அவதாரிகை –
அவன் முற்பாடனுமாய்
ருசி ஜனகனுமாய் இருக்கச் செய்தே
சம்சாரிகள் புறம்பே சிலரை ஆஸ்ரயணீயராகக் கொண்டு
போரா நின்றார்களே என்னில்
அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும்
அந்த ஆஸ்ரயணீயர் தங்களுக்கும் ஆஸ்ரயணீயர்
சர்வேஸ்வரனே –என்கிறார் –
——————————-
அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் –14-
பதவுரை
அவர் அவர்–ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்
தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி–(தங்களுடைய ரஜஸ் தமோ குணங்களுக்குத் தக்கபடி) தாங்கள் எப்படி
அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து
இவர் இவர் எம்பெருமான் என்று–தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு
சுவர் மிசை சார்த்தியும்–சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும்–பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
தொழுவர்–தொழுகின்றார்கள்;
(எவர் என்ன செய்தாலும்)
உலகு அளந்த மூர்த்தி–(எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி)
உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய
உருவே–திருமேனி யொன்றே
முதல்–முக்கியமானது
—————-
வியாக்யானம் –
அவரவர் –
ரஜஸ் தமஸ்ஸூக்களால் அபிபூதராய்
பின்ன ருசிகள் ஆகையாலே –
அவர் அவர் -என்று
அநாதரித்துச் சொல்லுகிறார் –
தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி –
கர்மம் அடியாக வந்த ருசியும்
அதுக்கீடான ஜ்ஞானமுமாய் இறே இருப்பது –
சாஸ்திரத்தின் பின் செல்லார்களே
ஆகையாலே தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே ஸ்தோத்ரம் பண்ணி –
இவர் இவர் எம்பெருமான் என்று –
அவரை இவரை வந்தாரைப் பிடித்து
இவர்கள் நமக்கு ஸ்வாமிகள் -என்று –
சகரர்கள் கண்டாரை -நீ என் குதிரை பிடித்தாய் நீ என் குதிரை பிடித்தாய் -என்று பிடிக்குமா போலே
நல்ல வஸ்துக்கள் எல்லாம் கிடக்க
வேம்பும் உள்ளியும் உகப்பாரைப் போலே
தாங்கள் உகந்த குணங்களை உடைய தேவதைகளை உகப்பர்கள் –
சத்வ நிஷ்டாஹி புருஷா
ஹரி ரேகஸ் சதாத்யேய-ஹரி வம்சம் -138-8-என்று ருத்ரன் தானே சொன்னான் –
சுவர் மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர்-
ஒரோ பித்திகளிலே லிகுத்து ஒரோ விடங்களிலே பிரதிஷ்டிப்பித்தும் தொழா நிற்பர்கள் –
சர்வேஸ்வரன் ஆஸ்ரித அனுக்ரஹார்த்தமாக ஒரோ வடிவுகளை கொடு வந்தால்
அங்கே செய்யக் கடவ செயல்களை இங்கே செய்யா நிற்பர்கள்
இவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் –
உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –
ஜகத்தை அடையத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட
சர்வேஸ்வரன் உடைய திரு மேனியே பிரதானம் –
சமஸ்ரயிப்பார் தலையிலும்
சமாஸ்ரயணீயர் தலையிலும்
ஒக்கத் துகைத்தவன் –
——————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply