ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -18 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

திருப் பாற் கடல் ஏறப் போக வேண்டுதல் –
திரு வுலகு அளந்து அருளின இடத்து ஏறப் போதல்
செய்து நான் இழந்தேனோ –
அதுக்கும் இவ்வருகே போந்து
கிருஷ்ணனாய் வந்து வவதரிக்கச் செய்தே கிடீர் நான் இழந்தது
என்கிறார் –

வரையாதே தீண்டிப் பரிமாறுகையும்
அழகும்
ஐஸ்வர்யமும்
பஷபாதமும்
உள்ளிட்டவை திரு உலகு அளந்து அருளின் இடத்துக்கும்
கிருஷ்ணாவதாரத்துக்கும் ஒத்து இருக்கும் –

——————————————————————————-

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் ———18-

பதவுரை

(பேய்ச்சியான பூதனையினுடைய)
நான்ற முலைத் தலை–சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு–விஷத்தை
உண்டி–(அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி–உறிகளிலே வைத்த
வெண்ணெய்–வெண்ணெயை(க் களவு செய்து)
தோன்ற–இச் செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி
உண்டான்–அமுது செய்தவனாகி
வென்றி–ஜயத்தை யுடைய
சூழ்–எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப்படுத்திக் கொள்ள வல்ல
களிற்றை–(கம்ஸனுடைய) யானையை
ஊன்றி பொருது–எதிர் நின்று யுத்தம் செய்து
உடைவு கண்டாலும்–அழித்தொழித்தவனும்
புள் வாய் கீண்டானும்–பகாசுரனுடய வாயைக் கிழித்து போகட்டவனும் ( யாவனெனில்?)
மருது இடை போய்–இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்
மண் அளந்த–உலகங்களை அளந்து கொண்டவனான
மால்–எம்பெருமானே யாவன்.

————————————————————————————-

வியாக்யானம் –

நான்ற முலைத் தலை நஞ்சுண்டு –
யசோதைப் பிராட்டி வடிவு கொண்டு வருகிறாள் ஆகையாலே
பாலாலே நிறைந்த முலைக் கண்ணும் தானுமாய் வந்து
தோற்றினாள்  ஆய்த்து –

இவன் முலைகளைச் சென்று  பற்றி அமுது செய்தவாறே
பழைய வடிவாய்
நான்ற முலையோடு விழுந்தாள்-

ஆரேனுமாக இவனை ஸ்பர்சித்தார்க்கும் ஸ்வ ஸ்வரூபா பத்தி தப்பாது
எல்லார்க்கும் வந்தேறி போம் –

உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் –
உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெய் உண்கிற இடத்தில் எட்டி உண்டபடி
சிசூபாலாதிகளும் ஏசும்படி களவு பிரசித்தமாம் படி உண்டான்

இத்தால்
அனுகூலர் உடைய கர ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது
தனக்கு செல்லாத படியாய் இருக்கிறபடி

நஞ்சு உண்டு –
வெண்ணெய்  உண்டு –
என்று ஒக்கச் சொல்லுகையாலே
அனுகூலர் உடைய த்ரவ்யத்தோடு
பிரதிகூலர் உடைய பிராணனோடு வாசியற
இவனுக்குத் தாரகமாய் இருக்கிறபடி –

வென்றி சூழ் களிற்றை-
வெற்றியை உடைத்தாய்
எதிரிகளுக்கு தான் சாய்ந்து காட்டுகை அன்றிக்கே
அவர்களையும் தன் பக்கலிலே சூழ்த்துக் கொள்ள வற்றான குவலயா பீடத்தை –

அங்கன் அன்றிக்கே
மிக்க வெற்றியை யுடைத்தான களிறு -என்றதாகவுமாம்

ஊன்றிப் பொருதுடைவு கண்டானும் –
அதுக்கு தேசிகர் ஆனவர்களைப் போலே
நெருங்க நின்று பொருது
கருவிப்பை   போலே உளுக்காக்கக் பண்ணின படி

அன்றிக்கே
இடைவு கண்டான் என்றாக்கி
இளைப்பித்து அதின் விழுக்காடு கண்டவன் என்றுமாம் –

புள்ளின் வாய் கீண்டானும் –
பகாசூர நிரசனம் பண்ணினவனும்

மருதிடை போய் மண்ணளந்த மால் -கிடீர் என்கிறார்
யமளார்ஜூனங்களின் நடுவே போய் அவற்றைப் பொடி படுத்தினவன்
பூமி அடங்கலும் தன் கால் கீழே இட்டுக் கொண்ட சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார்

திரு உலகு அளந்து அருளின நீர்மை பின்னாட்டுகிற படி

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தோடு
ஸ்ரீ வாமனாவதாரத்ததோடு வாசியற
இவருக்கு ஒரு போகியாகத்
தோற்றுகிறபடி –

—————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading