Archive for the ‘Uncategorized’ Category

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -75 -உலாகின்ற கெண்டை ஒளி யம்பு –சன்மம் பல பல -3 -10 –

March 16, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் –
ஸ்ரீ வைகுண்டமோ -வையகமோ -உங்கள் ஊர்-பதி வினாவுதல் -மதி உடன் படுக்கை -தலைமகன் தனது எடுத்துக் காட்ட -கேள்வி எழுப்பி -வியாஜமாக -ஆழ்வாருக்கு நிகர் இங்கும் அங்கும் இல்லை
கிளவித் தலைமகன் -பாகவத உத்தமர் வார்த்தை – கண்ணாலே இங்கேயே இருப்பதை பார்த்து -உபய வியாவ்ருத்தராக ஆழ்வார் இருப்பதைச் சொல்வது -இப்பாசுரம் – சன்மம் பல பல -3 -10 –இதன் விவரணம்-திருமாலின் சீர் பரவி –யானோர் குறை இலனே –பரிவிலனே -ஒன்றும் துயர் இலனே
இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று யாதும் அல்லல் இலனே-குறைவில் தடம் கடல் தன் கோலச் செங்கண் –உறைபவன் போல் -யோகு செய்யும் அவனைப் பற்றி குறைவிலனே-அங்கு
இங்கும் திருப்பாற்கடல் சேஷசாயி -சேவிக்க வந்த நித்ய ஸூரிகள் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீ வைகுண்டம் – உலாவும் அழகிய மீன் -பாயும் அம்பு போல் ஒளிபடைத்த கூர்மையான ஆழ்வார் கண் –
ஞான வைலக்ஷண்யத்துக்கு விசேஷணங்கள்-முகத்தீர் -ஆழ்வார் தமரையும் தம்மைப் போலே ஆளாக்கி அருளியதைக் காட்டுமே )

அவதாரிகை – கலந்து இருக்கிற தலைமகன் கொண்டாடுகிற படியிலே ஒரு வகை யாதல் –
(தென்றல் ஆகிற பாகவதர் -தலைமகன் )-அன்றிக்கே-இயற்கையிலே (கண்டவுடனேயே )ஐயமாதல்  –ஒரு நாள் சம்ஸ்லேஷித்து –விஸ்லேஷித்து –பின்னையும் வந்து சம்ஸ்லேஷித்த நாயகன்-நாயகி உடைய வைபவம் உபய விபூதியிலும் அடங்காது என்று கொண்டாடுகிறான் என்னுதல் –அன்றிக்கே –
யாத்ருசிகமாக பிரதமத்தில் சம்ஸ்லேஷித்து பரிச்சேதிக்க மாட்டாதே சம்சயிக்கிறான் என்னுதல்-மதி யுடம்படுக்கலுற்ற தலைவன் தலைவிப் பற்றி தோழியரை வினாதல் —

இவருடைய ஆஸ்வாஸ அதிசயம் கண்ட அன்புடையார் இவர் திவ்யராய் இருக்கிறாரோ இந்த விபூதியிலே இவ்வதிசயத்தைப் பெற்றவரோ என்று விஸ்மிதராய்ச் சொன்ன பாசுரத்தை தலைவன் பாங்கியுடன் தலைவியை எதிர்ப்பட்டு வியந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை -ப்ரஹ்ம வித் அக்ர கண்யர்கள் இவருடைய ப்ரபாவத்தைத் தங்கள் பார்வையால் முகந்து கொண்டு ஸந்துஷ்டார்களாய் ஸேவித்துப் பரிமண்ட விதராய் நிற்க
அவர்களைக் கடாக்ஷித்து இன்னபடியாக அருளிச் செய்கிறார் இதில்

உலாகின்ற கெண்டை  யொளி யம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே
– -75 –தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் 

உலாகின்ற–(காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற
கெண்டை–கெண்டை மீன் வடிவமான
ஒளி அம்பு–ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள்
எம் ஆவியை ஊடு உருவ–எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி
குலாவுகின்ற–(அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற-இந்திரியங்களுக்கு விஷயமாக –
வெம்சிலை–(புருவமாகிய) கொடிய வில்லையுடைய
வாள் முகத்தீர்–ஒளியுள்ள முகமுடையவர்களே!
குனி சங்கு இடறி–வளைந்த வடிவமுள்ள சங்குகளைக் கொழித்து எழுந்து
புலாகின்ற–மீன் நாற்றம் வீசப்பெற்ற
வேலை–அலைகிளர்ச்சியையுடைய
புணரி–கடலை
அம்பள்ளி–அழகிய படுக்கை யிடமாகவுடைய
அம்மான்-ஸர்வேஸ்வரனது
அடியார் நிலா கின்ற–பக்தர்களான நித்யமுக்தர் விளங்கி வாழப்பெற்ற
வைகுந்தமோ–ஸ்ரீவைகுண்ட லோகோமோ
வையமோ–இந்த நிலவுலகமோ
நும் நிலை இடம்–உங்களது இருப்பிடம்?

சன்மம் பல செய்து தான் இவ்வுலகு அளிக்கும்
நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர்
நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்
—30-இதரரைக் கவி பாடுகைக்கு அனர்ஹ கரண மாத்ரமாகை அன்றிக்கே பகவத் விஷயத்தை கவி பாடுகைக்கு அர்ஹ கரணனாகவும் ஆகப் பெற்றேன்
எனக்கு இனி வேண்டுவது உண்டோ என்று ஹ்ருஷ்டராகிற சன்மம் பல பல-வின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார்–இப்படி அவன் கல்யாண குணங்களை ஸ்துதிக்கப் பெற்றேன் என்று அருளிச் செய்த ஆழ்வாரை லௌகிகராய் உள்ளவர்களே நாத் தழும்பு ஏறும்படி ஸ்துதியுங்கோள்
அது தான் பல நாள் வேண்டா-ஒரு நாள் அமையும்-வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் -வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதனன் மேவியே – பகலிராப் பரவப் பெற்றேன் -என்கிற நிர்பந்தம் வேண்டா-நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்–சத்ருத் சேவிக்க அமையும்-சர்வதா சரசமாய் இருக்கும்-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்னும் விஷயம் இறே –

உலாகின்ற கெண்டை –உலாகின்ற கெண்டை போல் ஆயிற்று மௌக்த்யம் (அழகு )இருக்கிறபடி-ஒளி யம்பு –இவன் பார்த்த போது (அவள் ) பாராதே – பாராத போதாகப் (அவள் )பார்க்கையாலே – வரவு தெரியாதபடி-காணாக் கோலாக வந்து தைக்கிற படி – ஒளிக்கிற அம்பு –ஒளி யம்பு –கண் கொண்டு தப்ப ஒண்ணாது இருக்கிறபடி –(சாடு-கண் என்று பார்வையாய்-நாயகி பார்வையில் இருந்து தப்ப ஒண்ணாதபடி இருக்குமே–கண்ணாலே கண்டு தப்ப ஒண்ணாது-தோற்று ஜிதம் என்று சொல்லப் பண்ணுமே )எம்மாவியை ஊடுருவ – இது தான் புறம்பு ஒருவர் மேல் தையாதே –நம் மேல் தைப்பதுமாய் இருந்தது –-அது தன்னிலும்-தோல் புரையே போமது அன்றிக்கே -பிராணனிலே தைப்பதுமாய் இருந்தது – அது தன்னிலும் – தோற்றம்பு அன்றிக்கே -மறுபாடுருவத்தை தைப்பதுமாய் இரா நின்றது –(தோல் புரைய –வேதாந்த தாத்பர்யம் -சரீரம் பார்க்காமல்-மனமுடையீர் என்ற இதுக்கு ஸ்ரத்தையே அமையும்-பழுதிலா ஒழுகலாற்று பல சதுப்பேதி மாரில் -எம்மடியார்கள் ஆகில் -கொடுமின் கொள்மின்
கண்ணன் கழல்கள் நண்ணும் மனமுடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே-ஆவி
-ஆத்மாவையே பார்க்கும் அன்று மேலோட்டமாக தொடாமல் –மறுபாடுருவத்தை தைப்பதுமாய் இரா நின்றது -)

குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் –எப்போதும் ஒக்க வளைந்த படியாய் இருப்பதாய் –
ஒரு வியாபாரம் பண்ண வேண்டாதே –கண்ட காட்சியிலே இலக்கானார் அழியும் படியாய் –
அல்லா வில்களோபாதி  – கையிலே இருக்கை அன்றிக்கே –முகத்திலே இருக்குமதான வில்-வர்த்தியா நின்றுள்ள முகத்தை உடையீர் –(வாள் -வர்த்திக்கிற-உடைத்தான -வில் போன்ற புருவம் உள்ள திருமுகம் )அன்றிக்கே –வாள் என்று ஒளியாய் –வெஞ்சிலையையும்- ஒளியையும் உடைத்தான முகத்தை உடையீர் என்னுதல் –முகம் பழகின வில்லு -காணும் –இவளை நலிகிறது –(சாடு
பழகின வில் என்றும் முகத்திலே உண்டான வில் என்றும் )குனி சங்கு இத்யாதி – வலம்புரி தொடக்கமான சங்குகளை இடறி –புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான்புலாகின்ற
புலம்புகின்ற –சப்தியா நின்றுள்ள -திரைக் கிளர்த்தியை உடைய   -கடலாகிற அழகிய-படுக்கையை உடைய சர்வேஸ்வரனுடைய –புலாகின்ற –அச் சங்குகளின் உடைய ஒளியாலே எப்போதும் ஒக்க
ப்ரபாத சமயமே யாய் இருக்கிற-கடல் என்னவுமாம் –(புல புல விடிந்தது -பொழுது புலர்ந்தது என்ற அர்த்தத்தில் பகர் அல்ல பகல் செய் ஒளி விளக்கு போல் )

அம்மான் -இத்யாதி –நித்ய விபூதியிலே போது போக்கி-ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே –
தன் சந்நிதானத்தாலே கிளர்ந்து வருகிற திருப்பாற் கடலிலே புகுந்து குடில் கட்டி நோக்கிக் கிடப்பாரைப்-போலே –இஜ் ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற –இந் நீர்மைக்குத் தோற்று இருக்கிற நித்ய ஸூரிகள் நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டமோ-
அன்றிக்கே –மானாவிச் சோலை போலே ஆவது அழிவதாய் –காதாசித்கமாக அவன் வந்து முகம் காட்டிப் போகும்-லீலா விபூதியோ –உங்களுடைய வாஸ ஸ்தானம் —வானவர் நாடு -என்கிறபடியே –அவர்கள் இட்ட வழக்காய் இருக்கும் இறே அவ் விபூதி –அஹங்கார மமஹாரங்களாலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம்-நடை யாடாதபடி –பண்ணிக் கொண்டு இருப்பார்கள் இறே இங்கு உள்ளோர் –(அவனது வைகுண்டமோ அடியார்களான நமது வையமோ என்று நாம் நினைப்போம்-மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே-அங்கு ஆழ்வார் ஏக ராஜா-இங்கு ஆழ்வார் தேவநாதன் இருவரும் ராஜாக்கள்
ஈர் அரசு கிடையாதே அங்கு அவர்கள் நீதி வானவர்கள் அன்றோ ) பிள்ளை திரு நறையூர் அரையர் –
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ – அன்றிக்கே அவனதான வையமோ -என்று பணிப்பாராம் –
(ஒன்றுமே சொல்லா விட்டாலவனே ஆளாகிறான்-பாலின் நீர்மை -கிருத யுகம் சத்வகுணம் வெளுப்பு -பிரார்த்திக்க அப்படி சேவை –த்ரேதா சிகப்பு –மான் தளிர் பச்சை இரண்டும் கலந்து – கலியுகம் -கறுத்து -இயற்கையான வர்ணம் போல் இங்கும் அவனே ஆள்கிறான் இங்கு )

நாயகியும் தோழியும் ஒருங்கு இருந்த சமயம் நோக்கி நாயகன் அங்குச் சென்று தன் கருத்தை குறிப்பதற்கு வியாஜமாக ஊர் வினவுகிறான் – இவர்கள் வடிவு அழகு மிக வேறுபட்டு சிறந்து இருத்தலால் –நும் நிலையிடம் வைகுந்தமோ –இவ்வுலகத்தில் இல்லாதால் – வையமோ-உமது இடம் அந்த நித்ய விபூதியோ -ஞான விசேஷங்கள் கண்டால் முக்தரோ என்னலாம் படி – பூர்ண அனுபவம் கிடைக்கப் பெறாமையாலே இவர் இவ்வுலகத்தவரோ என்றும் -சம்சார சம்பந்தம் இல்லாமையால் அவ்வுலகத்தவரோ என்றும் சங்கை –மதியுடம்படுக்கலுற்ற நாயகன் நாயகியின் தோழியரைப் பதிவினாதல் இது. நாயகியும் தோழியும் ஒருங்கிருந்த ஸமயம் நோக்கி நாயகன் அங்குச்சென்று தன் கருத்தைக் குறிப்பிப்பதற்கு ஒரு வியாஜமாக ஊர் வினாவுகின்றானென்க.–காதளவும் நீண்டு கெட்டை மீன் வடிமான கண்களாகிய அம்புகள் எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படியாக அவ்வம்புகளைப்
பிரயோகிப்பதற்கு வளைந்திருகின்ற புருவமாகிய கொடிய வில்லையுடைய அழகிய முகமுடையவர்களே! என்று நாயகியையும் அவளது தோழியரையும் விளித்தபடி. கண்களை அம்பாகவும் புருவத்தைச் சிலையாகவும் வருணித்தல் கவிமரபு. -கையிற்கொள்ளும் வில்லம்புகளால் வருத்தும் உலகவியல்பு’ எனப்பட்டது.-பின்னடிகள் பதிவினாவுவன. இவ்வுலகத்தவரினும் இவர்களது வடிவழகு மிக வேறுபட்டுச் சிறந்திருத்தலால் ‘-நும் நிலையிடம் வைகுந்தமோ?’ என்றது; இவர்களைக் கண்டது இவ்வுலகத்திலாதலால் ‘வையமோ?’ என்றது.-இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரது ஸ்வரூபத்தைக் கண்டு ஈடுபட்ட பாகவதர் அவரையும் அவரோடொத்த அவரது அன்பரையும் நோக்கி ‘நுமது இடம் அந்த நித்யவிபூதியோ? என்று வியந்துரைத்தலாம்.
(உலாகின்ற + வாண்முகத்தீர்!) பரந்த குளிர்ந்த நுண்ணிய விளக்கமுடைய உமது ஞானத்தை எமது நெஞ்சிலே பதியும்படி செலுத்தும் முகமலர்ச்சியுடையவரே! என விளித்தபடி.
எம்பெருமானுடைய நித்யமுக்தர் வஸிக்கும் நித்ய விபூதியோ இந்த லீலாவிபூதியோ உமது இருப்பிடம்?
ஆழ்வார், ஞானம் முதலியவற்றின் மஹிமையால் முக்தரென்று சொல்லும்படியும் அங்கு நின்று இங்கு வந்தவரொருவரென்று சொல்லும்படியும் உள்ள தன்மை இப்படி விகற்பித்து வினாவுதற்குக் காரணம்.
அன்றியும் பூர்ண அனுபவம் கிடைக்கப் பெறாமையால் இவர் இவ்வுலகத்தவரோவென்றும்,
ஸம்ஸார ஸம்பந்தம் இல்லாமையால் அவ்வுலகத்தவரோவென்றும் சங்கை நிகழ்ந்ததென்க.

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
குழை யளவும் சென்று மீளுகையாலே உலாவா நிற்பதாய்-கெண்டையான ஒளியையுடைய அம்புகளானவை என்னுடைய ப்ராணனைத் தோற் புரையிலே போகாதே உள்ளுருவும் படியாக வளைந்து வியாபரிக்கிற புருவமாகிற கொடிய சிலையையுடைய ஒளி விஞ்சின முகத்தை யுடையவர்களே-குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான்-குனி சங்கைக் கீழ்ப்படுத்தி மேலே போய்த் தன் வெறி நாற்றத்தை யுடைத்தான திரைக் கிளப்பத்தை யுடைய கடலை அழகிய படுக்கையாக யுடைய ஸ்வாமி யானவனுடைய-வேலை -என்று கரை யாகவுமாம் (அலை யுடைய கடல் என்றும் கரையை யுடைய கடல் என்றும் )-அடியார் நிலாகின்ற வைகுந்தமோ-சேஷத்வ பாரதந்தர்யங்களை வடிவாக யுடையவர்கள் நித்ய வாஸம் பண்ணுகிற அழிவற்ற தேசமோ-வையமோ
அவனுடைய லீலா விபூதியோ-வையம் என்று-விபூதிக்கு உப லக்ஷணம்–நும் நிலை இடமே-உங்களுடைய வாஸஸ்தானமானது-வைலக்ஷண்யத்தைப் பார்த்தால் நித்ய விபூதி என்னலாய் இரா நின்றது-இங்கே காண்கையாலே இந்த விபூதி என்னலாய் இரா நின்றது என்கை –இத்தால்
உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் -என்கையாலே
நித்ய விகாஸ ப்ரவ்ருத்தி ஸீலமாய் (சென்று சென்று பரம் பரமாய் -அறிந்து அறிந்து தேறித் தேறி ) சீதள ஸ்வபாவமாய் பிரகாசத்தையும் கூர்மையையும் உடைத்தாய் இருக்கும் ஞானம் என்றபடி–எம்மா வீடு -திருவாய் 2-9-இத்யாதியாலே-இந்த ஞானத்தை அன்புடையார் நெஞ்சிலே அவகாடமாம்படி ப்ரதிபாதிக்கும் அளவில் ப்ரூ விஷேபாதியான முக விகாஸத்தை ஸூ சிப்பிக்கிறது-(வீடு வேண்டாம்-மா வீடு-கைவல்யம் வேண்டாம்-எம்மா வீடும் வேண்டாம் – ப்ரூவம் அழுத்தி திருத்தமாக சொல்வாரே-நின் செம் பாத பற்ப்பு ஒல்லை தலை மேல் சேர்க்கவே வேண்டும் -அடியேன் வேண்டுவது ஈதே -திருவடித் தாமரை தரித்து கைங்கர்யம் என் நெஞ்சுள் நிறுத்தினான் -ஆழமாக காட்டி அருளினார் அன்றோ )குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் -என்கையாலே-சேஷத்வ நிரூபித ஸ்வபாவரான ஸூத்த ஸ்வபாவரைக் கீழ்ப்படுத்தி தன்னுடைய தவ்ராத்ம்யமமே (துராத்மாவின் ஸ்வபாவமே ) கந்திக்கும்படியான மேல் எழுச்சியை யுடைய ஸம்ஸார சாகரத்தை நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தத்தாலே கைவிடாமல் நினைக்கிற ஸ்வாமியான என்று லீலா விபூதி யோகம் சொன்னபடி-(நாரங்களுக்கு அயனம் -கைவிடாமல் இங்கே வந்து கண் வளருபவன் அன்றோ
அம்மான் -ஸ்வாமி )-அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – என்கையாலே
ஸ்வரூப பிரகாசம் யுடையாருக்கு உத்தேச்யம் நித்ய விபூதி என்றும் இந்த விபூதியிலே யானாலும்
நேமிப்பிரான் தமர் போந்தார் -திருவாய் -5-2-6- என்று அங்குள்ளார் இங்கே வந்தார் என்று சொல்ல வேண்டும்படியாய் இருக்கும் என்றதாயிற்று –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் எம்மாவியை -எனக்கு ஆவியான அகண்ட ப்ரஹ்மத்தை ஊடுருவ -வியாபகாவதி வியாபாரிக்க வல்ல ஒள்ளிய அம்பாயும் ஒள்ளிய கெண்டையாயுமுள்ள கண்களைக் கொண்டே அவர்களைத் திரஸ்கரிக்க வுமானது கொண்டு
ஒளி பெற்ற முகங்களை யுடையவர்களே-கிஞ்ச-குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார் வேலையில் -கரையிலே குனிந்து இருக்கும் சங்குகளை புணரி -ஆஸ்வேஷிப்பித்தும் இடறியும் உலாவும் அவைகளால் அழகிய பாற்கடலில் பள்ளிகொள்ளும் அஸ்மத் ஸ்வாமிக்கு அடிமைப் பட்டவர்காள்-நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – உங்களுடைய ஞான வைஸத்யத்தை அப்பார்வையுள்ள முகத்தால் கண்டோம் உங்கள் இருப்பிடமே கேட்க்கிறோம்
ஸ்வரூபவ யாதாத்ம்ய ஞானம் நிலையாகி நிற்கும்படியான அவ்வைகுந்தமேயோ இவ்வையம் தானேயோ சொல்லுங்கோள் விருப்புற்றுக் கேட்க்கிறேன் என்றபடி –

ஸ்வாபதேசம்-இத்தால் ஆழ்வார் இருக்கிற இருப்பைக் கண்டாருக்கு – உபய விபூதியிலும் இவர் படிக்கு ஒப்பு இல்லை -என்று சொல்லும்படி இருக்கிற படியை சொல்லுகிறது –அங்கு உள்ளார் நிரந்தர-பகவத் அனுபவமேயாய் இருப்பார்கள் – இங்குள்ளார் இதர விஷயங்களின் உடைய வ்யாபாரங்களேயாய்-
லாபாலாபங்களாய்-இருப்பார்கள் –இப்படி இவர் உபய வ்யாவ்ருத்தராய் இறே இருப்பது – நிரந்தரமான பகவத் அனுபவமும் இன்றிக்கே – அன்ன பாநாதிகளால் தரித்து இருக்குமது அன்றிக்கே இறே இருக்கிறது –இரண்டு-விபூதியிலும் கைக்கு அடங்காதபடி யாய் இருக்கிற இருப்பைச் சொல்லிற்று –
இங்கன் அன்றாகில்-இரண்டு இடத்திலும் ஐயம் கூடாது இறே –லீலா விபூதியை தானே ஆளுகின்றான் -சம்சாரிகள் கையில் கொடாத படி -அரையர் ஸ்ரீ ஸூக்தி –மௌக்த்யம் -அழகு -தன் ஐயம் தீர்க்க அவள் இடமே கேட்கிறானாம் சர்வேஸ்வரன் –

தாத்பர்யம்-இதில் ஆழ்வார் ஆகிற நாயகி உடன் பாகவதர் கிளைவித் தலைமகன் ஸம்ஸ்லேஷித்து
கண் அழகில் -அவருடைய ஞான வைலக்ஷண்யத்திலே ஈடுபட்டு-ஓ பெண்ணே -நான் அன்ய த்ருஷ்டியாய் இருக்க -பார்க்காத போது என்னைப் பார்த்து -நான் பார்த்த போது -அப் பார்வையை என்னிடம் இருந்து விலக்கி உன்னுடைய அழகிய முகத்தில் உள்ள புருவம் தனுர் ஆகாரமாக வளைந்து
கண்கள் மீன் போல் -காது வரை நீண்டு பானம் போல் அதி க்ரூரமாய் -அத்யந்த ஆகர்ஷகமாய் இருக்க
உனது வைலக்ஷண்யம் கண்டு எனக்கு வந்த சங்கை இதுவே – இங்கேயே இருப்பதால் நித்யர் போல் இல்லை -அன்ன பானாதி தத் பரராய்-ஸம்ஸாரிகள் போல் இல்லாமல் இருப்பதால் -இது வையமாகவும் இருக்க முடியாது-இப்போது வாசம் செய்யும் பிரதேசம் எது-ஷீராப்தி நாதனை அனுபவிக்க வந்த நித்ய அனுபவ நித்ய ஸூரிகள் நிரந்தர வாஸம் செய்யும் நித்ய வைகுந்தமோ-விஷயாந்தர பரர் வாழும் வையகமோ -ஆழ்வாருக்கு உபய விபூதியிலும் நிகர் யாருமே இல்லையே -என்றவாறு

3-10-சன்மம்-பல பல -பிரவேசம் –

மேல் திருவாய்மொழியிலே பிறரைக் கவி பாடுகிறவர்களைப் பகவானிடத்தில் மீட்கப் பார்த்து, அவர்கள் மீளாது ஒழிய,‘இவர்களைப் போலே ஆகாமல் யான் முதன் முன்னம் பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளை உடையவனாகப் பெற்றேன்,’ என்கிறார்;
‘பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளையுடையவனான அளவேயோ?
பகவானைத் துதிப்பதற்குத் தக்க உறுப்புகளை உடையவனாகவும் பெற்றேன்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில்.
‘முடியானே’ என்ற திருவாய்மொழியில், தாம் அவனை அனுபவிக்கக்கோலி, அது பெறாமையாலே, தாமும் தம்முடைய உறுப்புகளும் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார்;
தாம் பகவத் விஷயத்திலே கூப்பிடுகிறது போன்று, சமுசாரிகள் மனைவி மக்கள் முதலியவர்களைப் பற்றிக் கூப்பிடுகிறபடியை நினைத்து, அவர்கள் கேட்டினைக் கண்டவாறே தமக்கு- ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் பிறந்த இழவு -தானே பேறாய்த் தோன்றிற்று.

அதற்கு மேலே, ‘அடியார்களின் பொருட்டுக் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களைப் போன்று சமுசாரிகள் நடுவே அவர்களோடு ஒத்த வடிவைக்கொண்டு அவதரித்த திவ்விய அவதாரங்களையும் அவதாரங்களில் செய்த திவ்விய செயல்களையும் வடிவழகையும்
ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியையும் திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தியையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும் ஆகிய இவற்றை
எல்லாம் அனுபவிக்கப்பெற்றேன்; எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.

இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘சன்மம் பலபல செய்து’ என்றுதனை நோக்கித் ‘திவ்விய அவதாரங்களை’ என்றும்,
‘மாளப்படைபொருத’ என்றதனை நோக்கித் ‘திவ்விய செயல்களை’ என்றும்.
‘எங்கும் அழகு அமர்’ என்பது போன்றவைகளை நோக்கி ‘வடிவழகை’ என்றும்,
‘மட்டவிழ் தண்ணம் துழாயான்’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும்,
‘சங்கொடு சக்கரம் வில்’ என்பன போன்றவைகளைத் திருவுள்ளம் பற்றித் ‘திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும்,
‘துக்கம் இல் ஞானம்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘அகடித கடநா சாமர்த்தியத்தை’ என்றும் அருளிச்செய்கிறார்.

பத்தாம் திருவாய் மொழியில்
கீழ் -இதர ஸ்தோத்ரத்தினுடைய ஹேயத் வாதிகளையும் பகவத் ஸ்தோத்ரத்தினுடைய வை லக்ஷண்யத்தையும் உபதேசித்து
இப்படி விலக்ஷணமான பகவத் விஷயத்தை நாம் சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்கப் பெற்றதே என்று அதி ப்ரீதராய்
1-அனுபாவ்யனான சர்வேஸ்வரனுடைய அவதார பலமான விரோதி நிரசனத்தையும்
2-அவதாரத்துக்கு மூலமான ஷீரார்ணவ ஸாயித்வத்தையும்
3-அனவதிக அதிசயையான சர்வவித போக்யதையும்
4-போக பிரதி சம்பந்தி ஸமஸ்த விரோதி நிவர்த்தகத்வத்தையும்
5-அர்த்திகளுக்கு அர்த்திதார்த்த காரித்வத்தையும்
6-அவதார திசையிலும் அதிமானுஷ சேஷ்டிதத்தையும்
7-அவதார நிர்வாஹ்யமான லீலா விபூதி யோகத்தையும்
8-இந்த நிலையிலும் பரதவ ஸூ சகமான ஸ்ரீ லஷ்மீ பதித்தவத்தையும்
9-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும்
10-சர்வாந்தராத்மத்தையும்
அனுசந்தித்து -ஏவம்விதனான சர்வேஸ்வரனை சர்வ பிரகார அனுபவம் பண்ணப் பெற்ற எனக்கு
ஒரு வைகல்யம் -விச்சேதம் -மன பீடை -மிறுக்கு–கிலேசம் -அப்ரீதி -அலமாப்பு -துக்கம் -அவசாதம் -விநாசம் -என்று சொல்லப் பட்ட
ஸமஸ்த துரிதங்களும் இல்லை என்று அதி ப்ரீதராய் -இப்பத்துக்கு தாத்பர்யமான
ஸ்வரூபத்தினுடைய தத் ஏக அனுபவத்தையும் உபபாதித்து முடிக்கிறார் –

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.
–3-10-1-

இத்திருவாய்மொழியிற்சொல்லுகிற பொருளைச் சுருக்கமாக அருளிச் செய்கிறார்;
‘திவ்விய ஆயுதங்களோடே அவன் வந்து அவதரிக்கும்படியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அடியார்களைக் காத்தற்பொருட்டு பல அவதாரங்களைச் செய்து அவர்கள் விரோதியை அழிக்கின்ற எம்பெருமானுடைய நற்குணங்களைப் புகழப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் கூடப் பிறவாத பிறவிகளை ஏறிட்டுக் கொண்டு வந்து காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘சர்வேசுவரனாய் மேன்மை அடித்து இவற்றோடே தோய்வு இன்றி இருக்கை அன்றிக்கே இவை பட்ட இடரைத் தானும் ஒக்க வந்துபட்டுக் காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார் என்னுதல்.

ஓர் அவதாரத்தைச் சொன்னால், ‘எத்திறம்!’ என்று ஈடுபடுகின்றவர், பல அவதாரங்களைப் பொறுக்க மாட்டார் அன்றோ? அதனால், ‘பல’ என்கிறார்.
‘கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பிறவிக்கு எல்லை காண்கின்றோம்; கர்மங்கட்குக் கட்டுப்படாதவன் பிறவிக்கு எல்லை காண்கின்றிலோம்,’ என்பார், ‘பலபல’ என்கிறார்.கர்மம் காரணமாக வரும் பிறவிகட்கு எல்லை உண்டு; திருவருள் காரணமாக வரும் பிறவிக்கு எல்லை இல்லை,’ என்றபடி.-எல்லாப் பொருள்கட்கும் காரணனாய் இருக்கின்ற தான் தன்னுடைய காரியங்களிலே ஒரு பொருளுக்குத் தான் காரியமாக வந்து அவதரிக்கின்றான்,’ என்பார், ‘செய்து’ என்கிறார் -என்றேனும், கட்கண்ணாற் காணாத அவ்வுருவை’ அன்றோ கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்?’-அவதரிக்கும்போது திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிக்கின்றான்–ஸ்ரீ பரத ஆழ்வான் திருச்சங்கு அம்சம் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் திருச்சக்கர அம்சம் -விண்ணுளாரிலும் சீரியர் –அழகிற்குக் காரணமாகவே கொண்டு, ‘ஒள்வாள்’ என்கிறார். ஒண்மை – அழகு.
‘ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலே ஆயிற்று வடிவும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது,’இங்கு நின்றும் போவார்க்கு அடையத் தக்கவர்களான நித்திய ஸூரிகளோடே கூட வந்து அவதரிக்கிறான் என்பதனையும்,
அவ்வாறு அவதரிப்பதுவும் கண்டு அனுபவித்த பின்னர், ‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவது என்றுகொலோ!’ என்று பிரார்த்திக்க வேண்டாதபடி அவர்களோடே கூடக் காட்சி கொடுக்கைக்காக என்பதனையும் தெரிவித்தபடி.–‘வன்மையுடைய அரக்கர்-திவ்விய ஆயுதங்களோடே அழகிய வடிவழகைத் திருவடி திருத்தோளிலே கண்டால், ‘சரணம்’ என்னுதல், எழுத்து வாங்குதல் செய்கை அன்றியே எதிர் இடுவதே பையல்கள்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘அழகுக்கு இலக்காய் வாழ மாட்டாது, அம்புக்கு இலக்காய் முடிந்து போவதே!’ என்கிறார் 

ஓர் குறைவு இலன் –ஒரு குறையும் உடையேன் அல்லேன்.
1-முதலிலே சமுசாரிகளைப் போன்று அறியாதொழிதல்,
2-அவதரித்துக் கண்ணுக்கு இலக்காய்ப் பாசுரமிட்டுப் பேச நிலமன்றிக்கே இருத்தல்,
3-சிசுபாலன் முதலியோர்களைப் போன்று ‘நம்மிலே ஒருவன்’ என்று தாழ்வாகப் பேசி முடிந்து போதல்.
4- ஸ்ரீ விஸ்வரூபத்தில் அருச்சுனனைப் போன்று நீச்சு நீராதல் -கரை காண ஒண்ணாமல் -இன்றிக்கே இறைவனைப் புகழ்ந்தவர் ஆதலின்,‘ஓர் குறைவிலன்’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அவன் எல்லா விதமான கல்யாண குணங்களை பரமாத்துமாவோடு கூட அனுபவிக்கின்றான்,’ என்கிறபடியே,-பரமபதத்திலே அனுபவிக்கக் கூடிய குணங்களின் அனுபவத்தை இங்கே அனுபவிக்கப்பெற்ற எனக்குப் ‘பரமபதத்திற் போகப் பெற்றிலேன்’ என்ற குறை உண்டோ?’ என்கிறார் என்னுதல்.

———–

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே
.–3-10-2-

குறைவு இல் தடம் கடல்-ஈண்டுக் குறைவு இல்லாமையாவது, ‘திருமேனி நீ திண்டப் பெற்று, மாலும் கருங்கடலே என் நோற்றாய்’ என்னுமாறு போன்று,-அவனுடைய பரிசத்தால் குறைவு அற்று இருக்கை. யசோதைப் பிராட்டி ஸ்ரீ கிருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உவக்குமாறு போன்று, சர்வேசுவரனைத் தனக்குள்ளே இட்டுக் கொண்டு அத்தாலே உவந்து குறைவு அற்று இருக்கை

காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தவாறே அந்நினைவு பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே ‘வாசுதேவனாகிய தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்-இப்படித் தன்னைத் தானே நினைத்தவாறே காத்தற்கு உரிய உபாயம் தோன்றுமே? தோன்றினவாறே கண்ணனாய் அவதரித்தான்-திருமேனியினுடைய பரிசத்தால் திமிர்ந்து செல்லாது நிற்றலின், தேர் முதலிய பொருள்களை நடத்துமாறு போன்று வடிம்பிட்டுத் தாக்கி நடத்த வேண்டி இருத்தலின், ‘கடாவி’ என்கிறார்.-

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – ‘இத்தகைய பாதுகாத்தலால் குறைவற்ற புகழைப் பிரீதியின் மிகுதியினாலே ஏத்தியும் பாடியும் பத்தி பாரவஸ்யத்தாலே இருந்த இடத்தில் இராமல் ஆடியும் வாழ்கின்ற நான், பகவானுடைய இன்பத்துக்கு ஒரு தடையை உடையேன் அல்லேன்,’ என்கிறார். முட்டு – விலக்கு.-

———–

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே
.–3-10-3-

பிரமன் சிவன் முதலானோர்கட்கும் முதன்மை சொல்லுவார்கள் ஆதலின், அவர்களை வேறுபடுத்துவதற்காக ‘ஒரு தனி நாயகன்’-விலஷணர்கள் -வீத ராகம் இல்லாத முமுஷுக்கள் அனுபவிக்கும் அமுதம் அன்றோ-இவருடைய அறுசுவை இருக்கிறபடி-பரமபதத்திற்குச் சென்றால் பூர்ண அனுபவம் பண்ணலாவது, இங்கே இருந்து குறைய அனுபவியாநின்றேன்’ என்னுமதனாலே-வரும் மனத்தின் துக்கம் உண்டோ எனக்கு?’ என்கிறார்.-

———

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே
.–3-10-4-

இங்கு ஆச்சரியமாவது, வாணனுடைய கரத்தைக் கழித்து, அவனை இறையிலி செய்து, நாட்டுக்குத் தானே நின்று இறையான ஆச்சரியம்.– ‘வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ அன்றோ?-ஆயனை –அவன் தோற்றதும் தன் தரம் குலையாதே நிற்கிற நிலையிலே; -இவன் வென்றதும் தன்னைத் தாழவிட்ட இடத்திலே.-பொன் சக்கரத்து
அரியினை
-அனுகூலர்க்கு விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும் காண முடியாதவனை.-பற்றி யான் இறையேனும் இடர் இலனே – இவனைப் பற்றின எனக்குச் சிறிது துக்கமும் இல்லை. ‘‘பேரன்’ என்று இருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலு நாள் சிறையில் இருக்க வேண்டிற்று; ‘அடியேன்’ என்று பற்றின எனக்கு அதுவும் வேண்டிற்று இல்லை,’ என்பார், ‘இறையேனும் இடர் இலன்’ என்கிறார்.-நான் ஏகதேசமும் மிறுக்கை யுடையேன் அல்லேன் இடர் -இடைஞ்சலாய் மிறுக்கு-என்றபடி –

———–

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
.–3-10-5-

காலத்தால் உண்டாகின்ற மாறுபாடு ஒன்றும் இல்லாத தேசமாகையாலே, கொண்டுபோகிற போதைப் படியில் ஒன்றும்
குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்.-பால உடலோடும் –
அன்றிக்கே,
‘பூசின மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட சவடிப் பூணுநூலும், இட்ட காது பணிகளுமான ஒப்பனையில் ஒன்றும்
குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்’ என்னுதல்.
‘பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்களாகில், இப்போது இவை எல்லாம் உண்டோ?’ என்று பட்டரைக் கேட்க, ‘ரிஷி புத்திரர்கள்
ஆகையாலே பிறக்கிற போதே அவற்றோடே பிறப்பர் காணும்’ என்று அருளிச்செய்தார்.

கர்ம சம்பந்தம் அற்றுப் போகாமையாலே ஆயிற்று இவர்களுக்கு மீள வேண்டிற்று-கர்ம சம்பந்தம் அற்றார் போகக்கூடிய
தேசத்திலே இவர்கள் சென்றபடி என்?’ என்னில், ‘நாய்ச்சிமார் தங்கள் சுவாதந்தரியம் காட்டுகைக்காக இவர்களை அங்கே அழைப்பித்தார்கள் ஆயிற்று.

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று தொடங்கி, ‘மங்கவொட்டு’ என்று மடிபிடித்துக் கூப்பிடும்படி சமுசாரத்தில் விரக்தி பிறந்தும்,
‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும், ‘மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும்,
‘அதனிற்பெரிய என் அவா’ என்றும் இப்படிப் பகவத் விஷயத்தில் கண்ணழிவு அற்ற பக்தி விளைந்து போக ஆசைப்படுகிற
எனக்கு ஒரு துக்கம் இல்லை’ என்கிறார் –

————-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.
–3-10-6-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி –தள்ளத்தக்க குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டாய், சுத்த சத்துவமயம் ஆகையாலே தனக்கு மேல் ஒன்று இல்லாததான ஒளியுருவமாய்
பிறர்க்கு உள்ளது ஒன்று அன்றிக்கே, தனக்கே சிறப்பாகவுடைய விக்கிரகமானது.
நின்ற வண்ணம் நிற்கவே –-அங்கு இருக்கும்படியில் ஒன்றும் குறையாமல், விளக்கிலே கொளுத்தின விளக்குப் போன்று அங்கு நின்ற வண்ணம் இங்கு நிற்க-நித்திய ஸூரிகளுக்கு எப்பொழுதும் காண்பதற்கு விஷயமான தன்னைஊனக் கண்களுக்குப் புலப்படச் செய்து.-தூது சென்று, சாரதியாய் இருந்து தேரை ஓட்டித் தன் படியைத் தெரிவித்து, இச்செயலாலே உலகத்தாரை எழுதிக்கொண்டவன்’அம்மான்-அபேஷா நிரபேஷமாக-இவர்களுக்கு தன் படிகளை வெளியிடுகைக்கு வேண்டும் ப்ராப்தியைச் சொல்லுகிறது

புகழ் துற்ற யான் – அவனுடைய கல்யாண குணங்களை நெருங்க நுகரப்பெற்ற யான்.
ஓர் துன்பம் இலன் –‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய மங்கள விக்கிரகத்தைக்கொண்டு இவ்வுடம்போடே அணையலாம் படி அவன் கிட்டுவான் ஆயிற்ற பின்பு, நான் இச்சரீரத்தை விட்டு அங்கே போய் அவ்வுடம்போடே அணைய வேண்டும்,’ என்றால் எனக்கு அவன் அருமைப்படுத்துவானோ?-

———–

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே
.–3-10-7-

கொடுத்த அறிவுதான் பொதுவாய் ருசி பேதத்தாலே வழி விலங்கிப் போய்க் கேட்டினை விளைத்துக்கொண்டு இருக்கிறபடியைக் கண்டு, ‘நாம் ஒன்றை நினைத்துச் செய்ய, இவை ஒன்றைச் சூழ்த்துக்கொண்ட படி கண்டாயே!’ என்று பிராட்டி முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்ய, ‘அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாக முடியும்’ என்றபடி.

ஏதும் அல்லல் இலனே –-‘அவனுடைய கர்மங்கட்குக் கட்டுப்படாத தன்மையைச் சொல்லிய எனக்குக் கர்மங்கட்குக் கட்டுப்படுதலாகிய துக்கம் இல்லை,’ -லீலா விபூதி அன்வயமும் ஆகிற துக்கமும் இல்லை -என்கிறார். -புருஷோத்தம ஞானம் வந்தால் கர்மங்கள் தீண்டாதே -அந்த பிறவியிலே பிரபன்னன் போலே பேறு கிட்டுமே-அவன்றன்னையே பற்றி விடுவித்துக்கொள்ள இருக்கிற எனக்கு ஒரு துன்பமும் இல்லை,’ –அவன் காலைக் கட்டி நாம் கால் கட்டு விடுவித்திக் கொள்ளலாமே –

————

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே
.–3-10-8-

எங்கும் அமர் அழகன் –-மோக்ஷ உலகம் முழுவதும் வெள்ளமிடும் காந்தியை யுடையவன்.
எங்கும் சூழ் ஒளியன் – திருமேனி எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து அலை எறியும்படியான இலாவண்யத்தையுடையவன்.
அன்றிக்கே,
‘அழகு என்று அவயவ சோபையாய், சூழ் ஒளி என்பது சமுதாய சோபையைச் சொல்லுகிறது,’ என்னலுமாம்.
அன்றிக்கே,
‘எங்கும் அழகு அமர் – பாதம் முதல் முடி வரையில் அவயவங்களைத் தனித்துப் பார்த்தால்
‘இங்கே அழகு குடி கொண்டது, இங்கு அழகு குடி கொண்டது,’ என்னும்படி பாதாதி கேசம் பழிப்பு அன்று,
சூழ் ஒளியன் –
மோக்ஷ உலகம் அடங்கலும் காநதியின் நிறைவினாலே வெள்ளமிடாநிற்பவன்,’ என்னுதல்.அல்லி மலர் மகள் போக மயக்குகள் –-இதனால், இவ்வழகு காட்டில் எறித்த நிலவு ஆகாதபடி நெஞ்சோடே அனுபவ்விப்பாரைச் சொல்லுகிறது.-உளமார அனுபவிப்பார் -மார்பிலே இருந்தே அனுபவிப்பார் –ஆகியும் நிற்கும் – தன்னுடைய ஆனந்தத்துக்கு மேலே திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையால் வந்த ஆனந்தத்தையுடையனாய் இருக்கும்.
ஸ்ரீ யை அணைத்து ஆனந்தம் -ஸ்ரீ யபதி என்பதை அனுசந்தித்து ஆனந்தம் –
அம்மான் –ஆனந்த மயனாய் திருமகள் கேள்வனாய் இருக்குமவன் அன்றோ சர்வேசுவரன்?எல்லை இல் ஞானத்தன்-யஸ்யா வீக்ஷம் முகம் ததிங்கித பராதீ நோ விதத்தே அகிலம் -அவளுக்காகவே புருஷ பிரசவம் —-இவளுக்கும் ஆனைக்கு குதிரை வைப்பார் போலே அவனது ஞானம் –

கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே-பிராட்டி சந்நிதியும் உண்டாய், அவள் புருஷகாரமாக வேறு துணைக்காரணம் வேண்டாமலே நம் காரியம் செய்யுமவனுமாய், ‘இந்தப் பரமாத்துமா தானே சந்தோஷிப்பிக்கிறான்’ என்கிறபடியே, ‘ஆனந்தத்தை உடையவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,

—————–

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே
.–3-10-9-

ஒடுங்க விழுங்குகையாவது,-‘ஏழுலகும் உண்டும் இடமுடைத்து’ என்கிறபடியே, சிறிய வயிற்றிலே பெரிய உலகங்களை வைத்தால், ஈர்க்கில் அத்திக்காய்
கோத்தது போன்று விசைத்து வேறாய் இராமல், அடங்கித் தகுதியாய் இருக்கை. இப்படிப்பட்டவனை பெற்று ஒன்றும் தளர்வு இலனே – எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றலை உடையவனாய்ப் பிரமன் முதலானவர்களையும் காப்பாற்றுகின்றவனானவனை
வேறு பயன் ஒன்றையும் கருதாதவனாய் அடைந்த எனக்கு ஒரு துக்கம் உண்டோ?’ என்கிறார்.-நைமித்திகப் பிரளயமான போது, அவர்களால் காக்கப்படுகின்ற மூன்று உலகங்களையும் பாதுகாக்கையாலே அவர்களையும் பாதுகாப்பவன்’ என்கை.-

—————

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.
–3-10-10-

கிளர் ஒளி மாயனைக் கண்ணனை– நிரவதிக தேஜோ ரூபமான விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு வ ஸூ தேவ க்ருஹே அவத்தீர்ணன் ஆனவனை பற்றின எனக்கு-யான் என்றும் கேடு இலன் – ‘இவன் விருப்பம் இல்லாதவனாய் இருந்த அன்றும் சம்பந்தத்தாலே சத்தையை நோக்கி, இவன் விரும்புகிற அன்று கண்ணுக்குத் தோற்றி நின்று காக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் கேடு இல்லை,’ என்கிறார்.

மூர்த்தியை, தனி முதல் ஞானம் ஒன்றாய், பூதங்கள் ஐந்தை, இரு சுடரை, என்றும் எங்கும் பரந்து, தளர்வு இன்றியே, அளவுடை ஐம்புலன்கள்
அறியா வகையால் அருவாகி நிற்கும் வளர் ஒளி ஈசனை, கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலன்
’ என்று கூட்டுக.

வியாப்யமே மூன்றாம் பத்தின் -சாரம் -எங்கும் வியாபித்து -த்ரிவித காரணன் – சங்கல்ப ஞானத்தாலே -ஞானம் மிக்கு -வியாபகத தோஷம் இல்லாமல் -விபுவாக -அந்தர் பஹிஸ்ஸ சர்வம் –நியந்த்ருத்வம் தொடங்கி -அடுத்த பத்தின் சாரமும் கோடி காட்டி -பொசிந்து காட்டுவதை காணலாமே –

————

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.
–3-10-11-

‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்களை எல்லா உலகங்களிலும் பிரசித்தமாம்படி ஸ்ரீ வைஷ்ணவ செல்வத்திலே நடத்தி,-மேலே பரமபதத்திலே சென்றால் தன் செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.

நலன் இடை ஊர்தி பண்ணி – நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையா வது, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ.-வீடும் பெறுத்தி – பரம புருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து.
மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகம் – தன்னதான மூன்று விதமான உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான் ஒப்பு அற்ற தலைவன் ஆம்படி பண்ணிக் கொடுக்கும்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்-ஆராவமுதே–5-8-

March 1, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

புண்டரீகாக்ஷன் கண்ணிலே அன்றோ ஈடுபட வேண்டும் என்று பாங்கன் சொல்ல
தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –-கீழே 57 பாசுரம் ஐந்தே துறை பார்த்தோம்
ஆராவமுதே இதன் விவரணம்-மலர்க்கண் வளர்கின்றான் அங்கும் உண்டே
நீர் பஞ்ச பூதங்கள் நல்லது செய்ய அந்தர்யாமியான அவன் நம்மைத் துன்புறுத்துவதே -என்று உள்ளுறைப் பொருள்-1-வைகுந்தம் போல் போக்யம்-2-எனக்கு உயிர்-3-யோகிகளால் என்ன அரியன
மூன்று விஷயங்கள் ஆழ்வாரது கண்கள்-

அவதாரிகை-தலைமகள் கண் அழகில் ஈடுபட்ட தலைமகன் வார்த்தை இதுவும் தலைவன் பாங்கனுக்கு கழற்றெதிர் மறுத்தல்-

கீழே புலக்குண்டல புண்டரீகத்த -பாசுரம் போலே இதுவும் -நாயகி உடைய கண் அழகில் ஈடுபட்டமை
தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன் தன் உறாவுதல் கண்டு வினவிய பாங்கனைக் குறித்து உற்று உரைத்த பாசுரம் –

இப்படி இவருடைய ஞான வைலக்ஷண்யத்தைக் கண்ட அன்பர் நம்முடைய அளவிலேயே இவருடைய ஞானம் விஷயீ கரித்தது விலக்ஷண ஞானரான பரம யோகிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய் யன்றோ இருப்பது என்று தங்கள் ஸூஹ்ருத்துக்களுக்குச் சொன்ன பாசுரத்தை-தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன் தன்னுறாவுதல் கண்டு வினாவின பாங்கனைக் குறித்து உற்றது யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–தலைமகள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது கீழ் போலே

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே
– -66–தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் 
—48–ஸ்ரீவர மங்கை வாணன் திருவடிகளிலே சரண் புக்க விடத்திலும் அங்கே தம் அபேஷிதம் கிடையாமையாலே ஆஸ்ரித ரஷண தீஷிதனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் கார்யம் செய்யாமை இல்லை –-எங்கே கார்யம் செய்ய நினைத்து இருக்கிறான் என்று தெரியாது என்று ஸ்ரீ திருக் குடந்தையிலே ஸ்ரீ ஆராவமுதாழ்வார்-திருவடிகளிலே செல்லவே நம் அபிமதம் சித்திக்கும் என்று மநோ ரதித்து சென்ற இடத்தில் அவர் எழுந்து இருத்தல்-இருத்தல்-உலாவி அருளுதல்-இன் சொல்லுச் சொல்லுதல்-குளிர நோக்குதல்-அரவணைத்தல்–செய்து அருளக் காணாமையாலே -ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியும் யுண்டாய்–நமக்கு அபேஷையும் யுண்டாய் இருக்க அபிமதம் பெறாது ஒழிவோமோ-என்று துடித்து இவ்வளவிலும் திருவடிகளே உபாயம் என்னும் துணிவு குலையாது ஒழியப் பெற்றோமே என்று வருந்தி தரித்தாராய் தலைக் கட்டுகிற ஸ்ரீ ஆராவமுதத்தில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்–இவ்வளவான தசையிலும்-உபாயாந்தரங்களில் கண் வைக்கை யாகிற மாசு இன்றிக்கே இருக்கிற அத்யாவச்ய ஞானாதி குணங்களை யுடையரான ஸ்ரீ ஆழ்வார் தம்மை அடைந்து பிரபன்ன ஜனமான நமக்கு ஸ்வாமி

உண்ணாது இத்யாதி –பிராக்ருத போகங்களால் தரியாதாராய் –பிரக்ருதி-ப்ராக்ருதங்கள்-த்யாஜ்யம் -என்னும் புத்தியை உடையராய் –அவ் வாத்மா வஸ்து தான் ஸ்வதந்த்ரம் -என்று இருக்கை யன்றிக்கே –
ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக -ஈஸ்வர ஜ்ஞானத்தை உடையராய் –இது அவனுக்கு பிரகாரம் -என்று இருக்கும்படி –பரம யோகம் கை வந்துள்ள அவர்களுக்கும் –எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் –அவர்களும் இக் கண்ணுக்கு இலக்கானாராகில் அவர்களுக்கும் ஆஸ்ரயமான பரத்வம் தன்னையும் காற்கடை கொண்டு –இத்தையே அது அது -என்று எண்ணும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாய் உள்ளன –(கரையேற்றுவனுக்கும் அறு நான்கும் உபதேசித்த ஞானம் அன்றோ ஆழ்வாரது )-எரி நீர் வளி வான் மண்ணாகியகாரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம்  உப லஷணம்-
அக்நி-நீர் -காற்று -ஆகாசம் -பூமி -இவை அடைய தனக்கு விபூதியாக உடையவன் –எம்பெருமான் –
அவனுடைய விபூதி யோகம் தமக்கு பேறாய் இருக்கிறபடி –   அவனுடைய குணங்களோபாதி  
விபூதி யோகமும் தமக்கு உத்தேயமாய் இருக்கிறபடி –தனது வைகுந்த மன்னாள் –0மானாதி போல்
(மஹா நவமி சோலை போல் லீலா விபூதி போல் )ஆவது அழிவதாம் விபூதி போல் அன்றிக்கே –
ஒரு நாளும் அழியாததாய் –அவனுக்கு அசாதாரணமாய் –அந்தரங்கமாய் இருக்கும் நித்ய விபூதி உடன் ஒத்து இருக்கிறவள் –கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே –அப்படிப் பட்டவள் பக்கலிலே வந்தவாறே –பிரதான அவயவகமாய் –என் பக்கலிலே வந்தவாறே – அசேத்யமாய் –அதாஹ்யமாய் – அழியாதாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய் –பாதகமாம் இடத்தில் ஸ்வதந்த்ரமாய் –
கண்ணுக்கு விஷயமாய் நின்று பாதகம் ஆகா நின்றன –அரு வினையேன் –ரஷகம் ஆனவையே
பாதகமாம் படி பாபத்தை பண்ணினேன் –உயிரான காவிகளே –அவள் பக்கலிலே வந்தவாறே கண்ணாய் –(நிரூபித்தவாறே ) என் பக்கலிலே வந்தவாறே உயிராய் – இவை தான் நிரூபித்த வாறே
வடிவு சில காவிகளாய் இரா நின்றன –உயிரான காவிகளே –உயிர் தான்-கொண்டு நின்று பாதகம் ஆகுமா –

வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்-கண்ணாய் -பரம பதம் போல் பேர் இன்பம் வடிவு எடுத்த தலைவியின் கண் –யோகியர்க்கும்-எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்-யோகம் கை வந்த பரம யோகிகளுக்கும் சிந்தனைக்கு உரியன-அவர்கள் பரம் பொருளை சிந்தனை மாற்றி இவள் கண் அழகையே சிந்தனை செய்வார்கள்-அருவினையேன் உயிராயின-பிரிந்து ஆற்றாமையும் துடிக்கும் அரு வினையேன் -உயிர் போலே தரிக்க முடியாமல் பண்ணுமே –

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அத்யசனமும் அதி நித்தரையும் யோக விரோதியாம் என்று துறந்து-யுக்தாஹார விஹாரராய்-யுக்த ஸ்வப்ந அவ போதராய்க் கொண்டு நிரந்தர த்யான தத் பரரான ஸநகாதி பரம யோகிகளுக்கும் ஹ்ருதயமாய்க் -(எண்ணாய் )கொண்டு நிரந்தர அனுபாவ்யமாய் மிளிர்ந்து தோற்றும் ஸ்வ பாவத்தை யுடையனவாகா நிற்கும்(ஆழ்வாரது கண்கள் )–எரி நீர் வளி வான் மண்ணாகிய வெம்பெருமான்
பிராணிகளுக்கு சீதோஷ்ண பரிஹார ரூபமாயும் (எரியும் நீரும் ) ஆஸ் வாஸ கரமாயும் (காற்று)
அவகாஸ ப்ரதமாயும் தாரகமாயும் யுள்ள பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்மாவாய் அக் கணக்கிலே நமக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய–தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்-அசாதாரணமாய்
அழிவற்ற தேசம் போலே நித்ய அநுபாவ்யை யானவளுடைய கண் என்ற பேராய்–அருவினையேன் உயிராயின–நிரந்தர அனுபவம் பண்ணப் பெறாமல் பிரிகைக்கு–அடி முடி காண ஒண்ணாத (அநாதியான -அந்தமும் இல்லாத ) பாபத்தை யுடையேனான எனக்கு முடிய ஒண்ணாத படி பிராணனாய்ப் புக்கு நில்லா நிற்பன வாயின–காவிகளே— ராக உத்தரதையாலே செங்கழுநீர்த் தடாகம் போலே இருக்கையாலே காவி என்னாலானவை--கண்ணாய் அருவினையேனு யிராயின காவிகள் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்-என்று அந்வயம்–இத்தால் ஆஸ்ரிதரான அன்பருக்கு தாரகமாய்
ராகோத்தரமான ஆழ்வாருடைய ஞானமானது அசநாத்ய தீதராய் அசங்குசித ஸ்வ பாவராய் நிரந்தர அனுபவ தத் பரரான நித்ய யோகத்தை யுடைய ஸூரிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய்க் கொண்டு
விளங்கித் தோற்றும் ஸ்வ பாவத்தை யுடைத்தாகா நிற்கும் என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
பிராகிருத போகங்களால் தரியாதாராய் ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற புத்தியே யன்றியே
உபாதேயமான ஆத்ம வஸ்து உத்தேச்யம் என்னும் புத்தியை யுடையராய் அவ்வாத்ம வஸ்து தான் ஸ்வ தந்திரம் என்று இருக்கை அன்றிக்கே ஆத்ம யாதாத்ம்ய ஞான பூர்வகமாக ஈஸ்வர ஞானத்தை யுடையராய் இது அவனுக்கு பிரகாரம் என்று இருக்கும் படி பரம யோகம் கை வந்து இருக்குமவர்களுக்கும்-எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்–அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானார்கள் ஆகில் தங்களுக்கு ஸூபாஸ்ரயமான பரதத்வம் தன்னையும்
காற்கடைக் கொண்டு இத்தையே அது அது என்னும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாக யுடையனவாய் யுள்ளன-எரி நீர் வளி வான் மண்ணாகிய-காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம் உப லக்ஷணம்-அக்னி நீர் காற்று ஆகாசம் பூமி இவை யடையத் தனக்கு விபூதியாக யுடையவன்-வெம்பெருமான்–அவனுடைய விபூதி யோகம் தனக்குப் பேறாய் இருக்கிற படி–தனது வைகுந்த மன்னாள்-மானாவிச்சோலை போலே ஆவது அழிவதாம் இவ்விபூதி போல் அன்றிக்கே ஒரு நாளும் அழியாததாய் அவனுக்கு அஸாதரணமாய் அந்தரங்கமான நித்ய விபூதியோடே ஒத்து இருந்தவள்
அவனோடே அழியாத விபூதியோடே ஒத்து இருந்துள்ளவள்–கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே–அப்படிப்பட்டவன் பக்கலிலே வந்தவாறே பிரதான அவயவமாய் என் பக்கலிலே வந்தவாறே அச்சேத்யமாய் அதாஹ்யமாய் அழியாததாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய் பாதகமாம் இடத்தில் ஸ்வ தந்திரமாய் நின்று பாதகமாகா நின்றன–அறு வினையேன்-ரக்ஷகமானவை தானே பாதகமாம் படி பாபத்தைப் பண்ணினேன் 

ஸ்வாபதேசம் –ஆழ்வார் ஞானத்தின் சிறப்பை பாகவதர்கள் அன்பர்களுக்கு சொல்லும் பாசுரம் –
பரமபதம் போலே அழிவற்ற -அனுபவிக்கத் தக்க ஞானம் –எங்களுக்கு மட்டும் இல்லை நிறைந்த அனுபவம் செய்யும் நித்ய ஸூரிகளுக்கும்-இன்பம் பயக்குமதாய்-யாவரும் மகிழ்ந்து சிரஸ் மேல் வைத்து கொண்டாடும் படியான ஞான வகைகளை காவி மலர்கள் என்கிறது –

ஸ்வா பதேசம்-இத்தால் ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை கண்டு அனுபவிக்கும் பாகவதர்களுக்கு –தேவு மற்று அறியேன் -என்னும் படி இறே இருப்பது –
அவர்கள் அதை ஆதரிக்கிறது-பகவத் சம்பந்தத்தால் இறே –அதுக்கு அடியான பகவத் விஷயத்தை அநாதரித்து –இவரை ஆதரிக்க-வேண்டும்படி இவருக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம்  தலை நிரம்பின படியை சொல்கிறது –சரம அவதியை-கண்டு அனுபவித்தவர்கள் பிரதம அவதியில் நில்லார்கள் இறே –
அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகமாட்டானே

தாத்பர்யம்-ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீரியில் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்-நாயகி நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-தோழன் இந்த அளவில் இவளின் கண் அழகில் உனக்கு ஈடுபாடு கூடாது என்ன அதற்கு மறுத்து தலைவன் பேசுகிறான்-செங்கழு நீர் போல் குளிர்ந்து மணமுடைய-கண் -ஆழ்வாரது ஞானம் –இத்தைக் கொண்டே-எனக்கு பிராண தாரகம் போல் நல் ஜீவனாய் -உள்ளதே-ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகர் போல் அபரிச்சின்ன போக்யம் உள்ள கண்கள் இவற்றில் ஈடுபட்டது நான் மட்டும் அல்ல–நித்ய ஸூரிகளும் ––அன்ன பானாதிகளை விட்டு சம்சாரம் த்யாஜ்யம் ஸ்ரீயப்பதியே உத்தேச்யம் என்று இருக்கும் மஹா யோகிகளுக்கும் இக்கண்ணைக் கண்டதும் வேறே ஒன்றில் கண் வைக்க இயலாதே இந்தக் கண்ணை நித்தியமாக அனுபவிக்கப் பெறாத பாக்யம் இழந்தேன் என்று வருந்துவதாகச் செல்லும் பாசுரம் –

5-8-ஆரா அமுதே! ப்ரவேஸம்

ஸ்ரீ நாதமுனிகள் திருவவதாரம் -823–ஸ்ரீ கீதாச்சார்யன் தானே மனுவுக்கு அருளிச் செய்ததை மீண்டும் வெளியிட்டால் போலே அன்றோ –
திராவிட ஸ்ருதி தர்சகாய நம-திரு நாமம் ஸ்ரீ ஆராவமுத ஆழ்வாருக்கு -அகதிகளுக்கு ஒரே சரண் அன்றோ இவன் –
மகர சங்கராந்தி–ஸ்ரீ கோமள வல்லித் தாயார் – பொற்றாமரை -தேரோடு இற ங்கி திருக் கல்யாணம் –
ஸ்ரீ ஆராவமுத ஆழ்வார் -ஸ்ரீ திரு மழிசை பிரான்
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அழியாமல் இருக்க ஆராவமுதம் -சரீரம் அழியாமல் இருக்கவே அமுதம் -உப்புச் சாறு –

ஸ்ரீ சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து
அநந்ய கதியாக-வேறு கதி இல்லாதவராய்க் கொண்டு சரணம் புக்கார்;
இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகங்காட்டாதிருக்க;
கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே,
“இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல்,-ஆகிஞ்சன்யம் கீழே –
மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் -அநந்ய கதித்வம் இதில் –
என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்;
தரித்த இது தான் திருக் குடந்தை யளவும் கால் நடை தந்து போகைக்கு உடலாயிற்று.

“ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து,
‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
இங்கே, ‘வேறு ஒன்றாலே பேறு என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல்’ என்றிருக்கையாலே,
“ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பதற்கு, மேல் அருளிச் செய்த மூன்று யோசனைகளையும் தவிர,
(உபாயம் ப்ராப்யம் -க்ருஹம் –
இரண்டுமே உபாயம்
சபதம் இட்டு சொன்னது -மூன்றும் )
இன்னமும் ஒரு யோசனை உண்டு என்று தோற்றுகிறது. அதாவது,
எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும் தந்தாய் என்பது.
“நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை நீக்குகிறது;
“நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை நீக்குகிறது;
ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்” என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும்.
ஆகிஞ்சந்யமாவது, வேறு உபாயம் இன்மை. அநந்யகதித்வமாவது, வேறு இரக்ஷகரில்லாமை.

தரித்த இது தான் திருக் குடந்தையளவும் கால்நடை தந்து போகைக்கு உடலாயிற்று.
என் தான்? இங்கு, தம் விருப்பம் கிட்டா தொழியவும் அங்கு ஏறப் போக வேண்டுவான் என்? என்னில்,
வஸ்து ஐக்கியம் உண்டே -பிரபத்தி ஒரு தடவை தானே பண்ண வேண்டும் -விசுவாசம் குலையாதோ என்னில் –
‘ஒரு கால் சரணாகதி செய்தோம், அது பலித்தது இல்லை’ என்னா,
நாஸ்திக புத்தியாலே விசுவாசம் குலைந்து ருசியும் நெகிழுமவரன்றே;
“அடியார்களுக்காக எழுந்தருளி யிருக்கிறவன் நம் காரியம் செய்து தலைக் கட்டாமை இல்லை,
‘இன்ன இடங்களிலே செய்யக் கடவோம்’ என்று அறுதி யிடப்பட்டதா யிருக்குமே அன்றோ,
ஆன பின்பு, இங்குச் செய்யப் பார்த்திலனாகில் மற்றோர் இடத்தில் செய்கிறான்;
(ராஜா ஆசன பேதத்தாலே கார்யம் செய்யுமா போல் )
ஸ்ரீ ரெங்கம் போன்ற இடங்களில் சரண் அடைந்த கலியன் திருக் குருங்குடியிலே பேறு பெற்றாரே –

இனித் தான், ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திருமுடி சூட்ட வேண்டும்’ என்று பாரித்துக் கொண்டு செல்ல.
‘பதினான்கு ஆண்டும் கழித்தல்லது மீளோம்’ என்ற ஸ்வதந்திரனே அன்றோ;
ஆகையாலே, நமக்கு நான்கு நாள் தாழ்த்ததே யாகிலும் நம் காரியம் செய்யாமை இல்லை” என்று பார்த்து,
ஸ்ரீ திருக் குடந்தையிலே சென்று புகவே நாம் விரும்பினவை அனைத்தும் கிட்டும்,
நமக்கு ஒரு குறையும் இல்லை’ என்று ஸ்ரீ திருக் குடந்தையை அடைந்தார்.

அவ்வாறு அடைய, ஸ்ரீ பரதாழ்வான் ‘இராச்சியத்துக்கு நிமித்தமானவனானேன்’ என்றதாலே ஒரு புண்பாடும்,
தாயைக் கொண்டு இராச்சியத்தை வாங்கிப் பெருமாளைக் காடேறப் போகவிட்டான்’ என்று நாட்டார் சீறுபாறு என்றிருப்பார்கள்”
என்றத்தாலே வந்ததொரு அச்சத்தையுமுடையவனாய்க் கொண்டு;
(ஆழ்வார் ப்ரவ்ருத்திகளை உபாயாந்தரம் என்று சங்கை கொள்வானோ என்ற புண்பாடும்
அன்னை ஊரார் என் சொல்வார் என்ற பயமும்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று சொல்லிக் கொள்பவர் அன்றோ ஆழ்வாரும் )
நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,
ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.
உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ!
என் பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திரு அருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து;

அம்பு எய்வார் படை திரட்டிக் கொண்டு போமாறு போல, திரு வயோத்தியிலுள்ளாரில் மரங்கள் அகப்பட ஆர்த்தியில்
தன்னில் குறைந்த பொருள்கள் இல்லை அன்றே, நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால்
மீளாமை இல்லை என்று பார்த்து “இந்த மந்திரிமார்களோடுங்கூட என்னால் தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட தேவரீர்,
பின் பிறந்தவனும் சிஷ்யனும் தாசனுமான அடியேனுக்குத் திருவருள செய்ய வேண்டும்” என்கிறபடியே,
இவன் செல்ல;

ஸ்ரீ பெருமாளும் “இராச்சிய தந்திரங்களில் குறைவு படாமல் நடத்தா நின்றாயே?
காரியங்கள் செய்யுமிடத்தில் மந்திரிகளோடு கூடிச் செய்யா நின்றாயே? என்பன போலே
இவனுக்கு இடம் அற வார்த்தைகள் கேட்டாற்போலே;

இவர் அடைந்த இடத்தில் திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி யருளுதல்,
திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்தல், அணைத்தல் செய்யக் கண்டிலர்.
“அந்த ஸ்ரீ கிருஷ்ணன், என்னை அக்ரூரனே! என்று அருளிச் செய்வர்” என்றாற்போலே
பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோ ரதம் பெற்றானே அன்றோ;
(அக்ரூரரும் யாதவ வம்சம் )
அப்படியே தம்மையும் கிட்ட வந்து அணைக்கப் பெறாமையாலே மிகவும் துக்கித்தவராய்,
இனிமையாலும் ஈடுபட்டு, அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து,
(ஆரா அமுதம்-போக்யதை -செந்தாமரைக் கண்ணன் -ஸுந்தர்யம்
உனக்கு ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ -போர நொந்து )
பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறா விட்டால்
அலமந்து நோவு படுமாறு போலே, அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு,
இன்னம் எத்தனைத் திரு வாசல் தட்டித் திரியக் கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக் கட்டுகிறார்.
(அநந்ய கதி ஞானம் உடையவர் அன்றோ -இவன் நித்ய சந்நிதி உள்ள வேறே திவ்ய தேசங்களைச் சொன்னவாறு )

எட்டாம் திருவாய் மொழியில் கீழ் -ஸ்ரீ வானமா மலை திருவடிகளில் அனுபவத்தை அபேக்ஷித்து அவன் தம் திருவடிகளில்
உபாய பாவத்தையும் பிரகாசிப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டாராய் பின்பும் அனுபவம் சித்திக்கக் காணாமையாலே அவசன்னரான இவருக்கு
ஆராவமுத ஆழ்வார் தம் வடிவு அழகை பிரகாசிப்பிக்க -அங்கே தம் அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்து
ஆராவமுதாழ்வாருடைய நிருபாதிக சம்பந்தத்தையும்
சம்பந்த கார்யமான அவதார உஜ்ஜ்வல்யத்தையம்
அவரை ஒழியத் தம்மை அந்நிய நிரபேஷராக்கின படியையும்
அவருடைய அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
மஹாத்ம்ய ப்ரகாசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
நித்ய ஸூரி ஸேவ்யமான நிரதிசய போக்யத்தையும்
போக்யதா பிரகாசகமான விக்ரஹ வை லக்ஷண்யத்தையும்
விபரீதமே பலிக்கிலும் விடாதபடியான தம்முடைய அநந்ய கதித்வத்தை பிரகாசிப்பித்த படியையும்
அனுமதியையும் பிறப்பித்து அனுபவிப்பிக்கும் ஆகாரத்தையும்
ஆந்திர அனுபவ விஷயமான அதிசயித சாரஸ்யத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டரானவர் ஆலோக அலாபாதிகளாலே நம்மை அனுபவித்திலரே என்று
ஸூத்தி சாஷாத்கார ஸந்நிஹிதரான அவர் தம்மையே நோக்கி அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிட்டு
எல்லா அவஸ்தையிலும் முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளே யல்லது உபாயம் இல்லை என்று பிரதிபத்தி பண்ணித் தலைக் கட்டுகிறார் –

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
–5-8-1-

முற்படக் காட்சியாய், அதன் பின்னர் அணுகி, பின்னர் ஸ்பரிசமாய், இப்படியே அன்றோ அநுபவப் பிரகாரங்கள் இருக்கின்றன;-அத்துணைக் கிரமங்களைப் பார்த்திருக்க ஒண்ணாதபடி-ஆரா அமுதே--சர்வாதிகாரமுமாய், எப்பொழுதும் உண்ணக் கூடியதாய், பிரஹ்மசரியம் முதலான வற்றினின்றும் நழுவுதலால் வரும் குற்றங்களையும் தானே போக்கக் கூடியதாயிருக்கும்.-தான் தன்னை அநுபவிக்கும் போதும் கூட்டுத் தேட வேண்டும்படி யாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம்.-ஆரா அமுதே – இத் திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச் சொல்லே ஆயிற்று.

வட தேசத்திலே லோக சாரங்க மஹாமுனிகள் வசித்துக்கொண்டிருக்க, இங்கேயுள்ள ஒருவன் அங்கு ஏறச்செல்ல, ‘பிள்ளாய்! தென்தேசத்தில் விசேஷம் என்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க, அதனைச் சிஷ்டர்கள் மேற்கொண்டு போரக் கொண்டாடிக் கொடு போகா நின்றார்கள்’ என்ன,
அதிலே உனக்குப் போவது ஒரு பாசுரத்தைச் சொல்லிக் காணாய்’ என்ன,‘“ஆராவமுதே’” என்கிற இத்துணையே எனக்கும் போம்” என்ன,
நாராயணன் முதலான நாமங்கள் கிடக்க, இங்ஙனேயும் ஒரு பெயர் உண்டாவதே’ என்று அதனைக் காண மிக்க ஆவலுடையவராய், இச்சொல் நடையாடுகிற தேசத்து ஏறப்போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார்.

அடியேன் –-மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்,
இனிமைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார்.-இளைய பெருமாள் -“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் “அவர் குணங்களால் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றாற்போலே குணங்கள் தானே ஈர்க்கும்-

நான்’ என்று இருக்கக்கூடிய இவர் தாம் ‘அடியேன்’ என்கிறது, விஷயத்தினுடைய இனிமையின் மிகுதியே அன்றோ;-அப்படியே சரீரமும் விஷயத்திற்கு வசப்பட்டதாய் அழிந்தபடி.-சேஷத்வமே உருவமான ஆத்மாவைத் தன் வழியே இழுக்கை தவிர்ந்து
அதன் வழியே தான் ஒழுகும்படியாயிற்று விஷயத்தினுடைய இனிமை. –
ஞானியை விக்ரகத்துடன் ஆராதிக்கும் -திருமேனி ஆத்மா தத்வம் ஆனதே –சேதனம் என்றும் அசேதனம் என்றும் கூறப்படுகின்ற வேற்றுமை அற அழிக்கவல்ல உன் பக்கலிலே அன்புக்கு இருப்பிடமாகை தவிர்ந்து அன்பு தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இரா நின்றது என்பார் ‘நின்பால் அன்பாயே’ என்கிறார்.–கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்றோ ‘உருக்குகின்ற’-அழிக்கிறவன் ‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே காணும் இவனும் உருக்கி அழிக்கிறபடி.-தேசமான அணிகலனும் இவர் கை கூப்புச் செய்கையே அன்றோ.

நெடுமாலே’-எதிர்த் தலையில் அழிவு கண்ட பின்பே அன்றோ இத் தலையில் அழிவு-அவனுடைய அழிவு சொல்லும் போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது.-மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன்-அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம்-பரத்வமும் நீர்மையும் உருக வைக்கிறது-என்னில் முன்னம் பாரித்து தான் முற்றப் பருகினான் –-

சீர் ஆல் செந்நெல் கவரி வீசும் – மிக்க கனத்தை யுடைத்தான செந்நெற் கதிர்களானவை திருக் கண் வளர்ந்தருளுகிற அழகைக் கண்டு-கைங்கர்யம் செய்வாரைப் போலே அசையா நிற்கும்.-சீர் – கனமும், அழகும்-ஆராவமுதாழ்வாருக்கு அமுதுபடி யாகிற சீர்மை-எம்பொழுதும் செந்நெற்கள் உள்ளன என்பார் ‘வீசும்’ என நிகழ் காலத்தாற் கூறுகிறார்.–நித்ய ஸூரிகளாய் வந்த சீர்மை

கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார்.-‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.
கிடந்தாய் கண்டேன் –-“சுகமாகத் தூங்குகிறவன்” என்கிறபடியே, கிடை அழகினைக் கண்களாலே காணப்பெற்றேன்,-நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன். என்றது, எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், ‘என் செய்தாய்’ என்று வினவுதல், அணைத்தல் செய்யப் பெற்றிலேன் என்றபடி

எம்மானே--இது நம்மது’ என்று இரா தொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே.-சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ –
வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியா நின்றது -ஸ்தநந்த்ய பிரஜை தாய் அறிந்தால் முலை முலை என்னுமா போலே சம்பந்த ஞானம் அன்றோ கூப்பிடப் பண்ணுகிறது –என்கிறார் –

—————

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?
–5-8-2-

எம்மானே! என் நான் செய்கேன் –-உடைமையோ! உடையவனோ உடைமையை நிர்வஹிப்பார்.-நீயே உன் காரியத்தைச் செய்து தலைக் கட்டிக் கொள்’ என்கைக்கு வெறும் நானேயாய் இருந்தேனோ.-பரதந்த்ரன் அடியேன் அன்றோ -ஸ்வா தந்த்ரன் அல்லன்-சுத்த ஸ்வரூபனாகையாலே தன் படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத் தன் பேறாகத் தானே காட்டக் கண்டேன்.- சிறிது மயர்வு கிடக்க நீ அருளினாயாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே.-

என்னை ஆள்வானே –காட்டுகிறபோது தெரியக் காட்டி, பின்னர் என் வழியே யாக்கி என்னைக் கை விட்டாயோ. என்றது,-அஞ்சிறைமடநாராய்”, “மாசறு சோதி” தொடக்கமான திருவாய்மொழிகளிலுண்டான வியசனங்களையும் போக்கி, குண ஞானத்தாலே தம்மைத் தரிப்பித்துக்கொண்டு போந்த படியைத் தெரிவித்தபடி.

எம் மா உருவும் ஆவாய் –-எனக்காகவும் அடியார்கட்காகவும் நீ படும்பாடு அறிவுதியே-எவ்வகையாலும் விலக்ஷணமான விக்கிரஹங்களை மேற்கொள்ளுகின்றவனே!-பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம்-திருமேனியாக இருக்கை.-வேண்டுமாற்றால் – “தனக்கு வேண்டு உருக்கொண்டு” என்கிறபடியே, இச்சையாலே என்னுதல்.-அடியார்கள் வேண்டுமாற்றால் என்னுதல்;
“தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” -முதல் திருவந். 44.-என்னக்கடவதன்றோ.
அன்றிக்கே,-‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு-“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்கிறபடியே, அடியார்களைக் காக்கும் பொருட்டு நீ கொள்ளாத வடிவு உண்டோ என்னுதல்.
எல்லா வடிவங்களும் அவன் கொண்டவையாகையாலே சிலாக்கியமாயிருக்கிறபடி;

கர்மம் அடியாக இவன் பிறக்குமாறு போலே அன்றோ அநுக்கிரஹம் அடியாக அவன் பிறக்கும்படி என்பார்-“வேண்டுமாற்றால் ஆவாய்” என்கிறார்.
இருவர்க்கும் பிறவி ஒக்கும். இவனுக்குக் கர்மங்கள் அழியப் பிறவி நீங்கும்,
இவன் கர்மங்கள் அவன் காலிலே குனியப் போம்; அவனுக்கு நித்தியமாகச் செல்லா நிற்கும்.-இனி, அவனுக்குக் கர்மம் என்னப் பார்க்கிறது, அநுக்கிரஹத்தை அன்றோ, அதுதானும் நித்தியமே அன்றோ அவனுக்கு.-இவனுக்கு இவன் தன் அளவிலே பிறக்க அமையும், அவனுக்கு எல்லார்க்குமாகப் பிறக்க வேணுமே.-இவனுக்குக் கர்மங்காரணமாக வந்ததாகையாலே தன் பொருட்டேயாயிருக்கும், அவனுக்கு அநுக்கிரஹம் காரணமாக வந்ததாகையாலே பிறர் பொருட்டேயாயிருக்கும்.-எழில் ஏறே ––பண்டு இல்லாத எழிலும் உண்டாயிருக்கை.-கர்மத்தால் பிறக்கில் அன்றோ நிறக்கேடாவது. பல பிறப்பாய் ஒளி வரும் முழுநலமே அன்றோ.பட்டி மேய்ந்த ஓர் காரேறு – என்கிறபடியே, ‘பிறக்கப் பெற்றோம்’ என்னும் மேனாணிப்பை யுடையவனாயிருக்கும்.-ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்-அஹம்வோ பாந்தவோ ஜாதோ-சூழ்த்துக் – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.

என் நான் செய்கேனே –-இவை இரண்டும் மலர்ந்தால் அல்லது தரியாதிருக்கிற நான் என் செய்கேன்? திருக் குடந்தையிலே தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டுகள் தேனைக் குடித்துக் களியா நின்றன,
இத் தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டு இங்ஙனே பட்டினி கிடந்து போமித்தனையோ! –-தெய்வ வண்டு அன்றோ
‘இக் கூப்பீடு உருவச் செல்லும்’ என்று இருக்கிறாயோ, சென்றற்றது கண்டாய்.
‘இவை ஒழிய -திருக் கண்கள் கடாஷம் ஒழிய -மது பானம் செய்யோம்’ என்கை யன்றோ
இவர்க்கு இங்ஙன் பட வேண்டுகிறது.
இனி, இவை அலர்தலாவது, விசேஷ கடாக்ஷம் பண்ணுகை காணும்.-அவன் கண் விழியாத போது இவர் கண் விழிக்க மாட்டாரே.

—————–

என்னான்  செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

என்மேலே விட்டிருக்கிறாயோ? பிறர் மேலே விட்டிருக்கிறாயோ? நீயே செய்யக் கடவதாக நினைத்திருக்கிறாயோ?-என் நான் செய்கேன்’ என்றதனால் ‘நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர்,-என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று;
க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக்கட்டுவதாக
நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார்.-“என் நான் செய்கேன்’-என்றவிடத்தில் இம் மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி 

‘யாரே களை கண்’ என்றதனால்,-அமிழ்ந்துகிறார் அமிழ்ந்துகிறாரை எடுக்கவோ?
ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கும் ஆள் அல்லாதவர்கள்-என் காரியம் செய்யவோ? -நெறி காட்டி நீக்குதியோ

என் நான்செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் –-என்னை அறியாயோ!
பிறரை அறியாயோ!-உன்னை அறியாயோ-என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது.-ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்ற இம் மூன்றாலும், உன் அபேக்ஷை ஒழிய, முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை- இம் மூன்றாலும், ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும், அவனே ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப் படுகின்றன 

உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –-உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –‘யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே. பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்-காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே
ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.

‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி,-‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.

கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்–இவருடைய உபாயம் அரண் செய்து கிடக்கிறபடி. ‘அவனே உபாயமும் உபேயமும்’ என்று அறுதியிட்டவர்கள்-அத்தலையில் உண்டான பரிவாலே அவனைக் காக்கை பணியே அன்றோ.

உன தாள் பிடித்தே செலக் காணே--உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும்படி பார்த்தருள வேண்டும்.-காற்கூறும் விடாதபடி பார்த்தருள வேண்டும்.‘ஒன்றும் குறை வேண்டேன்’ என்ற பின்னர், வந்து குறை நிரப்பக் கண்டிலர்;
இனி அநுபவம் பெற்றபோது பெற, ‘உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ என்கிற இந்த உறுதிகுலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.
அடிவிடில் உறுதி குலையுமே, அடியே பிடித்து ஜீவித்தவர் அதனை விடாரே இப்போதாக. அத்யவசாயம் இது,-ருசியில் வந்தால் பரபக்தியை யுடையவர், விளம்பத்துக்குக் காரணம் என்? என்னில்,-பக்தி விபாகத்துக்காகவும், இவருடைய பிரேமம் வழிந்த சொல்லால் நாட்டினைத் திருத்துகைக்காகவும்.-

————————-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.
–5-8-4-

எல்லாவுலகுமுடைய ஒரு மூர்த்தி” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் -“மூர்த்தி” என்பது விக்கிரஹமாய், அதனாலே அழகினை விவக்ஷித்து, வடிவழகைக் காட்டி எல்லா உயிர்களையும் காற்கீழே இட்டுக் கொள்ளக் கூடியவனே!-அழகைக் கொண்டே நாதன் ஆனவன் –மூர்த்தி’ என்ற சொல்லானது, விக்கிரஹத்துக்கும் பெயராய், ஐஸ்வரியத்துக்கும் பெயராய் இருக்கும்.-செல்வந்தர் என்றபடி-அப்போது, இவனே எல்லா உலகங்களுக்கும் சேஷி-ர்வாஹகனாய் –ஒப்பற்றவனான –சர்வேச்வரன்

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்--நீ ஸ்வரூபங்களால் வேறுபட்டவனாய்க் கொண்டு அங்கே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,-உன்னால் அல்லது செல்லாதாருடைய தேசத்தை விரும்பிப் படுகாடு கிடவா நின்றாய்,-கிரமப் பிராப்தி பற்றாதபடி அன்பு செலுத்தியிருப்பவர்களாதலின் ‘நலத்தால் மிக்கார்’ என்கிறது.-உன்னைக் காண்பான் நான்-
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாக இருக்க, அடியார்களை விடமாட்டாதே திருக் குடந்தையில் திருக் கண் வளர்ந்தருளுகிற உன்னை,-மிக்க காதலையுடைய நான், அத்தலை இத் தலையாய்க் காண ஆசைப்பட்டு அலமாவா நின்றேன்.-உன்னைக் காண்பான் நான்-
காண்கிறவன் நான் அன்றோ, காண்கிறது உன்னை அன்றோ; ஆன பின்னர், எங்ஙனே ஆறியிருக்கும்படி.-உன்னை –-மேலே கூறிய –ஆராவமுதே –மூர்த்தி –இரண்டு இனிமையும் உண்டே –

உன்னை’ என்னா நிற்கச் செய்தே ‘ஆகாசத்தை நோக்கி’ என்பான் என்? என்னில்,
‘அலப்பாய்’ என்றாரே அன்றோ, –கலக்கத்தின் காரியம் இருக்கிறபடி.
விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே.-ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப் பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.-இனிமையையுடைய உன்னை-ஆகாசத்தை நோக்கி என்பதற்கு, என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து” என்று ஆண்டான் அருளிச் செய்வர்.
அன்றிக்கே,-வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சு விட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களை யுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்
“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப: விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-ஸ்ரீராமா. அயோத். 13 : 16.-இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.

அழுவன் தொழுவன்-உபாசகர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன்,-பிரபந்நர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன்.-சபலர் செய்யுமதனையும் செய்யா நின்றேன்,-விரக்தர் செய்யுமதனையும் செய்யா நின்றேன்.

—————-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.
–5-8-5-

அழுவன் –-குழந்தைகள் செய்வதனையும் செய்யா நின்றேன்.-“மற்றவள் தன் அருள் நினைந்து அழுங்குழவியதுவே போன்றிருந்தேன்” என்னக் கடவதன்றோ-.தொழுவன் –
வேதாந்த ஞானமுடையார் செய்வதனையும் செய்யா நின்றேன்“அஞ்சலி: பரமா முத்ராஆடிக் காண்பன் – இத்தனை சோறு இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் -பசியர்-ஆடுமாறு போலே ஆடியும் பார்ப்பன்.-என் பட்டால் பெறலாம்’ என்று அறியாரே. —–பாடி அலற்றுவன் – காதலால் வழிந்த சொல் பாட்டாய், அது தானும் அடைவு கெடக் கூப்பிடுகை, அலற்றுகை.

தழு வல் வினையால் –-இப்படிப் பட்டாலும் காண ஒண்ணாதே அன்றோ -‘உடன் வந்தியான-வர்த்தியான- வல்வினை.-என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற பிரபலமான பாவத்தாலே.-பக்தியை, பாவம் என்கிறது,வேண்டாததைக் கொடுப்பது பாபம் ஆகையாலே.
வாராயோ என்றார்க்கு-சென்றேன் என் வல் வினையால் –போலே –சத்ருக்னன் அநக போலே –

செந்தாமரைக் கண்ணா
1-கையிலே நிதி உண்டாயிருக்க வறியர்க்கு-ஆர்த்தருக்கு- இடாதாரைப் போலே.
2-வேறு முகத்தாலே -சம்பந்தத்தாலே -என் ஜீவனமாய்க் கிடக்கிறாய் இல்லை,
3-என் ஜீவனம் ஒருமுகம் -ஒரு லஷ்யம்-செய்து கிடக்கிற தன்றோ.

தம்முடைய ஆற்றாமை பேற்றுக்குக் காரணம் அன்றிக்கே, அது பிரகிருதியாய்,-ஸ்வரூபம் – ‘அவனாலே பேறு’ என்று இருக்கிறபடி.-வேறு பிரயோஜனங்களை விரும்பாதார் திறத்தில் காரிய சிந்தையும் அவனதாக இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-தேக யாத்ரை கர்மாதீனம் -ஆத்மா யாத்ரை கிருபாதீனம் –த்ருஷ்டம் அத்ருஷ்டம் இரண்டுக்கும் நமக்கு பொறுப்பு இல்லையே-கைங்கர்யத்திலே நாம் கண் வைக்க வேண்டும் –

——————–

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே
.–5-8-8-

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் – நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், -ரஷணம்-அவன் கார்யம் தானே“நீயே உபாயமாக எனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை;-அறிவிப்பே அமையும் –என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை-களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ?-பரிகரம் இல்லை என்னப் போமோ;-நேமிப்படையாய்-இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ?-தொழுவித்துக் கொள்ளும் கைக்கு பரிகரம் உண்டு -சங்கு சக்கரம் ஏந்தும் கையான் –தொழும் கைக்கு அஞ்சலி பரிகரம் உண்டே-வளைவாய்-உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ? ‘’ –மா ஸூ ச சொல்ல வேண்டாமோ

குடந்தைக் கிடந்தாய் மா மாயா – சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது -ஸூ லபன் அன்று என்ன ஒண்ணாது -ருசியுதபாதகன் அன்று என்ன ஒண்ணாது-திருக் குடந்தையிலே வந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண் வளர்ந்தருளுகிறது அடியார்களுக்காக அன்றோ. நீ “மாம்” என்றதன் பின் இவ்வருகுள்ள ஏற்றமெல்லாம் பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி.-இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத நீ இசை – அபேக்ஷிதம் பெற்றிலேனேயாகிலும், நான் விரும்பியது சித்திக்கும்படி உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற் பண்ணி அருளவேண்டும்.-அநுபவம் கிடையாமையாலே, ‘அதற்கு அடியான உபாய அத்யவசாயமும் குலைகிறதோ’ என்று அஞ்சி, இது குலையாமல் பார்த்தருள வேண்டும் என்கிறார். ஒருங்க – ஒரு படிப்பட.-

———

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–
5-8-9-

என்னை இசைவித்து – நெடுநாள் விமுகனாய் நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாயிருக்கிற என்னை அடிமையிலே இசைவித்து.-இசையாத என்னை இசைவித்த அருமை வேணுமோ இசைந்திருந்த நீ காரியம் செய்கைக்கு.–தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சினை வஞ்சித்து -எதிர் சூழல் புக்கு -ஒருவனை வளைக்க ஊரை வளைப்பாரைப் போலே –-உன் தாள் இணைக்கீழ் இருத்தும் – நித்தியஸூரிகள் அடிமை செய்கின்ற உன் திருவடிகளிலே இருத்தினவனே!-சாக்கியம் கற்றோம் -இத்யாதி -பரகு பரகு என்று திரியாதபடி தன் திருவடிகளிலே விஷயமாம்படி செய்யுமவன் என்கை.
நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதி அடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி-அவன் இசைவிக்க வேண்டின சம்பந்தம் சொல்லுகிறது.-அசைவு இல் அமரர் தலைவா –குறைதல் விரிதல் இல்லாமல் எப்பொழுதும் ஒரே தன்மைத்தான ஞானத்தை யுடையவர்கள்-ஆதிப் பெரு மூர்த்தி--இவ் வருகுள்ளாருடையவும் சத்தைக்குக் காரணமாக இருப்பவனே!-மூர்த்தி – ஐஸ்வர்யம் உடைய ஸ்வாமி.

அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் – உலகமானது வருத்தம் அற்று அடையும்படி கிடந்தாய்.-வருத்தம் அறுதலாவது, கண்களால் காண முடியாதவனை நாம் எங்கே அடையப் போகிறோம் என்கிற வருத்தம் தீர்தல்.-அன்றிக்கே, அசைவில்லாத உலகமான நித்திய விபூதியிலுள்ள நித்தியசூரிகளும் வந்து அடையும்படி கிடந்தாய் என்னுதல்.
அன்றிக்கே, அசைவுண்டு – இடம் வலம் கொள்ளுகை, அதனைக் கண்டு உலகமானது பரவும் படி கிடந்தாய் என்னுதல்.
ஆக சத்தையை நோக்கி, மேலுள்ளனவற்றை இவர்கள் தாமே நிர்வஹித்துக் கொள்ள இருக்கை அன்றிக்கே,-மேலுள்ளனவற்றையும் தானே செய்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியைத் தெரிவித்தபடி
கிடந்தாய் காண வாராய் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற அழகினைக் கண்டு அநுபவித்தேன், இனி நடையழகு கண்டு நான் வாழும்படி வரவேணும்.
செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, -புருஷ ரத்னங்கள் ––‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷ ரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நிர்வஹிப்பர்கள்.-

——————

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–
5-8-10-

வாராஅருவாய்--வாராத அருவாய். என்றது, புறத்திலே கண்களாலே கண்டு அநுபவிக்கலாம்படி வாராத அரூபிப் பொருளாய் என்றபடி.-நம் சம்ப்ரதாயம் -அரூபமும் ஒரு வகை ரூபம் தானே -சர்வசக்தன்-அருவாய் வரும் என் மாயா –மறந்து பிழைக்க ஒண்ணாதபடி அகவாயிலே அருவாய்க் கொண்டு பிரகாசிக்கின்ற ஆச்சரியத்தை யுடையவனே!-அரு என்று ஆத்மாவாய், அகவாயிலே தாரகனாய்க்கொண்டு என்றபடி.
மாயா மூர்த்தியாய் – நித்தியமான திவ்விய மங்கள விக்கிரஹத்தை யுடையவனே! 

உன்னை அநுபவிப்பதற்குத் தடையாக வுள்ள கருமங்களைப் போக்குவித்து,
‘அடியேன் ஆவியகமே தித்திப்பாய்’ என்னும்படி புகுர நிறுத்தினவனே!-“தீர்ப்பாரை யாம் இனி” என்று திருவாய்மொழியில் கூறிய வினைகள் தொடக்கமானவற்றைப் போக்கி
என்னை அடிமை கொண்டாய்-திருக்குடந்தை ஊராய் –-என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே! என்றது,-நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி.-நீ இருக்கிற பரமபதத்தே நான் கிட்ட வேண்டும்படி யாயிருக்க, நான் இருக்கிற இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே-பர வ்யூஹ விபவங்களை-வ்யாவர்த்திக்கிறது ––உனக்கு ஆட்பட்டும் – சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும்.-அடியேன் – யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது.-இன்னம் உழல்வேனோ--என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக் கட்டக் கடவையாக நினைத்திருக்கிற நான், இன்னம் எத்தனை திருப்பதிகள் புக்குத் தட்டித் திரியக் கடவேன் –

——————

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.
–5-8-11-

திருக்குழல் ஓசையிற்காட்டிலும் விஞ்சி, கேட்டார் நோவுபடும்படியாக இருக்கிற ஒப்பற்ற
ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும், மரங்கள் நின்று மதுதாரைகள் பாய்தல் அன்றோ அங்கு,-மரங்களும் இரங்கும் வகை இங்கு; இனி, நாம் இரங்குகிற இது தன்னேற்றமே அன்றோ இங்குத்தைக்கு;-ஆதலின், ‘குழலின் மலிய’ என்கிறது.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லாரை-இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள்–மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–தங்கள் மௌக்த்யம் தீர்ந்து பாவ வ்ருத்தியுடன் சொல்ல வல்லவர்கள்-மான் போலே இருக்கிற நோக்கையுடைய மதிமுக மடந்தையரான திவ்ய அப்சரஸ் ஸூக்களுக்கு- ப்ரஹ்ம அலங்கார முகத்தாலே கமநீயராம்படி ஆதரிக்கப்படுவர்கள்
மானேய் நோக்கியர்க்குக் காமுகரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆதரணீயர் என்று த்ருஷ்டாந்த அபிப்ராயமாகவும் சொல்லுவர்–அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில், முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி.-உவமை புக்க இடத்தே உபமேயமும் வரக்கடவது. ““தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னா நின்றதே அன்றோ.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ காஞ்சீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வேதாந்த தேசிக ஸித்தாந்த ஸாரம்–

January 29, 2026

நிகமாந்த குரூத்தம ஸக்திததீ நிகமாஞ்சல யுக்ம மஹார்த்த மயீ
நிகமாந்த யுகாம்புதி மக்ந் ஹ்ருதாம் ஹ்ருதயே நிததே ரஸிகா:! பி/பத
–உபய வேதாந்தக் கடலில் ஆழ்ந்த பொருள்களை எடுத்துரைக்குமவையான ஸ்ரீமந் நிகமாந்த மஹா குருவின் ஸ்ரீஸூக்திகளை உபய வேதாந்த ஸாகர பாரங்கதர்களின் உள்ளத்தில் பதிய வைக்கிறேன். ரஸிகர்கள் அநுபவிக்க வேணுமென்கை

வேதக் கடல் கடைந்த வேதாந்த வாசிரியன்
போதக் கடலாய்ப் புனிதமாய்க் கோதற்ற
தேன் மொழிகள் தந்தருளித் தீய பொருள் திரளைத்
தானொழித்தான் தாளே சரண்.

தேசார்ந்த தேசிகனார் தேர்ந்தருளிச் செய்த பல
வாசா மகோசரமாம் வாய் மொழியால்-மாசார்ந்த
தீயபொரு ளனைத்தும் தீயினில் தூசாகிப்
போயின் வென்பதுரைப் போம்.

“நாதோபஜ்ஞம் ப்ரவருத்தம் பஹு பிருபசிதம் யாமுநேய ப்ரபந்தை.
த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை ரிதமகில தம: கர்சநம் தர்சநம் ந:”
என்கிற தேசிக ஸூக்திப் படியே,நம்மாழ்வார் திருவருளால் ஸகலார்த்த விசேஷங்களையும் நிதி பெற்றாற்
போலே பெற்று வாழ்ந்த ஸ்ரீமந்நாதமுனிகள் அநுஸந்தித்துக் கொண்டிருந்த ஸத்
ஸம்ப்ரதாயார்த்தங்களை மணக்கால்நம்பி வழியாக லபிக்கப் பெற்ற ஆளவந்தார்
அவ்வர்த்த விசேஷங்களைத் தம்முடைய திவ்யகடாக்ஷ மூலமாகவும் பெரிய நம்பி
திருமலைநம்பி திருக்கோட்டியூர்நம்பி திருமாலையாண்டான் முதலான ஸ்வசிஷ்ய
வர்க்க மூலமாகவும் எம்பெருமானார் பக்கலிலே தேக்கி யருள, அவை எம்பார் ஆழ்வான் பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை முதலான ஆசாரியர்களின் வழியாகவும், திருக் குருகைப் பிரான் பிள்ளான் கிடாம்பி யாச்சான் எங்களாழ்வான் நடாதூரம்மாள்-முதலான ஆசார்யர்களின் வழியாகவும் பரவஹித்து அஸ்மதாதி ஸம்ஸாரி சேதந் ஸமுஜ்ஜீவந் ஸாதனங்களாய் விளங்கி வாரா நின்றன.

மேலே நிர்தேசித்த ஆசார்யவர்யர்கள் பேசிற்றே பேசும் ஏக கண்டர்களாகையாலே இவர்களின் திவ்ய ஸூக்திகளிலே அர்த்த பேதம் காண்கைக்கு அவகாசமில்லை. ஸ்வல்ப யோஜனா பேதம் கண்டால் காணலாமத்தனை. இது ஸம்ப்ரதாய பரிசுத்தியில்- “ஸ்ரீபாஷ்யகாரருடைய சிஷ்ய ஸம்ப்ரதாயங்களில் ஒன்றிலும் அர்த்த விரோதமில்லை. வாக்ய யோஜநா பேதமே யுள்ளது. தேச காலா வஸ்தா விசேஷங்களாலே வரும் அநுஷ்டான வைஷம்யம் சாஸ்த்ராநுமதம்” என்கிற ஸ்ரீ ஸூக்தியினாலும் விசதம். இவ் வுண்மையை யுணராதார் சிலர், வேதாந்த வாசிரியர் தனிப்பட்டிருந்து வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாரென்றும், நம்பிள்ளை, பிள்ளை லோகாசாரியர் முதலானார் கொண்டிருந்த கொள்கைகளை அசாஸ்த்ரீயங்களென்று கண்டித்து விட்டாரென்றும் சொல்லிப் போருவது ஆதாரமற்ற தென்பதையும், நவீநர்கள் ஆதரித்து வருகிற அர்த்தங்களுக்கும் ஆசரித்துப் போருகிற அனுஷ்டானங்களுக்கும் வேதாந்த தேசிக க்ரந்தங்களில் ஆதார மில்லை யென்பதையும் ஸாரமாகவும் ஸம்பேமாகவும் உபபாதிப்போமிதில்.

பகவத் க்ருபை நிர்ஹேதுகமென்று கொண்டால் ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வருமென்றும் வைஷம்ய நைர்க்கண்யாபத்தியைப் பரிஹரிக்கின்ற “வைஷம்ய நைர்க்ருண்யேந ஸாபேக்ஷத்வாத்” என்கிற ப்ரஹ்ம ஸூத்ரம் விரோதிக்குமென்றும் சில வாதங்கள் கிளம்புவதுண்டு. உலகத்திலுள்ள ஸகல ப்ராணிகளிடத்திலும் எம்பெருமான் நிர்ஹேதுகமாகவே அருள் செய்வதாகக் கூறினால் தான் மேற் சொன்ன வாதங்களுக்கு ப்ரஸக்தியுண்டு.அப்படி யாரும் கொள்வதில்லை. அதிகாரி விசேஷங்களிடத்தில் நிர்ஹேதுகமாக அருள் செய்கிறா னென்றே ஸகலாசார்யர்களு மருளிச்செய்வது. இக் கொள்கையில் தேசிகன் வேறுபாடு கொண்டவரல்லர். நிர்ஹேதுக க்ருபையைப் பற்றிப் பல விடங்களிற் பேசுகிறார். சில விடங்கள் காட்டினால் போதுமன்றோ.

பரம பத ஸோபாநத்தில்—“அஜ்ஞாத யாத்ருச்சிக ஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமாந்ய புத்தி மூல க்டுத விசேஷங்களை வியாஜமாகக் கொண்டு விசேஷ கடாக்ஷம் பண்ணி என்றருளிச் செய்தார். இதில் “வ்யாஜமாகக் கொண்டு” என்றதையும் ஸஹியாமல் அவ்யாஜ க்ருபையையும் அருளிச் செய்து போந்தார். அது எங்கே யென்னில்; திருவாய்மொழியில் முதற்பத்தில் பொருமா நீள் படை யென்கிற பத்தாவது பதிகத்திற்கு ஆறாயிரப்படியிலில்லாத விஷயம் அவ்வாறாயிரப்படிக்குப் பிற்பட்ட வியாக்கியானங்களிலுள்ளது. அதாவது, இப் பதிகத்தினால் ஆழ்வார் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவத்தை யநுபவிக்கிறாரென்று பட்டர் நிர்வஹித்தருளினதாகக் காட்டப்பட்டது. அந்த நிர்வாஹத்தையே தேசிகன் ஆதரித்து த்ரமிடோபநிஷத்தாத்பர்ய ரத்நாவளியில் ஆதாவித்தம் பரத்வம் ‘ என்கிற ஸ்லோகத்தில் “அவ்யாஜோதாரபாவாத்” என்றருளிச் செய்தார். நிர்ஹேதுக க்ருபா விசிஷ்டனாகையாலே என்றபடி. இவ்விடத்தில் இரண்டு விசேஷங்கள்-(1) எம்பெருமானை நிர்ஹேதுக க்ருபாவானாகச் சொன்னது ஒன்று; (2) இவ் விஷயம்-ஆறாயிரப்படியில் இல்லாமல் அதற்குப் பின் தோன்றிய வியாக்கியானங்களில் மட்டும் விளங்கா நிற்கவும் இதையே ஆதரித்துப் பரிக்ரஹித்தது மற்றொன்று. இங்கு முன்னமெடுத்துக் காட்டிய பரமபத ஸோபாந ஸ்ரீ ஸூக்தியானது, ஸ்ரீவசந பூஷணம் நான்காவது ப்ரகரணம் ஆரம்பத்திலுள்ளதான ”த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க…… என்னுரைச்சொன்னாய் என் பேரைச்சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக் கொதுங்க நிழலைக் கொடுத்தாய் என்னுமாபோலே சிலவற்றை ஏறிட்டு…..ஐந்ம பரம்பரைகள் தோறும் யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருத விசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் ” என்கிற ஆச்சரியமான சூர்ணையை தேசிகன் அநவரதம் சிந்தனை செய்து போந்தவரென்பதைப் பேதையரு மறியும்படி அமைந்துள்ளது.

பொரு மா நீள் படை –ஆறாயிரப்படி –1-10–பிரவேசம் –
இப்படி எம்பெருமான் தம்மோடு கலந்த கலவையால் தமக்குப் பிறந்த நிரவதிகமான நிர்வ்ருதியாலே அக்கலவியைப் பேசுகிறார் –

இங்கு, சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து – எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை அநுசந்தித்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது,
கீழ் திருவாய்மொழியில் ‘உச்சி யுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்?
பேற்றில் இனி, ‘இதற்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இன்று;
இனி, இதனுடைய-அவிச்சேதத்தை – பிரிவின்மையைச்- செய்து கொடுக்கையே உள்ளது;
பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்;
இப் பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது;
‘ஏன் இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும்,
அத்வேஷம் -வெறுப்பின்மை-ஆபிமுக்யம் – எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்;
இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப் போகா; ‘என்னை?’ எனில்,
இத் தலையில் பரம பத்தி அளவாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே;-என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே;-மற்றும், ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத் தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே?
‘வரவாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது?
மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழி போக வேண்டும்’ என்று – உபகரணங்களை -உறுப்புகளைக் கொடுத்து விடுகையாலே, இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்; இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே, அத்வேஷம் -வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரம பத்தி முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனே யாவன்;
ஆதலால், ‘நித்திய ஸூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்,
அவன்-விஷயீகாரம் – திருவருள் இருக்கும்படி என்?’ என்று, கீழ் திருவாய்மொழியில்-உன்மஸ்தமாக- தலைமுடிவாகப் பிறந்த -சம்ஸ்லேஷ ரசத்தை -சேர்க்கையாலாய சுவையை – அனுசந்தித்து -நினைத்து-நிர்வ்ருதராகிறார் – இன்புறுகிறார் என்பது.பட்டர் தம்முடைய வைபவம் எல்லாம் காட்டும் திருவாய்மொழி யாயிற்று இது –

ஆதா வித்தம் பரத்வாத் அகில சமதயா பக்த ஸுலப்ய பூம்நா
நிஸ் சேஷாகஸ்சஹத்வாத் க்ருபண ஸூகட நாச்சாக்ய சம்ராத நத்வாத்
ஸ்வாது ஸ்வோபாச நத்வாத் ப்ரக்ருதி ருஜு தயா சாத்ம்ய போக ப்ரதத்வாத்
அவ்யா ஜோதாரபாவாத் மநுத சதகே மாதவம் சேவ நீயம்
-11-அவ்யா ஜோதாரபாவாத்–அத்யந்த ஆதர நிர்ஹேதுக உதாரானாகையாலும்-ஸ்ரீ எம்பெருமான் ஸேவ்யன் என்று பிரதம சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் என்கிறார் –

தயா சதகத்தில் நிஷாதாநகும் நேதா கபி குலபதி: காபி சபரீ குசேல: குப்ஜா ஸா வர யுவதயோ மால்ய க்ருதிதி, அமீஷாம் நி நத்வம் வருஷகிரிபதேருந்நதிம பிப்ரபூதை: ஸ்ரோதோபி : ப்ரஸப மநுகம்பே! ஸமய * என்கிற ஸ்லோக ரத்நத்தின் பொருளை உபந்யஸிக்கப் புக்கால் குஹப் பெருமாள் ஸுக்ரீவ மஹாராஜர் சபரி குசேலர் கூனி ஆய்ச்சியர் மாலாகாரர் என்னுமிவர்கள் இராமபிரானுடையவும் கண்ணபிரானுடையவும் நிர்ஹேதுக கருணைக்கு இலக்கானவர்கள் என்றல்லது வேறொன்று சொல்லிப் பிழைக்க வொண்ணாதாயிற்று.ஸ்தோத்ர க்ரந்தங்களில் பணிப்பது ரசம்ஸைக பரமாதலால் அது தன்னை சாஸ்த்ரார்த்தமாகக் கொள்ள வொண்ணா தென்று கூறவருவர்கள். முநி வாஹந போகமென்று பெயரிட்டு ரஹஸ்ய கரந்தமாகப் பணித்த அமலனாதி பிரான் வியாக்கியானத்தின் உபக்ரம ஸ்ரீ ஸூக்தி இது காணீர்;–“காரண விசேஷம் இன்னதென்று அறுதி யிட அரிதாயிருப்பதொரு பகவத் கடாக்ஷத்தாலே அத்ந லப்தமான……என்று. இவ்விஷயத்தில் இவ்வளவே போதும்.

“ஈஸ்வரனுக்குத் தான் சேதன லாபம் புருஷார்த்தம்” என்பது ஸித்தாந்த ஸாரம். தேசிகனுடைய திருவுள்ளமும்-சேதந லாபம் ஈஸ்வரனுக்குப் பேறு என்பதேயாம். இதனை அவர் கீதா பாஷ்ய
தாத்பர்ய சந்திரிகையில் வெகு அழகாகக் காட்டி யுள்ளார். கீதையில் ஒன்பதாம
த்யாயத்தின் முடிவிலுள்ள *மந் மநா பவ” என்கிற ஸ்லோகத்தின் பாஷ்யத்திற்கு
விவரண மெழுதுகையில்- “(“ஆஸ்ரித ஸம் ரக்ஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே “) என்றருளி யிருக்கிறர்.-“அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்” என்பது முக்தனுடைய முதல் வார்த்தை. ‘பகவானுக்கு நான் அன்னமாகிறேன்’ என்று ஒரு தடவைக்கு மூன்று தடவையாக இதில் சொல்லுகிறது. இதனால், ஈஸ்வரனானவன் சேதனனைப் பெற்று அனுபவிக்க வேணுமென்று பெரும் பசி கொண்டிருந்தா னென்றும், அப் பசி முக்தாத்மாவால் முதலில் தீருகிறதென்றும் ஸ்பஷ்டமாகிறது. இல்லை யாகில், அஹமந்தம்” என்று ஓத வேண்டிய தில்லை யன்றோ?-ஆளவந்தார் * கதாஹமைகாந்திக நித்ய கிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: * என்றார். இதில் ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற க்ரியா பதம் ஆச்சரியமாக அமைந்தது.உனக்குத் தொண்டு செய்து நான் எப்போது ஆநந்திக்கப் போகிறேனென்னாமல் நான் எப்போது உன்னை ஆநந்திப்பிக்கப் போகிறேன்‘ என்றர். ணிஜந்தப்ரயோகம் நோக்குக. இங்கு வியாக்கியானத்தில்- “தன்னுடைய அநுவருத்தியால் ஈஸ்வரனுக்குப் பிறக்கும் ஹர்ஷமேயிறே சேதநனுக்கு ப்ராப்யம்” என்று பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்ததை ஸ்தோத்ர பாஷ்யத்தில் தேசிகன் மொழிபெயர்த்தார் “[ப்ரஹர்ஷயிஷ்யாமி] த்வத்தாஸ பூதஸ்ய மே த்வத் ப்ரஹர்ஷ ஏவ ரதாநம் ப்ரயோஜ நமிதி பாவ ‘‘ என்று. இவற்றுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது ‘ந ச பரம புருஷ : ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா கதாசிதாவர் தயிஷ்யதி” என்கிற ஸ்ரீபாஷ்ய ஸூக்தி. இதில் ”பரமபுருஷ: ஜ்ஞாநிநம் லப்த்வா” என்றது உயிரான ஸூக்தியன்றோ? இதையே தேசிகன் பலவிடங்களில் பல முகமாக விவரித்தருளி னாராயிற்று.

சேதநன் தான் எம்பெருமானைப் பற்றுவது ஸ்வகத ஸ்வீகாரமென்றும், எம் பெருமான் தானே சேதநனை வரிப்பதானது பரகத ஸ்வீகார மென்றும் வழங்கப் படுகின்றது. முறையே மர்க்கட கிசோர ந்யாய மென்றும் மார்ஜார கிசோர ந்யாய மென்றும் வழங்குவர்.கீதையில் எட்டாவது அத்யாயத்தில் பதினான்காவது ஸ்லோகம் –அநந்ய சேதாஸ் ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யச:
தஸ்யாஹம் ஸு லப: பார்த்த! நித்ய யுக்தஸ்ய யோகிந:)
என்பது.-” ஞாநீ து ஆத்மைவ மே மதம்” என்று பகவான் தான் தனக்கு உயிர் நிலையாகக் கொண்டாடும் ஞானியானவன் தன்னை உபாஸிக்க வேண்டியபடியையும் பேறு பெறும் பரிசையும் இனி யருளிச் செய்கிறான் (கண்ணபிரான்) என்று அவதாரிகை யிட்டு ஸ்லோகத்தை வியாக்கியானித் தருளியுள்ளார் பாஷ்யகாரர்-

இதில் [தஸ்யாஹம் ஸுலப:– ‘அவனுக்கு நான் ஸுலபன்’ என்கிற பகுதிக்கு பாஷ்யம் செய்தருளி யிருக்கின்ற வகையாவது,
(தஸ்ய நித்ய யுக்தஸ்ய – நித்ய யோகம் காங்க்ஷமாணஸ்ய யோகி ந:, அஹம் ஸுல : -அஹமேவ ப்ராப்ய:; ந மத் பாவ ஐஸ்வர்யாதிக: ஸுப்ராபச்ச,தத் வியோக மஸஹமாந: அஹமேவ தம் வ்ருணே. மத் ப்ராப்த் யநுகுணோபாஸந விபாகம் தத் விரோதி நிரஸநம் அத்யர்த்த மத் ப்ரியத்வாதிகம்ச அணமேவ ததாமீத்யர்த்த: * யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய: இதி ஹி ஸ்ரூயதே. வ யதி ச தேஷாம் ஸ்தத யுக்தாநாம்…-இதி.-என்னோடு எப்போதும் கூடியிருக்க வேணுமென்கிற விருப்ப முடையவனுக்கு அடையத் தகுந்தவன் நானே யாகிறேன். மிக எளிதாக அடையத் தகுந்தவனு மாகிறேன்நான். (அதாவது) அவனுடைய பிரிவைப் பொறுக்க மாட்டாதவனாய் [அவனைப் பிரிந்து தரித்திருக்க மாட்டாதவனாய்] நானே அவனை வரிக்கிறேன். என்னை யடைவதற்கான உபாஸனத்தின் பரிபக்குவ நிலைமையையும், அதற்குற்ற இடையூறுகள் நீங்குதலையும், என்னிடத்தில் அதிகமான ப்ரீதி முதலியவைகளையும் நானே கொடுக்கிறேன்.* நாயமாத்மா ஸ்ருதியில் இவ் வர்த்தம் ப்ரஸித்தமாயிருப்பதோடு இந்த கீதையிலே மேலே பத்தாவது அத்யாயத்தில் 10, 11 ஸ்லோகங்களாலும் சொல்லப்படுகின்றது – என்பதாம்.

தத் வியோகம் அஸஹமாந : அஹமேவ தம் வருணே *] ஞானியான சேதநனைப் பிரிந்திருப்பதை எம்பெருமான் தான் பொறுத்திருக்க மாட்டாதவனாய்த் தானே அந்த சேதநனை வரிப்பதாகக் கூறுகின்ற விதுதான் பரகத ஸ்வீகார மென்பது.இந்த வாக்கியமானது ஸ்வகத ஸ்வீகாரப் பற்றசை நன்றகக் கழிக்கிறது.-இத் தலையில் விளைவதெல்லாம் எம்பெருமானுடைய க்ருஷி பலமாக விளைகின்றதே யன்றி இவன் தலையாலே விளைவித்துக் கொள்ளுமது ஒன்றுமில்லை என்கிற
ஸத் ஸம்பிரதாய ஸாரார்த்தம் தெளிவிக்கப்பட்டது. இந்தஇடத்தில் நாயமாத்மா ஸ்ருதியையும் எடுத்துக் காட்டி யருளின பாஷ்யகாரர், பரகத ஸ்வீகாரத்திற்கு அதுவே பிரமாணமென்று நிரூபிக்கிற முகத்தாலே பிறருடைய அசட்டு வாதங்களை அகற்றினாராயிற்று.-

இவ்விடத்தில் தாத்பர்ய சந்த்ரிகையில் ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்துள்ள திவ்ய ஸுக்திகள் தேனே பாலே கன்னலே யமுதே யத்தனை; [உக்தஸ்ய அதிவாத மாத்ரத்வ சங்காவ்யுதாஸாய ஸ்ருதி மூலதாமாஹ யமேவேதி] என்றருளிச் செய்திருப்பது ஆழ்ந்து நோக்கத் தக்கது.-் பிறர் எழுதியுள்ள அபார்த்தங்களுக்கு இடமில்லாதபடி செய்தருளி யிருக்கிறர் ஸ்வாமி தாத்பர்ய சந்த்ரிகையில்.
சேதநன் தலையிலே ஒன்றையும் வைத்திடாமல் அஹமேவ தம் வருணே…… அஹமேவ ததாமீத்யர்த்த:’‘ என்று ஒவ்வொன்றையும் எம்பெருமான் தலையிலே யாக்கிய பாஷ்யகாரர் அருளிச்செய்திருப்பதை அக்காலத்தில் சிலர் அதிவாதமென்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் போலும்.அது தேசிகன் திருச்செவியில் விழுந்தபடியால் அதை ஸஹித்திருக்க மாட்டாமல் “உக்தஸ்ய அதிவாத மாத்ரத்வ
சங்கா யுதாஸாய ஸ்ருதி மூலதாமாஹ -யமேவேதி
‘ என்று ப்ராமாணிகமான அவதாரிகையை இட்டருளினார். பரகத ஸ்வீகாரமென்பது உபநிஷத் ஸித்தமான அர்த்தமாகையாலே அதிவாதமென்று நெஞ்சாலும் நினைக்கத்தகாது என்று வெட்டொன்று துண்டிரண்டாக அருளிச் செய்தாராயிற்று தேசிகன்.-“த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே” என்றும் புகலொன்றில்லா வடியேன் உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேனே என்றும் நாம் பற்றுகிறோமாகக் காட்டிக் கொண்டு திருவடிகளிலே விழுந்தாலும், இது நாம் பற்றின பற்றன்று; எம்பெருமான் தானே பற்றுவித்தானத்தனை; அவன் நெடு நாளாகப் பண்ணிப் போந்த க்ருஷி பலித்ததத்தனை’-என்கிற அநுஸந்தானம் ஊடுருவச் செல்ல வேணு மென்பதேயாம்.

தனக்கு உபாயத்வமுண்டென்று சொல்லுமவர்களை முக்கியமாகக் கண்டிப்பவர் நிகமாந்த மஹா குருவேயாவர். மேலே உதாஹரித்த கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோக வியாக்கியானத்தில்(ரக்ஷையில்) தேசிகனருளிச் செய்வது காணீர் :--“ஸ்வயம் ஸ்வாதுத்வாத் க்ஷணிகஸ்ய காலாந்தர பாவி பல ஸாதநத்வா னுபபத்தி தர்சநாச்ச நாஸ்ய ஸ்வ வ்யாபாரே மோஷோபாயதா புத்தி ரபிஸ்யாதிதி பாவ:. அத: தைஸ்தைராராத்தோ பகவாநேவ ஹி ஸர்வத் ரோபாய? என்று.-*உபபத்தேச்ச(3-2-34) *பலமத உபபத்தே. (3-2-37.) என்கிற ப்ரஹ்ம ஸத்ரங்களின் ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி விபுலமாக அருளிச் செய்திருக்கும் ஸ்ரீஸூக்திகளின் ஸாரமாகவே மேலே உதாஹரித்த கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷா ஸூக்தி அமைந்தது.-

ந்யாஸ தசகத்தில் “ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந் நிர்பரம், ஸ்வ தத்தஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வ ஸ்மிந் ந்யஸ்யதி மாம் ஸ்வயம்.” என்னும் ஸ்லோகத்தில் ஒன்பதின்கால் ஸ்வ சப்த ப்ரயோகம் செய்தருளி யுள்ளார் தேசிகன். இதனால் சேதனனுடைய முயற்சி நாற்றம் வேரறுக்கப் படுகின்றமை யறிந்தால் உபாயமென்றும் ஸாத்யோபாய மென்றும் வாய் திறக்க வழியில்லை. ஸாத்யோபாயமென்றால் யாரால் பாதிக்கப்படுமுபாயம்? என்று கேள்வி வரும். சேதநனால் ஸாதிக்கப்படுவதாகச் சொல்லியாக வேணும். இச்சொல்லை ஒன்பது வாள்கள் கொண்டு கண்டிக்கின்றதன்றோ கீழே காட்டிய தேசிக ஸ்லோகம் !-

ஸ்வாமிந் ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந நிர்ப் பரம்
ஸ்வ தத்த ஸ்வ தியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந் நிஸ்யஸி மாம் ஸ்வயம். (3)

[ஸ்வாமிந் — ஸ்வத்வத்தை உடையவரே! ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனே !
ஸ்வ சேஷம் — தேவரீருடைய ஸொத்தாகவும் தேவரீருக்குச் சேஷ பூதனாயும்;
ஸ்வ வசம் — தேவரீருக்கு அதீநனாயும் இருக்கிற, தேவரீருக்கு உட்பட்டவனும் ஆன; மாம் -அடியேனை;
ஸ்வதத்த ஸ்வதியா — தேவரீரால் கொடுக்கப் பெற்றதான தேவரீரைக் குறித்ததான புத்தியினால்,
தேவரீரால் அளிக்கப் பெற்ற தேவரீருடைய புத்தியால், இச்சரீர ப்ரதாநம் முதல் ஸதாசார்ய ஸம்ச்ரயணம் பண்ணி வைத்து-த்வயோச்சாரணம் வரையில் உள்ள ஜ்ஞாநத்தினால்;
ஸ்வார்த்தம் — தேவரீருக்காகவே, தேவரீருடைய லாபத்துக்காகவே;
நிர்ப்பரம் — அடியேனுக்குச் சுமையில்லாதபடி, அடியேனுக்கு ஒரு பொறுப்பும் இல்லாதபடி;
ஸ்வ பரத்வேந — செய்யவேண்டிய கார்யங்கள் தேவரீருடைய பரமாக, தேவரீருடைய பொறுப்பாகவே;
ஸ்வஸ்மிந் — தேவரீரிடத்தில்; ஸ்வயம் — தேவரீரே; ந்யஸ்யஸி — வைத்துக் கொள்ளுகின்றீர்.]

அடியேனை ஸொத்தாக வுடைய பெருமாள், தனக்கு அடிமை யானவனும், தன்வசமா யிருப்பவனும்,
தன்னிடம் பரத்தை வைத்து விட்டபடி யாலே எல்லா வித பரமும் நீங்கினவனுமான அடியேனுக்குத் தன்னைப் பற்றிய ஞானத்தைத் தானே கொடுத்து, தான் அளித்த தன்னறிவாலே தனக்காகவே தன்னிடத்தில் தானே அடியேனை வைத்துக் கொள்ளுகிறார்.

நியாய ஸித்தாஞ்ஜநத்தில் ஸ்பஷ்டமாக வருளிச் செய்கிறார். (அதில் ஜீவ பரிச்சேதத்தில்)”இயம் கேவல லக்ஷ்மீ சோபாயத்வ ப்ரத்யயாத்மிகா, ஸ்வ ஹேதுத்வதியம் ருந்தேகிம் புநஸ் ஸஹ காரிணாம்’ என்கிற ஸ்லோகம் ஸித்தாஞ்ஜனமேயாகும். இந்த ஸ்லோகத்தினால் ப்ரபத்தியின் அநுபாயத்வம் தர்மிக்ராக ப்ரமாண ஸித்தம் என்று சிலா லிகித மாக்கினபடி சாஸ்த்ரஜ்ஞர்களில் தலைவரான தேசிகன் சாஸ்த்ரகதி விருத்தமாக ப்ரபத்தி உபாயமென்று நெஞ்சாலும் நினைக்க மாட்டாரன்றோ?*ஹேதுர் வைதே விமர்சே என்கிற ஸ்லோகம் காண்க. இதன் கருத்தாவது-ப்ரபத்தியானது விதிக்கப்பட்டிருப்பதனால் உபாயமென்று சொல்ல வேண்டி யிருந்தாலும் இங்கு அப்படிக் கொள்ள வேண்டா; ஒவ்வொரு வித்யையிலும் எம்பெருமானுக்கு ஒவ்வொரு ரூபம் அறியக் கடவதா யிருக்கிற கணக்கில இந்த ப்ரபத்தி வித்யையில் இதராநபேக்ஷ உபாயத்வம் (பிறிதொன்றை எதிர்பாராத உபாயத்வம் ) அறியத்தக்க ரூபமாதலால்- என்று இந்த ஸ்லோகத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ரஹஸ்யங்களிலும் இஃது உள்ளது.இசைவித் தென்னை யுன் தாளிணைக் கீழிருத்து மம்மானே என்பது போன்ற பல பாசுரங்களைக் கண்டால் இது நம்முடைய முயற்சியால் ஸாத்யமன்றிக்கே ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலமாகவே விளையுமதாக உண்மை தெரிவதால் ஸாத்யோபாய மென்கிற வ்யபதேசமும் இதற்கு ஏலாது.-இவ் விஷயமான “ஸ்வீகாரந் தானும் அவனாலே வந்தது; ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷி பலம்” என்ற பிள்ளை லோகாசார்யருடைய ஸ்ரீஸூக்திக்குச் சார்பாக தேசிகன் நிதானம் தத்ராபி ஸ்வய மகில நிர்மாண நிபுண:* என்று ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஒன்பதாவதான உபாய விபாகாதிகாரத்தின் முகப்பில் ஸாதித்துள்ள ஸ்லோகம் வடிக் கட்டின சாஸ்த்ரார்த்தமாக வன்றோ விளங்குகின்றது-)

உபாய: ஸ்வ ப்ராப்தே: உபநிஷததீ தஸ் ஸ பகவாந்
ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ப்ரபதன நிதித்யாஸநகதீ.
ததாரோஹ: பும்ஸாம் கூக்ருத பரிபாகே ந மஹதா
நிதாநாம் தத்ராபி ஸ்வய மகில நிர்மாண நிபுண:.
-என்பதாம் அந்த ஸ்லோகம். இதன் பொருளை நாம் விவரிக்க வேண்டுமோ?
அக்ஷர லப்யமான பொருளை யாரும் மாறுபடுத்த முடியாது. அவனைப் பெறுதற்கு அவனே உபாயமென்னுமிடம் உபநிஷத் ஸித்தம். பக்தி ப்ரபத்திகளானவை அவன் திருவுள்ள முகக்கைக்காக வாமத்தனை. அந்த பக்தி ப்ரபத்திகள் அமைவது மஹத்தான ஸுக்ருத பரிபாகத்தினால் தான். அந்த க்ருதந்தானும் எலியெலும்பனான சேதநனடியாக விளைவதன்று; நிகில நிர்மாண நிபுணனான பரமபுருஷன் தானே அதற்கும் மூல காரணமாவன்-என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

இதில் *நிதாநம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண: * என்கிற நான்காம் பாதமானது லோகாசார்ய ஸித்தாந்த ஸர்வஸ்வமென்று கொள்ளக் கடவது.
சேதனன் தலையிலே சிறு நாற்றத்தையும் ஸஹியாதே அறவே துடைத் தொழிக்கும் வார்த்தை யன்றோ விது!-நிதாநமென்கிற சொல்லுக்கு என்ன பொருளென்பதை அமர கோசங் கொண்டு அறிவது.நிதாநம் து ஆதி காரணம் ‘ என்றான் அமர ஸிம்ஹன்.-சேதநன் தலையிலுள்ளதாக எந்த ஹேத்வாபாஸத்தைக் காட்டினாலும் அதுவும் பரம புருஷனடியாக வந்ததே யொழிய இத் தலையாலே வந்தது லவ லேசமுமில்லை யென்று தேசிகன் கல் வெட்டாக்கி வைத்திருக்க, இதற்கு நேர் விருத்தமாகச் சொல்லிக் கொண்டு போராடுவது என்னோ? “ஸ்ருஷ்ட் யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷி பலம் ” என்ற பிள்ளை லோகாசார்யருடைய ஸ்ரீ ஸூக்தியே“நிதாநம் தத்ராபீத்யாதி ஸ்ரீ ஸூக்தியாக மொழி பெயர்ந்தது என்பதில் ஸந்தேஹமுண்டோ?

தேசிகனுடைய திவ்ய ஸக்திகளில் ” குண தலிபிக்ரமாது பநிபாதிநபா ந: * என்பது ஆச்சரியமான வொரு ஸூக்தி.-நாம் எம்பெருமானிடத்திலே சென்று சேருவதானது நம் இச்சையினாலே யன்று; குணாக்ஷர ந்யாயத்தாலே யாமத்தனை. அந்த நியாயமாவதென் னென்னில்; புழுவானது நேராகச் செல்ல மாட்டாது; சுருங்கியும் மடங்கியும் குடிலமாகச் செல்லுவதே அதன் இயல்வு.அங்ஙனம் செல்லுவதை நாம் உற்று நோக்கில் ஏதேனுமொரு பாஷையிலே சில எழுத்துக்கள் எழுதினாற் போல் தேறும். எழுத்து எழுத வேணு மென்கிற நினைவு அதற்கு இருக்க ப்ரஸக்தியில்லை.ஆயினும் யாத்ருச்சிகமாக எழுத்துத் தேறுகின்ற தென்பதைக் காணா நின்றோம். இது தான் குணாக்ஷர ந்யாயமென்பது. குணக்ஷத லிபிக்ரமாத்” என்று ஸ்வாமி ஸாதித்ததும் இதுவே யாம். நம்பிள்ளை பெரியாவாச்சான் பிள்ளைகள் “புழு குறித்தது எழுத்தாமாப் போலே” என்றருளிச் செய்திருப்பதையே ஸ்வாமி தேசிகன் இங்ஙனம் மொழி பெயர்த்தாரென்னத் தட்டில்லை. இந்த நியாயத்தைக் கொண்டு ஸ்வாமி என்ன ஸாதிக்கிறாரென்னில் லிபிக்ரமாத் உபநிபாதி : ந பாதி ” என்கிறார். புழு குறித்தது எழுத்தாகிற க்ரமத்திலே உபநிபாதிந -தன்னிடம் வந்து சேருமவர்களான, ந-நம்மை, பாதி – எம்பெருமான் காப்பாற்றி யருள்கிறான் என்று ஸாதித்துள்ளார். புத்தி பூர்வகமாக வன்றிக்கே கடலலை வழியாகக் கரையிலே தள்ளுண்டு வந்து சேரும் துரும்பு போலே யாத்ருச்சிகமாகத் தன் பக்கலிலே வந்து சேருமவர்களை எம்பெருமான் தன்னுடைய இயற்கை யின்னருளாலே குளிரக் கடாக்ஷித்து அருள் செய்கின்றா னென்கிற பரமார்த்தம் இதனால் தெரிவிக்கப் பட்டதாயிற்று ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் விபுலமாக ஸாதித்தவற்றை ஸாரமாக வெடுத்துரைப்பதென்னுங் காரணத்தினால் இதற்கு ஸார ஸார மென்றே திருநாமமிட்டனர். அதில் சரம ஸ்லோகாதிகாரத்தில்”இப்படி விதேயமான ப்ரபதநத்தைச் சிலர் அதிகாரி விசேஷணம் ஸம்பந்த ஜ்ஞாந மாத்ரம் ஸித்தோபாய ப்ரதிபத்தி மாத்ரம் அநிவாரண மாத்ரம் அநுமதி மாத்ரம் அசித் வ்யாருத்தி மாத்ரம் சைதந்தை க்ருத்யம் சித்த ஸமாதாநம் என்றாற் போலே சொல்லுமதுவும் இவ் விதிக்கும் இத்தை விஸ்தரிக்கிற சாஸ்த்ரங்களுக்கும் இவற்றுக்குச் சேர்ந்த உபபத்திகளுக்கும் பாஷ்ய கத்யாதிகளுக்கும் நிபுண ஸம் ப்ரதாயங்களுக்கும் அநுகுணமாக வேண்டுமாகையாலே * நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேனென்று நிற்கிற நம்மை ஈஸ்வரன் ரக்ஷிக்கிற விடத்தில்,*வந்தடைந்தேனென்று நாம் பண்ணுகிற அல்பமான வசீகரண யத்நம்* அதுவுமவன தின்னருளே * இசைவித்தென்னை இத்யாதிகளிற் படியேஅவன் தானே காட்டி ப்ரவர்த்திப்பித்ததொரு வ்யாஜமாத்ர மன்றோவென்று ஸித்தோபாய ப்ராதாந்யாநு ஸந்தானத்தில் அவர்களுக்கு தாத்பர்யம்.” என்றருளிச் செய்திருப்பது காணீர். உண்மையான சாஸ்த்ரார்த்தம் எதுவோ அதைத் தான் இங்கு வெளியிட்டருளினார். ” அவர்களுக்கு தாத்பர்யம் ” என்றவிதனையே பல விடங்களில் தம்முடைய தாத்பர்யமாக வெளியிட்டிருப்பதைக் கீழே காட்டியுள்ளோம். யாதவா யுதயமென்னும் மஹா காவ்யம் ஸ்வாமி தேசிகன் பணித்தது; இதில் பன்னிரண்டாவது ஸர்க்கம் ருக்மிணிப் பிராட்டி விஷயமானது. அதில் 1,2.ஸ்லோகங்களினால் ஸாக்ஷாத் ஸ்ரீ மஹாலக்ஷ்மியே ருக்மிணிப் பிராட்டியாகத் திருவவதரித்ததாய்ச் சொல்லப்பட்டது. உடனே மூன்றவது ஸ்லோகம் [ சிகண்டகம் நிஷ்ப்ரதிமம் ச்ருதீநாம் சருங்கார லீலோபம விச்வக்ருத்யம், அதீயதே தந்மிதுநம் ஸ்வபாவாத் அந்யோந்ய ஜீவாது மநந்ய போக்யம்”.] என்பதாகவுள்ளது. இதற்கு மேலுள்ள ஸ்லோகங்களெல்லாம் ருக்மிணிப் பிராட்டியை மாத்திரமே நோக்கியவை. முதலிரண்டு ச்லோகங்களும் அப்படிப் பட்டவை. இடையில் மூன்றாவதான ஸ்லோகமொன்று மாத்திரம் மிதுநம் என்கிற நிர்தேசத்தை யுட் கொண்டு தோன்றியுள்ளது. இந்த ஸ்லோகத்தில், ஸ்ருங்கார வீலோபம விஸ்வ க்ருத்யம் என்பதற்கு வியாக்கியான மென்ன வென்றால், ”ஸ்ருங்கார லீலாவத் அநாயாஸ ஸாத்ய -விநோத ரூப-ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாராதி க்ருத்யம்” என்பதேயாம். இப்படிப்பட்ட க்ருத்யத்தைப் பிராட்டியினிடத்தில் தனியாக இட்டுப் பேசுவதற்குத் திருவுள்ள மில்லாமையினாலேயே தேசிகன் மிதுநம் என்கிற பதத்தை ப்ரயோகித்து இடையிலே இந்த வொரு ஸ்லோகத்தை விலக்ஷணமாக அமைத்தார். முன்னும் பின்னும் பிராட்டியை மாத்திரமே குறித்து ஸ்லோகங்களை யருளிச் செய்து போருகிறவர் இவ்வொரு ஸ்லோகத்தில் மிதுநம் என்று இருவரையும் சேர்த்தருளிச் செய்ததை உற்று நோக்கினால் ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதிகளில் பிராட்டிக்குத் தனிப்பட்ட அன்வய மில்லை யென்று தேசிகன் நிச்சயித் திருப்பது திடமாக விளங்கும். ஸ்ரீஸ்து தியிலும், யத்ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹி ந்யமீஷாம் ஜந்மஸ்தேம ரலயரசநா ஐங்கமாஜங்கமாநாம்; தத் கல்யாணம் கிமபி யமிநாம்
ஏக லக்ஷ்யாம் ஸமாதெள பூர்ணம் தேஜ: ஸ்புரதி பவதீபாத லாக்ஷாரஸாங்கம்.
என்கிற இவ்வொரு ஸ்லோகமே போதும் பிராட்டி விஷயத்தில் தேசிகன் திரு வுள்ளத்தை உள்ளபடி யுணர. பிராட்டியை ஸ்துதிக்க இழிந்தவர் பிராட்டியினிடத் துள்ளதை யன்றோ பேச வேண்டும். “ஐங்கமா ஜங்கமா நாம் ஜந்ஸ்தேம ப்ரலயரசநாம் இந்திரே த்வம் கரோஷி*என்று ஸ்லோகமியற்ற அருமை யில்லையே. இப்படிச் சொன்னாலன்றோ பிராட்டியின் ஸ்துதியாகும் உண்மையில் இவளிடத்திலில்லாததை இருப்பதாக வைத்து எங்ஙனே கவி பண்ணுவர்? கூரத்தாழ்வான் முதலான பூர்வாசார்யர்கள் * ஆபவர்க்கிகபதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி: யஸ்யாவீக்ஷ்ய முகம் ததிங்கிதபர தீநோ விதத்தே இத்யாதியாக அருளிச் செய்ததைப் பின்பற்றியே தான் தேசிகனு மருளிச் செய்கிறாரென்பது ஸ்பஷ்டம். ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்திலும் பரிபூர்ண ப்ரஹ்மா நுபவாதிகாரத்தில் “ஈஸ்வரனுக்கு சத்ர சாமராதிகளைப் போலே லக்ஷணமாகச் சொன்ன ஜகத் காரணத்வ- மோக்ஷ ப்ரதத்வ-ஸர்வாதாரத்வ- ஸர்வ நியந்த்ருத்வ – ஸர்வ சேஷித்வா-ஸர்வ சரீரத்வ-ஸர்வ சப்த வாச்யத்வ – ஸர்வ வேத வேத்யத்வ – ஸர்வ லோக சரண்யத்வ -ஸர்வ பல ப்ரதத்வ-லக்ஷ்மீ ஸஹாயத்வாதிகள் ப்ரதி நியதங்கள்’ என்றருளிச் செய்யப்பட்டது. இந்த மஹா வாக்யத்தில் ஜகத் காரணத்வத்தை முந்துறச் சொல்லி முடிவில் லக்ஷ்மீ ஸஹாயத்வத்தைச் சொல்லி யிருக்கையாலே, லக்ஷ்மியினிடத்தில் லக்ஷ்மீ ஸஹாயத்வம் எப்படி அஸம்பாவிதமோ அப்படியே ஜகத் காரணத்வமும் அவளுக்கு அஸம்பாவிதமென்றும் இவையெல்லாம் பரப்ரஹ்மத்திற்கே பொருந்து மென்றும் காட்டப்பட்டதாயிற்று. இப்படி யருளிச் யெய்ததும் ஸ்ரீ பாஷ்யத்தில் “விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே என்றவிடத்து ஸ்ருத ப்ரகாசிகையில் “ஜகத் காரணத்வ மோக்ஷ ப்ரதத்வேஹி ராஜ்ச் சத்ர சாமரவத் ப்ரஹ்மண: அஸாதாரண சிஹ்நம்.” என்றருளிச் செய்திருப்பதைப் பின் பற்றியதே முனிவா ந போகத்தில் ஆதி என்றவிடத்தும் இப்படியே தானுள்ளது. ந்யாயஸித்தாஞ்ஜந ஜீவ பரிச்சேதத்திலுமிப்படியே தான். தேசிகன் சில்லரை ரஹஸ்யங்களென்றும் சில ரஹஸ்யங்கள் ஸாதித்திருக்கிறார். அவற்றை ஸேவித்தால் நல்ல தெளிவு உண்டாகும்.ரஹஸ்ய ரத்நாவளி யென்று ஒரு சிறு ரஹஸ்யம். அதில் “ஸ்ரீமானான நாராயணனொருவனுமே ஸர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம் ஸர்வ ஸ்வாமிநியாய் ஸர்வேஸ்வரனுக்கு சேஷமாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதிசயத்தாலும் புருஷகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள்”என்றருளிச் செய்து இதை ரஹஸ்ய ரத்நாவளீ ஹ்ருதய மென்கிற அடுத்த ரஹஸ்யத்தில் தாமே விவரித்தருளினார். உண்மையில் விவரணாபேக்ஷையே யில்லாத வாக்யமன்றோவிது. இப்படி நிஸ்ஸந்தேஹமாக வருளிச் செய்த விடங்கள் ஒன்றிரண்டல்ல, பலபல விடங்களுண்டு. சதுஸ் ஸ்லோகியில் மூன்றாவது ஸ்லோகத்தின் பாஷ்யத்தில் “மோக்ஷ ப்ரதே பகவதி முமுக்ஷணாம் கடக தயா ஏஷா திஷ்ட்டதீதி ஸர்வ ஸம்மதம் ” என்றருளிச் செய்ததொன்று போதுமே.”எம்பெருமான் தான் மோக்ஷ மளிப்பவன்; அதனைப் பெறுவிப்பவளாக மாத்திரம் பிராட்டி இராநின்றாள்” என்பது இந்த ஸம்ஸ்க்ருத ஸ்ரீ ஸூக்தியின் பொருள்-அதற்கு மேலுள்ள ஸ்ரீஸூக்திகளும் பிராட்டிக்கு உபாயத்வமில்லை யென்பதையே நிலைநாட்டுவன- த்வயத்தில் பூர்வ கண்டத்தில் பிராட்டிக்கு உபலக்ஷணத்வமா? விசேஷணத்மா ? என்று ஒரு விவாதத்தைக் கிளப்பிக் கொண்டு உபலக்ஷணத்வமென்று சிலர் சொல்லுவதாக வைத்து. அதைக் கண்டித்து விசேஷணத்வமே யுக்தமென்று ஸ்தாபிக்கப்படுகிறது ரஹஸ்ய த்ரய ஸாரத்தில். இது நம்முடைய பூர்வாசார்யர்களின் திருவுள்ளத்தைக் கண்டிப்பதென்று நவீனர்கள் மருண்டிருப்ப துண்டு. இது மிகத் தவறு. இங்குப் பிராட்டிக்கு விசேஷணத்வ மில்லை யென்று ஒரு ஆசார்யரும் உரைத்ததில்லை . முமுக்ஷப்படியில் த்வய ப்ரகரணத்தில் “இப்போதிவளைச் சொல்லுகிறது புருஷகாரமாக ” என்ற சூர்ணையின் வியாக்கியானத்திலே மணவாளமாமுனிகள் – (புருஷகாரமாக) என்கையாலே உபாய வஸ்து விசேஷணமா யிருக்கிற ஆகாரத்தை யிட்டு இவளுக்கு முபாயத்வத்தில் அந்வயம் சொல்லும் பக்ஷம் நிரஸ்தம்” என்றருளிச் செய்திருக்குமிடத்து விசேஷணத்வத்தைக் கண்டோக்தியாகவே யருளிச் செய்திருப்பது காண்க. இங்கு உபலக்ஷணத்வம் கொண்டாலும் விசேஷணத்வம் கொண்டாலும் வாசி சிறிதுமில்லை யென்பதை சாஸ்த்ர மர்மஜ்ஞர்கள் உணர்வர்கள். பிராட்டிக்குப் புருஷகாரத்வமுண்டு என்று இசைந்தான பின்பு அவளுக்கு உபாயத்வமுமுண்டு என்று வாய்திறக்க வழியே கிடையாது. உபாயத்வமாவது தானே கொடுக்க சக்தியுடைத்தாகை. அஃதிருக்குமாகில் புருஷகார க்ருத்யத்திலே நின்று துவள வேண்டிய ப்ரஸக்தியே கிடையாதாகையால் நவீனர்களின் உத்வேல ப்ரஸங்கமெல்லாம் உதறித் தள்ளப்பட்டன.பிராட்டிக்குப் புருஷகார க்ருத்யம் தவிர, தனியே மோக்ஷ ப்ரதாத்ருத்வ முண்டென்பதை தேசிகன் நெஞ்சாலும் நினைத்தவரல்லர். அப்படியே அவளுக்குத் தனியே ஜகத் காரணத்வமுண்டென்றும் நினைத்தவரல்லர். சதுஸ்ஸ்லோகீ பாஷ்யத்தில் * “ஸ லக்ஷ்மீகஸ்ய ஸாம்ராஜ்யம் ஸர்வதா ஸு ப்ரதிஷ்டிதம்” என்றருளிச் செய்திருப்பதை உணர்வாராருமிலர். இதற்கு என்ன பொருள் தெரியுமோ? எவ்விதமான பெருமை சொல்ல வேணுமானாலும் தனிப்படச் சொல்லாதீர்கள், பிராட்டியோடு கூடிய பெருமானுக்குச் சொல்லுங்கள். “இவளோடே கூடியே வஸ்துவினுடைய உண்மை” என்று பிள்ளை லோகசார்யர் முமுக்ஷப்படியிலருளிச் செய்தபடியே ஸலக்ஷ்மீகனான ஸர்வேஸ்வரனுக்கே ஸாமராஜ்யம் ஸுஸங்கதமாம். என்று கட்ட குட்யாம் ப்ரபாதமான கணக்கிலே சொல்லித் தலைக்கட்டியான பின்பு பிராட்டியைத் தனியே பிடித்துக் கொண்டு மன்றாட இடமேது? நியாயஸித்தாஞ்ஜநத்தில் ஜீவ பரிச்சேதத்தின் தொடக்கத்தில் ‘அத ஜீவ அல்ப பரிமாணத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வம்; சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வம், இத்யாதி தல் லக்ஷணம்.’ என்றருளிச் செய்தார் தேசிகன். ஜீவாத்மாவுக்குச் சொன்ன இந்த லக்ஷணமானது பிராட்டியிடத்திலும் ஸமந்வயமடைகின்ற தென்பதில் ஐயமில்லை.”ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்த்தே ப்ராமயமாணே ஸ்வகர்மபி:, ஜீவே துக்காகுலே விஷ்ணோ கருபா காப்யுபஜாயதே.” என்கிற ஆர்ஷ ஸ்லோகம் ஸுப்ரஸித்தம். துக்கப்படுகிற ஸம்ஸாரி சேதநனிடத்திலே எம்பெருமானுக்கு க்ருபை யுண்டாகிறதென்று இதில் சொல்லிற்று. இதை யடி யொற்றி “‘அசிதவிசேஷிதாந்ரளய மநி ஸம்ஸரத:” என்கிற ஸ்லோகமருளிச்செய்த பட்டர் * தயமாநமநா: * என்றுமட்டுமருளிச் செய்தார். இவ்விரண்டையும் விவரித்தருளா நின்ற தேசிகன் தயா சதகத்தில் “அசிதவிசிஷ்டாந் ரலயே ஜந்தூநவலோக்ய ஜாத நிர்வேதா” என்றருளிச் செய்தார். அந்த ஸ்துதியில் தயாளுவான எம்பெருமானை நோக்கிச் சொல்ல வேண்டிய வார்த்தைகளையே தயையை நோக்கிச் சொல்லுகிறாரென்பது நிர்விவாதமாகையாலே ஸம்ஸாரிகளை நோக்கி எம்பெருமான் ஜாத நிர்வேதனாகிறானென்று ஸ்பஷ்டமாகச் சொன்னாராயிற்று. துக்காபிநயம் காட்டினபடியே யொழிய வேறில்லை யென்னில் அவதார சேஷ்டிதங்களெல்லாம் அபிநய மாத்ரமே யென்று சொல்லி இதிஹாஸ புராணங்களைக் கட்டி உள்ளே வைத்திட வேண்டுமத்தனை. ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அநுஸந்தித் திருக்கின்ற திருக் குணங்களை உபபாதிக்குமாசாரியர்கள் ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்ரீராமாயணாதி ஸ்லோகங்களைக் கொண்டே உபபாதிக்கக் காண்கிறோம். இதை ஸ்தோத்ர பாஷ்யாதிகளிலும் காணலாம். அவ் விதிஹாஸ புராணங்களில் எம்பெருமான் காட்டி யருளின சரிதைகளைக் கொண்டு “ஸஞ்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹுர்த்தம் விம நாப வ.” இத்யாதி ஸ்லோகங்கள் அவதரித்தன. அந்த ஸ்லோகங்களை * உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து உடம்பெலாம் கண்ண நீர் சோர நின்று உபந்யஸிக்கிறார்கள் குண வித்தர்கள்– ஸாரத்தில் * செஞ்சொற் கவிகாள் பதிகத்தின் ஸாரத்தைக் கூறுமிடத்து “ஸ்வ ஜநதநுக்ருதாத் யாதரம் ப்ராஹ சாந்தே”என்றார்.எம்பெருமான் தம்முடைய திருமேனியில் வ்யாமோஹம் செய்தபடியை ஆழ்வார் அருளிச் செய்திருக்கிறாரே யொழிய மற்றையோர்களுடைய உடம்பில் வ்யாமோஹம் செய்திருப்பதாகப் பேசியிருக்க வில்லை. அதற்குச் சேர ஸ்வ தநு விநிஹிதாத்யாதரம் என்று ஸ்லோகமிட வேண்டியிருக்க* ஸ்வ ஜந தனு க்ருதாத்யாதரம் * என்று ஸ்லோகமிட்டிருக்கிறார். இங்கு ஸ்வாமியின் தாத்பர்யமென்னவென்றால், ஆழ்வார் தம்முடைய அழுக்குடம்பிலுள்ள வழுக்களை விரும்பி அவன் வ்யாமோஹித்திருப்பதாகச் சொன்னவிது தம் விஷயத்தோடு நிற்பதன்று; தன்னடியார்களெல்லாருடைய வுடலிலும் இப்படி விருப்பம் செய்து போருமவன் என்றதாகக் காட்டின படியென்று திருவுள்ளம் பற்றியே தேசிகன் ‘ஸ்வஐந’ என்று பணித்தார். “ஒளதந்வதே மஹதிஸத்மநி பாஸமாநே ஸ்லாக்க்யே ச திவ்யஸதநே தமஸ: பரஸ்தாத், அந்த: களேபரமிதம் ஸுஷிரம் ஸுஷ்மம் ஜாதம் கரீச கதமாதரணாஸ்பதம் தே” என்கிற ஸ்லோகத்தினால் தம் பக்கலிலும் அப்படிப்பட்ட பரிமாற்றம் நிகழ்ந்த படியைப் பேசினார். இதில் ஆதரணாஸ்பதம் என்கிற வாசகம் விசேஷித்து நோக்கத்தக்கது. ‘என்னுடைய ஹேயமான களேபரத்தில் நீ எப்படி வஸிக்கிறய்?’ என்று கேளாதே பலாப்பழத்தை ஈ மொய்த்துக் கொண்டு கிடக்குமா போலேயும் தண்டாமரையின் தேனை வண்டுகள் மொய்த்துக் கொண்டு கிடக்குமா போலேயும் பரமாதரம் காட்டிக் கொண்டு கிடைக்கிறாயே!இது என்னே! என்று வியந்து கேட்கிறபடி கண்டீரே. க்ருஹஸ்தாச்ரம தருமமாக விஹித விஷய போகம் ப்ராப்தமே யானாலும் அது விசிஷ்டாதிகாரிக்கு குப்ஸநீயமேயென்று. ஆகவே இவ்விஷயத்திலும் ஸத் ஸம்ப்ரதாய ஸித்தாந்தம் நிரவத்யமென்றுணர்க. இவ்விடத்தில் தாத்பர்ய சந்த்ரிகையை நன்கு ஸேவிப்பது.

ததா₂விதா₄நந்த₃மஹாபயாேத₄:
தரங்க₃வ்ரு’த்த்யா ப₄ஜதோ அவதாராந்
அஸேஷ ரூபேஷ்வநுரூபரூபா
தே ₃வீ ஜக₃ந் நேதுரநுப்ரஜஜ்ஜே — 12.1 —

ஸா தஸ்ய நித்யோதி ₃ததி ₃வ்யதா₄ம்ந:
பத்யு: ப்ரியா பா₄நுமத: ப்ரபே₄வ
அத்₄யாஸி துர் த்₃வாரவதீ மதூ₃ராத்
வ்யக்திம் ஶுபா₄ம் ப்ராப வித₃ர்ப₄தே₃ஸே —ஸ்ரீ யாதவாப்யுதயம்
12.2 —

ஶிக₂ண்ட₃கம் நிஷ்ப்ரதிமம் ஶ்ருதீநாம்
ஶ்ரு’ங்கா₃ர லீலோபம விஶ்வ க்ரு’த்யம்
அதீ₄யேத தந்மிது₂நம் ஸ்வபா₄வாத்
அந்யோந்ய ஜீவாது மநந்யே போ₄க்₃யம் –12.3 —

ஈஸ்வரனுக்கு சத்ர சாமராதிகளைப் போலே லஷணமாக சொன்ன –
ஜகத் காரணத்வ -மோஷ ப்ரதத்வ –சர்வ ஆதாரத்வ -சர்வ நியந்த்ருத்வ -சர்வ சேஷித்வ -சர்வ சரீரத்வ –
சர்வ சப்த வாச்யத்வ -சர்வ வேத வேத்யத்வ -சர்வ லோக சரண்யத்வ-சர்வ முமுசூபாச்யத்வ-சர்வ பலப்ரதத்வ – சர்வ வ்யாப்த ஜ்ஞானானந்த ஸ்வரூபத்வ-லஷ்மி சஹாயத்–வாதிகள் பிரதி நியதங்கள்-
அதிகாரம் -22–பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் –

ஆதி –
ஏஷ கர்த்தா ந க்ரியதே -இத்யாதிகளில் படியே சர்வ ஜநதேக காரண பூதன்
இத்தால் காரணந்து த்யேயய–காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாக பற்றப்படுமவன் என்று பலிதம்
(முமுஷுவால் பற்றப்படுபவர் நாராயணன் என்றதாயிற்று )
இக் காரணத்வமும் மோஷ பிரதத்வமும் ( ராஜாவுக்கு )சத்ர சாமரங்கள் போலே சர்வ லோக
சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள்-
முநி வாஹன போகம்–

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே–ரகஸ்ய ரத்னாவளி 

1—ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சம் அல்லன்
2—ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
3—இஜ் ஜீவன் அநாதி காலம் அனுபவிக்கப் பெறாதே ஸ்ரீ யபதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை ரகஸ்ய த்ரய முகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்கு தஞ்சமாகிறான்
4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்
5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே
6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே
நஷ்டம் ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரத்ய நந்தோ தயம்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்-—ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ-3—*ஸக்ருத்₃விபா₄தா ஸர்வார்தி ஸமுத்₃ர பரிஸோஷிணீ , *ப₄வப₄ங்கா₃ பஹாரிணீ ,
*பர நிர்வாணதா₃யிநீ,((ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23-உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில ) *ஜ்யோதிஷ் மத்யம்ருதாவஹேத்யாதீ₃நி । வைஷ்ணவே
ச * ஆத்ம வித்₃யா ச தே ₃வி த்வம் விமுக்தி ப₂லதா₃யிநீதி( –ஆத்ம வித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ –(-வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –) என்றும்) । அத்ர விமுக்தி ப₂லதா₃யித்வஸ்ய ஆத்ம வித்₃யா விஸேஷணத்வே (அ)பி
தாத்₃ருஸ வித்₃யா யாஸ்தத₃தீ₄நத் வோக்த்யா ப்ரக்ருத ஸித்₃தி₄꞉ ।மாேக்ஷ க்ஷேது பூ₄தாத்ம கு₃ண ஸித்₃தி₄ஶ்ச தத₃தீ₄நேதி தத்ர தத்ர உக்தம் । ஏவம்
ஸ்தி₂தே க₃த்₃யாரம்போ₄க்தந்யாயேந மோக்ஷ உபாய-தத₃தி₄காரயோ ꞉ தாவத்
ஏதந் மூலத்வம் து₃ரபஹ்நவம் । மாேக்ஷ ப்ரதே ₃ ப₄க₃வதி முமுஷணாம்
க₄டகதயா ஏஷா திஷ்ட₂தீதி ச ஸர்வ ஸம்மதம் । பரிபூர்ணாநுப₄வ ப்ரதா₃ந
ஸங்கல்பஸ்து ப₄க₃வத: ஸ்வஸ்யைவ வா ஸ பத்நீகஸ்ய வேதி
யதா₂ப்ரமாணம் ப₄வது । ஸர்வதா₂ வைஷ்ணவாத்₄ வஸ்ரேய꞉ப்ரத₃த்வமஸ்யா
இக்ஷோச்யமாநம் ந விருத்₃த₄மிதி ॥ 3-(அவனே இவள் புருஷகாரம் மூலம் என்றோ இருவரும் சேர்ந்தே பரிபூர்ண அனுபவ ப்ரீதிக்கு ஸங்கல்பம் செய்கிறார்கள் என்றோ கொள்ளலாம்)

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  கர்ண பர்வம்-பதினேழாம் நாள் போர்-

October 15, 2025

ஜனமேஜயன் கேள்வி! – கர்ண பர்வம் பகுதி – 01-துரோணர் இறந்த பிறகு, துரியோதனனும், பிற மன்னர்களும் அவரது மகனிடம் சென்றது; கர்ணனைத் தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு போரிடச் சென்றது; இரண்டு நாட்கள் கடும் போருக்குப் பிறகு அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்படுவது ஆகியவற்றை வைசம்பாயனர் சொல்வது; போரை விவரமாகச் சொல்லும்படி ஜனமேஜயன் கேட்டுக் கொண்டது…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.வைசம்பாயனர் {வியாசரின் சீடர்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, துரோணர் கொல்லப்பட்டதும், துரியோதனன் தலைமையிலான (கௌரவப் படையின்) அரசப் போர்வீரர்கள் அனைவரும், இதயம் நிறைந்த பெருங்கவலையுடன், துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} சென்றனர்.(1) துரோணரின் இழப்பால் அழுதபடியே இருந்த தங்கள் உற்சாகமற்ற நிலையின் விளைவால், சக்தியை இழந்து, துயரால் பீடிக்கப்பட்ட அவர்கள், சரத்வான் மகளின் {கிருபியின்} மகனை {அஸ்வத்தாமனைச்} சுற்றி அமர்ந்தனர்.(2) சாத்திரங்களில் காணப்படும் கருத்துகளால் சற்று ஆறுதலடைந்த அந்தப் பூமியின் ஆட்சியாளர்கள், இரவு வந்ததும் தங்கள் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர்.(3)எனினும், ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயா}, தங்கள் வசிப்பிடங்களில் இருந்த அந்தப் பூமியின் தலைவர்களால் எந்த மகிழ்ச்சியையும் உணரமுடியவில்லை. மிகப்பெரும் படுகொலைகளை நினைத்துப் பார்த்த அவர்களால் உறங்கவும் முடியவில்லை.(4) குறிப்பாகச் சூதன் மகன் (கர்ணன்), மன்னன் சுயோதனன் {துரியோதனன்}, துச்சாசனன், சகுனி ஆகியோரால் உறங்கவே முடியவில்லை.(5) இந்த நால்வரும், உயர் ஆன்மப் பாண்டவர்களுக்குத் தாங்கள் ஏற்படுத்திய துயரங்களை நினைத்துப் பார்த்தபடியே அவ்விரவை துரியோதனனின் பாசறையில் ஒன்றாகக் கழித்தனர்.(6) முன்பு அவர்கள், பகடையாட்டத்தால் துயரில் மூழ்கியிருந்த திரௌபதியைச் சபைக்குக் கொண்டு வந்தனர்.அதை நினைத்துப் பார்த்த அவர்கள், கவலை நிறைந்த இதயங்களுடன் பெரும் வருத்தத்தை அடைந்தனர்.(7) சூதாட்டத்தின் விளைவால் (பாண்டவர்களுக்கு) ஏற்படுத்தப்பட்ட அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அவ்விரவை நூறு வருடங்களைப் போலக் கழித்தனர்.(8)

காலை விடிந்ததும், அவர்கள் அனைவரும் இயல்பு விதிகளை நோற்று, வழக்கமான தங்கள் சடங்குகளைச் செய்தனர்.(9) வழக்கமான சடங்குகளைச் செய்த பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஓரளவுக்கு ஆறுதலை அடைந்த அவர்கள், தங்கள் துருப்புகளை முறையாக அணிவகுக்கச் செய்து, போரிட வெளியே வந்து,(10) கர்ணனின் மணிக்கட்டில் மங்கல நாணைக் கட்டி, அவனைத் {கர்ணனைத்} தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு, பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு, தயிர்ப்பாத்திரங்கள், தெளிந்த நெய், அக்ஷதங்கள் [1], தங்க நாணயங்கள், பசுக்கள், ரத்தினங்கள், நகைகள், விலைமதிப்புமிக்க ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்தும், கட்டியங்கூறுவோர் {சூதர்கள்}, இசைக்கலைஞர்கள் {மாகதர்கள்}, துதிபாடிகள் {வந்திகள்} ஆகியோரை வெற்றித் துதிகளால் தங்களைப் பாடச் செய்தும், அவர்களைத் தங்களின் வெற்றிக்காக வேண்டச் செய்தனர்.(11,12) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்களும், தங்கள் காலைச் சடங்குகளைச் செய்த பிறகு, போரிடும் தீர்மானத்துடன் தங்கள் முகாமை விட்டு வெளியே வந்தனர்.(13)அப்போது, ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு கடும்போர் தொடங்கியது.(14) கர்ணனுடைய படைத்தலைமையின் போது, குரு மற்றும் பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் நடந்த போரானது மிகக் கடுமையானதாக இரண்டு நாட்களுக்கு நீடித்தது.(15) போரில் தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்ற விருஷன் (கர்ணன்), இறுதியாகத் தார்தராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(16) பிறகு ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பிய சஞ்சயன், குருஜாங்கலத்தில் நடைபெற்ற அனைத்தையும் திருதராஷ்டிரனுக்குச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}“பீஷ்மர் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்டவனும், அம்பிகையின் மகனுமான முதிர்ந்த மன்னன் திருதராஷ்டிரன் பெரும் துயரால் பீடிக்கப்பட்டிருந்தான்.(18) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, துரியோதனனின் நலன் விரும்பியான கர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரில் மூழ்கியும், எவ்வாறு அவன் {திருதராஷ்டிரன்} உயிரோடு இருந்தான்?(19) தன் மகன்களின் வெற்றி எவனிடம் இருக்கிறது என அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} நினைத்தானோ, அவன் {கர்ணன்} வீழ்ந்த போதும், எவ்வாறு அவனால் {திருதராஷ்டிரனால்} உயிர் தரித்திருக்க முடிந்தது?(20) 

கர்ணனின் மரணத்தைக் கேட்ட பிறகும் மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடாமல் இருந்தான் எனும்போது, எத்தகு பெரும் துயரச் சூழ்நிலைகளிலும் மனிதர்கள் தங்கள் உயிரை விடுவது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(21) ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, சந்தனுவின் மதிப்புமிக்க மகன் {பீஷ்மர்}, பாஹ்லீகன், துரோணர், சோமதத்தன், பூரிஸ்ரவஸ், பிற நண்பர்கள், தன் மகன்கள், பேரன்கள் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்ட பிறகும், மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடவில்லை எனும்போது, ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, ஒருவன் உயிரை விடுவது என்பது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(22,23) உண்மையாக நடந்தவாறே இவை யாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக. என் மூதாதையரின் உயர்ந்த சாதனைகளைக் கேட்பதில் நான் நிறைவை அடையவில்லை” என்றான் {ஜனமேஜயன்}.(24)

சஞ்சயன் திருதராஷ்டிரன் உரையாடல்! – கர்ண பர்வம் பகுதி – 02-கர்ணன் வீழ்ந்ததைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; திருதராஷ்டிரனின் புலம்பல்; திருதராஷ்டிரன் வருந்தக்கூடாது என்று சொன்ன சஞ்சயன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கர்ணன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியற்ற இதயம் கொண்ட கவல்கணன் மகன் {சஞ்சயன்}, காற்றின் வேகத்திற்கு ஒப்பான குதிரைகளில் அவ்விரவே நாகபுரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான்.(1) ஹஸ்தினாபுரத்தை அடைந்ததும், ஆழ்ந்த கவலையால் நிறைந்த இதயத்துடன் கூடிய அவன் {சஞ்சயன்}, சொந்தங்களோ, நண்பர்களோ {அப்போது அங்கு} இல்லாதிருந்த திருதாரஷ்டிரனின் வசிப்பிடத்திற்குச் சென்றான். துயரால் சக்தி அனைத்தையும் இழந்திருந்த மன்னனை {திருதராஷ்டிரனைக்} கண்ட அவன் {சஞ்சயன்}, கூப்பிய கரங்களுடன், தலைவணங்கி அந்த ஏகாதிபதியின் பாதங்களை வழிபட்டான்.(3)

முறையாக மன்னன் திருதராஷ்டிரனை வணங்கிய அவன் {சஞ்சயன்}, கவலையால் கூவியபடியே சொல்லத் தொடங்கினான்,(4) “ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, நான் சஞ்சயன். நீர் மகிழ்ச்சியாக இல்லையா? உமது தவறுகளால் இத்தகு துயரத்தில் வீழ்ந்தாலும், நீர் மலைப்படைய மாட்டீர் என நான் நம்புகிறேன்.(5)

விதுரர், துரோணர், கங்கையின் மகன் {பீஷ்மர்}, கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோர் உமது நன்மைக்கான ஆலோசனைகளைச் சொன்னார்கள். அந்த ஆலோசனைகளை நீர் மறுத்தத்தை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(6)

ராமர் {பரசுராமர்}, நாரதர், கண்வர் மற்றும் பிறராலும் உமது நன்மைக்கான ஆலோசனைகள் சபையில் வைத்துச் சொல்லப்பட்டன. அவை உம்மால் மறுக்கப்பட்டதை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(7)

உமது நன்மையிலேயே எப்போதும் ஈடுபட்ட நண்பர்களான பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரும் போரில் எதிரியால் கொல்லப்பட்டதை நினைத்து நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்” என்றான் {சஞ்சயன்}.(8)

கரங்களைக் கூப்பியபடி தன்னிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த அந்தச் சூதன் மகனிடம் {சஞ்சயனிடம்}, துயரால் பீடிக்கப்பட்டு, நீண்ட வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே இருந்த அந்த ஏகாதபதி {திருதராஷ்டிரன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(9)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் கொண்ட போர்வீரரான அந்தக் கங்கை மகனின் {பீஷ்மரின்} வீழ்ச்சியையும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான துரோணரின் வீழ்ச்சியையும் கேட்டு என் இதயத்தில் பெரும் வலியை உணர்கிறேன்.(10) பெரும் சக்தி கொண்டவரும், வசுக்களால் பிறந்தவருமான எந்த வீரர் கவசம் பூண்டு கொண்டு ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் தேர்வீரர்களைக் கொன்றாரோ,(11), பிருகுவின் மகன் {பரசுராமர்}, உயர்ஆன்மா கொண்ட எவரிடம் உயர்ந்த ஆயுதங்களைக் கொடுத்தாரோ, பிள்ளைப் பருவத்திலே எந்தப் போர்வீரர், ராமரால் {பரசுராமரால்} வில்லின் அறிவியல் பயிற்றுவிக்கப்பட்டாரோ, ஐயோ அவர் {பீஷ்மர்}, பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்டவனும், யக்ஞசேனன் {துருபதன்} மகனுமான சிகண்டியால் கொல்லப்பட்டாரே. இதற்காக என் இதயம் பெரிதும் வலிக்கிறது[1].(12,13)எந்த வீரரின் அருளின் மூலம், வலிமைமிக்கத் தேர்வீரர்களான குந்தியின் அரச மகன்களும், பூமியின் தலைவர்கள் பலரும் மகாரதர்கள்[2] ஆனார்களோ,(14) ஐயோ, துல்லியமான இலக்குக் கொண்ட அந்தப் பெரும் வில்லாளியான துரோணர், திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் மிகவும் வலிக்கிறது.(15) அவ்விருவரும், நால்வகை ஆயுதங்களிலும் (ஆயுதங்களின் அறிவிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும்)[3] தங்களுக்கு ஒப்பாக எவனையும் கொண்டதில்லை. ஐயோ, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் மிகவும் வலிக்கிறது.(16) எந்தப் போர்வீரர், ஆயுத அறிவில் தனக்கு நிகராக மூன்று உலகிலும் எவனையும் கொள்ளவில்லையோ, வீரரான அந்தத் துரோணரின் கொலையைக் கேட்டு என் தரப்பின் மக்கள் என்ன செய்தனர்?(17)பாண்டுவின் உயர்ஆன்ம மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆற்றலுடன் முயன்று, பலமிக்கப் படையான சம்சப்தகர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிய பிறகு,(18) துரோணரின் புத்திசாலி மகனுடைய {அஸ்வத்தாமனுடைய} நாராயண ஆயுதம் கலங்கடிக்கப்பட்ட பிறகு, (கௌரவப்) படைப்பிரிவுகள் தப்பி ஓடத் தொடங்கிய பிறகு, என் தரப்பின் மக்கள் என்ன செய்தனர்?(19) துரோணரின் மரணத்திற்குப் பிறகு, தப்பி ஓடியவர்களும், துயரக் கடலில் மூழ்கியவர்களுமான என் துருப்பினரை, ஆழ்ந்த கடலின் நடுவே கப்பல் உடைந்த கடலோடிகளுக்கு ஒப்பாக நான் நினைக்கிறேன்.(20) ஓ! சஞ்சயா, குரு படைப்பிரிவுகள் களத்தில் இருந்து தப்பி ஓடிய போது, துரியோதனன், கர்ணன், போஜர்களின் தலைவனான கிருதவர்மன், மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், எஞ்சியிருக்கும் என் மகன்கள் மற்றும் பிறரின் முகங்கள் எவ்வண்ணத்தை ஏற்றன?(21,22) ஓ!கவல்கணன் மகனே {சஞ்சயா}, பாண்டவர்கள் மற்றும் என் தரப்பின் போர்வீரர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றலை விளக்கியபடி, போரில் உண்மையாக நடந்தவாறே இவையாவற்றையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது தவறால், கௌரவர்களுக்கு ஏற்பட்ட அனைத்தையும் கேட்டு நீர் எந்த வேதனையும் அடைய வேண்டாம். ஞானியான எவனும், விதிகொண்டு வரும் எதற்காகவும், ஒருபோதும் வலியை உணர்வதில்லை {மனம் வருந்துவதில்லை}.(24) விதி வெல்லப்பட முடியாததாகையால், மனித காரியங்கள் அடையப்படுவதாகவும், அடையப்படாததாகவும் ஆகலாம். எனவே, ஞானியான ஒருவன், தான் விரும்பிய பொருட்களை அடைந்தாலோ, வேறுவிதமானாலோ ஒருபோதும் வலியை உணர்வதில்லை” (என்றான் சஞ்சயன்}.(25)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, நான் வலியை உணரவில்லை. நான் இவை யாவற்றையும் விதியின் விளைவாகவே கருதுகிறேன். விரும்பியபடியே அனைத்தையும் நீ எனக்குச் சொல்வாயாக” என்றான்.(26)

தன் படைக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்! – கர்ண பர்வம் பகுதி – 03-திருதராஷ்டிரன் மகன்களின் முகவாட்டத்தைக் கண்டு, கலங்கி நின்ற படைவீரர்கள்; படைவீரர்களுக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்; கர்ணனின் பெருமைகளைச் சொன்ன துரியோதனன்; அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்பட்டதைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் வில்லாளியான துரோணர் வீழ்ந்ததும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள், நிறம் மங்கியவர்களாகி, உற்சாகமற்றவர்களாகி தங்கள் உணர்வுகளை இழந்தனர்.(1) ஆயுதங்கள் தரித்திருந்தவர்களான அவர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தலையைத் தொங்கப்போட்டனர். துயரால் பீடிக்கப்பட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், முற்றிலும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.(2) இவ்வாறு பீடிக்கப்பட்ட முகத்தோற்றத்துடன் கூடிய அவர்களைக் கண்ட உமது துருப்பினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துயரால் மனங்கலங்கி மேல்நோக்கியபடி வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(3) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் துரோணர் கொல்லப்பட்டதைக் கண்டதும், அவர்களில் பலரின் ஆயுதங்கள், இரத்தக் கறைகளுடன் அவர்களது கைகளில் இருந்து விழுந்தன.(4) மேலும், ஓ! பாரதரே, படைவீரர்களின் பிடியில் இருந்த எண்ணற்ற ஆயுதங்களும், வானத்தில் இருந்து விழும் விண்கோள்களுக்கு ஒப்பாகத் தொங்கிக் கொண்டிருந்தன[1].(5)

அப்போது துரியோதனன், ஓ! ஏகாதிபதி, முடக்கப்பட்டு உயிரற்றவர்களைப் போல இப்படி நின்று கொண்டிருந்த உமது அந்தப் படையைக் கண்டு,(6) “உங்கள் கரங்களின் வலிமையை நம்பியே நான் பாண்டவர்களைப் போருக்கு அழைத்து, இந்த ஆயுத வழியைத் தொடக்கினேன்.(7) எனினும், துரோணர் வீழ்ந்ததும், {நமக்கான} வாய்ப்பு மகிழ்ச்சியற்றதாகத் தெரிகிறது. போரில் ஈடுபடும் போர்வீரர்கள் அனைவரும் போரில் சாகிறார்கள்.(8) போரில் ஈடுபடுவதால், ஒரு போர்வீரன் வெற்றியையோ, மரணத்தையோ அடைவான். இதில் (துரோணரின் மரணத்தில்) என்ன வினோதமிருக்கிறது? ஒவ்வொரு திசையை நோக்கியும் முகத்தைத் திருப்பிப் போரிடுவீராக.(9) வலிமையும், பலமும், உயர் ஆன்மாவும் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான விகர்த்தனன் மகன் கர்ணன், தனது தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தியபடியே போரில் திரிவதை இப்போது காண்பீராக.(10)

போரில் அந்தப் போர்வீரன் {கர்ணன்} மீது கொண்ட அச்சத்தாலேயே, கோழையான குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிங்கத்தைக் கண்ட சிறு மானைப் போல எப்போதும் பின்வாங்குகிறான்.(11) அவனே {கர்ணனே}, பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்ட வலிமைமிக்கப் பீமசேனனை, சாதாரண மனிதப் போர் முறைகளாலேயே அந்தப் பரிதாப நிலையை அடையச் செய்தான்.(12) ஆயிரக்கணக்கான மாயைகளைக் கொண்டவனும், தெய்வீக ஆயுதங்களை நன்கறிந்தவனும், துணிச்சல்மிக்கவனுமான கடோத்கசனை உரக்க முழங்கியபடியே, வெல்லப்படமுடியாத தனது ஈட்டியால் கொன்றவன் அவனே {கர்ணனே}.(13) இலக்கில் துல்லியமும், வெல்லப்பட முடியாத சக்தியும் கொண்ட அந்தப் புத்திசாலி போர்வீரனின் {கர்ணனின்} வற்றாத ஆயுத வலிமையை இன்று காண்பீராக.(14) விஷ்ணுவுக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} ஒப்பான அஸ்வத்தாமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரின் ஆற்றலையும் அந்தப் பாண்டுவின் மகன்கள் இன்று காணட்டும்[2].(15) போரில் பாண்டுவின் மகன்களையும், அவர்களது துருப்புகளையும் தனித்தனியாகவே உங்கள் அனைவராலும் கொல்ல முடியும். அப்படியிருக்கையில் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் உங்களால் அடைய இயலும் சாதனை எவ்வளவு பெரியதாக இருக்க முடியும்? பெரும் சக்தியைக் கொண்டவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான நீங்கள், இன்று பெரும்பணிகளைச் சாதித்தபடியே ஒருவரையொருவர் காணப் போகிறீர்கள்” என்றான் {துரியோதனன்}.(16)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துரியோதனன், தனது தம்பிகளுடன் கூடி கர்ணனை (குரு படையின்) படைத்தலைவனாக்கினான்.(17) படைத்தலைமையை ஏற்றவனும், போரில் மிகக் கடுமையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கர்ணன் உரத்த முழக்கங்களைச் செய்தபடியே எதிரியோடு போரிட்டான்.(18) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிருஞ்சயர்கள், பாஞ்சாலர்கள், கேகயர்கள் மற்றும் விதேஹர்களுக்கு மத்தியில் அவன் {கர்ணன்} பேரழிவை ஏற்படுத்தினான்.(19) ஒன்றின் {ஒரு கணையின்} சிறகுக்கு {புங்கத்திற்கு} மிக நெருக்கமாக, வண்டுகளின் கூட்டங்களைப் போல எண்ணற்ற சரக் கணைகள் அவனது வில்லில் இருந்து வெளிப்பட்டன. பெரும் சுறுசுறுப்புடன் கூடிய பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் பீடித்து, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைக் கொன்ற அவன் {கர்ணன்}, இறுதியாக அர்ஜுனனால் கொல்லப்பட்டான்” {என்றான் சஞ்சயன்}.(21)

மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 04-துயரால் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்; பெண்களின் ஓலம்; பெண்கள் மயங்கிவிழுந்தது; மீண்டும் சஞ்சயனிடம் போரைக் குறித்து விசாரித்த திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இந்தப் புலனாய்வைக் கேட்ட அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், துயரின் உச்சக்கட்டத்தை உணர்ந்து, சுயோதனன் {துரியோதனன்} ஏற்கனவே இறந்துவிட்டதாகவே கருதினான். மிகவும் கலங்கிப் போன அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, உணர்வுகளை இழந்த யானையொன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(1) பெரிதும் கலக்கமடைந்தவனான அந்த ஏகாதிபதிகளில் முதனமையானவன் {திருதராஷ்டிரன்} பூமியில் விழுந்த போது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, (அரச குடும்பத்தைச் சார்ந்த) பெண்கள் உரக்க ஓலமிட்டனர். மொத்த பூமியையும் நிறைக்குமளவுக்கு அவ்வொலி பேரொலியாக இருந்தது[1].(2) ஆழ்ந்த துயரக் கடலில் மூழ்கியிருந்த அந்தப் பாரதப் பெண்மணிகள், பெரிதும் கலக்கமடைந்த இதயங்களுடன், துயரால் எரிக்கப்பட்டவர்களாக உரக்க அழுதனர்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மன்னனை அணுகிய காந்தாரியும், அந்தக் குடும்பத்தின் பிற பெண்மணிகள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(4)அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துயரால் பீடிக்கப்பட்டுக் கண்ணீரால் குளித்து, உணர்வுகளை இழந்த அந்தப் பெண்களுக்குச் சஞ்சயன் ஆறுதல் கூறினான்.(5) (சஞ்சயனால்) ஆறுதலடைந்த அந்தப் பெண்கள், காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினர்.(6) விதுரனும், அந்தக் குரு வழித்தோன்றலின் {திருதராஷ்டிரன்} மீது நீரைத் தெளித்து, தன் கண்ணையே ஞானமாகக் கொண்ட [2] அந்தப் பலமிக்க ஏகாதிபதிக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஆறுதலளிக்கத் தொடங்கினான்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மெதுவாக உணர்வுகளை அடைந்து, அந்தக் குடும்பத்தின் பெண்கள் அங்கே இருப்பதை அறிந்து கொண்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, மதியிழந்த ஒருவனைப் போலச் சிறிது நேரம் முற்றிலும் அமைதியாக இருந்தான்.(8)சிறிது நேரம் சிந்தித்து, நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் மகன்களை நிந்தித்து, பாண்டவர்களைப் புகழ்ந்தான்.(9) தன் அறிவையும், சுபலனின் மகனான சகுனியின் அறிவையும் நிந்தித்த மன்னன், நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினான்.(10) மீண்டும் தன் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்ட அந்த மன்னன், போதுமான மன உரத்துடன், கவல்கணன் மகனான தன் தேரோட்டி சஞ்சயனிடம் கேள்வி கேட்டான்.(11)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, நீ சொன்னதனைத்தையும் நான் கேட்டேன். ஓ! சூதா, எப்போதும் வெற்றியை விரும்பிய என் மகன் துரியோதனன், வெற்றியடையவதில் சலிப்படைந்து ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குச் சென்றுவிட்டானா? ஓ! சஞ்சயா, திரும்பச் சொல்ல வேண்டியிருந்தாலும் கூட, இவை யாவையும் எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றான்.(12,13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, மன்னனால் {திருதராஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதன் {சஞ்சயன்}, அவனிடம், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த வைகர்த்தனன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளிகளும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருந்தவர்களுமான தனது மகன்கள், தம்பிகள் மற்றும் பிற சூதப் போர்வீரர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டான்.(14) பாண்டுவின் புகழ்பெற்ற மகனால் {பீமனால்} துச்சாசனனும் கொல்லப்பட்டான். உண்மையில், அந்தப் போரில் கோபத்துடன் இருந்த பீமசேனனால் அவனது {துச்சாசனனின்} குருதியும் குடிக்கப்பட்டது” {என்றார் வைசம்பாயனர்}.(15)

கொல்லப்பட்ட கௌரவ வீரர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 05-பாண்டவர்கள் மற்றும் குருக்களில் இறந்தவர்கள் யார் எனச் சஞ்சயனிடம் கேட்ட திருதராஷ்டிரன்; கொல்லப்பட்ட குரு வீரர்களைக் குறித்துச் சொன்ன சஞ்சயன்

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், துயரால் இதயம் கலங்கிப் போய்த் தன் சாரதியான சஞ்சயனிடம்,(1) “ஓ! ஐயா {சஞ்சயா}, சிறுமதியாளனான என் மகனுடைய {துரியோதனனுடைய} தீய கொள்கையின் விளைவாலேயே விகர்த்தனன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டான். இந்தப் புலனாய்வு என் இதயத்தின் மையத்தையே பிளக்கிறது.(2) இந்தத் துன்பக் கடலை நான் கடக்க விரும்புகிறேன். எனவே, குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு[1] மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் எவர்கள், இறந்தவர்கள் எவர்கள் என்பதை எனக்குச் சொல்லி என் ஐயங்களை விலக்குவாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(3)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவரும், பெரும் எண்ணிக்கையிலான [2] சிருஞ்சயர்களையும், பாஞ்சாலர்களையும் கொன்றவருமான சந்தனுவின் மகன் பீஷ்மர், {போர் தொடங்கிப்} பத்து நாட்களுக்குப் பிறகு கொல்லப்பட்டார்.(4) வலிமைமிக்கவரும், வெல்லப்பட முடியாத வில்லாளியும், தங்கத் தேரைக் கொண்டவருமான துரோணர், போரில் பாஞ்சாலப் படைப்பிரிவுகளைக் கொன்ற பிறகு கொல்லப்பட்டார்.(5) பீஷ்மரும், சிறப்புமிக்கத் துரோணரும் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பின்னர் எஞ்சியவர்களில் பாதியைக் கொன்ற பிறகு விகர்த்தனன் மகனான கர்ணனும் கொல்லப்பட்டான்.(6)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும்பலம் கொண்டவனான இளவரசன் விவிம்சதி, போரில் நூற்றுக்கணக்கான ஆனர்த்த {ஆனர்த்த நாட்டுப்} போர்வீரர்களைக் கொன்றபிறகு கொல்லப்பட்டான்.(7) குதிரைகளையும், ஆயுதங்களையும் இழந்தாலும், உமது வீர மகனான விகர்ணன், க்ஷத்திரியக் கடமைகளை நினைவில் கொண்டு எதிரியை எதிர்த்து நின்றான்.(8) பீமசேனன், துரியோதனனால் தனக்கு இழைக்கப்பட்ட முறையற்ற தீங்குகளை நினைவு கூர்ந்தும், தன் சொந்த சபதத்தை மனத்தில் கொண்டும் அவனை {விகர்ணனைக்} கொன்றான்.(9) பெரும் வலிமை கொண்டவர்களும், அவந்தியின் இளவரசர்களுமான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகிய இருவரும், அடைவதற்கு மிகக் கடினமான சாதனைகளைச் செய்துவிட்டு யமலோகம் சென்றனர்.(10) தன் கூரிய கணைகளால் பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகளை வென்ற அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துவை {சிந்து நாட்டைத்} தலைமையாகக் கொண்ட பத்து அரசுகள் எந்த வீரனுடைய அளுகையின் கீழிருக்கின்றனவோ, உமக்கு எப்போதும் எவன் கீழ்ப்படிந்திருந்தானோ, அந்த வலிமையும், சக்தியும் மிக்க ஜெயத்ரதனைக் கொன்றான்.(12)

பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், போரில் எளிதாக வெல்லப்பட முடியாதவனும், தன் தந்தையின் உத்தரவுகளுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனுமான துரியோதனன் மகன் {லக்ஷ்மணன்}, சுபத்ரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டான்[3].(13) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், போரில் மூர்க்கமானவனுமான துணிச்சல்மிக்கத் துச்சாசனன் மகன்[4] பெரும் ஆற்றலுடன் முயன்ற திரௌபதியின் மகனால் யமலோகத்திற்கு அனுப்பப்பட்டான்.(14) கிராதர்கள் மற்றும் கடற்கரையில் உள்ள தாழ்ந்த நிலங்களில் வசிக்கும் பிறர் ஆகியோரின் ஆட்சியாளனும், பெரும் மதிப்புடையவனும், தேவர்களின் தலைவனுடைய அன்பு நண்பனும், க்ஷத்திரியக் கடமைகளுக்கு எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனுமான பகதத்தன், ஆற்றலுடன் பெரிதும் முயன்ற தனஞ்சயனால் {அர்ஜுனனால்} யமலோகத்திற்கு அனுப்பப்பட்டான்.(15,16) ஓ! மன்னா, கௌரவர்களின் உறவினனும், துணிச்சல் மிக்கவனும், கொண்டாடப்பட்டவனுமான அந்தச் சோமதத்தன் மகன் பூரிஸ்வரவஸ், போரில் சாத்யகியால் கொல்லப்பட்டான்.(17)

க்ஷத்திரியர்களில் முதன்மையானவனும், போரில் மிகவும் அச்சமற்ற வகையில் திரியக்கூடியவனுமான அம்பஷ்ட மன்னன் சுருதாயுஸ்[5], அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(18) ஆயுதங்களில் சாதித்தவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், எப்போதும் கோபம் நிறைந்தவனுமான உமது மகன் துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் கொல்லப்பட்டான்[6].(19) பல்லாயிரக்கணக்கான அற்புத யானைகளைக் கொண்டவனான சுதக்ஷிணன்[7] போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(20) கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}[8], பல்லாயிரம் பேரைக் கொன்ற பிறகு, ஆற்றலுடன் முயன்ற சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} யமலோகம் அனுப்பப்பட்டான்.(21) பல்லாயிரம் எதிரிகளோடும், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனனோடும் போரிட்ட உமது மகன் சித்திரசேனன், பீமசேனனால் கொல்லப்பட்டான்.(22) எதிரிகளின் அச்சங்களை அதிகரிப்பவனும், மத்ர ஆட்சியாளனின் தம்பியும்[9], வாளும், கேடயமும் தரித்தவனுமான அந்த அழகிய போர்வீரன், சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டான்.(23)போரில் கர்ணனுக்கு இணையானவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், வலிமையும், சக்தியும், நிலைத்த ஆற்றலையும் கொண்ட கர்ணனின் மகன் விருஷசேனன், தன் மகன் அபிமன்யு கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்தவனும், தான் செய்த சபதத்தை மனத்தில் கொண்டவனுமான தனஞ்சயனால் {அர்ஜுனனால்} யமலோகம் அனுப்பப்பட்டான்[10].(24,25) பூமியின் தலைவனும், பாண்டவர்களிடம் ஆழ்ந்த வெறுப்பை எப்போதும் வெளிப்படுத்தியவனுமான சுருதாயுஷ், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} தன் மனத்தில் உள்ள வெறுப்பைச் சொன்னதும், அவனால் கொல்லப்பட்டான்.(26) பெரும் ஆற்றலைக் கொண்டவனான சல்லியன் மகன் ருக்மரதன், ஓ! ஐயா, சகாதேவனின் தாய்மாமன் மகனாகவும், மைத்துனனாகவும் இருப்பினும், பின்னவன் {சகாதேவன்} முன்னவனை {ருக்மரதனைக்}[11] கொன்றான்.(27) பெரும் ஆற்றல், வலிமை, சக்தி ஆகியவற்றைக் கொண்ட முதிர்ந்த மன்னன் பாகீரதன், கைகேயர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்திரன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.(28) பெரும் ஞானத்தையும், பலத்தையும் கொண்ட பகதத்தன் மகன், ஓ! மன்னா, பருந்தின் சுறுசுறுப்புடன் போர்க்களத்தில் எப்போதும் திரியும் நகுலனால் கொல்லப்பட்டான்.(29) பெரும் வலிமையும், ஆற்றலும் கொண்டவரான உமது பாட்டன் பாஹ்லீகரும், அவரைப் பின்தொடர்ந்தவர்களும், பீமசேனனால் கொல்லப்பட்டனர்.(30

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, ஜராசந்தனின் மகனும், மகதர்களின் இளவரசனும், வலிமைமிக்கவனுமான ஜெயத்சேனன், போரில் உயர் ஆன்ம சுபத்திரையின் மகனால் கொல்லப்பட்டான்.(31) ஓ! மன்னா, உமது மகன் துர்முகன், வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மற்றொரு மகன் துஸ்ஸஹன் ஆகியோரை பீமசேனன் தன் கதாயுதத்தால் கொன்றான்.(32) துர்மர்ஷணன், துர்விஷஹன், வலிமைமிக்கத் தேர்வீரனான துர்ஜயன் ஆகியோர் அடைவதற்கரிய சாதனைகளைச் செய்து யமலோகத்திற்குச் சென்றனர்.(33) போரில் வெல்லப்பட முடியாத இரு சகோதரர்களான கலிங்கனும், விருஷகனும் {ரிஷபனும்}, அடைவதற்கரிய சாதனைகளைச் செய்து யமலோகத்தை அடைந்தனர்.(34) சூதனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது ஆலோசகன் விருஷவர்மன், ஆற்றலுடன் முயன்ற பீமசேனனால் யமலோகம் அனுப்பப்பட்டான்.(35)

பத்தாயிரம் யானைகளின் வலிமையைக் கொண்ட மன்னன் பௌரவனும், தன்னைப் பின்தொடர்ந்தவர்கள் அனைவருடன், பாண்டுவின் மகன் அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(36) தாக்கும் திறன் கொண்ட இரண்டாயிரம் எண்ணிக்கையிலான வசாதிகள் அனைவரும், பெரும் ஆற்றலைக் கொண்ட சூரசேனர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர்.(37) கவசம் பூண்டவர்களும், திறம்படத் தாக்க இயன்றவர்களும், போரில் மூர்க்கமானவர்களுமான அபீஷாஹர்களும், கலிங்கர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(38) போரில் மிகுந்த கோபம் நிறைந்தவர்களும், களத்தில் எப்போதும் பின்வாங்காதவர்களுமான கோகுலத்தில் வாழ்ந்து வளர்ந்த பிற வீரர்களும் (நாராயணக் கோபர்களும்) சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டனர்.(39) அர்ஜுனனை அணுகியவர்களான பல்லாயிரக்கணக்கான சிரேணிகள் மற்றும் சம்சப்தகர்கள் ஆகியோர் அனைவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(40)

பெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், உமது மைத்துனர்களுமான விருஷகன் மற்றும் அச்சலன் ஆகிய இருவரும் சவ்யசச்சினால் கொல்லப்பட்டனர்.(41) வலிய கரங்களைக் கொண்டவனும், மூர்க்கமாக் செயல்படுபவனும் {உக்கிரகர்மன்}, பெயராலும், சாதனைகளாலும் பெரும் வில்லாளியுமான மன்னன் சால்வன், பீமசேனானால் கொல்லப்பட்டான்.(42) ஓ! மன்னா, போரில் ஒன்றாகப் போரிட்டவர்களும், தங்கள் கூட்டாளிக்காகப் பெரும் வீரத்துடன் போரிட்டவர்களுமான ஓகவத் {ஓகவான்} மற்றும் விருஷந்தன் {பிருஹந்தன்} ஆகிய இருவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(43) ஓ! ஏகாதிபதி, தேர்வீரர்களில் முதன்மையான க்ஷேமதூர்த்தி, போரில் கதாயுதத்துடன் கூடிய பீமசேனனால் கொல்லப்பட்டான்.(44) பெரும் வில்லாளியும், வலிமைமிக்க மன்னனுமான ஜலசந்தனும், பெரும் பேரழிவை ஏற்படுத்திய பிறகு போரில் சாத்யகியால் கொல்லப்பட்டான்.(45)

(பெரும் வடிவைக் கொண்ட) கழுதைகள் பூட்டப்பட்ட வாகனத்தைக் கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அலாயுதன், பெரும் ஆற்றலுடன் முயன்ற கடோத்கசனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(46) சூதனான ராதையின் மகன் {கர்ணன்}, அவனது தம்பிகளான வலிமைமிக்கத் தேர்வீரர்கள், கைகேயர்கள், மாலவர்கள், மத்ரகர்கள், கடும் ஆற்றலைக் கொண்ட திராவிடர்கள், யௌதேயர்கள், லலித்தர்கள், க்ஷுத்ரகர்கள், உசீனரர்கள், மாவேலலகர்கள், துண்டிகேரர்கள், சாவித்ரிபுத்திரர்கள், கிழக்கத்தியர், வடக்கத்தியர், மேற்கத்தியர், தெற்கத்தியர் ஆகியோர் அனைவரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சவ்யசச்சினால் கொல்லப்பட்டனர்.(47-49) பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள், கூட்டங்கூட்டமான குதிரைகள், பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், பெரும் யானைகள் பலவும் கொல்லப்பட்டன.(50) கொடிமரங்கள், ஆயுதங்கள், கவசம், ஆடை, ஆபரணங்கள், விடாமுயற்சி, உயர்ந்த பிறப்பு, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்ட வீரர்கள் பலரும் அந்தப் போரில் உழைப்பால் களைப்பெதையும் அறியாதவனான பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டனர். அளவிலா வலிமை கொண்ட பிறர், தங்கள் எதிரிகளைக் கொல்ல விரும்பி அதே போன்ற விதியையே அடைந்தனர்.(51-52) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவர்களும், ஆயிரக்கணக்கான இன்னும் பலரும், அவர்களைப் பின்தொடர்ந்தவர்களும் போரில் கொல்லப்பட்டனர். நீர் என்னிடம் கேட்டதற்கு இப்போது பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.(53) 

இவ்வாறே அர்ஜுனனும், கர்ணனும் போரிட்ட போது அழிவு ஏற்பட்டது. போரில் விருத்திரனை மகேந்திரன் கொன்றதைப் போலவும், ராவணனை ராமன் கொன்றதைப் போலவும்,(54) நரகன், அல்லது முரணைக் கிருஷ்ணன் கொன்றதைப் போலவும்; மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் ஒரு பயங்கரப் போரைச் செய்த பிறகு, போரில் வெல்லப்பட முடியாதவனும், சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் கூடியவனுமான வீர கார்த்தவீரியனைப் பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்} கொன்றதைப் போலவும்;(55,56) (அசுரன்) மஹிஷனை ஸ்கந்தன் கொன்றதைப் போலவும், (அசுரன்) அந்தகனை ருத்திரன் கொன்றதைப் போலவும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் வெல்லப்பட முடியாதவனும், தார்தராஷ்டிரர்களுக்கு வெற்றியில் நம்பிக்கை ஏற்படுத்தியவனும், பாண்டவர்களுடன் ஏற்பட்ட பகைமைக்குப் பெரும் காரணமானவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான கர்ணனை, அவனது சொந்தங்கள் அனைவருடன் சேர்த்து அர்ஜுனன் ஒரு தனிப்போரில் கொன்றான். (57,58)

ஒரு காலத்தில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன் சாதிப்பான் என்பதை நன்கு சிந்திக்கும் நண்பர்கள் உமக்குத் தெரிவிக்கத் தவறவில்லையெனினும் {தெரிவித்தார்கள் எனினும்}, அவனால் {அர்ஜுனனால்} இயலும் என்று நீர் எதை நம்பாதிருந்தீரோ அதை இப்போது அவன் சாதித்துவிட்டான். பேரழிவு நிறைந்த அந்தப் பேரிடர் இப்போது வந்துவிட்டது.(59) ஓ! மன்னா, பேராசைமிக்க உமது மகன்களுக்கு நல்லாசிகளைக் கூறி, அவர்களின் தலைகளில் நீர் தீமைகளை {பாவத்தைக்} குவித்துவிட்டீர். அத்தீமைகளின் கனியே இப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது” {என்றான் சஞ்சயன்}.(60)

கொல்லப்பட்ட பாண்டவ வீரர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 06-கொல்லப்பட்ட பாண்டவ வீரர்களைக் குறித்துத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! மகனே {சஞ்சயா}, போரில் பாண்டவர்களால் என்தரப்பில் கொல்லப்பட்டோரின் பெயர்களை நீ குறிப்பிட்டாய். ஓ! சஞ்சயா, இப்போது என் தரப்பு மக்களால் பாண்டவர்களுக்கு மத்தியில் கொல்லப்பட்டோரின் பெயர்களை எனக்கு இப்போது சொல்வாயாக” என்று கேட்டான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் பெரும் ஆற்றலையும், சக்தியையும், வலிமையையும் கொண்ட குந்திகள் {பாண்டவவீரர்கள்}, தங்கள் சொந்தங்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவருடன் சேர்த்துப் போரில் பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.(2) நாராயணர்கள், பலபத்திரர்கள், நூற்றுக்கணக்கான பிற வீரர்கள் ஆகிய (பாண்டவர்களுக்கு அர்ப்பணிப்புள்ள அனைவரும் வீர பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.(3) சக்தியிலும், வலிமையிலும் போரில் கிரீடம் தரித்தவனான அர்ஜுனனுக்கு இணையான சத்யஜித், துல்லிய இலக்கைக் கொண்ட துரோணரால் போரில் கொல்லப்பட்டான்.(4) வலிமைமிக்க வில்லாளிகளும், போரில் திறம்பெற்றவர்களுமான பாஞ்சாலர்களில் பலர் துரோணரோட மோதி, யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(5) அதே போல வயதால் மதிப்பிற்குரியவர்களும், தங்கள் கூட்டாளிக்காகப் பெரும் ஆற்றலுடன் முயன்றவர்களுமான விராடன் மற்றும் துருபதன் ஆகிய இரு மன்னர்களும், தங்கள் மகன்களோடு சேர்த்துப் போரில் துரோணரால் கொல்லப்பட்டனர்.(6)

பாலனாக இருப்பினும், அர்ஜுனனுக்கோ, கேசவனுக்கோ {கிருஷ்ணனுக்கோ}, பலதேவனுக்கோ {பலராமனுக்கோ} போரில் இணையானவனும், போரில் உயர்ந்த சாதனைகளைச் செய்தவனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அபிமன்யு, எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்ற பிறகு, இறுதியாக ஆறு முதன்மையான தேர்வீரர்களால் சூழப்பட்டு அவர்களால் கொல்லப்பட்டான். அர்ஜுனனைத் தடுக்க முடியாத அவர்கள் அர்ஜுனனின் மகனை {அபிமன்யுவைக்} கொன்றனர். வீரனான அந்தச் சுபத்ரையின் மகன் {அபிமன்} தன் தேரை இழந்தாலும், க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து போரில் நிலைத்திருந்தான். இறுதியாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, துச்சாசனன் மகன் அவனை {அபிமன்யுவைக்) களத்தில் கொன்றான்.(7-9) படச்சரர்களைக் கொன்றவனும், பெரும் படையால் சூழப்பட்டவனும், அழகனுமான அம்பஷ்டன் மகன், தன் கூட்டாளிகளுக்காகத் தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தினான்.(10) எதிரிகளுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, அவன் துரியோதனன் மகனான துணிச்சல்மிக்க லக்ஷ்மணனால் போரில் எதிர்கொள்ளப்பட்டு யமனின் வசிப்பிடத்துக்கு அனுப்பப்பட்டான்.(11)

வலிமைமிக்க வில்லாளியும், போரில் வெல்லப்பட முடியாதவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமான பிருஹந்தன், பெரும் ஆற்றலுடன் முயன்ற துச்சாசனனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(12) போரில் வெல்லப்பட முடியாதவர்களும், தங்கள் கூட்டாளிகளாக்காகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களும், மன்னர்களுமான மணிமான் மற்றும் தண்டதாரன் ஆகிய இருவரும் துரோணரால் கொல்லப்பட்டனர்.(13) போஜர்களின் ஆட்சியாளனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், தன் படைகளின் முகப்பில் நின்றவனுமான அம்சுமான், பெரும் ஆற்றலுடன் முயன்ற துரோணரால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(14) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடற்கரையின் ஆட்சியாளனான சித்திரசேனன், தன் மகனோடு சேர்த்து, சமுத்ரசேனனால் பலவந்தமாக யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(15) கடல்வழி நாட்டின் {அநூப நாட்டின்} மற்றொரு ஆட்சியாளனான நீலன், பெரும் சக்தி கொண்ட வியாக்ரதத்தன் ஆகிய இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, அஸ்வத்தாமனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டனர்.(16) சித்திராயுதன், சித்திரயோதி ஆகிய இருவரும் பெரும் படுகொலைகளைச் செய்து, தன் தேரின் பல்வேறு நகர்வுகளை வெளிப்படுத்திய பிறகு, பெரும் ஆற்றலுடன் முயன்ற விகர்ணனால் போரில் கொல்லப்பட்டான்.(17)

போரில் விருகோதரனுக்கு {பீமனுக்கு} இணையானவனும், கைகேயப் போர்வீரர்களால் சூழப்பட்டவனுமான கைகேயர்கள் தலைவன், சகோதரனால் கொல்லப்பட்ட சகோதரனாக மற்றொரு கைகேயனாலேயே கொல்லப்பாட்டன்.(18) மலைநாட்டைச் சேர்ந்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும, கதாயுதப் போர்களில் சாதித்தவனுமான ஜனமேஜயன், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உமது மகன் துர்முகனால் கொல்லப்பட்டான்.(19) முதன்மையான மனிதர்களும், பிராகசமான கோள்கள் இரண்டைப் போன்றவர்களுமான ரோசமானன் சகோதரர்கள் ஆகிய இருவரையும் துரோணர் தன் கணைகளால் சொர்க்கத்திற்கு ஒன்றாக அனுப்பினார்.(20) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட வேறு மன்னர்கள் பலரும் (பாண்டவர்களுக்காகப்) போரிட்டனர். அடைவதற்கரிய சாதனைகளைச் செய்த அவர்கள் அனைவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(21)

சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தாய்மாமன்களான புருஜித் மற்றும் குந்திபோஜன் ஆகிய இருவரும், போரில் மரணமடைவதால் கிட்டும் உலகங்களுக்குத் துரோணரின் கணைகளால் அனுப்பப்பட்டனர்.(22) தன்னைப் பின்தொடர்பவர்களுக்குத் தலைமையேற்று வந்த காசிகளின் ஆட்சியாளனான அபிபூ, போரில் வசுதானன் மகனால் தனது உயிரை விடும்படி செய்யப்பட்டான்.(23) அளவற்ற ஆற்றலைக் கொண்ட யுதாமன்யு, பெரும் சக்தியைக் கொண்ட உத்தமௌஜஸ் ஆகியோர் வீரமிக்க நூற்றுக்கணக்கான போர்வீரர்களைக் கொன்ற பிறகு நமது மக்களால் கொல்லப்பட்டனர்.(24) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசர்களான மித்ரவர்மன் மற்றும் க்ஷத்ரதர்மன் ஆகிய முதன்மையான வில்லாளிகள் இருவரும் துரோணரால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையானவனும், பெரும் துணிச்சல் கொண்டவனும், சிகண்டியின் மகனுமான க்ஷத்ரதேவன், ஓ! ஐயா, உமது பேரன் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டான்.(26)

பெரும் வலிமை கொண்டவர்களும், போரில் அச்சமற்றுத் திரிந்தவர்களும், தந்தையும் மகனுமான சுசித்ரன் மற்றும் சித்ரவர்மன் ஆகிய இரு வீரர்களும் துரோணரால் கொல்லப்பட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அலைகள் நிறைந்த பெருங்கடலைப் போன்ற வார்த்தக்ஷேமி, போரில் தன் ஆயுதங்கள் தீர்ந்து, இறுதியாக இடைஞ்சலற்ற அமைதியை அடைந்தான்.(28) சூதர்களில் முதன்மையான சேனாபிந்து, போரில் எதிரிகள் பலரை எரித்த பிறகு, இறுதியாகப் பாஹ்லீகனால் {Bahlika} கொல்லப்பட்டான்.(29) ஓ! ஏகாதிபதி, சேதிகளுக்கு மத்தியில் உள்ள தேர்வீரர்களில் முதன்மையான திருஷ்டகேது, அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து யமனின் வசிப்பிடத்தை அடைந்தான்.(30) அதேபோல, பெரும் ஆற்றலைக் கொண்டவனான வீர சத்யதிருதி, பாண்டவர்களுக்காகப் போரில் பெரும் கொலைகளைச் செய்த பிறகு, யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(31) பூமியின் தலைவனும், சிசுபாலனின் மகனுமான சுகேது, எதிரிகள் பலரைக் கொன்ற பிறகு, இறுதியில் போரில் துரோணரால் கொல்லப்பட்டான்.(32)

விராடனின் மகன் சங்கனும், பெரும்பலம் கொண்ட உத்தரனும், அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(33) அதே போல, மத்ஸ்யர்களின் சத்யதிருதி, பெரும் சக்தி கொண்ட மதிராஸ்வன், பெரும் ஆற்றலைக் கொண்ட சூர்யதத்தன் ஆகியோர் அனைவரும் துரோணரின் கணைகளால் கொல்லப்பட்டனர்.(34) ஓ! ஏகாதிபதி, பெரும் ஆற்றலைக் கொண்ட சிரேணிமத் (சிரேணிமான்} அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து, யமனின் வசிப்பிடத்தை அடைந்தான்.(35) பெரும் ஆற்றலைக் கொண்டவனும், உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான மகதர்களின் தலைவன்[1], பீஷ்மரால் கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் உறங்குகிறான்.(36) போரில் பேரழிவை ஏற்படுத்திய வசுதானனும், பெரும் ஆற்றலுடன் முயன்ற பரத்வாஜர் மகனால் {துரோணரால்} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(37) இவர்களும், பாண்டவர்களின் இன்னும் பிற வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், பெரும் ஆற்றலுடன் முயன்ற துரோணரால் கொல்லப்பட்டனர். நீர் என்னைக் கேட்டது அனைத்தையும் இப்போது நான் சொல்லிவிட்டேன்” {என்றான் சஞ்சயன்}.(38)

உயிரோடு எஞ்சிய போர்வீரர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 07-குருக்களில் இன்னும் உயிரோடு இருக்கும் வீரர்கள் யாவர் என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன சஞ்சயன்; துயர் தாளாமல் மீண்டும் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, என் போர்வீரர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் அழிந்த பிறகு, என் படையில் எஞ்சியிருப்போரும் அழிந்துவிட மாட்டார்கள் என்று நான் நம்பவில்லை.(1) வலிமைமிக்க வில்லாளிகளும், குருக்களில் முதன்மையானோரும், வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும் கொல்லப்பட்ட பிறகும், நான் இன்னும் உயிரோடு இருப்பதால் என்ன பயன்?(2) போர்க்கள ரத்தினமும், பத்தாயிரம் யானைகளின் பலத்துடன் கூடிய பெரும் கர வலிமை கொண்டவனுமான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} மரணத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(3) ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே, ஓ! சூதா {சஞ்சயா}, முதன்மையான வீரர்கள் அனைவரும் இறந்த பிறகு எனது படையில் இன்னும் உயிரோடு எஞ்சியிருப்போரைக் குறித்து இப்போது சொல்வாயாக.(4) வீழ்ந்தவர்களின் பெயர்களை நீ எனக்குச் சொன்னாய். எனினும், இன்னும் உயிரோடு எஞ்சியிருப்போர் அனைவரும் கூட ஏற்கனவே இறந்துவிட்டதாகவே எனக்குத் தெரிகின்றனர்” என்றான் {திருதராஷ்டிரன்}.(5)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிராமணர்களில் முதன்மையான துரோணர், சுடர்மிக்க, தெய்வீகமான, வலிமைமிக்க நால்வகை ஆயுதங்கள் [1] பலவற்றை எந்த வீரனுக்கு வழங்கினாரோ, திறனும், கரநளினமும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், உறுதியான பிடியும், வலுவான ஆயுதங்களும், பலமிக்கக் கணைகளும் கொண்ட அந்த வீரன், நெடுந்தொலைவுக்கு {ஆயுதங்களை} ஏவவல்லவனான அந்த உயர்ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, உமக்காகப் போரிட விரும்பி களத்தில் இன்னும் நிற்கிறான்.(6,7) ஆநர்த்த நாட்டுவாசியும், ஹிருதிகனின் மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், சாத்வதர்களில் முதன்மையானவனும், போஜர்களின் தலைவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமான அந்தக் கிருதவர்மன், போரிட விரும்புபவனாக இன்னும் களத்தில் இருக்கிறான்.(8) ஆர்த்தாயனன் மகனும், போரில் அச்சமற்றவனும், போர்வீரர்களில் முதல்வனும், உம் தரப்பில் உள்ள அனைவரிலும் முதன்மையானவனும், தன் வார்த்தைகளை மெய்ப்பிப்பதற்காகத் தன் சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களான பாண்டவர்களைக் {நகுல சகாதேவர்களை} கைவிட்டவனும், போரில் கர்ணனின் உற்சாகச் செருக்கைக் குறைப்பதாக யுதிஷ்டிரனின் முன்னிலையில் உறுதியளித்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட வீரனும், வெல்லப்பட முடியாதவனும், சக்தியில் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானவனுமான சல்லியன், உமக்காகப் போரிட விரும்பி இன்னும் களத்தில் இருக்கிறான்(9,10)

ஆஜநேயர்கள், சைந்தவர்கள், மலைவாசிகள், வடிநிலப் பகுதிவாசிகள் {ஆற்றுப்படுகைவாசிகள்}, காம்போஜர்கள், வனாயுகள் ஆகியோரைக் கொண்ட தன் படையின் துணையுடன் கூடிய காந்தாரர்களின் மன்னன் {சகுனி}, உமக்காகப் போரிட விரும்புபவனாகக் களத்தில் இருக்கிறான்.(11) ஓ! மன்னா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், பல்வேறு அழகிய வழிகளில், பல்வேறு ஆயுதங்களுடன் போரிடவல்லவரும், கௌதமர் என்று அழைக்கப்படுபவருமான சரத்வான் மகன் {கிருபர்}, பெருங்கடினத்தைத் தாங்கவல்லதும், பெரியதுமான ஓர் அழகிய வில்லை எடுத்துக் கொண்டு போரிட விரும்பி களத்தில் நிற்கிறார்.(12) ஓ! குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், நல்ல குதிரைகளுடனும், கொடிமரத்துடனும் கூடிய நல்ல தேரில் ஏறியவனுமான கைகேயர்கள் ஆட்சியாளனுடைய மகன், உமக்காகப் போரிடுவதற்காகக் களத்தில் நிற்கிறான்.(13) 

ஓ! மன்னா{திருதராஷ்டிரரே}, உமது மகனும், குருகுலத்தின் போர்வீரர்களில் முதன்மையானவனுமான புருமித்ரன், சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட தன் தேரில் ஏறிக்கொண்டு, மேகமற்ற ஆகாயத்தில், பிரகாசமாக ஒளிரும் சூரியனைப் போலவே களத்தில் நிற்கிறான்.(14) பெரும் சக்தி கொண்ட துரியோதனனும், ஒரு யானைப்படைக்கு மத்தியில், போராளிகளில் முதன்மையான பலரின் துணையுடன் போரிட விரும்பி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் நிற்கிறான்.(15) மன்னர்கள் பலருக்கு மத்தியில், தாமரையின் காந்தியைக் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் {துரியோதனன்}, சற்றே புகையுடன் கூடிய நெருப்பைப் போலவோ, மேகங்களில் இருந்து வெளிப்படும் சூரியனைப் போலவோ, தனது அழகான தங்கக் கவசத்துடன் பிரகாசமாகத் தெரிந்தான்.(16)

சித்திரசேனனுடன் சேர்ந்து, வாள் மற்றும் கேடயத்துடன் கூடிய சுஷேணன், வீர சத்யசேனன் ஆகிய உமது மகன்களும், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன், போரிடும் விருப்பத்துடன் நிற்கின்றனர்.(17) பெரும் பலம் கொண்டவர்களும், பணிவுடன் கூடியவர்களுமான பாரத இளவரசர்கள் சித்ராயுதன், சுருதவர்மன், ஜயன், சலன், சத்யவிரதன், துச்சலன் ஆகியோர் அனைவரும் போரிட விரும்பி களத்தில் நிற்கின்றனர்.(18) கைதவ்யர்களின் ஆட்சியளானும், தன் துணிவில் செருக்குக் கொண்டவனும், போரில் அச்சமற்றுத் திரியவல்லவனுமான அந்த இளவரசன் {கைதவ்ய ராஜகுமாரன்}, காலாட்படை, குதிரைப்படை, யானைகள் மற்றும் தேர்களைக் கொண்ட தன் எதிரிகளைக் கொன்றபடியே, உமக்காகப் போரிட விரும்பி களத்தில் நிற்கிறான்.(19) வீரம் கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், திறம்படத் தாக்கவல்லவர்களும், துல்லியமான இலக்கைக் கொண்டவர்களுமான சுருதாயு, சுருதாயுதன், சித்திராங்கதன், சித்திரவர்மன் ஆகியோரும் போரில் விருப்பத்துடன் களத்தில் நிற்கின்றனர்.(20)

கர்ணனின் மகனான உயர் ஆன்ம சத்யசந்தன், போரிடும் விருப்பத்துடன் களத்தில் நிற்கிறான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர்ந்த ஆயுதங்களின் அறிவையும், பெரும் கரநளினத்தையும் கொண்டவர்களான கர்ணனின் வேறு இரண்டு மகன்களும், அற்ப சக்தி கொண்ட போர்வீரர்களால் துளைக்க முடியாதபடியே, உமக்காகப் போரிடும் விருப்பத்துடன் பெரும் படைகளுக்குத் தலைமையில் நிற்கிறார்கள்.(21) இவ்வீரர்கள் மற்றும் அளவற்ற வலிமை கொண்ட இன்னும் பல முதன்மையான போர்வீரர்கள் ஆகியோரின் துணையுடன் குரு மன்னன் (துரியோதனன்) இரண்டாவது இந்திரனைப் போல வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டு தன் யானை படைப்பிரிவுக்கு மத்தியில் நிற்கிறான்” {என்றான் சஞ்சயன்}.(22)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நமக்கும் எதிரிக்கும் மத்தியில் உயிரோடு இருப்பவர்கள் அனைவரையும் நீ முறையாக எனக்குச் சொல்லிவிட்டாய். இதிலிருந்தே வெற்றி எந்தப்பக்கம் சேரும் என்பதை நான் தெளிவாகப் பார்க்கிறேன். உண்மையில் அஃதை இந்த உண்மைகளில் இருந்தே அனுமானிக்கலாம்” என்றான்.(23)

வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், “தன் முதன்மையான வீரர்கள் அனைவரும் இறந்துவிட்டதால், தன் படையின் சிறு பகுதி மட்டுமே உயிரோடு இருப்பதை அறிந்த அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன், இதைச் சொன்ன போது, துயரத்தில் மிகவும் கலக்கமடைந்ததாகத் தன் இதயத்தை உணர்ந்தான். {அப்படியே, அந்த} மன்னன் {திருதராஷ்டிரன்} மயங்கிப் போனான். பிறகு ஓரளவுக்குத் தன் உணர்வுகள் மீண்ட அவன், சஞ்சயனிடம், “ஒருக்கணம் பொறுப்பாயாக” என்றான்.(24,25) மேலும் அந்த மன்னன், “ஓ! மகனே {சஞ்சயா}, இந்தக் கொடிய பேரிடரைக் கேட்ட பிறகு, என் இதயம் பெரிதும் கலங்குகிறது. என் புலன்கள் மயங்குகின்றன, என் அங்கங்களும் முடங்குகின்றன” என்றான்.(26) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், அம்பிகையின் மகனும், பூமியின் தலைவனுமான அந்தத் திருதராஷ்டிரன், தன் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தான்”{என்றார் வைசம்பாயனர்}.(27)

திருதராஷ்டிரனின் புலம்பல்! – கர்ண பர்வம் பகுதி – 08-கர்ணனின் பெருமைகளைச் சொல்லிப் புலம்பிய திருதராஷ்டிரன், நஞ்சுண்டோ, தீயில் விழுந்தோ, மலையில் இருந்து விழுந்தோ சாக விரும்புவதாகச் சஞ்சயனிடம் சொன்னது…

ஜனமேயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {வைசம்பாயனரே}, மன்னன் {திருதராஷ்டிரன்} சற்றே ஆறுதலடைந்ததும், கர்ணனின் வீழ்ச்சியையும், தனது மகன்கள் கொல்லப்பட்டதையும் கேட்டு என்ன சொன்னான்?(1) உண்மையில், தன் மகன்களுக்கு ஏற்பட்ட அழிவால் உண்டான அவனது துயரம் வருந்தக்கூடியதாக இருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} சொன்னது அனைத்தையும் கேட்கின்ற எனக்கு {அவற்றை} நீர் சொல்வீராக” என்றான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நம்பமுடியாததும், அதிர்ச்சியூட்டுவதும், அச்சமூட்டுவதும், அனைத்து உயிரினங்களின் உணர்வுகளையும் முடக்கும் திறன் கொண்டதும், மேருவின் வீழ்ச்சியைப் போலத் தெரிவதும்,(3) அல்லது நம்ப முடியாத வகையிலான சுக்கிரனின் {சுக்கிராச்சாரியரின்} அறிவு மயக்கம் போன்றதும், அல்லது பயங்கரச் சாதனைகளைச் செய்த இந்திரன் எதிரிகளிடம் அடையும் வீழ்ச்சியைப் போன்றதும்,(4) அல்லது ஆகாயத்தில் இருக்கும் பிரகாசமான சூரியன் பூமியில் விழுந்ததைப் போன்றதும், அல்லது வற்றாத நீர் கொள்ளிடமான பெருங்கடலானது, புரிந்து கொள்ள முடியாத வகையில் வற்றிப் போவது போன்றதும்,(5) அல்லது பூமி, ஆகாயம், திசைப்புள்ளிகள் மற்றும் நீர் ஆகியன, வியக்கவைக்கும் வகையில் முற்றிலும் அழிவது போன்றதும், அல்லது புண்ணியம் மற்றும் பாவம் ஆகிய இரு செயல்களும் கனியற்றுப் போவது போன்றதுமான கர்ணனின் படுகொலையைக் கேட்ட திருதராஷ்டிரன்,(6) அதுகுறித்துச் சிறிது நேரம் மெய்யுறுதியுடன் சிந்தித்ததும், தன் படை நிர்மூலமாக்கப்பட்டதாகவே நினைத்தான்.(7)

கொல்லப்பட முடியாத கர்ணனைப் போலவே, அதே போன்ற விதியையே பிற உயிரினங்களும் அடையப் போகின்றன என்று நினைத்தவனும், துயரில் எரிந்தவனும், பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவனும், கிட்டத்தட்ட அங்கங்கள் {அனைத்தும்} முடங்கியவனும், அந்த அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன், மிகவும் உற்சாகமற்ற வகையில் நெடும் பெருமூச்சுகளைவிட்டுக் கொண்டே, கவலையால் நிறைந்து “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் புலம்பத் தொடங்கினான்.(8,9)

அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, “ஓ! சஞ்சயா, அதிரதனின் அந்த வீர மகன் {கர்ணன்}, சிங்கம் அல்லது யானையின் ஆற்றலைக் கொண்டிருந்தான். ஒரு காளையின் கழுத்தளவிற்குத் தன் கழுத்து தடித்தவனான {காளையின் திமில்களைப் போலத் தோள் தடித்தவனான} அவனது கண்கள், நடை மற்றும் குரலும் கூடக் காளையைப் போன்றே இருந்தன.(10) வஜ்ரத்தைப் போன்ற கடினமான அங்கங்களைக் கொண்ட அந்த இளைஞன் {கர்ணன்}, காளையானது மற்றொரு காளையிடம் இருந்து தப்பி ஓடாததைப் போல, பெரும் இந்திரனே {மகேந்திரனே} தன் எதிரியாக இருந்தாலும் போரில் இருந்து எப்போதும் விலகியதில்லை. (11)

அவனது வில்லின் நாணொலி, உள்ளங்கையொலி, அவனது கணை மாரியின் “விஸ்” என்ற ஒலி ஆகியவற்றால் மனிதர்களும், குதிரைகளும், தேர்களும், யானைகளும் போரில் இருந்து தப்பி ஓடின.(12) துரியோதனன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளின் பெருங்கூட்டத்தைக் கொல்பவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தப் போர்வீரனை {கர்ணனை} நம்பியே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்களிடம் பகைமையைத் தூண்டிவிட்டான்.(13) தேர்வீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் புலியும், தடுக்கப்படமுடியாத தொடக்கத்தை {புறப்பாட்டைக்} கொண்ட வீரனுமான அந்தக் கர்ணன், போரில் பார்த்தனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்லப்பட்டான்?(14)

அவன் {கர்ணன்}, தன் கரங்களின் வலிமையை நம்பியே, மங்காப் புகழ் கொண்ட கேசவனையும் {கிருஷ்ணனையும்}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, விருஷ்ணிகள் மற்றும் பிற எதிரிகள் அனைவரையும் அலட்சியம் செய்தான்?(15) அவன் {கர்ணன்}, மூடனும், பேராசை கொண்டவனும், தலைக்குனிவை அடைந்தவனும், அரசில் ஆசை கொண்டவனும், பீடிக்கப்பட்டவனுமான துரியோதனனிடம், “ஒன்றாகச் சேர்ந்திருப்பவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான சாரங்கபாணி {கிருஷ்ணன்} மற்றும் காண்டீவதாரி {அர்ஜுனன்} ஆகிய இருவரையும், போரில் அவர்களது முதன்மையான தேர்களில் இருந்து நான் ஒருவனாகவே கீழே வீழ்த்துவேன்” என்று சொல்வது வழக்கம்.(16,17)

காந்தாரர்கள், மத்ரகர்கள், மத்ஸ்யர்கள், திரிகர்த்தர்கள், தங்கணர்கள், காசர்கள்,(18) பாஞ்சாலர்கள், விதேஹர்கள், குளிந்தர்கள், காசி-கோசலர்கள், சுஹ்மர்கள், அங்கர்கள், நிஷாதர்கள், புண்டரர்கள், கீசகர்கள்,(19) வத்ஸர்கள், கலிங்கர்கள், தரதர்கள், அஸ்மகர்கள், ரிஷிகர்கள் ஆகிய வெல்லப்பட முடியாதவர்களும், வலிமிக்கவர்களுமான எதிரிகளை அவன் {கர்ணன்} அடக்கியிருக்கிறான். துணிவுமிக்க இந்தக் குலங்கள் அனைத்தையும் கங்க இறகுகளைக் கண்ட தன் கூரிய கணைகளால் அடக்கியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக அவர்கள் அனைவரையும் நமக்குக் கப்பம் கட்டச் செய்தான்.(20,21) ஐயோ, தெய்வீக ஆயுதங்களை நன்கறிந்த போர்வீரனும், படைகளைப் பாதுகாப்பவனும், வலிமையும் சக்தியும் கொண்ட விருஷன் என்று அழைக்கப்பட்டவனும், விகர்த்தனன் மகனுமான அந்தக் கர்ணன், வீரர்களும், வலிமைமிக்கவர்களும், தன் எதிரிகளுமான பாண்டுவின் மகன்களால் போரில் எவ்வாறு கொல்லப்பட்டான்?(22)

தேவர்களில் முதன்மையானவனான இந்திரனைப் போல, கர்ணன் மனிதர்களில் முதன்மையானவனாக இருந்தான். இந்த மூவுலகிலும், இவர்களைப் போல வேறு மூன்றாவது நபரை நாம் கேள்விப்பட்டதிலை.(23) குதிரைகளில் உச்சைஸ்ரவம் முதன்மையானது; யக்ஷர்களில் வைஸ்ரவணன் {குபேரன்} முதன்மையானவன்; தேவர்களில் இந்திரன் முதன்மையானவன்; தாக்குபவர்களில் கர்ணனே முதன்மையானவன்.(24) பெரும் வீரமிக்கவர்களும், மிக வலிமையானவர்களுமான ஏகாதிபதிகளால் கூட வெல்லப்பட முடியாதவனாக இருந்த அவன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக மொத்த உலகத்தையும் அடக்கினான்.(25) மகத ஆட்சியாளன் {ஜராசந்தன்}, நல்லிணக்கம் மற்றும் கௌரவங்களின் மூலம் கர்ணனைத் தன் நண்பனாக அடைந்து, கௌரவர்களையும், யாதவர்களையும் தவிர்த்து உலகின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவி அழைத்தான்.(26)

{அப்படிப்பட்ட} அந்தக் கர்ணன், சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, நடுக்கடலில் உடைந்த மரக்கலத்தைப் போலத் துயரக் கடலில் நான் மூழ்குகிறேன்.(27) உண்மையில், மனிதர்களில் முதன்மையானவனும், தேர்வீரர்களில் சிறந்தவனுமான அவன் {கர்ணன்}, தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, கடலில் தெப்பம் இல்லாத ஒருவனைப் போலத் துன்பக்கடலில் நான் மூழ்குகிறேன்.(28) ஓ! சஞ்சயா, இவ்வளவு துயரத்திலும் சாகாமல் இருப்பதால் என் இதயம் பிளக்க முடியாததாகவும், வஜ்ரத்தைவிடக் கடினமானதாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.(29) ஓ! சூதா, சொந்தங்கள், உறவினர்கள், கூட்டாளிகள் ஆகியோரின் தோல்வியையும், அவமானத்தையம் கேட்ட பிறகும், இவ்வுலகில் என்னைத் தவிர வேறு எவன் உயிரை விடாமல் இருப்பான்?(30) நஞ்சுண்ணவோ, நெருப்பில் விழவோ, மலைச்சிகரத்தில் இருந்து விழவோ நான் விரும்புகிறேன். ஓ! சஞ்சயா, {இந்தத்} துயரத்தின் பெருங்கனத்தை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை” {என்றான் திருதராஷ்டிரன்}.(31)

திருதராஷ்டிரன் விசாரணை! – கர்ண பர்வம் பகுதி – 09-கர்ணனின் மரணத்தைக் கேட்டு துக்கமடைந்த திருதராஷ்டிரன்; கர்ணன் மற்றும் துரியோதனன் பற்றிச் சஞ்சயனிடம் கூறியது; கர்ணன் மற்றும் பாண்டவர்களுக்கிடையில் நடைபெற்ற போரைக் குறித்துச் சொல்லுமாறு சஞ்சயனை ஏவிய திருதராஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அழகாலும், பிறப்பாலும், புகழாலும், தவத்தாலும், கல்வியாலும் உலகம் உம்மை யயாதியின் மகன் நகுஷனுக்கு இணையாகக் கருதுகிறது.(1) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் உயர்ந்த சாதனையைக் கொண்ட பெருமுனிவர் ஒருவரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராவீர். உமது மனவுறுதியைத் திரட்டுவீராக. துயருக்குள்ளாகாதீர்” {என்றான்}.(2)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சால மரத்தைப் போல இருந்த கர்ணனே போரில் கொல்லப்பட்டதால், விதியே உயர்ந்ததென்றும், முயற்சி கனியற்றதென்றும் நான் நினைக்கிறேன்[1].(3) யுதிஷ்டிரனின் படையையும், பாஞ்சாலத் தேர்வீரர்களின் பெருங்கூட்டத்தையும் கொன்று, தன் கணைமாரியால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் எரித்து, அசுரர்களை மலைக்கச் செய்த வஜ்ரதாரியை {இந்திரனைப்} போல, போரில் பார்த்தர்களை {பாண்டவர்களை} மலைக்கச் செய்த பிறகு, ஐயோ, எதிரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்த வலிமைமிக்க வீரன் {கர்ணன்}, புயலால் பூமியில் வேரோடு சாய்க்கப்பட்ட பெருமரம் ஒன்றைப் போல எவ்வாறு விழுந்திருக்க முடியும்?(4,5)உண்மையில், மூழ்கிக் கொண்டிருப்பவனான மனிதன் ஒருவனால், பெருங்கடலின் எல்லையைக் காண முடியாததைப் போல, என் துயரங்களுக்கு ஓர் எல்லையை என்னால் காண இயலவில்லை. கர்ணனின் மரணம் மற்றும் பல்குனனின் {அர்ஜுனனின்} வெற்றி ஆகியவற்றைக் கேட்டு என் கவலைகள் அதிகரிப்பதால் நான் உயிர்வாழ விரும்பவில்லை.(6) உண்மையில், ஓ! சஞ்சயா, கர்ணனின் படுகொலையை நம்பவே முடியாததாக நான் கருதுகிறேன்.(7) கர்ணனின் வீழ்ச்சியைக் கேட்ட பிறகும், என் இந்தக் கடினமான இதயம் {கல்நெஞ்சம்} ஆயிரம் துண்டுகளாக வெடிக்காமல் இருப்பதால், அது வஜ்ரத்தாலானதே என்பதில் ஐயமில்லை.(8)

கர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரால் புண்பட்டும் நான் சாகாதிருப்பதால், (என் பிறப்புக்கு) முன்பே, தேவர்களால் எனக்கு நீண்ட வாழ்நாள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓ! சஞ்சயா, நண்பர்களற்ற ஒருவனின் இந்த வாழ்வுக்கு ஐயோ,(9) ஓ! சஞ்சயா, இன்று இந்த இழிந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டவனும், மூட புத்தி கொண்டவனுமான நான், அனைவராலும் பரிதாபப்படும்படியான துன்பகரமான வாழ்வையே வாழ வேண்டியிருக்கும்.(10) ஓ! சூதா {சஞ்சயா}, முன்பு மொத்த உலகத்தாலும் மதிக்கப்பட்ட நான், எதிரிகளால் அவமதிக்கப்பட்டு எவ்வாறு வாழ்வேன்?(11) ஓ! சஞ்சயா, பீஷ்மர், துரோணர் மற்றும் உயர் ஆன்ம கர்ணன் ஆகியோருடைய வீழ்ச்சியின் விளைவால், வலியில் {துன்பத்தில்} இருந்து பெரும் வலியையும் {பெருந்துயரையும்}, பேரிடரையுமே நான் அடைந்திருக்கிறேன்.(12) சூதன் மகன் {கர்ணன்} போரில் கொல்லப்பட்டான் எனும்போது, (என் படையைச் சேர்ந்த) எவனும் உயிரோடு தப்புவான் என்பதைக் காணவில்லை. ஓ! சஞ்சயா, அவன் {கர்ணன்} என் மகன்களுக்கு ஒரு பெரும் தெப்பத்தைப் போன்றவனாக இருந்தான்[2].(13) எண்ணற்ற கணைகளை ஏவிய அந்த வீரன் போரில் கொல்லப்பட்டுவிட்டான். அந்த மனிதர்களில் காளை {கர்ணன்} இல்லாமல், நான் வாழ்வதால் என்ன பயன்?(14) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, இடியின் வீழ்ச்சியால் பிளக்கப்பட்ட ஒரு மலைச் சிகரத்தைப் போலவே தன் தேரிலிருந்து வீழ்ந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(15) மதங்கொண்ட ஒரு யானைகளின் இளவரசனால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போல அவன் {கர்ணன்}, குருதியில் குளித்து, பூமியை அலங்கரித்தபடி கிடந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(16)எவன் தார்தராஷ்டிரர்களின் பலமாக இருந்தானோ, எவன் பாண்டு மகன்களை அச்சுறுத்துபவனாக இருந்தானோ, ஐயோ செருக்கு நிறைந்த வில்லாளியான அந்தக் கர்ணன், அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(17) வீரனும், வலிமைமிக்க வில்லாளியுமான அவன் {கர்ணன்}, என் மகன்களின் அச்சங்களை விலக்குபவனாக இருந்தான். ஐயோ, உயிரை இழந்த அந்த வீரன், இந்திரனால் தாக்கி வீழ்த்தப்பட்ட மலையைப் போல (பூமியில்) கிடக்கிறான்[3].(18) துரியோதனனின் விருப்பங்கள், முடவன் இடம்பெயர்வதை {வழிநடையைப்} போன்றனவோ, ஏழை மனிதனின் {தரித்திரனின்} விருப்பம் நிறைவேறுவதைப் போன்றனவோ, தாகம் கொண்டவனுக்கு எப்போதோ கிடைக்கும் நீர்த்துளிகளைப் போன்றனவோ ஆகும்.(19) ஒரு வழியில் திட்டமிடப்பட்ட நமது திட்டங்கள் வேறு மாதிரியாக முடிகின்றன. ஐயோ, விதியே வலிமையானது, காலமும் மீற முடியாதது.(20)

ஓ! சூதா {சஞ்சயா}, எனது மகன் துச்சாசனன், (புழுதியில்) பணியச் செய்யப்பட்டு, உற்சாகமற்ற ஆன்மா கொண்டவனாக ஆண்மை அனைத்தையும் இழந்து களத்தில் இருந்து ஓடிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டானா?(21) ஓ! மகனே, ஓ! சஞ்சயா, அந்தச் சந்தர்ப்பத்தில் கோழைத்தனமான செயல் எதையும் அவன் செய்யவில்லை என நான் நம்புகிறேன். வீழ்ந்துவிட்ட பிறகு அந்த வீரன் க்ஷத்திரியர்களைப் போலத் தன் மரணத்தைச் சந்திக்கவில்லையா?(22) போரேற்புக்கு எதிரான நலம்தரும் மருந்தான யுதிஷ்டிரனின் தொடர்ச்சியான அறிவுரையை மூடனான துரியோதனன் ஏற்கவில்லை.(23)

பெரும்புகழைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மர் தண்ணீரை இரந்து கேட்ட போது, பூமியின் பரப்பைத் துளைத்தான்.(24) அந்தப் பாண்டு மகனால் உண்டாக்கப்பட்ட நீர்த்தாரையைக் கண்ட அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர் (பீஷ்மர், துரியோதனனிடம், “ஓ! ஐயா, பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக. பகைமைகள் தணிந்தால், அமைதி உனதாகும். உனக்கும் உன் சகோதரர்களுக்கும் இடையிலான போர் என்னோடு முடிந்து போகட்டும். பாண்டு மகன்களுடன் சகோதரத்துவத்துடன் இந்தப் பூமியை அனுபவிப்பாயாக” என்றார்.(25,26) அந்த ஆலோசனைகளை அலட்சியம் செய்த எனது பிள்ளை {துரியோதனன்} இப்போது நிச்சயமாக வருந்தியிருப்பான். பெரும் முன்னறிதிறம் கொண்ட பீஷ்மர் சொன்னதே இப்போது நடக்கிறது.(27)

ஓ! சஞ்சயா, என்னைப் பொறுத்தவரை, நான் ஆலோசகர்களற்றவனாக, மகன்களை இழந்தவனாக இருக்கிறேன். சூதாட்டத்தின் விளைவாக, சிறகுகளை இழந்த பறவையைப் போல நான் பெருந்துயரத்தில் வீழ்ந்துவிட்டேன்.(28) ஓ! சஞ்சயா, விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் ஒரு பறவையைப் பிடித்து அதன் சிறகுகளை வெட்டி, மகிழ்ச்சியாக அதை விடுவிக்கும்போது,(29) சிறகற்றதன் விளைவால் இடம்பெயர முடியாத அந்த உயிரினத்தைப் போலவே நானும் சிறகுகளை இழந்த ஒரு பறவையாகிவிட்டேன்.(30) பலவீனனாக, எந்த வளமும் அற்றவனாக, சொந்தங்களற்றவனாக, உறவினங்கள் மற்றும் நண்பர்களை இழந்தவனாக, உற்சாகமற்றவனாக, எதிரிகளால் அவமதிக்கப்பட்டவனாக நான் எந்தத் திசைப்புள்ளிக்குத்தான் செல்வேன்?(31) எவன் காம்போஜர்கள், கைகேயர்களுடன் கூடிய அம்பஷ்டர்கள் ஆகியோர் அனைவரையும் வெற்றிகொண்டானோ, தன் காரியத்தைச் சாதித்துப் போரில் கந்தர்வர்கள், விதேகஹர்கள் ஆகியோரைப் போரில் வென்றானோ, எவன் துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக மொத்த உலகையும் அடக்கினானோ, அந்தப் பலமிக்கவன் {கர்ணன்}, ஐயோ, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், வீரர்களும், பலவான்களுமான பாண்டவர்களால் வெல்லப்பட்டான்.(32,33)

போரில் அந்த வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லபட்ட பிறகு, ஓ! சஞ்சயா, (களத்தில்) நின்ற வீரர்கள் யாவர் என்பதை எனக்குச் சொல்வாயாக.(34) போரில் அவன் பாண்டவர்களால் கொல்லப்பட்ட போது தனியனாகவும், (நண்பர்களால்) கைவிடப்பட்டவனாகவும் இல்லை என நான் நம்புகிறேன். ஓ! ஐயா, துணிச்சல்மிக்க நம் வீரர்கள் வீழ்ந்ததை இதற்கு முன்பே நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய்.(35) சிகண்டியின் தாக்குதலைத் தடுக்க எதையும் செய்யாதவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பீஷ்மரைப் போரில் அவன் {சிகண்டி} தனது பலமிக்கக் கணைகளால் வீழ்த்தினான்.(36) அதே போல, ஓ! சஞ்சயா, பல கணைகளால் ஏற்கனவே துளைக்கப்பட்டுப் போரில் தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவரும், வலிமைமிக்க வில்லாளியுமான துரோணரைத் தன் வாளை உயர்த்திக் கொன்றான் துருபதனின் மகனான திருஷ்டத்யும்னன்.(37) இவர்கள் இருவரும் பாவமான நிலையிலும், குறிப்பாக வஞ்சகத்தாலும் கொல்லப்பட்டனர். பீஷ்மர் மற்றும் துரோணரின் கொலையைக் குறித்து நான் இப்படியே கேட்டேன்.(38) உண்மையில் பீஷ்மரும், துரோணரும் போரிட்டுக் கொண்டிருந்த போது, நேர்மையான வழிகளில் வஜ்ரதாரியால் {இந்திரனால்} கூடப் போரில் கொல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர். நான் உனக்குச் சொல்லும் இதுவே உண்மையாகும் {சத்தியமாகும்}.

கர்ணனைப் பொறுத்தவரை, உண்மையில், இந்திரனுக்கு நிகரான அந்த வீரன் பன்மடங்கான தெய்வீக ஆயுதங்களை ஏவி கொண்டிருந்த போது, மரணத்தால் அவனை எவ்வாறு தீண்ட முடியும்?(40), எவனிடம், அவனது காதுகுண்டலங்களுக்கு மாற்றாக, எதிரியைக் கொல்வதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், மின்னலின் காந்தியைக் கொண்டதுமான தெய்வீக ஈட்டியைக் கொடுத்தானோ,(41) எவன், சந்தனத்தூளுக்கு மத்தியில் (தன் அம்பறாத்தூணியில்) பாம்பு வாய்க் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நல்ல சிறகுகளைக் கொண்டதும், எதிரிகள் அனைவரையும் கொல்லவல்லதுமான தெய்வீகக் கணையை {நாகாஸ்திரத்தைக்} கொண்டிருந்தானோ,(42) எவன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரைத் தங்கள் தலைமையில் கொண்ட வலிமைமிக்க வீரத் தேர்வீரர்களை அலட்சியம் செய்து, ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} பயங்கரப் பிரம்மாயுதத்தை அடைந்தானோ,(43) எவன், துரோணரைத் தங்கள் தலைமையில் கொண்ட போர்வீரர்கள் கணைகளால் பீடிக்கப்பட்டுக் களத்தில் புறமுதுகிடுவதைக் கண்டு தன் கூரிய கணைகளால் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} வில்லை அறுத்தானோ அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன்,(44) எவன், பத்தாயிரம் யானைகளின் வலிமையையும், காற்றின் வேகத்தையும் கொண்ட வெல்லப்பட முடியாத பீமசேனனைக் கணப்பொழுதிற்குள் தேரிழக்கச் செய்து, அவனைக் {பீமனைக்} கண்டு நகைத்தானோ,(45) எவன் நேரான கணைகளால் சகாதேவனை வென்று, அவனைத் தேரற்றவனாகச் செய்து, இரக்கத்தாலும், அறக்கருத்தாலும் அவனைக் கொல்லாதிருந்தானோ,(46) வெற்றியடையும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மாயைகளைச் செய்த இராட்சச இளவரசன் கடோத்கசனைச் சக்ரனின் {இந்திரனின்} ஈட்டியால் எவன் கொன்றானோ,(47) எவனுடைய போர்ச் சாதனைகள், நீண்ட காலத்திற்கு அவனுடன் தனிப்போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி தனஞ்சயனை {அர்ஜுனனை} அச்சத்தில் நிறைத்ததோ அவன், ஐயோ, அந்த வீரன் {கர்ணன்} போரில் எவ்வாறு கொல்லப்பட முடியும்?[4](48)

தேரிழப்பு, வில்முறிப்பு, ஆயுதங்கள் தீர்தல் ஆகியவற்றில் எவையேனும் ஒன்று நடைபெறாமல், எதிரிகளால் அவன் எவ்வாறு கொல்லப்பட முடியும்?(49) மனிதர்களில் புலியும், உண்மையான புலியையே போன்றவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான கர்ணன், தன் உறுதிமிக்க வில்லை அசைத்துக் கொண்டு, அதிலிருந்து பயங்கரக் கணைகளையும், தெய்வீக ஆயுதங்களையும் போரில் ஏவிக் கொண்டிருந்தவனை எவனால் வெல்ல முடியும்?(50) அவன் கொல்லப்பட்டான் என்று நீ என்னிடம் சொல்வதால், அவனது வில் ஒடிந்திருக்க வேண்டும், அல்லது அவனது தேர் பூமியில் அழுந்தியிருக்க வேண்டும், அல்லது அவனது ஆயுதங்கள் தீர்ந்து போயிருக்க வேண்டும் என்பது நிச்சயம். உண்மையில், அவனது கொலைக்கான ({அவனது கொலையை} விளக்கும்) வேறு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை.(51)

“பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் என் பாதங்களைக் கழுவுவதில்லை” என்ற பயங்கரச் சபதத்தை உயர் ஆன்மா கொண்ட எவன் செய்தானோ,(52) எந்தப் போர்வீரன் மீது கொண்ட அச்சத்தால், மனிதர்களில் காளையும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் காட்டில் தொடர்ந்து பதிமூன்று வருடங்களாகத் தூங்காமல் இமைத்துக் கொண்டிருந்தானோ,(53) உயர் ஆன்மாவையும், பெரும் ஆற்றலையும் கொண்ட எவனது வீரத்தை நம்பி என் மகன், பாண்டவர்களின் மனைவியைப் {திரௌபதியைப்} பலவந்தமாகச் சபைக்கு இழுத்து வந்தானோ,(54) அங்கே அந்தச் சபையில், பாண்டவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குருக்களின் முன்னிலையில், பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} அடிமைகளின் மனைவி என்று எவன் அழைத்தானோ,(55) சூத குலத்தைச் சேர்ந்த எந்த வீரன், சபைக்கு மத்தியில், கிருஷ்ணையிடம் {கர்ணன் திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணையே, எள்ளுப் பதர்களைப் போன்றவர்களான உன் கணவர்கள் அனைவரும் இனி இல்லை, எனவே, ஓ! அழகிய நிறத்தைக் கொண்டவளே, வேறு ஏதேனும் கணைவனைத் தேடுவாயாக” என்று சொல்லி, இணையான கடுமையும், முரட்டுத்தனமும் கொண்ட வேறு உணர்வு வெளிப்பாடுகளையும் அவளைக் கேட்கச் செய்தானோ, அந்த வீரன் எதிரியால் எவ்வாறு கொல்லப்பட்டான்?(56,57)

துரியோதனனிடம் எவன், “ஓ! துரியோதனா, போரில் தன் ஆற்றலைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளும் பீஷ்மரோ, போரில் வெல்லப்பட முடியாதவரான துரோணரோ பாரபட்சத்தால் குந்தியின் மகன்களைக் கொல்ல மாட்டார்கள். நானே அவர்கள் அனைவரையும் கொல்வேன், உன் இதய நோய் விலகட்டும்” என்ற வார்த்தைகளைச் சொன்னானோ, எவன், “குளுமையான சந்தனக் குழம்பால் பூசப்பட்டிருக்கும் என் கணை ஆகாயத்தில் செல்லும் போது, (அர்ஜுனனின்) காண்டீவத்தாலும், வற்றாத அம்பறாத்தூணி இரண்டாலும் என்ன செய்து விட முடியும்?” என்றும் சொன்னானோ, ஐயோ, காளையைப் போன்ற அகன்ற தோள்களைக் கொண்ட அந்தப் போர்வீரன், அர்ஜுனனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்?(58-60)

எவன் காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கைகளின் கடுந்தீண்டலை அலட்சியம் செய்து, கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “உனக்கு இப்போது கணவர்களில்லை” என்று சொல்லி பாண்டவர்களை வெறித்துப் பார்த்தானோ,(61) ஓ! சஞ்சயா, எவன் தன் கரங்களின் வலிமையை நம்பி, பார்த்தர்கள், அவர்களது மகன்கள் மற்றும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீது ஒருக்கணமும் அச்சங்கொள்ளாமல் இருந்தானோ, அவன், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்டு, சீற்றத்துடன் தன்னை எதிர்த்து விரையும் தேவர்களின் கரங்களிலேயே கூட மரணத்தை அடைய முடியாது என்று நான் நினைக்கும்போது, ஓ! ஐயா, பாண்டவர்களைக் குறித்துச் சொல்லும் தேவையென்ன இருக்கிறது?(63) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தன் கையுறைகளை அணிந்து கொண்டு வில்லின் நாணைத் தொடும்போதோ, அவன் எதிரில் நிற்கத்தகுந்தவர் எவருமில்லை.(64) சூரியன், சந்திரன் அல்லது நெருப்பு ஆகியவற்றின் காந்திகளை இழக்க பூமிக்குச் சாத்தியப்படலாம், ஆனால், போரில் எப்போதும் பின்வாங்காத அந்த முதன்மையான மனிதன் இறப்பது சாத்தியமில்லை.(65)

எவன் கர்ணனையும், தன் தம்பி துச்சாசனனையும் தன் கூட்டாளிகளாக அடைந்தானோ, அந்தத் தீய புத்தி கொண்ட என் மூடப் பிள்ளை {துரியோதனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பரிந்துரைகளை மறுக்க எண்ணம் கொண்டதால்,(66) காளையின் தோள்களைக் கொண்ட கர்ணன் மற்றும் துச்சாசனனின் கொலைகளைக் கண்டு இப்போது புலம்பங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான் என்பது உறுதி.(67) சவ்யசச்சினுடனான {அர்ஜுனனுடனான} தனிப்போரில் விகர்த்தனன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதையும், பாண்டவர்கள் வெற்றி மகுடம் சூடியதையும் கண்ட துரியோதனன் என்ன சொன்னான்?(68) போரில் துர்மர்ஷனனும், விருஷசேனனும் கொல்லப்பட்டதைக் கண்டும், வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படும்போது தன் படை பிளக்கப்படுவதைக் கண்டும்,(69) ஓடும் நோக்கோடு (தன் படையின்) மன்னர்கள் முகத்தைத் திருப்புவதையும், தன் தேர்வீரர்கள் ஏற்கனவே ஓடிவிட்டதையும் கண்டும் என் மகன் இப்போது புலம்பல்களில் ஈடுபடுகிறான் என்றே நான் நினைக்கிறேன்.(70)

உற்சாகமிழந்த தன் படையைக் கண்டவனும், ஆளமுடியாதவனும், செருக்கு மிக்கவனும், மூடனும், ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாதவனுமான துரியோதனன் உண்மையில் என்ன சொன்னான்?(71) தன் நண்பர்கள் அனைவராலும் தடுக்கப்பட்டும், இத்தகு கடும் பகைமையைத் தானே தூண்டிக் கொண்டவனும், போரில் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களைப் பெருமளவில் இழந்தவனுமான துரியோதனன் என்ன சொன்னான்?(72) பீமசேனனால் போரில் தன் தம்பி {துச்சாசனன்} கொல்லப்பட்டதைக் கண்டும், அவனது இரத்தம் குடிக்கப்பட்டதை அடுத்தும் உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்?(73) என் மகன், காந்தாரர்களின் ஆட்சியாளனோடு {சகுனியோடு)} சேர்ந்து, “போரில் கர்ணன் அர்ஜுனனைக் கொல்வான்” என்றான். கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, உண்மையில் அவன் {துரியோதனன்} என்ன சொன்னான்?(74)

ஓ! ஐயா {சஞ்சயா}, முன்பு பகடையாட்டம் நடந்து முடிந்ததும் மகிழ்ச்சியால் நிறைந்தவனும், பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} வஞ்சித்தவனும், சுபலனின் மகனுமான சகுனி, கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது என்ன சொன்னான்?(75) சாத்வதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியும், ஹிருதிகன் மகனுமான கிருதவர்மன், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்.(76) ஆயுத அறிவியலை அடைய விரும்புபவர்களான பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் எவனிடம் பாதுகாப்பிற்காகக் காத்திருக்கிறார்களோ {பணி செய்கிறார்களோ}, ஓ! சஞ்சயா, இளமையையும், அழகிய வடிவத்தையும் கொண்டவனும், பார்வைக்கு இனியவனும், உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவனும், துரோணரின் புத்திசாலி மகனுமான அந்த அஸ்வத்தாமன் என்ன சொன்னான்?(77,78) ஓ! ஐயா {சஞ்சயா}, கௌதம குலத்தைச் சேர்ந்தவரும், தேர்வீரர்களில் முதன்மையானவரும், ஆயுத அறிவியலின் ஆசிரியரும், சரத்வானின் மகனுமான கிருபர் கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட போது என்ன சொன்னார்?(79) மத்ரப் போர்வீரர்களின் வலிமைமிக்கத் தலைவனும், மத்ரத்தின் மன்னனும், சபைகளின் ரத்தினமும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், (தற்காலிகமாக) தேரைச் செலுத்துவதில் ஈடுபட்டவனும்[5], சௌவீர குலத்தைச் சேர்ந்த பெரும் வில்லாளியுமான சல்லியன், கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்? ஓ! சஞ்சயா, போரிட வந்த பூமியின் தலைவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களுமான பிற போர்வீரர்கள் அனைவரும், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னார்கள்?(80-82)

தேர்வீரர்களில் முதன்மையானவரும், மனிதர்களில் காளையுமான அந்த வீரத் துரோணர் வீழ்ந்த பிறகு, எவரெல்லாம் தங்கள் வகைக்கான பல்வேறு பிரிவுகளின் தலைவர்களானார்கள்?(83) ஓ! சஞ்சயா, தேர்வீரர்களில் முதன்மையானவனும், மத்ரர்களின் ஆட்சியாளனுமான சல்லியன், வைகர்த்தனன் {கர்ணன்} தேரைச் செலுத்துவதில் எவ்வாறு ஈடுபட்டான் என் எனக்குச் சொல்வாயாக.(84) சூதன் மகன் {கர்ணன்} போரில் ஈடுபட்டபோது, பின்னவனின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தவர்களும், அவனது இடது சக்கரத்தைப் பாதுகாத்தவர்களும், அந்த வீரனின் பின்புறத்தில் நின்றவர்களும் யாவர்?(85) கர்ணனைக் கைவிடாத வீரர்கள் யாவர்? ஓடிப்போன அற்பவர்கள் யாவர்? வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், ஒன்று சேர்ந்தவர்களாக இருந்த உங்களுக்கு மத்தியில் எவ்வாறு கொல்லப்பட்டான்?(86) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பாண்டவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போன்ற கணை மாரிகளை ஏவியபடி எவ்வாறு அவனை எதிர்த்துச் சென்றார்கள்?(87) 

ஓ! சஞ்சயா, வலிமைமிக்கதும், தெய்வீகமானதும், தன் வகையில் முதன்மையானதும், பாம்பைப் போன்ற தலையுடன் கூடியதுமான அந்தக் கணை {நாகாஸ்திரம்} எவ்வாறு பயனற்றதாகச் செய்யப்பட்டது என்பதையும் சொல்வாயாக.(88) ஓ! சஞ்சயா, என் படையின் தலைவர்களே நசுக்கப்படும்போது, உற்சாகமற்ற அதில் {என் படையில்} எஞ்சியோர் சிலரும் கூடக் காக்கப்படும் சாத்தியம் எதையும் நான் காணவில்லை.(89) எனக்காக எப்போதும் தங்கள் உயிரைவிடத் தயாராக இருந்த வலிமைமிக்க இரு வில்லாளிகளான, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவீரர்களும் கொல்லப்பட்டதைக் கேட்ட பிறகும் வாழ்வதால் எனக்கு என்ன பயன்?(90) பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான வலிமையான கரங்களைக் கொண்ட கர்ணன், பாண்டவர்களால் கொல்லப்பட்டான் என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(91)

துரோணர் இறந்த பிறகு, ஓ! சஞ்சயா, துணிச்சல்மிக்கப் போர்வீரர்களான கௌரவர்களுக்கும், அவர்களது எதிரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போரில் நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக.(92) குந்தியின் மகன்கள் கர்ணனுடன் எவ்வாறு போரிட்டனர் என்பதையும், அந்த எதிரிகளைக் கொல்பவன் {கர்ணன்} போரில் எவ்வாறு தன் ஓய்வை அடைந்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.[6](93)

படைத்தலைவனாக்கப்பட்ட கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 10-துரோணர் கொல்லப்பட்டதும், தப்பி ஓடிய படைகளை அணிதிரட்டிய துரியோதனன்; அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து முகாமில் ஆலோசித்த கௌரவர்கள்; கர்ணனைப் படைத்தலைவனாக்குமாறு சொன்ன அஸ்வத்தாமன்; கர்ணனின் பெருமைகளைச் சொல்லி, படைத்தலைமையை ஏற்குமாறு அவனைக் கேட்டுக் கொண்ட துரியோதனன்; துரியோதனனின் வார்த்தைகளை ஏற்ற கர்ணன்; சாத்திரங்களுக்கு இணங்கிய சடங்குகளின் படி படைத்தலைமையை ஏற்ற கர்ணன்; வந்திகளும், பிராமணர்களும் கர்ணனை வாழ்த்தியது; பொழுது புலர்ந்ததும் படையை அணிவகுத்த கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த நாளில் வலிமைமிக்க வில்லாளியான துரோணர் வீழ்ந்ததும், வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} காரியம் கலங்கடிக்கப்பட்டதும்,(1) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌரவர்களின் பரந்த படை ஓடிய பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்}, தன் துருப்புகளை அணிதிரட்டிக் கொண்டு தன் சகோதரர்களுடன் களத்தில் நின்றான்.(2) அவன் {அர்ஜுனன்} களத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் படை ஓடுவதைக் கண்டு பெரும் துணிவுடன் அவற்றை அணிதிரட்டினான்.(3)

ஓ! பாரதரே, தன் படைப்பிரிவுகளை நிலையேற்கச் செய்த உமது மகன் {துரியோதனன்}, வெற்றியடைந்தவர்களும், மகழ்ச்சியால் நிறைந்திருப்பவர்களும், நீண்ட நேரமாகப் போரிட்டுக் கொண்டிருந்த தன் எதிரிகளுமான பாண்டவர்களுடன், தன் கர வலிமையை நம்பி நீண்ட நேரம் போரிட்டான். மாலை சந்தி அணுகியதும் அவன் தன் துருப்புகளைத் திரும்ப அழைத்துக் கொண்டான்.(4,5) தங்கள் துருப்புகளைத் திரும்ப அழைத்துக் கொண்டு, தங்கள் முகாமுக்குள் நுழைந்த கௌரவர்கள், விரிப்புகளுடன் கூடிய விலையுயர்ந்த கட்டில்கள், சிறந்த இருக்கைகள் மற்றும் பகட்டான படுக்கைகள் ஆகியவற்றில் தேவர்களைப் போல அமர்ந்து கொண்டு, தங்கள் நலனைக் குறித்து ஒருவரோடொருவர் கலந்தாலோசித்தனர்.(6,7) பிறகு மன்னன் துரியோதனன், அந்த வலிமைமிக்க வில்லாளிகளிடம், இனிமையான, உயர்ந்த வெளிப்பாடுகளுடன் கூடிய பின்வரும் வார்த்தைகளைப் பேசினான்.(8)

துரியோதனன், “புத்திசாலிகளில் முதன்மையானவர்களே, உங்கள் கருத்துகளை அனைவரும் தாமதமில்லாமல் அறிவிப்பீராக. மன்னர்களே, இந்தச் சூழ்நிலையில் இன்றியமையாதது எது? அதைவிடவும் அவசியமானது எது?” என்று கேட்டான்.(9)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அந்த மனிதர்களின் இளவரசன் {துரியோதனன்}, அவ்வார்த்தைகளைப் பேசிய போது, தங்கள் அரியாசனங்களில் அமர்ந்திருந்த மனித சிங்கங்கள் {மன்னர்கள்}, போரில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு முகபாவங்களைச் செய்தனர்.(10) புத்திசாலித்தனத்துடன் கூடியவனும், பேச்சில் சாதித்தவனுமான ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, போர் நெருப்பில் தங்கள் உயிர்களை நீர்க்காணிக்கைகளாக {ஆகுதிகளாக} ஊற்ற விரும்பும் அவர்கள் அனைவரின் குறிப்புகளை உற்றுநோக்கி, காலைச்சூரியனின் பிரகாசத்துடன் கூடிய ஏகாதிபதியின் {துரியோதனனின்} முகத்தையும் கண்டு,(11) இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “உற்சாகம், வாய்ப்பு, திறமை, கொள்கை {நீதி} ஆகிய வழிகள் முடிவுகள் அனைத்தையும் சாதிக்கவல்லவை {வெற்றியை அடையவல்லவை} என்று கற்றோரால் அறிவிக்கப்பட்டிக்கிறது. எனினும், அவை விதியைச் சார்ந்ததே[1].(12)

தேவர்களுக்கு இணையானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், கொள்கையுடன் {நீதியுடன்} கூடியவர்களும், அர்ப்பணிப்புள்ளவர்களும், சாதித்தவர்களும், நன்றியுணர்வு கொண்டவர்களுமாக நம் தரப்பில் இருந்த முதன்மையான மனிதர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.(13) அவை யாவற்றாலும் நாம் வெற்றியில் நம்பிக்கையிழக்கக்கூடாது. இந்த வழிகள் முறையாகப் பொருத்தப்பட்டால், விதியையே கூட அநுகூலமானதாக்கலாம்.(14) எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, நாம் அனைவரும் சேர்ந்து, மனிதர்களில் முதன்மையானவனும், அனைத்து சாதனைகளையும் கொண்டவனுமான கர்ணனைப் படையின் தலைமையில் நிறுவலாம் {சேனாதிபதியாக்கலாம்}.(15) கர்ணனை நம் படைத்தலைவனாகச் செய்து, நம் பகைவர்களை நாம் நசுக்குவோம். இந்தக் கர்ணன் பெரும் வலிமை கொண்டவன்; இவன் ஆயுதங்களில் சாதித்தவனும், போரில் வீழ்த்தப்பட இயலாத வீரனுமாவான். யமனைப் போலத் தடுக்கப்பட முடியாதவனான இவன் {கர்ணன்}, போரில் நம் எதிரிகளை வெல்லத்தகுந்தவனாவான்” என்றான் {அஸ்வத்தாமன்}.(16)

ஆசான் மகனின் {அஸ்வத்தாமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில் கர்ணன் மீது பெரும் நம்பிக்கைகளைக் கொண்டான்.(17) பீஷ்மர் மற்றும் துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு கர்ணன் பாண்டவர்களை வெல்வான் என்ற அந்த நம்பிக்கையைத் தன் இதயத்தில் பேணி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அதனால் ஆறுதலை அடைந்து வந்த துரியோதனன்,(18) அஸ்வத்தாமனின் அந்த வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியால் நிறைந்தும், தன் மனதை உறுதியாக்கிக் கொண்டும், தன் கரங்களின் வலிமையை நம்பியும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்}, பாசம், மரியாதை, உண்மை, மகிழ்ச்சி, நன்மை ஆகியவை நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(19-20) “ஓ! கர்ணா, உன் ஆற்றலையும், நீ என் மீது கொண்ட பெரும் நட்பையும் நான் அறிவேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவை யாவற்றுக்காகவும், என் நன்மைக்கான குறிப்பிட்ட சில வார்த்தைகளை உனக்குச் சொல்வேன்.(21) ஓ! வீரா, அவற்றைக் கேட்ட பிறகு, உனக்கு எது விருப்பமுடைடையதாகத் தோன்றுகிறதோ அதைச் செய்வாயாக. பெரும் அறிவைக் கொண்டிருப்பதால், நீயே எனக்கு உயர்ந்த புகலிடமாவாய்.(22)

அதிரதர்களான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய என் இரண்டு படைத்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களைவிட வலிமையானவனான நீயே என் படைத்தலைவன் ஆவாயாக.(23) பெரும் வில்லாளிகளான அவ்விருவரும் வயதால் முதிர்ந்தவர்களாக இருந்தனர். மேலும், அதைத் தவிரவும் அவர்கள் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} பரிவும் கொண்டிருந்தனர். இருப்பினும், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உன் வார்த்தையினால் அவ்விரு வீரர்களும் என்னால் மதிக்கப்பட்டனர்.(24) ஓ! ஐயா {கர்ணா}, பாண்டுவின் மகன்களுடன் பாட்டன் {பீஷ்மர்} கொண்ட உறவுமுறையால், தொடர்ந்து பத்து நாட்களாக அந்தப் பயங்கரப் போரில் அவர்கள் தப்புவிக்கப்பட்டனர்.(25) நீயும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டாய். அந்தப் பெரும்போரில் தன் முன்னே சிகண்டியைக் கொண்ட பல்குனனால் {அர்ஜுனனால்} வீரப் பீஷ்மரும் கொல்லப்பட்டார்.(26) அந்தப் பெரும் வில்லாளி வீழ்ந்து, கணைப்படுக்கையில் தன்னை வழிப்படுத்திக் கொண்ட பிறகு, ஓ! மனிதர்களில் புலியே, உன் வார்த்தையினாலேயே துரோணர் நமது தலைவராக்கப்பட்டார்.(27) பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} அவரது {துரோணரது} சீடர்களாயிருந்த உறவின் விளைவால், அவராலும் கூட அவர்கள் தப்புவிக்கப்பட்டனர் என்றே நான் நினைக்கிறேன். மிக விரைவில், அந்தக் கிழவரும் {துரோணரும்} திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டுவிட்டார்.(28) போரில் உனக்கு இணையான மற்றொரு போர்வீரனை என்னால் சிந்திக்கவும் முடியவில்லை. போரில் கொல்லப்பட்ட அவ்விரு முதன்மையான போர்வீரர்களாலும் கூட உன் ஆற்றலை அளவிட முடியாது.(29)

இன்று, நீ மட்டுமே நமக்கு வெற்றியைக் கொடுக்க வல்லவன் என்பதில் சந்தேகமில்லை. முன்பும், இடையிலும், பின்பும் நீ நமது நன்மைக்காகவே செயல்பட்டவனாவாய்.(30) எனவே, ஒரு தலைவனைப் போல இந்தப் போரின் சுமையைச் சுமப்பதே உனக்குத் தகும். உன்னை நீயே தலைமையில் நிறுவிக் கொள்வாயாக.(31) தேவர்களின் படைத்தலைவனும், மங்கா ஆற்றலைக் கொண்டவனுமான தலைவன் ஸ்கந்தன் (தேவர்களின் படையை ஆதரிப்பதைப்) போல, இந்தத் தார்தராஷ்டிரப் படையை நீ ஆதரிப்பாயாக. தானவர்களைக் கொல்லும் மஹேந்திரனைப் போல, நம் எதிரிக்கூட்டங்கள் அனைத்தையும் அழிப்பாயாக.(32) போரில் நிற்கும் உன்னைக் காணும் வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களும், அவர்களுடன் சேர்ந்து பாஞ்சாலர்களும், விஷ்ணுவைக் கண்ட தானவர்களைப் போலப் போரில் தப்பி ஓடப் போகிறார்கள். எனவே, இந்தப் பரந்த படைக்கு நீ தலைமையேற்பாயாக.(33) களத்தில் நீ தீர்மானத்துடன் நின்றால், தீய இதயங்களைக் கொண்ட பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தப்பி ஓடுவார்கள்.(34) உதயச் சூரியன் தன் சக்தியால் அனைத்தையும் எரித்தபடியே அடர்த்தியான இருளை அழிப்பதைப் போல, நீ நம் எதிரிகளை அழிப்பாயாக” என்றான் {துரியோதனன்}.(35)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்டிருந்தாலும், கர்ணன் பாண்டவர்களை வெல்வான் என்ற நம்பிக்கை உமது மகனின் {துரியோதனனின்} இதயத்தில் பலமடைந்தது.(36) தன் இதயத்திற்குள் அந்நம்பிக்கையைப் பேணிக்காத்த அவன் {துரியோதனன்}, கர்ணனிடம், “ஓ! சூதன் மகனே {கர்ணா}, உனக்கு எதிரில் போரிடப் பார்த்தன் {அர்ஜுனன்} எப்போதும் விரும்பியதில்லை” என்றான்.(37)

அப்போது கர்ணன் {துரியோதனனிடம்}, “ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, `தங்கள் மகன்களோடு கூடிய பாண்டவர்களையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} நான் வெல்வேன்’ என்ற இந்த வார்த்தைகளை முன்னர் உன் முன்னிலையிலேயே சொல்லியிருக்கிறேன்.(38) நான் உனது படைத்தலைவனாவேன். இதில் எந்த ஐயமும் இல்லை. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அமைதியடைவாயாக. பாண்டவர்கள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே கருதுவாயாக” என்றான்.(39)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படிச் சொல்லப்பட்டதும் மன்னன் துரியோதனன், ஸ்கந்தனை கௌரவிப்பதற்காகத் தேவர்கள் அனைவருடன் சேர்ந்த நூறு வேள்விகளைச் செய்தவனைப் போலக் கர்ணனைக் கௌரவிப்பதற்காக ஏகாதிபதிகள் அனைவருடன் சேர்ந்து எழுந்து நின்றான்.(40) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் தலைமையிலான மன்னர்கள் அனைவரும், வெற்றியை விரும்பி, விதிகளுக்கு இணங்கிய சடங்குகளின் படி கர்ணனைப் படைத்தலைவர் பொறுப்பில் நிறுவினார்கள்[2].(41) மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்டு, விளிம்புவரை நீர் நிறைந்தவையும், யானைகளின் தந்தங்கள், காண்டாமிருகங்களின் கொம்புகள் மற்றும் வலிமைமிக்கக் காளைகளின் கொம்புகள் ஆகியவற்றுடன் கூடியவையுமான பொற்குடங்ளுடனும், மண்குடங்களுடனும்,(42) ரத்தினங்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட பிற பாத்திரங்களுடனும், நறுமணமிக்க மூலிகைகள் மற்றும் செடிகளுடனும், அபரிமிதமாகச் சேகரிக்கப்பட்டட பிற பொருட்களுடனும், உடும்பர மரத்தில் {அத்திப் பலகையில்} செய்யப்பட்டதும், பட்டுத் துணியால் மூடப்பட்டதுமான இருக்கை ஒன்றில் சுகமாக வீற்றிருந்த கர்ணன், சாத்திரங்களுக்கு இணங்கிய சடங்குகளின் படி படைத்தலைவனாகப் பட்டமளிக்கப்பட்டான். அந்தச் சிறந்த ஆசனத்தில் குளிப்பட்டப்பட்ட அந்த உயர் ஆன்மாவை {கர்ணனைப்} பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் மரியாதைக்குரிய சூத்திரர்கள் ஆகியோர் புகழ்ந்து துதித்தனர்[3].(43,44)இப்படிப் படைத்தலைவனாக நிறுவப்பட்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நிஷ்கங்கள், பசுக்கள் மற்றும் பிற செல்வங்களைக் கொடையாக அளிக்கச் செய்து பிராமணர்களில் முதன்மையான பலரையும் தன்னை ஆசீர்வதிக்கும்படி செய்தான்.(45) ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, ’கோவிந்தனோடு {கிருஷ்ணனோடு} கூடிய பார்த்தர்களையும், அவர்களைப் பின்தொடர்வோர் அனைவரையும் வெல்வாயாக’ என்ற இவ்வார்த்தைகளையே வந்திகளும், பிராமணர்களும் அவனிடம் சொன்னார்கள்.(46) (மேலும் அவர்கள்), “ஓ! ராதையின் மகனே {கர்ணா} கடுங்கதிர்களால் இருளை அழிக்கும் உதயச் சூரியனைப் போல, நம் வெற்றிக்காகப் பார்த்தர்களையும், பாஞ்சாலர்களையும் கொல்வாயாக.(47) சூரியனின் எரியும் கதிர்களைப் பார்க்க இயலாத ஆந்தைகளைப் போல, உன்னால் ஏவப்படும் கணைகளைக் கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடியவர்களால் {பாண்டுவின் மகன்களால்} பார்க்கவும் முடியாது.(48) போரில் இந்திரனுக்கு எதிராக நிற்க இயலாத தானவர்களைப் போல, ஆயுதங்களுடன் கூடிய உனக்கு முன்னிலையில் நிற்பதற்கும் பார்த்தர்களாலும், பாஞ்சாலர்களாலும் இயலாது” என்றனர்.(49)

படைத்தலைமையில் நிறுவப்பட்டவனும், ஒப்பிலா காந்தி கொண்டவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, இரண்டாவது சூரியனைப் போல அழகுடனும், ஒளியுடனும் பிரகாசித்தான்.(50) (இவ்வாறு) ராதையின் மகனை {கர்ணனைப்} படையின் தலைவனாக நிறுவிய உமது மகன் {துரியோதனன்}, காலனால் தூண்டப்பட்டு, தன் காரியங்கள் நிறைவேறியவனாகத் தன்னைக் கருதிக் கொண்டான்.(51) எதிரிகளைக் கொல்பவனான அந்தக் கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைத்தலைமை பொறுப்பை அடைந்து, சூரியன் உதித்ததும், துருப்புகளை அணிவகுக்கச் செய்தான்.(52) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தாரகையைத் தீய வேராகக் கொண்ட போரில், தேவர்களால் சூழப்பட்ட ஸ்கந்தனைப் போல, உமது மகன்களால் சூழப்பட்ட கர்ணன் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.(53)

மகரார்த்தச்சந்திர வியூகங்கள்! – கர்ண பர்வம் பகுதி – 11-போர்க்களத்திற்குச் சென்று தன் படையை மகரவியூகத்தில் அணிவகுத்த கர்ணன்; அர்ஜுனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; தன் படையை அர்த்தச்சந்திர வியூகத்தில் அணிவகுத்த அர்ஜுனன்; பதினாறாம் நாள் போர் தொடங்கியது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, படைத்தலைமையை அடைந்த பிறகு, மன்னனே {துரியோதனனே} இனிமையும், சகோதரத்துவமும் நிறைந்த அவ்வார்த்தைகளால் அவனிடம் {கர்ணனிடம்} பேசிய பிறகு, சூரிய உதயத்தில் துருப்புகளை அணிவகுக்கச் செய்த பிறகு, விகர்த்தனன் மகனான கர்ணன் என்ன செய்தான்?” என்றான்.(1,2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனின் விருப்பங்களை அறிந்த உமது மகன்கள், இன்பகரமான இசையுடன் துருப்புகளை அணிவகுக்கக் கட்டளையிட்டனர்.(3) விடிவதற்கு இன்னும் அதிக நேரம் இருந்த போது, “அணிவகுப்பீர், அணிவகுப்பீர்” என்ற உரத்த ஒலி உமது துருப்புகளின் மத்தியில் எழுந்தது.(4) தங்கள் கவசங்களைப் பூட்டும்போதோ, சேணம்பூட்டப்படும்போதோ, முதன்மையான யானைகள், தடுப்புடன் கூடியவையும் தயாரிப்பு நிலையில் இருந்தவையுமான தேர்கள், காலாட்படை வீரர்கள், குதிரைகள் ஆகியனவற்றுக்கு மத்தியிலும், சுறுசுறுப்புடன், ஒருவரையொருவர் கூவி அழைத்தப்படி நகர்ந்து கொண்டிருந்த போராளிகளுக்கு மத்தியில் எழுந்த அந்த ஆரவாரமானது மகத்தானதாகி சொர்க்கங்களையே எட்டியது.(5,6)

பிரகாசமான சூரியனின் காந்தியைக் கொண்டதும், பல கொடிகளால் மகுடம் சூட்டப்பட்டும், வெண்கொடிமரத்தைக் கொண்டதும், நாரைகளின் நிறத்திலான குதிரைகளுடன் கூடியதும், யானை கட்டும் கயிறை {யானைச் சங்கிலியை} பொறியாகத் தாங்கியதும் {கொடியில் கொண்டதும்}, நூற்றுக்கணக்கான அம்பறாத்தூணிகளால் நிறைந்ததும், கதாயுதம், மரத் தடுப்பு ஆகியவற்றைக் கொண்டதும், சதக்னிகள் நிறைந்ததும், மணிவரிசைகளைக் கொண்டதும், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள் மற்றும் பல விற்களுடன் கூடியதுமான தேரில், தங்கப் பின்புறம் கொண்ட வில்லைத் தாங்கியபடியே சூதன் மகன் {கர்ணன்} தோன்றினான்.(7-9) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தங்க இழைகளின் வலையால் அலங்கரிக்கப்பட்ட சங்கை ஊதிக் கொண்டும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட உறுதிமிக்கத் தன் வில்லை அசைத்துக் கொண்டும் களத்தில் தோன்றினான்.(10)

தேர்வீரர்களில் முதன்மையானவனும், அணுகுவதற்குக் கடினமானவனும், இருளை அழிக்கும் உதயச் சூரியனுக்கு ஒப்பானவனும், வலிமைமிக்க வில்லாளியுமான கர்ணன் தன் தேரில் அமர்ந்திருப்பதைக் கண்டு,(11) ஓ! மனிதர்களில் புலியே, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களில் எவரும், பீஷ்மர், அல்லது துரோணர், அல்லது வேறு மனிதர்களின் இழப்பாலும் கவலை கொள்ளவில்லை.(12) ஓ! ஐயா, தன்னுடைய சங்கின் வெடிப்பொலிகளால் போர்வீரர்களை வேகப்படுத்திய கர்ணன், கௌரவர்களின் அந்தப் பரந்த படையை வெளியே கொண்டுவந்தான்.(13) வலிமைமிக்க வில்லாளியும், எதிரிகளை எரிப்பவனுமான அந்தக் கர்ணன், துருப்புகளை மகர வியூகத்தில் அணிவகுக்கச் செய்துகொண்டு, வெற்றியடையும் விருப்பத்துடன் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றான்.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மகரத்தின் அலகு முனையில் கர்ணனே நின்றிருந்தான். அதன் இரு கண்களிலும் துணிச்சல்மிக்கச் சகுனியும், வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகனும் இருந்தனர்.(15) அதன் தலையில் துரோணர் மகனும் {அஸ்வத்தாமனும்}, அதன் கழுத்தில் {துரியோதனனின்} உடன்பிறந்த சகோதரர்கள் அனைவரும் இருந்தனர். அதன் {மகரத்தின்} மத்தியில் பெரும்படையால் ஆதரிக்கப்பட்டபடி மன்னன் துரியோதனன் இருந்தான்.(16) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதன் இடது காலில் நாராயணத் துருப்புகள் மற்றும் வெல்லப்படமுடியாத போர்வீரர்களான கோபாலர்கள் ஆகியோரின் துணையுடன் கிருதவர்மன் நின்றிருந்தான்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலது காலில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட கௌதமர் மகன் {கிருபர்}, வலிமைமிக்க வில்லாளிகளான திரிகர்த்தர்கள் மற்றும் தெற்கத்தியர் ஆகியோருடன் நின்றிருந்தார்.(18) இடது பின்னங்காலில் மத்ரர்களின் நாட்டில் இருந்து வந்த பெரும் படையுடன் சல்லியன் நின்றிருந்தான்.(19) வலது பின்னங்காலில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையான நோன்புகளைக் கொண்ட சுஷேணன், ஆயிரம் தேர்கள் மற்றும் முன்னூறு யானைகளால் சூழப்பட்டபடி  நின்றிருந்தான்.(20) அதன் வால் பகுதியில், ஒரு பெரும்படையால் சூழப்பட்ட படி வலிமையும் சக்தியும் கொண்ட இரண்டு அரச சகோதரர்களான சித்திரனும், சித்திரசேனனும் நின்றிருந்தனர்.(21)

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான கர்ணன் இவ்வாறு வெளியே வந்த போது, அர்ஜுனன் மீது தன் கண்களைச் செலுத்திய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(22) “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, ஓ! வீரா, இந்தப் போரில் வீரர்கள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் காக்கப்படும் வகையில் இந்தத் தார்தராஷ்டிரப் படையை எவ்வாறு கர்ணன் அணிவகுத்திருக்கிறான் பார்.(23) இந்தத் தார்தராஷ்டிரப் படை துணிச்சமிக்கப் போர்வீரர்களை இழந்திருக்கிறது. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, எஞ்சியிருப்போரைப் புல்லுக்கு இணையான பலவீனர்களாக நான் நினைக்கிறேன். ஒரே பெரும் வில்லாளியாக சூதன் மகனே {கர்ணனே} அதனில் ஒளிர்கிறான்.(24) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் பெரும் பாம்புகள் உள்ளடங்கிய அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மூவுலகாலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான்.(25) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்று நீ அவனைக் {கர்ணனைக்} கொன்றுவிட்டால், ஓ! பல்குனா {அர்ஜுனா}, வெற்றி உனதேயாகும். பனிரெண்டு {12} ஆண்டுகளாக என் இதயத்தில் தைத்திருக்கும் முள்ளும் பிடுங்கப்பட்டதாகும். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இஃதை அறிந்து கொண்டு நீ விரும்பியவாறு அணிவகுப்பாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.(26)

தனது அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அந்தப் பாண்டவன், அரை நிலவு {அர்த்தச் சந்திரன்} வடிவிலான எதிர் வியூகத்தில் {அர்த்தச்சந்திர வியூகத்தில்} தன் படையை அணிவகுத்தான்.(27) அதன் இடது பக்கத்தில் பீமசேனனும், வலது பக்கத்தில் பெரும் வில்லாளியான திருஷ்டத்யும்னனும் நின்றிருந்தனர்.(28) அந்த வியூகதின் நடுவில் மன்னனும் {யுதிஷ்டிரனும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} இருந்தனர். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் பின்புறத்தில், நகுலனும், சகாதேவனும் நின்றனர்.(29) பாஞ்சால இளவரசர்களான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும், (அர்ஜுனனின்) தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்களானார்கள். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட அவர்கள், ஒரு கணமும் அர்ஜுனனை விட்டு அகலாமல் இருந்தனர்.(30)

ஓ! பாரதரே, பெரும் வீரம் கொண்டவர்களும், கவசம் தரித்தவர்களுமான எஞ்சிய மன்னர்கள், தாங்கள் கொண்ட உற்சாகம் மற்றும் உறுதியின் அளவுக்கத்தக்க அந்த வியூகத்தில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்றனர்.(31) ஓ! பாரதரே, இவ்வாறே தங்கள் பெரும் வியூகத்தை அமைத்த பாண்டவர்களும், உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், தங்கள் இதயங்களைப் போரில் நிலைநிறுத்தினர்.(32) போரில் சூதன் மகனால் {கர்ணனால்} வகுக்கப்பட்டிருக்கும் போர்வியூகத்தில் அணிவகுத்திருக்கும் தன் படையைக் கண்ட துரியோதனன், தன் சகோதரர்கள் அனைவருடன் சேர்ந்து பாண்டவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(33) அதே போல, யுதிஷ்டிரனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வியூகத்தில் அணிவகுக்கப்பட்டிருக்கும் பாண்டவப் படையைக் கண்டு, கர்ணனுடன் சேர்ந்த தார்தராஷ்டிரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(34)

அப்போது சங்குகள், பேரிகைகள், உடுக்கைகள் {பணவங்கள்}, பெருமுரசுகள் {ஆனகங்கள்}, கைத்தாளங்கள் {கோமுகங்கள்}, டிண்டிமங்கள், ஜார்ஜரங்கள் ஆகியன அனைத்துப் பக்கங்களிலும் உரக்க முழக்கி, இசைக்கப்பட்டன.(35) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உரத்த ஒலியை எழுப்பக்கூடிய கருவிகள் இரண்டு படைகளுக்கு மத்தியிலும் முழக்கி இசைக்கப்பட்டன. வெற்றியை அடைவதற்காகத் துணிச்சல்மிக்க வீரர்களால் சிங்க முழக்கங்களும் அங்கே எழுந்தன.(36) மேலும், ஓ! மன்னா, அங்கே குதிரைகளின் கனைப்பொலிகளும், யானைகளின் பிளிறல்களும், தேர்ச்சக்கரங்களின் கடும் சடசடப்பொலிகளும் எழுந்தன.(37)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில், கவசம்பூண்டவனும், வியூகத்தின் தலைமையில் நின்றவனும், பெரும் வில்லாளியுமான கர்ணனைக் கண்டு, (கௌரவப் படையில்) எவரும் துரோணரின் இழப்பை உணராதிருந்தனர்.(38), ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியான மனிதர்களால் நிறைந்த இரண்டு படைகளும், தாமதமில்லாமல் ஒருவரையொருவர் அழிக்க (தயாராக) போரிடும் ஆவலோடு அங்கே நின்றிருந்தனர்.(39) அங்கே, ஓ! மன்னா, கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் ஒருவரையொருவர் கண்டு, கோபத்தால் தூண்டப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் ஊடாகத் திரிந்தபடியோ, நின்று கொண்டோ இருந்தனர்.(40) ஒருவரையொருவர் சந்திக்க விரைந்த அந்த இரு படையினரும் (மகிழ்ச்சியால்) ஆடுவதாகத் தெரிந்தது. இரண்டு படைகளின் சிறகுகள், மற்றும் பக்கச் சிறகுகள் ஆகியவற்றில் இருந்து போரிடுவதற்காகப் போர் விருப்பமுள்ள போர்வீரர்கள்  முன்னே வந்தனர்[1].(41) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுக்கிடையிலான போரானது ஒருவரையொருவர் அழிப்பதற்காகத் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(42)

பீமனால் கொல்லப்பட்ட க்ஷேமதூர்த்தி! – கர்ண பர்வம் பகுதி – 12-பீமனுக்கும் க்ஷேமதூர்த்திக்கும் இடையில் நடைபெற்ற போர்; க்ஷேமதூர்த்திக் கொல்லப்பட்டது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, மகிழ்ச்சிமிக்க மனிதர்களாலும், குதிரைகள், மற்றும் யானைகள் ஆகியவற்றாலும் நிறைந்த அந்தப் பரந்த இரு படைகளும், தேவாசுர படைகளுக்கு ஒப்பான காந்தியுடன் ஒன்றோடொன்று சந்தித்து, ஒன்றையொன்று தாக்கத் தொடங்கின.(1) பெரும் ஆற்றலைக் கொண்ட மனிதர்களும், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவையும், காலாட்படை வீரர்களும், உடல்களுக்கும், பாவங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் கட்டுறுதியான வீச்சுகளுடன் தாக்குதலைத் தொடுத்தனர்[1].(2) சிங்கத்தைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொருவரும், முழு நிலவுக்கோ, சூரியனுக்கோ ஒப்பானவையும், தாமரையின் நறுமணத்தைக் கொண்டவையும் சிங்கத்தைப் போன்றவையுமான வேறு மனிதர்களின் தலையால் பூமியை தூற்றினர்.(3) போராளிகள், பிறை வடிவம் மற்றும் அகன்ற தலை கொண்ட கணைகளாலும் {அர்த்தச்சந்திர பாணம் மற்றும் பல்லங்களாலும்}, கத்திமுகக் கணைகளாலும் {க்ஷுரப்ரங்களாலும்}, கோடரிகளாலும், போர்க்கோடரிகளாலும் வேறு போராளிகளின் தலைகளை வெட்டினர்.(4) ஆயுதங்களாலும், கடகங்களாலும் அலங்கரிக்கப்பட்ட நீண்ட பருத்த கரங்களைக் கொண்ட மனிதர்களின் கரங்கள், பருத்த கரங்களைக் கொண்ட வேறு மனிதர்களால் வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்து ஒளிர்ந்தன.(5) சிவந்த விரல்கள், உள்ளங்கை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு நெளிந்து கொண்டிருந்த அந்தக் கரங்கள், கருடனால் கொல்லப்பட்ட ஐந்து தலை பாம்புகள் கிடப்பதைப் போலப் பிரகாசமாகப் பூமியில் படர்ந்து கிடந்தன.(6)புண்ணியம் தீர்ந்து போய்த் தங்கள் தெய்வீகத் தேர்களில் இருந்து விழும் சொர்க்கவாசிகளைப் போல, எதிரிகளால் தாக்கப்பட்ட துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவற்றில் இருந்து கீழே விழுந்தனர்.(7) வேறு துணிச்சல் மிக்க வீரர்களும், கனமான கதாயுதங்கள், முள் பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, மற்றும் குறுந்தடிகளுடன் கூடிய மேலும் துணிச்சல்மிக்கப் போராளிகளால் அந்தப் போரில் நசுக்கப்பட்டு நூற்றுகணக்கில் விழுந்தனர்.(8) கொந்தளிப்படைந்த அந்தப் போரில் தேர்கள், தேர்களால் நசுக்கப்பட்டன, மதங்கொண்ட யானைகள், வேறு மதங்கொண்ட யானைகளாலும், குதிரைவீரர்கள், வேறு குதிரைவீரர்களாலும் நசுக்கப்பட்டனர்.(9) தேர்களால் அழிக்கப்பட்ட மனிதர்களும், யானைகளால் அழிக்கப்பட்ட தேர்களும், காலாட்படைவீரர்களால் கொல்லப்பட்ட குதிரைவீரர்களும், யானைகளால் அழிக்கப்பட்ட தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களும், காலாட்படை வீரர்களால் அழிக்கப்பட்ட தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளும், குதிரைகளால் அழிக்கப்பட்ட தேர்கள், காலாட்படை வீரர்களும் மற்றும் யானைகளும், தேர்களால் அழிக்கப்பட்ட மனிதர்களும், யானைகளும் களத்தில் கீழே விழுந்தன.(10,11) கைகள், கால்கள், ஆயுதங்கள், தேர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மனிதர்களும், குதிரைகளும், யானைகளும், தேர்வீரர்களும், தேர்வீரர்கள், குதிரைகள், யானைகளுக்கு ஏற்படுத்திய பேரழிவு பெரியதாக இருந்தது.(12)

வீரம் மிகுந்த போர்வீரர்களால் இப்படி அந்தப் படை தாக்கிக் கொல்லப்பட்ட போது, விருகோதரன் {பீமன்} தலைமையிலான பார்த்தர்கள் {பாண்டவர்கள்} எங்களை எதிர்த்து வந்தனர்.(13) அகன்ற தோள்களும், நீண்ட கரங்களும், நெடிய உடற்கட்டும், பெரிய கண்களும் கொண்டோரான, பாண்டியர்கள், சோழர்கள், கேரளர்கள் {சேரர்கள்} ஆகிய அனைவருடன் கூடிய வலிமைமிக்க ஓர் அணிவகுப்பால் சூழப்பட்டவர்களும், திராவிடர்களின் படைகளுடன் கூடியவர்களுமான திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள், பிரபத்ரகர்கள், சாத்யகி, சேகிதானன் ஆகியோரும் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} இருந்தனர்.(14,15) சாத்யகியால் வழிநடத்தப்பட்ட ஆந்திர இனக்குழுவைச் சேர்ந்த காலாட்படை போராளிகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாகவும், சிவந்த பற்களுடையவர்களாகவும், மதங்கொண்ட யானைகளின் ஆற்றலைக் கொண்டவர்களாகவும், பல்வேறு வண்ணங்களிலான ஆடைகளை உடுத்தியிருந்தவர்களாகவும், நறுமணப்பொடிகளைப் பூசியிருந்தவர்களாகவும்,(16) வாள்களையும், சுருக்குக் கயிறுகளையும் தரித்திருந்தவர்களாகவும், வலிமைமிக்க யானைகளையே தடுக்கவல்லவர்களாகவும், ஒருவரையொருவர் கைவிடாத மரணத் தோழர்களாகவும் {காலனின் தோழர்களாகவும்} [2],(17) அம்பறாத்தூணிகளைக் கொண்டவர்களாகவும், விற்களைத் தாங்கியிருந்தவர்களாகவும், நீண்ட குழல்களை {மயிரைக்} கொண்டவர்களாகவும், இனிமையான பேச்சைக் கொண்டவர்களாகவும், கடும் வடிவங்களையும், பெரும் சக்தியையும் கொண்டவர்களாகவும் இருந்தனர் [3].(18)துணிச்சல் மிக்கப் பிற போர்வீரர்களான சேதிகள், பாஞ்சாலர்கள், கைகேயர்கள், காருஷர்கள், கோசலர்கள், காஞ்சிகள், மகதர்கள் ஆகியோரும் விரைந்து முன்னேறினர்.(19) முதன்மையான வகைகளைச் சேர்ந்த அவர்களது தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியனவும், அவர்களது கடும் காலாட்படை வீரர்களும், பல்வேறு இசைக்கருவிகளின் இசையால் மகிழ்ந்து ஆடுவதாகவும், சிரிப்பதாகவும் தெரிந்தது.(20) அந்தப் பரந்த படைக்கு மத்தியில், யானையின் கழுத்தில் ஏறிக் கொண்ட விருகோதரன் {பீமன்}, பல முதன்மையான யானைவீரர்களால் சூழப்பட்டபடியே, உமது படையை எதிர்த்து வந்தான்.(21) முறையாக ஆயுதங்களைத் தரித்திருந்தவையும், கடுமையானவையும், முதன்மையானவையுமான அந்த யானைகள், உதய மலையின் மேலே உதயச் சூரியனால் மகுடம் சூட்டப்பட்டதும் கல்லால் கட்டப்பட்டதுமான மாளிகை போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(22) விலைமதிப்புமிக்க ரத்தினங்கள் பதிக்கப்பட்டவையும், தங்கள் வகையில் முதன்மையானவையுமான அவற்றின் {அந்த யானைகளின்} இரும்புக் கவசங்களும், நட்சத்திரங்களால் விரவிக் கிடக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலப் பிரகாசித்தன.(23)

கூதிர்காலத்து நடுப்பகல் சூரியனின் காந்தியுடன் கூடிய அந்தப் பீமன், விரிந்து நீட்டப்பட்ட தன் கைகளில் வேலுடனும், தன் தலையில் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய கிரீடத்துடனும், தன் எதிரிகளை எரிக்கத் தொடங்கினான்.(24) அந்த {பீமனின்} யானையைத் தொலைவிலிருந்தே கண்டவனும், தானும் யானையில் ஏறியிருந்தவனுமான க்ஷேமதூர்த்தி, மிகவும் மகிழ்ச்சியாக இருந்த பீமனை நோக்கி அறைகூவியபடியே விரைந்து சென்றான்.(25) அப்போது, மேலே மரங்களைக் கொண்ட இரு பெரும் மலைகளுக்கு ஒப்பானவையும், ஒன்றோடொன்று போரிட விரும்பியவையும் கடும் வடிவங்களுடன் கூடியவையுமான அந்த இரு யானைகளுக்கும் இடையில் ஒரு மோதல் நடந்தது.(26) ஒன்றோடொன்று மோதிய அந்த யானைகளில் இருந்த அவ்விரு வீரர்களும், சூரியக் கதிர்களின் காந்தியுடன் கூடிய வேல்களால் பலவந்தமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு உரத்த முழக்கமிட்டனர்.(27) பிறகு, பிரிந்த அவர்கள், தங்கள் யானைகளுடன் வட்டமாகத் திரிந்து, விற்களை எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(28)

தங்கள் உரத்த முழக்கங்களாலும், தங்கள் கக்கங்களைத் தட்டிக் கொண்டதாலும், தங்கள் கணைகளின் விஸ் என்ற ஒலியாலும் சுற்றியிருந்த மக்களை மகிழ்ச்சியடைச் செய்தபடியே அவர்கள் தொடர்ந்து சிங்க முழக்கமிட்டனர்.(29) பெரும் பலம் கொண்டவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான அவ்விருவரும், காற்றில் மிதக்கும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் யானைகளின் உயர்த்தித் தூக்கப்பட்ட துதிக்கைகளைப் பயன்படுத்திப் போரிட்டனர்.(30) பிறகு, அடுத்தவரின் வில்லை வெட்டிய அவ்விருவரும், ஒருவரையொருவர் நோக்கி முழங்கியபடியே, மழைக்காலத்து இரு மேகத் திரள்கள் மலைத்தாரைகளைப் பொழிவதைப் போல ஈட்டிகள் மற்றும் வேல்களின் மழையை ஒருவர்மீதொருவர் பொழிந்தனர்.(31)

அப்போது, க்ஷேமதூர்த்தி, பெரும் மூர்கத்தைக் கொண்ட வேலொன்றால் பீமசேனனின் நடுமார்பைத் துளைத்து, மேலும் ஆறால் துளைத்து, உரக்க முழங்கினான்.(32) தன் உடலில் தைத்திருந்த அந்த வேல்களுடன் கூடியவனும் கோபத்தால் சுடர்விட்டவனுமான பீமசேனன், மேகத்திரையின் வழியே கதிர்களை வெளியேற்றும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(33) அப்போது பீமன், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமானதும், முற்றிலும் நேராகச் செல்வதும், முழுவதும் இரும்பாலானதுமான வேல் ஒன்றைத் தன் எதிராளியின் மீது கவனமாக வீசினான்.(34) பிறகு அந்தக் குலுட்டர்களின் {கரூசர்களின்} ஆட்சியாளன் {க்ஷேமதூர்த்தி}, தன் வில்லை வளைத்துப் பத்துக் கணைகளால் அந்த வேலை அறுத்து, மேலும் அறுபது {60} கணைகளால் பாண்டுவின் மகனை {பீமனைத்} துளைத்தான்.(35) பிறகு பாண்டுவின் மகனான பீமன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட தன் வில்லை எடுத்துக் கொண்டு, உரக்க முழங்கிய படியே தன் எதிராளியின் யானையைத் தன் கணைகளால் ஆழமாகப் பீடித்தான்.(36) அந்தப் போரில் பீமசேனனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்த யானை, அதைத் தாங்கிக் கொள்ள முனைந்தாலும், காற்றால் விரட்டப்படும் மேகத்தைப் போலக் களத்தில் நிற்கவில்லை.(37) பீமனுக்குச் சொந்தமானதும், கடுமையானதுமான யானைகளின் இளவரசன், காற்றால் விரட்டப்படும் மேகத்திரள்களைப் புயலால் விரட்டப்படும் மற்றொரு மேகத்திரளைப் போல (ஓடிக் கொண்டிருக்கும்) தன் எதிராளியைப் பின்தொடர்ந்து சென்றது.(38) தன் யானையை நிறுத்திய வீர க்ஷேமதூர்த்தி, பின்தொடர்ந்து வந்த பீமசேனனின் யானையைத் தன் கணைகளால் துளைத்தான்.(39) நன்கு அடிக்கப்பட்டதும், முற்றிலும் நேரானதுமான கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் தன் எதிராளியின் வில்லை வெட்டிய க்ஷேமதூர்த்தி, பிறகு அந்தப் பகை யானையைப் பீடித்தான்.(40)

அப்போது அந்தப் போரில் கோபத்தால் நிறைந்த க்ஷேமதூர்த்தி, பீமனைத் துளைத்து, அவனது யானையின் அனைத்துப் பகுதியையும் நீண்ட கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் தாக்கினான்.(41) எனினும், தன் யானை வீழ்வதற்கு முன்பே அந்த விலங்கில் இருந்து கீழே குதித்துப் பூமியில் நின்ற பீமன், பிறகு தன் கதாயுதத்தால் எதிராளியின் யானையை நசுக்கினான்.(42) நசுக்கப்பட்ட தன் யானையில் இருந்து கீழே குதித்து, உயர்த்திய ஆயுதத்துடன் தன்னை நோக்கி வந்த க்ஷேமதூர்த்தியையும், பீமன் அவ்வாறே தாக்கினான்.(43) இப்படித் தாக்கப்பட்ட க்ஷேமதூர்த்தி, இடியால் வீழ்த்தப்பட்டு, இடியால் பிளக்கப்பட்ட மலையின் அருகிலேயே கிடக்கும் சிங்கத்தைப் போலத் தன் கையில் வாளுடன் தன் யானையின் அருகிலேயே உயிரற்று விழுந்தான்.(44) குலுட்டர்களின் {கரூசர்களின்} கொண்டாடப்படும் மன்னன் {க்ஷேமதூர்த்தி} கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மிகவும் துன்புற்று தப்பி ஓடின” {என்றான் சஞ்சயன்}.(45)

கைகேயத்து விந்தானுவிந்தர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 13-கேகயத்து இளவரசர்களான விந்தானுவிந்தர்கள் மற்றும் சாத்யகிக்கு இடையில் நடந்த மோதல்; சாத்யகியால் கொல்லப்பட்ட விந்தானுவிந்தர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கவனும், வீரமிக்க வில்லாளியுமான கர்ணன், அந்தப் போரில் தன் நேரான கணைகளால் பாண்டவப் படையைத் தாக்கத் தொடங்கினான்.(1) அதே போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்வீரர்களான பாண்டவர்களும், கோபத்தால் நிறைந்து, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது மகனுடைய {துரியோதனனுடைய} படையைத் தாக்கத் தொடங்கினர்.(2) கர்ணனும், ஓ! மன்னா, அந்தப் போரில், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்படவையும், சூரியக் கதிர்களின் பிரகாசத்துடன் கூடியவையுமான துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} பாண்டவப் படையைக் கொன்றான்.(3) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அங்கே கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட யானைகள் உரக்கப் பிளிறி, தங்கள் பலத்தை இழந்து மயக்கமடைந்து அனைத்துப் பக்கங்களிலும் திரிந்தன.(4)

அந்தப் படையானது சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு அழிக்கப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கர்ணனை} நோக்கி நகுலன் பெரும் வேகத்துடன் விரைந்தான்.(5) கடும் சாதனைகளை அடைவதில் ஈடுபட்டிருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து பீமசேனன் விரைந்தான். சாத்யகி, கைகேய இளவரசர்களான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோரைத் தடுத்தான்[1].(6) மன்னன் சித்திரசேனன் முன்னேறி வரும் சுருதகர்மனை எதிர்த்து விரைந்தான்; பிரதிவிந்தியன், அழகிய கொடிமரத்தையும், அழகிய வில்லையும் கொண்ட சித்திரனை எதிர்த்து விரைந்தான்.(7) துரியோதனன், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான்; அதே வேளையில் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூட்டம் கூட்டமாக வந்த கோபக்கார சம்சப்தகர்களை எதிர்த்து விரைந்தான்.(8) பெரும் வீரர்கள் கொல்லப்பட்ட அம்மோதலில், திருஷ்டத்யும்னன் கிருபரை எதிர்த்துச் சென்றான். வெல்லப்படமுடியாத சிகண்டி கிருதவர்மனோடு மோதினான்.(9) சுருதகீர்த்திச் சல்லியனுடன் மோதினான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாத்ரியின் மகனான வீரச் சகாதேவன், உமது மகன் துச்சாசனனோடு மோதினான்.(10)

அந்தப் போரில் கைகேய இளவரசர்கள் இருவரும், சுடர்மிக்கக் கணைமாரியால் சாத்யகியை மறைத்தனர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பின்னவனும் {சாத்யகியும்}, அந்த இரு கைகேயச் சகோதரர்களை மறைத்தான்.(11) காட்டில் இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு ஒரு பகையானையைத் தாக்குவது போல, அந்த வீரச் சகோதரர்கள் இருவரும் சாத்யகியின் மார்பை ஆழத் துளைத்தனர்.(12) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கணைகளால் தங்கள் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட அந்த இரு சகோதரர்களும், பழுதற்ற செயல்களைச் செய்யும் சாத்யகியைத் தங்கள் கணைகளால் துளைத்தனர்.(13) எனினும், ஓ! மன்னா, ஓ! பாரதரே, திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் கணைமாரியால் மறைத்த சாத்யகி, புன்னகைத்துக் கொண்டே, அவ்விரு சகோதரர்களையும் தடுத்தான்.(14) சிநியின் பேரன் {சாத்யகி} ஏவிய அந்தக் கணைமாரியால் தடுக்கப்பட்ட அவ்விரு சகோதரர்களும், தங்கள் கணைகளால் அந்தச் சிநியின் பேரனுடைய தேரை மறைத்தனர்.(15)

பெரும் புகழைக் கொண்ட அந்தச் சௌரின் {சாத்யகி}, அவ்விருவரின் அழகிய விற்களை வெட்டிவிட்டு அந்தப் போரில் தன் கூரிய கணைகளால் அவர்களைத் தடுத்தான்.(16) வேறு அழகிய இரு விற்களையும், பெரும் எண்ணிக்கையிலான பலமிக்கக் கணைகளையும் எடுத்துக் கொண்ட அவ்விருவரும், சாத்யகியை மறைத்து, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் திரியத் தொடங்கினர்.(17) கங்க மற்றும் மயில் இறகுகளைக் கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், அவ்விரு சகோதரர்களால் ஏவப்பட்டவையுமான அந்த வலிமைமிக்கக் கணைகள் திசைகளின் அனைத்துப் புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடியே பாயத் தொடங்கின.(18) அவர்களுக்கிடையிலான அந்தப் பயங்கரப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களால் ஏவப்பட்ட கணைகள் அங்கே இருளை உண்டாக்கின. பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரின் விற்களை வெட்டினர்.(19)

அப்போது வெல்லப்பட முடியாதவனான அந்தச் சாத்வதன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, அதில் நாணேற்றி, கத்தி தலை கொண்ட கூரிய கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் அனுவிந்தனின் தலையை அறுத்தான்.(20) காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய தலையானது, ஓ! மன்னா, (பழங்காலத்தில் நடந்த) பெரும்போரில் கொல்லப்பட்ட சம்பரனின் தலை போல விழுந்தது. மேலும் அது கைகேயர்கள் அனைவரையும் துயரில் நிறைக்கும்படி உடனே பூமியை அடைந்தது.(21) துணிச்சல் மிக்க அந்தப் போர்வீரன் {அனுவிந்தன்} கொல்லப்பட்டதைக் கண்ட அவனது சகோதரனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விந்தன், மற்றொரு வில்லுக்கு நாணேற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சிநியின் பேரனைத் தடுக்கத் தொடங்கினான்.(22) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அறுபது {60} கணைகளால் சாத்யகியைத் துளைத்த அவன் {விந்தன்}, “நில், நில்” என்று சொன்னபடியே உரக்க முழங்கினான்.(23) பிறகு அந்தக் கைகேயர்களின் வலிமைமிக்கத் தேர்வீரன் {விந்தன்}, பல்லாயிரம் கணைகளால் சாத்யகியின் கரங்களையும் மார்பையும் வேகமாகத் தாக்கினான்.(24)

அனைத்து அங்கங்களிலும் கணைகளால் காயம்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(25) அந்த மோதலில் உயர் ஆன்ம கைகேயனால் துளைக்கப்பட்ட சாத்யகி, (பதிலுக்கு) இருபத்தைந்து கணைகளால் அந்தக் கைகேயனை {விந்தனை} மிக எளிதாகத் துளைத்தான்.(26) பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அவ்விரு போர்வீரர்களும் {விந்தனும் சாத்யகியும்}, அம்மோதலில் ஒருவரின் அழகிய வில்லை மற்றவர் அறுத்து, ஒருவரின் சாரதியையும், குதிரைகளையும் மற்றவர் வேகமாகக் கொன்று, வாளால் போரிடுவதற்காக ஒருவரையொருவர் காலால் நடந்தே அணுகினர்.(27) பருத்த கரங்களைக் கொண்டவர்களான அவ்விருவரும், (பழங்காலத்தில்) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் பெரும் வலிமையுடன் கூடிய இருவரான ஜம்பன் மற்றும் சக்ரனை {இந்திரனைப்} போல, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கேடயத்தையும், ஒரு சிறந்த வாளையும் எடுத்துக் கொண்டு, அந்தப் பரந்த அரங்கில் பிரகாசமாகத் தெரிந்தனர்.(28) அந்தப் பெரும்போரில் அவர்கள் இருவரும் வட்டமாக {மண்டலகாரமாகத்} திரியத் தொடங்கினர். பிறகு அவர்கள் ஒருவரையொருவர் அருகில் அணுகி, ஒருவரோடொருவர் வேகமாக மோதத் தொடங்கினர்.(29)

அப்போது அந்தச் சாத்வதன் {சாத்யகி}, அந்தக் கைகேயனின் {விந்தனின்} கேடயத்தை இரண்டாகப் பிளந்தான். பின்னவனும் {விந்தனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் கேடயத்தை இரண்டாகப் பிளந்தான்.(30) நூறு நட்சத்திரங்களால் மறைக்கப்பட்ட தன் எதிராளியின் கேடயத்தைப் பிளந்த கைகேயன், (சில நேரங்களில்) முன்னேறியும், பின்வாங்கியும் வட்டமாகத் திரியத் தொடங்கினான்.(31) அப்போது பெறும் சுறுசுறுப்பைக் கொண்ட சிநியின் பேரன் {சாத்யகி}, இவ்வாறு கையில் வாளுடன் அந்தப் பரந்த அரங்கில் திரிந்து கொண்டிருந்த கைகேயர்களின் இளவரசனை {விந்தனை} ஒரு பக்கத் தாக்குதால் {குறுக்காக} வெட்டினான்.(32) கவசம் பூட்டப்பட்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கைகேய இளவரசன் {விந்தன்} இவ்வாறு அந்தப் பெரும்போரில் இரண்டாகப் பிளக்கப்பட்டதும், இடியால் பிளக்கப்பட்ட மலையொன்றைப் போலக் கீழே விழுந்தான்.(33)

போரில் அவனைக் கொன்றதும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், எதிரிகளை எரிப்பவனுமான துணிச்சல்மிக்கச் சிநியின் பேரன் {சாத்யகி}, வேகமாக யுதாமன்யுவின் தேரில் ஏறிக் கொண்டான்.(34) பிற்பாடு, முறையாக (அனைத்தையும்) அடையப்பெற்ற மற்றொரு தேரில் ஏறிய சாத்யகி, தன் கணைகளால் கைகேயர்களின் பெரும்படையைக் கொல்லத் தொடங்கினான்.(35) இப்படிப் போரில் கொல்லப்பட்ட அந்தக் கைகேயர்களின் பரந்த படையினர், தங்கள் எதிரியை {சாத்யகியை} விட்டுவிட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(36)

சுருதகர்மனும்! பிரதிவிந்தியனும்!! – கர்ண பர்வம் பகுதி – 14-சுருதகர்மனுக்கும், சித்திரசேனனுக்கும் இடையிலான போர்; சுருதகர்மனால் கொல்லப்பட்ட சித்திரசேனன்; பிரதிவிந்தியனுக்கும் சித்திரனுக்கும் இடையில் நடந்த போர்; பிரதிவிந்தியனால் கொல்லப்பட்ட சித்திரன்; பீமசேனனை நோக்கி விரைந்த அஸ்வத்தாமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் நிறைந்த சுருதகர்மன் [1], அந்தப் போரில் பூமியின் தலைவனான சித்திரசேனனை ஐம்பது கணைகளால் தாக்கினான்.(1) ஓ! மன்னா, அந்த அபிசாரர்களின் ஆட்சியாளன் {சித்திரசேனன்} (பதிலுக்கு) ஒன்பது நேரான கணைகளால் சுருதகர்மனைத் தாக்கி, ஐந்தால் அவனது சாரதியைத் துளைத்தான்.(2) சினத்தால் நிறைந்த சுருதகர்மன், படைகளுக்குத் தலைமையில் இருந்த சித்திரசேனனின் முக்கிய அங்கத்தை ஒரு கணையால் தாக்கினான்.(3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையால் ஆழத்துளைக்கப்பட்டவனும், உயர் ஆன்மா கொண்ட இளவரசனுமான வீரச் சித்திரசேனன், பெரும் வலியை உணர்ந்து மயக்கமடைந்தான்.(4) இந்த இடைவேளையில், பெரும் புகழைக் கொண்ட சுருதகர்மன், (உணர்வற்றிருந்த தன் எதிராளியான) அந்தப் பூமியின் தலைவனை {சித்திரசேனனை} தொண்ணூறு கணைகளால் மறைத்தான்.(5)

அப்போது உணர்வுகள் மீண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சித்திரசேனன், தன் எதிராளியின் வில்லை ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} வெட்டி, ஏழு கணைகளால் தன் எதிராளியைத் துளைத்தான்.(6) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், பலமாகத் தாக்க வல்லதுமான மற்றொரு வில்லை எடுத்த சுருதகர்மன், தன் கணைகளின் அலைகளால் சித்திரசேனனை {முள்ளம்பன்றி போன்ற} அற்புதத் தோற்றம் கொண்டவனாக ஆக்கினான்.(7) அந்தக் கணைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், இளமை நிறைந்தவனும், அழகிய மாலைகளை அணிந்தவனுமான மன்னன் {சித்திரசேனன்}, சபைக்கு மத்தியில் நல்ல அலங்காரத்துடன் கூடிய ஓர் இளைஞனைப் போல அந்தப் போர்க்களத்தில் தெரிந்தான்.(8) ஒரு கணையால் சுருதகர்மனின் நடுமார்பை விரைவாகத் துளைத்த அவன் {சித்திரசேனன்}, அவனிடம், “நில், நில்” என்றான்.(9) போரில் அந்தக் கணையால் துளைக்கப்பட்ட சுருதகர்மனும், செஞ்சுண்ணச் சாற்றின் ஓடையை உதிர்க்கும் ஒரு மலையைப் போல இரத்தம் சிந்தத் தொடங்கினான்.(10) குருதியில் குளித்து, அதனால் கறைபடிந்த அந்த வீரன் {சுருதகர்மன்}, மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றினைப் போலப் போரில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(11)

அப்போது எதிரியால் இப்படித் தாக்கப்பட்ட அந்தச் சுருதகர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, எதிரியைத் தடுக்கும் சித்திரசேனனின் அந்த வில்லை இரண்டாக வெட்டினான்.(12) பின்னவனின் {சித்திரசேனனின்} வில்லானது வெட்டபட்ட பிறகு, ஓ! மன்னா, சுருதகர்மன், நல்ல சிறகுகளைக் கொண்ட முன்னூறு கணைகளால் அவனை {சித்திரசேனனை} முழுமையாக மறைத்தான்.(13) தலைப்பாகையால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் உயர் ஆன்ம எதிராளியின் {சித்திரசேனனின்} தலையை, கூர்முனை கொண்ட மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அவன் {சுருதகர்மன்} அறுத்தான்.(14) சித்திரசேனனின் அந்தச் சுடர்மிக்கத் தலையானது, ஆகாயத்தில் இருந்து தானாகத் தளர்ந்து பூமியில் விழுந்த நிலவைப் போலத் தரையில் விழுந்தது.(15) {தங்கள்} மன்னன் கொல்லப்பட்டதைக் கண்ட சித்திரசேனனின் துருப்புகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, (அவனைக் கொன்றவனை {சுருதகர்மனை}) எதிர்த்து மூர்க்கமாக விரைந்தன.(16) அப்போது சினத்தால் நிறைந்த அந்தப் பெரும் வில்லாளி {சுருதகர்மன்}, தன் கணைகளை ஏவியபடியே, அண்ட அழிவின் போது சீற்றத்தால் நிறைந்து, அனைத்து உயிரினங்களையும் எதிர்த்துச் செல்லும் யமனைப் போல, அந்தப் படையை எதிர்த்துச் சென்றான்.(17) அந்தப் போரில் வில் தரித்த உமது பேரனால் {சுருதகர்மனால்} கொல்லப்பட்ட அவர்கள், காட்டுத்தீயால் எரிக்கப்படும் யானைகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகத் தப்பி ஓடினர்.(18) எதிரியை வெல்வதில் நம்பிக்கை இழந்து தப்பி ஓடும் அவர்களைக் கண்டு, தன் கூரிய கணைகளால் அவர்களைத் தொடர்ந்து சென்ற சுருதகர்மன் (தன் தேரில்) பிரகாசமாகத் தெரிந்தான்.(19)

பிறகு, {யுதிஷ்டிரனின் மகன்}பிரதிவிந்தியன் [2] , ஐந்து கணைகளால் சித்திரனைத் துளைத்து, மூன்றால் அவனது சாரதியைத் தாக்கி, ஒரு கணையால் அவனது கொடிமரத்தையும் தாக்கினான்.(20) சித்திரன், தங்கச் சிறகுகள் மற்றும் கூர்முனைகளைக் கொண்டவையும், கங்க மற்றும் மயில் இறகுகளைக் குஞ்சமாகக் கொண்டவையுமான ஒன்பது அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவனது {பிரதிவிந்தியனின்} கரங்களிலும், மார்பிலும் தாக்கினான்.(21) பிறகு பிரதிவிந்தியன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் தனது எதிராளியின் வில்லை அறுத்து, ஐந்து கூர்முனைக் கணைகளால் பின்னவனை ஆழத் துளைத்தான்.(22) பிறகு சித்திரன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்க மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், நெருப்பின் தழலுக்கு ஒப்பானதும், பயங்கரமானதும், தடுக்கப்பட முடியாததுமான ஈட்டி ஒன்றை உமது பேரன் {பிரதிவிந்தியன்} மீது ஏவினான்.(23) எனினும் பிரதிவிந்தியன் அந்தப் போரில், ஒளிரும் விண்கல்லைப் [3] போலத் தன்னை நோக்கி வந்த அந்த ஈட்டியை, மூன்று துண்டுகளாக மிகவும் எளிதாக வெட்டினான்.(24) பிரதிவிந்தியனின் கணைகளால் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்ட அந்த ஈட்டியானது, யுக முடிவில் அனைத்து உயிர்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வஜ்ரத்தைப் போலக் கீழே விழுந்தது.(25)

அந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட சித்திரன், தங்க வலையால் அலங்கரிக்கப்பட்ட கனமான கதாயுதம் ஒன்றை எடுத்துப் பிரதிவிந்தியன் மீது அதை வீசினான்.(26) அந்தப் போரில் அந்தக் கதாயுதம், பின்னவனின் {பிரதிவிந்தியனின்} குதிரைகளையும், சாரதியையும் கொன்று, தவிரவும் அவனது தேரையும் நசுக்கி பெரும் மூர்க்கத்துடன் பூமியில் விழுந்தது.(27) அதேவேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து இறங்கிய பிரதிவிந்தியன், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், தங்கப் பிடி கொண்டதுமான ஈட்டி ஒன்றைச் சித்திரன் மீது வீசினான்.(28) தன்னை நோக்கி வந்த அதை {அந்த ஈட்டியைப்} பிடித்த அந்த உயர் ஆன்ம மன்னன் சித்திரன், ஓ! பாரதரே, அதே ஆயுதத்தைப் பிரதிவிந்தியன் மீது {திரும்ப} வீசினான்.(29) துணிச்சல் மிக்கப் பிரதிவிந்தியனைத் தாக்கிய அந்தச் சுடர்மிக்க ஈட்டி, அந்தப் போரில் அவனது வலக்கரத்தைத் துளைத்து, இடியின் வெடிப்பைப் போல மொத்த பகுதிக்கும் ஒளியூட்டியபடியே பூமியில் விழுந்து.(30)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சினத்தால் நிறைந்த பிரதிவிந்தியன், சித்திரனுக்கு அழிவை உண்டாக்க விரும்பி, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வேல் {தோமரம்} ஒன்றை அவன் {சித்திரன்} மீது ஏவினான். அந்த வேலானது, அவனது {சித்திரனின்} கவசத்தையும், மார்பையும் ஊடுருவி, பொந்துக்குள் நுழையும் வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(32) அந்த வேலால் தாக்கப்பட்ட அந்த மன்னன், பெரியவையும், பருத்தவையும், இரும்பு தண்டங்களுக்கு ஒப்பானவையுமான தன் கரங்களை விரித்தபடியே கீழே விழுந்தான்.(33) சித்திரன் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், போர்க்கள ரத்தினங்களுமான உமது போர்வீரர்கள், பிரதிவிந்தியனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மூர்க்கமாக விரைந்தனர்.(34) பல்வேறு வகைகளிலான கணைகளையும், மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட சதக்னிகளையும் ஏவிய அவர்கள், சூரியனை மறைக்கும் மேகத் திரள்களைப் போல, பிரதிவிந்தியனை விரைவில் மறைத்தனர்.(35) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அந்தப் பிரதிவிந்தியன், போரில் அப்படித் தன்னைத் தாக்குபவர்களைத் தன் கணைமாரியால் எரித்து, வஜ்ரதாரியான சக்ரன் {இந்திரன்}, அசுரப்படையை முறியடித்ததைப் போல உமது படையை முறியடித்தான்.(36)

இப்படியே போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்ட உமது துருப்புகள், ஓ!மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றுதிரண்ட மேகத்திரள்கள் காற்றால் விரட்டப்படுவதைப் போலத் திடீரென அனைத்துப் பக்கங்களிலும் ஓடினர்.(37) அனைத்துப் பக்கங்களிலும் கொல்லப்பட்ட உமது படையினர் இவ்வாறு ஓடியபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மட்டும் தனியனாக வலிமைமிக்கப் பீமசேனனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(38) (பழங்காலத்தில்) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், விருத்திரனுக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கு} இடையில் நடந்த மோதலைப் போல, அங்கே அவர்களுக்குள் ஒரு கடும் மோதல் உடனேயே நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(39)

பீமனோடு மோதிய அஸ்வத்தாமன் – கர்ண பர்வம் பகுதி – 15-பீமசேனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த போர்; மயக்கமடைந்து விழுந்த இருவரும்; அவர்கள் இருவரையும் பாராட்டிய சித்தர்களும், பிறரும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் கர நளினத்தை வெளிப்படுத்தியபடியே ஒரு கணையால் பீமனைத் துளைத்தான்.(1) உடலின் முக்கிய அங்கங்களுடைய அறிவனைத்தையும் கொண்டிருந்ததால், வேகமான கரங்களைக் கொண்டவனான அந்த அஸ்வத்தாமன், அவனது {பீமனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் குறிபார்த்து, தொண்ணூறு {90} கணைகளால் மீண்டும் அவனைத் {பீமனைத்} துளைத்தான்.(2) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கூரிய கணைகளால் எங்கும் துளைக்கப்பட்ட பீமசேனன், அந்தப் போரில் கதிர்களுடன் கூடிய சூரியனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(3) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, நன்கு செலுத்தப்பட்ட ஓராயிரம் {1000} கணைகளால் துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மறைத்து, சிங்க முழக்கம் செய்தான்.(4) அந்தப் போரில் தன் கணைகளால் தன் எதிரியின் கணைகளைக் கலங்கடித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே, ஒரு துணிக்கோல் கணையால் {நாராசத்தால்} அந்தப் பாண்டவனின் {பீமனின்} முன்நெற்றியைத் தாக்கினான்.(5) ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, காட்டில் ஒரு காண்டாமிருகம் அதன் கொம்பைச் செருக்குடன் தாங்கிக் கொள்வதைப் போலவே அந்தக் கணையைத் தன் முன்நெற்றியில் தாங்கிக் கொண்டான்.(6)

பிறகு அந்தப் போரில் சிரித்துக் கொண்டே இருந்த வீரப் பீமன், போராடிக் கொண்டிருக்கும் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} நெற்றியை மூன்று துணிக்கோல் கணைகளால் {நாராசங்களை} தாக்கினான். அந்தப் பிராமணன் {அஸ்வத்தாமன்}, தன் நெற்றியில் ஒட்டியிருந்த அந்த மூன்று கணைகளுடன், மழைக்காலங்களில் நீரால் கழுவப்படும் மூன்று சிகரங்களைக் கொண்ட மலை ஒன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(8) அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் அந்தப் பாண்டவனைப் {பீமனை} பீடித்தாலும், காற்றால் அசைக்கப்பட முடியாத மலையைப் போல இருந்த அவனை {பீமனை} அசைக்கத் தவறினான்.(9) அதே போலவே, மகிழ்ச்சியால் நிறைந்திருந்த அந்தப் பாண்டுவின் மகனாலும், மலையை அசைப்பதில் தவறும் மழைத்தாரைகளைப் போலவே, தன் நூற்றுகணக்கான கணைகளால் அந்தப் போரில் துரோணர் மகனை அசைக்க முடியவில்லை.(10)

பயங்கரக் கணைமாரியால் ஒருவரையொருவர் மறைத்தவர்களும், வலிமையும், கடுமையும் கொண்டவர்களுமான அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், தங்கள் முதன்மையான தேர்களில் அப்போது பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(11) உலகத்தின் அழிவுக்காக உதித்த சுடர்மிக்க இரு சூரியர்களைப் போலத் தெரிந்த அவர்கள், சிறந்த கணைகளாலான தங்கள் கதிர்களால் ஒருவரையொருவர் எரிப்பதில் ஈடுபட்டனர்.(12) அந்தப் பெரும்போரில் மற்றவரின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்ற பெருங்கவனத்துடன் முயன்றவர்களும், உண்மையில் மிகவும் அச்சமற்றவகையில் கணைமாரியால் செயலுக்குப் பொருத்தமான செயலில் ஈடுபட்டவர்களும்,(13) மனிதர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் அம்மோதலில் இரு புலிகளைப் போலவே திரிந்தனர். வெல்லப்பட்ட முடியாதவர்களும், பயங்கரமானவர்களுமான அவ்விருவரும் கணைகளையே தங்கள் நச்சுப்பற்களாகவும், விற்களையே தங்கள் வாய்களாகவும் கொண்டிருந்தனர்.(14)

மேகத்திரள்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்து சூரியனையும், சந்திரனையும் போல, அனைத்துப் பக்கங்களிலும் கணை மேகங்களால் மறைக்கப்பட்ட அவர்கள் (கண்களுக்குக்) காணப்பட முடியாதவர்களானார்கள்.(15) பிறகு எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் இருவரும், மேகத்திரைகளில் இருந்து விடுபட்ட செவ்வாயையும், புதனையும் போலச் சுடர்விட்டபடி விரைவில் தோன்றினார்கள்.(16) அச்சந்தரும் வகையிலான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, விருகோதரனை {பீமனைத்} தன் வலப்பக்கத்தில் நிறுத்திய துரோணர் மகன் {அஸ்வத்தாமன்},(17) மலையொன்றின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல, நூற்றுக்கணக்கான கடுங்கணைகளை அவன் {பீமன்} மீது பொழிந்தான்.

எனினும், பீமனால் தன் எதிரியின் அந்த வெற்றிக் குறியீட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(18) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அஸ்வத்தாமனின் வலப்பக்கத்தில் நின்றபடியே, பின்னவனின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கினான். (நிலைமையின் தேவைக்குத் தகுந்தபடி) முன்னேறவும், பின்வாங்கவும் செய்த அவர்களது தேர்கள், பல்வேறு வழிகளில் திரிவதைத் தொடர்ந்த நிலையிலேயே,(19) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையிலான அந்தப் போர் மிகவும் மூர்க்கமடைந்தது. பல்வேறு பாதைகளில் திரிந்து, (போரிடுவதில்) வட்டமாகச் சுழன்ற அவர்கள்,(20) தங்கள் விற்களை முழுமையாக வளைத்துக் கணைகளை ஏவியபடியே ஒருவரையொருவர் தாக்குவதைத் தொடர்ந்தனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவனை அழித்துவிடவும் பெருமுயற்சி செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அந்தப் போரில் மற்றவனைத் தேரற்றவனாகச் செய்ய விரும்பினர்.(21)

பிறகு, அந்தப் பெரும் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றை அழைத்தான். எனினும், அந்தப் போரில் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியின் அந்த ஆயுதங்கள் அனைத்திற்கும் தன் கணைகளால் எதிர்வினையாற்றினான்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது, கோள்களுக்கிடையில் நடக்கும் பயங்கர மோதலைப் போலப் பயங்கரமான ஆயுத மோதல் அப்போது அங்கே நிகழ்ந்தது.(23) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களால் ஏவப்பட்ட கணைகள் ஒன்றோடொன்று மோதி திசைப்புள்ளிகள் அனைத்திற்கும், சுற்றிலும் இருந்த உமது துருப்புகளுக்கும்கூட ஒளியையூட்டின.(24) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது வீழும் விண்கற்களால் மறைக்கப்பட்டதைப் போலவே, கணைக்கூட்டங்களால் மறைக்கப்பட்ட ஆகாயம், பயங்கரத் தோற்றத்தை ஏற்றது.(25) ஓ! பாரதரே, கணைகளின் மோதலால் பொறிகளுடனும், சுடர்களுடன் கூடிய தழல்களுடனும் நெருப்பு அங்கே உண்டானது. அந்நெருப்பு இரு படைகளையும் எரிக்கத் தொடங்கியது.(26)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே திரிந்த சித்தர்கள், “போர்கள் அனைத்திலும் இந்தப் போரே முதன்மையானது. (இதற்கு முன் போரிடப்பட்ட) போர்கள் அனைத்தும் இதன் பதினாறின் ஒரு பங்கிற்கும் ஆகாது. இதுபோன்றதொரு போர் இனி நேராது. பிராமணனும், க்ஷத்திரியனுமான இவ்விரு மனிதர்களும் ஞானம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.(29) இருவரும் துணிச்சல்மிக்கவர்களாகவும், கடும் ஆற்றலைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். பீமனின் வலிமை பயங்கரமானதாக இருக்கிறது. அடுத்தவனின் {அஸ்வத்தாமனின்} ஆயுதத்திறன் அற்புதமானதாக இருக்கிறது. இவர்களது சக்தி எவ்வளவு பெரியதாக இருக்கிறது? இவ்விருவரும் கொண்ட திறன் எவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது?(30) யுகத்தின் முடிவில் அண்டத்தை அழிக்க நிற்கும் இரண்டு யமன்களைப் போலவே இவ்விருவரும் இந்தப் போரில் நிற்கின்றனர். இவர்கள் இருவரும் இரண்டு ருத்திரர்களைப் போலவோ, இரண்டு சூரியர்களைப் போலவோ பிறந்திருக்கின்றனர்.(31) பயங்கர வடிவங்களைக் கொண்ட இந்த மனிதர்களில் புலிகள் இருவரும், இந்தப் போரில் இரு யமன்களைப் போலவே இருக்கின்றனர்” என்ற சித்தர்களில் இத்தகைய வார்த்தைகளே ஒவ்வொரு கணமும் {அங்கே} கேட்கப்பட்டன. மேலும் அங்கே கூடியிருந்த சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் சிங்க முழக்கம் எழுந்தது.(32)

அந்தப் போரில் அவ்விரு போர் வீரர்களாலும் செய்யப்பட்டவையும், அற்புதமானவையும், நினைத்துப் பார்க்கவும் முடியாதவையுமான சாதனைகளைக் கண்டு, சித்தர்கள் மற்றும் சாரணர்களின் நெருக்கமான கூட்டங்கள் ஆச்சரியத்தால் நிறைந்தன.(33) அவ்விருவரையும் புகழ்ந்த தேவர்களும், சித்தர்களும், பெரும் முனிவர்களும், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர் மகனே {அஸ்வத்தாமா}, நன்று. ஓ! பீமா, நன்று” என்றனர்.(34) அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒருவருக்கொருவர் காயங்களைச் ஏற்படுத்திய அந்த வீரர்கள் இருவரும், சினத்தால் கண்களை உருட்டியபடியே ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்தனர்.(35) சினத்தால் சிவந்த கண்களுடன் கூடிய அவர்களது உதடுகளும்கூடச் சினத்தால் நடுங்கின. கோபத்தால் தங்கள் பற்களை அரைத்த அவர்கள், தங்கள் உதடுகளையும் கடித்துக் கொண்டனர்.(36)

அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், ஆயுதங்களின் பளபளப்பைத் தங்கள் மின்னலாகக் கொண்டு, கணைத்தாரைகளை மழையாகப் பொழியும் மேகங்கள் இரண்டைப் போல அந்தப் போரில் தங்களைக் கணை மாரியால் மறைத்துக் கொண்டனர்.(37) அந்தப் பெரும்போரில் மற்றவரின் கொடிமரத்தையும், சாரதியையும், குதிரைகளையும் துளைத்த அவர்களில் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கியபடியே இருந்தனர்.(38) பிறகு, ஓ! ஏகாதிபதி, அந்தப் பயங்கர மோதலில் சினத்தால் நிறைந்த அவர்கள் ஒவ்வொருவரும், மற்றவனைக் கொல்ல விரும்பி, இரு கணைகளை எடுத்துக் கொண்டு விரைவாக அவற்றை எதிரியின் மீது ஏவினர்.(39) தடுக்கப்படமுடியாதவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான அந்தச் சுடர்மிக்கக் கணைகள் இரண்டும், ஓ! மன்னா, தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையில் நின்று கொண்டிருந்த அவ்விரு வீரர்களையும் வந்தடைந்து {அவர்களைத்} தாக்கின.(40)

அந்தக் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் போராளிகள் இருவரில் ஒவ்வொருவரும், மற்றவனின் சக்தியால் {கட்டுண்டு} தங்கள் தங்கள் தேர்களின் தட்டுகளில் மூழ்கினர் {விழுந்தனர்}.(41) துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} நினைவிழந்ததை அறிந்த அவனது சாரதி, ஓ! மன்னா, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைப் போரில் இருந்து {வெளியே} கொண்டு சென்றான்.(42) அதேபோல, ஓ! மன்னா, மீண்டும் மீண்டும் மயக்கமடைந்தவனும், எதிரிகளை எரிப்பவனுமான பாண்டுவின் மகனையும் {பீமனையும்} அவனது சாரதி போரில் இருந்து {வெளியே} கொண்டு சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(43)

அர்ஜுனன் அஸ்வத்தாமன் மோதல்! – கர்ண பர்வம் பகுதி – 16-சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் ..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சம்சப்தகர்களுடன் அர்ஜுனனுக்கும், பாண்டவர்களுடன் பிற மன்னர்களுக்கும் எவ்வாறு போர் நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக.(1) ஓ! சஞ்சயா, அர்ஜுனன் அஸ்வத்தாமனுடனும், பூமியின் பிற தலைவர்கள் பார்த்தர்களுடனும் எவ்வாறு போரிட்டனர் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாவங்களுக்கும், உடல்களுக்கும், உயிர்களுக்கும் அழிவை உண்டாக்கிய அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை நான் சொல்லும்போது கேட்பீராக.(3) எதிரிகளைக் கொல்பவனான பார்த்தன் {அர்ஜுனன்}, பெருங்கடலுக்கு ஒப்பான சம்சப்தகப் படைக்குள் ஊடுருவி, பரந்த கடலைக் கலங்கடிக்கும் சூறாவளியைப் போல அதை மிகவும் கலங்கடித்தான்.(4) முழு நிலவின் காந்தியைக் கொண்ட முகங்கள், அழகிய கண்கள், புருவங்கள் மற்றும் பற்களால் அலங்கரிக்கப்பட்ட துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் தலைகளைக் கூர் முனைகளைக் கொண்ட அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} அறுத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தண்டுகளில் இருந்து கொய்யப்பட்ட தாமரைகளைப் போல விரைவில் அவற்றை {தலைகளைப்} பூமியில் விரவிக் கிடக்கச் செய்தான்.(5) மேலும் அந்தப் போரில் அர்ஜுனன், சுற்றிலும் நன்கு பருத்தவையும், பெரியவையும், பிரம்மாண்டமானவையும், சந்தனக்குழம்பாலும், நறுமணப் பொருட்களாலும் பூசப்பட்டவையும், ஆயுதங்களைப் பிடியில் கொண்டிருந்தவையும், தோலுறைகளால் மறைக்கப்பட்ட விரல்களுடன் கூடியவையும், ஐந்து தலை பாம்புகளைப் போலத் தெரிந்தவையுமான தன் எதிரிகளின் கரங்களைத் தனது கத்தித் தலைக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுத்தான்.(6)

மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, குதிரைகளையும், சாரதிகளையும், தேரோட்டிகளையும், கொடிகளையும், விற்களையும், கணைகளையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களையும் தனது அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} மீண்டும் மீண்டும் அறுத்தான்.(7) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் அந்தப் போரில், பல்லாயிரக்கணக்கான கணைகளால் தேர்வீரர்களையும், யானைகளையும், குதிரைகளையும், குதிரைவீரர்களையும் யமனின் வசிப்பிடத்திற்கு மேலும் அனுப்பி வைத்தான்.(8) சினத்தால் நிறைந்த முதன்மையான போர்வீரர்கள் பலர், காளைகளைப் போல முழங்கிக் கொண்டும், பருவகாலத்தில் பசுவுக்கான ஏக்க வெறியுடன் (கூடிய காளைகளைப் போலவே) உரத்த கூச்சல்களுடன் அர்ஜுனனை நோக்கி விரைந்து சென்றனர்.(9) அர்ஜுனன் அவர்களைக் கொல்வதில் ஈடுபட்டிருந்தபோது, மதங்கொண்ட காளைகள் தங்கள் இனத்தில் ஒன்றைத் தங்கள் கொம்புகளால் தாக்குவதைப் போல அவர்கள் அனைவரும் தங்கள் கணைகளால் அவனைத் {அர்ஜுனனைத்} தாக்கினர். அவனுக்கும், அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, மூவுலகையும் வெல்வதற்காகத் தைத்தியர்களுக்கும், வஜ்ரதாரிக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த போரைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.(10)

தன் ஆயுதங்களால் தன் எதிரிகளின் ஆயுதங்களை அனைத்துப் பக்கங்களிலும் தடுத்த அர்ஜுனன், எண்ணற்ற கணைகளால் வேகமாகத் துளைத்து அவர்களுடைய உயிர்களை எடுத்தான்.(11) தன் எதிரிகளின் அச்சங்களை அதிகரிப்பவனும், ஜெயன் என்று அழைக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மேகத்திரள்களை அழிக்கும் காற்றைப் போல, தன்னால் ஏற்கனவே சிதறடிக்கப்பட்ட அச்சுகள், சக்கரங்கள், கம்புகளைக் கொண்டவையும், போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் சாரதி ஏற்கனவே கொல்லப்பட்டவையும், ஆயுதங்கள் அம்பறாத்தூணிகள் இடம்பெயர்ந்தவையும், கொடிமரங்கள் நொறுங்கியவையும், சேணங்களும், கடிவாளங்களும் பிளக்கப்பட்டவையும், மரக்கூடுகளும் மற்றும் அச்சுகளும் ஏற்கனவே உடைந்தவையுமான தேர்க்கூட்டங்களை நூறு துண்டுகளாக வெட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தபடி, ஒன்றாகச் சேர்ந்து போரிட்ட ஆயிரக்கணக்கான பெரும் தேர்வீரர்களைப் பகைத்துக் கொண்டு, காண்பதற்குப் பிரமாண்டமான சாதனைகளை அடைந்தான்.(12-14)

சித்தர்கள், தெய்வீக முனிவர்கள் மற்றும் சாரணர்களின் கூட்டங்கள் அனைத்தும் அவனைப் {அர்ஜுனனைப்} பாராட்டின. தெய்வீகப் பேரிகைகள் ஒலித்தன, மேலும் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனின் தலைகளில் மலர்மாரி பொழிந்தன. அப்போது ஓர் அருவமான குரல்,(15) “கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், சந்திரனின் அழகையும், நெருப்பின் காந்தியையும், காற்றின் பலத்தையும், சூரியனின் பிரகாசத்தையும் எப்போதும் கொண்ட இரு வீரர்கள் ஆவர்.(16) ஒரே தேரில் இருக்கும் அவ்விரு வீரர்களும், பிரம்மனையும், ஈசானனையும் போலவே வெல்லப்பட முடியாதவர்களாவர்” என்றது.(17) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இந்த அற்புதங்களைக் கேட்டுக் கண்ட அஸ்வத்தாமன், அந்தப் போரில் பெரும் கவனத்துடனும், தீர்மானத்துடனும் இரு கிருஷ்ணர்களையும் எதிர்த்து விரைந்தான்.(18)

கணையைப் பற்றியிருந்த கரங்களுடன் கூடிய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைக் கொல்லும் தலைகளுடன் கூடிய கணைகளை ஏவிக்கொண்டிருந்த அந்தப் பாண்டவனை {அர்ஜுனனைப்} புகழ்ந்து, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(19) “ஓ! வீரா, (உன் முன்பாக) வந்து நிற்கும் மதிக்கத்தக்க விருந்தினன் ஒருவனாக என்னை நீ கருதினால், போரின் விருந்தோம்பலை முழு இதயத்துடன் இன்று எனக்குக் கொடுப்பாயாக” என்றான்.(20) இவ்வாறு போரிடும் விருப்பத்துடன் ஆசான் மகனால் {அஸ்வத்தாமனால்} அழைக்கப்பட்ட அர்ஜுனன், தான் உயர்வாக மதிப்பிடப்பட்டதாகக் கருதி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(21) “சம்சப்தகர்கள் என்னால் கொல்லப்பட வேண்டும், ஆனால் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} என்னை மீண்டும் அழைக்கிறார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, இந்தக் கடமைகளில் எதை நான் முதலில் செய்ய வேண்டும்? நீ முறையெனக் கருதினால், எழுந்து விருந்தோம்பலை அளித்துவிடலாம்” என்றான் {அர்ஜுனன்}.(22)

இப்படிச் சொல்லப்பட்ட கிருஷ்ணன், வேள்விக்கு இந்திரனைக் கொண்டு செல்லும் வாயுவைப் போல, வெற்றியாளனை அறைகூவி அழைக்கும் விதிப்படி அழைக்கப்பட்ட பார்த்தனைத் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அருகில் கொண்டு சென்றான்.(23) ஒன்றிலேயே மனம் நிலைத்திருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, அவனிடம், “ஓ! அஸ்வத்தாமரே, அமைதியாக இருந்து, ஒரு கணத்தையும் இழக்காமல், தாக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்வீராக.(24) பிறரைச் சார்ந்திருப்போர்கள், தங்கள் தலைவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளைத் திருப்பிச் செலுத்தும் நேரம் இதோ வந்திருக்கிறது. பிராமணர்களுக்கிடையிலான சச்சரவுகள் நுட்பமானவையாகும். எனினும், க்ஷத்திரியர்களுக்கிடையிலான சச்சரவுகளின் விளைவுகள், வெற்றியாகவும், தோல்வியாகவும் நன்கு உணரப்படுபவையாகும் {இயல்பானவையாகும்}.(25) பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} நீர் வேண்டும் விருந்தோம்பலின் சிறந்த சடங்குகளை அடைவதற்கு, இந்தப் பாண்டுவின் மகனிடம் இப்போது அமைதியாகப் போரிடுவீராக” என்றான்.(26)

வாசுதேவனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவன், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறி, கேசவனை {கிருஷ்ணனை} அறுபது கணைகளாலும், அர்ஜுனனை மூன்றாலும் துளைத்தான்.(27) அப்போது, சினத்தால் நிறைந்த அர்ஜுனன், மூன்று கணைகளால் அஸ்வத்தாமனின் வில்லை அறுத்தான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மேலும் உறுதிமிக்க மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(28) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அதை நாணேற்றிய அவன் {அஸ்வத்தாமன்}, கேசவனை முன்னூறு {300} கணைகளாலும், அர்ஜுனனை ஓராயிரம் {1000} கணைகளாலும் துளைத்தான்.(29) அப்போது அந்தத் துரோணரின் மகன், அந்தப் போரில் அர்ஜுனனை மலைக்கச் செய்து, ஆயிரக்கணக்கான, பத்தாயிரக் கணக்கான, பத்து இலட்சக்கணக்கான கணைகளை மிகக் கவனமாக ஏவினான்.(30) அந்தப் பிரம்ம உச்சரிப்பாளனின் {அஸ்வத்தாமனின்}, அம்பறாத்தூணிகள், வில், வில்லின் நாண்கயிறு, விரல்கள், தோள்கள், கரங்கள், மார்பு, முகம், மூக்கு, கண்கள்,(31) காதுகள், தலை, அங்கங்கள், உடலின் {தோல்} துளைகள், மேனியின் கவசம், தேர், கொடிமரம் ஆகியவற்றில் இருந்து கணைகள் வெளிப்படத் தொடங்கின.(32) அந்த அடர்த்தியான கணைமாரியால் மாதவனையும் {கிருஷ்ணனையும்}, பாண்டுவின் மகனையும் துளைத்த அந்தத் துரோணர் மகன், மகிழ்ச்சியால் நிறைந்து, மேகக்கூட்டங்களின் பரந்த திரளுக்கு ஒப்பான உரத்த முழக்கத்தைச் செய்தான்.(33)

அவனது முழக்கத்தைக் கேட்ட பாண்டுவின் மகன், மங்காப் புகழ் கொண்ட கேசவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ மாதவா {கிருஷ்ணா}, ஆசான் மகன் {அஸ்வத்தாமன்} எனக்குச் செய்யும் பொல்லாங்கைப் பார்.(34) இந்த அடர்த்தியான கணைமாரியால் அவர் நம்மைக் கொல்லவே கருதுகிறார். எனினும், என் பயிற்சியாலும், வலிமையாலும் அவரது நோக்கத்தை இப்போது கலங்கடிக்கப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(35) அஸ்வத்தாமனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக்கிய அந்த முதன்மையான பாரதக் குலத்தவன் {அர்ஜுனன்}, அடர்த்தியான பனியை அழிக்கும் சூரியனைப் போல அவை அனைத்தையும் அழித்தான்.(36) இதன் பிறகு, அந்தப் பாண்டுவின் மகன், குதிரைகள், சாரதிகள், தேர்கள், யானைகள், கொடிமரங்கள் மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோருடன் கூடிய சம்சப்தகர்களை மீண்டும் துளைத்தான்.(37) அங்கே பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும், கால், அல்லது தேர், அல்லது குதிரை, அல்லது யானை ஆகியவற்றுடன் நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும், அர்ஜுனன் கணைகளால் தான் மறைக்கப்பட்டிருப்பதாகக் கருதினர்.(38)

காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், சிறகு படைத்தவையும், பல்வேறு வடிங்களிலானவையுமான அந்தக் கணைகள், அந்தப் போரில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்போ, இரண்டு மைல் தொலைவுக்குள்ளோ இருந்த யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களைக் கொன்றன.(39) ஆவலைக் குறைக்கும் மதநீரானது, குமடுகளிலும், பிற அங்கங்களிலும் ஒழுகிக் கொண்டிருந்த யானைகளின் துதிக்கைகள், காட்டில் கோடரியால் வெட்டப்பட்டுக் கீழே விழும் நெடும் மரங்களைப் போல அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} வெட்டபட்டு விழுந்தன.(40) குன்றுகளைப்போன்ற அந்தப் பெரும் யானைகள், இந்திரனின் வஜ்ரத்தால் நொறுக்கப்பட்ட மலைகளைப் போலச் சற்றுப் பிறகே தங்கள் சாரதிகளுடன் கீழே விழுந்தன.(41) மாலை வானில் கரையும் நீர்மாளிகைகளை {மேகங்களைப்} போலத் தெரிந்தவையும், பெரும் வேகமும், நல்ல பயிற்சியும் கொண்டிருந்த குதிரைகள் பூட்டப்பட்டிருந்தவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையுமான தேர்களைத் தன் கணைகளால் நுண்ணியப் பகுதிகளாக வெட்டிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளின் மீது கணைமாரிகளைப் பொழிவதைத் தொடர்ந்தான். தனஞ்சயன் {அர்ஜுனன்}, எதிரியின் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரைவீரர்களையும், காலாட்படை வீரர்களையும் கொல்வதைத் தொடர்ந்தான்.(42,43) உண்மையில், யுக முடிவில் எழும் சூரியனுக்கு ஒப்பான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டு, எளிதில் வற்ற செய்ய இயலாத சம்சப்தகப் பெருங்கடலை வற்ற செய்தான்.(44)

அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, இடியால் மலையைப் பிளக்கும் வஜ்ரதாரியைப்போலப் பெரும் மலைக்கு ஒப்பாக இருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனைப்} பெரும் வேகம் கொண்டவையும், சூரியனின் காந்தியைக் கொண்டிருந்தவையுமான கணைகளைக் கொண்டு ஒரு கணமும் தாமதிக்காமல் மீண்டும் துளைத்தான்.(45) போரிடும் விருப்பத்துடன் கூடிய அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்} சினத்தால் நிறைந்து, வேகமாகச் செல்லும் தன் கணைகளால் அர்ஜுனனையும், அவனது குதிரைகளையும், சாரதிகளையும் துளைப்பதற்காக அவனை அணுகினான். எனினும் அர்ஜுனன், அஸ்வத்தாமனால் தன்னை நோக்கி ஏவப்பட்ட கணைகளை வேகமாக வெட்டினான்.(46) பெரும் கோபத்தில் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் வீட்டிற்கு வந்த விருந்தினனுக்கு அனைத்தையும் அளிக்கும் ஓர் ஈகையாளனைப் போல, விரும்பத்தக்க விருந்தினனான அஸ்வத்தாமனுக்கு அம்பறாத்தூணிகளுக்கு மேல் அம்பறாத்தூணிகளாலான கணைகளை அளித்தான்.(47) பிறகு, தகாத விருந்தினர்களைக் கைவிட்டு, தகுந்தவனை நோக்கிச் செல்லும் ஒரு கொடையாளனைப் போல, சம்சப்தகர்களை விட்ட அந்தப் பாண்டுவின் மகன், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி ஒரு கொடையாளனைப் போல விரைந்தான்[1].(48)

அஸ்வத்தாமனை விரட்டிய அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 17-அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; அர்ஜுனனால் களத்தைவிட்டு விரட்டப்பட்ட அஸ்வத்தாமன் கர்ணனின் படைக்குள் தஞ்சமடைந்தது; சம்சப்தகர்களை மீண்டும் எதிர்த்துச் சென்ற அர்ஜுனனும், கிருஷ்ணனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஆகாயத்தில் ஒரே நட்சத்திரக்கூட்டத்திற்குள் நுழையும் போது சுக்ரனுக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையில் நடைபெறும் போரைப் போலவே, கோள்களான சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதியின் காந்திக்கு ஒப்பான அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் அந்தப் போர் நடந்தது.(1) உலகத்தை அச்சுறுத்துபவர்களான அவர்கள், சுடர்மிக்கக் கணைகளையே தங்கள் கதிர்களாகக் கொண்டு ஒருவரையொருவர் பீடித்து, தங்கள் சுற்றுப்பாதையில் இருந்து விலகிய இரு கோள்களைப் போல நின்றனர்.(2) அப்போது அர்ஜுனன், அஸ்வத்தாமனின் புருவ மத்தியைத் தன் கணையொன்றால் ஆழத்துளைத்தான். {நெற்றியில்} அந்தக் கணையுடன் கூடிய துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மேல்நோக்கிய கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(3) அஸ்வத்தாமனின் நூற்றுக்கணக்கான கணைகளால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களும் கூட, யுக முடிவில் கதிர்களுடன் கூடிய இரு சூரியன்களைப் போலவே தெரிந்தனர்.(4)

பிறகு கிருஷ்ணனை மயக்கத்தில் கண்ட அர்ஜுனன், அனைத்துப் பக்கங்களிலும் கணைத்தாரைகளை வெளியிடும் ஓர் ஆயுதத்தை ஏவினான். பிறகு அவன் {அர்ஜுனன்}, இடி, அல்லது நெருப்பு, அல்லது மரணக்கோலுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளால் துரோணர் மகனைத் தாக்கினான்.(5)

வலிமையும் சக்தியும் கொண்ட அந்தக் கடுஞ்சாதனையாளன் (அஸ்வத்தாமன்), பெரும் வேகம் கொண்டவையும், தாக்கப்பட்டால் காலனையும் வலியை உணரச் செய்பவையும், நன்கு ஏவப்பட்டவையுமான கணைகளால் கேசவன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் துளைத்தான்.(6) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அந்தக் கணைகளைத் தடுத்த அர்ஜுனன், நல்ல சிறகுகளைக் கொண்ட இரு மடங்கு கணைகளால் அவனை மறைத்து, அந்த முதன்மையான வீரனையும் {அஸ்வத்தாமனையும்}, அவனது குதிரைகள், சாரதி மற்றும் கொடிமரத்தையும் மறைத்துச் சம்சப்தகர்களைத் தாக்கத் தொடங்கினான்.(7)

பார்த்தன் {அர்ஜுனன்}, பின்வாங்காதவர்களான தன் எதிரிகளின் விற்கள், கணைகள், அம்பறாத்தூணிகள், வில்லின் நாண்கயிறுகள், கரங்கள், தோள்கள், இறுக்கப்பிடிக்கப்பட்ட ஆயுதங்கள், குடைகள், கொடிமரங்கள், குதிரைகள், தேர் அச்சுகள், ஆடைகள், மலர்மாலைகள், ஆபரணங்கள், கவசங்கள், அழகிய கேடயங்கள் மற்றும் அழகான தலைகள் ஆகியவற்றை நன்கு ஏவப்பட்ட தன் கணைகளால் பெரும் எண்ணிக்கையில் அறுத்தான்.(8,9) பெரும் கவனத்துடன் போரிடும் வீரர்களால் செலுத்தப்பட்டவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டவையுமான தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன பார்த்தனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் அழிக்கப்பட்டு, அவற்றைச் செலுத்திய வீரர்களுடனேயே கீழே விழுந்தன.(10) அகன்ற தலை {பல்லம்}, பிறை வடிவ {அர்த்தச்சந்திர}, கத்திமுக {க்ஷுரப்ர} கணைகளால் வெட்டப்பட்டவையும், தாமரை, சூரியன், அல்லது முழு நிலவின் அழகுக்கு ஒப்பானவையும், கிரீடங்கள், ஆரங்கள், மகுடங்கள் ஆகியவற்றால் பிரகாசித்தவையுமான மனிதத் தலைகள் இடைவிடாமல் பூமியில் விழுந்து கொண்டிருந்தன.(11)

அப்போது தானவர்களின் செருக்கைத் தணிப்பவனான அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கொல்ல விரும்பிய கலிங்க, வங்க மற்றும் நிஷாத வீரர்கள், தைத்தியர்களின் பெரும் எதிரியுடைய {இந்திரனுடைய} யானையின் {ஐராவதத்தின்} காந்திக்கு ஒப்பானதை {யானையைச்} செலுத்திக் கொண்டு, அவனை {அர்ஜுனனை} எதிர்த்து வேகமாக விரைந்தனர்[1].(12) பார்த்தன்  {அர்ஜுனன்}, அந்த யானைகளின் கவசம், முக்கிய அங்கங்கள், துதிக்கைகள், சாரதிகள், கொடிமரங்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை வெட்டியதால், இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போல அந்த விலங்குகள் கீழே விழுந்தன.(13) அந்த யானைப்படை பிளக்கப்பட்ட போது, மேகக்கூட்டங்களின் திரள்களால் உதயச் சூரியனைத் தடுக்கும் காற்றைப் போலக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அந்த அர்ஜுனன், புதிதாக உதித்த சூரியனின் காந்தியைக் கொண்ட கணைகளால் தன் ஆசான் மகனை {அஸ்வத்தாமனைத்} தடுத்தான்.(14) தன் கணைகளால் அர்ஜுனன் கணைகளைத் தடுத்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளாலேயே மறைத்து, கோடையின் முடிவில் சூரியனையோ, சந்திரனையோ ஆகாயத்தில் மறைக்கும் மேகங்களின் திரளைப் போல உரக்க முழங்கினான்.(15) அந்தக் கணைகளால் ஆழத்துளைத்தக்கப்பட்ட அர்ஜுனன், தன் ஆயுதங்களால், அஸ்வத்தாமனையும், அவனைப் பின்பற்றும் உமது படையினரையும் நோக்கிக் குறிவைத்து, அஸ்வத்தாமனின் கணைகளால் உண்டாக்கப்பட்ட இருளை வேகமாக விலக்கி, நல்ல சிறகுகளைக் கொண்ட கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான்.(16)அந்தப் போரில் சவ்யசச்சின் {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுத்தான், எப்போது அவற்றைக் குறி பார்த்தான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை யாராலும் காணமுடியவில்லை. யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர், அவனது கணைகளால் தாக்கப்பட்டு உயிரையிழந்து கீழே விழுவது மட்டுமே அங்கே காணப்பட்டது.(17) அப்போது, ஒரு கணத்தையும் இழக்காத துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, பத்து முதன்மையான கணைகளைக் குறிபார்த்து, அவை ஏதோ ஒரே கணையே என்பதைப் போல அவற்றை வேகமாக ஏவினான். பெரும் சக்தியுடன் ஏவப்பட்ட அவற்றில் ஐந்து அர்ஜுனனையும், மற்ற ஐந்து வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தன.(18) அந்தக் கணைகளால் தாக்கபட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும், குபேரனையும், இந்திரனையும் போலக் குருதியில் குளித்தனர். இப்படிப் பீடிக்கப்பட்ட அவ்விரு வீரர்களும், ஆயுதங்களின் அறிவியலில் முற்றான திறன் கொண்ட அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டனர் என்றே மக்கள் அனைவரும் கருதினர்.(19)

அப்போது அந்தத் தசார்ஹர்களின் தலைவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனிடம், “(இப்படி அஸ்வத்தாமனை மிதமாக விடுவதால்) ஏன் பிழை செய்கிறாய்? இந்தப் போர்வீரனைக் கொல்வாயாக. வேறுபாடின்றி மதிக்கப்பட்டால், சிகிச்சையில்லாமல் தணிக்கப்படாத நோயைப் போல இவர் பெரும் துன்பத்திற்குக் காரணமாவார்” என்றான். மங்கா மகிமை கொண்ட கேசவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறியவனும், மறைக்கப்படாத புரிதல் கொண்டவனுமான அர்ஜுனன், துரோணர் மகனைத் தன் கணைகளால் கவனமாகச் சிதைக்கத் தொடங்கினான்.(20) அப்போது சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் இருந்து பெரும் சக்தியுடன் ஏவப்பட்டவையும், ஆடுகளின் காதுகளைப் போன்ற தலை கொண்டவையுமான கணைகளால் தன் எதிரியின் {அஸ்வத்தாமனின்}, சந்தனக்குழம்பு பூசப்பட்ட பருத்த கரங்களையும், மார்பையும், தலையையும், ஈடற்ற தொடைகளையும் வேகமாகத் துளைத்தான். பிறகு அஸ்வத்தாமனின் குதிரைகளுடைய கடிவாளங்களை வெட்டிய அர்ஜுனன், அந்தக் குதிரைகளையும் துளைக்கத் தொடங்கியதால், அவை {குதிரைகள்} அஸ்வத்தாமனைக் களத்தைவிட்டுப் பெருந்தொலைவுக்குக் கொண்டு சென்றன.(21)

காற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகளால் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவனும், பார்த்தனின் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்டவனும், புத்திசாலியுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிறிது நேரம் சிந்தித்த பின், திரும்பிச் செல்லவும், பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரைப் புதுப்பிக்கவும் விரும்பவில்லை.(22) வெற்றியானது எப்போதும் விருஷ்ணிகளின் தலைவனுடனும் {கிருஷ்ணனுடனும்}, தனஞ்சயனுடனும் {அர்ஜுனனுடனும்} இருக்கும் என்பதையறிந்த அந்த முதன்மையான அங்கீரசக் குலத்தவன் {அஸ்வத்தாமன்}, நம்பிக்கை இழந்தவனாக, கணைகளும், ஆயுதங்களும் கிட்டத்தட்டத் தீர்ந்தவனுமாகக் கர்ணனின் படைக்குள் நுழைந்தான்.(23) உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் குதிரைகளைக் கட்டுப்படுத்திய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சற்றே ஆறுதலடைந்து, தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் நிறைந்த அந்தக் கர்ணனின் படைக்குள் நுழைந்தான்.(24) தங்கள் எதிரியான அந்த அஸ்வத்தாமன், மந்திரங்களாலும், மருந்துகளாலும், வழிமுறைகளாலும் உடலில் இருந்து விலக்கப்பட்ட நோயைப் போல, அவனது குதிரைகளால் இவ்வாறு களத்தைவிட்டு விலகிய பிறகு,(25) கேசவனும், அர்ஜுனனும், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், காற்றில் ஆடிய கொடியைக் கொண்டதுமான தங்கள் தேரில் சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(26)

மகதர்களின் தலைவன் தண்டதாரன்! – கர்ண பர்வம் பகுதி – 18-அர்ஜுனனுக்கும் தண்டதாரனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; தண்டதாரனையும், அவனது தம்பி தண்டனையும் கொன்ற அர்ஜுனன்; அர்ஜுனனைத் துதித்த போர்வீரர்கள்; மீண்டும் சம்சப்தகர்களை நோக்கி விரைந்த அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், பாண்டவப்படையின் வடபுறத்தில், தண்டதாரனால் கொல்லப்படும் காலாட்படை வீரர்கள், யானைகள், குதிரைகளாலும் மற்றும் தேர்களாலும் அங்கே உரத்த ஆரவாரம் எழுந்தது.(1) கருடன் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்ட குதிரைகளை நிறுத்தாமலேயே தேரைத் திருப்பிய கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(2) “(எதிரிகளை) நொறுக்கும் யானையுடன் கூடிய மகதர்களின் தலைவன் {தண்டதாரன்} ஆற்றலில் ஒப்பற்றவனாக இருக்கிறான். பயிற்சியிலும், வலிமையிலும், அவன் பகதத்தனுக்குச் சற்றும் குறைவில்லாதவனாவான்.(3) அவனை {தண்டதாரனை} முதலில் கொன்ற பிறகு, சம்சப்தகர்களைக் கொல்வாயாக” என்று சொன்னான். அந்தக் கேசவன் {கிருஷ்ணன்}, தனது சொற்களின் முடிவில், பார்த்தனை {அர்ஜுனனை} தண்டதாரனின் முன்னிலைக்குக் கொண்டு சென்றான்.(4)

அங்குசத்தைக் கையாள்வதில் ஒப்பற்றவனும்[1]கோள்களனைத்தின் மத்தியில் தலையில்லாத கோளான கேதுவைப் போன்றவனுமான அந்த மகதர்களின் தலைவன் {தண்டதாரன்}, மொத்த உலகையும் அழிக்கும் கடும் வால் விண்மீனைப் போல, பகைவர் படையை அழித்துக் கொண்டிருந்தான்.(5) எதிரிகளைக் கொல்வதும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டதும், யானையின் முகத்தையும், வடிவையும் கொண்ட ஒரு தானவனைப் போலத் தெரிந்ததும், மேகக்கூட்டங்களின் திரளுக்கு ஒப்பாகப் பிளிறியதுமான யானையைச் செலுத்திய அந்தத் தண்டதாரன், தன் கணைகளால் ஆயிரக்கணக்கான தேர்களையும், குதிரைகளையும், யானைகளையும், மனிதர்களையும் அழித்துக் கொண்டிருந்தான்.(6) தன் பாதங்களைக் கொண்டு தேர்களை நசுக்கிய அந்த யானையும் கூட, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களையும், அவர்களது குதிரைகள் மற்றும் சாரதிகளையும் பூமியில் நசுக்கியது. அந்த முதன்மையான யானை, தன்னிரு முன்னங்கால்கள் மற்றும் துதிக்கையைப் பயன்படுத்தி யானைகள் பலவற்றைக் கொன்றது. உண்மையில் அவ்விலங்கு மரணச் சக்கரத்தை {காலச்சக்கரத்தைப்} போல நகர்ந்து கொண்டிருந்தது.(7) உருக்கு கவசங்களால் அலங்கரிக்கப்பட்ட மனிதர்களையும், அவர்களது குதிரைகள் மற்றும் காலாட்படைவீரர்களையும் கொன்ற அந்த மகதர்களின் தலைவன் {தண்டதாரன்}, தடித்த நாணல்களைப் படபடக்கும் ஒலியுடன் நொறுக்குவதைப் போலத் தனக்குச் சொந்தமானதும், வலிமையானதுமான அந்த முதன்மையான யானையைக் கொண்டு அவர்களைப் பூமியில் நசுக்கினான்.(8)அப்போது முதன்மையான தேரில் ஏறிவந்த அர்ஜுனன், ஆயிரக்கணக்கான தேர்கள், குதிரைகள், யானைகள் நிறைந்ததும், எண்ணற்ற மிருதங்கங்கள், பேரிகைகள், சங்குகள் ஆகியவற்றின் இசையால் எதிரொலிக்கப்பட்டதும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, வில்லின் நாண்கயிறினால் உண்டான நாணொலி, உள்ளங்கையொலி ஆகியவற்றின் ஆரவாரத்துடன் கூடியதுமான படைக்கு மத்தியில் இருந்த அந்த யானைகளின் இளவரசனை நோக்கி வேகமாக விரைந்தான்.(9) பிறகு தண்டதாரன், முதன்மையான பன்னிரு கணைகளால் அர்ஜுனனையும், பதினாறால் ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்}, மூன்றால் குதிரைகள் ஒவ்வொன்றையும் துளைத்து, உரக்க முழங்கி, மீண்டும் மீண்டும் சிரித்தான்.(10) அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} தன் எதிரியின் வில்லை அதன் நாண்கயிற்றோடும், அதில் பொருத்தப்பட்ட கணையோடும் அறுத்து, நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது கொடிமரத்தையும், அவனது விலங்கின் வழிகாட்டிகளையும், அவ்விலங்கைப் பாதுகாத்த காலாள்களையும் வெட்டினான். இதனால், அந்தக் கிரிவ்ரஜத் [2] தலைவன் {தண்டதாரன்} சினத்தால் நிறைந்தான்.(11) ஆவலால் கன்னக்கதுப்பு {கபோலம்} பிளந்ததும் {மதநீர் ஒழுகியதும்}, மேகத்திரள்களுக்கு ஒப்பானதும், காற்றின் வேகத்துடன் கூடியதுமான தன் யானையைக் கொண்டு ஜனார்த்தனனை கலங்கடிக்க விரும்பிய தண்டதாரன், பல வேல்களால் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கினான்.(12)

அப்போது கிட்டத்தட்ட அதே நேரத்திலேயே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஒரு யானையின் துதிக்கையைப் போலத் தெரிந்த தன் எதிரியின் இரு கரங்களில் ஒவ்வொன்றையும், முழு நிலவுக்கு ஒப்பான தலையையும் கத்தித் தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்} மூன்றைக் கொண்டு வெட்டினான்.(13) தங்கக் கவசத்துடன் கூடிய அந்த யானை, தங்கத்தால் அலங்கரிக்கபட்ட பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் மறைக்கப்பட்டு, இரவில் சுடர்விட்டெரியும் காட்டுத்தீயில், செடிகள் மற்றும் மரங்களுடன் கூடிய மலையொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(14) வலியால் பீடிக்கப்பட்டு, மேகங்களின் திரளைப் போல முழங்கி, மிகவும் பலவீனமடைந்திருந்த அந்த யானை, பிளிறிக் கொண்டே தள்ளாடிய நடையுடன் திரிந்து, இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரம் ஒன்றைப் போலத் தன் கழுத்தில் இருந்த வழிகாட்டியுடன் கீழே விழுந்தது.(15)

போரில் தன் அண்ணன் வீழ்ந்ததும், தண்டனானவன், இந்திரனின் தம்பியையும் {விஷ்ணுவான கிருஷ்ணனையும்}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} கொல்ல விரும்பி, பனி போன்ற வெண்மையானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், இமயச் சிகரத்தைப் போலத் தெரிந்ததுமான தன் யானையில் அவர்களை எதிர்த்துச் சென்றான்.(16) கதிர்களைப் போலப் பிரகாசமானவையும், கூராக்கப்பட்டவையுமான மூன்று வேல்களால் ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தாக்கிய தண்டன், ஐந்தால் அர்ஜுனனையும் தாக்கி உரக்க முழங்கினான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தண்டனின் இரு கரங்களையும் உரக்க முழங்கிய படியே அறுத்தான்.(17) கத்தித் தலை கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுக்கப்பட்டவையும், சந்தனக்குழும்பால் பூசப்பட்டவையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வேல்களைப் பிடித்திருந்தவையுமான அவ்விரு கரங்களும், யானையின் முதுகில் இருந்து விழுந்த அதே வேளையில், மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழுபவையும், பெரும் அழகுடன் கூடியவையுமான பெரும் பாம்புகள் இரண்டைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(18)

கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (பார்த்தனால் {அர்ஜுனனால்}) பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணையொன்றைக் கொண்டு வெட்டப்பட்ட தண்டனின் தலையும் யானையின் முதுகில் இருந்து கீழே பூமியில் விழுந்தது. குருதியால் நனைந்து கிடந்த அஃது, அஸ்தமலையில் இருந்து மேற்குப் பகுதியை நோக்கி விழுந்த சூரியனைப் போலப் பிரகாசிப்பதாகத் தெரிந்தது.(19) சூரியக் கதிர்களின் பிரகாசத்துடன் கூடிய சிறந்த கணைகள் பலவற்றைக் கொண்டு பார்த்தனால் துளைக்கப்பட்டதும், வெண்முகில்களின் திரளுக்கு ஒப்பானதுமான அந்த எதிரியின் {தண்டனின்} யானை, இடியால் பிளக்கப்பட்ட இமாலயச் சிகரத்தைப் போல, பேரொலியுடன் கீழே விழுந்தது.(20) அப்போது வெற்றியடையவல்லவையும், ஏற்கனவே கொல்லப்பட்ட {யானைகள்} இரண்டிற்கு ஒப்பானவையுமான வேறு பெரும் யானைகள், அந்தப் போரில் வெட்டப்பட்ட (தண்டனுக்கும், தண்டாதரனுக்கும் சொந்தமான) அந்த இரண்டைப் போலவே சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெட்டப்பட்டன. இதனால் அந்தப் பரந்த எதிரிப்படை பிளந்தது.(21) அடர்த்தியான கூட்டங்களாக இருந்த யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவையும், மனிதர்களும் ஒருவரோடொருவர் மோதி களத்தில் விழுந்தனர். தள்ளாடிக் கொண்டிருந்த அவை, ஒன்றோடொன்று பயங்கரமாக மோதிக் கொண்டு உயிரற்றுக் கீழே விழுந்தன.(22)

அப்போது புரந்தரனை {இந்திரனைச்} சூழ்ந்து கொள்ளும் தேவர்களைப் போல அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட அவனது படைவீரர்கள், “ஓ! வீரா, காலனைக் கண்ட உயிரினங்களைப் போல நாங்கள் அஞ்சிய பகைவன் உன்னால் கொல்லப்பட்டது நற்பேறாலேயே.(23) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, வலிமைமிக்க எதிரிகளால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட மக்களை அச்சத்தில் இருந்து நீ பாதுகாக்கவில்லையெனில், எவர்களது மரணத்தில் இப்போது மகிழ்கிறோமோ அந்த நமது எதிரிகளே இந்நேரத்தில் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்” என்றனர்.(24) நண்பர்களும், கூட்டாளிகளும் சொன்ன இவற்றையும், இன்னும் பிற வார்த்தைகளையும் கேட்ட அர்ஜுனன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், அவரவர் தகுதிகளுக்கேற்ப அம்மனிதர்களை வழிபட்டு, மீண்டும் சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}[3].(25)

போர்க்களத்தை வர்ணித்த கிருஷ்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 19-சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அவர்களை விரைவாகக் கொல்லும்படி சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனின் வேகத்தை வியந்த கிருஷ்ணன், அவனிடம் போர்க்களத்தை வர்ணித்தது; பாண்டியனால் திருதராஷ்டிரப்படைக் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு வியந்த கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “புதன் கோளானது அதன் சுற்றுப்பாதையில் சுழன்று செல்வதைப் போலச் சுழன்ற ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மீண்டும் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களைக் கொன்றான்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவையும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நடுங்கியபடியே திரிந்து நிறம் மங்கிக் கீழே விழுந்து இறந்தன.(2) தன்னுடன் போரில் ஈடுபட்ட பகை வீரர்களின் நுகத்தில் பூட்டப்பட்ட விலங்குகளில் முதன்மையானவை பலவற்றையும், சாரதிகள், கொடிமரங்கள், விற்கள், கணைகள், கரங்கள், அதன் பிடியில் இருந்த ஆயுதங்கள், தோள்கள், தலைகள் ஆகியவற்றையும், அகன்ற தலை கொண்டவை {பல்லங்கள்}, கத்தி போன்ற தலைகளைக் கொண்டவை {க்ஷுரங்கள்}, பிறைவடிவத்திலானவை {அர்த்தச்சந்திரக் கணைகள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்சதந்தங்கள்} எனச் சில பல கணைகளால் அந்தப் போரில் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அறுத்தான்.(3,4) பருவ காலத்தில் பசுவுக்காகச் சண்டையிடும் காளைகளைப் போல நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் அர்ஜுனனை நெருங்கி வந்தார்கள்.(5) அப்போது அவர்களுக்கும், அவனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, மூவுலகங்களை வெற்றி கொள்வதற்காகத் தைத்தியர்களுக்கும், வஜ்ரதாரிக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலைப் போல மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.(6)

அப்போது உக்ராயுதனின் [1] மகன், நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான மூன்று கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான். எனினும் பார்த்தன், தன் எதிரியின் உடலிலிருந்து அவனது தலையை அறுத்தான்.(7) பிறகு சினத்தால் நிறைந்த அவ்வீரர்கள், கோடையின் நெருக்கத்தில் மருத்தர்களால் {காற்றுகளால்} தூண்டப்பட்ட மேகங்கள், இமயத்தை மறைப்பதைப் போல, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் மறைத்தனர்.(8) அனைத்துப் பக்கங்களிலும் இருந்த தன் எதிரிகளைத் தன் ஆயுதங்களால் தடுத்த அர்ஜுனன், நன்கு ஏவப்பட்ட கணைகளால் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைக் கொன்றான்.(9) பிறகு அர்ஜுனன், தன் கணைகளால், தேர்கள் பலவற்றின் திரிவேணுக்கள், குதிரைகள் ஆகியவற்றையும் பார்ஷினி சாரதிகளையும் வெட்டி, {அ தேர்களில்} பலவற்றின் ஆயுதங்களையும், அம்பறாத்தூணிகளையும் புரட்டி, அவற்றில் பெரும்பாலானவற்றின் சக்கரங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றை இழக்கச் செய்து, பலவற்றின் நாண்கயிறுகள், கடிவாளங்கள், அச்சுகளைப் பிளந்து, பிறவற்றின் கீழ்த்தட்டுகளையும், நுகத்தடிகளையும் அழித்து, பலவற்றின் உபகரணங்கள் அனைத்தையும் அதனதன் இடங்களில் இருந்து விழ வைக்கவும் செய்தான்.(10,11)அர்ஜுனனால் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் அடித்து நொறுக்கப்பட்ட அந்தத் தேர்கள், நெருப்பு, காற்று மற்றும் மழையால் அழிக்கப்பட்ட செல்வந்தர்களின் ஆடம்பர மாளிகைகளைப் போலத் தெரிந்தன.(12) மூர்க்கத்தில் இடிக்கு ஒப்பான கணைகளால், தங்கள் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்ட யானைகள், மின்னலின் வெடிப்புகளால் மலைமுகடுகளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாளிகைகளைப் போலக் கீழே விழுந்தன.(13) பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், அர்ஜுனனால் தாக்கப்பட்டுத் தங்கள் பலத்தையெல்லாம் இழந்து, குருதியில் குளித்துத் தங்கள் நாக்குகளும், உள்ளுறுப்புகளும் வெளியே பிதுங்கத் தங்கள் சாரதிகளுடன் பூமியில் விழுந்து பயங்கரமாகக் காட்சியளித்தன.(14) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கணைகளால் துளைக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகளும் தள்ளாடியபடித் திரிந்து, கீழே விழுந்து வலியால் கதறி நிறம் மங்கியவைகளாகத் தெரிந்தன.(15) தானவர்களைத் தாக்கும் மகேந்திரனை {இந்திரனைப்} போலப் பார்த்தன், கல்லில் கூராக்கப்பட்டவையும், இடிக்கு ஒப்பானவையும், நஞ்சு போன்ற பயங்கரமானவையுமான கணைகளால் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைத் தாக்கினான்.(16)

விலையுயர்ந்த கவசங்களைப் பூண்டவர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களுமான துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், பார்த்தனால் கொல்லப்பட்டுத் தங்கள் தேர்கள் மற்றும் கொடிமரங்களுடன் களத்தில் கிடந்தனர்.(17) உயர்ந்த குடியில் பிறந்தவர்களும், பெரும் அறிவைக் கொண்டவர்களும், அறச் செயல்களைச் செய்தவர்களுமான மனிதர்கள், வெல்லப்பட்டு (உயிரை இழந்த) அவர்களது உடல்கள் பூமியில் கிடந்தாலும், தங்கள் மகத்தான செயல்களின் விளைவாக அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றனர்.(18) பிறகு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உமது படையின் தலைவர்கள், சினத்தால் நிறைந்து, தங்களைப் பின்தொடர்பவர்களின் துணையுடன் தேர்வீரர்களில் முதன்மையான அந்த அர்ஜுனனை எதிர்த்து விரைந்தனர்.(19) தங்கள் தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றில் சென்ற போர்வீரர்களும், காலாட்படை வீரர்களும், (அர்ஜுனனைக்) கொல்ல விரும்பிய அனைவரும், பல்வேறு ஆயுதங்களைப் பெரும் வேகத்துடன் ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர்.(20) பிறகு, அந்த அர்ஜுனக் காற்றானது, மேகக்கூட்டங்களின் திரளைப் போன்ற போர்வீரர்களால் பொழியப்பட்ட அந்த அடர்த்தியான கணைமாரியைக் கூரிய கணைகளால் அழித்தது.(22)

அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ!பாவமற்றவனே, ஏன் நீ இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கிறாய்? சம்சப்தகர்களை விரைவாகக் கலங்கடித்து, கர்ணனின் படுகொலைக்காக விரைவாயாக” என்றான்.(23) “அப்படியே ஆகட்டும்” என்று கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன், எஞ்சிய சம்சப்தகர்களைத் தன் ஆயுதங்களால் பலமாகத் தாக்கி, தைத்தியர்களை அழிக்கும் இந்திரனைப் போல அவர்களை அழிக்கத் தொடங்கினான்.(24) அந்த நேரத்தில் நெருக்கத்தில் இருந்து கவனித்தும் கூட, அர்ஜுனன் எப்போது தன் கணைகளை வெளியே எடுத்தான், எப்போது அவற்றைக் குறிபார்த்தான், எப்போது அவற்றை வேகமாக விடுத்தான் என்பதை மனிதர்களால் குறிப்பிட முடியவில்லை.(25) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அதைக் கோவிந்தனேகூட ஆச்சரியமாகக் கருதினான். தடாகத்தைப் பிளந்து செல்லும் அன்னங்களைப் போல, அன்னங்களின் வெண்மையையும், வேகத்தையும் கொண்ட அர்ஜுனனின் கணைகள் பகைவரின் படைக்குள் ஊடுருவின.(26)

அப்போது கோவிந்தன் {கிருஷ்ணன்}, போர்க்களத்தில் நடக்கும் அந்தப் பேரழிவைக் கண்டு சவ்யசச்சினிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(27) “ஓ! பார்த்தா, பாரதர்களுக்கும், பூமியின் பிற மன்னர்களுக்கும் நேரும் இந்தப் பயங்கரமான பேரழிவு துரியோதனனுக்காகவே இங்கே நடைபெறுகிறது.(28) ஓ! பரதனின் மகனே {அர்ஜுனனே}, வலிமைமிக்க வில்லாளிகள் பலருடையவையும், தங்கப் பின்புறம் கொண்டவையுமான இந்த விற்களையும், அவர்களது உடல்களில் இருந்து தளர்ந்து விழுந்த இந்த இடைக்கச்சைகளையும், அம்பறாத்தூணிகளையும் பார்.(29) தங்கச் சிறகுகளைக் கொண்ட இந்த நேரான கணைகளையும், தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளைப் போலத் தெரிபவையும், எண்ணெயில் நனைக்கபட்டவையுமான இந்த நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} பார்.(30) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த அழகிய வேல்கள் சிதறிக் கிடப்பதையும், ஓ! பாரதா {அர்ஜுனா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், போர்வீரர்களின் உடல்களில் இருந்து விழுந்தவையுமான இந்தக் கவசங்களையும் பார்.(31) தங்கத்தால் பளபளபாக்கப்பட்ட இந்தச் சூலங்களையும், அதே உலோகத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஈட்டிகளையும், தங்க இழைகளாலும், சணல் நாராலும் {பொற்பட்டங்களால்} கட்டப்பட்ட கனத்த கதாயுதங்களையும் பார்.(32)

பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த வாள்களையும், அஃதாலேயே அலங்கரிக்கப்பட்ட இந்தக் கோடரிகளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்ட இந்தப் போர்க்கோடரிகளையும் பார்.(33) சுற்றிலும் சிதறிக்கிடப்பவையான இந்த முள்பதித்த தண்டங்களையும் {பரிகங்களையும்}, இந்தக் குறுங்கணைகளையும் {பிண்டிபாலங்களையும்}, இந்தப் புசுண்டிகளையும், இந்தக் கணபங்களையும், இரும்பாலான இந்தக் குந்தங்களையும், இந்தக் கனத்த முசலங்களையும் {உலக்கைகளையும்} பார்[2].(34) வெற்றியை வேண்டுபவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருப்பவர்களுமான இந்தப் போர்வீரர்கள், இறந்து விட்டாலும், இன்னும் உயிருடன் கூடியவர்களாகவே தெரிவதைப் பார்.(35) கதாயுதங்களால் நொறுக்கப்பட்ட அங்கங்களுடனும், முசலங்களால் தலைகள் பிளக்கப்பட்டும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களால் நொறுக்கிக் கிழிக்கப்பட்டும் கிடக்கும் இந்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களைப் பார்.(36)ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனனே}, கணைகள், ஈட்டிகள், வாள்கள், வேல்கள், ரிஷ்டிகள், கோடரிகள், சூலங்கள், நக்கரங்கள்[3] மற்றும் தடிகளால் பயங்கரமாகச் சிதைக்கப்பட்டு, குருதியோடையில் குளித்து உயிரையிழந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களால் இந்தப் போர்களம் விரவிக் கிடக்கிறது.(37,38) ஓ! பாரதா, சந்தனக்குழும்பு பூசி அங்கதங்களால் அலங்கரிக்கபட்டு, மங்கலக் குறிகளால் அருளப்பட்டு, தோலுறைகளில் மறைக்கப்பட்டு, கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்ட தோள்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமி பிரகாசமாகத் தெரிகிறது.(39) பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட வீரர்களின் உறைகளில் மறைக்கப்பட்ட விரல்களுடன் கூடியவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான கரங்களும், துண்டிக்கப்பட்ட தோள்களும், யானைகளின் துதிக்கைகளைப் போலத் தெரியும் அறுக்கப்பட்ட தொடைகளும், காதுகுண்டலங்கள் மற்றும் ரத்தினங்களைக் கொண்ட தலைப்பாகைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும் (பூமியை மிகவும் அழகாக்கியபடி) விரவிக் கிடக்கின்றன.(40)

தங்க மணிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்டவையுமான அந்த அழகான தேர்களைப் பார். குருதியில் குளித்த கணக்கற்றக் குதிரைகளையும், அந்தத் தேர்த்தட்டுகளையும், நீண்ட அம்பறாத்தூணிகளையும், பல்வேறு வகைகளிலான கொடிமரங்களையும், கொடிகளையும்,(41) போராளிகளின் அந்தப் பெரும் சங்குகளையும், முற்றிலும் வெண்மையான அந்தச் சாமரங்களையும், வெளியே பிதுங்கிய நாவுகளுடன் மலைகளைப் போலக் களத்தில் கிடக்கும் அந்த யானைகளையும்,(42) அந்த அழகிய வெற்றிக் கொடிகளையும், கொல்லப்பட்ட அந்த யானைவீரர்களையும், அந்தப் பெரும் விலங்குகளின் முதுகில் ஒரே துண்டாக விரிக்கப்படும் அந்த விலையுயர்ந்த கம்பளங்களையும்,(43) வைடூரியங்கள் பதித்த கைப்பிடிகளுடன் பூமியில் விழுந்து கிடக்கும் அந்த அங்குசங்களையும், குதிரைகளின் அந்தத் தங்கமயமான நுகங்களையும், அவற்றின் மார்புக்கான வைரங்கள் பதித்த கவசங்களையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, குதிரைவீரர்களால் சுமக்கப்படும் கொடிமரங்களின் நுனியில் கட்டப்பட்ட அந்த விலையுயர்ந்த துணிகளையும்,(45) குதிரைகளின் முதுகில் விரிக்கத் தங்கத்தால் இழைக்கப்பட்டுத் தரையில் விழுந்து கிடக்கும் பலவண்ணங்களிலான அந்தக் கம்பளங்களையும், கூடுகளையும், ரங்குத் தோல்களையும்,(46) மன்னர்களின் தலைப்பாகைகளை அலங்கரிக்கும் அந்தப் பெரிய வைரக் கற்களையும், தங்கத்தாலான அந்த அழகிய ஆரங்களையும், நிலைகளில் இருந்து புரண்ட அந்தக் குடைகளையும், அந்தச் சாமரங்களையும், விசிறிகளையும் பார்.(47)

காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்திரன் அல்லது விண்மீன்களின் பிரகாசத்தைக் கொண்டவையும், நன்கு வெட்டப்பட்ட தாடிகளால் அழகூட்டப்பட்டவையும், முழு நிலவைப் போலத் தெரிபவையுமான முகங்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்.(48) அல்லி மற்றும் தாமரை மலர்களைப் போலத் தெரியும் அந்த முகங்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியானது, அல்லி மற்றும் தாமரை மலர்களின் அடர்த்தியான கூட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தடாகத்திற்கு ஒப்பாகத் தெரிகிறது.(49) பிரகாசமான நிலவின் ஒளியைக் கொண்டதும், விரிந்து கிடக்கும் விண்மீன் கூட்டங்களின் நட்சத்திரவொளிகளால் ஒளிரும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலத் தெரிவதுமான இந்தப் பூமியைப் பார்.(50) ஓ! அர்ஜுனா, இன்றைய பெரும்போரில் உன்னால் அடையப்பட்ட இந்தச் சாதனைகள் உண்மையில் உனக்கே தகும், அல்லது சொர்க்கத்திலிருக்கும் தேவர்களின் தலைவனுக்கே {இந்திரனுக்கே} தகும்” என்றான் {கிருஷ்ணன்}.(51)

இப்படியே கிருஷ்ணன், அர்ஜுனனுக்குப் போர்க்களத்தைக் காட்டினான். (களத்தில் இருந்து தங்கள் முகாமிற்குத் திரும்புகையில்) அவர்கள் துரியோதனனின் படையில் இருந்து பேரொலியைக் கேட்டனர்.(52) உண்மையில், அந்த ஆரவாரம், சங்குகளின் முழக்கங்களாலும், துந்துபிகள், பேரிகைகள், படகங்கள், தேர்ச்சக்கரங்களில் சடசடப்பொலிகள், குதிரைகளின் கனைப்பொலிகள், யானைகளின் பிளிறல்கள் மற்றும் ஆயுதங்களில் கடும் மோதல்களால் ஆனதாக இருந்தது.(53) காற்றின் வேகத்தைக் கொண்ட தன் குதிரைகளின் துணையுடன் அந்தப் படைக்குள் ஊடுருவிய கிருஷ்ணன், பாண்டியனால் உமது படைக் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான்.(54) உயிர்வாழும் காலம் தீர்ந்துவிட்ட உயிரினங்களைக் கொல்லும் யமனைப் போலவே, கணைகள் மற்றும் ஆயுதங்களில் திறம்பெற்ற போர்வீரர்களில் முதன்மையானவனான அந்தப் பாண்டியன், பல்வேறு வகைகளிலான கணைகளால் பகைவர்க்கூட்டத்தை அழித்துக் கொண்டிருந்தான்.(55) யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் உடல்களைக் கூரிய கணைகளால் துளைத்தவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அவன் {பாண்டியன்}, அவர்களை வீழ்த்தி, அவர்களை உயிரை இழக்கச் செய்தான். பகைவர்களில் முதன்மையான பலரால் தன் மீது வீசப்பட்ட பல்வேறு ஆயுதங்களைத் தன் கணைகளால் வெட்டிய அந்தப் பாண்டியன், தானவர்களை அழிக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலத் தன் எதிரிகளைக் கொன்றான்” {என்றான் சஞ்சயன்}.(57)

ஒப்பற்றவனான மலயத்வஜப் பாண்டியன்! – கர்ண பர்வம் பகுதி – 20-மலயத்வஜப் பாண்டியனின் பெருமையைக் கேட்ட திருதராஷ்டிரனும் அஃதை உரைத்த சஞ்சயனும்; தனக்கு இணையாக எவரையும் கருதாத பாண்டியன்; கர்ணனின் படையைக் கலங்கடித்தது; பாண்டியனின் ஆற்றலைக் கண்டு வியந்து, அவனைப் பாராட்டி, அவனைப் போருக்கு அழைத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் நாண்கயிற்றை அறுத்து, அவனது குதிரைகளையும், பாதுகாவலர்கள் இருவரையும் கொன்ற பாண்டியன் மலயத்வஜன்; பாண்டியன் மலயத்வஜனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று, அவனது தேரைச் சுக்கநூறாக நொறுக்கிய அஸ்வத்தாமன்; தன்னைத் தேடி வந்த யானையில் ஏறிக் கொண்ட மலயத்வஜப் பாண்டியன்; பாண்டியனின் கரங்களையும், சிரத்தையும் அறுத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை வழிபட்ட துரியோதனன்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, உலகம் பரந்த புகழைக் கொண்ட பாண்டியனின் பெயரை ஏற்கனவே நீ எனக்குச் சொன்னாய். ஆனால், போரில் அவனது சாதனைகள் உன்னால் உரைக்கப்படவே இல்லை.(1) அந்தப் பெரும் வீரனின் ஆற்றல், ஊக்கம், சக்தி, வலிமையின் அளவு மற்றும் செருக்கை இன்று எனக்கு விபரமாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஆயுத அறிவியலின் முழு அறிவைக் கொண்ட தலைவர்களான பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், அர்ஜுனன், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோர் உம்மால் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனினும், இந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவருக்கும் சக்தியில் மேம்பட்டவனாக, அந்தப் பாண்டியன் தன்னையே கருதினான் என்பதை அறிவீராக. உண்மையில் அவன், மன்னர்களில் எவரையும் தனக்கு நிகராகக் கருதியதே இல்லை.(3,4) கர்ணன் மற்றும் பீஷ்மரையும் அவன் தனக்கு இணையாக ஒருபோதும் ஏற்றதில்லை. வாசுதேவன் {கிருஷ்ணன்}, அல்லது அர்ஜுனனுக்கு எவ்விதத்திலும் குறைந்தவனாகத் தன் இதயத்தால் ஒருபோதும் அவன் ஏற்றதுமில்லை.(5) மன்னர்களில் முதன்மையானவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாண்டியன் இவ்வாறே இருந்தான். அந்தகனைப் போலச் சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டியன், அந்நேரத்தில் கர்ணனின் படையைக் கொன்று கொண்டிருந்தான்.(6)

தேர்கள், குதிரைகள் ஆகியவற்றால் பெருகியிருந்ததும், காலாட்படைவீரர்களில் முதன்மையானோர் நிறைந்ததுமான அந்தப் படையானது, பாண்டியனால் தாக்கப்பட்டு, குயவனின் சக்கரத்தைப் போலச் சுழலத் தொடங்கியது.(7) மேகக்கூட்டங்களின் திரளை விலக்கும் காற்றைப் போல அந்தப் பாண்டியன், தன்னால் நன்கு ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு, குதிரைகளையும், சாரதிகளையும், கொடிமரங்களையும், தேர்களையும் அழித்து, அதன் ஆயுதங்களையும், குதிரைகளையும் விழச் செய்து, அந்தப் படையைக் கலைக்கத் தொடங்கினான்.(8) மலைகளைப் பிளப்பவன் {இந்திரன்} தன் வஜ்ரத்தால் மலைகளைத் தாக்கி வீழ்த்துவதைப் போலவே பாண்டியனும், கொடிமரங்கள், கொடிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை வெட்டி, அவற்றைத் தரித்திருந்த யானைகளை அதன் சாரதிகளோடும், அவ்விலங்கைப் பாதுகாத்த காலாட்படை வீரர்களோடும் வீழ்த்தினான்.(9) மேலும் அவன், குதிரைகளையும், ஈட்டிகள், வேல்கள் மற்றும் அம்பறாத்தூணிகளுடன் கூடிய குதிரைவீரர்களையும் வெட்டி வீழ்த்தினான். பெரும் துணிவைக் கொண்டவர்களும், போரில் தளராதவர்களும், பிடிவாதம் கொண்டவர்களுமான புளிந்தர்கள், கஸர்கள், பாஹ்லீகர்கள், நிஷாதர்கள், அந்தகர்கள், தங்கணர்கள், தெற்கத்தியர்கள், போஜர்கள் ஆகியோர் அனைவரையும் தன் கணைகளால் சிதைத்த பாண்டியன், அவர்களது ஆயுதங்களையும், கவசங்களையும் இழக்கச் செய்து, அவர்களது உயிரையும் இழக்கச் செய்தான்.(10,11) போரில் நான்கு வகைச் சக்திகளையும் கொண்ட அந்தப் படையைத் தன் கணைகளால் அழித்துக் கொண்டிருந்த பாண்டியனைக் கண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அச்சமற்ற போர்வீரனை நோக்கி அச்சமில்லாமல் சென்றான்.(12)

அப்போது புன்னகையுடன் கூடியவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தேரில் நர்த்தனமாடிக்கொண்டிருப்பவனைப் போலத் தெரிந்த அந்தப் போர்வீரனிடம் {பாண்டியனிடம்} அச்சமற்ற வகையில் இனிமையாகப் பேசியழைத்து அவனிடம்,(13) “ஓ! மன்னா {பாண்டிய மன்னா}, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே, உன் பிறவி உன்னதமானதாகவும், கல்வி பெரியதாகவும் இருக்கிறது. கொண்டாடப்படும் வலிமையையும், ஆற்றலையும் கொண்ட நீ இந்திரனுக்கே ஒப்பானவனாக இருக்கிறாய்.(14) பருத்த உன்னிரு கரங்களில் உன்னால் பிடிக்கப்பட்டிருப்பதும், உன் பிடியில் இணைக்கப்பட்ட பெரிய நாண்கயிற்றைக் கொண்டதுமான அந்த வில்லை வளைத்து, வேகமான கணைகளாலான அடர்த்தியான மழையை உன் எதிரிகள் மீது பொழியும்போது, மேகக்கூட்டங்களின் திரளைப் போல நீ அழகாகத் தெரிகிறாய். போரில் என்னைத் தவிர உனக்கு நிகரான வேறு எவரையும் நான் காணவில்லை.(15,16) பயங்கர வலிமையைக் கொண்ட அச்சமற்ற சிங்கமானது, காட்டில் மான் கூட்டங்களை நொறுக்குவதைப் போல, எண்ணற்ற தேர்களையும், யானைகளையும், காலாட்படை வீரர்களையும், குதிரைகளையும் தனியனாகவே நீ நொறுக்குகிறாய்.(17) ஆகாயத்தையும், பூமியையும் உன் தேர்ச்சக்கரங்களின் உரத்த சடசடப்பொலியால் எதிரொலிக்கச் செய்யும் நீ, உரத்த முழக்கங்களைச் செய்து பயிரை அழிக்கும் கூதிர்கால மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிகிறாய்.(18) உன் அம்பறாத்தூணியை வெளியே எடுத்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான உன் கூரிய கணைகளை ஏவி, முக்கண் தேவனுடன் போரிடும் (அசுரன்) அந்தகனைப் போல என்னோடு மட்டுமே நீ போரிடுவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(19)

இப்படிச் சொல்லப்பட்ட பாண்டியன், “அப்படியே ஆகட்டும்” என்றான். “தாக்குவாயாக” என்று அவனிடம் சொன்ன துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஆவேசத்துடன் அவனைத் தாக்கினான். பதிலுக்கு மலயத்வஜன் {மலையத்வஜன்}[1], முள்பதித்த ஒரு கணையால் {கர்ணியால்} துரோணர் மகனைத் துளைத்தான்.(20) அப்போது ஆசான்களில் சிறந்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே, முக்கிய அங்கங்களை ஊடுருவவல்லவையும், நெருப்பின் தழல்களுக்கு ஒப்பானவையுமான சில கடுங்கணைகளால் அந்தப் பாண்டியனைத் தாக்கினான்.(21) பிறகு அஸ்வத்தாமன், கூர்முனை கொண்டவையும், முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லவையுமான பிற பெரிய கணைகள் சிலவற்றை, வேறுபட்ட பத்து வகை நகர்வுகளுடன்[2] செல்லுமாறு தன் எதிரியின் மீது மீண்டும் ஏவினான்.(22) எனினும் பாண்டியன், தன் எதிரியின் அந்தக் கணைகள் அனைத்தையும் ஒன்பது கணைகளால் வெட்டினான். மேலும் நான்கு கணைகளால் தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் அவன் பீடித்ததால், அவை விரைவாக இறந்தன.(23) பிறகு, தன் கூரிய கணைகளால் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளை வெட்டிய பாண்டியன், சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதும், நீட்டி வளைக்கப்பட்டதுமான அஸ்வத்தாமனுடைய வில்லின் நாண் கயிற்றையும் அறுத்தான்.(24)

அப்போது, எதிரிகளைக் கொல்பவனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, நாண்பூட்டாத தன் வில்லில் நாணைப்பூட்டிய அதே வேளையில், தன் தேரில் வேறு சிறந்த குதிரைகளைத் தன் ஆட்கள் பூட்டிவிட்டார்களா என்பதையும் பார்த்துக் கொண்டு,(25) (தன் எதிரியின் மீது) ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். இதனால், தன் கணைகளைக் கொண்டு அந்த மறுபிறப்பாளன் {பிராமணன்}, மொத்த ஆகாயத்தையும் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தான்.(26) கணை ஏவுவதில் ஈடுபட்டுள்ள உயர்ஆன்ம துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அந்தக் கணைகள் உண்மையில் வற்றாதவை என்பதை அறிந்திருந்தாலும், மனிதர்களில் காளையான அந்தப் பாண்டியன் அவை அனைத்தையும் துண்டுகளாக வெட்டினான்.(27) அந்த அஸ்வத்தாமனின் எதிராளி, அவனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கவனமாக வெட்டி, அம்மோதலில் பின்னவனின் {அஸ்வத்தாமனின்} தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்கள் இருவரைத் தன் கூரிய கணைகளால் கொன்றான்.(28)

தன் எதிரியால் வெளிக்காட்டப்படும் கரநளினத்தைக் கண்ட துரோணர் மகன், தன் வில்லை வட்டமாக வளைத்து, மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்திரளைப் போலத் தன் கணைகளை ஏவத் தொடங்கினான்.(29) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஒரு நாளின் எட்டுப் பாகத்தில் ஒன்றின் அளவிலான கால இடைவெளிக்குள் {ஏழரை நாழிகை = 2 முகூர்த்தம் = 1 சாமம் = 3 மணிநேர காலத்திற்குள்}[3], அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஒவ்வொன்றிலும் எட்டு இளங்காளைகள் பூட்டப்பட்டு இழுக்கப்படும் எட்டு வண்டிகளால் சுமக்கப்படும் அளவிற்குக் கணைகள் பலவற்றை ஏவினான்.(30) அந்நேரத்தில் சினத்தில் நிறைந்த அந்தகனைப் போலவோ, அந்தகனுக்கே அந்தகனைப் போலவோ தெரிந்த அஸ்வத்தாமனைக் கண்ட மனிதர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்தனர்.(31) மலைகளுடனும், மரங்களுடனும் கூடிய பூமியைக் கோடையின் முடிவில் மழைத்தாரைகளால் நனைக்கும் மேகத் திரளைப் போல, அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிப்படையின் மீது தன் கணைமாரியைப் பொழிந்தான்.(32)

அஸ்வத்தாம மேகத்தால் ஏவப்பட்ட அந்தத் தாங்கிக்கொள்ளமுடியாத கணைமாரியை வாயவ்ய ஆயுதத்தால் கலங்கடித்த அந்தப் பாண்டிய காற்று, மகிழ்ச்சியால் நிறைந்து உரத்த முழக்கங்களைச் செய்தது.(33) அப்போது துரோணர் மகன், முழங்கிக் கொண்டிருந்த பாண்டியனுடையதும், மலய மலை பொறிக்கப்பட்டதும், சந்தனக் குழம்பாலும், பிற நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்டதுமான கொடிமரத்தை அறுத்து, பின்னவனின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(34) பிறகு ஒற்றைக்கணையால் தன் எதிரியின் சாரதியைக் கொன்ற அஸ்வத்தாமன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட அந்தப் போர்வீரனின் {மலயத்வஜனின்} வில்லைப் பிறைவடிவக் கணையொன்றால் வெட்டி, தன் எதிரியின் தேரையும் நுண்ணியத் துண்டுகளாகப் பொடியாக்கினான்.(35) தன் ஆயுதங்களால் எதிரியின் ஆயுதங்களைத் தடுத்து, அவனது ஆயுதங்கள் அனைத்தையும் வெட்டிய துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரிக்குத் தீங்கால் மகுடம் சூட்ட ஒரு வாய்ப்பை அடைந்தாலும் கூட, மேலும் சிறிது நேரம் அவனோடு போரிடும் விருப்பத்தால் அவனைக் கொல்லாதிருந்தான்.(36)

அதே வேளையில் கர்ணன், பாண்டவர்களின் பெரிய யானைப் படையை எதிர்த்து விரைந்து, அதை முறியடித்து அழிக்கத் தொடங்கினான்.(37) தேர்வீரர்களை அவர்களது தேர்களை இழக்கச் செய்த அவன் {கர்ணன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நேரான எண்ணற்ற கணைகளால், யானைகளையும், குதிரைகளையும், மனிதப் போர்வீரர்களையும் தாக்கினான்.(38) வலிமைமிக்க வில்லாளியான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைக் கொல்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான பாண்டியனைத் தேரற்றவனாகச் செய்திருந்தாலும், போரிடும் விருப்பத்தில் அவனைக் கொல்லாதிருந்தான்.(39) அந்த நேரத்தில், பெரும் தந்தங்களுடன் கூடியதும், போர் உபகரணங்கள் அனைத்தையும் கொண்டு ஆயத்தம் செய்யப்பட்டதும், வேகமாக ஓடுவதும், பெரும் வலிமையைக் கொண்டதும், அஸ்வத்தாமனின் கணைகளால் தாக்கப்பட்டதும், சாரதியற்றதுமான ஒரு பெரும் யானை, மற்றொரு பகை யானையை எதிர்த்து முழங்கிக் கொண்டே பாண்டியன் இருந்த திசையை நோக்கிப் பெரும் வேகத்துடன் சென்றது.(40) பிளவுபட்ட மலைச்சிகரம் ஒன்றைப் போலத் தெரிந்த அந்த யானைகளின் இளவரசனைக் கண்டவனும், யானையின் கழுத்தில் இருந்து போரிடும் முறையை நன்கறிந்தவனுமான அந்தப் பாண்டியன், மலைச்சிகரத்தின் உச்சியில் உரத்த முழக்கத்துடன் துள்ளிக் குதிக்கும் ஒரு சிங்கத்தைப் போல அந்த விலங்கின் கழுத்தில் விரைவாக ஏறினான்.(41)

பிறகு, மலைகளின் இளவரசனின் அந்தத் தலைவன் {மலயத்வஜன்}, அங்குசத்தால் யானையைத் தாக்கி, சினத்தால் ஈர்க்கப்பட்டு, ஆயுதங்களைப் பெரும் வேகத்துடன் வீசுவதில் (தான் வேறுபட்டுத் தனித்துவமாகத் தெரிந்த) கவனமான நிதானத்துடன், சூரியனது கதிர்களின் பிரகாசத்துடன் கூடிய ஒரு {வேல்} வேலை  ஆசான் மகனின் {அஸ்வத்தாமன்} மேல் விரைவாக ஏவி உரக்க முழக்கமிட்டான்.(42) மகிழ்ச்சியால் மீண்டும் மீண்டும், “நீர் கொல்லப்பட்டீர், நீர் கொல்லப்பட்டீர்” என்று கூவிய பாண்டியன், ரத்தினங்களாலும், முதல் நீரின் வைரங்களாலும் {மிகத் தூய வைரங்களாலும்}, மிகச் சிறந்த வகைத் தங்கத்தாலும், அற்புதத் துணியாலும், முத்துச்சரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட துரோணர் மகனின் கிரீடத்தை (அந்த வேலைக் கொண்டு) துண்டுகளாக நொறுக்கினான்.(43) சூரியன், சந்திரன், கோள்கள், அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தக் கிரீடம், அந்தத் தாக்குதலுடைய பலத்தின் விளைவால், இந்திரனின் வஜ்ரத்தால் பிளக்கப்பட்ட ஒரு மலைச் சிகரம் பேரொலியுடன் பூமியில் விழுவதைப் போலக் கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.(44)

இதனால் பெருஞ்சினத்தால் சுடர்விட்ட அஸ்வத்தாமன், காலால் மிதிபட்ட பாம்புகளின் இளவரசனைப் போல, எதிரியைப் பெரும்வலியால் பீடிக்கவல்லவையும், யமதண்டத்துக்கு ஒப்பானவையுமான பதினான்கு கணைகளை எடுத்துக் கொண்டான்.(45) அக்கணைகளில் ஐந்தால் தன் எதிராளியின் யானையுடைய நான்கு கால்களையும், துதிக்கையையும், மூன்றால் அம்மன்னனின் {மலயத்வஜனின்} இரு கரங்களையும், சிரத்தையும் {தலையையும்} வெட்டிய அவன் {அஸ்வத்தாமன்}, பெரும் பிரகாசம் கொண்டவர்களும், அந்தப் பாண்டிய மன்னனைப் பின்தொடர்ந்து சென்றவர்களுமான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அறுவரை ஆறு கணைகளால் கொன்றான்.(46) நீண்டவையும், நன்கு பருத்தவையும், சிறந்த சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையுமான அம்மன்னனின் {மலயத்வஜனின்} கரங்கள் பூமியில் விழுந்ததும், கருடனால் கொல்லப்பட்ட இரு பாம்புகளைப் போல நெளியத் தொடங்கின.(47) முழு நிலவின் பிரகாசத்துடன் அருளப்பெற்ற முகத்தைக் கொண்டதும், நேர்த்தியான மூக்கையும், சினத்தால் தாமிரமாகச் சிவந்த இரண்டு பெரிய கண்களையும் கொண்டதும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தலையும் தரையில் விழுந்து, இரண்டு பிரகாசமான நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(48)

திறன்நிறைந்த அந்தப் போர்வீரனால் {அஸ்வத்தாமனால்}, ஐந்து கணைகளைக் கொண்டு ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட யானையும், மூன்று கணைகளைக் கொண்டு நான்கு துண்டுகளாக வெட்டப்பட்ட மன்னனும், மொத்தமாகப் பத்துத் துண்டுகளாகப் பிரிந்து கிடந்த போது, பத்து தேவர்களுக்காகப் பத்து பகுதிகளாகப் பிரித்துப் படைக்கபட்ட வேள்வி நெய்யைப் போல அது தெரிந்தது.(49) சுடலையில் {சுடுகாட்டில்} சுடர்விட்டெரியும் நெருப்பானது, உயிரற்ற உடலின் வடிவில் நீர்க்காணிக்கையை ஏற்ற பிறகு, நீரால் அணைக்கப்படுவதைப் போலவே, அந்தப் பாண்டிய மன்னன் {மலயத்வஜன்}, எண்ணற்ற குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் துண்டுகளாக வெட்டி, ராட்சசர்களுக்கு அவற்றை உணவாகப் படைத்த பிறகு, இப்படியே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் அமைதிப்படுத்தப்பட்டான்[4].(50) ஆயுத அறிவியலின் அந்த முழுமையான தலைவன் {அஸ்வத்தாமன்}, தான் எடுத்துக்கொண்ட பணியை நிறைவு செய்த பிறகு, அசுரன் பலி {பலிச்சக்கரவர்த்தி} அடக்கப்பட்டதும், விஷ்ணுவை மகிழ்ச்சியாக வழிபட்ட தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலத் தன் தம்பிகளுடன் கூடியவனும் உமது மகனுமான மன்னன் {துரியோதனன்}, அந்தப் போர்வீரனை {அஸ்வத்தாமனை} பெரும் மரியாதையுடன் வழிபட்டான்” {என்றான் சஞ்சயன்}.(51)

கர்ணனின் வீரம்! – கர்ண பர்வம் பகுதி – 21-பாண்டியன் கொல்லப்பட்டதும் என்ன நேர்ந்தது என்று சஞ்சயனை விசாரித்த திருதராஷ்டிரன்; கர்ணனின் வீரமும், அவனால் உண்டாக்கப்பட்ட பேரழிவும்; திருஷ்டத்யும்னன், உபபாண்டவர்கள், இரட்டயர் மற்றும் யுயுதானன் ஆகியோர் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தது; போர்வீரர்கள் பிறருக்கிடையில் நேர்ந்த கடும்போர்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, பாண்டியன் {மலயத்வஜன்} கொல்லப்பட்டதும், வீரர்களில் முதன்மையான கர்ணன், அந்தப் போரில் எதிரியை முறியடித்து அழித்துக் கொண்டிருந்தபோது, அர்ஜுனன் என்ன செய்தான்?(1) அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பெரும் வலிமையையும், தன் கடமைகளில் கவனமும், ஆயுத அறிவியலில் முற்றான திறமும் கொண்ட வீரனாவான். உயர் ஆன்ம சங்கரனே {சிவனே}, உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் அவனை {அர்ஜுனனை} வெல்லப்பட முடியாதவனாக்கினான்.(2) எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தனஞ்சயனிடமே {அர்ஜுனனிடமே} நான் பெரும் அச்சம் கொள்கிறேன். ஓ! சஞ்சயா, அங்கே அத்தருணத்தில் பார்த்தன் {அர்ஜுனன்} சாதித்தது அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(3)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டியன் வீழ்ந்ததும், கிருஷ்ணன் இந்த நன்மையான வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான், “நான் மன்னரை {யுதிஷ்டிரரைக்} காணவில்லை. பிற பாண்டவர்களும் பின்வாங்கிவிட்டனர்.(4) பார்த்தர்கள் திரும்பியிருந்தால், எதிரியின் பரந்த படையானது பிளக்கப்பட்டிருக்கும். அஸ்வத்தாமனால் ஊக்கப்படுத்தப்படும் காரியங்களை நிறைவு செய்யும் விதமாகக் கர்ணன், சிருஞ்சயர்களைக் கொன்று கொண்டிருக்கிறான்.(5) (அந்தப் போர்வீரனால்) குதிரைகளுக்கும், தேர்வீரர்களுக்கும், யானைகளுக்கும் பேரழிவு ஏற்படுகிறது” என்றான். இப்படியே வீர வாசுதேவன் கிரீடம் தரித்தவனிடம் (அர்ஜுனனிடம்) அனைத்தையும் எடுத்துரைத்தான்[1].(6)

தன் அண்ணன் {யுதிஷ்டிரன்} பேராபத்தில் இருப்பதைக் கேட்டுணர்ந்த பார்த்தன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம் விரைவாக, “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, குதிரைகளைச் செலுத்துவாயாக” என்றான்.(7) பிறகு ரிஷிகேசன் தடுக்கப்பட முடியாத அந்தத் தேரைச் செலுத்தினான். அங்கே நடந்த மோதலில் மீண்டும் கடுமை அதிகமானது.(8) பீமசேனனின் தலைமையிலான பாண்டவர்களும், சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையிலான நாங்களும், அதாவது குருக்களும், பாண்டவர்களும் அச்சமற்ற வகையில் {ஒருவரையொருவர்} மிகவும் நெருங்கி வந்தோம்.(9) ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, யமனின் ஆட்சிப்பகுதியில் வசிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் தொடங்கியது.

விற்கள், கணைகள், முள்பதித்த தண்டாயுதங்கள், வாள்கள், வேல்கள், கோடரிகள், குறுங்கதாயுதங்கள், புசுண்டிகள், ஈட்டிகள் {சக்திகள்}, குத்துவாள்கள், போர்க்கோடரிகள்,(11) கதாயுதங்கள், சூலங்கள், பளபளப்பாக்கப்பட்ட குந்தங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, அங்குசங்கள் ஆகியவற்றுடன் கூடிய போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய படியே ஒருவர் மீதொருவர் வேகமாகப் பாய்ந்தனர்.(12) ஆகாயம், திசைகளின் முக்கிய மற்றும் துணைப் புள்ளிகள், வானம், பூமி ஆகியவற்றைக் கணைகளின் விஸ் ஒலி, வில்லின் நாண்கயிறுகளின் நாணொலி, உள்ளங்கையொலி, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகியவற்றால் நிறைத்தபடியே பகைவரை நோக்கிப் பகைவர்கள் விரைந்தனர்.(13) அந்தப் பேரொலியால் மகிழ்ந்த வீரர்கள், பகைமைகளின் இறுதியை அடையும் விருப்பத்தில் வீரர்களுடனே போரிட்டனர்.(14) நாண்கயிறுகள், கூடுகள், விற்கள், யானைகளின் பிளிறல்கள் ஆகியவற்றாலும், காலாட்படை வீரர்கள் மற்றும் வீழ்ந்த மனிதர்களின் கூச்சல்களாலும் அவ்வொலியானது பேரொலியானது.(15) கணைகளின் பயங்கரமான விஸ் ஒலி, துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் பல்வேறு கூச்சல்கள் ஆகியவற்றைக் கேட்ட துருப்புகள் அச்சமடைந்து, நிறம் மங்கிக் கீழே விழுந்தன.(16) கதறுவதிலும், ஆயுதங்களை ஏவுவதிலும் ஈடுபட்ட அந்தப் பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை, அதிரதனின் அந்த வீரமகன் {கர்ணன்} தன் கணைகளால் நொறுக்கினான்.(17)

பிறகு கர்ணன், தன் கணைகளைக் கொண்டு, துணிச்சல் மிக்கப் பாஞ்சால வீரர்களில் இருபது தேர்வீரர்களை, அவர்களது குதிரைகள், சாரதிகள் மற்றும் கொடிமங்களோடு யமலோகத்திற்கு அனுப்பினான்.(18) அப்போது போர்வீரர்களில் முதன்மையானவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களும், ஆயுதங்களை வேகமாகப் பயன்படுத்துபவர்களுமான பாண்டவப் படையினர் பலர், வேகமாகச் சுழன்று அனைத்துப் பக்கங்களிலும் கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.(19) தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதும், அன்னங்களால் மறைக்கப்பட்டதுமான தடாகத்திற்குள் மூழ்கும் யானைமந்தையின் தலைமையானையைப் போல அந்தப் பகைவர்களின் படையை ஆயுதமாரியால் கர்ணன் கலங்கடித்தான்.(20) எதிரிகளுக்கு மத்தியில் ஊடுருவிய அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன் சிறந்த வில்லை அசைத்துத் தாக்கத் தொடங்கித் தன் கூரிய கணைகளால் அவர்களது தலைகளை வீழ்த்தினான்.(21) போர்வீரர்களின் கேடயங்களும், கவசங்களும் வெட்டுண்டு பூமியில் விழுந்தன. கர்ணனின் இரண்டாவது கணையின் தீண்டல் தேவைப்பட்ட எவருமே அங்கு இருக்கவில்லை.(22)

சாட்டையால் குதிரைகளைத் தாக்கும் சாரதியைப் போலக் கர்ணன், (தன் எதிரிகளின்) வில்லின் நாணால் மட்டுமே உணரக்கூடிய கூடுகளையும், கவசங்களையும், அவற்றைப் பூண்ட உடல்களையும், உயிர்களையும் நொறுக்கவல்ல தன் கணைகளால் தாக்கினான்.(23) மான்கூட்டங்களைக் கலங்கடிக்கும் சிங்கம் ஒன்றைப் போலக் கர்ணன், தன் கணைகள் செல்லும் தொலைவிற்குள் வர நேர்ந்த அந்தப் பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரையும் வேகமாகக் கலங்கடித்தான்.(24) அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களின் தலைவனும் {திருஷ்டத்யும்னனும்}, திரௌபதியின் மகன்களும், இரட்டையரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, மற்றும் யுயுதானனும் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தனர்.(25) இவ்வாறு குருக்களும், பாஞ்சாலர்களும், பாண்டுக்களும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தங்கள் உயிர்களையே துச்சமென மதித்த போர்வீரர்கள் பிறர் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.(26) கவசங்களும் உறைகளும் நன்கு பூட்டப்பட்டவர்களும், தலைக்கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களுமான போராளிகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கதாயுதங்களுடனும், குறுந்தண்டங்கள், உயர்த்திப் பிடிக்கப்பட்ட யமதண்டங்களைப் போலத் தெரிந்த முள்பதித்த தடிகள் ஆகியவற்றுடனும் குதித்து, ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, உரக்க முழங்கிக் கொண்டே தங்கள் எதிரிகளை நோக்கி விரைந்தனர்.(27,28)

பிறகு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், தாக்கப்பட்டும், தங்கள் அங்கங்களில் குருதி வழிய, அறிவையும், கண்களையும், ஆயுதங்களையும் இழந்தபடியே அவர்கள் கீழே விழுந்தனர்.(29) ஆயுதங்களால் மறைக்கப்பட்ட சிலர், பற்களால் அலங்கரிக்கப்பட்ட குருதி நிறைந்த வாய்களுடனும், மாதுளை போன்ற அழகிய முகங்களுடன் அங்கே கிடக்கையில், உயிரோடு இருப்பவர்களைப் போலவே தெரிந்தனர்.(30) போரெனும் அந்தப் பரந்த கடலில், சினத்தால் நிறைந்த வேறு சிலர், சிதைக்கப்பட்டனர், அல்லது வெட்டப்பட்டனர், அல்லது துளைக்கப்பட்டனர், அல்லது வீழ்த்தப்பட்டனர், அல்லது துண்டிக்கப்பட்டனர், அல்லது போர்க்கோடரிகளாலும், குறுங்கணைகளாலும், அங்குசங்களாலும், சூலங்களாலும், வேல்களாலும் கொல்லப்பட்டனர்.(31,32) ஒருவரையொருவர் கொன்று குருதியில் மறைந்த அவர்கள், கோடரியால் வெட்டப்பட்ட சந்தன மரங்கள், தங்கள் குளுமையான இரத்தச் சிவப்புத் திரவத்தை உதிர்த்தபடியே கீழே விழுவதைப் போல உயிரையிழந்து கீழே விழுந்தனர்.(33)

தேரால் அழிக்கப்பட்ட தேர்களும், யானைகளால் யானைகளும், மனிதர்களால் மனிதர்களும், குதிரைகளால் அழிக்கப்பட்ட குதிரைகளும் ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன.(34) கொடிமரங்கள், தலைகள், குடைகள், யானைகள், துதிக்கைகள், மனிதக்கரங்கள் ஆகியன கத்திமுக {க்ஷுரப்ரம்}, அல்லது அகன்ற தலை {பல்லம்}, அல்லது பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகளால் வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்தன.(35) பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களும், யானைகளும், தேர்களுடன் பூட்டப்பட்ட குதிரைகளும் அந்தப் போரில் நொறுக்கப்பட்டன. குதிரைவீரர்களால் கொல்லப்பட்ட துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் பலர் கீழே விழுந்தனர், துதிக்கைகள் வெட்டப்பட்ட யானைகள் பலவும், (தங்கள் உடல்களில் இருந்த) கொடிமரங்கள் மற்றும் கொடிகளுடன் மலைகள் வீழ்வதைப் போலக் கீழே விழுந்தன. காலாட்படைவீரர்களால் தாக்கப்பட்ட யானைகள் மற்றும் தேர்கள் பலவும் அழிக்கப்பட்டு, அல்லது அழிக்கப்படும் வேளையில், அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தன. சுறுசுறுப்புடன் கூடிய காலாட்படைவீரர்களுடன் மோதிய குதிரைவீரர்கள், அவர்களால் {காலாட்படை வீரர்களால்} கொல்லப்பட்டனர்.(36-38) அதே போலக் குதிரைவீரர்களால் கொல்லப்பட்ட காலாட்படை வீரர்களின் கூட்டங்களும் களத்தில் பட்டுக் கீழே விழுந்தனர். அந்தப் பயங்கரப்போரில் கொல்லப்பட்டோரின் முகங்களும், அங்கங்களும், நசுக்கப்பட்ட தாமரைகளைப் போலவும், மங்கிய மலர்மாலைகளைப் போலவும் தெரிந்தன. யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் அழகிய வடிவங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழுக்கடைந்த துணிகளுக்கு ஒப்பாகக் காண்பதற்கு வெறுக்கத்த நிலையை அடைந்தன” {என்றான் சஞ்சயன்}[2].(39-40)

மிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன்! – கர்ண பர்வம் பகுதி – 22-துரியோதனனின் தூண்டுதலின் பேரில் திருஷ்டத்யும்னனை எதிர்த்துச் சென்ற யானைப் படையினர்; யானைகளைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; யானைகளால் கொல்லப்பட்ட படைவீரர்கள்; வங்கர்களின் மன்னனை வீழ்த்திய சாத்யகி; புண்டரனைக் கொன்ற சகாதேவன்; அங்கர்களின் தலைவனான மிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன்; யானைப்படையைப் பீடித்த பாண்டவர்கள்; புறமுதுகிட்டோடிய கௌரவப் படையினர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யானைகளில் சென்ற போர்வீரர்கள் பலர், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, சினத்தால் நிறைந்து, திருஷ்டத்யும்னனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பி அவனை எதிர்த்துச் சென்றனர்.(1) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிழக்கத்தியர்கள், தெற்கத்தியர்கள், அங்கர்கள், வங்கர்கள், புண்டரர்கள், மகதர்கள், தாம்ரலிப்தகர்கள், மேகலர்கள், கோசலர்கள், மத்ரர்கள், தாசர்ணர்கள், நிஷாதர்கள் ஆகியோரைச் சார்ந்தவர்களும், யானைப் போரில் திறம்பெற்ற போராளிகளில் முதன்மையானோருமான பலர், கலிங்கர்களுடன் சேர்ந்து கொண்டு, கணைகளையும், வேல்களையும் பொழியும் மேகங்களைப் போல அந்தப் போரில் பாஞ்சாலர்களை நனைத்தனர்.(2-4)

குதிங்கால்கள், கால்விரல் நுனிகள் மற்றும் அங்குசங்களைக் கொண்டு தங்கள் சாரதிகளால் தூண்டப்பட்ட அந்த (எதிரிகளை) நசுக்கும் யானைகளைப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} தன் கணைகளாலும் நாராசங்களாலும் மறைத்தான்.(5) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகளைப் போலப் பெரியவையாக இருந்த அவ்விலங்குகள் ஒவ்வொன்றையும், அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, பத்து, எட்டு, அல்லது ஆறு கூரிய கணைகளால் துளைத்தான்.(6) மேகங்களால் சூழப்பட்ட சூரியனைப் போலப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த யானைகளால் சூழப்பட்டிருப்பதைக் கண்ட பாண்டுக்களும், பாஞ்சாலர்களும், கூரிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு உரத்த முழக்கங்களுடன் (அவனை மீட்பதற்காக) அவனை நோக்கிச் சென்றனர்.(7) அந்த யானைகளின் மீது தங்கள் ஆயுதங்களைப் பொழிந்த அந்தப் போர்வீரர்கள், தங்களின் உள்ளங்கையொலிகள் மற்றும் தங்கள் வில்லின் நாணொலிகள் ஆகியவற்றினால் உண்டான இசையின் துணையுடனும், காலத்தை வெல்லும் வீரர்களால் தூண்டப்பட்டும் அவர்கள் வீரர்களின் நடனத்தை ஆடத் தொடங்கினர்.(8)

அப்போது, பெரும்பலத்தைக் கொண்டவர்களான நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சாத்யகி, சிகண்டி, சேகிதானன் ஆகிய வீரர்கள் அனைவரும், மேகங்கள் தங்கள் மழையால் மலைகளை நனைப்பதைப் போலத் தங்கள் ஆயுதங்களால் அந்த யானைகளை அனைத்துப் பக்கங்களிலும் நனைத்தனர்.(9) மிலேச்சப் போர்வீரர்களால் தூண்டப்பட்ட அந்தச் சீற்றமிகு யானைகள், தங்கள் துதிக்கைகளால் மனிதர்களையும், குதிரைகளையும், தேர்களையும் இழுத்துத் தங்கள் கால்களால் அவற்றை நசுக்கின.(10) தங்கள் தந்தங்களின் முனைகளால் அவை சிலரைத் துளைத்தன, சிலரை உயரத் தூக்கித் தரையில் வீசின; அந்தப் பெரும் விலங்குகளின் தந்தங்களில் உயரத் தூக்கப்பட்ட வேறு சிலர், பார்வையாளர்களை அச்சுறுத்தும் வகையில் கீழே விழுந்தனர்.(11)

அப்போது, சாத்யகி, தன் முன்னே இருந்த வங்கர்களின் மன்னனுடைய யானையின் முக்கிய அங்கங்களைச் சிதைத்துப் பெரும் வேகத்தைக் கொண்ட நீண்ட கணையொன்றால் {நாராசத்தால்} அதைப் போர்க்களத்தில் கீழே வீழ்த்தினான்.(12) பிறகு சாத்யகி, தன்னால் தொட முடியாதவனான சாரதியை, அவன் தன் விலங்கின் முதுகில் இருந்து குதிக்கப் போகும் தருணத்தில், மற்றொரு நீண்ட கணையால் அவனது மார்பைத் துளைத்தான். சாத்வதனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {வங்கர்களின் மன்னன்} கீழே பூமியில் விழுந்தான்.(13) அதே வேளையில் சகாதேவன், நகரும் மலையெனத் தன்னை எதிர்த்து வந்த புண்டரனின் யானையைப் பெரும் கவனத்துடன் ஏவப்பட்ட மூன்று கணைகளால் தாக்கி,(14) கொடிமரம், சாரதி, கவசம் மற்றும் அதன் {யானையின்} உயிரையும் இழக்கச் செய்தான். இவ்வாறு அந்த யானையை வெட்டி வீழ்த்திய சகாதேவன், அங்கர்களின் தலைவனை [1] எதிர்த்துச் சென்றான்.(15) எனினும், சகாதேவனை விலகச் செய்த நகுலன், யமதண்டத்திற்கு ஒப்பான மூன்று நீண்ட கணைகளால் {நாராசங்களால்} அங்கர்களின் ஆட்சியாளனைப் பீடித்து, ஒரு நூறு கணைகளால் தன் எதிரியின் யானையையும் பீடித்தான்.(16) பிறகு அந்த அங்கர்களின் ஆட்சியாளன், சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசம் கொண்ட எண்ணூறு {800} வேல்களை நகுலன் மீது வீசினான். அவை ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நகுலன் வெட்டினான்.(17) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} தன் எதிராளியின் தலையைப் பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணையொன்றால் வெட்டி வீழ்த்தினான். இதனால் உயிரையிழந்த அந்த மிலேச்ச மன்னன், தான் செலுத்திய விலங்கிலிருந்து கீழே விழுந்தான்.(18)யானைகளைச் செலுத்துவதில் திறன்பெற்ற அந்த அங்கர்களின் இளவரசன் வீழ்ந்ததும், சினத்தால் நிறைந்த அங்கர்களின் யானைக்காரர்கள், நகுலனைத் துண்டுகளாக {தூள்தூளாக} நசுக்க விரும்பி, காற்றில் அசையும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சிறந்த வாய்களைக் கொண்டவையும், தங்கத்தாலான அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சுடர்மிக்க மலைகளைப் போலத் தெரிந்தவையுமானத் தங்கள் யானைகளில் வேகமாக அவனை {நகுலனை} எதிர்த்துச் சென்றனர்.(19,20) மேலும், மேகலர்கள், உத்கலர்கள், கலிங்கர்கள், நிஷாதர்கள், தாம்ரலிப்தகர்கள் பலரும், நகுலனைக் கொல்ல விரும்பி தங்கள் கணைகளையும், வேல்களையும் பொழிந்தபடியே அவனை எதிர்த்துச் சென்றனர்.(21) அப்போது சினத்தால் நிறைந்தவர்களான பாண்டுக்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்கள், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல அந்தப் போர்வீரர்களால் சூழப்பட்ட நகுலனை மீட்பதற்காக வேகமாக விரைந்தனர்.(22) பிறகு தங்கள் கணைகளையும், நாராசங்களையும் பொழிந்த அந்தத் தேர்வீரர்களுக்கும், ஆயிரக்கணக்கான வேல்களைப் பொழிந்த அந்த யானைக்காரர்களுக்கும் இடையே ஒரு கடும்போர் நேர்ந்தது.(23) யானைகளின் மத்தகங்கள், மற்ற அங்கங்கள், துதிக்கைகள் மற்றும் அலங்காரப் பொருட்களும் நாராசங்களால் மிகவும் துளைக்கப்பட்டுப் பிளந்து சிதைந்தன.(24)

அப்போது சகாதேவன், வேகமான அறுபத்துநான்கு கணைகளால், அந்தப் பெரும் யானைகளில் எட்டை விரைவாகக் கொன்று, அதன் சாரதிகளோடு கீழே விழச் செய்தான்.(25) தன் குலத்தை மகிழ்விப்பவனான நகுலனும், பெரும் வீரியத்துடன் தன் அற்புத வில்லை வளைத்து, நேரான கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் யானைகள் பலவற்றைக் கொன்றான்.(26) பிறகு, பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சிகண்டி ஆகியோர் அந்தப் பெரும் யானைகளைக் கணை மழையால் நனைத்தனர்.(27) பாண்டவ வீரர்களாலான அந்த மழைநிறைந்த மேகங்களின் விளைவாக, எதிரியின் யானைகளாலான அந்த மலைகள், இடியுடன் கூடிய புயலால் தாக்கி வீழ்த்தப்பட்ட உண்மையான மலைகளைப் போலவே, அவர்களது எண்ணற்ற கணைகளாலான மழைத்தாரைகளால் தாக்கி வீழ்த்தப்பட்டன.(28) பாண்டவத் தேர்வீரர்களான அந்தத் தலைவர்கள், அந்த உமது யானைகளை இவ்வாறு கொன்று, கரையை உடைத்துச் செல்லும் ஆற்றுக்கு ஒப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பகைவரின் படையின் மீது தங்கள் கண்களைச் செலுத்தினர்.(29) பாண்டு மகனின் அந்தப் போர்வீரர்கள், இவ்வாறு உமது படையைக் கலங்கடித்து, மீண்டும் அதைக் கலங்கடித்த பிறகு கர்ணனை எதிர்த்து விரைந்தனர். {என்றான் சஞ்சயன்}(30)

துச்சாசனனை வென்ற சகாதேவன்! – கர்ண பர்வம் பகுதி – 23-சகாதேவனை எதிர்த்து வந்த துச்சாசனன்; துச்சாசனனுக்கும், சகாதேவனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; மாறிமாறி ஒருவரின் வில்லை மற்றவர் வெட்டியது; துச்சாசனனை மயக்கமடையச் செய்த சகாதேவன்; போர்க்களத்தைவிட்டுத் துச்சாசனனைக் கொண்டு சென்ற அவனது சாரதி..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சினத்தால் நிறைந்த சகாதேவன், இவ்வாறு உமது படையைச் சிதறடித்துக் கொண்டிருந்தபோது, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, சகோதரனை எதிர்த்த சகோதரனாகத் துச்சாசனன் அவனை {சகாதேவனை} எதிர்த்துச் சென்றான்.(1) அவ்விருவரும் பயங்கரப் போரில் ஈடுபடுவதைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சிங்க முழக்கங்களைச் செய்தபடியே தங்கள் ஆடைகளை {காற்றில்} அசைத்தனர்.(2) அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வலிமைமிக்க அந்த மகன் {சகாதேவன்}, வில்தரித்த உமது கோபக்கார மகனால் {துச்சாசனனால்} மூன்று கணைகளைக் கொண்டு மார்பில் தாக்கப்பட்டான்.(3) பிறகு சகாதேவன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முதலில் ஒரு கணையால் உமது மகனைத் {துச்சாசனனைத்} துளைத்து, எழுபது கணைகளால் மீண்டும் அவனையும், அதன் பிறகு மூன்றால் அவனது சாரதியையும் துளைத்தான்.(4)

அப்போது துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில் சகாதேவனின் வில்லை அறுத்து, எழுபத்து மூன்று கணைகளால்அவனது கரங்களிலும், மார்பிலும் துளைத்தான்.(5) பிறகு அந்தப் பயங்கர மோதலில் சினத்தால் நிறைந்த சகாதேவன், ஒரு வாளை உருவி கொண்டு, அதைச் சுழற்றி உமது மகனின் {துச்சாசனனின்} தேரை நோக்கி வேகமாக வீசினான்.(6) கணை பொருத்தப்பட்ட துச்சாசனனுடைய வில்லின் நாண்கயிற்றை வெட்டிய அந்தப் பெரிய வாளானது, ஆகாயத்தில் இருந்து விழும் பாம்பைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(7) பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அந்த வீரச் சகாதேவன், மரணக் கணையொன்றை துச்சாசனன் மீது ஏவினான்.(8) எனினும், அந்தக் குரு போர்வீரன், யமதண்டத்தைப் போன்ற அந்தப் பிரகாசமான கணையானது தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும்போதே, அதைத் தன் கூர்முனை வாளால் இரு துண்டுகளாக வெட்டினான்.(9) பிறகு அந்தக் கூரிய வாளை சுழற்றிய துச்சாசனன், அந்தப் போரில் தன் எதிரியின் மீது அதை வேகமாக வீசினான். அதே வேளையில் அந்த வீரப் போர்வீரன் {துச்சாசனன்} கணையொன்றுடன் கூடிய மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(10)

எனினும் சகாதேவன், அந்தப் போரில் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த வாளைத் தன் கூரிய கணைகளால் மிக எளிதாக வெட்டிக் கீழே விழச் செய்தான்.(11) அப்போது அந்தப் பயங்கரப் போரில் உமது மகன் {துச்சாசனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அறுபத்துநான்கு கணைகளைச் சகாதேவன் தேர் மீது வேகமாக ஏவினான்.(12) எனினும் சகாதேவன், ஓ! மன்னா, அந்த எண்ணற்றக் கணைகள் பெரும் வேகத்தோடு தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே, அவை ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளால் வெட்டினான்.(13) உமது மகனால் {துச்சாசனனால்} ஏவப்பட்ட அந்த வலிமைமிக்கக் கணைகளைத் தடுத்த சகாதேவன், அந்தப் போரில் தன் எதிரியின் மீது பெரும் எண்ணிக்கையிலான கணைகளை ஏவினான்.(14) அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் மூன்று கணைகளால் வெட்டிய உமது மகன், மொத்த உலகையும் எதிரொலிக்கச் செய்தபடி உரக்க முழங்கினான்.(15)

பிறகு துச்சாசன், ஓ! மன்னா, சகாதேவனைத் துளைத்து, ஒன்பது கணைகளால் பின்னவனின் {சகாதேவனின்} சாரதியையும் அந்தப் போரில் தாக்கினான்.(16) அப்போது சினத்தால் நிறைந்த சகாதேவன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் வில்லின் நாண்கயிற்றில் அந்தகனுக்கு ஒப்பான பயங்கரக் கணையொன்றைப் பொருத்தினான்.(17) பெரும் வேகத்தோடு சென்ற அந்தக் கணையானது, ஓ! மன்னா, அவனது {துச்சாசனனின்} பலமான கவசத்தையும், உடலையும் துளைத்து, எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(18) அவன் {துச்சாசனன்} உணர்வுகளை இழந்ததைக் கண்ட அவனது சாரதி, தானும் கூரிய கணைகளால் எப்போதும் தாக்கப்பட்டிருந்தாலும், வேகமாகத் தன் தேரை {போருக்கு} வெளியே கொண்டு சென்றான்.(19) இவ்வாறு அந்தக் குரு போர்வீரனை வென்ற அந்தப் பாண்டுவின் மகன் {சகாதேவன்}, துரியோதனனின் படைப்பிரிவைக் கண்டு, அனைத்துப் பக்கங்களிலும் அதை நொறுக்கத் தொடங்கினான்.(20) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதரே, கோபத்தில் தூண்டப்பட்ட ஒரு மனிதன் எறும்புக்கூட்டத்தை நசுக்குவதைப் போலவே அந்தப் பாண்டுவின் மகனும் {சகாதேவனும்} கௌரவப் படையை நசுக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(21)

நகுலனை வீழ்த்திய கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 24-கர்ணனுக்கும் நகுலனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; நகுலனின் வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்த நகுலன்; ஆச்சரியத்தில் நிறைந்த தேவர்கள்; மீண்டும் கர்ணனுடைய வில்லின் நுனியை அறுத்த நகுலன்; இருவரின் கணைகளால் நிறைந்த ஆகாயம்; இருவீரர்களாலும் கொல்லப்பட்ட இருபடையினர்; பார்வையாளர்களாகத் தொலைவில் நின்ற இரு படை வீரர்கள்; கர்ணனின் கணைகளால் போர்க்களத்தில் உண்டான நிழல்; நகுலனின் தேரையும் குதிரைகளையும் சிதறடித்த கர்ணன், நகுலனின் கழுத்தில் வில்லை மாட்டி எள்ளி நகையாடி உயிரைப் பறிக்காமல் விட்டது; தப்பி ஓடிய நகுலன் யுதிஷ்டிரனின் தேரில் தஞ்சமடைந்தது; பாஞ்சாலர்களுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்திய கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நகுலன் பெரும்பலத்துடன் கௌரவப் படைப்பிரிவுகளை முறியடித்து அழித்துக் கொண்டிருந்த போது, சினத்தால் நிறைந்தவனும், விகர்த்தனன் மகனுமான கர்ணன் அவனைத் தடுத்தான்.(1) அப்போது, நகுலன் சிரித்துக் கொண்டே கர்ணனிடம், “நீண்ட காலத்திற்குப் பிறகு, தேவர்களின் கருணையால் நான் உன்னைக் காண்கிறேன்.(2) ஓ! இழிந்தவனே, நீயும் என் பார்வையில் ஒரு பொருளாய் வந்திருக்கிறாய். இந்தத் தீமைகள் அனைத்திற்கும், இந்தப் பகைமைக்கும், இந்தச் சச்சரவுக்கும் ஆணிவேரானாவர் நீயே.(3) உன் குற்றங்களாலேயே, கௌரவர்கள் ஒருவருடனொருவர் மோதி அழிகின்றனர். இன்றைய போரில் உன்னைக் கொன்று, நோக்கத்தை அடைந்தவனாக என்னைக் கருதிக் கொள்வேன். என் இதயத்தின் நோயும் விலகப்போகிறது” என்றான் {நகுலன்}.(4)

இவ்வாறு நகுலனால் சொல்லப்பட்ட சூதன் மகன் {கர்ணன்}, அந்த இளவரசனுக்கும் {நகுலனுக்கும்}, குறிப்பாக எந்த ஒரு வில்லாளிக்கும் தகுந்த பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(5) “ஓ! வீரா {நகுலா}, என்னைத் தாக்குவாயாக. உன் ஆண்மையை நாங்கள் காண விரும்புகிறோம். ஓ! துணிச்சில்மிக்கப் போர்வீரா, போரில் சில சாதனைகளை அடைந்திருப்பதால், நீ தற்பெருமையே பேச வேண்டும்.(6) ஓ! ஐயா, வீரர்களானவர்கள், தற்பெருமையில் ஈடுபடாமல் தங்கள் சக்தியில் சிறப்பாகப் போரிடுவார்கள். உன் சிறப்பான வலிமையைப் பயன்படுத்தி என்னுடன் போரிடுவாயாக. உன் செருக்கை நான் தணிப்பேன்” என்றான் {கர்ணன்}.(7) இவ்வார்த்தைகளைச் சொன்ன சூதன் மகன் {கர்ணன்}, வேகமாக அந்தப் பாண்டுவின் மகனை {நகுலனைத்} தாக்கி, அம்மோதலில் எழுபத்து மூன்று {73} கணைகளால் அவனைத் துளைத்தான்.(8)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்போது சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு தாக்கப்பட்ட நகுலன், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளாக்கு ஒப்பான எண்பது {80} கணைகளால் பதிலுக்கு அவனைத் {கர்ணனைத்} தாக்கினான்.(9) பிறகு பெரும் வில்லாளியான அந்தக் கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எண்ணற்ற கணைகளால் தன் எதிராளியின் {நகுலனின்} வில்லை அறுத்து, முப்பது கணைகளால் அவனைப் {நகுலனைப்} பீடித்தான்.(10) அவனது {நகுலனது} கவசத்தைத் துளைத்த அந்தக் கணைகள், கடும் நஞ்சுமிக்க நாகங்கள் பூமியைத் துளைத்த பிறகு நீரைக் குடிப்பதைப் போல அந்தப் போரில் அவனது {நகுலனது} குருதியைக் குடித்தன.(11) அப்போது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்ட நகுலன், இருபது கணைகளால் கர்ணனைத் துளைத்து, மூன்றால் அவனது {கர்ணனது} சாரதியைத் துளைத்தான்.(12)

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பகைவீரர்களைக் கொல்பவனான நகுலன், சினத்தால் நிறைந்து, பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலை {க்ஷுரப்ரக்} கணைகளால் கர்ணனின் வில்லை அறுத்தான்.(13) சிரித்துக் கொண்டே இருந்த அந்தப் பாண்டுவின் வீர மகன் {நகுலன்}, தேர்வீரர்களில் முதன்மையானவனும், வில்லற்றவனுமான கர்ணனனை முன்னூறு {300} கணைகளால் தாக்கினான்.(14) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனால் {நகுலனால்}, இவ்வாறு கர்ணன் பீடிக்கப்படுவதைக் கண்டவர்களும், (ஆகாயத்தில் இருந்த) தேவர்களுடன் கூடியிருந்தவர்களும், அங்கே இருந்தவர்களுமான தேர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(15) அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும், விகர்த்தனன் மகனுமான கர்ணன், ஐந்து கணைகளால் நகுலனின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(16) அங்கே தைத்த அந்தக் கணைகளுடன் கூடிய மாத்ரியின் மகன் {நகுலன்}, பூமியின் மீது தன் கதிர்களால் ஒளியைப் பொழியும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(17) பிறகு நகுலன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஏழு கணைகளால் கர்ணனைத் துளைத்து, மீண்டும் கர்ணனுடைய வில்லின் நுனிகளில் ஒன்றை அறுத்தான்.(18) அந்தப் போரில் மேலும் கடுமையான ஒரு வில்லை எடுத்துக் கொண்ட கர்ணன், தன் கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் நகுலனை மூடி ஆகாயத்தையும் நிறைத்தான்.(19) எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலன், கர்ணனின் வில்லில் இருந்து இவ்வாறு திடீரென ஏவப்பட்ட கணைகளால் மறைக்கப்பட்டாலும், தன் கணைகளால் அந்தக் கணைகள் அனைத்தையும் விரைவாக அறுத்தான்.(20)

சுற்றித்திரியும் விட்டிற்பூச்சிகளின் கூட்டத்தால் நிறைந்த வானம் போலவே, பெரும் எண்ணிக்கையிலான கணைகள் பரவிக் கிடந்த ஆகாயம் காட்சியளித்தது.(21) உண்மையில், வானமானது, (அந்தப் போர்வீரர்கள் இருவராலும்) ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் மறைக்கப்பட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெட்டுக்கிளிகளின் கூட்டத்தால் மறைக்கப்பட்டதைப் போலவே தெரிந்தது.(22) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், தொடர் சரங்களாக வெளிப்பட்டவையுமான அந்தக் கணைகள், ஆகாயத்தில் பறக்கும் நாரைகளின் வரிசைகளைப் போலவே அழகாகத் தெரிந்தது.(23) இவ்வாறு வானம் கணைமழையால் மறைக்கப்பட்டபோது, சூரியனே காட்சியில் இருந்து மறைந்து கொண்டான், காற்றில் பறக்கும் எந்த உயிரினத்தாலும் பூமியில் இறங்க முடியவில்லை.(24) அனைத்துப் பக்கங்களும் இவ்வாறு கணைமழையால் மறைக்கப்பட்டபோது, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள் இருவரும், யுகத்தின் முடிவில் எழுந்த இரு சூரியர்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(25)

கர்ணனின் வில்லில் இருந்து வெளிப்பட்ட கணைகளால் கொல்லப்பட்ட சோமகர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மிகவும் பீடிக்கப்பட்டவர்களாகப் பெரும் வலியை உணர்ந்து, தங்கள் கடைசி மூச்சைச் சுவாசிக்கத் தொடங்கினர்.(26) அதேபோல, நகுலனின் கணைகளால் தாக்கப்பட்ட உமது போர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் வீசப்பட்ட மேகங்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கலைந்து சென்றனர்.(27) அந்தப் போர் வீரர்கள் இருவராலும் தங்கள் தங்கள் வலிமைமிக்க தெய்வீகக் கணைகளால் இவ்வாறு கொல்லப்பட்ட இரண்டு படையினரும், அந்தக் கணைகள் அடையும் தொலைவுக்கு அப்பால் பின்வாங்கி, அம்மோதலைக் காணும் பார்வையாளர்களாக நின்றனர்.(28) கர்ணன் மற்றும் நகுலன் ஆகியோரின் கணைகளால் அந்த இருபடைகளும் விரட்டப்பட்டபோது, அந்த உயர் ஆன்ம வீரர்கள் இருவரும், கணை மழையால் ஒருவரையொருவர் துளைக்கத் தொடங்கினர்.(29) அந்தப் போர்களத்தில் தங்கள் தெய்வீக ஆயுதங்களை வெளிக்காட்டிய அவர்கள், ஒருவரின் அழிவை மற்றவர் ஏற்படுத்த விரும்பி வேகமாக ஒருவரையொருவர் மறைத்துக் கொண்டனர்.(30)

நகுலனால் ஏவப்பட்ட கணைகள், கங்க மற்றும் மயிலின் இறகால் அலங்கரிக்கப்பட்டு, சூதன் மகனை {கர்ணனை} மறைத்தபடியே, ஆகாயத்தில் நிலைத்து நிற்பதாகத் தெரிந்தன.(31) அதே போல அந்தப் பயங்கரப் போரில் சூதன் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட கணைகளும் பாண்டுவின் மகனை {நகுலனை} மறைத்தபடியே ஆகாயத்தில் நிலைத்து நிற்பதாகவே தெரிந்தன.(32) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையறைகளுக்குள் மறைக்கப்பட்ட அந்தப் போர் வீரர்கள் இருவரும், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனையும், சந்திரனையும் போலக் கண்ணுக்குப் புலப்படாதவர்களானார்கள்.(33) அப்போது கர்ணன், சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் பயங்கரத் தன்மையை அடைந்து, அனைத்துப் பக்கங்களிலும் கணை மழையால் அந்தப் பாண்டுவின் மகனை மறைத்தான்.(34)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சூதன் மகனால் {கர்ணனால்} முற்றிலும் மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, மேகங்களால் மறைக்கப்பட்டவனான நாளை உண்டாக்குபவனை {சூரியனைப்} போல எந்த வலியையும் உணராதவனாக இருந்தான்.(35) அப்போது, ஓ! ஐயா, அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே தன் கணைச்சரத்தை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவினான்.(36) அந்த உயர் ஆன்மக் கர்ணனின் கணைகளால் எஞ்சிய போர்க்களமெங்கும் ஒரு பரந்த நிழல் தெரிந்தது. உண்மையில், (அவனது வில்லில் இருந்து) தொடர்ந்து வெளிப்பட்ட அந்த அற்புதக் கணைகளால் மேகங்களால் உண்டானதைப் போல அங்கே ஒரு நிழல் உண்டானது.(37) பிறகு கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம நகுலனின் வில்லை அறுத்து, தேர்த்தட்டில் இருந்து பின்னவனின் சாரதியையும் மிக எளிதாக விழச் செய்தான்.(38) அடுத்ததாக, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நான்கு கூரிய கணைகளால் அவன் {கர்ணன்}, நகுலனின் நான்கு குதிரைகளை விரைவாக யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(39) மேலும் அவன் {கர்ணன்}, தனது கணைகளால் தன் எதிராளியின் சிறந்த தேரையும், அவனது கொடிமரம், அவனது தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்கள், கதாயுதம், வாள், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட கேடயம், வேறு பிற உபகரணங்கள் மற்றும் போர்ச் சாதனங்கள் ஆகியவற்றையும் நுண்ணியத் துண்டுகளாக வெட்டினான்.(40)

அப்போது நகுலன், குதிரைகளற்றவனாக, தேரற்றவனாக, கவசமற்றவனாக, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, முள்பதித்த கனத்தத் தடி ஒன்றைக் கையில் தரித்துக் கொண்டு தன் தேரில் இருந்து வேகமாக இறங்கினான்.(41) பாண்டுவின் மகனால் {நகுலனால்} இவ்வாறு உயர்த்தப்பட்ட அந்தப் பயங்கரத் தடியும், ஓ! மன்னா, பெரும் கடினத்தைத் தாங்க வல்ல கூரிய கணைகள் பலவற்றால் வெட்டப்பட்டது.(42) தன் எதிராளி {நகுலன்} ஆயுதமற்றவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், நேரான கணைகள் பலவற்றால் தாக்கத் தொடங்கினான், ஆனால், அவனைப் {நகுலனை} பெரிதும் பீடித்துவிடாமல் இருப்பதிலும் கவனம் செலுத்தினான்.(43) ஆயுதங்களில் சாதித்த அந்த வலிமைமிக்கப் போர்வீரனால் {கர்ணனால்} இவ்வாறு அந்தப் போரில் தாக்கப்பட்ட நகுலன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வேதனையில் வேகமாகத் தப்பி ஓடினான்.(44) மீண்டும் மீண்டும் சிரித்தபடி அவனைத் {நகுலனைத்} தொடர்ந்து சென்ற அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! பாரதரே, பின்வாங்கிக் கொண்டிருந்த நகுலனின் கழுத்தில், நாண் பொருத்தப்பட்ட தன் வில்லை மாட்டினான்.(45) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கழுத்தில் அந்தப் பெரிய வில்லுடன் கூடிய அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, ஒளிவட்டத்துடன் கூடிய ஆகாயத்து நிலவைப் போலவோ, இந்திரவில்லால் வளைக்கப்பட்ட ஒரு வெண்மேகத்தைப் போலவோ பிரகாசமாகத் தெரிந்தான்.(46)

அப்போது அவனிடம் {நகுலனிடம்} பேசிய கர்ணன், “நீ சொன்ன வார்த்தைகள் பயனற்றதாகின. மீண்டும் மீண்டும் என்னால் தாக்கப்பட்டிருக்கும் உன்னால் மகிழ்ச்சியாக இப்போது அவற்றைச் சொல்ல முடியாதா?(47) ஓ! பாண்டுவின் மகனே {நகுலனே}, பெரும் வலிமை கொண்ட குருக்களுடன் மீண்டும் போரிடாதே. ஓ! குழந்தாய் {நகுலா}, உனக்கு இணையானவர்களுடன் போரிடுவாயாக. ஓ! பாண்டுவின் மகனே {நகுலனே}, இதற்காக வெட்கமேதும் அடையாதே.(48) ஓ! மாத்ரியின் மகனே, வீட்டுக்குச் செல், அல்லது கிருஷ்ணனும், பல்குனனும் {அர்ஜுனனும்} எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வாயாக” என்றான் {கர்ணன்}. அவனிடம் {நகுலனிடம்} இவ்வாறு பேசிய பிறகு, அவன் {கர்ணன்} அவனைக் {நகுலனை} கைவிட்டுச் சென்றான்.(49) அறநெறி அறிந்தவனான கர்ணன், ஏற்கனவே காலனின் கோரப்பற்களுக்கிடையில் இருந்த நகுலனை அப்போது கொல்லவில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த கர்ணன் நகுலனைச் செல்லவிட்டான்.(50)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, வில்லாளியான சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு விடப்பட்டு, பெரும் நாணத்துடன் யுதிஷ்டிரனின் தேரை நோக்கிச் சென்றான்.(51) சூதன் மகனால் எரிக்கப்பட்ட அவன் {நகுலன்}, பெரும் துயரால் எரிந்து, ஜாடிக்குள் வைக்கப்பட்ட ஒரு பாம்பைப் போலத் தொடர்ந்து பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} தேரில் ஏறினான்.(52) அதே வேளையில் கர்ணன், நகுலனை வென்ற பிறகு, அழகான கொடிகளைக் கொண்டதும், நிலவைப் போன்ற வெண்மையான குதிரைகளைக் கொண்டதுமான தேரில் பாஞ்சாலர்களை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(53) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌரவப் படையின் தலைவன் {கர்ணன்}, பாஞ்சாலத் தேர்க்கூட்டங்களை நோக்கிச் செல்வதைக் கண்ட போது, பாண்டவர்களுக்கு மத்தியில் ஒரு பேராரவாரம் அங்கே உண்டானது.(54) ஓ! ஏகாதிபதி, சூரியன் நடுவானை அடைந்த அந்த வேளையில், பலமிக்கப் போர்வீரனும், சக்கரம் போன்ற சுறுசுறுப்புடன் எப்போதும் திரிந்து கொண்டிருந்தவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்} ஒரு பேரழிவை உண்டாக்கினான்.(55)

பாஞ்சாலப் போர்வீரர்கள் பலர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நொறுங்கிய சக்கரங்கள் மற்றும் அச்சுகளுடன் கூடியவையும், உடைந்த கொடிமரங்கள் மற்றும் கிழிந்த கொடிகளுடன் கூடியவையும், குதிரைகளற்றவையும், சாரதியற்றவையுமானத் தங்கள் தேர்களில் போரில் இருந்து கொண்டு செல்லப்படுவதை நாங்கள் கண்டோம். மேலும் (கணைகளால் அங்கங்கள் எரிக்கப்பட்ட) யானைகள் பலவும், காட்டுத்தீயில் எரிந்து, அங்கங்கள் சுடப்பட்டுப் பரந்தக்காட்டில் தனியாகத் திரிவது போல அங்கே அனைத்துத் திசைகளிலும் திரிவது காணப்பட்டது. உயர் ஆன்மக் கர்ணனால் தாக்கப்பட்ட வேறு சில {யானைகள்}, மத்தகங்கள் பிளக்கப்பட்டு, அல்லது குருதியில் குளித்து, அல்லது துதிக்கைகள் துண்டிக்கப்பட்டு,(56-58) அல்லது தங்கள் கவசம் பிளந்து, அல்லது தங்கள் வால்கள் அறுபட்டு, பிரிந்து செல்லும் மேகங்களைப் போலக் கீழே விழுந்தன.(59) ராதையின் மகனுடைய கணைகள் மற்றும் வேல்களால் அச்சுறுத்தப்பட்ட வேறு சில யானைகள், சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல ராதையின் மகனையே எதிர்த்துச் சென்றன.(60) பெரும் யானைகள் சில, தங்கள் சாரலில் சிற்றாறுகள் பாயும் மலைகளைப் போலப் பல்வேறு அங்கங்களில் குருதியை உதிர்த்து ஒன்றையொன்று எதிர்த்துத் தாக்குவது காணப்பட்டது.(61)

முதன்மையான இனத்தைச் சேர்ந்த குதிரைகள், மார்புத்தகடுகளையும், வெள்ளி, வெண்கலம் மற்றும் தங்கத்தாலான தங்கள் ஆபரணங்களையும் இழந்து,(62) நெற்றியணி, கடிவாளங்கள், சாமரங்கள், சேணவிரிப்புகள் இழந்து, தங்கள் முதுகுகளில் இருந்து அம்பறாத்தூணிகள் விழுந்து, போர்க்கள ரத்தினங்களான தங்கள் வீரச் சாரதிகள் கொல்லப்பட்டு, களத்தில் அங்கேயும் இங்கேயும் திரிந்து கொண்டிருப்பது காணப்பட்டது.(63,64) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வேல்கள், ரிஷ்டிகள், வாள்கள் ஆகியவற்றால் துளைத்து வெட்டப்பட்டவர்களும், கவசம், தலைக்கவசம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான குதிரை வீரர்கள் பலரை, ஓ! பாரதரே, கொல்லப்பட்டோ, கொல்லப்படும் தருணத்திலோ, அச்சத்துடன் நடுங்குவதையோ, பல்வேறு அங்கங்களை இழப்பதையோ நாங்கள் கண்டோம்.(65,66) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டவையுமான தேர்களும், தங்கள் சாரதிகள் கொல்லப்பட்டு அங்கேயும் இங்கேயும் வேகமாக இழுத்துச் செல்லப்படுவது காணப்பட்டது.(67) இவற்றில் சிலவற்றில், ஓ! பாரதரே, அச்சுகளும், தூண்களும் உடைந்திருந்தன. சிலவை கொடிகள் மற்றும் கொடிமரங்களற்றவையாக இருந்தன. சிலவை தங்கள் ஏர்க்கால்களை இழந்தவையாக இருந்தன.(68)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} கணைகளால் எரிக்கப்பட்டுத் தங்கள் தேர்களை இழந்து எங்குச் சுற்றிக் கொண்டிருக்கும் தேர்வீரர்கள் பலரும் எங்களால் அங்கே காணப்பட்டனர்.(69) சிலர் ஆயுதங்களை இழந்திருந்தனர், பெரும் எண்ணிக்கையிலான சிலர் தங்கள் கைகளில் ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும் உயிரற்றவர்களாகக் களத்தில் கிடப்பதும் காணப்பட்டது.(70) நட்சத்திரக்கூட்டங்கள் பதிக்கப்பட்டவையும், அழகான மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பலவண்ணங்களிலான வண்ணமயமான கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான யானைகள் பலவும் அனைத்துத் திசைகளிலும் திரிவது எங்களால் காணப்பட்டது.(71) கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் வெட்டப்பட்ட தலைகள், கரங்கள், மார்புகள், பிற அங்கங்கள் சுற்றிலும் இறைந்து கிடப்பது எங்களால் காணப்பட்டது.(72) (பாண்டவப் படையின்) போர்வீரர்கள் கூரிய கணைகளால் போரிட்ட போது, கர்ணனின் கணைகளால் சிதைக்கப்படுகையில், கடுமையான ஒரு பெரிய பேரிடர் அவர்களை ஆட்கொண்டது.(73)

சூதன் மகனால் {கர்ணனால்} அந்தப் போரில் கொல்லப்பட்ட சிருஞ்சயர்கள், சுடர்மிக்க நெருப்பை நோக்கி விரையும் பூச்சிகளைப் போலவே குருடாக அவனையே {கர்ணனையே} எதிர்த்துச் சென்றனர்.(74) உண்மையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் பாண்டவப் படைப்பிரிவினரை எரிப்பதில் ஈடுபட்டிருந்த போது, அவனைத் {கர்ணனைத்} தவிர்த்த க்ஷத்திரியர்கள், சுடர்மிக்க யுகநெருப்பாகவே அவனைக் கருதினர்.(75) அந்தப் பேரழிவில், வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் பாஞ்சாலர்களில் உயிருடன் எஞ்சியோர் தப்பி ஓடினர். எனினும் நொறுங்கிப் போய்ப் பின்வாங்கிய அந்தப் போர்வீரர்களின் மீது பின்னால் இருந்து கணைகளை ஏவியபடியே கர்ணன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். பெரும் சக்தியைக் கொண்ட அவன் {கர்ணன்} கவசங்களையும், கொடிமரங்களையும் இழந்த அந்தப் போராளிகளைப் பின்தொடர்ந்து சென்றான்.(76) உண்மையில் பெரும் வலிமையைக் கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, நடுவானை அடையும்போது அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் இருளை அகற்றுவோனைப் {சூரியனைப்} போலத் தன் கணைகளால் அவர்களைத் தொடர்ந்து எரித்தான்” {என்றான் சஞ்சயன்}.(77)

சகுனி மற்றும் உலூகனின் வெற்றி! – கர்ண பர்வம் பகுதி – 25-யுயுத்சுவுக்கும் உலூகனுக்கும் இடையில் நடந்த மோதல்; யுயுத்சுவை வென்ற உலூகன்; சுருதகர்மனுக்கும், நகுலனின் மகனான சதானீகனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகுனிக்கும் பீமனின் மகனான சுதசோமனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகுனியின் ஆற்றல்; வாளின் ஆற்றலை வெளிப்படுத்திய சுதசோமன்; தரையில் நின்று போரிட்ட சுதசோமனை வியந்த தேவர்கள்; சுதசோமனின் வாளை வெட்டிய சகுனி; அர்ஜுனன் மகனான சுருதகீர்த்தியின் தேரில் ஏறிக்கொண்ட சுதசோமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகனின் {துரியோதனனின்} பரந்த படையை முறியடித்துக் கொண்டிருந்த யுயுத்சுவை எதிர்த்து, “நில், நில்” என்று சொன்னபடியே உலூகன் வேகமாகச் சென்றான்.(1) அப்போது யுயுத்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இந்திரனே} வஜ்ர்த்தால் ஒரு மலையைத் தாக்குவதைப் போல, பெரும் சக்தியுடன் சிறகு படைத்த கூர்முனைக் கணையொன்றால் உலூகனைத் தாக்கினான்.(2) இதனால் சினத்தில் நிறைந்த உலூகன், அந்தப் போரில் உமது மகனின் {யுயுத்சுவின்}[1] வில்லைக் கத்தித்தலை கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டி, முள்பதித்த கணையொன்றால் {கர்ணியால்} உமது மகனையும் {யுயுத்சுவையும்} தாக்கினான்.(3) உடைந்த அந்த வில்லை வீசியெறிந்த யுயுத்சு, கோபத்தால் கண்கள் சிவந்து, பெரும் வேகத்தைக் கொண்ட மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிறகு அந்த இளவரசன், அறுபது கணைகளால் உலூகனைத் துளைத்தான். அடுத்ததாக உலூகனின் சாரதியைத் துளைத்த யுயுத்சு, மீண்டும் உலூகனையும் தாகினான்.(5)அப்போது சினத்தால் நிறைந்த உலூகன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இருபது கணைகளால் யுயுத்சுவைத் துளைத்து, பிறகு தங்கத்தால் ஆன அவனது {யுயுத்சுவின்} கொடிமரத்தையும் வெட்டினான்.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர்ந்ததும், அழகானதும், தங்கத்தாலானதுமான அந்தக் கொடிமரம் (உலூகனால்) வெட்டப்பட்டு, யுயுத்சுவின் தேருக்கு முன்பாகக் கீழே விழுந்தது.(7) தன் கொடிமரம் வெட்டப்பட்டதைக் கண்ட யுயுத்சு, கோபத்தால் தன் உணர்வுகளை இழந்து, ஐந்து கணைகளால் உலூகனின் நடுமார்பைத் துளைத்தான்.(8) பிறகு அந்தப் போரில் உலூகன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதர்களிற்சிறந்தவரே, எண்ணெயில் நனைக்கப்பட்ட அகன்ற தலைக் கணை {பல்லம்} ஒன்றால் தன் எதிராளியுடைய சாரதியின் தலையை அறுத்தான்.(9) அடுத்ததாக யுயுத்சுவின் நான்கு குதிரைகளையும் கொன்ற அவன் {உலூகன்}, ஐந்து கணைகளால் அவனையும் {யுயுத்சுவையும்} தாக்கினான். பலமிக்க உலூகனால் ஆழமாகத் தாக்கப்பட்ட யுயுத்சு, மற்றொரு தேரில் ஏறினான்.(10) அவனை {யுயுத்சுவைப்} போரில் வென்ற உலாகன், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்களை நோக்கி வேகமாக முன்னேறி, கூரிய கணைகளால் அவர்களைக் கொல்லத் தொடங்கினான்.(11)

அப்போது உமது மகன் சுருதகர்மன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {நகுலனின் மகனான} சதானீகனைக் கண்கள் இமைப்பதற்காகும் அரைப்பொழுதிற்குள் அச்சமற்ற வகையில் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான்.(12) எனினும், ஓ! ஐயா, வலிமைமிக்கத் தேர்வீரனான சதானீகன், குதிரைகளற்ற தன் தேரில் நின்றபடியே சினத்தால் நிறைந்து உமது மகனின் {சுருதகர்மனின்} மீது ஒரு கதாயுதத்தை வீசினான்.(13) அந்தக் கதாயுதமானது, உமது மகனின் தேரை அதன் குதிரைகள் மற்றும் சாரதியுடன் துண்டுகளாகக் குறைத்து, பெரும் வேகத்துடன் பூமியில் விழுந்து, அதைத் துளைத்துச் சென்றது.(14) பிறகு, குருக்களின் புகழை அதிகரிப்பவர்களும், தங்கள் தேர்களை இழந்தவர்களும், மோதலில் இருந்து விலகியவர்களுமான அவ்விரு வீரர்களும், ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர்.(15) அப்போது அச்சத்துக்கு ஆட்பட்ட உமது மகன் விவிம்சுவின் தேரில் ஏறிக் கொண்டான், அதே வேளையில், சதானீகனோ, {யுதிஷ்டிரனின் மகனானப்} பிரதிவிந்தியனின் தேரில் ஏறிக் கொண்டான்.(16)

சினத்தால் நிறைந்த சகுனி, {பீமசேனனின் மகனான} சுதசோமனைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தாலும், நீர்த்தாரையானது ஒரு மலையின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த தவறியதைப் போலப் பின்னவனை {சுதசோமனை} நடுங்கச் செய்வதில் தவறினான்.(17) தன் தந்தையின் {பீமனின்} பெரும் எதிரியைக் கண்ட சுதசோமன், ஓ! பாரதரே, பல்லாயிரம் கணைகாளல் அந்தச் சகுனியை மறைத்தான்.(18) எனினும், துல்லிய இலக்கைக் கொண்ட போர்வீரனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமான அந்தச் சகுனி, போரிடும் விருப்பத்தால் இயக்கப்பட்டு, சிறகுகள் படைத்த தன் கணைகளால் அந்தக் கணைகள் அனைத்தையும் விரைவாக வெட்டினான்.(19) போரில் தன் கணைகளால் அந்தக் கணைகளைத் தடுத்த சகுனி, சினத்தால் நிறைந்து மூன்று கணைகளால் சுதசோமனைத் தாக்கினான்.(20) அப்போது உமது மைத்துனன் {சகுனி}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரம் மற்றும் சாரதியைத் தன் கணைகளால் நுண்ணியத் துண்டுகளாக வெட்டியதால் பார்வையாளர்கள் உரத்த கூச்சலிட்டனர்.(21) குதிரைகளையும், தேரையும் இழந்தவனும், கொடிமரம் வெட்டப்பட்டவனுமான அந்தப் பெரும் வில்லாளி (சுதசோமன்), ஒரு நல்ல வில்லை எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து கீழே குதித்துப் பூமியில் நின்றான்.(22) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், பெரும் எண்ணிக்கையிலானவையுமான கணைகளை ஏவி அந்தப் போரில் உமது மைத்துனனின் {சகுனியின்} தேரை மறைத்தான்.(23) எனினும் அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, வெட்டுக்கிளிகளின் கூட்டத்துக்கு ஒப்பான அந்தக் கணைமாரி தன் தேரை நோக்கி வருவதைக் கண்டும் நடுங்காதிருந்தான். மறுபுறம், அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் தன் கணைகளால் அக்கணைகள் அனைத்தையும் நொறுக்கினான்.(24)

தன் தேரில் இருந்த சகுனியுடன், காலாளாக நின்று போராடும் சுதசோமனின் நம்புதற்கரிய அருஞ்சலைக் கண்டவர்களான அங்கே இருந்த போர்வீரர்களும், ஆகாயத்தில் இருந்த சித்தர்களும் மிகவும் மகிழ்ந்தனர்.(25) அப்போது சகுனி, பெரும் வேகத்தைக் கொண்டவையும், கூரியவையும், முற்றிலும் நேரானவையுமான எண்ணற்ற அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} சுதசோமனின் வில்லையும், அவனது {சுதசோமனது} அம்பறாத்தூணிகள் அனைத்தையும் வெட்டினான்.(26) வில்லற்றவனாகத் தேரற்றவனாக ஆன சுதசோமன் கருநெய்தலின் வண்ணம் கொண்டதும், தந்தக் கைப்பிடி கொண்டதுமான வாள் ஒன்றை உருவியுயர்த்தி உரத்த முழக்கம் செய்தான்.(27) தெளிந்த வானின் வண்ணத்தைக் கொண்ட புத்திசாலி சுதசோமனின் அந்த வாள் சுழற்றப்பட்ட போது, அது யமதண்டத்தைப் போல மிக ஆபத்தானதாகச் சகுனியால் கருதப்பட்டது.(28) அந்த வாளைத் தரித்தவனும், திறனும், வலிமையும் கொண்டவனுமான அவன் {சுதசோமன்}, பதினான்கு {14} வகையான உத்திகளை வெளிக்காட்டியபடியே திடீரென அந்த அரங்கில் வட்டமாக {மண்டலகரமாகத்} திரியத் தொடங்கினான்[2].(29) உண்மையில் அவன் {பீமன் மகன் சுதசோமன்} அந்தப் போரில் உயரமாகச் சுழன்றும், பக்கங்களில் உந்தித் தள்ளியும், முன்னோக்கிக் குதித்தும், உயரமாக எம்பிக் குதித்தும், வேகமாக ஓடியும், முன்னோக்கி விரைந்தும், மேல்நோக்கி விரைந்தும் என இப்படித் திரிந்து கொண்டே அந்த அசைவுகள் {உத்திகள்} அனைத்தையும் வெளிக்காட்டினான்.(30) அப்போது, சுபலனின் அந்த வீரமகன் {சகுனி} தன் எதிரியின் மீது எண்ணற்ற கணைகளை ஏவினாலும், அவை அனைத்தும் தன்னை நோக்கி வந்த போதே அவற்றை அந்தச் சிறந்த வாளால் பின்னவன் {எதிரி சுதசோமன்} வெட்டினான்.(31)(இதனால்) சினத்தால் நிறந்த சுபலனின் மகன் {சகுனி}, ஓ! மன்னா, கடும் நஞ்சுகொண்ட பாம்புகளுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளை மீண்டும் சுதசோமன் மீது ஏவினான்.(32) கருடனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவனும், தனது திறன் மற்றும் வலிமையின் துணை கொண்டவனுமான சுதசோமன், பெரும் சுறுசுறுப்பை வெளிக்காட்டியபடியே இவற்றையும் வெட்டினான்.(33) அப்போது சகுனி, தன் முன் மண்டலகாரமாகத் திரிந்து கொண்டிருந்தவனும், தன் எதிராளியுமான பின்னவனின் {சுதசோமனின்} அந்தப் பிரகாசமான வாளைப் பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் வெட்டினான்.(34) இவ்வாறு வெட்டப்பட்ட அந்தப் பெரிய வாளானது (அதன் பாதித் துண்டு) பூமியில் விழுந்தது, அதே வேளையில், ஓ! பாரதரே, பாதிவாளானது சுதசோமனின் பிடியிலேயே இருந்தது.(35)

தன் வாள் வெட்டப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சுதசோமன் ஆறு எட்டுகள் {நடையடிகள்} பின்வாங்கித் தன் பிடியில் இருந்த பாதி வாளைத் தன் எதிரியின் {சகுனியின்} மீது வீசினான்.(36) தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் துண்டு, நாண்கயிற்றுடன் கூடிய சிறப்புமிக்கச் சகுனியின் வில்லை வெட்டி, விரைவாகப் பூமியில் விழுந்தது. அப்போது சுதசோமன் சுருதகீர்த்தியின் பெரிய தேருக்குச் சென்றான். (37,38) உறுதிமிக்கதும், வெல்லப்பட முடியாததுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட சுபலனின் மகனும் {சகுனியும்}, (வழியில்) பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளைக் கொன்றபடியே பாண்டவப் படையை நோக்கிச் சென்றான்.(39) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகன் {சகுனி} அச்சமற்ற வகையில் அந்தப் போரில் திரிவதைக் கண்டு, பாண்டவர்கள் படையின் அந்தப் பகுதியில் உரத்த ஆரவாரம் எழுந்தது.(40) பெரியதும், மயிர்ச்சிலிர்ப்புடன் கூடியதும், ஆயுதங்களுடன் கூடியதுமான அந்தப் படைப்பிரிவுகள், சிறப்புமிக்கச் சுபலன் மகனால் {சகுனியால்} முறியடிக்கப்படுவதை மக்கள் கண்டனர்.(41) தேவர்களின் தலைவன் {இந்திரன்} தைத்திய படையை நசுக்குவதைப் போலவே சுபலனின் மகனும் {சகுனியும்} அந்தப் பாண்டவப் படையை அழித்தான்” {என்றான் சஞ்சயன்}.(42)

பாஞ்சால இளவரசர்களின் தோல்வி! – கர்ண பர்வம் பகுதி – 26-கிருபருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் நேரந்த போர்; பீமனை நோக்கி ஓடிய திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனை வென்ற கிருபர்; சிகண்டியின் வில்லை வெட்டிய கிருதவர்மன்; கிருதவர்மனின் வில்லை வெட்டிய சிகண்டி; சிகண்டியை மயக்கமடையச் செய்த கிருதவர்மன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “செருக்குமிக்கச் சிங்கமொன்றைக் காட்டில் தடுக்கும் ஒரு சரபத்தைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கிருபர், திருஷ்டத்யும்னனைத் தடுத்தார்.(1) கௌதமரின் வலிமைமிக்க மகனால் {கிருபரால்} தடுக்கப்பட்ட பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரேயொரு எட்டு {நடையடி} கூட முன்னேற முடியவில்லை.(2) கௌதமரின {கிருபரின்} தேரானது திருஷ்டத்யும்னனின் தேருக்கும் முன்பு இருப்பதைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்து, பின்னவன் {திருஷ்டத்யும்னன்} அழியும் சமயம் வந்துவிட்டதெனக் கருதின.(3)

உற்சாகமிழந்தவர்களான தேர்வீரர்கள் மற்றும் குதிரைவீரர்கள், “வலிமை, சக்தி, பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை அறிந்தவரும், மனிதர்களில் முதன்மையானவருமான சரத்வான் மகன் {கிருபர்}, துரோணரின் மரணத்தால் சினத்தால் நிறைந்திருக்கிறார். இன்று திருஷ்டத்யும்னன், கௌதமரின் {கிருபரின்} கைகளில் இருந்து தப்ப முடியுமா?(4,5) இந்தப் பரந்த படை இன்று இந்தப் பேராபத்துக்குத் தப்புமா? இந்தப் பிராமணர் {கிருபர்} நம் அனைவரையும் மொத்தமாகக் கொன்றுவிடமாட்டாரா?(6) இன்று அவர் ஏற்றிருக்கும் வடிவும் அந்தகனைப் போலவே இருப்பதும், இன்று அவர் {கிருபர்} துரோணரைப் போலவே செயல்படுவார் என்பதையே காட்டுகிறது.(7) பெரும் கரநளினம் கொண்ட ஆசான் கௌதமர் {கிருபர்} போரில் எப்போதும் வெல்பவராவார். ஆயுதங்களின் அறிவையும், பெரும் சக்தியையும் கொண்ட அவர் {கிருபர்}, சினத்தால் நிறைந்திருக்கிறார்” என்றனர்.(8) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இருபடை போர்வீரர்களாலும் பேசப்படும் இது போன்ற பல்வேறு பேச்சுக்களைக் கேட்டபடியே அந்த இருவீரர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(9)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் மூச்சை ஆழமாக இழுத்துவிட்டவரும், சரத்வான் மகனுமான கிருபர், செயல்படாமல் நின்றிருந்த பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பீடிக்கத் தொடங்கினார்.(10) அந்தப் போரில் சிறப்புமிக்கக் கௌதமரால் {கிருபரால்} தாக்கப்பட்டுப் பெரிதும் கலக்கமடைந்த திருஷ்டத்யும்னன் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(11) அப்போது அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} அவனது சாரதி, “ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, நலமாக இருக்கிறாயா? போரில் இதற்கு முன்னர் இதுபோன்ற பேரிடரில் நீ சிக்குவதை நான் கண்டதில்லை.(12) உன் முக்கிய அங்கங்களைக் குறிபார்த்து அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் {கிருபரால்} ஏவப்படுபவையும், முக்கிய அங்கங்களை ஊடுருவவல்லவையுமான இந்தக் கணைகள் உன்னைத் தாக்காமல் இருப்பது நல்லூழ் தரும் ஒரு வாய்ப்பாலேயே.(13) கடலால் திருப்பப்படும் ஓர் ஆற்றின் ஓட்டத்தைப் போல, இப்போது நான் இந்தத் தேரைத் திருப்பப்போகிறேன். உன் ஆற்றலை அழிக்கும் அந்தப் பிராமணர் {கிருபர்}, உன்னால் கொல்லப்பட முடியாதவர் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {திருஷ்டத்யும்னனின் சாரதி}.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படிச் சொல்லப்பட்ட திருஷ்டத்யும்னன் மெதுவாக, “ஓ! ஐயா {சாரதியே}, என் மனம் கலங்குகிறது, என் அங்கங்கள் வியர்க்கின்றன. என் உடல் நடுங்குகிறது. எனக்கு மயிர்க்கூச்சமும் ஏற்படுகிறது. போரில் அந்தப் பிராமணரைத் தவிர்த்துவிட்டு, மெதுவாக அர்ஜுனர் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! தேரோட்டியே, அர்ஜுனர், அல்லது பீமசேனர் ஆகியோரை அடைந்ததும், வளமை எனதாகும். இதுவே எனது உறுதியான நம்பிக்கை” என்றான்.(17) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குதிரைகளைத் தூண்டிய அந்தத் தேரோட்டி, உமது துருப்புகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்க வில்லாளியுமான பீமசேனன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(18) ஓ! ஐயா, அவ்விடத்தில் இருந்து திருஷ்டத்யும்னனின் தேர் விலகிச் செல்வதைக் கண்ட கௌதமர் {கிருபர்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவியபடையே அதைப் பின்தொடர்ந்து சென்றார்.(19) அந்த எதிரிகளை அழிப்பவர், மீண்டும் மீண்டும் தன் சங்கையும் முழங்கினார். உண்மையில் அவர் {கிருபர்}, தானவன் நமுசியை {நமூச்சியை} முறியடித்த இந்திரனைப் போலவே, அந்தப் பிருஷதன் மகனை முறியடித்தார்.(20)

பீஷ்மரின் மரணத்திற்குக் காரணனும், வெல்லப்பட முடியாதவனுமான சிகண்டி, தன்னோடு சிரித்துக் கொண்டே போரிட்டுக் கொண்டிருந்த ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} அந்தப் போரில் தடுக்கப்பட்டான்.(21) எனினும் சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த ஹிருதிகனோடு {கிருதவர்மனோடு} மோதி, ஐந்து கூரிய கணைகளாலும், அகன்ற தலை கணைகளாலும் {பல்லங்களாலும்} அவனது {கிருதவர்மனது} தோள்பூட்டைத் தாக்கினான்.(22) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், சினத்தால் நிறைந்து, சிறகு படைத்த அறுபது கணைகளால் தன் எதிரியைத் துளைத்தான். பிறகு ஒற்றைக்கணையொன்றால் அவன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே அவனது {சிகண்டியின்} வில்லை வெட்டினான்.(23) அந்த வலிமைமிக்கத் துருபதன் மகனை {சிகண்டி}, கோபத்தால் நிறைந்து மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(24) பிறகு அந்தச் சிகண்டி, ஓ! ஏகாதிபதி, பெரும் வேகம் கொண்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான தொண்ணூறு கணைகளைத் தன் எதிரியின் {கிருதவர்மனின்} மீது ஏவினான். எனினும் அந்தக் கணைகள் அனைத்தும் கிருதவர்மனின் கவசத்தில் இருந்து எதிர்விசை கொண்டு விழுந்தன.(25)

அக்கணைகள் எதிர்விசை கொண்டு பூமியின் பரப்பில் இறைந்து கிடப்பதைக் கண்ட சிகண்டி, ஒரு கத்தி தலைக் கணையால் கிருதவர்மனின் வில்லை அறுத்தான்.(26) கோபத்தால் நிறைந்த அவன் {சிகண்டி}, கொம்புகளற்ற காளைக்கு ஒப்பாக வில்லற்றவனாக இருந்த ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கரங்களையும், மார்பையும் எண்பது கணைகளால் தாக்கினான்.(27) நீரால் நிரம்பிய கொள்கலனொன்று நீரைக் கொப்பளிப்பதைப் போலக் கணைகளால் கிழித்துச் சிதைக்கப்பட்டிருந்த கிருதவர்மன், சினத்தால் நிறைந்திருந்தாலும், தன் அங்கங்களின் ஊடாகக் குருதியைக் கக்கினான்.(28) குருதியில் குளித்த அந்தப் போஜ மன்னன் {கிருதவர்மன்}, மழைக்குப் பிறகு செஞ்சுண்ண நீரோடையைக் கீற்றுகளாக வெளியிடும் மலையொன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(29)

அப்போது, நாணேற்றப்பட்டதும், கணையொன்று பொருத்தப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அந்தப் பலமிக்கக் கிருதவர்மன், சிகண்டியின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(30) தோள்ப்பூட்டில் இக்கணைகளால் தைக்கப்பட்டிருந்த சிகண்டி, கிளைகளும், கொப்புகளும் பரப்பிய பெரிய மரம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(31) ஒருவரையொருவர் துளைத்துக்கொண்டே குருதியில் குளித்து அவ்விரு போராளிகளும், கொம்புகளால் ஒன்றையொன்று குத்திக் கொள்ளும் இரண்டு காளைகளுக்கு ஒப்பாக இருந்தனர்.(32) கவனமாக ஒருவரையொருவர் கொல்ல முயன்ற அவ்வரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அந்த அரங்கத்தில் ஓராயிரம் வளையங்களில் நகர்ந்து சென்றனர்.(33)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரனிடம்}, அம்மோதலில் கிருதவர்மன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் பிருஷதன் மகனை {சிகண்டியைத்} துளைத்தான்.(34) பிறகு தாக்குபவர்களில் சிறந்தவனான அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, பெரும் சுறுசுறுப்புடன் பயங்கரமான ஒரு மரணக் கணையைத் தன் எதிரியின் {சிகண்டியின்} மீது ஏவினான்.(35) அதனால் தாக்கப்பட்ட சிகண்டி, விரைவில் மயக்கமடைந்தான். மலைப்புக்கு ஆட்பட்ட அவன் {சிகண்டி}, தன் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டே தன்னைத் தாங்கிக் கொண்டான்.(36) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனுடைய சாரதி, விரைவாக அவனைப் {சிகண்டியைப்} போரில் இருந்து கொண்டு சென்றான். ஹிருதிகன் மகனின் கணையால் எரிக்கப்பட்ட அவன் {சிகண்டி},மீண்டும் மீண்டும் பெருமூச்சை விட்டான்.(37) துருபதனின் வீரமகன் {சிகண்டி} தோற்ற பிறகு, ஓ! தலைவா, அனைத்துப் பக்கங்களிலும் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, களத்தில் இருந்து வெளியே ஓடியது” {என்றான் சஞ்சயன்}.(38)

சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 27-சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; பல்வேறு வீரர்களுடன் போரிட்டு அவர்களைக் கொன்றது; குருதிச் சேற்றில் திரிந்த அர்ஜுனனின் தேர்; சம்சப்தகர்களை வென்ற அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வெண்குதிரை கொண்டோனும் (அர்ஜுனனும்) கூட, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பஞ்சுக்குவியலை அணுகும் காற்றைப் போல உமது படையை முறியடித்து அனைத்துப் பக்கங்களிலும் அதைச் சிதறடித்தான்.(1) அவனை எதிர்த்து திரிகர்த்தர்கள், சிபிக்கள், கௌரவர்கள், சால்வர்கள், சம்சப்தகர்கள் ஆகியோரும், நாராயணர்களைக் கொண்ட படையும் விரைந்தன.(2) சத்யசேனன், சந்திரதேவன், மித்ரதேவன், சுருதஞ்சயன், சுஸ்ருதன் மகன், சித்திரசேனன் மற்றும் மித்ரவர்மன் ஆகியோரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளிகளும், பல்வேறு ஆயுதங்களை அறிந்தவர்களுமான தன் தம்பிகள் மற்றும் மகன்கள் ஆகியோரால் சூழப்பட்ட திரிகர்த்தர்களின் மன்னனும் {சுசர்மனும்},(4) பெருங்கடலை நோக்கிப் பாயும் சீற்றமிகு நீரோடையைப் போல அந்தப் போரில் கணைமாரியிறைத்தபடியே திடீரென முன்னேறிச் சென்றனர்.(5)

லட்சக்கணக்கில் இருந்த அந்தப் போர்வீரர்கள், கருடனைக் கண்ட பாம்புகளைப் போலவே அர்ஜுனனை அணுகிய அழிந்து போவது தெரிந்தது.(6) போரில் கொல்லப்பட்டாலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க எருப்பில் இருந்து ஒருபோதும் பின்வாங்காத பூச்சிகளைப் போலவே அவர்கள் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விட்டு அகலவில்லை.(7) அம்மோதலில் சத்யசேனன், மூன்று கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான், மித்ரதேவன் அறுபத்து மூன்றாலும், சந்திரதேவன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்.(8) மித்ரவர்மன் அவனை எழுபத்து மூன்று கணைகளாலும், சுஸ்ருதன் மகன் ஏழாலும் துளைத்தனர். சத்ருஞ்சயன் இருபதாலும், சுசர்மன் ஒன்பதாலும் அவனைத் துளைத்தனர்.(9) அம்மோதலில் இவ்வாறு பலரால் துளைக்கப்பட்ட அர்ஜுனன், பதிலுக்கு அம்மன்னர்கள் அனைவரையும் துளைத்தான். உண்மையில், சுஸ்ருதன் மகனை ஏழு கணைகளாலும், சத்யசேனனை மூன்றாலும் அவன் துளைத்தான்,(10) சத்ருஞ்சயனை இருபதாலும், சந்திரதேவனை எட்டாலும், மித்ரதேவனை நூறாலும், சுருதசேனனை மூன்றாலும்,(11) மித்ரவர்மனை ஒன்பதாலும், சுசர்மனை எட்டாலும் அவன் துளைத்தான்.

பிறகு, கல்லில் கூராக்கப்பட்ட எண்ணற்ற கணைகளைக் கொண்டு, தலைப்பாகையால் அலங்கரிக்கப்பட்ட சுஸ்ருதன் மகனின் தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான்.(12) பிறகு எந்தத் தாமதமும் செய்யாமல் எண்ணற்ற பிற கணைகளால் அவன் சந்திரதேவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறரைப் பொருத்தவரைத் தீவிரமாகப் போரிட்ட அவன் {அர்ஜுனன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் தடுத்தான்.(13) அப்போது சினத்தால் நிறைந்த சத்யசேனன், அந்தப் போரில் கிருஷ்ணனைக் குறி பார்த்து, உறுதிமிக்க ஒரு வேலை ஏவி, சிங்க முழக்கம் செய்தான்.(14) இரும்புவாயும், தங்கப் பிடியும் கொண்ட அந்த வேலானது, உயர் ஆன்ம மாதவனின் {கிருஷ்ணனின்} இடது கரத்தைத் துளைத்துச் சென்று பூமிக்கு ஊடுருவியது.(14) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு அந்தப் பெரும்போரில் வேலால் துளைக்கப்பட்ட மாதவனின் {கிருஷ்ணனின்} கரங்களில் இருந்து சாட்டையும், கடிவாளமும் கீழே விழுந்தன.(16)

வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அங்கம் துளைக்கப்பட்டதைக் கண்டவனும், பிருதையின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கோபமனைத்தையும் திரட்டிக் கொண்டு வாசுதேவனிடம்,(17) “ஓ! வலிய கரங்கொண்டவனே, ஓ! பலமிக்கவனே, என் கூர்மையான கணைகளால் சத்யசேனனை நான் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவதற்கு ஏதுவாக, அவனிடம் {சத்யசேனனிடம்} தேரைக் கொண்டு செல்வாயாக” என்றான்.(18) பிறகு அந்தச் சிறப்புமிக்கக் கேசவன் {கிருஷ்ணன்}, வேகமாகத் தன் சாட்டையையும், கடிவாளங்களையும் எடுத்துக் கொண்டு, சித்திரசேனனின் வாகனத்திற்கு முன்பு அந்தத் தேரைக் கொண்டு செல்லுமாறு அந்தக் குதிரைகளைச் செய்தான்.(19) அண்டத்தின் ஆட்சியாளன் {கிருஷ்ணன்} இவ்வாறு துளைக்கப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், பிருதையின் மகனுமான அந்தத் தனஞ்சயன், சில கூரிய கணைகளால் சத்யசேனனைத் தடுத்து,(20) காதுகுண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்டவனும், படையின் தலைமையில் நின்றவனுமான அந்த மன்னனுடைய பெரிய தலையைப் பெரும் கூர்மையைக் கொண்ட எண்ணற்ற அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவனது உடலில் இருந்து வெட்டினான்.(21) இவ்வாறு சத்யசேனனின் தலையை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, எண்ணற்ற கூரிய கணைகளால் சித்திரவர்மனையும் அகற்றி {கொன்று}, கன்றின் பல்லலைப் போன்ற ஒரு கூரிய கணையால் {வத்சதந்தத்தால்} பின்னவனின் சாரதியையும் அகற்றினான்.(22)

சினத்தால் நிறைந்த அந்த வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால், சம்சப்தகர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வீழ்த்தினான்.(23) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, வெள்ளிச் சிறகுகளைக் கொண்ட கத்தி தலை கணையொன்றால் சிறப்புமிக்க மித்ரசேனனின் தலையை வெட்டினான். மேலும் சினத்தால் நிறைந்த அவன் சுசர்மனின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(24) அப்போது கோபத்தால் நிறைந்தவர்களான சம்சப்தகர்கள் அனைவரும், தனஞ்சயனை {அர்ஜுனனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு கணைமாரியால் அவனைப் பீடிக்கத் தொடங்கி, திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் தங்கள் கூச்சல்களால் நிறைத்தனர்.(25) இவ்வாறு அவர்களால் பீடிக்கப்பட்டவனும், அளவில்லா ஆன்மா கொண்டவனும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, ஐந்திர ஆயுதத்தை {ஐந்திராஸ்திரத்தை} அழைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதத்தில் இருந்து ஆயிரகணக்கான கணைகள் தொடர்ச்சியாக வெளிப்படத் தொடங்கின.(26)

அப்போது, ஓ! மன்னா, கொடிமங்கள், அம்பறாத்தூணிகள், நுகத்தடிகள், அச்சுக்கட்டைகள், சக்கரங்கள், பூட்டாங்கயிறுகள், கூபரங்கள், தேர்த்தட்டுகள், கூபரங்கள் ஆகியவற்றைச் சுற்றிலும் கொண்டவையும், குதிரைகள், சூலங்கள், கதாயுதங்கள், முள் பதித்த தண்டங்கள், ஈட்டிகள், வேல்கள், கோடரிகள், சக்கரங்களுடன் கூடிய சதாக்னிகள், கணைகள், தொடைகள், கழுத்தாரங்கள், அங்கதங்கள், கேயூரங்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மாலைகள், கவசங்கள், ஓ! பாரதரே, குடைகள், விசிறிகள், கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகள் ஆகியவற்றுடன் கூடியவையுமான தேர்கள் விழுகையில் உரத்த ஆரவாரம் கேட்டது.(27-31) காது குண்டலங்கள் மற்றும் அழகிய கண்களால் அலங்கரிக்கப்பட்டவையும், முழு நிலவுக்கு ஒப்பானவையுமான தலைகள் ஒவ்வொன்றும், ஆகாயத்து நட்சத்திரங்களைப் போலக் களத்தில் கிடந்தன.(32) அழகிய மலர்மாலைகள், சிறந்த ஆடைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்தனக்குழம்பு பூசப்பட்டவையுமாகக் கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் போர்வீரர்களின் உடல்கள் பலவாக இருந்தன.(33)

பயங்கரமாக இருந்த அந்தப் போர்க்களமானது, நீராவி வடிவங்கள் நிறைந்து மேகங்களுடன் கூடிய ஆகாயத்தைப் போலத் தெரிந்தது. கொல்லப்பட்ட பெரும் வலிமைமிக்க இளவரசர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுடனும்,(34) வீழ்ந்திருந்த யானைகள், குதிரைகள் ஆகியவற்றுடனும் கூடிய பூமியானது, மலைகளால் விரவிக் கிடப்பதைப் போல அந்தப் போரில் கடக்க முடியாததானது.(35) தொடர்ச்சியாகத் தன் எதிரிகளைக் கொல்வதிலும், யானைகள் மற்றும் குதிரைகளைத் தன் அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} தாக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறப்புமிக்கப் பாண்டவனின் தேர்ச் சக்கரங்களுக்கு அங்கே பாதையேதும் இல்லை.(36) ஓ! ஐயா, அந்தப் போரில் குருதிச் சேற்றில் திரிவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவனது {அர்ஜுனனின்} தேர்ச்சக்கரங்கள் நிற்பது போலத் தெரிந்தது.(37) எனினும், மனம், அல்லது காற்றின் வேகத்துடன் கூடிய அவனது {அர்ஜுனனது} குதிரைகள், நகர மறுத்த அந்தச் சக்கரங்களைப் பெரும் முயற்சியுடனும், உழைப்புடனும் இழுத்தன.(38) இவ்வாறு வில்தரித்த அந்தப் பாண்டு மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்தப் படையானது, எதிரியை எதிர்த்து எஞ்சிநிற்போன் எவனும் இல்லாமல் கிட்டத்தட்ட மொத்தமாகவே தப்பி ஓடியது.(39) அந்தப் போரில் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களை வென்றதும், பிருதையின் மகனான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, புகையற்றச் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமா-யுதிஷ்டிரனை அச்சமில்லாமல் எதிர்கொண்ட துரியோதனன்; துரியோதனனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று, அவனது கொடிமரம், வில் மற்றும் வாள் ஆகியவற்றை வீழ்த்திய யுதிஷ்டிரன்; பேராபத்தான நிலையில் துரியோதனன் தரையில் நிற்பதைக் கண்டு அங்கே விரைந்த கௌரவர்கள்; யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்ட பாண்டவர்கள்; அதன் பிறகு நடந்த போர் குறித்த வர்ணனை…கத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.(40)

துரியோதனனை நிராயுதபாணியாக்கிய யுதிஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 28-யுதிஷ்டிரனை அச்சமில்லாமல் எதிர்கொண்ட துரியோதனன்; துரியோதனனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று, அவனது கொடிமரம், வில் மற்றும் வாள் ஆகியவற்றை வீழ்த்திய யுதிஷ்டிரன்; பேராபத்தான நிலையில் துரியோதனன் தரையில் நிற்பதைக் கண்டு அங்கே விரைந்த கௌரவர்கள்; யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்ட பாண்டவர்கள்; அதன் பிறகு நடந்த போர் குறித்த வர்ணனை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரன் பெரும் எண்ணிக்கையிலான கணைகளை ஏவிக் கொண்டிருந்தபோது, மன்னன் துரியோதனன் அவனை {யுதிஷ்டிரனை} அச்சமற்ற வகையில் எதிர்கொண்டு வரவேற்றான்.(1) நீதிமானான அரசன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனை {துரியோதனனைத்} வேகமாகத் துளைத்து, மூர்க்கத்துடன் அவனை நோக்கி விரைந்து, “நில், நிற்பாயாக” என்றான்.(2) எனினும் துரியோதனன், ஒன்பது கணைகளால் பதிலுக்கு யுதிஷ்டிரனைத் துளைத்து, பெருங்கோபத்தால் நிறைந்து, அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால் யுதிஷ்டிரனின் சாரதியையும் தாக்கினான்.(3)

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பதிமூன்று கணைகளைத் துரியோதனன் மீது ஏவினான்.(4) நான்கு கணைகளால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {யுதிஷ்டிரன்}, தன் எதிரியின் {துரியோதனனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, ஐந்தாவதால், துரியோதனனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(5) ஆறாவதால் (குரு) மன்னனின் {துரியோதனனின்} கொடிமரத்தைப் பூமியில் வீழ்த்தி, ஏழாவதால் அவனது வில்லையும், எட்டாவதால் அவனது வாளையும் வீழ்த்தினான்.(6) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், மேலும் ஐந்து கணைகளால் அந்தக் குரு ஏகாதிபதியையும் {துரியோதனனையும்} ஆழமாகப் பீடித்தான்.(7) அப்போது உமது மகன், குதிரைகள் அற்ற அந்தத் தேரில் இருந்து இறங்கி, உடனடி ஆபத்துடன் கூடியவனாகப் பூமியில் நின்றான். பேரச்சம் கொள்ளத்தக்க அந்தச் சூழ்நிலையில் அவனைக் கண்டவர்களான கர்ணன், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிறர், மன்னனை {துரியோதனனை} மீட்கும் விருப்பத்தால் அவ்விடத்தை நோக்கித் திடீரென விரைந்தனர்.(8) பிறகு பாண்டுவின் மகன்கள் {பிறர்} அனைவரும் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டு அம்மோதலில் பங்கேற்றதால், ஒரு கடும் போர் அங்கே நிகழ்ந்தது.(9)

அந்தப் பெரும் போரில் ஆயிரக்கணக்கான எக்காளங்கள் முழங்கின, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணற்ற குரல்களின் குழப்பான ஆரவாரம் அங்கே எழுந்தது.(10) எங்கே கௌரவர்களுடன் பாஞ்சாலர்கள் போரிட்டார்களோ, அங்கே மனிதர்களோடு மனிதர்கள் நெருங்கினர் {போரிட்டனர்}, யானைகளோடு, முதன்மையான யானைகளும் நெருங்கின.(11) தேர்வீரர்கள் தேர்வீரர்களோடு நெருங்கினர், குதிரைகள் குதிரைகளோடும் நெருங்கின. பெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்தவர்களும், பெரும் திறன் கொண்டவர்களும், இருவர் இருவராகப் போரிடுபவர்களான பல்வேறு மனிதர்களும், விலங்குகளும், அந்தக் களத்தில் அழகாகக் காட்சியளித்தன.(12) பெரும் மூர்க்கம் கொண்டவர்களான அந்த வீரர்கள் அனைவரும், ஒருவருக்கொருவர் அழிவை ஏற்படுத்த விரும்பி, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் போரிட்டனர்.(13) அந்தப் போரில் அவர்கள், போர்வீரர்களின் (ஒப்பளிக்கப்பட்ட) நடைமுறைகளை நோற்று ஒருவரையொருவர் கொன்றனர். அவர்களில் எவரும் பின்னாலிருந்து {பின்புறத்தில் இருந்து} போரிடவில்ல.(14) மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்தப் போர் அழகிய தன்மையைக் கொண்டிருந்தது. விரைவில் அது, போராளிகள் ஒருவருக்கொருவர் எந்த மதிப்பையும் காட்டாதவகையில் வெறிபிடித்த மனிதர்களின் மோதலாக மாறியது.(15)

தேர்வீரன் யானையை அணுகி, கூரிய கணைகளால் துளைத்து, நேரான கணைகளால் அதை யமனிடம் அனுப்பினான்.(16) அந்தப் போரில் பல்வேறு இடங்களில் யானைகள் குதிரைகளை அணுகி, அவற்றில் பலவற்றைக் கீழே இழுத்து (தங்கள் தந்தங்களால்) மிகக் கொடூரமாக அவற்றைக் கிழித்தன.(17) பெரும் எண்ணிக்கையிலான குதிரைவீரர்களும் கூட, குதிரைகளில் முதன்மையான பலவற்றைச் சூழ்ந்து கொண்டு, தங்கள் உள்ளங்கைகளால் உரத்த ஒலியை உண்டாக்கி, அவற்றுடன் நெருங்கினர்.(18), அந்தக் குதிரைவீரர்கள், அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்த குதிரைகளையும், அதே போலக் களத்தில் பின்புறத்திலும், பக்கங்களிலும் திரிந்து கொண்டிருந்த பெரும் யானைகள் பலவற்றையும் கொன்றனர்.(19) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட யானைகள், பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளை முறியடித்து, தங்கள் தந்தங்களால் அவற்றைக் கொன்றன, அல்லது பெரும்பலத்துடன் அவற்றை நசுக்கின.(20) கோபத்தால் நிறைந்த சில யானைகள் தங்கள் தந்தங்களால் குதிரைவீரர்களோடு கூடிய குதிரைகளைத் துளைத்தன. வேறு சில, அவற்றைப் பெரும்பலத்துடன் பிடித்து, பெரும்பலத்துடன் தரையில் வீசியெறிந்தன.(21) சரியான வாய்ப்புகளைப் பெற்ற காலாட்படை வீரர்களால் தாக்கப்பட்ட பல யானைகள், வலியால் பயங்கரமாகக் கூச்சலிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.(22)

அந்தப் பெரும்போரில், தங்கள் ஆபரணங்களை வீசியெறிந்துவிட்டு, ஓடிப்போன காலாட்படை வீரர்களில் பலர், அந்தக் களத்தில் விரைவாக {எதிரிகளால்} சூழப்பட்டனர். பெரும் யானைகளைச் செலுத்திய யானைவீரர்கள், வெற்றியின் குறியீடுகளைப் புரிந்து கொண்டு, தங்கள் விலங்குகளுடன் சுழன்று, அவற்றைக் கொண்டு அந்த அழகிய ஆபரணங்களைப் பிடிக்கச் செய்து, தங்கள் தந்தங்களால் அவர்களைத் துளைக்கச் செய்தனர்.(23,24) பெரும் மூர்க்கத்தையும், கடும் வலிமையையும் கொண்ட வேறு சில காலாட்படை வீரர்கள், இவ்விளையாட்டுகளில் ஈடுபடும் அந்த யானைவீரர்களைச் சூழ்ந்து கொண்டு அவர்களைக் கொல்லத் தொடங்கினர்.(25) அந்தப் பெரும்போரில் மேலும் சிலர், யானைகளின் துதிக்கைகளால் காற்றில் தூக்கி வீசப்பட்டுக் கீழே விழுகையில், பயிற்சி பெற்ற அவ்விலங்குகளின் தந்தநுனிகளால் துளைக்கப்பட்டனர்.(26) திடீரெனப் பிற யானைகளால் பிடிக்கப்பட்ட சிலர், அவற்றின் தந்தங்களால் தங்கள் உயிரை இழந்தனர். தங்கள் படைப்பிரிவுகளில் இருந்து வேறு படைப்பிரிவுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட சிலர், ஓ! மன்னா, அந்தப் பெரும் யானைகளால் மீண்டும் மீண்டும் தரையில் உருட்டப்பட்டுச் சிதைக்கப்பட்டனர்.(27) வேறு சிலர், விசிறிகளைப் போல உயரச் சுழற்றப்பட்டு அந்தப் போரில் கொல்லப்பட்டனர். சிலர், நின்று கொண்டிருந்த யானைகள் பிறவற்றுக்கு முன்னிலையில் அங்கேயும் இங்கேயும் களத்தில் திரிந்த யானைகளால் தங்கள் உடல்கள் அதிகமாகத் துளைக்கப்பட்டு, கிழிக்கப்பட்டனர்.(28)

பல யானைகள், தங்கள் குமடுகள், மத்தகங்கள் மற்றும் தங்கள் தந்தங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சூலங்களாலும், வேல்களாலும், ஈட்டிகளாலும், ஆழமாகக் காயம்பட்டன.(29) தங்கள் பக்கங்களில் நின்றிருந்த கடுமையான தேர்வீரர்களாலும், குதிரைவீரர்களாலும் மிகவும் பீடிக்கப்பட்ட பல யானைகள் தங்கள் உடல் பிளக்கப்பட்டுப் பூமியில் விழுந்தன.(30) அந்தப் பயங்கரப் போரில், தங்கள் குதிரைகளில் இருந்த குதிரைவீரர்கள் பலர், தங்கள் வேல்களால் காலாட்படை வீரர்களைத் தாக்கி, அவர்களைப் பூமியில் செருகினர், அல்லது பெரும்பலத்துடன் அவர்களை நசுக்கினர்.(31) மூர்க்கமான, பயங்கரமான அந்தப் போரில் சில யானைகள், ஓ ஐயா, கவசம் பூண்ட தேர்வீரர்களை அணுகி, அவர்களது வாகனங்களில் இருந்து அவர்களை உயரத்தூக்கி, பெரும்பலத்துடன் அவர்களைக் கீழே பூமியில் தூக்கி விசின.(32) துணிக்கோல் கணையால் கொல்லப்பட்ட சில யானைகள், இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.(33)

போராளிகளுடன் மோதிய போராளிகள், தங்கள் கை முட்டிகளால் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர், அல்லது ஒருவரையொருவர் முடியைப் பற்றி இழுத்துக் கீழே வீசி ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(34) வேறு சிலர் தங்கள் கரங்களை விரித்துக் கீழே பூமியில் தங்கள் எதிரிகளை வீசி, தங்கள் பாதங்களை அவர்களது மார்புகளில் வைத்துப் பெரும் சுறுசுறுப்புடன் அவர்களது தலைகளை வெட்டினர்.(35) சில போராளிகள், ஓ! மன்னா, இறந்து போன சில எதிரிகளைத் தங்கள் பாதங்களால் தாக்கினர். ஓ! மன்னா, சிலர், கீழே விழும் எதிரியின் தலையைத் தங்கள் வாளால் வெட்டினர்.(36) சிலர், உயிருடன் உள்ள எதிரியின் உடலில் தங்கள் ஆயுதத்தால் குத்தினர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கைமுட்டிகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஒருவரையொருவர் மயிர்ப்பற்றிக் கொண்டவர்கள், அல்லது வெறுங்கரங்களுடன் ஒருவரோடொருவர் மற்போரிட்டவர்கள் ஆகிய போராளிகளுக்கிடையில் அங்கே கடும்போர் நடந்தது.(37) பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைப் பயன்படுத்திய போராளிகள், வேறு சிலருடன் போரிட்டுக் கொண்டிருந்தவர்களும், அவர்களைக் காணாதவர்களுமான போராளிகளின் உயிர்களைப் பல சந்தர்ப்பங்களில் எடுத்தனர்.(38)

பொதுவாக நடந்த அந்தப் போரில், போராளிகள் அனைவரும் சிதைக்கப்பட்ட போது, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தலையில்லா முண்டங்கள் அந்தக் களத்தில் எழுந்து நின்றன.(39) உறைந்த குருதியில் நனைந்த ஆயுதங்களும், கவசங்களும், மிக அழகிய சிவப்பால் {சிவப்பு நிறத்தால்} வண்ணமேற்றப்பட்ட துணிகளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(40) பயங்கர ஆயுத மோதல்களால் குறிக்கப்பட்ட அந்தக் கடும்போரானது இவ்வாறே நடந்தது. வெறிபிடித்து முழங்கும் கங்கையின் ஓடையானது மொத்த அண்டத்தையுமே தன் ஆரவாரத்தால் நிறைப்பதைப் போல அது தெரிந்தது.(41) கணைகளால் பீடிக்கப்பட்ட போர்வீரர்களால், எதிரிகளிடமிருந்து தங்கள் நண்பர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. வெற்றியை வேண்டிய மன்னர்கள், தாங்களும் போரிட வேண்டும் என்று நினைத்தே அங்கே போரிட்டனர்.(42) அந்தப் போர்வீரர்கள், அருகில் வந்த நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் கொன்றனர். இரு படைகளையுஞ் சேர்ந்த போராளிகளும், அவர்களைச் சீற்றத்துடன் தாக்கிய இருபடை வீரர்களாலும் தங்கள் அறிவை இழந்தனர் {மயக்கமடைந்தனர்}.(43)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நொறுங்கிய தேர்கள், விழுந்த யானைகள், தரையில் கிடக்கும் குதிரைகள், வீழ்த்தப்பட்ட மனிதர்கள்,(44) உறைந்த இரத்தம் மற்றும் சதைகளின் சேறு ஆகியவற்றுடன் கூடிய பூமியானது, குருதியோடைகளால் மறைக்கப்பட்டு, விரைவில் கடக்கப்பட முடியாததானது.(45) கர்ணன் பாஞ்சாலர்களைக் கொன்றான், அதே வேளையில் தனஞ்சயன் {அர்ஜுனன்} திரிகர்த்தர்களைக் கொன்றான். ஓ! மன்னா, பீமசேனன், குருக்களையும், அவர்களின் படைப்பிரிவின் யானைகள் அனைத்தையும் கொன்றான்.(46) இவ்வாறே, சூரியன் நடுவானைக் கடந்த அந்த வேளையில், பெரும்புகழை வெல்லும் விருப்பத்தால் உந்தப்பட்ட குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு துருப்புகளின் அழிவும் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(47)

துரியோதனனைக் கொல்லாமல் விட்ட யுதிஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 29-யுதிஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நடந்த போர் எவ்வாறு தொடர்ந்தது என்று திருதராஷ்டிரன் கேட்க அதை விவரித்த சஞ்சயன்; தேரை இழந்திருந்த துரியோதனன், மற்றொரு தேரை அடைந்து யுதிஷ்டிரனை எதிர்த்தது; யுதிஷ்டிரனின் வில்லை வெட்டிய துரியோதனன்; துரியோதனனின் கொடிமரத்தையும், வில்லையும் வெட்டிய யுதிஷ்டிரன்; கதாயுதத்தை எடுத்த துரியோதனன்; ஈட்டி ஒன்றால் துரியோதனனின் மார்பைத் துளைத்து அவனை மயக்கமடையச் செய்த யுதிஷ்டிரன்; துரியோதனனைக் கொல்லாதவாறு யுதிஷ்டிரனைத் தடுத்த பீமசேனன்; துரியோதனனை அடைந்த கிருதவர்மன்; கிருதவர்மனை எதிர்த்து விரைந்த பீமசேனன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, கசப்பானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையுமான துன்பங்கள் பலவற்றையும், என் மகன்களால் நீடிக்கும் இழப்புகளையும் உன்னிடமிருந்து நான் கேட்டேன்.(1) ஓ! சூதா {சஞ்சயா}, நீ என்னிடம் சொன்னதிலிருந்தும், போரில் {நாம்} போரிட்டு வரும் முறையிலிருந்தும், இனி மேல் கௌரவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது என் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.(2) அந்தப் பயங்கரப் போரில் துரியோதனன், தேரற்றவனாகச் செய்யப்பட்டான். (அப்போது) தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு போரிட்டான்? அரசன் துரியோதனன் பதிலுக்கு எவ்வாறு போரிட்டான்?(3) அந்தப் பிற்பகலில் வேளையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது? ஓ! சஞ்சயா, உரையாற்றுவதில் திறம் கொண்டவனாக இருப்பதால் இவை யாவற்றையும் எனக்கு நீ விரிவாகச் செல்வாயாக” என்றான்.(4)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரு படைகளின் துருப்புகளும் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின்படி போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ!மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன், மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, வேகமாகத் தன் சாரதியிடம், “செல், செல்வாயாக.(5,6) ஓ! சாரதியே, கவசம்பூண்டவனும், தன் தலைக்கு மேலே பிடிக்கப்பட்டிருக்கும் குடையின் கீழ் ஒளிர்ந்து கொண்டிருப்பவனுமான பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்} எங்கிருக்கிறானோ, அங்கே என்னை விரைந்து கொண்டு செல்வாயாக” என்றான்.(7) மன்னனால் {துரியோதனனால்} இவ்வாறு தூண்டப்பட்ட சாரதி, தன் அரசத்தலைவனின் {துரியோதனனின்} சிறந்த தேரை யுதிஷ்டிரனின் முகத்தை நோக்கி விரைவாகத் தூண்டினான்.(8) இதனால் சினத்தால் நிறைந்தவனும், மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்தவனுமான யுதிஷ்டிரனும் தன் சாரதியிடம், “துரியோதனன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக” என்று சொல்லித் தூண்டினான்.(9)அப்போது, சகோதரர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், வீரர்களுமான அவ்விருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். பெரும் சக்தி கொண்டவர்களும், கோபத்தால் நிறைந்தவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும், பெரும் வில்லாளிகளுமான அவ்விருவரும் அந்தப் போரில் தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(10) பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் மன்னன் துரியோதனன், கல்லில் கூராக்கப்பட்ட அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால் அந்த அறம்சார்ந்த ஏகாதிபதியின் வில்லை இரண்டாக வெட்டினான்.(11) சினத்தால் நிறைந்த யுதிஷ்டிரனால் இந்த அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன் உடைந்த வில்லை வீசிவிட்டுக் கோபத்தால் கண்கள் சிவந்தவனும், தன் படைகளுக்குத் தலைமையில் நின்றவனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, துரியோதனனின் கொடிமரத்தையும், வில்லையும் வெட்டினான்.(13) பிறகு, துரியோதனன் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு பாண்டுவின் மகனைத் துளைத்தான். சினத்தால் நிறைந்த அவர்கள், ஒருவரை நோக்கி மற்றவர் கணைமாரி ஏவுவதைத் தொடர்ந்தனர்.(14)

ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய அவர்கள், கோபக்காரச் சிங்கங்கள் இரண்டிற்கு ஒப்பாகவே இருந்தனர். முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போல அந்தப் போரில் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(15) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தேவையான நேரத்தில் தாமதிக்கும் {சில} தவறுகளை ஒருவரிடமொருவர் எதிர்பார்த்தபடியே தொடர்ந்து {அங்கே} திரிந்து கொண்டிருந்தனர். பிறகு, முழுமையாக வளைக்கப்பட்ட விற்களில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் காயமடைந்த அவ்விரு போர்வீரர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்ந்திருக்கும் கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர். ஓ! மன்னா, அப்போது அவர்கள் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் செய்தனர்.(16,17) மனிதர்களின் ஆட்சியாளர்களான அவ்விருவரும், அந்தப் பயங்கரமான போரில், தங்கள் உள்ளங்கைகளால் உரத்த ஒலிகளை உண்டாக்கி, தங்கள் விற்களில் உரக்க நாணொலிக்கவும் செய்தனர். அவர்கள் தங்கள் சங்குகளையும் பெரும்பலத்துடன் ஊதினார்கள்.(18) மேலும் அவர்கள் ஒருவரையொருவர் அதிகமாகப் பீடித்தனர். அப்போது மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, தடுக்கப்பட முடியாதவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான மூன்று கணைகளால் உமது மகனின் {துரியோதனனின்} மார்பைத் தாக்கினான். எனினும், உமது அரசமகன் {துரியோதனன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான ஐந்து கூரிய கணைகளால் அவனைப் {யுதிஷ்டிரனைப்} பதிலுக்குத் துளைத்தான்.(19-20)

அப்போது மன்னன் துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அனைவரையும் கொல்லவல்லதும், மிகக் கூர்மையானதும், சுடர்மிக்கப் பெரிய பந்தத்திற்கு ஒப்பானதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை வீசினான்.(21) அது சென்று கொண்டிருந்தபோதே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கூரிய கணைகளால் அதை மூன்று துண்டுகளாக விரைவாக வெட்டி, ஐந்து கணைகளால் துரியோதனனையும் துளைத்தான்.(22) தங்கக் கைப்பிடியைக் கொண்டதும், விஸ் என்ற உரத்த ஒலியை உண்டாக்கியதுமான அந்த ஈட்டியானது, கீழே விழுந்தபோது, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய பெரிய பந்தம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(23) அந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கூர்முனை கொண்ட ஒன்பது கூரிய கணைகளால் யுதிஷ்டிரனைத் தாக்கினான்.(24) தன் வலிமைமிக்க எதிரியால் {துரியோதனனால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த எதிரிகளை எரிப்பவன் {யுதிஷ்டிரன்}, துரியோதனன் மீது குறி வைப்பதற்காகக் கணையொன்றை எடுத்தான்.(25) வலிமைமிக்க யுதிஷ்டிரன் அந்தக் கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(26) பிறகு, சினத்தால் நிறைந்தவனும், பெரும் வீரத்தைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அதை {அந்தக் கணையைத்} தன் எதிரியின் மீது ஏவினான். வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனைத் {துரியோதனனைத்} தாக்கிய அந்தக் கணை,(27) அவனை மலைக்கச் செய்த பிறகு, (அவனது உடலை ஊடுருவி கடந்து சென்று) பூமிக்குள் நுழைந்தது.

பிறகு, கோபத்தால் நிறைந்த துரியோதனன், பெரும் மூர்க்கத்தைக் கொண்ட கதாயுதம் ஒன்றை உயர்த்திக் கொண்டே,(28) (குருக்களுக்கும், பாண்டுக்களுக்கும் இடையில் இருந்த) பகைமைகளை முடித்துக் கொள்வதற்காக, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான். கதாயுதத்தை உயர்த்தியவனும், தண்டத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பானவனுமான அவனை {துரியோதனனைக்} கண்ட(29) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கதும், காந்தியால் சுடர்விடுவதும், பெரும் மூர்க்கத்தைக் கொண்டதும், சுடர்விடும் பந்தத்தைப் போலத் தெரிந்ததுமான ஈட்டி {சக்தி ஆயுதம்} ஒன்றை உமது மகனின் {துரியோதனனின்} மீது வீசினான்.(30) தன் தேரில் நின்று கொண்டிருந்த குரு இளவரசன் {துரியோதனன்}, அந்தக் கணையால் மார்பில் ஆழமாகத் துளைக்கப்பட்டு, ஆழமான வலியை உணர்ந்து, கீழே விழுந்து மயக்கமடைந்தான்.(31) அப்போது தன் சபதத்தை நினைவுகூர்ந்த பீமன், யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இவன் உம்மால் கொல்லப்படக்கூடாது” என்றான். இதனால் யுதிஷ்டிரன் (தன் எதிரிக்கு இறுதி அடியைக் கொடுப்பதில் இருந்து) விலகினான்[1].(32)அந்த நேரத்தில், துன்பப் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த உமது அரசமகனிடம் {துரியோதனனிடம்}, கிருதவர்மன் மிக வேகமாக வந்து சேர்ந்தான்.(33) அப்போது பீமன், தங்கத்தாலும், சணலாலான கயிறுகளாலும் அலங்கரிக்கப்பட்ட கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்தப் போரில் கிருதவர்மனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(34) அந்தப் பிற்பகல் வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட உமது துருப்பு மற்றும் எதிரி துருப்புப் போராளிகளுக்கு இடையில் இவ்வாறே போர் நடந்தது[2].(35)

அர்ஜுனன் மற்றும் சாத்யகியின் ஆற்றல்! – கர்ண பர்வம் பகுதி – 30-கர்ணனுக்கும், சாத்யகிக்கும் இடையில் நேர்ந்த போர்; சாத்யகியால் அதிகம் பீடிக்கப்படும் கர்ணனைக் கண்டு சாத்யகியை எதிர்த்துச் சென்ற கௌரவர்கள்; கௌரவர்களை விரட்டிய சாத்யகி; அர்ஜுனனை எதிர்த்த துரியோதனன்; துரியோதனனைத் தேரற்றவனாகச் செய்த அர்ஜுனன் மரணக் கணையொன்றைத் துரியோதனன் மீது ஏவியது; அர்ஜுனனின் கணையை வெட்டிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனைத் திக்குமுக்காடச் செய்த அர்ஜுனன் அடுத்ததாகக் கர்ணனை எதிர்த்துச் சென்றது; சாத்யகியை விட்டுவிட்டு அர்ஜுனனோடு மோதிய கர்ணன்; சூரியன் மறைந்தது; பதினாறாம் நாள் முடிவு…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் வீழ்த்தக் கடினமானவர்களான உமது போர்வீரர்கள், கர்ணனை முன்னணியில் நிறுத்திக் கொண்டு, திரும்பிவந்து, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான ஒரு போரை (எதிரியுடன்) போரிட்டனர்.(1) யானைகள், மனிதர்கள், தேர்கள், குதிரைகள், சங்குகள் ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட பேராரவாரத்தால் தூண்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான யானைவீரர்கள், தேர்வீரர்கள், காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர், கோபத்தால் நிறைந்து, எதிரியை எதிர்த்துச் சென்று, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களின் வீச்சுக்களால் அவர்களைக் கொன்றனர்.(2) அந்தப் பயங்கரப் போரில் யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவையும், மனிதர்களும், கூரிய போர்க்கோடரிகள், வாள்கள், கோடரிகள், பல்வேறு வகைகளிலான கணைகள் மற்றும் தங்கள் விலங்குகள் ஆகியவற்றைக் கொண்டு துணிச்சல்மிக்கப் போர்வீரர்களால் கொல்லப்பட்டனர்.(3)

வெண்பற்கள், அழகிய முகங்கள், அழகிய கண்கள், சிறந்த மூக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அழகிய கிரீடங்களாலும், காதுகுண்டலங்களாலும், அருளப்பட்டவையும், தாமரை, அல்லது சூரியன், அல்லது சந்திரன் ஆகியவற்றுக்கு ஒப்பானவையுமான மனிதத்தலைகள் விரவிக்கிடந்ததால் பூமியானது மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(4) ஆயிரக்கணக்கான யானைகளும், மனிதர்களும், குதிரைகளும், நூற்றுக்கணக்கான பரிகங்கள், குறுந்தடிகள் {உலக்கைகள்}, ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள் {தோமரங்கள்}, அங்குசங்கள், புசுண்டிகள் மற்றும் கதாயுதங்களால் கொல்லப்பட்டன. {அவற்றால் சிந்தப்பட்ட} சிந்திய குருதி அந்தக் களத்தில் ஆற்றைப் போன்ற ஓர் ஓடையை உண்டாக்கியது.(5) அந்தத் தேர்வீரர்களும், மனிதர்களும், குதிரைகளும், யானைகளும் எதிரியால் கொல்லப்பட்டு, பயங்கரத் தன்மைகளுடனும், காயங்களின் பிளவுகளுடனும் கிடந்ததன் விளைவால், அண்ட அழிவின் போது மரணத்தின் மகனுடைய {யமனின்} ஆட்சிப்பகுதியைப் போல அந்தப் போர்க்களம் தெரிந்தது.(6)

அப்போது, ஓ! மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளும், தேவர்களின் பிள்ளைகளுக்கு ஒப்பாகத் தெரியும் குருக்களில் காளைகளான உமது மகன்கள் அனைவரும், அளவில்லா வலிமையைக் கொண்ட போர்வீரர்களைக் கொண்ட ஒரு படையைத் தங்கள் முன்னணியில் கொண்டு, சிநி குலத்துக் காளையான சாத்யகியை எதிர்த்துச் சென்றனர்.(7) அதன் பேரில் அந்தப் படையானது, மனிதர்களில் முதன்மையானோரும், குதிரைகளும், தேர்களும், யானைகளும் நிரம்பிய அந்தப் படையானது ஆழ்கடலின் உரத்த ஆரவாரத்தை உண்டாக்கி, அசுரர்களின் படைக்கோ, தேவர்களின் படைக்கோ ஒப்பானதாக அழகில் கடுமையாக ஒளிர்ந்தது.(8)

அப்போது தேவர்களின் தலைவனுக்கு ஒப்பான ஆற்றலையுடையவனும், இந்திரனின் தம்பியைப் போன்றவனுமான அந்தச் சூரியன் மகன் {கர்ணன்}, சூரியக் கதிர்களுக்கு ஒப்பான காந்தியையுடைய கணைகளால் அந்தச் சிநி குலத்தில் முதன்மையானவனை {சாத்யகியைத்} தாக்கினான்.(9) அந்தப் போரில், அந்தச் சிநி குலத்தின் காளையும் {சாத்யகியும்}, தன் தேர், குதிரைகள் மற்றும் சாரதியாலும், நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவையும், பல்வேறு வகைகளிலானவையுமான பயங்கரக் கணைகளாலும் அந்த மனிதர்களில் முதன்மையானவனை {கர்ணனை} மறைத்தான்.(10) பிறகு, தேர்வீரர்களில் காளையான அந்த வசுசேனன் {கர்ணன்}, அந்தச் சிநி குலத்தின் முதன்மையான வீரனின் {சாத்யகியின்} கணைகளால் ஆழமாகப் பீடிக்கப்படுவதைக் கண்டவர்களும், உமது படையைச் சார்ந்தவர்களுமான அதிரதர்கள் பலர், யானைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களின் துணையுடன் அவனை {கர்ணனை} வேகமாக அணுகினர்.(11) எனினும், பெருங்கடலைப் போன்று பரந்திருந்த அந்தப் படையானது, எதிரிகளும், பெரும் வேகம் கொண்டவர்களும், துருபதன் மகன்களின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவப் போர்வீரர்களால் தாக்கப்பட்டுக் களத்தில் இருந்து தப்பி ஓடியது. அந்த நேரத்தில், மனிதர்களுக்கும், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுக்கு ஒரு பேரழிவு நேர்ந்தது.(12)

அப்போது, மனிதர்களில் முதன்மையானவர்களான அந்த அர்ஜுனனும், கேசவனும் {கிருஷ்ணனும்}, தினப்படியான தங்கள் வேண்டுதல்களைச் சொல்லி, தலைவன் பவனை முறையாக வழிபட்டு, உமது துருப்புகளை எதிர்த்துத் தங்கள் எதிரிகளான அவர்களைக் கொல்லும் தீர்மானத்துடன் வேகமாக விரைந்தனர்.(13) அவர்களது எதிரிகள் (குருக்கள்), மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், காற்றில் அழகாக அசையும் கொடிகளைக் கொண்டதும், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதுமான அந்தத் தேரின் மீது உற்சாகமற்ற வகையில் தங்கள் கண்களைச் செலுத்தினர்.(14) அப்போது காண்டீவத்தை வளைத்த அர்ஜுனன், தன் தேரில் நர்த்தனம் புரிந்தபடியே, சிறு வெற்றிடத்தையும் விட்டுவிடாமல் ஆகாயத்தையும், முக்கிய மற்றும் துணைத்திசைகள் அனைத்தையும் கணைகளின் மாரியால் நிறைத்தான்.(15) மேகங்களை அழிக்கும் சூறாவளியைப் போல அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், ஆயுதங்கள், கொடிமரங்கள் மற்றும் சாதரிகளுடன் ஆயத்தம் செய்யப்பட்டவையும், தேவர்களின் வாகனங்களைப் போலத் தெரிந்தவையுமான தேர்கள் பலவற்றைத் தன் கணைகளால் அழித்தான்.(16) வெற்றிக் கொடிகள் மற்றும் ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகள் பலவற்றையும், அவற்றை வழிநடத்திய மனிதர்களையும், குதிரைகளுடன் கூடிய குதிரைவீரர்கள் பலரையும், காலாட்படைவீரர்களில் பலரையும் கூட அர்ஜுனன் தன் கணைகளால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(17)

அப்போது துரியதோனன், கோபத்துடன் இருந்தவனும், தடுக்கப்பட முடியாதவனும், உண்மையில் யமனுக்கு ஒப்பானவனுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அர்ஜுனனை} எதிர்த்து தனியனாகவே சென்று, அவனைத் {அர்ஜுனனைத்} தன் நேரான கணைகளால் தாக்கினான்.(18) தன் எதிராளியின் {துரியோதனன்} வில், சாரதி, குதிரைகள், கொடிமரம் ஆகியவற்றை ஏழு கணைகளால் வெட்டிய அர்ஜுனன், அடுத்ததாக ஒரு கணையால் அவனது குடையையும் அறுத்தான்.(19) அப்போது ஒரு வாய்ப்பை அடைந்த அவன் {அர்ஜுனன்}, தாக்கப்படும் மனிதனின் உயிரை எடுக்க வல்ல சிறந்த கணையொன்றைத் துரியோதனனின் மீது ஏவினான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அக்கணையை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(20) பிறகு துரோணர் மகனின் வில்லை வெட்டி, தன் கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் கொன்ற பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அடுத்ததாக, கிருபரின் உறுதிமிக்க வில்லையும் அறுத்தான்.(21) பிறகு ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} வில்லை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, அவனது {கிருதவர்மனின்} கொடிமரத்தையும், குதிரைகளையும் வீழ்த்தினான். அடுத்து துச்சாசனனின் வில்லை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் சென்றான்.(22)

இதனால் சாத்யகியை விட்டகன்ற கர்ணன், விரைவாக மூன்று கணைகளால் அர்ஜுனனையும், இருபதால் கிருஷ்ணனையும் துளைத்து, மீண்டும் மீண்டும் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(23) கோபத்தால் தூண்டப்பட்ட இந்திரனைப் போலவே அந்தப் போரில் தன் எதிரிகளைக் கொல்லும்போது, கர்ணனால் ஏவப்பட்ட கணைகள் பலவாக இருந்தாலும் அவன் {அர்ஜுனன்} களைப்பெதையும் உணரவில்லை.(24) அதேவேளையில், முன்னே வந்த சாத்யகி, தொண்ணூற்று ஒன்பது {99} கடுங்கணைகளால் கர்ணனைத் துளைத்து, மீண்டும் ஒரு நாறாலும் துளைத்தான்.(25) அப்போது பார்த்தர்களில் முதன்மையான வீரர்கள் அனைவரும் கர்ணனைப் பீடிக்கத் தொடங்கினர். யுதாமன்யு, சிகண்டி, திரௌபதியின் மகன்கள், பிரப்ரகர்கள்,(26) உத்தமௌஜஸ், யுயுத்சு, இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, திருஷ்டத்யும்னன், சேதிகள், காருஷர்கள், மத்ஸ்யர்கள் மற்றும் கைகேயர்களின் படைப்பிரிவினர்,(27) வலிமைமிக்கச் சேகிதானன், சிறந்த நோன்புகளைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன் ஆகிய இவர்கள் அனைவரும், தேர்கள், குதிரைகள், யானைகள், கடும் ஆற்றலைக் கொண்ட காலாட்படைவீரர்கள் ஆகியோரின் துணையுடன்,(28) அந்தப் போரில் கர்ணனை அனைத்துப் பக்கங்களில் சூழ்ந்து கொண்டு, அவனுக்கு அழிவையுண்டாக்கத் தீர்மானித்துக் கடுஞ்சொற்களால் அவனிடம் {கர்ணனிடம்} பேசி, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை அவன் மீது பொழிந்தனர்.(29)

தன் கூரிய கணைகளால் அவ்வாயுதமாரியை அறுத்த கர்ணன், காற்றானது தன் வழியில் நிற்கும் மரங்களை முறித்துத் தள்ளுவதைப் போல, தன் ஆயுதங்களின் சக்தியால் தன் எதிராளிகளை அகற்றினான்.(30) கோபத்தால் நிறைந்த கர்ணன், தேர்வீரர்கள், பாகர்களுடன் கூடிய யானைகள், குதிரை வீரர்களுடன் கூடிய குதிரைகள் மற்றும் பெரும் கூட்டங்களான காலாட்படைவீரர்களைக் கொல்பவனாகக் காணப்பட்டான்.(31) கர்ணனின் ஆயுதங்களுடைய சக்தியால், அந்தப் பாண்டவர்களின் மொத்த படையே கிடத்தட்ட கொல்லப்பட்டு, ஆயுதங்களை இழந்தவர்களாக, அங்கங்கள் கிழிந்து சிதைந்தவர்களாக, களத்தில் இருந்து ஓய்ந்து செல்பவர்களாக ஆக்கப்பட்டனர்.(32) அப்போது சிரித்துக் கொண்டிருந்த அர்ஜுனன், தன் ஆயுதங்களால் கர்ணனின் ஆயுதங்களைக் கலங்கடித்து, கணைகளின் அடர்த்தியான மழையால், ஆகாயம், பூமி மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான்.(33)

அர்ஜுனனின் கணைகள், கனமான தண்டங்களைப் போலவும், பரிகங்களைப் போலவும் பாய்ந்தன. அவற்றில் சில சதக்னிகளைப் போலப் பாய்ந்தன, சில சீற்றமிக்க இடியைப் போலப் பாய்ந்தன.(34) இவற்றால் கொல்லப்பட்டவையும், காலாட்படை, குதிரை, தேர்கள் மற்றும் யானைகளைக் கொண்டவையுமான அந்தக் கௌரவப்படையானது, அதன் கண்களை அடைத்துக் கொண்டு, உரத்தத் துன்ப ஒலங்களை வெளியிட்டபடி, உணர்வற்றவர்களாகத் திரிந்து கொண்டிருந்தனர்.(35) அந்தச் சந்தர்ப்பத்தில் கொல்லப்பட்ட குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகளும் பலவாகும். மீண்டும் கணைகளால் தாக்கப்பட்டு, ஆழமாகப் பீடிக்கப்பட்டு பலர் அச்சத்தால் தப்பி ஓடினர்.(36)

வெற்றியடையும் விருப்பத்தால் உமது போர்வீரர்கள், இவ்வாறு போரிட்டுக் கொண்டிருந்தபோது, சூரியன் அஸ்த மலையை அடைந்து அதனுள் நுழைந்தான்.(37) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இருளாலும், குறிப்பாகப் புழுதியாலும், சாதகமாகவோ, பாதகமாகவோ எங்களால் எதையும் காண முடியவில்லை.(38) ஓ! பாரதரே, இரவுப்போருக்கு அஞ்சிய (கௌரவர்களில்) வலிமைமிக்க வில்லாளிகள் தங்கள் போராளிகள் அனைவருடன் களத்தை விட்டுச் சென்றனர்.(39) ஓ! மன்னா, அந்த நாளின் முடிவில் கௌரவர்கள் சென்றதும், வெற்றி அடைந்ததால் மகிழ்ந்த பார்த்தர்களும், தங்கள் முகாம்களுக்குச் சென்று,(40) தங்கள் இசைக்கருவிகளால் பல்வேறு வகைகளிலான ஒலிகளை உண்டாக்கித் தங்கள் எதிரிகளை ஏளனம் செய்து, அச்யுதனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் பாராட்டினர்.(41) அந்த வீரர்கள் இவ்வாறு படையை விலக்கிக் கொண்டதும், துருப்புகள் அனைத்தும், மன்னர்கள் அனைவரும் பாண்டவர்களை வாழ்த்தினார்கள்.(42) {படைகள்} விலகிய பிறகு, பாவமற்ற மனிதர்களான பாண்டவர்கள், பெருமகிழ்ச்சியடைந்து, தங்கள் பாசறைகளுக்குச் சென்று அங்கே இரவில் ஓய்ந்திருந்தனர்.(43) பெரும் எண்ணிக்கையிலான ராட்சசர்கள், பிசாசங்கள், ஊனுண்ணும் விலங்குகள் ஆகியன, ருத்திரனின் விளையாட்டுக்களத்திற்கு ஒப்பான அந்தப் பயங்கரப் போர்க்களத்திற்கு வந்தன” {என்றான் சஞ்சயன்}.(44)

கர்ணன் சொன்ன பலவீனங்கள்! – கர்ண பர்வம் பகுதி – 31-அர்ஜுனனின் சிறப்பைச் சொன்ன திருதராஷ்டிரன்; போர்க்களத்தில் நேர்ந்தவற்றைச் சொல்லத் தொடங்கிய சஞ்சயன்; அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்; அர்ஜுனனுக்கு எதிரான தன் பலங்களையும், பலவீனங்களையும் சொன்ன கர்ணன்; விஜயம் என்ற கர்ணனுடைய வில்லின் சிறப்பு; பலவீனங்களை நேராக்கி மேம்பட்டவனாகத் திகழத் துரியோதனனிடம் சில ஏற்பாடுகளைச் செய்ய சொன்ன கர்ணன்; ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டால் சாதிப்பேன் என்ற கர்ணன்; வாக்களித்த துரியோதனன் சல்லியனிடம் பேசியது..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அர்ஜுனன் உங்கள் அனைவரையும் தன் விருப்பப்படி கொன்றான் என்றே தெரிகிறது. உண்மையில் யமனே அர்ஜுனனுக்கு எதிராக ஆயுதங்களை எடுத்தாலும், அவனும் போரில் அவனிடம் தப்ப முடியாது.(1) தனியொருவனாகவே பார்த்தன் {அர்ஜுனன்} பத்திரையை {சுபத்திரையை} அபகரித்தான், தனியொருவனாகவே அவன் அக்னியையும் மனநிறைவு கொள்ளச் செய்தான். தனியொருவனாகவே அவன் மொத்த உலகையும் அடிபணியச் செய்து, மன்னர்கள் அனைவரையும் கப்பம் கட்டச் செய்தான்.(2) தன் தெய்வீக வில்லுடன் தனியொருவனாகவே அவன் நிவாதகவசர்களைக் கொன்றான். தனியொருவனாகவே அவன் {அர்ஜுனன்}, வேட வடிவத்தில் தன் முன் நின்ற மகாதேவனுடன் {சிவனுடன்} போரிட்டான்.(3) தனியொருவனாகவே அவன் பாரதர்களைக் காத்தான், மேலும் தனியொருவனாகவே அவன் பவனையும் {சிவனையும்} மனநிறைவு கொள்ளச் செய்தான். கடும் ஆற்றலைக் கொண்ட பூமியின் மன்னர்கள் அனைவரும் அவனால் {அர்ஜுனனால்} தனியொருவனாகவே வெல்லப்பட்டனர்.(4) குருக்களை {கௌரவர்களைப்} பழிக்க முடியாது. மறுபுறம் அவர்கள் (இத்தகு போர்வீரனொருவனுடன் போர் செய்ததால்) பாராட்டுக்குரியவர்களே. அவர்கள் {கௌரவர்கள்} என்ன செய்தனர் என இப்போது எனக்குச் சொல்வாயாக. ஓ! சூதா {சஞ்சயா}, அதன் பிறகு துரியோதனன் என்ன செய்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(5)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தாக்கப்பட்டு, காயம்பட்டு, தங்கள் வாகனங்களில் இருந்து வீழ்த்தப்பட்டு, கவசத்தை இழந்து, ஆயுதங்களை இழந்து, தங்கள் விலங்குகள் கொல்லப்பட்டு, அவலக் குரல்களுடனும், எரியும் துயரத்துடனும், தங்கள் எதிரிகளால் வெல்லப்பட்டவர்களும், இறுமாப்புடன் கூடியவர்களுமான கௌரவர்கள், தங்கள் பாசறைகளுக்குள் நுழைந்து, மீண்டும் ஒருவரோடொருவர் கலந்தாலோசித்தனர். அவர்கள், விஷத்தையும், பற்களையும் இழந்து மிதிபட்ட பாம்புகளைப் போலத் தெரிந்தனர்.(6,7) கோபக்காரப் பாம்பைப் போலப் பெருமூச்சு விட்ட கர்ணன், தன் கரங்களைப் பிசைந்தபடி உமது மகனைப் {துரியோதனனைப்} பார்த்துக் கொண்டே அவர்களிடம்,(8) “அர்ஜுனன் கவனம்நிறைந்தவனாகவும், உறுதிமிக்கவனாகவும், திறனைக் கொண்டவனாகவும், நுண்ணறிவு கொண்டவனாகவும் எப்போதும் இருக்கிறான். மேலும், நேரம் வரும்போது வாசுதேவன் {கிருஷ்ணன்} (என்ன செய்ய வேண்டும் என்பதில்) அவனை விழிப்புணர்வு கொள்ளச் செய்கிறான்.(9) இன்று, அந்தத் திடீர் ஆயுதமழையைக் கொண்டு, அவனால் நாம் வஞ்சிக்கப்பட்டோம். எனினும் நாளை, ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, அவனது {அர்ஜுனனது} நோக்கங்கள் அனைத்தையும் நான் மழுங்கடிப்பேன்” என்றான் {கர்ணன்}.(10)

கர்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட துரியோதனன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, அந்த மன்னர்களில் முதன்மையானோர் ஓய்வெடுக்க அனுமதி அளித்தான். மன்னனால் {துரியோதனனால்} அனுமதிக்கப்பட்ட அந்த ஆட்சியாளர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பாசறைகளுக்குச் சென்றனர்.(11) அவ்விரவை மகிழ்ச்சியாகக் கழித்த அவர்கள், (அடுத்த நாள்) போருக்கு உற்சாகமாகச் சென்றனர்.(12) அப்போது அவர்கள், பிருஹஸ்பதி மற்றும் உசனஸ் {சக்கிராச்சாரியார்} ஆகியோரின் இசைவுக்கேற்றபடி, குரு {கௌரவக்} குலத்தில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால், பெருங்கவனத்துடன் அமைக்கப்பட்ட, வெல்லப்பட முடியாத வியூகம் ஒன்றைக் கண்டனர்.(13)

அப்போது எதிரிகளைக் கொல்பவனான துரியோதனன், எதிரிகளுக்கு எதிர்வினையாற்றுபவனும், காளைபோன்ற {காளையின் திமிலைப் போன்ற} கழுத்தைக் கொண்ட போர்வீரனும், போரில் புரந்தரனுக்கும் {இந்திரனுக்கும்}, வலிமையில் மருத்துக்களுக்கும், சக்தியில் கார்த்தவீரியனுக்கும் இணையான வீரக் கர்ணனை மனத்தில் நினைத்தான். உண்மையில், மன்னனின் {துரியோதனனின்} இதயம் கர்ணனை நோக்கியே திரும்பியது.(14,15) பேராபத்தான நிலையில் நண்பனை நாடும் ஒருவனின் இதயத்தைப் போல, துருப்புகள் அனைத்தின் இதயங்களும் வலிமைமிக்க வில்லாளியும், வீரனுமான அந்தச் சூதன் மகனை {கர்ணனை} நோக்கித் திரும்பின {நாடின}” {என்றான் சஞ்சயன்}.(16)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணனை உங்கள் அனைவரின் இதயங்களும் நாடிய போது, அடுத்ததாகத் துரியோதனன் என்ன செய்தான்?(17) குளிரால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் பார்வையைச் சூரியனை நோக்கித் திருப்புவதைப் போல என் துருப்பினரும் தங்கள் கண்களை ராதையின் மகன் {கர்ணன்} மேல் செலுத்தினரா? துருப்புகளைத் திருப்பி அழைத்த பிறகு, போர் மீண்டும் தொடங்கியதும்,(18) ஓ! சஞ்சயா, விகர்த்தனன் மகனான கர்ணன் எவ்வாறு போரிட்டான்? அந்தச் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} பாண்டவர்கள் அனைவரும் எவ்வாறு போரிட்டனர்?(19) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணன், தனியொருவனாகவே பார்த்தர்களையும், சிருஞ்சயர்களையும் கொல்வான். கர்ணனுடைய கரங்களின் வலிமையானது போரில் சக்ரன் {இந்திரன்}, அல்லது விஷ்ணுவுக்கு இணையானதாகும்.(20) அவனது ஆயுதங்கள் மூர்க்கமானவை, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் ஆற்றலும் மூர்க்கமானதே. கர்ணனை நம்பியே மன்னன் துரியோதனன் தன் இதயத்தைப் போரில் நிலைநிறுத்தினான்.(21) துரியோதனன், அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} ஆழமாகப் பீடிக்கப்பட்டதைக் கண்டும், பெரும் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களான பாண்டுவின் மகன்களைப் பார்த்தும், வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் என்ன செய்தான்?(22)

ஐயோ, கர்ணன் மீது கொண்ட நம்பிக்கையாலேயே பார்த்தர்களையும், அவர்களுடன் கூடிய அவர்களது மகன்களையும், கேசவனையும் {கிருஷ்ணனையும்} வெல்ல முடியும் என மூடனான துரியோதனன் நம்புகிறான்.(23) ஐயோ, கர்ணனால் தன் பலத்தைக் கொண்டு போரில் பாண்டுவின் மகன்களை வெல்ல முடியாது என்பதே பெருந்துயரத்தைத் தருகிறது. விதியே உயர்வானது என்பதில் ஐயமில்லை.(24) ஐயோ, அந்தச் சூதாட்டத்தின் பயங்கர முடிவு இதோ வந்திருக்கிறது. ஐயோ, ஓ! சஞ்சயா, துரியோதனனின் செயல்களால் உண்டானவையும், பெரும் எண்ணிக்கையிலானவையும், பயங்கரக் கணைகளைப் போன்றவையுமான இதயத்தைப் பிளக்கும் கவலைகளை நான் இப்போது {என் இதயத்தில்} சுமக்கிறேன்.(25) ஓ! ஐயா {சஞ்சயா}, அப்போதெல்லாம், சுபலனின் மகனே {சகுனியே}, கூர்மதிகொண்டோனாகக் கருதப்பட்டான். கர்ணனும், மன்னன் துரியோதனனிடம் மிக அதிகமான பற்றுடன் எப்போதும் இருக்கிறான்.(26) ஐயோ, வழக்கு இப்படியிருக்கையில், ஓ! சஞ்சயா, தோல்விகளையும், எனது மகன்களின் மரணங்களையும் நான் ஏன் அடிக்கடிக் கேட்கிறேன்.(27) போரில் பாண்டவர்களைத் தடுக்கவல்லவர்கள் எவரும் இல்லையே. ஆதரவற்ற பெண்களுக்கு மத்தியில் நுழையும் மனிதனைப் போல, அவர்கள் என் படைக்குள் ஊடுருவுகிறார்கள். உண்மையில், விதியே உயர்வானது” என்றான் {திருதராஷ்டிரன்}.(28)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பகடையாட்டம் மற்றும் பிறவற்றைப் போன்ற உமது நீதிமிக்கச் செயல்கள் அனைத்தையும் இப்போது நினைப்பீராக. எந்தச் செயல்பாடுகள் கடந்தனவோ அவையே மனிதனின் சிந்தனை நோக்கங்களாக அமைகின்றன.(29) எனினும், ஒருவன் கடந்த போன செயல்களைச் சிந்திக்கக்கூடாது. அத்தகு சிந்தனையால் ஒருவன் அழிந்து போகக்கூடும். ஞானம் கொண்டவராக இருப்பினும், உமது செயல்களின் நன்மை, அல்லது தீமைகளை நீர் சிந்தித்துப் பார்க்காததால், (நீர் எதிர்பார்த்த) அவ்விளைவு பலனளிக்கும் இடத்தில் இருந்து இப்போது நீங்கியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுடன் போரிடுவதற்கு எதிராகப் பல முறை உமக்கு ஆலோசனை வழங்கப்பட்டது[1].(30,31) எனினும், ஓ! ஏகாதிபதி, மடமையினால் அவ்வாலோசனைகளை நீர் ஏற்கவில்லை. பாண்டுவின் மகன்களுக்கு எதிராகப் பயங்கர இயல்பைக் கொண்ட பாவம் நிறைந்த பல்வேறு செயல்கள் உம்மால் செய்யப்பட்டன.(32) அச்செயல்களுக்காகவே இப்போது இந்த மன்னர்களின் பயங்கரப் படுகொலைகள் நேர்ந்திருக்கின்றன. எனினும் அவையாவும் இப்போது கடந்தவையே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வருந்தாதீர்.(33) மங்கா புகழ் கொண்டவரே, நேர்ந்துவிட்ட பயங்கரப் பேரழிவின் விவரங்களை இப்போது கேட்பீராக.இரவு விடிந்ததும் கர்ணன், மன்னன் துரியோதனனிடம் சென்றான்.(24) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கர்ணன்}, மன்னனை {துரியோதனனை} அணுகி, “ஓ! மன்னா, சிறப்புமிக்கப் பாண்டு மகனுடன் {அர்ஜுனனுடன்} நான் இன்று போரிடுவேன்.(35) இன்று நான் அந்த வீரனைக் கொல்வேன், அல்லது அவன் {அர்ஜுனன்} என்னைக் கொல்வான். ஓ! பாரதா {துரியோதனா}, நானும், பார்த்தனும் {அர்ஜுனனும்} போரிட வேண்டியிருந்தாலும், ஓ! மன்னா, பல்வேறு காரியங்களால் எனக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் இதுவரை அது {நேரடி சந்திப்பு} நடக்கவில்லை. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, என் ஞானத்தில் பேசப்படும் இந்த என் வார்த்தைகளை இப்போது கேட்பாயாக.(36,37) ஓ! பாரதா {துரியோதனா}, போரில் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் நான் திரும்பேன். முதன்மையான போர்வீரர்களை நம் படை இழந்திருப்பதாலும், போரில் நான் இருப்பேன் என்பதாலும், அதிலும் குறிப்பாகச் சக்ரன் {இந்திரன்} எனக்களித்த ஈட்டியை நான் இழந்துவிட்டேன் என்பதாலும், பார்த்தன் {அர்ஜுனன்} என்னை எதிர்த்து வருவான். எனவே, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {துரியோதனா}, எது நன்மை என்பதை இப்போது கேட்பாயாக.(38,39)

என் தெய்வீக ஆயுதங்களின் சக்தியானது, அர்ஜுனனின் ஆயுதங்களின் சக்திக்கு இணையானதே. பலமிக்க எதிரிகளின் சாதனைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதிலும், கரநளினத்திலும், கணைகள் ஏவப்படும் தொலைவிலும்,(40) திறனிலும், குறியைத் தாக்குவதிலும் சவ்யசச்சின் {அர்ஜுனன்} ஒருபோதும் எனக்கு நிகராகமாட்டான். ஓ! பாரதா, உடல்பலம், துணிச்சல், (ஆயுத) அறிவு, ஆற்றல்,(41) குறி பார்த்தல் ஆகியவற்றிலும் சவ்யசச்சின் {அர்ஜுனன்} ஒருபோதும் எனக்கு இணையாக மாட்டான். விஜயம் என்று அழைக்கப்படும் என் வில்லானது (அதன் வகையில்) ஆயுதங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(42) அஃது (இந்திரனுக்கு) ஏற்புடையதைச் செய்ய விரும்பிய (தெய்வீகக் கைவினைஞன்) விஸ்வகர்மனால் இந்திரனுக்காகவே செய்யப்பட்டதாகும். ஓ! மன்னா {துரியோதனா}, அவ்வில்லால் இந்திரன் தைத்தியர்களை வென்றான்.(43) அதன் நாணொலியால் தைத்தியர்கள் {திசைகளின்} பத்து புள்ளிகளையும் வெறுமையாகக் கண்டனர்[2]. அனைவராலும் மதிக்கப்பட்ட அந்த வில்லைச் சக்ரன் {இந்திரன்}, பிருகுவின் மகனிடம் (ராமரிடம் {பரசுராமரிடம்}) கொடுத்தான்.(44) விற்களில் முதன்மையான அந்தத் தெய்வீக வில்லைப் பிருகுவின் மகன் {பரசுராமர்} என்னிடம் கொடுத்தார். கூட்டமாகக் கூடியிருக்கும் தைத்தியர்களுடன் அந்த வில்லைக் கொண்டு போரிடும் இந்திரனைப் போல நான், வெற்றியாளப் போர்வீரர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அர்ஜுனனுடன் போரிடுவேன். ராமர் {பரசுராமர்} பரிசளித்த அந்த உறுதிமிக்க வில்லானது {விஜயம் என்ற வில்லானது}, காண்டீவத்திற்கும் மேன்மையானதாகும். இந்த வில்லைக் கொண்டுதான் (பிருகுவின் மகனால் {பரசுராமரால்} இந்தப் பூமி இருபத்தோரு முறை வெல்லப்பட்டது. (45-47) ராமர் எனக்களித்த அந்த வில்லுடனே நான் அந்தப் பாண்டுவின் மகனுடன் போரிடுவேன்.

ஓ! துரியோதனா, வெற்றியாளர்களில் முதன்மை வீரனான அந்த அர்ஜுனனைப் போரில் கொன்று உன்னையும், உன் நண்பர்களையும் இன்று நான் மகிழ்ச்சியடையச் செய்வேன். (உன் விருப்பத்தை எதிர்க்க) ஒரு போர்வீரனும் இல்லாதவளும், மலைகள், காடுகள், தீவுகள் ஆகியவற்றுடன் கூடியவளும், நீயும், உன் மகன்களும், பேரர்களும் மேன்மையாக ஆளக்கூடியவளுமான மொத்த பூமியும் இன்று உனதாவாள். உனக்கு ஏற்புடையதைச் செய்வதே குறிப்பான நோக்கம் என்பதால், துறவியின் வெற்றியானது, அறத்தில் அர்ப்பணிப்பும், பற்றார்வமும் கொண்ட ஒருவனால் தவற விட முடியாததைப் போல, இன்று என்னால் அடையப்பட முடியாத ஏதும் கிடையாது. நெருப்பிலிருக்கும் மரத்தால் அந்த மூலகத்தை {பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பைத்} தாங்கிக் கொள்ள முடியாததைப் போலவே, போரில் அர்ஜுனனால் என்னைத் தாங்கிக் கொள்ள முடியாது.(47-51)

எனினும் எந்த அடிப்படையில் நான் அர்ஜுனனுக்குத் தாழ்ந்தவனாக இருக்கிறேன் என்பதை நான் அறிவிக்க வேண்டும். அவனது வில்லின் நாண்கயிறு தெய்வீகமானது, அவனது அம்பறாத்தூணிகள் இரண்டும் வற்றாதவையாகும். அவனது சாரதி கோவிந்தனாவான் {கிருஷ்ணனாவான்}.(52) அவனைப் {கிருஷ்ணனைப்} போல ஒருவன் எனக்கு இல்லை. விற்களில் முதன்மையானதும், தெய்வீகமானதும், போரில் அழிவற்றதும், காண்டீவம் என்றழைக்கப்படுவதுமான வில் அவனுடையது.(53) சிறந்ததும், தெய்வீகமானதும், உறுதிமிக்கதுமான விஜயம் என்று அழைக்கப்படும் வில்லை நானும் கொண்டிருக்கிறேன். எனவே, எங்கள் விற்களைப் பொறுத்தவரையில், ஓ! மன்னா, நான் அர்ஜுனனுக்கு மேம்பட்டவனாகவே இருக்கிறேன்[3].(54) பாண்டுவின் வீர மகன் {அர்ஜுனன்} எப்பொருட்களில் எல்லாம் என்னைவிட மேம்பட்டவனாக இருக்கிறான் என்பதை இப்போது கேட்பாயாக. (அவனது குதிரைகளின்) கடிவாளங்களைப் பிடிப்பவன், உலகங்கள் அனைத்தாலும் புகழப்படும் தசார்ஹகுலத்தோனாவான் {கிருஷ்ணனாவான்}.(55) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், எப்பகுதியிலும் ஊடுருவப்பட முடியாததுமான அவனது தெய்வீகத் தேரும், ஓ! வீரா {துரியோதனா}, மனோவேகம் கொண்ட அவனது குதிரைகளும், அக்னியால் அவனுக்கு {அர்ஜுனனால்} அளிக்கப்பட்டவையாகும்.(56) சுடர்மிக்கக் குரங்கைக் கொண்ட அவனது தெய்வீகக் கொடிமரமானது மிகவும் அற்புதமானதாகும். மேலும், அண்டத்தைப் படைத்தவனான கிருஷ்ணனே அவனது தேரைப் பாதுகாக்கிறான்.(57)இக்காரியங்களில் எல்லாம் அர்ஜுனனுக்குக் குறைந்தவனாகவே {நான்} இருப்பினும், அவனோடு போர்புரிய நான் விரும்புகிறேன். எனினும், சபைகளின் ரத்தினமான இந்தச் சல்லியன், சௌரிக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவராவார்.(58) இவர் {சல்லியன்} என் சாரதியானால், வெற்றியானது நிச்சயம் உனதேயாகும். எனவே, எதிரிகளால் தடுக்கப்பட முடியாத இந்தச் சல்லியன் என் தேரின் சாரதியாகட்டும்.(59) என் நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்}, கழுகின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்டவற்றையும் {கணைகளையும்} பெரும் எண்ணிக்கையிலான வண்டிகள் சுமந்து வரட்டும். ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட முதன்மையான தேர்கள் பெரும் எண்ணிக்கையில் என்னை எப்போதும் பின்தொடர்ந்து வரட்டும். குறிப்பிடப்பட்ட தன்மைகளைப் பொறுத்தவரையில், இந்த ஏற்பாடுகளால், நான் அர்ஜுனனுக்கு மேம்பட்டவனாக ஆவேன்.(61) சல்லியன் கிருஷ்ணனுக்கு மேன்மையானவர், நானோ அர்ஜுனனுக்கு மேம்பட்டவன். எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தசார்ஹ குலத்தோன் குதிரைக் கலைகளை அறிந்திருப்பதைப் போலவே,(62) வலிமைமிக்கத் தேர்வீரரான இந்தச் சல்லியரும் குதிரைக்கலைகளை அறிந்திருக்கிறார். கரங்களின் வலிமையில் மத்ரர்களின் தலைவருக்கு இணையாக வேறு எவனும் இல்லை.(63) ஆயுதங்களில் எனக்கு இணையான எவனும் இல்லாததைப் போல, குதிரைகளின் அறிவில் சல்லியனுக்கு இணையானவன் எவனும் இல்லை.(64)

சூழ்நிலை இவ்வாறிருந்தால், நான் பார்த்தனுக்கு மேம்பட்டவனாக இருப்பேன். என் தேரை எதிர்த்து வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களும் துணிந்து வரமாட்டார்கள்.(65) இவையாவும் கவனிக்கப்பட்டால், ஓ! குருக்களில் சிறந்தவனே, நான் என் தேரில் ஏறும்போது, போர்வீரனின் தன்மைகளில் அர்ஜுனனுக்கு மேம்பட்டவனாகி, பல்குனனை {அர்ஜுனனை} வெல்வேன்.(66) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, ஓ! எதிரிகளை எரிப்பவனே, இவை யாவும் உன்னால் செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். காலதாமதம் ஏதும் செய்ய வேண்டாம்.(67) இவையாவும் நிறைவேற்றப்பட்டால், விருப்பப்படும் அனைத்து சந்தர்ப்பத்திலும் மிகவும் பலன் தரும் வகையில் என்னாலான உதவி கிடைக்கும். அப்போது, ஓ! பாரதா {துரியோதனா}, போரில் நான் எதைச் சாதிப்பேன் என்பதை நீ காண்பாய்.(68) போரில் பாண்டுவின் மகன்கள் என்னை அணுகும்போது, அனைத்து வழிகளிலும் நான் அவர்களை வெல்வேன். தேவர்களாலும், அசுரர்களாலும் கூடப் போரில் என்னை எதிர்த்து வர முடியாது. அப்படியிருக்கையில், மனிதத் தோற்றம் கொண்ட பாண்டு மகன்களைக் குறித்து என்ன சொல்வது” என்று கேட்டான் {கர்ணன்}.(69)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போர்க்கள ரத்தினமான கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, அந்த ராதையின் மகனை {கர்ணனை} வழிபட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம்,(70) “ஓ! கர்ணா, நீ நினைப்பதைச் சாதிப்பாயாக. சிறந்த அம்பறாத்தூணிகள், குதிரைகள் ஆகியவற்றுடன் ஆயத்தப்படுத்தப்பட்ட தேர்கள் போரில் உன்னைப் பின் தொடர்ந்து வரும்.(71) நீ எவ்வளவு விரும்புவாயோ அவ்வளவு எண்ணிக்கையிலான தேர்கள், உன் நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்}, கழுகின் இறகுகளால் ஆயத்தப்படுத்தப்பட்ட கணைகளையும் சுமந்து வரட்டும். நாங்களும், மன்னர்கள் அனைவரும் போரில் உன்னைப் பின்தொடர்ந்து வருவோம்” என்று பதிலளித்தான் {துரியோதனன்}.”(72)

சஞ்சயன் தொடர்ந்தான், “இச்சொற்களைச் சொன்னவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான உமது அரச மகன் {துரியோதனன்}, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அணுகி, பின் வரும் வார்த்தைகளால் அவனுடன் பேசினான்” {என்றான் சஞ்சயன்}.(73)

சாரதியாவதை ஏற்ற சல்லியன்! – கர்ண பர்வம் பகுதி – 32-கர்ணனுக்குச் சாரதியாக இருக்குமாறு சல்லியனை வேண்டிய துரியோதனன்; சினம் கொண்ட சல்லியன் வீட்டுக் திரும்புவதாகச் சொல்வது; வர்ணங்களின் உயர்வு தாழ்வு சொல்வது; சல்லியனைத் தடுத்து அவனைப் புகழ்ந்த துரியோதனன்; துரியோதனனின் புகழ்ச்சியில் நிறைந்த சல்லியன், ஒரு நிபந்தனையுடன் கர்ணனுக்குச் சாரதியாக இருப்பதாக ஏற்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகன் {துரியோதனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அணுகி, அவனிடம் பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! மெய்நோன்புகள் கொண்டவரே, ஓ பெரும் நற்பேற்றைக் கொண்டவரே, ஓ! எதிரிகளின் கவலைகளை அதிகரிப்பவரே, ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, ஓ! போரில் வீரரே, ஓ! பகைவர் துருப்புகளை அச்சுறுத்துபவரே,(2) ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே {சல்லியரே}, என்னிடம் பேசிய கர்ணனின் நிமித்தமாக, இந்த மன்னர்களில் சிங்கங்களின் முன்னிலையில், உம்மிடம் வேண்டிக் கேட்க நான் எவ்வாறு விரும்புகிறேன் என்பதையே நீர் கேட்டுக் கொண்டிருக்கிறீர்.(3) ஓ! ஒப்பிலா ஆற்றலைக் கொண்டவரே, ஓ! மத்ரர்களின் மன்னரே, எதிரியின் அழிவுக்காக, பணிவுடன் சிரம் தாழ்த்தி நான் இன்று உம்மை வேண்டிக் கேட்கிறேன்[1].(4) எனவே, பார்த்தனின் {அர்ஜுனனின்} அழிவுக்காகவும், எனது நன்மைக்காகவும், ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவரே, தேரோட்டியின் பணியை அன்புடன் ஏற்பதே உமக்குத் தகும்.(5)

ராதையின் மகன் {கர்ணன்}, தனது சாரதியாக உம்மைக் கொண்டு என் எதிரிகளை அடக்குவான். ஓ! பெரும் நற்பேற்றைப் பேற்றவரே {சல்லியரே}, போரில் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவரே, கர்ணனின் {கர்ணனுடைய குதிரைகளின்} கடிவாளங்களைப் பிடிப்பதற்கு உம்மைத் தவிர வேறு எவனும் இல்லை. மகேஸ்வரனை {சிவனைக்} காக்கும் பிரம்மனைப் போல நீர் அனைத்து வழிகளிலும் கர்ணனைக் காப்பீராக.(6,7) பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} அனைத்து ஆபத்துகளிலும், அனைத்து வழிகளிலும் காக்கும் விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனைப்} போல, ஓ! மத்ரர்களின் தலைவா, இன்று நீர் ராதையின் மகனைக் காப்பீராக.(8) பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரும், நீரும், போஜர்களின் வீரத்தலைவன் {கிருதவர்மன்}, சுபலரின் மகன் சகுனி, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரும், நானும் நமது படையின் முக்கியப் பலமாக இருக்கிறோம்.(9) இவ்வாறே, ஓ! பூமியின் தலைவா, நாம் பகைவரின் படையை ஒவ்வொருவருக்கும் ஒரு பங்காக ஒன்பது பகுதிகளாகப் பிரித்துக் கொண்டோம். பீஷ்மருக்குப் பகிர்ந்தளித்த பங்கானது இப்போது இல்லை. அதே போல, உயர் ஆன்ம துரோணருக்குப் பகிர்ந்தளித்த பங்கும் இப்போது இல்லை.(10) அவர்கள் இருவரும் தங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பங்கிற்கு அதிகமாகவே என் எதிரிகளைக் கொன்றிருக்கின்றனர்.

மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், கிழவர்கள் என்றாலும், வஞ்சகத்தாலேயே அவ்விருவரும் கொல்லப்பட்டார்கள்.(11) அடைவதற்கரிய மிகக் கடினமாகச் சாதனைகளைச் செய்த அவ்விருவரும், ஓ! பாவமற்றவரே, சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார்கள். அதே போலவே நம் படையைச் சார்ந்த மனிதர்களில் புலிகளான பலரும், தங்கள் சிறந்த சக்திகளைப் பயன்படுத்திப் பெருமுயற்சி செய்த பிறகு, போரில் எதிரியால் கொல்லப்பட்டு, தங்கள் உயிரைவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(12,13) எனவே, ஓ! மன்னா {சல்லியரே}, முதலில் நம்மை விடக் குறைவானவர்களாக இருந்த பார்த்தர்களால், பெரும்பகுதி கொல்லப்பட்ட இந்த என் படை {இப்போது} இந்நிலையை அடைந்திருக்கிறது. இப்போது என்ன செய்யப்பட வேண்டும்?(14) ஓ! பூமியின் தலைவா, வலிமைமிக்கவர்களும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவர்களுமான உயர் ஆன்ம குந்தியின் மகன்களால் {பாண்டவர்களால்} எஞ்சிய என் படையும் அழிவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வீராக.(15)

ஓ! தலைவா {சல்லியரே}, என் இந்தப் படையின் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களைப் போரில் பாண்டவர்கள் கொன்றுவிட்டனர்.(16) ஓ!மனிதர்களில் புலியே, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனும், மொத்த உலகத்தில் உள்ள தேர்வீரர்களில் முதன்மையான நீரும் மட்டுமே நமது நன்மையில் அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள்.(17) ஓ! சல்லியரே, கர்ணன் இன்று அர்ஜுனனுடன் போரிட விரும்புகிறான். ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, அவன் {கர்ணன்} வெற்றிப் பெறுவான் என்ற நம்பிக்கை என்னில் பெரிதாக இருக்கிறது.(18) கர்ணனின் {கர்ணனுடைய குதிரைகளின்} கடிவாளங்களை நன்றாகப் பிடிக்கத்தக்கவர் (உம்மைத் தவிர) வேறு எவரும் இவ்வுலகில் இல்லை. கடிவாளங்களைப் பிடிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையான கிருஷ்ணன், போரில் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருப்பதைப் போலவே, ஓ! மன்னா {சல்லியரே}, கடிவாளங்களைப் பிடிப்பவர்கள் அனைவரில் முதன்மையான நீர் கர்ணனின் தேரில் இருப்பீராக.(19) ஓ! ஐயா, போரில் அவனது {கிருஷ்ணனின்} துணையுடனும், அவனால் பாதுகாக்கப்பட்டும் பார்த்தன் {அர்ஜுனன்} அடையும் சாதனைகள் அனைத்தும் உம் முன்பாக இருக்கின்றன.(20) முன்பெல்லாம் அர்ஜுனன், போரில் இது போலத் தன் எதிரிகளை எப்போதும் கொன்றதில்லை. எனினும், இப்போதோ, கிருஷ்ணனுடன் சேர்ந்து அவனது ஆற்றல் பெரிதாகியிருக்கிறது.(21) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, பார்த்தன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனுடன் சேர்ந்திருப்பதால் நாளுக்கு நாள் இந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையானது நிர்மூலமாக்கப்படுகிறது.(22)

ஓ! பெரும் காந்தி கொண்டவரே {சல்லியரே}, கர்ணனுக்கும், உமக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட பங்கு ஒன்று இருக்கிறது. கர்ணனுடன் சேர்ந்து அந்தப் பங்கைச் சுமந்து, போரில் அஃதை அழிப்பீராக.(23) சூரியன், அருணனுடன் சேர்ந்து இருளை அழிப்பதைப் போலவே, நீர் கர்ணனுடன் சேர்ந்து போரில் பார்த்தர்களைக் கொல்வீராக.(24) அடிவானில் உதித்தெழும் இரு சூரியர்களுக்கு ஒப்பானவர்களும், காலை சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட வீரர்களுமான கர்ணன் மற்றும் சல்லியன் ஆகியோரைப் போரில் கண்டு, (எதிரியின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் தப்பித்து ஓடட்டும்.(25) சூரியனையும் அருணனையும் கண்ட இருள் அழிவதைப் போல, கௌந்தேயர்களும், அவர்களுடன் சேர்ந்த பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்களும், உம்மையும் கர்ணனையும் கண்டு அழிந்து போகட்டும்.(26) கர்ணன் தேர்வீரர்களில் முதன்மையானவனாகவும், நீரோ சாரதிகளில் முதன்மையானவராகவும் இருக்கிறீர்கள். மீண்டும் ஏற்படப்போகும் இந்தப் போரின் மோதலில், உமக்கு இணையானவர் எவரும் இல்லை.(27) அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} காப்பதைப் போல, போரில் நீரும் விகர்த்தனன் மகனான கர்ணனைக் காப்பீராக.(28) உம்மைச் சாரதியாகக் கொண்ட கர்ணன், சக்ரனை {இந்திரனைத்} தலைமையில் கொண்ட தேவர்களுடன் கூடப் போரில் வெல்லப்பட முடியாதவன் ஆகிவிடுவான். பிறகு, பாண்டவர்களைக் குறித்துச் சொல்ல என்ன இருக்கிறது? என் வார்த்தைகளில் ஐயம் கொள்ளாதீர்” {என்றான் துரியோதனன்}.(29)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு சல்லியன் சினத்தால் நிறைந்தான். தன் புருவங்களை மூன்று கோடுகளாகச் சுருக்கி, மீண்டும் மீண்டும் தன் கரங்களை அசைத்து,(30) கோபத்தால் சிவந்த தன் பெரிய கண்களை உருட்டியவனும், பருத்த கரங்களைக் கொண்டவனும், தன் குலப்பிறப்பு, செல்வம், அறிவு, பலம் ஆகியவற்றில் பெருமை கொண்டவனுமான அந்தப் போர்வீரன் {சல்லியன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(31) சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, எந்தத் தயக்கமும் இல்லாமல் “சாரதியாகச் செயல்படுவாயாக” என்று என்னை நீ வேண்டிக் கொள்வதால், நீ என்னை அவமதிக்கிறாய், அல்லது என்னைச் சந்தேகிக்கிறாய் என்பதில் ஐயமில்லை.(32) எம்மை விடக் கர்ணனை மேன்மையானவனாகக் கருதுவதால் நீ அவனை இவ்வாறு புகழ்கிறாய். எனினும் நான், ராதையின் மகனைப் {கர்ணனைப்} போரில் எனக்கு இணையானவனாகக் கருதவில்லை.(33) ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, இன்னும் பெரிய பங்கை எனக்கு நீ அளிப்பாயாக. அதை {அந்தப் பங்கைப்} போரில் அழித்து, நான் எந்த இடத்தில் இருந்து வந்தேனோ அங்கே திரும்பிச் செல்வேன்.(34) அல்லது, நீ விரும்பினால், ஓ! குருக்களை மகிழ்விப்பவனே, எதிரியுடன் நான் தனியொருவனாகவே போரிடுவேன். இன்று எதிரிகளை எரிக்கப்போகும் என் ஆற்றலைக் காண்பாயாக. (35)

எம்மைப் போன்ற ஒரு மனிதன், {மனத்தில்} ஓர் அவமானத்தை அடைகாத்துக் கொண்டு, நான் செய்யும் பணியில் எப்போதும் ஈடுபடமாட்டான். போரில் என்னை நீ எப்போதும் {இப்படி} அவமதிக்கக்கூடாது.(36) இடியைப் போன்றவையும், பருத்தவையுமான என்னிரு கரங்களைப் பார். என் சிறந்த வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான இந்தக் கணைகளையும் பார்.(37) காற்றின் வேகத்தைக் கொண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட என் தேரைப் பார். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், சணல் கயிறுகளால் பின்னப்பட்டதுமான என் கதாயுதத்தையும் பார்.(38) கோபத்தில் நிறைந்தால், ஓ! மன்னா, என் சக்தியைக் கொண்டு பூமியைப் பிளக்கவும், மலைகளைச் சிதறடிக்கவும், பெருங்கடல்களை வற்ற செய்யவும் என்னால் முடியும்.(39) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எதிரிகளைப் பீடிக்க இவ்வளவு வல்லவனாக என்னை அறிந்தும்கூட, அதிரதன் மகனை {கர்ணனைப்} போல இழிந்த பிறப்புக் கொண்ட ஒரு மனிதனுக்குப் போரில் சாரதி அலுவலில் என்னை ஏன் நீ நியமிக்கிறாய்?[2](40)ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, இத்தகு அற்பப் பணிகளை எனக்கு அளிப்பது உனக்குத் தகாது. இவ்வளவு மேன்மையான நான், பாவம் நிறைந்த ஒரு மனிதனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய என் மனத்தை இணங்கச் செய்ய முடியாது.(41) தன் அன்புக்குக் கீழ்ப்படிந்து, தன் சொந்த விருப்பத்தோடு வந்த ஒரு மேன்மையான மனிதனைப் பாவம் நிறைந்த அற்பனுக்கு எவன் வசப்படச் செய்வானோ, அவன், மேன்மையானவனோடு கீழ்மையானவனைக் குழப்பிக் கொண்டதற்காக நிச்சயம் பாவத்தையே அடைவான்[3].(42)
பிரம்மன் பிராமணர்களை அவனது வாயிலிருந்து படைத்தான், 
க்ஷத்திரியர்களை அவனது கரங்களில் இருந்து படைத்தான். 
வைசியர்களை அவனது தொடைகளில் இருந்தும், 
சூத்திரர்களை அவனது பாதங்களில் இருந்தும் படைத்தான்.
அந்த நால்வகையில் ஒன்றோடொன்று இணைந்ததன் விளைவால், மேலான வர்க்கங்களில் பிறந்த மனிதர்கள், தங்களைவிடக் கீழான வர்க்கங்களின் பெண்களைத் திருமணம் செய்தும், நிலையெதிர்மாறாகச் செய்தும் {மேன்மையான பெண்கள், கீழ்மையான ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதாலும்}, அந்த நான்கிலிருந்து குறிப்பிட்ட வர்க்கங்கள் உதித்தன[4].(44)(பிற வர்க்கங்களின்) பாதுகாவலர்கள், செல்வத்தை அடைபவர்கள், அதையே {செல்வத்தைக்} கொடுப்பவர்கள் ஆகியோரே {மேலே} விளக்கப்பட்டிருக்கும் க்ஷத்திரியர்கள் ஆவர். வேள்விகளில் துணை செய்வது, கல்வி பயிற்றுவிப்பது, தூய கொடைகளை ஏற்பது ஆகியவற்றைச் செய்து மனிதர்களுக்கு நன்மை செய்வதற்காகப் பூமியில் நிறுவப்பட்டிருக்கிறார்கள்.

(45) உழவு, கால்நடை வளர்த்தல், கொடை ஆகியவையே சாத்திரங்களின் படி வைசியர்களின் தொழில்கள்.(46)

அதே போலச் சூதர்கள் {வர்ணக்கலப்பில் பிறந்தவர்கள்}, க்ஷத்திரியர்களுக்குப் பணியாட்களாவர், க்ஷத்திரியர்களோ சூதர்களுக்குப் பணியாட்கள் அல்ல. ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, என் இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக.(47) என்னைப் பொறுத்தவரை, புனித நீராடலுடன் மகுடம் சூடியவன் நான். அரச முனிகளின் குலத்தில் நான் பிறந்திருக்கிறேன். பெரும் தேர்வீரனாக நான் அறியப்பட்டிருக்கிறேன். வழிபாட்டுக்கும், பாணர்களும், சூதர்களும் {புகழ்ந்து} சொல்வன அல்லது பாடுவன ஆகியவற்றுக்கும் நான் தகுந்தவனாக இருக்கிறேன்.(48) ஓ! பகைவரின் துருப்புகளைக் கொல்பவனே, இவை யாவையுமாக இருக்கும் என்னால், போரில் சூதன் மகனுக்கு {கர்ணனுக்குச்} சாரதியாகச் செயல்பட முடியாது.(49) இந்த அவமதிப்பை அடைந்த நான் ஒருபோதும் போரிட மாட்டேன். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நான் வீடு திரும்புவதற்கு உன் அனுமதியைக் கேட்கிறேன்” என்றான் {சல்லியன்}.(50)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், மனிதர்களில் புலியும், சபைகளின் ரத்தினமுமான சல்லியன், சினத்தால் நிறைந்து, வேகமாக எழுந்து, மன்னர்களின் அந்தச் சபையில் இருந்து வெளியேற முயன்றான்.(51) எனினும், உமது மகன் {துரியோதனன்}, பாசத்தாலும், பெரும் மதிப்பினாலும் அம்மன்னனை நிறுத்தி, அனைத்து நோக்கங்களையும் அடையவல்ல இந்த இனிமையான, சமரச வார்த்தைகளை அவனிடம் {சல்லியனிடம்} சொன்னான்:(52) “ஓ! சல்லியரே, நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது {யாவும் இருக்கின்றன} என்பதில் ஐயமில்லை. ஆனால், நான் குறிப்பிட்ட ஒரு நோக்கத்தையே என் பார்வையில் கொள்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, அதைக் கேட்பீராக.(53) ஓ! மன்னா {சல்லியரே}, கர்ணன் உம்மிலும் மேன்மையானவன் இல்லை, மேலும் நான் உம்மில் ஐயங்கொள்ளவுமில்லை. மத்ரர்களின் அரசத் தலைவர் தவறானதை ஒருபோதும் செய்ய மாட்டார்.(54) மனிதர்களில் முதன்மையான உமது முன்னோர்கள் எப்போதும் உண்மையையே சொன்னார்கள். இதன் காரணமாகவே நீர் ஆர்த்தாயனி (உண்மையைத் தங்கள் புகலிடமாகக் கொண்டோரின் வாரிசு)[5] என்று அழைக்கப்படுவதாக நான் நினைக்கிறேன்.(55)ஓ! கௌரவங்களை அளிப்பவரே {சல்லியரே}, நீர் எதிரிகளுக்கு, முள்பதித்த கணையொன்றைப் {ஒரு கர்ணியைப்} போன்றவர்[6], எனவேதான் நீர் பூமியில் சல்லியன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறீர்.(56) வேள்விகளில் (பிராமணர்களுக்குப்) பெரும் கொடைகளை அளிப்பவரே, ஓ! அறவோனே, நீர் சாதிப்பீர் என்று முன்பு சொன்ன அனைத்தையும் சாதிப்பீராக.(57) அந்த முதன்மையான குதிரைகளுக்குச் சாரதியாக நான் தேர்ந்தெடுத்த உமக்கு, ராதையின் மகனோ {கர்ணனோ}, நானோ வீரத்தில் மேம்பட்டவர்கள் இல்லை.(58) எனினும், ஓ! ஐயா {சல்லியரே}, வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு) மேம்பட்டவராக உலகம் உம்மைக் கருதவதைப் போலவே, கர்ணனும் பல குணங்களில் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} மேம்பட்டவனே.(59) ஓ! மனிதர்களில் காளையே, ஆயுதகாரியங்களில் நிச்சயமாகக் கர்ணன் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} மேம்பட்டவனே. குதிரைகளின் அறிவு மற்றும் வலிமையில் நீரும் கிருஷ்ணனுக்கு மேம்பட்டவரே.(60) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, குதிரைகளில் உமது அறிவானது, உயர் ஆன்ம வாசுதேவனை {கிருஷ்ணனை} விட இரண்டு மடங்கு அதிகமானது என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.(61)சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே, ஓ! குருகுலத்தோனே {துரியோதனா}, இந்தத் துருப்புகள் அனைத்தின் மத்தியில் வைத்து, தேவகியின் மகனுக்கு {கிருஷ்ணனுக்கு} மேம்பட்டவனாக என்னை நீ விவரிப்பதால், உன்னிடம் நான் மனநிறைவு கொண்டேன்.(62) நீ வேண்டிக் கொள்வதைப் போலவே, அந்தப் பாண்டு மகன்களில் முதன்மையானவனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுகையில், பெரும்புகழைக் கொண்ட ராதையின் மகனுக்கு {கர்ணனுக்கு} நான் சாரதியாக இருப்பேன்.(63) எனினும், ஓ! வீரா {துரியோதனா}, விகர்த்தனன் மகனுடனான {கர்ணனுடனான} என் புரிதல் {புரிந்துணர்வு ஒப்பந்தம்} இவ்வாறு {பின்வருமாறு} இருக்கட்டும். அவனது முன்னிலையில் என் விருப்பப்படி எந்த வார்த்தைகளையும் நான் பேசுவேன்” என்றான் {சல்லியன்}.(64)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதரே, உமது மகன் {துரியோதனன்}, கர்ணனுடன் சேர்ந்து, அந்த மத்ரர்களின் இளவரசனிடம் {சல்லியனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான் {துரியோதனன்}” {என்றான் சஞ்சயன்}.(65)

துரியோதனன் சொன்ன சிவத் துதி! – கர்ண பர்வம் பகுதி – 33-தாரகாசுரனை முன்னிட்டு தேவர்களுக்கும், அசுரர்களுக்கு நடந்த போரைக் குறித்துச் சல்லியனிடம் சொன்ன துரியோதனன்; பிரம்மனை நோக்கித் தவமிருந்த தாரகனின் மகன்கள் மூவர்; வரமளித்த பிரம்மன்; மயனின் உதவியால் முந்நகரத்தை {திரிபுரத்தைக்} கட்டிய தைத்தியர்கள்; முந்நகரத்தை வெல்லத் தவறிய இந்திரன்; முந்நகரத்தை வெல்ல பிரம்மனிடம் வழிகேட்ட இந்திரன்; தேவர்கள் சொன்ன சிவத்துதி; ஆறுதலளித்த சிவன்.

துரியோதனன் {சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, ஓ! தலைவா {சல்லியரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில் என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் உமக்குச் சொல்லப் போவதை மீண்டும் கேட்பீராக.(1) இதைப் பெரும் முனிவரான மார்க்கண்டேயர் என் தந்தைக்கு உரைத்தார். ஓ! அரச முனிகளில் சிறந்தவரே, அதில் எதையும் விட்டுவிடாமல் இப்போது நான் உமக்கு உரைக்கிறேன். கிஞ்சிற்றும் ஐயமில்லாமல் நம்பிக்கையுடன் அவ்விவரங்களைக் கேட்பீராக.(2) ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் தாரகனையே {தாரகாசுரனையே} கேடாகக் (வேராகக்) கொண்ட பெரும் போர்[1] ஒன்று நடந்தது. தைத்தியர்கள் தேவர்களால் வீழ்த்தப்பட்டனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) தைத்தியர்கள் வீழ்ந்ததும், ஓ! மன்னா {சல்லியரே}, தாரகாக்ஷன் {தாராக்ஷன்}, கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற பெயர்கொண்ட தாரகனின் {தாரகாசுரனின்} மூன்று மகன்களும், கடும் தவங்களைப் பயின்று, உயர்ந்த நோன்புகளை நோற்று வாழ்ந்து வந்தனர். ஓ! எதிரிகளை எரிப்பவரே {சல்லியரே}, அந்த நோன்புகளால் அவர்கள் உடல் மெலிந்தவர்களானார்கள்.(4,5) வரமளிக்கும் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அவர்களின் சுயக்கட்டுப்பாடு, நோன்புகள், தவங்கள், தியானங்கள் ஆகியவற்றின் விளைவாக மனநிறைவு கொண்டு அவர்களுக்கு வரங்களை அளித்தான்.(6) ஒன்றாகச் சேர்ந்திருந்த அவர்கள், உலகத்தின் எந்த உயிரினத்தின் மூலமும், எக்காலத்திலும் மரணம் நேராதபடி {மரணமில்லாமையைப்} பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} வரம் கேட்டனர்.(7)தெய்வீகத் தலைவனும், உலகங்கள் அனைத்தின் குருவுமான அவன் {பிரம்மன்} அவர்களிடம், “எவ்வுயிரின் வாயிலாகவும் மரணமடையாதவாறு இருக்கக்கூடிய எந்தத் தன்மையும் உண்டாகாது. எனவே, அசுரர்களே, அத்தகு வேண்டுதல்களில் இருந்து விலகுவீராக. உங்களுக்கு விருப்பமான வேறேதும் வரத்தைக் கேட்பீராக” என்றான். பிறகு, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, வேறு வரத்தைக் குறித்து நீண்ட காலம் மீண்டும் மீண்டும் தங்களுக்குள் ஆலோசித்து, உலகங்கள் அனைத்தின் பெருங்குருவான அவனிடம் {பிரம்மனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள், “ஓ! தேவரே, ஓ! பெரும்பாட்டனே {பிரம்மாவே}, {பின்வரும்} இந்த வரத்தை எங்களுக்கு அளிப்பீராக.(9) {விரும்பியபடி காற்றில் திரியக்கூடிய} முந்நகரங்களில் {திரிபுரத்தில்} வசித்தபடியே உமது அருளால் நாங்கள் இவ்வுலகில் திரிந்து வருவோம்.(10) ஓராயிரம் வருடங்கள் சென்ற பிறகு, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம், எங்கள் முந்நகரங்களும் கூட ஒன்றுசேரும்.(11) அப்போது தேவர்களில் முதன்மையான எவனாவது, ஒரே கணையால் அந்த மூன்று நகரங்களையும் துளைத்தால், ஓ! தலைவோ, அப்போது எங்கள் அழிவு நேரட்டும்” என்று கேட்டனர்[2].(12)“அப்படியே ஆகட்டும்” என்று அவர்களிடம் சொன்ன அந்தத் தேவன் {பிரம்மன்} மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அவ்வரங்களைப் பெற்று மகிழ்ச்சியால் நிறைந்த அந்த அசுரர்கள், அந்த மூன்று நகரங்களையும் எவ்வாறு அமைக்க வேண்டும் என்று தங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டு,(13) அந்நோக்கத்தை அடைவதற்காக, அழிவோ, களைப்போ அறியாதவனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனும், பெரும் அசுரனும், தெய்வீகக் கைவினைஞனுமான மயனை {மயாசுரனைத்} தேர்ந்தெடுத்தனர்.(14) பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட மயன், தன் தவச் சக்தியின் துணையால், தங்கத்தாலான ஒன்றும், வெள்ளியால் மற்றொன்றும், கருப்பு இரும்பால் இன்னும் ஒன்றும் என முந்நகரங்களைக் கட்டமைத்தான்.(15) ஓ! பூமியின் தலைவா {சல்லியரே}, தங்க நகரம் சொர்க்கத்திலும், வெள்ளி நகரம் ஆகாயத்திலும், இரும்பு நகரம் பூமியிலும் என அவை அனைத்தும் வட்டமாகச் சுழன்று வருவது போன்ற வழியில் நிறுவப்பட்டன[3].(16) அந்த நகரங்கள் ஒவ்வொன்றும் நூறு யோஜனைகள் அகலமும், நூறு யோஜனைகள் நீளமும் கொண்டிருந்தன. மேலும் அவை, வீடுகளையும், மாளிகைகளையும், உயர்ந்த சுவர்களையும், முகப்பு மண்டபங்களையும் கொண்டிருந்தன.(17) ஒன்றுக்கொன்று நெருக்கமாகச் சிறந்த அரண்மனைகளால் பெருகியிருந்தாலும், அவற்றின் தெருக்கள் {வீதிகள்} அகலமாகவும், விசாலமாகவும் இருந்தன. மேலும் அவை பல்வேறு மாளிகைகளாலும், வாயில்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18)மேலும், ஓ! ஏகாதிபதி {சல்லியரே}, அந்நகரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக மன்னன் ஒருவனைக் கொண்டிருந்தன.(19) தங்கத்தாலான அழகிய நகரமானது சிறப்புமிக்கத் தாரகாக்ஷனுக்கும், வெள்ளியாலான நகரம் கமலாக்ஷனுக்கும், இரும்பாலானது வித்யுன்மாலிக்கும் சொந்தமானவையாக இருந்தன.(20) அந்தத் தைத்திய மன்னர்கள் மூவரும், விரைவில் தங்கள் சக்தியால் மூவுலகங்களையும் தாக்கியபடி அங்கே வசித்து ஆட்சி செய்து கொண்டே, “படைத்தவன் என்று அழைக்கப்படுபவன் எவன்?”[4] என்று சொல்லத் தொடங்கினர்.(21) தங்களுக்கு நிகரான வீரர்கள் எவரும் இல்லாதவர்களும், தானவர்களில் முதன்மையானவர்களுமான அவர்களிடம் {அந்த மூன்று மன்னர்களிடம்}, செருக்குடையவர்களும், தேவர்களால் முன்பு வீழ்த்தப்பட்டவர்களும், பெரும் செழிப்பை விரும்பியவர்களுமான ஊனுண்ணும் தானவர்கள் லட்சக் கணக்கில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வந்து, அந்த முந்நகரங்களில் குடியேறினர்.(22,23) இவ்வாறு ஒன்றாகச் சேர்ந்த அவர்கள் அனைவருக்கும் விரும்பிய அனைத்தையும் கொடுப்பவனாக மயன் இருந்தான். அவனை நம்பியே, முற்றிலும் அச்சமற்ற வகையில் அவர்கள் அனைவரும் அங்கே வசித்தனர்.(24) முந்நகரத்தில் வசித்தவர்களில் எவரும், எப்பொருளையும் தன் இதயத்தால் விரும்பினால், மயன் தனது மாயா சக்திகளின் துணையால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றினான்.(25)தாரகாக்ஷன், ஹரி என்ற பெயரில் ஒரு வீரமான, வலிமைமிக்க மகனைப் பெற்றிருந்தான். மிகக் கடுமையான தவங்களைச் செய்த அவனிடம் பெரும்பாட்டன் {பிரம்மன்} மனநிறைவு கொண்டான்.(26) அந்தத் தேவன் {பிரம்மன்} மனம் நிறைந்த போது, அவனிடம் ஹரி, “ஆயுதங்களால் கொல்லப்பட்டவர்கள் {தடாகத்தில்} வீசப்பட்டால், இருமடங்கு பலத்துடன் உயிருடன் மீண்டு வரும் வகையில் எங்கள் நகரத்தில் ஒரு தடாகம் உண்டாகட்டும்”[5] என்ற ஒரு வரத்தைக் கேட்டான்.(27) இந்த வரத்தை அடைந்தவனும், தாரகாக்ஷனின் மகனுமான வீரன் ஹரி, ஓ! தலைவா {சல்லியரே}, இறந்தோரை உயிருடன் மீட்கவல்ல ஒரு தடாகத்தைத் தன் நகரத்தில் உண்டாக்கினான்.(28) எவ்வடிவமும், எத்தோற்றமும் கொண்ட தைத்தியன் எவன் கொல்லப்பட்டாலும், அத்தடாகத்தில் அவன் வீசப்பட்டால், அதே வடிவம் மற்றும் தோற்றத்துடன் மீண்டும் அவன் உயிரோடு வெளியே வந்தான்.(29) தைத்தியர்கள், தங்களில் கொல்லப்பட்டோரை மீண்டும் அடைந்து, மூன்று உலகங்களையும் பீடிக்கத் தொடங்கினர். தவ வழிகளின் மூலம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், தேவர்களின் அச்சங்களை அதிகரிப்பவர்களுமான அவர்கள் {தைத்தியர்கள்}, ஓ! மன்னா {சல்லியரே}, போரில் எந்த இழப்பையும் அடையவில்லை.(30,31)பேராசை, மூடத்தனம் ஆகியவற்றால் மயக்கமடைந்து, தங்கள் அறிவை இழந்த அவர்கள் அனைவரும், அண்டத்தில் நிறுவப்பட்ட மாநகரங்கள் மற்றும் நகரங்களை வெட்கமில்லாமல் அழித்தனர்.(32) தாங்கள் பெற்ற வரங்களால் செருக்கில் நிறைந்த அவர்கள், எந்நேரமும், எல்லா இடங்களிலும், தேவர்களையும், அவர்களது துணைவர்களையும் தங்கள் முன் விரட்டிக் கொண்டே, தெய்வீகக் காடுகள், சொர்க்கவாசிகளின் விருப்பத்திற்குரிய ஆட்சிப்பகுதிகள் மற்றும் இனிமையானவையும், புனிதமானவையுமான முனிவர்களின் ஆசிரமங்கள் ஆகியவற்றில் விரும்பியவாறெல்லாம் திரிந்து கொண்டிருந்தனர். மேலும் தீயவர்களான அந்தத் தானவர்கள் எவருக்கும் எந்த மரியாதையும் காட்டவில்லை.(33,34) உலகங்கள் இவ்வாறு பீடிக்கப்படுகையில், மருத்துக்களால் சூழப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் இடியை {வஜ்ரத்தை} ஏவிய படி அந்த முந்நகரங்களையும் எதிர்த்துப் போரிட்டான்.(35) எனினும், ஓ! மன்னா {சல்லியரே}, படைத்தவனின் {பிரம்மனின்} வரங்களால் ஊடுருவமுடியாதவையாக இருந்த அந்த நகரங்களைத் துளைப்பதில் புரந்தரன் {இந்திரன்} தவறியபோது, அச்சத்தில் நிறைந்த அந்தத் தேவர்களின் தலைவன்{இந்திரன்} அந்நகரங்களை விட்டகன்று, அசுரர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளைத் தெரிவிப்பதற்காக, எதிரிகளைத் தண்டிப்பவரான பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றான்.(36,37)

தெய்வீகமான பெரும்பாட்டனிடம் அனைத்தையும் தெரிவித்து, அவனுக்குத் தலைவணங்கிய அவர்கள், முந்நகரத்தை {திரிபுரத்தை} அழிக்கக்கூடிய வழிமுறைகளைக் கேட்டனர்.(38) இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {பிரம்மன்}, “உங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவன் எவனும், எனக்கு எதிராகக் குற்றம் செய்தவனே ஆவான்.(39) அசுரர்கள் அனைவரும், தீய ஆன்மாக்களைக் கொண்டவர்களாகவும், எப்போதும் தேவர்களை வெறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். உங்களுக்கு வலியை {துன்பத்தைத்} தருபவர்கள், எனக்கு எதிராக எப்போதும் குற்றம் இழைப்பவர்களே.(40) உயிரினங்கள் அனைத்திடமும் நான் வேறுபாடு காணாதவன். இதில் எந்த ஐயமும் கிடையாது. எனினும், அநீதிமிக்கவர்கள் {அதர்மிகள்} அனைவரும் கொல்லத்தக்கவர்களே. இதுவே என் நிலைத்த நோன்பாகும்.(41) அந்த மூன்று கோட்டைகளும் [6] ஒரே கணையால் துளைக்கப்பட வேண்டும். வேறு எவ்வழியாலும் அவற்றை அழிக்க முடியாது. ஸ்தாணுவை {சிவனைத்} தவிர வேறு எவனாலும் அவற்றை ஒரே கணையால் துளைக்க முடியாது.(42) ஆதித்யர்களே, ஈசானன் என்றும், ஜிஷ்ணு என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுபவனும், உழைப்பில் எப்போதும் களைப்பறியாதவனுமான ஸ்தாணுவை {சிவனை} உங்கள் போர்வீரனாகத் தேர்ந்தெடுப்பீராக. அவனே அந்த அசுரர்களை அழிப்பான்” என்றான் {பிரம்மன்}.(43)பிரம்மனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலானவர்களுமான தேவர்கள், பிரம்மனைத் தங்கள் தலைமையாகக் கொண்டு, காளையைத் தன் குறியீடாகக் கொண்ட தேவனின் {சிவனின்} பாதுகாப்பை நாடி சென்றனர்.(44) கடுந்தவங்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர்களும், வேதங்களின் அழியாத வார்த்தைகளைச் சொல்பவர்களுமான முனிவர்களின் துணையுடன் கூடிய அந்த நீதிமான்கள் {தேவர்கள்}, தங்கள் மொத்த ஆன்மாவான பவனை {சிவனை} நாடினார்கள்.(45) அனைத்துச் சூழ்நிலைகளிலும் அச்சங்களை விலக்குபவனும், அண்டத்தின் ஆன்மாவும், தன் ஆன்மாவால் அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவனுமான அந்தப் பரமாத்மாவை {ஈஸ்வரனான சிவனை} வேதங்களின் உயர்ந்த வார்த்தைகளில் அவர்கள் புகழ்ந்தனர்.(46) தன் ஆன்மாவின் செயல்பாடுகள் அனைத்தையும் தனிச்சிறப்புக் கொண்ட தவங்களால் நிறுத்த அறிந்தவனும், ஆன்மாவுக்கும், பருப்பொருளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்தவனும், தன் ஆன்மாவை எப்போதும் கட்டுக்குள் கொண்டவனும், அண்டத்தில் ஒப்பற்றவனும், (அனைத்திற்கும்) மூலமானவனும், பாவமற்றவனும், ஈசானன் என்று அழைக்கப்படுபவனுமான அந்த உமையின் தலைவனை {சிவனை}, அவர்கள் கண்டனர்.(47,48) அந்தத் தேவன் ஒருவனேயென்றாலும், அவர்கள் பல்வேறு வடிவங்களில் அவனைக் கற்பனை செய்திருந்தனர். அவர்கள், தங்கள் தங்கள் இதயங்களில் தனித்தனியாகக் கண்டிருந்த பல்வேறு வடிவங்கள் ஒவ்வொன்றையும் அந்த உயர் ஆன்மாவிடம் {சிவனிடம்} கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(49) பிறவாதவனான அந்த அண்டத் தலைவனை உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களில் கண்ட அந்தத் தேவர்களும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் அனைவரும், தங்கள் சிரங்களால் பூமியைத் தொட்டனர்.[7](50)“நல்வரவு” என்ற வார்த்தையால் அவர்களை வணங்கி, அவர்களது பணிந்த தன்மையில் இருந்து அவர்களை உயர்த்திச் சிரித்த சிறப்புமிக்கச் சங்கரன், “உங்கள் வருகையின் நோக்கத்தை எமக்குச் சொல்வீராக” என்றான்.(51) முக்கண் தேவனால் {சிவனால்} இவ்வாறு ஆணையிடப்பட்டதும் அவர்களது இதயங்கள் ஆறுதலை அடைந்தன. அப்போது அவர்கள் அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்: “ஓ! தலைவா, உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம். தேவர்கள் அனைவரின் மூலமே ஆனவனும், வில் தரித்தவனும், கோபத்தால் நிறைந்தவனுமான உன்னை வணங்குகிறோம். உயிரினங்கள் அனைத்தின் தலைவனுடைய (தக்ஷனின்) வேள்வியை அழித்தவனும், உயிரினங்களின் தலைவர்கள் அனைவராலும் புகழப்படுபவனுமான உன்னை வணங்குகிறோம்.(53) சிவந்தவனும், மூர்க்கமானவனும், நீல மிடறு {தொண்டை} கொண்டவனும், திரிசூலந்தரித்தவனும்,(54) கலங்கடிக்கப்பட முடியாதவனும், மான்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், ஆயுதங்களில் முதன்மையான ஆயுதத்தைக் கொண்டு போரிடுபவனும், துதிகள் அனைத்திற்கும் தகுந்தவனும், மிகத் தூய்மையானவனும், அழிவின் வடிவே ஆனவனும், காலனே ஆனவனும்,(55) தடுக்கப்பட முடியாதவனும், பிரம்மனே ஆனவனும், பிரம்மச்சாரியின் வாழ்வை நோற்பவனும், ஈசானனும், அளக்கப்பட முடியாதவனும், பெரும் கட்டுப்பாட்டாளனும், கந்தலாடை அணிந்தவனும்,(56) பழுப்பானவனும், நோன்புகளை நோற்பவனும், விலங்கின் தோல்களை ஆடையாக அணிந்தவனும், குமாரனின் {முருகனின்} தந்தையும், முக்கண்ணனும், ஆயுதங்களில் முதன்மையான ஆயுதத்தைத் தரிப்பவனும்,(57) {உன்} பாதுகாப்பை நாடுவோர் அனைவரின் துன்பங்களை அழிப்பவனும், பிராமணர்களை வெறுப்போர் அனைவரையும் அழிப்பவனும், மரங்கள் அனைத்தின் தலைவரும், மனிதர்கள் அனைவரின் தலைவனும், பசுக்கள் அனைத்தின் தலைவனும், எப்போதும் வேள்விகளின் தலைவனாக இருப்பவனுமான உன்னை வணங்குகிறோம்.(58) துருப்புகளின் தலைமையில் எப்போதும் இருப்பவனும், முக்கண்ணனும், கடும் சக்தி கொண்டவனுமான உன்னை வணங்குகிறோம். எண்ணம், சொல் மற்றும் செயல்களில் நாங்கள், எங்களை உனக்கு அர்ப்பணிக்கிறோம். எங்களிடம் அருள்கூர்வாயாக” {என்றனர்}.(59) இந்தத் துதியால் மனம் நிறைந்த அந்தப் புனிதமானவன் {சிவன்}, “நல்வரவு” என்ற வார்த்தையால் வணங்கி, அவர்களிடம், “உங்கள் அச்சங்கள் அகலட்டும். உங்களுக்கு யாம் செய்ய வேண்டியதைச் சொல்வீராக” என்றான் [சிவன்]”[8].(60)

சிவனின் தேர்! – கர்ண பர்வம் பகுதி – 34அ-திரிபுரவாசிகளைக் கொல்ல சிவனைத் துதித்த பிரம்மன்; ஒற்றுமையாக இருக்கும் தங்கள் பலத்தில் பாதி அளவைக் கொண்டு அசுரர்களைக் கொல்ல சிவனை வேண்டிய தேவர்கள்; மஹாதேவன் என்று சிவன் அழைக்கப்படுவதற்கான காரணம்; போரிடத் தகுந்த தேர், வில் மற்றும் கணையை உண்டாக்குமாறு தேவர்களைப் பணித்த சிவன்; மூவுலகங்களின் பகுதிகள் அனைத்தையும் கொண்டு, விஸ்வகர்மனின் கைவண்ணத்தால் தேவர்கள் உண்டாக்கிய தேர், வில் மற்றும் கணை; தேரில் ஏறிய சிவன், தனக்குச் சாரதி யார் எனக் கேட்டது…

துரியோதனன் {சல்லியனிடம்}, “அந்த உயர் ஆன்ம தேவனால் {சிவனால்}, பித்ருக்கள், தேவர்கள் மற்றும் முனிவர்கள் கூட்டத்தின் அச்சங்கள் இவ்வாறு விலக்கப்பட்ட பிறகு, பிரம்மன், அண்டத்தின் நன்மைக்காக இவ்வார்த்தைகளால் சங்கரனை {சிவனைத்} துதித்தான்:(1) “ஓ! அனைவரின் தலைவா, உன்னருளால், உயிர்கள் அனைத்தின் தலைமையும் எனதாகியது. அந்தப் பதவியை அடைந்த நான் தானவர்களுக்குப் பெரும் வரத்தை அளித்துவிட்டேன்.(2) ஓ! கடந்த காலம் மற்றும் எதிர் காலங்களின் தலைவா, எவருக்கும் எம்மதிப்பையும் காட்டாத அந்தத் தீய அற்பர்களை அழிக்கும் வல்லமை உன்னைத்தவிர வேறு எவருக்கும் தகாது. ஓ! தேவா, உன் பாதுகாப்பை நாடுபவர்களும், உன்னை வேண்டுபவர்களுமான இந்தச் சொர்க்கவாசிகளின் எதிரிகளைக் கொல்லத்தகுந்த ஒரே ஒருவன் நீயே. ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, இவர்களுக்கு உன் அருளைத் தருவாயாக. ஓ! திரிசூலம் தரித்தவனே, தானவர்களைக் கொல்வாயாக.(3,4) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, உன் அருளால் அண்டம் மகிழ்ச்சியை அடையட்டும். ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவா, தஞ்சம் அளிப்பவன் எவனோ, அவன் நீயே. நாங்கள் அனைவரும் உன்னைத் தஞ்சமடைந்தோம்” என்றான் {பிரம்மன்}.(5)

ஸ்தாணு {சிவன்}, “உங்கள் எதிரிகள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். எனினும், தனியொருவனாக அவர்களை நான் கொல்லத் துணியேன். தேவர்களின் எதிரிகள் வலிமையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(6) எனவே, நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து என் வலிமையில் பாதியைக் கொண்டு உங்கள் எதிரிகளைப் போரில் எரிப்பீராக. ஒற்றுமையே பெரும்பலமாகும்” என்றான்.(7)

தேவர்கள் {சிவனிடம்}, “நாங்கள் ஏற்கனவே அவர்களது சக்தியையும், வலிமையையும் கண்டிருப்பதால், அவர்கள் சக்தியிலும், வலிமையிலும் எங்களைவிட இருமடங்கு அதிகமானவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றனர்.(8)

அதற்கு அந்தப் புனிதமானவன் {சிவன்}, “உங்களுக்கு எதிராகக் குற்றமிழைத்த அந்தப் பாவம் நிறைந்த அற்பர்கள் கொல்லப்பட வேண்டும். என் சக்தியிலும், வலிமையிலும் பாதியைக் கொண்டு அந்த உங்கள் எதிரிகள் அனைவரையும் கொல்வீராக” என்றான்.(9)

தேவர்கள் {சிவனிடம்}, “ஓ! மஹேஸ்வரா, உன் சக்தியில் பாதியை எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. மறுபுறம், ஒற்றுமையுடன் உள்ள எங்களின் வலிமையில் பாதியைக் கொண்டு எங்கள் எதிரிகளை நீயே கொல்வாயாக” என்றனர்.(10)

அந்தப் புனிதமானவன் {சிவன்}, “உண்மையில் என் வலிமையில் பாதியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், ஒற்றுமையாக இருக்கும் உங்கள் சக்தியில் பாதியைக் கொண்டு நான் அவர்களைக் கொல்வேன்” என்றான்.(11)

துரியோதனன் {சல்லியனிடம்} தொடர்ந்தான், “பிறகு தேவர்கள், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {சல்லியரே}, அந்தத் தேவர்களின் தேவனிடம் {சிவனிடம்} “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். அவர்கள் அனைவரிடம் இருந்தும் அவர்களது பாதிச் சக்தியை எடுத்துக் கொண்ட அவன், வலிமையில் மேன்மையானவன் ஆனான்.(12) உண்மையில், அந்தத் தேவன், அண்டத்தில் உள்ள அனைவருக்கும் வலிமையில் மேன்மையானவனாக ஆனான். அந்நேரத்தில் இருந்துதான் சங்கரன் மஹாதேவன் {பெருந்தேவன்} என்று அழைக்கப்பட்டான்.(13)

அப்போது மகாதேவன், “சொர்க்கவாசிகளே, வில்லையும், கணையையும் தரித்து என் தேரில் இருந்து கொண்டு, உங்கள் எதிரிகளான அவர்களைப் போரில் நான் கொல்வேன்.(14) எனவே, தேவர்களே, இந்த நாளே நான் அசுரர்களைப் பூமியில் வீழ்த்துமாறு, இப்போது எனக்குத் தேரையும், வில்லையும், கணையையும் ஏற்படுத்துவீராக” என்றான்[1].(15)

தேவர்கள், “ஓ தேவர்களின் தலைவா, மூவுலகங்களில் காணப்படும் வடிவங்கள் அனைத்தையும் திரட்டி, அவை ஒவ்வொன்றின் பகுதிகளை எடுத்துக் கொண்டு, பெரும் சக்தி கொண்ட ஒரு தேரை நாங்கள் உனக்கு அமைப்போம்.(16) விஸ்வகர்மனின் கைவண்ணத்தில், பெரும் நுண்ணறிவுடன் வடிமைக்கப்பட்ட பெரும் தேராக அஃது இருக்கும்” என்றனர். இதைச் சொன்ன அந்தத் தேவப்புலிகள், அந்தத் தேரைக் கட்டத் தொடங்கினர்.(17) மேலும் அவர்கள், அந்தச் சங்கரன் பயன்படுத்தும் கணையாக விஷ்ணு, சோமன் {சந்திரன்} மற்றும் ஹுதாசனன் {அக்னி} ஆகியோரைச் செய்தனர். ஓ! மன்னா {சல்லியரே}, கணைகளில் முதன்மையான அந்தக் கணையின் கைப்பிடியாக அக்னியும், தலையாகச் சோமனும், முனையாக விஷ்ணுவும் ஆகினர்.(18) பெரும் நகரங்கள், பட்டணங்கள், மலைகள், காடுகள், தீவுகள் ஆகியவற்றுடன் கூடியவளும், பல்வேறு உயிரினங்களுக்கு வீடானவளுமான பூமாதேவியே தேராக்கப்பட்டாள்.

மந்தரமலை அதன் அச்சாணியாக்கப்பட்டது; பெரும் ஆறான கங்கை[2] ஜங்கமானது {பக்கத்தடுப்புகள்}; முக்கிய மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகள் அந்தத் தேரின் ஆபரணங்களாகின.(20) நட்சத்திரக்கூட்டங்கள் அதன் சுழல்தண்டாகியது; கிருத யுகம் அதன் நுகத்தடியானது; பாம்புகளில் சிறந்த வாசுகி அந்தத் தேரின் கூபரம் ஆனான்.(21) இமய மற்றும் விந்திய மலைகள் அபஸ்கரம் மற்றும் அதிஷ்தானங்களாகின {தேரின் பாகங்களாகின}; உதய மற்றும் அஸ்த மலைகள், தேவர்களில் முதன்மையான அந்தத் தேவனின் {சிவனின்} தேருடைய சக்கரங்களாகின.(22) தானவர்களின் வசிப்பிடமான சிறந்த பெருங்கடலை அதன் மற்றொரு அச்சாணியாக அவர்கள் ஆக்கினார்கள். ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, அந்தத் தேரின் சக்கரங்களுக்குப் பாதுகாவலர்களானார்கள்.(23) கங்கை, சரஸ்வதி, சிந்து, வானம் ஆகியன அதன் துரமாக {தேரின் பகுதிகள்} ஆகின; பிற ஆறுகள் அனைத்தும் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும், அந்தத் தேரின் அங்கங்கள் {பகுதிகளை} பலவற்றைக் கட்டும் கயிறுகளாகின.(24) பகல், இரவு, காலத்தின் பல பிரிவுகளான கலைகள், காஷ்டைகள், பருவங்கள் ஆகியன அதன் அனுஷ்கரமாகின. சுடர்மிக்கக் கோள்களும், நட்சத்திரங்களும் அதன் மரத்தடுப்புகளாகின.(25)

அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்று கலந்து அதன் திரிவேணுவாகின {தேரின் பகுதிகளை இணைக்கும் மூங்கில் கழிகள்}. மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்ட செடிகொடிகள் அதன் மணிகளாகின.(26) சூரியனும், சந்திரனும் சமமாக்கப்பட்டு, அவை அந்தத் தேர்களில் முதன்மையான தேரின் (வேறு இரண்டு) சக்கரங்களாகின. பகலும், இரவும் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உள்ள அதன் மங்கலமான சிறகுகளாகின.(27) திருதராஷ்டிரனை முதன்மையாகக் கொண்ட பத்து முதன்மையான பாம்புகள் அத்தனையும், அந்தத் தேரின் (மற்றொரு) சுழல்தண்டாகின. வானம் அதன் (மற்றொரு) நுகத்தடியாக்கப்பட்டது, சம்வர்த்தகம், வலாகம் என்று அழைக்கப்படும் மேகங்கள், அந்த நுகத்தடியின் தோல் இழைகளாகின. இரு சந்திப் பொழுதுகளும், திருதி, மேதை, ஸ்திதி, சந்நதி,[3] கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் விரவிக் கிடக்கும் ஆகாயம் ஆகியன அந்தத் தேரை மறைக்கும் தோல்களாகச் செய்யப்பட்டன. தேவர்கள், நீர்நிலைகள், இறந்தோர் மற்றும் பொக்கிஷங்கள் ஆகியவற்றுக்குத் தலைவர்களான லோகபாலர்கள் அந்தத் தேரின் குதிரைகளாக்கப்பட்டனர்[4].(29) காலபிருஷ்டன், நகுஷன், கார்க்கோடகன், தனஞ்சயன் மற்றும் இன்னும் பிற பாம்புகள், அந்தக் குதிரைகளின் பிடறிகளைக் கட்டும் கயிறுகளாகினர்.(30) முக்கிய மற்றும் துணைத்திசைகள் அந்தத் தேரின் குதிரைகளுடைய கடிவாளங்களாகின. வேதவொலியான வஷத்தானது {வஷத்காரமானது} தான்றுகோலானது {சாட்டை போன்றது}, காயத்ரி அந்தக் கோலுடன் இணைந்த இழையானது.(31)

மங்கல நாட்கள் நான்கும் குதிரைகளின் சேணங்களாகின, அவற்றை ஆட்சி செய்யும் பித்ருக்கள் அதன் சங்கிலிகளாகவும், ஊசிகளாகவும் ஆகின[5].(32) செயல், உண்மை, தவநோன்புகள், பொருள் ஆகியன அந்தத் தேரின் கயிறுகளாக்கப்பட்டன. மனமானது அந்தத் தேர் நிற்கும் தரையானது, வாக்கே {பேச்சே} அது செல்லும் தடமானது.(33) பல்வேறு வண்ணங்களிலான கொடிகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மின்னலுடனும், அதனுடன் இணைந்த இந்திரவில்லுடனும் {வானவில்லுடனும்} அந்தச் சுடர்மிக்கத் தேரானது கடும் ஒளியை வெளியிட்டது. முன்பொரு சமயம், உயர் ஆன்ம ஈசானனின் வேள்வியில் ஒரு வருடம் என நிர்ணயிக்கப்பட்ட காலவெளியானது ஒரு வில்லானது, சாவித்ரி தேவி வில்நாண் கயிற்றின் உரத்த ஒலியானாள்.(35) விலைமதிப்பற்ற ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், ஊடுருவ முடியாததும், பிரகாசமானதும், காலச்சக்கரத்தில் இருந்து உதித்ததுமான ஒரு தெய்வீகக் கவசமும் உண்டாக்கப்பட்டது.(36) தங்க மலையான அந்த அழகிய மேரு, கொடிக்கம்பமானது, மின்னலின் கீற்றுகளைக் கொண்ட மேகங்கள் அதன் கொடிகளாகின.(37) இப்படி ஆயத்தம் செய்யப்பட்ட அந்தத் தேரானது, வேள்வி நடத்தும் புரோகிதர்களுக்கு மத்தியில் சுடர்விடும் நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது. முறையாக ஆயத்தம் செய்யப்பட்ட அந்தத் தேரைக் கண்ட தேவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(38)

ஓ ஐயா {சல்லியரே}, மொத்த அண்டத்தின் சக்திகளும் ஒரே இடத்தில் ஒன்றாக இணைந்ததைக் கண்ட தேவர்கள் ஆச்சரியப்பட்டு, இறுதியாக அந்தச் சிறப்புமிக்கத் தேவனிடம் {சிவனிடம்} அந்தத் தேர் தயாராகிவிட்டது எனத் தெரிவித்தனர்.(39) ஓ! ஏகாதிபதி {சல்லியரே}, ஓ! மனிதர்களில் புலியே {சல்லியரே}, இவ்வாறு தேவர்களால் தங்கள் எதிரிகளைக் கலங்கடிப்பதற்காகத் தேர்களில் சிறந்த அந்தத் தேரானது கட்டமைக்கப்பட்டதும், அதில் சங்கரன் {சிவன்} தனது தெய்வீக ஆயுதங்களை வைத்தான். வானத்தையே அதன் கொடிக்கம்பமாக ஏற்படுத்திக் கொண்ட அவன், ஆவின வகையான தன் காளையை அதில் வைத்தான்.(41) பிரம்ம தண்டம், காலத் தண்டம், ருத்ர தண்டம், நோய் ஆகியன அந்தத் தேர் பக்கவாட்டுகளின் பாதுகாவலர்களாகி, அனைத்துப் பக்கங்களை நோக்கியும் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டன.(42) அதர்வனும் {அதர்வ வேதமும்}, அங்கீரசும் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் {சிவனின்} தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்களானார்கள். ரிக் வேதம், சாமவேதம், புராணங்கள் ஆகிய அந்தத் தேருக்கு முன்பாக நின்றன.(43) வரலாறுகளும், யஜுர்வேதமும் பின்புறத்தின் பாதுகாவலர்களாகின. ஓ! ஏகாதிபதி {சல்லியரே}, புனித உரைகள் அனைத்தும், அறிவியல்கள் அனைத்தும், பாடல்கள் அனைத்தும், வேதவொலியான வஷத்தும் {வஷத்காரமும்} கூட அதைச் சூழ்ந்து நின்றன.(44) ஓ! மன்னா {சல்லியரே}, ஓரசையான “ஓம்” என்ற சொல்லானது அந்தத் தேருக்கு முன்பாக நின்று அதை மிகவும் அழகாக்கியது.(45)

ஆறுபருவங்களால் அலங்கரிக்கப்பட்ட வருடத்தையே வில்லாகக் கொண்ட அவன் {சிவன்}, அந்தப் போரில் தன் நிழலையே அந்த வில்லின் உறுதியான நாண்கயிறாக்கினான்.(46) அந்தச் சிறப்பு மிக்க ருத்திரன் காலனேயாவான்; வருடமே அவனது வில்லானது; எனவே, ருத்திரனின் நிழலான நள்ளிரவானது {மரண இரவானது} அந்த வில்லின் அழிக்கப்பட முடியாத நாண்கயிறானது.(47) (ஏற்கனவே சொன்னது போல) விஷ்ணு, அக்னி மற்றும் சோமன் ஆகியோர் கணையாகினர். இந்த அண்டமானது, அக்னியையும், சோமனையும் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதே போல இந்த அண்டம் விஷ்ணுவைக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் விஷ்ணுவானவன், அளக்க முடியாத சக்தி கொண்ட புனிதமான பவனின் {சிவனின்} ஆன்மாவாவான். இதனாலேயே வில்லின் அந்த நாண்கயிறானது அசுரர்களுக்குத் தாங்கமுடியாததாக இருந்தது[6].(49) பிருகு, அங்கிரஸ் ஆகியோரின் கோபத்தில் தோன்றியதும், தாங்கிக் கொள்ளப்பட முடியாததும், கோப நெருப்பானதும், தடுக்கப்பட முடியாததுமான தன் கடுங்கோபத்தைச் சங்கரன் {சிவன்} அந்தக் கணையில் செலுத்தினான்.(50) அப்போது, நீலமும் சிவப்பும் ஆனவனும், அல்லது புகையானவனும், பத்தாயிரம் சூரியர்களைப் போலத் தெரிபவனும், மட்டுமீறிய நெருப்பால் சூழப்பட்டவனும், தோல்களை உடுத்தியவனுமான அந்தப் பயங்கரத் தேவன் {சிவன்} காந்தியால் சுடர்விட்டெரிந்தான்.(51)

சங்கடப்படுத்த மிகக் கடினமானவனையும் சங்கடப்படுத்துபவனும், வெற்றியாளனும், பிரம்மத்தை வெறுப்போர் அனைவரையும் கொல்பவனும், ஹரன் என்றும் அழைக்கப்படுபவனும், நீதிமான்களை {அறவோரை} மீட்டு, நீதியற்றவர்களை {மறவோரை} அழிப்பவனுமான அந்தச் சிறப்புமிக்க ஸ்தாணு {சிவன்}, வலிமையும், பயங்கரமும் நிறைந்தவர்களும், பயங்கர வடிவங்களைக் கொண்டவர்களும், மனோ வேகம் கொண்டவர்களும், (எதிரிகள் அனைவரையும்) கலங்கடித்து நொறுக்க வல்லவர்களுமான பலரின் துணையுடன், தன்னைக் குறித்து விழிப்படையச் செய்யும் ஆன்மாவின் நுட்பமான பதினான்கு திறன்களுடன் கூடியவனைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(52,53) ஓ! மன்னா {சல்லியரே}, அவனது அங்கங்களையே தங்கள் புகலிடமாகக் கொண்ட இந்த மொத்த அண்டமும், அசையும் மற்றும் அசையாத உயிர்களுடன் சேர்ந்து மிக உயர்ந்த அற்புதமான தோற்றத்தைக் கொண்டு அழகாகத் தெரிந்தது.(54) முறையாக ஆயத்தம் செய்யப்பட்ட அந்தத் தேரைக் கண்ட அவன் {சிவன்}, தன் மேனியில் கவசம் பூண்டு கொண்டு, வில்லையும் தரித்துக் கொண்டு, சோமன், விஷ்ணு மற்றும் அக்னி ஆகியோரிடம் இருந்து உண்டான அந்தத் தெய்வீகக் கணையை எடுத்துக் கொண்டான்.(55)

பிறகு தேவர்கள், ஓ! மன்னா {சல்லியரே}, அந்தப் பலமிக்கத் தேவன் {சிவன்} மீது தான் கொண்டுள்ள நறுமணங்கள் அனைத்தையும் வீசும்படி தேவர்களில் முதன்மையான வாயுவுக்கு ஆணையிட்டனர்.(56) அப்போது மஹாதேவன் {சிவன்}, தேவர்களையே அச்சுறுத்தியபடி, பூமியையே நடுங்கச் செய்தபடி அந்தத் தேரில் உறுதியான தீர்மானத்துடன் ஏறினான்.(57) அந்தத் தேவர்களுக்குத் தேவன் {சிவன்}, அந்தத் தேரில் ஏறும்போது, பெரும் முனிவர்கள், கந்தர்வர்கள், தேவர்க்கூட்டங்கள், அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் ஆகியோர் துதிபாடத் தொடங்கினர்.(58) வரமளிக்கும் அந்தத் தேவன் {சிவன்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களால் புகழப்பட்டும், பாணர்களாலும், ஆடற்கலையை நன்கறிந்த பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த நர்த்தகிகளான அப்சரஸ்களால் துதிக்கப்பட்டும், வாள், கணை மற்றும் வில்லைத் தரித்துக் கொண்டு மிக அழகாகத் தெரிந்தான். பிறகு புன்னகைத்த அவன் {சிவன்}, அந்தத் தேவர்களிடம், “எவன் எனது சாரதியாவான்?” என்று கேட்டான்.{என்றான் துரியோதனன்}.(59,60)

திரிபுரம் எரித்த சிவன்! – கர்ண பர்வம் பகுதி – 34ஆ-தேவர்களிடம் தனக்கு ஒரு சாரதியை நியமிக்குமாறு கேட்ட சிவன்; சிவனுக்குச் சாரதியாக இருக்கப் பிரம்மனிடம் வேண்டிய தேவர்கள்; கோரிக்கையை ஏற்ற பிரம்மன்; திரிபுரத்தை எரித்த சிவன்; சிவனுக்குச் சாரத்தியம் ஏற்ற பிரம்மனைப் போல, சல்லியனும் கர்ணனுக்குச் சாரதியாக வேண்டும் என வேண்டிய துரியோதனன்…

{துரியோதனன் சல்லியனிடம் தொடர்ந்தான்}, “தேவர்கள் அவனிடம் {சிவனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, யாரை நீ நியமிப்பாயோ, அவரே உன் சாரதியாகட்டும்” என்றனர்.(61) அவர்களிடம் அந்தத் தேவன் {சிவன்}, “நீங்களே சிந்தித்துப் பார்த்து, என்னைவிட மேன்மையானவனைத் தாமதமில்லாமல் எனக்குச் சாரதியாக்குவீராக” என்றான்.(62) அந்த உயர் ஆன்ம தேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, அவனது அருளை நாடி இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(63) “ஓ! புனிதமானவரே, தேவர்களின் எதிரிகளைப் பீடிக்கும் காரியத்தில் நீர் எங்களுக்கு ஆணையிட்ட அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம். காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட தேவனும் {சிவனும்} எங்களிடம் மனம் நிறைந்தான்.(64) அற்புதமான ஆயுதங்கள் பலவற்றுடன் ஆயத்தம் செய்யப்பட்ட தேரை நாங்கள் கட்டமைத்துவிட்டோம். எனினும், அந்த முதன்மையான தேருக்கு யார் சாரதியாக முடியும் என்பதை நாங்கள் அறியவில்லை.(65) எனவே, தேவர்களில் எவராவது ஒருவரைச் சாரதியாக நியமிப்பீராக. ஓ! புனிதமானவரே {பிரம்மனே}, நீர் எங்களிடம் சொன்ன அந்த வார்த்தைகளை மெய்யாக்குவதே உமக்குத் தகும்.(66) ஓ! தேவரே, இதற்கு முன்னர், எங்களுக்கு நன்மை செய்வதாக நீர் சொல்லியிருக்கிறீர். அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதே உமக்குத் தகும்.(67)

தாங்கிக் கொள்ளப்பட முடியாததும், நமது எதிரிகளை நிர்மூலமாக்கவல்லதுமான அந்தச் சிறந்த தேரானது, தேவர்களின் பகுதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பினாகை தரித்த அந்தத் தேவனே {சிவனே} அதில் நிற்கும் போர்வீரனாகச் செய்யப்பட்டான். தானவர்களை அச்சத்தால் பீடித்து அவன் {சிவன்} போருக்குத் தயாராக இருக்கிறான்.(68) {அந்தத் தேரில்} நான்கு வேதங்களும் நான்கு முதன்மையான குதிரைகளாகியிருக்கின்றன. மலைகளுடன் கூடிய பூமியானவளே அந்த உயர் ஆன்மாவுக்கு {சிவனுக்குத்} தேராகியிருக்கிறாள். நட்சத்திரங்கள் அந்த வாகனத்தை அலங்கரிக்கின்றன. (ஏற்கனவே சொன்னது போல) ஹரனே {சிவனே} போர்வீரனாக இருக்கிறான். எனினும், அவனுக்குச் சாரதியாகக்கூடிய எவரையும் நாங்கள் காணவில்லை.(69) இவை யாவற்றுக்கும் மேன்மையான ஒருவரையே அந்தத் தேரின் சாரதியாக நாட வேண்டும். ஹரனே போர்வீரன், ஓ! தேவரே {பிரம்மனே}, அந்தத் தேரின் முக்கியத்துவமும் உமக்கு இணையானதாகும். ஓ! பெரும்பாட்டனே, கவசம், ஆயுதங்கள், வில் ஆகியவற்றை ஏற்கனவே நாம் கொண்டிருக்கிறோம்.(70) அந்தத் தேரின் சாரதியாக உம்மைத் தவிர வேறு எவரையும் எங்களால் காண முடியவில்லை. நீர் அனைத்துச் சாதனைகளையும் {பண்புகளையும்} கொண்டவராக இருக்கிறீர். ஓ! தலைவா, தேவர்கள் அனைவருக்கும் நீர் மேன்மையாக இருக்கிறீர்.(71) தேவர்களின் வெற்றிக்காகவும், எங்கள் எதிரிகளின் அழிவுக்காகவும், அந்தத் தேரில் வேகமாக ஏறி, அந்த முதன்மையான குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பீராக” என்றனர் {தேவர்கள்}.(72) மூவுலகங்களின் தலைவனான அந்தப் பெரும்பாட்டனிடம் தங்கள் தலைகளை வணங்கிய அந்தத் தேவர்கள், சாரதி நிலையை {சாரத்தியம்} ஏற்பதில் அவனை மனநிறைவு கொள்ளச் செய்ய முயன்றனர்.(73)

பெரும்பாட்டன் {பிரம்மன்}, “சொர்க்கவாசிகளே, நீங்கள் சொன்ன யாதிலும் பொய்மையேதும் இல்லை. கபர்தின் {சடை தரித்த சிவன்} போரிடுகையில் அவனது குதிரைகளின் கடிவாளத்தை நான் பிடிப்பேன்” என்றான்.(74) பிறகு, உலகங்களைப் படைப்பவனும், சிறப்புமிக்கத் தேவனுமான அந்தப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, உயர் ஆன்ம ஈசானனின் சாரதியாகத் தேவர்களால் நியமிக்கப்பட்டான்.(75) மேலும் அவன் {பிரம்மன்} அனைவராலும் வழிபடப்பட்டு அந்தத் தேரில் வேகமாக ஏறும்போது, காற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகள், தலைவணங்கி பூமியில் விழுந்தன.(76) தேரில் ஏறிய பிறகு, சிறப்புமிக்கத் தேவனான அந்தப் பெரும்பாட்டன், தன் சக்தியால் பிரகாசித்தபடி, கடிவாளங்களையும், தான்றுகோலையும் {சாட்டையையும்} எடுத்தான்.(77) அப்போது அந்தச் சிறப்புமிக்கத் தேவன், அந்தக் குதிரைகளை எழுப்பிவிட்டு, தேவர்களில் முதன்மையான ஸ்தாணுவிடம், “{தேரில்} ஏறுவாயாக” என்று சொன்னான்.(78) பிறகு, விஷ்ணு, சோமன் மற்றும் அக்னி ஆகியோர் அடங்கிய அந்தக் கணையை எடுத்துக் கொண்ட ஸ்தாணு, அந்தத் தேரில் ஏறி, தன் வில்லால் எதிரியை நடுங்கச் செய்தான்.(79) அந்தத் தேவர்களின் தலைவன் தேரில் ஏறிய பிறகு, பெருமுனிவர்கள், கந்தர்வர்கள், தேவர்க்கூட்டங்கள், அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் ஆகியோர் அவனைத் துதித்தனர்.(80)

அழகுடன் பிரகாசித்தவனும், வாள், கணை மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்தவனுமான அந்த வரமளிக்கும் தேவன் {சிவன்}, தன் சக்தியால் மூன்று உலகங்களையும் சுடர்மிக்கவையாகச் செய்தபடி தன் தேரில் நின்றிருந்தான்.(81) அந்தப் பெரும் தேவன் {சிவன்}, இந்திரனின் தலைமையான தேவர்களிடம் மீண்டும், “அசுரர்களை அழிக்கும் என் திறனில் ஐயுற்று ஒரு போதும் நீங்கள் வருந்தக்கூடாது.(82) இந்தக் கணையால் அசுரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதை அறிவீராக” என்றான். அப்போது தேவர்கள், “உண்மைதான். அசுரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்” என்றனர்.(83) அந்தத் தெய்வீகத் தலைவன் {சிவன்} சொன்ன வார்த்தைகள் பொய்க்க முடியாது என்று நினைத்த தேவர்கள், உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(84) பிறகு அந்தத் தேவர்களின் தலைவன் {சிவன்}, தேவர்கள் அனைவராலும் சூழப்பட்டு, எதற்கும் ஒப்பிடப்பட முடியாத அந்தப் பெரும் தேரில் சென்றான்.(85) அதே வேளையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், போரில் ஒப்பற்றவர்களும், மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்தவர்களும், ஒருவரை நோக்கி மற்றவர் கூக்குரலிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் மூர்க்கமாக ஓடிக் கொண்டிருந்தவர்களுமான துணைவர்களாலும், ஊனுண்ணிகள் பிறராலும் துதிக்கப்பட்டான்.(86) பெரும் நற்பேற்றைக் கொண்டவர்களும், தவத்தகுதிகளையுடையவர்களும், உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களுமான முனிவர்களும், தேவர்களும் மகாதேவனின் வெற்றிக்காக அவனை வாழ்த்தினர்.(87)

மூன்று உலகங்களின் அச்சங்களை விலக்குபவனான அந்த வரமளிக்கும் தேவன் {சிவன்}, இவ்வாறு சென்ற போது, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {சல்லியரே}, தேவர்கள் அனைவருடன் கூடிய மொத்த அண்டமும் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.(88) மேலும் அங்கே இருந்த முனிவர்கள், ஓ! மன்னா {சல்லியரே], பல்வேறு பாடல்களால் அந்தத் தேவர்களின் தலைவனைத் துதித்து, அவனது சக்தியை மேம்படுத்தியபடி அங்கேயே நிலை கொண்டனர்.(89) அவன் {சிவன்} புறப்பட்ட அந்த நேரத்தில், லட்சக்கணக்கான, பத்துலட்சக்கணக்கான கந்தர்வர்கள், பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தனர்.(90) வரமளிக்கும் பிரம்மன், தேரில் ஏறி அசுரர்களை நோக்கிச் சென்ற போது, அந்த அண்டத்தின் தலைவன் {சிவன்} சிரித்துக் கொண்டே, “நன்று, நன்று.(91) ஓ! தேவரே {பிரம்மனே}, தைத்தியர்கள் எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வீராக. விழிப்புடன் குதிரைகளைத் தூண்டுவீராக. போரில் நான் இன்று எதிரியைக் கொல்லும்போது என் கரங்களின் வலிமையைக் காண்பீராக” என்றான்.(92) இப்படிச் சொல்லப்பட்ட பிரம்மன், காற்று, அல்லது சிந்தனையின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகளைத் தூண்டி, தைத்தியர்களாலும், தானவர்களாலும் பாதுகாக்கப்பட்ட முந்நகரம் {திரிபுரம்} இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.(93) உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்பட்டவையும், வானத்தையே விழுங்கிவிடுவதைப் போன்ற வேகத்துடன் சென்றவையுமான அந்தக் குதிரைகளுடன் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் சொர்க்கவாசிகளின் வெற்றிக்காக வேகமாகச் சென்றான்.(94)

உண்மையில் பவன் {சிவன்}, முந்நகரத்தை {திரிபுரத்தை} நோக்கி அந்தத் தேரில் சென்ற போது, அவனது காளையானது திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைக்கும்வண்ணம் பயங்கரமாக முழங்கியது.(95) அந்தக் காளையின் பயங்கரமான பெருமுழக்கத்தைக் கேட்டவர்களும், தேவர்களின் எதிரிகளுமான தாரகனின் வழித்தோன்றல்கள் பலரும், அவனைப் பின்பற்றுபவர்களும் தங்கள் இறுதி மூச்சை சுவாசித்தனர்.(96) அவர்களில் பலர் போரில் எதிரியை எதிர்த்து நின்றனர். அப்போது, ஓ! மன்னா {சல்லியரே}, திரிசூலம் தரித்த ஸ்தாணு, கோபத்தால் தன் உணர்வுகளை இழந்தவனாக ஆனான்.(97) அனைத்து உயிரினங்களும் பீடியடைந்தன, மூன்று உலகங்களும் நடுங்கத் தொடங்கின. அந்தக் கணையால் அவன் குறிபார்த்த போது, பயங்கரமான சகுனங்கள் தோன்றின.(98) எனினும், அந்தக் கணையில் இருந்த சோமன், அக்னி மற்றும் விஷ்ணு ஆகியோரது எடையுடைய அழுத்தத்தின் விளைவாகவும், பிரம்மன், ருத்ரன் மற்றும் பின்னவனின் {ருத்ரனின்} வில் ஆகியவற்றின் அழுத்தத்தின் காரணமாகவும் அந்தத் தேரானது மூழ்குவதைப் போலத் தெரிந்தது.(99) அப்போது அந்தக் கணையின் முனையில் இருந்து வெளிப்பட்ட நாராயணன், காளையின் வடிவை ஏற்று அந்தப் பெரிய தேரை உயர்த்தினான்.(100)

அந்தத் தேரானது மூழ்கி, எதிரிகள் முழங்கத் தொடங்கிய போது, பெரும் வலிமையைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {சல்லியரே}, தனது குதிரைகளின் முதுகிலும், தனது காளையின் தலையிலும் நின்றபடியே, சினத்தால் பெருமுழக்கம் செய்யத் தொடங்கினான். அந்த நேரத்தில் சிறப்புமிக்க ருத்ரன் அந்தத் தானவ நகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.(101,102) ஓ! மனிதர்களில் சிறந்தவரே {சல்லியரே}, அந்நிலையில் நின்ற ருத்ரன், அந்தக் குதிரைகளின் காம்புகளையும் (teats), காளையுடைய குளம்புகளின் ஆணிகளையும் வெட்டினான்.(103) ஓ! மன்னா, அற்புதச் செயல்களைச் செய்யும் வலிமைமிக்க ருத்ரனால் பீடிக்கப்பட்ட அந்தக் காலம் முதல் குதிரைகள் காம்புகள் இன்றியே இருக்கின்றன[1].(104)

அப்போது சர்வன் {சிவன்}, தன் வில்லின் நாணையேற்றிக் கொண்டு, முந்நகரத்தை {திரிபுரத்தை} நினைத்துக் கொண்டே, பாசுபத ஆயுதத்துடன் தான் ஒன்றிணைத்த அந்தக் கணையால் குறிபார்த்தபடி காத்திருந்தான்.(105) ஓ! மன்னா {சல்லியரே}, ருத்ரன் அவ்வாறு வில்லைப் பிடித்த படி நின்று கொண்டிருந்த அந்த நேரத்தில், அந்த மூன்று நகரங்களும் ஒன்று சேர்ந்தன.(106) அந்த மூன்று நகரங்களும் தங்கள் தனிப்பட்ட பண்புகளை இழந்து ஒன்று சேர்ந்த போது, ஆரவாரமே உயர் ஆன்மத் தேவர்களின் மகழ்ச்சியானது.(107) பிறகு தேவர்கள் அனைவரும், சித்தர்களும், பெரும் முனிவர்களும் மஹேஸ்வரனை {சிவனைப்} புகழ்ந்து, ஜெயம் என்ற சொல்லைச் சொன்னார்கள்.(108) அப்போது, தாங்கிக் கொள்ள முடியாத சக்தியைக் கொண்டவனும், விவரிக்க முடியாத வடிவமும், கடுமையும் கொண்ட தேவனும், அசுரர்களைக் கொல்ல விரும்பிய போர்வீரனுமான அந்தத் தேவனின் {சிவனின்} முன்னிலையில் அந்த முந்நகரம் உடனே தோன்றியது.(109) பிறகு, சிறப்புமிக்கத் தேவனான அந்த அண்டத் தலைவன், அந்தத் தெய்வீக வில்லை வளைத்து, மொத்த அண்டத்தின் வலிமையையும் பிரதிபலித்த அந்தக் கணையை முந்நகரத்தின் {திரிபுரத்தின்} மீது ஏவினான்.(110) ஓ! பெரும் நற்பேற்றைக் கொண்டவரே {சல்லியரே}, அந்த முதன்மையான கணை ஏவப்பட்டதும், பூமியை நோக்கி விழத்தொடங்கிய அந்த நகரங்களில் இருந்து துன்பம் நிறைந்த பேரோலங்கள் கேட்கப்பட்டன. அந்த அசுரர்களை எரித்த அவன் {சிவன்}, அவர்களை மேற்குப் பெருங்கடலில் வீசினான்.(111) முந்நகரம் {திரிபுரம்} இவ்வாறே எரிக்கப்பட்டது, மூன்று உலகங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் கோபத்துடன் கூடிய மஹேஸ்வரனால் தானவர்களும் இவ்வாறே அழிக்கப்பட்டனர்.(112)

அந்த முக்கண் தேவன் {சிவன்}, தன் கோபத்தால் உண்டான நெருப்பிடம், “ஓ!, மூவுலகங்களையும் சாம்பலாக்கிவிடாதே” என்று சொல்லி அதைத் தணித்தான்.(113) இதன் பிறகு, தேவர்களும், முனிவர்களும், மூன்று உலகங்களும், தங்கள் இயல்பு நிலைகள் மீண்டு, ஒப்பற்ற சக்தி கொண்ட ஸ்தாணுவை {சிவனை} உயர்ந்த தரத்திலான வார்த்தைகளால் மனநிறைவு கொள்ளச் செய்தனர்.(114) பிறகு படைப்பாளனை {பிரம்மனைத்} தங்கள் தலைமையில் கொண்டவர்களும், இத்தகு முயற்சியால் தங்கள் நோக்கம் ஈடேறியவர்களுமான தேவர்கள், அந்தப் பெரும் தேவனிடம் {சிவனிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு, தாங்கள் எந்த இடங்களில் இருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(115) சிறப்புமிக்கத் தேவனும், உலகங்களைப் படைப்பவனும், தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவரின் தலைவனுமான மகேஸ்வரன், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக எது செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்தான்.(117)

உலகங்களைப் படைத்தவனும், பெரும்பாட்டனும், மங்காப் புகழ் கொண்ட உயர்ந்த தேவனுமான சிறப்புமிக்கப் பிரம்மன், ருத்ரனின் சாரதியாகச் செயல்பட்டதைப் போல, ருத்ரனின் குதிரைகளைக் கட்டுப்படுத்திய அந்தப் பெரும்பாட்டனைப் போல், உயர் ஆன்ம ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} குதிரைகளை நீர் கட்டுப்படுத்துவீராக.(118) ஓ! மன்னர்களில் புலியே {சல்லியரே}, கிருஷ்ணன், கர்ணன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகியோருக்கு நீர் மேம்பட்டவரே என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(119) போரில் ருத்ரனைப் போன்றவனே கர்ணன், கொள்கையில் பிரம்மனைப் போன்றவரே நீரும். எனவே, ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நீங்கள் இருவரும், அசுரர்களைப் போன்ற என் எதிரிகளை வெல்லத் தகுந்தவர்களே.(120) ஓ! சல்லியரே, கிருஷ்ணனைத் தன் தேரின் சாரதியாகவும், வெண்குதிரைகளையும் கொண்டவனான குந்தியின் மகனை {அர்ஜுனனை} கர்ணனால் எதைக் கொண்டு கொல்ல முடியுமோ, அஃது இன்று வேகமாக நடக்கட்டும்.(121) எங்களுக்காகவும், எங்கள் அரசுகளுக்காகவும், போரில் வேண்டும் வெற்றிக்காகவும், கர்ணன் உம்மைச் சார்ந்தே இருக்கிறான். எனவே, (கர்ணனின்) அந்தச் சிறந்த குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பீராக” {என்றான் துரியோதனன்}.(122)

வரமளித்த சிவன்! – கர்ண பர்வம் பகுதி – 34இ-சல்லியனுக்குப் பரசுராமர் மற்றும் சிவனின் கதையைச் சொன்ன துரியோதனன்; தெய்வீக ஆயுதங்கள் வேண்டி தவமிருந்த பரசுராமர்; தூய்மையடையப் பணித்த சிவன்; தைத்தியர்களை வெல்ல முடியாத தேவர்கள் சிவனிடம் பணிந்து வேண்டியது; தைத்தியர்களை அழிக்க பரசுராமரை ஏவிய சிவன்; தைத்தியர்களை அழித்த பரசுராமர்; ஆயுதங்களை அளித்த சிவன்; பரசுராமரிடம் இருந்து அவ்வாயுதங்களைப் பெற்றான் கர்ணன் எனத் துரியோதனன் சொல்வது…

{துரியோதனன் சல்லியனிடம் தொடர்ந்தான்}, “நான் சொல்லப்போகும் மற்றுமொரு கதையைக்  கேட்பீராக. அறமொழுகும் அந்தணர் {பிராமணர்} ஒருவர் என் தந்தையிடம் என் முன்னிலையில் இதைச் சொன்னார்.(123) ஓ! சல்லியரே, செயல்களின் காரணங்களும், நோக்கங்களும் நிறைந்த அந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்ட பிறகு, எவ்வித ஐயுணர்வும் இன்றி நீர் தீர்மானிப்பதையே செய்வீராக.(124)

பிருகு குலத்தவரில் கடும் தவநோன்புகளைக் கொண்டவராக ஜமதக்னி இருந்தார். அவருக்கு, அனைத்து அறங்களையும், சக்தியையும் கொண்டவரும், ராமர் {பரசுராமர்} என்ற பெயரில் கொண்டாடப்படுபவருமான ஒரு மகன் இருந்தார்.(125) உற்சாகமிக்க ஆன்மாவுடன் மிகக் கடினமான தவத்தைப் பயின்று, நோன்புகளுக்கும், விரதங்களுக்கும் கட்டுப்பட்டு, தன் புலன்களைக் கட்டுப்படுத்திய அவர் {பரசுராமர்}, ஆயுதங்களை அடைவதற்காகத் பவதேவனை {சிவனை} நிறைவுறச் செய்தார்.(126) அவரது அர்ப்பணிப்பு மற்றும் இதயத்தின் அமைதிநிலை ஆகியவற்றின் விளைவால் மஹாதேவன் {சிவன்} அவரிடம் {பரசுராமரிடம்} மனநிறைவு கொண்டான். ராமரது {பரசுராமரின்} இதயத்தில் பேணப்பட்ட விருப்பத்தைப் புரிந்து கொண்ட சங்கரன் {சிவன்}, தன்னை அவரிடம் {பரசுராமரிடம்} வெளிக்காட்டினான்.(127) 

மஹாதேவன் {சிவன்}, “ஓ! ராமா {பரசுராமா}, நான் உன்னிடம் நிறைவைக் கொண்டேன். நீ அருளப்பட்டிருப்பாயாக, உன் விருப்பத்தை நான் அறிவேன். உன் ஆன்மாவைத் தூய்மையாக்குவாயாக. அப்போது உன் விருப்பங்கள் அனைத்தையும் நீ அடைவாய்.(128) நீ தூய்மையானதும் {பரிசுத்தமடைந்ததும்} ஆயுதங்கள் அனைத்தையும் நான் உனக்குத் தருவேன். ஓ! பிருகுவின் மகனே, திறனற்றவனையும், அவ்வாயுதங்களுக்குத் தகாதவனையும் அவை {அவ்வாயுதங்கள்} எரித்துவிடும்” என்றான் {சிவன்}.(129) தேவதேவனும், திரிசூலபாணியுமான அந்தத் தேவனால் {சிவனால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, பலம்வாய்ந்த அந்த உயர்ந்தவனிடம் {சிவனிடம்} சிரம் தாழ்த்தி,(130) “ஓ! தேவதேவா, அவற்றை ஏந்த நான் தகுந்தவன் என உண்மையில் எப்போது நீ கருதுகிறாயோ, எப்போதும் உன் பணியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் எனக்கு அவ்வாயுதங்களை அப்போது கொடுப்பதே உனக்குத் தகும்” என்றார்.(131)

துரியோதனன் {சல்லியனிடம்} தொடர்ந்தான், “பிறகு அந்த ராமர், தவங்கள், புலன்களில் தற்கட்டுப்பாடு, நோன்புகள் நோற்பு, வழிபாடு, காணிக்கைகள், மந்திரங்களுடன் கூடிய வேள்விகள் மற்றும் ஹோமங்கள் ஆகியவற்றால் நீண்ட பல ஆண்டுகளாக சர்வனை {சிவனைத்} துதித்தார்.(132) இறுதியாக அந்த உயர் ஆன்ம பிருகு குல மகனிடம் {பரசுராமரிடம்} மனம் நிறைவடைந்த மகாதேவன், அறங்கள் பலவற்றைக் கொண்ட தன் தெய்வீகத் துணைவியின் {உமாதேவியின்} முன்னிலையில்:(133) “நோன்புகளில் உறுதியான இந்த ராமன் {பரசுராமன்}, என்னிடம் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவனாவான்” என்று சொன்னான். அவனிடம் மனம் நிறைந்த அந்தத் தலைவன் சங்கரன், ஓ! எதிரிகளைக் கொல்பவரே {சல்லியரே}, தேவர்கள் மற்றும் முனிவர்களின் முன்னிலையில் அவரது நற்பண்புகளை மீண்டும் மீண்டும் அறிவித்தார்.(134)

அதே வேளையில் தைத்தியர்கள் மிகவும் வலிமைமிக்கவர்களாக ஆகிவிட்டார்கள். செருக்கு மற்றும் மடமையால் குருடான அவர்கள் {தைத்தியர்கள்}, சொர்க்கவாசிகளைப் பீடிக்கத் தொடங்கினர். அப்போது தேவர்கள் ஒன்றுகூடி, அவர்களைக் கொல்ல உறுதியாகத் தீர்மானித்து, தங்கள் எதிரிகளின் அழிவுக்காக மிக ஊக்கமாக முயன்றனர். எனினும், அவர்களை வெல்லத் தவறினர்.(136) பிறகு தேவர்கள், உமையின் தலைவனான மஹேஸ்வரனிடம் சென்று, “எங்கள் எதிரிகளைக் கொல்வீராக” என்று சொல்லி அர்ப்பணிப்புடன் அவனை நிறைவு கொள்ளச் செய்யத் தொடங்கினர்.(137) தேவர்களின் எதிரிகளை அழிப்பதாக அவர்களிடம் உறுதியளித்த அந்தத் தேவன், பிருகுவின் வழித்தோன்றலான ராமரை அழைத்தான். ராமரிடம் {பரசுராமரிடம்} அந்த சங்கரன்,(138) “ஓ! பிருகுவின் வழித்தோன்றலே {பரசுராமா}, உலகம் அனைத்திற்கும் நன்மை செய்யவும், என்னை நிறைவு கொள்ளச்செய்யவும் விரும்பி, கூடியிருக்கும் தேவஎதிரிகள் அனைவரையும் கொல்வாயாக” என்றான்.(139)

இப்படிச் சொல்லப்பட்ட ராமர் {பரசுராமர்}, முக்கண்களைக் கொண்ட அந்த வரமளிக்கும் தேவனிடம் {சிவனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, ஆயுதங்களற்றவனாக நான் இருக்கிறேன், போரில் வெல்லப்பட முடியாதவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான தானவர்கள் கூட்டத்தைக் கொல்ல என்னிடம் என்ன பலத்தைக்கொண்டிருக்கிறேன்?” என்று கேட்டார்.(140) அதற்கு அந்த மஹேஸ்வரன், “என் ஆணையின் படி சென்று அந்த எதிரிகளை நீ கொல்வாயாக. அந்த எதிரிகள் அனைவரையும் வென்ற பிறகு, எண்ணிலா தகுதிகளை நீ அடைவாய்” என்றான்.(141) இவ்வார்த்தைகளைக் கேட்டு அவை அனைத்தையும் ஏற்ற ராமர் {பரசுராமர்}, தமது வெற்றிக்காக தீர்திற {பரிகாரச்} சடங்குகளைச் செய்யச் செய்து, தானவர்களை எதிர்த்துச் சென்றார்.(142)

வலிமை, மடமை, செருக்கு ஆகியவற்றைக் கொண்ட அந்தத் தேவ எதிரிகளிடம் பேசிய அவர், “போரில் மூர்க்கர்களான தைத்தியர்களே, போரை எனக்கு அளிப்பீராக {என்னுடன் போரிடுவீராக}.(143) உங்களை வெல்வதற்காகத் தேவதேவனால் நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார். அப்போது, அந்தப் பிருகுவின் வழித்தோன்றலால் {பரசுராமரால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் தைத்தியர்கள் போரிடத் தொடங்கினர்.(144) எனினும், பார்கவர்களை இன்புறச் செய்யும் அவர் {பரசுராமர்}, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட வீச்சுகளால் போரில் தைத்தியர்களைக் கொன்று,(145) மஹாதேவனிடம் {சிவனிடம்} திரும்பி வந்தார். பிராமணர்களில் முதன்மையான அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, தானவர்களால் தன் மேனியில் ஏற்பட்ட காயங்கள் பலவற்றுடனே திரும்பினார். எனினும், ஸ்தாணுவால் {சிவனால்} தீண்டப்பட்டதும் அவரது காயங்கள் குணமடைந்தன.(146) அவரது அந்த அருஞ்செயலால் நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்க தேவன், அந்த உயர் ஆன்ம பிருகு மகனுக்கு {பரசுராமருக்கு} பல்வேறு வகைகளிலான வரங்களை அளித்தான்.(147) இதயம் நிறைந்தவனும், திரிசூலபாணியுமான அந்தத் தேவதேவன், “ஓ! பிருகு குலத்தவரை இன்புறச் செய்பவனே {பரசுராமா}, உன் உடலில் ஆயுதங்கள் பாய்ந்ததன் விளைவால் நீ அடைந்த துன்ப வலி, மனிதசக்திக்கு அப்பாற்பட்ட வகையில் நீ செய்த அருஞ்செயலுக்குச் சாட்சி பகர்கிறது. நீ விருப்பப்பட்டவாறே, இந்தத் தெய்வீக ஆயுதங்களை என்னிடம் இருந்து பெறுவாயாக” என்றான் {சிவன்}.(148,149)

துரியோதனன் தொடர்ந்தான், “பிறகு அந்த ராமர் {பரசுராமர்}, தெய்வீக ஆயுதங்களையும், தாம் விரும்பிய வரங்களையும் அடைந்து, சிவனுக்குத் தலைவணங்கினார்.(150) பிறகு அந்தப் பெரும் தவசி {பரசுராமர்}, தேவர்களின் தலைவனிடம் {சிவனிடம்} விடைபெற்றுச் சென்றார். அந்த முனிவர் சொன்ன அந்தப் பழங்கதை இதுவே.(151) அந்தப் பிருகுவின் வழித்தோன்றல் {பரசுராமர்}, ஓ! மன்னர்களில் புலியே {சல்லியரே}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், உயர் ஆன்ம கர்ணனுக்குத் தமது ஆயுத அறிவியல் அனைத்தையும் கொடுத்தார்.(152) கர்ணனிடம் எக்களங்கமாவது இருந்திருப்பின், ஓ! பூமியின் தலைவா {சல்லியரே}, அந்தப் பிருகு குலத்தை இன்புறச் செய்வபவர் {பரசுராமர்}, தமது தெய்வீக ஆயுதங்களை அவனுக்கு ஒருபோதும் கொடுத்திருக்க மாட்டார்.(153)

கர்ணனைச் சூத குலத்தில் பிறந்தவன் என்று என்னால் நினைக்க முடியவில்லை. க்ஷத்திரிய வகையில் ஒரு தேவனுக்குப் பிறந்த மகனாகவே இவன் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.(154) இவன் பிறந்த குலத்தை உறுதி செய்ய முடியாத வகையில், (குழந்தை பருவத்திலேயே) அவன் கைவிடப்பட்டிருக்க வேண்டும் எனவும் நான் நினைக்கிறேன். இந்தக் கர்ணன், ஓ! சல்லியரே, சூத வகையில் எவ்வழியிலும் பிறந்திருக்க முடியாது.(155) பெண்மான் ஒன்றால் ஒருபோதும் ஒரு புலியைப் பெற முடியாததைப் போலத் தனது (இயற்கையான) காதுகுண்டலங்கள் மற்றும் (இயற்கையான) கவசம் ஆகியவற்றைக் கொண்டவனும், நீண்ட கரங்களையும் கொண்டவனும், சூரியனுக்கே ஒப்பானவனுமான இந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கர்ணன்}, ஒரு சாதாரணப் பெண்ணுக்குப் பிறந்திருக்கவே முடியாது.(156) யானைகளின் இளவரசனுடைய துதிக்கைக்கு ஒப்பாக இவனது கரங்கள் ஒவ்வொன்றும் பருத்திருக்கின்றன. அனைத்து எதிரிகளையும் தடுக்க வல்ல இவனது இந்த அகன்ற மார்பைப் பார்ப்பீராக.(157) ஓ! மன்னா {சல்லியரே}, வைகர்த்தனன் {சூரியன் மகன்} என்றும் வேறு பெயரில் அழைக்கப்படும் இந்தக் கர்ணன், ஒரு சாதாரண மனிதனாக இருக்கவே முடியாது. பெரும் வீரத்தைக் கொண்ட இந்த ராமரின் {பரசுராமரின்} சீடன் {கர்ணன்}, ஓ! மன்னர்களின் மன்னா {சல்லியரே}, மிக உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனாவான்” {என்றன் துரியோதனன்}.(158)

ஆரியர் பயிலா நடத்தைகள்! – கர்ண பர்வம் பகுதி – 35-கர்ணனை விட மேன்மையானவனாகச் சல்லியனைச் சொன்ன துரியோதனன்; சாரத்ய நிலையை ஏற்ற சல்லியன்; சல்லியனை ஐயுற்ற கர்ணன்; மீண்டும் சல்லியனிடம் பேசிய துரியோதனன்; ஆரியர்கள் பயிலாத நான்கு வெவ்வேறு நடத்தைகளைக் குறித்துக் கர்ணனுக்கு எடுத்துரைத்த சல்லியன்…

துரியோதனன் {சல்லியனிடம்}, “இவ்வாறே சிறப்புமிக்கத் தேவனும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனுமான பிரம்மன் சாரதி நிலையையும், ருத்ரன் {சிவன்} போர்வீரன் நிலையையும் அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்றனர்.(1) ஓ! வீரரே {சல்லியரே}, அத்தேரின் சாரதி, அதன் போர்வீரனைவிட மேன்மையானவனாக இருக்க வேண்டியிருந்தது. எனவே, ஓ! மனிதர்களில் புலியே, இந்தப் போரில் குதிரைகளின் கடிவாளங்களை நீர் பிடிப்பீராக.(2) ஓ! பெரும் மன்னா {சல்லியரே}, அந்தச் சந்தர்ப்பத்தில், தேவர்கள் அனைவராலும் கவனத்துடன் பெரும்பாட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல, உண்மையில், சங்கரனை விடப் பெரியவனாகத் தேவர்களால் அவன் {பிரம்மன்} தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போலவே, இப்போது கர்ணனை விட மேன்மையான உம்மை நாங்கள் கவனத்துடன் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ருத்திர குதிரைகளின் கடிவாளங்களைப் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஏந்தியதைப் போலவே, ஓ! பெரும் காந்தி கொண்டவரே {சல்லியரே}, இந்தப் போரில் கர்ண குதிரைகளின் கடிவாளங்களைத் தாமதமில்லாமல் நீர் ஏந்துவீராக” என்றான் {துரியோதனன்}.(3,4)

சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, அந்த இரண்டு தேவ சிங்கங்களைக் குறித்து நீ சொன்ன சிறப்புமிக்க இந்தத் தெய்வீக வரலாற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.(5) உண்மையில், பெரும்பாட்டன் எவ்வாறு பவனின் {சிவனின்} சாரதியாகச் செயல்பட்டான் என்பதையும், ஓ! பாரதா {துரியோதனா}, ஒரே கணையால் அசுரர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதையும் நான் கேட்டிருக்கிறேன்.(6) பழங்காலத்தில் எவ்வாறு அந்தச் சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் சாரதியாகச் செயல்பட்டான் என்ற அறிவனைத்தையும் ஏற்கனவே கிருஷ்ணனும் அறிந்திருக்கிறான். உண்மையில் கடந்த காலம், எதிர்காலம் மற்றும் அவற்றின் விபரங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் அறிவான்.(7) இவ்வுண்மையை அறிந்தே அவன் {கிருஷ்ணன்}, ருத்ரனின் {சிவனின்} சாரதியான தான்தோன்றியை {பிரம்மனைப்} போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} சாரதியானான்.(8) எவ்வழியிலாவது குந்தியின் மகனை {அர்ஜுனனைக்} கொல்வதில் இந்தச் சூதன் மகன் {கர்ணன்} வென்றால், அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டதைக் கண்டு கேசவனே {கிருஷ்ணனே} போரில் ஈடுபடுவான். அப்போது அந்தச் சங்கு சக்கரக் கதாதாரி {கிருஷ்ணன்}, உன் படையையே எரித்துவிடுவான்.(9) அந்தச் சிறப்புமிக்க விருஷ்ணி குலத்தோனின் {கிருஷ்ணனின்} கோபம் தூண்டப்படும்போது, அவனை எதிர்த்து நிற்க {நமது} படையணிகளின் முன்னணியில் எந்த மன்னனும் இங்கே இல்லை” என்றான் {சல்லியன்}.(10)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு பேசிக்கொண்டிருந்த மத்ர ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} எதிரிகளைத் தண்டிப்பவனும், உற்சாக ஆத்மா கொண்டவனுமான உமது வலிமைமிக்க மகன் {துரியோதனன்},(11) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, வைகர்த்தனன்[1] என்று வேறு பெயரில் அழைக்கப்படுபவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், நமது சாத்திரங்கள் அனைத்தின் பொருளை உணர்ந்தவனுமான கர்ணனைக் குறித்துப் போரில் இழிவாக எண்ண வேண்டாம்.(12) அவனது வில்லின் நாணொலி, மற்றும் அவனது உள்ளங்கையொலி ஆகிய பயங்கரப் பேரொலிகளைக் கேட்டே பாண்டவத் துருப்புகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடும்.(13) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, நூற்றுக்கணக்கான மாயைகளை வெளிப்படுத்திய கடோத்கசன் அவ்விரவில் (கர்ணனால்) எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை உமது கண்களாலேயே நீர் கண்டீர்.(14) இவ்வளவு நாட்களும் பெரும் அச்சத்தை உணர்ந்த பீபத்சுவால் {அர்ஜுனனால்} கர்ணனை எதிர்த்து நிற்க முடியவில்லை.(15) வலிமைமிக்கப் பீமசேனனும் கூட, கர்ணனுடைய வில்லின் நுனியால் இங்கேயும் அங்கேயும் இழுக்கப்பட்டு, “மூடன், பெருந்தீனிக்காரன்” என்ற பல்வேறு விதமாகக் கடிந்துரைக்கப்பட்டான்.(16) மாத்ரியின் துணிச்சல்மிக்க மகன்கள் இருவரும் பெரும்போரில் கர்ணனால் வீழ்த்தப்பட்டிருப்பினும், ஓ! ஐயா, ஏதோ ஒரு காரணத்தால் இவன் {கர்ணன்}  அவர்களைக் கொல்லவில்லை.(17)

விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனும், சாத்வத குலத்தின் தலைவனுமான வீரச் சாத்யகியும், கர்ணனால் வெல்லப்பட்டு, தேரற்றவனாகச் செய்யப்பட்டான்.(18) திருஷ்டத்யும்னன் தலைமையிலான சிருஞ்சயர்கள் அனைவரும் இந்தப் போரில் கர்ணனால் மிக எளிமையாக வீழ்த்தப்பட்டனர்.(19) உண்மையில், வஜ்ரதாரியான புரந்தரனையே கொல்லத் தகுந்தவன் எவனோ, {இந்த அருஞ்செயல்கள் அனைத்தையும் செய்தவனான} அந்தப் பெரும் வீரன் {கர்ணன்} கோபத்தால் தூண்டப்படும்போது, பாண்டவர்களால் எவ்வாறு வெல்ல அவனை முடியும்?(20) ஓ! வீரரே {சல்லியரே}, நீரும் ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவரே. நீர் கல்வியின் அனைத்துக் கிளைகளிலும் திறன் கொண்டவரே. ஆயுத வலிமையில் உமக்கு நிகராகப் பூமியில் வேறு எவரும் இல்லை.(21)

தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டிருக்கும் நீர், உமது எதிரிகளுக்கு ஓர் ஈட்டியை {முளையைப்} போலிருக்கிறீர். இக்காரணத்திற்காகவே, ஓ! மன்னா {சல்லியரே}, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, சல்லியன் என்று நீர் அழைக்கப்படுகிறீர்(22). உமது கரங்களின் வலிமையை எதிர்கொண்ட சாத்வதர்கள் அனைவராலும், சிறந்த விளைவைப் பெற முடியவில்லை. ஓ! மன்னா {சல்லியரே}, கிருஷ்ணன் வலிமையில் உம்மை விட மேம்பட்டவனா? உண்மையில், பார்த்தன் கொல்லப்பட்ட பிறகு, எவ்வாறு கிருஷ்ணனால் பாண்டவத் துருப்புகளின் சுமை சுமக்கப்படுமோ, அவ்வாறே கர்ணன் உயிரைவிட்டால், இந்தப் பரந்த (கௌரவப்) படையின் சுமையைச் சுமக்கவல்லவராக நீர் இருக்கிறீர்.(24) ஓ! ஐயா, என் துருப்புகளைத் தடுக்கத்தக்கவனாக அவன் {கிருஷ்ணன்} ஏன் இருக்க வேண்டும்? பகைவரின் துருப்புகளைக் கொல்லத்தக்கவராக நீர் ஏன் இருக்கக்கூடாது?[2] (25) ஓ! ஐயா {சல்லியரே}, (கொல்லப்பட்ட) என் தம்பிகள் மற்றும் பூமியின் வீர மன்னர்கள் பிறரின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி உமக்காக நான் விருப்பத்துடன் செல்வேன் {உமக்காக இறக்கவும் துணிவேன்}“ என்று மறுமொழி கூறினான் {துரியோதனன்}.(26)

சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, தேவகியின் மகனைவிட {கிருஷ்ணனைவிட} நான் மேம்பட்டவன் என்று உன் துருப்புகளுக்கு முன்பு நீ சொல்வதால், உன்னிடம் நான் பெரிதும் மனநிறைவு கொண்டேன்.(27) நீ விரும்புவது போலவே, அந்தப் பாண்டு மகன்களில் முதன்மையானவனோடு ராதையின் கொண்டாடப்படும் மகன் {கர்ணன்} போரிடும்போது, அவனது சாரதி நிலையை {சாரத்யத்தை} நான் ஏற்பேன்.(28) எனினும், ஓ! வீரா {துரியோதனா}, நான் வைகர்த்தனுடன் {கர்ணனுடன்} ஒரு சிறு கட்டுவரம்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ’இவனது {கர்ணனது} முன்னிலையில் நான் விரும்பும் எவ்வார்த்தையையும் நான் சொல்வேன்’ என்பதே அஃது” என்றான்.(29)

சஞ்சயன் தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்} கர்ணனுடன் சேர்ந்து, “அப்படியே ஆகட்டும்” என்று க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையும் மத்ரர்களின் ஆட்சியாளனுக்கு மறுமொழி கூறினான்.(30) சல்லியன் ஏற்றுக் கொண்ட சாரதி நிலையால் (சாரத்யத்தால்) உறுதி கொண்ட துரியோதனன், மகிழ்ச்சியால் நிறைந்து, கர்ணனைத் தழுவிக் கொண்டான்.(31) (சுற்றிலும் இருந்த பாணர்களாலும், துதிபாடிகளாலும்) துதிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் கர்ணனிடம், “தானவர்களைக் கொன்ற பெரும் இந்திரனைப் போலப் போரில் பார்த்தர்கள் அனைவரையும் கொல்வாயாக” என்றான். தன் குதிரைகளின் கடிவாளங்களை ஏந்தும் அலுவலைச் சல்லியன் ஏற்றதும், கர்ணன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் மீண்டும் துரியோதனனிடம், “மத்ரர்களின் ஆட்சியாளர் தாம் சொல்வதை உற்சாகமாகச் சொல்லவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, மீண்டும் அவரிடம் இனிய சொற்களால் வேண்டிக் கொள்வாயாக” என்றான்.(34)

இப்படிச் சொல்லப்பட்டவனும், பெரும் ஞானத்தைக் கொண்டவனும், அனைத்தையும் சாதித்தவனுமான அந்த வலிமைமிக்க மன்னன் துரியோதனன், பூமியின் தலைவனும், மத்ரர்களின் ஆட்சியாளனுமான அந்தச் சல்லியனிடம், அந்தப் பகுதி முழுவதையும் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் நிறைத்தபடி, “ஓ! சல்லியரே, இன்று அர்ஜுனனோட போரிட வேண்டும் என்று கர்ணன் நினைக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே, போரில் கர்ணனுடைய குதிரைகளின் கடிவாளங்களை ஏந்துவீராக.(36) பிற போர்வீரர்கள் அனைவரையும் கொன்ற இந்தக் கர்ணன், பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்ல விரும்புகிறான். ஓ! மன்னா, இவனது குதிரைகளின் கடிவாளங்களை ஏந்தும் காரியத்தில் மீண்டும் மீண்டும் நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.(37) சாரதிகள் அனைவரிலும் முதன்மையான அந்தக் கிருஷ்ணன், பார்த்தனுக்கு ஆலோசகனாக இருப்பதைப் போலவே, அனைத்து ஆபத்துகளில் இருந்தும் இன்று கர்ணனை நீர் பாதுகாப்பீராக” என்றான் {துரியோதனன்}[3].(38)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது உமது மகனைத் தழுவி கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் சல்லியன், எதிரிகளைக் கொல்பவனான அந்தத் துரியோதனனிடம்,(39) “ஓ! காந்தாரியின் அரசமகனே, ஓ! அழகிய குணங்களைக் கொண்டவனே, இதைத்தான் நீ நினைக்கிறாயென்றால், அதற்காக, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நான் சாதிப்பேன்.(40) ஓ! பாரதர்களின் தலைவா, எச்செயல்களுக்கு நான் தகுந்தவனோ, அச்செயல்களில் என்னை முழு இதயத்துடன் ஈடுபடுத்திக் கொண்டு, உன் செயல்கள் எவற்றின் சுமையையும் நான் சுமப்பேன். எனினும், கர்ணனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் அவனிடம் நான் பேசும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடாத எந்த வார்த்தைகளையும் கர்ணனும், நீயும் பொறுத்துக் கொள்வீராக” என்று மகிழ்ச்சியாக மறுமொழி கூறினான். (42)

கர்ணன் {சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, பிரம்மன் ஈசானனுக்கும் {சிவனுக்கும்}, கேசவன் பார்த்தனுக்கும் எவ்வாறு நன்மை செய்தார்களோ, அவ்வாறே நீரும் எப்போதும் நமது நன்மையில் ஈடுபடுவீராக” என்றான்.(43)

சல்லியன், “தன்னொறுப்பு {சுயநிந்தனை}, தற்புகழ்ச்சி, பிறரை இகழ்வது, பிறரைப் புகழ்வது ஆகிய நான்கு வகை நடத்தைகளையும் மரியாதைக்குரிய நபர்கள் {ஆரியர்கள்}[4] எவரும் பயில்வதில்லை.(44) எனினும், ஓ! கல்விமானே, உன் நம்பிக்கையை ஈர்க்க நான் சொல்லப்போகும் எதுவும் தற்புகழ்ச்சி நிறைந்ததாகவே இருக்கும். அவை யாவற்றிற்காகவும், அதை முறையாகக் கேட்பாயாக.(45) ஓ! பலமானவனே, மாதலியைப் {இந்திரன் சாரதியைப்} போலவே விழிப்புணர்விலும், குதிரைகளைக் கட்டுப்படுத்துவதிலும், எதிர்வரும் ஆபத்தை அறிவதிலும், அதைத் தவிர்ப்பதிலும், நடைமுறையில் அதைத் தவிர்க்கும் தகுதியிலும் நான் இந்திரனுக்கே கூடச் சாரதி அலுவலை ஏற்கத் தகுந்தவனே.(46) பார்த்தனோடு நீ போரிடுகையில், உன் குதிரைகளின் கடிவாளங்களை நான் ஏந்துவேன். ஓ! சூதனின் மகனே, உன் கவலை அகலட்டும்” என்றான்{சல்லியன்}.(47)

சாரதியானான் சல்லியன்! – கர்ண பர்வம் பகுதி – 36-கர்ணனிடம் நம்பிக்கை தெரிவித்த துரியோதனன்; சல்லியனை மீண்டும் வேண்டிக் கொண்டது; ஒரே தேரில் ஏறிய கர்ணனும், சல்லியனும்; கர்ணனை வாழ்த்திய துரியோதனன்; அர்ஜுனனைக் கொல்லத்தகுந்த தன் திறன் குறித்துக் கர்ணன் தற்புகழ்ச்சி செய்வது; பாண்டவர்களைப் புகழ்ந்து கர்ணனை அச்சுறுத்த முயன்ற சல்லியன்..

துரியோதனன் {கர்ணனிடம்} , “கிருஷ்ணனைவிட மேன்மையானவரும், தேவதலைவனின் {இந்திரனின்} சாரதியான மாதலியைப் போன்றவருமான இந்த மத்ர ஆட்சியாளர் {சல்லியர்}, உனக்குச் சாரதியாகச் செயல்படுவார்.(1) உண்மையில், இந்திரனின் குதிரைகள் பூட்டப்பட்ட தேரை நிர்வகிக்கும் மாதலியைப் போலவே, சல்லியரும் இன்று உனது தேரின் குதிரைகளுக்குச் சாரதியாக இருப்பார்.(2) அவ்வாகனத்தில் போர்வீரனாக உன்னையும், அதன் சாரதியாக மத்ரர்களின் ஆட்சியாளரையும் {சல்லியரையும்} கொண்ட முதன்மையான தேரானது, நிச்சயம் பார்த்தர்களைப் போரில் வெல்லும்” என்றான்.(3)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “காலை வந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} மீண்டும்,(4) “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, கர்ணனுடைய முதன்மையான குதிரைகளின் கடிவாளங்களைப் போரில் ஏந்துவீராக. ராதையின் மகன் {கர்ணன்} உம்மால் பாதுகாக்கப்பட்டுத் தனஞ்சயனை {அர்ஜுனனை} வெல்லப்போகிறான்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட சல்லியன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லித் தேரில் ஏறினான்.(5) அந்தத் தேரைச் சல்லியன் அணுகிய போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் கூடிய கர்ணன், தன் சாரதியிடம் {சல்லியனிடம்}, “ஓ! தேரோட்டியே, எனக்காகத் தேரை விரைவாக ஆயத்தம் செய்வீராக” என்றான்.(6) தன் வகையில் முதன்மையானதானதும், ஆகாயத்தின் நீர் {மேக} மாளிகைகளுக்கு ஒப்பானதுமான அந்த வெற்றித் தேரை முறையாக ஆயத்தம் செய்த சல்லியன், அதைக் கர்ணனிடம் கொண்டு வந்து, “நீ அருளப்பட்டிருப்பாயாக, வெற்றி உனதாகட்டும்” என்றான்.(7)

அப்போது தேர்வீரர்களில் முதன்மையான கர்ணன், பிரம்மத்தை அறிந்த புரோகிதர் ஒருவரால் பழங்காலத்தில் தூய்மையாக்கப்பட்ட {பரிசுத்தமாக்கப்பட்ட} அந்தத் தேரை முறையாக வழிபட்டு,(8) அதை வலம்வந்து, சூரியதேவனைக் கவனமாகத் துதித்து, அருகில் நின்றிருந்த மத்ர ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “வாகனத்தில் ஏறுவீராக” என்றான்.(9) அதன் பேரில், கர்ணனுக்குச் சொந்தமானதும், வெல்லப்பட முடியாததும், முதன்மையானதுமான அந்தப் பெரிய தேரில், வலிமையும், சக்தியும் மிக்கச் சல்லியன், மலைச்சிகரத்தில் ஏறும் சிங்கத்தைப் போல ஏறினான்.(10) சல்லியன் நிலைகொண்டதைக் கண்ட கர்ணன், மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகத்திரள்களில் ஏறும் சூரியனைப் போலவே தன் சிறந்த தேரில் ஏறினான்.(11) சூரியன், அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், ஒரே தேரில் ஏறிக்கொண்டு, ஆகாய மேகத்தில் அமர்ந்திருக்கும் சூரியனையும், அக்னியையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(12) (பாணர்கள் மற்றும் துதிபாடிகளால்) துதிக்கப்படுபவர்களும், பெரும் காந்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு வீரர்களும், அப்போது வேள்வியில் ரித்விக்குகளாலும், சத்யஸ்களாலும் துதி பாடல்களால் துதிக்கப்படும் இந்திரனையும் அக்னியையும் போலத் தெரிந்தனர்.(13) சல்லியனால் கடிவாளம் பிடிக்கப்பட்ட தன் குதிரைகளுடன் கூடிய தேரில் உறுதிமிக்கத் தன் வில்லை வளைத்தபடியே, ஒளிவட்டத்திற்குள் இருக்கும் சூரியனைப் போலக் கர்ணன் நின்றிருந்தான்.(14) இந்த முதன்மையான தேரில் நிலைகொண்ட மனிதர்களில் புலியான கர்ணன், தன் கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டு, மந்தரமலைகளில் உள்ள சூரியனைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(15)

அளவில்லா சக்தி கொண்டவனும், போருக்காகத் தன் தேரில் நிலை கொண்டிருந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்}, துரியோதனன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(16) “ஓ! அதிரதன் மகனே, ஓ! வீரா {கர்ணா}, துரோணரும், பீஷ்மரும் அடையாததும், அடைவதற்கரியதுமான அருஞ்செயலை வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்குபோதே அடைவாயாக.(17) வலிமைமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும், போரில் அர்ஜுனனையும், பீமசேனனையும் கொல்வார்கள் என நான் எப்போதும் ஐயமின்றி நம்பினேன்.(18) இரண்டாம் வஜ்ரதாரியை {இந்திரனைப்} போல, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அவ்விருவரும் அடையாததும், வீரனுக்குத் தகுந்ததுமான அருஞ்செயலை இந்தப் பெரும்போரில் நீ அடைவாயாக.(19) ஒன்று நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பிடிப்பாயாக, அல்லது தனஞ்சயன், பீமசேனன், மாத்ரியின் மகன்களான இரட்டையர்கள் {நகுலன், சகாதேவன்} ஆகியோரைக் கொல்வாயாக.(20) நீ அருளப்பட்டிருப்பாயாக, வெற்றி உனதாகட்டும். ஓ! மனிதர்களில் புலியே, போருக்குப் புறப்படுவாயாக. பாண்டு மகனின் துருப்புகள் அனைத்தையும் சாம்பலாகக் குறைப்பாயாக” என்றான் {துரியோதனன்}.(21)

அப்போது ஆயிரக்கணக்கான எக்காளங்கள் மற்றும் பத்தாயிரக்கணக்கான பேரிகைகள் ஒன்றாக ஒலித்து ஆகாய மேகங்களைப் போன்ற ஒலியை உண்டாக்கின.(22) (துரியோதனனின்) அவ்வார்த்தைகளை ஏற்றவனும், தன் தேரில் நிலை கொண்டிருந்த முதன்மையான தேர்வீரனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, போரில் சாதித்த போர்வீரனான சல்லியனிடம், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, தனஞ்சயன், பீமசேனன், இரட்டையர்கள் இருவர், மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரை நான் கொல்லும் வகையில் குதிரைகளைத் தூண்டுவீராக.(24) ஓ! சல்லியரே, கங்க இறகுகளால் சிறகுகளமைந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளை நான் ஏவும்போது, என் கரங்களின் வலிமையை இன்று தனஞ்சயன் {அர்ஜுனன்} காணட்டும்.(25) ஓ! சல்லியரே, இன்று பாண்டவர்களின் அழிவுக்காகவும், துரியோதனனின் வெற்றிக்காகவும் பெரும் சக்திகளைக் கொண்ட கணைகளை நான் ஏவுவேன்” என்றான் {கர்ணன்}.(26)

சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! சூதன் மகனே {கர்ணா}, பெரும் வலிமை கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் அனைவரையும் நீ ஏன் இவ்வளவு இகழ்வாகக எண்ணுகிறாய்?(27) பெரும் நற்பேற்றைக் கொண்டவர்களும், வெல்லப்பட முடியாதவர்களும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவர்களுமான அவர்கள் பின்வாங்காதவர்களாக இருக்கிறார்கள். இந்திரனுக்கே இதயத்தில் அச்சத்தைத் தூண்டவல்லவர்கள் அவர்கள்.(28) ஓ! ராதையின் மகனே {கர்ணா}, இந்தப் போரில் இடியின் தொடரொலிக்கு ஒப்பான காண்டீவத்தின் நாணொலியை நீ கேட்கையில், இத்தகு பேச்சுகள் எதையும் நீ பேச மாட்டாய்.(29) ஆகாயத்து மேகங்களைப் போலத் தங்கள் கூரிய கணைகளால் கவிகைகளை அமைக்கப் போகும் தர்மனின் மகனையும் {யுதிஷ்டிரனையும்}, இரட்டையர்களையும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும்}(30), பெரும் கர நளினமும், (கணைமாரிகளைப்) பொழியும் தன்மையும் கொண்ட பாண்டவப் படையின் வேறு பிற வெல்லப்பட முடியாத மன்னர்களையும் நீ காணும்போது, இத்தகு வார்த்தைகளை நீ சொல்ல மாட்டாய்” என்று சொன்னான் {சல்லியன்}.(31)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} சொன்ன அவ்வார்த்தைகளை அலட்சியம் செய்த கர்ணன், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அவனிடம் {சல்லியனிடம்} “செல்வீராக” என்று சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(32)

எள்ளி நகையாடிய சல்லியன்! – கர்ண பர்வம் பகுதி – 37-போரிடப் புறப்பட்ட கர்ணன்; அப்போது தோன்றிய சகுனங்கள்; முடிவு தெரிந்தே புறப்பட்டாலும், தன்னைத் தானே புகழ்ந்து கொண்ட கர்ணன்; கர்ணனை எள்ளி நகையாடிய சல்லியன், கர்ணனை நிந்தித்து அர்ஜுனனைப் புகழ்ந்தது; பாண்டவப் படையை எதிர்த்துச் சென்ற கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், போரிடும் விருப்பத்துடன் தன் நிலை ஏற்றதைக் கண்ட கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் உரக்க கூச்சலிட்டனர்.(1) தூரியங்கள் மற்றும் பேரிகைளின் ஒலி, பல்வேறு வகையிலான கணைகளின் விஸ் என்ற ஒலி, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட போராளிகளின் முழக்கங்கள் ஆகியவற்றோடும், மரணம் ஒன்றையே நிற்கும் புள்ளியாகக் கொண்டும், உமது துருப்புகள் அனைத்தும் போருக்குச் சென்றன.(2)

கர்ணன் புறப்பட்டு, குருபடையின் போர்வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமாதேவி நடுங்கி பேரொலியை உண்டாக்கினாள்.(3) சூரியன் உள்ளிட்ட ஏழு பெரும் கோள்கள் (மோதுவதற்காக) ஒன்றையொன்று எதிர்த்துச் செல்வதைப் போலத் தெரிந்தது. எரிநட்சத்திர மழை காணப்பட்டது, திசைகள் அனைத்தும் எரிவதைப் போலத் தெரிந்தன.(4) மேகமற்ற வானில் இருந்து இடி விழுந்தது, கடும் காற்றும் வீசத் தொடங்கியது.(5) பெரும் எண்ணிக்கையிலான விலங்குகளும், பறவைகளும் உமது படையைத் தங்கள் வலப்புறத்தில் கொண்டு பெரும் அழிவுகளை முன்னறிவித்தன[1].(6) கர்ணன் புறப்பட்டதும், அவனது குதிரைகள் பூமியில் விழுந்தன. வானத்தில் இருந்து பயங்கரமான எலும்புகளின் மழை பொழிந்தது.(7) (கௌரவப் போர்வீரர்களின்) ஆயுதங்கள் எரிவதைப் போலத் தெரிந்தன; அவர்களது கொடிமரங்கள் நடுங்கின; ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களின் விலங்குகள் அபரிமிதமான கண்ணீரைச் சொரிந்தன.(8) இவையும் இன்னும் பல பயங்கரச் சகுனங்களும் குருக்களின் அழிவுக்காகத் தோன்றின. விதியால் மயக்கமுற்ற அவர்களில் எவரும் அந்தச் சகுனங்களைக் கருத்தில் கொள்ள வில்லை.(9)

சூதன் மகன் {கர்ணன்} புறப்பட்டதைக் கண்ட (கௌரவப் படையைச் சார்ந்த) மனிதர்களின் ஆட்சியாளர்கள் அனைவரும் அவனது வெற்றிக்காகக் கூக்குரலிட்டனர். பாண்டவர்களை ஏற்கனவே வெல்லப்பட்டுவிட்டதாகவே கௌரவர்கள் கருதினர்.(10) பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணங்களை எண்ணிப் பார்த்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான வைகர்த்தனன் {கர்ணன்}, தன் தேரில் நின்று கொண்டிருந்த போது சூரியனையோ, நெருப்பையோ போன்ற காந்தியுடன் சுடர்விட்டான்.(11) பார்த்தனின் {அர்ஜுனனின்} வலிமைமிக்கச் சாதனைகளை நினைத்துப் பார்த்த அவன் {கர்ணன்}, இறுமாப்பு மற்றும் செருக்குடன், கோபத்தில் சுடர்விட்டு, கடும் பெருமூச்சுகளைவிட்டபடி சல்லியனிடம் பேசியவாறே இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(12) “என் வில்லுடன் நான் என் தேரில் இருக்கும்போது, கோபத்தால் தூண்டப்பட்டவனும், வஜ்ரதாரியுமான இந்திரனிடமே நான் அச்சங்கொள்ள மாட்டேன். பீஷ்மரின் தலைமையிலான அந்தப் பெரும் போர்வீரர்கள் போர்க்களத்தில் கிடப்பதைக் கண்டும் நான் எந்தக் கவலையையும் அடையவில்லை.(13) இந்திரனுக்கும், விஷ்ணுவுக்கும் நிகரானவர்களும், முதன்மையான தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளை நொறுக்குபவர்களும், கொல்லப்பட முடியாத வீரர்களுமான அந்தக் களங்கமற்ற பீஷ்மரும், துரோணரும் எதிரியால் கொல்லப்பட்டும் இந்தப் போரில் நான் எந்த அச்சத்தையும் அடையவில்லை.(14) உண்மையில் ஆசான் {துரோணர்}, வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்தவராகவும், பிராமணர்களில் முதன்மையானவராகவும் இருந்தாலும் கூட, சாரதிகள், யானைகள் மற்றும் தேர்களுடன் கூடிய நமது வலிமைமிக்க மன்னர்களை எதிரிகள் அழித்தபோது, அவர்கள் அனைவரையும் போரில் ஏன் கொல்லவில்லை?(15) குருக்களே, பெரும்போரில் அந்தத் துரோணரை நினைவு கூர்ந்து நான் சொல்வதைக் கேட்பீராக.

கடுந்தோற்றத்தையுடைய காலனுக்கு ஒப்பான போர்வீரனாக முன்னேறி வரும் அர்ஜுனனைத் தாங்கிக் கொள்ளக்கூடியவன் என்னையன்றி உங்களில் வேறு எவரும் கிடையாது.(16) பயிற்சியால் உண்டான திறனும், வலிமையும், துணிவும், உயர்ந்த ஆயுதங்களும், கொள்கையும் துரோணரில் இருந்தன. அந்த உயர் ஆன்மாவே மரணத்திற்கு அடிபணிய வேண்டியிருந்தது எனும்போது, (நமது படையின்) வேறு அனைவரையும் நான் பலமற்றவர்களாகவும், மரணத்தருவாயில் இருப்பவர்களாகவுமே கருதுகிறேன்.(17) செயல்களின் தொடர்புகளை {பற்றுகளைத்} தவிர்க்க முடியாததன் விளைவாக, இவ்வுலகில் நிலையானது எதையும் நன்கு சிந்தித்த பிறகும் கூட என்னால் காண முடியவில்லை. ஆசானே {துரோணரே} இறந்தார் எனும்போது, இன்றைய சூரிய உதயம் வரையாவது உயிருடன் வாழ்வோம் என எவன்தான் உறுதியாக நம்புவான்?[2](18) போரில் ஆசான் இவ்வாறு எதிரியால் கொல்லப்பட்டார் என்றால், சாதாரண மற்றும் தெய்வீக ஆயுதங்கள், வலிமை, ஆற்றல், சாதனைகள், விவேகமான கொள்கை {நீதியில் ஞானம்} ஆகியவற்றால் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியை அழிக்க முடியாது என்பதில் ஐயமில்லாமல் போகிறது.(19) சக்தியில் துரோணர் நெருப்புக்கோ சூரியனுக்கோ நிகரானவர், ஆற்றலில் விஷ்ணுவுக்கோ, புரந்தரனுக்கோ {இந்திரனுக்கோ} அவர் ஒப்பானவர், கொள்கையில் {நீதியில்} அவர் {துரோணர்] பிருஹஸ்பதிக்கோ, உசனஸுக்கோ {சுக்கிராச்சாரியருக்கோ} நிகரானவர்; அப்படித் தடுக்கப்பட முடியாதவராக இருந்த அவரையே கூட, ஆயுதங்களால் காக்க முடியவில்லை.(20)

ஓ! சல்லியரே, தார்தராஷ்டிரர்களின் வீரம் வீழ்த்தப்பட்டு, (நமது) மகளிரும், குழந்தைகளும் அழுது, ஓலமிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நானே போரிட வேண்டியவன் என்பதை நான் அறிவேன். எனவே, நம் எதிரிகளின் படையை எதிர்த்துச் செல்வீராக.(21) உண்மையில் உறுதிமிக்க {சத்தியத்தில் உறுதியான} பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, பீமசேனன், அர்ஜுனன், சாத்யகி மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகியோர் இருக்கும் அந்தத் துருப்புகளைத் தாக்குப்பிடிக்க என்னைத் தவிரை வேறு எவரால் முடியும்?(22) எனவே, ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, இந்தப் போரில் பாஞ்சாலர்கள், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களை நோக்கி விரைவாகச் செல்வீராக. போரில் அவர்களோடு மோதி, நான் அவர்களைக் கொல்வேன், அல்லது துரோணர் சென்ற பாதையில் யமனின் முன்னிலையை நான் அடைவேன்.(23) ஓ! சல்லியரே, அந்த வீரர்களுக்கு மத்தியில் நான் செல்ல மாட்டேன் என்று நீர் நினைக்காதீர். இந்த உட்பகையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (அவற்றைப் பொறுத்துக் கொள்ள முயலாத) நான் துரோணரைப் பின்தொடர்ந்தாவது செல்வேன்[3].(24) ஞானியோ, மூடனோ, அவனது காலம் முடிந்தால், அவர்கள் அனைவரையும் காலன் சமமாகவே கருதுகிறான்; எவரும் தப்ப முடியாது. ஓ! கல்விமானே, நான் பார்த்தர்களை எதிர்த்துச் செல்வேன். என் விதியை மீற முடியாதவனாக நான் இருக்கிறேன்.(25) விசித்திரவீரியன் மகனுடைய {திருதராஷ்டிரனுடைய} மகன் {துரியோதனன்} எப்போதும் எனக்கு நன்மை செய்வதிலேயே ஈடுபட்டான். அவனது நோக்கங்களைச் சாதிப்பதற்காக அன்பிற்குரியவையும், விடுவதற்குக் கடினமானவையுமான என் உயிர் மூச்சையும், இந்த உடலையும் நான் துறப்பேன்.(26)

புலித்தோலால் மறைக்கப்பட்டதும், எவ்வொலியையும் உண்டாக்காத அச்சுகள், தங்க ஆசனம், வெள்ளியாலான திரிவேணு ஆகியவற்றைக் கொண்ட இந்த முதன்மையான தேரானது, ராமர் {பரசுராமர்} எனக்கு அளித்த இந்த முதன்மையான குதிரைகள் பூட்டப்பட்டதாக இருக்கிறது.(27) ஓ! சல்லியரே, இந்த அழகிய விற்களையும், கொடிமரங்களையும், கதாயுதங்களையும், கடும் தோற்றங்களையுடைய இந்தக் கணைகளையும், சுடர்மிக்க இந்த வாளையும், இந்த வலிமைமிக்க ஆயுதத்தையும், கடுமையானதும், பேரொலியை எழுப்பக்கூடியதுமான இந்த வெண் சங்கையும் பார்ப்பீராக.(28) கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதும், இடியைப் போன்ற ஆழமான சடசடப்பொலியை உண்டாக்கும் சக்கரங்களைக் கொண்டதும், வெண் குதிரைகள் பூட்டப்பட்டதும், சிறந்த அம்பறாத்தூணிகளால் அலங்கரிக்கப்படுமான இந்தத் தேரில் செல்லும் நான், என் வலிமையை வெளிப்படுத்தி, தேர்வீரர்களில் காளையான அர்ஜுனனை இந்தப் போரில் கொல்வேன்.(29) அண்டத்தை எரிக்கும் அந்தகனே இந்தப் போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்காணிப்புடன் பாதுகாத்தாலும்கூட, போரில் அவனோடு மோதி நான் அவனைக் கொல்வேன், அல்லது பீஷ்மரைப் பின்தொடர்ந்து யமனின் முன்னிலைக்குச் செல்வேன்.(30) யமன், வருணன், குபேரன், வாசவன் {இந்திரன்} ஆகியோர் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் இங்கே வந்து, ஒன்றாகச் சேர்ந்து இந்தப் பெரும்போரில் அந்தப் பாண்டுவின் மகனைப் {அர்ஜுனனைப்} பாதுகாத்தாலும், அவர்கள் அனைவருடன் சேர்த்து நான் அவனை வெல்வேன். {அவ்வாறிருக்கையில்} பல சொற்களின் தேவைதான் எதற்கு?” {என்றான் கர்ணன்}.(31)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போரின் எதிர்பார்ப்பில் மிகவும் மகிழ்ச்சியாகத் தற்புகழ்ச்சி செய்து கொண்டிருந்த கர்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, அவனை எள்ளி நகையாடியபடி, உரக்கச் சிரித்து, {தற்புகழ்ச்சியில் இருந்து} அவனைத் தடுப்பதற்காகப் பின்வரும் மறுமொழியைச் சொன்னான்.(32)

சல்லியன் {கர்ணனிடம்}, “நிறுத்து, ஓ! கர்ணா, இத்தகு தற்புகழ்ச்சியை நிறுத்து. பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் நீ, ஒருவன் எப்போதும் சொல்லக்கூடாததையெல்லாம் சொல்கிறாய். மனிதர்களில் முதன்மையான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே? ஓ! மனிதர்களில் தாழ்ந்தவனே {கர்ணனே}, நீ எங்கே?(33) இந்திரனின் தம்பியாலும் {கிருஷ்ணனாலும்}, தேவர்களின் தலைவனாலும் பாதுகாக்கப்பட்டு, தேவலோகம் போல இருந்த யாதவர்களின் வசிப்பிடத்தை {துவாரகையைக்} கலங்கடித்து விட்டு, அனைவரிலும் முதன்மையானவனின் (கேசவனின் {கிருஷ்ணனின்}) தங்கையைக் {சுபத்திரையைக்} கடத்த அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்?(34) ஒரு விலங்கைக் கொன்ற சச்சரவு நேர்ந்த சமயத்தில், தலைவர்களின் தலைவனும், உலகங்களைப் படைத்தவனுமான பவனை {சிவனைப்} போருக்கு அழைக்க, தேவர்களுடைய தலைவனின் {இந்திரனின்} ஆற்றலுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்?(35)

அந்த ஜயன் {அர்ஜுனன்}, அக்னியைக் கௌரவப் படுத்துவதற்காக, அசுரர்கள், தேவர்கள், பெரும்பாம்புகள், மனிதர்கள், பறவைகள், பிசாசங்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோரைத் தன் கணைகளால் வென்று, அத்தேவன் {அக்னி} விரும்பிய உணவை அவனுக்குக் கொடுத்தான்.(36) ஓ! கர்ணா, சூரியப் பிரகாசம் கொண்ட தன் சிறந்த கணைகளால் அந்த எதிரிகளைக் கொன்றபோது, அந்தப் பல்குனன் {அர்ஜுனன்}, குருக்களுக்கு மத்தியில் இருந்த திருதராஷ்டிரர் மகனையும் {துரியோதனனையும்} விடுவித்தது உனக்கு நினைவில்லையா?(37) முதல்வனாக நீ தப்பி ஓடிய பிறகு, அந்த வானுலாவிகளை (சித்திரரதன் தலைமையிலான கந்தர்வர்களை) வீழ்த்தி, சச்சரவையே இயல்பாகக் கொண்ட திருதராஷ்டிரர் மகன்களைப் பாண்டவர்கள் விடுவித்த அந்த நிகழ்வு உனக்கு நினைவில்லையா?(38) (விராடனின்) பசுக்களைக் கைப்பற்றச் சென்ற நிகழ்வின் போது, மனிதர்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இரண்டையும் பெரும் எண்ணிகையில் கொண்டிருந்தவர்களும், ஆசான் {துரோணர்}, ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, பீஷ்மர் ஆகியோரைத் தங்களுடன் கொண்டிருந்தவர்களுமான கௌரவர்களை அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} வென்றானே. ஓ!, அப்போது அர்ஜுனனை ஏன் நீ வெல்லவில்லை?(39) உன் அழிவுக்காகவே மற்றுமொரு சிறந்த போர் இப்போது தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. உன் எதிரியிடம் கொண்ட அச்சத்தால், நீ தப்பி ஓடாமல் இருந்தால், ஓ! சூதன் மகனே {கர்ணா}, போரிடச் சென்றவுடன் நீ கொல்லப்படுவாய்” என்றான் {சல்லியன்}.(40)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கர்ணனிடம் இக்கடுமொழியில் இதயப்பூர்வமாக ஈடுபட்டு, பின்னவனின் {அவனது} எதிரியையும் புகழ்ந்து கொண்டிருந்தபோது, எதிரிகளை எரிப்பவனான அந்தக் குரு படையின் தலைவன் {கர்ணன்}, சினத்தால் தூண்டப்பட்டு, மத்ர மன்னனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(41)

கர்ணன் {சல்லியனிடம்}, “அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும். எனினும், அர்ஜுனனின் புகழ்ச்சியில் நீர் ஈடுபடுவது ஏன்? எனக்கும் அவனுக்கு இடையில் போர் நேரப்போகிறது. என்னை அவன்  {அர்ஜுனன்} போரில் வென்றால், இந்த உமது புகழ்ச்சிகள் அனைத்தும் நன்கு சொல்லப்பட்டதாகவே கருதப்படும்” என்றான்.(42)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி எந்த மறுமொழியும் கூறாமலிருந்தான். போரிடும் விருப்பத்தோடு கர்ணன், “செல்வீராக” என்று சல்லியனிடம் சொன்ன போது,(43) தன் வாகனத்தில் வெண்குதிரைகள் பூட்டியிருந்தவனும், சல்லியனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அந்தப் பெரும் தேர்வீரன் {கர்ணன்}, இருளை அளிக்கும் சூரியனைப் போலப் போரில் பெரும் எண்ணிக்கையிலானவர்களைத் தன் வழியில் கொன்றபடியே எதிரிகளை எதிர்த்து விரைந்தான்.(44) உண்மையில் கர்ணன், புலித்தோல்கள் போர்த்தி, வெண்குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேரில் உற்சாகமிக்க இதயத்துடன் சென்று, பாண்டவர்களின் படையைக் கண்டதும், தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} குறித்து விசாரித்தான்” {என்றான் சஞ்சயன்}.(45)

“அர்ஜுனனை எனக்குக் காட்டிக் கொடுத்தால்?” என்ற கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 38-அர்ஜுனனைத் தன்னிடம் காட்டிக் கொடுப்பவனுக்கு, அவன் விரும்பும் பரிசுகளைத் தான் அளிக்கப் போவதாகப் பாண்டவத் துருப்பினரிடம் சொன்ன கர்ணன்; மீண்டும் சல்லியன் கர்ணனிடம் பேசத் தொடங்குவது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படைக்கு மகிழ்வூட்டியபடி கர்ணன் போருக்குப் புறப்பட்ட பிறகு, தான் சந்தித்த ஒவ்வொரு பாண்டவப் படைவீரனிடமும் அவன் {கர்ணன்} இவ்வார்த்தைகளைப் பேசினான்:(1) “வெண்குதிரைகளைக் கொண்ட உயர் ஆன்மத் தனஞ்சயனை {அர்ஜுனனை} இன்று எனக்குச் சுட்டிக் காட்டுபவனுக்கு, அவன் விரும்பும் எந்தச் செல்வத்தையும் நான் அளிப்பேன்.(2) அதைப் பெற்ற பின்பும் அவன் நிறைவடையவில்லையென்றால், அதற்கு மேலும் அதிகமாக நான் கொடுப்பேன். அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு ஒரு வண்டிச்சுமை அளவுக்கு ரத்தினங்களையும், நகைகளையும் அளிப்பேன்.(3) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவன் நிறைவடையவில்லையெனில், அவனுக்கு நூறு பசுக்களையும், அவற்றில் பால் கறப்பதற்காக அதே அளவு பித்தளை பாத்திரங்களையும் கொடுப்பேன்.(4) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு முதன்மையான நூறு கிராமங்களை அளிப்பேன். அர்ஜுனனை எனக்குக் காட்டுபவனுக்கு, கருங்கண்களையும், நீண்ட கூந்தலையும் கொண்ட காரிகைகள் பலரையும், வெண் கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தேர் ஒன்றையும் அளிப்பேன்.(5)

அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், யானைகள் அளவுக்குப் பெரியவையான ஆறு காளைகள்[1] பூட்டப்பட்டதும், தங்கத்தாலானதுமான மற்றுமொரு தேரை நான் அளிப்பேன்.(6) ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், தங்கக் கழுத்தணி பூண்டவர்களும், நல்ல நிறத்தைக் கொண்டவர்களும்[2], பாடல் மற்றும் ஆடலில் சாதித்தவர்களுமான நூறு காரிகைகளையும் நான் அவனுக்கு அளிப்பேன்.(7) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அதுவும் நிறைவைத் தரவில்லையெனில், நூறு யானைகளையும், நூறு கிராமங்களையும், நூறு தேர்களையும்,(8) பருத்தவையும், சிறந்த தன்மைகள் பலவற்றைக் கொண்டவையும், தேர்களை இழுக்க வல்லவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான பத்தாயிரம் {10000} குதிரைகளையும் நான் அவனுக்கு அளிப்பேன்.(9) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்குத் தங்கக் கொம்புகள் கொண்ட நூனூறு பசுக்களையும், அவற்றின் கன்றுகளையும் கொடுப்பேன்.(10) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அதுவும் நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாகத் தங்க இழைகளாலும், தங்க நகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஐநூறு {500} குதிரைகளை நான் அவனுக்கு அளிப்பேன். நன்கு கீழ்ப்படியும் தன்மை கொண்ட வேறு பதினெட்டு குதிரைகளையும் நான் கொடுப்பேன்.(11,12) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்குப் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், முதன்மையான காம்பாஜக் குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்கத்தாலானதுமான பிரகாசமான ஒரு தேரையும் அளிப்பேன்.(13)

அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மிகவும் மதிப்புமிக்கப் பரிசாகக் கழுத்துகளில் தங்க ஆரங்களுடையவையும், தங்க அம்பாரிகளால் மறைக்கப்பட்டவையும், பெருங்கடலின் மேற்குக் கடற்கரைகளில் பிறந்தவையும்,[3] யானைப்பழக்கிகளால் பயிற்சியளிக்கப்பட்டவையுமான அறுநூறு {600} யானைகளை நான் அவனுக்கு அளிப்பேன்.(14,15) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாக, மக்கள் நிறைந்தவையும், செல்வம் நிறைந்தவையும், காடுகள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றை அருகாமையில் கொண்டவையும், ஆபத்துகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவையும், (இன்றியமையாதவை பிறவற்றுடன் சேர்த்து) நன்கு அமைக்கப்பட்டவையும், மன்னர்களால் அனுபவிக்கத் தகுந்தவையுமான பதினான்கு {14} வைசியக் கிராமங்களை நான் அவனுக்கு அளிப்பேன்.(16,17) தனஞ்சயனை {அர்ஜுனனை} எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு, தங்கக் கழுத்தணி கொண்டவர்களும், மகதர்களின் நாட்டைச் சேர்ந்தவர்களும், மிக இளவயதுடையவர்களுமான நூறு அடிமைப்பெண்களை நான் அவனுக்கு அளிப்பேன்.(18) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாக, உண்மையில் அவனே வேண்டுவதைக் கொடுப்பேன்.(19) நான் கொண்டுள்ள மகன்கள், மனைவியர், இன்பங்கள் மற்றும் இன்பநுகர் பொருட்கள் அனைத்தையும் அவன் விரும்பினால் நான் கொடுப்பேன்[4].(20) உண்மையில், கேவசவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் நான் கொன்ற பிறகு, அவர்களை எனக்குக் கண்டுபிடித்துத் தந்தவனுக்கு, அவர்களிடம் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடம்} எஞ்சியிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் கொடுப்பேன்” என்று சொன்னான் {கர்ணன்}.(21)

அந்தப் போரில் இப்படிப் பல்வேறு பேச்சுகளைப் பேசிய கர்ணன், கடலில் பிறந்ததும், இனிய ஒலியை உண்டாக்குவதுமான தன் சிறந்த சங்கை எடுத்து ஊதினான்.(22) சூதன் மகனின் நிலைக்குத் தகுந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியில் நிறைந்தவன் ஆனான்.(23) அந்தச் சூழ்நிலையில், ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் காளையே, (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில், மிருதங்கங்கள் மற்றும் பேரிகைகளின் முழக்கங்கள், சிங்க முழக்கங்கள், யானைகளின் பிளிறல்கள் ஆகியன அங்கே பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளோடு கலந்து எழுந்தன. மகிழ்ச்சியால் நிறைந்த போர்வீரர்களின் கூச்சல்களும் அங்கே எழுந்தன.(24,25) இவ்வாறு (கௌரவத்) துருப்புகள் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த போது, வெறுப்புடன் சிரித்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, எதிரிகளைக் கலங்கடிப்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், போரெனும் பெருங்கடலுக்குள் மூழ்கச் செல்பவனும், இத்தகு வீண் தற்புகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுமான அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}[5].(26)

“கர்ணா நீயொரு நரி!” என்ற சல்லியன்! – கர்ண பர்வம் பகுதி – 39-அர்ஜுனனுடன் தனியாகப் போரிட வேண்டாம் என்று கர்ணனை எச்சரித்த சல்லியன்; தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்த கர்ணன்; கர்ணனின் செருக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாத சல்லியன் அவனை இகழ்ந்தது; கர்ணன் மற்றும் அர்ஜுனனை, நரி மற்றும் சிங்கமாக ஒப்பிட்டுச் சொன்ன சல்லியன்…

சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! சூதன் மகனே {கர்ணா}, யானையளவு பெரிதான ஆறு காளைகளுடன் கூடிய தங்கத் தேரை எவனுக்கும் கொடுத்துவிடாதே. நீ இன்று தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணப் போகிறாய்.(1) நீயே பொக்கிஷத் தலைவன் {குபேரன்} என்பதைப் போலச் செல்வங்களைக் கொடுப்பதாக மடமையினாலே நீ சொல்கிறாய்.[1] எனினும், ஓ! ராதையின் மகனே {கர்ணனே}, எந்தத் இடருமில்லாமலே நீ இன்று தனஞ்சயனைக் காண்பாய்.(2) அறிவற்ற மனிதனைப் போல நீ செல்வத்தைக் கொடுக்கிறாய்; தகாதவர்களுக்குக் கொடுக்கப்படும் அப்பரிசுகளில் இணைந்திருக்கும் குறைகளை நீ காணவில்லை.(3) நீ கொடுக்க விரும்பும் அப்பெருஞ்செல்வத்தைக் கொண்டு, நிச்சயம் வேள்விகள் பலவற்றை நடத்திவிட முடியும். எனவே, ஓ! சூதன் மகனே {கர்ணா}, நீ அவ்வேள்விகளைச் செய்வாயாக.(4) மடமையினால் தூண்டப்பட்ட அவ்விருப்பம் நிச்சயம் வீணானதாகும். இரண்டு சிங்கங்கள் ஒரு நரியால் வீழ்த்தப்பட்டதை நாம் எப்போதும் கேட்டதில்லை.(5)

எதை நீ எப்போதும் வேண்டக்கூடாதோ அதையே வேண்டுகிறாய். சுடர்மிகும் நெருப்புக்குள் வேகமாக விழும் உன்னைத் தடுக்க நண்பர்கள் எவரும் உனக்கு இல்லை என்பது தெரிகிறது.(6) எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் வேறுபாடு காண உன்னால் இயலவில்லை. உன் காலம் நிறைவுபெற்றது என்பதில் ஐயமில்லை. வாழ விரும்பும் எந்த மனிதன்தான் இந்தளவுக்குக் கேட்பதற்கு ஒத்திசையாத, தகாத பேச்சுகளைப் பேசுவான்?(7) இந்த உனது முயற்சியானது, கழுத்தில் கனமான கல்லைக் கட்டிக் கொண்டு, இரண்டு கைகளால் மட்டுமே பெருங்கடலைக் கடக்க விரும்பும் ஒருவனைப் போலவோ, மலைச்சிகரத்தில் இருந்து குதித்துவிட விரும்பும் ஒருவனைப் போலவோ இருக்கிறது.(8) உன் நன்மைக்கான வெற்றியை நீ அடைய விரும்புவாயெனில், அணிவகுக்கப்பட்ட உன் படைப்பிரிவுக்குள் நல்ல பாதுகாப்புடன் இருந்து கொண்டு, உனது போர்வீரர்கள் அனைவரின் உதவியுடன் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடம்} போரிடுவாயாக. {தனியாகப் போரிடாதே}.(9) உன் மீது எந்தத் தீய நோக்கமும் கொள்ளாமல், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} நன்மைக்காகவே இதை நான் உன்னிடம் சொல்கிறேன். உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள விருப்பமேதும் நீ கொண்டிருந்தால், என்னால் சொல்லப்பட்டும் வார்த்தைகளை ஏற்பாயாக” என்றான் {சல்லியன்}.(10)

கர்ணன் {சல்லியனிடம்}, “என் கரங்களின் வலிமையை நம்பியே நான் அர்ஜுனனுடன் போரிட முயல்வேன். எனினும், நண்பனின் முகத்தோடு கூடிய பகைவரான நீர் என்னை அச்சுறுத்த விரும்புகிறீர்.(11) இந்தத் தீர்மானத்தில் இருந்து என்னைப் பின்வாங்கச் செய்ய எவனாலும், ஏன் வஜ்ரத்தை உயர்த்தும் இந்திரனாலும் கூட முடியாது எனும்போது, மனிதர்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது?” என்றான்.(12)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கர்ணனுடைய வார்த்தைகளின் முடிவில், அவனது கோபத்தைத் தூண்ட விரும்பிய மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அவனுக்கு மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(13) {சல்லியன்}, “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பல்குனனால் {அர்ஜுனனால்} ஏவப்படுபவையும், கங்க இறகுகளால் சிறகுகள் அமைந்தவையும், அவனது வில்லின் நாணில் இருந்து தூண்டப்பட்டவையும், அவனது சக்தி அனைத்தையும் திரட்டி ஏவப்பட்டவையுமான கூர்முனை கணைகள் உன்னை நாடும்போது, அந்த வீரனுடனான உன் மோதலைக் குறித்து நீ வருந்துவாய்.(14) சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தெய்வீக வில்லை எடுத்துக் கொண்டு (குரு) படையை எரித்து, கூரிய கணைகளால் உன்னை அதீதமாகப் பீடிக்கும்போது, ஓ! சூதன் மகனே {கர்ணா}, நீ (உன் மடமைக்காக) வருந்துவாய்.(15) தாயின் மடியில் கிடக்கும் குழந்தை, நிலவைப் பிடிக்க முயல்வதைப் போல நீயும் உன் மடமையினால் தேரில் நிற்கும் பிரகாசமிக்க அர்ஜுனனை வெல்ல முயல்கிறாய்.(16) ஓ! கர்ணா, கூர்முனை சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனுடன் நீ இன்று போரிட விரும்புவதன் மூலம், திரிசூலத்தின் கூர் முனைகளில் உன் அங்கங்களைத் தேய்த்துக் கொள்கிறாய்[2].(17)

ஓ! சூதன் மகனே {கர்ணனே}, சுறுசுறுப்பும், இளமையும், மடமையும் கொண்ட ஒரு சிறு மானானது, கோபத்தால் தூண்டப்பட்ட ஒரு பெரும் சிங்கத்தை அறைகூவியழைப்பதைப் போன்றதே இந்த உனது அறைகூவல் இருக்கிறது.(18) ஓ! சூதன் மகனே {கர்ணா}, காட்டில் இறைச்சியில் நிறைவு கொண்ட ஒரு நரியானது, பிடரிமயிர் கொண்ட காட்டு ஏகாதிபதியை {பெருஞ்சிங்கத்தை} அறைகூவியழைப்பதைப் போல, வலிமையும் சக்தியும் கொண்ட அந்த இளவரசனை {அர்ஜுனனை} நீ அறைகூவியழைக்காதே. அர்ஜுனனோடு மோதி அழிவையடையாதே.(19) ஓ! கர்ணா, ஒரு முயலானது, கலப்பைகள் அளவு பெரிய தந்தங்களைக் கொண்டதும், வலிமைமிக்கதும், வாயிலும், கன்னத்திலும் மத நீர் பெருக்குவதுமான ஒரு யானையை அறைகூவியழைப்பதைப் போல, நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(20) பார்த்தனோடு போரிட விரும்பும் மடமையினால் நீ, பொந்துக்குள் கிடக்கும் கடும் நஞ்சுமிக்கக் கருநாகத்தை மரத்துண்டினால் {குச்சியினால்} துளைத்து, அதன் சீற்றத்தைத் தூண்டுகிறாய்.(21) ஓ! கர்ணா, சிறுமதி கொண்ட நீ, மனிதர்களில் சிங்கமான அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} அலட்சியம் செய்து, கோபத்தால் தூண்டப்பட்டதும், பிடரிமயிர் கொண்டதுமான ஒரு சிங்கத்தை நோக்கி ஊளையிடும் நரியைப் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி ஊளையிடுகிறாய்.(22)

ஒரு பாம்பானது, பறவைகளில் முதன்மையானவனும், அழகிய இறகுகள் கொண்டவனும், பெரும் சுறுசுறுப்புடையவனுமான வினதையின் மகனை {கருடனை} தன் அழிவுக்காகவே அறைகூவியழைப்பதைப் போல, பாண்டுவின் மகனான தனஞ்சயனை நீ அறைகூவியழைக்கிறாய்.(23) நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடமும், மலைகளைப் போன்ற அலைகளைக் கொண்டதும், நீர்வாழ் உயிரினங்கள் நிறைந்ததும், சந்திரன் உதிக்கையில் உயரமாக எழுவதுமான பயங்கரமானபெருங்கடலை நீ படகில்லாமல் கடக்க விரும்புகிறாய்.(24) ஓ! கர்ணா, ஒரு கன்றானது, கூரிய கொம்புகளையும், பேரிகையைப் போன்ற தடித்த திமில்களையும் கொண்டதும், தாக்கவல்லதுமான காளையொன்றை அறைகூவியழைப்பதைப் போல, போரில் நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {குந்தியின் மகனான அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(25) அபரிமிதமான மழையைப் பொழியும் பயங்கரமான பெரும் மேகத்தைக் கண்டு கரையும் தவளையைப் போல, மனிதர்களில் பர்ஜன்யனான {மேகதேவனான}[3] அர்ஜுனனைக் கண்டு நீ கரைகிறாய்.(26) தன் தலைவனின் வீட்டு எல்லைக்குள் இருக்கும் நாயானது, காட்டில் திரியும் புலியைக் கண்டு குரைப்பதைப் போல, ஓ! கர்ணா, மனிதர்களில் புலியான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு நீ குரைக்கிறாய்.(27)

ஓ! கர்ணா, காட்டில், குழிமுயல்களுக்கு மத்தியில் வசிக்கும் நரியானது, உண்மையில் ஒரு சிங்கத்தைப் பார்க்குவரை, தன்னையே ஒரு சிங்கமாகக் கருதிக் கொள்ளும்.(28) அது போலவே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, எதிரிகளை ஒடுக்குபவனும், மனிதர்களில் புலியுமான தனஞ்சனை நீ காணாததால், உன்னையே சிங்கமாக நீ கருதிக் கொள்கிறாய்.(29) ஒரே தேரில் சூரியனையும், சந்திரனையும் போல இருக்கும் கிருஷ்ணர்கள் {கருபர்களான கிருஷ்ணன், அர்ஜுனன்} இருவரையும் நீ காணாதவரை உன்னை நீயே சிங்கமாகக் கருதிக் கொள்வாய்.(30) பெரும்போரில் காண்டீவத்தின் நாணொலியை நீ எதுவரை கேட்கவில்லையோ, அதுவரை நீ விரும்பியதைச் செய்ய இயன்றவனாக இருப்பாய்.(31) பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தேரின் சடசடப்பொலியாலும், தன் வில்லின் நாணொலியாலும் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைப்பதைக் கண்டும், புலியைப் போல அவன் முழங்குவதைக் கண்டும், நீ நரியாகப் போகிறாய்.(32) நீ எப்போதும் நரியே ஆவாய், தனஞ்சயனோ {அர்ஜுனனோ} எப்போதும் சிங்கமேயாவான். ஓ! மூடா, அந்த வீரர்களிடம் கொண்ட பொறாமை மற்றும் வெறுப்பின் விளைவால், நீ எப்போதுமே நரியாகவே தெரிகிறாய்.(33) எலியும் பூனையும் ஒன்றுக்கொன்று பலத்தில் எப்படியோ, நாயும் புலியும் எப்படியோ, நரியும் சிங்கமும் எப்படியோ, முயலும் யானையும் எப்படியோ, பொய்மையும், மெய்யும் எப்படியோ, விஷமும் அமுதமும் எப்படியோ, அப்படியே நீயும் பார்த்தனும் உங்கள் செயல்களால் அனைவராலும் அறியப்படுகிறீர்கள்” {என்றான் சல்லியன்}.(34)

“உமது தலையை நொறுக்கிவிடுவேன்!” என்ற கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 40-மத்ரக நாட்டின் நடைமுறைகள், அந்நாட்டின் பெண்களின் நடத்தை, நட்பை மறுக்கும் குணம் ஆகியவற்றை வெளியிட்டுச் சல்லியனை நிந்தித்த கர்ணன், மேலும் இதுபோலப் பேசினால் தன் கதாயுதத்தால் சல்லியனின் தலையை நொறுக்கிவிடுவதாகச் எச்சரித்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா சக்தி கொண்ட சல்லியனால் இவ்வாறு நிந்திக்கப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, தன்னை நிந்திப்பவனின் வார்த்தைக் கணைகளின் விளைவால் அவனது {சல்லியனின்} பெயரின் பொருளை உணர்ந்து, கோபத்தால் நிறைந்து இவ்வாறு பதிலுரைத்தான்[1]”(1)

கர்ணன் {சல்லியனிடம்}, “ஓ! சல்லியரே, தகுதிமிக்க மனிதர்களின் {குணசாலிகளின்} தகுதிகளை {குணங்களைத்} தகுதியற்றவர்கள் {குணமில்லாதவர்கள்} அறிவதில்லை, தகுதிமிக்கவர்களே {குணசாலிகளே} அறிவார்கள். எனினும், நீர் தகுதியற்றவராகவே இருக்கிறீர். அப்படியிருக்கையில், தகுதியையும், தகுதியின்மையையும் உம்மால் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?(2) ஓ! சல்லியரே, அர்ஜுனனின் வலிமைமிக்க ஆயுதங்கள், அவனது சக்தி, வில், கணைகள், அந்த உயர் ஆன்ம வீரனின் ஆற்றல் ஆகியவற்றை நான் நன்கறிவேன்.(3) அதே போல, ஓ! சல்லியரே, பூமியின் தலைவர்களுக்கு மத்தியில் காளையான கிருஷ்ணனின் பெருமையை நான் நன்கறிந்ததைப் போல நீர் அறியமாட்டீர்.(4) ஆனால், ஓ! சல்லியரே, என் சக்தியையும், பாண்டு மகனின் {அர்ஜுனனின்} சக்தியையும் அறிந்தே நான் அவனைப் போருக்கு அறைகூவியழைக்கிறேன். சுடர்மிக்க நெருப்பைப் பொறுத்தவரை, பூச்சி போல நான் செயல்படுவதில்லை.(5)

ஓ! சல்லியரே, குருதி குடிக்கும் கூரிய வாய்க் கொண்டதும், ஓர் அம்பறாத்தூணிக்குள் தனியாகவே கிடப்பதும், சிறகுகளுடன் ஆயத்தம் செய்யப்பட்டதும், எண்ணெயில் நன்கு தோய்க்கப்பட்டதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதுமான இந்தக் கணையை நான் கொண்டிருக்கிறேன்.(6) சந்தனத்தூளுக்கு மத்தியில் கிடப்பதும், பல ஆண்டுகளாக என்னால் வழிபடப்பட்டு வருவதுமான இது, பாம்பொன்றின் இயல்பையும், வடிவத்தையும் கொண்டிருப்பதால், நஞ்சுமிக்கதாகவும், கடுமையானதாகவும், பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளைக் கொல்லவல்லதாகவும் இருக்கிறது.(7) பயங்கர வடிவமும், அதிக அச்சத்தைத் தரவல்லதுமான இது, கவசங்களையும், எலும்புகளையும் துளைக்கவல்லதாக இருக்கிறது. கோபத்தால் தூண்டப்படும் நான், இதைக் கொண்டு வலிமைமிக்க மேருவின் மலைகளையும் கூடத் துளைக்க முடியும்.(8) பல்குனனையோ {அர்ஜுனனையோ}, தேவகியின் மகனான கிருஷ்ணனையோ தவிர வேறு எந்த மனிதனின் மீதும் நான் இக்கணையை ஏவமாட்டேன். இவ்விஷயத்தில் நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன். அதைக் கேட்பீராக.(9)

ஓ! சல்லியரே, கோபத்தால் தூண்டப்பட்ட நான் இக்கணையைக் கொண்டு, வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயனோடு {அர்ஜுனனோடு} போரிடுவேன். அந்த அருஞ்செயல் எனக்குத் தகுந்ததே.(10) விருஷ்ணி குலத்தின் வீரர்கள் அனைவரிலும், கிருஷ்ணனிடமே எப்போதும் செழிப்பு நிறுவப்பட்டுள்ளது. பாண்டுவின் மகன்கள் அனைவரிலும், பார்த்தனிடமே {அர்ஜுனனிடமே} எப்போதும் வெற்றி நிறுவப்பட்டுள்ளது.(11) ஒரே தேரில் இருக்கும் அந்த மனிதர்களில் புலிகள் இருவரும், போரில் தனியனான என்னை எதிர்த்து வருவார்கள். ஓ! சல்லியரே, இன்று என் குலப்பிறப்பின் உன்னதத்தை நீர் பார்ப்பீர்.(12) அத்தையின் மகனும், தாய்மாமனின் மகனுமான அந்த மைத்துனர்கள் இருவரும்[2], அந்த வெல்லப்பட முடியாத போர்வீரர்கள் இருவரும், (ஒரே கணையைக் கொண்டு) என்னால் கொல்லப்பட்டு, ஒரே இழையில் கோர்க்கப்பட இரு முத்துகளைப் போலத் தெரிவதை நீர் காண்பீர்.(13) அர்ஜுனனின் காண்டீவம், குரங்கைத் தாங்கும் கொடி, கிருஷ்ணனின் சக்கரம், கருடனைத் தாங்கும் கொடி ஆகியன மருண்டோரின் அச்சத்தையே தூண்டும். எனினும், ஓ! சல்லியரே, எனக்கோ அவை மகிழ்ச்சியை உண்டாக்கும்.(14) தீய நிலைப்பாடும், பெரும்போரில் திறனற்ற வழிமுறைகளையும் கொண்ட நீர் ஒரு மூடரே. அச்சத்தால் பீடிக்கப்பட்டே நீர் இப்படிக் கரைகிறீர்.(15) அல்லது நானறியாத ஏதோ காரணத்திற்காக நீர் அவர்களைப் புகழ்கிறீர். முதலில் அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டு, உம்மையும், உமது சொந்தங்கள் அனைவருடனும் சேர்த்து இன்று கொல்வேன்.(16)

பாவம் நிறைந்த நாட்டில் பிறந்த நீர், தீய ஆன்மா கொண்டவராகவும், கோணல் புத்தி கொண்டவராகவும், க்ஷத்திரியர்களில் இழிந்தவராகவும் இருக்கிறீர். நண்பராய் இருந்து கொண்டே, இரு கிருஷ்ணர்களைக் (இப்படிப் புகழ்வதால்) கொண்டு ஓர் எதிரியைப் போல என்னை ஏன் அச்சுறுத்துகிறீர்?(17) இன்று அவர்கள் இருவரும் என்னைக் கொல்வார்கள், அல்லது நான் அவர்கள் இருவரையும் கொல்வேன். என் பலத்தால் முடிந்ததெதுவோ அஃதை அறிந்த நான் இரு கிருஷ்ணர்களிடமும் அச்சமேதும் கொள்ளவில்லை.(18) ஓராயிரம் வாசுதேவர்களையும், நூற்றுக்கணக்கான பல்குனர்களையும் என்னால் தனியனாகவே கொல்ல முடியும். ஓ! பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவரே, உமது நாவை அடக்கும்.(19) ஓ! சல்லியரே, ஏற்கனவே பழமொழிகளாகிவிட்டவையும், இளைஞர்கள், முதியவர்கள், மகளிர் ஆகியோராலும், கணக்கிலடங்கா பயணங்களில் ஈடுபடும் மனிதர்களாலும், ஏதோ தங்கள் கல்வியின் ஒரு பகுதியாக அமைந்துவிட்ட ஒன்றைப் போல் தீய மத்ரகர்களைக் குறித்துப் பொதுவாகச் சொல்லப்படுபவையுமான இந்தச் சொலவடைகளைக் என்னிடமிருந்து கேட்பீராக. மன்னர்களின் அவைகளில் இதே காரியங்கள் முன்பு பிராமணர்களாலும் முறையாக உரைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மூடரே, அந்தச் சொலவடைகளைக் கவனமாகக் கேட்டு நீர் மன்னிக்கலாம், அல்லது மீண்டும் {என்னோடு} இணையலாம். {பேசாமலிருக்கவும், அல்லது மறுமொழிகூறவும்}.(20,21)

மத்ரகன் {மத்ர நாட்டவன்} என்பவன் எப்போதும் நண்பர்களை வெறுப்பவனே. எவன் நம்மை வெறுப்பானோ அவனே மத்ரகன். பேச்சில் கீழ்த்தரமானவனும், மனித இனத்தில் இழிந்தவனுமான மத்ரகனிடம் நட்பென்பதே கிடையாது.(22) மத்ரகன் எப்போதும் தீய ஆன்மா கொண்டவனாகவும், எப்போதும் பொய்மை நிறைந்தவனாகவும், கோணல்புத்தி கொண்டவனாகவுமே இருக்கிறான். மரணக் கணம் வரையிலும் கூட மத்ரகர்கள் தீயவர்களாகவே இருப்பார்கள் என்று நாம் கேள்வி படுகிறோம். (மத்ரகர்களுக்கு மத்தியில்) தந்தை, மகன், தாய், மாமியார், மாமனார், தாய்மாமன், மருமகன், மருமகள், சகோதரன், பேரன், பிற சொந்தங்கள்,(24) தோழர்கள், அவர்களது இல்லங்களுக்கு வரும் அயலார், ஆண் மற்றும் பெண் அடிமைகள் ஆகியோர் {தங்களுக்குள்} ஒன்று கலக்கிறார்கள். மத்ரகர்களின் பெண்கள், தாங்கள் அறிந்த அல்லது அறியாத ஆடவருடன் தங்கள் விருப்பப்படியே கலந்து கொள்கிறார்கள்[3].(25) நீதியற்ற ஒழுக்கத்துடன் கூடிய அவர்கள், வறுத்து, பொடியாக்கப்பட்ட சோளம் மற்றும் மீனை உண்டு, தங்கள் இல்லங்களில் மது குடித்து[4], மாட்டிறைச்சியும் உண்டு சிரித்து, அழுகின்றனர்.(26) ஒத்திசைவில்லாப் பாடல்களைப் பாடும் அவர்கள், வெளிப்படையாகப் பேசியபடியே ஒருவரோடொருவர் காமத்தில் கலக்கிறார்கள். {இவ்வாறு} அனைத்து வகைத் தீச்செயல்களிலும் ஆணவமும், இழிபெயரும் கொண்ட மத்ரகர்களிடம் எவ்வாறு அறமிருக்க முடியும்?(27) ஒரு மத்ரகனுடன் எவனும் நட்பு கொள்ளக்கூடாது, அல்லது அவனிடம் பகைமையையும் தூண்டக்கூடாது. மத்ரகனிடம் நட்பேதும் கிடையாது. மத்ரகன் எப்போதும் மனிதத்தின் கறையே.(28) காந்தாரகர்களிடம் தூய்மையும், வேள்வி செய்பவனாகவும், புரோகிதனாகவும் மன்னனே இருக்கும் வேள்வியில் ஊற்றப்படும் ஆகுதியையும் போல மத்ரகர்களுக்கு மத்தியில் நட்பின் அனைத்து செயல்பாடுகளும் தொலைந்துபோகும்.(29)

அதே போல, தேளால் கடிபட்டு அதன் நஞ்சால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு ஞானியர் மருத்துவம் செய்கையில், இவ்வார்த்தைகள் சொல்லப்படுவதை உண்மையாகவே காணலாம்: “சூத்திரனின் அறவிழாக்களில் {திருவருட்சாதனங்களில்} துணைபுரியும் ஒரு பிராமணன் தரமிழப்பதைப் போலவே, பிராமணர்களை வெறுப்பவன் எப்போதும் தரமிழப்பதைப் போலவே மத்ரகர்களுடன் கூட்டணி ஏற்படுத்தும் மனிதனும் தரமிழிப்பான். மத்ரகனிடம் நட்பேதும் இல்லாததைப் போல, ஓ! தேளே, உன் நஞ்சானது இல்லாமல் போகட்டும். இந்த அதர்வ மந்திரங்களால் நான் சர்வசாந்தி சடங்குகளை முறையாகச் செய்திருக்கிறேன்” {என்று ஞானியர் சொல்வதை நாம் காணலாம்}.(30-32) ஓ! கல்விமானே, இதை அறிந்து கொண்டு உமது நாவை அடக்கும், அல்லது, மேலும் நான் சொல்லப் போகும் சிலவற்றையும் கேளும்.(33)

மதுவினால் போதையுண்டு, தங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு ஆடும் பெண்களும், (குறிப்பிட்ட நபர்கள் எவருடனும்) புணர்ச்சியில் இணையாதவர்களும், இணைந்தவர்களுமான மகளிரும் எந்தக் கட்டுபாடுகளும் இன்றித் தாங்கள் விரும்பியதைச் செய்கிறார்கள் எனும்போது,(34) ஓ! மத்ரகரே {சல்லியரே}, நான் கேட்கிறேன், அம்மகளிரில் ஒருத்தியின் குழந்தையான நீர், மனிதர்களின் கடமைகளை அறிவிக்கத் தகுந்தவராக எவ்வாறு ஆக முடியும்? ஒட்டகங்கள், கழுதைகள் ஆகியவற்றைப் போல இயற்கையின் அழைப்புக்குப் பதில் சொல்லி வாழ்பவர்களும், பாவம் நிறைந்தவர்களும், நாணமற்றவர்களுமான அம்மகளிரில் ஒருத்தியின் பிள்ளையான நீர், மனிதர்களின் கடமைகளை அறிவிக்க எவ்வாறு விரும்பலாம்?(35,36) ஒரு மத்ரகப் பெண்மணி, சிறு அளவு காடிக்காக {ஒரு வகை மதுவுக்காக} வேண்டப்படும்போது, அதைக் கொடுக்கும் விருப்பமில்லாத அவள், தன் இடைகளைச் சொறிந்தபடி, இந்தக் கொடும் மொழிகளைச் சொல்கிறாள்;(37) “எனக்கு அன்பான காடியை என்னிடம் எந்த மனிதனும் கேட்காதிருக்கட்டும். அவனுக்கு நான் என் மகனைக் கொடுப்பேன், என் கணவனையும் அவனுக்குக் கொடுப்பேன், ஆனால் காடியை ஒருபோதும் கொடுக்க மாட்டேன்” {என்று சொல்வாள்}[5].(38)

இளம் மத்ரகக் கன்னியர்களை மிக நாணமற்றவர்களாகவும், மயிர் நிறைந்தவர்களாகவும், பெருந்தீனிக்காரர்களாகவும், தூய்மையற்றவர்களாகவுமே நாம் கேள்விப்படுகிறோம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவர்களது செயல்பாடுகளையும், இன்னும் இதே போன்ற வேறு காரியங்களையும் அவர்களைக் குறித்து என்னாலும், பிறராலும் உறுதியாகச் சொல்ல முடிகிறது.(39,40) உண்மையில், பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவர்களும், நடைமுறையில் மிலேச்சர்களாக இருப்பவர்களும், கடமைகள் அனைத்தையும் முற்றாக அலட்சியம் செய்பவர்களுமான மத்ரகர்களாலும், சிந்து சௌவீரர்களாலும் கடமை குறித்த எதையும் எவ்வாறு அறிய முடியும்?(41) போரில் கொல்லப்பட்டு, நல்லோரால் புகழப்பட்டுப் பூமியில் கிடப்பதே க்ஷத்திரியர்களின் உயர்ந்த கடமையென நாம் கேள்விப்படுகிறோம்.(42) மரணத்தால் சொர்க்கத்தை அடைய விரும்பும் நான் இந்த ஆயுத மோதலில் (என் உயிரை இழந்து) கிடக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன்.(43)

திருதராஷ்டிரரின் புத்திசாலி மகனுக்கு நான் உயிர் நண்பனாகவும் இருக்கிறேன். அவனுக்காகவே என் உயிர்மூச்சையும், என்னிடமுள்ள எந்தச் செல்வத்தையும் நான் கொண்டிருக்கிறேன்.(44) உம்மைப் பொறுத்தவரை, ஓ! பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவரே {சல்லியரே}, ஓர் எதிரியைப் போல எங்களிடம் நீர் அனைத்திலும் நடந்து கொள்வதால், பாண்டவர்களால் நீர் களங்கப்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.(45) நாத்திகர்களால் தவறாக வழிநடத்தப்பட இயலாத நீதிமிக்க மனிதனைப் போல, நானும் உம்மைப் போன்ற நூறு பேராலும் இந்தப் போரில் இருந்து அகற்ற இயலாதவனாகவே இருக்கிறேன்.(46) வியர்வையில் நனைந்திருக்கும் ஒரு மானைப் போல, அழுவதற்கோ, தாகம் கொள்வதற்கோ {வறட்சி அடைவதற்கோ} உமக்குச் சுதந்திரமுண்டு. ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நோற்பவனான நான், உம்மால் அச்சுறுத்தப்படத் தகுந்தவனாக இல்லை.(47) போரில் தங்கள் உயிரை விட்டவர்களும், பின்வாங்காத வீரர்களும் மனிதர்களில் சிங்கங்களுமாக இருந்தோரின் முடிவைக் குறித்துக் கடந்த காலங்களில் என் ஆசான் ராமரால் {பரசுராமரால்} எனக்கு அறிவிக்கப்பட்டவற்றை என் மனதில் நான் நினைத்துப் பார்க்கிறேன். கௌரவர்களைக் காக்கவும், எங்கள் எதிரிகளைக் கொல்லவும் தயாராக இருக்கும் என்னை, புரூரவனின் சிறந்த நடத்தையைக் கைகொள்ளத் தீர்மானித்திருப்பவனாக நீர் அறிந்து கொள்வீராக.(49)

ஓ! மத்ரகர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, இக்காரியத்தில் இருந்து என்னை அகற்றக் கூடிய மனிதன் எவனும் மூவுலகிலும் இருப்பதை நான் காணவில்லை.(50) இவை யாவையும் அறிந்து பேசுவதை நிறுத்துவீராக. ஏன் அச்சத்தால் இவ்வாறு கரைகிறீர்? ஓ! மத்ரகர்களில் இழிந்தவரே, நான் இப்போது உம்மைக் கொன்று, உமது உடலை ஊனுண்ணும் உயிரினங்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்க மாட்டேன்.(51) ஓ! சல்லியரே, நட்பைக் கருதுவதாலும், திருதராஷ்டிரர் மகனுக்காகவும் {துரியோதனனுக்காகவும்}, பழியைத் தவிர்ப்பதற்காகவும் என இம்மூன்று காரணங்களாலேயே நீர் இன்னும் உயிரோடு இருக்கிறீர்.(52) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, இத்தகு வார்த்தைகளை நீர் மீண்டும் பேசினால், வஜ்ரத்தைப் போன்ற கடினமான என் கதாயுதத்தினால் உமது தலையை நொறுக்கிவிடுவேன்.(53) ஓ! பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவரே, இரு கிருஷ்ணர்கள் கர்ணனைக் கொல்வதையோ, கர்ணன் இரு கிருஷ்ணர்களையும் கொல்வதையோ மக்கள் இன்று பார்ப்பார்கள், அல்லது கேட்பார்கள்” என்றான் {கர்ணன்}.(54) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் மத்ரர்களின் மன்னனிடம் {சல்லியனிடம்}, “செல்லும், செல்வீராக” என்று அச்சமில்லாமல் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(55)

செங்கண் காக்கையும், அன்னமும்! – கர்ண பர்வம் பகுதி – 41-காக்கை மற்றும் அன்னத்தைக் குறித்த கதையொன்றைக் கர்ணனுக்குச் சொன்ன சல்லியன்; அந்த உவமைக் கதையில் வரும் காக்கையைப் போன்றவனே கர்ணன் என்று அவனை நிந்தித்த சல்லியன்; கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் பாதுகாப்பை நாடுமாறு கர்ணனுக்கு அறிவுரை கூறிய சல்லியன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் மகிழ்ச்சி கொள்பவனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} இவ்வார்த்தைகளைக் கேட்ட சல்லியன் மீண்டும் கர்ணனிடம் ஓர் உதாரணத்தைச் சொல்லிப் பேசினான்.(1) {அவன்}, “பெரும் வேள்விகளைச் செய்தவர்களும், போரில் ஒருபோதும் பின்வாங்காதவர்களும், புனித நீராடலுடன் மணிமுடி தரித்த மன்னர்களும் உதித்த குலத்தில் பிறந்தவன் நான். மேலும் நானும் அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புள்ளவனே.(2) ஓ! விருஷா {கர்ணா}, மதுவின் போதையிலிருப்பவனைப் போலவே நீ தெரிகிறாய். போதையிலிருக்கும் உன்னையும், உனது தவறையும் நட்பின் காரணமாகவே நான் சீராக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.(3) ஓ! கர்ணா, ஒரு காகத்தைக் குறித்து நான் சொல்லப்போகும் உவமையைக் கேட்பாயாக. அதைக் கேட்டதும், ஓ! மதியற்றவனே, உன் குலத்தில் இழிந்தவனே, நீ தேர்ந்தெடுப்பதையே செய்வாயாக.(4)

ஓ! கர்ணா, அப்பாவியான என்னை நீ கொல்ல விரும்பும் அளவுக்கு, என்னிடம் ஒரு சிறு தவறையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.(5) நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் அறிந்திருப்பதாலும், குறிப்பாக நான் உனது தேரின் சாரதியாக இருப்பதாலும், மன்னன் துரியோதனனின் நன்மையை நான் விரும்புவதாலும், உனக்கு எது நன்மை, எது தீமை என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும்.(6) இந்தத் தேருக்கு மிக நெருக்கமான தொடர்பில் இருப்பவனும், இதன் சாரதியாக இருப்பவனுமான நான், சமமான தரை எது? சமமற்றது எது? (என் வாகனத்தில் உள்ள) போர்வீரனின் பலம், அல்லது பலவீனம், அனைத்து நேரங்களிலும் (நான் செலுத்தும்) குதிரைகள் மற்றும் போர்வீரனின் களைப்பு மற்றும் மயக்கம்,(7) இருப்பிலுள்ள ஆயுதங்களின் அறிவு, விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலிகள், குதிரைகளுக்குக் கனமானவை எவை? மிகக் கனமானவை எவை? கணைகளைப் பிடுங்குதல், காயங்களை ஆற்றுதல்,(8) ஆயுதங்களுக்கு எதிர்வினையாற்றும் ஆயுதங்கள் எவை? பல்வேறு போர்முறைகள், அனைத்து வகைகளிலான சகுனங்கள் மற்றும் குறியீடுகள் என்பன போன்றவற்றைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஓ! கர்ணா, இதற்காகவே, இந்த உதாரணத்தை நான் மீண்டும் உனக்கு உரைக்கிறேன்.(9)

பெருங்கடலின் மறுபக்கத்தில், அபரிமிதமான செல்வமும், சோளமும் {தானியமும்} கொண்டிருந்த வைசியன் ஒருவன் இருந்தான். அவன் வேள்விகளைச் செய்பவனாகவும், தாராளமான கொடைகளை அளிப்பவனாகவும், அமைதி நிறைந்தவனாகவும், தன் வகைக்கான {வைசிய} கடமைகளில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருந்தான், பழக்கவழக்கங்களாலும், மனத்தாலும் தூய்மையானவனாகவும் இருந்தான்.(10) அவன் தன் அன்புக்குரிய மகன்களாகப் பலரைக் கொண்டிருந்தான், உயிர்கள் அனைத்திடமும் அன்புடனும் இருந்தான். அறத்தால் வழிநடத்தப்பட்ட ஒரு மன்னனின் ஆட்சிப்பகுதிளுக்குள் அவன் அச்சமில்லாமல் வாழ்ந்து வந்தான்.(11) நன்னடத்தைக் கொண்டவர்களான அந்த வைசியனின் இளம் மகன்களின் உணவில் எஞ்சியவற்றைக் கொண்டு {எச்சிலுணவை உண்டு} வாழ்ந்து வந்த காகம் ஒன்று அங்கே இருந்தது.(12) அந்த வைசியக் குழந்தைகள் இறைச்சி, தயிர், பால், பாயாசம், தேன், நெய் ஆகியவற்றை எப்போதும் அந்தக் காக்கைக்குக் கொடுத்து வந்தனர்.(13) அந்த வைசியப் பிள்ளைகளின் உணவில் எஞ்சியவற்றால் இவ்வாறு உணவூட்டப்பட்டு வந்த அந்தக் காக்கையானது ஆணவம் கொண்டு, தனக்கு இணையான அனைத்துப் பறவைகளையும், ஏன் மேன்மையான பறவைகளையும்கூட அலட்சியம் செய்து {அவமதித்து} வந்தது.(14)

ஒரு சமயத்தில், உற்சாகமான இதயங்களையும், பெரும் வேகத்தையும் கொண்டவையும், எண்ணிய இடம் எங்கும் செல்ல வல்லவையும், செல்லும் தொலைவிலும், பறக்கும் வேகத்திலும் கருடனுக்கு இணையானவையுமான குறிப்பிட்ட சில அன்னங்கள் {ஹம்சங்கள்} பெருங்கடலின் அந்தப் பக்கத்திற்குத் தற்செயலாக வந்தன.(15) அந்த அன்னங்களைக் கண்ட வைசியச் சிறுவர்கள், அந்தக் காக்கையிடம், “ஓ! வானுலாவியே {காக்கையே}, சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் நீயே மேன்மையானவன்” என்றனர்.(16) அற்ப அறிவு கொண்டவர்களான அந்தப் பிள்ளைகளால் வஞ்சிக்கப்பட்ட அந்த முட்டையிடும் உயிரினம் {காக்கை}, மடமையினாலும், செருக்காலும் அந்த வார்த்தைகளை உண்மையென்றே கருதியது.(17) அந்தப் பிள்ளைகளின் உணவில் எஞ்சியதை உண்டு செருக்கடைந்திருந்த அந்தக் காகம், பெரும் தொலைவுகளைக் கடக்க வல்ல அந்த அன்னங்களுக்கு மத்தியில் பறந்து சென்று, அவற்றின் தலைவன் யார் என்பதை விசாரிக்க விரும்பியது.(18) இறுதியாக அந்த மடக் காக்கையானது, களைப்பில்லா சிறகுகளைக் கொண்ட அந்தப் பறவைகள், எதனைத் தங்களில் தலைவனாகக் கருதினவோ, அதனிடம், “பறப்பதில் நாம் ஒரு போட்டி வைத்துக் கொள்வோமா?” என்று அறைகூவியழைத்தது.(19)

அங்கே கூடியிருந்தவையும், பெரும் பலம் கொண்ட முதன்மையான பறவைகளுமான அந்த அன்னங்கள், கரையும் காக்கையின் அந்த வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்கத் தொடங்கின.(20) அப்போது, விரும்பிய எங்கும் செல்லவல்ல அந்த அன்னங்கள், அந்தக் காக்கையிடம்,(21) “அன்னங்களாகிய நாங்கள், மானஸத் தடாகத்தில் எங்கள் வசிப்பிடத்தைக் கொண்டவர்களாவோம்.  உலகம் முழுவதையும் நங்கள் கடந்து வருகிறோம். நாங்கள் சிறகுபடைத்த உயிரினங்களுக்கு மத்தியில் கடக்கும் தொலைவுகளுக்காகவே நாங்கள் மெச்சப்படுகிறோம்.(22) ஓ! மூடா, ஒரு காகமாக இருந்து கொண்டு, நினைத்த எங்கும் செல்லவல்லவனும், பெரும் வலிமை கொண்டவனும், பறக்கையில் பெரும் தொலைவுகளைக் கடப்பவனுமான ஓர் அன்னத்தை நீ அறைகூவியழைப்பது எவ்வாறு? சொல், ஓ! காகமே, நீ எவ்வாறு எங்களோடு பறப்பாய்?” என்று கேட்டது.(23)

தற்பெருமை நிறைந்த அந்தக் காகம், தன் இனத்துடைய மடமையின் விளைவால், மீண்டும், மீண்டும் அவ்வன்னத்தின் வார்த்தைகளில்  குறை கண்டுபிடித்து, இந்தப் பதிலை அளித்தது.(24) அந்தக் காகம், “வெவ்வேறு வகையான நூற்றொரு அசைவுகளை {இயக்கங்களை [அ] கதிகளை} வெளிப்படுத்தியபடியே நான் பறப்பேன் என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது. ஒவ்வொரு நூறு யோஜனைகளையும், வெவ்வேறு அழகிய அசைவுகளைச் செய்தபடியே, அந்த அசைவுகள் அனைத்தையும் நான் வெளிப்படுத்துவேன்.(25) உயர எழுவது, கீழ்நோக்கிப் பாய்வது, சுற்றிச் சுழல்வது, நேரே செல்வது, மெதுவாகச் செல்வது, உறுதியாக முன்னேறுவது, சாய்ந்த கோணத்தில் மேலும், கீழுமான பல்வேறு அசைவுகளைச் செய்வது,(26) அசையாமல் மிதப்பது, கணைபோல் முன்னோக்கிப் பாய்வது, கடும் வேகத்துடன் மேல்நோக்கி உயர்வது, மீண்டும் மெது்வாக முன்னேறுவது, பிறகு மிக மூர்க்கமாக முன்னேறுவது,(27) மீண்டும் கீழ்நோக்கிப் பாய்வது, சுற்றிச் சுழல்வது, உறுதியாக முன்னேறுவது, அதிர்வுடன் மேலே மேலே எழுவது, நேராக உயர்வது, மீண்டும் கீழே பாய்வது,(28), வட்டமாகச் சுழல்வது, செருக்குடன் விரைவது, என அசைவுகளின் பல்வேறு வகைகளான இவற்றை நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெளிப்படுத்துவேன். அப்போது நீங்கள் என் பலத்தைக் காண்பீர்கள்.[1](29) பல்வேறு அசைவுகளின் வகைகளான இவற்றில் எதைக் கண்டு நான் வானத்தில் உயர வேண்டும். அன்னங்களே, இந்த அசைவுகளில் எதைக் கொண்டு நான் வெளியினூடாகப் பறக்க வேண்டும்?(30) உங்களுக்கு அசைவு வகையைத் தீர்மானித்த பிறகு, நீங்கள் என்னோடு பறக்கலாம். அந்த வெவ்வேறு அசைவுகளையும் பின்பற்றியே ஆதாரமற்ற வெளியில் என்னோடு நீங்கள் பறக்க வேண்டும்” என்றது {காக்கை}.(31)

காகம் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், அன்னங்களில் ஒன்று அதனுடன் {அந்தக் காக்கையுடன்} பேசியது. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அந்த அன்னம் சொன்ன வார்த்தைகளைக் கேட்பாயாக. அந்த அன்னம், “ஓ! காகமே, நூற்றொரு வகையான அசைவுகளுடன் நீ பறப்பாய் என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது. எனினும், (பிற) பறவைகள் அறிந்த ஒரே வகை அசைவுடனே நான் பறப்பேன். ஓ! காகமே, நான் வேறு எதையும் அறியமாட்டேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ! செங்கண்களைக் கொண்டவனே, நீ விரும்பும் எவ்வகை அசைவுடனும் பறப்பாயாக” என்று சொன்னது {அந்த அன்னப்பறவை}.(32-35) அங்கே கூடியிருந்த காகங்கள், இவ்வார்த்தைகளைக் கேட்டு உரக்கச் சிரித்து, “பறப்பதில் ஒரே வகையை மட்டுமே அறிந்த அன்னமானது, நூறு வெவ்வேறு வகைகளில் பறப்பதைவிட  சிறப்படையப் போவதெவ்வாறு?”[2] என்றன.(36)

பிறகு அன்னம் மற்றும் காகம் ஆகிய இரண்டும் ஒன்றையொன்று அறைகூவியழைத்தபடியே வானத்தில் எழுந்தன. காகமானது வெவ்வேறு வகையான நூறு அசைவுகளுடன் பறந்த அதே வேளையில், விரும்பிய எங்கும் செல்லவல்ல அன்னமானது ஒரே வகை அசைவிலேயே பறந்தது.(37) அன்னம் பறந்து சென்றது, காக்கையும் (தனது திறனை) ஒவ்வொருவரும் வியக்கும் வண்ணமும், தன் சாதனைகளை ஒவ்வொருவரும் உயர்வாகப் பேசும் வண்ணமும் பறந்து சென்றது.(38) பெரும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த காகங்கள், அடுத்தடுத்த நேரங்களில் பல்வேறு வகைப் பறக்கும் அசைவுகளைக் கண்டு, மேலும் உரக்கக் கரைந்தன.(39) அன்னங்களும், (அந்தக் காகங்கள்) ஏற்றுக்கொள்ளாத பல கருத்துகளைச் சொல்லிக் கேலியுடன் சிரித்தன. பிறகு அவை இங்கேயும் அங்கேயும் மீண்டும் மீண்டும் உயரப் பறக்கத் தொடங்கின.(40) அவை மர உச்சிகளில் இருந்து கீழே பாயவும், பூமியின் பரப்பில் இருந்து உயர எழும்பவும் தொடங்கின. பிறகு அவை தங்கள் வெற்றியைக் குறிக்கும் வகையில் பல்வேறு கூச்சல்களைச் செய்தன.(41) எனினும், அந்த அன்னமானது, (தான் பழக்கப்பட்ட) ஒரே வகையிலான மெதுவான அசைவையே செய்து வானத்தைக் கடக்கத் தொடங்கியது. எனவே, ஓ! ஐயா {கர்ணா}, ஒரு சிறு {முகூர்த்த} காலம் வரை, காகத்தைவிட அந்த அன்னம் பின்தங்கியதாகத் தெரிந்தது.(42)

இதனால் காகங்கள், அன்னங்களை அவமதிக்கும் வகையில், இந்த வார்த்தைகளைச் சொல்லின: “பறந்து சென்றவனும், உங்களில் ஒருவனுமான அந்த அன்னம், பின்தங்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது” {என்றன காகங்கள்}.(43) (பறந்து கொண்டிருந்த) அன்னமானது, இவ்வார்த்தைகளைக் கேட்டதும், மேற்குநோக்கி, மகரங்களின் வசிப்பிடமான பெருங்கடலுக்குப் பெரும் வேகத்துடன்  பறந்து சென்றது.(44) அப்போது, களைக்கும்போது அமர்வதற்கு தீவுகள் அல்லது மரங்கள் எதையும் காணாமல் கிட்டத்தட்ட உணர்வையிழந்திருந்த அந்தக் காகத்தின் இதயத்திற்குள் அச்சம் நுழைந்தது. அந்தக் காகமானது, களைப்படைந்த போது, பரந்திருக்கும் அந்த நீரின் மீது எங்கே இறங்குவது எனத் தன் இதயத்துக்கள் எண்ணியது.(45) எண்ணற்ற உயிரினங்களின் வசிப்பிடமாக இருக்கும் பெருங்கடலானது கடக்கமுடியாததாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான ராட்சசர்கள் வசிக்கும் அது, {பல உயிரினங்கள் வசிப்பதால்} வானத்தைவிட மேன்மையானது.(46) ஓ! சூதனின் மகனே {கர்ணா}, ஆழத்தில் அதை விஞ்சுவதற்கு எதுவும் கிடையாது. ஓ! கர்ணா, பெருங்கடலின் நீரானது வெளியைப் போலவே எல்லையற்றிருப்பதாக மனிதர்கள் அறிகிறார்கள். ஓ! கர்ணா, அதன் நீரின் அளவுக்கு ஒரு காகமானது எம்மாத்திரம்?(47)

ஒரு கணத்தில் பெரும் தொலைவைக் கடந்த அன்னமானது, காகத்தைத் திரும்பிப் பார்த்ததும், அதனால் (இயலுமென்றாலும்} அதைப் பின்னால் விட்டு விட்டுச் செல்ல முடியவில்லை.(78) அந்தக் காகத்தைக் கடந்து சென்ற அந்த அன்னமானது, தன் கண்களை அதன் {அந்தக் காகத்தின்} மீது செலுத்தி, “இந்தக் காகமே {நம்மிடம்} வரட்டும்” என்று எண்ணிக் காத்திருந்தது.(49) காகமும், மிகவும் களைத்துப் போய் அன்னத்திடம் வந்தது.(50) விழுந்து, மூழ்கப்போகும் அதைக் கண்டும், நல்லினத்தோரின் நடைமுறைகளை நினைவுகூர்ந்தும் அதைக் காக்க விரும்பிய அன்னமானது, அதனிடம் இவ்வார்த்தைகளைப் பேசியது:(51) “பறத்தல் குறித்துப் பேசியபோது, பல்வேறு வகைகளிலான அசைவுகளைக் குறித்து நீ மீண்டும் மீண்டும் பேசினாயே. அவை எங்களுக்குப் புதிராக இருப்பதால் (இந்த உனது நிலையில்) அவை குறித்து நீ பேசவில்லையோ?(52) ஓ! காகமே, பறப்பதில் இப்போது நீ  பின்பற்றிய அசைவுவகையின் பெயரென்ன? உன் சிறகுகளாலும், அலகாலும் நீ மீண்டும் மீண்டும் நீரைத் தொடுகிறாயே.(53) ஓ! காகமே, அந்தப் பறக்கும் அசைவுகளில் நீ இப்போது எதைப் பின்பற்றுகிறாய்? வா, வா, ஓ! காகமே, வேகமாக வா, நான் உனக்காகவே காத்திருக்கிறேன்” என்றது.(54)

சல்லியன் {கர்ணனிடம்} தொடர்ந்தான், “ஓ! தீய ஆன்மா கொண்டவனே, மிகவும் பீடிக்கப்பட்டதும், தன் சிறகுகளாலும், அலகாலும் நீரைத் தொட்டுக் கொண்டிருந்ததும், அன்னத்தால் இவ்வாறு காணப்பட்டதுமான அந்தக் காகம், அதனிடம் {அன்னத்திடம்} பேசியது.(55) உண்மையில், அந்த நீர்ப்பரப்பின் எல்லையைக் காணாமல், களைத்து விழுந்து, பறக்கும் திறனை இழந்த காகமானது, அவ்வன்னத்திடம், “காகங்களாகிய நாங்கள், கா, கா எனக் கரைந்து கொண்டு அங்குமிங்கும் திரிந்து கொண்டிருப்போம். ஓ! அன்னமே, என் உயிர் மூச்சு உன் கரங்களில் இருக்கிறது, என் பாதுகாப்பை உன்னிடம் நான் நாடுகிறேன். ஓ! என்னைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்வாயாக” என்றது.(57) மிகவும் பீடிக்கப்பட்டுத் தன் சிறகுகளாலும், அலகாலும் பெருங்கடலைத் தொட்டுக் கொண்டிருந்த அந்தக் காகம், மிகவும் களைத்துப் போயத் திடீரெனக் கீழே விழுந்தது.(58) கவலை கொண்ட இதயத்துடன், பெருங்கடலின் நீரில் அது விழுவதைக் கண்ட அன்னமானது, மரணத் தருவாயில் இருந்த அந்தக் காகத்திடம், “ஓ! காகமே, தற்புகழ்ச்சியுடன் நீ  சொன்னதென்ன என்பதை நினைவுகூர்வாயாக. நூற்றொரு வெவ்வேறு வகைகளில் வானத்தில் பறப்பேன் என்பதே உன் வார்த்தைகளாக இருந்தன. எனவே, நூறு வெவ்வேறு வகைகளில் பறப்பவனும், என்னைவிட மேன்மையானவனுமான நீ, ஐயோ, ஏன் களைத்துப் போய்ப் பெருங்கடலில் விழுந்தாய்?” என்றது.(61)

பலவீனமடைந்த அந்தக் காகமானது, மேல்நோக்கி அன்னத்தின் மீது தன் கண்களைச் செலுத்தி, அதை மனநிறைவு கொள்ளச் செய்ய முயற்சிக்கும் வகையில்,(62) “பிறருடைய உணவுகளில் எஞ்சியதை உண்டு, அதனால் செருக்கடைந்த நான், ஓ! அன்னமே, கருடனுக்கு இணையானவனாக என்னைக் கருதிக் கொண்டு, அனைத்துக் காகங்களையும், பிற பறவைகள் பலவற்றையும் அலட்சியம் செய்தேன் {அவமதித்தேன்}.(63) எனினும், இப்போது என் உயிர் மூச்சை உன் கரத்தில் இருக்கிறது, உன் பாதுகாப்பை நான் வேண்டுகிறேன். ஓ!, என்னை ஏதேனும் ஒரு தீவின் கரைக்குக் கொண்டு செல்வாயாக.(64) ஓ! அன்னமே, ஓ! தலைவா, நான் என் நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திரும்ப முடிந்தால், அதன் பிறகு எப்போதும் ஒருவரையும் அலட்சியம் செய்ய {அவமதிக்க} மாட்டேன். ஓ!, இந்தப் பேரிடரில் இருந்து என்னைக் காப்பாயாக” என்று மறுமொழி கூறியது.(65)

இவ்வாறு சொன்னதும், கவலையுடன் அழுது கொண்டிருந்ததும், உணர்வுகளை இழந்ததும், “கா, கா” எனக் கரைந்து கொண்டே,(66) பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்ததும், நீரில் நனைந்திருந்திருந்ததும், காணச் சகியா நிலையில் இருந்ததும், அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்ததுமான அதனிடம் {காகத்திடம்}, மேலும் ஒரு வார்த்தையும் சொல்லாத அந்த அன்னமானது, தன் கால்களால் அதனைப் பற்றி இழுத்து, மெதுவாகத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது.(67) உணர்விழந்த அந்தக் காகத்தைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்ட அன்னமானது, அவ்விரண்டும் ஒருவரையொருவர் அறைகூவியழைத்தபடி எங்கிருந்து பறந்த வந்தனவோ, அதே தீவுக்கு வேகமாகத் திரும்பியது.(68) உலர்ந்த தரையில் அவ்வானுலாவியை {காக்கையைக்}கிடத்தி, அதற்கு ஆறுதலளித்த அவ்வன்னம், மனோ வேகத்துடன் தான் விரும்பிய பகுதிக்குச் சென்றது. பிறரின் உணவுகளில் எஞ்சியவற்றை உண்டு வந்த அந்தக் காகமானது, இவ்வாறே அந்த அன்னத்தால் வெல்லப்பட்டது. பிறகு அந்தக் காகம், தன் வலிமை, சக்தி ஆகியவற்றில் இருந்த செருக்கைத் துறந்து, அமைதியான வாழ்வையே மேற்கொண்டது.(69,70)

உண்மையில், அந்த வைசியப் பிள்ளைகளின் உணவுகளில் எஞ்சியதை உண்டு வளர்ந்த அந்தக் காகமானது, தனக்கு இணையானவர்களையும், மேன்மையானவர்களையும் அலட்சியம் செய்ததை {அவமதித்தைப்} போலவே, ஓ! கர்ணா, திருதராஷ்டிரன் மகன்களுடைய உணவில் எஞ்சியவற்றை {எச்சிலுணவை} உண்டு வளர்ந்த நீ, உனக்கு இணையானவர்கள் மற்றும் மேன்மையானவர்கள் அனைவரையும் அவமதிக்கிறாய்.(71) விராடனின் நகரத்தில், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், பீஷ்மர், மற்றும் பிற கௌரவர்களின் பாதுகாப்பு என்ற ஆதாயம் உனக்கு இருந்தபோதே, பார்த்தனை {அர்ஜுனனை} நீ ஏன் கொல்லவில்லை?(72) சிங்கத்தால் வீழ்த்தப்பட்ட நரிக்கூட்டத்தைப் போல, அப்போது, பெரும் அழிவை ஏற்படுத்தியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனால்  வீழ்த்தப்பட்ட போது, உங்கள் ஆற்றல் எங்கே சென்றது?(73) குரு வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} உன் தம்பி கொல்லப்படுவதைக் கண்டதும், முதலில் தப்பி ஓடியவன் நீயே.(74) துவைதத் தடாகத்தின் வனங்களில் {துவைத வனத்தில்}, ஓ! கர்ணா, கந்தர்வர்களால் நீங்கள் தாக்கப்பட்டபோது, குருக்கள் அனைவரையும் கைவிட்டுவிட்டு முதலில் தப்பி ஓடியவன் நீயே.(75) பேரழிவை ஏற்படுத்தியவர்களான சித்திரசேனன் தலைமையிலான கந்தவர்கள் போரில் வெற்றியடைந்த பிறகு, ஓ! கர்ணா, துரியோதனனையும், அவனது மனைவியையும் மீட்டவன் பார்த்தனே {அர்ஜுனனே}.(76)

முன்பு, ஓ! கர்ணா, ராமரேகூட {பரசுராமரே கூட}, (குரு) சபையில், மன்னர்கள் முன்னிலையில், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கேசவனின் {கிருஷ்ணனின்} ஆற்றலைக் குறித்துப் பேசியிருக்கிறார்.(77) அந்தக் கிருஷ்ணர்கள் இருவரும் கொல்லப்பட முடியாதவர்கள் என்று மன்னர்கள் அனைவரின் முன்னிலையில், துரோணரும், பீஷ்மரும் பேசிய வார்த்தைகளை நீ அடிக்கடி கேட்டாய்.(78) அனைத்து உயிரினங்களை விடவும் மேன்மையானவனாக  பிராமணன் இருப்பதைப் போல, உன்னைவிட மேன்மையானவனாக அர்ஜுனன் இருப்பவற்றில் சிலவற்றையே உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(79) வசுதேவரின் மகனும் {வாசுதேவ கிருஷ்ணனும்}, குந்தி மற்றும் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} முதன்மையான தேரில் இருப்பதை நீ விரைவில் காண்பாய்.(80)

(அந்தக் கதையில்) காகமானது, நுண்ணறிவுடன் செயல்பட்டு, அன்னத்தின் பாதுகாப்பை நாடியதைப் போல, நீயும் விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரின் பாதுகாப்பை நாடுவாயாக.(81) பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் காணும்போது, ஓ! கர்ணா, இவ்வாறான பேச்சுகளை நீ பேசமாட்டாய்.(82) பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் உன் செருக்கைத் தணிக்கும்போது, உனக்கும் தனஞ்சயனுக்குமான {அர்ஜுனனுக்குமான} வேறுபாட்டை நீ காண்பாய்.(83) மனிதர்களில் சிறந்தவர்களான அவ்விருவரும், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களின் மத்தியிலும் கொண்டாடப்படுபவர்கள் ஆவர். விட்டில் பூச்சியைப் போன்றவனான நீ, மடமையினால் பிரகாசமிக்க அந்த ஒளிக்கோள்கள் இரண்டையும் அலட்சியமாக நினைக்காதே.(84) சூரியனையும், சந்திரனையும் போன்ற கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் தங்கள் பிரகாசத்திற்காகவே {புகழுக்காகவே} {அவ்வாறு} கொண்டாடப்படுகிறார்கள். எனினும், நீ மனிதர்களில் விட்டிற்பூச்சியைப் போன்றவனே.(85) ஓ! கல்விமானே, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, அச்யுதனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் அலட்சியமாக எண்ணாதே. உயர் ஆன்மா கொண்ட அவ்விருவரும் மனிதர்களில் சிங்கங்களாவர். இவ்வாறான தற்புகழ்ச்சிகளில் ஈடுபடாதே” {என்றான் சல்லியன்}.(86)

கர்ணன் பெற்ற சாபங்கள்! – கர்ண பர்வம் பகுதி – 42-பரசுராமரிடம் தான் பெற்ற சாபத்தைச் சொன்ன கர்ணன்; பரசுராமர் கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தது; புழுவாக வந்து கர்ணனின் தொடையைத் துளைத்த இந்திரன்; நடந்ததை அறிந்த பரசுராமர்; உண்மையைச் சொன்ன கர்ணன்; பரசுராமரின் சாபம்; நண்பன் மற்றும் எதிரிக்கிடையிலான வேறுபாட்டைச் சல்லியனுக்குச் சொன்ன கர்ணன் அவனை நிந்திப்பது; யாரிடமும் அஞ்சாத தான், ஒரு பிராமணரின் சாபத்திற்கு அஞ்சுவதாகச் சொன்ன கர்ணன்; ஹோமப்பசுவின் கன்றைக் கொன்ற கர்ணன்; பிராமணரின் சாபம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதிரதனின் உயர் ஆன்ம மகன் {கர்ணன்}, நம்பிக்கையே இல்லாமல் மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} இவ்வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அந்தச் சல்லியனிடம், “வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனைக் குறித்தது நான் நன்கு அறிந்ததே.(1) தேர்களைச் செலுத்துவதில் சௌரியின் {கிருஷ்ணனின்} திறன், பாண்டுவின் மகனான அர்ஜுனனுடைய உயர்ந்த ஆயுதங்களின் வல்லமை ஆகியவை இந்நேரத்தில் நான் நன்கறிந்தவையே. எனினும், ஓ! சல்லியரே, அக்காரியங்களின் விழிச் சான்று உம்மிடம் இல்லை {அவற்றை நீர் கண்டதில்லை}.(2) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரிடமும் நான் அச்சமின்றிப் போரிடுவேன். எனினும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான ராமரின் {பரசுராமரின்} சாபம், இன்று என்னைப் பெரிதும் துன்புறுத்துகிறது.(3) முன்பொரு சமயம், ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து தெய்வீக ஆயுதங்களைப் பெற விரும்பி ஒரு பிராமணனின் வேடத்தில் அவருடன் நான் வசித்து வந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில், ஓ! சல்லியரே, தேவர்களின் தலைவன் {இந்திரன்}, ஒரு புழுவின் கடும் வடிவத்தை ஏற்று என் தொடையை அணுகி அதைத் துளைத்து ஒரு தடையை உண்டாக்கினான்.(4) என் ஆசான் {பரசுராமர்}, எனது தொடையில் தலையை வைத்து உறங்கிக் கொண்டிருக்கையில், அதை {என் தொடையை} அணுகி அதைத் துளைக்கத் தொடங்கினான். என் தொடை துளைக்கப்பட்டதன் விளைவால், என் உடலில் இருந்து அடர்த்தியான குருதி வெள்ளம் பாய்ந்தது.(5)என் ஆசானிடம் (அவரது உறக்கத்தினைக் கலைப்பதில்) கொண்ட அச்சத்தினால் நான் என் அங்கத்தை அசைக்காமல் இருந்தேன். எனினும் அந்தப் பிராமணர் விழித்துக் கொண்டதும் அங்கு நடந்ததைக் கண்டார். என் பொறுமையைக் கண்ட அவர் {பரசுராமர்}, என்னிடம் “நீ பிராமணனே அல்ல. நீ யார் என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றார்.(6) ஓ! சல்லியரே, நான் ஒரு சூதன் என்பதைச் சொல்லி அவரிடம் உண்மையைக் கூறினேன். என் வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும் தவசி, சினத்தால் இதயம் நிறைந்து, “ஓ! சூதா, வஞ்சகத்தின் விளைவால் நீ இவ்வாயுதத்தை அடைந்ததால், உன் மரணத்திற்கான காலம் வரும்போது, தேவையேற்படும் சமயத்தில் இஃது உன் நினைவில் தோன்றாது. பிராமணனாக இல்லாத ஒருவனிடம் நிச்சயம் பிரம்மன் வசிக்கமாட்டான்” என்று சபித்தார்[1].(8) கடுமையானதும், பயங்கரமானதுமான இந்தப் போரில் அந்தப் பெரும் ஆயுதத்தை {பிரம்மாயுதத்தைக்} நான் மறந்துவிட்டேன் [2].(9) ஓ! சல்லியரே, பாரதர்களுக்கு மத்தியில் சாதித்தவனும், பெருந்திறனுடன் தாக்குபவனும், அண்ட அழிவை ஏற்படுத்துபவனும், வலிமையாக நொறுக்குபவனுமான அந்த மிகப் பயங்கரமானவன் (அர்ஜுனன்), க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலரை எரித்துவிடுவான் என்றே நான் நினைக்கிறேன்.(10)எனினும், ஓ! சல்லியரே, கடும் வில்லாளியும், போர்வீரர்களில் முதன்மையானவனும், சுறுசுறுப்புடைய வீரனும், தாங்கிக் கொள்ள முடியாத சக்தியைக் கொண்டவனும், பயங்கரமானவனும், உறுதிமொழிகளைச் சாதித்த போர்வீரனும், பாண்டுவின் மகனுமான அந்தத் தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போரில் நான் கொல்வேன் என்பதை அறிவீராக.(11) எதிரிகளைப் பெருமளவில் அழிக்கவல்ல அந்த ஆயுதத்தை {பிரம்மாயுதத்தை} இன்று நான் என் காட்டுப்பாட்டில் (கட்டுப்பாட்டிலாவது) வைத்திருக்கிறேன்[3]. எதிரிகளை எரிப்பவனும், ஆயுதங்களில் சாதித்த வலிமைமிக்கப் போர்வீரனும், அளவிலா சக்தி கொண்ட கடும் வில்லாளியும், கொடுரமான, பயங்கரமான வீரனும், எதிரிகளைத் தடுப்பவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போரில் நான் கொல்வேன்.(12) நீர்நிலைகள் அனைத்தின் தலைவனும், அளக்கமுடியாதவனுமான பெருங்கடலானவன் {சமுத்திரராஜன்}, எண்ணிலா உயிரினங்களை மூழ்கடிப்பதற்குக் கடும் மூர்க்கத்துடன் விரைகிறான். எனினும், கரைகள் அவனைப் பிடித்துத் தடுத்து விடுகின்றன.(13) இன்று, இவ்வுலகில், வில்லின் நாணை இழுப்பவர்கள் அனைவரிலும் முதன்மையான குந்தியின் மகன் {அர்ஜுனன்}, நல்ல சிறகுகளைக் கொண்டவையும், வீரர்களுக்கு அழிவை உண்டாக்குபவையும், அனைத்து அங்கங்களையும் ஊடுருவவல்லவையும், அவற்றில் எதுவும் பொய்க்காதவையுமான எண்ணிலா கணைகளை இடையறாமல் தொடுத்துக் கொண்டிருக்கும்போது, அவனோடு {அர்ஜுனனோடு} போரிடும் நான் அவனைத் தடுப்பேன்.(14) வலிமையிலும் வலிமைமிக்கவனும், உயர்ந்த ஆயுதங்களைக் கொண்ட போர்வீரனும், பெருங்கடலைப் போன்ற வீரனும், நெடுந்தொலைவை அடையக்கூடியவையும், கடுமையானவையுமான கணைகளையே அலைகளாகக் கொண்டவனுமான அவன் {அர்ஜுனன்} (பகை) மன்னர்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும்போது, பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, நான் இன்று அவனைத் தடுப்பேன்.(15)

நான் இன்று அவனோடு {அர்ஜுனனோடு} போரிடும்போது, வில் தரிக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் இணையேதும் இல்லாததும், ஒன்றுசேர்ந்திருக்கும் தேவாசுரர்களையே வெல்லவல்லதுமான அந்தக் கடும்போரைக் காண்பீராக.(16)

அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பெருஞ் செருக்குடனே இருக்கிறான். போரிட விரும்பும் அவன், மனித சக்திக்கு அப்பாற்பட்ட தனது வலிமைமிக்க ஆயுதங்களுடன் என்னை அணுகுவான். போரில் என் ஆயுதங்களால் அவனுடைய ஆயுதங்களைக் கலங்கடிக்கும் நான், என் அற்புதக் கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனை} இன்று வீழ்த்துவேன்.(17)

கடுங்கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலத் தன் எதிரிகளை எரித்து, இருளையகற்றுபவனைப் போலவே தழலுடன் சுடர்விடும் நான் மேகத் திரள்களைப் போலவே, என் கணைகளால் தனஞ்சயனை {அர்ஜுனனை} இன்று முற்றாக மறைப்பேன்.(18)

பெரும் சக்தியைக் கொண்டதும், புகை கலந்ததும், உலகம் முழுவதையும் எரிக்கத் தயாராக இருப்பதைப் போலத் தெரிவதுமான தழல்களைக் கொண்ட சுடர்மிக்க நெருப்பை அணைக்கும் மேகங்களைப் போல நான் என் கணை மழையால் போரில் குந்தியின் மகனை அழிப்பேன்.(19) 

கடும் நஞ்சுமிக்கதும், பிடிபட மிகக் கடினமானதும், கூரிய நச்சுப்பற்களைக் கொண்டதும், சுடர்மிக்க நெருப்பைப் போன்றதும், கோபத்தால் எரிவதும், தன் எதிரிகளை எப்போதும் எரிப்பதுமான பயங்கரப் பாம்பான அந்தக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} என் அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அசையாமல் தடுக்கப் போகிறேன்.(20)

வலிமைமிக்கவனும், அனைத்தையும் நொறுக்குபவனும், மூர்க்கமானவனும், தாக்கும் தேவனுமான வாயுவை அசையாமல் தடுக்கும் இமயத்தைப் போல நான் கோபக்காரனும், பழிவாங்குபவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தடுப்பேன்.(21) 

உலகில் வில் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், எதிரிகள் அனைவரையும் சந்திக்கவல்லவனும், தேர்த்தடங்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவனும், போரிடுவதில் வீரனுமான தனஞ்சயனைப் போரில் நான் தடுப்பேன்.(22) 

வில் தரிக்கும் மனிதர்களில் இணையில்லாதவனும், மொத்த உலகத்தையும் வென்றவனுமான அவனுடன் {அர்ஜுனனுடன்} இன்று நான் போரிடுவேன்.(23)

காண்டவம் என்றழைக்கப்படும் நாட்டில் {காட்டில்} தேவர்கள் உட்பட அனைத்தை உயிரினங்களையும் வென்ற சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} என்னைத் தவிரத் தன்னுயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் வேறு எந்த மனிதன்தான் போரிடுவான் {போரிட விரும்புவான்}?(24) அர்ஜுனன் செருக்குடையவன்; அவனது ஆயுதங்களோ ஆழமாகத் தாக்குபவை; அவன் குதிரைகளை நன்கறிந்தவன்; பெரும் படைகளைக் கலங்கடிக்கவல்லவன்; அதிரதனாக அவன் கருதப்படுகிறான். இவ்வாறெல்லாம் இருந்தாலும், நான் இன்று என் கூரிய கணைகளால் அவனது {அர்ஜுனனது} உடலிலிருந்து தலையை அறுத்தெடுக்கப் போகிறேன்.(25)

ஓ! சல்லியரே, எப்போதும் மரணத்தையோ, வெற்றியையோ {மட்டுமே} என் முன்னால் கொள்ளும் நான், இன்று தனஞ்சயனோடு போரிடப்போகிறேன். அந்தகனுக்கு ஒப்பான அந்தப் பாண்டவனுடன் தனித்தேரில் போரிடக்கூடியவன் என்னைத் தவிர வேறு எவனுமில்லை.(26) க்ஷத்திரியர்களுடைய சபைகளின் மத்தியில் பல்குனனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் குறித்து நானே மகிழ்ச்சியாகவே பேசுவேன். எனினும், மூடரும், மூட அறிவு கொண்டவருமான நீர் அர்ஜுனனின் ஆற்றலைக் குறித்து என்னிடம் ஏன் பேசுகிறீர்.(27) ஏற்பில்லா {இனிமையற்ற} செயல்களைச் செய்பவர் நீர். கொடூரராகவும், அற்பராகவும், பொறுமையற்றவருமான {மன்னிக்கும் இயல்பற்றவருமான} நீர், பொறுமை சாலிகளைச் சிறுமைபடுத்துகிறீர். உம்மைப் போன்ற நூறு நபர்களை என்னால் கொல்ல முடியும் என்றாலும், மன்னிக்கும் இயல்பிலான என் மனநிலையின் விளைவால், காலத்தின் உடனடித் தேவையைக் கருத்தில் கொண்டு உம்மை நான் மன்னிக்கிறேன்.(28) பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர் நீர். பாண்டுவின் மகனுக்காக {அர்ஜுனனுக்காக}, ஏற்பில்லாத பலவற்றைச் சொல்லி ஒரு மூடனைப் போல என்னை ஏன் நீர் நிந்திக்கிறீர்? கோணல் மனம் கொண்ட நீர், நேர்மையான இதயம் கொண்ட என்னிடம் இவ்வார்த்தைகள் அனைத்தையும் சொன்னீர். நட்பு என்பது ஏழு எட்டுகள்[4] கொண்டதாகையால் நண்பனான {என்னைப் போன்ற} நண்பர்களுக்குத் தீங்கிழைக்கும் நீர் சபிக்கப்பட்டவராவீர்.(29) இப்போது {நாம்} கடந்து வரும் காலம் பயங்கரமானதாகும். துரியோதனனே நேராகப் போரிட வந்திருக்கிறான். அவனது நோக்கங்கள் நிறைவேற ஆவல் கொண்டவனாக நான் இருக்கிறேன். எனினும், (குரு மன்னனிடம்) எந்த நட்பும் இல்லாதவரைப் போலவே உமது செயல்பாடுகள் உம்மைக் காட்டுகின்றன.(30)

ஒருவனிடம் பற்றைக் காட்டுபவனும் {பாசம் கொண்டவனும்}, அவனை மகிழ்விப்பவனும், அவனைக் கௌரவிப்பவனும், அவனது இன்பங்களில் மகிழ்பவனுமான மற்றொருவனே நண்பன் எனப்படுகிறான். இந்தப் பண்புகள் அனைத்தையும் நான் கொண்டுள்ளேன், இவை யாவற்றையும் மன்னனும் {துரியோதனனும்} அறிவான் என்பதை நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன்.(31) மறுபுறம், நம்மை அழிப்பவனும், தண்டிப்பவனும், தன் ஆயுதங்களைக் கூராக்குபவனும், காயப்படுத்துபவனும், நம்மைப் பெருமூச்சு விடச் செய்பவனும், நம்மை உற்சாகமற்றவர்களாகச் செய்பவனும், பல்வேறு வழிகளில் நமக்குத் தீங்கிழைப்பவனுமான ஒருவன் எதிரி எனப்படுவான். இந்தப் பண்புகள் அனைத்தும் உம்மிடம் காணப்படுகின்றன, மேலும் நீரும் இவை யாவற்றையும் என்னிடம் காண்கின்றீர்[5].(32) துரியோதனனுக்காகவும், உமக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், வெற்றிக்காகவும், எனக்காகவும், கடவுளுக்காகவும், மிகத் தீவிரமாக முயன்று பார்த்தனுடனும் {அர்ஜுனனுடனும்}, வாசுதேவனுடனும் {கிருஷ்ணனுடனும்} நான் போரிடுவேன். என் அருஞ்செயல்களை இன்று காண்பீராக.(33) என் சிறந்த ஆயுதங்களான பிரம்மாயுதத்தையும், பிற தெய்வீக ஆயுதங்களையும், மனித ஆயுதங்களையும் இன்று காண்பீராக. மதங்கொண்ட எதிராளியைக் கொல்லும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போலவே, கடும் ஆற்றலைக் கொண்ட அந்த வீரனை {அர்ஜுனனை} நான் இன்று கொல்வேன்.(34) பிரம்மம் என்றழைக்கப்படும் அளவிலா சக்தி கொண்ட அந்த ஆயுதத்தை, என் வெற்றிக்காக இன்று பார்த்தன் மீது என் மனத்தாலேயே ஏவுவேன். இன்றைய போரில் என் தேர்ச்சக்கரங்கள் பூமிக்குள் புதையவில்லையென்றால், அந்த ஆயுதத்திடம் இருந்து அர்ஜுனனால் தப்ப இயலாது.(35) ஓ! சல்லியரே, தண்டம் தரித்து வரும் யமனிடமோ, சுருக்கு {பாசம்} தரித்து வரும் வருணனிடமோ, கதாயுததாரியாக வரும் குபேரனிடமோ, வஜ்ரதாரியாக வரும் வாசவனிடமோ {இந்திரனிடமோ}, என்னைக் கொல்வதற்காக அணுகும் வேறு எந்த எதிரியிடமோ நான் அச்சங்கொள்வதில்லை என்று நீர் அறிவீராக.(36,37) எனவே, நான் பார்த்தனிடமோ, ஜனார்த்தனனிடமோ {கிருஷ்ணனிடமோ} எந்த அச்சமும் கொள்ளவில்லை. மறுபுறம், அழிவுமிக்க இன்றைய போரில் நான் அந்த இருவருடனும் மோதுவேன்.(38)

ஒரு காலத்தில், விஜயம் என்றழைக்கப்படும் என் வில்லைக் கொண்டு ஆயுதங்களில் பயிற்சி எடுப்பதற்காகத் திரிந்து, ஓ! மன்னா {சல்லியரே}, பயங்கர வடிவங்களிலான கடுங்கணைகளை ஏவிக்கொண்டிருந்த போது, அந்தத் தனிமையான காட்டில் திரிந்து கொண்டிருந்த (ஒரு பிராமணரின்) ஹோமப் பசுவின் கன்றை அக்கணைகளில் ஒன்றால் கவனமில்லாமல் தாக்கி, என் விருப்பமில்லாமலேயே கொன்றுவிட்டேன். அப்போது அந்தப் பிராமணர் என்னிடம், “என் ஹோமப்பசுவின் கன்றை நீ உணர்வில்லாமல் கொன்றுவிட்டதால், போரிடுங்காலத்தில் உன் இதயத்திற்குள் அச்சம் நுழையும்போது, (உன் தேரின்) சக்கரம் பூமியில் புதைந்து போகட்டும்” என்று சொன்னார்.(41) பிராமணரின் இந்த வார்த்தைகளிலேயே நான் பெரும் அச்சமடைகிறேன். சந்திர குலத்தவரும், (பிற மக்களின்) இன்ப துன்பங்களுக்குத் தலைவர்களுமான இந்த மன்னர்கள்,(42) அந்தப் பிராமணருக்கு ஓராயிரம் பசுக்களையும், அறுநூறு காளை மாடுகளையும் கொடுக்க முன்வந்தனர். ஓ! சல்லியரே, ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, இத்தகு கொடையாலும் அந்தப் பிராமணர் மனநிறைவு கொள்ளவில்லை.(43) பிறகு நான் அவருக்குப் பெரிய தந்தங்களையுடைய எழுநூறு {700} யானைகளையும், பல்லாயிரக்கணக்கான அடிமைகளையும், அடிமைப்பெண்களையும் தருவதாகச் சொன்னேன். அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் அதிலும் மனம் நிறையவில்லை.(44) அடுத்ததாக, கருப்பு நிறமுள்ளவையும், வெண்ணிற கன்றைக் கொண்டவையுமான பதினான்காயிரம் {14000} பசுக்களைத் திரட்டினாலும், அந்தப் பிராமணர்களில் சிறந்தவரின் அருளை என்னால் அடைய முடியவில்லை.(45) ஆசைக்குகந்த பொருட்கள் அனைத்தாலும் நிறைந்த செழிப்புமிக்க மாளிகை ஒன்றை அவருக்கு உரிய வழிபாடுகளுடன் நான் கொடுக்க விரும்பினாலும், அந்தக் கொடையைப் பெற அவர் மறுத்துவிட்டார்.(46)

குற்றமிழைத்துவிட்டு, விடாப்பிடியாக அவரது மன்னிப்பை இரந்து கேட்டுக் கொண்டிருந்த என்னிடம் அந்தப் பிராமணர், “ஓ! சூதா, நான் சொன்னவை நடந்தே தீரும். அது வேறு வகையாக முடியாது. பொய்மையானது, உயிரினங்களை அழித்துவிடும், பாவமும் எனதாகும். எனவே, அறத்தைப் பேணிக்காப்பதற்காகவே, பொய்மை பேச நான் துணிவதில்லை.(47,48) பிராமணனின் ஆதாரவழிகளை மீண்டும் அழிக்காதே. என் பேச்சைப் பொய்யாக்க இவ்வுலகில் எவனும் கிடையாது. அவ்வார்த்தைகளை ஏற்றுக் கொள்வாயாக. அது (கன்றைக் கொன்ற பாவத்திற்கு) ஓர் ஈடாக {பரிகாரமாக} உனக்கு அமையும்” என்றார்.(49) உம்மால் கடிந்துரைக்கப்பட்டாலும், நட்பின் நிமித்தமாக நான் உமக்கு இவையாவையும் வெளிப்படுத்தினேன். இவ்வாறு கடிந்துரைக்கும் உம்மை நான் அறிவேன். இப்போது அமைதியாக இருந்து, நான் தற்சமயம் சொல்லப்போவதைக் கேட்பீராக” என்றான் {கர்ணன்}.(50)

சல்லியனை எச்சரித்த கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 43-சல்லியனை நிந்தித்த கர்ணன்; சல்லியனைக் கர்ணன் ஏன் கொல்லவில்லை என்பதற்கு அவன் சொன்ன காரணங்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, இவ்வாறு மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} மௌனமடையச் செய்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் இவ்வார்த்தைகளில் அவனிடம் {சல்லியனிடம்} பேசினான்:(1) “ஓ! சல்லியரே, உதாரணம் சொல்லும் {உவமை கதை} வழியில் என்னிடம் நீர் பேசியதற்கு மறுமொழியாக, உமது வார்த்தைகளால் நான் இந்தப் போரில் அச்சுறுத்தப்படப்பட முடியாதவன் என்பதையே உமக்குச் சொல்கிறேன்.(2) வாசவனுடன் {இந்திரனுடன்} கூடிய தேவர்கள் அனைவரும் என்னோடு போரிட்டாலும்கூட, நான் அச்சமேதும் அடைய மாட்டேன் எனும் போது, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோரிடம் நான் அஞ்சுகிறேன் என்பது குறித்து என்ன சொல்வது?(3) வார்த்தைகளால் மட்டுமே அச்சுறுத்தப்பட இயலாதவனாக நான் இருக்கிறேன். ஓ! சல்லியரே, போரில் உம்மால் அச்சுறுத்தப்படத் தகுந்தவன் வேறு எவனோ (நான் அல்ல).(4) நீர் என்னிடம் கசப்பான வார்த்தைகள் பலவற்றைப் பேசியிருக்கிறீர். இழிந்தோரின் பலம் இங்கேயே இருக்கிறது. என் தகுதிகளைப் பேச இயலாத நீர், ஓ தீய இதயம் கொண்டவரே, கசப்பான காரியங்கள் பலவற்றையே பேசுகிறீர்.(5)

ஓ! மத்ரகரே {சல்லியரே}, கர்ணன் போரில் அஞ்சுவதற்காகப் பிறந்தவனல்லன். மறுபுறம், நான் வீரத்தை வெளிப்படுத்துவதற்காகவும், புகழை அடைவதற்காகவும் பிறந்தவனாவேன்.(6) உம்மிடம் நான் கொண்ட நட்பிற்காகவும், என் பற்றுக்காகவும் {பாசத்திற்காகவும்}, கூட்டாளியாக நீர் இருப்பதாலும் என இம்மூன்று காரணங்களாலேயே, ஓ சல்லியரே, நீர் இன்னும் உயிரோடு இருக்கிறீர்.(7) மன்னர் திருதராஷ்டிரருக்காக இப்போது செய்யப்படுவது முக்கியப் பணியாகும். ஓ! சல்லியரே, அப்பணி என்னைச் சார்ந்தே இருக்கிறது. அதன் காரணமாகவே இக்கணம் வரை நீர் வாழ்கிறீர்.(8) உம்மால் சொல்லப்படும் ஏற்பில்லா வார்த்தைகள் என்னால் மன்னிக்கப்படும் என்ற ஒப்பந்தம் என்னால் முன்பு ஏற்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஓ! மத்ரகரே இதன் காரணமாகவே நீர் வாழ்கிறீர்.(9) ஆயிரம் சல்லியர்கள் இல்லாமலும் என்னால் என் எதிரிகளை வெல்லமுடியும்.[1] ஒரு நண்பனுக்குக் காயமேற்படுத்துபவன் பாவம் நிறைந்தவனாவான். இதன் காரணமாகவே இப்போது நீர் வாழ்கிறீர்” என்றான் {கர்ணன்}.(10)

பாஹ்லீக நடைமுறைகளைப் பழித்த கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 44-திருதராஷ்டிரனுடைய அவையில் பல்வேறு நாடுகளைக் குறித்துப் பேசுகையில் பாஹ்லீக நாடு குறித்துப் சொல்லப்பட்டதைச் சல்லியனுக்குச் சொன்ன கர்ணன்; பாஹ்லீகர்களின் நடைமுறை மற்றும் ஒழுக்கங்களைக் குறித்தும், பாஹ்லீக மகளிரின் நடத்தைகள் மற்றும் குடிவெறியைக் குறித்தும் பழித்துப் பேசிய கர்ணன்; இழிகுணங்கள் கொண்ட அந்தப் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் எவனும் வாழலாமா என்று கேட்டது; பிராமணர்கள் மற்றும் ராட்சசப் பெண்மணிகள் பாஹ்லீகர்களைக் குறித்துச் சொன்னதை எடுத்துரைத்துச் சல்லியனைப் பழித்த கர்ணன்…

சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, எதிரி குறித்து நீ சொல்லும் இவை வெறும் பிதற்றல்களே! என்னைப் பொறுத்தவரை, ஆயிரம் கர்ணர்கள் இல்லாமலேயே நான் எதிரியைப் போரில் வெல்லவல்லவனாவேன்” என்றான்.(1)

சஞ்சயன் {கர்ணனனிடம்} தொடர்ந்தான், “கர்ணனிடம் இத்தகு இனிமையற்ற காரியங்களைச் சொன்னவனும், கடும் குணங்களைக் கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} அவன் {கர்ணன்}, இரு மடங்கு கசப்பான வார்த்தைகளால் மீண்டும் பேசினான்.(2)

கர்ணன் {சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, திருதராஷ்டிரரின் முன்னிலையில உரைக்கப்படும்போது என்னால் கேட்கப்பட்ட இவற்றைக் கவனமான ஈடுபாட்டுடன் கேட்பீராக.(3) இனிமை நிறைந்த பல்வேறு நிலப்பகுதிகள், பழங்காலத்தின் மன்னர்கள் பலர் ஆகியவை குறித்துத் திருதராஷ்டிரரின் வசிப்பிடத்தில் பிராமணர்கள் உரை நிகழ்த்துவது வழக்கமாகும்.(4) பிராமணர்களில் முதன்மையானவரும், வயது முதிர்ந்தவருமான ஒருவர், பழங்கால வரலாறுகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, பாஹ்லீகர்கள் மற்றும் மத்ரகர்களைப் பழித்து இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(5)அறமற்றவர்களும், இமயம், கங்கை, சரஸ்வதி, யமுனை, குருக்ஷேத்திரம், சிந்து மற்றும் {அதன்} ஐந்து கிளை ஆறுகளைக்[1] கடந்து வாழ்பவர்களும், தூய்மையற்ற மக்களுமான பாஹ்லீகர்களை ஒருவன் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(6,7) பசுக்களைக் கொல்லும் களமும், போதையுண்டாக்கும் மதுவகைகளைச் சேமிப்பதற்கான இடமும் எப்போதும் (பாஹ்லீக) மன்னர்களுடைய வசிப்பிட நுழைவாயில்களின் அடையாளங்களாக விளங்கியதை நான் என் இளமைக்கால நாட்களில் இருந்து நினைவுகூர்கிறேன்[2].(8) மிகக் கமுக்கமான இயக்கம் {இரகசியமான காரியம்} ஒன்றிற்காக நான் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கிறேன். அப்படி அங்கே தங்கியதன் விளைவாக நான் அந்த மக்களை நன்றாக அறிந்திருக்கிறேன்.(9)சாகலம் என்ற பெயரில் ஒரு நகரமும், ஆபகம் {நிம்நகை} என்ற பெயரில் {கீழ்நோக்கிப் பாயும்} ஓர் ஆறும், ஜார்த்திகர்கள் {சண்டாளர்கள்}[3] என்ற பெயரால் அறியப்படும் பாஹ்லீகர்களின் ஓர் இனக்குழுவும் அங்கே {பாஹ்லீக நாட்டில்} இருக்கின்றன. அம்மக்களின் நடைமுறைகள் மிகவும் கண்டிக்கத்தக்கனவாகும்.(10) வறுத்த வாற்கோதுமையை {பார்லியை} உண்டு, கௌடம் என்றழைக்கப்படும் மதுவை அவர்கள் குடிக்கிறார்கள். பூண்டுடன் {வேறு சில பதிப்புகளில் வெங்காயம் என்றிருக்கிறது} சேர்த்து மாட்டிறைச்சியையும் அவர்கள் உண்கிறார்கள். மேலும் அவர்கள், இறைச்சி கலந்த மாவு உருண்டைகளையும், பிறரிடம் இருந்து பெறப்பட்ட சோற்றையும்[4] உண்கிறார்கள். நல்லொழுக்கங்கள் எவையும் அவர்களிடம் கிடையாது[5].(11) அவர்களது மகளிர், மலர்மாலைகளும், கண்மையும் இல்லாமல், மதுவால் போதையுண்டு, ஆடைகளை இழந்து, சிரித்துக் கொண்டும், நகரங்களிலுள்ள வீடுகளின் சுவர்களுக்கு வெளியே ஆடிக் கொண்டும்,(12) கழுதை கத்துவது போலவும், ஒட்டகம் கதறுவதைப் போலவும் பல்வேறு வகைகளிலான ஆபாசப் பாடல்களைப் பாடிக் கொண்டும் இருப்பார்கள். புணர்ச்சியில் அவர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாதவர்களாகவும், வேறு காரியங்கள் அனைத்திலும் அவர்கள் விருப்பப்படியே செயல்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். குடிவெறியுடன் கூடிய அவர்கள், ஈர்க்கும் அடைமொழிகளால் {காமக்குறிப்பு வார்த்தைகளால்} ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வார்கள்.(13) தங்கள் கணவர்கள் மற்றும் தலைவர்களிடம் குடிபோதையின் வியப்பொலிகள் பலவற்றால் பேசுபவர்களும், பாஹ்லீகர்களில் வீழ்ந்துவிட்ட மகளிருமான அவர்கள், புனிதமான நாட்களிலும் கூட எக்கட்டுப்பாட்டையும் பின்பற்றாமல், ஆடிக் கொண்டே இருப்பார்கள்[6].(14)

தீய பாஹ்லீகர்களில் ஒருவனும், ஆணவம் கொண்ட அந்தப் பெண்களுக்கு மத்தியில் வாழ்ந்தவனும், சில நாட்கள் குருஜாங்கலத்தில் வாழ நேர்ந்தவனுமான ஒருவன், உற்சாகமற்ற இதயத்துடன்,(15) “ஐயோ, பருத்த அங்கங்களைக் கொண்டவளும், மெல்லிய கம்பளிகளை {ஆடைகளை} உடுத்தியவளுமான அந்த (பாஹ்லீகக்) கன்னிகை, கட்டிலுக்கு {படுக்கைக்குப்} போகும் இந்த வேளையில், இப்போது குருஜாங்கலத்தில் நாட்களைக் கடத்தி வரும் அவளது காதலனான என்னை நினைத்திருப்பாளே.(16) சத்லஜ் மற்றும் இனிமை நிறைந்த ஐராவதி ஆகியவற்றை {ஆறுகளைக்} கடந்து, என் சொந்த நாட்டை அடைந்து, தடித்த நுதலெலும்பை {நெற்றியைக்} கொண்டவர்களும், நெற்றியில் சிவந்த அரிதாரத்தாலான சுடர்மிக்க வளையங்களைக் கொண்டவர்களும், கண்களில் கருப்பு மையிலான இழைகளைக் கொண்டவர்களும், தங்கள் அழகிய வடிவங்களின் மேல் கம்பளிகள் மற்றும் தோல்களால் உடுத்தியிருப்பவர்களும், கீச்சுக் குரலால் பேசுபவர்களுமான அந்த அழகு நிறைந்த பெண்கள் மீது எப்போது நான் என் கண்களைச் செலுத்த போகிறேன்?(17,18) கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றின் கதறல்களைப் போலவே, இனிமையான மிருதங்கங்கள், ஆனகங்கள் மற்றும் சங்குகளின் இசைக்கு மத்தியில் போதையிலிருக்கும் அம்மகளிரின் தோழமையில் நான் எப்போது இன்புற்றிருக்கப் போகிறேன்?(19) வன்னி, பீலு மற்றும் மூங்கில் மரங்கள் அடர்ந்த காடுகளின் இனிய பாதைகளில், மோருடன் கூடிய பணியாரங்கள், மாவு உருண்டைகளை உண்ணும் அந்த மகளிருக்கு மத்தியில் நான் எப்போது இருக்கப்போகிறேன்?(20) தங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு, நெடுஞ்சாலைகளில் வரும் வழிப்போகர்களின் மீது பாய்ந்து, அவர்களது மேலங்கிகளையும், உடைகளையும் பறித்துக் கொண்டு, அவர்களை மீண்டும் மீண்டும் தாக்கும் என் சொந்த நாட்டு மக்களுக்கு மத்தியில் நான் எப்போது இருக்கப்போகிறேன்?” என்று வெடித்துச் சொல்கிறான் {பாடுகிறான்}.(21)

இந்த அளவுக்கு வீழ்ந்துவிட்டவர்களும், தீயவர்களும், நடைமுறைகள் தவறியவர்களுமான அந்தப் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் ஒரு கணமாவது விருப்பத்துடன் வசிக்க எந்த மனிதன்தான் இருக்கிறான்?(22) ஓ! சல்லியரே, எவரின் தகுதிகள் {புண்ணியம்} மற்றும் குறைகளில் {பாவங்களில்} ஆறில் ஒரு பங்கை நீர் கொண்டிருக்கிறீரோ, அந்தப் பாஹ்லீகர்களின் இழிவான நடத்தையை இவ்வாறே அந்தப் பிராமணர் விளக்கினார்.(23) இதைச் சொன்ன அந்த நல்ல பிராமணர், தீய பாஹ்லீகர்களைக் குறித்து மீண்டும் சொன்னதை நான் உமக்குத் திரும்பச் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேட்பீராக.(24) பெரியதும், மக்கள் தொகை அதிகம் கொண்டதுமான அந்தச் சாகல நகரத்தில், ஒவ்வொரு தேய்பிறை பதினான்காம் நாளிலும் {சதுர்த்தசியிலும்} ஒரு ராட்சசப் பெண், தனது துந்துபியின் {இசைக்கருவியின்} துணையுடன், “மாட்டிறைச்சியைக் கழுத்துவரை உண்டு, கௌட மதுவை உண்டு, பாஹ்லிகர்கள் குறித்த பாடல்களை நான் இனி எப்போது சாகல நகரத்தில் பாடப்போகிறேன்?(26), ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, பருத்த அங்கங்களைக் கொண்ட அந்தக் கன்னிகைகள் மற்றும் மகளிருடன் சேர்ந்து, பெரும் அளவிலான ஆட்டிறைச்சியையும், பெரும் அளவிலான பன்றி, மாடு, வளர்ப்புப்பறவை {கோழி}, கழுதைகள் மற்றும் ஒட்டங்கங்களின் இறைச்சியையும் நான் எப்போது கழுத்துவரை உண்ணப் போகிறேன்? ஆட்டிறைச்சி உண்ணாதவர்கள் வீணாகவே வாழ்கிறார்கள்” என்று பாடுவாள்.(27,28) ஓ! சல்லியரே, இவ்வாறே இளைஞர்களும், முதிர்ந்தவர்களுமான சாகலவாசிகள், மதுவால் போதையுற்று பாடிக் கதறுகின்றனர். இத்தகு மக்களுக்கு மத்தியில் எவ்வாறு அறமிருக்க முடியும்?(29)

இதையும் நீர் அறியவேண்டும். எனினும், குரு சபையில் மற்றுமொரு பிராமணர் எங்களிடம் சொன்னதை நான் மீண்டும் உமக்குச் சொல்கிறேன்:(30) “பீலு மரங்களைக் கொண்ட காடுகள் எங்கிருக்கின்றனவோ, தங்களில் ஆறாவதாகச் சிந்துவை {சிந்து நதியைக்} கொண்ட சதத்ரு, விபாசை, ஐராவதி, சந்திரபாகை, விதஸ்தை ஆகிய ஐந்து ஆறுகளும் எங்குப் பாய்கின்றனவோ, இமயத்தில் இருந்து அகன்று இருப்பவையான அந்தப் பகுதிகளில் உள்ள நாடுகள் ஆரட்டாகள்[7] என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. அப்பகுதிகள் அறமும், அறநெறிகளும் அற்று இருக்கின்றன. அங்கே எவரும் செல்லக்கூடாது.(31,32) தேவர்களும், பித்ருக்களும், பிராமணர்களும், வீழ்ந்துவிட்டவர்களிடமிருந்தோ, பிற வர்ணப் பெண்களிடம் சூத்ரர்களால் பெறப்பட்டவர்களிடமிருந்தோ, வேள்விகளைச் செய்யாதவர்களும், மிகவும் அறமற்றவர்களுமான பாஹ்லீகர்களிடமிருந்தோ கொடையேதும் பெறுவதில்லை” என்றார். கல்விமானான அந்தப் பிராமணர் அந்தக் குரு சபையில் மேலும்,(33,34) “பாஹ்லீகர்கள், அகன்ற வயிறுகளைக் கொண்ட மரப் பாத்திரங்களிலும், மண் பாத்திரங்களிலும், நாயால் நக்கப்பட்டவையும், அழுகிய வாற்கோதுமை மற்றும் பிற தானியங்களால் கறைபட்டவையுமான பாத்திரங்களிலும் எந்த வெறுப்புணர்வும் இல்லாமல் உண்கிறார்கள்.(35) பாஹ்லீகர்கள், ஆடு, ஒட்டகம் மற்றும் கழுதைகளின் பாலைக் குடித்து, பல்வேறு வகையான அந்தப் பால்களில் உண்டாகும் தயிரையும், பிற உணவுகளையும் உண்கிறார்கள்.(36) அந்தத் தரமிழந்த மக்கள், தங்களில் பல வேசி மகன்களையும் கொண்டுள்ளனர். அவர்கள் உண்ணாத உணவோ, பாலோ எதுவும் கிடையாது. அறியாமையில் மூழ்கியிருக்கும் ஆரட்டா-பாஹ்லீகர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்களாவர்” என்றும் சொன்னார்.(37)ஓ! சல்லியரே இதையும் நீர் அறிய வேண்டும். எனினும், குரு சபையில் என்னிடம் பேசிய மற்றொரு பிராமணர் சொன்னதையும் நான் உமக்குச் சொல்ல வேண்டும். அவர்,(38) “யுகந்தரம் என்றழைக்கப்படும் நகரத்தில் பாலைக் குடித்துவிட்டு, அச்யுதஸ்தலம் என்ற இடத்தில் வசித்து, பூதிலயம் என்ற இடத்தில் நீராடிய ஒருவனால் எவ்வாறு சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்?[8](39) மலைகளில் இருந்து பாய்ந்தவுடன் எங்கே ஐந்து ஆறுகள் இருக்கின்றனவோ, அங்கே ஆரட்டா பாஹ்லீகர்களுக்கு மத்தியில், மதிப்பிற்குரிய எந்த மனிதனும் {எந்த ஆரியனும்} இரு நாட்களுக்குக்கூடத் தங்கக் கூடாது.(40) விபாசை ஆற்றில், பாஹி மற்றும் ஹீகன் என்ற பெயரில் இரு பிசாசங்கள் வசிக்கின்றன. அவை படைப்பாளனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் இல்லை. இவ்வளவு இழிந்த பிறவிகளைக் கொண்ட அவர்களால் {பாஹ்லீகர்களால்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளை எவ்வாறு அறிய முடியும்?(41) காரஷ்கரர்கள், மாஹிஷகர்கள், கலிங்கர்கள், கேரளர்கள், கார்க்கோடகர்கள், வீரகர்கள் மற்றும் அறமற்ற வேறு மக்கள் ஆகியோரை ஒருவன் தவிர்க்க வேண்டும்[9]” என்றார்.(42)இவ்வாறே பெரும் இடையைக் கொண்ட ஒரு ராட்சசப் பெண்மணி, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் புனித நீராடுவதற்காக அந்நாட்டிற்குச் சென்று ஒரு நாளை கடக்க நேர்ந்த அந்தப் பிராமணரிடம் சொன்னாள்.(43) அந்தப் பகுதிகள் ஆரட்டாகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. அங்கே வசிக்கும் மக்கள் பாஹ்லீகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மிகப் புராதனமான காலங்களில் இருந்தே பிராமணர்களில் இழிந்தோர் அங்கே வசித்து வருகின்றனர்.(44) அவர்கள் வேதமற்றவர்களாக, அறிவற்றவர்களாக, வேள்வியற்றவர்களாக, பிறரின் வேள்விகளில் துணை புரியும் சக்தி அற்றவர்களாகவே இருக்கின்றனர். வீழ்ந்துவிட்ட அவர்கள் அனைவரும், அவர்களில் பலரும், பிற மக்களின் பெண்களிடம் சூத்திரர்களால் பெறப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். தேவர்கள் அவர்களிடம் இருந்து எந்தக் கொடைகளையும் பெறுவதில்லை.(45) பிரஸ்தாலர்கள், மத்ரர்கள், காந்தாரர்கள், ஆரட்டாகள், காசர்கள் என்று அழைக்கப்படுவோர், வசாதிகள், சிந்துக்கள், சௌரவீரர்கள் ஆகியோர் அவர்களின் நடைமுறைகளுக்காகக் கிட்டத்தட்ட பழிக்கத்தக்கவர்களாகவே இருக்கின்றனர்” என்றான் {கர்ணன்}.(46)

மத்ரகர்களைப் பழித்த கல்மாஷபாதன்! – கர்ண பர்வம் பகுதி – 45-காந்தாரர்கள், மத்ரகர்கள் பாஹ்கீலகர்ளைக் குறித்து ஒரு பிராமணர் சொன்னதைச் சஞ்சயனுக்கு விளக்கிச் சொன்ன கர்ணன்; ஆரட்டர்கள் மீது விழுந்த, கற்புடைய பெண் ஒருத்தியின் சாபம்; கல்மாஷபாதன் என்ற ஒரு ராட்சசன் மத்ரகர்களைக் குறித்துச் சொன்னதைச் சல்லியனுக்குச் சொன்ன கர்ணன்; அதைத் தொடர்ந்து மேலும் மத்ரகர்களைப் பழித்த கர்ணன்; அனைவரையும் பழிக்கலாகாது எனக் கர்ணனுக்கு எடுத்துச் சொன்ன சல்லியன்; மேற்கொண்டு கர்ணனும், சல்லியனும் வாக்குவாதம் செய்யாதவாறு தடுத்த துரியோதனன்; கர்ணனும், சல்லியனும் போரிட ஒரே தேரில் புறப்பட்டது…

கர்ணன் {சல்லியனிடம்} தொடர்ந்தான், “ஓ! சல்லியரே, இவை யாவையும் நீர் அறிந்திருக்க வேண்டும். எனினும் நான் உமக்கு மீண்டும் சொல்கிறேன். நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்பீராக.(1) ஒரு காலத்தில் ஒரு பிராமணர் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். எங்கள் நடைமுறைகளைக் கண்டு மிகவும் மனம் நிறைந்த அவர், எங்களிடம்,(2) “நான் நீண்ட காலம் இமயச் சிகரமொன்றில் தனியாக வசித்திருந்தேன். அப்போதிருந்தே பல்வேறு அறங்களைப் பின்பற்றும் பல்வேறு நாடுகளை நான் கண்டிருக்கிறேன்.(3) எனினும், ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் நேர்மையில்லாமல் செயல்படுவதை நான் கண்டதே இல்லை. நான் சந்தித்த அனைத்து குலத்தவரும் வேதங்களை அறிந்தோரால் அறிவிக்கப்பட்டதே உண்மையான அறம் என்று ஏற்கிறார்கள்.(4) பல்வேறு அறங்களைப் பின்பற்றும் பல்வேறு நாடுகளின் வழியாகப் பயணித்த நான், ஓ! மன்னா {கர்ணா}, இறுதியாகப் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் சென்றேன்.(5)

அங்கே முதலில் ஒருவன் பிராமணனாவதாகவும், பிறகு க்ஷத்திரியனாவதாகவும் நான் கேள்விப்பட்டேன். உண்மையில் அதன் பிறகே ஒரு பாஹ்லீகன், வைசியனாகவும், அதன்பிறகு, சூத்திரனாகவும், அதன் பிறகு நாவிதனாகிறான்.(6) நாவிதனாகும் அவன், பிறகு {அடுத்த பிறவியில்} மீண்டும் ஒரு பிராமணனாகிறான். பிராமண நிலைக்குத் திரும்பிய அவன், மீண்டும் ஓர் அடிமையாகவே ஆகிறான்.(7) ஒரே குடும்பத்தில், ஒருவன் பிராமணனானால்; மற்ற அனைவரும் அறத்தில் இருந்து விழுந்து, தாங்கள் விரும்பியபடி செயல்படுகின்றனர்.[1](8) அற்ப புத்தி கொண்ட காந்தாரர்கள், மத்ரகர்கள், பாஹ்லீகர்கள் ஆகியோர் இப்படியே இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பயணித்து வந்த நான், பாவம் நிறைந்த ஒழுங்கின்மைகளால் அறத்திற்கு அழிவை உண்டாக்கும், இந்நடைமுறைகளைக் குறித்துப் பாஹ்லீகர்களிடமே கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.(9)ஓ! சல்லியரே இவை யாவையும் நீர் அறிந்திருக்க வேண்டும். எனினும், பாஹ்லீகர்களைக் குறித்து மேலும் ஒருவர் என்னிடம் சொன்ன இழிவார்த்தைகளை நான் மீண்டும் சொல்கிறேன்.(10) பழங்காலத்தில் கற்புடைய ஒரு பெண் ஆரட்டா (ஆராட்டாவைச் சேர்ந்த) கள்வர்களால் கடத்திச் செல்லப்பட்டாள். பாவம் நிறைந்த வகையில் அவர்களால் அவள் களங்கப்படுத்தப்பட்டதும், அவர்களை அவள்,(11) “கணவனற்றவளும் {திருமணமாகாதவளும்}, ஆதரவற்றவளுமான ஒரு பெண்ணை நீங்கள் பாவகரமாகக் களங்கப்படுத்தியிருப்பதால், உங்கள் குடும்பங்களின் பெண்டிர் அனைவரும் கற்பற்று போகட்டும்.(12) மனிதர்களில் இழிந்தோரே, இந்தப் பயங்கரப் பாவத்தின் விளைவுகளில் இருந்து உங்களால் தப்பவே முடியாது” என்று சபித்தாள். ஓ! சல்லியரே, இதன் காரணமாகவே, ஆரட்டர்களுடைய சகோதரிகளின் மகன்கள் அவர்களுக்கு வாரிசுகளாகிறார்களே அன்றிச் சொந்த மகன்கள் அவர்களுடைய வாரிசுகளாவதில்லை[2].(13) பெரும் அருளைப் பெற்றவர்களான கௌரவர்கள், பாஞ்சாலர்கள், சால்வர்கள், {மத்ஸ்யர்கள்}, நைமிசர்கள், கோசலர்கள், காசப்பௌண்டிரர்கள் {காசர்கள், பௌண்டிரர்கள் [அல்லது காசிகள், அங்கர்கள்}, கலிங்கர்கள், மகதர்கள்,(14) சேதிகள் {சைத்யர்கள்} ஆகியோர் அனைவரும் நிலைத்த அறம் எதுவென அறிந்தவர்கள். பல்வேறு நாடுகளில் இருக்கக்கூடிய பொல்லாதவர்கள் கூட அறமெதுவென அறிகிறார்கள். எனினும், பாஹ்லீகர்கள் நீதியற்றே வாழ்கிறார்கள்.(15)

மத்ஸ்யர்களில் தொடங்கி, குரு, பாஞ்சால நாட்டுவாசிகளும், நைமிசவாசிகளும், மதிப்பிற்குரிய பிற மக்களும், அனைத்துக் குலங்களில் உள்ள பக்திமான்களும், அறத்தின் நிலைத்த உண்மைகளை அறிகிறார்கள். {ஆனால்}, மத்ரகர்கள் மற்றும் ஐந்து ஆறுகள் பாயும் நாட்டில் வசிக்கும் கோணல் மனம் கொண்டோரைக் குறித்து இவ்வாறு சொல்ல முடியாது.(16) ஓ! மன்னா {சல்லியரே}, இக்காரியங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டு, அறம் மற்றும் அறநெறியோடு தொடர்புடைய காரியங்கள் அனைத்திலும் சொற்களை இழந்த ஒருவனைப் போல உமது நாவை அடக்கிக் கொள்வீராக. நீரே அம்மக்களின் பாதுகாவலரும், மன்னரும் ஆவீர், எனவே, அவர்களது தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் குறைகள் {பாவங்கள்} ஆகியவற்றின் ஆறில் ஒரு பங்கைக் கொள்பவராகவும் நீரே இருக்கிறீர்.(17) அல்லது ஒருவேளை, நீர் அவர்களை எப்போதும் பாதுகாத்ததில்லை என்பதால், அவர்களது குறைகளில் {பாவங்களில்} மட்டுமே ஆறில் ஒரு பங்கைக் கொள்பவராவீர். பாதுகாக்கும் மன்னனே குடிமக்களின் தகுதிகளில் {புண்ணியங்களில்} பங்கு கொள்ள முடியும். நீர் அவர்களது தகுதிகளில் {புண்ணியங்களில்} பங்கு கொள்பவர் அல்ல.(18)

பழங்காலத்தில் நிலைத்த அறமானது அனைத்து நாடுகளிலும் போற்றி மதிக்கப்பட்ட போது, பெரும்பாட்டன் {பிரம்மன்}, ஐந்து ஆறுகளைக் கொண்ட நாட்டின் நடைமுறைகளை உற்று நோக்கி அவர்களை நிந்தித்தான்.(19) கிருத யுகத்திலேயே, பிறர் நிலத்தில் {பிறன் மனையிடம்} சூத்திரர்களால் பெறப்பட்டவர்களும், தீய செயல்பாடுகளைக் கொண்டவர்களும், வீழ்ந்துவிட்டவர்களுமான அம்மக்களின் நடைமுறைகளைப் பிரம்மன் நிந்தித்தான் என்றால், இப்போது {இக்காலத்தில் உள்ள} உலகின் மனிதர்களுக்கு நீர் என்ன சொல்வீர்?(20) இப்படியே பெரும்பாட்டன், ஐந்து ஆறுகள் பாயும் அந்த நாட்டின் நடைமுறைகளைக் கண்டித்தான். மக்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது, பெரும்பாட்டன் இம்மனிதர்களிடம் களங்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.(21) ஓ! சல்லியரே, இவை யாவையும் நீர் அறிய வேண்டும். எனினும், நான் இன்னும் உமக்குச் சொல்வேன். கல்மாஷபாதன் என்ற பெயருடைய ராட்சசன் ஒருவன், ஒரு குளத்தில் மூழ்கும்போது,(22) “பிச்சையெடுப்பது க்ஷத்திரியனுக்கு மாசு கற்பிக்கும், அதே போல நோன்புகளை நோற்காதிருப்பது பிராமணர்களுக்கு மாசு கற்பிக்கும். பாஹ்லீகர்கள் பூமியின் மாசாவார்கள், மத்ரப் பெண்டிர் மொத்த பெண்பாலினத்தின் மாசாவார்கள்” என்று சொன்னான்.(23) அப்படி ஓடையில் மூழ்கிய அந்த ராட்சசனை {கல்மாஷபாதனை} ஒரு மன்னன் காப்பாற்றினான். பின்னவனால் {மன்னனால்} கேட்கப்பட்ட முன்னவன் {ராட்சசன்}, இந்த {பின்வரும்} பதிலை சொன்னான். நான் சொல்வதைக் கேட்பீராக.(24) {அந்த ராட்சசன் கல்மாஷபாதன்}, “மனிதகுலத்தில் மிலேச்சர்கள் மாசடைந்தவர்கள்; மிலேச்சர்களைவிட எண்ணெய் விற்பவர்கள் மாசடைந்தவர்கள்; எண்ணெய்விற்பவர்களைவிட அலிகள் மாசடைந்தவர்கள்; தங்கள் வேள்விகளில், க்ஷத்திரியர்களைப் புரோகித வேலைக்கு வைத்துக் கொள்பவர்கள் அலிகளைவிட மாசடைந்தவர்களாவர்.(25) நீ என்னைக் கைவிடவில்லையென்றால், இறுதிப் பெயர்களைக் கொண்ட நபர்களை {க்ஷத்திரியர்களைத்} தங்கள் புரோகிதராகக் கொண்டோரும், மத்ரகர்களும் அடையும் பாபத்தை நீ அடைவாய்” என்றான் {கல்மாஷபாதன்}[3].(26)

ஒரு ராட்சசனாலோ, நஞ்சின் சக்தியாலோ கொல்லப்பட்டவனை மீட்கும் சூத்திரமாக இதையே அந்த ராட்சசன் அறிவித்தான். பின்வரும் வார்த்தைகள் அனைத்தும் மிக உண்மையே.(27) வேதங்களில் சொல்லப்பட்ட கடமைகளைப் பாஞ்சாலர்கள் பின்பற்றுகிறார்கள்; கௌரவர்கள் உண்மையை {சத்தியத்தைப்} பின்பற்றுகிறார்கள்; மத்ஸ்யர்களும், சூரசேனர்களும் வேள்விகளைச் செய்கிறார்கள்; கிழக்கத்தியர் சூத்திரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்; தெற்கத்தியர்கள் வீழ்ந்துவிட்டவர்களாவர்; பாஹ்லீகர்களோ திருடர்கள்; சௌராஷ்டிரர்கள் வேசி மகன்களாவர்[4].(28) நன்றிகெட்டத்தனம், திருட்டு, குடி, ஆசான்களின் மனைவியரோடு முறைபிறழ் புணர்ச்சியில் ஈடுபடுவது, கடுமொழி, பசுக்கொலை, இரவில் வீட்டைவிட்டு வெளியே காமத்தோடு திரிதல், பிறரின் ஆபரணங்களை அணிவது ஆகியவற்றால் தூய்மையற்றவர்களாக ஆனவர்களால் என்ன பாவத்தைத்தான் செய்ய முடியாது?(29)

பாஞ்சாலர்கள் தொடங்கி, கௌரவர்கள், நைமிசர்கள், மத்ஸ்யர்கள் ஆகிய இவர்கள் யாவரும், அறம் யாது என்பதை அறிவார்கள். வடக்கத்தியர்கள், அங்கர்கள், மகதர்கள் ஆகியோர் (அறநெறிகளை அறியவில்லையெனினும்) பக்திமான்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.(30) அக்னியின் தலைமையிலான தேவர்கள் பலர் கிழக்கில் வசிக்கின்றனர். அறச்செயல்களைச் செய்யும் யமனால் ஆட்சி செய்யப்படும் தெற்கில் பித்ருக்கள் வசிக்கின்றனர்.(31) மேற்கில் இருக்கும் பிற தேவர்களை வலிமைமிக்க வருணன் மேற்பார்வை செய்கிறான். வடக்கானது தெய்வீக சோமனாலும், பிராமணர்களாலும் பாதுகாக்கப்படுகிறது.(32) ராட்சசர்களும், பிசாசங்களும் மலைகளில் சிறந்த இமயத்தைப் பாதுகாக்கின்றனர். ஓ! பெரும் மன்னா {சல்லியரே}, குஹ்யர்களோ, கந்தமாதன மலைகளைப் பாதுகாக்கின்றனர். ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படும் விஷ்ணுவோ, உயிரினங்கள் அனைத்தையும் ஐயமறப் பாதுகாக்கிறான். (இவையாவும் இப்படி இருந்தாலும், பாஹ்லீகர்களோ தேவர்களில் தங்களைக் காக்க எவரையும் கொண்டிருக்கவில்லை).(33)

மகதர்கள் குறிப்புகளால் அறிந்து கொள்கிறார்கள்; கோசலர்கள், தாங்கள் காண்பவற்றால் அறிந்து கொள்கிறார்கள்; குருக்களும், பாஞ்சாலர்களும், பாதி உரைக்கப்பட்ட பேச்சில் அறிந்து கொள்கிறார்கள்; முழுமையாகப் பேசினாலும் சால்வர்களால் அறிந்து கொள்ள முடியாது.(34) சிபிக்களைப் போன்ற மலைவாசிகள் பெரும் மூடர்களாவர்[5]. யவனர்களோ அனைத்துமறிந்தவர்கள்; குறிப்பாகச் சூரர்களும் கிட்டத்தட்ட அதுபோலவே அனைத்துமறிந்தவர்களே.[6](35) பிற மக்களால் புரிந்து கொள்ள முடியாது; நன்மையான ஆலோசனைகளைச் சொன்னால் பாஹ்லீகர்கள் சினமடைவார்கள்; மத்ரகர்களைப் பொறுத்தவரை (மேலே குறிப்பிட்டவற்றில்) எவற்றிலும் அவர்கள் சேராதவர்கள். ஓ! சல்லியரே, நீரும் அவ்வாறானவரே. எனக்கு மறுமொழி சொல்லாதீர்.(36) மத்ரகர்கள் பூமியில் உள்ள அனைத்து நாடுகளைவிடவும் மாசடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அதே போல மத்ர மகளிர் மொத்த பெண் பாலினத்திலேயே மாசடைந்தவர்களாக அழைக்கப்படுகிறார்கள்.(37) மது குடித்தல், தங்கள் ஆசான்களின் படுக்கையைக் களங்கப்படுத்தல், தவறான புணர்வால் உற்ற கருவை அழித்தல், அடுத்தவரின் செல்வத்தைக் களவாடுதல் ஆகியவற்றைத் தங்கள் நடைமுறைகளாகக் கொண்டவர்கள் செய்யாத பாவங்களே ஏதுமில்லை. ஆரட்டாகளுக்கும், ஐந்து ஆறுகள் பாயும் நாட்டின் மக்களுக்கும் ஐயோ.(38) இதை அறிந்து கொண்டு அமைதியடைவீராக. என்னை எதிர்க்க முயலாதீர். முதலில் உம்மைக் கொன்ற பிறகு, கேசவனையும், அர்ஜுனனையும் கொல்லும் நிலையை எனக்கு ஏற்படுத்திவிடாதீர்” {என்றான் கர்ணன்}.(39)

சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, {நோயினால் பீடிக்கப்பட்டு} துன்புறுவோரைக் கைவிடுதல், மனைவியையும், மக்களையும் விற்பனை செய்தல் ஆகியன நீ மன்னனாக இருக்கும் அங்கர்களுக்கு மத்தியில் பரவலாக நடைபெறுகிறது.(40) பீஷ்மர், உனது அந்தக் களங்களைச் சிந்தித்தே, ரதர்களையும், அதிரதர்களையும் பட்டியலிட்டபோது, உன் கோபத்தைத் தூண்டினார். கோபங்கொள்ளாதே.(41) பிராமணர்களை எங்கும் காணமுடியும்; க்ஷத்திரியர்களும் எங்கும் காணப்படுகிறார்கள்; ஓ! கர்ணா, அதே போலத்தான் வைசியர்களும், சூத்திரர்களும் காணப்படுகிறார்கள். கற்புநிறைந்தவர்களும், சிறந்த நோன்புகளைக் கொண்டோருமான மகளிருங்கூட எங்கும் காணப்படுகிறார்கள்.(42) வேறு மனிதர்களைக் கேலி பேசுவதிலும், ஒருவரையொருவர் காயப்படுத்துவதிலும் எங்கும் மனிதர்கள் மகிழ்ச்சியே அடைகிறார்கள். காமம்நிறைந்த மனிதர்களும் எங்கேயும் காணப்படவே செய்கிறார்கள்.(43) அனைவரும், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பிறரின் குறைகளைப் பேசுவதில் திறம்பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். எனினும், தன் குறைகளை எவரும் அறிவதில்லை, அல்லது அவற்றை அறிந்து வெட்கப்படுவதில்லை.(44) எங்கும் மன்னர்கள் தங்கள் தங்களுக்குரிய அறங்களில் அர்ப்பணிப்புடன் இருந்து, தீயவர்களைத் தண்டிக்கவே செய்கிறார்கள். நல்ல மனிதர்கள் எங்கும் காணப்படுகிறார்கள்.(45) ஓ! கர்ணா, ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் பாவம் நிறைந்தவர்களாக இருக்க முடியாது. தேவர்களின் நடத்தையையே விஞ்சக்கூடிய மனிதர்களும், பல நாடுகளில் இருக்கிறார்கள்” என்றான் {சல்லியன்}.(46)சஞ்சயன் {கர்ணனிடம்} தொடர்ந்தான், “அப்போது மன்னன் துரியோதனன், ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} நண்பனாகப் பேசியும், சல்லியனிடம் கரங்கூப்பி வேண்டிக் கொண்டும், கர்ணனையும், சல்லியனையும் (தங்களின் சொற்போரைத் தொடர்வதிலிருந்து) தடுத்து நிறுத்தினான்.(47) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் அமைதிப்படுத்தப்பட்ட கர்ணன், வேறேதும் சொல்வதை நிறுத்திக் கொண்டான். சல்லியனும் எதிரியை எதிர்கொண்டான்.(48) ராதையின் மகன் சிரித்துக் கொண்டே, “செல்வீராக” என்று சல்லியனை மீண்டும் தூண்டினான்” {என்றான் சஞ்சயன்}.[7](49)

பதினேழாம் நாள் போர்த் தொடக்கம்! – கர்ண பர்வம் பகுதி – 46-தினேழாம் நாள் போர் தொடங்கியதும், பாண்டவர்களின் வியூகத்தைக் கண்டு எதிர்வியூகம் அமைத்த கர்ணன், யுதிஷ்டிரனைத் தாக்கி வீழ்த்தியதாகத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; அர்ஜுனன் இருக்கும்போது கர்ணனால் எவ்வாறு யுதிஷ்டிரனைத் தாக்க முடிந்தது எனச் சஞ்சயனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; வியூகங்களில் போர்வீரர்கள் ஏற்ற நிலைகளை வர்ணித்த சஞ்சயன்; அர்ஜனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கு உறுதியளித்த அர்ஜுனன்; அர்ஜுனனின் தேரைக் கண்ட சல்லியன், அவனது திறனைக் குறித்தும், காணப்படும் தீய சகுனங்களைக் குறித்தும் கர்ணனிடம் சொன்னது; சல்லியனிடம் சம்சப்தகார்களால் மறைக்கப்பட்ட அர்ஜுனனைக் காட்டிய கர்ணன்; அர்ஜுனனை யாராலும் வெல்ல முடியாது என்று சொன்ன சல்லியன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பகைவரின் படைகள் அனைத்தையும் தடுக்கவல்லதும், திருஷ்டத்யும்னனால் அமைக்கப்பட்டதுமான பார்த்தர்களின் ஒப்பற்ற வியூகத்தைக் கண்ட கர்ணன்,(1) சிங்க முழக்கங்களைச் செய்தபடியும், தன் தேரில் உரத்த சடசடப்பொலியை எழுப்பியபடியும் சென்றான். மேலும் அவன் {கர்ணன்}, இசைக்கருவிகளின் உரத்த ஆரவாரத்தால் பூமியை நடுங்கச் செய்தான்.(2) போரில் எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த வீரன் சினத்தில் நடங்குவதாகத் தெரிந்தது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளை எதிர் வியூகத்தில் முறையாக அணிவகுக்கச் செய்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த வீரன் {கர்ணன்},(3) அசுரர் படையைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போலப் பாண்டவப் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கினான். கணைகள் பலவற்றால் யுதிஷ்டிரனைத் தாக்கிய அவன், பாண்டுவின் அந்த மூத்த மகனைத் தன் வலப்புறத்தில் நிறுத்தினான்.”(4)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, திருஷ்டத்யும்னனின் தலைமையிலானவர்களும், பீமசேனனால் பாதுகாக்கப்பட்டவர்களும், தேவர்களாலேயே வெல்லப்பட முடியாதவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தப் பாண்டவர்கள் அனைவருக்கும் எதிராக ராதையின் மகன் {கர்ணன்} தன் படையை எவ்வாறு எதிர் வியூகத்தில் அணிவகுக்கச் செய்தான்?(5) ஓ! சஞ்சயா, நமது படையின் சிறகுகளிலும், சிறகுகளின் எல்லைகளிலும் நின்றவர் யாவர்? போர்வீரர்கள் எவ்வாறு முறையாகப் பிரிந்து நின்றனர்?(6) என் படையின் வியூகத்திற்கு எதிராகப் பாண்டுவின் மகன்கள் எவ்வாறு தங்கள் வியூகத்தை அமைத்தனர்? மகத்தானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் எவ்வாறு தொடங்கியது?(7) கர்ணன் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்கையில் பீபத்சு {அர்ஜுனன்} எங்கிருந்தான்? அர்ஜுனனின் முன்னிலையில் யுதிஷ்டிரனைத் தாக்குவதற்கு எவனால் முடியும்?(8) முன்பு காண்டவத்தில் அனைத்து உயிரினங்களையும் தனியனாக வென்ற அர்ஜுனனுடன், ராதையின் மகனை {கர்ணனைத்} தவிர உயிர்மீது விருப்பம் கொண்ட எவன் போரிடுவான்?” என்று கேட்டான்.(9)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வியூகங்கள் அமைக்கப்பட்டதையும், அர்ஜுனன் வந்த விதத்தையும், இருதரப்பினராலும் தங்கள் தங்களுக்குரிய மன்னர்கள் சூழ எவ்வாறு அந்தப் போர் நடத்தப்பட்டது என்பதையும் இப்போது கேட்பீராக.(10) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சரத்வானின் மகனான கிருபர், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட மகதர்கள், சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் {உமது படையின்} வலது சிறகில் தங்கள் நிலைகளைக் கொண்டனர்.(11) இவர்களுக்கு வலப்புறத்தில், விட்டில் பூச்சிகளைப் போலப் பெரும் எண்ணிக்கையில் இருந்தவர்களும், பிசாசங்களைப் போன்ற கடும் தோற்றங்கொண்டவர்களும், அச்சமற்றவர்களுமான காந்தாரக் குதிரைவீரர்கள் பலர் மற்றும் வீழ்த்துவதற்குக் கடினமான மலைவாசிகள் பலர் ஆகியோரின் துணையுடன் சகுனி, வலிமைமிக்க உலூகன் ஆகியோர் நின்றிருந்தனர்.(12,13) போர்வெறிக் கொண்ட சம்சப்தகர்களின் {34,000} முப்பத்துநாலாயிரம் பின்வாங்காத தேர் வீரர்கள் அனைவரும், கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கொல்ல விரும்பி, உமது மகன்களைத் தங்கள் மத்தியில் கொண்டு (கௌரவப் படையின்) இடப்புறத்தைப் பாதுகாத்தனர்.(14) அவர்களுக்கு இடப்புறத்தில், காம்போஜர்கள், சகர்கள், யவனர்கள் ஆகியோர் தங்கள் தேர்கள், குதிரைகள், காலாட்கள் துணையுடன் சூதன் மகனின் {கர்ணனின்} உத்தரவின் பேரில் அர்ஜுனனையும், வலிமைமிக்கக் கேசவனையும் {கிருஷ்ணனையும்} அறைகூவி அழைக்கும்படி நின்றுகொண்டிருந்தனர்.(15)

அந்தப் படையின் தலைமையில்,, கவசம் தரித்து, அங்கதங்கள் மற்றும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கர்ணன், மத்திய பகுதியைப் பாதுகாப்பதற்காக அங்கே நின்றான்.(16) தன் கோபக்கார மகன்களால் ஆதரிக்கப்பட்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்த வீரன் {கர்ணன்}, தன் வில்லை மீண்டும் மீண்டும் வளைத்தபோது, அந்தப் படையின் தலைமையில் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(17) வலிமைமிக்கக் கரங்களையும், சூரியன், அல்லது நெருப்பின் பிரகாசத்தையும், பழுப்பு நிறக் கண்களையும், அழகிய பண்புகளையும் கொண்டவனும், படையின் பின்புறத்தில் நின்றவனுமான துச்சாசனன், பல துருப்புகள் சூழ யானையின் கழுத்தில் ஏறிவந்து, படிப்படியாகப் போரில் முன்னேறினான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், அழகிய குதிரைகளில் ஏறி வந்தவர்களும், அழகிய கவசங்களைப் பூண்டவர்களுமான தன் தம்பிகளின் பாதுகாப்போடு அவனுக்கு {துச்சாசனனுக்குப்} பின்னால் வந்தான்.(18,19) ஒன்று சேர்ந்திருந்தவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களுமான மத்ரகர்கள் மற்றும் கேகயர்களாலும் பாதுகாக்கப்பட்ட அந்த மன்னன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்களால் சூழப்பட்ட நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(20)

அஸ்வத்தாமன் மற்றும் பிற வலிமைமிக்கத் தேர்வீரர்களில் முதன்மையானோரும், மிலேச்சர்களால் செலுத்தப்பட்டவையும், மேகங்களைப போல மதநீர் பெருக்குபவையும், எப்போதும் மதம்பிடித்தவையாகவே இருப்பவையுமான பல யானைகளும் அந்தத் தேர்ப்படையைப் பின்தொடர்ந்து சென்றன.(21) வெற்றிக் கொடிகளாலும், சுடர்மிக்க ஆயுதங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பெரிய உயிரினங்கள், அவற்றின் முதுகில் இருந்து போரிடுவதில் திறம்பெற்ற போர்வீரர்களால் செலுத்தப்பட்டு, மரங்கள் அடர்ந்த மலைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(22) துணிச்சல்மிக்கவர்களும், பின்வாங்காதர்வர்களும், கோடரிகள் மற்றும் வாள்களைத் தரித்தவர்களுமான போர்வீரர்களே அந்த யானைகளின் பாதுகாவலர்களானார்கள்.(23) குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றால் கவர்ச்சிகரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த முதன்மையான வியூகம், தேவர்கள், அல்லது அசுரர்களின் வியூகத்தைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(24) போர் முறைகளை நன்கறிந்தவனான அதன் தலைவரால் பிருஹஸ்பதியின் திட்டப்படி அமைக்கபட்ட அந்த வியூகம், (முன்னேறிச் சென்ற போது) ஆடிக் கொண்டே செல்வதாகத் தெரிந்தது, மேலும் எதிரிகளின் இதயங்களில் அச்சம் நுழைந்தது.(25) மழைக்காலங்களில் எப்போதும் தோன்றும் மேகங்களைப் போல, போருக்காக ஏங்கியிருந்த காலாட்படைவீரர்கள், குதிரைவீரர்கள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரும், யானைகளும் அந்த வியூகத்தின் சிறகுகளில் இருந்தும், அவ்வியூகத்தின் எல்லைகளில் இருந்தும் வெளிப்படத் தொடங்கினர்.(26)

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், (பகைவரின்) படையின் தலைமையில் இருக்கும் கர்ணனைக் கண்டு, எதிரிகளைக் கொல்பவனும், உலகத்தின் வீரனுமான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(27) “ஓ! அர்ஜுனா, போரில் கர்ணனால் அமைக்கப்பட்ட வலிமைமிக்க வியூகத்தைப் பார். பகைவரின் படையானது, அதன் சிறகுகளிலும், சிறகின் எல்லைகளிலும் பிரகாசமாகத் தெரிகிறது.(28) பரந்து விரிந்திருக்கும் இந்தப் படையைக்கண்டு, அது நம்மை வென்றுவிடாத அளவுக்கான நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்” {என்றான் யுதிஷ்டிரன்}. மன்னனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன் கூப்பிய கரங்களோடு, “நீர் சொன்னதுபோலவே அனைத்தும் செய்யப்படும். வேறுவிதமாக ஆகாது.(30) ஓ! பாரதரே, எதனால் எதிரிக்கு அழிவு ஏற்படுமோ, அதை நான் செய்வேன். அவர்களது முதன்மையான வீரர்களைக் கொல்வதால், நான் அவர்களது அழிவைச் சாதிப்பேன்” என்றான்.(31)

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “அதே நோக்கோடு நீ ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக, பீமசேனன் சுயோதனனை {துரியோதனனை} எதிர்த்துச் செல்லட்டும், நகுலன் விருஷசேனனை எதிர்த்தும், சகாதேவன் சுபலனின் மகனை {சகுனியை} எதிர்த்தும், சதாநீகன் துச்சாசனனை எதிர்த்தும், சிநிக்களில் காளையான அந்தச் சாத்யகி, ஹிருதிகள் மகனை {கிருதவர்மனை} எதிர்த்தும், பாண்டியன் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்தும் செல்லட்டும். நான் கிருபருடன் போரிடுவேன்.(32,33) திரௌபதியின் மகன்களும், சிகண்டியும், எஞ்சிய தார்தராஷ்டிரர்களை எதிர்த்துச் செல்லட்டும். நமது படையின் பிற போர்வீரர்கள் நமது பிற எதிரிகளோடு மோதட்டும்” என்றான்.(34)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “நீதிமானான யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, தன் துருப்புகளிடம் (தேவையானதைச் செய்யச்சொல்லி) ஆணையிட்டும், படையின் தலைமையில் சென்றான்.(35) பிரம்மத்தில் இருந்து பிரகாசத்தை அடைந்தவனும், அண்டத்தின் தலைவனுமான அக்னி எந்தத் தேருக்குக் குதிரைகளாக ஆனானோ, பிரம்மத்தில் இருந்தே முதலில் தோன்றியதால், அது பிரம்மனுக்குச் சொந்தமானது எனத் தேவர்களால் எந்தத் தேர் அறியப்படுகிறதோ,(36) பழங்காலத்தில் பிரம்மன், இந்திரன், வருணன் ஆகியோரை ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து எந்தத் தேர் தாங்கியதோ, அந்த ஆதித் தேரிலேயே கேசவனும், அர்ஜுனனும் போருக்குச் செல்கிறார்கள்.(37)

அற்புதத் தன்மையைக் கொண்ட அந்தத் தேர் முன்னேறி வருவதைக் கண்ட சல்லியன், போரில் பெருஞ்சக்தி கொண்ட போர்வீரனான அதிரதன் மகனிடம் {கர்ணனிடம்} மீண்டும்,(38) “வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டதும், செயலின் தவிர்க்கப்பட முடியாத கனியைப் போல {வினைப்பயனைப் போலத்} துருப்புகள் அனைத்தாலும் தடுக்கப்படமுடியாத வாகனமுமான அந்தத் தேர் அதோ வருகிறது. நீ யாரைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தாயோ அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, வழியில் தன் எதிரிகளைக் கொன்றபடியே அதோ வருகிறான்.(39) கேட்கப்படும் பெருமுழக்கங்கள் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமாக, மகத்தானதாகக் கேடப்படுவதால், அவர்கள் உயர் ஆன்மாக்களைக் கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தான் என்பதில் ஐயமில்லை.(40)

கூடாரம் போல ஆகாயத்தில் பரவும் புழுதிப்படலம் அதோ உயர்கிறது. ஓ! கர்ணா, அர்ஜுனனுடைய சக்கரங்களின் சுற்றளவால் ஆழமாக வெட்டப்பட்டு மொத்த பூமியும் நடுங்குவதைப் போலத் தெரிகிறது.(41) உன் படையின் இரு பக்கங்களிலும் கடுங்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. ஊனுண்ணும் விலங்குங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன, மேலும் இவ்விலங்குகள் அச்சத்தையூட்டும் வகையில் கதறுகின்றன.(42) ஓ! கர்ணா, பயங்கரமானதும், தீமைக்குறியீடானதும், ஆவி {நீராவி} வடிவம் கொண்டதுமான கேது, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் சூரியனை மறைத்தபடி தோன்றுகிறது[1].(43) வலிமைமிக்க ஓநாய்கள் பலவும், புலிகளும் சுற்றிலும் உள்ள பல்வேறு வகை விலங்குக் கூட்டங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்பாயாக.(44) பயங்கரமான கங்கங்களும், கழுகுகளும் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி ஆலோசனையில் ஈடுபடுவதைப் போல ஒன்றையொன்று நோக்கி அமர்ந்திருப்பதைக் காண்பாயாக.(45)

உன் தேரில் இணைக்கப்பட்டுள்ள வண்ணந்தோய்ந்த சாமரங்கள் அமைதியற்றுப் பறக்கின்றன. உன் கொடிமரமும் நடுங்குகிறது.(46) பருத்த பெரிய அங்கங்களைக் கொண்டவையும், பறக்கும் பறவைகளுக்கு ஒப்பான பெரும் வேகம் கொண்டவையுமான உன் அழகிய குதிரைகளும் நடுங்குவதைக் காண்பாயாக.(47) ஓ! கர்ணா, இந்தச் சகுனங்களால் மன்னர்கள் நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் நிலைத்த உறக்கம் கொள்வதற்காக உயிரையிழந்து தரையில் கிடப்பார்கள் என்பது உறுதி.(48) மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் சங்குகளின் உரத்த பெருமுழக்கம் கேட்கப்படுகிறது. ஓ! ராதையின் மகனே, பேரிகைகள் மற்றும் மிருதங்கங்களின் ஒலிகளும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்படுகின்றன.(49) பல்வேறு வகைகளிலான கணைகளின் விஸ் ஒலிகளும், தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டும் ஆரவாரங்களும் கேட்கப்படுகின்றன. ஓ! கர்ணா, உயர் ஆன்மப் போர்வீரர்களுடைய விற்களின் நாண்கயிறுகளால் உண்டாக்கப்படும் உரத்த நாணொலியையும் கேட்பாயாக. (50)

ஓ! கர்ணா, மணிவரிசைகளைக் கொண்டதும், தங்க நிலவுகள் மற்றும் விண்மீண்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அர்ஜுனனின் அந்தக் கொடிகளைப் பார். திறன்மிக்கக் கலைஞர்களால் தங்கத்தில் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்டவையும், பல்வேறு வண்ணங்களில் இருப்பவையுமான அவை, காற்றில் அசையும்போது, மேகத்திரள்களில் உள்ள மின்னலின் கீற்றுகளைப் போல அர்ஜுனனின் தேரில் பிரகாசத்துடன் சுடர்விடுகின்றன.(51,52) காற்றில் அசைகையில் கூரிய ஒலிகளை உண்டாக்கும் (வேறு) கொடிகளையும் பார். ஓ! கர்ணா, தங்கள் வாகனங்களில் கொடியால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களுடன் கூடியவர்களான உயர் ஆன்மப் பாஞ்சாலர்களின் தேர்வீரர்கள், தெய்வீகத் தேர்களில் இருக்கும் தேவர்களைப் போலவே பிரகாசமாகத் தெரிகின்றனர்.(53) குந்தியின் வீரமகனும், தன் கொடிமரத்தில் முதன்மையான குரங்கைக் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, பகைவரை அழிப்பதற்காக முன்னேறி வருவதைப் பார்.(54) பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடிமரத்தின் உச்சியில், எதிரிகளின் அச்சங்களை அதிகப்படுத்துவதும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் (போர்வீரர்களின்) பார்வையை ஈர்ப்பதுமான அந்தப் பயங்கரக் குரங்குக் காணப்படுகிறது.(55)

நுண்ணறிவு கொண்ட கிருஷ்ணனின் சக்கரம், கதாயுதம், சாரங்கம் என்றழைக்கப்படும் வில், (பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும்) சங்கு, மேலும் அவனது கௌஸ்து ரத்தினம் ஆகியன அவனில் மிக அழகாகத் தெரிகின்றன.(56) சாரங்கம் மற்றும் கதையுதம் தரித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, காற்றின் வேகத்தைக் கொண்ட அந்த வெண்குதிரைகளைத் தூண்டியபடி வந்து கொண்டிருக்கிறான்.(57) சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வளைக்கப்படும் காண்டீவம் அதோ நாணொலிக்கிறது. அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரனால் ஏவப்படும் கூரிய கணைகள் அவனது எதிரிகளை அழிக்கின்றன.(58) முழு நிலவைப்போன்று அழகான முகங்களைக் கொண்டவையும், தாமிரவண்ணம் கொண்ட நீண்ட பெரிய கண்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான பின்வாங்காத மன்னர்களின் தலைகளால் பூமி விரவிக்கிடக்கிறது.(59) பரிகங்களைப் போலத் தெரிபவையும், ஆயுதங்களைப் பிடியில் {தம் கைப்பிடியில்} கொண்டவையும், சிறந்த நறுமணப் பொருட்களால் பூசப்பட்டவையும், உயர்த்திப் பிடித்த ஆயுதங்களுடன் போரில் திளைக்கும் போர்வீரர்களின் கரங்கள் அங்கே விழுந்து கொண்டிருக்கின்றன.(60)

கண்கள், நாவுகள், உள்ளுறுப்புகள் ஆகியன பிதுங்கிய குதிரைகள் தங்கள் சாரதிகளுடன் விழுகின்றன, விழுந்து உயிரையிழந்து பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கின்றன.(61) மலைச்சிகரங்களைப் போன்று பெரிய உயிரற்ற யானைகள், பார்த்தனால் கிழித்துச் சிதைத்துத் துளைக்கப்பட்டுப் பெரும் மலைகளைப் போலக் கீழே விழுகின்றன.(62) வானத்தில் மாறிக் கொண்டே இருக்கும் ஆவி வடிவங்களைப் போலத் தெரியும் அந்தத் தேர்கள், அவற்றின் அரச சாரதிகள் கொல்லப்பட்டு, சொர்க்கவாசிகளின் புண்ணியங்கள் தீர்ந்ததால் விழும் தெய்வீகத் தேர்களைப் போலக் கீழே விழுகின்றன.(63) பிடரி மயிர் கொண்ட சிங்கம் ஒன்றால் எண்ணற்ற கால்நடைக்கூட்டங்கள் கலங்கடிக்கப்படுவதைப் போல, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் மிகவும் கலங்கடிக்கப்படும் இந்தப் படையைப் பார்.(64) அதோ தாக்குவதற்காக முன்னேறிவரும் பாண்டவ வீரர்கள், போரில் ஈடுபட்டுவரும் மன்னர்களையும், உன் படையின் பெரும் எண்ணிக்கையிலான யானைகளையும், குதிரைகளையும், தேர்வீரர்கள் மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோரையும் கொல்கிறார்கள்.(65)

அதோ, மேகங்களால் மறைக்கப்படும் சூரியனைப் போலவே, (நண்பர்கள் மற்றும் எதிரிகளாலும், ஆயுதங்கள் மற்றும் புழுதியாலும்) மறைக்கப்பட்டிருக்கும் பார்த்தனைக் {அர்ஜுஅனனைக்} காண முடியவில்லை. அவனது கொடிமரம் மட்டுமே காணப்படுகிறது, அவனது வில்நாண்கயிற்றின் நாணொலி மட்டுமே கேட்கப்படுகிறது.(66) ஓ! கர்ணா, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டவனும், போரில் தன் எதிரிகளைக் கொன்று வருபவனுமான அந்த வீரனை நீ இன்று உறுதியாகக் காண்பாய். நீ எவனைக் குறித்து விசாரித்தாயோ, அவனை நிச்சயம் நீ காண்பாய்.(67) ஓ! கர்ணா, மனிதர்களில் புலிகளும், கண்கள் சிவந்தவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோர் இருவரும் ஒரே தேரில் நிற்பதை நீ இன்று உறுதியாகக் காண்பாய்.(68) ஓ! ராதையின் மகனே {கர்ணா}, கேசவனைத் {கிருஷ்ணனைத்} தன் சாரதியாகவும், காண்டீவத்தைத் தன் வில்லாகவும் கொண்டவனைக் கொல்வதில் நீ வென்றுவிட்டால், நீயே எங்கள் மன்னனாவாய்.(69) சம்சப்தகர்கள் அறைகூவியதால் பார்த்தன் {அர்ஜுனன்} இப்போது அவர்களை எதிர்த்துச் செல்கிறான். அந்த வலிமைமிக்கப் போர்வீரன், போரில் தன் எதிரிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறான்” என்றான் {சல்லியன்}.(70)

இப்படிச் சொன்ன மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} கர்ணன் சினத்துடன், “கோபக்கார சம்சப்தகர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்படும் பார்த்தனைக் காண்பீராக.(71) மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலப் பார்த்தனை இப்போது காணவில்லை. ஓ சல்லியரே, போர்வீரர்கள் எனும் பெருங்கடலுக்குள் மூழ்கிய அர்ஜுனன் அழியப்போவது உறுதி” என்றான்.(72)

சல்லியன், “நீரால் வருணனைக் கொல்பவனோ, எரிபொருளால் {விறகால்} நெருப்பைத் தணிப்பவனோ இங்கே எவன் இருக்கிறான்? காற்றைப் பிடிக்கவோ, பெருங்கடலைக் குடிக்கவோ இங்கே எவன் இருக்கிறான்?(73) பார்த்தனைப் பீடிக்குஞ்செயலும் அவ்வாறே என்றே நான் கருதுகிறேன். தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து தங்கள் தலைமையில் இந்திரனையே கொண்டு போரிட்டாலும், அர்ஜுனன் வெல்லப்பட முடியாதவனாவான்.(74) அல்லது, அவ்வார்த்தைகளை (பார்த்தனைக் கொல்லவல்ல உன் திறனைச்} சொல்லி நிறைவடைந்து, உன் மனத்தைச் சுமையைக் குறைத்துப் பாதிப்பை அடைவாயாக. பார்த்தனைப் போரில் வெற்றிக் கொள்ள முடியாது. உன் மனத்தில் கொண்டிருக்கும் வேறேதும் காரியத்தைச் சாதிப்பாயாக.(75)

எவன் இந்தப் பூமியைத் தன் இரு கரங்களால் தூக்குவானோ, எவன் தன் கோபத்தால் உயிரினங்கள் அனைத்தையும் எரிப்பானோ, எவன் தேவர்களைச் சொர்க்கத்தில் இருந்து வீசி எறியவல்லவனோ, அவனாலேயே அர்ஜுனனைப் போரில் வெல்ல முடியும்.(76) உழைப்பால் எப்போதும் களைப்படையாதவனும், பிரகாசத்தால் சுடர்விடுபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், மற்றொரு மேருவைப் போல நிற்பவனும், குந்தியின் மற்றொரு வீர மகனுமான பீமனைக் காண்பாயாக.(77) எப்போதும் கோபம் தூண்டப்பட்டவனும், பழிதீர்க்க ஏங்கிக் கொண்டிருப்பவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தப் பீமன், போரில் வெற்றியடைய விரும்பியும், தன் காயங்கள் அனைத்தையும் நினைத்தபடியும் அங்கே நின்று கொண்டிருக்கிறான்.(78) பகை நகரங்களை அடக்குபவனும், போரில் எதிரிகளால் தடுக்கப்படக் கடினமானவனும், அறவோர்களில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் அதோ நிற்கிறான்.(79) மனிதர்களில் புலிகளும், அசுவினி இரட்டையர்களும், வெல்லப்படமுடியாதவர்களும், உடன் பிறந்தவர்களுமான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் அதோ நிற்கின்றனர்.(80)

பாஞ்சால இளவரசர்களின் குணங்களைக் கொண்ட அந்தக் கிருஷ்ணையின் ஐந்து மகன்களையும் அங்கே காணலாம். போரில் அர்ஜுனனுக்கு நிகரான அவர்கள் அனைவரும் போரிட விரும்பியே அங்கே நின்று கொண்டிருக்கின்றனர்.(81) செருக்கிலும் சக்தியிலும் பெருகுபவர்களும், திருஷ்டத்யும்னனின் தலைமையிலானவர்களும், பெரும் சக்தி கொண்ட வீரர்களுமான துருபதன் மகன்கள், அங்கே தங்கள் நிலையை ஏற்றிருக்கின்றனர்.(82) சாத்வதர்களில் முதன்மையானவனும், இந்திரனைப் போலத் தடுக்கப்பட முடியாதவனுமான சாத்யகி, போரிடும் விருப்பத்தால், அந்தகன் கோபத்தோடு அந்தகன் நம் கண்முன்னே வருவதைப் போல அதோ நம்மை எதிர்த்து வருகின்றான்” என்றான் {சல்லியன்}.(83) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரும் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, கங்கை மற்றும் யமுனையின் ஊற்றுகளைப் போலக் கடும்போரில் இருபடைகளும் ஒன்று கலந்தன” {என்றான் சஞ்சயன்}[2].(84)

பேரழிவை உண்டாக்கிய கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 47-சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்ற அர்ஜுனன்; கர்ணனைப் பாதுகாத்த துரியோதனன்; பாஞ்சாலர்களுக்குப் பேரழிவை உண்டாக்கிய கர்ணன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “முறையாக அணிவகுக்கப்பட்ட அந்தப் படைகள் இரண்டும் போரிடுவதற்காக இவ்வாறு ஒன்றுகலந்த போது, ஓ!சஞ்சயா, பார்த்தன் {அர்ஜுனன்} சம்சப்தகர்களையும், கர்ணன் பாண்டவர்களையும் எவ்வாறு எதிர்த்தனர்?(1) உரைப்பதில் திறனுள்ளவனாக நீ இருப்பதால், போர் நிகழ்வுகளை எனக்குச் சொல்வாயாக. போரில் வீரர்களின் ஆற்றல்களைக் குறித்துக் கேட்பதில் நான் எப்போதும் முழு நிறைவையடைவதில்லை” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவ்வகையில் நின்றிருந்த பகைவரின் பரந்த படையை உற்று நோக்கிய அர்ஜுனன், உமது மகனின் {துரியோதனனின்} தீய கொள்கையின் {ஆலோசனைகளின்} விளைவால், தன் துருப்புகளை முறையான வடிவில் அணிவகுக்கச் செய்தான்.(3) குதிரைவீரர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள், தேர்கள் ஆகியவை நிறைந்ததும், திருஷ்டத்யும்னன் தலைமையிலானதுமான அந்தப் பரந்த பாண்டவப் படையானது, அப்போது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4) புறாக்களைப் போன்று வெண்மையான தன் குதிரைகளுடன் கூடியவனும், சூரியன் அல்லது சந்திரனுக்கு இணையான காந்தியைக் கொண்டவனும், வில் தரித்திருந்தவனுமான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, காலனே உடல் கொண்டு வந்ததைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(5) போரிடும் விருப்பத்துடன் கூடிய திரௌபதியின் மகன்கள், அந்தப் பார்ஷதனின் {திருஷ்டத்யும்னனின்} பக்கத்தில் நின்றிருந்தனர். அவர்கள் அனைவரும் சிறந்த கவசங்களைப் பூண்டவர்களாகவும், சிறந்த ஆயுதங்களைத் தரித்தவர்களாகவும், புலிகளின் ஆற்றலைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஒளிவீசும் உடல்களோடு கூடிய அவர்கள் சந்திரனோடு தோன்றும் விண்மீண்களைப் போலத் தங்கள் தாய்மாமனை {திருஷ்டத்யும்னனைப்} பின்தொடர்ந்தனர்.(6)

வியூகத்தில் நிற்கும் சம்சப்தகர்களைக் கண்ட அர்ஜுனன், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் வில்லான காண்டீவத்தை வளைத்தபடி அவர்களை எதிர்த்து விரைந்தான்.(7) அப்போது அர்ஜுனனைக் கொல்ல விரும்பிய சம்சப்தகர்கள், வெற்றியடைய உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டும், மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டும் பார்த்தனை எதிர்த்து விரைந்தனர்.(8) மனிதர்கள், குதிரைகள், மதங்கொண்ட யானைகள், தேர்கள் ஆகியவை நிறைந்ததும், வீரர்களைக் கொண்டதுமான அந்தத் துணிச்சல்மிக்கப் படையானது {சம்சப்தகப் படையானது}, மிக வேகமாக அர்ஜுனனைப் பீடிக்கத் தொடங்கியது.(9) கிரீடியுடனான {அர்ஜுனனுடனான} அவர்களது மோதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. நாம் கேள்விப்பட்ட அர்ஜுனன் மற்றும் நிவாதகவசர்களுக்கு இடையில் நடந்ததற்கு ஒப்பாக அந்த மோதல் இருந்தது.(10)

தேர்கள், குதிரைகள், கொடிமரங்கள், யானைகள், போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலாட்படைவீரர்கள், கணைகள், விற்கள், வாள்கள், சக்கரங்கள், போர்க்கோடரிகள், ஆயுதங்களைப் பிடியில் கொண்டு உயர்த்தப்பட்ட கரங்கள் மற்றும் எதிரிகளின் தலைகளையும் பார்த்தன் ஆயிரமாயிரமாக அறுத்துத் தள்ளினான்.(11,12) போர்வீரர்களின் ஆழமான சுழலில் பார்த்தனின் {அர்ஜுனனின்} தேர் மூழ்கிப் போனதாகக் கருதிய சம்சப்தகர்கள், பெரும் முழக்கங்களைச் செய்தனர்.(13) எனினும், முன்னால் இருந்த தன் எதிரிகள் அனைவரையும் கொன்ற பார்த்தன், அதையும் தாண்டி நின்றவர்களையும் கொன்று, அதன் பிறகு, உயிருடன் கூடிய அனைத்து உயிரினங்களையும் கோபத்தால் கொல்லும் ருத்திரனைப் போலத் தனக்கு வலப்புறத்திலும், பின்புறத்தில் இருந்தோரையும் கொன்றான்.(14)

பாஞ்சாலர்கள், சேதிகள், சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும், உமது துருப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது மிக மூர்க்கமானதாக இருந்தது.(15) உற்சாகத்துடன் கூடியவையும், சினத்தால் நிறைந்தவையும், தேர்களின் அடர்த்தியான படையணிகளைத் தாக்கவல்லவையுமான துருப்புகளின் துணையுடன் கூடியவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமான வீரர்களுமான கிருபர், கிருதவர்மன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர், பெரும் துணிவைக் கொண்டவர்களான கோசலர்கள், காசிகள், மத்ஸ்யர்கள், காருஷர்கள், கைகேயர்கள், சூரசேனர்கள் ஆகியோர் அனைவருடனும் போரிட்டனர்.(16,17) பெரும் படுகொலைகள் நிறைந்ததும், உடல் உயிர் மற்றும் பாவங்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான அந்தப் போரானது, அதில் ஈடுபட்ட க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வீரர்களுக்குப் புகழ், சொர்க்கம் மற்றும் அறம் ஆகியவற்றை உண்டாக்குவதாக அமைந்தது.(18)

அதே வேளையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் தம்பிகளுடன் கூடிய மன்னன் துரியோதனன், குரு வீரர்கள் பலராலும், வலிமைமிக்க மத்ரகத் தேர்வீரர்கள் பலராலும் ஆதரிக்கப்பட்டு, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், சேதிகள் மற்றும் சாத்யகியுடன் போரிட்டுக் கொண்டிருந்த கர்ணனைப் பாதுகாத்தான்.(19,20) தன் கூரிய கணைகளால் அந்தப் பரந்த படைப்பிரிவையும், தேர்வீரர்களில் முதன்மையான பலரையும் அழித்த கர்ணன், யுதிஷ்டிரனைப் பீடிப்பதில் வென்றான்.(21) கவசங்கள், ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான எதிரிகளின் உடல்கள் ஆகியவற்றை வெட்டி, தன் எதிரிகளில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்து, அவர்களைப் பெரும்புகழ் ஈட்டச் செய்த கர்ணன், தன் நண்பர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கினான்.(22) இப்படியே, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுக்கு அழிவை உண்டாக்கியதும், குருக்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் இடையில் நடந்ததுமான அந்தப் போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(23)

தடுக்கப்பட முடியாத கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 48-பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற கர்ணன், பிரபத்ரகர்கள், பாஞ்சாலர்கள், மற்றும் சேதிகளைக் கொன்றது; கர்ணனின் மகனான பானுசேனனைக் கொன்ற பீமசேனன்; கௌரவர்களைப் பீடித்த பீமன்; கர்ணனின் மற்றொரு மகனான சுஷேணனுக்கும் நகுலசகாதேவர்களுக்கும் இடையில் நடந்த போர்; கர்ணனின் மற்றொரு மகனான விருஷசேனனைத் தேரற்றவனாக, ஆயுதமற்றவனாகச் செய்த சாத்யகி; விருஷசேனனைக் காத்த துச்சாசனன்; துச்சாசனனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; பாண்டவ வீரர்களைக் கலங்கடித்த கர்ணன், தடுக்கப்பட முடியாதவனாக யுதிஷ்டிரனின் படைப்பிரிவை அடைந்தது; யுதிஷ்டிரனைத் தாக்கிய கர்ணன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “கர்ணன், ஓ! சஞ்சயா, பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் ஊடுருவி, பேரழிவை ஏற்படுத்திய பிறகு, மன்னன் யுதிஷ்டிரனைத் தாக்கிப் பீடித்தது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வாயாக.(1) கர்ணனைத் தடுத்த பார்த்தர்களில் முதன்மையான வீரர்கள் யாவர்? அதிரதன் மகன் {கர்ணன்}, யுதிஷ்டிரனைப் பீடிப்பதில் வெல்வதற்கு முன்னர், அவனால் நொறுக்கப்பட்ட வீரர்கள் யாவர்?” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போருக்காக நின்றிருக்கும் திருஷ்டத்யும்னன் தலைமையிலான பார்த்தர்களைக் கண்டவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான கர்ணன், பாஞ்சாலர்களை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(3) அதே போலவே, வெற்றியடைய ஏங்கிய பாஞ்சாலர்கள், மோதலுக்கு முன்னேறிக் கொண்டிருந்த அந்த உயர்ஆன்மப் போர்வீரனை {கர்ணனை} எதிர்த்து, கடலை நோக்கி விரையும் அன்னங்களைப் போல வேகமாக விரைந்தனர்.(4) அப்போது, எதிரொலியால் இதயத்தைத் துளைத்துவிடுவதைப் போல முழங்கிய ஆயிரக்கணக்கான சங்குகளின் முழக்கங்களும், உரத்த மணியோசை போன்ற ஆயிரம் பேரிகைகளின் கடுமொலிகளும் இருபடைகளிலும் எழுந்தன.(5) அங்கே எழுந்த பல்வேறு இசைக்கருவிகளின் ஒலியும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றால் உண்டான ஒலிகளும், வீரர்களின் சிங்க முழக்கங்களும் மிகுந்த அச்சமூட்டின.(6) மலைகள், மரங்கள், பெருங்கடல்கள் ஆகியவற்றுடன் கூடிய மொத்த பூமியும், காற்றால் விரட்டப்படும் மேகங்களால் மறைக்கப்பட்ட மொத்த வானமும், சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றோடு சேர்ந்த மொத்த ஆகாயமும் அவ்வொலியால் நடுங்கியதாகத் தெரிந்தது.(7) அவ்வொலியைக் கேட்ட உயிரினங்கள் அனைத்தும் கலக்கமடைந்தன. அவற்றில் பலமற்ற சில இறந்தும் விழுந்தன.(8)

அப்போது, பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட கர்ணன், தன் ஆயுதங்களை வேகமாக அழைத்து, அசுரர்களின் படையைத் தாக்கும் மகவத்தை {இந்திரனைப்} போல, அந்தப் பாண்டவப் படையைத் தாக்கத் தொடங்கினான்.(9) பாண்டவப் படைக்குள் ஊடுருவி, தன் கணைகளை ஏவிய கர்ணன், பிரபத்ரகர்களில் எழுபத்தேழு முதன்மையான போர்வீரர்களைக் கொன்றான்.(10) பிறகு அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {கர்ணன்}, நல்ல சிறகுகளைக் கொண்ட இருபத்தைந்து கூரிய கணைகளால், இருபத்தைந்து பாஞ்சாலர்களையும் கொன்றான்.(11) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எதிரிகள் அனைவரின் உடல்களையும் துளைக்கவல்லவையுமான துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் அந்த வீரன் {கர்ணன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சேதிகளை {சைத்யர்களைக்} கொன்றான்.(12) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட அந்த அருஞ்செயல்களை அவன் {கர்ணன்} செய்து கொண்டிருந்த போது, பாஞ்சாலர்களின் பெருந்தேர்க்கூட்டங்கள் அவனை அனைத்துப் பக்கங்களிலும் விரைவாகச் சூழ்ந்து கொண்டன.(13) ஓ! பாரதரே, வைகர்த்தனன் என்றும், விருஷன் என்றும் வேறுபெயர்களில் அழைக்கப்பட்ட அந்தக் கர்ணன், தடுக்கப்பட முடியாத ஐந்து கணைகளைக் குறிபார்த்து, ஐந்து பாஞ்சால வீரர்களைக் கொன்றான்.(14) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அவன் {கர்ணன்} கொன்ற அந்த ஐந்து பாஞ்சாலர்கள், பானுதேவன், சித்திரசேனன், சேனாபிந்து, தபனன், சூரசேனன் ஆகியோராவார்.(15)

அந்தப் பெரும்போரில் பாஞ்சால வீரர்கள் இவ்வாறு கணைகளால் கொல்லப்பட்ட போது, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அந்தப் பாஞ்சாலப் படைக்கு மத்தியில் பெரும் கூச்சல்கள் கேட்டன.(16) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களில் பத்துத் தேர்வீரர்கள் கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர். கர்ணன் அவர்களையும் தன் கணைகளால் வேகமாகக் கொன்றான்.(17) கர்ணனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாத்தவர்களும், சுஷேணன், சத்யசேனன் என்ற பெயர்களைக் கொண்ட அவனது வெல்லப்பட முடியாத மகன்கள் இருவர், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போரிடத் தொடங்கினர்.(18) கர்ணனின் மூத்த மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விருஷசேனன், தன் தந்தையின் {கர்ணனின்} பின்புறத்தைப் பாதுகாத்து வந்தான்.(19)

அப்போது கவசம் தரித்தவர்களான திருஷ்டத்யும்னன், சாத்யகி, திரௌபதியின் ஐந்து மகன்கள், விருகோதரன் {பீமன்}, ஜனமேஜயன், சிகண்டி, பிரபத்ரகர்களில் முதன்மையான போர்வீரர்கள் பலர், சேதிகளில் {சைத்யர்களில்} பலர், கைகேயர்கள், பாஞ்சாலர்கள், இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்}, மத்ஸ்யர்கள் ஆகியோர் தாக்குவதில் திறம்பெற்றவனான ராதையின் மகனைக் {கர்ணனைக்} கொல்ல விரும்பி, அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.(20,21) அவன் {கர்ணன்} மீது பல்வேறு வகைகளிலான ஆயுதங்களையும், அடர்த்தியான கணைமாரியையும் பொழிந்த அவர்கள், மழைக்காலங்களில் மலைச்சாரல்களைப் பீடிக்கும் மேகங்களைப் போல அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(22) தங்கள் தந்தையைக் காக்க விரும்பியவர்களும், திறன் மிகத் தாக்குபவர்களுமான கர்ணனின் மகன்கள் அனைவரும், உமது படையைச் சேர்ந்த இன்னும் பிற வீரர்களும் அந்த (பாண்டவ) வீரர்களைத் தடுத்தனர்.(23)

சுஷேணன், அகன்ற தலை கணையொன்றால் பீமசேனனின் வில்லை அறுத்து, ஏழு துணிக்கோல் கணைகளால் பீமனையும் துளைத்து, பெருமுழக்கம் செய்தான்.(24) பயங்கர ஆற்றலைக் கொண்ட விருகோதரன் {பீமன்}, மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, விரைவாக அதற்கு நாணேற்றி, சுஷேணனின் வில்லை அறுத்தான்.(25) சினத்தால் தூண்டப்பட்டு (தன் தேரில்) நர்த்தனம் ஆடுபவனைப் போலத் தெரிந்த அவன் {பீமன்}, பத்து கணைகளால் சுஷேணனைத் தாக்கி, கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக எழுபது கூரிய கணைகளால் கர்ணனையும் துளைத்தான்.(26) பீமன், வேறு பத்து கணைகளால் குதிரைகள், சாரதி, ஆயுதங்கள், கொடிமரம் ஆகியவற்றைக் கொண்ட கர்ணனின் மற்றொரு மகனான பானுசேனனை, அவனது நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வீழ்த்தினான்.(27) சந்திரனைப் போன்ற அழகிய முகத்தைக் கொண்ட அந்த இளைஞனின் பார்வைக்குகந்த தலையானது, தண்டிலிருந்து கொய்யப்படும் தாமரையைப் போலக் கத்தி தலை கணை ஒன்றால் {க்ஷுரப்ரத்தால்} கொய்யப்பட்டது.(28) கர்ணனின் மகனை {பானுசேனனைக்} கொன்ற பீமன் , மீண்டும் உமது துருப்புகளைப் பீடிக்கத் தொடங்கினான். கிருபர் மற்றும் ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோரின் விற்களை அறுத்த அவன், அவ்விருவரையும் பீடிக்கத் தொடங்கினான்.(29) முழுக்க இரும்பாலான மூன்று கணைகளால் துச்சாசனனையும், ஆறால் சகுனியையும் துளைத்த அவன் {பீமன்}, உலூகன் மற்றும் (அவனது தம்பி) பதத்திரி ஆகியோரைத் தேரிழக்கச் செய்தான்.(30)

அடுத்ததாகச் சுஷேணனிடம், இவ்வார்த்தைகளில், “நீ கொல்லப்பட்டாய்” என்று சொன்ன பீமன் ஒரு கணையை எடுத்துக் கொண்டான். இருப்பினும் கர்ணன் அந்தக் கணையை வெட்டி, மூன்று கணைகளால் பீமனையும் தாக்கினான்.(31) பிறகு, பெரும் சீற்றத்துடன் கூடிய மற்றொரு நேரான கணையை எடுத்துக் கொண்ட பீமன், அதைச் சுஷேணன் மீது ஏவினான். ஆனால் விருஷன் {கர்ணன்} அக்கணையையும் வெட்டினான்.(32) அப்போது தன் மகனைக் காக்க விரும்பிய கர்ணன், கொடூரனான பீமசேனனுக்கு ஒரு முடிவைக்கொண்டுவர விரும்பி, எழுபத்துமூன்று கடுங்கணைகளால் பின்னவனை {பீமசேனனைத்} தாக்கினான்.(33) பிறகு, பெருங்கடினத்தைத் தாங்கவல்ல சிறந்த வில்லொன்றை எடுத்துக் கொண்ட சுஷேணன், ஐந்து கணைகால் நகுலனின் கரங்களையும், மார்பையும் தாக்கினான்.(34) அப்போதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்ல பலமான இருபது கணைகளால் தன் எதிராளியைத் துளைத்த நகுலன், பெருமுழக்கம் செய்து, கர்ணனை அச்சுறுத்தினான்.(35)

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கவனான அந்தச் சுஷேணன், பத்து கணைகளால் நகுலனைத் துளைத்து, கத்தி தலை கணையொன்றால் பின்னவனின் வில்லையும் வேகமாக அறுத்தான்.(36) அப்போது சினத்தால் மதியிழந்த நகுலன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, அந்தப் போரில் ஒன்பது கணைகளால் சுஷேணனைத் தடுத்தான்.(37) பகைவீரர்களைக் கொல்பவனான அவன் {நகுலன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கணை மாரியால் அனைத்து இடங்களையும் மறைத்து, சுஷேணனின் சாரதியைக் கொன்று, மூன்று கணைகளால் சுஷேணனையும் துளைத்து, பிறகு வெறு மூன்று அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} பெரும் பலம் கொண்ட அவனது {சுஷேனனின்} வில்லையும் மூன்று துண்டுகளாக வெட்டினான்.(38) சினத்தால் தன் உணர்வுகளை இழந்தவனான சுஷேணனும், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, அறுபது கணைகளால் நகுலனையும், ஏழால் சகாதேவனையும் துளைத்தான்.(39) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அந்த வீரர்களுக்கிடையில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததைப் போலக் கடும்போர் நேர்ந்தது.(40)

சாத்யகி, மூன்று கணைகளால் {கர்ணனின் மூத்த மகன்} விருஷசேனனின் சாரதியைக் கொன்று, பின்னவனின் வில்லை அகன்ற தலை கொண்ட கணையொன்றால் வெட்டி, ஏழு கணைகளால் அவனது குதிரைகளையும் தாக்கினான்.(41) மற்றொரு கணையால் அவனது கொடிமரத்தை நொறுக்கிய அவன் {சாத்யகி}, மூன்று கணைகளால் விருஷசேனனின் மார்பைத் தாக்கினான். இவ்வாறு தாக்கப்பட்ட விருஷசேனன், தன் தேரில் மயக்கமடைந்தாலும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மீண்டும் எழுந்து நின்றான்[1].(42) யுயுதானனால் {சாத்யகியால்}, தன் சாரதி, குதிரைகள், தேர் மற்றும் கொடிமரத்தை இழந்த விருஷசேனன், வேளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, யுயுதானனைக் {சாத்யகியை} கொல்லும் விருப்பதோடு அவனை எதிர்த்து விரைந்தான்.(43) எனினும் சாத்யகி, தன் எதிராளி தன்னை நோக்கி விரைந்துவந்த போது, பன்றியின் காதுகளைப் போன்ற தலைகளைக் கொண்ட பத்து கணைகளால் அவனது வாளையும், கேடயத்தையும் தாக்கினான்.(44) அப்போது துச்சாசனன், தேரற்றவனாகவும், ஆயுதங்களற்றவனாகவும் செய்யப்பட்ட விருஷசேனனைக் கண்டு, அவனை வேகமாகத் தன் தேரில் ஏறச் செய்து, அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அவனைக் கொண்டு சென்று, மற்றொரு வாகனத்தில் அவனைச் செல்லச் செய்தான்.(45)

வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன், மற்றொரு வாகனத்தில் ஏறி வந்து, எழுபது கணைகளால் திரௌபதியின் மகன்களையும், ஐந்தால் யுயுதானனையும் {சாத்யகியையும்},(46) அறுபத்துநான்கால் பீமசேனனையும், ஐந்தால் சகாதேவனையும், முப்பதால் நகுலனையும், ஏழால் சதானீகனையும்,(47) பத்தால் சிகண்டியையும், நூறால் மன்னன் யுதிஷ்டிரனையும் தாக்கினான். ஓ! ஏகாதிபதி, வெற்றியடைய விரும்பிய இவர்களையும், இன்னும் பிற முதன்மையான வீரர்கள் பலரையும்,(48) கர்ணனின் மகனான அந்தப் பெரும் வில்லாளி {விருஷசேனன்}, தன் கணைகளால் தொடர்ந்து பீடித்தான். அப்போது அந்தப் போரில் வெல்லப்பட முடியாதவனான விருஷசேனன், தொடர்ந்து கர்ணனின் பின்புறத்தைப் பாதுகாத்தான்.(49)

சிநியின் பேரன் {சாத்யகி}, முழுக்க இரும்பாலான தொண்ணூற்றொரு கணைகளால் துச்சாசனனைச் சாரதியற்றவனாகவும், குதிரைகளற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்து, பத்து கணைகளால் துச்சாசனனின் நெற்றியைத் தாக்கினான்.(50) (தேவையான அனைத்துடனும்) முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த மற்றொரு தேரில் ஏறிவந்த அந்தக் குரு இளவரசன் {துச்சாசனன்}, கர்ணனின் படைப்பிரிவுக்குள் இருந்தபடியே பாண்டவர்களோடு மீண்டும் போரிடத் தொடங்கினான்.(51) பிறகு, திருஷ்டத்யும்னன் பத்துக் கணைகளாலும், திரௌபதியின் மகன்கள் எழுபத்துமூன்றாலும், யுயுதானன் {சாத்யகி} ஏழாலும் கர்ணனைத் துளைத்தனர்.(52) பீமசேனன் அறுபத்துநான்கு கணைகளாலும், சகாதேவன் ஏழாலும் அவனைத் {கர்ணனைத்} துளைத்தனர். நகுலன் முப்பது கணைகளாலும், சதானீகன் ஏழாலும் அவனைத் துளைத்தனர். வீரச் சிகண்டி பத்தாலும், மன்னன் யுதிஷ்டிரன் ஒரு நூறு கணைகளாலும் அவனை {கர்ணனைத்} துளைத்தனர்.(53) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட இவர்களும், மனிதர்களில் முதன்மையானோரான இன்னும் பிறர் அனைவரும், பெரும் வில்லாளியான சூதன் மகனை {கர்ணனை} அந்தப் பயங்கரப் போரில் கலங்கடிக்கத் தொடங்கினர்.(54)

எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் வீரனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தன் தேரால் பல விரைவான பரிணாமங்களைச் செய்து, அந்தப் போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(55) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் பிறகு, உயர் ஆன்மக் கர்ணணால் வெளிக்காட்டப்பட்ட கரநளினத்தையும், அவனது ஆயுதங்களின் சக்தியையும் நாங்கள் கண்டோம்.(56) எப்போது அவனது கணைகளை எடுத்தான், எப்போது அவற்றைக் குறிபார்த்தான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை மக்களால் காண முடியவில்லை. அவனது கோபத்தின் விளைவால், அவனது எதிரிகள் வேகமாக இறப்பதை மட்டுமே அவர்கள் கண்டனர்.(57) வானம், ஆகாய விரிவு, பூமி, மற்றும் இடங்கள் அனைத்தும் கூரிய கணைகளால் முற்றாக மறைக்கப்பட்டதாகத் தெரிந்தது. செம்மேகங்களால் மறைக்கப்பட்டதைப் போல ஆகாயம் பிரகாசமாகத் தெரிந்தது.(58)

வில் தரித்த ராதையின் வீர மகன் {கர்ணன்}, (தன் தேரில்) நர்த்தனம் ஆடுபவனைப் போல, தன்னைத் துளைத்துத் தாக்கியவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று மடங்கு கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.(59) மீண்டும் அவன் {கர்ணன்}, அவர்கள் ஒவ்வொருவரையும், அவர்களுடைய குதிரைகள், சாரதி, தேர் மற்றும் கொடிமரம் ஆகியவற்றையும் பத்து பத்து கணைகளால் துளைத்துப் பெருமுழக்கம் செய்தான். பிறகு, அவனைத் தாக்கியவர்கள் (அவன் கடந்து செல்லும் வகையில்) அவனுக்கு வழிவிட்டனர்.(60) கணைமாரிகளால் அந்த வலிமைமிக்க வில்லாளிகளை நொறுக்கியவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான அந்த ராதையின் மகன், பாண்டவ மன்னனால் {யுதிஷ்டிரனால்} தலைமைதாங்கப்பட்ட படைப்பிரிவுக்கு மத்தியில் தடுக்கப்பட முடியாதவனாக ஊடுருவினான்.(61) பின்வாங்காதவர்களான சேதிகளின் முப்பது தேர்களை அழித்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, கூரிய கணைகள் பலவற்றால் யுதிஷ்டிரனைத் தாக்கினான்.(62) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிகண்டி, சாத்யகி ஆகியோரோடு கூடிய பாண்டவப் போர்வீரர்கள் பலர், ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} இருந்து மன்னனை {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பி அவனை {யுதிஷ்டிரனைச்} சூழந்து கொண்டனர்.(63) அதே போலவே, உமது படையைச் சார்ந்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான அனைவரும், அந்தப் போரில் தடுக்கப்பட முடியாத கர்ணனை உறுதியான தீர்மானத்தோடு பாதுகாத்தனர்.(64) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளும், துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் சிங்க முழக்கங்களும் விண்ணைப் பிளந்தன.(65) சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையிலான குருக்களும், யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்களும் அச்சமில்லாமல் மீண்டும் ஒருவரோடொருவர் மோதினர்” {என்றான் சஞ்சயன்}.(66)

யுதிஷ்டிரனை எள்ளிநகையாடிய கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 49-யுதிஷ்டிரனை நோக்கி விரைந்த கர்ணன்; கர்ணனை அறைகூவி அழைத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனால் தாக்கப்பட்டுத் தன் தேரில் மயக்கமடைந்து விழுந்த கர்ணன்; விரைவில் உணர்வு மீண்ட கர்ணன், யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரத்தைப் பாதுகாத்த சந்திரதேவன் மற்றும் தண்டதாரன் ஆகியோரைக் கொன்றது; யுதிஷ்டிரனின் மேனியில் கர்ணன் ஆழமான காயத்தை உண்டாக்கியது; பிரம்மாஸ்திரத்தை ஏவிய கர்ணன்; யுதிஷ்டிரனின் வில்லையும் கவசத்தையும் அறுத்த கர்ணன்; கர்ணனை வேல்களால் தாக்கி அவனுக்குக் குருதியைக் கொப்பளிக்க வைத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் தேரை அழித்த கர்ணன்; புறமுதுகிட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைத் தொடர்ந்து சென்று, அவனது தோள்களைத் தீண்டி, எள்ளி நகையாடிய கர்ணன்; யுதிஷ்டிரனை விடுவித்த கர்ணன்; சுரூதகீர்த்தியின் தேரில் ஏறிக் கொண்ட யுதிஷ்டிரன்; போரின் கோரத்தை வர்ணித்த சஞ்சயன்; களத்தில் பாய்ந்த குருதிப்புனல்; திரும்பி வந்த பீமசேனன் மற்றும் சாத்யகியின் தலைமையிலான பாண்டவ வீரர்களிடம் புறமுதுகிட்டோடிய கௌரவப்படை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவப்படையின் ஊடாகச் சென்ற கர்ணன், ஆயிரக்கணக்கான தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள் ஆகியோரால் சூழப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான்.(1) எதிரிகளால் தன் மீது ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ஆயுதங்களைத் தன் நூற்றுக்கணக்கான கடுங்கணைகளால் வெட்டிய விருஷன் {கர்ணன்}, அச்சமில்லாமல் அப்படையைத் துளைத்துச் சென்றான்.(2) உண்மையில், சூதனின் மகன் {கர்ணன்}, தன் எதிரிகளின் தலைகளையும், கரங்களையும், தொடைகளையும் வெட்டினான், அவர்களும் உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(3) சாத்யகியால் தூண்டப்பட்ட திராவிட, அந்தக, நிஷாத காலாட்படை வீரர்கள், கர்ணனைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில அவனை நோக்கி மீண்டும் விரைந்தனர்.(4) கரங்கள், தலைக்கவசங்கள் ஆகியவற்றை இழந்து, கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், (கோடரியால்) வெட்டப்பட்ட சாலமரக் காட்டைப் போல அடுத்தடுத்து கீழே விழுந்தனர்.(5)

இவ்வாறு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான போராளிகள் உயிரை இழந்து, தங்கள் புகழால் மொத்த ஆகாயத்தையும் நிறைத்து, தங்கள் உடல்களுடன் பூமியில் விழுந்தனர்.(6) வைகர்த்தனன் என்று வேறு பெயரில் அழைக்கப்பட்ட கர்ணன், அந்தகனைப் போலப் போரில் கோபத்துடன் திரிந்து கொண்டிருந்தபோது, மந்திரங்கள் மற்றும் மருந்துகளால் நோயைத் தடுக்க முயலும் மக்களைப் போலப் பாண்டுக்களும், பாஞ்சாலர்களும் அவனுக்குத் {கர்ணனுக்குத்} தடைகளை ஏற்படுத்தினர்.(7) தாக்குபவர்களான அவர்கள் அனைவரையும் நொறுக்கிய கர்ணன், மந்திரங்கள், மருந்துகள் மற்றும் (தணிவடையச் செய்யும்) சடங்குகளால் தடுக்கப்பட முடியாத தாங்கிக் கொள்ள முடியாத நோயைப் போல, யுதிஷ்டிரனை நோக்கி மீண்டும் விரைந்தான்.(8) இறுதியாக, மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பிய பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், கைகேயர்கள் ஆகியோர் அனைவராலும் தடுக்கப்பட்ட கர்ணன், பிரம்மத்தை அறிந்த மனிதர்களை வெல்ல முடியாத காலனைப் போல அவர்களைக் கடந்து செல்வதில் வெல்லவில்லை.(9)

அப்போது கோபத்தால் கண்கள் சிவந்த யுதிஷ்டிரன், பகைவீரர்களைக் கொல்பவனும், சற்றுத் தொலைவில் தடுக்கப்பட்டிருந்தவனுமான கர்ணனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான்,(10) “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! வீண் நோக்குள்ளவனே. ஓ! சூதனின் மகனே, என் வார்த்தைகளைக் கேட்பாயாக. சுறுசுறுப்பான பல்குனனை {அர்ஜுனனை} நீ எப்போதும் அறைகூவி அழைக்கிறாய்.(11) திருதராஷ்டிரர் மகனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, நீ எப்போதும் எங்களை எதிர்க்க முயல்கிறாய். உன் பெரும் ஆற்றலைத் திரட்டி, உன் வலிமை அனைத்தையும், உன் சக்தி அனைத்தையும், மற்றும் பாண்டுவின் மகன்களிடம் நீ கொண்டுள்ள வெறுப்பனைத்தையும் இன்று காட்டுவாயாக.(12) இன்றைய பயங்கர போரில், போருக்கான உன் அசையை நான் அகற்றுவேன்” {என்றான் யுதிஷ்டிரன்}.(13)

இவ்வார்த்தைகளைச் சொன்ன பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முழுக்க இரும்பாலானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான பத்து கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(14) ஓ! பாரதரே, எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் வில்லாளியுமான சூதன் மகன் {கர்ணன்}, பெருங்கவனத்துடன், கன்றின் பற்களைப் போன்ற தலைகளைக் கொண்ட பத்து கணைகளால் {வத்ஸதந்தங்களால்} பதிலுக்கு யுதிஷ்டிரனைத் துளைத்தான்.(15) ஏளனமாகச் சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு துளைக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் நெய்யேற்கும் நெருப்பைப் போலக் கோபத்துடன் சுடர்விட்டெரிந்தான்.(16) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், உறுதிமிக்கதுமான வில்லை வளைத்த அந்தப் பாண்டுவின் மகன், வில்லின் நாண்கயிற்றில் மலைகளையே துளைக்கவல்ல கூரிய கணை ஒன்றைப் பொருத்தினான்.(17) வில்லை முழுமையாக வளைத்த அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்தால், காலனின் கணையைப் போன்று அழிவைத் தரக்கூடிய அந்தக் கணையை வேகமாக ஏவினான்.(18)

பெரும் வலிமை கொண்ட மன்னனால் {யுதிஷ்டிரனால்} ஏவப்பட்டதும், இடிக்கு ஒப்பானதும், “விஸ்” என்ற ஒலியைக் கொண்டதுமான அந்தக் கணை வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனின் இடது பக்கத்தைத் திடீரெனத் துளைத்தது.(19) அந்தத் தாக்குதலின் பலத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட கர்ணன், பலவீனமடைந்த அங்கங்களுடன், கரங்களில் இருந்து தன் வில் தளர்ந்து விழத் தன் தேரில் மயக்கமடைந்து விழுந்தான்.(20) கர்ணனை அந்தப் பரிதாப நிலையில் கண்ட அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையானது “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறியது, போராளிகளின் முகங்கள் அனைத்தும் நிறமிழந்தன.(21) மறுபுறம், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆற்றலைக் கண்ட பாண்டவர்களுக்கு மத்தியில் சிங்க முழக்கங்களும், கூச்சல்களும், குழப்பமான இன்பக் கதறல்களும் எழுந்தன.(22)

எனினும், கடும் ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்}, விரைவில் உணர்வுகள் மீண்டு, தன் இதயத்தை யுதிஷ்டிரனின் அழிவில் நிலைநிறுத்தினான்.(23) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், விஜயம் என்றழைக்கப்படுவதுமான தன் உறுதிமிக்க வில்லை வளைத்த அளவிலா ஆன்மா கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தன் கூரிய கணைகளால் பாண்டுவின் மகனைத் {யுதிஷ்டிரனைத்} தடுக்கத் தொடங்கினான்.(24) அம்மோதலில் அவன் {கர்ணன்}, உயர் ஆன்ம யுதிஷ்டிரனுடைய தேரின் இருச்சக்கரங்களைப் பாதுகாத்த பாஞ்சால இளவரசர்களான சந்திரதேவன் மற்றும் தண்டதாரன் ஆகிய இருவரையும் கத்தி தலை கணைகள் இரண்டால் கொன்றான்.(25) யுதிஷ்டிரனுடைய தேரின் பக்கங்களில் நின்றிருந்த அந்த வீரர்கள் இருவரும், சந்திரனுக்குப் பக்கத்தில் இருந்து புனர்வசு {புனர்பூச} நட்சத்திரக்கூட்டத்தைப் [1] போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(26) எனினும், யுதிஷ்டிரன் மீண்டும் முப்பது கணைகளால் கர்ணனைத் துளைத்தான். மேலும் அவன், சுஷேணன் மற்றும் சத்யசேனன் என்ற இருவரில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் தாக்கினான்.(27) மேலும் அவன் கர்ணனைப் பாதுகாத்த ஒவ்வொருவரையும் மும்மூன்று நேரான கணைகளால் துளைத்தான்.(28)

அப்போது, சிரித்துக் கொண்டே தன் வில்லை அசைத்த அதிரதன் மகன் {கர்ணன்}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} மன்னனின் {யுதிஷ்டிரனின்} உடலில் ஓர் ஆழமான காயத்தை ஏற்படுத்தி, மீண்டும் அறுபது கணைகளால் அவனைத் துளைத்து, உரக்க முழங்கினான்.(29) அப்போது பாண்டவர்களில் முதன்மையான வீரர்கள் பலர், மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பி கர்ணனை நோக்கி கோபத்தோடு விரைந்து, தங்கள் கணைகளால் அவனைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.(30) சாத்யகி, சேகிதானன், யுயுத்சு, சிகண்டி, திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள்,(31) இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்), பீமசேனன், சிசுபாலன் {சிசுபாலனின் மகனாக இருக்க வேண்டும்}, காருஷர்கள், மத்ஸ்யர்கள், சூரர்கள், கைகேயர்கள், காசிகள் மற்றும் கோசலர்கள்(32) ஆகிய இந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள் அனைவரும், பெரும் சுறுசுறுப்புடன் அந்த வசுசேனனை {கர்ணனைத்} தாக்கினர். பாஞ்சால இளவரசனான ஜனமேஜயன், கர்ணனைப் பல கணைகளால் துளைத்தான்.(33)

பல்வேறு வகைகளிலான கணைகள்[2], பல்வேறு ஆயுதங்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த பாண்டவ வீரர்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் துணையுடன் கர்ணனை நோக்கி விரைந்து, அவனைக் கொல்ல விரும்பி, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டனர்.(34,35) இவ்வாறு அந்தப் பாண்டவப் போர்வீரர்களில் முதன்மையானோரால் அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்பட்ட கர்ணன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் கணைகளால் நிறைத்தான்.(36) பிறகு அந்த வீரக் கர்ணன், சுடர்மிக்க நெருப்பைப் போல, எரியும் தழல்களைக் கணைகளாகக் கொண்டு, பாண்டவத் துருப்புகள் எனும் காட்டை எரித்துப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(37) உயர் ஆன்மா கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கர்ணன், சில வலிமைமிக்க ஆயுதங்களைக் குறிபார்த்து, சிரித்துக் கொண்டே, மனிதர்களில் முதன்மையானவனான அந்த யுதிஷ்டிரனின் வில்லை அறுத்தான்.(38)

மேலும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாகத் தொண்ணூறு நேரான கணைகளைக் குறிபார்த்த கர்ணன், அந்தக் கூர்மையான கணைகளால் தன் எதிராளியின் {யுதிஷ்டிரனின்} கவசத்தை அறுத்தான்.(39) காற்றால் விரட்டப்படும் மேகங்கள் சூரியக் கதிர்களால் துளைக்கப்படுவதைப்போலத் தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கவசமானது, கீழே விழும்போது அழகாகத் தெரிந்தது.(40) உண்மையில், விலையுயர்ந்த சிறந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கவசம், மனிதர்களில் முதன்மையான அவனுடைய உடலில் இருந்து விழுந்தபோது, இரவில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் ஆகாயத்தைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(41) அக்கணைகளால் கவசம் அறுபட்ட அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, குருதியால் மறைக்கப்பட்டு, கோபத்துடன் முழுக்க இரும்பாலான ஈட்டி ஒன்றை அந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(42) எனினும் கர்ணன், அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தபோதே, ஏழு கணைகளால் அதை (துண்டுகளாக) வெட்டினான்.(43)

அப்போது யுதிஷ்டிரன், நான்கு வேல்களால் கர்ணனின் இரு கரங்களையும், நெற்றியையும், மார்பையும் தாக்கி மீண்டும் மீண்டும் பெருமுழக்கம் செய்தான்.(44) அதன்பேரில், கர்ணனின் காயங்களில் இருந்து குருதி கொப்பளித்தது, இதனால் சினத்தால் நிறைந்து, பாம்பொன்றைப் போல மூச்சு விட்ட அவன் {கர்ணன்}, தன் எதிராளியின் கொடிமரத்தை வெட்டி, மூன்று அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அந்தப் பாண்டவனையும் {யுதிஷ்டிரனையும்} துளைத்தான்.(45) மேலும் அவன் {கர்ணன்}, (தன் எதிரி கொண்டிருந்த) அம்பறாத்தூணிகள் இரண்டையும், (அவன் {யுதிஷ்டிரன்} செலுத்திவந்த) தேரையும் நுண்ணியத் துண்டுகளாக வெட்டினான். அதன் பேரில், தந்தங்களைப் போன்ற வெண்ணிறத்தைக் கொண்டவையும், வாலில் கருப்பு முடிகளைக் கொண்டவையும், வழக்கமாக (போருக்கு) அவனைச் {யுதிஷ்டிரனைச்} சுமந்து வருபவையுமான குதிரைகள் பூட்டப்பட்ட மற்றொரு தேரில் ஏறி, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, தப்பி ஓடத் தொடங்கினான் {புறமுதுகிட்டு ஓடினான்}. இவ்வாறே பார்ஷினி சாரதி கொல்லப்பட்ட யுதிஷ்டிரன் பின்வாங்கத் தொடங்கினான்.(46,47) அவன் {யுதிஷ்டிரன்} மிகவும் உற்சாகமற்ற நிலையை அடைந்து, கர்ணனின் முன்னால் நிற்க முடியாதவனான். அப்போது, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்ற ராதையின் மகன் {கர்ணன்},(48) பலவந்தமாக அவனைக் கைப்பற்ற விரும்பி, அவனது தோள்களைத் தீண்டி, வஜ்ரம், குடை, அங்குசம், மீன், கொடி, ஆமை, சங்கு, ஆகிய மங்கலக் குறிகளால் அருளப்பட்ட (உள்ளங்கையைக் கொண்ட) தன் அழகான கையைத் தூய்மையாக்கிக் கொண்டான்.(49,50)

அப்போது சல்லியன், அவனிடம் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, மன்னர்களில் சிறந்த இவனைப் பிடிக்காதே. நீ அவனைப் பிடித்ததும், உன்னையும், என்னையும் அவன் சாம்பலாகக் குறைத்துவிடுவான்” என்றான்[3].(51) அப்போது எள்ளி நகையாடிய கர்ணன், அவனை {யுதிஷ்டிரனை} இழித்துரைக்கும் வகையில், “உன்னதக் குலத்தில் பிறந்து, க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுபவனாக இருந்தாலும், உன் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பி அச்சத்தால் போரை விட்டு எவ்வாறு நீ விலகுகிறாய்? க்ஷத்திரியக் கடமைகளை நீ நன்கறிந்தவனில்லை என நான் நினைக்கிறேன்.(52,53) பிரம்ம சக்தியைக் கொண்ட நீ, உண்மையில் வேத கல்வி கற்பதிலும், வேள்விச் சடங்குகளைச் செய்வதிலும் அர்ப்பணிப்புள்ளவனாவாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, மீண்டும் போரிடாதே, துணிவுமிக்க வீரர்களை நீ மீண்டும் அணுகாதே.(54) வீரர்களை நோக்கி கடுமொழியில் பேசாதே, மேலும் பெரும்போர்களுக்கு நீ வராதே. ஓ! ஐயா, நீ இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம், ஆனால், எங்களைப் போன்றோரிடம் அவ்வழியில் இனி ஒருபோதும் பேசாதே.(55) எங்களைப் போன்றோரிடம் இவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், போரில் இதையும், இன்னும் பிற வகை நடத்தைகளையும் நீ சந்திக்க நேரிடும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உன் இடத்திற்குத் திரும்பிச் செல்வாயாக, அல்லது கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோர் எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வாயாக.(56) உண்மையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உன்னைப் போன்ற ஒருவனைக் கர்ணன் ஒருபோதும் கொல்ல மாட்டான்” என்றான் {கர்ணன்}.

பிருதையின் மகனிடம் {{குந்தியின் மகன் யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன வலிமைமிக்கக் கர்ணன், யுதிஷ்டிரனை விடுவித்துவிட்டு,(57) அசுரப்படையைக் கொல்லும் வஜ்ரதாரியை {இந்திரனைப்} போலப் பாண்டவப் படையைக் கொல்லத் தொடங்கினான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மனிதர்களின் ஆட்சியாளன் (யுதிஷ்டிரன்) தப்பி ஓடினான்.(58) மன்னன் தப்பி ஓடுவதைக் கண்ட சேதிகள், பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும், மங்கா மகிமையைக் கொண்ட அந்த ஏகாதிபதியைப் பின்தொடர்ந்து சென்றனர்.(59) திரௌபதியின் மகன், சூரர்கள், பாண்டுவுக்கு மாத்ரியிடத்தில் உண்டான இரட்டை மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, ஆகியோரும் மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர். யுதிஷ்டிரனின் படைப்பிரிவு பின்வாங்குவதைக் கண்ட வீரக் கர்ணன், குருக்கள் அனைவருடன் சேர்ந்து மிகவும் மகிழ்ந்து, புறமுதுகிடும் படையைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினான். பேரிகைகள், சங்குகள், மிருதங்கங்கள், விற்கள் ஆகியவற்றின் ஆரவாரங்களும்,(60,61) சிங்க முழக்கங்களும் தார்தராஷ்டிரத் துருப்புகளுக்கு மத்தியில் எழுந்தன. அதேவேளையில், ஓ! குருகுலத்தவரே {திருதராஷ்டிரரே}, சுரூதகீர்த்தியின் தேரில் வேகமாக ஏறிச் சென்ற யுதிஷ்டிரன், கர்ணனின் ஆற்றலைக் காணத் தொடங்கினான். பிறகு, தன் துருப்புகள் வேகமாகக் கொல்லப்படுவதைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன்,(62,63) சினத்தால் நிறைந்து, தன் போர்வீரர்களிடம், “இந்த எதிரிகளைக் கொல்வீராக. ஏன் செயலற்று இருக்கிறீர்கள்?” என்று ஆணையிட்டான்.

அப்போது, மன்னனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பீமசேனன் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவர்கள் அனைவரும் உமது மகன்களை எதிர்த்து விரைந்தனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (இரு படைகளைச் சேர்ந்த) போர்வீரர்களின் கூச்சல்களும், தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியும், ஆயுதங்களின் மோதலொலியும் மிகப் பெரிதாக இருந்தன. “முயல்வீர், தாக்குவீர், எதிரியை எதிர்ப்பீர்”(64-66) போன்ற வார்த்தைகளையே அந்தப் பயங்கரப் போரில் போராளிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். அவர்களால் ஏவப்பட்ட கணைமாரியின் விளைவாக, மேகங்களால் உண்டானதைப் போன்ற ஒரு நிழல் போர்க்களமெங்கும் பரவியது.(67) அந்த மனிதர்களின் ஆட்சியாளர்கள் கணைகளால் மறைத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதன் விளைவாக, அந்தப் போரில் அவர்கள், கொடிகள், கொடிமரங்கள், குடைகள், குதிரைகள், சாரதிகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றை இழந்தவர்களானார்கள்.(68) உண்மையில், அந்தப் பூமியின் தலைவர்கள், உயிரையும், அங்கங்களையும் இழந்துபூமியில் விழுந்தனர்.

சமமற்ற முதுகுகள் கொண்டதன் விளைவாக மலைச்சிகரங்களைப் போலத் தெரிந்த பெரும் யானைகள்,(69) தங்கள் சாரதிகளோடு சேர்ந்து, இடியால் பிளக்கப்பட்ட மலைகளைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தன. ஆயிரக்கணக்கான குதிரைகளும், தங்கள் கவசங்கள், கருவிகள், மற்றும் அலங்காரங்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு, உடைக்கப்பட்டு, தளரச் செய்யப்பட்டு, தங்கள் வீரச் சாரதிகளுடன் சேர்ந்து உயிரையிழந்து கீழே விழுந்தன. தேர்வீரர்கள் தங்கள் பிடியில் இருந்து ஆயுதங்கள் தளர்ந்து, (பகை) தேர்வீரர்களால் தங்கள் தேர்களையும், உயிரையும் இழந்தனர். காலாட்படைவீரர்களின் பெருங்கூட்டங்கள் அந்தப் பயங்கர மோதலில் பகைவீரர்களால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன. தாமிர வண்ணத்தில் அகன்று விரிந்திருந்த கண்களாலும், தாமரை, அல்லது சந்திரன் போன்ற அழகிய முகங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தலைகளால், போர்வெறி ஏறிய அந்த வீரப் போராளிகளின் தலைகளால் பூமியானது மறைக்கப்பட்டது.(70-72) பூமியில் துணிவுமிக்க எதிரிகளால் நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டுப் புதிதாக {சொர்க்கத்திற்கு} வந்த வீரர்களை தெய்வீகப் பாடற்கலைஞர்கள் எவற்றைக் கொண்டு தொடர்ந்து வரவேற்றனரோ, அவர்களை {அப்படி வந்தோரை} எந்த வாகனங்களில் அமர்த்தி (இந்திரலோகத்தை நோக்கிக்) கொண்டு சென்றனரோ, அந்தத் தெய்வீகத் தேர்களில் இருந்த அப்சரஸ் பெருங்கூட்டத்தில் இருந்து வந்த இசை மற்றும் பாடல்களின் விளைவாக வானத்தில் கேட்கப்படும் ஒலியைப் போன்ற பேரொலியை பூமியின் பரப்பிலும் மக்கள் கேட்டனர். அந்த அற்புதக் காட்சிகளைத் தங்கள் கண்களாலேயே நேரடியாகக் கண்டு, சொர்க்கத்திற்குச் செல்லும் விரும்பிய வீரர்கள்,(73-75) உற்சாகமிக்க இதயங்களுடன் வேகமாக ஒருவரையொருவர் கொன்றனர். அந்தப் போரில் தேர்வீரர்கள் {வேறு} தேர்வீரர்களுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படை வீரர்களுடனும், அழகாகப் போரிட்டனர்,(76) யானைகள் யானைகளுடனும், குதிரைகள் குதிரைகளுடனும் அழகாகப் போரிட்டன. உண்மையில், யானைகளுக்கும், குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் அழிவைத் தந்த அந்தப் போரானது இவ்வாறு நடந்து கொண்டிருந்த போது,(77) துருப்புகளால் எழுப்பப்பட்ட புழுதியால் போர்க்களம் மறைக்கப்பட்டது.

பிறகு, எதிரிகள் எதிரிகளைக் கொன்றனர், நண்பர்களும் நண்பர்களைக் கொன்றனர். வாழ்வுக்கும், பாவங்களுக்கும் அழிவைத் தந்த அந்தக் கடும்போரில், போராளிகள் ஒருவரையொருவர் குழலைப் {மயிரைப்} பிடித்திழுத்தும், தங்கள் பற்களால் ஒருவரையொருவர் கடித்தும், நகங்களால் ஒருவரையொருவர் கிழித்தும்,(78) விரல்மடக்கி முட்டியால் ஒருவரையொருவர் தாக்கியும், வெறும் கரங்களால் ஒருவருடனொருவர் போரிடவும் செய்தனர். உண்மையில், யானைகளுக்கும், குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் பேரழிவைத் தந்த அந்தப் போர் இவ்வாறு மூர்க்கமாக நடந்து கொண்டிருந்த போது,(79) (கொல்லப்பட்ட) மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்களில் இருந்து ஒரு குருதி ஆறே பாய்ந்தது. அந்த ஓடையானது {குருதி ஆறானது} யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் இறந்த உடல்களைப் பெரும் எண்ணிக்கையில் கொண்டு சென்றது.(80) உண்மையில், மனிதர்கள், குதிரைகள், யானைகள், நிறைந்த அந்தப் பரந்த படையில், மனிதர்கள், குதிரைகள், யானைகள், குதிரைவீரர்கள் மற்றும் யானைவீரர்கள் ஆகியோரால் உண்டான அந்த ஆறு, சதையால் {இறைச்சியால்} சகதியாகி மிகப் பயங்கரமாக இருந்தது.(81) மருண்டோரை அச்சங்கொள்ள வைத்த அந்த ஓடையில், மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்கள் மிதந்தன. வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட சில போராளிகள் அதை வேகமாகக கடந்து சென்றனர், சிலர் மறுபக்கத்திலேயே இருந்தனர்.(82) சிலர் அதன் ஆழங்களுக்குள் பாய்ந்தனர், சிலர் அதில் மூழ்கினர், சிலர் அதன் பரப்பிற்கு எழுந்து அதை நீந்திக் கடந்தனர். மேனியெங்கும் குருதியால் பூசப்பட்ட அவர்களது கவசங்களும், ஆயுதங்களும், ஆடைகளும் என அனைத்தும் குருதியாகவே இருந்தன.(83) சிலர் அதில் நீராடினர், சிலர் அதைக் குடித்தனர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிலர் பலவீனமடைந்தனர். தேர்கள், குதிரைகள், மனிதர்கள், யானைகள், ஆயுதங்கள் ஆபரணங்கள்,(84) ஆடைகள், கவசங்கள், கொல்லப்பட்டோ, கொல்லப்படவோ இருந்த போராளிகள், பூமி, வானம், ஆகாய விரிவு, திசைப்புள்ளிகள் என அனைத்தும் சிவப்பாயின.(85) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மணம், தீண்டல், சுவை, அந்தக் குருதியின் மிகச் சிவப்பான காட்சி, அதன் பாயும் ஒலி,(86) ஆகியவற்றுடன் கிட்டத்தட்ட அனைத்துப் போராளிகளுமே உற்சாகத்தை மிகவும் இழந்தனர்.

அப்போது, பீமசேனன் மற்றும் சாத்யகியின் தலைமையிலான பாண்டவ வீரர்கள், தங்களை ஏற்கனவே வீழ்த்திய அந்த (குரு) படையை எதிர்த்து மீண்டும் மூர்க்கமாக விரைந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விரைந்து வரும் அந்தப் பாண்டவ வீரர்களின் மூர்க்கம் தடுக்கப்பட முடியாததாக இருப்பதைக் கண்ட(87,88) உமது மகன்களின் அந்தப் பரந்த படை அந்தப் போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடியது. உண்மையில், தேர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்கள் நிறைந்த உமது படையானது, எதிரியால் கலங்கடிக்கப்பட்டு, கட்டுக்கோப்பான வியூகமாக மேலும் நீடித்திராமல், கவசங்கள் இடம்பெயர்ந்து, தங்கள் பிடியில் இருந்த ஆயுதங்கள் மற்றும் விற்கள் தளர்ந்து, காட்டில் சிங்கங்களால் பீடிக்கப்படும் யானைக் கூட்டத்தைப் போல அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின” {என்றான் சஞ்சயன்}.(89,90)

கர்ணனை வீழ்த்திய பீமன்! – கர்ண பர்வம் பகுதி – 50-பீமனை எதிர்த்து விரைந்த கௌரவர்கள்; பீமனை நோக்கிச் சென்ற கர்ணன்; யுதிஷ்டிரனைச் சாத்யகியிடமும், திருஷ்டத்யும்னனிடம் அடைக்கலமாய் விட்டுச் சென்ற பீமன்; கர்ணனை எதிர்த்த பீமன்; அர்ஜுனன் வரக்கூடும் என்பதால், பீமனைத் தாக்கப் போவதாகச் சொன்ன கர்ணன்; ஆமோதித்த சல்லியன்; கணைகளால் பீமனின் நடுமார்பைத் தாக்கி அவனது வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனைக் கொல்ல விரும்பி பீமன் ஏவிய கடுங்கணை ஒன்றால் தாக்கப்பட்டுத் தன் தேரில் மயக்கமடைந்து விழுந்த கர்ணன்; போர்க்களத்தைவிட்டுக் கர்ணனைக் கொண்டு சென்ற சல்லியன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவ வீரர்கள் உமது படையை நோக்கி மூர்க்கமாக விரைவதைக் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, தன் படையின் போர்வீரர்களை {அவர்கள் புறமுதுகிடாதபடி} அனைத்துப் பக்கங்களிலும் தடுத்தான். எனினும், உமது மகன் {துரியோதனன்} தன் குரலின் உச்சியில் கதறினாலும், ஓ! மன்னா, தப்பி ஓடும் அவனது துருப்புகள், ஓடுவதை நிறுத்த மறுத்தன.(1,2) அப்போது அந்தப் படையின் ஒரு சிறகும், அந்தச் சிறகுகளின் எல்லைகளில் இருந்தோரும், சுபலனின் மகன் சகுனியும், கௌரவர்களும், நன்கு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு அந்தப் போரில் பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(3) மன்னர்கள் அனைவருடன் கூடிய தார்தராஷ்டிரப் படையானது புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட கர்ணனும், மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “பீமனை நோக்கித் தேரைச் செலுத்துவீராக” என்றான்.(4) இவ்வாறு கர்ணனால் தூண்டப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அன்னங்களின் வண்ணத்தில் இருந்த அந்த முதன்மையான குதிரைகளை விருகோதரன் {பீமன்} இருக்கும் இடத்தை நோக்கித் தூண்டத் தொடங்கினான்.(5) இவ்வாறு போர்க்கள ரத்தினமான சல்லியனால் தூண்டப்பட்ட அந்தக் குதிரைகள், பீமசேனனின் தேரை அணுகிப் போரில் கலந்தது.(6)

அதேவேளையில் கர்ணன் அணுகுவதைக் கண்ட பீமன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, கர்ணனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(7) வீரச் சாத்யகி மற்றும் பிருஷதனின் {துருபதனின்} மகனான திருஷ்டத்யும்னன் ஆகியோரிடம் பேசிய அவன் {பீமன்}, நல்லான்மா கொண்ட மன்னர் யுதிஷ்டிரரை நீங்கள் இருவரும் பாதுகாப்பீராக. என் கண்களுக்கு முன்பாகவே பெரும் ஆபத்தான நிலையில் இருந்து அவர் {யுதிஷ்டிரர்} தப்பித்தது மிகக் கடினமாக இருந்தது.(8) துரியோதனின் மனநிறைவுக்காகத் தீய ஆன்மா கொண்ட ராதையின் மகனால் {கர்ணனால்}, மன்னரின் கவசமும், அவரது ஆடைகளும் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிளந்து கிழிக்கப்பட்டன.(9) ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, நான் இன்று துயரின் முடிவை எட்டப் போகிறேன். நான் இன்று போரில் கர்ணனைக் கொல்வேன், அல்லது பயங்கரப் போரில் கர்ணன் என்னைக் கொல்வான். நான் இதை உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(10) இன்று மன்னரை {யுதிஷ்டிரரை} நான் ஒரு புனிதப் பற்றாக {அடைக்கலப் பொருளாக} உன்னிடம் அளிக்கிறேன். மன்னரைப் {யுதிஷ்டிரரைப்} பாதுகாப்பதற்காக உற்சாகம் நிறைந்த இதயங்களுடன், இன்று நீங்கள் முயல்வீராக” என்றான் {பீமன்}.(11)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், ஒரு சிங்க முழக்கத்தால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தபடி அதிரதன் மகனை {கர்ணனை} நோக்கிச் சென்றான்.(12) போரில் மகிழ்பவனான பீமன் வேகமாக முன்னேறுவதைக் கண்ட பலமிக்க மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(13) சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, சினத்தில் நிறைந்திருக்கும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டு மகனை {பீமனைப்} பார். பல ஆண்டுகளாகப் பேணப்பட்ட அவனது {பீமனது} கோபத்தை உன்மீது அவன் கக்க விரும்புகிறான் என்பதில் ஐயமில்லை.(14) இதற்கு முன்னர் இத்தகு வடிவத்தை அவன் {பீமன்} ஏற்றதில்லை. அபிமன்யுவும், ராட்சசன் கடோத்கசனும் கொல்லப்பட்ட போது கூட அவன் இத்தகு வடிவத்தை ஏற்றதில்லை.(15) கோபத்தால் நிறைந்து, யுகமுடிவில் தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் காந்தியோடு கூடிய வடிவை ஏற்று, மூன்று உலகங்களும் சேர்ந்து வந்தாலும் எதிர்க்கவல்லவனாகவே அவன் தெரிகிறான்” என்றான் {சல்லியன்}.(16)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, இவ்வார்த்தைகளை ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} சொல்லிக் கொண்டிருந்தபோது, சினத்தால் தூண்டப்பட்ட பீமன் கர்ணனை நோக்கி வந்தான்.(17) போரில் மகிழ்பவனான பீமன் இவ்வாறு அவனை அணுகியதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே சல்லியனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(18)

{கர்ணன் சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, ஓ! தலைவா, பீமனைக் குறித்து நீர் இன்று என்னிடம் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையே என்பதில் ஐயமில்லை.(19) இந்த விருகோதரன் {பீமன்} துணிச்சல்மிக்கவனும், கோபம் நிறைந்த வீரனுமாவான். தன் உடலைப் பாதுகாப்பதில் கவலையற்றவனாகவும், உடல் உறுப்புகளின் பலத்தில் அனைவருக்கும் மேம்பட்டவனாகவும் இருக்கிறான்.(20) விராட நகரத்தில் தலைமறைவு வாழ்வை வாழ்ந்த போது, திரௌபதிக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக, இவன் {பீமன்}, தனது வெறுங்கரங்களின் வலிமையை மட்டுமே நம்பி, கீசகனையும், அவனது உறவினர்களையும் கமுக்கமாகக் கொன்றான்.(21) கதாயுதத்தை உயர்த்திப் பிடித்த காலனுடன் {காலனான என்னுடன்} அவன் போரிடத் தயாராக இருக்கிறான்.(22) எனினும், அர்ஜுனனை நான் கொல்ல வேண்டும், அல்லது அர்ஜுனன் என்னைக் கொல்ல வேண்டும் என்ற இந்த ஆசையானது என் நாட்கள் {காலம்} முழுவதும் பேணிக் காக்கப்பட்டு வந்திருக்கிறது.(23) அந்த எனது ஆசையானது, பீமனுடன் நான் மோதுவதன் விளைவால் இன்று நிறைவேறக்கூடும். நான் பீமனைக் கொன்றாலோ, அவனைத் தேரற்றவனாகச் செய்தாலோ,(24) பார்த்தன் {அர்ஜுனன்} என்னை எதிர்த்து வரக்கூடும். அஃது எனக்கு நன்மையே. இந்த நேரத்தில் ஏற்றதென நீர் நினைப்பதைத் தாமதமில்லாமல் தீர்மானிப்பீராக” என்றான் {கர்ணன்}.(25)

அளவிலா சக்தி கொண்ட ராதை மகனின் {கர்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட சல்லியன் {கர்ணனிடம்},(26) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, பெரும் வலிமையைக் கொண்ட பீமசேனனை எதிர்த்துச் செல்வாயாக. பீமசேனனைத் தடுத்த பிறகு நீ பல்குனனை {அர்ஜுனனை} அடையக்கூடும்.(27) ஓ! கர்ணா, உனது நோக்கம் எதுவோ, நீண்ட ஆண்டுகளாக நீ உன் இதயத்தில் பேணிப் பாதுகாத்துவரும் ஆசை எதுவோ, அஃது இன்று நிறைவேறும். நான் உனக்கு உண்மையே சொல்கிறேன்” என்று மறுமொழிகூறினான் {சல்லியன்}.(28)

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், மீண்டும் சல்லியனிடம், “போரில் நான் அர்ஜுனனைக் கொல்வேன், அல்லது அவன் என்னைக் கொல்வான். போரில் உமது இதயத்தை நிலைநிறுத்தி, விருகோதரன் இருக்கும் இடத்திற்குச் செல்வீராக” என்றான் {கர்ணன்}.(29)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சல்லியன், உமது படையை முறியடித்துக் கொண்டிருந்த அந்தப் பெரும் வில்லாளியான பீமன் இருந்த இடத்திற்கு அந்தத் தேரை வேகமாகச் செலுத்தினான்.(30) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே பீமனும், கர்ணனும் சந்தித்தபோது, எக்காளங்களின் முழக்கமும், பேரிகைகளின் முழக்கமும் எழுந்தன.(31) சினத்தால் நிறைந்த வலிமைமிக்கப் பீமசேனன், வீழ்த்தக்கடினமான உமது துருப்புகளைப்  அனைத்துப் பக்கங்களுக்கும், பளபளப்பாக்கப்பட்ட தன் கூரிய கணைகளால் சிதறடிக்கத் தொடங்கினான்.(32) போரில் கர்ணனுக்கும், பாண்டு மகனுக்கும் {பீமனுக்கு} இடையில் நடந்த அம்மோதல், கடுமையையும், அச்சந்தரும் நிலையையும் அடைந்த போது எழுந்த அவ்வொலி பேராற்றல் வாய்ந்ததாக இருந்தது.(33)

தன்னை நோக்கி வரும் பீமனைக் கண்டவனும், வைகர்த்தனன், அல்லது விருஷன் என்று வேறு பெயரில் அழைக்கப்பட்டவனுமான கர்ணன், சினத்தால் நிறைந்து, கணைகளால் அவனது {பீமனின்} நடுமார்பைத் தாக்கினான்.(34) அளவிலா ஆன்மா கொண்ட அந்தக் கர்ணன், மீண்டும் கணைமாரியால் அவனை {பீமனை} மறைத்தான். இவ்வாறு சூதன் மகனால் துளைக்கப்பட்ட பீமன், முன்னவனை {கர்ணனை} சிறகு படைத கணைகளால் மறைத்தான்.(35) மேலும் அவன் நேரான ஒன்பது கூரிய கணைகளால் கர்ணனை மீண்டும் துளைத்தான். பிறகு கர்ணன், எண்ணற்ற கணைகளால், பீமனின் வில்லை அதன் கைப்பிடியில் இரண்டாக வெட்டினான்.(36) அவனது {பீமனது} வில்லை வெட்டிய பிறகு, அவன் {கர்ணன்}, பெரும் கூர்மை கொண்டதும், அனைத்து வகைக் கவசங்களையும் ஊடுருவவல்லதுமான கணையொன்றால் மீண்டும் அவனது {பீமனது} நடுமார்பைத் துளைத்தான்.(37) அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட விருகோதரன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உடலின் முக்கியப் பகுதிகள் எவை என்பதை முழுமையாக நன்கறிந்தவனாகக் கூரிய கணைகள் பலவற்றால் சூதன் மகனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(38)

வேடனொருவன் சுடர்மிக்கப் பந்தங்கள் பலவற்றால் காட்டில் செருக்குமிக்க மதங்கொண்ட யானை ஒன்றைத் தாக்குவதைப் போலக் கர்ணன் இருபத்தைந்து கணைகளால் அவனை {பீமனைத்} துளைத்தான்.(39) அக்கணைகளால் அங்கங்கள் சிதைக்கப்பட்டுச் சினத்தால் கண்கள் சிவந்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பழிவாங்கும் ஆசையாலும், கோபத்தாலும் உணர்வற்றவனாகி, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, (40) பெரும் வேகம் கொண்டதும், பெரும் கடினத்தைத் தாங்க வல்லதும், மலைகளையே துளைக்கத் தகுந்ததுமான ஒரு சிறந்த கணையைத் தன் வில்லில் பொருத்தினான்.(41) வில்லின் நாண்கயிற்றைத் தன் காதுவரை இழுத்தவனும், காற்றுதேவனின் மகனுமான அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, கோபத்தால் நிறைந்து, கர்ணனுக்கு ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பி அந்தக் கணையை ஏவினான்.(42)

வலிமைமிக்கப் பீமனால் இவ்வாறு ஏவப்பட்ட அந்தக் கணை, இடியைப் போன்ற ஒலியை உண்டாக்கி, மலைகளையே துளைத்துச் செல்லும் வஜ்ரத்தைப் போல அந்தப் போரில் கர்ணனைத் துளைத்துச் சென்றது.(43) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் தாக்கப்பட்டவனும், (உமது படைகளின்) தலைவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, உணர்வற்றவனாகக் கீழே தன் தேர்தட்டில் அமர்ந்தான். (44) அப்போது தன் உணர்வுகளை இழந்து விட்ட சூதன் மகனை {கர்ணனைக்} கண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அந்தப் போர்க்கள ரத்தினத்தை {கர்ணனைத்} அந்தப் போரில் இருந்து தன் தேரில் வெளியே கொண்டு சென்றான்.(45) கர்ணனின் தோல்விக்குப் பிறகு, பீமசேனன், தானவர்களை முறியடிக்கும் இந்திரனைப் போல அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையை முறியடிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(46)

பீமனின் பராக்கிரமம்! – கர்ண பர்வம் பகுதி – 51-கர்ணனைக் காப்பதற்குத் தன் தம்பிகளை அனுப்பிய துரியோதனன்; திருதராஷ்டிரன் மகன்களில் அறுவரைக் கொன்ற பீமன்; பீமனோடு மீண்டும் மோதிய கர்ணன்; பீமனின் வில்லை அறுத்த கர்ணன்; பீமனால் தாக்கப்பட்டு உடல் நடுங்கிய கர்ணன்; பீமனின் கொடிமரம், சாரதி மற்றும் தேரை அழித்த கர்ணன்; தன் கதாயுதத்தால் எழுநூறுக்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்ற பீமன்; பீமனைக் கண்டு அஞ்சி ஓடிய கௌரவர்கள்; மூவாயிரம் குதிரைவீரர்களைத் தன் கதாயுதத்தாலேயே கொன்ற பீமன்; கர்ணனிடம் இருந்து தப்பி ஓடிய யுதிஷ்டிரன்; கர்ணன் யுதிஷ்டிரனைத் தொடர்வதைத் தடுத்து அவனோடு மோதிய பீமன்; பீமனின் துணைக்கு வந்த சாத்யகி; சூரியன் நடுவானை அடைந்தது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தக் கர்ணனை நெடுஞ்சாண் கிடையாக அவனது தேரில் கிடக்கச் செய்த பீமனின் சாதனையானது அடைவதற்கு மிக அரிதானது.(1) “சிருஞ்சயர்களோடு சேர்த்துப் பாண்டவர்களைக் கொல்வதற்குக் கர்ணன் ஒருவனே இருக்கிறான்” என்பதையே, ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனன் என்னிடம் அடிக்கடி சொல்வது வழக்கம்.(2) எனினும், போரில் இப்போது பீமனால் வீழ்த்தப்பட்ட ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்டு, என் மகன் துரியோதனன் அடுத்ததாக என்ன செய்தான்?” என்று கேட்டான்.(3)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பெரும் போரில் புறமுதுகிட்ட சூத வகையைச் சார்ந்த ராதையின் மகனை {கர்ணனைக்} கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன்னுடன் பிறந்த தம்பிகளிடம்,(4) “நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நீங்கள் வேகமாகச் சென்று, பீமசேனனிடம் உண்டான அச்சத்தால் அடியற்ற துன்பப் பெருங்கடலில் மூழ்கியிருக்கும் ராதையின் மகனை {கர்ணனைக்} காப்பீராக” என்றான்.(5) மன்னனால் {துரியோதனனால்} இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்த இளவரசர்கள், கோபத்தால் தூண்டப்பட்டு, பீமசேனனைக் கொல்லும் விருப்பத்தில், சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அவனை {பீமனை} நோக்கி விரைந்து சென்றனர்.(6) அவர்கள், சுருதர்வான் {சுருதாயு}, துர்த்தரன், கிராதன், விவித்ஸு, விகடன், சோமன் {ஸமன்}, நிஷங்கி, கவசி, பாசி, நந்தன், உபநந்தகன்,(7) துஷ்பிரதர்ஷன், சுபாஹு, வாதவேகன், சுவார்ச்சஸஸ், தனுக்ராஹன், துர்மதன், ஜலசந்தன், சலன், ஸஹன் ஆகியோர் ஆவர்[1].(8)பெருந்தேர்ப்படையொன்றால் சூழப்பட்ட அந்த இளவரசர்கள், பெரும் சக்தியோடும், வலிமையோடும், பீமசேனனை அணுகி, அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(9) அவர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனை நோக்கிப் பல்வேறு வகைகளிலான கணைமாரிகளைப் பொழிந்தனர். இவ்வாறு அவர்களால் பீடிக்கப்பட்டவனும், பெரும் பலம் கொண்டவனுமான பீமன்,(10) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னை எதிர்த்து வந்த அந்த உமது மகன்களுக்கு மத்தியில் இருந்த முதன்மையான ஐம்பது தேர்வீரர்களையும், வேறு ஐநூறு பேரையும் வேகமாகக் கொன்றான்[2].(11) பிறகு, சினத்தால் நிறைந்த பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்}, முழு நிலவுக்கு ஒப்பான முகத்தால் அருளப்பட்டதும், காதுகுண்டலங்கள் மற்றும் தலைக்கவசத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான விவித்சுவின் தலையைத் தாக்கி வீழ்த்தினான். இவ்வாறு வெட்டப்பட்ட அந்த இளவரசன் கீழே பூமியில் விழுந்தான்.(12) தங்கள் வீரச் சகோதரன் கொல்லப்பட்டதைக் கண்ட (பிற) சகோதரர்கள், ஓ! தலைவா, அந்தப் போரில் பயங்கரமான ஆற்றலைக் கொண்ட பீமனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்து சென்றனர்.(13)பயங்கர ஆற்றலைக் கொண்டவனான பீமன், அந்தப் போரில் அகன்ற தலை கொண்ட வேறு கணைகள் {பல்லங்கள்} இரண்டால், உமது மகன்களில் மேலும் இருவரின் உயிரை எடுத்தான்.(14) இரண்டு தெய்வீக இளைஞர்களைப் போலத் தெரிந்த விகடன் மற்றும் சஹன் ஆகிய அவர்கள் இருவரும், புயலால் வேரோடு சாய்க்கப்பட்ட இரு மரங்களைப் போலப் பூமியில் விழுந்தனர்.(15) அப்போது ஒரு கணத்தையும் இழக்காத பீமன், கூர்முனை கொண்ட நீண்ட கணையொன்றால் {நாராசம் ஒன்றால்} கிராதனை யமலோகம் அனுப்பி வைத்தான். அந்த இளவரசன் உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.(16) அப்போது, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, பெரும் வில்லாளிகளான உமது வீரமகன்கள் அனைவரும் இவ்வாறு கொல்லப்படுகையில் உரத்தத் துன்பக் கதறல்கள் அங்கே எழுந்தன.(17) அந்தத் துருப்புகள் மீண்டும் கலங்கடிக்கப்பட்டபோது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கப் பீமன், அந்தப் போரில், நந்தன் மற்றும் உபநந்தகன் ஆகியோரையும் யமலோகம் அனுப்பி வைத்தான்[3].(18) அதன் பேரில் உமது மகன்கள் மிகவும் கலங்கடிக்கப்பட்டு, யுக முடிவின் அந்தகனைப் போல அந்தப் போரில் நடந்து கொண்ட பீமசேனனைக் கண்டு அச்சமடைந்து தப்பி ஓடினர்.(19)

அந்த உமது மகன்கள் கொல்லப்பட்டதைக் கண்டு, உற்சாகத்தை இழந்த இதயத்துடன் கூடிய சூதன் மகன் {கர்ணன்}, அன்னங்களின் வண்ணத்தைக் கொண்ட தன் குதிரைகளை மீண்டும் பாண்டுவின் மகன் {பீமன்} இருக்கும் இடத்திற்குத் தூண்டினான்.(20) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தூண்டப்பட்ட அக்குதிரைகள் பெரும் வேகத்துடன் பீமசேனனின் தேரை அடைந்து போரில் கலந்தது.(21) ஓ! ஏகாதிபதி, போரில் கர்ணனுக்கும், பாண்டுவின் மகனுக்கும் {பீமனுக்கும்} இடையில் மீண்டும் ஏற்பட்ட இந்த மோதல், ஓ! மன்னா, மிகக் கடுமையானதாகவும், அச்சம் நிறைந்ததாகவும், பெரும் ஆரவராம் நிறைந்ததாகவும் ஆனது.(22) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதைக் கண்ட {சஞ்சயனாகிய} நான், அந்தப் போரில் மேற்கொண்டு நடப்பவற்றை அறிய மிகுந்த ஆவல் கொண்டவனானேன்.(23)

அப்போது, போரில் தன் ஆற்றலைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொண்ட பீமன், ஓ! மன்னா, உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சிறகு படைத்த கணைமாரியால் கர்ணனை அம்மோதலில் மறைத்தான்.(24) பிறகு, மிக உயர்ந்த ஆயுதங்களை அறிந்த போர்வீரனான கர்ணன், கோபத்தால் நிறைந்து, முழுக்க இரும்பாலானவையும், அகன்ற தலை கொண்டவையும், நேரானவையுமான ஒன்பது கணைகளால் {பல்லங்களால்} பீமனைத் துளைத்தான்.(25) அதன்பேரில், வலிமைமிக்கக் கரங்களையும், பயங்கர ஆற்றலையும் கொண்ட பீமன், கர்ணனால் இவ்வாறு தாக்கப்பட்டதும், தன் காது வரை இழுக்கப்பட்ட வில்லின் நாண்கயிற்றில் இருந்த ஏழு கணைகளை ஏவி தன்னைத் தாக்கியவனைத் துளைத்தான்.(26) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலப் பெருமூசுவிட்ட கர்ணன், அடர்த்தியான கணைமாரியால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} மறைத்தான்.(27) வலிமைமிக்கப் பீமனும், கௌரவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடர்த்தியான கணைப்பொழிவால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கர்ணனை} மறைத்துப் பெருமுழக்கம் செய்தான்.(28)

அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், தன் வில்லை உறுதியாகப் பிடித்துக்கொண்டு, கல்லில் கூராக்கப்பட்டவையும், கங்க இறகுகளைக் கொண்டவையுமான பத்து கணைகளால் பீமனைத் துளைத்தான்.(29) பெருங்கூர்மை கொண்ட மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} பீமனின் வில்லையும் அவன் {கர்ணன்} அறுத்தான். அப்போது வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் பலத்தையும் கொண்ட பீமன், சணல் கயிறுகளால் சுற்றிலும் கட்டப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டும், காலனின் இரண்டாம் தண்டாயுதம் போன்றதுமான ஒரு பயங்கரமான பரிகத்தை எடுத்துக் கொண்டு கர்ணனை ஒரே அடியாகக் கொல்லும் விருப்பத்தோடு, பெருமுழக்கத்துடன் அதை அவன் மீது வீசினான்.(30,31) எனினும் கர்ணன், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளால், இடியைப் போலப் பெருமுழக்கம் செய்து கொண்டு தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்தப் பரிகத்தைப் பல துண்டுகளாக வெட்டினான்.(32) பிறகு, பகைவரின் துருப்புகளைக் கலங்கடிப்பவனான பீமன், பெரும்பலம் கொண்ட தன் வில்லைப் பிடித்து, கூரிய கணைகளால் கர்ணனை மறைத்தான்.(33) அந்தச் சந்திப்பில் கர்ணனுக்கும், பாண்டுவின் மகனுக்கும் {பீமனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது, ஒன்றையொன்று கொல்ல விரும்பும் பெருஞ்சிங்கங்களின் இரண்டிற்கிடையிலான போரைப் போல ஒரு கணத்தில் அச்சந்தருவதாக மாறியது.(34)

அப்போது கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வில்லைப் பெரும்பலத்தோடு வளைத்து, நாண்கயிற்றைத் தன் காது வரை இழுத்து மூன்று கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(35) கர்ணனால் ஆழத்துளைக்கப்பட்டவனும், பலம் கொண்டோர் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, தன் எதிராளியின் உடலைத் துளைத்துச் செல்லக்கூடிய ஒரு பயங்கரக் கணையை எடுத்தான்.(36) அந்தக் கணையானது, கர்ணனின் கவசத்தைப் பிளந்து, அவனது உடலையும் துளைத்துக் கடந்து சென்று, எறும்புப்புற்றுக்குள் செல்லும் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(37) அந்தத் தாக்குதலுடைய பலத்தின் விளைவால், பெரிதும் வலியை உணர்ந்த கர்ணன் மிகவும் கலக்கமடைந்தான். உண்மையில் அவன் {கர்ணன்}, நிலநடுக்கத்தின் போது குலுங்கும் மலையெனத் தன் தேரில் நடுங்கினான்.(38)

அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், ஓ! மன்னா, பதிலடி கொடுக்க விரும்பி, இருபத்தைந்து கணைகளாலும், இன்னும் பலவற்றாலும் பீமனைத் தாக்கினான்.(39) பிறகு அவன் வேறு ஒரு கணையால் பீமசேனனின் கொடிமரத்தை அறுத்து, தான் விடுத்த மற்றொரு அகன்ற தலை கணையால் {பலத்தால்} பீமனின் சாரதியை யமனின் முன்னிலைக்கு அனுப்பினான்.(40) அடுத்ததாக மற்றொரு சிறகு படைத்த கணையால் பாண்டு மகனின் {பீமனின்} வில்லை வேகமாக அறுத்த கர்ணன், பயங்கரச் சாதனைகளைச் செய்த பீமனைத் தேரிழக்கச் செய்தான்.(41) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {திருதராஷ்டிரரே}, தன் தேரை இழந்தும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், {ஆற்றலில்} காற்று தேவனுக்கு ஒப்பானவனுமான பீமன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் சிறந்த வாகனத்தில் இருந்து கீழே குதித்தான்.(42) உண்மையில் பெருஞ்சீற்றத்துடன் தன் தேரில் இருந்து கீழே குதித்த பீமன், ஓ! மன்னா, கூதிர் கால மேகங்களை அழிக்கும் {விரட்டும்} காற்றைப் போல உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.(43)

எதிரிகளை எரிப்பவனும், கோபத்தால் நிறைந்தவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஏர்க்கலப்பைகளைப் போலப் பெரிய தந்தங்களைக் கொண்டவையும், பகைவரின் துருப்புகளைத் தாக்கும் திறன் கொண்டவையுமான எழுநூறு யானைகளைத் திடீரென முறியடித்தான் {தாக்கினான்}.(44) பெரும் பலத்தைக் கொண்டவனும், யானைகளின் முக்கிய அங்கங்கள் எவை என்தை அறிந்தவனுமான அவன், அவற்றின் நெற்றிப்பொட்டுகளையும், கும்பப் பகுதிகளையும், தந்தக் கட்டுகளிலும் தாக்கினான்.(45) அதன்பேரில் அச்சமடைந்த அவ்விலங்குகள் தப்பி ஓடின. ஆனால் தங்கள் சாரதிகளால் மீண்டும் தூண்டப்பட்ட அவை, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல மீண்டும் பீமசேனனைச் சூழ்ந்து கொண்டன.(46) தன் வஜ்ரத்தால் மலைகளை வீழ்த்தும் இந்திரனைப் போல அந்தப் பீமன், சாரதிகள், ஆயுதங்கள் மற்றும் கொடிமரங்களோடு கூடிய அந்த எழுநூறு யானைகளையும் தன் கதாயுதத்தால் நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தினான்.(47) எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தக் குந்தியின் மகன் அடுத்ததாக, பெரும் பலத்தைக் கொண்டவையும், சுபலன் மகனுக்கு {சகுனிக்குச்} சொந்தமானவையுமான ஐம்பத்திரண்டு யானைகளை அடித்து வீழ்த்தினான்.(48)

உமது படையை எரித்துக் கொண்டிருந்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பிறகு அந்தப் போரில், முதன்மையான தேர்களில் ஒரு நூறையும், காலாட்படை வீரர்களில் பல நூற்றுக்கணக்கானவர்களையும் அழித்தான்.(49) சூரியனாலும், உயர் ஆன்ம பீமனாலும் எரிக்கப்பட்ட உமது படையானது, நெருப்பில் பரப்பட்ட ஒரு தோல் துண்டைப் போலச் சுருங்கத் தொடங்கியது.(50) ஓ! பாரதக் குலத்தின் காளையே அந்த உமது துருப்புகள், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தினால் கவலையில் நிறைந்து, அந்தப் போரில் பீமனைத் தவிர்த்துவிட்டு, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின.(51) அப்போது சிறந்த கவசங்களைத் தரித்த ஐநூறு தேர்வீரர்கள், பெரும் முழக்கங்களைச் செய்தபடியும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தபடியும், பீமனை நோக்கி விரைந்தனர்.(52) அந்தப் பீமன், அசுரர்களை அழிக்கும் விஷ்ணுவைப் போலத் துணிச்சல் மிக்கப் போர்வீரர்களை, அவர்களது சாரதிகள், தேர்கள், கொடிகள், கொடிமரங்கள் மற்றும் ஆயுதங்களுடன் சேர்த்துத் தன் கதாயுதத்தால் அழித்தான்.(53)

அப்போது, சகுனியால் அனுப்பப்பட்டவர்களும், துணிச்சல்மிக்க மனிதர்களால் மதிக்கப்படுபவர்களுமான மூவாயிரம் குதிரைவீரர்கள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் வேல்களுடன் பீமனை நோக்கி விரைந்தனர்.(54) அவர்களை நோக்கி மூர்க்கமாகச் சென்ற அந்த எதிரிகளைக் கொல்பவன், பல்வேறு வழித்தடங்களில் சென்று தன் கதாயுதத்தால் அவர்களைக் கொன்றான்.(55) பெரும்பாறைகளால் தாக்கப்படும்போது, யானை மந்தைகளுக்கு மத்தியில் எழுவதைப் போலப் பீமனால் தாக்கப்பட்ட அவர்களுக்கு மத்தியில் உரத்த கூச்சல்கள் எழுந்தன.(56) அவ்வழியில் சுபலன் மகனின் {சகுனியின்} மூவாயிரம் {3000} சிறந்த குதிரைகளைக் கொன்ற அவன், மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, சினத்தால் நிறைந்து ராதையின் மகனை எதிர்த்துச் சென்றான்.(57)

அதேவேளையில் கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான தர்மன் மகனை {யுதிஷ்டிரனை} அடர்த்தியான கணைமாரியால் மறைத்து, அவனது சாரதியையும் வீழ்த்தினான்.(58) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கர்ணன்}, அந்தப் போரில் இருந்து யுதிஷ்டிரன் தப்பி ஓடுவதைக் கண்டு, கங்க இறகுகளாலானவையும், நேராகச் செல்லக்கூடியவையுமான கணைகள் பலவற்றை ஏவிக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.(59) காற்றுதேவனின் மகன் {பீமன்}, சினத்தால் நிறைந்து, தன் கணைகளால் மொத்த ஆகாயத்தையும் மறைத்து, மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின் தொடர்ந்து சென்ற கர்ணனை அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(60) பின்தொடர்வதில் இருந்து திரும்பியவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் பீமனை வேகமாக மறைத்தான்.(61) அப்போது அளவிலா ஆன்மா கொண்டவனான சாத்யகி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் தேர் அருகே தன்னை நிறுத்திக் கொண்டு, பீமனின் முன்பு இருந்த கர்ணனைப் பீடிக்கத் தொடங்கினான்.(62) சாத்யகியால் அதிகம் பீடிக்கப்பட்டாலும், கர்ணன் பீமனையே அணுகினான். வில்தரித்தோர் அனைவருக்கு மத்தியில் காளைகளும், பெருஞ்சக்தி கொண்டவர்களுமான அவ்விருவரும், ஒருவரையொருவர் அணுகி அழகிய கணைகளை ஏவியபோது மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(63)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} ஆகாயத்தில் அவர்களால் பரப்பப்பட்ட அந்தக் கணைகள், நாரைகளின் சுடர்மிக்க முதுகுகளைப் போல, மிகக் கடுமையாகவும், பயங்கரமாகவும் தெரிந்தன.(64) அந்த ஆயிரங்கணைகளின் விளைவால், ஓ! மன்னா, அதற்கும் சூரியக் கதிர்களையோ, முக்கிய, அல்லது துணைத் திசைப்புள்ளிகளையோ எங்களாலும், எதிரியாலும் காண முடியவில்லை.(65) உண்மையில், நடுப்பகலில் ஒளிரும் சுடர்மிக்கச் சூரியப் பிரகாசமானது, கர்ணன் மற்றும் பாண்டுவின் மகனால் {பீமனால்} ஏவப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் விலக்கப்பட்டது.(66) சுபலனின் மகன் {சகுனி}, கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அதிரதன் மகன் {கர்ணன்}, கிருபர் ஆகியோர் பாண்டவர்களுடன் போரிடுவதைக் கண்ட கௌரவர்கள் திரண்டு மீண்டும் போரிடத் திரும்பி வந்தனர்.(67) ஓ! ஏகாதிபதி, தங்கள் எதிரிகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்த அந்தப் படையுண்டாக்கிய ஆரவாரமானது, மழைகளால் நிரம்பிய பெருங்கடல்களால் உண்டாக்கப்படும் பயங்கர ஒலிக்கு ஒப்பாக மகத்தானதாக இருந்தது.(68) போரில் சீற்றத்துடன் ஈடுபட்ட அவ்விரு படைகளும், போர்வீரர்களைக் கண்டு, அந்தப் பயங்கர ஆபத்தில் ஒன்றையொன்று பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியால் நிறைந்தன.(69)

சூரியன் நடுவானை எட்டியபோது தொடங்கிய அந்தப் போரானது, இதுவரை நம்மால் கேள்விப்படாததைப் போலவும், காணப்படாததைப் போலவும் இருந்தது.(70) ஒரு பரந்த படையானது, பெரும் நீர்நிலையான ஒன்று பெருங்கடலை நோக்கி வரைவதைப் போல மற்றொரு பரந்த படையை எதிர்த்து விரைந்தது.(71) இரு படைகளும் ஒருவரையொருவர் நோக்கி முழங்கிய போது எழுந்த ஆரவாரமானது, பல பெருங்கடல்கள் ஒன்றோடொன்று கலந்தால் கேட்கப்பட்டவதைப் போல ஆழமானதாகவும் உரக்கவும் இருந்தது.(72) உண்மையில் அந்தச் சீற்றமிகு படைகள் இரண்டும், ஒன்றையொன்று நோக்கிப் பாயும் இரு சீற்றமிக்க ஆறுகள் ஒன்றாக ஒரே திரளாகக் கலக்கப்போகவதைப் போல ஒன்றையொன்று அணுகின.(73)

அதன் பிறகு, பெரும் புகழை வெல்ல விரும்பியவர்களான குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவருக்கிடையில் தொடங்கிய போரானது, பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும் இருந்தது.(74) கூச்சலிட்ட போர்வீர்களின் முற்றிலும் குழப்பமான ஒலிகள், ஓ! பாரத அரசரே, அவர்கள் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைத்தபோது இடையறாமல் கேட்கப்பட்டன.(75) ஒருவன், தனது தந்தை அல்லது தாயின் தரப்பிலிருந்தோ, செயல்கள் அல்லது நடத்தையிலிருந்தோ பெற்ற கேலிக்குரிய எந்தக் காரியமும், அவனது எதிரியால் அந்தப் போரில் அறிவிக்கப்பட்டது.(76) அந்தப் போரில் ஒருவரையொருவர் உரக்க நிந்தித்துக் கொள்ளும் அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களைக் கண்ட நான், ஓ! மன்னா, அவர்களது வாழ்நாள் காலம் முடிந்து விட்டது என்றே நினைத்தேன்.(77) அளவிலா சக்தி கொண்ட அந்தக் கோபக்கார வீரர்களின் உடல்களைக் கண்டு, வரப்போகும் பயங்கர விளைவுகளைக் குறித்த ஒரு பெரும் அச்சம் என் இதயத்திற்குள் நுழைந்தது.(78) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகிய அனைவரும், ஒருவரையொருவர் தாக்கித் தங்கள் கூரிய கணைகளால் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.(79)

பலவீனமடைந்த கௌரவப் படை! – கர்ண பர்வம் பகுதி – 52-இரு படைகளுக்கும் இடையில் நடந்த கடும்போர்; உயிரினங்களின் ருத்ரசூனைக்கு ஒப்பான பயங்கரத்தை அடைந்த போர்க்களம்; நால்வகைப் படைகளும் தங்களுக்குள் மோதிக்கொண்ட விதம்; பலவீனமடைந்த கௌரவப் படை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் எதிர்த்துப் பகை உணர்வுகளை வளர்த்து வந்தவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான க்ஷத்திரியர்கள், அந்தப் போரில் ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(1) ஓ! மன்னா, தேர்க்கூட்டங்கள், குதிரைகளின் பெரும்படைகள், காலாட்படைப்பிரிவுகள், பெரும் எண்ணிக்கையிலான யானைகள் ஆகியவை அந்தப் போரில் ஒன்றோடொன்று கலந்தன.(2) அந்தப் பயங்கரப் போரில், ஒருவர் மீதொருவர் வீசிக்கொண்ட கதாயுதங்கள், முள் பதித்த தண்டங்கள் {பரிகங்கள்}, குணபங்கள் {சக்திகள்}, வேல்கள் {பராசங்கள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, ஏவுகணைகள் {முசுண்டிகள்} ஆகியவை விழுவதை நாங்கள் கண்டோம்.(3) காணப் பயங்கரமான கணைமாரிகள், விட்டிற்பூச்சிகளைப் போலப் பறந்தன. யானைகளை அணுகிய யானைகள், ஒன்றையொன்று முறியடித்தன.(4)

அந்தப் போரில் குதிரைவீரர்களோடு மோதிய குதிரைவீரர்கள், தேர்வீரர்களோடு மோதிய தேர்வீரர்கள், காலாட்படை வீரர்களோடு மோதிய காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்களைச் சந்தித்த காலாட்படைவீரர்கள்,(5) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள் மற்றும் யானைகளைச் சந்தித்த காலாட்படைவீரர்கள், யானைகள் மற்றும் குதிரைவீரர்களைச் சந்தித்த தேர்கள், பிற மூன்று வகைப் படைகளைப் பெரும் வேகத்தோடு சந்தித்த யானைகள் ஆகியன ஒன்றையொன்று நசுக்கிக் கலங்கடிக்கத் தொடங்கின.(6) அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, தங்கள் குரல்களின் உச்சியில் கூச்சலிட்டதன் விளைவால், அந்தப் போர்க்களமானது உயிரினங்களின் (உயிரினங்களைக் கொல்லும் ருத்ரனின்) சூனைக்கு {இறைச்சிக் கொட்டிலுக்கு} ஒப்பான அச்சத்தைத் தருவதாக இருந்தது.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குருதியால் மறைக்கப்பட்ட பூமியானது, மழைக்காலங்களில் செம்பட்டுப்பூச்சிகளால் {இந்திரகோபங்களால்} மறைக்கப்பட்ட பரந்த நிலத்தைப் போல அழகாகத் தெரிந்தது.(8) உண்மையில் பூமியானது, செக்கச்சிவந்த சாயம் பூசப்பட்ட வெண்ணிற ஆடைகளை உடுத்தியிருக்கும் பேரழகு இளங்கன்னிகையின் குணங்களையே அப்போது ஏற்றிருந்தது.(9) சதை, குருதி ஆகியவற்றால் பன்னிறங்கொண்ட அந்தப் போர்க்களமானது, எங்கும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதைப் போல இருந்தது. உடலிலிருந்து அறுக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சிரங்களும், ஓ! பாரதரே, கரங்கள், தொடைகள், காதுகுண்டலங்கள், போர்வீரர்களின் உடல்களில் இடம்பெயர்ந்திருந்த பிற ஆபரணங்கள்,(10) கழுத்தணிகள், மார்புக்கவசங்கள், துணிவுமிக்க வில்லாளிகளின் உடல்கள், கவசங்கள், கொடிகள் ஆகியனவும் தரையில் சிதறிக் கிடந்தன.(11)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யானைகளை எதிர்த்து வந்த யானைகள், தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று கிழித்துக் கொண்டன. எதிராளியின் தந்தங்களால் தாக்கப்பட்ட யானைகள் மிக அழகாகத் தெரிந்தன.(12) குருதியில் குளித்த அந்தப் பெரும் உயிரினங்கள் {யானைகள்}, தங்கள் சாரல்களில் ஓடைகளாகப் பாயும் தாதுக்களால் அலங்கரிக்கப்பட்ட அசையும் மலைகளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(13) குதிரைவீரர்களால் வீசப்பட்ட வேல்கள், அல்லது பகை போராளிகளால் பக்கவாட்டில் கொள்ளப்பட்டவற்றை {வேல்களைப்}, பிடித்துக் கொண்ட அவ்விலங்குகளில் பல, அவ்வாயுதங்களை வளைத்து முறித்தன.(14) கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்ட பல யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குளிர்காலத்தின் தொடக்கத்தில் மேகங்களற்றுக் காணப்படும் மலைகளைப் போலத் தெரிந்தன.(15) பல முதன்மையான யானைகள், தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகளால் துளைக்கப்பட்டு, ஓ! ஐயா, சுடர்மிக்கப் பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட சிகரங்களைக் கொண்ட மலைகளைப் போல மிக அழகாகத் தெரிந்தன.(16) மலைகளைப் போலப் பெரியவையாக இருந்த அவ்வுயிரினங்களில் சில, பகையானைகளால் தாக்கப்பட்டு அந்தப் போரில் சிறகு படைத்த மலைகளைப் (சிறகு படைத்த மலைகள் தங்கள் சிறகுகள் வெட்டப்பட்டதும் விழுவதைப்) போலக் கீழே விழுந்தன.(17) கணைகளால் பீடிக்கப்பட்ட இன்னும் பிற {யானைகள்}, தங்கள் காயங்களால் மிகவும் வலியை உணர்ந்து, தங்கள் மத்தகம், அல்லது தங்கள் தந்தங்களுக்கு இடையிலான பகுதிகளால் பூமியைத் தீண்டி கீழே விழுந்தன {தலைகுப்புற விழுந்தன}.(18) வேறு சில யானைகளோ சிங்கங்களைப் போல முழங்கின. இன்னும் பலவோ, பயங்கர ஒலிகளை வெளியிட்டபடியே அங்கேயும், இங்கேயும் ஓடின, மேலும் பல, ஓ! மன்னா, வலியால் கதறின.(19)

தங்க இழைகளுடன் கூடிய குதிரைகளும், கணைகளால் தாக்கப்பட்டு, கீழே விழவோ, பலவீனமடையவோ, அனைத்துத் திசைகளிலும் ஓடவோ செய்தன.(20) கணைகள் மற்றும் வேல்களால் தாக்கப்பட்டு, அல்லது, கீழே இழுக்கப்பட்ட வேறு சில {குதிரைகள்}, பூமியில் விழுந்து, பல்வேறு வகைகளிலான அசைவுகளைச் செய்து, வலியால் வேதனையுடன் நெளிந்தன.(21) ஓ! ஐயா, மனிதர்களும் பூமியில் விழுந்து, வலியால் பல்வேறு கூச்சல்களையிட்டனர். தங்கள் உறவினர், தந்தைமார், மற்றும் பாட்டன்மார்,(22) மற்றும் வேறு சிலரைக் கண்ட பிறர், தங்கள் எதிரிகள் பின்வாங்குவதைக் கண்டு, அவர்களுக்கு நன்கறிந்த பெயர்களையும், அவர்களது குலப் பெயர்களையும் சொல்லி ஒருவருக்கொருவர் உரக்கக் கதறினர்.(23) தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட போராளிகள் பலரின் கரங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளால் வெட்டப்பட்டு, பல்வேறு வகை அசைவுகளைச் செய்தபடி தரையில் நெளிந்தன.(24) இப்படி ஆயிரக்கணக்கான கரங்கள் கீழே விழுந்து, மேலே எழுந்தன, மேலும் பல, ஐந்து தலை பாம்புகளைப் போல முன்னோக்கி நகர்வதாகத் தெரிந்தது.(25) சிறுத்துச் செல்லும் பாம்புகளின் உடல்களைப் போலத் தெரிந்தவையும், சந்தனத்தால் பூசப்பட்டவையுமான அக்கரங்கள், ஓ! மன்னா, குருதியில் நனைந்த போது, தங்கத்தாலான சிறு கொடிமரங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(26) அனைத்துப் பக்கங்களிலும் போரானது மூர்க்கமாகவே நடைபெறுவதே இயல்பாக மாறியதும், போர்வீரர்கள் தாங்கள் போரிடுவோருடனோ, தாக்குவோருடனோ தனித்த உணர்வுகள் ஏதும் இல்லாமல் போரிட்டு ஒருவரையொருவர் கொன்றனர்.(27)

போர்க்களத்தில் புழுதி மேகம் பரவி, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அடர்த்தியான மழையாகப் பொழிந்தன. இவ்வாறு காட்சி இருளடைந்ததும், போராளிகளால் அதற்கு மேலும் நண்பர்களிடமிருந்து எதிரிகளை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(28) உண்மையில், கடுமையானதும், அச்சத்தை உண்டாக்குவதுமான அந்தப் போரானது இவ்வாறே நடந்தது. விரைவில் குருதிப் புனல்களால் அங்கே பெரும் ஆறுகள் பல பாயத் தொடங்கின.(29) தங்கள் பாறைகளாக அமைந்த போராளிகளின் தலைகளால் அவை {அந்த ஆறுகள்} நிறைந்திருந்தன. போர்வீரர்களின் மயிர், அவற்றின் மேல் மிதக்கும் பாசிகளாகவும், புற்களாகவும் அமைந்தன. எலும்புகளே அவற்றின் மீன்களாகின. விற்கள், கணைகள், கதாயுதங்கள் ஆகியன அவற்றைக் கடக்கும் தெப்பங்களாகின.(30) சதையையும், குருதியையும் அவற்றின் சேறாகக் கொண்டவையும், பயங்கரமானவையும், அச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்த ஆறுகள், அங்கே இவ்வாறு உண்டான குருதியோடையால் பெருகி,(31) மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்தின. அச்சத்தைத் தரும் அந்த ஆறுகள் யமனின் வசிப்பிடத்திற்கு வழிகாட்டிச் சென்றன. க்ஷத்திரியர்களை அச்சமடையச் செய்த பலர் அந்த ஓடைகளில் மூழ்கி மாண்டனர்.(32)

ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஊனுண்ணும் பல்வேறு உயிரினங்களின் முழக்கம் மற்றும் ஊளையின் விளைவால், அந்தப் போர்க்களமானது, இறந்தோரின் மன்னனுடைய {யமனுடைய} ஆட்சிப்பகுதிகளை {நரகத்தைப்} போலப் பயங்கரத்தை அடைந்தது.(33) அனைத்துப் பக்கங்களிலும் தலையற்ற முண்டங்கள் எண்ணற்றவை எழுந்து நின்றன. பயங்கரமான உயிரினங்கள், ஓ! பாரதரே, சதை மற்றும் குருதியைக் கழுத்துவரை உண்டு, குருதி மற்றும் கொழுப்பைக் குடித்துச் சுற்றிலும் ஆடத்தொடங்கின.(34) காகங்கள், கழுகுகள், நாரைகள் ஆகியன, கொழுப்பு, மஜ்ஜை மற்றும் பிற விலங்குகளின் சதை ஆகியவற்றால் நிறைவடைந்து, மகிழ்ச்சியாகத் திரிவது தெரிந்தது.(35)

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரர்களாக இருந்த உம்மவர், விடுவதற்குக் கடினமான அச்சங்கள் அனைத்தையும் விட்டு, போர்வீரர்களின் உறுதியை நோற்று, அச்சமற்ற வகையில் தங்கள் கடமைகளைச் செய்தனர்.(36) உண்மையில், எண்ணற்ற கணைகளும், ஈட்டிகளும் காற்றில் எங்குப் பாய்ந்தனவோ, ஊனுண்ணும் பல்வேறு வகை உயிரினங்கள் எங்கு நிறைந்திருந்தனவோ அந்தக் களத்தில், துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், அச்சமில்லாமல் திரிந்து தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.(37) ஓ! பாரதரே, ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட அவர்கள், தங்கள் பெயர்களையும், குடும்பங்களையும் அறிவித்தனர். தங்கள் தந்தைமார் மற்றும் குடும்பங்களை அறிவித்துக் கொண்ட அவர்களில் பலர், ஓ! தலைவா, ஓ! மன்னா, ஈட்டிகள், வேல்கள் மற்றும் போர்க்கோடரிகளால் ஒருவரையொருவர் நொறுக்கத் தொடங்கினர்.(38,39) கடுமையானதும், அச்சத்தை ஏற்படுத்துவதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்த போது கௌரவபடையானது, பெருங்கடலின் ஆழத்தில் நொறுக்கப்பட்ட மரக்கலம் ஒன்றைப் போல அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையை அடையும் வகையில் பலவீனமடைந்தது” {என்றான் சஞ்சயன்}.(40)

நாகாஸ்திரம் ஏவிய அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 53-ம்சப்தகர்களோடு போரிட்ட அர்ஜுனன்; நெருக்கமாகப் போரிட்ட அந்தப் போர்வீரர்கள் அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் பிடித்துக் கொண்டது; நாகாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அதனால் கட்டுண்ட சம்சப்தகர்கள்; கருடாஸ்திரத்தை ஏவிய சுசர்மன்; சம்சப்தகர்களின் கட்டுகள் விலகியது; ஐந்திராயுதத்தை ஏவி சம்சப்தகர்களை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அச்சம் நிறைந்ததாக அமைந்த போர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “க்ஷத்திரியர்கள் பலர் மூழ்கிக் கொண்டிருந்த அந்தப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, ஓ! ஐயா, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஆரவாரத்திற்கும் மேலாகக் காண்டீவத்தின் உரத்த நாணொலியானது, சம்சப்தகர்கள், கோசலர்கள், மற்றும் நாராயணப் படைகளைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எங்குக் கொன்று கொண்டிருந்தானோ, அங்கே கேட்டுக் கொண்டிருந்தது.(1,2) சினத்தால் நிரம்பியும், வெற்றிக்கான விருப்பத்துடனும் இருந்த சம்சப்தகர்கள் அந்தப் போரில் அர்ஜுனனின் தலையில் கணைமாரியைப் பொழியத் தொடங்கினர்.(3) எனினும், பலமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, அந்தக் கணைமாரியை வேகமாகத் தடுத்து, அந்தப் போரில் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொல்லத் தொடங்கினான்.(4) அந்தத் தேர்ப் படைப்பிரிவுக்குள் மூழ்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, கூராக்கப்பட்டதும், கங்க இறகுகளைக் கொண்டதுமான கணைகளின் உதவியுடன் கூடியவனாகச் சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருந்த சுசர்மனிடம் வந்தான்.(5)

அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனோ {சுசர்மனோ}, அர்ஜுனன் மீது அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தான். அதே வேளையில் சம்சப்தகர்களும் தங்கள் கணைகளால் அர்ஜுனனை மறைத்தனர்.(6) அப்போது பத்து கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்த சுசர்மன், மூன்றால் ஜனார்த்தனனின் {கிருஷ்ணனின்} வலக்கரத்தைத் துளைத்து, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அர்ஜுனனின் கொடிமரத்தையும் துளைத்தான்.(7) அதன்பேரில், பெரும் வடிவிலானதும், தெய்வீகத் தச்சனின் கைவண்ணத்தில் உருவானதுமான அந்த முதன்மையான குரங்கு, பேரொலிகளை வெளியிடத் தொடங்கி, மிக மூர்க்கமாக முழங்கி உமது துருப்பினரை அச்சுறுத்தியது.(8) குரங்கின் முழக்கங்களைக் கேட்ட உமது படை அச்சமடைந்தது. உண்மையில், பேரச்சத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்த அந்த வியூகமே {படையே} முற்றிலும் செயலற்றுப் போனது.(9) அப்படிச் செயலற்று நின்ற உமது படையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு மலர்களால் பூத்துக் குலுங்கும் சைத்ரரதக் காடு போல அழகாகத் தெரிந்தது.(10)

பிறகு, ஓ! குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் உணர்வுகள் மீண்ட அந்தப் போர்வீரர்கள், மலைகளை நனைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரியால் அர்ஜுனனை நனைத்தனர்.(11) அப்போது அவர்கள் அனைவரும் அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} பெருந்தேரைச் சூழ்ந்து கொண்டனர். அவனைத் {அர்ஜுனனைத்} தாக்கிய அவர்கள், எப்போதும் கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டாலும் கூடப் பெருமுழக்கங்களைச் செய்து கொண்டே இருந்தனர்.(12) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவனது {அர்ஜுனனின்} குதிரைகள், தேர்ச்சக்கரங்கள், தேரின் ஏர்க்கால், மற்றும் அந்த வாகனத்தின் பிற அங்கங்கள் ஆகியவற்றைப் பெரும்பலத்தோடு தாக்கியபடியே அவர்கள் சிங்க முழக்கங்கள் பலவற்றைச் செய்தனர்.(13) அவர்களில் சிலர் கேசவனின் {கிருஷ்ணனின்} பருத்த கரங்களைப் பற்றினர், மேலும் அவர்களில் வேறு சிலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரில் நின்று கொண்டிருந்தவனான பார்த்தனை {அர்ஜுனனைப்} பெரும் மகிழ்ச்சியோடு பிடித்தனர்.(14) அப்போது, அந்தப் போர்க்களத்தில் தன் கரங்களை அசைத்த கேசவன் {கிருஷ்ணன்}, தன் முதுகில் உள்ள சாரதிகள் {பாகர்கள்} அனைவரையும் உடல் குலுக்கிக் கீழே தள்ளும் பொல்லாத யானையொன்றைப் போலத் தன்னைப் பிடித்த அனைவரையும் கீழே வீசினான்.(15) பிறகு அந்தப் பெரும் தேர்வீரர்களால் சூழப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தேர் தாக்கப்படுவதையும், கேசவன் தாக்கப்படும் அந்த முறையையும் கண்டு, சினத்தால் நிறைந்து, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களையும், காலாட்படைவீரர்களையும் தூக்கி வீசினான்.(16)

மேலும் அவன் {அர்ஜுனன்}, நெருக்கமான போருக்குத் தகுந்தவாறு, தனக்கு நெருக்கமாக இருந்த போராளிகள் அனைவரையும் கணைகள் பலவற்றால் மறைத்தான். கேசவனிடம் பேசிய அவன் {அர்ஜுனன்},(17) “ஓ! கிருஷ்ணா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஆயிரகணக்கில் கொல்லப்பட்டாலும், ஒரு பயங்கரக் காரியத்தை நிறைவேற்றுவதில் ஈடுபடுபவர்களும், எண்ணற்றவர்களாய் இருப்பவர்களுமான இந்தச் சம்சப்தகர்களைப் பார். (18) ஓ! யதுக்களில் காளையே {கிருஷ்ணா}, தன் தேரில் இத்தகைய நெருக்கமான தாக்குதலைத் தாங்கிக் கொள்ளக்கூடியவன் என்னைத் தவிர இவ்வுலகில் வேறு எவனும் இல்லை” என்றான்.(19) பீபத்சு {அர்ஜுனன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுத் தன் சங்கை முழக்கினான். அப்போது கிருஷ்ணனும் தன் சங்கை முழக்கி, அதன் முழக்கத்தால் ஆகாயத்தை நிறைத்தான்.(20) அம்முழக்கத்தைக் கேட்ட சம்சப்தகர்களின் படையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்கத் தொடங்கிப் பேரச்சம் கொண்டது.(21) பிறகு, பகைவீரர்களைக் கொல்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி, நாகம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை {நாகாஸ்திரத்தை} அழைத்து, சம்சப்தகர்களின் கால்களை மீண்டும் மீண்டும் முடக்கினான்.(22) கால்களைக் கட்டும் அந்தப் பட்டைகளை {நாகாஸ்திரக் கணைகளைக்} கொண்டு, அந்த உயர் ஆன்மப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} இவ்வாறு கட்டப்பட்ட அவர்கள் அனைவரும் கல்லாகிப் போனவர்களைப் போல அசைவற்றிருந்தனர்.(23) பிறகு, பழங்காலத்தில் தாரகனுடனான போரில் அசுரர்களைக் கொன்ற இந்திரனைப் போல, அசைவற்றிருந்த அந்தப் போர்வீரர்களை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} கொல்லத் தொடங்கினான்.(24) போரில் இவ்வாறு கொல்லப்பட்ட அவர்கள், அந்தத் தேரை விட்டுவிட்டுத் தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கீழே வீசத் தொடங்கினர்.(25) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கால்கள் முடக்கப்பட்ட அவர்களால், ஓர் அடியேனும் நகர முடியவில்லை. அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, தன் நேரான கணைகளால் அவர்களைக் கொன்றான்.(26) உண்மையில் அந்தப் போரில், காலைக் கட்டும் ஆயுதத்தை அழைத்துப் பார்த்தன் {அர்ஜுனன்} எவர் மீது குறி வைத்து ஏவினானோ, அந்தப் போர்வீரர்கள் அனைவரும், தங்கள் கீழ் அங்கங்களில் பாம்புகளால் கட்டப்பட்டனர்.(27)

அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான சுசர்மன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் படை இவ்வாறு முடக்கப்பட்டதைக் கண்டு, சுபர்ணம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை {கருடாஸ்திரத்தை} விரைவாக அழைத்தான்.(28) அதன்பேரில் எண்ணற்ற பறவைகள் கீழே வந்து, அந்தப் பாம்புகளை விழுங்கத் தொடங்கின., அந்த வானுலாவிகளைக் கண்ட பின்னவையும் {பாம்புகளும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடத் தொடங்கின.(29) கால்களைக் கட்டும் அவ்வாயுதத்தில் இருந்து விடுபட்ட அந்தச் சம்சப்தகப் படையானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகங்களில் இருந்து விடுபட்டு அனைத்து உயினரங்களுக்கும் ஒளியைத் தரும் சூரியனைப் போலத் தெரிந்தது.(30) இவ்வாறு விடுபட்ட அந்தப் போர்வீரர்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்கள் கணைகளை மீண்டும் ஏவி, அர்ஜுனனுடைய தேரின் மீது தங்கள் ஆயுதங்களையும் வீசினர். அவர்கள் அனைவரும் பார்த்தனை எண்ணற்ற கணைகளால் துளைத்தனர்.(31) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த வாசவன் மகன் {இந்திரனின் மகனான அர்ஜுனன்}, அந்த வலிமைமிக்க ஆயுதங்களைத் தன் கணைமாரியால் அறுத்து, அந்தப் போர்வீரர்களையும் கொல்லத் தொடங்கினான்.(32)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சுசர்மன்,  நேரான கணை ஒன்றால் அர்ஜுனனின் மார்பைத் துளைத்து, மேலும் மூன்று பிற கணைகளாலும் அவனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(33) அதனால் ஆழத்துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த அர்ஜுனன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தான். அப்போது துருப்புகள் யாவும், “பார்த்தன் கொல்லப்பட்டான்” என்றே உரக்கக் கூச்சலிட்டன.(34) இதனால், சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் முழக்கங்களும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலியும், உரத்த சிங்க முழக்கங்களும் அங்கே எழுந்தன.(35) அளவிலா ஆன்மா கொண்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டவனுமான பார்த்தன், தன் உணர்வுகள் மீண்டு, வேகமாக ஐந்திர ஆயுதத்தை அழைத்தான்.(36) ஓ! ஐயா ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},, அவ்வாயுதத்தில் இருந்து வெளிப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால், மன்னர்களும், யானைகளும் கொல்லப்படுவது அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டது.(37) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணகான குதிரைகள், தேர்கள் ஆகியவையும் அவ்வாயுதத்தால் அந்தப் போரில் கொல்லப்படுவதும் (அழிக்கப்படுவதும்) காணப்பட்டது. அத்துருப்புகள் இவ்வாறு கொல்லப்பட்டபோது, ஓ! பாரதரே ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},, சம்சப்தகர்கள் மற்றும் கோபாலர்கள் ஆகியோர் அனைவரின் இதயங்களிலும் பேரச்சம் நுழைந்தது. அர்ஜுனனோடு போரிட அவர்களில் ஒரு மனிதனும் இருக்கவில்லை.(38,39)

அங்கே, வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அர்ஜுனன் உமது துருப்புகளை அழிக்கத் தொடங்கினான். அந்தப் படுகொலையை அனைவரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தாமல் முற்றிலும் செயலற்றவர்களாகவே நீடித்தனர்.(40) அப்போது, அந்தப் போரில் முழுமையாகப் பத்தாயிரம் {10000} போராளிகளைக் கொன்ற அந்தப் பாண்டுவின் மகன், ஓ! ஏகாதிபதி ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகையற்ற சுடர்மிக்க நெருப்பொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(41) மேலும் அவன் பதினாலாயிரம் {14000} போர்வீரர்களையும், மூவாயிரம் {3000} யானைகளையும் முழுமையாகக் கொன்றான்.(42) பிறகு, மரணத்தையோ, வெற்றியையோ தங்கள் இலக்காக்கிக் கொண்ட சம்சப்தகர்கள் மீண்டும் தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.(43) அப்போது, உமது போர்வீரர்களுக்கும், வலிமைமிக்க வீரனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அந்தப் பாண்டுவின் மகனுக்கும் இடையில் நடந்த போரானது அச்சம் நிறைந்ததாக அமைந்தது” {என்றான் சஞ்சயன்}.(44)

சுகேதுவைக் கொன்ற கிருபர்! – கர்ண பர்வம் பகுதி – 54-சிருஞ்சயர்களைக் கொன்ற கிருபர்; கிருபரை எதிர்த்த சிகண்டி; சிகண்டியைத் தேரிழக்கச் செய்த கிருபர்; சிகண்டியைக் காக்க விரைந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தடுத்த கிருதவர்மன்; சிகண்டியின் கேடயத்தை வெட்டிய கிருபர்; கிருபரை எதிர்கொண்ட பாஞ்சால இளவரசன் சுகேது; பின்வாங்கிய சிகண்டி; சுகேதுவைக் கொன்ற கிருபர்; கிருதவர்மனின் சாரதியை வீழ்த்தி வென்ற திருஷ்டத்யும்னன் கௌரவர்களைத் தடுக்கத் தொடங்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மன், கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சூதன் மகன் {கர்ணன்}, உலூகன், சுபலன் மகன் (சகுனி), தன்னுடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய மன்னன் {துரியோதனன்} ஆகியோர்,(1) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அச்சத்தில் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் உடைந்த மரக்கலமொன்றைப் போல ஒன்றாக நிற்க முடியாத நிலையில் இருக்கும் (குரு) படையைக் கண்டு, பெரும் வேகத்துடன் அதை மீட்க முயன்றனர்.(2) மீண்டும் நடந்த போரானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒரு குறுகிய காலத்திற்கு மிகக் கடுமையானதாகவும், மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் இன்பத்தையும் அதிகரிக்கும் வண்ணம் நடந்தது.(3) அந்தப் போரில் கிருபரால் ஏவப்பட்ட அடர்த்தியான கணை மாரியானது, அடர்த்தியான விட்டிற்பூச்சிகளைப் போலச் சிருஞ்சயர்களை மறைத்தது.(4)

அப்போது சினத்தால் நிறைந்த சிகண்டி, கௌதமர் மகனுக்கு {கௌதமரின் பேரனும், சரத்வானின் மகனுமான கிருபருக்கு} எதிராக வேகமாகச் சென்று, அந்தப் பிராமணக் காளையின் மேல் தன் கணைமாரியை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பொழிந்தான்.(5) உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவரான கிருபர், அந்தக் கணைப்பொழிவைத் தடுத்து, அந்தப் போரில் கோபத்துடன் பத்து கணைகளால் சிகண்டியைத் துளைத்தார்.(6) அப்போது சினத்தால் நிறைந்த சிகண்டி, நேரானவையும், கங்க இறகுகளைக் கொண்டவையுமான ஏழு கணைகளால் அம்மோதலில் கிருபரை ஆழத் துளைத்தான்.(7) பிறகு, பெரும் தேர்வீரரும், இரு பிறப்பாளருமான {பிராமணருமான} அந்தக் கிருபர், அந்தக் கூரிய கணைகளால் ஆழத் துளைக்கப்பட்டு, சிகண்டியை அவனது குதிரைகள், சாரதி மற்றும் தேர் ஆகியவற்றை இழக்கச் செய்தார்.(8) குதிரைகளற்ற தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (சிகண்டி), ஒரு வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு அந்தப் பிராமணரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(9) அம்மோதலில் அந்தப் பாஞ்சால இளவரசன் {சிகண்டி} முன்னேறிச் செல்கையில் அவனை நேரான கணைகள் பலவற்றால் கிருபர் மறைத்தது பெரும் ஆச்சரியம் நிறைந்ததாக இருந்தது.(10) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வாறு தாக்கப்பட்ட) சிகண்டி, முற்றிலும் செயல்பாடின்றியிருக்கும் பறக்கும் (மிதக்கும்) பாறைகளைப் போல இருந்த காட்சியை அந்தப் போரில் நாங்கள் மிக அற்புதம் நிறைந்ததாகவே கண்டோம்.(11)

ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிருபரால் (கணைகளைக் கொண்டு) மறைக்கப்பட்ட சிகண்டியைக் கண்ட திருஷ்டத்யும்னன், கிருபரை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(12) எனினும் பெரும் தேர்வீரனான கிருதவர்மன், மூர்க்கமாக விரைந்து சரத்வான் மகனை {கிருபரை} எதிர்த்துச் செல்லும் திருஷ்டத்யும்னனை எதிர்கொண்டான்.(13) சரத்வான் மகனின் {கிருபரின்} தேரை நோக்கித் தன் மகன் மற்றும் துருப்புகளுடன் விரைந்த யுதிஷ்டிரனைத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} தடுத்தான்.(14) உமது மகன் துரியோதனன், கணைமாரியை ஏவி கொண்டு, பெரும் வேகத்தைக் கொண்டவர்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரையும் எதிர்கொண்டு தடுத்தான்.(15) வைகர்த்தனன் என்று வேறு பெயரில் அழைக்கப்படும் கர்ணனும், ஓ! பாரதரே, அந்தப் போரில் பீமசேனன், காருஷர்கள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களைத் தடுத்தான்.(16)

அதேவேளையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சரத்வான் மகன் {கிருபர்}, பெரும் சுறுசுறுப்புடன், சிகண்டியை எரிக்கும் நோக்கோடு, அவன் மீது கணைகள் பலவற்றை ஏவினார்.(17) எனினும் அந்தப் பாஞ்சால இளவரசன் {சிகண்டி} தன் வாளை மீண்டும் மீண்டும் சுழற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை நோக்கிக் கிருபரால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் அனைத்தையும் வெட்டினான்.(18) அப்போது கௌதமர் மகன் {கிருபர்}, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பிருஷதன் மகனுடைய {சிகண்டியுடைய} கேடயத்தைத் தன் கணைகளால் வேகமாக வெட்டினார்.(19) ஓ! ஏகாதிபதி, தன் கேடயத்தை இழந்து கிருபருடைய சக்தியின் ஆளுகைக்குள் இருந்த சிகண்டி, காலனின் கோரப் பற்களுக்கிடையே சிக்கிய நோயாளியைப் போல (கிருபரை நோக்கி) கையில் வாளுடன் விரைந்து சென்றான்.(20)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்திரகேதுவின் மகன் சுகேது [1], அவ்வாறு கிருபரின் கணைகளால் தாக்கப்பட்டுத் துயரில் மூழ்கியிருந்த வலிமைமிக்கச் சிகண்டியை நோக்கிச் சென்றான்.(21) உண்மையில் அளவிலா ஆன்மா கொண்டவனும், இளைஞனுமான அந்த இளவரசன், கௌதமரின் தேரை நோக்கி விரைந்து, அந்தப் பிராமணரின் மீது பெருங்கூர்மை கொண்ட எண்ணற்ற கணைகளை அந்தப் போரில் பொழிந்தான்.(22) நோன்புகள் நோற்கும் அந்தப் பிராமணர், போரில் (வேறொருவனுடன்) ஈடுவதைக் கண்ட சிகண்டி, ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அந்த இடத்தில் இருந்து வேகமாகப் பின்வாங்கினான்.(23) அதே வேளையில் சுகேது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்பது கணைகளால் கௌதமரின் மகனைத் {கிருபரைத்} துளைத்து, மேலும் எழுபதாலும், அதன் பிறகு மீண்டும் மூன்றாலும் துளைத்தான்.(24) ஓ! ஐயா, அதன் பிறகு அந்த இளவரசன் {சுகேது} கிருபரின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்து, மற்றொரு கணையால், பின்னவருடைய {கிருபருடைய} சாரதியின் முக்கிய அங்கத்தைக் கடுமையாகத் தாக்கினான்.(25)

சினத்தால் நிறைந்த கௌதமர் மகன் {கிருபர்}, மிக உறுதியான புதிய வில் ஒன்றை எடுத்துக் கொண்டு, முப்பது கணைகளால் சுகேதுவின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் தாக்கினார்.(26) அங்கங்கள் அனைத்தும் மிகப் பலவீனமடைந்த அந்த இளவரசன் {சுகேது}, நிலநடுக்கத்தின் போது நடுங்கும் ஒரு மரத்தைப் போலத் தன் சிறந்த தேரில் நடுங்கினான்.(27) அப்போது, கத்தி தலை கணையொன்றை எடுத்த கிருபர், அவ்விளவரசன் நடுங்கிக் கொண்டே இருக்கையில், சுடர்மிக்கக் காதுகுண்டலங்கள், தலைப்பாகை மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது {சுகேதுவின்} தலையை, அவனது உடலில் இருந்து வீழ்த்தினார்.(28) அதன்பேரில் அந்தத் தலையானது, பருந்தின் நகங்களில் இருந்து விழும் இறைச்சித் துண்டைப் போலப் பூமியில் விழுந்ததும், ஓ! பெரும் புகழ் கொண்டவரே, அவனது உடலும் கீழே விழுந்தது.(29) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுகேதுவின் வீழ்ச்சியின் பேரில் அச்சமடைந்த அவனது துருப்புகள் கிருபரைத் தவிர்த்துவிட்டு, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.(30)

வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனைச் சூழ்ந்து கொண்ட கிருதவர்மன், அவனிடம் உற்சாகமாக, “நில், நிற்பாயாக” என்றான்.(31) அந்த விருஷ்ணி மற்றும் பாஞ்சாலப் போர்வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது, ஓர் இறைச்சித் துண்டுக்காக இரு பருந்துகளுக்கிடையில் நடைபெறுவதைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது.(32) சினத்தால் நிறைந்த திருஷ்டத்யும்னன் அந்தப் போரில் ஒன்பது கணைகளால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} தாக்கி, அவனைப் பெரிதும் பீடிப்பதில் வென்றான்.(33) பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} இவ்வாறு ஆழத் துளைக்கப்பட்ட கிருதவர்மன், அந்தப் போரில் தன்னைத் தாக்குபவனுடைய குதிரைகள், தேர் மற்றும் அவனது கணைகள் ஆகியவற்றை {தன் கணைகளால்} மறைத்தான்.(34) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு தேரோடு மறைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், மழைநிறைந்த மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலக் கண்ணுக்குப் புலப்படாதவனாக ஆனான்.(35) பிறகு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்த திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா, அந்தப் போரில் தன் காயங்களோடு பிரகாசமாகத் தெரிந்தான்.(36)

பாண்டவப் படைத்தலைவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சினத்தால் நிறைந்து, கிருதவர்மனை அணுகி, கடும் கணைமாரியை அவன் மீது பொழிந்தான்.(37) எனினும் ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, அந்தப் போரில் தன்னை நோக்கிப் பெரும் மூர்க்கத்துடன் வந்து கொண்டிருந்த அந்தக் கடுங்கணை மாரியை பல்லாயிரக்கணக்கான தன் கணைகளால் அழித்தான்.(38) தாங்கிக் கொள்ள முடியாத தன் கணைமாரியானது அந்தப் போரில் கிருதவர்மனால் தடுக்கப்பட்டதைக் கண்ட பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் எதிராளியை அணுகி அவனைத் {கிருதவர்மனைத்} தடுக்கத் தொடங்கினான்.(39) விரைவில் அவன் {திருஷ்டத்யும்னன்}, பெரும் கூர்மை கொண்ட அகன்ற தலை கணை ஒன்றால் கிருதவர்மனின் சாரதியை யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(40) வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தன் எதிராளியை வீழ்த்திய பிறகு, ஒரு கணமும் தாமதிக்காமல் தன் கணைகளால் கௌரவர்களைத் தடுக்கத் தடுங்கினான்.(41) அப்போது, ஓ! மன்னா, உமது போர்வீரர்கள், பெரும் சிங்க முழக்கங்களைச் செய்து கொண்டு திருஷ்டத்யும்னனை நோக்கி விரைந்தனர். இதனால், அவர்களுக்கிடையில் மீண்டும் ஒரு போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(42)

யுதிஷ்டிரனோடு மோதிய அஸ்வத்தாமன்! – கர்ண பர்வம் பகுதி – 55-நன்கு பாதுகாக்கப்பட்ட யுதிஷ்டிரனை உற்சாகமாக எதிர்த்துச் சென்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைத் தாக்கிய சாத்யகியும், திரௌபதியின் மகன்களும்; பதிலுக்கு அவர்களைத் தாக்கிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த சாத்யகி; சாத்யகியின் சாரதியைக் கொன்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனிடம் பேசிய யுதிஷ்டிரன் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றது; அஸ்வத்தாமனும் விலகிச் சென்றது; கௌரவப் படையை எதிர்த்துச் சென்ற யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிநியின் பேரனாலும் {சாத்யகியாலும்} திரௌபதியின் வீர மகன்களாலும் பாதுகாக்கப்பட்ட யுதிஷ்டிரனைக் கண்டு, மன்னனை {யுதிஷ்டிரனை} உற்சாகமாக எதிர்த்துச் சென்று,(1) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கடுங்கணைகள் பலவற்றை இறைத்தபடியே, தன் தேரில் பல்வேறு வழிமுறைகளையும், தான் அடைந்த பெரும் திறனையும், தனது அதீத கரநளினத்தையும் வெளிக்காட்டினான்.(2) தெய்வீக ஆயுதங்களின் சக்தியால் ஈர்க்கப்பட்ட கணைகளைக் கொண்டு மொத்த ஆகாயத்தையே அவன் {அஸ்வத்தாமன்} நிறைத்தான்.(3) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்டதால் எதையும் காண முடியவில்லை. அஸ்வத்தாமனுக்கு முன்பு இருந்த பரந்த வெளியானது, கணைகளின் ஒரே பரப்பாக ஆனது.(4) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் இவ்வாறு மறைக்கப்பட்ட ஆகாயமானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கத்தால் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட கூடாரம் ஒன்று அங்கே விரிக்கப்பட்டதைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(5) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பிரகாசமான கணைமாரியால் மறைக்கப்பட்ட ஆகாயத்தில், மேகங்களைப் போன்ற ஒரு நிழல் அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றியது.(6) இவ்வாறு கணைகளின் ஒரே பரப்பாக இருந்த வானத்தில் வானுலாவும் உயிரினமேதும் பறக்க முடியாததை அற்புதம் நிறைந்த காட்சியாக நாங்கள் கண்டோம்.(7)

அப்போது சாத்யகி, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் பிற போர்வீரர்கள் தீர்மானத்துடன் போராடினாலும், அவர்கள் அனைவராலும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த முடியவில்லை. துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} வெளிக்காட்டப்பட்ட பெருங்கரநளினத்தைக் கண்ட (பாண்டவப் படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருக்கும் சூரியனைப் போல எரித்துக் கொண்டிருந்த அஸ்வத்தாமனைப் பார்க்கவும் இயலாதவர்களாக அந்த மன்னர்கள் அனைவரும் இருந்தனர். இவ்வாறு (பாண்டவத்) துருப்புகள் கொல்லப்பட்ட போது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பாஞ்சாலப் போர்வீரர்கள் ஆகியோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, மரணம் குறித்த தங்கள் அச்சங்கள் அனைத்தையும் உதறித்தள்ளி, துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தனர்.(8-11)

அப்போது சாத்யகி, இருபத்தேழு கணைகளால் துரோணர் மகனைத் {அஸ்வத்தாமனைத்} துளைத்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட மேலும் ஏழு நீண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்} அவனைத் துளைத்தான்.(12) யுதிஷ்டிரன் அவனை {அஸ்வத்தாமனை} எழுபத்து மூன்று கணைகளாலும், பிரதிவிந்தியன் ஏழாலும்; சுருதகர்மன் மூன்றாலும், சுருதகீர்த்தி ஐந்தாலும் அவனைத் துளைத்தனர்.(13) மேலும் சுதசோமன் ஒன்பது கணைகளாலும், சதானீகன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்[1]. மேலும் வேறு வீரர்கள் பலரும் அவனை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பல கணைகளால் துளைத்தனர்.(14)

அப்போது சினத்தால் நிறைந்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கல்லில் கூராக்கப்பட்ட இருபத்தைந்து கணைகளால் பதிலுக்குச் சாத்யகியைத் துளைத்தான்.(15) மேலும் அவன் சுருதகீர்த்தியை ஒன்பது கணைகளாலும், சுதசோமனை ஐந்தாலும்; சுருதகர்மனை எட்டாலும், பிரதிவிந்தியனை மூன்றாலும் துளைத்தான்.(16) மேலும் அவன் {அஸ்வத்தாமன்} சதானீகனை ஒன்பது கணைகளாலும், தர்மனின் மகனை (யுதிஷ்டிரனை) ஐந்தாலும் துளைத்தான். மேலும் பிற போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் அவன் இரண்டு இரண்டு கணைகளால் துளைத்தான். பிறகு அவன் சில கூரிய கணைகளைக் கொண்டு சுருதகீர்த்தியின் வில்லை அறுத்தான்.(17) அப்போது, பெருந்தேர்வீரனான பின்னவன் {சுருதகீர்த்தி} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு முதலில் மூன்று கணைகளாலும், பிறகு கூர்முனைகளைக் கொண்ட வேறு பிற கணைகள் பலவற்றாலும் துரோணரின் மகனைத் துளைத்தான்.(18) பிறகு, ஓ ஏகாதிபதி, ஓ! பாரதக் குலக் காளையே, துரோணரின் மகன் அந்தப் பாண்டவத் துருப்புகளை அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(19)

அளவிலா ஆன்மா கொண்டவனான அந்தத் துரோணர் மகன் சிரித்துக் கொண்டே நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை அறுத்து, அடுத்ததாக மூன்று கணைகளால் அவனையும் {யுதிஷ்டிரனையும்} துளைத்தான்.(20) அப்போது, மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்ட தர்மன் மகன் {யுதிஷ்டிரன்}, எழுபது கணைகளால் துரோணரின் மகனுடைய {அஸ்வத்தாமனுடைய} கரங்களையும், மார்பையும் துளைத்தான்.(21) பிறகு அந்தப் போரில் சினத்தால் நிறைந்த சாத்யகி, பெரும் தாக்குதலைச் செய்பவனான துரோணர் மகனின் வில்லை ஓர் அர்த்தச் சந்திரக் கணையால் அறுத்து, உரக்க முழங்கினான்.(22) தன் வில் வெட்டப்பட்டவனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓர் ஈட்டியால் சாத்யகியின் சாரதியை அவனது தேரில் இருந்து வேகமாக வீழ்த்தினான்.(23) அப்போது துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, மற்றொரு வில்லை எடுத்துக்கொண்டு, ஓ! பாரதரே, சினியின் பேரனை {சாத்யகியைக்} கணைமாரியால் மறைத்தான்.(24) அவனது சாரதி கொல்லப்பட்டதும், ஓ! பாரதரே, அந்தப் போரில் சாத்யகியின் குதிரைகள் அங்கும் இங்கும் ஓடுவதாகத் தெரிந்தது.(25)

அப்போது யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவப் போர்வீரர்கள் அனைவரும் கூரிய கணைகளை ஏவியபடி, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணர் மகனை நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.(26) எனினும், எதிரிகளை எரிப்பவனான அந்தத் துரோணர் மகன், தன்னை எதிர்த்து கோபத்துடன் வரும் போர்வீரர்களைக் கண்டு, அவர்கள் அனைவரையும் அந்தப் போரில் எதிர்கொண்டான்.(27) பிறகு, காட்டில் உலர்ந்த புற்கள் மற்றும் வைக்கோல் குவியலை எரிக்கும் நெருப்பைப் போன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான துரோணர் மகன், தன் கணைமாரியையே தனது தழல்களாகக் கொண்டு, உலர்ந்த புல் மற்றும் வைக்கோல் குவியலுக்கு ஒப்பான பாண்டவத் துருப்புகளை அந்தப் போரில் எரித்தான்.(28) துரோணர் மகனால் இவ்வாறு எரிக்கப்பட்ட அந்தப் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} படையானது, ஓ! பாரதர்களின் தலைவரே, திமிங்கலத்தால் கலக்கப்படும் ஆற்றின் முகத்துவாரத்தைப் போல மிகவும் கலக்கமடைந்தது.(29) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணர் மகனின் ஆற்றலைக் கண்ட மக்கள், பாண்டவர்கள் அனைவரும் அவனால் {அஸ்வத்தாமனால்} ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே கருதினர்.(30)

அப்போது, பெரும் தேர்வீரனும், துரோணரின் சீடனுமான யுதிஷ்டிரன், சினத்தாலும், பதிலடி கொடுக்கும் விருப்பத்தாலும் நிறைந்து, துரோணர் மகனிடம்[2],(31) “ஓ! மனிதர்களில் புலியே, இன்று நீர் என்னைக் கொல்ல விரும்புவதால், உம்மிடம் பற்று {அன்பு} மற்றும் நன்றியுணர்வு ஏதும் இல்லை. தவம், கொடை மற்றும் கல்வியே ஒரு பிராமணரின் கடமைகளாகும்.(32) வில்லானது க்ஷத்திரியனால் மட்டுமே வளைக்கப்பட வேண்டும். எனவே, நீர் பெயரளவில் மட்டமே பிராமணராக இருக்கிறீர் என்றே தெரிகிறது.(33) எனினும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இப்போரில் நான் கௌரவர்களை வெல்வேன். போரில் உம்மால் என்ன முடியுமோ அதைச் செய்யும். பிராமணர்களில் இழிந்தவர் என்றே நான் உம்மைச் சொல்வேன்” என்றான் {யுதிஷ்டிரன்}[3].(34)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே, எது முறையானது, எது உண்மையானது என்பதைச் சிந்தித்து மறுமொழியேதும் கூறாதிருந்தான். எதையும் சொல்லாத அவன், கோபத்தில் உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கும் அந்தகனைப் போல அந்தப் போரில், கணைமாரியால் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} மறைத்தான்.(36) இவ்வாறு துரோணர் மகனால் மறைக்கப்பட்ட அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! ஐயா, தன் பெரும்படையை விட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து வேகமாகச் சென்றான்.(37) தர்மனின் மகனான யுதிஷ்டிரன் சென்றதும், ஓ! மன்னா, உயர் ஆன்ம துரோணர் மகனும் அந்த இடத்தைவிட்டு அகன்றான். அப்போது, ஓ! மன்னா, அந்தப் பெரும்போரில் துரோணர் மகனைத் தவிர்த்த யுதிஷ்டிரன், கொடும்பணியான படுகொலைகளைச் செய்யத் தீர்மானித்து உமது படையை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(39)

அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 56-அர்ஜுனன், பீமன் மற்றும் கர்ணன் ஆகியோர் ஏற்படுத்திய பேரழிவு; நகுலன் மற்றும் சகாதேவனோடு போரிட்ட துரியோதனன்; துரியோதனனைத் தடுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் வில்லை மீண்டும் மீண்டும் அறுத்த துரியோதனன்; துரியோதனனைத் தேரற்றவனாகச் செய்த திருஷ்டத்யும்னன்; துரியோதனைக் காத்த தண்டதாரன்; பாஞ்சாலத் தலைவர்களைக் கொன்ற கர்ணன்; கர்ணனோடு போரிட முன்னேறிய யுதிஷ்டிரன்; கர்ணனைத் தாக்கிய பாண்டவக்கூட்டம்; பீமனைக் கண்ட அச்சத்தால் உயிரைவிட்ட தேர்வீரர்கள்; சம்சப்தகர்களை வென்ற அர்ஜுனன்; கௌரவப் படையை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அர்ஜுனனைத் தடுத்த அஸ்வத்தாமன்; அர்ஜுனனை விஞ்சி நின்ற அஸ்வத்தாமன்; அர்ஜுனனைக் கண்டித்த கிருஷ்ணன்; அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்; காயம் காரணமாக வெகுதூரம் விலகிச் சென்று ஓய்வெடுத்த யுதிஷ்டிரன்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதே வேளையில் வைகர்த்தனன் {கர்ணன்}, பாஞ்சாலர்களாலும், சேதிகளாலும், கைகேயர்களாலும் ஆதரிக்கப்பட்ட பீமசேனனைத் தடுத்துக் கணைகள் பலவற்றால் அவனை மறைத்தான்.(1) அந்தப் போரில் பீமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சேதிகள், காருஷர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கர்ணன் கொன்றான்.(2) அப்போது பீமசேனன், தேர்வீரர்களில் சிறந்தவனான கர்ணனைத் தவிர்த்துவிட்டு, உலர்ந்த புற்களை நோக்கிச் செல்லும் சுடர்மிக்க நெருப்பைப் போலக் கௌரவத் துருப்புகளை எதிர்த்துச் சென்றான்.(3) சூதன் மகனும் {கர்ணனும்} அந்தப் போரில் பாஞ்சாலர்கள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களில் ஆயிரக்கணக்கான வலிமைமிக்க வில்லாளிகளைக் கொல்லத் தொடங்கினான்.(4) உண்மையில், மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தன் {அர்ஜுனன்}, விருகோதரன் {பீமன்} மற்றும் கர்ணன் ஆகியோர் முறையே சம்சப்தகர்கள், கௌரவர்கள் மற்றும் பாஞ்சாலர்களைக் கொல்லத் தொடங்கினர்.(5) உமது தீய கொள்கையின் {ஆலோசனைகளின்} விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அந்த மூன்று பெரும் போர்வீரர்களின் சிறந்த கணைகளால் எரிக்கப்பட்டு, அந்தப் போரில் அழியத் தொடங்கினர்.(6)

அப்போது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த துரியோதனன், ஒன்பது கணைகளால் நகுலனையும் அவனது நான்கு குதிரைகளையும் துளைத்தான்.(7) அடுத்ததாக அளவிலா ஆன்மாகக் கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, கத்திமுகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் சகாதேவனின் தங்கக் கொடிமரத்தை வெட்டி வீழ்த்தினான்.(8) கோபத்தால் நிறைந்த நகுலன், ஓ! மன்னா, அந்தப் போரில் உமது மகனை எழுபத்து மூன்று கணைகளால் தாக்கினான், சகாதேவனோ ஐந்தால் அவனைத் தாக்கினான்.(9) பாரதக் குலத்தின் முதன்மையான போர்வீரர்களும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும், சினங்கொண்ட துரியோதனின் ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளால் தாக்கப்பட்டனர்.(10) மேலம் அகன்ற தலை கொண்ட இரு கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, அந்தப் போராளிகள் இருவரின் வில்லையும் அவன் {துரியோதனன்} அறுத்தான்; பிறகு அவன் எழுபத்து மூன்று கணைகளால் அந்த இரட்டையரில் ஒவ்வொருவரையும் திடீரெனத் துளைத்தான்.(11)

இந்திரனின் வில்லுக்கு ஒப்பானவையும், முதன்மையானவையுமான அழகிய இரு விற்களை எடுத்துக் கொண்ட அந்த வீரர்கள் {நகுலன் -சகாதேவன்} இருவரும், அந்தப் போரில் தெய்வீக இளைஞர்களைப் போல அழகாகத் தெரிந்தனர்.(12) பிறகு, போரில் பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகத் திரள்கள் இரண்டைப் போலத் தங்கள் சகோதரன் {துரியோதனன்} மீது இடையறாத பயங்கரக் கணைமாரியைப் பொழிந்தனர்.(13) அதன்பேரில், ஓ! மன்னா, பெரும் தேர்வீரனான உமது மகன் {துரியோதனன்}, சினத்தால் நிறைந்து, சிறகு படைத்த கணைகளின் மாரியால் இரு பெரும் வில்லாளிகளான அந்தப் பாண்டுவின் இரட்டை மகன்களைத் தடுத்தான்.(14) ஓ! பாரதரே, அந்தப் போரில் துரியோதனனின் வில்லானது தொடர்ந்து வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது, அதிலிருந்து கணைகள் அனைத்துப் பக்கங்களிலும் இடையறாமல் வெளிவருவதும் காணப்பட்டது.(15) துரியோதனனின் கணைகளால் மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன்கள் இருவரும், மேகத்திரள்களால் மறைக்கப்பட்டுக் காந்தியை இழந்து ஆகாயத்தில் இருக்கும் சந்திரனையும், சூரியனையும் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.(16) உண்மையில், ஓ! மன்னா, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் சூரியனின் கதிர்களைப் போலத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தன.(17) ஆகாயம் இவ்வாறு மறைக்கப்பட்டு, காணும் அனைத்தும் ஒரே சீரான கணைகளின் பரப்பாகவே இருந்தபோது, இரட்டையரின் கூறுகள் {தன்மைகள்}, யுகமுடிவின் அந்தகனைப் போல வெளிப்பட்டன.(18) மறுபுறம், உமது மகனின் ஆற்றலைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், காலனின் முன்னிலையில் நிற்பதாகவே மாத்ரியின் இரட்டை மகன்களைக் கருதினர்.(19)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையின் தலைவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பார்ஷதன் {திருஷ்டத்யும்னன்} துரியோதனன் இருந்த இடத்திற்கு வந்தான்.(20) பெரும் தேர்வீரர்களான மாத்ரியின் மகன்கள் இருவரையும் கடந்து சென்று தனது கணைகளால் அவன் உமது மகனைத் தடுக்கத் தொடங்கினான்.(21) அளவிலா ஆன்மா கொண்டவனும், மனிதர்களில் காளையுமான உமது மகன், பதிலடி கொடுக்கும் விருப்பத்தால் நிறைந்தவனாகச் சிரித்துக் கொண்டே இருபத்தைந்து கணைகளால் அந்தப் பாஞ்சால இளவரசனைத் {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தான்.(22) அளவிலா ஆன்மா கொண்டவனும், மனிதர்களில் காளையுமான உமது மகன், பதிலடி கொடுக்கும் விருப்பத்தால் நிறைந்தவனாக மீண்டும் அந்தப் பாஞ்சால இளவரசனை அறுபது கணைகளாலும், அதன் பிறகு ஐந்தாலும் துளைத்து உரத்த முழக்கம் செய்தான்.(23) பிறகு அந்த மன்னன் {துரியோதனன்} கூரிய கத்தி முனை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால், ஓ! ஐயா, அந்தப் போரில் தன் எதிராளியின் கணைபொருத்தப்பட்ட வில்லையும், தோலாலான கையுறையையும் அறுத்தான்.(24) முறிந்த வில்லை வீசியெறிந்தவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, புதியதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(25) வேகத்தால் சுடர்மிக்கவனும், கோபத்தால் குருதி சிவப்பான கண்களைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தத் திருஷ்டத்யும்னன், தன் மேனியில் உள்ள காயங்கள் பலவற்றுடன் தன் தேரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(26)

ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, துரியோதனனைக் கொல்ல விரும்பிய அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, சீறும் பாம்புகளுக்கு ஒப்பான துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} பதினைந்தை ஏவினான்.(27) கல்லில் கூராக்கப்பட்டவையும், கங்கம் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட மன்னனின் {திருஷ்டத்யும்னனின்} கவசத்தைப் பிளந்து, அவனது உடலினூடாகக் கடந்து சென்று, ஏவப்பட்ட சக்தியின் விளைவால் பூமிக்குள் நுழைந்தன.(28) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆழத்துளைக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, இளவேனிற்காலத்தில், மலர்களின் கனத்துடன் கூடிய ஒரு பெரிய கின்சுகத்தை {பலாச மரத்தைப்} போல மிக அழகாகத் தெரிந்தான்.(29) அக்கணைகளால் கவசம் பிளக்கப்பட்டு, தன் மேனியெங்கும் அடைந்த காயங்களால் மிகவும் உறுதியற்ற நிலையை அடைந்த அவன் {துரியோதனன்}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்தான்.(30) ஓ! ஏகாதிபதி, தன் எதிராளியின் வில்லை அறுத்த மன்னன் {துரியோதனன்},  பெரும் வேகத்துடன், அவனது {திருஷ்டத்யும்னனின்} நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியிலும் பத்து கணைகளால் தாக்கினான்.(31) கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்ட அக்கணைகள், தேன் விரும்பும் வண்டுகள் முற்றும் மலர்ந்த தாமரையை அலங்கரிப்பதைப் போலத் திருஷ்டத்யும்னனின் முகத்தை அலங்கரித்தன.(32)

அந்த முறிந்த வில்லை வீசி எறிந்த உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், மற்றொரு வில்லையும், பதினாறு அகன்ற தலை கணைகளையும் வேகமாக எடுத்துக் கொண்டான்.(33) ஐந்தால் துரியோதனனின் நான்கு குதிரைகளையும், சாரதியையும் கொன்ற அவன் {திருஷ்டத்யும்னன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அவனது வில்லை மற்றொன்றால் {கணையால்} அறுத்தான்.(34) எஞ்சியிருந்த பத்தை கணைகளால், உமது மகனுடைய தேரின் உபஷ்கரம் {உபகரணங்கள்}, குடை, ஈட்டி, வாள், கதாயுதம் மற்றும் கொடிமரத்தையும் அறுத்தான்.(35) உண்மையில், தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட குரு மன்னனின் {துரியோதனனின்} அழகிய கொடிமரமும், ரத்தின வேலைப்பாடு செய்யப்பட்ட யானைப் பொறியும் {கொடியில் உள்ள இலச்சனையும்} பாஞ்சாலர்களின் இளவரசனால் {திருஷ்டத்யும்னனால்} அறுக்கப்பட்டதை மன்னர்கள் அனைவரும் கண்டனர்.(36) அப்போது துரியோதனனுடன் பிறந்த தம்பிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, தேரற்றவனும், அந்தப் போரில் தன் ஆயுதங்கள் அனைத்தும் அறுபட்டவனுமான துரியோதனனை மீட்டனர்.(37) திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ! ஏகாதிபதி, அந்த மனிதர்களின் ஆட்சியாளனை {துரியோதனைத்} தன் தேரில் ஏறச் செய்த துருதரன் {குண்டதாரன், தண்டதாரன்},[1] வேகமாக அவனைப் போருக்கு வெளியே கொண்டு சென்றான்.(38)

அதே வேளையில், வலிமைமிக்கக் கர்ணன், சாத்யகியை வென்றதும், (குரு) மன்னனை {துரியோதனனைக்} காக்க விரும்பி, கடுங்கணைகளைக் கொண்டவனும், துரோணரைக் கொன்றவனுமான அந்தப் போர்வீரனை {திருஷ்டத்யும்னனை} முகத்துக்கு நேராக எதிர்த்துச் சென்றான்.(39) எனினும், சிநியின் பேரன் {சாத்யகி} அவனை வேகமாகப் பின் தொடர்ந்து வந்து, தன் எதிராளியைத் துரத்திச் செல்லும் யானையானது தன் தந்தங்களால் பின்னால் இருந்து தாக்குவதைப் போலத் தன் கணைகளால் அவனைத் தாக்கினான்.(40) அப்போது, ஓ! பாரதரே, கர்ணனுக்கும், பிருஷதன் மகனுக்கும் இடையில் இருந்த வெளியில் இரு படைகளின் உயர் ஆன்ம போர்வீரர்களுக்கும் இடையில் நடந்த போரானது மிகத் தீவிரமாக நடந்தது.(41) பாண்டவர்களிலோ, நம்மிலோ புறமுதுகிட்ட போர்வீரன் ஒருவன் கூட இல்லை. அப்போது கர்ணன் பாஞ்சாலர்களை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு சென்றான்.(42) சூரியன் உச்சி வானுக்கு உயர்ந்த வேளையில், ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இருதரப்பிலும் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டது.(43)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட பாஞ்சாலர்கள் அனைவரும், பறவைகள் மரத்தை நோக்கிச் செல்வதைப் போலக் கர்ணனை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(44) பெரும் சக்தி கொண்ட அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, சினத்தால் நிறைந்து, பாஞ்சாலர்களின் தலைவர்களான வியாக்ரகேது, சுசர்மன், சித்திரன், உக்ராயுதன், ஜயன், சுக்லன், ரோசமானன், வெல்லப்பட முடியாத சிங்கசேனன் ஆகியோரைத் தனித்தனியாகத் தன் கூர்முனைக் கணைகளால் தாக்கத் தொடங்கினான்.(45,46) தங்கள் தேர்களில் வேகமாக முன்னேறி வந்த அந்த வீரர்கள், கோபக்கார வீரனும், போர்க்கள ரத்தினமுமான அந்தக் கர்ணனைச் சூழ்ந்து கொண்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவன் மேல் தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(47) மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் வீரம் கொண்டவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன்னோடு போரில் ஈடுபட்ட அந்த எட்டு வீரர்களையும் எட்டு கூரிய கணைகளால் பீடித்தான்.(48) பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா, போரில் திறம்பெற்ற பல்லாயிரக்கணக்கான போர்வீரர்கள் பிறரை அப்போது கொன்றான்.(49)

சினத்தால் நிறைந்த ராதையின் மகன் {கர்ணன்} அப்போது அந்தப் போரில், ஜிஷ்ணு, ஜிஷ்ணுகர்மன், தேவாபி, சித்திரன், சித்ராயுதன், ஹரி, சிங்ககேது, ரோசமானன், பெரும் தேர்வீரனான சலபன் மற்றும் சேதிகளின் தேர்வீரர்களில் பலரையும் கொன்றான்.(50,51) அந்த வீரர்களின் உயிரை எடுத்துக் குருதியில் குளித்திருந்த அதிரதன் மகனின் {கர்ணனின்} வடிவமானது, ருத்ரனின் பெருவடிவத்தைப் போலச் சக்தியிலும், செருக்கிலும் பெருகியிருந்தது.(52) ஓ! பாரதரே, அங்கே கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட யானைகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களுக்கும் தப்பி ஓடி, அந்தப் போர்க்களத்தில் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தின.(53) கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட பிறர், பல்வேறு கூச்சல்களையிட்டவாரே இடியால் பிளக்கப்பட்ட மலைகளென விழுந்தனர்.(54) கர்ணன் சென்ற தடமெங்கும், விழுந்துவிட்ட யானைகள், குதிரைகள், மனிதர்கள் ஆகியோரின் உடல்களாலும், விழுந்துவிட்ட தேர்களாலும் பூமியானது விரவிக் கிடந்தது.(55)

உண்மையில் பீஷ்மரோ, துரோணரோ, உமது படையின் பிற போர்வீரர்கள் எவருமோ எப்போதும் சாதிக்காத அருஞ்செயல்களே அந்தப் போரில் கர்ணனால் சாதிக்கப்பட்டன.(56) ஓ! மனிதர்களில் புலியே, யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் அந்தச் சூதன் மகன் பேரழிவை உண்டாக்கினான்.(57) மான் கூட்டத்திற்கு மத்தியில் சிங்கமானது அச்சமற்றுத் திரிவதைப் போலவே, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் கர்ணன் அச்சமில்லாமல் திரிந்தான்.(58) சிங்கமானது அச்சத்திலிருக்கும் மான்கூட்டத்தைத் திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் சிதறடிப்பதைப் போலவே, கர்ணனும் பாஞ்சாலர்களின் தேர்க்கூட்டங்களை அனைத்துப் பக்கத்திற்கும் சிதறடித்தான்.(59) சிங்கத்தின் கோரப்பற்களை அடைந்து உயிருடன் தப்பவே முடியாத மானைப் போலவே கர்ணனை அணுகிய பெருந்தேர்வீரர்களால் தங்கள் உயிர்களுடன் தப்ப முடியவில்லை.(60) சுடர்மிக்க நெருப்பைத் தீண்டினால் உறுதியாக எரிந்துவிடும் மக்களைப் போலே, ஓ! பாரதரே, சிருஞ்சயர்களும், கர்ணநெருப்பின் அருகாமையை அடைந்ததும் எரிக்கப்பட்டனர்.(61) சேதிகள் மற்றும் பாஞ்சாலர்களின் போர்வீரர்களில் வீரர்களாகக் கருதப்பட்ட பலர், அவர்களோடு தனியனாகப் போரிட்ட கர்ணனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது பெயர் அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.(62) கர்ணனின் ஆற்றலைக் கண்ட {சஞ்சயனாகிய} நான், ஓ! மன்னா, அதிரதன் மகனிடமிருந்து ஒரு பாஞ்சாலனும் அந்தப் போரில் தப்பமாட்டான் என்றே நினைத்தேன்.(63) உண்மையில் சூதன் மகன் {கர்ணன்} அந்தப் போரில் மீண்டும் மீண்டும் பாஞ்சாலர்களை முறியடித்தான்.(64)

அந்தப் பயங்கரப் போரில் இவ்வாறு பாஞ்சாலர்களைக் கொல்லும் கர்ணனைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவனை நோக்கிக் கோபத்துடன் விரைந்தான்.(65) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், திரௌபதியின் மகன்களும், நூற்றுக்கணக்கான போர்வீரர்களும், எதிரிகளைக் கொல்பவனான அந்த ராதையின் மகனை {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டனர்.(66) சிகண்டி, சகாதேவன், நகுலன், நகுலனின் மகன் {சதானீகன்}, ஜனமேஜயன், சிநியின் பேரன் {சாத்யகி}, பிரபத்ரகர்கள்(67) ஆகிய அளவிலா சக்தி கொண்ட இவர்கள் அனைவரும் திருஷ்டத்யும்னனைத் தங்கள் முன்னணியில் கொண்டு சென்று, கணைகளாலும், பல்வேறு ஆயுதங்களாலும் கர்ணனைத் தாக்கியபோது மிகச் சிறப்பானவர்களாகத் தெரிந்தனர்.(68) கருடன் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகளின் மீது பாய்வதைப் போலவே, அந்த அதிரதன் மகனும் {கர்ணனும்} தனியனாகச் சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் மீதும் அம்மோதலில் பாய்ந்தான்.(69) ஓ! ஏகாதிபதி, அவர்களுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் நடைபெற்றதைப் போலக் கடுஞ்சீற்றத்துடன் நடந்தது.(70) சூழ்ந்திருக்கும் இருளை அழிக்கும் சூரியனைப் போலவே அச்சமற்றவனான கர்ணனும் ஒன்றாகச் சேர்ந்து வருபவர்களும், தன் மீது மீண்டும் மீண்டும் கணைமாரிகளைப் பொழிபவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகளோடு தனியனாகவே மோதினான்.(71)

ராதையின் மகன் இவ்வாறு பாண்டவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தபோது, சினத்தால் நிறைந்த பீமசேனன், யமதண்டத்திற்கு ஒப்பான கணைகளால் குருக்களைக் கொல்லத் தொடங்கினான்.(72) பாஹ்லீகர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள், வசாதிகள், மத்ரர்கள் மற்றும் சைந்தவர்களோடு தனியனாகவே போரிட்ட அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, மிகப் பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(73) பீமனின் துணிக்கோல் கணைகளால் தங்கள் முக்கிய அங்கங்களில் தாக்கப்பட்ட யானைகள், தங்கள் சாரதிகளோடு கீழே விழுந்து, தங்கள் வீழ்ச்சியின் வன்மையால் பூமியை நடுங்கச் செய்தன.(74) தங்கள் சாரதிகள் கொல்லப்பட்ட குதிரைகளும், உயிரையிழந்த காலாட்படைவீரர்களும், கணைகளால் துளைக்கப்பட்டுப் பெரும் அளவிலான குருதியைக் கக்கியபடி கீழே கிடந்தனர்.(75) ஆயிரக்கணக்கான தேர்வீரர்கள் தங்கள் கரங்களில் இருந்து தளர்ந்த ஆயுதங்களுடன் கீழே விழுந்தனர். காயங்களால் சிதைந்த உடல்களுடன் கூடிய அவர்கள், பீமன் மீது கொண்ட அச்சத்தால் ஈர்க்கப்பட்டுத் தங்கள் உயிரையிழந்து கீழே விழுந்தனர்.(76) தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைவீரர்கள், சாரதிகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரும், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவை அனைத்தும் பீமசேனனின் கணைகளால் சிதைக்கப்பட்டுப் பூமியில் விரவிக் கிடந்தன.(77)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் படையானது, உற்சாகத்தை இழந்து, சிதைக்கப்பட்டும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால பீடிக்கப்பட்டு மலைத்துப் போய் நின்றது.(78) உண்மையில், ஓ! மன்னா, கூதிர்காலத்தில் அமைதியாக இருக்கும் பெருங்கடலைப் போலவே அந்தப் பயங்கரப் போரில் மனச்சோர்வையடைந்த அந்தப் படையும் அசைவற்று நின்றது.(79) அமைதியான பெருங்கடலைப் போலவே அந்தப் படையானது மலைத்து நின்றபோது, கோபம், சக்தி மற்றும் வலிமையைக் கொண்ட உமது மகனின் படையானது தன் செருக்கை இழந்து தன் காந்தி அனைத்தையும் இழந்தது. உண்மையில், இவ்வாறு கொல்லப்பட்ட அந்தப் படையானது, ஊனீரில் நனைந்து, குருதியில் குளித்தது. ஓ! பாரதர்களின் தலைவா, குருதியில் நனைந்த போராளிகள் ஒருவரையொருவர் அணுகி கொன்றது அங்கே காணப்பட்டது.(80-82) சினத்தால் நிறைந்த சூதன் மகன் {கர்ணன்}, பாண்டவப் படைப்பிரிவை சிதறடித்த அதே வேள்யில் பீமசேனன் குருக்களைச் சிதறடித்தான்.(83)

காண்போர் ஆச்சரியத்தில் நிறையும் வகையில் அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, வெற்றியாளர்களில் முதன்மையான அர்ஜுனன், பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களை அவர்களது வியூகத்திற்கு மத்தியில் கொன்ற பிறகு, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போராடிக் கொண்டிருக்கும் இந்தச் சம்சப்தகர்களின் படையானது உடைந்துவிட்டது.(84,85) சிங்கத்தின் முழக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத மானைப் போல என் கணைகளைப் பொருத்துக் கொள்ள முடியாதவர்களும், சம்சப்தகர்களுமான அந்தப் பெருந்தேர்வீரர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் சேர்ந்து தப்பி ஓடுகின்றனர்.(86) இந்தப் பெரும்போரில் சிருஞ்சயர்களின் பெரும்படையும் உடைந்ததாகத் தெரிகிறது. நுண்ணறிவைக் கொண்ட கர்ணனின் யானைக் கயிறு பொறிக்கப்பட்ட கொடியானது, ஓ! கிருஷ்ணா,(87) அவன் {கர்ணன்} பெரும் சுறுசுறுப்புடன் திரிந்து வரும் யுதிஷ்டிரரின் படைப்பிரிவுக்கு மத்தியில் அதோ தெரிகிறது. (நமது படையின்) பெரும் தேர்வீரர்கள் பிறரால் கர்ணனை வெல்ல இயலவில்லை.(88) போராற்றலில் கர்ணன் பெருஞ்சக்தி வாய்ந்தவன் என்பதை நீ அறிவாய். கர்ணன் நமது படைகளைச் சிதறடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்குச் செல்வாயாக.(89) போரில் (பிற வீரர்களைத்) தவிர்த்துவிட்டு, பெரும் தேர்வீரனான அந்தச் சூதன் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக. ஓ! கிருஷ்ணா, இதையே நான் விரும்புகிறேன். எனினும், நீ விரும்புவதைச் செய்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(90) அவனது வார்த்தளைக் கேட்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம் புன்னகைத்தவாறே, “ஓ! பாண்டுவின் மகனே, தாமதமில்லாமல் கௌரவர்களைக் கொல்வாயாக” என்றான்.(91)

அப்போது, கோவிந்தனால் தூண்டப்பட்டவையும், அன்னங்களைப் போன்று வெண்மையானவையுமான அந்தக் குதிரைகள், கிருஷ்ணனையும், பாண்டு மகனையும் {அர்ஜுனனையும்} சுமந்து கொண்டு உமது பரந்த படைக்குள் ஊடுருவின.(92) உண்மையில், தங்கப் பட்டைகளைக் கொண்டவையும், கேசவனால் தூண்டப்பட்டவையுமான அந்த வெண்குதிரைகள் அதன் மத்தியில் ஊடுருவியதும், உமது படையானது அனைத்துப் பக்கங்களிலும் பிளந்தது.(93) குரங்குக் கொடியைக் கொண்டதும், மேகங்களின் ஆழ்ந்த முழக்கத்திற்கு ஒப்பான சக்கரச் சடசடப்பொலி கொண்டதும், கொடிகளைக் காற்றில் அசைத்துச் சென்றதுமான அந்தத் தேரானது, ஆகாயத்தினூடாகக் கடந்து செல்லும் தெய்வீகத் தேரொன்றைப் போல அந்தப் படைக்குள் ஊடுருவியது.(94) சினத்தால் நிறைந்தவர்களும், குருதியெனக் கண்கள் சிவந்தவர்களுமான கேசவனும், அர்ஜுனனும், உமது பரந்த படையைத் துளைத்து ஊடுருவி சென்ற போது, தங்கள் காந்தியால் மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(95) போரில் திளைப்பவர்களும், குருக்களால் அறைகூவி அழைக்கப்பட்டுக் களத்திற்கு வந்தவர்களுமான அவ்வீரர்கள் இருவரும், ஒரு வேள்வியை நடத்தும் புரோகிதர்களால் முறையான சடங்குகள் செய்யப்பட்டு இருப்புக்கு அழைக்கப்பட்ட அசுவினி இரட்டையர்களைப் போலவே தெரிந்தனர்.(96) சினத்தால் நிறைந்ததும் மனிதர்களில் புலிகளான அவ்விருவரின் வேகமும், ஒரு பெருங்காட்டில் வேடர்களின் கரவொலியால் கோபம் தூண்டப்பட்ட யானைகள் இரண்டின் வேகத்தைப் போல அதிகரித்தது.(97)

அந்தத் தேர்ப்படை மற்றும் பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளுக்கு மத்தியில் ஊடுருவிய பல்குனன் {அர்ஜுனன்}, பாசக்கயிறுடன் செல்லும் யமனைப் போலவே அந்தப் படைப்பிரிவுகளுக்குள் திரிந்து கொண்டிருந்தான்.(98) தன் படையின் மீது அவன் {அர்ஜுனன்} இத்தகு ஆற்றலை வெளிப்படுத்துவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதரே, மீண்டும் சம்சப்தகர்களை அவனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகத் தூண்டினான்.(99) அதன் பேரில் ஓராயிரம் தேர்கள், முந்நூறு யானைகள், பதினாலாயிரம் குதிரைகள்,(100) வில் தரித்தவர்களும், பெரும் துணிவுமிக்கவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான இருநாறாயிரம் காலாட்படைவீர்களுடன் கூடிய(101) சம்சப்தகர்களின் தலைவரகள், ஓ! ஏகாதிபதி, அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரியால் அந்தப் பாண்டவனை மறைத்தபடியே, அந்தப் போரில் குந்தியின் மகனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர்.(102) இவ்வாறு அந்தப் போரில் கணைகளால் மறைக்கப்பட்டவனும், பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவனுமான பார்த்தன், பாசக்கயிற்றைக் கொண்ட யமனைப் போலவே கடும் வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பார்த்தன் அந்தச் சம்சப்தகர்களைக் கொல்லும்போது, அனைவராலும் பார்க்கத்தகுந்தவனாக ஆனான்.(103)

அப்போது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டவையும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் இடையறாமல் ஏவப்பட்டவையுமான கணைகளால் ஆகாயம் நிறைந்தது.(104) அர்ஜுனனின் கரங்களால் ஏவப்பட்ட வலிமைமிக்கக் கணைகளால் முற்றாக அடைக்கப்பட்ட அனைத்தும், சுற்றிலும் இடையறாமல் விழுந்து, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பாம்புகளால் மறைக்கப்பட்டவற்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(105) அளவிலா ஆன்மா கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கூரிய முனைகளைக் கொண்டவையுமான நேரான கணைகளை அனைத்துப் பக்கங்களிலும் ஏவினான்.(106) பார்த்தனின் உள்ளங்கை ஒலியின் விளைவாக, பூமி, அல்லது ஆகாயப் பெட்டகம், அல்லது திசைப்புள்ளிகள் அனைத்தும், அல்லது பல்வேறு பெருங்கடல்கள், அல்லது மலைகளே பிளந்துவிட்டனவோ என்றே மக்கள் நினைத்தனர்.(107) பத்தாயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்ற வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அப்போது, சம்சப்தகர்களுடைய சிறகின் எல்லைக்கு வேகமாகச் சென்றான்.(108) காம்போஜர்களால் பாதுகாக்கப்பட்ட அந்தச் சிறகின் எல்லை அடைந்த பார்த்தன் {அர்ஜுனன்}, தானவர்களைக் கலங்கடிக்கும் வாசவனை {இந்திரனைப்} போலத் தன் கணைகளால் அவர்களைப் பலமாகக் கலங்கடிக்கத் தொடங்கினான்.(109) அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவன் {அர்ஜுனன்}, தன்னைக் கொல்ல விரும்பும் எதிரிகளின் ஆயுதங்களைப் பிடித்திருந்த கரங்களையும், சிரங்களையும் வேகமாக அறுத்தான்.(110) பல்வேறு அங்கங்களையும், ஆயுதங்களையும் இழந்த அவர்கள், சூறாவளியால் முறிக்கப்பட்ட பல கிளைகளைக் கொண்ட மரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தனர்.(111)

இவ்வாறு யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள், காலாட்படை வீரர்கள் ஆகியோரை அவன் {அர்ஜுனன்} கொன்று கொண்டிருந்தபோது, (காம்போஜர்களின் தலைவனான) சுதக்ஷிணனின் தம்பி, அவன் மீது கணைமாரியைப் பொழியத் தொடங்கினான்.(112) அப்போது அர்ஜுனன், முள்பதித்த காதாயுதங்களை {பரிகங்களைப்} போலத் தெரிந்தவையான தன்னைத் தாக்குபவனின் இரண்டு கரங்களை அர்த்தச்சந்திரக் கணைகள் இரண்டாலும், முழு நிலவைப் போல அழகாக முகத்தால் அருளப்பட்ட அவனது {சுதக்ஷிணனின் தம்பியின்} தலையைக் கத்தித் தலை கணையொன்றாலும் அறுத்தான்.(113) குருதியில் குளித்து, உயிரை இழந்த அவன், இடியால் பிளக்கப்பட்ட செஞ்சுண்ண மலையொன்றைப் போலத் தனது வாகனத்தில் இருந்து கீழே விழுந்தான்.(114) உண்மையில், நெடியவனும், அழகானவனும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனுமான காம்போஜர் தலைவனின் தம்பி கொல்லப்பட்டு, தங்கத் தூண் ஒன்றைப் போலவோ, தங்கமயமான சுமேருவின் சிகரம் ஒன்றைப் போலவோ கீழே விழுவதை மக்கள் கண்டனர்.(115) பிறகு, கடுமையானதும், அற்புதம் நிறைந்ததுமான மற்றொரு போர் அங்கே தொடங்கியது. போராடும் போராளிகளின் நிலைகள் வேறு வேறாக இருந்தன.(116) காம்போஜர்கள், யவனர்கள், சக குலத்தவர் ஆகியோரின் குதிரைகள் மற்றும் போராளிகள் ஒவ்வொருவரும், ஓ! ஏகாதிபதி, ஒரே கணையால் கொல்லப்பட்டு, குருதியில் குளித்ததால், மொத்தப் போர்க்களமும் ஒரு சிவப்புப் பரப்பானது.(117) குதிரைகள் மற்றும் சாரதிகளை இழந்த தேர்வீரர்கள், சாரதிகளை இழந்த குதிரைகள், பாகர்களை இழந்த யானைகள், யானைகளை இழந்த பாகர்கள் ஆகியோர் ஒருவரோடொருவர் போரிட்டதன் விளைவால், ஓ! மன்னா, அங்கே ஒரு பெரும் அழிவு ஏற்பட்டது.(118)

சம்சப்தகர்களின் சிறகும் {படையின் சிறகு பகுதியும்}, சிறகின் எல்லைகளும் இவ்வாறு சவ்யசச்சனால் {அர்ஜுனனால்} நிர்மூலமாக்கப்பட்ட போது, வெற்றி அடையும் போர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனனை எதிர்த்து துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} வேகமாக விரைந்தான்.(119) உண்மையில் அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் உறுதிமிக்க வில்லை அசைத்துக் கொண்டும், பயங்கரக் கணைகள் பலவற்றைத் தன்னுடன் எடுத்துக் கொண்டும் கதிர்களுடன் தோன்றும் சூரியனைப் போலவே சென்றான்.(120) சினத்தால் அகல விரித்த வாயுடனும், பதிலடி கொடுக்கும் விருப்பத்துடனும், சிவந்த கண்களுடனும் இருந்த அந்த வலிமைமிக்க அஸ்வத்தாமன், யுகமுடிவில் கோபத்தில் நிறைந்திருப்பவனும், கதாயுதம் தரித்திருப்பவனுமான காலனைப் போலவே அச்சமேற்படுத்துபவனாகத் தெரிந்தான்.(121) பிறகு அவன் {அர்ஜுனன்} கடுங்கணை மாரியை ஏவினான். தன்னால் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் அவன் பாண்டவப் படையைச் சிதறடிக்கத் தொடங்கினான்.(122) அவன் {அர்ஜுனன்}, தாசார்ஹ குலத்தோனைக் கண்டதும், ஓ! ஐயா, ஓ! மன்னா, அவன் மீது கடுங்கணை மாரியை மீண்டும் மீண்டும் பொழிந்தான்.(123) துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்டுப் பாய்ந்த வந்த அந்தக் கணைகளால் கிருஷ்ணன், தனஞ்சயன் ஆகிய இருவரும் தங்கள் தேரில் முற்றாக அடைக்கப்பட்டனர்.(124)

அப்போது வீர அஸ்வத்தாமன், நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் அந்தப் போரில் மாதவன் {கிருஷ்னன்} மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் மலைக்கச் செய்தான்.(125) அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தையும் பாதுகாப்பவர்களான அவ்விருவரும் கணைகளால் இவ்வாறு மறைக்கப்படதைக் கண்டு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டமானது “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறியது.(126) சித்தர்கள் மற்றும் சாரணர்களின் கூட்டம் அங்கே வந்து, “உலகங்கள் அனைத்திற்கும் நன்மை விளையட்டும்” என்று அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மனதார வேண்டிக் கொண்டனர்.(127) அந்தப் போரில் கணைகளால் கிருஷ்ணர்கள் இருவரையும் மறைத்த துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆற்றலைப் போன்ற ஓர் ஆற்றலை முன்பு எப்போதும் நான் கண்டதில்லை.(128) எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்குவதும், சிங்கத்தின் முழக்கத்திற்கு ஒப்பானதுமான அஸ்வத்தாமனுடைய வில்லின் ஒலியை, ஓ! மன்னா, அந்தப் போரில் நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டோம்.(129) அந்தப் போரில் திரிந்து தன் வலப்பக்கமும், இடப்பக்கமும் தாக்கிய போது, அவனது வில்லின் நாண்கயிறானது, மேகத் திரள்களுக்கு மத்தியில் இருக்கும் மின்னலின் கீற்றுகளைப் போல அழகாகத் தெரிந்தது.(130) பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பெரும் உறுதியையும், கரநளினத்தையும் கொண்டவனாக இருப்பினும், துரோணரின் மகனை அவன் கண்டபோது பெரிதும் மலைப்படைந்தான்.(131) உண்மையில் அப்போது அர்ஜுனன், தன் ஆற்றலானது, தன்னைத் தாக்கும் உயர் ஆன்மாவால் அழிக்கப்பட்டதாகவே கருதினான்.(132)

துரோணர் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்கும்}, பாண்டவனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையிலான அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! ஏகாதிபதி, அதிலும் அந்த வலிமைமிக்கத் துரோணர் மகன், இவ்வாறு தன் எதிராளியிலும் மேம்பட்டு, குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் சக்தியை இழந்த போது, கிருஷ்ணன் சினத்தால் நிறைந்தவனானான். கோபத்துடன் இருந்த அவன் ஆழ்ந்த பெரு மூச்சுகளைவிட்ட படியே, அஸ்வத்தாமன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் தன் கண்களாலேயே எரித்து விடுபவனைப் போல மீண்டும் மீண்டும் பார்த்தான். சினத்தால் நிறைந்த கிருஷ்ணன், பாசமிக்கத் தொனியில் அர்ஜுனனிடம்,(133-135) “ஓ! பார்த்தா, இன்று துரோணர் மகன் உன்னை விஞ்சுவதால், போரில் நான் உன்னை இவ்வாறு காண்பது மிக விநோதமானதாகத் தெரிகிறது.(136) முன்பு நீ கொண்டிருந்ததைப் போல இப்போது உன் கரங்களில் வலிமையும், சக்தியும் இல்லையா? உன் கரங்களில் இன்னும் காண்டீவம் இருக்கவில்லையா? உன் தேரில் இப்போது நீ நிற்கவில்லையா?(137) உன் இரு கரங்களும் பலமாக இல்லையா? உன் முட்டுகளில் காயமேதும் ஏற்பட்டிருக்கிறதா? பிறகு ஏன் போரில் உன்னைவிடத் துரோணர் மகன் விஞ்சுவதை நான் காண்கிறேன்?(138) ஓ! பார்த்தா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உன்னைத் தாக்குபவரை உன் ஆசானின் மகனாகக் கருதி விட்டுவிடாதே. அவரை விட்டுவிடத் தகுந்த நேரம் இதுவன்று” என்றான்.(139)

இவ்வாறு கிருஷ்ணனால் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, வேகமே முக்கியமான தேவையாக இருந்த அந்த நேரத்தில், பதினான்கு அகன்ற தலை கணைகளை எடுத்து, அஸ்வத்தாமனின் வில், கொடிமரம், குடை, கொடிகள், தேர், ஈட்டி மற்றும் கதாயுதம் ஆகியவற்றை அறுத்தான்.(140) கன்றின் பல் போன்ற மேலும் சில கணைகளை {வத்சதந்தங்களை} எடுத்துக் கொண்ட அவன், அவற்றைக் கொண்டு துரோணர் மகனின் தோளில் ஆழமாகத் தாக்கினான். அதன் பேரில் ஆழ்ந்த மயக்கமடைந்த அஸ்வத்தாமன், தன் கொடிக்கம்பத்தைத் தாங்கிக் கொண்டே கீழே அமர்ந்தான்.(141) ஓ!ஏகாதிபதி, பின்னவனின் {அஸ்வத்தாமனின்} தேரோட்டி, அவனைத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து காக்க விரும்பி, எதிரியால் இவ்வாறு ஆழமாகப் பீடிக்கப்பட்டு மயக்கமுற்றிருந்த அவனைக் கொண்டு சென்றான்.(142)

அதேவேளையில் எதிரிகளை எரிப்பவனான விஜயன் {அர்ஜுனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வீரனான உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது துருப்புகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றான்.(143) இவ்வாறே, ஓ! மன்னா, உமது தீய கொள்கைகளால், எதிரியுடன் போரிடும் உமது போர்வீரர்களுக்கு ஒரு கொடூரமான, பயங்கரமான பேரழிவு தொடங்கியது.(144) குறுகிய காலத்திற்குள்ளாகவே பீபத்சு {அர்ஜுனன்} சம்சப்தகர்களை முறியடித்தான்; விருகோதரன் {பீமன்} குருக்களையும்; வசுசேனன் {கர்ணன்} பாஞ்சாலர்களையும் முறியடித்தனர்.(145) பெரும் வீரர்களுக்கு அழிவைத் தரும் அந்தப் போரில் சுற்றிலும் பல தலையற்ற முண்டங்கள் எழுந்து நின்றன.(146) அதே வேளையில், ஓ! பாரதர்களின் தலைவா, தன் காயங்களால் ஏற்பட்ட பெரும் வலியால் யுதிஷ்டிரன், போரில் இருந்து இரண்டு மைல்கள் பின்வாங்கிச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தான்” {என்றான் சஞ்சயன்}.

அஸ்வத்தாமனின் சபதம்! – கர்ண பர்வம் பகுதி – 57-கௌரவர்களுக்கு உற்சாகமளித்த துரியோதனன்; திருஷ்டத்யும்னன் செய்த அநீதியை நினைவுகூர்ந்த அஸ்வத்தாமன் ஒரு சபத்தைச் செய்தது; போர்க்களத்தின் முதன்மையான போர்வீரர்களைக் காண வந்த தேவர்களும், அப்சரஸ்களும்; அப்சரஸ்கள் சிந்திய தெய்வீக நறுமணத்தை நுகர்ந்த வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு இறந்தது; மூர்க்கமடைந்த போர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே, கர்ணனிடம் சென்று, அவனிடமும், மத்ரர்களின் ஆட்சியாளனிடமும், அங்கே இருந்த பூமியின் தலைவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “எம்முயற்சியும் செய்யாமலேயே சொர்க்கத்தின் வாயில்கள் அகலத் திறந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பமானது {நமக்கு} வாய்த்திருக்கிறது. ஓ! கர்ணா, இத்தகு போரை அடைந்த க்ஷத்திரியர்கள் மகிழ்ச்சியையே அடைகிறார்கள்.(2) ஓ! ராதையின் மகனே {கர்ணா}, வலிமையிலும், ஆற்றலிலும் தங்களுக்கு நிகரான துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்களுடன் போரிடும் அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் பெரும் நன்மையையே அடைகிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் அவ்வாறே வாய்த்திருக்கிறது.(3) இந்தத் துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்கள் போரில் பாண்டவர்களைக் கொன்று அகன்ற பூமியை அடையட்டும், அல்லது எதிரியால் போரில் கொல்லப்பட்டு, வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அருள் உலகங்களை வெல்லட்டும்” என்றான் {துரியோதனன்}.(4) துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த க்ஷத்திரியக் காளைகள், உற்சாக நிறைவுடன் உரத்த முழக்கங்களைச் செய்து, தங்கள் இசைக்கருவிகளை இசைத்து, முழக்கினர்.(5)

துரியோதனனின் படை இவ்வாறு மகிழ்ச்சியில் நிறைந்தபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} உமது போர்வீரர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், “துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உங்கள் அனைவரின் கண்களுக்கும் முன்னால் என் தந்தை {துரோணர்} தன் ஆயுதங்களைக் கீழே வைத்த பிறகு, திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(6,7) மன்னர்களே, இத்தகு நடத்தை தூண்டிவிடும் கோபத்தாலும், என் நண்பனுக்காகவும் உண்மையில் உங்கள் அனைவரின் முன்பும் நான் உறுதிமொழி ஏற்கிறேன். அந்த எனது உறுதிமொழியைக் கேட்பீராக.(8) திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல் நான் என் கவசத்தை அகற்ற மாட்டேன். இந்த எனது உறுதிமொழி நிறைவேற வில்லையென்றால் சொர்க்கத்திற்கு நான் செல்லாதிருப்பேனாக.(9) அர்ஜுனனாகட்டும், பீமசேனனாகட்டும், அல்லது வேறு எவருமாகட்டும், என்னை எதிர்த்து வரும் அவனை, அல்லது அவர்கள் யாவரையும் நான் நசுக்கிவிடுவேன். இதில் ஐயமேதுமில்லை” என்றான் {அஸ்வத்தாமன்}.(10)

அஸ்வத்தாமன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, மொத்த பாரதப் படையும் ஒன்றாகச் சேர்ந்து பாண்டவர்களை எதிர்த்து விரைந்தன, பின்னவர்களும் {பாண்டவப் படையும்} முன்னவர்களை {கௌரவர்களை} எதிர்த்து விரைந்தனர்.(11) ஓ! பாரதரே, தேர்ப்படைப்பிரிவின் துணிவுமிக்கத் தலைவர்களுக்கு இடையில் நடந்த மோதலானது மிகவும் அச்சத்தைத் தருவதாக அமைந்தது. குருக்கள் மற்றும் சிருஞ்சயர்களுக்கு முன்னணியில் நிறுவப்பட்ட வாழ்வின் அழிவானது, இறுதியான பெரும் அண்ட அழிவின் போது ஏற்படுவதற்கு ஒப்பாக இருந்தது.(12) அந்த ஆயுத வழி {போர்} தொடங்கியதும், தேவர்களுடனும், அப்சரஸ்களின் துணையுடனும் கூடிய பல்வேறு (மேன்மையான) உயிரினங்கள் அந்த மனிதர்களில் முதன்மையானோரைக் காண அங்கே வந்தனர்.(13) மகிழ்ச்சியால் நிறைந்த அப்சரஸ்கள், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்போடு இருந்த அந்த மனிதர்களில் முதன்மையானோரை தெய்வீக மலர்மாலைகளாலும், பல்வேறு வகையான தெய்வீக நறுமணப் பொருட்களாலும், பல்வேறு ரத்தின இனங்களாலும் மறைத்தனர்.(14) அந்த அற்புதமான நறுமணங்களைப் போர்வீரர்களில் முதன்மையான அனைவரின் நாசிகளுக்கும் மென்மையான தென்றல் கொண்டு சேர்த்தது. காற்றுடைய செயல்பாட்டின் விளைவால் அந்த நறுமணங்களை நுகர்ந்த போர்வீரர்கள் மீண்டும் போரில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பூமியில் விழத் தொடங்கினர்.(15) தெய்வீக மலர்கள், தங்கச் சிறகுகளைக் கொண்ட அழகிய கணைகள் மற்றும் போர்வீரர்களில் முதன்மையான பலரால் விரவிக்கிடந்த பூமியானது, நட்சத்திரக்கூட்டங்களால் விரவிக் கிடந்த ஆகாயத்தைப் போலத் தெரிந்தது.(16) ஆகாயத்தில் இருந்து வந்த மகிழ்ச்சி மற்றும் இசைக்கருவிகள் ஒலி ஆகியவற்றின் விளைவால், வில்லின் நாணொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகள் மற்றும் போர்வீரர்களின் கூச்சல்கள் நடந்த அந்தச் சீற்றமிகு ஆயுதவழியானது மிக மூர்க்கமானதாக ஆனது” {என்றான் சஞ்சயன்}.(17)

களநிலவரம் விவரித்த கிருஷ்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 58-யுதிஷ்டிரனைக் குறித்துக் கவலையடைந்த அர்ஜுனன் அதைக் கிருஷ்ணனிடம் தெரிவிப்பது; கள நிலவரத்தை அர்ஜுனனுக்கு எடுத்துரைத்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனிடம் செல்லுமாறு கிருஷ்ணனைத் தூண்டிய அர்ஜுனன்; களநிலவரத்தை மீண்டும் விவரித்தபடியே யுதிஷ்டிரன் இருக்குமிடத்திற்குத் தேரைச் செலுத்திய கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனன், கர்ணன் மற்றும் பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோர் கோபத்தை அடைந்தபோது பூமியின் தலைவர்களுக்கு இடையே நடந்த அந்தப் போரானது இவ்வாறே நடந்தது.(1) துரோணர் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, பெரும் தேர்வீரர்களான பிறரையும் வென்ற அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(2) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, பாண்டவப் படை தப்பி ஓடுவதைப் பார். இந்தப் போரில் கர்ணன், நமது பெரும் தேர்வீரர்களைக் கொல்வதைப் பார்.(3) ஓ! தசார்ஹ குலத்தோனே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரை நான் காணவில்லை. மேலும், ஓ! போர்வீரர்களின் முதன்மையானவனே, தர்மன் மகனின் {யுதிஷ்டிரரின்} கொடிமரத்தையும் காணவில்லை.(4) ஓ! ஜனார்த்தனா, நாளின் மூன்றாவது பகுதி இன்னும் இருக்கிறது. தார்தராஷ்டிரர்களில் எவரும் என்னை எதிர்த்துப் போரிட வரவில்லை.(5) 

எனவே, எனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக, யுதிஷ்டிரர் எங்கிருக்கிறாரோ அங்கே செல்வாயாக. தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} பாதுகாப்பாகவும், போரில் தன் தம்பிகளுடன் நலமாக இருப்பதையும் கண்ட பிறகு,(6) ஓ! விருஷ்ணி குலத்தோனே, நான் எதிரியோடு மீண்டும் போரிடுவேன்” என்றான் {அர்ஜுனன்}. பீபத்சுவின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட ஹரி {கிருஷ்ணன்}, மரணத்தையே தங்கள் இலக்காகச் செய்து கொண்டு, எதிரியோடு போரிட்டுக் கொண்டிருந்தவர்களும், வலிமைமிக்கவர்களும், பெரும் பலமிக்கத் தேர்வீரர்களுமான சிருஞ்சய வீரர்களுடன், மன்னன் யுதிஷ்டிரன் எங்கிருந்தானோ, அங்கே தன் தேரில் வேகமாகச் சென்றான்.(7,8)

அந்தப் பேரழிவு நடந்து கொண்டிருந்தபோது, போர்க்களத்தைக் கண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, சவ்யசச்சினிடம் {அர்ஜுனனிடம்},(9) “ஓ! பாரதா, துரியோதனனின் நிமித்தமாகப் பூமியில் உள்ள க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் நேரும் இந்தப் பயங்கரப் பேரழிவைப் பார்.(10) ஓ! பாரதா {அர்ஜுனா}, கொல்லப்பட்ட வீரர்களுக்குச் சொந்தமான தங்கப் பின்புறம் கொண்ட விற்களையும், தங்கள் தோள்களில் இருந்து இடம் பெயர்ந்திருக்கும் விலைமதிப்புமிக்க அவர்களது அம்பறாத்தூணிகளையும் பார்.(11) தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்த நேரான கணைகளையும் {நாராசங்களையும்}, எண்ணெயில் கழுவப்பட்டவையும், தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளைப் போலத் தெரிந்தவையுமான அந்தத் துணிக்கோல் கணைகளையும் பார்.(12) ஓ! பாரதா, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், தந்தப் பிடிகளைக் கொண்டவையுமான அந்தக் கத்திகளையும், தங்கம் பதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருக்கும் அந்தக் கேடயங்களையும் பார்.(13) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த வேல்களையும், தங்க ஆபரணங்களைக் கொண்ட அந்த ஈட்டிகளையும் {சக்திகளையும்}, சுற்றிலும் தங்கத்தால் {பொற்பட்டங்களால்} கட்டப்பட்ட அந்தப் பெரும் கதாயுதங்களையும் பார்.(14) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வாள்களையும், தங்க ஆபரணங்களைக் கொண்ட அந்தக் கோடரிகளையும் {பரசுகளையும்}, தங்கள் தங்கக் கைப்பிடிகளில் இருந்து விழுந்த போர்க்கோடரிகளின் தலைகளையும் பார்.(15)

அந்த இரும்பு குந்தங்களையும், மிகக் கனமான அந்தக் குறுந்தண்டங்களையும், அந்த அழகிய ஏவுகணைகளையும், முள்பதித்த தலைகளைக் கொண்ட அந்தப் பெரும் தடிகளையும், சக்கரதாரிகளின் கரங்களில் இருந்து இடம்பெயர்ந்திருக்கும் சக்கரங்களையும், இந்தப் பயங்கரப் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்தச் சூலங்களையும் பார்.(16) (உயிரோடு இருந்தபோது) போருக்கு வந்தவர்களான பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட போர்வீரர்கள், பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உயிரை இழந்து கீழே கிடந்தாலும் இன்னும் உயிரோடு இருப்பவர்களைப் போலவே தெரிகிறார்கள்.(17) கதாயுதங்களால் நசுக்கப்பட்ட அங்கங்களையும், கனமான தண்டங்களால் உடைக்கப்பட்ட தலைகளையும், யானைகள், குதிரைகள் மற்றும தேர்களால் கிழித்துச் சிதைக்கப்பட்ட உடல்களையும் கொண்டு போர்க்களத்தில் கிடக்கும் இந்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களைப் பார்.(18) போர்க்களமானது, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, கணைகள், ஈட்டிகள், வாள்கள், கோடரிகள், கத்திகள், முள்பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, வேல்கள், இரும்புக் குந்தங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றாலும், காயங்கள் பலவற்றால் வெட்டப்பட்டு, குருதிப்புனலால் மறைக்கபட்டு உயிரை இழந்த மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்களாலும் மறைக்கப்பட்டிருக்கிறது.(19,20)

ஓ! பாரதா {அர்ஜுனா}, சந்தனத்தால் பூசப்பட்டு, தங்க அங்கதங்களாலும் {தோள்வளைகளால்}, கேயூரங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், தங்கள் {கைகளின்} முனைகள் தோலுறைகளால் மறைக்கப்பட்டவையுமான கரங்களுடன் கூடிய பூமியானது அழகானதாகத் தெரிகிறது.(21) தோலுறைகள் பூட்டப்பட்ட கரங்கள், இடம்பெயர்ந்திருக்கும் ஆபரணங்கள், யானைகளின் துதிக்கைகளைப் போலத் தெரியும் அறுக்கப்பட்ட தொடைகள் ஆகியவற்றுடன் கூடிய சுறுசுறுப்பான போர்வீரர்கள் பலராலும்,(22) விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், காது குண்டலங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அகன்ற பெரிய கண்களைக் கொண்டவையுமான போர்வீரர்களின் விழுந்துவிட்ட தலைகளாலும் விரவிக்கிடக்கும் இந்தப் பூமியானது மிக அழகானதாகத் தெரிகிறது.(23) மேனியெங்கும் குருதியால் பூசப்பட்ட தலையற்ற உடல்கள், வெட்டப்பட்ட அங்கங்கள், தலைகள், உதடுகள் ஆகியவற்றுடன் கூடிய பூமியானது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நெருப்பு அணைக்கப்பட்டுச் சிதறிக் கிடக்கும் ஒரு வேள்விப் பீடத்தைப் போலத் தெரிகிறது.(24) தங்க மணிவரிசையைக் கொண்ட அந்த அழகிய தேர்கள், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்டிருப்பதையும், களத்தில் பரவிக் கிடக்கும் கொல்லப்பட்ட குதிரைகளின் உடல்களில் இன்னும் கணைகள் ஒட்டிக் கொண்டிருப்பதையும் பார்.(25) அந்தத் தேர்த்தட்டுகளும், அந்த அம்பறாத்தூணிகளும், அந்தக் கொடிகளும், பல்வேறு வகைகளிலான அந்தக் கொடிமரங்களும், தேர்வீரர்களின் பெரிய வெண்சங்குகளும் களமெங்கும் சிதறிக் கிடப்பதைப் பார்.(26)

மலைகளைப் போலப் பெரியவையான அந்த யானைகள், நாக்கு வெளியே தள்ளியவாறு பூமியில் கிடப்பதையும், வெற்றிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்த யானைகள், மற்றும் குதிரைகள் தங்கள் உயிர்களை இழந்து கிடப்பதையும் பார்.(27) அந்த யானை அம்பாரிகளையும், அந்தத் தோல்கள் மற்றும் விரிப்புகளையும், பலவண்ணங்களுடன் அழகாக இருக்கும் அந்தக் கிழிந்துபோன விரிப்புகளையும் பார்.(28) பெரும் வடிவிலான யானைகள் விழுந்ததன் விளைவால், பல்வேறு வழிகளில் உடைந்து, கிழிந்திருக்கும் அந்த மணிவரிசைகளையும், வைடூரியக் கற்கள் பதிக்கப்பட்ட அந்த அழகிய மாவெட்டிகளையும், தரையில் விழுந்து கிடக்கும் அந்த அங்குசங்களையும் பார்.(29) தங்கத்தாலும், பலவண்ண ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், (கொல்லப்பட்ட) குதிரைவீரர்களின் பிடியில் இன்னும் இருப்பவையுமான அந்தச் சாட்டைகளையும், குதிரையின் முதுகில் இருக்கைகளாகப் பயன்பட்டு இப்போது தரையில் கிடப்பவைகளான அந்த விரிப்புகளையும், ரங்கு மான் தோல்களையும் பார்.(30) மன்னர்களின் கிரீடங்களை அலங்கரிக்கும் அந்த ரத்தினங்களையும், தங்கத்தாலான அந்த அழகிய கழத்தணிகளையும், இடம்பெயர்ந்து கிடக்கும் அந்தக் குடைகளையும், விசிறுவதற்கான சாமரங்களையும் பார்.(31) அழகிய காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டும், நன்கு வெட்டப்பட்ட தாடிகளுடனும், நிலவு மற்றும் நட்சத்திரங்களின் காந்தியுடனும் கூடிய வீரர்களின் முகங்களால், குருதிச் சேற்றுடன் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்[1].(32)

காயமடைந்தாலும், உயிர் இன்னும் போகாமல் துன்பத்தால் ஓலமிட்டுக் கொண்டே சுற்றிலும் கிடக்கும் அந்தப் போர்வீரர்களைப் பார். ஓ! இளவரசே {அர்ஜுனா}, அவர்களது உறவினர்கள் தங்கள் ஆயுதங்களை வீசி எறிந்துவிட்டு, அவர்களைப் பராமரித்துக் கொண்டு இடையறாமல் அழுது கொண்டிருக்கின்றனர்.(33) கணைகளால் போர்வீரர்களை மறைத்து, அவர்களின் உயிரை எடுத்த பிறகும், சுறுசுறுப்புடன் கூடியவர்களும், வெற்றியடையும் ஏக்கம் கொண்டவர்களும், சினம் பெருகியவர்களுமான அந்தப் போராளிகள் பிற எதிரிகளை எதிர்த்து மீண்டும் போரிடச் செல்வதைப் பார்.(34) சிலர் களத்தில் இங்கேயும் அங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். தங்கள் உறவினர்களான வீழ்ந்துவிட்ட வீரர்களால் இரந்து கேட்கப்பட்ட தண்ணீரைத் தேடி சிலர் செல்கின்றனர்.(35) அதே வேளையில், ஓ! அர்ஜுனா, பலர் தங்கள் இறுதி மூச்சை சுவாசிக்கின்றனர். திரும்பி வரும் அவர்களது உறவினர்கள், உணர்வற்றுக் கிடக்கும் அவர்களைக் கண்டு,(36) தாங்கள் கொண்டு வந்த நீரை வீசிவிட்டு, ஒருவரை நோக்கி ஒருவர் கதறிக் கொண்டே மூர்க்கமாக ஓடுகின்றனர். ஓ! பாரதா {அர்ஜுனா}, பலர் தங்கள் தாகம் தணிந்ததும் இறக்கின்றனர், பலர் தாங்கள் {நீரைக்} குடித்துக் கொண்டிருக்கும்போதே இறக்கின்றனர்.(37) சிலர் தங்கள் உறவினர்களிடம் பாசத்தைக் கொண்டிருந்தாலும், {இறந்து போன} தங்கள் அன்புக்குரிய உறவினர்களை விட்டுவிட்டு அந்தப் பெரும்போரில் எதிரிகளை நோக்கி ஓடுகின்றனர்.(38) மேலும் சிலர், ஓ! மனிதர்களில் சிறந்தவனே, தங்கள் கீழுதடுகளைக் கடித்துக் கொண்டு, தங்கள் புருவங்கள் சுருங்கியதன் விளைவாக, பயங்கரத்தை அடைந்த முகங்களுடன் சுற்றிலும் களத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்” என்றான் {கிருஷ்ணன்}.

இந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வாசுதேவன் {கிருஷ்ணன்} யுதிஷ்டிரனை நோக்கிச் சென்றான். அர்ஜுனனும், அந்தப் பெரும்போரில் மன்னனை {யுதிஷ்டிரனைப்} பார்ப்பதற்காக, “செல், செல்வாயாக” என்று கோவிந்தனை மீண்டும் மீண்டும் தூண்டிக் கொண்டிருந்தான்.(40) பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குப்} போர்க்களத்தைக் காட்டிய பிறகு, வேகமாகச் சென்ற மாதவன் {கிருஷ்ணன்}, மீண்டும் பார்த்தனிடம் மெதுவாக, “மன்னர் யுதிஷ்டிரரை நோக்கி விரைந்து செல்லும் அந்த மன்னர்களைப் பார். போர் அரங்கத்தில் சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பாகத் திகழும் கர்ணனைப் பார்.(42) அதோ வலிமைமிக்க வில்லாளியான பீமர் போரிடச் சென்று கொண்டிருக்கிறார். பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்களில் முதன்மையானவர்கள் யாவரோ, திருஷ்டத்யும்னனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்கள் யாவரோ, அவர்களே பீமரைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள்.(43) விரைந்து செல்லும் பார்த்தர்களால் எதிரியின் பரந்த படையான மீண்டும் பிளக்கிறது. ஓ! அர்ஜுனா, தப்பி ஓடும் கௌரவர்களை அணிவகுக்கச் செய்ய முயலும் கர்ணனைப் பார்.(44) ஓ! குரு குலத்தோனே, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமர்}, வேகத்தில் யமனுக்கும், ஆற்றலில் இந்திரனுக்கும் ஒப்பாக அதோ செல்கிறார். வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் அந்த வீரரை {அஸ்வத்தாமரை} எதிர்த்து விரைகிறான். சிருஞ்சயர்கள் திருஷ்டத்யும்னனின் வழிகாட்டுதலின் பேரில் பின்தொடர்கிறார்கள். {அதோ} சிருஞ்சயர்கள் வீழ்வதைப் பார்” என்றான் {கிருஷ்ணன்}.(46)

இவ்வாறே வெல்லப்பட முடியாதவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அர்ஜுனனிடம் அனைத்தையும் விவரித்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பயங்கரமானதும், அச்சத்தை ஏற்படுத்துவதுமான ஒரு போர் தொடங்கியது.(47) ஓ! ஏகாதிபதி, அவ்விரு படைகளும் மரணத்தையே இலக்காகக் கொண்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது உரத்த சிங்க முழக்கங்கள் எழுந்தன.(48) இவ்வாறே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கைகளின் விளைவால், உமது மற்றும் எதிரியின் போர்வீரர்களான அந்த அழிவு பூமியில் ஏற்பட்டது” {என்றான் சஞ்சயன்}.(49)

மீண்டும் அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 59-தனியனான கர்ணனுக்கும், பாண்டவப் படையினருக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த போர்; திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனைத் தடுத்த சாத்யகி; திருஷ்டத்யும்னனை எதிர்த்து வந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனும், திருஷ்டத்யும்னனும் கடுமொழியில் பேசிக் கொண்டது; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தேரற்றவனாகச் செய்து, அவனைக் கொல்வதற்காக இழுத்துச் சென்ற அஸ்வத்தாமன்; அந்தக் காட்சியைக் காட்டி, அஸ்வத்தாமனிடம் இருந்து திருஷ்டத்யும்னனைக் காக்குமாற அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன்; அஸ்வத்தாமனைத் தாக்கிய அர்ஜுனன்; மீண்டும் தேரில் ஏறிய அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட சகாதேவன்; அர்ஜுனனால் தாக்கப்பட்டு மீண்டும் மயக்கமடைந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைக் களத்தைவிட்டுக் கொண்டு சென்ற அவனது சாரதி; மீண்டும் சம்சப்தகர்களை நோக்கிச் செல்ல விரும்பிய அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில், யுதிஷ்டிரனின் தலைமையில் பார்த்தர்களும், சூதன் மகன் {கர்ணன்} தலைமையில் நாங்களும் இருந்தபோது, குருக்களும், சிருஞ்சயர்களும் அச்சமில்லாமல் ஒருவரோடொருவர் மீண்டும் மோதிக் கொண்டனர்.(1) அப்போது, கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில், யமனின் அரசாங்கத்தைப் பெருகச் செய்வதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதுமான ஒரு பயங்கரமான போர் தொடங்கியது.(2) துணிச்சல்மிக்கச் சம்சப்தகர்களில் சொற்பமானவர்களே கொல்லப்படாமல் எஞ்சிய போது, குருதிப்புனலை உண்டாக்கிய அந்த மூர்க்கமான போர் தொடங்கியதும்,(3) ஓ! ஏகாதிபதி (திருதராஷ்டிரரே}, (பாண்டவத் தரப்பு) மன்னர்கள் அனைவருடன் கூடிய திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் ஆகியோர் அனைவரும் கர்ணனை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.(4) பெரும் அளவிலான நீர்த்தாரைகளை ஏற்கும் மலையைப் போல எவரின் துணையும் இல்லாத கர்ணன், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களும், வெற்றிக்காக ஏங்கியவர்களும், அந்தப் போரில் முன்னேறி வருபவர்களுமான அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் {தனியாக} எதிர்கொண்டான்.(5) கர்ணனோடு மோதிய அந்த வலிமைமிக்க வீரர்கள், மலையுடன் மோதி அனைத்துப் பக்கங்களிலும் சிதறும் நீர்த்திரள்களைப் போலச் சிதறி பிளந்தனர்.(6) எனினும், அவர்களுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடந்த அந்தப் போர் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

அப்போது அந்தப் போரில் திருஷ்டத்யும்னன் நேரான கணை ஒன்றால் ராதையின் மகனை {கர்ணனைத்} தாக்கி, அவனிடம், “நில்லும், நிற்பீராக” என்றான்.(7) வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், சினத்தால் நிறைந்து, விஜயம் என்று அழைக்கப்பட்ட தன் முதன்மையான வில்லை அசைத்து, திருஷ்டத்யும்னனின் வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான அவனது கணைகளையும் வெட்டி, ஒன்பது கணைகளால் திருஷ்டத்யும்னனையும் தாக்கினான். ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கவசத்தைத் துளைத்த அந்தக் கணைகள்,(8,9) குருதியில் குளித்து, செம்பட்டுப்பூச்சிகள் {இந்திரகோபங்கள்} பலவற்றைப் போல அழகாகத் தெரிந்தன. வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், உடைந்துபோன அந்த வில்லை வீசிவிட்டு,(10) மற்றொரு வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றையும் எடுத்துக் கொண்டான். எண்ணிக்கையில் எழுபதாக இருந்த அந்த நேரான கணைகளால் கர்ணனைத் துளைத்தன.(11) அதே போலக் கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் எதிரிகளை எரிப்பவனான அந்தப் பிருஷதன் மகனைக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றால் மறைத்தான். துரோணரைக் கொன்றவனான அந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, கூரிய கணைகள் பலவற்றால் கர்ணனைத் துளைத்துப் பதிலடி கொடுத்தான்.(12)

அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இரண்டாவது யமதண்டத்தைப் போன்றதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கணையொன்றைத் தன் எதிராளியின் மீது ஏவினான்.(13) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரமான கணையானது, பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி மூர்க்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரன் {சாத்யகி}, தன் பெரும் கரநளினத்தை வெளிக்காட்டும் விதமாக அதை ஏழு துண்டுகளாக அறுத்தான்.(14) சாத்யகியின் கணைகளால் கலங்கடிக்கப்பட்ட தன் கணையைக் கண்ட கர்ணன், ஓ! மன்னா, கணைமாரிகளால் சாத்யகியை அனைத்துப் பக்கங்களிலும் தடுத்தான்.(15) அம்மோதலில் அவன் ஏழு துணிக்கோல் கணைகளால் சாத்யகியைத் துளைத்தான். எனினும் அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பதிலுக்குத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகள் பலவற்றால் அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரு வீரர்களுக்குள் நடந்த போரானது, பார்வையாளர்கள் மற்றும் போராளிகள் ஆகிய இருவரையும் அச்சத்தில் நிறைந்தது. அஃது {அந்தப் போர்} அச்சந்தருவதாக இருந்தாலும், அழகானதாகவும், காணத் தகுந்ததாகவும் இருந்தது.(17) அந்தப் போரில் கர்ணன் மற்றும் சிநியின் பேரன் ஆகியோரின் அருஞ்செயல்களைக் கண்டு மயிர்ச்சிலிர்த்து நிற்பதாக அனைத்து உயிரினங்களும் தெரிந்தன.(18)

அதே வேளையில் வலிமைமிக்கத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைத் தண்டிப்பவனும், எதிரிகள் அனைவரின் ஆற்றலையும் தணிப்பவனுமான பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து விரைந்தான்.(19) சினத்தால் நிறைந்தவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, திருஷ்டத்யும்னனிடம், “ஓ! பிராமணனைக் {துரோணரைக்} கொன்றவனே, நில், நிற்பாயாக, நீ இன்று என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது” என்றான்.(20) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பெரும் கரநளினம் கொண்டவனுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அஸ்வத்தாமன்}, உறுதியுடன் முயன்று, பெரும் வேகத்துடன் கூடியவையும், பயங்கரமானவையுமான கூரிய கணைகளைக் கொண்டு, கிட்டத்தட்ட தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்திப் போராடிய துணிச்சல் மிக்கப் பிருஷதன் மகனை ஆழமாகத் துளைத்தான். துரோணர் (உயிரோடு இருந்தபோது), ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் மகனைக் கண்டு, தன் காலன் வந்துவிட்டதாகக் கருதியதைப் போலவே, பகைவீரர்களைக் கொல்பவனான பிருஷதன் மகனும், அந்தப் போரில் துரோணர் மகனைக் {அஸ்வத்தாமனைக்} கண்டதும், தன் காலன் வந்துவிட்டதாகவே கருதினான்.(21-23) எனினும், போரில் ஆயுதங்களால் தான் கொல்லப்படாதவன் என்பது நினைவுகூர்ந்த அவன், அண்ட அழிவின் போது அந்தகனை எதிர்க்கும் அந்தகனைப் போலத் துரோணரின் மகனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(24)

எனினும், துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் முன் நிற்கும் திருஷ்டத்யும்னனைக் கண்டு, கோபத்தால் ஆழ்ந்த பெருமூச்சுகளைவிட்டபடியே அவனை நோக்கி விரைந்தான்.(25) ஒருவரையொருவர் கண்டு இருவருமே பெருஞ்சினத்தால் நிறைந்தனர். அப்போது, பெரும் சுறுசறுப்பைக் கண்ட துரோணரின் வீர மகன், ஓ! ஏகாதிபதி, தன்னிடம் இருந்து தொலைவில் இல்லாத திருஷ்டத்யும்னனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! பாஞ்சாலர்களில் இழிந்தவனே, நான் இன்று உன்னை யமனிடம் அனுப்புவேன்.(26,27) பார்த்தனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்படாமல் போரில் நீ நின்றாலோ, ஓ! மூடா, தப்பி ஓடாமல் நீ இருந்தாலோ, முன்பு துரோணரைக் கொன்றதால் நீ இழைத்த பாவமானது, அந்த உனது பெருந்தீமைக்காக இன்று உன்னை வருத்தத்தால் நிறைக்கும். {இதை உனக்கு} நான் உண்மையாகவே சொல்கிறேன்” {என்றான் அஸ்வத்தாமன்}.(28,29)

இவ்வாறு சொல்லப்பட்ட வீரத் திருஷ்டத்யும்னன், “உறுதியுடன் போரிட்டுக் கொண்டிருந்த உமது தந்தைக்குப் பதிலளித்த என் அதே வாள், இந்த உமது பேச்சுக்கும் இன்று பதிலளிக்கும்.(30) ஓ! பெயரளவில் மட்டுமே பிராமணராக இருப்பவரே {அஸ்வத்தாமரே}, துரோணரை என்னால் கொல்ல முடிந்ததென்றால், என் ஆற்றலை வெளிப்படுத்தி இன்று உம்மை நான் ஏன் கொல்ல மாட்டேன்?” என்று மறுமொழி கூறினான்.(31) பாண்டவப் படைகளின் கோபக்காரத் தலைவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, கூரிய கணையொன்றால் துரோணர் மகனைத் துளைத்தான்.(32) பிறகு, சினத்தால் நிறைந்த துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நேரான கணைகளைக் கொண்டு திருஷ்டத்யும்னனை அனைத்துப் பக்கங்களிலும் மறைத்தான்.(33) ஆயிரக்கணக்கான கணைகளால் மறைக்கப்பட்டதால், ஓ! ஏகாதிபதி, அதற்கு மேலும் ஆகாயமோ, திசைப்புள்ளிகளோ, சுற்றிலும் உள்ள போராளிகளோ காணப்படவில்லை.(34) அதே போலப் பிருஷதன் மகனும், ஓ! ஏகாதிபதி, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, போர்க்கள ரத்தினமான அந்தத் துரோணர் மகனைக் கணைகளால் மறைத்தான்.(35)

ராதையின் மகனும் {கர்ணனும்} கூட, ஓ! ஏகாதிபதி, பாஞ்சாலர்கள், பாண்டவர்கள், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், யுதாமன்யு, தன் அருஞ்செயலின் விளைவால் அனைவரின் கண்களுக்கு வடமீனாக {அருந்ததி நட்சத்திரமாகத்} தெரிந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சாத்யகி ஆகியோரைத் தனியாகவே தடுத்தான்.(36) அப்போது திருஷ்டத்யும்னன் அந்தப் போரில், மிகக் கடினமானதும் உறுதியானதுமான துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான அவனது கணைகள் அனைத்தையும் அறுத்தான்.(37) எனினும், துரோணர் மகன் கண்ணிமைப்பதற்குள் தன் கணைகளால், பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} வில், ஈட்டி, கதாயுதம், கொடிமரம், குதிரைகள், சாரதி மற்றும் தேர் ஆகியவற்றை அழித்தான்.(38) வில்லற்று, தேற்று, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன அந்தப் பிருஷதன் மகன் ஒரு பெரிய கத்தியையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சுடர்மிக்கக் கேடயத்தையும் எடுத்துக் கொண்டான்.(39) பெரும் கரநளினத்தையும், வலிமைமிக்க ஆயுதங்களையும் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா, அந்தப் போரில் அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, திருஷ்டத்யும்னன் தன் தேரின் அருகே வருவதற்கு முன்பே பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} அந்த ஆயுதங்களையும் வேகமாக அறுத்தான்.(40) இவை யாவும் அற்புதமானவையாகத் தெரிந்தன.

எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் விறுவிறுப்பாகப் போராடினாலும், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கணைகள் பலவற்றால் துளைத்துச் சிதைக்கப்பட்டவனாகவும், தேரற்று, குதிரைகளற்று, வில்லற்றவனாகவும் இருந்த திருஷ்டத்யும்னனை அவனால் கொல்ல முடியவில்லை.(41,42) எனவே, ஓ! மன்னா, தன் எதிரியைக் கணைகளால் கொல்ல முடியவில்லை என்பதைத் துரோணர் மகன் கண்டபோது, அவன் தன் வில்லை வைத்துவிட்டு, பிருஷதன் மகனை நோக்கி வேகமாக {தேரை விட்டு இறங்கி நடந்து} சென்றான்.(43) அந்த உயர் ஆன்மா கொண்டவன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரியை நோக்கி விரைந்த வேகமானது, ஒரு பெரிய பாம்பைப் பிடிப்பதற்காகப் பாயும் கருடனுக்கு ஒப்பாக இருந்தது.(44)

அதே வேளையில், மாதவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனிடம், “ஓ! பார்த்தா, பிருஷதன் மகனின் தேரை நோக்கிப் பெரும் வேகத்துடன் துரோணர் மகன் எவ்வாறு விரைகிறார் என்பதைப் பார். அந்த இளவரசனை அவர் கொன்றுவிடுவார் என்பதில் ஐயமில்லை.(45) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! எதிரிகளை நொறுக்குபவனே, காலனின் கோரப் பற்களுக்கிடையில் அகப்பட்டிருப்பதைப் போல இப்போது துரோணர் மகனின் கோரப் பிடிக்குள் இருக்கும் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} மீட்பாயாக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன வீர வாசுதேவன் {கிருஷ்ணன்} துரோணர் மகன் இருந்த இடத்தை நோக்கி குதிரைகளைத் தூண்டினான்.(46,47) நிலவின் காந்தியைக் கொண்ட அந்தக் குதிரைகள், கேசவனால் தூண்டப்பட்டு, வானத்தையே விழுங்கிவிடுவதைப் போலத் துரோணர் மகனின் தேரை நோக்கிப் பாய்ந்தன.(48) பெரும் சக்தியைக் கொண்ட கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் ஆகிய இருவரும் தன்னை நோக்கி வருவதைக் கண்ட வலிமைமிக்க அஸ்வத்தாமன், திருஷ்டத்யும்னனை விரைவாகக் கொல்வதற்கான பெரும் முயற்சிகளைச் செய்தான்.(49)

ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் தன் எதிரியால் இழுக்கப்படுவதைக் கண்ட வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி கணைகள் பலவற்றை ஏவினான்.(50) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள், துரோணர் மகனை அணுகி, எறும்புப் புற்றைத் துளைக்கும் பாம்புகளைப் போல அவனை ஆழமாகத் துளைத்தன.(51) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரக் கணைகளால் இவ்வாறு துளைக்கப்பட்ட துரோணரின் வீரமகன், அளவிலா சக்தி கொண்ட அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கைவிட்டான்.(52) உண்மையில் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் இவ்வாறு பீடிக்கப்பட்ட அந்த வீரன், தன் தேரில் {மீண்டும்} ஏறித் தன் சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, கணைகள் பலவற்றால் பார்த்தனைத் துளைக்கத் தொடங்கினான்.(53) அதேவேளையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, வீரச் சகாதேவன், எதிரிகளை எரிப்பவனான அந்தப் பிருஷதன் மகனைத் தன் தேரில் சுமந்து சென்றான்.(54) அப்போது அர்ஜுனன், ஓ! மன்னா, துரோணர் மகனைப் பல கணைகளால் துளைத்தான். சினத்தால் நிறைந்த துரோணர் மகன், அர்ஜுனனின் கரங்களையும் மார்பையும் தாக்கினான்.(55)

இவ்வாறு கோபம் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, காலனின் இரண்டாவது தண்டம் போன்றதோ, ஒருவேளை காலனையே போன்றதோவான ஒரு நீண்ட கணையை அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} மீது ஏவினான். பெரும் காந்தியைக் கொண்ட அந்தக் கணையானது அந்தப் பிராமண வீரனின் தோள்களில் பாய்ந்தது.(56) அந்தப் போரில் அடைந்த அந்தத் தாக்குதலின் பலத்தால் மிகவும் கலக்கமடைந்து அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி, தன் தேர்த்தட்டில் அமர்ந்து மயங்கிப் போனான்.(57) அப்போது கர்ணன், ஓ! ஏகாதிபதி, தன் வில்லான விஜயத்தை அசைத்துக் கொண்டு, சினத்தால் நிறைந்து, அர்ஜுனனோடு தனிப்போரில் ஈடுபடும் விருப்பத்துடன் அந்தப் போரில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.(58) அதேவேளையில் துரோணர் மகன் உணர்வற்றுக் கிடப்பதைக் கண்ட பின்னவனின் {அஸ்வத்தாமனின்} சாரதி, வேகமாகப் போர்க்களத்தில் இருந்து அவனைக் கொண்டு சென்றான்.(59)

பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீட்கப்பட்டதையும், துரோணர் மகன் பீடிக்கப்பட்டதையும் கண்ட பாஞ்சாலர்கள், ஓ! மன்னா, வெற்றியடையும் எதிர்பார்ப்பில் உரக்க முழங்கத் தொடங்கினர்.(60) ஆயிரக் கணக்கான இனிய கருவிகள் {இசைக் கருவிகள்} ஒலிக்கத் தொடங்கின. போரில் இத்தகு அற்புதமான அருஞ்செயல்களைக் கண்ட போராளிகள் சிங்க முழக்கம் செய்தனர்.(61) அந்தச் சாதனையைச் செய்த பார்த்தன் {அர்ஜுனன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, சம்சப்தகர்களை நோக்கிச் செல்வாயாக. அதையே நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றான்.(62) பாண்டு மகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தசார்ஹ குலத்தோன், பல கொடிகளால் அருளப்பட்டதும், காற்று, அல்லது மனத்தின் வேகத்தைக் கொண்டதுமான அந்தத் தேரில் முன்னேறிச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(63)

கிருஷ்ணனின் நேரடிப் போர் வர்ணனை! – கர்ண பர்வம் பகுதி – 60-சம்சப்தகர்களிடம் செல்லுமாறு சொன்ன அர்ஜுனனுக்கு யுதிஷ்டிரனின் நிலையைச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; போரை நேரடியாக வர்ணித்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைக் காத்து நின்ற சாத்யகியும், பீமனும்; ஒருவேளை யுதிஷ்டிரர் இறந்திருக்கக்கூடும் என்று ஐயமெழுப்பிய கிருஷ்ணன்; பீமனின் வீரத்தை எடுத்துரைத்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் உயிரோடுதான் இருக்கிறான் என ஐயந்தெளிந்த கிருஷ்ணன்; நிஷாத இளவரசன் ஒருவனைக் கொன்ற பீமன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் குந்தியின் மகனான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குச்} சுட்டிக் காட்டிய கிருஷ்ணன், அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(2) “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கவர்களும், தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகளுமான பலர், அதோ உன் அண்ணனை (யுதிஷ்டிரரைப்) பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவரைக் கொல்லும் விருப்பத்தைக் கொண்டவர்களாவர்.(2) போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும் வலிமைமிக்கவர்களுமான பாஞ்சாலர்கள், உயர் ஆன்ம யுதிஷ்டிரரை மீட்கும் விருப்பத்தால் அவரை நோக்கிச் செல்கின்றனர்.(3) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, மொத்த உலகின் மன்னனான துரியோதனன், கவசம்பூண்டு, பெரும்படை ஒன்றின் துணையுடன் அதோ பாண்டவ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பின்தொடர்ந்து செல்கிறான்.(4) தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரியோதனன், ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, நஞ்சுமிக்கப் பாம்புகளின் தீண்டலையுடைய ஆயுதங்களைக் கொண்டவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான தன் தம்பிகளின் துணையுடன் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான்.(5)

அந்தத் தார்தராஷ்டிர யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும், காலாட்படை வீரர்களும், மதிப்புமிக்க ரத்தினத்தைக் கவர நினைக்கும் ஓர் ஏழை மனிதரைப் போல யுதிஷ்டிரரைக் கைப்பற்ற வருகின்றனர்.(6) சாத்யகியாலும், பீமனாலும் தடுக்கப்படும் அவர்கள், அமுதத்தைக் கவர்ந்து செல்ல விரும்பிய தைத்தியர்கள் சக்ரனாலும் {இந்திரனாலும்}, அக்னியாலும் அசைவற்றவர்களாகச் செய்யப்பட்டதைப் போல மீண்டும் மலைப்படைந்து நிற்கின்றனர்.(7) எனினும், (குரு படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அதிகமான தங்கள் எண்ணிக்கையின் விளைவால், மழைக்காலங்களில் பெருங்கடலை நோக்கி விரையும் பெரும் அளவிலான நீரைப் போல யுதிஷ்டிரரை நோக்கி மீண்டும் செல்கின்றனர்.(8) அந்த வலிமைமிக்க வில்லாளிகள் சிங்க முழக்கங்களைச் செய்து, சங்குகளை முழக்கித் தங்கள் விற்களை அசைத்துக் கொண்டிருக்கின்றனர்.(9) இவ்வாறு துரியோதனனின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டவரும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரரை ஏற்கனவே காலனின் வாய்க்குள் அகப்பட்டவராகவோ, ஏற்கனவே வேள்வி நெருப்பில் ஊற்றப்பட்ட ஆகுதியாகவோ நான் கருதுகிறேன்[1].(10)

ஓ! பாண்டவா {அர்ஜுனா}, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படையானது முறையாக ஆயத்தம் செய்யப்பட்டு அணிவகுக்கப்பட்டிருக்கிறது. அதன் {அந்த வியூகத்துடைய} கணைகளின் எல்லைக்குள் சக்ரனே {இந்திரனே} வந்தாலும், அவனும் தப்புவது அரிதே.(11) பெரும் வேகத்துடன் கணைமாரிகளைப் பொழிபவனும், கோபத்தில் அந்தகனுக்கு ஒப்பானவனுமான வீரத் துரியோதனனின் மூர்க்கத்தைப் போரில் எவனால் தாங்கிக் கொள்ள முடியும்?(12) வீரத் துரியோதனன், அல்லது துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அல்லது கிருபர், அல்லது கர்ணனுடைய கணைகளின் சக்தியானது, மலைகளையே பிளந்துவிடக் கூடியதாகும்.(13) எதிரிகளை எரிப்பவரான மன்னர் யுதிஷ்டிரர், ஒரு முறை கர்ணனால் களத்தில் புறமுதுகிடச் செய்யப்பட்டார். அந்த ராதையின் மகன் {கர்ணன்}, பெரும் வலிமைகொண்டவனாகவும், பெரும் கரநளினம் கொண்டவனாகவும் இருக்கிறான். அவன் {கர்ணன்}, போரில் பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரரைப்} பீடிக்கத் தகுந்தவனாக, அதிலும் குறிப்பாக, வலிமைமிக்கவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான திருதராஷ்டிரர் மகன்களுடன் சேர்ந்திருக்கும்போது அதற்கு முற்றிலும் தகுந்தவனாகவே அவன் இருக்கிறான்.(14,15)

கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {திருஷ்டத்யும்னன்}, அவ்வீரர்கள் அனைவருடன் போரிட்டுக் கொண்டிருந்த போது, பெரும் தேர் வீரர்களான பிறர் அவரைத் தாக்கி, அவரது வீழ்ச்சியில் பங்களித்தனர்.(16) ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, தன் உண்ணா நோன்புகளின் விளைவால் மன்னர் {யுதிஷ்டிரர்} மிகவும் மெலிந்திருக்கிறார். அவர் பிரம்ம சக்தியைக் கொண்டிருக்கிறார், ஆனால், அந்தப் பலமிக்கவர் அதிக அளவு க்ஷத்திரிய வலிமையைக் கொண்டவராக இல்லை[2].(17) எனவே, கர்ணனால் தாக்கப்பட்டவரும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரர்}, பேராபத்தான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.(18) ஓ! பார்த்தா, மன்னர் யுதிஷ்டிரர் வீழ்ந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில், எதிரிகளைத் தண்டிப்பவரும், கோபம் நிறைந்தவருமான பீமசேனர், வெற்றியடையும் விருப்பத்தால் அடிக்கடி கூச்சலிட்டு, சிங்க முழக்கங்களைச் செய்து, தங்கள் சங்குகளை முழக்கும் தார்தராஷ்டிரர்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்வதால்,(19,20) ஓ! மனிதர்களில் காளையே, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரர் இறந்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்[3]. அதோ தார்தராஷ்டிரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கர்ணன் முன்னேறத் தூண்டுகிறான்.(21)

வலிமைமிக்க (தார்தராஷ்டிரத்) தேர்வீரர்கள், ஸ்தூணாகர்ணம், இந்திரஜாலம், பாசுபதம் மற்றும் பிற ஆயுதக் கூட்டங்களுடன் பிருதையின் அரச மகனைச் {குந்தியின் மகனான யுதிஷ்டிரனைச்} சூழ்ந்திருக்கிறார்கள் [4].(22) வேகமே தேவையான அந்த உயர்ந்த வேளையில் பாஞ்சாலர்களும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான பாண்டவர்களும், அடியற்ற கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் மனிதனை காக்க விரையும் பலசாலிகளைப் போல மன்னரை {யுதிஷ்டிரரை} நோக்கி விரைந்து செல்வதால், அவர் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, மிகப் பலவீனமான நிலையிலேயே இருக்கக்கூடும்.(23,24) மன்னரின் கொடிமரமும் தென்படவில்லை. ஒருவேளை கர்ணன் தன் கணைகளால் தாக்கி அதை வீழ்த்தியிருக்கக்கூடும். ஓ! பார்த்தா, இரட்டையர்கள் {நகுல சகாதேவன், சாத்யகி, சிகண்டி,(25) திருஷ்டத்யும்னன், பீமன், சதானீகன் ஆகியோரும், பாஞ்சாலர்களும் மற்றும் சேதிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ! பாரதா,(26) தாமரைக்கூட்டங்களை அழிக்கும் யானையொன்றைப் போலக் கர்ணன் தன் கணைகளால் பாண்டவப் படையை அதோ அழித்துக் கொண்டிருக்கிறான்.(27) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன் படையின் தேர்வீரர்கள் அதோ தப்பி ஓடுகின்றனர். பார், ஓ! பார்த்தா, அந்தப் பெரும் போர்வீரர்கள் எவ்வாறு பின்வாங்குகிறார்கள் என்பதைப் பார்.(28) ஓ! பாரதா, போரில் கர்ணனால் தாக்கப்படும் அந்த யானைகள், வலியால் பிளிறிக் கொண்டே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடுகின்றன.(30)

சூதன் மகனின் {கர்ணனின்} தேரில் இருப்பதும், யானையின் கயிற்றைப் பொறியாகத் தாங்கியதுமான அந்த முதன்மையான கொடிமரம், களமெங்கும் அசைந்து தென்படுவதைப் பார்.(31) அதோ, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனரை எதிர்த்து இப்போது விரைகையில், நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்து, உன் படையைக் கொன்றுகொண்டே செல்கிறான்.(32) அச்சந்தரும் போரில் சக்ரனால் {இந்திரனால்} முறியடிக்கப்படும் தைத்தியர்களைப் போலவே அந்த வலிமைமிக்கப் பாஞ்சாலத் தேர்வீரர்கள் அங்கே (கர்ணனால்) முறியடிக்கப்படுகின்றனர்.(33) பாஞ்சாலர்கள், பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரை வென்ற கர்ணன், அதோ அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் செலுத்தி உன்னையே தேடுகிறான் என நான் நினைக்கிறேன்.(34) ஓ! பார்த்தா, கர்ணன் தன் முதன்மையான வில்லை அழகாக வளைக்கும்போது, தன் எதிரிகளை வென்று தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சக்ரனை {இந்திரனைப்} போல மிக அழகாகத் தெரிகிறான் பார்.(35)

கௌரவர்கள், கர்ணனின் ஆற்றலைக் கண்டு, அனைத்துப் பக்கங்களிலும் பாண்டுக்களையும், சிருஞ்சயர்களையும் அச்சங்கொள்ளச் செய்யும் வகையில் அதோ முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.(36) அந்தப் பயங்கரப் போரில், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, கர்ணனே தன் முழு ஆன்மாவோடு பாண்டுக்களை அச்சுறுத்தும் வகையில், அனைத்துத் துருப்புகளிடமும்,(37) “கௌரவர்களே முன்னேறிச் செல்லுங்கள், நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. இந்தப் போரில் ஒரு சிருஞ்சயனும் உயிரோடு தப்பாத வகையில் வேகமாக விரைவீராக.(38) நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதைச் செய்வீராக. எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் உங்களைப் பின்தொடர்ந்து வருவோம்” என்று அதோ சொல்கிறான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன் {கர்ணன்}, தன் கணைகளை இறைத்தபடியே (தன் துருப்புகளுக்குப்) பின்னால் முன்னேறிச் செல்கிறான்.(39) ஓ! பார்த்தா, இந்தப் போரில் வெண்குடையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கர்ணன், சந்திரனால் அலங்கரிக்கப்பட்ட உதயமலைகளைப் போலத் தெரிவதைப் பார்.(40) நூறு விலாக்களை {கம்பிகளைக்} கொண்டதும், முழு நிலவுக்கு ஒப்பானதும், இந்தப் போரில் அவனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்டதுமான அவனது அழகிய குடையுன் கூடிய கர்ணன், ஓ! இளவரசே {அர்ஜுனா}, தன் பார்வையை உன் மேல் செலுத்துகிறான். இந்தப் போரில் அவன் பெரும் வேகத்துடன் இங்கே வருவான் என்பதில் ஐயமில்லை.(41,42)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அச்சத்தை ஏற்படுத்தும் இந்தப் போரில் அவன் {கர்ணன்}, தன் உறுதிமிக்க வில்லை அசைப்பதையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளை ஏவுவதையும் பார்.(43) ஓ! பார்த்தா, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, குரங்கைக் கொண்டிருக்கும் உன் கொடியைக் கண்டு, ஓ! எதிரிகளை எரிப்பவனே, உன்னோடு மோத விரும்பி, இந்தத் திசையை நோக்கி அதோ திரும்புகிறான். உண்மையில் அவன் {கர்ணன்}, விளக்கின் வாய்க்குள் புகும் பூச்சி ஒன்றைப் போலவே தன் அழிவுக்காகவே {இங்கே} வந்து கொண்டிருக்கிறான்.(44) கோபம் நிறைந்தவனும், துணிச்சல்மிக்கவனுமான அவன், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} நன்மையிலேயே எப்போதும் ஈடுபடுகிறான். தீய புத்தியைக் கொண்ட அவனால் {கர்ணனால்}, எப்போதும் உனக்கு இணையானவனாக ஆக முடியாது.(45)

கர்ணன் தனியனாகவும், ஆதரவற்றவனாகவும் இருப்பதைக் கண்ட திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, ஓ! பாரதா, அவனைக் காப்பதற்காகத் தன் பெரும் படையின் துணையுடனும், பெரும் உறுதியுடனும் அவனை நோக்கித் திரும்புகிறான்.(46) அந்தத் தீய ஆன்மா கொண்டவனும், அவனது கூட்டாளிகள் அனைவரும், புகழ், அரசாங்கம் மற்றும் இன்பத்தை வெல்லும் விருப்பத்துடன், சுறுசுறுப்பையும் வெளிப்படுத்தும் உன்னால் கொல்லப்பட வேண்டும்.(47) நீங்கள் இருவரும் பெரும் பலத்தைக் கொண்டவர்கள். நீங்கள் இருவரும் பெரும் புகழையும் கொண்டவர்கள். ஓ! பார்த்தா, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான பெரும்போரில் தேவனைப் போலவும், தானவனைப் போலவும் ஒருவருடனொருவர் போரில் {நீங்கள் இருவரும்} மோதும்போது, உன் ஆற்றலைக் கௌரவர்கள் அனைவரும் காண வேண்டும்.(48) பெருஞ்சினத்தால் நிறைந்திருக்கும் உன்னையும், சீற்றத்துடன் இருக்கும் கர்ணனையும் கண்டு, ஓ! பாரதக் குலத்தின் காளையே, கோபத்திலிருக்கும் துரியோதனனால் எதையும் செய்ய இயலாது.(49) தூய்மையான ஆன்மாகவாக உன்னைக் கருதியும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, நல்லோனான யுதிஷ்டிரரிடம் ராதையின் மகன் {கர்ணன்} பெரும் பகைமையைப் பாராட்டுவதையும் நினைவுகூர்ந்தும்,(50) ஓ! குந்தியின் மகனே, எது இப்போது அடையப்பட வேண்டுமோ அதை அடைவாயாக. போரில் உன் இதயத்தை நேர்மையாக நிறுத்தி, அந்தத் தேர்வீரர்களின் தலைவனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக.(51)

ஓ! தேர்வீரர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, ஓ! குந்தியின் மகனே, ஓ! வீரா, பெரும் வலிமையும், கடும் சக்தியும் கொண்ட ஐநூறு முதன்மையான தேர்வீரர்களும்,(52) ஐயாயிரம் யானைகளும், அதைவிட இருமடங்கு குதிரைகளும், எண்ணற்ற காலாட்படை வீரர்களும் ஒன்று சேர்ந்து, ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டு, உன்னை எதிர்த்து அதோ வருகின்றனர். உன் விருப்பப்படியே நீ, பெரும் வில்லாளியான சூதன் மகனிடம் {கர்ணனிடம்} உன்னை வெளிப்படுத்துவாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவனை {கர்ணனை} நோக்கிப் பெரும் வேகத்துன் செல்வாயாக.(53,54) பெருங்கோபத்தால் நிறைந்த கர்ணன், அதோ பாஞ்சாலர்களை எதிர்த்து விரைகிறான். அவனது கொடிமரம் திருஷ்டத்யும்னனின் தேரை நோக்கிச் செல்வதை நான் காண்கிறேன். அவன் பாஞ்சாலர்களை முற்றாக அழிப்பான் என்றே நான் நினைக்கிறேன்.(55) நான் உனக்குச் சில நற்செய்திகளையும் சொல்கிறேன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! பார்த்தா, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்[5].(56)

திரும்பி வரும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமர், ஓ! பாரதரே, சிருஞ்சயர்கள் மற்றும் சாத்யகியால் ஆதரிக்கப்பட்டுப் படையின் தலைமையில் நிலைகொள்கிறார்.(57) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, பீமசேனர் மற்றும் உயர் ஆன்ம பாஞ்சாலர்களின் கூரிய கணைகளால் அதோ கௌரவர்கள் கொல்லப்படுகின்றனர்.(58) குருதியில் குளித்திருக்கும் பாரதப் படையானது, ஓ! பாரத் குலத்தின் தலைவா, பயிர்களை இழந்திருக்கும் பூமியின் தன்மையை அடைந்து மிகவும் உற்சாகமற்றிருக்கிறது.(60) ஓ! குந்தியின் மகனே, போராளிகளில் முதன்மையானவரான பீமசேனர், கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து (கௌரவப்) படையை முறியடித்துக் கொண்டிருக்கிறார்.(61) விண்மீன்கள், நிலவுகள் மற்றும் சூரியன்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சள், சிவப்பு, கருப்பு, மற்றும் வெள்ளைக் கொடிகளும், குடைகள் பலவும், ஓ! அர்ஜுனா {அதோ} சிதறிக் கிடக்கின்றன.(62) தங்கம், அல்லது வெள்ளி, அல்லது பித்தளை மற்றும் பிற உலோகங்களால் செய்யப்பட்ட கொடிமரங்களும், யானைகள், மற்றும் குதிரைகளும், களமெங்கும் {அதோ} சிதறிக் கிடக்கின்றன.(63)

பின்வாங்காத பாஞ்சாலர்களின் பல்வேறு வகைக் கணைகளால் உயிரை இழுந்த அந்தத் தேர்வீரர்கள் அதோ தங்கள் தேர்களில் இருந்து விழுகின்றனர்.(64) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, பெரும் வேகத்தோடு கூடிய பாஞ்சாலர்கள், சாரதிகளற்ற தார்தராஷ்டிர யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை எதிர்த்து அதோ விரைகின்றனர்.(65) தங்கள் உயிர்களைத் துச்சமாக மதிப்பவர்களும், போரில் வீழ்த்தக் கடினமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, ஓ! மனிதர்களில் புலியே, பீமசேனரின் வலிமையின் துணைகொண்டு பகைவரின் படையை நொறுக்குகின்றனர்.(66) பாஞ்சாலர்கள், உரத்த முழக்கங்களைச் செய்து, தங்கள் எதிரிகளை நோக்கி விரைகையில், தங்கள் சங்குகளை முழக்கிக் கொண்டு, போரில் தங்கள் கணைகளால் அதோ அவர்களை நொறுக்குகின்றர்.(67) அவர்களது சக்தியையும், பலத்தையும் பார். யானைகளைக் கொல்லும் கோபக்கார சிங்கங்களைப் போல, சுத்தமான வீரத்தால் பாஞ்சாலர்கள் தார்தராஷ்டிரர்களைக் {அதோ} கொல்கிறார்கள்.(68) ஆயுதங்களற்ற அவர்கள், ஆயுதம்படைத்த தங்கள் எதிரிகளிடம் இருந்து அவ்வாயுதங்களைப் பறித்து, இவ்வாறு பறிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு நன்கு தாக்கக்கூடிய தங்கள் எதிரிகளைக் கொன்று உரத்த முழங்கங்களைச் செய்கின்றனர்.(69)

அவர்களது எதிரிகள், சிரங்கள் மற்றும் கரங்கள் தாக்கப்பட்டுக் களத்தில் வீழ்த்தப்படுகின்றனர். பாஞ்சாலத் தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும் உயர்ந்த பாராட்டுக்குரியவையாகும்.(70) மானஸத் தடாகத்தை {மானசரோவர் ஏரியை} விட்டுப் பெரும் வேகத்தில் புறப்பட்டு, கங்கைக்கு விரையும் அன்னங்களைப் போல, கௌரவர்களை எதிர்த்துப் பாஞ்சாலர்கள் {அதோ} விரைகின்றனர், அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையின் ஒவ்வொரு பகுதியும் {அதோ} அவர்களால் தாக்கப்படுகின்றன.(71) காளைகளைத் தடுக்கும் காளைகளைப் போல, வீரக் கிருபர், கர்ணன் மற்றும் பிற தலைவர்கள், தங்கள் வீரமனைத்தையும் வெளிப்படுத்திப் பாஞ்சாலர்களைத் தடுக்கின்றனர்.(72) திருஷ்டத்யும்னனால் தலைமை தாங்கப்பட்ட பாஞ்சால வீரர்கள், பீமரின் ஆயுதங்கள் எனும் பெருங்கடலில் ஏற்கனவே மூழ்கிக் கொண்டிருப்பவர்களும், தங்கள் எதிரிகளுமான தார்தராஷ்டிரப் படையின் பெருந்தேர் வீரர்களை ஆயிரக்கணக்கில் கொல்கின்றனர்.(73) தங்கள் எதிரிகளால் விஞ்சப்படும் பாஞ்சாலர்களைக் காண்பவரும், அச்சமற்றவருமான அந்தக் காற்று தேவனின் மகன் {பீமர்}, தன் கணைகளை ஏவி, பகைவர் படையைத் தாக்கி, உரத்த முழக்கங்களைச் செய்கிறார்.(74) பரந்த தார்தராஷ்டிரப் படையின் பெரும் பகுதியானது மிகவும் அச்சத்திலிருக்கிறது.(75)

துணிக்கோல் கணைகளைக் கொண்டு பீமரால் துளைக்கப்படும் அந்த யானைகள், இந்திரனின் வஜ்ரத்தால் பிளக்கப்படும் மலை முகடுகளைப் போலக் கீழே விழுவதைப் பார்.(76) பீமசேனரின் நேரான கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் யானைகள், தங்கள் படையணிகளையே நசுக்கியபடியே தப்பி ஓடுகின்றன.(77) ஓ! அர்ஜுனா, போரில் வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டுப் பயங்கரமாக முழங்கும் பீமசேனரின் தாங்கிக் கொள்ள முடியாத சிங்க முழக்கங்களையும் நீ அறிந்துகொள்ளவில்லையா {கேட்கவில்லையா}?(78) நிஷாதர்களின் இளவரசன், சினத்தால் நிறைந்து, தண்டத்தைத் தரித்திருக்கும் யமனைப் போலவே பாண்டுவின் மகனை {பீமரைக்} கொல்ல விரும்பி தன் வேல்களை எடுத்துக் கொண்டு, தன் முதன்மையான யானையின் மீதேறி அவரை எதிர்த்து அதோ வருகிறான். (79) நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியுடன் கூடிய பத்து கூரிய துணிக்கோல் கணைகளைக் கொண்டு பீமரால் தாக்கப்பட்டு, முழங்கிக் கொண்டிருக்கும் அந்த {நிஷாத} இளவரசனின் பிடியில் இருந்த வேல்களுடன் கூடிய இரு கரங்களும் வெட்டப்படுகின்றன.(80)

அந்த இளவரசனைக் கொன்ற பீமர், நீல மேகங்களைப் போலத் தெரிபவையும், சாரதிகளால் திறனுடன் வழிநடத்தப்பட்ட பிற யானைகளையும் எதிர்த்துச் செல்கிறார்.(81) அந்தச் சாரதிகள், அபரிமிதமான ஈட்டிகளாலும், வேல்களாலும் விருகோதரை {பீமரைத்} தாக்குவதைப் பார். ஒரே நேரத்தில் தன் கணைகளால் ஏழு யானைகளைக் கொல்லும் உனது அண்ணனால் {பீமரால்} அவற்றின் {அந்த யானைகளின்} வெற்றிக் கொடிகளும் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பிற யானைகளைப் பொறுத்தவரை, அவை ஒவ்வொன்றும் பத்துப் பத்துக் கணைகளைக் கொண்டு அவரால் கொல்லப்படுகின்றன.(82.83) புரந்தரனுக்கு {இந்திரனுக்கு} இணையான பீமர் இப்போது போரில் ஈடுபடுவதால், ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, தார்தராஷ்டிரர்களின் கூச்சல்கள் இதற்கு மேல் கேட்கப்படவில்லை.(84) துரியோதனனின் படைவீரர்களில், முழுமையாக மூன்று அக்ஷௌஹிணி வீரர்கள் (பீமரின் முன்னிலையில்) ஒன்று சேர்ந்து நிற்கின்றனர். கோபத்திலிருப்பவரும், மனிதர்களில் சிங்கமான அந்தப் பீமரால், அவர்கள் அனைவரும் தடுக்கப்படுகின்றனர்” என்றான் {கிருஷ்ணன்}.(85)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அடைவதற்கரிதானதும், பீமசேனனால் அடையப்பட்டதுமான அந்த அருஞ்செயலைக் கண்ட அர்ஜுனன், எஞ்சியிருக்கும் தன் எதிரிகளைத் தன் கணைகளால் அழித்தான்.(86) (அர்ஜுனனால்) முறியடிக்கப்பட்டு, போரில் கொல்லப்பட்ட அந்த வலிமைமிக்கச் சம்சப்தகர்கள், ஓ! தலைவா, அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(87) (அப்படி விழுந்த) அவர்களில் பலர், சக்ரனின் {இந்திரனின்} விருந்தினர்களாகி பேரின்பத்தை அடைந்தனர். பார்த்தனைப் {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, மனிதர்களில் புலியான அவன், தன் நேரான கணைகளைக் கொண்டு, தார்தாஷ்டிரரின் நால்வகைப் படைகளையும் கொல்வதைத் தொடர்ந்தான்” {என்றான் சஞ்சயன்}.(88)

பீமனின் அருஞ்செயல்கள்! – கர்ண பர்வம் பகுதி – 61-பீமனிடம் இருந்து தப்பி ஓடிய படையை மீண்டும் அணிதிரட்டிய கர்ணன்; கர்ணனுடன் மோதிய சிகண்டி, குதிரைகளையும், சாரதியையும் இழந்து தப்பி ஓடியது; திருஷ்டத்யும்னனுடன் வீரமாகப் போரிட்ட துச்சாசனன்; விருஷசேனனுடன் மோதிய நகுலன்; உலூகனை விரட்டிய சகாதேவன்; சகுனியை எளிதாக வென்ற சாத்யகி; பீமனிடம் புறமுதுகிட்ட துரியோதனன்; கிருபரிடம் இருந்து பின்வாங்கிச் சென்ற யுதாமன்யு; கிருதவர்மனால் விரட்டப்பட்ட உத்தமௌஜஸ்; யானைப் படையைக் கலங்கடித்து, தேர்வீரர்களைப் புறமுதுகிடச் செய்து, ருத்திரனைப் போலத் தெரிந்த பீமசேனன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பீமனும், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதும், என் துருப்புகள் பாண்டுக்களாலும், சிருஞ்சயர்களாலும் கொல்லப்படும் போதும்,(1) உண்மையில் என் பரந்த படையானது, பிளக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் உற்சாகத்தை இழந்தபோதும், ஓ! சஞ்சயா, கௌரவர்கள் என்ன செய்தனர் என்று எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிய கரங்களைக் கொண்ட பீமன், சூதன் மகனின் {கர்ணனின்} பெரும் வல்லமையைக் கண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் கண்கள் சிவந்து, அவனை நோக்கி விரைந்தான்.(3) பீமசேனனிடம் இருந்து உமது படை தப்பி ஓடுவதைக் கண்ட வலிமைமிக்கக் கர்ணன், ஓ! மன்னா, பெரும் முயற்சிகளைச் செய்து அதை அணிதிரட்டினான்.(4) வலிய கரங்களைக் கொண்ட கர்ணன், உமது மகனின் {துரியோதனனின்} படையை அணிதிரட்டிய பிறகு, போரில் வீழ்த்தக்கடினமான வீரர்களான பாண்டவர்களை எதிர்த்துச் சென்றான்.(5) பெரும் தேர்வீரர்களான பாண்டவர்களும் தங்கள் விற்களை அசைத்துக் கணைகளை ஏவியபடியே அந்த ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் சென்றனர்.(6) பீமசேனன், சிநியின் பேரன் {சாத்யகி}, சிகண்டி, ஜனமேஜயன், பெரும் பலங்கொண்ட திருஷ்டத்யும்னன், பிரபத்ரகர்கள் அனைவர்,(7) மனிதர்களில் புலிகளான அந்தப் பாஞ்சாலர்கள் ஆகியோர் சினத்தால் நிறைந்து, வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் ஈர்க்கப்பட்டு, அந்தப் போரில் உமது படையை எதிர்த்து அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர்.(8) அதேபோல உமது படையின் பெருந்தேர்வீரர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப் படையைக் கொல்லும் விருப்பத்தில் அஃதை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்தவையும், அபரிமிதமான காலாட்படைவீரர்கள் மற்றும் கொடிமரங்களைக் கொண்டவையுமான அந்த இரு படைகளும், ஓ! மனிதர்களில் புலியே, அப்போது ஓர் அற்புதத் தன்மையை ஏற்றன.(10)

சிகண்டி கர்ணனை எதிர்த்துச் சென்றான், திருஷ்டத்யும்னன் ஒரு பெரும்படையின் துணையுடன் கூடிய உமது மகன் துச்சாசனனை எதிர்த்துச் சென்றான்.(11) நகுலன் விருஷசேனனை எதிர்த்துச் சென்றான், அதே வேளையில் யுதிஷ்டிரன் சித்திரசேனனை எதிர்த்தான். சகாதேவன், ஓ! மன்னா, அந்தப் போரில் உலூகனை எதிர்த்துச் சென்றான்.(12) சாத்யகி சகுனியை எதிர்த்துச் சென்றான். திரௌபதியின் மகன்கள் பிற கௌரவர்களை எதிர்த்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் பெருங்கவனத்துடன் அர்ஜுனனை எதிர்த்துச் சென்றான்.(13) கௌதமரின் மகன் கிருபர் வலிமைமிக்க வில்லாளியான யுதாமன்யுவை எதிர்த்துச் சென்றார், அதே வேளையில் பெரும் பலத்தைக் கொண்ட கிருதவர்மன் உத்தமௌஜஸை எதிர்த்துச் சென்றான்.(14) வலிய கரங்களைக் கொண்ட பீமசேனன், ஓ! ஐயா, தனியொருவனாக, ஆதரவற்றவனாக, குருக்கள் மற்றும் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையில் நின்றிருந்த உமது மகன்கள் அனைவரையும் எதிர்த்தான்.(15)

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைக் கொன்றவனான சிகண்டி, அந்தப் போரில் அச்சமற்றவனாகத் திரிந்து கொண்டிருந்த கர்ணனைச் சிறகுபடைத்த தன் கணைகளால் தடுத்தான்.(16) தடுக்கப்பட்டவனான கர்ணன் அப்போது சினத்தால் தன் உதடுகள் நடுங்க, மூன்று கணைகளைக் கொண்டு சிகண்டியின் கண் புருவங்களுக்கு மத்தியில் தாக்கினான்.(17) தன் நெற்றில் தைத்திருந்த அந்த மூன்று கணைகளுடன் கூடிய சிகண்டி, மூன்று உயர்ந்த சிகரங்களைக் கொண்ட ஒரு வெள்ளி மலையைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(18) அம்மோதலில் சூதன் மகனால் {கர்ணனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான சிகண்டி, பதிலுக்குத் தொண்ணூறு கூறிய கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(19) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், சிகண்டியின் குதிரைகளைக் கொன்று, அடுத்ததாக மூன்று கணைகளால் அவனது சாரதியையும் கொன்று, ஒரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது கொடிமரத்தையும் அறுத்தான்.(20) பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சிகண்டி}, சினத்தால் நிறைந்து, குதிரைகளற்றத் தன் தேரில் இருந்து கீழே குதித்துக் கர்ணன் மீது ஓர் ஈட்டியை வீசினான்.(21) அம்மோதலில் மூன்று கணைகளால் அவ்வீட்டியை வெட்டிய கர்ணன், ஓ! பாரதரே, பிறகு ஒன்பது கூரிய கணைகளால் சிகண்டியைத் துளைத்தான்.(22) மிகவும் சிதைக்கப்பட்டவனும், மனிதர்களில் சிறந்தவனுமான அந்தச் சிகண்டி கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளைத் தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் இருந்து வேகமாகப் பின்வாங்கினான்.(23) பிறகு கர்ணன், ஓ! ஏகாதிபதி, பஞ்சுக் குவியலைச் சிதறடிக்கும் வலிய காற்றைப் போலப் பாண்டவர்களின் துருப்புகளைச் சிதறடிக்கத் தொடங்கினான்.(24)

அதே வேளையில், உமது மகன் துச்சாசனனால் பீடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு மூன்று கணைகளால் அவனது நடுமார்பைத் துளைத்தான்.(25) அப்போது துச்சாசனன், ஓ! ஐயா, தன்னைத் தாக்குபவனின் இடக்கரத்தை, கூரியதும், நேரானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான ஓர் அகன்ற தலை கணையால் {பலத்தால்} துளைத்தான்.(26) இவ்வாறு துளைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், கோபத்தால் நிறைந்து, பதிலடி கொடுக்க விரும்பி, ஓ! பாரதரே, துச்சாசனன் மீது பயங்கரமான கணை ஒன்றை ஏவினான்.(27) இருப்பினும், உமது மகன் {துச்சாசனன்}, திருஷ்டத்யும்னனால் ஏவப்பட்டுத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த மூர்க்கமான கணையைத் தன் கணைகள் மூன்றால் வெட்டினான்.(28) பிறகு, திருஷ்டத்யும்னனை அணுகிய அவன், தங்கத்தால் அலங்கரிக்கபட்ட அகன்ற தலை கொண்ட பதினேழு கணைகளால் அவனது கரங்களையும் மார்பையும் தாக்கினான்.(29) அதனால் சினத்தால் நிறைந்த அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, கூரிய கத்தித் தலை கணை ஒன்றால் {க்ஷுரப்ரத்தால்}, ஓ! ஐயா, துச்சாசனனின் வில்லை அறுத்தான். இதனால் துருப்புகள் அனைத்தும் உரக்க முழங்கின.(30)

மற்றொரு கணையை எடுத்துக் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, சிரித்துக் கொண்டே அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரிகளால் திருஷ்டத்யும்னனைத் தடுத்தான்.(31) உமது உயர்ஆன்ம மகனின் ஆற்றலைக் கண்ட போராளிகளும், சித்தர்களும், அப்சரஸ்களும் ஆச்சரியத்தால் நிறைந்தவர்கள் ஆனார்கள்.(32) பிறகு, சிங்கத்தால் தடுக்கப்பட்ட பெரும் யானையொன்றைப் போல, இவ்வாறு துச்சாசனனால் தாக்கப்படும் வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனை நாங்கள் கண்டோம்.(33) அப்போது, ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, (பாண்டவப் படையின்) தலைவனைக் காக்க விரும்பிய பாஞ்சாலத் தேர்வீரர்கள் பலரும், யானைகள், குதிரைகள் ஆகியனவும் உமது மகனைச் {துச்சாசனனைச்} சூழ்ந்து கொண்டன.(34) ஓ! எதிரிகளை எரிப்பவரே, உமது போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில் தொடங்கிய போரானது, யுக முடிவில் அனைத்துயிர்களுக்கும் நேரும் அழிவு காட்டுவதைப் போலவே அச்சம் நிறைந்த காட்சியையே தந்தது.(35)

தன் தந்தையின் {கர்ணனின்} அருகில் நின்ற விருஷசேனன், முழுக்க இரும்பாலான ஐந்து கணைகளால் நகுலனைத் துளைத்து, மேலும் மூன்று கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(36) அந்த வீர நகுலன், சிரித்துக் கொண்டே, பெரும் கூர்மை கொண்ட துணிக்கோல் கணையொன்றால் விருஷசேனனின் மார்பை ஆழமாகத் துளைத்தான்.(37) இவ்வாறு தன் வலிமைமிக்க எதிரியால் துளைக்கப்பட்டவனும், எதிரிகளை எரிப்பவனுமான விருஷசேனன், தன்னைத் தாக்கியவனை இருபத்தைந்து கணைகளால் துளைத்து, ஐந்து கணைகளால் அவனால் {நகுலனால்} துளைக்கப்பட்டான்.(38) பிறகு அந்த மனிதர்களில் காளையர் இருவரும், ஆயிரக்கணக்கான கணைகளால் ஒருவரையொருவர் மறைத்துக் கொண்டனர். அதன்பேரில் அவர்களை ஆதரித்த படைப்பிரிவுகள் பிளந்தன.(39) திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} துருப்புகள் தப்பி ஓடுவதைக் கண்ட சூதன் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா, அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பலவந்தமாகத் நிறுத்த தொடங்கினான்.(40) கர்ணன் சென்ற பிறகு, நகுலன் கௌரவர்களை எதிர்த்துச் சென்றான். கர்ணனின் மகனும் {விருஷசேனனும்} நகுலனைத் தவிர்த்துவிட்டு,(41) ஓ! ஐயா, தன் தந்தையின் {கர்ணனின்} தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பதற்காக அந்த ராதையின் மகன் {கர்ணன்} இருந்த இடத்திற்கே வேகமாகச் சென்றான்.

கோபக்கார உலூகன் சகாதேவனால் தடுக்கப்பட்டான்.(42) அவனது நான்கு குதிரைகளையும் கொன்ற வீர சகாதேவன், பிறகு, தன் எதிரியின் சாரதியை யமலோகம் அனுப்பி வைத்தான்.(43) அப்போது தன் தந்தைக்கு {சகுனிக்கு} மகிழ்ச்சியை அளிப்பவனான உலூகன், தன் தேரில் இருந்து கீழே குதித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வேகமாகச் சென்று, திரிகர்த்தர்களின் படைப்பிரிவுக்குள் நுழைந்தான்.(44) சாத்யகி, இருபது கூரிய கணைகளால் சகுனியைத் துளைத்து, அகன்ற தலை கொண்ட கணையொன்றால் {பல்லத்தால்} அந்தச் சுபலன் மகனின் {சகுனியின்} கொடிமரத்தையும் எளிதாக அறுத்தான்.(45) சுபலனின் வீர மகன் {சகுனி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சின்னத்தால் நிறைந்து, அம்மோதலில் சாத்யகியின் கவசத்தைத் துளைத்து, பிறகு தங்கத்தாலான அவனது கொடிமரத்தையும் அறுத்தான்.(46) அப்போது சாத்யகி, கூரிய கணைகள் பலவற்றால் அவனைப் {சகுனியைப்} பதிலுக்குத் துளைத்து, ஓ! ஏகாதிபதி, மூன்று கணைகளால் அவனது {சகுனியின்} சாரதியைத் தாக்கினான்.(47) பிறகு அவன் {சாத்யகி}, வேறு கணைகளைக் கொண்டு, சகுனியின் குதிரைகளை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான். ஓ! மனிதர்களில் காளையே, தன் தேரில் இருந்து வேகமாக இறங்கியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சகுனி,(48) வேகமாக {தன் மகன்} உலூகனின் தேரில் ஏறிக் கொண்டான். அப்போது பின்னவன் {உலுகன்} போரில் திறம்பெற்ற வீரனான அந்தச் சிநியின் பேரனிடம் {சாத்யகியிடம்} இருந்து தன் தந்தையை {சகுனியை} பெரும் வேகத்தோடு வெளியே கொண்டு சென்றான்.(49) பிறகு சாத்யகி, ஓ! மன்னா, அந்தப் போரில் பெரும் வேகத்தோடு உமது படையை எதிர்த்து விரைந்ததனால் அந்தப் படை பிளந்தது.(50) சினியின் பேரனுடைய {சாத்யகியின்} கணைகளால் மறைக்கப்பட்ட உமது படையினர், ஓ! ஏகாதிபதி, பெரும் வேகத்தோடு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடி, உயிரை இழந்து கீழே விழுந்தனர்.(51)

உமது மகன் {துரியோதனன்} அந்தப் போரில் பீமசேனனைத் தடுத்தான். ஒரு கணப்பொழுதில் பீமன், அந்த மனிதர்களின் ஆட்சியாளனை {துரியோதனனைத்} குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக, தேரற்றவனாக, கொடியற்றவனாகச் செய்ததால், (பாண்டவத்) துருப்புகள் பெருமகிழ்ச்சியடைந்தன. பிறகு உமது மகன் {துரியோதனன்}, பீமசேனனின் முன்னிலையில் இருந்து சென்றுவிட்டான்.(52,53) இதனால் மொத்த குரு படையும் பீமசேனனை எதிர்த்து விரைந்தது. பீமசேனனைக் கொல்லும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் போராளிகளால் உண்டாக்கப்பட்ட ஆரவாரமானது வல்லமைமிக்கதாக இருந்தது.(54) யுதாமன்யு, கிருபரைத் துளைத்து அவரது வில்லையும் வேகமாக அறுத்தான். அப்போது, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கிருபர், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு,(55) யுதாமன்யுவின் கொடிமரம், சாரதி மற்றும் குடை ஆகியவற்றைப் பூமியில் சாய்த்தார். இதனால், வலிமைமிக்கத் தேர்வீரனான யுதாமன்யு தன் தேரைத் தானே ஓட்டிக் கொண்டு அதில் {அந்தத் தேரிலேயே} பின்வாங்கிச் சென்றான்.(56)

உத்தமௌஜஸ், மலையில் மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல, பயங்கரமான ஆற்றலைக் கொண்ட ஹிருதிகனின் பயங்கர மகனை {கிருதவர்மனை} அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(57) ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கு இடையிலான அந்தப் போரானது, ஓ! ஏகாதிபதி, இதற்கு முன்பு காணப்படாததைப் போல அச்சம் நிறைந்த நிலையை அடைந்தது.(58) அப்போது கிருதவர்மன், ஓ! மன்னா, அம்மோதலில் திடீரென உத்தமௌஜஸின் மார்பைத் துளைத்ததால், பின்னவன் {உத்தமௌஜஸ்} தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(59) அந்த முதன்மையான தேர்வீரனின் சாரதி அவனை {அங்கிருந்து} வெளியே கொண்டு சென்றான். அப்போது மொத்த குரு படையும், பீமசேனனை நோக்கி விரைந்தது.(60)

துச்சாசனன் மற்றும் சுபலன் மகன் {சகுனி} ஆகியோர், ஒரு பெரும் யானைப் படையின் துணையுடன் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டு, சிறு கணைகளால் {க்ஷுதரகங்களால்} அவனைத் {பீமனைத்} துளைக்கத் தொடங்கினர்.(62) தன்னை எதிர்த்து வேகமாக முன்னேறும் அந்த யானைப் படையைக் கண்ட விருகோதரன் {பீமன்}, பெருஞ்சினத்தால் நிறைந்து, தன் தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தான். மேலும் அவன் அசுரர்களைத் தாக்கும் இந்திரனைப் போல யானைகளை யானைகளாலேயே தாக்கத் தொடங்கினான்.(63) விருகோதரன் {பீமன்} அந்த யானைகளைக் கொன்று கொண்டிருந்த போது, அந்தப் போரில், நெருப்பை மறைக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போலத் தன் கணைகளால் ஆகாயத்தை மறைத்தான்.(64) மேகத்திரள்களைச் சிதறடிக்கும் காற்றைப் போலவே அந்தப் பீமன் ஆயிரக்கணக்கில் ஒன்றாகத் திரண்டிருந்த அந்த யானைக் கூட்டங்களைச் சிதறடித்து அழித்தான்.(65)

தங்க வலைப்பின்னல்களாலும், ரத்தினங்கள் பலவற்றாலும் மேனியெங்கும் மறைக்கப்பட்டிருந்த அந்த யானைகள், மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகங்களைப் போல அந்தப் போரில் மிக அழகாகத் தெரிந்தன.(66) பீமனால் கொல்லப்பட்ட அந்த யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடத் தொடங்கின. அவற்றில் சில தங்கள் இதயங்கள் துளைக்கப்பட்டுப் பூமியில் விழுந்தன.(67) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், விழுந்துவிட்டவையுமான அந்த யானைகளுடன் கூடிய பூமியானது, உடைந்த மலைகளால் விரவிக் கிடப்பதைப் போலவே அழகாகத் தெரிந்தது.(68) சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவர்களும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், விழுந்துவிட்டவர்களுமான யானை வீரர்களுடன் கூடிய அந்தப் பூமியானது, தகுதி தீர்ந்த {புண்ணியம் தீர்ந்த} கோள்களால் விரவிக் கிடப்பதைப் போல அழகாகத் தெரிந்தது[1].(69) அப்போது, கன்னப்பொட்டுகளும் {கபோலங்களும்}, மத்தகங்களும், துதிக்கைகளும் ஆழமாகத் துளைக்கப்பட்ட அந்த யானைகள், பீமசேனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு அந்தப் போரில் இருந்து நூற்றுக் கணக்கில் தப்பி ஓடின.(70)

மலைகளைப் போலப் பெரியவையான அவற்றில் சில, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, கணைகளால் தங்கள் அங்கங்கள் துளைக்கப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் உலோகத் தாதுக்கள் வழியும் மலைகளைப் போலக் குருதியைக் கக்கியபடியே தப்பி ஓடின.(71) அப்போது சந்தனக்குழம்பாலும், பிற நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்டவையும், இரு பெரும் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான பீமனின் இரு கரங்களும், தொடர்ந்து வில்லை வளைப்பதில் ஈடுபடுவதை மக்கள் கண்டனர்.(72) இடிமுழக்கத்திற்கு ஒப்பான அவனது வில்லின் நாண்கயிறு மற்றும் உள்ளங்கைகளின் ஒலியைக் கேட்ட அந்த யானைகள், சிறுநீரும், மலமும் கழித்து அச்சத்தால் தப்பி ஓடின.(73) தனியொருவனாகப் பெரும் நுண்ணறிவைக் கொண்ட பீமனின் அருஞ்செயல்களால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் {பீமன்}, அனைத்து உயிர்களையும் அழித்துக் கொண்டிருக்கும் ருத்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்” {என்றான் சஞ்சயன்}.(74)

கர்ணனிடம் புறமுதுகிட்ட யுதிஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 62-யுதிஷ்டிரனை முற்றுகையிட்ட துரியோதனன்; யுதிஷ்டிரனை மீட்க விரைந்த பாண்டவப் படை; அந்தப் பாண்டவப் படை முழுவதையும் தனியொருவனாகத் தடுத்த கர்ணன்; சகாதேவனால் தாக்கப்பட்ட துரியோதனன்; சினம் கொண்ட கர்ணன் பாண்டவத் துருப்புகளை விரட்டியது; யுதிஷ்டிரனைத் தாக்கிய கர்ணன்; கௌரவப் படையைப் பிளந்த யுதிஷ்டிரன்; கர்ணனால் தாக்கப்பட்டு அவனிடம் இருந்து பின்வாங்கிச் சென்ற யுதிஷ்டிரன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது அந்த அழகிய அர்ஜுனன், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், நாராயணனாலேயே {கிருஷ்ணனால்} செலுத்தப்பட்டதுமான அந்த முதன்மையான தேரில் {அங்கே} காட்சியளித்தான்.(1) பெருங்கடலைக் கலங்கடிக்கும் சூறாவளியைப் போல, ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, விஜயன் {அர்ஜுனன்} அந்தப் போரில் குதிரைவீரர்கள் நிறைந்த உமது படையைக் கலங்கடித்தான்.(2) வெண்குதிரைகளைக் கொண்டவனான அர்ஜுனன் வேறு காரியத்தில் {போரில்} ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, உமது மகன் துரியோதனன், சினத்தால் நிறைந்து, பழிவாங்கும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டு, தன் துருப்புகளில் பாதி அளவு சூழச் சென்று, முன்னேறி வந்து கொண்டிருந்த யுதிஷ்டிரனைத் திடீரென முற்றுகையிட்டான்.(3) பிறகு அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, எழுபத்துமூன்று கத்தி தலைக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தான். இதனால் கோபத்தால் தூண்டப்பட்டவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரன்,(4) முப்பது அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} உமது மகனை {துரியோதனனை} வேகமாகத் தாக்கினான். அப்போது, யுதிஷ்டிரனைப் பிடிப்பதற்காகக் கௌரவத் துருப்புகள் மிக வேகமாக விரைந்தன.(5)

எதிரியின் தீய எண்ணங்களைப் புரிந்து கொண்ட பாண்டவப் படையின் பெருந்தேர்வீரர்கள், ஒன்றாகச் சேர்ந்து, குந்தியின் மகனான யுதிஷ்டிரனை மீட்பதற்காக அவனை நோக்கி விரைந்தனர்.(6) உண்மையில், நகுலன், சகாதேவன், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன் ஆகியோர் ஒரு முழு அக்ஷௌஹிணி துருப்புகளால் சூழப்பட்டு இவ்வாறு யுதிஷ்டிரனை நோக்கிச் சென்றனர்.(7) பீமசேனனும், அந்தப் போரில் உமது படையின் பெருந்தேர்வீரர்களை நசுக்கி, எதிரிகளால் சூழப்பட்ட மன்னனை {யுதிஷ்டிரனை} நோக்கிச் சென்றான்.(8) வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடர்த்தியான கணைமாரிகளை ஏவிக் கொண்டு, (யுதிஷ்டிரனை மீட்பதற்காக) இவ்வாறு முன்னேறிவரும் அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரையும் தனியொருவனாகத் தடுத்தான்.(9) அவர்களும் அடர்த்தியான கணைமாரிகளை ஏவி, எண்ணற்ற வேல்களை வீசி உறுதியாகப் போரிட்டாலும், ராதையின் மகனை {கர்ணனைப்} பார்க்கக் கூட அவர்களால் முடியவில்லை.(10)

உண்மையில், தாக்கும் மற்றும் தடுக்கும் ஆயுதங்கள் அனைத்திலும் திறன் வாய்ந்தவனான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, பெரும் வில்லாளிகளான அவர்கள் அனைவரையும் தடுத்தான்.(11) எனினும், உயர் ஆன்ம சகாதேவன், (துரியோதனன் இருந்த இடத்திற்கு) வேகமாக அணுகி, தாமதமில்லாமல் ஒரு (தெய்வீக) ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, இருபது கணைகளால் துரியோதனனைத் துளைத்தான்.(12) இவ்வாறு சகாதேவனால் துளைக்கப்பட்ட குரு மன்னன் {துரியோதனன்}, குருதியால் மறைக்கப்பட்டு, கன்னப்பொட்டுகள் {கபோலங்கள்} பிளக்கப்பட்ட பெரும் யானை ஒன்றைப் போல அழகாக இருந்தான்.(13) பெரும் சக்தி கொண்ட கணைகள் பலவற்றால் ஆழமாகத் துளைக்கப்பட்ட உமது மகனை {துரியோதனனைக்} கண்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, சினத்தால் நிறைந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்றான்.(14) அந்த அவல நிலைக்குக் குறைக்கப்பட்ட துரியோதனனைக் கண்ட கர்ணன், தன் ஆயுதங்களை வேகமாக இருப்புக்கு அழைத்து, யுதிஷ்டிரன் மற்றும் பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.(15)

இவ்வாறு உயர் ஆன்மக் கர்ணனால் கொல்லப்பட்ட யுதிஷ்டிரனின் துருப்புகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் கணைகளால் பீடிக்கப்பட்டு விரைவில் தப்பி ஓடின.(16) கணைகளின் மழையானது அங்கே மொத்தமாகப் பொழிந்தது. உண்மையில், சூதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட அவை {கணைகள்}, முன்பு ஏவப்பட்டவற்றின் சிறகை {வால்பகுதியைத்} தங்கள் தலையால் {கணை முனையால்) தீண்டின.(17) அந்தக் கணைமாரிப் பொழிவில் {கணைகள்} ஒன்றோடொன்று மோதிக்கொண்டதன் விளைவால், ஓ! ஏகாதிபதி, ஆகாயத்தில் நெருப்புண்டாவதைப் போலத் தெரிந்தது.(18), ஓ! மன்னா, முன்னேறிச் செல்லும் வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போன்றவையும், எதிரிகளின் உடல்களைத் துளைக்க வல்லவையுமான கணைகளால், அந்தக் கர்ணன், திசைகளின் பத்து புள்ளிகளையும் விரைவில் மறைத்தான்.(19) உயர்ந்த ஆயுதங்களை வெளிப்படுத்திய கர்ணன், செஞ்சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தன் இரு கரங்களையும் பெரும் சக்தியுடன் அசைக்கத் தொடங்கினான்.(20)

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களையும் தன் கணைகளால் மலைக்கச் செய்த கர்ணன், நீதிமானான யுதிஷ்டிரனை ஆழமாகப் பீடித்தான்.(21) இதன் காரணமாகச் சினத்தால் நிறைந்த தர்மனின் மகன் யுதிஷ்டிரன், ஐம்பது கூரிய கணைகளால் கர்ணனைத் தாக்கினான்.(22) அந்தக் கணைமாரியால் உண்டான இருளின் விளைவால், போரானது காணப் பயங்கரமானது. கங்க இறகுகளைக் கொண்ட பல்வேறு வகைக் கூரிய கணைகளாலும், கல்லில் கூராக்கப்பட்ட எண்ணற்ற அகன்ற தலை கணைகளாலும் {பல்லங்களாலும்}, பல்வேறு வகைகளிலான ஈட்டிகள், வாள்கள் மற்றும் கதாயுதங்களினாலும், அவர்களைத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} கொன்ற போது, ஓ! ஏகாதிபதி, உமது துருப்புகளுக்கு மத்தியில் பெரும் துன்பக் குரல்கள் எழுந்தன.(23,24) அற ஆன்மா கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தீமை செய்ய விரும்பித் தன் கண்களை எங்கே செலுத்தினானோ, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அங்கே உமது படை பிளந்தது.(25) பெருஞ்சினத்தால் தூண்டப்பட்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான கர்ணனும், பதிலடி கொடுக்கும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டு, முகத்தில் கோபம் கொப்பளிக்க அந்தப் போரில் துணிக்கோல்கணைகளையும், அர்த்தச்சந்திரக் கணைகளையும், கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகளையும் {வத்ஸதந்தங்களையும்} ஏவிக் கொண்டு, நீதிமானான மன்னனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான். யுதிஷ்டிரனும், தங்கச் சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகள் பலவற்றால் அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(26,27)

அப்போது சிரிப்பவனைப் போலத் தெரிந்த கர்ணன், கங்க இறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, பாண்டுவின் அரசமகனுடைய மார்பில் துளைத்தான்.(28) அதனால் ஆழமாகப் பீடிக்கப்பட்டவனான அந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே தன் சாரதியிடம் பின்வாங்கிச் செல்லுமாறு ஆணையிட்டான்.(29) அதன் பேரில் தங்கள் மன்னனோடு {துரியோதனனோடு} கூடிய தார்தராஷ்டிரர்கள் அனைவரும், “பிடியுங்கள். பிடியுங்கள்” என்று உரக்கக் கூவியவாறு அந்த மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(30) அப்போது தாக்குவதில் திறம்பெற்ற ஆயிரத்து எழுநூறு கேகயத் துருப்பினர், பாஞ்சாலத் துருப்பினரோடு ஒன்று சேர்ந்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் தார்தராஷ்டிரர்களைத் தடுத்தனர்.(31) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருபோது, பெரும் வலிமை கொண்ட போர்வீரர்களான துரியோதனன் மற்றும் பீமன் ஆகிய இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்” {என்றான் சஞ்சயன்}.(32)

பாசறையை அடைந்த யுதிஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 63-கணைகளால் சிதைக்கப்பட்டுப் பாண்டவப் பாசறையை நோக்கி சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்று தாக்கிய கர்ணன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்று, அவனது தலைப்பாகையையும் வீழ்த்திய கர்ணன்; சகாதேவனின் தேரில் ஏறிக்கொண்ட நகுலனும், யுதிஷ்டிரனும்; யுதிஷ்டிரனைவிட்டு அர்ஜுனனைத் தாக்குமாறு கர்ணனிடம் சொன்ன சல்லியன்; யுதிஷ்டிரனையே தொடர்ந்து தாக்கிய கர்ணன்; பீமனிடம் துரியோதனன் சிக்கியிருப்பதைக் கர்ணனுக்கு உணர்த்திய சல்லியன்; யுதிஷ்டிரனை விட்டகன்று பீமனிடம் சென்ற கர்ணன்; யுதிஷ்டிரனைப் பாசறையில் விட்டுவிட்டுப் பீமனிடம் திரும்பிய நகுலனும், சகாதேவனும்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் கர்ணன், தன் முன்னே நின்றவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தக் கைகேயர்களைத் தன் கணைமாரிகளால் பீடிக்கத் தொடங்கினான்.(1) உண்மையில், அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன்னை அந்தப் போரில் தடுத்துக் கொண்டிருந்த அந்தப் போர்வீரர்களில் ஐநூறு பேரை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(1) அந்தப் போரில் தடுக்கப்பட முடியாதவனாக இருக்கும் ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்ட அந்தப் போர்வீரர்கள், தங்களைத் தாக்குபவனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, பீமசேனனின் முன்னிலையை வந்தடைந்தனர்.(3) அந்தத் தேர்ப்படையைத் தன் கணைகளால் பல பகுதிகளாகப் பிளந்த கர்ணன், ஒரே தேரில் தனியொருவனாகச் சென்று, கணைகளால் அதிகம் சிதைக்கப்பட்டவனும், கிட்டத்தட்ட உணர்வை இழந்திருந்தவனும், தன் இரு பக்கங்களிலும் நகுலன் மற்றும் சகாதேவனை நிறுத்திக் கொண்டு பாண்டவப் பாசறையை அடைவதற்காக மெதுவாகச் சென்று கொண்டிருந்தவனுமான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்தான்.(4,5)

மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகிய ராதையின் மகன் {கர்ணன்}, துரியோதனனுக்கு நன்மை செய்ய விரும்பி, உறுதிமிக்க மூன்று கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தான்.(6) பதிலுக்கு அந்த மன்னனும் {யுதிஷ்டிரனும்}, ராதை மகனின் நடு மார்பைத் துளைத்து, மூன்று கணைகளால் அவனது சாரதியையும் துளைத்தான்.(7) பிறகு, எதிரிகளை எரிப்பவர்களும், யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவர்களுமான மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} கொல்வதில் கர்ணன் வெல்லாத வகையில் பின்னவனை {கர்ணனை} நோக்கி விரைந்தனர்.(8) அப்போது, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும், பெருங்கவனத்துடன் கணைமாரிகளை ஏவி, அவற்றைக் கொண்டு ராதையின் மகனை {கர்ணனை} மறைத்தனர்.(9) எனினும், வீரனான சூதன் மகன் {கர்ணன்}, உயர் ஆன்மா கொண்டவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அந்த இருவரையும், பெரும் கூர்மை கொண்ட அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} துளைத்தான்.(10)

பிறகு அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தந்தத்தைப் போன்ற வெண்மையானவையும், மனத்தைப் போன்று வேகமானவையும், வாலில் கருப்பு முடியைக் கொண்டவையுமான யுதிஷ்டிரனின் சிறந்த குதிரைகளைக் கொன்றான்.(11) அப்போது பெரும் வில்லாளியான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} குந்தி மகனின் தலைப்பாகையை வீழ்த்தினான்,(12) அதே போல, நகுலனின் குதிரைகளையும் கொன்ற அந்த வீரக் கர்ணன், மாத்ரியின் அந்தப் புத்திசாலி மகனின் {நகுலனின்} தேருடைய ஏர்க்காலையும், வில்லையும் அறுத்தான்.(13) குதிரைகளற்றவர்களும், தேரற்றவர்களும், பாண்டுவின் மகன்களுமான அந்தச் சகோதர்கள் இருவரும் {யுதிஷ்டிரனும், நகுலனும்}, அதன்பேரில் சகாதேவனின் தேரில் ஏறிக் கொண்டனர்.(14)

அந்த இரு சகோதரர்களையும் தேரற்றவர்களாகக் கண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், அவர்களது தாய்மாமனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கருணையால் ராதையின் மகனிடம் {கர்ணனிடம்},(15) “நீ இன்று பிருதையின் மகனான பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} போரிட வேண்டும். தர்மனின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இந்த அளவுக்குச் சினம் தூண்டப்படும் வகையில் ஏன் நீ போரிடுகிறாய்?(16) உன் ஆயுதங்கள் தீர்ந்து பாதிப்படையும் நிலையில் நீ இருக்கிறாய். உன் கவசமும் பலவீனமடைந்துள்ளது. ஓ! ராதையின் மகனே {கர்ணனே}, பார்த்தனை {அர்ஜுனனை} நீ அடையும் போது, உன் கணைகளும் குறைந்து, அம்பறாத்தூணிகளும் இல்லாமல், உன் சாரதியும், குதிரைகளும் களைத்துப் போய், எதிரியின் ஆயுதங்களால் நீயும் சிதைந்திருந்தால், ஏளனத்திற்கும், கேலிக்கும் உரிய பொருளாக நீ ஆவாய்” என்றான் {சல்லியன்}.(17) மத்ரர்களின் ஆட்சியாளனால் இவ்வாறு சொல்லப்பட்டாலும், சினத்தால் நிறைந்திருந்த கர்ணன், அந்தப் போரில் யுதிஷ்டிரனைத் தாக்குவதைத் தொடரவே செய்தான்.(18) மேலும் அவன், பாண்டு மற்றும் மாத்ரியின் மகன்கள் இருவரையும் கூரிய கணைகள் பலவற்றால் துளைப்பதையும் தொடர்ந்தான். சிரித்துக் கொண்டே தன் கணைகளால் அவன் {கர்ணன்}, யுதிஷ்டிரனைப் போரில் இருந்து புறங்காட்ட வைத்தான்.(19)

அப்போது சல்லியன், யுதிஷ்டிரனை அழிக்கத் தீர்மானித்துப் பெருங்கோபத்தால் தன் தேரில் நின்று கொண்டிருந்த கர்ணனிடம், மீண்டும் சிரித்துக் கொண்டே, இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(20) “ஓ! ராதையின் மகனே, எவனுடைய நிமித்தமாகத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} உன்னை எப்போதும் கௌரவிக்கிறானோ, அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக.(21) இரு கிருஷ்ணர்களும் தங்கள் சங்குகளை உரக்க முழங்குவது கேட்கப்படுகிறது. மழைக்காலங்களில் கேட்கப்படும் மேகங்களின் முழக்கத்தைப்போல அர்ஜுனனின் நாணொலியும் கேட்கப்படுகிறது.(22) அர்ஜுனன், நமது தேர்வீரர்களில் முதன்மையானோரைத் தன் கணைப் பொழிவால் தாக்கி வீழ்த்தி நம் துருப்பினர் அனைவரையும் அதோ விழுங்கிக் கொண்டிருக்கிறான். ஓ கர்ணா, இந்தப் போரில் அவனைப் பார்.(23)

அவனது பின்புறத்தை யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும் பாதுகாக்கின்றனர். துணிச்சல்மிக்கச் சாத்யகி அவனது இடது சக்கரத்தைப் பாதுகாக்கிறான்,(24) திருஷ்டத்யும்னன் அவனது வலது சக்கரத்தைப் பாதுகாக்கிறான். பீமசேனனோ திருதராஷ்டிரரின் அரச மகனுடன் {துரியோதனனுடன்} அதோ போரிடுகிறான்.(25) ஓ! ராதையின் மகனே, இன்று நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே  அந்தப் பீமன் மன்னனைக் கொல்ல இயலாத வகையிலும், அவனிடம் இருந்து மன்னன் {துரியோதனன்} தப்புவிக்கும் வகையிலும் செயல்படுவாயாக.(26) போர்க்கள ரத்தினமான பீமசேனனின் ஆளுகையின் கீழ் துரியோதனன் கொண்டுவரப்படுவதைப் பார். அவனை அணுகி உன்னால் காக்க முடியுமென்றால், உண்மையில் அஃது அற்புதம் நிறைந்த ஓர் அருஞ்செயலாகவே இருக்கும். (27) மன்னனைப் பேராபத்து நெருங்குவதால் அங்கே சென்று அவனை மீட்பாயாக. மாத்ரியின் மகன்களையோ, மன்னன் யுதிஷ்டிரனையோ கொல்வதால் நீ என்ன ஆதாயத்தை அடையப் போகிறாய்?” என்றான்.(28) ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சல்லியனின் வார்த்தைகளைக் கேட்டவனும், அந்தப் பயங்கரப்போரில் பீமனால் ஆட்கொள்ளப்படும் துரியோதனனைக் கண்டவனுமான ராதையின் வீர மகன் {கர்ணன்},(29) சல்லியனின் வார்த்தைகளால் இவ்வாறு தூண்டப்பட்டு, மன்னனைக் காக்க மிகவும் விரும்பி, அஜாதசத்ருவையும் {யுதிஷ்டிரனையும்}, பாண்டு மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்களையும் விடுவித்தான்.(30) பறவைகளைப் போன்ற வேகத்தைக் கொண்டவையும், மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தூண்டப்பட்டவையுமான தன் குதிரைகளால் அவன் {கர்ணன்} கொண்டு செல்லப்பட்டான்.(31)

கர்ணன் சென்றதும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், ஓ! ஐயா, சகாதேவனின் வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுப் பின்வாங்கிச் சென்றான்.(32) தன் இரட்டைச் சகோதரர்களின் துணையுடன் சென்ற அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {யுதிஷ்டிரன்}, வெட்கத்துடன் (பாண்டவ) முகாமுக்கு வேகமாகத் திரும்பி, கணைகளால் மிகவும் சிதைக்கப்பட்ட தன் உடலுடன்,(33) தேரில் இருந்து கீழே இறங்கி, ஒரு சிறந்த படுக்கையில் வேகமாக அமர்ந்து கொண்டான்.
அப்போது அவனுடைய உடலில் இருந்து கணைகள் பிடுங்கப்பட்ட பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, துன்பக்கணையால் தன் இதயம் அதிகமாகப் பீடிக்கப்பட்டவனாக,(34) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மாத்ரியின் மகன்களுமான தன் இரு சகோதரர்களிடம், “பீமசேனனின் படைப்பிரிவுக்கு வேகமாகத் திரும்பிச் செல்வீராக.(35) மேகமென முழங்கிக் கொண்டே விருகோதரன் {பீமன்} போரிட்டுக் கொண்டிருக்கிறான்” என்றான். மற்றொரு தேரில் ஏறியவனும், தேர்வீரர்களில் காளையுமான நகுலன்,(36) பெரும் சக்தி கொண்ட சகாதேவன் ஆகிய பெரும் வலிமையைக் கொண்டவர்களும், எதிரிகளை நசுக்குபவர்களான அவ்விரு சகோதரர்களும், மிக வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டு, பீமனை நோக்கிச் சென்றனர். உண்மையில், ஒன்றாகச் சேர்ந்து பீமசேனனின் படைப்பிரிவுக்குத் திரும்பிய அந்தச் சகோதரர்கள், அங்கே தங்களுக்குரிய இடங்களில் நிலைகொண்டனர்” {என்றான் சஞ்சயன்}.(37)

கர்ணன் ஏவிய பார்க்கவ ஆயுதம்! – கர்ண பர்வம் பகுதி – 64-அர்ஜுனனை நோக்கி விரைந்த அஸ்வத்தாமன்; கிருஷ்ணனின் வலக்கரத்தைத் துளைத்த அஸ்வத்தாமன்; களத்தில் பாய்ந்த குருதிப்புனல்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த அர்ஜுனன்; ஐந்திராயுதம் ஏவிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் சாரதியை வீழ்த்திய அர்ஜுனன்; தேரைச் செலுத்திக் கொண்டே போரிட்ட அஸ்வத்தாமன்; கடிவாளங்களை அறுத்த அர்ஜுனன்; தப்பி ஓடிய கௌரவப் படை; தடுத்து நிறுத்திய கர்ணன்; பார்க்கவ ஆயுதத்தை ஏவிய கர்ணன்; கர்ணனிடம் போரிட கிருஷ்ணனிடம் அனுமதி கேட்ட அர்ஜுனன்; யுதிஷ்டிரனைக் கண்ட பிறகு, கர்ணனோடு போரிடலாம் என்று அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைக் காணச் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதே வேளையில் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் தேர்ப்படை சூழ திடீரெனப் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான்.(1) சௌரியைத் {கிருஷ்ணனைத்} தன் துணைவனாகக் கொண்ட வீரப் பார்த்தன், பொங்கும் பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, இயல்பான தூண்டலுடன் விரைந்து வந்த அஸ்வத்தாமனை இயல்பான தூண்டலுடனே தடுத்து நின்றான்.(2) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த துரோணர் மகன், அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தான்.(3) கணைகளால் மறைக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களையும் கண்ட (பாண்டவப் படையின்) பெருந்தேர்வீரர்களும், குருக்களும் மிகுந்த ஆச்சரியத்தை அடைந்தனர்.(4) அப்போது அர்ஜுனன் சிரித்துக் கொண்டே ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும் பிராமணனான அஸ்வத்தாமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதத்தை அந்தப் போரில் கலங்கடித்தான்.(5)

உண்மையில் அம்மோதலில், துரோணர் மகனைக் {அஸ்வத்தாமனைக்} கொல்லும் விருப்பத்தில் அர்ஜுனனால் ஏவப்பட்ட அந்த ஆயுதங்கள் அனைத்தும் அந்தப் பெரும் வில்லாளியால் கலங்கடிக்கப்பட்டன.(6) அச்சம் நிறைந்த அந்த ஆயுதமோதலானது நடந்து கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அகன்ற வாயைக் கொண்ட அந்தகனுக்கு ஒப்பானவனாகவே அந்தத் துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} நாங்கள் கண்டோம்.(7) முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்தையும் நேரான கணைகளால் மறைத்த அவன் {அஸ்வத்தாமன்}, வாசுதேவனின் வலக்கரத்தை மூன்று கணைகளால் துளைத்தான்.(8) அப்போது அர்ஜுனன், தன்னைத் தாக்கும் அந்த உயர் ஆன்மா கொண்டவனின் {அஸ்வத்தாமனின்} குதிரைகள் அனைத்தையும் கொன்று[1], அந்தப் போரில் அச்சம் ஏற்படுத்தக்கூடியதும், அடுத்த உலகத்தை நோக்கிச் செல்வதும், பல்வேறு வகைகளிலான உயிரினங்கள் மிதந்து சென்றதுமான இரத்த ஆற்றால் பூமியை மறைத்தான். பார்த்தனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட கணைகளின் மூலம் கொல்லப்பட்ட அஸ்வத்தாமனின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான அந்தத் தேர்வீரர்கள் அழிவடைவதைப் பார்வையாளர்கள் அனைவரும் கண்டனர். அஸ்வத்தாமனும், தன் எதிரிகளைக் கொன்று, யமனின் ஆட்சிப்பகுதிகளுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு பயங்கரமான இரத்த ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(9-11)

பயங்கரமானதும், அச்சம் நிறைந்ததுமான அந்தப் போரானது, துரோணர் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்து கொண்டிருந்தபோது, ஒருவருக்கொருவர் எந்தக் கருணையும் காட்டாமல் போரிட்ட போராளிகள், அங்கேயும், இங்கேயும் விரைந்து கொண்டிருந்தனர்.(12) குதிரைகளும், சாரதிகளும், கொல்லப்பட்ட தேர்கள், சாரதிகள் கொல்லப்படக் குதிரைகள், பாகர்கள் கொல்லப்பட்ட யானைகள் ஆகியவற்றின் விளைவாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பார்த்தனால் ஒரு பயங்கரமான பேரழிவு ஏற்பட்டது.(13) பார்த்தனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் தேர்வீரர்கள் உயிரை இழந்து கீழே விழுந்தனர். தங்கள் கட்டுகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட குதிரைகள், அங்கேயும், இங்கேயும் ஓடின.(14) போர்க்கள ரத்தினமான பார்த்தனின் அந்த அருஞ்செயல்களைக் கண்ட துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, வெற்றியாளர்களின் முதன்மையான முன்னவனை {அர்ஜுனனை} வேகமாக அணுகி,(15) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் உறுதிமிக்க வில்லை அசைத்து, கூரிய கணைகள் பலவற்றால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.(16) மீண்டும் வில் வளைத்த அந்தத் துரோணர் மகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகு படைத்த ஒரு கணையால் மார்பைக் குறி பார்த்து அர்ஜுனனைக் கொடூரமாகத் தாக்கினான்.(17)

அம்மோதலில், துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட வீரனுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கணை மாரிகளால் துரோணர் மகனைப் பலவந்தமாக மறைத்து, அவனது வில்லையும் அறுத்தான்.(18) வில்லறுபட்ட துரோணர் மகன், இடிக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட ஒரு முள் பதித்த கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டு, அம்மோதலில் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன் மீது வீசினான்.(19) எனினும், ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததுமான அந்த முள் பதித்த கதாயுதத்ததைத் திடிரென அறுத்தான்.(20) இவ்வாறு, பார்த்தனின் கணைகளால் வெட்டப்பட்ட அஃது, ஓ! மன்னா, இடியால் தாக்கப்பட்டு நொறுங்கிய ஒரு மலையைப் போலப் பூமியில் விழுந்தது.(21)

இதனால் சினத்தால் நிறைந்தவனும், பெரும் தேர்வீரனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஐந்திர ஆயுதத்துடைய சக்தியின் துணை கொண்டு பீபத்சுவை {அர்ஜுனனை} மறைக்கத் தொடங்கினான்.(22) ஐந்திர ஆயுதத்தின் மூலம் ஆகாயத்தில் பரப்பப்பட்ட கணைமாரியைக் கண்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் வில்லான காண்டீவத்தை எடுத்து, இந்திரனால் உண்டாக்கப்பட்ட வலிமைமிக்க ஓர் ஆயுதத்தை அவனது நாண்கயிற்றில் பொருத்தி, அந்த ஐந்திரக் கணைமாரியை அழித்தான்.(23) ஐந்திர ஆயுதத்தால் உண்டான கணைமாரியைக் கலங்கடித்த பார்த்தன், (தன் கணைகளால்) துரோணர் மகனின் தேரை வேகமாக மறைத்தான். எனினும், பார்த்தனின் கணைகளால் மறைக்கப்பட்டாலும் அந்தத் துரோணர் மகன்,(24) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட அந்தக் கணைமாரியின் ஊடாக ஊடுவி, பின்னவனை {அர்ஜுனனை} அணுகி, ஒரு வலிமைமிக்க ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, திடீரென நூறு {100} கணைகளால் கிருஷ்ணனையும், முன்னூறு {300} குறுங்கணைகளால் {பிண்டிபாலங்களால்} அர்ஜுனனையும் துளைத்தான்.(25)

அப்போது அர்ஜுனன், ஒரு நூறு கணைகளால் தனது ஆசானின் மகனை {அஸ்வத்தாமனை} அவனது முக்கிய அங்கங்கள் அனைத்திலும் துளைத்தான். பிறகு அவன் {அர்ஜுனன்}, உமது போர்வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, துரோணர் மகனின் குதிரைகள், சாரதி, வில்லின் நாண் கயிறு ஆகியவற்றின் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(26) அனைத்து முக்கிய அங்கங்களிலும் துரோணர் மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு தன் எதிராளியின் {அஸ்வத்தாமனின்} சாரதியை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(27) எனினும், கடிவாளங்களைத் தானே பிடித்துக் கொண்ட துரோணர் மகன், கணைகள் பலவற்றால் கிருஷ்ணனை மறைத்தான். பல்குனனோடு {அர்ஜுனனோடு} போரிட்டுக் கொண்டே தன் குதிரைகளை வழிநடத்தியதால், அப்போது துரோணர் மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றலுடன் கூடிய செயல்பாடு மிக அற்புதமானாதாக இருந்தது. அந்தப் போரில் அவனது இந்த அருஞ்செயலை, ஓ! மன்னா, போர்வீரர்கள் அனைவரும் பாராட்டினர்.(29)

ஜயன் என்றும் அழைக்கப்பட்ட பீபத்சு, சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் கத்தி முகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால், அஸ்வத்தாமனின் குதிரைகளுடைய கடிவாளங்களை வேகமாக அறுத்தான்.(30) இதன் காரணமாக, ஏற்கனவே அர்ஜுனனுடைய கணைகளின் சக்தியால் பீடிக்கப்பட்டிருந்த அந்தத் துரோணர் மகனின் குதிரைகள் தப்பி ஓடின. அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது.(31) அதே வேளையில், வெற்றியை அடைந்த பாண்டவர்கள், மேலும் அதை மேம்படுத்த விரும்பி, உமது துருப்புகளின் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளை ஏவியபடி அவற்றை எதிர்த்து விரைந்து சென்றனர்.(32) அப்போது, தார்தராஷ்டிரர்களின் அந்தப் பரந்த படையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, அனைத்துப் போர்முறைகளையும் அறிந்தவர்களான உமது மகன்கள், சுபலனின் மகனான சகுனி மற்றும் கர்ணன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட வீரப் பாண்டவர்களால், ஓ! மன்னா, மீண்டும் மீண்டும் பிளக்கப்பட்டது.(33,34)

அந்தப் படையை உமது மகன்கள் தடுக்க முயற்சித்தாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் பீடிக்கப்பட்ட அது களத்தில் நிற்கவில்லை.(35) உண்மையில், அனைத்துப் பக்கங்களிலும் போர்வீரர்கள் பலர் தப்பி ஓடிக் கொண்டிருந்ததன் விளைவால் அச்சத்தை அடைந்த உமது மகனின் {துரியோதனனின்} பரந்த படைக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது.(36) சூதன் மகன் {கர்ணன்}, “நில்லுங்கள், நிற்பீராக” என்று உரக்கக் கூச்சலிட்டாலும், உயர் ஆன்மப் போர்வீரர்கள் பலரால் கொல்லப்பட்ட உமது படையானது களத்தில் நிற்கவில்லை.(37) அப்போது, ஓ! ஏகாதபதி, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தார்தராஷ்டிரப் படையைக் கண்டு, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட பாண்டவர்களால் பேரொலிகள் எழுப்பப்பட்டன.(38)

அப்போது துரியோதனன், கர்ணனிடம் அன்புடன் பேசி, “ஓ! கர்ணா, பாண்டவர்களால் அதிகமாகப் பீடிக்கப்பட்ட நமது படையைப் பார். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இஃதை அறிந்து கொண்டு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, இந்நேரத்திற்கு ஏற்றதைச் செய்வாயாக.(39,40) பாண்டவர்களால் முறியடிக்கப்பட்டோரான (நமது) போர்வீரர்களில் ஆயிரக்கணக்கானோர், ஓ! வீரா {கர்ணா}, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உன்னை மட்டுமே அழைக்கின்றனர்” என்றான்.(41)

துரியோதனனின் இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட ராதையின் மகன் {கர்ணன்}, சிரிப்பவன் போல இருந்து கொண்டு, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(42) “ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, என் கரங்களின் ஆற்றலையும், என் ஆயுதங்களின் சக்தியையும் பார்ப்பீராக. நான் இன்று பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டுக்கள் அனைவரையும் இந்தப் போரில் கொல்வேன். ஓ! மனிதர்களில் புலியே, குதிரைகளுடன் கூடிய என் தேரைச் செலுத்துவீராக. நான் சொன்னது போலவே அனைத்தும் நடக்கும் என்பதில் ஐயமில்லை” என்றான்.(43)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பெரும் வீரம் கொண்ட வீரனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பழைமையானதும், விஜயம் என்று அழைக்கப்பட்டதுமான முதன்மையான வில்லை எடுத்து,(44) அதில் நாணேற்றி, அந்த நாணை மீண்டும் மீண்டும் தேய்த்தான். தன் உண்மைத் தன்மை மற்றும் ஓர் உறுதிமொழி ஆகியவற்றைச் சொல்லி உறுதிகூறி, துருப்புகளைக் களத்தில் நிற்கச் செய்தவனும், அளவிலா ஆன்மா கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அந்தக் கர்ணன், பார்க்கவம்[2] என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஆயுதத்தைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(45) அவ்வாயுதத்தில் இருந்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கோடிக்கணக்கான கூரிய கணைகள் பாய்ந்தன.(46) கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளால் சிறகமைந்தவையும், சுடர்மிக்கவையும், பயங்கரமானவையுமான அந்தக் கணைகளால் முற்றாக மறைக்கப்பட்ட பாண்டவப் படையால் எதையும் காண முடியவில்லை.(47) வலிமைமிக்கப் பார்க்கவ ஆயுதத்தால் அந்தப் போரில் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஓலங்கள் எழுந்தன.(48) ஓ! மன்னா, அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரக்கணக்காக விழும் தேர்களாலும், உயிரை இழுந்து விழும் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களாலும், ஓ! ஏகாதிபதி, பூமியானது நடுங்கத் தொடங்கியது. பரந்த பாண்டவப் படையானது ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரை கலக்கமடைந்தது.(49,50)அதே வேளையில், எதிரிகளை எரிப்பவனும், போர்வீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் புலியுமான அந்தக் கர்ணன், தன் எதிரிகளை எரித்துக் கொண்டிருந்த போது, புகையற்ற நெருப்பொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(51) இவ்வாறு கர்ணனால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள் மற்றும் சேதிகள், ஒரு காட்டுத்தீயில் உணர்வையிழக்கும் யானைகளைப் போல அந்தக் களமெங்கும் தங்கள் உணர்வுகளை இழக்கத் தொடங்கினர்.(52) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் புலிகளைப் போலவே முழங்கிக் கொண்டிருந்தனர். பீதியடைந்து, அச்சத்தால் நடுங்கியவாறே போர்க்களத்தின் அனைத்துப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டிருந்த போராளிகளால் உண்டாக்கப்பட்ட ஓலமானது, அண்ட அழிவின் போது வாழும் உயிரினங்களின் ஓலங்களைப் போலப் பேரொலியாக இருந்தது.(53,54) சூதன் மகனால் {கர்ணனால்} அவர்கள் இவ்வாறு கொல்லப்படுவதைக் கண்டவையான, விலங்குகள், பறவைகள் முதலான உயிரினங்கள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்தன.(55)

அப்போது சூதன் மகனால் இவ்வாறு கொல்லப்பட்ட சிருஞ்சயர்கள், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் இருப்பவையான இறந்தோரின் ஆவிகள், தங்களைக் காப்பதற்காக யமனை அழைப்பதைப் போலவே, அர்ஜுனனையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} மீண்டும் மீண்டும் அழைத்தனர். கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்ட துருப்புகளின் அந்த ஓலங்களைக் கேட்டவனும், பயங்கரமான பார்க்கவ ஆயுதம் இருப்புக்கு அழைக்கப்பட்டதைக் கண்டவனும், குந்தியின் மகனுமான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, இவ்வார்த்தைகளை வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்னான்:(56-58)) “ஓ! வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, பார்க்கவ ஆயுதத்தின் ஆற்றலைப் பார். எவ்வழியாலும் போரில் அதைக் கலங்கடிக்க முடியாது.(59) இந்தப் போரில், ஓ! கிருஷ்ணா, சினத்தால் நிறைந்தவனும், ஆற்றலில் அந்தகனுக்கே ஒப்பானவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கடுமையான இத்தகு அருஞ்செயலைச் செய்து கொடிருப்பதையும் பார்.(60) அடிக்கடி தன் குதிரைகளைத் தூண்டும் அவன் {கர்ணன்} மீண்டும் மீண்டும் தன் கோபப்பார்வைகளை என் மீது செலுத்துகிறான். இந்தப் போரில் ஒருபோதும் என்னால் கர்ணனிடம் இருந்து தப்ப இயலாது[3].(61) உயிருடன் வாழும் மனிதன் போரில் வெற்றியையோ, வீழ்ச்சியையோ சந்திக்கலாம். எனினும், ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, இறந்தவனுக்கோ, மரணமே கூட வெற்றியே ஆகும். இறந்தவனுக்கு எவ்வாறு தோல்வி ஏற்படக்கூடும்?” என்று கேட்டான் {அர்ஜுனன்}[4].(62பார்த்தனால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்ட கிருஷ்ணன், புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அவனிடம், அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த இவ்வார்த்தைகளால் மறுமொழி கூறினான்:(63) “குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரர்}, கர்ணனால் சிதைக்கப்பட்டு ஆழமாகக் காயமடைந்திருக்கிறார். முதலில் அவரைக் கண்டு ஆறுதலளித்த பிறகு, ஓ! பார்த்த {அர்ஜுனா}, நீ கர்ணனைக் கொல்லலாம்” {என்று சொன்னான்}.(64) பிறகு, யுதிஷ்டிரனைக் காண விரும்பி அவனை நோக்கிச் சென்ற அதே வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனும் களைப்படையட்டும் என்று கேசவன் நினைத்தான்.(65) கணைகளால் பீடிக்கப்பட்ட யுதிஷ்டிரனைத் தானும் காண விரும்பிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, கேசவனுடைய {கிருஷ்ணனுடைய} ஆணையின் பேரில் போரைத் தவிர்த்துவிட்டு அந்தத் தேரில் வேகமாகச் சென்றான்.(66) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் காணும் விருப்பத்தில் இவ்வாறு சென்று கொண்டிருந்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, படையின் ஒவ்வொரு பகுதியில் தன் கண்களைச் செலுத்தினாலும், தன் அண்ணனைக் {யுதிஷ்டிரனைக்} காண்பதில் தவறினான்.(67) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தன் ஆசானின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} போரிட்டு, வஜ்ரதாரியாலும் {இந்திரனாலும்} தடுக்கப்பட முடியாத அந்த வீரனை {அஸ்வத்தாமனை} வென்ற பிறகு, இவ்வாறு சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(68)

யுதிஷ்டிரனைக் கண்ட கிருஷ்ணர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 65-போர்வீரர்களை உற்சாகப்படுத்திய அர்ஜுனன்; யுதிஷ்டிரனைக் குறித்துப் பீமனிடம் விசாரித்த அர்ஜுனன்; யுதிஷ்டிரன் உயிருடன் இருப்பது ஐயமே என்று அர்ஜுனனிடம் சொன்ன பீமன்; யுதிஷ்டிரனைக் கண்டு வருமாறு பீமனுக்குச் சொன்ன அர்ஜுனன்; பகைவரைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், யுதிஷ்டிரனை அர்ஜுனனே கண்டு வர வேண்டும் என்றும் சொன்ன பீமன்; யுதிஷ்டிரனைக் காணச் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும்; அவர்களைக்கண்டு மகிழ்ந்த யுதிஷ்டிரன் கர்ணன் கொல்லப்பட்டு விட்டதாகக் கருதியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} வீழ்த்தி, வலிமைமிக்கதும், வீரம் நிறைந்ததும், அடைவதற்கரிதானதுமான ஓர் அருஞ்செயலைச் செய்தவனும், எதிரிகளால் தடுக்கப்பட முடியாதவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கைகளில் வளைக்கப்பட்ட வில்லுடன், தன் துருப்புகளுக்கு மத்தியில் கண்களைச் செலுத்தினான்.(1) துணிச்சல்மிக்கச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, தங்கள் படைப்பிரிவுகளின் முகப்புகளில் போரிட்டுக் கொண்டிருந்த போர்வீரர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், அவர்களில் தங்கள் முந்தைய சாதனைகளுக்காகக் கொண்டப்படுவோரைப் பாராட்டி, தன் படையின் தேர்வீரர்களைத் தங்கள் நிலைகளில் தொடர்ந்து நிலைக்கச் செய்தான்.(2) கிரீடத்தாலும், தங்கக் கழுத்தணியாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த அர்ஜுனன், தன் அண்ணனான ஆஜமீட குலத்து யுதிஷ்டிரனைக் காணாததால், வேகமாகப் பீமனை அணுகி, “மன்னர் {யுதிஷ்டிரர்} எங்கிருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டு, மன்னன் இருக்குமிடத்தை அவனிடம் விசாரித்தான்.(3)

இவ்வாறு கேட்கப்பட்ட பீமன் {அர்ஜுனனிடம்}, “நீதிமானான மன்னர் யுதிஷ்டிரன், கர்ணனின் கணைகளால் தன் அங்கங்கள் எரிக்கப்பட்டு, இவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டார். அவர் இன்னும் உயிருடன் இருப்பது ஐயத்திற்கிடமானதே” என்றான்.(4)

இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் {பீமனிடம்}, “இந்தக் காரணத்திற்காக, குருவின் வழித்தோன்றல்கள் அனைவரிலும் சிறந்தவரான மன்னரை {யுதிஷ்டிரரைக்} குறித்து அறிந்து வருவதற்காக இவ்விடத்தில் இருந்து வேகமாகச் செல்வீராக. கர்ணனின் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட மன்னர் {யுதிஷ்டிரர்} {நம்} முகாமுக்கே சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.(5) அந்தக் கடும் ஆயுதவழியில் கூரிய கணைகளைக் கொண்டு துரோணரால் ஆழத்துளைக்கப்பட்ட போதும், வெற்றியை எதிர்பார்த்தவரும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவருமான மன்னர் {யுதிஷ்டிரர்}, அந்தத் துரோணர் கொல்லப்படும்வரை போரிலேயே நிலைத்திருந்தார்.(6) பாண்டவர்களில் முதன்மையானவரான அந்தப் பெருந்தன்மைமிக்கவர், இன்றைய போரில் கர்ணனால் பேராபத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். எனவே, ஓ! பீமரே, அவரது {யுதிஷ்டிரரது} நிலையை உறுதி செய்து கொள்வதற்காக, அவர் இருக்கும் இடத்திற்கு வேகமாகச் செல்வீராக. நம் எதிரிகள் அனைவரையும் தடுத்துக் கொண்டு நான் இங்கே நிற்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(7)

இவ்வாறு சொல்லப்பட்ட பீமன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பெரும் மகிமை கொண்டவனே, பாரதர்களில் காளையான மன்னரின் {யுதிஷ்டிரரின்} நிலையை உறுதி செய்வதற்கு நீயே செல்வாயாக. நான் சென்றால், ஓ! அர்ஜுனா, வீரர்களில் முதன்மையானோரான பலர், போரில் நான் அச்சமடைந்துவிட்டதாகச் சொல்லக்கூடும்” என்றான்.(8) அப்போது அர்ஜுனன், பீமசேனனிடம், “என் படைப்பரிவுக்கு எதிரில் சம்சப்தகர்கள் இருக்கின்றனர். கூடித் திரண்டிருக்கும் அந்த எதிரிகளை முதலில் கொல்லாமல், இந்த இடத்தில் இருந்து அகல்வது எனக்கு இயலாத காரியமாகும்” என்றான்.(9) அப்போது பீமன், அர்ஜுனனிடம், “ஓ! குருக்களில் முதன்மையானவனே, என் சொந்த வலிமையைக் கொண்டு நான் சம்சப்தகர்கள் அனைவருடனும் போரிடுவேன். எனவே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நீயே செல்வாயாக” என்றான்.(10)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பகைவர்களுக்கு மத்தியில் தன் அண்ணனான பீமசேனனின் அடைவதற்கரிதான அவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} காண விரும்பி, அந்த விருஷ்ணி வீரனிடம் {கிருஷ்ணனிடம்},(11) “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, இந்தத் துருப்புகளின் கடலை விட்டுவிட்டு, குதிரைகளைச் செலுத்துவாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, மன்னர் அஜாதசத்ருவை {யுதிஷ்டிரரைக்} காண நான் விரும்புகிறேன்” என்றான்.(12)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தசார்ஹர்களில் முதன்மையான கேசவன் {கிருஷ்ணன்}, சரியாகக் குதிரைகளைச் செலுத்தப்போகும் தருணத்தில் பீமனிடம் அவன் {கிருஷ்ணன்}, “ஓ! பீமரே, இந்த அருஞ்செயல் உமக்கு அற்புதமானதன்று. நான் (அங்கே) செல்லப் போகிறேன். திரண்டிருக்கும் இந்தப் பார்த்தனுடைய எதிரிகளைக் கொல்வீராக” என்றான்.(13) பிறகு ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான பீமனைப் படையின் முன்னணியில் நிறுத்தி, (சம்சப்தகர்களுடன்) போரிடுமாறு ஆணையுமிட்டு, ஓ! ஏகாதிபதி, கருடனுக்கு ஒப்பான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்கு வேகமாகச் சென்றான்.(14,15)

பிறகு, தங்கள் தேரில் சென்ற அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும் (கிருஷ்ணனும், அர்ஜுனனும்}, தன் படுக்கையில் கிடந்த மன்னனை {யுதிஷ்டிரனை} அடைந்தனர். அந்தத் தேரில் இருந்து இறங்கிய இருவரும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் பாதங்களை வழிபட்டனர்.(16) அந்த மனிதர்களில் காளை, அல்லது புலி {யுதிஷ்டிரன்}, பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதைக் கண்ட அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும், வாசவனை {இந்திரனைக்} கண்ட அசுவினி இரட்டையரைப் போல மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(17)

அப்போது மன்னன் {யுதிஷ்டிரன்}, அசுவினி இரட்டையரை வாழ்த்தும் விவஸ்வானைப் போலவோ, வலிமைமிக்க அசுரன் ஜம்பனைக் கொன்ற பிறகு, சக்ரனையும் {இந்திரனையும்} விஷ்ணுவையும் பாராட்டிய பிருஹஸ்பதியைப் போலவோ அவ்விருவரையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} வாழ்த்தினான்.(18) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கர்ணன் கொல்லப்பட்டதாக நினைத்து மகிழ்ச்சியால் நிறைந்தான். அந்த எதிரிகளை எரிப்பவன் {யுதிஷ்டிரன்}, மகிழ்ச்சியால் தடைபட்ட குரலுடன் இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(19)

யுதிஷ்டிரனின் அதியாவல்! – கர்ண பர்வம் பகுதி – 66-கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கண்ட யுதிஷ்டிரன், கர்ணன் கொல்லப்பட்டதாக நினைத்து அவர்களிடம் விசாரித்தது; தன் இதயத்தில் இருந்த அச்சங்களை வெளிப்படுத்திய யுதிஷ்டிரன், கர்ணனை அர்ஜுனன் எவ்வாறு கொன்றான் என்று விசாரித்தது…

யுதிஷ்டிரன், “ஓ! தேவகியைத் தாயாகக் கொண்டவனே {கிருஷ்ணா}, நல்வரவு, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} உனக்கு நல்வரவு. ஓ! அச்யுதா {கிருஷ்ண}, ஓ! அர்ஜுனா, உங்கள் இருவரையும் கண்டது மிகவும் இனிமையான காட்சியாக இருக்கிறது.(1) கர்ணனின் எதிரிகளான நீங்கள் இருவரும், உங்கள் மேனியில் எந்தக் காயமுமின்றி, வலிமைமிக்கத் தேர்வீரனான அவனைக் {கர்ணனைக்} கொன்றிருக்கிறீர்கள் என்று காண்கிறேன்.(2) அவன் {கர்ணன்} இந்தப் போரில், கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலவே இருந்தான். ஆயுதங்கள் அனைத்திலும் சாதித்தவனாகவும் அவன் இருந்தான். தார்தராஷ்டிரர்கள் அனைவரின் தலைவனாக இருந்த அவன், அவர்களது கவசமாகவும், பாதுகாவலனாகவும் இருந்தான்.(3) போரிட்டுக் கொண்டிருக்கும்போது, பெரும் வில்லாளிகளான விருஷசேனன் மற்றும் சுசேனன் ஆகிய இரு பெரும் வில்லாளிகளால் எப்போதும் பாதுகாக்கப்படுபவனாகவும் அவன் இருந்தான். பெரும் சக்தி கொண்ட அவன் {கர்ணன்}, ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து ஆயுத பாடங்களைக் கற்றான். போரில் அவன் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(4) உலகமனைத்திலும் முதன்மையான அவன், ஒரு தேர்வீரனாக, உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்பட்டான். அவன் {கர்ணன்}, தார்தராஷ்டிரர்களின் மீட்பனாகவும், அவர்களது படைக்கு முன்னணியில் செல்பவனாகவும் இருந்தான்.(5)

பகைவரின் துருப்புகளைக் கொல்பவனாகவும், எதிரிகளின் பெருங்கூட்டத்தை நசுக்குபவனாகவும் அவன் {கர்ணன்} இருந்தான். எப்போதும் துரியோதனனுக்கு நன்மை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவன், நமக்குத் துன்பத்தைக் கொடுக்கவும் எப்போதும் தயாராகவே இருந்தான்.(6) வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலேயே, போரில் வெல்லப்பட முடியாதவனாக அவன் இருந்தான். சக்தியிலும், வலிமையிலும் அவன் {கர்ணன்}, நெருப்பு தேவனுக்கும் {அக்னிக்கும்}, காற்று தேவனுக்கும் {வாயுவுக்கும்} நிகரானவனாக இருந்தான்.(7) ஈர்ப்பில் அவன் அளக்கமுடியாத கீழ் உலகம் {பாதாளம்} போலவே இருந்தான். நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான அவன், எதிரிகளுக்கு அந்தகனைப் போலவே இருந்தான். இந்தப் பயங்கரப் போரில் (இவ்வாறெல்லாம் இருந்த) கர்ணனைக் கொன்ற பிறகு, ஓர் அசுரனைக் கொன்ற தேவர்கள் இருவரைப் போல நீங்கள் இருவரும் வந்திருப்பது நற்பேறாலேயே.(8)

ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, அர்ஜுனா, இன்று வலிமையோடு போராடிக் கொண்டிருந்த எனக்கும், உயிரினங்களை அழிக்கும் அந்தகனுக்கு ஒப்பான அந்த வீரனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் ஒரு பெரும்போர் நடந்தது.(9) என் கொடிமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. என் பார்ஷினி சாரதிகள் இருவரும் அவனால் {கர்ணனால்} கொல்லப்பட்டனர். யுயுதானன், திருஷ்டத்யும்னன், இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்), வீரச் சிகண்டி, திரௌபதியின் மகன்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் அவனால் {கர்ணனால்}, குதிரைகளற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்யப்பட்டேன்.(10,11) இவர்களையும் {மேற்கண்டோரையும்}, தன் எதிரிகளில் எண்ணற்றோரையும் வென்ற பிறகு, வலிமையும், சக்தியும் கொண்டவனான அந்தக் கர்ணன், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே {அர்ஜுனா}, போரில் உறுதியுடன் முயன்று கொண்டிருந்த என்னையும் வென்றான்.(12) அதன் பிறகு, என்னைப் பின்தொடர்ந்தே வந்து, என் பாதுகாவலர்கள் அனைவரையும் ஐயமில்லாமல் வென்ற அந்த முதன்மையான போர்வீரன் {கர்ணன்}, என்னிடம் பல்வேறு கடுமொழிகளைப் பேசினான்.(13) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, பீமசேனனுடைய ஆற்றலின் காரணமாகவே நான் இன்னும் உயிரோடிருக்கிறேன். (அவனைக் குறித்து) இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டிய தேவையென்ன இருக்கிறது? அந்த அவமானத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(14)

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கர்ணன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, பதிமூன்று {13} வருடங்களாக இரவில் தூக்கத்தையோ, பகலில் ஆறுதலையோ என்னால் அடைய முடிந்ததில்லை.(15) ஓ! தனஞ்சயா, கர்ணன் மீது கொண்ட வெறுப்பால் நிறைந்து நான் எரிகிறேன். வாத்ரிணசைப் பறவை போல, என் அழிவு நேரத்தை அறிந்தே நான் கர்ணனிடம் இருந்து தப்பி வந்தேன்[1].(16) போரில் கர்ணனின் அழிவை நான் எவ்வாறு சாதிக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே என் மொத்த காலமும் கடந்தது.(17) விழிப்பிலோ, உறக்கத்திலோ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, (என் மனக்கண்ணால்) நான் எப்போதும் கர்ணனையே கண்டேன். நான் எங்கிருந்தாலும், இந்த அண்டமே கர்ணனால் நிறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றியது.(18) கர்ணனிடம் கொண்ட அச்சத்தால், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நான் எங்குச் சென்றாலும், அங்கே என் கண்களுக்கு எதிராகக் கர்ணன் நிற்பதையே கண்டேன்.(19) போரில் பின்வாங்காத அந்த வீரனால் {கர்ணனால்}, குதிரைகள் மற்றும் தேருடன் கூடிய நான் வெல்லப்பட்டாலும், அவனால் உயிரோடு விடப்பட்டேன்.(20)

போர்க்கள ரத்தினமான கர்ணன், இன்று என்னைச் “சீ” என்றதால், இந்த உயிரினாலோ, அரசாங்கத்தாலோ எனக்கு யாது பயன்?(21) போரில் பீஷ்மர், அல்லது கிருபர், அல்லது துரோணர் ஆகியோரிடம் எனக்கு நேராத ஒன்று, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சூதன் மகனிடம் {கர்ணனிடம்} நேர்ந்தது.(22) இதன் காரணமாகவே, ஓ! குந்தியின் மகனே, நான் உன்னிடம் உனது நலத்தைக் கேட்கிறேன். கர்ணனை நீ இன்று எவ்வாறு கொன்றாய் என்பதை எனக்கு விபரமாகச் சொல்வாயாக(23) போரில் கர்ணன், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனாவான். ஆற்றலில் அவன் யமனுக்கு நிகரானவனாவான். ஆயுதங்களில் அவன் ராமருக்கு {பரசுராமருக்கு} இணையானவனாவான். அவனை {கர்ணனை} எவ்வாறு நீ கொன்றாய்?(24) அவன் வலிமைமிக்கத் தேர்வீரனாகவும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனாகவும் கருதப்படுபவனாவான். அவன் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமாவான்.(25)

ஓ! இளவரசனே {அர்ஜுனா}, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, திருதராஷ்டிரராலும், அவரது மகனாலும் {துரியோதனனாலும்}, உனக்காகவே எப்போதும் வழிபடப்பட்டான். அவனை எவ்வாறு நீ கொன்றாய்?(26) ஓ! அர்ஜுனா, ஓ! மனிதர்களில் காளையே, அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, கர்ணனை உனக்குக் காலனாகவே கருதினான்.(27) ஓ! மனிதர்களில் புலியே, அந்தக் கர்ணன் போரில் எவ்வாறு உன்னால் கொல்லப்பட்டான்? ஓ! குந்தியின் மகனே, அந்தக் கர்ணன் எவ்வாறு உன்னால் கொல்லப்பட்டான்?(28) ஓ! மனிதர்களில் புலியே, அவனது நண்பர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ருரு மானின் தலையைக் கிழிக்கும் ஒரு புலியைப் போல, போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவனது தலையை நீ எவ்வாறு தாக்கி வீழ்த்தினாய்?(29) போரில் திசைப்புள்ளிகள் அனைத்திலும் எவன் உன்னைத் தேடினானோ, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, உன்னைச் சுட்டிக் காட்டுபவனுக்கு யானையின் உடலளவுகளைக் கொண்ட ஆறு காளைகளால் இழுக்கப்படும் தேரைக் கொடுப்பதாக எவன் உறுதியளித்தானோ அந்தக் கர்ணன்,(30) தீய ஆன்மா கொண்டவனான அந்தக் கர்ணன், கங்க இறகுகளைக் கொண்ட உன் கூரிய கணைகளால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் கிடக்கிறானா என்று நான் உன்னைக் கேட்கிறேன். போரில் சூதன் மகனை {கர்ணனைக்} கொன்றதால், எனக்கு இனிமையான ஓர் உயர்ந்த பணியை நீ சாதித்திருக்கிறாய்.(31)

ஆணவம், செருக்கு, தன் வீரத்தில் தற்பெருமை ஆகியவற்றால் நிறைந்தவனும், போர்க்களத்தில் எங்கும் உன்னைத் தேடிக் கொண்டிருந்தவனுமான அந்தச் சூதன் மகனோடு {கர்ணனோடு} போரில் மோதி அவனை நீ கொன்றுவிட்டாயா?(32) ஓ! ஐயா, எப்போதும் உன்னை அறைகூவி அழைப்பவனும், உன் நிமித்தமாகவே, தங்கத்தாலானதும், எண்ணற்ற யானைகள், காளைகள் மற்றும் குதிரைகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான தேரைப் பிறருக்குக் கொடுக்க விரும்பிய அந்த இழிந்த பாவியை உண்மையில் போரில் நீ கொன்றுவிட்டாயா?(33) சுயோதனனின் {துரியோதனனின்} அன்புக்குரியவனும், வீரச்செருக்கால் போதையுண்டவனும், குருக்களின் சபையில் எப்போதும் தற்பெருமை பேசுபவனுமான அந்தப் பொல்லாத பாவியை இன்று உண்மையில் நீ கொன்றுவிட்டாயா?(34) போரில் மோதியவனும், குருதியில் நனைக்கப்பட்ட, உன் வில்லில் இருந்து உன்னால் ஏவப்பட்ட வானுலாவும் கணைகளால் தன் அங்கங்கள் சிதைக்கப்பட்டவனுமாக அந்த இழிந்தவன் இன்று களத்தில் கிடக்கிறானா? (இறுதியாக) திருதராஷ்டிரர் மகனின் இரு கரங்களும் முறிந்தனவா?(35)

செருக்கால் நிறைந்து, மன்னர்களின் சபையில், துரியோதனனை மகிழ்விப்பதற்காக “நான் பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்வேன்” என்று எப்போதும் தற்பெருமை பேசி மடமையினால் அவன் {கர்ணன்} உதிர்த்த அவ்வார்த்தைகள் நிறைவேறாமல் போயினவா?(36) ஓ! இந்திரனின் மகனே, “பார்த்தன் {அர்ஜுனன்} உயிரோடு வாழும் வரை தன் கால்களைக் கழுவுவதில்லை” என்று உறுதிமொழியேற்றவன் எவனோ, அந்தச் சூதன் மகன், சிறுமதிபடைத்த அந்தக் கர்ணன் இன்று உன்னால் கொல்லப்பட்டானா?(37) சபையில், குரு தலைவர்களுக்கு முன்னிலையில் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, வலிமையை இழந்தவர்களும், மிகவும் பலவீனமானவர்களும், வீழ்ந்துவிட்டவர்களுமான பாண்டவர்களை நீ ஏன் கைவிடக்கூடாது?” என்று பேசியவனும், தீய அறிவைக் கொண்டவனுமான அந்தக் கர்ணன்,(38) “கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} கொல்லாமல் போரில் இருந்து திரும்புவதில்லை“ என்று சொல்லி, உன் நிமித்தமாகச் சபதமேற்ற அந்தக் கர்ணன், பாவம் நிறைந்த அறிவைக் கொண்ட அந்தக் கர்ணன், கணைகளால் தன் உடல் துளைக்கப்பட்டு, இன்று போர்க்களத்தில் கிடக்கிறானா?(39) சிருஞ்சயர்களும், கௌரவர்களும், ஒருவரோடொருவர் மோதிக் கொண்ட போது நடந்ததும், போரில் என்னைப் பரிதாபமிக்க அந்த இழிந்த நிலையை அடையச் செய்ததுமான அந்தப் போரின் இயல்பை நீ அறிவாய். அந்தக் கர்ணனோடு மோதி, அவனை இன்று நீ கொன்றுவிட்டாயா?(40)

ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட சுடர்மிக்கக் கணைகளைக் கொண்டு, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கர்ணனின் பிரகாசமிக்கத் தலையை அவனது உடலில் இருந்து அறுத்துவிட்டாயா?(41) ஓ! வீரா {அர்ஜுனா}, இன்று கர்ணனின் கணைகளால் துளைக்கப்பட்ட நான், (நீ அவனைக் கொன்றுவிடுவாய் என்று) உன்னை நினைத்தேன். கர்ணனைக் கொன்றதன் மூலம், அந்த என் நினைப்பை நீ உண்மையாக்கினாயா?(42) கர்ணனால் அளிக்கப்பட்ட பாதுகாப்பின் விளைவால், செருக்கால் நிறைந்திருக்கும் சுயோதனன் {துரியோதனன்} எப்போதும் நம்மைத் துச்சமாகவே கருதி வந்தான். உன் ஆற்றலை வெளிப்படுத்தி, நீ இன்று அந்தச் சுயோதனனின் புகலிடத்தை {துரியோதனனுக்குப் பாதுகாப்பை அளிக்கும் கர்ணனை} அழித்தாயா?(43) கௌவர்களின் முன்னிலையிலும், சபைக்கு மத்தியிலும், எள்ளுப்பதர்கள் என்று முன்பு எவன் நம்மை அழைத்தானோ, அந்தத் தீய ஆன்மா கொண்ட சூதன் மகனும், பெருகோபம் கொண்டவனுமான அந்தக் கர்ணனுடன் போரில் மோதி நீ இன்று அவனைக் கொன்றுவிட்டாயா?(44) சுபலன் மகனால் {சகுனியால்} சூதாட்டத்தில் வெல்லப்பட்ட யக்ஞசேனன் மகளை {திரௌபதியைப்} பலவந்தமாக இழுத்துவருமாறு துச்சாசனனுக்குக் கட்டளையிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தவன் எவனோ, அந்தத் தீய ஆன்மாகக் கொண்ட சூதன் மகன் இன்று உன்னால் கொல்லப்பட்டானா?(45)

பூமியில் உள்ள ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான நமது பாட்டன் பீஷ்மர், ரதர்களையும், அதிரதர்களையும் பட்டியலிட்டபோது, அவரால் அரைத் தேர்வீரனாக எவன் கணக்கிடப்பட்டானோ அந்தச் சிறுமதிகொண்ட கர்ணன் உன்னால் கொல்லப்பட்டானா?(46) ஓ! பல்குனா {அர்ஜுனா}, போரில் கர்ணனோடு மோதி இன்று நீ அவனைக் கொன்றாய் என்று என்னிடம் சொல்லி, பழி உணர்ச்சியில் பிறந்துதும், அவமானம் என்ற காற்றால் விசிறப்படுவதும், என் இதயத்தில் எரிந்து கொண்டிருப்பதுமான இந்த நெருப்பை நீ அணைப்பாயாக.(47) கர்ணன் கொல்லப்பட்ட செய்தியானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகும். எனவே, அந்தச் சூதன் மகன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை எனக்குச் சொல்வாயாக. விருத்திரன் கொல்லப்பட்ட செய்தியுடன் வரும் இந்திரனின் வரவிற்காகக் காத்திருந்த தெய்வீக விஷ்ணுவைப் போலவே, ஓ! வீரா, நானும் உனக்காக இவ்வளவு நீண்ட காலம் காத்திருந்தேன்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(48)

யுதிஷ்டிரனிடம் உறுதிகூறிய அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 67-நடந்தவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்; சம்சப்தகர்களுடன் தான் போரிட்டதையும், அஸ்வத்தாமன் குறுக்கிட்டதையும், தன்னால் பீடிக்கப்பட்ட அஸ்வத்தாமன் கர்ணனின் படைக்குள் நுழைந்ததையும், கர்ணன் ஏவிய பார்க்கவ ஆயுதத்தைத் தான் கண்டதையும் யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்; கர்ணனையும், அவனது உறவினர்கள் அனைவரையும் கொல்வதாக யுதிஷ்டிரனிடம் உறுதிகூறிய அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கோபத்தில் நிறைந்திருந்த நேர்மையான மன்னனின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், உயர் ஆன்ம அதிரதனும், எல்லையில்லா சக்தி கொண்டவனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, பெரும் வலிமைமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனுமான அந்த யுதிஷ்டிரனிடம் மறுமொழியாக,(1) “இன்று சம்சப்தகர்களுடன் போரிடுகையில், குரு துருப்புகளின் முகப்பில் எப்போதும் செல்லும் துரோணர் மகன் {அஸ்வத்தாமர்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளை ஏவியபடியே திடீரென என் எதிரில் வந்தார்[1].(2) மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்ட என் தேரைக் கண்டதும், துருப்புகள் அனைத்தும் அதைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்கின. அவர்களில் முழுமையாக ஐநூறு பேரைக் கொன்ற நான், ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்தத் துரோணர் மகனை {அஸ்வத்தாமரை} எதிர்த்துச் சென்றேன்.(3) பெரும் உறுதியோடு என்னை அணுகிய அந்த வீரர், ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே} சிங்கத்தை எதிர்த்து வரும் யானைகளின் இளவரசனைப் போல என்னை எதிர்த்து விரைந்து, என்னால் கொல்லப்பட்டு வந்த கௌரவத் தேர்வீரர்களை மீட்க விரும்பினார்.(4) அப்போது, ஓ! பாரதரே, குருவீரர்களில் முதன்மையானவரும், நடுங்கச் செய்யப்பட இயலாதவருமான அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தப் போரில், நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான கூரிய கணைகளால் என்னையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} பீடிக்கத் தொடங்கினார்.(5)

என்னோடு {அவர்} போரிட்டபோது, எட்டு இளங்காளைகளால் இழுக்கப்படும் எட்டு வண்டிகள் அவரது நூற்றுக்கணக்கான கணைகளைச் சுமந்து வந்தன. அவை அனைத்தையும் அவர் என் மீது ஏவினார். ஆனால் நானோ, மேகங்களை அழிக்கும் காற்றைப் போல என் கணைகளால் அவரது கணைமாரியை அழித்தேன்.(6) பிறகு, திறன், பலம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவற்றோடு கூடிய அவர், மழைக்காலங்களில் நீர்த்தாரைகளைப் பொழியும் கார்மேகத்தைப் போலத் தன் காது வரை இழுக்கப்பட்ட வில்லின் நாண்கயிற்றில் இருந்து ஏவப்பட்ட ஆயிரகணக்கான கணைகளை என் மீது ஏவினார்.(7) துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் கணைகளை இடப்புறத்தில் இருந்து ஏவுகிறாரா, வலப்புறத்தில் இருந்து எவுகிறாரா என்பதை நாங்கள் அறியாத வண்ணம் அவர் அந்தப் போரில் திரிந்தார், அதே போல அவர் {அஸ்வத்தாமர்} தமது கணைகளை எப்போது எடுத்தார், அவற்றை எப்போது விடுத்தார் என்பதையும் நாங்கள் அறியவில்லை.(8) உண்மையில், துரோணர் மகனின் வில்லானது இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே எங்களால் காணப்பட்டது. இறுதியாகத் துரோணர் மகன் ஐந்து கூரிய கணைகளால் என்னையும், மேலும் ஐந்து கூரிய கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தார்.(9) எனினும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக, வஜ்ரத்தின் சக்தியைக் கொண்ட முப்பது கணைகளால் நான் அவரைப் பீடித்தேன். என்னால் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர் {அஸ்வத்தாமர்}, விரைவில், ஒரு முள்ளம்பன்றியின் வடிவை ஏற்றார்.(10)

அவரது {அஸ்வத்தாமரது} அங்கங்கள் அனைத்தும் குருதியில் குளித்திருந்தன. போர்வீரர்களில் முதன்மையானோரான தன் துருப்பினர் குருதியால் மறைக்கப்பட்டு, என்னால் மூழ்கடிக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர், சூதன் மகனின் {கர்ணனின்} தேர்ப்படைப் பிரிவிற்குள் நுழைந்துவிட்டார்.(11) (பகைவரின் படைகளை) கலங்கடிப்பவனான கர்ணன், போரில் என்னால் மூழ்கடிக்கப்பட்ட துருப்புகளைக் கண்டு, யானைகளும், குதிரைகளும் அச்சமடைந்து ஓடுவதைக் கண்டு, ஐம்பது பெருந்தேர்வீரர்களுடன் என்னை வேகமாக அணுகினான். கர்ணனைத் தவிர்த்து, அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, உம்மைக் காண்பதற்காக நான் இங்கே வேகமாக வந்தேன்[2].(12) பாஞ்சாலர்கள் அனைவரும் கர்ணனைக் கண்டதால், சிங்கத்தின் மணத்தை {வாசனையை} அறிந்த பசுக்களைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கர்ணனை அணுகிய பிரபத்ரகர்களும், அகன்று விரிந்திருக்கும் காலனின் வாய்க்குள் நுழைந்தவர்களைப் போலத் தெரிகிறார்கள்.(13) துன்பத்தில் இருந்த அந்தத் தேர்வீரர்களில், முழுமையாக ஆயிரத்து எழுநூறு பேரைக் கர்ணன் ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவிட்டான். உண்மையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்} நம்மைக் காணும் வரை தன் உற்சாகத்தை இழக்கவில்லை.(14) முதலில் நீர் அஸ்வத்தாமருடன் போரிட்டு, அவரால் மிகவும் சிதைக்கப்பட்டீர். கர்ணனால் நீர் காணப்பட்ட பிறகே அதை நான் கேள்விப்பட்டேன். ஓ! நினைத்துப் பார்க்க முடியாத அருஞ்செயல்களைச் செய்பவரே, கொடூரனான கர்ணனினிடம் இருந்து வந்த பிறகு, (முகாமில்) நீர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பீர் என்றே நான் நினைத்தேன்.(15)

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, போரின் முன்னணியில் கர்ணனால் வெளிப்படுத்தப்பட்ட பேரற்புதமான (பார்க்கவ) ஆயுதத்தை நான் கண்டேன். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் கர்ணனைத் தடுக்கச் சிருஞ்சயர்களில் எந்தப் போர்வீரனாலும் இப்போது இயலாது.(16) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சிநியின் பேரனான சாத்யகியும், திருஷ்டத்யும்னனும், என் தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களாகட்டும். வீர இளவரசர்களான யுதாமன்யுவும், உத்தமௌஜசும் என் பின்புறத்தைப் பாதுகாக்கட்டும்.(17) ஓ! பெரும் மகிமை கொண்டவரே, பகைவரின் படையில் இருப்பவனும், வீரனும், வெல்லப்பட முடியாத தேர்வீரனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, இன்றைய இந்தப் போரில் காணப்பட்டால், ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஓ! பாரதரே, விருத்திரனுடன் மோதிய சக்ரனை {இந்திரனைப்} போலவே அவனுடன் {கர்ணனுடன்} நான் போரிடுவேன். வெற்றிக்கான போரில் நானும், சூதன் மகனும் போராடுவதை வந்து பாரும்.(18,19) வலிமைமிக்கக் காளையின் முகத்தை நோக்கி ஓடும் மனிதர்களைப்[3] போல அங்கே அந்தப் பிரபத்ரகர்கள் கர்ணனை நோக்கி விரைகின்றனர். அங்கே, ஓ! பாரதரே, ஆறாயிரம் இளவரசர்கள், சொர்க்கத்திற்காகப் போரில் தங்களைத் தியாகம் செய்கின்றனர்.(20)ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் பலத்தை வெளிப்படுத்தி, கர்ணனோடு போரிட்டு, அவனையும், அவனது உறவினர்கள் அனைவரையும் இன்று நான் கொல்லவில்லையெனில், ஓ! மன்னர்களில் சிங்கமே {யுதிஷ்டிரரே}, தான் செய்த உறுதிமொழியை நிறைவேற்றாத ஒருவனுக்கு என்ன முடிவு ஏற்படுமோ, அதே முடிவு என்னையும் அடையட்டும்.(21) போரில் வெற்றி எனதே என எனக்கு ஆசி வழங்குமாறு நான் உம்மை இரந்து கேட்கிறேன். அதோ, தார்தராஷ்டிரர்கள் பீமரை விழுங்கப் போகின்றனர். ஓ! மன்னர்களில் சிங்கமே, சூதன் மகனையும் {கர்ணனையும்}, அவனது துருப்புகளையும், நம் எதிரிகள் அனைவரையும் நான் கொல்வேன்” என்றான் {அர்ஜுனன்}”.(22)

உன் காண்டீவத்திற்கு ஐயோ! – கர்ண பர்வம் பகுதி – 68-கர்ணன் உயிரோடிருப்பதை அறிந்து கோபமடைந்த யுதிஷ்டிரன் அர்ஜுனனை நிந்தித்தது; அர்ஜுனன் பிறந்த போது அசரீரி சொன்னதை நினைவுபடுத்தியது; பீமனைக் கைவிட்டு வந்தமைக்கு அர்ஜுனனை நிந்தித்துக் காண்டீவத்தைக் கிருஷ்ணனிடம் கொடுத்து, அர்ஜுனன் சாரதியாக வேண்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; அர்ஜுனன் கருவிலேயே கலைந்திருக்கலாம் என நிந்தித்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் காண்டீவம், வலிமை, வீரம், தேர் ஆகிவயற்றை நிந்தித்த யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா சக்தி கொண்டவனும் பிருதையின் மகனுமான அந்த யுதிஷ்டிரன், வலிமையும், சக்தியும் கொண்ட கர்ணன் இன்னும் உயிரோடு இருப்பதைக் கேட்டு, பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} பெருங்கோபமடைந்தும், கர்ணனின் கணைகளால் எரிந்தும், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! ஐயா, உன் படையானது, கௌரவமற்ற வழியில் வீழ்த்தப்பட்டுத் தப்பி ஓடியிருக்கிறது. கர்ணனைக் கொல்ல முடியாததால். அச்சமடைந்து, பீமனைக் கைவிட்டுவிட்டு இங்கே நீ வந்திருக்கிறாய்.(2) குந்தியின் கருவறைக்குள் நுழைந்து, அவளது கருவைத் தோல்வியுறச் செய்திருக்கிறாய். சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல இயலாமல், பீமனைக் கைவிட்டு வந்து முறையற்ற செயலைச் செய்திருக்கிறாய்.(3) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, துவைத வனத்தில் இருக்கும்போது, ஒரே தேரில் சென்று கர்ணனைக் கொல்லப்போவதாக நீ என்னிடம் சொன்னாய். கர்ணன் மீது கொண்ட அச்சத்தால், கர்ணனைத் தவிர்த்து, பீமனைக் கைவிட்டுவிட்டு ஏன் இங்கு வந்தாய்?(4) துவைதவனத்தில், நீ என்னிடம், “ஓ! மன்னா, கர்ணனோடு என்னால் போரிட இயலாது” என்று சொல்லியிருந்தால், ஓ! பார்த்தா , சூழ்நிலைக்குத் தகுந்த வேறு ஏற்பாடுகளை நாங்கள் செய்திருப்போமே.(5)

ஓ! வீரா {அர்ஜுனா}, கர்ணனைக் கொல்வதாக உறுதியளித்துவிட்டு, நீ அந்த உறுதியைக் காத்தாயில்லை. எதிரிகளுக்கு மத்தியில் எங்களைக் கொண்டு வந்து, கடும் மண்ணில் {தரையில்} தூக்கி வீசி எங்களை ஏன் நீ நொறுக்குகிறாய்?(6) ஓ! அர்ஜுனா, நாங்கள் உன்னிடம் இருந்து பல்வேறு நல்ல பொருட்களையும், நன்மைகளையும் எதிர்பார்த்தே உனக்கு எப்போதும் ஆசிகளைச் சொன்னோம். எனினும், ஓ! இளவரசனே, ஒரு மரத்திடம் கனியை எதிர்பார்த்திருந்து, மலர்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றதைப் போல, அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் வீணானவை என்று {இப்போது} மெய்ப்பிக்கப்பட்டன.(7) அரசின் மீது பேராசை கொண்ட நாங்கள், இறுதியில் ஏமாற்றமடையும் வகையில், இறைச்சித் துண்டிற்குள் மறைந்திருக்கும் மீன்-முள்ளை {தூண்டில் முள்ளைப்} போலவோ, உணவில் பூசப்பட்ட நஞ்சைப் போலவோ, {இருப்பவனான} நீ அரசின் வடிவில் அழிவையே சுட்டியிருக்கிறாய்.(8) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, பருவகாலத்தில் தேவர்களால் அனுப்பப்படும் மழையை எதிர்பார்த்துப் பூமியில் நம்பிக்கையுடன் தூவப்படும் விதையைப் போலவே உன்னை நம்பியே இந்தப் பதிமூன்று வருடங்களாக நாங்கள் வாழ்ந்துவிட்டோம்.(9)

ஓ! மூட அறிவைக் கொண்டோனே {அர்ஜுனா}, நீ பிறந்து ஏழு நாட்களில் வானத்தில் இருந்து ஒரு குரல் பிருதையிடம் {குந்தியிடம்}, இந்த வார்த்தைகளையே சொன்னது, “பிறந்திருக்கும் இந்த உனது மகன், வாசவனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டிருப்பான். தனது வீரப் பகைவர்கள் அனைவரையும் இவன் வெல்வான்.(10) உயர்ந்த சக்தியைக் கொண்ட இவன், காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} ஒன்றாகத் திரண்டிருக்கும் தேவர்கள் அனைவரையும், பல்வேறு உயிரினங்களையும் வெல்வான். மத்ரர்கள், கலிங்கர்கள் மற்றும் கைகேயர்களை இவன் அடக்குவான். பல மன்னர்களுக்கு மத்தியில் வைத்துக் குருக்களை இவன் கொல்வான்.(11) இவனுக்கும் மேன்மையான வில்லாளி எவனும் இருக்க மாட்டான், எந்த உயிரினத்தாலும் இவனை வெல்ல இயலாது. புலன்களைத் தன் கட்டுக்குள்கொண்டு, அறிவின் கிளைகள் அனைத்திலும் திறனைப் பெறும் இவன் விரும்பிவிட்டால், உயிரினங்கள் அனைத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து விடுவான்.(12) ஓ! குந்தி, உனக்குப் பிறந்திருக்கும் இந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன், அழகில் சோமனுக்கும், வேகத்தின் காற்றின் தேவனுக்கும் {வாயுவுக்கும்}, பொறுமையில் {உறுதியில்} மேருவுக்கும் {மேரு மலைக்கும்}, மன்னிக்கும் தன்மையில் {பொறுமையில்} பூமிக்கும், காந்தியில் சூரியனுக்கும், செழிப்பில் பொக்கிஷத் தலைவனுக்கும் {குபேரனுக்கும்}, வீரத்தில் சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, வலிமையில் விஷ்ணுவுக்கும் போட்டியாளனாக இருப்பான். அதிதியின் மகனான விஷ்ணுவைப் போலவே இவன் எதிரிகள் அனைவரையும் கொல்வான். அளவிலா சக்தி கொண்ட இவன், தன் எதிரிகளுக்கு ஏற்படுத்தும் அழிவினாலும், நண்பர்களுக்காகப் பெறும் வெற்றியாலும் கொண்டாடப் படுபவனாக இருப்பான். அதையும் தவிர, இவன் ஒரு குலத்தின் நிறுவுனனாக இருப்பான்” {என்றது வானத்தில் இருந்து வந்த அந்தக் குரல்}.(13,14)

சதசிருங்க மலைகளின் சிகரத்தில் தவசிகள் பலர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வானத்தில் இருந்து அந்தக் குரல் இவ்வாறு பேசியது. எனினும் அவையாவும் கடந்து விட்டன. ஐயோ, தேவர்களும் பொய்மைகளைப் பேசுவார்கள் என்பதையே இது காட்டுகிறது.(15) முனிவர்களில் முதன்மையானோர் பலரால் உன்னைக் குறித்து எப்போதும் புகழ்ச்சியாகச் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்ட நான், வெற்றியையும், செழிப்பையும் சுயோதனன் {துரியோதனன்} அடைவான் என்பதையோ, கர்ணனிடம் நீ அச்சங்கொள்வாய் என்பதையோ எதிர்பார்க்கவில்லை.(16) தெய்வீகத் தச்சனால் {விஸ்வகர்மனால்} கட்டமைக்கப்பட்டதும், கீச்சொலி கேட்காத அச்சுகளைக் கொண்டதும், குரங்கைச் சுமக்கும் கொடிமரத்தைக் கொண்டதுமான சிறந்த தேரில் நீ செல்கிறாய். வாரில் தங்கமும் பட்டும் இணைக்கப்பட்ட வாளை நீ தரித்திருக்கிறாய். இந்த உனது வில்லான காண்டீவம், முழுமையாக ஆறு முழம் நீளம் கொண்டதாகும். மேலும் கேசவனை {கிருஷ்ணனை} நீ சாரதியாகக் கொண்டிருக்கிறாய்.[1] ஓ! பார்த்தா, பிறகு ஏன் நீ கர்ணனிடம் கொண்ட அசத்தால் போரில் இருந்து வெளியே வந்தாய்.(17)ஓ! தீய ஆன்மா கொண்டவனே {அர்ஜுனா}, இந்த வில்லைக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} கொடுத்துவிட்டு, நீ சாரதியானால், மருத்தர்களின் தலைவன் (சக்ரன் {இந்திரன்}) தன் வஜ்ரத்தால் அசுரன் விருத்திரனைக் கொன்றதைப் போல, கடுமைமிக்கக் கர்ணனைக் கேசவன் (இந்நேரம்) கொன்றிருப்பான்.(18) போரில் திரிபவனும், கடுமையானவனுமான ராதையின் மகனை உன்னால் தடுக்க முடியவில்லையெனில், ஆயுதங்களில் (அவற்றைப் பயன்படுத்துவதிலும், அவற்றின் அறிவிலும்) மேன்மையான வேறு மன்னர் எவருக்கும் இந்த உனது காண்டீவத்தை இன்று கொடுத்துவிடுவாயாக.(19) அது செய்யப்பட்டால், மகன்கள் மற்றும் மனைவியரற்றவர்களாகவும், அரசை இழந்து மகிச்சியற்றவர்களாகவும், அடியாழமற்ற நரகப் பேரிடரில் மூழ்கியவர்களாகவும் உலகம் நம்மைக் காணாது.(20) ஓ! இளவரசனே, போரில் இருந்து இவ்வாறு வெளியேறியதை விட, நீ குந்தியின் கருவறையில் உன் பிறப்பை அடையாமல் இருந்திருக்கலாம், அல்லது, ஓ! பொல்லாத ஆன்மாவே, கருவறையில் ஐந்தாவது மாதத்திலேயே கலைந்திருக்கலாம், அப்படியிருந்தால் அஃது உனக்கு நன்மையானதாக அமைந்திருக்கும்.(21) உன் காண்டீவத்திற்கு ஐயோ, உன் கரங்களின் வலிமைமைக்கு ஐயோ, வற்றாத உன் கணைகளுக்கு ஐயா. உன் கொடியில் இருக்கும் பெருவடிவக் குரங்கிற்கு ஐயோ, நெருப்புத் தேவனால் {அக்னியால்} உனக்கு வழங்கப்பட்ட உன் தேருக்கு ஐயோ” என்றான் {யுதிஷ்டிரன்}”[2].(22)

பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீரும்! – கர்ண பர்வம் பகுதி – 69-தன் சப்தத்தை நினைத்துக் கோபமடைந்த அர்ஜுனன், யுதிஷ்டிரனைக் கொல்வதற்காக வாளை உருவியது; அர்ஜுனனை அதட்டி நிந்தித்த கிருஷ்ணன்; பொய்ம்மையும் வாய்மைக்கு இணையாக ஆகும் சந்தர்ப்பங்களை அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; தன் சபதத்துக்குப் பங்கம் நேராதவாறு ஆலோசனைகளைக் கிருஷ்ணனிடம் வேண்டிய அர்ஜுனன்; கிருஷ்ணன் சொன்ன ஆலோசனை.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யுதிஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் பாரதக் குலத்தின் காளையை {யுதிஷ்டிரனைக்} கொல்வதற்காகத் தன் வாளை உருவினான்.(1) (மனித) இதயத்தின் செயல்பாடுகளை நன்கறிந்தவனான கேசவன் {கிருஷ்ணன்}, அவனது {அர்ஜுனனின்} கோபத்தைக் கண்டு, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ ஏன் உன் வாளை உருவுகிறாய்?(2) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நீ போரிடக் கூடிய எவரும் இங்கு இருப்பதாக நான் காணவில்லையே. நுண்ணறிவு கொண்ட பீமசேனரால், இப்போது தார்தராஷ்டிரர்கள் தாக்கப்படுகிறார்களே.(3) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, மன்னரை {யுதிஷ்டிரரைக்} காண்தற்காகவே நீ போரில் இருந்து {இங்கு} வந்தாய். மன்னரையும் நீ கண்டுவிட்டாய். உண்மையில், யுதிஷ்டிரர் நலமாகவே இருக்கிறார்.(4) புலிக்கு இணையான ஆற்றலுடன் கூடிய இந்த மன்னர்களில் புலியைக் கண்டு நீ மகிழ்ச்சியுற வேண்டிய இந்நேரத்தில் ஏன் இந்த மடமை?(5) ஓ! குந்தியின் மகனே, நீ கொல்லத்தக்க மனிதர் எவரையும் நான் இங்குக் காணவில்லையே. பிறகு ஏன் {யாரை} நீ தாக்க விரும்புகிறாய்? உன் மனத்தில் உள்ள இந்த மாயைதான் யாது?(6) உறுதிமிக்க அந்த வாளை ஏன் இவ்வளவு வேகமாக எடுக்கிறாய்? ஓ! குந்தியின் மகனே, நான் உன்னைக் கேட்கிறேன். ஓ! நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்டவனே, கோபத்துடன் அந்த வாளைப் பிடித்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.(7)

கிருஷ்ணனால் இவ்வாறு கேட்கப்பட்ட அர்ஜுனன், யுதிஷ்டிரனின் மீது தன் கண்களைச் செலுத்தி, கோபக்காரப் பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்},(8) “ எந்த மனிதன் என்னிடம், “உன் காண்டீவத்தை வேறொருவனுக்குக் கொடு” என்று சொல்கிறானோ அவனது தலையை நான் அறுப்பேன். இதுவே என் கமுக்கமான நோன்பாகும் {இரகசிய விரதமாகும்}.(9) ஓ! அளவிலா ஆற்றலைக் கொண்டோனே, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, உன் முன்னிலையிலேயே அந்த வார்த்தைகள் இந்த மன்னரால் பேசப்பட்டன. அவற்றை மன்னிக்க நான் துணியமாட்டேன்.(10) அறத்திலிருந்து சிறு வீழ்ச்சியை அடைவதற்கும் அஞ்சும் இந்த மன்னரை அதற்காகவே நான் கொல்லப்போகிறேன். இந்த மனிதர்களில் சிறந்தவரைக் {யுதிஷ்டிரரைக்} கொன்று என் நோன்பை நான் காக்கப் போகிறேன்.(11) ஓ! யதுக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, அதற்காகவே நான் என் வாளை உருவினேன். யுதிஷ்டிரரைக் கொன்று, உண்மைக்கான {சத்தியத்திற்கான} என் கடனையே நான் செலுத்தப் போகிறேன்.(12) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அதனால் நான் என் துயரையும், நோயையும் போக்கிக் கொள்வேன். இவ்வாறு எழுந்திருக்கும் சூழ்நிலைக்குத் தகுந்ததாக எதை நீ நினைக்கிறாய் என்றே நான் உன்னைக் கேட்கிறேன்?(13) ஓ! ஐயா, இவ்வண்டத்தின் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அறிந்தவன் நீயே. நீ எனக்கு என்ன சொல்வாயோ, அதையே நான் செய்யப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(14)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது கோவிந்தன் {கிருஷ்ணன்], பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ச்சீ… ச்சீ…” என்று சொல்லி மீண்டும் அவனிடம்,(16) “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கோபப்படக்கூடாத நேரத்தில் நீ கோபம் கொள்வதால், ஓ! மனிதர்களில் புலியே, பெரியோருக்காக நீ காத்திருந்ததில்லை என்பதை நான் இப்போது அறிகிறேன். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அறநெறியின் தனிச்சிறப்புகளை அறிந்த எவனும், ஓ! பாண்டுவின் மகனே, அவற்றை அறிந்தவனான நீ இன்று செயல்பட்ட விதத்தில், நடந்து கொள்ள மாட்டான்.(17) ஓ! பார்த்தா, வெளிப்படையாக முறையாகத் தெரிந்தாலும், சாத்திரங்களால் கண்டிக்கப்பட்டவையும், செய்யக்கூடாதவையுமான செயல்களைச் செய்பவன் மனிதர்களில் இழிந்தவனாவான்[1].(18) சீடர்களால் காத்திருக்கப்படும் {பணிசெய்யப்படும்} கல்விமான்கள், அறநெறியின் ஆணைகளைப் பின்பற்றி அறிவித்த தங்கள் கருத்துகளின் தீர்மானங்களை நீ அறிய மாட்டாய்[2].(19) அந்தத் தீர்மானங்களை அறியாத மனிதன், ஓ! பார்த்தா, என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் வேற்றுமையை உணர முடியாமல் குழம்பிப் போய்ப் புத்தி மயங்குகிறான்.(20) என்ன செய்யப்பட வேண்டும், என்ன செய்யப்படக்கூடாது என்பதை உறுதி செய்வது எளிதல்ல. சாத்திரங்களின் உதவியாலேயே அனைத்தையும் உறுதி செய்து கொள்ள முடியும். எனினும், நீ சாத்திரங்களை அறியவில்லையே.(21)

சாத்திரங்களை உணர்ந்தவனாக (உன்னை நீ நம்பிக்கொள்வதால்), அறியாமையால் ஏவப்படும் நீ, அறநெறியை (இவ்வாறு) நோற்கவிரும்புகிறாய் (எனத் தெரிகிறது). அறத்தை அறிந்தவனாக உன்னை நீ நம்புகிறாய். ஆனால், ஓ! பார்த்தா, உயிர்வாழும் உயிரினங்களைக் கொல்வது பாவம் என்பதை நீ அறியவில்லை.(22) விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காமல் தவிர்ப்பது {விலங்குகளிடம் அஹிம்சையே} உயர்ந்த அறம் என நான் நினைக்கிறேன். ஒருவன் பொய்ம்மையும் பேசலாம், ஆனால் ஒருபோதும் கொலை செய்யக் கூடாது.(23) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பிறகு ஒரு சாதாரண மனிதனைப் போல, நீ எப்படி அறநெறியறிந்தவரும், மன்னருமான உன் அண்ணனைக் கொல்ல விரும்பலாம்?(24) போரில் ஈடுபடாத ஒரு மனிதனையோ, ஓர் எதிரியையோ, போரில் புறமுதுகிடுபவனையோ, தப்பி ஓடுபவனையோ, பாதுகாப்பை வேண்டுபவனையோ, கரங்கூப்பியவனையோ, சரணடைந்தவனையோ, தேரற்றவனையோ கொல்வதை நேர்மையாளர்கள் ஒரு போதும் மெச்சுவதில்லை. இந்தத் தன்மைகள் அனைத்தும் உனக்கு மூத்தவரிடம் {யுதிஷ்டிரரிடம்} இருக்கின்றன[3].(25,26)

சாத்திரங்களை உணர்ந்தவனாக (உன்னை நீ நம்பிக்கொள்வதால்), அறியாமையால் ஏவப்படும் நீ, அறநெறியை (இவ்வாறு) நோற்கவிரும்புகிறாய் (எனத் தெரிகிறது). அறத்தை அறிந்தவனாக உன்னை நீ நம்புகிறாய். ஆனால், ஓ! பார்த்தா, உயிர்வாழும் உயிரினங்களைக் கொல்வது பாவம் என்பதை நீ அறியவில்லை.(22) விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காமல் தவிர்ப்பது {விலங்குகளிடம் அஹிம்சையே} உயர்ந்த அறம் என நான் நினைக்கிறேன். ஒருவன் பொய்ம்மையும் பேசலாம், ஆனால் ஒருபோதும் கொலை செய்யக் கூடாது.(23) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பிறகு ஒரு சாதாரண மனிதனைப் போல, நீ எப்படி அறநெறியறிந்தவரும், மன்னருமான உன் அண்ணனைக் கொல்ல விரும்பலாம்?(24) போரில் ஈடுபடாத ஒரு மனிதனையோ, ஓர் எதிரியையோ, போரில் புறமுதுகிடுபவனையோ, தப்பி ஓடுபவனையோ, பாதுகாப்பை வேண்டுபவனையோ, கரங்கூப்பியவனையோ, சரணடைந்தவனையோ, தேரற்றவனையோ கொல்வதை நேர்மையாளர்கள் ஒரு போதும் மெச்சுவதில்லை. இந்தத் தன்மைகள் அனைத்தும் உனக்கு மூத்தவரிடம் {யுதிஷ்டிரரிடம்} இருக்கின்றன[3].(25,26)

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, முன்பே இந்த நோன்பு மடமையின் காரணமாக {குழந்தைத்தனமாக} உன்னால் பின்பற்றப்பட்டது. அந்நோன்பின் விளைவாகவும், மடமையினாலும், பாவம் நிறைந்த இந்தச் செயலை நீ செய்யத் துணிகிறாய்.(27) புரிந்து கொள்ளக் கடினமானதும், மிக நுட்பமானதுமான அறநெறியின் பாதையைத் தீர்மானிக்காமல், மதிப்பிற்குரிய உன் மூத்தவரை நோக்கி நீ ஏன் விரைகிறாய்?(28) ஓ! பாண்டுவின் மகனே, பீஷ்மராலும், நீதிமானான யுதிஷ்டிரராலும், க்ஷத்ரி என்று வேறு பெயரிலும் அழைக்கப்பட்ட விதுரராலும், பெரும்புகழைப் பெற்ற குந்தியினாலும் அறிவிக்கப்பட்டதும், அறநெறியுடன் தொடர்புடையதுமான இந்தப் புதிரை {தர்மரகசியத்தை} நான் இப்போது உனக்குச் சொல்கிறேன்[4]. நான் அந்தப் புதிர் குறித்த அனைத்து விவரங்களையும் உனக்குச் சொல்கிறேன். ஓ! தனஞ்சயா, கேட்பாயாக.(29,30)உண்மையை {சத்தியத்தை} உரைப்பவன் நேர்மையாளன். உண்மையைத் தவிர உயர்வானது ஏதுமில்லை. எனினும், உள்ளபடியே உண்மையானது, அதன் முக்கிய இயல்புகளைப் பொறுத்தவரை புரிந்து கொள்ள மிகக் கடினமானதாகும் என்பதைக் காண்பாயாக.(31) பொய்ம்மையே உண்மையாகவும், உண்மையே பொய்ம்மையாகவும் உள்ள இடத்தில், உண்மையும் சொல்லக்கூடாததாகலாம்; பொய்ம்மையும் சொல்லக்கூடியதாகலாம்[5].(32) ஆபத்தான வாழ்வுச் சூழலிலும், திருமணத்திலும் பொய்ம்மை சொல்லத்தக்கதாகிறது. ஒருவன் தன் சொத்துகள் அனைத்தையும் இழக்கக்கூடிய சூழ்நிலையிலும் பொய்ம்மை சொல்லத்தக்கதாகிறது.(33) திருமணத்தின் போதோ, பெண்ணுடன் இன்பமாக இருப்பதற்காகவோ, உயிருக்கு ஆபத்து ஏற்படுங்காலத்திலோ, ஒருவனது மொத்த சொத்தும் பறிபோகும் நிலையிலோ, ஒரு பிராமணனுக்காகவோ பொய்ம்மை சொல்லப்படலாம். இந்த ஐவகைப் பொய்மைகள் பாவமற்றவையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.(34) இந்தச் சந்தர்ப்பங்களில் பொய்மையே உண்மையாகவும், உண்மையே பொய்மையாகவும் ஆகிறது.(35)

உண்மைக்கும், பொய்மைக்கும் இடையிலான வேறுபாட்டை அறியாமல் உண்மையை {சத்தியத்தைப்} பயில்பவன் மூடனாவான். உண்மைக்கும், பொய்மைக்கும் இடையில் உள்ள வேற்றுமையை உணரக் கூடியவனே அறநெறியை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(36) கண்பார்வை இல்லாத விலங்கைக் கொன்றதால் பலாகன் அடைந்ததைப் போல, ஒரு விவேகியும்கூட ஒரு கொடுஞ்செயலைச் செய்வதன் மூலம் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைவான் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?(37) ஆறுகளுக்கு மத்தியில் (வாழும்) கௌசிகன் அடைந்ததைப் போல, அறியாமை கொண்ட மூடனொருவனும் தகுதியை {புண்ணியத்தை} அடையும் விருப்பத்தால், பெரும்பாவத்தையே ஈட்டுவான் என்பதிலும் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?” என்றான் {கிருஷ்ணன்}.(38)

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ புனிதமானவனே, பலாகனைக் குறித்தும், ஆறுகளுக்கு மத்தியில் (வாழும்) கௌசிகனைக் குறித்தும் உள்ள இந்த எடுத்துக்காட்டுகள் அடங்கிய கதையை நான் புரிந்து கொள்ளும் வகையில் எனக்கு உரைப்பாயாக” என்று கேட்டான்.(39)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பாரதா, விலங்குகளை வேட்டையாடும் குறிப்பிட்ட ஒருவன் {வேடன்}, பலாகன் என்ற பெயரில் இருந்தான். விருப்பத்தினால் அல்லாமல், தன் மகன்கள் மற்றும் மனைவியரின் வாழ்வுக்காக மட்டுமே அவன் விலங்குகளைக் கொன்று வந்தான்.(40) தன் வகைக்குண்டான கடமைகளில் அர்ப்பணிப்போடும், எப்போதும் உண்மை பேசிக் கொண்டும், தீய நோக்கம் ஏதும் இல்லாமலும் இருந்த அவன், தன்னை நம்பியிருந்த தன் பெற்றோரையும், பிறரையும் ஆதரித்து வந்தான்.(41) ஒரு நாள், விடாமுயற்சியுடனும், கவனத்துடனும் விலங்குகளைத் தேடியும், ஒன்றையும் அவனால் காண முடியவில்லை. இறுதியில், கண்களின் குறைக்கு ஈடு செய்யும் வகையில் நுகர்வுணர்ச்சி கொண்ட {மூக்கையே கண்ணாகக் கொண்ட} ஊனுண்ணும் விலங்கு ஒன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததைக் கண்டான்.(42) அதைப்போன்ற விலங்கொன்றை அவன் அதுவரை கண்டதில்லை என்றாலும், அதை உடனே கொன்றான். பார்வையற்ற அந்த விலங்கைக் கொன்றதும், வானத்தில் இருந்து (அந்த வேடனின் தலைமீது) மலர்மாரி பொழிந்தது.(43) அந்த விலங்குகளை வேட்டையாடுபவனை {வேடனைச்} சொர்க்கத்திற்குக் கொண்டு செல்வதற்காக, மிக இனிமையானதும், அப்சரஸ்களின் பாடல்களையும், அவர்களுடைய இசைக்கருவிகளின் இசையையும் எதிரொலித்துக் கொண்டிருந்ததுமான தெய்வீகத் தேர் ஒன்று அங்கே வந்தது.(44) ஊனுண்ணும் அவ்விலங்கு, தவத்துறவுகளை மேற்கொண்டு, உயிரினங்கள் அனைத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்த ஒரு வரத்தை அடைந்ததது. அதன் காரணமாகத் தான்தோன்றியால் {பிரம்மனால்} அது குருடாக்கப்பட்டது.(43) உயிரினங்கள் அனைத்தையும் கொல்லத் தீர்மானித்திருந்த அவ்விலங்கைக் கொன்றதால், பலாகன் சொர்க்கத்திற்குச் சென்றான். {எனவே} அறத்தைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதாகும்.(46)

சாத்திரங்களில் அதிக அறிவற்றவனும், கௌசிகன் என்ற பெயரைக் கொண்டவனுமான தவசி ஒருவன் இருந்தான்[6]. கிராமத்தை விட்டு மிகத் தொலைவில்லாததும், பல ஆறுகள் சந்திக்கும் புள்ளியுமான ஓர் இடத்தில் அவன் வாழ்ந்து வந்தான்.(47) “நான் எப்போதும் உண்மையையே பேசுவேன்” என்று சொல்லி ஒரு சபதத்தை அவன் செய்திருந்தான். ஓ! தனஞ்சயா, பிறகு அவன் உண்மை பேசுபவன் எனக் கொண்டாடப்படலானான்.(48) அந்த நேரத்தில், சில குறிப்பிட்ட மனிதர்கள், கள்வர்கள் மீது கொண்ட அச்சத்தால் (கௌசிகன் வசித்து வந்த) வனத்திற்குள் நுழைந்தனர். சினத்தால் நிறைந்த கள்வர்கள், அவர்களைக் கவனமாகத் தேடியபடியே அங்கே வந்தனர்.(49) உண்மையைப் பேசுபவனான கௌசிகனிடம் வந்த அவர்கள், “ஓ புனிதமானவரே, சற்று முன்னர் எந்தப் பாதையின் வழியாக மக்கள் கூட்டம் சென்றது? உண்மையின் பெயரால் கேட்கும் எங்களுக்குப் பதிலளிப்பீராக. அவர்களை நீர் கண்டிருந்தால், எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டனர்.(50) இவ்வாறு உண்மையின் பெயரில் கேட்கப்பட்ட கௌசிகனும், “மரங்கள், கொடிகள் மற்றும் செடிகள் நிறைந்த இந்த வனத்திற்குள்தான் அம்மனிதர்கள் நுழைந்தனர்” என்று உண்மையை அவர்களிடம் சொன்னான்.(51) இவ்வாறே, ஓ! பார்த்தா, அந்தக் கௌசிகன் அவர்களுக்குத் தகவலை அளித்தான். பிறகு அந்தக் கொடூர மனிதர்கள், தாங்கள் தேடி வந்தவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் அனைவரையும் கொன்றனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(52) சிறுமதி கொண்டவனும், அறநெறிகளின் தனித்துவ வேறுபாடுகளை அறியாதவனுமான மூடனொருவன், தன் ஐயங்களுக்கான தீர்வை முதியோரிடம் கேட்காமல் நரகத்தில் வீழ்வதைப் போலவே, அறநெறியின் நுட்பங்களை அறியாத கௌசிகனும், தான் பேசிய வார்த்தைகளில் இருந்த அந்தப் பெரும்பாவத்தின் விளைவால் பயங்கரமான நரகத்தில் வீழ்ந்தான்.(53,54)

பாவத்திலிருந்து அறத்தை வேறுபடுத்திப் பார்க்க சில அறிகுறிகள் இருக்க வேண்டும். உயர்ந்ததும், அடைய முடியாததுமான ஞானத்தை, சிலவேளைகளில் அறிவுப்பயிற்சியின் {பகுத்தறிவின்} மூலம் நாம் அடைக்கூடும்.(55) ஒருபுறம் சாத்திரங்கள் அறத்தைக் குறிக்கின்றன என்று பலர் சொல்கின்றனர். நான் இதில் முரண்படவில்லை. எனினும், சாத்திரங்கள் அனைத்து வழக்குகளிலும் {அறக்குறிப்புகளை} வழங்குவதிலை.(56) உயிரினங்களின் வளர்ச்சிக்காக அறநெறி குறித்த கட்டளைகளே {அவற்றில்} அறிவிக்கப்பட்டிருக்கின்றன.(57) தீங்கிழையாமை {அஹிம்சை} அறநெறியுடன் தொடர்புடையது என்பது உறுதியானதே. அறநெறி குறித்த கட்டளைகள் {சாத்திரங்கள்} உயிரினங்களைத் தீங்கிழையாதனவாக மாற்றவே உண்டாக்கப்பட்டன.(58) அந்த அறநெறியானது அனைவராலும் தூக்கி நிறுத்தப்படுவதனாலேயே {உயர்த்தப்படுவதனாலேயே} அது தர்மம் {அறம்} என்று அழைக்கப்படுகிறது[7]. உண்மையில், அறநெறியே உயிரினங்களைத் தூக்கிநிறுத்துகிறது {உயர்த்துகிறது}. எனவே, (உயிரினங்களைத்) தூக்கி நிறுத்தவதற்காகக் கணிக்கப்படுவதே அறநெறி என்பதில் ஐயமில்லை.(59) சாத்திரங்கள் மௌனமாக {ஒன்றும் சொல்லாமல்} இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, அறிவின் துணையில்லாத கட்டளைகளின் படி செயல்பட்டு அறத்தை அடையவோ, முக்தியை அடையவோ நம்புவோருடன், எச்சந்தர்ப்பத்திலும் ஒருவன், எத்தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.(60) (சாத்திரங்களோ, ஞானமோ எந்த ஒளியையும் பாய்ச்சாத சூழ்நிலைகளில்), பேசும் தேவை ஏற்படும்போது, ஒருவன் அமைதியுடன் இருக்க வேண்டும், அல்லது, அந்த அமைதியானது (தனக்கோ, பிறருக்கோ) ஆபத்தை உண்டாக்குமானால், பொய்ம்மை பேசுவதே சிறப்பானதாகும். உண்மையில், அந்தப் பொய்ம்மையே உண்மையாகும் {சத்தியமாகும்}.(61) குறிப்பிட்ட காரியங்களை நோக்கமாகக் கொண்டு, ஒரு சபதத்தைச் செய்த ஒருவன், அவற்றை {அக்காரியங்களைத்} தன் செயல்களால் காக்கவில்லையென்றால், அந்தச் சபதத்தின் கனியை அவன் அடைவானில்லை[8].(62) உயிருக்கு ஆபத்து நேரும் சந்தர்ப்பங்களிலோ, திருமணத்தின்போதோ, ஒருவனுடைய உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோர் மொத்தமாக அழிவடைய நேரும் என்ற அபாயம் இருக்கும்போதோ, கேலிக்காகவோ சொல்லப்படுவது பொய்மையாகக் கருதப்படமாட்டாது.(63)

அறநெறியின் உண்மைகளை அறிந்தோர் இவற்றில் பாவத்தைக் காணமாட்டார்கள். {போலியான} ஓர் உறுதிமொழியால், திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் தோழமையில் இருந்து ஒருவன் தப்பிக்கூடும் என்றால், அந்தப் பொய்மையானது ஐயமில்லாத உண்மையே என்பதால், அங்கே போலியாக உறதியளிப்பதே சிறந்ததாகும். தன் செல்வங்கள் கள்வர்களிடம் பறிபோவதை ஒருவனால் எவ்வழியிலாவது தவிர்க்க முடியுமென்றால், அதை {அந்தச் செல்வங்களை} அவன் அவர்களுக்கு {கள்வர்களுக்கு} ஒருபோதும் கொடுக்கக்கூடாது.(64,65) ஒருவனுடைய செல்வத்தைப் பாவிகளுக்குத் தானமளிப்பது, அந்தக் கொடையாளியையே பீடிக்கும் {துன்புறுத்தும்}. எனவே, நீதிக்காகப் பொய்மை பேசுவது பொய்மையாகாது.(66) அறநெறியையோ, அல்லதையோ உறுதி செய்து கொள்ளக்கூடிய குறிப்புகளை நான் உனக்கு முறையாக இப்போது அறிவித்துவிட்டேன். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இவை யாவற்றையும் கேட்ட பிறகு, யுதிஷ்டிரர் உன்னால் கொல்லத்தக்கவரா என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(67)

அர்ஜுனன், “ஓ! கிருஷ்ணா, பெரும் ஞானத்தையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனாக நீ இருக்கிறாய். எங்கள் நன்மைக்காக நீ சொன்னது ஐயமற உண்மையே.(68) நீ எங்களுக்குத் தாயும், தந்தையும் போன்றவனாவாய். ஓ! கிருஷ்ணா, நீயே எங்களுக்குப் பெரும் புகலிடம். அதன் காரணமாகவே நீ எங்களுக்குச் சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறாய்.(69) ஓ! கிருஷ்ணா, மூவுலகிலும் நீ அறியாதன ஏதுமில்லை. எனவே, உயர்ந்த அறநெறியையும், அதன் விவரங்களையும் நீ அறிந்திருக்கிறாய்.(70) நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் என்னால் கொல்லப்படத்தக்கவர் இல்லை என்றே நான் உறுதியாகக் கருதுகிறேன். எனினும், இதில், தற்போதைய என்னுடைய காரியத்தில் நான் என்ன செய்யலாம் என்பதை அருள்கூர்ந்து எனக்குச் சொல்வாயாக. நான் இப்போது அறிவிக்கப் போவதும், என் இதயத்தில் இருப்பதுமான மற்றொன்றையும் இப்போது கேட்பாயாக.(71) ஓ! தாசார்ஹ குலத்தோனே, என் நோன்பு என்ன என்பதை நீ அறிவாய். “ஓ! பார்த்தா, ஆயுதங்களிலும், சக்தியிலும் உன்னிலும் மேம்பட்ட ஒருவனுக்கு உன் காண்டீவத்தைக் கொடுப்பாயாக” என்ற இவ்வார்த்தைகளை எவன் என்னிடம் சொல்வானோ, அவனை என் வலிமையை வெளிப்படுத்தி நான் கொல்வேன். பீமர், தன்னை “தாடியற்றவனே”[9] என்று அழைப்பவனைக் கொல்வதைப்போலவே நானும் கொல்வேன். ஓ! வீரா, மன்னர், “உன் வில்லைக் கொடுப்பாயாக” என்ற அந்தச் சொற்களை உன் முன்னிலையிலேயே என்னிடம் மீண்டும் மீண்டும் சொன்னார்.(72,73) ஓ! கேசவா, நான் அவரைக் கொன்றால், ஒரு கணமும் என்னால் இவ்வுலகில் வாழ முடியாது. மடமையினாலும், மனநிலையை இழந்ததாலும், மன்னரைக் கொல்ல எண்ணி நான் பாவமிழைத்துவிட்டேன்.(74) ஓ! நீதிமான்கள் அனைவரிலும் முதன்மையானவனே, உலகமனைத்திலும் அறியப்பட்ட என் நோன்பு மெய்ப்பிக்கப்படும் அதேவேளையில் நானும், பாண்டுவின் மூத்த மகனும் {யுதிஷ்டிரரும்} உயிரோடு இருக்கத்தக்க ஆலோசனையை நீ எனக்கு வழங்குவாயாக” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(75)

வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, “மன்னர் {யுதிஷ்டிரர்} களைப்படைந்து, துயரத்தின் ஆளுகைக்குள் இருக்கிறார். அவர் போரில் கர்ணனின் எண்ணற்ற கணைகளால் சிதைக்கப்பட்டிருக்கிறார். ஓ! வீரா {அர்ஜுனா}, போரில் பின்வாங்கி வரும்போது, சூதன் மகனால் (அவனது {கர்ணனின்} கணைகளால்) அவர் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டார்.(76) இதன் காரணமாகத் துயரத்தில் இருந்த அவர் {யுதிஷ்டிரர்}, கோபத்தால் முறையற்ற அந்த வார்த்தைகளை உன்னிடம் பேசிவிட்டார். போரில் கர்ணனை நீ கொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வார்த்தைகளால் உன்னைத் தூண்டிவிட்டார்.(77) அந்தப் பொல்லாத கர்ணன், (உன்னைத் தவிர) இவ்வுலகில் உள்ள வேறு எவராலும் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் என்பதைப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அறிவார். இதன் காரணமாகவே, ஓ! பார்த்தா, பெருங்கோபத்தில் இருந்த மன்னர் உன் முகத்துக்கு நேராகக் கடும் வார்த்தைகளைப் பேசினார்.(78) இன்றைய போர் விளையாட்டில், எப்போதும் விழிப்புடன் இருப்பவனும், எப்போதும் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவனுமான கர்ணனே பந்தயப் பொருளாவான். அந்தக் கர்ணன் கொல்லப்பட்டால், கௌரவர்கள் நிச்சயம் வீழ்ச்சியடைவார்கள். இதையே தர்மனின் அரச மகனும் {யுதிஷ்டிரரும்} நினைத்தார்.(79) இதற்காகவே தர்மனின் மகன் மரணத்திற்குத் தகுந்தவராகிவிட மாட்டார். ஓ! அர்ஜுனா, உன் நோன்பும் காக்கப்பட வேண்டும். யுதிஷ்டிரர் உயிரை இழக்காமலும், இருப்பினும் மரணத்தையே அடைந்தவராகவும் ஆக உனக்கு ஏற்புடைய வகையில் நான் சொல்லும் ஆலோசனைகளை இப்போது கேட்பாயாக.(80)

மரியாதைக்குத் தகுந்த ஒருவர், அந்த மரியாதையைத் தொடர்ந்து அடையும் வரை மனிதர்களின் உலகில் அவர் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. எனினும், அத்தகு மனிதர் ஒருவர் அவமதிப்பை அடையும்போது, அவர் உயிரோடு இருந்தாலும் இறந்தவராகவே சொல்லப்படுகிறார்.(81) இந்த மன்னர் {யுதிஷ்டிரர்}, உன்னாலும், பீமராலும், இரட்டையர்களாலும் {நகுலன் மற்றும் சகாதேவனாலும்}, வீரர்கள் அனைவராலும், இவ்வுலகில் பலகாலமாக மதிக்கப்படுவோர் அனைவராலும் எப்போதும் மதிக்கப்பட்டே வருகிறார்.(82) எனவே, ஓ! பார்த்தா, “மதிப்புக்குரியவரே” என்று வழக்கமாக உன்னால் அழைக்கப்படும் இந்த யுதிஷ்டிரரை இப்போது “நீ” என்று அழைப்பாயாக. ஓ! பாரதா, “நீ” என்று அழைக்கப்படும் மேன்மையான ஒருவர், உயிரை இழக்கவில்லையென்றாலும் கொல்லப்பட்டவரே ஆவார்.(83) ஓ! குந்தியின் மகனே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் நீ இவ்வாறு நடந்து கொள்வாயாக. ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, கண்டிக்கத்தக்க இந்நடத்தையைப் பின்பற்றுவாயாக.(84) திறன்தேர்வுகள்[10] அனைத்திலும் சிறந்த இந்தத் திறன்தேர்வை {சுருதியை} அதர்வன் மற்றும் அங்கிரஸ் ஆகியோர் அறிவித்திருக்கின்றனர். நன்மையை விரும்பும் மனிதர்கள், எந்தவகையான ஐயுணர்வுமின்றி இவ்வழியில் நடக்க வேண்டும்.(85)

மேன்மையான ஒருவர், உயிரையிழக்காமல் இருந்தாலும், “நீ” என்று அழைக்கப்பட்ட அந்த மதிப்புக்குரியவன் கொல்லப்பட்டவனே ஆவான் என்று சொல்லப்படுகிறது. கடமையை அறிந்தவனான நீ, நான் குறிப்பிட்ட முறையில் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் பேசுவாயாக.(86) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன் கையால் நேரும் இந்த மரணத்தை, உன்னால் இழைக்கப்பட்ட குற்றமாக ஒருபோதும் மன்னர் யுதிஷ்டிரர் நினைக்கமாட்டார். இவ்வழியில் அவரிடம் பேசும் நீ, பிறகு அவரது பாதங்களை வழிபட்டு, இந்தப் பிருதையின் மகனிடம் {யுதிஷ்டிரரிடம்} மதிப்புமிக்க வார்த்தைகளைப் பேசி காயமடைந்த அவரது மரியாதைக்கு ஆறுதலளிப்பாயாக.(87) உன் அண்ணன் விவேகியாவார். எனவே, பாண்டுவின் அந்த அரசமகன் {யுதிஷ்டிரர்} உன்னிடம் ஒருபோதும் கோபப்படமாட்டார். பொய்ம்மையிலிருந்தும், உடன்பிறந்தவரைக் கொல்வதிலிருந்தும் விடுபடும் நீ, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பிறகு உற்சாகமாகச் சூதன் மகனான கர்ணனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(88)

கிருஷ்ணா, துன்பக்கடலில் நீயே படகாவாய்! – கர்ண பர்வம் பகுதி – 70-கிருஷ்ணனுடைய ஆலோசனையின் பேரில் யுதிஷ்டிரனை ஒருமையில் பேசி அவமதித்த அர்ஜுனன்; பீமனைப் புகழ்ந்து, யுதிஷ்டிரனைச் சூதுக்கு அடிமை என நிந்தித்த அர்ஜுனன்; அண்ணனை அவமதித்த குற்ற உணர்வால் தற்கொலை செய்து கொள்ள வாளை உருவிய அர்ஜுனன்; அர்ஜுனனைத் தடுத்த கிருஷ்ணன், தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமமானது என்று சொன்னது; தற்புகழ்ச்சி செய்த அர்ஜுனன்; யுதிஷ்டிரனிடம் மன்னிப்பு கோரிய அர்ஜுனன்; மனம் நொந்து தன்னையே நிந்தித்துக் கொண்ட யுதிஷ்டிரன், காட்டுக்குச் செல்லப்போவதாகச் சொன்னது; யுதிஷ்டிரனுக்கு உண்மையைச் சொன்ன கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு ஜனார்த்தனனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட பிருதையின் மகனான அர்ஜுனன், தன் நண்பனின் அவ்வாலோசனைகளைப் பாராட்டி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், முன்னெப்போதும் பயன்படுத்தாத கடும் மொழியில் பேசினான்.(1)

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போர்க்களத்தில் இருந்து முழுமையாக இரண்டு மைல் தொலைவில்[1] நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் நீ என்னை இவ்வாறு நிந்தியாதே. எனினும், உலகின் முதன்மையான வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் பீமன் என்னை நிந்திக்கலாம்.(2) போரில் சரியான நேரத்தில் தன் எதிரிகளைப் பீடித்து, பூமியின் துணிச்சல்மிக்கத் தலைவர்கள் பலரையும், முதன்மையான தேர்வீரர்களையும், பெரும் யானைகளையும், குதிரைவீரர்கள் பலரையும், எண்ணற்ற துணிச்சல்மிக்கப் போராளிகளையும் கொன்ற அவர் {பீமர்},(3) அதற்கும் மேலாக ஆயிரம் யானைகளையும், பத்தாயிரம் காம்போஜ மலைவாசிகளையும் கொன்று, எண்ணற்ற சிறு விலங்குகளைக் கொன்ற சிங்கத்தைப் போலப் போரில் சிங்க முழக்கம் செய்து கொண்டிருக்கிறார்.(4) அந்த வீரர், உன்னால் அடையவே முடியாத அடைதற்கரிய கடும் அருஞ்செயல்களைச் செய்திருக்கிறார். கையில் கதாயுதத்துடன், தன் தேரிலிருந்து கீழே குதித்து, போரில் பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளை அவர் அழித்திருக்கிறார்.(5) தன் முதன்மையான வாளைக் கொண்டும் அவர், பல குதிரைவீரர்கள், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளை அழித்திருக்கிறார். தேர்களின் உடைந்த உறுப்புகளையும், தன் வில்லையும் கொண்டு அவர் எதிரிகளை எரித்து வருகிறார். இந்திரனின் ஆற்றலோடு கூடிய அவர், தன் காலாலும், வெறும் கரங்களாலும் எண்ணற்ற எதிரிகளைக் கொன்று வருகிறார்.(6)பெரும் வலிமையைக் கொண்டவரும், குபேரன், அல்லது யமனுக்கு ஒப்பானவருமான அவர் {பீமர்}, தன் பலத்தை வெளிப்படுத்தி, பகைவரின் படையை அழித்து வருகிறார். அந்தப் பீமசேனருக்கு என்னை நிந்திக்க உரிமையுண்டு, ஆனால் எப்போதும் நண்பர்களால் பாதுகாக்கப்படும் உனக்குக் {உரிமை} கிடையாது.(7) முதன்மையான தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரைக் கலங்கடிக்கும் பீமர், இப்போதும் தார்தராஷ்டிரர்களுக்கு மத்தியில் தனியொருவராகவே இருக்கிறார். அந்த எதிரிகளைத் தண்டிப்பவருக்கு என்னை நிந்திக்கும் உரிமையுண்டு.(8) இப்போது கலிங்கர்கள், வங்கர்கள், அங்கர்கள், நிஷாதர்கள், மகதர்கள், எப்போதும் மதங்கொண்டவையாக, நீலமேகத் திரள்களைப் போன்றவையாக இருக்கும் பகைவரின் பெரும் எண்ணிக்கையிலான யானைகளையும் கொன்று வரும் அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {பீமர்} என்னை நிந்திக்கத் தகுந்தவர்.(9) தகுந்த தேரில் சென்று, சரியான நேரத்தில் தன் வில்லை அசைத்து, தன் (மற்றொரு) கரத்தில் கணைகளைக் கொண்டிருக்கும் அந்த வீரர், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலப் பெரும்போரில் கணைமாரியைப் பொழிந்து வருகிறார்.(10) இன்றைய போரில் மத்தகங்கள் பிளக்கப்பட்டு, தந்த முனைகள் வெட்டப்பட்ட எண்ணூறு யானைகள், பீமரின் கணைகளால் கொல்லப்படுவதை நான் கண்டேன். அந்த எதிரிகளைக் கொல்பவர் என்னிடம் கடுஞ்சொற்களைப் பேசத் தகுந்தவரே[2].(11)

முதன்மையான பிராமணரின் பலம் பேச்சில் இருக்கிறது, க்ஷத்திரியனின் பலம் அவனது கரங்களில் இருக்கிறது. ஓ! பாரதா, நீ சொற்களில் பலமானவனாகவும், வன்னெஞ்சம் கொண்டவனாகவும் இருக்கிறாய். நீ உன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறாய்.(12) நான் என் ஆன்மாவாலும், வாழ்வாலும், மகன்களாலும், மனைவியராலும் உனக்கு எப்போதும் நன்மையையே செய்கிறேன். இவையாவும் இருந்தபோதிலும், நீ இத்தகு வார்த்தை ஈட்டிகளால் இன்னும் என்னைத் துளைப்பதால், நாங்கள் உன்னிடம் இருந்து எந்த இன்பத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.(13) திரௌபதியின் படுக்கையில் கிடக்கும் நீ, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உன் நிமித்தம் நான் கொன்று கொண்டிருந்தாலும் என்னை அவமதிக்கவே செய்கிறாய். ஓ! பாரதா, எந்தக் கவலையற்றவனாகவும், கொடூரனாகவும் நீ இருக்கிறாய். நான் உன்னிடம் இருந்து எந்த மகிழ்ச்சியையும் எப்போதும் அடைந்ததில்லை.(14) ஓ! மனிதர்களின் தலைவா, உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்போடு இருந்த அந்தப் பீஷ்மர், உனக்கு நன்மை செய்வதற்காகவே போரில் தன் மரணத்திற்கான வழிகளை உன்னிடம் சொல்லி, வீரனும், உயர்ஆன்மா கொண்டவனும், துருபதன் மகனும், என்னால் பாதுகாகப்பட்டவனுமான சிகண்டியால் கொல்லப்பட்டார்.(15)

சூதாடும் தீய பழக்கத்திற்கு நீ அடிமையாக இருப்பதால், அரசுரிமையை மீட்கும் உமது நினைப்பு எனக்கு எந்த இன்பத்தையும் அளிக்கவில்லை. இழிந்தோர் மட்டுமே அடிமையாகும் தீய செயலைச் செய்த நீ, இப்போது எங்கள் உதவியால் உன் எதிரிகளை வெல்ல விரும்புகிறாய்.(16) பகடையின் எண்ணற்ற களங்கங்களையும், பெரும் பாவம் நிறைந்த தன்மையையும் நீ சகாதேவன் சொல்லக் கேட்டாய். எனினும், தீயோரால் வழிபடப்படும் பகடையை உன்னால் கைவிட முடியவில்லை. இதன் காரணமாகவே நாங்கள் அனைவரும் நரகத்திற்குள் வீழ்ந்தோம்.(17) நீ பகடையில் சூதாடிக் கொண்டிருந்ததால் நாங்கள் எந்த மகிழ்ச்சியையும் எப்போதும் அடைந்ததில்லை. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, நீயே இந்தப் பேரிடர் அனைத்தையும் உண்டாக்கிவிட்டு, என்னிடம் சுடுஞ்சொற்களால் பேசுகிறாய்.(18) எங்களால் கொல்லப்பட்ட பகைவரின் துருப்பினர், உடல்கள் சிதைக்கப்பட்டு, உரத்த ஓலங்களையிட்டபடியே களத்தில் கிடக்கின்றனர். நீ செய்த அந்தக் கொடுஞ்செயலாலேயே கௌரவர்கள் குற்றவாளிகளாகி அழிக்கப்பட்டு வருகின்றனர்.(19) இருதரப்பைச் சேர்ந்த பெரும் போர்வீரர்களாலும் போரில் ஒப்பற்ற அருஞ்செயல்கள் செய்யப்பட்ட பிறகு, வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு நாட்டினர், தாக்கப்பட்டு, காயடையச் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு வருகின்றனர்.(20) நீயே சூதாடினாய். உன்னாலேயே நாங்கள் எங்கள் அரசை இழந்தோம். ஓ! மன்னா, எங்களது பேரில் உன்னிடமிருந்தே எழுந்தது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது பேச்செனும் கொடூர அங்குசத்தால் மீண்டும் தாக்கி எங்கள் கோபத்தைத் தூண்டாதே” என்றான் {அர்ஜுனன்}”.(21)

சஞ்சயன் சொன்னான், “தன் அண்ணனிடம் இந்தக் கடுமையான, மிகக் கசப்பான வார்த்தைகளைப் பேசி, அதனால் ஒரு சிறு பாவத்தை இழைத்த பிறகு, நுண்ணறிவு, விவேகம் மற்றும் அமைதியைக் கொண்டவனும், அறத்திலிருந்து வீழ்வது குறித்த அச்சத்தோடு எப்போதும் செயல்படுபவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, மிகவும் உற்சாகத்தை இழந்து போனான்.(22) தேவர்கள் தலைவனின் மகன் {அர்ஜுனன்}, பின்னிரக்கத்தால் நிறைந்து, கடுமூச்சு விட்டுக் கொண்டே தன் வாளை உருவினான். இதைக் கண்ட கிருஷ்ணன், “இஃது என்ன? வானத்தைப் போல நீலமாக இருக்கும் உன் வாளையே ஏன் மீண்டும் உறையில் இருந்து உருவுகிறாய்?(23) உன் நோக்கம் நிறைவேற ஆலோசனை வழங்குவதற்காக உன் பதில் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் கிருஷ்ணன்.

அந்த முதன்மையான மனிதனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன், கேசவனிடம் பெரும் சோகத்துடன்,(24) “இந்தத் தீய செயலைச் செய்த நான், என் பலத்தை வெளிப்படுத்தி என்னையே கொல்ல {தற்கொலை செய்து கொள்ளப்} போகிறேன்” என்றான்.

பார்த்தனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், நீதிமான்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான கேசவன், தனஞ்சயனிடம் இதைச் சொன்னான்,(25) “மன்னரிடம் {யுதிஷ்டிரரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு நீ ஏன் இவ்வளவு மகிழ்ச்சியற்றவனாக இருக்கிறாய்? ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நீ இப்போது உன்னையே அழித்துக் கொள்ள விரும்புகிறாய். எனினும், ஓ! கிரீடி {ஆர்ஜுனா}, நீதிமான்களால் இஃது அங்கீகரிக்கப்படவில்லை.(26) ஓ! மனிதர்களில் வீரா, பாவத்தின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நீ இன்று அற ஆன்மா கொண்ட இந்த உன் அண்ணனைக் கொன்றிருந்தால், அப்போது உன் நிலை எவ்வாறு இருந்திருக்கும், அப்போது நீ என்ன செய்திருப்பாய்?(27) ஓ! பாரதா, அறநெறியானது நுட்பமானதும், அறிந்து கொள்ள முடியாததுமாகும், குறிப்பாக அறியாமை கொண்டோரால் அறிந்து கொள்ள முடியாது. நான் உனக்குப் போதிப்பதைக் கேட்பாயாக. உன்னையே நீ அழித்துக் கொள்வதால், நீ உன் அண்ணனைக் கொன்றிருந்தால் அடையும் நரகத்தைவிட படுபயங்கரமான நரகத்தில் மூழ்கிப் போவாய்.(28) உன் சொந்த தகுதிகளை உன் சொற்களாலேயே இப்போது அறிவிப்பாயாக. ஓ! பார்த்தா, அப்போது நீ உன்னையே கொன்றிருப்பாய்” என்றான் {கிருஷ்ணன்}.(29)

இவ்வார்த்தைகளைப் பாராட்டி, “ஓ! கிருஷ்ணா, அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன சக்ரனின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் வில்லைத் தாழ்த்தி, அறவோரில் முதன்மையான யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னா, கேட்பீராக.(30) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, பினாகையைத் தாங்கும் தெய்வத்தைத் தவிர, என்னைப் போன்ற வேறொரு வில்லாளி எவனும் கிடையாது. அந்தச் சிறப்புமிக்க தெய்வத்தாலேயே கூட நான் மதிக்கப்படுகிறேன். அசையும் மற்றும் அசையா உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டத்தையே என்னால் ஒரு கணத்தில் அழித்துவிட முடியும்.(31) ஓ! மன்னா, திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும், அவற்றில் ஆண்டுகொண்டிருந்த மன்னர்கள் அனைவரையும் வெற்றிக் கொண்டு, அவர்கள் அனைவரையும் உமது கட்டுக்குள் கொண்டுவந்தவன் நானே. (உம்மால் செய்யப்பட்ட) ராஜசூயம், தக்ஷிணையால் நிறைவடைந்ததும், உமக்குச் சொந்தமான தெய்வீகமான அரண்மனையும் என் ஆற்றலால் கொண்டு வரப்பட்டன.(32) என் கரங்களில் கூரிய கணைகளும், நாணேற்றப்பட்டுக் கணைபொருத்தப்பட்ட வில்லும் (அவற்றினால் உண்டான தழும்புகளும்) இருக்கின்றன. என் உள்ளங்கால் இரண்டிலும் கொடிகளுடன் கூடிய தேர்களின் குறிகள் இருக்கின்றன. என்னப்போன்ற ஒரு மனிதனைப் போரில் எவனாலும் வெல்ல முடியாது.(33)

வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள நாடுகள் என்னால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, முறியடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன. சம்சப்தகர்களில் சிறு பகுதி மட்டுமே உயிருடன் எஞ்சியிருக்கிறது. நான் மட்டுமே (பகைவரின்) மொத்த படையில் பாதியைக் கொன்றிருக்கிறேன்.(34) ஓ! மன்னா, தேவர்களின் படைக்கு ஒப்பான பாரதப் படையினர் என்னால் கொல்லப்பட்டு, களத்தில் கிடக்கின்றனர். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தோரை மட்டுமே நான் (உயர்ந்த) ஆயுதங்களைக் கொண்டு கொல்கிறேன். இதன் காரணமாகவே மூவுலகங்களும் சாம்பலாகாமல் இருக்கின்றன[3].(35) பயங்கரமானதும், வெற்றிகரமானதுமான என் தேரைச் செலுத்திக் கொண்டு, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்வதற்காகக் கிருஷ்ணனும் நானும் விரைவில் செல்லப் போகிறோம்.(36) இன்று அந்தச் சூதப் பெண்மணி {ராதை} மகனற்றவளாவாள், அல்லது கர்ணனால் குந்தி மகனற்றவளாவாள். போரில் என் கணைகளால் கர்ணனைக் கொல்லாமல் நான் என் கவசத்தைக் கழற்ற மாட்டேன் என்று உண்மையாகவே சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(37)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வெற்றியாளர்களில் முதன்மையான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன பார்த்தன், “தன் ஆயுதங்களை வீசி எறிந்துவிட்டு, தன் வில்லையும் கீழேவைத்து, வேகமாகத் தன் வாளை உறைக்குள் செலுத்தினான்.(38) வெட்கத்தால் தலைகுனிந்து நின்றவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், கூப்பிய கரங்களுடன் யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னா, என்னை மன்னித்து மகிழ்ச்சியடைவீராக. நான் என்ன சொன்னேன் என்பதைச் சற்று நேரம் கழித்து நீர் புரிந்து கொள்வீர். நான் உம்மை வணங்குகிறேன்” என்றான்.(39) எதிரிகள் அனைவரையும் தாங்கிக் கொள்ள இயன்ற அந்த அரசவீரனை {யுதிஷ்டிரனை} இவ்வாறு உற்சாகப்படுத்த முயன்றவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன், அங்கேயே நின்று கொண்டு மீண்டும், “இந்தப் பணி தாமதமாகாது. அது விரைவில் நிறைவேற்றப்படும். கர்ணன் என்னை நோக்கி வருகிறான். நானும் அவனை எதிர்த்துச் செல்வேன்.(40) போரில் இருந்து பீமரைக் காக்கவும், சூதன் மகனைக் கொல்லவும் நான் என் முழு ஆன்மாவோடு செல்வேன். உமது நன்மைக்காகவே நான் என் உயிரைத் தாங்கியிருக்கிறேன் என்று நான் உமக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, இதை உண்மையாக அறிவீராக” என்றான்.(41)

இவ்வாறு சொன்னவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டவனுமான அர்ஜுனன், மன்னனின் {யுதிஷ்டிரனின்} பாதங்களைத் தொட்டு, களத்திற்குச் செல்ல எழுந்தான்.(42) எனினும், தன் தம்பியான பல்குனனின் {அர்ஜுனனின்} அந்தக் கடும் வார்த்தைகளைக் கேட்டவனும், பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், (தான் அமர்ந்திருந்த) அந்தப் படுக்கையில் இருந்து எழுந்து, இதயம் நிறைந்த சோகத்துடன் பார்த்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(43) “ஓ! பார்த்தா, நான் தீயவனாகவே செயல்பட்டிருக்கிறேன். அதனாலேயே நீங்கள் பயங்கரப் பேரிடரில் அகப்பட்டீர்கள். எனவே, இன்று இந்த என் தலையைத் தாக்கி வீழ்த்துவாயாக. நான் மனிதர்களில் இழிந்தவனும், என் குலத்தை அழித்தவனுமாவேன்.(44) நான் இழிந்தவன். நான் தீய வழிகளுக்கு அடிமையாக இருக்கிறேன். மூட புத்தி கொண்டவனாக நான் இருக்கிறேன். நான் சோம்பேறியாகவும், கோழையாகவும் இருக்கிறேன். முதியோரை அவமதிப்பவனாக நான் இருக்கிறேன். நான் கொடூரன். என்னைப் போன்ற ஒரு கொடூரனுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனாக இருப்பதால் உன்னால் என்ன {நன்மையை} ஈட்ட முடியும்?(45) இழிந்தவனான நான், இன்றே காடுகளுக்குள் ஓயச் செல்கிறேன். நானில்லாமல் நீ மகிழ்ச்சியாக வாழ்வாயாக. உயர் ஆன்ம பீமசேனனே மன்னனாக இருப்பதற்குத் தகுந்தவன். பேடியான நான், அரசுரிமையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்?(46) கோபத்தால் தூண்டப்பட்ட உனது கடும்பேச்சைத் தாங்கிக் கொள்ள இயலாதவனாக நான் இருக்கிறேன். பீமனே மன்னனாகட்டும். ஓ! வீரா, இவ்வாறு அவமதிக்கப்பட்ட நான் உயிரோடு இருப்பதால் என்ன பயன்?” என்றான் {யுதிஷ்டிரன்}.(47)

இவ்வார்த்தைகளைச் சொன்ன மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தப் படுக்கையை விட்டு அகன்று, திடீரென எழுந்து, காட்டுக்குச் செல்ல விரும்பினான். அப்போது அவனை வணங்கிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, அவனிடம்,(48) “ஓ! மன்னா, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனான காண்டீவதாரி {அர்ஜுனன்}, காண்டீவத்தைக் குறித்துச் செய்திருந்த கொண்டாடப்படும் நோன்பானது நீர் அறிந்ததே.(49) எந்த மனிதன் அவனிடம், “உன் காண்டீவத்தை வேறொருவனுக்குக் கொடுப்பாயாக” என்று சொல்வானோ, அவன் அவனால் கொல்லப்படுவான். அதே வார்த்தைகளைத் தான் நீர் அவனிடம் சொன்னீர்.(50) எனவே, மெய்யுறுதி கொண்ட அந்த நோன்பைக் காப்பதற்காகவே, ஓ! பூமியின் தலைவரே, என்னுடைய ஆலோசனையின் பேரிலேயே பார்த்தன் இந்த அவமதிப்பை உமக்கு அளித்தான். மேன்மையானவர்களை அவமதிப்பது அவர்களின் மரணமே என்று சொல்லப்படுகிறது.(51) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இதன் காரணமாக, ஓ! மன்னா, உண்மையைக் காக்க என்னாலும், அர்ஜுனனாலும் இழைக்கப்பட்ட இந்த மீறலுக்காக உம்மைப் பணிபவனும், வேண்டிக் கொள்பவனுமான என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். ஓ! பெரும் மன்னா, நாங்கள் இருவரும் உமது கருணைக்காகப் பணிகிறோம்.(52,53) ராதையின் பொல்லாத மகனுடைய {கர்ணனுடைய} குருதியை இன்று பூமாதேவி குடிக்கப் போகிறாள். நான் உம்மிடம் உண்மையாக உறுதிகூறுகிறேன். சூதன் மகன் {கர்ணன்} இன்று கொல்லப்படுவான் என்பதை அறிவீராக. எவனுடைய கொலையை நீர் விரும்புகிறீரோ அவன் இன்று தன் உயிரை இழப்பான்” என்றான் {கிருஷ்ணன்}.(54)

கிருஷ்ணனின் இந்த வார்த்தகைகளைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைப்} பரபரப்புடன் எழுப்பி,(55) தன் கரங்களைக் கூப்பியபடியே அவசரமாக, “நீ சொன்னது போலத்தான் இருக்கிறது. மீறலுக்கான குற்றவுணர்வு என்னிடம் இருக்கிறது.(56) ஓ! கோவிந்தா, நான் இப்போது உன்னால் விழிப்படைந்தேன். ஓ! மாதவா, நான் உன்னால் காக்கப்பட்டேன். ஓ! அச்யுதா, பேரிடரில் இருந்து இன்று நாங்கள் உன்னால் காக்கப்பட்டோம்.(57) உன்னைத் தலைவனாக அடைந்த நானும், அர்ஜுனனும் மடமையால் மலைப்படைந்து {மயங்கி}, துன்பமெனும் பெருங்கடலில் இருந்து மீடக்கப்பட்டோம்.(58) உண்மையில், இன்று உன் நுண்ணறிவு என்ற படகை அடைந்த நாங்கள், எங்கள் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் துன்பம் மற்றும் துயரமாகிய பெருங்கடலைக் கடந்துவிட்டோம். ஓ! அச்யுதா, உன்னை அடைந்த நாங்கள் தலைவனற்றவர்களாக ஆக மாட்டோம்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(59)

அர்ஜுனனை வாழ்த்திய யுதிஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 71-அர்ஜுனன் உற்சாகமற்றிருப்பதைக் கண்டு அவனைத் தேற்றிய கிருஷ்ணன்; யுதிஷ்டிரனின் பாதம்பணிந்து, மன்னிப்பைக் கோரிய அர்ஜுனன்; நெடுநேரம் அழுத சகோதரர்கள்; கர்ணனைக் கொல்ல அர்ஜுனனைத் தூண்டிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் பாதங்களில் வீழ்ந்து உறுதியேற்ற அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு ஆசி வழங்குமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனை வாழ்த்தி ஆசி வழங்கிய யுதிஷ்டிரன்; கர்ணனை அன்றே கொல்வதாக மீண்டும் உறுதியளித்த அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மன்னன் யுதிஷ்டிரனின் மகிழ்ச்சிகரமான இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், யதுக்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்பவனும், அற ஆன்மா கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, அப்போது பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசினான்.(1) எனினும், கிருஷ்ணனின் {கிருஷ்ணன் பேசும்} அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனிடம் அவ்வார்த்தைகளைச் சொன்னதால், இழைத்துவிட்ட சிறு பாவத்தைக் கருதி மிகவும் உற்சாகமற்றவனாக இருந்தான்.(2) அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே, அந்தப் பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அறத்தை நோற்று, உன் கூரிய வாளால் தர்மன் மகனை {யுதிஷ்டிரரை} நீ கொன்றிருந்தால், உன் நிலைமை என்னவாக இருக்கும்? மன்னரை “நீ” என்ற மட்டுமே சொன்னதற்குக் கூட, உன் இதயம் உற்சாகத்தை இழந்துவிட்டது.(3,4) ஓ பார்த்தா, நீ மன்னரைக் கொன்றிருந்தால், அதன் பிறகு என்ன செய்திருப்பாய்? அறநெறியை அறிந்து கொள்ள முடியாது {அது கடினம்}, அதிலும் குறிப்பாக மூட அறிவால் அஃது அறியப்படமாட்டாது.(5) பாவம் குறித்த அச்சத்தின் விளைவால், ஐயமில்லாமல், பெரும் துயரத்தையே நீ அடைந்திருப்பாய். உன் அண்ணனைக் கொன்றதன் விளைவால் பயங்கர நரகத்திலும் நீ மூழ்கியிருப்பாய்.(6)

அறச் செயல்பாடு கொண்டவரும், அறம் பயில்வோர் அனைவரிலும் முதன்மையானவரும், குரு குலத்தின் தலைவருமான இந்த மன்னரை {யுதிஷ்டிரரை} இப்போது மனம் நிறையச் செய்வாயாக. என் விருப்பமும் இதுவே.(7) அர்ப்பணிப்பால் மன்னர் யுதிஷ்டிரரை மனம் நிறையச் செய்து, அவர் மகிழ்ச்சியை அடைந்ததும், சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடுவதற்காக அவனது தேரை எதிர்த்து நாம் இருவரும் செல்வோம்.(8) ஓ1 கௌரவங்களை அளிப்பவனே, இன்று உன் கூரிய கணைகளால் கர்ணனைப் போரில் கொன்று, தர்மன் மகனுக்கு {யுதிஷ்டிரருக்குப்} பெரும் மகிழ்ச்சியை நீ அளிப்பாயாக.(9) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, இந்த நேரத்திற்குத் தகுந்ததென இதையே நான் நினைக்கிறேன். இதைச் செய்த பிறகே உன் காரியம் நிறைவேறும்” என்றான் {கிருஷ்ணன்}.(10) அப்போது வெட்கத்தை அடைந்த அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் தலையால் மன்னர் யுதிஷ்டிரனின் பாதங்களைத் தொட்டான்.(11) மேலும் அவன் {அர்ஜுனன்} அந்தப் பாரதர்களின் தலைவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “என்னிடம் மனநிறைவு கொள்வீராக. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அறம் நோற்கும் விருப்பத்தாலும், பாவத்திற்கு அஞ்சியும் நான் சொன்ன அனைத்தையும் மன்னிப்பீராக {பொறுப்பீராக}” என்று மீண்டும் மீண்டும் சொன்னான்.(12)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, அழுதுகொண்டே தன் பாதத்தில் கிடப்பதைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பியை எழச் செய்தான்.(13) பூமியின் தலைவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பியைப் பாசத்துடன் தழுவிக் கொண்டு, உரக்க அழுதான்.(14) பெரும் காந்தியைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், நீண்ட நேரம் அழுத பிறகு, ஓ! ஏகாதிபதி, இறுதியாகத் தங்கள் துயரில் இருந்து விடுபட்டு, முன்பு போலவே உற்சாகத்தால் நிறைந்தனர்.(15) அப்போது மீண்டும் பாசத்துடன் தன் தம்பியைத் தழுவிக் கொண்டு, அவனது தலையை முகர்ந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மிகுந்த மன நிறைவை அடைந்து, தன் தம்பியான ஜயனை {அர்ஜுனனைப்} பாராட்டி, “ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, போரில் மிகுந்த கவனத்தோடு நான் முயன்றாலும் கூட, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கர்ணன் தன் கணைகளால் என் கவசம், கொடிமரம், வில், ஈட்டி, குதிரைகள் மற்றும் கணைகள் ஆகியவற்றை வெட்டினான்.(17) ஓ! பல்குனா {அர்ஜுனா}, போரில் அவனது {கர்ணனின்} அருஞ்செயல்களைக் கண்டும், அவற்றை நினைத்தும் துயரத்தால் நான் என் சக்திகளை இழந்தேன்.(18) இன்றைய போரில் நீ அவ்வீரனை {கர்ணனைக்} கொல்லவில்லையென்றால், நான் என் உயிர் மூச்சை விட்டுவிடுவேன். உயிரோடிருப்பதால் என்ன பயன் இருக்கிறது?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(19)

இவ்வாறு சொல்லப்பட்ட விஜயன் {அர்ஜுனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, “இன்றைய போரில் நான் கர்ணனைக் கொல்வேன், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! பூமியின் தலைவரே , அல்லது அவனால் {கர்ணனால்} கொல்லப்பட்டுப் பூமியில் வீழ்வேன் என்று உண்மை மற்றும் உமது அருளின் பெயராலும், பீமர் மற்றும் இரட்டையர்களின் {நகுலன் மற்றும் சகாதேவனின்} பெயராலும் நான் உறுதியேற்கிறேன்.(20,21) உண்மையாக உறுதியேற்றபடியே நான் என் ஆயுதங்களைத் தொடுவேன்” என்று மறுமொழி கூறினான். மன்னரிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {அர்ஜுனன்}, மாதவனிடம் {கிருஷ்ணனிடம்},(22) “ஓ! கிருஷ்ணா, இன்றைய போரில் நான் கர்ணனைக் கொல்வதில் ஐயமில்லை. நீ அருளப்பட்டிருப்பாயாக, உன் நுண்ணறிவின் துணையால் அந்தத் தீயவனின் படுகொலை நிச்சயம் நேரும்” என்றான் {அர்ஜுனன்}.(23)

இவ்வாறு சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதர்களில் சிறந்தவனே, வலிமைமிக்கக் கர்ணனைக் கொல்வதற்கு நீ தகுந்தவனே.(24) ஓ! வலிமைமிக்கத் தேர்வீரா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, போரில் கர்ணனை நீ கொல்வாய் என்பதே எப்போதும் என் எண்ணமாக இருக்கிறது” என்றான்.(25) பெரும் நுண்ணறிவைக் கொண்ட மாதவன், மீண்டும் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரரே, பீபத்சுவுக்கு {அர்ஜுனனுக்கு} ஆறுதலை அளித்து, தீய ஆன்மாவான கர்ணனைக் கொல்ல அவனுக்கு ஆணையிடுவதே உமக்குத் தகும்[1]. கர்ணனின் கணைகளால் நீர் பீடிக்கப்பட்டீர் என்பதைக் கேட்டே, ஓ! பாண்டுவின் மகனே, உமது நிலையை உறுதி செய்து கொள்வதற்காக நானும், இவனும் இங்கே வந்தோம்.(26, 27) ஓ! மன்னா, நீர் கொல்லப்படாதது நற்பேறாலேயே. நீர் பிடிபடாததும் நற்பேறாலேயே. ஓ! பாவமற்றவரே, உமது பீபத்சுவின் {அர்ஜுனனின்} வெற்றிக்கான வாழ்த்துகளைச் சொல்லி, அவனுக்கு ஆறுதலளித்து ஆசி கூறுவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(28)

யுதிஷ்டிரன், “ஓ! பார்த்தா, ஓ! பீபத்சு, வாருங்கள், ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா} வந்து என்னைத் தழுவிக் கொள்வாயாக. சொல்லத்தகுந்த நன்மையான வார்த்தைகளையே நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய், நான் உன்னை மன்னித்தேன்.(29) ஓ! தனஞ்சயா, செல்வாயாக, சென்று கர்ணனைக் கொல்வாயாக என்று நான் ஆணையிடுகிறேன். ஓ! பார்த்தா, நான் உன்னிடம் சொன்ன கடுஞ்சொற்களுக்காக என்னிடம் நீ கோபங்கொள்ளாதே” என்றான் {யுதிஷ்டிரன்}.”(30)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா யுதிஷ்டிரனுக்குத் தலைவணங்கி, தன் அண்ணனின் பாதங்களைத் தன்னிரு கரங்களாலும் பற்றிக் கொண்டான்.(31) அவனை எழச் செய்து, நெருக்கமாக அவனைத் தழுவிக் கொண்ட மன்னன், அவனது தலையை முகர்ந்து, மீண்டும் இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(32) “ஓ! தனஞ்சயா, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, நான் உன்னால் பெரிதும் கௌரவிக்கப்பட்டேன். நீ எப்போதும் வெற்றியையும், மேன்மையையும் வெல்வாயாக {அடைவாயாக}” என்றான்.(33)

அர்ஜுனன், “இன்று வலிமையில் செருக்குற்ற ராதையின் மகனை {கர்ணனை} போரில் அடைந்து, பாவம் நிறைந்த செயல்களைச் செய்த அம்மனிதனை, அவனது சொந்தங்கள் மற்றும் அவனைப் பின்தொடர்வோர் அனைவருடனும் சேர்த்து என் கணைகளால் கொல்வேன்.(34) தன் வில்லை வலுவாக வளைத்து, எவன் அவனது கணைகளால் உம்மைப் பீடித்தானோ, அந்தக் கர்ணன், தன் செயலுக்கான கசந்த கனியை இன்று அடைவான்.(35) ஓ! பூமியின் தலைவரே, கர்ணனைக் கொன்ற பிறகு, உமக்குப் பின்னால் நடந்து உம்மைக் கௌரவிக்க, அந்தப் பயங்கரப் போரில் இருந்து இன்று நான் திரும்பிவருவேன்.(36) கர்ணனைக் கொல்லாமல், இன்று அந்தப் பெரும்போரில் இருந்து நான் திரும்பேன். ஓ! அண்டத்தின் தலைவா, உமது பாதங்களைத் தொட்டு, நான் இந்த உறுதியை ஏற்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}”.(37)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வாறு பேசிக் கொண்டிருந்த அந்தக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனிடம் (அர்ஜுனனிடம்) யுதிஷ்டிரன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் மிக முக்கியமான இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(38) “அழியாப் புகழையும், உன் விருப்பத்திற்குத் தகுந்தபடியே வெற்றி, சக்தி மற்றும் உன் எதிரிகளின் அழிவு, வாழ்நாள் ஆகியவற்றை அடைவாயாக. தேவர்கள் உனக்குச் செழிப்பை அருளட்டும். என்னால் விரும்பப்பட்டும் அளவுக்கு நீ இவை அனைத்தையும் அடைவாயாக. தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளும்பொருட்டு விருத்திரனைக் கொன்ற புரந்தரனை {இந்திரனைப்} போலவே, {கர்ணனைக் கொல்வதற்காகப்} போரிட நீ விரைந்து செல்வாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}”.(39)

கிருஷ்ணன் செய்த கர்ணார்ஜுன ஒப்பீடு! – கர்ண பர்வம் பகுதி – 72-தன் தேரை ஆயத்தம் செய்யும்படி கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்; தேரை ஆயத்தம் செய்து தகவல் தெரிவித்த தாருகன்; கர்ணனுடன் போரிடப் புறப்பட்ட அர்ஜுனனுக்கு முன்பு தோன்றிய நற்சகுனங்கள்; கவலைநிறைந்திருந்த அர்ஜுனனிடம், அவனது திறன்களை வியந்து சொன்ன கிருஷ்ணன், கர்ணனின் திறன்களையும் சொல்லி, அவனைக் கொல்லுமாறு அர்ஜுனனைத் தூண்டியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உற்சாகம் நிறைந்த இதயத்தோடு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நிறைவு செய்து, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்லத் தயாரான பார்த்தன் {அர்ஜுனன்}, கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்},(1) “என் தேர் மீண்டும் ஆயத்தம் செய்யப்படட்டும், அதனோடு என் முதன்மையான குதிரைகள் பூட்டப்படட்டும். அந்தப் பெரும் வாகனத்தில் அனைத்து வகை ஆயுதங்களும் வைக்கப்படட்டும்.(2) குதிரைகள் தரையில் புரண்டிருக்கின்றன. குதிரைகளை நன்கறிந்தோரால் அவை பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. அந்தத் தேரின் பிற கருவிகளுடன் கூடிய அவை, தங்கள் சேணங்கள் பூட்டப்பட்டு வேகமாகக் கொண்டு வரப்படட்டும்.(3) ஓ! கோவிந்தா, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்ல விரைந்து புறப்படுவாயாக” என்று சொன்னான். ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம பல்குனனால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்ட கிருஷ்ணன், தாருகனை அழைத்து, “பாரதக் குலத்தின் தலைவனும், வில் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனன் சொன்னவை அனைத்தையும் செய்வாயாக” என்றான்.(4,5)

கிருஷ்ணனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட தாருகன், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, புலித் தோல்களால் மறைக்கப்பட்டதும், எதிரிகள் அனைவரையும் எப்போதும் எரிக்கவல்லதுமான அந்தத் தேரில் அக்குதிரைகளைப் பூட்டினான்.(6) பிறகு அவன் {தாருகன்}, அவ்வாகனம் ஆயத்தம் செய்யப்பட்ட செய்தியை உயர் ஆன்ம பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} சொன்னான். உயர் ஆன்ம தாருகனால் ஆயத்தம் செய்யப்பட்ட தேரைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்},(7) யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, பிராமணர்களைத் தன் நன்மைக்கான சடங்குகளைச் செய்யவும், தனக்கு ஆசி கூறவும் செய்து, அந்த அற்புத வாகனத்தில் ஏறினான்.(8) பெரும் விவேகியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனும் அவனுக்கு ஆசி கூறினான். இதன் பிறகு பல்குனன், கர்ணனின் தேரை நோக்கிச் சென்றான்.(9) அந்தப் பெரும் வில்லாளி இவ்வாறு செல்வதைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணன் ஏற்கனவே அந்த உயர் ஆன்ம பாண்டவனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டுவிட்டதாகவே கருதின.(10)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திசைப்புள்ளிகள் அனைத்தும் அமைதியடைந்தன. ஓ! மன்னா, மீன்கொத்திப் பறவைகள், கிளிகள் மற்றும் நாரைகளும் அந்தப் பாண்டுவின் மகனை வலம் வந்தன.(11) அழகியவையும், மங்கலகரமானவையும், “புங் {பும்}” என்றழைக்கப்பட்டவையுமான பெரும் எண்ணிக்கையிலான பறவைகள் (சரியான நேரத்தில் தோன்றி) அர்ஜுனனை அந்தப் போரில் பெரும் வேகத்தை வெளிப்படுத்த செய்யும் வகையில் அவனைச் சுற்றி உற்சாகமாக இரைந்தன. பயங்கரமான கங்கங்கள், கழுகுகள், நாரைகள், பருந்துகள், அண்டங்காக்கைகள் ஆகியன, உணவு இருப்பால் ஈர்க்கப்பட்டடு, அவனது தேருக்கு முன்பாகச் சென்று, மங்கலச் சகுனங்களை வெளிப்படுத்தும் வகையில், பகைவரின் படை அழியப்போவதையும், கர்ணனின் கொலையையும் முன்னறிவித்தன. பார்த்தன் சென்று கொண்டிருந்த அதே வேளையில், அவனது உடலானது வேர்வையால் மறைக்கப்பட்டது.(12-15) தன் சபதத்தைத் தான் நிறைவேற்றப் போவது எவ்வாறு என்ற கவலை அவனுக்கு {அர்ஜுனனுக்கு} அதிகமானது. செல்லும்போதே பார்த்தன் கவலையால் நிறைவதைக் கண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளின் பேசினான்”.(16)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! காண்டீவதாரியே, இந்த உன் வில்லால் நீ யாரையெல்லாம் வென்றாயோ, அவர்களை வெல்ல இங்கே வேறொருவனும் இல்லை.(17) சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக்கொண்ட பல வீரர்கள், வீரனான உன்னோடு போரில் மோதி உயர்ந்த உலகங்களை அடைந்ததை நாங்கள் கண்டோம்.(18) ஓ! பலமிக்கவனே, துரோணர், பீஷ்மர், பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் தலைவர் சுதக்ஷிணன், வலிமையும் சக்தியும் கொண்ட சுருதாயுதன் மற்றும் அச்யுதாயுதன் ஆகியோருடன் மோதிய பிறகு உனக்கு இணையில்லாத எவனால் {உன்னைத் தவிர வேறு எவனால்} நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும்?(19,20) தெய்வீக ஆயுதங்கள், கரநளினம், வலிமை ஆகியவற்றைக் கொண்டவனான நீ போரில் மலைப்படையாதவனாக {மயங்கி வீழாதவனாக} இருக்கிறாய். அறிவால் உண்டான பணிவைக் கொண்டவனாகவும் நீ இருக்கிறாய்.(21)

விளைவை ஏற்படுத்தும் வகையில் உன்னால் தாக்க முடிகிறது. ஓ! அர்ஜுனா, இலக்கில் துல்லியமும், சமயத்திற்கு ஏற்ற தேர்வு செய்யும் ஆற்றலையும் நீ கொண்டிருக்கிறாய். தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரோடு சேர்த்து அசையும் மற்றும் அசையா உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத்தகுந்தவனாகவும் நீ இருக்கிறாய்.(22) ஓ! பார்த்தா, போரில் உனக்கு இணையான வேறு மனிதப் போர் வீரன் எவனும் இவ்வுலகில் கிடையாது. வில் தரித்துப் போரில் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரிலும், ஏன் தேவர்களுக்கு மத்தியிலும் கூட, உனக்கு இணையான ஒருவனை நான் கண்டதோ, கேட்டதோ கிடையாது. ஓ பார்த்தா, அனைத்து உயிரினங்களையும் படைத்த பிரம்மனே நீ எதைக் கொண்டு போரிடுகிறாயோ, அந்தப் பெரும் வில்லான கண்டீவத்தையும் படைத்தான். இந்தக் காரணத்தாலும், உனக்கு இணையாக வேறு எவனும் இல்லை. எனினும், ஓ! பார்த்தா, உனக்கு நன்மையானதையும் நான் சொல்ல வேண்டும்.(23-25)

ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, போர்க்கள ரத்தினமான கர்ணனை நீ அலட்சியம் செய்யாதே. கர்ணன் வலிமைமிக்கவனாவான். அவன் செருக்குமிக்கவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமாவான். அவன் ஒரு மஹாரதன்.(26) அவன் (போர் முறைகளில்) சாதித்தவனும், போர் முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமாவான். இடத்திற்கும், காலத்திற்கும் பொருத்தமான அனைத்தையும் அவன் நன்கறிவான். இன்னும் அதிகம் சொல்ல என்ன இருக்கிறது? ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, சுருக்கமாகக் கேட்பாயாக.(27) வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனை உனக்கு இணையானவனாக, அல்லது ஒருவேளை உனக்கு மேம்பட்டவனாக நான் கருதுகிறேன். இந்தப் பெரும்போரில், பெரும் கவனத்தோடும், உறுதியோடும் நீ அவனைக் கொல்ல வேண்டும்.(28) சக்தியில் அவன் அக்னிக்கு இணையானவன். வேகத்தில் அவன் காற்றைப் போல மூர்க்கமானவன். கோபத்தில் அவன் அந்தகனுக்கே ஒப்பானவன். வலிமையுடன் கூடிய அவன், உடலமைப்பால் சிங்கத்திற்கு ஒப்பாக இருக்கிறான்.(29) அவன் எட்டு ரத்னிகள்[1] அளவுக்கு உடற்கட்டைக் கொண்டவனாக இருக்கிறான். அவனது கரங்கள் பருத்தவையாக இருக்கின்றன. அவனது மார்பு அகன்றதாக இருக்கிறது. அவன் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். அவன் உணர்ச்சிமிக்கவனாக இருக்கிறான். அவன் வீரனாக இருக்கிறான். மேலும் அவன் வீரர்களில் முதன்மையானவனாகவும் இருக்கிறான். அவன் மிகுந்த அழகனாக இருக்கிறான்.(30)

போர்வீரனுக்குரிய அனைத்தையும் கொண்ட அவன் நண்பர்களின் அச்சங்களைப் போக்குபவனாக இருக்கிறான். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} நன்மையில் ஈடுபடும் அவன் {கர்ணன்}, பாண்டுவின் மகன்களை வெறுக்கிறான்.(31) உன்னைத் தவிர, வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும் கூட ராதையின் மகனைக் கொல்ல முடியாது என்றே நான் நினைக்கிறேன். எனவே, அந்தச் சூதன் மகனை {கர்ணனை} இன்று கொல்வாயாக.(32) இரத்தமும், சதையும் கொண்ட எவனாலும் {எந்த மனிதனாலும்}, ஏன் பெருங்கவனத்துடன் போரிடும் தேவர்களாலும், ஒன்றாகத் திரண்டு போரிட வரும் (மூவுலகங்களின்) போர்வீரர்கள் அனைவராலும் கூட அந்தத் தேர்வீரனை வெல்ல முடியாது.(33) பாண்டவர்களிடம் அவன் {கர்ணன்}, தீய ஆன்மா கொண்டவனாகவும், பாவம்நிறைந்த நடத்தை கொண்டவனாகவும், கொடூரனாகவும், தீய புத்தி {எண்ணம்} கொண்டவனாகவுமே நடந்திருக்கிறான். பாண்டு மகன்களுடனான தன் சச்சரவில், தன் சொந்த நலன்கள் பாதிக்கப்படுவதையும் கருதிப்பாராமலேயே அவன் செயல்படுகிறான். எனவே, அந்தக் கர்ணனைக் கொன்று, உன் நோக்கத்தை இன்று நிறைவேற்றுவாயாக.(34) மரணத்தின் அருகாமையில் இருக்கும் முதன்மையான தேர்வீரனான அந்தச் சூதன் மகனை இன்று யமனின் முன்னிலைக்கு அனுப்புவாயாக. உண்மையில், தேர்வீரர்களில் முதல்வனான அந்தச் சூதன் மகனைக் கொன்று, நீதிமானான யுதிஷ்டிரரிடம் நீ கொண்டுள்ள அன்பைக் காட்டுவாயாக.(35)

ஓ! பார்த்தா, தேவர்களாலும், அசுரர்களாலும் தடுக்கப்பட முடியாத உன் ஆற்றலை நான் உண்மையாக அறிவேன். தீய ஆன்மா கொண்ட அந்தச் சூதன் மகன், செருக்கின் மிகுதியால் எப்போதும் பாண்டுவின் மகன்களை அவமதித்தே வருகிறான்.(36) ஓ! தனஞ்சயா, இழிந்தவனான துரியோதனன், எந்த மனிதனால் தன்னை வீரனாகக் கருதிக் கொள்கிறானோ, (அந்தப்) பாவம் நிறைந்த மனிதர்கள் அனைவருக்கும் எவன் வேராக இருக்கிறானோ, அந்தச் சூதன் மகனை {கர்ணனை} இன்று நீ கொல்வாயாக.(37) ஓ! தனஞ்சயா, மனிதர்களில் புலியும், சுறுசுறுப்பு மற்றும் செருக்கு மிக்கவனும், தன் நாவையே வாளாகவும், வாயையே வில்லாகவும், பற்களையே கணைகளாகவும் கொண்டவனுமான அந்தக் கர்ணனைக் கொல்வாயாக.(38) உன்னில் இருக்கும் சக்தி மற்றும் வலிமை ஆகியவற்றைப் பொறுத்தவரை உன்னை நான் நன்றாக அறிவேன். யானையொன்றைக் கொல்லும் ஒரு சிங்கத்தைப் போல, நீ துணிச்சல்மிக்கக் கர்ணனைப் போரில் கொல்வாயாக.(39) ஓ பார்த்தா, எவன் வைகர்த்தனன் என்று வேறு பெயரால் அழைக்கப்படுகிறானோ, எவனுடைய சக்தியால் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} உன் சக்தியை {உங்களை} அவமதிக்கிறானோ, அந்தக் கர்ணனை இன்று நீ கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}”.(40)

அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 73-பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணத்துக்கும், துரியோதனனுடைய அநீதிகளுக்கும் கர்ணனே காரணம் என்பதைக் கூறிய கிருஷ்ணன்; அர்ஜுனனின் சாதனைகளை விளக்கியது; கர்ணன் செய்த தீமைகளையும், அவனே துரியோதனனின் நம்பிக்கையாய் இருப்பதையும் அர்ஜுனனுக்கு எடுத்துரைத்த கிருஷ்ணன்; அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தைக் கூறி அர்ஜுனனின் கோபத்தைத் தூண்டியது; அபிமன்யுவின் மரணத்திற்குக் கர்ணனே காரணம் என்று சொன்னது; கௌரவச் சபையில் திரௌபதியைக் கர்ணன் அவமதித்த விதத்தைச் சொன்னது; கர்ணன் பாண்டவப் படையைக் கொன்று கொண்டிருப்பதை அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; கர்ணனைக் கொல்ல அர்ஜுனனை வற்புறுத்திய கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா ஆன்மா கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கொல்லும் உறுதியான நோக்கோடு (போரிடச்} சென்று கொண்டிருந்த அர்ஜுனனிடம் மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! பாரதா {அர்ஜுனா}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு நேரும் இந்தப் பயங்கரப் படுகொலையில் இன்று பதினேழாம் நாளாகும்.(2) தொடக்கத்தில் உனக்குச் சொந்தமான படை பரந்த அளவில் இருந்தது. போரில் எதிரியுடன் மோதிய அந்தப் படையானது, ஓ! மன்னா {அர்ஜுனா}, எண்ணிக்கையில் மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.(3) கௌரவர்களும், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தொடக்கத்தில் எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொண்டிருந்தனர். எனினும், உன்னை எதிரியாகக் கொண்டு மோதிய அவர்கள், போரின் முகப்பில் கிட்டத்தட்ட நிர்மூலமாக்கப்பட்டுவிட்டனர்.(4) இந்தப் பூமியின் தலைவர்களும், இந்தச் சிருஞ்சயர்களும், இந்தப் பாண்டவத் துருப்புகளுடன் ஒன்று சேர்ந்து, வெல்லப்படாத உன்னையே தங்கள் தலைவனாக அடைந்து, போர்க்களத்தில் நிலைபெற்றிருக்கின்றனர்.(5) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன்னால் பாதுகாக்கப்பட்ட பாஞ்சாலர்கள், மத்ஸ்யர்கள், காரூஷர்கள், சேதிகள் ஆகியோர் உன் எதிரிகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கின்றனர்.(6)

போரில் கூடியிருக்கும் கௌரவர்களை வெல்லக்கூடியவன் இங்கே வேறு எவன் இருக்கிறான்? மறுபுறம், உன்னால் பாதுகாக்கப்படும் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களை வெல்லவும் இங்கே வேறு எவன் இருக்கிறான்?(7) எனினும், ஒன்று சேர்ந்த தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களைக் கொண்ட மூவுலகங்களையும் போரில் நீ வெல்லத்தகுந்தவனாவாய். பிறகு கௌரவப் படையைக் குறித்து நான் என்ன சொல்ல வேண்டும்?(8) ஓ! மனிதர்களில் புலியே, ஆற்றலில் வாசவனுக்கே {இந்திரனுக்கே} ஒப்பானவனாக இருந்தாலும், உன்னைத் தவிர வேறு எவனால் மன்னன் பகதத்தனை வெற்றிக் கொள்ள முடியும்?(9) அதே போலவே, ஓ! பாவமற்றவனே, ஓ! பார்த்தா, பூமியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும், உன்னால் பாதுகாக்கப்படும் இந்தப் பரந்த படையை அவர்களால் பார்க்கக்கூட முடியாது.(10)

அதே போலவே, உன்னால் பாதுகாக்கப்பட்டதாலேயே திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டியால், துரோணர் மற்றும் பீஷ்மரைக் கொல்ல முடிந்தது.(11) உண்மையில், ஓ! பார்த்தா, சக்ரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவர்களும், பாரதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரையும் போரில் எவனால் வெல்ல முடியும்?(12) ஓ! மனிதர்களில் புலியே, அக்ஷௌஹிணிகளின் சீற்றமிகு தலைவர்களும், புறமுதுகிடாதவர்களும், வெல்லப்பட முடியாத வீரர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், ஒன்றாகச் சேர்ந்திருந்தவர்களுமான சந்தனுவின் மகன் பீஷ்மர், துரோணர், வைகர்த்தனன் {கர்ணன்}, கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மன்னன் துரியோதனன் ஆகியோரை இவ்வுலகில் உன்னைத் தவிர வேறு எந்த மனிதனால் வெல்ல முடியும்?(13-15)

படைவீரர்களின் எண்ணிலடங்கா படைப்பிரிவுகளும், (உன் கணைகளால்) சிதைக்கப்பட்ட அவர்களது குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகள் ஆகியவையும் (உன்னால்) அழிக்கப்பட்டிருக்கின்றன. கோபம் நிறைந்தவர்களும், கடுமையானவர்களும், பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்தவர்களுமான எண்ணற்ற க்ஷத்திரியர்களும் உன்னால் அழிக்கப்பட்டிருக்கின்றனர்.(16) குதிரைகள் மற்றும் யானைகளும், ஓ! பாரதா, பல்வேறு க்ஷத்திரிய இனங்களைச் சேர்ந்த கோவாசர்கள், தாசமீயர்கள், வசாதிகள், கிழக்கத்தியர்கள், வாடதானர்கள், தங்கள் கௌரவத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களான போஜர்கள் ஆகிய பெரும் எண்ணிக்கையிலான போராளிளும், ஓ! பாரதா, உன்னையும், பீமரையும் அணுகி அழிவையே அடைந்தனர்.(17,18) பயங்கரச் செயல்களைச் செய்பவர்களும், மிகக் கடுமையானவர்களும், பெரும் கோபமும், பெரும் வலிமையும் கொண்டவர்களும், போரில் திளைப்பவர்ளும், கதாயுதங்களைக் கொண்டவர்களுமான துஷாரர்கள், யவனர்கள், கசர்கள், தார்வபிசாரர்கள், தரதர்கள், சகர்கள், கமதர்கள், ரமதர்கள், தங்கணர்கள்,(19) அந்திரகர்கள், புளிந்தர்கள், கடும் ஆற்றலைக் கொண்ட கிராதர்கள், மிலேச்சர்கள், மலைவாசிகள், கடற்புறத்திலிருந்து வந்த இனங்கள்(20) ஆகிய அனைவரும் குருக்களுடன் ஒன்று சேர்ந்து, துரியோதனனுக்காகக் கோபத்துடன் போரிட்டு, உன்னைத் தவிர வேறு யாராலும் போரில் வெல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர்.(21)

வலிமைமிக்கவர்களும், எண்ணிக்கையில் பெருகி இருந்தவர்களும், போரில் முறையாக அணிவகுக்கப்பட்டவர்களுமான தார்தராஷ்டிரர்களைக் கண்டும், உன்னால் பாதுகாக்கப்படாமல் எந்த மனிதனால் முன்னேறிச் செல்ல இயலும்?(22) ஓ! பலமிக்கவனே, உன்னால் பாதுகாக்கப்பட்ட பாண்டவர்கள், கோபத்தால் நிறைந்து, அவர்களுக்கு மத்தியில் ஊடுருவி, பொங்கும் கடலுக்கு ஒப்பாகப் புழுதியால் மறைக்கப்பட்ட அந்தப் படையை அழித்தனர்.(23) மகதர்களின் ஆட்சியாளனான வலிமைமிக்க ஜயத்சேனனால், போரில் அபிமன்யு கொல்லப்பட்டு ஏழு நாட்கள் கடந்திருக்கின்றன.(24) அதன்பிறகு, கடுஞ்சாதனைகளைச் செய்பவையும், அந்த மன்னனை {ஜயத்சேனனைப்} பின்தொடர்பவையுமான பத்தாயிரம் யானைகளைப் பீமசேனர் தமது கதாயுதத்தால் கொன்றார்.(25) அதன்பிறகு பிற யானைகளும் நூற்றுக்கணக்கான தேர்வீரர்களும் பீமசேனரின் பல பயன்பாட்டில் அவரால் {பீமரால்} அழிக்கப்பட்டனர்.(26) இவ்வாறே, ஓ! பார்த்தா, இந்தப் பயங்கரப் போரில் தங்கள் குதிரைகள், தேர்வீரர்கள் யானைகள் ஆகியவற்றுடன் பீமசேனர் மற்றும் உன்னுடன் மோதிய கௌரவர்கள், ஓ! பாண்டுவின் மகன், இங்கிருந்து யமலோகத்திற்குச் சென்றனர்.(27)

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கௌரவப் படையின் முகப்பானது, பாண்டவர்களால் தாக்கி வீழ்த்தப்பட்டதும், ஓ! ஐயா, பீஷ்மர், கடுங்கணைகளை ஏவினார்.(28) உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவரான அவர், சேதிகள், பாஞ்சாலர்கள், காரூஷர்கள், மத்ஸ்தர்கள் மற்றும் கைகேயர்கள் ஆகியோரைத் தம் கணைகளால் மறைத்து அவர்களைக் கொன்றார்.(29) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், நேராகச் செல்பவையும், எதிரிகள் அனைவரின் உடல்களையும் துளைக்கவல்லவையுமான கணைகள் அவரது வில்லில் இருந்து வெளிப்பட்டு ஆகாயத்தை நிறைத்தன.(30) அவர் {பீஷ்மர்}, ஒரே நேரத்தில் கணை மழைகளைப் பொழிந்து, ஆயிரக்கணக்கான தேர்வீரர்களைக் கொன்றார். மொத்தமாக அவர் ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம்} மனிதர்களையும் பெரும் வலிமை கொண்ட யானைகளையும் கொன்றார்.(31) புது வகையில் உள்ள பல்வேறு அசைவுகளைக் கைவிட்டுத் திரிந்து கொண்டிருந்த தீய மன்னர்களும், யானைகளும் அழியும்போது, பல குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளையும் சேர்த்து கொன்றனர். உண்மையில், போரில் பீஷ்மரால் ஏவப்பட்ட கணைகள் எண்ணற்றவையாகும்.(32) சேர்ந்தாற்போலப் பத்து நாட்களுக்குப் பாண்டவப் படைகளைக் கொன்ற பீஷ்மர், எண்ணற்ற தேர்த்தட்டுகளை வெறுமையாக்கி, எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொன்றார்.(33) போரில் ருத்ரன், அல்லது உபேந்திரனின் வடிவத்தை ஏற்ற அவர், பாண்டவப் படைகளைப் பீடித்து, அவர்களுக்கு மத்தியில் பேரழிவை உண்டாக்கினார்.(34) தெப்பமற்ற கடலில் மூழ்கிக் கொண்டிருந்த தீய சுயோதனனை மீட்க விரும்பிய அவர் {பீஷ்மர்}, சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் கைகேயர்களில் உள்ள பூமியின் தலைவர்கள் பலரைக் கொன்று, தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நிறைந்திருந்த பாண்டவப் படையில் பேரழிவை உண்டாக்கினார். நன்கு ஆயுதம் தரித்தவர்களான சிருஞ்சயர்களுக்கு மத்தியில் எண்ணற்ற காலாட்படைவீரர்களும், பூமியின் பிற தலைவர்களும், போரில் அந்த வீரர் எரிக்கும் காந்தியுடன் கூடிய சூரியனுக்கு ஒப்பாகத் திரிந்து கொண்டிருந்தபோது, அவரைக் காண்பதற்கும் இயலாதவர்களாக இருந்தனர்.(35-37) இறுதியாகப் பாண்டவர்கள், தங்கள் வழிவகைகள் அனைத்தையும் கொண்டு ஒரு பெரும் முயற்சியைச் செய்து, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டவரும், இவ்வழியில் போரில் திரிந்து கொண்டிருந்தவருமான அந்தப் போர்வீரரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்தனர்.(38) எனினும் உலகின் முதன்மையான போர்வீரர் என்று கருதப்படும் அவர் {பீஷ்மர்}, எந்த உதவியையும் பெறாமல், போரில் பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களை முறியடித்தார்.(39) அவரோடு மோதிய சிகண்டி, உன்னால் பாதுகாக்கப்பட்டு அந்த மனிதர்களில் புலியை {பீஷ்மரைத்} தன் நேரான கணைகளால் கொன்றான்.(40) வாசவனை {இந்திரனைத்} தன் எதிரியாக அடைந்த விருத்திரனைப் போல, மனிதர்களில் புலியான உன்னை (தமது பகைவனாக) அடைந்த அந்தப் பாட்டன் {பீஷ்மர்}, இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(41)

கடுமை நிறைந்த துரோணரும் சேர்ந்தாற்போல ஐந்து நாட்களுக்காப் பகைவரின் படையைக் கொன்றார். ஊடுருவமுடியாத {பிளகப்பட முடியாத} வியூகம் ஒன்றை அமைத்து, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கொல்லச் செய்த அந்தப் பெரும் வீரரே, (சில காலத்திற்கு) ஜெயத்ரதனையும் பாதுகாத்தார். யமனைப் போலவே கடுமையான அவர், இரவு போரில் பேரழிவை உண்டாக்கினார்.(42,43) பெரும் வீரம் கொண்ட அந்தப் பரத்வாஜரின் வீரமகன் {துரோணர்}, தமது கணைகளால் எண்ணற்ற போராளிகளை எரித்தார். இறுதியாகத் திருஷ்டத்யும்னனுடன் மோதி, உயர்வான தன் முடிவை அடைந்தார்[1].(44) அந்நாளில் சூதன் மகன் {கர்ணன்} தலைமையிலான (தார்தராஷ்டிரப்) போர்வீரர்கள் அனைவரையும் நீ தடுக்காமலிருந்திருந்தால், துரோணரை எப்போதும் கொன்றிருக்க முடியாது.(45) மொத்த தார்தராஷ்டிரப் படையையும் நீயே தடுத்துவைத்திருந்தாய். இதனாலேயே, ஓ! தனஞ்சயா, பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} துரோணரைக் கொல்ல முடிந்தது.(46)உன்னைத் தவிர வேறு எந்த க்ஷத்திரியனால், போரில் ஜெயத்ரதனைப் படுகொலை செய்த அந்த அருஞ்செயலைச் செய்ய முடியும்?(47) பரந்த (கௌரவப்) படையைத் தடுத்து, துணிவுமிக்க மன்னர்கள் பலரைக் கொன்று, உன் வலிமை மற்றும் உன் ஆயுதங்களின் சக்தி ஆகியவற்றின் துணையால் நீ மன்னன் ஜெயத்ரதனைக் கொன்றாய்.(48) சிந்துக்களின் ஆட்சியாளனை (ஜெயத்ரதனைப்) படுகொலை செய்த செயலை அற்புதம் நிறைந்ததாக மன்னர்கள் அனைவரும் கருதுகின்றனர். எனினும், நீயே அதைச் செய்தாய் என்பதாலும், நீ பெரும் தேர் வீரன் என்பதாலும் நான் அவ்வாறு (அதை அற்புதம் என்று) கருதவில்லை.(49) உன்னைப் பகைவனாக அடைந்த இந்தப் பரந்த க்ஷத்திரியக் கூட்டம், ஒரு முழு நாளில் அழிவை அடைந்திருக்குமென்றாலும், அப்போதும் நான் இந்த க்ஷத்திரியர்களை உண்மையில் வலிமைநிறைந்தவர்களாகவே கருதுவேன்[2].(50) பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்ட பிறகு, ஓ! பார்த்தா, இந்தப் பயங்கரத் தார்தராஷ்டிரப் படையானது தன் வீரர்கள் அனைவரையும் இழந்துவிட்டதாகவே கருதப்பட வேண்டும்.(51) உண்மையில், அதன் முதன்மையான வீரர்கள் கொல்லப்பட்டு, குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியன அழிக்கப்பட்ட பாரதப் படையானது, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இழந்த ஆகாயத்தைப் போல இன்று தெரிகிறது.(52) ஓ! பார்த்தா, அதோ கடும் ஆற்றலைக் கொண்ட அந்தப் படை பழங்காலத்தில் சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலால் காந்தியை இழந்த அசுரப் படையைப் போல இன்று தன் காந்தியை இழந்திருக்கிறது.(53)

அந்தப் பெருந்திரளில் எஞ்சியிருக்கும் படையானது, இப்போது அஸ்வத்தாமன், கிருதவர்மன், கர்ணன், சல்லியன் மற்றும் கிருபர் ஆகிய ஐந்து பெரும் தேர்வீரர்களை மட்டுமே கொண்டிருக்கிறது.(54) ஓ! மனிதர்களில் புலியே, அந்த ஐந்து பெரும் தேர்வீரர்களையும் இன்று கொன்று, உன் பகைவர்கள் அனைவரையும் கொன்ற வீரனாகி, தீவுகள் மற்றும் நகரங்களுடன் கூடிய இந்தப் பூமியை மன்னர் யுதிஷ்டிரருக்கு அளிப்பாயாக.(55) அளவிலா சக்தியும் செழிப்பும் கொண்டவரும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரர், நீரையும், அதற்கு மேலே ஆகாயத்தையும், அதற்குக் கீழே பாதாள உலகங்களையும் கொண்டிருக்கும் மொத்த உலகத்தையும் இன்று அடையட்டும்.(56) பழங்காலத்தில் தைத்தியர்களையும் தானவர்களையும் கொன்ற விஷ்ணுவைப் போல இந்தப் படையைக் கொன்று, (மூவுலகங்களையும்) சக்ரனுக்கு அளித்த ஹரியைப் போல, நீ இந்தப் பூமியை மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அளிப்பாயாக.(57) விஷ்ணுவால் தானவர்கள் கொல்லப்பட்டதும் மகிழ்ந்த தேவர்களைப் போலப் பாஞ்சாலர்கள், தங்கள் பகைவர்கள் கொல்லப்பட்டு இன்று மகிழ்ச்சியை அடையட்டும்.(58)

மனிதர்களில் முதன்மையான உன் ஆசான் துரோணரின் மீது கொண்ட மதிப்பால் அஸ்வத்தாமரிடம் நீ இரக்கம் கொண்டாயெனினும், ஆசானுக்கு உரிய மதிப்புடன் நீ கிருபரிடம் பரிவு கொண்டாயெனினும்,(59) கிருதவர்மனை அணுகி, தாய்வழி சொந்தங்களின் மீது கொண்ட மதிப்பால் இன்று நீ அவனை யமலோகம் அனுப்பவில்லையெனினும்,(60) ஓ! தாமரைக் கண்ணா {அர்ஜுனா}, உன் தாயாரின் சகோதரரான மத்ரர்களின் ஆட்சியாளர் சல்லியரை அணுகி, இரக்கத்தால் அவரை நீ கொல்லவில்லையெனினும்,(61) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாண்டு மகன்களின் மீது கடும் வெறுப்பைக் கொண்டவனும், பாவம் நிறைந்த இதயம் கொண்ட இழிந்தவனுமான கர்ணனைக் கூரிய கணைகளால் வேகமாக இன்று கொல்வாயாக.(62) இதுவே உன் உன்னதக் கடமையாகும். இதில் முறையற்றதென ஏதுமில்லை. நாம் அஃதை அங்கீகரிக்கிறோம், அதில் எந்தக் களங்கமும் இல்லை.(63)

ஓ! மங்கா புகழ் கொண்டோனே, ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இரவில் உன் தாயாரை, அவளது பிள்ளைகள் {பிள்ளைகளான உங்கள்} அனைவரோடு சேர்த்து எரிக்கும் முயற்சிக்கும், பகடையாட்டத்தின் விளைவால் சுயோதனன் உங்களிடம் நடந்து கொண்ட நடத்தைக்கும் தீய ஆன்மா கொண்ட கர்ணனே அடிவேராக இருக்கிறான்.(64) சுயோதனன், கர்ணன் மூலமான விடுதலையையே எப்போதும் எதிர்பார்த்திருக்கிறான். சினத்தால் நிறைந்த அவன் {துரியோதனன்}, (அந்த ஆதரவின் விளைவாலேயே) என்னையும் பீடிக்க முயல்கிறான்.(65) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, போரில் பார்த்தர்கள் அனைவரையும் ஐயமில்லாமல் கர்ணன் கொல்வான் என்பது திருதராஷ்டிரருடைய அரசமகனின் {துரியோதனனின்} உறுதியான நம்பிக்கையாகும்.(66) உன் வலிமையை முற்றாக அறிந்தவனாக இருப்பினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, கர்ணன் மீது கொண்ட நம்பிக்கையின் விளைவாலேயே உன்னோடு போர்தொடுத்தான்.(67) “ஒன்றாகக் கூடியிருக்கும் பார்த்தர்கள் அனைவரையும், வலிமைமிக்கத் தேர்வீரனும், தாசார்ஹ குலத்தைச் சேர்ந்தவனுமான வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} நான் வெல்வேன்” என்றே கர்ணன் எப்போதும் சொல்லி வருகிறான். திருதராஷ்டிரரின் தீய மகனை மிதமிஞ்சித் தூண்டும் தீய கர்ணன் எப்போதும் (குரு) சபையில் {இவ்வாறே} முழங்குகிறான். ஓ! பாரதா, அவனை இன்று கொல்வயாக.(69) குற்றவாளியாகத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} உங்களுக்கு இழைத்த தீங்குகள் அனைத்திலும் தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்த அறிவைக் கொண்டவனுமான கர்ணனே அவற்றின் தலைவனாக இருக்கிறான்.(70)

காளையைப் போன்ற கண்களைக் கொண்ட சுபத்ரையின் வீர மகன் {அபிமன்யு}, தார்தராஷ்டிரப் படையைச் சேர்ந்தவர்களும், கொடூர இதயங்களைக் கொண்டவர்களுமான ஆறு வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படுவதை நான் கண்டேன்.(71) துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிற வீரர்களைக் கொண்ட அந்த மனிதர்களில் காளைகளைக் கலங்கடித்த அவன் {அபிமன்யு}, யானைகளைத் தங்கள் பாகர்களை இழக்கச் செய்தான், வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தங்கள் தேர்களை இழக்கும்படியும் செய்தான்.(72) காளையின் திமில்களைப் போன்ற கழுத்தைக் கொண்டவனும், குருக்கள் மற்றும் விருஷ்ணிகளின் புகழைப் பரப்பியவனுமான அபிமன்யு, குதிரைகளைத் தங்கள் சாரதிகளையும், காலாட்படை வீரர்களைத் தங்கள் ஆயுதங்களையும், உயிரையும் இழக்கச் செய்தான்.(73) (கௌரவப்) படைப்பிரிவுகளை முறியடித்து, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைப் பீடித்த அவன் {அபிமன்யு} எண்ணற்ற மனிதர்களையும், குதிரைகள் மற்றும் யானைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(74)

ஓ! நண்பா {அர்ஜுனா}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளால் பகைவரின் படையை எரித்துக் கொண்டே அவ்வாறு முன்னேறிச் சென்ற போது, அந்தச் சந்தர்ப்பத்திலும் கூட, தீய ஆன்மா கொண்ட கர்ணன், அந்த வீரனிடம் பகைமை பாராட்டினான் என்று நினைக்கும் போதே என் அங்கமெல்லாம் எரிகின்றன. நான் உண்மையின் பெயரால் இதை உனக்கு உறுதி கூறுகிறேன். ஓ! பார்த்தா, அந்தப் போரில் அபிமன்யுவின் முகத்திற்கு நேரே நிற்க முடியாமல், சுபத்ரை மகனின் கணைகளால் சிதைக்கப்பட்டு, சுய நினைவை இழந்து, குருதியில் குளித்த கர்ணன், சினத்தால் எரிந்து அழ்ந்த பெருமூச்சுகளை விட்டான். இறுதியாக, கணைகளால் பீடிக்கப்பட்ட அவன் {கர்ணன்}, களத்தில் புறமுதுகிட நினைத்தான்.(75-77) தப்பி ஓடும் ஆவல் கொண்டு, உயிரில் நம்பிக்கையிழந்த அவன் போரில் சற்று நேரம், தான் அடைந்த காயங்களால் களைப்படைந்தவனாக, முற்றிலும் மலைப்படைந்தவனாக நின்றான்.(78) இறுதியாக, அந்த நேரத்திற்குத் தகுந்தாற்போல, “கர்ணா, அபிமன்யுவின் வில்லை அறுப்பாயாக” என்ற துரோணரின் கொடூர வார்த்தைகளை அந்தப் போரில் கேட்டான்.(79) முறையற்ற போர் வழிமுறைகளை நன்கறிந்தவர்களான ஐந்து பெருந்தேர் வீரர்கள், அவனால் {கர்ணனால்} அந்தப்போரில் வில்லற்றவனாகச் செய்யப்பட்ட அந்த வீரனை {அபிமன்யுவைத்} தங்கள் கணைமாரியால் கொன்றனர்.(80) அந்த வீரனின் படுகொலையால் ஒவ்வொருவரின் இதயத்திற்குள்ளும் துயரம் நுழைந்தது. தீய ஆன்மா கொண்ட கர்ணன் மற்றும் சுயோதனன் மட்டுமே மகிழ்ச்சியாகச் சிரித்தனர்.(81)

(குரு) சபையில், பாண்டவர்கள் மற்றும் குருக்களின் முகத்திற்கு நேராகக் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} கடுமையாகவும், கசப்பாகவும் பேசிய கர்ணனின் கொடூர வார்த்தைகளை நினைவுகூர்வாயாக.(82) “ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, பாண்டவர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் நித்தியமான நரகத்திற்குள் மூழ்கிவிட்டார்கள். ஓ! பருத்த பிட்டங்களைக் கொண்டவளே, ஓ! இனிமையாகப் பேசுபவளே, இப்போது வேறு தலைவர்களைத் தேர்ந்தெடுப்பாயாக.(83) ஓ! நெளிந்த இமைமயிர் கொண்டவளே, திருதராஷ்டிரரின் வசிப்பிடத்திற்குள் ஒரு பணிப்பெண்ணாக இப்போது நுழைவாயாக, இனிமேல் உனக்குக் கணவர்கள் இல்லை.(84) ஓ! கிருஷ்ணையே, இன்று பாண்டவர்கள் உனக்கு எந்தச் சேவையும் செய்ய மாட்டார்கள். ஓ! பாஞ்சால இளவரசியே, அடிமைகளின் மனைவி நீ, ஓ! அழகிய பெண்ணே, நீயே கூட அடிமையே.(85) இன்று துரியோதனன் மட்டுமே பூமியில் ஒரே மன்னனாகக் கருதப்படுகிறான். உலகம் முழுவதிலும் உள்ள மற்ற மன்னர்கள் அனைவரும் அவனுடைய {துரியோதனனின்} ஆட்சி நிர்வாகத்தையே பராமரித்து வருகின்றனர்.(86) ஓ! இனியவளே, பாண்டவர்கள் அனைவரும் சமமாக விழுந்து கிடக்கின்றனர் என்பதை இப்போது பார். திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} சக்தியில் மூழ்கிப் போன அவர்கள், இப்போது அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.(87) இவர்கள் அனைவரும் எள்ளுப் பதர்களே, இவர்கள் அனைவரும் நரகத்தில் மூழ்கிவிட்டவர்களே என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் மன்னர்களுக்கு மன்னனான இந்தக் கௌரவனிடம் (துரியோதனனிடம்) பணியாளாகவே பணிசெய்ய முடியும்” என்றான்{கர்ணன்}.(88) ஓ! பாரதா {அர்ஜுனா}, பாவம் நிறைந்தவனும், தீய இதயம் கொண்டவனும், இழிந்தவனுமான கர்ணன், அந்தச் சந்தர்ப்பத்தில் நீ கேட்டுக் கொண்டிருக்கும்போதே பேசிய இழிந்த பேச்சு இதுவே.(89)

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், உன்னால் ஏவப்படுகையில் உயிரையே எடுக்கவல்லவையுமான கணைகள், அந்த இழிந்தவன் உங்களுக்குச் செய்த பிற தீங்குகள் அனைத்தையும், அந்த (நெருப்பு) வார்த்தைகளையும் அணைக்கட்டும். உன் கணைகள் அந்தத் தீங்குகள் அனைத்தையும் தணித்து, அந்தப் பொல்லாதவனின் உயிரையும் அணைக்கட்டும்.(90,91) அந்தத் தீய ஆன்மா கொண்ட கர்ணன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட பயங்கரக் கணைகளின் தீண்டலை உணர்ந்து, பீஷ்மர் மற்றும் துரோணரின் வார்த்தைகளை இன்று நினைத்துப் பார்க்கட்டும்.(92) எதிரிகளைக் கொல்பவையும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டவையுமான துணிக்கோல் கணைகள் உன்னால் ஏவப்பட்டு, அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்து, அவனது குருதியைக் குடிக்கட்டும்.(93) பெரும் வேகம் கொண்டவையும், சீற்றமும், வலிமையும் மிக்கவையுமான கணைகள் உன் கரங்களால் ஏவப்பட்டு, கர்ணனின் முக்கிய அங்கங்களை ஊடுருவி, இன்று அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பட்டும்.(94)

இன்று உன் கணைகளால் பீடிக்கப்பட்டு, தன் தேரில் இருந்து கீழே விழும் கர்ணனைக் கண்டு, உற்சாகத்தை இழந்து, கவலையில் நிறைந்து, பூமியின் மன்னர்கள் அனைவரும் துன்பத்துடன் ஓலமிடட்டும்.(95) இன்று குருதியில் மூழ்கி, தன் பிடியிலுள்ள ஆயுதங்கள் தளர்ந்து, பூமியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடக்கும் கர்ணனை அவனது சொந்தங்கள் மகிழ்சியற்ற முகங்களுடன் காணட்டும்.(96) யானை கட்டும் கயிரைப் பொறியாகக் கொண்டதும், உயரமானதுமான அதிரதன் மகனின் {கர்ணனின்} கொடிமரம், உன் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} வெட்டப்பட்டு, படபடத்துக் கொண்டே பூமியில் விழட்டும். (97) சல்லியன், (தான் செலுத்துவதும்) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரானது, அதன் போர்வீரனையும், குதிரைகளையும் இழந்து உன் நூற்றுக்கணக்கான கணைகளால் துண்டுகளாக வெட்டப்படுவதைக் கண்டு, அச்சத்தால் அதைக் கைவிட்டுவிட்டு ஓடட்டும்.(98) உன் எதிரியான சுயோதனன், உன்னால் கொல்லப்படும் அதிரதன் மகனைக் {கர்ணனைக்} கண்டு, அரசு மற்றும் உயிரில் நம்பிக்கையிழக்கட்டும்.(99)

ஓ! பார்த்தா, சக்தியில் இந்திரனுக்கு இணையானவனும், அல்லது ஒருவேளை சங்கரனே ஆனவனுமான கர்ணன், தன் கணைகளால் அதோ உன் துருப்புகளைக் கொன்று வருகிறான்.(100) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, அங்கே கர்ணனின் கூரிய கணைகளால் கொல்லப்பட்டாலும், பாண்டவர்களின் காரியத்தை நிறைவேற்றவே பாஞ்சாலர்கள் விரைகின்றனர்.(101) ஓ! பார்த்தா, பாஞ்சாலர்கள், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி, திருஷ்டத்யும்னனின் மகன்கள், நகுலனின் மகன் சதானீகன், நகுலன், சகாதேவன், துர்முகன், ஜனமேஜயன், சுதர்மன், சாத்யகி ஆகியோரைக் கர்ணன் விஞ்சி நிற்கிறான்.(102-103) ஓ! எதிரிகளை எரிப்பவனே, உன் கூட்டாளிகளான அந்தப் பாஞ்சாலர்கள் அந்தப் பயங்கரப் போரில் கர்ணனால் தாக்கப்படும்போதும் உண்டாகும் உரத்த ஆரவாரம் கேட்கப்படுகிறது.(104) பாஞ்சாலர்கள் ஒருபோதும் அஞ்சவில்லை, அல்லது அவர்கள் போர்க்களத்தில் இருந்து புறமுதுகிடவும் இல்லை. அந்த வலிமைமிக்க வில்லாளிகள், இந்தப் பெரும்போரில் ஏற்படப்போகும் மரணத்தைத் துச்சமாக மதிக்கின்றனர்.(105)

தனியாகவே பாண்டவப் படையைத் தன் கணைமேகங்களால் சூழ்ந்து கொண்ட பீஷ்மருடன் மோதியும் அந்தப் பாஞ்சாலர்கள் அவரிடம் இருந்து தங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளவில்லை {புறமுதுகிடவில்லை}.(106) மேலும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, தங்கள் பெரும் எதிரியும், வில்தரித்தோர் அனைவரின் ஆசானும், வெல்லப்படமுடியாதவரும், ஆயுதங்களின் சுடர்மிக்க நெருப்பும், போரில் தன் எதிரிகளை எப்போதும் எரிப்பவருமான துரோணரைப் பலவந்தமாக வெல்லத் துரிதமாகச் செயல்படவே எப்போதும் அவர்கள் {பாஞ்சாலர்கள்} முயன்றனர். அதிரதன் மகனை {கர்ணனை} அஞ்சி அவர்கள் ஒருபோதும் போரில் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டதில்லை {புறமுதுகிட்டதில்லை}.(107,108) எனினும் அந்த வீரக் கர்ணன், சுடர்மிக்க நெருப்பை நோக்கி வரும் பூச்சி கூட்டங்களின் உயிரை எடுக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், தன்னை எதிர்த்து விரைபவர்களுமான அந்தப் பாஞ்சால வீரர்களின் உயிர்களைத் தன் கணைகளால் எடுக்கிறான்,(109) இந்தப் போரில் அந்த ராதையின் மகன், தங்கள் கூட்டாளிகளுக்காகத் தங்கள் உயிரை விடத் தீர்மானித்தவர்களும், வீரர்களும், தன்னை எதிர்த்து வருபவர்களுமான பாஞ்சாலர்களை நூற்றுக்கணக்கில் அழிக்கிறான்.(110) ஓ! பாரதா, படகற்ற பெருங்கடலான கர்ணனில் மூழ்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெரும் வில்லாளிகளை, அந்தத் துணிச்சல்மிக்க வீரர்களைக் காக்க நீ அவர்களின் படகாவதே உனக்குத் தகும்.(111)

தவசிகளில் முதன்மையானவரும், பிருகு குலத்தவருமான ராமரிடம் {பரசுராமரிடம்} அவன் பெற்ற அந்த ஆயுதத்தின் {பார்க்கவ ஆயுதத்தின்} கோர வடிவம் வெளிக்காட்டப்படுகிறது.(112) சீற்றமிக்கதும், சக்தியால் சுடர்விடுவதும், பயங்கர வடிவத்தைக் கொண்டதுமான அவ்வாயுதம், நம் பரந்த படையைச் சூழ்ந்து கொண்டு, துருப்புக்ள அனைத்தையும் எரிக்கிறது.(113) கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகள், வண்டுக்கூட்டங்களைப் போலப் போரில் அடர்த்தியாகச் சென்று உன் துருப்புகளை எரிக்கின்றன.(114) ஓ! பாரதா, ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைக்காதவர்களால் தடுக்கப்பட முடியாத கர்ணனின் அவ்வாயுதத்தோடு போரில் மோதும் அந்தப் பாஞ்சாலர்கள், அதோ அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(115) ஓ! பார்த்தா, தணிக்கப்பட முடியாத கோபத்தைக் கொண்டவரான பீமர், அனைத்துப் பக்கங்களிலும் சிருஞ்சயர்களால் சூழப்பட்டு, கர்ணனிடம் போரிட்டு, பின்னவனின் {கர்ணனின்} கூரிய கணைகளால் பீடிக்கப்படுகிறார்.(116) புறக்கணிக்கப்பட்ட நோயின் கிருமி உடலுக்குள் நுழைவதைப் போல, ஓ! பாரதா, கர்ணன் புறக்கணிக்கப்பட்டால், அவன் பாண்டவர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்களை அழித்துவிடுவான்.(117)

போரில் ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} மோதி, வீட்டுக்கு பாதுகாப்பாகவும், நலமாகவும் திரும்பி வருவதற்கு, உன்னைத் தவிர வேறு எந்தப் போர்வீரனையும் யுதிஷ்டிரரின் படையில் நான் காணவில்லை.(118) ஓ! மனிதர்களில் காளையே, ஓ! பார்த்தா, உன் சபதத்துக்குத் தக்கபடி செயல்பட்டு, உன் கூரிய கணைகளால் கர்ணனை இன்று கொன்று பெரும்புகழை வெல்வாயாக.(119) ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, கர்ணனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டுள்ள கௌரவர்களைப் போரில் வெல்ல நீ மட்டுமே தகுந்தவன், வேறு எவனும் இல்லை என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(120) வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனைக் கொல்லும் இந்த அருஞ்செயலைச் செய்து, ஓ! பார்த்தா, உன் நோக்கத்தை அடைந்து, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு மகிழ்ச்சியாக இருப்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}”.(121)

அர்ஜுனனின் உறுதிமொழிகள்! – கர்ண பர்வம் பகுதி – 74-கர்ணனைக் கொல்வதாகக் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் செய்த உறுதிமொழிகள்; கர்ணனைக் கொன்ற பிறகு நேரக்கூடியவற்றைக் குறித்துக் கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்; இறுதியாகக் கிருஷ்ணனின் அனுமதியுடன் மீண்டும் தற்புகழ்ச்சி செய்து கொண்ட அர்ஜுனன்; போரிடப் புறப்பட்டது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே, கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீபத்சு {அர்ஜுனன்}, தன் கவலையை விட்டு உற்சாகம் நிறைந்தவனானான்.(1) காண்டீவத்தின் நாணை உருவி, அதை வளைத்த அவன் {அர்ஜுனன்}, கர்ணனின் அழிவுக்காகத் தன் வில்லைப் பற்றிக் கொண்டு, அந்தக் கேசவனிடம் இவ்வாறு பேசினான்,(2) “ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, உன்னை என் பாதுகாவலனாகக் கொண்டிருக்கும்போதும், கடந்த காலம் மற்றும் வருங்காலத்தை அறிந்தவனான நீ என்னிடம் இன்று நிறைவுடன் இருக்கும்போதும், வெற்றி எனதாகவே இருக்க வேண்டும்.(3) ஓ! கிருஷ்ணா, உன் துணையுடன் கூடிய என்னால் பெரும்போரில் ஒன்று சேர்ந்து வரும் மூன்று உலகங்களையும் அழித்துவிட முடியும் எனும்போது, கர்ணனைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்?(4) ஓ! ஜனார்த்தனா, பாஞ்சாலர்கள் தப்பி ஓடுவதையும், போரில் கர்ணன் அச்சமற்றவனாகத் திரிவதையும் நான் பார்க்கிறேன்.(5) சக்ரனால் அழைக்கப்பட்ட பலமிக்க வஜ்ரத்தைப் போல, ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, கர்ணனால் இருப்புக்கு அழைக்கப்பட்ட பார்க்கவ ஆயுதம் அனைத்துத் திசைகளிலும் செல்வதை நான் பார்க்கிறேன்.(6) ஓ விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, கர்ணன் என்னால் கொல்லப்படப்போவதும் {இந்தப் போரே}, பூமியுள்ளவரை அனைத்து உயிரினங்களாலும் பேசப்படப்போவதும் இந்தப் போரே.(7)

ஓ! கிருஷ்ணா, என் கரங்களால் செலுத்தப்படுபவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்படுபவையுமான முள்ளற்ற கணைகள் {விகர்ணங்கள்}, கர்ணனைச் சிதைத்து, அவனை யமனிடம் இன்று கொண்டு செல்லும்.(8) அரசுரிமைக்குத் தகாதவனான துரியோதனனை அரியணையில் நிறுவிய தமது அறிவை மன்னர் திருதராஷ்டிரர் இன்று சபித்துக் கொள்ளப் போகிறார்.(9) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, தமது அரசுரிமை, இன்பம், செழிப்பு, அரசு, நகரம் மற்றும் மகன்களைத் திருதராஷ்டிரர் இன்று இழக்கப் போகிறார்.(10) நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், ஓ! கிருஷ்ணா, கர்ணன் கொல்லப்பட்டதும், துரியோதனன் வாழ்விலும், அரசிலும் இன்று நம்பிக்கையற்றவனாவான்.(11) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில் இந்திரனால் வெட்டப்பட்ட விருத்தினரைப் போல, என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்படும் கர்ணனைக் காணும் மன்னன் துரியோதனன், அமைதியைக் கொண்டு வர நீ பேசிய வார்த்தைகளை இன்று மனத்தில் நினைக்கப் போகிறான்.(12)

ஓ! கிருஷ்ணா, என் கணைகளே {பகடை} பாச்சிகைகள் என்றும், என் காண்டீவமே அவற்றை வீசும் {பகடைக்} களம் என்றும், என் தேரே {பகடை} கட்டம் போட்ட துணி என்றும் சுபலனின் மகன் {சகுனி} இன்று அறியப் போகிறான்.(13) ஓ! கோவிந்தா, கூரிய கணைகளால் கர்ணனைக் கொன்று, குந்தி மகனின் {யுதிஷ்டிரரின்} நீண்ட உறக்கமின்மையை நான் அகற்றுவேன்.(14) என்னால் சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதன் பேரில், குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரர்} நிறைவை அடைந்து, உற்சாகம் நிறைந்த இதயத்துடன் என்றென்றைக்குமான மகிழ்ச்சியையும் இன்று அடையட்டும்.(15) ஓ! கேசவா {கிருஷ்ணா}, தடுக்கப்பட முடியாததும், ஒப்பற்றதும், கர்ணனை உயிரிழக்கச் செய்வதுமான ஒரு கணையை நான் இன்று ஏவப் போகிறேன்.(16)

ஓ! கிருஷ்ணா, என்னைக் கொல்வது குறித்துக் கர்ணன், “பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்லாதவரை நான் என் கால்களைக் கழுவமாட்டேன்” என்று சபதம் செய்திருக்கிறான்.(17) ஓ! மதுசூதனா, அந்த இழிந்தவனின் இந்தச் சபதத்தைப் பொய்க்கச் செய்து, நேரான கணைகளால் அவனது உடலை அவனது தேரில் இருந்து நான் இன்று தூக்கி வீசுவேன்.(18) பூமியில் உள்ள பிற மனிதர்கள் அனைவரையும் போரில் இகழும் அந்தச் சூதன் மகனின் {கர்ணனின்} குருதியைப் பூமி இன்று குடிக்கப் போகிறது.(19) திருதராஷ்டிரரின் ஒப்புதலுடன், சூதன் மகன் கர்ணன் தன் தகுதிகளைத் தானே தற்புகழ்ச்சி செய்து கொண்டு, “ஓ! கிருஷ்ணையே, இப்போது உனக்குக் கணவன் எவனும் இல்லை” என்று சொன்னான்.(20) என் கூரிய கணைகள் அவனது அந்தப் பேச்சைப் பொய்க்கச் செய்யும். கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளைப் போல அவனது உயிர்க்குருதியை அவை குடிக்கும்.(21) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட என்னால் செலுத்தப்படுபவையும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்படுபவையுமான துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} கர்ணனை அவனது இறுதிப் பயணத்திற்கு அனுப்பப் போகின்றன.(22)

சபைக்கு மத்தியில், பாண்டவர்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் பாஞ்சால இளவரசியிடம் {திரௌபதியிடம்} பேசிய அந்தக் கொடூர வார்த்தைகளுக்காக ராதையின் மகன் {கர்ணன்} இன்று மனம் வருந்துவான்.(23) அந்தச் சந்தர்ப்பத்தில் எள்ளுப்பதர்களாக இருந்தவர்கள், தீய ஆன்மா கொண்டவனும், வைகர்த்தனன் என்று வேறு பெயரால் அழைக்கப்படுபவனும், சூதன் மகனுமான கர்ணன் வீழ்ந்த பிறகு எள்ளாவார்கள்.(24) திருதராஷ்டிரர் மகன்களிடம் தன் தகுதிகளைத் தானே புகழ்ந்து கொள்ளும் வகையில், “நான் உங்களைப் பாண்டுவின் மகன்களிடம் இருந்து காப்பேன்” என்ற வார்த்தைகளைச் சொன்னான். அவனது அந்தப் பேச்சை என் கூரிய கணைகள் பொய்க்கச் செய்யப் போகின்றன.(25) இன்று வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, “பாண்டவர்கள் மற்றும் அவர்களது மகன்கள் அனைவரையும் நான் கொல்வேன்” என்று சொன்ன கர்ணனை நான் கொல்வேன்[1].(26) ஓ! மதுசூதனா, எவனுடைய ஆற்றலை நம்பி தீய புத்தி கொண்ட திருதராஷ்டிரரின் செருக்குமிக்க மகன்கள் எப்போதும் எங்களை அவமதித்தார்களோ, அந்த ராதையின் மகனை, அந்தக் கர்ணனை நான் இன்று கொல்வேன்.(27)

ஓ! கிருஷ்ணா, கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தங்கள் மன்னனோடு கூடிய தார்தராஷ்டிரர்கள், சிங்கத்தைக் கண்டு அஞ்சும் மான்களைப் போலப் பீதியடைந்து அனைத்துத் திசைகளிலும் இன்று ஓடப் போகிறார்கள்.(28) போரில் என்னால் கர்ணன் கொல்லப்பட்டதன் பேரில், மன்னன் துரியோதனன், தன் மகன்கள் மற்றும் உறவினர்களுடன் கூடி இன்று மனம் வருந்த போகிறான்.(29) ஓ! கிருஷ்ணா, இன்று கர்ணன் கொல்லப்படுவதைக் கண்டு, திருதராஷ்டிரரின் கோபம் நிறைந்த மகன் {துரியோதனன்} போரில் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்று என்னை அறியட்டும்.(30) மன்னர் திருதராஷ்டிரர் மற்றும் அவரது மகன்கள், பேரப்பிள்ளைகள், அமைச்சர்கள், பணியாட்கள் ஆகியோரை நான் இன்று உறைவிடமற்றவர்களாக்குவேன்.(31) ஓ! கேசவா, நாரைகளும், பிற ஊனுண்ணும் பறவைகளும், என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்பட்ட கர்ணனின் அங்கங்களுடன் இன்று விளையாடப் போகின்றன.(32) ஓ! மதுசூதனா, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ராதையின் மகனான கர்ணனின் தலையை நான் இன்று வெட்டப் போகிறேன்.(33) ஓ! மதுசூதனா, விபாடங்கள் மற்றும் கத்தி முகக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} ஆகியவற்றால் தீய ஆன்மா கொண்ட ராதையின் மகனுடைய அங்கங்களைப் போரில் இன்று நான் அறுக்கப் போகிறேன்.(34)

வீர மன்னர் யுதிஷ்டிரர் தம் இதயத்தில் நீண்ட காலமாக உள்ள பெரும் வலியிலிருந்தும் {துன்பத்த்திலிருந்தும்}, பெரும் கவலையிலிருந்தும் இன்று விடுபடப் போகிறார்.(35) ஓ! கேசவா, ராதையின் மகனையும், அவனது உறவினர்கள் அனைவரையும் கொன்று தர்மனின் மகனான யுதிஷ்டிரரை நான் இன்று மகிழ்ச்சியுறச் செய்வேன்.(36) ஓ! கிருஷ்ணா, சுடர்மிக்க நெருப்பு, அல்லது நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பான கணைகளால் போரில் உற்சாகமற்ற வகையில் கர்ணனைப் பின்தொடர்ந்து செல்வோரை நான் இன்று கொல்வேன்.(37) ஓ! கோவிந்தா, தங்கக் கவசம் பூண்டவர்களான மன்னர்களை (அவர்களின் உடல்களைக்) கழுகின் இறகுகளைக் கொண்ட என் நேரான கணைகளைக் கொண்டு இன்று பூமியில் விரவிக் கிடக்கச் செய்வேன்.(38) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அபிமன்யுவின் எதிரிகள் அனைவரின் உடல்களையும் என் கூரிய கணைகளால் நொறுக்கி, அவர்களது தலைகளை இன்று அறுப்பேன்.(39) ஓ! கேசவா, தார்தராஷ்டிரர்கள் {திருதராஷ்டிரனின் குல தோன்றல்கள்} அற்ற பூமியை என் அண்ணனுக்கு {யுதிஷ்டிரருக்கு} நான் இன்று அளிப்பேன், அல்லது ஒருவேளை அர்ஜுனன் இல்லாத பூமியில் நீ நடந்து கொண்டிருப்பாய்.(40)

ஓ! கிருஷ்ணா, வில்லாளிகள் அனைவருக்கும், என் கோபத்திற்கும், குருக்களுக்கும், என் கணைகளுக்கும், காண்டீவத்திற்கும் பட்டிருக்கும் கடனில் இருந்து நான் இன்று விடுபடுவேன்.(41) ஓ! கிருஷ்ணா, சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போலப் போரில் கர்ணனைக் கொன்று, பதிமூன்று வருடங்களாக அனுபவித்த துயரில் இருந்து நான் இன்று விடுபடுவேன்.(42) தங்கள் கூட்டாளிகளின் பணியை நிறைவேற்ற விரும்பியவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான சோமகர்கள், போரில் நான் கர்ணனைக் கொன்ற பிறகு, தங்கள் பணி நிறைவடைந்ததாக இன்று கருதப் போகிறார்கள்.(43) ஓ! மாதவா {கிருஷ்ணா}, நான் இன்று கர்ணனைக் கொன்று வெற்றியை அடைந்ததும், சிநியின் பேரன் {சாத்யகி} கொள்ளும் மகிழ்ச்சியின் அளவை நான் அறியமாட்டேன்.(44) போரில் கர்ணனையும், வலிமைமிக்கத் தேர்வீரனான அவனது மகனையும் கொன்று, பீமர், இரட்டையர்கள் (நகுலன், சகாதேவன்) மற்றும் சாத்யகி ஆகியோருக்கு நான் இன்று மகிழ்ச்சியை அளிக்கப் போகிறேன்.(45) ஓ! மாதவா, பயங்கரப் போரில் கர்ணனைக் கொன்று, திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டி ஆகியோருடன் கூடிய பாஞ்சாலர்களுக்கு நான் பட்டிருக்கும் கடனை நான் இன்று அடைக்கப் போகிறேன்.(46) போரில் கௌரவர்களுடன் போரிட்டு, சூதன் மகனைக் கொல்லும் கோபம் நிறைந்த தனஞ்சயனை {அர்ஜுனனை} அனைவரும் இன்று காணப் போகிறார்கள்.(47)

மீண்டும் உன் முன்னிலையில் என் சொந்த பெருமைகளை நானே சொல்ல {தற்புகழ்ச்சி செய்ய என்னை} அனுமதிப்பாயாக. ஆயுத அறிவியலில் இவ்வுலகில் எனக்கு நிகராக எவனும் கிடையாது. ஆற்றலிலும் கூட எனக்கு ஒப்பானவன் எவன் இருக்கிறான்? பொறுமையில் எனக்கு இணையான வேறு எந்த மனிதன் இருக்கிறான்? கோபத்திலும், எனக்கு நிகராக வேறு எவனும் கிடையாது.(48,49) ஒன்றுகூடியவர்களான அசுரர்கள், தேவர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும், வில் தரித்தவனும், என் கரங்களின் ஆற்றலைத் துணையாகக் கொண்டவனுமான என்னால் வெல்ல முடியும்.(50) தனி ஒருவனாக என் வலிமையை வெளிப்படுத்தி, காண்டீவத்தில் இருந்து வெளிப்படும் என் கணைகளின் நெருப்பைக் கொண்டு, குருக்கள் மற்றும் பாஹ்லீகர்கள் அனைவரையும் தாக்கி, குளிர்காலத்தின் நெருக்கத்தில் உலர்ந்த புற்குவியலின் மத்தியில் உள்ள நெருப்பைப் போல அவர்களைப் பின்தொடர்பவர்களையும் நான் எரிப்பேன்.(51) இந்த அம்புக்குறிகளும், நாணில் பொருத்தப்பட்ட கணையுடன் வளைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிறந்த விற்குறிகளையும் என் உள்ளங்கையில் நான் கொண்டிருக்கிறேன். என் உள்ளங்கால் ஒவ்வொன்றிலும் தேர் மற்றும் கொடிமரத்தின் குறியீடுகள் இருக்கின்றன. போரிடச் செல்லும் என்னைப் போன்ற மனிதன் ஒருவன், எவனாலும் வெல்லப்பட முடியாது” என்றான் {அர்ஜுனன்}.(52) ரத்தச் சிவப்பான கண்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கொல்பவனும், வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்}, அச்யுதனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் பீமனை மீட்கவும், கர்ணனின் உடலில் இருந்து அவனது தலையைக் கொய்யவும் வேகமாகப் போரிடச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(53)

சுஷேணனைக் கொன்ற உத்தமௌஜஸ்! – கர்ண பர்வம் பகுதி – 75-அர்ஜுனன் புறப்பட்ட பிறகு ஏற்பட்ட போரின் தன்மையைத் திருதராஷ்டிரனுக்கு விளக்கிய சஞ்சயன்; அர்ஜுனன் ஏற்படுத்திய அழிவு; எவரெவர் எவரெவரோடு மோதினர் என்ற குறிப்பு; கர்ணனின் மகனான சுஷேணனைக் கொன்ற உத்தமௌஜஸ்; உத்தமௌஜஸைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன்; கிருபரின் குதிரைகளைத் தாக்கிவிட்டு சிகண்டியின் தேரில் ஏறிக் கொண்ட உத்தமௌஜஸ்; தேரிழந்த கிருபரைக் கொல்லாமல் விட்ட சிகண்டி; கிருபரை மீட்ட அஸ்வத்தாமன்; பீமனின் ஆவேசத் தாக்குதல்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! ஐயா {சஞ்சயா}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும், என் படையின் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்ததும், பயங்கரமானதும், நிலைகாண முடியாததுமான அம்மோதலில் தனஞ்சயன் {அர்ஜுனன்} போரிடச் சென்ற போது, உண்மையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது?” என்று கேட்டான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் போரில் உயரந்த கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், (செருக்கிலும், சக்தியிலும்) பெருகியிருந்தவையுமான பாண்டவப்படையின் எண்ணற்ற பிரிவுகள் ஒன்றாகச் சேர்ந்து, கோடையின் முடிவில் ஆழ்ந்த முழக்கங்களை வெளியிடும் மேகத்திரள்களைப் போல, பேரிகைகளையும், பிற கருவிகளையுமே தங்கள் வாயாகக் கொண்டு உரக்க முழங்கத் தொடங்கின.(2) அதைத் தொடர்ந்து நடந்த போரானது, கொடூரமானதும், வாழும் உயிரினங்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான பருவந்தவறிய, கேடுநிறைந்த மழைக்கு ஒப்பானதாக இருந்தது. பெரும் யானைகளே அதன் மேகங்களாக இருந்தன; ஆயுதங்களே அங்கே பொழியும் நீராகின; இசைக்கருவிகளின் டங்காரமும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், உள்ளங்கை ஒலிகளும் அதன் முழக்கங்களாகின; தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் மின்னலின் கீற்றுகளாகின; கணைகள், வாள்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, வலிமைமிக்க ஆயுதங்கள் ஆகியன மழைத்தாரைகளாகின. {போரின்} வேகமான தொடக்கத்தால் அம்மோதலில் குருதியாறு பாய்ந்தது. இடைவிடாத வாள்வீச்சுகளால் பயங்கரத் தன்மையை அடைந்த அது {அம்மோதல்}, க்ஷத்தரியரின் பேரழிவை அதிகமாகக் கொண்டிருந்தது.(3,4)

தேர்வீரர்கள் பலர் ஒன்றாகச் சேர்ந்து, தனியொரு தேர்வீரனைச் சூழ்ந்து கொண்டு, அவனை யமனின் முன்னிலைக்கு அனுப்பினர். அல்லது, தனியொரு முதன்மையான தேர்வீரன், தனியொரு பகைவனை {அவ்வாறு} அனுப்பினான், அல்லது தனியொருவன் ஒன்றாகச் சேர்ந்திரந்த பகைவர்கள் பலரை {யமனின் முன்னிலைக்கு} அனுப்பினான்.(5) மேலும், ஏதோவொரு தேர்வீரன், ஏதோவொரு பகைவனை அவனது சாரதி மற்றும் குதிரைகளோடு யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான். ஒரே யானையில் ஏதோ ஒரு பாகன், தேர்வீரர்கள் பலரையும், குதிரைவீரர்களையும் {யமனுலகு} அனுப்பினான்.(6) அதேபோலவே பார்த்தனும் {அர்ஜுனனும்}, {தன்} கணை மேகங்களைக் கொண்டு, பகைவருக்குச் சொந்தமான சாரதிகள் மற்றும் குதிரைகளோடு கூடிய தேர்கள் பலவற்றையும், சாரதிகளோடு கூடிய யானைகளையும், குதிரைகளையும், காலாட்படைவீரர்களையும் {யமனுலகு} அனுப்பினான்.(7) அந்தப் போரில் கிருபரும், சிகண்டியும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர், அதே வேளையில், சாத்யகி துரியோதனனை எதிர்த்துச் சென்றான். மேலும் சுருதசிரவஸ், துரோணர் மகனோடும் {அஸ்வத்தாமனோடும்}, யுதாமன்யு சித்திரசேனனோடும் மோதினர்.(8)

பெரும் சிருஞ்சயத் தேர்வீரனான உத்தமௌஜஸ், கர்ணனின் மகனான சுஷேணனுடன் மோதினான், அதேவேளையில் சகாதேவன், வலிமைமிக்கக் காளையை எதிர்க்கும் பசித்த சிங்கம் ஒன்றைப் போலக் காந்தாரர்களின் மன்னன் சகுனியை எதிர்த்து விரைந்தான்.(9) நகுலனின் மகனான இளமைநிறைந்த சதானீகன், கணைமாரியை ஏவியபடியே கர்ணனின் மகனான இளமைநிறைந்த விருஷசேனனை எதிர்த்து விரைந்தான். கர்ணனின் வீர மகனும் {விருஷசேனனும்}, அந்தப் பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} மகனை {சதானீகனை} கணைகள் பலவற்றால் தாக்கினான்.(10) போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனும், தேர்வீரர்களில் காளையுமான அந்த மாத்ரியின் மகன் நகுலன் கிருதவர்மனைத் தாக்கினான். பாஞ்சாலர்களின் மன்னனும், யக்ஞசேனனின் {துருபதனின்} மகனுமான திருஷ்டத்யும்னன், கௌரவப் படையின் தலைவனான கர்ணனைத் தன் படைகள் அனைத்தையும் கொண்டு தாக்கினான்.(11) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாரதப் படையில் ஒரு பகுதியாக அமைந்திருந்தவர்களும், பெருகியிருந்தவர்களுமான சம்சப்தகர்களின் படையோடு கூடிய  துச்சாசனன், தடுக்கப்பட முடியாத வேகத்தைக் கொண்டவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான பீமனை அந்தப் போரில் சீற்றத்துடன் தாக்கினான்.(12)

வீர உத்தமௌஜஸ் தன் பலத்தை வெளிப்படுத்தி, கர்ணன் மகனை {சுஷேணனைத்} தாக்கி, அவனது தலையை அறுத்ததால், அது {அந்தத் தலை} பூமியையும், ஆகாயத்தையும் பேரொலியால் நிறைத்தபடி கீழே பூமியில் விழுந்தது.(13) சுஷேணனின் தலை தரையில் கிடப்பத்தைக் கண்டு, கர்ணன் கவலையால் நிறைந்தான். எனினும் சினத்தோடு கூடிய அவன் {கர்ணன்}, தன் மகனைக் கொன்றவனின் {உத்தமௌஜஸின்} குதிரைகள், தேர், கொடிமரம் ஆகியவற்றைக் கூரிய கணைகள் பலவற்றால் விரைவில் வெட்டி வீழ்த்தினான்.(14) அதே வேளையில் உத்தமௌஜஸ், கிருபரின் குதிரைகளைத் தன் கூரிய கணைகளால் துளைத்து, பிரகாசமான தன் வாளால் அவற்றையும், கிருபரின் பக்கங்களைப் பாதுகாத்த போர்வீரர்களையும் வெட்டி வீழ்த்தி, சிகண்டியின் தேரில் வேகமாக ஏறினான்.(15) கிருபர் தமது தேரை இழந்தவராக இருப்பதைக் கண்டவனும், தன் வாகனத்தில் இருந்தவனுமான சிகண்டி,  அவரை {கிருபரைத்} தன் கணைகளால் தாக்க விரும்பவில்லை. அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கிருபரின் தேரைத் தன் தேரால் மறைத்துக் கொண்டு, சேற்றில் சிக்கிய காளையை மீட்பதைப் போலப் பின்னவரை {கிருபரை} மீட்டான்.(16)

அதேவேளையில், காற்று தேவனின் {வாயுத்தேவனின்} மகனான பீமன், தங்கக் கவசம் பூண்டு, கோடை காலத்தலில் அனைத்தையும் எரிக்கும் நடுப்பகல் சூரியனைப் போல, உமது மகன்களின் துருப்புகளைத் தன் கூரிய கணைகளால் எரிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(17)
விசோகனுக்குப் பரிசளித்த பீமன்! – கர்ண பர்வம் பகுதி – 76- தனியொருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த பீமன்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய கௌரவப் படை; யுதிஷ்டிரன் ஓடிவிட்டதாகவும், அர்ஜுனன் இறந்துவிட்டதாகவும் ஐயுற்ற பீமன், ஆயுதங்கள் போதுமான அளவுக்கு இருக்கின்றவா என்று தன் தேரோட்டியான விசோகனிடம் ஆய்வு செய்யுமாறு சொன்னது; அர்ஜுனன் வருவதைக் கண்டு பீமனுக்குச் சொன்ன விசோகன்; மகிழ்ச்சியடைந்த பீமன் விசோகனுக்குப் பரிசுகளை அளிப்பது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தக் கடும்மோதல் நடக்கையில், தனி ஒருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த பீமன், எண்ணற்ற எதிரிகளால் சூழப்பட்டபோது, {பீமன்} தன் சாரதியிடம் {விசோகனிடம்}, “தார்தராஷ்டிரப் படைக்கு மத்தியில் என்னைக் கொண்டு செல்வாயாக.(1) ஓ! தேரோட்டியே, இந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு வேகமாகச் செல்வாயாக. இந்தத் தார்தராஷ்டிரர்கள் அனைவரையும் நான் யமனின் முன்னிலைக்கு அனுப்புவேன்” என்றான். இவ்வாறு பீமசேனனால் தூண்டப்பட்ட தேரோட்டி, பீமன் எந்த இடத்தில் உமது மகனின் {துரியோதனனின்} படையை அழிக்க விரும்பினானோ, அந்த இடத்திற்கு அதை எதிர்த்து மிக மூர்க்கமாகவும், வேகமாகவும் சென்றான். அப்போது யானைகள், தேர்கள், குதிரை மற்றும் காலாட்கள் ஆகியவற்றோடு கூடிய எண்ணற்ற கௌரவத் துருப்புகள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனை எதிர்த்து விரைந்தன.(2,3) பிறகு ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும், பீமனுக்குச் சொந்தமான முதன்மையான வாகனங்களைத் தங்கள் எண்ணற்ற கணைகளால் அவர்கள் {கௌரவர்கள்} தாக்கினர். எனினும், உயர் ஆன்ம பீமன், தன்னை நோக்கி வரும் எதிரிகளின் கணைகள் அனைத்தையும் தங்கச்சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் அறுத்தான்.(4)

இவ்வாறு பீமனின் கணைகளால் இரண்டு, அல்லது மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அவனது எதிரிகளின் கணைகள் பூமியில் விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் கணைகளால் தாக்கப்பட்ட முதன்மையான க்ஷத்திரியர்களுக்கு மத்தியில், யானைகள், தேர்கள், குதிரை மற்றும் காலாட்கள் ஆகியன,(5) ஓ! ஏகாதிபதி, இடியால் பிளக்கப்படும் மலைகள் உண்டாக்கும் ஆரவாரத்திற்கு ஒப்பாக உரக்க ஓலமிட்டன. இவ்வாறு பீமனால் தாக்கப்பட்ட அந்த முதன்மையான க்ஷத்திரியர்கள், பீமனின் பலமிக்கக் கணைகளால் தங்கள் அங்கங்கள் துளைக்கப்பட்டு, புதிதாக வளர்ந்த பறவைகள் ஒரு மரத்தை நோக்கிச் செல்வதைப் போல, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீமனை எதிர்த்து விரைந்தனர். இவ்வாறு அவனை {பீமனை} எதிர்த்து உமது துருப்புகள் சென்ற போது, சீற்றமும், மூர்க்கமும் கொண்ட அந்தப் பீமன், யுக முடிவின்போது கதாயுதம் தரித்த காலன், உயிரினங்கள் அனைத்தையும் எரித்து அழிப்பதைப் போலத் தன் வேகமனைத்தையும் வெளிப்படுத்தினான்.(6-7) யுக முடிவில் வாயை அகல விரித்து அனைத்து உயிர்களையும் அழிக்கும் காலனைப் போலச் சீற்றமும், வேகமும் கொண்டிருந்த அந்தப் பீமனை உமது படைவீரர்களால் தடுக்க முடியவில்லை.(8) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, புயலால் சிதறடிக்கப்படும் மேகத்திரள்களைப் போல, உயர் ஆன்மப் பீமனால் அந்தப் போரில் இவ்வாறு சிதைத்து எரிக்கப்பட்ட அந்தப் பாரதப் படையானது அனைத்துப் பக்கங்களிலும் பிளக்கப்பட்டுத் தப்பி ஓடியது. அப்போது, வலிமைமிக்கவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான பீமசேனன், தன் தேரோட்டியிடம் உற்சாகமாக,(9,10) “ஓ! சூதா {விசோகா}, என்னை நோக்கி வரும் அந்தத் தேர்களும், கொடிமரங்களும் நமக்குச் சொந்தமானவையா? எதிரிகளுக்குச் சொந்தமானவையா? என்பதை உறுதி செய்வாயாக. போரில் உள்ளிழுக்கப்பட்டிருப்பதால், அவற்றை வேறுபடுத்திப் பார்க்க என்னால் இயலவில்லை. என் கணைகளால் என் துருப்புகளையே நான் மறைக்காமல் இருக்க வேண்டும்.(11)

ஓ! விசோகா, அனைத்துப் பக்கங்களிலும் பகை போர்வீரர்களையும், தேர்களையும், அவர்களது கொடிமரங்களின் உச்சிகளையும் {மட்டுமே} காண்பதால் நான் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கிறேன். மன்னரோ {யுதிஷ்டிரரோ} துன்பத்தில் இருக்கிறார். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனும் இன்னும் வரவில்லை. ஓ! சூதா, இக்காரியங்கள் என் இதயத்தைக் கவலையால் நிறைக்கின்றன.(12) ஓ! தேரோட்டி, எதிரிகளுக்கு மத்தியில் என்னை விட்டுவிட்டு நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் சென்று விட்டார் என்பதே என் துயரமாகும். பீபத்சுவும் {அர்ஜுனனும்} உயிரோடிருக்கிறானா? அல்லது இறந்துவிட்டானா? என்பதை நான் அறியவில்லை. இஃது என் துயரத்தை இன்னும் அதிகரிக்கிறது.(13) எனினும், பெரும் துன்பத்தில் நிறைந்திருந்தாலும், பெரும் வலிமையைக் கொண்ட இந்தப் பகைவரின் துருப்புகளை நான் அழிப்பேன். கூடியிருக்கும் எதிரிகளுடனான போருக்கு மத்தியில் இவ்வாறு அழிவை உண்டாக்கி, இன்று நான் உன்னை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்வேன்.(14) ஓ! சூதா, கணைகளைக் கொண்ட என் அம்பறாத்தூணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, என் தேரில் எஞ்சியிருக்கும் கணைகளின் அளவையும், வகைகளையும், நன்றாக உறுதி செய்வாயாக” என்றான் {பீமன்}.(15)

இவ்வாறு ஆணையிடப்பட்ட விசோகன், “ஓ! வீரரே {பீமரே}, கணைகளில் நீர் இன்னும் அறுபதாயிரத்தைக் {60,000} கொண்டிருக்கிறீர், உமது கத்தித் தலைக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அகன்ற தலை கணைகள் {பல்லங்கள்} ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் {10,000} எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறீர். ஓ! வீரரே, துணிக்கோல் கணைகளில் {நாராசங்களில்} இன்னும் இரண்டாயிரம் {2,000} இருக்கின்றன, ஓ, பார்த்தரே {பீமரே}, பிரதரங்களில் {சிறப்பு வகைக் கணைகள்} இன்னும் மூவாயிரம் {3,000} இருக்கின்றன. உண்மையில், ஓ! பார்த்தரே {பீமரே}, ஆறு எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் சுமக்க முடியாத அளவுகளுக்கான ஆயுதங்கள் இன்னும் இருக்கின்றன.(16) ஓ! கல்விமானே, கரங்களைக் கொண்டு மட்டுமே பயன்படுத்தும் ஆயுதங்களில் கதாயுதங்கள் மற்றும் வாள்கள் மட்டுமே இன்னும் ஆயிரம் ஆயிரமாக இருக்கின்றன. அதே அளவுக்கு வேல்கள், குறுவாள்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியனவும் இருக்கின்றன. உமது ஆயுதங்கள் தீர்ந்து போகும் என்று ஒருபோதும் அஞ்சாதீர்” என்றான் {விசோகன்}.(17)

பீமன் {தேரோட்டி விசோகனிடம்}, “ஓ! சூதா, இந்தப் பயங்கரமான போரில் என் வில்லில் இருந்து சீற்றத்துடன் ஏவப்படும் வேகமான கணைகளால், என் எதிரிகள் அனைவரையும் சிதைத்து, அனைத்தையும் மறைக்கப்போவதால் சூரியன் மறைந்து யமனின் இருள் உலகங்களுக்கு ஒப்பாக இந்தப் போர்க்களத்தை ஆக்கப்போகிறது.(18) ஓ! சூதா, போரில் பீமசேனன் அடிபணிந்தான், அல்லது குருக்கள் அனைவரையும் அவன் அடியபணியச் செய்தான் என்பதைக் குழந்தைகள் உள்ளிட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் இன்று அறியப் போகிறார்கள்.(19) கௌரவர்கள் அனைவரும் போரில் வீழ்வார்கள், அல்லது என் கடந்த காலச் சாதனைகளைத் தொடக்கமாகக் கொண்டு உலகமனைத்தும் என்னை இன்று மெச்சப் போகிறது. தனி ஒருவனாக நான் அவர்கள் அனைவரையும் வீழ்த்தப் போகிறேன், அல்லது அவர்கள் அனைவரும் பீமசேனனைத் தாக்கி வீழ்த்தப் போகிறார்கள்.(20) நற்செயல்களைச் சாதிக்க உதவி செய்யும் தேவர்கள் எனக்கு அருள் வழங்கப் போகிறார்கள். முறையாக இருப்புக்கு அழைக்கப்படும் சக்ரன் {இந்திரன்}, வேகமாக ஒரு வேள்விக்கு வருவதைப் போல எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன் இப்போது இங்கே வரப்போகிறான்.(21) பாரதப்படை பிளப்பதைப் பார். அந்த மன்னர்கள் ஏன் தப்பி ஓடுகிறார்கள்? மனிதர்களில் முதன்மையான சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் கணைகளால் அந்தப் படையை மறைக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(22)

ஓ! விசோகா, அந்தக் கொடிமரங்கள், யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படைவீரர்களின் கூட்டம் ஆகியன ஓடிப்போவதைப் பார். ஓ! சூதா, கணைகள் மற்றும் ஈட்டிகளால் தாக்கப்படும் இந்தத் தேர்கள், சிதறடிக்கப்படுவதைப் பார்.(23) தங்கச் சிறகுகள் மற்றும் மயிலின் இறகுகள் ஆகியவற்றைக் கொண்டவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் அதிகமாகக் கொல்லப்பட்டாலும், இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளும் அந்தக் கௌரவப் படையை அதோ பார்.(24) தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன காலாட்படைவீரர்களின் கூட்டத்தை நசுக்கிக் கொண்டு தப்பி ஓடுகின்றன. உண்மையில், தங்கள் உணர்வுகளை இழந்த கௌரவர்கள் அனைவரும், எரியும் காட்டில் அச்சத்தால் நிறைந்த யானைகளைப் போலத் துன்பக் குரலை வெளியிட்டபடியே தப்பி ஓடுகின்றனர். ஓ! விசோகா, அந்தப் பெரும் யானைகளும் கணைகளால் தாக்கப்பட்டு உரக்கப் பிளிறுகின்றன” என்றான் {பீமன்}.(25,26)

விசோகன் {பீமனிடம்}, “ஓ! பீமரே, பார்த்தரால் {அர்ஜுனரால்} கோபத்துடன் வளைக்கப்படும் காண்டீவத்தின் நாணொலியை நீர் கேட்காமலிருப்பது எவ்வாறு? இந்த உமது காதுகள் இரண்டும் செயலிழந்துவிட்டனவா?[1](27) ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, உமது விருப்பங்கள் யாவும் நிறைவேறிவிட்டன. (எதிரியின்) யானைப்படைக்கு மத்தியில் (அர்ஜுனரின் கொடியில் உள்ள) குரங்கு அதோ காணப்படுகிறது. நீல மேகங்களுக்கு மத்தியில் மின்னலைப் போலக் காண்டீவத்தின் நாண்கயிறுகள் கீற்றுகளாகத் தெரிவதைப் பாரும்.(28) அதோ தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கொடிமரத்தின் உச்சியில் உள்ள குரங்கானது இந்தப் பயங்கரப் போரில் பகைவரின் படைப்பிரிவுகளை அனைத்துப் பக்கங்களிலும் அச்சுறுத்துகிறது. நான் கூட அதைப் பார்க்கும்போது அச்சத்தால் தாக்கப்படுகிறேன்.(29) அங்கே, அர்ஜுனரின் அழகிய கிரீடம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கிரீடத்தில் உள்ள ரத்தினம் சூரியனின் காந்தியோடு மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.(30)அவருக்குப் பக்கத்தில் உரத்த சங்கொலியைக் கொண்டதும், வெண்மேகங்களின் வண்ணத்தைக் கொண்டதுமான அவரது தேவதத்த சங்கை அங்கே பாரும். கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு, பகைவரின் படைக்குள் ஊடுருவும் ஜனார்த்தனருக்கு {கிருஷ்ணருக்குப்} பக்கத்தில் சூரியப் பிரகாசத்தைக் கொண்டதும், கத்தி போன்ற கூர்மை கொண்டதுமான அவரது சக்கரத்தைப் பாரும். ஓ! வீரரே, எப்போதும் யதுக்களால் வழிபடப்படுவதும், புகழைப் பெருக்குபவனான கேசவனுடையதுமான அந்தச் சக்கரத்தைப் பாரும்.(31,32) முற்றிலும் நேராக உயர்ந்திருக்கும் மரங்களுக்கு ஒப்பானவையான பெரும் யானைகளின் அந்தத் துதிக்கைகள், கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்பட்ட பூமியில் விழுகின்றன. அந்தப் பெரும் உயிரினங்களும், கணைகளால் துளைத்துப் பிளக்கப்பட்டு, இடியால் பிளக்கப்பட்ட மலைகளைப் போலத் தங்கள் பாகர்களுடன் அங்கே கீழே விழுகின்றன.(33) ஓ! குந்தியின் மகனே {பீமரே}, மிக அழகானதும், சந்திரனின் நிறத்தைக் கொண்டதுமான கிருஷ்ணரின் பாஞ்சஜன்யத்தையும், அவரது மார்பில் சுடர்விடும் கௌஸ்துபத்தையும், அவரது வெற்றி மாலையையும் அங்கே காண்பீராக.(34)

தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், முதலானவருமான பார்த்தர் {அர்ஜுனர்}, வெண்மேகங்களின் நிறத்தைக் கொண்டவையும், கிருஷ்ணரால் தூண்டப்பட்டவையுமான தன் முதன்மையான குதிரைகளால் சுமக்கப்பட்டு, பகைவரின் படையைக் கொன்றபடியே வருகிறார் என்பதில் ஐயமில்லை.(35) தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} சக்தியைக் கொண்ட உமது தம்பியால் {அர்ஜுனனால்} சிதைக்கப்பட்ட அந்தத் தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களின் கூட்டத்தைப் பாரும். கருடனின் சிறகுகளால் உண்டாக்கப்பட்ட புயலில் வேரோடு பிடுங்கப்பட்ட காட்டைப் போல அவை விழுந்து கொண்டிருப்பதைப் பாரும்.(36) தங்கள் குதிரைகள் மற்றும் சாரதிகளுடனும் கூடிய நானூறு தேர்வீரர்களும், எழுநூறு யானைகளும், எண்ணற்ற காலாட்படைவீரர்கள் மற்றும் குதிரைவீரர்களும் கிரீடியின் {அர்ஜுனரின்} வலிமைமிக்கக் கணைகளால் இந்தப் போரில் கொல்லப்படுவதைப் பாரும்.(37) குருக்களைக் கொன்றபடியே வலிமைமிக்க அர்ஜுனன், சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைப் போல உமது பக்கத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். உமது விருப்பங்கள் யாவும் நிறைவேறுகின்றன. உமது எதிரிகள் அழிக்கப்படுகிறார்கள். உமது வலிமையும், உமது வாழ்நாளும் எப்போதும் அதிகரிக்கட்டும்” என்றான் {விசோகன்}.(38)

பீமன் {தேரோட்டி விசோகனிடம்}, “ஓ! விசோகா, அர்ஜுனனின் வருகையை நீ சொன்னதாலும், நீ சொன்ன அந்தச் செய்தியால் உன்னிடம் எனக்கு மகிழ்ச்சி உண்டானதாலும், மக்கள் தொகை நிறைந்த பதினான்கு கிராமங்களையும், நூறு அடிமைப்பெண்களையும், இருபது தேர்களையும் நான் உனக்குத் தருகிறேன்” என்றான் {பீமன்}”.(39)

சகுனியைத் தோற்கடித்த பீமன்! – கர்ண பர்வம் பகுதி – 77-அர்ஜுனன் கௌரவப் படைகளுக்கு ஏற்படுத்திய பேரழிவு; கர்ணனின் படையை நோக்கிச் சென்ற அர்ஜுனன்; அர்ஜுனன் வருவதை உணர்ந்த பீமன் உற்சாகமாகப் போரிட்டது; பீமனைத் தடுக்கத் தன் படையை ஏவிய துரியோதனன்; இரண்டு லட்சத்து இருநூறு வீரர்களைக் கொன்ற பீமன் அங்கே ஒரு குருதிப் புனலை உண்டாக்கியது; பீமனைத் தாக்கச் சகுனியை ஏவிய துரியோதனன்; பீமனுடன் சகுனி புரிந்த வீரப் போர்; பீமனைச் சரமாரியாகத் தாக்கிய சகுனி; இருவருக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; சகுனியின் வில், குதிரைகள், சாரதி, தேர் ஆகியவற்றை அழித்து அவனை மயக்கமடையச் செய்த பீமன்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய துரியோதனனும், கௌரவர்களும்; கர்ணனைத் தஞ்சமடைந்த கௌரவர்கள்; கர்ணனின் படையை நோக்கிச் சென்ற பீமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேரொலிகளையும், (போர்வீரர்களின்) சிங்க முழக்கங்களையும் கேட்ட அர்ஜுனன், “குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டுவாயாக” என்று கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்னான்.(1) அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவிந்தன், அவனிடம், “பீமர் எங்கிருக்கிறாரோ அங்கே நான் பெரும் வேகத்தோடு செல்லப்போகிறேன்” என்றான்.(2) அப்போது கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், தேர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் காலாட்களின் பெரும்படைகளோடு சென்று, தங்கள் கணைகளின் விஸ் ஒலி, தங்கள் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, தங்கள் குதிரைக் குளம்படிகளின் ஒலிகள் ஆகியவற்றால் பூமியை எதிரொலிக்கச் செய்தவர்களுமான (கௌரவப் படைக்குச் சொந்தமான) மனிதர்களில் சிங்கங்கள் பலர், பனி, அல்லது சங்கு போன்று வெண்மையானவையும், தங்கம், முத்து, ரத்தினங்களால் ஆன கடிவாளங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளால் சுமக்கப்பட்டு வெற்றிபெற முன்னேறிச் சென்றவனும், (அசுரன்) ஜம்பனைக் கொல்வதற்காக வஜ்ரத்தைத் தரித்துக் கொண்டு அவனை எதிர்த்துப் பெருங்கோபத்தோடு சென்ற தேவர்கள் தலைவனை {இந்திரனைப்} போன்றவனுமான ஜயனை (அர்ஜுனனை) எதிர்த்துச் சென்றனர்.(3-4) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கும், பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் உடல், உயிர், பாவம் ஆகியவற்றுக்கு அழிவைத் தருவதும், மூவுலகங்களின் நிமித்தமாக அசுரர்களுக்கும், வெற்றியாளர்களில் முதன்மையானவனான தேவன் விஷ்ணுவுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போன்றதுமான ஒரு பெரும்போர் நடந்தது.(5)

கிரீடம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனான பார்த்தன் {அர்ஜுனன்}, தனியொருவனாகவே அவர்கள் ஏவிய வலிமைமிக்க ஆயுதங்களையும், அவர்களது சிரங்கள் மற்றும் கரங்களையும் பல்வேறு வழிகளில், பெரும் கூர்மை கொண்ட கத்தி முக, பிறைவடிவ, அகன்ற தலை கணைகளால் {க்ஷுரப்ரம், அர்த்தச்சந்திரக்கணை, பல்லங்கள் ஆகியவற்றால்} வெட்டினான்.(6) குடைகள், விசிறுவதற்கான சாமரங்கள், கொடிமரங்கள், குதிரைகள், தேர்கள், காலாட்படை கூட்டங்கள், யானைகள் ஆகியன பல்வேறு வழிகளில் வடிவம் சிதைக்கப்பட்டு, புயலால் முறிந்து விழும் காட்டைப் போலப் பூமியில் விழுந்தன.(7) தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டு, (முதுகுகளில்) வெற்றிக்கொடிகள் மற்றும் போர்வீரர்களைக் கொண்ட பெரும் யானைகள், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் துளைக்கப்பட்ட போது, ஒளியுடன் எரியும் மலைகளைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(8) யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றை வாசவனின் வஜ்ரத்திற்கு ஒப்பான சிறந்த கணைகளால் துளைத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, பழங்காலத்தில் (அசுரன்) பலனைப் பிளக்கச் சென்ற இந்திரனைப் போலவே கர்ணனைக் கொல்ல வேகமாகச் சென்று கொண்டிருந்தான்.(9) மனிதர்களில் புலியும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {அர்ஜுனன்}, பெருங்கடலுக்குள் பாயும் மகரத்தைப் போல உமது படைக்குள் ஊடுருவினான்.(10).

அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட உமது போர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், காலாட்கள், பெரும் எண்ணிக்கையிலான யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றுடன் அவனை எதிர்த்து விரைந்தனர்.(11) அவர்கள் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்ற போது உண்டாக்கிய ஆரவாரமானது, புயலின் சீற்றத்தால் அடிக்கப்படும் பெருங்கடலின் நீரால் உண்டாக்கப்பட்டதற்கு ஒப்பாகப் பேராற்றல் வாய்ந்ததாக இருந்தது.(12) (ஆற்றலில்) புலிகளுக்கு ஒப்பான அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் அனைவரும், மரணம் குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்தப் போரில், அந்த மனிதர்களில் புலியை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தனர்.(13) எனினும் அர்ஜுனன், குரு தலைவர்களின் அந்தத் துருப்புகள் அவன் மீது ஆயுதமாரியை ஏவியபடி முன்னேறி வருகையிலேயே கூடித்திரண்ட மேகத் திரள்களை விரட்டும் புயல் காற்றைப் போல அவற்றை முறியடித்தான்.(14) தாக்குவதில் திறம்பெற்றவர்களா அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அர்ஜுனனை எதிர்த்துச் சென்று, கூரிய கணைகளால் அவனைத் துளைக்கத் தொடங்கினர்.(15)

அப்போது அர்ஜுனன், தன் கணைகளால் பல்லாயிரக்கணக்கான தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(16) அர்ஜுனனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் இவ்வாறு அந்தப் போரில் தாக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரர்கள், தங்கள் தேர்களில் இருந்து ஒருவருக்கடுத்து ஒருவராகக் காணாமல் போவதாகத் தெரிந்தது.(17) மொத்தமாக அர்ஜுனன், அந்தப் போரில் வீரத்துடன் முயன்று கொண்டிருந்த அந்த வீரத் தேர்வீரர்களில் நானூறு பேரைத் தன் கூரிய கணைகளால் கொன்றான்.(18) பல்வேறு வகைகளிலான கூரிய கணைகளால் தாக்கப்பட்ட அவர்கள், அர்ஜுனனைத் தவிர்த்துவிட்டு அனைத்துப் பக்கங்களில் தப்பி ஓடினர்.(19) பொங்கும் கடலானது மலையோடு மோதி சிதறும்போது உண்டாவதைப் போல அந்தப் போர்வீரர்கள் பிளந்து, தப்பி ஓடியபோது உண்டான ஆரவாரம் பேராற்றல் வாய்ந்ததாக இருந்தது.(20)

அந்தப் படையைத் தன் கணைகளால் முறியடித்து, அதை அச்சுறுத்திய பிருதையின் மகன் அர்ஜுனன், ஓ! ஐயா, அதன்பிறகு சூதன் மகனின் {கர்ணனின்} படைப்பிரிவை எதிர்த்துச் சென்றான்.(21) பழங்காலத்தில் பாம்புகளைப் பிடிக்கப் பாய்ந்திறங்கிய கருடன் உண்டாக்கியதைப் போன்ற பேரொலியுடன் அர்ஜுனன் தன் எதிரிகளைச் சந்தித்தான்.(22) பார்த்தனைப் {அர்ஜுனனைப்} பார்க்கவிரும்பிய வலிமைமிக்கப் பீமசேனன், அவ்வொலியைக் கேட்டு மகிழ்ச்சியால் நிறைந்தான்.(23) பார்த்தனின் வருகையைக் கேட்டுணர்ந்த வீர பீமசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் உயிரையே துச்சமாக மதித்து உமது துருப்புகளைக் கலங்கடிக்கத் தொடங்கினான்.(24) காற்றுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவனும், காற்று தேவனின் மகனுமான வீர பீமன், காற்றைப் போலவே அந்தக் களத்தில் திரியத் தொடங்கினான்.(25)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனால் தாக்கப்பட்ட உமது படையானது, கடலுக்கு மத்தியில் உடைந்த கப்பலைப் போலச் சுழலத் தொடங்கியது.(26) தன் கரநளினத்தை வெளிப்படுத்திய பீமன், தன் கடுங்கணைகளால் அந்தப் படையை வெட்டிச் சிதைக்கத் தொடங்கி, பெரும் எண்ணிக்கையிலானோரை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(27) அந்தச் சந்தர்ப்பத்தில், யுக முடிவில் தோன்றும் அந்தகனைப் போல, மனித சக்திக்கு அப்பாற்பட்ட பீமனின் வலிமையைக் கண்ட உமது போர்வீரர்கள் அச்சத்தால் நிறைந்தனர்.(28) வலிமைநிறைந்த தன் படைவீரர்கள் இவ்வாறு பீமசேனனால் பீடிக்கப்படுவதைக் கண்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளையும், பெரும் வில்லாளிகள் அனைவரையும் அழைத்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே, பீமன் வீழ்த்தப்பட்டால் பாண்டவத் துருப்புகளை ஏற்கனவே கொல்லப்பட்டனவாகக் கருதலாம் என்பதால் அந்தப் போரில் அவர்களிடம் பீமனைக் கொல்ல ஆணையிட்டான்.(29,30)

உமது மகனின் {துரியோதனனின்} ஆணையை ஏற்ற மன்னர்கள் அனைவரும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியால் பீமனை மறைத்தனர்.(31) ஓ! மன்னா, வெற்றி பெறும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற யானைகளும், மனிதர்களும், ஓ! ஏகாதிபதி, தேர்களும், குதிரைகளும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டன.(32) இவ்வாறு அந்தத் துணிச்சல்மிக்க வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், பாரதக் குலத்தின் தலைவனுமான அந்த வீரன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விண்மீன்களால் சூழப்பட்ட நிலவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(33) உண்மையில் முழு நிலவானது தன் ஒளிவட்டத்திற்குள் அழகாகத் தெரிவதைப் போலவே அந்த மனிதர்களில் சிறந்தவனும் {பீமனும்} அந்தப் போரில் மிக அழகானவனாகத் தெரிந்தான்.(34) கொடூர நோக்கம் கொண்ட அந்த மன்னர்கள் அனைவரும் கோபத்தால் சிவந்த கண்களுடனும், விருகோதரனை {பீமனைக்} கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டும் தங்கள் கணை மழையை அவன் மீது பொழிந்தனர்.(35)

நேரான கணைகளால் அந்த வலிமைமிக்கப்படையைத் துளைத்த பீமன், வலையில் இருந்து வெளிப்படும் மீன் ஒன்றைப் போல, பின்வாங்காத பத்தாயிரம் {10,000} யானைகளையும், இருநூறாயிரத்து இருநூறு (இரண்டு லட்சத்து இருநூறு- 2,00,200} மனிதர்களையும், ஓ! பாரதரே, ஐந்தாயிரம் {5,000} குதிரைகளையும், நூறு தேர்வீரர்களையும் கொன்றுவிட்டு அந்த முற்றுகையில் இருந்து வெளிவந்தான். இவை யாவையும் கொன்ற பீமன் அங்கே ஒரு குருதிப் புனலை {இரத்த ஆற்றைப்} பாயச் செய்தான்.(36-38) குருதியே அதன் நீரானது, தேர்கள் சுழல்களாகின; யானைகள் அதில் நிறைந்திருக்கும் முதலைகளாகின. மனிதர்கள் அதன் மீன்களாகவும், குதிரைகள் அதன் சுறாக்களாகவும், விலங்குகளின் முடிகள் அதன் பாசியாகவும் ஆகின.(39) உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட கரங்கள் அதன் முதன்மையான பாம்புகளாகின. எண்ணற்ற ஆபரணங்களும், ரத்தினங்களும் அவ்வோடையில் அடித்துச் செல்லப்பட்டன. தொடைகள் அதன் முதலைகளாகவும், ஊனீர் சேறாகவும் ஆகின. மேலும் தலைகள் அதன் பாறைகளாகின.(40)

விற்களும் கணைகளும், அந்தப் பயங்கர ஆற்றைக் கடந்த செல்ல மனிதர்களால் வேண்டப்பட்ட தெப்பங்களாகவும், கதாயுதங்களும், பரிகங்களும் அதன் பாம்புகளாகின. குடைகள், கொடிமரங்கள் அதன் அன்னங்களாகவும், தலைப்பாகைகள் அதன் நுரையாகவும் ஆகின.(41) கழுத்தணிகள் அதன் தாமரைகளாகவும், அங்கே எழுந்த மண் தூசு அதன் அலைகளாகவும் அமைந்தன. உன்னதக் குணங்களைக் கொண்டோர் அதை எளிமையாகக் கடந்தனர், மருண்டோரும், அச்சமடைந்தோரும் கடப்பதற்குக் கடினமானதாக அதைக் கண்டனர்.(42) போர்வீரர்களையே அதன் முதலைகளாகக் கொண்ட அது யமனின் உலகத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. உண்மையில், அந்த மனிதர்களில் புலி {பீமன்}, அந்நதியை வெகுவிரைவில் உண்டாக்கிவிட்டான்.(43) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோருக்கு வைதரணீயைக் கடப்பது கடினம் என்பதைப் போல, பயங்கரமானதும், மருண்டோரின் அச்சத்தை அதிகரிப்பதுமான அந்தக் குருதிப் புனலைக் கடப்பதும் கடினமானதாக இருந்தது.(44) தேர்வீரர்களில் சிறந்தவர்களான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} எங்கே ஊடுருவினானோ, அங்கே அவன் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பகை போர் வீரர்களை வீழ்த்தினான்.(45)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே},போரில் பீமசேனனால் அடையப்பட்ட அந்தச் சாதனைகளைக் கண்ட துரியோதனன்,  சகுனியிடம், “ஓ! மாமா, போரில் வலிமைமிக்கப் பீமசேனனை வெல்வீராக. அவன் {பீமன்} வீழ்த்தப்பட்டால், வலிமைமிக்கப் பாண்டவப் படையும் வீழ்த்தப்படதாகவே கருதப்படும்” என்றான்.(47) இவ்வாறு சொல்லப்பட்டவனும், பயங்கரப் போரைச் செய்யவல்லவனுமான அந்தச் சுபலனின் வீர மகன் {சகுனி}, ஓ! ஏகாதிபதி, தன் தம்பிகள் சூழ அங்கிருந்து சென்றான்.(48) பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமனை அந்தப் போரில் அணுகிய அந்த வீரச் சகுனி, பெருங்கடலையைத் தடுக்கும் கரையைப் போல அவனைத் தடுத்தான்.(49) கூரிய கணைகளால் பீமன் தடுக்கப்பட்டாலும், அவை யாவையும் அலட்சியம் செய்த பீமன், சுபலன் மகன்களை எதிர்த்துச் சென்றான்.(50)

அப்போது சகுனி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எண்ணற்ற துணிக்கோல் கணைகளை {நாராசங்களை} பீமனுடைய மார்பின் இடது பக்கத்தில் ஏவினான்.(51) அந்த உயர் ஆன்மப் பாண்டு மகனின் {பீமனின்} கவசத்தைத் துளைத்துச் சென்றவையும், கங்க மற்றும் மயில் இறங்குகளைக் கொண்டவையுமான அந்தக் கடுங்கணைகள், ஓ! ஏகாதிபதி, அவனது உடலில் ஆழமாக மூழ்கின.(52) அந்தப் போரில் ஆழத் துளைக்கப்பட்ட பீமன், ஓ! பாரதரே, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணையொன்றைச் சுபலன் மகன் {சகுனி} மீது திடீரென ஏவினான்.(53) எனினும், ஓ! மன்னா, எதிரிகளை எரிப்பவனும், பெரும் கரநளினம் கொண்டவனுமான சகுனி, தன்னை நோக்கி வந்த அந்தப் பயங்கரக் கணையை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(54) தன் கணை பூமியில் விழுந்த போது, ஓ! மன்னா, மிகவும் கோபமடைந்த பீமன், ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} சுபலன் மகனின் வில்லை மிக எளிதாக வெட்டினான்.(55)

அப்போது அந்த வீரச் சுபலன் மகன் {சகுனி}, முறிந்த அந்த வில்லை விட்டு விட்டு, மற்றொரு வில்லையும், பதினாறு அகன்ற தலை கணைகளையும் {பல்லங்களையும்} எடுத்தான்.(56) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த அகன்ற தலை கணைகளில் நேரான இரண்டைக் கொண்டு பீமனைத் தாக்கி;(57) மற்றொன்றால் பீமனின் கொடிமரத்தை வெட்டி, இன்னும் இரண்டால் அவனது குடையையும் அவன் {சகுனி} அறுத்தான். அந்தச் சுபலன் மகன் {சகுனி}, எஞ்சியிருப்பவற்றில் நான்கைக் கொண்டு தன் எதிராளியின் நான்கு குதிரைகளைத் துளைத்தான்.(58) இதனால் சினத்தால் நிறைந்த வீரப் பீமன், ஓ! ஏகாதிபதி, இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியைக் கொண்டதுமான ஓர் ஈட்டியை அந்தப் போரில் வீசினான்.(59) பாம்பின் நாக்கைப் போல ஓய்வற்றதும், பீமனின் கரங்களில் இருந்து ஏவப்பட்டதுமான அந்த ஈட்டியானது, உயர் ஆனமச் சுபலன் மகனுடைய தேரின் மீது வேகமாக விழுந்தது.(60)

அப்போது கோபத்தால் நிறைந்த பின்னவன் {சகுனி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அதே ஈட்டியை எடுத்து, அதைப் பீமசேனன் மீது திரும்ப வீசினான்.(61) உயர் ஆன்மப் பாண்டு மகனின் {பீமனின்} இடது கரத்தைத் துளைத்த அது, வானத்தில் இருந்து கீற்றுகளாக விழும் மின்னலைப் போலப் பூமியில் விழுந்தது.(62) ஓ! ஏகாதிபதி, இதனால் தார்தராஷ்டிரர்கள் சுற்றிலும் பெரும் முழக்கத்தை வெளியிட்டனர். எனினும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட தன் எதிரிகளின் அந்தச் சிங்க முழக்கங்களைப் பீமனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(63) அப்போது அந்த வலிமைமிக்கப் பாண்டுவின் மகன் {பீமன்} நாண் பொருத்தப்பட்ட மற்றொரு வில்லை ஒரு கணத்தில் எடுத்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி, தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போரிட்டுக் கொண்டிருந்த சுபலன் மகனின் {சகுனியின்} படைவீரர்களைக் கணைகளால் மறைத்தான்.(64) அவனது நான்கு குதிரைகளையும், பிறகு அவனது சாரதியையும் கொன்றவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், ஓ! மன்னா, அடுத்ததாக, ஒரு கணத்தையும் இழக்காமல் தன் எதிராளியின் கொடிமரத்தை ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அறுத்தான்.(65)

அந்தக் குதிரைகளற்ற தேரை வேகமாகக் கைவிட்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தச் சகுனி, சினத்தால் சிவந்த கண்களுடனும், தயாராகத் தன் கரங்களில் வளைத்து வைக்கப்பட்ட வில்லுடனும் தரையில் நின்று கொண்டு, பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவன் பிறகு, ஓ!மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணற்ற கணைகளால் பீமனை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்கினான்.(66) அந்தக் கணைகளாக் கலங்கடித்த வீரப் பீமன், சினத்தால் சகுனியின் வில்லை அறுத்து, கூரிய கணைகள் பலவற்றால் சகுனியையும் துளைத்தான்.(67) பலமிக்கத் தன் எதிராளியால் ஆழத் துளைக்கப்பட்ட அந்த எதிரிகளை எரிப்பவன் {சகுனி}, ஓ! மன்னா, கிட்டத்தட்ட உயிரற்றவனைப் போலப் பூமியில் விழுந்தான்.(68) அவன் {சகுனி} மயக்கமடைந்ததைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, பீமசேனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் தேரில் அவனைப் {சகுனியைப்} போரிலிருந்து கொண்டு சென்றான்.(69) மனிதர்களில் புலியான அந்தச் சகுனி, துரியோதனனின் தேரில் இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட போது, போரில் இருந்து தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்ட தார்தராஷ்டிரத் துருப்புகள், பீமசேனனால் அந்தப் பயங்கரச் சந்தர்ப்பத்தில் அச்சமடைந்து அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(70)

பெரும் வில்லாளியான அந்தப் பீமசேனனால், சுபலன் மகன் {சகுனி} தோற்கடிக்கப்பட்டதும், பெரும் அச்சத்தால் நிறைந்த உமது மகன் துரியோதனன், தன் தாய்மாமனின் {சகுனியின்} உயிர் மீது கொண்ட மதிப்பால், தன் வேகமானக் குதிரைகளால் சுமக்கப்பட்டுப் பின்வாங்கினான்.(71) போரில் இருந்து மன்னனே {துரியோதனனே} பின்வாங்குவதைக் கண்டத் துருப்புகள், ஓ! பாரதரே, அவ்விருவருக்கும் இடையில் நடந்த மோதலில் இருந்து தப்பிச் சென்றனர்.(72) போரில் இருந்து தார்தராஷ்டிரத் துருப்புக்ள அனைத்தும் பின்வாங்குவதையும், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுவதையும் கண்ட பீமன், வேகமாக விரைந்து, அவர்கள் மீது பாய்ந்து, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவினான்.(73) பீமனால் கொல்லப்பட்டுப் பின்வாங்கிய தார்தராஷ்டிரர்கள், ஓ! மன்னா, கர்ணன் இருந்த இடத்தை அடைந்து, அவனைச் சுற்றி நின்று மீண்டும் போரில் நிலை கொண்டனர்.(74)

பெரும் வலிமையும், பெரும் சக்தியும் கொண்ட கர்ணனே அவர்களுக்குப் புகலிடமாக அமைந்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கண்ட உமது துருப்புகள் ஆறுதலையடைந்து, கப்பல் உடைந்த மாலுமிகள், ஓ! மனிதர்களில் புலியே, துன்பம் நிறைந்த தங்கள் அவல நிலையில், இறுதியாக ஒரு தீவை அடைவதைப் போல, ஒருவரையொருவர் நம்பி உற்சாகமாக நின்றனர். பிறகு அவர்கள், மீண்டும் மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}”.(75-77)

கர்ணன் ஏற்படுத்திய பேரழிவு! – கர்ண பர்வம் பகுதி – 78- பீமன் தார்தராஷ்டிரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தபோது, கர்ணன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன சஞ்சயன்; கர்ணனும், பீமனும் தங்கள் எதிரிகளின் படைகளை அழித்தது; பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற கர்ணன்; கர்ணனைச் சூழ்ந்து கொண்ட பாண்டவப் படை வீரர்கள்; அவர்களைப் புறமுதுகிடச் செய்த கர்ணன்; கர்ணன் ஏற்படுத்திய பேரழிவு; துரியோதனன் அடைந்த மகிழ்ச்சி; பாஞ்சாலர்களின் வீரம்; பாண்டவப் போர்வீரர்கள் ஏற்படுத்திய பேரழிவு…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “அந்தப் போரில் பீமசேனனால் நமது துருப்புகள் பிளக்கப்பட்டபோது, ஓ! சஞ்சயா, துரியோதனனும், சுபலனின் மகனும் {சகுனியும்} என்ன சொன்னார்கள்?(1) அல்லது, வெற்றியாளர்களில் முதன்மையான கர்ணனோ, அந்தப் போரில் என் தரப்பைச் சேர்ந்த போர்வீரர்களோ, கிருபரோ, கிருதவர்மனோ, துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, துச்சாசனனோ என்ன சொன்னார்கள்?(2) என் படையின் போர்வீரர்கள் அனைவருடன் அந்தப் போரில் தனியொருவனாகப் போரிட்ட அந்தப் பாண்டுமகனின் {பீமனின்} ஆற்றல் மிக அற்புதமானது என நான் நினைக்கிறேன்.(3) ராதையின் மகன் {கர்ணன்}, தன் சபதத்தின் படி (பகை) துருப்புகளிடம் நடந்து கொண்டானா? ஓ! சஞ்சயா, எதிரிகளைக் கொல்பவனான அந்தக் கர்ணனே, கௌரவர்களின் செழிப்பும், கவசமும், புகழும், வாழ்வின் நம்பிக்கையுமாவான்.(4) அளவற்ற சக்தி கொண்ட அந்தக் குந்தியின் மகனால் {பீமனால்} படை பிளக்கப்படுவதைக் கண்டு, அதிரதன் மற்றும் ராதையின் மகனான கர்ணன் அந்தப் போரில் என்ன செய்தான்?(5) போரில் வீழ்த்தக் கடினமானவர்களான என் மகன்களோ, நமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களோ, பிற மன்னர்களோ என்ன செய்தனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(6)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பிற்பகலில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் வீரம் கொண்டவனான சூதன் மகன் {கர்ணன்}, பீமசேனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சோமகர்கள் அனைவரையும் தாக்கத் தொடங்கினான்.(7) பெரும்பலம் கொண்ட பீமனும், தார்தராஷ்டிரத் துருப்புகளை அழிக்கத் தொடங்கினான். அப்போது கர்ணன், (தன் சாரதியான) சல்லியனிடம், “பாஞ்சாலர்களிடம் என்னைக் கொண்டு செல்வீராக” என்றான்.(8) உண்மையில், பெரும் நுண்ணறிவு கொண்ட பீமசேனனால் தன் படை முறியடிக்கப்படுவதைக் கண்ட கர்ணன், மீண்டும் தன் சாரதியிடம் {சல்லியனிடம்}, “பாஞ்சாலர்களிடம் மட்டுமே என்னைக் கொண்டு செல்வீராக” என்றான்.(9) இவ்வாறு தூண்டப்பட்டதும்,பெரும் வலிமையைக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், மனோ வேகம் கொண்ட அந்த வெண்குதிரைகளைச் சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் காருஷர்களை நோக்கிச் செலுத்தினான்.(10)

பகைவீரர்களைக் கலங்கடிப்பவனான அந்தச் சல்லியன், வலிமைமிக்க அந்தப் படைக்குள் ஊடுருவி, போர்வீரர்களில் முதன்மையான கர்ணன் எந்த இடத்திற்கெல்லாம் செல்ல விரும்பினானோ அந்த இடங்கள் அனைத்திற்கும் அந்தக் குதிரைகளை உற்சாகமாக நடத்தினான்.(11) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, புலித்தோல்களால் மறைக்கப்பட்டதும், மேகத்தைப் போலத் தெரிந்ததுமான அந்தத் தேரைக் கண்ட பாண்டுக்களும், பாஞ்சாலர்களும் பீதியடைந்தனர்.(12) அந்தப் பயங்கரப் போரில் இடியொலி, அல்லது துண்டுகளாகப் பிளக்கும் மலையின் ஒலிக்கு ஒப்பாக அந்தத் தேரின் சடசடப்பொலியானது கேட்டது.(13) கர்ணன், வில்லின் நாணைத் தன் காதுவரை இழுத்து ஏவிய நூற்றுக் கணக்கான கூரிய கணைகளைக் கொண்டு பாண்டவப்படையின் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைத் தாக்கினான்.(14)

வெல்லப்படாத கர்ணன் அந்த அருஞ்செயல்களைச் செய்து கொண்டிருந்த போது, பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகள் பலரும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(15) உண்மையில், சிகண்டி, பீமன், பிருஷதனின் மகன் திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலியின் (ஐந்து) மகன்கள், சாத்யகி ஆகியோர், அந்த ராதையின் மகனைச் {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டு அவனை அடுத்த உலகத்திற்கு அனுப்பும் விருப்பத்தால், அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(16) மனிதர்களில் சிறந்தவனான அந்த வீரச் சாத்யகி, அந்தப் போரில் இருபது கணைகளால் கர்ணனைத் தோள்ப்பூட்டில் தாக்கினான்.(17) சிகண்டி இருபத்தைந்து கணைகளாலும், திருஷ்டத்யும்னன் ஏழாலும், திரௌபதியின் மகன்கள் அறுபத்துநான்காலும், சகாதேவன் ஏழாலும், நகுலன் ஒரு நூறாலும் அந்தப் போரில் அவனைத்தாக்கினர்.(18) வலிமைமிக்கப் பீமசேனன் அம்மோதலில், சினத்தால் நிறைந்து, நேரான தொண்ணூறு கணைகளால் ராதையின் மகனைத் {கர்ணனைத்} தாக்கினான்.(19)

அப்போது பெரும் வலிமைமிக்க அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, தன் அற்புத வில்லை வளைத்து, தன் எதிரிகளைக் பீடிக்கும்படி கூரிய கணைகள் பலவற்றை விடுத்தான்.(20) அந்த ராதையின் மகன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் வில்லையும், அவனது கொடிமரத்தையும் அறுத்த கர்ணன், சாத்யகியின் நடுமார்பைத் தொண்ணூறு கணைகளால் துளைத்தான். கோபத்தால் நிறைந்த அவன் {கர்ணன்}, பிறகு பீமசேனனை முப்பது கணைகளால் துளைத்தான்.(21,22) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அடுத்ததாக ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு, சகாதேவனின் கொடி மரத்தை அறுத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {கர்ணன்}, மூன்று பிற கணைகளால், சகாதேவனின் சாரதியையும் பீடித்தான்.(23) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக, திரௌபதியின் (ஐந்து) மகன்களைத் தேரிழக்கச் செய்த அவனது செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(24) உண்மையில், தன் நேரான கணைகளால் அந்த வீரர்களைப் போரில் புறமுதுகிடச் செய்த அந்த வீரக் கர்ணன், பாஞ்சாலர்களையும், சேதிக்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரையும் கொல்லத் தொடங்கினான்.(25)

இவ்வாறு அந்தப் போரில் தாக்கப்பட்ட சேதிகளும், மத்ஸ்யர்களும், கர்ணனை மட்டுமே எதிர்த்து விரைந்து, அவன் மீது கணை மாரியைப் பொழிந்தனர்.(26) எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தன் கூரிய கணைகளால் அவர்களைத் தாக்கத் தொடங்கினான். பெரும் ஆற்றலைக் கொண்டவனும், அந்தப் போரில் எந்த ஆதரவுமின்றி, தனியொருவனாகப் போரிட்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, முழு ஆற்றலோடு போராடிய அந்த வில்லாளிகள் அனைவருடனும் போரிட்டு,(27,28) ஓ! ஏகாதிபதி, பாண்டவப் போர்வீரர்கள் அனைவரையும் தன் கணைகளால் தடுத்த பெரும் சாதனையை நான் கண்டேன். ஓ! பாரதரே, அந்தச் சந்தர்ப்பத்தில் கரநளினம் கொண்ட அந்த உயர் ஆன்ம கர்ணனிடம்,(29) தேவர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் அனைவரும் நிறைவு கொண்டனர். ஓ! மனிதர்களில் சிறந்தவரே, தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகள் அனைவரும்,(30) பெரும் தேர்வீரர்களில் முதன்மையானவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதல்வனுமான கர்ணனைப் புகழ்ந்தனர்.

அப்போது கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பகைவரின் அந்தப் படையை,(31) வலிமைமிக்கதும், சுடர்மிக்கதுமான காட்டுநெருப்பானது, கோடைக்காலத்தில் உலர்ந்த புற்குவியலை எரிப்பதைப் போல எரித்தான். இவ்வாறு கர்ணனால் கொல்லப்பட்ட பாண்டவத் துருப்புகள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, கர்ணனின் கண் முன்பாகவே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது. கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால் அந்தப் போரில் இவ்வாறு தாக்கப்பட்டபோது, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஓலங்கள் எழுந்தன. அவ்வொலியைக் கேட்டு அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களும், கர்ணனின் எதிரிகளுமான அந்தப் பரந்த பாண்டவப் படையானது,(32-34) கர்ணனையே அந்தப் போரின் ஒரே போர்வீரனாகக் கருதியது. பிறகு எதிரிகளை நொறுக்குபவனான அந்த ராதையின் மகன், மீண்டும் ஓர் அற்புத சாதனையை அடைந்தான்.(35) ஒன்று சேர்ந்திருந்தவர்களான பாண்டவர்களால் அதன்காரணமாக அவனை {கர்ணனைப்} பார்க்கக்கூட முடியவில்லை.

பெருகும் நீர்த்திரளானது மலையை அடையும்போது பிளக்கப்படுவதைப் போலவே,(36) அந்தப் பாண்டவப் படையும், கர்ணனைச் சந்தித்ததும் பிளந்தது. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தக் கர்ணன், அந்தப் பரந்த பாண்டவப் படையை எரித்து, புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போல அங்கே நின்று கொண்டிருந்தான். ஓ! மன்னா, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்த வீரன், துணிச்சல் மிக்கத் தன் எதிரிகளின் கரங்களையும், சிரங்களையும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகளையும் தன் கணைகளால் வெட்டினான். தந்தக் கைப்பிடிகள் கொண்ட வாள்கள், கொடிமரங்கள், ஈட்டிகள், குதிரைகள், யானைகள்,(37-39) பல்வேறு வகையான தேர்கள், கொடிகள், அச்சுகள், நுகத்தடிகள், பல்வேறு வகைகளினான சக்கரங்கள் ஆகியன,(40) ஓ! மன்னா, ஒரு போர்வீரனின் சபதத்தை நோற்கும் கர்ணனால் பல்வேறு வழிகளில் வெட்டப்பட்டன.

ஓ! பாரதரே, அங்கே கர்ணனால் கொல்லப்பட்ட யானைகள், குதிரைகள் ஆகியவற்றுடன் கூடியவையும்,(41) சதைகள் மற்றும் குருதியால் சேறானவையுமான பூமி கடக்கமுடியாததாகியது. கொல்லப்பட்ட குதிரைகள், காலாட்கள், முறிந்த தேர்கள், இறந்த யானைகள் ஆகியவற்றின் விளைவால் அந்தக் களத்தில் சமமற்ற மற்றும் சமமான இடங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(42) கர்ணனின் (தெய்வீக) ஆயுதம் வெளிப்படுத்தப்பட்ட போது கணைகளால் உண்டான அந்த அடர்த்தியான இருளில், போராளிகளால் நண்பர்களையும், எதிரிகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(43) ஓ! ஏகாதிபதி, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளால் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் முற்றாக மறைக்கப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இவ்வாறு வீரியத்துடன் போராடிக்கொண்டிருந்த பாண்டவர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், காட்டில் ஒரு கோபக்கார சிங்கத்தால் முறியடிக்கப்படும் மான்கூட்டத்தைப் போலவே, ராதையின் மகனால் {கர்ணனால்} மீண்டும் மீண்டும் பிளக்கப்பட்டனர்.(44-46)

பாஞ்சாலத் தேர்வீரர்களில் முதன்மையானவர்களையும், (பிற) எதிரிகளையும் முறியடித்தவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான கர்ணன், அந்தப் போரில், சிறு விலங்குகளைக் கொல்லும் ஓர் ஓநாயைப் போலப் பாண்டவப் போர்வீரர்களைக் கொன்றான். போரில் புறமுதுகிடும் பாண்டவப் படையைக் கண்டவர்களும், பெரும் வலிமைமிக்கத் தார்தராஷ்டிர வில்லாளிகள்,(47,48) பின்வாங்கிச் செல்லும் அந்தப் படையைப் பயங்கரக் கூச்சலிட்டபடியே தொடர்ந்து சென்றனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போது பெரும் மகிழ்ச்சியில் நிறைந்த துரியோதனன்,(49) படையின் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கச்செய்தான். மனிதர்களில் முதன்மையானவர்களான அந்தப் பாஞ்சாலப் பெரும் வில்லாளிகள் பிளந்தாலும் கூட,(50) மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு மீண்டும் போரிடுவதற்காக வீரமாகத் திரும்பினர்.

எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மனிதர்களில் காளையும், எதிரிகளை அழிப்பவனுமான ராதையின் மகன், திரும்பி வந்த அந்த வீரர்களைப் பல்வேறு வழிகளில் பிளந்தான். ஓ! பாரதரே, அங்கே பாஞ்சாலர்களில் இருபது தேர்வீரர்களும், சேதி போர்வீரர்களில் நூறு பேரும் கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தேர்த்தட்டுகளையும், குதிரைகளின் முதுகுகளையும் வெறுமையாகச் செய்து,(51-53) யானைகளின் கழுத்திலிருந்து போரிட்ட போராளிகளைக் கொன்று, காலாட்படை வீரர்களை முறியடித்தவனும் எதிரிகளை எரிப்பவனும், பெரும் துணிச்சல்மிக்கவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, நடுப்பகல் சூரியனைப் போலக் காணப்பட முடியாதவனாகி, யுக முடிவின் அந்தகனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். இவ்வாறு, ஓ! ஏகாதிபதி, எதிரிகளைக் கொல்பவனும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தக் கர்ணன், காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றைக் கொன்றபடியே தன் தேரில் நின்றிருந்தான். உண்மையில், உயிரினங்கள் அனைத்தையும் கொன்றுவிட்டு நின்று கொண்டிருக்கும் வலிமைமிக்கக் காலனைப் போலவே,(54-56) அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் கர்ணனும், சோமகர்களைக் கொன்றுவிட்டுத் தனியாக நின்று கொண்டிருந்தான். பிறகு, பாஞ்சாலர்களிடம் நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாகத் தெரிந்தது,(57) கர்ணனால் இவ்வாறு தாக்கப்பட்டாலும் கூட அவர்கள் போரில் முகப்பில் இருந்த அந்த வீரனிடம் இருந்து தப்பி ஓட மறுத்தனர்

அந்த நேரத்தில், மன்னன் (துரியோதனன்), துச்சாசனன், சரத்வானின் மகன் கிருபர்,(58) அஸ்வத்தாமன், கிருதவர்மன், பெரும் வலிமையைக் கொண்ட சகுனி ஆகியோர் பாண்டவப் போர்வீரர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றனர்.(59) ஓ! ஏகாதிபதி, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சகோதரர்களான கர்ணனின் மகன்கள் இருவரும், சினத்தால் நிறைந்து, களத்தின் பல்வேறு பகுதிகளில் பாண்டவப் படையைக் கொன்று கொண்டிருந்தனர்.(60) பேரழிவு நேர்ந்த அந்தப் போர் நடந்த இடம் பயங்கரமானதாகவும், கொடூரமானதாகவும் இருந்தது. அதே போலப் பாண்டவ வீரர்களான திருஷ்டத்யும்னன், சிகண்டி,(61) திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோரும் சினத்தால் நிறைந்து உமது படையைக் கொன்றனர். இவ்வாறே பாண்டவர்களுக்கு மத்தியில் களத்தின் அனைத்திடங்களிலும் பேரழிவு நேர்ந்தது, மேலும் இவ்வாறே உமது படையும், வலிமைமிக்கப் பீமனின் கரங்களில் நேர்ந்த பேரிழப்பால் துன்புற்றது” {என்றான் சஞ்சயன்}.(62)

சல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 79-கர்ணனைக் கண்டு களத்தில் குருதிப்புனலை உண்டாக்கிய அர்ஜுனன்; கர்ணனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று கிருஷ்ணனனிடம் சொன்னது; அர்ஜுனனைக் கண்டு கர்ணனுக்குத் தகவல் தெரிவித்த சல்லியன் கர்ணனை அர்ஜுனனிடம் போரிட வற்புறுத்தியது; சல்லியனின் வார்த்தைகளில் ஆறுதல் அடைந்த கர்ணன், அர்ஜுனனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று சல்லியனுக்கு உறுதியளித்தது; சல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்; அர்ஜுனனுக்கு இணையான போர்வீரன் எவனும் இவ்வுலகில் இல்லை என்று சொன்ன கர்ணன்; அர்ஜுனனைக் கண்டதும் தன் இதயத்திற்குள் அச்சம் நுழைகிறது என்றும், பார்த்தனே வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்றும் சொன்னது; அர்ஜுனனைத் தடுக்கக் கௌரவர்களை ஏவிய கர்ணன்; அவர்கள் அனைவரையும் தாக்கிய அர்ஜுனன்; அஸ்வத்தாமனையும், கிருபரையும் தேரற்றவர்களாகச் செய்தது; பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில நடந்த கடும் மோதல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி, (எதிரியின்) நால்வகைப் படைகளையும் கொன்று, அந்தப் பயங்கரப் போரில் கோபக்கார சூதன் மகனையும் {கர்ணனையும்} கண்டு,(1) சதை, ஊனீர் மற்றும் எலும்புகளுடன் கூடிய பழுப்பு நிறக் குருதி ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(2) மனிதத் தலைகளே அதன் பாறைகளும், கற்களுமாகின. யானைகளும், குதிரைகளும் அதன் கரைகளாக அமைந்தன. வீரப் போராளிகளின் எலும்புகளால் நிறைந்த அது, கருங்காக்கைகள் மற்றும் கழுகுகளின் அலறல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது. குடைகள் அதன் அன்னங்களாகின, அல்லது தெப்பங்களாகின. அந்த ஆறானது, தன் ஓடைகளில் மரங்களை இழுத்துச் செல்வதைப் போல வீரர்களைக் கொண்டு சென்றது.(3) (வீழ்ந்து கிடந்த) கழுத்தணிகள் அதன் தாமரைக்கூட்டங்களாகவும், தலைப்பாகைகள் அதன் சிறந்த நுரைகளாகவும் ஆகின. விற்களும், கணைகளும் அதன் மீன்களாகின; மனிதர்களால் நொறுக்கப்பட்ட கிரீடங்கள் அதன் பரப்பில் மிதந்து கொண்டிருந்தன[1].(4) கேடயங்களும், கவசங்களும் அதன் சுழல்களாகின, தேர்கள் அதன் படகுகளாகின. வெற்றியை விரும்பும் மனிதர்களால் எளிதாகக் கடக்கத்தக்கதாகவும், கோழைகளால் கடக்கப்பட முடியாததாகவும் அஃது இருந்தது.(5)

அந்த ஆற்றைப் பாயச் செய்தவனும், பகைவரைக் கொல்பவனும், மனிதர்களில் காளையுமான பீபத்சு {அர்ஜுனன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(6) “ஓ! கிருஷ்ணா, அதோ சூதன் மகனின் {கர்ணனின்} கொடிமரம் தெரிகிறது. அங்கே பீமசேனரும், பிறரும் அந்தப் பெரும் தேர்வீரனுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அங்கே கர்ணனிடம் அச்சம் கொண்ட பாஞ்சாலர்கள் தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அங்கே கர்ணனோடு கூடிய மன்னன் துரியோதனன், பாஞ்சாலர்களை முறியடிக்கையில், தன் தலைக்கு மேல் வெண்குடையுடன் மிகப் பிரகாசமாகத் தெரிகிறான்.(8) அங்கே சூதன் மகனால் பாதுகாக்கப்படும் கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} ஆகியோர் அம்மன்னன் துரியோதனனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.(9) ஓ! கிருஷ்ணா, அங்கே கடிவாளத்தைப் பிடிப்பதை நன்கறிந்தவரான சல்லியர், கர்ணனின் தேர்த்தட்டில் அமர்ந்து, அந்த வாகனத்தை வழிநடத்தியபடியே மிகப் பிரகாசமாகத் தெரிகிறார்.(10) நான் பேணிக்காத்த விருப்பமாகையால், என்னை அந்த வலிமைமிக்கத் தேர்வீரனிடம் கொண்டு செல்வாயாக. கர்ணனைக் கொல்லாமல் நான் இந்தப் போரில் திரும்புவதில்லை. அல்லது, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்த ராதையின் மகன் {கர்ணன்}, நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தர்களையும், சிருஞ்சயர்களையும் அழித்துவிடுவான்” என்றான் {அர்ஜுனன்}.(12)

இவ்வாறு சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்}, வேகமாகத் தன் தேரை உமது படைக்கு எதிராகவும், கர்ணனுக்கும், சவ்யசச்சினுக்கும் {அர்ஜுனனுக்கும்) இடையில் ஒரு தனிப்போரை உண்டாக்கவும், வலிமைமிக்க வில்லாளியான கர்ணனை நோக்கிச் சென்றான்.(13) உண்மையில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஹரி {கிருஷ்ணன்}, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆணையின் பேரில், பாண்டவத் துருப்புகள் அனைத்திற்கும் (அந்தச் செயலால்) உறுதியளித்தபடியே தன் தேரில் சென்றான்.(14) பிறகு அர்ஜுனனுடைய வாகனத்தின் சடசடப்பொலியானது, வாசவனின் {இந்திரனின்} பேராற்றல் வாய்ந்த வஜ்ரத்தின் ஒலியைப் போல அந்தப் போரில் உரக்க எழுந்தது.(15) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், அளவில்லா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் தேர்ச்சக்கரங்களின் உரத்த சடசடப்பொலியோடு உமது படையை வென்றான் {வென்றபடியே} (வந்தான்).(16)

வெண்குதிரைகளையும், கிருஷ்ணனைச் சாரதியாகவும் கொண்ட அர்ஜுனன் இவ்வாறு முன்னேறி வருவதைக் கண்ட மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் கொடிமரத்தையும் கண்டு, கர்ணனிடம்,(17) “தன் வாகனத்தில் வெண்குதிரைகளைப் பூட்டியவனும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டவனுமான அந்தத் தேர்வீரன் {அர்ஜுனன்}, போரில் தன் எதிரிகளைக் கொன்றவாறே அதோ வருகிறான். நீ யாரை விசாரித்தாயோ அவன் அதோ வருகிறான்.(18) அதோ அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். இன்று உன்னால் அவனைக் {அர்ஜுனனைக்} கொல்ல முடியுமென்றால், அஃது எங்களுக்குப் பெரும் நன்மையைச் செய்ததாகும்.(19) ஓ! கர்ணா, உன்னோடு மோத விரும்பி, நமது போர்வீரர்களில் தலைமையானவர்களைக் கொன்றபடியே அவன் வருகிறான். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, வேறு எவனாலும் அவன் தடுக்கப்பட முடியாதவனாவான். பாரதக் குலத்தின் அந்த வீரனை எதிர்த்து நீ செல்வாயாக.(20)

தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொல்லும் அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அங்கே தார்தராஷ்டிரப்படை அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகப் பிளக்கிறது.(21) நம் போர்வீரர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, சினத்திலும், சக்தியிலும் பெருகி பெரும் வேகத்தோடு வரும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தோற்றத்திலிருந்து, அவன் உன்னோடு மோதவே {இவ்வாறு} வருகிறான் என நான் நினைக்கிறேன்.(22) கோபத்தில் சுடர்விடும் பார்த்தன் {அர்ஜுனன்}, உன்னையன்றி வேறு யாராலும்; அதிலும் குறிப்பாக (உன்னால்) விருகோதரன் {பீமன்} மிக அதிமாகப் பீடிக்கப்படும்போது தன் போர்விருப்பத்தை விடவே மாட்டான்.(23) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் உன்னால் மிக அதிகமாகச் சிதைக்கப்பட்டு, தேரற்றவனாகச் செய்யப்பட்டான் என்பதை அறிந்தும், சிகண்டி, சாத்யகி, பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன்,(24) திரௌபதியின் மகன்கள் (ஐவர்), யுதாமன்யு, உத்தமௌஜஸ், சகோதரர்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரை(25) {ஆகியோரின் அவலநிலையைக்} கண்டும், எதிரிகளை எரிப்பவனான அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} உன்னை எதிர்த்துத் தனித்தேரில் மூர்க்கமாக வந்து கொண்டிருக்கிறான்.(26)

பிற போராளிகளைத் தவிர்த்துவிட்டு அவன் {அர்ஜுனன்} நம்மை எதிர்த்தே மிக வேகமாக வருகிறான் என்பதில் ஐயமில்லை. ஓ! கர்ணா, (நம்மில் அவனை எதிர்க்கக் கூடியவர் எவரும் இல்லை என்பதால்) நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக.(27) (பொங்கும் கடலைத் தடுக்கும்) கரையைப் போல, போரில் அந்தக் கோபக்கார அர்ஜுனனைத் தடுக்க உன்னைத் தவிர வேறு எந்த வில்லாளியையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(28) அவனது பக்கங்களுக்கோ, பின்புறத்திற்கோ எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக நான் காணவில்லை. அவன் தனி ஒருவனாகவே உன்னை எதிர்த்து வருகிறான். இப்போது நீ வெற்றியடைய முயற்சிப்பாயாக.(29) போரில் இரு கிருஷ்ணர்களுடனும் {கருப்பர்களுடன்} மோத நீ ஒருவனே இயன்றவன். ஓ! ராதையின் மகனே, அ்ஃது உன் பொறுப்பேயாகும். எனவே தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வாயாக.(30) பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன், கிருபர் ஆகியோருக்கு நீ இணையானவனாவாய். இந்தப் பெரும்போரில் முன்னேறி வரும் அந்தச் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நீ தடுப்பாயாக.(31)

உண்மையில், ஓ! கர்ணா, தன் நாவை அடிக்கடி வீசும் பாம்புக்கோ, முழங்கும் காளைக்கோ, காட்டுப் புலிக்கோ ஒப்பான இந்தத் தனஞ்சயனை {அர்ஜுனனை} நீ கொல்வாயாக.(32) அங்கே அந்த மன்னர்களும், தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஒருவரையொருவர் கருதிப்பாராமல் வேகமாகத் தப்பி ஓடுகின்றனர்.(33) ஓ! சூதன் மகனே, ஓ! வீரா {கர்ணா}, போரில் பின்வாங்கிச் செல்லும் அந்த வீரர்களின் அச்சங்களை அகற்ற உன்னைத் தவிர வேறு எந்த மனிதனும் இல்லை.(34) ஓ! மனிதர்களில் புலியே, போரில் உன்னையே தஞ்சமாக அடைந்த அந்தக் குருக்கள் அனைவரும், உன் பாதுகாப்பை விரும்பி உன்னையே நம்பி நிற்கின்றனர்.(35) ஓ! ராதையின் மகனே, கிட்டத்தட்ட வெல்ல முடியாதவர்களான வைதேஹர்கள், அம்பஷ்டர்கள், காம்போஜர்கள், நக்னஜித்கள் மற்றும் காந்தாரர்கள் ஆகியோரைப் போரில் வீழ்த்திய உன் துணிவைத் திரட்டிக் கொண்டு அந்தப் பாண்டுவின் மகனை எதிர்த்து நீ செல்வாயாக.(36) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன் பெரும் ஆற்றலைத் திரட்டிக் கொண்டு, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனிடம் (அர்ஜுனனிடம்) எப்போதும் நிறைவுடன் இருக்கும் விருஷ்ணி குலத்து வாசுதேவனை {கிருஷ்ணனை} எதிர்த்துச் செல்வாயாக” என்றான் {சல்லியன்}. 37

கர்ணன் {சல்லியனிடம்}, “நீர் இப்போது வழக்கமான மனநிலையை அடைந்துவிட்டதாகவும், இப்போது உம்மை எனக்கு ஏற்புடையவராகவும் நான் காண்கிறேன். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} எந்த அச்சமும் அடைய வேண்டாம்.(38) என் கரங்களின் வலிமையை இன்று பாரும், என் திறனையும் பாரும். பாண்டவர்களின் வலிமைமிக்கப்படையையும், மனிதர்களில் சிங்கங்களான அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் நான் இன்று தனியொருவனாகவே கொல்வேன்.(39) நான் இன்று அந்த வீரர்கள் இருவரையும் கொல்லாமால் களத்தைவிட்டுத் திரும்ப மாட்டேன். அல்லது அவ்விருவரால் இன்று கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் நான் தூங்குவேன். போரில் வெற்றியானது உறுதியில்லாததாகும். கொன்றோ, கொல்லப்பட்டோ நான் இன்று என் காரியத்தை நிறைவேற்றுவேன்” என்றான் {கர்ணன்}.(40,41)

சல்லியன், “ஓ! கர்ணா, இந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் (அர்ஜுனன்) தனியொருவனாக இருந்தாலும் வெல்லப்பட்டமுடியாதவன் என்றே பெரும் தேர்வீரர்கள் அனைவரும் சொல்கின்றனர். மேலும், கிருஷ்ணனால் அவன் பாதுகாக்கப்பட்டிருக்கும்போது, அவனை வெல்ல எவன் துணிவான்?” என்றான்.(42)

கர்ணன், “நான் கேட்விப்பட்டவரை, இத்தகு மேன்மையான தேர்வீரன் எவனும் பூமியில் பிறக்கவில்லை. அப்படிப்பட்ட பார்த்தனை எதிர்கொள்ளப்போகும் என் ஆற்றலைக் காண்பீராக.(43) தேர்வீரர்களில் முதன்மையான இந்தக் குருகுல இளவரசன் {அர்ஜுனன்}, அவனது வெண்ணிறக் குதிரைகளால் சுமக்கப்பட்டுப் போரில் திரிந்து வருகிறான். ஒருவேளை அவன் {அர்ஜுனன்} இன்று என்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைக்கலாம். எனினும், கர்ணனின் மரணத்தோடு இவர்கள் (குருக்கள்) அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்பதை அறிவீராக.(44) இந்த இளவரசனின் கரங்கள் இரண்டும் எப்போதும் வியர்வையால் மறைக்கப்படுவதில்லை. அவை ஒருபோதும் நடுங்குவதுமில்லை. அவை பருத்தவையாகவும், வடுக்களோடு கூடியவையாகவும் இருக்கின்றன. ஆயுதப் பயன்பாட்டில் உறுதியாக இருக்கும் அவன், பெரும் திறனையும், பெரும் கரநளினத்தையும் கொண்டிருக்கிறான். உண்மையில், அந்தப் பாண்டுவின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு) இணையான போர்வீரன் எவனும் இல்லை.(45)

அவன் {அர்ஜுனன்} பெரும் எண்ணிகையிலான கணைகளை எடுத்து, அவை ஏதோ ஒன்று என்பதைப் போல அவன் அவற்றை ஏவுகிறான். வேகமாக வில்லின் நாண்கயிற்றில் அவற்றைப் பொருத்தி, இரு மைல்கள் {ஒரு குரோச} தொலைவிற்கு அவன் அவற்றை ஏவுகிறான். அவை எப்போதும் எதிரியின் மீது பாய்கின்றன. அவனுக்கு இணையாக வேறு எந்த வீரன் இவ்வுலகத்தில் இருக்கிறான்?(46) பெரும் சுறுசுறுப்புடன் கூடிய அந்த அதிரதன், கிருஷ்ணனைத் தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டவத்தில் தேவன் அக்னியை நிறைவு செய்தான். அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயர் ஆன்மக் கிருஷ்ணன் தன் சக்கரத்தையும், பாண்டுவின் மகனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தையும் அடைந்தனர்.(47) அழிவேதும் அறியாதவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அவன் அங்கேதான் வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தன் பயங்கரத் தேரையும், தெய்வீகமானவையும், வற்றாதவையுமான தன்னிரு அம்பறாத்தூணிகளையும், இன்னும் பல்வேறு தெய்வீக ஆயுதங்களையும் நெருப்புத் தேவனிடம் {அக்னி தேவனிடம்} இருந்து அடைந்தான்.(48) இந்திரலோகத்தில் அவன் தன் சங்கான தேவதத்தத்தை அடைந்து, எண்ணற்ற தைத்தியர்களையும், காலகேயர்கள் அனைவரையும் கொன்றான். அவனுக்கு மேன்மையானவனாக இவ்வுலகில் எவன் இருக்கிறான்?(49) மகிமைமிக்க ஆன்மா கொண்ட அவன், நல்லதொரு போரில் மகாதேவனை {சிவனை} நிறைவு செய்து, அவனிடமிருந்து பயங்கரமானதும், வலிமைமிக்கதும், மூவுலகங்களையும் அழிக்கவல்லதுமான பாசுபத ஆயுதத்தை அடைந்தான்.(50)

பல்வேறு லோகபாலர்களும் ஒன்றாக இணைந்து அளவிலா சக்தியைக் கொண்ட தங்கள் ஆயுதங்களை அவனுக்குக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டே அந்த மனிதர்களில் சிங்கம் போரிட ஒன்றாகச் சேர்ந்து வந்த அசுரர்களான காலகஞ்சர்களை வேகமாக அழித்தான்.(51) அதே போலவே, விராடனின் நகரத்திலும், ஒரே தேரில் தனியொருவனாக வந்து நம் அனைவரையும் வென்று, நம்மிடமிருந்த கால்நடைச் செல்வத்தைப் பறித்து, முதன்மையான தேர்வீரர்களின் ஆடைகளையும் (அவற்றின் பகுதிகளையும்) எடுத்துக் கொண்டான்.(52) விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனைத்} தன் கூட்டாளியாகக் கொண்டவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானவனும், இத்தகு சக்தியையும், பண்புகளையும் கொண்டவனுமான அந்த வீரனை அறைகூவி அழைப்பதால், ஓ! சல்லியரே, துணிவின் எல்லையில் உலகம் அனைத்திலும் முதன்மையான ஒருவனாக நான் என்னைக் கருதிக் கொள்கிறேன்.(53) மேலும், எவன் நாராயணனோ, எவன் எதிரியற்றவனோ, எவனது பண்புகள், உலகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பத்தாயிரம் வருடங்களானாலும் சொல்லி முடியாதோ, அந்த மதங்கொண்ட சக்தியை உடையவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு எப்போதும் வெற்றியடைபவனுமான அந்தக் கேசவனால் {கிருஷ்ணனால்} அவன் {அர்ஜுனன்} பாதுகாக்கப்படுகிறான். ஒரே தேரில் அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் கண்டு, வீரத்துடன் சேர்ந்து என் இதயத்திற்குள் அச்சமும் நுழைகிறது[2].(54,55)

பார்த்தனே {அர்ஜுனனே} வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன், அதே வேளையில், சக்கரத்தைக் கொண்ட மோதல்களில் நாராயணன் ஒப்பற்றவனாவான். வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} இவ்வாறானவர்களே. உண்மையில், இமய மலைகள் அவற்றின் இருப்பில் இருந்து நகரலாம், ஆனால் இவ்விரு கிருஷ்ணர்களும் நகரார்கள்.(56) அவ்விருவரும் வீரர்களாகவும், பெரும் திறனைக் கொண்டவர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டில் உறுதிமிக்கவர்களாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வைரத்தாலான உடலைக் கொண்டவர்களாக {பலசாலிகளாக} இருக்கிறார்கள்.(57) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, பாண்டு மகனுடன் போரிட வேண்டும் என்று நான் பேணிக்காத்து வந்த விருப்பம் இன்று தாமதமில்லாமல் நிறைவேறப் போகிறது. அற்புதம் நிறைந்ததும், ஒப்பற்றதும், அழகானதுமான அந்தப் போர் விரைவில் நடக்க இருக்கிறது. போரில் இன்று அவ்விருவரையும் நான் வீழ்த்துவேன், அல்லது அந்த இரு கிருஷ்ணர்களும் இன்று என்னை வீழ்த்துவார்கள்” என்றான் {கர்ணன்}.(58) இவ்வார்த்தைகளைச் சல்லியனிடம் சொன்னவனும், பகைவர்களைக் கொல்பவனுமான கர்ணன், அந்தப் போரில் மேகங்களின் கர்ஜனையைப் போல உரத்த முழக்கங்களைச் செய்யத் தொடங்கினான். பிறகு, குருக்களில் முதன்மையான உமது மகனை {துரியோதனனை} அடைந்து, அவனால் மரியாதையாக வணங்கப்பட்ட கர்ணன், அந்த இளவரசனிடமும் {துரியோதனனிடமும்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்களான கிருபர் மற்றும் போஜத் தலைவன் கிருதவர்மன் ஆகியோரிடமும், தன் மகனோடு கூடிய காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் சொந்தத் தம்பி மற்றும் காலாட்படை, குதிரை, மற்றும் யானை வீரர்கள் ஆகியோரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(60)

அவன் {கர்ணன்}, “அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனை நோக்கி விரைவீராக, பூமியின் தலைவர்களே, சுற்றிலும் உள்ள பாதைகளை மறைத்து, முயற்சியால் அவர்களைக் களைப்படையச் செய்து, ஆழமாக அவர்களைச் சிதைத்தப்பிறகு, எளிதாக அவர்களைக் கொல்லலாம்” என்றான்.(61) “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அந்த முதன்மையான வீரர்கள், அர்ஜுனனைக் கொல்லும் விருப்பத்துடன் அவனை எதிர்த்து வேகமாகச் சென்றனர். அப்போது கர்ணனின் ஆணைக்குக் கீழ்ப்படிந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அந்தப் போரில் எண்ணற்ற கணைகளால் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கத் தொடங்கினர்.(62) பெரும் அளவிலான நீரைக் கொண்ட பெருங்கடல் ஆண் {நதிகள்} மற்றும் பெண் {நதங்கள் = ஓடைகள்} ஆறுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதைப் போலவே, அர்ஜுனன் அந்தப் போரில் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் எதிர்கொண்டான்.(63) அவன் எப்போது தன் சிறந்த கணைகளை வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை அவனது எதிரிகளால் காண முடியவில்லை. தனஞ்சயனால் ஏவப்பட்ட கணைகளால் துளைக்கப்பட்டுத் தொடர்ச்சியாக உயிரையிழந்து கீழே விழும் மனிதர்களும், குதிரைகளும், யானைகளும் மட்டுமே அங்கே காணக்கூடியனவாக இருந்தன.(64) நோயுற்ற கண்களைக் கொண்ட மனிதர்களால் சூரியனைப் பார்க்க முடியாததைப் போலவே, அந்தச் சந்தர்ப்பத்தில் காண்டீவத்தையே அழகான வட்டிலாகவும், கணைகளையே தன் கதிர்களாகவும் கொண்டவனும், யுக முடிவில் எழுந்து அனைத்தையும் எரிக்கும் சூரியனின் சக்தியைக் கொண்டவனுமான ஜயனை {அர்ஜுனனைக்} கௌரவர்களால் பார்க்கவும் முடியவில்லை.(65)

சிரித்துக் கொண்டே இருந்த பார்த்தன், தன் கணை மாரியால், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் தன் மீது ஏவப்பட்ட சிறந்த கணைகளை அறுத்தான். பதிலுக்கு அவன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை முழுமையான வட்டமாக வளைத்து எண்ணற்ற கணைகளால் அவர்களைத் தாக்கினான்.(66) சூரியனின் கடுங்கதிர்கள், ஜியேஷ்ட {ஆனி} மற்றும் ஆஷார {ஆடி} மாதங்களில் (பூமியின்) நீரை எளிதாக வற்ற செய்வதைப் போலவே, ஓ மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனும், தன் எதிரிகளின் கணைகளைக் கலங்கடித்து உமது துருப்புகளை எரித்தான்.(67) அப்போது கிருபர், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, உமது மகன் {துரியோதனன்} ஆகியோர் கணை மாரிகளை ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்} தன் கணைகளை ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். உண்மையில், அவர்கள் அனைவரும், மலை மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அவன் மீது தங்கள் கணைகளை மழையாகப் பொழிந்தனர்.(68) எனினும் அந்தப் பாண்டுவின் மகன், பெரும் சுறுசுறுப்புடனும், வேத்துடனும் கூடியவனாக, தன்னைக் கொல்லும் விருப்பத்துடன் கூடிய அந்தச் சாதனைப் போர்வீரர்களால் அந்தப் பயங்கரப் போரில் பெருங்கவனத்துடன் தன் மீது ஏவப்பட்ட அந்தச் சிறந்த கணைகளைத் தன் கணைகளால் அறுத்து, தன் எதிராளிகள் ஒவ்வொருவரின் மார்பையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(69) கணைகளையே தன் கடுங்கதிர்களாகக் கொண்ட அந்த அர்ஜுனச் சூரியன், பிரகாசமான ஒளிவட்டமாக அமைந்த காண்டீவத்தை முழுதாக வளைத்து, தன் எதிரிகளை எரித்த போது, ஜியேஷ்ட மற்றும் ஆஷார மாதங்களில் தன் பிரகாசமான ஒளிவட்டத்திற்குள் இருக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(70)

அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பத்து முதன்மையான கணைகளால் தனஞ்சயனையும், மூன்றால் கேசவனையும், நான்கால் தனஞ்சயனின் நான்கு குதிரைகளையும் துளைத்து, அர்ஜுனனின் கொடியிலிருந்த குரங்கின் மீது கணைகள் பலவற்றைப் பொழிந்தான்.(71) இவையாவற்றுக்காகவும் தனஞ்சயன் தன் எதிராளியின் கையில் முழுமையாக வளைக்கப்பட்டிருந்த வில்லை அறுத்து, ஒரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது {அஸ்வத்தாமனின்} சாரதியுடைய தலையையும், நான்கு பிற கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் வெட்டி, இறுதியாகத் தன் எதிரியின் தேரில் இருந்த கொடிமரத்தை மூன்று பிற கணைகளால் வீழ்த்தினான்.(72) அப்போது கோபத்தால் நிறைந்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தக்ஷகனின் உடலைப் போலப் பிரகாசமானதும், விலைமதிப்புமிக்கதும், ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் மலையின் அடிவாரத்தில் பிடிபட்ட ஒரு பெரும்பாம்புக்கு ஒப்பானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(73) பூமியில் நின்றவாறே அந்த வில்லுக்கு நாண்பொருத்தி, ஒன்றன் பின் ஒன்றாகக் கணைகளையும், ஆயுதங்களையும் வெளியே எடுத்தவனும், பல சாதனைகள் விஞ்சி நின்ற போர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான அவ்விருவரையும் மிக அருகில் இருந்து பல கணைகளால் துளைத்தான்.(74) வலிமைமிக்கத் தேர்வீரர்களான கிருபர், போஜன் {கிருதவர்மன்}, உமது மகன் {துரியோதனன்} ஆகியோர் போரின் முகப்பில் நின்று கொண்டு, அந்தப் பாண்டவர்களில் காளை மீது பாய்ந்து, இருளை அகற்றுபவனை {சூரியனை} மறைக்கும் மேகங்களைப் போல அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(75)

ஆயிரங்கரங்கள் கொண்டோனுக்கு (கார்த்தவீரியனுக்கு) இணையான ஆற்றலைக் கொண்டவனான பார்த்தன் {அர்ஜுனன்}, பழங்காலத்தில் தன் கணைகளை (அசுரன்) பலியின் மீது பொழிந்த வஜ்ரதாரியை {இந்திரனைப்} போலக் கணை பொருத்தப்பட்ட கிருபரின் வில், அவரது குதிரைகள், அவரது கொடிமரம் மற்றும் அவரது சாரதியின் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(76) பார்த்தனின் கணைகளால் ஆயுதங்கள் அழிக்கப்பட்டவரும், அந்தப் பெரும்போரில் தன் கொடிமரமும் நொறுக்கப்பட்டவருமான கிருபர், முன்பு கங்கையின் மைந்தனான பீஷ்மர், (அவர் வீழ்ந்த நாளில்) இதே கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட போர்வீரனுடைய எத்தனை கணைகளால் தாக்கப்பட்டாரோ அதே அளவுக்கு ஆயிரக்கணக்கான பல்வேறு கணைகளால் அர்ஜுனானால் பீடிக்கப்பட்டார்.(77) அப்போது அந்த வீரப் பார்த்தன், முழங்கிக் கொண்டிருந்த உமது மகனின் கொடிமரத்தையும், வில்லையும் தன் கணைகளால் அறுத்தான். அடுத்ததாகக் கிருதவர்மனின் அழகிய குதிரைகளை அழித்த அவன், பின்னவனின் {கிருதவர்மனின்} கொடிமரத்தையும் அறுத்தான்.(78) பிறகு அவன், பகைவரின் படையில் இருந்த யானைகளையும், குதிரைகளோடு கூடிய தேர்களையும், சாரதிகளையும், விற்கள் மற்றும் கொடி மரங்களையும் பெரும் வேகத்தோடு அழிக்கத் தொடங்கினான். அதன் பேரில் அந்த உமது பரந்த படையானது, நீர் மோதும் ஏரிக்கரைகளைப் போல நூறு பகுதிகளாகப் பிளந்தது.(79)

அப்போது அர்ஜுனனின் தேரை வேகமாகத் தூண்டிய கேசவன் {கிருஷ்ணன்}, அவனால் பீடிக்கப்பட்ட எதிரிகள் அனைவரையும் தன் வலப்பக்கத்தில் நிறுத்தினான்.(80) பிறகு ஒரு மோதலை விரும்பிய பிற வீரர்கள், விருத்திரனைக் கொன்று சென்ற இந்திரனைப் போலப் பெரும் வேகத்தோடு சென்று கொண்டிருந்த தனஞ்சயனை, உயர்ந்த கொடிமரங்களுடன் நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த தேர்களோடு பின்தொடர்ந்து சென்றனர்.(81) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரர்களான சிகண்டி, சாத்யகி, இரட்டையர்கள் ஆகியோர் தனஞ்சயனின் திசையிலேயே சென்று, எதிரிகளைத் தடுத்து, கூரிய கணைகளால் அவர்களைத் துளைத்து, பயங்கரமான முழக்கங்களைச் செய்தனர்.(82) பிறகு குரு வீரர்களும், சிருஞ்சயர்களும் சினத்தால் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டு, பழங்காலத்தின் பெரும்போர் ஒன்றில் அசுரர்களும், தேவர்களும் போலப் பெரும் சக்தி கொண்ட நேரான கணைகளால் ஒருவரையொருவர் கொன்றனர்.(83) எதிரிகளைத் தண்டிப்பவர்களான யானைவீரர்கள், குதிரை வீரர்கள், தேர் வீரர்கள் ஆகியோர் அனைவரும் வெற்றி பெரும் விருப்பத்தாலோ, சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டிய பொறுமையின்மையாலோ ஈர்க்கப்பட்டு, வேகமாகக் களத்தில் விழுந்தனர். பெரும் முழக்கங்களைச் செய்தபடியே அவர்கள் நன்கு ஏவப்பட்ட கணைகளால் ஒருவரையொருவர் மூர்க்கமாகத் துளைத்துக் கொண்டனர்.(84) பெரும் துணிச்சலைக் கொண்ட அந்த உயர்ஆன்ம போர்வீரர்கள், அங்கே அந்தப் பயங்கரப் போரில் இருளை உண்டாக்கியதன் விளைவால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகள் இருளில் மூழ்ந்து அந்தச் சூரியனின் பிரகாசமே முற்றாக முறைக்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.(85)

கௌரவர்களை விரட்டிய அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 80-கர்ணனின் படைகளைத் தவிர்த்துவிட்டு, பீமனைக் காக்க விரைந்த அர்ஜுனன்; அர்ஜுனனால் கௌரவப்படைக்கு ஏற்பட்ட அழிவு; தப்பி ஓடிய கௌரவர்கள்; பீமனுடன் சிறிது நேரம் ஆலோசித்த அர்ஜுனன்; கௌரவர்களை விரட்டி அவர்களைப் பூமியில் தள்ளிய அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குரு படையின் முதன்மையான வீரர்கள் பலரால் தாக்கப்பட்டு, (அந்தத் தாக்குதலால்) மூழ்குபவன் போலத் தெரிந்த குந்தியின் மகனான பீமனை மீட்க விரும்பிய தனஞ்சயன் {அர்ஜுனன்},(1) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} துருப்புகளைத் தவிர்த்துவிட்டு, (பீமனை எதிர்த்துக் கொண்டிருந்த) அந்தப் பகைவீரர்களைத் தன் கணைகளால் காலனின் உலகத்திற்கு அனுப்பத் தொடங்கினான்[1].(2) அர்ஜுனன் அடுத்தடுத்து பொழிந்த கணை மழையால், வானம் கணைகள் மூட்டத்துடன் காணப்பட்ட அதே வேளையில் உமது படையை {பாண்டவப் படையின்} பிறர் கொல்வதும் காணப்பட்டது.(3) இறகு படைத்த உயிரினங்களின் அடர்த்தியான கூட்டத்திற்கு ஒப்பான கணைகளால் ஆகாயத்தை நிறைத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி, அந்த நேரத்தில் குருக்களின் யமனாகவே ஆனான்.(4) தன் அகன்ற தலை மற்றும் தட்டைத் தலை கணைகள் {பல்லங்கள்}, கத்தி போன்ற கூர்மையான கணைகள் {க்ஷுரப்ரகங்கள்}, பிரகாசமாகப் பளபளப்பாக்கப்பட்டிருந்த துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} ஆகியவற்றால் பார்த்தன் {அர்ஜுனன்} தன் எதிரிகளின் உடல்களைச் சிதைத்து, அவர்களின் தலைகளையும் அறுத்தான்.(5)

உடல்கள் வெட்டி சிதைக்கப்பட்ட சிலரும், கவசமிழந்த சிலரும், தலைகளையிழந்த சிலரும் என விழுந்து கொண்டிருப்பவர்களும், வீழ்ந்தவர்களுமான போர்வீரர்களால் அந்தப் போர்க்களம் விரவிக் கிடந்தது.(6) (உயிருள்ளோர் உலகத்தையும், இறந்தோரின் உலகத்தையும் பிரிக்கும்) பெரும் வைதரணீயை {வைதரணீ ஆற்றைப்} போல அந்தப் போர்க்களமானது, ஓ! மன்னா, தனஞ்சயனின் கணைகளால் தாக்கப்பட்ட குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகள் ஆகியவை சிதைக்கப்பட்டு, துளைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, பல்வேறு வழிகளில் வெட்டப்பட்டதன் விளைவாகச் சமமற்றதாகவும், கடக்க முடியாததாகவும், காணச் சகியாததாகவும், பயங்கரமானதாகவும் ஆனது.(7,8) உடைந்த கணைகள், சக்கரங்கள், அச்சுகள் ஆகியவற்றாலும், குதிரைகளற்ற, அல்லது குதிரைகளுள்ள தேர்களாலும், சாரதியற்ற, அல்லது சாரதிகளுள்ள தேர்களாலும் பூமியானது மறைக்கப்பட்டிருந்தது.(9)

எப்போதும் சீற்றத்துடன் இருப்பவையும் {மதங்கொண்டவையும்}, கோபத்தால் தூண்டப்பட்டவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையும், தங்க வண்ண கவசம் தரித்தவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், கடுமையான பாகர்களின் குதிங்கால்களாலும், கட்டைவிரல்களாலும் அழுத்தம் கொடுக்கப்பட்டுத் தூண்டப்பட்டவையுமான நானூறு {400} யானைகள், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் கணைகளால் தாக்கப்பட்டு, உயிரினங்கள் வாழும் பெரும் மலைகளில் இருந்து தளர்ந்து விழும் சிகரங்களைப் போலக் கீழே விழுந்தன.(10,11) உண்மையில், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்டு விழுந்து (இன்னும் பிற) யானைகளாலும் பூமி மறைக்கப்பட்டது.(12) மேகத் திரள்களின் ஊடாகப் பிளந்து செல்லும் சூரியனைப் போல, அந்த அர்ஜுனனின் தேரானது, மேனியில் மதநீர் ஒழுகுபவையும், மேகத்திரள்களைப் போலத் தெரிபவையுமான யானைகளின் உடல்களின் அடர்த்தியினூடாகக் கடந்து சென்றது.(13) கொல்லப்பட்ட யானைகள், மனிதர்கள் மற்றும் குதிரைகளாலும், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்ட தேர்களாலும், ஆயுதங்கள், கருவிகள், கவசங்கள், பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள் கைகளில் தளர்ந்து கிடந்த உயிரற்ற வீரர்களாலும், பல்குனன் {அர்ஜுனன்}, தன் வழித்தடங்களைக் குவியச் செய்தான்.(14) காண்டீவத்தின் நாணொலியானது, ஆகாயத்தில் எழும் இடியினொலியைப் போல மகத்தான பேரொலியாக இருந்தது.(15)

அப்போது, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட (தார்தராஷ்டிரப்) படையானது, பெருங்கடலின் மத்தியில் புயலால் அடிக்கப்படும் பெரிய மரக்கலத்தைப் போலப் பிளந்தது.(16) எரிகொள்ளிகள், எரிகோள்கள், இடிகள் ஆகியவற்றுக்கு ஒப்பானவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையுமான பல்வேறு வகைகளிலான மரணக்கணைகள் உமது படையை எரித்தன.(17) தனஞ்சயனின் கணைகளால் இவ்வாறு பீடிக்கப்பட்ட அந்த வலிமையான படை, இரவு நேரத்தில் மலையிலிருக்கும் மூங்கில்காடுகள் எரிவதைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(18) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் கணைகளால் நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டு, சிதைக்கப்பட்டு, கொல்லப்பட்ட அந்த உமது படையானது அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(19) உண்மையில், சவ்யசச்சினால் எரிக்கப்பட்ட கௌரவர்கள், காட்டுத்தீயில் அச்சமடைந்து ஓடும் பெரும் வனத்தின் விலங்குகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கலைந்தோடின.(20)

(பீமசேனனைத் தாக்கிய) அந்தக் குரு படையானது, அந்த வலிமைமிக்க வீரனை {பீமனைக்} தவிர்த்துவிட்டு, கவலையால் நிறைந்து, போரில் புறமுதுகிட்டது.(21) குருக்கள் முறியடிக்கப்பட்ட பிறகு, வெல்லப்பட முடியாதவனான பீபத்சு {அர்ஜுனன்}, பீமசேனனை அணுகி, அங்கே ஒரு கணம் தங்கினான்.(22) பீமனைச் சந்தித்து, அவனோடு ஆலோசனை செய்த பல்குனன் [அர்ஜுனன்}, யுதிஷ்டிரனின் உடலில் இருந்து கணைகள் பிடுங்கப்பட்டதையும், பின்னவன் {யுதிஷ்டிரன்} முற்றிலும் நலமாக இருப்பதையும் தன் அண்ணனிடம் {பீமனிடம்} தெரிவித்தான்.(23) பீமன் சென்றதும், தனஞ்சயன், ஓ! பாரதரே, இந்தப் பூமியையும், வானத்தையும் தன் தேரின் சடசடப்பொலியால் எதிரொலிக்கச் செய்தபடியே (மீண்டும் தன் எதிரிகளை எதிர்த்துச்) சென்றான்.(24) பிறகு, வீரர்களும், போர்வீரர்களில் முதன்மையானவர்களும், துச்சாசனனின் தம்பிகளுமான உமது மகன்களில் பத்து பேரால் அவன் {அர்ஜுனன்} சூழப்பட்டான்.(25) எரிப்பந்தங்களைக் கொண்டு யானையைப் பீடிக்கும் வேடர்களைப் போலத் தங்கள் கணைகளால் அர்ஜுனனைப் பீடித்த அவ்வீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் விற்களை விரித்து விளைத்து (தங்கள் தேர்களில்) நர்த்தனம் செய்பவர்களைப் போலத் தெரிந்தனர்.(26)

அப்போது மதுசூதனன் {கிருஷ்ணன்} தன் தேரை வழிநடத்திய படியே அவர்கள் அனைவரையும் தன் வலப்பக்கத்தில் நிறுத்தினான் [2]. உண்மையில் அவன் {கிருஷ்ணன்}, அவர்கள் அனைவரையும் விரைவில் அர்ஜுனன் யமனின் முன்னிலைக்கு அனுப்பிவிடுவான் என்று எதிர்பார்த்தான்.(27) அர்ஜுனனின் தேர் வேறு திசையில் செல்வதைக் கண்ட அந்த வீரர்கள் அவனை நோக்கி விரைந்தனர். எனினும், பார்த்தன் {அர்ஜுனன் / பீமன்}, எண்ணற்ற துணிக்கோல் கணைகளாலும் {நாராசங்களாலும்}, பிறைவடிவக் கணைகளாலும் {அர்த்தச்சந்திர பாணங்களாலும்} அவர்களது கொடிமரங்கள், குதிரைகள், விற்கள் மற்றும் கணைகளை வெட்டி வீழ்த்தி, அவர்களையும் பூமியில் விழச் செய்தான். பிறகு, கடிக்கப்பட்ட உதடுகளாலும், சினங்கொண்ட ரத்தச் சிவப்பான கண்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவர்களது தலைகளைச் சில அகன்ற தலை கணைகளால் அவன் {அர்ஜுனன் / பீமன்} வீழ்த்தினான்[3]. அம்முகங்கள், தாமரைக் கூட்டங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(28-30) எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன், தங்கக் கவசம் பூண்டிருந்த அந்தப் பத்துக் கௌரவர்களை, பெரும் மூர்க்கத்தையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட பத்து அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} கொன்றுவிட்டு முன்னேறத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(31)

கர்ணனிடம் தஞ்சமடைந்த கௌரவர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 81-அர்ஜுனனை நோக்கி விரைந்த சம்சப்தகர்கள்; அவர்களைத் தவிர்த்துவிட்டுக் கர்ணனை நோக்கித் தேரைச் செலுத்திய கிருஷ்ணன், எனினும் பின் தொடர்ந்து வந்த சம்சப்தகர்களை வீழ்த்திய அர்ஜுனன்; அர்ஜுனனை எதிர்த்து வந்த கௌரவப் படை; அதை முறியடித்த அர்ஜுனன்; கர்ணனைத் தஞ்சமடைந்த கௌரவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் பெரும் வேகம் கொண்ட தன் குதிரைகளால் சுமக்கப்பட்டு முன்னேறிக் கொண்டிருந்த குரங்குக் கொடியோன் அர்ஜுனனை எதிர்த்துப் போரிடுவதற்காகத் தொண்ணூறு கௌரவத் தேர்வீரர்கள் {சம்சப்தகர்கள்} விரைந்தனர்.(1) அந்த மனிதர்களில் புலிகள், மறு உலகத்தைக் குறித்துப் பயங்கரச் சபதம் ஒன்றை [1] ஏற்றுக் கொண்டு, மனிதர்களில் புலியான அந்த அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) எனினும், (அவர்களைக் கண்டு கொள்ளாத) கிருஷ்ணன், பெரும் வேகம் கொண்டவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், முத்துச்சரங்களால் மறைக்கப்பட்டவையுமான அர்ஜுனனின் வெண்குதிரைகளைக் கர்ணனின் தேரை நோக்கித் தூண்டினான்.(3) அந்தத் தொண்ணூறு சம்சப்தகர்களும், கர்ணனின் தேரை நோக்கிச் செல்லும் தனஞ்சயனைப் பின்தொடர்ந்து சென்று, அவன் மீது கணைமாரியை இறைத்தனர்.(4) அப்போது அர்ஜுனன், பெரும் சுறுசுறுப்புடையவர்களும், தன்னைத் தாக்குபவர்களுமான அந்தத் தொண்ணூறு பேரையும், அவர்களது சாரதிகள், விற்கள் மற்றும் கொடிமரங்களையும் தன் கூரிய கணைகளால் வெட்டினான்.(5) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் பல்வேறு வகைக் கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், புண்ணியங்கள் தீர்ந்து சொர்கத்தில் இருந்து கீழே விழும் சித்தர்களைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து விழுந்தனர்.(6)

இதன்பிறகு, தேர்கள், யானைகள், மற்றும் குதிரைகளோடு கூடிய கௌரவர்கள் பலர், குரு குலத்தில் முதன்மையானவனும், பாரதர்களின் தலைவனுமான அர்ஜுனனை அச்சமில்லாமல் எதிர்த்து சென்றனர்.(7) போராடும் மனிதர்கள் மற்றும் குதிரைகள் நிறைந்ததும், முதன்மையான யானைகள் பெருகியிருந்ததுமான உமது மகன்களின் அந்தப் பெரிய படையானது தனஞ்சயனின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அவனைச் சூழ்ந்து கொண்டன.(8) அந்த வலிமைமிக்கக் கௌரவ வில்லாளிகள், ஈட்டிகள், வாள்கள், வேல்கள், சூலங்கள், கதாயுதங்கள், கத்திகள் மற்றும் கணைகளுடன் அந்தக் குரு குல வழித்தோன்றலை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.(9) சூரியன் தன் கதிர்களால் இருளை அழிப்பது போலவே, அந்தப் பாண்டுவின், மகன் ஆகாயத்தில் சூழ்ந்திருந்த அந்தக் கணைமாரியைத் தன் கணைகளால் அழித்தான்.(10)

எப்போதும் மதப்பெருக்குடன் இருக்கும் ஆயிரத்து முன்னூறு {1300} யானைகளைச் செலுத்திக் கொண்டு வந்த மிலேச்சர்களின் படையானது, உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவின் பேரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} பக்கங்களைத் தாக்கியது.(11) முள் பதித்த கணைகள் {கர்ணிகள்}, நாளீகங்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, வேல்கள், சூலங்கள், ஈட்டிகள், கம்பணங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்} ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் தேரில் இருந்த பார்த்தனைப் பீடித்தனர்.(12) ஒப்பற்ற அந்தக் கணை மாரிகளில் யானைகளின் தந்தங்களால் ஏவப்பட்ட சிலவற்றைப் பல்குனன் {அர்ஜுனன்}, மிகக் கூர்மையான தன் அகன்ற தலை கணைகள் {பல்லங்கள்} மற்றும் பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகளால் அறுத்தான்.(13) பல்வேறு வகைக் கணைகளுடன் கூடிய அவன் {அர்ஜுனன்}, அந்த யானைகளை அனைத்தும், அவற்றின் கொடிமரங்கள், கொடிகள், பாகர்கள் ஆகியவற்றையும், வஜ்ரத்தால் மலைகளைத் தாக்கும் இந்திரனைப் போலத் தாக்கினான்.(14) தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் பீடிக்கப்பட்டவையும், தங்கத்தாலான கழுத்தணிகளை அணிந்திருந்தவையுமான அந்தப் பெரும் யானைகள், எரிகுழம்புகளுடன் சுடர்விடும் மலைகளைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தன.(15)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளாலான அந்தப் படையின் முழக்கம், கூச்சல் மற்றும் ஓலங்களுக்கு மத்தியில் காண்டீவத்தின் நாணொலியானது உயர்ந்து எழுந்தது.(16) யானைகள், ஓ! மன்னா, (கணைகளால்) தாக்கப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின. சாரதிரிகள் கொல்லப்பட்ட குதிரைகளும் அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தன.(17) ஓ! ஏகாதிபதி, வானத்தில் மாறிக்கொண்டே இருந்த நீராவி வடிவங்களை {மேகங்களைப்} போன்ற தேர்கள், சாரதிகளையும், குதிரைகளையும் இழந்தவையாக ஆயிரக்கணக்கில் தென்பட்டன.(18) அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருந்த குதிரைவீரர்கள், ஓ! ஏகாதிபதி, பார்த்தனின் கணைகளால் உயிரை இழந்து கீழே விழுவதும் காணப்பட்டது.(19) அந்த நேரத்தில் அர்ஜுனனின் கரவலிமையும் காணப்பட்டது. அந்தப் போரில், தனியொருவனாகவே அவன் (அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்தவர்களான) குதிரைவீரர்களையும், யானைகளையும், தேர்வீரர்களையும் வென்றான் (என்ற அளவுக்கு அவனது கரவலிமை பெரியதாக இருந்தது).(20)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்குனன், மூவகைப் படைகளைக் கொண்ட ஒரு பெரும் (கௌரவப்) படையால் சூழப்பட்டதைக் கண்ட பீமசேனன்,(21) கௌரவத் தேர்வீரர்களில் கொல்லப்படாமல் எஞ்சியவர்களும், தன்னோடு போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான அந்தச் சிலரைத் தவிர்த்துவிட்டு, தனஞ்சயனின் தேர் இருந்த இடத்திற்கு மூர்க்கமாக விரைந்தான்.(22) அதேவேளையில், அந்தப் பெரும் படுகொலைக்குப் பிறகும் எஞ்சியிருந்த அந்தக் கௌரவப்படை மிகவும் பவலீனமடைந்து தப்பி ஓடியது. (ஏற்கனவே சொன்னது போல) அர்ஜுனனைக் கண்ட பீமன், தன் தம்பியை நோக்கிச் சென்றான்.(23) களைப்படையாதவனும், கதாயுதம் தரித்தவனுமான அந்தப் பீமன், அர்ஜுனனால் பெரும்பகுதியினர் கொல்லப்பட்டும் எஞ்சியிருந்தவையும், பெரும் வலிமையைக் கொண்டவையுமான அந்தக் கௌரவக் குதிரைகளை {குதிரை வீரர்களை / குதிரைப் படையை} அந்தப் போரில் அழித்தான்.(24) மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும் மரண இரவைப் போலக் கடுமையானதும், சுவர்கள், மாளிகைகள், நகரங்களின் வாயில்கள் ஆகியவற்றை நொறுக்கவல்லதும், மிகப் பயங்கரமானதுமான தன் கதாயுதத்தைக் கொண்டு, தன்னைச் சுற்றியிருந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைத் தொடர்ச்சியாகத் தாக்கினான். ஓ! ஐயா, அந்தக் கதாயுதம் எண்ணற்ற குதிரைகளையும், சாரதிகளையும் கொன்றது.(25,26)

அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்தக் கதாயுதத்தைக் கொண்டு, இரும்பாலான கவசந்தரித்த மனிதர்களையும் குதிரைகளையும் நொறுக்கினான். அதனால் தாக்குண்ட அவர்கள் பேரொலியோடு கீழே விழுந்தனர்.(27) தங்கள் பற்களால் பூமியைக் கடித்து, குருதியில் குளித்தவர்களும், தங்கள் தலைகளில் இருந்த மகுடங்கள், விற்கள் மற்றும் அங்கங்களில் அடிப்பாகங்கள் நொறுக்கப்பட்டவர்களுமான அவர்கள், ஊனுண்ணும் விலங்குகள் அனைத்திற்கும் உணவாகி களத்தில் கிடந்தனர்.(28) குருதி, தசை, ஊனீர் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை வயிறு முட்ட உண்ட அந்த (பீமசேனனின்) கதாயுதம், மரண இரவை {காலனைப்} போலவே காணக் கடினமானதாக இருந்தது.(29) பத்தாயிரம் {10000} குதிரைகளையும், எண்ணற்ற காலாட்படை வீரர்களையும் கொன்ற பீமன், கையில் தன் கதாயுத்துடனும், சினத்துடனும், களத்தில் இங்கேயும், அங்கேயும் ஓடினான்.(30)

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கையில் கதாயுதுத்துடன் பீமனைக் கண்ட உமது துருப்புகள், காலதண்டத்துடன் கூடிய யமனே தங்களுக்கு மத்தியில் இருப்பதாகக் கருதின.(31) அப்போது சினத்தால் தூண்டப்பட்டவனும், மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பெருங்கடலுக்குள் நுழையும் ஒரு மகரத்தைப் போல, அந்தக் (கௌரவர்களின்) யானைப் படைப்பிரிவுக்குள் புகுந்தான்.(32) உறுதிமிக்கக் கதாயுதத்துடன் அந்த யானைப்படைக்குள் ஊடுருவியவனும், கோபத்துடன் கூடியவனுமான பீமன், மிகக் குறுகிய காலத்திற்குள் அதை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(33) தங்கள் உடல்களில் முள் பதித்த தகடுகளுடன் கூடிய அந்த மதங்கொண்ட யானைகள், தங்கள் பாகர்கள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன், சிறகு படைத்த மலைகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் விழுவதை நாங்கள் கண்டோம்.(34) அந்த யானைப்படையை அழித்த அந்த வலிமைமிக்கப் பீமசேனன், மீண்டும் தன் தேரில் ஏறிக் கொண்டு, அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றான்.(35)

இவ்வாறு கொல்லப்பட்டதும், ஓடிப் போவதற்குத் தயாராக இருந்ததும் உற்சாகமின்மையால் நிறைந்து, கிட்டத்தட்ட செயலற்ற நிலையில் நின்ற அந்தப் பெரும்படையானது, ஓ! ஏகாதிபதி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஆயுதங்களால் தாக்கப்பட்டது.(36) அடக்கமுடையதாகத் தெரிந்ததும், செயலற்று, கிட்டத்தட்ட அசைவற்று நின்றதுமான அந்தப் படையைக் கண்ட அர்ஜுனன், உயிரை எரிக்கும் கணைகளால் அதை மறைத்தான்.(37) அந்தப் போரில் காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கணைமாரியால் துளைக்கப்பட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளும், இழைகளுடன் கூடிய கதம்ப மலர்களைப் போல அழகானவையாகத் தெரிந்தன.(38) ஓ! மன்னா, மனிதர்கள், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றை வேகமாகக் கொல்லும் அர்ஜுனனின் கணைகளால் இவ்வாறு தாக்கப்பட்ட கௌரவப் படையில் இருந்து துன்ப ஓலங்கள் எழுந்தன.(39) “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறி, மிகவும் அச்சப்பட்டு, ஒன்றோடொன்று நெருங்கி நின்ற உமது படையானது பெரும் வேகத்தோடு திரும்பத் தொடங்கியது.(40)

எனினும், குருக்களும், பெரும் வலிமை கொண்ட பாண்டவர்களுக்கும் இடையிலான அந்தப் போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. காயம்படாத எந்த ஒரு தேர்வீரனோ, குதிரைவீரனோ, யானைவீரனோ, குதிரையோ, யானையோ அங்கே இல்லை.(41) கணைகளால் துளைக்கப்பட்ட தங்கள் கவசங்களுடன் குருதியில் குளித்த அத்துருப்பினர், காடுகளில் மலர்ந்திருக்கும் அசோகங்களைப் போலச் சுடர்விடுபவர்களாகத் தெரிந்தனர்.(42) அந்தச் சந்தர்ப்பத்தில் வீரத்தை வெளிப்படுத்திய சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கண்ட கௌரவர்கள், கர்ணனின் உயிரில் நம்பிக்கையிழந்தவர்களாக ஆனார்கள்.(43) அர்ஜுனனுடைய கணைகளின் தீண்டலைத் தாங்கிக் கொள்ள முடியாததாக உணர்ந்த கௌரவர்கள், அந்தக் காண்டீவதாரியால் வெல்லப்பட்டுக் களத்தைவிட்டுத் தப்பி ஓடினர்.(44) அர்ஜுனனின் கணைகளால் இவ்வாறு தாக்கப்பட்டுப் பட்டு அந்தப் போரில் கர்ணனை விட்டுவிட்டு, (தங்களைக் காக்கும்படி) சூதன் மகனை உரக்க அழைத்துக் கொண்டே அனைத்துப் பள்ளங்களிலும் தப்பி ஓடினர்.(45)

எனினும், அவர்களைப் பின்தொடர்ந்த சென்ற பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, பீமசேனனின் தலைமையிலான பாண்டவ வீரர்களை மகிழ்ச்சியடையச் செய்தான்.(46) அப்போது, ஓ! ஏகாதிபதி, உமது மகன்கள் கர்ணனின் தேரை நோக்கிச் சென்றனர். அடியற்ற பெருங்கடலில் மூழ்குபவர்களைப் போலத் தெரிந்த அவர்களுக்கு, கர்ணன் ஒரு தீவாக ஆனான்.(47) ஓ! ஏகாதிபதி, நஞ்சற்ற பாம்புகளைப் போன்ற அந்தக் கௌரவர்கள், காண்டீவதாரியிடம் கொண்ட அச்சத்தால் கர்ணனிடம் தஞ்சமடைந்தனர்.(48) உண்மையில், செயல்பாடுகளுடன் கூடிய உயிரினங்கள், மரணத்தின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அறத்திடம் தஞ்சமடைவதைப் போலவே,(49) உமது மகன்களும், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, பாண்டுவின் உயர் ஆன்ம மகனிடம் {அர்ஜுனனிடம்} கொண்ட அச்சத்தால், வலிமைமிக்க வில்லாளியான கர்ணனிடம் தஞ்சமடைந்தனர்.(50)

அப்போது, அச்சத்தால் ஈர்க்கப்படாத கர்ணன், கணைகளால் பீடிக்கப்பட்டுக் குருதியில் குளித்து வேதனையில் இருந்த அந்தப் போர்வீரர்களிடம், “அஞ்சாதீர்கள்! என்னிடம் வாருங்கள்!” என்றான்.(51) பார்த்தனால் உமது படை மிக மூர்க்கமாகப் பிளக்கப்படுவதைக் கண்ட கர்ணன், எதிரியைக் கொல்ல விரும்பி தன் வில்லை வளைத்து நின்றிருந்தான்.(52) குருக்கள் களத்தைவிட்டு அகன்றதைக் கண்டவனும், ஆயுததாரிகளில் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், சற்றே சிந்தித்து, பார்த்தனைக் கொல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தி, நீண்ட பெருமூச்சுகளை விடத் தொடங்கினான்.(53) தன் உறுதிமிக்க வில்லை வளைத்த அந்த அதிரதன் மகன் விருஷன் {கர்ணன்}, சவ்யசச்சின் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் பாஞ்சாலர்களை எதிர்த்து விரைந்தான்.(54) எனினும், இரத்தச் சிவப்பான கண்களைக் கொண்ட பூமியின் தலைவர்கள் பலர், மலையின் மீது மழையைப் பொழியும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமழையை விரைவாகப் பொழிந்தனர்.(55) அப்போது, ஓ! வாழும் உயிரினங்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, கர்ணனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள், பாஞ்சாலர்களில் பலரைத் தங்கள் உயிரை இழக்கச் செய்தன.(56) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, நண்பர்களின் மீட்பனான அந்தச் சூதன் மகனால், தன் நண்பர்களின் நிமித்தமாக இவ்வாறு தாக்கப்பட்ட பாஞ்சாலர்கள் பேரோலங்களை வெளியிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(57)

பீமனை வீழ்த்திய துச்சாசனன்! – கர்ண பர்வம் பகுதி – 82-பாஞ்சாலர்களை அழிக்கத் தொடங்கிய கர்ணன்; பாஞ்சால இளவரசர்களான ஜனமேஜயன், திருஷ்டத்யும்ன் ஆகியோரையும் மற்றும் சிநி குலத்து சாத்யகியையும் குதிரைகளற்றவர்களாகச் செய்தது; கைகேய இளவரசன் விசோகனையும், படைத்தலைவன் உக்ரகர்மனையும் கொன்ற கர்ணன்; கர்ணனின் மகனான பிரசேனனைக் கொன்ற சாத்யகி; சாத்யகியைக் கர்ணனிடமிருந்து காத்த சிகண்டி; திருஷ்டத்யும்னனின் மகனைக் கொன்ற கர்ணன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; கர்ணனை அசைக்க முடியாத பாஞ்சாலர்கள்; சாத்யகி செய்த போர்; பீமனை எதிர்த்து வந்த துச்சாசனன்; துச்சாசனனின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்து, அவனது சாரதியின் தலையையும் கொய்த பீமன்; துச்சாசனன் ஏவிய கணையொன்றால் துளைக்கப்பட்ட பீமன் உயிரை இழந்தவனைப் போலத் தன் தேரில் விழுந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரன்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரை கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனால் குருக்கள் விரட்டப்பட்ட பிறகு, சூதன் மகனான கர்ணன், மேகத்திரள்களின் கூட்டத்தை அழிக்கும் புயலைப் போலத் தன் வலிமைமிக்கக் கணைகளால் பாஞ்சாலர்களின் மகன்களை அழிக்கத் தொடங்கினான்.(1) அஞ்சலிகங்கள் என்று அழைக்கப்படும் அகன்ற முகக் கணைகளால், {பாஞ்சால} ஜனமேஜயனின் சாரதியை வீழ்த்திய அவன் {கர்ணன்}, அடுத்ததாக அந்தப் பாஞ்சால வீரனின் குதிரைகளையும் கொன்றான். பிறகு எண்ணற்ற அகன்ற தலை கணைகளை {பல்லங்களைக்} கொண்டு சதானீகன் மற்றும் சுதசோமன் ஆகிய இருவரையும் துளைத்த அவன் {கர்ணன்}, பிறகு அவ்விரு வீரர்களின் விற்களையும் அறுத்தான்.(2) அடுத்ததாக, ஆறு கணைகளால் திருஷ்டத்யும்னனைத் துளைத்த அவன், பிறகு ஒரு கணத்தையும் இழக்காமல் அம்மோதலில அந்த இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} குதிரைகளைக் கொன்றான். அடுத்ததாகச் சாத்யகியின் குதிரைகளைக் கொன்ற அந்தச் சூதன் மகன், கைகேயர்களின் ஆட்சியாளனுடைய மகனான விசோகனைக் கொன்றான்.(3) கைகேய இளவரசன் {விசோகன்} கொல்லப்பட்டதை அடுத்து, கைகேயப் படைத்தலைவனான உக்ரகர்மன் [1], வேகமாக விரைந்து, கர்ணனின் மகனான பிரசேனனை[2] சீற்றமிக்கக் கணைகள் பலவற்றால் மிக மூர்க்கமாகத் தாக்கி, அவனை நடுங்கச் செய்தான்.(4) அப்போது கர்ணன், தன் மகனைத் தாக்குபவனின் கரங்களையும், சிரத்தையும், பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகள் மூன்றால் வெட்டியதால், கோடரியால் கிளைகள் வெட்டப்பட்டு விழும் சால மரத்தைப் போலப் பின்னவன் {உக்ரகர்மன்} உயிரை இழந்து தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.(5)

அப்போது {கர்ணனின் மகன்} பிரசேனன், குதிரைகளற்றவனான சிநியின் பேரனை {சாத்யகியை}, நேராகச் செல்லும் கூரிய கணைகள் பலவற்றால் மறைத்து, தன் தேரில் நர்த்தனம் செய்பவனைப் போலத் தெரிந்தான். எனினும், சிநியின் பேரனால் {சாத்யகியால்} விரைவில் தாக்கப்பட்ட கர்ணனின் மகன் {பிரசேனன்} கீழே விழுந்தான் {கொல்லப்பட்டான்}.(6) கர்ணன், தன் மகன் கொல்லப்பட்டதையடுத்து, சினத்தால் நிறைந்த இதயத்துடன், சிநிக்களின் காளையை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்துடன் அவனிடம், “ஓ! சிநியின் பேரனே, நீ கொல்லப்பட்டாய்” என்று சொல்லி, எதிரிகள் அனைவரையும் கொல்லவல்ல கணையொன்றை அவன் {சாத்யகியின்} மீது ஏவினான்.(7) அப்போது சிகண்டி, மூன்று கணைகளால் அக்கணையை வெட்டி, மேலும் மூன்று கணைகளால் கர்ணனையும் தாக்கினான். கடுஞ்சீற்றமுடைய அந்தச் சூதன் மகன், சிகண்டியின் வில்லையும் கொடி மரத்தையும் இரண்டு கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} வெட்டி, ஆறு கணைகளால் சிகண்டியையும் தாக்கி, அதன்பிறகு திருஷ்டத்யும்னன் மகனின் தலையையும் வெட்டினான்.(8,9)

திருஷ்டத்யும்னனின் மகன் கொல்லப்பட்ட பிறகு, அந்தக் கடும் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னர்களில் சிங்கமே {திருதராஷ்டிரரே}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசிய கிருஷ்ணன், “பாஞ்சாலர்கள் நிர்மூலமாக்கப்படுகின்றனர். செல், ஓ! பார்த்தா, கர்ணனைக் கொல்வாயாக” என்றான்.(10) இப்படிச் சொல்லப்பட்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன், புன்னகைத்து, தேர்வீரர்களின் தலைவனான கர்ணனால் அந்தப் பயங்கரச் சந்தர்ப்பத்தில் கொல்லப்படும் பாஞ்சாலர்களைக் காக்க விரும்பி, அதிரதன் மகனின் {கர்ணனின்} தேரை நோக்கித் தன் தேரில் சென்றான்.(11) உரத்த நாணொலியைக் கொண்ட தன் காண்டீவத்தை நீட்டி, தன் வில்லின் நாண்கயிற்றைத் தன் உள்ளங்கையால் கடுமையாக அடித்து, தன் கணைகளின் மூலமாகத் திடீரென இருளை உண்டாக்கி, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் கொடிமரங்களை அழித்தான்.(12) (அந்நாணொலியின்) எதிரொலிகள் வானத்தில் எதிரொலித்தன. (காற்றில் நிலைக்க முடியாத) பறவைகள், மலைகளின் நிலக் குடைவுகளுக்குள் தஞ்சமடைந்தன. முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லுடன் அர்ஜுனன் மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். உண்மையில், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான பார்த்தன், அந்தப் பயங்கரக் கணத்தில் எதிரிகள் மீது பாய்ந்த போது,(13) வீரர்களில் முதன்மையான பீமசேனன், அந்தப் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} பின்புறத்தைப் பாதுகாத்தபடியே அவனைப் பின்தொடர்ந்து சென்றான். அப்போது அந்த இளவரசர்கள் இருவரும், வழியில் தங்கள் எதிரிகளோடு மோதிபடியே கர்ணனை நோக்கித் தங்கள் தேர்களில் பெரும் வேகத்தோடு சென்றனர்.(14) அந்த இடைவேளையின் போது, சூதன் மகன், சோமகர்களைக் கலங்கடித்தபடியே கடுமையாகப் போரிட்டான். எண்ணற்ற தேர்வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும் கொன்ற அவன், தன் கணைகளால் திசைகளின் பத்து புள்ளிகளையும் மறைத்தான்.(15)

அப்போது, உத்தமௌஜஸ், {பாஞ்சால} ஜனமேஜயன், கோபமடைந்தவனான யுதாமன்யு, சிகண்டி ஆகியோர் பிருஷதன் மகனுடன் (திருஷ்டத்யும்னனுடன் சேர்ந்து) உரக்க முழங்கியபடியே கணைகள் பலவற்றால் கர்ணனைத் துளைத்தனர்.(16) பாஞ்சாலப் போர்வீரர்களில் முதன்மையான அந்த ஐவரும், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட கர்ணனை எதிர்த்து விரைந்தாலும், துறவின் மூலம் தூய்மையான ஆன்மாவை அடைந்த மனிதர்களிடம் புலன்நுகர்பொருட்கள் தவறுவது போலவே[3], அவர்களால் அவனது தேரில் இருந்து அவனை அசைக்க முடியவில்லை.(17) அவர்கள் விற்கள், கொடிமரங்கள், குதிரைகள், சாரதிகள், கொடிகள் ஆகியவற்றைத் தனது கணைகளால் வேகமாக வெட்டி கர்ணன், சிங்கத்தைப் போல முழங்கிக் கொண்டே அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் தாக்கினான்.(18) வீரனான அந்தக் கர்ணன், தன் கையில் கணைகளுடன், வில்லின் நாண்கயிற்றைத் தீண்டி தன்னைத் தாக்குபவர்கள் மீது அவற்றை ஏவி தன் எதிரிகளைக் கொல்லும்போது ஏற்படும் அந்த வில்லின் நாணொலியால், மலைகள் மற்றும் மரங்களுடன் கூடிய பூமி பிளக்கப்போகிறது என்றெண்ணி மக்கள் மிகவும் உற்சாகமிழந்தவர்களாக ஆனார்கள்.(19) சக்ரனின் {இந்திரனின்} வில்லுக்கு ஒப்பானதும், பெரியதும், நீளமானதுமான தன் வில்லைக் கொண்டு கணைகளை ஏவிய அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, ஒளிவட்டத்துக்குள் சுடர்மிக்கக் கதிர்கள் பலவற்றுடன் கூடிய சூரியனைப் போலவே மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(20)

அப்போது சூதனின் மகன் {கர்ணன்}, பனிரெண்டு கூரிய கணைகளால் சிகண்டியைத் துளைத்து, ஆறால் உத்தமௌஜஸையும், மூன்றால் யுதாமன்யுவையும், சோமக மற்றும் பிருஷத மகன்கள் (ஜனமேஜயன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகிய) இருவரில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளாலும் துளைத்தான்.(21) அந்தப் பயங்கரப் போரில் சூதன் மகனால் {கர்ணனால்} வெல்லப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஐவரும், எதிரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தூய ஆன்மா கொண்ட மனிதனால் வெல்லப்படும் புலன் நுகர் பொருட்களைப் போல முற்றிலும் செயலற்றவர்களாக நின்றனர்.(22) அப்போது, திரௌபதியின் மகன்கள் ஐவரும், ஆழமான பெருங்கடலில் உடைந்த மரக்கலங்களில் உள்ள வணிகர்களைப் பிற மரக்கலங்களைக் கொண்டு மீட்கும் மனிதர்களைப் போலக் கர்ணக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தவர்களான தங்கள் தாய்மாமன்களை, நன்றாக ஆயத்தம் செய்யப்பட்ட பிற தேர்களுடன் வந்து மீட்டனர்.(23) பிறகு, அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, கர்ணனால் ஏவப்பட்ட எண்ணற்ற கணைகளைத் தன் கூரிய கணைகளால் வெட்டி, முற்றிலும் இரும்பாலான கூரிய கணைகள் பலவற்றால் கர்ணனையும் துளைத்து, எட்டு கணைகளால் உமது மூத்த மகனை {துரியோதனனைத்} துளைத்தான்.(24) பிறகு, கிருபர், போஜத் தலைவன் (கிருதவர்மன்), உமது மகன் {துரியோதனன்}, கர்ணன் ஆகியோர் பதிலுக்குச் சாத்யகியைக் கூரிய கணைகளால் தாக்கினர். எனினும் அந்த யது குலத்தின் முதன்மையானவன் {சாத்யகி}, (நான்கு) திசைகளின் காவலர்களுடன் {திக்பாலர்களுடன்} போரிடும் தைத்தியர்களின் தலைவனைப் போல அந்த நான்கு போர்வீரர்களுடனும் போரிட்டான்.(25)

நாணொலிக்கும் தன் வில்லானது முழுமையான அளவுக்கு வளைக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து இடையறாமல் பாய்ந்த கணைகளின் மூலம் அந்தச் சாத்யகி, கூதிர் கால வானின் நடுப்பகல் சூரியனைப் போலத் தடுக்கப்பட முடியாதவனானான்.(26) அப்போது எதிரிகளை எரிப்பவர்களான அந்த வலிமைமிக்கப் பாஞ்சாலத் தேர்வீரர்கள், மீண்டும் தங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு, கவசம் பூண்டு, ஒன்றாகச் சேர்ந்து, போரில் எதிரிகளைப் பீடிக்கும் சக்ரனை {இந்திரனைக்} காக்கும் மருத்துகளைப் போல அந்தச் சிநிக்களில் முதன்மையானவனை {சாத்யகியைப்} பாதுகாத்தனர்.(27) பிறகு உமது எதிரிகளுக்கும், உமது படையின் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்ததும், மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் படுகொலைகள் நிறைந்ததுமான அந்தப் போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு ஒப்பாகக் கடுமையை அடைந்தது.(28) பல்வேறு ஆயுத மழையால் மறைக்கப்பட்ட தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோர் ஓரிடத்தில் இருந்து மறு இடத்திற்கு நகரத் தொடங்கினர். ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அவர்கள், சூழன்றனர், அல்லது துன்ப ஓலங்களை வெளியிட்டனர், அல்லது உயிரை இழந்து கீழே விழுந்தனர்.(29)

காரியங்களின் நிலை அவ்வாறிருக்கையில், உமது மகனும், மன்னனுக்கு {துரியோதனனுக்குத்} தம்பியுமான துச்சாசனன், கணைமாரியை ஏவியபடியே அச்சமில்லாமல் பீமனை எதிர்த்து வந்தான். விருகோதரனும் {பீமனும்}, ஒரு பெரிய ருரு மானை நோக்கிப் பாயும் சிங்கம் ஒன்றைப் போல அவனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(30) அப்போது ஒருவரோடொருவர் பகை கொண்டவர்களும், உயிரையே பணயமாக வைத்துப் போர்விளையாட்டை ஆடிக்கொண்டிருந்தவர்களுமான அவ்விரு வீரர்களுக்குள்ளும் நேர்ந்த மோதலானது, பழங்காலத்தில் {அசுரன்} சம்பரனுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப்போல மிகக் கடுமையான நிலையை அடைந்தது.(31) காமத்தால் தூண்டப்பட்டவையும், தங்கள் உடல்களில் தொடர்ச்சியாக மதநீர் பெருக்குபவையுமான பெருங்களிறுகள் {பெரும் ஆண் யானைகள்} இரண்டு, பருவ காலத்தில் உள்ள பிடியின் {பெண் யானையின்} அருகில் ஒன்றோடொன்று போரிட்டுக் கொள்வதைப் போல, பெரும் சக்தி கொண்டவையும், ஒவ்வொருவரின் உடலைத் துளைக்கவல்லவையுமான கணைகளால் அவ்விருவரும் ஒருவரையொருவர் ஆழத் தாக்கிக் கொண்டனர்.(32) பெரும் வேகம் கொண்ட விருகோதரன் {பீமன்}, கத்தி தலைக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} இரண்டால் உமது மகனின் {துச்சாசனனின்} வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். தன்னை எதிர்ப்பவனின் நெற்றியை, சிறகு படைத்த மற்றொரு கணையால் துளைத்து, அடுத்ததாக (நான்காவது கணையைக் கொண்டு) பின்னவனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(33)

மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட இளவரசன் துச்சாசனன், பனிரெண்டு கணைகளால் விருகோதரனைத் துளைத்தான். தானே தன் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்ட அவன், நேரான கணைகளின் மாரியை மீண்டும் பீமன் மீது பொழிந்தான்.(34) அப்போது துச்சாசனன், சூரியனின் கதிர்களைப் போன்ற பிரகாசமானதும், தங்கம், வைரங்கள் மற்றும் பிற விலைமதிப்பில்லா ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டும், தன்னைத் தாக்குபவனின் உடலைத் துளைக்கவல்லதும், இந்திரனுடைய வஜ்ரத்தின் வீச்சைப் போலத் தடுக்கப்பட முடியாததுமான கணையொன்றை ஏவினான்.(35) அதனால் உடல் துளைக்கப்பட்ட விருகோதரன் {பீமன்}, தளர்ந்த அங்கங்களுடன், விரித்து நீட்டிய கரங்களுடனும் உயிரை இழந்த ஒருவனைப் போலத் தன் சிறந்த தேரில் விழுந்தான். எனினும் உணர்வுகள் மீண்ட அவன் ஒரு சிங்கத்தைப் போல முழங்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(36)

மார்பைப் பிளந்து உதிரம் குடித்த பீமன்! – கர்ண பர்வம் பகுதி – 83-பீமனின் வில்லை அறுத்து, அவனது சாரதியைத் துளைத்த துச்சாசனன், பீமன் ஏவிய ஈட்டியை வெட்டி, மற்றொரு கணையால் பீமனை ஆழமாகத் துளைத்த துச்சாசனன்; துச்சாசனனுக்குத் தன் சபதத்தை நினைவுப்படுத்திய பீமன்; துச்சாசனனின் தலையைத் தாக்கி, அவனுடைய குதிரைகள், தேர் ஆகியவற்றை இழக்கச் செய்தது; தரையில் விழுந்து துடித்த துச்சாசனன்; கர்ணன், துரியோதனன், கிருபர், அஸ்வத்தாமன், கிருதவர்மன் ஆகியோரைக் கூவியழைத்து, அவர்களின் கண்ணெதிரிலேயே துச்சாசனனின் மார்பைப் பிளந்து அவனது உதிரத்தைக் குடித்த பீமன்; கர்ணனின் தம்பியான சித்திரசேனனைக் கொன்ற யுதாமன்யு; கர்ணனை எதிர்த்து விரைந்த நகுலன்; தன் சபதம் நிறைவேறியதை கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் சொன்ன பீமன்; துரியோதனனைக் கொல்லப் போவதாகச் சொன்னது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மிக மூர்க்கமாகப் போரிட்ட இளவரசன் துச்சாசனன், அடைவதற்கு மிக அரிதான சாதனையை அம்மோதலில் அடைந்தான். ஒரு கணையால் பீமனின் வில்லை அறுத்த அவன், ஆறு கணைகளால் தன் எதிரியின் சாரதியைத் துளைத்தான்.(1) அந்த அருஞ்செயல்களைச் செய்தவனும், பெரும் சுறுசறுப்பைக் கொண்டவனுமான அந்த இளவரசன் {துச்சாசனன்}, ஒன்பது கணைகளால் பீமனையும் துளைத்தான். உண்மையில் அப்போது, அந்த உயர் ஆன்ம போர்வீரன், ஒரு கணத்தையும் இழக்காமல், பெரும் சக்தி கொண்ட பல கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(2) இதனால் சினத்தால் நிறைந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பீமசேனன், உமது மகனின் {துச்சாசனனின்} மீது கடுமையான ஓர் ஈட்டியை ஏவினான். சுடர்விடும் பந்தமெனத் தன்னை நோக்கி மூர்க்கமாக விரையும் அந்தப் பயங்கர ஈட்டியைக் கண்ட உமது உயர் ஆன்ம மகன் {துச்சாசனன்}, முழுதாக வளைத்த தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட பத்து கணைகளால் அதை வெட்டினான்.(3) அவன் அந்தக் கடுஞ்சாதனையை அடைவதைக் கண்ட போர்வீரர்கள் அனைவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, அவனை உயர்வாகப் புகழ்ந்தனர். பிறகு உமது மகன் {துச்சாசனன்}, மற்றொரு கணையால் பீமனை ஆழத் துளைத்தான்.(4) துச்சாசனனைக் கண்டதும் கோபத்தால் சுடர்விட்டெரிந்த பீமன், அவனிடம், “ஓ! வீரா, வேகமாகவும், ஆழமாகவும், உன்னால் நான் துளைக்கப்பட்டேன். எனினும், மீண்டும் என் கதாயுதத்தின் வீச்சைத் தாங்கிக் கொள்வாயாக” என்றான்.(5)

இதைச் சொன்னவனும், சினத்தோடிருந்தவனுமான பீமன், துச்சாசனனைக் கொல்வதற்காகத் தனது பயங்கரமான கதாயுதத்தை எடுத்தான். மீண்டும் அவனிடம் {துச்சாசனனிடம்} பேசியவன் {பீமன்}, “ஓ! தீய ஆன்மா கொண்டவனே, இன்று இந்தப் போர்க்களத்தில் நான் உனது உதிரத்தைக் குடிப்பேன்” என்றான்.(6) இவ்வாறு சொல்லப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, காலனுக்கே ஒப்பான ஒரு கடும் ஈட்டியைப் பெரும்பலத்தோடு பீமன் மீது வீசினான். கோபத்தால் நிறைந்த வடிவத்துடன் கூடிய பீமனும், தனது பயங்கரக் கதாயுதத்தைச் சுழற்றி, தன் எதிராளியின் மீது வீசினான்.(7) அந்தக் கதாயுதம், துச்சாசனனின் ஈட்டியை வேகமாக முறித்து, உமது மகனின் தலையைத் தாக்கியது. உண்மையில், உடலில் வழிந்தோடும் மதநீரோடு கூடிய யானையொன்றைப் போல வியர்த்துக் கொண்டிருந்த பீமன், அந்தப் பயங்கரப் போரில் தன் கதாயுதத்தை அந்த இளவரசன் {துச்சாசனன்} மீது வீசினான்.(8) பீமசேனன், அவ்வாயுதத்தைக் கொண்டு, பத்து விற்களின் நீளத்தின் அளவைக் கொண்ட தொலைவுக்குத் துச்சாசனனை அவனது தேரில் இருந்து பலமாக வீசியெறிந்தான். மூர்க்கமான அந்தக் கதாயுதத்தால் தாக்கப்பட்ட துச்சாசனன், தரையில் வீசியெறியப்பட்டு நடுங்கத் தொடங்கினான்.(9) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதம் வீழ்ந்ததால், அவனது குதிரைகள் அனைத்தும், அவனது தேரும் கூட அணுக்களாகக் குறைந்து போகின. துச்சாசனனைப் பொறுத்தவரையில், அவனது கவசம், ஆபரணங்கள், ஆடை, மாலைகள் ஆகியன இடம்பெயர்ந்திருந்தன, அவன் வலியால் பீடிக்கப்பட்டு நெளியத் தொடங்கினான்.(10)

பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட பீமசேனன், அப்போது, அந்தப் பயங்கரப் போரில், குரு படையின் முதன்மையான போர்வீரர்கள் பலருக்கு மத்தியில் நின்று கொண்டு, உமது மகன்களால் (பாண்டவர்களுக்கு) இழைக்கப்பட்ட பகையான அனைத்துச் செயல்பாடுகளையும் நினைவுகூர்ந்தான்.(11) நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளைச் செய்தவனான வலிய கரங்களைக் கொண்ட பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அந்த அவல நிலையில்) துச்சாசனனைக் கண்டு, திரௌபதியின் குழல்கள் {கேசம்} பற்றப்பட்டதையும், அவள் நோயுற்றிருந்த போது ஆடை களையப்பட்டதையும்[1] நினைத்துப் பார்த்தான்.(12) உண்மையில், அக்காட்சியில் இருந்து கணவர்கள் முகம் திருப்பி அமர்ந்திருக்கையில் அந்த இளவரசிக்கு இழைக்கப்பட்ட பல்வேறு தீமைகளை நினைத்துப் பார்த்த அப்பாவி பீமன், நெருப்பில் ஊட்டப்பட்ட தெளிந்த நெய்க் காணிக்கையைப் போல[2] கோபத்தில் சுடர்விட்டெரிந்தான்.(13) கர்ணன், சுயோதனன், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருதவர்மன் ஆகியோரோடு பேசிய அவன், “இன்று நான் இந்தப் பொல்லாத துச்சாசனனைக் கொல்லப் போகிறேன். அனைத்துப் போர்வீரர்களும் (அவர்களால் முடிந்தால்) இவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும்” என்றான்.(14) இதைச் சொன்னவனும், பெரும் பலமும் சுறுசுறுப்பும் கொண்டவனுமான பீமன், துச்சாசனனைக் கொல்லும் விருப்பத்தால் திடீரென விரைந்தான்.(15)

கடுமையும், மூர்க்கமும் கொண்ட சிங்கம் ஒன்று வலிமைமிக்க யானையை நோக்கி வரைவதைப் போலவே, வீரர்களில் முதன்மையான அந்த விருகோதரன் {பீமன்}, அந்தப் போரில் துச்சாசனனை நோக்கி விரைந்து, சுயோதனனும், கர்ணனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைத் தாக்கினான். தன் தேரில் இருந்து கீழே குதித்துத் தரையில் இறங்கிக் கீழே விழுந்து கிடந்த எதிரியின் மீது கண்களைப் பொருத்தி நிலைக்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.(16) கூர்தீட்டப்பட்டதும், கூர்முனை கொண்டதுமான தன் வாளை உருவி, சினத்தால் நடுங்கிய அவன் {பீமன்}, தன் காலைத் துச்சாசனனின் தொண்டையில் வைத்து, தரையில் நீட்டிக் கிடந்த அந்தத் தன் எதிரியின் {துச்சாசனனின்} மார்பைப் பிளந்து, சூடான அவனது உயிர்க்குருதியைக் குடித்தான்.(17) பிறகு அவனைக் கீழே வீசி, உமது மகனின் தலையை அந்த வாளால் வெட்டியவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான பீமன், தன் சபதத்தை நிறைவேற்ற விரும்பி, சுவையில் இன்புறுவதற்காகத் தன் எதிரியின் உதிரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தான். பிறகு கோபம் நிறைந்த கண்களுடன் அவனைப் துச்சாசனனைப்} பார்த்த அவன் {பீமன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(18,19) “என் எதிரியின் இந்த உதிரதத்தை, என் தாயின் பாலுக்கோ, தேனுக்கோ, தெளிந்த நெய்க்கோ, தேனில் இருந்து உண்டாக்கப்பட்ட நல்ல மதுவுக்கோ, நல்ல நீருக்கோ, {பசுவின்} பாலுக்கோ, தயிருக்கோ, மோருக்கோ, அமுதத்தைப் போன்ற மேன்மையான இனிய சுவையைக் கொண்ட அனைத்து வகையிலான பிற பானங்களுக்கோ சுவையில் மேம்பட்டதாக நான் கருதுகிறேன்” என்றான்.(20,21) கடுஞ்செயல்களைச் செய்யக்கூடிய பீமன், கோபத்தால் தன் இதயம் நிறைந்து, இறந்து போன துச்சாசனனை மீண்டும் கண்டு, மெல்லப் புன்னகைத்து, “இதற்கு மேல் நான் உன்னை என்ன செய்ய முடியும்? மரணம் உன்னை என் கைகளில் இருந்து தப்பிக்க வைத்தது” என்றான்.(22)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், தன் எதிரியின் உதிரத்தைக் குடித்ததில் மகிழ்ச்சியில் நிறைந்து இவ்வார்த்தைகளைச் சொல்லிப் போர்க்களத்தில் அச்சமூட்டியபோது, பின்னவனை {பீமனைக்} கண்டவர்கள் அச்சத்தால் கீழே விழுந்தனர்.(23) அக்காட்சியைக் கண்டும் கீழே விழாதவர்கள், தங்கள் கரங்களில் இருந்து ஆயுதங்கள் கீழே விழுவதைக் கண்டனர். அச்சத்திலிருந்த பலர், பலவீனமாகக் கதறி, பாதி மூடிய கண்களுடன் பீமனைப் பார்த்தனர்.(24) உண்மையில் பீமனைச் சுற்றி நின்றோர் அனைவரும், அவன் துச்சாசனனின் உதிரத்தைக் குடிப்பதைக் கண்டதும், அச்சத்தில் மூழ்கி, “இவன் மனிதனல்ல” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர்.(25) பீமன் இவ்வடிவத்தை ஏற்ற போது, அவன் தன் எதிரியின் உதிரத்தைக் குடிப்பதைக் கண்ட மக்கள், “இந்தப் பீமன் ராட்சசனாகவே இருக்க வேண்டும்” என்று ஒருவருக்கொருவர் சொன்னபடியே {கர்ணனின் தம்பியான} சித்திரசேனனோடு சேர்ந்து தப்பி ஓடினர்.(26)

அப்போது, (பாஞ்சால) இளவரசனும், தன் துருப்புகளின் தலைமையில் நின்று கொண்டிருந்தவனுமான யுதாமன்யு, பின்வாங்கிச் செல்லும் சித்திரசேனனை அச்சமில்லாமல் பின்தொடர்ந்து சென்று, ஒன்றன்பின் ஒன்றாக ஏழு கூரிய கணைகளால் அவனை வேகமாகத் துளைத்தான்.(27) மிதிபட்டதும், பெரும் சக்தியைக் கொண்டதுமான ஒரு பாம்பு, தன் நஞ்சைக் கக்க விரும்பி மீண்டும் மீண்டும் தன் நாவை வெளியே நீட்டுவதைப் போல, சித்திரசேனனும் திரும்பி மூன்று கணைகளால் அந்தப் பாஞ்சால இளவரசனையும் {யுதாமன்யுவையும்}, ஆறால் அவனது சாரதியையும் துளைத்தான்.(28) அப்போது துணிச்சல்மிக்க யுதாமன்யு, நல்ல சிறகைக் கொண்டதும், மிகக் கூரிய முனையைக் கொண்டதுமான ஒரு கணையை முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து மிகக் கவனமாக ஏவி, தன் எதிரியின் {சித்திரசேனனின்} தலையை வீழ்த்தினான்.(29) தன் தம்பியான சித்திரசேனனின் வீழ்ச்சிக்குப் பிறகு, கோபத்தால் நிறைந்த கர்ணன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, அந்தப் பாண்டவப் படையை ஓடச் செய்ததால், நகுலன் அளவிலா சக்தி கொண்ட அவ்வீரனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(30)

பீமனும், (கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே) பழியுணர்ச்சி கொண்ட துச்சாசனனைக் கொன்ற பிறகு, அவனது உதிரத்தைச் சிறிதளவு எடுத்து, மிக ஓங்கிய நுரையீரலைக் {மூச்சுக் காற்றினைக்} கொண்ட அவன், உலகின் முதன்மையான வீரர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(31) “ஓ! மனிதர்களில் இழிந்தோரே, இதோ உங்கள் தொண்டையில் இருந்து உயிர்க்குருதியை நான் குடிக்கிறேன். (நீங்கள் முன்பு செய்ததைப் போலவே) மகிழ்ச்சியால் நிறைந்து எங்களை “விலங்கு, விலங்கு” என்று நிந்தியுங்கள்” என்று சொன்னான்.(32) மேலும் தொடர்ந்த அவன், “அப்போது, “விலங்கு, விலங்கு” என்று சொல்லி எங்களைப் பார்த்து ஆடியவர்கள், தங்கள் வார்த்தைகளை மீண்டும் சொன்னபடியே இப்போது ஆடப்போகிறார்கள்.(33) பிரமாணக்கோடி அரண்மனையில் எங்கள் உறக்கும், எங்கள் உணவில் கலக்கப்பட்ட நஞ்சு, கருநாகங்களின் கடிகள், அரக்கு வீட்டில் இடப்பட்ட நெருப்பு,(34) சூதாடித் திருடப்பட்ட எங்கள் நாடு, காடுகளுக்குள் நாங்கள் நாடுகடத்தப்பட்டது, கொடூரமாக பற்றி இழுக்கப்பட்ட திரௌபதியின் அழகிய கூந்தல்,(35) போரில் கணைகள் மற்றும் ஆயுதங்களின் வீச்சுகள், வீட்டில் நாங்கள் அடைந்த துயரங்கள், விராடனின் வசிப்பிடத்தில் நாங்கள் அடைந்த பிற துன்பங்கள் ஆகிய(36) அனைத்து துயரங்களும், சகுனி, துரியோதனன் மற்றும் ராதையின் மகனுடைய ஆலோசனைகளின் மூலமாக உங்களையே காரணமாக வைத்து நடந்தன.(37) திருதராஷ்டிரர் மற்றும் அவரது மகனின் {துரியோதனனின்} தீய குணங்களின் மூலமாகவே நாங்கள் இந்தக் கடுந்துயரங்களை அடைந்தோம். மகிழ்ச்சி எப்போதும் எங்களுடையதாக இருந்ததில்லை” என்றான் {பீமன்}.(38)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த வெற்றியாளன் விருகோதரன் {பீமன்}, மீண்டும் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(39) உண்மையில் குருதியில் குளித்து, தன் காயங்களில் இருந்து உதிரம் பாய, மிகவும் சிவந்திருந்த முகத்துடன் பெரும் கோபத்தில் நிறைந்திருந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பீமசேனன், இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “வீரர்களே, போரில் துச்சாசனன் சம்பந்தமாக நான் என்ன சபதம் செய்திருந்தேனோ, அதை இன்று நிறைவேற்றிவிட்டேன்.(40) இரண்டாவது விலங்கான துரியோதனனையும், இந்தப் போர் வேள்வியில் கொன்று என் மற்றொரு சபதத்தையும்[3] நான் நிறைவேற்றுவேன். கௌரவர்களின் முன்னிலையில் அந்தத் தீய ஆன்மாக் கொண்டவனின் தலையை என் காலால் உதைத்த பிறகே நான் அமைதியை அடைவேன்” என்றான் {பீமன்}.(41) இவ்வார்த்தைகளைச் சொன்ன பீமன், பெரும் மகிழ்ச்சியில் நிறைந்து, குருதியில் நனைந்து, (அசுரனான) விருத்திரனைக் கொன்ற பிறகு முழங்கிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கவனும், உயர் ஆன்மா கொண்டவனும், ஆயிரங்கண்களைக் கொண்டவனுமான இந்திரனைப் போல உரக்க முழங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(42)

நகுலனைத் தேரற்றவனாகச் செய்த விருஷசேனன்! – கர்ண பர்வம் பகுதி – 84-திருதராஷ்டிரன் மகன்களான பத்து பேரால் தாக்கப்பட்ட பீமன் அவர்கள் அனைவரையும் கொன்றது; பீமனின் ஆற்றலைக் கண்டு அச்சமடைந்த கர்ணன்; கர்ணனுக்கு உற்சாகமூட்டிய சல்லியன்; நகுலனுக்கும், கர்ணனின் மகனான விருஷசேனனுக்கும் இடையில் நடந்த மோதல்; விருஷசேனனால் தேரற்றவனாகச் செய்யப்பட்ட நகுலன் பீமனின் தேரில் ஏறிக் கொண்டது; விருஷசேனனைக் கொல்லச் சொல்லி அர்ஜுனனை வற்புறுத்திய பீமனும், நகுலனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் கொல்லப்பட்டபிறகு, போரில் பின்வாங்காதவர்களும், பெரும் தேர்வீரர்களும், வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், கோபமெனும் நஞ்சு நிறைந்தவர்களுமான உமது மகன்களில் பத்து பேர், தங்கள் கணைகளால் பீமனை மறைத்தனர்.(1) நிஷாங்கின், கவசின், பாசின், தண்டதாரன், தானுகிரகன், அலோலூபன், சகன், ஷண்டன், வாதவேகன், சுவர்ச்சஸ் ஆகியனவே,(2) தங்கள் அண்ணன் கொலையால் பீடிக்கப்பட்டவர்களும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனனைத் தடுக்க ஒன்றாகச் சேர்ந்திருந்தவர்களுமான அந்தப் பத்து பேரின் பெயர்களாகும்.(3) அந்தப் பெரும் தேர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்ட பீமன், சினத்தால் நெருப்பெனக் கண்கள் சிவந்து, கோபத்துடன் இருக்கும் அந்தகனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(4) எனினும் பார்த்தன் {பிருதையின் மகன்: பீமன் / அர்ஜுனன்}, தங்கக் கைவளைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பத்து இளவரசர்களை, தங்கச் சிறகுகளையும், பெரும் மூர்க்கத்தையும் கொண்ட பத்து அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்[1].(5)

அந்தப் பத்து வீரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாண்டவர்களால் உண்டான அச்சத்தினால் பீடிக்கப்பட்ட உமது படை, சூதன் மகன் {கர்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடியது.(6) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாழும் உயிரனங்களை அழிப்பவனுக்கு {காலனுக்கு) ஒப்பான பீமனின் ஆற்றலைக் கண்ட கர்ணனின் இதயத்திற்குள் பேரச்சம் நுழைந்தது.(7) சபைகளின் ரத்தினமான சல்லியன், கர்ணனின் தன்மைகளை ஆய்வு செய்து, அவனது மனநிலையைப் புரிந்து கொண்டு, அந்த நேரத்திற்கு ஏற்ற வார்த்தைகளை அந்த எதிரிகளைத் தண்டிப்பவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்:(8) “ஓ! ராதையின் மகனே {கர்ணனே}, வருந்தாதே. இஃது உனக்குத் தகாது. பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டே இம்மன்னர்கள் அனைவரும் ஓடுகின்றனர்.(9) உயர் ஆன்மப் பீமனால், துச்சாசனனின் இரத்தம் குடிக்கப்பட்டதன் விளைவாலும், அவனுக்கு நேர்ந்த பேரிடராலும் மிகவும் துன்புற்ற துரியோதனன் மலைப்படைந்திருக்கிறான்.(10)

கிருபரோடு கூடிய பிறரும், மன்னனின் தம்பியரில் இன்னும் எஞ்சியிருப்போரும்[2] பீடிக்கப்பட்ட இதயங்களுடனும், கவலையால் சினம் தணிவடைந்தும், துரியோதனனைச் சுற்றி அமர்ந்து அவனுக்கு ஆறுதலளிக்கின்றனர்.(11) தனஞ்சயன் {அர்ஜுனன்} தலைமையிலானவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களுமான அந்தப் பாண்டவ வீரர்கள் உன்னை எதிர்த்துப் போரிடவே வருகிறார்கள்.(12) இந்தக் காரணங்களுக்காக, ஓ! மனிதர்களில் புலியே, உன் ஆற்றல் அனைத்தையும் திரட்டி, க்ஷத்திரியக் கடமைகளை உன் கண் முன் நிறுத்தி, தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வாயாக.(13) (இந்தப் போரின்) மொத்த சுமையும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} உன் மீதே நிறுத்தப்பட்டிருக்கிறது. ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, உன் பலத்திற்கும், சக்திக்கும் சிறந்தவாறு அந்தச் சுமையைச் சுமப்பாயாக.(14) வெற்றியிலேயே பெரும்புகழ் இருக்கிறது, தோல்வியிலோ, சொர்க்கம் நிச்சயமாக இருக்கிறது.(15) ஓ! ராதையின் மகனே, உன் மகனான விருஷசேனன், நீ மலைப்பில் மூழ்கியிருப்பதைக் கண்டு, கோபத்தால் நிறைந்து, பாண்டவர்களை நோக்கி அதோ விரைகிறான்” என்றான் {சல்லியன்}.(16) அளவிலா சக்தி கொண்ட சல்லியனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், ஆலோசித்தபடியே, போரானது தவிர்க்க இயலாததாகிவிட்டதென மாற்றமில்லாத தீர்மானத்தை அடைத்தான்.(17)

அப்போது கோபத்தால் நிறைந்த விருஷசேனன், காலதண்டத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பாகக் கதாயுதம் தரித்தவனும், உமது துருப்புகளைக் கொன்று கொண்டிருந்தவனும், பாண்டுவின் மகனுமான விருகோதரனை {பீமனை} நோக்கி விரைவாகத் தன் தேரைச் செலுத்தினான்.(18) வீரர்களில் முதன்மையான நகுலன், கோபத்தால் நிறைந்து, (அசுரன்) ஜம்பனை எதிர்த்து விரையும் வெற்றியாளன் மகவத்தை {இந்திரனைப்} போலக், கர்ணனின் மகனான தங்கள் எதிரியை நோக்கி மகிழ்ச்சியான இதயத்துடன் விரைந்து சென்று, கணைகளால் அவனைத் தாக்கினான்.(19) பிறகு, துணிச்சல்மிக்க அந்த நகுலன், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரியின் கொடிமரத்தை, ஒரு கத்தி தலை கணையை {க்ஷுரப்ரத்தைக்} கொண்டு அறுத்தான். அடுத்ததாக ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு அவன் {நகுலன்}, தங்க வாருடன் இணைக்கப்பட்ட கர்ணன் மகனின் வில்லையும் அறுத்தான். (20)

அப்போது, வலிமையான ஆயுதங்களைக் கொண்ட கர்ணனின் மகன் {விருஷசேனன்}, துச்சாசனனுக்குத் தன் மரியாதையைக் காட்ட விரும்பி, மற்றொரு வில்லை வேகமாக எடுத்துக் கொண்டு, வலிமைமிக்க தெய்வீக ஆயுதங்கள் பலவற்றால், பாண்டுவின் மகனான நகுலனைத் துளைத்தான்.(21) பிறகு சினத்தால் நிறைந்த அந்த உயர் ஆன்ம நகுலன், சுடர்மிக்க எரிப்பந்தங்களுக்கு ஒப்பான கணைகளால் தன் எதிராளியைத் துளைத்தான். ஆயுதங்களை நன்கறிந்தவனான கர்ணனின் மகனும், இதனால் நகுலன் மீது தெய்வீக ஆயுதங்களைப் பொழிந்தான்.(22) தனது எதிரியுடைய ஆயுதங்களின் வீச்சுகளால் கோபமடைந்ததாலும், தன் ஆயுதங்களின் சக்தியாலும், தன்னொளியாலும், தெளிந்த நெய்க் காணிக்கைகளால் ஊட்டப்படும் நெருப்பைப் போல அந்தக் கரண்ன் மகன் {விருஷசேனன்} சுடர்விட்டெரிந்தான்.(23) உண்மையில், ஓ! மன்னா, அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, வனாயு இனத்தைச் சேர்ந்தவையும், வெண்ணிறம் கொண்டவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், மென்மையான நகுலனுக்குச் சொந்தமானவையுமான அழகிய குதிரைகளைத் தன் சிறந்த ஆயுதங்களால் கொன்றான்.(24) குதிரைகளற்ற தன் வாகனத்தில் இருந்து இறங்கிய நகுலன், பிரகாசமானதும், தங்க நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு கேடயத்தை எடுத்துக் கொண்டு, வானத்தைப் போன்ற நீலவண்ணம் கொண்ட வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டு, அடிக்கடி குதித்த படியே ஒரு பறவையைப் போல அங்கே திரிந்தான்.(25)

காற்றில் அழகிய பரிமாணங்களை நிகழ்த்திக் காட்டிய அந்தப் பாண்டுவின் மகன், முதன்மையான மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் பலவற்றையும் வெட்டினான். அந்த வாளால் வெட்டப்பட்டவை, குதிரை வேள்வி ஒன்றில், {குதிரையை} வெட்டும் கடமையில் நியமிக்கப்பட்ட மனிதனால் வெட்டப்படும் விலங்குகளைப் போலப் பூமியில் விழுந்தன.(26) நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், போரில் திளைப்பவர்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்களும், நன்கு கூலி கொடுக்கப்பட்டவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், சிறந்த சந்தனக் குழம்பை மேனியில் பூசியிருந்தவர்களுமான இரண்டாயிரம் வீரர்கள், வெற்றியின் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டவனும், தனியொருவனுமான நகுலனால் வேகமாக வெட்டி வீழ்த்தப்பட்டனர்.(27) அப்போது, அந்தப் போரில் திடீரெனப் பெரும் வேகத்தோடு நகுலனை எதிர்த்து விரைந்த அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, அவனைக் கொல்லும் விருப்பத்தால், பல கூரிய கணைகளைக் கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் அவனைத் துளைத்தான்.(28) இவ்வாறு (விருஷசேனனின்) கணைகளால் தாக்கப்பட்ட நகுலன், துணிச்சல்மிக்கத் தன் எதிராளியைப் பதிலுக்குத் தாக்கினான். பாண்டு மகனால் துளைக்கப்பட்ட அந்த விருஷசேனன், கோபத்தால் நிறைந்தான். எனினும், அந்தப் பயங்கரப் போரில், தன் அண்ணனான பீமனால் காக்கப்பட்ட உயர் ஆன்ம நகுலன், அந்தச் சந்தர்ப்பத்தில் பயங்கரச் சாதனைகளை அடைந்தான்.(29) சினத்தால் நிறைந்த கர்ணன் மகன், பிறகு, எந்த ஆதரவுமின்றி முதன்மையான மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளை அழித்துக் கொண்டு அந்தப் போரில் விளையாடிக் கொண்டிருப்பவனைப் போலத் தெரிந்த வீர நகுலனை பதினெட்டு கணைகளால் துளைத்தான்.(30)

அந்தப் போரில் விருஷசேனனால ஆழத்துளைக்கப்பட்டவனும், பாண்டுவின் மகனும், மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டாவனுமான நகுலன், சினத்தால் நிறைந்து, கர்ணன் மகனைக் கொல்லும் விருப்பத்தோடு, அம்மோதலில் அவனை எதிர்த்து விரைந்தான்.(31) இறைச்சியில் விருப்பத்துடன் சிறகுகளை விரிக்கும் பருந்தொன்றைப் போலப் பெரும் சக்தி கொண்ட நகுலன், மிக வேகமாக எதிர்த்து சென்று கொண்டிருந்த போது, அவன் {நகுலன்} மீது கூரிய கணைமாரியை விருஷசேனன் பொழிந்தான்.(32) எனினும், தன் எதிராளியின் கணைமாரியைக் கலங்கடித்த நகுலன், பல்வேறு அழகிய அசைவுகளுடன் {கதிகளுடன்} திரிந்து கொண்டிருந்தான். ஓ! மன்னா, பெரும் சுறுசுறுப்புடனும், அந்த அழகிய அசைவுகளுடனும் நகுலன் திரிந்து கொண்டிருந்தபோது, அந்தப் பயங்கரப் போரில் கர்ணன் மகன் {விருஷசேனன்}, ஆயிரம் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட அவனது {நகுலனின்} கேடயத்தைத் தன் வலிமைமிக்கக் கணைகளால் வெட்டினான்.(33) பளபளப்பாக்கப்பட்டதும், கூர்முனை கொண்டதும், உருக்காலானதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதும், எதிரிகளின் உடல்கள் அனைத்தையும் அழிக்கவல்லதும், பயங்கரமானதும், பாம்பின் நஞ்சைப் போலக் கடுமையானதும், உறையில் இருந்து உருவப்பட்டதுமான தன் வாளை நகுலன் மிக வேகமாகச் சுழற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு கணத்தையும் இழக்காத அந்த எதிரிகளைத் தடுப்பவன் (விருஷசேனன்), கூரிய கத்தித் தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்} ஆறால் அதை {அந்த வாளை} வெட்டினான். அதன் பிறகு, விருஷசேனன், நன்கு கடினமாக்கப்பட்டவையும், கூர்முனை கொண்டவையுமான சில கணைகளால் தன் எதிராளியின் {நகுலனின்} நடுமார்பை ஆழமாகத் துளைத்தான்.(34,35)

உன்னதமான மனிதர்களால் பாராட்டப்பட்டவையும், வேறு மனிதனால் அடைய முடியாதவையுமான அந்த அருஞ்செயல்களை அவன் {விருஷசேனன்} அடைந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், உயர் ஆன்மாவைக் கொண்டவனுமான நகுலன், பீமசேனனின் தேரை நோக்கிச் சென்றான்.(36) குதிரைகளற்றவனான அந்த மாத்ரியின் மகன், கர்ணனின் மகனால் இவ்வாறு பீடிக்கபட்டு, தனஞ்சயன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மலைச்சிகரத்தில் பாயும் சிங்கம் ஒன்றைப் போலப் பீமனின் தேர் மீது பாய்ந்தேறினான்.(37) அப்போது, உயர் ஆன்மா கொண்ட அந்த வீர விருஷசேனன், கோபத்தால் நிறைந்து, பாண்டுவின் மகன்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவர் மீதும் தன் கணைமாரியைப் பொழிந்தான்.(38) பாண்டு மகனின் (நகுலனின்) தேரானது அழிவடைந்த பிறகு, (விருஷசேனனால்) அவனது வாளும் வேகமாக வெட்டப்பட்ட பிறகு, குரு வீரர்களில் முதன்மையான பலர், ஒன்றாகச் சேர்ந்து, அந்தப் பாண்டவச் சகோதரர்களை அணுகி, கணைப் பொழிவால் அவர்களைத் தாக்கத் தொடங்கினர்.(39)

அப்போது, தெளிந்த நெய்க்காணிக்கைகளால் ஊட்டப்பட்ட நெருப்புகள் இரண்டைப் போலக் கோபத்தால் நிறைந்தவர்களும், பாண்டுவின் மகன்களுமான அந்தப் பீமனும், அர்ஜுனனும், விருஷசேனன் மீதும், அவனைச் சுற்றிலும் கூடியிருந்த பிறர் மீதும் பயங்கரக் கணைமாரியைப் பொழிந்தனர்.(40) அப்போது காற்று தேவனின் {வாயுத்தேவனின்} மகன் {பீமன்}, அந்தப் பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, “நகுலன் பீடிக்கப்படுவதைப் பார். கர்ணனின் மகன் {விருஷசேனன்} எங்களைத் தடுக்கிறான். எனவே நீ அந்தக் கர்ணனின் மகனை எதிர்த்துச் செல்வாயாக” என்றான்.(41) இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவன் (அர்ஜுனன்), தன் அண்ணனான விருகோதரனின் {பீமனின்} தேரை அணுகினான். அவ்வீரன் {அர்ஜுனன்} அருகில் வருவதைக் கண்ட நகுலன் அவனிடம், “இவனை வேகமாகக் கொல்வீராக” என்றான்.(42) தன் எதிரே நின்று கொண்டிருந்த தன் தம்பி நகுலனால் அந்தப் போரில் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், உறுதிமிக்க வீரனுமான அந்த அர்ஜுனன், கேசவனால் {கிருஷ்ணனால்} செலுத்தப்பட்ட தன் குரங்குக் கொடி வாகனத்தை, விருஷசேனனை நோக்கி மிக வேகமாகச் செலுத்தச் செய்தான்” {என்றான் சஞ்சயன்}.(43)

கர்ணனின் மகனைக் கொன்ற அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 85-நகுலனைக் காக்க விரைந்த பாண்டவ வீரர்கள்; அவர்களை எதிர்த்துச் சென்ற கௌரவர்கள்; பாண்டவர்களுக்கு ஆதரவாக யானைப்படையுடன் வந்த குளிந்தர்கள்; குளிந்த இளவரசனைக் கொன்ற கிருபர்; குளிந்த இளவரசனின் தம்பியைக் கொன்ற சகுனி; சதானீகனின் குதிரைகளைக் கொன்ற கிருதவர்மன்; துரியோதனனின் மார்பைத் துளைத்த மற்றொரு குளிந்த இளவரசன், கிராதனையும் தாக்கி வீழ்த்தி, விருகனைத் துளைத்து, அவனது குதிரைகளைக் கொன்று, தேரை நொறுக்கியது; பப்ருவின் மகனான மகத இளவரசனைக் கொன்ற சதானீகன்; குளிந்த இளவரசனைக் கொன்ற சகுனி; கர்ணனின் மகனான விருஷசேனன் செய்த அருஞ்செயல்; அர்ஜுனனைத் தாக்கிய விருஷசேனன்; அபிமன்யுவை நினைத்து, கர்ணனை எச்சரித்து, விருஷசேனனைக் கொன்ற அர்ஜுனன்; அர்ஜுனனை நோக்கிக் கோபத்துடன் விரைந்த கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நகுலன் தேரிழந்ததையும், கர்ணன் மகனின் {விருஷசேனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டதையும், ஆயுதங்களால் சிதைக்கப்பட்டதையும், அவனது கணைகள், வில், வாள் ஆகியன வெட்டப்பட்டதையும் அறிந்தவர்களும், எதிரிகள் அனைவரையும் தடுப்பவர்களுமான துருபதனின் ஐந்து வீரமகன்கள், ஆறாவதாகச் சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகிய பதினோரு பேரும், பேரொலியை எழுப்புபவையும், {அவற்றுடன்} பிணக்கப்பட்டுள்ள குதிரைகளால் இழுக்கப்படுபவையுமான தேர்களில், காற்றில் அசையும் கொடிகளுடனும், சாதித்த சாரதிகளால் வழிநடத்தப்பட்டும் வேகமாகச் சென்றனர். நன்கு ஆயுதம் தரித்திருந்த அந்தப் போர்வீரர்கள் {துருபதன் மகன்கள், சாத்யகி மற்றும் திரௌபதியின் மகன்கள் ஆகியோர்}, உமது யானைகள், தேர்கள், மனிதர்கள் மற்றும் குதிரைகளை, உறுதிமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் அழிக்கத் தொடங்கினர்.(1,2) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனன், சகுனியின் மகன் {சகுனியாகவே இருக்க வேண்டும்}, விருகன், கிராதன் மற்றும் தேவாவிரதன் ஆகிய முதன்மையான கௌரவத் தேர்வீரர்கள், தங்கள் விற்களைத் தரித்தும், யானைகள் அல்லது மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான ஆழமான சடசடப்பொலி கொண்ட தங்கள் தேர்களில் ஏறியும் வேகமாக அவர்களை {அந்தப் பதினோரு பேரை} எதிர்த்துச் சென்றனர்.(3) மனிதர்களில் முதன்மையானவர்களும், தேர்வீரர்களில் முதல்வர்களுமான (பாண்டவப் படையின்) அந்தப் பதினோரை வீரர்களையும் தாக்கிய இந்தக் கௌரவ வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கணைகளால் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தனர். இதன் காரணமாக, மூர்க்கமும் வேகமும் கொண்டவையும், மலைச்சிகரங்களைப் போலத் தெரிந்தவையும், புதிதாய் எழுந்த மேகங்களின் வண்ணத்தைக் கொண்டவையுமான தங்கள் யானைகளைச் செலுத்திக் கொண்டு, கௌரவவீரர்கள் எதிர்த்து அந்தக் குளிந்தர்கள் {குணிந்தர்கள்} வந்தனர்.(4) நன்கு ஆயத்தம் செய்யப்பட்டவையும், தங்கத்தால் மறைக்கப்பட்டவையும், இமயப் பகுதிகளில் பிறந்தவையும், போருக்காக ஏங்கிய போர்வீரர்களால் {குளிந்தர்களால்}[1] செலுத்தப்பட்டவையுமான அந்த மதங்கொண்ட யானைகள், மின்னலின் சக்தியூட்டப்பட்டு ஆகாயத்திலிருக்கும் மேகங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(5)
அப்போது அந்தக் குளிந்தர்களின் இளவரசன், முழுக்க இரும்பாலான பத்து கணைகளால் கிருபரையும், அவரது சாரதி மற்றும் குதிரைகளையும் மூர்க்கமாகத் தாக்கினான். (பதிலுக்கு) சரத்வான் மகனின் {கிருபரின்} கணைகளால் தாக்கப்பட்ட அந்த இளவரசன் தன் யானையில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(6) அப்போது அந்த இளவரசனின் தம்பியானவன், முழுக்க இருப்பாலானவையும், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமாக இருந்தவையுமான எண்ணற்ற வேல்களால் கிருபரின் தேரைத் தாக்கி உரத்த முழக்கங்களைச் செய்தான். எனினும், காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, முழங்கிக் கொண்டே இருந்த அந்தப் போர்வீரனின் தலையை {அவன் முழங்கிக் கொண்டிருக்கும்போதே} வெட்டினான்.(7) அந்தக் குளிந்தர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, கடலில் பிறந்த தங்கள் சங்குகளை முழக்கி, விற்களைத் தரித்துக் கொண்டு, தங்கள் எதிரிகளை எதிர்த்து விரைந்து சென்றனர்.(8) குருக்கள் ஒருபுறத்திலும், பாண்டுக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் மறுபுறத்திலுமென மீண்டும் நடந்த போரானது, கணைகள், கத்திகள், ஈட்டிகள், வாள்கள், கதாயுதங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றுடன் பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும் மாறி, மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுக்குப் பெரும் அழிவைத் தந்தது.(9) தேர்வீரர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைவீரர்கள் ஆகியோர், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, கீழே தரையில் விழுந்து, மின்னலின் சக்தியூட்டப்பட்டவையும், தொடர்ச்சியான இடி முழக்கத்தை உண்டாக்குபவையுமான மேகத்திரள்கள், காற்றால் அனைத்துப் பக்கங்களில் சிறடிக்கப்படும்போதான ஆகாயத்தைப் போல அந்தப் போர்க்களத்தை மாற்றினர்.(10)

அப்போது போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, பெரும் யானைகளையும், தேர்வீரர்களையும், எண்ணிலா காலாட்களையும், சதானீகனின் குதிரையையும் தாக்கினான். கிருதவர்மனின் கணைகளால் தாக்கப்பட்ட இவை விரைவில் கீழே தரையில் விழுந்தன.(11) அதே நேரத்தில் அஸ்வத்தாமனின் கணைகளால் கொல்லப்பட்டவையும், அனைத்து வகை ஆயுதங்களால் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையும், சாதனை செய்த போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், உயர்ந்த கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான மூன்று பெரும் யானைகள், இடியால் பிளக்கப்பட்ட பெரும் சிகரங்களைப் போல உயிரற்றுத் தரையில் விழுந்தன.(12) பிறகு, குளிந்தத் தலைவனின் மூன்றாவது சகோதரன், சிறந்த கணைகள் சிலவற்றால் உமது மகன் துரியோதனனின் நடுமார்பைத் துளைத்தான். எனினும் உமது மகன் {துரியோதனன்}, அவனையும், அவனது யானையையும் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் துளைத்தான்.(13) அப்போது, இளவரசனைத் தன் முதுகில் கொண்ட அந்த யானைகளின் இளவரசன், மழைக்காலங்களில், சச்சியின் தலைவனுடைய {இந்திரனுடைய} வஜ்ரத்தால் பிளக்கப்பட்டு விழும் செம்மலையொன்றின் சாரலில் செஞ்சுண்ண ஓடை பாய்வதைப் போல, தன் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் குருதியோடை வெளியேற கீழே விழுந்தது.(14) எனினும், அந்தக் குளிந்த இளவரசன், உரிய காலத்தில் தன்னைக் காத்துக் கொண்டு மற்றொரு யானையைச் செலுத்தினான். அந்த இளவரசனால் தூண்டப்பட்ட அந்த விலங்கானது {யானையானது}, கிராதனையும், அவனது சாரதி, குதிரைகள் மற்றும் தேரையும் தாக்கியது. எனினும், கிராதனின் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த யானை, இடியினால் பிளக்கப்பட்ட மலையொன்றைப் போலத் தன் சாரதியுடன் சேர்ந்து கீழே விழுந்தது.(15)

எனினும், மலைகளில் பிறந்தவனும், மற்றொரு யானையில் முதுகில் இருந்தவனுமான அந்த இளவரசனின் கணைகளால் தாக்கப்பட்ட வெல்லப்பட்ட முடியாத தேர்வீரனான அந்தக் கிராதர்களின் ஆட்சியாளன், தன் குதிரைகள், சாரதி, வில், கொடிமர்ம் ஆகியவற்றுடன், புயலால் வேரோடு பெயர்ந்து விழுந்த ஒரு பெரும் மரத்தைப் போலக் கீழே விழுந்தான்.(16) அப்போது விருகன், இமயத்தைத் தன் வசிப்பிடமாகக் கொண்டவனும், யானையில் நின்றிருந்தவனுமான அந்த இளவரசனின் பனிரெண்டு கணைகளால் துளைக்கப்பட்டான். அந்தப் பெரும் விலங்கு {யானை}, தன் நான்கு கால்களாலும், (கௌரவப் போர்வீரனான} விருகனின் குதிரைகளையும், தேரையும் வேகமாக நொறுக்கியது.(17) பிறகு தன் சாரதியுடன் கூடிய அந்த யானைகளின் இளவரசன், பப்ருவின் மகனால் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பின்னவனை {பப்ரு மகனை} எதிர்த்து மிக வேகமாக முன்னேறியது. எனினும் மகதர்களின் இளவரசனான அந்தப் பப்ருவின் மகனோ, சகாதேவன் மகனின் கணைகளால் பீடிக்கப்பட்ட கீழே விழுந்தான்.(18) பிறகு அந்தக் குளிந்த இளவரசன், தன் தந்தங்களாலும், உடலாலும் முதன்மையான போர்வீரர்களைக் கொல்லவல்ல அந்த யானையுடன் சேர்ந்து, சகுனியைக் கொல்வதற்காக அவனை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான். அந்த மலைவாசி சகுனியைப் பீடிப்பதில் வெற்றியும் அடைந்தான். எனினும், விரைவில் அந்தக் காந்தாரர்களின் தலைவன் {சகுனி} அவனது {குளிந்த இளவரசனின்} தலையை அறுத்தான்.(19) அதே நேரத்தில் பெரும் யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும், காலாட்களின் பெருங்கூட்டமும் {நகுலனின் மகனான} சதானீகனால் தாக்கப்பட்டு, முடக்கமடைந்து, நொறுங்கி, கருடனின் சிறகுகளால் உண்டான புயல் தாக்கப்பட்ட பாம்புகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.(20)

அப்போது (கௌரவத் தரப்பைச் சார்ந்த) குளிந்த போர்வீரன் ஒருவன், சிரித்துக் கொண்டே, நகுலன் மகனான சதானீகனைக் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் துளைத்தான். எனினும், நகுலன் மகனோ, தாமரைக்கு ஒப்பான தன் எதிராளியின் தலையை ஒரு கத்தித் தலைக் கணையை {க்ஷுரப்ரத்தைக்} கொண்டு, அவனது உடலில் இருந்து வெட்டினான்.(21) அப்போது கர்ணனின் மகன் {விருஷசேனன்}, முழுக்க இரும்பாலான மூன்று கணைகளால் சதானீகனையும், அதே அளவு கணைகளால் அர்ஜுனனையும் துளைத்தான். பீமனை மூன்று கணைகளாலும், நகுலனை ஏழாலும், ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} பனிரெண்டாலும் துளைத்தான்.(22) மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அடையும் அந்த விருஷசேனனின் அருஞ்செயலைக் கண்ட கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து அவனைப் பெரிதும் பாராட்டினர். எனினும், அவர்கள் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} ஆற்றலையும் அறிந்தவர்களாக இருந்ததால், நெருப்புக்குள் ஏற்கனவே ஊற்றப்பட்ட காணிக்கையாகவே விருஷசேனனைக் கருதினர்.(23) அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மனிதர்களில் முதன்மையான மாத்ரியின் மகன் நகுலன் அனைவருக்கும் மத்தியில் தன் தேரை இழந்ததைக் கண்டும், கணைகளால் சிதைக்கப்பட்ட ஜனார்த்தனனைக் கண்டும், அந்தப் போரில் சூதன் மகனுக்கு (கர்ணனுக்கு) முன்பாக அப்போது நின்று கொண்டிருந்த விருஷசேனனை எதிர்த்து விரைந்தான்.(24) இந்திரனை எதிர்த்துச் செல்லும் நமுசியைப் போலவே பெருந்தேர்வீரனான அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, கடுமையானவனும், மனிதர்களில் முதன்மையானவனும், ஆயிரங்கணைகளைக் கொண்டவனும், தன்னை நோக்கி வருபவனுமான அர்ஜுனனை எதிர்த்து விரைந்தான்.(25)

எவருடைய ஆதரவுமற்ற அந்த உயர் ஆன்மக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, அந்தப் போரில் ஒரு கணையால் வேகமாகப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்து, பழங்காலத்தில் இந்திரனைத் துளைத்த பிறகு முழங்கிய நமுசியைப் போலவே பெருமுழக்கம் செய்தான்.(26) மீண்டு விருஷசேனன், உறுதிமிக்கக் கணைகள் பலவற்றால் பார்த்தனின் இடது கக்கத்தைத் துளைத்தான். அடுத்ததாக ஒன்பது கணைகளால் கிருஷ்ணனைத் துளைத்த அவன், மீண்டும் பத்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.(27) வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், அந்த உறுதி மிக்கக் கணைகளால் விருஷசேனனால் துளைக்கப்பட்ட பிறகு, சற்றே கோபமடைந்து, கர்ணன் மகனை {விருஷசேனனைக்} கொல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(28) உயர் ஆன்மா கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், கோபத்தால் மூன்று கோடுகளுடன் பள்ளமாகிய புருவத்துடன், போரின் முன்னணியில் இருந்து, அம்மோதலில் விருஷசேனனின் அழிவுக்காக எண்ணற்ற கணைகளை விரைவாக ஏவினான்.(29) 

யமனே போரிட்டாலும், அவனையும் கொல்ல வல்ல அந்த வீரன் {அர்ஜுனன்}, கோபத்தால் சிவந்த கண்களுடன், பயங்கரமாகச் சிரித்தபடியே, கர்ணனிடமும், துரியோதனன் மற்றும் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலிருந்த கௌரவர்களிடமும், இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! கர்ணா, இந்தப் போரில் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சீற்றமிக்க விருஷசேனனை என் கூரிய கணைகளால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைப்பேன். பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், தனியொருவனாக இருந்தவனும், ஆதரவற்றவனாகத் தன் தேரில் இருந்தவனுமான என் மகனை {அபிமன்யுவை}நான் இல்லாத வேளையில், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொன்றதாக மக்கள் சொல்கின்றனர். எனினும் நான் உன் மகனை {விருஷசேனனை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்வேன். கௌரவத் தேர்வீரர்கள் அனைவரும் இவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். சீற்றமிக்க விருஷசேனனை நான் கொல்வேன். அதன் பிறகு, ஓ! மூடா {கர்ணா}, அர்ஜுனனான நான் போருக்கு மத்தியில் வைத்து உன்னைக் கொல்வேன். இன்றைய போரில் நான் இந்தச் சச்சரவின் வேரும், துரியோதனனின் ஆதரவின் விளைவால் செருக்கடைந்திருப்பவனுமான உன்னைக் கொல்வேன். என் பலத்தை வெளிபடுத்தி, இந்தப் போரில் நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன், பீமசேனரோ, எவனது தீய கொள்கையின் மூலம், பகடையில் பிறந்த இந்தச் சச்சரவு எழுந்ததோ, அந்தத் துரியோதனனைக் கொல்லப் போகிறார்” என்றான் {அர்ஜுனன்}.(30-34) இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, அந்தப் போரில் விருஷசேனன் மீது இலக்கை வைத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கர்ணன் மகனின் படுகொலைக்காக எண்ணற்ற கணைகளை ஏவினான்.(35)

அப்போது கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அச்சமில்லாமலும், பெரும்பலத்துடனும், பத்து கணைகளால் விருஷசேனனின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். கத்தித் தலை கொண்ட நான்கு கடுங்கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அவன் {அர்ஜுனன்}, விருஷசேனனின், வில், இரு கரங்கள் மற்றும் சிரத்தை அறுத்தான்.(36) பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கர்ணன் மகன் {விருசசேனன்}, கரங்களையும், சிரத்தையும் இழந்து, மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழும் மலர்களுடன் கூடிய ஒரு பெரும் சாலமரத்தைப் போலத் தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(37) தன் மகன் இவ்வாறு கணைகளால் தாக்கப்பட்டு, தன் வாகனத்தில் இருந்து விழுவதைக் கண்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டுவனும், சூதன் மகனுமான கர்ணன், தன் மகனின் {விருஷசேனனின்} மரணத்தால் ஏற்பட்ட துயருடன் எரிந்து கோபத்தால் ஈர்க்கப்பட்டு, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தனின் தேரை எதிர்த்து வேகமாத் தன் தேரில் சென்றான்.(38) உண்மையில், தான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனால் போரில் தன் மகன் {விருஷசேனன்} கொல்லப்படுவதைக் கண்ட அந்த உயர் ஆன்மக் கர்ணன், பெருங்கோபத்தால் நிறைந்து, கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் எதிர்த்து விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}[2].(39)

கர்ணனை எதிர்த்துச் சென்ற அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 86-கர்ணனைக் கொல்ல அர்ஜுனனுக்கு உற்சாகமூட்டிய கிருஷ்ணன்; அன்றைக்கே கர்ணனைக் கொல்லாமல் திரும்புவதில்லை எனக் கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்; கர்ணனை எதிர்த்துக் குதிரைகளைத் தூண்டிய கிருஷ்ணன்; கர்ணனை அடைந்த அர்ஜுனனின் தேர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரிய வடிவத்தைக் கொண்டவனும், முழங்கிக் கொண்டிருப்பவனும், தேவர்களாலேயே தடுக்கப்பட முடியாதவனுமான கர்ணன், பொங்கும் கடலென முன்னேறிவருவதைக் கண்ட மனிதர்களில் காளையான அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(1) “வெண்குதிரைகளைக் கொண்டவனும், சல்லியனைத் தன் சாரதியாகக் கொண்டவனுமான தேர்வீரனை {கர்ணனை} எதிர்த்தே நீ போரிடப் போகிறாய். எனவே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}! உன் பொறுமை அனைத்தையும் அழைப்பாயாக {திரட்டுவாயாக}.(2) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நன்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ள கர்ணனின் தேரைக் காண்பாயாக. வெண்குதிரைகள் இணைக்கப்பட்டுள்ள அதில் {அந்தத் தேரில்} ராதையின் மகனே {கர்ணனே} போர்வீரனாக நின்று கொண்டிருக்கிறான்.(3) கொடிகள் நிறைந்ததும், மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான அது {அந்தத் தேர்}, வெண்ணிறம் கொண்ட குதிரைகளால், ஆகாயத்தில் தாங்கிச் செல்லப்படும் தெய்வீகத் தேரைப் போலவே தெரிகிறது.(4) யானை கட்டும் கயிற்றைப் பொறியாக {இலச்சனையாகக்} கொண்டதும், இந்திரனின் வில்லைப் போலத் தெரிவதும், ஆகாயத்தைத் தெளிவான கோட்டால் பிரிப்பதுமான அந்தக் கர்ணனின் கொடிமரத்தைக் காண்பாயாக.(5)

மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணை மாரியை ஏவி வருபவனும், திருதராஷ்டிரர் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தால் முன்னேறி வருபவனுமான கர்ணனைக் காண்பாயாக.(6) அங்கே, அந்தத் தேரின் முதன்மைப் பகுதியில் வீற்றிருக்கும் மத்ரர்களின் அரசத் தலைவனே {சல்லியனே}, அளவிலா சக்தி கொண்ட ராதையின் மகனுடைய குதிரைகளை வழிநடத்தி வருகிறார்.(7) அவர்களுடைய {கௌரவர்களுடைய} பேரிகைகளின் முழக்கத்தையும், சங்குகளின் கடும் ஒலியையும் கேட்பாயாக. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அனைத்துப் பக்கங்களில் இருந்து வரும் பல்வேறு சிங்க முழக்கங்களைக் கேட்பாயாக.(8) அளவிலா சக்தி கொண்ட கர்ணனால் வளைக்கப்படுவதும், பிற பேரொலிகள் அனைத்தையும் அமைதியாக்குவதுமான (விஜயம் என்ற) வில்லின் பயங்கர நாணொலியைக் கேட்பாயாக.(9) அங்கே, அந்தப் பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களைப் பின்தொடர்ந்து வருபவர்கள், பெருங்காட்டில் உள்ள மான்கூட்டமொன்று கோபக்கார சிங்கமொன்றைக் கண்டது போலப் பிளந்து ஓடுகின்றனர்.(10)

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, சூதன் மகனை {கர்ணனை} நீ மிகக் கவனமாகக் கொல்வதே உனக்குத் தகும். உன்னைத் தவிர வேறு எந்த மனிதனும் கர்ணனின் கணைகளைத் தாங்கிக் கொள்ளத் துணிய மாட்டான்.(11) மூன்று உலகங்களையும், அவற்றில் உள்ள அசையும், மற்றும் அசையா உயிரினங்களையும், தேவர்களையும், கந்தர்வர்களையும் போரில் வெல்லத்தகுந்தவன் நீ என்பதை நான் நன்கு அறிவேன்.(12) கடுமையானவனும், பயங்கரமானவனும், பெருந்தேவனும், மூக்கண் சர்வனும், கபர்தின் என்று அழைக்கப்படுவபனுமான அந்த ஈசானனுடனே {சிவனுடனேயே} நீ போரிட்டாய் எனும்போது, வேறு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது.(13) எனினும், உயிரினங்கள் அனைத்தின் அருளுக்கும் மூலகாரணனும், ஸ்தாணு என்று அழைக்கப்படுவனும், அந்தத் தேவர்களுக்குத் தேவனுமான சிவனையே நீ போரில் நிறைவு செய்திருக்கிறாய். பிற தெய்வங்கள் அனைவரும் உனக்கு வரங்களை அளித்திருக்கின்றனர்.(14) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்தத் தேவர்களுக்குத் தேவனும், திரிசூலம் தரித்தவனுமான அந்தத் தெய்வத்தின் {சிவனின்} அருளால், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, {அசுரன்} நமுசியைக் கொன்ற இந்திரனைப் போல நீ கர்ணனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(15)

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, என் வெற்றி உறுதியானதே. ஓ! மதுசூதனா, உலகங்கள் அனைத்திற்கும் ஆசானான நீ என்னிடம் நிறைவு கொண்டிருப்பதால் இஃதில் எந்தச் சந்தேகமும் இல்லை.(16) ஓ! ரிஷிகேசா, ஓ! பெரும் தேர்வீரா, என் குதிரைகளையும், தேரையும் தூண்டுவாயாக. இன்று கர்ணனைக் கொல்லாமல் போரில் இருந்து பல்குனன் {அர்ஜுனன்} திரும்பமாட்டான்.(17) இன்று கர்ணன் கொல்லப்படுவதையும், என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்படுவதையும் காண்பாயாக. அல்லது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, (கர்ணனின்) கணைகளால் நான் கொல்லப்படுவதை இன்று காண்பாயாக.(18) மூவுலங்கங்களையும் மலைக்கச்செய்ய வல்ல அந்தப் பயங்கப்போரானது நெருங்கி வருகிறது. இந்தப் பூமி உள்ளளவும் இதைக் குறித்து மக்கள் பேசப் போகின்றனர்” என்றான் {அர்ஜுனன்}.(19)

உழைப்பால் எப்போதும் களைக்காத கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, பகையானையை எதிர்த்து விரையும் யானையொன்றைப் போலக் கர்ணனை எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(20) பெரும் சக்தியைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! ரிஷிகேசா, காலங்கடக்கிறது, குதிரைகளைத் தூண்டுவாயாக” {என்று சொன்னான்}. இவ்வாறு பாண்டுவின் உயர் ஆன்ம மகனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்},(21) அவனை வெற்றியடையும்படி வாழ்த்தி, மனோ வேகம் கொண்ட அந்தக் குதிரைகளைத் தூண்டினான். பிறகு, பெரும் வேகத்தைக் கொண்ட பாண்டு மகனின் {அர்ஜுனனின்} தேரானது, கர்ணனின் தேருடைய முகப்பை அடைந்தது” {என்றான் சஞ்சயன்}.(22)

ஆகாயத்தில் நின்ற தேவாசுரர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 87-கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நேரப்போகும் போரைக் காண ஆகாயத்தில் கூடிய தேவாசுரர்கள்; முறையே இரண்டு தரப்பாகத் தேவாசுரர்கள் பிரிந்தது; கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் வெற்றியானது சமமானதாக இருக்க வேண்டும் என்று உயிரினங்களால் பிரம்மனிடம் விரும்பிக் கேட்கப்பட்டது; அர்ஜுனனுக்கே வெற்றி என இந்திரனும்; கர்ணனுக்கே வெற்றி எனச் சூரியனும் விரும்பி கேட்டது; அர்ஜுனனே வெற்றிபெறுவான் என்று சொன்ன பிரம்மனும், ஈசானனும்; கர்ணன், சல்லியன் உரையாடல்; அர்ஜுனன், கிருஷ்ணன் உரையாடல்; கர்ணனை நிச்சயம் கொல்லப்போவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “{தன் மகன்} விருஷசேனன் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், துயரத்தாலும், சினத்தாலும் நிறைந்து, தன் மகனின் மரணத்திற்காகக் கண்களில் கண்ணீரைச் சிந்தினான்.(1) பெரும் சக்தியையும், சினத்தால் தாமிரமெனச் சிவந்த கண்களையும் கொண்ட கர்ணன், தன் எதிரியான தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போருக்கழைத்து, அவன் முகத்திற்கு நேராகச் சென்றான்.(2) அப்போது சூரியப் பிரகாசம் கொண்டவையும், புலித் தோல்களால் மூடப்பட்டவையுமான அந்தத் தேர்கள் இரண்டும், அருகருகே இருக்கும் இரு சூரியன்களைப் போலத் தெரிந்தன.(3) வெண் குதிரைகளைக் கொண்டவர்களும், எதிரிகளை நொறுக்கும் போர்வீரர்களும், பெரும் வில்லாளிகளும், சூரியப் பிரகாசத்தைக் கொண்டவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும் {கர்ணனும், அர்ஜுனனும்}, ஆகாயத்திலுள்ள சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(4) இந்திரனுக்கும், விரோசனன் மகனுக்கும் (பலிக்கும்) ஒப்பான அவ்வீரர்கள் இருவரும், மூவுலகையும் வெற்றிக் கொள்ளப் போருக்குத் தயாராவதைக் கண்டு, உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தில் நிறைந்தன.(5)

தேர்ச்சக்கரச் சடசடப்பொலிகள், வில்லின் நாணொலிகள், உள்ளங்கை ஒலி, கணைகளின் விஸ் ஒலி, சிங்க முழக்கங்கள் ஆகியவற்றுடன் கூடிய அந்தப் போர் வீரர்கள் இருவரும், ஒருவரையொருவர் எதிர்த்து விரைவதைக் கண்டும், கர்ணனின் யானை கட்டும் கயிற்றையும், பார்த்தனின் {அர்ஜுனனின்} குரங்கையும் கொண்ட கொடிமரங்களுடன் அவர்கள் ஒருவரையொருவர் அணுகுவதைக் கண்டும், பூமியின் தலைவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் நிறைந்தனர்.(6,7) ஒருவரோடொருவர் மோதப்போகும் அவ்விரு தேர்வீரர்களைக் கண்ட மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிங்க முழக்கங்களைச் செய்தபடியே அவர்களை மீண்டும் மீண்டும் உற்சாகப்படுத்தினர்.(8) பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கர்ணனுக்கு இடையிலான தனிப்போரைக் கண்ட ஆயிரக்கணக்கான போராளிகள், தங்கள் கக்கங்களை அறையவும், தங்கள் ஆடைகளைக் காற்றில் அசைக்கவும் செய்தனர்.(9) கௌரவர்கள், கர்ணனை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் இசைக்கருவிகளை இசைத்து, எண்ணற்ற சங்குகளை முழக்கினர்.(10) அதே போல, பாண்டவர்கள் அனைவரும், தனஞ்சயனை {அர்ஜுனனை} மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக எக்காளங்கள் மற்றும் சகங்களைக் கொண்டு திசைகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தனர்.(11)

கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கு இடையிலான அந்த மோதல் நேர்ந்த சமயத்தில், துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் செய்த அந்தச் சிங்க முழக்கங்கள், கக்க அறைதல்கள், பிற உரத்த கூச்சல்கள் மற்றும் முழக்கங்கள் பேராற்றல் வாய்ந்தனவாக இருந்தன.(12) மனிதர்களில் புலிகளும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அவர்கள் {கர்ணனும், அர்ஜுனனும்} தங்கள் உறுதிமிக்க வில், கணைகள் மற்றும் ஈட்டிகளை ஆயத்தம் செய்து கொண்டு, நெடுங்கொடிமரங்களுடன் கூடிய தங்கள் தேர்களில் நின்று கொண்டிருப்பதை மக்கள் கண்டனர்.(13) கவசம் பூண்டு, கத்திகளைக் கச்சையில் கட்டிக் கொண்டு, வெண்குதிரைகளில் வந்த அவ்விருவரும், சிறந்த சங்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். ஒருவன் {அர்ஜுனன்} கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டிருந்தான், மற்றவனோ {கர்ணனோ} சல்லியனைத் தன் சாரதியாகக் கொண்டிருந்தான். பெரும் தேர்வீரர்களான அவர்கள் இருவரும் ஒருவர் போலவே தெரிந்தனர்.(14) சிங்கக் கழுத்துகளையும், நீண்ட கரங்களையும், சிவந்த கண்களையும் கொண்ட அவர்கள் இருவரும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். மின்னலின் கீற்றுகளைப் போலத் தெரிந்த விற்களைத் தரித்துக் கொண்ட அவர்கள் இருவரும், ஆயுத செல்வத்தால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.(15)

வெண்சாமரங்களால் வீசப்பட்டு, தங்கள் தலைக்கு மேலே வெண்குடையால் அலங்கரிக்கப்பட்டவர்களாக அவ்விருவரும் இருந்தனர். சிறந்த அம்பறாத்தூணிகளைக் கொண்ட அவர்கள் இருவரும், மிகவும் அழகாகத் தெரிந்தனர்.(16) அவ்விருவரும் செஞ்சந்தனக் குழம்பால் பூசப்பட்டு, மதங்கொண்ட இரு காளைகளைப் போலத் தெரிந்தனர். சிங்கத்தைப் போல அகன்ற கழுத்தையும், அகன்ற மார்பையும் கொண்டவர்களான அவ்விருவரும், பெரும்பலத்துடன் கூடியவர்களாகவும் இருந்தனர்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் அறைகூவி அழைத்த அவர்களில் ஒவ்வொருவரும், அடுத்தவனைக் கொன்றுவிட விரும்பினர். மாட்டுக் கொட்டகையில் உள்ள வலிமைமிக்கக் காளைகளைப் போல, அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர்.(18) மதங்கொண்ட இரு யானைகளைப் போலவோ, கோபத்துடன் கூடிய மலைகளைப் போலவோ, கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்குட்டிகளைப் போலவோ, அனைத்தையும் அழிக்கும் யமன்களைப் போலவோ அவர்கள் இருந்தனர்.(19) இந்திரனையும், விருத்திரனையும் போல ஒருவரோடொருவர் சினம் கொண்ட அவர்கள், காந்தியில் சூரியனையும், சந்திரனையும் போலத் தெரிந்தனர். கோபத்தால் நிறைந்த அவர்கள், யுக முடிவின் போது, உலகை அழிக்க எழும் வலிமைமிக்கக் எரிக்கோள்கள் இரண்டுக்கு ஒப்பாக இருந்தனர்.(20)

அவர்கள் இருவரும் தெய்வீகத் தந்தைமாருக்குப் பிறந்தவர்களாகவும், அழகில் தேவர்களுக்கு ஒப்பானவர்களாகவும், சக்தியில் தேவர்களைப் போன்றவர்களாகவும் இருந்தனர். உண்மையில் தாமாகவே அந்தப் போர்க்களத்தில் சூரியனாகவும், சந்திரனாகவும் அவர்கள் தெரிந்தனர்.(21) அவ்விருவரும், பெரும் வலிமை கொண்டவர்களாகவும், போரில் செருக்கு நிறைந்தவர்களாவும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களாகவும் இருந்தனர். புலிகளின் மூர்க்கத்தைக் கொண்டவர்களும், மனிதர்களில் புலிகளுமான அவ்விரு வீரர்களையும் கண்ட உமது துருப்பினர், ஓ! ஏகாதிபதி, பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(22) மனிதர்களில் புலிகளான கர்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிருவரும் போரிடுவதைக் கண்ட அனைவரின் இதயங்களுக்குள்ளும், அவர்களில் யார் வெல்லப் போகிறார்கள் என்ற ஐயம் நுழைந்தது.(23) மேன்மையான ஆயுதங்களைக் கொண்டவர்களும், போரில் நன்கு பயிற்சி பெற்றவர்களுமான அவ்விருவரும், தங்கள் கக்கங்களை அறைந்து {அவ்வொலியால்} ஆகாயத்தை எதிரொலிக்கச் செய்தனர்.(24) ஆற்றல் மற்றும் வலிமையின் விளைவால் பெரும் வேகத்தைக் கொண்ட அவர்களின் போர்த்திறனைப் பொறுத்தவரை, அசுரன் சம்பரனுக்கும், தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} ஒப்பானவர்களாக அவ்விருவரும் இருந்தனர்.(25)

அவ்விருவரும் போரில் கார்த்தவீரியனுக்கோ, தசரதன் மகனுக்கோ {இராமனுக்கோ} இணையானவர்களும், சக்தியில் விஷ்ணுவுக்கோ, போரில் பவனுக்கோ {சிவனுக்கோ} இணையானவர்களாக இருந்தனர்.(26) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரைகளைக் கொண்ட அவ்விருவரும், முதன்மையான தேர்களால் சுமக்கப்பட்டார்கள். மேலும் அந்தப் போரில் அவ்விருவரும் முதன்மையான சாரதிகளைக் கொண்டிருந்தனர்.(27) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தேர்களில் பிரகாசமாகத் தெரிந்த அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரையும் காண அங்கே வந்திருந்த சித்தர்கள் மற்றும் சாரணர்கள் கூட்டம் ஆச்சரியத்தால் நிறைந்தது.(28) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே, தங்கள் துருப்புகளுடன் கூடிய தார்தராஷ்டிரர்கள், காலம் எதையும் இழக்காமல், போர்க்கள ரத்தினமான உயர் ஆன்மக் கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.(29) அதேபோலவே, திருஷ்டத்யும்னன் தலைமையிலான பாண்டவர்களும், மகிழ்ச்சியால் நிறைந்து, போரில் நிகரில்லாதவனான உயர் ஆன்மப் பார்த்தனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.(30)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், உமது படையின் பணயப் பொருளாகக் கர்ணனும், பாண்டவர்களின் பணயப் பொருளாகப் பார்த்தனும் {அர்ஜுனனும்} ஆனார்கள்.(31) அந்தச் சபையின் உறுப்பினர்களான இருதரப்புப் படைவீரர்களும், அவ்விளையாட்டின் பார்வையாளர்களானார்கள். உண்மையில், அந்தப் போர்விளையாட்டில் ஈடுபட்டோரைப் பொறுத்தவரை, வெற்றியோ, தோல்வியோ உறுதியானதாகவே இருந்தது.(32) கர்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய அவ்விருவரும் வெற்றிக்காவோ, நேர்மாறான நிலைக்காகவோ நமக்கும், பாண்டவர்களுக்குமான போர்க்கள விளையாட்டை நின்றபடியே தொடங்கினார்கள்.(33) போரில் திறம்பெற்றவர்களான அவ்விருவரும், ஓ! ஏகாதிபதி, அம்மோதலில் ஒருவரோடொருவர் மிகவும் கோபம் கொண்டு, ஒருவரையொருவர் கொல்ல விலும்பினர்.(34) இந்திரன் மற்றும் விருத்திரனைப் போல, ஒருவரையொருவர் உயிரெடுக்க விரும்பிய அவர்கள், பயங்கர வடிவம் கொண்ட இரு பெரும் எரிநட்சத்திரங்களைப் போல ஒருவரையொருவர் எதிர்த்தனர்.(35)

அப்போது ஆகாயத்தில் இருந்த உயிரினங்களுக்கு மத்தியில், கர்ணன் மற்றும் அர்ஜுனன் குறித்த காரியத்தில் தூற்றுதல்களுடன் கூடிய வேற்றுமைகளும், சர்ச்சைகளும் எழுந்தன. உலகவாசிகள் அனைவரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்களுக்குள் வேறுபடுவது கேட்கப்பட்டது.(36) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள் {நாகர்கள்}, ராட்சசர்கள் ஆகியோர் கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான அம்மோதலில் எதிரெதிர் பக்கங்களை எடுக்க நேர்ந்தது.(37) விண்மீன்களுடன் கூடிய ஆகாயமானது, ஓ! ஏகாதிபதி, கர்ணனின் காரியத்தில் ஆவல் கொண்ட அதே வேளையில், இந்தப் பரந்த பூமியானது {பூமியானவள்}, மகனிடம் தாய்க் கொள்ளும் ஆவலைப் போல, பார்த்தனின் {அர்ஜுனனின்} காரியத்தில் ஆவல்கொண்டது {ஆவல்கொண்டாள்}[1].(38) ஆறுகள், கடல்கள், மலைகள், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மரங்கள், இலையுதிர்க்கும் செடிகள் மற்றும் கொடிகள் ஆகியன கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் தரப்பை ஏற்றன.(39) அசுரர்கள், யாதுதானர்கள், குஹ்யர்கள், ஓ! எதிரிகளை எரிப்பவரே, கருங்காக்கைகள் மற்றும் பிற வானுலாவிகள் ஆகியன கர்ணனின் தரப்பை ஏற்றன.(40)

ரத்தினங்கள், விலைமதிக்கமுடியாத செல்வங்கள் அனைத்தும், வரலாறுகளை ஐந்தாவதாகக் கொண்ட நான்கு வேதங்கள், உபவேதங்கள், உபநிஷத்துகளுடன் கூடிய அதன் புதிர்களும், தொகுப்புகளும்,(41) வாசுகி, சித்திரசேனன், தக்ஷகன், உபதக்ஷகன், மலைகள் அனைத்தும், தங்கள் பிள்ளைகளுடன் கூடிய கத்ருவின் வாரிசுகள் அனைவரும், நஞ்சுடன் கூடிய பெரும்பாம்புகள் அனைத்தும், நாகர்களும் அர்ஜுனன் தரப்பை ஏற்றன.(42) ஐராவதனும் அவனது பிள்ளைகளும், சுரபியின் வாரிசுகள், வைசாலியின் வாரிசுகள், போகினிகள் ஆகியோரும் அர்ஜுனனை ஏற்றன. சிறு பாம்புகள் அனைத்தும் கர்ணனின் தரப்பை அடைந்தன. ஓநாய்கள், காட்டு மான்கள், மங்கலகரமான அனைத்து வகை விலங்குகள், பறவைக் ஆகியன, ஓ! மன்னா, பார்த்தனின் {அர்ஜுனனின்} வெற்றியை விரும்பின.(44) வசுக்கள், மருத்துக்கள், சத்யஸ்கள், ருத்திரர்கள், விஸ்வதேவர்கள், அசுவினிகள், அக்னி, இந்திரன், சோமன், பவனன் ஆகியோரும் மற்றும் திசைகளின் பத்து புள்ளிகளும் தனஞ்சயனின் ஆதரவாளர்களானார்கள், அதே வேளையில் ஆதித்யர்கள் அனைவரும் கர்ணனின் தரப்பை ஏற்றனர்.(45)

வைசியர்கள், சூத்திரர்கள், சூதர்கள், பிறப்பால் கலப்பு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அனைவரும், ஓ! மன்னா, ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} தரப்பை ஏற்றனர்.(46) எனினும், தேவர்கள், பித்ருக்கள், அவர்களோடிருந்தவர்கள், அவர்களைப் பின்தொடர்பவர்கள், யமன், வைஸ்ரவணன் {குபேரன்}, வருணன் ஆகியோர் அர்ஜுனனின் தரப்பிலிருந்தனர். பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் ஆகியோரும், வேள்விகள், தக்ஷிணைகள் என்றழைக்கப்படும் கொடைகள் ஆகியனவும் அர்ஜுனனின் தரப்பை ஏற்றன.(47) பிரேதங்கள், பிசாசங்கள், ஊனுண்ணும் பல விலங்குகள் மற்றும் பறவைகள், கடல்வாழ் அசுரர்களுடன் கூடிய ராட்சசர்கள், நாய்கள், நரிகள் ஆகியன கர்ணனின் தரப்பை ஏற்றன.(48) தெய்வீக, மறுபிறப்பாள, அரச முனிகளின் பல்வேறு இனங்கள், பாண்டு மகனை {அர்ஜுனனை} ஏற்றனர். தும்புருவின் தலைமையிலான கந்தர்வர்கள், ஓ! மன்னா, அர்ஜுனன் தரப்பில் இருந்தனர்.(49) ஓநாய்கள், மான்கள், யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள், மேகங்கள், காற்று ஆகியவற்றைத் தங்கள் வாகனங்களாகக் கொண்ட பிராதா மற்றும் மௌனி ஆகியோரின் வாரிசுகள், கந்தர்வர்களில் பல்வேறு வகையினர், அப்சரஸ்கள், விவேகிகளான தவசிகள் பலர் ஆகியோர், கர்ணன் மற்றும் அர்ஜுனனுக்கிடையிலான அம்மோதலைக் காண அங்கே வந்தனர்.(50,51)

தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷர்கள், பறவைகள், வேதங்களை அறிந்தவர்களான பெரும் முனிவர்கள், ஸ்வாதா என்றழைக்கப்படும் கொடைகளில் வாழும் பித்ருக்கள்,(52) தவம், அறிவியல்கள், பல்வேறு நன்மைகளைக் கொண்ட (தெய்வீக) மூலிகைகள் ஆகியன, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே வந்து நிலைகொண்டு பேரொலியை எழுப்பின.(53) மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களுடன் கூடிய பிரம்மனும், உயிரினங்களின் தலைவனும், தேரில் இருந்தவனுமான பவனும் {சிவனும்}, ஆகாயத்தின் அந்தப் பகுதிக்கு வந்தனர்.(54) உயர் ஆன்மா கொண்டோரான கர்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் ஒருவரோடொருவர் மோதப்போவதைக் கண்டு சக்ரன் {இந்திரன்}, “அர்ஜுனன், கர்ணனை வெல்லட்டும்” என்றான். எனினும் சூரியனோ, “கர்ணன், அர்ஜுனனை வெல்லட்டும்.(55) உண்மையில், என் மகன் கர்ணன், அர்ஜுனனைக் கொன்று இந்தப் போரில் வெற்றியை அடையட்டும்” என்றான்.(56)

அங்கே இருந்த சூரியன் மற்றும் வாசவன் {இந்திரன்} ஆகிய அந்தப் புகழ்பெற்ற இருவரும், எதிரெதிர் தரப்புகளை ஏற்று, இவ்வாறே ஒருவரோடொருவர் சர்ச்சை செய்து கொண்டனர்.(57) உயர் ஆன்மா கொண்டோரான கர்ணன் மற்றும் தனஞ்சயன் ஆகிய இருவரும் போரிடப் போவதைக் கண்டு தேவர்களும், அசுரர்களும் எதிரெதிர் தரப்புகளை ஏற்றனர்.(58) தெய்வீக முனிவர்கள், தேவர்கள் அனைவரும், உயிரினங்கள் அனைத்துடனும் கூடிய மூவுலகமும் அந்தக் காட்சியைக் கண்டு நடுங்கினர்.(59) தேவர்கள், பார்த்தனின் தரப்பிலிருந்தனர், அசுரர்களோ, கர்ணனின் தரப்பிலிருந்தனர். இவ்வாறே அம்மோதலில் விருப்பம் கொண்ட உயிரினங்கள் அனைத்தும், இங்கோ, அங்கோ எனத் தேர்வீரர்களில் தலைவர்களான குரு அல்லது பாண்டவ வீரனின் தரப்பை ஏற்றன.(60)

தான்தோன்றியான படைப்புத்தலைவனை (பிரம்மனைக்) கண்ட தேவர்கள், அவனிடம், “ஓ! தேவா, மனிதர்களில் சிங்கங்களான இவ்விருவருக்கும் வெற்றிச் சமமானதாக இருக்கட்டும். கர்ணன் மற்றும் அர்ஜுனனுக்கு இடையிலான இம்மோதலின் விளைவாக இந்தப் பரந்த அண்டம் அழியாதிருக்கட்டும். ஓ! தான்தோன்றியே, இவ்விருவருக்கும் இணையான வெற்றியே கிட்டட்டும் என்ற வார்த்தையை மட்டும் சொல்வீராக” என்றனர்.(62) இவ்வார்த்தைகளைக் கேட்ட மகவத் {இந்திரன்}, பெரும்பாட்டனை வணங்கி, நுண்ணறிவு கொண்ட அனைத்திலும் முதன்மையான அந்தத் தேவர்களுக்குத் தேவனிடம் {பிரம்மனிடம்}, “கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும் எப்போதும் வெற்றியை அடைவது உறுதியென நீரே முன்பு சொல்லியிருக்கிறீர். நீர் சொன்னவாறே (இப்போது) ஆகட்டும். ஓ! புனிதமானவரே {பிரம்மனே}, என்னிடம் நிறைவு கொள்வீராக” என்று சொன்னான்.(64)

இதைக் கேட்ட பிரம்மனும், ஈசானனும், அந்தத் தேவர்களின் தலைவனிடம் {இந்திரனிடம்}, “வேள்விக் கொடைகளை உண்பவனை {அக்னிதேவனைக்} காண்டவ வனத்தில் நிறைவு செய்தவனும், ஓ! சக்ரா {இந்திரா}, சொர்க்கத்திற்கு வந்து உனக்கு உதவியவனும், சவ்யசச்சினும் {இரு கரங்களைப் பயன்படுத்துபவனும்}, உயர் ஆன்மா கொண்டவனுமான அந்த விஜயனின் {அர்ஜுனனின்} வெற்றி உறுதியானதே.(65,66) கர்ணன், தானவர்களின் பக்கத்தில் இருக்கிறான். எனவே, அவன் தோல்வியடைய வேண்டும் என்பதே சரி. இதனால் தேவர்களின் காரியங்கள் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.(66) ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, ஒருவனின சொந்தக் காரியமானது எப்போதும் முக்கியமானதாக இருக்க வேண்டும். உயர் ஆன்மப் பல்குனன் {அர்ஜுனன்}, உண்மைக்கும், அறநெறிக்கும் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறான். அவன் எப்போதும் வெல்ல வேண்டும் என்பதில் ஐயமில்லை.(68) உயர் ஆன்மா கொண்டவனும், தன் கொடிமரத்தில் காளையைக் கொண்ட புனிதமான தேவன் {சிவன்}, எவனால் நிறைவு செய்யப்பட்டானோ, அண்டத்தின் தலைவனான விஷ்ணுவையே தன் தேரின் சாரதியாக எவன் கொண்டுள்ளானோ, ஓ! ஆயிரங்கண் கொண்டோனே {இந்திரா}, அவன் ஏன் வெற்றியடையமாட்டான்? பெரும் மனோசக்தியும், பெரும்பலமும் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, ஆயுதங்களில் சாதித்த, தவத்தகுதி கொண்ட ஒரு வீரனாவான்.(70) பெரும் உடல் சக்தியைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, மொத்த ஆயுத அறிவியலையும் தன்னிடம் கொண்டிருக்கிறான் {அறிந்திருக்கிறான்}. உண்மையில், பார்த்தன் அனைத்து சாதனைகளையும் செய்தவனாவான். தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுபவனாகையால் அவன் வெற்றியே அடைய வேண்டும்.(71) சாதகமவோ, பாதகமாகவோ இருக்கக்கூடிய விதியையே, தன் மகிமையின் விளைவால் மீறக் கூடியவன் பார்த்தன்; அவன் அவ்வாறு செய்கையில், உயிரினங்களுக்குப் பேரழிவு ஏற்படும்.(72) இருகிருஷ்ணர்களும் கோபத்தால் தூண்டப்படும் போது, எதைக் குறித்தும் கவலைகொள்ள மாட்டார்கள். உயிரினங்களில் காளைகளான இவ்விருவருமே, உண்மை மற்றும் உண்மையற்ற பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்கள் ஆவர்.(73) இவ்விருவரும், புராதனமானவர்களும், முனிவர்களில் சிறந்தவர்களுமான நரநாராயணர்கள் ஆவர். அவர்களை ஆட்சி செய்ய எவரும் கிடையாது. அவர்களே அனைவரையும் ஆட்சி செய்பவர்கள் ஆவர். முற்றிலும் அச்சமற்றவர்களான அவர்கள், எதிரிகள் அனைவரையும் எரிப்பவர்களாக இருக்கிறார்கள்.(74) சொர்க்கத்திலோ, மனிதர்களுக்கு மத்தியிலோ அவர்களுக்கு இணையான எவரும் கிடையாது. மூவுலகங்களும், தெய்வீக முனிவர்களும், சாரணர்களும் இவர்கள் இருவரின் பின்னால் இருக்கின்றனர்.(75)

தேவர்களும், உயிரினங்கள் அனைத்தும் இவர்களின் பின்னால் நடந்து செல்கின்றனர். இவ்விருவருடைய சக்தியின் விளைவாலேயே மொத்த அண்டமும் நிலைத்திருக்கிறது.(76)

மனிதர்களில் காளையான கர்ணன், இங்கிருக்கும் இந்த முதன்மையான உலகங்களை அடையட்டும். அவன் வசுக்கள், அல்லது மருத்துக்கள் ஆகியோரின் அடையாளத்தை அடையட்டும். விகர்த்தனன் {சூரியன்} மகன் {கர்ணன்}, துணிச்சல் மிக்கவனும், வீரனுமானதால், சொர்க்கத்தில் துரோணர் மற்றும் பீஷ்மருடன் சேர்த்து அவனும் வழிபடப்படட்டும். எனினும், வெற்றியானது இரு கிருஷ்ணர்களையே அடையட்டும்” என்றார் {பிரம்மனும், சிவனும்}.(78) தேவர்களில் முதன்மையான அவ்விருவரும் (பிரம்மனும், ஈசானனும்) இவ்வாறு சொன்னதும், ஆயிரம் கண்களைக் கொண்ட தேவன் {இந்திரன்}, உயிரினங்கள் அனைத்தையும் வணங்கி,(79) “அண்டத்தின் நன்மைக்காக அந்தத் தேவர்கள் இருவரால் சொல்லப்பட்டதை நீங்கள் கேட்டீர்கள். அஃது அப்படியே ஆகும், வேறாகாது. உற்சாகமிக்க இதயங்களுடன் நிற்பீராக” என்றான் {இந்திரன்}.(80)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயிரினங்கள் அனைத்தும், ஓ! ஐயா, ஆச்சரியத்தால் நிறைந்து, அந்தத் தேவனைப் புகழ்ந்தனர்.(81) அப்போது தேவர்கள் பல்வேறு வகைகளிலான நறுமணமிக்க மலர்களைப் பொழிந்து, தங்கள் எக்காளங்களை முழக்கினர்.(82) உண்மையில், தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரும், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்குள் நேரப்போகும் அந்த ஒப்பற்ற தனிப்போரைக் காண அங்கே காத்திருந்தனர்.(83) ஓ! மன்னா, கர்ணனும், அர்ஜுனனும் இருந்த இரண்டு தேர்களிலும் வெண்குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. இரண்டும் {அந்த இரண்டு தேர்களும்} சிறந்த கொடிமரங்களைக் கொண்டவையாகவும், உரத்த சடசடப்பொலியை உண்டாக்குபவையாகவும் இருந்தன.(84) துணிச்சல்மிக்க வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும், சல்லியனையும், கர்ணனையும் அணுகிய முதன்மையான வீரர்கள் பலரில் ஒவ்வொருவரும் தங்கள் சங்கை முழக்கினர்.(85)

அப்போது (அந்தப் போர்வீரர்கள் இருவருக்குள்ளும்) தொடங்கிய போரானது, மருண்டோர் அனைவரையும் அச்சுறுத்தியது. சக்ரனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் போல அவர்கள் ஒருவரையொருவர் கடுமையுடன் அறைகூவியழைத்தனர்.(86) முற்றிலும் பிரகாசமானவையாக இருந்த அந்த வீரர்கள் இருவரின் கொடிமரங்களும், அண்ட அழிவின் போது ஆகாயத்தில் எழுந்த ராகு மற்றும் கேது கோள்களைப் போல, அவர்களின் தேர்களில் மிக அழகாகத் தெரிந்தன.(87) யானை கட்டும் கயிற்றைக் கொண்டதும், ரத்தினங்களால் ஆனதும், மிக உறுதியானதும், இந்திரனின் வில்லுக்கு ஒப்பானதும், பாம்பைப் போலத் தெரிந்ததுமான கர்ணனின் கொடியானது, (காற்றில் அசைகையில்) பிரகாசமாகத் தெரிந்தது.(88) மேலும், அகன்ற வாயைக் கொண்டதும், பயங்கரமானதும், சூரியனைப் போலப் பார்க்கக் கடினமானதுமான பார்த்தனுக்குச் சொந்தமான முதன்மையான குரங்கு, {அதைப் பார்ப்பவர்களைத்} தன் உறுதிமிக்கப் பல்லால் அச்சுறுத்தியது.(89)

காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கொடிமரத்தில் இருந்த மூர்க்கமான குரங்கானது, போரிட விரும்பி, தன் நிலையில் இருந்து {அகன்று} விரைந்து, கர்ணனுடைய கொடிமரத்தின் மீது பாய்ந்தது.(90) பெரும் மூர்க்கத்தைக் கொண்ட அந்தக் குரங்கு, பாம்பின் மீது கருடன் பாய்வதைப் போல முன்னோக்கிப் பாய்ந்து, தன் நகங்களாலும், பற்களாலும், அந்த யானை கட்டும் கயிற்றைத் தாக்கியது.(91) சிறு மணி வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டதும், இரும்பைப் போலக் கடினமானதும், (யமன் அல்லது வருணனின் கைகளிலிருக்கும்) மரணச் சுருக்குக்கு {பாசக்கயிற்றுக்கு} ஒப்பானதுமான அந்த யானை கட்டும் கயிறானது, கோபத்தால் நிறைந்து குரங்கை நெருங்கியது.(92) இவ்வாறு அவ்விரு வீரர்களுக்கிடையிலானதும், பகடையாட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவற்றின் விளைவாக வந்ததுமான அந்தக் கடுமையான தனிப்போரில், அவர்களின் கொடிமரங்களே முதலில் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன. அதே வேளையில், ஒருவனின் குதிரைகள் மற்றவனின் குதிரைகளைப் பார்த்துக் கனைத்தன.(93) தாமரைக் கண் கேசவனோ {கிருஷ்ணனோ}, தன் கூரிய பார்வையால் சல்லியனைத் துளைத்தான். பின்னவனும் {சல்லியனும்}, முன்னவனை {கிருஷ்ணனைக்} கண்டு, அதே போன்ற பார்வைகளை வீசினான்.(94) எனினும், குந்தி மகனான தனஞ்சயன் தன் பார்வைகளால் கர்ணனை வென்ற அதே வேளையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} சல்லியனை வென்றான்.(95)

அப்போது சூதன் மகன் {கர்ணன்}, புன்னகைத்தவாறே சல்லியனிடம், “ஓ! நண்பரே, இன்று பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வகையிலாவது என்னை கொன்றுவிட்டால், அதன் பிறகு நீர் என்ன செய்வீர் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டான்.

அதற்குப் பதிலுரைத்த சல்லியன் {கர்ணனிடம்}, “நீ கொல்லப்பட்டால், கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் நான் கொல்வேன்” என்றான்.(96,97) மீண்டும் அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, “ஓ! கர்ணா, இன்றைய போரில் வெண்குதிரை கொண்ட அர்ஜுனன் உன்னைக் கொன்றால், ஒரே தேரில் செல்லும் நான் மாதவன் {கிருஷ்ணன்} மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் கொல்வேன்” என்றான்.”(98)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அர்ஜுனனும், கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்} இதே போன்ற கேள்வியைக் கேட்டான். எனினும் கிருஷ்ணன் புன்னகைத்தவாறே பார்த்தனிடம், பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(99) “சூரியன் தன் இடத்தில் இருந்து தளர்ந்து வீழலாம், பூமாதேவி ஆயிரம் துண்டுகளாகச் சிதறிப் போகலாம்; நெருப்புக் குளுமையாகலாம், இருப்பினும், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கர்ணனால் உன்னைக் கொல்ல இயலாது.(100) எனினும், அதுபோல் ஏதேனும் நடந்தால், அண்டமே அழியும் என்பதை அறிவாயாக. என்னைப் பொறுத்தவரை, என் வெறுங்கைகளைக் கொண்டே, போரில் கர்ணன் மற்றும் சல்லியன் ஆகிய இருவரையும் கொல்வேன்” என்றான்.(101)

கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன், சிரித்துக் கொண்டே, முயற்சியால் களைப்பேதும் அடையாதவனான கிருஷ்ணனுக்கு மறுமொழியாக,(102) “ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சல்லியர் மற்றும் கர்ணன் ஆகியோர் இருவரும் ஒன்று சேர்ந்தாலும், தனியனான எனக்கு ஈடாகமாட்டார்கள். தன் கொடிமரம், கொடிகள் ஆகியவற்றுடனும், சல்லியனுடனும், தனது தேர் மற்றும் குதிரைகளுடனும், தனது குடை, கவசம், ஈட்டிகள், கணைகள் மற்றும் வில் ஆகியவற்றுடனும் கூடிய கர்ணன், போரில் என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்படுவதை நீ இன்று காண்பாய்.(103,104) தன் தேர், குதிரைகள், ஈட்டிகள், கவசம், ஆயுதங்களுடன் கூடிய அவன் {கர்ணன்}, தந்தமுடைய யானையால் காட்டில் நொறுக்கப்படும் மரத்தைப் போல என்னால் தூசாகக் குறைக்கப்படப் போவதை நீ இன்று காண்பாய்.(105)

இன்று ராதை மகனின் {கர்ணனின்} மனைவிமார் விதவைகளாகப் போகின்றனர். உண்மையில், ஓ! மாதவா, அவர்கள் (கடந்த இரவின்) கனவுகளில், தங்களை அணுகும் தீமையின் அறிகுறிகளைக் கண்டிருப்பார்கள்.(106) உண்மையில், கர்ணனின் மனைவியர் விதவைகளாவதை நீ இன்று காண்பாய். முன்னறிவற்ற இந்த மூடன் {கர்ணன்}, சபைக்குள் கிருஷ்ணை {திரௌபதி} இழுத்து வரப்படுவதைக் கண்டு, மீண்டும் மீண்டும் சிரித்து, தீய வார்த்தைகளால் எங்களை நிந்தித்ததை நினைத்து உண்டாகும் கோபத்தை என்னால் அடக்கிக் கொள்ளவே முடியாது.(107,108) ஓ! கோவிந்தா, ஒரு மதங்கொண்ட யானையால் நொறுக்கப்படும் மலர்கள் நிறைந்த மரத்தைப் போல, என்னால் நொறுக்கப்படும் கர்ணனை நீ இன்று காண்பாய்.(109) ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, கர்ணன் வீழ்ந்த பிறகு, “ஓ! விருஷ்ணி குலத்தோனே, நற்பேற்றாலேயே வெற்றி உனதானது” என்ற அந்த இனிய வார்த்தைகளை நீ இன்று கேட்பாய்.(110) எதிரிக்குக் கடனைச் செலுத்தி, இதயத்தின் கனத்தைக் குறைத்துக் கொண்டு, அபிமன்யுவின் அன்னைக்கு {சுபத்திரைக்கு} நீ இன்று ஆறுதலை அளிப்பாய். மகிழ்ச்சியால் நிறையும் நீ, உன் தந்தைவழி அத்தையான குந்திக்கு இன்று ஆறுதலை அளிப்பாய்.(111) ஓ! மாதவா {கிருஷ்ணா}, கண்ணீர் நிறைந்த முகத்துடன் கூடிய கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்}, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரருக்கும், அமுதம் போன்ற இனிய வார்த்தைகளால் நீ இன்று ஆறுதலை அளிப்பாய்” என்றான் {அர்ஜுனன்}.”(112)

துரியோதனனுக்கு அஸ்வத்தாமன் கூறிய அறிவுரை! – கர்ண பர்வம் பகுதி – 88-கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான போர் தொடங்கியது; எதிரிகளை வீழ்த்திக் கர்ணனைத் துளைத்த அர்ஜுனன்; அர்ஜுனன் மீதி பொழிந்த மலர்மாரி; பாண்டவர்களிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு துரியோதனனை அறிவுறுத்திய அஸ்வத்தாமன்; இணங்க மறுத்த துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் ஆகாயத்தில், தேவர்கள், நாகர்கள், அசுரர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பெரும் கூட்டங்களாக இருந்த கந்தர்வர்கள், ராட்சசர்கள், அப்சரஸ்கள், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள், அரச முனிகள் ஆகியோரும் அற்புத இறகுகளைக் கொண்ட பறவைகள்[1] ஆகியனவும் அற்புதமான வடிவை ஏற்றன.(1) மனிதர்கள் யாவரும், வானத்தில் அற்புதத்தன்மையுடன் நின்றிருந்த அவர்களையும், இசைக்கருவிகள், பாடல்கள், புகழ் துதிகள், சிரிப்பு, ஆடல்களையும், மற்றும் பல்வேறு வகைகளினான இன்பமான ஒலிகளை எதிரொலித்திருக்கும் வானத்தையும் கண்டனர்.(2)

அப்போது மகிழ்ச்சியால் நிறைந்த கௌரவ மற்றும் பாண்டவப் போர்வீரர்கள், இசைக் கருவிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்களாலும், சிங்க முழக்கங்களாலும் பூமியையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கும்படி போராரவாரம் செய்து தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(3) மனிதர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் நிறைந்ததும், கதாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள், குத்துவாள்கள் ஆகியவற்றின் பாய்ச்சலின் விளைவாகப் போராளிகளால் தாங்கிக் கொள்ள முடியாததும், வீரர்களால் நிறைந்ததும், உயிரற்ற உடல்களால் நிறைந்ததுமான போர்க்களமானது, குருதியால் சிவப்பாகி மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது.(4) உண்மையில், குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகியோருக்கிடையிலான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பானதாக இருந்தது. தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் கடுமையான, பயங்கரமான போர் தொடங்கிய பிறகு, சிறந்த கவசம் தரித்திருந்த அவ்விரு வீரர்களில் ஒவ்வொருவரும், திசைகளின் பத்து புள்ளிகளையும், தன்னை எதிர்த்த படையையும் நேரான, கூரிய கணைகளால் மறைத்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏவப்பட்ட கணைகளால் அங்கே உண்டான இருளின் காரணமாக, உமது போர்வீரர்களையோ, எதிரிகளையோ அதற்கு மேலும் வேறு எதையும் பார்க்க முடியவில்லை.(5,6)

ஆகாயத்தில் பரவியிருக்கும் ஒளிக்கதிர்கள், சூரியனையோ, சந்திரனையோ நோக்கிக் குவிவதைப் போல, அச்சமடைந்த போர்வீரர்கள் அனைவரும் கர்ணன், அல்லது அர்ஜுனனின் பாதுகாப்பை நாடினார்கள். பிறகு அந்த வீரர்கள் இருவரும், கிழக்கில் இருந்து வரும் காற்றும், மேற்கில் இருந்து வரும் காற்றும் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதைப் போலத் தன் ஆயுதத்தால் மற்றவனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கச் செய்து,(7) மேங்களால் உண்டானதும், ஆகாயத்தை மறைத்திருந்ததுமான இருளை விலக்கி எழும் சூரியனையோ, சந்திரனையோ போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர். தன் துருப்புக்கு உற்சாகமூட்டிய அவர்கள் ஒவ்வொருவரும் {கர்ணனும், அர்ஜுனனும்}, “தப்பி ஓடாதீர்கள்” என்று சொன்னதால், களத்தைவிட்டு அகலாமல் இருந்த எதிரி மற்றும் உமது போர்வீரர்கள்,(8) வாசவனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் சுற்றி நிற்கும் தேவர்களையும், அசுரர்களையும் போல, அவ்விரு வலிமைமிக்கத் தேர்வீரர்களைச் சூழ்ந்து நின்றனர். அப்போது அந்த இரு படைகளும், மனிதர்களில் சிறந்த அவ்விருவரையும், பேரிகைகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒலிகளாலும், சிங்கமுழக்கங்களாலும் வரவேற்றதால்,(9) சுற்றித் திரண்டு முழங்கும் மேகங்களால் வரவேற்கப்படும் சூரியனையும், சந்திரனையும் போல அந்த மனிதர்களில் காளைகள் இருவரும் அழகாகத் தெரிந்தனர்[2]. முழுமையான வட்டமாக வளைக்கப்பட்ட வில்லைத் தரித்து, (சூரிய, அல்லது சந்திர) ஒளிவட்டத்துடன் கூடியவர்களாகத் தெரிந்த அவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் கதிர்களாக அமைந்த ஆயிரக்கணக்கான கணைகளை அந்தப் போரில் ஏவி,(10) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் எரிக்கும் வகையில், யுக முடிவில் எழும் தாங்கிக் கொள்ளப்பட முடியாத இரு சூரியர்களுக்கு ஒப்பானவர்களாகத் தெரிந்தார்கள்.

வெல்லப்பட முடியாதவர்களும், எதிரிகளை அழிக்கவல்லவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், தங்களில் அடுத்தவரிடம் தன் திறனை வெளிக்காட்டியவர்களும்,(11) போர்வீரர்களுமான கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய அவ்விருவரும், இந்திரனையும், அசுரன் ஜம்பனையும் போல, அந்தப் போரில் ஒருவரிடமொருவர் அச்சமில்லாமல் நெருங்கினர். அப்போது வலிமைமைமிக்க ஆயுதங்களை இருப்புக்கு அழைத்த அந்த உறுதிமிக்க வில்லாளிகள் இருவரும், தங்கள் பயங்கரக் கணைகளால்,(12) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணற்ற மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளைக் கொல்லத் தொடங்கி, தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மீண்டும் அந்த மனிதர்களில் முதன்மையானவர்களாக இருவராலும் பீடிக்கப்பட்டவையும், யானைகள், காலாள்கள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களை உள்ளடக்கியவையுமான குருக்கள் மற்றும் பாண்டவர்களின் துருப்புகள், காட்டில் சிங்கத்தால் தாக்கப்பட்ட சிறுவிலங்குகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.

அப்போது, துரியோதனன், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, சுபலனின் மகன் {சகுனி}, கிருபர் மற்றும் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்},(13,14) ஆகிய ஐந்து பெரும் தேர்வீரர்களும், பெரும் வலியை உண்டாக்கவல்ல கணைகளால் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்}, கேசவனையும் {கிருஷ்ணனையும்} தாக்கினர். எனினும், தனஞ்சயன், அதே நேரத்தில், தன் கணைகளால் அந்தப் போர்வீரர்களின் விற்களையும், அம்பறாத்தூணிகளையும், குதிரைகளையும், யானைகளையும், சாரதிகளோடு கூடிய தேர்களையும் வெட்டி, சிறந்த கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் சிதைத்து, பனிரெண்டு கணைகளால் சூதன் மகனையும் {கர்ணனையும்} துளைத்தான். அப்போது நூறு யானைகளும், நூறு தேர்களும், எண்ணற்ற சகர்கள், துகாரர்கள் மற்றும் யவன குதிரைவீரர்களும், காம்போஜர்களின் முதன்மையான போராளிகள் சிலருடன் சேர்ந்து, அர்ஜுனனைக் கொல்ல விரும்பி, அவனை எதிர்த்து வேகமாக விரைந்தனர். தன் கையில் இருந்த கணைகள் மற்றும் கத்தித் தலை கணைகளால் {க்ஷுரப்ரங்களால்}, எதிரிகளின் சிறந்த ஆயுதங்களையும், அவர்களது தலைகளையும்,(15-17), குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களையும் வெட்டி வீழ்த்திய தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் தன்னோடு மோதிய எதிரிகளையும் வீழ்த்தினான். அப்போது ஆகாயத்தில், சிறந்த தேவர்களால் இசைக்கப்பட்ட தெய்வீக பேரிகைகள் {தங்கள் ஒலிகளால்} வெடித்தன. இவை அர்ஜுனனின் துதிகளோடு கலந்தன.(18) மென்மையான தென்றலால் வீசப்பட்டதும், நறுமணமிக்கதுமான மலர் மாரி அங்கே (அர்ஜுனனின் தலை மீது) பொழிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சம்பவத்தைக் கண்ட தேவர்களும், மனிதர்களும், அனைத்து உயிரினங்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(19) ஒரே கருத்தைக் கொண்டவர்களாகையால், உமது மகனும் {துரியோதனனும்}, சூதன் மகனும் {கர்ணனும்} மட்டுமே ஆச்சரியத்தையோ, வலியையோ {துன்பத்தையோ} உணரவில்லை.

அப்போது துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனனின் கரங்களைப் பற்றிக் கொண்டு[3], தணிவான தொனியைப் பின்பற்றி உமது மகனிடம்,(20) “ஓ! துரியோதனா, நிறைவடைவாயாக. பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக. இங்கே சச்சரவுக்கான எந்தத் தேவையும் இல்லை. போருக்கு ஐயோ {போரை நிந்திக்க வேண்டும்}. வலிமைமிக்க ஆயுதங்களான பிரம்ம ஆயுதத்தை அறிந்த ஆசான் {துரோணர்} கொல்லப்பட்டுவிட்டார். பீஷ்மரின் தலைமையிலானவர்களும், மனிர்களில் காளைகளுமான பிறரும் கொல்லப்பட்டுவிட்டனர்.(21) என்னைப் பொறுத்தவரையும், என் தாய்மாமனை {கிருபரைப்} பொறுத்தவரையும் நாங்கள் கொல்லப்பட முடியாதவர்கள். பாண்டுவின் மகன்களோடு (அரசைப் பகிர்ந்து கொண்டு) எப்போதும் அரசாள்வாயாக. நான் தடுத்தால் தனஞ்சயன் விலகிவிடுவான். ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} பகைமையை விரும்பவில்லை.(22) யுதிஷ்டிரன் உயிரினங்கள் அனைத்தின் நன்மையிலும் எப்போதும் ஈடுபடுகிறான். விருகோதரன் {பீமன்} அவனுக்குக் கீழ்ப்படிந்தவனே ஆவான். அதே போலவே இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்} கீழ்ப்படிந்தவர்களே. உனக்கும், பார்த்தர்களுக்கும் இடையில் அமைதி உண்டாக்கப்பட்டால், அந்த உன் விருப்பத்தின் மூலமே, அனைத்து உயிரினங்களும் நன்மையை அடைந்தன என்பது போலவும் தெரியும்.(23) இன்னும் உயிரோடு இருக்கக்கூடிய மன்னர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லட்டும். துருப்புகள், தங்கள் பகைமையில் இருந்து விலகட்டும். ஓ! மன்னா {துரியோதனா} என் வார்த்தைகளை நீ கேட்கவில்லையென்றால், எதிரிகளால் போரில் நீ துன்பத்தில் எரிய வேண்டியிருக்கும்.(24) கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன் தனி ஒருவனாக எவற்றை அடைந்தான் என்பதை நீயும் கண்டாய், இந்த அண்டமும் நன்றாகக் கண்டது. {அசுரன்} பலனைக் கொன்றவனாலேயே {இந்திரனாலேயே} கூட இதைப்போன்றதொரு காரியத்தைச் சாதிக்க முடியாது. அதே போல, யமனாலோ, பிரசேதகர்களாலோ, யக்ஷர்களின் புகழ்பெற்ற மன்னனாலோ {குபேரனாலோ} கூடச் சாதிக்க முடியாது.(25)

தனஞ்சயனின் {அர்ஜுனனின்} சாதனைகளைப் பொறுத்தவரை, அஃது இதைவிட மிக மேம்பட்டதாகும். நான் என்ன சொன்னாலும், அவன் ஒருபோதும் அதை மீற மாட்டான். அவன் உன்னை எப்போதும் பின்தொடர்வான். ஓ! மன்னா {துரியோதனா}, அண்டத்தின் நன்மைக்காக நீ நிறைவடைவாயாக.(26) நீ எப்போதும் என்னை மதிக்கிறாய். நானும் உன்னிடம் பெரும் நட்பைக் கொண்டுள்ளேன். இதன் காரணமாகவே, நான் உனக்கு இதைச் சொல்கிறேன். அமைதியை நீ ஏற்றால், கர்ணனையும் கூட நான் விலங்கச் செய்வேன்.(27) நுணுக்கமாகக் கண்டறியும் மனிதர்கள், இயல்பாகவே நண்பர்களாகுபவர்கள், மனவேற்றுமை நீக்கப்பட்டு {நல்ல வார்த்தைகளால்} உண்டாகுபவர்கள், செல்வத்தின் மூலம் உண்டாகுபவர்கள், இறுதியாகப் பலத்தை வெளிப்படுத்தி அடக்கி {நண்பர்களாகக்} கொள்ளப்படுபவர்கள் என நால்வகை நண்பர்களைக் குறித்துச் சொல்கிறார்கள்.[4] பாண்டுவின் மகன்களைப் பொறுத்தவரை இந்த அனைத்தும் உன்னிடம் இருக்கின்றன.(28) ஓ! வீரா, பாண்டவர்களோ, இயல்பாகவே உன் நண்பர்களாவர். {நல்ல வார்த்தைகளால்} மனவேற்றுமை நீக்கப்பட்டு மீண்டும் உறுதியாக அவர்களை நண்பர்களாக அடைவாயாக. நீ நிறைவு கொண்டால், ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, அவர்களும் நண்பர்களாக ஏற்பார்கள், எனவே அவ்வழியிலேயே செயல்படுவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(29)

தன் நண்பனின் {அஸ்வத்தாமனின்} மூலம் சொல்லப்பட்ட இந்த நன்மையான வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் சிறிது நேரம் சிந்தித்தான். நீண்ட பெருமூச்சுகளை விட்ட அவன், உற்சாகமற்ற இதயத்துடன், “ஓ! நண்பரே {அஸ்வத்தாமரே}, நீர் சொன்னவாறே இஃது இருக்கிறது. எனினும், நான் உமக்குச் சொல்லப்போகும் வார்த்தைகளையும் கேட்பீராக.(30) தீய இதயம் கொண்ட விருகோதரன் {பீமன்}, ஒரு புலியைப் போலத் துச்சாசனனைக் கொன்று, தன் இதயத்தில் இன்னும் நீடித்திருக்கும் வார்த்தைகளைச் சொன்னான். நீரும் அதைக் கேட்டீர். பிறகு, எவ்வாறு அமைதி ஏற்பட முடியும்?(31) மேலும், புயலின் வேகமானது, வலிமைமிக்க மேரு மலைகளில் மோதி பலவீனமடைவதைப் போலவே, அர்ஜுனனால், போரில் கர்ணனைத் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் பலவந்தமான பகைமை கொண்ட (நான் அவர்களுக்கு இழைத்த) பல செயல்களை நினைத்துப் பார்த்து, பிருதையின் {குந்தியின்} மகன்களும் என்னிடம் சிறு நம்பிக்கையும் கொள்ள மாட்டார்கள்.(32) ஓ! மங்காப் புகழ் கொண்ட ஆசான் மகனே {அஸ்வத்தாமரே}, “போரில் இருந்து விலகுவாயாக” என்று இப்போது கர்ணனிடம் சொல்வதும் உமக்குத் தகாது. பல்குனன் {அர்ஜுனன்} இன்று மிகவும் களைத்துப் போய் இருக்கிறான். கர்ணன் விரைவில் அவனைக் கொல்வான்” என்றான் {துரியோதனன்}.(33) பணிவோடு கூடிய இந்த வார்த்தைகளை ஆசான் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} மீண்டும் மீண்டும் சொன்ன உமது மகன் {துரியோதனன்}, தன் துருப்புகளை அழைத்து, “கணைகளைத் தரித்துக் கொண்டு, இந்த எதிரிகளை எதிர்த்து விரைந்து, அவர்களைக் கொல்வீராக. ஏன் செயலற்று நிற்கிறீர்கள்?” என்று ஆணையிட்டான் {துரியோதனன்}.”(34)

கர்ணனை கைவிட்டு ஓடிய கௌரவர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 89- கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த பயங்கரமான போர்; அர்ஜுனன் ஏவிய கணைகள் அனைத்தையும் கலங்கடித்த கர்ணன்; இதைப் பொறுக்காத பீமன் அர்ஜுனனைக் கடிந்து கொண்டு, அவனுக்கு உற்சாகமூட்டியது; கிருஷ்ணனும் அர்ஜுனனுக்கு உற்சாகமூட்டியது; பிரம்மாயுதத்தை அழைத்த அர்ஜுனன்; அவ்வாயுதத்தைக் கலங்கடித்த கர்ணன்; இரண்டாவது முறையும் பிரம்மாயுதத்தை ஏவிய அர்ஜுனன்; அவ்வாயுதத்தால் கௌரவத் துருப்புகளுக்கு நேர்ந்த பேரழிவு; போரைக் காண களத்தில் வந்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அறுந்த காண்டீவத்தின் நாண்கயிறு; அந்தக் கணத்தைப் பயன்படுத்தி அர்ஜுனன், கிருஷ்ணன் மற்றும் பீமனைத் துளைத்த கர்ணன்; கர்ணனைத் தன் கணைகளால் மறைத்த அர்ஜுனன்; பாம்புகளை ஏவி கிருஷ்ணனைத் துளைத்த கர்ணன்; கணைகளாக மாறி வந்த அந்தப் பாம்புகளை வெட்டி, கர்ணனின் உடலை ஆயுதங்களால் நன்கு சிதைத்த அர்ஜுனன்; நடுக்கமடைந்த கர்ணன் மிகுந்த கடினத்தோடு தன் தேரில் நின்றது; அச்சத்தால் கர்ணனைக் கைவிட்டுத் தப்பி ஓடிய கௌரவர்கள்; இருப்பினும் வீரத்தோடு உற்சாகமாகப் போராடிய கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சங்கு முழக்கங்களும், பேரிகையின் ஒலிகளும் பேரொலியாக எழுந்தபோது, வெண்குதிரைகளைக் கொண்டோரும், மனிதர்களில் முதன்மையானோருமான சூதன் மகன் வைகர்த்தனன் {கர்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனின் தீய கொள்கையின் விளைவால் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(1) பெரும் மூர்க்கத்தைக் கொண்ட வீரர்களான தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகன் {கர்ணன்} ஆகிய இருவரும், முழுதாக வளர்ந்த தந்தங்களைக் கொண்டவையும், பருவகாலத்தில் உள்ள பிடிக்காக {பெண் யானைக்காக} மோதிக்கொள்பவையுமான, மதங்கொண்ட இமாலயக் களிறுகள் {ஆண் யானைகள்} இரண்டைப் போல ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(2) மேகத்திரள் ஒன்று, மற்றொரு மேகத்திரளுடன், அல்லது மலையோடு மலை மோதிக் கொள்வதைப் போல அந்தப் போர்வீரர்கள் இருவரும், கணைமாரியைப் பொழிந்து கொண்டும், உரத்த நாணொலி எழுப்பும் தங்கள் விற்களுடனும், செவிடாக்கும் சடசடப்பொலியை உண்டாக்கும் தங்கள் தேர்சக்கரங்களுடனும், பேரொலிகளை வெளியிடும் தங்கள் நாண்கயிறுகள் மற்றும் உள்ளங்கைகளுடனும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(3) நெடிய சிகரங்களைக் கொண்டவையும், மரங்கள், செடி கொடிகள் நிறைந்தவையும், அவற்றுக்கு இயல்பான பல்வேறு காட்டுவாசிகளால் நிறைந்தவையுமான இரண்டு மலைகளைப் போல, அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும், ஒரு மோதலுக்காக ஒருவரையொருவர் நோக்கி விரைந்து, வலிமைமிக்க ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(4) அந்த இரு வீரர்களுக்கு இடையிலான அம்மோதல், பழங்காலத்தில் தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்}, விரோசனன் மகனுக்கும் {பலிக்கும்} இடையில் நடந்ததைப் போலச் சீற்றம் நிறைந்ததாக இருந்தது. பிறரால் தாங்கிக் கொள்ள முடியாதவையும், குருதியையே அருவருக்கத்தக்க சுவை கொண்ட தன் தண்ணீராகக் கொண்ட ஒரு நதியால் குறிக்கப்பட்டவையுமான, அவ்விரு வீரர்களின் அங்கங்களும், அவர்களது சாரதிகள் மற்றும் விலங்குகளின் அங்கங்களும் மிகவும் சிதைக்கப்பட்டன[1].(5)

பல்வேறு வகைகளிலான தாமரைகள், மீன்கள், ஆமைகள் நிறைந்தவையும், பல்வேறு வகைகளிலான நீர்க்கோழிகளின் குரல்களை எதிரொலித்தவையும், காற்றால் மெதுவாகக் கலக்கப்பட்டவையுமான இரு பெரும் தடாகங்கள் ஒன்றையொன்று அணுகுவதைப் போலவே, கொடிமரங்களால் அருளப்பட்ட அந்தத் தேர்கள் இரண்டும் ஒன்றையொன்று அணுகின.(6) பெரும் இந்திரனுக்கு {மஹேந்திரனுக்கு} இணையான ஆற்றலைக் கொண்டவர்களும், பெரும் இந்திரனுக்கே ஒப்பானவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும், பெரும் இந்திரன் மற்றும் (அசுரன்) விருத்திரன் ஆகியோரைப் போலவே, அந்தப் பெரும் இந்திரனின் வஜ்ரத்திற்கு இணையான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(7) அழகிய கவசங்கள், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்களால் ஆயத்தம் செய்யப்பட்ட தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்களைக் கொண்ட இரு படைகளும், அங்கே ஆகாயத்தில் இருந்தவர்களும், அர்ஜுனன் மற்றும் கர்ணனுக்கிடையிலான அற்புதத் தன்மை கொண்ட அம்மோதலைக் கண்டு அச்சமடைந்தனர்.(8) மதங்கொண்ட யானைகள், ஒன்றையொன்று எதிர்த்து விரைவதைப் போல, அதிரதன் மகனை {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்துடன், அவனை {கர்ணனை} எதிர்த்து, அர்ஜுனன் விரைந்த போது, பார்வையாளர்களில் வேறு சிலர், மகிழ்ச்சியால் நிறைந்து, சிங்க முழக்கங்கள் செய்து, தங்கள் கரங்களை உயர்த்தி, தங்கள் விரல்களையோ, தாங்கள் பிடித்திருந்த துணித்துண்டுகளையோ அசைத்தனர்.(9)

அப்போது சோமகர்கள், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! அர்ஜுனா, வேகமாகச் சென்று கர்ணனைத் துளைப்பாயாக. தாமதமில்லாமல் அவனது தலையையும், (அதனோடு சேர்த்து) அரசை அடையும் திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} ஆசையையும் வெட்டி வீழ்த்துவாயாக” என்று உரக்கக் கூச்சலிட்டனர்.(10) அதே போல நமது போர்வீரர்கள் பலர், கர்ணனிடம், “செல், ஓ! கர்ணா, சென்று, கூரிய கணைகளால் அர்ஜுனனைக் கொல்வாயாக. பிருதையின் {குந்தியின்} மகன்கள் எப்போதும் காட்டிலேயே இருக்கும் வகையில் மீண்டும் செல்லட்டும்” என்றனர்.(11) அப்போது, அம்மோதலில் கர்ணன் முதலில் பத்து வலிமைமிக்கக் கணைகளால் பார்த்தனைத் துளைத்தான். பதிலுக்கு அர்ஜுனன், பெரும் மூர்க்கம் கொண்டவையான பத்துக் கூர்முனைக் கணைகளால் அவனது நடுமார்பைத் துளைத்தான்.(12) உண்மையில், அந்தச் சூதன் மகனும் {கர்ணனும்}, அர்ஜுனனும், நல்ல சிறகுகளுடன் கூடிய கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர். அந்தப் பயங்கரப் போரில், தாங்கள் ஒவ்வொருவரும் செய்யும் தாமதத்தின் பயனை அடைய விரும்பிய அவர்கள், உற்சாகமிக்க இதயங்களுடன் ஒருவரையொருவர் எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர்.(13) கடும் வில்லாளியான அர்ஜுனன், தன் இரு கைகளையும், காண்டீவத்தின் நாண்கயிற்றையும் தேய்த்துவிட்டு, துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, நாளீகங்கள், பன்றியின் காது போன்ற தலைகளைக் கொண்ட கணைகள் {வராஹகர்ணங்கள்}, கத்தி தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அஞ்சலீகங்கள், பிறைவடிவக் கணைகள் {அர்த்தச்சந்திரக் கணைகள்} ஆகியவற்றின் மழையைப் பொழிந்தான்.(14) பார்த்தனின் அந்தக் கணைகள், ஆகாயமெங்கும் பரவி, மாலைவேளையில், இரவு ஓய்வுக்காக மரத்திற்குள் தலைதாழ்த்தி ஊடுருவும் பறவைக்கூட்டங்களைப் போலக் கர்ணனின் தேருக்குள் ஊடுருவின.(15)

எதிரிகள் அனைவரையும் வெல்பவனான அர்ஜுனன், சுருங்கிய புருவத்துடனும், கோபப் பார்வைகளுடனும், கர்ணன்மீது ஏவிய அந்தக் கணைகள் அனைத்தும், பாண்டு மகனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட தொடர்ச்சியான அந்தக் கணைமாரிகள் அனைத்தும், சூதன் மகனின் கணைகளால் வெட்டப்பட்டன.(16) அப்போது அந்த இந்திரன் மகன் {அர்ஜுனன்}, எதிரிகள் அனைவரையும் கொல்லவல்ல நெருப்பாயுதம் {ஆக்னேயாஸ்திரம்} ஒன்றைக் கர்ணன் மீது ஏவினான். பூமியையும், வானத்தையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் மறைத்தபடி, சூரியப் பிரகாசத்துடன் சென்ற அஃது, அவனது உடலையே ஒளியால் சுடவிட்டெரியச் செய்தது.(17) போர்வீரர்களின் ஆடைகள் அனைத்திலும் நெருப்புப் பற்றியதால் அவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். மூங்கில் காடுகளில் தீப்படிக்கும்போது கேட்கப்படும் பேரொலிகள் அங்கே கேட்கப்பட்டன.(18) அந்த நெருப்பாயுதம் {ஆக்னேயாஸ்திரம்}, அனைத்துப் பக்கங்களிலும் செயல்படுவதைக் கண்டவனும், பெரும் வீரம் கொண்டவனுமான, சூதன் மகன் கர்ணன், அதைத் தணிப்பதற்காக வாருணாயுத்ததை அம்மோதலில் ஏவினான். கர்ணனுடைய ஆயுதத்தின் விளைவால் அந்த நெருப்பானது தணிவடைந்தது.(19)  திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் வேகமாக மறைத்த பெரும் மேகத்திரள்கள் அங்கே இருளை உண்டாக்கின. மலைகளின் தன்மைகளுடன் கூடிய முனைகளைக் கொண்ட அந்த மேகங்கள், அனைத்துப் பக்கங்களில் சூழ்ந்து கொண்டு, பூமியில் நீரைப் பாய்ச்சின.(20)

அந்தக் கடும் நெருப்பானது கடுமையாகவே இருந்தாலும், ஒரே கணத்தில் அந்த மேகங்களால் தணிக்கப்பட்டது. மொத்த ஆகாயமும், முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்தும் அம்மேகங்களால் மறைக்கப்பட்டிருந்தன.(21) இவ்வாறு மேகங்களால் சூழப்பட்ட திசைப்புள்ளிகள் அனைத்தும் இருளடைந்ததால் அங்கே எதையும் காண முடியவில்லை. அப்போது அர்ஜுனன், கர்ணனால் உண்டான அம்மேகங்களை வாயவ்ய ஆயுதத்தால் {வாயவ்யாஸ்திரத்தால்} விலக்கினான்.(22) இதன்பிறகு, எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, காண்டீவத்தையும், அதன் நாண்கயிற்றையும், தன் கணைகளையும் மந்திரங்களால் ஈர்க்கச்செய்து, தேவர்கள் தலைவனுக்குப் பிடித்தமானதும், சக்தியிலும், ஆற்றலிலும் வஜ்ரத்திற்கு இணையானதுமான மற்றொரு ஆயுதத்தை {வஜ்ராஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தான்.(23) அப்போது, வஜ்ரத்தின் சக்தியும், மூர்க்கமும் கொண்டவையான கத்தித்தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அஞ்சலீகங்கள், பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகள், நாளீகங்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, பன்றியின் காது போன்ற தலைகளைக் கொண்டவை {வராஹகர்ணங்கள்} ஆகிய கூரிய கணைகள் அனைத்தும், காண்டீவத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளிப்பட்டன.(24) பெரும் சக்தியும், வலிமையும், கழுகின் சிறுகளையும் கொண்ட அந்த மூர்க்கமான கூரிய கணைகள், கர்ணனின் அங்கங்கள் அனைத்தையும், அவனது குதிரைகளையும், வில்லையும், நுகத்தடியையும், சக்கரங்களையும், கொடிமரத்தையும் துளைத்து, கருடனைக் கண்டஞ்சிய பாம்புகள் பூமிக்குள் ஊடுருவுவதைப் போலவே வேகமாக அவற்றுக்குள் ஊடுருவின.

மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு, குருதியில் குளித்த அந்த உயர் ஆன்மக் கர்ணன், கோபத்தால் உருளும் கண்களுடன்,(25,26) தன் வில்லின் உறுதியான நாண்கயிற்றை வளைத்து, கடலின் முழக்கத்திற்கு ஒப்பான உரத்த நாணொலியை உண்டாக்கி, பார்க்கவ ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். (அர்ஜுனன் ஏவிய) இந்தரனின் ஆயுதத்துடைய {வஜ்ராயுதத்தின்} வாயிலிருந்து வெளிப்பட்ட பார்த்தனின் கணைமாரிகளை வெட்டி வீழ்த்திய கர்ணன்,(27) தன் ஆயுதத்தால் {பார்க்கவ ஆயுதத்தால்} எதிராளியின் ஆயுதத்தை (வஜ்ராயுதத்தைக்) கலங்கடித்து, (பாண்டவப் படையின்) தேர்களையும், யானைகளையும், காலாட்படை வீரர்களையும் அழித்தான். அந்தக் கடும் மோதலில் அர்ஜுனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் கர்ணன், பார்க்கவ ஆயுதத்தின் சக்தியால் இதைச் செய்தான்.(28)

கோபத்தால் நிறைந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, இரு கிருஷ்ணர்களையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} கண்டு சிரித்து, அந்தப் போரில் நன்கு ஏவப்பட்ட கணைகளால் பாஞ்சாலத் தேர்வீரர்களில் முதன்மையானோரைத் துளைத்தான்.(29) அப்போது ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் கர்ணனின் கணைமாரியால் பீடிக்கப்பட்டு, கோபத்தால் நிறைந்த பாஞ்சாலர்களும், சோமகர்களும், ஒன்று சேர்ந்தவர்களாக நின்று, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சூதன் மகனை {கர்ணனைக்} கூரிய கணைகளால் துளைத்தனர்.(30) வேகமாகத் தன் கணைகளால் அவற்றை வெட்டிய சூதன் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் அவர்களைக் கலங்கடித்து, பாஞ்சாலர்களின் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும் பல கணைகளால் பீடித்தான்.(31) கர்ணனின் அந்தக் கணைகளால் தங்கள் மேனி துளைக்கப்பட்ட அவர்கள், பயங்கரப் பலம் கொண்ட கோபக்கார சிங்கமொன்றால் கொல்லப்பட்ட வலிமைமிக்க யானைகளைப் போல, பேரொலிகளைச் செய்தபடியே உயிரையிழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(32) முதன்மையான போர்வீரர்களும், பெரும் பலம் கொண்ட வீரர்களும், எப்போதும் (போருக்குத்) தன்னை அறைகூவியழைத்தவர்களுமான அந்தப் பாஞ்சாலத் தலைவர்களைக் கொன்ற கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கணைகளை ஏவுகையில், மழைத்தாரைகளைப் பொழியும் மேகத் திரள்களைப் போல அழகாகத் தெரிந்தான்.(33)

அப்போது கர்ணன் வென்றுவிட்டதாக நினைத்த உமது போர்வீரர்கள், உரக்கக் கைத்தட்டியவாறே சிங்க முழக்கங்களை வெளியிட்டனர். ஓ! குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளால் தாங்கிக் கொள்ளப்பட முடியாததான வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனின் வீரத்தைக் கண்ட அவர்கள் அனைவரும், கர்ணனின் ஆளுகைக்குள் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும் வந்துவிட்டதாகவே கருதினர். போருக்கு மத்தியில் தனஞ்சயனின் அந்த ஆயுதம், கர்ணனால் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டவனான,(34,35) காற்று தேவனின் {வாயுத்தேவனின்} கோபக்கார மகன் {பீமன்}, கோபத்தால் சுடர்விட்டெரியும் கண்களுடன் தன் கைகளைப் பிசையத் தொடங்கினான். உண்மையில், கோபம் நிறைந்த அந்தப் பீமன், தன் கோபம் தூண்டப்பட்ட நிலையில், ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடியே, துல்லிய இலக்கைக் கொண்ட அர்ஜுனனிடம்,(36) “ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, அறத்திலிருந்து விழுந்தவனான இந்தப் பொல்லாத சூதன் மகன் {கர்ணன்}, போரில் தன் வலிமையை வெளிப்படுத்தி, நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பாஞ்சாலப் போர்வீரர்களில் பலரைக் கொல்வது எவ்வாறு?(37) இதற்கு முன்பு நீ தேவர்களாலோ, காலகேயர்களாலோ வெல்லப்பட முடியாதவனாக இருந்தாய். ஸ்தாணுவுடைய {சிவனுடைய} கரங்களின் தீண்டலை நீ பெற்றிருக்கிறாய். ஓ! கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனா, பிறகு, தேர்வீரர்கள் பயன்படுத்தும் பத்து நீண்ட கணைகளைக் {நாராசங்களைக்} கொண்டு சூதன் மகனால் {கர்ணனால்} உன்னை முதலில் துளைக்க முடிந்தது எவ்வாறு?(38) இன்று அந்தச் சூதன் மகன், உன்னால் ஏவப்பட்ட கணைகளைக் கலங்கடிப்பது எனக்கு மிக ஆச்சரியமானதாகத் தெரிகிறது. கிருஷ்ணையின் {கருப்பியான திரொபதியின்} துன்பங்களையும், இந்தத் தீய ஆன்மா கொண்ட சூதன் மகனால் {கர்ணனால்} “எள்ளுப்பதர்களே” என்று அச்சமில்லாமல் சொல்லப்பட்ட, ஏற்கமுடியாத, கூரிய வார்த்தைகளையும் நினைவுகூர்வாயாக. ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, இவை யாவற்றையும் நினைவுகூர்ந்து, பொல்லாதவனான கர்ணனை இன்றைய போரில் வேகமாகக் கொல்வாயாக”(39,40) ஓ! கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனா, (இச்செயலில்) நீ இவ்வளவு அலட்சியமாக இருப்பது ஏன்? கர்ணனின் படுகொலையில் உன் அலட்சியத்தைக் காட்ட இது நேரமல்ல. எந்தப் பொறுமையால் உயிரினங்கள் அனைத்தையும் வென்று, காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} அக்னிக்கு உணவூட்டினாயோ,(41) அந்தப் பொறுமையால், இந்தச் சூதன் மகனை {கர்ணனை} நீ கொல்வாயாக. நானும் கூட என் கதாயுதத்தாலேயே இவனை நொறுக்கிவிடுவேன்” என்றான் {பீமன்}.

அப்போது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பார்த்தனின் கணைகள் கர்ணனால் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு, முன்னவனிடம் {அர்ஜுனனிடம்},(42) “ஓ! கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனா, இன்று உன் ஆயுதங்களைக் கர்ணனின் ஆயுதங்களால் நொறுக்க முடிவது எவ்வாறு? ஓ! வீரா, நீ உன் அறிவை இழப்பது {மயங்கமடைவது} ஏன்? கர்ணனுக்குப் பின்னால் நிற்கும் கௌரவர்கள், இப்போது மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவதை நீ கவனிக்கவில்லையா?(43) உண்மையில், உன் ஆயுதங்கள் அனைத்தும் கர்ணனின் ஆயுதங்களால் கலங்கடிக்கப்பட்டதை அவர்கள் அனைவரும் அறிவார்கள். எந்தப் பொறுமையைக் கொண்டு,  இருள் தன்மையையே தங்கள் ஆயுதமாகக் கொண்ட மனிதர்களையும், பயங்கரமான க்ஷத்திரியர்களையும், செருக்கில் பிறந்த அசுரர்களையும் யுகம் யுகமாகப் பல போர்களில் கொன்றிருக்கிறாயோ, அந்தப் பொறுமையைக் கொண்டு, கர்ணனை இன்று கொல்வாயாக. சக்ரன் {இந்திரன்} தன் எதிரியான நமுசியின் தலையை வஜ்ரத்தால் தாக்கி வீழ்த்தியதைப் போல, உன் வலிமையை வெளிப்படுத்தி, நான் உனக்குத் தரும் கத்தி போன்ற கூர்முனை கொண்ட இந்தச் சுதர்சனத்தால் {சுதர்சனச் சக்கரத்தால்} உன் எதிரியின் தலையைத் தாக்கி வீழ்த்துவாயாக. எந்தப் பொறுமையைக் கொண்டு, வேடன் வடிவில் வந்த சிறப்புமிக்க தெய்வமான மகாதேவனை {சிவனை} நீ நிறைவு செய்தாயோ,(44-46) அந்தப் பொறுமையை மீண்டும் அழைத்து, ஓ! வீரா, சூதன் மகனையும் {கர்ணனையும்}, அவனைப் பின் தொடர்பவர்கள் அனைவரையும் கொல்வாயாக. அதன்பிறகு கடல்களையே கச்சையாகக் கொண்டவளும், நகரங்கள், கிராமங்கள், செல்வங்கள் ஆகியவற்றைக் கொண்டவளுமான பூமாதேவியின் பரப்பில் இருந்து எதிரிகள் அனைவரையும் நீக்கி மன்னர் யுதிஷ்டிரருக்கு அவளை {பூமியை} அளிப்பாயாக. அந்தச் செயலால், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, ஒப்பற்ற புகழையும் நீ வெல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}. இவ்வாறு (கிருஷ்ணனால்) சொல்லப்பட்டவனும், பெரும் வலிமையைக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்மப் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் இதயத்தில் சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலையை நிலைநிறுத்தினான்.(47,48)

உண்மையில், பீமனாலும், ஜனார்த்தனனாலும் {கிருஷ்ணனாலும்} தூண்டப்பட்டு, (தன் துன்பங்களை) நினைவுகூர்ந்து, தனக்குள்ளேயே உள் ஆய்வைச் செய்து, இவ்வுலகத்திற்குத் தான் வந்த காரணத்தை மனத்தில் நிறுத்தி, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அவன்,(49) “நான் இப்போது, உலகத்தின் நன்மைக்காகவும், சூதன் மகனின் அழிவுக்காகவும் வலிமையும், சீற்றமும் கொண்ட ஓர் ஆயுதத்தை இருப்பு அழைக்கப் போகிறேன். உன் அனுமதியும், பிரம்மன் மற்றும் பவனின் அனுமதியும், பிரம்மத்தை அறிந்தோர் அனைவரின் அனுமதியும் அதற்கு வேண்டும்” என்று சொன்னான் {அர்ஜுனன்}.(50) புனிதமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, பிரம்மனை வணங்கியவாறு, சிறந்ததும், தடுக்கப்பட முடியாததும், மனத்தால் மட்டுமே பயன்படுத்த கூடியதுமான பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தான்.(51) எனினும், அவ்வாயுதத்தைக் {பிரம்மாஸ்திரத்தைக்} கலங்கடித்த கர்ணன், மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போலத் தன் கணைகளை ஏவியபடியே தொடர்ந்து அழகானவனாகத் தெரிந்தான். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் அவ்வாயுதமானது, போருக்கு மத்தியில் கர்ணனால் கலங்கடிக்கப்படுவதைக் கண்டவனும், கோபம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனுமான பீமன், சினத்தால் சுடர்விட்டெரிந்து, துல்லிய இலக்கைக் கொண்ட அர்ஜுனனிடம், “உயர்ந்த பிரம்ம ஆயுதத்தையும், (எதிரிகளின் அழிவை அடைய) அதைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் திறம்பட அறிந்தவன் என உன்னைக் குறித்து மக்கள் சொல்கின்றனர்.(53) ஓ! சவ்யசச்சின், அதே வகையிலான மற்றொரு ஆயுதத்தைப் பயன்படுத்துவாயாக” என்றான் {பீமன்}.

இவ்வாறு தன் அண்ணனால் {பீமனால்} சொல்லப்பட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்}, அதே வகையைச் சேர்ந்த இரண்டாவது ஆயுதத்தைப் பயன்படுத்தினான். அளவிலா சக்தி கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, அதைக் கொண்டு, பாம்புகளுக்கு ஒப்பான சீற்றத்துடன் கூடியவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், சூரியனின் சுடர்மிக்கக் கதிர்களைப் போன்றவைகளுமான கணைகளால், முக்கிய மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான். அந்தப் பாரதக் குலத்தின் காளையால் உண்டாக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், யுக நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்துடன் கூடியவையுமான அந்தக் கணைகள்,  கர்ணனின் தேரை ஒரு கணத்தில் மறைத்தன.(54,55) அதிலிருந்து வெளிப்பட்டவையும், பயங்கர வடிவைக் கொண்டவையுமான நூற்றுக்கணக்கான நீண்ட ஈட்டிகள், போர்க்கோடரிகள், சக்கரங்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} ஆகியவற்றால் சுற்றியிலும் இருந்த பகைவரின் போர்வீரர்கள் அனைவரும் தங்கள் உயிரை இழக்கத் தொடங்கினர். பகைவரின் போர்வீரனான ஏதோ ஒருவனின் தலை, அவனது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுக் கீழே போர்க்களத்தில் விழுந்தது.(56,57) விழுந்து கொண்டிருக்கும் தன் தோழனைக் கண்ட மற்றொருவன் அச்சத்தால் பூமியில் இறந்து விழுந்தான். யானை துதிக்கையைப் போன்றதும் பருத்ததுமான மூன்றாமவனின் பெரிய (வலது) கரம், (பார்த்தனால்) வெட்டப்பட்டு, பிடியில் உள்ள வாளுடன் கீழே விழுந்தது.(58) கேடயத்துடன் கூடிய நான்காமவனின் இடக்கரம், கத்தித் தலைக் கணையொன்றால் வெட்டப்பட்டுக் கிழே விழுந்தது. இவ்வாறே, கிரீடம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, துரியோதனன் படையைச் சார்ந்த முதன்மையான போர்வீரர்கள் அனைவரையும், மரணத்தைத் தரும், தன் பயங்கரமான கணைகளால் காயப்படுத்தவும், கொல்லவும் செய்தான். வைகர்த்தனனும் {கர்ணனும்} அந்தப் போருக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான்.(59,60) இவை, உரத்த விஸ் ஒலியுடன், மேகங்களில் இருந்து பொழியும் மழைத்தாரைகளைப் போலப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தன.

அப்போது மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்த பீமசேனன், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, மற்றும் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன் ஆகிய ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்த அந்தப் பயங்கர வலிமையைக் கொண்ட கர்ணன், பயங்கரமான பேரொலியுடன் முழங்கினான். கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், பீமனையும், ஜனார்த்தனனையும் (கிருஷ்ணனையும்} கண்டு,(61,62) (தன் எதிராளியின் சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள முடியாதவனானான். எனவே, மீண்டும் அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, பதினெட்டு கணைகளை ஏவினான். அந்தக் கணைகளில் ஒன்றால் அவன் கர்ணனின் அழகிய கொடிமரத்தையும், நான்கால் சல்லியனையும், மூன்றால் கர்ணனையும் துளைத்தான்.(63) நன்கு ஏவப்பட்ட மற்ற பத்து கணைகளைக் கொண்டு அவன் {அர்ஜுனன்}, தங்கக் கவசம் பூண்ட, கௌரவப் போர்வீரனான சபாபதியைத் தாக்கினான். இதன்பேரில் அந்த இளவரசன் {சபாபதி}, தன் சிரம் {தலை}, கரங்கள், குதிரைகள், சாரதி, வில் மற்றும் கொடிமரம் ஆகியவற்றை இழந்து,(64) காயமடைந்து, கோடரியால் வெட்டப்பட்ட சாலமரம் ஒன்றைப் போலத் தன் முதன்மையான தேரில் இருந்து இறந்து விழந்தான். மீண்டும் கர்ணை மூன்று, எட்டு, பனிரெண்டு, நான்கு மற்றும் பத்துக் கணைகளால் துளைத்த பார்த்தன்,(65) பல ஆயுதங்களைக் கொண்டு நாறு யானைகளையும், எண்ணூறு தேர்வீரர்களையும், சாரதிகளோடு கூடிய ஓராயிரம் குதிரைகளையும், துணிச்சல்மிக்க எட்டாயிரம் காலாட்படைவீரர்களையும் கொன்றான்.

விரைவில் பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனையும், அவனது சாரதி {சல்லியன்}, தேர், குதிரைகள், கொடி மரம் ஆகியவற்றையும் தன் நேரான கணைகளைக் கொண்டு காட்சியில் இருந்து மறைத்தான் {கண்களுக்குப் புலப்படாதவையாகச் செய்தான்}. இவ்வாறு தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்தக் கௌரவர்கள் அப்போது அதிரதன் மகனிடம் {கர்ணனிடம்},(67) “உன் கணைகளை ஏவி, பாண்டு மகனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக. ஏற்கனவே அவன் தன் கணைகளால் குருக்களை நிர்மூலமாக்கத் தொடங்கிவிட்டான்” என்றனர். இவ்வாறு தூண்டப்பட்ட கர்ணன், தன் சிறந்த முயற்சிகளால், கணைகள் பலவற்றை இடையறாமல் ஏவினான்.(68) முக்கிய அங்கங்களை வெட்ட வல்லவையும், கர்ணனால் நன்கு ஏவப்பட்டவையுமான அந்தக் குருதி குடிக்கும் கணைகள், எண்ணற்ற பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் கொன்றன. இவ்வாறே, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவர்களும், பெரும் பலம் கொண்டவர்களும், எதிரிகள் அனைவரையும் தாங்கிக் கொள்ளவல்லவர்களும்,(69) ஆயுதங்களை நன்கறிந்தவர்களுமான அவ்வீரர்கள் இருவரும், தங்களை எதிர்த்து வந்த போர்வீரர்களை வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றால் தாக்கினர்.

அப்போது, {தன் உடலில் இருந்து} கணைகள் பிடுக்கப்பட்டவனும், மந்திரங்களாலும், தன்னிடம் நல்ல மனநிலை கொண்ட அறுவைசிகிச்சை நிபுணர்களில் முதன்மையானவர்களால் மருந்தளிக்கப்பட்டும் நலமடைந்தவனும், தங்கக் கவசம் பூண்டவனுமான யுதிஷ்டிரன், (அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடந்த) அம்மோதலைக் காண்பதற்காக அந்த இடத்திற்கு வேகமாக வந்தான். ராகுவின் கோரப்பற்களுக்கிடையில் இருந்து விடுபட்டதும், ஆகாயத்தில் எழுந்ததுமான பிரகாசமிக்க முழு நிலைவைப் போல அங்கே வந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்ட அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியால் நிறைந்தன. போர்வீரர்களில் முதன்மையானோரும், வீரர்களில் முதல்வர்களும், எதிரிகளைக் கொல்பவர்களுமான கர்ணன் மற்றும் பார்த்தன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் போரில் ஈடுபடுவதைப் பார்வையாளர்களாகக் கண்ட வானவாசிகள் {தேவர்கள்} மற்றும் நிலவாசிகள் {மனிதர்கள்] இருவரும், தாங்கள் செலுத்திய, அல்லது தங்கள் வாகனங்களில் பூட்டப்பட்ட, விலங்குகளை {குதிரைகள் / யானைகளைக்} கட்டுப்படுத்தியவாறு அசைவில்லாமல் நின்றனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் இருவரும், முதன்மையான கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் தாக்கியதால், தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகன் {கர்ணன்} ஆகிய இருவரின் விற்கள், வில்லின் நாண்கயிறுகள், உள்ளங்கைகள் ஆகியவற்றில் எழுந்த ஒலிகள் மகத்தானதாகவும், அவர்களால் நன்கு ஏவப்பட்ட கணைகள் உண்டாக்கிய விஸ்ஒலி செவிடாக்குவதாகவும் இருந்தன. அப்போது, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பலமாகத் தன் வில்லின் {காண்டீவத்தின்} நாணை இழுத்த போது, அது பேரொலியுடன் அறுந்தது.(70-74)

இவ்வாறு அளிக்கப்பட்ட இடைவேளையில், அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கூரியவையும், எண்ணெயில் நனைக்கப்பட்டவையும், பறவைகளின் இறகுகளால் சிறகமைந்தவையும், சட்டை உரித்த பாம்புகளுக்கு ஒப்பானவையுமான நூற்றுக்கணக்கான குறுங்கணைகளால் {பிண்டிபாலங்களால்} பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.(75) மேலும் அவன் அறுபது கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} எட்டால் பல்குலனனையும் {அர்ஜுனனையும்} துளைத்தான். மேலும் அந்தச் சூரியன் மகன் {கர்ணன்}, ஆயிரமாயிரமான வலிமைமிக்கக் கணைகளால் பீமனைத் துளைத்தான்.(76) கிருஷ்ணனையும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடிமரத்தையும் துளைத்த கர்ணன், பார்த்தனைப் பின்தொடர்ந்து வந்த சோமகர்களுக்கு மத்தியில் பலரை வீழ்த்தினான். எனினும், அவர்களும் பதிலுக்கு, ஆகாயத்தில் சூரியனை மறைக்கும் மேகங்களின் திரள்களைப் போல நேரான கணைமாரியால் கர்ணனை மறைத்தனர்.(77) ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் சாதித்தவனான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, முன்னேறிவரும் அந்தப் போர்வீரர்களைத் தன் கணைகளால் மலைக்கச் செய்து, அவர்களால் ஏவப்பட்ட ஆயுதங்கள் அனைத்தையும் கலங்கடித்து, அவர்களது தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளையும் அழித்தான்.(78)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அவர்களில் முதன்மையான தேர்வீரர்கள் பலரையும் தன் கணைகளால் பீடித்தான். கர்ணனின் கணைகளால் துளைக்கப்பட்ட அவர்களது உடல்களானவை, உயிரற்றுத் தரையில் விழும்போது பேரொலியை உண்டாக்கின.(79) உண்மையில் பயங்கரப் பலம் கொண்ட கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் போராளிகள், கோபக்கார சிங்கத்தால் பீடிக்கப்பட்ட நாய்களின் கூட்டத்தைப் போல அழிந்தன. இதன் பிறகு, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உள்ள போராளிகளில் முதன்மையான பலரும், (கௌரவர்களுக்கு மத்தியில் உள்ள) அதே போன்ற பலரும், கர்ணனாலும், தனஞ்சயனாலும் {அர்ஜுனனாலும்} கொல்லப்பட்டுக் கீழே விழுந்தனர்.(80)

வலிமைமிக்கக் கர்ணனால், பெரும்பலத்துடன் நன்கு ஏவப்பட்ட கணைகளால் தங்கள் குடல்களில் உள்ள உள்ளடக்கங்களைக் கழித்து {மலத்தை வெளியேற்றியபடியே} உயிரையிழந்து கீழே விழுந்தனர். அப்போது ஏற்கனவே வெற்றி தங்களுடையதானது எனக் கருதிய உமது {கௌரவ} துருப்பினர், தங்கள் கரங்களை வேகமாகத் தட்டி, உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(81) உண்மையில், அந்தப் பயங்கர மோதலில் கர்ணனின் ஆளுகைக்குள் கிருஷ்ணர்கள் இருவரும் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவே அவர்களில் அனைவரும் கருதினர். பிறகு தன் வில்லின் நாண்கயிற்றை வேகமாக வளைத்து, அந்த அதிரதன் மகனின் {கர்ணனின்} அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்த பார்த்தன்,(82) கர்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்ட தன் அங்கங்களின் விளைவால் சினத்தால் நிறைந்து, கௌரவர்களைத் தாக்கினான். தன் வில்லின் நாண்கயிற்றை உருவி, தன் உள்ளங்கைகளைத் தட்டி, தன்னால் ஏவப்பட்ட கணைகளின் மாரியால் அங்கே திடீரென இருளை உண்டாக்கினான்.(83) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அந்தக் கணைகளால் கர்ணனையும், சல்லியனையும், குருக்கள் அனைவரையும் துளைத்தான். அந்த வலிமைமிக்க ஆயுதத்தின் மூலம் இருண்ட ஆகாயத்தில், பறவைகளால் பறக்க முடியாதபோது நறுமணத்தைச் சுமந்தபடியே இனிய தென்றால் அங்கே வீசத்தொடங்கியது. சிரித்துக் கொண்டே இருந்த பார்த்தன், பத்து கணைகளால் சல்லியனின் கவசத்தைப் பலமாகத் தாக்கினான்.(84) அடுத்ததாகக் கர்ணனைப் பனிரெண்டு கணைகளால் துளைத்த அவன், மேலும் ஏழாலும் அவனைத் துளைத்தான். பார்த்தனின் வில்லில் இருந்து பெரும்பலத்துடன் ஏவப்பட்டவையும், கடும் சக்தியைக் கொண்டவையும், சிறகுகள் படைத்தவையுமான அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட கர்ணன்,(85) சிதைந்த அங்கங்களுடன் குருதியில் குளித்த உடலுடன், அண்ட அழிவின் போது, நடுப்பகலிலோ, மாலையிலோ சுடலைக்கு மத்தியில், குருதியால் நனைந்த தன் உடலுடன் விளையாடும் {கூத்தாடும்} ருத்திரனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(86)

அப்போது அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தேவர்கள் தலைவனுக்கு (சக்தியிலும், வலிமையிலும்) ஒப்பானவனான தனஞ்சயனை மூன்று கணைகளால் துளைத்து, ஐந்து பாம்புகளுக்கு ஒப்பான சுடர்மிக்க வேறு ஐந்து கணைகளைக் கிருஷ்ணனின் உடலுக்குள் ஊடுருவச் செய்தான்.(87) பெரும்பலத்துடன் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள், அந்த உயிரினங்களில் முதன்மையானவனின் {கிருஷ்ணனின்} கவசத்தைத் துளைத்து ஊடுருவி, அவனது உடலைக் கடந்து சென்று பூமியில் விழுந்தன. பெரும் சக்தி கொண்ட அவை, பூமிக்குள் நுழைந்து, (பாதாள உலகத்தில் உள்ள போகவதி ஆற்றின் நீரில்) குளித்து மீண்டும் கர்ணனிடமே திரும்பி வந்தன.(88) அந்தக் கணைகள் தக்ஷகனுடைய மகனின் (காண்டவ வனத்தில் பார்த்தனால் தன் அன்னை கொல்லப்பட்டவனான இந்த அஸ்வசேனனின்) தரப்பை ஏற்ற ஐந்து பெரும் பாம்புகளாகும். பெரும்பலத்துடன் ஏவப்பட்ட பத்து அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்}, அந்த ஐந்து பாம்புகள் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக அர்ஜுனன் வெட்டியதன் பேரில் அவை பூமியில் விழுந்தன.(89) கர்ணனின் கரங்களால் ஏவப்பட்டவையும், கணைகளாக மாறியிருந்தவையுமான அந்தப் பாம்புகளால் இவ்வாறு அங்கங்கள் துளைக்கப்பட்ட கிருஷ்ணனைக் கண்டவனும், கிரீடம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.(90)

பிறகு அவன், காதுவரை இழுக்கப்பட்ட வில்லின் நாண்கயிற்றில் இருந்து ஏவப்பட்ட சுடர்மிக்க மரணக் கணைகளால், கர்ணனின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். (ஆழமாகத் துளைக்கப்பட்ட) கர்ணன், வலியால் நடுங்கினான். பெருங்கடினத்துடன் தன் பொறுமையனைத்தையும் திரட்டிக்கொண்டே அவன் {கர்ணன்} நின்று கொண்டிருந்தான்.(91) கோபத்தால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏவிய கணைமாரியால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்தும், சூரியனின் காந்தியும், கர்ணனின் தேரும் கண்ணுக்குப் புலப்படாதவையாக ஆகின. அடர்த்தியான மூடு பனியால் மூடப்பட்டதைப் போல ஆகாயம் தெரிந்தது.(92) பிறகு எதிரிகளைக் கொல்பவனும், குரு குலத்தின் காளையும், வீரர்களில் முதன்மையானவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், குதிரைகள், சாரதிகள் ஆகியவற்றுடன் கூடியவர்களும், கர்ணனின் தேர்ச்சக்கரங்களுக்கும், சிறகுகளுக்கும் {பக்கங்களுக்கும்}, முன்புறத்திற்கும், பின்புறத்திற்கும் பாதுகாவலர்களாக இருந்தவர்களும், துரியோதனனின் தேர்ப்படையில் முக்கியமானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், துரியோதனனால் தூண்டப்பட்டுப் பெரும் சக்தியுடன் போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான குரு போர்வீரர்களில் முதன்மையான அந்த இரண்டாயிரம் பேரையும் கொன்றான்.(93-95)

அப்போது, உமது மகன்களும், உயிருடன் எஞ்சியிருந்த கௌரவர்களும் கர்ணனை விட்டுவிட்டும், இறந்து கொண்டிருந்தவர்களும், காயமடைந்தவர்களும், ஓலமிட்டுக் கொண்டிருந்தவர்களுமான தங்கள் மகன்கள் மற்றும் தந்தைமாரைக் கைவிட்டுவிட்டும் தப்பி ஓடினர்.(96) அச்சமடைந்த குருக்களால் கைவிடப்பட்டவனும், தன்னைச் சுற்றியிருந்த வெளி வெறுமையாக இருந்ததைக் கண்டவனுமான கர்ணன், ஓ!பாரதரே {திருதராஷ்டிரரே}, எந்தக் கலக்கத்தையும் அடையாமல், மறுபுறம் உற்சாகம் நிறைந்த இதயத்துடன் அர்ஜுனனை நோக்கி விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}[2].(97)

கோபத்தால் கண்ணீர் சிந்திய கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 90-அஸ்வசேனன் என்ற பாம்பின் வரலாறு; பாம்புக் கணையை நினைவுகூர்ந்து, அதைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்திய கர்ணன்; கிருஷ்ணன் தேரை அழுத்தியது; அர்ஜுனனின் கிரீடம் உடைந்தது; மீண்டும் தன்னை ஏவும்படி கேட்ட அஸ்வசேனனும், மறுத்த கர்ணன்; தானாக அர்ஜுனனைத் தாக்கச் சென்ற அஸ்வசேனனைத் துண்டுகளாக வெட்டிய அர்ஜுனன்; கர்ணனின் தேரை விழுங்கத் தொடங்கிய பூமாதேவி; தனக்கு நேரிடும் பேரிடர்களைக் கண்டு அறத்தைப் பழித்த கர்ணன்; அர்ஜுனனின் நாண்கயிறுகளைப் பதினோரு முறை வெட்டிய கர்ணன்; தன் சக்கரத்தை வெளிக்கொணரும் வரை, தன்னைத் தாக்கிக் கொல்ல வேண்டாம் என்று கோபத்துடனும், கண்ணீருடனும் அர்ஜுனனை வேண்டிய கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனனின் கணைகள் பாய்ந்ததன் விளைவால் தப்பி ஓடிப் பிளந்த கௌரவப் படைப்பிரிவினர், தொலைவில் நின்று கொண்டு, அர்ஜுனனின் ஆயுதம் சக்தியில் பெருகுவதையும், மின்னலின் பிரகாசத்துடன் செல்வதையும் காணத் தொடங்கினர்.(1) எதிரியின் அழிவுக்காக அந்தக் கடும் மோதலில் பெரும் வீரியத்துடன் அர்ஜுனன் ஏவிய ஆயுதம் சென்று கொண்டிருந்தபோதே, அதைக் கர்ணன் தன் பயங்கரக் கணைமாரியால் கலங்கடித்தான்.(2) உண்மையில், சக்தியில் பெருகிய (பார்த்தனின்) அந்த ஆயுதம், குருக்களை எரித்துக் கொண்டிருந்தபோது, சூதன் மகன் {கர்ணன்}, தங்கச் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் அதை நொறுக்கினான். பிறகு, கர்ணன், உறுதியான நாண்கயிற்றைக் கொண்டதும், உரத்த ஒலியெழுப்புவதுமான தன் வில்லை வளைத்துக் கணைமாரிகளைப் பொழிந்தான்.(3) அர்ஜுனனின் அந்த எரியும் ஆயுதத்தை, (பலாபலன்களில்) அதர்வணச் சடங்குக்கு ஒப்பானதும், ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து பெற்றதும், பெரும் பலம் வாய்ந்ததும், எதிரியைக் கொல்லவல்லதுமான தன் ஆயுதத்தால் அந்தச் சூதன் மகன் {கர்ணன்} அழித்தான். மேலும் அவன் {கர்ணன்} பார்த்தனையும் {அர்ஜுனனையும்} எண்ணற்ற கூரிய கணைகளால் துளைத்தான்[1].(4)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுக்கும், அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் நடந்த அந்த மோதலானது மிகப் பயங்கரமான நிலையை அடைந்தது. தந்தங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் கடுமையான இரு யானைகளைப் போல அவர்கள் தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர்.(5) திசைகளின் புள்ளிகள் அனைத்தும் ஆயுதங்களால் மறைக்கப்பட்டன, சூரியனும் கூடக் கண்ணுக்குப் புலப்படாதவனானான். உண்மையில், கர்ணனும், பார்த்தனும் {அர்ஜுனனும்} தங்கள் கணைகளின் பொழிவால், ஆகாயத்தில் எந்த இடைவெளியும் இல்லாமல், அதைக் கணைகளின் ஒரே பரப்பாக ஆக்கினர்.(6) கௌரவர்கள் மற்றும் சோமகர்கள் அனைவரும், பரந்து விரிந்த ஒரு கணை வலையையே அப்போது கண்டனர். கணைகளால் உண்டாக்கப்பட்ட அந்த அடர்த்தியான இருளில், வேறு எதையும் அவர்களால் பார்க்க முடியவில்லை.(7) ஆயுதங்களில் சாதித்த மனிதர்களில் முதன்மையான அவ்விருவரும், இடையறாமல் குறிபார்த்து, எண்ணற்ற கணைகளை ஏவி, பல்வேறு வகைகளிலான அழகிய செயலாற்று வழிமுறைகளை வெளிப்படுத்தினர்.(8) போரில் அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஆற்றல், ஆயுதங்கள் மற்றும் கரநளினம் ஆகியவற்றில், சில வேளைகளில் சூதன் மகன் {கர்ணன்} தன் எதிராளியை விஞ்சி நின்றான், சில வேளைகளில் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} அவனை விஞ்சிநின்றான்.(9) ஒருவர் தாமதத்தை மற்றவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அந்த வீரர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்றதும், பயங்கரமானதும், அச்சத்தை ஏற்படுத்தவதுமான அந்த ஆயுத வழியை {போரைக்} கண்டு, அந்தப் போர்க்களத்தில் இருந்த பிற போர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(10) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்த உயிரினங்கள் கர்ணனையும், அர்ஜுனனையம் பாராட்டினர். உண்மையில் அவர்களில் பலர் ஒரே நேரத்தில், மகிழ்ச்சியால் நிறைந்து, சில நேரங்களில் “ஓ! கர்ணா, மிகச்சிறப்பு” என்றும், சில நேரங்களில் “ஓ! அர்ஜனா, மிகச்சிறப்பு” என்றும் கூச்சலிட்டனர்.(11)

அந்தக் கடும் மோதல் நடக்கையில், தேர்களின் கனமும், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் நடையும் பூமியை ஆழமாக அழுத்திய போது, அர்ஜுனனுக்கு எதிரியான அஸ்வசேனன் எனும் பாம்பானவன், பாதாள உலகத்தில் தன் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.(12) காண்டவத்தின் காட்டுத் தீயில் இருந்து தப்பிய அவன், (பாதாள உலகத்திற்குச் செல்வதற்காக) கோபத்தால் பூமியை துளைத்துச் சென்றான். அந்தத் துணிச்சல் மிக்கப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, தன் தாயின் மரணத்தையும், அதன் காரணமாக அர்ஜுனனிடம் தான் கொண்ட பகைமையையும் நினைவு கூர்ந்து, பாதாளலோகத்தில் இருந்து எழுந்து வந்தான். வானத்தில் எழுக்கூடிய சக்தியைக் கொண்ட அவன் {அஸ்வசேனன்}, கர்ணன் மற்றும் அர்ஜுனனுக்கிடையிலான போரைக் காண்பதற்காகப் பெரும் வேகத்துடன் பறந்து சென்றான்.(13) தீய ஆன்மா கொண்ட பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகத் தான் கொண்ட பகைமையை நிறைவு செய்ய இதுவே நேரம் என்று நினைத்த அவன் {அஸ்வசேனன்}, வேகமாகக் கர்ணனின் அம்பறாத்தூணிக்குள் ஒரு கணையின் வடிவில் புகுந்தான்.(14)

அந்த நேரத்தில், சுற்றிலும் ஒளியைப் பொழிந்த வண்ணம் கணைகளின் வலை ஒன்று அங்கே காணப்பட்டது. கர்ணனும், பார்த்தனும் தங்கள் கணைப் பொழிவால், அடர்த்தியான கணைகளின் ஒரே திரளாக ஆகாயத்தைச் செய்தனர்.(15) பரந்து, விரிந்த அந்தக் கணைகளின் பரப்பைக் கண்ட கௌரவர்கள் மற்றும் சோமகர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தவர்களாகினர். கணைகளால் உண்டான அடர்த்தியான, பயங்கரமான அந்த இருளில் அவர்கள் வேறு எதையும் பார்க்கமுடியாதவர்களானார்கள்.(16) மனிதர்களில் புலிகளும், உலகின் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், போரில் தங்கள் முயற்சிகளால் களைப்படைந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(17) இளம் (பனை) இலைகளாலான சிறந்த விசிறிகளால் அவர்கள் இருவரும் வீசப்பட்டனர். ஆகாயத்தில் இருந்த அப்சரஸ்கள் பலரால் நறுமணமிக்கச் சந்தன நீரும் அவர்கள் மேல் தெளிக்கப்பட்டது. சக்ரனும் {இந்திரனும்}, சூரியனும், தங்கள் கரங்களால் அவ்விரு வீரர்களின் முகங்களையும் முழுமையாகத் துடைத்தனர்.(18)

இறுதியாகக் கர்ணன் தன்னால் பார்த்தனை {அர்ஜுனனை} விஞ்ச இயலவில்லை என்பதையும், அவனது {அர்ஜுனனின்} கணைகளால் தான் மிகவும் எரிக்கப்படுவதையும் கண்டபோது, தன் அங்கங்கள் மிகவும் சிதைக்கப்பட்ட அந்த வீரன், தன் அம்பறாத்தூணிக்குள் தனியாகக் கிடக்கும் அந்தக் கணையின் மீது தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(19) எதிரியைக் கொல்லக்கூடியதும், மிகக் கூரியதும், பாம்பின் வாயைக் கொண்டதும், சுடர்மிக்கதும், கடுமையானதுமான அந்தக் கணையை விதிப்படி பளபளப்பாக்கிய அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பார்த்தனின் அழிவுக்காக வெகுகாலமாகத் தன்னிடம் வைத்திருந்த அதைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான்.(20) கடுஞ்சக்தி கொண்டதும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டதும், தங்க அம்பறாத்தூணியில் சந்தனத் தூளுக்கு மத்தியில் கிடந்ததும், எப்போதும் தன்னால் வழிபடப்பட்டதுமான அந்தக் கணையைப் பொருத்திய கர்ணன், தன் வில்லின் நாண்கயிற்றைக் காதுவரை இழுத்து, பார்த்தன் மீது அதைக் குறி வைத்தான்.(21) உண்மையில், அந்தப் போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} தலையை வெட்டுவதற்காகவே, ஐராவதத்தின் குலத்தில் பிறந்த அந்தச் சுடர்மிக்கக் கணையைக் குறி வைத்தான். அப்போது திசைகளின் அனைத்துப் புள்ளிகளும், ஆகாயமும் எரிந்தன, பயங்கர எரிநட்சத்திரங்களும், இடிகளும் விழுந்தன.(22) வில்லின் நாண்கயிற்றில் கணையின் வடிவிலான அந்தப் பாம்பு பொருத்தப்பட்ட போது, சக்ரனுடன் {இந்திரனுடன்} கூடிய லோகபாலர்கள் உரக்க ஓலமிட்டனர். பாம்பான அஸ்வசேனன், யோக சக்திகளின் உதவியால் தன் கணைக்குள் நுழைந்திருப்பதைச் சூதன் மகன் {கர்ணன்} அறியவில்லை.(23)

வைகர்த்தன் {கர்ணன்} அந்தக் கணையைக் குறிபார்ப்பதைக் கண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, “ஓ! கர்ணா, இந்தக் கணை அர்ஜுனனின் தலையை வீழ்த்தாது. கவனமாகத் தேடி, எதிரியின் தலையை வீழ்த்தக்கூடிய மற்றொரு கணையைப் பொருத்துவாயாக” என்றான்[2].(24) பெரும் சுறுசுறுப்புடைய அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கோபத்தில் எரியும் கண்களுடன், மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “ஓ! சல்லியரே, கர்ணன் ஒரு போதும் ஒரு கணையை இரு முறை குறிபார்ப்பதில்லை. எங்களைப் போன்ற மனிதர்கள் ஒருபோதும் நேர்மையற்ற போர்வீரர்களாக மாட்டார்கள்” என்றான்.[3](25) இவ்வார்த்தைகளைச் சொன்ன கர்ணன், பல வருடங்களாகத் தான் வழிபட்ட அந்தக் கணையைப் பெருங்கவனத்துடன் ஏவினான். வெற்றியைப் பெற நினைத்த அவன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியிடம் {அர்ஜுனனிடம்} வேகமாக, “ஓ! பல்குனா {அர்ஜுனா}, நீ கொல்லப்பட்டாய்” என்றான்[4].(26) கர்ணனின் கரங்களில் இருந்து ஏவப்பட்டதும், பயங்கரமான விஸ் ஒலியுடன் கூடியதும், நெருப்பு, அல்லது சூரியனுக்கு ஒப்பான காந்தியைக் கொண்டதுமான அந்தக் கணை, வில்லின் நாண்கயிற்றை விட்டகன்றதும், ஒரு பெண்ணின் கூந்தலைப் பிரிக்கும் வகுட்டைப் போல, ஒரு கோட்டால் ஆகாயத்தைப் பிரிப்பது போலத் தெரிந்து, ஆகாயத்தில் சுடர்விட்டெரிந்தது.(27)

ஆகாயத்தில் சுடர்விடும் அந்தக் கணையைக் கண்டவனும், கம்சனைக் கொன்றவனுமான மாதவன் {கிருஷ்ணன்}, பெரும் வேகத்துடன், தன் பாதத்தால் அந்தச் சிறந்த தேரைக் கீழே அழுத்தி, மிக எளிதாக ஒரு முழம்[5] ஆழத்திற்கு அதை {அந்தத் தேரை} {பூமியில்} மூழ்கச் செய்தான்.(28) இதனால், சந்திரனின் கதிர்களைப் போல வெண்மையானவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கித் தங்களைத் தரையில் கிடத்திக் கொண்டன {தரையில் விழுந்தன}. உண்மையில் கர்ணனால் குறிபார்க்க்கப்பட்ட (கணையின் வடிவில் இருந்த) அந்தப் பாம்பைக் கண்டவனும், வலிமையுடன் கூடிய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான மாதவன் {கிருஷ்ணன்}, தன் பலத்தைச் செலுத்தி இவ்வாறு தன் பாதத்தால் அந்தத் தேரைப் பூமிக்குள் அழுத்தியதால், (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) அந்தக் குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கி, அந்தத் தேர் மூழ்கிய அந்தப் பூமியில் தங்களைக் கிடத்திக் கொண்டன[6].(29,30) அப்போது ஆகாயத்தில் வாசுதேவனை {கிருஷ்ணனைப்} புகழ்ந்து பேரொலிகள் எழுந்தன. பல தெய்வீகக் குரல்கள் கேட்கப்பட்டன, கிருஷ்ணன் மீது தெய்வீக மலர்கள் பொழிந்தன, சிங்க முழக்கங்களும் செய்யயப்பட்டன. மதுசூதனின் {கிருஷ்ணனின்} முயற்சியால் இவ்வாறு அந்தத் தேரானது பூமிக்குள் அழுத்தப்பட்ட போது,(31) பெருங்கவனத்துடனும், கோபத்துடனும் ஏவப்பட்ட அந்தப் பாம்பாயுதத்தின் இயல்பின் விளைவால், சூதன் மகன் {கர்ணன்} அந்தக் கணையைக் கொண்டு உலகம், ஆகாயம், சொர்க்கம், நீர்நிலைகள் போன்ற அனைத்திலும் கொண்டாடப்பட்ட ஆபரணமும், தன் எதிராளியான அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்த அற்புத மகுடத்தை வீழ்த்தினான்.(32)அந்தக் கிரீடமானது, சூரியன், அல்லது சந்திரன், அல்லது நெருப்பு, அல்லது ஒரு கோளின் காந்தியைக் கொண்டதும், தங்கம், முத்துகள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், புரந்தனுக்காகப் பலமிக்கத் தான்தோன்றியாலேயே {பிரம்மனாலேயே} பெருங்கவனத்துடன் செய்யப்பட்டதுமாகும்.(33) விலைமதிப்புமிக்கத் தோற்றத்தைக் கொண்டதும், எதிரிகளின் இதயங்களை அச்சங்கொள்ளச் செய்வதும், அதை அணிபவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பதும், நறுமணத்தைப் பொழிவதுமான அந்த ஆபரணமானது {கிரீடமானது}, தேவர்களின் எதிரிகளைக் கொல்ல பார்த்தன் சென்ற போது, தேவர்களின் தலைவனாலேயே {இந்திரனாலேயே} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுக்கப்பட்டதாகும்.(34) அந்தக் கிரீடமானது, ருத்ரன், நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, சக்ரன் {இந்திரன்} மற்றும் குபேரன் ஆகியோராலும், பிநாகை, பாசம் {சுருக்குக் கயிறு}, வஜ்ரம் மற்றும் முதன்மையான கணைகளைக் கொண்டும் நொறுக்கப்பட முடியாததாக இருந்தது. தேவர்களில் முதன்மையானோராலேயே அது பொறுத்துக் கொள்ளப்பட முடியாததாக இருந்தது.(35) பெரும் சுறுசுறுப்பு கொண்டவனும், தீய இயல்பைக் கொண்டவனும், போலி நோன்புகளைக் கொண்டவனுமான அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கிரீடத்தின் மீது பாய்ந்து, அர்ஜுனன் தலையிலிருந்து அதை அகற்றிவிட்டான்.(36)

அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் தலையில் இருந்து பலவந்தமாக அஃதை அகற்றி, மலர்களுடன் கூடிய உயர்ந்த, அழகிய மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் பிளக்கும் வஜ்ரத்தைப் போலப் பல ரத்தினங்களைக் கொண்டதும், அழகால் சுடர்விட்டதும், நன்கு வடிவமைக்கப்பட்டதுமான அந்த ஆபரணத்தைத் துண்டுகளாகக் குறைத்தான்.(37) அந்தச் சிறந்த ஆயுதத்தால் நொறுக்கப்பட்டதும், காந்தியுடன் கூடியதும், (பாம்பின்) நஞ்செனும் நெருப்பால் சுடர்விட்டதும், அழகு நிறைந்ததும், பார்த்தனால் மிகவும் விரும்பப்பட்டதுமான அந்தக் கீரடம், சூரியனின் சுடர்மிக்க வட்டில் அஸ்தமலைகளில் வீழ்வதைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(38) உண்மையில், அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, அரும்பும் இலைகள் மற்றும் மலர்களுடனும் கூடிய உயர்ந்த மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய மலைச் சிகரத்தை வீழ்த்தும் இந்திரனின் வஜ்ரத்தைப் போல, பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்தக் கிரீடத்தைப் பலவந்தமாக அகற்றினான்.(39) புயலால் கலங்கடிக்கப்படும்போது பூமி, ஆகாயம், சொர்க்கம், நீர்நிலைகள் ஆகியவை உரக்க முழங்குவதைப் போலவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த நேரத்தில் உலகங்கள் அனைத்திலும் முழக்கம் எழுந்தது. அந்த மகத்தான ஒலியைக் கேட்ட மக்கள், அமைதியாக இருக்கும் திறனை இழந்து, மிகவும் கலங்கிப் போய் நின்றபடியே சுழன்றனர்.(40)

கரிய நிறம் கொண்டவனும், இளமை நிறைந்தவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தக் கிரீடம் இல்லாதவனாக, உயர்ந்த சிகரத்தைக் கொண்ட ஒரு நீல மலையைப் போல அழகாகத் தெரிந்தான். அப்போது தன் குழல்களை {கேசத்தை} வெண்துணியால் கட்டிக் கொண்ட அர்ஜுனன், முற்றிலும் அசைவற்றவனாக நின்றான். தலையில் வெள்ளைத் தலைப்பாகையுடன் கூடிய அவன், சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்பட்ட உதய மலையைப் போலத் தெரிந்தான்.(41) இவ்வாறு, (காண்டவத்தில் அர்ஜுனனால் கொல்லப்பட்ட) சிறந்த வாயைக் கொண்ட அந்தப் பெண்பாம்பானவள், பெரும் சக்தியும், வலிமையும் கொண்ட அந்த அர்ஜுனன், குதிரைகளின் கடிவாளங்களின் அளவு உயரத்தில் தன் தலையைக் கொண்டிருப்பதைக் கண்டு, நன்கு வடிவமைக்கப்பட்டதும், (முன்பொரு காலத்தில்) அதிதியின் மகனுக்கு {இந்திரனுக்குச்} சொந்தமானதும், சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்தக் கிரீடத்தை மட்டும், சூரியனின் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட கணையின் வடிவிலான தன் மகனின் {அஸ்வசேனன்} மூலமாக அகற்றினாள். ஆனால் அர்ஜுனனும் (பின் வரும் தொடர்விளைவில் தோன்றப் போவதைப் போல), அந்தப் பாம்பை யமனின் சக்திக்கு அடிபணியச் செய்யாமல் போரை விட்டுத் திரும்பவில்லை[7].(42) கர்ணனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்திற்கு ஒப்பான விலைமதிப்புமிக்கக் கணையானவனும், முன்பே அர்ஜுனனின் மிக முக்கிய எதிரியானவனுமான அந்த வலிமைமிக்கப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, இவ்வாறு பின்னவனின் {அர்ஜுனனின்} கிரீடத்தை நொறுக்கிச் சென்றான்.(43)தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்தக் கிரீடத்தை எரித்த அவன் {அஸ்வசேனன்}, மீண்டும் பெரும் வேகத்தோடு அர்ஜுனனிடம் செல்ல விரும்பினான். எனினும், (அவனைக் கண்டவனும், ஆனால் அவனை அறியதவனுமான) கர்ணனால் கேட்கப்பட்ட அவன் {அஸ்வசேனன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(44) “ஓ! கர்ணா, என்னைப் பாராமலேயே நீ என்னை ஏவினாய். இதன் காரணமாகவே என்னால் அர்ஜுனனின் தலையை வீழ்த்த முடியவில்லை. என்னை நன்றாகப் பார்த்த பிறகு, மீண்டும் என்னை வேகமாக ஏவுவாயாக. அப்போது, உன் எதிரியும், என் எதிரியுமான அவனை {அர்ஜுனனை} நான் கொல்வேன்” என்றான்.(45) இவ்வாறு அந்தப் போரில் அவனால் சொல்லப்பட்ட சூதன் மகன் {கர்ணன்}, “பயங்கர வடிவைக் கொண்ட நீ யார்?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன் கர்ணனிடம்}, “பார்த்தனால் {அர்ஜுனால்} தீங்கிழைக்கப்பட்ட ஒருவனாக என்னை நீ அறிந்து கொள்வாயாக. என் அன்னையைக் கொன்றதால், நான் அவனிடம் பகை கொண்டேன்.(46) வஜ்ரதாரியே {இந்திரனே} பார்த்தனைக் காத்தாலும்கூட, பின்னவன் {அர்ஜுனன்} பித்ருக்களின் மன்னனுடைய {யமனுடைய} ஆட்சிப்பகுதிக்குச் சென்றே ஆக வேண்டும். என்னை அலட்சியம் செய்யாதே. நான் சொல்வதைச் செய். நான் உன் எதிரியைக் கொல்வேன். தாமதமில்லாமல் என்னை ஏவுவாயாக” என்றான் {அஸ்வசேனன்}.(47)

அவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {அஸ்வசேனனிடம்}, “ஓ! பாம்பே {அஸ்வசேனா}, அடுத்தவனின் வலிமையை நம்பி போரில் வெற்றி பெற எப்போதும் கர்ணன் விரும்பியதில்லை. நூறு அர்ஜுனர்களை நான் கொல்ல வேண்டியிருந்தாலும், ஓ! பாம்பே, ஒரே கணையை இருமுறை நான் ஏவமாட்டேன்” என்றான்.(48) போருக்கு மத்தியில் மீண்டும் அவனிடம் பேசியவனும், மனிதர்களில் சிறந்தவனுமான அந்தச் சூரியன் மகன் கர்ணன், “பிற பாம்பாயுதங்களுடைய இயல்பின் துணையைக் கொண்டும், உறுதியான முயற்சி மற்றும் கோபத்தைக் கொண்டும் நான் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கொல்வேன். நீ மகிழ்வடைந்து, வேறெங்கும் செல்வாயாக” என்றான் {கர்ணன்}.(49) அந்தப் போரில் கர்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பாம்புகளின் இளவரசன் {அஸ்வசேனன்}, சினத்தால் அவ்வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு கணையின் வடிவையேற்று தானே பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்லச் சென்றான். பயங்கர வடிவைக் கொண்ட அவன் {அஸ்வசேனன்}, ஆவலுடன் காத்த விருப்பமானது தன் எதிரியினை அழிப்பதே ஆகும்.(50)

அப்போது கிருஷ்ணன் அம்மோதலில் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “உன்னிடம் பகை கொண்ட அந்தப் பெரும்பாம்பைக் கொல்வாயாக” என்றான். மதுசூதனனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், எதிரிகளுக்கு எப்போதும் கடுமையான வில்லாளியுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, அவனைக் குறித்து {கிருஷ்ணனிடம்} விசாரிக்கும் வகையில், “உண்மையில், கருடனின் வாயில் நேராகச் சென்று விழுவதைப் போல, என்னை எதிர்த்துத் தானே முன்னேறி வரும் அந்தப் பாம்பானவன் யார்?” என்று கேட்டான்.(51) அதற்குக் கிருஷ்ணன், “வில்தரித்து, காண்டவ வனத்தில் அக்னி தேவனை நிறைவு செய்வதில் நீ ஈடுபட்டிருந்த போது, இந்தப் பாம்பானவன், தன் தாயின் உடலுக்குள் பதுங்கி வானத்தில் இருந்தான், வானத்தில் இருப்பது ஒரே பாம்பு என்று நினைத்து நீ அந்தத் தாயைக் கொன்றாய்.(52) உன்னால் செய்யப்பட்ட அந்தப் பகைச்செயலை நினைத்துப் பார்த்தே, இன்று உன் அழிவுக்காக உன்னை நோக்கி இவன் வருகிறான். ஓ! எதிரிகளைத் தடுப்பவனே, சுடர்மிக்க எரிநட்சத்திரம் ஒன்று வானத்தில் இருந்து விழுவதைப் போல வரும் அவனைப் பார்ப்பாயாக” என்றான்.”(53)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது சினத்தால் முகம் மாறிய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, சாய்வான திசையில் ஆகாயத்தில் இருந்து தன்னை நோக்கி வந்த அந்தப் பாம்பை ஆறு கூரிய கணைகளைக் கொண்டு வெட்டினான். இவ்வாறு உடல் வெட்டப்பட்ட அவன் {அஸ்வசேனன்} பூமியில் விழுந்தான்.(54) அர்ஜுனனால் அந்தப் பாம்பானவன் வெட்டப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பருத்த கரங்களைக் கொண்டவனும், உயிரினங்களில் முதன்மையானவனுமான தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, பூமியில் இருந்து அந்தத் தேரைத் தன் கரங்களைக் கொண்டு உயர்த்தினான்.(55) அந்நேரத்தில், தனஞ்சயனைச் சாய்வாகப் பார்த்த கர்ணன், கல்லில் கூராக்கப்பட்டவையும், மயிலின் இறகுகளைக் கொண்டவையுமான பத்து கணைகளால், மனிதர்களில் முதன்மையான அந்தக் கிருஷ்ணனைத் துளைத்தான்.(56) அப்போது தனஞ்சயன், பன்றியின் காதுகளைப் போன்ற தலையைக் கொண்டவையும், நன்கு ஏவப்பட்டவையுமான பனிரெண்டு கூரிய கணைகளால் {வராஹகர்ணங்களால்} கர்ணனைத் துளைத்து, தன் வில்லின் நாண்கயிற்றைத் தன் காது வரை இழுத்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்பின் சக்தியைக் கொண்டவொரு துணிக்கோல் கணையையும் {நாராசத்தையும்} ஏவினான்.(57) அர்ஜுனனால் நன்கு ஏவப்பட்ட அந்த முதன்மையான கணை, கர்ணனின் கவசத்தை ஊடுருவிச் சென்று, அவனது உயிர் மூச்சை நிறுத்திவிடுவதைப் போல, அவனது குருதியைக் குடித்து, ஊனீரால் தன் சிறகுகள் நனைந்து, பூமிக்குள் நுழைந்தது.(58)

பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட விருஷன் {கர்ணன்}, தடியால் அடிக்கப்பட்ட பாம்பொன்றைப் போல அந்தக் கணையால் தாக்கப்பட்டதால் சினமடைந்து, நஞ்சைக் கக்கும் கடும் நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்ற வலிமைமிக்கக் கணைகள் பலவற்றை ஏவினான்.(59) அவன் {கர்ணன்}, ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} பனிரெண்டு கணைகளாலும், அர்ஜுனனை தொண்ணூற்றொன்பது கணைகளாலும் துளைத்தான். ஒரு பயங்கரக் கணையால் மீண்டும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} துளைத்த கர்ணன், சிரித்துக் கொண்டே பெருமுழக்கம் செய்தான்.(60) எனினும், அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} தன் எதிரியின் மகிழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனித உடலின் முக்கியப் பகுதிகள் அனைத்தையும் அறிந்தவனும், இந்திரனின் ஆற்றலைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, பெரும் சக்தி கொண்ட பலனைத் தாக்கிய இந்திரனைப் போல நூற்றுக்கணக்கான கணைகளால் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்தான்.(61) பிறகு அர்ஜுனன், காலதண்டத்திற்கு ஒப்பான தொண்ணூறு கணைகளைக் கர்ணன் மீது ஏவினான். அக்கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன், இடியால் பிளக்கப்பட்ட மலையைப் போல நடுங்கினான்.(62) விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், விலைமதிக்க முடியாத வைரங்கள், பசும்பொன் {தூய தங்கம்} ஆகிவற்றால் அலங்கரிக்கப்பட்ட கர்ணனின் தலைக்கவசம், அவனது காதுகுண்டலங்கள் ஆகியவையும் கூட, சிறகு படைத்த கணைகளைக் கொண்டு அர்ஜுனனால் பூமியில் வீழ்த்தப்பட்டன.(63) விலைமதிப்புமிக்கதும், பிரகாசமானதும், நெடுங்காலத்திற்கு முதன்மையான கலைஞர்கள் பலரால், பெருங்கவனத்துடன் வடிவமைக்கப்பட்டதுமான சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தையும் கூட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஒரு கணத்தில் பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தினான்.(64)

இவ்வாறு அவனைக் {கர்ணனைக்} கவசமற்றவனாக்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, சினத்துடன், பெரும் சக்தி கொண்ட கூரிய கணைகள் நான்கால் கர்ணனைத் துளைத்தான். தன் எதிரியால் பலமாகத் தாக்கப்பட்ட கர்ணன், பித்தம், சளி, வாயு மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பீடிக்கப்பட்ட ஒரு நோயாளியைப் போல, பெரும் வலியால் துன்புற்றான்.(65) பெரும் வேகம் கொண்ட அர்ஜுனன், எண்ணற்றவையும், சிறந்தவையும், பெரும் கூர்மை கொண்டவையும், பெரும் பலம், வேகம் மற்றும் கவனத்துடன் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் மீண்டும் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்தான்.(66) கூர்முனையையும், கடும் சக்தியையும் கொண்ட அந்தப் பல்வேறு கணைகளைக் கொண்டு பார்த்தனால் ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன், தன் சாரலில் செந்நீர் ஓடைகள் பாயும் ஒரு செஞ்சுண்ண மலையைப் போல (குருதியால் மறைக்கப்பட்டு) மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(67) மீண்டும் அர்ஜுனன், நேராகச் செல்பவையும், முழுக்க இரும்பாலானவையும், பலமானவையும், தங்கச் சிறகுகளுடன் கூடியவையும், அந்தகனின் நெருப்புதண்டத்துக்கு ஒப்பானவையுமான கணைகளால், கிரௌஞ்ச மலைகளைத் துளைக்கும் அக்னியின் மகனைப்[8] போல அந்தக் கர்ணனை நடுமார்பில் துளைத்தான்.(68) பிறகு சூதன் மகன் {கர்ணன்}, சக்ரனின் {இந்திரனின்} வில்லுக்கு ஒப்பான தன் வில்லையும், அம்பறாத்தூணியையும் எறிந்து விட்டு, பெரும் வலியை உணர்ந்து, சுழன்று, தன் பிடி தளர்ந்து, பெரும் வேதனையை அடைந்து, செயலற்றவனாக மலைத்து நின்றான்[9].(69)ஆண்மையின் கடமையை {ஆண்மை விரதத்தை} நோற்பவனான அறம்சார்ந்த அர்ஜுனன், அத்தகு துயரத்தில் வீழ்ந்த தன் எதிரியைக் கொல்ல விரும்பவில்லை. அப்போது இந்திரனின் தம்பி {கிருஷ்ணன்}, பெரும்பரபரப்புடன், அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஏன் மறதி நிறைந்தவனாக இருக்கிறாய்?(70) உண்மையில் விவேகம் கொண்டோர், தங்கள் எதிரிகள் பலவீனமாக இருந்தாலும், ஒரு போதும் அவர்களை விடமாட்டார்கள். கற்றறிந்தவனான ஒருவன், துயரில் விழுந்த எதிரிகளைக் கொல்வதால் தகுதி {புண்ணியம்} மற்றும் புகழ் ஆகிய இரண்டையும் ஈட்டுகிறான்.(71) காலத்தை இழக்காமல், எப்போதும் உன்னிடம் பகை கொண்டவனும், வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணனை வேகமாக நொறுக்குவாயாக. சூதன் மகன் {கர்ணன்} இயன்றவனானதும் {எழுந்ததும்}, முன்பைப் போலவே உன்னை எதிர்த்து விரைவான். எனவே, அசுரன் நமுசியைக் கொன்ற இந்திரனைப் போல நீ அவனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(72) “ஓ! கிருஷ்ணா, அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி ஜனார்த்தனனை வழிபட்டவனும், குருகுலத்தின் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனன், அசுரன் சம்பரனைத் துளைத்த சொர்க்கத்தின் ஆட்சியாளனை {இந்திரனைப்} போல, சிறந்த கணைகள் பலவற்றால் மீண்டும் கர்ணனை வேகமாகத் துளைத்தான்.(73) கிரீடத்தில் அலங்கரிக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகள் {வத்ஸதந்தங்கள்} பலவற்றால் கர்ணனையும், அவனது தேர் மற்றும் குதிரைகளையும் மறைத்து, தன் வீரத்தை வெளிப்படுத்தி, தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான்.(74)

கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட அந்தக் கணைகளால் {வத்ஸதந்தங்களால்} துளைக்கப்பட்டவனும், அகன்ற மார்பைக் கொண்டவனுமான அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, மலர்கள் நிறைந்த அசோகம், பலாசம், சால்மலி {முள்ளிலவு} மரங்களைப் போலவோ, சந்தன மரக் காடுகளை அதிகம் கொண்ட ஒரு மலையைப் போலவோ பிரகாசமாகத் தெரிந்தான்.(75) உண்மையில், தன் உடலில் தைத்திருந்த அந்த எண்ணற்றக் கணைகளுடன் கூடிய கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மரங்கள் நிறைந்த உச்சிகளையும், தாழ்வரைகளையும் கொண்ட மலைகளின் இளவரசனைப் போலவோ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கர்ணிகார மரங்களைப் போல அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(76) கணைமாரிகளைத் திரும்பத் திரும்ப ஏவியவனும், அந்தக் கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டவனுமான கர்ணன், அஸ்த மலைகளை நோக்கி, பிரகாசமான வட்டிலுடனும், சிவந்த கதிர்களுடனும் செல்லும் சூரியனைப் போலத் தெரிந்தான்.(77) எனினும், அர்ஜுனன் கரங்களில் இருந்து ஏவப்பட்ட கூர்முனைக் கணைகள், அதிரதன் மகனின் {கர்ணனின்} கரங்களால் ஏவப்பட்டவையும், வலிமைமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான சுடர்மிக்கக் கணைகளுடன் ஆகாயத்தில் மோதி, அவை அனைத்தையும் அழித்தன.(78) பொறுமை மீண்டவனும், கோபக்கார பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றை ஏவியவனுமான கர்ணன், கோபக்காரப் பாம்புகளைப் போலத் தெரிந்த பத்து கணைகளால் பார்த்தனையும், அவ்வாறே தெரிந்த ஆறு கணைகளால் கிருஷ்ணனையும் துளைத்தான்.(79)

அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கதும், முழுக்க இரும்பாலானதும், பாம்பின் நஞ்சுக்கோ, நெருப்பின் சக்திக்கோ ஒப்பானதும், இந்திரனின் இடிமுழக்கத்திற்கு ஒப்பான விஸ் ஒலியைக் கொண்டதும், உயர்ந்த (தெய்வீக) ஆயுதத்தின் சக்தியால் ஈர்க்கப்பட்டதுமான பயங்கரக் கணை ஒன்றை ஏவ விரும்பினான்.(80) அந்நேரத்தில், கர்ணனின் மரணத்திற்கான அந்த நேரம் வந்த போது, கண்ணுக்குப்புலப்படாதவனாக {கர்ணனை} அணுகிய காலன், பிராமணனின் சாபத்தை[10] மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் வகையில், அவனது மரணம் நெருங்கிவிட்டது என்று கர்ணனுக்குத் தெரிவிக்க விரும்பி, அவனிடம் {கர்ணனிடம்}, “பூமாதேவி உன் சக்கரத்தை விழுங்குகிறாள்” என்றான்.(81) உண்மையில், கர்ணனின் மரணத்திற்கான நேரம் வந்தபோது, சிறப்புமிக்கப் பார்க்கவர் {பரசுராமர்} அவனுக்கு அளித்த உயர்ந்த பிரம்ம ஆயுதம் அவனது நினைவில் இருந்து தப்பியது. பூமியும் அவனுடைய தேரின் இடது சக்கரத்தை விழுங்கத் தொடங்கியது.(82) அந்த முதன்மையான பிராமணனின் சாபத்தின் விளைவால், பூமியில் ஆழமாக மூழ்கிய கர்ணனின் தேரானது சுழலத் தொடங்கி, மேட்டுப்பகுதியில் மலர்களின் கனத்துடன் நிற்கும் புனிதமான மரம் ஒன்றைப் போல அந்த இடத்திலேயே நிலைத்து நின்றது[11].(83)

பிராமணனின் சாபத்தால் அவனது தேர் சுழலத் தொடங்கி, ராமரிடம் {பரசுராமரிடம்} பெற்ற அந்த உயர்ந்த ஆயுதமும், உள்ளொளியால் தன்னிடம் ஒளிராமல், பாம்பு வாய்க் கொண்ட அவனது பயங்கரக் கணையும் பார்த்தனால் வெட்டப்பட்ட போது, கர்ணன் கவலையால் நிறைந்தான்.(84) அந்த இடர்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத அவன் {கர்ணன்}, தன் கரங்களை அசைத்தபடியே {உதறியபடியே} அறம் குறித்துப் பழிக்கத் தொடங்கி, “அறமானது நேர்மையாளர்களை {அறவோரைக்} காக்கும் என்று அறமறிந்தோர் எப்போதும் சொல்கின்றனர்.(85) நம்மைப் பொறுத்தவரை, நம்மால் இயன்றதிலும், அறிவிலும் சிறந்த அளவுக்கு அறம் பயிலவே எப்போதும் முயல்கிறோம். எனினும், இப்போதோ அறமானது, தனக்கு அர்ப்பணிப்புள்ள நம்மைக் காக்காமல் அழித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அறமானது எப்போதும் தன்னை வழிபடுபவர்களைக் காக்காது என்றே நான் நினைக்கிறேன்” என்றான்.(86) இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் அர்ஜுனனுடைய கணைகளால் தாக்குதலால் மிகவும் கலக்கமடைந்தான். அவனது குதிரைகளும், அவனது சாரதியும் {சல்லியனும்}, தங்கள் வழக்கமான நிலைகளை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். தன் முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டுக் கருத்தில்லாதவனாக {தளர்ச்சியடைந்து} இருந்த அவன் {கர்ணன்}, அந்தப் போரில் மீண்டும் மீண்டும் அறத்தை {தர்மத்தைப்} பழித்தான்.(87) பிறகு அவன், கிருஷ்ணனின் கரங்களை மூன்று கணைகளாலும், பார்த்தனை ஏழாலும் துளைத்தான்.(88)

அப்போது அர்ஜுனன், முற்றிலும் நேரானவையும், கடும் மூர்க்கம் கொண்டவையும், நெருப்பின் காந்திக்கு ஒப்பானவையும், சக்தியில் இந்திரனின் வஜ்ரத்தைப் போன்றவையுமான பயங்கரமான பதினேழு கணைகளை ஏவினான்.(89) அச்சந்தரத்தக்க மூர்க்கம் கொண்ட அந்தக் கணைகள் கர்ணனைத் துளைத்து, அவனது உடலைக் கடந்து சென்று பூமியின் பரப்பில் விழுந்தன. அதிர்ச்சியில் நடுங்கிய கர்ணன், கிட்டத்தட்ட தன் முழுச் சுறுசுறுப்பையும் அப்போது வெளிப்படுத்தினான்.(90) ஒரு பலமிக்க முயற்சியால் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவன் {கர்ணன்}, பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான்[12]. பிரம்மாயுதத்தைக் கண்ட அர்ஜுனன், ஐந்திர ஆயுதத்தை உரிய மந்திரங்களுடன் இருப்புக்கு அழைத்தான்.(91) காண்டீவத்தையும், அதன் நாண்கயிற்றையும், தன் கணைகளையும் மந்திரங்களால் ஈர்த்த அந்த எதிரிகளை எரிப்பவன், மழைத்தாரைகளைப் பொழியும் புரந்தரனை {இந்திரனைப்} போலக் கணை மாரியை ஏவினான்.(92) பெரும் சக்தியும், பலமும் கொண்ட அந்த ஆயுதங்கள், பார்த்தனின் தேரில் இருந்து வெளிப்பட்டு, கர்ணனின் வாகனத்தருகே கண்களுக்குக் காணப்பட்டன. வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், தன் முன்பு தெரிந்த அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான்.(93)

இவ்வாறு அந்த ஆயுதம் அழிக்கப்பட்டதைக் கண்ட விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம், “ஓ! பார்த்தா, உயர்ந்த ஆயுதங்களை ஏவுவாயாக. ராதையின் மகன் உன் கணைகளைக் கலங்கடிக்கிறான்” என்றான்.(94) அர்ஜுனன், உரிய மந்திரங்களுடன், பிரம்ம ஆயுதத்தைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான். கணைகளால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் மறைத்த பார்த்தன், (இன்னும் பல) கணைகளால் கர்ணனைத் தாக்கினான்.(95) அப்போது கர்ணன், பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற கூரிய கணைகளால் அர்ஜுனனுடைய வில்லின் நாண் கயிற்றை அறுத்தான். அதே போல இரண்டாவதாகப் பொருத்தப்பட்ட நாண்கயிற்றையும், மூன்றாவதையும், நான்காவதையும், ஐந்தாவதையும் கூட அறுத்தான்.(96) ஆறாவதும், ஏழாவதும், அதற்கடுத்து எட்டாவதும், ஒன்பதாவதும், பத்தாவதும், இறுதியாகப் பதினொன்றாவதும் அந்த விருஷனால் {கர்ணனால்} அறுபட்டது. நூற்றுக் கணக்கான கணைகளை ஏவ வல்ல கர்ணன், பார்த்தன் தன் வில்லுக்கு நூறு நாண்கயிறுகளைக் கொண்டிருந்தான் என்பதை அறியவில்லை[13].(97) தன் வில்லுக்கு மற்றொரு நாண்கயிற்றைக் கட்டி, பல கணைகளை ஏவிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சுடர்மிக்க வாய்களைக் கொண்ட பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் கர்ணனை மறைத்தான்.(98) எப்போது நாண்கயிறு அறுந்தது, எப்போது அது மாற்றப்பட்டது என்பதைக் கர்ணன் காணாத வகையில், அறுந்த அந்த நாண்கயிறுகளை அர்ஜுனன் வேகமாக மாற்றினான். அவனால் செய்யப்பட்ட அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(99)

ராதையின் மகன் {கர்ணன்} தன் ஆயுதங்களால், சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} ஆயுதங்களைக் கலங்கடித்தான். தன் ஆற்றலை வெளிப்படுத்திய அவன், தனஞ்சயனை {அர்ஜுனனை} விட மேம்படுவதாக அந்த நேரத்திற்குத் தெரிந்தது.(100) கர்ணனின் ஆயுதங்களால் பீடிக்கப்படும் அர்ஜுனனைக் கண்ட கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “கர்ணனை {அருகில்} அணுகி, மேன்மையான ஆயுதங்களால் அவனைத் தாக்குவாயாக” என்றான்.(101) அப்போது சினத்தால் நிறைந்த தனஞ்சயன், நெருப்பைப் போன்றதும், பாம்பின் நஞ்சுக்கு ஒப்பாகத் தெரிந்ததும், வஜ்ரத்தைப் போலக் கடினமானதுமான மற்றொரு தெய்வீக ஆயுதத்தை மந்திரங்களால் ஈர்த்து,(102) அதனுடன் ரௌத்ர ஆயுதத்தையும் ஒன்றிணைத்து, அதைத் தன் எதிரியின் மீது ஏவ விரும்பினான்[14]. அந்த நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமியானது, கர்ணனின் தேர்ச்சக்கரங்களில் ஒன்றை விழுங்கியது.(103) வேகமாகத் தன் வாகனத்தில் இருந்து இறங்கிய அவன் {கர்ணன்}, மூழ்கிய சக்கரத்தைத் தன்னிரு கரங்களாலும் பற்றி, அதைப் பெரும் முயற்சியுடன் உயர்த்த முயற்சித்தான்.(104) கர்ணனால் பலமாக உயரத் தூக்கப்பட்டவளும், அவனது சக்கரத்தை விழுங்கியவளுமான பூமாதேவியானவள், நான்கு விரல்களின் அளவு உயரத்திற்கு, தன் ஏழு தீவுகள், மலைகள், நீர் நிலைகள், காடுகள் ஆகியவற்றுடன் உயர எழுந்தாள்.(105)

விழுங்கப்பட்ட தன் சக்கரத்தைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் கண்ணீர் சிந்தி, அர்ஜுனனைக் கண்டு, சினத்தால் நிறைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(106) “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, ஓ! பார்த்தா, மூழ்கிய இந்தச் சக்கரத்தை நான் உயர்த்தும்வரை ஒரு கணம் பொறுப்பாயாக.(107) ஓ! பார்த்தா, என் தேரின் இடது சக்கரம், தற்செயலாகப் பூமியால் விழுங்கப்பட்டதைக் கண்டும், கோழையால் மட்டுமே செய்யப்படக்கூடிய (என்னைத் தாக்கிக் கொல்லும்) இந்தக் காரியத்தைக (செய்யாமல்) கைவிடுவாயாக.(108) அற நடத்தைகளை நோற்கும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களாக இருப்பவர்கள், கலைந்த முடிகளைக் கொண்ட மனிதர்கள், போரில் இருந்து முகம் திருப்பிக் கொண்டோர், பிராமணன், கரங்கூப்பியவன், சரணடைந்தவன், இடத்தை இரந்து கேட்பவன், தன் ஆயுதத்தை விட்டவன், கணைகள் தீர்ந்து போனவன், கவசம் இடம்பெயர்ந்தவன், ஆயுதம் விழுந்துவிட்டவன், ஆயுதம் உடைந்துபோனவன் ஆகியோர் மீது ஒருபோதும் தங்கள் ஆயுதங்களை ஏவுவதில்லை.(109,110) நீ உலகின் துணிச்சல்மிக்க மனிதனாவாய். போர்விதிகளையும் நீ நன்கறிந்தவனாவாய். இந்தக் காரணங்களுக்காக நீ என்னை ஒரு கணம் பொறுப்பாயாக,(111) அஃதாவது, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} நான் என் சக்கரத்தைப் பூமியில் இருந்து வெளிக்கொணரும் வரை பொறுப்பாயாக. நீ தேரில் இருக்கவும், நான் பலவீனனாக, ஊக்கம் குன்றியவனாகப் பூமியில் நிற்கவும் கூடிய இந்த நேரத்தில் நீ என்னைக் கொல்வது உனக்குத் தகாது[15].(112) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வாசுதேவனாலோ {கிருஷ்ணனாலோ}, உன்னாலோ என்னைக் கிஞ்சிற்றும் அச்சுறுத்த இயலாது. நீ க்ஷத்திரிய வகையில் பிறந்தவனாவாய். நீ உயர்ந்த குலம் ஒன்றைத் தழைக்க வைப்பவனாவாய். அறத்தின் படிப்பினைகளை நினைவுகூர்ந்து, ஒரு கணம் என்னைப் பொறுப்பாயாக” என்று சொன்னான் {கர்ணன்}.”(113)

கர்ணனின் தலையைக் கொய்த அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 91- அறம் மற்றும் நியாயமான போர் ஆகியவற்றை வேண்டிய கர்ணனைக் குற்றஞ்சாட்டிய கிருஷ்ணன், அவனாலும், துரியோதனனாலும் பாண்டவர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை நினைவூட்டியது; வெட்கத்தால் தலைகுனிந்த கர்ணன்; அர்ஜுனனை மயக்கமடையச் செய்த கர்ணன்; அந்த இடைவேளையில் தன் தேரை வெளிக்கொணர முயன்ற கர்ணனின் தலையைப் புலனுணர்வு மீண்ட அர்ஜுனன் வெட்டியது; கர்ணனின் உடலில் இருந்து வெளிப்பட்ட ஒளி சூரியனைச் சென்றடைந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேரில் நின்றிருந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, அந்தக் கர்ணனிடம், “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ அறத்தை நினைவு கூர்வது நற்பேறாலேயே. கீழ்த்தரமானவர்கள் {நீசர்கள்}, தாங்கள் துன்பத்தில் மூழ்கும்போது, தங்கள் தேவைக்குப் பழிப்பதும், தாங்கள் செய்யும் தீச்செயல்களின் போது பழிக்காததும் பொதுவாகக் காணப்படுகிறது.(1) நீ, சுயோதனன், துச்சாசனன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர், ஒற்றையாடையில் இருந்த திரௌபதியைச் சபைக்கு மத்தியில் கொண்டு வரச் செய்தீர்கள். ஓ! கர்ணா, அச்சந்தர்ப்பத்தில் உனது அறம் வெளிப்படவில்லை. பகடையில் திறன்பெற்ற சகுனி, அஃதை {பகடையை} அறியாத குந்தியின் மகனான யுதிஷ்டிரரை சபையில் வெற்றிக் கொண்ட போது, இந்த உனது அறம் {தர்மம்} எங்கே சென்றது?(3) உன் ஆலோசனைப்படி செயல்பட்ட குரு மன்னன் (துரியோதனன்), பாம்புகள் மற்றும் நஞ்சூட்டப்பட்ட உணவு ஆகியவற்றின் உதவியால் பீமரைப் பீடித்தபோது, உனது அறம் எங்கே சென்றது?(4) காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்ட காலமும், {மறைந்து வாழ வேண்டிய} பதிமூன்றாவது {13} வருடமும் கழிந்த பிறகும், பாண்டவர்களுக்கு அவர்களது அரசை நீங்கள் கொடுக்காதபோது, உனது அறம் எங்கே சென்றது?(5)

உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களை எரித்துக் கொல்வதற்காக வாரணாவதத்தின் அரக்கு வீட்டுக்கு நீங்கள் நெருப்பிட்டீர்களே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது, உனது அறம் எங்கே சென்றது?(6)

மாதவிடாயின் காரணமாகக் குறைந்த உடையில் இருந்தவளும், துச்சாசனனின் விருப்பப்படிக் கீழ்ப்படிந்திருந்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} சபைக்கு மத்தியில் நின்றிருந்தபோது அவளைக் கண்டு சிரித்தாயே, ஓ! கர்ணா, அப்போது இந்த உனது அறம் எங்கே சென்றது?(7)

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் அத்துமீறி, அப்பாவியான கிருஷ்ணை {திரௌபதி} இழுக்கப்பட்டபோது, நீ தலையிடவில்லையே. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது உனது அறம் எங்கே சென்றது?(8)

யானையின் நடை கொண்ட பெண்மணியாக மதிக்கப்பட்ட இளவரசி திரௌபதியிடம் நீ பேசியபோது, “ஓ! கிருஷ்ணையே, பாண்டவர்கள் தொலைந்தனர். அழிவில்லா நரகில் அவர்கள் மூழ்கிவிட்டனர். நீ வேறொரு கணவனைத் தேர்ந்தெடுப்பாயாக” என்றாயே. ஓ! கர்ணா, அப்போது உனது அறம் எங்கே சென்றது?(9)

அரசின் மீது பேராசை கொண்டும், காந்தாரர்களின் ஆட்சியாளனை {சகுனியை} நம்பியும் (பகடையாட) பாண்டவர்களை நீங்கள் அழைத்தீர்களே. அப்போது உனது அறம் எங்கே சென்றது?(10)

வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், சிறுவனான அபிமன்யுவைப் போரில் சூழ்ந்துகொண்டு, அவனைக் கொன்ற போது, உனது அறம் எங்கே சென்றது?(11)

இப்போது நீ இருப்புக்கு அழைக்கும் இந்த அறம், அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் எங்குமில்லையெனில், இப்போது அவ்வார்த்தையைச் சொல்லி உன் {வாயின்} மேலண்ணத்தை உலர்த்துவதால் யாது பயன்? ஓ! சூதா {கர்ணா}, நீயோ இப்போது அறத்தின் நடைமுறைகளைக் குறித்துப் பேசுகிறாய், ஆனாலும் நீ உயிரோடு தப்ப மாட்டாய்.(12) புஷ்கரனால் வீழ்த்தப்பட்ட நளன், மீண்டும் தன் ஆற்றலால் அரசை மீட்டதைப் போல, ஆசையிலிருந்து விடுபட்ட பாண்டவர்களும், தங்கள் கரங்களின் ஆற்றலாலும், தங்கள் நண்பர்கள் அனைவரின் உதவியாலும் தங்கள் அரசை மீட்பார்கள்.(13) தங்கள் பலமிக்க எதிரிகளைக் கொன்ற பிறகு, சோமகர்களுடன் சேர்ந்து தங்கள் அரசை அவர்கள் மீட்பார்கள். அறத்தால் எப்போதும் காக்கப்படும் இந்த மனிதர்களில் சிங்கங்களின் (பாண்டு மகன்களின்) கைகளால் தார்தராஷ்டிரர்கள் அழிவை அடைவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}[1].”(14)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், எந்தப் பதிலையும் அளிக்காமல் தன் தலையைத் தொங்கவிட்டான்.(15) சினத்தால் உதடுகள் நடுங்க தன் வில்லை உயர்த்திய அவன் {கர்ணன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் சக்தியும், ஆற்றலும் கொண்டவன் ஆதலால், பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} தன் போரைத் தொடர்ந்தான்.(16) அப்போது பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} பேசிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பெரும் வலிமை கொண்டோனே, தெய்வீக ஆயுதத்தால் கர்ணனைத் துளைத்து, அவனைக் கீழே வீழ்த்துவாயாக” என்றான்.(17) அந்தப் புனிதமானவனால் இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன் சினத்தால் நிறைந்தான். உண்மையில், கிருஷ்ணனால் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, சீற்றத்துடன் சுடர்விட்டெரிந்தான்.(18) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் இருந்த பார்த்தனுடைய உடலின் துளைகள் அனைத்திலும் நெருப்பின் தழல்கள் வெளிப்படுவதாகத் தெரிந்தது. அந்தக் காட்சியைக் காண மிக அற்புதமானதாக இருந்தது.(19) அதைக் கண்ட கர்ணன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, தனஞ்சயன் மீது கணைமாரியைப் பொழிந்து, தன் தேரை வெளிக்கொணர மீண்டும் முயற்சித்தான்.(20)

பார்த்தனும் {அர்ஜுனனும்}, பிரம்மாயுதத்தின் துணையால் கர்ணன் மீது கணைமாரியைப் பொழிந்தான். அந்தப் பாண்டுவின் மகன், தன் ஆயுதத்தால் எதிரியின் ஆயுத்தைக் கலங்கடித்தபடியே தொடர்ந்து அவனைத் தாக்கினான்.(21) அப்போது அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கர்ணனைக் குறிபார்த்து, அக்னியின் சக்தியால் ஈர்க்கப்பட்டதும், தனக்குப் பிடித்தமானதுமான மற்றொரு ஆயுதத்தை ஏவினான். அர்ஜுனனால் ஏவப்பட்ட அந்த ஆயுதம், தன் சக்தியால் சுடர்விட்டெரிந்தது.(22) எனினும் கர்ணன் வருணாயுதத்தால் அந்த நெருப்பைத் தணித்தான். மேலும் அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தான் உண்டாக்கிய மேகங்களின் மூலம், மழை நாளில் காணப்படும் இருளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான்.(23) பெரும் சக்தி கொண்ட அந்தப் பாண்டுவின் மகன், கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அச்சமில்லாமல் வாயவ்ய ஆயுதத்தின் மூலம் அம்மேகங்களை விலக்கினான்.(24) அப்போது அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பாண்டுமகனைக் {அர்ஜுனனைக்} கொல்வதற்காக நெருப்பைப் போன்ற சுடர்மிக்கப் பயங்கரக் கணையொன்றை எடுத்தான்.(25)

புகழத்தக்க அந்தக் கணை நாண்கயிற்றில் பொருத்தப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமாதேவி, அவளது மலைகள், நீர்நிலைகள் மற்றும், காடுகளுடன் சேர்ந்து நடுங்கினாள்.(26) கடினமான கூழாங்கற்களுடன் கடுங்காற்று வீசத் தொடங்கியது. திசைகளின் புள்ளிகள் அனைத்தும் புழுதியில் மூழ்கியன. ஓ! பாரதரே, ஆகாயத்தில் தேவர்களுக்கு மத்தியில் துயரத்துடன் கூடிய ஓலங்கள் எழுந்தன.(27) சூதன் மகனால் {கர்ணனால்} குறிபார்க்கப்பட்ட அந்தக் கணையைக் கண்ட பாண்டவர்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உற்சாகமற்ற இதயங்களுடன் பெருங்கவலையில் மூழ்கினர்.(28) கூர்முனை கொண்டதும், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ரத்திற்கு ஒப்பான பிரகாசத்துடன் கூடியதுமான அந்தக் கணை கர்ணனின் கரங்களில் இருந்து ஏவப்பட்டு, எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பெரும்பாம்பைப் போலத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} மார்பில் பாய்ந்தது.(29) எதிரிகளைக் கலங்கடிப்பவனான அந்த உயர் ஆன்ம பீபத்சு {அர்ஜுனன்}, அம்மோதலில் இவ்வாறு துளைக்கப்பட்டுச் சுழலத் தொடங்கினான். அவனது பிடி தளர்ந்ததால், அவனது கரங்களில் இருந்த அவனது வில்லான காண்டீவம் விழுந்தது. நிலநடுக்கத்தால் நடுங்கும் மலைகளின் இளவரசனைப் போல அவன் {அர்ஜுனன்} நடுங்கினான்.(30)

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரன் விருஷன் {கர்ணன்}, பூமியால் விழுங்கப்பட்ட தன் தேரின் சக்கரத்தை வெளிக்கொணர விரும்பி, தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்தான். தன்னிரு கைகளாலும் சக்கரத்தைப் பற்றிய அவன் {கர்ணன்}, பெரும் பலத்துடன் அதை இழுக்க முயன்றாலும், விதி அவனது அம்முயற்சியைத் தோல்வியுறச் செய்தது.(31) அதே வேளையில் கிரீடத்தால் அலங்கரிக்கப்படும் உயர் ஆன்ம அர்ஜுனன், தன் உணர்வுகள் மீண்டு, காலதண்டத்தைப் போன்று மரணத்தைத் தரக்கூடிய அஞ்சலிகம்[2] என்றழைக்கப்படும் கணையொன்றை எடுத்தான் {எடுக்கத் தயாரானான்}. அப்போது பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, “உன் எதிரியான இந்த விருஷன் {கர்ணன்}, அவனது தேரில் ஏறுவதற்கு முன்னர், அவனது தலையை உன் கணையால் கொய்வாயாக” என்றான்.(32) தன் எதிரியின் சக்கரம் இன்னும் புதைந்த நிலையில், தலைவன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அவ்வார்த்தைகளை மெச்சியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அர்ஜுனன், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட கத்தித் தலைக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றை எடுத்து, யானை கட்டும் கயிறு பொறிக்கப்பட்டதும், களங்கமற்ற சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான (கர்ணனின்) கொடிமரத்தைத் தாக்கினான்.(33) அந்தக் கொடிமரமானது விலைமதிப்புமிக்க யானை கட்டும் கயிறு பொறிக்கப்பட்டதும், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், ஞானத்தில் விஞ்சிய முதன்மையான கலைஞர்களால் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டதும், பெரும் அழகைக் கொண்டதும் பசும்பொன்னின் வண்ணங்களைக் கொண்டதுமாக இருந்தது.(34) அந்தக் கொடிமரமானது, எப்போதும் உமது துருப்புகளுக்குப் பெரும் வீரத்தை அளிப்பதாகவும், எதிரிக்கு அச்சத்தை ஊட்டுவதுமாக இருந்தது. அதன் வடிவம் புகழத்தக்கதாக இருந்தது. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட அது {அந்தக் கொடிமரம்}, காந்தியில் சூரியனுக்கு ஒப்பானதாக இருந்தது. உண்மையில் அதன் பிரகாசமானது, நெருப்பு, சூரியன், அல்லது சந்திரனைப் போன்றதாக இருந்தது.(35)

கிரீடத்தால் அலங்கரிக்கப்படும் அர்ஜுனன், பெரும் தேர்வீரனான அதிரதன் மகனின் {கர்ணனின்} அந்தக் கொடிமரத்தைப் பெருங்கூர்மை கொண்டதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதும், தெளிந்த நெய்க்காணிக்கைகளால் ஊட்டப்படும் நெருப்பின் காந்தியைக் கொண்டதும், சுடர்மிக்க அழகைக் கொண்டதுமான அந்தக் கத்தித் தலை கணையால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டி வீழ்த்தினான்.(36) அப்படி விழுந்த அந்தக் கொடிமரத்தோடு சேர்ந்து, குருக்களின் இதயங்களும், அவர்களது புகழும், செருக்கும், வெற்றி மீதான நம்பிக்கையும், விரும்பத்தக்க அனைத்தும் விழுந்த போது (அந்தக் குரு படையில் இருந்து) “ஓ” என்றும், “ஐயோ” என்றும் உரத்த ஓலங்கள் எழுந்தன.(37) பெரும் கரநளினம் கொண்ட குரு குலத்து வீரனால் {அர்ஜுனனால்} அந்தக் கொடிமரம் வெட்டி வீழ்த்தப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வெற்றியில் இருந்த அனைத்து நம்பிக்கைகளையும் இழந்தனர்.(38) கர்ணனை அழிக்க விரைந்த பார்த்தன் {அர்ஜுனன்}, இந்திரனின் வஜ்ரத்திற்கோ, அக்னியின் தண்டத்திற்கோ ஒப்பானதும், ஆயிரங்கதிர் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான சிறந்த அஞ்சலிக ஆயுதத்தைத் தன் அம்பறாத்தூணியில் இருந்து வெளியே எடுத்தான்.(39)

முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லதும், குருதியாலும், சதையாலும் பூசப்பட்டதும், நெருப்பு, அல்லது சூரியனுக்கு ஒப்பானதும், விலைமதிப்புமிக்கப் பொருட்களால் செய்யப்பட்டதும், மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கு அழிவை உண்டாக்குவதும், நேராகப் பெரும் மூர்க்கத்துடன் செல்லகூடியதுமான அது {அந்த அஞ்சலிகம்}, ஆறு அடி {சிறகுகள் என்று இருக்க வேண்டும்} மற்றும் மூன்று முழம் நீளத்தைக் கொண்டதாக இருந்தது.(40) ஆயிரங்கண் இந்திரனுடைய வஜ்ரத்தின் சக்தியைக் கொண்டதும், இரவில் தடுக்கப்பட முடியாத ராட்சசர்களைப் போன்றதும், பிநாகை அல்லது நாராயணனின் சக்கரத்திற்கு ஒப்பானதுமான அது மிகப் பயங்கரமானதாகவும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் அழிவை உண்டாக்குவதுமாக இருந்தது[3].(41) பார்த்தன் {அர்ஜுனன்}, கணையின் வடிவில் இருந்ததும், தேவர்களாலேயே தடுக்கப்பட முடியாததும், அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} எப்போதும் துதிக்கப்படுவதும், தேவர்களையும் அசுரர்களையும் வெல்ல வல்லதுமான அந்தப் பெரும் ஆயுதத்தை உற்சாகமாக எடுத்தான்.(42) அந்தப் போரில் பார்த்தனின் பிடியில் இருந்த அந்தக் கணையைக் கண்ட மொத்த அண்டமும், அதன் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் சேர்ந்து நடுங்கியது. உண்மையில், அந்தப் பயங்கரப் போரில் உயர்த்தப்படும் அவ்வாயுதத்தைக் கண்ட முனிவர்கள், “அண்டத்தில் அமைதியுண்டாகட்டும்” என்று உரக்கக் கூச்சலிட்டனர்.(43) அப்போது அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, அந்த ஒப்பற்ற கணையைத் தன் வில்லில் பொருத்தி, வலிமைமிக்க உயர்ந்த ஆயுதம் ஒன்றில் அஃதை இணைத்தான். தன் வில்லான காண்டீவத்தை இழுத்த அவன் {அர்ஜுனன்}, வேகமாக,(44) “நான் தவத்துறவுகளை மேற்கொண்டவனாக, மூத்தவர்களை நிறைவுசெய்தவனாக, நலன்விரும்பிகளின் ஆலோசனைகளைக் கேட்பவனாக இருந்தால், இந்த எனது கணை, என் எதிரியின் உடலையும், இதயத்தையும் விரைவாக அழிக்கவல்ல வலிமைமிக்க ஆயுதம் ஒன்றைப் போல ஆகட்டும்.(45) என்னால் வழிபடப்படுவதும், பெரும் கூர்மை கொண்டதுமான இந்தக் கணை, அந்த உண்மையின் காரணமாக என் எதிரியான கர்ணனைக் கொல்லட்டும்” என்றான் {அர்ஜுனன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன தனஞ்சயன் {அர்ஜுனன்}, அங்கிரஸின் அதர்வணத்தில் பரிந்திரைக்கப்படும் சடங்கின் பலாலன்களைக் கொண்டதும், பிரகாசத்தால் சுடர்விடுவதும், போரில் காலனாலேயே பொறுத்துக்கொள்ள முடியாததும், கடுமையானதுமான அந்தப் பயங்கரக் கணையைக் கர்ணனின் அழிவுக்காக விடுத்தான். கிரீடத்தால் அலங்கரிக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனைக் கொல்ல விரும்பி, பெரும் உற்சாகத்துடன், “இந்தக் கணை எனக்கு வெற்றியை அளிக்கட்டும். என்னால் ஏவப்படுவதும், நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்டதுமான இந்தக் கணையானது கர்ணனை யமனின் முன்னிலைக்குக் கொண்டு செல்லட்டும்” என்றான்.(47) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்படுபவனுமான அர்ஜுனன், கர்ணனிடம் கொண்ட பகைவுணர்ச்சியை வளர்த்து, அவனைக் கொல்லவிரும்பி, சூரியன், அல்லது சந்திரனின் காந்தியைக் கொண்டதும், வெற்றியை அளிக்கவல்லதுமான அந்த முதன்மையான கணையால் தன் எதிரியை {கர்ணனை} உற்சாகமாகத் தாக்கினான்.(48) இவ்வாறு அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்டதும், சூரியனின் சக்தியைக் கொண்ட அந்தக் கணை, திசைப்புள்ளிகளின் அனைத்தையும் எரியச் செய்தது. இந்திரன் வஜ்ரத்தால் விருத்திரனுடைய தலையை வீழ்த்தியது போல, அர்ஜுனன், அந்தக் கணையைக் கொண்டு, தன் எதிரியின் {கர்ணனின்} தலையை வீழ்த்தினான்.(49) உண்மையில் அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மந்திரங்களால் ஈர்க்கப்பட்டு, வலிமைமிக்க ஆயுதமான மாற்றப்பட்ட அந்த அஞ்சலிக ஆயுதத்தைக் கொண்டு, பிற்பகலில் அந்த வைகர்த்தனனின் {கர்ணனின்} தலையை வெட்டினான்.(50)

இவ்வாறு அந்த அஞ்சலிகத்தால் வெட்டப்பட்ட கர்ணனின் உடல் பூமியில் விழுந்தது.(51) உதயச் சூரியனின் காந்திக்கு இணையானதும், கூதிர்கால நடுவான சூரியனுக்கு ஒப்பானதுமான அந்த (கௌரவப்) படைத்தலைவனின் {கர்ணனின்} தலையும், அஸ்த மலைகளில் விழும் குருதிவட்டில் கொண்ட சூரியனைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(52) உண்மையில், மிக அழகானதும், எப்போதும் ஆடம்பரமாகக் கவனிக்கப்பட்டதும், உன்னச் செயல்களைச் செய்யும் கர்ணனுடையதுமான அந்தத் தலையானது, பெரும் செல்வத்தில் நிறைந்த வசதியான மாளிகையைக் கைவிட விரும்பாத ஒருவனைப் போலவே விருப்பமில்லாமலேயே அந்த உடலைக் கைவிட்டது.(53) அர்ஜுனனின் கணையால் வெட்டப்பட்டதும், உயிரை இழந்ததும், பெரும் காந்தியுடன் கூடியதுமான கர்ணனின் நெடிய உடலானது, அனைத்துக் காயங்களில் இருந்தும் குருதி வெளியேற, மழைக்குப்பிறகு இடியால் பிளக்கப்பட்ட, தன் பக்கங்களில் செந்நீர் ஓடைகளுடன் கூடியசெஞ்சுண்ண மலைச் சிகரம் ஒன்றைப் போலக் கீழே விழுந்தது.(54) அப்போது வீழ்ந்துவிட்ட கர்ணனின் உடலில் இருந்து ஓர் ஒளியானது ஆகாயத்தினூடாகக் கடந்து சென்று சூரியனுக்குள் நுழைந்தது. கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, மனிதப் போர்வீரர்கள் அனைவராலும் இந்த அற்புதக் காட்சி காணப்பட்டது.(55)

அப்போது பல்குனனால் {அர்ஜுனனால்}, கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட பாண்டவர்கள், தங்கள் சங்குகளை உரக்க முழக்கினர். அதேபோலவே, கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} கூட, மகிழ்ச்சியால் நிறைந்து, காலத்தை இழக்காமல் தங்கள் சங்குகளை முழக்கினர்.(56) சோமகர்கள், களத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கும் கர்ணனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்து, (பாண்டவப் படையின்) பிற துருப்புகளுடன் சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டனர். பெரும் மகிழ்ச்சியால் அவர்கள் தங்கள் எக்காளங்களை முழக்கி, தங்கள் கரங்களையும் ஆடைகளையும் அசைத்தனர்.(57) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்கள் அனைவரும் பார்த்தனை {அர்ஜுனனை} அணுகி மகிழ்ச்சியாகப் புகழத் தொடங்கினர். வலிமைகொண்ட பிறரும், ஆடிக்கொண்டும், ஒருவரையொருவர் தழுவிக் கொண்டும் உரக்கக் கூச்சலிட்டபடியும், “கணைகளால் சிதைக்கப்பட்டுக் கர்ணன் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடத்தப்பட்டிருப்பது நற்பேறாலேயே” என்றனர்.(58) உண்மையில், வெட்டப்படக் கர்ணனின் தலையானது, புயலால் தளர்ந்து விழுந்த மலைச்சிகரம் ஒன்றைப் போலவோ, வேள்வி முடித்தும் அணைக்கப்பட்ட நெருப்பைப் போலவோ, அஸ்த மலைகளை அடைந்துவிட்ட சூரியனின் வடிவத்தைப் போலவோ அழகானதாக இருந்தது.(59) கணைகளையே கதிர்களாகக் கொண்ட கர்ண சூரியன், பகைவரின் படையை எரித்தபிறகு, இறுதியாக, வலிமைமிக்க அர்ஜுன காலத்தால் மறையச்செய்யப்பட்டது.(60)

அஸ்த மலைகளை நோக்கிச் செல்லும் சூரியன், தன் கதிர்கள் அனைத்தையும் தன்னோடு எடுத்துக் கொண்டு செல்வது போலவே, (அர்ஜுனனின்) அந்தக் கணையும், கர்ணனின் உயிர்மூச்சை எடுத்துக் கொண்டு {உடலைவிட்டு} வெளியே கடந்து சென்றது.(61) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகனின் மரணக் காலமானது, அந்நாளின் பிற்பகலாக இருந்தது[4]. அந்தப் போரில் அஞ்சலிக ஆயுதத்தால் வெட்டப்பட்ட கர்ணனின் தலையானது, அவனது உடலோடு சேர்ந்து கீழே விழுந்தது.(62) உண்மையில், அர்ஜுனனின் அந்தக் கணையானது, கௌரவத் துருப்புகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வேகமாகக் கர்ணனின் தலையையும், உடலையும் வீழ்த்தியது.(63) வீரக்கர்ணன் வீழ்த்தப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடத்தப்பட்டதைக் கண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கொடிமரமிழந்த அந்தத் தேருடன் அங்கிருந்து சென்றான்.(64) கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் போரில் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட கௌரவர்கள், காந்தியுடன் சுடர்விடும் அர்ஜுனனின் உயர்ந்த கொடிமரத்தின் மேல் தங்கள் கண்களை அடிக்கடி செலுத்தியபடியே, அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் களத்தை விட்டே தப்பி ஓடினர்.(65) ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரைக்கு ஒப்பான முகத்துடன் அருளப்பட்ட, ஆயிரங்கண் இந்திரனைப் போன்ற சாதனைகளைக் கொண்ட கர்ணனின் அழகிய தலையானது, நாளின் முடிவில் காணப்படும் ஆயிரங்கதிர் சூரியனைப் போலக் கீழே பூமியில் விழுந்தது” {என்றான் சஞ்சயன்}.(66)

துரியோதனனைத் தேற்றிய சல்லியன்! – கர்ண பர்வம் பகுதி – 92-கர்ணன் கொல்லப்பட்டதில் துரியோதனன் அடைந்த துயரம்; உரத்த முழக்கங்களைச் செய்து கௌரவர்களை அச்சுறுத்திய பீமன்; வீழ்ந்துவிட்ட கர்ணனைக் காணச் சென்ற படைவீரர்கள்; துரியோதனனைத் தேற்றிய சல்லியன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான அம்மோதலில் கணைகளால் நொறுக்கப்பட்ட துருப்புகளைக் கண்ட சல்லியன், கோபத்தால் நிறைந்து கருவிகளை இழந்த அந்தத் தேரில் சென்றான்.(1) சூதன் மகனை {கர்ணனை} இழந்த தன் படையையும், அதன் தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் அழிக்கப்பட்டதையும் கண்ட துரியோதனன், கண்ணீரால் குளித்த கண்களுடன், கவலையின் வடிவாக மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(2) கணைகளால் துளைக்கப்பட்டவனும், குருதியில் குளித்தவனும், விருப்பத்துடன் வானத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலப் பூமியில் நீண்டு கிடப்பவனுமான வீரக் கர்ணனைக் காண விரும்பிய போர்வீரர்கள், அங்கே வந்து, வீழ்ந்துவிட்ட அந்த வீரனை {கர்ணனைச்} சூழ்ந்து நின்றனர்.(3) இவ்வாறு அங்கே நின்றிருந்த எதிரிப்படையினர் மற்றும் நமது படையினருக்கு மத்தியில், தங்கள் இயல்புக்குத் தக்கபடி, சிலர் மகிழ்ச்சிக் குறிகளை வெளிக்காட்டினர், சில அச்சத்தையும், சிலர் கவலையையும், சிலர் ஆச்சரியத்தையும் வெளிக்காட்டினர், சிலரோ பெரும் துயரில் வீழ்ந்தனர்.(4) கௌரவர்களில் சிலர், வலிமைமிக்கக் கர்ணன், கவசம், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெயரச் செய்யப்பட்டு, தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டதைக் கேட்டு, காளையை இழந்து பேரச்சம் கொண்ட பசுக்கூட்டத்தைப் போல அச்சத்தால் தப்பி ஓடினர்.(5)

அப்போது பீமன், பெருமுழக்கங்களைச் செய்து, அந்த அச்சந்தரத்தக்க, மகத்தான கூச்சல்களால் ஆகாயத்தை நடுங்கச் செய்தபடி, தன் கக்கங்களை அறைந்து கொள்ளவும், குதிக்கவும், ஆடவும் தொடங்கி, அந்த அசைவுகளால் தார்தராஷ்டிரர்களை அச்சுறுத்தினான்.(6) சோமகர்களும், சிருஞ்சயர்களும் தங்கள் சங்குகளை உரக்க முழங்கினர். அவ்வேளையில் சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.(7) பயங்கரமான போரைச் செய்த கர்ணன், சிங்கத்தால் கொல்லப்படும் யானையைப் போல அர்ஜுனனால் கொல்லப்பட்டான். மனிதர்களில் காளையான அந்த அர்ஜுனன், இவ்வாறே தன் சபதத்தை நிறைவேற்றினான். உண்மையில், இவ்வாறே பார்த்தன் {அர்ஜுனன்}, (கர்ணனிடம்) தான் கொண்ட பகைமையில் எல்லையை அடைந்தான்.(8)

மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, மலைப்படைந்த இதயத்துடன் கொடிமரமிழந்த அந்தத் தேரில், துரியோதனனின் பக்கத்தை வேகமாக அடைந்து, கவலையால் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) “உன் படையின் யானைகள், குதிரைகள் மற்றும் முதன்மையான போர்வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் மலைகளைப் போன்ற பெரும் யானைகள் ஒன்றோடொன்று மோதி கொல்லப்பட்டதன் விளைவால், உன் படையானது யமனின் ஆட்சிப்பகுதியைப் போலத் தெரிகிறது.(10) ஓ! பாரதா {துரியோதனா}, இன்று கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்ததைப் போன்ற போர் இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை. இன்று கர்ணன் அந்த இரு கிருஷ்ணர்களையும், உன் பிற எதிரிகள் அனைவரையும் பலமாகத் தாக்கினான்.(11) எனினும், விதியானது நிச்சயம் பார்த்தனால் {அர்ஜுனனால்} கட்டுப்படுத்தப்பட்டு இதை நடத்தியிருக்கிறது. இதனாலேயே விதியானது பாண்டவர்களைப் பாதுகாக்கவும், நம்மைப் பலவீனமடையவும் செய்கிறது. உன் நோக்கங்களை நிறைவேற்றத் தீர்மானித்த பல வீரர்கள் எதிரியால் பலவந்தமாகக் கொல்லப்பட்டனர்.(12) சக்தி, துணிவு, வலிமை ஆகியவற்றில் குபேரன், அல்லது யமன், அல்லது வாசவன் {இந்திரன்}, அல்லது நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} ஆகியோருக்கு இணையானவர்களும், அனைத்துத் தகுதிகளைக் கொண்டவர்களும், கிட்டத்தட்ட கொல்லப்பட முடியாதவர்களும், உன் நோக்கத்தை அடைய விரும்பியவர்களுமான துணிச்சல் மிக்க மன்னர்கள், போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டனர். ஓ! பாரதா {துரியோதனா}, இதற்காக நீ வருந்தாதே. இதுவே விதி. ஆறுதலை அடைவாயாக. வெற்றி என்பது எப்போதும் அடையப்படுவதில்லை[1]” என்றான் {சல்லியன்}.(13-14)மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} அவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் தீச்செய்கைகளை நினைவுகூர்ந்த துரியோதனன், உற்சாகமற்ற இதயத்துடன், கிட்டத்தட்ட புலனுணர்வை இழந்தவனாக, கவலையின் வடிவமாக மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டான்” {என்றான் சஞ்சயன்}.(15)

துரியோதனனின் வீர உரை! – கர்ண பர்வம் பகுதி – 93-அர்ஜுனன், பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன், இரட்டையர்கள், சிகண்டி மற்றும் திரௌபதியின் மகன்கள் ஆகியோரைக் கண்டு அஞ்சி ஓடிய கௌரவர்கள்; அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற துரியோதனன்; கௌரவர்களின் இருபத்தைந்தாயிரம் காலாட்படை வீரர்களைக் கொன்ற பீமேசேனன்; தேர்ப்படையை நோக்கி விரைந்த அர்ஜுனன்; போர்வீரர்களை அணிதிரட்ட வீர உரையாற்றிய துரியோதனன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தப் பயங்கர நாளில், கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அம்மோதலில் கணைகளால் நொறுக்கப்பட்டும், (ஆயுதங்களால்) எரிக்கப்பட்டும் தப்பி ஓடும்போது குரு மற்றும் சிருஞ்சயப் படைகளின் தன்மை எவ்வாறு இருந்தது?”என்று கேட்டான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு அந்தப் போரில் பயங்கரமான பேரழிவு எவ்வாறு உண்டானது என்பதைக் கவனமாகக் கேட்பீராக.(2) கர்ணன் வீழ்ந்த பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} செய்த சிங்க முழக்கங்களால், உமது மகன்களின் இதயங்களின் பேரச்சம் நுழைந்தது.(3) கர்ணன் வீழ்ந்ததும், உமது படையின் எந்தப் போர்வீரனும், துருப்புகளைத் திரட்டுவதையோ, ஆற்றலை வெளிப்படுத்துவதிலோ தன் இதயத்தில் நிலைநிறுத்தவில்லை.(4) அர்ஜுனனால் தங்கள் புகலிடம் அழிக்கப்பட்ட அவர்கள், அடியற்ற பெருங்கடலில் உடைந்த மரக்கலத்தில் இருந்த தெப்பமற்ற வணிகர்களைப் போல, கடக்க முடியாததைக் கடக்க விரும்பினார்கள்.(5)

சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணைகளால் துளைக்கப்பட்டு, அச்சமடைந்த கௌரவர்கள் தலைவனற்றவர்களாக, சிங்கத்தால் பீடிக்கப்படும் யானை மந்தையைப் போலப் பாதுகாப்பை விரும்பினார்கள்.(6) அந்தப் பிற்பகலில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்ட அவர்கள், முறிந்த கொம்புகளைக் கொண்ட காளைகளைப் போலவோ, உடைந்த நச்சுப்பற்களைக் கொண்ட பாம்புகளைப் போலவோ தப்பி ஓடினார்கள்.(7) தங்கள் முதன்மையான போர்வீரர்கள் கொல்லப்பட்டும், தங்கள் துருப்புகள் குழப்பத்தில் ஆழ்ந்தும், கூரிய கணைகளால் தாங்களே சிதைக்கப்பட்டும் இருந்த உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வீழ்ச்சிக்குப்பின்னால் அச்சத்தால் தப்பி ஓடினார்கள்.(8) ஆயுதங்கள் மற்றும் கவசங்களை இழந்த அவர்கள், திசைகளை அறியாதவர்களாக, புலன் உணர்வை இழந்தவர்களாக ஓடும்போது ஒருவரையொருவர் நசுக்கி, அச்சத்தால் பீடிக்கப்பட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(9) “பீபத்சு {Vibhatsu-அர்ஜுனன்} வேகமாகத் துரத்தி வருவது என்னையே”, “விருகோதரன் {பீமன்} வேகமாகத் துரத்தி வருவது என்னையே” என்று நினைத்த கௌரவர்கள் ஒவ்வொருவரும், அச்சத்தால் ஒளியிழந்து, ஓடிக் கொண்டிருக்கும்போதே கீழே விழுந்தனர்.(10)

குதிரைகளில் சிலரும், தேர்களில் சிலரும், யானைகளில் சிலரும், கால்களில் சிலரும் என வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பெரும் வேகத்துடன் அச்சத்தால் தப்பி ஓடினர்.(11) யானைகளால் தேர்கள் நொறுக்கப்பட்டன, பெரும் தேர்வீரர்களால் குதிரைவீரர்கள் நொறுக்கபட்டனர், குதிரைகள் அச்சத்தால் தப்பி ஓடும்போது காலாட்படை வீரர்களின் கூட்டம் நசுக்கப்பட்டது.(12) சூதன் மகனின் {கர்ணனின்} வீழ்ச்சிக்குப்பிறகு உமது போர்வீரர்கள், இரைதேடும் விலங்குகள், கள்வர்கள் ஆகயோர் நிறைந்த காட்டில் இருக்கும் பாதுகாப்பற்ற மக்களைப் போல ஆகினர்.(13) பாகர்கள் இல்லாத யானைகளைப் போலவும், கரங்கள் இல்லாத மனிதர்களைப் போலவும் அவர்கள் இருந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள், பார்த்தனால் நிறைந்திருப்பதைப் போலவே மொத்த உலகையும் கண்டனர்.(14)

பீமசேனனிடம் கொண்ட அச்சத்தால் பீடிக்கபட்டு அவர்கள் தப்பி ஓடுவதையும், உண்மையில், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூவியபடியே களத்தை விட்டு ஆயிரக்கணக்கில் அகன்ற தன் துருப்புகளையும் கண்ட துரியோதனன், தன் சாரதியிடம், (15) “கையில் வில்லுடன் நிற்கும் என்னைப் பார்த்தனால் மீறிச் செல்ல முடியாது. துருப்புகள் அனைத்திற்கும் பின்னால் மெதுவாகத் தூண்டுவாயாக.(16) படையின் பின்னால் இருந்து நான் போரில்லால், ஆழ்ந்த நீர்நிலைகளால் கரையைக் கடக்க முடியாததைப் போல அந்தக் குந்தியின் மகனால் என்னை மீறிச் செல்ல முடியாது.(17) அர்ஜுனன், கோவிந்தன் {கிருஷ்ணன்}, செருக்கு மிக்க விருகோதரன் மற்றும் எஞ்சிய என் எதிரிகளைக் கொன்று, கர்ணனுக்கு நான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவேன்” என்றான் {துரியோதனன்}.(18) குரு மன்னனால் சொல்லப்பட்டவையும், வீரனுக்கும், கௌரவமிக்க மனிதனுக்கும் தகுந்தவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட தேரோட்டி, தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட தன் குதிரைகளை மெல்லத் தூண்டினான்.(19)

அப்போது உமது படையைச் சார்ந்த இருபத்தைந்தாயிரம் {25000} காலாட்படை வீரர்கள், அவர்களுக்கிடையில் தேர்களோ, குதிரைகளோ, யானைகளோ இல்லாமல், போருக்கு ஆயத்தமாகினர்.(20) கோபத்தால் நிறைந்த பீமசேனனும், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னனும், நால் வகைப் படைகளுடன் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தங்கள் கணைகளால் அவர்களைத் தாக்கத் தொடங்கினர்.(21) பதிலுக்கு அந்தப் போர்வீரர்களும், பீமனுடனும், பிருஷதன் மகனுடனும் {திருஷ்டத்யும்னனுடனும்} போரிட்டனர். அவர்களில் சிலர் அவ்விரு வீரர்களின் பெயர்களைச் சொல்லி அறைகூவியழைத்தனர்.(22) அப்போது பீமசேனன் சினத்தால் நிறைந்தான். கையில் கதாயுதத்துடன் தன் தேரை விட்டு இறங்கிய அவன் {பீமன்}, போருக்கு வந்த அந்தப் போர்வீரர்களுடன் போரிட்டான்.(23) நேர்மையான போருக்கான விதிகளை நோற்றவனும், குந்தியின் மகனுமான அந்த விருகோதரன் {பீமன்}, தன் தேரில் இருந்து கீழே இறங்கி, தன் கரங்களின் வலிமையை மட்டுமே நம்பி, காலாள்களாக இருந்த அந்த எதிரிகளோடு காலாளாகவே போரிட்டான்.(24)

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்ட அவன் {பீமன்}, தண்டம் தரித்த யமனைப் போல, அவர்கள் அனைவரையும் கொல்லத் தொடங்கினான்.(25) காலாள்களாக இருந்த கௌரவப் போர்வீரர்கள், சினத்தால் நிறைந்து, தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து, சுடர்மிக்க நெருப்பை நோக்கிப் பாயும் பூச்சிகளைப் போல அந்தப் போரில் பீமனை எதிர்த்து விரைந்தனர்.(26) போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும், மதங்கொண்டவர்களுமான அந்தப் போராளிகள், பீமசேனனை அணுகி, யமனைக் கண்ட உயிரினிங்களைப் போல அந்தப் போரில் மாண்டனர்.(27) கதாயுதம் தரித்த வலிமைமிக்கப் பீமன், ஒரு பருந்தைப் போலத் திரிந்து அந்த இருபத்தைந்தாயிரம் {25000} போராளிகள் அனைவரையும் அழித்தான்.(28) வீரப் போர்வீரர்களைக் கொண்ட அந்தப் படைப்பிரிவை அழிந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலையும், பெரும் வலிமையையும் கொண்ட பீமன், மீண்டும் திருஷ்டத்யும்னனைத் தன் முன்னால் கொண்டு நின்றான்.(29)

பெருஞ்சக்தி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, (கௌரவர்களில் எஞ்சிய) தேர்ப்படையை எதிர்த்துச் சென்றான்.(30) மாத்ரியின் இரு மகன்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, சாத்யகியும், மகிழ்ச்சியால் நிறைந்து சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்து, அந்தச் சுபலன் மகனின் {சகுனியின்} துருப்புகளைக் கொன்றனர்.(31) அம்மோதலில் தங்கள் கூரிய கணைகளைக் கொண்டு அவனது {சகுனியின்} குதிரைப் படையையும், யானைகளையும் கொன்ற அவர்கள், சகுனியை எதிர்த்து மூர்க்கமாக விரைந்ததன் பேரில் அங்கே ஒரு பெரும்போர் நிகழ்ந்தது.(32) அதே வேளையில் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, உமது தேர்ப்படையை எதிர்த்துச் சென்று, மூவுலகங்களாலும் கொண்டாடப்படும் தன் வில்லான காண்டீவத்தில் நாணொலி எழுப்பினான்.(33) வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கிருஷ்ணனை சாரதியாகக் கொண்டதுமான அந்தத் தேரைக் கண்டும், அதில் இருந்த போர் வீரன் அர்ஜுனனே என்பதைப் பார்த்தும், உமது துருப்புகள் அச்சத்துடன் தப்பி ஓடின.(34)

தேர்களை இழந்திருந்த இருபத்தைந்தாயிரம் காலாட்படை வீரர்கள் (பீமன் மற்றும் திருஷ்டத்யும்னனின் கைகளில்) அழிவை அடைந்தனர்.(35) அவர்களைக் கொன்றவனும், மனிதர்களில் புலியும், பாஞ்சாலர்களுக்கு மத்தியில் பெரும் தேர்வீரனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான அந்த உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், விரைவில் பீமேசேனன் முன்பாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டான்.(36,37) புறாக்களைப் போன்ற வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கோவிதார மரத்தால் {காட்டாத்தி [அ] குராமரம்} ஆன உயர்ந்த கொடிமரத்தைக் கொண்டதுமான திருஷ்டத்யும்னனின் தேரைக் கண்ட கௌரவர்கள் பேரச்சத்துடன் தப்பி ஓடினர்.(38) பெரும்புகழைக் கொண்ட இரட்டையர்களும் (நகுலன் மற்றும் சகாதேவனும்), சாத்யகியும், ஆயுத பயன்பாட்டில் கரநளினத்தைக் கொண்ட காந்தாரர்களின் மன்னனை {சகுனியைப்} பெரும் வேகத்தோடு துரத்திச் சென்று (பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில்) மீண்டும் தோன்றினர்.(39) சேகிதானான், சிகண்டி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது பரந்த படையைக் கொன்று தங்கள் சங்குகளை உரக்க முழங்கினர்.(40)

அந்த வீரர்கள் அனைவரும், களத்தைவிட்டுத் திரும்பிய முகங்களுடன் தப்பி ஓடும் உமது துருப்புகளைக் கண்டாலும், கோபக்காரக் காளைகளை வென்ற வேறு காளைகளைப் போல மேலும் அவர்களைத் துரத்திச் சென்றனர்.(41) பெரும் வலிமை கொண்டவனான பாண்டுவின் மகன் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையில் எஞ்சியோர் இன்னும் போரிட நிற்பதைக் கண்டு, கோபத்தால் நிறைந்தான்.(42) பெரும் சக்தி கொண்ட தனஞ்சயன் மூவுலகங்களாலும் கொண்டாடப்படும் தன் வில்லான காண்டீவத்தை வளைத்தபடியே அந்தத் தேர்ப்படையை எதிர்த்து விரைந்தான். அதனால் எழுந்த புழுதியால் காட்சி இருளாகி, அதற்கும் மேலும் வேறெதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(44) இவ்வாறு பூமியானது புழுதியால் மறைக்கப்பட்டு, அனைத்தையும் இருள் மறைத்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் ஓடின.(45)

குரு படையானது இவ்வாறு பிளந்த போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகனான குரு மன்னன் {துரியோதனன்}, தன்னை எதிர்த்த எதிரிகளை அனைவரையும் எதிர்த்து விரைந்தான்.(46) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களை அறைகூவியழைத்த அசுரன் பலியைப் {மகாபலி} போலவே துரியோதனனும் பாண்டவர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவியழைத்தான்.(47) இதனால் ஒன்றுசேர்ந்த பாண்டவர்கள் அனைவரும், துரியோதனன் மீது பல்வேறு ஆயுதங்களை ஏவியபடியும், வீசியபடியும், அவனை மீண்டும் மீண்டும் கடிந்து கொண்டு அவனை எதிர்த்து விரைந்தனர்.(48) எனினும், சினத்தால் நிறைந்த துரியோதனன், கூரிய கணைகளைக் கொண்டு அந்த எதிரிகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அச்சமில்லாமல் கொன்றான்.(49) அப்போது, தனி ஒருவனாகவும், எந்த ஆதரவில்லாதவனாகவும், ஒன்றுசேர்ந்திருந்த பாண்டவர்கள் அனைவருடன் போரிட்ட உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(50)

அப்போது துரியோதனன், கணைகளால் சிதைக்கப்பட்டு, தப்பி ஓடுவதையே இதயங்களில் நிறுத்தியிருந்த தன் துருப்புகள் களத்தைவிட்டு வெகு தொலைவில் சென்றுவிடாததைக் கண்டான்.(51) அவர்களை அணிதிரட்டியவனும், தன் கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தீர்மானித்தவனுமான உமது மகன் {துரியோதன்ன}, அந்தப் போர்வீரர்களை மகிழ்ச்சிப்படுத்து விதமாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(52) “நீங்கள் தப்பி ஓடினாலும், பூமியிலோ, மலைகளிலோ பாண்டவர்களால் உங்களைக் கொல்ல முடியாத எந்த இடத்தையும் நான் காணவில்லை. அப்படியிருக்கையில், தப்பி ஓடுவதால் பயன் யாது?(53) பாண்டவர்கள் இப்போது கொண்டிருப்பது சிறு படையேயாகும். இரு கிருஷ்ணர்களும் கூட அதிகமாகச் சிதைக்கப்பட்டிருக்கின்றனர். நாம் அனைவரும் சேர்ந்து போரில் நின்றால் நிச்சயம் வெற்றி நமதேயாகும்.(54) 

ஒற்றுமையின்றி நாம் தப்பி ஓடினால், நம்மைத் துரத்தி வரும் பாண்டவர்கள் நிச்சயம் நம் அனைவரையும் கொன்றுவிடுவார்கள். இதனால், நாம் போரிட்டு சாவதே சிறந்தது.(55) போரில் மரணமடைவது மகிழ்ச்சி நிறைந்ததாகும். க்ஷத்திரியக் கடமைகளை நோற்றுப் போரிடுவீராக. இறந்தவன் எந்தத் துயரையும் அறிய மாட்டான். மறுபுறம், அப்படிப்பட்டவன் இதன் பிறகு நித்தியமான அருளையே மகிழ்ச்சியுடன் அனுபவிப்பான்.(56) க்ஷத்திரியர்களே, இங்கே கூடியிருக்கும் நீங்கள் அனைவரும் கேட்பீராக. அழிப்பவனான யமன், வீரனையோ, கோழையையோ விடாத போது, நம்மைப் போன்று க்ஷத்திரிய நோன்பை நோற்றாலும், அறிவில்லாத எவன்தான் போரிடாமல் இருப்பான்?(57) கோபக்கார எதிரியான பீமசேனனுடைய சக்தியின் கீழ் நீங்கள் உங்களை நிறுத்திக் கொள்ளப் போகிறீர்களா? உங்கள் தந்தைமாரும், பாட்டன் மாரும் நோற்ற {க்ஷத்திரியக்} கடமையைக் கைவிடுவது உங்களுக்குத் தகாது.(58) போரில் இருந்து தப்பி ஓடுவதைவிட ஒரு பெரிய பாவம் க்ஷத்திரியனுக்கு வேறில்லை. கௌரவர்களே, போர்க்கடமையைவிட, சொர்க்கத்திற்கான அருளப்பட்ட வழி வேறேதும் இல்லை. போர்வீரர்களே, போரில் கொல்லப்பட்டு, தாமதமில்லாமல் சொர்க்கத்தை அனுபவிப்பீராக” என்றான் {துரியோதனன்}.”(59)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “உமது மகன் இவ்வார்த்தைகளைச் சொன்ன போது, மிகவும் சிதைக்கப்பட்டிருந்த (கௌரவப்) போர்வீரர்கள், அந்தப் பேச்சையும் கருதிப் பாராமல் {அலட்சியம்} செய்து, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினார்கள்” {என்றான் சஞ்சயன்}”(60)

சங்குகளை முழக்கிய அர்ஜுனனும்! கிருஷ்ணனும்!! – கர்ண பர்வம் பகுதி – 94-களத்தில் நேர்ந்த பேரழிவைத் துரியோதனனுக்கு விளக்கிச் சொன்ன சல்லியன்; இரவு ஓய்வுக்காகத் துருப்புகளைத் திரும்ப அழைக்குமாறு சொன்ன சல்லியன்; கர்ணனின் நிமித்தமாகத் துரியோதனன் அடைந்த துயரம்; கர்ணன் வீழ்ந்ததும் தென்பட்ட சகுனங்கள்; தங்கள் சங்குகளை முழக்கிய அர்ஜுனனும், கிருஷ்ணனும்; வீரத்திற்காக அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் வழிபட்ட தேவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “முகத்தில் பயத்துடன் கூடியவனும், துயரத்தால் இதயம் மலைத்திருந்தவனும், துருப்புகளைத் திரட்டிக் கொண்டிருந்தவனுமான உமது மகனை {துரியோதனனைக்} கண்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அந்தத் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(1)

சல்லியன் {துரியோனனிடம்}, “ஓ! வீரா {துரியோதனா}, கொல்லப்பட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் குவியல்களால் மறைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயங்கரமான போர்க்களத்தைப் பார். மலைகளைப் போலப் பெரியவையும், அதிகமாகச் சிதைக்கப்பட்டவையும், கணைகளால் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டவையும், ஆதரவற்று கிடப்பவையும், உயிரை இழந்தவையும், கவசம் இடம்பெயர்ந்தவையுமான விழுந்துவிட்ட யானைகளாலும், அவை தரித்திருந்தவையும், இப்போது சிதறிக்கிடப்பவையுமான ஆயுதங்கள், கவசங்கள், வாள்கள் ஆகியவற்றால் சில பாதைகள்  மறைக்கப்பட்டிருக்கின்றன. விழுந்துவிட்ட இந்த விலங்குகள், இடியால் பிளக்கப்பட்டு, பாறைகள், உயர்ந்த மரங்கள், கொடிகள் ஆகியவை தளர்ந்து, சுற்றிலும் சிதறிக் கிடக்கும் பெரும் மலைகளுக்கு ஒப்பாக இருக்கின்றன.(2,3) அந்தப் பெரும் விலங்குகள் தரித்திருந்த மணிகள், இரும்பு அங்குசங்கள், வேல்கள், கொடிமரங்கள் ஆகியவை தரையில் சிதறிக் கிடக்கின்றன. தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்ட அவற்றின் உடல்கள் இப்போது குருதியில் குளித்திருக்கின்றன. மேலும் கணைகளால் சிதைக்கப்பட்டு, வலியால் கடினமாக மூச்சுவிட்டுக் கொண்டு, குருதியைக் கக்குபவையும் விழுந்துவிட்டவையுமான குதிரைகளால் சில பாதைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.(4) அவற்றில் சில பலவீனமான ஒலியுடன் ஓலமிடுகின்றன, உருளும் கண்களுடன் சில பூமியைக் கடிக்கின்றன, சில பரிதாபகரமாகக் கனைக்கின்றன. குதிரைவீரர்களாலும், தங்கள் விலங்குகளில் இருந்து விழுந்துவிட்ட யானைவீரர்களாலும், தங்கள் தேர்களில் இருந்து பலவந்தமாகத் தூக்கி வீசப்பட்ட தேர்வீரர்களின் கூட்டங்களாலும் களத்தின் சில பகுதிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.(5)

அவற்றில் சில ஏற்கனவே இறந்துவிட்டன, மேலும் சில மரணத்தருவாயில் இருக்கின்றன. தேர்களாலும், மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் சடலங்களாலும், துதிக்கைகளும், அங்கங்களும் வெட்டப்பட்ட பெரும் யானைகளாலும் மறைக்கப்பட்ட பூமியானது, (யமனின் ஆட்சிப்பகுதியில் பாயும்) பெரும் வைதரணீயை {வைதரணீ நதியைப்} போலப் பயங்கரமாகத் தெரிகிறது.(6) நடுங்கும் உடல்களுடன் தரையில் கிடப்பவையும், தந்தங்கள் உடைந்தவையும், குருதி கக்குபவையும், வலியால் தீனமாக அழுபவையும், தங்கள் முதுகுகளில் இருந்த போர்வீரர்களை இழந்தவையும், தங்கள் அங்கங்களை மறைத்திருந்த கவசங்களை இழந்தவையும், தங்கள் பக்கங்கள் மற்றும் பின்புறத்தைப் பாதுகாத்த காலாட்படை வீரர்களை இழந்தவையும், அம்பறாத்தூணிகள், கொடிகள், கொடிமரங்கள் இடம்பெயர்ந்தவையும், தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் உடல்கள் எதிரியின் ஆயுதங்களால் ஆழமாகத் தாக்கப்பட்டவையுமான யானைகள் சிதறிக் கிடந்த பூமியானது அவ்வாறே {வைதரணீ நதியைப் போலப் பயங்கரமானதாக} இருக்கிறது.(7) விழுந்துவிட்டவர்களும், பெரும் புகழைக் கொண்டவர்களுமான யானைவீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், முகத்துக்கு முகமாகப் போரிட்டு எதிரிகளால் கொல்லப்பட்டவர்களும், கவசங்கள், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றை இழந்தவர்களுமான காலாட்படைவீரர்கள் ஆகியோரின் உடல்கள் சிதறிக் கிடப்பதன் விளைவாகப் பூமியானது, மேகங்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்தைப் போலத் தெரிகிறது.(8) கணைகளால் சிதைக்கப்பட்டவர்களும், காட்சியில் முழுமையாக வெளிப்பட்டவர்களும், சுயநினைவை இழந்திருந்தவர்களும், விழுந்துவிட்டவர்களும், மெல்ல மூச்சு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்களுமான ஆயிரக்கணக்கான போராளிகளால் மறைக்கப்பட்டிருந்த பூமியானது, அணைக்கப்பட்ட நெருப்புகளால் மறைக்கப்பட்டதைப் போலத் தெரிகிறது.(9) கணைகளால் துளைக்கப்பட்டு, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கர்ணனால் உயிரையிழந்த குருக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகிய இரு தரப்பு முதன்மையான வீரர்களுடன் கூடிய பூமியானது, ஆகாயத்தில் இருந்து விழுந்த சுடர்மிக்கக் கோள்களால் விரவிக் கிடப்பதைப்போல, அல்லது, சுடர்மிக்கக் கோள்கள் சிதறிக் கிடக்கும் இரவு நேர வானத்தைப் போலத் தெரிகிறது[1].(10)

கர்ணன் மற்றும் அர்ஜுனனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட கணைகள், யானைகள், குதிரைகள் மனிதர்கள் ஆகியோரின் உடல்களைத் துளைத்து, அவற்றின் உயிர்களை நிறுத்தி, கீழ்நோக்கிய தலையுடன் தங்கள் பொந்துக்குள் நுழையும் பெரும்பாம்புகளைப் போலப் பூமிக்குள் சென்றன.(11) கொல்லப்பட்டுக் குவிந்து கிடக்கும் மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளாலும், தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகனின் {கர்ணனின்} கணைகளால் உடைக்கப்பட்ட தேர்களாலும், அவர்களால் ஏவப்பட்ட எண்ணற்ற கணைகளாலும் பூமியானது கடக்கப்பட முடியாததாக இருக்கிறது.(12) வலிமைமிக்கக் கணைகளால் நொறுக்கப்பட்டவையும், அவற்றில் இருந்த போர்வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் கொடிமரங்களுடன் கூடியவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையுமான தேர்கள், தங்கள் இணைப்புகள் உடைந்து, அச்சுகள், நுகத்தடிகள், திரிவேணு ஆகியவை துண்டுகளாகக் குறைக்கப்பட்டு, சக்கரங்கள் தளர்ந்து, உபஷ்கரங்கள் அழிக்கப்பட்டு, அனுஷ்கரங்கள் துண்டுகளாக வெட்டப்பட்டு, அம்பறாத்தூணிகளின் இணைப்புகள் வெட்டப்பட்டு, தேர்த்தட்டுகள் உடைந்து களத்தில் விரவி கிடக்கின்றன. தங்கம் மற்றும் இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அந்த வாகனங்களால் விரவிக் கிடக்கும் பூமியானது, கூதிர்கால மேகங்களால் விரவிக் கிடக்கும் ஆகாயத்தைப் போலத் தெரிகிறது.(13,14) நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த அரசத் தேர்கள், தங்கள் சாரதிகளை இழந்து, குதிரைகளால் வேகமாக இழுக்கபடுவதன் விளைவாலும், மிக வேகமாகத் தப்பி ஓடும் மனிதர்கள், யானைகள், தேர்கள் மற்றும் குதிரைகளின் விளைவாலும் படையானது பல்வேறு வழிகளில் பிளக்கின்றது.(15)

தங்க மணிகளைக் கொண்ட முள் பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, போர்க்கோடரிகள், கூரிய வேல்கள், கனமான தண்டங்கள், உலக்கைகள், உரையிலிருந்து உருவப்பட்ட பிரகாசமான வாள்கள், தங்கத் துணியால் மறைக்கப்பட்ட கதாயுதங்கள் ஆகியன களத்தில் விழுந்து கிடக்கின்றன.(16) தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விற்கள், பசும்பொன்னால் ஆன அழகிய சிறகுகளைக் கொண்ட கணைகள், மிகக் கடினமானவையும், நீளமானவையுமான குத்து வாள்கள், வேல்கள், தங்கத்தைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய கத்திகள், குடைகள், விசிறிகள், சங்குகள், சிறந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்கள், யானை அம்பாரிகள், கொடிமரங்கள், தேர்க்கூடுகள், கிரீடங்கள், கழுத்தணிகள், பிரகாசமான மகுடங்கள்,(18) ஓ! மன்னா {துரியோதனா}, வெண்சாமரங்கள், முத்து மற்றும் வைடூரியங்களால் ஒளிரும் மாலைகள், தலையில் உள்ள தலைப்பாகைகள், மணிக்கட்டு மற்றும் தோள்களுக்கான வளைகள், தங்க இழைகளுடன் கூடிய கழுத்தணிகள்,(19] பல்வேறு வகைகளிலான விலைமதிப்புமிக்க வைரங்கள், ரத்தினங்கள், முத்துக்கள், ஆடம்பரத்தில் வளர்ந்த உடல்கள், சந்திரனைப் போன்ற அழகான தலைகள் ஆகியன அங்கே சிதறிக் கிடக்கின்றன.(20) உடல்கள், ஆடைகள், பல்வேறு வகைகளிலான இன்ப விளையாட்டுகள் ஆகியவற்றைக் கைவிட்டு, அர்ப்பணிப்புடன் பெரும் தகுதியை அடைந்து, தங்கள் வகைக்கான அறத்தை வெளிப்படுத்திய அவர்கள் {போர்வீரர்கள்}, புகழ்ச்சுடரோடு கூடியவர்களாக வேகமாக அருள் உலகங்களுக்குச் சென்றனர்.(21) ஓ! துரியோதனா, திரும்புவாயாக. துருப்புகளும் ஓயட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, கௌரவங்களை அளிப்பவனே, உன் முகாமை நோக்கிச் செல்வாயாக. ஓ! மனிதர்களில் ஆட்சியாளனே, நீயே இவை யாவற்றுக்கும் காரணமாவாய்” என்றான் {சல்லியன்}.

துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன சல்லியன், இதயம் நிறைந்த வேதனையுடன் அங்கேயே நின்றான். எனினும், அந்நேரத்தில் மிகவும் பீடிக்கப்பட்டவனான துரியோதனன், தன் புலன்களை இழந்து, கண்ணீரால் குளித்த கண்களுடன், “ஓ! கர்ணா! ஓ! கர்ணா!” என்று சொல்லி சூதன் மகனுக்காக {கர்ணனுக்காக} அழுதான்.(23) அப்போது துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலான மன்னர்கள் அனைவரும், மீண்டும் மீண்டும் துரியோதனனுக்கு ஆறுதலளித்து, புகழால் சுடர்விடுவதாகத் தெரிந்த அர்ஜுனனின் உயர்ந்த கொடிமரத்தை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே தங்கள் முகாம்களுக்குச் சென்றனர்.(24) அனைத்தும் பிரகாசமாகத் தெரிந்த அந்தப் பயங்கர வேளையில், அடுத்த உலகிற்குச் செல்லத் தீர்மானித்தவர்களும், குருதியால் மறைக்கப்பட்டதன் விளைவால், தங்கள் குணங்களை உணர முடியாதவர்களுமான கௌரவர்கள் அனைவரும், சிவப்பு ஆடைகள், மலர் மாலைகள் மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அரசவை மங்கையைப் போல, மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் உடல்களில் இருந்து பாய்ந்த குருதியில் குளித்திருந்த பூமியைக் கண்டு அங்கே நிற்க இயலாதவர்களானார்கள்.(25,26)

கர்ணன் கொல்லப்பட்டதால் கவலையில் நிறைந்த அவர்கள், “ஐயோ கர்ணா! ஐயோ, கர்ணா!” என்று உரக்க அழுது புலம்பினர். சூரியன் சிவப்பு நிறத்தை ஏற்பதைக் கண்ட அவர்கள் அனைவரும், வேகமாகத் தங்கள் முகாமை நோக்கிச் சென்றனர்.(27) கர்ணனைப் பொறுத்தவரை, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டதும், குருதி தோய்ந்த இறகுகளைக் கொண்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், தங்கச் சிறகைக் கொண்டதுமான கணையால் துளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டாலும், அந்த வீரன் பிரகாசமான கதிர்களைக் கொண்ட சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் தரையில் கிடந்தான்.(28) தன்னை வழிபடுவோரிடம் எப்போதும் அன்புடன் இருக்கும் சிறப்புமிக்கச் சூரியன், குருதியால் நனைந்த கர்ணனின் உடலைத் தீண்டி, துயரத்தால் சிவந்த தன்மையை அடைந்து, நீராட விரும்பி வேறு {மேற்கு} கடலுக்குச் சென்றதைப் போலவே அப்போது தெரிந்தது[2].(29) அப்படியே நினைத்துக் கொண்டு, (அந்தப் போரைக் காண அங்கே வந்திருந்த) தேவர்கள் மற்றும் முனிவர்களின் கூட்டங்களும், காட்சியை விட்டகன்று தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர். மற்ற உயிரினங்களின் பெருங்கூட்டமும், அதையே நினைத்துக் கொண்டு, சொர்க்கத்திற்கோ, பூமிக்கோ சென்றனர்.(30)

குரு வீரர்களில் முதன்மையானோரும் கூட, தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகனுக்கு {கர்ணனுக்கு} இடையில் நடைபெற்றதும், அனைத்து உயிரினங்களுக்கும் அச்சத்தையூட்டியதுமான அற்புதமான போரைக் கண்டு, ஆச்சரியத்தால் நிறைந்து, (அம்மோதலைப்) புகழ்ந்து (தங்கள் இரவு வசிப்பிடத்திற்கு) சென்றனர்.(31) கணைகளால் கவசம் வெட்டப்பட்டிருந்தாலும், அந்தப் பயங்கரப் போரில் கொல்லப்பட்டிருந்தாலும், அந்த ராதை மகனின் அழகான தன்மைகள் எதுவும் இறந்தபின்னும் அவனை விட்டு அகலவில்லை.(32) உண்மையில், அந்த வீரனின் உடலானது, புடம்போட்ட தங்கத்துக்கு ஒப்பாக இருப்பதை அனைவரும் கண்டனர். உயிருடன் கூடியதாகவும், நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதாகவும் அது தெரிந்தது.(33) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, களத்தில் இறந்து கிடக்கும் சூதன் மகனை {கர்ணனைக்} கண்ட போர்வீரர்கள் அனைவரும் சிங்கத்தைக் கண்ட வேறு விலங்குகளைப் போல அச்சமடைந்தனர்.(34) உண்மையில், அந்த மனிதர்களில் புலி இறந்து கிடந்தாலும், தன் உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தயாராக இருப்பவனைப் போலவே {அப்போதும்} தெரிந்தான். அந்தச் சிறப்புமிக்கச் சடலத்தில் எதுவும் மாறியிருப்பதாகத் தெரியவில்லை.(35)

அழகிய ஆடையுடுத்தி, மிக அழகிய கழுத்துடன் கூடிய சூதன் மகனின் முகமானது, காந்தியுடன் கூடிய முழு நிலவுக்கு ஒப்பானதாக இருந்தது.(36) பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பிரகாசமான தங்கத்தாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்படிருந்த அந்த வைகர்த்தனன் {கர்ணன்}, கொல்லப்பட்டாலும், கிளைகள் மற்றும் கொப்புகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மரம் ஒன்றைப் போலவே நீண்டு கிடந்தான்.(37) உண்மையில், அந்த மனிதர்களில் புலி, பசும்பொன்னின் குவியலைப் போலவோ, பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} கணை எனும் நீர் கொண்டு அணைக்கப்பட்ட சுடர்மிக்க நெருப்பைப் போலவோ இருந்தான்.(38) நீரின் தீண்டலால் அணைந்த காட்டுத் தீயைப் போலவே அந்தப் போரில் கர்ணத்தீயானது அர்ஜுன மேகத்தால் அணைக்கப்பட்டது.(39) கணைமாரிகளை ஏவி, திசைகளின் பத்து புள்ளிகளையும் எரித்தவனும், மனிதர்களில் புலியுமான அந்தக் கர்ணன், தன் மகன்களுடன் சேர்த்து பார்த்தனின் சக்தியால் அமைதிப்படுத்தப்பட்டான். பூமியில் நியாயமான போரால் ஈட்டிய மகிமையையும் புகழையும் எடுத்துக் கொண்டு அவன் {கர்ணன்} அடுத்த உலகத்திற்குச் சென்றான்.(40)

தன் ஆயுதங்களின் சக்தியால் பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் எரித்துக் கணைமாரிகளைப் பொழிந்து, பகைவரின் படையணிகளை எரித்து,(41) பேரழகுடைய ஆயிரங்கதிர் சூரியனால் வெப்பமூட்டப்பட்ட அண்டத்தைப் போலவே, வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட அந்தக் கர்ணன், தன் மகன்கள் மற்றும் தொண்டர்களுடன் இந்த உலகை விட்டுச் சென்றான்.(42) தகுந்தோரான இந்தப் பறவை கூட்டங்களுக்குக் கல்ப மரமாக இருந்த அந்த வீரன் இவ்வாறே வீழ்ந்தான். தகுந்தோரால் வேண்டப்படும்போது அவன் {கர்ணன்}, “நான் தருகிறேன்” என்றே எப்போதும் சொன்னானேயன்றி, “என்னிடம் இல்லை” என்ற வார்த்தைகளை ஒரு போதும் சொன்னதே இல்லை.(43) நல்லோர் எப்போதும் அவனை அறவோனாகவே கருதினர். அந்தத் தனிப்போரில் வீழ்ந்த விருஷன் {கர்ணன்}, இவ்வாறானவனாகவே இருந்தான். அந்த உயர் ஆன்மா கொண்டோனின் செல்வங்கள் அனைத்தும் பிராமணர்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. அவன் பிராமணர்களுக்குக் கொடுக்க மாட்டான் என்று சொல்ல ஏதுமில்லை, ஏன் அவன் உயிரையே கூடப் பிராமணர்களுக்காகக் கொடுப்பான்.(44) அவன் எப்போதும் மாதர்களுக்குப் பிடித்தமானவனாகவும், மிகவும் தாராளம் வாய்ந்தவனாகவும், வலிமைமிக்கத் தேர்வீரனாகவும் இருந்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} ஆயுதங்களால் எரிக்கப்பட்ட அவன், இவ்வாறு உயர்ந்த முடியவையே அடைந்தான்[3].(45)

எவனை நம்பி உமது மகன் {துரியோதனன்} பகைமைகளைத் தூண்டினானோ, அவன் {கர்ணன்} தன்னுடன் கௌரவர்களின் வெற்றி நம்பிக்கை, மகிழ்ச்சி, கவசம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இவ்வாறே சொர்க்கத்திற்குச் சென்றான்.(46) கர்ணன் வீழ்ந்தபோது, ஆறுகள் அசையாமல் நின்றன. மங்கிய நிறத்துடன் சூரியன் மறைந்தான். சோமனின் மகனான, புதன் கோளானவன், நெருப்பு, அல்லது சூரியனின் வண்ணத்தை ஏற்று, ஆகாயத்தில் சாய்வுக்கோணத்தில் செல்வதைப் போலத் தெரிந்தது.(47) ஆகாயமே இரண்டாகப் பிளந்ததைப் போலவும் தெரிந்தது; பூமி உரக்க முழங்கியது; பலமானதும், பயங்கரமானதுமான காற்று வீசத் தொடங்கியது. அடிவானின் புள்ளிகள் அனைத்தும் புகையால் மறைக்கப்பட்டு எரிவதாகத் தெரிந்தது. பெருங்கடல்கள் கலங்கி பயங்கரமான ஒலிகளை எழுப்பின.(48) காடுகளுடன் கூடிய மலைகள் நடுங்கத் தொடங்கின, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அனைத்து உயிரினங்களும் வலியை உணர்ந்தன {துன்புற்றன}. வியாழன் கோளானது, ரோஹினி நட்சத்திரக்கூட்டத்தைப் பீடித்து, சந்திரன், அல்லது சூரியனின் வண்ணத்தை ஏற்றது.(49) கர்ணனின் வீழ்ச்சியால் துணைத்திசைகளும் கூட எரிந்தன. ஆகாயம் இருளால் மூடப்பட்டது. பூமி நடுங்கியது. சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய எரிநட்சத்திரங்கள் வீழ்ந்தன. ராட்சசர்களும், பிற இரவு உலாவிகளும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(50)

அர்ஜுனன், அந்தக் கத்திமுனைக் கணையை {அஞ்சலிகத்தைக்} கொண்டு, சந்திரனைப் போன்ற அழகான முகத்தால் அலங்கரிக்கப்பட்ட கர்ணனின் தலையைத் தாக்கி வீழ்த்திய போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கம், ஆகாயம் மற்றும் பூமியில் உள்ள உயிரினங்கள் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறுவது கேட்டது.(51) தேவர்கள், கந்தவர்கள் மற்றும் மனிதர்களால் வழிபடப்பட்டவனும், தன் எதிரியுமான கர்ணனைப் போரில் கொன்ற பிறகு, பிருதையின் மகனான அர்ஜுனன், விருத்திரனைக் கொன்ற ஆயிரங்கண் தேவனை {இந்திரனைப்} போலச் சக்தியில் பிரகாசமாகத் தெரிந்தான்.(52) மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பான சடசடப்பொலியைக் கொண்டதும், கூதிர்காலத்தின் நடுவான சூரியனைப் போன்ற காந்தியைக் கொண்டதும், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதும், அடிக்கடி பயங்கர ஒலியை உண்டாக்கும் கொடிமரத்தைக் கொண்டதும், பனி, அல்லது சூரியன், அல்லது சங்கு அல்லது பளிங்குக்கு ஒப்பான பிரகாசம் கொண்டதும்,(53) இந்திரனின் குதிரைகளைப் போன்ற குதிரைகளையே கொண்டதுமான அந்தத் தேரில் சென்று கொண்டிருந்தவர்களும், பெரும் இந்திரனுக்கு ஒப்பான சக்தியைக் கொண்டவர்களும், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், நெருப்பு, அல்லது சூரியனைப் போன்ற காந்தி கொண்டவர்களுமான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மற்றும் கேசினைக் கொன்றவன் {கிருஷ்ணன்} ஆகிய அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும், ஒரே தேரில் செல்லும் விஷ்ணுவையும், வாசவனையும் போல அச்சமில்லாமல் அந்தப் போர்க்களத்தில் பெரும் வேகத்துடன் சென்று கொண்டிருந்தனர்.(54,55)

காண்டீவத்தின் நாணொலியாலும், உள்ளங்கை அறைகளாலும் எதிரியைக் காந்தியிழந்தவனாகச் செய்தவர்களும், கணைமாரிகளால் குருக்களைக் கொன்றவர்களும், அளவிலா சக்தியைக் கொண்டவர்களுமான குரங்குக் கொடியோன் அர்ஜுனன், கருடக் கொடியோன் கிருஷ்ணன்(56) ஆகிய அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பனியைப் போன்று வெண்மையானவையும், பேரொலி எழுப்புபவையுமான சங்குகளைத் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு, அவற்றைத் தங்கள் உதடுகளில் பொருத்தி, எதிரிகளின இதயங்களைத் துளைக்கும் ஒலியுடன் தங்கள் அழகிய வாய்களால் அவற்றை மீண்டும் மீண்டும் முழக்கினர்.(57) பாஞ்சஜன்யம் மற்றும் தேவதத்தத்தின் சங்குலிகள், பூமி, ஆகாயம் மற்றும் சொர்க்கம் ஆகியவற்றை நிறைத்தன.(58) வீர மாதவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் அந்தச் சங்கொலிகளால், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தனர்.(59) தங்கள் சங்கொலிகளால், காடுகள், மலைகள், ஆறுகள், திசைப்புள்ளிகள் ஆகியவற்றை எதிரொலிக்கச் செய்த அந்த மனிதர்களில் முதன்மையானோர், அவ்வொலியால் யுதிஷ்டிரனை மகிழச் செய்தனர்.(60)

இவ்வாறு முழக்கப்பட்ட அந்தச் சங்கொலிகளைக் கௌரவர்கள் கேட்டதும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்கள் அனைவரும், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் பாரதர்களின் தலைவனான துரியோதனன் ஆகியோரை விட்டுவிட்டு பெரும் வேகத்துடன் களத்தை விட்டகன்றனர்.(61) அப்போது ஒன்று சேர்ந்திருந்த பல்வேறு உயிரினங்கள், உதயச் சூரியன்கள் இரண்டைப் போலத் தெரிந்தவர்களும், போர்க்களத்தில் பிரகாசமாக ஒளிர்ந்தவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான வீரர்களான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்}, ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} வாழ்த்தின.(62) கர்ணனின் கணைகளால் துளைக்கப்பட்டவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோர் இருவரும், பல கதிர்களைக் கண்ட சந்திரனையும் சூரியனைப் போல இருளை அகற்றிப் பிரகாசமாக ஒளிர்வதாகத் தெரிந்தனர்.(63) அந்தக் கணைகளைப் பிடுங்கியவர்களும், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும், நலன்விரும்பிகள் மற்றும் நண்பர்களால் சூழப்பட்டு, வேள்விப் புரோகிதர்களால் முறையாக இருப்புக்கு அழைக்கப்படும் வாசவனையும் {இந்திரனையும்}, விஷ்ணுவையும் போலத் தங்கள் பாசறைக்குள் மகிழ்ச்சியாக நுழைந்தனர்.(64) அந்தப் பயங்கரமான போரில் கர்ணன் கொல்லப்பட்டதும், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், சாரணர்கள், பெருமுனிவர்கள், யக்ஷர்கள், பெரும் நாகர்கள் ஆகியோர் கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் பெருமதிப்புடன் வழிபட்டு, (அனைத்து காரியங்களிலும்) அவர்கள் வெற்றியடைய வாழ்த்தினர்.(65) அப்போது தங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் வயதுக்கத்தக்கபடி வரவேற்று, பதிலுக்கு அந்த நண்பர்களால் தங்கள் ஒப்பற்ற சாதனைகளுக்காகப் பாராட்டப்பட்ட அந்த வீரர்கள் இருவரும், பலியை {மகாபலியை} வீழ்த்திய பிறகு இருந்த தேவர்கள் தலைவனையும் {இந்திரனும்}, விஷ்ணுவையும் போலத் தங்கள் நண்பர்களுடன் மகிழ்ந்திருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(66)

பாசறைக்குத் திரும்பிய கௌரவர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 95-கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, களத்தில் இருந்து ஓயச் சென்ற கௌரவர்களின் வரிசைமுறை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, வெறும் வெளியில் தங்கள் கண்களைச் செலுத்தியபடியே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(1) உண்மையில், எதிரியால் வீரக் கர்ணன் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டதும், அச்சத்தால் மலைத்த உமது துருப்புகள் அனைத்தும் பிளந்து, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின.(2) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவலையால் நிறைந்த குரு தலைவர்கள், தப்பி ஓடுவதில் இருந்து யாரை உமது மகன் {துரியோதனன்} தடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தானோ அந்தத் தலைவர்கள் தங்கள் துருப்புகளைத் திரும்ப அழைக்க விரும்பினர்.(3) அவர்களின் விருப்பத்தைப் புரிந்து கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதகுலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சல்லியனின் ஆலோசனைப்படி செயல்பட்டு படையைத் திரும்ப அழைத்தான்.(4)

அப்போது கிருதவர்மன், ஓ! பாரதரே, உமது படையில் கொல்லப்படாமல் எஞ்சியிருந்த நாராயணத் துருப்புகள் சூழ வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றான்.(5) ஆயிரக்கணக்கான காந்தாரர்கள் சூழ இருந்த சகுனி, அதிரதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு, வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றான்.(6) சரத்வானின் மகனான கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகத் திரள்களுக்கு ஒப்பான ஒரு பெரும் யானைப்படையால் சூழப்பட்டு வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றார்.(7) பாண்டவர்களின் வெற்றியைக் கண்டு நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்ட வீர அஸ்வத்தாமன் வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றான்.(8) கொல்லப்படாமல் எஞ்சியிருந்த சம்சப்தகர்களால் இன்னும் ஒரு பெரிதாகவே இருந்த அந்தப் படையால் சூழப்பட்ட சுசர்மனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சமுற்ற அந்தப் படைவீரர்களின் மேல் தன் கண்களைச் செலுத்தியபடியே சென்றான்.(9)

ஆழமாகப் பீடிக்கப்பட்டவனும், அனைத்தையும் இழந்தவனுமான மன்னன் துரியோதனன், இதயம் நிறைந்த துயருடன், மகிச்சியற்ற சிந்தனைகள் பலவற்றுக்கு இரையாகியபடியே சென்று கொண்டிருந்தான்.(10) தேர்வீரர்களில் முதன்மையான அந்தச் சல்லியன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் செலுத்தியபடியே கொடிமரத்தை இழந்த அந்தத் தேரில் பாசறையை நோக்கிச் சென்றான்.(11) இன்னும் பெரும் எண்ணிக்கையில் இருந்த பாரதப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், அச்சத்தால் பீடிக்கப்பட்டும், வெட்கத்தால் நிறைந்தும், கிட்டத்தட்ட தங்கள் உணர்வுகளை இழந்த நிலையில் வேகமாகத் தப்பி ஓடினர்.(12) உண்மையில், கர்ணன் வீழ்த்தப்பட்டதைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களும் கவலையுற்றவர்களுமாகக் கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன் நடுங்கிக் கொண்டே தப்பி ஓடினர்.(13) ஓ! குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, குரு படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் சிலர் அர்ஜுனனைப் பாராட்டினர், சிலர் கர்ணனைப் பாராட்டினர்.(14)

அந்தப் பெரும்போரில் உமது படையின் ஆயிரக்கணக்கான போர்வீரர்களுக்கு மத்தியில் அதற்கு மேலும் போரிட விரும்பிய எந்த ஒரு மனிதனும் அங்கே இல்லை.(15) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, வாழ்வு, அரசு, மனைவியர், செல்வம் ஆகியவற்றில் கௌரவர்கள் நம்பிக்கையற்றவர்கள் ஆனார்கள்.(16) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவர்களைக் கவனமாக வழிநடத்திய உமது மகன் {துரியோதனன்}, துயரத்தாலும், கவலையாலும் நிறைந்தவனாகி, இரவில் அவர்களை ஓய்வெடுக்கச் செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(17) அந்தப் பெரும் தேர்வீரர்களும், ஓ! ஏகாதிபதி, அவனது ஆணைகளைச் சிரந்தாழ்ந்து ஏற்று, உற்சாகமற்ற இதயங்களுடனும், மங்கிய முகங்களுடனும் களத்தை விட்டு ஓயச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(18)

வெற்றி கிருஷ்ணனுடையதே! – கர்ண பர்வம் பகுதி – 96-யுதிஷ்டிரனிடம் செல்லுமாறு அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் ஆரத்தழுவிக் கொண்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கு வாழ்த்து தெரிவித்த கிருஷ்ணன்; வெற்றியானது கிருஷ்ணனுடையதே என்று சொன்ன யுதிஷ்டிரன், கர்ணனின் உடலைக் காண போர்க்களத்திற்கு வந்தது; பாண்டவப் பாஞ்சால வீரர்களால் வாழ்த்தப்பட்ட யுதிஷ்டிரன்; கர்ண பர்வத்தை உரைப்பதாலும், உரைப்பதைக் கேட்பதாலும் கிட்டும் பலன்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு கர்ணன் கொல்லப்பட்டு, கௌரவத் துருப்புகள் தப்பி ஓடிய பிறகு, மகிழ்ச்சியால் பார்த்தனை {அர்ஜுனனைத்} தழுவிக் கொண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “{அசுரன்} விருத்திரன் வஜ்ரதாரியால் {இந்திரனால்} கொல்லப்பட்டான். கர்ணனோ உன்னால் கொல்லப்பட்டான். பயங்கரப் போரில் விருத்திரன் கொல்லப்பட்டதையும், கர்ணனின் படுகொலையையும் மனிதர்கள் (ஒரே அளவிலேயே) பேசுவார்கள்.(2) பெருஞ்சக்தி கொண்ட தேவனால் {இந்திரனால்} தனது வஜ்ரத்தைக் கொண்டு போரில் விருத்திரன் கொல்லப்பட்டான். உன்னால் வில்லையும், கூரிய கணைகளையும் கொண்டு கர்ணன் கொல்லப்பட்டான்.(3) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, ஓ! பாரதா, உலகத்தில் நன்கு அறியப்படப் போவதும், உனக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தரக்கூடியதுமான இந்த உனது ஆற்றலைக் குறித்து நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் சென்று சொல்வாயாக.(4) போரில் எதைச் சாதிக்க நீண்ட வருடங்களாக நீ முயற்சி செய்து வந்தாயோ, அந்தக் கர்ணனின் படுகொலையை நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் சொல்லி, மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} நீ பட்டிருக்கும் கடனில் இருந்து விடுபடுவாயாக.(5) உனக்கும், கர்ணனுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, களத்தைக் காண்பதற்காகத் தர்மன் மகன் {யுதிஷ்டிரர்} ஒரு முறை {இங்கே} வந்தார்.(6) எனினும், (கணைகளால்) அதிகமாகவும் ஆழமாகவும் துளைக்கப்பபட்டிருந்த அவரால் {யுதிஷ்டிரரால்}, போரில் நிற்க இயலவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(7)

பார்த்தன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, யது குலத்துக் காளையான கேசவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பதிலளித்தான். பின்னவனும் {கிருஷ்ணனும்} உற்சாகமாக அந்த முதன்மையான தேரை அப்போது திரும்பச் செய்தான்.(8) இந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன், படைவீரர்களிடம், “நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நீங்கள் அனைவரும் எதிரியை எதிர்த்துக் கவனமாக நிற்பீராக” என்றான்.(9) பிறகு அந்தக் கோவிந்தன் {கிருஷ்ணன்}, திருஷ்டத்யும்னன், யுதாமன்யு, மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, விருகோதரன் {பீமன்}, யுயுதானன் {சாத்யகி} ஆகியோரிடம்,(9) “மன்னர்களே, அர்ஜுனனால் செய்யப்பட்ட கர்ணனின் படுகொலையை மன்னருக்குத் {யுதிஷ்டிரருக்குத்} தெரிவித்துவிட்டு நாங்கள் திரும்பி வரும் வரையில் கவனமாக இங்கேயே நிற்பீராக” என்றான்.(11)

அந்த வீரர்களின் அனுமதியைப் பெற்ற பிறகே அவன் {கிருஷ்ணன்} மன்னன் {யுதிஷ்டிரன்} இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். பார்த்தனுடன் {அர்ஜுனனுடம்} சென்ற கோவிந்தன் {கிருஷ்ணன்}, தங்கத்தாலான சிறந்த படுக்கையில், மனிதர்களில் புலியான யுதிஷ்டிரன் கிடப்பதைக் கண்டான். பெரும் மகிழ்ச்சியோடு கூடிய அவ்விருவரும் மன்னனின் {யுதிஷ்டிரனின்} பாதத்தைத் தொட்டனர் {தொட்டு வணங்கினர்}.(12,13) அவர்களின் மகிழ்ச்சியையும், அவர்களது உடலில் இருந்த இயல்புக்கு மீறிய அதிகமான காயங்களையும் கண்ட யுதிஷ்டிரன், ராதையின் மகன் {கர்ணன்} இறந்து விட்டதாகக் கருதி தன் படுக்கையில் இருந்து வேகமாக எழுந்தான்.(4) எதிரிகளைத் தண்டிப்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் படுக்கையில் இருந்து எழுந்து, வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் மீண்டும் மீண்டும் அன்புடன் தழுவிக் கொண்டான். பிறகு அந்தக் குரு குலத்தின் வழித்தோன்றல் {யுதிஷ்டிரன்}, வாசுதேவனிடம் (கர்ணனின் மரணத்தைக் குறித்த செய்திகளைக்) கேட்டான்.(15)

அப்போது, இனிய பேச்சைக் கொண்டவனும், யதுகுலத்தின் வழித்தோன்றலுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, கர்ணனின் மரணத்தைக் குறித்து உள்ளபடி நடந்தவாறே சரியாக அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான்.(16) அச்யுதன் என்றும் அழைக்கப்படும் அந்தக் கிருஷ்ணன், சிரித்துக் கொண்டே தன் உள்ளங்கைகளைக் கூப்பி, எதிரிகள் கொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரனிடம்,(17) “வீரர்களுக்குப் பேரழிவைத் தந்ததும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியதுமான இந்தப் போரில் இருந்து, காண்டீவதாரியும் {அர்ஜுனனும்}, பாண்டுவின் மகனான விருகோதரரும் {பீமரும்}, நீரும், மாத்ரியின் இரட்டை மகன்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்} விடுபட்டது நற்பேறாலேயே.(18) 

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அடுத்து செய்யப்பட வேண்டியவற்றைச் செய்வீராக. பெரும் வலிமையைக் கொண்டவனும், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்டவனுமான அந்தச் சூதன் மகன் கர்ணன் கொல்லப்பட்டான். ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி உமதானது நற்பேறாலேயே. ஓ! பாண்டுவின் மகனே, நற்பேறாலேயே நீர் வளர்கிறீர்.(19) பகடையில் வெல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்டு சிரித்தவனும், மனிதர்களில் பொல்லாதவனுமான அந்தச் சூதன் மகனின் {கர்ணனின்} குருதியை இன்று பூமாதேவி குடித்தாள்.(20) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அந்த உமது எதிரி {கர்ணன்}, மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு இன்று வெறுந்தரையில் கிடக்கிறான். கணைகளால் துளைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் கிடக்கும் அந்த மனிதர்களில் புலியை {கர்ணனைக்} காண்பீராக.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது எதிரிகள் எவரும் அற்ற இந்தப் பூமியைக் கவனமாக ஆண்டு, அனைத்து வகை இன்பமான பொருட்களுடனும், எங்களோடும் மகிழ்ச்சியாக இருப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.”(22)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “உயர் ஆன்மக் கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியோடு பதிலுக்கு அந்தத் தாசார்ஹ குலத்து வீரனை {கிருஷ்ணனை} வழிபட்டு, “நற்பேறே, நற்பேறே” என்று சொன்னான்.(23) மேலும் அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! தேவகியின் மகனே {கிருஷ்ணனா}, உன்னைத் தேரோட்டியாக அடைந்த பார்த்தனால் {அர்ஜுனனால்} மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அடையமுடியும் எனும்போது, இஃது உனக்கு ஆச்சரியமானது இல்லை” என்றான்.(24) பிறகு பிருதையின் {குந்தியின்} நீதிமிக்க மகனான அந்தக் குரு குலத் தலைவன் {யுதிஷ்டிரன்}, அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேசவனின் {கிருஷ்ணனின்} வலக்கரத்தைப் பிடித்துக் கொண்டு, கேவசன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரிடமும்,(25) “நீங்கள் இருவரும், புராதனமானவர்களும், அறத்தை {நீதியைக்} காப்பதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், சிறந்த முனிவர்களுமான நர நாராயணர்கள் என்று நாரதர் என்னிடம் சொன்னார்.(26) பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட தலைவர் கிருஷ்ணதுவைபாயணரான உயர்ந்த அருளைக் கொண்ட அந்த வியாசரும் கூட இந்தத் தெய்வீக வரலாற்றை மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லியிருக்கிறார்.(27) ஓ! கிருஷ்ணா, பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளை எதிர்த்து, எவரிடமும் புறமுதுகிடாமல் அவர்களை வென்றிருப்பது உனது செல்வாக்கினாலேயே. போரில் பார்த்தனுடைய சாரதிநிலையை நீ ஏற்றபோதே, தோல்வியையல்ல, வெற்றியையே அடைவோம் என்பது உறுதியாகிவிட்டது” என்றான் {யுதிஷ்டிரன்}.(29)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், மனிதர்களில் புலியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், தந்தத்தைப் போன்ற வெண்ணிறம் கொண்டவையும், கருப்பு வால்களைக் கொண்டவையும், மனோவேகம் கொண்டவையுமான குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் தேரில் ஏறிக்கொண்டு, பல பாண்டவத் துருப்புகள் சூழப் புறப்பட்டு, ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடைபெற்ற போர்க்களத்தைக் காண்பதற்காக, வழிநெடுக கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடம் இனிமையாகப் பேசிக் கொண்டே சென்றான்.(30,31) மாதவன் {கிருஷ்ணன்}, மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களிடமும் பேசிக் கொண்டே சென்ற மன்னன் {யுதிஷ்டிரன்}, போர்க்களத்தில் கிடக்கும் மனிதர்களில் காளையான கர்ணனைக் கண்டான்.(32) உண்மையில், மன்னன் யுதிஷ்டிரன், நேரான இழைகளுடன் கூடிய கதம்ப மலரைப் போலக் கணைகளால் மேனியெங்கும் துளைக்கப்பட்டிருந்த கர்ணனைக் கண்டான்.(33) அந்த யுதிஷ்டிரன், நறுமணமிக்க எண்ணெய் நிறைந்த ஆயிரக்கணக்கான தங்க விளக்குகளின் ஒளியில் கர்ணனை {கர்ணனின் உடலைக்} கண்டான்.(34) காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கர்ணனையும், அவனது மகனையும் கண்ட மன்னன் யுதிஷ்டிரன்,(35) தன் கண்களை நம்புவதற்கு முன்பு, மீண்டும் மீண்டும் அவனைப் பார்த்தான்.

பிறகு மனிதர்களில் புலிகளான மாதவனையும் {கிருஷ்ணனையும்}, பல்குனனையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்த அவன்,(36) “ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பெரும் விவேகத்தைக் கொண்ட நீ என் பாதுகாவலனாகவும், தலைவனாகவும் இருக்கும் விளைவால், என் தம்பிகளுடன் கூடிய நான் இன்று இந்தப் பூமியின் மன்னனாகிறேன்.(37) மனிதர்களில் புலியான செருக்கு மிக்க ராதையின் மகனுடைய {கர்ணனின்} கொலையைக் கேட்கும் திருதராஷ்டிரரின் தீய ஆன்ம கொண்ட மகன் {துரியோதனன்}, உயிர் மற்றும் அரசு ஆகிய இரண்டிலும் மனத்தளர்ச்சி அடைவான். ஓ! மனிதர்களில் காளையே {கிருஷ்ணா}, உன் அருளின் மூலமாகவே நாங்கள் எங்கள் நோக்கங்கள் நிறைவேறியவர்களானோம்.(38,39) எதிரி கொல்லப்பட்டது நற்பேறாலேயே. பாண்டுவின் மகனான காண்டீவதாரி {அர்ஜுனன்} வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதும் நற்பேறாலேயே.(40) பதிமூன்று {13} வருடங்களை நாங்கள் விழிப்புடனும், பெரும் கவலையுடனுமே கழித்தோம். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன் அருளால் நாங்கள் இந்த இரவில் மகிழ்ச்சியாக உறங்குவோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(41) இவ்வாறே, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் பெரிதாகப் புகழ்ந்தான்.”(42)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பார்த்தனின் கணைகளால் கர்ணனும், அவனது மகனும் கொல்லப்பட்டதைக் கண்டவனும், குருகுலத்தைத் தழைக்கச் செய்பவனுமான யுதிஷ்டிரன், மீண்டும் பிறப்பெடுத்தவனாகத் தன்னைக் கருதினான்.(48) (பாண்டவப் படையின்) மன்னர்களும், பெரும் தேர்வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்து, குந்தியின் மகனான யுதிஷ்டிரனை அணுகி, அவனைப் பெரிதும் மகிழ்ச்சியுறச் செய்தனர்.(44) சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர், நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகனான விருகோதரன் {பீமன்}, விருஷ்ணித் தேர்வீரர்களில் முதன்மையானவனான சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், சிகண்டி, பிற பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் அந்தக் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} வழிபட்டனர்.(46) போரில் திளைப்பவர்களும், திறம்படத் தாக்குபவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், வெற்றிக்காக ஏங்கியவர்களுமான அந்த வீரர்கள், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனை வெகுவாகப் பாரட்டி, எதிரிகளை எரிப்பவர்களான இரு கிருஷ்ணர்களையும், புகழுரைகள் நிறைந்த தங்கள் பேச்சால் புகழ்ந்தனர். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் பெரும் தேர்வீரர்கள் தங்கள் முகாமை நோக்கிச் சென்றனர்.(47,48) ஓ! மன்னா, உமது தீய கொள்கையின் விளைவால் விளைந்ததும், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியதுமான அந்தப் பேரழிவு இவ்வாறே நடந்தது. இப்போது அதற்காக ஏன் நீர் வருந்துகிறீர்?” {என்றான் சஞ்சயன்}.”(49)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்தத் தீய செய்திகளைக் கேட்ட குரு மன்னன் திருதராஷ்டிரன், தன் அற்புத இருக்கையில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(50) அதே போல, பெரும் முன்னறி பார்வை கொண்ட அரச மங்கை காந்தாரியும் கீழே விழுந்தாள்.(51) அப்போது விதுரன், சஞ்சயன் ஆகிய இருவரும் விழுந்துவிட்ட ஏகாதிபதியைத் தூக்கி, அவனுக்கு ஆறுதலளித்தனர். அதேபோலக் காந்தாரியும் குரு பெண்மணிகளால் தூக்கப்பட்டாள்.(52,53) விதியும், தேவையும் அனைத்திலும் சக்திமிக்கவை என்று நினைத்த அந்த அரசத் துறவி {திருதராஷ்டிரன்}, பெரும் துயரில் வீழ்ந்து, தன் உணர்வுகளை இழந்தவனாகத் தெரிந்தான்.(54) எனினும், கவலை மற்றும் துயரத்தால் நிறைந்த இதயத்துடன் கூடிய அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் மயக்கமடையவில்லை. அவர்களால் ஆறுதலளிக்கப்பட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, அமைதியாக இருந்து, துக்கத் தியானத்தில் ஈடுபட்டான்.(55)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, உயர் ஆன்ம தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் நடந்ததும், ஒரு வேள்வியைப் போன்றதுமான இந்தப் பெரும்போரைப் படிப்பவன் {உரைப்பவன்}, படிக்கப்படுவதைக் கேட்பவன் ஆகிய இருவரும் ஒரு பெரும் வேள்வி செய்ததன் கனியை {பலனை} அடைவார்கள்.(56) புனிதமானவனும், அழிவில்லாதவனுமான விஷ்ணுவே வேள்வி என்றும், பிற தேவர்களான, அக்னி, வாயு, சோமன், சூரியன் ஆகிய ஒவ்வொருவரும் அவ்வாறானவர்களே {வேள்வியே} என்றும் கல்விமான்கள் சொல்கின்றனர். எனவே, கெடுநோக்கம் இல்லாமல் இந்தப் பர்வத்தைக் கேட்பவனோ, உரைப்பவனோ, மகிழ்ச்சியை அடைபவனும், அருள் உலகங்கள் அனைத்தையும் அடையவல்லவனும் ஆவான்.(57) புனிதமானதும், சம்ஹிதைகளில் முதன்மையானதுமான இதைப் படிக்கும் மனிதர்கள், எப்போதும் அர்ப்பணிப்பில் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு செயல்படுபவர்கள், செல்வம், தானியம் மற்றும் புகழையும் அடைவார்கள்.(58) எனவே, ஒரு மனிதன் கெடுநோக்கம் இல்லாமல் இதை எப்போதும் கேட்க வேண்டும். இவ்வாறு செய்பவன், அனைத்து வகை இன்பங்களையும் அடைவான். விஷ்ணுவும், சிறப்புமிக்கத் தான்தோன்றியான பவனும் {சிவனும்} அந்த மனிதர்களில் முதன்மையானவனிடம் நிறைவடைவார்கள்.(59)

ஒரு பிராமணன், இதைப் படிப்பதால், வேதங்களைப் படித்ததன் கனியை {பலனை} அடைவான்;

ஒரு க்ஷத்திரியன், பலத்தையும், போரில் வெற்றியையும் அடைவான்;

வைசியர்கள் அபரிமிதமான செல்வத்தை அடைவார்கள்;

சூத்திரர்கள் உடல்நலத்தையும், நோயில் இருந்து விடுதலையையும் அடைவார்கள்.(60)

மேலும் சிறப்பு மிக்க விஷ்ணு நித்தியமானவனாவான். இந்தப் பர்வத்தில் அந்தத் தேவனே மகிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இதைப் படிக்கும், அல்லது கேட்கும் மனிதன், மகிழ்ச்சியை அடைந்து, தன் இதயத்தின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியவனாவான். பெரும் முனிவரின் (வியாசரின்) இந்த வார்த்தைகள் ஒருபோதும் பொய்யாக முடியாது.(61) கர்ண பர்வம் உரைக்கப்படும்போது கேட்பதால் அடையப்படும் தகுதியானது {புண்ணியமானது}, ஒரு வருடம் முழுவதும் நிறுத்தாமல் {தடையில்லாமல்} கன்றுகளோடு கூடிய பசுக்களைத் தானமளிப்பதற்கு இணையானதாகும்[1]”(62)

பதினேழாம் நாள் போர் முற்றும்
கர்ண பர்வம் முற்றிற்று 
——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-பிரதிஜ்ஞா பர்வம் –

October 14, 2025

அர்ஜுனனின் அழுகையும்! கோபமும்!! – துரோண பர்வம் பகுதி – 072-பாசறைக்குத் திரும்புகையில் தீய சகுனங்களை உணர்ந்த அர்ஜுனன் கிருஷ்ணனிடம் அச்சத்துடன் வினவியது; தன்னை வாழ்த்த அபிமன்யு வரதாததைக் கண்டு நிலைமையைப் புரிந்து கொண்டு புலம்பிய அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிய கிருஷ்ணன்; தன் சகோதரர்களிடம் கோபித்துக் கொண்ட அர்ஜுனன்; யுதிஷ்டிரன் பேச ஆரம்பித்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயிரினங்களின் படுகொலை நிறைந்த அந்தப் பயங்கர நாள் முடிந்து சூரியன் மறைந்த போது, மாலைவேளையின் அழகிய அந்திப் பொழுது தன்னைப் பரப்பிக் கொண்டது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இருதரப்பின் துருப்புகளும் தங்கள் பாசறைகளுக்கு ஓயச் சென்றன. அப்போது குரங்குக் கொடி கொண்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்} தன் தெய்வீக ஆயுதங்களால் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களைக் கொன்ற பிறகு, தனது அந்த வெற்றித் தேரில் ஏறித் தன் பாசறையை நோக்கிச் சென்றான்.

அப்படி அவன் {அர்ஜுனன்} சென்று கொண்டிருக்கையிலேயே, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்} அவன் {அர்ஜுனன்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் இதயம் ஏன் அஞ்சுகிறது? என் பேச்சு ஏன் தடுமாறுகிறது? தீச்சகுனங்கள் என்னைச் சந்திக்கின்றன, என் அங்கங்களும் பலவீனமாக இருக்கின்றன. பேரழிவு குறித்த எண்ணங்கள், அஃதை அனுபவிக்காமலே என் மனத்தைப் பீடிக்கின்றன. பூமியின் அனைத்துப் பக்கங்களிலும் பல்வேறு சகுனங்கள் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பல வகைகளிலான அந்தச் சகுனங்களும், அறிகுறிகளும் கொடிய பேரழிவையே முன்னறிவிக்கும் வகையில் எங்கும் காணப்படுகின்றன. என் மதிப்பிற்குரிய மூத்தவரான மன்னன் {யுதிஷ்டிரர்} தன் நண்பர்கள் அனைவருடன் நலமாக இருக்கிறாரா?” என்றான் {அர்ஜுனன்}.

வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “உன் சகோதரரும், அவரது நண்பர்களும் அனைத்து வகையிலும் நலமாக இருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. வருந்தாதே, வேறு திசையில் அற்பமான தீமையேதும் நடைபெற்றிருக்கலாம்” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு அந்த வீரர்கள் இருவரும் (கிருஷ்ணனும், அர்ஜுனனும்), அந்திப் பொழுதைப் போற்றிவிட்டுத் தங்கள் தேரில் ஏறி, வீரர்களுக்கு அழிவைத் தந்த அந்த நாளின் போரைக் குறித்துப் பேசிக் கொண்டே சென்றனர். அடைவதற்கு அரிதான மிகக் கடினமான சாதனைகளை அடைந்த வாசுதேவனும், அர்ஜுனனும் இறுதியாக (பாண்டவ) கூடாரத்தை அடைந்தனர்.

பகைவீரர்களைக் கொல்பவனான பீபத்சு {அர்ஜுனன்}, முகாம் மகிழ்ச்சியற்று, துக்கத்துடன் இருப்பதையும், அனைத்தும் குழம்பிப் போய் இருப்பதையும் கண்டு, இதய வேதனையுடன் கிருஷ்ணனிடம், “ஓ! ஜனார்த்தனா, துந்துபி மற்றும் உரத்த சங்கொலிகளுடன் கலந்த மங்கல எக்காளம் எதுவும் இன்று முழக்கப்படவில்லை. கைத்தாளத்துடன் கூடிய இனிய வீணையின் இசையும் எங்கும் இசைக்கப்படவில்லை. துருப்புகளுக்கு மத்தியில் உள்ள நமது பாணர்களால் துதி நிறைந்த மங்கலமான இனிய பாடல்கள் எங்கும் உரைக்கப்படவோ, பாடப்படவோ இல்லை.

வீரர்கள் அனைவரும் கூட, தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டபடியே கலைந்து செல்கின்றனர். முன்பு போல, என்னைக் கண்டதும், தாங்கள் அடைந்த சாதனைகளை அவர்கள் என்னிடம் சொல்லவில்லை. ஓ! மாதவா {கிருஷ்ணா}, என் சகோதரர்கள் நலமாக இருக்கிறார்களா? நம் மனிதர்கள் துயரத்தில் மூழ்கி இருப்பதைக் கண்டு நான் அமைதியை அடையவில்லை.

ஓ! மரியாதைகளைத் தருபவனே, ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {கிருஷ்ணா}, பாஞ்சாலர்களின் ஆட்சியாளன் {துருபதன்}, விராடன் ஆகியோரும், நம் வீரர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்களா? ஐயோ, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, போர்க்களத்தில் இருந்து திரும்பி வரும் என்னைப் புன்னகையோடு வரவேற்கத் தன் சகோதரர்களோடு இன்று வெளிவரவில்லையே” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் சொன்னான், “இப்படிப் பேசிக் கொண்ட அவ்விருவரும் (கிருஷ்ணனும், அர்ஜுனனும்) தங்கள் முகாமுக்குள் நுழைந்தனர். அவர்கள், பெரும் துயரத்தில் மூழ்கி உற்சாகமற்று அமர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும் கண்டனர். தன் சகோதரர்களையும், மகன்களையும் கண்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன் பெரிதும் உற்சாகமிழந்தவனானான்.

சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} காணாத அர்ஜுனன், “உங்கள் அனைவரின் முகங்களும் மங்கிய நிறத்தில் இருப்பதைக் காண்கிறேன். மேலும் நான் அபிமன்யுவைக் காணவில்லை. என்னை வாழ்த்தவும் அவன் வரவில்லை. துரோணர் இன்று சக்கர வியூகத்தை அமைத்தார் என்று நான் கேட்விப்பட்டேன். சிறுவன் அபிமன்யுவைத் தவிர உங்களில் எவராலும் அந்த வியூகத்தை உடைக்க முடியாது. எனினும், அவ்வியூகத்தைப் பிளந்த பிறகு, அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதை நான் அவனுக்குக் கற்பிக்கவில்லையே. அந்தச் சிறுவனை {அபிமன்யுவை} அந்த வியூகத்தில் நீங்கள் நுழையச் செய்தீர்களா?

பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்க வில்லாளியுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அந்த வியூகத்தைப் பிளந்து, போர்க்களத்தில் எண்ணிலா பகை வீரர்களைக் கடந்து, இறுதியாக அந்தப் போரில் விழுந்தானா? மலைச்சாரலில் சிங்கத்தைப் போல (நம் பரம்பரையில்) பிறந்தவனும், இந்திரனின் தம்பிக்கு {விஷ்ணுவுக்கு} இணையானவனும், வலிமைமிக்கக் கரங்களையும், சிவந்த கண்களையும் கொண்டவனான அந்த வீரன் போர்க்களத்தில் எவ்வாறு விழுந்தான்? ஓ! எனக்குச் சொல்வீராக.

சுபத்திரையின் அன்பு மகனும், கேசவனுக்கும், திரௌபதிக்கும் பிடித்தமானவனும், குந்தியால் எப்போதும் அன்புடன் விரும்பப்பட்டவனுமான அந்தக் குழந்தையைக் காலனால் அறிவை இழந்த எந்த வீரன் கொல்லத் துணிந்தான்? ஆற்றல், கல்வி, கண்ணியம் ஆகியவற்றில் விருஷ்ணி வீரனான உயர் ஆன்ம கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையான அவன் போர்க்களத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான்?

விருஷ்ணி குலமகளுக்கு {சுபத்திரைக்குப்} பிடித்தமான மகனும், ஐயோ, எப்போதும் என்னால் பேணி வளர்க்கப்பட்டவனுமான அவனை {அபிமன்யுவைக்} காணவில்லையெனில் நான் யமலோகம் செல்வேன். சுருள்முனை கேசம் கொண்டவனும், இளம் வயதினனும், இளம் மானைப் போன்ற கண்களைக் கொண்டவனும், மதம்கொண்ட யானையின் நடையைக் கொண்டவனும், சால மரத்தைப் போன்று நெடிந்து வளர்ந்தவனும், புன்னகையுடன் கூடிய இனிய பேச்சைக் கொண்டவனும், அமைதியானவனும், மூத்தோரின் உத்தரவுகளுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனும், வயதால் இளையவனெனினும் முதிர்ச்சியுடன் செயல்படுபவனும், ஏற்புடைய பேச்சு கொண்டவனும், செருக்கற்றவனும், பெரும் வீரமும், பெரும் சக்தியும் கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்களைக் கொண்டவனும், தனக்கு அர்ப்பணிப்புள்ளோரிடம் அன்பு கொண்டவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், இழிவெதையும் {இழிவானவர்கள் எவரையும்} பின்பற்றாதவனும், நன்றிமிக்கவனும், அறிவுடையவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், போரில் பின்வாங்காதவனும், போரில் எப்போதும் மகிழ்பவனும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவனும், சொந்தங்களின் நன்மையில் ஈடுபடுபவனும், தந்தைமாரின் வெற்றியை விரும்பியவனும், எப்போதும் முதலில் தாக்காதவனும், ஐயோ, போரில் முற்றாக அச்சமற்றவனுமான அந்த மகனை {அபிமன்யுவைக்} காணவில்லையெனில் நான் யமலோகம் செல்வேன்.

தேர்வீரர்களைக் கணக்கிடுகையில் எப்போதும் மகாரதனாகக் கருதப்பட்டவனும், என்னைவிட ஒன்றரை மடங்கு மேன்மையானவனும், இளம் வயதினனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், ஐயோ, பிரத்யும்னன், கேசவன் {கிருஷணன்} மற்றும் எனது அன்புக்கும் பாத்திரமான அந்த மகனை {அபிமன்யுவைக்} காணவில்லையெனில் நான் யமலோகம் செல்வேன்.

அழகிய மூக்கு, அழகிய நெற்றி, அழகிய கண்கள், புருவங்கள், இதழ்கள் ஆகியவற்றைக் கொண்ட அம்முகத்தைக் காணாது என் இதயத்துக்கு அமைதியேது? ஆண் குயிலின் குரலைப் போல மதுரமானதும், மகிழ்ச்சி நிறைந்ததும், வீணையின் அதிர்வுகளைப் போல இனிமையானதுமான அவனது {அபிமன்யுவின்} குரலைக் கேட்காது என் இதயத்துக்கு அமைதியேது? தேவர்களில் கூட அரிதான ஒப்பற்ற அழகைக் கொண்ட அந்த வடிவத்தின் மீது என் கண்களைச் செலுத்தாது என் இதயத்துக்கு அமைதியேது? (தனக்கு மூத்தவர்களை) மரியாதையுடன் வணங்குபவனும், ஐயோ, தன் தந்தைமாரின் உத்தரவுகளுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனுமான அவனை {அபிமன்யுவைக்} காணாது என் இதயத்துக்கு அமைதியேது?

போரில் துணிச்சல் கொண்டவனும், அனைத்து வசதிகளுக்கும் பழக்கப்பட்டவனும், மிருதுவான படுக்கைக்குத் தகுந்தவனுமான அவன் {அபிமன்யு}, தன்னைப் பார்த்துக் கொள்ளப் பாதுகாவலர்களைக் கொண்டோரில் முதன்மையானவனாக இருந்தும், ஏதோ தன்னைக் கவனிக்க யாரும் இல்லாததைப் போல, ஐயோ, இன்று வெறுந்தரையில் உறங்குகிறான். தன் படுக்கையில் கிடக்கும்போது, அழகிய பெண்களில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்ட அவன் {அபிமன்யு}, ஐயோ, கணைகளால் சிதைக்கப்பட்டுப் போர்க்களத்தில் அமங்கலமான நரிகளால் இன்று சூழப்பட்டிருப்பான். முன்பு தன் குறைத்தூக்கத்தில் சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியவர்களால் எழுப்பப்படும் அவன் {அபிமன்யு}, ஐயோ, இரைதேடும் கொடூர விலங்குகளால் இன்று நிச்சயம் எழுப்பப்படுவான். குடையின் நிழலில் இருக்கத்தக்க அந்த அழகிய முகம், ஐயோ, இன்று போர்க்களத்தின் புழுதியால் நிச்சயம் அழகை இழந்திருக்கும்.

ஓ! குழந்தாய், உன்னைப் பார்ப்பதில் எப்போதும் நிறைவுறாத என்னிடம் இருந்து மரணம் உன்னைப் பலவந்தமாக எடுத்துச் செல்கிறதே, நான் பாக்கியமற்றவனே. அறச்செயல்கள் செய்வோரின் இலக்காக எப்போதும் இருப்பதும், மகிழ்ச்சி மிக்க மாளிகையுமான அந்த யமனின் வசிப்பிடம், உன் காந்தியால் இன்று ஒளியூட்டப்பட்டு, உன்னால் மிக அழகாகப்போகிறது என்பதில் ஐயமில்லை. யமன், வருணன், சதக்ரது, குபேரன் ஆகியோர் உன்னைப் பிடித்தமான விருந்தினனாக அடைந்து, வீரனான உன்னைப் புகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை” என்றான் {அர்ஜுனன்}.

கப்பல் மூழ்கிப் போன வணிகன் ஒருவனைப் போலவே, இப்படிப் பல்வேறு புலம்பல்களில் ஈடுப்பட்ட அர்ஜுனன், பெரும் துயரால் பீடிக்கப்பட்டு, யுதிஷ்டிரனிடம், “ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, போர்க்களத்தில் முதன்மையான வீரர்களுடன் மோதி, எதிரியின் மத்தியில் பெரும் படுகொலையை நிகழ்த்திய பிறகு அவன் சொர்க்கத்திற்குச் சென்றானா? தீர்மானத்தோடு வீரமாகப் போரிட்டு, போர்வீரர்களில் முதன்மையானோர் எண்ணற்றோருடன் தனியொருவனாக மோதிக் கொண்டிருந்த போது, உதவியை விரும்பி அவனது இதயம் என்னிடம் திரும்பியிருக்கும் {என்னை நினைத்திருப்பான்} என்பதில் ஐயமில்லை. கர்ணன், துரோணர், கிருபர் மற்றும் இன்னும் பிறர் ஆகியோரின் கூரிய ஒளிமிக்க முனை கொண்ட பல்வேறு கணைகளால் பீடிக்கப்பட்ட போது, பலம் குறைந்த என் மகன் “இந்நெருக்கடியில் என் தந்தையே என்னைக் காப்பார்” என்று மீண்டும் மீண்டும் நினைத்திருப்பானே” என்றான் {அர்ஜுனன்}.

இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, “கொடூர வீரர்களால் அவன் தரையில் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அல்லது, என்னால் பெறப்பட்டவனும், மாதவனின் {கிருஷ்ணனின்} மருமகனும், சுபத்திரைக்குப் பிறந்தவனுமான அவன் {அபிமன்யு} அநேகமாக அப்படிப் புலம்பியிருக்க மாட்டான்.

கண்கள் சிவந்த, வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரனை நான் காணவில்லை எனினும், உடையாமல் இருப்பதால், என் இதயம் இடியின் சாரத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

கொடூர இதயம் கொண்ட அந்த வலிமைமிக்க வில்லாளிகள், என் மகனும், வாசுதேவனின் மருமகனும், வயதில் இளையோனுமான அந்தப் பிள்ளையின் மீது கணைகளை எவ்வாறு ஏவ முடியும்? உன்னத இதயம் கொண்ட அந்த இளைஞன் வழக்கமாகத் தினமும் என்னை வாழ்த்துவான், ஐயோ, எதிரியைக் கொன்று திரும்பும் என்னிடம் அவன் {அபிமன்யு} இன்று ஏன் வரவில்லை? வீழ்த்தப்பட்டுக் குருதியில் குளித்து வெறுந்தரையில் இன்று கிடக்கிறான் அவன் என்பதில் ஐயமில்லை. (ஆகாயத்தில் இருந்து) விழுந்த சூரியனைப் போலத் தன் உடலால் பூமியை அழுகூட்டியபடி கிடக்கிறான்.

எவள், பின்வாங்காத தன் மகன் போரில் இறந்தான் எனக் கேட்டு, கவலையால் பீடிக்கப்பட்டு, உயிரை இழப்பாளோ, அந்தச் சுபத்திரைக்காக நான் வருந்துகிறேன். அபிமன்யுவைத் தொலைத்த சுபத்திரை என்னிடம் என்ன சொல்வாள்? திரௌபதி என்னிடம் என்ன சொல்வாள்? துயரத்தில் பீடிக்கப்படும் அவர்களிடம் நான் என்ன சொல்வேன்?

துயரத்தால் துளைக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் என் மருமகளைக் {உத்திரையைக்} கண்டும் ஆயிரம் துண்டுகளாக உடையாததால் என் இதயம் இடியின் சாரத்தாலானது என்பதில் ஐயமேயில்லை.

உண்மையில், செருக்கால் பெருகும் திருதராஷ்டிரர்களின் சிங்க முழக்கங்கள் என் காதுகளில் நுழைந்தன. வீரர்களை நிந்தித்த யுயுத்சு, (திருதராஷ்டிரப் படையினரிடம் இந்த வார்த்தைகளில்) “வலிமைமிக்கத் தேர்வீரர்களே, பீபத்சுவை {அர்ஜுனனை} வீழ்த்த முடியாமல், ஒரு குழந்தையைக் கொன்றுவிட்டு ஏன் மகிழ்கிறீர்கள்? போரில் கேசவனுக்கும், அர்ஜுனனுக்கும் ஏற்பில்லாததைச் செய்துவிட்டு, உண்மையில் துன்பம் வரப்போகும் நேரத்தில், மகிழ்ச்சியால் சிங்கங்களைப் போல ஏன் முழங்குகிறீர்கள்? உங்கள் பாவச்செயல்களின் கனிகள் விரைவில் உங்களை வந்தடையும். நீங்கள் கொடிய குற்றத்தைப் புரிந்திருக்கிறீர்கள். எவ்வளவு காலம் அது கனிகளைக் கொடாமல் இருக்கும்?” என்று {யுயுத்சு} பேசுவதைக் கிருஷ்ணனும் கேட்டிருக்கிறான். இவ்வார்த்தைகளால் அவர்களை நிந்தித்தவனும், வைசிய மனைவி மூலம் திருதராஷ்டிரருக்குப் பிறந்த உயர் ஆன்ம மகனுமான அவன் {யுயுத்சு}, சினத்தாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டுத் தன் ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறான். ஓ! கிருஷ்ணா, போரின் போது இவையாவையும் நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை? கொடூர இதயங்களைக் கொண்ட அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் நான் அப்போதே எரித்திருப்பேனே” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் மகன் {அபிமன்யு} நிமித்தமாகத் துயரில் பீடிக்கப்பட்டிருந்தவனும், மிகுந்த துன்பத்தில் இருந்தவனும், கண்ணீரால் குளித்த கண்களைக் கொண்டவனும், உண்மையில், தன் பிள்ளையின் படுகொலையால் வேதனையில் மூழ்கியிருந்தவனுமான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆறுதல் சொல்லும் வகையில் அவனிடம் {அர்ஜுனனிடம்}, “துயருக்கு ஆட்படாதே. துணிச்சல் மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களும், குறிப்பாகப் போரைத் தொழிலாகக் கொண்ட க்ஷத்திரிய வீரர்கள் அனைவரின் வழியும் இதுவே. ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவனே {அர்ஜுனா}, போரில் ஈடுபட்டுப் புறமுதுகிடாத வீரர்களுக்கு, நமது சாத்திரங்களின் ஆசிரியர்களால் விதிக்கப்பட்ட இலக்கும் இதுவே. புறமுதுகிடாத வீரர்களுக்கு மரணம் உறுதியானதே. அபிமன்யு, அறச்செயல் செய்தோருக்காக ஒதுக்கப்பட்ட உலகங்களை அடைந்திருக்கிறான் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, போரில் இறக்கும் துணிவுடன் எதிரிகளை முகமுகமாகச் சந்திக்கும் அனைவரும் விரும்புவது இதையே.

அபிமன்யுவைப் பொறுத்தவரை, போரில் பல வீரர்களையும், வலிமைமிக்க இளவரசர்களையும் கொன்ற பிறகு, வீரர்களால் விரும்பப்படுவதைப் போலவே மரணத்தை முகமுகமாகச் சந்தித்திருக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, வருந்தாதே. பழங்காலத்தில் விதியை உண்டாக்கியவர்கள், க்ஷத்திரியர்களின் நிலைத்த தகுதியாக {புண்ணியமாக} போரில் மரணம் என்பதையே அறிவித்திருக்கிறார்கள். ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, இந்த உன் சகோதரர்கள், மன்னர் {யுதிஷ்டிரர்}, இந்த உன் நண்பர்கள் ஆகியோர் அனைவரும், துயரில் மூழ்கியிருக்கும் உன்னைக் கண்டு பெரிதும் உற்சாகமிழந்திருக்கின்றனர். ஓ! மரியாதைகளை அளிப்பவனே {அர்ஜுனா}, ஆறுதல் தரும் வார்த்தைகளால் அவர்களைத் தேற்றுவாயாக. அறியத்தக்கது உன்னால் அறியப்பட்டிருக்கிறது. வருந்துவது உனக்குத் தகாது” என்றான் {கிருஷ்ணன்}.

அற்புதச் செயல்களைப் புரியும் கிருஷ்ணனால் இப்படித் தேற்றப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, தன் சகோதரர்கள் அனைவரிடமும், சோகத்தால் தடைபட்ட குரலுடன் அந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களையும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான பெரிய கண்களையும் கொண்ட அந்த வீரன் அபிமன்யு எவ்வாறு போரிட்டான் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.

எதிரியை அவர்களது யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவற்றோடு நான் அழிக்கப்போவதையும், என் மகனைக் கொன்றோரையும் அவர்களைப் பின்தொடர்வோர் மற்றும் சொந்தங்களுடன் சேர்த்துப் போரில் அழிக்கப்போவதையும் நீங்கள் காண்பீர்கள்.

நீங்கள் அனைவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களே. சுபத்திரையின் மகன் {அபிமன்யு} வஜ்ரதாரியுடனேயே {இந்திரனுடனேயே} போரிட்டிருந்தாலும், நீங்கள் அனைவரும் ஆயுதம் தரித்திருக்கும்போது அவனை எப்படிக் கொல்ல முடியும்?

ஐயோ, பாண்டவர்களாலும், பாஞ்சாலர்களாலும் போரில் என் மகனைக் காக்க முடியாது என்று அறிந்திருந்தால், நானே அவனைக் {அபிமன்யுவைக்} காத்திருப்பேனே. அப்போது நீங்கள் உங்கள் தேர்களில் இருந்தீர்கள், நீங்கள் உங்கள் கணைகளை ஏவி கொண்டிருந்தீர்கள். ஐயோ, உங்கள் படையணிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தி எதிரியால் அபிமன்யுவை எவ்வாறு கொல்ல முடியும்?

ஐயோ, நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அபிமன்யு கொல்லப்பட்டதால், உங்களுக்கு ஆண்மையோ ஆற்றலோ இல்லை. அல்லது, நீங்கள் அனைவரும் பலமற்றவர்கள், கோழைகள், உறுதியற்றவர்கள் என்பதை அறிந்தும் நான் சென்றுவிட்டதால் என்னையேதான் நான் கடிந்து கொள்ள வேண்டும்.

ஐயோ, (நீங்கள் கவசங்களை அணிந்திருந்தாலும், தலையில் இருந்து பாதம் வரை ஆயுதம் தரித்திருந்தாலும், வார்த்தைகளால் உங்கள் தகுதிக்கேற்ப எனக்கு நீங்கள் உறுதியளித்திருந்தாலும்) என் மகனைக் காக்கத் தவறினீர்களே, உங்கள் கவசங்களும், அனைத்து வகை ஆயுதங்களும் உங்கள் மேனிகளை அலங்கரிக்கும் ஆபரணங்கள்தானா? சபைகளில் பேசுவதற்காக மட்டுமே உங்களுக்கு வார்த்தைகளா?” என்று கேட்டான் {அர்ஜுனன்}.

இந்த வார்த்தைகளைச் சொன்ன பார்த்தன் {அர்ஜுனன்}, வில்லையும், தன் சிறந்த வாளையும் பிடித்தபடி அமர்ந்தான். உண்மையில், அந்த நேரத்தில், கோபத்தில் அந்தகனுக்கு ஒப்பானவனாக மீண்டும் மீண்டும் நீண்ட மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்த பீபத்சுவை {அர்ஜுனனை} யாராலும் பார்க்கவும் முடியவில்லை. தன் மகன் {அபிமன்யு} நிமித்தமாக அதீத துயரில் பீடிக்கப்பட்டவனும், கண்ணீரால் குளித்த முகத்தைக் கொண்டவனுமான அர்ஜுனனைப் பார்க்கவோ, அவனிடம் பேசவோ அவனது நண்பர்கள், சொந்தங்கள் ஆகியோரில் எவரும் துணியவில்லை.

உண்மையில் வாசுதேவனையோ, யுதிஷ்டிரனையோ தவிர வேறு எவராலும் அவனை {அர்ஜுனனை} அணுக முடியவில்லை. இந்த இருவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அர்ஜுனனுக்கு ஏற்புடையவர்களாக இருந்தனர். அவர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டதாலும், அன்புடன் நேசிக்கப்பட்டதாலும், அவர்களால் மட்டுமே அத்தகு நேரங்களில் அவனைத் தனியாக அணுக முடிந்தது. பிறகு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், கோபத்தால் நிறைந்திருந்தவனும், தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்தவனுமான பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} மன்னன் யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளில் பேசினான்” {என்றான் சஞ்சயன்}.

அர்ஜுனன் ஏற்ற உறுதிமொழி! – துரோண பர்வம் பகுதி – 073-அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தை அர்ஜுனனிடம் சொன்ன யுதிஷ்டிரன்; அர்ஜுனன் உரைத்த வெஞ்சினம்; அவன் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி; கிருஷ்ணனும், அர்ஜுனனும் தங்கள் சங்குகளை முழக்கியது

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, நீ சம்சப்தகர்களை நோக்கிச் சென்ற பிறகு, ஆசான் துரோணர் என்னைப் பிடிப்பதற்காகக் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். எனினும், அந்தப் போரில், தீவிரமாகப் போராடும் தேர்ப்படைப்பிரிவை எதிரணியாக வகுத்து, வியூகத்தின் தலைமையில் நின்ற துரோணரை அனைத்துப் புள்ளிகளிலும் தடுப்பதில் நாங்கள் வென்றோம்.

பெரும் எண்ணிக்கையிலான வீரர்களால் தடுக்கப்பட்டிருந்த துரோணர், நன்றாகப் பாதுகாக்கப்பட்டிருந்த என்னையும், {நம்மைச் சேர்ந்த} அனைவரையும் தன் கூரிய கணைகளால் பீடித்துப் பெரும் சுறுசுறுப்புடன் தாக்க ஆரம்பித்தார். இப்படி அவரால் {துரோணரால்} பீடிக்கப்பட்ட எங்களால், அவரது படையை எதிர்கொள்ள மட்டுமல்ல, பார்க்கக்கூட முடியவில்லை. பிறகு, ஓ! தலைவா {அர்ஜுனா}, நாங்கள் அனைவரும், ஆற்றலில் உனக்குச் சமமான சுபத்திரையின் மகனிடம் {அபிமன்யுவிடம்} சென்று “ஓ! மகனே {அபிமன்யு}, துரோணரின் இந்த வியூகத்தைப் பிளப்பாயாக” என்று கேட்டோம். வீரியமிக்க அந்த வீரன் {அபிமன்யு}, இப்படி எங்களால் தூண்டப்பட்டு, சுமை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதை ஏற்கும் நல்ல குதிரையைப் போல, அந்தச் சுமையைத் தானே ஏற்றுக் கொண்டான்.

உனது சக்தியையும், உன்னிடம் இருந்து பெறப்பட்ட ஆயுத அறிவின் துணையையும் கொண்ட அந்தப் பிள்ளை {அபிமன்யு}, பெருங்கடலுக்குள் ஊடுருவும் கருடனைப் போல அந்த வியூகத்தினுள் ஊடுருவினான். (திருதராஷ்டிரப் படைக்குள்) ஊடுருவ விரும்பிய எங்களைப் பொறுத்தவரை, அந்தப் போரில், சுபத்திரையின் மகனான அந்த வீரன் அபிமன்யு அதற்குள் {வியூகத்தில்} நுழைந்த அதே பாதையில் அவனையே {அபிமன்யுவையே} பின் தொடர்ந்து சென்றோம். அப்போது, ஓ! ஐயா {அர்ஜுனா}, சிந்துக்களின் இழிந்த மன்னனான ஜெயத்ரதன், ருத்ரனால் {சிவனால்} அருளப்பட்ட வரத்தின் விளைவால் எங்கள் அனைவரையும் தடுத்தான்.

பிறகு, துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கோசலர்களின் மன்னன் {பிருஹத்பலன்}, கிருதவர்மன் ஆகிய இந்த ஆறு தேர்வீரர்களும் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். இப்படி அந்தப் பெரும் தேர்வீரர்கள் அந்தப் பிள்ளையைச் சூழ்ந்து கொண்ட பிறகு, அவர்கள் பலராக இருப்பினும், தன் சக்தி முழுவதையும் பயன்படுத்திப் போரிட்ட அவனது தேரை அவர்கள் இழக்கச் செய்தனர். அபிமன்யு தேரை இழந்ததும், அவனிடமிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய துச்சாசனன் மகன் [1], சந்தர்ப்பவசத்தால் அவனை {அபிமன்யுவை} அவனது முடிவை அடையச் செய்வதில் {அவனைக் கொல்வதில்} வென்றான்.

அபிமன்யுவைப் பொறுத்தவரை, பல்லாயிரம் மனிதர்கள், குதிரைகள், மற்றும் யானைகளையும் கொன்று, எட்டாயிரம் தேர்களை அழித்து, மேலும் தொள்ளாயிரம் யானைகள், இரண்டாயிரம் {2000} இளவரசர்கள், புகழை அறியாத பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் பலர் ஆகியோரையும் கொன்று, அந்தப் போரில் {கோசல} மன்னன் பிருஹத்பலனையும் சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டு, இறுதியாகத் தீயூழின் காரணமாகத் தன் மரணத்தைச் சந்தித்தான். நம் வருத்தத்தை அதிகரிக்கும் இந்த நிகழ்வு இப்படியே நடந்தது! அந்த மனிதர்களில் புலி {அபிமன்யு}, இப்படியே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்” என்றான் {யுதிஷ்டிரன்}.

மன்னன் யுதிஷ்டிரனால் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், “ஓ… மகனே” என்று சொல்லி பெருமூச்சுவிட்டபடி, பெரும் வலியோடு பூமியில் விழுந்தான். பிறகு பாண்டவர்கள் அனைவரும் துயரால் நிறைந்து, உற்சாகமிழந்த முகங்களுடன், தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு, கண்ணிமைக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சுயநினைவு மீண்ட வாசவனின் மகன் {இந்திரனின் மகன் அர்ஜுனன்}, சினத்தால் நிறைந்து மூர்க்கமடைந்தான். அடிக்கடி பெருமூச்சுவிட்ட அவன் {அர்ஜுனன்}, காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருந்தவன் போலவே தெரிந்தான். தன் கைகளைப் பிசைந்து கொண்டு, ஆழ்ந்த மூச்சுகளை விட்டு, கண்ணீரால் குளித்த கண்களுடன் ஒரு பைத்தியக்காரனைப் போலப் பார்த்துக் கொண்டே இருந்த அவன் {அர்ஜுனன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

அர்ஜுனன், “நாளை நான் ஜெயத்ரதனைக் கொல்லப் போகிறேன் என்று நான் உண்மையாகவே உறுதிகூறுகிறேன் {சத்தியம் செய்கிறேன்}. மரணப் பயத்தால் அவன் {ஜெயத்ரதன்} திருதராஷ்டிரர்களைக் கைவிடாதிருந்தாலோ, நமது பாதுகாப்பையும், மனிதர்களில் முதன்மையான கிருஷ்ணன் அல்லது {யுதிஷ்டிரராகிய} உமது பாதுகாப்பையும் அவன் மன்றாடிக் கேட்காதிருந்தாலோ, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நாளை அவனை {ஜெயத்ரதனை} நான் நிச்சயம் கொல்வேன்!

என்னிடம் கொண்ட நட்பை மறந்து, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்வதில் ஈடுபடும் அந்த இழிந்தவனே {ஜெயத்ரதனே} என் பிள்ளையின் {அபிமன்யுவின்} படுகொலைக்குக் காரணமானான்! {எனவே} நாளை நான் அவனைக் {ஜெயத்ரதனைக்} கொல்வேன். நாளைய போரில் அவனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பதற்காகத் துரோணரோ, கிருபரோ, எவரெல்லாம் என்னுடன் மோதுவார்களோ, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரையும் என் கணையால் நான் மறைப்பேன். மனிதர்களில் காளையரே, வீரர்களில் முதன்மையானோரே, (நாளைய) போரில் இதை நான் அடையவில்லையெனில், அறவோருக்கு ஒதுக்கப்படும் நல்லுகங்களை நான் அடையாதிருப்பேனாக!

தங்கள் தாய்மாரைக் கொன்றவர்கள், தங்கள் தந்தைமாரைக் கொன்றவர்கள், தங்கள் ஆசான்களின் படுக்கையைக் களங்கப்படுத்துபவர்கள் {குருதாரகமனம் செய்பவர்கள்}, தீயவர்கள், கொடூரர்கள், அறவோரிடம் பகைமை பாராட்டுபவர்கள், பிறர் மீது பழிகூறுபவர்கள், அடைக்கலப் பொருட்களைக் கவர்பவர்கள், நம்பிக்கை துரோகிகள், முன்பு தாங்கள் யாவரிடம் இன்புற்றனரோ அந்த மனைவிமாரை நிந்திப்பவர்கள், பிராமணர்களைக் கொன்றவர்கள் {பிரம்மஹத்தி செய்தவர்கள்}, பசுவைக் கொன்றவர்கள், சர்க்கரை கலந்த பால் மற்றும் அரிசி {பாயாசம்}, வாற்கோதுமை {பார்லி}, கீரைவகைகளால் செய்யப்பட்ட உணவு, பால், எள்ளுப்பொடி, அரிசி ஆகியவற்றால் செய்யப்பட்ட பண்டங்கள், கோதுமை மாவை நெய்யில் வறுத்துச் செய்யப்படும் அப்பங்கள், பிறவகை அப்பங்கள், இறைச்சி ஆகியவற்றைத் தேவர்களுக்கு அர்ப்பணிக்காமல் காரணமின்றி உண்போர் ஆகியோர் எந்த உலகங்களை அடைவார்களோ அந்த உலகங்கள், நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் விரைவாக எனதாகட்டும்.

வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் பிராமணர்கள், மரியாதைக்குரியவர்கள், தங்கள் ஆசான்களை அவமதிப்போர் ஆகியோர் எந்த உலகங்களை அடைவார்களோ (அந்த உலகங்கள், நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும்). பிராமணர்களையோ, நெருப்பையோ தங்கள் காலால் தீண்டுபவர்கள் எந்த முடிவை {கதியை} அடைவார்களோ, சளி {கபம்}, மலம் மற்றும் சிறுநீரை நீர்நிலையில் கழிப்பவர்கள் எந்த முடிவை அடைவார்களோ, அந்தத் துன்பகரமான முடிவு {அந்தத் துன்பகதி}, நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும்.

நிர்வாணமாக (நீர்நிலையில்) குளிப்பவனும், விருந்தினரை உபசரிக்காதவனும் எந்த முடிவை அடைவானோ, கையூட்டு பெறுவோர், பொய்மை பேசுவோர், பிறரை வஞ்சித்து ஏமாற்றுவோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ, தங்கள் ஆன்மாவுக்குக் குற்றமிழைத்தோர் {தற்புகழ்ச்சி செய்வோர்}, (பிறரைப்) பொய்யாகத் துதிப்போர், பணியாட்கள், மகன்கள், மனைவியர், தன்னை அண்டியிருப்பவர்கள் {நம்பியிருப்பவர்கள்} ஆகியோருக்குக் கொடாமல், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இனிய பண்டங்களை உண்ணும் {ம்ருஷ்டான்னபோஜனம் செய்யும்} இழிந்த பாவிகள் ஆகியோர் எந்த முடிவை {கதியை} அடைவார்களோ அந்தப் பயங்கர முடிவு, நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும்!

அறம்சார்ந்து கீழ்ப்படியும் சீடனை {அல்லது தன்னை அண்டியவனை} ஆதரிக்காமல் கைவிடும் இரக்கமற்ற ஆன்மா கொண்ட இழிந்த பாவியும், சிராத்தங்களின் காணிக்கைகளைத் தகுந்த அண்டைவீட்டாருக்குக் கொடாமல், அவற்றைத் தகாதவர்களுக்கு அளிப்பவனும் எந்த முடிவை அடைவானோ, மது குடிப்பவன், மரியாதைக்குத் தகுந்தவர்களை அவமதிப்பவன், நன்றிமறந்தவன், தன் சகோதரர்களைப் பழிப்பவன் எந்த முடிவை அடைவானோ அந்த முடிவு, நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும் [2]. நான் குறிப்பிட்ட பாவிகளும், குறிப்பிடாத பாவிகளும் எந்த முடிவை {கதியை} அடைவார்களோ அந்த முடிவு, இந்த இரவு கடந்ததும் நாளை நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் விரைவில் எனதாகட்டும்.எனது மற்றொரு உறுதிமொழியையும் கேட்பீராக! நாளை நான் அந்த இழிந்தவனைக் கொல்லாமல் சூரியன் மறைவானெனில், அப்போது இங்கே நான் சுடர்மிகும் நெருப்புக்குள் நுழைவேன். அசுரர்களே, தேவர்களே, மனிதர்களே, பறவைகளே, பாம்புகளே, பிதுர்களே, இரவு உலாவிகளே, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களே, தெய்வீக முனிவர்களே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களே, இன்னும் நான் குறிப்பிடாதவர்களே, என் எதிரியை என்னிடம் இருந்து காப்பதில் நீவிர் வெல்ல மாட்டீர்! அவன் பாதாளத்திற்கே சென்றாலும், ஆகாயத்திற்கு உயர்ந்தாலும், தேவர்களிடம் சென்றாலும், தைத்தியர்களின் மாநிலங்களுக்குச் சென்றாலும், இந்த இரவு கழிந்ததும், நூற்றுக்கணக்கான கணைகளால் அபிமன்யுவின் எதிரியுடைய {அந்த ஜெயத்ரதன்} தலையை நிச்சயம் நான் துண்டிப்பேன்” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், தன் இரு கைகளாலும் காண்டீவத்தை வளைக்கத் தொடங்கினான். அர்ஜுனனின் குரலையும் மீறி எழுந்த அந்த நாணொலி சொர்க்கங்களையே {வானத்தையே} எட்டியது. அர்ஜுனன் இந்த உறுதிமொழியை ஏற்றதும், கோபத்தால் நிறைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கினான். பல்குனனோ {அர்ஜுனனோ} தேவதத்தத்தை முழக்கினான். பெரும் சங்கான பாஞ்சஜன்யம், கிருஷ்ணனின் வாய்க்காற்றால் நன்கு நிரப்பப்பட்டுப் பெரும் ஒலியை உண்டாக்கியது. யுக முடிவில் நேர்வதைப் போல அவ்வொலி, முக்கிய மற்றும் துணைத் திசைகளின் ஆட்சியாளர்கள் {திக்பாலர்கள்}, பாதாள உலகங்கள் மற்றும் மொத்த அண்டத்தையும் அதிரச் செய்தது. உண்மையில், உயர் ஆன்ம அர்ஜுனன் அந்த உறுதிமொழியை ஏற்றதும், ஆயிரக்கணக்கான இசைக்கருவிகளின் ஒலிகளும், உரத்த சிங்க முழக்கங்களும் அந்தப் பாண்டவ முகாமிலிருந்து எழுந்தன” {என்றான் சஞ்சயன்}.

ஜெயத்ரதனுக்கு ஆறுதல் சொன்ன துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 074-அர்ஜுனனின் சபதத்தைக் கேட்டு அஞ்சிய ஜெயத்ரதன் களத்தை விட்டு வீட்டுக்குச் செல்வதாகச் சொன்னது; ஜெயத்ரதனுக்குத் தைரியமூட்டிய துரியோதனன்; துரோணரிடம் சென்ற ஜெயத்ரதன்; அவனுக்கு ஆறுதல் சொன்ன துரோணர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(துரியோதனனின்) ஒற்றர்கள் {சாரர்கள்}, வெற்றியை விரும்பிய பாண்டவர்களால் உண்டாக்கப்பட்ட அந்த உரத்த ஆரவாரத்தைக் கேட்டு, (அதன் காரணத்தைக் குறித்துத் தங்கள் தலைவர்களுக்கு) தகவல் சொன்ன போது, அடியற்ற பெருங்கடலில் மூழ்குபவனைப் போலத் துயரத்தால் இதயம் நிலைகுலைந்து, சோகத்தில் மூழ்கிய ஜெயத்ரதன், மெதுவாக எழுந்து, நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, மன்னர்களின் சபைக்குச் சென்றான்.

மனிதர்களில் தேவர்களான அவர்களின் முன்னிலையில் சிறிது நேரம் சிந்தித்த ஜெயத்ரதன், அபிமன்யுவின் தந்தையின் {அர்ஜுனன்} மீது கொண்ட அச்சத்தால் வெட்கமடைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான், “பாண்டுவின் மண்ணில் {மனைவியிடத்தில்}, ஆசையின் ஆதிக்கத்தின் கீழ் இந்திரனால் பெறப்பட்ட அந்த இழிந்தவன் {அர்ஜுனன்} என்னை யமனுலகுக்கு அனுப்ப நினைக்கிறான். நீங்கள் அருளப்பட்டிருப்பீராக.

எனவே, உயிர் மீது கொண்ட விருப்பத்தால் நான் என் வீட்டுக்குத் திரும்புகிறேன். அல்லது, க்ஷத்திரியரில் காளையரே, உங்கள் ஆயுதங்களின் பலத்தால் என்னைப் பாதுகாப்பீராக. பார்த்தன் {அர்ஜுனன்} என்னைக் கொல்ல முயல்கிறான், வீரர்களே, என்னை அச்சமற்றவனாக்குங்கள். துரோணர், துரியோதனன், கிருபர், கர்ணன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, பாஹ்லீகர், துச்சானன் மற்றும் பிறர், யமனால் பீடிக்கப்பட்டவனையே காக்க இயன்றவர்களாவர். எனினும், பல்குனனால் {அர்ஜுனனால்} மட்டுமே நான் அச்சுறுத்தப்படுகிறேன் எனும்போது, பூமியின் தலைவர்களான இவர்கள் அனைவரும், மற்றும் நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து என்னைக் காக்க இயலாதா?

பாண்டவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்ட பிறகு எனது அச்சம் பெரிதாக இருக்கிறது. பூமியின் தலைவர்களே, மரணத்தின் விளிம்பில் நிற்கும் மனிதர்களைப் போல எனது அங்கங்கள் பலமற்றனவாகின்றன. காண்டீவதாரி {அர்ஜுனன்} என் மரணத்துக்காக உறுதியேற்றிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. இதன்காரணமாகவே பாண்டவர்கள், தாங்கள் அழவேண்டிய இந்நேரத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர். மனித ஆட்சியாளர்களை விட்டுத் தள்ளுங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோர் கூட அர்ஜுனனின் சூளுரையைக் கலங்கடிக்கத் துணியமாட்டார்கள்.

எனவே, மனிதர்களில் காளையரே, அருளப்பட்டிருப்பீராக, (குரு முகாமை விட்டு அகல) எனக்கு அனுமதி அளிப்பீராக. என்னை நான் மறைத்துக் கொள்ள வேண்டுகிறேன். பாண்டவர்களால் இதற்கு மேல் என்னைக் காண முடியாது!” என்றான் {ஜெயத்ரதன்}.

அச்சத்தால் இதயம் நடுங்க இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனிடம், வேறு அனைத்தையும் விடத் தன் சொந்த வேலையைச் செய்து முடிப்பதையே எப்போதும் நோக்கும் துரியோதனன், “ஓ மனிதர்களில் புலியே {ஜெயத்ரதா}, அஞ்சாதே. ஓ! மனிதர்களில் காளையே, இந்த க்ஷத்திரிய வீரர்களுக்கு மத்தியில் இருக்கும் உன்னுடன் போரில் மோத யாரால் முடியும். {துரியோதனனாகிய} நான், விகர்த்தனன் மகன் கர்ணன், சித்திரசேனன், விவிம்சதி, பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், வெல்லப்பட முடியாத விருஷசேனன், புருமித்ரன், ஜயன், போஜன், காம்போஜன், சுதக்ஷிணன், பெரும்பலமுள்ள சத்யவிரதன், விகர்ணன், துர்முகன், துச்சாசனன், சுபாஹு, தன் ஆயுதங்களை உயர்த்தியிருக்கும் கலிங்கர்களின் ஆட்சியாளன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் (சகுனி) ஆகிய இவர்களும், எண்ணற்ற பிற மன்னர்களும் தங்கள் படைகளுடன் அனைத்துப் புறங்களிலும் உன்னைச் சூழ்ந்து கொண்டு போரைச் சந்திக்கின்றனர். எனவே, உனது இதய நோய் அகலட்டும்!

மேலும், நீயே தேர்வீரர்களில் முதன்மையானவனாகவும் இருக்கிறாய். ஓ!அளவிலா காந்தி கொண்டவனே, நீயே வீரனாகவும் இருக்கிறாய். ஓ! சிந்துக்களின் மன்னா {ஜெயத்ரதா}, இப்படிப்பட்ட நீ அச்சத்திற்கான காரணத்தை எவ்வாறு காண முடியும்? எனக்குச் சொந்தமான பதினோரு அக்ஷௌஹணி படைகளும் உன்னைப் பாதுகாப்பதற்காகக் கவனத்துடன் போராடும். எனவே, ஓ! சிந்துக்களின் மன்னா {ஜெயத்ரதா}, அச்சங்கொள்ளாதே. உன் அச்சங்கள் விலகட்டும்” என்றான் {துரியோதனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் {துரியோதனனால்} தேற்றப்பட்ட சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, துரியோதனன் துணையுடன் அன்றிரவே (குரு படைத்தலைவர்) துரோணரிடம் சென்றான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மரியாதையுடன் துரோணரின் கால்களைத் தொட்டுப் பணிவுடன் தன் இருக்கையில் அமர்ந்த அவன் {ஜெயத்ரதன்}, ஆசானிடம் {துரோணரிடம்} இந்த வார்த்தைகளில், “இலக்கை அடித்தல், தொலைவிலிருந்து அஃதை {இலக்கை} அடித்தல், கரங்களின் உறுதி, தாக்குதலின் பலம் ஆகியவற்றில் எனக்கும் பல்குனனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் உள்ள வேறுபாட்டை எனக்குச் சொல்வீராக! ஓ! ஆசானே {துரோணரே}, (ஆயுத அறிவியலில் உள்ள) திறனைப் பொறுத்தவரை எனக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைத் துல்லியமாக நான் அறியவிரும்புகிறேன்! அஃதை என்னிடம் உண்மையாகச் சொல்வீராக!” என்று கேட்டான் {ஜெயத்ரதன்}.

துரோணர் {ஜெயத்ரதனிடம்}, “ஓ! மகனே {ஜெயத்ரதா}, நீ மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் ஒரே அளவு கல்வியையே பயின்றீர்கள். எனினும், யோகம் {அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி} மற்றும் அவன் ஏற்ற கடின வாழ்வு {கடின முயற்சி} ஆகியவற்றின் விளைவால் அவன் உனக்கு மேம்பட்டவனாக இருக்கிறான்! எனினும், எக்காரணத்திற்காகவும் நீ பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} அஞ்சலாகாது. ஓ! மகனே {ஜெயத்ரதா}, இவ்வச்சத்தில் இருந்து நான் உன்னைப் பாதுகாப்பேன் என்பதில் ஐயமில்லை. என் கரங்களால் பாதுகாக்கப்படுபவனைத் தேவர்களே கூடத் தீங்கு செய்ய முடியாது.

பார்த்தனால் {அர்ஜுனனால்} துளைக்க {கடக்க [அ] பிளக்க} முடியாத வியூகம் ஒன்றை நான் அமைக்கப் போகிறேன். எனவே, உன் சொந்த வகையின் {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்றபடி அஞ்சாமல் நீ போரில் ஈடுபடுவாயாக. ஓ! வலிமைமிக்கத் தேர்வீரனே {ஜெயத்ரதா}, உன் தந்தைமார்கள் மற்றும் பாட்டன்மார்களின் வழியில் நீ நடப்பாயாக. வேதங்களை முறையாகக் கற்ற பிறகு நீ விதிப்படி நெருப்பில் காணிக்கைகளைச் செலுத்தியிருக்கிறாய் {அக்னியில் ஹோமம் செய்திருக்கிறாய்}. பல்வேறு வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய். எனவே, மரணம் என்பது உனக்கு அச்சத்தைத் தரும் பொருளாகாது. (ஒரு வேளை நீ இறந்தாலும்) தீய மனிதர்களால் அடைய முடியாத பெரும் நற்பேறைப் பெற்று, கர வலிமையால் ஒருவன் அடையும் சொர்க்கத்திலுள்ள அற்புத உலகங்கள் அனைத்தையும் நீ அடைவாய்.

கௌரவர்கள், பாண்டவர்கள், விருஷ்ணிகள், பிற மனிதர்கள், நான், என் மகன் ஆகியோரும் குறுகிய வாழ்நாளைக் கொண்ட மனிதர்களே. இஃதை எண்ணிப் பார்ப்பாயாக. அனைத்திலும் சக்தி வாய்ந்த காலத்தால், ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்படப் போகும் நாம் அனைவரும், தத்தமது வினையையே {செயற்பலனையே} அடுத்த உலகத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறோம். கடும் நோன்புகளை நோற்று துறவியர் எந்த உலகங்களை அடைவார்களோ, அதே உலகங்களைத் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்றே க்ஷத்திரியர்கள் அடைகிறார்கள்” என்றார் {துரோணர்}.

இவ்வாறே சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} ஆறுதல் சொல்லப்பட்டான். பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்த அச்சத்தை {தன்னிடமிருந்து} வெளியேற்றிய அவன் {ஜெயத்ரதன்}, தன் இதயத்தைப் போரில் நிலைநிறுத்தினான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் பெரும் மகிழ்ச்சியை அடைந்தன. சிங்க முழக்கங்களுடன் கலந்து, இசைக்கருவிகளின் உரத்த ஒலி அங்கே கேட்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.

கிருஷ்ணன் சொன்ன தகவல்! – துரோண பர்வம் பகுதி – 075-ஒற்றர்கள் மூலம் அறிந்த தகவலை கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது; ஜெயத்ரதன் துரியோதனனிடம் பேசியது; துரோணர் அமைக்கப்போகும் வியூகம் குறித்த தகவல்கள் ஆகியவற்றைச் சொன்ன கிருஷ்ணன் மீண்டும் மந்திரிகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்று அர்ஜுனனை முடுக்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பார்த்தன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} மரணத்தைக் குறித்துச் சூளுரைத்த பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} “உன் சகோதரர்களின் சம்மதத்துடன் (மட்டுமே, என்னிடம் ஆலோசியாமல்), “சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வேன்” என்று உறுதியேற்றிருக்கிறாய்! இஃது (உன் தரப்பில்) பெரும் அசட்டைத் துணிவு கொண்ட ஒரு செயலாகும். என்னிடம் ஆலோசியாமலே, நீ பெரும் கனத்தை (உன் தோள்களில்) ஏற்றிருக்கிறாய். ஐயோ, அனைவரின் ஏளனத்தில் இருந்து நாம் எப்படித் தப்பிக்கப் போகிறோம்? [1]நான் திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} முகாமுக்கு சில ஒற்றர்களை அனுப்பிவைத்தேன். அந்த ஒற்றர்கள் விரைவாக என்னிடம் வந்து இந்தத் தகவலை எனக்கு அளித்தனர். அஃதாவது, ஓ! தலைவா {அர்ஜுனா}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} குறித்து நீ உறுதியேற்ற பிறகு, சிங்க முழக்கங்களுடன் கலந்த (நமது) இசைக்கருவிகளின் ஒலி, திருதராஷ்டிரர்களால் கேட்கப்பட்டது.

அந்த ஆரவாரத்தின் விளைவாக, அந்தத் திருதராஷ்டிரர்கள், தங்கள் நலன்விரும்பிகளுடன் கூடி அச்சமடைந்து, “இந்தச் சிங்க முழக்கங்கள் காரணமற்றவையல்ல” என்று நினைத்து (அடுத்தது என்ன நடக்கும் என்று) காத்திருந்தனர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, கௌரவர்களின் யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படைக்கு மத்தியில் இருந்து உரத்த முழக்கங்களைக் கொண்ட ஆரவாரம் எழுந்தது. அவர்களது தேர்களில் இருந்து பயங்கரச் சடசடப்பொலிகளும் கேட்கப்பட்டது. “அபிமன்யுவின் மரணத்தைக் கேட்கும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆழமாகத் துன்புற்றுக் கோபத்தில் இரவிலேயே கூடப் போரிடப் புறப்பட்டு வருவான்” என்று நினைத்து (போருக்குத் தயாராக) அவர்கள் காத்திருந்தனர்.

அப்படி அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கையில், ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, உண்மையில் பிணைப்புள்ள நீ, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல ஏற்றிருக்கும் உறுதியை உண்மையில் அறிந்து கொண்டனர். பிறகு, சுயோதனனின் ஆலோசகர்கள் அனைவரும் உற்சாகமிழந்து சிறு விலங்குகளைப் போல அச்சமுற்றனர்.

மன்னன் ஜெயத்ரதனைப் பொறுத்தவரை, சிந்துக்கள் மற்றும் சௌவீரர்களின் ஆட்சியாளனான அவன், துயரத்தில் மூழ்கி, முற்றிலும் உற்சாகத்தை இழந்து எழுந்து நின்று, தன் ஆலோசகர்கள் அனைவருடன் தன் பாசறைக்குள் நுழைந்தான். ஆலோசனை தேவைப்பட்டு நிற்கும் அந்நேரத்தில், தனக்கு நன்மையைத் தரும் அனைத்துத் தீர்வுகளையும் குறித்து (அவர்களுடன்) கலந்தாலோசித்த பிறகு, (கூட்டணியில் உள்ள) மன்னர்களின் சபைக்குச் சென்று சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

{அவன் ஜெயத்ரதன்}, ”தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனது மகனைக் கொன்றவன் நானே என்று நினைத்து, நாளை என்னுடன் போரில் மோதுவான்! தன் படைக்கு மத்தியில் அவன் {அர்ஜுனன்} என்னைக் கொல்வதாகச் சபதமேற்றிருக்கிறான். தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோரும் கூடச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} அந்த உறுதிமொழியில் அவனைச் சலிப்படையச் செய்யத் துணியமாட்டார்கள். எனவே, நீங்களனைவரும் போரில் என்னைப் பாதுகாக்க வேண்டும். தனஞ்சயன் {அர்ஜுனன்} உங்கள் தலையில் தன் காலை வைத்து இலக்கை {அவனது இலக்கான என்னை} அடிப்பதில் வெல்லாதிருக்கட்டும். இக்காரியம் குறித்து உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அல்லது, ஓ! குருக்களை மகிழ்விப்பவனே {துரியோதனா}, போரில் என்னைக் காப்பதில் நீ வெல்ல முடியாது என நீ நினைத்தால், ஓ! மன்னா {துரியோதனா}, நான் வீட்டுக்குச் செல்ல அனுமதிப்பாயாக” என்றான் {ஜெயத்ரதன்}.

இப்படி (ஜெயத்ரதனால்} சொல்லப்பட்ட சுயோதனன் {துரியோதனன்} உற்சாகமற்றவனாக அமர்ந்து தன் தலையைத் தொங்கப்போட்டான். ஜெயத்ரதன் பெரும் அச்சத்தில் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்ட சுயோதனன் {துரியோதனன்} அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினான். குரு மன்னன் {துரியோதனன்} பெரிதும் துயருறுவதைக் கண்ட சிந்துக்களின் ஆட்சியாளனான மன்னன் ஜெயத்ரதன், தன் நன்மையைக் குறிப்பிட்டு மெதுவாக இந்த வார்த்தைகளைச் சொன்னான், ”பெரும்போரில் அர்ஜுனனின் ஆயுதங்களைத் தன் ஆயுதங்களால் கலங்கடிக்கும் மேன்மையான சக்தி கொண்ட எந்த வில்லாளியையும் நான் இங்கே காணவில்லை. சதக்ரதுவே {இந்திரனே} ஆனாலும், வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டீவ வில்லுடன் நிற்கும் அர்ஜுனன் முன்பு எவனால் நிற்க முடியும்?

முற்காலத்தில், இமயமலையில், உயர்ந்த சக்தியைக் கொண்ட தலைவன் மகேஸ்வரனே {சிவனே} காலாளாக நின்றிருந்த பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதினான் என்று கேள்விப்படுகிறோம். தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} தூண்டப்பட்ட அவன் {அர்ஜுனன்}, தனித்தேரில் சென்று, ஹிரண்யபுரத்தில் வசித்த ஆயிரம் தானவர்களைக் கொன்றான். அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} இப்போது பெரும் மதிநுட்பம் கொண்ட வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} கூட்டுச் சேர்ந்திருக்கிறான். அவன் {அர்ஜுனன்}, தேவர்களுடன் சேர்ந்த இந்த மூவுலகங்களையும் அழிக்கத் தகுந்தவனென நான் நினைக்கிறேன். (போர்க்களத்தை விட்டு என் வீட்டுக்குச் செல்ல) எனக்கு நீ அனுமதியளிக்க வேண்டும், அல்லது உயர் ஆன்ம வீரத் துரோணர் தன் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} சேர்ந்து என்னைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அல்லது, உன் விருப்பத்துக்காக நான் காத்திருப்பேன்” என்றான் {ஜெயத்ரதன்}.

ஓ! அர்ஜுனா, (ஜெயத்ரதனால் இப்படிச் சொல்லப்பட்ட) மன்னன் சுயதோனன் இக்காரியம் குறித்து ஆசானிடம் பணிவுடன் வேண்டினான் [2]. அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்களும், குதிரைகளும் அணிவகுக்கப்பட்டிருக்கின்றன. கர்ணன், பூரிஸ்ரவஸ், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வெல்லப்பட முடியாத விருஷசேனன், கிருபர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆகியோர் முன்னணியில் (ஜெயத்ரதனுக்கு முன்பாக) நிற்பார்கள்.அரைப்பங்கு சகடமும் {தேர்போன்ற வாகனம்}, அரைப்பங்கு தாமரையும் {பத்மும்} கொண்ட வியூகம் ஒன்றை துரோணர் அமைக்கப்போகிறார். அந்தத் தாமரையின் இதழ்களின் நடுவில் சூசிமுக {ஊசி வாய்} வியூகமும் இருக்கும். சிந்துக்களின் ஆட்சியாளனான அந்த ஜெயத்ரதன் அதற்குள் போரில் வெல்லப்பட முடியாத படி கடினமாக வீரர்களால் பாதுகாக்கப்படுவான். வில் (பயன்பாடு), ஆயுதங்கள், ஆற்றல், பலம், குலவழி [3] ஆகியவற்றில் இந்த ஆறு தேர்வீரர்களும் தாங்கிக் கொள்ள மிகக் கடினமானவர்கள் என்பதில் ஐயமில்லை. இந்த ஆறு தேர்வீரர்களையும் முதலில் வீழ்த்தாமல் ஜெயத்ரதனை அடையமுடியாது.ஓ! அர்ஜுனா, அந்த அறுவரில் ஒவ்வொருவரின் ஆற்றலையும் நினைத்துப் பார். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா} அவர்கள் ஒன்றுசேர்ந்து நிற்கும்போது எளிதில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருப்பார்கள். எனவே, நாம், நமது நன்மைக்காகவும், நமது நோக்கத்தில் வெற்றியடைவதற்காகவும், நம் நன்மையை விரும்புபவர்களும், கொள்கைகளை {ஆலோசனைகளை} அறிந்தவர்களுமான ஆலோசகர்களுடன் மீண்டும் ஆலோசிக்க வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்

அர்ஜுனனின் தன்னம்பிக்கை! – துரோண பர்வம் பகுதி – 076-அர்ஜுனன் தன் வல்லமையையும், கிருஷ்ணனின் பெருமையையும், தன் ஆயுதங்களின் சக்தியையும் கிருஷ்ணனுக்கு எடுத்துச் சொன்னது

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “நீ பலமாகக் கருதும் திருதராஷ்டிரப் படையின் இந்த ஆறு தேர்வீரர்களின் (ஒன்றுபட்ட) சக்தியும் என் சக்தியின் பாதி அளவுக்கும் இணையாகாது என்றே நான் நினைக்கிறேன்! ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, ஜெயத்ரதனைக் கொல்ல அவர்களை எதிர்த்து நான் செல்லும்போது, அவர்கள் அனைவரின் ஆயுதங்களும் என்னால் வெட்டப்பட்டுக் கலங்கடிக்கப் படுவதை நீ காண்பாய்!

துரோணரும், இந்த மனிதர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} தலையை நான் பூமியில் வீழ்த்துவதைக் கண்டு அவர்கள் புலம்பப் போகிறார்கள். சித்தர்கள், ருத்ரர்கள், வசுக்கள், அசுவினிகள், இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட மருத்துக்கள், பிற தேவர்களுடன் கூடிய விஸ்வதேவர்கள், பிதுர்கள், கந்தர்வர்கள், கருடன், பெருங்கடல், மலைகள், ஆகாயம், சொர்க்கம், பூமி, (முக்கிய மற்றும் துணைத்) திசைகள், அவற்றின் ஆட்சியாளர்கள் {திக்பாலர்கள்}, வீட்டு மற்றும் காட்டு உயிரினங்கள் அனைத்தும், உண்மையில், அசைவன, அசையாதன ஆகிய அனைவரும் சேர்ந்து சிந்துக்களின் ஆட்சியாளனைப் {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தாலும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நாளைய போரில் என் கணைகளால் ஜெயத்ரதன் கொல்லப்படுவதை நீ காண்பாய்!

ஓ! கிருஷ்ணா, உண்மையின் பெயரால் நான் உறுதிகூறுகிறேன், ஓ! கேசவா {கிருஷ்ணா}, இழிந்த பாவியான ஜெயத்ரதனின் பாதுகாவலராக இருக்கும் அந்த வலிமைமிக்க வில்லாளியான துரோணருடன் தொடக்கத்திலேயே மோதுவேன் என்று சொல்லி என் ஆயுதங்களைத் தொடுகிறேன் ({ஆயுதங்களைத்} தொட்டு அவற்றின் பெயரால் உறுதிகூறுகிறேன்). இந்த ஆட்டம் (போர்) துரோணரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனச் சுயோதனன் {துரியோதனன்} நினைக்கிறான். எனவே, துரோணரால் வழிநடத்தப்படும் படையின் முகப்பைத் துளைத்துச் சென்று நான் ஜெயத்ரதனை அடைவேன்!

இடியால் {வஜ்ரத்தால்} பிளக்கப்படும் மலை முகட்டைப் போல, மிக வலிமைமிக்க வில்லாளியான அவர் {துரோணர்}, போரில் கடும் சக்தி கொண்ட என் கணைகளின் மூலம் என்னால் பிளக்கப்படுவதை நாளை நீ காண்பாய். கூரிய கணைகள் தங்கள் மேல் பாய்ந்து, அதனால் பிளக்கப்பட்டு வீழ்ந்த மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் மார்புகளில் இருந்து குருதி (தாரைத்தாரையாகப்) பாயும்! மனம் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்ட காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உயிர்கள் ஆயிரக்கணக்கில் பறிக்கப்படும்!

நாளைய போரில், யமன், குபேரன், வருணன், இந்திரன் மற்றும் ருத்ரன் ஆகியோரிடம் நான் பெற்ற ஆயுதங்களை மனிதர்கள் காண்பார்கள். நாளைய போரில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாக்க வருவோர் அனைவரின் ஆயுதங்களும் என்னுடைய பிரம்ம ஆயுதத்தால் கலங்கடிக்கப்படுவதை நீ காண்பாய்! நாளைய போரில், ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் கணைகளின் சக்தியால் வெட்டப்பட்டு விழும் மன்னர்களின் தலைகள் இந்தப் பூமியில் விரவிக் கிடப்பதை நீ காண்பாய்! எதிரியை முறியடித்து, என் நண்பர்களுக்கு மகிழ்வூட்டி, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதரனை} நசுக்கி, ஊனுண்ணிகள் அனைவரையும் (நாளை) நான் மனம்நிறையச் செய்வேன்!

பெரும் குற்றவாளியும், ஓர் உறவினனைப் போல நடந்து கொள்ளாதவனும், பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவனுமான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} என்னால் கொல்லப்பட்டுத் தன் உறவினர்களைத் துக்கமடையச் செய்யப் போகிறான். பாவகர நடத்தை கொண்டவனும், அனைத்து வசதிகளுடனும் வளர்க்கப்பட்டவனுமான அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, என் கணைகளால் துளைக்கப்படுவதை நீ காண்பாய்! நாளை, ஓ! கிருஷ்ணா, எனக்கு நிகரான வில்லாளி எவனும் இந்தப் பூமியில் இல்லை என்று சுயோதனனை {துரியோதனனை} நான் சிந்திக்க வைக்கப் போகிறேன்.

தெய்வீக வில்லாகும் {இந்த} என் காண்டீவம்! போர்வீரன் நானே! ஓ! மனிதர்களில் காளையே, ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, தேரோட்டி நீயே! {அப்படியிருக்க} என்னால் எதைத்தான் வீழ்த்த முடியாது? ஓ! புனிதமானவனே {கிருஷ்ணா} உன் அருளால், போரில் நான் அடைய முடியாததுதான் எது? ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, என் ஆற்றல் தடுக்கப்பட முடியாதது என அறிந்தும், ஏன் என்னை நீ நிந்திக்கிறாய்? சோமத்தில் எப்போதும் லக்ஷ்மி இருப்பதைப் போல, பெருங்கடலில் எப்போதும் நீர் இருப்பதைப் போல, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா} என் சபதம் எப்போதும் சாதனையில் இருக்கும் என்பதையும் அறிவாயாக!

என் ஆயுதங்களை எளிதாக எண்ணாதே! உறுதியான என் வில்லை எளிதாக எண்ணாதே! என் கரங்களின் வலிமையை எளிதாக எண்ணாதே! தனஞ்சயனை {அர்ஜுனன் ஆகிய என்னை} எளிதானவனாக {எண்ணவே} எண்ணாதே! நான் உண்மையில் வெல்வேன், தோற்கமாட்டேன் எனும் அத்தகு வழியிலேயே நான் போரிடச் செல்வேன். நான் உறுதியேற்றேன் என்றதும், போரில் அந்த ஜெயத்ரதன் ஏற்கனவே கொல்லப்பட்டதாகவே அறிவாயாக!

உண்மையில், பிராமணனிடத்தில் உண்மை இருக்கிறது; உண்மையில், அறவோரிடம் பணிவு இருக்கிறது; உண்மையில், வேள்வியிலேயே செழிப்பு இருக்கிறது; உண்மையில், நாராயணனிடமே வெற்றியும் இருக்கிறது” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “வசுதேவர் மகனான ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தனக்குத் தானே அதைச் சொல்லிக் கொண்ட அர்ஜுனன், ஆழ்ந்த குரலில் மீண்டும் ஒருமுறை தலைவன் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினான், “ஓ! கிருஷ்ணா, கையில் இருக்கும் காரியம் பயங்கரமானது. ஆகையால் இந்த இரவு விடிவதற்குள், என் தேர் நல்ல தயார் நிலையில் இருக்குமடி செய்வாயாக” {என்றான் அர்ஜுனன்}.

சுபத்திரைக்கு ஆறுதல் கூறிய கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 077-அர்ஜுனனும், கிருஷ்ணனும் கோபமாக இருப்பதை நினைத்துக் கவலையடைந்த தேவர்கள்; கௌரவர்களுக்குத் தெரிந்த தீய சகுனங்கள்; சுபத்திரைக்கு ஆறுதலளிக்கக் கிருஷ்ணனை அனுப்பிய அர்ஜுனன்; கிருஷ்ணனின் ஆறுதல் வார்த்தைகள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும், கவலை மற்றும் துயரத்தால் பீடிக்கப்பட்டு, இரு பாம்புகளென அடிக்கடி பெருமூச்சைவிட்டுக் கொண்டே இரவில் தூங்காதிருந்தனர். நரன் மற்றும் நாராயணன் ஆகிய அந்த இருவரும் சினத்தில் இருப்பதை அறிந்த தேவர்களும், வாசவனும் {இந்திரனும்} “என்ன ஆகப்போகிறதோ?” என்றெண்ணி மிகவும் கவலையடைந்தனர்.

வறண்ட காற்று ஆபத்தை முன்னறிவித்தபடியே கடுமையாக வீசத் தொடங்கியது. சூரிய வட்டிலில் தலையற்ற முண்டமும், கதாயுதமும் {பரிகமும்} தோன்றின. மேகமற்றிருந்தாலும், மின்னலின் கீற்றுகளோடு கலந்த உரத்த இடிமுழக்கங்கள் அடிக்கடி கேட்கப்பட்டன. மலைகள், நீர்நிலைகள் மற்றும் காடுகளுடன் கூடிய பூமாதேவி குலுங்கினாள். மகரங்களின் வசிப்பிடமான கடல்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} கொந்தளித்துப் பெருகியது. வழக்கமாக ஓடும் திசைக்கு எதிராக ஆறுகள் பாய்ந்தன. தேர்வீரர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் கீழ் உதடுகளும், மேல் உதடுகளும் துடிக்கத் தொடங்கின. மனித ஊனுண்ணிகளை மகிழ்ச்சிப்படுத்தும்படியும், யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோர் பெருமளவில் அதிகரிக்கப் போவதை முன்னறிவித்தபடியும், விலங்குகள் (போர்க்களத்தில்) மலமும் சிறுநீரும் கழித்தவாறே துன்பத்துடன் உரக்கக் கதறின. மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்த செய்யும் இந்தக் கடும் சகுனங்களைக் கண்டும், வலிமைமிக்க அர்ஜுனனின் கடும் சபதத்தைக் கேட்டும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} உமது வீரர்கள் அனைவரும் மிகவும் கலக்கமடைந்தனர்.

அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாகசாசனனின் {இந்திரன்} மகன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம், “தன் மருமகளோடு {உத்தரையோடு} இருக்கும் உன் தங்கை சுபத்திரையைத் தேற்றச் செல்வாயாக. ஓ! மாதவா {கிருஷ்ணா} மருமகளையும் {உத்தரையையும்}, அவளது தோழிகளையும் தேற்றுவாயாக. ஓ! தலைவா {கிருஷ்ணா}, உண்மை நிறைந்த ஆறுதல் வார்த்தைகளால் அவர்களைத் தேற்றுவாயாக” என்றான் {அர்ஜுனன்}. இப்படிச் சொல்லப்பட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} உற்சாகமற்ற இதயத்தோடு அர்ஜுனன் வசிப்பிடத்திற்குச் சென்று, தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் ஏற்பட்ட துயரால் பீடிக்கப்பட்டுக் கவலையில் இருந்த தன் தங்கையைத் {சுபத்திரையைத்} தேற்றத் தொடங்கினான்.

வாசுதேவன் {கிருஷ்ணன் சுபத்திரையிடம்}, ”ஓ! விருஷ்ணி குலத்துப் பெண்ணே {சுபத்திரையே}, உனது மருமகளுடன் {உத்தரையுடன்} சேர்ந்து உன் மகனுக்காகத் {அபிமன்யுவிற்காகத்} துயரப்படாதே. ஓ! மருண்டவளே, அனைத்து உயிரினங்களுக்கும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு. பெருமைமிக்கப் பரம்பரையில் பிறந்த வீரனுக்கு, அதிலும் குறிப்பாக க்ஷத்திரியனுக்கு உரிய முடிவையே உன் மகன் அடைந்திருக்கிறான். எனவே நீ வருந்தாதே. பெரும் விவேகமும், தன் தந்தைக்கு இணையான ஆற்றலையும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, க்ஷத்திரிய வழக்கத்தின்படியே, வீரர்கள் ஆசைப்படும் ஒரு முடிவை அடைந்திருப்பது நற்பேறாலேயே.

எண்ணற்ற எதிரிகளை வீழ்த்தி, அவர்களை யமனின் முன்னிலைக்கு அனுப்பி வைத்த அவன் {அபிமன்யு}, அனைத்து விருப்பங்களையும் அருள்பவையும், அறவோருக்கு உரியவையுமான நித்தியமான உலகங்களை அடைந்திருக்கிறான். தவம், பிரம்மச்சரியம், சாத்திர அறிவு, ஞானம் ஆகியவற்றால் அறவோர் அடையும் முடிவையே உன் மகனும் அடைந்திருக்கிறான். வீரனின் தாயும், வீரனின் மனைவியும், வீரனின் மகளும், வீரர்களுக்கு உறவினருமான நீ, ஓ! இனியவளே {சுபத்திரையே}, உயர்ந்த முடிவை அடைந்திருக்கும் உன் மகனுக்காக {அபிமன்யுவிற்காக} வருந்தலாகாது.

ஓ! அழகான பெண்ணே, ஒரு குழந்தையைக் கொன்றவனும், பாவகரக் காரியத்தைச் செய்தவனுமான அந்தச் சிந்துக்களின் இழிந்த ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, இந்த இரவு கடந்ததும், தன் நண்பர்கள் மற்றும் உறவினருடன் சேர்ந்து தன் வெறியின் கனியை அடையப்போகிறான். அவன் {ஜெயத்ரதன்}, இந்திரனின் வசிப்பிடத்திற்கே சென்றாலும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களில் இருந்து தப்ப மாட்டான். அந்தச் சிந்துவின் {சைந்தவனின்} தலை அவனது உடலில் இருந்து வெட்டப்பட்டுச் சமந்தபஞ்சகத்திற்கு {குருசேத்திரத்திற்கு} வெளியே உருண்டது என்பதை நாளை நீ கேட்பாய்! உன் கவலையை விடுவாயாக; வருந்தாதே.

க்ஷத்திரியன் ஒருவனின் கடமைகளைத் தன் முன் கொண்ட உன் வீர மகன் {அபிமன்யு}, ஆயுதம் தாங்குவதைத் தொழிலாகக் கொண்ட பிறரும், அறவோரும் அடையும் முடிவையே {கதியையே} அடைந்திருக்கிறான். ஓ! அழகான பெண்ணே, அகன்ற மார்பு மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பின்வாங்காதவனும், தேர்வீரர்களை நசுக்குபவனுமான உன் மகன் {அபிமன்யு} சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறான். (உன் இதயத்திலிருந்து) இந்நோயை விரட்டுவாயாக.

தன் தந்தைமார், தாய்வழி உறவினர், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆகியோருக்கு கீழ்ப்படிந்த அந்த வீரன் {அபிமன்யு}, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்ற பிறகே மரணத்துக்கு இரையானான். ஓ! ராணி {சுபத்திரையே}, உன் மருமகளை {உத்தரையைத்} தேற்றுவாயாக. ஓ! க்ஷத்திரியப் பெண்ணே, அதிகமாக வருந்தாதே. ஓ! மகளே {தங்கை சுபத்திரையே}, நாளை நீ இனிய செய்தியைக் கேட்கவிருப்பதால் உன் துயரை விரட்டுவாயாக.

பார்த்தன் {அர்ஜுனன்} ஏற்ற உறுதிமொழி {சபதம்} சாதிக்கப்பட வேண்டும். அது வேறுவகையிலாகாது. உன் கணவன் {அர்ஜுனன்} செய்ய முயன்றது எதுவும் சாதிக்கப்படாமல் நீண்டதில்லை. மனிதர்கள் அனைவரும், பாம்புகள், பிசாசங்கள், இரவுலாவிகள் அனைவரும், பறவைகள், தேவர்கள் அனைவரும், அசுரர்கள் ஆகியோரும் போர்க்களத்தில் சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு {ஜெயத்ரதனுக்கு} உதவினாலும் கூட, அவன் {ஜெயத்ரதன்} நாளை இருக்கமாட்டான்” என்றான் {கிருஷ்ணன்}.

சுபத்திரையின் புலம்பல்! – துரோண பர்வம் பகுதி – 078-கிருஷ்ணனின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டுப் புலம்பத் தொடங்கிய சுபத்திரை; சுபத்திரை, திரௌபதி, உத்தரை ஆகியோர் அழுது புலம்பி மயங்கி விழுந்தது; நீர் தெளித்து அவர்களின் மயக்கத்தைத் தெளிவித்த கிருஷ்ணன் மீண்டும் அர்ஜுனனிடம் வந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட சுபத்திரை, தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கினாள்: “ஓ! பேறற்றவளான என் மகனே, ஓ! உன் தந்தைக்கு {அர்ஜுனனுக்கு} இணையான ஆற்றல் கொண்டவனே, ஓ! குழந்தாய் {அபிமன்யு}, போருக்குச் சென்ற நீ எவ்வாறு அழிந்தாய்? ஓ! குழந்தாய் {அபிமன்யு}, அழகான பற்கள் மற்றும் சிறந்த கண்களால் அருளப்பட்டதும், நீலத் தாமரைக்கு {கருநெய்தலுக்கு} [1] ஒப்பானதுமான உன் முகம், ஐயோ, போர்க்களத்தின் புழுதியால் மறைக்கப்பட்டு இப்போது எவ்வாறு காணப்படும்?ஐயமில்லாத துணிவுடன் புறமுதுகிடாத உன்னை, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தலை, கழுத்து, கரங்கள், மார்பு, அடிவயிறு மற்றும் அங்கங்களுடன் களத்தில் விழுந்த உன்னை, அழகிய கண்களைக் கொண்ட உன்னை, ஆயுதக் காயங்களுடன் சிதைந்து போயிருக்கும் உன்னை உதிக்கும் சந்திரனைப் போலவே அனைத்து உயிரினங்களும் காண்கின்றன. ஐயோ, விலையுயர்ந்த மிக வெண்மையான படுக்கையில் கிடப்பவனான நீ, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுந்தவனான நீ, ஐயோ, கணைகளால் துளைக்கப்பட்ட உன் உடலுடன் வெறும் பூமியில் {தரையில்} எவ்வாறு இன்று உறங்குகிறாய்?

முன்னர், அழகிகளில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்ட வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {அபிமன்யு}, ஐயோ, போர்க்களத்தில் விழுந்து, நரிகளின் துணையுடன் தன் காலத்தை எவ்வாறு கழிக்கிறான்? முன்னர், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோரால் பாடிப் புகழப்பட்டவன், ஐயோ, கோரமாக ஊளையிடும் ஊனுண்ணும் விலங்குகளால் இன்று வரவேற்கப்படுவானே. ஓ! தலைவா {அபிமன்யு}, பாண்டவர்களையும், பாஞ்சாலர்கள் அனைவரையும் உன் பாதுகாவலர்களாகக் கொண்டும், ஐயோ, ஆதரவற்ற நிலையில் நீ யாரால் கொல்லப்பட்டாய்?

ஓ! மகனே, ஓ! பாவமற்றவனே {அபிமன்யு}, உன்னைக் கண்டு நான் இன்னும் நிறைவு கொள்ளவில்லையே. பேறற்றவளான நான் யமனின் வசிப்பிடத்திற்குச் செல்வேன் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. பெரிய கண்கள் மற்றும் அழகிய குழல்களைக் கொண்டதும், இனிய வார்த்தைகள், களிப்புமிக்க நறுமணம் ஆகியவற்றை வெளியிடுவதுமான பருக்களற்ற உன் மிருதுவான முகத்தை என் கண்களால் மீண்டும் எப்போது நான் காணப் போகிறேன்? பீமசேனரின் பலத்திற்கும், பார்த்தரின் {அர்ஜுனரின்} வில்வித்தகத்திற்கும், விருஷ்ணி வீரர்களின் ஆற்றலுக்கும், பாஞ்சாலர்களின் பலத்திற்கும் ஜயோ {இஃது இழிவே}! ஓ! வீரா {அபிமன்யு}, போரில் ஈடுபடுகையில் உன்னைப் பாதுகாக்க இயலாத கைகேயர்கள், சேதிகள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும் ஐயோ {இஃது இழிவே}!

நான் இந்தப் பூமியை வெறுமையானதாகவும், உற்சாகமற்றதாகவும் இன்று காண்கிறேன். என் அபிமன்யுவைக் காணாது என் கண்கள் துயரால் அல்லலுறுகின்றன. நீ வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை {சுபத்திரையின்} மகனும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} மகனும், வீரனும், அதிரதனும் ஆவாய். ஐயோ, கொல்லப்பட்ட உன்னை நான் எவ்வாறு காண்பேன்? ஐயோ ஓ! வீரா {அபிமன்யு}, கனவில் காணப்பட்ட பொக்கிஷமாகத் தோன்றி மறைந்தாயே. மனிதரைச் சேர்ந்த அனைத்தும் நீர்க்குமிழியைப் போல நிலையற்றனவே.

உனக்கு நேர்ந்த தீங்கால் இந்த உன் இளம் மனைவி {உத்தரை} துயரில் மூழ்கியிருக்கிறாள். ஐயோ, கன்றில்லா பசுவைப் போல இருக்கும் அவளை நான் எவ்வாறு தேற்றுவேன்? ஐயோ, ஓ! மகனே {அபிமன்யு}, உன்னைக் காண ஏங்கி, பெருமையின் கனியைத் தாங்கப் போகும் சமயத்தில், குறித்த காலத்திற்கு முன்பே என்னிடம் இருந்து சென்றுவிட்டாயே. கேசவரை {கிருஷ்ணரை} உன் பாதுகாவலராகக் கொண்டும், ஆதரவற்றவனைப் போல நீ கொல்லப்பட்டதால், ஞானியராலும் யமனின் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதில் ஐயமில்லை.

ஓ! மகனே {அபிமன்யு}, வேள்விகள் செய்வோர், தூய்மையடைந்த ஆன்மா கொண்ட பிராமணர்கள், பிரம்மச்சரியம் பயின்றோர், புனித நீர்நிலைகளில் நீராடியோர், நன்றிமிக்கோர், தொண்டாற்றுவோர், தங்கள் ஆசான்களுக்குச் சேவை செய்யத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோர், அபரிமிதமான வேள்விக் கொடை அளித்தோர் ஆகியோரின் உலகங்கள் உனதாகட்டும்.

போரிடுகையில் துணிச்சலுடன் புறமுதுகிடாதவர்கள், தங்கள் எதிரிகளைக் கொன்றுவிட்டுப் போரில் வீழ்ந்தவர்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை {கதியை} நீயும் அடைவாயாக.

ஆயிரம் பசுக்களைத் தானமளித்தவர்கள், வேள்விகளில் தானமளித்தவர்கள், தகுந்தோருக்கு வீடுகள் மற்றும் மாளிகைகளைத் தானமளித்தவர்கள் ஆகியோர் எந்த மங்கல முடிவை அடைவார்களோ, ரத்தினங்களையும், நகைகளையும் தகுந்த பிராமணர்களுக்குத் தானமளித்தோர், குற்றவாளிகளைத் தண்டிப்போர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

பிரம்மச்சரியத்துடன் கடும் நோன்புகளை நோற்ற முனிவர்கள், ஒரே கணவனுடன் வாழ்ந்த பெண்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, நன்னடத்தைக் கொண்ட மன்னர்கள், கடமைகளை முறையாக நோற்று, ஒன்றன்பின் ஒன்றாக வாழ்வின் நான்கு நிலைகளையும் வாழ்ந்தவர்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, ஏழைகளிடமும், துயருற்றோரிடமும் கருணை கொண்டோர், தங்களிடமும், தங்களை அண்டியிருப்போரிடமும் எந்தப் பாகுபாடுமின்றிச் சமமாக இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வோர், வஞ்சகம் மற்றும் கொடுமை ஆகியவற்றை எப்போதும் செய்யாதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, நோன்புகள் நோற்பவர்கள், அறம் சார்ந்தோர், ஆசான்களின் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோர், விருந்தோம்பாமல் எவ்விருந்தினரையும் அனுப்பாதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, துன்பத்திலும், மிகக் கடுமையான இக்கட்டான சூழல்களிலும் துன்பத்தீயில் எவ்வளவு அதிகமாக எரிக்கப்பட்டாலும், தங்கள் ஆன்மாக்களின் சமநிலையை {மன அமைதியை} இழக்காதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ மகனே {அபிமன்யு}, தங்கள் தந்தைமார், தாய்மார் மற்றும் பிறரின் சேவைக்கு எப்போதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோர், தங்கள் மனைவியரிடம் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, பிறர் மனைவியரிடம் தங்களைத் தாங்களே தடுத்துக் கொள்வோர், பருவ காலங்களில் தங்கள் மனைவியரிடம் மட்டும் தோழமையை நாடுவோர் ஆகிய ஞானியர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, அனைத்து உயிரினங்களையும் சமாதானக் கண்ணுடன் நோக்குவோர், பிறருக்கு எப்போதும் துன்பத்தை அளிக்காதோர், எப்போதும் மன்னிப்போர் {பொறுமையுடன் இருப்போர்} ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.

ஓ! மகனே {அபிமன்யு}, தேன், இறைச்சி, மது, செருக்கு, பொய்மை ஆகியவற்றில் இருந்து விலகியிருப்போர், பிறருக்குத் துன்பம் தருவதைத் தவிர்ப்போர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை {கதியை} நீயும் அடைவாயாக.

அடக்கமுடையோர், அனைத்து சாத்திரங்களின் அறிவு கொண்டோர், அறிவில் நிறைவு கொண்டோர், ஆசைகளைக் கட்டுக்குள் வைத்தோர் ஆகியோர் அடையும் இலக்கை நீயும் அடைவாயாக” என்றாள் {சுபத்திரை}.

{இப்படி சுபத்திரை} துயரத்தில் பீடிக்கப்பட்டு இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாஞ்சால இளவரசி (திரௌபதி), விராடன் மகளுடன் {உத்தரையுடன்} உற்சாகமற்ற  அந்தச் சுபத்திரையிடம் வந்தாள். பெரும் துன்பத்தால் அவர்கள் அனைவரும், இதயத்தைப் பிளக்கும் புலம்பல்களில் ஈடுபட்டு அதிகமாக அழுதனர். சோகத்தால் நினைவிழந்த மனிதர்களைப் போல, அவர்கள் அனைவரும் மயங்கிப் பூமியில் விழுந்தனர்.

நீருடன் தயாராக நின்ற கிருஷ்ணன், இதயம் துளைக்கப்பட்டவளும், அழுது, சுயநினைவை இழந்து, நடுங்கிக் கொண்டிருந்தவளுமான தன் தங்கையின் {சுபத்திரையின்} மேல் நீரைத் தெளித்து, ஆழமாகத் துன்புற்று, அத்தகு சந்தர்ப்பத்தில் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னான். அந்தத் தாமரைக் கண்ணன் {கிருஷ்ணன்}, “ஓ! சுபத்திரையே, துன்புறாதே! ஓ! பாஞ்சாலி {திரௌபதியே}, உத்தரையைத் தேற்றுவாயாக! க்ஷத்திரியரில் காளையான அபிமன்யு மெச்சத்தகுந்த இலக்கையே அடைந்திருக்கிறான்.

ஓ! அழகிய முகம் கொண்டவளே {சுபத்திரையே}, பெரும்புகழ் கொண்ட அபிமன்யு அடைந்த இலக்கையே நம் குலத்தில் உயிருடன் இருப்போர் அனைவரும் அடையட்டும். ஓ! பெண்ணே {சுபத்திரையே}, எவருடைய உதவியுமில்லாமல் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு} அடைந்த சாதனையையே, எங்கள் நண்பர்களுடன் சேர்ந்த நாங்கள் அனைவரும் இந்தப் போரில் அடைய விரும்புகிறோம்” என்றான் {கிருஷ்ணன்}.

தன் தங்கையையும் {சுபத்திரையையும்}, திரௌபதியையும், உத்தரையையும் இப்படித் தேற்றிய பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த வலிமைமிக்கக் கரத்தைக் கொண்டோன் (கிருஷ்ணன்} பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} சென்றான். அப்போது, கிருஷ்ணன், அங்கிருந்த மன்னர்கள், நண்பர்கள் மற்றும் அர்ஜுனனை வணங்கியபடியே (பின்னவனின் {அர்ஜுனனின்}) அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். பிறகு அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்” {என்றான் சஞ்சயன்}.

தாருகனிடம் பேசிய கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 079-அர்ஜுனனின் படுக்கையைத் தயாரித்து, சிவனுக்கான அவனது இரவுப்பலியை முடிக்கச் செய்த கிருஷ்ணன்; நடு இரவில் தாருகனிடம் பேசிய கிருஷ்ணன்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, தாமரையின் இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனின் ஒப்பற்ற மாளிகைக்குள் நுழைந்து நீரைத் தொட்டு {ஆசமனம் செய்து} [1], மங்கலகரமான சம தரையில், வைடூரியத்திற்கு ஒப்பான குச {தர்ப்பைப்} புற்களைப் படுக்கையாகப் பரப்பினான். அந்தப் படுக்கையைச் சுற்றிலும் சிறந்த ஆயுதங்களை வைத்த அவன் {கிருஷ்ணன்}, மேலும் அதை மலர்மாலைகள், அவல் {fried paddy}, நறுமணத் திரவியங்கள், பிற மங்கலப் பொருட்கள் ஆகியவற்றால் முறையாக அலங்கரித்தான். பார்த்தனும் நீரைத் தொட்ட {ஆசமனம் செய்த} [1] பிறகு, அமைதியும், பணிவும் கொண்ட பணியாட்கள் முக்கண்ணனுக்கு (மஹாதேவனுக்கு) உரிய வழக்கமான இரவு பலியைக் கொண்டு வந்தனர். அப்போது, மகிழ்ச்சியான ஆன்மா கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, நறுமணப்பொருட்களை மாதவன் {கிருஷ்ணன்} மேல் பூசி, மலர் மாலைகளால் அலங்கரித்து, மகாதேவனுக்கு இரவுப்பலியைச் செய்தான் [2]. பிறகு, கோவிந்தன் {கிருஷ்ணன்} மங்கிய புன்னகையுடன் பார்த்தனிடம், “நீ அருளப்பட்டிருப்பாயாக, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, படுத்துக் கொள்வாயாக, நான் உன்னிடம் விடைபெறுகிறேன்” என்றான். பிறகு நன்கு ஆயுதம் தரித்த வாயில் காப்போரையும், காவலாளிகளையும் நிறுத்திய அந்த அருளப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்} (தன் தேரோட்டியான) தாருகன் பின் தொடரத் தன் பாசறைக்குச் சென்றான்.

வெண்படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களைக் குறித்து ஆலோசித்தான். பிறகு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் (கேசவன்), (பார்த்தனின்) துயரையும், கவலையையும் களைவதற்காகவும், அவனது {அர்ஜுனனின்} ஆற்றலையும் காந்தியையும் அதிகரிப்பதற்காகவும் பல்வேறு வழிகளைக் குறித்துப் பார்த்தனுக்காக {அர்ஜுனனுக்காகச்} சிந்தித்தான். யோகத்தில் பொதிந்த ஆன்மா கொண்டவனும், அனைவரின் உயர்ந்த தலைவனும், பரந்த புகழைக் கொண்டவனும், ஜிஷ்ணுவுக்கு {அர்ஜுனனுக்கு} ஏற்புடையதையே எப்போதும் செய்பவனுமான அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, (அர்ஜுனனுக்கு) நன்மை செய்ய விரும்பி, யோகத்திலும், தியானத்திலும் லயித்தான்.

பாண்டவ முகாமில் அவ்விரவில் உறங்கியவர் எவரும் இல்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விழிப்புணர்வே அனைவரையும் ஆட்கொண்டது. (பாண்டவ முகாமில்) அனைவரும் இதையே சிந்தித்தனர், “தன் மகனின் மரணத்தால் துயரில் எரியும் உயர் ஆன்ம காண்டீவதாரி {அர்ஜுனன்}, சிந்துவை {ஜெயத்ரதனைக்} கொல்வதாகத் திடீரென உறுதிமொழி ஏற்றுவிட்டான். உண்மையில், பகைவீரர்களைக் கொல்பவனும், வாசவனின் {அர்ஜுனனின்} மகனும், வலிமைமிக்க வீரனுமான அவன் எவ்வாறு தனது உறுதி மொழியைச் சாதிக்கப் போகிறான்? உயர் ஆன்மப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} உண்மையில் மிகக் கடினமான தீர்மானத்தை எடுத்திருக்கிறான்.

மன்னன் ஜெயத்ரதன் வலிமையும் சக்தியும் கொண்டவனாவான். ஓ!, அர்ஜுனன் தன் உறுதி மொழியை நிறைவேற்றுவதில் வெல்லட்டும். தன் மகனின் {அபிமன்யுவின்} நிமித்தமாகத் துயரில் பீடிக்கப்பட்ட அவன் {அர்ஜுனன்}, அந்தக் கடின உறுதிமொழியை ஏற்றுவிட்டான். துரியோதனனின் தம்பியர் அனைவரும் பெரும் ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவனது படைகளும் எண்ணற்றவையாக இருக்கின்றன. திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, இவர்கள் அனைவரையும் ஜெயத்ரதனுக்கு (அவனது பாதுகாவலர்களாக) ஒதுக்கியிருக்கிறான். ஓ!, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்று, தனஞ்சயன் {அர்ஜுனன்} (முகாமுக்குத்) திரும்பட்டும். தன் எதிரிகளை வீழ்த்தி அர்ஜுனன் தனது உறுதிமொழியைச் சாதிக்கட்டும்.

நாளை சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதில் அவன் {அர்ஜுனன்} தோற்றால், சுடர்மிகும் நெருப்புக்குள் நிச்சயம் அவன் நுழைவான். பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் உறுதிமொழியைப் பொய்யாக்க மாட்டான். அர்ஜுனன் இறந்தால், தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு தன் நாட்டை மீட்பான்? உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் (யுதிஷ்டிரன்), (தன் நம்பிக்கைகள் அனைத்திலும்) அர்ஜுனனின் வெற்றியையே சார்ந்திருக்கிறான். நாம் ஏதாவது (அறத்) தகுதியை அடைந்திருந்தால், நாம் நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக எப்போதாவது ஊற்றியிருந்தால், அவற்றின் கனிகளின் துணையோடு சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் எதிரிகளை அனைவரையும் வீழ்த்தட்டும்” {என்றே பாண்டவ முகாமில் உள்ள அனைவரும் சிந்தித்தனர்}. ஓ! தலைவா, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} இவ்வாறு (நாளைய) வெற்றி குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே அவர்களது நீண்ட இரவு கடந்து போனது.

நடு இரவில் விழித்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பார்த்தனின் {அர்ஜுனனின்} உறுதிமொழியை நினைவுகூர்ந்து, (தன் தேரோட்டியான) தாருகனிடம், “அர்ஜுனன், தன் மகனின் மரணத்தால் ஏற்பட்ட துயரால் உறுதிமொழி செய்தான். இதைக் கேட்ட துரியோதனன், பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வாறு தன் நோக்கத்தை அடைவதில் தோல்வியுறுவான் என்று தன் அமைச்சர்களிடம் நிச்சயம் ஆலோசித்திருப்பான். அவனது {துரியோதனனின்} பல அக்ஷௌஹிணி துருப்புகள் ஜெயத்ரதனைப் பாதுகாக்கும். ஆயுதங்கள் அனைத்தையும் ஏவும் வழிகளை முழுமையாக அறிந்த துரோணரும், அவரது மகனும் {அஸ்வத்தாமனும்} அவனைப் {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பார்கள். ஒப்பற்ற வீரனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்களின் செருக்கை அழித்தவனுமான ஆயிரம் கண்ணனே {இந்திரனே} கூட, போரில் துரோணரால் பாதுகாக்கப்படும் ஒருவனைக் கொல்லத் துணியமாட்டான்.

எனவே, குந்தியின் மகனான அர்ஜுனன், சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைக் கொல்ல என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் செய்வேன். என் மனைவியர், என் சொந்தங்கள், என் உறவினர்கள் ஆகியோரிலும் கூட அர்ஜுனனை விட மிகுந்த அன்புக்குரியவர் எவருமில்லை. ஓ! தாருகா, அர்ஜுனன் இல்லாத பூமியில் ஒரு கணமும் நான் என் கண்களைச் செலுத்த மாட்டேன். பூமி அர்ஜுனன் அற்றதாகாது என நான் உனக்குச் சொல்கிறேன். குதிரைகளோடும், யானைகளோடும் கூடியவர்கள் அனைவரையும், அர்ஜுனனுக்காக நானே என் பலத்தைப் பயன்படுத்தி வீழ்த்தி, அவர்களோடு சேர்த்து கர்ணனையும், சுயோதனனையும் {துரியோதனனையும்} கொல்வேன்.

ஓ! தாருகா, பெரும்போரில் தனஞ்சயனுக்காக {அர்ஜுனனுக்காக} நாளை என் வீரத்தை நான் வெளிப்படுத்தும்போது, என் ஆற்றாலை மூன்று உலகங்களும் காணட்டும். ஓ! தாருகா, நாளை ஆயிரக்கணக்கான மன்னர்களும், நூற்றுகணக்கான இளவரசர்களும், தங்கள் குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் போரில் இருந்து ஓடப் போகின்றனர். ஓ! தாருகா, பாண்டுவின் மகனுக்காகக் கோபத்துடன் உள்ள நான், நாளை மன்னர்களின் படையை வீழ்த்தி, என் சக்கரத்தால் அவற்றை நசுக்கப் போவதைக் காண்பாய். ஓ! தாருகா, தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியவர்களுடன் கூடிய (மூன்று) உலகங்கள் என்னைச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} (உண்மை) நண்பனாக நாளை அறியும். எவன் அவனை {அர்ஜுனனை} வெறுக்கிறானோ, அவன் {கிருஷ்ணனாகிய} என்னை வெறுக்கிறான். எவன் அவனைப் பின்பற்றுகிறானோ, அவன் என்னைப் பின்பற்றுகிறான். புத்திக்கூர்மை கொண்ட நீ, அர்ஜுனன் என்னில் பாதியானவன் என்பதை அறிவாயாக.

ஓ! தாருகா, இரவு கழிந்து காலை வந்ததும், என் சிறந்த தேரில் கௌமோதகி என்றழைக்கப்படும் என் தெய்வீகக் கதாயுதத்தையும், என் ஈட்டி மற்றும் சக்கரத்தையும், என் வில் மற்றும் கணைகளையும், இன்னும் தேவையான பிற அனைத்தையும் படை அறிவியலின் படி தரிக்கச் செய்து, கவனத்துடன் என்னிடம் கொண்டு வருவாயாக. ஓ! சூதா {தாருகா}, என் தேர்த்தட்டில் எனது குடையை அலங்கரிக்கும் என் கொடிமரத்துக்கும், அதில் இருக்கும் கருடனுக்குமான இடத்தை ஒதுக்கி, வலாஹம், மேகபுஷ்பம், சைப்யம், சுக்ரீவம் என்று அழைக்கப்படும் என் முதன்மையான குதிரைகளை அதில் பூட்டி, சூரியன் மற்றும் நெருப்பின் காந்தியுடன் கூடிய தங்கக் கவசத்தால் அவற்றை அலங்கரித்து, நீயும் உன் கவசத்தை அணிந்து கொண்டு, கவனமாக அதில் நிற்பாயாக. ரிஷப சுரத்தின் [3] ஒலியை உமிழும் என் சங்கான பாஞ்சஜன்யத்தின் உரத்த, பயங்கரமான வெடிப்பொலியைக் கேட்டதும் விரைவாக நீ என்னிடம் வருவாயாக.ஓ! தாருகா, ஒரே நாளில் என் தந்தைவழி அத்தையின் {வசுதேவர் தங்கை குந்தியின்} மகனான என் மைத்துனனின் {அர்ஜுனனின்} பல்வேறு துயரங்களையும் கோபத்தையும் நான் விலக்கப் போகிறேன். திருதராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீபத்சு {அர்ஜுனன்} போரில் ஜெயத்ரதனைக் கொல்வதற்காக அனைத்து வழிகளிலும் நான் முயல்வேன். ஓ! தேரோட்டியே {தாருகா}, பீபத்சு இவர்களில் யாரையெல்லாம் கொல்ல முயல்வானோ, அவர்களைக் கொல்வதில் நிச்சயம் வெல்வான் என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.

தாருகன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, நீ யாருடைய தேரைச் செலுத்துகிறாயோ, அவனது வெற்றி உறுதியே. உண்மையில், அவனுக்கு எவ்விடத்தில் இருந்து தோல்வி வரும்? என்னைப் பொறுத்தவரை, நீ என்ன உத்தரவிடுகிறாயோ, அதையே நான் செய்வேன். இந்த இரவு (அதன் தொடர்ச்சியாக) அர்ஜுனனின் வெற்றிக்காக மங்கலமான காலைப் பொழுதைக் கொண்டுவரும்” என்றான் {தாருகன்}.

சிவனைத் துதித்த கிருஷ்ணனும்! அர்ஜுனனும்!! – துரோண பர்வம் பகுதி – 080-அர்ஜுனனின் கனவில் கிருஷ்ணன் தோன்றியது; சிவனை நினைக்கச் சொன்ன கிருஷ்ணன் அர்ஜுனனைக் கைலாசத்திற்கு அழைத்துச் சென்றது; சிவனைப் போற்றிய கிருஷ்ணனும், அர்ஜுனனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்ட குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் உறுதிமொழியை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்துச் சிந்தித்து, (வியாசரால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட) மந்திரங்களை நினைவுகூர்ந்தான். விரைவில் அவன் {அர்ஜுனன்} உறக்கத்தின் கரங்களில் அமைதியடைந்தான் [1]. துயரில் எரிந்து கொண்டிருந்தவனும், சிந்தனையில் மூழ்கியிருந்தவனுமான அந்தக் குரங்குக் கொடி வீரனின் {அர்ஜுனனின்) கனவில், கருடனைத் தன் கொடியாகக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} தோன்றினான்.

அற ஆன்மா கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கேசவன் {கிருஷ்ணன்} மீது கொண்ட அன்பு மற்றும் மரியாதையின் விளைவால் எப்போதும் எழுந்து நின்று, ஒரு சில எட்டுகள் முன்னேறிச் சென்று கிருஷ்ணனை வரவேற்பதை எந்தச் சூழ்நிலையிலும் தவிர்த்ததில்லை. எனவே, இப்போது அவன் {அர்ஜுனன்}, (தன் கனவிலும்) எழுந்து நின்று கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஓர் இருக்கையைக் கொடுத்தான். எனினும் அவன் {அர்ஜுனன்}, அந்நேரத்தில் இருக்கையில் தானும் அமர்ந்து கொள்ளத் தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை. வலிமையும் சக்தியும் கொண்ட கிருஷ்ணன், பார்த்தனின் {அர்ஜுனனின்} தீர்மானத்தை அறிந்து, இருக்கையில் அமர்ந்து, பின்னவன் {அர்ஜுனன்} நின்று கொண்டிருக்கையிலேயே அந்தக் குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, துயரில் உன் இதயத்தை நிலைநிறுத்தாதே.

காலம் வெல்லப்பட முடியாததாகும். காலம், அனைத்து உயிரினங்களையும் தவிர்க்க முடியாத வழியில் பலவந்தமாகத் தள்ளுகிறது. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, {அப்படியிருக்கையில்}, இந்த உனது துயரம் எதற்காக? ஓ! கற்றறிந்தவர்களுள் முதன்மையானவனே {அர்ஜுனா}, துயரில் ஈடுபடக்கூடாது! செயல்பாட்டுக்குத் துயரம் ஒரு தடையாகும். சாதிக்கப்பட வேண்டிய செயலைச் சாதிப்பாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, ஒருவனின் முயற்சிகள் அனைத்தையும் துறக்கச்செய்யும் துயரமானது உண்மையில் அவனது எதிரியாகும். துயரில் ஈடுபடும் ஒருவன், தன் எதிரிகளை மகிழ்வித்து, தன் நண்பர்களைக் கவலைகொள்ளச் செய்து, தன்னையும் பலவீனமாக்கிக் கொள்கிறான். எனவே, துயருறாமல் இருப்பதே உனக்குத் தகும்” என்றான் {கிருஷ்ணன்}.

அப்போது, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், எவராலும் வெல்லப்படாதவனும், பெரும் கல்வியைக் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, இந்தப் பயங்கர வார்த்தைகளைச் சொன்னான்: “ஜெயத்ரதன் படுகொலையைக் குறித்து நான் செய்த உறுதிமொழி பயங்கரமானது. ஓ கேசவா {கிருஷ்ணா}, நாளையே என் மகனைக் கொன்ற அந்த இழிந்தவனை {ஜெயத்ரதனை} நான் கொல்வேன் என்பதே எனது உறுதிமொழியாகும். என் உறுதிமொழியில் என்னைச் சலிக்கச் செய்வதற்காக, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவராலும் பாதுகாக்கப்படும் ஜெயத்ரதனைத் தார்தராஷ்டிரர்கள் தங்கள் பின்னால் நிறுத்திக் கொள்வார்கள்.

ஓ! மாதவா {கிருஷ்ணா}, பதினோரு அக்ஷௌஹிணி துருப்புகளில், படுகொலைக்குப் பிறகு எஞ்சியவர்களைத் தன் எண்ணிக்கையாகக் கொண்டுள்ள அவர்களது படை வீழ்த்துவதற்குக் கடினமானதே ஆகும். பெரும் தேர்வீரர்கள் அனைவராலும் சூழப்பட்ட சிந்துக்களின் தீய ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நாம் எவ்வாறு காண்போம்? ஓ! கேசவா, என் உறுதிமொழி நிறைவேறப் போவதில்லை. உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தோற்ற என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு உயிர்வாழ முடியும்? ஓ! வீரா {கிருஷ்ணா}, இது (இந்த என் உறுதி மொழி) சாதிக்கப்பட முடியாதது என்று தெளிவாகத் தெரிகிறது. அதுவே (என்) பெரும் துயரத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. (வருடத்தின் இந்தப் பருவக் காலத்தில்) சூரியன் விரைவாக மறைகிறான் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

பறவை {கருடக்} கொடி கொண்ட கிருஷ்ணன், பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} துயரின் காரணத்தைக் கேட்டு, நீரைத் தொட்டு, கிழக்கு நோக்கி அமர்ந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், பெரும் சக்தியையும் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} படுகொலையைத் தீர்மானித்துப் பாண்டுவின் மகனுடைய {அர்ஜுனனுடைய} நன்மைக்காக இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பாசுபதம் என்ற பெயரில் அழிக்கப்பட முடியாத ஓர் உயர்ந்த ஆயுதம் இருக்கிறது. அதைக் கொண்டு தேவன் மகேஸ்வரன் {சிவன்}, தைத்தியர்கள் அனைவரையும் போரில் கொன்றான். அதை இப்போது நீ நினைவு கூர்ந்தால், நாளை ஜெயத்ரதனை உன்னால் கொல்ல முடியும். அதை நீ (இப்போது) அறியவில்லையெனில், உன் இதயத்திற்குள், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்ட தேவனை {சிவனைத்} துதிப்பாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} மனத்தில் அந்தத் தேவனைச் சிந்தித்து, அவனை {சிவனை} நினைவுகூர்வாயாக. நீ அவனது பக்தனாவாய். அவனது {சிவனின்} அருளால் நீ அந்த மகிமையான உடைமையை {பாசுபதத்தை} அடைவாய்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, நீரைத் தொட்டுக் குவிந்த மனத்தோடு பூமியில் அமர்ந்து, பவ தேவனை {சிவனை} நினைத்தான். அப்படி அவன் குவிந்த மனத்துடன் அமர்ந்ததும், மங்கலக் குறியீடுகளைக் கொண்ட பிரம்மம் என்று அழைக்கப்படும் காலத்தில் {பிரம்மமுகூர்த்தத்தில்}, அர்ஜுனன், தானும் கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} வானத்தில் பயணித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். மனோவேகத்தைக் கொண்ட பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குக்} கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} தானும் சேர்ந்து புனிதமான இமயமலையின் அடிவாரத்தையும், பல பிரகாசமான ரத்தினங்கள் நிறைந்ததும், சித்தர்கள் மற்றும் சாரணர்களால் அடிக்கடி அடையப்பட்டதுமான மணிமான் மலையையும் அடைந்ததாகத் தெரிந்தது. தலைவன் கேசவன் அவனது {அர்ஜுனனது} இடது கையைப் பற்றியிருந்ததாகவும் [2] தெரிந்தது. (அந்த இடத்தை அடைகையில்) பல அற்புதக் காட்சிகளைக் கண்டதாகவும் அவனுக்குத் தோன்றியது.பிறகு, அற ஆன்மா கொண்ட அர்ஜுனனுக்குத் தான் வடக்கின் வெண்மலையை அடைந்ததாகத் தெரிந்தது. பிறகு அவன் {அர்ஜுனன்}, குபேரனின் மகிழ்ச்சியான நந்தவனங்களில் {சைத்ரரதத்தில்} தாமரைகள் நிறந்த அழகிய தடாகத்தைக் கண்டான். மேலும் அவன் நதிகளில் முதன்மையான கங்கை முழுமையான நீருடன் செல்வதையும் கண்டான். பிறகு அவன் {அர்ஜுனன்} மந்தர மலைகளின் பகுதிகளை அடைந்தான். அந்தப் பகுதிகள் எப்போதும் மலர்களையும் கனிகளையும் தாங்கியிருக்கும் மரங்களால் நிறைந்திருந்தது. அவற்றில் ஸ்படிகக் கற்கள் எங்கும் விரவிக் கிடந்தன. அவற்றில் சிங்கங்களும், புலிகளும் வசித்தன, பல்வேறு வகைகளிலான விலங்குகளும் நிறைந்திருந்தன. அவை, மகிழ்ச்சிமிக்கப் பறவைகளின் இனிய சுரங்களை எதிரொலித்தபடி முனிவர்களின் அழகிய ஆசிரமங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கின்னரர்களின் பாடல்களும் அங்கே எதிரொலித்தன. தங்க மற்றும் வெள்ளி முகடுகளால் அருளப்பட்ட அவை, பல்வேறு மூலிகை செடிகளாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. மந்தர மரங்கள் பல அபரிமிதமான மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

பிறகு அர்ஜுனன், மைக்குவியல்களைப் போலத் தெரியும், காலம் என்றழைக்கப்படும் மலைகளை {காலபர்வதத்தை} அடைந்தான். பிறகு அவன் பிரம்மதுங்கம் என்றழைக்கப்படும் கொடுமுடியையும், பிறகு பல நதிகளையும், வசிப்போரற்ற பல மாகாணங்களையும் அடைந்தான். சதசிருங்கத்தை அடைந்த அவன், சர்யாதி என்ற பெயரில் அறியப்படும் காடுகளையும் {சர்யாதி வனத்தையும்} அடைந்தான். பிறகு குதிரைத் தலை {அஸ்வசிரஸ்} என்று அறியப்படும் ஒரு புனிதமான இடத்தையும், பிறகு அதர்வணம் என்ற பகுதியையும் அவன் கண்டான். விருதம்சம் என்றழைக்கப்படும் மலைகளின் இளவரசனையும், அப்சரசுகளால் நிறைந்ததும், கின்னரர்களின் இருப்பால் அருளப்பட்டதுமான பெரும் மந்தரத்தையும் {மகாமந்தரத்தையும்} அவன் கண்டான். அந்த மலையில் கிருஷ்ணனுடன் உலவிய பார்த்தன், சிறந்த நீரூற்றுகளால் அலங்கரிக்கப்பட்டும், தங்கத் தாது நிரம்பியதும், சந்திரக் கதிர்களின் காந்தியைக் கொண்டதும், பல பெருநகரங்களையும், நகரங்களையும் கொண்டதுமான பூமியின் ஒரு பகுதியைக் கண்டான். பல அற்புத வடிவங்களையும் பல செல்வச்சுரங்கங்களையும் கொண்ட பல கடல்களையும் அவன் கண்டான். வானம், ஆகாயம் மற்றும் பூமியில் இப்படிச் சென்று கொண்டிருந்த அவன் விஷ்ணுபதம் என்றழைக்கப்படும் இடத்தை அடைந்தான். கிருஷ்ணனின் துணையுடன் உலவிய அவன் (வில்லில் இருந்து) ஏவப்பட்ட கணையைப் போலப் பெரும் வேகத்துடன் கீழே இறங்கினான். விரைவில் பார்த்தன் {அர்ஜுனன்}, கோள்கள், நட்சத்திரங்கள் அல்லது நெருப்புக்கு இணையான காந்தியைக் கொண்ட சுடர் மிகும் மலையொன்றை {கைலாசத்தைக்} கண்டான்.

அந்த மலையை அடைந்த அவன் {அர்ஜுனன்}, அதன் உச்சியில், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்டவனும், தவத்துறவுகளில் {தபோநிஷ்டையில்} எப்போதும் ஈடுபடுபவனும், ஆயிரம் சூரியன்கள் ஒன்றாகச் சேர்ந்ததைப் போல இருப்பவனும், தன்னொளியாலேயே சுடர்விடுபவனுமான அந்த உயர் ஆன்மத் தேவனை {சிவனைக்} கண்டான். கையில் திரிசூலமும், தலையில் சடா முடியும், வெண்பனியின் நிறமும் கொண்ட அவன் {சிவன்}, மரப்பட்டை மற்றும் தோலாலான ஆடையை அணிந்திருந்தான். பெரும் சக்தியைக் கொண்ட அவனது உடல் ஆயிரம் கண்களுடன் சுடர்விட்டு எரிவதாகத் தெரிந்தது. அவன் {சிவன்} (தன்னைச் சுற்றி) பல வடிவங்களிலான உயிரினங்களால் சூழப்பட்டுப் பார்வதியுடன் அமர்ந்திருந்தான். அவனுடன் இருப்போர் பாடுவதிலும், இசைக்கருவிகளை இசைப்பதிலும், சிரிப்பதிலும், ஆடுவதிலும், அசைவதிலும், தங்கள் கைகளை நீட்டுவதிலும், உரத்த முழக்கங்களைச் செய்வதிலும் ஈடபட்டிருந்தனர். நறுமணச் சுகந்தங்களால் அந்த இடம் மணமூட்டப்பட்டிருந்தது. பிரம்மத்தை வழிபடும் {பிரம்மவாதிகளான தெய்வீக} முனிவர்கள், அனைத்து உயிர்களைக் காப்பவனும், (பினாகை என்றழைக்கப்படும் பெரும்) வில்லைக் கொண்டவனுமான அந்தத் தேவனை மங்கா மகிமை கொண்ட அற்புதப் பாடல்களால் துதித்தனர்.

அற ஆன்மா கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்து அவனைக் {சிவனைக்} கண்டு, தன் தலையால் பூமியைத் தொட்டு, வேதங்களின் அழியாச் சொற்களை உரைத்தான் [3]. அண்டத்தின் மூல முதல்வனும், சுயம்புவும், மங்காப்புகழ் கொண்டவனும், உயர்ந்தத் தலைவனுமான அந்தத் தேவனை {சிவனைக்} கிருஷ்ணன், தன் பேச்சாலும், மனத்தாலும், அறிவாலும், செயல்களாலும் துதித்தான். மனத்தின் உயர்ந்த காரணனும், வெளியும், காற்றும், (ஆகாயத்திலுள்ள) ஒளிக்கோள்கள் அனைத்தின் காரணனும், மழையை உண்டாக்குபவனும், உயர்ந்தவனும், பூமியின் மூலப் பொருளும், தேவர்கள், தானவர்கள், யக்ஷர்கள், மனிதர்கள் ஆகியோரின் துதிக்குத் தகுந்தவனும், யோகியரால் காணப்படும் உயர்ந்த பிரம்மமும், சாத்திரங்கள் அறிந்தோரின் புகலிடமும், உயிரினங்களில் அசைவன, அசையாத ஆகியவை அனைத்தையும் படைத்தவனும், அவர்களை அழிப்பவனும், யுக முடிவில் கோபத்துடன் அனைத்தையும் அழிப்பவனும், உயர்ந்த ஆன்மாவும், சக்ரனாகவும், சூரியனாகவும் இருப்பவனும், குணங்கள் அனைத்தின் மூலமும் ஆன அவனைக் கிருஷ்ணன் துதித்தான்.-நுட்பமானது, ஆன்மிகமானது என்று அழைக்கப்படுவதை {முக்தியை} [4] அடைய விரும்பும் ஞானியரால் காணப்படுபவனும், அனைத்துக் காரணங்களுக்கு ஆன்மாவான சுயம்புவான அந்தப் பவனின் {சிவனின்} பாதுகாப்பைக் கிருஷ்ணன் வேண்டினான். அந்தத் தேவனே {சிவனே} அனைத்து உயிர்களின் மூலம் என்றும், கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்திற்குக் காரணம் என்றும் அறிந்த அர்ஜுனன் அவனை மீண்டும் மீண்டும் துதித்தான்.-நரனும், நாராயணனும் வந்திருப்பதைக் கண்ட பவன் {சிவன்} உற்சாக ஆன்மாவுடன் {மகிழ்ச்சியுடன்} புன்னகைத்துக் கொண்டே அவர்களிடம், “மனிதரில் முதன்மையானோரே, உங்களுக்கு நல்வரவு. உங்கள் பயணக் களைப்பு நீங்கி எழுவீராக. ஓ வீரர்களே, உங்கள் இதய விருப்பம் என்ன? அதை விரைவாகச் சொல்லுங்கள். எக்காரியம் உங்களை இங்கே அழைத்து வந்தது? அதை அடையும் நான் உங்களுக்கு எது நன்மையோ அதைச் செய்கிறேன். நீங்கள் விரும்பும் அனைத்தையும் நான் அருள்வேன்” என்றான் {சிவன்}.

பிறகு கூப்பிய கரங்களுடன், களங்கமற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய பெரும் விவேகிகள் இருவரும் அந்த உயர் ஆன்மத் தேவனை {சிவனை} ஒரு சிறந்த பாடலால் நிறைவடையச் செய்யத் தொடங்கினர். கிருஷ்ணனும், அர்ஜுனனும், “பவனை {உலகங்கள் அனைத்தின் தலைவனை}, சர்வனை {உயிரினங்களைக் கொல்பவனை}, ருத்ரனை {அழச் செய்பவனை}, வரமளிக்கும் தேவனை நாங்கள் வணங்குகிறோம். உயிருடன் கூடிய உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவனை {பசுபதியை}, எப்போதும் கடுமையாக இருக்கும் தேவனை, கபார்தின் {கபார்தி – சடை கொண்டவன்} என்று அழக்கப்படுபவனை நாங்கள் வணங்குகிறோம். மகாதேவனை {தேவர்களுள் சிறந்தவனை}, பீமனை {பயங்கரமானவனை}, முக்கண்ணனை, அமைதியும் சமாதமுமானவனை நாங்கள் வணங்குகிறோம். (தக்ஷனின்) வேள்வியை அழித்த ஈசானனை நாங்கள் வணங்குகிறோம்.

அந்தகனை {அந்தகாசுரனை} அழித்தவனுக்கு, குமரனின் {முருகனின்} தந்தைக்கு, நீலகண்டனுக்கு, படைப்பாளனுக்கு எங்கள் வணக்கங்கள். பினாகைதாரிக்கு, தெளிந்த நெய்யினாலான காணிக்கையை {ஹவிஸைப்} பெறத் தகுந்தவனுக்கு, உண்மையானவனுக்கு, அனைத்திலும் இருப்பவனுக்கு வணக்கம். வெல்லப்படாதவனை, எப்போதும் நீலக் குழல்களைக் கொண்டவனை, திரிசூலம் தரித்தவனை, தெய்வீகப் பார்வை கொண்டவனை, அனைவரையும் பாதுகாக்கும் ஹோத்ரியை, முக்கண்ணனை, நோயாக இருப்பவனை [5]உயிர்வித்தை நெருப்பில் விட்டவனை, நினைத்துப் பார்க்க முடியாதவனை, அம்பிகையின் தலைவனை, தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனை, காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்டவனை, தைரியமானவனை, சடாமுடி தரித்தவனை, பிரம்மச்சாரியை, நீரில் தவம் செய்து நிற்பவனை, பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடன் உள்ளவனை, வெல்லப்பட முடியாதவனை, அண்டத்தின் ஆன்மாவை, அண்டத்தைப் படைத்தவனை, அண்டம் முழுமையும் வியாபித்திருப்பவனை, அனைத்து உயிர்களின் உண்மைக் காரணனை, அனைவரின் மரியாதைக்குத் தகுந்தவனான உன்னை நாங்கள் வணங்குகிறோம். பிரம்மச்சக்கரம் என்றழைக்கப்படும் உன்னை, சர்வன், சங்கரன், சிவன் என்று அழைக்கப்படும் உன்னை, பேருயிர்கள் அனைத்தின் தலைவனான உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஆயிரம் சிரங்களையும், ஆயிரம் கரங்களையும் கொண்ட உன்னை, மரணம் என்று அழைக்கப்படும் {மிருத்யு ஸ்வரூபியான} உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஆயிரம் கண்கள் மற்றும் ஆயிரம் கால்கள் கொண்ட உன்னை, எண்ணிலா செயல்களைச் செய்யும் உன்னை, தங்க நிறம் கொண்ட உன்னை, தங்கக் கவசம் பூண்ட உன்னை, பக்தர்களிடம் எப்போதும் கருணை கொண்ட உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஓ! தலைவா, எங்கள் விருப்பம் நிறைவேறட்டும்” என்றனர் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்}.சஞ்சயன் தொடர்ந்தான், “இம்முறையில் மகாதேவனை வழிபட்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் (பாசுபதம் என்றழைக்கப்படும் பெரும்) ஆயுதத்தை அடைவதற்காக அவனை {சிவனை} நிறைவு செய்யத் தொடங்கினர்” என்றான் {சஞ்சயன்}.

சிவன் அளித்த வரம்! – துரோண பர்வம் பகுதி – 081-சிவனும் கிருஷ்ணனும் ஒன்றெனக் கண்டு மலைத்த அர்ஜுனன்; கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் ஒரு தடாகத்திற்கு அனுப்பிய சிவன்; வில்லையும் அம்பையும் சிவனிடம் கொடுத்த கிருஷ்ணார்ஜுனர்கள்; ஆயுதம் பயன்படுத்த வேண்டிய முறையை அறிந்து கொண்ட அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சிமிக்க ஆன்மாவுடன் கரங்களைக் குவித்து, காளையைத் தன் அடையாளமாக {காளையைக் கொடியாகக்} கொண்டவனும், அனைத்து சக்திகளின் கொள்ளிடமுமான அந்தத் தேவனை (ஆச்சரியத்தில்) கண்களை விரித்துப் பார்த்தான். ஒவ்வொரு இரவும் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அவன் செலுத்திய காணிக்கைகளை, அந்த முக்கண் தேவனின் {சிவனின்} அருகில் கண்டான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மனப்பூர்வமாகக் கிருஷ்ணன், சர்வன் {சிவன்} ஆகிய இருவரையும் வணங்கிப் பின்னவனிடம் {சிவனிடம்}, “தெய்வீக ஆயுதத்தை (அடைய) விரும்புகிறேன்” என்றான்.

விரும்பிய வரத்தை வேண்டிய பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவன் சிவன், புன்னகையுடன் வாசுதேவனிடமும், அர்ஜுனனிடமும், “ஓ! மனிதர்களில் முதன்மையானவர்களே, உங்களுக்கு நல்வரவு. உங்கள் மனத்தின் விருப்பத்தையும், நீங்கள் இங்கே வந்த காரியத்தையும் நான் அறிவேன். நீங்கள் விரும்பியதை நான் தருவேன். ஓ! எதிரிகளைக் கொல்பவர்களே, இந்த இடத்திற்கு வெகு அருகில், அமிர்தம் நிறைந்த தெய்வீகத் தடாகம் ஒன்று இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு, அந்த எனது தெய்வீக வில்லும், கணையும் அங்கே வைக்கப்பட்டன. அதைக் கொண்டே தேவர்களின் எதிரிகள் அனைவரையும் போரில் நான் கொன்றேன். கிருஷ்ணா, அந்தச் சிறந்த வில்லில் கணையைப் பொருத்தி இங்கே கொண்டு வருவாயாக” என்றான் {சிவன்}. சிவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனுடன் சேர்ந்து “அப்படியே ஆகட்டும்” என்றான்.

பிறகு, நூற்றுக்கணக்கான தெய்வீக அற்புதங்களைக் கொண்டதும், அனைத்துப் பொருளையும் அருள வல்லதும், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்ட தேவனால் {சிவனால்} குறிப்பிடப்பட்டதுமான அந்தப் புனிதத் தடாகத்திற்குச் சிவனின் துணைவர்கள் அனைவரின் துணையுடன் அந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றனர். முனிவர்களான நரனும், நாராயணனும் (அஃதாவது, அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}) அந்தத் தடாகத்திற்கு அச்சமில்லாமல் சென்றனர்.

சூரியவட்டிலைப் போன்றப் பிராகாசமுடன் இருந்த அந்தத் தடாகத்தை அடைந்த அர்ஜுனனும், அச்யுதனும் {கிருஷ்ணனும்}, அதன் நீருக்குள் ஒரு பயங்கரப் பாம்பைக் கண்டனர். மேலும் அங்கே ஆயிரம் {1000} தலைகளைக் கொண்ட மற்றுமொரு பாம்பையும் கண்டனர். நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அந்தப் பாம்பு {நெருப்பின்} கடுந்தழல்களைக் கக்கிக் கொண்டிருந்தது. அப்போது, கிருஷ்ணனும், அர்ஜுனனும், நீரைத் தொட்டுத் தங்கள் கரங்களைக் குவித்து, காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்ட தேவனை {சிவனை} வணங்கி அந்தப் பாம்புகளை அணுகினர். வேதங்களை அறிந்தவர்களான அவர்கள் அந்தப் பாம்புகளை அணுகும்போதே, அளவிலா சக்தி கொண்ட பவனை {சிவனைத்} தங்கள் நேர்மையான ஆன்மாக்களால் வணங்கியபடியே, ருத்ரனைப் புகழ்ந்து வேதங்களில் உள்ள {சதருத்ரியம் என்ற} நூறு பத்திகளை {ஸ்லோகங்களை} உரைத்தனர்.

அந்த ருத்ரத் துதிகளுடைய சக்தியின் விளைவால் அந்தப் பயங்கரப் பாம்புகள் இரண்டும், தங்கள் பாம்பு வடிவங்களைத் துறந்து, எதிரிகளைக் கொல்லும் வில் மற்றும் கணையின் வடிவை ஏற்றன. (தாங்கள் கண்டதில்) நிறைவுற்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும் பெரும் பிரகாசம் கொண்ட அந்த வில்லையும் கணையையும் கைப்பற்றினர். பிறகு அந்த உயர் ஆன்ம வீரர்கள் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} சிறப்புமிக்க மஹாதேவனிடம் {சிவனிடம்} அவற்றைக் கொண்டு வந்து கொடுத்தனர். அப்போது சிவனுடைய உடலின் ஒருபகுதியில் இருந்து பழுப்பு நிறக் கண்களைக் கொண்ட ஒரு பிரம்மச்சாரி வெளிவந்தான். தவத்தின் புகலிடமாக அவன் தெரிந்தான். நீலத் தொண்டையும், சிவப்பு குழல்களும் கொண்ட அவன் பெரும் பலம் கொண்டவனாகவும் இருந்தான்.அந்தச் சிறந்த வில்லை எடுத்த அந்தப் பிரம்மச்சாரி (வில் மற்றும் தனது பாதம் ஆகிய இரண்டையும் முறையாக வைத்துக் கொண்டு) நிலையாக நின்றான் [1]. கணையை வில்லின் நாணில் பொருத்திய அவன், பின்னதை {வில்லை} முறையாக வளைக்கத் தொடங்கினான். நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அவன் {அந்த பிரம்மச்சாரி} விற்பிடியைப் பிடித்திருக்கும், நாணை வளைக்கும், பாதங்களை நிலைநிறுத்தும் முறைகளைக் கண்டும், பவனால் {சிவனால்} உச்சரிக்கப்பட்ட மந்திரங்களைக் கேட்டும் அனைத்தையும் முறையாகக் கற்றான். வலிமையும், பலமும் மிக்க அந்தப் பிரம்மச்சாரி அந்தக் கணையை அதே தடாகத்தில் ஏவினான். மேலும் அவன் அந்த வில்லையும் அதே தடாகத்தில் மீண்டும் வீசியெறிந்தான்.நல்ல நினைவுத்திறனைக் கொண்ட அர்ஜுனன், தன்னிடம் பவன் {சிவன்} மனம்நிறைந்தான் என்பதை அறிந்தும், காட்டில் தனக்குப் பின்னவன் {சிவன்} அளித்த வரத்தையும், தனிப்பட்ட முறையில் தனக்குக் காட்சியளித்ததையும் நினைவுகூர்ந்தும், “இவை அனைத்தும் கனியை {பலனை} உண்டாக்குவதாக அமையட்டும்” என்று மனப்பூர்வமாக விரும்பினான். அவனது விருப்பத்தைப் புரிந்து கொண்ட பவன் {சிவன்}, அவனிடம் நிறைவடைந்து அவனுக்கு வரத்தை அளித்தான். மேலும் அந்தத் தேவன் {சிவன்}, பயங்கரப் பாசுபதாயுதத்தையும் [2], உறுதிமொழியின் நிறைவேற்றத்தையும் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} அருளினான். இப்படியே உயர்ந்த தேவனிடம் {சிவனிடம்} இருந்து மீண்டும் பாசுபதாயுதத்தை அடைந்தவனும், வெல்லப்பட முடியாதவனும், {தான் கண்ட காட்சியால்} மயிர் சிலிர்ப்பை அடைந்தவனுமான அர்ஜுனன், ஏற்கனவே தன் காரியம் சாதிக்கப்பட்டதாகவே கருதினான்.பிறகு மகிழ்ச்சியால் நிறைந்த அர்ஜுனனும், கிருஷ்ணனும், தங்கள் தலைகளைத் தாழ்த்தி, அந்தப் பெரும் தேவனிடம் {சிவனிடம்} தங்கள் வழிபாட்டைச் செலுத்தினர். பவனால் {சிவனால்} அனுமதிக்கப்பட்ட அர்ஜுனன், கேசவன் {கிருஷ்ணன்} ஆகிய வீரர்கள் இருவரும் மகிழ்ச்சியின் வரத்தால் நிறைந்து கிட்டத்தட்ட உடனேயே தங்கள் முகாமுக்குத் திரும்பினர். ஜம்பனைக் கொல்ல விரும்பிய இந்திரன், விஷ்ணு ஆகிய தேவர்கள் இருவரும், பெரும் அசுரர்களைக் கொல்பவனான பவனின் {சிவனின்} அனுமதியைப் பெற்று மகிழ்ச்சியை அடைந்ததைப் போலவே உண்மையில் அவர்களது {கிருஷ்ணார்ஜுனர்களின்} மகிழ்ச்சியும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.

யுதிஷ்டிரனின் அலங்காரம்! – துரோண பர்வம் பகுதி – 082-சூதர்களால் எழுப்பப்பட்ட யுதிஷ்டிரன் நீராடச் சென்றது; மூலிகைகளாலும், நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்ட யுதிஷ்டிரன்; நன்கு அலங்கரித்துக் கொண்டு, தியானித்த பிறகு நெருப்புக்கு ஆகுதி செலுத்திப் பிராமணர்களைச் சந்தித்துத் தானமளித்தது; வெளியறைக்கு வந்து அமர்ந்த அவனிடம் கிருஷ்ணனின் வரவு அறிவிக்கப்பட்டது; கிருஷ்ணனை வரவேற்ற யுதிஷ்டிரன்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனும் தாருகனும் அப்படிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே அந்த இரவு கடந்து போனது. (காலை விடிந்த போது), மன்னன் யுதிஷ்டிரன் தன் படுக்கையில் இருந்து எழுந்தான். பனிஸ்வானிகர்கள் {Paniswanikas}, மாகதர்கள் [1], மதுபர்க்கிகர்கள் {Madhuparkikas}, சூதர்கள் [2] ஆகியோர் (பாடல்களாலும், இசையாலும்) மன்னனை {யுதிஷ்டிரனை} நிறைவு செய்தனர். ஆடற்கலைஞர்கள் தங்கள் ஆடலைத் தொடங்கினர், இனிய குரல் கொண்ட பாடகர்கள் குரு குலத்தின் புகழால் நிறைந்த தங்கள் இனிய பாடல்களைப் பாடினர் [3]. (தங்கள் தங்கள் இசைக்கருவிகளில்) நன்கு பழக்கப்பட்ட திறம்வாய்ந்த இசைக்கலைஞர்கள், மிருதங்கங்கள், ஜர்ஜரங்கள், பேரிகைகள், பணவங்கள், ஆனகங்கள், கோமுகங்கள், அடம்பறங்கள் {சிறு பறைகள்}, சங்குகள், பேரொலியுள்ள துந்துபிகள், பல்வேறு வகையிலான பிற இசைக்கருவிகள் ஆகியவற்றை இசைத்தனர். மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமான அந்தப் பேரொலி சொர்க்கங்களையே {வானத்தையே} தொட்டது. மன்னர்களில் முதன்மையான யுதிஷ்டிரனை அஃது உறக்கத்தில் இருந்து எழுப்பியது.தன் படுக்கையில் இருந்து எழுந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அவசியம் தேவையான செயல்களைச் செய்வதற்காக மஞ்சனசாலைக்கு {குளியலறைக்குச்} சென்றான். நீராடி வெள்ளுடைத் தரித்திருந்த நூற்றியெட்டு இளம் பணியாளர்கள் {ஸ்நாபகர்கள்}, விளிம்பு வரை {நீர்} நிறைந்திருந்த தங்கக் குடங்கள் பலவற்றுடன் மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகினர். மென்துணி உடுத்தித் தன் அரச இருக்கையில் [4] சுகமாக வீற்றிருந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, சந்தனம் மற்றும் தூய மந்திரங்களுடன் பல்வேறு வகைகளிலான நீரில் குளித்தான். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பலமான பணியாட்கள், பல்வேறு வகைகளிலான மருத்துவ மூலிகைகளில் ஊறிய நீரைக்கொண்டு அவனது {யுதிஷ்டிரனது} உடலைப் தேய்த்தனர். பின்னர்ப் பல்வேறு நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்ட அதிவாச நீரில் அவன் {யுதிஷ்டிரன்} நீராட்டப்பட்டான். பிறகு அவனுக்காகத் தளர்வாக வைக்கப்பட்டிருந்ததும், அன்னங்களின் இறகுகளைப் போன்ற வெண்மையானதுமான நீண்ட துணியைப் பெற்றுக் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, நீர் உலர்வதற்காகத் தன் தலையைச் சுற்றி அதைக் கட்டிக் கொண்டான்.அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் உடலில் சிறந்த சந்தனக்குழம்பைப் பூசிக்கொண்டு, மலர்மாலைகளை அணிந்து கொண்டு, தூய ஆடைகளை உடுத்திக் கொண்டு தன் கரங்களைக் கூப்பிய படி கிழக்கை நோக்கி அமர்ந்தான். அறவோரின் வழியைப் பின்பற்றுபவனான அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மனப்பூர்வமாகத் தன் வேண்டுதல்களைச் சொன்னான். பிறகு , (வழிபாட்டுக்காகச்) சுடர்மிக்க நெருப்பு வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பெரும் பணிவுடன் நுழைந்தான். அவன் {யுதிஷ்டிரன்}, புனித மரத்தாலான விறகுகளாலும், மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்ட தெளிந்த நெய்யின் காணிக்கைகளாலும் நெருப்பை வழிபட்ட பிறகு அந்த அறையை விட்டு வெளிவந்தான் [5].பிறகு, இரண்டாவது அறைக்குள் நுழைந்த அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்}, வேதங்களை அறிந்த பிராமணர்களில் காளைகள் பலரை அங்கே கண்டான். அவர்கள் அனைவரும் தன்னொடுக்கம் {புலனடக்கம்} கொண்டவர்களாகவும், வேதகல்வியிலும், நோன்புகளிலும் தூய்மையடைந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களால் செய்யப்பட்ட வேள்விகளின் நிறைவில் நீராடலை {அவபிருத ஸ்நானத்தை} முடித்திருந்தனர். சூரியனை வழிபடுபவர்களான அவர்கள் எண்ணிக்கையில் ஆயிரமாக இருந்தனர். அவர்களைத் தவிர அதே வர்க்கத்தைச் சேர்ந்த {பிராமணர்கள்} எட்டாயிரம் {8000} பேரும் அங்கே இருந்தனர்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அவர்களுக்குத் தேன், தெளிந்த நெய், சிறந்த வகையிலான மங்கலகரமான கனிகள் ஆகியவற்றைத் தானமாகக் கொடுத்து, ஏற்புடைய நல்வார்த்தைகளைத் தனித்துவமான குரல்களில் {தெளிவான ஒலியில்} அவர்களைச் சொல்ல வைத்து, அவர்கள் {பிராமணர்கள்} ஒவ்வொருக்கும் ஒரு நிஷ்கம் தங்கத்தையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு குதிரைகளையும், விலைமதிப்புமிக்க ஆடைகளையும், ஏற்புடைய பிற பரிசுகளையும் கொடுத்தான். மேலும், அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தீண்டும்போதெல்லாம் பாலைத் தருபவையும், கன்றுகளுடன் கூடியவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளையும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட குழம்புகளையும் கொண்ட காராம்பசுக்களையும் {அவர்களுக்குக்} கொடுத்து அவர்களை வலம் வந்தான்.

பிறகு அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, நற்பேற்றை அதிகரிப்பதும் நிறைவானதுமான சுவஸ்திகங்கள் [6], தங்கத்தாலான நந்தியாவர்த்தங்கள் [7], மலர் மாலைகள், நீர்க்குடங்கள், சுடர்மிகும் நெருப்பு, வெயிலில் காய்ந்த அரிசியால் நிறைந்த {அக்ஷதப்} பாத்திரங்கள், பிற மங்கலகரமான பொருட்கள், பசுவின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட மஞ்சள் வண்ணப்பொருள் {கோரோசனை}, மங்கலகரமானவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களுமான கன்னியர், தயிர், தெளிந்த நெய், தேன், மங்கலகரமான பறவைகள், புனிதமாகக் கருதப்படும் பல்வேறு பிற பொருட்கள் ஆகியவற்றைக் கண்டும் தொட்டும் வெளியறைக்கு வந்தான்.அப்போது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, வட்ட வடிவில் தங்கத்தாலான விலைமதிப்புமிக்கச் சிறந்த இருக்கை ஒன்றை, ஊழியர்கள் அந்த அறைக்குக் கொண்டு வந்தனர். முத்துக்கள், வைடூரியங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், விலைமதிப்புமிக்க விரிப்புக்கு மேல் மெல்லிய இழை கொண்ட மற்றொரு துணியாலும் மறைக்கப்பட்ட அந்த இருக்கை தேவதச்சனின் {விஸ்வகர்மாவின்} கைகளால் உருவானதாகவே தெரிந்தது.

அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் இருக்கையில் அமர்ந்ததும், விலைமதிப்புமிக்கதுமானப் பிரகாசமான ஆபரணங்களைப் பணியாட்கள் அவனிடம் கொண்டு வந்தனர். அந்த உயர் ஆன்மக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, ரத்தினங்களாலான அந்த ஆபரணங்களை அணிந்து கொண்டதும், அவனது அழகு, அவனது எதிரிகளின் துயரை அதிகரித்தது. தங்கப் பிடியையும், சந்திரனின் பிரகாசத்தையும் கொண்ட வெண்சாமரங்களைப் பணியாட்கள் வீசிய போது, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மின்னலுடன் கூடிய மேகங்களின் திரளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

சூதர்கள் அவனது புகழைப் பாடவும், வந்திகள் அவனது புகழை உரைக்கவும் தொடங்கினர். பாடகர்கள் அந்தக் குரு குலத்தை மகிழ்விப்பவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாடத் தொடங்கினர். ஒருக்கணத்தில் வந்திகளின் குரல்கள் பேரொலியாகப் பெருகிற்று. அப்போது, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், குதிரைக்குளம்படிகளும் கேட்கப்பட்டன. யானை மணிகளின் கிங்கிணி, சங்குகளின் முழக்கம் மற்றும் மனிதர்கள் நடக்கும் ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்ததன் விளைவாக அந்த ஒலியால் பூமியே நடுங்குவதாகத் தெரிந்தது.

அப்போது, கவசம் பூண்டவனும், வயதால் இளைஞனும், காது குண்டலங்களாலும், தன் இடையில் தொங்கும் வாளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான வாயில்காப்போன் ஒருவன், அந்தத் தனிப்பட்ட அறைக்குள் நுழைந்து, தரையில் மண்டியிட்டு, அனைத்து வழிபாட்டுக்கும் தகுந்தவனான அந்த ஏகாதிபதிக்கு {யுதிஷ்டிரனுக்குத்} தலைவணங்கி, உயர் ஆன்மா கொண்ட அந்தத் தர்மனின் அரசமகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} வந்து காத்திருப்பதாகச் சொன்னான். அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்}, “சிறந்த இருக்கை ஒன்றையும், ஆர்க்கியத்தையும் அவனுக்காகத் தயாராக வைப்பீராக” என்று தன் பணியாட்களுக்கு உத்தரவிட்டு, விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனை} வரச்செய்து அவனை விலைமதிப்புமிக்க இருக்கையில் அமரச் செய்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், வழக்கமான விசாரணைகளால் மாதவனை {கிருஷ்ணனை} வரவேற்றுப் பேசி, அந்தக் கேசவனை {கிருஷ்ணனை} முறையாக வழிபட்டான்” {என்றான் சஞ்சயன்}.

கிருஷ்ணனின் சொற்கள்! – துரோண பர்வம் பகுதி – 083-கிருஷ்ணனையும், மற்றப் பாண்டவவீரர்களையும் வரவேற்ற யுதிஷ்டிரன்; கிருஷ்ணனிடம் தன் கவலையைச் சொன்ன யுதிஷ்டிரன்; கிருஷ்ணன் சொன்ன ஆறுதல் வார்த்தைகள்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தேவகியின் மகனான ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வணங்கி, மகிழ்ச்சியுடன் அவனிடம், “ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இரவை வசதியாகக் கடத்தினாயா? ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் நோக்கங்கள் அனைத்தும் தெளிவாக இருக்கின்றனவா?” என்று கேட்டான். வாசுதேவனும் {கிருஷ்ணனும்} அதே போன்ற விசாரிப்புகளை யுதிஷ்டிரனிடம் செய்தான். அப்போது வாயில் காப்போன் வந்து, பிற க்ஷத்திரியர்கள் {பிரகிருதிகள் = அரசு அங்கத்தினர்} வந்து காத்திருப்பதாகச் சொன்னான்.

மன்னனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்ட அந்த மனிதன் {வாயில்காப்போன்}, {வந்திருந்த} அந்த வீரர்களின் கூட்டத்தில் அடங்கிய விராடன், பீமசேனன், திருஷ்டத்யும்னன், சாத்யகி, சேதிகளின் ஆட்சியாளர் திருஷ்டகேது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துருபதன் மற்றும் சிகண்டி, இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), கேகயர்களின் ஆட்சியாளன் சேகிதானன், குரு குலத்தின் யுயுத்சு, பாஞ்சாலர்களின் உத்தமௌஜஸ், யுதாமன்யு, சுபாகு, திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோரை உள்ளே அனுமதித்தான். இவர்களும், க்ஷத்திரியர்கள் பிறரும் க்ஷத்திரியர்களில் காளையான அந்த உயர் ஆன்மாவை {யுதிஷ்டிரனை} அணுகி சிறந்த இருக்கைகளில் அமர்ந்தனர். வலிமைமிக்கவர்களும், பெரும் காந்தி கொண்ட உயர் ஆன்ம வீரர்களுமான கிருஷ்ணன் மற்றும் யுயுதானன் {சாத்யகி} ஆகிய இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்தனர்.

அவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, யுதிஷ்டிரன், தாமரைக்கண்ணனான மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்} இனிய வார்த்தைகளில், “ஆயிரங்கண் தேவனான தெய்வீகமானவனை {இந்திரனைப்} போல உன்னை மட்டுமே நம்பி நாங்கள் போரில் வெற்றிக்கும், நித்தியமான மகிழ்ச்சிக்கும் முயற்சி செய்கிறோம். ஓ! கிருஷ்ணா, எங்கள் நாட்டை இழக்கச்செய்து எதிரிகளால் நாங்கள் நாடுகடத்தப்பட்டதையும், எங்களது பல்வேறு துன்பங்களையும் நீ அறிவாய். ஓ! அனைவருக்கும் தலைவனே, ஓ! உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் கருணை கொண்டவனே, ஓ! மதுசூதனா, எங்கள் அனைவரின் மகிழ்ச்சியும், எங்கள் இருப்பும் கூட உன்னிடமே {உன்னை நம்பியே} இருக்கிறது. ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, என் இதயம் உன்னிலேயே நிலைத்திருக்க எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக. ஓ! தலைவா, அர்ஜுனன் ஏற்ற உறுதி மொழி எதனால் நிறைவேறுமோ அதையும் செய்வாயாக. ஓ!, துன்பம் மற்றும் சினம் ஆகியவற்றின் இந்தக் கடலில் இருந்து எங்களை இன்று மீட்பாயாக. ஓ! மாதவா, (அந்தக் கடலைக்) கடக்க விரும்பும் எங்களுக்கு இன்று நீ ஒரு படகாவாயாக.

போரில் எதிரியைக் கொல்லவிரும்பும் தேர்வீரர்களுக்கு, ஒரு தேரோட்டியானவன் கவனமாக முயன்றால் என்ன செய்ய முடியுமோ, அஃதை (அவனது நோக்கத்தின் வெற்றிக்காகச்) செய்வாயாக. ஓ! ஜனார்த்தனா, பேரிடர்கள் அனைத்திலும் இருந்து நீ விருஷ்ணிகளை எப்போதும் காப்பதைப் போலவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இந்தத் துயரில் இருந்து எங்களைக் காப்பதே உனக்குத் தகும். ஓ! சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதத்தைத் தாங்குபவனே, அடியற்ற குரு கடலில் படகற்று மூழ்கும் பாண்டுவின் மகன்களுக்கு ஒரு படகாகி, அவர்களை மீட்பாயாக. ஓ! தேவர்களின் தலைவனுக்குத் தேவனே {தேவதேவேசனே}, ஓ! நித்தியமானவனே, ஓ! அழிப்பவர்களில் உயர்ந்தவனே, ஓ! விஷ்ணுவே, ஓ! ஜிஷ்ணுவே, ஓ! ஹரியே, ஓ! கிருஷ்ணா, ஓ! வைகுண்டா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {புருஷோத்தமா} உன்னை வணங்குகிறேன். வரங்களை அளிப்பவரும், சாரங்க வில்லைத்தரிப்பவரும், அனைவரில் முதன்மையானவருமான (நாராயணன் என்று அழைக்கப்படும்) புராதனமான சிறந்த முனிவர் என்று நாரதர் உன்னைச் சொல்லியிருக்கிறார். ஓ! மாதவா, அவ்வார்த்தைகளை மெய்யாக்குவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

அந்தச் சபைக்கு மத்தியில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், பேசுவபவர்களில் முதன்மையானவனுமான கேசவன் {கிருஷ்ணன்} மழை நிறைந்த மேகங்களின் ஆழ்ந்த குரலில் யுதிஷ்டிரனிடம், “ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, தேவர்களையும் சேர்த்து அடங்கிய உலகங்கள் அனைத்திலும், தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} நிகரான எந்த வில்லாளியும் கிடையாது. மனிதர்களில் முதன்மையான அர்ஜுனன், பெரும் சக்தி, ஆயுதங்களில் சாதனை, பெரும் ஆற்றல், பெரும்பலம், போரில் கொண்டாடப்படுதல், எப்போதும் கோபம் நிறைந்திருத்தல், பெரும் சக்தி ஆகியவற்றைக் கொண்டவனாவான். வயதில் இளமையையும், காளையின் கழுத்தையும், நீண்ட கரங்களையும் கொண்ட அவன் {அர்ஜுனன்}, பெரும் பலத்தைக் கொண்டவன் ஆவான். சிங்கத்தைப் போலவோ, காளையைப் போலவோ நடப்பவனும், பெரும் அழகனுமான அவன் {அர்ஜுனன்}, உமது எதிரிகள் அனைவரையும் கொல்வான்.

என்னைப் பொறுத்தவரை, பெருகும் காட்டுத்தீயைப் போலக் குந்தியின் மகனான அர்ஜுனன், திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} துருப்புகளை எரிக்கச்செய்யும்படி செய்வேன். பாவச் செயல்களைச் செய்தவனும், சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} கொன்றவனுமான அந்த இழிந்த ஈனனை (ஜெயத்ரதனை), தன் கணைகளால், எந்தச் சாலையில் இருந்து பயணிகள் எவரும் திரும்புவதில்லையோ அங்கே இந்நாளே அர்ஜுனன் அனுப்புவான். இன்று, கழுகுகளும், பருந்துகளும், மூர்க்கமான நரிகளும், ஊனுண்ணும் பிற உயிரினங்களும் அவனது {ஜெயத்ரதனது} சதையை உண்ணப்போகின்றன.

ஓ! யுதிஷ்டிரரே, அவனது பாதுகாவலர்களாக இந்திரனுடன் கூடிய அனைத்துத் தேவர்களும் வந்தாலும் கூட, நெருக்கமானப் போரில் கொல்லப்படும் ஜெயத்ரதன் யமனின் தலைநகரத்திற்குச் செல்வான். சிந்துக்களின் ஆட்சியாளனைக் {ஜெயத்ரதனைக்} கொன்ற பிறகு, (மாலையில்) ஜிஷ்ணு {அர்ஜுனன்} உம்மிடம் வருவான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமது துயரையும் (உமது இதய) நோயையும் கைவிட்டுச் செழிப்பால் அருளப்பட்டிருப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.

அர்ஜுனனின் சொற்கள்! – துரோண பர்வம் பகுதி – 084-யுதிஷ்டிரனிடம் வந்த அர்ஜுனன் தான் கண்ட கனவைச் சொன்னது; பாண்டவ வீரர்கள் ஆச்சரியமடைந்து உற்சாகம் கொண்டது; அர்ஜுனனுக்குத் தோன்றிய மங்கலச் சகுனங்கள்; சாத்யகிக்கு அர்ஜுனன் இட்ட பணி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யுதிஷ்டிரன், வாசுதேவன் {கிருஷ்ணன்}, மற்றும் பிறர் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, பாரதக் குலத்தின் முதன்மையானவனான அந்த மன்னனையும் {யுதிஷ்டிரனையும்}, தனது நண்பர்களையும், நலன்விரும்பிகளையும் காண விரும்பி தனஞ்சயன் {அர்ஜுனன்} அங்கே வந்தான். அவன் {அர்ஜுனன்}, அந்த மங்கலகரமான அறைக்குள் நுழைந்து, மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கி, அவனுக்கு முன்பு நின்ற பிறகு, அந்தப் பாண்டவர்களில் காளை (மன்னன் யுதிஷ்டிரன்) தன் இருக்கையில் இருந்து எழுந்து, பெரும் பாசத்துடன் அர்ஜுனனைத் தழுவிக் கொண்டான். தன் கரங்களால் அவனை அணைத்துக் கொண்டு, அவனது தலையை முகர்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அவனை {அர்ஜுனனை} இதயப்பூர்வமாக வாழ்த்தினான்.

பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, அவனிடம் {அர்ஜுனனிடம்} சிரித்துக் கொண்டே, “ஓ! அர்ஜுனா, (பிரகாசமான, மகிழ்ச்சியான) உன் முகம் மற்றும் உன்னிடம் மிகவும் நிறைவுடன் இருக்கும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} என்ற உண்மைச் செய்திகளைக் கொண்டு தீர்மானிக்கையில், போரில் உனக்கு வெற்றியே நிச்சயம் காத்திருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.

அப்போது ஜிஷ்ணு {அர்ஜுனன்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அருளப்பட்டிருப்பீராக. கேசவனின் {கிருஷ்ணனின்} அருளால், மிக ஆச்சரியமான ஒன்றை நான் கண்டேன்” என்று சொல்லி தனக்கு நேர்ந்ததும், மிக உயர்ந்த அற்புதமுமான அந்தச் சம்பவத்தை அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான். பிறகு தனஞ்சயன் {அர்ஜுனன்}, முக்கண் தேவனுடன் {சிவனுடன்} ஏற்பட்ட தனது சந்திப்பைத் தன் நண்பர்களுக்கு உறுதி செய்யும் வகையில், தான் கண்டவாறே அனைத்தையும் சொன்னான். அப்போது அதைக் கேட்டவர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்து, தங்கள் தலைகளைத் தரைவரை தாழ்த்தினர். மேலும் காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தேவனை {சிவனை} வணங்கியபடியே அவர்கள், “நன்று, நன்று!” என்றனர்.

பிறகு (பாண்டவர்களின்) நண்பர்களும், நலன்விரும்பிகள் அனைவரும், தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} ஆணைக்கிணங்க, தங்கள் இதயங்களில் (எதிரிக்கு எதிராக) சினத்தால் நிறைந்து, விரைவுடனும், கவனத்துடனும் போருக்குச் சென்றனர். மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கிய யுயுதானன் {சாத்யகி}, கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன் ஆகியோர், மகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரனின் வசிப்பிடத்தை விட்டுப் புறப்பட்டனர். வெல்லப்பட முடியாத இரு வீரர்களான யுயுதானன் மற்றும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோர் இருவரும் ஒரே தேரில் சென்று அர்ஜுனனின் பாசறையை அடைந்தனர். அங்கே வந்த கிருஷ்ணன், (தொழிலால்) ஒரு தேரோட்டியைப் போலவே, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனுக்கு (அர்ஜுனனுக்குச்) சொந்தமானதும், குரங்குகளின் இளவரசனை {அனுமனை} அடையாளமாகத் தாங்குவதுமான {குரங்குக் கொடியைக் கொண்டதுமான} அந்தத் தேரைத் தயார்ப்படுத்தத் தொடங்கினான். புடம்போட்ட தங்கத்தின் பிரகாசத்தைக் கொண்டதும், மேகங்களுக்கு ஒத்த ஆழமான முழக்கத்துடன் கூடிய சடசடப்பொலியைக் கொண்டதும், (கிருஷ்ணனால்} தயார் நிலையில் நிறுத்தப்பட்டதுமான அந்த முதன்மையான தேர், காலைச் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது. அப்போது கவசம் பூண்ட அந்த மனிதர்களில் புலி (வாசுதவேன்), காலை வேண்டுதல்களை முடித்திருந்த பார்த்தனிடம், அவனது தேர் முறையாகத் தயாரிக்கப்பட்டு விட்டது என்ற செய்தியைச் சொன்னான். பிறகு, இவ்வுலக மனிதர்களில் முதன்மையானவனான அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), தங்கக் கவசம் பூண்டு, கையில் தன் வில் மற்றும் கணைகளுடன் அந்தத் தேரை வலம் வந்தான்.

தவத்துறவுகள், அறிவு மற்றும் வயது ஆகிவற்றில் முதிர்ந்தோரும், அறச்சடங்குகள் மற்றும் வேள்விகள் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களுமான பிராமணர்களால் வெற்றி குறித்த வாழ்த்தும், அருளும் ஆசிகளுடன் சொல்லப்பட்ட பின்பு, போரில் வெற்றியைத் தரவல்ல மந்திரங்களால் முன்பே தூய்மையாக்கப்பட்டிருந்த அற்புத வாகனமான அந்தத் தேரில், சுடர்மிகும் கதிர்களைக் கொண்ட சூரியன் கிழக்கு மலையில் ஏறுவதைப் போலவே அர்ஜுனன் ஏறினான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்வீரர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, தன் தங்க ஆபரணங்களின் விளைவால், மேருவின் சாரலில் சுடர்மிகும் காந்தி கொண்ட சூரியனைப் போலவே அந்தத் தேரில் தெரிந்தான். சர்யாதி வேள்விக்கு இந்திரனுடன் ஒரே தேரில் சென்ற அசுவினி இரட்டையர்களைப் போல, பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குப்} பிறகு, யுயுதானனும் {சாத்யகியும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, அந்தத் தேரில் ஏறினர். போரில் விருத்திரனைக் கொல்வதற்காக இந்திரன் சென்ற போது, அவனது தேரின் கடிவாளங்களைப் பிடித்த மாதலியைப் போலவே, தேரோட்டிகளில் சிறந்தவனான கோவிந்தன் (அந்தக் குதிரைகளின்) கடிவாளங்களைப் பிடித்தான்.

அந்த இரு நண்பர்களுடன் {கிருஷ்ணன் மற்றும் சாத்யகியுடன்} சிறந்த தேரில் ஏறியவனும், எதிரிகளின் பெரும் படைகளைக் கொல்பவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, புதனுடனும், சுக்கிரனுடனும் கூடி இரவின் இருளை அழிப்பதற்காக (ஆகாயத்தில்) எழும் சோமனைப் போலவோ, (பிருஹஸ்பதியின் மனைவியான) தாரகை கடத்தப்பட்ட நிகழ்வின் போது, வருணன் மற்றும் சூரியனுடன் கூடி (அசுரர்களுக்கு எதிராகப்) பெரும்போருக்குச் சென்ற இந்திரனைப் போலவோ சென்றான். அப்படிப் புறப்பட்ட வீர அர்ஜுனனை, இசைக்கருவிகளின் ஒலியாலும், நற்சகுனம் குறித்த மங்கலப் பாடல்களாலும், மாகதர்களும், இசைவல்லுனர்களும் நிறைவு கொள்ளச் செய்தனர். வெற்றிக்கான வாழ்த்தையும், {அந்த நாள்} நல்ல நாளாக அமைவதற்கான வாழ்த்தையும் பாடிய சூதர்கள் மற்றும் மாகதர்களின் குரல்கள் இசைக்கருவிகளின் ஒலியோடு கலந்து அவ்வீரர்களை நிறைவு கொள்ளச் செய்தன.

பார்த்தனை {அர்ஜுனனை} மகிழ்வித்து, அவனது எதிரிகளின் சக்திகளை உறிஞ்சியபடியே நறுமணம் மிக்க மங்கலமான தென்றல் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குப்} பின்னால் இருந்து வீசியது. அந்நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் வெற்றியையும், உமது வீரர்களின் தோல்வியையும் குறிக்கும் வகையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகைகளிலான பல மங்கலச் சகுனங்கள் அங்கே தோன்றின. வெற்றியின் அந்தக் குறியீடுகளைக் கண்ட அர்ஜுனன், தன் வலப்பக்கத்தில் இருந்த பெரும் வில்லாளியான யுயுதானனிடம் {சாத்யகியிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! யுயுதானா {சாத்யகி}, (மங்கலகரமான) சகுனங்களாக இவை அனைத்தும் காணப்படுவதால், ஓ! சினி குலத்தின் காளையே {சாத்யகி}, இன்றைய போரில் என் வெற்றி உறுதியானதாகவே தெரிகிறது. எனவே, என் சக்திக்காகவும் (என் சக்தி வெளிப்படுவதைப் பார்ப்பதற்காகவும்), யமலோகம் செல்வதற்காகவும் காத்திருக்கும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} எங்கிருக்கிறானோ அங்கே நான் செல்வேன்.

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {சாத்யகி}, இன்று மன்னரின் {யுதிஷ்டிரரின்} பாதுகாவலனாக நீ இருப்பாயாக. நான் பாதுகாப்பதைப் போலவே நீயும் அவரைப் பாதுகாப்பாயாக. உன்னை வெல்லக்கூடிய மனிதர் எவரையும் நான் இவ்வுலகில் காணவில்லை. போரில் நீ வாசுதேவனுக்கே {கிருஷ்ணனுக்கே} நிகரானவனாவாய். தேவர்களின் தலைவனே {இந்திரனே கூட} உன்னை வீழ்த்த இயலாது. இந்தச் சுமையை உன் மீதோ, வலிமைமிக்கத் தேர்வீரனான பிரத்யும்னன் மீதோ வைத்துவிட்டு, ஓ! மனிதர்களில் காளையே {சாத்யகி}, கவலையில்லாமல் என்னால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல முடியும்.

ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, என்னைக் குறித்த எந்தக் கவலையும் கொள்ள வேண்டியதில்லை. உன் முழு இதயத்தோடு நீ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பாதுகாப்பாயாக. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} எங்கிருக்கிறானோ, நான் எங்கிருக்கிறேனோ, அங்கே அவனுக்கோ, எனக்கோ சிறு ஆபத்தும் ஏற்பட முடியாது என்பதில் ஐயமில்லை” என்றான் {அர்ஜுனன்}. இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான சாத்யகி, “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறினான். பிறகு, பின்னவன் {சாத்யகி}, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.

பிரதிஜ்ஞா பர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ உத்யோக பர்வம்-ஸ்ரீ  பகவத்யாந பர்வம்-சைனிய நிர்யாண உப பர்வம்-

October 12, 2025

பாண்டவப் படைத்தலைவன்! – உத்யோக பர்வம் பகுதி 151-(பகவத்யாந பர்வம் – 80) {சைனியநிர்யாண பர்வம் – 1}கௌரவப் படை புறப்பட்டுவிட்டது எனக் கிருஷ்ணன் மூலமாகக் கேட்ட யுதிஷ்டிரன், அக்ஷௌஹிணிகளின் தலைவர்களாக எழுவரை நியமித்து, படைத்தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் எனத் தனது தம்பிகளிடம் கேட்டது; விராடனின் பெயரைச் சகாதேவனும், துருபதனின் பெயரை நகுலனும், திருஷ்டத்யும்னனின் பெயரை அர்ஜுனனும், சிகண்டியின் பெயரை பீமசேனனும் முன்மொழிவது; படைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கிருஷ்ணனிடம் யுதிஷ்டிரன் கொடுப்பது; திருஷ்டத்யும்னனைப் படைத்தலைவனாகக் கிருஷ்ணன் தேர்ந்தெடுத்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஜனார்த்தனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், கேசவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில், தனது தம்பிகளிடம், “குருக்கள் கூடியிருந்த சபையில் நடந்தது அத்தனையும் நீங்கள் கேட்டீர்கள். கேசவன் {கிருஷ்ணன்} உதிர்த்த வார்த்தைகள் அனைத்தையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, மனிதர்களில் சிறந்தவர்களே, போரிட வேண்டிய வரிசையில் {பிரிவுகளாகப் பிரித்து} எனது துருப்புகளை அணிவகுப்பீராக.

நமது வெற்றிக்காக இங்கே ஏழு {7} அக்ஷௌஹிணி படைகள் கூடியிருக்கின்றன. அந்த ஏழு அக்ஷௌஹிணிகளையும் வழிநடத்தப்போகும் {தலைவர்களான} அந்த ஏழு புகழ்பெற்ற வீரர்களின் பெயர்களைக் கேட்பீராக. துருபதர், விராடர், திருஷ்டத்யும்னன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன், பெரும் சக்தி கொண்ட பீமசேனன் ஆகியோரே அவர்கள் {அந்த எழுவர்}. இந்த வீரர்களே எனது துருப்புகளின் தலைவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவரும், வேதங்களை {தனுர் வேதத்தை} அறிந்தவர்களாவர். பெரும் வீரம் கொண்ட இவர்கள் அனைவரும், அற்புத நோன்புகளைப் பயின்றவர்களாவர் {உடல் வெறுத்தவர்களாவர்}. பணிவு கொண்ட இவர்கள் அனைவரும், கொள்கைகளிலும் மற்றும் போரிலும் சாதனைளை அறிந்தவர்களாவர். ஆயுதங்களிலும், அம்புகளிலும் நன்கு திறம்பெற்ற இவர்கள் அனைவரும், அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தத் தகுந்தவர்களாவர்.

ஓ! சகாதேவா, ஓ! குரு குலத்தின் மகனே, அனைத்து வகைப் போர்வரிசைகளை {படைகளின் பிரிவுகளை} அறிந்தவரும், இந்த எழுவருக்கும் தலைவராக ஆகக்கூடியவரும், கணைகளைச் சுடராகக் கொண்டிருக்கும் நெருப்பைப் போன்ற பீஷ்மரைப் போரில் தாக்குப்பிடிக்கக்கூடியவருமான வீரர் யார் என்பதை எங்களுக்கு இப்போது சொல்வாயாக. ஓ! மனிதர்களில் புலியே {சகாதேவா}, *நமது படைத்தலைவராக ஆகத் தகுந்தவர் யார் என்பதில் உனது கருத்தை எங்களுக்குச் சொல்வாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “உறவில் நமக்கு நெருக்கமானவரும் {சம்பந்தியும்}, துயரத்தில் {அஞ்ஞாதவாசத்தில்} நமக்கு ஆதரவாக இருந்தவரும், பெரும் பலம் கொண்டவரும், அனைத்து அறங்களையும் அறிந்தவரும், போரில் தடுக்கப்பட முடியாதவரும், நாட்டில் உள்ள பங்கை மீட்டுத் தருவதில் நமக்கு நம்பிக்கையானவரும், பலம்பொருந்திய மத்ஸ்ய {மச்ச நாட்டு} மன்னருமான விராடரே, பீஷ்மர் மற்றும் அந்தப் பலமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் போரில் தாக்குப்பிடிக்க வல்லவராவார்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சகாதேவன் இதைச் சொன்னதும், சொல்திறமிக்க நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, “வயது, சாத்திர அறிவு, விடாமுயற்சி, பிறப்பு மற்றும் குலம் ஆகியவற்றினால் மதிக்கத்தகுந்தவரும், பணிவு, பலம் மற்றும் செழிப்பைக் கொண்டவரும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரும், (பரத்வாஜ முனிவரிடம்) ஆயுத அறிவியலைக் கற்றவரும், தடுக்கப்பட முடியாதவரும், உண்மையில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவரும், துரோணரையும், வலிமைமிக்கப் பீஷ்மரையும் எப்போதும் சவாலுக்கழைப்பவரும், அரச குடும்பங்களில் முதன்மையான ஒன்றில் வந்தவரும், படைகளின் புகழ்பெற்ற தலைவரும், சூழ்ந்திருக்கும் மகன்கள் மற்றும் பேரர்களின் விளைவால் நூறு கிளைகளைக் கொண்ட மரத்திற்கு ஒப்பானவரும், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் மனைவியுடன் சேர்ந்து துரோணரின் அழிவுக்காகக் கடும் தவமிருந்தவரும், சபைகளின் ரத்தினமானவரும், நம்மை எப்போதும் ஒரு தந்தையைப் போல ஆதரிப்பவரும், நமது மாமனாருமான துருபதரே படைத்தலைவராக இருக்க வேண்டும். போருக்கு விரைந்து வரும் துரோணரையும் பீஷ்மரையும் தாக்குப்பிடிக்க இயன்றவர் அவரே {துருபதரே} என்பது எனது கருத்து. ஏனெனில், அங்கிரசின் வழித்தோன்றலான துரோணருக்கு நண்பரான இந்த மன்னர் {துருபதர்}, தெய்வீக ஆயுதங்களையும் அறிந்தவராக இருக்கிறார்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {நகுலன்}.

மாத்ரியின் மகன்கள் இருவரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தியதும், வாசவனின் {இந்திரனின்} மகனும், அந்த வாசவனுக்கே {இந்திரனுக்கே} நிகரானவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, “தவசிகளை மனநிறைவு செய்து, தவநோன்புகளின் சக்தியால் பிறந்தவனும்; நெருப்பின் நிறம் கொண்டவனும்; சிறந்த சாதியிலான அற்புதக் குதிரைகள் பூட்டப்பட்டதும், பெருந்திரள் மேகங்களின் கர்ஜனையைப் போன்ற ஒலியை எழுப்பவல்ல சக்கரங்களைக் கொண்டதுமான தேருடனும், வில், வாள் மற்றும் இரும்புக் கவசம் ஆகியவற்றுடனும், வேள்வி செய்யும் நெருப்புக் குண்டத்தில் இருந்து உதித்தவனும்; சிங்கத்தைப் போன்ற உடற்கட்டு, வீரம், பலம், சக்தி ஆகியவற்றைக் கொண்ட வீரனும்; சிங்கம் போன்ற தோள்கள், கரங்கள், மார்பு ஆகியவற்றைக் கொண்டவனும்; சிங்கத்தின் உறுமல் போன்ற குரலைக் கொண்டவனும்; பெரும் பிரகாசம் கொண்ட வீரனும்; அழகிய புருவங்கள், நல்ல பற்கள், உருண்ட கன்னங்கள், நீண்ட கரங்கள், பருத்த உடல், சிறந்த தொடைகள், அகன்ற பெரிய கண்கள், சிறந்த கால்கள், உறுதியான உடற்கட்டு ஆகியவற்றைக் கொண்டவனும்; எவ்வகை ஆயுதத்தாலும் துளைக்கப்பட முடியாதவனும்; மதம் கொண்ட யானையைப் போல இருப்பவனும், உண்மை நிறைந்த பேச்சு, கட்டுபடுத்தப்பட்ட ஆசைகள் ஆகியவற்றைக் கொண்டவனுமான இந்தத் தெய்வீகமான திருஷ்டத்யும்னன் துரோணரின் அழிவுக்காகவே பிறந்தவனாவான்.

இடிபோன்ற கடுமையுடன் அடிக்கப்படுவதும், நெருப்புச்சுடர்விடும் {நெருப்பைக் கக்கும்} வாய்களுடன் கூடிய பாம்புகளைப் போன்றதும், யமனின் தூதர்களுக்கு இணையான வேகம் கொண்டதும், (தொடுவதாலேயே அனைத்தையும் எரித்துவிடும்) நெருப்புச் சுடர்களைப் போன்று விழுவதும், இதற்கு முன்னால் ராமரால் {பரசுராமரால்} மட்டுமே போரில் தாங்கப்பட்டதுமான பீஷ்மரின் கணைகளைத் தாங்கவல்லவன் திருஷ்டத்யும்னன் மட்டுமே என்று நான் நினைக்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனைத் தவிர, பெரும் நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைத் தாக்கப்பிடிக்கவல்ல வேறு எவரையும் நான் காணவில்லை. இதையே நான் நினைக்கிறேன். கரங்களில் பெருவேகம் {பெரும் இலகுத்தன்மை} கொண்டவனும், அனைத்து வகையான போர்முறைகளை அறிந்தவனும், ஆயுதங்களால் துளைக்கப்பட முடியாத கவசம் கொண்டவனும், யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போன்றவனுமான இந்த அழகிய வீரனே {திருஷ்டத்யும்னனே), என் கருத்தின்படி, நமது படைத்தலைவனாக இருக்கத் தகுந்தவனாவான்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.

பீமன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துருபதனின் மகனும், ‘பீஷ்மரின் அழிவுக்காகப் பிறந்தவன்’ என்று தவசிகள் மற்றும் சித்தர்களின் கூட்டத்தால் சொல்லப்படுபவனும், போர்க்களத்தில் தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்தும்போது, ஒப்பற்ற ராமரை {பரசுராமரைப்} போன்றவனுமான சிகண்டியானவன், கவசம் பூண்ட தனது தேரில் நிலைத்திருக்கும்போது, ஆயுதங்களால் அவனை {சிகண்டியைத்} துளைக்கவல்ல ஒருவனையும் நான் காணவில்லை. சிகண்டியைத் தவிர, தனிப்போரில் பீஷ்மரைக் கொல்லவல்ல பிற வீரர்கள் யாரும் இல்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சிகண்டியே நமது படைத்தலைவனாக இருக்கத் தகுந்தவன் என இதற்காகவே நான் நினைக்கிறேன்” என்றான் {பீமன்}.

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “ஓ! ஐயா {பீமா}, அண்டத்தில் உள்ள அனைத்தின் பலம் மற்றும் பலவீனம், வலிமை மற்றும் அயர்வு ஆகியவற்றையும், ஒவ்வொருவரின் நோக்கங்களையும், அறம்சார்ந்த கேசவனே {கிருஷ்ணனே} நன்கறிவான். தாசார்ஹ குலத்தின் கிருஷ்ணன் குறிப்பிடும் எவனும் ஆயுதங்களில் திறனுடனோ, திறனில்லாமலோ, இளைஞனாகவோ, முதியவராகவோ இருந்தாலும், அவனே எனது படைகளின் தலைவனாக இருக்கட்டும். இவன்தான் {கிருஷ்ணன்தான்} நமது வெற்றி அல்லது தோல்வியின் வேராக இருக்கிறான். இவனிலேயே நமது உயிர்கள், நமது நாடு, நமது செழிப்பும் வறுமையும், நமது மகிழ்வும் துன்பமும் இருக்கின்றன.

இவனே விதி சமைப்பவனாகவும், படைப்பாளனாகவும் இருக்கிறான். நமது ஆசைகளின் கனிகள் அனைத்தும் இவனிலேயே நிறுவப்பட்டுள்ளன. எனவே, கிருஷ்ணனால் பெயர் சொல்லப்படுபவரே, நமது படையின் தலைவராக இருக்கட்டும். நமது தலைவரை {படைத்தலைவரைத்} தேர்ந்தெடுத்து, மலர்களாலும், வாசனைத் திரவியங்களாலும் நமது ஆயுதங்களை வழிபட்டு, பொழுது புலர்ந்ததும் கிருஷ்ணனின் உத்தரவுப்படி போர்க்களதிற்கு அணிவகுப்போமாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “புத்திசாலி மன்னனும், நீதிமானுமான யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட, தாமரைக் கண் கிருஷ்ணன், தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பார்த்தபடி, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமது துருப்புகளின் தலைவர்களாகப் பெயரிடப்பட்ட பலம்நிறைந்த வீரர்கள் அனைவரையும் நான் முழுமையாக அங்கீகரிக்கிறேன். எதிரிகளைத் தாக்குப்பிடிக்க அவர்கள் அனைவரும் தகுந்தவர்களே. உண்மையில், அவர்கள் இந்திரனையே பெரும்போரில் அச்சுறுத்தக்கூடியவர்கள் எனும்போது, பேராசையும், தீய மனமும் கொண்ட திருதராஷ்டிரன் மகன்கள் எம்மாத்திரம்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, போரைத் தடுத்துச் சமாதானத்தைக் கொண்டுவர நான் பெரும் முயற்சிகளைச் செய்தது உமது நன்மைக்காவே. அதன் காரணமாக, அறத்தால் நாம் பட்ட கடன்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டோம். குறை கண்டுபிடிக்கும் மனிதர்களால், இனி எதைக் கொண்டும் நம்மை நிந்திக்க முடியாது.

அறிவற்றவனும், மூடனுமான துரியோதனன், ஆயுதங்களில் நிபுணனாகத் தன்னைக் கருதிக் கொள்கிறான். உண்மையில் அவன் பலவீனனாக இருப்பினும், பலம் கொண்டவனாகவே தன்னை நினைத்துக் கொள்கிறான் [1]நமது கோரிக்கைகளைப் பெற படுகொலை ஒன்றே {இருப்பதில்} ஒரே வழி என்பதால் விரைவாக உமது துருப்புகளை அணிவகுப்பீராக. உண்மையில், யுயுதானனை {சாத்யகியை} இரண்டாவதாகக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அபிமன்யு, திரௌபதியின் ஐந்து மகன்கள், விராடன், துருபதன், கடும் பரக்கிரமம் கொண்ட பிற மன்னர்கள் மற்றும் அக்ஷௌஹிணிகளின் தலைவர்கள் அனைவரையும் காணும்போது, திருதராஷ்டிரன் மகன்களால், தங்கள் நிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள {நிலத்தில் நிற்க} முடியாது. நமது படை பெரும் வலிமையுடையதும், வெல்லப்பட முடியாததும், தாக்குபிடிக்கப்பட முடியாததுமாகும். திருதராஷ்டிரன் கூட்டத்தை அது {பாண்டவர்கள் படை} கொல்லும் என்பதில் ஐயமில்லை. நமது தலைவரைப் {படைத்தலைவரைப்} பொருத்தவரை, எதிரிகளைத் தண்டிப்பவனான திருஷ்டத்யும்னனை நான் அழைப்பேன்” என்றான் {கிருஷ்ணன்}.

குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணனின் சங்கொலி! – உத்யோக பர்வம் பகுதி 152-பாண்டவப் படை குருக்ஷேத்திரத்திற்கு அணிவகுத்துச் சென்றதையும், உபப்லாவ்யத்தில் அவர்கள் செய்து சென்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வைசம்பாயனர் விவரிப்பது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணன் இதைச் சொன்னதும் அனைத்து ஏகாதிபதிகளும் மகிழ்ச்சியில் நிறைந்தனர். மகிழ்ச்சியடைந்த மன்னர்கள் அனைவராலும் எழுப்பப்பட்ட ஒலி பேரொலியாக {பிரம்மாண்டமானதாக} இருந்தது. “அணிவகுப்பீராக, அணிவகுப்பீராக” என்று சொல்லி அத்துருப்புகள் பெரும் வேகத்துடன் நகரத் தொடங்கின. எங்கும் கேட்ட குதிரைகளின் கனைப்புகளும், யானைகளின் பிளிறல்களும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், சங்கொலிகளும், துந்துபிகளின் ஒலியும், அங்கே ஒரு மிகப்பெரிய ஆரவாரத்தை உண்டாக்கியது. தேர்களாலும், காலாட்படைவீரர்களாலும், குதிரைகளாலும், யானைகளாலும் நிரம்பியிருந்ததும், இங்கும் அங்கும் அணிவகுத்து நகர்ந்து சென்றதும், கவசங்களை அணிந்தபடி போர் கர்ஜனைகளுடன் சென்றவர்களைக் கொண்டதுமான பாண்டவர்களின் வெல்லப்பட முடியாத அந்தப் படையைக் காண, கடுமையான எதிர்ச்சுழிகளாலும், அலைகளாலும் கலங்கிச் செல்லும் பூரணமான {நிறைந்த அளவை எட்டிய} கங்கையின் மூர்க்கமான நீரூற்றைப் போலத் தெரிந்தது.

கவசம் தரித்தவர்களான பீமசேனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் ஐந்து மகன்கள், பிரஷத குலத்தைச் சார்ந்த திருஷ்டத்யும்னன் ஆகியோர் அந்தப் படையின் முன்னணியில் சென்றார்கள். பிரபத்ரகர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் பீமசேனனுக்குப் பின்னே அணிவகுத்துச் சென்றார்கள். அப்படி அணிவகுத்துச் சென்ற படையின் ஆரவாரம், அமாவாசையின் போது மிக உயரமாக எழும் கடலின் {கடல் அலையின்} கர்ஜனையைப் போல, மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. உண்மையில் அந்த அமளி சொர்க்கத்தையே {வானத்தையே} எட்டுவதாகத் தெரிந்தது. பகைவரின் படையணியை உடைக்கவல்லவர்களும், கவசம் அணிந்தவர்களுமான அந்த வீரர்கள் மகிழ்ச்சியில் நிறைந்து இப்படியே அணிவகுத்துச் சென்றார்கள்.

அவர்களுக்கு மத்தியில் குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தேர்களையும், போக்குவரத்துக்குத் தேவையான பிற வாகனங்களையும், உணவு மற்றும் தீவனப் பைகளையும், கூடாரங்களையும் [1], வண்டிகளையும், பணப்பெட்டகங்களையும், இயந்திரங்களையும், ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, அறுவைசிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செல்லுபடியாகதவர்கள், மெலிந்த பலவீனமான போர்வீரர்கள், ஆகியோரையும், பணியாட்கள் மற்றும் முகாம்களில் இருப்போர் {பணிசெய்வோரையும்} அனைவரையும் எனத் தன்னுடன் அழைத்துச் சென்றான்

பாஞ்சால இளவரசியான உண்மை நிறைந்த திரௌபதி, வீட்டில் இருக்கும் பெண்களின் துணையோடும், ஊழியர்களும், பணிப்பெண்கள் சூழவும் உபப்லாவ்யத்திலேயே இருந்தாள். தங்கள் நிதி மற்றும் மங்கையரைப் பாதுகாக்கும்படி, தங்கள் படைவீரர்களில் சில அமைப்புகளை நிரந்தரச் சுற்றரணாக அமர்த்தியும், அங்கிருந்து சற்றுத் தூரத்தில் சிலரையும் நிறுத்திய பாண்டவர்கள், தங்கள் பெரும்படையுடன் புறப்பட்டுச் சென்றனர். {**பாண்டவர்கள், கோட்டை முதலிய அரண்களையும், வாயில்காப்போர் முதலிய படைவீரர்களாலும் செல்வம் மற்றும் மங்கையர் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு, பெரிய படையுடன் சென்றார்கள்}.

பசுக்களையும், தங்கத்தையும் அந்தணர்களுக்குக் கொடையளித்துவிட்டு, அவர்களை வலம் வந்து, ஆசிகளைப் பெற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, நகைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு, தங்கள் தேர்களில் ஏறி அணிவகுப்பைத் தொடங்கினார்கள்.

கேகய இளவரசர்கள், திருஷ்டகேது, காசிகள் {காசி நாட்டு} மன்னனின் மகன் {அபிபூ}, சிரேணிமாத், வசுதானன், வெல்லப்பட முடியாத சிகண்டி ஆகிய அனைவரும் நலத்துடனும், இதயப்பூர்வமாகவும், கவசம்பூட்டி, ஆயுதங்கள் தாங்கிக் கொண்டும், ஆபரணங்களால் தங்ககளை அலங்கரித்துக் கொண்டும், யுதிஷ்டிரனைத் தங்கள் மத்தியில் கொண்டு அவனுக்கு {யுதிஷ்டிரனுக்குப்} பின்னால் அணிவகுத்துச் சென்றனர்.

விராடன், சோமக குலத்தின் யக்ஞசேனன் மகன் (திருஷ்டத்யும்னன்), சுசர்மன், குந்திபோஜன், திருஷ்டத்யும்னனின் மகன்கள் ஆகியோரும், நாற்பதாயிரம் {40,000} தேர்களும், அதைப் போல ஐந்து மடங்கு {2,00,000} குதிரைகளும், அதைவிட {குதிரைகளைவிட} பத்துமடங்கு {20,00,000} அதிக எண்ணிக்கையில் காலாட்படையும், அறுபதாயிரம் {60,000} யானைகளும் {படையின்} பின்னே சென்றன. அனாதிருஷ்டி, சேகிதானன், திருஷ்டகேது, சாத்யகி ஆகியோர் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} சூழ்ந்தபடி அணிவகுத்துச் சென்றார்கள்.

போர் வரிசையிலான தங்கள் படைகளுடன் குருக்ஷேத்திரக் களத்தை அடைந்தவர்களும், அடிப்பவர்களுமான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, காளைகளைப் போலக் கர்ஜிப்பவர்களாகத் தெரிந்தார்கள். களத்தில் புகுந்ததும், எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் தங்கள் சங்குகளில் ஒலியெழுப்பினர். வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தங்கள் சங்குகளிலும் ஒலியை எழுப்பினர். இடி உருளும் ஓசைக்கு நிகரானதும், பஞ்சஜன்யம் {Panchajanya} என்று அழைக்கப்பட்டதுமான அந்தச் சங்கின் ஒலியைக் கேட்ட (பாண்டவப் படையின்) போர்வீரர்க்ள அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தார்கள். கரங்கள் மற்றும் அசைவில் வேகத்தைக் கொண்ட அந்தவீரர்களின் சிம்மகர்ஜனைகள், சங்கொலிகள் மற்றும் துந்துபிகளின் ஒலிகள் ஆகியவை கலந்து, முழுப் பூமியையும், வானத்தையும், கடல்களையும் எதிரொலிக்கச் செய்தன.”

பாளையமிறங்கிய பாண்டவப்படை! – உத்யோக பர்வம் பகுதி 153-விலங்குகளுக்கு ஓய்வு கொடுத்து, குருக்ஷேத்திரத்தை நோக்கி பாண்டவப் படை முன்னேறிச் சென்றது; இறுதியாகக் குருக்ஷேத்திரத்தின் வழியாக ஓடும் ஹிரண்வதீ நதியை அடைந்து, அதன் அருகே பெரிய அகழியை வெட்டி, திருஷ்டத்யும்னன் மற்றும் சாத்யகியைக் கொண்டு முகாமுக்கான இடத்தை அளந்து பாசறைகளை அமைத்தது; பாண்டவர்கள் பெற்றிருந்த இராணுவத்தளவாடங்கள் மற்றும் உணவு, நீருக்கான ஏற்பாடுகள் குறித்த குறிப்பு…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, மன்னன் *யுதிஷ்டிரன், சமமானதும், குளுமையானதும், புற்களும், விறகுகளும் நிறைந்ததுமான ஒரு பகுதியில் தனது துருப்புகளை முகாமிடச்செய்தான் {தங்கச் செய்தான்}. சுடுகாடுகள், கோவில்கள், தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடங்கள், தவசிகளின் ஆசிரமங்கள், புண்ணியத்தீர்த்தங்கள் மற்றும் பிற புனிதமான இடங்கள் ஆகியவற்றைத் தவிர்த்த குந்தியின் உயர் ஆன்ம மகன் யுதிஷ்டிரன், இனிமையான, வளமான, திறந்தவெளியில் தனது துருப்புகளைத் தங்கச் செய்தான். தனது விலங்குகளுக்குப் போதுமான ஓய்வைக் கொடுத்த அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் எழுந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏகாதிபதிகள் சூழ இன்பமாகப் புறப்பட்டான்.

பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்திருந்த கேசவன் {கிருஷ்ணன்}, {வழியில்} (புறக்காவலர்களாக வைக்கப்பட்டிருந்த) திருதராஷ்டிரனின் படைவீரர்களில் எண்ணற்றவர்களைச் சிதறடித்தபடி நகர ஆரம்பித்தான். சாத்யகி என்றும் அழைக்கப்படுபவனும், பெரும் சக்தி கொண்ட பலமிக்கத் தேர்வீரனுமான யுயுதானனும், பிரஷத குல திருஷ்டத்யும்னனும் முகாமுக்கான {பாசறை அமைப்பதற்கான} இடத்தை அளந்தனர்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, குருக்ஷேத்திரத்ததின் வழியே ஓடுவதும், புனித நீர் நிறைந்ததும், கூரான கற்களும் சேறும் இல்லாத படுகைகொண்டதும், அற்புதமான தீர்த்தமாகக் கருதப்பட்டதுமான புனிதமான ஹிரண்வதீ நதியை அடைந்த கேசவன் {கிருஷ்ணன்}, அங்கு ஓர் அகழியைத் தோண்டச் செய்து, அதன் பாதுகாப்புக்காகப் போதுமான எண்ணிக்கையிலான துருப்புகளை முறையான கட்டளைகளுடன் நிறுத்தினான். உயர் ஆன்ம பாண்டவர்களின் பாசறைகளை நிறுவுவதில் எந்த ஏற்பாடுகளைச் செய்தானோ, அதையே (அவர்களின் கூட்டாளிகளான} பிற மன்னர்களின் பாசறைகளுக்கும் கேசவன் {கிருஷ்ணன்} பின்பற்றினான்.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த மன்னர்க்களுக்காக, பூமியின் மேற்பரப்பில் ஒன்றுக்கொன்று இடைவெளி கொண்டவையும், தாக்கப்பட முடியாதவையும், விலையுயர்ந்தவையுமான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாசறைகளை நிறுவினான். பானகங்கள், உணவு வகைகள் மற்றும் விறகுகள் நிறைந்த அவை {பாசறைகள் [அ] கூடாரங்கள்} அரண்மனைகளைப் போன்றிருந்தன. ஒழுங்கான ஊதியம் பெற்ற இயந்திரக் கைவினைஞர்கள் {Mechanics}, நூறு நூறாக அங்கே கூடினர். சுய அறிவியலில் நன்கு தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் {Physicians} மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் {Surgeons} ஆகியோர், தேவையான அனைத்து மூலப் பொருட்களுடனும் அங்கு இருந்தனர்.

மன்னன் யுதிஷ்டிரன், ஒவ்வொரு பாசறையிலும் அதிக அளவிலானவையும், மலைகளைப் போன்று உயரமாக இருந்தவையுமான, நாண்கள், விற்கள், கவசங்கள், ஆயுதங்கள், தேன் மற்றும் தெளிந்த நெய், ரசப்பொடிகள், நீர், கால்நடைகளுக்கான தீவனங்கள், வைக்கோல் மற்றும் நிலக்கரி {உமிக் காந்தல்கள், கனரக இயந்திரங்கள், நாராசங்கள் {நீண்ட அம்புகளைப் போன்றவை}, தோமரங்கள் {ஈட்டிகளைப் போன்றவை}, போர்க்கோடரிகள், விற்தண்டுகள் {நாணற்ற விற்கள்}, மார்புக்கவசங்கள், ரிஷ்டிகள் {குறுவாள்கள்} மற்றும் அம்பறாத்தூணிகள் ஆகியவை நிறைந்திருக்கச் செய்தான்.

இரும்பு முள்ளுள்ள கவசம் பூண்டவையும், மலைகளைப் போன்று பெரியவையும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவரோடு {நூறாயிரம் பேருடன்} போர்புரியவல்ல எண்ணிலடங்கா யானைகளும் அங்குக் காணப்பட்டன. அந்தக் களத்தில் பாண்டவர்கள் பாளையமிறங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்த அவர்களது கூட்டாளிகள் {கூட்டணியில் உள்ள மன்னர்கள்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, தங்கள் படைகள், விலங்குகளோடு அங்கே அணிவகுத்துச் செல்லத் தொடங்கினர். பிரம்மச்சரிய நோன்புகள் பயின்றவர்களும், (புனிதமாக்கப்பட்ட = consecrated) சோமத்தைக் குடித்தவர்களும், வேள்விகளில் அந்தணர்களுக்குப் பெரும் கொடைகளை அளித்தவர்களுமான பல மன்னர்கள், பாண்டு மகன்களின் வெற்றிக்காக அங்கே வந்தனர்.”

கடல் போலத் தெரிந்த தலைநகரம்! – உத்யோக பர்வம் பகுதி 154-ஹஸ்தினாபுரத்தில் இருந்து கிருஷ்ணன் புறப்பட்டதும், தங்களுக்குள் ஆலோசித்த துரியோதனன், கர்ணன், துச்சாசனன் மற்றும் சகுனி ஆகியோர், போர் நிச்சயம் என்பதை உறுதி செய்து கொண்டு, அடுத்த நாள் படை புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தீர்மானித்தது; கௌரவப்படையின் மன்னர்களும், வீரர்களும் போருக்குக் கிளைம்பிய விதம்; மக்கள் கூட்டத்தால் நிரம்பிய ஹஸ்தினாபுரத்தின் தோற்றம்…

ஜனமேஜயன் {வைசம்பயனரிடம்} சொன்னான், “போரை விரும்பி, தனது துருப்புகளை அணிவகுக்கச் செய்து, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பாதுகாக்கப்பட்டு, விராடன் மற்றும் துருபதன், மற்றும் அவர்களுடைய மகன்கள் {விராடன் மற்றும் துருபதனின் மகன்கள்} ஆகியோர் துணையுடன், கேகயர்கள், விருஷ்ணிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பிற மன்னர்கள் என ஆதித்தியர்களால் பாதுகாக்கப்படும் பெரும் இந்திரனைப் போல, பலமிக்க எண்ணற்ற தேர்வீரர்களால் கவனிக்கப்பட்டு வந்த யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரத்தில் முகாமிட்டுவிட்டான் என்பதைக் கேள்விப்பட்டதும், மன்னன் துரியோதனன் என்ன ஆலோசித்தான்? என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தான்?

ஓ! உயர் ஆன்மா கொண்டவரே {வைசம்பாயனரே}, அந்தப் பயங்கரச் சந்தர்ப்பத்தில் குருஜாங்கலத்தில் {கௌரவ நாடு = குருஜாங்கலம்} நடந்தது அனைத்தையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். வாசுதேவன் {கிருஷ்ணன்}, விராடன், துருபதன், பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, பலமிக்க யுதாமன்யு, பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஆகியோர் தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவர்களும், இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களுக்கே சிக்கலைக் கொடுக்கவல்லவர்களுமாவர். எனவே, ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் பாண்டவர்கள் ஆகியோரின் செயல்களை அனைத்தையும், அவை நடந்தவாறே விபரமாகக் கேட்க நான் விரும்புகிறேன்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(குருக்களின் சபையில் இருந்து) தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} புறப்பட்டதும், கர்ணன், துச்சாசனன், சகுனி ஆகியோரிடம் பேசிய மன்னன் துரியோதனன், “தனது நோக்கத்தைச் சாதிக்க இயலாத கேசவன் {கிருஷ்ணன்}, பிருதையின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றுவிட்டான். கோபத்தால் நிறைந்த அவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களை நிச்சயம் தூண்டிவிடுவான். எனக்கும், பாண்டவர்களுக்குமான போரை வாசுதேவன் {கிருஷ்ணன்} மிகவும் விரும்புகிறான். பீமசேனனும், அர்ஜுனனும் எப்போதும் அவனைப் {கிருஷ்ணனைப்} போன்ற மனம் கொண்டவர்களே. மேலும், யுதிஷ்டிரனோ, எப்போதும் பீமசேனனின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பவன். தம்பிகள் அனைவருடனும் கூடிய இந்த யுதிஷ்டிரன் முன்னர் என்னால் துன்புறுத்தப்பட்டிருக்கிறான்.

நான் பகைமை பாராட்டி வந்த விராடனும், துருபதனும் வாசுதேவனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} கீழ்ப்படிந்து, யுதிஷ்டிரனின் படையில் தலைவர்களாக இருக்கிறார்கள். எனவே, கடுமையானதும், பயங்கரமானதுமான போர் நடக்கப் போகிறது. எனவே, சோம்பல் அனைத்தையும் கைவிட்டு, மோதலுக்கான அனைத்து தயாரிப்புகளைச் செய்வீர்களாக. (எனது கூட்டாளிகளான) மன்னர்கள் அனைவரும், குருக்ஷேத்திரத்தில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தங்கள் பாசறைகளை அமைக்கட்டும். அகன்றதும், எதிரிகளால் அணுகமுடியாததும், நீரும், விறகும் நிறைந்ததும், செய்திகள் மற்றும் பொருட்களை எதிரிகள் தடுக்க முடியாத வகையில் உள்ளதுமான இடங்களில், பல்வேறு வகை ஆயுதங்கள், கொடிகள் மற்றும் கொடிச்சீலைகள் நிறைந்ததுமான பாசறைகளை அமைப்பீர்களாக. நமது நகரத்தில் இருந்து அந்த முகாமுக்குச் செல்லும் சாலைகள் சமமாக ஆக்கப்படட்டும். இன்றே, தாமதமில்லாமல் இஃது அறிவிக்கப்பட்டு, *நாளை நமது அணிவகுப்பு தொடங்கட்டும்” என்றான் {துரியோதனன்}.

(மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட) அவர்கள், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். அடுத்த நாளில் அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {கர்ணன், துச்சாசனன் மற்றும் சகுனி ஆகியோர்}, தாங்கள் ஏவப்பட்டபடியே, அந்த ஏகாதிபதிகளுக்குத் தேவையான தங்குமிடங்கள் மற்றும் அனைத்துத் தேவைகளையும் செய்தனர்.

(அதே வேளையில்) அந்த ஏகாதிபதிகள் அனைவரும் மன்னனின் {துரியோதனனின்} கட்டளையைக் கேட்டு, அவனது நோக்கங்களை உணர்ந்து, தங்கள் விலையுயர்ந்த இருக்கைகளில் இருந்து கோபத்துடன் எழுந்தனர். அவர்கள் கதாயுதம் {பரிகாயுதம்} போன்றவையும், தங்கத் தோள்வளைகளால் சுடர்விடுவனவுமான தங்கள் கரங்களில் சந்தனக் குழம்பையும், மற்ற பிற வாசனைத் திரவியங்களையும் {கோரோசனை} மெதுவாகப் பூச ஆரம்பித்தனர். தாமரை போன்றன தங்கள் கரங்களால், தலைப்பாகைகளையும் அரை {கீழ்} மற்றும் மேலாடைகளையும், பல்வேறு வகை ஆபரணங்களையும் அணிந்து கொண்டனர்.

தேர்வீரர்களில் முதன்மையான பலர் தங்கள் தேர்களை மேற்பார்வையிட்டனர். குதிரை மரபுகளை அறிந்தவர்கள், தங்கள் குதிரைகளைப் பூட்ட ஆரம்பித்தனர், யானைகள் சம்பந்தமான காரியங்களை அறிந்தவர்கள், பெரிய விலங்குகளான அவற்றில் சாதனங்களைப் பொருத்தினர். பிறகு அந்த வீரர்கள் அனைவரும் பல்வேறு விதமாக அழகிய கவசங்களை அணிந்து கொள்ளவும், பல்வேறு விதமான ஆயுதங்களால் தங்களைத் தயார் செய்து கொள்ளவும் தொடங்கினர். காலாட்படை வீரர்கள் பல்வேறு விதமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, தங்கத்தாலான பல்வேறு விதமான கவசங்களைத் தங்கள் உடல்களில் அணிந்து கொண்டனர்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, மகிழ்ச்சியான கோடி {1,00,00,000} பேரால் நிறைந்திருந்த துரியோதனனின் அந்த நகரம் {ஹஸ்தினாபுரம்}, பண்டிகை காலத்தைப் போலப் பிரகாசமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, குருக்களின் அந்தத் தலைநகரம் {ஹஸ்தினாபுரம் = நாகபுரம்}, நிலவு தோன்றும்போது காணக்கிடைக்கும் கடலைப் போலத் தெரிந்தது. மனித குலத்தின் பெரும் கூட்டத்தால் அது {ஹஸ்தினாபுர நகரம்}, எதிர்ச்சுழிப்புகளைக் கொண்ட கடலின் நீர் போலவும்; தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன மீன்களாகவும்; சங்குகள் மற்றும் துந்துபிகளின் ஒலி, அதன் {அக்கடலின்} கர்ஜனை போலவும்; பொக்கிஷ சாலைகள், அதன் ரத்தினங்கள் மற்றும் கற்களைப் போலவும்; பல்வேறு விதமான ஆபரணங்களும் கவசங்களும் அதன் அலைகளாகவும்; பிரகாசமான ஆயுதங்கள் அதன் வெண் நுரையாகவும்; வீடுகளின் வரிசைகள் கடற்கரையில் இருக்கும் மலைகளைப் போலவும்; சாலைகளும், கடைவீதிகளும் {ஹஸ்தினாபுரம் என்ற கடலில் கலக்கும்} ஏரிகளைப் போலவும் தெரிந்தன.

யுதிஷ்டிரனின் தயக்கம்! – உத்யோக பர்வம் பகுதி 155-துரியோதனனின் சொல்லைப் பொறுக்காத யுதிஷ்டிரன், அதை மீண்டும் கிருஷ்ணனிடம் கேட்பது; இனி அது குறித்துப் பேசிப் பயனில்லை, போரே ஒரே வழி என்று கிருஷ்ணன் சொன்னது; தன் கூட்டணியில் இருந்த மன்னர்களைப் போருக்குத் தயாராகும்படி சொன்ன யுதிஷ்டிரன் தனது தம்பிகளிடம், பெரியோர்களை எதிர்த்து அவர்கள் எப்படிப் போரிடப் போகிறார்கள் என்பதைக் குறித்து வினவுவது; போரைத் தவிர்க்க முடியாது என யுதிஷ்டிரனுக்கு அர்ஜுனன் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளை நினைவு கூர்ந்த யுதிஷ்டிரன், மீண்டும் ஒரு முறை அந்த விருஷ்ணி குலக்கொழுந்திடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, தீயவனான துரியோதனனால் எப்படி இதைச் சொல்ல முடியும்? ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {கிருஷ்ணா}, வந்திருக்கும் சந்தர்ப்பத்தை நோக்கில் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்? எவ்வழியில் செயல்படுவதால், நாங்கள் எங்கள் கடமையின் பாதையில் செல்ல முடியும்? {எந்நோன்பிருந்தால் நாம் நமது அறத்திலிருந்து நழுவாதிருப்போம்?}

ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரின் நோக்கங்களை நீ நன்கு அறிந்தவனாவாய். என்னாலும், எனது தம்பிகளாலும் எத்தகு நோக்கங்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றன என்பதையும் நீ அறிவாய். விதுரர் மற்றும் பீஷ்மர் ஆகிய இருவரும் உதிர்த்த வார்த்தைகளையும் நீ கேட்டிருக்கிறாய்.. ஓ! பெரு அறிவு கொண்டவனே {கிருஷ்ணா}, குந்தியால் பேசப்பட்ட அறிவுச் சொற்களையும் முழுமையாக நீ கேட்டிருக்கிறாய். இவை அனைத்தையும் கடந்து, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நன்கு ஆலோசித்த பிறகு, எங்களக்கு நன்மை எது என்பதைத் தயக்கமில்லாமல் எங்களுக்குக் கூறுவாயாக”, என்றான் {யுதிஷ்டிரன்}.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் சொன்னவையும், அறம் மற்றும் பொருள் நிரம்பியவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன், மேகங்கள் மற்றும் துந்துபியின் ஆழ்ந்த குரலுடன் {யுதிஷ்டிரனிடம்}, “துரியோதனனுக்குச் சாதகமானவையும், அறம், பொருள் ஆகிய இரண்டுக்கும் இசைவானவையும், குருக்களின் சபையில் என்னால் சொல்லப்பட்டவையுமான அந்த வார்த்தைகளுக்கு, அறிவு இருக்க வேண்டிய இடத்தில் வஞ்சகத்தைக் கொண்டிருக்கும் குரு இளவரசனான துரியோதனிடம் எந்தப் பதிலையும் காண முடியவில்லை {அடைய முடியவில்லை}. {அந்த வார்த்தைகள் துரியோதனனிடம் நிலைபெறவில்லை}. தீய புரிதல் கொண்ட அந்த இழிந்தவன் {துரியோதனன்}, பீஷ்மர், விதுரர், நான் ஆகியோர் சொன்ன ஆலோசனைகளைச் சிறிதும் கேட்கவில்லை {எங்கள் ஆலோசனைகளில் ஒன்றையும் கேட்கவில்லை}. அவன் {துரியோதனன்} அனைவரையும் மீறுகிறான். அவன் {துரியோதனன்} அறம் ஈட்டவும் விரும்பவில்லை, அதே போல புகழையும் அவன் {துரியோதனன்} விரும்பவில்லை.

தீய ஆன்மா கொண்ட அவன் {துரியோதனன்}, கர்ணனை நம்பி, அனைத்தும் ஏற்கனவே வெல்லப்பட்டுவிட்டதாகக் கருதுகிறான். உண்மையில், தீய இதயம் படைத்தவனும், பாவம் நிறைந்த தீர்மானங்கள் கொண்டவனுமான சுயோதனன், **என்னைச் சிறையிலடைக்கவும் உத்தரவிட்டான். இருப்பினும், அவனது {துரியோதனனின்} அந்த ஆசை வெற்றிபெறவில்லை. பீஷ்மரோ, துரோணரோ இது குறித்து எதுவும் சொல்லவில்லை.** உண்மையில் விதுரரைத் தவிர அவர்கள் அனைவரும் துரியோதனனையே பின்பற்றினார்கள். ஓ! மங்காப் புகழ் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, மூடனும், பழியுணர்ச்சி கொண்டவனுமான துரியோதனனிடம், சுபலனின் மகன் சகுனி, கர்ணன், துச்சாசனன் ஆகிய மூடர்கள் உம்மைக் குறித்துத் தவறான ஆலோசனைகளை வழங்கினார்கள். உண்மையில், அந்தக் குரு இளவரசன் சொன்னதையெல்லாம் உம்மிடம் மீண்டும் கூறுவதால் என்ன பயன்?

சுருங்கச் சொல்லின், அந்தத் தீய ஆன்மா படைத்தவன் உம்மிடம் நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. உம்முடைய படையில் இருக்கும் மன்னர்கள் அனைவரிடமும் நல்லெண்ணம் கொள்ளாத அளவுக்கு, துரியோதனனுக்குள் மட்டும் இவ்வளவு பாவமும், தீமையும் நிரம்பி வசிக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, நமது உடைமையைக் கைவிட்டுக் கௌரவர்களுடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள நாம் விரும்பவில்லை. எனவே, இப்போது நடைபெற வேண்டியது போரே” என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வாசுதேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, எதையும் சொல்லாமல் யுதிஷ்டிரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஏகாதிபதிகளின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையரோடு {நகுலன் மற்றும் சகாதேவனோடு} சேர்ந்து, “துருப்புகளைப் போருக்காக அணிவகுக்கச் செய்யுங்கள்” என்றான்.

அந்தக் கட்டளைச் சொல்லைக் கடந்ததும், பாண்டவப் படையில் பெரும் ஆரவாரக் குரல்கள் கேட்டன. படைவீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் நிறைந்தனர். எனினும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கொல்லப்படத் தகாதவர்களின் (வரப்போகும்) படுகொலையைக் கண்டு பெருமூச்சு விடத் தொடங்கி, பீமனிடமும் விஜயனிடமும் {அர்ஜுனனிடமும்}, “எதற்காக வனவாசத்தை ஏற்று, இவ்வளவு துன்பத்தையும் அனுபவித்தோமோ, அந்தப் பேரிடர் நிலைத்த நோக்கத்தோடு நம்மைப் பின்தொடர்கிறது. எதற்காக இவ்வளவு முயன்றோமோ, அது நாம் முயலாதது போலவே நம்மை விட்டுச் செல்கிறது. மறுபுறம், நாம் அழைக்காமலே நம்மைப் பெருந்துயரம் பின்தொடர்ந்து வருகிறது. எக்காரணம் கொண்டும் நம்மால் கொல்லமுடியாத (நமது) மரியாதைக்குரிய பெரியோர்களிடம் நாம் எப்படிப் போரிடப் போகிறோம்? வயது முதிர்ந்த நமது ஆசான்களைக் கொன்று நம்மால் அடையப்படும் வெற்றி எந்த வகையானது?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்}, தனது அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்} வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன வார்த்தைகளைத் திரும்பச் சொன்னான். மீண்டும் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்த அர்ஜுனன், “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவகி மகனால் {கிருஷ்ணனால்} திரும்பச் சொல்லப்பட்ட குந்தி மற்றும் விதுரரின் வார்த்தைகள் அனைத்தையும் நீர் நிச்சயம் புரிந்திருப்பீர். விதுரரோ, குந்தியோ, இவர்களில் எவரும் பாவம் நிறைந்த எதையும் சொல்லமாட்டார்கள் என்பதை நான் நிச்சயம் அறிவேன். இஃது ஒரு புறமிருக்க, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, போரில் ஈடுபடாமல் நம்மால் விலக முடியாது” என்றான் {அர்ஜுனன்}.

சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} உரையைக் கேட்ட வாசுதேவனும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “அது (நீ சொல்வது) சரிதான்.” என்றான். “ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா} பிறகு, பாண்டுவின் மகன்கள் தங்கள் மனங்களைப் போருக்குத் தயார் செய்து, தங்கள் படைவீரர்களுடன் அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தார்கள்.”

துரியோதனனின் படைப்பிரிவுகள் – உத்யோக பர்வம் பகுதி 156-தனது படையில், திறன்மிக்கவர்களையும், நடுத்தரமானவர்களையும், தாழ்ந்தவர்களையும் பிரித்த துரியோதனன்; துரியோதனன் படையின் தளவாடங்களைக் குறித்த வைசம்பாயனரின் வர்ணனை; படைப்பிரிவுகள் மற்றும் அதன் வகைகள் குறித்த வர்ணனை; தனது பதினோரு அக்ஷௌஹிணி படைகளுக்கும் பதினோரு தலைவர்களைத் தேர்ந்தெடுத்த துரியோதனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இரவு கடந்ததும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், பதினோரு {11} அக்ஷௌஹிணிகள் கொண்ட தனது துருப்புகளைப் (முறையான வரிசையில்) பிரித்தான். *மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என மூன்று வகைகளாக வரிசைப் படுத்தி, (படையின் முன்னணி, நடு, பின் படை என நிறுத்தி) அவர்களை அந்தந்த வகைகளாகப் பிரித்து நிறுத்தினான்.

போரின் அழுத்தத்தைத் தாக்குப்பிடித்துச் சேதமடையும் தேர்களைச் சீரமைப்பதற்கு மரங்கள் மற்றும் பலகைகளோடும், பெரும் அம்பறாத்தூணிகளைத் தாங்கிய தேர்களோடும், புலித்தோலாலும் பிற உறுதியான தோல்களாலும் மூடப்பட்ட பக்கங்கள் கொண்ட தேர்களோடும், கையால் வீசப்படும் முள் ஈட்டிகளோடும் {முள் தோமரங்களோடும்}, குதிரைகளாலும், யானைகளாலும் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், நீண்ட கைப்பிடி கொண்ட இரும்பு ஈட்டிகள் {சக்திகள்} மற்றும் ஏவுகணைகளோடும், கனமான மரங்களைக் கொண்டு காலாட்படை வீரர்களால் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், கொடிக் கம்பங்கள் மற்றும் கொடிகளோடும், வில்லில் இருந்து அடிக்கப்படும் நீண்ட கனமான கணைகளோடும் {தோமரங்களோடும்}, {அருகில் இருப்பவர்களைக் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்க} பல்வேறு விதமான சுருக்குக்கயிறுகள் மற்றும் சாட்டைகளோடும், பல்வேறு விதமான கவசங்களோடும், கூரிய முனை கொண்ட மரத்தாலான பரிகங்களோடும், {காய்ச்சப்பட்ட [அ] வேகவைக்கப்பட்ட} எண்ணெய், பாகு, மணல் ஆகியவற்றோடும், நஞ்சுமிக்கப் பாம்புகள் நிறைந்த மண்குடங்களோடும், {எளிதில் தீப்பற்றக்கூடிய} தூளாக்கப்பட்ட அரக்கு மற்றும் எரியும் தன்மையுள்ள பிற பொருட்களோடும், கிண்கிணி மணிகள் பொருத்தப்பட்ட குறு ஈட்டிகளோடும், சூடான பாகு, நீர் மற்றும் கற்களை வீசுவதற்கான இயந்திரங்கள் மற்றும் பல்வேறு இரும்பு ஆயுதங்களோடும், ஒலியெழுப்பும் மரத்தாலான ஆயுதங்களோடும் {பிண்டிபாலங்களோடும்}, மெழுகு மற்றும் கனரக உலக்கைகளோடும், இரும்பு முட்களைக் கொண்ட கழிகளோடும், கலப்பைகள் மற்றும் நஞ்சு பூசப்பட்ட தோமரங்களோடும், சூடான பாகை ஊற்றவல்ல செலுத்திகளோடும் {ஊசிகளோடும் = Syringes} [1], பிரம்பு பலகைகளோடும் {பெட்டிகளோடும்}, போர்க்கோடரிகள் மற்றும் வளைந்த முனை கொண்ட ஈட்டிகளோடும் {இலந்தை முள் போன்ற முள் உடைய அங்குச தோமரங்களோடும்}, முள் பொருந்திய கையுறைகோடும் {கீல்கவசங்களோடும்}, கோடரிகள் {வாய்ச்சிகள்} மற்றும் கூரிய முனை கொண்ட இரும்பு முட்களோடும் {உளி ஆகிவற்றோடும்}, புலி மற்றும் சிறுத்தைகளின் தோல் போர்த்திய தேர்களோடும், கூரிய முனை கொண்ட வட்ட வடிவ மரப் பலகைகளோடும் {தடிக்கழிகளோடும்}, கொம்புகள், ஈட்டிகள் மற்றும் தாக்குதலுக்குண்டான பல்வேறு பிற ஆயுதங்களோடும், குதராவகைக் கோடரிகள் {குந்தாலி} மற்றும் மண்வெட்டிகளோடும், எண்ணெய் மற்றும் தெளிந்த நெய் ஆகியவற்றில் தோய்க்கப்பட்ட {நனைக்கப்பட்ட} துணிகளோடும், தங்க சித்திர வேலைப்பாடுகள் கொண்ட பளபளக்கும் ஆடைகளோடும், இருந்த துரியோதனனின் படை வீரர்கள், ரத்தினங்கள் கற்கள் மற்றும் பல்வேறு ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு நெருப்பைப் போலச் சுடர்விட்டபடி அழகாகப் பிரகாசித்தனர்.

கவசம் பூண்டவர்களும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களும், குதிரை மரபுகளை நன்கு அறிந்தவர்களுமான நற்குடியில் பிறந்தவர்கள் {துரியோதனனின் படையில்} தேரோட்டிகளாகப் பணியமர்த்தப்பட்டனர். தேர்கள் அனைத்தும், பல்வேறு விதமான மருந்துகளோடும், தலையில் மணிகள் மற்றும் முத்துகளாலான சரங்கள் பொருத்தப்பட்ட குதிரைகளோடும், கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்களோடும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, அருளோடிருந்த கோபுரங்கள் மற்றும் சிறுகோபுரங்களோடும், கேடயங்கள், வாட்கள், வேல்கள், எறிஈட்டிகள் மற்றும் முள்பதித்த கதாயுதங்களோடும் இருந்தன.

அந்தத் தேர்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த சாதிக் குதிரைகள் நான்கு பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் {அந்தத் தேர்களில்} ஒவ்வொன்றிலும் நூறு {100} கணைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்கள் ஒவ்வொன்றும், ஒரு தேரோட்டி, முன்னால் கட்டப்பட்ட இரு குதிரைகள், தேர்ச்சக்கரங்களில் பூட்டப்பட்டிருந்த இரு குதிரைகளுக்குப் பொறுப்பான இரு தேரோட்டிகள் ஆகியவற்றோடு இருந்தன. குதிரைகளைச் செலுத்தும் தேர்வீரன் {தேரோட்டி} திறன்மிக்கவனாக இருந்தாலும், பின்னர்க் குறிப்பிடப்பட்ட இரு தேரோட்டிகளும் திறன்வாய்ந்த தேர்வீரர்களாகவே இருந்தனர். இப்படி அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தேர்களும், அரண்களால் காக்கப்பட்ட நகரங்களைப் போலவும், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவையாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு அனைத்துப் புறங்களிலும் நின்று கொண்டிருந்தன.

மணிகள், முத்துச் சரங்கள்,  மற்றும் பல்வேறு விதமான ஆபரணங்களால் யானைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த விலங்குகள் {யானைகள்} ஒவ்வொன்றின் முதுகிலும் ஏழு {7} வீரர்கள் ஏறியிருந்தனர். இப்படி அலங்கரிக்கப்பட்டிருந்ததன் விளைவாக அந்த விலங்குகள் {யானைகள்} ரத்தினங்களால் நிறைந்த மலைகளைப் போல இருந்தன. {யானையின் மேலிருந்த} அந்த எழுவரில், இருவர் ஈட்டியைக் கொண்டு போரிடுபவராகவும், இருவர் சிறந்த வில்லாளிகளாகவும், இருவர் முதல் தர வாள் வீரர்களாகவும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒருவர் வேலையும் {சக்தி ஆயுதத்தையும்} மற்றும் முத்தலச்சூலத்தையும் {திரிசூலத்தையும்} தாங்கியவர்களாக இருந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் முதுகில் நிறைய ஆயுதங்களையும், கணைகள் நிரம்பிய அம்பறாத்தூணிகளையும் சுமந்து வந்த எண்ணிலடங்கா மதங்கொண்ட யானைகளால் அந்த ஒப்பற்ற குரு மன்னனின் {துரியோதனனின்} படை நிரம்பியிருந்தது.

கொடிகளுடனும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்த கவசந்தரித்த வீரமிக்கப் போர் வீரர்களால் செலுத்தப்படும் ஆயிரக்கணக்கான குதிரைகளும் அங்கிருந்தன. எண்ணிக்கையில் நூறுகளாகவும், ஆயிரங்களாகவும் {பல லட்சங்களாக} இருந்த அந்தக் குதிரைகள் அனைத்தும், தங்கள் முன்னங்கால்களின் குளம்புகளைக் கொண்டு தரையைச் சிராய்க்கும் பழக்கம் நீங்கியவையாக இருந்தன [2]. {கடிவாளம் பிடித்து இழுக்கப்படாதவையாக அவை இருந்தன}. நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையாகவும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படவையாகவும், தங்களைச் செலுத்துபவர்களுக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவையாகவும் அவை {அக்குதிரைகள்} இருந்தன.

காலாட்படை வீரர்களில், பல்வேறு முகத் தோற்றம் கொண்டவர்களும், பல்வேறு வகையான கவசங்கள் தரித்தவர்களும், வித்தியாசமான வகை ஆயுதங்களைக் கொண்டவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமாக நூறாயிரம் பேர் இருந்தனர்.

ஒவ்வொரு தேருக்கும் பத்து {10} யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் பத்து குதிரைகளும்{10}, ஒவ்வொரு குதிரைக்கும் பத்துக் {10} காலாட்படை வீரர்களும் பாதுகாவலர்களாக இருந்தனர். மேலும், அணிவகுப்புச் சிதறுகையில், அதை ஒன்றிணைக்கும் வகையில், {துரியோதனனின்} துருப்புகளில் ஒரு பெரும்பகுதி ஒதுக்கி வைக்கப்பட்டது. {இப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட} இந்த அதிகப்படியான படையில் ஒவ்வொரு தேரிலும் ஐம்பது யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் நூறு குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் ஏழு காலாட்படை வீரர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஐநூறு {500} தேர்களும், அதற்குத் தக்க {அதே அளவு ஐநூறு} யானைகளும் (ஆயிரத்து ஐநூறு 1500} குதிரைகளும், இரண்டாயிரத்து ஐநூறு {2500} காலாட்படை வீரர்களும்) சேர்ந்து ஒரு சேனையாகும். பத்துச் {10} சேனைகள் சேர்ந்தது ஒரு பிருத்னையாகும். பத்துப் பிருத்னைகள் கொண்டது ஒரு வாஹினியாகும், எனினும் பொதுவான மொழிப்பாணியில் {In common Parlance} சேனை, வாஹினி, பிருத்னை, துவஜினீ, சமூ, அக்ஷௌஹிணி, வரூதினீ என்ற சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படியே புத்திமானான அந்தக் கௌரவன் {துரியோதனன்} தனது படையை அணிவகுத்தான். இரு தரப்பும் சேர்த்து எண்ணிக்கையில் மொத்தமாகப் பதினெட்டு {18} அக்ஷௌஹிணிகள் இருந்தன. அதில் பாண்டவப் படை ஏழு {7} அக்ஷெஹிணிகளையும், கௌரவப் படை பதினோரு {11} அக்ஷௌஹிணிகளையும் கொண்டிருந்தன.

ஐம்பதில் ஐந்து மடங்கு {இருநூற்றைம்பது} மனிதர்களால் ஆனது ஒரு பட்டியாகும் {Five times fifty men constitute a Patti.} [3]. மூன்று பட்டிகள் சேர்ந்தது ஒரு சேனாமுகம், அல்லது குல்மம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று குல்மங்கள் சேர்ந்தது ஒரு கணமாகும். (எதிரிகளை) அடிக்கவல்லவர்களும், போருக்காக ஏங்குபவர்களுமான போர்வீரர்கள் அடங்கிய அத்தகு கணங்கள், துரியோதனனின் அந்தப் படையில் ஆயிரக்கணக்கிலும் நூற்றுக் கணக்கிலும் {பதினாயிரக்கணக்கில்} இருந்தன.

வலிய கரங்களைக் கொண்ட மன்னன் துரியோதனன், வீரர்கள் மற்றும் புத்திசாலிப் போர்வீரர்களில் இருந்து தனது துருப்புகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். மனிதர்களில் சிறந்தோரான கிருபர், துரோணர், சல்லியன், சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், கிருதவர்மன், துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), கர்ணன், பூரிஸ்ரவஸ், சுபலனின் மகன் சகுனி, வலிமைமிக்க மன்னனான பாஹ்லீகர் ஆகியோர் ஒவ்வொருவரின் கீழும் ஓர் அக்ஷௌஹிணி படையை {துரியோதனன்} வைத்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, தினமும் அவர்களைத் தன்னெதிரே கொண்டு வரச் செய்து, அவர்களிடம் மணிக்கணக்காகப் பேசினான். தன் கண் எதிரிலேயே மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். தங்கள் தொண்டர்கள் அனைவரோடும் இப்படியே நியமிக்கப்பட்ட போர்வீரர்கள் அனைவரும், அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மிகவும் ஏற்புடையதைச் செய்ய வேண்டுமென விரும்பத் தொடங்கினர்.

படைத்தலைவரானார் பீஷ்மர்! – உத்யோக பர்வம் பகுதி 157-பீஷ்மரைத் தனது படைத்தலைவராகும்படி துரியோதனன் வேண்டல்; ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது தான் போரிடுவதாகப் பீஷ்மர் நிபந்தனை விதிப்பது; பீஷ்மர் உயிரோடிருக்கும் வரை தான் போரிடப்போவதில்லை எனக் கர்ணன் சொல்வது; பீஷ்மரைத் துரியோதனன் தனது படையின் தலைவராக நியமிப்பது; அதன் பிறகு நேர்ந்த சில சகுனங்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னர்கள் அனைவருடனும் இருந்த திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சந்தனுவின் மகன் பீஷ்மரிடம், கூப்பிய கரங்களோடு, “வலிமைமிக்க ஒரு பெரும்படை கூடப் படைத்தலைவர் இல்லாதிருந்தால், போர்க்களத்தில் எறும்புக்கூட்டம் போல நிர்மூலமாக்கப்படும். இருவரின் அறிவு எப்போதும் ஏற்புடையதாக இருக்காது. மேலும், வேறுபட்ட படைத்தலைவர்கள், தங்கள் ஆற்றலைக் கருதி ஒருவருக்கொருவர் பொறாமையுடன் இருப்பார்கள். ஓ! பெரும் அறிவு படைத்தவரே {பீஷ்மரே}, (ஒரு காலத்தில்) குசப் புற்கட்டுகளை {குசத்வஜத்தை} {தங்கள் ஆயுதங்களாக} உயர்த்திப் பிடித்த அந்தணர்கள், அளவிலா சக்தி கொண்டவர்களும், ஹேஹய குலத்தைச் சேர்ந்தவர்களுமான க்ஷத்திரியர்களுடன் போரிட்டனர் என்று (நாம்) கேள்விப்படுகிறோம்.

ஓ! பாட்டா {தாத்தா பீஷ்மரே}, வைசியர்களும், சூத்திரர்களும் பிராமணர்களைப் பின்தொடர்ந்து வந்தார்கள். அப்படி மூன்று வகையினர் {வர்ணத்தினர்} ஒருபுறத்திலும், க்ஷத்திரியர்களில் காளையர் தனியாக ஒரு புறத்திலும் இருந்தார்கள். எனினும், நடைபெற்ற அந்தப் போரில், அந்த மூன்று வகையினரும் மீண்டும் மீண்டும் உடைந்து போனதால், க்ஷத்திரியர்கள் தனியர்களாக இருந்தாலும், தங்களை எதிர்த்த அந்தப் பெரிய படையை வீழ்த்தினார்கள். பிறகு, அந்தணர்களில் சிறந்தவர்கள் (அதன் காரணத்தைக்) குறித்து க்ஷத்திரியர்களிடமே விசாரித்தனர்.

ஓ! பாட்டா {தாத்தா பீஷ்மரே}, க்ஷத்திரியர்களில் அறம்சார்ந்து இருந்தவர்கள், தங்களிடம் விசாரிப்பவர்களிடம் உண்மையான பதிலைச் சொன்னார்கள். அவர்கள், “போரில் நாங்கள், பெரும் அறிவுடைய ஒருவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். நீங்களோ ஒருவருக்குள் ஒருவர் ஒற்றுமையின்றி, ஒவ்வொருவரின் தனிப்புரிதலின் படி செயல்படுகிறீர்கள்” என்றனர். பிறகு அந்த அந்தணர்கள், தங்களில் வீரமானவரும், கொள்கைகளின் {நீதியின்} வழிகளை நன்கு அறிந்தவருமான ஒருவரைப் படைத் தலைவராக நியமித்தனர். பிறகு அவர்கள் {அந்தணர்கள்} க்ஷத்திரியர்களை வீழ்த்துவதில் வென்றனர். தனக்குக் கீழிருக்கும் படைகளின் நன்மையைக் கருதுபவனும், திறன் வாய்ந்தவனும், வீரமிக்கவனுமான பாவமற்ற ஒரு படைத்தலைவனை நியமிக்கும் மக்களே போரில் தங்கள் எதிரிகளை வெல்கின்றனர்.

உம்மைப் பொருத்தவரை, நீர் உசனசுக்கு {சுக்கிரனுக்கு} இணையானவரும் எனது நன்மையை எப்போதும் நாடுபவராகவும் இருக்கிறீர். கொல்லப்பட இயலாத நீர் அறத்திற்கு உம்மை அர்ப்பணித்தவராகவும் இருக்கிறீர். எனவே, நீரே எங்கள் படைத்தலைவர் ஆவீராக. ஒளிர்வனவற்றுள் சூரியனைப் போலவும், இனிமையான மூலிகைகள் அனைத்திற்கும் சந்திரனைப் போலவும், யக்ஷர்கள் மத்தியில் குபேரனைப் போலவும், தேவர்களுக்கு மத்தியில் வாசவனைப் {இந்திரனைப்} போலவும், மலைகளுக்கு மத்தியில் மேருவைப் போலவும், பறவைகளுக்கு மத்தியில் சுபர்ணனைப் {கருடனைப்} போலவும், தேவர்களுக்கு மத்தியில் குமரனைப் {முருகனைப்} போலவும், வசுக்களுக்கு மத்தியில் ஹவ்யவாகனனைப் {அக்னியைப்} போலவும் எங்களுக்கு மத்தியில் நீரே இருக்கிறீர். சக்ரனால் {இந்திரனால்} பாதுகாக்கப்படும் தேவர்களைப் போலவே, உம்மால் பாதுகாக்கப்படும் நாங்கள், அந்தத் தேவர்களைப் போலவே வெல்லப்பட முடியாதவர்கள் ஆவோம் என்பது நிச்சயம். அக்னியின் மகன் (குமரன்) {முருகன்} தேவர்களுக்குத் தலைமையில் இருப்பதைப் போல,*எங்களுக்குத் தலைமையில் நீர் அணிவகுப்பீராக. பெருங்காளையைப் பின்தொடரும் கன்றுகளைப் போல நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம்” என்றான் {துரியோதனன்}.

அதற்குப் பீஷ்மர் {துரியோதனனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாரதா {துரியோதனா}, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஆனால் உன்னைப் போலவே, பாண்டவர்களும் எனது அன்புக்குரியவர்கள். எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, (முன்பே) உனக்கு நான் கொடுத்திருக்கும் உறுதிமொழியின்படி, என்னதான் நான் உனக்ககாகப் போரிட்டாலும், நான் அவர்களது நன்மையையும் நிச்சயம் நாட வேண்டும். மனிதர்களில் புலியான குந்தியின் மகன் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தவிர, எனக்கு இணையாக இவ்வுலகில் வேறு எந்த வீரனையும் நான் காணவில்லை. பெரும் அறிவு படைத்த அவன் {அர்ஜுனன்}, எண்ணிலடங்கா தெய்வீக ஆயுதங்களை அறிந்தவன் ஆவான்.

எனினும், பாண்டுவின் அந்த மகன் {அர்ஜுனன்}, வெளிப்படையாக என்னுடன் போரிட மாட்டான். எனது ஆயுதங்களின் சக்தியால், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய இந்த அண்டத்தை ஒரு நொடிப்பொழுதில் என்னால் அழித்துவிட முடியும். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள், என்னால் அழிக்க முடியாதவர்களகாக இருக்கிறார்கள். எனவே, நான் தினமும் பத்தாயிரம் {10,000} வீரர்களைக் கொல்வேன். உண்மையில், முதலில் அவர்கள் என்னைக் கொல்லாதிருந்தால், அவர்களது படையை நான் இப்படியே படுகொலை செய்வதைத் தொடர்வேன். மற்றொரு புரிந்துணர்வின் {பிரதிஜ்ஞையும்} அடிப்படையில், நான் விருப்பத்துடன் உனது படைகளின் தலைவனாவதற்கும் வழியுண்டு. {எனது பிரதிஜ்ஞையை நீ ஏற்றால் நான் விருப்பத்துடன் உனது சேனாதிபதியாவேன்}. அதை நீ கேட்பதே உனக்குத் தகும். ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது நான் முதலில் போரிடுகிறேன். அந்தச் சூதமகன் {கர்ணன்}, போரில் தனது ஆற்றலை என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு தற்பெருமையாகப் பேசுகிறான்” என்றார் {பீஷ்மர்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, “கங்கையின் மகன் {பீஷ்மர்} உயிரோடுள்ளவரை, ஓ! மன்னா {துரியோதனா}, நான் போரிடவே மாட்டேன். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகே, நான் காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவேன்” என்றான்.

வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதன்பிறகு, அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பெரும் கொடைகளைப் பிரித்தளித்து, பீஷ்மரை முறையாகத் தனது படைகளின் தலைவராக்கினான். அவர் {பீஷ்மர்} அதிகாரத்தில் நிறுவப்பட்டதும், அழகில் சுடர்விட்டுப் பிரகாசித்தார். ராஜாவின் உத்தரவின் பேரில், இசைக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மகிழ்ச்சியாகப் பேரிகைகளை இசைத்து, சங்குகளை ஊதினர். எண்ணற்ற சிம்ம கர்ஜனைகள் செய்யப்பட்டன, அம்முகாமில் இருந்த விலங்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒன்றாகக் கூக்குரலிட்டன.

என்னதான் வானம் மேகமற்று இருந்தாலும், இரத்த மழை பொழிந்து, பூமி சேறானது. கடும் சுழற்காற்றும், பூகம்பங்களும், யானைகளின் பிளிறல்களும் வீரர்கள் அனைவரின் இதயத்தையும் உற்சாகமிழக்கச் செய்தன. உருவமற்ற குரல்களும் {அசரீரிகளும்}, எரிகற்களின் மின்னல்கீற்றுகளும் வானத்தில் கேட்கப்படவும், பார்க்கப்படவும் செய்தன. நரிகள் தங்கள் கடும் ஊளையால், வரப்போகும் பெரும் பேரிடரை முன்னறிவித்தன. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் {துரியோதனன்}, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது துருப்புகளின் தலைவராக நிறுவிய போது, மேற்கண்ட பயங்கரக் காட்சிகள் தோன்றின.

பகைவர் படையை வாட்டும் பீஷ்மரைப் படைத்தலைவராகச் {சேனாதிபதியாகச்} செய்த போது, பசுக்களையும் தங்கத்தையும் தனக்கு ஆசி கூறிய பிராமணர்களுக்கு அபரிமிதமாக அளித்து, அந்த ஆசிகளால் வளர்ந்து, தனது துருப்புகளால் சூழப்பட்டு, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது படையின் முன்னணியில் கொண்டு, தனது தம்பிகளோடு இருந்த துரியோதனன், குருக்ஷேத்திரத்திற்குத் தனது பெரும்படையுடன் அணிவகுத்தான். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கர்ணனுடன் களத்தை {குருக்ஷேத்திரத்தைச்} சுற்றி, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சமமான ஒரு பகுதியில் தனது பாசறையை அமைத்தான். இனிமையானதும், வளமானதும், புற்கள் மற்றும் விறகு நிறைந்ததுமான பகுதியில் அமைக்கப்பட்ட அந்தப் பாசறை, ஹஸ்தினாபுரத்தைப் போலவே ஒளிர்ந்தது.”

பலராமனின் தீர்த்தயாத்திரை! – உத்யோக பர்வம் பகுதி 158-யுதிஷ்டிரன் தனது படைகளுக்கு ஏழு தலைவர்களை நியமிப்பது; அந்த எழுவருக்கும் தலைவனாகத் திருஷ்டத்யும்னனை நியமிப்பது; அனைவருக்கும் தலைவனாக அர்ஜுனனை நியமிப்பது; பாண்டவர்களின் முகாமுக்கு பலராமன் வந்தது; பாண்டவர்களையும், கௌரவர்களையும் சமமாகவே தான் கருதுவதாகவும், கௌரவர்களின் அழிவைத் தன்னால் பார்க்க முடியாததால் சரஸ்வதி தீர்த்தத்திற்குப் புனித யாத்திரை செய்யப் போவதாகச் சொல்லிவிட்டுப் பாண்டவர்களிடம் விடைபெற்றுச் செல்வது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், “கங்கையின் உயர் ஆன்ம மகனும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவரும், பாரதர்களின் பாட்டனும், மன்னர்கள் அனைவருக்கும் தலைவரும், புத்திக்கூர்மையில் பிருஹஸ்பதிக்குப் போட்டியாளரும், ஈர்ப்பு விசையில் கடலைப் போன்றவரும், அமைதியில் இமயத்தைப் போன்றவரும், உன்னதத் தன்மையில் படைப்பாளனைப் {பிரம்மனைப்} போன்றவரும், சக்தியில் சூரியனைப் போன்றவரும், தன் கணைகளை மழையாகப் பொழிந்து எதிரிப் படைகளைக் கொல்வதில், பெரும் இந்திரனைப் போன்றவருமான பீஷ்மர், பார்ப்பதற்குப் பயங்கரமானதும், நினைக்கும்போதே ஒருவரை மயிர்ச்சிலிர்க்கச் செய்வதுமான போர் எனும் பெரும் வேள்வியின் நெருக்கத்தில், குரு {கௌரவப்} படையின் அதிகாரியாக {படைத்தலைவராக} நிறுவப்பட்ட செய்தியை, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பாண்டுவின் மகனும், ஆயுதம் தாங்குவோரில் முதன்மையானவனுமான யுதிஷ்டிரன் கேட்ட போது, அது குறித்து என்ன சொன்னான்? பீமனும், அர்ஜுனனும் என்ன சொன்னார்கள்? மேலும் கிருஷ்ணன் என்ன சொன்னான்?” என்று கேட்டான் {ஜனமேஜயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “செய்தியை அடைந்த போது, பெரும் புத்திசாலித்தனம் கொண்டவனும், ஆபத்து மற்றும் பேரிடர் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவனுமான யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவரையும் மற்றும் நித்தியமான வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்) தனது முன்னிலைக்கு அழைத்தான். பேசுபவர்களில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, பிறகு, மென்மையான குரலில், “படைவீரர்களுக்கு மத்தியில் சுற்றி, கவசம் பூண்டு பாதுகாப்பாக இருப்பீர்களாக. நமது முதல் மோதல் நமது பாட்டனுடன் {பீஷ்மருடன்} இருக்கப் போகிறது. எனது துருப்புகளின் ஏழு {7} அக்ஷௌஹிணிகளின் (ஏழு) தலைவர்களைப் பார்ப்பீராக” என்றான் {யுதிஷ்டிரன்}.

கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே} இது போன்ற பயனுள்ள வார்த்தைகளையே இத்தகு சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டும். உண்மையில் நீர் அதையே சொல்லியிருக்கிறீர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நானும் இதையே விரும்புகிறேன். எனவே, அடுத்ததாகச் செய்யப்பட வேண்டியது செய்யப்படட்டும். உண்மையில், உமது படையின் ஏழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படட்டும்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “போர் செய்ய ஆவலோடு இருந்த வீரர்களான துருபதன், விராடன், சினி குலத்துக் காளை {சாத்யகி}, பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், மன்னன் திருஷ்டகேது, பாஞ்சாலத்தைச் சேர்ந்த இளவரசன் சிகண்டி, மகத ஆட்சியாளன் சகாதேவன் ஆகியோரை அழைத்த யுதிஷ்டிரன், அவர்களை முறையே தனது ஏழு பிரிவுகளுக்குத் தலைவர்களாக நியமித்தான் [1]. அவர்களுக்கெல்லாம் மேலாகத் துருப்புகள் அனைத்துக்கும் தலைவனாக, சுடர்விட்டெரியும் (வேள்வி) நெருப்பில், துரோணரின் அழிவுக்காக உதித்த திருஷ்டத்யுமனன் நியமிக்கப்பட்டான். சுருள் முடி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம தலைவர்கள் அனைவருக்கும் தலைவனாக நியமிக்கப்பட்டான். பெரும் புத்திக்கூர்மையுடையவனும், சங்கர்ஷணனுக்குத் {பலராமனுக்குத்} தம்பியுமான அழகிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனுக்கு வழிகாட்டியாகவும், அவனது {அர்ஜுனனின்} குதிரைகளைச் செலுத்துபவனாகவும் {குதிரையோட்டி [அ] தேரோட்டியாக} நியமிக்கப்பட்டான்.(குருக்ஷேத்திரத்திற்குப் புறப்படும்போது //துருபதர், விராடர், திருஷ்டத்யும்னன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன், பீமசேனன் ஆகியோரே துருப்புகள் தலைவர்கள்என்று ஏழு தலைவர்களை அறிவிக்கிறான் யுதிஷ்டிரன். இங்கே மீண்டும் துருபதன், விராடன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், திருஷ்டகேது, சிகண்டி, சகாதேவன் எனப் புதிய பட்டியலைத் தருகிறான். ஒருவேளை முன்னவர்கள் அக்ஷௌஹிணிகளுக்குத் தலைவர்களும், பின்னவர்கள், ஏழு படைப்பிரிவுகளுக்கு தலைவர்களாகவும் இருப்பார்)

பெரும் அழிவை உண்டாக்கப்போகும் போர் நெருங்கி வருவதைக் கண்டு, ஓ! மன்னா {ஜனமேஜா}, பாண்டவ முகாமுக்கு, அக்ரூரர், கதன், சாம்பன், உத்தவர், ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்|, ஆகுகனுடைய மகன்கள், சாருதேஷ்ணன் ஆகியோருடனும், பிறருடனும் ஹாலாயுதன் {பலராமன்} அங்கே வந்தான். வலிமைமிக்கப் புலிகளின் கூட்டம் போன்ற அந்த விருஷ்ணி குலத்தின் முதன்மையான போர்வீரர்களால் பாதுகாக்கப்பட்டும், சூழப்பட்டும், மருத்தர்களின் மத்தியில் உள்ள வாசவனைப் {இந்திரனைப்} போலவும், கைலாய மலையின் சிகரத்தைப் போலவும் இருந்த அழகிய ராமன் {பலராமன்}, நீலப்பட்டாடை உடுத்தி, சிங்கத்தின் விளையாட்டு நடையுடனும், குடியால் சிவந்த கடைவிழிகளுடனும் அங்கே (அத்தகு நேரத்தில்) வந்தான்.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பெரும் பிரகாசம் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பயங்கரச் செயல்களைப் புரியும் பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்}, காண்டீவதாரி {அர்ஜுனன்} மற்றும் அங்கிருந்த பிற மன்னர்கள் அனைவரும் அவனைக் {பலராமனைக்} கண்டு, தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். ஹாலாயுதன் {பலராமன்} அந்த இடத்திற்கு வந்த போது அவர்கள் அனைவரும் தங்கள் வழிபாட்டைக் காணிக்கையாக்கினர். பாண்டவ மன்னன் {யுதிஷ்டிரன்}, ராமனின் {பலராமனின்} கரங்களைத் தனது கரங்களால் தொட்டான். எதிரிகளைத் தண்டிப்பவனான ஹாலாயுதனும் {பலராமனும்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தலைமையில் இருந்த அவர்கள் அனைவரையும் அணுகி, பதிலுக்கு அவர்களை வழிபட்டு, வயதால் மூத்த விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரையும் (மரியாதையாக) வணங்கி, யுதிஷ்டிரனுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

மன்னர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, அந்த ரோகிணியின் மகன் {பலராமன்}, வாசுதேவன் {கிருஷ்ணன்} மேல் தன் பார்வையைச் செலுத்தியபடி பேச ஆரம்பித்தான். அவன் {பலராமன்}, இந்தக் கடுமையான, கொடூரமான படுகொலை தவிர்க்க முடியாததாகும். விதியின் கட்டளை இஃது என்பதில் ஐயமில்லை. மேலும் இது தவிர்க்கப்பட முடியாததே எனவும் நான் நினைக்கிறேன். எனினும், உங்கள் நண்பர்களுடன் கூடிய நீங்கள் அனைவரும், நல்ல உடல்களுடனும், முற்றான நலத்துடனும், இந்தக் கலவரத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே வருவீர்கள் என நம்புகிறேன். ஒன்றாகக் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவருக்கும், அவர்களது நேரம் வந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. இரத்தம் மற்றும் சதையினாலான சேற்றில் மூழ்கிய ஒரு கடுமையான கைக்கலப்பு நேரப்போவது உறுதியாகிவிட்டது.

தனிமையில் நான் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நம்மிடம் சமமான உறவுமுறை கொண்டோரிடம் {நமது சம்பந்திகளுடன்}, சமமான நடத்தையை நோற்பாயாக. பாண்டவர்கள் நமக்கு எப்படியோ, அப்படியே மன்னன் துரியோதனனுமாவான். எனவே, அவனுக்கும் {துரியோதனனுக்கும்} அதே உதவியைக் கொடுப்பாயாக. உண்மையில் அவன் {துரியோதனன்} திரும்பத் திரும்ப வேண்டினான்” எனச் சொன்னேன். எனினும், உங்களுக்காக மதுசூதனன் {கிருஷ்ணன்} எனது வார்த்தைகளை அலட்சியம் செய்தான். தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பார்த்த அவன் {கிருஷ்ணன்}, தனது முழு இதயத்துடன், உங்கள் காரியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறான்.

பாண்டவர்களின் வெற்றி என்பது உறுதியானது என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} விருப்பமும் அதுவே ஆகும். என்னைப் பொறுத்தவரை, கிருஷ்ணன் (என் அருகில்) இல்லாத உலகத்தில் எனது கண்களைச் செலுத்த நான் துணிய மாட்டேன். இதற்காகவே, கிருஷ்ணன் அடைய முயற்சிப்பது எதுவாக இருப்பினும், அதையே நானும் பின்பற்றுகிறேன். கதாயுதப் போரில் நல்ல திறம் வாய்ந்த இந்த வீரர்கள் இருவரும் {பீமனும், துரியோதனனும்} எனது சீடர்களாவர். எனவே, எனது அன்பு, பீமனுக்கு இணையாக மன்னன் துரியோதனனிடமும் உண்டு. இந்தக் காரணங்களுக்காக, *நான் இப்போது, நீர்க்காணிக்கைகள் செய்து சுத்திகரித்துக் கொள்வதற்காகச் சரஸ்வதி தீர்த்தத்திற்குச் செல்லப் போகிறேன். ஏனெனில், கௌரவர்களின் அழிவை என்னால் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்றான் {பலராமன்}.

இப்படிச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட ராமன் {பலராமன்}, பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, (மேலும் மேலும் தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த) மதுசூதனனைத் {கிருஷ்ணனை} தடுத்து, புனித நீர்நிலைகளுக்கான தனது பயணத்திற்குப் புறப்பட்டான்.”

புறக்கணிக்கப்பட்ட ருக்மி! – உத்யோக பர்வம் பகுதி 159-பாண்டவர்களின் முகாமுக்குள் ருக்மி வருவது; ருக்மியின் முன் கதை சுருக்கம்; மூன்று பெரும் விற்களான காண்டீவம், சாரங்கம் மற்றும் விஜயம் ஆகியவற்றின் வர்ணனையும் அவற்றை உடையவர்கள் குறித்த செய்தியும்; ருக்மி அர்ஜுனனிடம் தனது உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு சொல்வது; அர்ஜுனன் அவனைப் புறக்கணிப்பது; ருக்மி துரியோதனனிடம் அதே கோரிக்கையுடன் சென்றது; துரியோதனனும் ருக்மியைப் புறக்கணித்தது; போரில் இருந்து விலகிய ருக்மி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்த நேரத்தில் அங்கே பாண்டவப் பாசறைக்குள், பீஷ்மகனின் மகனும், உண்மைநிறைந்த தீர்மானத்தைக் கொண்டவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான ருக்மி என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவன் வந்தான். வேறு பெயரில் ஹிரண்யரோமன் என்றும் அழைக்கப்பட்டவனான உயர் ஆன்ம பீஷ்மகன் {ருக்மியின் தந்தை} இந்திரனுக்கு நண்பனாக இருந்தான். போஜர்களின் வழித்தோன்றல்களில் பெரும் சிறப்புமிக்கவனாகவும், தென்னாடு முழுமைக்கும் ஆட்சியாளனாகவும் {தக்ஷிணதேசத்தாருக்குப் பதியுமாக} அவன் {பீஷ்மகன்} இருந்தான்.

கந்தமாதன மலைகளைத் தனது வசிப்பிடமாகக் கொண்டவனும், துரோணன் {துருமன்} என்ற பெயரில் அறியப்பட்டவனுமான கிம்புருஷர்களில் சிங்கம் போன்றவனுக்குச் {துருமனுக்கு} ருக்மி சீடனாக இருந்தான். அவன் {ருக்மி}, தனது ஆசானிடம் {துருமனிடம்} நான்கு பிரிவுகளுடன் கூடிய ஆயுத அறிவியலை முழுமையாகக் கற்றான். வலிய கரங்களைக் கொண்ட அந்தப் போர்வீரன் {ருக்மி}, காண்டீவம் மற்றும் (கிருஷ்ணனால் தரிக்கப்படும்) சாரங்கத்திற்கு இணையான சக்தி கொண்டதும், பெரும் இந்திரனுக்குச் {மகேந்திரனுக்குச்} சொந்தமானதும், தெய்வீகத் தொழில்நுட்பம் வாய்ந்ததுமான விஜயம் என்ற பெயரைக் கொண்டதுமான வில்லை {துருமனிடமிருந்து} அடைந்தான்.

வருணனுடைய காண்டீவம், இந்திரனுடைய விஜயம் என்று அழைக்கபட்ட வில், பெரும் சக்தி கொண்டதான விஷ்ணுவின் தெய்வீகமான வில் {சாரங்கம்} ஆகிய மூன்றும் சொர்க்கவாசிகளுக்குச் சொந்தமான தெய்வீக விற்களாக இருந்தன. பகை வீரர்களின் இதங்களில் பயத்தை உண்டாக்கும் இந்தக் கடைசி வில் (சாரங்கம்) கிருஷ்ணனால் தரிக்கப்பட்டது. காண்டவத்தை எரித்த நிகழ்வின் போது அக்னியிடம் இருந்து காண்டீவம் என்று அழைக்கப்பட்ட வில்லை இந்திரனின் மகன் (அர்ஜுனன்) பெற்றான். அதே வேளையில், விஜயம் என்ற வில்லைப் பெரும் சக்தி கொண்ட ருக்மி, {கிம்புருஷனான} துரோணனிடம் {துருமனிடம்} இருந்து பெற்றான்.

முரனின் சுருக்குகளை {பாசங்களை} கலங்கடித்து, அந்த அசுரனைத் {முரனைத்} தனது ஆற்றலால் கொன்றவனும், பூமியின் {பூமாதேவியின்} மகனான நரகனை வீழ்த்தியவனுமான ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பதினாறாயிரம் {16,000} பெண்களையும், பல்வேறு வகையான ரத்தினங்கள் மற்றும் கற்களையும், (அதிதியின்) மணிக்குண்டலங்களை மீட்ட போது, சாரங்கம் என்று அழைக்கப்பட்ட அந்த அற்புதமான வில்லையும் அடைந்தான்.

மேகங்களின் கர்ஜனைக்கு நிகரான நாணொலி கொண்ட விஜயம் என்ற வில்லை அடைந்த ருக்மி, அச்சத்தால் முழு அண்டத்தையும் கலங்கடித்தபடி பாண்டவர்களிடம் வந்தான். தனது கரங்களின் வலிமையில் செருக்கு கொண்டவனான அந்த ருக்மி, முன்னதாக {முன்பு ஒரு காலத்தில்}, தனது தங்கை ருக்மிணி புத்திமானான வாசுதேவனால் {கிருஷ்ணனால்} கடத்தப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், “ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} கொல்லாமல் திரும்புவதில்லை” என்ற உறுதிமொழியை நோற்று அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றான்.

அழகான கவசங்களைத் தரித்து, பல்வேறு வகையான ஆயுதங்களையும் தரித்து, பெருகியோடும் கங்கையின் நீரோட்டத்தைப் போலப் பாய்வதும், (அணிவகுத்துச் செல்லும்போது) பூமியின் ஒரு மிகப்பெரிய பகுதியை ஆக்கிரமிப்பதுமான நால்வகைப் படைகளின் துணையுடன் வந்தவனும், ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {ருக்மி}, விருஷ்ணி குலத்தோனான வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்தான்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, தவத்துறவுகளால் அடையத்தக்க அனைத்துக்கும் தலைவனான அந்த விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} வந்த ருக்மி, அவனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்டு அவமானம் அடைந்தான். அதன் காரணமாக அவன் {ருக்மி}, (தனது நகரான) குண்டினத்திற்குத் [1] {Kundina} திரும்பவில்லை. பகை வீரர்களைக் கொல்பவனான அவன் {ருக்மி} கிருஷ்ணனால் எந்த இடத்தில் வீழ்த்தப்பட்டானோ, அதே இடத்தில் போஜகடம் {Bojakata} என்ற பெயரில் ஓர் அற்புத நகரத்தைக் கட்டினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் படைகளுடனும், யானைகள் மற்றும் குதிரைகளுடனும் நிரம்பியிருக்ககும் அந்த நகரம், உலகத்தில் அந்தப் பெயராலேயே {போஜகடம் என்ற பெயராலேயே} பரந்து அறியப்பட்டது.

கவசம் பூண்டு, விற்கள், கையுறைகள், வாட்கள், அம்பறாத்தூணிகள் ஆகியவற்றைத் தரித்திருந்த அந்தப் பெரும் சக்தி கொண்ட வீரன் {ருக்மி}, ஓர் அக்ஷௌஹிணி படையுடன் {உபப்லாவ்யத்தில் இருந்த} பாண்டவ முகாமுக்குள் விரைவாக நுழைந்தான். சூரியனைப் போன்று நிலையான சுடரொளியுடன் இருந்த அந்தப் {பாண்டவப்} பெரும்படைக்குள் நுழைந்த ருக்மி, வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்கத்தக்கதைச் செய்ய விரும்பிய பாண்டவர்களிடம் தன்னை அறியச் செய்து கொண்டான். சில எட்டுகள் முன் வந்த மன்னன் யுதிஷ்டிரன், அவனுக்கு {ருக்மிக்குத்} தனது வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். முறையாக வழிபடப்பட்டு, பாண்டவர்களால் புகழப்பட்ட ருக்மி, பிறகு, தனது பதில் வணக்கத்தைத் தெரிவித்து, தனது துருப்புகளுடன் சிறிது நேரம் ஓய்ந்திருந்தான்.

*பிறகு, அவன் {ருக்மி}, கூடியிருந்த வீரர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியின் மகனான அர்ஜுனனிடம், “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அச்சப்படுகிறாயெனில், போரில் உனக்கு உதவிகளை அளிக்க நான் இங்கு இருக்கிறேன். நான் உனக்குத் தரும் உதவியை, உனது எதிரிகளால் தாங்கிக் கொள்ள இயலாது. ஆற்றலில் எனக்கு நிகரான எந்த மனிதனும் இவ்வுலகில் கிடையாது. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உனது எதிரிகளில் யாரை நீ எனக்கு ஒதுக்குகிறாயோ அவர்களை நான் கொல்வேன். துரோணர், கிருபர், பீஷ்மர் மற்றும் கர்ணன் ஆகிய வீரர்களில் ஒருவரை நான் கொல்வேன். அல்லது, பூமியின் மன்னர்களான இவர்கள் அனைவரும் ஒரு புறம் நிற்கட்டும். உனது எதிரிகளை நானே கொன்று, இந்தப் பூமியை நான் உனக்கு அளிக்கிறேன்” என்றான் {ருக்மி}.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோர் முன்னிலையிலும், (கூடியிருந்த) ஏகாதிபதிகளும், (முகாமில்) இருந்த அனைவரும் கேட்கும்படியும் இதைச் சொன்னான். பிறகு, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகியோர் மீது தனது கண்களைச் செலுத்திய குந்தியின் புத்திசாலி மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, புன்னகைத்தவாறே, நட்பு கலந்த குரலில், “குரு {கௌரவக்} குலத்தில் பிறந்து, அதிலும் குறிப்பாகப் பாண்டுவின் மகனாகப் பிறந்து, எனது ஆசான் என்று துரோணரின் பெயரைச் சொல்லிக் கொண்டு, வாசுதேவனை {கிருஷ்ணனை} எனது கூட்டாளியாக வைத்துக் கொண்டு, அதையெல்லாம் விடக் காண்டீவம் என்று அழைக்கப்படும் வில்லையும் கொண்டிருக்கும் நான், அஞ்சுகிறேன் என்று எப்படிச் சொல்வேன்?

ஓ! வீரா {ருக்மியே}, கால்நடைகளைக் கணக்கெடுத்த நிகழ்வில் {கோஷ யாத்ரையின் போது} பலமிக்கக் கந்தர்வர்களுடன் நான் போரிட்டபோது, எனக்கு உதவி செய்ய எவன் இருந்தான்?

காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} ஒன்று சேர்ந்து பெரும் எண்ணிக்கையில் வந்த தேவர்களுடனும், தானவர்களுடனும் பயங்கர மோதல் ஏற்பட்டு, நான் அவர்களுடன் போரிடுகையில், எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?

மேலும், நிவாதகவசர்களுடனும், காலகேயர்கள் என்று அழைக்கப்பட்ட பிற தானவர்களுடனும் நான் போரிட்டபோது, எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?

மேலும், விராட நகரத்தில், எண்ணற்ற குருக்களுடன் நான் போரிட்ட போது, அந்தப் போரில் எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?

போரின் நிமித்தமாக ருத்ரன், சக்ரன் {இந்திரன்}, வைஸ்ரவணன் {குபேரன்}, யமன், வருணன், பாவகன் {அக்னி}, கிருபர், துரோணர், மாதவன் {கிருஷ்ணன்} ஆகியோருக்கு எனது மரியாதைகளைச் செலுத்துபவன் நான்.

ஓ! மனிதர்களில் புலியே {ருக்மியே}, ஏந்துவதற்குக் கடினமானதும், பெரும் சக்தி கொண்டதும், காண்டீவம் என்றழைக்கப்படுவதுமான தெய்வீக வில்லைத் தரித்துக் கொண்டு, வற்றாத அம்புகள் மற்றும் தெய்வீக ஆயுதங்களைக் கொண்டிருக்கும் என்னைப்போன்றவன், புகழனைத்தையும் திருடிவிடக்கூடிய {இழந்துவிடக்கூடிய} “நான் அஞ்சுகிறேன்” என்ற வார்த்தைகளை வஜ்ரத்தைத் தாங்கியிருக்கும் இந்திரனிடம் கூட எப்படிச் சொல்வான்?

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் அஞ்சவில்லை, உனது உதவிக்கான எந்தத் தேவையும் எனக்கில்லை. எனவே, செல். அல்லது தங்கு. உனக்கு விருப்பமானதையோ, தகுந்ததையோ செய்துகொள்வாயாக {எதை வேண்டுமானாலும் செய்து கொள்}” என்றான் {அர்ஜுனன்}.

அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ருக்மி, கடல் போன்று பரந்திருந்த தனது படையுடன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரியோதனனிடம் சென்றான் {ருக்மி}. அங்கே சென்ற மன்னன் ருக்மி, துரியோதனனிடமும் இந்த வார்த்தைகளேயே திரும்பச் சொன்னான். தனது வீரத்தில் செருக்குக் கொண்ட அம்மன்னனும் {துரியோதனனும்}, அதே வழியில் {அர்ஜுனனைப் போலவே} அவனை {ருக்மியை} நிராகரித்தான்.

இப்படியே, ஓ! மன்னா {ஜனமேஜயா}, விருஷ்ணி குலத்து ரோகிணியின் மகன் (ராமன் {பலராமன்}), மன்னன் ருக்மி ஆகிய இருவரும் போரில் இருந்து விலகினர். ராமன் {பலராமன்} தீர்த்த யாத்திரைக்குப் புறப்படவும், பீஷ்மகனின் மகன் ருக்மி இப்படி விலகவும் செய்த பிறகு, மீண்டும் ஒருமுறை பாண்டுவின் மகன்கள் ஒருவருக்குள் ஒருவர் ஆலோசிக்க அமர்ந்தனர். எண்ணிலடங்கா ஏகாதிபதிகள் நிறைந்ததும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் தலைமை தாங்கப்பட்டதுமான அந்தச் சபை, சிறிய ஒளி பொருட்ளாலும் {கோள்களாலும்}, அவற்றுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனாலும் அலங்கரிக்கப்பட்ட வானம் போலச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது.” 

துரியோதனனைக் குற்றஞ்சாட்டாதீர்! – உத்யோக பர்வம் பகுதி 160-கௌரவ மற்றும் பாண்டவப் படைகளைக் குறித்துச் சொல்லும்படி சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் வேண்டிக் கேட்டு, தனது குறையையும் சொல்வது; நேர்ந்து வரும் தீமைக்குத் துரியோதனன் மட்டுமே பொறுப்பாளி அல்ல என்று சஞ்சயன் சொல்வது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், “படைவீரர்கள் இப்படிப் போருக்காக (குருக்ஷேத்திரக் களத்தில்) அணிவகுத்த பிறகு, ஓ! அந்தணர்களில் காளையே {வைசம்பாயனரே}, விதியால் உந்தப்பட்ட {காலனால் ஏவப்பட்ட} கௌரவர்கள் என்ன செய்தார்கள்?”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, படைவீரர்கள் இப்படிப் போருக்காக அணிவகுத்த பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.”

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வா, ஓ! சஞ்சயா, குரு {கௌரவ} மற்றும் பாண்டவத் துருப்புகளின் முகாம்களில் நடந்த நிகழ்வுகள் அனைத்தின் முழு விபரங்களையும் எனக்குச் சொல்வாயாக. போரின் தீய விளைவுகள் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனினும், *சூதாட்டத்தில் மகிழ்ந்து, வஞ்சகத்தை அறிவாகக் கருதும் எனது மகனை {துரியோதனனை} என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, விதியே உயர்ந்தது என்றும், முயற்சி {உழைப்பு} பயனில்லாதது என்றும் கருதுகிறேன். அனைத்தையும் அறிகிறேன். எனினும், எனது சொந்த நலனைக் கூட இன்னும் என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. ஓ! சூதா {சஞ்சயா}, (நடவடிக்கைகளின்) குறைபாடுகளைக் காணும் திறன் எனது புரிதலுக்கு {அறிவுக்கு} இருக்கிறது. எனினும், நான் துரியோதனனை அணுகும்போது, அந்தப் புரிதல் (சரியான அந்தப் பாதையில்) இருந்து நழுவி விடுகிறது. நிலைமை இப்படி இருக்கையில், ஓ! சஞ்சயா, எது நடக்க வேண்டுமோ, அதுவே நடக்கும். உண்மையில், போரில் தனது உடலைத் தியாகம் செய்வது, க்ஷத்திரியர் ஒவ்வொருவருக்கும் பாராட்டத்தக்க கடமையே ஆகும்” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்கும் இந்தக் கேள்வி உண்மையில் உமக்குத் தகுந்ததே. எனினும், துரியோதனன் மேல் மட்டுமே முழுத் தவறும் இருப்பதாக நீர் குற்றம் சாட்டுவது உமக்குத் தகாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இது குறித்து நான் விரிவாகப் பேசுகையில் என்னைக் {நான் சொல்வதைக்} கேட்பீராக. தனது தன்னடத்தையில் {சுய நடத்தையில்} உள்ள தவறின் விளைவாகத் தீமையை அடையும் ஒரு மனிதன், அந்தத் தவறுக்காக, காலத்தையோ, தேவர்களையோ எப்போதும் குற்றம் சாட்டக்கூடாது.

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, தீய செயல்கள் அனைத்தையும் நிகழ்த்தும் மனிதர்களில் ஒருவன், அச்செயல்களை நிகழ்த்தியதன் விளைவால் கொல்லப்படத் தகுந்தவனாகிறான். எனினும், பகடை ஆட்டத்தின் விளைவால் தீங்கை அனுபவித்த பாண்டுவின் மகன்கள், அமைதியாக அத்தீங்குகள் அத்தனையையும் தங்கள் ஆலோசகர்கள் அனைவருடனும் தாங்கிக் கொண்டு, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடைபெறயிருக்கும் போரில் குதிரைகள், யானைகள், அளவிலா சக்தி கொண்ட மன்னர்கள் ஆகியோரின் படுகொலைகளைக் குறித்து என்னிடம் முழுமையாகக் கேளும். ஓ! பெரும் அறிவைக் கொண்டவரே, இப்படிக் {வலிந்து} கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தக் கடும் போரால் ஏற்படப்போகும் உலக அழிவைப் பொறுமையாகக் கேட்ட பிறகு, சரியான அல்லது தவறான தனது செயல்பாடுகளுக்கு மனிதன் ஒருபோதும் பொறுப்பாக முடியாது என்பதைத் தவிர வேறு எதையும் தீர்மானிக்காதிருப்பீராக.

உண்மையில், மரப்பாவை {மரப் பொம்மை} போன்ற மனிதன், (தான் செய்யும் அனைத்துக்கும்) பொறுப்பாளியல்ல. இந்த வகையில், மூன்று கருத்துகள் சொல்லப்படுகிறது; அனைத்தும் கடவுளால் விதிக்கப்படுகிறது என்று சிலர் சொல்கின்றனர்; நமது தன்னிச்சையின் {சுய விருப்பத்தின்} விளைவே நமது செயல்கள் என்று சிலர் சொல்கின்றனர்; பிறரோ, நமது கடந்த கால வாழ்வுகளின் {முற்பிறவியில் நாம் செய்த செயல்களின்} விளைவே நமது செயல்கள் என்றும் சொல்கின்றனர். எனவே, நமக்கு நேர்ந்திருக்கும் தீமையைப் பொறுமையாகக் கேட்பீராக” என்றான் {சஞ்சயன்}.

பகவத்யாந பர்வம் முற்றும்

சைனியநிர்யாண பர்வம் முற்றும்

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ விராட பர்வம்-ஸ்ரீ  கோஹரணப் பர்வம்–

October 12, 2025

துச்சாசனன் ஆலோசனை! – விராட பர்வம் பகுதி 26-துரியோதனன் தன் அவையோரின் ஆலோசனைகளை வேண்டல்; கர்ணன் தனது ஆலோசனையை வழங்கல்; துச்சாசனன் தனது ஆலோசனையை வழங்கல்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் ஒற்றர்களின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், தனக்குள்ளேயே சிறிது நேரம் சிந்தித்த பிறகு, தனது அவையினரிடம், “நிகழ்வுகளின் போக்கைத் தெரிந்து கொள்வது கடினமாக உள்ளது. நம்மால் கண்டறியப்படாமல், அவர்கள் {பாண்டவர்கள்} வாழ வேண்டிய பதிமூன்றாவது வருடத்தின் பெரும்பகுதி கழிந்துவிட்டது. மீதம் இருப்பது {மீதம் இருக்கும் காலம்} மிகவும் குறைவு. எனவே, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} எங்கிருக்கிறார்களோ அந்த இடத்தைக் கண்டுபிடியுங்கள்.

உண்மை {சத்திய} நோன்புக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களான பாண்டுவின் மகன்களால், இந்த வருடத்தில் எஞ்சியிருக்கும் காலத்தையும் கண்டறியப்படாமல் உண்மையில் கழிக்கமுடியுமானால், அவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றியவர்கள் ஆவார்கள். பிறகு, மதநீர் பாயும் பலமிக்க யானைகளைப் போலவோ, கடும் நஞ்சு கொண்ட பாம்புகளைப் போலவோ அவர்கள் திரும்பி வருவார்கள். {அப்படி வந்தால்} கோபம் நிறைந்த அவர்கள், குருக்களுக்குக் கொடூரத் தண்டனையை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, காலத்தின் தன்மைகளை நன்கறிந்த பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, வலிநிறைந்த வேடங்களில் இப்போது இருப்பது போலவே நீடிக்கவும், தங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு மீண்டும் கானகம் செல்லவும், {நாம் எடுக்க} வேண்டிய முயற்சிகளைக் காலந்தாழ்த்தாமல் எடுப்பதே உங்களுக்குத்தகும். உண்மையில், நாடு அமைதியாகவும், எதிரிகளற்றதாகவும், எந்தக் குறைவும் இல்லாததாகவும், நாட்டிற்காகச் சண்டை நடவாதிருக்கவும், சண்டைக்கான அனைத்துக் காரணங்களையும் களையும்படியான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்” என்றான் {துரியோதனன்}.

துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {துரியோதனனிடம்}, “ஓ! பாரதா {துரியோதனா}, திறன்வாய்ந்தவர்களும், இன்னும் அதிகத் தந்திரமிக்கவர்களும், நோக்கத்தைச் சாதிக்கவல்லவர்களுமான வேறு ஒற்றர்களை விரைந்து அனுப்பு. நல்ல வேடந்தரித்து, பெரிய நாடுகளிலும், மக்கள் நிறைந்த மாகாணங்களிலும் திரிந்து, கற்றோர் சபைகளையும், மாகாணங்களில் இருக்கும் காண்பதற்கினிய இடங்களையும் அவர்கள் வேவு பார்க்கட்டும். அரண்மனைகளின் அந்தப்புரங்களிலும், சன்னதிகளிலும், புனித இடங்களிலும், சுரங்கங்களிலும், வித்தியாசமான பிற பகுதிகளிலும், நன்கு வழிகாட்டப்பட்ட ஆவலுடன் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} தேடப்பட வேண்டும்.

மாற்றுருவில் வாழும் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, வேலையில் அர்ப்பணிப்புக் கொண்ட, நல்ல வேடந்தரித்த, தேடுவதற்கான நோக்கங்களை நன்கு அறிந்த, நல்ல திறன்வாய்ந்த அதிக எண்ணிக்கையிலான ஒற்றர்களால் தேடப்படட்டும். ஆற்றங்கரைகளிலும், புனித இடங்களிலும், கிராமங்களிலும், நகரங்களிலும், துறவியரின் இடங்களிலும், காண்பதற்கினிய மலைகள் மற்றும் மலைக்குகைகளிலும் {அந்த பாண்டவர்கள்} தேடப்படட்டும்” என்றான் {கர்ணன்}.

கர்ணன் நிறுத்தியதும், துரியோதனனின் இரண்டாவது தம்பியும் {துரியோதனனுக்கு உடன்தம்பியும்}, {துரியோதனனின்} பாவச்செயல்களுக்குக் கைகோர்ப்பவனுமான துச்சாசனன், தனது அண்ணனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனரே}, நமது வெகுமதிகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டு, நாம் நம்பிக்கை வைத்திருக்கும் ஒற்றர்கள் மட்டும் மீண்டும் தேடச் செல்லட்டும். இதுவும், கர்ணன் சொன்ன வேறு யாவும் நமது முழு ஏற்பைப் பெற்றவையாகும். ஏற்கனவே கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி {மற்ற} அனைத்து ஒற்றர்களும் இந்தத் தேடலில் ஈடுபடட்டும். அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் படி, ஒவ்வொரு மாகாணத்திலும் தேடுவதில் இவர்களும், பிறரும் ஈடுபடட்டும்.

எனினும், பாண்டவர்கள் தொடர்ந்து சென்ற பாதையையோ, அவர்கள் தற்போது இருக்கும் வசிப்பிடத்தையோ, {அவர்கள்} மேற்கொண்டிருக்கும் தொழிலையோ கண்டுபிடிக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. ஒருவேளை, அவர்கள் {அந்த பாண்டவர்கள்} நன்றாக மறைந்திருக்கலாம்; ஒருவேளை, அவர்கள் {அந்த பாண்டவர்கள்} கடலின் மறுபுறத்திற்கே சென்றிருக்கலாம். அல்லது தங்கள் பலத்திலும் வீரத்திலும் கொண்ட கர்வத்தினால், ஒருவேளை அவர்கள் காட்டுவிலங்குகளால் விழுங்கப்பட்டிருக்கலாம்; அல்லது அவர்கள் {அந்த பாண்டவர்கள்} ஏதாவது எதிர்பாரா ஆபத்தை அடைந்து, ஒருவேளை நித்தியமாக அழிந்துபோயிருக்கலாம். எனவே, ஓ! குருகுலத்தின் இளவரசே {துரியோதனரே}, உமது இதயத்தில் இருந்து அனைத்து துயரங்களையும் அகற்றி, உமது சக்திக்கேற்றபடி எப்போதும் போலச் செயல்பட்டு, உம்மால் முடிந்ததைச் சாதியும். {செய்யக் கருதும் காரியத்தைச் செய்யும்}” என்றான் {துச்சாசனன்}.

துரோணர் ஆலோசனை! – விராட பர்வம் பகுதி 27-பாண்டவர்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்றும், நற்பண்புகள் கொண்ட அவர்கள் அழிந்திருக்க மாட்டார்கள் என்றும், அவர்களை விரைந்து கண்டுபிடிக்க ஆளனுப்ப வேண்டும் என்றும் துரோணர் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும்சக்தியும், பெரும் விவேகமும் கொண்ட துரோணர், “பாண்டுவின் மகன்களைப் போன்றோர் அழிவடையவோ, ஏமாற்றமடையவோ மாட்டார்கள். வீரமும், அனைத்து அறிவியல்களில் நிபுணத்துவமும், புத்திக்கூர்மையும், புலனடக்கமும், அறச்சார்பும், பெருந்தன்மையும் கொண்டு, கொள்கை முடிவுகள், அறம் பொருள் ஆகியவற்றை அறிந்தவனும், ஒரு தந்தையைப் போலத் தங்களிடம் பிணைப்புடன் இருப்பவனும், அறத்தைக் கடுமையுடன் பின்பற்றுபவனும்,  உண்மையில் உறுதியுள்ளவனும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவனும், யாரையும் புண்படுத்தாதவனும், தனது தம்பிகளுக்குக் கீழ்ப்படிபவனுமான தங்கள் அண்ணன் {யுதிஷ்டிரன்} அறிய அவனைப் பின் தொடர்பவர்களும், நீதிமானான யுதிஷ்டிரனும் இவ்வகையில் எப்போதும் அழிவடைய மாட்டார்கள்.

கொள்கை அறிவு கொண்ட பிருதையின் மகனால் (குந்தியின் மகன் யுதிஷ்டிரனால்), அர்ப்பணிப்பும், கீழ்ப்படியுந்தன்மையும், பெரும்ஆன்மாவும் கொண்டவர்களான தன் தம்பிகளின் செழுமையை,  பிறகேன் மீட்டெடுக்க முடியாது? இதற்காகவே, இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே அவர்கள் {பாண்டவர்கள்} கவனமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் போன்ற மனிதர்கள் எப்போதும் அழிவடையமாட்டார்கள். என் அறிவின் மூலம் இதையே நான் காண்கிறேன். எனவே, சரியாக ஆலோசித்த பிறகு என்ன செய்ய வேண்டுமோ, அதைத் தாமதிக்காமல் விரைவாகச் செய்யுங்கள். தங்கள் ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள், தங்கள் வாழ்வின் அனைத்துத் தேவைகளையும் எதிர்கொள்ள, {அந்த பாண்டவர்கள்} வசிப்பதற்கு ஏற்ற இடத்தை நாம் இப்போது தீர்மானிக்க வேண்டும்.

வீரர்களும், பாவமற்றவர்களும், தவத்தகுதி படைத்தவர்களுமான பாண்டவர்களைக் (அவர்களது அஜ்ஞாதவாத காலத்திற்குள்ளாகவே) கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். புத்திசாலித்தனமும், அனைத்து அறங்களும், உண்மையில் அர்ப்பணிப்பும், கொள்கை தத்துவங்கள் அறிதலும், சுத்தமும், புனிதமும், அளவிட முடியாத சக்தியும் கொண்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் யுதிஷ்டிரன்}, (தன் எதிரிகளைப்) பார்வையாலேயே எரித்துவிடும் திறன்பெற்றவனாவான். இவை யாவையும் அறிந்து, முறையானதைச் செய்யுங்கள். எனவே, அந்தணர்களையும், சாரணர்களையும், தவத்தில் வெற்றி மகுடம் சூட்டப்பட்டவர்களையும், அந்த வீரர்களைக் குறித்து அறிந்த இதே போன்றோரையும் அனுப்பி, மீண்டும் ஒருமுறை அவர்களை நாம் தேடுவோமாக!” என்றார் {துரோணர்}.

பீஷ்மர் ஆலோசனை! – விராட பர்வம் பகுதி 28-பாண்டவர்களைக் கண்டுபிடிக்க வேண்டாம் என்று பீஷ்மர் சொல்வது; யுதிஷ்டிரன் இருக்கும் இடங்களில் எத்தகு பண்புகள் நிறைந்திருக்கும் என்பதைப் பீஷ்மர் சொல்வது; …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, துரோணர் தனது பேச்சை முடித்ததும், வேதங்களை அறிந்தவரும், காலம் மற்றும் இடத்தின் தன்மைகளை அறிந்தவரும், அறநெறிகளின் அனைத்து கடமைகளைக் குறித்த அறிவைக் கொண்டவரும், பாரதர்களின் பெரும்பாட்டனும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், அந்த ஆசானின் {துரோணரின்} வார்த்தைகளைப் பாராட்டிவிட்டு, நேர்மையற்றவர்களால் அதிகம் பேசப்படாதவனும், நேர்மையானவர்களால் விரும்பி சந்திக்கப்பட்டுப் புகழப்படுபவனுமான அறம்சார்ந்த யுதிஷ்டிரன் மீது தாம் கொண்ட பிணைப்பை வெளிப்படுத்தும் வண்ணமும், பாரதர்களின் நன்மைக்கு வழிவகுக்கும் வண்ணமும், அறம்சார்ந்த வார்த்தைகளைப் பேசினார். பீஷ்மர் பேசிய வார்த்தைகள் பாகுபாடற்றவையாகவும், ஞானிகளால் வழிபடப்படுபவையாகவும் இருந்தன.

குருக்களின் பெரும்பாட்டன் {பீஷ்மர்}, “மறுபிறப்பாளரும் {பிராமணரும்}, ஒவ்வொரு காரியத்தின் உண்மையை அறிந்தவருமான துரோணர் சொன்ன வார்த்தைகளை நான் ஏற்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அனைத்து நற்குறிகள், அறம்சார்ந்த நோன்புகள், வேத கல்வி ஆகியவற்றைப் பெற்று, அறச் சடங்குகளுக்குத் தன்னை அர்ப்பணித்து, பல்வேறு அறிவியல்களை அறிந்து, முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, சத்திய நோன்பைப் பின்பற்றி, காலத்தின் தன்மை அறிந்து, {அஜ்ஞாத வாசம் குறித்து} தாங்கள் கொடுத்த வாக்குறுதியின் படி நடந்து, நடத்தையில் சத்தத்துடன், க்ஷத்திரிய வகைக்கான கடமைகளை எப்போதும் செய்து, கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} எப்போதும் கீழ்ப்படிந்து, உயர் ஆன்மாவும், பெரும் பலமும் கொண்டு, எப்போதும் ஞானிகளின் சுமைகளைத் தாங்கி வரும் அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} கெடுபேறால் கவிழ்ந்து போக மாட்டார்கள்.

அறத்திற்குக் கீழ்ப்படிந்து மறைந்திருக்கும் வாழ்வை வாழ்ந்து வருபவர்களும், தங்கள் சக்தியின் துணை கொண்டவர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, நிச்சயம் அழிவை அடைய மாட்டார்கள். இதைத்தான் எனது மனது உத்தேசமாகக் கணிக்கிறது. எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, பாண்டுவின் மகன்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய நேர்மையான ஆலோசனைக்கு நான் உதவுவேன். ஒற்றர்களைக் கொண்டு அவர்களைக் கண்டுபிடிக்கச் செய்வது விவேகமுள்ளவனின் கொள்கையாக இருக்காது [1]. எனது அறிவின் துணை கொண்டு சிந்தித்துப் பார்த்து பாண்டுவின் மகன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்வேன். நான் உங்கள் மீது கொண்ட அதிருப்தியால் எதையும் சொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

என்னைப் போன்ற மனிதர்கள் நேர்மையற்றவர்களுக்கு இத்தகு ஆலோசனைகளை வழங்கக்கூடாது. (நான் சொல்வது போன்ற) ஆலோசனைகள் நேர்மையானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். எனினும், தீமையான ஆலோசனைகளை எத்தகு சூழ்நிலையிலும் வழங்கக்கூடாது {என்பதைக் கருத்தில் கொள்கிறேன்}. ஓ! குழந்தாய் {துரியோதனா}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, முதிர்ந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்து, விவேகமுள்ளவனாக இருக்கும் ஒருவன், அறத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், ஒரு சபையின் மத்தியில் பேசும்போது, எத்தகைய சந்தர்ப்பத்திலும் அவன் உண்மையையே பேச வேண்டும். எனவே, வனவாசத்தின் பதிமூன்றாம் {13} வருடத்தில் இருக்கும் நீதிமானான யுதிஷ்டிரனின் வசிப்பிடம் குறித்துப் பேசும்போது, நான் இங்கிருக்கும் மக்கள் அனைவரையும்விட வித்தியாசமாக எண்ணுகிறேன் என்றே நான் சொல்ல வேண்டும்.

ஓ! குழந்தாய் {துரியோதனா}, மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் மாகாணத்தையோ, நகரத்தையோ ஆளும் ஆட்சியாளனை எந்தத் தீப்பேறும் அணுகாது. மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் நாடு, தொண்டுள்ளமும், தாராளமும், மனத்தாழ்மையும் {பணிவும்}, அடக்கமும் கொண்ட மக்கள் நிறைந்ததாக இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் நாட்டில் இருக்கும் மக்கள், ஏற்புடைய {இனிமையான} பேச்சும், ஆசை அடக்கமும், உண்மை நோற்றலும், உற்சாகமும், உடல் நலமும் {ஆரோக்கியமும்}, சுத்தமான நடத்தையும், வேலையில் நிபுணத்துவமும் கொண்டிருப்பார்கள். யுதிஷ்டிரன் இருக்கும் இடத்தில் உள்ள மக்கள் பொறாமைகொண்டவர்களாகவோ, தீங்கிழைப்பவர்களாகவோ, வீணர்களாகவோ, கர்விகளாகவோ இருக்க முடியாது. ஆனால் அவர்கள் {அந்த மக்கள்} அனைவரும் தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். உண்மையில், யுதிஷ்டிரன் வசிக்கும் இடத்தில் அனைத்துப்புறங்களிலும் வேத மந்திரங்கள் ஓதப்படும், வேள்விகள் செய்யப்படும், {அவ்வேள்வியில்} கடைசி நீர்க்காணிக்கைகள் {நெய் போன்றவை} எப்போதும் முழுமையாக உற்றப்படும் [2]. {அவ்வேள்வியில்} அந்தணர்களுக்குக் கொடுக்கப்படும் பரிசுகள் அபரிமிதமாக இருக்கும்.(வேள்வி தடையில்லாமல் நிறைவேறியது என்பதைக் குறிப்பது)

அங்கே மேகங்கள் அபரிமிதமான மழையைப் பொழியும் என்பதில் சந்தேகமில்லை. நல்ல அறுவடையின் காரணமாக அந்த நாடு எப்போது அச்சமற்றதாக இருக்கும். அங்கே நெல்லில் தானியம் இல்லாதிருக்காது; பழங்கள் சாறற்றவையா {ரசமற்றவையாக} இருக்காது; மலர் மாலைகள் நறுமணமற்றவையாக இருக்காது; மனிதர்களின் விவாதங்கள் ஏற்புடைய {இனிமையான} சொற்கள் நிறைந்தவையாகவே எப்போதும் இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் தென்றல் சுகமாக வீசும், மனிதர்களின் கூடுகைகள் நட்புடன் இருக்கும். அச்சத்திற்கான எந்தக் காரணமும் இருக்காது. மெலிந்தோ, பலமற்றதாகவோ எந்தப் பசுவும் இருக்காது. அங்கே பசுக்கள் நிறைந்திருக்கும். பால், தயிர், நெய் ஆகிய அனைத்தும் சுவைமிக்கதாகவும் சத்தானதாகவும் இருக்கும்.

மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், அனைத்துவகைப் பயிர்களும் ஊட்டச்சத்து மிக்கதாகவும், சமையலுக்குகந்த நல்ல சுவையுடனும் இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், {நாக்கு உணரும்} சுவை, {உடல் உணரும்} தொடுதல், {நாசி [மூக்கு] உணரும்} மணம் {வாசனை}, {காது உணரும்} கேள்வித்திறன் ஆகியவை அற்புத தன்மைகளைக் கொண்டிருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், பார்வையும் காட்சிகளும் மகிழ்ச்சி தருவனவையாக இருக்கும். அந்த இடத்தின் மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அறம்சார்ந்தவர்களாகவும், தங்களுக்கு உரிய கடமைகளைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள். உண்மையில், அவர்களது வனவாசத்தின் பதிமூன்றாவது {13} வருடத்தில் இருக்கும் பாண்டுவின் மகன்கள் வசிக்கும் நாட்டில் உள்ள மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், சுத்தமான நடத்தையோடும், எந்த வகைத் துன்பமும் இல்லாதவர்களாக இருப்பார்கள். {அந்த மக்கள்} தேவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தங்கள் முழு ஆன்மாவோடு அவர்களை {தேவர்களையும் விருந்தினர்களையும்} வழிபடுபவர்களாகவும், தாங்கள் விரும்பியவற்றைத் தானம் செய்பவர்களாகவும், பெரும் சக்தி நிறைந்தவர்களாகவும், நித்தியமான அறத்தைப் பின்பற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.

மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் இருக்கும் மக்கள் தீமையானவை அனைத்தையும் தவிர்த்து, நல்லதை மட்டுமே சாதிக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் இருப்பவர்கள் எப்போதும் வேள்விகளைச் செய்பவர்களாகவும், சுத்தமான நோன்புகளையும் நோற்பவர்களாகவும், பேச்சில் பொய்மையை வெறுப்பவர்களாகவும் இருந்து, நன்மையான, மங்களகரமான பயனுள்ளவற்றை அடைய எப்போதும் விரும்புபவர்களாக இருப்பார்கள். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் உள்ள மக்கள் நன்மையைப் பெற நிச்சயம் விரும்புவார்கள். அவர்களது இதயங்கள் எப்போதும் அறத்தை நோக்கி உயர்ந்தே இருக்கும். ஏற்புடைய {இனிய} நோன்புகளைச் செய்து எப்போதும் அறத்தகுதிகளை அடைவதிலேயே, எப்போதும் அவர்கள் {அம்மக்கள்} ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஓ! குழந்தாய் {துரியோதனா}, சாதாரண மனிதர்களை விட்டுவிடு, புத்திக்கூர்மை, தொண்டுள்ளம், உயர்ந்த மன அமைதி, ஐயமற்ற பொறுமை {மன்னிக்கும் குணம்}, அடக்கம், செழிப்பு, புகழ், பெரும் சக்தி, அனைத்து உயிர்களிடமும் அன்பு ஆகியவற்றைக் கொண்ட பிருதையின் மகனை {யுதிஷ்டிரனை}, (அவன் இப்போது தன்னை மறைத்துக் கொண்டிருப்பதால்) அந்தணர்களால் கூடக் கண்டுபிடிக்க இயலாது. நான் விவரித்த பண்புகள் கொண்ட {மக்கள் வசிக்கும்} பகுதியில்தான் ஞானியான யுதிஷ்டிரன் மாறுவேடத்தில் வசிக்க வேண்டும். அவனின் {யுதிஷ்டிரனின்} சிறந்த வாழ்வு முறையைக் குறித்து மேலும் எதையும் சொல்ல நான் துணிய மாட்டேன். இவை யாவையும் நினைத்துப் பார்த்து, ஓ! குருகுலத்தின் இளவரசே {துரியோதனா}, உண்மையில் என் மீது நீ ஏதாவது நம்பிக்கை கொண்டிருந்தாயானால், எது நன்மையைத் தரும் என்று நீ நினைக்கிறாயோ அதைக் காலந்தாழ்த்தாமல் செய்” என்றார் {பீஷ்மர்}.

கிருபர் ஆலோசனை! – விராட பர்வம் பகுதி 29-பாண்டவர்கள் வருவதற்குள் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள் எனக் கிருபர் துரியோதனனிடம் சொல்வது …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு சரத்வானின் மகன் கிருபர் {துரியோதனனிடம்}, “முதிர்ந்த பீஷ்மர் பாண்டவர்களைக் குறித்துச் சொன்னவை அனைத்தும், காதுக்கு இனியதாகவும், அறம் பொருளுக்கு இசைவானதாகவும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாகவும், மிக நியாயமானதாகவும், அவரது {பீஷ்மரது} தகுதிக்கு ஏற்றனவாகவும் உள்ளன. இது குறித்து நான் சொல்வதையும் கேள். அவர்கள் {பாண்டவர்கள்} தொடர்ந்து சென்ற பாதையையும், அவர்கள் இருப்பிடத்தையும் ஒற்றர்கள் மூலமாக அறிந்து, உனக்கு நன்மையைக் கொடுக்கும் கொள்கையை ஏற்பதே உனக்குத் தகும்.

ஓ! குழந்தாய் {துரியோதனா}, தனது நலனில் அக்கறையுள்ளவன், சாதாரண எதிரியைக் கூடப் புறக்கணிக்கக்கூடாது. ஓ! குழந்தாய் {துரியோதனா}, அப்படியிருக்கும்போது போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆயுதங்களிலும் முழு நிபுணர்களான பாண்டவர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன்? எனவே, கானகம் புகுந்து இப்போது மாறுவேடத்தில் தங்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் உயர் ஆன்ம பாண்டவர்களின் மறு தோன்றலுக்கான நேரம் வந்துவிட்டது எனும்போது, நீ உனது நாட்டிலும், பிற மன்னர்களின் நாடுகளிலும் உனது பலத்தை உறுதி செய்ய வேண்டும்.

பாண்டவர்கள் திரும்பும் நேரம் வந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. தாங்கள் உறுதியளித்த வனவாச காலம் முடிந்ததும், சிறப்புமிக்கவர்களும், பலமிக்கவர்களும், அளவிலா பராக்கிரமம் கொண்டவர்களுமான பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்}, சக்தியுடன் இங்கே வெடித்து வருவார்கள். எனவே, அவர்களுடன் ஒரு சாதகமான உடன்படிக்கையை முடிக்கும்பொருட்டு, நல்ல கொள்கைகளைக் கொண்டு, உனது படைபலத்தைப் பெருக்கு, கருவூலத்தை மேம்படுத்து. ஓ! குழந்தாய் {துரியோதனா}, இவையாவையும் உறுதி செய்து கொண்டு, பலவீனமான மற்றும் வலுவான உனது நட்பு நாடுகளைக் கொண்டு உனது சொந்த பலத்தைக் கணித்திடு!

உனது படைகளின் செயல்திறன், பலவீனம், வேறுபாடுகள் ஆகியவற்றையும், அவர்களில் யார் வேண்டியவர்கள், யார் வேண்டப்படாதவர்கள், என்பதை உறுதி செய்து கொண்டு, {ஒன்று} நாம் எதிரியுடன் போரிட வேண்டும் அல்லது அவனிடம் {எதிரியிடம்} உடன்படிக்கை செய்ய வேண்டும். சமரசம், வேற்றுமை, தண்டனை, கையூட்டு {இலஞ்சம்} ஆகிய கலைகளைத் தஞ்சமாகக் கொண்டு, எதிரிகளை அடக்கி, பலவீனர்களைப் பலத்தால் வீழ்த்தி, கூட்டாளிகளையும் துருப்புகளையும் உனது மென்மையான பேச்சால் வெற்றி கொள். (இந்த வழிகளில்) நீ உனது படைகளைப் பலப்படுத்தி, உனது கருவூலத்தை நிறைத்தால், முழு வெற்றியும் உனதாகும். இவை யாவற்றையும் நீ செய்துவிட்டால், துருப்புகளிலும் {காலாட்படையிலும்}, விலங்குகளிலும் {யானை, குதிரை போன்றவைகளிலும்} குறைபாடுள்ள பாண்டுவின் மகன்கள் ஒரு புறமிருந்தாலும், தங்களை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த எதிரிகளிடம் உன்னால் போரிட முடியும். உனது வகை வழக்கங்களுக்கு உகந்த அனைத்தின்படியும் நீ நடந்து கொண்டால், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, குறித்த நேரத்தில் நீ மகிழ்ச்சியை அடைவாய்” என்றார் {கிருபர்}.

திரிகார்த்தன் சுசர்மன் ஆலோசனை! விராட பர்வம் பகுதி 30-மத்ஸ்ய நாட்டை இப்போது தாக்குவது உசிதம் எனத் திரிகார்த்தர்களின் மன்னன் சுசர்மன் துரியனுக்கு ஆலோசனை வழங்கியது …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மத்ஸ்யர்கள் மற்றும் சல்லியர்களின் துணை கொண்டு மத்ஸ்ய சூதனான கீசனால் அடிக்கடி பல முறை தோற்கடிக்கப்பட்டவனும், எண்ணிலடங்கா தேர்களுக்குச் சொந்தக்காரனும், பலம்பொருந்திய திரிகார்த்தர்களின் மன்னனுமான சுசர்மன், இச்சந்தர்ப்பத்தைச் சாதகமானதாகக் கருதி, நேரங்கடத்தாமல் இந்த வார்த்தைகளைக் கூறலானான்.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பலமிக்கக் கீசகனால், தன் உறவினர்களோடு சேர்த்துப் பலவந்தமாகத் தோற்கடிக்கப்பட்ட மன்னன் சுசர்மன், கர்ணனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான். அவன் {சுசர்மன்}, “எனது நாடு மத்ஸ்யர்களின் மன்னனால் {விராடனால்} பல முறை பலவந்தமாகப் படையெடுக்கப்பட்டுள்ளது. பலமிக்கக் கீசகனே {அப்போது} மன்னனின் தளபதியாக இருந்தான். 

குறுக்குப்புத்தியும், வெஞ்சினமும் கொண்டு, உலகம் முழுவதும் அவனது {கீசகனது} பராக்கிரமத்திற்காகப் புகழ்பெற்று, பாவச்செயல்கள் செய்து வந்த மிகக் கொடூரமான அந்த ஈனன் {கீசகன்} எப்படியோ கந்தர்வர்களால் கொல்லப்பட்டிருக்கிறான். கீசகன் இறந்ததால், மன்னன் விராடன் கர்வமிழந்து, {கீசகன் என்ற} புகலிடம் இல்லாமல் தைரியத்தையும் அனைத்தையும் இழந்திருப்பான் என நான் நினைக்கிறேன். உங்களுக்கும், சிறப்புமிக்கக் கர்ணனுக்கும் மற்றும் கௌரவர்கள் அனைவருக்கும் விருப்பம் இருக்குமானால் இப்போதே நாம் அந்த நாட்டின் மீது படையெடுக்கலாம்.

நடந்த விபத்து {கீசகனின் மரணம்} நமக்குச் சாதகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே சோளம் நிறைந்த விராட நாட்டுக்கு நாம் {படையெடுத்துச்} செல்லலாம். நாம் {அங்கு} சென்று, அவனது {விராடனின்} ரத்தினங்கள் மற்றும் பல்வேறு வகையான பிற சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவனது கிராமங்களையும் நாட்டையும், நமக்குள் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது நாம் அவனது {விராடனது} நகரத்திற்குள் பலம்கொண்ட படையெடுப்படை நடத்தி, பல இனங்களிலான அவனது {விராடனின்} சிறந்த பசுக்களை ஆயிரக்கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஓ! மன்னா {துரியோதனா}, கௌரவப் படைகளையும் திரிகார்த்தர்கள் படைகளையும் ஒன்றாகச் சேர்த்து அவனது {விராடனது} கால்நடை மந்தைகளைக் கவர்ந்து வருவோம். அல்லது நமது படைகளை இணைத்து, அவனே {விராடனே} வந்து சமாதானம் கோரும் வண்ணம் அவனது அதிகாரத்தைத் தடுக்கலாம். அல்லது அவனது {விராடனது} முழுப் படையையும் அழித்து, மத்ஸ்யனை அடிபணியச் செய்யலாம். நீதிக்குடன்பட்டு அப்படி அவனை {விராடனை} அடிபணியச் செய்ததும், நாம் நமது நாட்டில் மகிழ்ச்சியாக வாழலாம். அதே வேளையில் உனது பலமும் மேம்படுவதில் ஐயமில்லை” என்றான் {திரிகார்த்தர்களின் மன்னன் சுசர்மன்}.

சுசர்மனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், மன்னனிடம் {துரியோதனனிடம்}, “சுசர்மன் நன்று சொன்னான். சந்தர்ப்பம் சாதகமானதாகவும், உறுதியாக, நமக்கு லாபகரமானதாகவும் இருக்கிறது. எனவே, நீ விரும்பினால், ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, நமது படைகளை அணிவகுக்கச் செய்து, அவற்றைப் பிரிவுகளாகத் திரட்டி விரைந்து புறப்படுவோம். அல்லது, சரத்வானின் மகன் கிருபர், ஆசானான துரோணர், வயது முதிர்ந்த குருக்களின் ஞானியான பாட்டனாரும் {பீஷ்மரும்} சொல்வது போல இப்படையெடுப்பு நிர்வகிக்கப்படட்டும். ஒருவருடன் ஒருவர் ஆலோசித்து, ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, நமது இலக்கை விரைந்து அடைய புறப்படுவோம். செல்வம், பலம், பராக்கிரமம் ஆகியவற்றை இழந்திருக்கும் பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நமக்கு ஆக வேண்டியது என்ன? அவர்கள் முற்றிலும் காணாமல் போய்விட்டனர், அல்லது யமனின் வசிப்பிடம் சென்றுவிட்டனர். ஓ! மன்னா {துரியோதனா}, துயரப்பட்டுக்கொண்டிராமல் நாம் விராடனின் நகரத்திற்குச் சென்று, அவனது கால்நடைகள் மற்றும் பல்வேறு வகையான பிற சொத்துக்களையும் கொள்ளையடிப்போம்” என்றான் {கர்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சூரியனின் மகனான கர்ணனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட மன்னன் துரியோதனன், தனது உடன்தம்பியும், தனது விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனுமான தனது தம்பி துச்சாசனனை அழைத்து, “மூத்தவர்களுடன் ஆலோசித்து, தாமதமில்லாமல் நமது படைகளை அணிவகுக்கச் செய். கௌரவர்கள் அனைவருடன் கூடி, நாம் நிர்ணயித்த இடத்திற்குச் செல்வோம். பலம் பொருந்திய வீரனான மன்னன் சுசர்மன், திரிகார்த்தர்களுடனும் வாகனங்கள் மற்றும் விலங்குகளுடன் கூடிய போதுமான படைகளுடனும் மத்ஸ்யனின் நாட்டுக்குப் புறப்படட்டும்.

தனது நோக்கத்தைக் கவனமாக மறைத்துக் கொண்டு, சுசர்மன் முதலில் செல்லட்டும். அதைத் தொடர்ந்து அவர்களறிய அடுத்த நாள் நெருக்கமான அணிகளுடன் நாம், மத்ஸ்ய மன்னின் செழிப்புமிக்க நாட்டுக்குப் புறப்படுவோம். திரிகார்த்தார்கள் விராட நகரத்திற்குத் திடீரெனச் சென்று, பசுக்கூட்டங்களையும், அபரிமிதமான செல்வங்களையும் கைப்பற்றட்டும். நாம் இரு பிரிவுகளாக அணிவகுத்துச் சென்று, மங்களக்குறிகள் கொண்ட அற்புதமான பசுக்களை ஆயிரக்கணக்கில் பிடிப்போம்” என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ பூமியின் தலைவா {ஜனமேஜயா}, கடும் பராக்கிரமம் கொண்ட தங்கள் காலாட்படை துணையுடன் தென்கிழக்குத் திசையில் அணிவகுத்துச் சென்று, அவனது {விராடனின்} பசுக்களைக் கைப்பற்ற விரும்பி, விராடனிடம் பகைதீர்க்க திரிகார்த்தர்கள் நினைத்தனர். தேய்பிறையின் ஏழாவது நாளில் பசுக்களைக் கைப்பற்ற சுசர்மன் புறப்பட்டான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தேய்பிறையின் எட்டாவது நாளில், அனைத்து துருப்புகளின் துணைகளையும் கொண்ட கௌரவர்கள், பசுக்களை ஆயிரக்கணக்கில் கைப்பற்றத் தொடங்கினர்.” {என்றார் வைசம்பாயனர்}.

விராடப் படை அணிவகுப்பு! விராட பர்வம் பகுதி 31-விராடனின் பசுமந்தைகளைத் திரிகார்த்தர்கள் கைப்பற்றிச் செல்வதை மன்னன் விராடனிடம் வந்து மந்தையாளர்கள் சொல்வது; விராடன், பாண்டவர்களையும் தன்னுடன் சேர்ந்து போராடச் சொல்வது; பாண்டவர்கள் உற்சாகத்தோடு போருக்குப் புறப்பட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பலம்வாய்ந்த மன்னா {ஜனமேஜயா}, மன்னன் விராடனுக்குச் சேவை செய்யப் புகுந்து, அவனது {விராடனின்} சிறந்த நகரத்தில் மாறுவேடத்தில் வசித்து வந்த அந்த அளவிலா பராக்கிரமம் கொண்ட உயர் ஆன்ம பாண்டவர்கள், பிறரறியாமல் வாழ்வதாகத் தாங்கள் வாக்குறுதி அளித்திருந்த {அஜ்ஞாதவாச காலத்தை} காலத்தை நிறைவு செய்தார்கள். பகைவீரர்களைக் கொல்பவனான பலம்பொருந்திய மன்னன் விராடன், கீசகன் கொல்லப்பட்ட பிறகு, குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்} மீது தனது நம்பிக்கையை வைக்கத் தொடங்கினான். அவர்களது {பாண்டவர்களின்} வனவாச காலத்தின் பதிமூன்றாவது வருட நிறைவில்தான் விராடனின் கால்நடைகளை {பசுக்களை} அந்தச் சுசர்மன் ஆயிரக்கணக்கில் கைப்பற்றினான். கால்நடைமந்தைகள் அப்படிக் கைப்பற்றப்பட்ட போது, விராடனின் மந்தையாளர்கள் {இடையர்கள்} பெருவேகத்துடன் நகருக்கு வந்து, விவேகமுள்ள சபை உறுப்பினர்கள், மனிதர்களில் காளையரான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} மற்றும் காதுகுண்டலங்களும், கடகங்களும் அணிந்திருந்த துணிச்சல் மிக்க வீரர்கள் ஆகியோரின் மத்தியில் மத்ஸ்யர்கள் மன்னனான தங்கள் ஆட்சியாளன் {விராடன்} அரியாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.

தன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை மேம்படுத்தும் மன்னன் விராடன், தனது சபையில் அமர்ந்திருந்தபோது, அவனுக்கு {விராடனுக்கு} முன்பு தோன்றிய அந்த மந்தையாளர்கள், அவனை {விராடனைப்} பணிந்து வணங்கி, அவனிடம் {விராடனிடம்}, “ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {விராடரே}, நண்பர்களோடு கூடிய எங்களை வீழ்த்தி அவமதித்த திரிகார்த்தர்கள் உமது மந்தைகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் {அறுபதினாயிரம் என்கிறது ஒரு பதிப்பு} கைப்பற்றினர். எனவே, விரைந்து அவற்றை மீட்பீராக. ஓ!, அவற்றை {பசுமந்தைகளை} நீர் தொலைத்துவிடாதிருக்க ஆவன செய்யும்” என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {விராடன்}, தேர்களும், யானைகளும், குதிரைகளும், காலாட்படைகளும், கொடிக்கம்பங்களும் நிறைந்த மத்ஸ்ய படையை அணிவகுக்கச் செய்தான்.

ஒளிர்ந்து கொண்டிருந்த வீரர்கள் அணியத்தக்க அழகான கவசங்களை மன்னர்களும், இளவரசர்களும், அதனதன் சரியான இடங்களில் விரைவாகப் பொருத்தினர். விராடனின் அன்பிற்குரிய தம்பியான சதானீகன் {Satanika}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பிளக்க இயலாத எஃகால் {எஃகு} செய்யப்பட்ட கவசத்தைத் தரித்தான். சதானீகனுக்கு அடுத்து பிறந்தவனான மதிராக்ஷன் {Madirakshya}, தங்கம் பூசப்பட்டு, அனைத்து ஆயுதங்களையும் தாங்கவல்ல வலுவான கவசத்தை அணிந்தான். மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்} அணிந்த கொண்ட கவசமானது, நூறு வட்டங்களும், நூறு புள்ளிகளும், நூறு கண்களும் கொண்டு நூறு சூரியன்களால் அலங்கரிக்கப்பட்ட பிளக்கமுடியாத கவசமாக இருந்தது. சூரியதத்தன் {Suryadatta} [1] அணிந்த கவசமானது, சூரியனைப் போன்று பிரகாசமாகவும், தங்கத்தால் பூசப்பட்டதாகவும், மணமிக்க (கல்லார {Kahlar}) இனத்தைச் சார்ந்த நூறு தாமரைகளைப் {செங்கழுநீர் மலர்களைப்} போல அகன்று இருந்தது. விராடனின் மூத்த மகனும் வீரனுமான சங்கன் {Sanksha} ஆயிரங்கண் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பளபளக்கும் எஃகினால் செய்யப்பட்டதாகத் துளைக்கப்பட முடியாத கவசத்தை அணிந்தான்.

இப்படியே தேவர்களைப் போன்றிருந்த அந்தப் பலமிக்க நூறு வீரர்களும், தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, போர் செய்யும் ஆர்வத்துடன், தங்கள் கவசங்களைப் பூட்டினர். பிறகு கவசம் பூட்டப்பட்ட வெள்ளை நிறக் குதிரைகளைத் தங்கள் அற்புதமான தேர்களில் பூட்டினர். பிறகு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பிரகாசத்தில் சூரியனையோ, சந்திரனையோ ஒத்திருந்த மத்ஸ்யனின் {விராடனின்} அற்புதமான தேரில் இருந்த {கொடிமரத்தில்} அவனது {விராடனது} மகத்தான கொடி ஏற்றப்பட்டது. பிறகு மற்ற க்ஷத்திரிய வீரர்களும், தங்கள் தங்கள் தேர்களில் உள்ள தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் பல்வேறு வடிவகளில், பல கருவிகளைக் கொண்டிருந்த கொடிகளை ஏற்றினர்.

பிறகு மன்னன் மத்ஸ்யன், தன் உடன்தம்பியான சதானீகனிடம், “பெரும் சக்தி கொண்ட கங்கன், வல்லவன், தந்திரீபாலன் மற்றும் தமக்கிரந்தி {கிரந்திகன் [நகுலன்]} ஆகியோர் போரிடுவார்கள் என்பது ஐயமின்றி எனக்குத் தெரிகிறது. கொடிகளுடன் கூடிய தேர்களை அவர்களுக்கு நீ கொடு. எளிமையாக அணிந்து கொள்ளும் வகையில் {எடை குறைந்த} பிளக்கமுடியாதவையான அழகான கவசங்களை அவர்கள் அணிந்து கொள்ளட்டும். அவர்கள் ஆயுதங்களைப் பெற {ஏற்பாடு} செய். {கவசம் போன்ற} தற்காப்பு வடிவங்களைத் தாங்கி, யானையின் பலமிக்கத் துதிக்கைகளைப் போன்ற கரங்களைக் கொண்ட அவர்களால் போரிட முடியாது என்று என்னால் சொல்ல முடியாது” என்றான் {விராடன்}.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சதானீகன், அரசமகன்களான யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய பிருதையின் மகன்களுக்கு {குந்தியின் மகன்களான பாண்டவர்களுக்கு} தேர்களை உடனே வரவழைத்தான். மன்னனால் உத்தரவு கொடுக்கப்பட்டதும், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடனும், மாறாபற்றைக் {விசுவாசத்தைக்} கருத்தில் கொண்ட தேரோட்டிகள் (பாண்டவர்களுக்காக) விரைந்து தேர்களைத் தயார் செய்தார்கள். பிறகு விராடனால் உத்தரவிடப்பட்ட வகையில், எளிமையாக அணிந்துகொள்ளத்தக்க, பிளக்கமுடியாதபடி இருந்த அழகிய கவசங்களை அந்தக் களங்கமற்ற புகழ் கொண்ட வீரர்கள் {பாண்டவர்கள்} அணிந்து கொண்டனர். நல்ல குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறிய அந்த மனிதர்களில் முதன்மையானவர்களும், பகைக்கூட்டத் தலைவர்களை அடிப்பவர்களுமான பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள்}, மகிழ்ச்சிகரமான இதயத்துடன் புறப்பட்டனர்.

உண்மையில், போர்க்கலையில் நிபுணர்களான அந்தப் பெரும் பலம்வாய்ந்த வீரர்களும், குருகுலத்தின் காளையரும், பாண்டுவின் மகன்களும், கலங்கடிக்கப்படாத பராக்கிரமம் கொண்டவர்களுமான அந்த நான்கு வீரச் சகோதரர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஏறி, விராடனின் உத்தரவுக்கிணங்க ஒன்றாகப் புறப்பட்டனர். பயங்கர வடிவம் கொண்டவைகளும், மதப்பெருக்குடையவையும், அறுபது வயதைக் கடந்தவையும், நல்ல வடிவம் கொண்ட தந்தங்கள் கொண்டவைகளும், போரில் நிபுணர்களாக இருக்கும் வீரர்களால் ஏறப்பட்டவையும், மழைபொழிகின்ற மேகங்களைப் போன்றவையுமான யானைகளைப் போல, மன்னனைப் {விராடனைப்} பின்தொடர்ந்து, அசைந்து செல்லும் மலைகளைப் போல அவர்கள் {பாண்டவர்கள்}, சென்றார்கள்.

ஆவலுடன் மன்னனை {விராடனைத்} தொடர்ந்து சென்ற மத்ஸ்யனின் {விராடனின்} வீரர்களிடம், எட்டாயிரம் {8000} தேர்களும், ஆயிரம் {1000} யானைகளும், அறுபதினாயிரம் {60,000} குதிரைகளும் இருந்தன. மேலும், ஓ! பாரதர்களில் காளையே {ஜனமேஜயா}, விராடனின் அந்தப் படை, ஓ! மன்னா {ஜனமேஜயா}, கால்நடைகளின் பாதச்சுவடுகளைக் குறித்துக் கொண்டு அணிவகுத்துச் சென்ற காட்சியைக் காண மிக அழகாக இருந்தது. உறுதிமிக்க ஆயுதங்களைத் தாங்கிய வீரர்கள் நிறைந்ததும், யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்ததுமான விராடனின் படைகளில் முதன்மையான அந்தப் படையின் அணிவகுப்பைக் காண உண்மையில் அற்புதமாக இருந்தது.” {என்றார் வைசம்பாயனர்}.

சுசர்மன் விராடன் மோதல்! விராட பர்வம் பகுதி 32-திரிகார்த்தர்களுக்கும், மத்ஸ்யர்களுக்கு இடையில் நடந்த போர்; சுசர்மனுக்கும் விராடனுக்கும் இடையே நடந்த மோதல் ஆகியவற்றைக் குறித்த வர்ணனை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நகரத்தில் இருந்து புறப்புட்டு வெளியே சென்று, போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற வீரர்களான மத்ஸ்யர்கள், சூரியன் தீர்க்க ரேகையை {meridian} கடக்கும்போது {சூரிய அஸ்தமனத்தின்போது} திரிகார்த்தர்களை முறியடித்தார்கள். உக்கிரத்தால் உற்சாகமடைந்து, {எதிரி} மன்னனை அடைய விரும்பிய அந்த ஈரணியினரும் {இரு அணியினரும்}; போரில் அடக்கப்படமுடியாதவர்களான அந்தப் பெரும் பலமிக்கத் திரிகார்த்தர்களும், மத்ஸ்யர்களும் பெரும் கர்ஜனை செய்தார்கள். பிறகு, ஈரணிகளையும் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த போராளிகளால் நடத்தப்பட்ட பயங்கரமான மதம் கொண்ட யானைகள், தோமரங்களாலும், அங்குசங்களாலும் தூண்டப்பட்டு ஒன்றுக்கொன்று மோத வைக்கப்பட்டன.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூரியன் கீழே அடிவானத்தில் இருந்தபோது, ஈரணியினரின் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைகள் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற அந்த மோதல், மயிர்க்கூச்சரியும் வகையிலும், யமனுடைய நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்கக் கணிக்கப்பட்டதாகவும், கடுமையாகவும், பயங்கரமாகவும், பழங்காலத்தில் நடந்த தேவாசுரப் போரைப் போலவும் இருந்தது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதற்காகப் போராளிகள் விரைந்தபோது, அடர்த்தியான தூசிப்படலம் எழுந்தது. எனவே, {யாராலும்} எதையும் பார்க்க முடியவில்லை.

படைகளின் மோதலால் ஏற்பட்ட அந்தத் தூசிப்படலத்தால், பறவைகள் பூமியில் விழத்தொடங்கின. அடர்த்தியாக இருந்த கணைமழைக்குப் பின்னால் சூரியனே மறைந்து போனான். ஆநேகமாயிரம் மின்மினிப்பூச்சிகள் இருப்பது போல ஆகாயம் பிரகாசமாக இருந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தண்டுகளைக் கொண்ட தங்கள் விற்களை ஒரு கையில் இருந்து மறுகைக்கு மாற்றிய அந்த வீரர்கள், இடமாகவும், வலமாகவும் தங்கள் கணைகளை அடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

தேர்கள் தேர்களோடும், காலாட்படை காலாட்படையோடும் குதிரையில் இருப்போர் குதிரையிலிருப்போராடும், யானைகள் பெரும் பலமிக்க யானைகளோடும் மோதிக் கொண்டன. வாட்கள், கோடரிகள், பராசங்கள், எறிவேல்கள், இரும்பு கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த வலிய கரங்கள் கொண்ட போர்வீரர்கள் ஒருவருக்கொருவர் உக்கிரமாகத் தாக்கிக் கொண்டாலும், அந்த மோதலில் எந்த அணியாலும் மற்ற அணியை முறியடித்து வெற்றி காண முடியவில்லை. அழகான மூக்குகளுடன் சிலவும், மேல் உதடு ஆழமாக வெட்டப்பட்ட சிலவும், காது வளையங்களுடன் சிலவும், காயங்களால் வகுக்கப்பட்ட சிலவும், நன்கு வெட்டி நேர்த்தியாக்கப்பட்ட முடிகளோடு கூடிய சிலவும் எனப் பல தலைகள் தூசி படிந்த தரையில் உருண்டன.

விரைவில், கணைகளால் அறுக்கப்பட்டு. ஆச்சா மரங்களின் அடிமரத்தைப் போலக் கிடந்த க்ஷத்திரிய வீரர்களின் அங்கங்களால், அந்தப் போர்க்களமே நிறைந்தது. காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும், பாம்புகளின் உடல்களைப் போல இருந்த சந்தனம் பூசப்பட்ட கரங்களும் சிதறிக் கிடந்ததால், அந்தப் போர்க்களம் பார்ப்பதற்கு மிக அழகாக ஆனது {became exceedingly beautiful}. தேர்கள் தேர்களோடும், குதிரையில் இருப்போர் குதிரையிலிருப்போராடும், காலாட்படையினர் காலாட்படையினரோடும், யானைகள் யானைகளோடும் மோதிக்கொண்ட போது எழுந்த பயங்கரமான தூசிப்படலம், விரைவில் இரத்த ஊற்றால் நனைந்தது. போராளிகளில் சிலர் மயக்கமடைந்தனர். மனிதம், நட்பு, உறவு என்பனவற்றைக் கருதாமல், ஈவிரக்கம் பாராமல் வீரர்கள் போரிடத் தொடங்கினர். கணைமழையால் அவர்களது பார்வையும், வழியும் தடைசெய்யப்பட்டபோது, கழுகுகள் தரையில் இறங்கத் தொடங்கின. ஆனால், என்னதான் அந்த வலிய கரங்கள் கொண்ட போராளிகள் மூர்க்கமாகத் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டாலும், ஈரணியைச் சேர்ந்த வீரர்களாலும் தங்கள் எதிரிகளை வீழ்த்துவதில் வெல்ல முடியவில்லை.

எதிரிகளில் நூறு பேரைக் கொன்ற சதானீகனும்,  நானூறு பேரைக் கொன்ற விசாலாக்ஷனும் {மதிராக்ஷனும்} அந்தப் பெரும் திரிகார்த்தப் படையின் மத்தியில் நுழைந்தனர். அந்த அடர்ந்த திரிகார்த்தப்படைக்குள் புகுந்த அந்தப் புகழ்பெற்ற வலிமைமிக்க வீரர்கள், தங்கள் எதிரிகளுடன் நெருக்கமாகப் போர் புரிந்தனர். அந்தப் போராளிகள் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு, தங்கள் நகங்களைக் கொண்டு ஒருவரையொருவர் கிழித்தனர். வலுவான எண்ணிக்கை கொண்ட திரிகார்த்தர்களின் தேர்கள், ஒன்றுதிரட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்ட அந்த வீரர்கள், கடைசியாக அதை நோக்கித் தங்கள் தாக்குதலைச் செய்தனர்.

சூரியதத்தனைத் தனது தேரிலும், மதிராக்ஷனைத் தனக்குப் பின்னாலும் கொண்டிருந்த தேர் வீரர்களில் முதன்மையான மன்னன் விராடன், அந்த மோதலில் ஐநூறு தேர்களையும், எண்ணூறு குதிரைகளையும், பெரும் தேர்களில் இருந்த ஐந்து வீரர்களையும் அழித்து, அந்தப் போர்க்களத்தில் தனது தேரின் மீது இருந்து தனது பல்வேறு திறமைகளை {தந்திர உத்திகளை} வெளிப்படுத்தினான். இறுதியில் மன்னன் {விராடன்}, தங்கத்தேரில் இருந்த திரிகார்த்த ஆட்சியாளனை {சுசர்மனை} எதிர்த்தான். உயர் ஆன்மா கொண்டவர்களும், பலமிக்க வீரர்களுமான அவர்கள், {தங்களுக்குள்} சண்டையிட விரும்பி, மாட்டுக்கொட்டகையில் உள்ள இரு காளைகள் போல உறுமிக் கொண்டு விரைந்தனர்.

பின்பு, மனிதர்களில் காளையும், போரில் கட்டுக்கடங்காதவனுமான திரிகார்த்தர்களின் மன்னன் சுசர்மன், தேரில் இருந்து புரியும் தனிப்போர் செய்ய மத்ஸ்யனுக்கு {விராடனுக்குச்} சவால்விட்டான். பிறகு சினத்தால் துடித்த அந்தப் போர்வீரர்கள் தங்கள் தேர்களில் ஒருவரை ஒருவர் எதிர்த்தபடி மழையூற்றைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமழையைப் பொழியத் தொடங்கினர்.  ஒருவரிடம் ஒருவர் சினம் கொண்டவர்களும், ஆயுதங்களில் நிபணத்துவம் கொண்டவர்களுமான அந்த இரு கடும் போர்வீரர்களும் வாட்கள், கணைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைத் தாங்கி, ஒருவரை ஒருவர் கூர்மையான கணைகளால் தாக்கிக் கொண்டு (போர்க்களத்தில்) களமாடினர்.

மன்னன் விராடன், சுசர்மனை பத்து கணைகளாலும், அவனது நான்கு குதிரைகளில் ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளாலும் துளைத்தான். அபாயகரமான ஆயுதங்களை அறிந்த, போர்க்களத்தில் கட்டுக்கடங்காத சுசர்மனும், மன்னன் மத்ஸ்யனை {விராடனை} கூர்மையான ஐம்பது கணைகளால் துளைத்தான். பிறகு, ஓ! பலமிக்க ஏகாதிபதியே {ஜனமேஜயா}, போர்க்களத்தில் எழுந்த புழுதியின் விளைவாக, சுசர்மன் மற்றும் மத்ஸ்ய மன்னன் ஆகியோரது படைவீரர்களால் ஒருவரை ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.” {என்றார் வைசம்பாயனர்}.

சுசர்மனின் ஏமாற்றம்! விராட பர்வம் பகுதி 33-போரில் திரிகார்த்தனின் கை ஓங்கியது; திரிகார்த்தன் விராடனை சிறைபிடித்தது; யுதிஷ்டிரன் விராடனை விடுவிக்கச் சொல்லி பீமனுக்கு உத்தரவிட்டது; பீமன் விராடனை மீட்டது; யுதிஷ்டிரன் சுசர்மனை விடுவிக்கச் சொன்னது

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, இந்த உலகமே புழுதியாலும், இரவின் இருளாலும் சூழப்பட்டிருந்தபோது, அவ்விரு அணிகளையும் சேர்ந்த போர்வீரர்கள், படையணிகளை உடைக்காமல், சிறிது நேரம் [1] {போர் செய்யாமல்} நிறுத்தினர். பிறகு, இருளை அகற்றியபடி, இரவை ஒளியூட்டியபடி, க்ஷத்திரிய வீரர்களின் இதயங்கள் மகிழ்வுறும்படி சந்திரன் உதித்தான். அனைத்தும் கண்களுக்குப் புலப்பட்டன. போர் மீண்டும் தொடங்கியது. போராளிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுத்திப் பார்க்காதவாறு அது {அந்தப் போர்} அப்படியே உக்கிரமாய் நடந்தது.

பிறகு, தனது தம்பியோடு இருந்த திரிகார்த்தர்களின் தலைவனான சுசர்மன், தனது அனைத்து தேர்களின் துணையோடு மத்ஸ்ய மன்னனை {விராடனை} நோக்கி விரைந்தான். தங்கள் தேர்களில் இருந்து இறங்கிய அந்த க்ஷத்திரியர்களில் காளையரான (அரச) சகோதரர்கள் {சுசர்மனும் அவனது தம்பியும்}, தங்கள் கைகளில் கதாயுதத்துடன், எதிரியின் {விராடனின்} தேரை நோக்கி மூர்க்கமாக விரைந்தனர். கதாயுதங்கள், வாட்கள், குறுவாள்கள், போர்க்கோடரிகள், கூரிய முனைகளும் கடினமும் கொண்ட பராசங்கள் ஆகியவற்றைக் கொண்டு அந்தப் பகைக்கூட்டத்தினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

திரிகார்த்தர்களின் தலைவனான மன்னன் சுசர்மன், தனது சக்தியால் மத்ஸ்யர்களின் முழுப் படையையும் ஒடுக்கி வீழ்த்தியபடி, பெரும் சக்தி கொண்ட விராடனை நோக்கி அவசரமாக விரைந்தான். அந்த இரு சகோதரர்களும் {சுசர்மனும் அவனது தம்பியும்}, விராடனின் இரு குதிரைகளையும், அவனது தேரோட்டியையும், பின்புறம் இருந்து அவனைப் {விராடனைப்} பாதுகாத்த படைவீரர்களையும் தனித்தனியாக வெட்டிப் போட்டனர். {அந்த நேரத்தில்} அவன் {விராடன்} தேரை இழந்திருந்தபோது, அவனை {விராடனை} உயிருடன் சிறைபிடித்தனர். பிறகு, பாதுகாப்பற்ற ஒரு காரிகையைத் துன்புறுத்தும் ஒரு காமாந்தகன் போல, அவனைத் {விராடனைத்} துன்புறுத்திய சுசர்மன், விராடனைத் தனது தேரில் ஏற்றி, களத்தை விட்டு விரைந்து சென்றான்.

பலமிக்க விராடன், தேரை இழந்து சிறைபிடிக்கப்பட்டதும், திரிகார்த்தர்களால் முற்றிலும் அலைக்கழிக்கப்பட்ட மத்ஸ்யர்கள், அச்சத்தால் எல்லாப்புறங்களிலும் சிதறி ஓடினர். பீதியுற்ற அவர்களைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், எதிரிகளை அடக்குபவனான பலமிக்கக் கரங்கள் கொண்ட பீமனிடம், “மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, திரிகார்த்தர்களால் தூக்கிச் செல்லப்படுகிறான். ஓ! பலமிக்கக் கரங்கள் கொண்டவனே {பீமா}, வலுமிக்க எதிரியிடம் {சுசர்மனிடம்} அவன் {விராடன்} வீழாதவாறு அவனைக் காப்பாற்று. நமது விருப்பங்கள் ஈடேறி, விராடனின் நகரில் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததால், ஓ! பீமசேனா, (அம்மன்னனை {விராடனை} விடுவித்து) அந்தக் கடனை அடைப்பதே உனக்குத் தகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.

அதற்குப் பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, “உமது கட்டளையின் பேரில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அவனை {விராடனை} விடுவிப்பேன். எனது கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி, எதிரியிடம் போரிட்டு, (இன்று) நான் செய்யப்போகும் சாதனையைக் குறித்துக் கொள்ளும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நமது தம்பிகளுடன் ஒரு புறம் ஒதுங்கி இருந்து, எனது பராக்கிரமத்தை இன்று சாட்சியாகப் பாரும். கதாயுதம் போன்ற பெரும் அடிமரம் கொண்ட இந்தப் பலமிக்க மரத்தை வேரோடு பிடுங்கி, நான் எதிரியை முறிப்பேன்” என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மதம் கொண்ட யானைப் போல அந்த மரத்தின் மீது கண்களைச் செலுத்திய பீமனைக் கண்ட நீதிமானான வீரமிக்க மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பியிடம் {பீமனிடம்}, “ஓ! பீமா, இத்தகு மூர்க்கமான செயலைச் செய்யாதே. அந்த மரம் அங்கேயே நிற்கட்டும். நீ அந்த மரத்தைக் கொண்டு மனிதசக்திக்கு அப்பாற்பட்ட முறையில் இத்தகு சாதனைகளை அடையக்கூடாது. நீ அப்படிச் செய்தால், ஓ! பாரதா {பீமா}, “இவன் பீமன்” என்று மக்கள் உன்னை அடையாளம் காண்பார்கள். எனவே, மனித ஆயுதங்களான, (கணைகளுடன் கூடிய) வில்லையோ, வேலையோ, வாளையோ, போர்க்கோடரியையோ எடுத்துக் கொள். ஓ! பீமா, சில மனித ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உன்னை அடையாளம் காணும் வழிகளை யாருக்கும் அளிக்காமல், மன்னனை {விராடனை} விடுவிப்பாயாக. பெரும் பலம் கொண்ட இரட்டையர்கள் உனது சக்கரங்களைப் பாதுகாப்பார்கள். ஒன்றுகூடிப் போரிட்டு, ஓ! குழந்தாய் {பீமா}, மத்ஸ்யர்களின் மன்னனை {விராடனை} விடுவிப்பாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட பெரும் வேகம் கொண்ட பலமிக்கப் பீமன், ஒரு சிறந்த வில்லை விரைவாக எடுத்துக் கொண்டு, மழை நிறைந்த மேகம் பொழிவது போல, அதிலிருந்து {அந்த வில்லில் இருந்து} கணைமழையை விரைவாகப் பொழிந்தான். பிறகு பீமன் பயங்கரச் செயல்கள் புரியும் சுசர்மனை நோக்கிச் சினத்துடன் விரைந்து, “ஓ! நல்ல மன்னா!” என்று அழைத்து, விராடனுக்கு உறுதி கூறிக் கொண்டே [2], திரிகார்த்தர்களின் தலைவனிடம் {சுசர்மனிடம்}, “நில்! நில்!” என்றான். “நில்! நில்! இந்த மோதலில் நடக்கும் இந்தப் பலமிக்கச் சாதனையைச் சாட்சியாகப் பார்” என்று சொல்லித் தனக்குப் பின்னால் யமனைப் போல இருக்கும் பீமனைக் கண்ட வீரர்களில் காளையான சுசர்மன், (அச்சூழ்நிலையைத்) தீவிரமாகக் கருதிப்பார்த்து, தனது வில்லை எடுத்துக் கொண்டு, தனது சகோதரர்களுடன் மீண்டும் திரும்பினான்.

கண்மூடித் திறப்பதற்குள், தன்னை எதிர்த்து வந்த தேர்களைப் பீமன் அழித்தான். விரைவில் மீண்டும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தேர்களும், யானைகளும், குதிரைகளும், குதிரை வீரர்களும், துணிச்சலும் கடுமையும் கொண்ட வில்லாளிகளும் விராடனின் கண் முன்பாகவே பீமனால் வீழ்த்தப்பட்டனர். கையில் கதாயுதம் கொண்ட சிறப்புமிக்கப் பீமனால் பகையணியின் காலாட்படையும் படுகொலைக்கு ஆளாகத் தொடங்கியது. அந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டு, போரில் கட்டுக்கடங்காத சுசர்மன் தனக்குள்ளாகவே, “இவனது பலமிக்கப் படைக்கு மத்தியில் என் தம்பி ஏற்கனவே பலியாகிவிட்டான் என்றே தெரிகிறது. எனது படை அழிவடையப் போகிறதா?” என்று நினைத்துக் கொண்டான் {சுசர்மன்}.

பிறகு, தனது வில்லின் நாணை காது வரை இழுத்த சுசர்மன் உடலைத் திருப்பி, கூரிய கணைகள் கொண்டு தொடர்ச்சியாக அடிக்க ஆரம்பித்தான். பாண்டவர்கள் தங்கள் தேரில் வருவதைக் கண்ட மத்ஸ்ய வீரர்களைக் கொண்ட பெரும்படை, தங்கள் குதிரைகளை விரைந்து செலுத்தி, திரிகார்த்த படைவீரர்களைக் கலங்கடிக்கும் சிறந்த ஆயுதங்களை அடித்தார்கள். மிகுதியாக எரிச்சலடைந்திருந்த விராடனின் மகனும், மிகப்பெரும் பயத்தால் வீரத்தை வெளிப்படுத்தத் தொடங்கினான். குந்தியின் மகன் யுதிஷ்டிரனும் (எதிரிகளில்) ஆயிரம் {1000} பேரைக் கொன்றான். பீமன் ஏழாயிரம் {7000} பேருக்கு யமனின் வசிப்பிடத்தைக் காட்டினான். நகுலன் தனது கணைகள் கொண்டு எழுநூறு {700} பேரை (அவர்கள் கடைசிக் கணக்கை முடித்து) அனுப்பினான். யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட பலமிக்கச் சகாதேவன் துணிவுமிக்க முன்னூறு {300} வீரர்களைக் கொன்றான்.

இவ்வளவு எண்ணிக்கையில் {எதிரிகளைக்} கொன்ற பலமிக்க வீரனான யுதிஷ்டிரன் ஆயுதங்களை உயர்த்தியபடி சுசர்மனை எதிர்த்து விரைந்தான். தேர் வீரர்களில் முதன்மையான சுசர்மனை நோக்கி விரைவாகச் சென்ற மன்னன் யுதிஷ்டிரன், அவனைத் தனது கணைகளால் சரமாரியாகத் தாக்கினான். பெரும் கோபம் கொண்ட சுசர்மனும் யுதிஷ்டிரனை ஒன்பது கணைகளாலும், அவனது நான்கு குதிரைகளில் ஒவ்வொன்றையும் நான்கு கணைகளாலும் துளைத்தான். பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, விரைவான அசைவுகள் கொண்ட குந்தியின் மகன் பீமன், சுசர்மனை அணுகி அவனது குதிரைகளை நசுக்கினான். {சுசர்மனுடைய தேரின்} பின்புறத்தைக் காத்த வீரர்களைக் கொன்ற அவன் {பீமன்}, தனது எதிரியின் தேரோட்டியை தரையில் இழுத்துச் சென்றான்.

{விராடனின்} தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பதில் புகழ்பெற்றவனும் துணிவுமிக்கவனுமான மதிராக்ஷன், தேரோட்டியில்லாமல் திரிகார்த்த மன்னனின் தேர் இருப்பதைக் கண்டு அவனது {பீமனின்} துணைக்கு வந்தான். அதன்பேரில், சுசர்மனின் தேரில் இருந்து குதித்து, பின்னவனின் {சுசர்மனின்} கதாயுதத்தை அடைந்த பலமிக்க விராடன், அவனைப் {மதிராக்ஷனைப்} பின்தொடர்ந்து ஓடினான். முதிர்ந்தவனாக இருந்தாலும், கையில் கதாயுதத்துடன் களத்தில் நகர்ந்த அவனைப் {விராடனைப்} பார்ப்பதற்கு, மிளிர்வு கொண்ட இளைஞனைப் போலத் தெரிந்தது. சுசர்மன் ஓடுவதைக் கண்ட பீமன் அவனிடம் {சுசர்மனிடம்}, “நில். ஓ இளவரசே! இப்படி நீ ஓடுவது உனக்குத் தகாது! இந்த உனது பராக்கிரமத்தைக் கொண்டு, மந்தையை நீ எப்படிப் பலவந்தமாகக் கைப்பற்ற முடியும்? உனது தொண்டர்களையெல்லாம் கைவிட்டு, எதிரிகள் மத்தியில் நீ தாழ்வடையலாமா?” என்று கேட்டான் {பீமன்}.

பிருதையின் மகனால் {பீமனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், எண்ணிலடங்கா தேர்களுக்குத் தலைவனுமான பலமிக்கச் சுசர்மன் பீமனிடம், “நில்! நில்!” என்று சொல்லித் திடீரெனத் திரும்பி அவனை நோக்கி விரைந்து வந்தான். பிறகு பாண்டுவின் மகனான பீமன், தன்னால் மட்டுமே ஆகக்கூடிய வகையில் தனது தேரில் இருந்து குதித்து, சுசர்மனின் உயிரை எடுக்க விரும்பி, அலட்சியமாக முன்னேறி வந்தான். திரிகார்த்த மன்னனைப் பிடிக்க விரும்பி அவனை நோக்கி முன்னேறிய பலமிக்கப் பீமசேனன், சிறு மானைப் பிடிக்க விரைந்து வரும் சிங்கம் போல அவசரமாக விரைந்து வந்தான். அப்படி அவசரமாக முன்னேறி வந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பீமன், கோபத்தில் சுசர்மனின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி, கீழே எறிந்து தரையில் மோதச் செய்தான். துயரத்தால் அவன் {சுசர்மன்} அழுது கிடந்த போது, வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பீமன் அவனது தலையில் எட்டி உதைத்தான். பிறகு தனது {பீமனின்} முட்டியை அவனது {சுசர்மனின்} மார்பில் வைத்து {அழுத்தி}, அவனைக் கடுமையாக அடித்தான். அந்த உதைகளால் மிகவும் துன்பப்பட்ட திரிகார்த்த மன்னன் {சுசர்மன்} உணர்வற்றுப் போனான்.

தேரை இழந்த திரிகார்த்தர்களின் மன்னன் {சுசர்மன்} இப்படிப் பிடிப்பட்டதும், மொத்த திரிகார்த்தப்படையும் பீதியடைந்து எல்லாத் திக்குகளிலும் ஓடின. நோன்பு நோற்றலும், பணிவும் கொண்ட பாண்டுவின் வலிமைமிக்க மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி சுசர்மனை வீழ்த்தி, பசுக்களையும், அனைத்து வகைச் செல்வங்களையும் மீட்டு, விராடனின் துயரை அகற்றி, அந்த ஏகாதிபதியின் {விராடனின்} முன்பு ஒன்றாகக் கூடி நின்றனர்.

பிறகு பீமசேனன், “தீய செயல்களைச் செய்யும் இந்த இழிந்தவன் என்னிடம் இருந்து உயிரோடு தப்பத் தகாதவன். ஆனால், என்ன செய்ய? மன்னர் {யுதிஷ்டிரர்} மிகவும் கருணை கொண்டவராக இருக்கிறாரே!” என்று சொன்னான். பிறகு தூசு படிந்த தரையில் உணர்வற்றுக் கிடந்த சுசர்மனின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, அவனை இறுகக் கட்டிய பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமன்}, அவனைத் தனது தேரில் ஏற்றி, களத்திற்கு மத்தியில் யுதிஷ்டிரன் இருக்கும் இடத்திற்குச் சென்றான். பிறகு, பீமன் சுசர்மனை அந்த ஏகாதிபதியிடம் {யுதிஷ்டிரனிடம்} காட்டினான். பீதியடைந்திருக்கும் சுசர்மனைக் கண்ட மனிதர்களில் புலியான மன்னன் யுதிஷ்டிரன், சிரித்துக் கொண்டே போர்க்களத்தின் ரத்தினமான பீமனிடம், “மனிதர்களில் இழிந்த இவன் விடுதலை பெறட்டும்” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட பீமன், பலமிக்கச் சுசர்மனிடம், “ஓ! பாதகா {சுசர்மா}, நீ வாழ விரும்பினால், எனது இந்தச் சொற்களைக் கேள். அனைத்துச் சபைகளிலும், மனிதர்களின் கூடுகைகளிலும் “நான் ஓர் அடிமை” என்று நீ சொல்ல வேண்டும். இந்த நிபந்தனையின் பேரில் மட்டுமே நான் உனக்கு உயிரை அளிப்பேன். தோற்றவர்களுக்கு, நிச்சயமாக இதுவே விதியாகிறது” என்றான். அதன் பேரில் மூத்த சகோதரன் {யுதிஷ்டிரன்}, பீமனிடம் பாசமாக, “நீ எம்மை அதிகாரம் கொண்டவராகக் கருதினால், இந்தப் பொல்லாதவனை விடுவித்துவிடு. இவன் ஏற்கனவே மன்னன் விராடனின் அடிமையாகிவிட்டான்” என்றான். பிறகு சுசர்மனை நோக்கித் திரும்பிய அவன் {யுதிஷ்டிரன்}, “நீ விடுதலையடைந்தாய். சுதந்திர மனிதனாக நீ செல்லலாம். இனியும் இவ்வழியில் செயல்படாதே” என்று சொன்னான் {யுதிஷ்டிரன்}. 

வெற்றிப் பிரகடனம்! – விராட பர்வம் பகுதி 34-விராடன் பாண்டவர்களுக்கு அபரிமிதமான செல்வங்களைப் பரிசாக அளித்தது; தனது வெற்றியைப் பிரகடனப்படுத்த தனது வீரர்களை நகரத்திற்கு அனுப்பியது;

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி யுதிஷ்டிரனால் சொல்லப்பட்ட சுசர்மன் அவமானத்தில் மூழ்கித் தனது தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான். (அடிமைத்தனத்தில் இருந்து) விடுபட்ட அவன் {சுசர்மன்}, மன்னன் விராடனிடம் சென்று அந்த ஏகாதிபதியை வணங்கிய பிறகு {அங்கிருந்து} புறப்பட்டான். நோன்புகள் நோற்றுப் பணிவுடன் இருந்த பாண்டவர்கள் தங்கள் சொந்த கரங்களின் பலத்தால் பதிலளிக்கும் வகையில் தங்கள் எதிரிகளைக் கொன்று, சுசர்மனை விடுவித்த பிறகு, அந்த இரவை மகிழ்ச்சியாகப் போர்க்களத்திலேயே கழித்தார்கள். அந்த வலிமைமிக்க வீரர்களும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட பராக்கிரமம் கொண்டவர்களுமான குந்தியின் மகன்களுக்குச் செல்வமும் மரியாதையும் அளித்து விராடன் மனநிறைவு கொண்டான்.

பிறகு விராடன், “எனது இந்த ரத்தினங்கள் அனைத்தும் எப்படி என்னுடையவையோ, அது போலவே அவை உங்களுடையவையும் ஆகும். உங்கள் இன்பத்துக்குத் தக்க நடந்து கொண்டு, நீங்கள் இங்கே மகிழ்ச்சியாக வாழுங்கள். போர்க்களத்தில் எதிரிகளை அடிப்பவர்களே, நான் உங்களுக்கு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட காரிகைகளையும், அபரிமிதமான செல்வத்தையும், நீங்கள் விரும்பும் பிறவற்றையும் அளிப்பேன். உங்கள் வலிமையினால் இன்றைய துயரில் இருந்து விடுவிக்கப்பட்ட நான், இப்போது வெற்றி மகுடம் சூட்டப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் மத்ஸ்யர்களுக்குத் தலைவர்களாவீர்கள்” என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மத்ஸ்யர்களின் மன்னனால் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} இப்படிச் சொல்லப்பட்டதும், யுதிஷ்டிரன் தலைமையிலான அந்தக் குருக்குல வழித்தோன்றல்கள் தங்கள் கரங்களைக்கூப்பித் தனித்தனியாக அவனுக்கு {விராடனுக்கு} மறுமொழி கூறும் வகையில், “ஓ! ஏகாதிபதி {விராடரே}, நீர் சொல்வது அனைத்தாலும் நாங்கள் பெரும் மன நிறைவு கொண்டாலும், எதிரிகளிடம் இருந்து இன்று நீர் விடுபட்டத்தே எங்களுக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுக்கிறது” என்றனர்.

இப்படிப் பதிலளிக்கப்பட்ட மன்னர்களில் முதன்மையானவனும், மத்ஸ்யர்களின் தலைவனுமான விராடன் மீண்டும் யுதிஷ்டிரனிடம், “வாரும், நாம் உம்மை மத்ஸ்யர்களின் ஆட்சிக்கட்டிலில் நிறுவுகிறோம். மேலும் பூமியில் கிடைத்தற்கரிய பொருட்களையும், ஆசைக்குகந்த பொருட்களையும், நாங்கள் உமக்கு அளிப்போம். எங்கள் கைகளில் அனைத்தையும் பெற நீர் தகுதியுடையவர். ஓ! வியாக்ர வகை அந்தணர்களில் முதன்மையானவரே {கனகரே}, ரத்தினங்கள், பசுக்கள், மாணிக்கங்கள், முத்துகள் ஆகியவற்றை நான் உமக்கு அளிப்பேன். நான் உம்மை வணங்குகிறேன். உம்மாலேயே நான் இன்று எனது மகன்களையும் நாட்டையும் மீண்டும் ஒருமுறை பார்க்கிறேன். பேரழிவு மற்றும் ஆபத்தால், பாதிப்பும் அச்சமும் அடைந்த நான், உமது வலிமையினாலேயே எதிரியிடம் விழாமலிருந்தேன்” என்றான் {விராடன்}.

பிறகு, யுதிஷ்டிரன் மீண்டும் மத்ஸ்யனிடம் {விராடனிடம்}, “நீர் பேசும் இனிமையான சொற்களால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் மனிதத்தன்மையுடன் நடந்துகொண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீராக. நமது நண்பர்களுக்கு இந்த நல்ல செய்தியைச் சொல்லும் பொருட்டும், உமது வெற்றியைப் பிரகடனப்படுத்தும் பொருட்டும், உமது உத்தரவின் பேரில் தூதர்கள் இப்போதே நகரத்திற்கு விரைந்து செல்லட்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}. அவனது இந்தச் சொற்களைக் கேட்ட மன்னன் மத்ஸ்யன் {விராடன்} தூதுவர்களைக் அழைத்து, “நீங்கள் நகரத்திற்குத் திரும்பி, போர்கள வெற்றியைப் பிரகடனப்படுத்துங்கள். நன்கு அலங்கரிக்கப்பட்ட காரிகைகளும், தாதிகளும் அனைத்துவகை இசைக்கருவிகளை வாசித்தபடி நகரத்தை விட்டு வெளியே {எங்களை எதிர் கொண்டழைக்க} வரட்டும்” என்றான் {விராடன்}. மத்ஸ்யர்கள் மன்னனால் {விராடனால்} இப்படி உத்தரவிடப்பட்ட அந்த மனிதர்கள், அந்த ஆணையைத் தலைமேல் கொண்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் {அங்கிருந்து} புறப்பட்டுச் சென்றனர். அந்த இரவிலேயே நகரம் {நோக்கி} திரும்பிய அவர்கள், மன்னன் அடைந்த வெற்றியை சூரிய உதயத்தின் போது நகரவாயிலில் பிரகடனப்படுத்தினார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.

உத்தரனிடம் பேசிய மந்தையாளன்! – விராட பர்வம் பகுதி 35-பசுக்களை மீட்க திரிகார்த்தர்களைத் தொடர்ந்து ஒருபுறம் விராடன் சென்ற போது, மறுபுறத்தில் துரியோதனனும் அவனது பரிவாரங்களும் நாட்டின் வேறு பகுதி மீது படையெடுத்துப் பசுக்களைக் கவர்வது; இச்செய்தியை மந்தையர்த்தலைவன் உத்தரனிடம் சென்று சொல்வது; உத்தரன் தற்புகழ்ச்சியாகப் பேச ஆரம்பிப்பது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பசுக்களை மீட்க ஆவல் கொண்ட மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, திரிகார்த்தர்களைத் தொடர்ந்து சென்ற போது, தனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய துரியோதனன், விராடனின் ஆளுகைக்குட்பட்ட {வேறொரு} பகுதி மீது படையெடுத்தான். பீஷ்மர், துரோணர், கர்ணன், சிறந்த ஆயுதங்களை அறிந்த கிருபர், அசுவத்தாமன், சுபலனின் மகன் {சகுனி}, துச்சாசனன், விவிம்சதி, விகர்ணன், பெரும் சக்தி கொண்ட சித்திரசேனன், துர்முகன், துஸ்ஸகன் ஆகியோரும், ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, இன்னும் பிற பெரும் வீரர்களும் மத்ஸ்ய ஆட்சிப் பகுதியை அடைந்து, மன்னன் விராடனின் மந்தையாளர்களை {இடையர்களை – கோ-பாலர்களை} விரைவாக விரட்டிவிட்டு, பசுக்களைப் பலவந்தமாகக் கவர்ந்தனர்.

தேர்க்கூட்டங்களால் அனைத்துப்புறங்களிலும் சூழப்பட்ட கௌரவர்கள், அறுபதினாயிரம் {60,000} பசுக்களைப் பிடித்தனர். அந்தப் பயங்கர மோதலில் அடிபட்ட மந்தையாளர்கள் {கோ-பாலர்கள்}, துயரத்தால் உரக்கக் கதறினார்கள். {அப்போது} மந்தையாளர்களின் தலைவன் {மந்தையர்த்தலைவன்} ஒருவன், பெருவேகத்துடன் தேரில் ஏறி, துக்கத்தில் அழுது கொண்டே நகரத்திற்குப் புறப்பட்டான். மன்னனின் {விராடனின்} நகரத்திற்குள் நுழைந்த அவன், அந்த இடத்திற்கு முன்னேறி, தேரில் இருந்து விரைந்து இறங்கி, (என்ன நடந்தது) என்பதை உரைக்கலானான். பூமிஞ்சயன் {உத்தரன்} என்ற பெயர் கொண்ட மத்ஸ்யனின் பெருமிக்க மகனைக் கண்டு, அரச பசுக்கள் பிடிப்பட்டது குறித்த அனைத்தையும் அவனிடம் {உத்தரனிடம்} தெரிவித்தான்.

மேலும் அவன் அறுபதினாயிரம் {60,000} பசுக்களைக் கௌரவர்கள் பிடித்ததாகவும் சொன்னான். {பிறகு, அவன்-மந்தையர்த்தலைவன்}, “எனவே, ஓ! நாட்டின் புகழை மேம்படுத்துபவனே {உத்தரா}, உனது கால்நடைகளைத் திரும்பக் கொண்டுவருவதற்காக எழு! ஓ! இளவரசே {உத்தரா}, (நாட்டின்) நன்மையை அடைய நீ விரும்பினால், நேரத்தைக் கடத்தாமல் உடனே புறப்படு. உண்மையில், மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} உன்னை வெறுமையான நகரத்தில் விட்டுச் சென்றிருக்கிறார். (உனது தந்தையான) மன்னர் {விராடர்}, “எனது மகன் எனக்கு நிகரான வீரனாவான். எனது குலத்தைத் (குலத்தின் பெருமையைத்) தாங்குபவன் அவனே. கணைகளிலும் ஆயுதங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த போர்வீரனான எனது மகன் {உத்தரன்} பெரும் துணிவு கொண்டவனாவான்” என்று சபையில் உன்னைக் குறித்துப் {எப்போதும்} பெருமையாகப் பேசுவார்.

ஓ!, அந்த மனிதர்களின் தலைவனுடைய {விராடனுடைய} சொல் உண்மையாகட்டும்! ஓ! மந்தை உரிமையாளர்களின் தலைவா {உத்தரா}, உனது கணைகளின் பயங்கர சக்தியால் குருக்களின் {கௌரவர்களின்} துருப்புகளை எரித்து, அவர்களை வீழ்த்தி, பசுக்களை மீட்டு வா. {யானைகளில்} தலைமை யானை, {வேறு யானை} மந்தையை விரட்டுவது போல, உனது வில்லில் இருந்து புறப்படும், தங்க இறகுகள் கொண்ட நேரான கணைகளைக் கொண்டு எதிரி தலைவர்களைத் துளைத்திடு. உனது வில் வீணையைப் போல இருக்கிறது. அதன் இரண்டு முனைகளும் தந்தத்தாலான தலையணையை ஒத்திருக்கிறது. அதன் முக்கியக் கம்பியான அதன் நாண், அதன் தண்டு, விரல்களைத் தாங்கும் இடம், அதில் இருந்து அடிக்கப்படும் அம்புகள் ஆகியன இசைக்குறிப்புகளைப் போல இருக்கின்றன. எதிரிகளுக்கு மத்தியில் இந்த வீணையின் {வில்லின்} இசையொலியால் {கணைமழையால்} {அவர்களை} அடித்திடு! [1]

ஓ! தலைவா {உத்தரா}, வெள்ளி நிறம் கொண்ட உனது குதிரைகள் தேரில் பூட்டப்படட்டும். தங்க சிங்க இலச்சனை கொண்ட உனது கொடி ஏற்றப்படட்டும். தங்க இறகுகளும், கூரிய முனைகளும் கொண்ட கணைகள், உனது வலிய கரங்களால் அடிக்கப்பட்டு, சூரியனைத் தடுக்கும் கிரகணம் போல, அந்த மன்னர்களின் வழிகளைத் தடுக்கட்டும். அசுரர்களை வீழ்த்தும் வஜ்ரம் தாங்குபவனைப் {இந்திரனைப்} போல, அனைத்துக் குருக்களையும் {கௌரவர்களையும்} போர்க்களத்தில் வீழ்த்தி, பெரும் புகழை அடைந்து நகரம் திரும்புவாயாக. மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} மகனாக நீ இருப்பதால், அறம்சார்ந்த வீரர்களில் முதன்மையான பாண்டு மகன்களில் அர்ஜுனன் போல நீயே இந்த நாட்டின் ஒரே புகலிடம். அவனது சகோதரர்களுக்கு அர்ஜுனன் எப்படியோ, அதே போல, இந்த நாட்டிற்குள் வசிப்போருக்கும் நீயே புகலிடம் என்பதில் ஐயமில்லை. உண்மையில், இந்த ஆட்சியின் குடிமக்களாகிய நாங்கள் உன்னில் எங்கள் பாதுகாவலனைக் கொண்டிருக்கிறோம்” என்றான் {மந்தையர்த்தலைவன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு, பெண்களுக்கு மத்தியில் மூச்சுக்கு மூச்சு வீரச் சொற்களைப் பேசிய அந்த மந்தையாளனால் {கோபாலனால்} இப்படிச் சொல்லப்பட்ட இளவரசன் {உத்தரன்}, தற்புகழ்ச்சியின் வெளிப்பாடாக {பின்வரும்} இச்சொற்களைச் சொன்னான்”

பிருஹந்நளை தேரோட்டலாமே! – விராட பர்வம் பகுதி 36-ஒரு தேரோட்டி மட்டும் இருந்தால் நான் கௌரவர்களை விரட்டி விட்டுப் பசுக்களை மீட்டு விடுவேன் என்று உத்தரன் பெண்களுக்கு மத்தியில் தற்பெருமை பேசுவது; இதைக் கேட்ட அர்ஜுனன் திரௌபதியிடம் சொல்லி உத்தரன் தன்னைத் தேரோட்டியாக அமர்த்த ஆவன செய்யுமாறு பணித்தது; திரௌபதி உத்தரையிடம் சென்று பிருஹந்நளன் குறித்துச் சொன்னது…

உத்தரன் சொன்னான், “குதிரைகளின் மேலாண்மையில் திறனுடைய ஒரு தேரோட்டி வந்தால், வில்லைப் பயன்படுத்துவதில் உறுதியுடன் இருக்கும் நான், பசுக்களின் பாதையைத் தொடர்ந்து இன்றே புறப்படுவேன். எனினும், எனக்குத் தேரோட்டியாக இருக்கத்தக்க மனிதனை நான் அறியவில்லை. எனவே, காலந்தாழ்த்தாமல், புறப்படத் தயாராக இருக்கும் எனக்கு ஒரு தேரோட்டியைத் தேடுங்கள். ஒரு மாதம் முழுமையோ அல்லது இருபத்தெட்டு இரவுகளோ {நாட்களோ} நாளுக்கு நாள் {தினமும்} தொடர்ச்சியாக நடந்த பெரும்போரில், எனது தேரோட்டி கொல்லப்பட்டான். குதிரைகளின் மேலாண்மையை அறிந்த மற்றொரு மனிதன் கிடைத்தவுடன், எனது கொடியை உயர ஏற்றி, உடனே புறப்படுவேன். பிறகு, யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த எதிரிப்படைக்கு மத்தியில் ஊடுருவி, ஆயுத வலிமையில் அற்பர்களும், பலவீனர்களுமான குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தி, பசுக்களை நான் மீட்டு வருவேன்.

தானவர்களை அச்சுறுத்தும் இரண்டாவது வஜ்ரதாங்கியைப் {இந்திரனைப்} போல, துரியோதனன், பீஷ்மர், கர்ணன், கிருபர், துரோணர் மற்றும் அவரது மகன்  {அஸ்வத்தாமன்}ஆகியோரையும், அங்கே கூடியிருக்கும் வலிய வில்லாளிகளையும் போரில் அச்சுறுத்தி, இக்கணத்திலேயே நான் பசுக்களை மீட்டு வருவேன். (எதிர்க்க) யாருமற்றதாலேயே, குருக்கள் {கௌரவர்கள்} பசுக்களைக் கவர்ந்து செல்கின்றனர். நான் அங்கில்லாத போது, என்னால் என்ன செய்ய முடியும்? ஒன்றுகூடி வந்திருக்கும் குருக்கள் {கௌரவர்கள்} எனது பராக்கிரமத்தை இன்று சாட்சியாகக் காண்பார்கள். “நம்மை எதிர்ப்பது அர்ஜுனனா?” என்று அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள்” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அனைத்தையும் அறிந்த அர்ஜுனன், இளவரசனால் {உத்தரனால்} பேச்சப்பட்ட வார்த்தைகளைக் கேட்டான். பிறகு, சிறிது நேரம் கழித்து, துருபதன் மகளும், பாஞ்சால இளவரசியும், களங்கமற்ற அழகு கொண்டவளும், கொடியால் செய்யப்பட்டவளும், நெருப்பில் உதித்தவளும், உண்மை, நேர்மை ஆகிய அறங்களைக் கொண்டு, தனது கணவர்களின் நன்மையில் எப்போதும் கவனமுள்ளவளும், தனது அன்பிற்குரிய மனைவியுமான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} தனிமையில் பேசினான் {அர்ஜுனன்}. வீரனான அந்த அர்ஜுனன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகியே {திரௌபதி}, எனது வேண்டுதலின் படி உத்தரனிடம் தாமதமில்லாமல் சென்று, “திறமையும் உறுதியும் கொண்ட இந்தப் பிருஹந்நளன், பாண்டு மகனின் {அர்ஜுனனுடைய} தேரோட்டியாக இருந்தான். பல போர்களில் பங்குபெற்ற அவன் {பிருஹந்நளன்} உனது தேரோட்டியாகட்டும்” என்று சொல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மகளிருக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் இளவரசன் {உத்தரன்} சொல்லிக் கொண்டிருந்த சொற்களைக் கேட்ட பாஞ்சாலியால் {திரௌபதியால்}, {அச்சொற்களில் இருந்த} பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} குறித்த மறைமுகக் குறிப்புகளை அமைதியாகத் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாணத்துடன் பெண்கள் மத்தியில் இருந்து வெளியேறிய அப்பாவியான அந்தப் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அவனிடம் {உத்தரனிடம்} இச்சொற்களை மெதுவாகப் பேசினாள். “வலிமைமிக்க யானைப் போன்றவரும், பிருஹந்நளன் என்ற பெயரில் அறியப்படுபவருமான அந்த அழகிய இளைஞர், முன்னர் அர்ஜுனருக்குத் தேரோட்டியாக இருந்தார். அந்தச் சிறப்புமிக்க வீரரின் {அர்ஜுனரின்} சீடரும், வில்லைப்பயன்படுத்துபவர்களில் யாருக்கும் சளைக்காதவருமான அவரை, நான் பாண்டவர்களுடன் வாழ்ந்து வந்த போதே அறிவேன். அக்னியால் காண்டவ வனம் எரிக்கப்பட்ட போது, அர்ஜுனருடைய அற்புதமான குதிரைகளின் கடிவாளத்தை இவரே பிடித்திருந்தார். இவரைத் தேரோட்டியாகக் கொண்ட பார்த்தர், காண்டவப்பிரஸ்தத்தின் அனைத்து உயிரினங்களையும் வீழ்த்தினார். உண்மையில், அவருக்கு {பிருஹந்நளனுக்கு} நிகரான தேரோட்டி வேறு ஒருவருமில்லை” என்றாள் {திரௌபதி}.

உத்தரன் {திரௌபதியிடம்}, “ஓ! சைரந்திரி, இந்த இளைஞனை நீ அறிவாயா? இந்த அலியால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை நீ அறிந்திருக்கிறாய். எனினும், ஓ! அருளப்பட்டவளே {மாலினி}, என் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடிக்குமாறு நானே பிருஹந்நளையிடம் கோர முடியாது” என்றான்.

அதற்குத் திரௌபதி {உத்தரனிடம்}, “ஓ! வீரரே, அழகிய இடைகள் கொண்ட காரிகையான உனது தங்கையின் {உத்தரையின்} சொற்களுக்குப் பிருஹந்நளன் கீழ்ப்படிவார் என்பதில் ஐயமில்லை. அவர் {பிருஹந்நளன்} உனக்குத் தேரோட்டியாக இருக்கச் சம்மதித்தால், நீ குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தி, பசுக்களை மீட்டுத் திரும்புவாய் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்காது” என்றாள் {திரௌபதி}.

சைரந்திரியால் இப்படிச் சொல்லப்பட்ட உத்தரன், தனது தங்கையிடம் {உத்தரையிடம்}, “ஓ! களங்கமற்ற அழகுடையவளே {உத்தரை}, நீயே சென்று பிருஹந்நளையை இங்கே அழைத்து வருவாயா?” என்று கேட்டான். தனது அண்ணனால் அனுப்பப்பட்ட அவள் {உத்தரை}, வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மாறுவேடத்தில் தங்கியிருந்த ஆடற்கூடத்திற்கு விரைந்து சென்றாள்.” {என்றார் வைசம்பாயனர்}.

போருக்குப் புறப்படுதல்! – விராட பர்வம் பகுதி 37-உத்தரனுக்குத் தேரோட்டியாகும்படி உத்தரை பிருஹந்நளையை வேண்டுவது; பிறகு உத்தரனும் வேண்டுவது; அர்ஜுனன் உத்தரனுடன் தேரில் புறப்படுவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படித் தனது தமையனால் {உத்தரனால்} அனுப்பப்பட்டவளும், தங்க அட்டிகையால் அலங்கரிக்கப்பட்டவளும், தன் தமையனுக்கு எப்போதும் கீழ்ப்படிபவளும், குளவி போன்ற மெல்லிய இடுப்பு கொண்டவளும், லட்சுமியைப் போன்ற பிரகாசமிக்கவளும், மயிலின் மென்மையான இறகைப் போன்ற அழகிய அங்கங்கள் கொண்டவளும், முத்து வலயங்கள் {zone of pearls) படர்ந்த இடுப்பு கொண்டவளும், சற்றே சரிந்த கண்ணிமைகள் கொண்டவளும், அனைத்து மங்கலங்களையும் தனது உருவில் கொண்டவளுமான தொலைபுகழ் கொண்ட மத்ஸ்யமன்னன் மகள் {உத்தரை}, கருமேகங்களை நோக்கி மின்னல் கீற்று விரைவதைப் போல ஆடற்கூடத்திற்கு விரைந்து சென்றாள்.

களங்கமற்றவளும் மங்களகரமானவளும், அழகிய பற்கள் கொண்டவளும், மெல்லிய இடுப்புடையவளும், யானையின் துதிக்கையைப் போன்ற தொடைகளும், அவை ஒன்றுக்கொன்று நெருக்கமானதாக அமையப்பட்டவளும், மேனியில் அற்புதமான மாலையைத் தரித்தவளுமான விராடன் மகள் {உத்தரை}, தன் துணையை நாடும் பெண் யானையைப் போலப் பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனை} அடைந்தாள். விலைமதிப்பற்ற ரத்தினம் போன்றவளும், இந்திரனுடைய செழிப்பின் உருவம் போன்றவளும், மிகுந்த அழகுடையவளும், அகன்ற கண்களுடையவளும், வழிபடப்பட்டுக் கொண்டாடப்படுபவளுமான அந்த அழகிய காரிகை அர்ஜுனனை வணங்கினாள். அவளால் {உத்தரையால்} வணங்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, நெருக்கமான தொடைகளும், தங்க நிறமும் கொண்ட அந்தக் கன்னிகையிடம் {உத்தரையிடம்}, “அட்டிகை பூட்டி வந்த காரிகையே, எது உன்னை இங்கு அழைத்து வந்தது? ஓ! மருண்ட பார்வை கொண்ட கன்னிகையே, உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்? ஓ! அழகிய பெண்ணே {உத்தரை}, உனது முகம் ஏன் உற்சாகமற்றிருக்கிறது? இவை யாவையும் தாமதமில்லாமல் எனக்குச் சொல்!” என்று கேட்டான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, (துயரத்தில் இருக்கும்) தோழியான அகன்ற கண்களுடைய இளவரசியைக் {உத்தரையைக்} கண்ட அவளது {உத்தரையின்} தோழன் (அர்ஜுனன்), உற்சாகத்துடன் (இச்சொற்களைச்) சொல்லி, அங்கே வந்த அவளது வருகைக்கான காரணத்தை விசாரித்தான். அந்த மனிதர்களில் காளையை {அர்ஜுனனை} அணுகிய அந்த இளவரசி {உத்தரை}, தனது பெண் பணியாட்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, தனது பணிவைச் சரியாகக் காட்சிப்படுத்தி, அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பிருஹந்நளா, இந்த ஆட்சிக்குட்பட்ட பசுக்கள், குருக்களால் {கௌரவர்களால்} ஓட்டிச் செல்லப்படுகின்றன. அவற்றை வெற்றிக் கொள்ள எனது தமையன் {உத்தரன்} கையில் வில்லுடன் புறப்பட இருக்கிறார். சமீபத்தில்தான் அவரது தேரோட்டி போர்க்களத்தில் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட எனது தமையனின் தேரோட்டிக்கு நிகராகச் செயல்படக்கூடியவர் வேறு ஒருவரும் இல்லை. ஒரு தேரோட்டியை அடைய முயன்று வரும் அவரிடம் {உத்தரரிடம்}, ஓ! பிருஹந்நளா, குதிரைகளின் மேலாண்மையில் உனக்கிருக்கும் நிபுணத்துவத்தைக் குறித்துச் சைரந்திரி {மாலினி} பேசினாள். முன்பொரு சமயத்தில் நீயே அர்ஜுனரின் தேரோட்டியாக இருந்திருக்கிறாய். உன்னுடன் சேர்ந்துதான் அந்தப் பாண்டு மகன்களின் காளை {அர்ஜுனர்} தனியாக முழு உலகையும் அடக்கியிருக்கிறார். எனவே, ஓ! பிருஹந்நளா, நீ எனது தமையனின் {உத்தரனின்} தேரோட்டியாகச் செயல்படுவாயாக. (இந்நேரத்தில்) நமது பசுக்களைப் பெருந்தூரத்திற்குக் குருக்கள் {கௌரவர்கள்} ஓட்டிச் சென்றிருப்பார்கள். என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டும், என் சொற்களுக்கு நீ செயலாற்றவில்லையென்றால், பாசத்துடன் இந்தச் சேவையை உன்னிடம் கேட்கும் நான் எனது உயிரை விடுவேன்” என்றாள் {உத்தரை}.

இப்படி, அழகிய இடுப்புக் கொண்ட தனது தோழியால் சொல்லப்பட்ட அந்த எதிரிகளை ஒடுக்குபவனான அளவிலா பராக்கிரமம் கொண்டவன் {அர்ஜுனன்}, அந்த இளவரசனின் {உத்தரனின்} முன்பு சென்றான். கன்றுக்குப் பின் ஓடும் பெண்யானையைப் போல, அகன்ற கண்களைக் கொண்ட அந்த இளவரசியும் {உத்தரையும்}, மதநீர் பெருகிய யானை போல விரைந்த நடையுடன் சென்ற அந்த வீரனைப் {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றாள். தூரத்திலேயே அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட அந்த இளவரசன் {உத்தரன்}, “உன்னைத் தனது தேரோட்டியாகக் கொண்டே, காண்டவ வனத்தில், குந்தியின் மகனான தனஞ்சயர் {அர்ஜுனர்}, அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்து, முழு உலகையும் அடக்கியிருக்கிறார். சைரந்திரி உன்னைக் குறித்து என்னிடம் சொன்னாள். அவள் பாண்டவர்களை அறிவாள். எனவே, ஓ! பிருஹந்நளா, எனது குதிரைகளின் கடிவாளங்களை நீ பிடிப்பாயாக, எனது செல்வங்களான பசுக்களை மீட்கும்பொருட்டு, நான் குருக்களுடன் {கௌரவர்களுடன்} மோத விரும்புகிறேன். முன்னர், நீ அர்ஜுனரின் அன்புக்குரிய தேரோட்டியாக இருந்திருக்கிறாய். உன்னுடன் சேர்ந்தே அந்தப் பாண்டு மகன்களில் காளை {அர்ஜுனர்} இந்த முழு உலகையும் தனி ஆளாக அடக்கியிருக்கிறார்!” என்றான் {உத்தரன்}. இப்படிச் சொல்லப்பட்ட பிருஹந்நளை, அந்த இளவரசனிடம் {உத்தரனிடம்}, “போர்க்களத்தில் தேரோட்டியாகச் செயல்பட எனக்குத் திறன் ஏது? பாடலோ, இசைக்கருவிகளுடன் கூடிய ஆடலோ அல்லது அவை போன்ற பிறவோ என்றால், நான் உன்னை மகிழ்விப்பேன். ஆனால் ஒரு தேரோட்டி ஆவதற்கான திறன் என்னிடம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டாள்.

அதற்கு உத்தரன் {அர்ஜுனனிடம்}, “ஓ பிருஹந்நளா, நீ பாடகராகவோ, ஆடற்கலைஞராகவோ இரு {இருந்து கொள்}. (இப்போது) காலந்தாழ்த்தாமல், எனது அற்புதக் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு எனது தேரில் ஏறுவாயாக!” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த எதிரிகளை ஒடுக்குபவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அனைத்தையும் அறிந்திருந்தாலும், உத்தரனின் முன்னிலையில், பல தவறுகளை வேடிக்கையின் பொருட்டுச் {கேலிக்காகச்} செய்யத் தொடங்கினான். அவன் {அர்ஜுனன்} கவசத்தை எடுத்து தலைகீழாக அணிந்து கொள்ள முயன்றபோது, அதைக் கண்ணுற்ற அகன்ற விழிகள் கொண்ட மாதரனைவரும் உரத்த சிரிப்பை வெடித்துச் சிரித்தனர். அவன் கவசம் அணிவதைக் கூட அறியாதிருப்பதைக் கண்ட உத்தரன், தானே பிருஹந்நளைக்கு விலையுயர்ந்த கவசத்தை அணிவித்தான். சூரியப்பிரகாசம் கொண்ட கவசத்தைத் தன் மேனியில் தரித்துக் கொண்டு, சிங்க உருவம் பொறித்த கொடியைத் தனது கம்பத்தில் உயர்த்திய இளவரசன் {உத்தரன்}, பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாக்கிக் கொண்டான். கடிவாளத்தைப் பிருஹந்நளை பற்றும்படி செய்த அந்த வீரன் தன்னுடன் பல விலையுயர்ந்த விற்களையும், அதிக எண்ணிக்கையிலான அழகிய கணைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். பிறகு, {அர்ஜனனின்} தோழியான உத்தரை தனது பணிப்பெண்களுடன் சேர்ந்து பிருஹந்நளையிடம், “ஓ! பிருஹந்நளா, கூடியிருக்கும் குருக்களில், போர்க்களத்தில் முதன்மையான பீஷ்மர் மற்றும் துரோணரை வீழ்த்திய பிறகு, (நீ திரும்பி வரும்போது) நமது பாவையருக்கு பலவிதமான நல்ல அழகிய துணிகளைக் கொண்டுவா” என்றாள் {உத்தரை}. இப்படிச் சொல்லப்பட்ட பாண்டு மகனான பார்த்தான் {அர்ஜுனன்}, மேகங்களின் உறுமலைப் போன்ற ஆழ்ந்த குரலில், அந்த மங்கையர்க்கூட்டத்திடம் சிரித்துக் கொண்டே, “அந்த வலிமைமிக்கப் போர்வீரர்களை உத்தரன் வீழ்த்தினால், நான் நிச்சயம் அற்புதமான அழகிய துணிகளைக் கொண்டு வருவேன்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இச்சொற்களைச் சொன்ன வீரனான அர்ஜுனன், எண்ணற்ற கொடிகள் பறக்கும் குரு {கௌரவப்} படையை நோக்கி குதிரைகளை விரைந்து செலுத்தினான். எனினும், அவர்கள் புறப்படுவதற்குச் சற்று முன்பு, பிருஹந்நளையைத் தேரோட்டியாகக் கொண்டு, உயர்ந்து பறக்கும் பெரும் கொடியைக் கொண்ட தனது அற்புதத் தேரில் அமர்ந்திருக்கும் உத்தரனைக் கண்ட முதிய பெருமாட்டிகளும் {பேரிளம்பெண்களும்}, கன்னியரும், கடும் நோன்புகள் கொண்ட அந்தணர்களும், அந்த வீரனை {உத்தரனை} வாழ்த்தும் வகையில் தேரை வலம் வந்தனர். அப்போது பெண்கள், “ஓ! பிருஹந்நளா, இன்று நீ இளவரசன் உத்தரனுடன் சேர்ந்து குருக்களிடம் மோதும்போது, பழங்காலத்தில் காண்டவ வனத்தை எரித்த போது காளையைப் போல நடக்கும் அர்ஜுனன் பெற்ற அதே வெற்றி {அப்போது} உனதாகட்டும்” என்று வாழ்த்தினர்.

உத்தரனை இழுத்து வந்த அர்ஜுனன்! – விராட பர்வம் பகுதி 38-கௌரவப் படையைக் கண்ட உத்தரன் அஞ்சி ஓடுவது; கௌரவர்கள் பிருஹந்நளையே அர்ஜுனன் எனச் சந்தேகம் கொள்வது; ஓடும் உத்தரனை அர்ஜுனன் இழுத்து வருவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நகரத்தில் இருந்து வெளியே வந்த அச்சமற்ற விராடனின் மகன் {உத்தரன்}, தனது தேரோட்டியிடம் {பிருஹந்நளையிடம்}, “குருக்கள் {கௌரவர்கள் } எங்கே இருக்கிறார்களோ, அங்கே செல். வெற்றியை விரும்பி இங்கே கூடியிருக்கும் குருக்களை வீழ்த்தி, எனது பசுக்களை அவர்களிடமிருந்து மீட்ட பிறகே, எனது தலைநகரத்திற்கு நான் திரும்புவேன்” என்றான். இளவரசனின் {உத்தரனின்} இந்தச் சொற்களைக் கேட்ட, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, குதிரைகளை விரைந்து நடத்தினான். காற்றின் வேகம் கொண்டவையும், தங்க அட்டிகைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், மனிதர்களில் சிங்கத்தால் {அர்ஜுனனால்} நடத்தப்பட்டவையுமான அக்குதிரைகளைப் பார்க்க காற்றில் பறப்பன போலத் தெரிந்தன.

வெகுதூரம் செல்வதற்கு முன்னரே அந்த எதிரிகளை அடிப்பவர்களான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, மத்ஸ்யனின் மகனும் {உத்தரனும்}, பலமிக்கக் குருக்களின் {கௌரவர்களின்} படையைக் கண்டனர். மயானத்தை நோக்கிச் செல்லும் வழியில், அவர்கள் {அர்ஜுனனும், உத்தரனும்} போருக்காக அணிவகுத்திருக்கும் குருக்களின் {கௌரவர்களின்} படையைக் கண்டனர். பெருந்திரளான கடலைப் போலவும், எண்ணிலடங்கா மரங்களுடன் வானத்தில் நகரும் காட்டைப் போலவும் அந்தப் பெருஞ்சேனை தெரிந்தது. ஓ! குருக்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்தப் படை நகர்ந்ததால் ஏற்பட்ட புழுதிப்படலம் வானத்தை அடைந்து, அனைத்து உயிரினங்களின் பார்வையையும் தடை செய்தது.

யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த அந்தப் பெரும்படை, கர்ணனாலும், துரியோதனனாலும், கிருபராலும், சந்தனுவின் மகனாலும் {பீஷ்மராலும்}, புத்திசாலியும் பெரும் வில்லாளியுமான துரோணராலும், அவரது மகனாலும் {அஸ்வத்தாமனாலும்} பாதுகாக்கப்படுவதைக் கண்ட விராடனின் மகன் {உத்தரன்} அச்சத்தால் பீதியடைந்து, தன்னுடலில் இருந்த முடிகள் அனைத்தும் முனைவரை முள் போல நீண்டு நிற்க {மயிர்க்கூச்சுடன் = புளகத்துடன்} பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “குருக்களுடன் {கௌரவர்களுடன்} போரிட நான் துணியேன். என் உடல் புளகமடைவதைப் {மயிர் சிலிர்ப்பதைப்} பார். கடுமை மிகுந்தவர்களும், தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவர்களுமான எண்ணிலடங்கா போர்வீரர்கள் நிறைந்த குருக்களின் படையோடு போரிட எனக்குத் தகுதி கிடையாது. குதிரைகளும், யானைகளும், தேர்களும், காலாட்படைவீரர்களும், பதாகைகளும் நிறைந்ததும், பயங்கர வில்லாளிகளைக் கொண்டதுமான பாரதர்களின் படைக்குள் ஊடுருவ நான் முயலமாட்டேன். போர்களத்தில் நிற்கும் துரோணர், பீஷ்மர், கிருபர், கர்ணன், விவிம்சதி, அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தன், பாஹ்லிகன், ரதவீரர்களில் முதன்மையான வீரமன்னன் துரியோதனன் மற்றும் போரில் நிபுணத்துவம் வாய்ந்த இன்னும் பிற அற்புத வில்லாளிகளை, போர்க்களத்தில் நிற்கும் எதிரிகளாகக் கண்டமாத்திரத்தில், என் மனம் மிகவும் கவலை கொள்கிறது. அடிப்பவர்களான இந்தக் குருக்கள் {கௌரவர்கள்}, போர்க்களத்தில் அணிவகுத்து நிற்பதைக் கண்டதும் மயிர்ச்சிலிர்ப்புடன் கூடிய அச்சத்தை நான் அடைகிறேன்” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இழிந்த மனம் கொண்ட மூடனான உத்தரன், மடத்தனத்தால் (தேரோட்டியாக) வேடந்தரித்திருந்த உயர் ஆன்மா கொண்டவனின் (அர்ஜுனனின்) முன்னிலையில், (தனது விதியை நினைத்துப்) புலம்பத் தொடங்கினான். அவன் {உத்தரன்}, “வெறுமையான நகரத்தை மட்டும் எனக்கு விட்டுவிட்டு, முழுப் படையையும் அழைத்துக் கொண்டு திரிகார்த்தர்களைச் சந்திக்க எனது தந்தை சென்றுவிட்டார். எனக்கு உதவி செய்ய எந்தத் துருப்புகளும் இல்லை. சிறுவனும், தனியாக இருப்பவனும், ஆயுதங்களில் அதிகப் பயிற்சி இல்லாதவனுமான {உத்தரனாகிய} நான், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்ட எண்ணிலடங்கா வீரர்களுடன் மோத இயலாதவனாக இருக்கிறேன். எனவே, ஓ! பிருஹந்நளா, முன்னேறுவதை நிறுத்து!” என்றான் {உத்தரன்}.

அதற்குப் பிருஹந்நளை {அர்ஜுனன் உத்தரனிடம்}, “அச்சத்தால் வெளிறிப்போய், உன்னுடைய எதிரிகளின் மகிழ்ச்சியை நீ ஏன் அதிகரிக்கிறாய்? போர்க்களத்தில், எதிரிகளிடம் நீ எக்காரியத்தையும் இன்னும் செய்யவில்லை. “கௌரவர்களிடம் என்னை அழைத்துச் செல்” என்று நீயே எனக்குக் கட்டளையிட்டாய். எனவே, அதோ எண்ணிலடங்கா கொடிகள் இருக்கும் அந்த இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்வேன். ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {உத்தரா}, ஊனுக்காகப் {இறைச்சிக்காகப்} போரிடும் பருந்துகளைப் போல, உனது பசுக்களுக்காகப் போரிடத் தயாராக இருக்கும் எதிரிகளான குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} மத்தியில் நான் உன்னை நிச்சயம் அழைத்துச் செல்வேன். பூமியின் ஆட்சியைக் கோருவதான உயர்ந்த நோக்கத்துக்காக அவர்கள் வந்திருந்தாலும், நான் அதையே செய்வேன்.

புறப்படும்போது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் பெரும் ஆண்மையுடன் பேசிவிட்டு, இப்போது போரில் இருந்து ஏன் விலகுகிறாய்? பசுக்களை மீட்காமல் நீ வீடு திரும்பினால், வீரமிக்க ஆண்களும், ஏன் பெண்களும்கூட அவர்களுக்குள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது உன்னைச் சொல்லி (ஏளனமாகச்) சிரிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, தேரோட்டுவதில் எனக்கிருக்கும் திறன் குறித்துச் சைரந்திரி {மாலினி} உயர்வாகச் சொல்லி பாராட்டியிருக்கிறாள் (அதற்காகவே நான் வந்தேன்). எனவே, குருக்களிடம் {கௌரவர்களிடம்}, நான் ஏன் போரிடக்கூடாது? (உன்னைப் பொறுத்தவரை) நீ உறுதியுடன் நில் {போதும்}.” என்றாள் {பிருஹந்நளை}.

உத்தரன் {பிருஹந்நளாவிடம்}, “மத்ஸ்யர்களின் செல்வமனைத்தையும் குருக்கள் கொள்ளையிடட்டும். ஓ! பிருஹந்நளா, ஆண்களும் பெண்களும் என்னைக் கண்டு சிரிக்கட்டும். எனது பசுக்கள் அழியட்டும், எனது நகரம் பாலைவனமாகட்டும். நான் எனது தந்தையின் முன் வெளிப்பட்டு நின்றாலும்கூட, போருக்கான தேவை எதுவும் {எனக்கு} இல்லை” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அச்சமுற்ற இளவரசன் {உத்தரன்} இதைச் சொல்லிவிட்டு, தேரில் இருந்து குதித்து, வில்லையும் அம்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு மதிப்பையும் பெருமையையும் துறந்து ஓடத்தொடங்கினான். எனினும், பிருஹந்நளன் {உத்தரனிடம்}, “போர்க்களத்தில் இருந்து ஓடுவது, வீரமிக்க க்ஷத்திரியர்களின் செயலன்று. பயத்தில் ஓடுவதைவிடப் போர்க்களத்தில் ஏற்படும் மரணமே சிறந்தது” என்று உரத்துச் சொன்னான். இதைச் சொன்ன குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, {களத்தைவிட்டு} ஓடிவிட்ட இளவரசனைத் தொடர்ந்து {செல்லும் பொருட்டு}, தனது நீண்ட பின்னலும், சுத்தமான சிவந்த ஆடைகளும் காற்றில் படபடக்கும்படி, அந்த அற்புதமான தேரில் இருந்து இறங்கி {உத்தரனைப் பின்தொடர்ந்து} ஓடினான்.

இப்படி, பின்னல் காற்றில் படபடக்க ஓடிக்கொண்டிருப்பது அர்ஜுனன் என்பதை அறியாத சில போர்வீரர்கள், இக்காட்சியைக் கண்டு வெடித்துச் சிரித்தனர். அவன் {அர்ஜுனன்} இப்படி ஓடிக்கொண்டிருப்பதைக் கண்ட குருக்கள் {கௌரவர்கள்}, “சாம்பலுக்குள் மறைந்திருக்கும் நெருப்பு போல, {இப்படி} வேடம்பூண்டிருக்கும் இந்த மனிதன் யார்? இவன் பகுதி {சிறிது} ஆணாகவும், பகுதி {சிறிது} பெண்ணாகவும் இருக்கிறானே. அலியின் உருவத்தைத் தாங்கியிருந்தாலும், இவன் அர்ஜுனனைப் போல இருக்கிறானே. இவனது தலைகளும், கழுத்தும், கதாயுதங்களைப் போன்ற இரு கரங்களும் அவனைப் {அர்ஜுனனைப்} போலவே உள்ளன. இவனது நடையும் அவனைப் {அர்ஜுனனைப்} போலவே உள்ளது. தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தவிர இவன் வேறு யாரும் அல்ல.

மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் அர்ஜுனன், தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் இந்திரனைப் போன்றவனாவான். தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர வேறு எவன் நமக்கு எதிராகத் தனியாக வருவான்? தனது ஒரு மகனை மட்டுமே விராடன் அந்த வெறும் நகரத்தில் விட்டுச் சென்றான். அவன் {அந்த மகன்} வீரத்தாலல்ல, சிறுபிள்ளைத்தனத்தால் வெளியே வந்திருக்கிறான். நகரத்தை விட்டு வெளியே வந்தவன் உத்தரனாக இருக்க வேண்டும். இப்போது மாறுவேடத்தில் இருக்கும் பிருதையின் மகனான அர்ஜுனனை, அவன் {உத்தரன்} தேரோட்டியாக வரித்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. நமது படையைக் கண்ட அவன் {உத்தரன்} பீதியடைந்து ஓடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவனைத் திரும்பிக் கொண்டுவரவே, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஓடிக்கொண்டிருக்கிறான் என்பதில் ஐயமில்லை” என்று {கௌரவர்கள்} தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மாறுவேடத்தில் இருக்கும் பாண்டுவின் மகனைக் கண்ட கௌரவர்கள், ஓ! பாரதா {ஜனமேஜயா}, இந்த உத்தேசக் கணிப்பீடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினர். ஆனால், அவர்களால் திட்டவட்டமாக எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அதே வேளையில் புறமுதுகிட்டு ஓடிய உத்தரனைத் தொடர்ந்து, விரைந்து சென்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரு நூறு அடிகள் எடுத்து வைப்பதற்குள் அவனது தலைமுடியைப் பற்றினான். அர்ஜுனனால் பிடிக்கப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, பெரும் துன்பத்தில் இருப்பவனைப் போல மிகவும் வருந்திப் புலம்பத் தொடங்கி, “ஓ! நல்ல பிருஹந்நளா, ஓ! அழகிய இடை கொண்டவளே கேள். தேரின் பாதையை விரைந்து திருப்பு. எவன் {உயிருடன்} வாழ்கிறானோ, அவனே செழிப்பைச் சந்திக்கிறான் {அடைகிறான்}. பசும்பொன்னாலான நூறு நாணயங்களையும் {பொற்காசுகளையும்}, பொன்னால் இழைக்கப்பட்ட எட்டு பிரகாசமான வைடூரியங்களையும், அற்புத குதிரைகளால் இழுக்கப்படும் தங்கக் கொடிக்கம்பமுடைய ஒரு தேரையும், பராக்கிரமம் மிக்கப் பத்து அராளங்களையும் {மதயானைகளையும்} நான் உனக்குத் தருகிறேன். ஓ! பிருஹந்நளா, என்னை விட்டு விடு” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “{உத்தரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்த மனிதர்களில் புலி {அர்ஜுனன்} சிரித்துக் கொண்டே, கிட்டத்தட்ட உணர்வை இழந்து, இச்சொற்களைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த உத்தரனைப் பிடித்துத் தேரை நோக்கி இழுத்து வந்தான். பிறகு, அச்சத்தால் உணர்வை இழக்கும் தருவாயில் இருந்த அந்த இளவரசனிடம் {உத்தரனிடம்}, பிருதையின் மகன் {அர்ஜுனன்}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, எதிரியிடம் போரிட உனக்குத் துணிவில்லையென்றால், நான் எதிரியிடம் போரிடுவதற்கேதுவாக வந்து குதிரைகளின் கடிவாளத்தைப் பிடி. வீரர்களாலும், வலிமைமிக்கவர்களாலும் பாதுகாக்கப்பட்டு, வலிமைமிக்கதாகவும், வெல்லமுடியாததாகவும் இருக்கும் தேர்களின் ஒப்பற்ற வரிசையிருக்கும் அவ்விடத்திற்கு, எனது கரங்களின் பலத்தால் உண்டான பாதுகாப்புடன் ஊடுருவிச் செல்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {உத்தரா}, அஞ்சாதே, நீ ஒரு க்ஷத்திரியன். மேலும் நீ ஓர் அரசின் இளவரசர்களில் முதன்மையானவனுமாவாய். ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, எதிரிகளின் மத்தியில் நீ ஏன் அடங்கிச் செல்கிறாய்? நான் நிச்சயம் குருக்களுடன் {கௌரவர்களுடன்} போரிட்டு, வல்லமைமிக்கதும், அணுக இயலாததுமான தேர்களின் வரிசைக்குள் ஊடுருவிச் சென்று, பசுக்களை மீட்பேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே {உத்தரா}, நான் குருக்களுடன் போரிடுவேன். நீ எனது தேரோட்டி ஆவாயாக” என்றான் {அர்ஜுனன்}. இப்படி விராடனின் மகனான உத்தரனிடம் பேசியவனும், இதுவரை போரில் வீழாதவனுமான பீபத்சு {பீபத்சு-அர்ஜுனன்}, சிறிது நேரம் அவனைத் {உத்தரனைத்} தேற்றினான். பிறகு, பயத்தால் பீதியுற்று, மயக்கமும் தயக்கமும் கொண்ட இளவரசனை {உத்தரனை}, அடிப்பவர்களில் முதன்மையான அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} தேரில் ஏற்றினான்” {என்றார் வைசம்பாயனர்}.

துரோணரின் எச்சரிக்கை! – விராட பர்வம் பகுதி 39-இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்துக் கொண்ட துரோணர், கௌரவர்களை எச்சரித்தது; கர்ணன் கோபம் கொண்டது; துரியோதனன் விளக்கம்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “{புறமுதுகிட்டு} (ஓடிய) உத்தரனை ஏற்றிக் கொண்டு, வன்னி மரத்தை நோக்கிச் செல்பவனும், மூன்றாம் பாலினப் பழக்கத்தில் இருப்பவனும் தேரில் அமர்ந்திருப்பவனுமான அந்த மனிதர்களில் காளையைக் {அர்ஜுனனைக்} கண்டவர்களும், பீஷ்மர், துரோணர் ஆகியோரைத் தலைமையாகக் கொண்டவர்களுமான பெரும் தேர்வீரர்கள் யாவரும், வந்தவன் தனஞ்சயனே {அர்ஜுனனே} என்று சந்தேகித்து இதயத்தில் பயங்கொண்டனர்.

அவர்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டதைக் கண்டும், அற்புதமான அத்தாட்சிகள் பலவற்றைக் குறித்தும் கொண்ட ஆயுதம் தாங்குபவர்களின் முதன்மையானவரும், பரத்வாஜரின் மகனுமான ஆசான் துரோணர், “கடுமையாகவும், வெப்பமாகவும் வீசும் காற்று, கீழே கற்களைத் தாராளமாகப் பொழிகிறது. வானம் மேகமூட்டத்துடன் சாம்பல் நிறத்தில் இருண்டிருக்கிறது. உலர்ந்ததும், வறண்டதுமான விசித்திரமான காட்சியை மேகங்கள் முன்வைக்கின்றன. நமது பல்வேறு விதமான ஆயுதங்களும், உறைகளில் இருந்து நழுவுகின்றன. அனைத்துப்புறங்களிலும் ஏற்படும் காட்டுத்தீயைக் கண்டு அச்சமுறும் நரிகள் கொடூரமாக ஊளையிடுகின்றன.

குதிரைகளும் கண்ணீர் வடிக்கின்றன. யாரும் அசைக்காத போதே நமது பதாகைகள் நடுங்குகின்றன. இத்தகு மங்கலமற்ற குறியீடுகள், வரப்போகும் பெரும் ஆபத்தையே குறிக்கின்றன. எச்சரிக்கையுடன் இருப்பீராக. உங்களை நீங்களே பாதுகாத்துக் கொண்டு, துருப்புகளைப் போருக்காக அணிவகுத்திடுங்கள். பசுக்களைப் பாதுகாத்துக் கொண்டு, கொடும் படுகொலைகளை எதிர்பார்த்து நில்லுங்கள். மூன்றாம் பாலினப் பழக்கம் கொண்டு இங்கே வந்திருக்கும் இந்த வலிமைமிக்க வில்லாளி, ஆயுதங்கள் தாங்குபவர்களில் முதன்மையான பிருதையின் மகனே {குந்தியின் மகன் அர்ஜுனனே}, இதில் ஐயமில்லை” என்றார் {துரோணர்}.

பிறகு பீஷ்மரிடம் பேசும் வகையில் தொடர்ந்த அந்த ஆசான் {துரோணர்}, “ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, இங்கே பெண்ணாடை பூண்டு வந்தவன், இலங்கைத் தலைவனின் {ராவணனின்} நந்தவனத்தை அழித்தவனைத் {அனுமானைத்} தனது பதாகையில் {கொடியில்} தாங்கியிருப்பவனும், மரத்தின் பெயரால் அழைக்கப்படுபவனும், மலைகளின் எதிரியுடைய {இந்திரனுடைய} மகனுமான கிரீடியாவான் {அர்ஜுனனாவான்}. இவன் நிச்சயம் இன்று நம்மை வீழ்த்தி பசுக்களை எடுத்துக் கொள்வான்! இந்த எதிரிகளைத் தண்டிப்பவன், சவ்யசச்சின் என்ற புனைப்பெயர் கொண்ட வீரம்செறிந்த பிருதையின் மகனாவான் {குந்தியின் மகன் அர்ஜுனனாவான்}. தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து வந்தாலும் அவன் {அர்ஜுனன்} போரில் இருந்து விலகமாட்டான். கானகத்தில் பெரும் துன்பத்துக்குள்ளாக்கப்பட்ட அவன் {அர்ஜுனன்}, கோபத்துடன் வந்திருக்கிறான். இந்திரனால் கற்பிக்கப்பட்ட அவன், போர்க்களத்தில் இந்திரனைப் போலவே இருப்பான். எனவே, கௌரவர்களே, அவனிடம் {அர்ஜுனனிடம்} தாக்குப்பிடிக்கக்கூடிய எந்த வீரனையும் நான் காணவில்லை. இமயத்தின் மலைகளில், வேடனாக மாறுவேடத்தில் வந்த தலைவன் மகாதேவனையே {சிவனையே}, இந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, போரில் மனநிறைவு கொள்ளச் செய்தான் என்று சொல்லப்படுகிறது” என்றார் {துரோணர்}.

இச்சொற்களைக் கேட்ட கர்ணன், “பல்குணனின் {அர்ஜுனனின்} அறங்களைப் பேசி, எப்போதும் நீர் எங்களை நிந்திக்கிறீர். எனினும், என்னிலோ, துரியோதனனிலோ பதினாறில் ஒரு பங்குக்குக் கூட {1/16} அர்ஜுனன் ஈடாகமாட்டான்!” என்றான். பிறகு துரியோதனன், “இது பார்த்தனாக {அர்ஜுனனாக} இருந்தால், ஓ! ராதேயா {கர்ணா}, எனது காரியம் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகவே ஆகும். ஓ! மன்னா {கர்ணா}, பாண்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், மீண்டும் பனிரெண்டு வருட காலத்திற்கு உலவித் திரிய வேண்டியிருக்கும். அல்லது அலியின் ஆடியில் இருந்த அவன், வேறு எவனாகவாவது இருந்தால், என் கூரிய கணைகளால் விரைவில் நான் அவனைப் பூமியில் சாய்ப்பேன்” என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்} இப்படிச் சொன்னதும், பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அவனது {துரியோதனனின்} ஆண்மையைப் பாராட்டினர்!”

காண்டீவம் கடினமானது! – விராட பர்வம் பகுதி 40-அர்ஜுனன் வன்னி மரத்தில் இருக்கும் தங்களது ஆயுதங்களை உத்தரனிடம் எடுக்கச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வன்னி மரத்தை அடைந்ததும், போரில் அனுபவமற்றவனும், மிக மென்மையான சுபாவமுடையவனுமான விராடன் மகனின் {உத்தரனின்} நிலையை உறுதி செய்து கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} அவனிடம் {உத்தரனிடம்}, “ஓ! உத்தரா, நான் ஏவுவது போல் {சொல்வது போல்}, (இந்த மரத்திலிருந்து) அங்கே இருக்கும் சில விற்களை விரைந்து கீழே இறக்கு. அதிக எடையைக் கொண்டு எனது கரங்களை நீட்டி விரித்து, குதிரைகளையும், யானைகளையும் அடித்து, எதிரிகளை நான் வெற்றிகொள்வதற்கு, எனது பலத்தை இந்த உனது விற்களால் தாங்கமுடியாது.

எனவே, ஓ! பூமிஞ்சயா {உத்தரா}, இந்த மரத்தில்தான் பாண்டுவின் வீர மகன்களான யுதிஷ்டிரர், பீமர், பீபத்சு {பீபத்சு} மற்றும் இரட்டையர்களின் {நகுல சகாதேவர்களின்} அற்புதமான கவசங்களும், பதாகைகளும், கணைகளும், விற்களும் கட்டி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அடர்த்தியான இலைகளுடன் இருக்கும் இந்த மரத்தில் ஏறு. அங்கே தான், மற்ற பிற ஆயிரம் விற்களுக்குத் தனிச்சமமாக இருப்பதும், ஒரு நாட்டின் வரம்புகளை {எல்லைகளை} விரிவாக்கும் திறன் கொண்டதும், பெரும் சக்தி வாய்ந்த வில்லுமான அர்ஜுனனின் காண்டீவம் இருக்கிறது. மிகப்பெரும் அழுத்தத்தைத் தாங்கவல்ல பெரிய பனை மரம் போன்றதும், ஆயுதங்கள் அனைத்திலும் பெரியதும், எதிரிகளைத் தடுக்கவல்லதும், அழகானதும், மிருதுவானதும், அகன்றதும், முடிச்சற்றிருப்பதும் {முடிச்சு அற்று இருப்பதும்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், அழகிய வடிவமைப்புடையதுமான அது {காண்டீவம்}, கடினமானதும், பெரும் எடையைத் தாங்கவல்லதுமாகும். யுதிஷ்டிரர், பீமர், பீபத்சு {பீபத்சு}, இரட்டையர்கள் ஆகியோரின் பிற விற்களும் இதற்கு நிகரான பலமும் கடினமும் கொண்டவையே” என்றான் {அர்ஜுனன்}.

பொதி அவிழ்த்த உத்தரன்! – விராட பர்வம் பகுதி 41-மரத்தில் ஏற முதலில் தயங்கிய உத்தரன், பிறகு அதில் ஏறி ஆயுதங்களைக் கீழ இறக்கி, பொதிகளை அவிழ்த்து ஆயுதங்களைப் பார்த்தல்…உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “இந்த மரத்தில் ஒரு பிணம் கட்டப்பட்டுள்ளது என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, பிறப்பால் இளவரசனான நான், எனது கைகளால் அதை எப்படித் தொட முடியும்? க்ஷத்திரிய வகையில் உள்ள ஒரு பெரும் மன்னனுக்கு மகனாகப் பிறந்து, மந்திரங்களையும் மற்றும் நோன்புகளையும் எப்போதும் நோற்கும் நான் அதைத் தொடலாகாது. ஓ! பிருஹந்நளா, ஒரு பிணத்தைத் தொட வற்புறுத்தி, பிணங்களைச் சுமக்கும் சுத்தமற்றவனாகவும் மாசுபட்டவனாகவும் என்னை ஏன் ஆக்கப் பார்க்கிறாய்?” என்று கேட்டான் {விராடனின் மகன் உத்தரன்}.

அதற்குப் பிருஹந்நளை {அர்ஜுனன் – உத்தரனிடம்}, “ஓ! மன்னர்களுக்கு மன்னா {உத்தரா}, நீ சுத்தமானவனாகவும், மாசற்றவனாகவும் நீடிப்பாய். அஞ்சாதே, இம்மரத்தில் விற்களே இருக்கின்றன. பிணங்கள் அல்ல. மத்யர்கள் மன்னனின் வாரிசே {உத்தரா}, மகத்தான குடும்பத்தில் பிறந்த உன்னை, ஓ! இளவரசே {உத்தரா}, எப்படி நான் நிந்திக்கத்தக்க செயலைச் செய்ய வைப்பேன்?” என்று கேட்டாள்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, பார்த்தனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான விராடனின் மகன் {உத்தரன்}, தேரில் இருந்து இறங்கி, தயக்கத்துடன் அந்த வன்னி மரத்தில் ஏறினான். தேரிலேயே நின்றிருந்த எதிரிகளைக் கொல்பவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனிடம் {உத்தரனிடம்}, “மரத்தின் உச்சியில் இருந்து அந்த விற்களை விரைவாகக் கொண்டு வா” என்றான். {ஆயுதங்களைக் கீழே இறக்கிய பிறகு}, முதலில் பொதிகளை {wrappings} அறுத்து, பிறகு அவற்றில் கட்டப்பட்டிருந்த கயிறுகளையும் அறுத்த அந்த இளவரசன் {உத்தரன்}, வேறு நான்கு விற்களுடன் காண்டீவம் இருப்பதைக் கண்டான். அப்படி அவை அவிழ்க்கப்படும்போது, சூரியப் பிரகாசம் கொண்ட அந்த விற்கள், கோள்கள் உதிக்கும் நேரத்தில், அவை உமிழும் பேரொளியால் பிரகாசிப்பது போல ஒளிர ஆரம்பித்தன. சீறும் பாம்புகள் போன்ற வடிவங்களில் இருந்த அவற்றைக் {விற்களைக்} கண்ட அவன் {உத்தரன்} அச்சத்தால் பீடிக்கப்பட்டு, ஒரு நொடியில் மயிர்ச்சிலிர்த்து நின்றான். பிறகு பெரும்பிரகாசம் கொண்ட அந்தப் பெரிய விற்களைத் தொட்ட விராடனின் மகன் {உத்தரன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அர்ஜுனனிடம் இப்படிப் பேசினான்.”

ஆயுத விசாரணை! – விராட பர்வம் பகுதி 42-பிரித்துப் பார்த்த ஆயுதங்களில், ஒவ்வொரு ஆயுதத்தையும் சுட்டி, அவை யாருடையவை எனப் பிருஹந்நளையான அர்ஜுனனிடம் உத்தரன் கேட்பது…

உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “நூறு பொன் பொட்டுகளும், பிரகாசமிக்க முனைகளும் கொண்ட இந்த அற்புதமான வில் எந்தப் புகழ்பெற்ற வீரனுக்குச் சொந்தமானது? இத்தகு பிரகாசத்துடன் ஒளிர்வதும், தங்க யானைகளைத் தண்டில் கொண்டிருப்பதும், நல்ல மேற்புறங்கள் கொண்டதும், பிடிப்பதற்கு எளிமையானதுமான இந்த அற்புத வில் யாருடையது? பசும்பொன்னால் {சுத்த தங்கத்தால்} ஆன மூன்று வரிசை இந்திரகோபங்களைத் சரியான இடைவெளில் தண்டில் கொண்டுள்ள இந்த அற்புத வில் யாருடையது? பெரும் பிரகாசம் கொண்ட மூன்று தங்கச் சூரியன்கள் பொறிக்கப்பட்டு இத்தகு பிரகாசத்தால் சுடர்விடும் இந்த அற்புத வில் யாருடையது? பல வண்ணங்களிலான ரத்தினங்களாலும் தங்கத்தாலும் இழைக்கப்பட்டு, அழகிய கற்களுடன் கூடிய பொன்வண்டுகளைக் கொண்டிருக்கும் இந்த அழகிய வில் யாருடையது?

தங்கத்தலைகளுடன் {இறுதியில்} இறகுடையதும், பொன் அம்பறாத்தூணியில் இருப்பதும், ஆயிரம் எண்ணிக்கை கொண்டதுமான இந்தக் கணைகள் யாருடையவை? கழுகுச் சிறகுகள் கொண்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், மஞ்சள் நிறத்தில் இருப்பதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், கூரிய முனைகள் கொண்டதும், கனமானதும், முழுவதும் இரும்பாலானதுமான இந்தப் பெரிய பராசங்களும் யாருடையவை? பன்றியின் காது போன்ற முனைகள் கொண்ட பத்து கணைகளையும், இன்னும் பிற கணைகளையும் தாங்கியிருப்பதும், ஐந்து புலி உருவங்களைக் கொண்டதும் கரிய நிறம் கொண்டதுமான இந்த அம்பறாத்தூணி யாருடையது? பிறை வடிவ சந்திரனைப் போலத் தெரிவதும், (எதிரியின்) இரத்தத்தைக் குடிக்கவல்லதும், நீண்டதும், தடித்ததுமான இந்த எழுநூறு கணைகள் யாருடையவை? அடியில் பாதி, கிளிகளின் இறகாலானதும், மேல்பாதி நன்கு கடினமாக்கப்பட்ட இரும்பாலானதும், கல்லில் கூராக்கப்பட்டதுமான இந்தத் தங்கக் கொண்டை கொண்ட கணைகள் யாருடையவை? தவளைச் சின்னம் பொறிக்கப்பட்டதும், தவளையின் தலை போன்ற முனை கொண்டதும், எதிரிகளுக்குக் கொடூரமானதும், தடுக்கமுடியாததுமான இந்த அற்புத வாள் யாருடையது?

பல வண்ணத்திலான புலித்தோலுறையில் இருப்பதும், பலவண்ண தங்கத்தாலும், ஒலிபெருக்கும் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், கூரிய அற்புதமான முனைகள் கொண்டதுமான இந்தப் பெரும் வாள் யாருடையது? பளபளப்பான முனைகளும், தங்கக் கைப்பிடியும் கொண்ட இந்தக் கூன்வாள் யாருடையது? நிஷாத நாட்டில் தயாரிக்கப்பட்டதும், தடுக்க முடியாததும், உடைக்க முடியாததும், மாட்டுத்தோலுறையில் இருப்பதும், பளபளக்கும் முனைகள் கொண்டதுமான இந்த வாள் யாருடையது?

ஆட்டத்தோலுறையில் இருப்பதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், தங்கப்பிடி கொண்டதும், வானம் போன்ற கரிய நிறம் கொண்டதும், நீண்டிருப்பதுமான, இந்த அழகிய வாள் யாருடையது? கனமானதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், முப்பது விரல்கட்டைகளுக்குச் சற்றே நீண்டதும், பிற ஆயுதங்களுடன் ஏற்பட்ட மோதலால் பளபளப்பாக்கப்பட்டதும், தங்க உறையிலிருப்பதும், நெருப்பு போன்று பிரகாசமாக இருப்பதுமான இந்த அகன்ற வாள் யாருக்குச் சொந்தமானது? தங்கப்பொட்டுகள் நிறைந்ததும், எதிரிகளின் உடல்களை வெட்டவல்லதும், நஞ்சுமிக்கப் பாம்புகளின் மரணத் தீண்டல் கொண்டதும், எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுமான கரிய முனைகள் கொண்ட இந்த அழகிய கூன்வாள் யாருடையது?

ஓ! பிருஹந்நளா, என்னால் கேட்கப்படும் நீ, உண்மையைச் சொல்வாயாக. இந்த அற்புதப் பொருட்கள் அனைத்தையும் காணும் எனக்குப் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றான் {உத்தரன்}.

ஆயுத விளக்கம்! – விராட பர்வம் பகுதி 43-ஒவ்வொரு ஆயுதமும் யாருடையவை என்று உத்தரனுக்குப் பிருஹந்நளையான அர்ஜுனன் சொன்னது…

 பிருஹந்நளை {அர்ஜுனன் உத்தரனிடம்} சொன்னாள், “நீ முதலில் விசரித்தது, எதிரிகள் படையைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் திறன் கொண்டதும், உலகம் பரந்த புகழ் கொண்டதுமான அர்ஜுனனின் வில்லான காண்டீவமாகும். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்தக் காண்டீவம் அர்ஜுனனுக்குச் சொந்தமான அனைத்து ஆயுதங்களிலும் உயர்ந்ததும் பெரியதுமாகும். தனியாகவே இது நூறாயிரம் ஆயுதங்களுக்குச் சமமானதாகும். நாடுகளின் எல்லைகளை விரிவு படுத்தும் ஆற்றல் இதற்குண்டு. மனிதர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய இருவரையும் இதைக் கொண்டே பார்த்தன் {அர்ஜுனன்} வெற்றிகொண்டான். தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரால் எப்போதும் வழிபடப்படுவதும், அற்புதமான வண்ணங்கள் பல கொண்டதும், பெரியதும், மிருதுவானதுமான இந்த வில்லில் ஒரு முடிச்சோ கறையோ எங்கும் இருக்காது.

சிவன், இதை {காண்டீவத்தை} ஆயிரம் {1000) வருடங்கள் வைத்திருந்தான். அதன்பிறகு பிரஜாபதி, இதை ஐநூற்றுமூன்று வருடங்கள் {503} வைத்திருந்தான். அதன் பிறகு, சக்ரன் {இந்திரன்}, இதை எண்பத்தைந்து {85} வருடங்கள் வைத்திருந்தான். அதன் பிறகு சோமன் {சந்திரன்}, இதை ஐநூறு {500} வருடங்கள் வைத்திருந்தான். அதன் பிறகு வருணன், இதை, நூறு {100} வருடங்கள் வைத்திருந்தான். கடைசியாக ஸ்வேதவாஹனன் [1] என்ற பட்டப் பெயர் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} இதை அறுபத்தைந்து {65} வருடங்கள் [2] வைத்திருந்தான். பெரும் சக்தியும், உயர்ந்த தெய்வீகப் பிறப்பும் கொண்ட இது {காண்டீவம்}, விற்கள் அனைத்திலும் சிறந்ததாகும். தேவர்களாலும் மனிதர்களாலும் கொண்டாடப்படும் இது {காண்டீவம்} அழகிய வடிவம் கொண்டதாகும். பார்த்தன் {அர்ஜுனன்}, இந்த அழகிய வில்லை வருணனிடம் இருந்து பெற்றான்.

அழகிய மேற்புறங்கள் கொண்டதும், தங்கப்பிடி கொண்டதுமான இந்த மற்றொரு வில்லைக் கொண்டுதான் எதிரிகளைத் தண்டிப்பவரும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பீமர் கிழக்குப் பகுதிகள் முழுமையையும் வென்றார். அழகிய வடிவமும், இந்திரகோபக இலச்சனைகள் கொண்டதுமான இந்த மற்றொரு வில், ஓ! விராடனின் மகனே {உத்தரா}, மன்னர் யுதிஷ்டிரருக்குச் சொந்தமானது. சுடர்விடும் பிரகாசத்துடன் அனைத்துப் புறங்களிலும் கதிரை அள்ளி வீசும் தங்கச் சூரியன்களைக் கொண்ட இந்த மற்றொரு வில் நகுலனுக்குச் சொந்தமானது. வண்டுகளின் வடிவத்தில் தங்கத்தாலான படங்கள், ரத்தினங்கள் மற்றும் கற்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இந்த வில் சகாதேவன் என்று அழைக்கப்படும் மாத்ரியின் மகனுடையது.

கத்தி போன்று கூர்மையானவையும், பாம்புகளின் நஞ்சு போல அழிவை உண்டாக்குபவையும், இறகுகள் கொண்டவையுமான இந்த ஆயிரம் {1000} கணைகளும், ஓ! விராடனின் மகனே {உத்தரா}, அர்ஜுனனுடையவையாகும். போர்க்களத்தில் இவற்றை எதிரிகள் மீது ஏவும்போது, இந்த வேகமான கணைகள் இன்னும் அதிகமாகப் பிரகாசித்து {எதிரிகளை அழித்த பிறகு} அழிவடையாமல் திரும்பும். கூரிய முனைகள் கொண்டவையும், எதிரி தலைவர்களை {அவர்களின் எண்ணிக்கையைக்} குறைப்பவையும், சந்திரப்பிறை போன்ற வடிவம் கொண்டவையுமான இந்த நீண்ட, தடித்த கணைகள் பீமருடையவை. புலிகளின் ஐந்து படங்களைச் சுமந்து, கல்லில் கூராக்கப்பட்டு, தங்க இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, மஞ்சள் நிறக் கணைகளைக் கொண்டிருக்கும் இந்த அம்பறாத்தூணி நகுலனுடையது. மாத்ரியின் புத்திசாலி மகன் {நகுலன்}, மேற்குப் பகுதிகள் முழுவதையும் இந்த அம்பறாத்தூணியைக் கொண்டுதான் வென்றான். சூரியப் பிரகாசம் கொண்டவையும், பல வண்ணங்களால் பூசப்பட்டவையும், எதிரிகளை ஆயிரக்கணக்கில் அழிக்கவல்லவையுமான இந்தக் கணைகள் சகாதேவனுடையவை.

நீண்ட இறகுகள் மற்றும் தங்கத் தலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், மூன்று முடிச்சுகள் கொண்டதுமான நீளம் குறைந்தவையும் நன்கு கடினமாக்கப்பட்டவையுமான இந்தத் தடித்த கணைகள் மன்னர் யுதிஷ்டிரருடையவை. தவளைப் படம் செதுக்கப்பட்டு, தவளையின் வாயைப் போன்ற தலை வடிவமைப்பு செய்யப்பட்டு, பலமானதாகவும், தாங்கமுடியாததாகவும் இருக்கும் இந்த நீண்ட வாள் அர்ஜுனனுடையது. புலித்தோலுறையில் இருப்பதும், நீண்டதும், தாங்கமுடியாததும், எதிரிகளுக்குப் பயங்கரமானதுமான இந்த வாள் பீமசேனருடையது. நல்ல வண்ணம் பூசப்பட்ட உறையில், தங்கக் கைப்பிடியுடன் இருக்கும் இந்த அழகிய வாள், கௌரவர்களில் விவேகியான நீதிமானான யுதிஷ்டிரருடையது. ஆட்டுத்தோலுறையில் இருப்பதும், பல அற்புதப் போர்முறைகளுக்கு உகந்ததும், தாங்கமுடியாததும், பலமிக்கதுமான இந்த வாள் நகுலனுடையது. மாட்டுத் தோலுறையில் இருப்பதும், பலமிக்கதும், தாங்கமுடியாததுமான இந்தப் பெரும் கூன்வாள் சகாதேவனுடையது” என்றாள் {பிருஹந்நளை}.

“நான் அர்ஜுனன்!” – விராட பர்வம் பகுதி 44-பிருஹந்நளை, தானே அர்ஜுனன் என்பதை உத்தரனுக்குச் சொல்வது; விராடனின் அலுவல்களில் ஈடுபட்டிருந்த பிற பாண்டவர்களின் அடையாளங்களையும் பிருஹந்நளை சொன்னது; உத்தரன் அர்ஜுனனின் பத்து பெயர்களையும் அதற்கான காரணங்களையும் சொன்னால்தான், இவையாவையும் தன்னால் உண்மை என்று நம்ப முடியும் என்று பிருஹந்நளையிடம் சொன்னது; அர்ஜுனன் தனது பெயர்களையும், அதற்கான காரணங்களையும் உத்தரனிடம் சொன்னது; உத்தரனின் அச்சம் விலகியது..

உத்தரன் {பிருஹந்நளையான அர்ஜுனனிடம்} சொன்னான், “வேகமான கரங்களும், உயர் ஆன்மாவும் கொண்ட பார்த்தனின் {அர்ஜுனனின்}, இந்த ஆயுதங்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையாகக் காண்பதற்கு அழகு மிகுந்தவையாக இருக்கின்றன என்பது நிச்சயம். ஆனால், பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன், குரு குலத்தின் யுதிஷ்டிரன், பாண்டுவின் {பிற} மகன்களான நகுலன், சகாதேவன், பீமசேனன் ஆகியோர் {இப்போது} எங்கே இருக்கின்றனர்? பகடையால் நாடிழந்தவர்களும், எதிரிகளை அழிப்பவர்களுமான அந்த உயர் ஆன்ம பாண்டவர்களைக் குறித்து ஒன்றும் கேள்விப்பட முடியவில்லையே. பகடைத் தோல்விக்குப் பிறகு பாண்டு மகன்களைக் காட்டுக்குத் தொடர்ந்து சென்றவளும், பாஞ்சால இளவரசியும், மங்கையரில் ரத்தினமுமான திரௌபதி {இப்போது} எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டான் {உத்தரன்}.

அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “பார்த்தன் என்றும் அழைக்கப்படும் நானே அர்ஜுனன். உனது தந்தையின் அரசவை {தலைமை} உறுப்பினராக இருப்பது யுதிஷ்டிரர் என்றும்; உனது தந்தையின் சமையற்காரனான வல்லவனே பீமர் என்றும்; குதிரை கண்காணிப்பாளனே நகுலன் என்றும்; மாட்டுக் கொட்டகையில் இருப்பவனே சகாதேவன் என்றும்; யார் பொருட்டுக் கீசகர்கள் கொல்லப்பட்டார்களோ, அந்தச் சைரந்திரியே திரௌபதி என்றும் அறிந்து கொள்” என்றான் {அர்ஜுனன்}.

உத்தரன் {அர்ஜுனனிடம்}, “நான் முன்பு கேள்விப்பட்டிருக்கும், பார்த்தனின் {அர்ஜுனனின்} பத்துப் பெயர்களை நீ கணக்கிட்டுச் சொல்லிவிட்டால், நான் இவை யாவையும் {உண்மையென} நம்புவேன்!” என்றான்.

அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! விராடனின் மகனே {உத்தரா}, நான் எனது பத்துப் பெயர்களை உனக்குச் சொல்கிறேன். அவற்றைக் கேட்டு, நீ ஏற்கனவே கேள்விப்பட்டதோடு ஒப்பீடு செய்து கொள். அவற்றைக் குவிந்த மனத்துடனும், நெருக்கமான கவனத்துடனும் கேள். அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்சு, விஜயன், கிருஷ்ணன் [1], சவ்யசச்சின், தனஞ்சயன் என்பவையே அவை” என்றான்.

உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “நீ விஜயன் என்றும் ஸ்வேதவாகனன் என்றும் எதனால் அழைக்கப்படுகிறாய் என்பதை உண்மையாகச் சொல். கிருஷ்ணன், அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, பீபத்சு என்றெல்லாம் உனக்கு ஏன் பெயர்கள் ஏற்பட்டன. எதற்காக நீ தனஞ்சயன் என்றும் சவ்யசச்சின் என்று அழைக்கப்படுகிறாய்? அந்த வீரனின் {அர்ஜுனனின்} பல்வேறு பெயர்களின் மூலத்தைக் குறித்து நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் உன்னால் சொல்ல முடிந்தால்தான் நான் உனது சொற்களில் நம்பிக்கை கொள்ள முடியும்” என்றான்.

அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்},

“செல்வத்தின் மத்தியில் நான் வாழ்ந்ததாலும், அனைத்து நாடுகளையும் அடக்கி, அவர்களது செல்வங்களைக் கொள்ளை கொண்டதாலும், என்னைத் தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.

ஒப்பற்ற மன்னர்களுடன் போர்புரியச் சென்று, அவர்களை வீழ்த்தாமல் (களத்தைவிட்டு) நான் திரும்பியதில்லை என்பதால், என்னை விஜயன் என்று அழைக்கிறார்கள்.

எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், என்னை ஸ்வேதவாஹனன் என்று அழைக்கிறார்கள்.

அடிவானில் உத்திர நட்சத்திரக்கூட்டம் {உத்தரப் பல்குனி} தோன்றிய நாளில் {உத்திரம் நட்சத்திரம் கொண்ட நாளில்} இமயத்தின் மார்பில் நான் பிறந்ததால், என்னைப் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.

முன்னர், வலிமைமிக்கத் தானவர்களுடன் நான் மோதும்போது, சூரியப்பிரகாசம் கொண்ட ஒரு மணிமுடியை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், நான் கிரீடி என்று பெயர் பெற்றேன்.

போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் பீபத்சு என்று நான் அறியப்படுகிறேன்.

காண்டீவத்தை எனது இருகரங்களாலும் இழுக்கவல்லவனாக நான் இருப்பதால், சவ்யசச்சின் {சவ்யசாசி} என்று தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் நான் அறியப்படுகிறேன்.

பூமியின் நான்கு எல்லைகளுக்குள் எனது நிறம் மிக அரிதானதாலும், எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.

அணுகமுடியாதவனாகவும், அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், பகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகனாகவும் இருப்பதால் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில், நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.

எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் [2] என்பது, கரிய தோலும் {நிறமும்} பெரும் தூய்மையும் கொண்ட சிறுவனான என் மீது பாசம் கொண்ட எனது தந்தையால் {பாண்டுவால்} எனக்கு வழங்கப்பட்டதாகும்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு பார்த்தனை {அர்ஜுனனை} நெருக்கமாக அணுகி, வணங்கிய விராடனின் மகன் {உத்தரன்}, “என் பெயர் பூமிஞ்சயன். நான் உத்தரன் என்றும் அழைக்கப்படுகிறேன். ஓ! பார்த்தரே, நற்பேறாலேயே நான் உம்மைக் காணும்படி நேர்ந்தது. ஓ! தனஞ்சயரே, உமக்கு நல்வரவு. ஓ! சிவந்த கண்கள் கொண்டவரே, யானையின் துதிக்கையைப் போன்ற இரு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {அர்ஜுனரே}, அறியாமையால் நான் சொன்ன யாவற்றையும் பொருத்தருள்வதே உமக்குத் தகும். மேலும், இதற்கு முன்பு, உம்மால் சாதிக்கப்பட்ட அற்புதமானவையும், கடினமானவையுமான செயல்களால், எனது அச்சங்கள் விலகிவிட்டன. உண்மையில், எனக்கு உம்மிடம் அதிகமான அன்பு உண்டாகியிருக்கிறது” என்றான் {உத்தரன்}.

“நீர் ஏன் அலியானீர்?” – விராட பர்வம் பகுதி 45-உத்தரன் அர்ஜுனனிடம் அவன் ஏன் அலியாக நேரிட்டது என்பது குறித்து வினவுவது; அர்ஜுனன் அளிக்கும் விளக்கம்; அர்ஜுனன் தனியாகவும், கௌரவர்கள் அணியாகவும் இருப்பதைச் சுட்டிக் காட்டி உத்தரன் அஞ்சுவது; அர்ஜுனன் உத்தரனுக்குத் துணிவூட்டி தேரை நடத்தச் செய்தது…

உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “ஓ! வீரரே {அர்ஜுனரே}, என்னைத் தேரோட்டியாகக் கொண்ட இந்தப் பெரிய தேரில் ஏறும். (எதிரிப்) படையின் எந்தப் பகுதிக்குள் நீர் ஊடுருவ வேண்டும்? உம்மால் கட்டளையிடப்படும் நான், உம்மை அங்கே அழைத்துச் செல்வேன்!” என்றான்.

அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அஞ்சுவதற்கான எந்தக் காரணமும் உனக்கில்லை. ஓ! பெரும் வீரா, நான் உனது எதிரிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பேன். ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, நீ வசதியாக {சுகமாக} இரு. நடக்கவிருக்கும் அடிதடிச்சண்டையில் {melee}, பயங்கரமான பெரிய சாதனைகளைச் செய்து, நான் உன் எதிரிகளுடன் போரிடுவேன். எனது தேரில் அந்த அம்பறாத்தூணிகள் அனைத்தையும் விரைந்து கட்டு. (அவற்றுக்கிடையில்) இருக்கும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், முனை பளபளப்பாக்கப்பட்டதுமான ஒரு வாளை {பட்டாக்கத்தியை} எடுத்துக் கொள்” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனனின் இந்தச் சொற்களைக் கேட்ட உத்தரன் அனைத்துச் சோம்பலையும் கைவிட்டான். மரத்தில் இருந்து விரைந்து இறங்கி, தன்னுடன் அர்ஜுனனின் ஆயுதங்களைக் கொண்டு வந்தான். பிறகு அர்ஜுனன் அவனிடம் {உத்தரனிடம்}, “நான் கௌரவர்களுடன் போரிட்டு, உனது பசுக்களை மீட்பேன். என்னால் பாதுகாக்கப்பட்ட நிலையில், இந்தத் தேரின் மேல் பாகம் உனக்கு ஒரு அரணாக இருக்கும். வழிகளும், குறுகிய சந்துகளும் மற்றும் தெருக்களின் இதர பகுதிகளும் அந்த அரண் {கோட்டை} கொண்ட நகரத்தின் மாளிகைகளாக இருக்கும். இந்த எனது கரங்கள், அதன் {அரணின்} மதில்களாகவும் நுழைவாயில்களாகவும் இருக்கும். இந்தத் திரிதண்டமும் {ஏர்க்கலப்பை போன்ற இந்தத்தண்டும்}, எனது அம்பறாத்தூணியும் எதிரிகள் அணுகாதபடி தற்காப்பு படைகளாக அமையும். ஒற்றையானதும், பிரம்மாண்டமானதுமான எனது இந்தப் பதாகையே {கொடியே}, உனது நகரத்தில் இருக்கும் அனைத்துக் கொடிகளுக்கும் சமமாக இருக்காதா? இந்த எனது வில்லின் நாண், கவண்பொறிகளாகவும் {Catapult – உண்டிவில் போன்று கோட்டை மதில்களில் பொருத்தப்படும் ஒரு பொறி}, தகரிகளாகவும் {பழங்காலத்தில் இருந்த பீரங்கி போன்ற ஒரு பொறி} செயல்பட்டு, முற்றுகையிட்டிருப்போரின் ஆவிகளின் மீது ஏவுகணைகளை உமிழும். தூண்டப்பட்ட எனது கோபம் அவ்வரணை வல்லமைமிக்கதாகச் செய்யும். {அப்போது எழும்} எனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி உனது தலைநகரின் பேரிகைகளை ஒத்திருக்காதா? காண்டீவம் தாங்கிய என்னால் ஓட்டப்படும் இந்தத் தேர், எதிரிப்படையால் வீழ்த்த முடியாததாக இருக்கும். ஓ! விராடனின் மகனே {உத்தரா}, உனது அச்சங்கள் விலகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.

உத்தரன் {அர்ஜுனனிடம்}, “நான் இவற்றைக் கண்டு இனியும் அஞ்சமாட்டேன். போரில், கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, இந்திரனுக்கும் உள்ள உறுதியைப் போன்ற உமது உறுதியை நான் அறிவேன். ஆனால் இவற்றை நினைத்துப் பார்க்கும்போது, நான் தொடர்ந்து மனக்குழப்பத்துக்கு உள்ளாகிறேன். ஒரு நிச்சயமான முடிவுக்கு வர இயலாத மூடனாக இருக்கிறேன். இவ்வளவு அழகிய அங்கங்களும், மங்கலக்குறிகளையும் கொண்ட ஒரு மனிதன், எத்தகு துயர்நிறைந்த சூழல் வந்தால் தனது ஆண்மையை இழப்பான் {அலியாவான்}? உண்மையில் உம்மைக் கண்டால் மகாதேவனோ {சிவனோ}, இந்திரனோ, கந்தர்வர்களின் தலைவனோ {குபேரனோ}, மூன்றாவது பாலினப் போர்வையில் {மாறுவேடத்தில்} வசிப்பது போலத் தெரிகிறது” என்றான் {உத்தரன்}.

அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “நான் எனது அண்ணனின் {யுதிஷ்டிரரின்} ஆணையை ஏற்றுக் கொண்டு, ஓராண்டு முழுவதும் இந்த நோன்பை நோற்று வருகிறேன் என்பதை உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {உத்தரா}, உண்மையில் நான் அலியில்லை. ஆனால், இன்னொருவரின் {ஊர்வசியின்} விருப்பத்திற்கு {சாபத்துக்கு} அடிபணிந்தும், அறத்தகுதிகளில் விருப்பம் கொண்டுமே, நான் இந்த அலித்தன்மையேற்கும் நோன்பை நோற்று வந்தேன். ஓ! இளவரசே {உத்தரா}, நான் இப்போது அந்த நோன்பை முடித்துவிட்டேன் என்பதை அறிந்து கொள்” என்றான் {அர்ஜுனன்}.

உத்தரன் {அர்ஜுனனிடம்}, “இப்போது என் சந்தேகம் முற்றிலும் ஆதாரமற்றது என்று என்னைக் காணச் செய்ததால், ஒரு மகத்தான உதவியை இன்று நீர் எனக்குச் செய்திருக்கிறீர். உண்மையில், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, உம்மைப் போன்ற ஒரு மனிதன் அலியாக இருக்க முடியாது. போர்க்களத்தில் எனக்கு இப்போது ஒரு கூட்டாளியைப் பெற்றுவிட்டேன். என்னால் இப்போது தேவர்களுடன் கூடப் போரிட முடியும். எனது அச்சங்கள் விலகின. நான் என்ன செய்ய வேண்டும்? எனக்குக் கட்டளையிடும். கற்ற ஆசானால் தேரோட்டப் பயிற்றுவிக்கப்பட்ட நான், ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனரே}, எதிரிப் படைத்தலைவர்களின் தேர்களை உடைக்கவல்ல உமது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பேன். ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனரே}, வாசுதேவனின் தாருகனைப் போன்றோ, சக்ரனின் {இந்திரனின்} மாதலி போன்றோ, நான் திறமைமிக்கத் தேரோட்டி {ரதசாரதி} என்பதை அறிந்து கொள்ளும்.

(உமது தேரின்) வலதுகை துருவத்தில் {நுகத்தடியில்} பூட்டப்பட்டிருப்பதும், ஓடும்போது {அதன்} குளம்புகள் {பாதம்போன்ற அடிக்கால்கள்} தரையில் படுவது அரிதாகவே தெரிவதுமான இந்தக் குதிரை, கிருஷ்ணனின் சுக்ரீவத்திற்கு {சுக்ரீவம்} ஒப்பாயிருக்கிறது. தன் இனங்களில் முதன்மையானதும், இடது துருவத்தில் {நுகத்தடியில்} பூட்டப்பட்டதுமான இந்த மற்றொரு அழகிய குதிரையை, மேகபுஷ்பத்துக்கு {மேகபுஷ்பம்} இணையான வேகம் கொண்டதாக நான் கருதுகிறேன். தங்கக்கவசம் பூண்டதும், இடதுபுறத்தின் பின்புறத்தில் பூட்டப்பட்டதுமான இந்த (மூன்றாவது) அழகிய குதிரையை, வேகத்தில் சைப்பியத்திற்கு {சைப்பியம்} நிகரானதாகவும், அதைவிடப் பலத்தில் மேன்மையானதாகவும் நான் கருதுகிறேன். வலப்புறத்தின் பின்புறத்தில் பூட்டப்பட்டிருக்கும் இந்த (நான்காவது) அழகிய குதிரையை, வேகத்திலும் பலத்திலும் வலாஹகத்திற்கு {வலாஹகம்} மேன்மையானதாக நான் கருதுகிறேன். உம்மைப்போன்ற ஒரு வில்லாளியைப் போர்க்களத்தில் சுமப்பதற்கு இந்தத் தேர் தகுதிவாய்ந்ததாக இருக்கிறது. நீரும் இந்தத் தேரில் இருந்து போரிடத் தகுதி வாய்ந்தவராக இருக்கிறீர். இதைதான் நான் நினைக்கிறேன்” என்றான் {உத்தரன்}.

வைம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு பெரும் சக்தி கொண்ட அர்ஜுனன், தனது கரங்களில் இருந்த கடகங்களைக் {சங்கு வளையங்களைக்} களைந்து, தங்கத்தால் இழைக்கப்பட்ட அழகிய கையுறைகளை அணிந்து கொண்டான். பிறகு, சுருண்ட தனது கரிய கூந்தலை, ஒரு வெண்துணியால் கட்டினான். பிறகு முகம் கிழக்கு பார்த்தபடி, அந்த அற்புதத் தேரில் அமர்ந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தனது உடலைச் சுத்திகரித்து, ஆன்மாவைக் குவித்து, தன் மனதில் தனது அனைத்து ஆயுதங்களையும் நினைவுகூர்ந்தான் {தியானித்தான்}. அனைத்து ஆயுதங்களும் வந்து, அரசமகனான பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! ஒப்பற்றவனே {அர்ஜுனா}, நாங்கள் இங்கே இருக்கிறோம். ஓ! இந்திரனின் மகனே, நாங்கள் உனது பணியாட்கள்” என்று சொல்லின. அவற்றை வணங்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, அவற்றைத் தனது கரங்களில் பெற்றுக் கொண்டு, அவற்றிடம் {அந்த ஆயுதங்களிடம்}, “எனது நினைவில் வசிப்பீர்களாக” என்றான் {அர்ஜுனன்}.தன் அனைத்து ஆயுதங்களையும் அடைந்த அந்த வீரன் {அர்ஜுனன்} மகிழ்ச்சியாகத் தெரிந்தான். பிறகு, விரைந்து தனது வில்லான காண்டீவத்தில் நாணேற்றி, அதில் நாணொலி எழுப்பினான். அவ்வில்லின் நாணொலி இரு பலமிக்கக் காளைகளின் மோதலைப் போல் அதிக ஒலியுடன் இருந்தது. அப்படிப் பூமியை நிறைத்த அவ்வொலி பயங்கரமானதாக இருந்தது. எல்லாப்புறங்களிலும் வீசிய காற்று உக்கிரமாக வீசியது-விழுந்து கொண்டிருந்த விண்கற்களின் மழை அடர்த்தியாக இருந்தது [1]. அனைத்துப்புறங்களும் இருளில் மூழ்கின. வானத்தில் பறவைகள் அங்குமிங்கும் பறந்தன. பெருமரங்கள் நடுங்கத் தொடங்கின [2]. இடியின் வெடிச்சத்தம் பெருவொலியாக இருந்தது. தனது தேரில் இருந்து விற்களில் சிறந்த தனது வில்லின் நாணில், அர்ஜுனன் எழுப்பிய நாணொலியே அது என்பதை அவ்வொலியில் இருந்தே குருக்கள் {கௌரவர்கள்} அறிந்து கொண்டனர்.

பிறகு உத்தரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாண்டவர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, நீர் தனியாக இருக்கிறீர். இந்தப் பலமிக்கத் தேர்வீரர்களோ பலராக இருக்கின்றனர். அனைத்து வகை ஆயுதங்களிலும் திறம்பெற்ற இந்த அனைவரையும் போர்க்களத்தில் நீர் எப்படி வெல்லப்போகிறீர்? ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனரே}, நீர் ஒரு தொண்டருமற்றிருக்கிறீர்; அதே வேளையில் கௌரவர்களுக்குப் பலர் இருக்கின்றனர். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {அர்ஜுனரே}, உம்மருகில் இருக்கும் நான் இதற்காகவே அச்சத்தால் பீடிக்கப்படுகிறேன்” என்றான் {உத்தரன்}.

உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவனை {உத்தரனை} நோக்கி, “ஓ! வீரா {உத்தரா}, அஞ்சாதே. கோஷயாத்திரை நிகழ்வில், வலிமைமிக்கக் கந்தர்வர்களுடன் நான் போரிட்ட போது, நட்புடன் என்னைப் பின்பற்றி வந்த {தொண்டர்} யாரை பெற்றிருந்தேன்? காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} தேவர்கள் மற்றும் தானவர்கள் பலருடன் பயங்கர மோதலில் ஈடுபட்ட எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்? வலிமைமிக்க நிவாடகவசர்கள் மற்றும் பௌலோமர்களுடன் தேவர்களின் தலைவன் {இந்திரன்} சார்பாக நான் போரிட்ட போது, எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்? ஓ! குழந்தாய் {உத்தரா}, பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} சுயம்வரத்தில் எண்ணற்ற மன்னர்களுடன் நான் மோதிய போது, அந்தப்போர்க்களத்தில் எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்?

ஆசான் துரோணராலும், சக்ரனாலும் {இந்திரனாலும்}, வைஸ்ரவணனாலும், யமனாலும், வருணனாலும், அக்னியாலும், கிருபராலும், மதுகுலத்தின் கிருஷ்ணனாலும், பினகைதாங்கியாலும் (சிவனாலும்) ஆயுதங்களில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கும்போது, நான் ஏன் இவர்களுடன் போரிட முடியாது? எனது தேரை விரைந்து நடத்து. உனது இதய நோய் அகலட்டும்” என்றான் {அர்ஜுனன்}.

மீண்டும் எச்சரித்த துரோணர்! – விராட பர்வம் பகுதி 46-அர்ஜுனனின் சங்கொலியைக் கேட்டு உத்தரன் நடுங்குவது; அர்ஜுனனின் குதிரைகள் தரையில் விழுவது; அர்ஜுனன் அவற்றை நிமிர்த்தி, உத்தரனுக்குத் துணிவூட்டியது; துரோணர் கண்ட துர்நிமித்தங்கள்; துரோணர் துரியோதனனை எச்சரிப்பது; பிறகு பசுக்களை முன்னே விட்டு, அனைவரையும் போருக்குத் தயாராக அணிவகுக்கச் செய்யும்படி துரோணர் துரியோதனனிடம் கோருவது…வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உத்தரனைத் தனது தேரோட்டியாகக் கொண்டு, அந்த வன்னிமரத்தை வலம் வந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனது ஆயுதங்கள் அத்தனையையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சிங்க உருவம் பொறிக்கப்பட்ட பதாகையை இறக்கி, வன்னிமரத்தின் அடியில் வைத்த அந்தப் பலமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, தனது தேருக்கு உத்தரனைத் தேரோட்டியாக வைத்துக் கொண்டு புறப்பாட்டான். விஸ்வகர்மனால் வகுக்கப்பட்ட தெய்வீக மாயையில் உருவானதும், சிங்க வால் கொண்ட குரங்கின் உருவம் தாங்கியதுமான தனது தங்கப்பதாகையை அந்தத் தேரில் ஏற்றினான். உண்மையில் அவன் {அர்ஜுனன்} அக்னி அளித்த கொடையை எண்ணிப் பார்த்தவுடனேயே, அவனது {அர்ஜுனனின்} விருப்பத்தை அறிந்து கொண்டு, மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயிரினங்களை அந்தப் பதாகையில் இடம்பெறச் செய்தான் {விஸ்வகர்மன்}.

அழகிய தயாரிப்பான அந்தக் கொடியையும், அதனுடன் இணைக்கப்பட்ட அம்பறாத்தூணிகளையும் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக அழகுடையதுமான அந்த அற்புத கொடிக்கம்பம் வானத்தில் இருந்து திடீரென அவனது தேரில் விழுந்தது. அந்தப் பதாகை {கொடி}, தனது தேருக்கு வந்ததைக் கண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, அதை முறையாக வலம் வந்தான். குரங்கு பதாகை கொண்ட குந்தியின் மகனும், ஸ்வேதவாகனன் என்று அழைக்கப்பட்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, உடும்புத் தோலாலான விரலுறைகளை அணிந்து கொண்டு, தனது வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டான்.

பெரும் பலம் கொண்டவனான அந்த எதிரிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தனது பெரிய சங்கை எடுத்துப் பலமாக ஊதி, எதிரிகளை மயிர்ச்சிலிர்க்கச் செய்யும் இடியின் ஓசையை எழுப்பினான். அவ்வொலியைக் கேட்ட, வேகம் கொண்ட அந்தக் குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கித் தரையில் விழுந்தன. பெரிதும் அஞ்சிய உத்தரனும் கீழே தேர்க்காலில் அமர்ந்தான். பிறகு குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தானே கடிவாளத்தைப் பிடித்து, குதிரைகளை எழுப்பி, அவற்றைச் சரியான நிலைக்குக் கொண்டு வந்தான்.

பிறகு உத்தரனை ஆரத்தழுவி, அவனுக்கு உற்சாகமூட்டும் வகையில், “ஓ! இளவரசர்களில் முதன்மையானவனே {உத்தரா}, அஞ்சாதே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, பிறப்பால் நீயொரு க்ஷத்திரியன். ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, பிறகேன் எதிரிகளுக்கு மத்தியில் நீ உற்சாகமிழக்கிறாய்? பல சங்குகளின் ஒலிகளையும், பல பேரிகைகளையும், போருக்காக அணிவகுக்கப்பட்ட தலைவர்களுக்கு மத்தியில் பல யானைகளின் பிளிறல்களையும் கர்ஜனைகளையும் இதற்கு முன்னர் நீ கேட்டிருப்பாயே. எனினும், ஏதோ சாராரண மனிதனைப் போல, இந்தச் சங்கொலியால் உற்சாகமிழந்து, கலக்கமடைந்து, நீ ஏன் பயந்து போயிருக்கிறாய்?” என்றான் {அர்ஜுனன்}.

உத்தரன் {அர்ஜுனனிடம்}, “பல சங்கொலிகளையும், படையணியில் நிறுத்தப்பட்டிருக்கும் பல யானைகளின் பிளிறல்களையும் கர்ஜனைகளையும் நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இத்தகு சங்கொலியை நான் எப்போதும் கேட்டதில்லை. மேலும் இது போன்ற ஒரு பதாகையை நான் எப்போதும் கண்டதில்லை. இது போன்ற நாணொலியை இதற்கு முன்னர் நான் எப்போதும் கேட்டதில்லை. அய்யா, உண்மையில், இந்தச் சங்கொலியாலும், வில்லின் நாணொலியாலும், இந்தப் பதாகையில் இருக்கும் உயிரினங்களின் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட கதறல்களாலும், இந்தத் தேரிச் சக்கரங்களின் சடசடப்பொலியாலும், எனது மனம் மிகவும் குழப்பமடைந்துள்ளது. திசை குறித்த எனது பார்வையும் குழம்பிப் போயிருக்கிறது. எனது இதயம் வலியால் பீடிக்கப்பட்டிருக்கிறது. முழு வானமே இந்தப் பதாகையால் மூடப்பட்டது போல எனக்குத் தெரிகிறது. அனைத்தும் எனது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதைப் போல எனக்குத் தோன்றுகிறது. காண்டீவத்தின் நாணொலியால் எனது காதும் செவிட்டு நிலையை அடைந்துவிட்டது” என்றான் {உத்தரன்}.

அர்ஜுனன் {உத்தரனிடம்}, “நான் மீண்டும் எனது சங்கை ஊதப் போகிறேன். ஆகையால், பாதங்களைத் தேரில் அழுத்தி உறுதியாக நில். கடிவாளத்தை இறுக்கமாக பற்றிக் கொள்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு அர்ஜுனன் மீண்டும் தனது சங்கை ஊதினான். அந்தச் சங்கு, எதிரிகளைத் துன்பத்தால் நிறைத்து, நண்பர்களின் இன்பத்தை அதிகரித்தது. மலைகளைப் பிளப்பது போலவும், மலைக்குகைகளையும், திசைப்புள்ளிகளையும் துளைப்பது போலவும் அவ்வொலி பெருத்த ஒலியாக இருந்தது. அந்தச் சங்கொலியாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் பூமி நடுங்குவதாகத் தெரிந்தது. உத்தரனின் அச்சத்தைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளித்தான்.

அதே வேளையில் துரோணர், “தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும், மேகங்கள் வானத்தை மூடியிருக்கும் விதத்தாலும், இந்தப் பூமியே நடுங்குகிறது. இந்தப் போர்வீரன் சவ்யசச்சினை {அர்ஜுனனைத்} தவிர வேறு யாருமில்லை. நமது ஆயுதங்கள் ஒளிரவில்லை; நமது குதிரைகள் உற்சாகமிழந்திருக்கின்றன; நமது நெருப்புகளுக்கு எரிபொருள் கொடுக்கப்பட்டாலும் அவை சுடர்விடவில்லை. இவையாவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. நமது விலங்குகள் அனைத்தும் சூரியனை நோக்கி வெறித்துப் பார்த்தபடி, பயங்கரமாக அலறுகின்றன. நமது பதாகைகளில் காக்கைகள் அமர்கின்றன. இவையாவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. இதோ, அது {நரி} அடிபடாமல் தப்பி விட்டது

நமது படைகளுக்கு மத்தியில் பரிதாபமாக ஊளையிட்டபடியே நரி ஓடுகிறது.

இவையாவும் கடுமையான பேரிடரை முன்னறிவிக்கின்றன. உங்கள் அனைவருக்கும் மயிர்ச்சிலிர்த்திருக்கிறது. நிச்சயமாக, இது போரில் க்ஷத்திரியர்களுக்கு ஏற்படும் பெரும் அழிவை  முன்குறிக்கிறது. ஒளிகொண்ட அனைத்துப் பொருட்களும் மங்கியிருக்கின்றன; விலங்குகளும் பறவைகளும் பார்ப்பதற்குக் கடுமையாக இருக்கின்றன; க்ஷத்திரிய அழிவுக்கு அறிகுறியாகப் பல பயங்கர அத்தாட்சிகள் சாட்சியாகக் காணப்படுகின்றன. இந்தச் சகுனங்கள், நமக்கு மத்தியில் நிகழப்போகும் பெரும் அழிவை முன்னறிவிக்கின்றன. ஓ! மன்னா {துரியோதனா}, எரியும் விண்கற்களால் உனது அணிகள் குழப்பத்துக்கு ஆழ்வதாகத் தெரிகிறது.

உனது விலங்குகள் உற்சாகமிழந்ததாகத் தெரிகிறது. அவை அழுகின்றன. கழுகுகளும் பறவைகளும் உனது துருப்புகளைச் சுற்றிப் பறக்கின்றன. பார்த்தனின் கணைகளால் உனது படை துன்புறுவதைக் கண்டு நீ வருந்த வேண்டியிருக்கும். உண்மையில், நமது அணிகள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே தெரிகிறது. அவர்களில் யாரும் போரிட ஆவலாக இல்லை. நமது வீரர்களின் முகங்கள் அனைத்தும் மங்கிப்போய் உணர்விழந்து இருக்கின்றன. பசுக்களை முன்னே விட்டு, நமது வீரர்களைப் போருக்காக அணிவகுக்கச் செய்து, தாக்குவதற்குத் தயாராக நாம் இங்கேயே நிற்கலாம்” என்றார் {துரோணர்}.

துரோணரை நிந்தித்த கர்ணன்! – விராட பர்வம் பகுதி 47-பாண்டவர்கள் குறித்த காலத்திற்கு முன்பே வெளிப்பட்டதாகத் துரியோதனன் பீஷ்மரிடம் சுட்டிக் காட்டுவது; துரியோதனனும் கர்ணனும் துரோணரை நிந்திப்பது; துரோணரை அலட்சியப்படுத்தி, படைகளைப் போருக்காக அணிவகுக்கச் செய்யும்படி கர்ணன் துரியோதனனை வேண்டுவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு மன்னன் துரியோதனன் போர்க்கள வீரர்களில் புலிகளான பீஷ்மர், துரோணர் மற்றும் பெருந்தேர் வீரரான கிருபரிடம் இச்சொற்களில், “நான், கர்ணன் ஆகிய இருவரும் ஆசான்களிடம் இதைச் {ஏற்கனவே} சொல்லியிருக்கிறோம் [1]. அதை ஒருமுறை சொல்லி மனநிறைவு கொள்ளவில்லையாதலால், அதை மீண்டும் குறிப்பிடுகிறேன். பனிரெண்டு {12} ஆண்டுகளை நாடுகளிலும் கானகங்களிலும் கழிப்பது என்பதும், மேலும் ஒரு வருடத்தை நாமறியாதவாறு கழிப்பது என்பதும், நமது அறிவுக்கு எட்டிய வகையில் (பகடையாட்டத்தின்போது) பாண்டு மகன்கள் (பாண்டவர்கள்) கொடுத்த வாக்குறுதிகளாகும்.

அந்தப் பதிமூன்றாவது {13} வருடம் நடப்பில் இருக்கிறது. அஃது இன்னும் முடியவில்லை. எனவே, இன்னும் தலைமறைவாக வாழவேண்டிய பீபத்சு {அர்ஜுனன்}, நம் முன்னிலையில் தோன்றிவிட்டான். குறித்த வனவாச காலம் முடிவதற்கு முன்னரே பீபத்சு {அர்ஜுனன்} வந்திருக்கிறான் என்றால், பாண்டவர்கள் மற்றுமொருமுறை, மேலும் பனிரெண்டு வருடங்களைக் காட்டில் கழிக்கவேண்டும். (அவர்கள்) (பாண்டவர்கள்) மறந்துவிட்டார்களா? அரசாட்சி மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டு இதை அறியாமல் இருக்கிறார்களா? அல்லது இதில் நமது தவறு {ஏதேனும்} உள்ளதா?என்பதையும், (அவர்கள் (பாண்டவர்கள்) வாக்குறுதி கொடுத்த அந்தக் குறித்த காலத்தின்) குறைவையும் மிகுதியையும் பீஷ்மர் கணக்கிடுவதே தகும். ஆசைக்குகந்த பொருள் அடையப்படுதல் மற்றும் அடையாது போகுதல் ஆகிய இரு நிலைகளில் ஒன்றில் {எப்போதும்} சந்தேகம் ஏற்படும். ஒருவழியில் தீர்மானிக்கப்படுவது, முடியும்போது எப்போதும் வேறுபடுகிறது [2]. ஒழுக்கவியலாளர்கள் {moralists} கூட, தங்கள் சொந்தச் செயல்களை ஆராய்வதில் குழப்பமடைகின்றனர் [3]. என்றான் {துரியோதனன்}.

நம்மைப் பொறுத்தமட்டில், மத்ஸ்யர்களிடம் போரிடவும், வடக்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் அவர்களது பசுக்களைப் பிடிக்கவும் இங்கே வந்திருக்கிறோம். அதே வேளையில், அர்ஜுனன் இங்கே வந்தான் என்றால், என்ன தவறு நம்முடன் இணையும்? {இதில் நமது தவறு என்ன?}. மத்ஸ்யர்கள் இழைத்த எண்ணிலடங்கா கொடுமையெல்லாம் நமக்குச் சொல்லப்பட்டதால், திரிகார்த்தர்கள் சார்பாக நாம் மத்ஸ்யர்களை எதிர்த்துப் போரிட இங்கே வந்திருக்கிறோம். அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த திரிகார்த்தர்களுக்கு இதன் காரணமாகவே நாம் துணைக்கு வருவதாக வாக்களித்தோம். மத்ஸ்யர்களின் அபரிமிதமான செல்வமான பசுக்களை ஏழாம் சந்திர நாளில் {சப்தமியில்}, மத்திய வேளையில், அவர்கள் {திரிகார்த்தர்கள்} முதலில் பிடிப்பதென்பதும், அப்படி முதலில் எடுத்துச் செல்லப்பட்ட பசுக்களைத் தொடர்ந்து மத்ஸ்ய மன்னன் {விராடன்} செல்லும்போது, எட்டாம் சந்திர நாளின் {அஷ்டமியின்} சூரிய உதய நேரத்தில், இந்தப் பசுக்களை நாம் பிடிக்க வேண்டும் என்பதும் நாம் அவர்களுடன் {திரிகார்த்தர்களுடன்} ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தமாகும்”, என்றான் {துரியோதனன்}.

திரிகார்த்தர்கள் பசுக்களை {இங்கே} இப்போது கொண்டு வரலாம்; அல்லது தோற்றுவிட்ட காரணத்தால், மத்ஸ்யர்களின் மன்னனுடன் (விராடன்) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கலாம்; அல்லது, திரிகார்த்தர்களைத் துரத்திவிட்ட மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்}, இம்மக்களின் தலைமையேற்று, கடும் வீரர்களைக் கொண்ட தனது மொத்தப் படையையும் அழைத்துக் கொண்டு, {இங்கே} காட்சியில் தோன்றி, நம்மீது இரவு தாக்குதல் நடத்த முன்னேறிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஏதோ ஒரு சக்திமிக்கத் தலைவன் நம்மை வீழ்த்துவதற்காக முன்னேறி வந்து கொண்டிருக்கலாம். அல்லது மத்ஸ்யர்களின் மன்னனே {விராடனே} கூட வந்து கொண்டிருக்கலாம். ஆனால், {வருவது} மத்ஸ்யர்கள் மன்னனாக இருப்பினும், பீபத்சுவாக {அர்ஜுனனாக} இருப்பினும் நாம் அனைவரும் {அவனிடம்} போரிட வேண்டும். இதுவே நமது வாக்காகும்”, என்றான் {துரியோதனன்}.

“தேர்வீர்களில் முதன்மையான இந்தப் பீஷ்மர், துரோணர், கிருபர், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அனைவரும் ஏன் துக்கத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் போலத் தங்கள் தேர்களில் அமர்ந்திருக்கிறார்கள்? தற்போது போரிடுவதைத் தவிரச் சிறந்தது எதுவும் கிடையாது. எனவே, உங்கள் மனங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நாம் பிடித்திருக்கும் கால்நடைக்காக வஜ்ரதாங்கியிடமோ {இந்திரனிடமோ}, ஏன் யமனிடமோ கூட ஒரு மோதல் ஏற்பட்டால், {இங்கே இருக்கும்} யார் ஹஸ்தினாபுரத்தை அடைய நேரிடும்? (எதிரியின்) குதிரைப்படையே தப்புவது சந்தேகம் எனும்போது, கணைகளால் துளைக்கப்படும் காலாட்படை வீரர்கள் ஆழ்ந்த கானகத்திற்குள் புறமுதுகிட்டோடி உயிருடன் எப்படித் தப்பிக்க முடியும்?” என்றான் {துரியோதனன்}.

துரியோதனனின் இச்சொற்களைக் கேட்ட கர்ணன் {துரியோதனனிடம்} , “ஆசானை {துரோணரை} அலட்சியம் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய். அவர் {துரோணர்}, பாண்டவர்களின் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டு, நமது இதயங்களில் அச்சமூட்டுகிறார். அர்ஜுனனிடம் அவர் {துரோணர்} கொண்ட பாசம் மிகப் பெரிதென நான் காண்கிறேன். அவன் {அர்ஜுனன்} வருவதைப் பார்த்தாலே, அவனது புகழை இவர் பாடுகிறார். நமது துருப்புகள் உடையாதிருக்க உரிய ஏற்பாடுகளைச் செய். {அர்ஜுனனுடைய} குதிரைகளின் கனைப்பொலியைக் கேட்டே துரோணர் அனைவரையும் குழப்பிவிடுகிறார். இந்த வெப்பகாலத்தில் தொலைவான நிலத்தில் இருக்கும் இந்தப் பெரும் வனத்திற்கு மத்தியில் இந்தத் துருப்புகள் வந்திருக்கின்றன. எனவே அவை குழப்பமடைந்து எதிரிகளிடம் வீழாமல் இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்.

நமது ஆசானுக்குப் {துரோணருக்கு} பிடித்தவர்களில் சிறந்தவர்களாக எப்போதுமே பாண்டவர்கள் இருக்கின்றனர். தன்னலம் கொண்ட பாண்டவர்கள் நமக்கு மத்தியில் துரோணரை நிறுத்தியிருக்கின்றனர். உண்மையில், இவர் தனது பேச்சால் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறார். ஒருவனது குதிரைகளின் கனைப்பொலியை மட்டுமே கேட்டு, யாரால் ஒரு மனிதனை இப்படிப் போற்ற முடியும்? நடந்தாலும், நின்றாலும் எப்போதும் குதிரைகள் கனைக்கவே செய்யும்; காற்று எல்லாக் காலங்களிலும் வீசத்தான் செய்கிறது. இந்திரன் எப்போதும் மழையைப் பொழிந்து கொண்டுதான் இருக்கிறான். மேகங்களின் கர்ஜனை அடிக்கடி கேட்கப்பட்டே வருகிறது. இவை யாவற்றுக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்ன செய்தான்? இவற்றுக்காக அவன் {அர்ஜுனன்} ஏன் புகழப்பட வேண்டும்? எனவே, (துரோணரின் பங்குக்கு), அவர் அர்ஜுனனுக்கு நல்லது செய்ய விரும்புகிறார் அல்லது கோபத்தால் நம்மீது வெறுப்புக் கொண்டிருக்கிறார்”, என்றான் {கர்ணன்}.

விவேகிகளும், பாவமற்றவர்களும், அனைத்துயிர்களிடமும் கருணை கொண்டவர்களும் தான் ஆசான்கள் ஆவார்கள். எனினும், ஆபத்துக் காலங்களில் அவர்களிடம் {ஆசான்களிடம்} எப்போதும் ஆலோசிக்கக் கூடாது. பேசும் வல்லமை பெற்ற கற்ற மனிதர்கள், ஆடம்பர மாளிகைகளிலும், சபைகளிலும், இன்பத் தோட்டங்களிலுமே தங்கள் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. சபைகளில் அற்புதமான காரியங்களைச் செய்யும் கற்ற மனிதர்கள், அங்கேயோ அல்லது வேள்வி பொருட்கள் சரியாக வைத்து கழுவப்பட வேண்டிய இடங்களிலோதான் தங்கள் நிலையை அடைகின்றனர். பிறர் குறை அறிவது, மனிதர்களின் குணங்களைப் படிப்பது, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களின் அறிவியல், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுகள் மற்றும் பசுக்களின் நோய்களைக் குணப்படுத்துவது, கட்டடங்கள் மற்றும் நுழைவாயில்களைத் திட்டமிடுவது, உணவு மற்றும் பாணங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றிலேயே உண்மையில் கற்ற மனிதர்கள் தங்கள் நிலையை அடைகின்றனர். எதிரியின் வீரத்தைப் புகழும் கற்ற மனிதர்களை அலட்சியம் செய்து, அவ்வெதிரி அழிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய். பசுக்களைப் பாதுகாப்பாக நிறுத்தி, போரிடுவதற்காக இந்தத் துருப்புகளை அணிவகுக்கச் செய். எதிரியிடம் நாம் போரிடும் வகையில், உரிய இடங்களில் காவலர்களை நிறுத்து” என்றான் {கர்ணன்}.

கர்ணனின் சொற்கள்! – விராட பர்வம் பகுதி 48-தான் அர்ஜுனனை அடிக்கப் போகும் விதத்தைக் கர்ணன் விவரிப்பது…

கர்ணன் {துரியோதனனிடம்} சொன்னான், “இந்த அருளப்பட்டவர்கள், அச்சத்தில் இருப்பவர்களாக, துயரத்தில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியாதவர்களாக, போர் செய்ய விருப்பமில்லாதவர்களாக இருப்பதைக் காண்கிறேன். வருவது மத்ஸ்யர்களின் மன்னனாக {விராடனாக} இருந்தாலும், பீபத்சுவாக {அர்ஜுனனாக} இருந்தாலும், பெருகிவரும் கடலைத் தடுக்கும் கரைகளைப் போல நான் அவனைத் தடுப்பேன். எனது வில்லில் இருந்து அடிக்கப்படும் இந்த நேரான பறக்கும் கணைகள், சீறிச் செல்லும் பாம்புகளைப் போல இலக்குத் தப்பாதவையாகும். எனது இலகுவான கரங்களால் அடிக்கப்படும் இந்தக் கூரிய முனைகளும், தங்க இறகுகளும் கொண்ட கணைகள், வெட்டுக்கிளிகளால் மூடப்படும் மரம் போலப் பார்த்தனை {அர்ஜுனனை} எல்லாப்புறங்களிலும் மூடும். இந்த இறகு படைத்த கணைகளால் அழுத்தப்படும் இந்த வில்லின் நாண், தோலாலான எனது கையுறைகளால் ஒலி எழுப்பும். அதனால் கேட்கப்படும் ஒலி இரு முரசுகளின் ஒலியை ஒத்திருக்கும்.

(கடந்த) பதிமூன்று {13} ஆண்டுகளாகத் தவ நோன்புகளில் ஈடுபட்ட பீபத்சுவால் {அர்ஜுனனால்}, இந்த மோதலில் என்னை மென்மையாகவே தாக்க முடியும். நற்குணங்கள் கொண்ட அந்தணனாக மாறியிருக்கும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, என்னால் அடிக்கப்படும் ஆயிரம் கணைகளை அமைதியாகத் தாங்கிக் கொள்வதற்குத் தகுந்த மனிதனாக மாறியிருக்கிறான். உண்மையில், இந்த வலிமைமிக்க வில்லாளி மூவுலகங்களிலும் கொண்டாடப்படுகிறான். மனிதர்களில் முதன்மையான அந்த அர்ஜுனனுக்கு, நானும், எந்த வகையிலும் சளைத்தவனல்ல. என்னால் அடிக்கப்படும் கழுகின் இறகுகளைக் கொண்ட எனது தங்கக் கணைகள் மின்மினி பூச்சிகள் மொய்ப்பதைப் போல இன்று வானத்தில் தெரியட்டும்.

போர்க்களத்தில் அர்ஜுனனைக் கொன்று, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} நான் வாக்குறுதி அளித்திருந்ததும், திரும்பச் செலுத்துவதற்குக் கடினமானதுமான எனது கடனை இன்று செலுத்துவேன். எனது வில்லில் இருந்து அடிக்கப்படும் நேரான கணைகளின் பற்களுக்கிடையில் நிற்பதற்குத் தேவர்களிலோ அசுரர்களிலோ யாரும் இல்லையெனும்போது, வேறு எந்த மனிதன் இருக்க முடியும்? இறகு படைத்து, அழுந்திய கணுக்களுடன் பறக்கும் எனது கணைகள் மின்மினிப் பூச்சிகளாக வானத்தில் தெரியட்டும். இந்திரனின் வஜ்ரத்தைப் போல அவன் கடினமாக இருந்தாலும், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} சக்தியை அவன் {அர்ஜுனன்} பெற்றிருந்தாலும், எரிகொள்ளிகளைக் கொண்டு ஒரு யானையைத் துன்புறுத்துவதைப் போல, நான் இன்று நிச்சயம் பார்த்தனை {அர்ஜுனனை} அடிப்பேன்.

ஒரு பாம்பைக் கருடன் பிடிப்பது போல, பலமிக்கத் தேர்வீரனும், துணிவுமிக்கவனும், ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவனும், {என்னைத்} தடுத்து நிறுத்த இயலாதவனுமான அந்தப் பார்த்தனை {அர்ஜுனனை} நான் பிடிப்பேன். கட்டுக்கடங்காத நெருப்பு போல, வாட்கள், பராசங்கள் மற்றும் கணைகள் என்ற எரிபொருளால் சுடர்விட்டெரிந்து எதிரிகளை எரிக்கும் அந்தப் பாண்டவ நெருப்பு {அர்ஜுனன்}, (நான் வழிநடத்தும்) எண்ணிலடங்கா தேர்களை இடியாகவும், எனது குதிரைகளின் வேகத்தைக் காற்றாகவும் கொண்டிருக்கும் வலிமைமிக்க மேகம் போன்ற நான் அடிக்கும் தொடர்ச்சியான கணை மழையால் அணைக்கப்படும். பாம்புகள் எறும்புப் புற்றைத் துளைப்பதைப் போல, எனது வில்லில் இருந்து புறப்படும் நஞ்சுமிக்கப் பாம்புகளான எனது கணைகள் பார்த்தனின் {அர்ஜுனனின்} உடலைத் துளைக்கும். கோங்கு மலர்களால் { Karnikara flowers} மூடப்படும் மலையைப் போல, நன்கு கடினமாக்கப்பட்டதும், நேரானதும், தங்க இறகுகள் கொண்டதும், பெரும் சக்தி கொண்டதுமான எனது கணைகளால் குந்தியின் மகன் {அர்ஜுனன்} துளைக்கப்படுவதை நீ இன்று பார்ப்பாய்.

துறவியரில் சிறந்தவரான ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த நான், அவற்றின் சக்தியை நம்பி, தேவர்களுடன் கூடப் போரிட முடியும். எனது எறிவேலால் அடிக்கப்பட்டு, அவனது {அர்ஜுனனது} தேரின் கொடியின் மேல் அமர்ந்திருக்கும் குரங்கு, இன்று பயங்கரமாகக் கதறிக் கொண்டு தரையில் விழும். எதிரியின் {அர்ஜுனனின்} கொடிக்கம்பத்தில் அமர்ந்திருக்கும் (மனித சக்திக்கு அப்பாற்பட்ட) உயிரினங்களின் கதறல்கள் இன்று விண்ணை நிறைக்கும். அவை {அந்த உயிரினங்கள்} அனைத்து திக்குகளுக்கும் பறந்து போகும். அர்ஜுனனை அவனது தேரில் இருந்து கீழே வீசி, துரியோதனனின் இதயத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் கணையின் வேரை நான் இன்று பிடுங்குவேன். தேர் உடைந்து, குதிரைகள் கொல்லப்பட்டு, வீரம் குன்றி, பாம்பு போலப் பெருமூச்சு விடும் பார்த்தனை {அர்ஜுனனை}, இன்று கௌரவர்கள் காண்பார்கள். தங்கள் விருப்பப்படி செல்வங்களான பசுக்களைக் கௌரவர்கள் எடுத்துச் செல்லட்டும். ஆனால் அவர்கள் விரும்பினால், தங்கள் தேர்களில் இருந்து கொண்டு, நான் செய்யும் போரைச் சாட்சியாகக் காணட்டும்” என்றான் {கர்ணன்}

கர்ணனிடம் வாதிட்ட கிருபர்! – விராட பர்வம் பகுதி 49-கர்ணனை கிருபர் நிந்திப்பது; அர்ஜுனனின் பராக்கிரமத்தை விவரித்து, அவற்றில் ஒன்றையாவது கர்ணன் செய்திருக்கிறானா என்று கிருபர் அவனை மட்டம்தட்டுவது; எனினும் அறுவரும் சேர்ந்து அர்ஜுனனுடன் போரிட்டே ஆக வேண்டும் என்று கிருபர் சொல்வது…

கிருபர் {கர்ணனிடம்} சொன்னார், “ஓ! ராதேயா {கர்ணா}, உனது கொடிய இதயம் எப்போதும் போரை விரும்புகிறது. பொருட்களின் உண்மை இயல்பை நீ அறிவதில்லை; அதனால் {போரினால்} ஏற்படும் பின்விளைவுகளையும் நீ கணிப்பதில்லை. ஊகித்தறியும்படி சாத்திரங்களில் பல்வேறு விதமான தகுமுறைகள் {expedients வழிமுறைகள்} உண்டு. கடந்த காலத்தை அறிந்தவர்கள் போர் மிகப்பாவகரமானது என்று கருதி, அதை அவற்றில் {சாத்திரங்களில்} சொல்லியிருக்கிறார்கள். காலமும் இடமும் சாதகமாக இருக்கும்போதுதான் படையெடுப்புகள் வெற்றிக்கு வழிவகுக்கும்.

எனினும், தற்போதைய நிகழ்வில், காலம் சாதகமற்று இருப்பதால், நல்ல முடிவுகள் இல்லாது போகும். சரியான காலத்திலும், இடத்திலும் காட்டப்படும் பராக்கிரமம் நன்மையைத் தரும். அதன் {காலம் மற்றும் இடம் ஆகியவற்றின்} சாதகம் மற்றும் பாதகமே ஒரு செயலுடைய வாய்ப்புகளின் தன்மையைத் தீர்மானிக்கிறது. தேர் செய்பவனின் கருத்துப்படி கற்றமனிதர்களால் செயல்பட முடியாது. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால், பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} மோதல் நமக்கு நல்லதல்ல!

குருக்களை {கௌரவர்களை} (கந்தர்வர்களிடம் இருந்து) தனியாகவே அவன் {அர்ஜுனன்} காத்தான். தனியாகவே அவன் அக்னியை நிறைவு கொள்ளச் செய்தான். ஐந்து வருடங்கள் தனியாகவே அவன் (இமயத்தின் மார்பில்} பிரம்மச்சர்ய வாழ்வை நோற்றான். தனது தேரில் சுபத்திரையைக் கடத்திச் சென்ற அவன் {அர்ஜுனன்}, தனியாகவே கிருஷ்ணனை தனிப்போருக்கு அறைகூவி அழைத்தான். தன் முன் காட்டுவாசியாக நின்ற ருத்திரனுடன் {சிவனுடன்} தனியாகவே அவன் போரிட்டான்.

(ஜெயத்ரதனால்) கடத்தி செல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியை} இதே காட்டில்தான் பார்த்தன் மீட்டான். இந்திரனுக்குக் கீழிருந்து ஐந்து வருடங்கள் ஆயுதங்களின் அறிவியலைக் கற்றவன் அவன் {அர்ஜுனன்} ஒருவனே. தனியாகவே அனைத்து எதிரிகளையும் வீழ்த்திய அவன் {அர்ஜுனன்} குருக்களின் {கௌரவர்களின்} புகழைப் பரப்பினான். அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {அர்ஜுனன்}, {ஒருகணத்தில்} கந்தர்வர்களின் மன்னனான சித்திரசேனனையும், மறுகணத்தில் அவனது {சித்திரசேனனின்} ஒப்பற்ற துருப்புகளையும், தனியாகவே போர்க்களத்தில் வீழ்த்தினான். தேவர்களாலும் கொல்லமுடியாதவர்களான நிவாடகவசர்களையும், காலகஞ்சர்களையும் தனியாகவே அவன் தூக்கியெறிந்தான்.

எனினும், ஓ! கர்ணா, தனியாளாகவே இந்தப் பூமியின் பல தலைவர்களை அடக்கிய, அந்தப் பாண்டு மகன்களில் யாராவது ஒருவரைப் போலாவது, நீ என்ன செய்திருக்கிறாய்? போர்க்களத்தில் பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதுவதற்கு இந்திரனே கூடத் தகுதியற்றவனே. எனவே, அர்ஜுனனுடன் போரிட விரும்பும் ஒருவன், மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். உன்னைப் பொறுத்தவரை, நீ உன் வலக்கரத்தை விரித்து, உனது சுட்டுவிரலை நீட்டி, கொடும் நஞ்சு கொண்ட கோபக்காரப் பாம்பின் நச்சுப்பற்களைப் பிடுங்க விரும்புகிறாய். அல்லது தெளிந்த நெய்யை பூசிக் கொண்டு, {பட்டு போன்ற} மென்மையான ஆடை உடுத்திக் கொண்டு, கொழுப்பு, ஊனீர் {இறைச்சியில் கிடைக்கும் கொழுப்பு}, தெளிந்த நெய் ஆகியவற்றை உண்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்குள் {ஊடுருவி, அதைக்} கடந்து செல்ல விரும்புகிறாய்.

தனது கைகளையும், கால்களையும் கட்டிக் கொண்டும், கழுத்தைச் சுற்றி ஒரு பெருங்கல்லைக் கட்டிக் கொண்டும், வெறுங்கையால் கடலைக் கடக்க நினைப்பவர்கள் இங்கே யார் இருக்கிறார்கள்? இத்தகு செயலில் இருக்கும் ஆண்மைதான் என்ன? ஓ! கர்ணா, ஆயுதங்களில் திறமையற்றுப் பலவீனமாக இருப்பவன், ஆயுதங்களில் பலமிக்கவனும் திறமைசாலியுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போரிட விரும்பினால் அவன் மூடனே. நேர்மையற்ற முறையில் நம்மால் ஏமாற்றப்பட்டு, பதிமூன்று {13} வருட வனவாசத்தில் இருந்து விடுபட்ட அந்த ஒப்பற்ற வீரன் {அர்ஜுனன்} நம்மை நிர்மூலமாக்கமாட்டானா? கிணற்றுக்குள் மறைந்திருந்த நெருப்பு போலப் பார்த்தன் {மறைந்து} இருந்த இடத்திற்கு அறியாமையின் காரணமாக வந்ததால், உண்மையில், நாம் பெருத்த ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டோம்.

அவன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் எதிர்க்கப்பட இயலாதவனாக இருப்பினும், நாம் அவனை எதிர்த்துப் போரிட்டே ஆக வேண்டும். எனவே, கவசமணிந்து அணிவகுக்கப்படும் நமது துருப்புகள், தாக்குவதற்குத் தயாராக இருக்கட்டும். துரோணர், துரியோதனன், பீஷ்மர், {கர்ணனாகிய} நீ, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, நாம் ஆகிய அனைவரும் சேர்ந்து பிருதையின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். ஓ! கர்ணா, தனியாகப் போரிட்டு, இப்படித் துடுக்காகச் செயல்பட்டுவிடாதே! நாம் ஆறு தேர்வீரர்களும் ஒன்றுபட்டு, அவனுக்கு இணையானவர்களாகி, வஜ்ரதாங்கியைப் போலக் கடுமையாக இருப்பவனும், போரிடத் தீர்மானத்துடன் இருப்பவனுமான அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். பெரும் வில்லாளிகளான நாம், அணிவகுக்கப்பட்ட நமது துருப்புகளின் உதவியைப் பெற்று, கவனமாக நின்று, தானவர்கள் வாசவனுடன் {இந்திரனுடன்} போரிடுவது போல {அர்ஜுனனிடம்} போரிடுவோம்” என்றார் {கிருபர்}.

கர்ணனைக் கண்டித்த அஸ்வத்தாமன்! – விராட பர்வம் பகுதி 50-தற்பெருமை பேசும் கர்ணனை அஸ்வத்தாமன் கண்டித்தது; துரியோதனன் பாண்டவர்களை ஏமாற்றியதைச் சுட்டிக் காட்டுவது; தான் அர்ஜுனனுடன் போரிட மாட்டேன் என்று சொன்னது………

அஸ்வத்தாமன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, இந்தப் பசுக்கள் இன்னும் வெல்லப்படவில்லை. அல்லது அவை (தங்கள் உரிமையாளரின் ஆட்சிக்குட்பட்ட) எல்லையைக் கடக்கவில்லை. அல்லது அவை இன்னும் ஹஸ்தினாபுரத்தை அடையவில்லை. எனவே, ஏன் நீ தற்பெருமை பேசுகிறாய்? எண்ணிலடங்கா போர்களை வென்று, அபரிமிதமான செல்வத்தை அடைந்து, எதிரிப்படைகளை வீழ்த்திய உண்மையான வீரர்கள் தங்கள் பராக்கிரமம் குறித்து ஒரு வார்த்தையும் பேசமாட்டார்கள். நெருப்புப் பேசாமல் எரிகிறது. பேசாமல்தான் சூரியனும் ஒளிர்கிறான். பேசாமல்தான் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களை இந்தப் பூமி சுமக்கிறது. கண்டனம் இல்லாமல் ஒவ்வொருவரும் செல்வத்தை அடைய நான்கு வகையினருக்குமான அலுவல்கள் சுயம்புவால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

வேதங்களைக் கற்கும் ஓர் அந்தணன், தானே வேள்விகள் செய்து கொண்டு, பிறரது வேள்விகளையும் நடத்திக் கொடுக்க வேண்டும். ஒரு க்ஷத்திரியன், தனது வில்லை நம்பி, தனது வேள்விகளை மட்டும் செய்ய வேண்டும். அவன் மற்றவர்களுக்காக வேள்விகளை நடத்தக்கூடாது. செல்வங்களை ஈட்டும் ஒரு வைசியன், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்குகளைத் தனக்காக மட்டும் செய்து கொள்ள வேண்டும். ஒரு சூத்திரன் பிற மூன்று வகையினருக்கும் சேவை செய்து அவர்களுக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும். மலர்கள் மற்றும் இறைச்சி விற்பதைத் தொழிலாகக் கொண்டு தங்கள் வாழ்வை நடத்துபவர்களைப் பொறுத்தவரை, ஏமாற்றியும் மோசடியும் செய்து அவர்கள் தங்கள் செல்வத்தை ஈட்டிக் கொள்ளலாம்.

எப்போதும் சாத்திரங்களின் விதிப்படி நடந்து கொள்ளும் மேன்மிக்கப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} இந்த முழு உலகத்தின் ஆட்சியையும் பெற்றார்கள். பெரியவர்கள் அவர்களிடம் பகைகொண்டாலும், அவர்களிடம் {அந்தப் பெரியவர்களிடம்} எப்போதும் மரியாதையுடனே அவர்கள் {பாண்டவர்கள்} நடந்து கொள்கிறார்கள். வெட்கங்கெட்ட இந்தத் தீய திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} பகடையாட்டத்தின் மூலம் அடைந்த நாட்டைப் பார்த்து எந்த க்ஷத்திரியன் மகிழ்ச்சி கொள்வான்? இறைச்சி விற்பவன் போல ஏமாற்றுத்தனத்தாலும், மோசடியாலும் செல்வத்தை அடைந்தால், எந்த விவேகியால் அது குறித்துத் தற்பெருமையாகப் பேசிக் கொள்ள முடியும்? {[அதாவது] நீ விவேகி இல்லை என்று கர்ணனிடம் சொல்கிறான் அஸ்வத்தாமன்}

அவர்களது செல்வத்தைத் திருடிக் கொண்டாலும், தனஞ்சயனையோ {அர்ஜுனனையோ}, நகுலனையோ, சகாதேவனையோ எந்தத் தனிப்போரில் {ஒற்றைக்கு ஒற்றையான எந்த மோதலில்} நீ வென்றாய்? யுதிஷ்டிரனையோ, பலசாலிகளில் முதன்மையான பீமனையோ எந்தப் போரில் நீ வென்றாய்? இந்திரப்பிரஸ்தத்தை எந்தப் போரில் நீ வென்றாய்? ஓ! இழிந்த செய்கைகள் செய்பவனே, நீ செய்ததெல்லாம், நோய்வாய்ப்பட்டு ஒற்றையாடையுடன் இருந்த இளவரசியை {திரௌபதியைச்} சபை நடுவே இழுத்து வந்ததுதான். சந்தனம் போன்று மென்மையான பாண்டவ மரத்தின் வேரை நீ வெட்டிவிட்டாய்.

செல்வத்தின் மீது கொண்ட ஆசையால் செயல்பட்டு, பாண்டவர்களை அடிமைகளைப் போல நீ நடத்திய போது, விதுரர் என்ன சொன்னார் என்பதை நினைத்துப் பார்! மனிதர்களும் பிறரும், ஏன் பூச்சிகளும் எறும்புகளும் கூடத் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி பொறுத்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம். {[அதாவது] ஒரு கட்டத்திற்கு மேல் அவையும் தங்கள் சக்திக்கேற்ற கோபத்தை வெளிப்படுத்தும் என்பதைப் பார்க்கிறோம்}. எனினும், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} திரௌபதியின் துன்பங்களைப் பொறுக்க இயலாது. திருதராஷ்டிரன் மகன்களின் அழிவுக்காகவே தனஞ்சயன் {அர்ஜுனன்} இங்கு வந்திருக்கிறான் என்பது நிச்சயம். பெருஞானம் பாதிப்படையும் வகையில் உரையாற்றுவதற்கே நீ தகுந்தவன். ஆனால் எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, நம் அனைவரையும் நிர்மூலமாக்கிவிடுவான் என்பதே உண்மை. தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, ராட்சசர்களோ, {வந்திருப்பது} எவராக இருப்பினும் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} பீதியடைந்து போரில் இருந்து விலகிவிடுவானா?

கோபத்துடன் அவன் யார் மீது விழுகிறானோ, கருடனின் பாரத்தில் அழுந்தும் மரத்தைப் போல அவனை வீழச் செய்வான். பராக்கிரமத்தில் உன்னைவிட மேன்மையானவனும், தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} நிகரான வில்லாளியும், போரில் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நிகரானவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} யார் தான் புகழ மாட்டார்கள்? தெய்வீக ஆயுதங்களை தெய்வீக ஆயுதங்களாலும், மனித ஆயுதங்களை மனித ஆயுதங்களாலும் முறியடிக்கும் அர்ஜுனனுக்கு எந்த மனிதன் இணையாக முடியும்? மகன் என்ற ஸ்தானத்திற்குச் சீடன் எவ்வகையிலும் குறைவில்லாதவன் என்று சாத்திரங்களை அறிந்தவர்கள் தீர்மானிக்கின்றனர். {ஒரு மகனைக் காட்டிலும் சீடன் குறைந்தவனல்ல என்று சாத்திரங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்}. அதனால்தான் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} துரோணருக்குப் பிடித்தமானவனாக {மகனைப் போன்று பிடித்தமான சீடனாக} இருக்கிறான்.

பகடையாட்டத்தின் போது கைக்கொண்ட அதே வழிகளை இப்போது கைக்கொள். இந்திரப்பிரஸ்தத்தைக் கவர்ந்ததைப் போல, திரௌபதியை சபைக்கு நீ இழுத்து வந்ததைப் போல அதே வழிகளைக் கைக்கொள்! க்ஷத்திரிய வகைக் கடமைகளை நன்கு அறிந்தவனும் விவேகம் நிறைந்தவனும், காந்தார இளவரசனும், ஏமாற்றுகரச் சூதாடியுமான இந்த உனது மாமன் சகுனி இப்போது போரிடட்டும்! எனினும், காண்டீவம், கிருதம் {பகடைக்காயின் நான்கு எண்ணுள்ள பக்கம்} என்றும், துவாபரம் {பகடைக்காயின் இரண்டு எண்ணுள்ள பக்கம்} என்றும் பகடைக்காய்களை வீசாது. ஆனால் அது {காண்டீவம்} சுடர்விட்டெரியும் கூரிய முனை கொண்ட எண்ணற்ற கணைகளை அடிக்கும்.

காண்டீவத்தில் இருந்து அடிக்கப்படும் கழுகு இறகு கொண்டதும் சக்திமிக்கதுமான கடும் கணைகள் மலைகளைக் கூடத் துளைக்கும். யமன் என்ற பெயரைக் கொண்ட அனைத்தையும் அழிப்பவனும், வாயுவும், குதிரை முகம் கொண்ட அக்னியும் கூடச் சில மிச்சங்களை விட்டுச் செல்வார்கள். ஆனால் கோபம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} அதைக் கூட விடமாட்டான் {மிச்சமில்லாமல் அழிப்பான்}. உனது மாமனின் {சகுனியின்} துணை கொண்டு, எப்படிச் சபையில் பகடை விளையாடினாயோ, அதே போல அந்தச் சுபலனின் மகனால் {சகுனியால்} பாதுகாக்கப்பட்டு இந்தப் போரில் நீ போரிட்டுக் கொள். போரிடுவதாகத் தீர்மானித்தால் ஆசான் {கிருபர்} போரிட்டுக் கொள்ளட்டும். எனினும், நான் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} போரிட மாட்டேன். பசுக்களின் பாதையைப் பற்றிக் கொண்டு மத்ஸ்ய மன்னன் வந்தால், அவனுடன் போர் புரிய வேண்டும் என்பதற்காகவே உண்மையில் நாம் வந்தோம்” என்றான் {அஸ்வத்தாமன்}.

கங்கையின் மகனே உண்மையைச் சொல்லும்! – விராட பர்வம் பகுதி 51-பீஷ்மர் துரோணரிடம் அஸ்வத்தாமனிடமும் கோபம் தணியச் சொல்வது; அஸ்வத்தாமன் என்னிடம் சொல்லாதீர் என்பது; துரியோதனன் துரோணரின் கோபத்தைத் தணிப்பது; துரோணர் பாண்டவர்களின் வனவாச காலம் முடிந்து விட்டதா என்பதைப் பீஷ்மரே சொல்ல வேண்டும் என்று சொன்னது…

பீஷ்மர் சொன்னார், “துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} நன்றாகக் கவனித்திருக்கிறான், கிருபரும் சரியாகவே கவனித்திருக்கிறார். கர்ணனைப் பொறுத்தவரை, க்ஷத்திரிய வகையின் கடமைகளைக் கருத்தில் கொள்வதால் மட்டுமே அவன் {கர்ணன்} போரிட விரும்புகிறான். ஞானம் கொண்ட எந்த மனிதனும் ஆசானைப் பழிக்கலாகாது. எனினும், காலத்தையும் இடத்தையும் கருத்தில் கொள்ளும் நான், நாம் போரிட வேண்டும் என்றே கருதுகிறேன். தங்கள் சிரமகாலத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் ஐந்து பிரகாசமிக்கச் சூரியன்களைப் போன்ற, ஐந்து வீரப் போராளிகளை எதிரிகளாகக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் {துரியோதனன்} ஏன் குழம்பமாட்டான்? அறநெறிகளை அறிந்தவர்களே கூடத் தங்கள் சுய விருப்பங்களில் குழப்பம் கொள்கின்றனர். ஓ! மன்னா {துரியோதனா}, என் சொற்களை நீ ஏற்றாலும், ஏற்காவிடினும் அதற்காகவே நான் இதைச் சொல்கிறேன்.

(தளரும்) நமது வீரம் எழுச்சியடையவே கர்ணன் உன்னிடம் இப்படிச் சொன்னான். ஓ! ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, உன்னைப் பொறுத்தவரை, அனைத்தையும் மன்னிப்பாயாக. ஆபத்து அருகில் இருக்கிறது. குந்தியின் மகன் {அர்ஜுனன்} வந்திருக்கும்போது, {நமக்குள்} சண்டையிட இது நேரமில்லை. அனைத்தும் {அஸ்வத்தாமனான} உன்னாலும், ஆசானான கிருபராலும் பொறுத்துக்கொள்ளப்பட வேண்டும். சூரியனில் இருக்கும் ஒளி போல, உன்னிடம் அனைத்து ஆயுதங்களின் திறமையும் வசிக்கின்றன. சந்திரனில் இருந்து அழகு பிரிக்கப்படாதது போல, வேதங்கள் மற்றும் பிரம்ம ஆயுதம் ஆகிய இரண்டும் உன்னில் நிறுவப்பட்டுள்ளன. ஒரு பொருளில் {மனிதனில்} நான்கு வேதங்கள் வசிப்பதையும், மற்றொன்றில் க்ஷத்திரிய குணங்கள் வசிப்பதையும் நாம் எப்போதும் காண்கிறோம்.

பாரதக் குல ஆசானிடமும் {துரோணரிடம்}, அவரது மகனிடமும் {அஸ்வத்தாமனான உன்னிடம்} தவிர வேறு எந்த மனிதனுக்குள்ளும் அவ்விரண்டும் ஒன்றாக வசிப்பதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இதையே நான் நினைக்கிறேன். வேதாந்தங்களிலோ, புராணங்களிலோ, பழம் வரலாறுகளிலோ, ஓ! மன்னா {துரியோதனா}, ஜமதக்னியைத் {பரசுராமரைத்} தவிர, துரோணரைவிட மேலானவனாக வேறு எவன் இருக்கிறான்? வேதங்களுடன் சேர்ந்த பிரம்ம ஆயுதம் எனும் கலவை வேறு எங்கும் காணப்படுவதில்லை. ஓ! ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, பொறுத்துக்கொள். ஒற்றுமையின்மைக்கு இது நேரமல்ல. நாம் அனைவரும் ஒன்றுபட்டு, {எதிர்த்து} வந்து கொண்டிருக்கும், இந்திரனின் மகனிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவோம். ஞானம் கொண்ட மனிதர்கள் நிறைந்த ஒரு படைக்கு நேரும் அழிவுகள் அனைத்திலும், தலைவர்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையே {ஒற்றுமையின்மையால் ஏற்படும் அழிவே} மோசமானதாகும்” என்றார் {பீஷ்மர்}.

அதற்கு அஸ்வத்தாமன் {பீஷ்மரிடம்}, “ஓ! மனிதர்களில் காளையே {பீஷ்மரே}, இந்த உமது அவதானிப்புகள் எங்கள் முன்னிலையில் சொல்லத்தக்கதல்ல; எனினும், கோபத்தில் நிறைந்திருக்கும் ஆசான் {துரோணர்}, அர்ஜுனனின் நற்குணங்களைக் குறித்துப் பேசினார். ஒருவனுடைய ஆசானின் குறைகள் கூடச் சுட்டிக்காட்டப்படலாம் எனும்போது, எதிரியின் நற்குணங்களையும் {நாம்} ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே, தனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு, ஒருவன் தனது மகன் அல்லது சீடனின் தகுதிகளை அறிவிக்க வேண்டும்” என்றான் {அஸ்வத்தாமன்}.

அதற்குத் துரியோதனன், “ஆசான் தனது மன்னிப்பை அருளட்டும். அமைதி திரும்பட்டும். நம்மில் ஒருவராக ஆசான் {துரோணர்} இருக்கும்போது, (தற்போதையை அவசர நிலையில்) என்னவெல்லாம் செய்யப்பட வேண்டுமோ, அவை அனைத்தும் ஏற்கனவே செய்யப்பட்டதாகவே தெரிகிறது” என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, கர்ணன், கிருபர், உயர் ஆன்ம {மகாத்மாவான} பீஷ்மர் ஆகியோரின் உதவியுடன் துரியோதனன், துரோணரைத் சமாதானப் படுத்தினான் {அவரது கோபத்தைத் தணித்தான்}.”

துரோணர், “சந்தனு மகனான பீஷ்மர் பேசிய முதல் வார்த்தைகளிலேயே நான் சமாதானமடைந்துவிட்டேன். போர்களத்தில் துரியோதனனைப் பார்த்தன் {அர்ஜுனன்} அணுகமுடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்படட்டும். துடுக்குத்தனம் மற்றும் தீர்மானமற்ற தன்மை ஆகியவற்றின் விளைவாக, மன்னன் துரியோதனன் எதிரியால் சிறைபிடிக்கப்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். வனவாசத்தின் குறித்த காலம் முடிவதற்கு முன்னரே அர்ஜுனன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டான் என்பது உறுதி. அதே போலவே, பசுக்களை மட்டும் மீட்டுக் கொண்டு, இன்று (நமது) இந்தச் செயல்களை மன்னித்துவிடமாட்டான். எனவே, நமது துருப்புகளை வீழ்த்தி, திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தாக்குவதில், அவன் {அர்ஜுனன்} வெல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். (குறித்த வனவாச காலத்தின் நிறைவில் உள்ள சந்தேகத்தோடு) என்னைப் போலவே முன்பு துரியோதனனும் சொன்னான். இதை மனதில் கொண்டு, எது உண்மை என்பதைச் சொல்வதே கங்கையின் மகனுக்குத் {பீஷ்மருக்குத்} தகும்” என்றார் {துரோணர்}.

நல்லதோ அல்லதோ விரைந்து செய்! – விராட பர்வம் பகுதி 52-வனவாசத்தின் குறித்த காலம் சரியாக முடிந்தது என்று பீஷ்மர் உரைப்பது; பாண்டவர்களின் பெருமையைச் சொல்வது; நல்லதோ அல்லதோ அதை விரைந்து செய்யுமாறு துரியோதனனை பீஷ்மர் பணித்தது; பாண்டவர்களுக்கு நாட்டைக் கொடுக்க மாட்டேன் என்று துரியோதனன் சொல்வது; பீஷ்மர் கூறிய ஆலோசனை; பீஷ்மர் படையை அணிவகுக்கத் தொடங்கியது…

பீஷ்மர் சொன்னார், “கலைகள் {1.6 நிமிடம்}, காஷ்டைகள் {3.2 விநாடிகள்}, முகூர்த்தங்கள் {48 நிமிடங்கள்}, நாட்கள் {30 முகூர்த்தங்கள்}, அரைத்திங்கள்கள் {15 நாட்கள்} [1], மாதங்கள் {30 நாட்கள்}, நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} {இரண்டு மாதங்கள்}, ஆண்டுகள் {360 நாட்கள் [கவனிக்க: 365 நாட்கள் அல்ல]} ஆகிய பிரிவுகளைக் கொண்டு காலச்சக்கரம் [2] சுழன்று வருகிறது. அதில் வரும் கூடுதல் பகுதிகள் {காலாதிக்யம்} மற்றும் வானத்தின் கோள்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றின் விளைவாக, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் இரண்டு மாதங்கள் கூடுகின்றன. இவ்வழியில் கணக்கிட்டால் பதிமூன்று வருடங்களுக்கு ஐந்து மாதங்களும் பனிரெண்டு நாட்களும் அதிகமாக வரும் எனத் தெரிகிறது. எனவே, பாண்டுவின் மகன்கள் வாக்குறுதி அளித்ததுபோல, அந்தக் காலம் அவர்களால் சரியாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. {அந்தக் குறிப்பிட்ட காலம் நேற்றே முடிந்துவிட்டது}.

இதை உறுதிப்பட அறிந்ததால்தான் பீபத்சு {Vibhatsu_அர்ஜுனன்} இங்கே தோன்றியிருக்கிறான். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் உயர் ஆன்மா கொண்டவர்களும் {மகாத்மாக்களும்}, சாத்திரங்களின் பொருள் அறிந்தவர்களும் ஆவார்கள். யுதிஷ்டிரனைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்ட அவர்கள் அறத்தில் இருந்து எப்படி விலகுவார்கள்? குந்தியின் மகன்கள் எப்போதும் சலனமடைய {மோகம் கொள்ள} மாட்டார்கள். அரிதான சாதனையை அவர்கள் அடைந்துவிட்டார்கள். நியாயமற்ற முறையில் தங்கள் நாட்டை அடைய வேண்டும் என்று நாட்டங்கொண்டிருந்தால், அந்தக் குருக்குல வழித்தோன்றல்கள் {பாண்டவர்கள்}, பகடையாட்டம் நடைபெற்ற நேரத்திலேயே தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அறத்தின்கண் கட்டுப்பட்டு, க்ஷத்திரிய வகைக்குரிய தங்கள் கடமையில் இருந்து அவர்கள் {அன்று} வழுவாதிருந்தார்கள்.

அவர்கள் பொய்மையுடன் நடந்து கொள்வதாகக் கருதுபவன் நிச்சயம் தோல்வியை அடைவான். பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்}, பொய்மைக்குப் பதில் மரணத்தையே விரும்புவார்கள். {மரணத்தை அடைந்தாலும் அடைவார்களேயொழிய பொய்யை விரும்ப மாட்டார்கள்}. எனினும், நேரம் வரும்போது, சக்ரனைப் {இந்திரனைப்} போன்ற சக்தி கொண்ட மனிதர்களில் காளையரான அந்தப் பாண்டவர்கள், தங்களுடையவை எவையும் வஜ்ரதாங்கியால் {இந்திரனால்} பாதுகாக்கப்பட்டாலும், அவற்றை {தங்கள் உடைமைகளை} விடமாட்டார்கள். ஆயுதங்களைத் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களை {பாண்டவர்களை}, நாம் போரில் எதிர்க்க வேண்டியிருக்கிறது.

எனவே, நம்முடைய உடைமைகளை எதிரி கையகப்படுத்தமுடியாதவாறு, நல்லவர்கள் மற்றும் நேர்மையாளர்களின் அனுமதியோடு கூடிய சாதகமான ஏற்பாடுகள் செய்யப்படட்டும். ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! கௌரவா {துரியோதனா}, “நாம் நிச்சயம் வெல்வோம்” என்று இருதரப்பில் எந்தத் தரப்பாலும் சொல்ல முடிந்த எந்தப் போரையும் நான் இதுவரை கண்டதில்லை. ஒரு போர் ஏற்படும்போது, அங்கே {ஒரு தரப்புக்கு} வெற்றியோ தோல்வியோ அல்லது செழுமையோ சிரமமோ {நிச்சயம்} ஏற்படும். போர்க்களத்தில் இருக்கும் ஒரு தரப்பு இவ்விரண்டில் ஒன்றை நிச்சயம் அடைய வேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, இப்போது போர் உகந்ததாக இருப்பினும், அறத்தின்கண் நிலையற்றோ அல்லாமலோ இருப்பினும் {உகந்தது இல்லாவிடினும்}, உனது ஏற்பாடுகளை விரைந்து செய். தனஞ்சயன் {Dhananjaya_அர்ஜுனன்} அருகில் வந்துவிட்டான்” என்றார் {பீஷ்மர்}.

அதற்குத் துரியோதனன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா {பீஷ்மரே}, பாண்டவர்களுக்கு அவர்களது நாட்டை நான் திரும்பத் தரமாட்டேன். எனவே, போருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தாமதமில்லாமல் நடைபெறட்டும்” என்றான் {துரியோதனன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்}, “நான் சரியாகக் கருதுவதை, உனக்கு விருப்பமிருந்தால் கேள். உனக்கு எது நன்மையோ அதையே நான் எப்போதும் சொல்ல வேண்டும். ஓ! கௌரவா {துரியோதனா}, நேரத்தை இழக்காமல் {காலவிரையம் செய்யாமல்} படையில் நாலில் ஒரு பங்கை அழைத்துக் கொண்டு தலைநகர் நோக்கி நீ முன்னேறு. படையின் மற்றொரு நாலில் ஒரு பாகம், பசுக்களுக்குக் காவலாக அணிவகுத்துச் செல்லட்டும். {மீதமுள்ள} பாதித் துருப்புகளைக் கொண்டு, நாங்கள் அந்தப் பாண்டவனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். நான், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமன் மற்றும் கிருபர் ஆகியோர் சேர்ந்து, நம்மை அணுகிவரும் பீபத்சுவையோ {அர்ஜுனையோ}, மத்ஸ்யர்களின் மன்னனையோ {விராடனையோ}, ஏன் இந்திரனையோ கூட, தீர்மானத்துடன் எதிர்த்து நிற்போம். உண்மையில், துள்ளும் கடலைத் தாக்குப்பிடிக்கும் கரைகளைப் போல, அவர்களில் எவரையும் நாங்கள் எதிர்த்து நிற்போம்” என்றார் {பீஷ்மர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம {மகாத்மாவான} பீஷ்மர் பேசிய இச்சொற்கள் அவர்களுக்கு ஏற்புடையனவாக இருந்தன. கௌரவர்களின் மன்னன் {துரியோதனன்}, அதற்குத் தக்க, தாமதமில்லாமல் செயல்பட்டான். மன்னனையும் {துரியோதனனையும்}, பசுக்களையும் அனுப்பிவிட்ட பிறகு, பீஷ்மர் படைகளை அணிவகுக்கத் தொடங்கினார். ஆசானிடம் {துரோணரிடம்} பேசும் வகையில் அவர் {பீஷ்மர்}, “ஓ! ஆசானே {துரோணரே}, நீர் {படைவரிசையின்} நடுவில் நில்லும், அஸ்வத்தாமன் இடது பக்கத்தில் நிற்கட்டும், சரத்வானின் மகனான ஞானமிக்கக் கிருபர் {படையின்} வலது பக்கத்தைப் பாதுகாக்கட்டும். கவசம் பூண்டிருக்கும் சூத குலத்தின் கர்ணன் முன்னணியில் நிற்கட்டும். நான் படையனைத்தையும் பாதுகாத்துக் கொண்டு பின்புறத்தில் நிற்பேன்” என்றார் {பீஷ்மர்}.

துரோணரை வணங்கிய அர்ஜுனன்! – விராட பர்வம் பகுதி 53-உத்தரனுக்குத் துரோணரையும், பிற கௌரவத் தலைவர்களையும் அர்ஜுனன் காட்டியது; அம்புகள் இரண்டை துரோணரின் பாதத்தில் விழச் செய்து, அர்ஜுனன் துரோணரை வணங்கியது; அங்கே துரியோதனன் இல்லாததைக் கண்டு உத்தரனிடம் தேரைத் திருப்பச் சொன்னது; அர்ஜுனனின் நோக்கத்தை அறிந்த கிருபர் அவனைப் பக்கவாட்டில் தாக்கலாம் என்றது; அர்ஜுனனின் சரமாரி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, வரிசைப்படி தங்கள் நிலைகளில் கௌரவர்கள் நின்ற பிறகு, அர்ஜுனன் தனது தேர் சடசடப்பின் எதிரொலி காற்றில் நிரம்பும் வகையில் அவர்களை நோக்கி விரைந்து வந்தான். குருக்கள் {கௌரவர்கள்} அவனது கொடியைக் கண்டனர்; தேர் சடசடப்பின் எதிரொலியையும் நீட்டிவிரிக்கப்பட்ட காண்டீவத்தின் நாணொலியையும் தொடர்ச்சியாகக் கேட்டனர். இவை யாவையும் கவனித்து, அந்தப் பெரும் தேர்வீரனான காண்டீவந்தாங்கியைக் {அர்ஜுனனைக்} கண்ட துரோணர், “தூரத்தில் ஒளிர்ந்து வருவது பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடியாகும். இஃது அவனது தேரின் ஒலி, பயங்கரமாகக் கர்ஜனை செய்வது {அவனது கொடியிலிருக்கும்} அந்தக் குரங்காகும். உண்மையில் அந்தக் குரங்கு நமது துருப்புகளைப் பயத்தில் பீடிக்கச் செய்கிறது. இடியொலி போல நாணொலியெழுப்பிவரும் விற்களில் சிறந்த வில்லான காண்டீவத்தை இழுக்கும் தேர்வீர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} அந்த அற்புதமான தேரில்தான் இருக்கிறான்.

எனது பாதங்களில் வந்து விழும் இவ்விரு கணைகளை இதோ பாருங்கள். மற்றும் இரண்டு கணைகள் வெறுமனே எனது காதுகளைத் தொட்டுச் செல்கின்றன. வனவாச காலத்தை நிறைவு செய்து, பல அற்புத சாதனைகளை அடைந்திருக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்னை வணங்கி, எனது காதுகளில் மெதுவாகப் பேசுகிறான் [1]. ஞானம் கொண்டவனும், உறவினர்களால் விரும்பப்படுபவனும், நீண்ட காலம் கழித்து நம்மால் பார்க்கப்படுபவனும் பாண்டுவின் மகனுமான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உண்மையில் அழகாலும், அருளாலும் சுடர்விடுகிறான். தேர், கணைகள், கையுறைகள், அம்பறாத்தூணி, சங்கு, கொடி, கவசம், கிரீடம், கூன்வாள், வில் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பிருதையின் மகன் {son of Pritha – குந்தியின் மகன் அர்ஜுனன்}, வேள்விக்கரண்டிகள் சூழ, தெளிந்த நெய்யை உண்ணும் (ஹோம) நெருப்பு போலச் சுடர்விட்டு ஒளிர்கிறான்.” என்றார் {துரோணர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “போருக்குத் தயாராக இருக்கும் குருக்களை {கௌரவர்களைக்} கண்ட அர்ஜுனன், மத்ஸ்யன் மகனிடம் {உத்தரனிடம்} அச்சூழ்நிலைக்கு ஏற்ற சொற்களில், “ஓ! தேரோட்டி {உத்தரா}, எனது கணைகள் எதிரியைச் சென்றடையும் தூரத்தில் குதிரைகளை நிறுத்து. அதேவேளையில், இந்தப் படையின் மத்தியில் அந்தக் குருகுலத்தின் இழிந்த பாவி {துரியோதனன்} எங்கிருக்கிறான் என்பதை நான் காணும்படி செய். இவர்கள் அனைவரையும் கருத்தில் கொள்ளாமல், அந்த இளவரசர்களில் வீணனைத் {துரியோதனனைத்} தனித்திருக்கச் செய்து, அவன் தலையில் விழுவேன். அந்தப் பாவியை {துரியோதனனை} வீழ்த்திவிட்டால், தாங்கள் வீழ்ந்துவிட்டதாகவே பிறர் கருதுவார்கள்.

துரோணர் அதோ நிற்கிறார், அவருக்கு அடுத்து அவரது மகன் {அஸ்வத்தாமன்} நிற்கிறார். அங்கே பெரும் வில்லாளிகளான பீஷ்மர், கிருபர் மற்றும் கர்ணன் ஆகியோர் இருக்கின்றனர். எனினும், நான் மன்னனைக் {துரியோதனனைக்} காணவில்லை. தனது உயிரைக் காத்துக்கொள்ள அவன் {துரியோதனன்}, தெற்கு சாலையின் வழியே, கவர்ந்த பசுக்களை அழைத்துக் கொண்டு பின்வாங்கிக் கொண்டிருக்கிறான் என்று சந்தேகிக்கிறேன். இந்தத் தேர்வீரர்களின் வரிசையைத் தவிர்த்து, சுயோதனன் {Suyodhana _ துரியோதனன்} இருக்கும் இடத்திற்குச் செல். போர் பலனற்றதாகிவிடும் என்பதால், ஓ! விராடனின் மகனே {உத்தரா}, அங்கே அவனிடம் போரிட்டு, அவனை வீழ்த்திய பிறகு, பசுக்களை அழைத்துக் கொண்டு திரும்பி வரலாம்” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட விராடனனின் மகன் {உத்தரன்}, சற்று முயன்று குதிரைகளை நிறுத்தி, குரு குல காளையர் இருக்கும் இடத்தில் இருந்து கடிவாளத்தை ஓர் இழு இழுத்து, அவற்றைத் துரியோதனன் இருக்கும் இடம் நோக்கிச் செலுத்தினான். அப்படி அர்ஜுனன் அந்தப் படையின் அடர்த்தியான வரிசையைத் தவிர்த்து விட்டுச் சென்ற போது, அவனது நோக்கத்தை அறிந்த கிருபர், தனது தோழர்களிடம், “பீபத்சு {அர்ஜுனன்}, மன்னனைத் {துரியோதனனைத்} தவரித்து வேறு யாரிடமும் நிற்க விரும்பமாட்டான். முன்னேறிச் செல்லும் அந்த வீரனின் {அர்ஜுனனின்} பக்கவாட்டுப் பகுதியை நாம் தாக்குவோம். கோபத்தால் எரிந்து கொண்டு, எவர் துணையும் அற்று வரும் அவனிடம்{அர்ஜுனனிடம்} ஆயிரம் கண் தெய்வத்தையோ {இந்திரனையோ} அல்லது தேவகியின் மகனான கிருஷ்ணனையோ தவிர வேறு யாரும் {தனியாக} மோத முடியாது. பார்த்தன் {அர்ஜுனன்} என்ற பெருங்கடலில் வீழும் படகைப் போலத் துரியோதனன் மூழ்கிவிட்டால் இந்தப் பசுக்களாலோ, இந்த அபரிமிதமான செல்வத்தாலோ நமக்கு என்ன பயன்?” என்றார் {கிருபர்}.

அதேவேளையில், அந்தக் குறிப்பிட்ட படைப்பிரிவை நோக்கி முன்னேறிய பீபத்சு {அர்ஜுனன்}, தனது பெயரை விரைந்து அறிவித்துக் கொண்டு, வெட்டுக்கிளிகள் போலத் தடித்திருந்த அவனது அம்புகளால் அத்துருப்புகளை மூடினான். பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட எண்ணற்ற கணைகளால் மூடப்பட்ட எதிரி வீரர்களால் எதையும் காணமுடியவில்லை. பூமியும், வானமும் கூட அதனால் {அம்புகளால்} மறைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. போருக்குத் தயாராக இருந்த வீரர்கள் குழம்பிப் போனதால் யாராலும் களத்தை விட்டு ஓடிப்போகவும் முடியவில்லை. பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} கரங்களின் இலகுத்தன்மையைக் கண்ட அவர்கள் {கௌரவப் படையினர்} அனைவரும் மனதுக்குள் {அச்செயலைப்} பாராட்டினார்கள்.

பிறகு அர்ஜுனன், எதிரிகளை எப்போதுமே மயிர்ச்சிலிர்க்கச்செய்யும் தனது சங்கை எடுத்து ஊதினான். விற்களில் சிறந்த தனது வில்லில் நாணொலி எழுப்பி, தனது கொடியில் இருந்து உயிரினங்களை மேலும் பயங்கரமாகக் கர்ஜிக்கச் செய்தான். அந்தச் சங்கொலியாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும், காண்டீவத்தின் நாணொலியாலும், கொடியில் இருந்த மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயிரினங்களின் கர்ஜனையாலும், பூமியே நடுங்கத் தொடங்கியது. பிறகு தெற்கு சாலையில் சென்று கொண்டிருந்த பசுக்கள் உயர்ந்த தங்கள் வால்களை அசைத்து, ஒன்றாக இறங்கித் திரும்பின” என்றார் {வைசம்பாயனர்}.

புறமுதுகிட்டான் கர்ணன்! – விராட பர்வம் பகுதி 54-அர்ஜுனன் தனது தேரை கர்ணனிடம் கொண்டு செல்லுமாறு உத்தரனைப் பணித்தது; கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; போர்க்களத்தை விட்டு ஓடிய கர்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “எதிரிக் கூட்டத்தைச் சீர்குலைத்து, பசுக்களை மீட்ட பிறகு, மீண்டும் போரிட விரும்பிய அந்த வில்லாளிகளில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, துரியோதனனை நோக்கி முன்னேறினான். மத்ஸ்யர்களின் நகரத்தை நோக்கி பசுக்கள் முரட்டுத்தனமாகத் திரும்புவதைக் கண்ட குரு வீரர்களில் முதன்மையானவர்கள் {கௌரவர்கள்}, கிரீடி {Kiritin – அர்ஜுனன்} ஏற்கனவே வெற்றியை அடைந்துவிட்டதாகவே கருதினார்கள். பிறகு, துரியோதனனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த அர்ஜுனன் மீது, அவர்கள் {கௌரவர்கள்} அனைவரும் தீடிரெனப் பாய்ந்தனர்.

எண்ணற்ற கொடிகள் பறக்க, அவர்களது எண்ணற்ற பிரிவுகள் போருக்காக வரிசையாக நிற்பதைக் கண்ட அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, மத்ஸ்ய மன்னனின் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்கக் கடிவாளங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த வெள்ளைக் குதிரைகளை, அவற்றால் முடிந்த அளவு சிறப்பாக, இச்சாலையின் வழியே செலுத்துவாயாக. நான் அந்தக் குரு சிங்கங்களின் கூட்டத்தை அணுகும் வகையில் நன்றாக முயற்சி செய். வேறு யானையுடன் மோத விரும்பும் யானை போல அந்தத் தீய ஆன்மாக் கொண்ட சூதனின் மகன் {கர்ணன்}, என்னுடன் போரிட ஆவல் கொண்டிருக்கிறான். ஓ! இளவரசே {உத்தரா}, துரியோதனனின் ஆதரவின் கீழ், கர்வத்துடன் வாழும் அவனிடம் {கர்ணனிடம்} என்னை அழைத்துச் செல்.

இப்படிச் சொல்லப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, தங்கக்கவசம் பூண்டிருந்தவையும், காற்றின் வேகம் கொண்டவையுமான அந்தப் பெரிய குதிரைகளைச் செலுத்தி, போர்க்களத்தின் மத்தியில் அந்தப் பாண்டவனை {அர்ஜுனனை} அழைத்துச் சென்றான். இதைக் கண்ட சித்திரசேனன், சங்கிராமஜித்தன் {கர்ணனின் தம்பி}, சத்ருசஹன், மற்றும் ஜயன் ஆகிய தேர்வீரர்கள் கர்ணனுக்கு உதவ விரும்பி, முன்னேறி வந்து கொண்டிருந்த பாரதகுல வீரனை {அர்ஜுனனை} எதிர்த்து, தங்கள் நீண்ட கணைகளுடன் விரைந்தார்கள். பிறகு, கோபத்தால் எரிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, தனது வில்லில் இருந்து நெருப்பு போன்ற கணைகளை அடித்தான். அங்கே கூடியிருந்த குருக்களில் {கௌரவர்களில்} காளையருக்குச் சொந்தமான தேர்வரிசை காடு எரிவது போல எரிந்தது.

பிறகு, போர் மிகவும் உக்கிரமடையத் தொடங்கியது. பீமனுக்குத் தம்பியும், தேர்வீர்களில் முதன்மையானவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} மீது, தனது தடித்த நீண்ட கணைகளைப் பொழிந்து கொண்டேயிருந்த குரு வீரனான விகர்ணன், தனது தேரில் அவனை {அர்ஜுனனை} அணுகினான். கடினமான நாணால் கட்டப்பட்டிருந்த விகர்ணனின் வில்லை அறுத்த அர்ஜுனன், பிறகு, அவனது கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான். தனது கொடிக்கம்பம் அறுபட்டதைக் கண்ட விகர்ணன், {போர்க்களத்தை விட்டு} விரைவாக ஓடினான்.

விகர்ணன் ஓடிப்போனதும், சினத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாத சத்துருந்தபன், எதிரிகளைத் தடுப்பவனும், மனித சாதனைக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்பவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} அடிக்கத் தொங்கினான். குரு {கௌரவப்} படை வரிசைக்கு மத்தியில் மூழ்கியவன் போல இருந்த அர்ஜுனன், அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மன்னன் சத்ருந்தபனால் துளைக்கப்பட்டான். பிறகு, அவன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அவனை {சத்ருந்தபனை} ஐந்து கணையால் தாக்கி, அவனது தேரோட்டியை பத்து கணைகளால் தாக்கினான். பிளக்கக் கடினமான தடித்த கவசம் பூண்டிருந்த சத்ருந்தபனை அந்தப் பாரதக் குலக் காளை {அர்ஜுனன்} அடித்த கணை துளைத்தது. காற்றால் கிழிக்கப்பட்டு மலைமேல் இருந்து விழும் மரம் போல. அந்தப் போர்க்களத்தில் அவன் {சத்ருந்தபன்} இறந்து விழுந்தான்.

மனிதர்களில் துணிச்சல் மிக்கவனால் {அர்ஜுனனால்}, போரில் சிதைக்கப்பட்ட அந்த மனிதர்களில் வீரக்காளைகள் {கௌரவர்கள்}, அண்ட அழிவின் போது வீசும் கடும் காற்றால் அசைக்கப்பட்ட பெரும் கானகம் போல, தடுமாற்றத்துடன் நடுங்க ஆரம்பித்தனர். வாசவனின் {இந்திரனின்} மகனான பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் தாக்கப்பட்டவர்களும், வாசவனின் {இந்திரனின்} சக்தியைக் கொண்டவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கரிய கவசம் பூண்டவர்களும், முழுதாய் வளர்ந்த இமாலய யானைகளைப் போன்றவர்களும், பெரும் கொடையாளிகளுமான, அந்த மனிதர்களில் நன்கு உடுத்திய வீரர்கள், {அர்ஜுனனிடம்} தோல்வியுற்று, உயிரிழந்து, தங்கள் {உடலின்} நீளத்தால் தரையை அளக்க ஆரம்பித்தனர்.

கோடைகாலத்தின் நெருக்கத்தில் {முதுவேனிற்காலத்தில்} பொங்கியெழும் தீ, கானகத்தை எரிப்பது போலப் பொங்கியெழுந்த, அந்த மனிதர்களில் முதன்மையானவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் தனது எதிரிகளை அனைத்துப் புறங்களிலும் கொன்று கொண்டிருந்தான். மேகக்கூட்டங்களைக் கலைக்கும் காற்று, வசந்த காலத்தில், சருகுகளைக் கீழே உதிர்ப்பது போல, தேர்வீரர்களில் முதன்மையானவனான {அதிரதனான} கிரீடி {அர்ஜுனன்}, தனது எதிரிகள் அனைவரையும் உதிர்த்துக் கொண்டு, போர்க்களத்தில் உலவினான்.

கிரீடத்தைத் தரித்தவனான பெருந்தீரமுடையவன் {அர்ஜுனன்}, விரைவில், விகர்த்தனன் மகனின் {கர்ணனின்} தம்பியான சங்கிராமஜித்தின் தேரில் பூட்டப்பட்டிருந்த சிவப்பு குதிரைகளைக் கொன்றான். பிறகு, ஒரு பிறை வடிவக் கணையால், தனது எதிரியின் {சங்கிராமஜித்தினுடைய} தலையை அறுத்தான். தனது தம்பி கொல்லப்பட்டதும், சூத சாதியைச் சேர்ந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தனது பராக்கிரமம் அனைத்தையும் திரட்டி, தந்தங்களை நீட்டி வரும் பெரிய யானையைப் போலவோ, பெருங்காளையை எதிர்த்து வரும் புலியைப் போலவோ அர்ஜுனனை நோக்கி விரைந்தான்.

பாண்டுவின் மகனைப் {அர்ஜுனனைப்} பனிரெண்டு கணைகளால் அந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்} துளைத்தான். அவனது {அர்ஜுனனது} குதிரைகளின் உடம்பில் அனைத்துப் பகுதிகளிலும் அடித்தான். {ஒரு கணையால்} விராடன் மகனைக் {உத்தரனை} அவனது கையில் அடித்தான். தன்னை நோக்கித் திடீரென முன்னேறி வரும் விகர்த்தனன் மகனை {கர்ணனை} நோக்கி அவசரமாக விரைந்த கிரீடி {அர்ஜுனன்}, பலவண்ணத் தோகை கொண்ட கருடன், கீழிருக்கும் பாம்பின் மீது பாய்வது போல, அவனைக் {கர்ணனைக்} கடுமையாகத் தாக்கினான். அவ்வீரர்கள் இருவரும் வில்லாளிகளில் முதன்மையானவர்களாக இருந்தனர்; இருவரும் பெரும் சக்தியுடன் இருந்தனர்; இருவரும் எதிரிகளைக் கொல்லும் வல்லமையைப் பெற்றிருந்தனர். அவர்களுக்குள் நடைபெற்ற மோதலைச் சாட்சியாகக் காண, ஆவலுடன் வந்த கௌரவர்கள், வெறும் பார்வையாளர்களாகத் தொலைவிலேயே நின்றுவிட்டனர்.

குற்றவாளியான கர்ணனைக் கண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் வெகுண்டெழுந்தாலும், அவன் {கர்ணன்} கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்து, விரைவில் எண்ணற்ற கணைகளைப் பயங்கர மழையாகப் பொழிந்து, அவனையும் {கர்ணனையும்}, அவனது குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் {கணை மழையால்} மறைத்தான். பீஷ்மரைத் தலைமையாகக் கொண்ட வீரர்கள், தங்கள் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவை, கிரீடியால் {அர்ஜுனனால்} துளைக்கப்பட்டு, அவனது கணைகளால் மறைக்கப்பட்டு, தங்கள் படைகள் சிதறிப் போனதால் உடைந்து போய், துயரத்தில் பெருத்த ஓலமிடத் தொடங்கினார்கள்.

எனினும், அர்ஜுனன் கரங்களால் அடிக்கப்பட்ட அந்தக் கணைகளைத் தனது எண்ணற்ற கணைகளால் எதிர்கொண்ட ஒப்பற்றவனும், வீரனுமான கர்ணன், விரைவில், தனது அம்புகளையும் வில்லையும் கொண்டு {அவற்றை} வெடிக்கச் செய்து, சுடர்மிகும் நெருப்பெனக் காட்சியில் தோன்றினான். அப்போது, வில்லின் நாண் கையுறைகளில் பட்டதால் ஏற்பட்ட நாணொலியால், அச்சூழலை அந்த விகர்த்தனன் மகன் {கர்ணனை} நிரப்பினான். அவனைப் {கர்ணனைப்} பாராட்டும் வகையில் கௌரவர்கள் எழுப்பிய கரவொலிகளாலும் {கை தட்டல்களாலும்}, சங்கொலிகளாலும், எக்காளம் மற்றும் பேரிகைகளாலும் அங்கே பெருத்தவொலி எழுந்தது.

காண்டீவத்தின் நாணொலியால் காற்றை நிரப்பிய கிரீடியையும் {அர்ஜுனனையும்}, அவனது கொடிக்கம்பத்துக்கு மேல் இருந்த கொடியில் பயங்கரமாகக் கதறிக் கொண்டிருக்கும் உயர்ந்த வாலுடைய குரங்கையும், {அக்கொடியிலிருக்கும்} பயங்கரமான உயிரினங்களையும் கண்ட கர்ணன், உரத்த கர்ஜனையை எழுப்பினான். குதிரைகளோடு இருந்த விகர்த்தனன் மகனைத் {கர்ணனைத்} தனது கணைகளால் துன்புறுத்திய கிரீடி, தனது பாட்டன் {பீஷ்மர்}, துரோணர், கிருபர் ஆகியோர் மீது பார்வையைச் செலுத்தியபடியே, துரிதமான கணை மழையை அவன் {கர்ணன்} மீது விரைந்து பொழிந்தான். பதிலுக்கு, விகர்த்தனன் மகனும் {கர்ணனும்}, கணைகளின் அடர்த்தியான மழையைப் பார்த்தன் {அர்ஜுனன்} மீது, மழைபொருந்திய மேகம் போலப் பொழிந்தான்.

கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அர்ஜுனன், கூரிய முனை கொண்ட தனது கணைகளால் கர்ணனை மூடினான். கூரிய முனை கொண்ட கணைகளின் மேகங்களைத் தங்கள் தேர்களில் இருந்து உற்பத்தி செய்த அந்த இரு வீரர்களும் எண்ணற்ற கணைகளையும், ஆயுதங்களையும் கொண்டு மோதிய போது, அவர்கள், மேகங்களால் மூடப்பட்ட சூரியனும் சந்திரனும் போலப் பார்வையாளர்களுக்குத் தோன்றினார்கள். எதிரியைப் பார்க்க முடியாதவனும், இலகுவான கரங்கள் கொண்டவனுமான கர்ணன், கிரீடம் அணிந்த அந்த வீரனின் {அர்ஜுனனின்} நான்கு குதிரைகளைத் தனது கூரிய கணைகளால் துளைத்தான். பிறகு அவனது தேரோட்டியை {உத்தரனை} மூன்று கணைகளாலும், அவனது கொடிக்கம்பத்தை மூன்றாலும் அடித்தான்.

இப்படி அடிக்கப்பட்டவனும், போரில் எதிரிகளை அடிப்பவனும், குரு குலத்தின் காளையுமான காண்டீவத்தைத் தாங்கும் ஜிஷ்ணு {அர்ஜுனன்}, துயில் நீத்த சிங்கமென எழுந்து, நேராகச் செல்லும் கணைகளால் கர்ணனைக் கடுமையாகத் தாக்கினான். (கர்ணனால் அடிக்கப்பட்ட) கணைமழையால் துன்புற்றவனும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களைச் சாதிப்பவனுமான அந்த ஒப்பற்றவன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். பல்வேறு உலகங்களைத் தனது கதிர்களால் மூடும் சூரியனைப் போல, அவன் {அர்ஜுனன்}, எண்ணற்ற கணைகளால் கர்ணனின் தேரை மறைத்தான். யானையால் தாக்கப்பட்ட சிங்கம் போன்ற அர்ஜுனன், தனது அம்பறாத்தூணியில் இருந்து சில கூரிய பிறைவடிவக் கணைகளை எடுத்து, தனது வில்லைக் காதுவரை இழுத்து, அந்தச் சூத மகனின் {கர்ணனின்} உடலெங்கும் {அந்தப் பிறைவடிவ அம்புகளை} அடித்தான்.

அந்தப்போரில், வஜ்ர வேகம் கொண்ட தனது கூரிய கணைகளால், கர்ணனின் கரங்கள், தொடைகள், தலை, நெற்றி, கழுத்து மற்றும் {அவனது} உடலின் பிற முக்கிய உறுப்புகள் ஆகியவற்றை, அந்த எதிரிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தில் இருந்து அடித்தான். பாண்டுவின் மகனான பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட கணைகளால் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, போர்க்களத்தின் முன்னணியை விட்டு அகன்று, ஒரு யானையால் வீழ்த்தப்பட்ட மற்றொரு யானை போல {அந்தப் போர்க்களத்தைவிட்டு} விரைந்து ஓட்டமெடுத்தான்.”

பீஷ்மர் எனக்குத் தடையாக முடியும்! – விராட பர்வம் பகுதி 55-போரில் அர்ஜுனன் செய்த சாகசம்; அர்ஜுனன் உத்தரனுக்கு எதிரிணியின் படைத்தலைவர்களை அறிமுகப்படுத்தியது; உத்தரன் கிருபரை நோக்கித் தேரை நடத்திச் சென்றது….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ராதையின் மகன் {கர்ணன்} களத்தை விட்டு ஓடியதும், துரியோதனன் தலைமையிலான பிற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தங்களுக்குரிய படைப்பிரிவுகளில் இருந்து பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். துள்ளும் கடலின் கோபத்தைத் தாங்கும் கரையைப் போல, போர்க்களத்தில் வரிசையாக அணிவகுத்து, தன்னை எதிர்த்து விரைந்தோடி வந்த எண்ணிலடங்கா தலைவர்களின் சீற்றத்தைத் தாங்கிக் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, {அவர்கள் மீது} கணைகளின் மேகங்களைப் பொழிந்தான். தேர்வீரர்களில் முதன்மையானவனும், வெள்ளைக் குதிரைகளைக் கொண்டவனும், குந்தியின் மகனுமான பீபத்சு {அர்ஜுனன்}, எந்நேரமும் தெய்வீக ஆயுதங்களை அடித்துக் கொண்டே எதிரியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்.

விரைவில், சூரியன் தனது கதிர்களால் முழு உலகத்தையும் மூடுவதைப் போல, பார்த்தன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட எண்ணிலடங்கா கணைகளால், வானத்தின் அனைத்து திக்குகளையும் நிறைத்தான். தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றில் இருந்து போரிட்டவர்கள் மற்றும் கவசம் பூண்டு தரைப்படையில் போரிட்ட வீரர்கள் ஆகியோரில், கூர்மையான அம்புகளால் காயம்படாதவாறு தங்கள் உடலில் இரண்டு விரல் அகலத்தில் எஞ்சிய இடம் கொண்டவர்கள் எவரும் இல்லை. தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} இருந்த திறமையாலும், அந்தக் குதிரைகள் பெற்றிருந்த பயிற்சியாலும், உத்தரனனின் திறமையாலும், அவனது {அர்ஜுனனின்} ஆயுதங்கள் சென்ற விதத்தாலும், அவனது பராக்கிரமத்தாலும், இலகுவான கரங்களாலும், அர்ஜுனனை, படைக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் அண்ட அழிவின் போது, உட்கொள்ளும் சுடர்மிக்க நெருப்பாக மக்கள் கருதத் தொடங்கினர்.

எதிரிகள் மத்தியில் எவராலும், சுடர்விடும் தீ போலப் பெரும் பிரகாசத்துடன் ஒளிர்ந்த அர்ஜுனன் மீது தங்கள் கண்களைச் செலுத்த முடியவில்லை. அர்ஜுனனின் கணைகளால் சிதைக்கப்பட்ட எதிரிப்படை தலைவர்கள், மலையின் மார்பில் புதிதாக உதித்திருக்கும் மேகங்கள் சூரியக் கதிர்களைப் பிரதிபலிப்பதைப் போலவும், அசோக மரங்கள் நிறைந்த தோப்பு, கொத்து கொத்தான மலர்களால் பிரகாசிப்பது போலவும் தோன்றினர். உண்மையில், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் துன்புற்ற படைவீர்கள் இவற்றைப் போலவே இருந்தனர். அல்லது மலர்கள் படிப்படியாகத் தளர்ந்து விழும் அழகிய பூமாலை போல இருந்தனர். அனைத்திலும் வியாபித்துள்ள காற்று, எதிரிப்படை தலைவர்களுடைய கிழிந்த கொடிகளையும், குடைகளையும் தனது சிறகுகளில் தாங்கிச் சென்றது.

மேலும், தங்கள் அணிகளின் மத்தியில் ஏற்பட்ட அழிவைக் கண்டு பயந்த குதிரைகள், பார்த்தனின் அம்புகளால் {தேர்களின்} நுகங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, தேர்களின் உடைந்த பாகங்களை இழுத்தபடியே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின. காதுகளிலும், விலாப்புறங்களிலும், தந்தங்களிலும், கடைவாயருகிலும், உடலின் முக்கியப் பகுதிகளிலும் தாக்கப்பட்ட யானைகள், அந்தப் போர்க்களத்தில் கீழே விழ ஆரம்பித்தன. மேலும், கௌரவர்களைச் சார்ந்த யானைகளின் சடலங்கள் குறுகிய காலத்தில் பரவலாகச் சிதறுண்டதால், அந்தப் பூமியைக் காண பெருந்திரளான கருமேகங்கள் நிறைந்த மேகமூட்டமான வானம் போல இருந்தது. யுகத்தின் முடிவில் தோன்றும் சுடர்விடும் தழல்களைக் கொண்ட நெருப்பு, உலகத்தில் அழிந்து போகக்கூடிய அசைவன, அசையாதன ஆகிய அனைத்துப் பொருட்களையும் எரிப்பது போல, அந்தப் போர்க்களத்தில் அனைத்து எதிரிகளையும் பார்த்தனும் {அர்ஜுனனும்} எரித்தான். தனது ஆயுதங்களின் சக்தியாலும், தனது வில்லின் நாணொலியாலும், கொடிக்கம்பத்தில் நிலைத்திருக்கும் உயிரினங்களின் இயல்புக்கு மிக்கக் கதறல்களாலும், அந்தக் குரங்கின் பயங்கரமான கர்ஜனையாலும், சங்கொலியின் வெடிப்பாலும், எதிரிகளைப் பலமாக அடிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்}, துரியோதனனுடைய துருப்பினரின் இதயங்களில் திகிலை உணரச் செய்தான்.

அர்ஜுனன் பார்வைக்கெதிரிலேயே, எதிரி வீரர்கள் ஒவ்வொருவரின் வலிமையும் தூசிக்குச் சமானமாக மாறுவது தெரிந்தது. பாதுகாப்பற்றவர்களைக் கொல்லும் பாவத்தைச் செய்யத் துணிய விரும்பாத அர்ஜுனன், திடீரெனத் திரும்பி, தங்கள் இலக்கைக் கூர்முனை கணை மேகங்களால் தாக்குவதற்காகப் பருந்துகளைத் தப்பவிடும் வேடர்களைப் போல அப்படையைப் பின்னால் இருந்து தாக்கினான். அவன் {அர்ஜுனன்} விரைவில், இரத்தம் குடிக்கும் அம்புகளைக் கொத்துக் கொத்தாக ஆகாயம் முழுவதும் நிரப்பினான். சக்தி மிக்கச் சூரியனின் (முடிவிலியான} கதிர்கள் சிறு பாத்திரத்திற்குள் நுழைந்து, அதை முழுவதுமாக நிரப்புவது போல, அர்ஜுனனின் எண்ணற்ற கணைகள் விரிவடைவதற்கு ஆகாயத்தில் இடம் இல்லாமல் போயிற்று.

அருகில் இருக்கும்போது ஒரே ஒரு முறை மட்டுமே எதிரிகளால் அர்ஜுனனின் தேரைக் காண முடிந்தது. ஏனெனில், அதன் பிறகு {அப்படிப் பார்த்த} உடனேயே அவர்கள் தங்களுடைய குதிரைகளுடன் சேர்த்து அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர் {அடுத்த நொடியிலேயே கொல்லப்பட்டனர்}. அவனது கணைகள் எப்படி எதிரிகளின் உடலைத் தடங்கலற்றுக் கடந்து சென்றனவோ, அதே போல, அவனது தேரும் எதிரி தலைவர்கள் மத்தியில் தடங்கலற்று கடந்து சென்றது. உண்மையில், பெருங்கடலில் விளையாடும் ஆயிரம் தலை கொண்ட வாசுகியைப் போல, அவன் எதிரி துருப்புகளைப் பெரும் வன்முடையுடன் தூக்கியெறிந்து கலங்கடிக்கத் தொடங்கினான். இடையறாது கிரீடி {அர்ஜுனன்} தனது கணைகளை அடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வில்லின் நாணொலி, மற்ற உயிரினங்களால் ஏற்கனவே கேட்கப்படாத அளவுக்கு அனைத்து ஒலிகளையும் விஞ்சி இருந்தது. சூரியக் கதிர்களால் பளிச்சென ஒளிர்ந்த கருமேகங்கள் போல, களத்தை நிரப்பிய யானைக்கூட்டம், தங்கள் உடல்கள் (கொழுந்துவிட்டெரியும்) கணைகளால் துளைக்கப்பட்டு ஒளிவீசின. அனைத்துத் திசைகளிலும் உலவி, வலதிலும் {வலது கையாலும்}, இடதிலும் {இடது கையாலும்} (கணைகளை) அடித்த அர்ஜுனனின் வில் இழுக்கப்பட்டு எப்போதும் சரியான வட்டமாகத் தெரிந்தது. அழகற்ற எதன் மீதும் கண்கள் நிலைக்காததைப் போல, அந்தக் காண்டீவந்தாங்கியின் {அர்ஜுனனின்} கணைகள் இலக்கைத் தவிர வேறு எதையும் அடையவில்லை. யானைக்கூட்டத்தின் நடையால் பாதை உண்டாவது போல, அந்தக் கிரீடியின் {அர்ஜுனனின்} தேரால் அங்குப் பாதை உண்டாக்கப்பட்டது. பார்த்தனால் அடிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இருந்த எதிரி வீரர்கள், “பார்த்தனின் வெற்றியை விரும்பும் இந்திரனே இறவாதவர்கள் {தேவர்கள்} அனைவரையும் அழைத்து வந்து நம்மைக் கொன்று கொண்டிருக்கிறானோ” என்று எண்ணினார்கள்.

சுற்றிலும் பயங்கரப் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த விஜயனை {அர்ஜுனனை} கண்ட அவர்கள், அனைத்து உயிரினங்களையும் கொல்வதற்காக மரணமே அர்ஜுனனின் உருவில் வந்திருப்பதாகவும் கருதினார்கள். பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட குருக்களின் {கௌரவர்களின்} துருப்புகள், பார்த்தனின் மோதல்களில் மட்டுமே காணக்கூடிய வகையிலும், பார்த்தனின் சாதனையை விவரிக்கும் வண்ணமும் சிதைக்கப்பட்டு, சிதறப்பட்டு இருந்தன. {பருவ காலத்தில்} இலையுதிர்க்கும் மூலிகைச் செடிகளின் மேல்புறத்தைத் துண்டிப்பதைப் போல, அவன் {அர்ஜுனன்} பகைவரின் தலைகளை வெட்டிச் சாய்த்தான். அர்ஜுனனால் ஏற்பட்ட பயங்கரத்தைக் கண்ட குருக்களின் சக்தி அனைத்தும் தொலைந்து போயிற்று. அர்ஜுனனின் எதிரிகள் நிரம்பிய காடு, அர்ஜுனன் என்ற புயலால் சிதைக்கப்பட்டுக் கலங்கடிக்கப்பட்டது போல, ஊதா நிற சுரப்பு நீரால் {purple secretions} பூமியைச் சிவப்பாக்கியது. குருதி கலந்த புழுதி காற்றால் உயர்த்தப்பட்டு, சூரியனின் கதிர்களையே கூட, மேலும் சிவப்பாக்கியது. விரைவில் சூரியனால் அலங்கரிக்கப்பட்ட வானம் மாலைவேளை வந்துவிட்டதைப் போல அதிகச் சிவப்பாக இருந்தது. உண்மையில், சூரியன் கூட அஸ்தமித்ததும் தனது கதிர்களை நிறுத்திவிடுவான், ஆனால் பாண்டுவின் மகன் தனது கணையடிப்பை நிறுத்தினானில்லை. எதிரியின் பெரும் வில்லாளிகள் அனைவரும் பெரும் சக்தியும் பராக்கிரமமும் கொண்டிருந்தாலும், நினைத்துப் பார்க்க முடியாத சக்தி கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தனது அனைத்து தெய்வீக ஆயுதங்களாலும் அவர்களை மூழ்கடித்தான்.

பிறகு அர்ஜுனன், துரோணர் மீது கூர்முனை கொண்ட எழுபத்துமூன்று {73} அம்புகளை அடித்தான். துஸ்ஸஹன் மீது பத்தும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது எட்டும், துச்சாசனன் மீது பனிரெண்டும், சரத்வானின் மகன் கிருபர் மீது மூன்றும் அடித்தான். பிறகு, அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, சந்தனுவின் மகனான பீஷ்மரையும், மன்னன் துரியோதனனையும் நூறு அம்புகளால் துளைத்தான். கடைசியாக, பராசத்தைக் கொண்டு கர்ணனுடைய காதைத் துளைத்தான். அனைத்து ஆயுதங்களிலும் திறமைபெற்ற பெரும் வில்லாளியான கர்ணன் அப்படித் துளைக்கப்பட்ட போது, அவனது குதிரைகளும், தேரும், தேரோட்டியும் என அனைத்தும் அழிக்கப்பட்டன. அவனுக்கு {கர்ணனுக்கு} ஆதரவாக இருந்த துருப்புகள் உடைய ஆரம்பித்தன. அப்படி அந்த வீரர்கள் உடைவதைதக் கண்ட விராடன் மகன் {உத்தரன்}, பார்த்தனின் நோக்கத்தை அறிந்து அவர்களுக்கு வழி கொடுத்தபடியே அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தரே {அர்ஜுனரே}, என்னைத் தேரோட்டியாகக் கொண்டு, இந்த அழகிய தேரில் நின்று கொண்டிருக்கும் உம்மை, நான் எந்தப் பிரிவுக்கு {எந்தப் பிரிவின் பக்கம்} அழைத்துச் செல்லட்டும்? நீர் உத்தரவிட்டால், நான் உடனே அங்கு அழைத்துச் செல்வேன்” என்றான் {உத்தரன்}.

அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! உத்தரா, புலித்தோலைக் கவசமாக அணிந்து, சிவப்பு நிற குதிரைகளால் இழுக்கப்படும் நீலக்கொடி பொருந்திய தேரில் இருக்கும் மங்கலவீரரான கிருபர் அதோ இருக்கிறார். கிருபரின் படைப்பிரிவின் முகப்பு அதோ தெரிகிறது. அங்கே என்னை அழைத்துச் செல். அந்தப் பெரும் வில்லாளிக்கு {கிருபருக்கு}, நான் வில்வித்தையில் எனது வேகமான கரங்களின் திறனைக் காட்ட விரும்புகிறேன்.

தனது கொடியில் தங்க வேலைப்பாடு கொண்ட நேர்த்தியான நீர்க்குடத்தைக் கொண்டிருக்கும் அந்த வீரரே அனைத்து ஆயுதங்களிலும் முதன்மையானவரான ஆசான் துரோணராவார். ஆயுதம் தாங்கும் அனைவரைக்காட்டிலும், நான் அவர் மீது எப்போதும் மிகுந்த மதிப்பைக் கொண்டிருக்கிறேன். எனவே, நீ உற்சாகமாக அவரை {துரோணரை} வலம் வா. அங்கே நமது சிரம் தாழட்டும். அதுவே நிலைத்த அறமாகும். எனது உடலை துரோணர் முதலில் தாக்கிய பிறகே நான் அவரைத் தாக்குவேன். ஏனெனில், அப்போதுதான் அதற்காக அவரால் சீற்றங்கொள்ள இயலாது.

அதோ, அங்கே துரோணருக்கு அருகில், வில்லைக் கொடியில் தாங்கியிருக்கும் வீரர், ஆசானின் {துரோணரின்} மகனான பெரும் தேர்வீரர் அஸ்வத்தாமன் ஆவார். ஆயுதம் தாங்கும் அனைவரிலும் நான் பெரிதும் மதிப்பவர்களில் அவரும் {அஸ்வத்தாமரும்} ஒருவராவார். எனவே, நீ அவரது தேர் அருகே செல்லும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் நிறுத்துவாயாக.

அதோ, தங்கக்கவசம் பூண்டு, {நான்காகப் பிரிக்கப்பட்ட படையின்} மூன்றாவது பிரிவான மிகத் திறமையான துருப்பால் சூழப்பட்டு, தங்கத்தரையில் இருக்கும் யானையைத் தனது கொடியில் கொண்டிருப்பவன், திருதராஷ்டிரரின் மகனான துரியோதனனாவான். ஓ! வீரா {உத்தரா}, எதிரிப்படையின் தேர்களைக் கலங்கடிக்கும் உனது தேரை அவனுக்கு முன்பாக நடத்து. இம்மன்னன் {துரியோதனன்} போர்க்களத்தில் வீழ்த்தப்படக் கடினமானவனும், அனைத்து எதிரிகளையும் கலங்கடிக்க வல்லவனும் ஆவான். கரங்களின் வேகத்தில் இவனே துரோணரின் சீடர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். நான் விற்கலையில் மேன்மையான வேகத்தைப் போர்க்களத்தில் அவனுக்குக் காட்டுவேன்.

அதோ, யானைகளைக் கட்டும் தடித்த கயிறைத் தனது கொடியில் தாங்கியிருப்பவன் விகர்த்தனன் மகனான கர்ணனாவான். அவனை நீ ஏற்கனவே அறிவாய். ராதையின் அந்தத் தீய மகனருகே {கர்ணனருகே} நீ செல்லும் போது, நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவன் என்னிடம் எப்போதும் மோதலுக்குச் சவால் விடுவான்.

அதோ, (நடுவில்) சூரியனையும், ஐந்து நட்சத்திரங்களையும் தனது நீல நிறக் கொடியில் கொண்டவரும், பெரும் சக்தியுடன் தனது தேரில் நிற்பவரும், கையில் பெரும் வில்லுடன் இருப்பவரும், அற்புதமான கையுறைகளை அணிந்திருப்பவரும், சுத்தமான வெள்ளை நிறத்திலான குடையைத் தனது தலைக்கு மேலே கொண்டவரும், பெருந்திரளான கருமேகங்களுக்கு முன்னிலையில் இருக்கும் சூரியனைப் போல, பல்வேறு கொடிகளும் பதாகைகளும் தாங்கி வரிசையாக நிற்கும் பெருந்தேர்களுக்குத் தலைமையாக நிற்பவரும், சூரியனைப் போன்றும், சந்திரனைப் போன்றும் பிரகாசமிக்கத் தங்க கவசத்தை அணிந்தவரும். தலையில் அணிந்திருக்கும் தங்கக் கவசத்தால் எனது இதயத்தை அச்சமூட்டுபவரும், எங்கள் அனைவருக்கும் பாட்டனுமான சந்தனுவின் மகன் பீஷ்மர் அவரே ஆவார்.

துரியோதனனால், அரசருக்குரிய பிரகாசத்துடன் தான் உற்சாகமூட்டப்படுவதால், அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} அவர் {பீஷ்மர்} பாசம் கொண்டு மிகுந்த பாகுபாட்டுடன்,  இருக்கிறார். அவரை நாம் கடைசியாக அணுகுவோமாக. ஏனெனில், இப்போது கூட அவரால் {பீஷ்மரால்} எனக்குத் தடையாக இருக்க முடியும். என்னோடு {அவர்} போரிடும்போது, குதிரைகளை நீ கவனமாகச் செலுத்துவாயாக” என்றான் {அர்ஜுனன்}. அவனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் அவசரத்துடன், அந்தச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தேரை, போரிட ஆவலாக நின்று கொண்டிருந்த கிருபரிடம் நடத்திச் சென்றான்.”

இந்திரனின் வருகை! – விராட பர்வம் பகுதி 56-கௌரவர்களுக்கு அர்ஜுனனுக்கும் இடையில் நடக்கும் போரைக் காண வந்திருந்த தேவர்களும் இந்திரனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மழைக்காலத்தில், மென்மையான காற்றின் முன்னிலையில் செல்லும் மேகத்திரள் போல, அந்தக் கடும் வில்லாளிகளின் படைகள் {காலாட்படைகள்} தெரிந்தன. (அந்தக் காலாட்படையின்) அருகில் பயங்கரமான போர்வீரர்களால் நடத்தப்படும் எதிரிகளின் குதிரைகள் {குதிரைப்படைகள்} நின்றிருந்தன. அங்கே, பயங்கர முகம் கொண்டவையும், அழகிய கவசத்தால் ஒளிருபவையும், திறமையான போராளிகளால் நடத்தப்படுபவையும், இரும்பு அங்குசங்களால் தூண்டப்படுபவையுமான யானைகளும் {யானைப்படைகளும்} இருந்தன.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, விஸ்வர்கள் மற்றும் மருதர்களாகிய தேவர்கள் துணையுடன், ஓர் அழகிய தேரில் ஏறி சக்ரன் {இந்திரன்} அங்கே வந்திருந்தான். தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் கூட்டத்தாலும், அந்த மேகங்களற்ற இரவில் மின்னிக் கொண்டிருந்த கோள்கள் மற்றும் விண்மீன் கூட்டத்தாலும் ஆகாயவிரிவு பிரகாசத்துடன் இருந்தது. மேலும், பீஷ்மர் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் சந்திக்கும்போது நடைபெறும் கடுமையான வலிமைமிக்க மோதலைச் சாட்சியாகக் காணவும், மானுடப் போர்களில் தங்கள் தெய்வீக ஆயுதங்களின் பலாபலனைக் கண்ணுறவும் விரும்பிய தேவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் தங்கள் தேர்களில் அங்கே வந்தனர்.

ஓட்டுநரின் விருப்பப்படி நினைத்த இடத்திற்குச் செல்ல வல்லதும், ஆயிரம் தூண்களால் தாங்கப்பட்ட கூரை கொண்டதும், ரத்தினங்களாலும் தங்கத்தாலும் ஆன நடுத்தூணைக் கொண்டதும், அனைத்து வகை ரத்தினங்களால் அழகுபடுத்தப்பட்டிருந்ததுமான தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தெய்வீகத் தேர், தெளிந்த வானில் அழகாகத் தெரிந்தது.

வாசவனுடன் (வாசவனைத் தலைமையாகக் கொண்ட} {இந்திரனுடன்} கூடிய முப்பத்துமூன்று {33} தேவர்களும், பெரும் முனிவர்களுடன் ஒன்றாக வந்த கந்தர்வர்கள், ராட்சசர்கள், நாகர்கள், பித்ருக்கள் ஆகியோரும் அங்கே காட்சியில் தோன்றினர். தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தேரில், பிரகாசமிக்க மேனிகள் கொண்ட மன்னர்களான வசுமனஸ், பலாக்ஷன், சுப்ரதர்த்தனன், அஷ்டகன், சிபி, யயாதி, நகுஷயன், கயன், மனு, பூரு, ரகு, பானு, கிரிசாஸ்வன், சகரன், நளன் ஆகியோர் இருந்தனர். அங்கே அக்னி, ஈசானன், சோமன், வருணன், பிரஜாபதி, தத்ரி, விதத்ரி, குபேரன், யமன், ஆலம்புசன், உக்கிரசேனன், கந்தர்வன் தம்புரு ஆகியோரும், அந்தப் பிரகாசமிக்க வரிசையில் ஒளிர்ந்து கொண்டு, தங்கள் தேரில் வந்திருந்தனர்.

தேவர்கள், சித்தர்கள் ஆகிய அனைவரும், முனிவர்களில் முதன்மையானவர்களும் அர்ஜுனனுக்கும் குருக்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதலைக் காண அங்கே வந்திருந்தனர். தேவர்களின் பூமாலையில் இருந்து வீசிய புனிதமான நறுமணம், வசந்தகாலத்தில் பூத்துக்குலுங்கும் கானகத்தைப் போலக் காற்றில் நறுமணத்தை நிறைத்தன. அங்கே இருந்த சிவப்புக் குடைகள், அங்கிகள், பூமாலைகள், மற்றும் தேவர்களின் சாமரங்கள் ஆகியன மிகுந்த அழகுடன் இருந்தன. பூமியில் இருந்த புழுதிப்படலம் உடனே மறைந்தது. (தெய்வீக) ஒளி அனைத்தையும் வெளிச்சமாக்கியது. தெய்வீக வாசனைத்திரவியங்களால் நறுமணம் பரவி தென்றலுடன் சேர்ந்து போராளிகளுக்கு ஆறுதலளித்தது.

தேவர்களில் முதன்மையானோர் அங்கே கொண்டுவந்திருந்த வித்தியாசமான பிரகாசமிக்க நகைகளாலும் அங்கே ஏற்கனவே வந்திருந்த பல்வேறு தயாரிப்புகளிலான அழகிய தேர்களாலும் நிறைந்த ஆகாயவிரிவைக் காண அழகாக இருந்தது. தேவர்களால் சூழப்பட்டவனும், தாமரை மற்றும் அல்லி மலர்களால் ஆன மாலைகளை அணிந்தவனுமான வஜ்ரத்தைத் தாங்கிய சக்திமிக்கவன் {இந்திரன்}, தனது தேரில் பார்ப்பதற்கு அழகாக இருந்தான். அந்தப் பலனைக் கொன்றவன் {இந்திரன்}, போர்க்களத்தில் இருந்த தனது மகனை {அர்ஜுனனை} நிலைத்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படிப்பார்த்தாலும் அவனது மனம் நிறைவை அடையவில்லை” {என்றார் வைசம்பாயனர்}.

தேரொடிந்த கிருபர்! – விராட பர்வம் பகுதி 57-அர்ஜுனனுக்கும் கிருபருக்கும் இடையில் நடந்த மோதல்…

வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், “போர்க்களத்தில் வரிசையாக நிற்கும் குரு படையினரைக் கண்ட குரு குலக் கொழுந்தான பார்த்தன் {அர்ஜுனன்}, விராடன் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்க பலிப்பீடத்தைத் தாங்கிக் காணப்படும் கொடியைக் கொண்ட தேரில், தெற்கு நோக்கி விரையும் சரத்வானின் மகன் கிருபரைத் தொடர்ந்து செல்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} சொற்களைக் கேட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஒரு நொடியும் தாமதியாமல், தங்கக் கவசம் பூண்ட வெள்ளி நிறக் குதிரைகளை விரைந்து செலுத்தினான். மேலும், சந்திரனின் நிறத்தைப் பிரதிபலிக்கும் அந்த நெருப்பு போன்ற குதிரைகளை, ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு வகையான வேகமான எட்டுகளை எடுத்துவைக்கும்படி செய்தான். குதிரை சாத்திரம் அறிந்த உத்தரன், குரு படையை அணுகியதும், காற்றின் வேகம் கொண்ட அந்தக் குதிரைகளைத் திருப்பினான். வாகனங்களைச் {தேர்களைச்} செலுத்துவதில் திறமை கொண்ட அந்த மத்ஸ்ய இளவரசன் {உத்தரன்}, சில நேரங்களில் அங்கே சுழன்று கொண்டும், சில நேரங்களில் சிக்கலான வட்டப்பாதையில் சென்றும், சில நேரங்களில் இடது புறம் திரும்பியும் சென்று குருக்களை அலங்கமலங்க விழிக்க வைக்கத் தொடங்கினான். அப்படிச் சுற்றிலும் சுழன்ற அந்தத் துணிச்சல் மிக்க விராடன் மகன் {உத்தரன்}, கடைசியாகக் கிருபரின் தேரை அணுகி, அவரை எதிர்கொள்ளும் விதமாக நின்றான்.

பிறகு, தனது பெயரை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன், தேவதத்தம் என்று அழைக்கப்பட்ட சங்குகளில் சிறந்த சங்கை எடுத்து வலுவுடன் ஊதி, உரத்த சங்கொலியை ஒலித்தான். வலிமைமிக்க ஜிஷ்ணுவால் {அர்ஜுனனால்}, போர்க்களத்தில் ஒலிக்கப்பட்ட சங்கொலி, மலையைப் பிளப்பது போலக் கேட்கப்பட்டது. அர்ஜுனனால் ஊதப்படும்போது அந்தச் சங்கு நூறு துண்டுகளாக உடைந்து போகாததைக் கண்ட குருக்கள் {கௌரவர்கள்}, தங்கள் வீரர்கள் அனைவருடன் சேர்ந்து அதை உயர்வாக மெச்சத் தொடங்கினர். சொர்க்கத்தை அடைந்த அவ்வொலி, திரும்பி வரும்போது, மலையின் மார்பில் மகவத்தால் {இந்திரனால்} வீசப்படும் வஜ்ரத்தின் ஒலி {இடியோசை} போலக் கேட்கப்பட்டது.

அதன்பின்பு, வீரரும், துணிச்சல்மிக்கவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், பலமும் பராக்கிரமும் நிறைந்தவருமான சரத்வானின் மகன் கிருபர், அவ்வொலியைத் தாங்கொணாது, அர்ஜுனன் மீது கோபம் கொண்டு, {அவனுடன்} போரிட விரும்பி, கடலில் பெறப்பட்ட தனது சங்கை எடுத்துப் பலமாக ஊதினார். அவ்வொலியால் மூன்று உலகங்களையும் நிரப்பிய அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவர் {கிருபர்}, தனது பெரிய வில்லை எடுத்து, அந்த வில்லின் நாணைப் பலமாகச் சுண்டி நாணொலி எழுப்பினார். இரு சூரியன்களுக்கு ஒப்பான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஒருவரை எதிர்த்து மற்றவர் நின்றபோது, இலையுதிர்கால மேகங்களின் பெருந்திரளைப் போல அவர்கள் பிரகாசித்தனர்.

பிறகு, எதிரி வீரர்களைக் கொல்பவரான சரத்வானின் மகன் {கிருபர்}, உயிர் நிலைகளில் நுழையவல்லவையும். வேகமானவையுமான கூரிய பத்து கணைகளால், விரைவாகப் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தார். அந்தப் பிருதையின் மகனும் {குந்தியின் மகன் அர்ஜுனனும்}, தனது பங்குக்கு, உலகத்தால் கொண்டாடப்படும் ஆயுதங்களில் முதன்மையான காண்டீவத்தை இழுத்து, உடலின் முக்கியமான பகுதிகளைத் துளைக்கவல்ல எண்ணிலடங்கா இரும்புக் கணைகளை அடித்தான். அதன்பேரில், கிருபர், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகள் {தன்னிடம்} வருமுன்பே கூரிய கணைகளைக் கொண்டு, அவற்றை நூறாகவும் {100}, ஆயிரமாகவும் {1000} வெட்டிப் போட்டார். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோபத்தில் பல்வேறு தந்திரங்களை வெளிப்படுத்தி, கணைகளின் மழையால் அனைத்துப் புறங்களையும் மூடினான். முழு வானத்தையும் தனது கணைகளால் மறைத்த அளவிடமுடியா ஆன்மா கொண்ட அந்த வலிமைமிக்க வீரனான பிருதையின் மகன் {அர்ஜுனன்}, நூறு கணைகளால் கிருபரைச் சூழந்தான். தீச்சுடர்களைப் போன்ற அந்தக் கூரிய கணைகளால் துன்புற்ற கிருபருக்குக் கோபம் பெருகியதால், அளவிடமுடியாத பராக்கிரமம் கொண்ட உயர் ஆன்ம பார்த்தனை {அர்ஜுனனை}, பத்தாயிரம் கணைகளால் விரைவாகப் பீடிக்கச் செய்து, அந்தப் போர்க்களத்தையே அவர் {கிருபர்} கர்ஜிக்கச் செய்தார்.

பிறகு வீரனான அர்ஜுனன், தனது எதிரியின் {கிருபரின்} நான்கு குதிரைகளை, காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்டவையும், கூரானவையும், நேரானவையும், தங்க இறகுகள் கொண்டவையுமான நான்கு மரணக்கணைகளால் துளைத்தான். தீச்சுடர் போன்ற அந்தக் கூரிய கணைகளால் துளைக்கப்பட்ட அந்தக் குதிரைகள் திடீரெனப் பின்வாங்கின. அதன் விளைவாகக் கிருபர் தனது இடத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டார். கௌதமர் {கிருபர்} தனது இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதைக் கண்ட குருகுலத் தோன்றலான அந்த எதிரி வீரர்களைக் கொல்பவன் {அர்ஜுனன்}, எதிராளியின் {கிருபரின்} கண்ணியத்தை மதித்த காரணத்தால், அவர் மீது கணைகள் தொடுப்பதை நிறுத்தினான்.

பிறகு, மீண்டும் தனது இடத்தை அடைந்த கௌதமர் {கிருபர்}, கங்கப் பறவையின் இறகுகளைக் கொண்ட பத்து கணைகளால் சவ்யசச்சினை {அர்ஜுனனை} விரைவாகத் துளைத்தார். பிறகு பார்த்தன், கூரிய முனை கொண்ட ஒரு பிறை வடிவ கணையைக் கொண்டு, கிருபரின் வில்லையும், கையுறைகளையும் வெட்டியெறிந்தான். உயிரையும் துளைக்கவல்ல கணைகளால் கிருபரின் கவசத்தையும் வெட்டியெறிந்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவரது உடலுக்குக் காயத்தை ஏற்படுத்தவில்லை. கவசத்தை இழந்த அவரது {கிருபரின்} உடல், பருவகாலத்தில் சதுப்பு நிலத்தைவிட்டகன்ற பாம்பை ஒத்திருந்தது. தனது வில் பார்த்தனால் வெட்டப்பட்டவுடன், மற்றொன்றை எடுத்த கௌதமர் {கிருபர்}, அதில் மூன்று நாண்கயிறுகளைச் சேர்த்துக் கட்டினார்.

சொல்வதற்கே அதிசயமாக இருந்தாலும், அந்த அவரது வில்லும், குந்தி மகனின் {அர்ஜுனனின்} நேரான கணைகளால் வெட்டப்பட்டது. எதிரி வீரர்களைக் கொல்பவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சரத்வானின் மகனால் {கிருபரால்} ஒன்றன் பின் ஒன்றாக {மேலும்} பிற விற்கள் எடுக்கப்பட்ட போதெல்லாம், அவற்றையும் இவ்வழியிலேயே வெட்டியெறிந்தான். தனது அனைத்து விற்களும் வெட்டியெறியப்பட்ட பிறகு, அந்த வலிமைமிக்க வீரர் {கிருபர்}, தனது தேரில் இருந்து வஜ்ரம் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த ஓர் எறிவேலை வீசினார். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த எறிவேல், எரிகல்லைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு காற்றில் வந்த போது, அர்ஜுனன் அதைப் பத்துக் கணைகள் கொண்டு வெட்டியெறிந்தான்.

புத்திசாலியான அர்ஜுனனால் தனது எறிவேல் இப்படி வெட்டப்பட்டதைக் கண்ட கிருபர், மற்றுமொரு வில்லை விரைந்து எடுத்து, எண்ணற்ற பிறைவடிவ கணைகளைத் தொடர்ச்சியாக அடித்தார். எனினும், பார்த்தன், கூரிய முனை கொண்ட தனது பத்து {10} கணைகளால் அவற்றை வெட்டியெறிந்தான். பிறகு அந்தப் போர்க்களத்தில் மிகவும் கோபம் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும் தீச்சுடர்களுக்கு ஒப்பானவையுமான பதிமூன்று {13} கணைகளை அடித்தான். அவற்றில் ஒன்றைக் கொண்டு, எதிரி {கிருபருடைய} தேரின் நுகத்தடியை வெட்டினான். {அவற்றில்} நான்கைக் கொண்டு நான்கு குதிரைகளைத் துளைத்தான். ஆறாவதைக் கொண்டு தனது எதிரியுடைய {கிருபருடைய} தேரோட்டியின் தலையை அவனுடைய உடலில் இருந்து துண்டித்தான். {அவற்றில்} மூன்றைக் கொண்டு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், அந்த மோதலில் கிருபருடைய தேரின் மூங்கில் திரிதண்டத்தையும், {அவற்றில்} இரண்டைக் கொண்டு {தேரின்} சக்கரங்களையும் தாக்கினான். பனிரெண்டாவது கணையைக் கொண்டு கிருபரின் கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான்.

இந்திரனைப் போல ஏளனமாகச் சிரித்த பல்குனன் {அர்ஜுனன்}, பதிமூன்றாவதைக் கொண்டு கிருபரின் மார்பைத் துளைத்தான். பிறகு, தனது வில் வெட்டப்பட்டு, தேர் உடைக்கப்பட்டு, குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்டதையும் கண்ட கிருபர் கீழே குதித்து, ஒரு கதாயுதத்தை எடுத்து விரைவாக அர்ஜுனன் மீது வீசினார். ஆனால், கிருபரால் வீசப்பட்ட அந்தக் கனமிக்கப் பளபளப்பான கதாயுதம், அர்ஜுனனின் கணைகளால் தாக்குண்டு, மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.

பிறகு, சரத்வான் மகனை {கிருபரைக்} மீட்க விரும்பிய வீரர்கள் (கிருபர் இருந்த படைப்பிரிவின் வீரர்கள்) அனைத்துப் புறங்களில் இருந்தும் பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதி, அவனைத் தங்கள் கணைகளால் மூடினர். குதிரைகளை இடதுபுறம் திருப்பிய விராடன் மகன் {உத்தரன்}, யமகம் என்றழைக்கப்பட்ட சுற்றிவளைக்கும் பரிணாமத்தைச் செய்யத் தொடங்கி, அதன் காரணமாக அவ்வீரர்களின் எதிர்ப்பைத் தடுத்தான். பிறகு அந்த மனிதர்களில் ஒப்பற்ற காளைகள், தேரை இழந்த கிருபரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, குந்தியின் மகனான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருகில் இருந்து {தூரமாக} அவரை {வேறுபக்கம்} வழிநடத்திச் சென்றனர்.

துரோணர் விலக வாய்ப்பளித்த பார்த்தன்! – விராட பர்வம் பகுதி 58-அர்ஜுனனுக்கும் துரோணருக்கும் இடையில் நடந்த மோதல்; அவர்களுக்குள் நடந்த மோதலில் இடைமறித்த அஸ்வத்தாமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருபர் இப்படி அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, சிவப்புக் குதிரைகள் கொண்ட ஒப்பற்ற துரோணர், ஏற்கனவே நாணில் கணை பொருத்தப்பட்ட தனது வில்லை எடுத்துக் கொண்டு, வெண்குதிரைகள் கொண்ட அர்ஜுனனை நோக்கி விரைந்தார். தனது தங்கத் தேரில் முன்னேறி வரும் ஆசானை சிறிது தொலைவில் கண்ட வெற்றி வீரர்களில் முதன்மையான அர்ஜுனன், உத்தரனிடம், “ஓ! நண்பா, நீ அருளப்பட்டிருப்பாயாக. சுடர்விடும் நெடும் நெருப்பைப் போன்ற தங்க பலிப்பீடத்தைத் தனது உயர்ந்த பதாகையின் தலைப்பில் கொண்டவரும், {தேரைச்} சுற்றிலும் நிறையக் கொடிகள் கொண்டவரும், அமைதியான இனிய முகமும், பவளம் மற்றும் தாமிர வண்ணமும், உயர்ந்த பயிற்சியும் கொண்ட, மிக அழகான பெரிய குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் வருபவரான துரோணரிடமே நான் போரிட விரும்புகிறேன்.

நீண்ட கரங்களும், பெரும் சக்தியும், பலமும், அழகான மேனியும் கொண்ட அவர் {துரோணர்}, உலகங்களால் தனது பராக்கிரமத்திற்காகக் கொண்டாடப்படுபவரும், புத்திக்கூர்மையில் உசானஸைப் {சுக்கிராச்சாரியாரைப்} பிரதிபலிப்பவரும், அறநெறி அறிவில் பிருகஸ்பதியைப் போன்றவரும், நான்கு வேதங்களையும் அறிந்து, பிரம்மச்சரிய அறங்களைப் பயின்று வருபவராவார். ஓ! நண்பா {உத்தரா}, தெய்வீக ஆயுதங்களை ஏவுதல் மற்றும் திரும்ப அழைத்தல் ஆகியவையும், மொத்த ஆயுத அறிவியலும் அவருள் எப்போதும் வசிக்கின்றன. பொறுமை {மன்னிக்கும் தன்மை}, தற்கட்டுப்பாடு, உண்மை {சத்தியம்}, ஊறிழைக்காமை {அகிம்சை}, நடத்தையில் ஒழுங்கு ஆகியவையும் எண்ணற்ற பிற பண்புகளும் அந்த மறுபிறப்பாளரிடம் {பிராமணரிடம்_துரோணரிடம்} எப்போதும் வசிக்கின்றன. போர்க்களத்தில் இருக்கும் அந்த உயர்ந்த அருள் பெற்றவருடன் நான் போரிட விரும்புகிறேன். எனவே, ஓ! உத்தரா, அங்கே ஆசானின் முன்பு என்னை அழைத்துச் செல்” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனனால் இப்படிச் சொல்லப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது குதிரைகளை, பரத்வாஜரின் மகனுடைய {துரோணரின்} தேர் நோக்கிச் செலுத்தினான். தேர்வீரர்களில் முதன்மையானவரான துரோணரும், கோபமுற்ற யானை போல், தன்னைப் போலவே கோபங்கொண்டு அவசரமாக முன்னேறிக் கொண்டிருந்த பாண்டுவின் மகனான பார்த்தனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தார். பிறகு அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, நூறு எக்காளங்களின் ஒலிக்கு நிகரான தனது சங்கொலியை எழுப்பினார். கடலைக் கலங்கடிக்கும் புயல் போல அவ்வொலி மொத்த படையையும் கலங்கடித்தது. அவரது {துரோணரது} செந்நிறக் குதிரைகளும், மனோவேகம் கொண்டவையும், அன்னம் போன்ற வெண்மையானவையுமான அர்ஜுனனின் குதிரைகளும் போரில் கலப்பதைக் கண்ட பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பராக்கிரமம் மிக்கவர்களும், ஒப்பற்றவர்களும், நன்கு பயிற்சிபெற்றவர்களும், பெரும் சக்தியும் பலமும் படைத்தவர்களுமான அவ்விரு தேர்வீரர்களான ஆசான் துரோணரும், அவரது சீடன் பார்த்தனும் {அர்ஜுனனும்} ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர்க்களத்தில் நிற்பதைக் கண்ட பாரதர்கள் கூட்டம் அடிக்கடி நடுங்கத் தொடங்கின. பெரும் பராக்கிரமம் கொண்ட பலமிக்கத் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் தேரைத் தனது தேர் மூலம் அடைந்து, மகிழ்ச்சியில் நிறைந்து, தனது ஆசானை {துரோணரை} வணங்கினான். எதிரி வீரர்களைக் கொல்பவனும், வலிய கரங்கள் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, துரோணரிடம் எளிமையான மற்றும் இனிமையான தொனியில், “எங்கள் வனவாசத்தை முடித்த நாங்கள், எங்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகளுக்குப் பழிதீர்க்க விரும்புகிறோம். போரில் ஒப்பற்றவரான நீர் எங்களிடம் கோபம் கொள்ளுதல் தகாது. ஓ! பாவமற்றவரே, என்னை நீர் முதலில் தாக்காமல், நான் உம்மைத் தாக்க மாட்டேன். இதுவே எனது நோக்கம். நீர் விரும்பிய செயலைச் செய்வீராக” என்றான் {அர்ஜுனன்}.

இப்படிச் சொல்லப்பட்ட துரோணர், அவன் மீது இருபதுக்கும் மேற்பட்ட கணைகளை அடித்தார். ஆனால், இலகுவான கரங்கள் படைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவை தன்னை அடையுமுன்பே வெட்டிப் போட்டான். இதைக் கண்ட பலமிக்கத் துரோணர், தனது கரங்களின் இலகுத்தன்மையை வெளிக்காட்டும்படி, ஆயிரம் {1000) கணைகளால் பார்த்தனின் தேரை மூடினார். பார்த்தனைக் கோபமூட்ட விரும்பிய அந்த அளவிடமுடியா ஆன்மா கொண்டவர் {துரோணர்}, வெள்ளி போன்ற வெண்மையான அவனது குதிரைகளை, கல்லில் கூராக்கப்பட்டவையும் கங்கப் பறவையின் இறகுகள் படைத்தவையுமான தனது கணைகளால் மூடினார். துரோணருக்கும், கிரீடிக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் போர் தொடங்கியது. அந்த மோதலில் சுடர்மிகும் பிரகாசம் கொண்ட கணைகளை இருவரும் அடித்தனர். தங்கள் சாதனைகளுக்காக இருவரும் அறியப்பட்டவர்களாக இருந்தனர். காற்றின் வேகம் கொண்ட அந்த இருவரும் தெய்வீக ஆயுதங்களை அறிந்திருந்தனர். இருவரும் பெரும் சக்தி படைத்திருந்தனர். அப்படிப்பட்ட அந்த இருவரும் அரசகுல க்ஷத்திரியர்கள் அழியும் வண்ணம் மேகங்கள் போலக் கணைகளை அடிக்கத் தொடங்கினர்.

அங்கே கூடியிருந்த வீரர்கள் அனைவரும் இக்காட்சிகள் அனைத்தையும் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தனர். அவர்கள் அனைவரும் கணைமேகங்களை அடித்த துரோணரைக் கண்டு “நன்று செய்தீர்! நன்று செய்தீர்!” என்று போற்றினர், “போர்க்களத்தில் துரோணரிடம் போரிட பல்குனனை {அர்ஜுனனைத்} தவிரத் தகுந்தவன் வேறு எவன்?” “அர்ஜுனன் தன் சொந்த ஆசானிடமே போரிடுகிறானே. நிச்சயம் க்ஷத்திரியக் கடமைகள் கண்டிப்பானவை” என்றும் உரைத்தனர். அந்தப்போர்க்களத்தில் நின்றவர்கள் இப்படியே தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் வெல்லவல்லவர்களும், வலிய கரங்கள் கொண்டவர்களுமான அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கணைமழையால் மூடினர்.

கோபம் பெருகிய பரத்வாஜர் மகன் {துரோணர்}, பின்புறத்தில் தங்கத்தால் முலாமிடப்பட்டதும், வெல்லப்பட முடியாததுமான தனது பெரிய வில்லை உருவி, தனது கணைகளால் பல்குனனை {அர்ஜுனனைத்} துளைத்தார். சூரியப் பிரகாசம் கொண்ட எண்ணற்ற கூரிய கணைகளை அர்ஜுனனின் தேர் மீது அடித்து, {அர்ஜுனனுக்கு} முற்றிலுமாகச் சூரிய ஒளியை மறைத்தார். வலிய கரங்கள் கொண்ட அந்தப் பெரும் ரதவீரர் தனது கூரிய கணைகளைக் கொண்டு, மலையில் பொழியும் மேகம் போலப் பிருதையின் மகனைக் கடுமையாகத் துளைத்தார். பிறகு விற்களில் முதன்மையானதும், எதிரிகளை அழிக்க வல்லதும், பெரும் சிரமங்களைச் சமாளிக்கக்கூடிய திறம் கொண்டதுமான காண்டீவத்தை எடுத்த பாண்டுவின் மகன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட எண்ணற்ற கணைகளை விரைவாக அடித்தான். ஒரு நொடியில் அந்தப் பலமிக்க வீரனும் {அர்ஜுனனும்}, தனது வில்லில் இருந்து அடிக்கப்பட்ட பல்வேறு கணைகளின் மழையால், துரோணரை நிலைகுலையச் செய்தான். இதைக் கண்ட பார்வையாளர்கள் பெரிதும் ஆச்சரியமடைந்தனர்.

பிறகு, பிருதையின் {குந்தியின்} மகனான அந்த அழகிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது தேரில் உலவி, ஒரே நேரத்தில் பல பக்கங்களில் இருந்து தனது ஆயுதங்களை வீசினான். முழு ஆகாய விரிவும் அவனது கணைகளால் மூடப்பட்டதால், ஒரு பெரும் நிழல் பரப்பு அங்கே தோன்றிற்று. துரோணர், மலைமீதிருக்கும் நெருப்பு போல இருந்தார். பிருதையின் {குந்தியின்} மகனுடைய {அர்ஜுனனுடைய} கணைகளால் தனது தேர் முழுவதும் மறைக்கப்பட்டதைக் கண்ட போர்க்களத்தின் ரத்தினமான துரோணர், மேக கர்ஜனை புரியும் விற்களில் முதன்மையானதும், பயங்கரமானதுமான தனது வில்லை வளைத்தார். நெருப்பு வட்டம் போலிருந்த அந்த ஆயுதங்களில் முதன்மையானதை {அந்த வில்லை} இழுத்து, கூர்முனை கொண்ட கணைகளை அவர் {துரோணர்} அடித்தார்.

பிறகு, நெருப்பிலிடப்பட்ட மூங்கில்கள் பிளப்பது போல, போர்க்களமெங்கும் ஒலிகள் கேட்டன. அளவிலா ஆன்மா கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தங்க இறகுகள் கொண்ட கணைகளைத் தனது வில்லில் இருந்து அடித்து, அனைத்துப் புறங்களையும் மூடி, {துரோணருக்குச்} சூரிய ஒளியைத் தடுத்தான். துரோணரால் அடிக்கப்பட்ட கணைகள், ஒன்றின் இறகை மற்றொன்று தொட்டுக் கொண்டிருந்ததால், வானத்தில் செல்லும் முடிவிலா கோடு போல அவை தெரிந்தன. முடிச்சுகள் நன்றாக உரிக்கப்பட்ட {அழுந்திய கணுக்களுடைய} அந்தக் கணைகள், தங்க இறகுகள் கொண்ட பறவை கூட்டம் போல வானத்தில் தெரிந்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளை அடித்த அந்த வீரர்கள், வானத்தை எறிகற்களால் நிறைப்பது போலத் தெரிந்தது. கங்கப் பறவையின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கணைகள், இலையுதிர்கால வானில் உலவும் வரிசையான கொக்குகள் போலத் தெரிந்தன.

ஒப்பற்ற துரோணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற அந்தக் கடுமையான, பயங்கரமான மோதல், பழங்காலத்தில் விருத்திரனுக்கும் வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் போல இருந்தது. வில்லின் முழு நீளத்திற்கு இழுக்கப்பட்ட விற்களில் இருந்து கணைகளை அடித்த அந்த இருவரும், தந்தங்களால் மோதிக்கொள்ளும் இரு யானைகளைப் போல இருந்தனர். கோபக்கார வீரர்களும், போர்க்களத்தின் ரத்தினங்களுமான அந்த இருவரும், நிறுவப்பட்ட வழிமுறைகளின் படி கண்டிப்புடன் நடந்து கொண்டு, முறையான வரிசையில் பல்வேறு தெய்வீக ஆயுதங்களைக் காட்சிப்படுத்தினர். பிறகு அறம்சார்ந்த மனிதரில் முதன்மையான அர்ஜுனன், தனது கூரிய கணைகள் கொண்டு, ஆசான்களில் சிறந்தவர் {துரோணர்} அடித்த கூரிய கணைகளைத் தடுத்தான். பிறகு பார்வையாளர்கள் முன்னிலையில் பல்வேறு ஆயுதங்களைக் காட்டிய அந்தப் பயங்கரப் பராக்கிரமம் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, பல்வேறு வகையான கணைகளால் வானத்தை மூடினான்.

கடும் சக்தியுடன் தன்னைத் தாக்கும் நோக்கத்துடன் இருந்த மனிதர்களில் புலியான அர்ஜுனனைக் கண்ட அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவரான ஆசான்களில் சிறந்தவர் {துரோணர்}, (பாசத்தால்) இலகுவான நேரான கணைகளைக் கொண்டு அவனுடன் {அர்ஜுனனுடன்} விளையாட்டுத்தனமாகப் போரிட ஆரம்பித்தார். முன்னவனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட தெய்வீக ஆயுதங்களைத் தனதைக் {தன் தெய்வீக ஆயுதங்களைக்} கொண்டு தடுத்தார். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளாமல், சீற்றமிக்க மனிதர்களில் சிங்கங்கள் போலப் போரிட்டுக் கொண்டிருந்த அவர்களது மோதல், தேவர்களுக்கும் தானவர்களுக்கும் {அசுரர்களுக்கும்} இடையில் நடைபெற்ற போரைப் போல இருந்தது. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, துரோணர் அடித்த ஐந்திரம், வாயவ்யம், ஆக்னேயம் ஆகிய ஆயுதங்களை, தன்னிடம் இருந்த அதே
வகை ஆயுதங்களால் திரும்பத்திரும்பக் கலங்கடித்தான். கூரிய கணைகளை அடித்துக் கொண்டிருந்த அந்தப் பலமிக்க வில்லாளிகள், தங்கள் கணை மழையால் முழு வானத்தையும் மூடி, பெரும் நிழல் பரப்பை உண்டாக்கினார்கள்.

அர்ஜுனனால் அடிக்கப்பட்ட கணைகள், எதிரி வீரர்களின் மேல் பட்டு, இடியின் ஒலியை எழுப்பின. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இரத்தத்தில் குளித்த யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியன மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பலாச மரங்களைப் போலத் தெரிந்தன. துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்த மோதலின் போது, அந்தக் களத்தில் வளையங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களும், அழகாக உடுத்தியிருந்த தேர்வீரர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பலவண்ண கவசங்களும், கொடிகளும் என அனைத்தும் சிதறிக் கிடந்தன. பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்ட வீரர்களைக் கண்ட குரு படை பீதியடைந்தது. கடும் சிரமத்தைத் தாங்கவல்ல தங்கள் விற்களை அசைத்த அந்த  எதிராளிகள் இருவரும், தங்கள் கணைகளால் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்த தொடங்கினர்.

ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரோணருக்கும், குந்தியின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்த மோதல், பலிக்கும் {மகாபலிக்கும்} வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற எல்லையற்ற பயங்கரம் நிறைந்த போரைப் போல இருந்தது. பிறகு, அவர்கள் {ஆசானும் சீடனும்} தங்கள் உயிரைப் பணயம் வைத்து, முழுதாக இழுக்கப்பட்ட தங்கள் வில்லின் நாண்களில் இருந்து நேரான கணைகளை அடித்து ஒருவரை ஒருவர் துளைத்தனர். அப்போது, வானத்தில் இருந்து ஒரு குரல், “எதிரிகளை அடிப்பவனும், பெரும் சக்தியுடைவனும், உறுதியான பிடி கொண்டவனும், போரில் ஒப்பற்றவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், தேவர்கள் மற்றும் தைத்தியர்களையே வீழ்த்தியவனுமான அர்ஜுனனுடன் போரிடும் துரோணரின் செயல் கடின
மானதாகும்” என்று துரோணரைப் பாராட்டியது.

பார்த்தனின் {அர்ஜுனனின்}, தவறற்ற தன்மை {குறி தவறாத்தன்மை}, பயிற்சி, கரங்களின் வேகம், அர்ஜுனனின் அம்பு வீச்சு ஆகியவற்றைக் கண்ட துரோணர் மிகவும் வியந்தார். ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, பிறகு, அற்புதமான வில்லான காண்டீவத்தை உயர்த்திய பார்த்தன் {அர்ஜுனன்}, இருகரங்களாலும் கணைகளை மழையாகப் பொழிந்தான். அம்மழை வெட்டுக்கிளிகள் பறப்பதைப் போலத் தெரிந்தது. பார்வையாளர்கள், அவனை {அர்ஜுனனை} பார்த்து, “அற்புதம்! அற்புதம்!” என்றனர். அவனுடைய {அர்ஜுனனுடைய} அம்புகளுக்கிடையில் காற்றும் புகுவதற்கு சக்தியற்றதாய் இருந்தது. அவன் {அர்ஜுனன்}, கணைகளைத் தொடுப்பதற்கும் விடுப்பதற்கும் எடுத்துக் கொள்ளும் இடைவெளியைப் பார்வையாளர்கள் எவரும் காணவில்லை. கரங்களின் வேகத்தை வகைப்படுத்தும் வகையில் அந்தக் கடும்போரில் ஆயுதங்கள் அடிக்கப்பட்டன. பார்த்தன் {அர்ஜுனன்}, தனது கணைகளை முன்பை விட வேகமாக அடிக்கத் தொடங்கினான். பிறகு திடீரென நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான நேரான கணைகள் துரோணரின் தேரைத் தாக்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, காண்டீவத்தைத் தாங்கியவனுடைய {அர்ஜுனனுடைய} கணைகளால் முழுவதுமாக மறைக்கப்பட்ட துரோணரைக் கண்ட குரு படையினர், “ஓ” என்றும், “ஐயோ” என்றும், கதறினர். அங்கே கந்தர்வர்களுடனும் அப்சரஸ்களுடனும் வந்திருந்த மகவத் {இந்திரன்}, பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} கரங்களின் வேகத்தைப் பாராட்டினான்.

பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான ஆசானின் {துரோணரின்} மகன் {அஸ்வத்தாமன்} பலமிக்கத் தேர்களின் வரிசையைக் கொண்டு, அந்தப் பாண்டவனைத் {அர்ஜுனனைத்} தடுத்தான். அர்ஜுனனிடம் கோபம் கொண்டிருந்தாலும், அஸ்வத்தாமன், அந்தப் பிருதையின் {குந்தியின்} உயர் ஆன்ம மகனுடைய சாதனையை மனதில் புகழ்ந்தான். பிறகு கோபம் பெருக, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} விரைந்து சென்ற அவன் {அஸ்வத்தாமன்}, மேகத்தில் இருந்து பொழியும் பெரும் மழையைப் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி கணை மழையைப் பொழிந்தான். துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கித் திரும்பிய பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணர் களத்தை விட்டு அகல ஒரு வாய்ப்பை அளித்தான். அந்தப் பயங்கரப் போரில் காயம்பட்ட பின்னவர் {துரோணர்}, தனது கவசம் மற்றும் கொடியுடன், வேகமான குதிரைகளின் உதவியைக் கொண்டு விரைந்து சென்றார்.

அம்பறாத்தூணி தீர்ந்த அஸ்வத்தாமன்! – விராட பர்வம் பகுதி 59-அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அவர்களுக்குள் நடந்த மோதலில் இடைமறித்த கர்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! வலிமைமிக்க மன்னா {ஜனமேஜயா}, போர்க்களத்தில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அர்ஜுனனுடன் மோதினான். கணைகளை மழையெனப் பொழிந்து, மோதலுக்கு விரைந்து வந்த அவனைக் {அஸ்வத்தாமனைக்} கண்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, கணைகளின் மேகத்தால் அவனை {அஸ்வத்தாமனை} வரவேற்றான். தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலைப் போன்று, அந்த மோதல், பயங்கரமாக இருந்தது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விருத்திரனையும் வாசவனையும் {இந்திரனையும்} போலக் கணைகளை அடித்துக் கொண்டனர். கணைகளைக் கொண்டு ஆகாய விரிவின் அனைத்துப் பக்கங்களையும் மறைத்து, சூரியனை முழுமையாக மறைத்து, காற்றே நின்று போகும்படி போரிட்டனர்.

ஓ! எதிரி நகரங்களை வெல்பவனே {ஜனமேஜயா}, அப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டபோது, நெருப்பிலிடப்பட்ட மூங்கில்களில் எழுவது போல உரத்த ஒலிகள் அங்கே எழுந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அர்ஜுனனால் கடுமையாகத் தாக்கப்பட்ட அஸ்வத்தாமனின் குதிரைகள் குழப்பத்தில் ஆழ்ந்து, எந்தத் திக்கில் செல்ல வேண்டும் என்பதில் நிலை குலைந்து நின்றன. அப்படிப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} களத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, துரோணரின் பலமிக்க மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு சந்தர்ப்பத்தைக் கண்டுபிடித்து, குதிரை லாடத்தின் உருவிலான ஒரு கணையால், காண்டீவத்தின் நாணை அறுத்தான். அந்த இயல்புக்குமிக்கச் சாதனையைக் கண்ட தேவர்கள் அவனை {அஸ்வத்தாமனை} உயர்வாகப் புகழ்ந்தனர்.

“நன்று செய்தாய்! நன்று செய்தாய்!” என்று ஆச்சரியப்பட்ட துரோணர், பீஷ்மர், கர்ணன், வலிமைமிக்க வீரரான கிருபர் ஆகிய அனைவரும் அவனது அந்தச் சாதனையைப் பெரிதும் பாராட்டினர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தனது அற்புதமான வில்லை வளைத்து, கங்கப்பறவையின் இறகுகளைக் கொண்ட கணைகளால், வீரர்களில் காளையான பார்த்தனின் {அர்ஜுனனின்} மார்பில் அடித்தான். அதன் பேரில், உரக்கச் சிரித்த, வலிமையான கரங்களைக் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் புதிய வலிமையான நாணைப் பொருத்தினான். பிறகு, பிறைச்சந்திரனை ஒத்திருந்த தனது நெற்றியில் இருந்த வியர்வையால், தனது வில்லின் நாணை ஈரப்படுத்திய பிருதையின் மகன் {அர்ஜுனன்}, யானைகள் மந்தையின் சீற்றமிகு தலைவன் மற்றொரு யானையை நோக்கி விரைவதைப் போலத் தனது எதிரியை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான். அந்த ஒப்பற்ற இரு வீரர்களுக்கிடையில் நடந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அதைக் கண்டவர்களுக்கு அது மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

இரு வலிமைமிக்க யானைகள் போல, அந்த இரு வீரர்களும் போரிட்டபோது, குருக்கள் {கௌரவர்கள்}, அதை ஆச்சரியத்துடன் கண்டனர். மனிதர்களில் வீரமிக்கக் காளைகளான அவர்கள், பாம்பு மற்றும் சுடர் மிகும் நெருப்பைப் போன்ற வடிவங்களிலான கணைகளைக் கொண்டு, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பாண்டவனுக்கு {அர்ஜுனனுக்குச்} சொந்தமான அம்பறாத்தூணிகள் இரண்டும் வற்றாதவையாக இருந்ததால், அவ்வீரன் {அர்ஜுனன்} அசையாத மலையென அந்தப் போர்க்களத்தில் நின்றான். அந்த மோதலில் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருந்ததின் விளைவாக அஸ்வத்தாமனின் கணைகள் விரைவாகத் தீர்ந்தன.இதனாலேயே அர்ஜுனன், தனது எதிரியை {அஸ்வத்தாமனை} வெற்றிக் கொண்டான்.

பிறகு, தனது பெரிய வில்லை எடுத்து கர்ணன் நாணொலி எழுப்பினான். அப்போது, அங்கே, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் ஆச்சரிய ஒலிகள் எழுந்தன. வில்லின் நாண் சுண்டப்பட்ட இடத்தை நோக்கித் தன் கண்களைச் செலுத்திய பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தன் முன்னே ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்டான். அந்தக் காட்சியால் அவனது கோபம் பெரிதும் தூண்டப்பட்டது. சினமும், கர்ணனைக் கொல்லும் விருப்பமும் தூண்டப்பட்ட அந்தக் குரு குலத்தின் காளை {அர்ஜுனன்}, நிலைத்த பார்வையுடனும், உருளும் கண்களுடனும், அவனை {கர்ணனை} வெறித்துப் பார்த்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பார்த்தன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமனிடம் இருந்து திரும்புவதைக் கண்ட குரு {கௌரவ} வீரர்கள், அவன் {அர்ஜுனன்} மீது ஆயிரக்கணக்கான கணைகளை அடித்தனர். அந்த எதிரிகளைக் கொல்பவனான வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} விட்டுவிட்டு, திடீரெனக் கர்ணனை நோக்கி விரைந்தான். கோபத்தால் கண்கள் சிவக்க, கர்ணனை நோக்கி விரைந்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அவனுடன் தன்னந்தனியாக {ஒற்றைக்கு ஒற்றையாகப்} போரிட விரும்பி, இந்த வார்த்தைகளைச் சென்னான்.”

வடதிசை நோக்கி ஓடிய கர்ணன்! – விராட பர்வம் பகுதி 60-கர்ணனுக்குச் சவால் விட்ட அர்ஜுனன்; அர்ஜுனனை இகழ்ந்த கர்ணன்; ஏற்கனவே கர்ணன் தன்னிடம் இருந்து தப்பி ஓடியதைச் சுட்டிக் காட்டிய அர்ஜுனன்; கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த போர்; அர்ஜுனன் கர்ணனின் மார்பைத் துளைத்தது; கர்ணன் போர்க்களத்தை விட்டு வடதிசை நோக்கி ஓடி மீண்டும் புறமுதுகிடுவது…

அர்ஜுனன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, போரில் உனக்குச் சமமான எவனும் இல்லை என்று சபா மண்டபத்தின் மத்தியில் நீ பேசிய இறுமாப்பான பேச்சுக்கு நல்லது செய்யும் நேரம் {இதோ} வந்துவிட்டது. இன்று, ஓ! கர்ணா, என்னிடம் நீ மோதப் போகும் இந்தப் பயங்கர மோதலால், உனது சொந்த பலத்தை நீ அறிந்து கொள்வாய்; இதற்கு மேலும் யாரையும் நீ அவமதிக்கமாட்டாய். நற்பிறப்பைத் துறந்து, நீ பல கொடுஞ்சொற்களைப் பேசியிருக்கிறாய். ஆனால், இப்போது நீ செய்ய முயலும் இது, மிகக் கடுமையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, குருக்களின் {கௌரவர்களின்} பார்வையில் என்னிடம் மோதும் நீ, இதற்கு முன் என்னை அவமதித்ததற்கு நல்லது செய்வாயாக. {அந்த வார்த்தைகளை உண்மையென நிரூபிப்பாயாக}.

சபையின் நடுவில் பாஞ்சால இளவரசி {திரௌபதி} தீயவர்களின் அட்டூழியத்திற்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டாயே, {நீயும் அதற்கொரு காரணமாய் இருந்தாயே}, அந்த உனது செயலுக்கான கனியை {பலனை} இப்போது அறுவடை செய்வாயாக. முன்பு, அறநெறியின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததால், அப்போது நான் பழிவாங்கவில்லை. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அந்தக் கோபத்தின் கனியை நடக்கப் போகும் இம்மோதலில் இப்போது நீ காண்பாய். ஓ! தீயவனே {கர்ணனே}, அந்தக் காட்டில் முழுப் பனிரெண்டு {12} வருடங்களும் பெருந்துன்பத்தை நாங்கள் அனுபவித்தோம். நீ இன்று அந்தச் செறிவூட்டப்பட்ட பழியுணர்வின் {concentrated vengeance} கனிகளை {பலன்கள்} அறுவடை செய்வாயாக. வா, ஓ! கர்ணா, வந்து போரில் என்னைச் சமாளி. இந்தக் கௌரவ வீரர்கள் இம்மோதலைச் சாட்சியாகக் காணட்டும்” என்றான் {அர்ஜுனன்}.

இச்சொற்களைக் கேட்ட கர்ணன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சொற்களால் நீ சொல்வதையெல்லாம் செயலால் சாதிப்பாயாக. நீ சாதிக்கும் செயலைவிட நீ அதிகமாகப் பேசுவாய் என்பதை இவ்வுலகம் அறியும். உனது இயலாமையின் காரணமாக எதையும் செய்ய முடியாத நிலையிலேயே நீ முன்பு பொறுமையாக இருந்தாய். இப்போதாவது உனது பராக்கிரமத்தை சாட்சியாக நாங்கள் கண்டால், அக்கூற்று உண்மை என நாங்கள் அங்கீகரிக்கூடும். அறநெறிக்கு நீ கட்டுப்பட்டதால் கடந்த காலத்தில் {பழிதீர்க்காமல்} பொறுத்தாயென்றால், {அக்கட்டில் இருந்து} விடுபட்டவன் என்று உன்னை நீயே நினைத்துக் கொண்டாலும், இப்போதும் அதற்குச் சமமாகக் கட்டுப்பட்டே இருக்கிறாய். நீ சொன்னவாறே, உனது வாக்குறுதியின்படி கடும் விதிமுறைகளுடன் உனது வனவாசத்தை நீ கழித்திருந்தாலும், அந்தத் தவ வாழ்வின் பலனாகப் பலவீனமடைந்து இருக்கும் நீ, இப்போது என்னுடன் போரிட விரும்புவது எவ்வாறு? ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, உனது பக்கத்தில் இருந்து சக்ரனே (இந்திரனே} போரிட்டாலும் கூட, எனது பராக்கிரமத்தைக் காட்டுவதில், நான் எந்தத் தயக்கமும் கொள்ளமாட்டேன். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உனது விருப்பம் நிறைவேறப் போகிறது. என்னுடன் இப்போது போரிட்டு, எனது பலத்தை நீ காண்பாயாக” என்றான் {கர்ணன்}.

இதைக்கேட்ட அர்ஜுனன் {கர்ணனிடம்}, “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, இப்போது கூட என்னுடனான போரில் நீ {தோற்று} ஓடினாயே. அதனால்தானே, உன் தம்பி கொல்லப்பட்டாலும், நீ {இன்னும்} உயிருடன் இருக்கிறாய். தன் தம்பி கொல்லப்படுவதைக் கண்டு களத்தைவிட்டு ஓடிய பிறகும், உண்மையான நல்ல மனிதர்களுக்கு மத்தியில் நின்று தற்பெருமை பேசுபவன், உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்?” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இச்சொற்களைக் கர்ணனிடம் சொன்ன ஒப்பற்ற பீபத்சு {அர்ஜுனன்}, அவனிடம் விரைந்து சென்று, கவசத்தை ஊடுருவி செல்லும் கணைகளைச் சரமாரியாக அடித்தான். ஆனால், வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், பெரும் சுறுசுறுப்புடன், மேகத்தின் பொழிவு போன்ற தனது கணை மழையால் அவற்றைத் தடுத்தான். கணைகளின் அந்தக் கடும் ஊற்று அனைத்துப் புறங்களையும் மூடி, குதிரைகளையும், கரங்களையும், போராளிகளின் தோலுறைகளையும் பல இடங்களில் துளைத்தன. அந்தத் தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாத அர்ஜுனன், தனது நேரான கூரிய கணையால் கர்ணனுடைய அம்பறாத்தூணியின் கயிறுகளைத் துண்டித்தான்.

உடனே தனது அம்பறாத்தூணியில் இருந்து மற்றொரு கணையை எடுத்த கர்ணன், அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} வில் தாங்கிய கரங்கள் தளரும் வகையில் அவற்றைத் துளைத்தான். பிறகு வலிமையான கரங்கள் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனின் வில்லைத் துண்டுகளாக {சுக்குநூறாக} வெட்டிப்போட்டான். பிறகு கர்ணன், தனது எதிரியின் {அர்ஜுனனின்} மீது ஒரு பராசத்தை வீசினான். ஆனால் அர்ஜுனன் தன் கணைகளால் அதைத் துணித்தான். பிறகு ராதையின் மகனைப் {கர்ணனைப்} பின்தொடர்ந்து வந்த வீரர்கள் கூட்டமாக அர்ஜுனனிடம் விரைந்தனர். ஆனால் பார்த்தன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட கணைகளின் மூலம் அவர்கள் அனைவரையும் யமனுலகு அனுப்பி வைத்தான்.

வில்லின் நாணைக் காதுவரை இழுத்து அடிக்கப்பட்ட கூரிய கடும் கணைகளால் கர்ணனின் குதிரைகளைப் பீபத்சு {அர்ஜுனன்} கொன்றான். அவை {அக்குதிரைகள்} உயிரற்றுத் தரையில் கீழே விழுந்தன. பெரும் சக்தி கொண்ட சுடர்மிகும் மற்றொரு கூரிய கணையை எடுத்த வலிமைமிக்கக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கர்ணனின் மார்பைத் துளைத்தான். அந்தக் கணை அவனது {கர்ணனின்} கவசத்தைப் பிளந்து கொண்டு அவனது உடலைத் துளைத்தது. இதனால் கர்ணனின் பார்வை தடைபட்டு, அவனது உணர்வுகள் அவனை விட்டகன்றன. பிறகு உணர்வுகள் மீண்ட அவன் {கர்ணன்}, பெரும் வலியை உணர்ந்து, போர்க்களத்தை விட்டு வடதிசையை நோக்கி ஓடினான். இதனால், வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன் மற்றும் உத்தரன் ஆகிய இருவரும் அவனிடம் {கர்ணனிடம்} தரக்குறைவாகப் பேசத் தொடங்கினர்.

புறமுதுகிட்ட துச்சாசனன்! – விராட பர்வம் பகுதி 61-பீஷ்மரை நோக்கி அர்ஜுனன் முன்னேறுவது; துச்சாசனன் தடுப்பது; துச்சாசனனை ஒரு நொடியில் களத்தைவிட்டு ஓடச் செய்த அர்ஜுனன்; திருதராஷ்டிரனின் மற்ற மகன்களை அர்ஜுனன் வீழ்த்துவது 

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விகர்த்தனன் மகனை {கர்ணனை} வீழ்த்திய பிறகு, அர்ஜுனன், விராடனின் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்கப் பனைமரம் தெரியும் பிரிவை நோக்கி என்னை அழைத்துச் செல்வாயாக. அங்கே எங்கள் பாட்டனான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, என்னுடன் மோதுவதற்கு விரும்பி தேவனைப் போலக் காத்திருக்கிறார்” என்றான் {அர்ஜுனன்}.

உடனே, கணைகளால் கடுமையாகத் துளைக்கப்பட்டிருந்த உத்தரன், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நெருக்கமாக இருந்த அந்த வலிமைமிக்கப் படையைக் கண்டு, “ஓ! வீரரே {அர்ஜுனரே}, என்னால் இனிமேலும் உமது அற்புத குதிரைகளை வழிநடத்த இயலாது. எனது ஆவியில் உற்சாகம் குறைகிறது. என் மனது மிகவும் குழம்பிப் போயுள்ளது. உம்மாலும் குருக்களாலும் பயன்படுத்தப்பட்ட தெய்வீக ஆயுதங்களுடைய சக்தியின் விளைவாக அனைத்துப் புறங்களும் எனது கண்களுக்கு முன்பாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. முடைநாற்றம் கொண்ட கொழுப்பு, இரத்தம் மற்றும் சதை ஆகியவற்றால் நான் எனது உணர்வுகளை இழந்துவிட்டேன். இவை அனைத்தையும் கண்ட எனது மனது பயங்கரத்தால், இருந்த இடத்திலேயே இரண்டாகப் பிளக்கிறது {மனம் உடைந்து போகிறது}. இதற்கு முன்னர் நான் போரில் குதிரைகளின் இத்தகு திரட்சியைக் கண்டதில்லை. ஓ! வீரரே {அர்ஜுனரே}, வீரர்களால் ஏற்படும் கையுறைகள் உராயும் ஒலி {சிறகடிப்பு}, சங்கொலி, சிம்ம கர்ஜனைகள், யானைகளின் பிளிறல்கள், இடியைப் பிரதிபலிக்கும் காண்டீவத்தின் நாணொலி ஆகியவற்றைக் கேட்டும் நினைத்துப் பார்த்தும் வாயடைத்துப் போகிறேன்.

ஓ! வீரரே {அர்ஜுனரே}, மோதலின் போது நெருப்பு வட்டத்தைப் பிரதிபலிக்கும் காண்டீவத்தை  இடைவிடாமல் நீர் வட்டமாக வளைத்ததைக் கண்டதால், எனது கண்கள் தோற்று {செயலிழந்து}, இதயம் பிளக்கிறது. கோபத்தில் இருக்கும் பினகைதாங்கியைப் {சிவனைப்} போலப் போர்க்களத்தில் உமது கடும் வடிவத்தையும், உம்மால் அடிக்கப்படும் பயங்கரக் கணைகளையும் கண்டு நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன். நீர் உமது அற்புதமான கணைகளை எப்போது எடுக்கிறீர், வில்லின் நாணில் எப்போது பொருத்துகிறீர், அவற்றை எப்போது விடுகிறீர் என்பதைக் காண்பதில் நான் தோற்றேன். இவையாவையும் நீர் எனது கண்களுக்கு முன்பே செய்திருந்தாலும், உணர்வுகளை நான் இழந்திருந்ததால் என்னால் அவற்றைக் காண முடியவில்லை. எனது உற்சாகம் குன்றுகிறது, உலகமே எனது முன்னிலையில் நீந்திக் கொண்டிருப்பதைப் போல எனக்குத் தெரிகிறது. சாட்டையையும், கடிவாளங்களையும் பிடிக்க என்னிடம் பலம் இல்லை” என்றான் {உத்தரன்}.

இச்சொற்களைக் கேட்ட அர்ஜுனன் {உத்தரனிடம்}, “அஞ்சாதே. ஓ! மனிதர்களில் காளையே {உத்தரா}, நீயும் இப்போர்க்களத்தில் அற்புதச் சாதனைகளைச் செய்தாய். மத்ஸ்யர்களின் ஒப்பற்ற வழியில் பிறந்து, இளவரசனாக இருக்கும் நீ அருளப்பட்டிருப்பாயாக. எதிரிகளைத் தண்டிப்பதில் நீ உற்சாகமிழக்கலாகாது. எனவே, ஓ! இளவரசே {உத்தரா}, நான் மீண்டும் போரில் ஈடுபடும்போது, எனது தேரில் இருந்துகொண்டு, உனது மனோபலத்தைப் பெருக்கிக் கொண்டு, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {உத்தரா}, எனது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பாயாக” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விராடனின் மகனிடம் {உத்தரனிடம்} இதைச்சொன்ன, அந்த மனிதர்களில் சிறந்தவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், வலிய கரங்கள் கொண்டவனுமான அர்ஜுனன், விராடன் மகனிடம் {உத்தரனிடம்} மீண்டும், “பீஷ்மரின் படைப்பிரிவின் முன்னணிக்குத் தாமதமில்லாமல் என்னை அழைத்துச் செல்வாயாக. இந்தப் போரில் நான் அவரது {பீஷ்மரின்} வில்லின் நாணை அறுப்பேன். வானில் இருக்கும் மேகங்களுக்கு மத்தியில் இருந்து வெளிப்படும் மின்னல் கீற்றுகளைப் போலச் சுடர்மிகும் அழகுடன் கூடிய தெய்வீக ஆயுதங்களை நான் அடிப்பதை இன்று நீ காண்பாய். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் காண்டீவத்தின் பின்புறத்தை இன்று கௌரவர்கள் காண்பார்கள். கூடியிருக்கும் எதிரிகள் பிறகு “இவன் எந்தக் கையில் அடிக்கிறான். வலதிலா இடதிலா” என்று தங்களுக்குள் சச்சரவு செய்வார்கள்.

நான் இன்று பயங்கரமான (மரண) ஆற்றை மறு உலகத்தை நோக்கிப் பாயச் செய்வேன். அது {அந்த ஆறு} இரத்தத்தை நீராகவும், தேர்களை எதிர்சுழிப்புகளாகவும், யானைகளை முதலைகளாகவும் கொண்டிருக்கும். எனது நேரான கணைகளால், கரங்களையும், பாதங்களையும், தலைகளையும், முதுகுகளையும், தோள்களையும் கிளைகளாகக் கொண்டிருக்கும் மரங்கள் அடர்ந்த குரு காட்டை {கௌரவக் காட்டை} நான் இன்று முற்றாக ஒழிப்பேன். கையில் வில்லுடன் தனியாக நான் கௌரவப் படையை வீழ்த்துவதால், எரியும் காட்டில் இருந்து எனக்கு நூறு வழிகள் திறக்கும். என்னால் தாக்கப்படும் குரு படை (களத்தைவிட்டு ஓட இயலாமல்) திரும்பத் திரும்பச் சக்கரத்தைப் போலச் சுழன்று வருவதை நீ இன்று காண்பாய். கணைகளிலும் ஆயுதங்களிலும் எனக்கு உள்ள அற்புதப் பயிற்சியை நான் இன்று உனக்குக் காட்டுவேன்.

{போர்க்களத்} தரை, சமமானதாகவோ, சமமற்றதாகவோ இருப்பினும், நீ எனது தேரில் உறுதியாக நிற்பாயாக. இறகு படைத்த எனது கணைகளால் சொர்க்கத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் மேரு மலையைக் கூட என்னால் துளைக்கமுடியும். பழங்காலத்தில், இந்திரனின் கட்டளையின்பேரில், பௌலோமர்களையும் காலகஞ்சர்களையும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் போர்க்களத்தில் கொன்றேன். நான் எனது பிடியின் உறுதியை இந்திரனிடம் பெற்றேன். எனது கரங்களின் இலகுத்தன்மையைப் பிரம்மனிடம் பெற்றேன். எதிரிக்கூட்டத்தின் மத்தியில் போரிடும் வகையில் தற்காப்பு மற்றும் கடுந்தாக்குதல்களில் உள்ள பல்வேறு முறைகளைப் பிரஜாபதியிடம் இருந்து கற்றிருக்கிறேன். பெருங்கடலுக்கு அப்பாலுள்ள ஹிரண்யபுரத்தில் {தங்கத்தாலான மிதக்கும் நகரம் – பௌலோமர்களுடைய தலைநகரம்} வசித்த கடும் வில்லாளிகளான அறுபதினாயிரம் தேர்வீரர்களை முன்பு வீழ்த்தினேன். பஞ்சுப் பொதியைச் சிதறடிக்கும் புயலென நான் குருக்களின் {கௌரவர்களின்} பெரும்படையை வீழ்த்தப்போவதை இப்போது பார்.

பதாகைகளை மரங்களாகவும், காலாட்படையைச் செடிகொடிகளாகவும், தேர்வீரர்களை இரைதேடும் விலங்குகளாகவும் கொண்டிருக்கும் இந்தக் குரு என்ற காட்டை {கௌரவக்காட்டை}, தீ போன்ற எனது கணைகளால் நான் இன்று எரிப்பேன். வஜ்ரதாங்கி {இந்திரன்} தானவர்களை {அசுரர்களை} வீழ்த்துவது போல, தங்கள் சிறந்த சக்தியைப் பயன்படுத்திப் போரிட்டுவரும் குரு படையின் வலிமைமிக்க வீரர்களை,  நான் தனியாகவே, எனது நேரான கணைகளால், அவர்களுடைய தேர்க்கூண்டுகளில் இருந்து விழ வைப்பேன். ருத்ரனிடம் {சிவனிடம்} இருந்து ரௌத்திரத்தையும், வருணனிடம் இருந்து வருணத்தையும் {வருணபாசத்தையும்}, அக்னியிடம் இருந்து ஆக்னேயத்தையும், காற்றின் தேவனிடம் {வாயுவிடம்} இருந்து வாயவ்யத்தையும், சக்ரனிடம் {இந்திரனிடம்} இருந்து வஜ்ரத்தையும் இன்னும் பிற ஆயுதங்களையும் நான் பெற்றிருக்கிறேன். சிங்கம் போன்ற பல வீரர்களால் காக்கப்பட்டாலும் அந்தக் கடும் தார்த்தராஷ்டிர காட்டை நான் நிச்சயம் அழிப்பேன். எனவே, ஓ! விராடனின் மகனே {உத்தரா}, உனது அச்சங்கள் விலகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} உறுதிகூறப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, பீஷ்மரால் பாதுகாக்கப்பட்டிருந்த கடுந்தேர்களின் வரிசைக்குள் ஊடுருவினான். எனினும் கடுஞ்செயல்கள் புரியும் கங்கையின் மகன் {பீஷ்மர்}, போர்க்களத்தின் வீரர்களை வீழ்த்த விருப்பம் கொண்டு முன்னேறி வரும் வலிய கரங்கள் கொண்ட வீரனை {அர்ஜுனனை} மகிழ்ச்சியுடன் எதிர்த்து நின்றார். எதிர்த்து நின்ற பீஷ்மரின் கொடிக்கம்பத்தை, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது கணையைக் கொண்டு ஜிஷ்ணு {அர்ஜுனன்} வேரோடு வெட்டி வீழ்த்தினான். இதனால், அழகிய மலர்மாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த துச்சாசனன், விகர்ணன், துஸ்ஸஹன், விவிங்சதி ஆகிய நான்கு வீரர்களும் அந்தக் கடும் வில்லாளியை நோக்கி விரைந்து வந்தனர். கடும் வில்லாளியான பீபத்சுவை {அர்ஜுனனை} நோக்கி விரைந்து வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு, வீரனான துச்சாசனன், ஒரு பிறை வடிவக் கணையால் விராடன் மகனையும் {உத்தரனையும்}, மற்றொரு கணையால் அர்ஜுனனின் மார்பையும் துளைத்தான்.

துச்சாசனனை எதிர்த்த ஜிஷ்ணு {அர்ஜுனன்}, கழுகின் இறகுகளைப் படைத்த தனது கூரிய கணைகளால், தனது எதிரியின் {துச்சாசனனின்} தங்க முலாம் பூசப்பட்ட வில்லை வெட்டி, ஐந்து கணைகளால் அவனது மார்பைத் துளைத்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் துன்புற்ற துச்சாசனன், போரை விட்டு விலகி {புறமுதுகிட்டு} ஓடினான். பிறகு திருதராஷ்டிரன் மகனான விகர்ணன், எதிரி வீரர்களைக் கொல்லும் அர்ஜுனனை கழுகின் இறகுகள் கொண்ட நேரான கூரிய கணைகளால் துளைத்தான். ஆனால் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது நேரான கணைகள் மூலம் ஒரு நொடிக்குள் அவனது {விகர்ணனின்} நெற்றியில் அடித்தான். அர்ஜுனனால் துளைக்கப்பட்ட அவன் தனது தேரில் இருந்து விழுந்தான். இதைக் கண்ட துஸ்ஸஹன், விவிங்சதியை ஆதரித்தபடி, தனது சகோதரனை மீட்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு மேகம் போன்ற கூரிய கணைகளால் அர்ஜுனனை மறைத்தான்.

எனினும், இதற்குக் கிஞ்சிற்றும் கவலைப்படாத தனஞ்சயன் {அர்ஜுனன்}, அதே நொடியிலேயே இரு கணைகளால் அவர்கள் இருவரையும் துளைத்து, அவர்கள் இருவரது குதிரைகளையும் கொன்றான். இதனால், குதிரைகளை இழந்து, தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்ட அந்த இரு திருதராஷ்டிரன் மகன்களையும், மற்ற தேர்களில் அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பிற வீரர்கள் தூக்கிச் சென்றனர். வீழ்த்தப்பட முடியாதவனும், கிரீடம் தரித்தவனும், குந்தியின் பலமிக்க மகனுமான பீபத்சு {அர்ஜுனன்}, தனது கணைகளைக் கொண்டு, குறிதவறாமல் அனைத்துப்புறங்களிலும் அடித்துக் கொண்டிருந்தான்.

அர்ஜுனனின் பராக்கிரமம்! – விராட பர்வம் பகுதி 62-போர்க்களத்தில் அர்ஜுனனின் கோரத்தாண்டவம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! பாரதக் குலத்தவனே {ஜனமேஜயா}, குருக்களில் பெரும் தேர்வீரர்கள் அனைவரும் ஒன்றுகூடி, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி அனைத்துப் புறங்களில் இருந்தும் அர்ஜுனனைத் தாக்கினர். ஆனால் அளவிலா ஆன்மா கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, அந்த வலிய தேர்வீரர்களை, மலைகளை மூடும் பனி போலத் தனது கணை மேகங்களால் மூடினான். பெரும் யானைகளின் பிளிறல்களும், சங்கொலிகளும் ஒன்றாகக் கலந்து அங்கே பெரும் ஒலியை உண்டாக்கின. யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும், இரும்புக்கவசங்களையும் பார்த்தன் {அர்ஜுனன்} அடித்த அம்புகள் துளைத்து வெளியேறி ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன. மிகுந்த வேகத்துடன் கணைகளை அடித்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் போட்டியில், கூதிர்காலத்தின் {இலையுதிர் காலத்தின்} நண்பகல் வேளையில் சுட்டெரிக்கும் சூரியனை நினைவுபடுத்தினான்.

அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும், குதிரை வீரர்கள் தங்கள் குதிரைகளில் இருந்தும் கீழே குதித்து, காலாட்படையினருடன் சேர்ந்து அனைத்துப் புறங்களிலும் {புறமுதுகிட்டு} ஓடினர். தாமிரம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பலமிக்க வீரர்களின் கவசங்களை அர்ஜுனனின் கணைகள் பிளந்த போது ஏற்பட்ட சடசடப்பொலி பெருவொலியாக இருந்தது. பாம்புகள் போலச் சீறிக்கொண்டு விரைந்து சென்ற பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் சிதைக்கப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள் மேலிருந்த போர்வீரர்கள் அனைவரும் விரைவில் அந்தக் களத்தில் பிணங்களாக விழுந்தனர்.

கையில் வில்லுடன் போர்க்களத்தில் தனஞ்சயன் {அர்ஜுனன்} நாட்டியம் ஆடுவதைப் போலத் தெரிந்தது. இடி போன்ற காண்டீவத்தின் நாணொலியால் பீதியடைந்தவர்களில், அந்தப் போர்க்களத்தை விட்டு ஓடியவர்கள் பலராக இருந்தனர். தலைப்பாகைகள், காது குண்டலங்கள், தங்க ஆரங்களுடன் கூடிய வெட்டப்பட்ட தலைகள் அந்தப் போர்க்களத்தில் நிறைந்திருந்தன. ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட கைகளில் விற்களை ஏந்திய மனித உடல்கள், கணைகளால் சிதைக்கப்பட்டு எங்கும் சிதறிக் கிடந்ததால் பூமி அழகாகத் தெரிந்தது. ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, கூரிய கணைகளால் வெட்டப்பட்ட தலைகள் தொடர்ச்சியாகப் பூமியில் விழுவதைக் காண, வானத்தில் இருந்து கல் மழை பொழிவது போல இருந்தது.

அஞ்சத்தக்க பராக்கிரமம் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} தனது கடுமையை வெளிக்காட்டியபடி போர்க்களத்தில் உலவி, திருதராஷ்டிரன் மகன்கள் மீது கோபத்தால் பயங்கர நெருப்பை ஊற்றிக் கொண்டிருந்தான். அர்ஜுனனின் கடும் பராக்கிரமத்தைக் கண்ட எரிக்கப்பட்ட அந்த எதிரிப்படையின் குரு வீரர்கள் துரியோதனன் முன்னிலையிலேயே உற்சாகமிழந்து போரிடுவதை நிறுத்தினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் படையைப் பயங்கரத்தால் பீடிக்கச் செய்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கதிகலங்கச் செய்த அந்த வெற்றியாளர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} களத்தில் இப்படியே உலவி கொண்டிருந்தான்.

இறந்தவர்களின் கலைந்த கேசத்தை மிதக்கும் தக்கையாகவும், விற்களையும் அம்புகளையும் படகுகளாகவும், இறைச்சியையும் விலங்குச் சாறுகளையும் சேறாகவும் கொண்ட யுகமுடிவின் மரண ஆறு போல, பாண்டுவின் மகன் அந்தப் போர்க்களத்தில், அலையடிக்கும் கடுமையான ரத்த ஆற்றை உற்பத்தி செய்தான். கவசங்களும், தலைப்பாகைகளும் அதன் பரப்பில் அடர்த்தியாக மிதந்து சென்றன. யானைகள் முதலைகளாகவும், தேர்கள் அதன் கட்டுமரங்களாகவும், கொழுப்பு, இரத்தம் ஆகியன அதன் ஊற்றாகவும் இருந்தன. பார்வையாளர்களின் இதயங்களில் பயங்கரம் பீடிக்கச்செய்ய அது {அந்த இரத்த ஆறு} கணக்கிடப் பட்டிருந்தது.

காணக் கொடூரமாகவும், சீற்றமிகு விலங்குகளின் கதறல்களை எதிரொலிக்கும் அச்சத்தின் எல்லையாகவும் இருந்த கூரிய கணைகள் அதன் {அந்த இரத்த ஆற்றின்} முதலைகளாக இருந்தன. ராட்சசர்களும் மற்ற மனித ஊனுண்ணிகளும் {நரமாமிசம் உண்பவர்களும்} அதன் ஓர் எல்லையில் இருந்து மற்ற எல்லைவரை நடமாடினர். முத்துச் சரங்கள் அதன் {அந்த இரத்த ஆற்றின்} அதிர்வலைகளாக இருந்தன. பிற அற்புத ஆபரணங்கள் அதன் குமிழிகளாக இருந்தன. மொய்க்கும் கணைகள் அதன் கடும் சுழிக்காற்றாகவும், குதிரைகள் அதன் ஆமைகளாகவும் இருந்தன. அந்த வலிமைமிக்கத் தேர் வீரன் {அர்ஜுனன்} அதன் {அந்த இரத்த ஆற்றில் இருக்கும்} பெரிய தீவாக இருந்தான். அது சங்கொலிகளையும், பேரிகையொலிகளையும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பார்த்தன் {அர்ஜுனன்} உண்டாக்கிய அந்த இரத்த ஆறு கடக்கமுடியாததாக இருந்தது. அர்ஜுனன் தனது கணைகளை எடுப்பதையும், வில்லின் நாணில் அவற்றைப் பொருத்துவதையும் அக்காண்டீவத்தில் இருந்து நீட்டி இழுத்து அவற்றை விடுவதையும் பார்வையாளர்களால் காண முடியாத அளவுக்கு அவனது {அர்ஜுனனது} கரங்கள் இலகுவாக {வேகமாக} இருந்தன.

பீஷ்மர் மயங்கினார்! – விராட பர்வம் பகுதி 63-பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற கடும் போர்; வானத்தில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிவது; இருவரும் கடுமையாகப் போரிடுவது; அர்ஜுனன் அடித்த கணைகளால் பீஷ்மர் மயங்குவது; தேரோட்டிகள் அவரைப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்வது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்களுக்கு மத்தியில் பெரும் அழிவு ஏற்பட்ட போது, சந்தனுவின் மகனும், பாரதர்களின் பாட்டனுமாகிய பீஷ்மர், அர்ஜுனனை நோக்கி விரைந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தனது அற்புத வில்லையும், எதிரிகளின் முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்ல கூரிய முனை கொண்ட பல கணைகளையும் எடுத்து, அடித்து அவனைக் {அர்ஜுனனைக்} கடும் வேதனைக்குள்ளாக்கினார். அவரது {பீஷ்மரது} தலைக்கு மேலே வெண்குடை ஏந்தப்பட்டதன் விளைவாக அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சூரிய உதயத்தின் போது காணப்படும் அழகிய மலை போலத் தெரிந்தார்.

பிறகு அந்தக் கங்கையின் மகன் {பீஷ்மர்}, திருதராஷ்டிரன் மகன்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தனது சங்கை ஒலித்துக் கொண்டு, தனது வலப்புறத்தில் சுழன்று பீபத்சுவை {அர்ஜுனனை} அடைந்து அவனது போக்கைத் தாமதப்படுத்தினார். எதிரி வீரர்களைக் கொல்லும் அவர் {பீஷ்மர்}, தன்னை நோக்கி குந்தியின் மகன் {அர்ஜுனன்} வருவதைக் கண்டு, மழை நிறைந்த மேகத்தை வரவேற்கும் மலை போல, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனை {அர்ஜுனனை} வரவேற்றார். பெரும் சக்தி கொண்ட பீஷ்மர், பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடிக்கம்பத்தை எட்டு {8} கணைகளால் துளைத்தார். பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கொடியை அடைந்த அக்கணைகள், அங்கே சுடர்விட்டுக் கொண்டிருந்த குரங்கையும், பதாகையின் மேல் இருந்த அந்த {மற்ற} உயிரினங்களையும் அடித்தன.

பிறகு, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய முனை கொண்ட வலிமைமிக்க ஓர் எறிவேலைக் கொண்டு பீஷ்மரின் குடையை வெட்டினான். அக்கணமே அது {அந்தக்குடை} தரையில் விழுந்தது. இலகுவான கரங்களைக் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது எதிரியின் கொடிக்கம்பத்தையும், பிறகு அவரது {பீஷ்மரின்} குதிரைகளையும், பிறகு பீஷ்மரின் பக்கவாட்டுப் பகுதிகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்த  ஓட்டுனர்கள் இருவரையும் பல கணைகளால் அடித்தான். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத பீஷ்மர், அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} பலத்தைக் குறித்து அறிந்திருந்தாலும், ஒரு வலிமைமிக்க தெய்வீகக் ஆயுதத்தால் தனஞ்சயனை {அர்ஜுனனை} மூடினார். அளவிடமுடியாத ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பீஷ்மரை நோக்கி ஒரு தெய்வீக ஆயுதத்தை அடித்து, பீஷ்மரிடம் இருந்து வந்த ஆயுதத்தை, அடர்த்தியான மேகத்திரளை வரவேற்கும் மலை போல ஏற்றுக் கொண்டான்.

பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதல் கடுமையாக இருந்தது. படைகளுடன் இருந்த மற்ற கௌரவ வீரர்கள் வெறும் பார்வையாளர்களாகவே அங்கே இருந்தனர். பீஷ்மருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையிலான அம்மோதலில், கணைகளை எதிர்த்து அடித்த மற்ற கணைகள், மழைக்காலத்தின் விட்டில்பூச்சிகளைப் போலக் காற்றில் ஒளிர்ந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, பார்த்தன் {அர்ஜுனன்}, வலது மற்றும் இடது ஆகிய தனது இரண்டு கைகளாலும் மாற்றி மாற்றிக் கணைகளை அடித்துக் கொண்டிருந்ததன் விளைவாக வளைந்திருந்த காண்டீவம், தொடர் நெருப்பு வளையம் போலக் காட்சியளித்தது. பிறகு, கனமழையால், மலையின் மார்பை மறைக்கும் மேகம் போல, நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் பீஷ்மரை அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} மறைத்தான்.

ஆர்ப்பரிக்கும் கடலைத் தாங்கிக் கொள்ளும் கரையைப் போல, அந்தக் கணை மழையைத் தனது கணைகளால் கலங்கடித்த பீஷ்மர், பதிலுக்கு அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} தனது கணைகளால் மறைத்தார். அந்தப் போரில் ஆயிரம் துண்டுகளாக வெட்டப்பட்ட வீரர்கள், பல்குனனின் {அர்ஜுனனின்} தேருக்கு அருகே வேகமாகச் சரிந்து விழுந்தனர். பிறகு, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} தேரில் இருந்து, தங்க இறகுகள் கொண்ட கணை மழை வானத்தில் இருந்து வெட்டுக்கிளிகள் பறந்து வருவது போலப் பொழிந்தன. அவனால் {அர்ஜுனனால்} அப்படி அடிக்கப்பட்டவற்றை, மீண்டும் பீஷ்மர், தனது கூரிய கணைகளால் தடுத்தார். இதற்குக் கௌரவர்கள், “அற்புதம்! அற்புதம்!! அர்ஜுனனுடன் போரிடுவதில், பீஷ்மர் மிகக் கடுமையான சாதனையைச் சாதித்திருக்கிறார். பலமிக்கவனும், இளமைநிறம்பியவனும், இலகுவான திறமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும் ஆவான் தனஞ்சயன் {அர்ஜுனன்}. தேவகியின் மகன் கிருஷ்ணன், ஆசான்களில் முதன்மையானவரான பரத்வாஜரின் வலிமைமிக்க மகன் {துரோணர்}, சந்தனுவின் மகன் பீஷ்மர் ஆகியோரைத் தவிர வேறு யாரால் பார்த்தனின் {அர்ஜுனனின்} வேகத்தைப் போர்க்களத்தில் தாங்கிக் கொள்ள முடியும்?” என்று ஆச்சரியப்பட்டனர்.

ஆயுதங்களை ஆயுதங்களால் தடுத்த, அந்த இரு வலிமைமிக்கப் பாரதக் குலத்தின் காளைகளும், விளையாட்டாகப் போரிட்டபடி அனைத்து உயிர்களின் கண்களையும் கவர்ந்தனர். அந்த ஒப்பற்ற வீரர்கள், பிரஜாபதி, இந்திரன், அக்னி, கடும் ருத்திரன் {சிவன்}, குபேரன், வருணன், யமன், வாயு ஆகியோர்களிடம் பெற்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியபடியே களத்தில் உலவிக் கொண்டிருந்தனர். அந்த வீரர்களின் மோதலைக் கண்ணுற்ற அனைவரும் பெரிதும் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அனைவரும், “நீண்ட கரங்கள் கொண்ட பார்த்தா {அர்ஜுனா} நன்று செய்தாய்!”, “பீஷ்மரே நன்று செய்தீர்!”, “உண்மையில் பீஷ்மருக்கும் பார்த்தனுக்கும் இடையில் நடைபெறும் இம்மோதலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மனிதர்களுக்கு மத்தியில் அரிதானவையாகும்” என்றனர்.”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படியே அனைத்து ஆயுதங்களையும் அறிந்த அந்த வீரர்களுக்கிடையிலான மோதல் நடந்து கொண்டிருந்தது. தெய்வீக ஆயுதங்களின் மோதல் நின்றதும், கணைகளின் தாக்குதல் தொடர்ந்தது. எதிராளியை {பீஷ்மரை} அணுகிய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தனது கூரிய கணையால் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீஷ்மரின் வில்லை வெட்டினான். எனினும், வலிய கரங்கள் கொண்டவரும், பெரும் தேர்வீரருமான பீஷ்மர், கண் இமைப்பதற்குள் மற்றொரு வில்லை எடுத்து அதற்கு நாண் பொருத்தினார். மிகுந்த கோபமடைந்த அவர் {பீஷ்மர்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கணைமழையைப் பொழிந்தார்.

பெரும் சக்தி கொண்ட அர்ஜுனனும், பீஷ்மர் மீது கூரிய கணைகளைப் மழையெனப் பொழிந்தான். பீஷ்மரும் மேகங்கள் போன்ற கணைகளைப் பாண்டு மகனின் {அர்ஜுனன்} மீது அடித்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, தெய்வீக ஆயுதங்களை அறிந்து, கூரிய கணைகளை அடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த இருவரிடமும், யாராலும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. கிரீடம் தரித்த வலிமைமிக்கத் தேர்வீரனான குந்தியின் மகனும் {அர்ஜுனனும்}, சந்தனுவின் வீரமிக்க மகனும் {பீஷ்மரும்} தங்கள் கணைகளால் பத்து  {10} திசைகளையும் தெளிவற்றதாக்கினர்.

மேகம் போன்ற கணைகளால் அந்தப் பாண்டவன் {அர்ஜுனன்} பீஷ்மரை மூடினான்; பீஷ்மரும் அந்தப் பாண்டவனை {அர்ஜுனனை} மூடினார். ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களின் உலகில் நடைபெற்ற அற்புதப் போராக அஃது இருந்தது. பீஷ்மரின் தேரைப் பாதுகாத்துக் கொண்டிருந்த வீரர்கள், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, அந்தக் குந்தி மகனுடைய {அர்ஜுனனுடைய} தேரின் அருகிலேயே தரையில் விழுந்தனர். காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட ஸ்வேதவாகனனின் {அர்ஜுனனின்} இறகு படைத்த கணைகள், அனைத்துப் புறங்களிலும் பாய்ந்து எதிரிகளை மொத்தமாகப் படுகொலை செய்தன. அவனது தேரில் இருந்து வெளிப்பட்ட, இறகுகள் படைத்த சுடர்மிகும் கணைகளைக் காண வானத்தில் செல்லும் அன்னப்பறவைகளின் வரிசையைப் போலத் தெரிந்தன.

ஆகாயத்தில் இருந்த இந்திரனுடன் கூடிய தேவர்கள், அற்புதமான வில்லாளியான அர்ஜுனனால் பெருஞ்சக்தியுடன் அடிக்கப்பட்ட மற்றொரு தெய்வீக ஆயுதத்தை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். பெரும் அழகுபடைத்த அற்புத ஆயுதமான வலிமைமிக்கக் காண்டீவத்தைக் கண்ணுற்ற {கந்தர்வனான} சித்திரசேனன், தேவர்கள் தலைவனிடம் {இந்திரனிடம்}, “பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்படும் கணைகள் வானத்தில் ஒரே நேர்கோட்டில் செல்வதைப் பாரும். இந்தத் தெய்வீக ஆயுதத்தைப் {காண்டீவத்தைப்} பயன்படுத்துவதில் ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} கைத்திறம் அற்புதமாக இருக்கிறது. மனிதர்களுக்கு மத்தியில் இஃது இல்லாததால், இது மனிதர்கள் பயன்படுத்தத்தக்க ஆயுதமன்று. பழங்காலத்தில் இருந்து பயன்பட்டு வரும் வலிமைமிக்க அந்த ஆயுதங்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றன? கணைகளை எடுப்பதற்கும், வில்லில் பொருத்துவதற்கும், காண்டீவத்தை வளைத்து அடிப்பதற்குமான இடைவெளியே காணப்படவில்லையே.  நாளின் மத்திய வேளை சூரியனைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பாண்டுவின் மகனைக் {அர்ஜுனனைக்} காணும் சக்தி கூட அந்தப் படை வீரர்களுக்கு இல்லையே. அதே போல, கங்கையின் மகனான பீஷ்மரையும் யாராலும் பார்க்க முடியவில்லை. இருவரும் புகழ்பெற்ற சாதனையாளர்களே. இருவரும் கடும் பராக்கிரமம் மிக்கவர்களே, வீரத்தில் அவ்விருவரும் இணையாகவே இருக்கின்றனர். இவர்கள் இருவரையுமே போர்க்களத்தில் வீழ்த்த முடியாது” என்றான் {கந்தர்வனான சித்திரசேனன்}.

பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, பீஷ்மருக்கும் இடையில் நடந்த அந்த மோதலைக் குறித்து அந்தக் கந்தர்வனால் இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவர்கள் இருவர் மீதும் தெய்வீகப் பூமாரியைப் பொழிந்து, அவர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தினான். அதேவேளையில், சந்தனுவின் மகனான பீஷ்மர், இருகைகளாலும் தன்னைத் துளைத்துக் கொண்டிருந்த அர்ஜுனனை, இடதுபுறமாகத் தாக்கினார். இதைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, உரக்கச் சிரித்தபடி, கழுகு இறகுகள் படைத்த கூரிய கணையொன்றால், சூரியப் பிரகாசமிக்கப் பீஷ்மரின் வில்லை வெட்டினான்.

பிறகு, என்னதான் பின்னவர் {பீஷ்மர்} தனது பராக்கிரமம் அனைத்தையும் செலுத்திப் போராடிக் கொண்டிருந்தாலும், குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, பத்து கணைகளால் பீஷ்மரின் மார்பைத் துளைத்தான். கடும் வலியால் வேதனையுற்ற வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான கங்கையின் மகன் {பீஷ்மர்}, தனது தேரின் கம்பத்தில் சாய்ந்தபடி அப்படியே நீண்ட நேரம் நின்றார். மயக்கத்தில் இருக்கும் வீரர்களைப் பாதுகாக்கும் முறையை அறிந்தவர்களான குதிரைத்தேரோட்டிகள், அவர் {பீஷ்மர்} சுயநினைவை இழந்ததைக் கண்டு, அவரைப் பாதுகாப்பாக {அங்கிருந்து} அழைத்துச் சென்றனர்.

ஆராயாமல் தப்பி ஓடிய துரியோதனன்! – விராட பர்வம் பகுதி 64-துரியோதனனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; துரியோதனன் அர்ஜுனனைத் தாக்கியது; விகர்ணன் துரியோதனனின் உதவிக்கு வந்து புறமுதுக்கிட்டு ஓடியது; அவனைக் கண்ட மற்ற படைவீரர்களும் களத்தைவிட்டு புறமுதுகிட்டு ஓடுவது; துரியோதனனும் புறமுதுகிடுவது; அர்ஜுனன் துரியோதனனை நிந்திப்பது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “களத்தின் முன்னணியை விட்டு பீஷ்மர் ஓடியதும், திருதராஷ்டிரனின் சிறப்புமிக்க மகன் {துரியோதனன்}, தனது கொடியை உயர்த்தியபடி, கையில் வில்லுடனும், உரத்த கர்ஜனையுடனும் அர்ஜுனனை அணுகினான். தனது வில்லைக் காது வரை இழுத்து ஈட்டி முனை கொண்ட கணையை அடித்து, எதிரிகளுக்கு மத்தியில் உலாவி கொண்டிருந்த கடும் பராக்கிரமமிக்கப் பயங்கர வில்லாளியான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நெற்றியைத் துளைத்தான். தனது புகழ்பெற்ற செயல்களின் காரணமாகப் பிரகாசமாக இருந்தவனான அந்த வீரன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா} கூரிய தங்க முனை கொண்ட அந்தக் கணையால் நெற்றியில் துளைக்கப்பட்டு, ஒற்றைச் சிகரமுடைய அழகிய மலை போல இருந்தான். அந்தக் கணையால் வெட்டப்பட்டு உண்டான புண்ணிலிருந்து உயிரோட்டமான சூடான இரத்தம் அதிகமாகப் பாய்ந்தது. அப்படி அவனது {அர்ஜுனனின்} உடலில் சொட்டிய இரத்தம், தங்க மலர்களால் ஆன மாலை போல அழகாக ஒளிர்ந்தது.

அந்தக் கணையைக் கொண்டு துரியோதனனால் தாக்கப்பட்டவனும், வேகமான கரங்களும், பொய்க்கா பலமும் கொண்டவனுமான அர்ஜுனன், கோபத்தின் பெருக்கத்தால், கடும் சக்தி கொண்ட நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற கணைகளைக் கொண்டு துரியோதனனை அடித்தான். வல்லமையும், சக்தியும் கொண்ட துரியோதனன் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தாக்கினான். வீரர்களில் முதன்மையான பார்த்தனும் {அர்ஜுனனும்} துரியோதனனைத் தாக்கினான். *அஜமீட குலத்தில் பிறந்த அந்த மனிதர்களில் முதன்மையான இருவரும் அந்த மோதலில் ஒருவரை ஒருவர் இப்படியே தாக்கிக் கொண்டனர்.

பிறகு நான்கு தேர்களின் துணையுடன், மலை போன்ற பெரிதான யானையின் மீது அமர்ந்தபடி, விகர்ணன், குந்தியின் மகனான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} நோக்கி விரைந்து வந்தான். பெரும் யானை தன்னை நோக்கி வேகத்துடன் வருவதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது வில்லின் நாணை காதுவரை இழுத்து பெரும் வேகத்துடன் ஓர் இரும்புக் கணையை அதன் {யானையின்} நெற்றிப் பொட்டில் அடித்தான். வஜ்ரத்தைக் கொண்டு மலையைப் பிளக்கும் இந்திரன் போல, கழுகின் இறகுகள் கொண்ட கணையைக் கொண்டு பெரும் மலையைப் போன்ற அந்த யானையைப் பார்த்தன் {அர்ஜுனன்} துளைத்தான். அந்தக் கணையால் பெரிதும் வேதனையுற்ற அந்த யானைவகையின் தலைமை யானை, நடுங்கத் தொடங்கி, இடியால் தாக்கப்பட்ட மலைச்சிகரம் போல, தரையில் விழுந்தது.

யானைகளில் சிறந்த யானை, அப்படிப் பூமியில் விழுந்ததும், பெரும் அச்சத்துடன் அதில் இருந்து திடீரென இறங்கிய விகர்ணன், எண்ணூறு {800} அடிகள் பின்னோக்கி ஓடி விவிங்சதியின் தேரில் ஏறிக் கொண்டான். மேகத்திரள் போலவும், மலை போலவும் இருந்த பெரும் யானையை இடிபோன்ற கணையால் கொன்ற பிருதையின் மகன் {அர்ஜுனன்}, அதே போன்ற மற்றொரு கணையால் துரியோதனனை,  அவனது மார்பில் அடித்தான். யானையும், மன்னனும் {துரியோதனனும்} காயப்பட்டதையும், மன்னனின் தேரைத் தாங்கிய வீரர்களுடன் சேர்ந்து விகர்ணன் ஓடியதையும் கண்ட மற்ற வீரர்கள், காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட கணைகளால் துன்புற்றுக் களத்தை விட்டு ஓடினர்.

பார்த்தனால் யானை கொல்லப்பட்டதையும், பிற வீரர்கள் அனைவரும் ஓடுவதையும் கண்ட குருக்களில் முதன்மையான துரியோதனன், எதையும் ஆராயாமலேயே, தனது தேரைத் திருப்பி, பார்த்தன் {அர்ஜுனன்} இல்லாத திசையில் தப்பி ஓடினான். அந்தக் கணையால் துளைக்கப்பட்டு, இரத்தம் கக்கியபடி, அச்சத்தால் துரியோதனன் ஓடிய போது, அனைத்து எதிரிகளையும் எதிர்க்கவல்ல கிரீடி {அர்ஜுனன்}, மேலும் போரிட விரும்பி, கோபத்தால் அவனை {துரியோதனனை} நிந்திக்கும் வகையில், “உனது பெரும் பெயரையும், புகழையுந்துறந்து, புறமுதுகிட்டு ஏன் இப்படி ஓடுகிறாய்? உனது நாட்டை விட்டுக் கிளம்பிய போது உனது எக்காளம் எப்படி ஒலித்ததோ, அப்படி ஏன் இப்போது ஒலிக்கவில்லை? இதோ பார், நான் யுதிஷ்டிரருக்குக் கீழ்ப்படிந்த ஒரு பணியாளும், பிருதையின் {குந்தியின்} மூன்றாவது மகனுமாவேன். நானே போருக்காக உறுதியாக நிற்கிறேன். திரும்பு. ஓ! திருதராஷ்டிரர் மகனே {துரியோதனா}, உனது முகத்தை எனக்குக் காட்டு. மன்னர்களின் நடத்தையை மனதில் கொள். துரியோதனன் {பிறரால் எதிர்த்துப் போரிடப்பட முடியாதவன்} என்று உனக்கு முன்பு கொடுக்கப்பட்ட பெயர் இதன்மூலம் பொருளற்றதாகிவிடும். இப்படிக் களத்தை விட்டு ஓடுவதால் உனது நிலைத்த பேறு என்னவாகும்? ஓ! துரியோதனா, உனக்கு முன்னும் பின்னும் எந்தப் பாதுகாவலரையும் நான் காணவில்லையே. ஓ மனிதர்களில் முதன்மையானவனே, உனக்கும் மிகவும் பிடித்தமான உனது உயிரைக் காத்துக் கொண்டு, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} கைகளில் இருந்து தப்பித்து ஓடிக்கொள். போ” என்றான் {அர்ஜுனன்}

தோற்றுத் திரும்பிய குருக்கள்! – விராட பர்வம் பகுதி 65-அர்ஜுனனின் வசைகளைத் தாங்கிக் கொள்ளாமல் திரும்பி வந்த துரியோதனனைக் கர்ணன் தடுத்து தானே அர்ஜுனனை எதிர்த்துச் சென்றது; கௌரவர்கள் அனைவரும் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டு தாக்குவது; சம்மோகனம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அர்ஜுனன் கௌரவர்களை மயக்குவது; அவர்களது ஆடைகளை எடுத்துக் கொள்வது; பீஷ்மர் துரியோதனனை ஹஸ்தினாபுரம் திரும்புமாறு வேண்டுவது; அர்ஜுனன் அடைந்த வெற்றி..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி அந்த ஒப்பற்ற வீரனால் {அர்ஜுனனால்} அழைக்கப்பட்ட அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, அந்தக் கண்டனங்களால் குத்தப்பட்டு, அங்குசத்தால் குத்தப்பட்ட வலிமையும் சீற்றமும் மிக்க யானையைப் போலத் திரும்பினான். தன்னால் தாங்கிக் கொள்ளமுடியாத நிந்தனைகளால் குத்தப்பட்ட அந்த வலிமையும் துணிச்சலும் மிக்கத் தேர்வீரன் {துரியோதனன்}, பாம்பை மிதித்துவிட்டவன் போலப் பெரும் வேகத்துடன் தனது தேரைத் திருப்பினான். தங்க அட்டிகையால் அலங்கரிக்கப்படவனும், மனிதர்களில் வீரனுமான கர்ணன், காயங்களுடன் துரியோதனன் திரும்புவதைக் கண்டு,  அம்மன்னனை {துரியோதனனை} வழியிலேயே தடுத்து நிறுத்தி, அவனுக்கு {துரியோதனனுக்கு} ஆறுதல் அளித்து, துரியோதனனின் தேருக்கு வடக்கில் இருந்த பார்த்தனைப் {அர்ஜுனனைப்} போரில் சந்திக்க அவனே {கர்ணனே} சென்றான்.

சந்தனுவின் மகனான பீஷ்மரும், பார்த்தன் {அர்ஜுனன்} கையில் இருந்து துரியோதனனைக் காக்க, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது பெரிய பழுப்பு நிற குதிரைகளைத் திருப்பி, கையில் வில்லுடன் விரைந்தார். துரோணர், கிருபர், விவிங்சதி, துச்சாசனன், மற்றும் பிறரும், இழுத்துப் பிடித்த விற்கள் மற்றும் வில்லின் நாணில் பொருத்தப்பட்ட கணைகளுடன் துரியோதனனைக் காப்பதற்காக விரைவில் திரும்பினார்கள். அலைகள் பெருகும் கடலெனத் தன்னை நோக்கி முன்னேறி வரும் படைப்பிரிவுகளைக் கண்டப் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தாழும் மேகத்தை நோக்கி கொக்கு விரைவதைப் போல அவர்களை நோக்கி விரைந்தான். கையில் தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட அவர்கள் பிருதையின் மகனை {அர்ஜுனனை} முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டு, மலைமீது மேகங்கள் கனத்த மழையைப் பொழிவதைப் போல, அவன் {அர்ஜுனன்} மீது அனைத்துப் புறங்களில் இருந்தும் கணை மழையைப் பொழிந்தனர்.

தனது ஆயுதங்களைக் கொண்டு, அந்த அனைத்து ஆயுதங்களையும் தள்ளியவனும், குருக்களில் காளையும், அனைத்து எதிரிகளையும் எதிர்க்க வல்லவனுமான அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, இந்திரனிடம் இருந்து தான் பெற்ற, {யாராலும்} தாங்கிக் கொள்ள முடியாத ஆயுதமான சம்மோகனம் {ஸம்மோஹனம்} என்ற ஆயுதத்தை அடித்தான். அனைத்துப் புறங்களையும் திசைப்புள்ளிகளையும், அழகிய இறகுகள் கொண்ட தனது கூர்முனைக் கணைகளால் நிறைத்த அந்த வலிமைமிக்க வீரன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தின் நாணொலியால் அவர்களது உணர்வுகளை மழுங்கடித்தான். பிறகு, தனது இரு கைகளாலும் சங்கை எடுத்து மீண்டும் ஒருமுறை, வலிமையுடன் உரக்க ஊதிய எதிரிகளைக் கொல்பவனான பார்த்தன் {அர்ஜுனன்}, அனைத்து திசைப்புள்ளிகளையும், முழு உலகத்தையும், வானத்தையும் அவ்வொலியால் நிறைத்தான்.

பார்த்தனால் {அர்ஜுனனால்} ஊதப்பட்ட அந்தச் சங்கொலியால், குருவீரர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்தனர். எப்போதும் பிரியாத தங்கள் விற்கள் கைகளில் இருந்து விழும்வண்ணம் அவர்கள் அனைவரும் அப்படியே நின்றனர். அந்தக் குரு படை மயங்கியிருந்த அவ்வேளையில், உத்தரையின் சொற்களை மனதில் நினைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, மத்ஸ்ய மன்னனின் மகனிடம் {உத்தரனிடம்}, “ஓ! மனிதர்களில் சிறந்தவனே {உத்தரா}, குருக்கள் மயங்கியிருக்கும் வரையில் நீ அவர்கள் மத்தியில் சென்று துரோணர், கிருபர் ஆகியோருடைய வெள்ளாடைகளையும், மஞ்சள் நிறத்தில் அழகாக இருக்கும் கர்ணனின் ஆடையையும், மன்னன் {துரியோதனன்} மற்றும் துரோணரின் மகனுடைய {அஸ்வத்தாமனுடைய} நீல நிற ஆடைகளையும் எடுத்து வா. பீஷ்மர் மயக்கத்திலில்லை என்று நான் நினைக்கிறேன். அவரால் எனது ஆயுதங்களுக்கு எதிர்வினை புரிய முடியும். எனவே அவரது குதிரைகளை இடது புறம் கொண்டு கடந்து போ. மயக்கத்திலில்லாதவர்களை இப்படியே தவிர்க்க வேண்டும்” என்றான் {அர்ஜுனன்}.

இச்சொற்களைக் கேட்ட மத்ஸ்யனின் ஒப்பற்ற மகன் {உத்தரன்}, குதிரைகளின் கடிவாளத்தைவிட்டு, தேரில் இருந்து இறங்கி, அவ்வீரர்களின் ஆடைகளை எடுத்துக் கொண்டு, தன்னிடத்திற்குத் திரும்பி வந்தான். பிறகு அந்த விராடன் மகன் {உத்தரன்}, தங்கக் கவசம் பூண்ட நான்கு குதிரைகளையும் விரைந்து ஓட்டினான். அப்படி விரைந்து ஓடிய வெள்ளைக் குதிரைகள், கைகளில் கொடிதாங்கிய காலாட்படையினரின் வரிசைக்கப்பால், அர்ஜுனனை அவர்களுக்கு வெளியே இட்டுச் சென்றன. மனிதர்களில் சிறந்தவன் {அர்ஜுனன்} இப்படிச் செல்வதைக் கண்ட பீஷ்மர், தனது கணைகளால் அவனைத் தாக்கினார்.

பீஷ்மரின் குதிரைகளைக் கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, பத்து கணைகளால் அவரையும் {பீஷ்மரையும்} துளைத்தான். அவரது தேரோட்டியை முதலில் கொன்ற அர்ஜுனன், கையில் அழகிய வில்லுடன், எண்ணற்ற தேர்களைக் கடந்து, மேகங்களை விட்டு வெளியேறும் சூரியனைப் போல வெளியே வந்தான். குருவீரர்களில் முதன்மையான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தனது உணர்வு மீண்டு {மயக்கம் தெளிந்து}, தேவர்களின் தலைவனைப் போல {இந்திரனைப் போல}, அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, போர்க்களத்தில் தனியாக நிற்பதைக் கண்டான். அவன் {துரியோதனன்} விரைந்து (பீஷ்மரிடம்), “அவன் எப்படி உம்மிடம் இருந்து தப்பினான்? அவன் தப்பாதவாறு நீர் அவனைத் தாக்குவீராக” என்றான்.

அதற்கு, சிரித்தபடியே அவனிடம் {துரியோதனனிடம்} சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, “அழகிய வில்லையும், உனது கணைகளையும் துறந்து நீ மயங்கி இருந்தபோது, இந்த உனது உணர்வும், பராக்கிரமமும் எங்கிருந்தன? பீபத்சு {அர்ஜுனன்}, அட்டூழியங்கள் புரிவதற்கு அடிமையானவனல்ல {அட்டூழியங்கள் புரியமாட்டான்}; அல்லது அவன் ஆன்மா எப்போதும் பாவத்தை நோக்காது. மூன்று உலகங்களுக்காகவும் அவன் {அர்ஜுனன்} தன் கொள்கைகளை விட்டுக் கொடுப்பவனல்ல. அதனால்தான் நாம் அனைவரும் {இப்படி மயக்கமடைந்த போதிலும்} இந்தப் போரில் கொல்லப்படாமல் இருக்கிறோம். ஓ! குருவீரர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, குருக்களின் நகரத்திற்குத் திரும்புவாயாக. பசுக்களை வென்று பார்த்தனும் திரும்பிச் செல்லட்டும். மூடத்தனமாக உனது நன்மையைத் தூக்கி வீசாதே. உண்மையில், ஒருவனுக்கு நன்மை எதுவோ, அதுவே {அவனால்} சாதிக்கப்பட வேண்டும்” என்றார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனது நன்மைக்காகச் சொல்லப்பட்ட பாட்டனின் சொற்களைக் கேட்ட கோபக்கார மன்னன் துரியோதனன், மேலும் போரிட ஆர்வமில்லாததால், நீண்ட பெருமூச்சு விட்டபடி அமைதியடைந்தான். பீஷ்மர் சொன்ன அறிவரை தனக்கு நன்மையே தரும் என்பதை நினைத்தும், பலத்தில் வளர்ந்திருக்கும் பாண்டவர்களைக் கண்டு அவனும் {துரியோதனனும்}, துரியோதனனைக் காக்க விரும்பிய பிற வீரர்களும் {தங்கள் நாட்டுக்குத்} திரும்பிச் செல்லத் தீர்மானித்தனர். அந்தக் குரு வீரர்கள் தங்கள் நகரத்திற்குத் திரும்பிச் செல்வதைக் கண்டப் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவர்களிடம் பேசவும், அவர்களை வழிபடவும் விரும்பி, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சிறிது நேரம் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். சந்தனுவின் மகனான வயது முதிர்ந்த பாட்டனையும் {பீஷ்மரையும்}, ஆசானான துரோணரையும் வழிபட்ட பிறகு, துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, கிருபரையும், பிற மதிப்பிற்குரிய வீர்களையும் அழகிய கணைகளால் வணங்கிய பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, மற்றொரு கணையால், மதிப்புமிக்க ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த துரியோதனனின் கிரீடத்தைத் துண்டுகளாக உடைத்தான்.

துணிச்சலும் மதிப்பும் மிக்க, அனைத்து வீரர்களையும் வணங்கிய பிறகு, அவன் {அர்ஜுனன்}, காண்டீவத்தின் நாணொலியால் மூன்று உலகங்களையும் நிறைத்தான். திடிரெனத் தனது சங்கான தேவதத்தத்தை எடுத்து ஊதி, தனது எதிரிகளின் இதயங்களை அவ்வீரன் {அர்ஜுனன்} துளைத்தான். எதிரிகளை {இப்படிச்} சிறுமைபடுத்தியபிறகு, அவன் {அர்ஜுனன்}, அழகிய கொடியுடன் கூடிய தேரில் பிரகாசமாகத் தெரிந்தான். குருக்கள் திரும்புவதைக் கண்ட கிரீடி {அர்ஜுனன்}, மத்ஸ்யன் மகனிடம் {உத்தரனிடம்} மகிழ்ச்சியாக, “உனது பசுக்களை மீட்டு, உனது குதிரைகளைத் திருப்புவாயாக; எதிரிகள் செல்கின்றனர். நீயும் உனது நகரத்திற்கு மகிழ்ச்சிநிறைந்த இதயத்துடன் திரும்புவாயாக” என்றான். பல்குனனுக்கும் {அர்ஜுனனுக்கும்} குருக்களுக்கும் இடையில் நடைபெற்ற மிக அற்புதமான இந்த மோதலைச் சாட்சியாகக் கண்ட தேவர்களும் பெருமகிழ்ச்சியுடன், பார்த்தனின் {அர்ஜுனனின்} சாதனைகளை நினைத்துப் பார்த்தபடி, தங்களுக்கு உரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.

அதே வன்னிமரம்! – விராட பர்வம் பகுதி 66-அர்ஜுனனைத் தஞ்சம் அடைந்த கௌரவப் படைவீரர்கள்; அபயமளித்த அர்ஜுனன்; அர்ஜுனனும் உத்தரனும் மீண்டும் வன்னிமரத்தை அணுகி உடை மாற்றிக் கொள்வது; அர்ஜுனன் உத்தரனிடம் உத்தரனே இப்போரை வென்றதாக அவனது தந்தையிடம் சொல்லச் சொல்வது; விராட நகரத்தை அடைவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்களைப் போரில் வீழ்த்தியபிறகு, காளையின் கண் போன்ற கண்களைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, பெரும் அளவிலான விராடனின் கால்நடைச் செல்வங்களை {பசு மந்தையை} திரும்ப மீட்டான். திருதராஷ்டிரர்கள் {திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும்} படுதோல்வியடைந்து சென்ற பிறகு, பெரும் எண்ணிக்கையிலான குரு படைவீரர்கள், ஆழ்ந்த கானகத்தில் இருந்து வெளியேறி, இதயத்தில் அச்சத்துடன், பார்த்தனின் {அர்ஜுனனின்} முன்பு வந்தனர். கலைந்த கேசத்துடனும், கூப்பிய கரங்களுடனும் அவர்கள் அவன் {அர்ஜுனன்} முன்பு வந்தனர். அந்நிய நிலத்திற்கு வந்து, பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்து, அச்சத்தால் உணர்வற்றுப் போய், மனக் குழப்பமடைந்திருந்த அவர்கள் அனைவரும், பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} முன்பு வந்து, “நாங்கள் உமது அடிமைகள்” என்றனர்.

அர்ஜுனன் {சரணடைந்த கௌரவப் படைவீரர்களிடம்}, “நல்வரவு. நீங்கள் அருளப்பட்டிருங்கள். நீங்கள் செல்லலாம். நீங்கள் அஞ்ச வேண்டிய காரணமேதும் இல்லை. துக்கமுற்றவர்களை நான் கொல்வதில்லை. உங்கள் பாதுகாப்புக்கான உறுதியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உறுதிகூறப்பட்ட இச்சொற்களைக் கேட்டு, கூடியிருந்த அவ்வீரர்கள், அவனது {அர்ஜுனனின்} சாதனைகள், புகழ் ஆகியவற்றைப் பாராட்டி, அவனது {அர்ஜுனனின்} நீண்ட வாழ்நாளுக்கான {நீண்ட ஆயுளுக்கான} நன்மொழிகளையும் {ஆசீர்வாதங்களையும்} கூறினர். எதிரியை முறியடித்து, மதங்கொண்ட யானையைப் போல விராடனின் நகரத்தை நோக்கி முன்னேறிய அர்ஜுனனைக் கௌரவர்களால் எதிர்கொள்ளமுடியவில்லை. மேகங்களைக் கலைக்கும் கடுங்காற்றைப் போல, மொத்த குரு {கௌரவப்} படையையும் முறியடித்த எதிரிகளைக் கொல்பவனான பார்த்தன் {அர்ஜுனன்}, மதிப்புடன், மத்ஸ்ய இளவரசனிடம் {உத்தரனிடம்}, “ஓ! குழந்தாய் {உத்தரா}, பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்} அனைவரும் உனது தந்தையுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நீ மட்டுமே அறிவாய். நகரில் நுழைந்ததும் அவர்களைப் {பாண்டவர்களைப்} புகழ்ந்துவிடாதே. ஏனெனில், அதனால் மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} அச்சங்கொண்டு, ஒளிந்து கொள்ள நேரிடும். அதற்குப் பதில், நகரத்தில் நுழைந்ததும், உனது தந்தையின் முன்னிலையில், “குருக்களின் படை என்னால் வீழ்த்தப்பட்டது. எதிரியிடமிருந்து பசுக்களும் என்னால் மீட்கப்பட்டன” என்று சொல்லி, இந்தச் செயல் உன்னால் ஆனதே என்று அறிவிப்பாயாக” என்றான் {அர்ஜுனன்}.

அதற்கு உத்தரன் {அர்ஜுனனிடம்}, “நீர் அடைந்த சாதனை எனது சக்திக்கு அப்பாற்பட்டது. அதை அடைவதற்கான திறனை நான் பெற்றிருக்கவில்லை. எனினும், ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனரே}, நீர் அதைச் செய்யச் சொல்லாத வரை, நான் எனது தந்தையிடம், உம்மைக் குறித்துச் சொல்ல மாட்டேன்” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “எதிரி படையை வீழ்த்தி, குருக்களிடம் இருந்து, கால்நடைச் செல்வங்கள் முழுவதும் கைப்பற்றப்பட்ட பிறகு, ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மீண்டும் அந்த மயானத்திற்குத் திரும்பி வந்து, அதே வன்னி மரத்தை அடைந்து, எதிரிகளின் கணைகளால் சிதைக்கப்பட்ட உடலுடன் அங்கே நின்றான். பிறகு, நெருப்பு போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்தப் பயங்கரக் குரங்கு அந்தக் கொடிக்கம்பத்தில் இருந்த பிற உயிரினங்களுடன் சேர்ந்து வானத்தில் உயர்ந்தது {அந்தப் பெரிய வானரம், பூதங்களுடன் சேர்ந்து ஆகாயத்தில் கிளம்பியது}. (விஸ்வகர்மாவால்} உண்டாக்கப்பட்ட அந்த மாயை கறைந்து போய், சிங்க இலச்சனை பொறித்த உத்தரனின் கொடி அந்தத் தேரில் நிறுவப்பட்டது. அந்தக் குரு இளவரசர்களில் முதன்மையானவனின் {அர்ஜுனனின்} கணைகளையும், அம்பறாத்தூணிகளையும், போர்க்களத்தின் கடுமையை அதிகரிக்கும் வேறு ஆயுதத்தையும் (காண்டீவத்தையும்) {வன்னி மரத்தில்} மீண்டும் வைத்துவிட்டு, கிரீடியைத் {அர்ஜுனனைத்} தேரோட்டியாகக் கொண்டு மத்ஸ்யத்தின் ஒப்பற்ற இளவரசன் {உத்தரன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் நகரத்திற்குப் புறப்பட்டான். வலிமைமிக்கப் பெரும்சாதனையை அடைந்த எதிரியைக் கொல்பவனான பார்த்தனும் {அர்ஜுனனும்}, தனது தலைமுடியை முன்பு போலவே பின்னலாகக் கட்டி, உத்தரனின் கரங்களில் இருந்து கடிவாளங்களைப் பெற்றுக் கொண்டான். பிறகு அந்த ஒப்பற்ற வீரன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் மீண்டும் பிருஹந்நளையாக மாறி, உத்தரனின் தேரோட்டியாக விராடனின் நகரத்திற்குள் நுழைந்தான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கௌரவர்கள் அனைவரும் முற்றிலும் முறியடிக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டு, தளர்ந்த மனநிலையுடன் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றதும், {நகரம் நோக்கித்} திரும்பிக் கொண்டிருந்த பல்குனன் {அர்ஜுனன்}, உத்தரனிடம், “ஓ! இளவரசே, ஓ! வலிய கரங்கள் கொண்ட வீரா {உத்தரா}, பசுமந்தையாளர்களால் {மாட்டிடையர்களால்}, பாதுகாக்கப்பட்டபடியே பசுக்கள் முன்னே செல்லட்டும். குதிரைகளைக் {நீர்} குடிக்கச் செய்து {நீர்காட்டி}, குளிக்கச் செய்து, அவற்றை நன்றாகத் தேற்றிய பிறகு, பிற்பகலில் {மதிய வேளையில்} நாம் தலைநகருக்குள் நுழையலாம். உன்னால் அனுப்பப்படும் பசுமந்தையாளர்கள் {கோபாலர்களான மாட்டிடையர்கள்}, {இந்த} நற்செய்தியோடு நகரத்திற்கு விரைந்து சென்று, உனது வெற்றியை {முன்} அறிவிக்கட்டும் {பிரகடனம் செய்யட்டும்}” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனனின் சொற்களுக்கு இசைவாக, உத்தரன் தூதுவர்களிடம், “சென்று மன்னனின் {விராடரின்} வெற்றியை அறிவியுங்கள்” என்று விரைந்து கட்டளையிட்டான். எதிரி முறியடிக்கப்பட்டு, பசுக்கள் மீட்கப்பட்டதும், அந்த மத்ஸ்யனும் {உத்தரனும்}, பாரத இளவரசனும் {அர்ஜுனனும்} தங்களுக்குள் ஆலோசித்தபடியே மீண்டும் வன்னி மரத்தை அணுகினர். தாங்கள் பெற்ற வெற்றியால் மனம் நிறைந்த அவர்கள், வன்னி மரத்தின் அடியை அடைந்து, அங்கே அவர்கள் விட்டுச் சென்ற தங்கள் ஆடை ஆபரணங்களைத் தங்கள் தேரில் எடுத்துக் கொண்டு, அந்த இடத்தை விட்டு அகன்றனர். எதிரியின் மொத்தப் படையையும் வீழ்த்தி, குருக்களிடமிருந்து மொத்த செல்வத்தையும் {மொத்த கால்நடைச் செல்வத்தையும்} மீட்ட பிறகு, பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாகக் கொண்ட விராடனின் வீரமகன் {உத்தரன்} நகரத்திற்குத் திரும்பினான்.

பகடைக்காயால் யுதிஷ்டிரனை அடித்த விராடன்! – விராட பர்வம் பகுதி 67-திரிகார்த்தர்களை வீழ்த்திய பிறகு, விராடன் தனது நகருக்குத் திரும்புவது; உத்தரன் குருக்களை எதிர்த்துத் தனியாகச் சென்றிருப்பதை அறிந்து வருந்துவது; பிருஹந்நளன் உடன் சென்றிருந்ததால் வருந்த வேண்டாம் என்று கங்கராக இருக்கும் யுதிஷ்டிரன் விராடனிடம் சொல்வது; உத்தரன் வென்றான் என்ற செய்தியை விராடன் கேள்விப்பட்டு மகிழ்வது; கங்கரை விராடன் சூதாட அழைப்பது; சூதாடும்போது தனது மகன் உத்தரனை விராடன் புகழ்வது; பிருஹந்நளனே அதற்குக் காரணம் என்பது போலக் கங்கரான யுதிஷ்டிரன் சொல்வது; கோபமடையும் விராடன் யுதிஷ்டிரனைப் பகடைக் காய்களால் தாக்குவது; யுதிஷ்டிரனின் மூக்கில் இருந்து இரத்தம் வழிவது; அதைத் திரௌபதி பிடிப்பது;…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விரைவாகத் தனது செல்வத்தை மீட்ட விராடன், நான்கு பாண்டவர்களின் துணையோடு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், பெரும்படையுடனும் தனது நகரத்திற்குள் நுழைந்தான். போரில் திரிகார்த்தர்களை வீழ்த்தி, பசுக்களை மீட்ட அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {விராடன்}, பிருதையின் {குந்தியின்} மகன்களுடன்  சேர்ந்து பிரகாசமடைந்து, அழகில் ஒளிர்ந்தான். நண்பர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்துபவனான அந்த வீரமிக்க மன்னன் {விராடன்}, தனது அரியணையில் அமரந்ததும், அந்தணர்களின் தலைமையிலான அவனது குடிமக்கள் அவன் {விராடன்} முன் வந்து நின்றனர். அவர்களால் வழிபடப்பட்ட மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்}, தனது படையின் தலைமையில் நின்று, அந்த அந்தணர்களையும், குடிமக்களையும் பதிலுக்கு வணங்கி, அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தனுப்பினான். பெரிய படையைக் கொண்டவனான மத்ஸ்யர்கள் மன்னன் விராடன், உத்தரனைக் குறித்து விசாரிக்கும் வகையில், “உத்தரன் எங்கே சென்றிருக்கிறான்?” என்று கேட்டான்.

அரண்மனையில் இருந்த பெண்களும், கன்னிகைகளும், அந்தப்புரத்தில் வாழ்ந்த மற்ற மகளிரும், அவனிடம் {விராடனிடம்}, மகிழ்ச்சியுடன், “நமது பசுக்களைக் குருக்கள் {கௌரவர்கள்} கைப்பற்றினர். இதனால் கோபமுற்ற பூமிஞ்சயன் {உத்தரன்}, அந்தக் குரு {கௌரவப்} படையுடன் வந்திருக்கும் சந்தனுவின் மகன் பீஷ்மர், கிருபர், கர்ணன், துரியோதனன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகிய ஆறு பலமிக்கத் தேர்வீரர்களை வீழ்த்த எண்ணி, மிகுந்த துணிச்சலுடன், பிருஹந்நளையைத் துணைக்கழைத்துக் கொண்டு, தனியாகச் சென்றிருக்கிறான்” என்றனர்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஒரே தேருடன், பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாகக் கொண்டு, தனது வீர மகன் {உத்தரன்} சென்றிருப்பதைக் கேட்ட மன்னன் விராடன், துயரில் மூழ்கி, தனது தலைமை ஆலோசகர்களிடம் {அமைச்சர்களிடம்}, “திரிகார்த்தர்களின் தோல்வியை அறிந்த கௌரவர்களும், பூமியின் பிற தலைவர்களும் தங்கள் நிலையில் நிற்க மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, திரிகார்த்தர்களால் காயங்கொள்ளாத எனது பிற வீரர்கள், இந்தப்பெரும்படையைத் துணைக்கழைத்துக் கொண்டு உத்தரனின் பாதுகாப்புக்காகச் செல்லட்டும்” என்றான் {விராடன்}.

இதைச் சொன்ன மன்னன் {விராடன்}, குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்களைத் தனது மகனுக்காக விரைந்து அனுப்பினான். பெரும்படைக்குச் சொந்தக்காரனான மத்ஸ்யர்கள் மன்னன் விராடன், இப்படியே, நால்வகைத் துருப்புகளைக் கொண்ட தனது படையின் பெரும்பிரிவை விரைந்து செல்ல கட்டளையிட்டான். இதைச் செய்த பிறகு, அவன் {விராடன்}, “இளவரசன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பதைத் தாமதிக்காமல் அறியுங்கள்! அலியைத் தேரோட்டியாகக் கொண்டு சென்றிருக்கும் ஒருவன் உயிரோடு இருக்க மாட்டான் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், துன்பத்திலிருந்த மன்னன் விராடனிடம், சிரித்துக் கொண்டே, “ஓ! ஏகாதிபதி {விராடரே}, பிருஹந்நளன் அவனது {உத்தரனது} தேரோட்டியாகச் சென்றிருந்தால், உமது பசுக்களை எதிரியால் இன்று கைப்பற்ற இயலாது. அந்தத் தேரோட்டியால் பாதுகாக்கப்படும் உமது மகன், குருக்களுடன் கூடி வரும் பூமியின் அனைத்து தலைவர்களையும், ஏன், தேவர்களோ, அசுரர்களோ, சித்தர்களோ, யக்ஷர்களோ உண்மையில் வந்தால் கூட, அவர்களையும் போரில் வீழ்த்தவல்லவனாவான்”, என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதே வேளையில், உத்தரனால் அனுப்பப்பட்ட, வேகமான பாதங்களைக் கொண்ட தூதர்கள், விராடனின் நகரத்தை அடைந்து, வெற்றிச் செய்தியைத் தந்தனர். பிறகு தலைமை அமைச்சர், பெரும் வெற்றி அடையப்பட்டதையும், உத்தரனின் வருகை ஆகிய அனைத்தையும் மன்னனிடம் {விராடனிடம்} தெரிவித்தார். அவர் {தலைமை அமைச்சர்}, “அனைத்துப் பசுக்களும் திரும்பக் கொண்டு வரப்பட்டன, குருக்கள் வீழ்த்தப்பட்டனர். எதிரிகளைக் கொல்பவனான உத்தரனும், அவனது தேரோட்டியும் {உடல்நலத்துடன்} நன்றாக இருக்கின்றனர்” என்றார். பிறகு யுதிஷ்டிரன் {மன்னன் விராடனிடம்}, “நற்பேறாலேயே, பசுக்கள் மீட்கப்பட்டு, குருக்கள் {கௌரவர்கள்} முறியடிக்கப்பட்டுள்ளனர். எனினும், பிருஹந்நளனைத் தேரோட்டியாகக் கொண்டவனுக்கு வெற்றி உறுதி என்பதால், உமது மகன் {உத்தரன்}, குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தியதை நான் வியப்பாகக் கருதவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அளவிலா பலம் கொண்ட தனது மகன் {உத்தரன்} அடைந்த வெற்றியைக் கேட்ட மன்னன் விராடன், மயிர்சிலிர்க்கும் வண்ணம் மகிழ்ச்சியை அடைந்தான். தூதர்களுக்கு ஆடைகளைப் பரிசாக வழங்கிய பிறகு, அவன் தனது அமைச்சர்களிடம், “நெடுஞ்சாலைகள் {ராஜபாட்டைகள்} கொடிகளால் அலங்கரிக்கப்படட்டும், மலர்க்காணிக்கைகளால் அனைத்து தேவர்களும், தேவிகளும் வழிபடப்படட்டும். இளவரசர்களும், துணிவுமிக்க வீரர்களும், இசைக்கலைஞர்களும், கணிகையரும் {பொதுமகள் = வேசி = harlots} வெளியே அணிவகுத்து எனது மகனை வரவேற்கட்டும். கிங்கரர்கள் {மணியாட்டிகள் – bellmen}, மதங்கொண்ட யானைகளில் விரைந்து சென்று, நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் எனது வெற்றியை அறிவிக்கட்டும். கன்னியராலும், துதிபாடுவோராலும் சூழப்பட்டு, அழகான ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட {எனது மகள்} உத்தரையும், எனது மகனை {உத்தரனை} எதிர்கொண்டழைக்கச் செல்லட்டும்” என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}  தொடர்ந்தார், “மன்னனின் இச்சொற்களைக் கேட்ட குடிமக்கள் அனைவரும், தங்கள் கைகளில் மங்கலகரமான பொருட்களுடன் சென்றார்கள். அவர்களில் பலர் கைத்தாளங்களுடனும் {வெண்கலத்தாளம்}, பூரிகைகளுடனும், சங்குகளுடனும் சென்றார்கள். அழகான ஆடைகள் உடுத்திய அழகிய பெண்டிரும், துதிபாடுவோரும், புனித பாடல்களைப் பாடுவோரும், முகமன் கூறுவோரும் {encomiasts}, பாணபத்திரரும் {minstrels}, பேரிகையிசைப்பவர்களும், இன்னும் பிறவகை இசைக்கலைஞர்களும் அளவிலா பராக்கிரமம் கொண்ட உத்தரனை வரவேற்பதற்காக, வலிமைமிக்க விராடனின் நகரத்தில் இருந்து வெளியே வந்தனர். துருப்புகளையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கன்னியரையும், கணிகையரையும் {வேசிகளையும்} அனுப்பிய பிறகு, விவேகம் நிறைந்த மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} மகிழ்ச்சியுடன், “ஓ! சைரந்திரி {மாலினி}, பகடையைக் கொண்டு வா. ஓ! கங்கரே, ஆட்டம் ஆரம்பமாகட்டும்” என்றான். அதற்குப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, “மகிழ்ச்சி நிறைந்த இதயம் கொண்டவன், தந்திரமான ஒரு சூதாடியுடன் விளையாடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளதை நாம் கேள்விப்படுகிறோம். எனவே, மகிழ்ச்சியாக இருக்கும் உம்முடன் நான் சூதாடத் துணிய மாட்டேன். எப்போதும் நான் உமக்கு நன்மையே செய்ய விரும்புகிறேன். எனினும், உமக்கு விருப்பமுண்டானால் விளையாட்டு ஆரம்பிக்கட்டும்” என்றான்.

அதற்கு விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “நான் சூதாடாவிட்டாலும், எனது அடிமைப்பெண்கள், பசுக்கள், தங்கம், மற்றும் நான் கொண்டுள்ள அனைத்துச் செல்வங்கள் ஆகிய இவை யாவற்றையும் உம்மால் இன்று காக்க முடியாது” என்றான். அதற்குக் கங்கன் {யுதிஷ்டிரன் விராடனிடம்}, “ஓ! ஏகாதபதி, ஓ! வெகுமதிகள் அளிப்பவரே {விராடரே}, எண்ணற்ற தீமைகள் நிறைந்த சூதாட்டத்தால் உமக்கு என்ன பயன்? சூதாட்டம் பல தீமைகளைக் கொண்டது; எனவே, அதை விலக்க வேண்டும். பாண்டுவின் மகனான யுதிஷ்டிரரை நீர் பார்த்திருக்கலாம், அல்லது {அவரைக் குறித்துக்} கேட்டிருக்கலாம். அவர், தனது விரிந்த செழிப்பான நாட்டையும், தேவர்களைப் போன்ற தம்பிகளையும் பகடையால் இழந்தார். இதற்காகவே, நான் சூதாடத் தயங்குகிறேன். ஆனால் நீர் விரும்பினால், ஓ! மன்னா {விராடரே}, நான் விளையாடுவேன்” என்று பதிலளித்தான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விளையாட்டு நடந்து கொண்டிருந்த போது, மத்ஸ்யன் {விராடன்}, அந்தப் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “பாரும், பெரும் வல்லமை கொண்ட கௌரவர்களை எனது மகன் {உத்தரன்} போரில் வீழ்த்திவிட்டான்” என்றான். அதற்குச் சிறப்புமிக்க மன்னனான யுதிஷ்டிரன் {விராடனிடம்}, “பிருஹந்நளனைத் தேரோட்டியாகக் கொண்ட அவன் {உத்தரன்} ஏன் வெல்லமாட்டான்?” என்று கேட்டான்.

இப்படிச் சொல்லப்பட்டதும், மிகுந்த கோபம் கொண்ட மத்ஸ்ய மன்னன் {விராடன்}, பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தணர்களில் இழிந்தவனே, அலியோடு எனது மகனை ஒப்பிடுகிறாயா? ஒருவரிடம் எதைச் சொல்வது சரி, எது சரியன்று என்ற அறிவு உனக்கில்லையா? நீ என்னை அவமதிக்கிறாய் என்பதில் ஐயமில்லை. பீஷ்மரையும், துரோணரையும் தலைவர்களாகக் கொண்ட அவர்களை {கௌரவர்களை} எனது மகன் ஏன் வீழ்த்த முடியாது? ஓ! பிராமணா {கங்கா}, நட்பால் மட்டுமே, நான் உனது இக்குற்றத்தை மன்னிக்கிறேன். எனினும், நீ வாழ விரும்பினால் {உயிரோடிருக்க விரும்பினால்} மீண்டும் அவ்வாறு சொல்லாதே” என்றான் {விராடன்}.

யுதிஷ்டிரன் {விராடனிடம்}, “பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விகர்த்தனன் மகன் {கர்ணன்}, கிருபர், மன்னர் துரியோதனன் மற்றும் பிற பலமிக்க அரசர்களான தேர்வீர்கள் கூடியிருந்தாலும், மருதர்களால் சூழப்பட்ட இந்திரனே கூட இருந்தாலும், அவர்கள் அனைவரிடமும் மோதிப் போரிட பிருஹந்நளனைத் தவிர வேறு எந்த மனிதனால் முடியும்? கரங்களின் வலிமையில் அவனுக்கு நிகர் யாரும் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை! உண்மையில், ஒரு பயங்கரப் போரைப் பார்க்கும்போதும் பிருஹந்நளனின் இதயமே மகிழ்ச்சியில் நிறையும். தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் கூடி வந்த போதும் அவனே அவர்களை வீழ்த்தியிருக்கிறான். அப்படிப் பட்ட ஒருவனைக் கூட்டாளியாகக் கொண்டிருப்பவனான உமது மகன் {உத்தரன்}, ஏன் எதிரியை வெல்லக் கூடாது?” என்றான். அதற்கு விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “மீண்டும் மீண்டும் தடுத்தும் நீ உனது நாவை அடக்க மறுக்கிறாய். தண்டிக்க எவரும் இல்லையாயின், யாரும் அறம் பயிலமாட்டார்கள்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன மன்னன் {விராடன்}, கோபத்தால் எரிந்து, பகடைக் காயால் யுதிஷ்டிரனை வலிந்து அடித்து, அவனை நிந்தித்தபடி, “இது மீண்டும் நடவாதிருக்கட்டும்!” என்றான். இப்படிக் கடுமையாகத் தாக்கப்பட்டதால், அவனது {யுதிஷ்டிரனின்} மூக்கில் இருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. ஆனால், அது தரையில் விழும் முன்னரே குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அதைத் தனது கைகளில் பிடித்தான். பிறகு தன்னருகே நின்று கொண்டிருந்த திரௌபதியை அறம் சார்ந்த அந்த யுதிஷ்டிரன் பார்த்தான். தனது தலைவனின் விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படிபவளான களங்கமற்ற திரௌபதி, {அந்தப் பார்வையின்} பொருளை உணர்ந்து, நீர் நிறைந்த ஒரு தங்கப் பாத்திரத்தைக் கொண்டுவந்து, அவனது {யுதிஷ்டரனின்} மூக்கில் இருந்து வழிந்த இரத்ததைப் பிடித்தாள் [1].

அதே வேளையில், பலவிதமான இனிய நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் ஊக்கப்படுத்தப்பட்ட உத்தரன், குடிமக்களாலும், பெண்களாலும், மாகாணங்களின் மக்களாலும் வரவேற்கப்பட்டு, மெதுவாக நகரத்திற்குள் நுழைந்தான். அரண்மனையின் வாயிலை அடைந்த அவன் {உத்தரன்}, தனது வருகையைக் குறித்துத் தனது தந்தைக்கு {மன்னன் விராடனுக்குச்} செய்தி அனுப்பினான். பிறகு மன்னனை அணுகிய சுமைதூக்கி {porter} {வாயில் காப்போன் = gatekeeper} ஒருவன், “பிருஹந்நளையைத் துணையாகக் கொண்ட உமது மகன் உத்தரன் வாயிலில் காத்திருக்கிறான்” என்றான். மத்ஸ்ய மன்னன் {விராடன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம், “நான் அவர்களைக் காண ஆவலுடன் இருப்பதால், அவர்கள் இருவரையும் இங்கே வரவேற்று அழைத்துவா” என்றான்.

பிறகு, குருக்களின் மன்னனான யுதிஷ்டிரன், {அந்தப்} பாதுகாவலனின் காதுக்கருகில் மெதுவாக, “உத்தரன் மட்டும் உள்ளே வரட்டும். பிருஹந்நளன் உள்ளே வரக்கூடாது. போரிலின்றி வேறு நேரத்தில் எவன் என் மேனியில் காயமேற்படுத்தவோ, இரத்தம் சிந்தவோ செய்கிறானோ, அவன் உயிருடன் இருக்க மாட்டான் என்பது அந்த வலிய கரங்கள் கொண்ட வீரன் {பிருஹந்நளன்} ஏற்றிருக்கும் நோன்பாகும். {இதைக் கண்டால்} ஆத்திரத்தில் அழற்சியுறும் அவன், நான் இரத்தம் சிந்துவதைப் பார்க்கப் பொறாமல் {பொறுக்க முடியாமல்}, ஆலோசகர்கள், துருப்புகள், குதிரைகளுடன் சேர்த்து விராடரையும் இப்போதே கொன்று விடுவான்” என்றான் {யுதிஷ்டிரன்}.

இரத்தம் தரையில் விழுந்திருந்தால்? – விராட பர்வம் பகுதி 68-சபைக்குள் நுழைந்த உத்தரன், இரத்தம் சொட்ட ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் கங்கனைக் கண்டு பயந்து விராடனை அதட்டுவது; கங்கனிடம் விராடனை மன்னிப்பு கோரச் சொல்வது; விராடன் யுதிஷ்டிரனிடம் மன்னிப்பு கோரியது; யுதிஷ்டிரனுக்கு இரத்தம் சொட்டுவது நின்றதும், அர்ஜுனன் உள்ளே நுழைவது; அர்ஜுனன் கேட்கும்படி விராடன் உத்தரனைப் புகழ்வது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு மன்னனின் {விராடனின்} மூத்த மகனான பூமிஞ்சயன் {உத்தரன்}, உள்ளே நுழைந்து, தனது தந்தையின் {விராடனின்} பாதங்களை வழிபட்டு, கங்கனை {யுதிஷ்டிரனை} அணுகினான். இரத்தத்துடன் இருக்கும் கங்கன், சபையின் ஒரு மூலையில், தரையில் அமர்ந்திருப்பதையும், சைரந்திரி {திரௌபதி} அவனுக்காகக் காத்திருப்பதையும் அவன் {உத்தரன்} கண்டான். இதைக் கண்ட உத்தரன், தனது தந்தையிடம் {விராடனிடம்} அவசரமாக, “ஓ! மன்னா {விராடரே}, இவர் யாரால் அடிக்கப்பட்டார்? இந்தப் பாவச்செயல் யாரால் மேற்கொள்ளப்பட்டது?” என்று கேட்டான்.

அதற்கு விராடன் {உத்தரனிடம்}, “இந்த இழிந்த பிராமணன் என்னாலேயே தாக்கப்பட்டான். இதைவிட இன்னும் அதிகம் பெற இவன் {கங்கன்} தகுந்தவனே. நான் உன்னைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, இவன் {கங்கன்} அந்த மூன்றாம் பாலினத்தவனைப் {பிருஹந்நளனைப்} புகழ்ந்தான்” என்றான் {விராடன்}.

உத்தரன் {விராடனிடம்}, “ஓ! மன்னா {விராடரே}, நீர் முறையற்ற செயலைச் செய்துள்ளீர். கடும் நஞ்சான ஓர் அந்தணச்சாபம், உமது வேர் வரை உம்மை எரித்துவிடாமலிருக்க, விரைவாக அவரை {கங்கரை} அமைதிப்படுத்தும்!” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனது நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தும் விராடன், தனது மகனின் {உத்தரனின்} இச்சொற்களைக் கேட்டு, சாம்பலில் மறைந்திருக்கும் நெருப்பு போல இருந்த குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} {அணுகி}, அவனிடம் மன்னிப்பைப் பெறும் வகையில் அமைதிப்படுத்தத் தொடங்கினான். தனது மன்னிப்பைப் பெற விரும்பும் மன்னனிடம் {விராடனிடம்}, அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, “ஓ! மன்னா {விராடரே}, நான் நீண்ட நேரத்திற்கு முன்னரே அதை மன்னித்துவிட்டேன். எனக்குக் கோபம் இல்லை. எனது மூக்கிலிருந்து இந்த இரத்தம் தரையில் விழுந்திருந்தால், ஓ! ஏகாதிபதி {விராடரே}, உமது நாட்டுடன் நீரும் அழிவுக்குள்ளாகியிருப்பீர் என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! மன்னா {விராடரே}, ஓர் அப்பாவியை அடித்துவிட்டீர் என்று நான் உம்மைக் குற்றஞ்சாட்ட மாட்டேன். ஏனென்றால், ஓ! மன்னா {விராடரே}, சக்தி வாய்ந்தவர்கள் பொதுவாகவே காரணமற்ற தீவிரத்துடனேயே செயல்படுவார்கள்” என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இரத்தப்பெருக்கு நின்றதும், விராடனையும், கங்கனையும் வணங்கியவாறு பிருஹந்நளை (சபை அறைக்குள்) நுழைந்து அமைதியாக நின்றாள். குருக்களின் தலைவனை {யுதிஷ்டிரனை} அமைதிப்படுத்திய மன்னன் {விராடன்}, சவ்யசச்சின் {அர்ஜுனன்} கேட்கும்படி, போர்க்களத்தில் இருந்து திரும்பியிருந்த உத்தரனைப் புகழ ஆரம்பித்தான். அந்த மன்னன் {விராடன்}, “ஓ! கேகேய இளவரசியின் {சுதேஷ்ணையின்} மகிழ்ச்சியை அதிகரிப்பவனே {உத்தரா}, உண்மையில், உன்னிலேயே நான் என் மகனைக் கொண்டிருக்கிறேன். {உன்னால் நான் மகனுள்ளவன் ஆனேன்}. உனக்கு நிகரான மகன் எனக்கு இருந்ததும் இல்லை, இனி இருக்கப் போவதுமில்லை! உண்மையில், ஓ! குழந்தாய் {உத்தரா}, ஒரே நேரத்தில் ஆயிரம் குறிகளை அடித்தாலும், ஒரு குறியும் தவறாமல் அடிப்பவனான கர்ணனுடன், எப்படி நீ மோதினாய்? ஓ! குழந்தாய், மொத்த உலகத்தில் உள்ள மனிதர்களிலும் தனக்கு நிகரில்லாத பீஷ்மரிடம், எப்படி நீ மோதினாய்? ஓ! குழந்தாய், அனைத்து க்ஷத்திரியர்களுக்கும் ஆசானாகக் கருதப்படும் இருபிறப்பாளரும் {பிராமணரும்}, கௌரவர்கள் மற்றும் விருஷ்ணிகளின் ஆசானும், ஆயுதம் தாங்கும் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணரிடம், எப்படி நீ மோதினாய்? கொண்டாடப்படும் அஸ்வத்தாமனைப் போர்க்களத்தில், எப்படி நீ சந்தித்தாய்? ஓ! குழந்தாய், தனது வலிமைமிக்கக் கணைகளால் மலையைக் கூடத் துளைக்கவல்ல இளவரசனான துரியோதனனிடம், எப்படி நீ மோதினாய்? எனது எதிரிகள் அனைவரும் அடிக்கப்பட்டுவிட்டனர். இனிமையான தென்றல் என்னைச் சுற்றி வீசுவது போலத் தோன்றுகிறது. குருக்களால் கைப்பற்றப்பட்ட எனது செல்வமனைத்தையும் நீ மீட்டு வந்துவிட்டமையால், அந்த வலிமைமிக்க வீரர்கள் அனைவரும் பீதியால் தாக்கப்பட்டார்கள் என்றே தெரிகிறது. ஓ! மனிதர்களில் காளையே {உத்தரா}, புலியிடம் இருந்து அதன் இரையைப் பறிப்பதைப் போல, எனது செல்வங்களான பசுக்களை என்னிடம் இருந்து பறித்துச் சென்ற எதிரியை முறியடித்துவிட்டாய் என்பதில் ஐயமில்லை” என்றான் {விராடன்}.

தெய்வ மகன்? – விராட பர்வம் பகுதி 69-பசுக்கள் மீட்கப்பட்டதும், கௌரவர்கள் வெல்லப்பட்டதும் தன்னாலல்ல என்றும் ஒரு தெய்வ மகன் வந்து அவற்றைச் சாதித்தானென்றும் விராடனிடம் உத்தரன் சொல்வது; விராடனிடம் அனுமதி பெற்று, அர்ஜுனன் உத்தரைக்கு ஆடைகளைப் பரிசளிப்பது…

உத்தரன் {மன்னன் விராடனிடம்} சொன்னான், “பசுக்கள் என்னால் மீட்கப்படவில்லை; எதிரிகளும் என்னால் வீழ்த்தப்படவில்லை. அவை யாவும் ஒரு தெய்வ மகனால் நிறைவேற்றப்பட்டன. வஜ்ரத்தைப் போலத் தாக்கவல்ல அந்தத் தெய்வீக இளைஞன், அச்சத்தால் ஓடும் என்னைக் கண்டு, என்னை நிறுத்தி தானே எனது தேரில் ஏறிக் கொண்டான். அவனாலேயே பசுக்கள் மீட்கப்பட்டு, கௌரவர்கள் வீழ்த்தப்பட்டனர். ஓ! தந்தையே, அக்காரியம் அந்த வீரனால் ஆனது, என்னாலல்ல. கிருபரையும், துரோணரையும், பலமிக்க சக்தி கொண்ட துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சூதனின் மகனையும் {கர்ணனையும்}, பீஷ்மரையும் அவனே கணைகளால் துரத்தினான். யானை மந்தையின் தலைமை யானை ஓடுவதைப் போல அச்சத்தால் ஓடிக்கொண்டிருந்த இளவரசன் துரியோதனனிடம் அந்த வலிமைமிக்க வீரன் {தெய்வ மகன்}, “ஓ! குரு குலத்தின் இளவரசே, ஹஸ்தினாபுரத்திலும் நீ பாதுகாப்பாக இருப்பதற்கான எந்தக் காரணிகளையும் நான் காணவில்லை. உனது பலத்தை வெளிப்படுத்தி, உனது உயிரைக் காத்துக் கொள். ஓடுவதால் நீ என்னிடமிருந்து தப்ப இயலாது. எனவே, உனது மனதைப் போருக்குத் தயார் செய்வாயாக. வெற்றியடைந்தால், பூமியின் ஆட்சியுரிமை உனதாகும், கொல்லப்பட்டால், சொர்க்கமேகூட உனதாகும்” என்ற சொற்களைச் சொன்னான்.

ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} சூழ இருந்த அந்த மனிதர்களில் புலியான மன்னன் துரியோதனன், இப்படிச் சொல்லப்பட்டதும், பாம்பு போலத் தனது தேரில் பெருமூச்சுவிட்டுத் திரும்பி, வேகமான கணைகளை வஜ்ரம் போன்ற சக்தியுடன் மழையாகப் பொழிந்தான். மதிப்பிற்குரிய ஐயா {தந்தையே}, இவையனைத்தையும் கண்ட எனக்குத் தொடைகள் நடுங்க ஆரம்பித்தன. பிறகு, சிங்கம் போன்ற வீரர்களைக் கொண்ட குரு படையைத் தனது கணைகளால் அந்தத் தெய்வீக இளைஞன் துளைத்தான். அப்படி அந்தத் தேர்க்கூட்டத்தைத் துளைத்து துன்புறுத்திய சிங்கம்போன்று பருத்திருந்த அந்த இளைஞன், அவர்களைக் கண்டு சிரித்து, அவர்களது துணிகளையும் ஆடைகளையும் களவாடினான். உண்மையில், குருக்களின் அந்த ஆறு பெரும் தேர்வீரர்களையும், விலங்கு மந்தையைக் காட்டில் கோபத்துடன் விரட்டும் தனிப்புலி போல அந்த வீரனே தனியாக வீழ்த்தினான்” என்றான் {உத்தரன்}.

விராடன் {உத்தரனிடம்}, “குருக்களால் {கௌரவர்களால்} கைப்பற்றப்பட்ட எனது செல்வத்தைப் போரிட்டு மீட்ட வலிமைமிக்கக் கரங்களும், தெய்வீகப் பிறப்பும் கொண்ட புகழ்மிக்க அந்த இளைஞன் எங்கே? உன்னையும் எனது பசுக்களையும் காத்த தெய்வீக பிறப்புடைய அந்த வலிமைமிக்க வீரனைக் காணவும், வழிபடவும் ஆவலாக இருக்கிறேன்” என்றான் {விராடன்}.

அதற்கு உத்தரன் {தந்தை விராடனிடம்}, “வலிமைமிக்க அந்தத் தெய்வமகன் அங்கேயே மறைந்து போனான். எனினும், அவன் நாளையோ அல்லது அதற்கு மறுதினமோ தன்னை வெளிக்காட்டுவான் என்று நினைக்கிறேன்” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும்படைக்குச் சொந்தக்காரனான விராடன், உத்தரனால் தனக்கு விவரிக்கப்பட்டவனும், தனது அரண்மனையிலேயே மாறுவேடத்தில் வாழ்ந்து வருபவனுமான பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} அறியாமலேயே இருந்தான். உயர் ஆன்ம விராடனால் அனுமதிக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, விராடன் மகளுக்கு {உத்தரைக்குத்} தான் கொண்டு வந்த ஆடைகளைத் தனது கரங்களாலேயே கொடுத்தான். பல விதங்களில் இருந்த அந்த விலையுயர்ந்த புதிய ஆடைகளைப் பெற்றுக் கொண்ட அழகிய உத்தரை, மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} மகனுடன் {உத்தரனுடன்} சேர்ந்து பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

அறத்தின் திருவுருவம் யுதிஷ்டிரன்! – விராட பர்வம் பகுதி 70-பாண்டவர்கள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு விராடனின் சபையில் மன்னர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்வது; அங்கே வந்த விராடன் அதைக் கண்டு கோபமுற்று, கங்கனை நிந்திப்பது; அர்ஜுனன் விராடனைப் பரிகசிக்கும் வகையில் யுதிஷ்டிரனின் புகழைச் சொல்வது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, {அன்றிலிருந்து} மூன்றாவது நாளில் [1] குளித்து முடித்து வெள்ளுடை உடுத்தி, அனைத்து வகைகளிலாலான ஆபரணங்களும் தரித்துக் கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களான ஐந்து பாண்டவ சகோதரர்களும், தங்கள் நோன்பை முடித்து, ஐந்து மதங்கொண்ட யானைகளைப் போல யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்டு, பிரகாசத்துடன் அரண்மனை வாயிலுக்குள் நுழைந்தனர். விராடனின் சபா மண்டபத்துக்குள் நுழைந்த அவர்கள், மன்னர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அரியணைகளில் அமர்ந்து கொண்டு, வேள்விப்பீடத்தில் இருக்கும் நெருப்புகள் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தனர். அப்படிப் பாண்டவர்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்த பிறகு, பூமியின் தலைவனான விராடன், தனது அரச அலுவல்களை முடித்து, தனது சபையை நடத்த அங்கே வந்தான். சுடர்விடும் நெருப்புகளைப் போன்ற ஒப்பற்ற பாண்டவர்களைக் கண்டு சிறிது நேரம் அந்த மன்னன் {விராடன்} சிந்தித்தான். பிறகு, கோபம் நிறைந்த மத்ஸ்ய மன்னன், மருதர்களால் சூழப்பட்ட தேவர்கள் தலைவனைப் போல அமர்ந்திருந்த கங்கனிடம் பேசினான். அவன் {விராடன்}, “பகடையாட்டக்காரனான நீ என்னால் சபை உறுப்பினராகவே அமர்த்தப்பட்டாய்! அழகிய ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து கொண்டு, அரச ஆசனத்தில் நீ எப்படி அமரலாம்?” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, விராடனின் சொற்களைக் கேட்டு அவனைக் கேலி செய்ய விரும்பிய அர்ஜுனன், அவனிடம் {விராடனிடம்} புன்னகையுடன், “இந்த மனிதர், ஓ! மன்னா {விராடரே}, இந்திரனுடன் சேர்ந்து ஒரே ஆசனத்தில் அமரத் தகுந்தவராவார். அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, வேதங்களை அறிந்து, ஆடம்பரம் மற்றும் உடல் இன்பங்களை அலட்சியப்படுத்தி, வேள்விகள் செய்வதை வழக்கமாகக் கொண்டு, நோன்புகளில் நிலைத்து நின்று, சக்தி கொண்ட அனைத்து மனிதர்களிலும், முதன்மையானவரும், பூமியில் உள்ள அனைவரிலும் புத்திசாலித்தனத்தில் மேன்மையானவரும், தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், பல்வேறு ஆயுதங்களை அறிந்தவருமான இவர் உண்மையில் அறத்தின் உருவமாவார் {உடல் கொண்டு வந்த தர்மம் [தர்மதேவன்] ஆவார்}.

மூன்று உலகத்திலும் உள்ள அசையும் மற்றும் அசையாத உயிரினங்களில் யாரும் இத்தகு {இவர் கற்று வைத்திருக்கும்} ஆயுதங்களின் அறிவை இதுவரை அடைந்தது இல்லை, இனி அடையப்போவதும் இல்லை. தேவர்களிலோ, அசுரர்களிலோ {Asuras}, மனிதர்களிலோ, ராட்சசர்களிலோ {Rakshasas}, கந்தர்வர்களிலோ {Gandharvas}, யக்ஷத் தலைவர்களிலோ {Yaksha chiefs}, கின்னர்களிலோ {Kinnaras}, ஊர்க்கர்களிலோ {Uragas} இவரைப் போன்ற ஒருவரும் இல்லை. பெரும் முன்னறிதிறமும் {தீர்க்கதரிசனமும்}, சக்தியும் கொண்டு, குடிமக்கள், மாகாணங்களில் வசிப்பவர்கள் ஆகியோரால் விரும்பப்படும் இவரே பாண்டு மகன்களில் {பாண்டவர்களில்} பெரும்பலமிக்கத் தேர்வீரராவார். வேள்விகளைச் செய்பவரும், அறநெறிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், ஆசைகளை அடக்கியவரும், பெரும் முனிவரைப் போன்றவருமான இந்த அரசமுனி அனைத்து உலகங்களாலும் கொண்டாடப்படுபவராவார். பெரும் பலமும், பெரும் புத்திசாலித்தனமும், திறனும், உண்மையும் {சத்தியமும்}, கொண்ட இவர் தனது புலன்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராவார். செல்வத்தில் இந்திரனுக்கும், குவியல்களால் குபேரனுக்கும் நிகரான இவர் பெரும் பராக்கிரமம் மிக்க மனுவைப் போல உலகங்களைப் பாதுகாப்பவராவார். இவர் பெரும் பலமிக்கவராவார். அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு பாராட்டும் இவர், குருகுலத்தின் காளையும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்திரரைத் தவிர வேறு யாருமில்லை.

இந்த மன்னனின் சாதனைகள் சூரியனைப் போன்ற சுடர் மிகும் பிரகாசம் கொண்டவையாகும். அந்தச் சூரியனின் கதிர்களைப் போலவே இவரது புகழும் அனைத்துத் திக்குகளுக்கும் பயணித்துக் கொண்டே இருக்கிறது. உதயச் சூரியனின் கதிர்களைப் போன்ற சுடர்மிகும் பிரகாசம் கொண்ட இவர் குருக்களின் மத்தியில் வசித்தபோது, ஓ! மன்னா {விராடரே}, வேகமான பத்தாயிரம் {10000} யானைகள் இவரைப் பின்தொடர்ந்து செல்லும். ஓ! மன்னா {விராடரே}, சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட முப்பதாயிரம் {30000} தேர்கள் இவரைப் பின்தொடர்ந்து செல்வது வழக்கம். ரத்தினங்கள் ஒளிரும் காது வளையங்கள் அணிந்த எண்ணூறு {800} துதிபாடிகளும், பாணர்களும், இந்திரனைப் புகழும் முனிவரைகளைப் போல, இவரது புகழையே அந்தக் காலத்தில் பாடிக் கொண்டிருந்தனர்.

ஓ! மன்னா {விராடரே}, கௌரவர்களும், இந்தப் பூமியின் பிற தலைவர்களும், தேவர்கள் குபேரனுக்காகக் காத்திருப்பது போல், இவருக்காக எப்போதும் அடிமைகள் போலக் காத்திருப்பார்கள். பிரகாசமான கதிர்கொண்ட சூரியனைப் போல இருக்கும் இந்த உயர்ந்த மன்னன் {யுதிஷ்டிரர்}, இந்தப் பூமியின் அனைத்து மன்னர்களையும், உழவர் வர்க்கத்தினர் போலத் தனகு கப்பம் கட்ட வைத்தார். உயர் ஆன்ம ஸ்நாதகர்கள் எண்பத்தெட்டாயிரம் {88000} பேர், தங்கள் வாழ்வாதாரத்திற்காக அற்புத நோன்புகள் பயிலும் இந்த மன்னனையே நம்பி இருந்தனர். இந்த ஒப்பற்ற தலைவன் {யுதிஷ்டிரன்}, முதிர்ந்தவர்களையும், ஆதரவற்றவர்களையும், முடமானவர்களையும், குருடர்களையும் தனது மகன்களைப் போலப் பாதுகாத்து, தனது குடிகளை அறம் சார்ந்து ஆட்சி செய்தார்.

அறநெறியில் உறுதியாக, தன்னடக்கத்துடன், கோபத்தை அடக்கும் திறனுடன், தாராளக் குணம் மிகுந்து, அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, உண்மையுடன் {சத்தியத்துடன்} இருந்த இவர் பாண்டுவின் மகனாவார். இவரது {யுதிஷ்டிரனது} செழுமையும் பராக்கிரமமும், மன்னன் சுயோதனனையும் {துரியோதனனையும்}, கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} அடங்கிய அவனது தொண்டர்களையும் துன்புறுத்தியது. ஓ! மனிதர்களின் தலைவரே {விராடரே}, இவரது அறங்கள் எண்ண இயலாத முடிவிலி தன்மை கொண்டவை. அறநெறிக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் இந்தப் பாண்டுவின் மகன் எப்போதும் ஊறிழைப்பதைத் தவிர்ப்பவராவார் {அஹிம்சாவாதியாவார்}. இத்தகு குணங்களைக் கொண்ட மன்னர்களில் காளையான இந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! ஏகாதிபதி {விராடரே}, {இந்த} அரச ஆசனத்தை அடையத் தகுதி வாய்ந்தவரே ஆவார்.

உமது மகள் எனது மருமகளாகலாம்! – விராட பர்வம் பகுதி 71-விராடன் அர்ஜுனனிடம் மற்ற பாண்டவர்களை அடையாளங்காட்டச் சொல்வது; அர்ஜுனன் ஒவ்வொருவராக அடையாளங்காட்டுவது; உத்தரன் மீண்டும் பாண்டவர்களை வர்ணித்து அடையாளங்காட்டுவது; விராடன் தனது மகளை அர்ஜுனனுக்குக் கொடுக்க முன் வருவது; அர்ஜுனன் உத்தரையைத் தனது மருமகளாக ஏற்பதாகச் சொல்வது…

விராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “உண்மையில், இவரே குந்தியின் மகனான குரு மன்னன் யுதிஷ்டிரர் என்றால், இவர்களில் யார் இவரது தம்பி அர்ஜுனன். இதில் யார் பலமிக்கப் பீமன். இவர்களில் யார் நகுலன், யார் சகாதேவன், கொண்டாடப்படும் அந்தத் திரௌபதி எங்கே? பகடையாட்டத்தில் வீழ்ந்த பிறகு, பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} குறித்து யாராலும் எதுவும் கேள்விப்படவில்லை” என்றான் {விராடன்}.

அதற்கு அர்ஜுனன் {விராடரிடம்}, “ஓ! மன்னா {விராடரே}, வல்லவன் என்று அழைக்கப்படும் உமது சமையற்கலைஞரான இவரே வலிமைமிக்கக் கரங்களும், பயங்கர வலிமையும், சீற்றமிகு உத்வேகமும் கொண்ட பீமராவார். கந்தமாதன மலைகளில் ராட்சசர்களைக் கொன்று, பெரும் நறுமணமிக்க தெய்வீக மலர்களை {செங்கழுநீர் மலர்களைக்} கிருஷ்ணைக்கு {திரௌபதிக்குக்} கொணர்ந்தவர் இவரே. தீய ஆன்மா கொண்ட கீசகனைக் கொன்றவர் இவரே {பீமரே}. உமது அரண்மனை அந்தப்புரத்தில், புலிகளையும், கரடிகளையும், காட்டுப்பன்றிகளையும் கொன்றவர் இவரே {பீமரே}.

உமது குதிரைகளைப் பாதுகாப்பவனே நகுலன் என்று அழைக்கப்படும் எதிரிகளைக் கொல்பவனாவான். உமது பசுக்களைப் பாதுகாக்கும் இவனே சகாதேவன். பெரும் புகழையும், மேனி அழகும் கொண்ட இந்த இரு மாத்ரி மகன்களும் பெரும் தேர்வீரர்களாவர்.

உமது மனைவியின் {சுதேஷ்ணையின்}, {பணிப்பெண்ணான} சைரந்திரியும், தாமரையிதழ் போன்ற கண்களும், கொடியிடையும், இனிய புன்னகையும் கொண்ட இந்த மங்கையே துருபதன் மகள் {திரௌபதி} ஆவாள். இவள் பொருட்டே, ஓ! மன்னா {விராடரே} கீசகர்கள் கொல்லப்பட்டனர். ஓ! மன்னா {விராடரே}, பிருதையின் {குந்தியின்} மகனும், பீமருக்கு இளையவனும், இரட்டையர்களுக்கு மூத்தவனுமான நானே அர்ஜுனன். இதை நீர் கேள்விப்பட்டிருப்பீர் என்பது தெளிவு. ஓ! மன்னா {விராடரே}, கண்டறியப்படக்கூடாத {அஞ்ஞாதவாச} காலத்தை, கருவறைக்குள் இருக்கும் குழந்தைகளைப் போல, உமது வசிப்பிடத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகக் கழித்தோம்!” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வீரர்களான அந்த ஐந்து பாண்டவர்களையும் அர்ஜுனன் சுட்டிக்காட்டிய பிறகு, அர்ஜுனனுடைய பராக்கிரமம் குறித்து விராடனின் மகன் {உத்தரன்} பேசினான். உத்தரன் மீண்டும் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} அடையாளம் காட்டினான். பிறகு அந்த இளவரசன் {உத்தரன்}, “சுத்தமான தங்கம் போன்ற பிரகாசமான நிறமும், முழுதாய் வளர்ந்த சிங்கம் போலப் பருத்திருப்பவரும், நேர்த்தியான மூக்கு உடையவரும், விரிந்த பெரிய கண்களைக் கொண்டவருமான தாமிர நிறத்திலான அகன்ற முகத்தைக் கொண்டவரே குருக்களின் மன்னன் {யுதிஷ்டிரர்} ஆவார்.

மதங்கொண்ட யானையின் நடையும், புடம்போட்ட தங்கம்போன்ற நிறமும், அகன்று விரிந்த தோள்களும், நீண்ட பருத்த கரங்களும் கொண்ட இந்த விருகோதரைப் {பீமரைப்} பாரும். அவரது அருகில் கரிய நிறத்தில், யானை மந்தையின் தலைமை யானையைப் போல, சிங்க போன்ற அகன்ற தோள்களும், பலமிக்க யானையின் நடையும், தாமரை இதழ்களைப் போன்ற விரிந்த பெரிய கண்களும் கொண்டு நிற்பவரே வில்லாளிகளில் முதன்மையான அர்ஜுனர் ஆவார். மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அருகே விஷ்ணுவையும், இந்திரனையும் போல இருப்பவர்களும், மனிதர்களின் உலகத்தில், அழகிலும், பலத்திலும், நடத்தையிலும் தனக்கு நிகர் இல்லாதவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான இரட்டையர்களை இதோ அனைவரும் பாருங்கள். அவர்களுக்கு அருகே, தங்கம் போன்ற அழகுடனும், ஒளியே உருவம் கொண்டு வந்தது போலவும், நீலத்தாமரையின் {நீலோத்பலமலரின்} நிறத்துடனும், தெய்வீக மங்கையைப் போலவும், லட்சுமியின் வாழும் உருவத்தைப் பிரதிபலிப்பது போலவும் நிற்கும் அவரே கிருஷ்ணையாவார்” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு விராடனின் மகன் {உத்தரன்}, அர்ஜுனனின் பராக்கிரமத்தை விவரிக்க எண்ணி, “மான்கூட்டத்தை நாசம் செய்யும் சிங்க போல எதிரிகளைக் கொன்றவர் இவரே. எதிரிகளின் தேர்க்கூட்டத்திற்கு மத்தியில் உலவி, அவர்களது சிறந்த தேர்வீரர்களைக் கொன்றவர் இவரே. மதங்கொண்ட ஒரு பெரிய யானை இவரது ஒரே கணையால் கொல்லப்பட்டது. தங்கக் கவசம் பூண்டிருந்த அந்தப் பெரிய விலங்கு, இவரால் துளைக்கப்பட்டு, தனது தந்தங்களால் பூமியைத் துளைத்தவண்ணம் கீழே விழுந்தது. பசுக்களை மீட்டதும், போரில் கௌரவர்களை வீழ்த்தியதும் இவரே. இவரது சங்கொலியால் எனது காதுகள் செவிடாகின. துரியோதனனுடன் கூடிய பீஷ்மர், துரோணர் ஆகியோர் இந்தக் கடுஞ்செயல் புரியும் வீரராலேயே வீழ்த்தப்பட்டனர். அந்தச் சாதனை அவருடையதே! எனதல்ல” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட மத்ஸ்யர்களின் வலிமைமிக்க மன்னன் {விராடன்}, யுதிஷ்டிரனுக்குக் காயமேற்படுத்தியதைக் குற்றமாகக் கருதி உத்தரனிடம், “பாண்டு மகன்களை {பாண்டவர்களை} அமைதிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது என நான் நினைக்கிறேன். நீ விரும்பினால், எனது மகள் உத்தரையை அர்ஜுனனுக்கு அளிப்பேன்” என்றான் {விராடன்}.

உத்தரன் {விராடனிடம்}, “நம்மால் வழிபடத்தகுந்தவர்களும், நமது போற்றுதலுக்கும், வழிபாட்டுக்கும், மதிப்புக்கும் உரிய பாண்டுவின் ஒப்பற்ற மகன்களை {பாண்டவர்களை} வழிபடும் நேரம் வந்துவிட்டது” என்றான்.

விராடன் {உத்தரனிடம்}, “போரில் நான் எதிரிகளிடம் அகப்பட்ட போது, பீமசேனனே என்னைக் காத்தான். எனது பசுக்களும் அர்ஜுனனால் மீட்கப்பட்டுள்ளன. உங்கள் கரங்களின் பலத்தினாலேயே நாங்கள் போரில் வெற்றியை அடைந்திருக்கிறோம். இப்படியே அனைத்தும் நடந்திருப்பதால், நமது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய நாங்கள் அனைவரும் குந்தியின் மகனான யுதிஷ்டிரரை அமைதிப்படுத்துவோம். ஓ! பாண்டு மகன்களில் காளையே {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளுடன் கூடிய நீர் அருளப்பட்டிரும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சொல்லாலோ, செயலாலோ, இதற்கு முன்னர், அறியாமையின் காரணமாக நான் எப்போதாவது தீங்கிழைத்திருந்தால், எங்களை மன்னிப்பதே உமக்குத் தகும். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அறம்சார்ந்தவரல்லவா?” என்று கேட்டான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்த உயர் ஆன்ம விராடன், பெரிதும் மகிழ்ந்து மன்னன் யுதிஷ்டிரனை அணுகி அவனிடம் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு, செங்கோல், கருவூலம் மற்றும் தலைநகரம் ஆகியவை அனைத்தையும் கொண்ட தனது முழு {மத்ஸ்ய} நாட்டையும் அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அளித்தான். பிறகு அனைத்துப் பாண்டவர்களிடமும், குறிப்பாகத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, அந்த வலிமைமிக்க மத்ஸ்ய மன்னன் {விராடன்} மீண்டும் மீண்டும், “நற்பேறாலேயே நான் உன்னைக் காண்கிறேன்” என்று சொன்னான். பிறகு மீண்டும் மீண்டும், யுதிஷ்டிரனையும், பீமனையும் மாத்ரியின் மகன்களையும் தழுவி, அவர்களது உச்சந்தலையை முகர்ந்து பார்த்த பெரும்படைக்குச் சொந்தக்காரனான விராடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் திருப்தியடையவில்லை.

பிறகு மிகவும் மகிழ்ந்த அவன் {விராடன்}, மன்னன் யுதிஷ்டிரனிடம், “நற்பேறாலேயே, காட்டிலிருந்து பாதுகாப்பாக நீர் வந்ததைக் கண்டேன். நற்பேறாலேயே அடைவதற்குக் கடினமான வனவாச காலத்தையும், அந்தத் தீயவர்களால் கண்டறியப்படாமல் நிறைவு செய்திருக்கிறீர்கள். என்னிடம் உள்ள அனைத்தையும், எனது மொத்த நாட்டையும் நான் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொடுக்கிறேன். சிறு தயக்கமும் இன்றிப் பாண்டுவின் மகன்கள் இவற்றை ஏற்கட்டும். சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உத்தரையின் கரங்களை ஏற்கட்டும். மனிதர்களில் சிறந்த அவனே {அர்ஜுனனே} அவளுக்கு {உத்திரைக்குத்} தலைவனாக இருக்கத் தகுந்தவன்” என்றான் {விராடன்}. இப்படிச் சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது பார்வையைச் செலுத்தினான். தனது அண்ணனால் இப்படிப் பார்க்கப்பட்ட அர்ஜுனன், மத்ஸ்ய மன்னனிடம் {விராடனிடம்}, “ஓ! ஏகாதிபதி {விராடரே}, உமது மகளை {உத்திரையை} நான் எனது மருமகளாக ஏற்பேன். மத்ஸ்யருக்கும், பாரதருக்கும் இடையிலான கூட்டணி இந்த வகையில் அமைவதே உண்மையில் விரும்பத்தக்கதாகும்” என்றான் {அர்ஜுனன்}.

அபிமன்யு உத்தரை திருமணத்திருவிழா! – விராட பர்வம் பகுதி 72- உத்தரையை மருமகளாக ஏற்றது ஏன் என்று அர்ஜுனன் விராடனுக்குச் சொன்னது; அர்ஜுனனின் திட்டத்தை விராடன் ஏற்பது; அபிமன்யு உத்தரை திருமணத்திற்காக அர்ஜுனனும் விராடனும் நண்பர்களையும் உறவினர்க்ள அனைவரையும் அழைத்தது; கிருஷ்ணனுடன் கூடிய யாதவர்கள் அனைவரும் பெருஞ்செல்வத்துடன் அங்கே வந்தது; காசி மன்னனும், சைப்பியனும் படைகளுடன் வந்தது; துருபதன் தனது உறவினர்களுடன் வந்தது; அபிமன்யு உத்தரை திருமணம் நிறைவு பெற்றது; அந்தணர்களுக்கு யுதிஷ்டிரன் வழங்கிய கொடை…

விராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “ஓ! பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நான் உனக்குத் தந்த எனது மகள் உத்தரையை நீ ஏன் மனைவியாக ஏற்க விரும்பவில்லை?” என்று கேட்டான்.

அதற்கு அர்ஜுனன் {விராடனிடம்}, “நான் உமது அந்தப்புரத்தில் வசித்தபோது, உமது மகளை {உத்தரையைப்} பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு எப்போதும் வாய்த்தது. தனிமையிலோ, துணையுடனோ இருக்கும்போதெல்லாம் அவளும் {உத்தரையும்} என்னை ஒரு தந்தையை நம்புவது போல நம்பினாள். பாடலையும் ஆடலையும் நன்கு அறிந்ததால், நான் அவளால் விரும்பப்பட்டு, மதிக்கப்பட்டேன். உண்மையில் உமது மகள் என்னை அவளது பாதுகாவலனாகவே [1] எப்போதும் கருதுகிறாள். ஓ! மன்னா, அவள் பூப்படையும் வயதை அடைந்தும் கூட நான் அவளுடன் ஓர் ஆண்டு முழுவதும் வாழ்ந்தேன். இந்தச் சூழ்நிலையில், நீரோ, பிற மனிதர்களோ அவள் மீதோ என் மீதோ காரணமில்லாமலேயே சந்தேகங்கொள்ள இஃது ஏதுவாக இருக்கும்.(உத்தரை தன்னை ஆசானாகக் கருதுகிறாள் என்று அர்ஜுனன் சொல்வதாக வருகிறது.)

எனவே, ஓ! மன்னா {விராடரே}, என் உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தித் தூய்மையாக இருக்கும் நான், ஓ! ஏகாதிபதி {விராடரே}, உமது மகளை {உத்தரையை} எனக்கு மருமகளாய்க் கொடுக்குமாறு உம்மிடம் இரந்து கேட்கிறேன். இப்படியே நான் அவளது தூய்மையை அங்கீகரிக்கிறேன். ஒரு மகனுக்கும் அந்த மகனின் சுயத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லாதது போலவே, ஒரு மருமகளுக்கும் மகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே, இவ்வழியைப் மேற்கொள்வதால் அவளது தூய்மை நிரூபிக்கப்படும். நான் அவதூறுக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் அஞ்சுகிறேன். எனவே, ஓ! மன்னா {விராடரே}, நான் உமது மகள் உத்தரையை எனது மருமகளாக ஏற்கிறேன். ஆயுத அறிவுடையவர்கள் அனைவரையும் விஞ்சியவனும், அழகில் தெய்வீக இளமையைக் கொண்டவனுமான அந்த வலிய கரங்கள் கொண்ட அபிமன்யு, சக்கரம் தாங்குபவனான வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பிடித்தமான மருமகனாவான். ஓ! மன்னா {விராடரே}, உமக்கு மருமகனாகவும், உமது மகளுக்குக் கணவனாகவும் தகுந்தவன் அவனே {அபிமன்யுவே}”, என்றான் {அர்ஜுனன்}.

விராடன் {அர்ஜுனனிடம்} ,“அறத்தில் நிலைபெற்ற விவேகியும், குருக்களில் சிறந்த குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} சொல்வதால் இது தகுந்ததே. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, அதைச் செய்வாயாக. தனது மருமகனின் தந்தையாக {தனது சம்பந்தியாக} அர்ஜுனனைக் கொண்டிருப்பவன் தனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறியவனாக இருப்பான்” என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த ஏகாதிபதி {விராடன்} இதைச் சொன்னதும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், மத்ஸ்ய மன்னனுக்கும் {விராடனுக்கும்}, அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்த ஒப்பந்தத்திற்குத் தனது ஏற்பைத் தெரிவித்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு, வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} அழைப்பை அனுப்பினான். விராடனும் அதையே செய்தான். பதிமூன்றாம் வருடத்தின் நிறைவுக்குப் பிறகு, அந்த ஐந்து பாண்டவர்களும், விராடனின் நகரங்களில் ஒன்றான உபப்லாவியத்தில் {Upaplavya} தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, ஆனர்த்த நாட்டில் இருந்து தாசார்ஹ குலத்தின் மக்கள் பலரையும், அபிமன்யுவையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} அழைத்து வந்தான்.

யுதிஷ்டிரனுக்கு மிக நெருங்கிய நண்பர்களான காசியின் மன்னனும், சைவியனும் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணி* துருப்புகளுடன் அங்கே வந்தனர். வலிமைமிக்கத் துருபதன், திரௌபதியின் வீரமிக்க மகன்களுடனும், வீழ்த்தப்பட முடியாத சிகண்டியுடனும், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையான ஒப்பற்ற திருஷ்டத்யும்னனுடனும், ஓர் அக்ஷௌஹிணி* துருப்புகளுடனும் வந்தான். அங்கு வந்த மன்னர்கள் அனைவரும் அக்ஷௌஹிணி தலைவர்களாக மட்டும் இல்லாமல், வேள்விகளில் அந்தணர்களுக்கு அபரிமிதமாகக் கொடையளிப்பவர்களாகவும், வேத அறிவுடன் வீரம் கொண்டவர்களாகவும், போரில் மரணத்தைத் தழுவத் தயாராக இருப்பவர்களாகவும் இருந்தனர்.

(ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள், மூன்று குதிரைகள் அடங்கியது ஒரு பட்டி, மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படும். மூன்று குல்மாக்கள் ஒரு கணம், மூன்று கணங்கள் ஒரு வாகினி, மூன்று வாகினிகள் சேர்ந்தது ஒரு பிருதனை என்றழைக்கப்படும். மூன்று பிருதனாக்கள் சேர்ந்தது ஒரு சம்மு, மூன்று சம்முக்கள் ஒரு அனீகினி, பத்து அனீகினிக்கள் சேர்ந்ததுதான் ஒரு அக்ஷௌஹிணி. ஓ அந்தணர்களே, கணிதவியலாளர்கள், ஒரு அக்ஷௌஹிணியில் இருபத்து ஓராயிரத்து எண்ணூற்று எழுபது {21870} தேர்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும் {21870}, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றி ஐம்பது {109350} காலாட்படைவீரர்களும்,  அறுபத்தைந்து ஆயிரத்து அறுநூற்று பத்தும் {65610} குதிரைகளும் ஆகும். ஓ அந்தணர்களே! இதுதான் ஒரு அக்ஷௌஹிணியின் கணக்காகும் என்று எண்களின் இலக்கணப்படிச் சொல்கிறார்கள். இந்தக் கணக்குப்படி கௌரவர்களும் பாண்டவர்களுமாக பதினெட்டு{18} அக்ஷௌஹிணி படைகள் இருந்தன.)

அவர்கள் வந்ததைக் கண்ட அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, முறைப்படி அவர்களை வணங்கி, அவர்களது துருப்புகளையும், பணியாட்களையும், சுமை தூக்கிகளையும் மகிழ்வித்தான். அவன் {விராடன்} தனது மகளை {உத்தரையை} அபிமன்யுவுக்கு அளிப்பதில் மிகவும் மகிழ்ந்திருந்தான். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மன்னர்கள் வந்த பிறகு, மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அங்கு வந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஹலாயுதன் {பலராமன்}, ஹ்ருதிகனின் மகன் கிருதவர்மன், சத்யகனின் மகன் யுயுதானான், ஆனாத்ருஷ்டி, அக்ரூரர், சாம்பன், நிசடன் ஆகியோருடன் வந்தான். எதிரிகளை அழிப்பவர்களான அவர்கள் {அந்த யாதவர்கள்} தங்களுடன் அபிமன்யுவையும், அவனது தாயையும் {சுபத்திரையையும்} அழைத்து வந்தனர். ஒரு வருடம் முழுவதும் துவாரகையில் வசித்த இந்திரசேனனும் மற்றவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட பாண்டவர்களின் தேர்களைத் தங்களுடன் கொண்டு வந்தனர். அந்த விருஷ்ணிகளில் புலியான பெரும் பிரகாசமிக்க வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தொடர்ந்து, பத்தாயிரம் {10,000} யானைகளும், பத்தாயிரம் {10,000} தேர்களும், பத்து கோடி {10,00,00,000 Hundred Million} குதிரைகளும், பத்தாயிரம் கோடி {10000,00,00,000 Hundred Billion} காலாட்படையினரும், பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற விருஷ்ணிகளும், அந்தகர்களும், போஜர்களும் அங்கே வந்தனர்.

ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் ஒவ்வொருவருக்கும், எண்ணற்ற அடிமைப்பெண்களையும், ரத்தினங்களையும், ஆடைகளையும் கிருஷ்ணன் கொடுத்தான். பிறகு மத்ஸ்ய மன்னன் {விராடன்} மற்றும் பாண்டவர் குடும்பங்களின் திருமணத் திருவிழா ஆரம்பித்தது. பாண்டவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சங்குகள், கைத்தாளங்களும், கொம்புகளும், பேரிகைகளும் மற்றும் பிற இசைக்கருவிகள் விராடனின் அரண்மனையில் ஒலிக்கத் தொடங்கின. பல்வேறு வகையான மான்களும், தூய்மையான விலங்குகளும் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டன. பல்வேறு வகையான மதுவகைகளும், மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட போதைச் சாறுகளும் அபரிமிதமாகச் சேகரிக்கப்பட்டன. பாடுவதில் வல்லவர்களும், பழங்கதைகள் அறிந்தவர்களுமான நாடகக் கலைஞர்களும், புலவர்களும், துதிபாடிகளும் மன்னர்களுக்காகக் காத்திருந்து, அவர்களது புகழையும் குல வரிசைகளையும் {வம்ச வரலாறுகளையும்} பாடினர்.

சமச்சீரான உடல்கள் மற்றும் கால்கள் கொண்ட முதிர்வயது பெண்கள், திருமண முடிச்சுக் கட்டப்படும் இடத்திற்கு {திருமண மண்டபத்திற்கு} சுதேஷ்ணையின் தலைமையில் வந்தனர். அழகிய நிறமும், அற்புத ஆபரணங்களும் கொண்ட அந்த அழகிய பெண்களுக்கு மத்தியில், அழகிலும், புகழிலும், காந்தியிலும் கிருஷ்ணையே {திரௌபதியே} முதன்மையானவளாக இருந்தாள். பெரும் இந்திரனின் மகளைப் போல அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த இளவரசி உத்தரையை அழைத்துக் கொண்டு அவர்கள் அனைவரும் அங்கே வந்தனர்.

பிறகு, குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சுபத்திரையின் மூலம் பிறந்த தனது மகன் {அபிமன்யு} சார்பாக, குறைகளற்ற அங்கங்கள் கொண்ட விராடனின் மகளை {உத்தரையை} ஏற்றுக் கொண்டான். இந்திரனைப் போல அங்கே நின்று கொண்டிருந்த பெரும் மன்னனான குந்தியின் மகன் யுதிஷ்டிரனும் அவளை {உத்தரையை} தனது மருமகளாக ஏற்றுக் கொண்டான். அவளை ஏற்றுக் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் முன் ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} கொண்டு, சுபத்திரையின் ஒப்பற்ற மகனின் {அபிமன்யுவின்} திருமண விழாவை நடத்தச் செய்தான்.

பிறகு அவனுக்கு {அர்ஜுனனுக்கு}, விராடன், காற்றின் வேகம் கொண்ட ஏழாயிரம் {7000} குதிரைகளையும், சிறந்த வகையிலான இருநூறு {200} யானைகளையும், பெருஞ்செல்வத்தையும் (வரதட்சணையாகக்) கொடுத்தான். சுடர்விடும் நெருப்புக்குள் தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாகக் கொடுத்து, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} மரியாதை செலுத்திய விராடன், பாண்டவர்களுக்குத் தனது நாடு, படை, கருவூலம், மற்றும் தன்னையே காணிக்கையாகக் கொடுத்தான்.

திருமணம் நிறைவு பெற்றதும், தர்மனின் மகனான யுதிஷ்டிரன், மங்காப்புகழ் கொண்ட கிருஷ்ணன் கொண்டு வந்த செல்வத்தை அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கையாகக் கொடுத்தான். மேலும், ஆயிரக்கணக்கான பசுக்களையும், பல்வேறு வகைகளிலான ஆடைகளையும், அற்புத ஆபரணங்களையும், வாகனங்களையும், படுக்கைகளையும், பல்வேறு வகைகளிலான இனிய பானங்களையும், பல்வேறு இனங்களிலான சிவந்த பானங்களையும் கொடுத்தான். அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தணர்களுக்கு, நிலக்கொடையும், ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் உரிய சடங்குகளுடன் அளித்தான். ஆயிரக்கணக்கான குதிரைகளையும், தங்கம் மற்றும் பிற வகைச் செல்வங்களையும் அதிகமாக, வயது முதிர்ந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்தான். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, நன்கு உண்டு மகிழ்ச்சியுடனிருந்த மனிதர்களால் நிரம்பிய அந்த மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} நகரம், பெரும் திருவிழா நடைப்பதைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது” என்றார் {வைசம்பாயனர்}.

கோஹரணப் பர்வம் முற்றிற்று

விராட பர்வம் முற்றிற்று *

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ வன பர்வம்-ஸ்ரீ  திரௌபதி ஹரணப் பர்வம்–

October 11, 2025

துர்வாசரை உபசரித்த துரியோதனன்! – வனபர்வம் பகுதி 260-பத்தாயிரம் சீடர்களுடன் துர்வாசர் துரியோதனனைச் சந்திப்பது; துர்வாசரை துரியோதனன் நன்கு உபசரிப்பது; வரமளிக்க முற்பட்ட துர்வாசரிடம், துரியோதனன் பாண்டவர்கள் உண்ட பிறகு அவர்களிடம் அவர் செல்ல வேண்டும் என்று கோரியது; பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதாக துரியோதனனுக்கு துர்வாசர் வாக்களித்தது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, கிருஷ்ணை {திரௌபதி} உணவு உண்ணும் வரை, உணவு நாடி வந்த அந்தணர்களுக்கும் பிறருக்கும், சூரியனிடம் இருந்து பெற்ற உணவை, பலவகைப்பட்ட மான்கறியோடு {Venison} பகிர்ந்தளித்து, முனிவர்களுடன் இனிய விவாதங்களை மேற்கொண்டு வந்த அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்து வந்த போது, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனியின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்ட துரியோதனனும், திருதராஷ்டிரனின் மற்ற மகன்களும் அவர்களிடம் எப்படி நடந்து கொண்டனர்? நான்  உம்மிடம் இதையே கேட்கிறேன். எனக்கு இவ்விஷயத்தில் ஞானம் வழங்குவதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, நகரத்தில் வாழ்வது போலவே காட்டிலும் பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன், கலைநயமிக்க {artful} {வஞ்சனையில் நுண்ணறிவுள்ள என்கிறது கும்பகோணம் பதிப்பு} கர்ணன், துச்சாசனன், மற்றும் பிறரோடு சேர்ந்து அவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தான். அந்தத் தீய மனம் கொண்டோர், பல்வேறு தீய திட்டங்களை நடத்த ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது, அறம்சார்ந்த, கொண்டாடப்படும் துறவியான துர்வாசர், தம் சுயஇச்சையால், பத்தாயிரம் {10000} சீடர்களுடன் குருக்களின் அந்த நகரத்திற்கு {ஹஸ்தினாபுரம்} வந்தார். எளிதில் கோபம் கொள்ளும் அத்துறவி {துர்வாசர்} வந்ததைக் கண்ட துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து பெரும் பணிவுடனும், அடக்கத்துடனும், மென்மையுடனும் அவரை வரவேற்றான். அந்த முனிவருக்கு {துர்வாசருக்கு} அடிமை போல, தானே வேலை செய்த அந்த இளவரசன் {துரியோதனன்}, அவரை {துர்வாசரை} சரியான முறையில், போற்றி வரவேற்றான். அந்தச் சிறப்புமிக்க முனிவர் {துர்வாசர்} சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அப்போதெல்லாம் துரியோதனன், பழிக்கு {சாபத்திற்கு அஞ்சி} ஆளாகாமல், விழிப்புடனும் விடாமுயற்சியுடனும் அவரை {துர்வாசரை} இரவும், பகலும் கவனித்துக் கொண்டான்.

சில நேரங்களில் அந்த முனிவர் {துர்வாசர்}, “நான் பசித்திருக்கிறேன், ஓ! மன்னா {துரியோதனா}, எனக்கு விரைவாக ஏதாவது உணவைக் கொடு” என்று கேட்பார். சில நேரங்களில், குளிப்பதற்காக வெளியே சென்று, நேரம் கடந்து வந்து, “எனக்குப் பசியில்லை. நான் இன்று எதுவும் உண்ணமாட்டேன்” என்று சொல்லி அவனது {துரியோதனனின்} பார்வையில் இருந்து மறைந்துவிடுவார். சில நேரங்களில், திடீரென வந்து, “விரைவாக எங்களுக்கு உணவளி” என்பார். இன்னும் சில நேரங்களில் ஏதாவது குறும்பு செய்ய விரும்பியவராய், நடு இரவில் எழுந்து, உணவைத் தயாரிக்கச் செய்து, முக்கியத்துவம் இல்லாதவற்றில் குறை கண்டு {carp}, அவற்றை உண்ணவே மாட்டார். இவ்விதமெல்லாம் அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} நடந்து கொண்ட அந்த முனிவர் {துர்வாசர்}, கோபமோ எரிச்சலோ அடையாத மன்னன் துரியோதனனைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா} கட்டுக்கடங்காதவரான துர்வாசர் அவனிடம் {துரியோதனனிடம்}, “உனக்கு வரங்களை அருளும் சக்தி எனக்கு உள்ளது. உனது இதயம் விரும்பும் எதையும் நீ என்னிடம் கேட்கலாம். நற்பேறு உனதாகட்டும். நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அறத்திற்கும், அறநெறிகளுக்கும் புறம்பில்லாத எதையும் நீ என்னிடம் இருந்து அடையலாம்” என்று சொன்னார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெருந்துறவியின் {துர்வாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுயோதனன் {துரியோதனன்}, புதிய உயிரைப் பெற்றதாக உணர்ந்தான். உண்மையில், வரவேற்புக்குப் பிறகு முனிவர் மகிழ்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று அவனும் {துரியோதனனும்}, கர்ணனும், துச்சாசனனும் முன்பே பேசி வைத்திருந்தனர். அந்தத் தீய மனம் கொண்ட மன்னன் {துரியோதனன்}, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டதை நினைத்துப் பார்த்து, பின்வரும் உதவியை மகிழ்ச்சியுடன் கேட்டான். அவன் {துரியோதனன்}, “பெரும் மன்னரான யுதிஷ்டிரரே, எங்கள் குலத்தில் சிறந்தவரும், மூத்தவரும் ஆவார். அந்தப் பக்திமான் {யுதிஷ்டிரர்}, இப்போது தனது தம்பிகளுடன் சேர்ந்து காட்டில் வாழ்ந்து வருகிறார். எனவே, ஓ! அந்தணரே {துர்வாசரே}, உமது சீடர்களுடன் என்னிடம் வந்ததுபோல, அந்தச் சிறப்பு வாய்ந்தவரிடமும் {யுதிஷ்டிரரிடமும்} நீர் ஒரு முறை விருந்தினராகச் செல்ல வேண்டும். நீர் எனக்கு உதவி செய்ய விரும்பினால், மென்மையான சிறந்த பெண்மணியான கொண்டாடப்படும் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அந்தணர்களுக்கும், தனது கணவர்களுக்கும் உணவு படைத்து, அவளும் உண்டு முடித்து, ஓய்வெடுக்கப் படுக்கும்போது, நீர் அவரிடம் {யுதிஷ்டிரரிடம்} செல்ல வேண்டும்” என்று கோரினான் {துரியோதனன்}.

அதற்கு அம்முனிவர் {துர்வாசர்}, “உனது திருப்திக்காக நான் அவ்வாறே செய்வேன்” என்றார். இப்படிச் சுயோதனனிடம் சொன்ன அந்தச் சிறந்த அந்தணரான துர்வாசர், முன்பு எப்படி வந்தாரோ அப்படியே சென்றார். தான் விரும்பிய அனைத்தையும் அடைந்துவிட்டதாகச் சுயோதனன் தன்னைக் கருதிக் கொண்டான். பிறகு, பெரும் மனநிறைவுடன் கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்டான். கர்ணனும், தனது தம்பிகளுடன் இருந்த மன்னனிடம் {துரியோதனனிடம்} மகிழ்ச்சியாக, “சிறு நற்பேறாலேயே, நீ நன்கு செயல்பட்டு உனது விருப்பங்களையும் அடைந்தாய். உனது நற்பேறாலேயே, உனது எதிரிகள், கடக்க முடியாத ஆபத்தான கடலில் மூழ்கினர். அந்தப் பாண்டுவின் மகன்கள் இப்போது, துர்வாசரின் கோபம் எனும் நெருப்புக்குள் விழப்போகிறார்கள். அவர்கள் செய்த தவறால், இருள் நிறைந்த பள்ளத்திற்குள் விழுந்துவிட்டனர்” என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, நடந்ததில் தங்கள் மனநிறைவை வெளிப்படுத்திய, தீய சூழ்ச்சிகள் செய்யும் துரியோதனனும் மற்றவர்களும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியோடு திரும்பினர். 

தப்பி ஓடிய துர்வாசர்! – வனபர்வம் பகுதி 261-துர்வாசர் பாண்டவர்களிடம் சென்றது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் சோற்றுப் பானையை வாங்கி, அதில் ஒட்டியிருந்த கீரையையும் ஒரு பருக்கையையும் உண்டு பசியாறியது; இதனால் துர்வாசரும், அவரது சீடர்களும் பசியாறுவது; பீமன் துர்வாசரை அழைக்கச் சென்றது; பீமன் அவரைக் காணாதது; அவர் ஓடிவிட்டதாக அங்கிருந்த துறவிகள் சொன்னது ..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒருநாள், பாண்டவர்கள் வசதியாக அமர்ந்து விட்டார்கள் என்றும், கிருஷ்ணை {திரௌபதி} தனது உணவை உண்டு ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதையும் உறுதி செய்து கொண்ட தவசியான துர்வாசர், தனது பத்தாயிரம் {10000} சீடர்களுடன் அந்தக் {காம்யகக்} காட்டிற்குச் சென்றார். சிறப்புமிக்க, நேர்மையான மன்னனான யுதிஷ்டிரன், விருந்தினர் வந்ததைக் கண்டு, தனது தம்பிகளுடன் அவரை வரவேற்க முன்னேறிச் சென்றான். தனது கரங்களைக் கூப்பி, அவர் அமர்வதற்குச் சரியான அற்புதமான ஆசனத்தைக் காட்டி, முனிவர்களுக்குத் தகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்றான். பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்} அவரிடம் {துர்வாசரிடம்}, “ஓ! வணங்கத்தக்க ஐயா, உங்களுடைய பகல் நீராடுதல் மற்றும் சடங்குகளை முடித்து விரைவாகத் திரும்புங்கள்” என்றான். அம்மன்னன் எப்படித் தனக்கும் தன் சீடர்களுக்கும் உணவை வழங்குவான் என்பதை அறியாத பாவமற்ற முனிவர், சிஷ்யர்களுடன் சேர்ந்து நீராடச் சென்றார். தங்கள் ஆசைகளை அடக்கிய அந்த முனிவர் கூட்டம் தங்கள் சுத்திகரிப்பைச் செய்ய {நீராட} ஓடைக்குச் சென்றது.

அதே வேளையில் ஓ! மன்னா {ஜனமேஜயா}, கணவர்களுக்குத் தன்னை அர்ப்பணிந்திருந்த அற்புதமான இளவரசியான திரௌபதி, (முனிவர்களுக்குக் கொடுக்க வேண்டிய) உணவு குறித்துப் பெரும் கவலையில் இருந்தாள். அவள் கவலையோடு சிந்தித்த பிறகு உணவு வழங்கும் வழியை யாரும் வழங்க முடியாது என்று தீர்மானித்து, கம்சனைக் கொன்றவனான கிருஷ்ணனை உள்முகமாக வேண்டினாள். அந்த இளவரசி {திரௌபதி}, “கிருஷ்ணா, வலிமையான கரங்கள் கொண்ட ஓ! கிருஷ்ணா, ஓ! தேவகியின் மகனே, அளவிலாத சக்தி கொண்டவனே, ஓ! வாசுதேவா, தன்னை வணங்குபவர்களின் சிரமங்களை விலக்கும் ஓ! அண்டத்தின் தலைவா, நீயே ஆன்மா, நீயே இந்த அண்டத்தைப் படைப்பவனும் அழிப்பவனுமாவாய். ஓ! தலைவா, அல்லல் படுபவர்களுக்கு மீட்பனாய் இருப்பவன் நீயே. இந்த அண்டத்தையும், படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பவன் நீயே. உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவன் நீயே. மனத்தோற்றங்களில் உண்டாகும் ஆஹுதிகளும், சித்திகளும் [1] நீயே. ஓ! உச்சமானவனே, முடிவற்றவனே, ஓ! நன்மைகள் அனைத்தையும் கொடுப்பவனே, ஆதரவற்றவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவன் நீயே. ஆத்மாவாலோ மன அளவிளோ, பிற வழிகளிலோ அறியமுடியாத ஓ! ஆதி பொருளே, நீயே அனைவரையும் ஆட்சி செய்பவனும், பிரம்மனின் தலைவனுமாவாய். நான் உனது பாதுகாப்பைத் தேடுகிறேன். ஓ! தேவா, உன்னைப் புகலிடமாகக் கொண்டோரிடம் எப்போதும் அன்புள்ளவனே, உன் கருணையால் என்னைப் பாதுகாப்பாயாக. கருநெய்தல் மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவனே. அல்லி மலரின் உள்வட்டத்தைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டவனே, மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனே, பிரகாசிக்கும் கௌஸ்துப ரத்தினத்தை மார்பில் தரித்தவனே. படைத்த அனைத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறாய். நீயே அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருக்கிறாய். அண்டத்தின் {அண்டத்தின்} உயர்ந்த ஒளியும், சாரமுமாக நீயே இருக்கிறாய். அனைத்து திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் நீயே. உன்னையே அனைத்திற்கும் வித்தாகவும், அனைத்துப் பொக்கிஷங்களின் குவியலாகவும் சொல்கிறார்கள். உனது பாதுகாப்பில் இருக்கும்போது, ஓ! தேவர்களின் தலைவா, அனைத்து தீமைகளும் தங்கள் பயங்கரங்களை இழக்கின்றன. துச்சாசனனிடம் இருந்து நீ என்னை முன்பு காத்ததைப் போல, இந்தச் சிரமத்தில் இருந்து நீயே என்னை விடுவிக்க வேண்டும்” என்று வேண்டினாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தன்னை நம்பியிருப்பவர்களிடம் கருணையாக இருப்பவனும், மர்மமான இயக்கங்கள் கொண்டவனும், பெரியவனும், இறையாண்மை உள்ள தேவனும், பூமியின் தலைவனுமான தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, கிருஷ்ணையால் {திரௌபதியால்} துதிக்கப்பட்டதும், அவளது சிரமத்தைக் கண்டு, தன்னருகே படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ருக்மிணியை விட்டு எழுந்து உடனே அந்த இடத்திற்குச் {காம்யக வனத்திற்குச்} சென்றான். வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கண்ட திரௌபதி பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனை வணங்கி, முனிவர்களின் வருகையையும், மற்றும் யாவையும் தெரிவித்தாள். அனைத்தையும் கேட்ட கிருஷ்ணன் அவளிடம் {திரௌபதியிடம்}, “நான் பசியால் மிகவும் வருந்துகிறேன். தாமதமில்லாமல் எனக்கு ஏதாவது உணவைக் கொடு. உன் மற்ற வேலைகளைப் பிறகு செய்யலாம்” என்றான்.

கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை {திரௌபதி} குழப்பம் கொண்டு அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “நான் உண்ணும் வரைதான் சூரியனால் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் உணவு இருக்கும். ஆனால், ஏற்கனவே நான் என் உணவை இன்று உண்டுவிட்டேன். இப்போது அதில் {அந்தப் பாத்திரத்தில்} உணவு இல்லை” என்றாள். பிறகு அந்தத் தாமரைக் கண் கொண்ட வணங்கத்தக்கவன் {கிருஷ்ணன்} கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, இது கேலிக்கான நேரமில்லை. பசியால் நான் மிகவும் துன்புறுகிறேன். விரைவாகச் சென்று அந்தப் பாத்திரத்தை எடுத்துவந்து என்னிடம் காட்டு” என்றான். யது குலத்தின் ஆபரணமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அந்தப் பாத்திரம் இது போன்ற நிலையில் கொண்டு வரப்பட்டபோது, அவன் அதற்குள் நோட்டம் விட்டு, அதன் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்த, ஒரு பருக்கை அரிசியையும், கீரையையும் {Vegetable = காய்கறி} கண்டான். அதை விழுங்கிய அவன் {கிருஷ்ணன்}, அவளிடம் {திரௌபதியிடம்}, “அண்டத்தின் ஆன்மாவான தேவன் ஹரியை இது நிறைவு கொள்ளச்செய்யட்டும். வேள்விகளில் {அவிர்ப்பாகம்} உண்ணும் தேவனுக்கும் {இந்திரனுக்கு} இது தெவிட்டும் நிலையை உண்டாக்கட்டும்” என்றான்.

பிறகு நீண்ட கரங்கள் கொண்டவனும், துன்பங்களுக்கு ஆறுதலாக இருப்பவனுமானவன் {கிருஷ்ணன்}, பீமசேனனிடம், “விரைந்து சென்று முனிவர்களை உணவு உண்ண அழைப்பாயாக” என்றான். பிறகு ஓ! நல்ல மன்னா {ஜனமேஜயா}, கொண்டாடப்படும் பீமசேனன், தங்கள் சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்ய அருகில் இருந்த தெளிந்த குளிர்ச்சியான நீர் ஓடும் ஓடைக்குச் சென்றிருக்கும் அனைத்து முனிவர்களையும், துர்வாசரையும், பிறரையும் அழைப்பதற்காக, விரைவாகச் சென்றான். அதே வேளையில், ஆற்றில் மூழ்கி எழுந்த துறவியர், தங்கள் உடல்களைத் தேய்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக உணர்ந்தனர். ஓடையை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு துர்வாசரிடம் திரும்பிய அத்துறவியர், “மன்னனை உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு, நீராட இங்கே வந்துவிட்டோம். ஆனால், ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே {துர்வாசரே}, நமது வயிறு கழுத்து வரை நிரம்பியிருப்பதாகக் காணப்படுகிறது. இப்போது நம்மால் எதையும் உண்ண எப்படி முடியும்? நமக்காகத் தயாரிக்கப்படும் உணவு பயனற்றுப் போகும். இப்போது செய்வதற்கு எது தகுந்தது?” என்று கேட்டனர்.

அதற்குத் துர்வாசர், “உணவைப் பாழாக்கியதால், நாம் அரச முனிவனான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பெரும் தீங்கை இழைத்துவிட்டோம். பாண்டவர்கள் தங்கள் கோபப் பார்வையால் நம்மைப் பார்த்து எரித்துவிடமாட்டார்களா? அரச முனியான யுதிஷ்டிரன் பெரும் தவச் சக்தியைப் பெற்றிருக்கிறான் என்பதை நான் அறிவேன். அந்தணர்களே, ஹரிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன். உயர் ஆன்ம {மகாத்மாவான} பாண்டவர்கள் அனைவரும், அறம் பயில்பவர்கள் {தர்மவான்கள்}, கற்றவர்கள், போர்க்குணம் மிக்கவர்கள், தவத்துறவிலும் நோன்பிலும் கவனம் உள்ளவர்கள், வாசுதேவனுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள், நன்னடத்தைகளை விதிப்படி எப்போதும் நோற்பவர்களுமாவர். தூண்டப்பட்டால், பஞ்சுக்குவியலை எரிக்கும் நெருப்பு போலத் தங்கள் கோபத்தால் நம் அனைவரையும் எரித்துவிடுவார்கள். எனவே, சீடர்களே, நீங்கள் அனைவரும் அவர்களை (மீண்டும்) பார்க்காமல் விரைவாக ஓடுங்கள்” என்றார் {துர்வாசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தங்கள் ஆன்ம குருவால் இப்படி அறிவுறுத்தப்பட்ட அந்த அந்தணர்கள் அனைவரும், பாண்டவர்களிடம் பெரும் அச்சம் கொண்டு, அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடினர். அந்தத் தெய்வீக நதியின் அருகே, அற்புதமான முனிவர்களைக் காணாத பீமசேனன், அந்த நதித்துறைகளில் இங்கும் அங்கும் என அனைத்து இடங்களிலும் தேடினான். அந்த இடத்தில் இருந்த துறவிகளால், அவர்கள் ஓடிவிட்டனர் என்பதை அறிந்த அவன் {பீமன்}, திரும்பி வந்து, யுதிஷ்டிரனிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். பிறகு அடங்கிய புலன்கள் கொண்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களை எதிர்பார்த்து சிறிது நேரம் காத்திருந்தனர்.

யுதிஷ்டிரன், “நடு இரவில் திடீரென வந்து நம்மை முனிவர்கள் ஏமாற்றிவிடலாம். ஓ! உண்மைகளால் {தெய்வத்தால்} உருவாக்கப்பட்ட இந்தக் கடும்சிரமத்தில் இருந்து நாம் எப்படித் தப்புவது?” என்று சொன்னான். இப்படிப்பட்ட நினைவுகளில் மூழ்கி, நீண்ட பெருமூச்சுகளை அடிக்கடி விட்டுக்கொண்டிருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்ட கிருஷ்ணன், திடீரென அவர்கள் முன் தோன்றி, அவர்களிடம், “பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, கோபக்கார மூனிவர் மூலம் உங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை அறிந்த திரௌபதி என்னிடம் மன்றாடினாள். எனவே, நான் இங்கு விரைவாக வந்தேன். ஆனால், இப்போது, முனிவர் துர்வாசரிடம் நீங்கள் சிறிதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களது தவச் சக்திகளுக்குப் பயந்து, முன்பே அவர் ஓடிப்போய்விட்டார். அறம் சார்ந்த மனிதர்கள் எப்போதும் துன்பப்படுவதில்லை. நான் எனது வீட்டிற்குத் திரும்ப இப்போது உங்களிடம் நான் அனுமதி கோருகிறேன். நீங்கள் எப்போதும் வளத்துடன் இருப்பீராக!” என்றான் {கிருஷ்ணன்}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திரௌபதியுடன் இருந்த பிருதையின் மகன்கள் கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்டு மனம் அமைதியடைந்தார்கள். நோய் (வருத்தம்) அகன்ற அவர்கள் {பாண்டவர்கள்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “அகன்ற கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மனிதர்கள், ஒரு படகின் மூலமாகப் பாதுகாப்பாகக் கரையை அடைவதைப் போல, உன் துணையைக் கொண்ட நாங்கள், ஓ! தலைவா, கோவிந்தா {கிருஷ்ணா}, தப்பமுடியாத சிரமத்தில் இருந்து தப்பித்தோம். இப்போது நீ அமைதியுடன் திரும்பலாம். வளமை உனதாகட்டும்” என்றனர். இப்படி வழியனுப்பப்பட்ட அவன் {கிருஷ்ணன்}, தனது தலைநகரை அடைந்தான்.. ஓ! அருளப்பட்ட தலைவா {ஜனமேஜயா}, வனம் விட்டு வனம் உலவித் திரிந்த பாண்டவர்கள், திரௌபதியுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தினர். ஓ! மன்னா, இப்படியே நீ சொல்லச்சொன்ன கதையை உனக்குச் சொல்லிவிட்டேன். இப்படியே காட்டில் இருந்த பாண்டவர்களிடம் திருதராஷ்டிரனின் தீய மகன்களின் தந்திரங்கள் பலிக்கவில்லை”

திரௌபதியைக் கண்ட ஜெயத்ரதன்! – வனபர்வம் பகுதி 262-பாண்டவர்கள் அனைவரும் வேட்டைக்குச் சென்றது; அவ்வேளையில் ஜெயத்ரதன் திரௌபதியைக் காண்பது; அவளைக் கண்டு மயங்கிய அவன், அவளைப் பற்றி அறிய கோடிகனை அனுப்பியது .

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாரதக் குலத்தைச் சார்ந்த இத்தகுப் பெரும் வீரர்கள் காம்யகம் எனும் பெரும் காட்டில் தேவர்களைப் போலச் சுற்றிக் கொண்டும், வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டும், நாட்டின் எண்ணிலடங்கா காட்டுபகுதிகளையும், அழகான மலர்கள் பூக்கும் காலம் கொண்ட கானகத்தின் பரந்த பகுதிகளையும் மகிழ்ச்சியுடன் கண்டனர். ஒவ்வொருவரும் இந்திரனைப் போல இருந்து, எதிரிகளுக்குப் பயங்கரத்தைக் கொடுக்கும் அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அங்கே சிறிது காலம் தங்கினர். ஒரு நாள், எதிரிகளை வெல்லும் அந்தப் பராக்கிரமசாலிகள் {பாண்டவர்கள்}, தங்களுடன் இருந்த அந்தணர்களுக்கு உணவு கொடுப்பதற்காக, அனைத்து பக்கங்களுக்கும் வேட்டையாடச் சென்றனர். தவ மகிமை கொண்ட பெரும் துறவியான திருணபிந்துவிடமும், தங்கள் ஆன்ம வழிகாட்டியான தௌமியரிடமும் அனுமதி கேட்டு, திரௌபதியைத் தனியாக ஆசிரமத்தில் விட்டுச் சென்றனர்.

அதே வேளையில், சிந்துவின் புகழ்பெற்ற மன்னனான, விருத்தக்ஷத்ரனின் மகன் {ஜெயத்ரதன்}, திருமணம் செய்து கொள்ளும் நோக்குடன், சிறந்த அரச உடைகள் உடுத்தி, எண்ணற்ற இளவரசர்களின் துணையுடன் சால்வ நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். காம்யக வனத்தில் அந்த இளவரசன் {ஜெயத்ரதன்} நின்றான். அந்த ஒதுங்கிய இடத்தில், பாண்டவர்களின் கொண்டாடப்படும் அன்பிற்குரிய மனைவியான அழகிய திரௌபதி, ஆசிரமத்தின் வாசலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவளது அழகிய வடிவத்தால் பிரம்மாண்டமாக இருந்த அவள், கரிய மேகக் குவியலைப் பிரகாசிக்க வைக்கும் மின்னலைப் போல, அந்த வனத்தைச் சுற்றி ஒரு காந்தியைப் பரப்பிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவளை {திரௌபதியைக்} கண்ட எவரும், “இது அப்சரசா? தேவர்களின் மகளா? அல்லது தேவ மாயையா?” என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டனர். இந்த எண்ணத்தால் அவர்களது கரங்களும் குவிந்தன. அவர்கள் களங்கமற்ற வடிவழகு கொண்டவளை நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விருத்தக்ஷத்ரனின் மகனும், சிந்துவின் மன்னனுமான ஜெயத்ரதன், களங்கமற்ற அழகுடைய அந்த மங்கையைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி, தீய நோக்கத்தால் பீடிக்கப்பட்டான். ஆசை கொழுந்து விட்டெரிய அவன் {ஜெயத்ரதன்} கோடிகன் என்ற இளவரசனிடம், “களங்கமற்ற வடிவம் கொண்ட இந்த மங்கை யாருடையவள்? இவள் மனித வகையைச் சார்ந்தவள்தானா? இந்தப் பேரழகியை அடைய முடிந்தால் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை [1]. அவளை என்னுடன் அழைத்துக் கொண்டு எனது வசிப்பிடத்திற்குத் திரும்புவேன். ஓ! ஐயா {கோடிகா}, இவள் யாரென்றும், இவள் எங்கிருந்து வந்திருக்கிறாள் என்றும், இந்த மென்மையானவள் முட்கள் நிறைந்த இந்தக் கானகத்திற்கு ஏன் வந்தாள் என்றும் அறிந்து வா. பெண் வகையில் ரத்தினமான இந்தக் கொடியிடையாள், பெரும் அழகு படைத்த இந்த மங்கை, அழகிய பற்களும், நீண்ட கண்களும் கொண்ட இவள் என்னைத் தலைவனாக ஏற்பாளா? இந்த அற்புதமான மங்கையின் கரங்களை அடைந்தால், நான் நிச்சயம் என்னை வெற்றியடைந்தவனாகக் கருதிக் கொள்வேன். போ, கோடிகா {கோடிகாஸ்யா}, இவளது தலைவன் யார் என்பதை விசாரித்து வா” என்றான் {ஜெயத்ரதன்}. இப்படிக் கேட்கப்பட்ட குண்டலங்கள் அணிந்திருந்த கோடிகன், தனது தேரில் இருந்து குதித்து, ஒரு நரி பெண் புலியை அணுகுவதைப் போல அவளின் {திரௌபதியின்} அருகில் வந்து, இந்த வார்த்தைகளைப் பேசினான்.

திரௌபதியிடம் பேசிய கோடிகன்! – வனபர்வம் பகுதி 263-ஜெயத்ரதன் கட்டளைக்கிணங்க கோடிகன் திரௌபதியிடம் சென்று பேசுவது; அவள் யார், யாருடைய மனைவி என்று விசாரித்து, தங்களைக் குறித்த அறிமுகத்தைச் சொல்வது ..

கோடிகன் {திரௌபதியிடம்} சொன்னான், “அற்புதமான மங்கையே, இரவு நேரத்தில் சுடர்விடும் நெருப்பெனப் பிரம்மாண்டமாகத் தெரிகிறாயே. இந்த ஆசிரமத்தில் இருக்கும் கடம்ப மரத்தில் சாய்ந்து கொண்டு, தென்றலால் தாலாட்டப்பட்டுத் தனியாக நிற்கும் நீ யார்? நேர்த்தியான அழகுடன் இருக்கும் நீ, இந்தக் காட்டுப் பகுதியில் எந்தப் பயத்தையும் உணரவில்லையா? {இங்கே உன்னைக் கண்டு}, தேவதையோ, யக்ஷியோ, தானவியோ, அற்புதமான அப்சரசோ, தைத்தியர் எவரின் மனைவியோ, நாக மன்னனின் மகளோ, ராட்சசியோ, வருணனின், யமனின், சோமனின், குபேரனின் மகளோ மனித உருவம் கொண்டு இந்தக் கானகத்தில் உலவுவதாக நான் உன்னைக் குறித்து எண்ணுகிறேன். அல்லது, தாத்ரி {தாதா}, விதாத்ரி {விதாதா}, சாவித்ரி {சூரியன்}, விபு, சக்ரன் {இந்திரன்} ஆகியோரின் மாளிகையில் இருந்து இங்கு வந்திருக்கிறாயா?

நாங்கள் யார் என்று எங்களிடம் நீ கேட்கவில்லை. உன்னை இங்கு யார் பாதுகாக்கிறார்கள் என்பதை நாங்கள் அறியவில்லை. மரியாதையுடன் உன்னைக் கேட்கிறேன், ஓ! நன்மங்கையே, பலமிக்க உனது தந்தை யார்? உனது கணவன், உறவிர்கள், குலம் ஆகிய பெயர்களை எங்களுக்குச் சொல். நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதையும் சொல். எங்களைப் பொறுத்தவரையில், நான் மன்னன் சுரதனின் மகன், என்னை மக்கள் கோடிகன் என்று அறிவார்கள். அந்தத் தங்கத்தேரில் வேள்விப்பீடத்தில் அமர்ந்திருக்கும் நெருப்புப்போல அமர்ந்திருக்கும் அந்த மனிதன், தாமரை இதழ்களைப் போல நீண்ட கண்களையுடைய அந்த வீரன், க்ஷேமங்கரன் என்ற பெயரால் அறியப்படும் திரிகார்த்த {நாட்டின்} மன்னனாவான். அவனுக்குப் பின்னால், இப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவன் புளிந்த {குளிந்த நாட்டு} மன்னனின் புகழ்பெற்ற மகனாவான். பெரும் வில்லைத் தாங்கி, அகன்ற கண்களுடன், மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, மலைகளின் மார்புகளில் வாழ்பவன் அவன். கரிய நிறமும், அழகும் கொண்டவனும், எதிரகளை அழிப்பவனும், அந்தக் குளத்தின் அருகில் நின்று கொண்டிருப்பவனுமான அந்த இளைஞன், இக்ஷவாகு குலத்தில் வந்த சுபலனின் மகனாவான்.

ஓ! அற்புதமான மங்கையே, ஜெயத்ரதன் என்ற பெயர் பெற்ற, சௌவீர {நாட்டு} மன்னனைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கலாம். வேள்வி பீடத்தில் தோன்றும் நெருப்பு போல இருப்பவர்களும், சிவந்த குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இருப்பவர்களுமான அங்காரகன், குஞ்சரன், குப்தகன், சத்ருஞ்சயன், ஸ்ரீஞ்சயன், சுப்பிரவிருத்தன், பிரபாங்கரன், பிரமரன், ரவி, சூரன், பிரதாபன் மற்றும் குஹனன் ஆகிய பனிரெண்டு சௌவீர இளவரசர்களைத் தனது கொடி தாங்குபவர்களாக வைத்துக் கொண்டு, {போரில்} ஆறாயிரம் தேர்களின் தலைவனாக {முன்னணியில்} இருந்து கொண்டு, குதிரைகளுடனும், யானைகளுடன், காலாட்படையுடனும், செல்லும் அவனும் {ஜெயத்ரதனும்} அதோ அங்கே இருக்கிறான். அந்த மன்னனின் தம்பிகளான பலமிக்க வலாஹகன், அநீகன், விதாரணன் மற்றும் பிறரும் அவனைப் பின்தொடரும் தொண்டர்களுக்கு மத்தியில் இருக்கின்றனர். வலிய கரங்களும் கால்களும் கொண்ட இந்த இளைஞர்கள் அனைவரும் தீரச்செயல்களின் மலர்களாவர். அந்த மன்னன் {ஜெயத்ரதன்}, இவர்களுடனே, மருதர்களால் சூழப்பட்ட இந்திரனைப் போலத் தனது பயணத்தைச் செய்கிறான். ஓ! அழகிய கூந்தல் கொண்டவளே, நீ யாருடைய மனைவி, யாருடைய மகள் என்று (இது போன்ற விஷயங்களை) அறியாத எங்களுக்கு அவற்றைச் சொல்வாயாக” என்று கேட்டான் {கோடிகன்}

திரௌபதியின் வரவேற்பு! – வனபர்வம் பகுதி 264-திரௌபதி கோடிகனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிபி குலத்தவனால் {கோடிகனால்} இப்படிக் கேட்கப்பட்ட இளவரசி திரௌபதி, தன் கண்களை மெதுவாக நகர்த்தி, கடம்ப மர கிளையில் இருந்த தனது பிடியை விட்டு, தன் பட்டாடையைச் சரி செய்து கொண்டு, “ஓ! இளவரசரே {கோடிகா}, என்னைப் போன்ற ஒருத்தி உம்மிடம் இப்படி உரையாடுவது தகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், உம்மிடம் பேச இங்கு வேறு ஆடவரோ, பெண்மணியோ இல்லை. நான் இங்கே தனியாக இருக்கிறேன். அதனால் என்னைப் பேச அனுமதியும். தகுதியுடைய ஐயா {கோடிகா}, என்னுடைய பாலினத்தை {நான் பெண் என்பதை} நினைவுகூர்ந்து, இந்தக் காட்டில் தனிமையில் இருக்கும் நான் உம்மிடம் பேசக்கூடாது என்பதை அறியும்.

ஓ! சைப்பியரே {கோடிகா}, சுரதனின் மகனான உம்மைக் கோடிகன் என்ற பெயரால் மக்கள் அறிகிறார்கள் என்றும் நான் {உம்மிடம் இருந்து} அறிந்தேன். எனவே, நான் என் பங்குக்கு, எனது உறவினர்களையும், எனது புகழ்வாய்ந்த குலத்தையும் இப்போது சொல்கிறேன். நான் மன்னர் துருபதரின் மகள், கிருஷ்ணை {திரௌபதி} என்ற பெயரால் மக்கள் என்னை அறிவார்கள். காண்டவப்பிரஸ்தத்தில் வாழ்ந்து வந்த ஐவரை நான் கணவர்களாக ஏற்றுக் கொண்டேன் என்பதை நீர் கேள்விப்பட்டிருக்கலாம். யுதிஷ்டிரர், பீமசேனர், அர்ஜுனர் மற்றும் மாத்ரியின் இருமகன்கள் {நகுல, சகாதேவர்கள்}ப் ஆகிய அந்த உயர்ந்த மனிதர்கள் {எனது கணவர்கள்}, என்னை இங்கே விட்டுவிட்டு, வேட்டையாடுவதற்காக நான்கு திசைகளில் சென்றிருக்கிறார்கள்.

மன்னர் {யுதிஷ்டிரர்} கிழக்குத் திசையில் சென்றிருக்கிறார், பீமசேனர் தெற்கிலும், அர்ஜுனர் மேற்கிலும், இரட்டைச் சகோதரர்கள் {நகுலன், சகாதேவன் ஆகியோர்} வடக்கிலும் சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் {பாண்டவர்களிடம்} உரிய வரவேற்பைப் பெற்று நீங்கள் செல்லலாம். எனவே, இப்போது உங்கள் வண்டிகளை விட்டுக் கீழிறங்கி அவற்றுக்கு {வண்டிகளுக்கு} நீங்கள் விடை கொடுங்கள். உயர் ஆன்மா கொண்ட தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} விருந்தினர்களை மிகவும் பிடிக்கும். அவர் உங்களைக் கண்டு மிகவும் மகிழ்வார் என்பது நிச்சயம்” என்றாள். அந்தச் சைப்பியனின் மகனிடம் {கோடிகனிடம்} இப்படிச் சொன்ன, சந்திரன் போன்ற அழகிய முகம் கொண்ட துருபதன் மகள் {திரௌபதி}, தன் கணவன் {யுதிஷ்டிரன்} விருந்தோம்பல் செய்யும் குணத்தை நன்றாக நினைவுகூர்ந்து, தன் விசாலமான குடிசைக்குள் நுழைந்தாள்.

ஜெயத்ரதனின் சிறுமை! – வனபர்வம் பகுதி 265-ஜெயத்ரதன் திரௌபதியை அணுகியது; திரௌபதி ஜெயத்ரதனைக் கண்டித்து, நீண்ட பேச்சுகளால் தாமதம் செய்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, கோடிகாக்கியன் {கோடிகன்}, கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்} தனக்கும் இடையில் நடந்தவற்றை, காத்திருந்த {ஜெயத்ரதன் உட்பட்ட} அந்த இளவரசர்களுக்குச் சொன்னான். கோடிகாக்கியனின் வார்த்தைகளைக் கேட்ட சிபி குலக் கொழுந்தான ஜெயத்ரதன், “அவள் பேசியதை மட்டுமே கேட்ட என் இதயம், அந்தப் பெண்குல ரத்தினத்தின் மேல் காதல் கொள்கிறது. இப்படியிருக்கும்போது, நீ ஏன் (வெற்றியடையாமல்) திரும்பினாய்? நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கோடிகா}, இந்தப் பெண்ணை ஒரு முறை கண்ட பிறகு, மற்ற பெண்களெல்லாம் எனக்கு {பெண்} குரங்குகளைப் போலத் தெரிகிறார்கள். நான் இவளைக் கண்டவுடன், இவள் எனது இதயத்தைக் கொள்ளையிட்டுவிட்டாள். ஓ! சைப்பியா {கோடிகா}, இந்த அற்புதமான மங்கை, மனித வகையைச் சேர்ந்தவள்தானா என்று எனக்குச் சொல்?” என்று கேட்டான். அதற்குக் கோடிகன், “இந்த மங்கை புகழ்பெற்ற இளவரசியான கிருஷ்ணையாவாள் {திரௌபதியாவாள்}. இவள் துருபதனின் மகளும், பாண்டுவின் ஐந்து மகன்களுக்கும் பிரபலமான மனைவியுமாவாள். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} இவள் மதிப்பிற்குரிய, அன்பிற்குரிய, கற்புடைய மனைவியாவாள். இவளை உன்னுடன் சௌவீரத்திற்கு எடுத்துச் செல்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிந்து, சௌவீரம் மற்றும் பிற நாடுகளுக்கு மன்னனான தீய மனம் கொண்ட ஜெயத்ரதனுக்கு இப்படிச் சொல்லப்பட்டதும், அவன் {ஜெயத்ரதன்}, “நான் திரௌபதியைப் பார்க்க வேண்டும்” என்றான். பிறகு, ஆறு பேருடன், அந்தத் தனிமையான ஆசிரமத்திற்குள், சிங்கக் குகைக்குள் நுழையும் ஓநாய் போல நுழைந்தான். பிறகு அவன் {ஜெயத்ரதன்} கிருஷ்ணையிடம் {திரௌபதி}, “உனக்கு வாழ்த்துகள், அருமையான மங்கையே! யாருடைய செழிப்பை நீ எப்போதும் விரும்புகிறாயோ அந்த உனது கணவர்கள் நன்றாக இருக்கிறார்களா?” என்று கேட்டான். அதற்குத் திரௌபதி, “குந்தியின் மகனும், குரு குலத்தைச் சேர்ந்தவருமான மன்னர் யுதிஷ்டிரரும், அவரது தம்பிகளும், நானும், நீர் விசாரிக்கும் அனைவரும் நலமாக இருக்கின்றோம். உமது நாடு, உமது அரசு,  அந்த அரசின் நிதிக் கருவூலம், உமது படைகள் ஆகியன நலமா? தனிப்பெரும் ஆட்சியாளராக, சைப்பியம், சிபி, சிந்து மற்றும் உமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள வளமை மிகுந்த நாடுகள் அனைத்தையும் நீதியுடன் ஆட்சி செய்கிறீரா? ஓ! இளவரசரே, உமது பாதங்களைக் கழுவி கொள்ள இந்த நீரைப் பெற்றுக் கொள்ளும். இந்த இருக்கையில் அமரும். உமது படை அணியினரின் காலை உணவுக்காக நான் ஐம்பது விலங்குகளைத் தருகிறேன். இது போக, குந்தியின் மகனான யுதிஷ்டிரர், மான்குட்டிகளையும் {Porcine deer = பன்றி போன்ற மான்கள்}, நயங்குமான்களையும், புள்ளி மான்களையும், இரலைகளையும் {கலைமான்களையும்}, எண்காற்புட்களையும் {சரபங்களையும் = சிங்கத்தையே கொல்லவல்ல எட்டுக் கால் பறவைகளையும்}, முயல்களையும், ருருமான்களையும், கரடிகளையும், சம்பரமான்களையும், கவயங்களையும், இன்னும் பல விலங்குகளையும், காட்டுப்பன்றிகளையும், காட்டெருமைகளையும், நான்கு கால் கொண்ட விலங்குகள் பலவற்றையும் உமக்குக் கொடுப்பார்” என்றாள்.

இதைக்கேட்ட ஜெயத்ரதன், “என்னிடம் உள்ள அனைத்தும் நன்றாக இருக்கின்றன. எங்களுக்குக் காலை உணவு அளிக்க முன்வந்து, உண்மையில் நீ அதை ஒருவகையில் கொடுத்துவிட்டாய் {By offering to provide our breakfast, thou hast in a manner actually done it.}. இப்போது வா. என் தேரில் பயணித்து, முழுமையான மகிழ்ச்சியை அடைவாயாக. நாடு பறிக்கப்பட்டு, சிறிதளவும் மாற்றமடைய முடியாதப் பேறைப் பெற்று, ஆற்றல்கள் முடங்கி, காட்டில் பரிதாபகரமான நிலையில் வாழும் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} நீ எதற்காகவும் பொருட்படுத்த வேண்டியதில்லை. உன்னைப் போன்ற அறிவுள்ள பெண் ஏழைக் கணவனுடன் இணைந்திருக்கமாட்டாள். அவள் {உன்னைப் போன்ற அறிவுள்ள பெண்} தனது தலைவன் வளமையில் இருக்கும்போது அவனைத் தொடர வேண்டும். ஆனால், கேடுகாலத்தில் அவனைக் கைவிட வேண்டும். பாண்டுவின் மகன்கள், தங்கள் உயர்ந்த நிலையில் இருந்து விழுந்துவிட்டனர். காலத்திற்கு அவர்களது நாட்டைத் தொலைத்துவிட்டார்கள். எனவே, அவர்களிடம் மதிப்புக் கொண்டு,  அவர்களது துன்பத்தில் நீ பங்கு கொள்ள வேண்டியதில்லை. எனவே, ஓ! அழகிய இடை கொண்டவளே {திரௌபதி}, பாண்டுவின் மகன்களைக் கைவிட்டு, எனது மனைவியாகி மகிழ்ச்சியடைந்து, என்னுடன் சிந்து மற்றும் சௌவீர நாடுகளைப் பகிர்ந்து கொள்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயன்} தொடர்ந்தார், “சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை அவ்விடத்தில் இருந்து விலகி, புருவங்களை நெறித்து முகம்சுழிதாள். அவனது வார்த்தைகளைப் பெரிதும் அவமதித்து, அலட்சியம் செய்த அந்த மெல்லிடையாளான கிருஷ்ணை {திரௌபதி}, சிந்து மன்னனிடம் {ஜெயத்ரதனிடம்}, “மீண்டும் அப்படிப் பேசாதே! உனக்கு வெட்கமாக இல்லையா? உன்னைப் பாதுகாத்துக் கொள்” என்று சொன்னாள். தனது கணவன் திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்தக் குற்றமற்ற குணம் கொண்ட மங்கை {திரௌபதி}, நீண்ட நேரம் {அவனிடம்} பேசி, அவனை முழுமையாக ஏமாற்றத் தொடங்கினாள்”

திரௌபதி கடத்தப்பட்டாள்! – வனபர்வம் பகுதி 266-திரௌபதி ஜெயத்ரதனைக் கண்டித்தது; ஜெயத்ரதன் திரௌபதியின் மேலாடையைப் பற்றியது; ஜெயத்ரதனைத் தள்ளிவிட்ட திரௌபதி; திரௌபதியை இழுத்துச் சென்று ஜெயத்ரதன் தேரில் ஏற்றியது; தௌமியர் ஜெயத்ரதனை எச்சரித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “துருபதன் மகள் {திரௌபதி} இயற்கையாகவே அழகாக இருந்தாலும், கோபம் எழுந்ததால் {மிகவும்} சிவப்பாக இருந்தாள். எரியும் கண்களுடனும், கோபம் கொண்ட புருவங்களுடனும், அவள் சௌவீர ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நிந்தித்தாள். அவள் {திரௌபதி}, “ஓ! மூடனே,  இந்திரனுக்கு ஒப்பானவர்களும், கடும் போர்வீரர்களும், கடமைகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களிடம் போரிடும்போது கூடக் கலங்காதவர்களுமான அந்தக் கொண்டாடப்படுபவர்களை {பாண்டவர்களை} இத்தகு வார்த்தைகளால் அவமதிக்க உனக்கு வெட்கமாக இல்லையா? ஓ! சௌவீரா {ஜெயத்ரதா}, கல்வி அறிவு கொண்டு தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் கற்ற மனிதர்களை, அவர்கள் காட்டில் வாழ்ந்தாலும், வீட்டில் வாழ்ந்தாலும் நல்லவர்கள் தவறாகப் பேசுவதில்லை. உன்னைப் போன்ற குறுகிய புத்தி கொண்ட பாதகர்களே அப்படிச் செய்வார்கள். உனது பாதத்திற்கு அடியில் உள்ள குழிக்குள் விழப்போகும் உன்னைக் கைகொடுத்துக் காக்க கூடிய ஒருவனும் இந்த {உனது} க்ஷத்திரயக்கூட்டத்தில் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

இமயத்தின் பள்ளத்தாக்குகளில் உள்ள யானைக்கூட்டத்தில், மதம் கொண்டு மதநீர் ஒழுகிய நிலையில் மலைச்சிகரத்தைப் போன்று இருக்கும் தலைமை யானையை, கையில் உள்ள குச்சியால் பிரித்து விடலாம் என்பது போல இருக்கிறது, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரை வீழ்த்திவிடலாம் என்ற உனது நினைப்பு. சிறுபிள்ளை போன்று அறியாமையில் இருக்கும் நீ, உறங்கிக் கொண்டிருக்கும் சக்திமிக்கச் சிங்கத்தை உதைத்து விழிப்படையச் செய்து அதன் முகத்தில் இருக்கும் முடியைப் பிடித்திழுக்க நினைக்கிறாய். எனினும், பீமசேனரின் கோபத்தைக் கண்டால் நீ ஓடிவிடுவாய். சீற்றமிகு ஜிஷ்ணுவிடம் {அர்ஜுனரிடம்} நீ மோதினால், மலைக்குகையில் உறங்கிக் கொண்டிருக்கும் பெரும்பலம் வாய்ந்த, பயங்கரமான, முழுதும் வளர்ந்த சீற்றமிகு சிங்கத்தை உதைப்பதற்குச் சமமாகும். இரு அற்புதமான இளைஞர்களான இளம்பாண்டவர்களிடம் {நகுல சகாதேவர்களிடம்} மோதுவது குறித்து நீ பேசுகிறாய். அவர்களுடன் நீ மோதுவது, பிளந்த இரண்டு நாவுகள் கொண்ட, இரண்டு நஞ்சுமிகுந்த கருநாகங்களின் வால்களை வேண்டுமென்றே மிதிப்பதற்கு அது சமமாகும். மூங்கிலும், வாழையும், கோரையும் அழிவதற்காகவே கனி கொடுத்து, மேலும் வளராமல் இருக்கின்றன. தனது அழிவுக்காகவே கருவுறும் நண்டைப் போல, அந்தப் பெரும்பலம் மிக்க வீரர்களால் {பாண்டவர்களால்} பாதுகாக்கப்படும் என் மீது உனது கைகளை வைக்கிறாய்.” என்றாள் {திரௌபதி}.

அதற்கு ஜெயத்ரதன் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, இவையாவையும் நான் அறிவேன். அந்த இளவரசர்களின் பராக்கிரமத்தை நான் நன்கு அறிவேன். ஆனால், இந்த அச்சுறுத்தல்களைக் கொண்டு எங்களைப் பயமுறுத்த முடியாது. ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, பதினேழு சக்திகளையும் {எட்டு கர்மங்களும் [1] ஒன்பது சக்திகளும் [2]}, ஆறு அரச குணங்களையும் [3] கொண்ட உயர்ந்த குலத்திலேயே நாங்கள் பிறந்திருக்கிறோம். எனவே, நாங்கள் பாண்டவர்களைத் தாழ்ந்தவர்களாவே கருதி, அவர்களை குனிந்து பார்க்கிறோம். எனவே, ஓ! துருபதன் மகளே {திரௌபதி}, இந்த யானையிலோ, அல்லது தேரிலோ விரைவாக ஏறு, உனது வார்த்தைகளை மட்டுமே கொண்டு எங்களைக் கலங்கடிக்க முடியாது. கர்வமற்றுப் பேசி, சௌவீர மன்னனிடம் {என்னிடம்} கருணையைப் பெற முயற்சி செய்” என்று மறுமொழி கூறினான் {ஜெயத்ரதன்}.

அதற்குத் திரௌபதி {ஜெயத்ரதனிடம்}, “நான் சக்திமிக்கவளாக இருப்பினும், என்னை ஏன் சௌவீர மன்னன் {நீ} மிகவும் பலம் குறைந்தவளாக எண்ணுகிறான் {எண்ணுகிறாய்}? வன்முறை மீது கொண்ட பயத்தால் இளவரசனின் முன்னால் என்னை நான் இழிவுபடுத்திக் கொள்ள மாட்டேன் என்பது நன்கு அறியப்பட்டதே. யாரைப் பாதுகாக்க கிருஷ்ணனும், அர்ஜுனரும் ஒரே தேரில் துரத்திக் கொண்டு வருவார்களோ அவளை {என்னை} இந்திரனாலேயே கடத்திச் செல்ல முடியாது. எதிரிகளைக் கொல்பவரான கிரீடி {அர்ஜுனர்}, என் காரியமாகத் தேரில் வந்தால், உங்கள் தலைவர்கள் இதயங்களில் பயத்தை உண்டாக்கி, கோடை காலத்தில் காய்ந்த புல்லை உட்கொள்ளும் நெருப்பைப் போல அனைத்தையும் எரித்துவிடுவார். யாரும் என்னைத் தீண்டினால், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தலைமையாகக் கொண்டு போர் செய்யும் அந்தகர்கள் மற்றும் விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த இளவரசர்களும், கேகேய குலத்தின் வலிமைமிக்க வில்லாளிகளும் பெரும் உணர்ச்சி பொங்க எனக்காகத் தொடர்ந்து வருவார்கள். {அர்ஜுனரின்} கரத்தின் பலத்தால் காண்டீவத்தின் நாணில் இருந்து புறப்படும் தனஞ்சயரின் {அர்ஜுனரின்} பயங்கரமான கணைகள், பெரும் சக்தியுடன், காற்றில் பறந்து வந்து மேகங்களைப் போலக் கர்ஜிக்கும். காண்டீவத்திலிருந்து வெட்டுக்கிளிகள் பறப்பது போல அடர்த்தியான கணைமழையைப் பொழியும் அர்ஜுனரை நீ காணும்போது, உனது மூடத்தனத்திற்காக வருந்துவாய். சங்கை ஊதிக்கொண்டு, வில்லின் நாணொலியை எதிரொலிக்கும் கையுறைகளுடன் மீண்டும் மீண்டும் கணைகளால் அவர் {அர்ஜுனர்} உனது மார்பைத் துளைக்கும்போது நீ எப்படி உணர்வாய் என்பதை நினைத்துப்பார். கையில் கதாயுதத்துடன் பீமர் உன்னை நோக்கி வரும்போதும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மாத்ரியின் இரண்டு மகன்கள் தங்கள் கோபம் எனும் நஞ்சைக் கக்கும்போதும், வலியை உணரும் நீ, அதற்காக எப்போதும் வருந்த நேரிடும். மனதால் கூட நான் எனது தகுதி வாய்ந்த கணவர்களுக்குப் பொய்மையுடன் {அவர்களை மீறி} நடந்து கொண்டதில்லை. நான் கொண்ட அந்தத் தகுதியால், பிருதையின் {குந்தியின்} மகன்களால் நீ வீழ்த்தப்பட்டு, இழுத்துச் செல்லப்படுவதைக் காணும் இன்பத்தை அடைவேன். குருவீரர்கள் என்னைக் கண்டுபிடித்ததும், தங்களுடன் என்னை மீண்டும் காம்யக வனத்திற்குத் திரும்ப அழைத்து வருவார்கள். அதனால், கொடூரமான நீ, வன்முறையுடன் என்னைச் சிறைப்பிடித்து அச்சுறுத்தமுடியாது. ” என்றாள்.

வைசம்பாயனர் {ஜனமேஜனிடம்} தொடர்ந்தார், “பிறகு அகன்ற கண்களையுடைய அந்த மங்கை {திரௌபதி}, வன்முறையுடன் தன் மீது கைவைக்கத் தயாராக இருக்கும் அவர்களைக் கண்டு, நிந்திக்கும் வகையில், “என்னைத் தொட்டு தீட்டுப்படுத்தாதீர்” என்று சொல்லி, பிறகு, பெரும் அச்சத்துடன், தங்கள் ஆன்ம ஆலோசகரான தௌமியரைக் அழைத்தாள். எனினும், ஜெயத்ரதன் அவளது மேலாடையைப் பற்றினான். ஆனால் அவள் பெரும் ஆவேசத்துடன் அவனைத் தள்ளினாள். அந்த மங்கையால் {திரௌபதியால்} தள்ளப்பட்ட அந்த இழிந்த பாவி வேரறுக்கப்பட்ட மரம் போலத் தரையில் விழுந்தான். எனினும், மீண்டும் அவனால் {ஜெயத்ரதனால்} பெரும் வன்முறையுடன் பிடிக்கப்பட்ட அவள் {திரௌபதி} மூச்சுத்திணற ஆரம்பித்தாள். அந்தப் பாவியால் இழுத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி}, தௌமியரின் பாதங்களை வணங்கி, கடைசியாக அவனது {ஜெயத்ரதனது} தேரில் ஏறினாள். பிறகு தௌமியர் ஜெயத்ரதனிடம், “ஓ! ஜெயத்ரதா, க்ஷத்திரயர்களின் பண்டைய வழக்கத்தைக் கைக்கொள்வாயாக. அந்தப் பெரும் வீரர்களை வீழ்த்தாமல் நீ இவளைத் தூக்கிச் செல்லக்கூடாது {இயலாது}. யுதிஷ்டிரனின் தலைமையிலான வீர மிகுந்த பாண்டுவின் மகன்களிடம் நீ மோதுகிறாய். உனது இத்தகு வெறுக்கத்தக்க செயலுக்கான வலிநிறைந்த கனிகளை நீ நிச்சயம் அறுப்பாய்” என்றார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன தௌமியர், ஜெயத்ரதனின் காலாட்படைகளுக்கு மத்தியில் நுழைந்து, கடத்தல்காரனால் தூக்கிச் செல்லப்படும், அந்தப் புகழ்பெற்ற இளவரசியைத் {திரௌபதியைப்} பின்தொடர ஆரம்பித்தார்.

தொடர்ந்து சென்ற பாண்டவர்கள்! – வனபர்வம் பகுதி 267-யுதிஷ்டிரன் தீய சகுனங்களைக் காண்பது; தங்கள் இருப்பிடம் விரைவது; திரௌபதியின் பணிப்பெண் அழுது கொண்டிருப்பதைக் காண்பது; திரௌபதி கடத்தப்பட்டதைச் சொன்ன பணிப்பெண்; பாண்டவர்கள் திரௌபதியைத் தேடி பின்தொடர்ந்து செல்வது; ஜெயத்ரதன் படையைக் கண்டடைவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பூமியின் மேல் இருக்கும் வில்லாளிகளில் முதன்மையானவர்கள் {பாண்டவர்கள்} தனித்தனியாக எல்லாப்புறங்களிலும் சென்று, பல மான்களையும், எருமைகளையும் கொன்று நீண்ட நேரம் கழித்துச் சந்தித்துக் கொண்டனர். மான்கூட்டங்களாலும், வனவிலங்குகளாலும் நிறைந்திருக்கும் அப்பெரும் கானகத்தில், உரத்த குரலில் பறவைகள் அழுவதையும், வன விலங்குகளின் அலறல் மற்றும் கதறல்களையும் அவர்கள் கேட்டனர். யுதிஷ்டிரன் தனது தம்பிகளிடம், “சூரியனால் ஒளியூட்டப்பட்ட அத்திசையில் ஓடும் இந்த விலங்குகளும் பறவைகளும் பொருந்தாமல் கதறி, தீவிர பதட்டத்தைக் காட்டுகின்றன. இப்பெரும் கானகம் விரோதிகளால் ஊடுருவப்பட்டிருக்கிறது என்பதை இவையனைத்தும் இயம்புகின்றன. ஒரு நொடியும் தாமதியாமல் நமது {வேட்டைக்கான} துரத்தலைக் கைவிடுவோம். நமக்கு இந்த விளையாட்டு {வேட்டை} இன்னும் தேவையில்லை. என் இதயம் வலிக்கிறது. அது {இதயம்} எரிவது போலவும் தெரிகிறது. எனது உடலுக்குள் இருக்கும் ஆன்மா, அறிவை அடக்கி, வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. கருடனற்ற தடாகத்தில் பெரும்பாம்பு வசிப்பதைப் போல, தாகம் மிகுந்த மனிதர்களால் குடத்தின் உள்ளடக்கம் {குடத்தில் உள்ள நீர்} காலியாவதைப் போல, மன்னனையும், செழிப்பையும் இழந்த நாட்டைப் போல, இந்தக் காம்யக வனம் எனக்குத் தெரிகிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, மிக வேகமாகச் செல்லும் சைந்தர்வ {Saindharva} வகைக் குதிரைகள் பூட்டி இழுக்கப்பட்ட அழகிய பெரும் தேர்களை, சூறாவளியைப் போன்ற வேகத்துடன் தங்கள் வசிப்பிடத்திற்கு ஓட்டிச் சென்றனர். அப்படித் தாங்கள் {வீடு} திரும்பிக் கொண்டிருந்த வழியில், சாலையோரத்தில் தங்கள் இடதுபக்கமாகப் பயங்கரமாக ஊளையிடும் ஒரு குள்ளநரியைக் கண்டனர். மன்னன் அதைக் கவனமாகக் கருதிப் பார்த்து, பீமனிடமும், தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, “விலங்கு வகைகளில் மிகவும் தாழ்வான இனத்தைச் சார்ந்த இந்தக் குள்ளநரியின் மொழி, நம்மை அவமதிக்க எண்ணும் பாவிகளான குருக்கள், வன்முறையில் ஈடுபட்டு நம்மை ஒடுக்குவதற்காக இங்கே வந்திருப்பதையே தெளிவாகக் குறிக்கிறது” என்றான். வேட்டையைக் கைவிட்ட பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டே, தங்கள் ஆசிரமம் இருந்த தோப்புக்குள் நுழைந்தனர். அங்கே தங்கள் அன்புக்குரியவளின் {திரௌபதியின்} பணிப்பெண்ணான தாத்ரேயிகை புலம்பி அழுது கொண்டிருப்பதைக் கண்டனர். 

தேரைவிட்ட விரைவாக இறங்கிய இந்திரசேனன், வேகமாக நடந்து அவளை அடைந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் துயரத்தில் இருந்த அவளிடம் {தாத்ரேயிகையிடம்}, “தரையில் கிடக்கிறாயே, எது உன்னை இப்படி அழ வைக்கிறது? ஏன் உனது முகம் நிறமற்று போய் வறட்சியுடன் இருக்கிறது? ஒப்பற்ற அழகும், நீண்ட கண்களும், அந்தக் குரு குலக் காளைகளின் {பாண்டவர்களின்} இரண்டாம் உருவமுமான இளவரசி திரௌபதிக்கு எந்தக் கொடூர பாவியாலும் தீங்கு நேர்ந்ததா?

அந்த இளவரசி பூமியின் குடலுக்குள் நுழைந்தாலும், சொர்க்கத்திற்குப் பறந்தாலும், ஆழ்கடலுக்குள் பாய்ந்தாலும், கவலையில் இருக்கும் தர்மனின் மகனும் {யுதிஷ்டிரரும்}, அவரது தம்பிகளும் அவளைத் தொடர்ந்து செல்வார்கள். எதிரிகளைக் கொன்று எப்போதும் வெற்றிபெறக்கூடிய பலம் பொருந்திய பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமானவளும், அவர்களது உயிர்களுக்கு ஒப்பாகக் கருதியிருந்தவளுமான ரத்தினம் போன்ற இளவரசியை {திரௌபதியைக்} கடத்திச் செல்லத்தக்க மூடன் யார்?

இத்தகு வலிமைமிக்கப் பாதுகாவலர்களைக் கொண்டு, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} இதயங்களின் வெளி உருவமாக நடந்து கொண்டிருந்த அந்த இளவரசியைக் கடத்திச் செல்ல நினைத்த மனிதன் எவன் என்பதை நான் அறியவில்லையே? அவனது இதயத்தைத் துளைக்கும் கடும் கணைகள், பூமியில் இன்று விழப்போகின்றன? ஓ! மருட்சியுடைய மங்கையே, கிருஷ்ணை {திரௌபதி} இன்றே திரும்பிவிடுவாள். அவளுக்காக அழாதே. பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் எதிரிகளைக் கொன்று, மீண்டும் யக்ஞசேனியுடன் {திரௌபதியுடன்} இணைவார்கள்” என்றான்.

இப்படி அவனால் {இந்திரசேனனால்} சொல்லப்பட்ட தாத்ரேயிகை, தனது அழகிய முகத்தைத் துடைத்துக் கொண்டு, தேரோட்டியான இந்திரசேனனிடம், “ஐந்து இந்திரர்களைப் போன்ற பாண்டுவின் மகன்களை அலட்சியம் செய்து, கிருஷ்ணையை {திரௌபதியை} ஜயத்ரதன் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றான். அவன் சென்ற பாதை இன்னும் மறையவில்லை; இதோ மரங்களின் உடைந்த கிளைகள் இன்னமும் வாடவில்லை பாருங்கள். எனவே, உங்கள் தேர்களைத் திருப்பி அவளைப் பின் தொடருங்கள். இந்நேரத்திற்குள் அந்த இளவரசி வெகுதூரம் சென்றிருக்க முடியாது!

இந்திரனின் பராக்கிரமம் கொண்ட வீரர்களே {பாண்டவர்களே}, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் அடங்கி, தன் உணர்வையும், கன்னங்களின் நிறத்தையும் அவள் {திரௌபதி} இழந்தாள். வேள்விக் கரண்டி மூலம், சாம்பற்குவியலின் மேல் ஊற்றப்படும் புனிதமான காணிக்கையைப் போல, தகுதியற்ற மனிதனுக்குத் அடங்கி அவள் {திரௌபதி} சென்றாள். அழகாகச் செய்யப்பட்ட உங்கள் ஆடம்பர விற்களைத் {கவசங்களை என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்} தரித்துக் கொண்டு, விற்களையும், அம்பறாத்தூணிகளையும் எடுத்துக் கொண்டு, அவளை {திரௌபதியை} விரைவாகப் பின்தொடருங்கள்.

ஓ!, தெளிந்த நெய், எரியாத நெல் உமியின் மேல் ஊற்றப்படாமலும்; மலர்களாலான மாலை இடுகாட்டில் வீசப்படாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். ஓ!, வேள்வியைச் செய்யும் புரோகிதர்களின் கவனக்குறைவால், வேள்விக்கான சோமச்சாற்றை நாய் நக்கி விடாமல் {நாவினால் தொட்டுவிடாமல்} கவனமாக இருங்கள். ஓ!, நுழைய முடியாத காட்டில் இரை தேடிய அலையும் குள்ள நரியால் அல்லிமலர் முரட்டத்தனமாகக் கிழிக்கப்படாதிருக்கட்டும். ஓ!, தெளிந்த நெய் இருக்கும் வேள்விக்கான குடத்தை நாய் நக்குவதைப் {நாவினால் தொடுவதைப்} போல, அழகிய கண்களும், நேர்த்தியான மூக்கும் {நாசியும்}, சந்திரனின் கதிர்களைப் போன்ற நிறமும், அழகிய முகமும் கொண்ட உங்கள் மனைவியை {திரௌபதியை}, அந்த இழிந்த மனிதன் {ஜெயத்ரதன்} தனது நாவால் தொடாதிருக்கட்டும். இவ்வழியில் விரைவாகச் செல்லுங்கள். நேரம் உங்களைக் கடக்காதிருக்கட்டும் {நேரம் கடந்துவிடப்போகிறது}” என்றாள் {தாத்ரேயிகை}.

யுதிஷ்டிரன், “நன்மங்கையே {கல்யாணி}, இருப்பிடம் செல், உனது நாவை அடக்கு. எங்கள் முன்னிலையில் இது போன்று பேசாதே. யாராக இருப்பினும், அதிகாரத்தால் போதையுண்ட மன்னர்களும் இளவரசர்களும் துக்கம் வருவது நிச்சயம்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவர்கள் {பாண்டவர்கள்}, பாம்புகளின் இரைப்பைப் போல அடிக்கடி ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடியும், தங்கள் பெரிய விற்களின் நாணைச் சுண்டியபடியும், தங்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் தொடர்ந்து சென்றனர். ஜெயத்ரதன் படைக்குச் சொந்தமான குதிரைகளின் குளம்படிகள் ஏற்படுத்திய தூசிப்படலத்தை அவர்கள் கண்டார்கள். குடிகெடுத்தவனின் {ஜெயத்ரதனின்} காலாட்படைக்கு {ravisher’s infantry} மத்தியில் இருந்து கொண்டு, பீமனை விரைந்து செயல்படும்படி அறிவுறுத்திய தௌமியரைக் கண்டார்கள். பிறகு தாழாத மனம் கொண்ட அந்த இளவரசர்கள் (பாண்டுவின் மகன்கள்), அவருக்கு {தௌமியருக்கு} உற்சாகம் கொடுத்து, “மகிழ்ச்சியுடன் திரும்பி வாரும்” என்றனர்.

அதன் பின்னர்ப் பருந்துகள் தங்கள் இரையை நோக்கி கீழே பாய்வதைப் போல,  பெருஞ்சீற்றத்துடன், அவர்கள் {பாண்டவர்கள்} அப்படையை நோக்கி விரைந்தனர். இந்திரனின் பராக்கிரமத்தைக் கொண்ட அவர்கள், திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தால் பெரும் கோபம் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜெயத்ரதனையும், அவனது தேரில் அமர்ந்திருந்த தங்கள் அன்புக்குரிய மனைவியையும் {திரௌபதியையும்} கண்ட பிறகு அவர்களது கோபம் எல்லையைக் கடந்தது. அந்தப் பெரும் வில்லாளிகளான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, இரட்டைச் சகோதரர்கள் {நகுலன், சகாதேவன்} மற்றும் மன்னன் {யுதிஷ்டிரன்} ஆகியோர் உரத்தவொலியுடன் ஜெயத்ரதனை நிற்கச் சொன்னார்கள். இதனால் அந்த எதிரி {ஜெயத்ரதன்} மனக்குழப்பமடைந்து, திசைகளின் அறிவை இழந்தான்.

பாண்டவர்களை அறிந்த ஜெயத்ரதன்! – வனபர்வம் பகுதி 268-பாண்டவர்களைக் கண்ட ஜெயத்ரதன் அஞ்சுவது; திரௌபதியிடம் அவளது கணவர்களைக் குறித்துச் சொல்லுமாறு ஜெயத்ரதன் கேட்பது; திரௌபதி ஒவ்வொருவரையும் சுட்டிக்காட்டி அவர்களது பெயர்களையும் தன்மைகளையும் சொல்வது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பீமசேனன் மற்றும் அர்ஜுனனைக் கண்டு எதிரி க்ஷத்திரியர்கள் ஆத்திரமடைந்து, அந்தக் காட்டில் உரத்த ஒலி எழுப்பினர். குரு குலக் காளைகளின் கொடிக்கம்பங்களைக் கண்ட தீய மன்னன் ஜெயத்ரதன், நம்பிக்கையிழந்தான். பிறகு பிரகாசத்துடன் தனது {ஜெயத்ரதனின்} தேரில் அமர்ந்திருந்த யக்ஞசேனியிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, வந்து கொண்டிருக்கும் அந்த ஐந்து வீரர்களும் உனது கணவர்கள் என நம்புகிறேன். ஓ! அழகான தலைமுடி கொண்டவளே, பாண்டுவின் மகன்களை நீ நன்கு அறிந்தவளாகையால், அவர்கள் பயணிக்கும் தேரைச் சுட்டிக்காட்டி, அவர்களை {பாண்டவர்களைக்} குறித்து ஒருவர் ஒருவராக விவரித்துச் சொல்!” என்றான் {ஜெயத்ரதன்}.

இப்படிச் சொல்லப்பட்ட திரௌபதி, “உனது வாழ்நாள் குறையும்படி இந்த வன்செயலைச் செய்த பிறகு, ஓ! முட்டாளே! இப்போது அந்தப் பெரும் வீரர்களின் பெயர்களை அறிவதால் உனக்கு என்ன பயன்? எனது வீரக் கணவர்கள் வந்துவிட்டார்கள், களத்தில் உள்ள உங்களில் ஒருவரது உயிரும் இப்போது மிஞ்சாது. எனினும் மரணத்தருவாயில் கேட்டுவிட்டாய். இது விதிக்கு இசைவானதாக இருப்பதால், நான் உனக்கு அனைத்தையும் சொல்கிறேன். தன் தம்பிகளுடன் கூடிய மன்னர் யுதிஷ்டிரரைக் கண்ட பிறகு, உன் நிமித்தமாகச் சிறு கவலையையோ, அச்சத்தையோ நான் அடையவில்லை.

தலைக்கு மேலே உள்ள கொடுக்கம்பத்தில் நந்தம், உபநந்தம் என்ற நிற்காமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அழகிய இரு ஒலிமிக்க மிருதங்கங்களைக் கொண்ட வீரர், ஓ! சௌவீரத் தலைவா {ஜெயத்ரதா}, தனது செயல்களின் அறநெறிகளைக் குறித்துச் சரியாக அறிந்தவராவார். வெற்றியடைந்த மனிதர்கள் எப்போதும் இவரைத் தொடர்கிறார்கள். சுத்தமான தங்கத்தைப் போன்ற நிறமும், உயர்ந்த மூக்கும், அகன்ற கண்களும் மெலிந்த தேகமும் கொண்ட இந்த எனது கணவரை தர்மனின் மகனும், குரு குலத்தின் முதன்மையானவருமான யுதிஷ்டிரர் என்ற பெயரில் மக்கள் அறிவார்கள். மனிதர்களின் இந்த அறம்சார்ந்த இளவரசர் {யுதிஷ்டிரர்}, சரணடைந்தவன் எதிரியாக இருந்தாலும் அவனுக்கு உயிரை அளிப்பவராவார். எனவே, ஓ! மூடா! உனது ஆயுதங்களைக் கீழே வீசி, உனது நன்மைக்காகக் குவிந்த கரங்களுடன் அவரிடம் ஓடிச்சென்று உனது பாதுகாப்பை நாடு.

நீண்ட கரங்களைக் கொண்டு, முழுதும் வளர்ந்த ஆச்சா {சால} மரத்தைப் போன்ற உயரத்துடன், உதடுகளைக் கடித்துக் கொண்டு, நெற்றியைச் சுருக்கி, புருவங்களை ஒன்றிணைத்துத் தேரில் அமர்ந்திருக்கும் அவர் எனது கணவர் விருகோதரராவார் {பீமர்}. பருத்த, வலுவான, உன்னதமான இனத்தைச் சார்ந்த, நன்கு பழகப்படுத்தப்பட்ட பெரும் சக்திகொண்ட குதிரைகளே அந்த வீரரின் {பீமரின்} தேர்களை இழுக்கின்றன. இவரின் சாதனைகள் அனைத்தும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகும். எனவே அவர் பீமன் என்ற பெயரால் பூமியில் அறியப்படுகிறார். அவருக்குத் தீங்கிழைத்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். பகைவரை அவர் ஒருபோதும் மறப்பதில்லை. சில போலிக் காரணம் {pretext} கொண்டோ அல்லது வேறு வழியிலோ தனது பழியைத் தீர்த்துக் கொள்வார். பழிவாங்காமல் அவர் அமைதியடைவதில்லை.

வில்லாளிகளில் முதன்மையானவரும், புத்திகூர்மை கொண்டவரும், புகழ்பெற்றவரும், புலன்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரியோரை மதிப்பவரும், யுதிஷ்டிரின் தம்பியும் சீடருமான எனது கணவர் தனஞ்சயர் {அர்ஜுனர்} அதோ இருக்கிறார். காமத்தாலோ, அச்சத்தாலோ, கோபத்தாலோ அறத்தை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. கொடுஞ்செயலை அவர் ஒருபோதும் செய்வதுமில்லை. நெருப்பின் சக்தி கொண்டு, எதிரியைத் தாக்கி அழிப்பவரான அவர் குந்தியின் மகனாவார்.

அறநெறி மற்றும் பொருள் குறித்த அனைத்துக் கேள்விகளை அறிந்தவரும், அஞ்சுபவர்களின் அச்சங்களை விலக்குபவரும், உயர்ந்த ஞானம் கொண்டவரும், இந்த முழு உலகிலும் உள்ள மனிதர்களிலேயே அழகானவராகக் கருதப்படுபவரும், பாண்டுவின் அனைத்து மகன்களாலும் பாதுகாக்கப்படுபவரும், தங்கள் மேல் அவர் கொண்ட பக்தியினால் தங்கள் உயிரை விட உயர்வாக அவர்களால் {மற்ற பாண்டவர்களால்} கருதப்படுபவருமான அந்த இளைஞர் எனது கணவரான நகுலராவார். கை லாவகம் கொண்டவரும், உயர்ந்த ஞானம் கொண்டவரும், சகாதேவனைத் தனது தம்பியாகக் கொண்டவருமான அவர், தனது கைகளின் திறமையால் வாள் கொண்டு போரிடுபவராவார். தைத்தியர்களுக்கு மத்தியில் இருக்கும் இந்திரனின் செயல்திறனைப் போல, போர்க்களத்தில் அவரது செயல்திறனை முட்டாள் மனிதனான நீ இன்று காண்பாய்.

ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவரும், புத்திக்கூர்மையும், ஞானமும் கொண்டவரும், தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} ஏற்புடையதைச் செய்யும் நோக்கம் உடையவரும், பாண்டவர்களில் இளையவரும் அனைவருக்கும் பிடித்தமானவருமான அந்த வீரர் எனது கணவரான சகாதேவராவார். வீரம், அறிவு, வெஞ்சினம் ஆகியவற்றைக் கொண்ட அவருக்கு நிகரான நுண்ணறிவு கொண்டவரோ, சொல்திறன் கொண்டவரோ ஞானிகளின் மத்தியிலும் கிடையாது. குந்தியால் தன் இன்னுயிரைவிட உயர்வாகக் கருதப்படும் அவர் {சகாதேவர்}, எப்போதும் க்ஷத்திரியக் கடமைகள் குறித்த மனத்தோடேயே இருப்பவர். அறம் மற்றும் அறநெறிகளுக்கு எதிராக எதையும் சொல்வதைவிடத் தனது உயிரைத் தியாகம் செய்வதையோ நெருப்புக்குள் புகுவதையோ சிறப்பென நினைப்பவர் அவர் {சகாதேவர்}.

போர்க்களத்தில் உனது வீரர்களைப் பாண்டுவின் மகன்கள் கொன்ற பிறகு, கடலில் நகைச்சரக்குகளுடன் செல்லும் கப்பல், திமிங்கலத்தின் முதுகில் மோதி சிதறுவதைப் போல உனது படை கலக்கப்படுவதை {சிதறுவதை} நீ காண்பாய். உனது முட்டாள்த்தனத்தால் அலட்சியப்படுத்திய பாண்டு மகன்களின் பராக்கிரமம் குறித்து இப்படியே விளக்கிவிட்டேன். சிறிதும் தீங்குறாமல் அவர்களிடம் தப்பினால், நீ புது வாழ்வை அடைவாய்” என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்திரர்களைப் போன்ற, பிருதையின் {குந்தியின்} அந்த ஐந்து மகன்களும், கோபத்தால் நிறைந்து, கருணைக்காக மன்றாடும் பீதி நிறைந்த காலாட்படையை மட்டும் விட்டுவிட்டு, தேரோட்டிகளை நோக்கி விரைந்து, அவர்களை அனைத்துப் புறங்களில் இருந்தும் தாக்கினர். தங்கள் அடர்த்தியான கணை மழையால் அந்தப் பகுதியையே அவர்கள் {பாண்டவர்கள்} இருளாக்கினர்.”

பிடிபட்டான் ஜெயத்ரதன்! – வனபர்வம் பகுதி 269ஜெயத்ரதனின் படையினருக்கும், பாண்டவர்களுக்குமிடையில் மூண்ட போர்; பாண்டவர்களின் பராக்கிரமம்; சுரதனை வீழ்த்திய யுதிஷ்டிரன்; கோடிகாக்கியனைக் கொன்ற பீமன்; சௌவீர இளவரசர்கள் அனைவரையும் கொன்ற அர்ஜுனன்; திரௌபதியைவிட்டுவிட்டு ஓடிய ஜெயத்ரதன்; திரௌபதி, தௌமியர், இரட்டையர்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு யுதிஷ்டிரன் ஆசிரமம் திரும்புவது; பீமனும் அர்ஜுனனும் ஜெயத்ரதனைத் தொடர்ந்து செல்வது; ஜெயத்ரதன் பிடிபடுவது; அவனைக் கொல்ல வேண்டாம் என பீமனை அர்ஜுனன் வேண்டுவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதே வேளையில் சிந்து மன்னன் மற்ற இளவரசர்களுக்குக் கட்டளையிட்டபடி, “நில்லுங்கள், தாக்குங்கள், செல்லுங்கள், விரையுங்கள்” போன்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தான். பீமன், அர்ஜுனன், இரட்டைச் சகோதரர்களுடன் {நகுல சகாதேவர்களுடன்} கூடிய யுதிஷ்டிரன் ஆகியோரைக் கண்ட படைவீரர்கள் போர்க்களத்தில் உரத்த ஒலியை எழுப்பினர். சிபி, சௌவீர, சிந்து குலங்களின் போர்வீரர்கள், உக்கிரமான புலிகளைப் போல இருந்த அந்த வலிமைமிக்க வீரர்களைக் கண்டதும் உற்சாகமிழந்தனர். முழுமையாகச் சைக்கிய இரும்பினால் {உருக்கினால்} ஆனதும், பொன்னால் பொறிக்கப்பட்டதுமான கதாயுதத்தைத் தாங்கி வந்த பீமசேனன், மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் சைந்தவ ஏகாதிபதியை {ஜெயத்ரதனை} நோக்கி விரைந்தான். ஆனால் பலமிக்கத் தேரோட்டிகளுடன் விருகோதரனை {பீமனை} விரைவாகச் சூழ்ந்து கொண்ட கோடிகாக்கியன், இடையில் வந்து அந்தப் போராளிகளைப் பிரித்தான். வலிய கரம் கொண்ட பகை வீரர்களால் எண்ணற்ற ஈட்டிகளும், தண்டங்களும், இரும்புக்கணைகளும் பீமன் மீது வீசப்பட்டாலும், அவன் ஒரு கணம் கூடத் தடுமாறவில்லை. மறுபுறம், அவன் {பீமன்} தனது கதாயுதத்தைக் கொண்டு, பாகனோடு சேர்ந்த ஒரு யானையையும், ஜெயத்ரதனின் தேருக்கு முன்னணியில் போரிட்டுக்கொண்டிருந்த பதினான்கு காலாட்படை வீரர்களையும் கொன்றான்.

சௌவீர மன்னனைச் {ஜெயத்ரதனைச்} சிறைபிடிக்க விரும்பிய அர்ஜுனனும், சிந்து படையின் வாகனத்தில் இருந்து போரிட்டுக்கொண்டிருந்த ஐநூறு {500} வீரமிக்க மலைநாட்டு வீரர்களைக் கொன்றான். அந்த மோதலில், கண் இமைக்கும் நேரத்தில், மன்னன் {யுதிஷ்டிரன்}, சௌவீரத்தின் சிறந்த வீரர்களில் நூற்றுக்கணக்கானோரை கொன்றான். கையில் வாளுடன் தேரில் இருந்து குதித்த நகுலனும், விதைகளைத் தூவுவதைப் போல ஒரு கணத்தில் தன்னிடம் பின்புறமாகப் போரிட்ட வீரர்களின் தலைகளைச் சிதறடித்தான். சகாதேவன் தனது தேரில் இருந்தபடி யானைமேல் இருந்து போரிடும் பல வீரர்களைத் தனது இரும்புக்கணைகளால் அடித்து, மரத்தின் கிளைகளில் இருந்து விழும் பறவைகளைப் போல அவர்களை விழ வைத்தான்.

பின்னர்த் திரிகார்த்தர்களின் மன்னன் {சுரதன்}, கையில் வில்லுடன் தனது பெரும் தேரில் இருந்து இறங்கினான். அவன் {சுரதன்} மன்னனின் நான்கு குதிரைகளைத் தனது கதாயுதத்தால் அடித்துக் கொன்றான். எதிரி தனக்கு மிக அருகில் வருவதைக் கண்ட குந்தியின் மகனான நீதிமானான யுதிஷ்டிரன், பிறை வடிவ கணை கொண்டு அவனது மார்பைத் துளைத்தான். இப்படி மார்பில் காயம் பட்ட அந்த வீரன் இரத்தம் கக்கியபடி, வேரறுந்த மரம் போலப் பிருதையின் {குந்தியின்} மகனருகே தரையில் விழுந்தான். தனது குதிரைகள் கொல்லப்பட்டதால் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்திரசேனனோடு தனது தேரில் இருந்து இறங்கி, சகாதேவனின் தேரில் ஏறினான்.

க்ஷேமங்கரன் மற்றும் மகாமுக்ஷன் ஆகிய இரு வீரர்கள் நகுலனைத் தனிமைப்படுத்தி, இரண்டு பக்கங்களில் இருந்தும் கூர்முனை கொண்ட கணைகளை மழையெனப் பொழிந்தார்கள். இருப்பினும் அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, தன் மேல் மழைக்கால மேகங்கள் போல மழையெனக் கணையடித்த அந்த இருவரையும் இரு நீண்ட கணையால் கொல்வதில் வெற்றிக் கண்டான். யானைகளைச் செலுத்துவதில் வல்லவனான திரிகார்த்தர்களின் மன்னனான சுரதன், நகுலனின் தேருக்கு முன்பு வந்து, அந்தத் தேரை யானைகளைக் கொண்டு இழுக்கச் செய்தான். இதனால் சிறிது அச்சமடைந்த நகுலன், தனது தேரில் இருந்து குதித்து, பாதுகாப்பளிக்கும் சாதகமான ஒரு இடத்தை அடைந்து, கையில் கேடயத்துடனும் வாளுடனும் மலையென அசையாதிருந்தான். அதனால் நகுலனை உடனடியாகக் கொல்ல நினைத்த சுரதன், துதிக்கை உயர்த்தியபடி இருந்த பெரிய மதங்கொண்ட யானையை அவனை {நகுலனை} நோக்கிச் செலுத்தினான். ஆனால் அந்த விலங்கு தன் அருகில் வந்ததும், நகுலன் தனது வாளைக் கொண்டு அதன் தலையில் இருந்து தந்தங்களையும் துதிக்கையையும் அறுத்தான். அந்தக் கவசம் பூண்ட யானை, பயங்கர ஓலத்துடன், தலைகுப்புற தரையில் விழுந்து, அந்த வீழ்ச்சியால் தன் மீது சவாரி செய்தவர்களை நசுக்கியது. இந்தத் துணிகரச் செயலைச் செய்த வீரனான மாத்ரி மகன் {நகுலன்}, பீமசேனனின் தேரில் ஏறிக் கொண்டு சிறிது ஓய்வெடுத்தான்.

மோதலுக்கு விரைந்து வரும் இளவரசன் கோடிகாக்கியனைக் கண்ட பீமன், குதிரைலாடம் போன்ற கணை கொண்டு அவனது தோரோட்டியின் தலையை அறுத்தான். வலிய கரம் கொண்ட தன் எதிரியால் தனது தேரோட்டி கொல்லப்பட்டதை அவ்விளவரசன் {கோடிகாக்கியன்} காணவில்லை. சாரதி இல்லாத குதிரைகளைப் போர்க்களத்தின் அனைத்து திசைகளுக்கும் ஓடியது. சாரதியில்லாத இளவரசன் {கோடிகாக்கியன்} புறமுதுகிட்டதைக் கண்ட அடிப்பவர்களில் முதன்மையான பாண்டு மகன் பீமன், இறகு கொண்ட கணையால் {பிராசாயுதத்தால்} அவனைக் கொன்றான். தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, தனது கூர்முனை கொண்ட பிறை வடிவ கணைகளால் {அர்த்தச்சந்திர பாணம்} பனிரெண்டு சௌவீர வீரர்களின் விற்களையும், அவர்களது தலைகளையும் அறுத்தான். போர்க்களத்தில் அந்தப் பெரும் வீரர்கள் {அர்ஜுனனின்} கணைகளால், கொல்லப்பட்டதும், இக்ஷவாகு தலைவர்களையும், சிபிகளின் படைகளையும், திரிகார்த்தர்களையும், சைந்தவர்களையும் கொன்றான். மேலும் பலவண்ணக் கொடிகளுடன் இருந்த பல பெரிய யானைகளும், கொடிக்கம்பங்களுடன் கூடிய தேர்களும் அர்ஜுனன் கையால் வீழ்ந்தன.

உடலற்ற தலைகளும், தலையற்ற உடல்களும், முழுப் போர்க்களத்தையும் மூடியபடி கிடந்தன. நாய்கள், நாரைகள், அண்டங்காக்கைகள், காகங்கள், வல்லூறுகள், குள்ளநரிகள், கழுகுகள் ஆகியன அக்களத்தில் கொல்லப்பட்ட வீரர்களின் சதையையும் இரத்தத்தையும் விருந்தாக உண்டன. தனது வீரர்கள் கொல்லப்பட்டதைச் சிந்து மன்னன் ஜெயத்ரதன் கண்ட போது, பயமடைந்து கிருஷ்ணையை விட்டுவிட்டு ஓட எண்ணினான். அந்தக் குழப்பமான நேரத்தில், அந்தப் பாதகன் {ஜெயத்ரதன்} திரௌபதியை கீழே இறக்கி விட்டு, தான் வந்த அதே காட்டுப்பாதையில் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடினான்.

தனக்கு முன் தௌமியரை நடக்கவிட்டு வரும் திரௌபதியைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவளை மாத்ரியின் மகனான வீரன் சகாதேவனின் தேரில் ஏற்றிக் கொள்ளச் செய்தான். ஜெயத்ரதன் இப்படி ஓடிய போது, அவனைத் தொடர்ந்த ஓடிக்கொண்டிருக்கும் அவனது {ஜெயத்ரதனின்} தொண்டர்களில் ஒவ்வொரு படைவீரனின் பெயரையும் சொல்லி அழைத்த பீமன் தனது இரும்புக் கணைகளால் அவர்களைக் கத்தரிக்கத் தொடங்கினான். ஆனால் அர்ஜுனன், ஜெயத்ரதன் ஓடிவிட்டதைக் கண்டு, சைந்தவனக் கூட்டத்தில் எஞ்சிய சிலரையும் கொல்வதை நிறுத்துமாறு தனது அண்ணக்கு {பீமனுக்கு} வற்புறுத்தினான். அர்ஜுனன், “யாருடைய தவறால் மட்டுமே நாம் இந்தக் கசப்பான துன்பத்தை அனுபவித்தோமோ, அந்த ஜெயத்ரதனை நான் களத்தில் காணவில்லை. முதலில் அவனைக் கண்டுபிடியும். உமது முயற்சி வெற்றியால் மகுடம் சூட்டப்படட்டும்! இந்தப் படைவீரர்களை நீர் கொல்வதால் என்ன நன்மை விளையப்போகிறது? பயன்றற காரியத்தை நீர் ஏன் செய்கிறீர்” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு பெரும் ஞானம் கொண்ட அர்ஜுனனால் அறிவுறுத்தப்பட்ட பீமசேனன், யுதிஷ்டிரனை நோக்கித் திரும்பி, “எதிரி வீரர்கள் பெரும்பான்மையினர் கொல்லப்பட்டுவிட்டனர். சிலர் அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, திரௌபதி, இரட்டைச்சகோதரர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, தௌமியர் ஆகியோருடன் வீட்டுக்குத் திரும்பி, நமது ஆசிரமத்தை அடைந்ததும், இளவரசிக்கு ஆறுதல் கூறும்! மூடனான சிந்து மன்னனை {ஜெயத்ரதனை}, அவன் வாழும் வரை விடமாட்டேன். அவன் பாதாள லோகத்தைத் தஞ்சமடைந்திருந்தாலும், இந்திரனின் துணையைக் கொண்டிருந்தாலும் அவனைக் கொல்லாமல் விட மாட்டேன்” என்றான் {பீமன்}. அதற்கு யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே, (நமது தங்கை) துச்சலையையும், கொண்டாடப்படும் காந்தாரியையும் நினைவுகூர்ந்து, தீயவனாக இருப்பினும் சிந்து மன்னனை {ஜெயத்ரதனை} நீ கொல்லக்கூடாது” என்றான்.

வைசம்பாயனர்  {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி மிகவும் உணர்ச்சிவசப்பட்டாள். உணர்ச்சித் தூண்டலில் இருந்த அந்த உயர்ந்த புத்திக்கூர்மை கொண்ட மங்கை {திரௌபதி} கோபம் கலந்த அடக்கத்துடன், தன் இரு கணவர்களான பீமன் மற்றும் அர்ஜுனனிடம், “எனக்கு ஏற்புடையதைச் செய்ய வேண்டும் என்பதில் நீங்கள் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், தீயவனும், ஈனனும், பாவியும், மூடனும், இழிவானவனும் வெறுக்கத்தக்கவனுமான சைந்தவக் குலத்தின் தலைவனைக் {ஜெயத்ரதனைக்} கொல்ல வேண்டும். அடுத்தவன் மனைவியை அபகரிப்பவன், நாட்டைப் பறிப்பவன் ஆகிய எதிரிகள், அவர்களே கருணை கோரினாலும் போர்க்களத்தில் மன்னிக்கப்படக்கூடாது” என்றாள். இவ்வாறு கடிந்து கொள்ளப்பட்ட வீரமிக்க அந்த இரு வீரர்களும் சைந்தவத் தலைவனைத் {ஜெயத்ரதனைத்} தேடிச் சென்றனர்.

கிருஷ்ணையை {திரௌபதியை} தன்னுடன் அழைத்துக் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது ஆன்ம ஆலோசகருடன் {தௌமியருடன்} வீடு திரும்பினான். ஆசிரமத்திற்குள் நுழைந்ததும், மார்க்கண்டேயர் மற்றும் பிற அந்தணர்களின் முன்னிலையில் துறவிகளுக்கான இருக்கைகள் சிதறிக் கிடப்பதையும், சீடர்கள் {சோகத்துடன்} நிறைந்திருப்பதையும் அவன் {யுதிஷ்டிரன்} கண்டான். அந்த அந்தணர்கள் திரௌபதியைக் குறித்துப் பெரிதும் புலம்பிக்கொண்டிருந்தபோது, பெரும் ஞானம் கொண்ட யுதிஷ்டிரன் தனது தம்பிகளோடு கூடி அவர்களோடு சேர்ந்து கொண்டான். சைந்தவனையும் {ஜெயத்திரதனையும்}, சௌவீரக்கூட்டத்தையும் வீழ்த்தி, திரௌபதியை மீட்டுத் திரும்பியிருக்கும் மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} கண்ட அவர்கள் உற்சாகமடைந்து மகிழ்ச்சியை அடைந்தனர். மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்களுக்கு மத்தியில் அமர்ந்தான். அற்புதமான இளவரசியான கிருஷ்ணை {திரௌபதி}, அந்தச் சகோதரர்கள் இருவருடன் {தன் கணவர்களான நகுலன் மற்றும் சகாதேவனுடன்} ஆசிரமத்திற்குள் நுழைந்தாள்.

அதே வேளையில், பீமனும் அர்ஜுனனும், இரண்டு மைல்கள் {ஒரு குரோச தூரம்} தொலைவில்தான் எதிரி இருக்கிறான் என்பதை அறிந்து, அவனை {ஜெயத்ரதனை} அடைவதற்காகக் குதிரைகளை அதிவேகமாகச் செலுத்தினார்கள். இரண்டு மைல்கள் தொலைவில் இருந்தாலும், பலம்வாய்ந்த அர்ஜுனன், ஜெயத்ரதனின் குதிரையைக் கொன்று ஓர் அற்புதமான செயலை நிகழ்த்தினான். தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு, சிரமங்களுக்கு அஞ்சாமல், மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட அம்புகளைக் கொண்டு இந்தக் கடினமான சாதனையை அவன் {அர்ஜுனன்} செய்தான். பிறகு அந்த இரு வீரர்களான பீமனும், அர்ஜுனனும், குதிரைகள் கொல்லப்பட்டதால் மனக்குழப்பமும் அச்சமும் அடைந்திருக்கும் சிந்து மன்னனை {ஜெயத்ரதனை} நோக்கி விரைந்தனர். அவன் {ஜெயத்ரதன்}, தனது குதிரைகள் கொல்லப்பட்டதைக் கண்டு பெரும் துக்கமடைந்தான்.

இத்தகு துணிகரச் செயலைச் செய்த தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} கண்டு, ஓடிவிட எண்ணம் கொண்டு, {தேரில் இருந்து குதித்து} தான் வந்த காட்டுப்பாதையையே {ஜெயத்ரதன்} தொடர்ந்து சென்றான் {ஓடினான்}. பயத்தால் சுறுசுறுப்படைந்த சைந்தவத் தலைவனைக் {ஜெயத்ரதனைக்} கண்ட பல்குனன் {அர்ஜுனன்}, பின்தொடர்ந்தபடியே, அவனிடம், “ஆண்மையற்ற நீ, பலவந்தமாக ஒரு பெண்ணை அபகரிக்க எப்படித் துணியலாம்? ஓ! இளவரசே {ஜெயத்ரதா} திரும்பு; ஓடுவது உனக்குத் தகுந்ததன்று! எதிரிகளின் மத்தியில் உனது தொண்டர்களை {படை வீரர்களை} விட்டு விட்டு நீ எவ்வாறு இப்படிச் செய்யலாம்?” என்றான். பிருதையின் {குந்தியின்} மகன்களால் இப்படிச் சொல்லப்பட்டாலும் சிந்து நாட்டு ஏகாதிபதி {ஜெயத்ரதன்} ஒரு முறையேனும் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் தேர்ந்தெடுத்தபடி செய்ய விட்ட பலம் கொண்ட பீமன் நொடிப்பொழுதில் அவனை வென்றான். ஆனால் இரக்கம் கொண்ட அர்ஜுனன் அந்த இழிந்தவனை {ஜெயத்ரதனைக்} கொல்ல வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

ஜெயத்ரதன் அவமானமும் விமோசனமும்! – வனபர்வம் பகுதி 270-ஜெயத்ரதன் பீமனிடம் பிடிபடுவது; பீமன் ஜெயத்ரதனின் சிரத்தை மழிப்பது; யுதிஷ்டிரனிடம் அழைத்துச் செல்வது; யுதிஷ்டிரனும், திரௌபதியும், ஜெயத்ரதனை விடுவிப்பது; அவமானத்தில் திரும்பிய ஜெயத்ரதன் சிவனை நோக்கி தவம் இருப்பது; ஜெயத்ரதன் பெற்ற வரம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தனது உயிரைக் காத்துக் கொள்ள ஓடிய ஜெயத்ரதன், அந்த இரு சகோதரர்களையும் {பீமனையும், அர்ஜுனனையும்} கண்டு, உயர்த்திய கரங்களுடன் மிகுந்த துன்பத்துடனும், மிகுந்த வேகத்துடனும், முன் எச்சரிக்கையுடனும் ஓடினான். ஆனால் வலிமைமிக்கக் கோபக்கார பீமசேனன், தனது தேரைவிட்டு இறங்கி, ஓடிக்கொண்டிருந்த அவனைத் தொடர்ந்தோடி, அவனின் {ஜெயத்ரதனின்} தலை மயிரைப் பற்றிப் பிடித்தான். அப்படியே அவனைக் காற்றில் மேலே தூக்கி, வன்முறையுடன் தரையில் எறிந்தான். பிறகு அந்த இளவரசனின் {ஜெயத்ரதனின்} தலையைப் பற்றி அவனை அடித்தான். சுய நினைவு திரும்பிய பிறகு, அந்த இழிந்தவன் {ஜெயத்ரதன்} உரக்கத் தேம்பி அழுதான். பீமன் தனது கால் மற்றும் கை முட்டிகளால் அவனது மார்பைக் குத்தினான். இப்படி நையப்புடைக்கப்பட்ட அந்த இளவரசன் {ஜெயத்ரதன்} விரைவில் உணர்வை இழந்தான்.

(தங்கள் தங்கை) துச்சலை குறித்து யுதிஷ்டிரன் சொன்னதை ஞாபகப்படுத்தி, சினம் கொண்ட பீமசேனன், அந்த இளவரசனை {ஜெயத்ரதனை} மேலும் தண்டிக்காமல் பல்குனன் {அர்ஜுனன்} அவனை {பீமனை} அறிவுறுத்தினான். ஆனால் பீமன், “இந்த இழிந்த பாவி {ஜெயத்ரதன்}, கொடுமை தாங்கா கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} கொடுந்தீங்கைச் செய்திருக்கிறான். எனவே, இவன் என் கையால் இறக்கத்தக்கவன்! ஆனால் நான் என்ன செய்ய? மன்னர் எப்போதும் கருணையால் நிரம்பி வழிகிறார். நீயும் குழந்தைத்தனமான அறவுணர்வால் {தர்ம உணர்வால்} எனது வழியில் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்துகிறாய்!” என்று மறுமொழி கூறினான். இந்த வார்த்தைகளைச் சொன்ன விருகோதரன் {பீமன்}, தனது பிறைவடிவ அம்பை {அர்த்தச் சந்திரக் [பாதி நிலவு] கணையை} எடுத்து, அந்த இளவரசனின் {ஜெயத்ரதனின்} ஆங்காங்கே ஐந்து கொத்துகளை {குடுமிகளை} விட்டு விட்டு, தலையில் உள்ள மயிரைச் சிரைத்தான்.

ஜெயத்ரதன் இதுகுறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. பிறகு எதிரியிடம் பேசிய விருகோதரன் {பீமன்}, “நீ வாழ விரும்பினால், நான் சொல்வதைக் கேள். ஓ! மூடனே! உன் விருப்பத்தை நீ அடைவது குறித்து {எப்படி என்று} நான் உனக்குச் சொல்கிறேன். பொதுக்கூட்டங்களிலும், திறந்த சபைகளிலும் “நான் பாண்டவர்களின் அடிமை” என்று நீ சொல்ல வேண்டும். இந்த நிபந்தனையின் பேரில் மட்டுமே நான் உனது உயிரை உனக்குக் கொடுப்பேன்! இது போர்க்களம் வென்றவர்கள் செய்யும் வழக்கமான விதியே” என்றான். இப்படி நடத்தப்பட்டும், சொல்லப்பட்டும் இருந்த மன்னன் ஜெயத்ரதன், பார்க்க எப்போதும் கடுமையாக இருந்த கடும்வலிமைமிக்க வீரனிடம் {பீமனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். அவன் {ஜெயத்ரதன்} புழுதிபடிந்த தேகத்துடன் உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்தான். பிறகு அர்ஜுனனும் விருகோதரனும் {பீமனும்} சேர்ந்து அவனைச் சங்கிலியால் கட்டி தேரில் புகுத்தினார்கள். அர்ஜுனனுடன் தேரில் ஏறிய பீமன், அதை ஆசிரமத்திற்குச் செலுத்தினான். பிறகு அங்கே அமர்ந்திருந்த யுதிஷ்டிரனை அணுகி, அந்நிலையில் இருந்த ஜெயத்ரதனை மன்னன் {யுதிஷ்டிரன்} முன்பு கிடத்தினான். மன்னன் {யுதிஷ்டிரன்} சிரித்துக் கொண்டே, சிந்து நாட்டு இளவரசனை {ஜெயத்ரதனை} விடுவிக்குமாறு அவனிடம் {பீமனிடம்} சொன்னான்.

பிறகு பீமன், மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “இந்த இழிந்தவன் பாண்டவர்களின் அடிமையானன் என்பதைத் திரௌபதிக்குச் சொல்லும்” என்றான். அதற்கு அவனது {பீமனின்} அண்ணன் {யுதிஷ்டிரன்}, அவனிடம் {பீமனிடம்} பாசத்துடன், “நீ நம் மீது ஏதாவது மரியாதை வைத்திருக்கிறாயானால், இந்த இழிந்தவனை விடுவித்துவிடு” என்றான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} மனதைப் படித்த திரௌபதியும், “அவனை விட்டுவிடுங்கள். அவன் மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அடிமையாகிவிட்டான். மேலும் தலையில் ஐந்து குடிமிகளை வைத்து நீரும்  அவனை உருகுலைத்து விட்டீர்” என்றாள். பிறகு சிகரத்தில் இருந்து விழுந்தவனான அந்த இளவரசன் {ஜெயத்ரதன்}, விடுதலையைப் பெற்று, மன்னன் யுதிஷ்டிரனை அணுகி, அவனை வணங்கினான். அங்கிருந்த முனிவர்களைக் கண்டு, அவர்களையும் வணங்கினான்.

பிறகு தர்மனின் மகனான இளகிய மனம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், அர்ஜுனனால் தாங்கப்பட்ட ஜெயத்ரதனின் நிலையைக் கண்டு, அவனிடம் {ஜெயத்ரதனிடம்}, “நீ இப்போது சுதந்திர மனிதன்; நான் உன்னை விடுவிக்கிறேன்! மீண்டும் இதுபோன்று செய்யாது கவனமாக இருப்பாயாக. இப்போது நீ போகலாம். தீய மனம் கொண்ட நீ, சக்தியற்றவனாக இருப்பினும், ஒரு மங்கையை வன்முறையால் அபகரிக்க முயன்றாய்! இஃது உனக்கு அவமானமே! உன்னைத் தவிர வேறு எந்தக் கேடுகெட்டவன் இச்செயலைச் செய்வான்?” என்றான். பிறகு பாரதகுலத்தின் முதன்மையான மன்னன் {யுதிஷ்டிரன்} தீய செயல்கள் புரிந்த அவன் மீது கருணைக் கண் கொண்டும், அவன் உணர்வை இழந்துவிட்டான் என்று உணர்ந்தும், “உனது இதயத்தில் அறம் வளரட்டும்! அறநெறி மீறிய செயல்களில் உனது இதயத்தைச் செலுத்தாதே! உன் தேரோட்டிகள், குதிரைப்படை, காலாட்படையுடன் இப்போது நீ அமைதியாகச் செல்லலாம்” என்றான் {யுதிஷ்டிரன்}.

யுதிஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த இளவரசன் {ஜெயத்ரதன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெரும் அவமானமடைந்து, தலையைத் தொங்கப்போட்டவாறு, ஒடுங்கிச் செல்லும் கங்கை, சமவெளிகளில் அகன்று செல்லும் ஓர் இடத்திற்கு அமைதியுடனும், துயரத்துடனும் சென்றான். உமையின் கணவனான முக்கண் தேவனின் {சிவனின்} பாதுகாப்பை இறைஞ்சி, அவ்விடத்தில் கடும் தவத்தைச் செய்தான். அவனது {ஜெயத்ரதனின்} தவத்தில் நிறைவு கொண்ட முக்கண் தேவனும் அவனது தகுதிக்குத்தக்க காணிக்கைகளை {தவத்தை} ஏற்க நேரடியாக வந்தான். அவன் {சிவன்}, அவனுக்கு {ஜெயத்ரதனுக்கு} ஒரு வரத்தையும் அருளினான். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த இளவரசன் {ஜெயத்ரதன்} எவ்வாறு வரத்தைப் பெற்றான் என்பதைக் கேள்.

அத்தேவனிடம் {சிவனிடம்} பேசிய ஜெயத்ரதன், “தங்கள் தேர்களில் இருக்கும் பாண்டுவின் ஐந்து மகன்களையும் போர்க்களத்தில் நான் வீழ்த்த வேண்டும்” என்ற ஓரு வரத்தைக் கேட்டான். எனினும், அந்தத் தேவன் {சிவன்}, “இது நடக்காது” என்றான். மகேஸ்வரன், “அவர்களைப் போர்க்களத்தில் வெல்லவோ, கொல்லவோ யாராலும் முடியாது. எனினும், அர்ஜுனனைத் தவிர்த்து, மீதம் உள்ளவர்களைப் போர்க்களத்தில் உன்னால் (ஒரு முறை மட்டும்) தடுக்க முடியும். வலிய கரங்கள் கொண்ட வீரனான அர்ஜுனன், நரனின் பாணி {Nara styled} கொண்ட தேவ அவதாரமாவான். அவன் {நரனான அர்ஜுனன்} பழங்காலத்தில் பதரியில் தவம் பயின்றவன். தேவனான நாராயணன் அவனது நண்பனாவான். எனவே, தேவர்களாலேயே அவனை வீழ்த்த முடியாது. நானே கூட அவனுக்குப் பாசுபதம் என்ற தெய்வீக ஆயுதத்தை வழங்கியிருக்கிறேன். திசைப்புள்ளிகளின் பத்து லோகபாலகர்களிடம் இருந்து, வஜ்ரம் முதற்கொண்ட பலமிக்கப் பல்வேறு ஆயுதங்களை அவன் {அர்ஜுனன்} பெற்றிருக்கிறான். தேவர்களுக்குத் தலைமை குருவும், எல்லையற்ற ஆவியைக் கொண்ட பெரிய தேவனுமான விஷ்ணுவே {நாராயணனே} குணங்களற்ற தலைமையானவனாவான். அவனே அண்டத்தின் ஆன்மாவாக இருந்து, முழுப் படைப்பிலும் உள்ளுறைந்து இருக்கிறான். காலங்களின் சக்கரம் முடியும்போது, அனைத்தையும் உட்கொள்ளும் நெருப்பு வடிவம் கொண்டு, மலைகள், கடல்கள், தீவுகள், குன்றுகள், காடுகள், வனங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் உட்கொள்கிறவன் அவனே {விஷ்ணுவே}. பாதாள லோகத்தில் இருக்கும் நாகலோகத்தையும் இவ்வாறே அழித்ததும், பலவர்ணக் குவியல்களாகப் பெருமுழக்கமிடும் மேகங்களையும், மின்னல்கீற்றுகளையும் முழு வானத்திலும் பரவி, உயரத்தில் தோன்றச் செய்து, பிறகு தேர்களின் அச்சு அளவு கனம் கொண்ட நீரை அடர்த்தியாகப் பொழிந்து, எங்கும் வெளியை {நீரால்} நிறைத்து, அனைத்தையும் எரிக்கும் நெருப்பை அணைக்கிறான்.

நாலாயிரம் {4000} யுகங்கள் முடியும் நெருக்கத்தில் இந்தப் பூமி முழுவதும் ஒரே பெரிய கடலாக நீரால் நிறைந்திருக்கும். அசையும் உயிரினங்கள் அனைத்தும் மாண்டு. சூரியன், சந்திரன், காற்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, கோள்கள் நட்சத்திரங்கள் அற்ற அண்டத்தில், ஆயிரம் தலைகளுடன், பல கண்கள் மற்றும் கால்கள் கொண்ட புலன்களால் உணரமுடியாத நாராயணன் என்று அழைக்கப்படும் பரமாத்மா ஓய்வெடுக்க விரும்பினான். ஆயிரம் தலைகளுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருக்கும் சேஷன் என்ற பாம்பு, பத்தாயிரம் சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டு, குருக்கத்திப்பூ {Kunda flower} போலவோ, சந்திரனைப் போலவோ, முத்துச்சரம் போலவோ, வெண்தாமரை போலவோ, பாலைப் {பால்} போலவோ, தாமரைத் தண்டின் இழைகளைப் போலவோ இருந்து, அவனது சங்காகச் {conch} {இங்கு படுக்கையாக என்ற பொருள் வர வேண்டும் என நினைக்கிறேன்} செயல்படுகிறது. வணங்கத்தக்க, எல்லாம்வல்ல தேவன், வெளிகள் அனைத்தையும் இரவின் அந்தகாரத்தில் மூழ்கடித்து, ஆழத்தின் மார்பில் இப்படியே உறங்கினான்.

பிறகு அவனது படைப்புத் தொழில் தூண்டப்பட்டதும், அவன் எழுந்திருந்து, எதுவுமில்லாமல் புறக்கணிக்கப்பட்ட அண்டத்தைக் காண்கிறான். நாராயணன் என்பதன் பொருளை மதித்து உரைக்கும், இது தொடர்பான ஒரு சுலோகம், “(முனிவர்) நரனால் நீர் படைக்கப்பட்டது. அதுவே {நீரே} அவனது உடலானது; எனவே அது நரனின் பாணி எனக் கேள்விப்படுகிறோம். அதுவே {நீரே} அவனது அயணத்தை (ஓய்வெடுக்கும் இடத்தை) உருவாக்கியதால், அவன் நாராயணன் {நரன் + அயணம் = நாராயணன்} என்று அறியப்படுகிறான்” என்கிறது. அண்டத்தின் மறு படைப்புக்காக, அந்த நித்தியமானவன் தியானத்தில் இருக்கும் போது, ஒரு தாமரை மலர் அவனது தொப்புளில் {நாபியில்} இருந்து உதித்தது. நான்முகனான பிரம்மன் அந்தத் தொப்புள்த்தாமரையில் இருந்து வெளியே வந்தான். பிறகு அனைத்து உயிரினங்களுக்கும் பெருந்தகப்பனான அவன் {பிரம்மன்}, அந்த மலரில் அமர்ந்து, முழு அண்டமும் வெறுமையாய் இருப்பதைக் கண்டு, தன் சுய விருப்பத்தின் பேரில், மரீசி மற்றும் பிறரரடங்கிய (ஒன்பது) [1] பெரும் முனிவர்களைப் படைத்தான்.(மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர், நாரதர், பிருகு ஆகியோர் அந்த ஒன்பது முனிவர்கள் என்று சொல்லப்படுகிறது.)

அவர்களும் {முனிவர்களும்}, தங்கள் பங்குக்கு அதையே {வெறுமையைக்} கண்டு, யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், ஊர்வன, மனிதர்கள் மற்றும் அனைத்து அசையும் அசையா உயிரினங்களைப் படைத்து, படைப்பை முழுமை செய்தனர். பரமாத்மா மூன்று நிலைகளில் இருக்கிறான். பிரம்மனின் உருவத்தில் அவன் படைக்கிறான்; விஷ்ணுவின் உருவத்தில் அவன் காக்கிறான்; ருத்ரனின் உருவத்தில் அவன் அண்டத்தை அழிக்கிறான். ஓ! சிந்து நாட்டு மன்னா {ஜெயத்ரதா}, வேதங்களை அறிந்த முனிவர்களாலும், அந்தணர்களாலும் சொல்லப்படும் விஷ்ணுவின் அற்புத சாதனைகளை நீ கேட்டதில்லையா? இப்படி ஒரு முறை பரந்த நீர்ப்பரப்புக் கொண்ட உலகம், ஒரே கடலாக, தனக்கு மேலே ஆகாயத்துடன் இருந்தபோது, மழைக்காலத்து இரவின் மின்மினிப் பூச்சிகள் போல, அந்தத் தலைவன் {விஷ்ணு}, தனது படைப்புகளுக்குப் புனர்வாழ்வு கொடுப்பதற்காக, நிலையான தரையைத் தேடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான். பிறகு நீரில் மூழ்கியிருந்த பூமியை உயர்த்த விருப்பம் கொண்டான்.

“இந்த வெள்ளத்திலிருந்து பூமியை மீட்க நான் என்ன வடிவம் எடுப்பது?” என்று நினைத்து, தெய்வீகப் பார்வையால் கண்டு, நீரில் விளையாட விரும்பும் காட்டுப் பன்றியின் வடிவம் {வராக அவதாரம்} கொள்ள நினைத்தான். பிறகு, வேதங்கள் மூலம் உள்ளுணர்வு கொண்டு பத்து யோஜனை நீளத்துடன், கூரிய தந்தங்களுடன், மேகம் போன்ற கரிய நிறத்துடன், மலை போன்ற பெரிய உருவத்துடன், மேகத்திரள் போன்று கர்ஜித்த அந்தத் தலைவன் நீருக்குள் மூழ்கி, தனது {பன்றியாக இருந்த தனது} ஒரு தந்தத்தால் பூமியை உயர்த்தி, அதைச் சரியான கோளத்தில் மாற்றி வைத்தான்.

இன்னுமொரு காலத்தில், அந்தப் பலம்வாய்ந்த தலைவன் {நாராயணன்}, பாதிச் சிங்கம் பாதி மனிதன் கொண்ட அற்புத வடிவம் {நரசிம்ம அவதாரம்} கொண்டு, தனது கைகளைப் பிசைந்து கொண்டு, தைத்தியர்களின் ஆட்சியாளன் சபைக்குச் சென்றான். தேவர்களின் எதிரியும், திதியின் மகனும் தைத்தியர்களின் மூதாதையுமானவன் {ஹிரண்யகசிபு}, அந்தத் தலைவனின் {நரசிம்மனின்} விசித்திர வடிவத்தைக் கண்டு, உணர்வுகளால் வெடித்து, கடுங்கோபம் கொண்டு, கொழுந்துவிட்டு எரியும் கண்களைக் கொண்டான். போர்க்குணம் மிக்கத் திதியின் மகனும், தேவர்களின் எதிரியுமான அந்த ஹிரண்யகசிபு, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, கருமேகத்திரள் போலக் காட்சியளித்து, கையில் திரிசூலம் கொண்டு, மேகமெனக் கர்ஜித்து, பாதிச் சிங்கம், பாதி மனிதன் வடிவம் கொண்டவனை நோக்கி விரைந்தான். பிறகு பாதிச் சிங்கம் பாதி மனிதனாக இருந்த வலிமைமிக்கவனான காட்டுவிலங்குகளின் மன்னன் {நாராயணன்}, ஒரே பாய்ச்சலில் காற்றில் எழுந்து, தனது கூரிய நகங்களால் அந்தத் தைத்தியனை  {ஹரிரண்யகசிபுவை} இருகூறாக கிழித்துப் போட்டான். பெரும் பிரகாசம் கொண்ட, அந்தப் புகழத்தக்க தாமரைக் கண் தலைவன் {நாராயணன்}, அனைத்து உயிர்களின் நன்மைக்காக அந்தத் தைத்திய மன்னனைக் {ஹிரண்யகசிபுவைக்} கொன்று, மீண்டும் அதிதியின் கருவறையில் காசியபரின் மகனாகத் தனது பிறப்பை அடைந்தான்.

ஆயிரம் வருடங்கள் முடிந்ததும், அவள் {அதிதி} அந்தத் தெய்வீகக் கருவைப் பெற்றெடுத்தாள். பிறகு மழை நிறைந்த மேகங்களின் நிறத்துடன், பிரகாசமிக்கக் கண்களுடன், குள்ளமான வடிவத்துடன் அவன் {நாராயணன் வாமனனாகப்} பிறந்தான். அவன் துறவுக்கான தண்டத்தையும், நீர்க்குடத்தையும் {கமண்டலத்தையும்} கைகளில் கொண்டிருந்தான். அவனது மார்பில் ஒரு சுருட்டை முடி சின்னமாகக் {ஸ்ரீவத்சம்} குறிக்கப்பட்டிருந்தது. அந்த வணங்கத்தக்கவன் {வாமனன்} சடாமுடி தரித்து, பூணூல் அணிந்து, சற்றுப் பருமனான, அழகான, பிரகாசமான காந்தி கொண்ட உடலைப் பெற்றிருந்தான். தானவ மன்னனான பலியின் வேள்வி முடியும் தருவாயில் அந்த வேள்விக்கூட்டத்திற்குள் பிருஹஸ்பதியின் உதவியுடன் அவன் {வாமனன்} நுழைந்தான். குட்டை உடல் கொண்டவனைக் கண்ட அந்தப் பலி மனநிறைவு கொண்டு அவனிடம், “உம்மைக் கண்டு மகிழ்கிறேன், ஓ! அந்தணரே {வாமனரே}, என்னிடம் உமக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லும்” என்று கேட்டான்.

பலியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் குட்டை தேவன் {வாமனன்}, புன்சிரிப்புடன், “{ஸ்வஸ்தி} அப்படியே ஆகட்டும்! தானவர்கள் தலைவா {பலியே}, எனக்கு {என் காலடி அளவு கொண்ட} மூன்றடி நிலம் கொடு” என்று கேட்டான். எல்லையற்ற சக்திகொண்ட அந்த அந்தணன் கேட்டதைக் கொடுக்க பலி மனநிறைவு கொண்டான். பிறகு {தனது} காலடிகளால் பூமியை அளக்க எண்ணங்கொண்ட போது, அந்த ஹரி {வாமனன்}, அற்புதமான இயல்புக்குமிக்க வடிவத்தை அடைந்தான். மூன்று காலடிகளில் எல்லையற்ற உலகத்தை அளந்தான். பிறகு, என்றுமுள்ள தேவனான விஷ்ணு, அதை இந்திரனுக்குக் கொடுத்தான். இப்போது உனக்குச் சொல்லப்பட்ட வரலாறு, “வாமன அவதாரம்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அவனிலிருந்து அனைத்து தேவர்களும் தங்கள் நிலையை அடைந்தனர். அவனுக்குப் பிறகு, இந்த உலகம் வைஷ்ணவம் என்றும் விஷ்ணுவால் நிறைந்தது என்றும் சொல்லப்படுகிறது. தீயவர்களின் அழிவுக்காகவும், அறத்தைக் காக்கவும், அவனே இப்போது யது குலத்தில் அவதரித்திருக்கிறான். வணங்கத்தக்க விஷ்ணு இப்போது கிருஷ்ணனின் பாணியில் இருக்கிறான்.

ஓ! சிந்து நாட்டு மன்னா {ஜெயத்ரதா}, உலகே வணங்கும் தலைவனின் சாதனைகள் இவையே. கற்றவர்கள் அவனையே {நாராயணனையே} ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்றும், பிறப்பற்றவன் என்றும், தெய்வீகமானவன் என்றும் வர்ணிக்கிறார்கள். போர்க்கலைகளை அறிந்தவர்களில் சிறந்தவனாக, மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி, தெய்வீகமாக, சுருள்முடிச் சின்னம் {ஸ்ரீவத்சம் என்ற மச்சம்} தரித்து, கைகளில் கதாயுதம், சக்கரம், சங்கு ஆகியவற்றோடு கூடிய, வெல்லப்பட முடியாதவனை, கிருஷ்ணன் என்று அவர்கள் {கற்றவர்கள்} அழைக்கிறார்கள். இத்தகு குணங்களைக் கொண்ட கிருஷ்ணன் அர்ஜுனனைப் பாதுகாக்கிறான். எல்லையற்ற சக்தி கொண்ட புகழ்பெற்றவனான அந்தத் தாமரைக் கண் கொண்டவன் {கிருஷ்ணன்}, ஒரே தேரில் பிருதையின் {குந்தியின்} மகனுடன் {அர்ஜுனனுடன்} பயணித்து அவனைப் பாதுகாக்கிறான்! எனவே, அவன் {அர்ஜுனன்} வீழ்த்தப்பட முடியாதவன்; தேவர்களாலேயே அவனது சக்தியைத் தாங்க முடியாது. அப்படி இருக்கும்போது மனிதத் தன்மை கொண்டவர்களால் எப்படிப் பிருதையின் மகனைப் {அர்ஜுனனைப்} போர்க்களத்தில் வீழ்த்த முடியும்? எனவே, ஓ! மன்னா {ஜெயத்ரதா}, அவனைத் தனியாக விடு! {உன்னால் அர்ஜுனனை வெல்ல முடியாது}. எனினும், நீ ஒரு நாளைக்கு மட்டும் மீதியுள்ள யுதிஷ்டிரனின் படையினர் அனைவரையும், உனது எதிரிகளான பாண்டுவின் மற்ற நான்கு மகன்களையும் வீழ்த்துவாய்” என்றான் {சிவன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளை அந்த இளவரசனுக்கு {ஜெயத்ரதனுக்குச்} சொன்ன, பாவங்களை அழிப்பவனும், உமையின் கணவனும், காட்டுவிலங்குகளின் தலைவனும், {தக்ஷனின்} வேள்வியை அழித்தவனும், திரிபுரனைக் கொன்றவனும், பகனின் கண்களைப் பிடுங்கியவனும், குள்ளர்கள் மற்றும் கூன்முதுகர்களாலும், பயங்கரக் கண்களும், காதுகளும், உயர்த்திய கைகளும் கொண்ட பயங்கரத் தொண்டர்களாலும் சூழப்பட்டிருக்கும் வணங்கத்தக்க ஹரன் {சிவன்}, தனது மனைவியான உமையுடன், அந்த இடத்திலிருந்து மறைந்து போனான். அந்தத் தீய ஜெயத்ரதனும் தனது இல்லம் திரும்பினான். பாண்டுவின் மகன்கள் தொடர்ந்து காம்யக வனத்தில் வசிக்கலானார்கள்.”

யுதிஷ்டிரன் கேள்வி! – வனபர்வம் பகுதி 271-கானக வாழ்வில் துன்பத்தை அனுபவிக்கும் தன்னைப் போலப் பாதிக்கப்பட்டவர் யாரும் உண்டா என்று யுதிஷ்டிரன் மார்க்கண்டேயரிடம் கேட்பது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}“திரௌபதி அபகரிக்கப்பட்டதன் விளைவாக இத்தகு துன்பத்தை அனுபவித்த பிறகு மனிதர்களில் புலிகளான அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஜெயத்ரதனை வீழ்த்தி, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட பிறகு, அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் அந்த முனிவர்களில் சிறந்தவரின் {மார்க்கண்டேயர்} அருகில் அமர்ந்தான். திரௌபதிக்கு நேர்ந்த கேட்டைத் தாங்கிக் கொண்டு, தங்கள் துயரை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்தத் துறவிகளில் முதன்மையானவர்களுக்கு மத்தியில், மார்க்கண்டேயரிடம், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், “ஓ! வணக்கத்தக்க ஐயா, பழங்காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்த முழு ஞானம் கொண்டவர் என்று தேவர்கள் மற்றும் துறவிகள் மத்தியில் நீர் அறியப்பட்டிருக்கிறீர். என் மனதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதை நீர்தான் தீர்த்துவைக்க வேண்டும்! துருபதன் மகளான இந்த மங்கை {திரௌபதி}, வேள்விப்பீடத்தில் உதித்தவளாவாள். மனித கர்ப்பத்தில் பிறந்தவளல்ல. இவள் உயர்ந்த அருளைக் கொண்டவளும் பாண்டுவின் சிறப்புமிக்க மருமகளுமாவாள். நான் காலத்தைக் குறித்துச் சிந்திக்கிறேன். மனிதனின் விதி அவனது செயல்களைப் பொறுத்து இருக்கிறது. இது உயிரினங்களைப் பொறுத்தமட்டில் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. (அது அப்படி இல்லையெனில்) நேர்மையான மனிதன் மீது சொல்லப்படும் போலி திருட்டுக் குற்றச்சாட்டைப் போல, அறம்சார்ந்து உண்மையுள்ளவளாக இருக்கும் எங்கள் மனைவி {திரௌபதி} எப்படி இத்தகு துரதிர்ஷ்டத்தால் துன்புற நேர்ந்தது?

துருபதனின் மகள் {திரௌபதி} ஒரு பாவச் செயலையோ, வரவேற்கத்தகாத எச்செயலையோ செய்யவில்லையே. மறுபுறம், அவள் அந்தணர்களிடம் உயர் அறங்களையல்லவா தொடர்ந்து பயின்று வந்தாள். இருப்பினும் மூடனான மன்னன் ஜெயத்ரதன் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றான். அவள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்செயலின் விளைவாக, அந்த இழிந்த பாவியின் {ஜெயத்ரதனின்} தலையைச் சிரைத்து, போர்க்களத்தில் அவனது கூட்டாளிகளையும் வீழ்த்தினோம். சிந்து நாட்டின் துருப்புகளைக் கொன்று அவளை {திரௌபதியை} மீட்டோம் என்பது உண்மையே. ஆனால், நாங்கள் எதிர்பாராத நேரத்தில் எங்கள் மனைவி பலவந்தமாகக் கடத்தப்பட்டாள் என்ற அவமானம் தொடரும் என்பது நிச்சயம். இந்தக் காட்டு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. இந்தக் காட்டிலேயே தங்கி, எங்களுடன் வாழும் இந்தக் காட்டின் விலங்குகளைக் கொல்லக் கடன் பட்டு, அந்த வேட்டையின் மூலமே எங்கள் உயிரைத் தாங்குகிறோம். இப்படிப்பட்ட இந்த வனவாசத்தையும், ஏமாற்றுகர உறவினர்களின் செயல்களாலேயே அனுபவிக்கிறோம். என்னைப்போன்ற பேறிலி வேறு யாரும் உண்டா? இது போன்ற ஒருவனை நீர் முன்னர்க் கண்டதோ கேட்டதோ உண்டா?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

இராமாயணம் ஆரம்பம்! – வனபர்வம் பகுதி 272-ராமன் மற்றும் சீதையின் பிறப்பு; ராவணனின் மூதாதையர் பற்றிய அறிமுகம்; குபேரன் பிறப்பு; குபேரன் பெற்ற நன்மைகள் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, {தசரத ராமனே} ராமனே கூட இணையற்ற துயரத்தைச் சந்தித்தான். ராட்சச மன்னனான தீய மனம் கொண்ட ராவணன், ஏமாற்றைக் {மாயையைக்} கைக்கொண்டு, ஜடாயு என்ற கழுகை வீழ்த்தி, அவனது {ராமனின்} மனைவியான சீதையை, அவனது {ராமனின்} ஆசிரமத்தில் இருந்து பலவந்தமாகக் கடத்திச் சென்றான். பிறகு உண்மையில், சுக்ரீவனின் உதவியைப் பெற்று, கடலில் பாலத்தைக் கட்டி தனது கூர்முனை கொண்ட கணைகளால் லங்கையை எரித்து, சீதையை மீட்டான்”

யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}“ராமன் எந்தக் குலத்தில் பிறந்தான். அவனது பலம் மற்றும் பராக்கிரமத்தின் அளவு என்ன? ராவணன் யாருடைய மகன்? எதன் பேரில் அவன் ராமனுடன் முரண்பட்டான்? ஓ சிறப்புமிக்கவரே {மார்க்கண்டேயரே}, அனைத்தையும் விவரமாக எனக்குச் சொல்லும்; பெரும் சாதனைகள் கொண்ட ராமனின் கதையை நான் கேட்க மிக ஆவலாக உள்ளேன்” என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குல இளவரசே {யுதிஷ்டிரா}, இந்தப் பழைய வரலாற்றை அது நடந்தவாறே சரியாகக் கேள்! தனது மனைவியுடன் சேர்ந்து ராமன் அனுபவித்த துன்பம் அனைத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன். இக்ஷவாகு குலத்தில் உதித்த அஜன் என்ற பெரும் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு {அஜனுக்கு}, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, எப்போதும் சுத்தமாக இருந்த தசரதன் என்ற பெயர் கொண்ட மகன் ஒருவன் இருந்தான். அந்தத் தசரதனுக்கு, அறநெறிகளையும், பொருளையும் அறிந்த ராமன், லட்சுமணன், சத்ருக்னன் மற்றும் பலம்பொருந்திய பரதன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர்.

ராமனுக்குக் கௌசல்யை என்ற தாயும், பரதனுக்குக் கைகேயி என்ற தாயும் இருந்தனர். எதிரிகளுக்குக் கசையாக இருந்த லட்சுமணனும், சத்ருக்னனும் சுமித்திரையின் மகன்கள். ஜனகன் விதேக நாட்டின் மன்னாக இருந்தான். சீதை அவனது மகளாக இருந்தாள். அவளை {சீதையை} ராமனின் அன்பிற்குரிய மனைவியாக்க விரும்பிய தஷ்திரி {பிரம்மன்} தானே அவளைப் படைத்தான். ராமன் மற்றும் சீதையின் பிறப்பு குறித்த வரலாற்றை இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.

இப்போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் ராவணனின் பிறப்பைக் குறித்து உரைக்கிறேன். அனைத்து உயிர்களின் தலைவனும், அண்டத்தைப் படைத்தவனும், பெரும் தவத்தகுதி படைத்த தேவனும், சுயம்புவுமான பிரஜாபதியே {பிரம்மனே} ராவணனின் பாட்டனாவான். புலஸ்தியருக்கு, பசுவிடம் பெறப்பட்ட வைஸ்ரவணன் {குபேரன்} என்ற பெயரில் அழைக்கப்பட்ட பலம்பொருந்திய மகன் ஒருவன் இருந்தான். ஆனால் அவரது {புலஸ்தியரின்} மகன் {வைஸ்ரவணன்}, தன் தந்தையை {புலஸ்தியரை} விட்டுவிட்டு, தன் பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றுவிட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதனால் கோபமடைந்த அவனது {வைஸ்ரவணனின்} தந்தை {புலஸ்தியர்}, தன்னிடமிருந்து இரண்டாவதாக ஒரு சுயத்தைப் படைத்தார். தன் சுயத்தின் மறுபாதியின் மூலமே அந்த மறுபிறப்பாளர், வைஸ்ரவணனிடம் கொண்ட கோபத்தைத் தீர்க்க விஸ்ரவஸ் என்றவனைப் பிறப்பித்தார்.

ஆனால் வைஸ்ரவணனிடம் {குபேரனிடம்} மனநிறைவு கொண்ட பெரும்பாட்டனோ {பிரம்மனோ}, அவனுக்கு {வைஸ்ரவணனுக்கு} இறவாமையையும், அண்டத்தில் உள்ள அனைத்துச் செல்வங்களின் மீது ஆட்சி அதிகாரத்தையும், திசைப்புள்ளிகளில் ஒன்றுக்குப் பாதுகாவலன் என்ற பொறுப்பையும், ஈசானனின் நட்பையும், நளகுபேரன் என்ற மகனையும் கொடுத்தான். அவன் {பிரம்மன்}, ராட்சசக் கூட்டத்தால் பாதுகாக்கப்பட்ட, அவனது தலைநகரான இலங்கையையும், செலுத்துபவன் விருப்பதிற்கேற்ப நினைத்த இடம் எங்கும் செல்லும் திறன் கொண்ட புஷ்பகம் என்று அழைக்கப்பட்ட தேரையும் {விமானத்தையும்} கொடுத்தான். யக்ஷர்களுக்கு மன்னனாகவும், மன்னர்களை ஆள்பவனாகவும் அவனை {வைஸ்ரவணனை} நியமித்தான்.” 

ராவணன் பெற்ற வரம்! – வனபர்வம் பகுதி 273-ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கரன், சூர்ப்பனை பிறப்பு; அவர்கள் வைஸ்ரவணனிடம் கொண்ட பொறாமை; அவர்களின் கடுந்தவம்; தனது தலையை வெட்டி வேள்வி நெருப்பில் இட்ட ராவணன்; அவர்களுக்கு பிரம்மன் அருளிய வரம்; விபீஷணன் இறவாமை பெற்றது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “புலஸ்தியரின் பாதி ஆன்மாவாக இருந்த விஸ்ரவஸ் என்ற பெயர் கொண்ட முனிவன், பெரும் கோபத்துடன் வைஸ்ரவணனைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் மன்னனான குபேரன், தன்னிடம் தன் தந்தை {விஸ்ரவஸாக இருந்த புலஸ்தியர்} கோபமாக இருப்பதை அறிந்து, அவனை எப்போதும் ஆறுதல் படுத்த எண்ணினான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}. மனிதர்களின் தோள்களில் சவாரி செய்து இலங்கையில் வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுக்கு மன்னன் தனது தந்தைக்காகக் காத்திருப்பதற்காக மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பி வைத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புஷ்போத்கதை, ராகை, மாலினி என்பது அவர்களது பெயர்களாகும். பாடுவதில் ஆடுவதிலும் திறமை பெற்ற அவர்கள், எப்போதும் அந்த உயர் ஆன்ம முனிவரை சிரத்தையுடன் கவனித்து வந்தனர்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த முனிவரை மனநிறைவு கொள்ளச்செய்ய அந்தக் கொடியிடை மங்கையர் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். அந்த உயர் ஆன்மா கொண்ட வணங்கத்தக்கவர்கள் அவர்களிடம் மனநிறைவு கொண்டு, அவர்களுக்கு வரங்களை அருளினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப இளவரசர்கள் போன்ற மகன்களைக் கொடுத்தார். இவ்வுலகில் நிகரற்ற பராக்கிரமத்தைக் கொண்ட ராட்சசர்களில் முதன்மையான கும்பகர்ணன் மற்றும் பத்துத் தலை கொண்ட ராவணன் ஆகிய இரு மகன்களும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். மாலினி விபீஷணன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றாள். ராகை என்பவள் கரன் மற்றும் சூர்ப்பனகை என்ற இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றாள்.

அவர்கள் அனைவரிலும் விபீஷணன் மிகுந்த அழகைக் கொண்டிருந்தான். அந்த அருமையான மனிதன் பக்திமானாகவும், சிரத்தையுள்ளவனாகவும் இருந்து அறச் சடங்குகள் அனைத்தையும் செய்து வந்தான். அவன் அறம் சார்ந்தவனாக, சுறுசுறுப்புள்ளவனாக, பெரும் பலமும் பராக்கிரமமும் கொண்டவனாக இருந்தான். அவர்களில் ராட்சசனான கும்பகர்ணனே போர்க்களத்தில் பெரும் பலம் உள்ளவானாக இருந்தான். முரட்டுத்தனமும் பயங்கரமும் கொண்ட அவன் அனைத்து மாயக் கலைகளிலும் நிபுணனாக இருந்தான். கரண் விற்கலையில் நிபுணனாக இருந்தான். அவன் அந்தணர்களின் எதிரியாக இருந்து, {அவர்களது} இறைச்சியை உண்டு வாழ்ந்தான். கடுமை நிறைந்த சூர்ப்பனகை துறவிகளுக்கு எப்போதும் தொல்லை கொடுத்து வந்தாள்.

வேதங்களைக் கற்று, சடங்குகளில் விடாமுயற்சியுடன் இருந்த அந்த வீரர்கள் அனைவரும் தங்கள் தந்தையுடன் கந்தமாதனத்தில் வாழ்ந்தனர். அங்கே அவர்கள் செல்வத்தின் தலைவனான, மனிதர்களின் தோள்களில் பயணிக்கும் வைஸ்ராவணன் {குபேரன்} தங்கள் தந்தையின் அருகே அமர்ந்திருப்பதைக் கண்டனர். பொறாமையால் பீடிக்கப்பட்ட அவர்கள், தவங்கள் பயிலத் தீர்மானித்தனர். தங்கள் கடும் தவத்தால் அவர்கள் பிரம்மனை நிறைவடைய வைத்தனர். காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த பத்து தலை ராவணன், ஐந்து புனித நெருப்புகள் சூழ தியானத்தில் மூழ்கி, ஆயிரம் வருடங்களுக்கு ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான். உண்ணாதிருந்து தலைகீழாக நின்று கொண்டிருந்த கும்பகர்ணன், தனது தவத்தில் உறுதியாக இருந்தான். ஞானமும் மேன்மையும் மிக்க விபீஷணன் உண்ணா நோன்புகள் நோற்று, காய்ந்த இலைகளை உண்டு, தியானத்தில் ஈடுபட்டு, நீண்ட காலத்திற்குத் தவம் இருந்தான். அவர்கள் இப்படித் தவம் செய்து கொண்டிருந்த போது, கரணும், சூர்ப்பனகையும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தனர்.

ஆயிரம் வருடங்கள் முடியும் நெருக்கத்தில், பத்துத் தலை கொண்டவன் {ராவணன்}, தனது தலைகளை {ஒவ்வொன்றாக} வெட்டி வேள்வி நெருப்பில் காணிக்கையாக இட்டான். அவனது இச்செயலால் அண்டத்தின் தலைவன் {பிரம்மன்} நிறைவு கொண்டான். பிறகு பிரம்மன் நேரடியாக அவனிடம் வந்து, தவத்தைக் கைவிடுமாறும், அவர்கள் அனைவருக்கும் வரங்களை அருள்வதாகவும் உறுதி கூறினான். அந்த வணங்கத்தக்க பிரம்மன், “பிள்ளைகளே, நான் உங்களிடம் நிறைவு கொண்டேன்! தவத்தை நிறுத்துங்கள்; என்னிடம் வரங்களைக் கேளுங்கள்! இறவாமை தவிர்த்து, நீங்கள் கேட்கும் எந்த விருப்பங்களும் உங்களுக்குக் கிடைக்கும். பெரும் குறிக்கோளுடன், நீ காணிக்கையாக இட்ட உனது தலைகள், நீ விரும்பியபடி முன்பு போலவே உனது உடலை அலங்கரிக்கும். உனது உடல் உருகுலையாது. நீ விரும்பிய உருவம் எடுக்கவல்லவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளை வெல்பவனாகவும் இருப்பாய். இதில் சந்தேகமில்லை” என்றான் {பிரம்மன்}. அதற்கு ராவணன், “கந்தர்வர்கள், தேவர்கள், கின்னரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள் மற்றும் அனைத்து பிற உயிரனங்களிடமும் நான் தோல்வியடையாமலிருப்பேனாக!” என்றான். பிரம்மன், “மனிதர்கள் தவிர்த்து, நீ பெயரிட்டுச் சொன்னவர்கள் மூலம் உனக்கு எப்போதும் அச்சம் இருக்காது (அச்சமேற்படும் சந்தர்ப்பம் உனக்கு வாய்க்காது). உனக்கு நன்மை உண்டாகட்டும்! அப்படியே நான் உனக்கு விதித்திருக்கிறேன்!” என்றான்.

மார்க்கண்டேயர், “இப்படிச் சொல்லப்பட்ட பத்துத்தலையன் {தசக்கிரீவன்} {இராவணன்} மிகவும் மன நிறைவு கொண்டு, அவனது வக்கிரபுத்தியின் காரணமாக, மனிதர்களை உண்ணும் அவன் மனிதர்களை அலட்சியமாக எண்ணினான். பிறகு அந்தப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, முன்பு போலவே {ராவணனிடம் கேட்டது போலவே} கும்பகர்ணனிடமும் கேட்டான். இருளால் மூடப்பட்ட அறிவு கொண்ட அவன் நீண்ட தூக்கத்தைக் கேட்டான். “அப்படியே ஆகும்” என்று சொன்ன பிரம்மன் விபீஷணனிடம், “ஓ என் மகனே {விபீஷணா}, நான் உன்னிடம் மிகவும் நிறைவு கொண்டேன்! நீ விரும்பும் எந்த வரத்தையும் கேள்!” என்று கேட்டான். அதற்கு விபீஷணன், “பெரும் ஆபத்திலும் நான் நேர்மையில் இருந்து வழுவாமல் {அதர்மம் செய்யாமல்} இருக்க வேண்டும். நான் அறியாமையில் இருப்பதால், ஓ வணங்கத்தக்க ஐயா, தெய்வீக ஞான ஒளி எனக்குள் ஒளிர வேண்டும்” என்று கேட்டான். பிரம்மன், “ஓ ஏதிரிக்குத் தீமை விளைவிப்பவனே {விபீஷணா}, உன் ஆன்மா அறமின்மையை விரும்பாதாதல், நீ ராட்சசனாகப் பிறந்திருந்தாலும், உனக்கு இறவாமையை அருள்கிறேன்” என்றான் {பிரம்மன்}”

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்த வரத்தைப் பெற்றுக் கொண்ட பத்து தலை ராட்சசன் {ராவணன்}, போரில் குபேரனை வீழ்த்தி, இலங்கையின் ஆட்சியுரிமையை அவனிடம் இருந்து அடைந்தான். கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னரர்கள் ஆகியோர் தன்னைத் தொடர இலங்கையை விட்டகன்ற அந்தப் போற்றுதலுக்குரியவன் {குபேரன்}, கந்தமாதன மலையில் வாழ்வதற்குச் சென்றான். அவனிடம் {குபேரனிடம்} இருந்த தெய்வீகத் தேரான புஷ்பகத்தையும் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டான். இதனால் வைஸ்ரவணன் அவனிடம், “இந்தத் தேர் உன்னைச் சுமக்காது; போர்க்களத்தில் உன்னைக் கொல்வனை இது சுமக்கும்! உன் அண்ணனான என்னை நீ அவமதித்ததால்,விரைவில் நீ சாவாய்!” என்று சாபமிட்டான்.

பக்திமானான விபீஷணன், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்தவர்களும், பெரும் புகழ் கொண்டவர்களும் தொடரும் பாதையில் நடந்து, குபேரனைத் தொடர்ந்து சென்றான். போற்றுதலுக்குரிய அந்தச் செல்வத்தலைவன் {குபேரன்}, தன் தம்பிகளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு யக்ஷ, ராட்சசக் கூட்டத்திற்குத் தலைவனாக்கினான். மறுபுறம், மனிதர்களை உண்ணும் வலிமைமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும் ஒன்று கூடி பத்து தலை ராவணனிடம் தங்கள் ஆட்சியுரிமையைக் கொடுத்தார்கள். நினைத்த வடிவம் கொள்பவனும், பயங்கரப் பராக்கிரமம் கொண்டவனும், காற்றில் செல்பவனுமான அந்த ராவணன், தேவர்களையும், தைத்தியர்களையும் தாக்கி, அவர்களது மதிப்புமிக்க உடைமைகளை அவர்களிடம் இருந்து கவர்ந்தான். அனைத்து உயிர்களையும் நடுங்கச் செய்ததால் அவன் ராவணன் என்று அழைக்கப்பட்டான். எந்த அளவு சக்தியையும் திரட்டும் வல்லமை பெற்ற ராவணன், தனது பயங்கரத்தால் தேவர்களின் மனதிடத்தையே அகற்றினான்”

மந்தரை என்ற கூனி ! – வனபர்வம் பகுதி 274-ராவணன் செய்யும் தீமைகளைப் பொறுக்காத அக்னி, ராவணனின் அழிவைக் குறித்துப் பிரம்மனிடம் கேட்பது; பிரம்மன் முக்கியமான தேவர்கள் அனைவரையும் பூமியில் குரங்குகளாகவும், கரடிகளாகவும் பிறக்கச் சொன்னது; குரங்குகள் மற்றும் கரடிகளில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தேவர்கள் பிள்ளைகளைப் பெறுவது; பூசல்களை உருவாக்க பிரம்மன், துந்துபி என்ற கந்தர்வியை, பூமியில் கூனியான மந்தரையாகப் பிறக்கச் செய்தது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பின்னர்ப் பிரம்ம முனிவர்கள், சித்தர்கள், தேவமுனிவர்கள், ஆகியோர் ஹவ்யவாகனனை {அக்னியைத்} தங்கள் பேச்சாளனாகக் கொண்டு பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள். அக்னி {பிரம்மனிடம்}, “விஸ்ரவசின் சக்திமிக்க மகனான பத்துத் தலையனை {ராவணனை}, உமது வரத்தின் காரணமாகக் கொல்ல முடியவில்லை. பெரும் பலம் கொண்ட அவன் {ராவணன்} பூமியில் உள்ள உயிரினங்களை ஒடுக்குகிறான். ஓ! போற்றுதலுக்குரியவரே! எனவே எங்களைக் காப்பாற்றும்! எங்களைக் காப்பாற்ற உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று சொன்னான்.

பிரம்மன் {அக்னியிடம்}, “ஓ! அக்னி, தேவர்களாலோ அசுரர்களாலோ அவனை {ராவணனை} போர்க்களத்தில் வெல்ல முடியாது! அந்நோக்கத்திற்குத் தேவையானதை நான் ஏற்கனவே விதித்துவிட்டேன். உண்மையில் அவனது மரணம் அருகிலிருக்கிறது! எனது தூண்டுதலின் பேரில் நான்கு தலை கொண்ட தெய்வம் அக்காரணத்திற்காகவே அவதரித்துவிட்டான். அடிப்பவர்களில் முதன்மையான விஷ்ணு அந்நோக்கத்தைச் சாதிப்பான்” என்றான் {பிரம்மன்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்தப் பாட்டன் {பிரம்மன்} அவர்களுக்கு மத்தியில் சக்ரனிடம் {இந்திரனிடம்}, “தேவர்களுடன் சேர்ந்து நீயும் பூமியில் பிறப்பாயாக! குரங்குகளும், கரடிகளும் விஷ்ணுவின் கூட்டாளிகளாவதற்காக நினைத்த உருவம் கொள்ளக்கூடிய பெரும் பலம் கொண்ட உங்கள் மகன்களாக அவர்களைப் பெறுவீர்களாக” என்று சொன்னான். இதனால், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தானவர்கள் ஆகியோர் விரைவாகக் கூடி தாங்கள் எவ்வாறு பிறக்க வேண்டும் என்பதை ஆலோசித்து, அவரவர்க்கு உரிய தன்மையுடன் பூமியில் பிறந்தார்கள். வரங்களை அருளும் தேவன் {பிரம்மன்}, அவர்கள் முன்னிலையிலேயே துந்துபி என்ற பெயர்கொண்ட கந்தர்வியை அழைத்து, “நோக்கம் நிறைவேற நீ அங்குச் செல்!” என்றான். பாட்டனின் {பிரம்மனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட துந்துபி, மனிதர்களின் உலகில் கூன்முதுகு கொண்ட மந்தரையாகப் பிறந்தாள்.

சக்ரனோடு {இந்திரனோடு} கூடிய முக்கியமான அனைத்து தேவர்களும் குரங்குகள், கரடிகள் ஆகியவற்றில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தங்கள் வாரிசுகளைப் பெற்றார்கள். அந்த மகன்களும் பலத்திலும் புகழிலும் தங்கள் தந்தைகளுக்கு ஈடாக இருந்தனர். அவர்கள் மலைச்சிகரங்களைப் பிளக்கவல்லவர்களாக இருந்தார்கள். கற்களும் ஆச்சா மரங்களும் {சால மரங்களும்}, பனை மரங்களும் {தால மரங்களும்} அவர்களது ஆயுதங்களாக இருந்தன. அவர்களது உடல்கள் உறுதி மிக்கதாவும் கடுமை நிறைந்ததாகவும் இருந்தன. அவர்கள் பெரும் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். போரில் வல்லவர்களாகவும், விருப்பத்திற்கேற்ற ஆற்றலைத் திரட்டும் திறன் அவர்களுக்கு இருந்தது. பலத்தால் அவர்கள் ஆயிரம் யானைகளுக்கு நிகராக இருந்தார்கள். வேகத்தால் அவர்கள் காற்றுக்கு ஈடாக இருந்தனர். சிலர் தாங்கள் விரும்பிய இடங்களிலெல்லாம் வசித்தார்கள், அதே வேளை மேலும் சிலர் கானகத்தில் வாழ்ந்தார்கள். அண்டத்தைப் படைத்த போற்றுதலுக்குரியவன் {பிரம்மன்}, இவ்வனைத்தையும் விதித்து, மந்தரை {கூனி} என்ன செய்ய வேண்டும் என்பதை அவளுக்கு உரைத்தான். மனோவேகம் கொண்ட மந்தரை, அவனது வார்த்தைகள் அனைத்தையும் புரிந்து கொண்டு, இங்கும் அங்கும் சென்று பூசல்களைத் தூண்டுவதில் ஈடுபட்டாள்”

காட்டுக்குச் சென்ற ராமன்! – வனபர்வம் பகுதி 275-ராமனுக்குப் பட்டம் சூட்ட தசரதன் தீர்மானம்; ராமனைக் காட்டுக்கு அனுப்பி, பரதனை நாடாள வைக்க வேண்டும் என்ற வரத்தைக் கைகேயி தரசதனிடம் கேட்டல்; ராமன் காட்டுக்குச் செல்வது; கரன் தூஷணனைக் கொல்வது; அங்கம் பழுதான சூர்ப்பனகை ராவணனிடம் சென்று தனது நிலையைத் தெரியப்படுத்துதல்; கோபம் கொண்ட ராவணன், ராமனை அழிப்பதற்குத் திட்டம் தீட்டி மாரீசனை அணுகுதல்…

யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! போற்றுதலுக்குரியவரே {மார்க்கண்டேயரே}, ராமன் மற்றும் பிறரின் பிறப்பு வரலாற்றை நீர் எனக்கு விவரமாகச் சொன்னீர். நான் அவர்களது வனவாசத்திற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, தசரதன் மகன்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய சகோதரர்கள், மிதிலை இளவரசியுடன் {சீதையுடன்} காட்டுக்கு ஏன் சென்றார்கள் என்பதை உரைப்பீராக” என்று கேட்டான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “பக்திமானான மன்னன் தசரதன், எப்போதும் பெரியவர்களைக் கவனிப்பவனாகவும், அறச்சடங்குகள் செய்வதில் சிரத்தையுள்ளவனாகவும் இருந்தான். அவன் {தசரதன்} தனக்குப் பிறந்த மகன்களைக் குறித்துப் பெரும் மனநிறைவு கொண்டான். அவனது மகன்கள் பலத்திலும் வேதங்களிலும், அதன் புதிர்களிலும், ஆயுத அறிவியலிலும் படிப்படியாக வளர்ந்தனர். தங்கள் பிரம்மச்சரிய நோன்பை நிறைவேற்றிய அந்த இளவரசர்களுக்குத் திருமணமும் நடந்தது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியும் உயர்ந்த மனநிறைவையும் கொண்டான். அவர்கள் அனைவரிலும் மூத்தவனான புத்திகூர்மை கொண்ட ராமன், தனது அழகான நடத்தையால் மக்களைப் பெரும் மனநிறைவு கொள்ளச் செய்து, தன் தந்தைக்குப் பிடித்தமானவனாக ஆனான்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தன் வயது முதிர்வை கவனத்தில் கொண்ட அந்த ஞானமுள்ள மன்னன் {தசரதன்}, தனது அமைச்சர்களிடமும், ஆன்ம ஆலோசகரிடமும் {வசிஷ்டரிடமும்}, ராமனைத் தன் பேரரசின் பிரதிநிதியாக {பட்டத்து இளவரசனாக} நியமிக்க ஆலோசனை செய்தான். அந்தப் பெரும் அமைச்சர்கள் அனைவரும், அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை ஏற்றனர். ஓ! குருகுலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, கௌசல்யையின் மகிழ்ச்சியைப் பெருக்குபவனும், கண்கள் சிவந்தவனும், தசை பொருந்திய கரங்கள் கொண்டவனுமான தன் மகனைக் {ராமனைக்} கண்ட மன்னன் தசரதன் பெரிதும் மனம் நிறைந்தான் . அவனது {ராமனின்} நடை காட்டு யானையைப் போல இருந்தது. அவன் {ராமன்} நீண்ட கரங்களும், உயர்ந்த தோள்களும், சுருண்ட கரிய தலைமுடியும் கொண்டிருந்தான். வீரனாகவும். பிரகாசம் கொண்டவனாகவும், போர்க்களத்தில் இந்திரனுக்கு எந்தவிதத்திலும் தாழாதவனாகவும் அவன் {ராமன்} இருந்தான். புனித ரித்துகள் அனைத்தையும் அறிந்த அவன் {ராமன்}, ஞானத்தில் பிருஹஸ்பதிக்கு இணையானவனாக இருந்தான். அனைத்து மக்களின் அன்புக்கு ஒரு பொருளாக இருந்த அவன் {ராமன்}, அனைத்து அறிவியலிலும் திறன்வாய்ந்தவனாக இருந்தான். புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அவனைக் கண்ட அவனது எதிரிகளே கூட அவனைக் கண்டதும் அவனிடம் {ராமனிடம்} மனநிறைவு கொண்டார்கள். தீயவர்களுக்குப் பயங்கரனாகவும், அறம்சார்ந்தவர்களைப் பாதுகாப்பவனாகவும், அவன் {ராமன்} இருந்தான். புத்திகூர்மையும், கலங்கடிக்கப்பட முடியாதவனாகவும் இருந்த அவன் {ராமன்}, அனைவரையும் வெல்பவனாகவும், எவ்வழியிலும் வீழ்த்தப்பட முடியாதவனாகவும் இருந்தான்.

ஓ! குருக்களின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, கௌசல்யையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான தனது மகனை {ராமனைக்} கண்ட மன்னன் தசரதன் மிகவும் மகிழ்ந்தான். ராமனின் நற்பண்புகளை நினைத்துப் பார்த்த சக்திமிக்கவனும் பலமிக்கவனுமான மன்னன் {தசரதன்}, மகிழ்ச்சியோடு தனது குடும்பப் புரோகிதரிடம் {வசிஷ்டரிடம்}, “ஓ! அந்தணரே, நீர் அருளப்பட்டிரும். இன்று இரவு பூச நட்சத்திரம், வெகு மங்களமான சேர்க்கையைக் கொண்டுவருகிறது. எனவே, அனைத்துப் பொருட்களும் சேகரிக்கப்படட்டும், ராமனும் அழைக்கப்படட்டும். இந்தப் பூச நட்சத்திரம் நாளை வரை நீடிக்கிறது. எனவே, ராமன் எனது குடிமக்களின் பட்டத்து இளவரசனாக என்னாலும், எனது அமைச்சர்களாலும் நியமிக்கப்பட வேண்டும்” என்றான்.

அதே வேளையில், (கைகேயியின் பணிப்பெண்ணான) மந்தரை, மன்னனின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, தனது தலைவியிடம் {கைகேயி} சென்று சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசினாள். அவள் {மந்தரை}, “ஓ! கைகேயி, உனது பெரும் தீயூழை {துரதிர்ஷ்டத்தை} இந்நாளில் மன்னர் {தசரதர்} பிரகடனம் செய்திருக்கிறார்! ஓ! பேறிலியே {துரதிர்ஷ்டசாலியே}, கோபம் மிகுந்த கரும்பாம்பு மறைந்திருந்து உன்னைக் கடிக்கிறது. தன் மகன் அரியணையில் நிறுவப்பட இருப்பதால், உண்மையில் கௌசல்யையே பேறு பெற்றவளாவாள். உன் மகன் {பரதன்} நாட்டை அடையாத போது, உனக்குச் செழிப்பு எங்கே இருக்கும்?” என்று கேட்டாள்.

தன் பணிப்பெண்ணின் {மந்தரையின்} வார்த்தைகளைக் கேட்ட, அழகிய கொடியிடை கொண்ட அந்தக் கைகேயி, தன் ஆபரணங்கள் அனைத்தையும் பூண்டுகொண்டு, தனது கணவனைத் தனிமையில் நாடினாள். மகிழ்ச்சியான இதயத்துடன், இனிமையாகப் புன்னகைத்து, அனைத்து பசப்புநயமான காதல் வார்த்தைகளுடன் சேர்த்து, “ஓ! மன்னா {தரசரதரே}, நீர் என்றும் உமது உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருப்பீர் {என்று நம்புகிறேன்}. முன்பே நீர் எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தீர். அந்த உறுதிமொழியை இப்போது நிறைவேற்றும். வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஏற்படும் பாவத்தில் இருந்து உம்மைக் காத்துக் கொள்ளும்!” என்று சொன்னாள். அதற்கு மன்னன் {தசரதன்-கைகேயியிடம்}, “நீ என்ன விரும்பினாலும் கேள், நான் உனக்கு அவ்வரத்தைத் தருவேன். கொல்லத்தகாத எந்த மனிதன் இன்று கொல்லப்பட வேண்டும்? கொல்லத்தகுந்த எவன் இன்று விடுதலை பெற வேண்டும்? யாருக்கு இன்று நான் செல்வம் அளிக்க வேண்டும்? யாருடைய செல்வத்தை இன்று பறிமுதல் செய்ய வேண்டும்? அந்தணர்களின் உடைமைகளைத் தவிர இவ்வுலகத்தில் உள்ள எந்தச் செல்வமானாலும், அது எனதே! நான் இந்த உலகத்தில் உள்ள மன்னர்களுக்கெல்லாம் மன்னனும், நால்வகை மனிதர்களின் பாதுகாவலனுமாவேன்! ஓ! அருளப்பட்ட மங்கையே {கைகேயி}, எந்தப் பொருளின் மீது உன் இதயம் நிலைத்திருந்தாலும், அதை விரைவாக என்னிடம் சொல்!” என்று கேட்டான்

மன்னனின் {தசரதனின்} வார்த்தைகளைக் கேட்டு,  அவன் மீது தான் கொண்ட ஆளுமையை அறிந்து, அவன் கொடுத்திருந்த வாக்குறுதியில், அவனை உறுதி கொள்ள வைக்க முயன்று, அவள் {கைகேயி} அவனிடம் {தசரதனிடம்}, ராமனுக்காக நீர் வடிவமைத்த பதவியேற்பைப் பெறுபவனாகப் பரதன் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். சடாமுடி தரித்து, மரவுரியும், மான்தோலும் அணிந்து, தண்டகவனத்தில் பதினான்கு {14} வருடங்களுக்கு ராமன் வனவாசம் செய்யட்டும்” என்றாள். ஏற்கத்தகாத இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {தசரதன்}, ஓ! பாரதக் குல தலைவா {யுதிஷ்டிரா}, மிகவும் துன்புற்றுப் பேச்சற்றவனானான்!

ஆனால் வலிமையும் நல்லொழுக்கமும் கொண்ட ராமன், {கைகேயியால்} தன் தந்தை இப்படி வேண்டிக்கொள்ளப்பட்டதை அறிந்து, தன் தந்தை கொடுத்த உறுதிமொழி களங்கமடையாமல் இருக்கக் காட்டுக்குச் சென்றான். {யுதிஷ்டிரா} நீ அருளப்பட்டிரு, வில்லாளிகளில் முதன்மையான {தம்பி} லட்சுமணனும், விதேகநாட்டு இளவரசியும்ஜனகனின் மகளும்,அவனது மனைவியுமான சீதையும் அவனைப் {ராமனைப்} பின்தொடர்ந்தார்கள். ராமன் காட்டுக்குச் சென்றதும், காலத்தின் நிலைத்த விதிக்குக் கட்டுப்பட்டு மன்னன் தசரதன் தனது உடலைத் துறந்தான். ராமன் அருகில் இல்லாததையும், மன்னன் {தசரதன்} இறந்துவிட்டதையும் அறிந்த கைகேயி, தன் முன்னே பரதனை அழைத்து வரச் செய்து, அவனிடம் {பரதனிடம்} “தசரதர் சொர்க்கம் சென்றுவிட்டார். ராமனும் லட்சுமணனும் காட்டில் இருக்கின்றனர்! குந்தகம் விளைவிக்க எந்தப் பகைவரும் அற்ற இந்த அகன்ற அரசை {நாட்டை} நீ எடுத்துக் கொள்” என்றாள் {கைகேயி}.

நல்லொழுக்கமுடைய பரதன் அவளுக்கு {கைகேயிக்கு} மறுமொழியாக, “செல்வத்தில் மட்டுமே மோகம் கொண்டு, உன் கணவரைக் கொன்று, குடும்பத்தை அடியோடு அழித்து, தீச்செயலைச் செய்தாய்! ஓ! எம்குலத்தில் சபிக்கப்பட்டவளே, ஓ தாயே, நீ என் தலையில் புகழ்க்கேட்டைச் சுமத்தி, உனது இந்த நோக்கத்தை அடைந்தாய்” என்றான். இப்படிச் சொன்ன அந்த இளவரசன் {பரதன்} உரக்க அழுதான். அந்நாட்டுக் குடிமக்கள் அனைவரின் முன்பும் தன் களங்கமின்மையை மெய்ப்பித்து நிறுவி, ராமனைத் திரும்ப அழைக்க விரும்பி, அவனைத் {ராமனைப்} பின்தொடர்ந்து சென்றான். பிறகு, வரிசையாக உள்ள தனது வாகனங்களில், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோரை ஏற்றி, சத்ருக்னனுடன் கனத்த இதயத்தோடு முன்னேறினான்.

ராமனைத் திரும்ப அழைக்க விரும்பிய அவன் {பரதன்}, வசிஷ்டர், வாமதேவர் மற்றும் பிற ஆயிரக்கணக்கான அந்தணர்கள், நகரங்கள் மற்றும் மாநிலங்களின் மக்கள் ஆகியோருடன் சென்றான். பிறகு அவன் {பரதன்}, கையில் வில்லுடனும், துறவிகளின் ஆபரணங்கள் பூண்டும் சித்திரகூட மலைகளில் வாழ்ந்து வந்த ராமனை, லட்சுமணனுடன் சேர்ந்திருக்கக் கண்டான். எனினும், தந்தையின் {தசரதனின்} வார்த்தைகளுக்கிணங்க செயல்படத் தீர்மானித்திருந்த ராமன், பரதனை திருப்பி அனுப்பினான். இப்படித் திரும்பிய பரதன், தன் அண்ணனின் {ராமனின்} மரக்காலணிகளைத் {பாதுகைகளைத்} தன் முன்பு வைத்து, நந்திகிராமத்தில் இருந்து ஆட்சி செய்தான்.

அயோத்தியின் மக்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள் என்ற அஞ்சிய அவன் {ராமன்}, சரபங்கர் ஆசிரமம் இருக்கும் பெருங்காட்டுக்குள் நுழைந்தான். சரபங்கருக்குத் தனது மரியாதைகளைச் செலுத்தி, தண்டகக் காட்டுக்குள் நுழைந்த அவன் {ராமன்}, அழகிய கோதாவரி ஆற்றங்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான். அங்கே வாழ்ந்து கொண்டிருந்த போது, சூர்ப்பனகையின் காரணமாக, ஜனஸ்தானத்தில் வசித்த கரனிடம் அவன் {ராமன்} பகைமை கொள்ள நேரிட்டது. துறவிகளைப் பாதுகாப்பதற்காக, அந்த ரகு குலத்தின் நல்லொழுக்கம் கொண்ட வழித்தோன்றல் {ராமன்}, பூமியில் இருந்த பதினாலாயிரம் ராட்சசர்களைக் கொன்றான். கரன், தூஷணன் என்ற பெரும்பலமிக்க ராட்சசர்களைக் கொன்ற, ஞானமிக்க ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, அந்தப் புனிதமான காட்டை மீண்டும் ஆபத்தற்றதாக்கினான்.

அந்த ராட்சசர்கள் கொல்லப்பட்ட பிறகு, மூக்கும், உதடுகளும் அறுபட்டிருந்த சூர்ப்பனகை, தனது அண்ணனின் {ராவணனின்} வசிப்பிடமான இலங்கைக்குச் சென்றாள். துன்பத்தால் உணர்வற்று, முகத்தில் காய்ந்த ரத்தக்கறையுடன் ராவணன் முன்பு சென்ற அந்த ராட்சசப் பெண் {சூர்ப்பனகை}, அவனது {ராவணனின்} காலில் விழுந்தாள். இப்படிக் கடும் சேதத்திற்குள்ளாகியிருக்கும் அவளை {சூர்ப்பனகையைக்} கண்ட ராவணன் கோபத்தால், பற்களைக் {நறநறவெனக்} கடித்து, தனது இருக்கையை விட்டு எழுந்தான். பிறகு தன் அமைச்சர்களை அனுப்பிவிட்டு, அவளிடம் {சூர்ப்பனகையிடம்} தனிமையில், “அருளப்பட்ட தங்கையே {சூர்ப்பனகையே}, என்னை மறந்து, என்னை அவமதிக்கும்படி, உனக்கு இப்படிச் செய்தவன் எவன்? கூரிய ஈட்டியைத் தனது உடலில் தேய்த்துக் கொள்பவன் எவன்? தலைக்கருகே நெருப்பை வைத்துவிட்டு, பாதுகாப்பாக உணர்ந்து மகிழ்ச்சியுடன் தூங்குபவன் எவன்? பழியுணர்வும் கடும்நஞ்சும் கொண்ட பாம்பை மிதித்தவன் எவன்? பிடரிமயிர் கொண்ட சிங்கத்தின் வாய்க்குள் கையைத் திணித்துக் கொண்டு நிற்பவன் உண்மையில் எந்த மனிதன்?” என்று கேட்டான்.

பிறகு, நெருப்பில் இருக்கும் மரங்களின் துவாரங்களில் இருந்து வெளிப்படும் சுடர்களைப் போல, அவனது உடலில் இருந்து கோபம் எனும் சுடர் வெடித்தது. அவனது தங்கை {சூர்ப்பனகை}, ராமனின் பராக்கிரமத்தைக் குறித்தும், கரன் மற்றும் தூஷணனைத் தலைமையாகக் கொண்ட ராட்சசர்களின் தோல்வி குறித்தும் சொன்னாள். தன் உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், விதியால் உந்தப்பட்டு, ராமனைக் கொல்வதற்காக மாரீசனை நினைவுகூர்ந்தான். தான் பின்பற்ற வேண்டிய வழியைத் {திட்டத்தைத்} தீர்மானித்து, தனது தலைநகரை ஆள ஏற்பாடுகள் செய்துவிட்டு, தன் தங்கைக்கு {சூர்ப்பனகைக்கு} ஆறுதலளித்து, ஒரு வான்வழிப் பயணத்தை மேற்கொண்டான். திரிகூடம் மற்றும் கால மலைகளைத் தாண்டிய அவன், மகரங்களின் வசிப்பிடமான ஆழம்நிறைந்த நீரின் அகன்ற கொள்கலனைக் {கடலைக்} கண்டான். பிறகு அந்தக் கடலைக் கடந்த பத்து தலை ராவணன், திரிசூலம் ஏந்திய சிறப்புமிக்கத் தேவனுக்கு {சிவனுக்குப்} பிடித்த ஓய்விடமான கோகர்ணத்தை அடைந்தான். அங்கே, ராமன் மீது கொண்ட பயத்தின் காரணமாகத் துறவு வாழ்வை மேற்கொண்டிருந்த தனது பழைய நண்பனான மாரீசனை ராவணன் கண்டான்.

சீதையைக் கடத்திய ராவணன்! – வனபர்வம் பகுதி 276-மாரீசன் ராவணனுக்குப் புத்தி சொல்வது; ராவணன் மாரீசனை மிரட்டுவது; மாரீசன் மானுரு கொண்டு சீதைக்கு ஆசை காட்டுவது; ராமன் மானைத் துரத்துவது; ராமனால் அடிக்கப்பட்ட மாரீசன் ராமனின் குரலில் கதறுவது; அச்சமுற்ற சீதை ராமனைத் தேடி லட்சுமணனைப் போகச் சொல்வது; போகாத லட்சுமணனை சீதை நிந்திப்பது; லட்சுமணன் சென்றதும் ராவணன் வந்து சீதையைத் தூக்கிச் செல்வது..

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ராவணன் வருவதைக் கண்ட மாரீசன் அவனை மரியாதையுடன் வரவேற்று, அவனுக்குப் பழங்களும் கிழங்குகளும் கொடுத்தான். ராவணன் இருக்கையில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்த பிறகு, பேச்சில் வல்லவனான மாரீசன், ராவணன் அருகில் அமர்ந்து, பேச்சில் சொல்திறனுடன் அவனிடம் {ராவணனிடம்}, “உன்னுடைய நிறம் இயற்கைக்கு மாறான சாயலைக் கொண்டிருக்கிறதே, ஓ! ராட்சச மன்னா {ராவணனா}, உன் நாட்டில் அனைத்தும் சரியாக இருக்கிறதா? எது உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது? உனது குடிமக்கள் முன்பு போலவே உன்னிடம் பற்றுறுதியுடன் இருக்கிறார்களா? என்ன காரியம் உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது? அது {அக்காரியம்} சாதிப்பதற்கு எவ்வளவு கடினமானதாக இருப்பினும் அதை நிறைவேறிவிட்டதாக அறி” என்றான்.

கோபத்தாலும் அவமானத்தாலும் கொந்தளித்த இதயம் கொண்ட ராவணன், ராமனின் செயல்களைக் குறித்தும், இனி செய்ய வேண்டியவை குறித்தும் அவனிடம் சுருக்கமாகச் சொன்னான். அவனது கதையைக் கேட்ட மாரீசன், “நீ ராமனைத் தூண்டக்கூடாது. நான் அவனது சக்தியை அறிவேன். அவனது கணைகளின் வேகத்தைத் தாங்கும் திறன்மிக்க மனிதன் எவன்? அந்தப் பெரும் மனிதனே {ராமனே}, எனது தற்போதைய துறவு வாழ்க்கைக்குக் காரணமானவன். உனக்குச் சிதைவையும், அழிவையும் தரும் இத்திட்டத்தைத் தீட்டிய தீய மனம் கொண்டவன் எவன்?” என்று சுருக்கமாகவே கேட்டான். அதற்கு ராவணன் கோபத்துடன் மறுமொழி கூறி, நிந்தித்து {மாரீசனிடம்}, “நீ எனது கட்டளைகளுக்குக் கீழ்படியவில்லையென்றால், நிச்சயம் என் கைகளால் இறப்பாய்” என்றான் {இராவணன்}.

பிறகு மாரீசன் {ராவணனிடம்}, “மரணம் தவிர்க்க முடியாதது எனும்போது, மேன்மையானவன் கையால் இறப்பதே சிறந்தது. எனவே, நான் இவன் கேட்டதைச் செய்வேன்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். பிறகு அவன் {மாரீசன்}, ராட்சசர்கள் தலைவனிடம் {ராவணனிடம்}, “என்னால் முடிந்த உதவியை நான் உனக்கு நிச்சயம் செய்வேன்” என்றான். பிறகு, அந்தப் பத்துத்தலை ராவணன் அவனிடம் {மாரீசனிடம்}, “தங்கக் கொம்புகளும், தங்கத் தோலும் கொண்ட அழகிய மானின் வடிவம் தாங்கிச்சென்று சீதைக்கு ஆசை காட்டு. அப்படி இருக்கும் உன்னைக் காணும் சீதை, உன்னை வேட்டையாட நிச்சயம் ராமனை அனுப்பிவிடுவாள். பிறகு சீதை எனது ஆளுகையின் கீழ் நிச்சயம் வருவாள். நான் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்வேன். பிறகு, தனது மனைவியின் இழப்பால் வருந்தும் தீய ராமன் நிச்சயம் இறப்பான். இவ்வழியில் நீ எனக்கு உதவி செய்!” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட மாரீசன், (எதிர்நோக்கியிருக்கும்) தனது ஈமச்சடங்குகளை முடித்துக் கொண்டு {எள்ளும் தண்ணீரும் இறைத்துவிட்டு}, தனக்கு முன் சென்ற ராவணனைத் தொடர்ந்து சோகமான இதயத்துடன் சென்றான். பிறகு, கடும்சாதனைகள் செய்திருந்த ராமனின் ஆசிரமத்தை அடைந்து, இருவரும் முன்பே தீர்மானித்து வைத்திருந்தபடி செயல்பட்டனர். கமண்டலமும் திரிதண்டமும் தரித்த ராவணன், துறவியின் கோலத்தில் மழித்த {மொட்டைத்} தலையுடன் தோன்றினான். மாரீசன் மானின் வடிவம் கொண்டான். அந்தக் கோலத்தில் மாரீசன் விதேக இளவரசியின் {சீதையின்} முன் தோன்றினான். விதியால் உந்தப்பட்ட அவள், மானுக்குப் பின்னே ராமனை அனுப்பிவிட்டாள். அவளை மனநிறைவு கொள்ளச் செய்யும் நோக்கத்துடன், விரைவாகத் தனது வில்லை எடுத்துக் கொண்ட ராமன், அவளை {சீதையைப்} பாதுகாப்பதற்கு லட்சுமணனை விட்டுவிட்டு, மானைத் துரத்திச் சென்றான்.

வில், அம்பறாத்தூணி மற்றும் கூன்வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, உடும்புத் தோலாலான உறையை விரல்களுக்கு அணிந்த ராமன், நட்சத்திர மானைத் [1] தொடர்ந்த ருத்திரனைப் போல, அந்த மானைத்  தொடர்ந்து சென்றான். ஒருநேரம் தோன்றுவதும், மறுநேரம் அவனது பார்வையில் இருந்து மறைவதுமாக, அந்த ராட்சசன், வெகுதூரத்திற்கு  ராமனைக் கவர்ந்திழுத்துச் சென்றான். கடைசியில், ராட்சசனே மான் என்பதை ராமன் அறிந்த போது, ரகு குலத்தின் அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, தவறாத கணையொன்றை எடுத்து, மானின் உருவம் கொண்டு வந்த அந்த ராட்சசனைக் {மாரீசனைக்} கொன்றான். ராமனின் கணையால் அடிக்கப்பட்ட அந்த ராட்சசன் {மாரீசன்}, ராமனின் குரலைப் பிரதிபலித்து, பெருந்துக்கத்துடன் அழுது, சீதையையும், லட்சுமணனையும் அழைத்தான்.(தார்த மிருகம் – முன்பொரு சமயம், பிரஜாபதி, மானின் உருவம் கொண்டு காமத்தால் தனது மகளைத் தொடர்ந்தார். திரிசூலம் கொண்ட ருத்திரன், பிரஜாபதியைத் தொடர்ந்து சென்று, அவன் தலையை அடித்தான் {துண்டித்தான்}. பிரஜாபதியின் அந்த மான் தலை உடலில் இருந்து அறுக்கப்பட்டு, மிருகசீரிஷம் {மிருகத்தின் அறுக்கப்பட்ட தலை} என்றழைக்கப்படும் நட்சத்திரமாகவோ, விண்மீன்கூட்டமாகவோ மாறியது)

அந்தத் துன்பக் குரலை விதேக இளவரசி {சீதை} கேட்ட போது, அந்தக் குரல் வந்த பகுதியை நோக்கி லட்சுமணனை விரையச் சொல்லி வலியுறுத்தினாள். பிறகு, லட்சுமணன் அவளிடம் {சீதையிடம்}, “அச்சமுள்ள பெண்ணே, நீ அஞ்சக் காரணமேதுமில்லை. ராமனை அடிக்கும் அளவு சக்தியுள்ளவன் எவன்? ஓ! இனிய புன்னகை கொண்டவளே {சீதை}, ஒரு நொடியில் நீ உனது கணவனைக் காண்பாய்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய சீதை, பெண்களுக்கே இயற்கையான அச்சத்துடன், புனிதமான லட்சுமணன் மீது சந்தேகம் கொண்டு, உரக்க அழுத் தொடங்கினாள். பிறகு கணவனுக்கு {ராமனுக்குத்} தன்னை அர்ப்பணித்திருந்த அந்தக் கற்புடைய மங்கை {சீதை}, “ஓ! மூடனே {லட்சுமணா}, உனது இதயத்தில் நீ கொண்டிருக்கும் நோக்கம் எப்போதும் ஈடேறாது! ஆயுதம் கொண்டோ, மலைமேல் இருந்து குதித்தோ, சுடர்விட்டெரியும் நெருப்புக்குள் புகுந்தோ என்னை மாய்த்துக் கொள்வேனேயன்றி, என் கணவர் ராமரைப் புறக்கணித்து, நரியின் பாதுகாப்பில் இருக்கும் பெண்புலியைப் போல, உன்னைப் போன்ற இழிந்தவனுடன் நான் வாழ மாட்டேன்” என்று சொல்லி கடுமையாக ஏசினாள் {சீதை}.

தன் அண்ணனை மிகவும் விரும்புபவனும், நல்ல இயல்பு கொண்டவனுமான லட்சுமணன், இவ்வார்த்தைகளைக் கேட்டு, தனது காதுகளைப் (தன் கைகளால்) பொத்தி, ராமன் சென்ற பாதையில் சென்றான். கோவைப்பழம் {Bimba Fruit} போலச் சிவந்து மென்மையாக இருக்கும் உதடுகளைக் கொண்ட அந்த மங்கையை {சீதையை} ஒரு முறையும் {திரும்பிப்} பாராமல் லட்சுமணன் சென்றான். அதே வேளையில், இதயத்தில் தீமையுடன் இருந்தாலும், மரியாதையான தோற்றத்தை அணிந்திருந்த அந்த ராட்சசனான ராவணன், சாம்பற்குவியால் மூடப்பட்ட நெருப்பு போல இருந்து, தன்னை வெளிப்படுத்தினான். களங்கமற்ற குணம் கொண்ட அந்த மங்கையைப் {சீதையைப்} பலவந்தமாகத் தூக்கிச் செல்ல அவன் துறவியின் கோலத்தில் அங்கே தோன்றினான்.

அவன் {துறவியின் வேடத்திலிருந்த ராவணன்} வருவதைக் கண்ட நல்லொழுக்கம் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, கனிகளும், கிழங்கும், இருக்கையும் கொடுத்து அவனை {ராவணனை} வரவேற்றாள். இவற்றையெல்லாம் அலட்சியம் செய்து, தன் சுயஉருவம் கொண்ட அந்த ராட்சசர்களில் காளை {ராவணன்}, விதேக இளவரசியிடம் {சீதையிடம்}, “ஓ! சீதை, ராவணன் என்ற பெயரில் அறியப்படும் நான், ராட்சசர்களின் மன்னனாவேன். இலங்கை என்ற பெயரில் அறியப்படும் காண்பதற்கினிய என் நகரம், பெருங்கடலைத் தாண்டிய அக்கரையில் இருக்கிறது! அங்கே அழகிய பெண்களுக்கு மத்தியில் என்னுடன் நீ ஒளிர்வாய்! ஓ! அழகிய உதடுகள் கொண்ட மங்கையே {சீதையே}, துறவியான ராமனைப் புறக்கணித்து,  என் மனைவியாவாயாக!” என்ற வார்த்தைகளைச் சொன்னான்.

இவற்றையும், இதே வகையான வேறு வார்த்தைகளையும் கேட்ட அழகிய உதடுகள் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, தனது காதுகளைப் பொத்திக் கொண்டு, அவனிடம் {ராவணனிடம்}, “அப்படிச் சொல்லாதே! நட்சத்திரங்களுடன் கூடிய வானம் இடிந்து விழலாம், இந்தப் பூமித் தூள் தூளாக உடைந்து போகலாம், நெருப்பும் தனது இயல்பை விட்டுக் குளுமையடையலாம், இருப்பினும் என்னால் ரகுவின் வழித்தோன்றலைக் {ராமரைக்} கைவிட முடியாது! யானைக்கூட்டத்தில், நெற்றிப்பொட்டில் {temple} மதம் பெருகும் தலைமை யானையுடன் வாழ்ந்த பெண் யானை எப்படி அதைக் கைவிட்டு காட்டுப்பன்றியுடன் {hog} வாழும்? தேன் அல்லது {இலுப்பை} மலர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிய மதுவை ஒரு முறையே சுவைத்த ஒரு பெண், அரிசியில் தயாரிக்கப்பட்ட இழிந்த சாராயத்தை எப்படி விரும்பி அருந்துவாள்?” என்றாள்.

இந்த வார்த்தைகளைச் சொன்ன அவள் {சீதை}, கோபத்தால் உதடுகள் நடுங்க, உணர்ச்சி வசப்பட்டதால் கரங்கள் இங்கும் அங்கும் ஆட, அந்தக் குடிசைக்குள் நுழைந்தாள். எனினும், அங்கே அவளைத் தொடர்ந்து சென்ற ராவணன், மேலும் முன்னேறுவதில் இருந்து அவளை {சீதையை} இடைமறித்தான். முரட்டுத்தனமாக அந்த ராட்சசனால் வசைபாடப்பட்ட அவள் {சீதை} மயக்கமடைந்தாள். ஆனால் ராவணன் அவளது தலை முடியைப் பற்றிக்கொண்டு காற்றில் எழும்பினான். பிறகு {பிரஸ்ரவணம் என்ற} மலைச்சிகரத்தில் வாழும் ஜடாயு என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய கழுகானவன், இப்படி ராவணனால் தூக்கிச் செல்லப்படும் போது, அழுது கொண்டும், பெருந்துயரத்துடன் ராமனை அழைத்துக்கொண்டுமிருந்த ஆதரவற்ற அந்த மங்கையை {சீதையைக்} கண்டான்.

கவந்தன் வதம்! – வனபர்வம் பகுதி 277-சீதையை  ராவணன் கடத்திச் செல்வதைத்தடுத்துப் போராடிய ஜடாயு; ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்துவது; ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைக் காண்பது; ராவணன் சென்ற திக்கை ஜடாயு குறிப்பால் உணர்த்துவது; கவந்தனிடம் லட்சுமணன் சிக்குவது; கவந்தனின் இரு கைகளை ராமனும் லட்சுமணனும் வெட்டுவது; கவந்தன் ராமனை சக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சம்பாதியைத் தனது உடன்பிறந்த அண்ணனாகவும், அர்ஜுனனைத் {அருணனைத்} தனது தந்தையாகவும் கொண்ட வீரமிக்கக் கழுகு மன்னனான ஜடாயு, தசரதனின் நண்பனாவான். தனது {தன் நண்பனின்} மருமகளான சீதை, ராவணனின் மடியில் இருப்பதைக் கண்ட அந்த விண்ணதிகாரி, அந்த ராட்சச மன்னனை {ராவணனை} எதிர்த்துக் கோபத்துடன் விரைந்தான். அந்தக் கழுகானவன் {ஜடாயு} ராவணனிடம், “மிதிலை இளவரசியை {சீதையை} விடு, அவளை விடு என நான் சொல்கிறேன்! ஓ ராட்சசா, நான் உயிருடன் இருக்கும்போது நீ எப்படி அவளைக் கடத்த முடியும்? நீ எனது மருமகளை {சீதையை} விடவில்லையெனில், என்னிடம் இருந்து நீ உயிருடன் தப்ப மாட்டாய்!” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைச் சொன்ன ஜடாயு, தன் நகங்களைக் கொண்டு அந்த ராட்சச மன்னனைக் {ராவணனைக்} கிழிக்கத் தொடங்கினான். அவனது உடலின் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பகுதிகளில் தனது அலகாலும், சிறகுகளாலும் அடித்து, அவனைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்தான். மலையின் ஊற்றில் இருந்து நீர் வடிவது போல, ராவணனின் உடலில் இருந்து இரத்தம் திரளாகப் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

ராமனுக்கு நன்மை செய்ய விரும்பிய கழுகால் {ஜடாயுவால்} இப்படித் தாக்கப்பட்ட ராவணன், தனது வாளை எடுத்து அந்தப் பறவையின் {ஜடாயுவின்} இரு சிறகுகளையும் அறுத்தெரிந்தான். மேகங்களுக்கு மேலே காட்சித் தரும் பெரும் மலைச்சிகரம் போல இருந்த அந்தக் கழுகு மன்னனைக் {ஜடாயுவைக்} கொன்ற அந்த ராட்சசன் {ராவணன்}, மடியில் சீதையை வைத்துக் கொண்டு காற்றில் உயர எழும்பினான். எங்கெல்லாம் துறவிகளின் ஆசிரமங்கள், தடாகம், ஆறு, குளம் எங்கெல்லாம் தென்பட்டனவோ, அங்கெல்லாம், அந்த விதேக நாட்டு இளவரசி {சீதை}, தனது ஆபரணங்களில் ஒன்றை வீசி எறிந்தாள். ஒரு மலையின் மேல் குரங்களில் முதன்மையான ஐந்து குரங்குகள் இருப்பதைக் கண்ட அந்தப் புத்திக்கூர்மை கொண்ட மங்கை {சீதை}, தன் விலையுயர்ந்த ஆடையில் இருந்து ஒரு பெரும் துண்டை அவர்களுக்கு மத்தியில் வீசி எறிந்தாள். மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த அழகிய துணித்துண்டு, அந்தக் குரங்குகளில் முதன்மையான ஐவர் மத்தியல், மேகத்தில் இருந்து வரும் மின்னல் போலக் காற்றில் படபடத்துக் கொண்டு வந்தது. அதற்குள் அந்த ராட்சசன் {ராவணன்}, காற்றில் {விரைவாகச்} செல்லும் பறவை போல, வானத்தில் வெகு தொலைவு கடந்து சென்றுவிட்டான். விரைவில் அந்த ராட்சசன் {ராவணன்}, உயர்ந்த சுவர்களைக் கொண்டு அனைத்துப் பக்கங்களில் சூழப்பட்டதும், பல வாயில்களைக் கொண்டதும், விஸ்வகிரீத்தால் {விஸ்வகர்மாவால்} கட்டப்பட்டதுமான காண்பதற்கினிய தனது அழகிய நகரத்தைக் கண்டான். பிறகு அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, இலங்கை என்று அழைக்கப்பட்ட தனது நகரத்திற்குள் சீதையுடன் நுழைந்தான்.

இப்படிச் சீதைக் கடத்திச் செல்லப்பட்ட வேளையில், அந்தப் பெரும் மானைக் {மானுருவில் இருந்த மாரீசனைக்} கொன்ற புத்திக்கூர்மை கொண்ட ராமன், திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, (வழியில்) தன் தம்பி லட்சுமணனைக் கண்டான். தன் தம்பியைக் {லட்சுமணனைக்} கண்ட ராமன், “ராட்சசர்கள் நடமாடும் ஒரு காட்டில், விதேக இளவரிசயை {சீதையை} விட்டு விட்டு, நீ எப்படி இங்கே வரலாம்? என்று சொல்லிக் கடிந்து கொண்டான். மான் தோற்றத்தில் வந்த ராட்சசன் தன்னை நெடுந்தூரம் இழுத்துச் சென்றதையும், (சீதையை ஆசிரமத்தில் தனியாக விட்டுவிட்டு வந்த) தன் தம்பியின் வருகையையும் நினைத்துப் பார்த்த ராமன், வேதனையால் நிரம்பினான். லட்சுமணனைக் கடிந்து கொண்டே, அவனை நோக்கி விரைவாக முன்னேறிய ராமன், “ஓ! லட்சுமணா, விதேக இளவரசி {சீதை} இன்னும் உயிருடன் இருக்கிறாளா? அவள் இனி இல்லை என நான் அஞ்சுகிறேன்!” என்றான்.

பிறகு லட்சுமணன் சீதை சொன்ன அனைத்தையும், குறிப்பாகத் தகாத இழிவான மொழிகளை அடுத்தடுத்துச் சொன்னான். எரியும் இதயத்துடன் ராமன் ஆசிரமத்தை நோக்கி ஓடினான். வழியில் மரண வேதனையில் பெரும் மலைபோல் கிடந்த ஒரு பெரிய கழுகைக் கண்டான். அவன் {ஜடாயு}, ஒரு ராட்சசனாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்த காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, பெரும் சக்தியுடன் தனது வில்லை வட்டமாக வளைத்து, தன் தம்பி லட்சுமணனுடன் அவனை {ஜடாயுவை} நோக்கி விரைந்தான். எனினும் அந்தப் பெருங்கழுகானவன் {ஜடாயு}, அந்த இருவரிடமும், “அருளப்பட்டிருப்பீர்கள், நான் கழுகுகளின் மன்னனும், தசரதனின் நண்பனுமாவேன்” என்றான். அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமன் மற்றும் அவனது தம்பி ஆகிய இருவரும் தங்கள் அற்புதமான வில்லை ஒதுக்கி வைத்துவிட்டு, “நம் தந்தையின் பேரை இக்கானகத்தில் சொல்லும் இவன் யார்?” என்றனர்.

பிறகு அவர்கள் அந்த உயிரினத்தை {ஜடாயு என்ற கழுகை}, இரண்டு சிறகுகளும் அற்ற பறவை எனக் கண்டார்கள். அந்தப் பறவையானவன் {ஜடாயு}, சீதைக்காக {போராடி}, ராவணன் கையால் தான் வீழ்ந்ததைச் சொன்னான். பிறகு ராவணன் போன வழியைக் குறித்து ராமன் அந்தக் கழுகிடம் {ஜடாயுவிடம்} விசாரித்தான். அக்கழுகானவன் {ஜடாயு} தனது தலையசைவின் மூலம் பதிலளித்துத் தனது கடைசி மூச்சை விட்டான். ராவணன் தென் திசையில் சென்றான் என்ற அந்தக் கழுகின் குறிப்பைப் புரிந்த கொண்ட ராமன், தன் தந்தையின் நண்பருக்கு {ஜடாயுவிற்கு} அஞ்சலி செலுத்தி, அவனது {ஜடாயுவின்} ஈமச் சடங்குகளை முறைப்படிச் செய்தான்.

பிறகு எதிரிகளைத் தண்டிப்பவர்களான ராமனும் லட்சுமணனும், விதேக இளவரசி {சீதை} கடத்தப்பட்டதால் பெருந்துக்கத்தில் மூழ்கி, தண்டக வனம் செல்லும் தென் பாதையில் பயணித்தனர். அப்படி அவர்கள் போகும் வழியில், தர்ப்பை ஆசனங்கள் சிதறி, நீர்க்குடங்கள் உடைந்து, இலைகளைக் குடைகளாகக் கொண்டிருந்த துறவிகளின் பல ஆசிரமங்கள் ஆளற்று இருப்பதையும், நூற்றுக்கணக்கான நரிகள் அங்கு நிறைந்திருப்பதையும் கண்டனர். சுமித்திரையின் மகனுடன் {லட்சுமணனுடன்} சென்ற ராமன், அந்தப் பெரும் கானகத்தில், அனைத்துத் திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் மான்கூட்டங்களைக் கண்டான். விரைவாகப் பரவும் கானக நெருப்பின் போது {காடு எரியும்போது} கேட்கப்படும் ஒலியைப் போலப் பல்வேறு உயிரினங்களின் ஒலியைக் கேட்டான். விரைவில் அவர்கள் கொடூரமான முகத்தோற்றம் கொண்ட தலையில்லாத ராட்சசன் ஒருவனைக் கண்டனர். மேங்களைப் போலக் கருமையாகவும், மலையைப் போலப் பெரிதாகவும் இருந்த அந்த ராட்சன் சால {ஆச்சா} மரத்தைப் போல அகன்ற தோள்களும், பெரும் கரங்களையும் கொண்டிருந்தான். அவனது மார்பில் இரண்டு பெரிய கண்கள் இருந்தன. வாயின் திறப்பு அவனது அகன்ற தொந்தியில் இருந்தது.

அந்த ராட்சசன் {கவந்தன்} தன் கரம் கொண்டு லட்சுமணனை எந்தச் சிரமமும் இல்லாமல் {எளிதாகப்} பிடித்தான். ராட்சசனால் பிடிக்கப்பட்ட அந்தச் சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, முற்றிலும் குழம்பிப் போய் ஆதரவற்றவனானான். ராமனை நோக்கித் தன் பார்வையைச் செலுத்திய அந்தத் தலையில்லாத ராட்சசன் {கவந்தன்}, தன் உடலில் வாயிருக்கும் பகுதியை நோக்கி லட்சுமணனை இழுக்க ஆரம்பித்தான். அப்போது லட்சுமணன் துயரத்துடன் ராமனிடம், “என் அவலநிலையைப் பாரும்! உமது நாட்டை இழந்தீர், பிறகு நமது தந்தை இறந்தார், சீதை அபகரிக்கப்படாள், இறுதியாக இந்தப் பேரழிவு என்னை அடைந்திருக்கிறது! ஐயோ, விதேக இளவரசியுடன் {சீதையுடன்} கோசலத்துக்கு நீர் திரும்புவதையும், மூதாதையர் வழி வந்த அரியணையில் அமர்ந்து நீர் முழு உலகையும் ஆளப்போவதையும் என்னால் காண முடியாதே! தர்ப்பைப் புற்களாலும், நெற்பொரிகளாலும் {fried paddy}, கருப்புப் பட்டாணிகளாலும் {வன்னித்துளிர்களாலும்} சுத்தப்படுத்தப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்ட நீரில் பட்டமேற்புக்கான குளியலை முடித்து, மேகங்களில் இருந்து வெளிப்படும் சந்திரனைப் போல இருக்கும் உமது முகத்தை, பேறுபெற்றவர்களால்தானே காணமுடியும்!” என்றான் [1]. புத்திகூர்மை கொண்ட லட்சுமணன் இதையும், இதுபோன்ற வார்த்தைகளையும் இதே போன்ற தொனியில் சொல்லிப் புலம்பினான்.

அவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே,
 ‘வெவ்வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய்,
வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்;
செய்வது என் இவண்?’ என, செம்மல் சொல்லுவான்:

தோகையும் பிரிந்தனள்; எந்தை துஞ்சினன்;
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்;
ஆகலின், யான், இனி, இதனுக்கு ஆமிடம்;
ஏகுதி ஈண்டுநின்று, இளவலே!’ என்றான்.கம்பனின் ராமகாதையில், ராமன் புலம்புவதாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த அழகிய வரிகள்.

எனினும் காகுஸ்த குலத்தைச் சேர்ந்த அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, ஆபத்துக்கு மத்தியில் அச்சமற்றவனாக இருந்து, லட்சுமணனிடம், “ஓ! மனிதர்களில் புலியே {லட்சுமணா}, துயருக்கு வழி கொடுக்காதே! நான் இங்கு இருக்கும்போது உன்னை இது {இந்த அசுரன்} என்ன செய்யும்? இவனது வலக்கரத்தை நீ வெட்டு, நான் இவனது இடக்கரத்தை வெட்டுகிறேன்” என்றான். ராமன் இப்படிப் பேசிக் கொண்டே, அந்த அரக்கனின் இடக்கரத்தை, கூர்மையான தனது கூன்வாள் கொண்டு, எள்ளுக்கட்டைக் வெட்டுவதுபோல வெட்டினான். தன் அண்ணன் தன் முன் நிற்பதைக் கண்ட சுமித்திரையின் பலம் பொருந்திய மகன் {லட்சுமணன்}, தன் வாளைக் கொண்டு, அந்த ராட்சசனின் வலக்கரத்தையும் துண்டித்தான். பிறகு அந்த லட்சுமணன், அந்த ராட்சசனை விலாப்புறத்தில் தொடர்ந்து அடிக்கவும் ஆரம்பித்தான். பிறகு தலையில்லாத அந்தப் பெரும் அரக்கன் தரையில் விழுந்து விரைவாக அழிந்தான்.

அப்போது அங்கே அந்த ராட்சசன் உடலில் இருந்து ஒரு தெய்வீக மனிதன் வெளிப்பட்டான். அவன் ஒரு நொடி வானத்தில் நின்று, ஆகாயத்தில் இருக்கும் ஒளி பொருந்திய சூரியனைப் போல அந்தச் சகோதரர்களுக்குக் காட்சியளித்தான். பேச்சில் வல்லவனான ராமன், அவனிடம், “நீ யார்? உன்னை விசாரிக்கும் எனக்குப் பதில் சொல்? எப்படி இது போன்ற ஒன்று நடக்கக்கூடும்? அனைத்தும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றன!” என்றான். ராமனால் இப்படிக்கேட்கப்பட்ட அவன் {ராட்சசன்}, “ஓ! இளவரசே {ராமா}, நான் விசுவாவசு என்ற பெயர் கொண்ட கந்தர்வனாவேன். ஒரு அந்தணரின் சாபத்தால் நான் ராட்சசனின் உருவத்தையும் இயல்பையும் அடைந்தேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ! ராமா, இலங்கையில் வசிக்கும் மன்னன் ராவணனால் சீதை பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டாள். உனக்குத் தனது நட்பைத் தரும் சுக்ரீவனிடம் செல். ரிஷ்யமூகச் சிகரத்திற்கு மிக அருகே புனிதமான நீரும், கொக்குகளும் நிறைந்த பம்பை என்ற பெயர் கொண்ட ஒரு தடாகம் இருக்கிறது. அங்கே பொன் மாலைத் தரித்த குரங்கு மன்னன் வாலியின் தம்பியான சுக்ரீவன், தனது நான்கு ஆலோசகர்களுடன் வசித்து வருகிறான். அவனிடம் சென்று உனது துயரத்தைச் சொல். உன்னைப் போலவே அவல நிலையில் இருக்கும் அவன், தனது உதவியை உனக்கு அளிப்பான். இதைத்தான் {இவ்வளவுமட்டும்தான்} நாம் சொல்ல முடியும். சந்தேகமற நீ ஜனகனின் மகளைக் {சீதையைக்} காண்பாய்! ராவணனையும், பிறரையும் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்} அறிந்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை!” என்றான் [2]. இந்த வார்த்தைகளைக் சொன்ன அந்தப் பெரும் ஒளி கொண்ட தெய்வீகமனிதன் தன்னைப் பார்வையில் இருந்து மறைத்துக் கொண்டான். ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய அந்த இரு வீரர்களும் இதனால் {இக்காட்சியினால்} மிகவும் ஆச்சரியப்பட்டனர்.

கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை

எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது’ என்றான்,அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார்.கவந்தன் ராமனை சுக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது :கம்பனின் மொழியில்

ராமனும், சீதையும் கொண்ட நட்பு! – வனபர்வம் பகுதி 278-சுக்ரீவனோடு நட்பு கொண்ட ராமன் வாலியைக் கொன்றது; கிஷ்கிந்தையில் ராமன் நான்கு மாதங்கள் இருந்தது; அசோகவனத்தில் ராட்சசிகள் பாதுகாப்புடன் சீதையை வைத்த ராவணன்; திரிஜடை சீதையைத் தோழி என்று அழைத்தது; அவிந்தியன் சொன்னது; சீதைக்குத் திரிஜடை நம்பிக்கையூட்டியது..

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சீதை கடத்தப்பட்ட துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த ராமன், பல்வேறு வகையான தாமரைகள் நிறைந்திருந்த பம்பை என்ற தடாகத்தை வெகு தூரம் செல்வதற்கு முன்னரே அடைந்தான். காட்டிலிருந்து வீசிய இனிய, நறுமணமிக்க, குளிர்ந்த காற்றால், திடீரென ராமன் தனது அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைவுகூர்ந்தான். ஓ! பலமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, தன் அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைத்துப் பார்த்த அவன் {ராமன்}, அவளது பிரிவின் நினைவால் மிகவும் துன்பப்பட்டுப் புலம்பி அழுதான். பிறகு சுமித்திரையின் மகன் {லட்சுமணன்} அவனிடம் {ராமனிடம்}, “ஓ! தகுந்தவர்களுக்கு முறையான மரியாதையளிப்பவரே, முறையான வாழ்வு வாழும் முதிர்ந்த மனிதனை நோய் அண்டுவதில்லை. எனவே, இது போன்ற {நோய் போன்ற} மனத்தளர்ச்சி உம்மை அண்டுவதற்கு விடாதீர். ராவணன் குறித்தும், விதேக இளவரசி {வைதேகி, சீதை} குறித்தும் நீர் தகவலைப் பெற்றீர்! இனி உமது முயற்சியாலும், புத்திக்கூர்மையாலும் அவளை விடுவியும்! இப்போது, நாம் மலையின் மேல் இருக்கும் குரங்குகளில் முதன்மையான சுக்ரீவனை அணுகலாம்! உமது சீடனும், அடிமையும், கூட்டாளியுமான நான் உம் அருகில் இருக்கிறேன் {என்பதை மறவாதீர்}. எனவே உம்மை ஆறுதல் படுத்திக் கொள்ளும்” என்றான் {லட்சுமணன்}.

லட்சுமணனால் சொல்லப்பட்ட இவையும், இவைபோன்ற வேறு வார்த்தைகளையும் கேட்ட ராமன் தனது இயற்கையான தன்மையை {இயல்பை} அடைந்து, காரியத்தைச் செய்யத் தொடங்கினான். பம்பையின் நீரில் குளித்து, தன் முன்னோர்களுக்கு நீர்க்காணிக்கைகள் செலுத்திய ராமன், லட்சுமணன் ஆகிய அந்த இரு வீரச் சகோதரர்களும் (ரிஷ்யமுகத்திற்கு) கிளம்பினார்கள். கனிகளும், கிழங்குகளும், மரங்களும் நிறைந்த ரிஷ்யமுகத்தை அடந்தை அந்த வீரர்கள், மலைச் சிகரத்தின் மேலே ஐந்து குரங்குகளைக் காண்டார்கள். அவர்கள் {அந்தச் சகோதரர்கள்} தங்களை அணுகுவதைக் கண்ட சுக்ரீவன், இமய மலை போன்ற பெரிய உருவம் படைத்த தனது ஆலோசகனான {அமைச்சனான} புத்திக்கூர்மை கொண்ட ஹனுமானை அவர்களை வரவேற்க அனுப்பினான். முதலில் ஹனுமானிடம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட அச்சகோதரர்கள், {பின்பு} சுக்ரீவனை அணுகினார்கள். பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராமன் சுக்ரீவனைத் தனது நண்பனாக்கிக் கொண்டான். ராமன் தன் மனதில் இருந்த நோக்கத்தைச் சுக்ரீவனிடம் சொன்ன போது, ராவணனால் தூக்கிச் சொல்லப்படுகையில், குரங்குகளுக்கு மத்தியில் சீதை வீசிய துணித்துண்டை சுக்ரீவன் அவனுக்குக் {ராமனுக்குக்} காட்டினான். அந்தச் சான்றுகளை அவனிடம் {சுக்ரீவனிடம்} இருந்து பெற்றுக் கொண்ட ராமன், பூமியில் உள்ள குரங்குகளுக்கு மன்னனாகச் சுக்ரீவனை நிறுவினான். மேலும் ராமன் போரில் வாலியைக் கொல்வதெனப் பற்றுறுதியை ஏற்றுக்கொண்டான்.

பிறகு ஒரு புரிதலை அடைந்து, ஒருவருக்கொருவர் முழு நம்பிக்கைவைத்த அவர்கள் அனைவரும் (வாலியுடன்) போரிட விரும்பி கிஷ்கிந்தைக்குச் சென்றார்கள். கிஷ்கிந்தையை அடைந்ததும், சுக்ரீவன், மலைவீழாறு போல ஆழ்ந்த கர்ஜனையை உரக்க எழுப்பினான். இந்த அறைகூவலைத்  தாங்கிக் கொள்ளாத வாலி, வெளியே வந்தான். (ஆனால் அவனது மனைவி) தாரை அவனது வழியில் நின்று, “பெரும்பலத்தோடு கூடி சுக்ரீவர் கர்ஜிக்கும் முறை, அவர் ஏதோ துணையை அடைந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என நான் கருதுகிறேன். எனவே நீர் வெளியே செல்வது தகாது!” என்றாள். அவளால் {தாரையால்} இப்படிச் சொல்லப்பட்ட குரங்குகள் மன்னனும், தங்க மாலை அணிந்திருந்தவனும், நாநயமிக்கவனுமான வாலி, நிலவு போன்ற அழகு முகம் கொண்ட தாரையிடம், “அனைத்து உயிரினங்களின் குரலையும் நீ புரிந்து கொள்கிறாய். {எனவே}, பெயரளவுக்கே எனது தம்பியான இவன் {சுக்ரீவன்}, யாருடைய உதவியைப் பெற்றிருக்கிறான் என்பதைச் சிந்தித்துச் சொல்!” என்றான்.

அவனால் {வாலியால்} இப்படிச் சொல்லப்பட்டவளும், சந்திரனின் பிரகாசத்தைக் கொண்டவளும், ஞானமுள்ளவளுமான தாரை, ஒரு நொடியே சிந்தித்த பிறகு தனது தலைவனிடம் {வாலியிடம்}, “ஓ! குரங்குகளின் ஏகாதிபதியே, கேளும்! வில்லாளிகளில் முதன்மையானவனும், பெரும் வலிமை படைத்தவனும், தன் மனைவியை இழந்தவனும், தசரதன் மைந்தனுமான ராமன், தாக்குதலுக்காவும், தற்காப்புக்காகவும் சுக்ரீவருடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறான். சுக்ரீவரின் நோக்கம் வெல்வதற்காகச் சுமித்திரையின் வீழ்த்தப்பட முடியாத மகனும், வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனுமான லட்சுமணனும் அவன் {ராமன்} அருகில் நிற்கிறான். மயிந்தன் {Maind}, திவிவிதன் {Dwivida}, பவனனின் மகனான ஹனுமான் {ஹனுமான்} மற்றும் கரடி மன்னனான ஜாம்பவான் (Jamvuman} ஆகியோர் சுக்ரீவரின் அருகில் ஆலோசகர்களாக {அமைச்சர்களாக} இருக்கிறார்கள். இந்தச் சிறப்புமிக்கவர்கள் அனைவரும், பெரும் பலமும், புத்திக்கூர்மையும் கொண்டவர்களாவர். இவர்கள் அனைவரும் ராமனின் வலிமையையும் சக்தியையும் நம்பி, உம்மை அழிக்கத் தயாராக இருக்கின்றனர்!” என்றாள் {தாரை}.

தன் நன்மைக்காகச் சொல்லப்பட்ட அவளது {தாரையின்} வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரங்குகளின் மன்னன் {வாலி}, அவை அனைத்தையும் மொத்தமாக அலட்சியப்படுத்தினான். பிறகு பொறாமையால் நிறைந்த அவன், சுக்ரீவன் மீது அவள் {தாரை} இதயத்தை நிலைக்க வைத்திருக்கிறாள் எனச் சந்தேகப்பட்டான்! பிறகு தாரையிடம் கடும் வார்த்தைகள் பேசிவிட்டு, குகையை விட்டு வெளியேறி, மால்யவாத மலைகளின் {Malyavat} அருகில் நின்று கொண்டிருந்த சுக்ரீவனின் முன்பு வந்து, “முன்பு என்னால் அடிக்கடி வீழ்த்தப்பட்ட நீ, உனது உயிரை விரும்பியதால், என்னுடன் நீ கொண்ட உறவு முறைக்காக, {உயிருடன்} தப்பிச் செல்ல என்னால் அனுமதிக்கப்பட்டாய். இவ்வளவு விரைவாக உன்னை மரணத்தை விரும்ப வைத்தது எது?” என்று கேட்டான்.

வாலியால் இப்படிச் கேட்கப்பட்ட எதிரிகளைக் கொல்பவனான சுக்ரீவன், என்ன நடந்தது என்பதை ராமனுக்குச் சொல்வது போல, தன் அண்ணனிடம் {வாலியிடம்} “ஓ! மன்னா, உன்னால் மனைவியையும், நாட்டையும் இழந்த நான், உயிர் வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது? அதற்காகவே {மனைவிக்காகவும், நாட்டுக்காகவுமே} நான் வந்திருக்கிறேன் என்பதை அறி!” என்ற சிந்தனைக்குரிய வார்த்தைகளைப் பேசினான். பிறகு, இது போலவும், வேறு வார்த்தைகளாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட வாலியும், சுக்ரீவனும் மோதலுக்கு விரைந்தனர். பிறகு அவர்கள் ஆச்சா மரங்கள், பனை மரங்கள் மற்றும் கற்களைக் கொண்டு போரிட்டுக் கொண்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பூமியில் அடித்துக் கீழே வீழ்த்தினர். காற்றில் உயர குதித்த அவர்கள், தங்கள் கை முட்டிகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். தங்கள் நகங்களையும் பற்களையும் கொண்டு ஒருவரையொருவர் சிதைத்துக் கிழித்தனர். அவர்கள் இருவரும் ரத்ததால் மூடப்பட்டிருந்தனர் {ரத்தத்தில் நனைந்தனர்}.

அவர்கள் இருவரும் பூத்திருக்கிற புரசமரம் {Kinshuka} போல அப்போது விளங்கினார்கள். அவர்கள் அப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது (தோற்றத்தில்) அவர்களிடையே ஒரு வேற்றுமையும் காணப்படவில்லை. பிறகு ஹனுமான், சுக்ரீவனின் கழுத்தில் மலர்களால் ஆன மாலையை அணிவித்தான். பிறகு அந்த வீரன் {சுக்ரீவன்}, வரிசையான மேகங்களுடன் கூடிய மால்யா {மால்யாவாதம்} எனும் பெரும் சிகரத்தைப் போல அழகாக, கழுத்திலிருந்த அந்த {மலர்} மாலையால் ஒளிர்ந்தான். அந்தக் குறிப்பால் சுக்ரீவனை அடையாளம் கண்ட ராமன், விற்களில் முதன்மையான தனது பெரும் வில்லை எடுத்து, தனது இலக்காக வாலியைக் குறிவைத்தான். ராமனின் வில்லில் இருந்து புறப்பட்ட அந்த நாணொலி, பொறியைப் {இயந்திரத்தைப்} போல ஒலி பெருக்கியது. அக்கணையால் மார்பில் துளைக்கப்பட்ட வாலி, அச்சத்தில் நடுங்கினான். இதயம் துளைக்கப்பட்ட வாலி ரத்தம் கக்க ஆரம்பித்தான். பிறகு தன் முன் நின்ற ராமனையும், அவன் {ராமனின்} அருகில் நின்ற சுமித்திரையின் மகனையும் {லட்சுமணனையும்} கண்டான். காகுஸ்த குலத்தவனை {ராமனை} ஏசிய வாலி தரையில் விழுந்து உணர்வற்றவன் ஆனான். சந்திரனைப் போன்ற பிரகாசமுடைய தனது தலைவன் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைத் தாரைக் கண்டாள். இப்படி வாலி கொல்லப்பட்ட பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையையும், அதனுடன் சேர்த்து அழகிய நிலவு போன்ற முகம் கொண்ட தாரையையும் மீண்டும் அடைந்தான். பிறகு மால்யவாதமலையின் அழகிய மார்பில் நான்கு மாதங்கள் வசித்த புத்திக்கூர்மை கொண்ட ராமன், சுக்ரீவனால் எப்போதும் சரியான முறையில் வழிபடப்பட்டான்.

அதே வேளையில், காமத்தால் உந்தப்பட்ட ராவணன், தனது நகரான இலங்கையை அடைந்ததும், அசோகங்களின் {அசோகர மரங்கள் நிறைந்த} காட்டில், நந்தனத்தை ஒத்திருக்கும் வசிப்பிடத்தில், துறவிகளின் ஆசிரமம் போல இருக்கும் ஒரு ஆசிரமத்தில் சீதையை அமர்த்தினான். அகன்ற கண்கள் கொண்ட சீதை, கனிகளையும், கிழங்குகளையும் கொண்டு வாழ்ந்து, துறவியின் ஆடை (குறிப்பிட்ட வகை ஆடை) உடுத்தி, உண்ணா நோன்புகளுடன் கூடிய தவங்களைப் பயின்று, தனது கணவனின் பிரிவை எண்ணி நாளுக்கு நாள் மெலிந்து, தனது நாட்களைத் துன்பகரமாகக் கழித்தாள். ராட்சசர்களின் மன்னன் {ராவணன்}, சீதைக்குப் பாதுகாவலாகப் பராசங்களையும், வாள்களையும், சூலங்களையும், போர்க்கோடரிகளையும், தண்டாயுதங்களையும், எரிகொள்ளிகளையும் தாங்கிய பல ராட்சசிகளை நியமித்தான். அவர்களில் சிலர் இரண்டு கண்களுடனும், சிலர் மூன்றுடனும் இருந்தனர். சிலருக்கு நெற்றியில் கண்கள் இருந்தன. சிலருக்கு நீளமான நாக்கும், சிலருக்கு நாக்கு இல்லாமலும் இருந்தது. சிலருக்கு மூன்று கொங்கைகளும், சிலருக்கு ஒரே காலும் இருந்தன. சிலருக்குத் தலையில் மூன்று சடைகள் இருந்தன. சிலர் ஒரே கண்ணைக் கொண்டிருந்தனர். இவர்களும், சுடர்மிகும் கண்கள் கொண்ட பிறரும், ஒட்டகத்தின் முடி போல மேல்நோக்கிய முடி கொண்டவர்களும், சீதையின் அருகில் நின்று கொண்டு, இரவும் பகலும் கவனமாக அவளைச் சூழ்ந்திருந்தனர். பயங்கரக் குரலும் கொடூரத் தன்மையும் கொண்ட அந்தப் பெண்பிசாசங்கள், அந்த அகன்ற கண் கொண்ட மங்கையிடம் {சீதையிடம்} கடுமையான தொனியிலேயே பேசினார்கள். அவர்கள் {அந்தப் பிசாசுகள்}, “நமது தலைவனை அவமதித்து இங்கே வசிக்கும் இவளைத் தின்றுவிடுவோம், இவளைச் சிதைப்போம், இவளைத் துண்டு துண்டாகக் கிழிப்போம்” என்றனர்.

தன் தலைவனின் பிரிவால் துன்பம் நிறைந்த சீதை ஆழமான பெருமூச்சுவிட்டு, அந்த ராட்சசிகளிடம், “மரியாதைக்குரிய மங்கையரே {ராட்சசிகளே}, தாமதமில்லாமல் என்னை உண்ணுங்கள்! நீலநிறத்தவரும், அலைபாயும் கூந்தல் கொண்டவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்கள் கொண்டவருமான எனது கணவர் {ராமர்} இல்லாது நான் வாழ விரும்பவில்லை! உணவருந்தாமல், உயிர்மேல் கிஞ்சிற்றும் ஆசையில்லாமல், வேல மரத்திற்குள்ளிருக்கும் பெண் பாம்பு (ஒடுங்கி) {பனிக்ககாலத்தில் ஓய்வெடுக்கப் பாம்பு மரப்பொந்துக்குள் உறங்குதல்} போல இருந்து, என் அங்கங்களை மெலியச் செய்வேன். ரகு குல வழித்தோன்றலைத் {ராமரைத்} தவிர நான் வேறு எந்த மனிதனின் பாதுகாப்பையும் எப்போதும் நாடமாட்டேன் என்பது அறியுங்கள். இது நிச்சயம். இதை அறிந்த பிறகு, தகுந்ததென்று நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள்!” என்றாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட கரடுமுரடான குரல் கொண்ட அந்த ராட்சசிகள் ராட்சசர்களின் மன்னனிடம் {ராவணனிடம்} சென்று அவள் {சீதை} சொன்னது அனைத்தையும் சொன்னார்கள்.

இப்படி அந்த ராட்சசிகளை அனைவரும் சென்ற பிறகு, அவர்களில் {ராட்சசிகளில்} ஒருத்தியும், அறம்சார்ந்த, ஏற்புடைய பேச்சு கொண்டவளும், திரிஜடை என்ற பெயரால் அறியப்படுபவளுமான ராட்சசி, விதேக இளவரசிக்கு {சீதைக்கு} ஆறுதல் கூறத் தொடங்கினாள். அவள் {திரிஜடை}, “ஓ! சீதையே கேள்! நான் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன்! ஓ தோழி, நான்சொல்வதை நம்பு! ஓ! அழகிய இடை கொண்டவளே, உனது அச்சத்தை விலக்கி, நான் சொல்வதைக் கேள். புத்திக்கூர்மை கொண்டவனும், ராட்சசர்களின் முதிய தலைவனுமான ஒருவன் அவிந்தியன் என்ற பெயரில் அறியப்படுகிறான். அவன் {அவிந்தியன்}, ராமனின் நலத்தை எப்போதும் நாடுபவனாவான். அவன் {அவிந்தியன்}, உனக்காக என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

{அவிந்தியன்} “என் பெயரைச் சொல்லி சீதைக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டி, நான் சொன்னதாக, “உனது கணவனான வலிமைமிக்க ராமன் நன்றாக இருக்கிறான். அவனை லட்சுமணன் காக்கிறான். ரகுவின் அருளப்பட்ட அந்த வழித்தோன்றல் {ராமன்} ஏற்கனவே குரங்குகள் மன்னன் சுக்ரீவனின் நட்பைப் பெற்று, உனக்காகச் செயல்படத் தயாராக இருக்கிறான். மேலும், ஓ! அச்சம் கொண்ட மங்கையே, முழு உலகும் நிந்திக்கும் ராவணனைக் கண்டு அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதே. ஓ! மகளே, அவன் {ராவணன்} நளகூபரனிடம் {நளகுபேரனிடம்} பெற்ற சாபத்தின் காரணமாக நீ பாதுகாப்பாகவே இருப்பாய். உண்மையில், இந்தப் பாவி {ராவணன்}, தனது மருமகளான ரம்பையைக் களங்கப்படுத்தியதால் முன்பே சபிக்கப்பட்டிருக்கிறான். இந்தக் காமாந்தகப்பாவி {ராவணன்}, எந்தப் பெண்ணையும் பலவந்தமாக அடைவதற்கு சக்தியுடையவனல்ல. சுக்ரீவனால் பாதுகாக்கப்பட்டு, புத்திக்கூர்மையுள்ள சுமித்திரையின் மகனால் {லட்சுமணனால்} பின்தொடரப்பட்டு விரைவாக வரும் உனது கணவன் {ராமன்}, உன்னை மிக விரைவில் மீட்டுச் செல்வான் என்று சொல்” என்றான் {அவிந்தியன்}.

ஓ! மங்கையே {சீதையே}, தீய சகுனமாக, புலஸ்திய குலத்தின் தீய மனம் கொண்ட பாவியின் அழிவைக் குறிக்கும் மிகப் பயங்கரக் கனவொன்றை நான் {திரிஜடை} கண்டேன். இழிந்த செயல்கள் புரியும் இரவு உலாவியான இவன், உண்மையில் மிகத் தீயவனும் கொடூரனுமாவான். தனது இயல்பின் குறைபாடுகளால் அவன் {ராவணன்} தீய நடத்தையையும், பயங்கரங்களையும் மேற்கொள்கிறான். விதியால் தனது அறிவை இழந்த அவன் {ராவணன்}, தேவர்களுக்கே அறைகூவல் விடுகிறான். அவனது வீழ்ச்சியைக் குறிக்கும் அனைத்து குறியீடுகளையும் நான் எனது பார்வையில் {அந்தக் கனவில்} கண்டேன். தலைகள் மழிக்கப்பட்ட அந்தப் பத்துத் தலையன் {the Ten-headed} {தசக்ரீவன்}, உடலெங்கும் எண்ணெய் பூசி, சகதியில் மூழ்கினான். அடுத்த நொடியில் கழுதைகளால் இழுக்கப்பட்ட வாகனத்தில் கூத்தாடினான். முழுவதும் நிர்வாணமாக, தலை மழிக்கப்பட்டவர்களாக, சிவப்பு மலர்மாலைகள் தரித்து, களிம்பு சிவப்பு மேற்பூச்சு} பூசியிருந்த கும்பகர்ணனும், மற்றவர்களும், தென்திசை நோக்கி ஓடினார்கள்.

தலைக்கு மேல் குடையுடனும் தலைப்பாகை அணிந்து, வெண்மாலைகள் தரித்து, களிம்பு {வெண்சந்தனம்} அணிந்திருந்த விபீஷணன் மட்டுமே, வெண்மலையின் உச்சியில் ஏறியதை நான் கண்டேன். வெண்மாலைகள் தரித்து, களிம்பு {வெண்சந்தனம்} அணிந்திருந்த அவனது நான்கு ஆலோசகர்களும் {அமைச்சர்களும்} அவனுடன் உச்சிக்கு ஏறுவதையும் நான் கண்டேன். எதிர்வரும் பயங்கரத்தில் இவர்கள் மட்டுமே காக்கப்படுவார்கள் என்பதையே இது குறிக்கிறது. ராமனின் கணைகளால், இந்தக் கடல் சூழ்ந்த பூமி மறைக்கப்படுப்போகிறது. ஓ! மங்கையே, உனது கணவன் {ராமன்}, தனது புகழால் இந்த முழு உலகையும் நிறைப்பான். (தனது கணைகளால்), லட்சுமணன் அனைத்துப் புறங்களையும் எரிப்பதையும், எலும்புக்குவியல் மீது ஏறி தேனும், கண்ணமுதும் பருகுவதையும் கண்டேன். ஓ! மங்கையே, அழுது கொண்டு, இரத்தத்தால் நனைந்து, ஒரு புலியால் பாதுகாக்கப்பட்ட நீ, வடதிசை நோக்கி ஓடுவதையும் கண்டேன்! ஓ! விதேக இளவரசியே, ஓ! சீதை, தம்பியின் துணையுடன் இருக்கும் ரகு குல வழித்தோன்றலான உனது கணவனுடன் {ராமனுடன்} மீண்டும் சேர்ந்து, நீ விரைவில் மகிழ்ச்சியை அடைவாய்!” என்றாள் {திரிஜடை}.

இளமான்களின் கண்களைக் கொண்ட அந்தப் பெண் {சீதை}, திரிஜடையின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் தலைவனுடன் சேரும் நம்பிக்கையை மீண்டும் வளர்க்க ஆரம்பித்தாள். கடுமையும் கொடுமையும் நிறைந்த பிசாசங்களான {ராவணனிடம் சென்ற} அந்தப் பாதுகாவலர்கள், திரும்பி வந்த போது, முன்பு போலவே திரிஜடையுடன் அமர்ந்திருக்கும் அவளைக் {சீதையைக்} கண்டனர்.”

சீதையை அணுகிய ராவணன்! – வனபர்வம் பகுதி 279-அசோக வனத்தில் சோகமாக இருக்கும் சீதையை அணுகி, தன்னைக் கணவனாக ஏற்கும்படி ராவணன் கேட்பது; சீதை ராவணனை அவமதிப்பது; ராவணன் அங்கிருந்து மறைந்து, தான் விரும்பிய இடம் சென்றது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தன் தலைவனை {ராமனைப்} பிரிந்த துயரத்தால் தாக்கப்பட்டு, எளிய ஆடை (குறிப்பிட்ட வகையிலான துணி) உடுத்தி, (மணிக்கட்டில் அணியும் திருமண நூல் {தாலியில்} கோர்க்கப்பட்டிருந்த) ஒரே ஒரு நகை மட்டும் அணிந்தபடி அங்கே {அசோக வனத்தில்} வசித்துவந்த கற்புடைய சீதை, ஒரு கல்லில் அமர்ந்து கொண்டு இடைவிடாமல் அழுது கொண்டிருந்தாள். அப்படி அமர்ந்திருந்த அவளுக்காக ராட்சசிகள் காத்திருந்தனர். அப்போது, காம தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்ட ராவணன் அங்கே அவள் முன்னிலையில் வந்து நின்றான். போர்க்களத்தில், தேவர்களாலும், தானவர்களாலும், கந்தர்வர்களாலும், யக்ஷர்களாலும், கிம்புருஷர்களாலும் வெல்லப்பட முடியாத அவன் {ராவணன்}, ஆசையில் எரிந்தான். தெய்வீக ஆடைகள் உடுத்தி, அழகிய அம்சங்களுடன், ரத்தினம் பொருந்திய காதுகுண்டலங்களும், அழகிய மாலையும், மகுடமும் தரித்து, இளவேனிற்காலத்தின் {வசந்த காலத்தின்} உருவகமாக அசோக வனத்துக்குள் அவன் {ராவணன்} நுழைந்தான். கவனமாக {அழகாக} உடுத்தியிருந்த ராவணன், இந்திரனின் நந்தவனத்தில் உள்ள கல்ப மரத்தைப் {கற்பகவிருக்ஷம்} போல இருந்தான். ஆனால், அனைத்தையும் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், கல்லறைக்கு மத்தியில் இருக்கும் அழகிய ஆல மரத்தைப் போலவே, அவன் {ராவணன்}, அவளுக்குப் {சீதைக்குப்} பயத்தை ஏற்படுத்தினான். இரவு உலாவியான அவன், அந்தக் கொடியிடை மங்கையின் {சீதையின்} முன்னிலையை அடைந்து, ரோகிணியின் {ரோகிணி நட்சத்திரத்தின்} முன்பு நிற்கும் சனிக்கிரகம் போல இருந்தான்.

பூக்களைத் தனது சின்னமாகக் கொண்ட தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்ட அவன் {ராவணன்}, பெண் வெள்ளாடு போல அச்சத்துடன் இருந்த அழகிய இடை கொண்ட அந்த ஆதரவற்ற மங்கையை {சீதையை} அணுகி, “ஓ! சீதை, உன் தலைவனை {ராமனை} நீ வெகுவாக மதிக்கிறாய்! ஓ! மென்மையான உறுப்புகள் கொண்டவளே {மென்மையானவளே}, என்னிடம் கருணை காட்டு. {இந்தப் பணிப்பெண்கள்} இப்போது உன் மேனியை அழகூட்ட அனுமதி கொடு. ஓ! அருமையானவளே, என்னை உன் தலைவனாக ஏற்றுக் கொள். ஓ! மிக அழகான நிறம் கொண்டவளே, விலையுயர்ந்த ஆடை ஆபரணகளைத் தரித்து, எனது வீட்டின் பெண்கள் அனைவரிலும் முதன்மையான இடத்தைப் பெறு. நான் கொண்டிருக்கும் அவர்களில் பலர், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் மகள்களாவர். நான் பல தானவ மற்றம் தைத்திய மங்கையருக்குத் தலைவனாக இருக்கிறேன். பதினான்கு கோடி {14,00,00,000_One hundred and forty million} பிசாசங்களும், அதைவிட இரண்டு மடங்கு மனிதனை உண்ணும் பயங்கர ராட்சசர்களும், அதைவிட மூன்று மடங்கு யக்ஷர்களும் என் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களில் சிலர் கரூவலத்தலைவனான {குபேரனின்} என் அண்ணனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ஓ! அழகிய தொடைகள் கொண்டவளே {சீதை}, என் மதுபான கூடத்தில் {Drinking Hall}, கந்தர்வர்களும் அப்சரசுகளும், என் அண்ணனுக்காகக் காத்திருப்பது போலவே எனக்காகக் காத்திருக்கின்றனர். மேலும், மறுபிறப்பாள {பிராமண} முனிவரான உயர்ந்த தவத்தகுதி படைத்த விஸ்வரசின் மகன் நான். நான் இந்த அண்டத்தின் ஐந்தாவது ஆட்சியாளனாக {லோகபாலகனாக} புகழ்பெற்றிருக்கிறேன். ஓ! அழகிய மங்கையே {சீதையே}, நான் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல மிகச்சிறந்த உணவும் பானமும் கொள்கிறேன். காட்டு வாழ்வின் தொடர்ச்சியாக உனக்கு ஏற்பட்ட தொல்லைகள் எல்லாம் நின்று போகட்டும். ஓ! அழகிய இடை கொண்டவளே {சீதை}, மண்டோதரியைப் போலவே, நீ எனது ராணியாகு” என்ற வார்த்தைகளைக் கூறினான் {ராவணன்}.

அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட விதேகத்தின் அந்த அழகிய இளவரசி {சீதை}, அப்புறம் திரும்பிக்கொண்டு, புல்லைவிட இழிந்தவனாக அவனை {ராவணனைக்} கருதி, அந்த இரவு உலாவிக்கு மறுமொழி கூறினாள். விதேக இளவரசியான அந்த அழகிய இடை கொண்ட பெண் {சீதை}, தொடர்ந்து அழுததால் ஏற்பட்ட மங்கலமற்ற கண்ணீர், அவளது பருத்த கச்சிதமான மார்புகளை அந்நேரத்தில் நனைத்தது. தன் கணவனைத் தேவனாகக் {தெய்வமாகக்} கருதிய அவள் {சீதை}, அந்த இழிந்த பாவியிடம் {ராவணனிடம்}, “ஓ! ராட்சசர்களின் மன்னா {ராவணா}, சுத்தமாகப் பேறு இல்லாததாலேயே உன்னால் பேசப்படும் இத்தகு துக்ககரமான வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. ஓ! சிற்றின்பத்தை விரும்பும் ராட்சசா {ராவணா}, என்னிடம் இருந்து உனது இதயத்தை விலக்கு. நீ அருளப்பட்டிருப்பாயாக! நான் வேறு ஒருவரின் மனைவி; கணவருக்கே என்னை எப்போதும் அர்ப்பணித்திருக்கிறேன். எனவே, நான் உன்னால் அடையத்தகாதவள்! ஆதரவற்ற மானுடப் பெண்ணான நான், உன் மனைவி ஆவதற்குத் தகுந்தவளல்ல! விருப்பமில்லாத பெண்ணை வன்முறையால் அடைவதால், நீ அடையப்போகும் மகிழ்ச்சிதான் என்ன? உனது தந்தை ஒரு ஞானமுள்ள அந்தணர்; பிரம்மனுக்குப் பிறந்தவர்; படைப்புத் தலைவனுக்கு {பிரம்மனுக்கு} நிகரானவர்! எனவே, அண்ட ஆட்சியாளனுக்கு {லோகபாலனுக்கு} நிகரான நீ ஏன் அறத்தைக் கடைப்பிடிக்கக்கூடாது? மகேஸ்வரனுக்கு {சிவனுக்கு} நண்பனும், யக்ஷர்களின் மன்னனும், கருவூலத் தலைவனுமான உனது அண்ணனை {குபேரனை} அவமதித்துவிட்டு, நீ எப்படி வெட்கப்படாமல் இருக்கிறாய்?” என்று கேட்டாள்.

இந்த வார்த்தைகளைச் சொன்ன சீதை, ஆடையால் தனது கழுத்தையும் முகத்தையும் மூடிக் கொண்டு, கலக்கத்தால் தன் மார்புகள் நடுங்க அழத்தொடங்கினாள். அழுது கொண்டிருந்த அந்த மங்கையின் {சீதையின்} தலையில் இருந்து விழுந்த, நன்றாகப் பின்னப்பட்ட, மிகக் கருமையான, பளபளப்பான நீண்ட சடை பார்ப்பதற்குக் கருநாகம் போல இருந்தது. சீதையால் சொல்லப்பட்ட இந்தக் கொடுஞ்சொற்களைக் கேட்ட அந்த முட்டாள் ராவணன், இப்படி அவளால் {சீதையால்} நிராகரிக்கப்பட்டாலும், அவளிடம் {சீதையிடம்} மீண்டும், “ஓ! மங்கையே, மகரத்தைச் சின்னமாகக் கொண்ட தேவன் என்னைச் சுட்டெரிக்கட்டும். இருப்பினும், ஓ! இனிய புன்னகையும், அழகிய இடையும் கொண்டவளே {சீதை}, விருப்பமற்ற உன்னை நான் எக்காரணம் கொண்டும் அணுக {அடைய} மாட்டேன். எங்களுக்கு உணவாக இருக்ககூடிய மனிதனான ராமனை இன்னும் உயர்வாகக் கருதும் உன்னை நான் என்ன செய்யக்கூடும்?” என்று சொன்னான். களங்கமற்ற மங்கையிடம் {சீதையிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்ன ராட்சச மன்னன் {ராவணன்}, பார்த்துக் கொண்டிருக்கும்போதே காட்சியில் இருந்து மறைந்து, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றான். ராட்சசிகளால் சூழப்பட்டிருந்த சீதை, திரிஜடையால் மென்மையாக நடத்தப்பட்டு துயரத்துடன் அங்கு வசிக்கத் தொடங்கினாள்.

கண்டேன் சீதையை ! – வனபர்வம் பகுதி 280-கோபம் கொண்ட ராமன், லட்சுமணனை சுக்ரீவனிடம் அனுப்பியது; சுக்ரீவனின் முன்னேற்பாடுகளை லட்சுமணன் அறிந்து கொள்வது; சீதையைக் கண்டு திரும்பிய ஹனுமான்; ஹனுமான் இலங்கையில் தான் கண்டதை ராமனிடம் விளக்கியது; சீதை கொடுத்தனுப்பிய மணியைப்பற்றி ராமனிடம் ஹனுமான் சொன்னது…

மார்க்கண்டேயர் {{யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதேவேளையில், ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, சுக்ரீவனால் விருந்தோம்பலுடன் நடத்தப்பட்டு, தினமும் தெளிந்த நீல வானத்தைக் கண்டபடி, மால்யவாத மலையின் மார்பில் தன் தம்பியுடன் தொடர்ந்து வசித்து வந்தான். ஒரு நாள் இரவில், மேகங்களற்ற தெரிந்த வானத்தில் கோள்களாலும், விண்மீன் கூட்டத்தாலும் சூழப்பட்ட பிரகாசமான சந்திரனை மலை மேல் இருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, தாமரை, அல்லி மற்றும் அதே வகையைச் சார்ந்த மலர்களின் நறுமணத்தைச் சுமந்த வந்த குளுமையான தென்றலால் அந்த எதிரிகளைக் கொல்பவன் {ராமன்} திடீரென எழுச்சியடைந்தான்.

பிறகு அறம்சார்ந்த ராமன், சீதை சிறைபிடிக்கப்பட்டு ராட்சசனின் வசிப்பிடத்தில் இருப்பதை நினைத்து மனச்சோர்வடைந்து, வீரனான லட்சுமணனிடம் காலையில், “லட்சுமணா போ. ஓ! ரகு குலத்தை நிலைநிறுத்துபவனே {லட்சுமணா}, சொந்த நலன்களை மட்டுமே நன்கு புரிந்து கொள்பவனும், இப்போது சிற்றின்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவனும், என்னால் அரியணையில் அமர்த்தப்பட்டவனும், தன் குலத்தின் இழிந்த மூடனும், {கொண்டை முசுறுகள்}, குரங்குகள், கரடிகள் ஆகியற்றால் முழு மனதுடன் நம்பப்படுபவனுமான நன்றிமறந்த அந்தக் குரங்குகள் மன்னனைத் {சுக்ரீவனை} தேடி கிஷ்கிந்தைக்குச் செல். ஓ! லட்சுமணா, துயரத்தில் மூழ்கியிருக்கும் என்னை அந்த இழிந்தவன் மறந்துவிட்டான். அதனால்தான், அந்தக் குரங்குகளில் இழிந்தவன் {சுக்ரீவன்} நன்றி மறந்திருக்கிறான் என்று கருதுகிறேன். மந்த புத்தியினால், தனக்கு இத்தகு சேவை செய்தவனை {என்னை} அவமதிக்கும் வகையில், தான் ஏற்ற உறுதியைச் செய்வதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறான் என நினைக்கிறேன். மந்தமாக, புலனின்பங்களில் அவன் உருண்டு கொண்டிருப்பதை நீ கண்டால், அனைத்து உயிர்களின் பொது இலக்குக்கு {யமலோகத்துக்கு}, வாலி சென்ற பாதையில் நீ அவனை {சுக்ரீவனை} அனுப்பி வைக்க வேண்டும்! மறுபுறம் அந்தக் குரங்குகளில் முதன்மையானவன் {சுக்ரீவன்}, நம் காரியத்தைச் செய்வதில் மகிழ்ச்சி கொண்டிருந்தானானால், ஓ! காகுஸ்தன் வழித்தோன்றலே {லட்சுமணா}, நீ அவனை {சுக்ரீவனை} என்னிடம் அழைத்து வா! விரைந்து செல். தாமதிக்காதே!” என்றான் {ராமன்}.

மூத்தோர் நலனில் அக்கறையிலும் அவர்களின் கொடுக்கும் உத்தரவுகளிலும் எப்போதும் கவனமாக இருப்பவனான லட்சுமணன் தனது அண்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், கைகளில் நாணுடன் கூடிய அழகிய வில்லுடனும், கணைகளுடனும் கிளம்பிச் சென்றான். கிஷ்கிந்தையின் வாயிலை அடைந்து, யாராலும் தடுக்கப்படாமல் அந்நகருக்குள்ளே நுழைந்தான். அவன் {லட்சுமணன்} கோபமாக இருப்பதை அறிந்த குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்}, அவனை வரவேற்பதற்காக முன் சென்றான். குரங்குகள் மன்னனான சுக்ரீவன் தனது மனைவியுடனும், எளிய இதயத்துடனும், மகிழ்ச்சியுடனும், உரிய மரியாதைகள் செய்து அவனை {லட்சுமணனை} வரவேற்றான். அந்த அச்சமற்ற சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ராமன் சொன்னதை அவனிடம் {சுக்ரீவனிடம்} சொன்னான். ஓ! பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அனைத்தையும் விவரமாகக் கேட்ட குரங்குகள் மன்னன் சுக்ரீவன், தனது மனைவியுடனும், பணியாட்களுடனும் கரங்கள் கூப்பி, மனிதர்களில் களிறான லட்சுமணனிடம் மகிழ்ச்சியாக, “ஓ! லட்சுமணா, நான் தீயவனோ, நன்றிகெட்டவனோ, அறமற்றவனோ கிடையாது! சீதை சிறைசெய்யப்பட்டிருக்கும் இடத்தை அறிய நான் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைக் கேள்! விடாமுயற்சி கொண்ட குரங்குகளை நான் அனைத்து திசையிலும் அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரு மாதத்திற்குள் திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறேன். ஓ! வீரா {லட்சுமணா}, காடுகள், மலைகள், கடல்கள், கிராமங்கள், நகரங்கள், பட்டணங்கள், சுரங்கங்கள் நிறைந்த முழு உலகத்தையும் அவர்கள் தேடுவார்கள். ஒரு மாதம் முடிய இன்னும் ஐந்து இரவுகளே இருக்கின்றன. பிறகு, ராமனோடு சேர்ந்த நீ பெரிய மகிழ்ச்சியான செய்தியைக் கேட்பாய்!” என்றான்.

புத்திக்கூர்மையுள்ள குரங்குகள் மன்னனால் {சுக்ரீவனால்} இப்படிச் சொல்லப்பட்ட, உயர் ஆன்ம {மகாத்மாவான} லட்சுமணன் அமைதியடைந்து, பதிலுக்குச் சுக்ரீவனை வழிபட்டான். பிறகு சுக்ரீவனையும் அழைத்துக் கொண்டு, மால்யவாத மலையின் மார்பில் இருந்த ராமனிடம் திரும்பினான். அவனை {ராமனை} அணுகிய லட்சுமணன், தங்கள் காரியத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டிருப்பவை குறித்துத் தெரிவித்தான். விரைவில் வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளைக் கவனமாகத் தேடிப் பார்த்துவிட்டு, ஆயிரக்கணக்கான குரங்கு தலைவர்கள், திரும்பத் தொடங்கினார்கள். ஆனால் தெற்கே சென்றவர்கள் யாரும் திரும்பவில்லை. ஏற்கனவே திரும்பி வந்தவர்கள், தாங்கள் கடல்களை இடைக்கச்சையாக அணிந்த முழு உலகத்தையும் தேடியும் தங்களால் விதேக இளவரசியையோ {சீதையையோ}, ராவணனையோ காண முடியவில்லை என்று சொன்னார்கள். இதனால் காகுஸ்தன் குல வழித்தோன்றல் {ராமன்} இதயம் தாக்கப்பட்டாலும், தெற்கே சென்ற பெரும் குரங்குகளின் மீது கொண்ட நம்பிக்கையால் (சீதையைக் குறித்த செய்திகளை அறிவோம் என்ற நம்பிக்கையால்) உயிரை விடாதிருந்தான்.

இரண்டு மாதங்கள் கழிந்ததும், சுக்ரீவனின் முன்னிலைக்கு விரைந்து வந்த பல குரங்குகள், “ஓ! மன்னா {சுக்ரீவா}, குரங்குகளில் முதன்மையானவர்களான பவனனின் மகனும், வாலியின் மகனான அங்கதனும், தென்திசைக்கு நீர் அனுப்பி வைத்த இன்னும் பிற பெரும் குரங்குகளும் திரும்பிவிட்டார்கள். அவர்கள், வாலியின் பாதுகாவலர்களாலும், உம்மாலும் எப்போதும் காக்கப்பட்டு, மதுவனம் என்ற பெயரால் அழைக்கப்படும் அற்புதமான பெரும் பழத்தோட்டத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பணியாட்களே இதைப் போலச் செயல்பட முடியும் என்பதால், தங்கள் பங்குக்கு இவ்வளவு சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளும் அவர்களது செயல்பாட்டைக் கேட்ட சுக்ரீவன் அவர்களது பணி வெற்றியடைந்திருக்கிறது என்பதை அனுமானித்தான். குரங்குகளில் புத்திசாலியும் முதன்மையானவனுமான அவன் {சுக்ரீவன்}, தனது சந்தேகங்களை ராமனுக்குத் தெரிவித்தான். இதனால், மிதிலையின் இளவரசி {சீதை} காணப்பட்டாள் என்று ராமனும் ஊகித்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அனுமானின் நடைபாணியையும், அவனது முகத்தின் நிறத்தையும் கண்ட ராமன், ஹனுமான் உண்மையில் சீதையைக் கண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையில் உறுதி கொண்டான். பிறகு ஹனுமானின் தலைமையில் வெற்றி பெற்ற குரங்குகள் ராமனையும், லட்சுமணனையும், சுக்ரீவனையும் முறைப்படி வணங்கினார்கள். பிறகு தனது வில்லையும் அம்பறாத்தூணியையும் எடுத்துக் கொண்ட ராமன் அக்குரங்குகளிடம், “நீங்கள் வெற்றியடைந்தீர்களா? நீங்கள் என்னை உயிரடையச் செய்வீர்களா? போர்க்களத்தில் எனது எதிரியைக் கொன்று ஜனகனின் மகளை {சீதையை} மீட்டு, அயோத்தி திரும்பி நான் மீண்டும் ஆட்சி செய்யச் செய்வீர்களா? விதேக இளவரசியை {சீதையை} மீட்காமல், எதிரியைப் போர்க்களத்தில் கொல்லாமல், மனைவியையும் மதிப்பையும் இழந்து நான் உயிர்வாழத் துணிய மாட்டேன்” என்றான்.

ராமனால் இப்படிச் சொல்லப்பட்ட பவனனின் மகன் {ஹனுமான்}, அவனிடம் {ராமனிடம்}, “ஓ! ராமா, நான் உனக்கு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன்; கண்டேன் ஜனகனின் மகளை {கண்டேன் சீதையை}. மலைகள், காடுகள், சுரங்கங்கள் ஆகியவற்றைக் கொண்ட தென் பகுதியை சில காலம் தேடிக் களைப்படைந்தோம். பிறகு ஒரு பெரும் குகையைக் கண்டோம். அதைக் கண்டபிறகு, பல யோஜனைகள் நீண்டிருந்த அந்தக் குகைக்குள் நுழைந்தோம். அது இருளடைந்து, மரங்கள் அடர்ந்து, புழுக்களில் தொல்லை நிறைந்து இருந்தது. அந்தப் பெரும் வழியில் நீண்ட தூரம் சென்ற பிறகு, நாங்கள் சூரியனின் வெளிச்சத்தையும், அழகிய அரண்மனை ஒன்றையும் கண்டோம். ஓ! ராகவா {ராமா}, அது தைத்தியன் மயனுடைய வசிப்பிடமாகும். அங்கே தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் துறவியான பிரபாவதியைக் கண்டோம். அவள் எங்களுக்கு உணவும், பலவகைப்பட்ட பானங்களையும் கொடுத்தாள். இதனால் உற்சாகமடைந்து, எங்கள் பலத்தை மீண்டும் அடைந்து, அவள் காட்டிய வழியில் மேலும் தொடர்ந்து சென்றோம்.

கடைசியாக நாங்கள் அந்தக் குகையை விட்டு வெளிய வந்து, உப்புக் கடலையும், அதன் கரைகளில் இருந்த சஹ்யம், மலயம், பெரும் தர்துரம் என்ற மலைகளையும் கண்டோம். பிறகு மலய மலையில் ஏறி அகன்ற கடலைக் கண்டோம் [1]. அதைக் கண்ட நாங்கள் மனதால் மிகவும் துயரப்பட்டோம். மனச் சோர்வடைந்து, வலியால் தாக்கப்பட்டு, பசியும் பட்டினியுமாக, உயிருடன் திரும்புவதில் ஆசையற்றவர்களானோம். திமிங்கலங்கள், முதலைகள், பிற நீர்வாழ்விலங்குகள் நிறைந்து பல நூற்றுக்கணக்கான யோஜனைகள் பரந்திருக்கும் பெரும் கடலைக் கண்களால் கண்ட நாங்கள் வருத்தமடைந்து ஆர்வமற்றுப் போனோம். பிறகு நாங்கள் ஒன்றுகூடி அமர்ந்து, பட்டினி கிடந்துச் சாவது என்று தீர்மானித்தோம். அப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, நாங்கள் கழுகான ஜடாயு குறித்துப் பேச நேர்ந்தது. அப்போதுதான், பயங்கர உருவமும், காணும் அனைத்து இதயத்துக்குப் பயங்கரத்தை உணரச் செய்பவனும், வினதையின் இரண்டாவது மகனைப் போல [2] இருந்தவனும், மலை போலப் பெரிதாக இருந்தவனுமான ஒரு பறவையானவனை நாங்கள் கண்டோம்.

திகைப்பூட்டும் விதத்தில் எங்களை விழுங்க வந்த அவன், “என் தம்பி ஜடாயுவைக் குறித்து இப்படிப் பேசுபவர்களான நீங்கள் யார்? நான் அவனது அண்ணன், என் பெயர் சம்பாதி, நான் பறவைகளின் மன்னனாவேன். ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் விஞ்ச எண்ணிய நாங்கள் இருவரும் சூரியனை நோக்கி முன்னேறினோம். எனது சிறகுகள் எரிந்து போயின. ஆனால் ஜடாயுவுக்கு எரியவில்லை. என் ஆருயிர் தம்பியும், கழுகுகளின் மன்னனுமான ஜடாயுவை நான் கடைசியாகக் கண்டது அப்போதுதான். எனது சிறகுகள் எரிந்ததும், நான் இப்போது இருக்கும் இதே பெருமலையில்தான் விழுந்தேன்” என்றான் {சம்பாதி}. அவன் பேச்சை நிறுத்தியதும், நாங்கள் அவனது தம்பியின் இறப்பைக் குறித்துச் சில வார்த்தைகள் பேசிவிட்டு, உனக்கு நேர்ந்த பெரும் தீங்கையும் சொன்னோம். ஓ! மன்னா {ராமா}, இந்தத் துன்பகரமான செய்தியைக் கேட்ட பலமிக்கச் சம்பாதி பெரும் துன்பமடைந்து, எங்களிடம், “யாரிந்த ராமன்? சீதை ஏன் கடத்தப்பட்டாள்? ஜடாயு எப்படிக் கொல்லப்பட்டான்? குரங்குகளின் முதன்மையானவர்களே, நான் அனைத்தையும் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்று மீண்டும் விசாரித்தான்.

பிறகு நாங்கள் உனக்கு ஏற்பட்ட துயர் அனைத்தையும் சொல்லி, அதன் காரணமாக, பட்டினி கிடந்து சாகப் போகும் எங்கள் நோன்பு குறித்தும் சொன்னோம். பிறகு அந்தப் பறவைகளின் மன்னன் {சம்பாதி} (எங்கள் நோன்பைக் கைவிட வலியுறுத்தி), “உண்மையில், ராவணனை நான் அறிவேன். இலங்கையே அவனது தலைநகரம். திரிகூட மலைகளின் பள்ளத்தாக்கில், கடலின் மறுபுறத்தில் நான் அதைக் {இலங்கையைக்} கண்டிருக்கிறேன். சீதை அங்குத் தான் இருக்க வேண்டும். இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் விரைந்து எழுந்து, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, கடலை கடப்பது எப்படி என்று ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்தோம்! யாரும் அதைக்கடக்கத் துணியவில்லை. என் தந்தையின் {வாயுத்தேவனின்} உதவியைப் பெற்ற நான், நூறு யோஜனைகள் அகன்ற அந்தப் பெரும் கடலைக் கடந்தேன். நீரில் இருந்த ராட்சசிகளைக் கொன்று, ராவணனின் அந்தப்புரத்தில், தவம் நோற்று, தன் தலைவனைக் காணும் அவலுடன், தலையில் ஜடை தரித்து, உடலில் புழுதி படிந்து, மெலிந்து போய், துன்பத்துடன் ஆதரவற்ற நிலையில் இருந்த கற்புடைய சீதையை நான் கண்டேன்.

வழக்கத்திற்கு மாறான அவளது குறிப்புகளைக் கண்டு, அவளே சீதையென உணர்ந்து, தனியாக இருந்த அந்த வழிபடத்தக்க மங்கையை அணுகி, “ஓ! சீதை, நான் ராமனின் தூதுவன்; பவனனால் பெறப்பட்ட குரங்கு [3]. உன்னைக் காண விரும்பியே, வானத்தில் பயணித்து இங்கே வந்திருக்கிறேன். (பவனன் என்றால் வாயுத்தேவன் )குரங்குகளின் ஏகாதிபதியான சுக்ரீவனால் பாதுகாக்கப்பட்ட அரசச் சகோதரர்களான ராமனும் லட்சுமணனும் அமைதியாக இருக்கிறார்கள். ஓ! மங்கையே, ராமனும், சுமித்திரையின் மகனும் {லட்சுமணனும்} உனது நன்னிலை குறித்து விசாரித்து அனுப்பினார்கள்! (ராமன் மற்றும் லட்சுமணனுடன் கொண்ட) நட்பின் காரணமாகச் சுக்ரீவனும் உனது நன்னிலை குறித்து விசாரித்து அனுப்பினான். அனைத்து குரங்குகளாலும் தொடரப்படும் உனது கணவன் விரைவில் இங்கு வருவான். ஓ! புகழத்தக்க மங்கையே, நான் ஒரு குரங்குதான்; ராட்சசனில்லை. என்னில் நம்பிக்கை கொள்” என்றேன்.

என்னால் இப்படிச் சொல்லப்பட்ட சீதை, ஒருக்கணம் தியானிப்பது போலத் தெரிந்தது, பிறகு, “அவிந்தியனின் வார்த்தைகளால் நீ ஹனுமான் என்பதை அறிந்தேன்! ஓ! பலமிக்கவனே, அவிந்தியன் முதிர்ந்த மதிக்கத்தக்க ராட்சசனாவார்! அவர், உன்னைப் போன்ற ஆலோசகர்களால் {அமைச்சர்களால்} சுக்ரீவன் சூழப்பட்டிருப்பதாகச் சொன்னார். நீ இப்போது செல்லலாம்” என்று சொல்லி இந்த மணியை ஒரு நற்சான்றாக அளித்தாள். உண்மையில், இந்த மணியின் காரணமாகவே களங்கமற்ற சீதை உயிர் தாங்க முடிந்திருக்கிறது. ஓ! மனிதர்களில் புலியே {ராமா}, மேலும் அந்த ஜனகனின் மகள் {சீதை}, அவளது அடையாளத்தைத் தெரிவிப்பதற்காக, சித்திரக்கூடம் என்ற பெயரால் அறியப்படும் பெரும் பலம் வாய்ந்த மலையின் மார்பில் நீ இருந்த போது (மந்திரங்கள் ஊட்டப்பட்டு, உயிர்க்கொல்லி ஆயுதமாக மாற்றப்பட்ட) ஒரு புல்லால் ஒரு காக்கையை அடித்ததாகச் சொன்னாள். நான் அவளைச் சந்தித்தற்கும், அவள்தான் உண்மையான விதேக இளவரசிதான் என்பதற்கும் சான்றாக இதைச் சொன்னாள். பிறகு ராவணன் படைவீரர்கள் பிடிக்குமாறு, நான் அவர்களுக்கு அகப்பட்டு, இலங்கை என்ற அந்த நகரத்திற்குத் தீ மூட்டினேன்” என்றான் {ஹனுமான்}.

இலங்கையை அடைந்தான் ராமன்! – வனபர்வம் பகுதி 281-குரங்குத் தலைவர்கள் ராமனையும், சுக்ரீவனையும் வந்து அடைவது; அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, ராமன் கடற்கரையை அடைவது; அங்கே ராமனும் லட்சுமணனும் தர்ப்பை புல் விரித்துப் படுப்பது; கனவில் வந்த பெருங்கடலரசன், குரங்குப் படையில் இருக்கும் நளனைக் கொண்டு பாலம் அமைக்கச் சொன்னது; தன்னைத் தஞ்சமடைந்த விபீஷணனுக்குப் பட்டம் சூட்டிய ராமன், இலங்கையை அடைந்தது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதே மலையின் {மால்யவாத மலையின்} மார்பில், குரங்குகளில் முதன்மையானவர்களுடன் ராமன் அமர்ந்திருந்த போது, சுக்ரீவனின் கட்டளையின் பேரில் குரங்குகளின் பெருந்தலைவர்கள் அங்கே ஒன்றுகூட ஆரம்பித்தனர். வாலியின் மாமனாரான சிறப்புமிக்கச் சுஷேணன், ஆயிரம் கோடி {1000,00,00,000} சுறுசுறுப்பான குரங்குகளுடன் ராமனிடம் வந்தான். குரங்குகளில் முதன்மையானவர்களான கயன் மற்றும் கவ்யன் [1] ஆகிய பலமிக்க சக்தி கொண்ட இருவரும், ஆளுக்கு நூறு கோடி {2 X 100,00,00,000} குரங்குகளுடன் அங்கே காட்சியளித்தனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடுமை நிறைந்த முகமும், மாடு போன்ற வாலும் கொண்ட கவக்ஷயன், அறுபதாயிரம் கோடி  {60000,00,00,000} குரங்குகளைச் சேகரித்து அங்கே தோன்றினான். கந்தமாதன மலையில் வசிக்கும் புகழ்பெற்ற கந்தமாதனன் {என்ற குரங்கு}, நூறாயிரம் கோடி {100,000,00,00,000} குரங்குகளைச் சேகரித்தான். பனசன் என்ற பெயரில் அறியப்பட்ட புத்திசாலியும் பலசாலியுமான குரங்கானவன் ஐம்பத்திரண்டு கோடி {52,00,00,000} குரங்குகளைத் திரட்டினான் [2]. குரங்குகளில் சிறப்புமிக்க, முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான ததிமுகன் என்பவன், பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பெரிய குரங்குகள் படையைத் திரட்டினான். பயங்கரச் செயல் புரிபவையும், முகத்தில் திலகக் குறி கொண்டவையுமான [3] நூறாயிரம் {100,000} கருங்கரடிகளுடன் ஜாம்பவான் தோன்றினான்.

இவர்களும், இன்னும் பிற குரங்குத் தலைவர்களுக்குத் தலைவர்களும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராமனின் காரியத்தில் உதவுவதற்காக எண்ணிலடங்காதபடி அங்கே வந்தனர். மலைச்சிகரங்களைப் போன்ற பெரிய உடல் படைத்த அவை, சிம்மங்களைப் போன்று கர்ஜித்தன. அந்த உரத்த கர்ஜனையைக் கேட்ட குரங்குகள், ஓய்வில்லாமல் இடத்திற்கு இடம் மாறி ஓடிக் கொண்டிருந்தன. அவற்றில் சில {குரங்குகள்} பார்ப்பதற்கு மலைச்சிகரங்களைப் போல இருந்தன. சில எருமைகளைப் போல இருந்தன. சில இலையுதிர்கால மேகங்களின் நிறம் கொண்டிருந்தன. சில குங்குமத்தைப் போன்ற {ஜாதிலிங்கம் போல} சிவந்த நிறத்தில் இருந்தன. சில உயர எழுந்தன, சில கீழே விழுந்தன, சில மொட்டுகளை வெட்டிக் கொண்டும், சில புழுதியைக் கிளப்பிக் கொண்டும், பல திசைகளில் இருந்து வந்து ஒன்றுதிரண்டிருந்தன.

அலைகள் நிறைந்த கடலைப் போல, அகன்ற அந்தக் குரங்குப்படை, சுக்ரீவனின் உத்தரவின் பேரில் அங்கே இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது. அனைத்துத் திசைகளில் இருந்தும் அந்தக் குரங்குகளில் முதன்மையானவர்கள் திரண்ட பிறகு, சுக்ரீவனை அருகில் கொண்ட ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, அதிர்ஷ்டமான நட்சத்திர சேர்க்கை கொண்ட ஒரு மிக அற்புதமான நாளில், மங்களகரமான தருணத்தில் அணிவகுக்கப்பட்ட அந்தப் படையைக் கொண்டு, அனைத்து உலகங்களையும் அழிக்கும் காரியத்திற்குப் புறப்பட்டதுபோலப் போர்க்களத்திற்குக் கிளம்பிச் சென்றான். வாயுத்தேவனின் மகனான ஹனுமான், அந்தப் படையின் முன்னணியில் இருந்தான். அதே நேரம் படையின் பின்புறம் அச்சமற்ற சுமித்திரையின் மகனால் {லட்சுமணனால்} பாதுகாக்கப்பட்டது.  கைவிரல்களுக்கு உடும்புத் தோலாலான கையுறைகளைத் தரித்தக் கொண்டு, குரங்குத் தலைவர்கள் சூழ சென்ற அந்த ரகுவீட்டு இளவரசர்கள் {ராமனும், லட்சுமணனும்}, கோள்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனும், சந்திரனும் போல ஒளிர்ந்தார்கள்.

கற்கள், ஆச்சா {சால} மரங்கள் மற்றும் பனை {தால} மரங்களை ஆயுதமாகக் கொண்ட அந்தக் குரங்குப் படை, காலை சூரியனுக்குக் கீழே இருக்கும் மிக நீண்ட சோள {செந்நெல் – வேறு பதிப்பு} வயல் போல இருந்தது. நளன், நீலன், அங்கதன், கிராதன், மைந்தன், துவிவிதன் ஆகியோரால் பாதுகாகப்பட்ட அந்தப் பலம்பொருந்திய படை, ராகவனின் காரியத்தை நிறைவேற்றுவதற்காக அணிவகுத்துச் சென்றது. பழங்கள், கிழங்குகள், நீர், தேன், இறைச்சி ஆகியவை நிறைந்த, பரந்த மற்றும் ஆரோக்கியமான நிலப்பரப்புகளிலும், பள்ளத்தாக்குகளிலும், எவ்வகையான இடையூறுகளும் இன்றித் தங்கிச் சென்ற அந்தக் குரங்குகள் படை, கடைசியாக உப்புக்கடலின் கரையை அடைந்து, அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்தது.

பிறகு தசரதனின் சிறப்புவாய்ந்த மகன் {ராமன்}, அனைத்து குரங்குகளிலும் முதன்மையான சுக்ரீவனிடம் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசினான். அவன் {ராமன்}, “இந்தப் படை மிகவும் பெரிதாக இருக்கிறது. கடலும் கடப்பதற்குக் கடினமானது. எனவே, கடல் கடந்து செல்வதற்குப் பாராட்டுக்குரிய என்ன திட்டம் உன்னிடம் இருக்கிறது?” என்று கேட்டான். இந்த வார்த்தைகளுக்கு, வெட்டிப் பெருமை பேசும் {பகட்டான} குரங்குகள், “நாங்கள் கடலைக் கடப்பதற்கு முழுமையான திறன் பெற்றிருக்கிறோம்” என்றன. எனினும், அனைவராலும் அதைச் செய்ய முடியாதாகையால், இப்பதில், அதிகப் பலனைக் கொடுக்க முடியவில்லை. சில குரங்குகள் கடலைப் படகுகளில் கடக்கலாம் என்றும், சில குரங்குகள் பலவிதமான தெப்பங்களிலும் கடக்கலாம் என்றும் முன்மொழிந்தன.

இருப்பினும் அவர்கள் அனைவரையும் இணக்கப்படுத்திய ராமன், “இது முடியாது. இங்கே இருக்கும் கடல் நூறு யோஜனைகள் அகன்றிருக்கிறது. வீரர்களே, அனைத்துக் குரங்குகளும் இதைக் கடக்க இயலாது. எனவே, நீங்கள் செய்திருக்கும் இந்த முன்மொழிவுகள் அறிவுக்கு ஒத்திசைபவையாக இல்லை. மேலும் நமது துருப்புகள் அனைத்தையும் சுமந்து செல்லத் தேவையான எண்ணிக்கையில் படகுகள் நம்மிடம் இல்லை. மேலும், நம்மைப் போன்ற ஒருவன், வணிகர்களின் பாதையில் எப்படி இத்தகு தடைகளை எழுப்புவான்? நமது படை மிகவும் பெரியது. ஒரு துளை {ஓட்டை} கண்டுபிடிக்கப்பட்டாலும், எதிரி, பெரும் அழிவைச் ஏற்படுத்துவான். எனவே, படகுகளிலும், தெப்பங்களிலும் கடலைக் கடப்பது என்பது எனக்கு ஏற்புடையதல்ல. இருப்பினும், தேவையான வழிகளுக்காகப் பெருங்கடலை நான் வேண்டிக் கொள்வேன். உணவைக் கைவிட்டு, நான் இந்தக் கரையில் படுத்துக் கொள்வேன். நிச்சயம் அவன் {பெருங்கடலரசன் = சமுத்திர ராஜன்} எனக்குக் காட்சிக் கொடுப்பான். அவன் எனக்குக் காட்சிக் கொடுக்கவில்லை என்றால், நெருப்பைப் போன்று பிரகாசிக்கும் கலங்கடிக்கப்படாத எனது பெரும் ஆயுதங்களைக் கொண்டு நான் அவனைத் தண்டிப்பேன்!” என்றான்.

இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு ராமனும், லட்சுமணனும் நீரைத் தொட்டு [4], அந்தக் கடற்கரையில் தர்ப்பைப் படுக்கையில் தங்களைக் கிடத்திக் கொண்டனர். ஆண் நதிகளுக்கும், பெண் நதிகளுக்கும் {நதங்கள் மற்றும் நதிகள் என்கிறார்கள்} தலைவனாக இருந்த அந்தத் தெய்வீகமான, சிறப்புமிக்கப் பெருங்கடலரசன் {சமுத்திர ராஜன்}, நீர்வாழ் விலங்குகள் சூழ, ராமனின் பார்வைக்குக் காட்சி கொடுத்தான். அந்தப் பெருங்கடலின் அதிமேதாவி {சமுத்திர ராஜன்}, எண்ணிலடங்கா ரத்தினச் சுரங்கங்கள் சூழ ராமனிடம் வந்து இனிய உச்சரிப்புகளுடன், “ஓ! கௌசல்யை மகனே {ராமா}, என்னிடம் என்ன உதவி வேண்டும்! ஓ மனிதர்களில் காளையே, நான் உனக்கு அதைச் செய்வேன்! நானும் இக்ஷவாகு குலத்தில் உதித்தவன்தான் [5], எனவே நான் உனது உறவினனும் ஆவேன்” என்றான். அதற்கு ராமன், “ஓ!ஆண் நதிகளுக்கும் பெண் நதிகளுக்கும் {நதங்களுக்கும் நதிகளுக்கும்} தலைவா {பெருங்கடலரசனே}, புலஸ்திய குலத்தில் இழிந்த பாவியான பத்துத் தலையனைக் {ராவணனைக்} கொல்வதற்கு எனது துருப்புகள் செல்ல, எனக்கு வழி கொடுக்க வேண்டும் என நான் உன்னிடம் விரும்பிக் கேட்கிறேன்! நான் உன்னிடம் இரந்து கேட்கும் வழியை நீ கொடுக்கவில்லையென்றால், பிறகு நான் மந்திரங்களால் உந்தப்பட்ட எனது தெய்வீகக் கணைகளைக் கொண்டு உன்னை வற்ற செய்வேன்!” என்றான்.(இக்ஷவாகு குலத்தைச் சார்ந்த, மன்னன் சகரனின் மகன்கள், கடலைத் தோண்டினர் என்பது மரபு. எனவேதான் பெருங்கடல் சாகரம் என்று அழைக்கப்படுகிறது)

ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வருணனின் வசிப்பிடத்தில் இருக்கும் அதிமேதாவி {பெருங்கடலரசன்}, கரங்கள் கூப்பி, பெருந்துன்பத்துடன், “நான் உன் வழியில் எந்தத் தடையையும் இட விரும்பவில்லை. நான் உனது பகைவன் இல்லை! ஓ! ராமா, இந்த வார்த்தைகளைக் கேள். அதைக் கேட்டு எது சரியோ அதைச் செய்! உனது உத்தரவின் பேரில் நான் உனது இந்தப் படைக்கு வழியைக் கொடுத்தேனென்றால், பிறகு மற்றவர்களும், தங்கள் விற்களின் பலத்தால் இவ்வாறு கட்டளையிடுவர்! உனது படையில் நளன் என்ற ஒரு குரங்கானவன் இருக்கிறான். அவன் ஒரு தொழில்நுட்ப வல்லுனனாவான். பெரும் பலம் கொண்ட நளன், அண்டத்தின் தெய்வீக கைவினைஞனான தஷ்த்ரியின் {விஸ்வகர்மாவின்} மகனாவான். அவன் {நளன்}, என் நீருக்குள் எறிவது, கட்டையாகவோ, புல்லாகவோ, கல்லாகவோ இருப்பினும் நான் அவற்றை என் பரப்பின் மேல் தாங்குவேன். இப்படி (நீ கடந்து செல்வதற்கு) உனக்கு ஒரு பாலம் கிடைக்கும்!” என்றான்.

இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெருங்கடல்மேதாவி {பெருங்கடலரசன்} அங்கேயே மறைந்து போனான். விழித்தெழுந்த ராமன், நளனை அழைத்து அவனிடம், “கடலின் மீது நீ ஒரு பாலத்தைக் கட்டுவாயாக! நீ மட்டுமே இதைச் செய்ய முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!” என்றான். இப்படியே காகுஸ்த குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் கொண்ட பாலத்தைக் கட்டச் செய்தான். இந்நாள் வரை அந்தப் பாலம் நளனின் பாலம் என்று அனைத்து உலகத்தாலும் கொண்டாடப்படுகிறது. பாலத்தை முடித்த மலை போன்ற பெரும் உடல் கொண்ட நளன் ராமனின் உத்தரவில் பேரில் அதை விட்டு வந்தான்.

ராமன், பெருங்கடலின் இக்கரையில்  இருந்தபோது, ராட்சச மன்னனின் {ராவணனின்} தம்பியான அறம்சார்ந்த விபீஷணன், தன்னுடைய நான்கு ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} ராமனிடம் வந்தான். உயர் ஆன்ம {மகாத்மாவான} ராமனும் அவனை முறைப்படி நல்வரவு கூறினான். இருப்பினும், அவன் {விபீஷணன்} ஒற்றனாக இருக்கக்கூடும் என்று சுக்ரீவன் அஞ்சினான். அதே வேளையில் (விபீஷணனிடம்) பெரிதும் மன நிறைவு கொண்ட ராமன், அவனது செயல்களில் இருந்த நேர்மையையும், நன்னடத்தையின் பல குறிகளையும் அவனிடம் கண்டு, மரியாதையுடன் அவனை {விபீஷணனை} வழிபட்டான். பிறகு அவன் {ராமன்}, விபீஷணனை அனைத்து ராட்சசர்களுக்கு ஆட்சியாளனாக நிறுவி, அவனைத் {விபீஷணனைத்} தனக்கு இளநிலை ஆலோசகனாகவும் {இளநிலை அமைச்சனாகவும் = Junior Counsellor}, லட்சுமணனுக்கு நண்பனாகவும் செய்தான்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெருங்கடலின் மேல் இருந்த பாலத்தின் வழியாக ராமன் தன் அனைத்துத் துருப்புகளுடன் விபீஷணனின் வழிகாட்டுதலின் படியே, ஒரு மாத காலத்தில் கடந்தான். பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்த ராமன், அதன் {இலங்கையின்} எண்ணிலடங்கா விரிவான தோட்டங்களைத் தனது குரங்குகளைக் கொண்டு பேரழிவுக்குள்ளாக்கினான். ராமனின் துருப்புகள் அங்கே இருந்த போது, ராவணனின் அமைச்சர்களும் அதிகாரிகாளுமான சுகன், சாரணன் என்ற இருவர், குரங்குகள் உருவம் கொண்டு ஒற்றர்களாக வந்த போது விபீஷணனால் பிடிக்கப்பட்டனர். அந்த இரவு உலாவிகள் தங்கள் உண்மை உருவான ராட்சச உருவை அடைந்த போது, ராமன் அவர்களுக்குத் தனது துருப்பைக் காண்பித்து, அவர்களை அமைதியாக அனுப்பிவைத்தான். அந்நகரத்தைச் {இலங்கையைச்} சூழ்ந்திருந்த வனத்தில் தனது துருப்புகளைத் தங்க வைத்த ராமன், பெரும் ஞானம் கொண்ட குரங்கான அங்கதனைத் தனது தூதனாக ராவணனிடம் அனுப்பி வைத்தான்.

இலங்கையில் அனைத்தும் இலக்கானது! – வனபர்வம் பகுதி 282-ராமனுடைய சொல்லை அங்கதன் ராவணனிடம் சொன்னது; ராமனின் கட்டளையின் பேரில் குரங்குகள் இலங்கையைச் சூறையாடி ராட்சசர்களோடு போர் புரிந்தது; நகரத்தில் இருந்த அனைத்தும் தங்கள் படைக்கு இலக்காகத் தெரியும்படி செய்த பிறகு ராமன் குரங்குகளைப் பின்வாங்கும்படி சொன்னது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பழங்கள், கிழங்குகள் என உணவும், நீரும் நிறைந்திருந்த அந்தத் தோப்புகளில் தனது படையை நிறுத்திய பிறகு, காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்} அவர்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ளத் தொடங்கினான். மறுபுறம் ராவணன், இராணுவ அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு தனது நகரத்தில் பல கருவிகளைப் பொருத்தினான். அவனது நகரம் {இலங்கை}, பலம் வாய்ந்த மதில்களாலும், வாயில்களாலும் இயற்கையாகவே தாக்குதல்களுக்கு அசைந்து கொடுக்காததாக இருந்தது. ஆழமான, விளிம்பு நிறைந்த நீர் கொண்ட ஏழு அகழிகளில் மீன்களும், சுறாக்களும், முதலைகளும் குவிந்திருந்தாலும் கூரிய கருங்காலி முளைகளை {Stakes of Khadira woods} {அவ்வகழிகளில்} நிறைத்து மேலும் {தன் நகரத்தை} அசைந்து கொடுக்காததாக்கினான் {ராவணன்}. கற்கள் குவிக்கப்பட்டிருந்த மதில்களில் கவண் பொருத்தி {அம்மதில்களை} மேலும் அசைந்து கொடுக்காததாக்கினான். (சுவர்களைக் காத்த) போர்வீரர்கள் நஞ்சுகொண்ட பாம்புகள் நிறைந்த மண்குடங்களையும், பலவகையான விஷப்பொடிகளையும் வைத்திருந்தனர். அவர்கள் தண்டம், எரிகொள்ளி, கணைகள், சூலங்கள், வாள்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றையும் ஏந்தியிருந்தனர். மேலும் அவர்கள் சதாக்னிகளையும் [1], மெழுகில் ஊறிய தடித்த கதாயுதங்களையும் [2] வைத்திருந்தனர்.

நகரத்தின் {இலங்கையின்} அனைத்து வாயில்களிலும், எண்ணற்ற யானைகளாலும், குதிரைகளாலும் தாங்கப்படும் பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையைக் கொண்ட, அசையும் மற்றும் அசையாத முகாம்கள் {ஸ்தாவர குல்மங்களும் ஜங்கமகுல்மங்களும்[3]} அமைக்கப்பட்டன. நகரத்தின் வாயில்களை அடைந்த அங்கதன் தன்னை ராட்சசர்கள் அறியச் செய்தான். சந்தேகமோ, அச்சமோ இல்லாமல் அவன் அந்நகரத்திற்குள் நுழைந்தான். கணக்கற்ற ராட்சசர்கள் சூழ சென்ற அந்த வீரன் {அங்கதன்} மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான். தனது ஆலோசகர்களுக்கு மத்தியில் இருந்த புலஸ்திய குல வீரனை {ராவணனை} அணுகிய நாவன்மை மிக்க அங்கதன் அம்மன்னனை வணங்கி, ராமனின் செய்தியை வழங்கத் தொடங்கினான். அவன் {அங்கதன்}, “ஓ! மன்னா {ராவணா}, கோசலத்தை ஆள்பவனும், முழு உலகம் பரந்த புகழைக் கொண்டவனுமான ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, இச்சூழலுக்குத் தகுந்த வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினான். அந்தச் செய்தியை ஏற்று, அதன்படி செயல்படு. {அது இதுதான்}, “தங்கள் ஆன்மாக்களைக் கட்டப்படுத்த திறனற்ற பாவி மன்னர்களின் தொடர்பின் விளைவால் மாநிலங்களும் {நாடுகளும்}, நகரங்களும் மாசடைந்து அழிவைச் சந்திக்கின்றன. சீதையைப் பலவந்தமாக அபகரித்ததால் நீ மட்டுமே என்னைக் காயப்படுத்தினாய்! எனினும், பல குற்றமற்ற மனிதர்களின் மரணத்திற்கு நீ காரணமாகிறாய். அதிகாரத்தாலும், கர்வத்தாலும், முன்பு நீ, காட்டில் வாழும் பல முனிவர்களைக் கொன்றாய்; தேவர்களையும் அவமதித்தாய். நீ பெரும் மன்னர்கள் பலரையும், அழுது கொண்டிருந்த பல பெண்களையும் கொன்றாய். அந்த உனது வரம்புமீறல்களுக்கான தண்டனை உன்னை மூழ்கடிக்கப்போகிறது! நான் உன்னை உனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} சேர்த்துக் கொல்வேன். போரிட்டு உனது வீரத்தைக் காட்டு [4]. ஓ இரவு உலாவியே, நான் அற்ப மனிதனாக இருப்பினும் எனது வில்லின் சக்தியைப் பார்! ஜனகனின் மகளான சீதையை விடுவி! நீ அவளை விடுவிக்கவில்லையெனில், நான் எனது கூரிய கணைகளால் இந்தப் பூமியை ராட்சசர்களற்றதாகச் செய்வேன்!” {என்று ராமன் சொன்னான்}” என்றான் {அங்கதன்}.

எதிரியின் இந்த இணக்கமற்ற வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ராவணன், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபத்தால் உணர்வற்றவனான். தங்கள் ஆசானின் அனைத்து குறிப்புகளையும் படிப்பதில் நிபுணர்களான நான்கு ராட்சசர்கள், நான்கு பருந்துகள் புலியைப் பிடிப்பது போலப் அங்கதனைப் பிடித்தனர். எனினும் தன்னை உறுதியாகப் பிடித்திருந்த அந்த ராட்சசர்களுடன் மேலே குதித்து அரண்மனையின் மொட்டைமாடியில் இறங்கினான். அப்படி அவன் பெரும் சக்தியுடன் குதித்த போது, அந்த இரவு உலாவிகள் {ராட்சசர்கள்} பூமியில் விழுந்து, அப்படிக் கடுமையாக விழுந்ததால் காயம்பட்டு, தங்கள் விலாக்களை {விலா எலும்புப் பகுதிகளை} உடைத்துக் கொண்டனர். பிறகு அவன் ஏறிய அந்தத் தங்க உப்பரிகையில் இருந்து கீழே குதித்தான். இலங்கையின் சுவர்களைத் தாண்டி குதித்து, தனது தோழர்கள் இருந்த இடத்தில் {சுவேல மலைக்கு அருகில்} இறங்கினான். பிறகு கோசலத் தலைவனின் {ராமனின்} முன்னிலையை அடைந்து, அவனிடம் அனைத்தையும் சொன்ன பெரும் சக்தியுடைய குரங்கான அங்கதன், உரிய மரியாதையுடன் ராமன் விடை கொடுத்ததும், ஓய்வெடுத்துப் புத்துணர்ச்சி பெறச் சென்றான்.

பிறகு, ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, காற்றின் வேகம் கொண்ட அந்தக் குரங்குகளை ஒருங்கிணைந்து தாக்குதல் மூலம் இலங்கையின் மதில்களை உடைக்கச் செய்தான். பிறகு விபீஷணனுடனும், கரடிகளின் மன்னனுடனும் {ஜாம்பவானுடனும்} கூடிய லட்சுமணன், படையின் முன்னணியில் இருந்து, தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காத அந்நகரத்தின் தென்வாயிலைத் தகர்த்தெறிந்தான். பிறகு ராமன், போர்க்களத்தில் பெரும் நிபுணத்துவம் கொண்டவையும், இளம் ஒட்டகங்களைப் {கரபம் = இளம் ஒட்டகம்} போன்ற சிவந்த நிறம் கொண்டவையுமான நூறாயிரம் கோடி {100000,00,00,000} குரங்குகளுடன் இலங்கையைத் தாக்கினான். பொதுவாகத் தங்கள் அகன்ற இடுப்பின் மூலமே தங்களைத் தாங்கிக் கொண்டு, நீண்ட கரங்களும், கால்களும், பெரும் பாதங்களும் கொண்ட கோடிக்கணக்கான {3 கோடி என்கிறது கும்பகோணம் பதிப்பு} சாம்பல் நிற கரடிகள், அத்தாக்குதலுக்கு உதவியாக இருந்தன. அந்தக் குரங்குகள் மேலும் கீழுமாகவும், குறுக்கும் நெடுக்குமாகவும் குதித்தன் விளைவாக எழுந்த தூசியால், சூரியனின் பிரகாசமான வட்டு முழுவதும் நிழலால் கவ்வப்பட்டு மறைந்து போனது

நெற்கதிர்கள் போன்ற மஞ்சள் நிறத்திலும், வாகைப்பூக்களைப் {Shirisha flowers = சீரிதம்} போன்ற சாம்பல் நிறத்திலும், உதயசூரியனைப் போன்ற செந்நிறத்திலும், சணலைப் போல வெள்ளை நிறத்திலும் இருந்த குரங்குகளால் மூடப்பட்ட தங்கள் நகரத்தின் சுவர்கள் பழுப்பு நிறத்தை அடைந்திருப்பதை இலங்கையின் குடிமக்கள் கண்டனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் மனைவியரோடும் மூத்தவர்களோடும் இருந்த ராட்சசர்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர். பிறகு அந்தக் குரங்குப் போர்வீரர்கள், விலையுயர்ந்த கற்களாலும் செய்யப்பட்ட தூண்களையும், உப்பரிகைகளையும், அரண்மனைகளின் உச்சிகளையும் இழுத்துப் போட தொடங்கினர். கவண்கள் மற்றும் பிற இயந்திரங்களின் விசைகளையும் சுக்குநூறாக உடைத்த அவர்கள், அவற்றை அனைத்துப் புறங்களிலும் தூக்கி வீசினர். வட்டுகள், தண்டங்கள், கற்களோடு கூடிய சதாக்னிகளைப் பெருத்த ஒலியுடனும், பெரும் சக்தியுடனும் கீழே இருந்த நகரத்தில் தூக்கி எறிந்தனர். அவற்றைப் பாதுகாப்பதற்காகச் சுவர்களில் இருந்த ராட்சசர்கள், அந்தக் குரங்குகளால் தாக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சடுதியில் தப்பி ஓடினர்.

பிறகு கடும் முகத்தோற்றமும், நினைத்த உருவை அடைய வல்லவர்களுமான நூறாயிரம் ராட்சசர்கள் மன்னனின் {ராவணனின்} உத்தரவின் பேரில் வெளியே வந்தனர். சரியான கணை மழையைப் பொழிந்து, காட்டுவாசிகளை {குரங்குகளை} ஓட்டிய அந்தப் போர்வீரர்கள், தங்கள் பெரும் பராக்கிரமத்தைக் காட்டியபடி, மதில்களை அலங்கரித்தனர். விரைவில், சதைப் பிண்டமாக இருக்கும் அந்தக் கடும் முகம் படைத்த இரவு உலாவிகள் {ராட்சசர்கள்}, அக்குரங்குகளைச் சுவர்களில் இருந்து பலவந்தமாக விரட்டினர். எதிரிகளின் சூலங்களால் சிதைக்கப்பட்ட எண்ணற்ற குரங்குத் தலைவர்கள் மதில்களில் இருந்து கீழே விழுந்தனர். அப்படி அவர்கள் விழுவதால் நடுக்கப்பட்ட தூண்களும், வாயில்களும், எண்ணற்ற ராட்சசர்களும் கூட மீண்டும் எழாத படிக்கு கீழே விழுந்தனர்.

அந்தக் குரங்குகளும், எதிரியைத் தின்ன வந்த வீரமிக்க ராட்சசர்களும் தலைமுடிகளைப் பற்றி ஒருவரை ஒருவர் சிதைத்து, ஒருவரை ஒருவர் தங்கள் நகங்களாலும் பற்களாலும் கிழித்தெறிந்தனர். அந்தக் குரங்குகளும் ராட்சசர்கள் பயங்கரமாகக் கதறவும், கர்ஜிக்கவும் செய்தனர். இருதரப்பிலும் பலர் மீண்டும் எழாதபடிக்கு கீழே விழுந்து கொல்லப்பட்டாலும், எந்தத் தரப்பும் போட்டியைக் கைவிடவில்லை. அதே வேளையில் ராமன், மேகங்களைப் போல, தனது கணைகளை மழையாகப் பொழிந்து கொண்டிருந்தான். இலங்கையை மூழ்கடிக்கும்படி அவன் அடித்த கணைகள் ராட்சசர்களைப் பெரும் எண்ணிக்கையில் கொன்றன. போர்க்களத்தில் களைப்படையாத பலம் மிக்க வில்லாளியான சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, மதில்களில் நின்று கொண்டிருந்த குறிப்பிட்ட ராட்சசர்களைப் பெயர் சொல்லி அழைத்து, தன் துணிக்கோல் கணைகளைக் {clothyard shafts} கொண்டு அவர்களைக் கொன்றான். இலங்கையின் கோட்டைகளை உடைத்து, அந்த நகரத்திற்குள் இருக்கும் அனைத்துப் பொருட்களும் முற்றுகையிட்டிருந்த படைக்கு இலக்காகத் தெரியும்படி செய்த பிறகு, வெற்றி அடைந்த அந்தக் குரங்குக் கூட்டம் ராமனின் கட்டளையின் பேரில் பின்வாங்கியது. 

ராமனுடன் மோதிய ராவணன்! – வனபர்வம் பகுதி 283-வானரப் படைக்குள் கண்களுக்குப் புலப்படாதபடி ராட்சசர்கள் ஊடுருவுதல்; அதைக் கண்டறிந்த விபீஷணன் அவர்களது மாய சக்தியை விலக்குதல்; ஊடுருவிய ராட்சசர்கள் கொல்லப்படுதல்; ராவணன் ராமனோடும், இந்திரஜித் லட்சுமணனோடும் மோதியது; கடுமையும் பயங்கரமும் கொண்ட போர் நடந்தது.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்தப் படைகள் (இவ்வாறு திரும்பி) தங்கள் இடங்களுக்குச் சென்று இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, ராவணனைத் தலைவனாகக் கொண்ட அற்ப ராட்சசர்களும் பிசாசங்களும், அவர்களுக்கு மத்தியில் ஊடுருவினர். அவர்களில் பர்வணன், பதனன், ஜம்பன், கரன், குரோதவாசன், ஹரி, பிரருஜன், அருஜன், பிரகாசன் ஆகியோரும் பிறரும் இருந்தனர். கண்ணுக்குப் புலப்படாத இந்தத் தீயவர்கள் (குரங்குப் படைக்குள்) ஊடுருவிய போது, இதைக் குறித்து அறிந்த விபிஷணன், அவர்களது {கண்ணுக்குப் புலப்படாமல்} மறைந்திருக்கும் சக்தியை உடைத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பலமிக்கவர்களும், நீண்ட தூரம் தாவுபவர்களுமான அக்குரங்குகளுக்கு {அக்குரங்குகளின் கண்களுக்கு} அவர்கள் காணப்பட்டதும், அவர்கள் {ராட்சசர்கள்} கொல்லப்பட்டு, உயிரற்றவர்களாய் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தப்பட்டார்கள்.

இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ராவணன், அணிவகுத்திருந்த தனது துருப்புகளுக்குத் தலைமையேற்று புறப்பட்டான். இரண்டாவது உசானசைப் {சுக்கிராச்சாரியார்} போலப் போர் விதிகளை நன்கறிந்த ராவணன், ராட்சசர்களும் பிசாசங்களும் கொண்ட தனது பயங்கரப்படையால் சூழப்பட்டு, உசானசின் {சுக்கிரனின்} பெயராலேயே அழைக்கப்படும் வரிசையால் அணிவகுக்கப்பட்ட தனது படைகளை வெளியே அனுப்பினான். பிருஹஸ்பதியால் பரிந்துரைக்கப்பட்ட முறையைப் பின்பற்றிய ராமன், அந்த இரவு உலாவியை எதிர்த்து அணிவகுத்து, எதிர் வரிசையில் தனது படைகளை வெளியே அனுப்பினான். விரைவாக முன்னேறி வந்த ராவணன், ராமனுடன் போரிடத் தொடங்கினான். லட்சுமணன் இந்திரஜித்துடன் தனித்தும், சுக்ரீவன் விரூபாக்ஷனுடன் தனித்தும், நிகாவடன் தாரனோடும், நளன் துந்தனோடும் {பௌண்டரனோடும்}, படுசன் பனசனோடும் போரிட்டனர். தனக்கு ஒப்பானவன் என்று தான் கருதும் ஒருவனிடம் முன்னேறிய ஒவ்வொரு போர்வீரனும், தன் கரத்தின் பலத்தை நம்பி, போர்க்களத்தில் அவனோடு {தான் தேர்ந்தெடுத்த எதிரியோடு} போரிடத் தொடங்கினான். அச்சமுள்ளவர்களுக்கு அச்சமூட்டிய அது {மோதல்}, விரைவில் பயங்கரமானதாகவும், கடுமையானதாகவும், பழங்காலத்தில் நடைபெற்ற தேவாசுரப் போர் போலவும் மாறியது.

கணைகள், சூலங்கள், வாட்கள் ஆகியவற்றை மழையாகப் பொழிந்த ராவணன் ராமனை மறைத்தான். ராமனும், கூரிய முனை கொண்ட தனது இரும்புக் கணைகளால் ராவணனைத் துன்புறுத்தினான். அதே போல லட்சுமணனும் பெரும்பான்மையான உயிர்ப்பகுதிகளைத் துளைக்கும் வல்லமை கொண்ட தனது கணைகளால், தன்னுடன் மோதிய இந்திரஜித்தை அடித்தான். இந்திரஜித்தும் தனது கணை மழையால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} அடித்தான். விபீஷணன் பிரஹஸ்தன் மீதும், பிரஹஸ்தன் விபீஷணன் மீதும்கூர் முனையும் இறகும் படைத்த தங்கள் கணைகளை அடர்த்தியாகப் பொழிந்தனர். இப்படியே அந்தப் பெரும் பலம் கொண்ட போர்வீர்ர்களுக்கு இடையில் பெரும் சக்தி கொண்ட தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட மோதல் உருவானது. இதனால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களும் கடுந்துன்பத்தால் பாதிக்கப்பட்டன.

துயில்நீத்தான் கும்பகர்ணன்! – வனபர்வம் பகுதி 284-விபீஷணன் பிரஹஸ்தனைக் கொன்றது; ஹனுமான் தூம்ராக்ஷனைக் கொன்றது; வீரத்துடன் போராடிய குரங்குகள் ராட்சசர்களை இலங்கை நகரத்திற்குள் விரட்டியது; ராவணன் கும்பகர்ணனை எழுப்பியது; .

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “திடீரென விபீஷணனை நோக்கி முன்னேறி உரத்துக் கூவிய பிரஹஸ்தன், அவனைத் {விபீஷணனைத்} தனது கதாயுதத்தால் அடித்தான். பயங்கர சக்தியுடன் கதாயுதத்தால் அடிக்கப்பட்டாலும், வலிய கரமும், பெரும் ஞானமும் கொண்ட விபீஷணன், சற்றும் தடுமாறாமல் இமயத்தின் மலைகளைப் போல் அசையாமல் நின்றான். பிறகு விபீஷணன், நூறு மணிகளைக் கொண்டிருந்ததும், பெரியதும், பலம் வாய்ந்ததுமான ஒரு ஈட்டியை எடுத்து, மந்திரங்களால் அதற்கு ஊக்கமளித்து, தன் எதிரியின் { தலையை நோக்கி வீசினான். வஜ்ராயுதத்தின் சக்தியுடன் விரைந்த அந்த ஆயுதத்தின் மூர்க்கத்தால் பிரஹஸ்தனின் தலை துண்டிக்கப்பட்டது. அவன் {பிரஹஸ்தன்} காற்றில் முறிந்த மரம் போலத் தெரிந்தான்.

இரவு உலாவியான பிரஹஸ்தன் போர்க்களத்தில் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட தூம்ராக்ஷன், அந்தக் குரங்குக் கூட்டத்துக்கு எதிராக பெரும் வேகத்துடன் விரைந்தான். பயங்கரத் தோற்றம் கொண்ட மேகங்கள் போல முகத்தோற்றத்துடன் இருந்த தூம்ராக்ஷனின் படைவீரர்களை தங்களை நோக்கி விரைந்து வருவதைக் கண்ட குரங்குத் தலைவன் {சுக்ரீவனாக இருக்கும்} திடீரென {போரை} முறித்து {தவிர்த்து} ஓடினான். குரங்களில் முதன்மையானவன் திடீரென வழிவிடுவதைக் கண்ட குரங்குகளில் புலியான பவனனின் மகன் ஹனுமான் முன்னேறத் தொடங்கினான். பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்த குரங்குகள் அனைவரும், பவனின் மகன் {ஹனுமான்} போர்க்களத்தில் அசையாதிருப்பதைக் கண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விரைவாக {மீண்டும்} அணிவகுத்தனர். ராமனும், ராவணனும் ஒருவருக்கெதிராக ஒருவர் விரைவதைக் கண்டதன் விளைவாக இருதரப்பு வீரர்களுக்கு மத்தியில் பயத்துடன் கூடிய வலிய பெரிய கூச்சல் எழுந்தது. அந்தப் போரில் பயங்கர சேதத்தைக் கண்ட களம் விரைவில் ரத்தச்சேறானது.

தூம்ராக்ஷன், சிறகு படைத்த கணைகள் மூலம் அந்தக் குரங்குக் கூட்டத்தைத் துன்புறுத்தினான். பிறகு எதிரிகளை வெல்பவனான பவனனின் மகன் ஹனுமான், முன்னேறிக் கொண்டிருந்த அந்த ராட்சசத் தலைவனை {தூம்ராக்ஷனை} விரைந்து பிடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய அந்தக் குரங்குக்கும் {ஹனுமானுக்கும்}, அந்த ராட்சச வீரனுக்கும் {தூம்ராக்ஷனுக்கும்} நடைபெற்ற மோதல், (பழங்காலத்தில்) இந்திரனுக்கும் பிரஹலாதனுக்கும் இடையில் நடைபெற்றதைப் போல கடுமையாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அந்த ராட்சசன், அந்தக் குரங்கை தனது கதாயுதங்களாலும், பரிகங்களாலும் {#} அடித்தான். அதே வேளையில் அக்குரங்கு {ஹனுமான்}, வெட்டப்படாத கிளைகளுடன் கூடிய மரத்தின் தண்டைக் கொண்டு அந்த ராட்சசனை {தூம்ராக்ஷனை} அடித்தான். பிறகு பவனனின் மகனான ஹனுமான் பெருங்கோபம் கொண்டு, அந்த ராட்சசனையும், அவனது தேரோட்டி மற்றும் அவனது குதிரைகளையும் கொன்று, அவனது தேரைத் துண்டுகளாக உடைத்தெறிந்தான்.

ராட்சசர்களில் முதன்மையான தூம்ராக்ஷன் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்டக் குரங்குகள், தங்கள் அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்த ராட்சசப் படையை நோக்கி பெரும் வீரத்துடன் விரைந்தன. வெற்றிபெற்ற வலிமைநிறைந்த குரங்குகளால் பெரிய எண்ணிக்கையில் தங்கள் தரப்பில் கொல்லப்பட்டதால், அந்த ராட்சசர்கள் உற்சாகமிழந்து இலங்கைக்குள் ஓடினர். உயிருடன் மீந்த அந்தச் சேதமடைந்த ராட்சசப் படை, நகரத்தை அடைந்ததும், மன்னன் ராவணனிடம் நடந்தது அத்தனையும் தெரிவித்தனர். பிரஹஸ்தன், பலம்வாய்ந்த வில்லாளியான தூம்ராக்ஷன் ஆகிய இருவரும் தங்கள் படையினருடன் சேர்த்து அந்த வலிமைமிக்க குரங்குகளால் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன் நீண்டு பெருமூச்சு விட்டு, தனது அற்புதமான இருக்கையில் இருந்து எழுந்து “கும்பகர்ணன் செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன் {ராவணன்}, பலதரப்பட்ட உரத்த ஒலியெழுப்பும் கருவிகளைக் கொண்டு, ஆழ்ந்த நீண்ட துயிலில் இருந்த தனது தம்பி கும்பகர்ணனை எழுப்பினான்.

பெரும் முயற்சி செய்து அவனை எழுப்பிய அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, துயரத்துடன் அந்த பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் பேசினான். அவன் {கும்பகர்ணன்} தனது படுக்கையில் வசதியாக அமர்ந்து தன் சுயநினைவையும், தன்நிலைமையையும் அடைந்த பிறகு, “ஓ! கும்பகர்ணா உண்மையில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். நமக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பயங்கரப் பேரிடரை உணராது, இடையூறற்ற ஆழமான இளைப்பாறுதலை நீ அடையக்கூடாது. தனது குரங்குப் படையுடன் பெருங்கடலைப் பாலமமைத்துக் கடந்து வந்திருக்கும் ராமன், நம் அனைவரையும் அவமதிக்கும்படி, (நமக்கெதிராக) பயங்கரப் போரைத் தொடுத்திருக்கிறான். ஜனகனின் மகளான அவனது {ராமனின்} மனைவி சீதையை கள்ளமாக {Stealthily} நான் கொண்டு வந்தேன். பெருங்கடலின் மீது பாலமமைத்து அவளை {சீதையை} மீட்பதற்காகவே அவன் {ராமன்} இங்கே வந்திருக்கிறான்.  பிரஹஸ்தன் மற்றும் பிறர் கூடிய நமது பெரும் இரத்த உறவுகள் அனைவரும் அவனால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர். ஓ! உனது எதிரிகளை துன்புறச் செய்பவனே {கும்பகர்ணா}, உன்னைத் தவிர ராமனைக் கொல்ல வேறு யாராலும் முடியாது! எனவே, ஓ! வீரா, உனது கவசத்தை அணிந்து கொண்டு, ராமனையும், அவனைத் தொடர்பவர்களையும் அழித்தொழிக்கும் நோக்குடன் இந்த நாளே செல்வாயாக! தூஷணனின் தம்பிகளான வஜ்ரவேகனும், பிரமாதினும் தங்கள் படையினருடன் உன்னைச் சேர்வார்கள்” என்ற வார்த்தைகளைச் சொன்னான் {கும்பகர்ணனிடம் ராவணன்}. பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் இதைச் சொன்ன அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, வஜ்ரவேகனிடமும், பிரமாதினிடம், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தினான். அவனது அறிவரையை ஏற்ற அந்தப் போர்க்குணமிக்கவர்களான தூஷணனின் இரு தம்பிகள், நகரத்தில் இருந்து விரைந்து, கும்பகர்ணனை முன் கொண்டு அணிவகுத்து சென்றனர்.

மீளாத்துயில்கொண்ட கும்பகர்ணன்! – வனபர்வம் பகுதி 285-கும்பகர்ணனைக் கொன்ற லட்சுமணன்; வஜ்ரவேகனைக் கொன்ற ஹனுமான்; பிரமாதியைக் கொன்ற நளன்…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பிறகு கும்பகர்ணன் தனது தொண்டர்களுடன் நகரத்தைவிட்டுக் கிளம்பினான். வெற்றி பெற்ற குரங்கு துருப்புகள் முற்றுகையிட்டிருப்பதை விரைவில் தன் முன் கண்டான். ராமனைத் தேடும் நோக்கத்தோடு அவர்களைக் கடந்து சென்ற அவன் {கும்பகர்ணன்}, கையில் வில்லுடன் தனது நிலையில் நிற்கும் சுமித்திரையின் மகனைக் {லட்சுமணனைக்} கண்டான். பிறகு அந்தக் குரங்கு போர்வீரர்கள், அவனை {கும்பகர்ணனை} நோக்கி விரைந்து, அனைத்து புறத்திலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவர்கள் எண்ணிலடங்கா பெரிய மரங்களைக் கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தனர். அவர்களில் {குரங்குகளில்} பலர் அச்சமற்று, தங்கள் நகங்களைக் கொண்டு அவனது உடலைக் கிழிக்கத் தொடங்கினர். போர்க்கலை விதிகளால் அங்கீகரிக்கப்பட்ட பல வழிகளில் அந்தக் குரங்குகள் அவனுடனான தங்கள் போரைத் தொடங்கின. விரைவில் அவர்கள் அந்த ராட்சசர்களின் தலைவனை {கும்பகர்ணனை} பல வகைகளிலான பயங்கர ஆயுதங்களின் மழையால் மறைத்தனர்.

அவர்களால் இப்படித் தாக்கப்பட்ட கும்பகர்ணன், அவர்களைப் பார்த்துச் சிரிக்க மட்டுமே செய்து, அவர்களை உண்ண ஆரம்பித்தான். சலன், சண்டசலன், வஜ்ரபாகு என்ற பெயர்களால் அறியப்படும் குரங்குகளில் முதன்மையானவர்களை அவன் {கும்பகர்ணன்} விழுங்கினான். அந்த ராட்சசன் செய்த அஞ்சத்தக்க செயலைக் கண்ட பிற குரங்குகள் அச்சமடைந்தனர். அதனால் அவர்கள் அச்சமடைந்து உரத்த ஓலமிட்டனர். அந்தக் குரங்குத் தலைவர்களின் அலறலைக் கேட்ட சுக்ரீவன் துணிச்சலுடன் கும்பகர்ணனை நோக்கி முன்னேறினான். உயர் ஆன்மா கொண்ட அந்தக் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்}, அந்த ராட்சசனை {கும்பகர்ணனை} விரைவில் அணுகி, ஆச்சா {சால} மரத்தின் தண்டைக் கொண்டு அவனது தலையில் கடுமையாக அடித்தான். எப்போதும் விரைந்து செயல்படும் உயர் ஆன்ம சுக்ரீவன், கும்பகர்ணனின் தலையில் அடித்து அந்த ஆச்சாமரத்தை ஒடித்தாலும், அந்த ராட்சசன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறினான். பின்பு, அந்த அடியால் மந்த நிலையில் இருந்து எழுந்தவன் போல இருந்த கும்பகர்ணன், தனது கரங்களை நீட்டி, தன் பலத்தை மட்டுமே கொண்டு சுக்ரீவனைப் பிடித்தான். நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் சுமித்திரையின் வீர மகன் {லட்சுமணன்}, அந்த ராட்சசனால் {கும்பகர்ணனால்} சுக்ரீவன் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டு, கும்பகர்ணனை நோக்கி விரைந்தான்.

எதிரி வீரர்களைக் கொல்லும் லட்சமணன், கும்பகர்ணனை நோக்கி முன்னேறியவாறு, தங்கப் புங்கங்கள் {#} கொண்ட பலமிக்க மூர்க்கமான கணையை அவனை {கும்பகர்ணனை} நோக்கி அடித்தான். அந்தக் கணை, அவனது கவசத்தைப் பிளந்து, அவனது உடலுக்குள் ஊடுருவி, அப்பட்டமாக அதைக் {அவ்வுடலைக்} கடந்து, அந்த ராட்சசனின் ரத்தக் கறையுடன் பூமியைப் பிளந்து நின்றது. அப்படி மார்பு துளைக்கப்பட்ட கும்பகர்ணன், குரங்குகளின் மன்னனை {சுக்ரீவனை} விடுவித்தான். ஒரு பெரும் பாறையைத் தன ஆயுதமாக எடுத்துக் கொண்ட அந்தப் பலமிக்க வீரனான கும்பகர்ணன், சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} இலக்காக வைத்து அவனை நோக்கி விரைந்தான். அப்படி அந்த ராட்சசன் {கும்பகர்ணன்} அவனை {லட்சுமணனை} நோக்கி விரைந்த போது, அவனது {கும்பகர்ணனின்} உயர்த்தப்பட்ட {இரு} கரங்களை, கத்தியைப் போன்றிருந்த தனது கூரிய முனை கொண்ட கணைகளால் லட்சுமணன் வெட்டி வீழ்த்தினான்.

ஆனால், அந்த ராட்சசனின் இருகரங்களும் அப்படி வெட்டப்பட்ட போது, அக்கரங்களின் எண்ணிக்கையைப் போல இருமடங்கு கரங்கள் அவன் மேனியில் தோன்றின. எனினும், சுமித்திரையின் மகன், தனது ஆயுத நிபுணத்துவத்தைக் காட்டி, அதே போன்ற கணைகளைக் கொண்டு, கற்களைக் கொண்டிருந்த அக்கரங்களையும் வெட்டி வீழ்த்தினான். இதனால், அந்த ராட்சசன் {கும்பகர்ணன்}, பல தலைகளும், கால்களும், கரங்களும் கொண்ட மிகப்பெரிய உருவமெடுத்தான். பிறகு, சுமித்திரையின் மகனான அந்த வீரன் {லட்சுமணன்}, மலைக்குவியலைப் போல இருந்த அவனை {கும்பகர்ணனை} பிரம்ம ஆயுதத்தினால் பிளந்தான். அந்தத் தெய்வீக ஆயுதத்தால் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {கும்பகர்ணன்}, கிளைகள் விரித்த பெரும் மரம் ஒன்று, வானத்தின் இடியால் தாக்கப்பட்டு விழுவது போல, அந்தப் போர்க்களத்தில் விழுந்தான். அசுரன் விருத்திரனுக்கு ஒப்பானவனும், பெருஞ்செயல் புரியுபவனுமான கும்பகர்ணன் உயிரிழந்து போர்க்களத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட ராட்சச வீரர்கள் அச்சத்தால் பின்வாங்கி ஓடினார்கள்.

அப்படிப் போர்க்களத்தை விட்டு ஓடும் ராட்சச வீரர்களைக் கண்ட, தூஷணனின் தம்பி, அவர்களை அணிதிரட்டி, பெரும் கோபத்துடன் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} நோக்கி விரைந்தான். எனினும், சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, உரத்த கர்ஜனை செய்து, தனது இறகு படைத்த கணைகளைக் கொண்டு, தன்னை நோக்கி விரைந்து வரும் கோபக்கார போர்வீரர்களான வஜ்ரவேகனையும், பிரமாதினையும் வரவேற்றான். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு, தூஷணன் தம்பிகள் ஒரு புறமும், புத்திக்கூர்மை கொண்ட லட்சுமணன் ஒரு புறமும் எனக் காண்பவர்களுக்கு மயிர்க்கூச்சலை ஏற்படுத்தும் மிகக்கடுமையான போர் மூண்டது. லட்சுமணன், அந்த இரு ராட்சசர்களையும் கச்சிதமான தனது அம்பு மழையால் மூழ்கடித்தான். மறுபுறம் கோபத்தால் பரபரப்படைந்த அந்த இரு ராட்சச வீரர்களும், தங்கள் கணைகளால் கல்மாரி பொழிந்து லட்சுமணனை மறைத்தனர். வஜ்ரவேகன், பிரமாதின் ஆகியோருக்கும் வலிய கரங்கள் கொண்ட லட்சுமணனுக்கு இடையில் நடந்த அந்தப் பயங்கர மோதல் சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலம்} நீடித்தது.

பவனனின் மகனான ஹனுமான் ஒரு மலைச்சிகரத்தை எடுத்துக்கொண்டு விரைந்து, அந்த ஆயுதத்தால் {மலைச்சிகரத்தால}, அச்சகோதரர்களில் ஒருவனான ராட்சசன் வஜ்ரவேகனின் உயிரைப் பறித்தான். பலமிகுந்த குரங்கான நளனும் {நீலன் என்கிறது கும்பகோணம் பதிப்பு}, ஒரு பெரும் பாறையைக் கொண்டு, தூஷணனின் தம்பியான பிரமாதினை நசுக்கினான். எனினும், ஒருவருக்கொருவர் எதிர்த்து முன்னேறும் ராமன் மற்றும் ராவணனின் படைவீரர்களுக்கிடையேயான அந்தக் கொடிய போராட்டம், இதற்குப் பிறகும் ஒரு முடிவுக்கு வராமல், முன்பு போலவே உக்கிரத்துடன் நடந்தது. அந்தக் கானகவாசிகளால் {குரங்குகளால்} நூற்றுக்கணக்கான ராட்சசர்கள் கொல்லப்பட்டார்கள், அதே வேளையில் பல குரங்குகள் ராட்சசர்களாலும் கொல்லப்பட்டனர். எனினும், மரண இழப்பில் குரங்குகளை விட ராட்சசர்களுடைய இழப்பு மிக அதிகமாக இருந்தது.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தொண்டர்களுடன் {பின்தொடர்பவர்களுட்ன} கூடிய கும்பகர்ணனும், பெரும் போர்வீரனான பிரஹஸ்தனும், பெரும் சக்தி கொண்ட தூம்ராக்ஷனும் போர்க்களத்தில் விழுந்ததை அறிந்த ராவணன், தனது வீர மகன் இந்திரஜித்திடம், “ஓ! எதிரிகளைக் கொல்பவனே {இந்திரஜித்}, ராமன், சுக்ரீவன் மற்றும் லட்சுமணனை நீ கொல்வாயாக. எனது நன் மகனே, சச்சியின் தலைவனான, வஜ்ரத்தைத் தாங்கும் ஆயிரம் கண்கொண்டவனை {இந்திரனை} வீழ்த்தியதால், உன்னாலேயே எனக்கு இந்தப் பெரும்புகழ் கிடைத்தது. ஓ !எதிரிகளை அடிப்பவனே! உனது விருப்பத்துக்கேற்றவாறு தோன்றவும் மறையவும் கூடிய சக்தி கொண்ட நீ, (தேவர்களிடம்) வரமாகப் பெற்ற தெய்வீகக் கணைகளைக் கொண்டு எதிரிகளைக் கொல்வாயாக. உனது ஆயுதங்களின் சாதாரண ஸ்பரிசத்தையே ராமன், லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் ஆகியோரால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது, அவர்களது தொண்டர்களைக் குறித்த நான் என்ன சொல்வேன்? ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {இந்திரஜித்}, பிரஹஸ்தனாலோ, கும்பகர்ணனாலோ எந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லையோ, அது உன்னால் முடியட்டும். ஓ! மகனே {இந்திரஜித்}, உனது கூர்முனை கணைகளால், எனது எதிரிகளையும், அவர்களது படையினரையும் கொன்று, நீ முன்பொரு முறை வாசவனைக் கொன்று எனது மகிழ்ச்சியை எப்படி அதிகரிக்கச் செய்தாயோ, அப்படி இன்று செய்வாயாக” என்றான் {ராவணன்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட இந்திரஜித், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, கவசம் பூண்டு தனது தேரில் விரைந்து ஏறி, போர்க்களத்தை நோக்கி முன்னேறினான்.

பிறகு அந்த ராட்சசர்களில் காளை, {இந்திரஜித் என்ற} தனது பெயரை உரக்கக் கூறி, ஒற்றைக்கு ஒற்றைப் போர் புரிய {to a single combat}, நற்குறிகள் கொண்ட லட்சுமணனுக்கு அறைகூவல் விடுத்தான். இப்படிச் சவால்விடப்பட்ட லட்சுமணன், தனது வில் மற்றும் கணைகளை எடுத்துக் கொண்டு, அந்த வில்லின் நாணைத் தோல் உறை பூண்ட, தனது இடது கையால் சுண்டிவிட்டு, எதிரிகளின் இதயம் பயங்கரத்தை உணரச்செய்யும் வகையில், அந்த ராட்சசனை {இந்திரஜித்தை} நோக்கி விரைந்தான். தெய்வீக ஆயுதங்களை அறிந்த அந்த இரு வீரர்களுக்கிடையில், ஒருவருக்கொருவர் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தி, ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி நடைபெற்ற அந்த மோதல் பயங்கரத்தின் எல்லையைக் காட்டுவதாக இருந்தது. ஆனால், தனது கணைகளால் எதிராளி {லட்சுமணன்} மீது எந்த ஆதிக்கத்தையும் தான் பெற முடியாது என்பதைக் கண்டறிந்த வலிமைமிக்க வீரர்களில் முதன்மையான ராவணனின் மகன் {இந்திரஜித்}, தனது ஆற்றல்கள் அனைத்தையும் திரட்டினான். பிறகு, இந்திரஜித் பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற எறிவேல்களை {#} லட்சுமணனின் மீது வீசத் தொடங்கினான். எனினும், சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, தனது கூர்முனை கொண்ட கணைகளால், அவற்றை வெட்டிச் சிதறடித்தான். லட்சுமணனின் கூர்முனைக் கணைகளால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அந்த எறிவேல்கள் தரையில் விழுந்தன.

பிறகு வாலியின் மகனான அழகான அங்கதன், ஒரு பெரிய மரத்தை எடுத்து இந்திரஜித்தை நோக்கி மூர்க்கமாக விரைந்து, அதைக் கொண்டு அவனது தலையில் அடித்தான். இருப்பினும் அச்சமற்றிருந்த அந்த வலிமைமிக்க இந்திரஜித் சூலத்தைக் கொண்டு அங்கதனை அடிக்க முயன்றான். எனினும், சரியாக அந்நேரத்திலேயே, ராவணன் மகனால் {இந்திரஜித்தால்} எடுக்கப்பட்ட அந்தச் சூலத்தை லட்சுமணன் துண்டு துண்டாக வெட்டிப் போட்டான். பிறகு ராவணனின் மகன் கதாயுதத்தை எடுத்து, தன் அருகில் இருந்த அந்தக் குரங்குகளில் முதன்மையானவனும் வீரனுமான அங்கதனின் இடது விலாவில் அடித்தான். வாலியின் பலமிக்க மகனான அங்கதன், அந்த அடியை ஒரு பொருட்டாக எண்ணாமல், இந்திரஜித்தின் மேல் ஒரு பெரும் ஆச்சாமரத் தண்டை வீசினான். இந்திரஜித்தை அழிப்பதற்காகக் கோபம் கொண்ட அங்கதனால் வீசப்பட்ட அந்த மரம், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, குதிரைகள் மற்றும் தேரோட்டியோடு கூடிய இந்திரஜித்தின் தேரை அழித்தது. பிறகு குதிரைகளற்ற, தேரோட்டியற்ற தேரில் இருந்து குதித்த ராவணனின் மகன் {இந்திரஜித்}, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தனது மாய சக்திகளின் துணை கொண்டு, காட்சியில் இருந்து மறைந்தான்.

அபரிமிதமான மாய சக்திகளைக் கொண்ட அந்த ராட்சசன் {இந்திரஜித்}, திடீரென மறைந்ததைக் கண்டு, அந்த இடத்தில் ராமன் முன்னேறி வந்து, தனது துருப்புகளைக் கவனமாகக் காக்க ஆரம்பித்தான். எனினும், இந்திரஜித், தேவர்களின் வரங்களால் {தான்} அடைந்த கணைகளைக் கொண்டு, ராமன், பலமிக்க லட்சுமணன் ஆகிய இருவரது உடல்களின் அனைத்துப் பாகங்களையும் துளைக்க ஆரம்பித்தான். பிறகு, தனது மாய சக்திகள் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு போரிட்ட ராவணனின் மகனுக்கு எதிராக, வீரர்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும், தங்கள் கணைகளைக் கொண்டு தொடர்ந்து போராடினர். ஆனால் அந்த மனிதர்களில் சிங்கங்கள் மேல் முழுவதும் தனது கூர்முனை கொண்ட கணைகளை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தொடர்ந்து அடித்தான். தொடர்ச்சியாகத் தனது கணைகளைப் பொழிந்து கொண்டிருந்த மறைந்திருந்த அந்த வீரனை {இந்திரஜித்தை}, கற்குவியல்களை ஏந்திய குரங்குகள், ஆகாயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேடின. எனினும், அவர்களையும் {குரங்குகளையும்}, அந்த இரு சகோதரர்களையும், மறைந்திருந்த அந்த ராட்சசன் {இந்திரஜித்}, தனது கணைகள் மூலம் துன்புறுத்தத் தொடங்கினான். உண்மையில் அந்த ராவணனின் மகன், தனது மாய சக்திகளைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு, அந்தக் குரங்குப் படையைப் பெருஞ்சீற்றத்துடன் தாக்கினான். இப்படி உடல் முழுவதும் அவனது {இந்திரஜித்தின்} கணைகளால் துளைக்கப்பட்ட வீர சகோதரர்களான ராமனும் லட்சுமணனும், ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனையும், சந்திரனையும் போலத் தரையில் விழுந்தனர்.

மாயையை வென்ற மாயநீர்! – வனபர்வம் பகுதி 287-ராமலட்சுமணர்களின் உணர்வை மீட்ட விபீஷணனும், சுக்ரீவனும்; குபேரன் ராமனுக்காகக் கைலாசத்தில் இருந்து நீர் கொடுத்தனுப்பியது; அந்நீரால் கண்களை அலம்பிக் கொண்ட ராமனும் மற்றவர்களும் மறைந்திருக்கும் அனைத்தையும் தங்கள் கண்களால் காண முடிந்தது; லட்சுமணன் இந்திரஜித்தை கொன்றது; சீதையைக் கொல்ல விரும்பிய ராவணன்; ராவணனின் கோபத்தைத் தணித்த அவிந்தியன்; போருக்குத் தயாரான ராவணன்…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சகோதரர்களான ராமனும், லட்சுமணனும் நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் கிடப்பதைக் கண்ட ராவணனின் மகன் {இந்திரஜித்}, தான் வரங்களாகப் பெற்றிருந்த கணைகளால் வலை செய்து அவர்களைக் கட்டினான். இப்படி இந்திரஜித்தின் அம்புகளாலான வலையால் போர்க்களத்தில் கட்டப்பட்ட மனிதர்களில் வீரப்புலிகளான அவர்கள், சிறையிலடைபட்ட இரு பருந்துகளைப் போலத் தெரிந்தனர். அந்த வீரர்கள் நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைக் கண்ட சக்ரீவன், எல்லாப்புறங்களிலும் அனைத்துக் குரங்குகளும் சூழ நின்றான். சுஷேணன், மைந்தன், துவிவிதன், குமுதன், அங்கதன், ஹனுமான், நீலன், தாரன், நளன் ஆகியோருடன் அந்தக் குரங்குகளின் மன்னன் {சுக்ரீவன்} அங்கு நின்று கொண்டிருந்தான். களத்தின் வேறொரு பகுதியில் வெற்றியடைந்த விபீஷணன், விரைவில் அந்த இடத்திற்கு வந்து, பிரக்ஞம் [1] என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, உணர்வற்றிருந்த அந்த வீரர்களை {ராமன் மற்றும் லட்சுமணனை} {நினைவடையும்படி} எழுப்பினான்.

பிறகு சுக்ரீவன் விரைவாக அவர்களது உடலில் இருந்து அம்புகளைப் பிடுங்கினான். பிறகு, தெய்வீக மந்திரங்களுடன், மிகவும் பயனளிக்கக்கூடிய விசல்யை [2] எனும் மருந்தைப் {சுக்ரீவன்} பூசியதும், அந்த மனித வீரர்கள் {ராமனும், லட்சுமணனும்} தங்கள் சுயநினைவை அடைந்தனர். தங்கள் உடல்களில் இருந்து அம்புகள் அகற்றப்பட்டதும், அந்தப் பலமிக்கப் போர்விரர்கள் தங்கள் வலி மற்றும் சோர்வு ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, தங்கள் மயக்கநிலையில் இருந்து ஒரு கணத்தில் எழுந்தனர். இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றலான ராமன், துன்பம் நீங்கியவனாக இருப்பதைக் கண்டதும், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இரு கரங்கள் கூப்பிய நிலையில் இருந்த விபீஷணன் அவனிடம் {ராமனிடம்}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, குஹ்யர்கள் மன்னனின் {குபேரனின்} உத்தரவின் பேரில், வெண்மலைகளிலிருந்து நீரை [3] எடுத்துக் கொண்டு ஒரு குஹ்யன் {யக்ஷன்} இங்கு வந்திருக்கிறான். ஓ! பெரும் மன்னா {ராமா}, அந்த நீர் குபேரன் உனக்குக் கொடுத்தனுப்பியிருக்கும் பரிசாகும். அதனால், மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, உனக்குக் காட்சியளிக்கும்! இந்த நீரைக் கொண்டு கண்களை அலம்பினால் மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும் உனக்குக் காட்சியளிக்கும். இதை {இந்த நீரை} நீ யாருக்குக் கொடுக்கிறாயோ அவர்களுக்கும் காட்சியளிக்கும்” என்றான் {விபீஷணன்}

(விசல்யை என்பது வெட்டுகள் மற்றும் காயங்களைக் குணப்படுத்தும் ஒரு மருத்துவத் தாவரமாகும். இது இன்றும் வங்காளத்தின் பகல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இந்த எழுத்தாளரின் {கங்குலியின்} மருத்து நண்பர் ஒருவர், இப்பெயரில் இருக்கும் ஒரு தாவரத்தின் திறனைச் சோதித்துப் பார்த்தார். அப்போது அது, இரத்தத்தை உரையவைக்கும் காலிக் அமிலம் {gallic acid} அல்லது டேனிக் அமிலம்{tannic acid} ஆகியவற்றைவிடப் பெரும் வீரியம் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். என்கிறார் கங்குலிஇந்து தொன்மவியலில் {புராணங்களில்} குஹ்யர்கள் என்பவர்கள் தேவர்களுக்கு அடுத்த நிலையிலும், தெய்வீக ஆடல் பாடல் நிபுணர்களான கந்தர்வர்களை விட மேம்பட்டவர்களாகவும் சொல்லப்பட்டுள்ளது. சிவனின் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கும் கைலாசத்தின் மறுபெயரே வெண்மலை என்பதாகும் என்கிறார் கங்குலி.)

“அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன ராமன் அந்தப் புனித நீரைப் பெற்றுக் கொண்டு, அதைக் கொண்டு தனது கண்களைச் சுத்தப்படுத்தினான். உயர்ந்த மனம் படைத்த லட்சுமணனும் அதையே செய்தான். சுக்ரீவன், ஜாம்பவான், ஹனுமான், அங்கதன், மைந்தன், துவிவிதன், நீலன் மற்றும் குரங்குகளில் முதன்மையான பலர், தங்கள் கண்களை அந்நீர் கொண்டு அலம்பினர். அதன் பிறகு, அனைத்தும் விபீஷணன் சொன்னவாறே சரியாக நடந்தன. ஓ! யுதிஷ்டிரா, விரைவில் அவர்கள் அனைவரின் கண்களுக்கும், துணையில்லா கண்களால் காணமுடியாத பொருட்களைக் காணும் திறன் பெற்றன.

அதேவேளையில், தான் பெற்ற வெற்றிக்குப் பிறகு இந்திரஜித் தனது தந்தையிடம் சென்றான். தான் செய்த செயல்களை அனைத்தையும் சொன்ன அவன் களத்திற்கு விரைந்து வந்து, படையின் முன்னணியில் தன்னை நிறுத்திக் கொண்டான். பிறகு விபீஷணனின் வழிகாட்டுதல்படி, சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, திரும்பி வந்துகொண்டிருக்கும் கோபக்கார ராவணனின் மகனை {இந்திரஜித்தை} நோக்கி, அவனைத் தாக்குவதற்காக விரைந்தான். விபீஷணனிடம் இருந்து ஒரு துப்பைப் {குறிப்பைப்} பெற்ற லட்சமணன், உக்கிரமடைந்து, தனது தினசரி வேள்வியை அன்று செய்து முடிக்காத இந்திரஜித்தைக் கொல்ல விரும்பி, வெற்றியைப் பெற எரிந்து கொண்டிருக்கும் அந்த வீரனைத் {இந்திரஜித்தைத்} தனது கணைகளால் அடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த எண்ணி, அவர்களுக்கிடையில் நடைபெற்ற அந்த மோதல், {பழங்காலத்தில்} தேவர்களுக்கும் பிரகலாதனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல அற்புதமாக இருந்தது. உயிர் நிலைகளைத் துளைக்கும் கணைகளால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} துளைத்தான் இந்திரஜித். சுமித்திரையின் மகனும் {லட்சுமணனும்}, ராவணனின் மகனைக் கடும் சக்திகள் கொண்ட தனது கணைகளால் துளைத்தான். லட்சுமணனின் கணைகளால் துளைக்கப்பட்ட ராவணனின் மகன் {இந்திரஜித்} கோபத்தால் உணர்வற்றுப் போனான். பிறகு அவன் {இந்திரஜித்}, லட்சுமணனை நோக்கி, நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற எட்டு கடும் கணைகளை அடித்தான்.

ஓ! யுதிஷ்டிரா, சக்தியும், பிரகாசமும், மூன்று சிறகுகளும் கொண்ட கணைகளால் சுமித்திரையின் வீர மகன் {லட்சுமணன்}, தனது விரோதியின் {இந்திரஜித்தின்} உயிரை எப்படி எடுத்தான் என்பதை இப்போது நான் சொல்கிறேன் கேள். அவற்றில் {அந்த அம்புகளில்} ஒன்றைக் கொண்டு வில்லைப்பிடித்திருந்த இந்திரஜித்தின் கரங்களை உடலில் இருந்து துண்டித்தான். இரண்டாவதைக் கொண்டு, கணைகளைப் பற்றியிருந்த மற்றொரு கரமும் தரையில் விழும்படி செய்தான். கூரிலும் கூரானதும் பிரகாசமானதுமான மூன்றாவதைக் கொண்டு, அழகிய மூக்காலும், பிரகாசமான காது குண்டலங்களாலும் அலகங்கரிக்கப்பட்டிருந்த அவனது {இந்திரஜித்தின்} தலையை அறுத்தெரிந்தான். கரங்களும், தலையும் அற்ற அவனது உடல் காண்பதற்குப் பயங்கரமாக இருந்தது. எதிரியைக் கொன்ற பிறகு, பலமிக்க மனிதர்களில் முதன்மையானவனான அவன் {லட்சுமணன்}, தனது கணைகளைக் கொண்டு, தனது எதிரியின் தேரோட்டியைக் கொன்றான். பிறகு குதிரைகள் வெறும் தேரை நகரத்திற்குள் இழுத்துச் சென்றன.

ராவணன், தனது மகன் இல்லாது திரும்பிய தேரைக் கண்டான். தனது மகன் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், இதயம் நிறைந்த துன்பத்தால் பாதிக்கப்பட்டான். எல்லையில்லா துயரம் மற்றும் பாதிப்பில் மூழ்கிய அந்த ராட்சசர்களின் மன்னன் {ராவணன்}, திடீரென மிதிலையின் இளவரசியைக்  {சீதையைக்} கொல்ல விரும்பினான். தனது வாளை எடுத்துக் கொண்ட அந்த ராட்சசன் {ராவணன்}, அசோக வனத்தில் தனது தலைவனைக் காண்பதற்காகக் காத்திருந்த மங்கையை நோக்கி விரைந்தோடினான். அந்த இழிந்த பாவியின் பாவம் நிறைந்த காரியத்தைக் கண்ட அவிந்தியன் அவனது கோபத்தைத் தணித்தான்.

ஓ! யுதிஷ்டிரா, அவிந்தியன் சொன்ன காரணங்களைக் கேள்! அந்த ஞானம் கொண்ட ராட்சசன் {அவிந்தியன்}, “ஒரு வல்லரசின் சுடர்மிகும் அரியணையில் அமர்ந்திருக்கும் நீ, ஒரு பெண்ணைக் கொல்வது தகாது! அதுபோக, உன் சக்தியைக் கொண்டு இவள் சிறைபிடிக்கப்பட்டதைக் கருதினால், இந்தப் பெண் ஏற்கனவே கொல்லப்பட்டவளே. இவளது உடல் மட்டும் அழிவதால் இவள் கொல்லப்பட்டவள் ஆக மாட்டாள் என்று நான் நினைக்கிறேன். இவளது கணவனைக் கொல்! அவனைக் கொன்றால், இவளும் கொல்லப்பட்டவளே! உண்மையில் நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கூடப் பராக்கிரமத்தில் உனக்கு நிகரானவனல்ல! இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் உன்னால் மீண்டும் மீண்டும் போர்க்களத்தில் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்!” என்று சொன்னான். மேலும் இது போன்ற வார்த்தைகளால் இதற்கு ஒப்பான இதே போன்ற பல வார்த்தைகளாலும், ராவணனைத் தணிப்பதில் வெற்றிக் கொண்டான் அவிந்தியன். உண்மையில் பின்னவன் {ராவணன்}, தனது ஆலோசகனின் {அமைச்சனின்} பேச்சைக் கேட்டான். பிறகு அந்த இரவு உலாவி, தானே போரில் ஈடுபடத் தீர்மானித்து, வாளை உறையில் இட்டு, தனது தேரைத் தயாராக நிறுத்த ஆணைகள் பிறப்பித்தான்.”

ராவணன் எரிந்தான்! – வனபர்வம் பகுதி 288-ராமனை எதிர்த்து வந்த ராவணன் ; ராவணனின் படைவீரர்களை மரத்தண்டுகள் கொண்டு தாக்கி குரங்குகள் வீழ்த்துவது; மாயை வெளிப்படுத்திய ராவணன்; மாயையால் உண்டான வீரர்களைக் கொன்ற ராமன்; ராமனையும் லட்சுமணனையும் போன்ற தோற்றம் கொண்ட வீரர்களை ராவணன் உண்டாக்குவது; ராமன் அவர்களையும் கொல்வது; மாதலி ராமனைச் சந்தித்து, இந்திரனின் தேரில் பயணிக்குமாறு வற்புறுத்துவது; பிரம்மாயுதம் கொண்டு ராமன் ராவணனை வீழ்த்துவது..

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தனது அன்பிற்குரிய மகனின் {இந்திரஜித்தின்} மரணத்தால் ஏற்பட்ட கோபத்தால் உந்தப்பட்ட பத்து கழுத்தோன் {ராவணன்}, தங்கத்தாலும், ரத்தினத்தாலும் இழைக்கப்பட்டிருந்த தனது தேரில் ஏறினான். பல வகையான ஆயுதங்களைக் கையில் கொண்டிருந்த பயங்கர ராட்சசர்கள் சூழ இருந்த ராவணன், எண்ணிலடங்கா குரங்கு தலைவர்களுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருந்த ராமனை நோக்கி முன்னேறினான். கோபம் கொண்ட அவன் {ராவணன்} குரங்குப்படையை நோக்கி விரைவதைக் கண்ட மைந்தன், நீலன், நளன், அங்கதன், ஹனுமான் மற்றும் ஜாம்பவான ஆகியோர் தங்கள் துருப்புகள் அனைத்துடன் அவனைச் {ராவணனைச்} சூழ்ந்தனர். குரங்குகளிலும், கரடிகளிலும் முதன்மையான அவர்கள், பத்துக்கழுத்தோனின் (ராவணனின்) படை வீரர்களை அவன் {ராவணன்} பார்வைக்கெதிரிலேயே மரத்தின் தண்டுகளைக் கொண்டு பூண்டோடு அழிக்கத் தொடங்கினர். எதிரி தனது துருப்புகளைக் கொன்றொழிப்பதைக் கண்ட பெரும் மாய சக்திகள் கொண்ட ராட்சச மன்னனான ராவணன், தனது மாயையைப் பயன்படுத்தத் தொடங்கினான். கைகளில் கணைகளும், சூலங்களும், இருபுறக்கூர் கொண்ட வாள்களையும் {ரிஷ்டிகளையும்} கொண்ட ராட்சச வீரர்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவனது {ராவணனின்} உடலில் இருந்து வெளிப்பட்டனர்.

இருப்பினும் ராமன் தனது தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு அந்த ராட்சசர்கள் அனைவரையும் கொன்றான். ராட்சசர்களின் மன்னன் {ராவணன்} மீண்டும் ஒருமுறை தனது மாயசக்தியை வெளிப்படுத்தினான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பத்து முகத்தோன் {ராவணன்} தனது உடலில் இருந்து ராமனையும், லட்சுமணனையும் போன்ற எண்ணிலடங்கா போர்வீரர்களை உற்பத்தி செய்து அந்த இரு சகோதரர்களை நோக்கி விரைந்தான். பிறகு, ராமனுக்கும், லட்சுமணனுக்கும் எதிரியான அந்த ராட்சசர்கள், விற்களையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி விரைந்தனர். அந்த ராட்சசர்கள் மன்னனால் {ராவணனால்} பிரயோகிக்கப்பட்ட மாயையின் சக்தியைக் கண்ட இக்ஷவாகு குல வழித்தோன்றலான சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ராமனிடம், “உமது தோற்றத்தில் இருக்கும் இந்த இழிந்த ராட்சசர்களை நீரே கொல்லும்” என்ற வீர வார்த்தைகளைச் சொன்னான். அதன் பேரில் ராமன், தனது உருவத்தில் இருந்தவர்களையும் மற்ற ராட்சசர்களையும் கொன்றான்.

அந்த நேரத்தில், பழுப்பு நிற {tawny hue = கபில நிறம், மஞ்சட்பழுப்பு நிறம்} {பச்சை நிறம் என்கிறது கும்பகோணம் பதிப்பு} குதிரைகள் பூட்டப்பட்டு, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தேரில் இந்திரனின் தேரோட்டியான மாதலி அந்தப் போர்க்களத்துக்கு வந்து ராமனை அணுகினான். மாதலி, “ஓ! காகுஸ்த குலத்தின் மகனே {ராமா}, ஒரு ஜோடி பழுப்புக் குதிரைகள் பூட்டுப்பட்டு, வெற்றிவாகை சூடும் இந்த அற்புதமான தேர் தேவர்கள் தலைவனுக்குச் சொந்தமானது! ஓ! மனிதர்களில் புலியே, இந்த அற்புதத் தேரில் இருந்தே நூற்றுக்கணக்கான தைத்தியர்களையும், தானவர்களையும் இந்திரன் போர்க்களத்தில் கொன்றான்! எனவே, ஓ! மனிதர்களில் புலியே, என்னால் செலுத்தப்படும் இந்தத் தேரில் பயணித்து விரைவாகப் போர்க்களத்தில் ராவணனைக் கொல்! இதைச் சாதிக்கத் தாமதிக்காதே!” என்றான் {இந்திரனின் தேரோட்டி மாதலி}.

எனினும், இப்படி அவனால் {மாதலியால்} சொல்லப்பட்ட ரகு குல வழித்தோன்றல் {ராமன்}, இதுவும் ராட்சசர்களின் மாயை என்று நினைத்து, மாதலியின் உண்மை நிறைந்த வார்த்தைகளில் சந்தேகங்கொண்டான். அப்போது விபீஷணன், “ஓ! மனிதர்களில் புலியே {ராமா}, இது தீய ராவணனின் மாயையன்று! ஓ! பெரும் பிரகாசமிக்கவரே, இந்திரனுக்குச் சொந்தமான இந்தத் தேரில் விரைவாக ஏறு!” என்றான். இதனால் மகிழ்ச்சி கொண்ட காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, விபீஷணனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, அத்தேரில் ஏறி ராவணன் மேல் கோபம் கொண்டு விரைந்தான்.

ராவணனும் தனது எதிரிக்கு எதிராக விரைந்த போது, பூமியில் இருந்த உயிரினங்கள் உரத்து அலறின, அதே நேரத்தில், சொர்க்கத்தில் இருந்த தேவர்கள், படக {#படகம்} ஒலியுடன் கூடிய சிம்ம கர்ஜனை புரிந்தனர். பிறகு பத்து கழுத்தோனான ராவணனுக்கும், ரகு குலத்தின் இளவரசனுக்கும் {ராமனுக்கும்} இடையில் தொடங்கிய மோதல் கடுமையாகவும், தீவிரமாகவும் இருந்தது. உண்மையில், அவர்களுக்கு இடையில் நடந்த போருக்கு வேறு எங்கும் இணையே கிடையாது. அந்த ராட்சசன் {ராவணன்} ராமனை நோக்கி, உச்சரிக்கப் போகும் நிலையில் இருக்கும் அந்தணரின் சாபம் போன்றதும் [1] {பிரம்ம தண்டம் போன்றதும்}, இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்றதுமான எறிவேலை {#} {சூலம்}எறிந்தான். இருப்பினும் ராமன் தனது கூரிய கணைகளால் அந்த எறிவேலை துண்டு துண்டாக அறுத்துப் போட்டான்.(வியாசர் மற்றும் வால்மீகி ஆகிய இருவரின் படியும், பிராமணச் சாபத்தைவிடக் கடுமையானது எதுவுமில்லை. இந்திரனின் வஜ்ராயுதமே பிராமணச் சாபத்துடன் ஒப்புநோக்கும்போது பலவீனமானதே. காரணம் தெளிவானது. வஜ்ராயுதம் யாரை நோக்கி ஏவப்படுகிறதோ அந்தத் தனிநபரையே அடிக்கும். பிராமணச் சாபமோ மொத்த குலத்தையும், மொத்த தலைமுறையையும், முழு நாட்டையுமே அடித்துவிடும்.)

செய்வதற்கு அரிதான அச்செயலைக் கண்ட ராவணன் அச்சத்தால் தாக்கப்பட்டான். ஆனால், விரைவில் கோபம் தூண்டப்பட்டுப் பத்து கழுத்து வீரன் {ராவணன்}, ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும், எண்ணிலடங்காதவாறும் ஏவுகணைகளையும் {புசுண்டி}, எறிவேல்களையும், தண்டங்களையும், போர்க்கோடரிகளையும், பலவிதமான கணைகளையும், சதாக்னிகளையும், கல்லில் கூராக்கப்பட்ட அம்புகளையும், மேலும் பலவகையான ஆயுதங்களையும் ராமன் மீது பொழிந்தான். பயங்கர உருவைக் காட்சிப்படுத்திய பத்து கழுத்து ராட்சசனின் {ராவணனின்} மாயையைக் கண்ட குரங்குகள் அச்சப்பட்டு அனைத்து திசைகளிலும் ஓடின.

பிறகு அந்தக் காகுஸ்தனின் வழித்தோன்றல் {ராமன்}, தனது அம்பறாத்தூணியில் இருந்த, அழகிய சிறகுகளும், தங்க இறகுகளும், பிரகாசமான, அழகிய தலை கொண்ட ஓர் அழகிய அம்பை எடுத்து பிரம்மாயுத {பிரம்மாஸ்திர} மந்தரத்துடன் சேர்த்து வில்லில் பொருத்தினான். இந்திரனைத் தலைமையாகக் கொண்டு தேவர்களும், கந்தர்வர்களும், சரியான மந்திரங்களால் பிரம்மாயுதமாக ராமனால் மாற்றபட்ட அற்புத கணையைக் கண்டு மகிழ ஆரம்பித்தனர். தேவர்களும், தானவர்களும் கின்னரர்களும் பிரம்மாயுதத்தின் அக்காட்சியால், எதிரியான ராட்சசனின் {ராவணனின்} உயிருக்கு முடிவு நெருங்கியது என்றே கருதத் தலைப்பட்டனர். பிறகு, ஒப்பற்ற சக்தி கொண்டதும், ராவணனின் மரணத்தை ஏற்படுத்த போவதும், உச்சரிக்கப்படும் நிலையில் இருக்கும் அந்தண சாபத்தைப் போன்றதுமான அந்தப் பயங்கர ஆயுதத்தை ராமன் அடித்தான்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வில்லை வட்டமாக வளைத்து ராமனால் அக்கணை {பிரம்மாயுதம்} அடிக்கப்பட்டதும், தேர், தேரோட்டி, குதிரைகளுடன் கூடிய ராட்சச மன்னன் {ராவணன்} எல்லாப் பக்கங்களிலும் பயங்கர நெருப்பால் சூழப்பட்டு எரிக்கப்பட்டான். புகழ்பெற்ற சாதனையைச் செய்த ராமனால் ராவணன் கொல்லப்படுவதைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும் சாரணர்களும் மிகவும் மகிழ்ந்தனர். பிரம்மாயுதத்தின் ஆற்றலால் அண்ட மேலாட்சியை இழந்த சிறப்பு வாய்ந்த ராவணனை ஐங்கூறுகளும் {ஐம்பூதங்களும்} கைவிட்டன. ராவணனின் உடல் சார்ந்த மூலப்பொருட்கள் அனைத்தும் அந்தப் பிரம்மாயுதத்தால் எரிக்கப்பட்டன. அவனது சதை, குருதி ஆகியவை சாம்பல் கூடக் காணக்கிடைக்காதவாறு ஏதுமற்றவையாகக் குறைக்கப்பட்டன.

நான் பாவமிழைத்தவளானால்…! – வனபர்வம் பகுதி 289அ-ராமனிடம் சீதையை அவிந்தியன் அழைத்து வந்தது; ராமனின் கடுஞ்சொற்களைக் கேட்ட சீதை பூமியில் விழுந்தது; வாயு, அக்னி, வருணன், பிரம்மன் தசரதன் ஆகியோர் சீதையை ஏற்றுக் கொள்ளும்படி ராமனிடம் கேட்டது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அற்பனும், தேவர்களுக்கு எதிரியுமான ராட்சசர்கள் மன்னனை {ராவணனைக்} கொன்ற பிறகு தனது நண்பர்களுடனும், சுமித்திரையின் மகனுடனும் {லட்சுமணனுடனும்} ராமன் மிகுந்த மகிழ்ச்சியோடிருந்தான். அந்தப் பத்துக்கழுத்தோன் (ராட்சசன்) {ராவணன்} கொல்லப்பட்ட பிறகு, முனிவர்களைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள், வலிய கரங்கள் கொண்ட ராமனை வழிபட்டு, “ஜெயம்” என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரித்து அருள் வழங்கினர். தேவர்கள் அனைவரும், கந்தர்வர்களும், தேவலோகவாசிகளும் தாமரை இதழ்களைப் போன்ற கண் கொண்ட ராமனை, தங்கள் பாடல்களாலும், பூமாரியாலும் மனநிறைவு கொள்ளச் செய்தனர். இப்படி ராமனை முறையாக வழிபட்ட அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பினர். ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அப்போது வானத்தைப் பார்த்த போது, அங்கே ஏதோ பெரும் திருவிழா கொண்டாடப்பட்டது போல இருந்தது.

பத்து கழுத்து ராட்சசனைக் {ராவணனைக்} கொன்றபிறகு, உலகம் பரந்த புகழ் கொண்டவனும், எதிரி நகரங்களை வெல்பவனுமான தலைவன் ராமன், இலங்கையை விபீஷணனுக்கு அளித்தான். பிறகு முதிர்ந்த ஞானியான (ராவணனின்) ஆலோசகனான {அமைச்சனான} அவிந்தியன், சீதையைத் தனக்கு முன்னும், அதற்கு முன்னே நடந்து சென்ற விபீஷணனுக்குப் பின்னும் விட்டு, நகரத்தை விட்டு வெளியே வந்தான். பிறகு பெரும் பணிவு கொண்ட அவிந்தியன் காகுஸ்த குலத்தின் சிறப்புமிக்கவனிடம் {ராமனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவனே {ராமா}, அற்புதமான நடத்தை கொண்ட ஜனகனின் மகளான இந்தத் தேவியை ஏற்றுக் கொள்!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, அற்புதமான தனது தேரில் இருந்து இறங்கி, கண்ணீரால் குளித்திருக்கும் சீதையைக் கண்டான்.

துயரத்துடனும், புழுதி படிந்த மேனியுடனும், தலையில் சடாமுடியுடனும், அழுக்கடைந்த ஆடை உடுத்தியும் தனது வாகனத்தில் {பல்லக்கில்} அமர்ந்திருந்த அந்த அழகான மங்கையைக் {சீதையைக்} கண்ட ராமன், தனது மதிப்புக்கு ஏற்படப்போகும் களங்கத்திற்கு அஞ்சி அவளிடம் {சீதையிடம்}, “விதேகத்தின் மகளே {சீதை}, நீ விரும்பிய இடத்திற்குச் செல். இப்போது நீ விடுபட்டாய்! நான் என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்பட்டது! ஓ! அருளப்பட்ட மங்கையே, என்னைக் கணவனாகக் கொண்ட நீ, ஒரு ராட்சசனின் வசிப்பிடத்தில் கிடந்து முதிர்ந்து விடக்கூடாது! இதற்காகவே நான் அந்த இரவு உலாவியைக் கொன்றேன். ஆனால், அறநெறிகளின் அனைத்து உண்மைகளையும் அறிந்த எங்களைப் போன்ற ஒருவன், மாற்றான் கைகளில் விழுந்த ஒரு பெண்ணை எவ்வாறு ஒருக்கணமேனும் அணைக்க முடியும்? ஓ! மிதிலையின் இளவரசியே, நீ கற்புடையவளோ, கற்பற்றவளோ, நாயால் நக்கப்பட்ட வேள்வி நெய்யைப் போன்ற உன்னுடன் இன்பமாக இருக்க இனி நான் துணிய மாட்டேன்!” என்றான் {ராமன்}.

இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட அந்த வழிபடத்தக்க பெண் {சீதை}, இதயத்தில் ஏற்பட்ட துயரத்தால், வேர்களில் துண்டிக்கப்பட்ட வாழை மரம் போலத் திடீரெனக் கீழே விழுந்தாள். தான் அடைந்த மகிழ்ச்சியின் விளைவாக அவள் முகத்தை மூடியிருந்த நிறம், வாயிலிருந்து வெளிப்படும் மூச்சுக்காற்றால் ஊதப்படும் கண்ணாடியில் இருக்கும் நீர்த்துகள்கள் போல {கண்ணாடியில் ஊதினால் எப்படி அது மங்குமோ அதுபோல} விரைவில் காணாமல் போனது. ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைத்துக் குரங்குகளும், லட்சுமணனும் இறந்தவர் போல அசையாதிருந்தனர். பிறகு தெய்வீகமானவனும், புனித ஆன்மா கொண்டவனும், தாமரையில் இருந்து தானே உதித்த அண்ட படைப்பாளனும் நான்முகனுமான பிரம்மன், தனது தேரில் வந்து ரகுவின் மகனுக்குக் {ராமனுக்கு} காட்சி கொடுத்தான். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வாயு, யமன், வருணன், யக்ஷர்களின் சிறப்புமிக்கத் தலைவன், புனிதமான முனிவர்கள் மற்றும் மன்னன் தசரதனும் தங்கள் பிரகாசமான தெய்வீக உருவத்துடன், அன்னங்களால் இழுக்கப்பட்ட தேரில் காட்சி கொடுத்தனர். தேவர்களாலும் கந்தர்வர்களாலும் நிறைந்த ஆகாயம், நட்சத்திரங்களை ஆடையாகக் கொண்ட இலையுதிர்கால {சரதகால} வானம் போல இருந்தது.

பிறகு, தரையில் இருந்து எழுந்த அருளப்பட்டவளும், புகழ்பெற்றவளுமான விதேக இளவரசி {சீதை}, அங்கே இருந்தவர்களுக்கு மத்தியில் அகன்ற மார்பு கொண்ட ராமனிடம், “ஓ! இளவரசே, ஆண்களிடமும், பெண்களிடமும் எவ்வாறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் நீர். எனவே, எந்தத் தவறாலும் நான் உம்மைக் குற்றப்படுத்தவில்லை. ஆனால், எனது வார்த்தைகளையும் கேளும்! எப்போதும் நகரும் தன்மை கொண்ட காற்று {வாயு} அனைத்து உயிருக்குள்ளும் இருக்கிறது. நான் பாவமிழைத்திருந்தால், அவன் {வாயுத்தேவன்} எனது உயிர் சக்திகளைக் கைவிடட்டும் {எனது உயிரைப் பறிக்கட்டும்}. ஓ! நான் பாவமிழைத்திருந்தால், (நான் ஏற்கனவே அழைத்திருக்கும்) காற்றைப் {வாயுவைப்} போலவே, நெருப்பு {அக்னி}, நீர், ஆகாயம், பூமி ஆகியனவும் எனது உயிர்ச்சக்திகளைக் கைவிடட்டும். ஓ! வீரரே, நான் கனவிலும் வேறொருவனின் உருவத்தைக் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்பது உண்மையானால், முன்பு தேவர்களால் நியமிக்கப்பட்டது போலவே நீர் எனக்குத் தலைவராக இருப்பீராக!” என்றாள்.

சீதை பேசிய பிறகு, மொத்த பகுதிகளுக்கும் கேட்கும்படி, உயர் ஆன்மா கொண்ட குரங்குகளின் இதயத்தை மகிழ்விக்கும் வகையில் வானத்தில் ஒரு புனிதமான குரல் கேட்டது. “ஓ! ரகுவின் மகனே {ராமா}, சீதை உண்மையையே சொன்னாள்! நான் வாயுத்தேவன். மிதிலையின் இளவரசி பாவமற்றவள்! எனவே, ஓ! மன்னா, நீ உன் மனைவியைச் சேர்வாயாக!” என்று வாயுத்தேவன் சொன்னது கேட்டது. பிறகு, நெருப்பு தேவன் {அக்னி தேவன்}, “ஓ! ரகுவின் மகனே {ராகவா = ராமா}, நான் அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசிப்பவன்! ஓ! காகுஸ்தனின் வழித்தோன்றலே, மிதிலையில் இளவரசி {மைதிலி = சீதை} நுண்ணியத் தவறையும் செய்யாத குற்றமற்றவள் ஆவாள்!” என்றான். பிறகு வருணனும், “ஓ! ரகுவின் மகனே {ராமா}, “அனைத்து உயிர்களின் உடல்களில் உள்ள சுவைகள் {ரசங்கள் = ரசனைகள்}, என்னிடம் இருந்தே இருப்பை அடைகின்றன! நான் சொல்கிறேன், மிதிலையின் இளவரசியை ஏற்றுக் கொள்வாயாக!” என்றான்.

பிறகு பிரம்மன், “ஓ! காகுஸ்தனின் வழித்தோன்றலே {ராமா}, ஓ! மகனே, நேர்மையும், சுத்தமும், அரச முனிகளின் கடமைகள் அனைத்தையும் கொண்ட உனது இந்த நடத்தை விசித்திரமாக இல்லை {ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை}. இருப்பினும், எனது வார்த்தைகளைக் கேள்! ஓ! வீரா, தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷர்கள், தானவர்கள் மற்றும் பெரும் முனிவர்களுக்கு எதிரியானவனை {ராவணனை} நீ கொன்றிருக்கிறாய். எனது அருளாலேயே அவன் {ராவணன்} இதுவரை எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான். உண்மையில், ஒரு காரணத்திற்காகவே நான் அவனிடம் பொறுமை காத்து வந்தேன்! எனினும், அந்த இழிந்தவன் {ராவணன்} தனது அழிவிற்காகவே சீதையை அபகரித்தான். சீதையைப் பொறுத்தவரை, நளகூபரனின் சாபத்தினால் நான் அவளைப் பாதுகாத்தேன். பழங்காலத்தில், விருப்பமில்லாத பெண்ணை அவன் எப்போது அணுகினாலும் அவன் தலை நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும் என அவனே {நளகூபரனே} ராவணனைச் சபித்தான். எனவே, எந்தச் சந்தேகமும் கொள்ளாதே! ஓ பெரும் புகழ் கொண்டவனே, உனது மனைவியை ஏற்றுக் கொள்! ஓ! தெய்வீகப் பிரகாசம் கொண்டவனே, உண்மையில், தேவர்களின் நன்மைக்காகவே நீ இந்தப் பெரும் சாதனையைச் சாதித்திருக்கிறாய்!” என்றான் {பிரம்மன்}.

பின்பு அனைவரிலும் கடைசியாகத் தசரதன், “ஓ! குழந்தாய்! நான் உன்னிடம் நிறைவு கொண்டேன். நானே உன் தந்தையான தசரதன்; நீ அருளப்பட்டிருப்பாயாக! ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொண்டு, உனது நாட்டை ஆட்சி செய் என நான் உனக்கு உத்தரவிடுகிறேன்!” என்றான். அதற்கு ராமன், “ஓ! மன்னர்களுக்கு மன்னரே, நீர் எனது தந்தை என்றால், நான் உம்மை மதிப்புடன் வணங்குகிறேன். உண்மையில் நான், உமது உத்தரவின் பேரில் அழகிய நகரமான ஆயோத்யைக்குத் திரும்புவேன்” என்றான்.” 

ஆட்சிக்கட்டிலில் ராமன்! – வனபர்வம் பகுதி 289ஆ-ராமன் தன் பரிவாரங்கள், லட்சுமணன் மற்றும் சீதையுடன் அயோத்திக்குப் புறப்பட்டது. வழியில் கிஷ்கிந்தையில் இறங்கி அங்கதனுக்குப் பட்டத்து இளவரசனாகப் பட்டம் சூட்டியது; நந்திகிராமத்தில் இருந்த பரதனிடம் ஹனுமானைத் தூதனுப்பியது; ராமனின் பட்டாபிஷேகம்; சுக்ரீவன், விபீஷணன் ஆகியோருக்குத் தகுந்த வெகுமதிகளை ராமன் கொடுத்தனுப்பியது; ராமன் கோமதியாற்றங்கரையில் பத்து குதிரை வேள்விகளைச் செய்தது…

“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, விழியோரம் சிவந்த ராமன் இப்படிப் பதிலளித்ததும், மகிழ்ந்த அவனது தந்தை {தசரதன்} “அயோத்தி திரும்பி நாட்டை ஆட்சி செய்! ஓ! பெரும் புகழ்கொண்டவனே {ராமா}, உனது {வனவாசத்தின்} பதினான்கு {14} வருடங்கள் முடிவடைந்தன” என்றான். தசரதனால் இப்படிச் சொல்லப்பட்டு, ராமன் தேவர்களை வணங்கி, நண்பர்களால் வழிபடப்பட்டு, புலோமனின் மகளுடன் இணைந்த தேவர்கள் தலைவனைப் போலத் தனது மனைவியுடன் இணைந்தான். பிறகு அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் அவிந்தியனுக்கு ஒரு வரத்தைக் கொடுத்தான். திரிஜடை என்ற ராட்சச பெண்ணுக்கு செல்வங்களையும் மரியாதைகளையும் அளித்தான். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களுடன் இருந்த பிரம்மன், ராமனிடம், “ஓ கௌசல்யையைத் தாயாகக் கொண்டவனே {ராமா}, உனது இதயத்தில் இருக்கும் எந்த வரங்களை நாங்கள் கொடுப்பது?” என்று கேட்டான்.

அதன்பேரில் ராமன், அவர்களிடம், அறத்தில் உறுதியான பற்றும், எதிரிகளைப் பொறுத்தமட்டில் வெல்லப்பட முடியாதவனாக இருக்க வேண்டும் என்றும், ராட்சசர்களால் கொல்லப்பட்ட அனைத்துக் குரங்குகளும் உயிர் மீள்வதையும் வேண்டினான். “அப்படியே ஆகட்டும்’ என்று பிரம்மன் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயிர்மீட்கப்பட்ட அந்தக் குரங்குகள் போர்க்களத்தில் இருந்து எழுந்து வந்தனர். பெரும் நற்பேறுபெற்ற சீதையும் ஹனுமானுக்கு ஒருவரம் அளித்தாள். “ஓ! மகனே {ஹனுமானே}, ராமரின் சாதனைகள் (புகழ்) நீடிக்கும் வரை உனது வாழ்வும் நீடிக்கட்டும்! மேலும், மஞ்சள் கண்களைக் கொண்ட ஹனுமானே, மேலும், தெய்வீக உணவுகளும், பானங்களும் எனது அருளால் உனக்கு எப்போதும் கிடைக்கட்டும்” என்றாள் {என்ற வரத்தை ஹனுமானுக்கு அளித்தாள் சீதை}.

பிறகு களங்கமற்ற சாதனைகள் செய்த அந்த வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் மறைந்தனர். ஜனகனின் மகளுடன் {சீதையுடன்} ராமன் இணைந்திருப்பதைக் கண்ட சக்ரனின் {இந்திரனின்} தேரோட்டி {மாதலி}, மிகவும் மனம் நிறைந்து, நண்பர்களுக்கு மத்தியில், “ஓ! கலங்கடிக்கமுடியாத பராக்கிரமம் கொண்டவனே, தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், நாகர்கள், மனிதர்கள் ஆகியோரின் துயரங்களை நீ விலக்கியிருக்கிறாய். எனவே, இந்தப் பூமி ஒன்றாக நிலைத்திருக்கும் வரை, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள் ஆகியோர் உன்னைக் குறித்துப் பேசிக் கொண்டே இருப்பார்கள்” என்றான்.

இவ்வார்த்தைகளை ராமனுக்குச் சொன்ன மாதலி, அந்த ரகுவின் மகனை வழிபட்டு, ஆயுதம் தாங்குவோரில் முதன்மையான அவனிடம் {ராமனிடம்} விடைபெற்றுக்கொண்டு, சூரியப் பிரகாசம் கொண்ட அதே தேரில் சென்றான். சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, விபீஷணன், சுக்ரீவனைத் தலைமையாகக் கொண்ட குரங்குகளுடன் சீதையை முன்னிட்டுச் சென்ற ராமன், இலங்கையின் பாதுகாப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அதே பாலத்தின் வழியாகக் கடலை மீண்டும் கடந்தான். பயணிப்பவனின் விருப்பத்திற்கேற்ற இடத்திற்குச் செல்ல வல்ல புஷ்பகம் என்று அழைக்கப்பட்ட வானுறையும் அந்த அழகிய தேரில் அவன் பயணித்தான். ஆசைகளை அடக்கிய அவனை {ராமனை}, அவனது முதன்மையான ஆலோசகர்கள் முன்னுரிமை வரிசையில் சூழ்ந்திருந்தனர். ஏற்கனவே தான் படுத்திருந்த கடற்கரை பகுதிக்கு வந்த அந்த அறம்சார்ந்த மன்னன் {ராமன்} அனைத்துக் குரங்குகளுடன் தனது தற்காலிக வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.

பிறகு ரகுவின் மகன் {ராமன்}, உரிய நேரத்தில் குரங்குகளைத் தனது முன்னிலைக்கு அழைத்து, அவர்கள் அனைவரையும் வணங்கி, தங்கமும், ரத்தினங்களும் கொடுத்து மனநிறைவு கொள்ளச் செய்து ஒவ்வொருவராக அவர்களுக்கு விடை கொடுத்தான். குரங்குத் தலைவர்கள், கரடிகள் மற்றும் மாட்டுவால் கொண்ட குரங்குகள் அனைவரும் சென்ற பிறகு, ராமன் சுக்ரீவனும் கிஷ்கிந்தைக்குள் மீண்டும் நுழைந்தான். விபீஷணன் மற்றும் சுக்ரீவன் ஆகிய இருவருடன் புஷ்பகத்தேரில் கிஷ்கிந்தைக்குள் மீண்டும் நுழைந்த ராமன், வழியெங்கும் விதேக இளவரசிக்கு {சீதைக்கு} காடுகளைக் காட்டிக் கொண்டே வந்தான். பிறகு கிஷ்கிந்தையை அடைந்த அடிப்பவர்களில் முதன்மையான ராமன் வெற்றிபெற்ற அங்கதனை அந்த நாட்டின் பட்டத்து இளவரசனாக நிறுவினான்.

பிறகு சுமித்திரையின் மகனையும் {லட்சுமணனையும்}, அதே நண்பர்களையும் அழைத்துக் கொண்டு, தான் வந்த வழியிலேயே தன் நகரத்தை {அயோத்தியை} நோக்கி மீண்டும் சென்றான் ராமன். அயோத்தி நகரத்தை அடைந்ததும், அந்த மன்னன் {ராமன்} ஹனுமானைத் தூதுவனாகப் பரதனிடம் அனுப்பினான். வெளிப்புறக் குறிப்புகளைக் கொண்டு பரதனின் நோக்கங்களை உறுதி செய்து கொண்ட ஹனுமான், அவனுக்கு {ராமனின் வரவைக் குறித்த} நற்செய்தியைச் சொன்னான். அதன்பிறகு பவன குமாரன் {ஹனுமான்} திரும்பி வந்ததும், ராமன் நந்திகிராமத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்திற்குள் நுழைந்த ராமன், புழுதி படிந்த தேகமும், கந்தலாடை உடுத்தியும், தன் முன்னிலையில் தனது அண்ணனின் {ராமனின்} பாதுகைகளை வைத்துக் கொண்டும் அமர்ந்து இருக்கும் பரதனைக் கண்டான். ஓ! பாரதக் குலத்தின் காளையே இப்படிப் பரதனுடனும், சத்ருக்னனுடனும் சேர்ந்த ரகுவின் பலம் வாய்ந்த மகன் {ராமன்}, சுமித்திரையின் மகனுடன் {லட்சுமணனுடன்} கூடி பெரும் மகிழ்ச்சி கொள்ள ஆரம்பித்தான். தங்கள் அண்ணனுடன் சேர்ந்த பரதனும் சத்ருக்னனும் சீதையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தனர். பிறகு, திரும்பி வந்த தனது அண்ணனை வழிபட்ட பரதன், மிகுந்த மகிழ்ச்சியுடனும் தன்னிடத்தில் புனிதமாக, அடைக்கலமாக வைக்கப்பட்டிருந்த நாட்டைத் திருப்பிக் கொடுத்தான். பிறகு வசிஷ்டரும், வாமதேவரும் சேர்ந்து, அந்த வீரனுக்குத் {ராமனுக்கு} திருவோணம் {சிரவண} நட்சத்திரத்தின் எட்டாவது முகூர்த்தத்தில் [1] (அயோத்தியின்} ஆட்சிக்கட்டிலில் அமர்த்திப் பட்டம் சூட்டினர். இப்படிப் பட்டம் நிறுவப்பட்ட பிறகு, மிகுந்த மனநிறைவோடிருந்த குரங்குகள் மன்னன் சுக்ரீவனுக்கும், அவனது தொண்டர்களுக்கும் மற்றும் புலஸ்திய குலத்தின் விபீஷணனுக்கும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்ல ராமன் விடை கொடுத்து அனுப்பினான்.(அபிஜித் முகூர்த்தமே {கிட்டத்தட்ட மதிய வேளை} ஒரு நாளின் எட்டாவது முகூர்த்தமாக இருக்கிறது. ஒரு முகூர்த்தம் என்பது 48 நிமிடங்களைக் கொண்டதாகும். ஒரு நாளுக்கு {அதாவது 24 மணி நேரம்} 30 முகூர்த்தங்களாகும். நீலகண்டரால் விளக்கப்பட்ட வைஷ்ணவ விண்மீன் அறிவியல் சிரவவம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார் கங்குலி.)

பலவகையான இன்பம்தரக்கூடிய பொருட்களைக் கொடுத்து அவர்களை வழிபட்டு, அந்த நேரத்திற்குத் தகுந்த அனைத்தையும் செய்து, துயரம் நிறைந்த இதயத்துடன் ராமன் தனது நண்பர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான். பிறகு புஷ்பகத் தேரை வழிபட்ட ரகுவின் மகன் {ராமன்}, அதை மகிழ்சியுடன் வைஸ்ரவணனிடம் திருப்பிக் கொடுத்தான். பிறகு தெய்வீக முனிவரைத் {வசிஷ்டரைத்} துணையாகக் கொண்டு, அந்தணர்களுக்கு மூன்று மடங்கு கொடையளித்து, எத்தடையுமின்றிக் கோமதி ஆற்றங்கரையில் பத்து குதிரை வேள்விகளை நடத்தினான்.

துயர்களைந்த யுதிஷ்டிரன்! – வனபர்வம் பகுதி 290-ராமன் கதையைச் சொல்லிய மார்க்கண்டேயர், யுதிஷ்டிரனுக்குத் துணைவர்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி அவனைத் தேற்றுவது…

“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, இப்படியே அளவிலா சக்தி கொண்டவனான ராமன், வனவாசத்தின் விளைவாகப் பெரும்பேரிடரைப் பழங்காலத்தில் அனுபவித்தான். ஓ! மனிதர்களில் புலியே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, கவலைப்படாதே, நீ ஒரு க்ஷத்திரியன்! மேலும் நீயும் கரங்களின் வலிமையைச் சோதிக்கும் பாதையிலேயே சொல்கிறாய். அந்த வழி உறுதியாகப் பரிசுகளை ஏற்க இட்டுச் செல்லும். உன்னிடம் ஒரு துகள் அளவும் பாவமில்லை. இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், அசுரர்களும் நீ செல்லும் பாதையிலேயே செல்ல நேர்ந்தது! இது போன்ற துயரங்களுக்குப் பிறகுதான் வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்}, மருதர்களின் துணை கொண்டு விருத்திரனையும், ஒப்பற்ற நமுசியையும், நீண்ட நாக்குடைய ராட்சசியையும் {தீர்க்கஜிஹவை} கொன்றான். துணையுள்ளவன், தனது நோக்கங்களின் சாதனையை {நிறைவை} எப்போதும் ஈட்டுவான்!

தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தம்பியாகக் கொண்டவனால் {உன்னால்} போர்க்களத்தில் வெல்ல முடியாதது எது? பயங்கரப் பராக்கிரமம் கொண்ட இந்தப் பீமனும் பலம் நிறைந்த மனிதர்களில் முதன்மையானவனாக இருக்கிறான். இளைஞர்களும் வீரர்களுமான மாத்ரவதியின் {மாத்ரியின்} மகன்களும் {நகுலனும் சகாதேவனும்} பலமிக்க வில்லாளிகளாக இருக்கின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரா}, இப்படிப்பட்ட துணை கொண்ட நீ ஏன் விரக்தியடைகிறாய்? இவர்கள் மருதர்களின் துணை கொண்ட வஜ்ரம் தாங்குபவனின் {இந்திரனின்} படையை அழிக்கும் திறன் கொண்டவர்களாவர். தெய்வீக வடிவில் இருக்கும் இந்தப் பலமிக்க வில்லாளிகளைத் துணையாகக் கொண்ட நீ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உனது அனைத்து எதிரிகளையும் போர்க்களத்தில் வெல்வாய் என்பது நிச்சயம்!

பலம் மற்றும் சக்தியில் கர்வமடைந்திருந்த தீய மனம் கொண்ட சைந்தவனால் {ஜெயத்ரதனால்}, துருபதனின் மகளான இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} பலவந்தமாக அபகரிக்கப்பட்ட போது, இந்தப் பலமிக்க வீரர்களின் பயங்கரச் சாதனைகளால் மீட்கப்பட்டாள் என்பதைப் பார். மன்னன் ஜெயத்ரதன் வீழ்த்தப்பட்டு, உனக்கும் முன்னால் சக்தியற்று கிடத்தப்பட்டான் என்பதைப் பார். கிட்டத்தட்ட எந்த உதவியுமற்று, பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பத்து கழுத்து ராட்சசனைப் {ராவணனைப்} போர்க்களத்தில் கொன்று, விதேக இளவரசி ராமனால் மீட்கப்பட்டாள்! உண்மையில், (அந்தப் போராட்டத்தில்) ராமனுக்குத் துணையாக இருந்தது, குரங்குகளும், கரிய முகம் கொண்ட கரடிகளுமே ஆவர். அவர்கள் மனிதர்கள் அல்லர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவை அனைத்தையும் உனது மனதில் நினைத்துப் பார்! எனவே, குருக்களில் முதன்மையானவனே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, (நடந்தது) அத்தனைக்கும் வருந்தாதே! உன்னைப் போன்ற சிறப்புமிக்க மனிதர்கள், ஓ! எதிரிகளை அடிப்பவனே {யுதிஷ்டிரா}, துன்பத்தில் நாட்டம் கொள்ளமாட்டார்கள்!” {என்றார் மார்க்கண்டேயர்}

வைசம்பயானர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படியே மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மார்க்கண்டேயர் ஆறுதலளித்தார். பிறகு, அந்த உயர் ஆன்மா கொண்டவன் {யுதிஷ்டிரன்}, தனது துயரங்களை விலக்கிவைத்து, மீண்டும் ஒரு முறை மார்க்கண்டேயரிடம் பேசினான்.”

திரௌபதி ஹரணப் பர்வம் முற்றிற்று*

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கீதையும் ஸ்ரீ குறளும்–

September 24, 2025

அவனன்றி ஓர் அணுவும்‌ அசையாது” எனத் தாயுமானாரும்‌,
“ஆதி பகவன்‌ முதற்றே யுலகு” எனத்‌ தெய்வப்‌ புலவரும்‌,

“அகர முதல்‌ வெழுத்தெல்லா மாதி
பகவன்‌ முதற்றே உலகு:
-1-
தமிழெழுத்துக்கே யன்றி வடவெழுத்துற்‌கும்‌-மற்றும்‌ எல்லா மொழிகளின்‌ எழுத்துக்களுக்கும்‌ _ முதலாதல்‌ நோக்கி, **எழுத்தெல்லா”’ மென்றார்‌. அ, உ, ம்‌” என்னும்‌
மூன்று ஒலிகள்‌ சேர்ந்து இசைப்பதே ஒங்காரமாகும்‌, ௮ம்‌ மூன்றினுள்ளும்‌, அகாரமே முதல்‌ ஒலியாக நின்று உச்சரிப்பை உண்டாக்குவதாலும்‌, அகாரமே மற்ற எழுத்துக்களெல்லாம்‌
ஆவதற்கு மூல காரண’ மென்பதும்‌, பொருந்தும்‌.-அகர ஓலியானது ஆதி நாதமென்று,
நூல்கள்‌ புகழ்ந்து கூறுகின்றன.

அக்ஷராணாமகாரோஸ்மி த்வந்த்வஸ் ஸாமாஸி கஸ்ய ச.—-
அஹமேவாக்ஷயஸ் காலோ தாதாஹம் விஸ்வதோமுக-–৷৷10.33৷৷

எழுத்துக்களுக்குள் நான் அகாரம் ஆகிறேன் சமாஜ சமூகத்தின் உள்ளும்–(அவ்யயீபாவ-தத்புருஷ -பஹு வ்ரீஹி த்வந்த ஸமாஸம்) -த்வந்த்வ சமாசம் ஆகிறேன்-அழிவற்ற காலமும் நானே-அசித் தத்வம் இங்கே தான் நாலு புறமும் முகங்களை உடையவனாய் அண்டத்தின் உள் இருக்கும் பொருள்களைப் படைப்பவனான நான்முகனும் நானே

மலர்மிசை யேகிறன்‌ மாணடி சேர்ந்தார்‌
நிலமிசை நீதி வாழ்வார்‌ -3-.

மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்‌, எல்லா உலகிற்கும் மேலாய விட்டுலகின்‌ கண்‌ அழிவின்றி வாழ்வர்‌. அன்பால்‌ நினைவாரது உள்ளக் கமலத்தில்‌, ௮வர்‌ நினைந்த வடிவோடு விரைந்து சேரலின்‌, “ஏகினான் ” என இறந்த காலத்தாற்‌ கூறினா – பரிமேலழகர்‌.
மனனக மலமற மலர் மிசை யெழு தரும்‌
மனனுணர்‌ வளவிலன்‌”
” (திருவாய் மொழி)
ஈஸ்வர ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேர்ஜுந திஷ்டதி–
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா
–৷৷18.61৷৷
வாஸூ தேவன் -(ஸர்வேஷ்வரேண-என்றே பாஷ்யம்-காரணத்வம் வியாபகத்வம் நியந்த்ருத்வம் இவன் ஒருவன் இடமே – -)எல்லா உயிர்களுக்கும் அறிவு உதயமாகும் ஹ்ருதயமாகிற இடத்தில் ப்ரக்ருதி கார்யமான சரீரமாகிற யந்திரத்தில் ஏறி நிற்கும் எல்லா உயிர்களையும் சர்வ ரஜஸ் தமோ குண மயமான மாயையால் அந்த குணங்களுக்கு அனுகுணமாக நடக்கச் செய்து கொண்டு நிற்கிறான்-
தமேவ ஸரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத–
தத் ப்ரஸாதாத் பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்–
৷৷18.62৷৷
அர்ஜுனனே-அனைவரையும் நியமிக்கும் பரத குலத்தில் உதித்தவனே -அந்தப் பரமாத்மாவையே எல்லா வகையாலும் பின்பற்றுவாய் – அவனுடைய அருளாலே நிலையான மோக்ஷ ஸ்தானமான பரமபதத்தை அடைவாய் –

வானின்‌ றுலகம்‌ வழங்கி வருதலாற்‌
றானமிழ்த மென்றுணரற்‌ பாற்று.

மழை இடையறாது நிற்ப. உலகம்‌ நிலை பெற்று வருதலான்‌, ௮ம் மழை தான்‌ உலகத்திற்கு அமிழ்த மென்றுணரும்‌ பான்மை யுடைத்து-அமிழ்த முண்டார்‌ சாவாது நிலை பெறுதலின்‌ உலகத்தை நிலை பெறுத்‌துகின்றவானை ௮மிழ்தமென்‌று உணர்க வென்றார்‌–பரிமேலழகர்‌,

அந்நாத் பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்ந ஸம்பவ–
யஜ்ஞாத் பவதி பர்ஜந்யோ யஜ்ஞ கர்ம ஸமுத்பவ
—৷৷3.14৷৷

அன்னத்தில் இருந்து தேவர் மனுஷ்யர் முதலான எல்லா ஜீவ ராசிகளும் உண்டாகின்றன –
மழையில் இருந்து அன்னத்தின் உத்பத்தி ஏற்படுகிறது-யஞ்ஞத்தில் இருந்து மழை ஏற்படுகிறது-யஞ்ஞம் கர்மங்களில் இருந்து உண்டாகிறது -அன்னத்தால் பூதங்கள் வாழலாம் –

கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷர ஸமுத்பவம்–
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்—
৷৷3.15৷৷

மூல ப்ரக்ருதியும் ப்ரஹ்மம் போல் பெரியதாகவும் இருக்கும் -அன்றோ -நித்ய விபூதியில் பரவி இல்லா விட்டாலும் சூழ்ந்து அகன்று ஆழ்ந்த முடிவில் பெரும் பாழ் அன்றோ-அதில் இருந்து தோன்றிய உடலைக் குறிக்கும் இங்கு –

சுவை யொளி யூறு ஓசை நாற்ற மென்றைத்தின்‌
வகை தெரிவான் கட்டே யுலகு–27-

சுவையும்‌, ஒளியும்‌, ஊறும்‌, ஓசையும்‌, நாற்றமுமென்‌ற தன் மாத்திரைகளின் ஐந்து கூறுபாட்டையும்‌, அறிவாலா ராய்வான்‌ கண்ணதே உலகம்‌.-பூதங்கட்கு முதலாகிய அவைதாமைந்தும்‌, ௮வற்றின்‌ கட்டோன்றிய அப்பூதங்கள் ஐந்தும்‌, அவற்றின்‌ கூறாகிய ஞானேந்திரியங்களைந்தும்‌, கர்மேந்திரியங்களைக்துமாக இருபதுமாம்‌. *வகை தெரிவான்‌
கட்‌ “டென) உடம்பொடு புணர்த்ததனால்‌, தெரிகின்ற புருடனும்‌; அவன்‌ தெரிதற் கருவியாகிய மான்‌ அகங்கார மனங்களும்‌, அவற்றிற்கு முதலாகிய மூலப் பகுதியும்‌ பெற்றாம்‌.-இது, தத்துவ ஆராயச்சியாகும்‌-பரிமேலழகர்‌.-நித்திய அநித்தியப்‌ பொருள்களின்‌ விவேகமே”சிறந்த ஞான சாதனமாகக்‌ கூறப்படுகிறது. மனிதன்‌ மேலோனாவதற்கு இந்தச் சாதனமே முதற்படியாக உள்ளது. இதையே தத்துவ ஞான மார்க்க மெனவும்‌, முத்தி நெறிக்கு
வழி யெனவும்‌ நூல்கள்‌ கூறுகின்றன.

மாத்ரா ஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ண ஸுக துக்கதா–
ஆகமாபாயிநோ நித்யாஸ்தாம் ஸ்திதிக்ஷஸ்வ பாரத৷৷2.14৷৷

குந்தீ புத்திரனே தந் மாத்ரா கார்யமான -சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்களோடும் -அவற்றை உடைய பொருள்களோடும்- இந்திரியங்களின் சேர்க்கைகள் குளிர் வெப்பம் முதலானவற்றால் உண்டான இன்ப துன்பங்களைக் கொடுக்கின்றன – இவை உண்டாகி அழிபவை-மோக்ஷ நிலையில் அடியோடு அழியக் கூடியவை -அவற்றைப் பொறுத்துக் கொள்

நிறை மொழி மாந்தர்‌ பெருமை நிலத்து
மறை மொழி காட்டி விடும்‌.28-

நிறைந்த’மொழியினையடைய துறந்தாரது “பெருமையை, நில வுலகின்‌ கண்‌ ௮வராணையாகச்‌ சொல்லிய மந்த்ரங்களே கண்கூடாகக்‌ காட்டும்‌.-நிறைமொழி’ என்பது அருளிக்‌ கூறினும்‌, வெகுண்டு கூறிலும்‌ அவ்வப்‌ பயன்களைப்‌ பயந்தே விடும்மொழி;-காட்டுதல்‌- பபனானுணர்த்துதல்‌. பரிமேலழகர்‌.

யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷

சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர்-அந்தச் சிறந்தவன் அக் கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது-

மனத்துக்கண்‌ மாசில்னாத லனைத்தற
னாகுல நீர பிற-34-.

அறஞ்செய்வான்‌ தன் மனத்தின்‌ கண்‌ குற்‌றமுடையன்‌ அல்லனாக, அவ்வளவே அறமாவது-மற்றவை யெல்லாம்‌ ஆரவாரத் தன்மை யுடையன–குற்றம்‌-தீயன சிந்தித்தல்‌, பிறர்‌ புகழ வேண்டிச்‌ செய்வன வெல்லாம்‌ ஆரவாரத்தின் பாற்பட்டமையின்‌-ஆகுல நீர’ வென்றார்‌-பரிமேலழகர்‌-அற வொழுக்கத்தில்‌ வாழ விருப்பமுடைய அறிஞர்கள்‌ மிக எச்சரிக்கையாக இருந்து தீய சிந்தனைகளை மனதிற்‌ புகவொட்டாமல்‌ நீக்கி, மனம்‌ பரிசுத்த மடைவதுவே சிறந்த அறமாகும்‌

ஸ்ரீ பகவாநுவாச–
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த்த மநோ கதாந்.–
ஆத்மந்யே வாத்மநா துஷ்ட ஸ்தித ப்ரஜ்ஞஸ்த தோச்யதே—৷৷2.55৷৷

ஸ்ரீ பகவான் சொன்னான்-அர்ஜுனா ஆத்மாவையே பற்றி நிற்கும் மனத்தினால் ஆனந்த ரூபமான தன் ஆத்மாவிலேயே ப்ரீதி உடையவனாய் மனத்தினில் இருக்கும் மற்ற பலன்களைப் பற்றி இருக்கும் எல்லா விருப்பங்களையும் எப்பொழுது கை விடுகிறானோ
அப்போது ஸ்திதபிரஞ்ஞன் -நிலைத்த ஞானமுடையவன்‌”-என்று கூறப்படுகிறான்

அழுக்காறு அவா வெகுளி யின்னாச்‌ சொல் நான்கும்
இழுக்கா வியன்ற தறம்‌–35-

பிறராக்கம்‌ பொறாமையும்‌, புலன் கண் மேற்‌ செல்‌லுகின்‌ற அவாவும்‌, ௮வை யேதுவாகப்‌ பிறர் பால்‌ வரும்‌ வெகுளியும்‌, அது பற்‌றி வரும்‌ கடுஞ்‌ சொல்லுமாகிய இந் நான்கினையும்‌ கடிந்து இடையறாது நடந்தது அறம்‌”எனப்படும்‌-பரிமேலழகர்‌-அற வொழுக்க முடை யவரிடமே நல்ல எண்ணமும்‌, நல்ல சொல்‌லும்‌, நல்ல செயலும்‌ உண்டாகும்‌-அதுவே, தெய்விகத்‌ தன்மை பொருக்திய நல்லற வாழ்க்கையை உண்டாக்கும்‌-

தம்போ தர்போபி மாநஸ்ச க்ரோத பாருஷ்யமேவ ச–
அஜ்ஞாநம் சாபி ஜாதஸ்ய பார்த்த ஸம்பதமாஸுரீம்--৷৷16.4৷৷

குந்தீ புத்திரனே -பகவத் ஆஜ்ஜையை மீறி நடக்கும் அசுரர்க்கு உரிய செல்வத்தை உடையவனுக்கு- தார்மிகன் என்னும் புகழைப் பெற்ற தர்மத்தை அனுஷ்டிப்பது – சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதால் உண்டாகும் செருக்கு – அதிகமான கர்வம் –இனி யார் உளர் மாறு -இல்லை எனக்கு எதிர் -போன்றவை மானம் உத்தேச்யம் – பிறரைத் துன்புறுத்தும் சினம்- நல்லோர்களை வெறுப்படையச் செய்யும் கடுமை -(அங்கே தலை இருப்பதே கருமம் கண்டாய் என்பது உபாதேயம் தானே ) தத்வ விஷயத்திலும் செய்யத்தக்கது அல்லது தகாதது விஷயத்திலும் அறிவின்மை -ஆகிய இக்குணங்கள் அமைகின்றன –

பயன் றூக்கார்‌ செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற்‌ பெரிது103-

இவர்க்கு இன்னது செய்தால்‌ இன்னது பயக்குமென்று ஆராய்தலிலராய்ச் செய்த ஈரமுடைமையை ஆராயின்‌, அதனன்மை கடலினும்‌ பெரிதாம்‌–பரிமேலழகர்‌ -இதுவே ‘செய்யாமற்செய்த உதவி’ யென்‌றும்‌, *காலத்தினாற் செய்த உதவி’ என்றும்‌ தெய்வப் புலவர்‌குறிப் பிடுகிறார்‌.

தஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸமாசர—
அஸக்தோ ஹ்யாசரந் கர்ம பரமாப்நோதி பூருஷ—৷৷3.19৷৷

இந்த பிரகரணத்தில் ஆத்மாவையே பரம் என்று சொல்கிறான்-கர்ம யோகமே ஆத்ம சாஷாத்காரம் நேராகவே பெற்றுக் கொடுக்கும் என்கிறான் இதில-எனவே பற்று அற்றவனாய் -இடைவிடாமல் அவசியம் செய்ய வேண்டியது என்றே கர்ம யோகத்தைச் செய்வாயாக – பற்று அற்றவனாகக் கர்ம யோகத்தைச் செய்யும் மனிதன் -பிரக்ருதியைக் காட்டிலும் மேலான ஆத்மாவை அடைகிறான் –

கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஜநகாதய–.
லோக ஸங்க்ரஹமேவாபி ஸம் பஸ்யந் கர்துமர்ஹஸி—-৷৷3.20৷৷

ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம பிராப்தி யாகிற பயனை அடைந்தார்கள் அன்றோ –உலகத்தை இசையை வைப்பதில் கருத்தைக் கொண்டும் நீ கர்மத்தைச் செய்வதே தக்கது-ஜனகன் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் -மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் உண்டே –

கெடுவல் யா னெள்ப தறிகதன்‌ செஞ்ச
நடு வொரீஇ யல்ல செயின்‌–116

ஒருவன்‌ தன்னெஞ்சம்‌ நடுவு நிற்றலை யொழித்து நடுவல்லவற்றைச்‌ செய்ய நினைக்குமாயின்‌, அந்‌ நினைவை யான்‌ கெடக் கடவேனென்றுணரும்‌ உற்பாதமாக
(கெடு குறியாக) ௮றிக-நினைத்தலும்‌ செய்தலோ டொக்குமாதலால்‌ *செயின்‌
என்று கூறினார் — பரிமேலழகர்‌.

த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம் முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்-இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன் காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது

க்ரோதாத்பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷

கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்

நிலையிற்‌ றிரியா தடங்கி யாள்‌ றோற்ற
மலையினு மாணப்‌ பெரிது-124-

இல்வாழ்க்கையாகிய நன்னெறியினின்று வேறுபடாமல்‌ அடங்கினவனது உயர்ச்சி யானது, மலையினுச்சியினும்‌ மிகப்‌ பெரிது-திரியா தடங்குதல்‌, பொறிகளால்‌ புலன்களை நுகரா நின்றே அடங்குதல்‌. — பரிமேலழகர்‌.

உதாஸீநவத் ஆஸீநோ  குணைர்யோ ந விசால்யதே–
குணா வர்தந்த இத்யேவ யோவதிஷ்டதி நேங்கதே–৷৷14.23৷৷

அச்யுத திருவடிகளில் யுக்ம ருக்ம வ்யாமோஹத்தால் த்ருணமாக நினைப்பது போல் -ஆத்மாவைக் காண்பதில் திருப்தியுற்ற எவன் வேறு விஷயங்களில் கவனமற்று இருக்கிறானோ –சத்வாதி குணங்களால் விருப்பு வெறுப்பு வற்றின் மூலம் அசைக்கப்படாது இருக்கிறானோ –சத்வாதி குணங்கள் அவற்றின் கார்யங்களைச் செய்கின்றன என்றே எண்ணி வாளா இருக்கின்றானா –அவற்றின் செயலுக்குத் தக்கவாறு நடவாமல் இருக்கிறானோ –அவன் முக்குண மாயயைக் கடந்தவனாகப் பேசப் பெறுகிறான்-

ஸம துக்க ஸுக ஸ்வஸ்த ஸமலோஷ்டாஸ்ம காஞ்சந–
துல்ய ப்ரியாப்ரியோ தீரஸ் துல்ய நிந்த ஆத்ம ஸம் ஸ்துதி–৷৷14.24৷৷

ஸூகம் துக்கம் இவற்றில் எது நேர்ந்தாலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பவன் –
தன் ஆத்மாவிலேயே நிலைத்து இருப்பவன் -மண்கட்டி கல் ஸ்வர்ணம் இவற்றை சமமாக -அதாவது விடத்தக்க பொருளாக நினைப்பவன் – ஸூகத்துக்கு காரணமான இஷ்டமான வஸ்துவையும் துக்கத்துக்குக் காரணமான அநிஷ்டமான வஸ்துவையும் சமமாகக் கொண்டவன் -ஆத்ம விவேகம் உள்ளவன் – தன்னைப் பழிப்பதையும் புகழ்வதையும் சமமாக நினைப்பவன்

மாநாபமாநயோஸ் துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ–
ஸர்வாரம்ப பரித்யாகீ குணாதீத ஸ உச்யதே৷৷14.25৷৷

பிறர் மதிப்பையும் அவமதிப்பையும் ஒன்றாக நினைக்கிறானோ-நண்பர்கள் எதிரிகள் ஆகிய இரு தரப்பினரையும் ஒன்றாக நினைக்கிறானோ-தேஹ சம்பத்திற்கு அனுகுணமான எல்லாக் காரியங்களையும் கைவிட்டு இருக்கிறானோ-அவன் முக் குணங்களையும் கடந்தவன் என்று சொல்லப்படுகிறான்

ஓருமை யுளாமை போ லைந்தடக்க லாற்றின்‌
எழுமையுமே மாப்‌ புடைத்து-126-

ஆமைபோல ஒருவன்‌ ஒரு பிறப்பின் கண்‌ ஐம்பொறிகளையு மடக்க வல்லனாயின்‌, ௮வ் வன்மை அவனுக்கு எழு பிறப்பின்‌ கண்ணும்‌ அரணாதலை யுடைத்து-ஆமை ஜந்துறுப்பினையும்‌ இடர் புகுதாமல்‌ அடக்குதல்‌ போல, இவனும்‌ ஐம்பொறிகளையும்‌ பாவம்‌ புகுதாமலடக்க வேண்டுமென்பார்‌ ஆமைபோலென்றார்‌. ஒரு பிறப்பிற்‌ செய்த வினையின் பயன்‌ எழுமையுகம் தொடருமென்பது இதனானறிக, — பரிமேலழகர்‌-இவ்வாறு புலன்களை வசப்படுத்தும்‌ அறிவுடையவனை, கீதையில்‌ (ஸ்திதப்ரஜ்ஞன்‌) அறிவு நிலைத்தவன்‌ என்கிறார்-

யதா ஸம் ஹரதே சாயம் கூர்மோங்காநீவ ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.58৷৷

எப்போது இந்த ஞான நிஷ்டன் இந்திரியங்களை ஆமை அவயவங்களை இழுத்துக் கொள்வது போலே எல்லாப் படியாலும் விஷயங்களில் நின்றும் இழுத்துக் கொள்கிறானோ அவனுடைய அறிவு நிலையாக நிற்கிறது-இப்படிச் செய்வது பிரத்தியாகாரம்‌” எனப்படும்‌.

புகழ்பட வாழாதார்‌ தந் நோவார்‌ தம்மை
இகழ்வாரை நோவ தெவன் -237

தமக்குப்‌ புகழ்‌ உண்டாகும்படி. வாழ மாட்டாதார்‌ பிறரிகழ்ந்த வழி இவ் விகழ்ச்சி நம்மாட்டாமையின்‌ வந்ததென்று தம்மை நோவாதே தம்மை யிகழ்வாரை
நோவதென்கருதி-புகழ்பட வாழலாயிருக்க, அது மாட்டாத குற்றம் பற்‌றிப்‌ பிறரிகழ்தல்‌ ஒருதலை யாகலின்‌ இகழ்வாரை” என்றார்‌-பரிமேலழகர்‌ -உலக மக்களுக்கு உண்டாகிய வறுமை, அறிவின்மை; கொடு நோய்‌ முதலியவற்றை, பொருள்‌ ஈகையால்‌ தீர்ப்பதே சிறந்த புகழ்‌ என பரிமேலழகர்‌ குறிப்பால்‌ தெரிய வருகிறது. -பூதவுடம்பு அழியினும்‌, என்றென்றும்‌ அழியாப் புகழுடம்பைப்‌ பெறுவதே இக வாழ்க்கையின்‌ இலட்சியமாகுமென்பதும்‌, புகழ்பெறாத மனிதர்கள்‌, உலகத்தில்‌ இருப்பதும்‌, இறப்பதும்‌ ஒன்றே எனவும்‌ இவ்வதிகாரத்திலுள்ள பத்துக்‌ குறட்பாக்களாலும்‌ விளக்கமாகின்‌றன.

பயாத்ரணாது பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா—
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்—৷৷2.35৷৷

பெரு வீரர்களான எதிரிகள் உன்னை அச்சத்தினால் போரில் புற முதுகு இட்டவனாக நினைக்கப் போகிறார்கள்-எந்தப் பெரு வீரர்களுக்கு நீ இதுவரை மதிக்கத் தக்கவனாக இருந்தாயோ அவர்களுக்கு எளியவனாக ஆகப் போகிறாய்

அவாச்ய வாதாம்ஸ்ச பஹூந் வதிஷ்யந்தி தவாஹிதா–
நிந்தந்தஸ் தவ ஸாமர்த்யம் ததோ துக்க தரம் நு கிம்—৷৷2.36৷৷

உன் எதிரிகள் உன்னுடைய திறமையை நிந்திப்பவர்களாய் பேசத் தகாத பல வகைச் சொற்களையும் சொல்லப் போகிறார்கள் -அவற்றைக் கேட்பதில் காட்டிலும் கொடிய துன்பம் வேறு ஓன்று உண்டோ – வாயாலே பேசிக் கூடாத -கோழை போலே -ஹிதம் விரும்பாதவர்கள் –நீ யோகி அல்ல வீரன் –சகிக்க முடியாதே துக்கம் தரும் -மரணம் விட மோசம் -காண்டீபம் -தர்ம புத்திரர் கேலி பண்ணுவார் –

உற்ற நோய்‌ நோன்ற லுயிர்க் குறுகண்‌ செய்யாமை
யற்றே தவத்திற்‌ கு௫ -261

தவத்திற்கு வடிவு உண்டி. சுருங்கல்‌” முதலியவற்றால்‌, தம்முயிர்க்கு வரும்‌ துன்பங்களைப்‌ பொறுத்‌தலும்‌, பிற உயிர்க்குத்‌ துன்பம்‌ செய்யாமையுமாகிய ௮வ்‌ வளவிற்று -மற்றுள்ளன எல்லாமே இவற்றில் அடங்கும் என்பதால் அற்றே’ யென தேற்றேகாரங்‌ கொடுத்தார்‌- பரிமேலழகர்‌-

ஸக்நோதீஹைவ ய ஸோடும் ப்ராக் ஸரீர விமோக்ஷணாத்.—
காம க்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த ஸ ஸுகீ நர—-৷৷5.23৷৷

சரீரம் விடுவதற்கு முன் -சாதன அனுஷ்டான நிலையான இக்காலத்திலேயே காம க்ரோதங்களால் – மநோ வாக் காயங்களால் ஏற்படும் வேகத்தை எந்தக் கர்ம யோகியானவன் பொறுக்க (தடுக்க)வல்லவன் ஆகிறானோ அந்த மனிதனே ஆத்ம அனுபவத்தை அடையத் தக்கவன் – சரீரம் விட்ட பின் ஆத்ம அனுபவ ஸூகத்தை அவன் அடைகிறான்

அத்வேஷ்டா ஸர்வ பூதாநாம் மைத்ரஸ் கருண ஏவ ச.–
நிர்மமோ நிரஹங்காரஸ் ஸம துக்க ஸுகஸ் க்ஷமீ–-৷৷12.13৷৷

ஸந்துஷ்டஸ் ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஷஸ்சய—
மய் யர்பித மநோ புத்திர்யோ மத் பக்தஸ் ஸ மே ப்ரிய—৷৷12.14৷৷

எல்லா ஜீவ ராஸிகளையும் வெறுக்காதவனாய் அவர்கள் இடம் நட்புக் கொண்டவனாய் அவர்கள் துன்புறும் போது கருணை காட்டுபவனாய் -மமகாரம் அற்றவனாய் அஹங்காரம் அற்றவனாய்–இன்ப துன்பங்களை ஓக்க நோக்குகின்றவனாய் பொறுமை யுடையவனாய்-திருப்தி பெற்றவனாய்-எப்போதும் ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிப்பவனாய்-மனத்தை அடைக்கியவனாய்-ஸாஸ்த்ரங்களில் சொன்ன அர்த்தங்களில் உறுதியான ஞானத்தை யுடையவனாய்-என்னிடம் செலுத்தப்பட்ட நெஞ்சையும் துணிந்த அறிவையும் யுடையவனாய்-எவன் ஒருவன் கர்ம யோகத்தைச் செய்து என்னிடம் அன்பு செலுத்துகிறானோ-அவன் எனக்கு இனியவன் -.ஆத்ம சாஷாத்காரத்தை நான் அளிக்கிறேன் என்று தாத்பர்யம்-

மனத்தது மாசாக மாண்டார்‌ நீராடி
மறைந்‌ தொழுகு மாந்தர்‌ பலர்‌-
278-
மாசு தம்‌ மனதின்‌ கண்ணதாக பிறர்க்குத்‌ தவத்தான்‌ மாட்சி யுடையராய்‌ நீரின்‌ மூழ்கிக் காட்டி, தாம்‌ அதன்‌ கண்ணே மறைந்து ஒழுகும்‌ மாந்தர் உலகத்துப்‌ பலர்‌-மாசு, காம, வெகுளி, மயக்கங்கள்‌, மாண்டாரென்று பிறர் கருதுதற்கு, நீராடுதலால்‌ ௮த்தொழிலை ௮வர்‌ மறைதற்‌கிடனாக்கினார்‌- பரிமேலழகர்‌ -பொய்வேடமணிந்து மக்களை ஏமாற்‌றும்‌ கூடாவொழுக்க முடையவர்களைக் குறித்து இக்குறட்‌ பாவில்‌ சொல்லப்படுகிறது.
நடுங்கின மலைகளு மரனு நாவவிந்‌
தடங்கன பறவையும்‌ விலங்கு மஞ்சின
படங்குறைக்‌ தொதுங்கின பாம்பும்‌ பாதகக்‌
கடுந் தொழி லரக்கனைக்‌ காணுங்‌ கண்ணினே.”

இராவணனது (பொய்‌ வேடத்தைக் கண்டு மலைகள்‌ நடுங்கின பறவைகளும்‌ சப்‌திக்கவில்லை! விலங்குகளும்‌ பீதி யடைந்தன படமெடுத்தாடிய பாம்புகளும்‌, படத்தைச்‌ சுருக்கிப்‌ பயந்தோடின!”’ கூடா வொழுக்க முடைய பாதகர்கள்‌ வாழ்வதை ௮ஃறிணை உயிர்‌களும்‌ விரும்பவில்லை யென்றால்‌, ஆறறிவு படைத்த மக்களுக்கு யாதாகும்‌?

கர்மேந்த்ரியாணி ஸம் யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்—
இந்த்ரியார்தாந் விமூடாத்மா மித்யாசார ஸ உச்யதே–৷৷3.6৷৷

எவன் ஒருவன் வாக்கு கை கால் முதலிய கர்ம இந்திரியங்களை அடக்கினாலும் ஆத்ம ஞானம் அற்ற நெஞ்சை உடையவனாய் அந்த நெஞ்சால் இந்திரியங்களுக்கு உரிய சப்தாதி விஷயங்களை நினைத்துக் கொண்டு இருக்கிறானோ அவன் பொய் ஒழுக்கம் கொண்டவனாகக் கூறப்படுகிறான்

வாய்மையெனப்‌ படுவதீ யாதெனி ன்‌ யாதொன்றும்‌
தீமை யிலாத சொலல்‌.-291-

*மெய்மை’ யென்று சிறப்பித்து சொல்லப்‌ படுவது யாதென் வினவின்‌, ௮.து பிறிதோருயிர்க்கு தீங்கு சிறிதம்‌ பயவாத சொற்களைச்‌ சொல்லுதல்‌- பரிமேலழகர்‌-பொய்மையும்‌ வாய்மை யிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்‌”

அநுத்வேக கரம் வாக்யம் ஸத்யம் ப்ரிய ஹிதம் ச யத்–
ஸ்வாத்யா யாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே–৷৷17.15৷৷

பிறருக்கு வெறுப்பை விளைக்காததாகவும் உண்மையானதாகவும் இனியதாகவும் நன்மை விளைவிப்பதாகவும் இருக்கும் வார்த்தையை விடாது ஓதலுமே வாக்கினால் செய்யப்படும் தவம் என்று சொல்லப்படுகிறது-

நில்லாதவற்றை நிலையின வென்றுணரும்‌
புல்லறி வாண்மை கடை-331-

நிலையுதலில்லாத பொருள்களை நிலையுத லுடையன வென்று கருதுகின்ற புல்லிய வறிவினை யுடையராதல்‌ துறந்தாற்கிழிபு-தோற்றமுடையவற்றைக்‌ கேடிலவென்று கருதும்‌ புல்‌லறிவான்‌, அவற்றின்‌ மேற் பற்றுச்‌ செய்தல்‌ பிறவித்‌ துன்‌பத்துக் கேதுவாதலான்‌’ ௮து வீடெய்துவார்க்கிழுக்கென்‌பது இதனாற்‌ கூறப்பட்டது- பரிமேலழகர்‌-
நீரிற்‌ குமிழி யிளமை நிறை செல்வம்‌
நீரிற்‌ சுருட்டும்‌ நெடுந் திரைகள்‌ — நீர்மே
லெழுத்தாகும்‌ யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான்‌ மன்று
” என நீதி நெறியிலும்‌,
“பெருக்காறொத்தது செல்வம்‌, பெருக்காற்‌ றிடிகரை யொத்த திளமை, இடிகரை வாழ் மரமொத்தது வாழ்நாள்‌, ஆதலின்‌,
ஒன்றே செய்யவும்‌ வேண்டும்‌, ஒன்றும்‌ நன்றே செய்யவும்‌ வேண்டும்‌, நன்றும்‌ இன்றே செய்யவும்‌ வேண்டும்‌, இன்றும்‌ இன்னே செய்யவும்‌ வேண்டும்‌, இன்னும்‌
நாளை நாளை என்பீராகில்‌ – ௮து நமனுடை முறை நாளாவது மறியீர்‌ நம்முடை முறை நாளாவது மறியீர்‌’” என்ற கபிலர்‌ அகவற்பா –
இப் புல்லறிவை நீக்கி, நல்லறிவு பெற்று, பிறவித்‌ துன்‌பத்தினின்றும்‌ நீங்கி விட்டின்ப மடைவதற்காகவே, நிலையாமை, துறவு, மெய்யுணாதல்‌, அவா வறுத்தல்‌, என்ற நான்கு ௮திகாரத்துள்ளும்‌, ஞான சாதனங்கள்‌ நான்கையும்‌ கூறி யுள்ளார்‌ என்பது விளங்குகிறது.

யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச–
அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ--৷৷18.31৷৷

குந்தீ புத்திரனே – எந்த அறிவாலே தர்மத்தையும் அதர்மத்தையும் -செய்யத் தக்கத்தையும்-செய்யத் தகாததையும் –தவறாக ஒருவன் அறிகிறானோ -அந்த அறிவு ரஜோ குணத்தால் உண்டானது –

அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸா வ்ருதா–
ஸர்வார்தாந் விபரீதாம்ஸ்ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ–৷৷18.32৷৷

குந்தீ புத்திரனே – எந்த அறிவானது தமோ குணத்தால் சூழப் பட்டதாய் – அதர்மத்தை தர்மம் என்று அறிகிறதோ –சித்தமாயும் சாத்யமாயும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் நேர் மாறாக அறிகிறதோ –அந்த அறிவு தமோ குணத்தால் உண்டாகும் புத்தியாகும் –

குடம்பை தனித்தொழியப்‌ புட்பறந்தற்றே
உடம்பொ டுயிரிடை நட்பு–338

முன்றனியாத முட்டை தனித்துக்‌ கிடப்ப அதனுள்ளிருந்த புள்‌ பருவம் வந்துழிப்‌ பறந்து போன தன்‌மைத்து உடம்பிற்கும்‌ உயிருக்கும்‌ உள்ள நட்பு. தனித்‌தொழிய வென்‌றதனால்‌ முன்றனியாமை பெற்றாம்‌. கருவுந் தானும்‌ ஒன்றாய்ப்‌ பிறந்து வேறாம் துணையுந் அதற்காதாரமாய்‌ நிற்றலால்‌, ௮து உடம்பிற்குவமை யாயிற்று. சேதனமாய்‌ அருவாய்‌ நித்தமாய உயிரும்‌, ௮சேதனமாய்‌ அநித்தமாய்‌ உருவாய உடம்பும்‌ தம்முண்‌ மாறாகலின்‌, வினை வயத்தாற்‌ கூடிய தல்லது நட்பிலவென்றறிக. நட்பென்பது ஈண்டுக்‌ குறிப்பு மொழியாய்‌ நட்பின்றிப்‌ போத லுணர்த்திற்று-பரிமேழைகர்‌-இதில்‌ குடம்பை’ என்பது கூடென்று மணக்குடவரும்‌, முட்டை’ யென்று பரிமேலழகரும்‌ கூறுகிறார்கள்‌. இவற்றுள்‌ ஒன்று பறவை சித்தற்கும்‌, ஒன்று உற்பத்திக்கும்‌ இருப்பிடமானது. இவ்விரண்டினின்றும்‌
பறவை வெளியேறுகிறது. இது :புட்பறந்தற்றே’ என்‌ உவமை கூறினார்‌-இவற்றுள்‌ குடம்பை” யென்பது உடம்பிற்கும்‌. புள்‌ளென்பது உயிருக்கும்‌ உவமை யாயிற்று.

வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ—৷৷2.22৷৷

மனிதன் எப்படிக் கிழிந்த துணிகளைக் கை விட்டு வேறு புதிய துணிகளைக் கைக் கொள்ளுகிறானோ அப்படியே ஆத்மாவானவன் கட்டுக் குலைந்த உடல்களைக் கை விட்டு வேறு புதிய உடல்களை நன்றாக அடைகிறான் –

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு –339
ஒருவனுக்குச்‌ சாக்காடு வருதல்‌ உறக்கம்‌ வருதலோடொக்கும்‌. அதன்‌ பின்பு, பிறப்பு வருதல்‌ உறங்கி விழித்தலோ டொக்கும்‌. உறங்குதலும்‌ விழித்தலும்‌ உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின்‌ மாறி மாறி வருதல்‌ போன்று, சாக்காடும்‌ பிறப்பும்‌ கடிதின்‌ மாறி மாறி வரும்‌ என்பது கருத்து; நிலையாமையே நிலை பெற்றவாற றிவித்ததற்குப்‌ பிறப்பும்‌ உடன்‌ கூறப்பட்டது.-பரிமேலழகர்‌.
*துறக்கமே முதலவாய தூயன யாவை யேனும்‌
மறக்குமா நினையலம்மா வரம்பில தோற்று மாக்கள்‌
இறக்குமா றிது வென்பான் போன்‌ முன்னை நாளிறந்தான்‌
பின்னாட்‌ பிறக்குமா றிது வென்பான்‌ போற் பிறந்தனன்‌ பிறவா வெய்யோன்‌.”
-கங்கைப்படலம் -கம்பநாட்டாழ்வார்
வரம்பில தோற்று மாக்கள்‌-எல்லை யில்லாத பிறப்பு இறப்புக்களில்‌ சிக்கி உழலுகின்ற பகுத்தறிவின்‌றிய – விலங்கை யொத்த மனிதர்கள்‌, துறக்கம்‌. முதலிய போக பூமிகளையும்‌, தூயனவாகிய வைகுண்டமாகிய முத்தி உலகங்களையும்‌ மறந்து விடுகிறார்களே! இது வியப்‌ பல்லவா? அவ்வாறுள்ள நல்ல பதவிகளை அடைய முயலாமல்‌, ௮ற்பமான-பிறந்து நசிக்கின்ற மலவுடலின்‌ இன்பத்‌தையே பெரிதென விரும்புகின்ற அஞ்ஞானிகள்‌ இறப்‌பிற்கு உவமை காட்டுவான்‌ போன்று, ‘கதிரவன்‌ முன்னை நாள்‌ மேற்கில்‌ மறைந்தான்‌’ – பின்பு அவர்களின்‌ பிறப்பிற்‌ குவமை காட்டுவான்‌ போன்று, மறுநாட்‌ காலையில்‌ கிழக்கில்‌ உதயமானான்‌’ என்பது பொருளாயிற்று.

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச.–
தஸ்மாதபரிஹார்யேர்த்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி—৷৷2.27৷৷

உண்டாவதற்கு அழிவு தவிர்க்க முடியாதது – அழிந்ததற்கு மறு பிறப்பும் தவிர்க்க முடியாதது –ஆகையால் தவிர்க்க முடியாத இந்த விஷயத்தில் நீ வருந்துவதற்குத் தகுதி உடையவன் அல்லை-சோகிக்க அர்ஹதை இல்லை – பிறந்தது என்றால் இறக்க வேன்டும் – இறந்தவை பிறக்கவும் செய்ய வேன்டும் – பரிகாரம் இல்லாமல் இருக்க எதற்கு சோகிக்க வேன்டும் —

யாதனின்‌ யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்‌-341-
ஒருவன்‌ யாதொரு பொருளின்‌ யாதொரு பொருளின்‌ நீங்கினான்‌; அவன்‌ அப் பொருளான்‌ ௮ப்பொருளான்‌ வரும்‌ துன்பத்தை அடைவதில்லை. -பரிமேலழகர்‌-பற்றற்ற கண்ணே
பிறப்பறுக்கும்‌” அற்றது பற்‌ றெனில்‌ உற்றது வீடு”

“வேத நூற் பிராயம்‌ நூறு மனிதர்‌ தாம் புகுவரேலும்‌
பாதிய முறங்கிப் போகும்‌ நின்‌றதிற் பதினை யாண்டு
பேதை பாலகனதாகும்‌ பிணி பசி மூப்புத் துன்பம்‌
ஆதலாற்‌ பிறவி வேண்டேன்‌ அரங்க மா நகருளானே”
,
பற்றின்றிச்‌ செய்து கொள்வதுடன்‌ மனதைப் பற்றியுள்ள விஷயப்‌ பற்றுக்களை ஒவ்வொன்றாக விட்டு விடுதலே மெய்யறிவு பெற விரும்பும்‌ அறிஞர்களின்‌ கடமை என்பதை,-யாதனின்‌ யாதனின்‌ நீங்கியான்‌” எனவும்‌, ௮வ்வாறு விஷயப் பற்றுக்கள்‌ நீங்கிய வளவுக்கு உலகத்‌ தொல்லைகள்‌ நீங்கி மனோ சாந்‌தி யுண்டாகுமென்பதை *நேர்தல்‌ அதனின்‌ அதனின்‌ இலன்‌” என்றுங்‌ கூறினார் –

பாஹ்ய ஸ்பர்ஸேஷ் வஸக்தாத்மா விந்தத் யாத்மநி யஸ் ஸுகம்.—
ஸ ப்ரஹ்ம யோக யுக்தாத்மா ஸுக மக்ஷய மஸ்நுதே—-৷৷5.21৷৷

எந்த கர்ம யோகியானவன் வெளி விஷய அனுபவங்களில் ஈடுபடாத நெஞ்சை உடையவனாய் –உள்ளே இருக்கும் ஆத்மாவாலேயே இன்பம் அடைகின்றானோ –
அவன் ஆத்மாவைப் பயில்வதிலேயே ஈடுபட்ட மனம் உடையவனாய் ஆத்ம அனுபவம் ஆகிற அழியாத ஸூகத்தைப் பெறுகிறான் –

யே ஹி ஸம் ஸ்பர்ஸஜா போகா துக்கயோநய ஏவ தே.—
ஆத்யந்தவந்த கௌந்தேய ந தேஷு ரமதே புத—–৷৷5.22৷৷

குந்தீ புத்திரனே விஷயங்களோடு இந்திரியங்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள் யாவை சில உண்டோ – அவை துன்பத்திற்கே காரணமாய் இருப்பவை அன்றோ -முதலும் முடிவும் உள்ளவை அன்றோ – அவற்றின் இயல்வை அறிபவன் அவற்றில் ஈடுபட மாட்டான்-

அடல் வேண்டு மைந்தன்‌ புலத்தை விடல் வேண்டும்‌
வேண்டிய வெல்லா மொருங்கு -343-

வீடெய்துவார்க்குச்‌ செவி முதலிய ஐம்‌ பொறிகட்‌குரியனவாகிய ஓசை முதலிய ஐம்புலன்களையும்‌ கெடுத்தல் வேண்டும்‌. கெடுக்குங்கால்‌ அவற்றை நுகர்தற்‌
பொருட்டு தாம்‌ படைத்த பொருண்‌ முழுவதையும்‌ ஒருங்கே விடுதல்‌ நல்லது. பகுத்தறிவு பெற்ற மனிதப்‌ பிறவியினர்களுக்‌ குண்டாகும்‌ இவ்வுலக சுகங்களும்‌, ஒன்றுக் கொன்று உயர்வாகவே அமைந்துள்ளன. அவைகள்‌ வரிசைக் கிரமமாக முதலில்‌, ‘தேக சுகம்‌, இந்திரிய சுகம்‌, மனோசுகம்‌, புத்தி சுகம்‌, ஆத்ம சுகம்‌’ என்பனவாகும்‌. இவைகள்‌ ஒன்றுக் கொன்று ௮திக உயர்வானவை. இதனை இந்தரி யாணி பராண்யாஹு”’ என்ற கீதை 3-42 வது சுலோகம்‌ விளக்கிக்‌ காட்டுகிறது-முத்தி விருப்பமுள்ள அதிகாரிகளை,-உத்தமன்‌, மத்திமன்‌; அதமன்-மந்த ” என்று மூவகைப் படுத்தி வேதாந்த நூல்கள்‌ கூறுகின்றன-மத்திம அதிகாரிகளைக்‌ குறித்து உபதேசிக்கும்‌ நூலுபதேசங்கள்‌ பலவாக விருப்பினும்‌, புலனடக்கமே ஞான அதிகாரிகளுக்கு முதற் சாதான மாலதால்‌ “அடல்வேண்டும்‌ ஐந்தன் புலத்தை ”என தெய்வப் புலவர்‌ விதி முகத்தால்‌ அறிவுரை கூறினார்‌-முன்‌ அனுபவித்த
பழக்க வாசனை யானது இவனை வலிய இழுத்துச்‌ சென்று,விட்ட பற்றுக்களில்‌ புகுத்திப்‌ பேரின்ப வாழ்வுக்கு இடையூறு உண்டாக்குவதால்‌ விடல்வேண்டும்‌ வேண்டிய வெல்லா மொருங்கு”” என்ற நியமத்தையும்‌ உடன் கூறினா்‌-

இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய பரம் மந–
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே பரதஸ்து ஸ—-৷৷3.42৷৷

ஞானத்தை தடை செய்வதில் பத்து இந்திரியங்களும் முக்கியவையாக கூறுகின்றனர்
இந்திரியங்களைக் காட்டிலும் மனத்தை முக்கியமாகக் கூறுகின்றனர்
மனத்தைக் காட்டிலும் விஷய அனுபவத்தில் உறுதியான புத்தி முக்கியமானது
புத்தியைக் காட்டிலும் எது மேலானதோ அது காமமே யாகும் –

ஸங்கல்ப ப்ரபவாந் காமாம் ஸ்த்யக்த்வா ஸர்வாநஷேஷத—
மநஸை வேந்த்ரிய க்ராமம் விநியம்ய ஸமந்தத—-৷৷6.24৷৷

ஸநை ஸநைரு பரமேத் புத்த்யா த்ருதி க்ருஹீதயா—-
ஆத்ம ஸம் ஸ்தம் மந க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்—৷৷6.25৷৷

தன் மமகாரத்தால் ஏற்படும் எல்லா விரும்பத்தக்க பொருள்களையும் அடியோடு மனத்தாலேயே ஸ்வரூப தியாகம் செய்தும் -எல்லா விஷயங்களில் நின்றும் இந்திரிய சமூகத்தை மிகவும் திருப்பி மெள்ள மெள்ள தைர்யத்தினால் நிலை நிறுத்தப்பட்ட அறிவினால் – ஆத்மாவைத் தவிர்ந்த மற்ற விஷயங்களில் நின்றும் கை வாங்கக் கடவன் –
ஆத்மாவிலேயே இருப்பதாக மனத்தைச் செய்து ஆத்மாவைத் தவிர்ந்த எவ் விஷயத்தையும் சிந்திக்கக் கடவன் அல்லன் –

யானென தென்னுஞ்‌ செருக்கறுப்பான்‌ வானோர்க்‌கு
உயர்ந்த வுலகம் புகும்‌–346-

தானல்லாதவுடம்பை யானென்றும்‌, தன்‌னோடியைபில்லாத பொருளை எனதென்றுங் கருதி அவற்றின்‌ கட்‌ பற்றுச் செய்தற்‌ கேதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்‌ வானோர்க்கும்‌ எய்தற்கரிய வீட்டுலகத்தை யெய்தும்‌. இதனான்‌ இவ் விரு வகைப்‌ பற்றைபும்‌ விட்டார்க்கே வீடுள்ளது என்பது கூறப்பட்டது. ஒருவனுக்குக்‌ காமானுசாரத்ததிற்குத்‌ தக்கவாறாகவே உலகப்‌ பொருள்கள்‌ வந்து சேருகின்றன. இது:“”புண்ணியமாம்‌ பாவம்‌ போம்‌ போன நாட்‌ செய்தவை மண்ணிற்‌ பிறந்தாரக்கு வாய்த்த பொருள்‌”-என்ற பாவின்படி., முன்‌ செய்துள்ள புண்ணிய வினைப்‌பயனால்‌ ஒருவனுக்குப்‌ பல பொருள்கள்‌ தானே வந்து குவிகின்றன.

விஹாய காமாந் யஸ் ஸர்வாந் புமாம்ஸ்சரதி நிஸ்ப்ருஹ—.
நிர்மமோ நிரஹங்கார ஸ ஸாந்தி மதிகச்சதி–৷৷2.71৷৷

எந்த மனிதன் சப்தாதி விஷயங்கள் அனைத்தையும் விட்டு -அவற்றில் ஆசை அற்றவனாய் –மமகாராம் அஹங்காரம் அற்றவனாய் வாழ்கிறானோ அவன் சாந்தியை அடைகிறான்-

பொருளல்‌ லவற்றைப்‌ பொருல் என்‌றுணரு
மருளானா மாணாப்‌ பிறப்பு-351-

மெய்ப்‌ பொருளல்லாத வற்றை மெய்ப்‌ பொருளென்று உணரும்‌ விபரீத வுணர்வானே உனதாம்‌;இன்பமில்லாத பிறப்பு.–விபரீத வுணர்வாவது இருவினைப் பயனும்‌, *கடவுளுமில்லை எனவும்‌ மற்றுமித்‌ தன்மை யெனவுஞ்‌ சொல்லும்‌
மயக்க நூல்‌ வழக்குகளை மெய்‌ நூல்‌ வழக்‌கென துணிதல்‌.
“மருள்‌, மயக்கம்‌, விபரீத வுணர்வு, அவித்யை ”’ என்பன ஒரு பொருட்‌ சொற்கள்‌. நரகர்‌, விலங்கு, மக்கள்‌, தேவ” என்னும்‌ நால்வகை பிறப்பினும் துன்பமே யாதலின்‌,மாணாப்‌ பிறப்‌’பென்றார்‌ பிறப்பு துன்பமென்பதும்‌ அதற்கு முதற் காரணம்‌ -அவித்யை ‘ என்பதும்‌ கூறப்‌பட்டன.–பரிமேலழகர்‌.- -மெய்யுணர்தல்‌’ என்ற அதிகாரத்துள்ள பத்துக்‌ குறட் பாக்களிலும்‌ விளக்கி யருளினர்‌- -கீதை 13-26-ஸ்லோகத்தின்‌ கருத்தாகும்‌-

அந்யே த்வேவமஜாநந்த ஸ்ருத்வாந்யேப்ய உபாஸதே–
தே அபி சாதி தரந்த்யேவ ம்ருத்யும் ஸ்ருதி பராயணா--৷৷13.26৷৷

இவ்வாறு ஜீவாத்மா ஞானம் இல்லாத மற்றும் சிலரோ என்னில்-ஆச்சார்யர்கள் இடம் ஆத்மாவைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு உபாசிக்கிறார்கள் குருமுகமாகக் கேட்பதையே முக்கிய லஷ்யமாகக் கொண்ட அந்த பாக்ய சாலிகளும் படிப்படியாக சம்சாரத்தை கடப்பரே யாவர்

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத-
உபயோரபி த்ருஷ்டோந்த ஸ்த்வநயோஸ் தத்வ தர்ஸிபி–৷৷2.16৷৷

இல்லது எனப்படும் உடலுக்கு உள்ளதின் தன்மையாகிற நித்யத்வம் உண்டாகாது -உடல் அநித்யமானது உள்ளது எனப்படும் ஆத்மாவுக்கு இல்லதின் தன்மையாகிற அநித்யத்வம் உண்டாகாது -ஆத்மா நித்தியமானது உடல் ஆத்மா இவ்விரண்டையும் பற்றிய முடிவானது உண்மை அறிவாளிகளால் இவ்வாறு அறியப் பட்டுள்ளது-

இருள் நீங்கி மின்பம்‌ பயக்கு மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு-352-
அவித்தை நீங்கி மெய் யுணர்வுடையராயினார்க்கு, அம் மெய்யுணர்வு பிறப்பினை நீக்கி விட்டினைக்‌ கொடுக்கும்‌. மாசறு காட்சி யென்றது கேவல வுணர்வினை- இதனால்‌
வீடாவது நிரதசய வின்பமென்பதுவும்‌, அதற்கு நிமித்த காரணம்‌ கேவலப்‌ பொருளென்பதூவும் கொள்க– பரிமேலழகர்‌.
சாணினு முளனோர்‌ தன்மை யணுவினைச்‌ சத கூறிட்ட
கோணினு முளன் மா மேருக்‌ குன்றினு முளனின்னின்‌ற
தூணினமுளன்‌ நீ சொன்ன சொல்லினு முளனித் தன்மை காணுதி விரைவில்‌’”
-கம்பநாட்டாழ்வார் –

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷

எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்-

ஐயத்நீனீங்கித்‌ தெளிந்தார்க்கு வையத்தின்‌
வாள நணிய துடைத்து-353-

ஐயத்தினின்றி நீங்கி மெய்புணர்ந்தார்க்கு எய்‌தி நின்ற நிலவுலகத்தினும்‌ எய்தக் கடவதாய வீட்டுலகம்‌ கணித்தா தலுடைத்து – ஐயமாவது பலதலையாய வுணர்வு. அஃதாவது மறு பிறப்பும்‌ இருவினைப் பயனும்‌ கடவுளும்‌ உளவோ இலவோவென ஒன்றிற்றுணிவு பெறாது நிற்றல்‌, பேய்த்தேரோ,புனலோ, கயிரோ, அரவோ வெனத் துணியாது நிற்பதும்‌ அது-. ஒருவாற்றார பிற மதம் களைந்து தம்மத நிறுத்தல்‌ எல்லாச்‌ சமய நூல்கட்கும்‌ இயல்பாதலின்‌, ௮வர்‌ கூறுகின்ற பொருள்களுள்‌ யாது மெய்யென நிகழுமையத்தனை யோக முதிர்ச்சி யுடையார்‌ தம்மனுபவத்தால் நீக்கி மெய்யுணர்வார் ஆதலின் அவரை ஐயத்தின்‌ நீங்கித்‌ தெளிக்தாரென்றும்‌, அவர்க்கு ௮வ் வனுபவ வுணர்வு அடிப்பட்டு வரவர பண்டை உலககிய லுணர்வு தூர்ந்து வருமாகலின்‌, அதனைப்‌ பயன் மேலிட்டு ‘வையத்தின்‌ வானம்‌ நணியதுடைத்து”‘ என்றும் கூறினார்‌- கூறவே, ஐய வுணாவும்‌ பிறப்பிற்குக்‌ காரணமாதல்‌ கூறப்பட்டது.– பரிமேலழகர்‌.

அஜ்ஞஸ் சாஸ்ரத் ததாநஸ்ச ஸம்ஸயாத்மா விநஸ்யதி—
நாயம் லோகோஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஸயாத்மந—-৷৷4.40৷৷

ஆத்ம ஞானம் அற்றவனும் அவ்வறிவை வளர்ப்பதில் ஆர்வம் அற்றவனும் ஐயம் உற்றவனுமான மனிதன் அழிந்து விடுவான்- ஐயம் உற்ற நெஞ்சினனுக்கு இவ்வுலகில் புருஷார்த்தங்கள் கிடையாது –பர லோக புருஷார்த்தமான மோக்ஷமும் கிடைக்காது -ஆத்ம விஷயமான சுகமும் கிடைக்காது –

லபந்தே ப்ரஹ்ம நிர்வாணம் ருஷய க்ஷீண கல்மஷா—
சிந்ந த்வைதா யதாத்மாந ஸர்வ பூத ஹிதே ரதா—-৷৷5.25৷৷

சீத உஷ்ணம் முதலிய இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்களாய் -ஆத்மாவிலேயே ஈடுபட்ட மனத்தை உடையவர்களாய் எல்லா ஜீவ ராசிகள் உடையவும் நன்மையில் ஊற்றம் உடையவர்களாய் ஆத்ம சாஷாத்காரத்தை பயில்கின்றவர்களான கர்ம யோகிகள் ஆத்மாவை அடையத் தடையாய் இருக்கும் எல்லாப் பாபங்களும் நீங்கப் பெற்றவர்களாய்
ஆத்ம அனுபவ ஸூகத்தை அடைகிறார்கள் –

ஐயுணர்‌ வெய்தீயந்‌ கண்ணும்‌ பயமின்றே
மெய்யுணார்‌ வில்லா தவர்க்கு–354-

செல்லப்படுகின்ற புலன்கள்‌ வேறுபாட்‌டான்‌ ஜந்தாகிய உணர்வு, அவற்றை விட்டுத்‌ தம்‌ வயத்ததாகிய வழியும்‌, அதனாற்‌ பயனில்லையேயாம்‌ மெய்யுணர்‌வைப்‌ பெறாதார்க்கு-ஐந்‌தாகிய வுணர்வு மனம்‌. அஃதெய்துதலாவது-மடங்கி ஒருவழிப்பட்டுத் தாரணைக் கண்‌ நிற்றல்‌, அங்கன் நின்ற வழியும்‌ வீடு பயவாமையின்‌ பயமின்றென்றார்‌. சிறப்‌பும்மை எய்‌துதற்கருமை விளக்கி நின்றது. இதனால்‌, ‘மெய்‌ யுணர்வுடையார்க்கே வீடுள”தென மெய் யுணர்வின்‌ சிறப்புக்‌ கூறப்பட்டது-பரிமேலழகர்‌.

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களின் ஆசை நீங்குவது இல்லை-ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் –ஏக ஆஸ்ரய தோஷம்-

எப்பொரு ளெத்தன்னைத்‌ தாயினு மப்பொருள்‌
மெய்ப்‌ பொருள்‌ காண்பதறிவு-355

யாதொரு பொருள்‌ யாதோரியல்பாய்த் தோற்றினும்‌ அத் தோற்றியவற்றைக கண்டொழியாது ௮ப்‌ பொருளின்‌ கணின்று மெய்யாகிய பொருளைக்‌ காண்பதே
மெய்யுணர்வாவது-,பொருள் தோறும்‌ உலகத்தாசர் கற்பித்துக் கொண்டு
வழக்கும்‌ கற்பனைகளை நீக்கி நின்ற உண்மையைக்‌ காணுதலாம்‌- பரிமேலழகர்‌-மெய்யுணர்தலுக்கு இலக்கணமாக அமைந்துள்ளது இக்குறட்பா -மரத்தால் செய்த யானையைப்‌ பார்க்கு மிடத்து முதலில்‌ யானை தோன்றுகிறது; மரம்‌ தெரிவதில்லை.-மரம்‌” என்ற உண்மை தெரிந்தவுடன்‌ யானை தோன்றுவதில்லை-மஞ்சட்காமாலை யுள்ளவன்‌ கண்களுக்கு ஸூர்ய வொளி மஞ்சன்‌ நிறமாகவே தோற்றமளிக்கிறது–“தேகமே நான்‌’ என்று மாறு பட்டுணர்வது பொய்யுணரவாகும்‌-

யாவத் ஸஞ்ஜாயதே கிஞ்சித் ஸத்த்வம் ஸ்தாவர ஜங்கமம்–
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ ஸம் யோகாத் தத் வித்தி பரதர்ஷப–৷৷13.27৷

பரத வம்ச திலகமே ஸ்தாவரமாகவோ ஜங்கமமாகவோ ஏதாவது ஒரு ஐந்து எவ்வளவு உண்டாகிறதோ-அவ்வளவும் ப்ரக்ருதி ஜீவன் இவற்றின் சேர்க்கையால் ஏற்பட்டதே என்று அறிவாயாக-விலங்குகளுக்கும் ஸ்தாவரங்களுக்கும் ஆத்மாக்கள் உண்டு-எந்தப் பொருளும் சேதன அசேதன சேர்க்கையாலேயே உண்டாகின்றன –

ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஸ்வரம்–
விநஸ்யத் ஸ்வ விநஸ்யந்தம் ய பஸ்யதி ஸ பஸ்யதி–৷৷13.28৷৷

ஆத்ம தேஹ பண்புகளை பிரித்து பார்ப்பவன் உண்மையாகப் பார்க்கிறான்-வெவ்வேறு ஆகாரமான எல்லா தேஹங்களிலும் தனித்தனியே தேகம் முதலியவற்றுக்கு முழு ஈஸ்வரனாய் –சேதனனாய் -சமமாக இருப்பவனும் –ஞான ஆகாரத்தால் சமமாகப் பார்க்க வேண்டுமே -அந்த தேகங்கள் அளிக்கின்ற போது என்றும் தான் அழியாமல் இருப்பவனுமாக எவன் காண்கிறானோ அவனே ஆத்ம தர்சனம் செய்பவன் –

கற்றீண்டு மெய்ப்பொருள்‌ கண்டார்‌ தலைப்படுவர்‌
மற்றீண்டு வாரா நெறி-356

இம்மக்கட்‌ பிறப்பின்‌ கண்ணே உபதேச மொழிகளை அனுபவமுடைய தேசிகர்பாற்‌ கேட்டு, அதனான்‌ மெய்ப்பொருளை யுணர்ந்தவா்‌ மீண்டு இப்‌ பிறப்பின்‌ கண்‌ வாராத நெறியை யெய்துவர்‌-விட்டிற்கு நிமித்த காரணமாய்‌ முதற்‌ பொருளை யுணர்தற்குபாயம்‌ மூன்று- அவை -ஸ்ரவணம் -மனனம் -நிதித்யாஸனம்-கேள்வி, விமரிசம்‌, பாவனை, யென்பன,- அவற்றுட்‌ கேள்வி இதனாற்‌ கூறப்பட்டது. -(பரிமேலழகர்).-

யஜ்ஜ்ஞாத்வா ந புநர் மோஹ மேவம் யாஸ்யஸி பாண்டவ.—
யேந பூதாந் யஸேஷேண த்ரக்ஷ்யஸ்யாத் மந்யதோ மயி—৷৷4.35৷৷

எதை அறிந்து மறுபடியும் இவ் வண்ணமாக மயக்கத்தை அடைய மாட்டாயோ –
எந்த அறிவினால் ஜீவ ராசிகள் ஓன்று விடாமல் தனக்கு சமமாகவும் எனக்கும் சமமாகவும் காண்பாயோ –அந்த அறிவைப் பெறுவாயாக –சாஷாத்காரம் அடைந்தால் -மயக்கம் பிரமம் வராது -பார்வை -உன்னை போலே பூதங்களை பார்ப்பாய் – எல்லாரையும் ப்ரஹ்மமாகவே -சரீரம் தானே என்று அறிந்து -கொள்வாய்-

பிறப்பென்னும்‌ பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள்‌ காண்ப தறிவு-358-

-பிறப்பிற்கு முதற் காரணமாகிய அவித்யை கெட வீட்டிற்கு நிமித்த காரணமாகிய செவ்விய பொருளைக்‌ காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது-*பிறப்பென்னும்‌ பேதமை” எனலும்‌, *சிறப்பென்னும்‌செம் பொருள்‌” எனவும்‌ காரியத்தைக்‌ காரணமாக உபசரித்தார்‌-இது எல்லாம்‌ ஈஸ்வர சொருபம்‌!” என்ற பாவனை நிலை பெற வேண்டும்‌. இது தியான சமாதிகளால்‌ உண்டாகும்‌ ஆத்மானுபவத்தாலாவது- இதனைச்‌ செம் பொருள்‌ காண்பதறிவு” என்று கூறினார்‌. “எய்ப்பென்னை வந்து நலியும் போதங்கேதும்‌ நானுன்னை
நினைக்க மாட்டேன்‌. அப்போதைக்‌ இப்போதே சொல்லி வைத்தேன்‌ அரங்கத் தரவணைப்‌ பள்ளியானே’ -மனதின்‌ இயல்பே மனித உருவமாகிறது. அம்மனதிற் கொத்தபடியே உலக
மும்‌ அவளுக்குக்‌ காட்சி யளிக்கிறது-

ஜ்ஞாநேந து தத் அஜ்ஞாநம் யேஷாம் நாஸிதம் ஆத்மந–
தேஷாம் ஆதித்யவத் ஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத் பரம்—৷৷5.16৷৷

எந்த ஜீவர்களுக்கு ஆத்ம விஷயமான ஞானத்தால் அந்த கர்மம் அழிக்கப் பட்டதோ அவர்களுக்கு மேலான அவ்வாத்மா ஞானம் ஸூர்யனைப் போலே எல்லாவற்றையும் பிரகாசப் படுத்துகிறது-விலக்க உபாயம் -அநாதி பாப கர்ம வாசனை -ஆத்ம யாதாம்யா ஞானம் கொண்டே -வளர்த்து -அப்பியாசம் முக்கியம் – ஆதித்யன் ஒளியால் பொருள்கள் விளங்குவது போலே ஞானம்-மேகம் மூட்டம் போலே அஞ்ஞானம் –

தத்புத்தயஸ் ததாத்மாநஸ் தந்நிஷ்டாஸ் தத்பராயணா—-
கச்சந்தி அபுநராவ்ருத்திம் ஜ்ஞாந நிர்தூத கல்மஷா—৷৷5.17৷৷

முன் கூறிய ஆத்ம தர்சனத்தாலேயே உறுதி பூண்டவர்களாய் -அதிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய் –அதின் பயிற்சியிலே ஊன்றி நிற்பவர்களாய் -அதுவே பரம பிரயோஜனம் என்று நினைத்து இருப்பவர்களாய்-இந்த ஆத்ம ஞானத்தாலேயே முன் செய்த வினைகள் அழியப் பெற்றவர்கள் திரும்பி வருதல் இல்லாத ஆத்மாவை அடைகிறார்கள்-

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—7-19-

பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் –
வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் – அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான் -பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

காமம்‌ வெருளி மயக்கமிலை மூன்றன்‌
நாமந்‌ கெடக்‌ கெடுனோய்‌-360-

காமம்‌, வெகுளி, மயக்கமெனும்‌ இக் குற்‌றங்கள்‌ மூன்றும்‌, ஞான யோகப்‌ பயிற்சி யுடையார்க்கு அறவே கெடுதலால்‌, அவற்றின்‌ காரியமாக வினைப் பயன்‌கள்‌ உண்டாக மாட்டா-ஆகையால்‌, பிறவிப் பிணி அவர்‌களுக்கு இனி உண்டாகாது-மெய்யுணர்ந்த ஞானிகளுக்கு நிற்பது, எடுத்த உடம்பும்‌ அதற்குள்ள வினைப்‌ பயன்களுமே யென்பது பெற்றாம்‌-பரிமேலழகர் –

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸநம் ஆத்மந–
காம க்ரோதஸ்  ததா லோபஸ் தஸ்மா தேதத் த்ரயம் த்யஜேத்–৷৷16.21৷৷-த்யஜேத்-படர்க்கை –த்யஜ-முன்னிலை பாட பேதம்-

காமம் கோபம் பேராசை என்கிற இது ஆஸூரத் தன்மையாகிற நரகத்திற்கு ஆத்மாவையே அழிக்க வல்ல மூன்று வகைப்பட்ட காரணமாகும் -ஆகையால் இந்த மூன்றையும் கை விட வேண்டும் – மூன்று துவாரம் -ஆத்மாவை அழிக்கும் -காமம் -க்ரோதம் -பேராசை -மூன்றையும் விலக்கி விடுவாய் – தேவைகளை குறைத்து ஆசைப் படாமல் இருந்தால் போதுமே-

அவா வென்ப வெல்லா வுயிர்க்கு மெஞ்‌ஞான்றும்
தவாஅப்‌ பிறப்பீனும்‌ வித்து-361-

எல்லா வுயிர்கட்கும்‌ எக் காலத்தும்‌ கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும்‌ வித்து அவா வென்று சொல்லுவர்‌ நூலோர்‌-*ஆசையுள்ளளவும்‌ பிறப்பும்‌ உண்டு’ என்ற
நிச்சயம்‌ காணப்படுகிறது-தேகமகிய ஏரியில்‌ நிறைந்து ததும்புகின்ற ஆசையாகிய தண்ணீர்‌, பொறிகளாகிய கால்வாய்களில்‌ வழிந்தோடி விஷயங்களிற்‌ சென்று
பாய்ந்து, விஷயங்களில் பற்றுக் கொண்டு நற்கதிக்குச்‌ செல்ல வொட்டாமல்‌ தடைப் படுத்துகிறது.

ஸ்ரீ பகவாநுவாச-
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ–
மஹா ஸநோ மஹா பாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்–৷৷3.37৷৷

பகவான் கூறினான் -நீ கேட்ட விஷய அனுபவ காரணம்-ரஜோ குணத்தால் உண்டாவதாய் –
பெரும் தீனி தின்னும் காமமே யாகும்–நெருப்புக்கு எவ்வளவு விறகு கொடுத்தாலும்‌ அதை எரித்துவிட்டு மேலும்‌ விறகை வேண்டி. நிற்கிறது. அவ்வாறே காமத்துக்கு உணவை ஊட்ட ஊட்ட அது உண்டு வளருகிறது,-இக் காமமே -தடை செய்யப்பட போது -தடை செய்தவர்களைக் குறித்து -பெரும் பாவச் செயல்களையும் புரியும் கோபமாகப் பரிணமிக்கிறது –இக் காமத்தையே இந்த ஞான யோகத்துக்கு விரோதி என்று தெரிந்து கொள்வாயாக-

வேண்டாமை யன்ன விழுச் செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்பதில் -363-

ஒரு பொருளையும்‌ ஆசைப்படாத விழுமிய செல்வம்‌ காணப்படுகின்ற இவ்வுலகில்‌ இல்லை- அவ்‌வளவே யன்று, காணப் படாத துறக்க வுலகத்தும்‌ அதனை யொப்பதில்லை. மக்கள்‌ செல்வமும்‌ தேவர்‌ செல்வமும்‌ அதற்கு மேலுள்ள செல்வத்தை நோக்க, இச்செல்வங்கள்‌ கீழாகின்றன–தனக்கு மேல்‌ ஒன்றுமில்லாத வேண்டாமையை விழுச் செல்வமென்றார் — பரிமேலழகர்‌.

அநபேக்ஷஸ் ஸூசிர் தக்ஷ உதாஸீநோ கத வ்யத–
ஸர்வாரம்ப பரி த்யாகீ யோ மத் பக்தஸ் ஸ மே ப்ரிய–৷৷12.16৷৷

ஆத்ம தவிர்ந்த எல்லா வஸ்துக்களையும் விரும்பாதவனாய் -ஆஹார சுத்தியை உடையவனாய் – சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கிரியைகளைச் செய்வதில் வல்லவனாய் – மற்ற கிரியைகள் விஷயத்தில் உதா சீனனாய் -சாஸ்திரீய கிரியைகள் செய்வதனால் தவிர்க்க முடியாமல் ஏற்படும் துன்பங்களினால் துன்புறாதவனாய் -சாஸ்திரீய கர்மங்கள் தவிர்ந்த மற்ற கர்மங்கள் அனைத்தையும் தொடங்காமலே விடுபவனாய் -எந்த கர்ம யோக நிஷ்டன் என்னிடம் அன்பு செலுத்துகிறானோ அவன் எனக்கு இனியவன்-

ஆரா வியற்கை யவா நீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும் –370-

ஒருகாலும்‌ நிரம்பாத அவாவினை ஒருவன்‌ நீக்குமாயின்‌ , அந் நீப்பு அவனுக்கு அப்பொழுதே எந் நாளும்‌ ஒரு தன்மையனா மியல்பைக்‌ கொடுக்கும்‌-களிப்புக்‌ கவர்ச்சிகளும்‌, பிறப்பு இறப்புப்‌ பிணி மூப்புகளும்‌ முதலாயின வின்றி உயிர் நிரதிசய வின்பத்தைப்‌ பெறுதலின்‌ விட்டின்‌பத்தனைப்‌ (பேரா வியற்கை’ யென்றும்‌, ௮ஃது அவா நீத்த
வழிப் பெறுதல்‌ ஒரு தலையாதலின்‌ அந்நிலையே :த௫’ மென்‌றும் கூறினார்‌. – பரிமேலழகர்‌-இவ்வதிகாரத்துள்ள முதல்‌ ஒன்பது பாக்களிலும்‌, அவா” என்னும்‌ ஆசையாலுண்டாகும்‌ தீமைகளை யெல்லாம்‌ பலவாறாக விளக்கக்‌ கூறி, இப் பத்தாவது குறளில்‌ *ஆரா வியற்கை யவா” என்று அவாவினது முழு இலக்கணத்தையும்‌ தெய்வப் புலவர்‌ கூறிமுடித்தார்‌. அத்‌ தன்மையான ஆசையை ஒருவன்‌ நீக்க வல்லவனாயின்‌, அப்‌பொழுதே அவன்‌ வீட்டின்பத்தினை யடைகிறான்‌’ என அதன்‌ பலனையும்‌ அடுத்த அடியில்‌ உள்ள வாக்‌கியத்தின்‌ பொருளால்‌ விளக்கிக்‌ கூறினார் –

தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ–
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி–৷৷16.24৷৷

ஆகையால் உனக்குக் கைக் கொள்ளத் தக்கது இது கைக் கொள்ளத் தகாதது இது என்று நிர்ணயிப்பதில் வேதமே ப்ரமாணமாகும்- ஆகையால் சாஸ்திரங்களில் சொல்லப்படும் தத்துவத்தை உள்ளபடி அறிந்து இக் கர்ம பூமியில் அக் கர்மத்தையும் அந்த தத்வ ஞானத்தையும் நீ கைக் கொள்ளத் தக்கவனாகிறாய் –

ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷

எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை-

நுண்ணிய தூல்பல கற்பினு மற்றுந்தன் னுண்மை யறிவே மிகும் -373-
பேதைக்‌ குணமுடையானொருவன்‌ நுண்‌ணிய பொருள்களை யுணர்த்தும்‌ நூல்கள்‌ பலவற்றையுங்‌ கற்‌றானா யினும் மற்றுந்தன்‌ ஊழானாகிய பேதமை யுணர்வே மேற்படும்‌-*இயற்கையறிவு, நூலறிவு’ –இயற்கையறிவென்பது சத்துவ, ராஜஸ தாமஸ மாகிய முக்குணக் கலப்பினாலாகியது, அது, *௮வனவன்‌ ஊழ்வினைக்குத்‌ தக்கவாறாக அமைந்துள்ளது” என்பது பரிமேலழகரின்‌ கருத்தாகும்‌-கீதை 15 -மூன்று குணங்களின்‌ விளக்க அத்தியாயம்‌” இதைக்‌ கம்பரும்‌, *மூன்‌று உருவெனக்‌ குண மும்மையா முதற் தோன்றுரு வெவையும்‌” என வலியுறுத்தினார் –

ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞாநவாநபி–
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ கிம் கரிஷ்யதி—৷৷3.33৷৷

சாஸ்த்ரங்களினால் ஏற்படும் ஆத்ம தத்வ ஞானத்தை உடையவனும் தன்னுடைய அநாதியான விஷய வாசனைக்குத் தக்கபடி -உலக விஷயங்களிலேயே பழகுகிறான் -ஏன் எனில் – அசேதனத்தோடு சேர்ந்து இருக்கும் சேதனர்கள் அநாதி வாசனையையே பின் செல்கின்றனர் – அவர்களை சாஸ்திரம் செய்யும் நியமனம் என்ன செய்து விட முடியும் –

இருவே றுலகத்‌ தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும்‌ வேறு-374-

உலகத்து ஊழினாலாய வியற்கை இரண்டு கூறு. அவை, செல்வமுடையராதலும்‌ வேறு; அறிவுடையராதலும்‌ வேறு-உலகமென்பது உயர்ந்தோர்‌ மாட்டே என்‌றபடி, உயர்‌ பிறப்பாகிய மக்கட்‌ பிறவியைக்‌ குறிப்பிடுகிறார் – அம்மக்கட்‌ பிறவியிலுள்ளும்‌, *ஊழ்வினைக்‌குத்‌ தக்கவாறாக இருவிதக்‌ குறிக் கோளை இயல்பாக வுடையவர்களாக இருக்கிறார்கள்‌’ எனப்‌ பிரித்துக்‌ கூறினார்‌, அவற்‌றுள்‌, செல்வத்தை மட்டும்‌ விரும்புவோர்‌, உலகப் பற்றுடையார்‌ பந்தத்தில்‌ கட்டுண்டவர் ‘ என, ஒரு சாரரராகவும்‌, ஞானத்தை விரும்புவோர்‌, தெய்விகப்‌ பற்றுடையவர் முக்தி நெறியின்‌ சார்பு பெற்றவர் ‘ என மற்றொரு சார்பாராகவும்‌ பிரித்து, ‘செல்வமுடையராதலும்‌ வேறு அறிவுடையராதலும்‌ வேறு’ என, இரு விதமாகப்‌ பகுத்துக்‌ கூறினார்‌-நம்‌ சமய நூல்களில்‌ ஊழ் வலியை வற்புறுத்திக்‌ கூறுவது போன்று,பிற மதங்களில்‌ காணப்படவில்லை, மற்றும்‌, நம்‌ சமய நூல்‌களில்‌ கண்ணிமைப்பதும்‌, கைகாலசைவதும்‌, காலில்‌ முள்‌ தைப்பதும்‌, கல்‌ இடரி விழுந்து தலை சிதறி உயிர்‌ நீப்பதும்‌,
*ஊழ்வினையின்‌ விளை’ வென்றே சோதிடம்‌ முதலான எல்லா நூல்களும்‌ ஒரு படித்தாகவே கூறுகின்றன.

நா தத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு—
அஜ்ஞாநே நாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ—৷৷5.15৷৷

பல இடங்களில் பரவக் கூடிய இந்த ஜீவன் (தர்ம பூத ஞானத்தால் தான் விபு ஸ்வரூபத்தால் அணு தான் )தனக்கு வேண்டியவனாக நினைக்கப்படும் புத்ரன் முதலான-எவனுடைய துக்கத்தையும் நீக்கி விடுவது இல்லை –தனக்கு வேண்டாதவனாக நினைக்கப்படும் சத்ரு முதலான எவனுடைய ஸூகத்தையும் போக்கடிப்பது இல்லை – இவனுடைய அறிவு -இவ்வறிவுக்கு விரோதியான முன் செய்த வினைகளால் மறைக்கப் பட்டுள்ளது
ஜந்தவ-தேவாதி சரீரங்கள் இருக்கும் ஜீவர்கள் அந்த முன் செய்த வினைகளால் தேஹாத்ம மயக்கம் முதலான வற்றால் மயங்குகின்றனர்

ஸ்ரீ பகவாநுவாச-
லோகேஸ்மிந் த்வி விதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக—
ஜ்ஞாந யோகேந ஸாங்க்யாநாம் கர்ம யோகேந யோகிநாம்—৷৷3.3৷৷

ஸ்ரீ பகவான் கூறினான்-பாவம் அற்றவனே -இவ்வுலகில் என்னால் அறிவு உடையவர்களுக்கு ஞான யோகத்தில் நிலை கர்ம யோகத்தில் அதிகாரம் உடையவர்களுக்குக் கர்ம யோகத்தில் நிலை ஆகிய இரண்டு விதமான நிஷ்டைகள் முன்னால் கூறப்பட்டது கர்ம யோகம் அநாதி -சாஸ்த்ர ஸம்மதம் -மயா -தன் திரு மார்பை தொட்டு -அருளிச் செய்கிறான்-

சென்ற விடத்தாற்‌ செல்வீடாதீ தொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு–422-

மனதை, ௮து சென் ற புலத்தின் கட்‌ செல்லவிடாது, அப்புலத்தின்‌ நன்மை தீமைகளை யாராய்ந்து தீயதனினீக்கி , நன்னெறிக் கட்‌ செலுத்துவது அறிவாம்‌-மாவும்‌ மாக்‌
களும்‌, ஐயறிவினவே மக்கடாமே ஆறறி வுயிரே”” எனத்‌ தொல்காப்பிய” சூத்திரம்‌ -கடோபநிடதத்தில்‌ *ஆத்மானம்‌ ரதீநம்‌,-இந்த்ரியாணி ஹயானா’” என்ற இரண்டு மந்திர வாக்கியங்கள் -பொறிகளை அடக்கியாளும்‌ நல்லறிவு பெற்றுள்ளவர்களே பிறப்பின்‌
பலனை அடைகின்றனர்கள்‌’

ராக த்வேஷ வியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ் சரந்.–
ஆத்ம வஸ்யைர் விதேயாத்மா ப்ரஸாதமதி கச்சதி–৷৷2.64৷৷

ஆசை வெறுப்பு முதலியவை நீங்கப் பெற்றவையாய் தனக்கு வசப்பட்டு இருக்கின்ற இந்த்ரியங்களால் சப்தாதி விஷயங்களைக் கடந்து நிற்பவனாய் மனத்தை அடக்கிய புருஷன் மனத்தெளிவை அடைகிறான் –

இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோநுவிதீயதே—
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர் நாவமி வாம்பஸி—৷৷2.67৷৷

விஷயங்களில் ஈடுபடும் இந்திரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி
செய்யப்படுகிறதோ அந்த மனம் இவனுடைய அறிவை காற்றானது கப்பலை இழுப்பது போலே விஷயங்களை நோக்கி இழுத்துச் செல்லுகிறது அன்றோ-

தஸ்மாத் யஸ்ய மஹா பாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—৷৷2.68৷৷

நீண்ட கைகளை உடையவனே ஆகையால் எவனுடைய இந்திரியங்கள் விஷயங்களில் இருந்து எல்லாப் படியாலும் இழுக்கப் பட்டனவோ அவனுக்கு ஆத்ம விஷயமான அறிவு நிலை நிற்கிறது-

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு–426-

உலகம்‌ யாதொருவாற்றா னொழுகுவதாயிற்று அவ் வுலகத்தோடு மேவித்தானும்‌ ௮வ்வாற்றா னொழுகுவது அறிஞர்கட்குக்‌ கடமையாகும்‌.
உலகத்தோ டொட்ட வொழுகல்‌ பல கற்றுங்‌ கல்லா ரறிவிலாதார்‌–140
உலகத்தோடு பொருந்த வொழுகு தலைக்‌ கல்லாதார்‌, பல நூல்களையுங்‌ கற்றாராயிலும்‌ *அறிலிலாதார்‌” என்பதாகும்‌.-ஞானிகள்‌, இப்படிப்பட்ட அவிவவேககள்‌” கெட்டுப் போகாமலிருத்தற்‌ பொருட்டு, கர்மத்தில் பற்றுள்ள அவர்கள்‌, கர்மங்களையாவது சரிவரச்‌ செய்து பலனடடைவதற்காகத்‌ தாங்களும்‌ கர்மங்களைச்‌ செய்தும்‌, செய்வித்துக்‌ காட்டியும்‌ அவர்களை முன்னேற்றமடையச்‌ செய்தல்‌ வேண்டும் –

ஸக்தா கர்மண் யவித்வாம் ஸோ யதா குர்வந்தி பாரத—
குர்யாத் வித்வாம் ஸ்ததாஸக்தஸ் சிகீர்ஷுர் லோக ஸங்க்ரஹம்৷৷3.25৷৷

பரத குலத்தில் உதித்தவனே -கர்மத்தில் தொடர்பை உடையவர்களாய் -ஆத்ம ஸ்வரூபத்தைக் குறைவற அறியாதவர்கள் எப்படிக் கர்ம யோகத்தைச் செய்கிறார்களோ அவ் வண்ணமாக கர்மத்தில் பிணைப்பு அற்றவனாய் ஆத்ம ஸ்வரூபத்தைக் குறைவற அறிந்தவனாய் -உலகத்தை இசைய வைப்பதற்கு விரும்பியவன் கர்ம யோகத்தைச் செய்யக் கடவன் –

ந புத்தி பேதம் ஜநயேத ஜ்ஞாநாம் கர்ம ஸங்கிநாம்—
ஜோஷயேத் ஸர்வ கர்மாணி வித்வாந் யுக்த ஸமாசரந்৷৷3.26৷৷

ஆத்மாவைக் குறைவற அறியாதவர்களாய்க் கர்மத்திலேயே பிணைப்பை யுடைய முமுஷுக்களுக்கு கர்ம யோகத்தைக் காட்டிலும் வேறொரு சாதனம் உள்ளது என்னும் புத்தி மாறாட்டத்தை உண்டு பண்ணக் கூடாது –

மனநல மன்னுயிர்க்‌ காக்க மினநல
மெல்லாம்‌ புகழுந்‌ தரும்‌–457

நிலை பெற்ற வுயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக்‌ கொடுக்கும்‌; இனத்தினது நன்மை, அதனோடு எல்லாப்‌ புகழையுங் கொடுக்கும்‌. “மன்னுயிர்க்கு ஆக்கம்‌” என்ற வாக்கியம்‌; *உயிர்‌ இன்பத்தைப்‌ பெறுவது” என்பது பொருளாயினும்‌, உயிரால்‌ ககாக்கப்படுவது ௨டம்பாகலின்‌, “உடம்பும்‌ ஆரோக்கியத்தை அடைகின்றது” என்பதை மன்னுயிர்‌” என்ற பதம்‌ குறிப்பாலுணர்த்‌துகிறது -தூய எண்ணங்கள்‌ மனதில்‌ தோன்றுவதற்கு புலனடக்கமே முக்கிய கரரணமாகும்‌. ஆயின்‌, புலனடக்கம்‌ அமைவது மிக அரிது என்பதை நூல்கள்‌ கூறுகின்றன-மனத்தின்‌ நன்மையே மேலானது” என்றவாறு –

மன-ப்ரசாத:ஸவ்ம்யத்வம் மெளனமாத்ம விநிக்ரஹ
பாவஸம்‌ சுத்திரித்யே தத்த போ மானஸ் முச்யதே.

மனத்தின்‌ தெளிவு, அன்புடமை, மெளனம்‌, தன்னடக்கம்‌, பரிசுத்தமான நோக்கம்‌” என்ற
இவைகள்‌, “மனத்தார்‌ செய்யும்‌ தவம்‌” என்று கூறப்படும்‌. -சிந்தை யடக்கத்தால்‌ வாயடக்கமும்‌ மெய்யடக்கமும்‌ தானே வந்து விடும்‌.

பெருமைக்கு மேனைச்‌ சிறுமைக்குந்‌ தத்தங்‌ கருமமே கட்டளைக்‌ கல்‌-505-
பிறப்புக்‌ குணம்‌ அதிவென்பன வற்றுான்‌ மக்களெப்தும்‌ பெருமைக்கும்‌, மற்றைச்‌ இறுமைக்கும்‌ உரை கல்லாவது தாந்தாஞ் செய்யும்‌ கருமமே பிறிதில்லை. –அறிவுடையார்‌ எல்லாமுடையார்‌, அறிவிலார்‌ என்னுடையரேலுமிலர் ‘-43-என்றும் ஒருமைச்‌ செயலாற்றும்‌ பேதை எழுமையும்‌ தாம்புக்‌ கழுந்துமளறு”‘- 835-பேதையானவன்‌ ஒரு பிறப்பில் செய்த வினையால்‌, எழும் பிறப்புகளிலும் தீராத நிரயத்‌ துன்பத்தைத்‌ தேடிக் கொள்கிறான்‌ -என்றும் -அறிவிலார்‌ தாந்தம்மைப்‌ பீழிக்கும்‌ பீழை செறுவார்க்கும்‌ செய்தலரிது”-843– ௮றிவில்லாதார்‌ தாங்கள்‌ செய்து கொள்ளும்‌ காரியங்களால்‌ . தாமே தம்மை வருத்திக் கொள்ளும்‌ துன்பங்களை, ‘தமது பகைவர்‌களாலும்‌ செய்தல்‌ அரிது” என்றும் உண்டு

உத்தரே தாத்மநாத்மாநம் நாத்மாநம வஸாதயேத்—
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந—৷৷6.5৷৷

விஷயத்தில் பற்று அற்ற மனத்தினால் தன்னை உயர்த்தக் கடவன் – தன்னைக் கீழே தள்ளக் கடவன் அல்லன் – விஷயப் பற்று அற்ற மனமே தனக்கு உறவினனாய் இருப்பதாகும் – விஷயப் பற்று உள்ள மனமே தனக்கு எதிரியாய் இருப்பதாகும்-

பந்துராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்ம நஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்—৷৷6.6৷৷

எந்த மனிதனால் தன் மனம் தன்னாலேயே விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ அம் மனிதனுக்கு அம் மனம் உறவினன் ஆகும் -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ எனில் தன் மனமே தன் எதிரியைப் போலே நன்மைக்குத் தடையாய் இருப்பதில் ஈடுபடும்-தன்னை உயர்த்துவது வேறோரு நண்பனுமல்ல- தன்னைக்‌ கெடுப்பது வேறொரு பகைவனுமல்ல, தானே தனக்குப்‌ பெருமையை யுண்டாக்குபவனும்‌, தானே தனக்‌குச்‌ சிறுமையை உண்டாக்கிக்‌ கொள்பவலும்‌ ஆகின்றான்‌ என்பது புலனாகிறது.

நெடு நீர்‌ மறவி மடி துயி நான்கும்
கெடு நீரார்‌ காமக்‌ கலன்‌-605-

மடியும்‌ விரைந்து செய்வதனை நீட்டித்துச் செய்யுமியல்பும்‌ மறப்பும்‌ துயிலுமாகிய, இந் நான்கும்‌ இறக்கு மியல்பினை யுடையார்‌ விரும்பி யேறும்‌ மரக்கலமாகும்‌-காமக் கலன்‌” என்பதற்கு, ‘விரும்பிப்‌ பூணுமாபரண மென்றுரைத்தார்‌-மணக் குடவா்‌.

அயுக்த ப்ராக்ருத ஸ்தப்தஸ் ஸடோ நைஷ்க்ருதி கோலஸ–
விஷாதீ தீர்க்க ஸூத்ரீ ச கர்த்தா தாமஸ உச்யதே–৷৷18.28৷৷

சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்களைச் செய்யத் தகுதி இல்லாதவனாய் -சாஸ்திரங்களைக் கல்லாத சாமான்யனாய் –சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்களைத் தொடங்கும் இயல்வே இல்லாதவனாய் அபிசாரம் முதலான தாழ்ந்த கர்மங்களில் ஈடுபாடு உடையவனாய் -வஞ்சிக்கும் இயல்வு யுடையவனாய் -தொடங்கிய கர்மங்களிலும் மந்தமாகச் செயல்படுபவனாய் – மிகுந்த மன வருத்தத்தை இயல்பாக யுடையவனாய் – நீண்ட காலமாகப் பிறர்க்குத் தீங்கைச் சிந்திக்கும் இயல்பு யுடையவனான செயல் புரிபவன் -தாமச கர்த்தா என்று சொல்லப்படுகிறான் –

தெய்வப் புலவர்‌, 605-வது குறட்பாவில்‌ மக்‌களுக்குக்‌ கேடு விளைவிக்கும்‌ தன்மை யுள்ள குணங்களை நான்காகக்‌ கூறினார்‌. அதே இயல்புடன்‌ கூடிய குணங்களைப்‌ பின்னும்‌ நான்கினைச்‌ சோத்து, கீதையில்‌ எட்டுவகைப்‌ படுத்திக்‌ கீதாசார்யர்‌ கூறியிருப்பதும்‌ பொருத்தமானதே

முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும்‌–616
ஒருவன்‌ மாட்டுளதாய முயற்சி, செல்‌வத்தை வளர்க்கும்‌ அம் முயற்சி யில்லாமை வறுமையை அடைவித்து விடும்‌-பரிமேலழகர்‌-இதற்கு மாறுபாடாகிய சோம்பலான, வறுமையை உண்டாக்கும்‌ இலக்குமியின்‌ மூத்தாளும்‌” அவனிடத்தில்‌ குடி புகுவள்‌.இக் கருத்தை தெய்வப் புலவர்‌, இதற்கடுத்துவரும்‌ பாவிலேயே :மடியுளான்‌ மா:முகடி” என்ப — மடியிலான்‌ தாளுளாள்‌ தாமரையினாள்‌” ”” எனக் கூறி முடித்தார்‌. மேலும்‌ முயற்சியானது, மக்களுக்கு எல்லா நன்மைகளையும்‌ உண்‌டாக்கும்‌ ஓர்‌ கற்பகத் தருவுக்குச்‌ சமானமாகும்‌. மனிதனை மனிதனாக வாழச்செய்வதும்‌ அதுவே! இதையே “முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார்‌”” என்ற பழமொழியாலும்‌ அறியலாம்‌.

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ  ஹி அகர்மண–
ஷரீர யாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத கர்மண—-৷৷3.8৷৷

அநாதி காலமாகப் பழகிப் போந்த கர்ம யோகத்தையே நீ செய்வாயாக – ஏன் எனில் ஞான நிஷ்டையை விட கர்ம யோகமே சிறந்தது எக் கர்மத்தையும் செய்யாத உனக்கு ஞான நிஷ்டைக்கு வேண்டிய தேஹ தாரணமும் கை கூடாது

ஞானாதிகாரியுங்கூட, ஞான. நிஷ்டைக் கனுகூலமான தேகம்‌ நிலைத்‌திருப்பதின் பொருட்டு, அத்தியாவசியமான கர்மங்களைச்‌ செய்ய வேண்டி யவனாகிறான்‌, ஆகையால்‌, கர்மமானது ஞானத்திற்கு முக்ய சாதனமாயிருப்பதால்‌, கர்மஞ்செய்தலே மேலென்று சொல்லப்பட்டது.-இராமானுஜர் –

தெய்வத்தா னாகா தெனினும்‌ முயற்சி தன்‌
மெய் வருத்தக்‌ கூலி தரும்‌–619-

முயன்‌ற வினை ஊழ் வினையால்‌ கருதிய பயனைத்‌ தராதாயினும்‌ முயற்சி செய்தற்கிடனாகிய உடம்பு வருத்திய வருத்தத்தின்‌ கூலி யளவு தரும்‌; பாழாகாது.

கர்ம யோகத்தில் தொடங்கியதற்கு அழிவு இல்லை -தொடங்கி விட்டு விட்டாலும் தோஷம் கிடையாது –கர்மயோகம் எனப்படும் இந்த தர்மத்தின் சிறு பகுதியும் பெரிதான சம்சார பயத்தில் இருந்து காப்பாற்றுகிறது –நடுவில் நழுவினாலும்-கர்ம யோகம் – -அடுத்த ஜென்மம் விட்ட இடத்தில் தொடரும் -தப்பானாலும் தோஷம் இல்லை-ஞான யோகம் பக்தி யோகம் அப்படி இல்லையே -கொஞ்சம் பண்ணினாலும் -முடிந்த அளவு செய்து தொடரலாம்-

மதி நுட்பம்‌ நூலோ டுடையார்க்‌ கதிநுட்பம்‌
யாவுள முள்ளிற்‌ பவை–636

இயற்கையாயே நுண்ணறிவோடு செயற்‌கையாகிய நூலறிவும்‌ உடையராயனார்க்கு மிக்க சூழ்ச்சிகளாய்‌ முன்னிற்பவை யாவை உள? முன்னிற்றல்‌ மாற்றார்‌ சூழ்ச்சியாயின தஞ்சூழ்ச்சியால்‌ அழியாது நிற்றல்‌-தங்கள்‌ நுண்ணறிவுடன்‌ நூலறிவுப் பிரமாணமும்‌ உள்‌ளவர்கள்‌ பகைவர்கள்‌ சூழ்வனவற்றைத்‌ தாமறிந்து நீக்கியும்‌, அவரறிந் தழியாதவாறு தாம்‌ சூழ்வரென்பது கருத்து–பரிமேலழகர்‌- நூற் பிரமாணத்தைத்‌ தாயகமாகக்‌ கொண்ட நுண்ணறிவுடையோர்க்கே சாலும்‌” என்ற துணிவு பற்றி, *அதி நுட்பம்‌ யாவுள முன்னிற்பவை”’ எனக்‌ கூறினார்-

ய ஸாஸ்த்ர விதி முத்ஸ்ருஜ்ய வர்ததே காம காரத–
ந ஸ ஸித்தி மவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்–৷৷16.23৷৷

எவன் ஒருவன் வேதமாகிற எனது ஆணையைக் கை விட்டு தன் விருப்பப்படி செயல் புரிகிறானோ – அவன் மறுமையில் ஸ்வர்க்கம் முதலான பயனையும் இம்மையில் இன்பத்தையும் மேலான கதியையும் அடைவது இல்லை – அத்யாயம் சுருக்கம் -சாஸ்த்ர விதியை தாண்டி தம் மனம் போன படி ஆசைப் பட்டு அனைத்தையும் இழக்கிறார்கள்
ஸ்வர்க்கம் அடைவதும் மாட்டான் -இவ்வுலக இன்பமும் இல்லை -ஸ்ரீ வைகுண்டமும் கிட்டான்-

தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ–
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி–৷৷16.24৷৷

ஆகையால் உனக்குக் கைக் கொள்ளத் தக்கது இது கைக் கொள்ளத் தகாதது இது என்று நிர்ணயிப்பதில் வேதமே ப்ரமாணமாகும்- ஆகையால் சாஸ்திரங்களில் சொல்லப்படும் தத்துவத்தை உள்ளபடி அறிந்து இக் கர்ம பூமியில் அக் கர்மத்தையும் அந்த தத்வ ஞானத்தையும் நீ கைக் கொள்ளத் தக்கவனாகிறாய் –

நுன்பமுற வரினுஞ்‌ செய்க துணிவாற்றி
இன்பம்‌ பயக்கும்‌ வினை–669

ஒரு வினையைச்‌ செய்யுமிடத்து முதற் கண்‌ மெய்ம்‌முயற்சி யாற்றமக்குத்‌ துன்பம்‌ மிக வருமாயினும்‌,௮து நோக்கித்‌ தளராது முடிவில்‌ இன்பந்தரும்‌ நலமான வினைகளைத்‌ திட்பமுடையராகச்‌ செய்க-இதனையே செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார் ” என-20-வது குறட் பாவாலும்‌ கூறினார்‌.

யத் தத் அக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம்–
தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்–৷৷18.37৷৷

பரதர் குலத்தலைவனே -இப்போது ஸூகமானது -முக் குணங்களை யிட்டு மூன்று வகைப்பட்ட இருப்பதை என்னிடம் இருந்து கேட்பாயாக – எந்த ஸூகத்தில் நீண்ட நாள் பழகுவதால் ஒப்பற்ற ஆனந்தத்தை அடைகிறானோ -எல்லா சம்சாரத் துன்பங்களின்
முடிவையும் அடைகிறானோ -எந்த ஸூகம் யோகத்தைத் தொடங்கும் காலத்தில் பழகாத ஆத்ம விஷயத்தில் மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கையாலே துன்பம் போல் தோன்றுகிறதோ -யோகத்தின் இறுதியில் ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கையால் அமுதத்தைப் போலே இனிதாய் இருக்கிறதோ மற்ற விஷயங்களில் இருந்து நீங்கி ஆத்மாவையே அனுபவிக்கையாலே உண்டானதான அந்த ஸூகமானது சத்வ குணத்தால் உண்டானது என்று சொல்லப்படுகிறது –

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்‌–850-
உயர்ந்தோர் பலரும்‌ உண்டென்பதோர் பொருளைத்‌ தன்‌ புல்லறிவானில்லை யென்று சொல்லுவான்‌;-மகனென்று கருதப்படான்‌? வையத்துக்‌ காணப்படுவதோர்‌ பேயென்று கருதப்படும்‌-சான்றோர்‌ உண்டென்று நிச்சயித்துக்‌ கூறும்‌ தெய்வக்‌ கொள்கை, இருவினை, இம்மை மறுமை முதலியவைகளின்‌ தன்மைகளை இல்லை’யென்று மறுத்து, தாங்கள்‌ வேண்டியவாறு கூறலால்‌, ஒப்பும்‌ வடிவால்‌ ஒவ்வாமை யுமுடைமை யிற்றன்‌ யாக்கை கரந்து மக்கள்‌ யாக்கை யிற்றோன்றுதல்‌ வல்ல -அலகை”யென்றும் கூறினார்‌- பரிமேலழகர்‌-இக்குறட்பா புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தின்‌ பத்தாவது குறளாகும்‌. இதற்கு முன்‌னுள்ள ஒன்பது குறள்களில்‌ புல்லறிவாளர்களின்‌ இயல்புகளைப்‌ பலவாறாக விளக்கிக் கூறி, அதன்‌ கருத்துக்களை யெல்‌லாம்‌ சேர்த்து, *௮வர்கள்‌ மக்கள்‌ தோற்றம்‌ உடையவராயினும்‌ அவர்கள்‌ *பேய்‌’க்குச்‌ சமானமானவர்கள்‌” என முடிவு கூறினார்‌.

அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுர நீஸ்வரம்–
அபரஸ்பர ஸம்பூதம் கிமந்யத் காம ஹேதுகம்-–৷৷16.8৷৷

அந்த ஆஸூர ப்ரக்ருதிகள் உலகம் ப்ரஹ்மாத்மகமானது என்றும் ப்ரஹ்மத்தில் நிலை நிற்பது என்றும் ப்ரஹ்மத்தால் நியமிக்கப்படுகிறது என்றும் சொல்லுவது இல்லை -இதுவே அஸத்யம் – ஆண் பெண் சேர்க்கையால் உண்டாகாதது வேறே எந்தப் பொருள் உள்ளது என்று கூறுகிறார்கள் – ஆகையால் உலகு அனைத்தையும் காமத்தையே காரணமாகக் கொண்டது என்றும் கூறுகிறார்கள்-

ஏதாம் த்₃ருஷ்டிம் அவஷ்டப்₄ய நஷ்டாத்மாந: அல்ப பு₃த்₃ே₄ய:
ப்ரப₄வந்த் யுக்₃ர கர்மாண: க்ஷயாய ஜக₃தோ (அ)ஹிதா : ॥–৷৷16.9৷৷ஜகதோஹிதா–ஜகதோ அஸூபா–பாட பேதம் -மங்களத் தன்மை இல்லாமல்-

ஆஸூர ப்ரக்ருதிகள் இந்த விபரீதமான பார்வையை பற்றிக் கொண்டு தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஆத்மாவைக் காணாதவர்களாய் -அறியப்படும் அசித்தான தேகத்தில் அறிவதாகையாலே அதைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மா உணரப் படுகிறது என்று பிரித்து அறிய முடியாத அல்ப புத்திக் காரர்களாய் – அனைவருக்கும் தீங்கு இழைக்கும் கொடிய செயல்களைச் செய்பவர்களாய் -அமங்களமானவர்களாய்-
உலகம் அழிவதற்கு காரணம் ஆகிறார்கள் – இந்த த்ருஷ்ட்டியை பண்ணிக் கொண்டு -குத்ருஷ்ட்டி – அல்ப புத்தி -தேஹாத்ம பிரமத்தால் – உலகம் அழிவதற்கு செயல்படுவார்கள்

காமமாஸ்ரித்ய துஷ் பூரம் தம்ப மாந மதாந்விதா–
மோஹாத் க்ருஹீத்வ அஸத் க்ராஹாந் ப்ரவர்தந்தே அஸூசி வ்ரதா–৷৷16.10৷৷

ஆஸூர ப்ரக்ருதிகள் நிறைவேற்ற அரிதான காமத்தை பற்றிக் கொண்டு -அதன் நிறைவேற்றுதற்காக அறிவின்மையாலே அநியாய வழியிலே தேடப்பட்ட பொருள்களை பற்றிக் கொண்டு சாஸ்திரங்களில் விதிக்கப்படாத விரதங்களோடு கூடியவர்களாய் -(பாஷாண்ட ஆகமம் ) டம்பம் துராபிமானம் மதம் ஆகியவற்றோடு கூடியவர்களாய் செயல்படுகிறார்கள் ஆசைப் பட்டு -அடி இல்லா பள்ளம் -தூராக் குழி -டம்பம் -மானம் -மதம் கர்வத்தால் -அறிவின்மையால் – தவறான வழியில் பொருளை ஈட்டி வைத்து -சாஸ்திரம் விதிக்காத வழியில் செயல் படுவார்கள்

அநேக சித்த விப்ராந்தா மோஹ ஜால ஸமாவ்ருதா–
ப்ரஸக்தா காம போகேஷு பதந்தி நரகேஷுசௌ–৷৷16.16৷৷

இவர்கள் பல நினைவுகளால் அலைக் கழிக்கப் படுபவர்களாய் -பல மயக்கங்களால் சூழப்பட்டு புலன் இன்பங்களில் மிகவும் ஈடுபட்டு நடுவில் மரணம் அடைந்து அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள் -சிந்தனை கடலில் அலைந்து -மோஹம் மயக்கம் சூழ்ந்து -காமம் அனுபவித்து -நரகில் விழுகிறார்கள் – செம்பினால் இயன்ற பாவையை தழுவி பாவி -நைமிசாரண்ய பாசுரம்-

மயிர் நீப்பின்‌ வாழாக்‌ கவரிமா வன்னா
ருயிர் நீப்பர்‌ மானம்‌ வரின்‌-969-

தன்‌ மயிர்க்‌ கூட்டத்தினின்று ஒரு மயிர்‌ நீங்கினும்‌ உயிர்‌ வாழாத கவரிமானை யொப்பார்‌, உயிர்‌ நீக்‌கத் தான்‌ மானமெய்து மெல்லைவரின்‌, அம்மானத்தைச்‌ சகியாது இறப்பர்‌-உவமை அது அவர்க்கு இயல்‌பென்பது விளக்கி நின்றது.-பரிமேலழகர்‌-கம்பரும்‌ -மந்திரப்படலத்தில்‌ அரிய நூலுங்கற்றவர்‌, மானம்‌ நோக்கிற்‌ கவரிமா வனைய நீரார்‌” -கவரிமான் தன்‌ மயிர்‌ கற்றை யிலுள்ள ஒரு மயிரைக்‌ தன்‌ உயிரைவிட மேலெனக்‌ கருதி உள்ளது,

அகீர்த்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேவ்யயாம்.–
ஸம்பாவிதஸ்ய சாகீர்த்திர் மரணாத ரிச்யதே—৷৷2.34৷৷

எல்லா தேசத்திலும் எல்லாக் காலத்திலும் பரவக் கூடிய பழியை எல்லாரும் உனக்குக் கூறுவார்கள் – வீரம் முதலிய நற் குணங்கள் உடையவனாகக் கொண்டாடப்படும் உன்னைப் போன்றவனுக்கு பழிச் சொல் என்பது மரணத்தைக் காட்டிலும் கொடியதாகிறது
அகீர்த்தி உலகம் எங்கும் பரவும் –இதிஹாச புராணம்-எழுதுவோர்க்கு வாய்ப்பு –
வீர்யம் மிகுந்த நீ -அகீர்த்தி மரணம் விட மோசமாகும் –

பணியுமா மென்றும்‌ பெருமை சிறுமை யணியுமாந்‌ தன்னை வியந்து -978
பெருமை யுடையார்‌ ௮ச்‌ செல்வமுடைய ஞான்றும்‌ தருக்கின்றி அமைந் தொழுகுவர்‌. மற்றுச்‌ சிறுமை யுடையார்‌, அப்பெருமை அவர்‌க்கு இல்லாத காலத்தும்‌,தம்மை வியந்து பெருமையாகப்‌ பேசுவர்‌-பரிமேலழகர்‌
தம்மைப்‌ பணித்து பேசுபவர்கள்‌ உயர்ந்தோரது தன்மையை அடைவர்‌. தம்மைப்‌ புகழ்ந்து பேசுபவர்‌கள்‌ இழிந்தோராவார் ” என, உலகியலை வியந்து கூறினார்‌ –மணக்குடவர்‌.

தேஜ க்ஷமா த்ருதி ஷௌசம த்ரோஹோ நாதிமாநிதா–
பவந்தி ஸம்பதம் தைவீமபி ஜாதஸ்ய பாரத–-৷৷16.3৷৷

தீயவர்களால் வெல்ல ஒண்ணாமை-துன்புறுத்துவர்கள் இடம் பொறுமை -பேர் ஆபத்து வந்தாலும் செய்ய வேண்டியதில் உறுதியாய் இருக்கை – மனோ வாக் காயங்களில் சாஸ்திரங்களில் சொல்லிய பரிசுத்தி யாகிய அனுஷ்டானத் தகுதியை உடையனாய் இருக்கை – பிறர் நற் செயல்களைத் தடுக்காமை -தகாத கர்வமின்மை – ஆகிய குணங்கள் பகவத் ஆஜ்ஜையைப் பின்பற்றி நடக்கும் தெய்வப்பிறவி யாகிற செல்வத்தை உடையவனும் உள்ளன –

ஆத்ம ஸம்பாவிதா ஸ்தப்தா தந மாந மதாந்விதா–
யஜந்தே நாம யஜ்ஞைஸ்தே தம்பேந அவிதி பூர்வகம்–৷৷16.17৷৷

தம்மைத் தாமே பெருமை பேசிக் கொள்கிறவர்களாய் -தம்மைப் பெருக்க மதிக்கையாலே பணிவில்லாமல் நிமிர்ந்து நிற்பவர்களாய் -பணத்தினாலும் கல்வி குடிப்பிறப்பு ஆகியவற்றால் உண்டான அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்களான அந்த ஆஸூர ப்ரப்ருதிகள் புகழையே பயனாகக் கொண்டு செய்யப்படும் யாகங்களாலே
ஸாஸ்த்ர விதிக்கு முரணாக யாகம் செய்தவன் என்னும் புகழை வெளிப்படுத்திக் கொள்வதற்காக யாகம் செய்கிறார்கள் – தன் பெருமையை பேசி -குலையாமல் -தான மதம் -பெயர் யாகம் -பெயருக்காக புகழுக்காக யாகம் – டம்பம் -சாஸ்திரம் விதிக்காத வகையில்-

நகல் வல்ல் ரல்லார்க்கு மாயிரு ஞாலம்‌
புகலும் பாற்‌ பட்டன்‌ றிருள் -999

பண்பின்மையான்‌ ஒருவரோடுங் கலந்து அளவளாவி வாழ மாட்டாதார்க்கு, மிகவும்‌ பெரிய உலகம்‌ இருளில்லாத பகற் பொழுதினும்‌ இருளின்‌ கட் கிடந்ததாம்‌-எல்லாரோடுங்‌ கலந்தறியப்‌ பெறாமையின்‌, பண்பிலார்க்கு உலகியல்‌ தெரியாதென்பார் – உலகமிருளின் கட்‌பட்டதென்றார்‌–பரிமேலழகர்‌-இதற்கு ஸ்ரீ கண்ணபிரான்‌ இவ் வுலகமானது சிலருக்கு
பகல்‌ இரவாகவும்‌, இரவு பகலாகவும்‌ காணப் படுகிறது என்‌பதன்‌ காரணங்களை உபமானங் காட்டி, ஒரு ஸ்லோகத்தால்‌ விளக்குகிறார் –

யா நிஸா ஸர்வ பூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ.
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே–৷৷2.69৷৷

யாதொரு ஆத்ம விஷயமான அறிவு எல்லா ஜீவ ராசிகளுக்கும் இரவு போலே இருந்து இருக்கிறதோ – அவ் வறிவு விஷயத்தில் இந்திரியங்களை அடக்கியவன் விழிப்புடன் இருக்கின்றான் யாதொரு சப்தாதி விஷயமான அறிவில் உலகோர் விழித்து இருக்கிறார்களோ அவ் வறிவு ஆத்மாவைப் பார்ப்பவனாய் அதையே மனனம் செய்பவனுக்கு இரவு போல் இருந்து கிடக்கின்றது

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எம்பெருமானாருடைய திருமேனி சம்பந்தம் பெற்ற ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள்-

July 31, 2025

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருகம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ ராமானுஜஸ்ய சரெணௌ சரணம் ப்ரபத்யே
-கூரத்தாழ்வான்-அருளிச் செய்த தனியன்
யார் எப்போதும் அச்சுதனின் தாமரை பாதங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, அவற்றை தவிர மற்ற எல்லாவற்றையும் புல்லைப் போல கருதுகிறாரோ-அந்த எங்கள் குருவும், கருணைக்கடலுமான பகவான் ஸ்ரீ ராமானுஜரின் திருவடிகளில் நான் சரணடைகிறேன்.

லஷ்மீ நாதாக்க்ய சிந்தவ்-சடரிபூஜலத -ப்ராப்ய காருண்ய நீரம்
நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் -தத் அநு ரகுவராம்போஜ சஷுர்ஜ்ஜராப்யாம்
கத்வா தாம் யாமுனாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மகரேந்த்ரம்
சம்பூர்ய பிராணிச சயே ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் ராமானுஜர் நாயக்க ரத்னம்-லஷ்மீ நாத சிந்தவ் இத்யாதி – –கருணைக்கடல் -நம்மாழ்வார் மேகம் -நாதமுனி மலையில் பொழிந்து இரண்டு அருவிகள் -உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி -காட்டாறு ஆளவந்தார் -ஐந்து ஆச்சார்யர் முகமாக-ராமானுஜர் ஏரி -74 சிம்ஹாசனபதிகள் -மூலம் நம்மை அடையும்படி அருளி –

சடரிபு கலிஜித் சரோ பூத வேதாள கோதா குரூன் முனி வஹ குலசேகரௌ பக்த பத்ரேணு பக்த்யர்ணவௌ
மதுரகவி மாதோ யதீந்த்ரம் ததா அன்யான சேஷான் குரூன் ஸ்ரீ யம்பி வஸூ தாஞ்ச நீளாஞ்ச வைகுண்ட நாதம் ஸ்ரேயே-
என்று இறே ஆழ்வார்களை தொடங்கி சேவிக்கும் க்ரமம் இருப்பது –

(1. பூதம் (பூதத்தாழ்வார்) -ஆழ்வார் திருமுடி
2. ஸரஸ்யர் (பொய்கையாழ்வார்) 3. மஹதாஹ்வயர் (பேயாழ்வார்) -ஆழ்வாருடைய திருக்கண்கள்
4. பட்டநாதர் (பெரியாழ்வார்) -ஆழ்வாருடைய திரு வாய்
5. பக்திசாரர் (திருமழிசையாழ்வார் -ஆழ்வாருடைய திருக்கழுத்து
6. குலசேகரர் (குலசேகராழ்வார்) 7. யோகிவாஹர் (திருப்பாணாழ்வார்) –ஆழ்வாருடைய திருக்கரங்கள்
8. பக்தாங்க்ரி ரேணு (தொண்டரடிப்பொடியாழ்வார்) -ஆழ்வாருடைய திருவயிறு
9. பரகாலர் (திருமங்கையாழ்வார்) – 10. யதீந்த்ரமிச்ரர் (எதிராசர்) -ஆழ்வாருடைய திருவடி இணைகள்
11. ஶ்ரீமத் பராங்குசமுநி (நம்மாழ்வார்).

பக்தி பாரவச்ய பிரபன்னரான ஆழ்வார்களும் அவர்களோடு விகல்ப்பிக்கும் படியான ஸ்ரீ பாஷ்ய காரரும் சர்வதா பஜ நீயர்

—————-

மாதுலர் மாமா – பெரிய திருமலை நம்பி -இவர் பத்னி கிடாம்பி ஆச்சானின் அத்தை -இவர்க்கு மூன்று சகோதரிகள் -மூன்று குமாரர்கள் -இரண்டு மகள்கள் -நான்கு – மருமகன்கள் -ஒரு பேரன்-
மூத்த சகோதரி -பூதேவி என்னும் காந்திமதி –அவர் கணவர் -கேசவ சோமயாஜியார்-இவர் திருக்குமாரர் ராமானுஜர்

இரண்டாம் சகோதரி –ஸ்ரீ தேவி என்னும் த்யுதிமதி -இவர் கணவர் மதுரமங்கலம் கமல நயன பட்டர் –குமாரர்கள் -மூத்தவர் கோவிந்தர் எனப்படும் எம்பார்-ராமானுஜ பதச் சாயா எனப்படுபவர் -இவர் விஞ்ஞான ஸ்துதி என்னும் கிரந்தம் அருளிச் செய்தார் – இளையவர் –சிறிய கோவிந்த பட்டர் –
சிறிய கோவிந்த பட்டரின் குமாரர் பராங்குச நம்பி -ஆளவந்தாருடைய மூன்றாவது குறையை அடியோடு நிறைவேற்ற உடையவர் நியமனப்படி எம்பார் சாத்தி அருளிய திருநாமம் -கூரத்தாழ்வான் தமிழில் வல்லவரான இவரையே பாலேய் தமிழர் என்பாராம்

மூன்றாவது சகோதரியின் பெயர் தெரியவில்லை -இவர் குமாரர் பால தந்வி என்னும் இளைய வில்லி ஆச்சான் -இளைய பெருமாளைப்போல் உடையவருக்கு கைங்கர்யங்கள் செய்தமையால் சாத்தப்பட்ட திரு நாமம் எம்பெருமானார் திருநாடு அலங்கரிப்பதாக கனவில் கண்ட அளவிலே எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றும் சொல்லி மூச்சடங்கப் பெற்றவர் –

பெரிய திருமலை நம்பிக்கை மூன்று திருக்குமாரர்கள்
மூத்தவர் -பிள்ளைத் திருமலை நம்பி-அவரது தனியன்
வ்ருஷே விசாக ஸம்பூதம் ராமானுஜ பதாச்ரிதம்
ஸ்ரீசைலபூர்ண சத்புத்ரம் ஸ்ரீசைலார்யமஹம் பஜே
அடுத்தவர் -ராமானுஜன்
மூன்றாமவர் -பிள்ளான் -திருக்குருகைப்பிரான் பிள்ளான்
-என்று பின்னர் திருநாம சாற்றப் பெற்றவர் -கோவிந்தரை யாசித்துப் பெற்ற உடையவருக்கு இவரையே அபிமான புத்திரராகக் கொள்ளும்படி கொடுத்து அருளினார்-தனியன்
“ஸிம்ஹே ம்ருகலிரோத்பூதம் ராமானுஜபதாச்ரிதம் |
த்ராவிடாம்நாய தத்வக்ஞம் குருகாதிப மாஸ்ரயே I
த்ராவிடஸாரக்ஞ்ம் ராமானுஜ பதாச்ரிதம் 1
ஸுதியம் குருகேஸார்யம் நமாமி ஸ்மிரஸாந்வஹம் |

இவர் ஆவணி மாதம் மிருக சீர்ஷ நட்சத்ரத்தில் அவதரித்தார். இவர் பெரிய திருமலை நம்பியின் மூன்றாவது குமாரர். (பிள்ளை திருமலை நம்பி -ராமானுஜன் -முதல் இருவர்)பெரிய திருமலை நம்பி இவரை ராமானுஜருக்கு அபிமாந புத்ரராக கொடுத்தார். இவர் ராமானுஜர் திக்விஜய யாத்ரையாக திருக்குருகூர் சென்றிருந்த பொழுது இவரும் அவர் கூடவே சென்றிருந்தார். நம்மாழ்வார் செய்தருளின பேருபகாரத்துக்காக அவர் திருநாமம் சாத்துகைக்கு அர்ஹமாக ஒருவரைத் தேடிய பொழுது “பிள்ளான்” என்ற பெயர் கொண்ட இவரை தேர்ந்தெடுத்தார். இவருக்கு ‘திருக்குருகைப் பிரான் பிள்ளான்’ என்று திருநாமம் சாத்தியருளினார்.

பெரிய திருமலை நம்பிக்கை இரண்டு திருக்குமாரத்திகள்
மூத்தவர் -அலர்மேல் மங்கை நாச்சியார்-
இவர் கணவர் -எம்பெருமானாருடைய சிஷ்யரான அலங்கார வேங்கடவர் என்னும் திருவேங்கட மூர்த்தி -இவர் அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய பூர்வாஸ்ரம –யஜ்ஞமூர்த்தியுடைய திருக்குமார்
இந்த தம்பதிகளுக்கு திருக்குமாரார் தாத்தாச்சாரியார் -இவரே விஞ்சிமூர் தாத்தாச்சாரியார் என்னும் பிரசித்தி பெற்றவர் –

இரண்டாம் திருக்குமாரத்தி திருநாமம் தெரியவில்லை -இவர் கணவர் சுந்தர தேசிகன் என்னும் அழகப்பிரான் -இவர் ஆளவந்தாருடைய சிஷ்யர் -அவரது நியமனப்படியே திருமலையில் கைங்கர்யம் செய்து வந்தார் -இவருடைய திருக்குமாரர்கள் ஈச்சம்பாடி ஆச்சான் -ஈச்சம்பாடி ஜீயர் -எம்பெருமானார் திருமலைக்கு எழுந்த அருளின சமயத்தில் பெரிய திருமலை நம்பியுடைய நியமநப்படி-தாபனீய உபநிஷத் ந்ருஸிம்ஹ மந்த்ரம் உபதேசித்து அருளினவர்

பெரிய திருமலையின் பத்னி -கிடாம்பி ஆச்சானுடைய அத்தை -பெயர் தெரியவில்லை -கிடாம்பி ஆச்சானுடைய இயல் பெயர் ப்ரணதார்த்தி ஹரர் -இவர் நம்பியின் மைத்துனன் திருகுமாரர் -கட அம்பு -கடாம்பு -கிடாம்பு மருவு -தீர்த்த கைங்கர்யம் பண்ணிய வம்சத்தில் அவதரித்தவர் –பெரிய திருமலை நம்பிக்கு தீர்த்த கைங்கர்யத்தில் உதவி செய்தவர் -இவர் தமையனார் பெயர் விஷ்ணவாச்சார்யர் –கிடாம்பி ஆச்சார்யன் எம்பெருமானாருக்கும் திருமடப்பள்ளி கைங்கர்யம் பண்ணியவர் -ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து முடித்த பின்பு இவற்றையும் கிடாம்பிப்பெருமாளையும் காஷ்மீர் தேசம் அனுப்பி சாரதா பீட அங்கீகாரம் பெறச்செய்தவர் –கிடாம்பி ஆச்சான் வழி வந்த கிடாம்பி அப்புள்ளார் மா முனிகளின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரே

எம்பெருமானாருக்கு மூன்று சகோதரிகள்
முதல்வர் -நாச்சியார் அம்மன்
-இவர் கணவர் ஆனந்த தீக்ஷிதர் -இவர்கள் திருக்குமாரர் தாசாரதி எனப்படும் முதலியாண்டான் -எம்பெருமானார் சிஷ்யர்கள் அனைவருக்கும் நிர்வாஹகராய் இருந்ததால் இந்தத்திருநாமம் -த்ரிதண்ட அம்சம் –
இரண்டாம் சகோதரியின் பெயர் தெரியவில்லை -இவர் கணவர் முடும்பை நம்பி என்னும் ஸ்ரீ வரதாச்சார்யர் –இவர் திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜ நம்பி -இவர் திருக்குமாரர் முடும்பை ஆண்டான் –இவர் ஸ்ரீ ரெங்கத்துக்குக் குடி பெயர்ந்தார் –வடக்குத்திருவீதிப்பிள்ளை -பிள்ளை லோகாச்சார்யார் நாயனார் பிரதிவாதி பயங்கரம் அண்ணா எறும்பி அப்பா ராமானுஜம் பிள்ளை ஆத்தான் ஸ்வாமி போல்வாரும் முடம்பை வம்சத்தவர்களே

மூன்றாவது சகோதரியின் பெயரும் அவர் கணவர் பெயரும் தெரியவில்லை -இவர்கள் திருக்குமாரர் வரதவிஷ்ணு எனப்படும் நடாதூர் ஆழ்வான் -ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -இவரது திருப்பேரானார் வாத்ஸ வரதாச்சார்யர் எனப்படும் நடாதூர் அம்மாள் -இவரே எங்கள் ஆழ்வானுடைய பிரதான சிஷ்யர் -ஆகவே எங்கள் ஆழ்வான் -அம்மாள் ஆச்சார்யர் என்றே அழைக்கப்பட்டார்

எம்பெருமானாருடைய பத்னி தஞ்சமாம்பாள் -இவர்களுக்கு இரண்டு திருக்குமாரர்கள் –எம்மான் -பெம்மான் -இரட்டையர்கள் -பெம்மானே ஆஸூரிப்பெருமாள் என்பவர் -இவர் வம்சத்தில் ஆயி ஜநன்யார்ச்சார்யார் திருஅவதாரம்

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –