ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -21 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஐஸ்வர்யத்தைக் கொண்டு பிற்காலியாதே நெஞ்சே
அவன் ஆஸ்ரித சம்ஸ்லேஷைக ஸ்வபாவன் கிடீர் -என்கிறார் –
அங்கன் அன்றிக்கே
பெரிய மேன்மையை யுடையனாய் இருந்து வைத்து
அவை ஒன்றும் பாராதே ஆஸ்ரிதர்க்காகத் தன்னை
அழிய மாறியும் கார்யம் செய்யுமவன் கிடீர் என்கிறார்  –

—————————————–

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-

பதவுரை

சென்று நின்று–(மஹாபலியின் யாக பூமியிற்) போய் நின்று
அம் கை–(தனது) அழகிய திருக்கையினால்
நிலம் நீரேற்று–பூமி தானம் வாங்கி
மூ அடியால்–மூன்றடிகளாலே
திசை அளந்த–எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக் கொண்ட
செம்கண்மாற்கு–செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு
என்றும்–எப்போதும்
ஆழி–சக்கரமானது
படை–ஆயுதமாயிருக்கும்;
புள்–கருடன்
ஊர்தி–வாஹனமா யிருப்பன்;
ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
அறி–நான் சொல்வதை ஆராய்ந்து கொள்;
பாம்பு அணையான் பாதம் அடை–சேஷ சயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு.

——————————————

வியாக்யானம் –

சென்று நின்று –
மகா பலி யஞ்ஞ வாடத்து அளவும் செல்ல நடந்து
பின்னை அவன் முன்னே அர்த்தித்வம் தோற்ற நின்ற நிலையும்
எல்லாம் இவர்க்கு ஆகர்ஷகமாய் இருக்கிறபடி –

நின்று-
மலையாளர் வளைப்பு போலே
பெற்று அன்றிப் பேரேன் என்று –

நிலமங்கை நீரேற்று –
பூமியை அழகிய கையால் நீரேற்று –
உபய விபூதிக்கும் படி இடும் கை –
கொடுத்து வளர்ந்த கையாலே பெற்றான் ஆய்த்து –
பிராட்டியை ஸ்ரீ ஜனக ராஜன் நீர் வார்த்ததைப் போலே

மூவடியால் திசை யளந்த-
மூன்று திருவடிகளாலே திக்குகளை அடைய அளந்து கொண்ட படி
திக்குகள் தோறும் சென்று அளந்தது -என்னுமாம் –

செங்கண் மாற்கு –
அந்த கார்யம் வாய்ந்த வாறே சிவந்த கண்களை உடைய சர்வேஸ்வரனுக்கு –
அத்தாலே அலாப்ய லாபம் பெற்றானாய் இருக்கை-

தம்தாமது பெற்றாலும் இனியராக வேணுமோ
கீழே திரு வுலகு அளந்து அருளின இடம் பிரஸ்துதமாய்
அத்தை அது பின்னாட்டின படி சொல்லுகிறது –

என்றும் படையாழி –
எல்லாத்தையும் உடையவன் கிடீர் இரந்தான்-
எப்பொழுதும் கை கழலா நேமியான்  -பெரிய திருவந்தாதி -87-

படையாழி  -புள்ளூர்தி பாம்பணையான்-
எப்பொழுதும் பரிகரம் ஆயத்து திருவாழி –
பெரிய திருவடி வாஹனம்
திரு வநந்த ஆழ்வான் படுக்கை –

கையிலே திருவாழி யைப் பேராதே பிடிக்க வல்லனுமாய்
திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும்
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்
சர்வேஸ்வரன் -ஆகிறான்

பாதம் அடையாழி நெஞ்சே அறி –
இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி
மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே
உன்னைக் கொடு

ஆழி  நெஞ்சே –
கம்பீர ஸ்வ பாவமாய் அளவுடைய நெஞ்சே –
என்னை ஓதுவிக்க வல்லை நீ யன்றோ

அறி –
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே
அழகிதாக புத்தி பண்ணு-

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading