அவதாரிகை –
திருப் பாற் கடலிலே போய்க் கிட்ட வேண்டும்படி தூரமாய்
நான் இழந்தேனோ
அவன் தானே வந்து சந்நிஹிதனாகச் செய்தே கிடீர்
நான் இழந்தது – என்கிறார் –
சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அநுபவிக்கப் போமோ –
பரம பதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன
இங்கே வெள்ளம் இட்ட வன்று பெற்றேனோ -என்கிறார் –
அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடியுகிரா
லீர்ந்தான் இரணியன தாகம் இருஞ்சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று –17-
பதவுரை
இரணியனது–ஹிரண்யாஸுரனுடய
ஆகம்–மார்வை
வடி உகிரால்–கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான்–கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புன் ஊர்ந்தான்–பெரிய சிறகை யுடைய கருடனை ஏறி நடத்துபவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று–உலகளந்த காலத்திலே
அடியும்–திருவடி
படி கடப்ப–பூமியை அளந்து கொள்ள
தோள்–திருத் தோள்கள்
திசை மேல் செல்ல–திக்குகளிலே வியாபிக்க
முடியும்–கிரீடம்
விசும்பு–மேலுலகத்தை
அளந்தது–அளவு படுத்திக் கொண்டது
என்பர்–என்று சொல்லுவர்கள்.
(ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெறவில்லையே!!)
————————————
வியாக்யானம் –
அடியும் படி கடப்பத்-
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே -திருவாய் மொழி -4-3-6-என்கிறபடியே
என் தலையிலே நோக்கான திருவடிகள் கிடீர்
பூமியை அளந்து கொண்டது –
அன்றிக்கே
அமரர் சென்னிப் பூவான திருவடிகள் கிடீர் காடும் ஓடையும் அளக்கின்றன –
படி கடப்ப –
சென்று காண வேண்டும் திருவடிகள் தானே வந்து பூமியை அகப்படுத்திக் கொண்டன –
தோள் திசை மேல் செல்ல –
திருத் தோள்கள் ஆனவை திக்குகளின் மேல் செல்ல
பிராட்டியைத் தழுவக் கடவ தோள் கிடீர் திக்குகளை தழுவுகின்றன
முடியும் விசும்பும் அளந்தது –
திரு வபிஷேகமும் அண்ட பித்தியின் அளவும் நிமிர்ந்தது
அபரிச்சேத்யமான ஆகாசத்தை அளவு படுத்திற்று
நின்றார் நின்றபடியே வென்றி கொள்ளுமா போலே
என்பர் –
இன்று நான் கேட்டார் வாய்க் கேட்பதே -என்கிறார்
திருவடிகள் தானே வந்து என் தலை மேல் இருக்க
நான் எங்கே புக்குக் கிடந்தேனோ –
வடியுகிரா லீர்ந்தான் இரணியன தாகம் –
கூரிய உகிராலே ஹிரண்யன் உடைய முருட்டு உடலைக் கிழித்துப் பொகட்டான் ஆயிற்று
இருஞ்சிறைப் புள் ளூர்ந்தான் உலகளந்த நான்று –
பெரிய திருவடி முதுகிலே இருக்கும்படியான
சௌகுமார்யத்தை யுடையவன் –
பூமியை அளந்து கொள்ளுகிற வன்று ஓர் இடத்திலே விரோதி நிரசனம் பண்ணி
ஓர் இடத்திலே முகம் காட்டும் அளவன்றியே
ஜகத்துக்கு எல்லாம் ஒரு காலத்திலே உதவின அன்று –
இருஞ்சிறைப் புள்ளூர்ந்தான் உலகளந்த நான்று
அடியும் படி கடப்ப
தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் –
என்று அந்வயம் –
—————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply