துர்வாசரை உபசரித்த துரியோதனன்! – வனபர்வம் பகுதி 260-பத்தாயிரம் சீடர்களுடன் துர்வாசர் துரியோதனனைச் சந்திப்பது; துர்வாசரை துரியோதனன் நன்கு உபசரிப்பது; வரமளிக்க முற்பட்ட துர்வாசரிடம், துரியோதனன் பாண்டவர்கள் உண்ட பிறகு அவர்களிடம் அவர் செல்ல வேண்டும் என்று கோரியது; பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதாக துரியோதனனுக்கு துர்வாசர் வாக்களித்தது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, கிருஷ்ணை {திரௌபதி} உணவு உண்ணும் வரை, உணவு நாடி வந்த அந்தணர்களுக்கும் பிறருக்கும், சூரியனிடம் இருந்து பெற்ற உணவை, பலவகைப்பட்ட மான்கறியோடு {Venison} பகிர்ந்தளித்து, முனிவர்களுடன் இனிய விவாதங்களை மேற்கொண்டு வந்த அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்து வந்த போது, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனியின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்ட துரியோதனனும், திருதராஷ்டிரனின் மற்ற மகன்களும் அவர்களிடம் எப்படி நடந்து கொண்டனர்? நான் உம்மிடம் இதையே கேட்கிறேன். எனக்கு இவ்விஷயத்தில் ஞானம் வழங்குவதே உமக்குத் தகும்” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, நகரத்தில் வாழ்வது போலவே காட்டிலும் பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன், கலைநயமிக்க {artful} {வஞ்சனையில் நுண்ணறிவுள்ள என்கிறது கும்பகோணம் பதிப்பு} கர்ணன், துச்சாசனன், மற்றும் பிறரோடு சேர்ந்து அவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தான். அந்தத் தீய மனம் கொண்டோர், பல்வேறு தீய திட்டங்களை நடத்த ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது, அறம்சார்ந்த, கொண்டாடப்படும் துறவியான துர்வாசர், தம் சுயஇச்சையால், பத்தாயிரம் {10000} சீடர்களுடன் குருக்களின் அந்த நகரத்திற்கு {ஹஸ்தினாபுரம்} வந்தார். எளிதில் கோபம் கொள்ளும் அத்துறவி {துர்வாசர்} வந்ததைக் கண்ட துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து பெரும் பணிவுடனும், அடக்கத்துடனும், மென்மையுடனும் அவரை வரவேற்றான். அந்த முனிவருக்கு {துர்வாசருக்கு} அடிமை போல, தானே வேலை செய்த அந்த இளவரசன் {துரியோதனன்}, அவரை {துர்வாசரை} சரியான முறையில், போற்றி வரவேற்றான். அந்தச் சிறப்புமிக்க முனிவர் {துர்வாசர்} சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அப்போதெல்லாம் துரியோதனன், பழிக்கு {சாபத்திற்கு அஞ்சி} ஆளாகாமல், விழிப்புடனும் விடாமுயற்சியுடனும் அவரை {துர்வாசரை} இரவும், பகலும் கவனித்துக் கொண்டான்.
சில நேரங்களில் அந்த முனிவர் {துர்வாசர்}, “நான் பசித்திருக்கிறேன், ஓ! மன்னா {துரியோதனா}, எனக்கு விரைவாக ஏதாவது உணவைக் கொடு” என்று கேட்பார். சில நேரங்களில், குளிப்பதற்காக வெளியே சென்று, நேரம் கடந்து வந்து, “எனக்குப் பசியில்லை. நான் இன்று எதுவும் உண்ணமாட்டேன்” என்று சொல்லி அவனது {துரியோதனனின்} பார்வையில் இருந்து மறைந்துவிடுவார். சில நேரங்களில், திடீரென வந்து, “விரைவாக எங்களுக்கு உணவளி” என்பார். இன்னும் சில நேரங்களில் ஏதாவது குறும்பு செய்ய விரும்பியவராய், நடு இரவில் எழுந்து, உணவைத் தயாரிக்கச் செய்து, முக்கியத்துவம் இல்லாதவற்றில் குறை கண்டு {carp}, அவற்றை உண்ணவே மாட்டார். இவ்விதமெல்லாம் அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} நடந்து கொண்ட அந்த முனிவர் {துர்வாசர்}, கோபமோ எரிச்சலோ அடையாத மன்னன் துரியோதனனைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா} கட்டுக்கடங்காதவரான துர்வாசர் அவனிடம் {துரியோதனனிடம்}, “உனக்கு வரங்களை அருளும் சக்தி எனக்கு உள்ளது. உனது இதயம் விரும்பும் எதையும் நீ என்னிடம் கேட்கலாம். நற்பேறு உனதாகட்டும். நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அறத்திற்கும், அறநெறிகளுக்கும் புறம்பில்லாத எதையும் நீ என்னிடம் இருந்து அடையலாம்” என்று சொன்னார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெருந்துறவியின் {துர்வாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுயோதனன் {துரியோதனன்}, புதிய உயிரைப் பெற்றதாக உணர்ந்தான். உண்மையில், வரவேற்புக்குப் பிறகு முனிவர் மகிழ்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று அவனும் {துரியோதனனும்}, கர்ணனும், துச்சாசனனும் முன்பே பேசி வைத்திருந்தனர். அந்தத் தீய மனம் கொண்ட மன்னன் {துரியோதனன்}, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டதை நினைத்துப் பார்த்து, பின்வரும் உதவியை மகிழ்ச்சியுடன் கேட்டான். அவன் {துரியோதனன்}, “பெரும் மன்னரான யுதிஷ்டிரரே, எங்கள் குலத்தில் சிறந்தவரும், மூத்தவரும் ஆவார். அந்தப் பக்திமான் {யுதிஷ்டிரர்}, இப்போது தனது தம்பிகளுடன் சேர்ந்து காட்டில் வாழ்ந்து வருகிறார். எனவே, ஓ! அந்தணரே {துர்வாசரே}, உமது சீடர்களுடன் என்னிடம் வந்ததுபோல, அந்தச் சிறப்பு வாய்ந்தவரிடமும் {யுதிஷ்டிரரிடமும்} நீர் ஒரு முறை விருந்தினராகச் செல்ல வேண்டும். நீர் எனக்கு உதவி செய்ய விரும்பினால், மென்மையான சிறந்த பெண்மணியான கொண்டாடப்படும் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அந்தணர்களுக்கும், தனது கணவர்களுக்கும் உணவு படைத்து, அவளும் உண்டு முடித்து, ஓய்வெடுக்கப் படுக்கும்போது, நீர் அவரிடம் {யுதிஷ்டிரரிடம்} செல்ல வேண்டும்” என்று கோரினான் {துரியோதனன்}.
அதற்கு அம்முனிவர் {துர்வாசர்}, “உனது திருப்திக்காக நான் அவ்வாறே செய்வேன்” என்றார். இப்படிச் சுயோதனனிடம் சொன்ன அந்தச் சிறந்த அந்தணரான துர்வாசர், முன்பு எப்படி வந்தாரோ அப்படியே சென்றார். தான் விரும்பிய அனைத்தையும் அடைந்துவிட்டதாகச் சுயோதனன் தன்னைக் கருதிக் கொண்டான். பிறகு, பெரும் மனநிறைவுடன் கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்டான். கர்ணனும், தனது தம்பிகளுடன் இருந்த மன்னனிடம் {துரியோதனனிடம்} மகிழ்ச்சியாக, “சிறு நற்பேறாலேயே, நீ நன்கு செயல்பட்டு உனது விருப்பங்களையும் அடைந்தாய். உனது நற்பேறாலேயே, உனது எதிரிகள், கடக்க முடியாத ஆபத்தான கடலில் மூழ்கினர். அந்தப் பாண்டுவின் மகன்கள் இப்போது, துர்வாசரின் கோபம் எனும் நெருப்புக்குள் விழப்போகிறார்கள். அவர்கள் செய்த தவறால், இருள் நிறைந்த பள்ளத்திற்குள் விழுந்துவிட்டனர்” என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, நடந்ததில் தங்கள் மனநிறைவை வெளிப்படுத்திய, தீய சூழ்ச்சிகள் செய்யும் துரியோதனனும் மற்றவர்களும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியோடு திரும்பினர்.
தப்பி ஓடிய துர்வாசர்! – வனபர்வம் பகுதி 261-துர்வாசர் பாண்டவர்களிடம் சென்றது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் சோற்றுப் பானையை வாங்கி, அதில் ஒட்டியிருந்த கீரையையும் ஒரு பருக்கையையும் உண்டு பசியாறியது; இதனால் துர்வாசரும், அவரது சீடர்களும் பசியாறுவது; பீமன் துர்வாசரை அழைக்கச் சென்றது; பீமன் அவரைக் காணாதது; அவர் ஓடிவிட்டதாக அங்கிருந்த துறவிகள் சொன்னது ..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒருநாள், பாண்டவர்கள் வசதியாக அமர்ந்து விட்டார்கள் என்றும், கிருஷ்ணை {திரௌபதி} தனது உணவை உண்டு ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதையும் உறுதி செய்து கொண்ட தவசியான துர்வாசர், தனது பத்தாயிரம் {10000} சீடர்களுடன் அந்தக் {காம்யகக்} காட்டிற்குச் சென்றார். சிறப்புமிக்க, நேர்மையான மன்னனான யுதிஷ்டிரன், விருந்தினர் வந்ததைக் கண்டு, தனது தம்பிகளுடன் அவரை வரவேற்க முன்னேறிச் சென்றான். தனது கரங்களைக் கூப்பி, அவர் அமர்வதற்குச் சரியான அற்புதமான ஆசனத்தைக் காட்டி, முனிவர்களுக்குத் தகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்றான். பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்} அவரிடம் {துர்வாசரிடம்}, “ஓ! வணங்கத்தக்க ஐயா, உங்களுடைய பகல் நீராடுதல் மற்றும் சடங்குகளை முடித்து விரைவாகத் திரும்புங்கள்” என்றான். அம்மன்னன் எப்படித் தனக்கும் தன் சீடர்களுக்கும் உணவை வழங்குவான் என்பதை அறியாத பாவமற்ற முனிவர், சிஷ்யர்களுடன் சேர்ந்து நீராடச் சென்றார். தங்கள் ஆசைகளை அடக்கிய அந்த முனிவர் கூட்டம் தங்கள் சுத்திகரிப்பைச் செய்ய {நீராட} ஓடைக்குச் சென்றது.
அதே வேளையில் ஓ! மன்னா {ஜனமேஜயா}, கணவர்களுக்குத் தன்னை அர்ப்பணிந்திருந்த அற்புதமான இளவரசியான திரௌபதி, (முனிவர்களுக்குக் கொடுக்க வேண்டிய) உணவு குறித்துப் பெரும் கவலையில் இருந்தாள். அவள் கவலையோடு சிந்தித்த பிறகு உணவு வழங்கும் வழியை யாரும் வழங்க முடியாது என்று தீர்மானித்து, கம்சனைக் கொன்றவனான கிருஷ்ணனை உள்முகமாக வேண்டினாள். அந்த இளவரசி {திரௌபதி}, “கிருஷ்ணா, வலிமையான கரங்கள் கொண்ட ஓ! கிருஷ்ணா, ஓ! தேவகியின் மகனே, அளவிலாத சக்தி கொண்டவனே, ஓ! வாசுதேவா, தன்னை வணங்குபவர்களின் சிரமங்களை விலக்கும் ஓ! அண்டத்தின் தலைவா, நீயே ஆன்மா, நீயே இந்த அண்டத்தைப் படைப்பவனும் அழிப்பவனுமாவாய். ஓ! தலைவா, அல்லல் படுபவர்களுக்கு மீட்பனாய் இருப்பவன் நீயே. இந்த அண்டத்தையும், படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பவன் நீயே. உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவன் நீயே. மனத்தோற்றங்களில் உண்டாகும் ஆஹுதிகளும், சித்திகளும் [1] நீயே. ஓ! உச்சமானவனே, முடிவற்றவனே, ஓ! நன்மைகள் அனைத்தையும் கொடுப்பவனே, ஆதரவற்றவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவன் நீயே. ஆத்மாவாலோ மன அளவிளோ, பிற வழிகளிலோ அறியமுடியாத ஓ! ஆதி பொருளே, நீயே அனைவரையும் ஆட்சி செய்பவனும், பிரம்மனின் தலைவனுமாவாய். நான் உனது பாதுகாப்பைத் தேடுகிறேன். ஓ! தேவா, உன்னைப் புகலிடமாகக் கொண்டோரிடம் எப்போதும் அன்புள்ளவனே, உன் கருணையால் என்னைப் பாதுகாப்பாயாக. கருநெய்தல் மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவனே. அல்லி மலரின் உள்வட்டத்தைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டவனே, மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனே, பிரகாசிக்கும் கௌஸ்துப ரத்தினத்தை மார்பில் தரித்தவனே. படைத்த அனைத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறாய். நீயே அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருக்கிறாய். அண்டத்தின் {அண்டத்தின்} உயர்ந்த ஒளியும், சாரமுமாக நீயே இருக்கிறாய். அனைத்து திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் நீயே. உன்னையே அனைத்திற்கும் வித்தாகவும், அனைத்துப் பொக்கிஷங்களின் குவியலாகவும் சொல்கிறார்கள். உனது பாதுகாப்பில் இருக்கும்போது, ஓ! தேவர்களின் தலைவா, அனைத்து தீமைகளும் தங்கள் பயங்கரங்களை இழக்கின்றன. துச்சாசனனிடம் இருந்து நீ என்னை முன்பு காத்ததைப் போல, இந்தச் சிரமத்தில் இருந்து நீயே என்னை விடுவிக்க வேண்டும்” என்று வேண்டினாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தன்னை நம்பியிருப்பவர்களிடம் கருணையாக இருப்பவனும், மர்மமான இயக்கங்கள் கொண்டவனும், பெரியவனும், இறையாண்மை உள்ள தேவனும், பூமியின் தலைவனுமான தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, கிருஷ்ணையால் {திரௌபதியால்} துதிக்கப்பட்டதும், அவளது சிரமத்தைக் கண்டு, தன்னருகே படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ருக்மிணியை விட்டு எழுந்து உடனே அந்த இடத்திற்குச் {காம்யக வனத்திற்குச்} சென்றான். வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கண்ட திரௌபதி பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனை வணங்கி, முனிவர்களின் வருகையையும், மற்றும் யாவையும் தெரிவித்தாள். அனைத்தையும் கேட்ட கிருஷ்ணன் அவளிடம் {திரௌபதியிடம்}, “நான் பசியால் மிகவும் வருந்துகிறேன். தாமதமில்லாமல் எனக்கு ஏதாவது உணவைக் கொடு. உன் மற்ற வேலைகளைப் பிறகு செய்யலாம்” என்றான்.
கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை {திரௌபதி} குழப்பம் கொண்டு அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “நான் உண்ணும் வரைதான் சூரியனால் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் உணவு இருக்கும். ஆனால், ஏற்கனவே நான் என் உணவை இன்று உண்டுவிட்டேன். இப்போது அதில் {அந்தப் பாத்திரத்தில்} உணவு இல்லை” என்றாள். பிறகு அந்தத் தாமரைக் கண் கொண்ட வணங்கத்தக்கவன் {கிருஷ்ணன்} கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, இது கேலிக்கான நேரமில்லை. பசியால் நான் மிகவும் துன்புறுகிறேன். விரைவாகச் சென்று அந்தப் பாத்திரத்தை எடுத்துவந்து என்னிடம் காட்டு” என்றான். யது குலத்தின் ஆபரணமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அந்தப் பாத்திரம் இது போன்ற நிலையில் கொண்டு வரப்பட்டபோது, அவன் அதற்குள் நோட்டம் விட்டு, அதன் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்த, ஒரு பருக்கை அரிசியையும், கீரையையும் {Vegetable = காய்கறி} கண்டான். அதை விழுங்கிய அவன் {கிருஷ்ணன்}, அவளிடம் {திரௌபதியிடம்}, “அண்டத்தின் ஆன்மாவான தேவன் ஹரியை இது நிறைவு கொள்ளச்செய்யட்டும். வேள்விகளில் {அவிர்ப்பாகம்} உண்ணும் தேவனுக்கும் {இந்திரனுக்கு} இது தெவிட்டும் நிலையை உண்டாக்கட்டும்” என்றான்.
பிறகு நீண்ட கரங்கள் கொண்டவனும், துன்பங்களுக்கு ஆறுதலாக இருப்பவனுமானவன் {கிருஷ்ணன்}, பீமசேனனிடம், “விரைந்து சென்று முனிவர்களை உணவு உண்ண அழைப்பாயாக” என்றான். பிறகு ஓ! நல்ல மன்னா {ஜனமேஜயா}, கொண்டாடப்படும் பீமசேனன், தங்கள் சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்ய அருகில் இருந்த தெளிந்த குளிர்ச்சியான நீர் ஓடும் ஓடைக்குச் சென்றிருக்கும் அனைத்து முனிவர்களையும், துர்வாசரையும், பிறரையும் அழைப்பதற்காக, விரைவாகச் சென்றான். அதே வேளையில், ஆற்றில் மூழ்கி எழுந்த துறவியர், தங்கள் உடல்களைத் தேய்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக உணர்ந்தனர். ஓடையை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு துர்வாசரிடம் திரும்பிய அத்துறவியர், “மன்னனை உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு, நீராட இங்கே வந்துவிட்டோம். ஆனால், ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே {துர்வாசரே}, நமது வயிறு கழுத்து வரை நிரம்பியிருப்பதாகக் காணப்படுகிறது. இப்போது நம்மால் எதையும் உண்ண எப்படி முடியும்? நமக்காகத் தயாரிக்கப்படும் உணவு பயனற்றுப் போகும். இப்போது செய்வதற்கு எது தகுந்தது?” என்று கேட்டனர்.
அதற்குத் துர்வாசர், “உணவைப் பாழாக்கியதால், நாம் அரச முனிவனான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பெரும் தீங்கை இழைத்துவிட்டோம். பாண்டவர்கள் தங்கள் கோபப் பார்வையால் நம்மைப் பார்த்து எரித்துவிடமாட்டார்களா? அரச முனியான யுதிஷ்டிரன் பெரும் தவச் சக்தியைப் பெற்றிருக்கிறான் என்பதை நான் அறிவேன். அந்தணர்களே, ஹரிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன். உயர் ஆன்ம {மகாத்மாவான} பாண்டவர்கள் அனைவரும், அறம் பயில்பவர்கள் {தர்மவான்கள்}, கற்றவர்கள், போர்க்குணம் மிக்கவர்கள், தவத்துறவிலும் நோன்பிலும் கவனம் உள்ளவர்கள், வாசுதேவனுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள், நன்னடத்தைகளை விதிப்படி எப்போதும் நோற்பவர்களுமாவர். தூண்டப்பட்டால், பஞ்சுக்குவியலை எரிக்கும் நெருப்பு போலத் தங்கள் கோபத்தால் நம் அனைவரையும் எரித்துவிடுவார்கள். எனவே, சீடர்களே, நீங்கள் அனைவரும் அவர்களை (மீண்டும்) பார்க்காமல் விரைவாக ஓடுங்கள்” என்றார் {துர்வாசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தங்கள் ஆன்ம குருவால் இப்படி அறிவுறுத்தப்பட்ட அந்த அந்தணர்கள் அனைவரும், பாண்டவர்களிடம் பெரும் அச்சம் கொண்டு, அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடினர். அந்தத் தெய்வீக நதியின் அருகே, அற்புதமான முனிவர்களைக் காணாத பீமசேனன், அந்த நதித்துறைகளில் இங்கும் அங்கும் என அனைத்து இடங்களிலும் தேடினான். அந்த இடத்தில் இருந்த துறவிகளால், அவர்கள் ஓடிவிட்டனர் என்பதை அறிந்த அவன் {பீமன்}, திரும்பி வந்து, யுதிஷ்டிரனிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். பிறகு அடங்கிய புலன்கள் கொண்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களை எதிர்பார்த்து சிறிது நேரம் காத்திருந்தனர்.
யுதிஷ்டிரன், “நடு இரவில் திடீரென வந்து நம்மை முனிவர்கள் ஏமாற்றிவிடலாம். ஓ! உண்மைகளால் {தெய்வத்தால்} உருவாக்கப்பட்ட இந்தக் கடும்சிரமத்தில் இருந்து நாம் எப்படித் தப்புவது?” என்று சொன்னான். இப்படிப்பட்ட நினைவுகளில் மூழ்கி, நீண்ட பெருமூச்சுகளை அடிக்கடி விட்டுக்கொண்டிருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்ட கிருஷ்ணன், திடீரென அவர்கள் முன் தோன்றி, அவர்களிடம், “பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, கோபக்கார மூனிவர் மூலம் உங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை அறிந்த திரௌபதி என்னிடம் மன்றாடினாள். எனவே, நான் இங்கு விரைவாக வந்தேன். ஆனால், இப்போது, முனிவர் துர்வாசரிடம் நீங்கள் சிறிதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களது தவச் சக்திகளுக்குப் பயந்து, முன்பே அவர் ஓடிப்போய்விட்டார். அறம் சார்ந்த மனிதர்கள் எப்போதும் துன்பப்படுவதில்லை. நான் எனது வீட்டிற்குத் திரும்ப இப்போது உங்களிடம் நான் அனுமதி கோருகிறேன். நீங்கள் எப்போதும் வளத்துடன் இருப்பீராக!” என்றான் {கிருஷ்ணன்}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திரௌபதியுடன் இருந்த பிருதையின் மகன்கள் கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்டு மனம் அமைதியடைந்தார்கள். நோய் (வருத்தம்) அகன்ற அவர்கள் {பாண்டவர்கள்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “அகன்ற கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மனிதர்கள், ஒரு படகின் மூலமாகப் பாதுகாப்பாகக் கரையை அடைவதைப் போல, உன் துணையைக் கொண்ட நாங்கள், ஓ! தலைவா, கோவிந்தா {கிருஷ்ணா}, தப்பமுடியாத சிரமத்தில் இருந்து தப்பித்தோம். இப்போது நீ அமைதியுடன் திரும்பலாம். வளமை உனதாகட்டும்” என்றனர். இப்படி வழியனுப்பப்பட்ட அவன் {கிருஷ்ணன்}, தனது தலைநகரை அடைந்தான்.. ஓ! அருளப்பட்ட தலைவா {ஜனமேஜயா}, வனம் விட்டு வனம் உலவித் திரிந்த பாண்டவர்கள், திரௌபதியுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தினர். ஓ! மன்னா, இப்படியே நீ சொல்லச்சொன்ன கதையை உனக்குச் சொல்லிவிட்டேன். இப்படியே காட்டில் இருந்த பாண்டவர்களிடம் திருதராஷ்டிரனின் தீய மகன்களின் தந்திரங்கள் பலிக்கவில்லை”
திரௌபதியைக் கண்ட ஜெயத்ரதன்! – வனபர்வம் பகுதி 262-பாண்டவர்கள் அனைவரும் வேட்டைக்குச் சென்றது; அவ்வேளையில் ஜெயத்ரதன் திரௌபதியைக் காண்பது; அவளைக் கண்டு மயங்கிய அவன், அவளைப் பற்றி அறிய கோடிகனை அனுப்பியது .
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாரதக் குலத்தைச் சார்ந்த இத்தகுப் பெரும் வீரர்கள் காம்யகம் எனும் பெரும் காட்டில் தேவர்களைப் போலச் சுற்றிக் கொண்டும், வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டும், நாட்டின் எண்ணிலடங்கா காட்டுபகுதிகளையும், அழகான மலர்கள் பூக்கும் காலம் கொண்ட கானகத்தின் பரந்த பகுதிகளையும் மகிழ்ச்சியுடன் கண்டனர். ஒவ்வொருவரும் இந்திரனைப் போல இருந்து, எதிரிகளுக்குப் பயங்கரத்தைக் கொடுக்கும் அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அங்கே சிறிது காலம் தங்கினர். ஒரு நாள், எதிரிகளை வெல்லும் அந்தப் பராக்கிரமசாலிகள் {பாண்டவர்கள்}, தங்களுடன் இருந்த அந்தணர்களுக்கு உணவு கொடுப்பதற்காக, அனைத்து பக்கங்களுக்கும் வேட்டையாடச் சென்றனர். தவ மகிமை கொண்ட பெரும் துறவியான திருணபிந்துவிடமும், தங்கள் ஆன்ம வழிகாட்டியான தௌமியரிடமும் அனுமதி கேட்டு, திரௌபதியைத் தனியாக ஆசிரமத்தில் விட்டுச் சென்றனர்.
அதே வேளையில், சிந்துவின் புகழ்பெற்ற மன்னனான, விருத்தக்ஷத்ரனின் மகன் {ஜெயத்ரதன்}, திருமணம் செய்து கொள்ளும் நோக்குடன், சிறந்த அரச உடைகள் உடுத்தி, எண்ணற்ற இளவரசர்களின் துணையுடன் சால்வ நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். காம்யக வனத்தில் அந்த இளவரசன் {ஜெயத்ரதன்} நின்றான். அந்த ஒதுங்கிய இடத்தில், பாண்டவர்களின் கொண்டாடப்படும் அன்பிற்குரிய மனைவியான அழகிய திரௌபதி, ஆசிரமத்தின் வாசலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவளது அழகிய வடிவத்தால் பிரம்மாண்டமாக இருந்த அவள், கரிய மேகக் குவியலைப் பிரகாசிக்க வைக்கும் மின்னலைப் போல, அந்த வனத்தைச் சுற்றி ஒரு காந்தியைப் பரப்பிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவளை {திரௌபதியைக்} கண்ட எவரும், “இது அப்சரசா? தேவர்களின் மகளா? அல்லது தேவ மாயையா?” என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டனர். இந்த எண்ணத்தால் அவர்களது கரங்களும் குவிந்தன. அவர்கள் களங்கமற்ற வடிவழகு கொண்டவளை நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தனர்.
விருத்தக்ஷத்ரனின் மகனும், சிந்துவின் மன்னனுமான ஜெயத்ரதன், களங்கமற்ற அழகுடைய அந்த மங்கையைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி, தீய நோக்கத்தால் பீடிக்கப்பட்டான். ஆசை கொழுந்து விட்டெரிய அவன் {ஜெயத்ரதன்} கோடிகன் என்ற இளவரசனிடம், “களங்கமற்ற வடிவம் கொண்ட இந்த மங்கை யாருடையவள்? இவள் மனித வகையைச் சார்ந்தவள்தானா? இந்தப் பேரழகியை அடைய முடிந்தால் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை [1]. அவளை என்னுடன் அழைத்துக் கொண்டு எனது வசிப்பிடத்திற்குத் திரும்புவேன். ஓ! ஐயா {கோடிகா}, இவள் யாரென்றும், இவள் எங்கிருந்து வந்திருக்கிறாள் என்றும், இந்த மென்மையானவள் முட்கள் நிறைந்த இந்தக் கானகத்திற்கு ஏன் வந்தாள் என்றும் அறிந்து வா. பெண் வகையில் ரத்தினமான இந்தக் கொடியிடையாள், பெரும் அழகு படைத்த இந்த மங்கை, அழகிய பற்களும், நீண்ட கண்களும் கொண்ட இவள் என்னைத் தலைவனாக ஏற்பாளா? இந்த அற்புதமான மங்கையின் கரங்களை அடைந்தால், நான் நிச்சயம் என்னை வெற்றியடைந்தவனாகக் கருதிக் கொள்வேன். போ, கோடிகா {கோடிகாஸ்யா}, இவளது தலைவன் யார் என்பதை விசாரித்து வா” என்றான் {ஜெயத்ரதன்}. இப்படிக் கேட்கப்பட்ட குண்டலங்கள் அணிந்திருந்த கோடிகன், தனது தேரில் இருந்து குதித்து, ஒரு நரி பெண் புலியை அணுகுவதைப் போல அவளின் {திரௌபதியின்} அருகில் வந்து, இந்த வார்த்தைகளைப் பேசினான்.
திரௌபதியிடம் பேசிய கோடிகன்! – வனபர்வம் பகுதி 263-ஜெயத்ரதன் கட்டளைக்கிணங்க கோடிகன் திரௌபதியிடம் சென்று பேசுவது; அவள் யார், யாருடைய மனைவி என்று விசாரித்து, தங்களைக் குறித்த அறிமுகத்தைச் சொல்வது ..
கோடிகன் {திரௌபதியிடம்} சொன்னான், “அற்புதமான மங்கையே, இரவு நேரத்தில் சுடர்விடும் நெருப்பெனப் பிரம்மாண்டமாகத் தெரிகிறாயே. இந்த ஆசிரமத்தில் இருக்கும் கடம்ப மரத்தில் சாய்ந்து கொண்டு, தென்றலால் தாலாட்டப்பட்டுத் தனியாக நிற்கும் நீ யார்? நேர்த்தியான அழகுடன் இருக்கும் நீ, இந்தக் காட்டுப் பகுதியில் எந்தப் பயத்தையும் உணரவில்லையா? {இங்கே உன்னைக் கண்டு}, தேவதையோ, யக்ஷியோ, தானவியோ, அற்புதமான அப்சரசோ, தைத்தியர் எவரின் மனைவியோ, நாக மன்னனின் மகளோ, ராட்சசியோ, வருணனின், யமனின், சோமனின், குபேரனின் மகளோ மனித உருவம் கொண்டு இந்தக் கானகத்தில் உலவுவதாக நான் உன்னைக் குறித்து எண்ணுகிறேன். அல்லது, தாத்ரி {தாதா}, விதாத்ரி {விதாதா}, சாவித்ரி {சூரியன்}, விபு, சக்ரன் {இந்திரன்} ஆகியோரின் மாளிகையில் இருந்து இங்கு வந்திருக்கிறாயா?
நாங்கள் யார் என்று எங்களிடம் நீ கேட்கவில்லை. உன்னை இங்கு யார் பாதுகாக்கிறார்கள் என்பதை நாங்கள் அறியவில்லை. மரியாதையுடன் உன்னைக் கேட்கிறேன், ஓ! நன்மங்கையே, பலமிக்க உனது தந்தை யார்? உனது கணவன், உறவிர்கள், குலம் ஆகிய பெயர்களை எங்களுக்குச் சொல். நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதையும் சொல். எங்களைப் பொறுத்தவரையில், நான் மன்னன் சுரதனின் மகன், என்னை மக்கள் கோடிகன் என்று அறிவார்கள். அந்தத் தங்கத்தேரில் வேள்விப்பீடத்தில் அமர்ந்திருக்கும் நெருப்புப்போல அமர்ந்திருக்கும் அந்த மனிதன், தாமரை இதழ்களைப் போல நீண்ட கண்களையுடைய அந்த வீரன், க்ஷேமங்கரன் என்ற பெயரால் அறியப்படும் திரிகார்த்த {நாட்டின்} மன்னனாவான். அவனுக்குப் பின்னால், இப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவன் புளிந்த {குளிந்த நாட்டு} மன்னனின் புகழ்பெற்ற மகனாவான். பெரும் வில்லைத் தாங்கி, அகன்ற கண்களுடன், மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, மலைகளின் மார்புகளில் வாழ்பவன் அவன். கரிய நிறமும், அழகும் கொண்டவனும், எதிரகளை அழிப்பவனும், அந்தக் குளத்தின் அருகில் நின்று கொண்டிருப்பவனுமான அந்த இளைஞன், இக்ஷவாகு குலத்தில் வந்த சுபலனின் மகனாவான்.
ஓ! அற்புதமான மங்கையே, ஜெயத்ரதன் என்ற பெயர் பெற்ற, சௌவீர {நாட்டு} மன்னனைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கலாம். வேள்வி பீடத்தில் தோன்றும் நெருப்பு போல இருப்பவர்களும், சிவந்த குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இருப்பவர்களுமான அங்காரகன், குஞ்சரன், குப்தகன், சத்ருஞ்சயன், ஸ்ரீஞ்சயன், சுப்பிரவிருத்தன், பிரபாங்கரன், பிரமரன், ரவி, சூரன், பிரதாபன் மற்றும் குஹனன் ஆகிய பனிரெண்டு சௌவீர இளவரசர்களைத் தனது கொடி தாங்குபவர்களாக வைத்துக் கொண்டு, {போரில்} ஆறாயிரம் தேர்களின் தலைவனாக {முன்னணியில்} இருந்து கொண்டு, குதிரைகளுடனும், யானைகளுடன், காலாட்படையுடனும், செல்லும் அவனும் {ஜெயத்ரதனும்} அதோ அங்கே இருக்கிறான். அந்த மன்னனின் தம்பிகளான பலமிக்க வலாஹகன், அநீகன், விதாரணன் மற்றும் பிறரும் அவனைப் பின்தொடரும் தொண்டர்களுக்கு மத்தியில் இருக்கின்றனர். வலிய கரங்களும் கால்களும் கொண்ட இந்த இளைஞர்கள் அனைவரும் தீரச்செயல்களின் மலர்களாவர். அந்த மன்னன் {ஜெயத்ரதன்}, இவர்களுடனே, மருதர்களால் சூழப்பட்ட இந்திரனைப் போலத் தனது பயணத்தைச் செய்கிறான். ஓ! அழகிய கூந்தல் கொண்டவளே, நீ யாருடைய மனைவி, யாருடைய மகள் என்று (இது போன்ற விஷயங்களை) அறியாத எங்களுக்கு அவற்றைச் சொல்வாயாக” என்று கேட்டான் {கோடிகன்}
திரௌபதியின் வரவேற்பு! – வனபர்வம் பகுதி 264-திரௌபதி கோடிகனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிபி குலத்தவனால் {கோடிகனால்} இப்படிக் கேட்கப்பட்ட இளவரசி திரௌபதி, தன் கண்களை மெதுவாக நகர்த்தி, கடம்ப மர கிளையில் இருந்த தனது பிடியை விட்டு, தன் பட்டாடையைச் சரி செய்து கொண்டு, “ஓ! இளவரசரே {கோடிகா}, என்னைப் போன்ற ஒருத்தி உம்மிடம் இப்படி உரையாடுவது தகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், உம்மிடம் பேச இங்கு வேறு ஆடவரோ, பெண்மணியோ இல்லை. நான் இங்கே தனியாக இருக்கிறேன். அதனால் என்னைப் பேச அனுமதியும். தகுதியுடைய ஐயா {கோடிகா}, என்னுடைய பாலினத்தை {நான் பெண் என்பதை} நினைவுகூர்ந்து, இந்தக் காட்டில் தனிமையில் இருக்கும் நான் உம்மிடம் பேசக்கூடாது என்பதை அறியும்.
ஓ! சைப்பியரே {கோடிகா}, சுரதனின் மகனான உம்மைக் கோடிகன் என்ற பெயரால் மக்கள் அறிகிறார்கள் என்றும் நான் {உம்மிடம் இருந்து} அறிந்தேன். எனவே, நான் என் பங்குக்கு, எனது உறவினர்களையும், எனது புகழ்வாய்ந்த குலத்தையும் இப்போது சொல்கிறேன். நான் மன்னர் துருபதரின் மகள், கிருஷ்ணை {திரௌபதி} என்ற பெயரால் மக்கள் என்னை அறிவார்கள். காண்டவப்பிரஸ்தத்தில் வாழ்ந்து வந்த ஐவரை நான் கணவர்களாக ஏற்றுக் கொண்டேன் என்பதை நீர் கேள்விப்பட்டிருக்கலாம். யுதிஷ்டிரர், பீமசேனர், அர்ஜுனர் மற்றும் மாத்ரியின் இருமகன்கள் {நகுல, சகாதேவர்கள்}ப் ஆகிய அந்த உயர்ந்த மனிதர்கள் {எனது கணவர்கள்}, என்னை இங்கே விட்டுவிட்டு, வேட்டையாடுவதற்காக நான்கு திசைகளில் சென்றிருக்கிறார்கள்.
மன்னர் {யுதிஷ்டிரர்} கிழக்குத் திசையில் சென்றிருக்கிறார், பீமசேனர் தெற்கிலும், அர்ஜுனர் மேற்கிலும், இரட்டைச் சகோதரர்கள் {நகுலன், சகாதேவன் ஆகியோர்} வடக்கிலும் சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் {பாண்டவர்களிடம்} உரிய வரவேற்பைப் பெற்று நீங்கள் செல்லலாம். எனவே, இப்போது உங்கள் வண்டிகளை விட்டுக் கீழிறங்கி அவற்றுக்கு {வண்டிகளுக்கு} நீங்கள் விடை கொடுங்கள். உயர் ஆன்மா கொண்ட தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} விருந்தினர்களை மிகவும் பிடிக்கும். அவர் உங்களைக் கண்டு மிகவும் மகிழ்வார் என்பது நிச்சயம்” என்றாள். அந்தச் சைப்பியனின் மகனிடம் {கோடிகனிடம்} இப்படிச் சொன்ன, சந்திரன் போன்ற அழகிய முகம் கொண்ட துருபதன் மகள் {திரௌபதி}, தன் கணவன் {யுதிஷ்டிரன்} விருந்தோம்பல் செய்யும் குணத்தை நன்றாக நினைவுகூர்ந்து, தன் விசாலமான குடிசைக்குள் நுழைந்தாள்.
ஜெயத்ரதனின் சிறுமை! – வனபர்வம் பகுதி 265-ஜெயத்ரதன் திரௌபதியை அணுகியது; திரௌபதி ஜெயத்ரதனைக் கண்டித்து, நீண்ட பேச்சுகளால் தாமதம் செய்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, கோடிகாக்கியன் {கோடிகன்}, கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்} தனக்கும் இடையில் நடந்தவற்றை, காத்திருந்த {ஜெயத்ரதன் உட்பட்ட} அந்த இளவரசர்களுக்குச் சொன்னான். கோடிகாக்கியனின் வார்த்தைகளைக் கேட்ட சிபி குலக் கொழுந்தான ஜெயத்ரதன், “அவள் பேசியதை மட்டுமே கேட்ட என் இதயம், அந்தப் பெண்குல ரத்தினத்தின் மேல் காதல் கொள்கிறது. இப்படியிருக்கும்போது, நீ ஏன் (வெற்றியடையாமல்) திரும்பினாய்? நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கோடிகா}, இந்தப் பெண்ணை ஒரு முறை கண்ட பிறகு, மற்ற பெண்களெல்லாம் எனக்கு {பெண்} குரங்குகளைப் போலத் தெரிகிறார்கள். நான் இவளைக் கண்டவுடன், இவள் எனது இதயத்தைக் கொள்ளையிட்டுவிட்டாள். ஓ! சைப்பியா {கோடிகா}, இந்த அற்புதமான மங்கை, மனித வகையைச் சேர்ந்தவள்தானா என்று எனக்குச் சொல்?” என்று கேட்டான். அதற்குக் கோடிகன், “இந்த மங்கை புகழ்பெற்ற இளவரசியான கிருஷ்ணையாவாள் {திரௌபதியாவாள்}. இவள் துருபதனின் மகளும், பாண்டுவின் ஐந்து மகன்களுக்கும் பிரபலமான மனைவியுமாவாள். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} இவள் மதிப்பிற்குரிய, அன்பிற்குரிய, கற்புடைய மனைவியாவாள். இவளை உன்னுடன் சௌவீரத்திற்கு எடுத்துச் செல்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சிந்து, சௌவீரம் மற்றும் பிற நாடுகளுக்கு மன்னனான தீய மனம் கொண்ட ஜெயத்ரதனுக்கு இப்படிச் சொல்லப்பட்டதும், அவன் {ஜெயத்ரதன்}, “நான் திரௌபதியைப் பார்க்க வேண்டும்” என்றான். பிறகு, ஆறு பேருடன், அந்தத் தனிமையான ஆசிரமத்திற்குள், சிங்கக் குகைக்குள் நுழையும் ஓநாய் போல நுழைந்தான். பிறகு அவன் {ஜெயத்ரதன்} கிருஷ்ணையிடம் {திரௌபதி}, “உனக்கு வாழ்த்துகள், அருமையான மங்கையே! யாருடைய செழிப்பை நீ எப்போதும் விரும்புகிறாயோ அந்த உனது கணவர்கள் நன்றாக இருக்கிறார்களா?” என்று கேட்டான். அதற்குத் திரௌபதி, “குந்தியின் மகனும், குரு குலத்தைச் சேர்ந்தவருமான மன்னர் யுதிஷ்டிரரும், அவரது தம்பிகளும், நானும், நீர் விசாரிக்கும் அனைவரும் நலமாக இருக்கின்றோம். உமது நாடு, உமது அரசு, அந்த அரசின் நிதிக் கருவூலம், உமது படைகள் ஆகியன நலமா? தனிப்பெரும் ஆட்சியாளராக, சைப்பியம், சிபி, சிந்து மற்றும் உமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள வளமை மிகுந்த நாடுகள் அனைத்தையும் நீதியுடன் ஆட்சி செய்கிறீரா? ஓ! இளவரசரே, உமது பாதங்களைக் கழுவி கொள்ள இந்த நீரைப் பெற்றுக் கொள்ளும். இந்த இருக்கையில் அமரும். உமது படை அணியினரின் காலை உணவுக்காக நான் ஐம்பது விலங்குகளைத் தருகிறேன். இது போக, குந்தியின் மகனான யுதிஷ்டிரர், மான்குட்டிகளையும் {Porcine deer = பன்றி போன்ற மான்கள்}, நயங்குமான்களையும், புள்ளி மான்களையும், இரலைகளையும் {கலைமான்களையும்}, எண்காற்புட்களையும் {சரபங்களையும் = சிங்கத்தையே கொல்லவல்ல எட்டுக் கால் பறவைகளையும்}, முயல்களையும், ருருமான்களையும், கரடிகளையும், சம்பரமான்களையும், கவயங்களையும், இன்னும் பல விலங்குகளையும், காட்டுப்பன்றிகளையும், காட்டெருமைகளையும், நான்கு கால் கொண்ட விலங்குகள் பலவற்றையும் உமக்குக் கொடுப்பார்” என்றாள்.
இதைக்கேட்ட ஜெயத்ரதன், “என்னிடம் உள்ள அனைத்தும் நன்றாக இருக்கின்றன. எங்களுக்குக் காலை உணவு அளிக்க முன்வந்து, உண்மையில் நீ அதை ஒருவகையில் கொடுத்துவிட்டாய் {By offering to provide our breakfast, thou hast in a manner actually done it.}. இப்போது வா. என் தேரில் பயணித்து, முழுமையான மகிழ்ச்சியை அடைவாயாக. நாடு பறிக்கப்பட்டு, சிறிதளவும் மாற்றமடைய முடியாதப் பேறைப் பெற்று, ஆற்றல்கள் முடங்கி, காட்டில் பரிதாபகரமான நிலையில் வாழும் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} நீ எதற்காகவும் பொருட்படுத்த வேண்டியதில்லை. உன்னைப் போன்ற அறிவுள்ள பெண் ஏழைக் கணவனுடன் இணைந்திருக்கமாட்டாள். அவள் {உன்னைப் போன்ற அறிவுள்ள பெண்} தனது தலைவன் வளமையில் இருக்கும்போது அவனைத் தொடர வேண்டும். ஆனால், கேடுகாலத்தில் அவனைக் கைவிட வேண்டும். பாண்டுவின் மகன்கள், தங்கள் உயர்ந்த நிலையில் இருந்து விழுந்துவிட்டனர். காலத்திற்கு அவர்களது நாட்டைத் தொலைத்துவிட்டார்கள். எனவே, அவர்களிடம் மதிப்புக் கொண்டு, அவர்களது துன்பத்தில் நீ பங்கு கொள்ள வேண்டியதில்லை. எனவே, ஓ! அழகிய இடை கொண்டவளே {திரௌபதி}, பாண்டுவின் மகன்களைக் கைவிட்டு, எனது மனைவியாகி மகிழ்ச்சியடைந்து, என்னுடன் சிந்து மற்றும் சௌவீர நாடுகளைப் பகிர்ந்து கொள்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயன்} தொடர்ந்தார், “சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை அவ்விடத்தில் இருந்து விலகி, புருவங்களை நெறித்து முகம்சுழிதாள். அவனது வார்த்தைகளைப் பெரிதும் அவமதித்து, அலட்சியம் செய்த அந்த மெல்லிடையாளான கிருஷ்ணை {திரௌபதி}, சிந்து மன்னனிடம் {ஜெயத்ரதனிடம்}, “மீண்டும் அப்படிப் பேசாதே! உனக்கு வெட்கமாக இல்லையா? உன்னைப் பாதுகாத்துக் கொள்” என்று சொன்னாள். தனது கணவன் திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்தக் குற்றமற்ற குணம் கொண்ட மங்கை {திரௌபதி}, நீண்ட நேரம் {அவனிடம்} பேசி, அவனை முழுமையாக ஏமாற்றத் தொடங்கினாள்”
திரௌபதி கடத்தப்பட்டாள்! – வனபர்வம் பகுதி 266-திரௌபதி ஜெயத்ரதனைக் கண்டித்தது; ஜெயத்ரதன் திரௌபதியின் மேலாடையைப் பற்றியது; ஜெயத்ரதனைத் தள்ளிவிட்ட திரௌபதி; திரௌபதியை இழுத்துச் சென்று ஜெயத்ரதன் தேரில் ஏற்றியது; தௌமியர் ஜெயத்ரதனை எச்சரித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “துருபதன் மகள் {திரௌபதி} இயற்கையாகவே அழகாக இருந்தாலும், கோபம் எழுந்ததால் {மிகவும்} சிவப்பாக இருந்தாள். எரியும் கண்களுடனும், கோபம் கொண்ட புருவங்களுடனும், அவள் சௌவீர ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நிந்தித்தாள். அவள் {திரௌபதி}, “ஓ! மூடனே, இந்திரனுக்கு ஒப்பானவர்களும், கடும் போர்வீரர்களும், கடமைகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களிடம் போரிடும்போது கூடக் கலங்காதவர்களுமான அந்தக் கொண்டாடப்படுபவர்களை {பாண்டவர்களை} இத்தகு வார்த்தைகளால் அவமதிக்க உனக்கு வெட்கமாக இல்லையா? ஓ! சௌவீரா {ஜெயத்ரதா}, கல்வி அறிவு கொண்டு தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் கற்ற மனிதர்களை, அவர்கள் காட்டில் வாழ்ந்தாலும், வீட்டில் வாழ்ந்தாலும் நல்லவர்கள் தவறாகப் பேசுவதில்லை. உன்னைப் போன்ற குறுகிய புத்தி கொண்ட பாதகர்களே அப்படிச் செய்வார்கள். உனது பாதத்திற்கு அடியில் உள்ள குழிக்குள் விழப்போகும் உன்னைக் கைகொடுத்துக் காக்க கூடிய ஒருவனும் இந்த {உனது} க்ஷத்திரயக்கூட்டத்தில் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
இமயத்தின் பள்ளத்தாக்குகளில் உள்ள யானைக்கூட்டத்தில், மதம் கொண்டு மதநீர் ஒழுகிய நிலையில் மலைச்சிகரத்தைப் போன்று இருக்கும் தலைமை யானையை, கையில் உள்ள குச்சியால் பிரித்து விடலாம் என்பது போல இருக்கிறது, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரை வீழ்த்திவிடலாம் என்ற உனது நினைப்பு. சிறுபிள்ளை போன்று அறியாமையில் இருக்கும் நீ, உறங்கிக் கொண்டிருக்கும் சக்திமிக்கச் சிங்கத்தை உதைத்து விழிப்படையச் செய்து அதன் முகத்தில் இருக்கும் முடியைப் பிடித்திழுக்க நினைக்கிறாய். எனினும், பீமசேனரின் கோபத்தைக் கண்டால் நீ ஓடிவிடுவாய். சீற்றமிகு ஜிஷ்ணுவிடம் {அர்ஜுனரிடம்} நீ மோதினால், மலைக்குகையில் உறங்கிக் கொண்டிருக்கும் பெரும்பலம் வாய்ந்த, பயங்கரமான, முழுதும் வளர்ந்த சீற்றமிகு சிங்கத்தை உதைப்பதற்குச் சமமாகும். இரு அற்புதமான இளைஞர்களான இளம்பாண்டவர்களிடம் {நகுல சகாதேவர்களிடம்} மோதுவது குறித்து நீ பேசுகிறாய். அவர்களுடன் நீ மோதுவது, பிளந்த இரண்டு நாவுகள் கொண்ட, இரண்டு நஞ்சுமிகுந்த கருநாகங்களின் வால்களை வேண்டுமென்றே மிதிப்பதற்கு அது சமமாகும். மூங்கிலும், வாழையும், கோரையும் அழிவதற்காகவே கனி கொடுத்து, மேலும் வளராமல் இருக்கின்றன. தனது அழிவுக்காகவே கருவுறும் நண்டைப் போல, அந்தப் பெரும்பலம் மிக்க வீரர்களால் {பாண்டவர்களால்} பாதுகாக்கப்படும் என் மீது உனது கைகளை வைக்கிறாய்.” என்றாள் {திரௌபதி}.
அதற்கு ஜெயத்ரதன் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, இவையாவையும் நான் அறிவேன். அந்த இளவரசர்களின் பராக்கிரமத்தை நான் நன்கு அறிவேன். ஆனால், இந்த அச்சுறுத்தல்களைக் கொண்டு எங்களைப் பயமுறுத்த முடியாது. ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, பதினேழு சக்திகளையும் {எட்டு கர்மங்களும் [1] ஒன்பது சக்திகளும் [2]}, ஆறு அரச குணங்களையும் [3] கொண்ட உயர்ந்த குலத்திலேயே நாங்கள் பிறந்திருக்கிறோம். எனவே, நாங்கள் பாண்டவர்களைத் தாழ்ந்தவர்களாவே கருதி, அவர்களை குனிந்து பார்க்கிறோம். எனவே, ஓ! துருபதன் மகளே {திரௌபதி}, இந்த யானையிலோ, அல்லது தேரிலோ விரைவாக ஏறு, உனது வார்த்தைகளை மட்டுமே கொண்டு எங்களைக் கலங்கடிக்க முடியாது. கர்வமற்றுப் பேசி, சௌவீர மன்னனிடம் {என்னிடம்} கருணையைப் பெற முயற்சி செய்” என்று மறுமொழி கூறினான் {ஜெயத்ரதன்}.
அதற்குத் திரௌபதி {ஜெயத்ரதனிடம்}, “நான் சக்திமிக்கவளாக இருப்பினும், என்னை ஏன் சௌவீர மன்னன் {நீ} மிகவும் பலம் குறைந்தவளாக எண்ணுகிறான் {எண்ணுகிறாய்}? வன்முறை மீது கொண்ட பயத்தால் இளவரசனின் முன்னால் என்னை நான் இழிவுபடுத்திக் கொள்ள மாட்டேன் என்பது நன்கு அறியப்பட்டதே. யாரைப் பாதுகாக்க கிருஷ்ணனும், அர்ஜுனரும் ஒரே தேரில் துரத்திக் கொண்டு வருவார்களோ அவளை {என்னை} இந்திரனாலேயே கடத்திச் செல்ல முடியாது. எதிரிகளைக் கொல்பவரான கிரீடி {அர்ஜுனர்}, என் காரியமாகத் தேரில் வந்தால், உங்கள் தலைவர்கள் இதயங்களில் பயத்தை உண்டாக்கி, கோடை காலத்தில் காய்ந்த புல்லை உட்கொள்ளும் நெருப்பைப் போல அனைத்தையும் எரித்துவிடுவார். யாரும் என்னைத் தீண்டினால், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தலைமையாகக் கொண்டு போர் செய்யும் அந்தகர்கள் மற்றும் விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த இளவரசர்களும், கேகேய குலத்தின் வலிமைமிக்க வில்லாளிகளும் பெரும் உணர்ச்சி பொங்க எனக்காகத் தொடர்ந்து வருவார்கள். {அர்ஜுனரின்} கரத்தின் பலத்தால் காண்டீவத்தின் நாணில் இருந்து புறப்படும் தனஞ்சயரின் {அர்ஜுனரின்} பயங்கரமான கணைகள், பெரும் சக்தியுடன், காற்றில் பறந்து வந்து மேகங்களைப் போலக் கர்ஜிக்கும். காண்டீவத்திலிருந்து வெட்டுக்கிளிகள் பறப்பது போல அடர்த்தியான கணைமழையைப் பொழியும் அர்ஜுனரை நீ காணும்போது, உனது மூடத்தனத்திற்காக வருந்துவாய். சங்கை ஊதிக்கொண்டு, வில்லின் நாணொலியை எதிரொலிக்கும் கையுறைகளுடன் மீண்டும் மீண்டும் கணைகளால் அவர் {அர்ஜுனர்} உனது மார்பைத் துளைக்கும்போது நீ எப்படி உணர்வாய் என்பதை நினைத்துப்பார். கையில் கதாயுதத்துடன் பீமர் உன்னை நோக்கி வரும்போதும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மாத்ரியின் இரண்டு மகன்கள் தங்கள் கோபம் எனும் நஞ்சைக் கக்கும்போதும், வலியை உணரும் நீ, அதற்காக எப்போதும் வருந்த நேரிடும். மனதால் கூட நான் எனது தகுதி வாய்ந்த கணவர்களுக்குப் பொய்மையுடன் {அவர்களை மீறி} நடந்து கொண்டதில்லை. நான் கொண்ட அந்தத் தகுதியால், பிருதையின் {குந்தியின்} மகன்களால் நீ வீழ்த்தப்பட்டு, இழுத்துச் செல்லப்படுவதைக் காணும் இன்பத்தை அடைவேன். குருவீரர்கள் என்னைக் கண்டுபிடித்ததும், தங்களுடன் என்னை மீண்டும் காம்யக வனத்திற்குத் திரும்ப அழைத்து வருவார்கள். அதனால், கொடூரமான நீ, வன்முறையுடன் என்னைச் சிறைப்பிடித்து அச்சுறுத்தமுடியாது. ” என்றாள்.
வைசம்பாயனர் {ஜனமேஜனிடம்} தொடர்ந்தார், “பிறகு அகன்ற கண்களையுடைய அந்த மங்கை {திரௌபதி}, வன்முறையுடன் தன் மீது கைவைக்கத் தயாராக இருக்கும் அவர்களைக் கண்டு, நிந்திக்கும் வகையில், “என்னைத் தொட்டு தீட்டுப்படுத்தாதீர்” என்று சொல்லி, பிறகு, பெரும் அச்சத்துடன், தங்கள் ஆன்ம ஆலோசகரான தௌமியரைக் அழைத்தாள். எனினும், ஜெயத்ரதன் அவளது மேலாடையைப் பற்றினான். ஆனால் அவள் பெரும் ஆவேசத்துடன் அவனைத் தள்ளினாள். அந்த மங்கையால் {திரௌபதியால்} தள்ளப்பட்ட அந்த இழிந்த பாவி வேரறுக்கப்பட்ட மரம் போலத் தரையில் விழுந்தான். எனினும், மீண்டும் அவனால் {ஜெயத்ரதனால்} பெரும் வன்முறையுடன் பிடிக்கப்பட்ட அவள் {திரௌபதி} மூச்சுத்திணற ஆரம்பித்தாள். அந்தப் பாவியால் இழுத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி}, தௌமியரின் பாதங்களை வணங்கி, கடைசியாக அவனது {ஜெயத்ரதனது} தேரில் ஏறினாள். பிறகு தௌமியர் ஜெயத்ரதனிடம், “ஓ! ஜெயத்ரதா, க்ஷத்திரயர்களின் பண்டைய வழக்கத்தைக் கைக்கொள்வாயாக. அந்தப் பெரும் வீரர்களை வீழ்த்தாமல் நீ இவளைத் தூக்கிச் செல்லக்கூடாது {இயலாது}. யுதிஷ்டிரனின் தலைமையிலான வீர மிகுந்த பாண்டுவின் மகன்களிடம் நீ மோதுகிறாய். உனது இத்தகு வெறுக்கத்தக்க செயலுக்கான வலிநிறைந்த கனிகளை நீ நிச்சயம் அறுப்பாய்” என்றார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன தௌமியர், ஜெயத்ரதனின் காலாட்படைகளுக்கு மத்தியில் நுழைந்து, கடத்தல்காரனால் தூக்கிச் செல்லப்படும், அந்தப் புகழ்பெற்ற இளவரசியைத் {திரௌபதியைப்} பின்தொடர ஆரம்பித்தார்.
தொடர்ந்து சென்ற பாண்டவர்கள்! – வனபர்வம் பகுதி 267-யுதிஷ்டிரன் தீய சகுனங்களைக் காண்பது; தங்கள் இருப்பிடம் விரைவது; திரௌபதியின் பணிப்பெண் அழுது கொண்டிருப்பதைக் காண்பது; திரௌபதி கடத்தப்பட்டதைச் சொன்ன பணிப்பெண்; பாண்டவர்கள் திரௌபதியைத் தேடி பின்தொடர்ந்து செல்வது; ஜெயத்ரதன் படையைக் கண்டடைவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பூமியின் மேல் இருக்கும் வில்லாளிகளில் முதன்மையானவர்கள் {பாண்டவர்கள்} தனித்தனியாக எல்லாப்புறங்களிலும் சென்று, பல மான்களையும், எருமைகளையும் கொன்று நீண்ட நேரம் கழித்துச் சந்தித்துக் கொண்டனர். மான்கூட்டங்களாலும், வனவிலங்குகளாலும் நிறைந்திருக்கும் அப்பெரும் கானகத்தில், உரத்த குரலில் பறவைகள் அழுவதையும், வன விலங்குகளின் அலறல் மற்றும் கதறல்களையும் அவர்கள் கேட்டனர். யுதிஷ்டிரன் தனது தம்பிகளிடம், “சூரியனால் ஒளியூட்டப்பட்ட அத்திசையில் ஓடும் இந்த விலங்குகளும் பறவைகளும் பொருந்தாமல் கதறி, தீவிர பதட்டத்தைக் காட்டுகின்றன. இப்பெரும் கானகம் விரோதிகளால் ஊடுருவப்பட்டிருக்கிறது என்பதை இவையனைத்தும் இயம்புகின்றன. ஒரு நொடியும் தாமதியாமல் நமது {வேட்டைக்கான} துரத்தலைக் கைவிடுவோம். நமக்கு இந்த விளையாட்டு {வேட்டை} இன்னும் தேவையில்லை. என் இதயம் வலிக்கிறது. அது {இதயம்} எரிவது போலவும் தெரிகிறது. எனது உடலுக்குள் இருக்கும் ஆன்மா, அறிவை அடக்கி, வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. கருடனற்ற தடாகத்தில் பெரும்பாம்பு வசிப்பதைப் போல, தாகம் மிகுந்த மனிதர்களால் குடத்தின் உள்ளடக்கம் {குடத்தில் உள்ள நீர்} காலியாவதைப் போல, மன்னனையும், செழிப்பையும் இழந்த நாட்டைப் போல, இந்தக் காம்யக வனம் எனக்குத் தெரிகிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.
இப்படிச் சொல்லப்பட்ட அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, மிக வேகமாகச் செல்லும் சைந்தர்வ {Saindharva} வகைக் குதிரைகள் பூட்டி இழுக்கப்பட்ட அழகிய பெரும் தேர்களை, சூறாவளியைப் போன்ற வேகத்துடன் தங்கள் வசிப்பிடத்திற்கு ஓட்டிச் சென்றனர். அப்படித் தாங்கள் {வீடு} திரும்பிக் கொண்டிருந்த வழியில், சாலையோரத்தில் தங்கள் இடதுபக்கமாகப் பயங்கரமாக ஊளையிடும் ஒரு குள்ளநரியைக் கண்டனர். மன்னன் அதைக் கவனமாகக் கருதிப் பார்த்து, பீமனிடமும், தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, “விலங்கு வகைகளில் மிகவும் தாழ்வான இனத்தைச் சார்ந்த இந்தக் குள்ளநரியின் மொழி, நம்மை அவமதிக்க எண்ணும் பாவிகளான குருக்கள், வன்முறையில் ஈடுபட்டு நம்மை ஒடுக்குவதற்காக இங்கே வந்திருப்பதையே தெளிவாகக் குறிக்கிறது” என்றான். வேட்டையைக் கைவிட்ட பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டே, தங்கள் ஆசிரமம் இருந்த தோப்புக்குள் நுழைந்தனர். அங்கே தங்கள் அன்புக்குரியவளின் {திரௌபதியின்} பணிப்பெண்ணான தாத்ரேயிகை புலம்பி அழுது கொண்டிருப்பதைக் கண்டனர்.
தேரைவிட்ட விரைவாக இறங்கிய இந்திரசேனன், வேகமாக நடந்து அவளை அடைந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் துயரத்தில் இருந்த அவளிடம் {தாத்ரேயிகையிடம்}, “தரையில் கிடக்கிறாயே, எது உன்னை இப்படி அழ வைக்கிறது? ஏன் உனது முகம் நிறமற்று போய் வறட்சியுடன் இருக்கிறது? ஒப்பற்ற அழகும், நீண்ட கண்களும், அந்தக் குரு குலக் காளைகளின் {பாண்டவர்களின்} இரண்டாம் உருவமுமான இளவரசி திரௌபதிக்கு எந்தக் கொடூர பாவியாலும் தீங்கு நேர்ந்ததா?
அந்த இளவரசி பூமியின் குடலுக்குள் நுழைந்தாலும், சொர்க்கத்திற்குப் பறந்தாலும், ஆழ்கடலுக்குள் பாய்ந்தாலும், கவலையில் இருக்கும் தர்மனின் மகனும் {யுதிஷ்டிரரும்}, அவரது தம்பிகளும் அவளைத் தொடர்ந்து செல்வார்கள். எதிரிகளைக் கொன்று எப்போதும் வெற்றிபெறக்கூடிய பலம் பொருந்திய பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமானவளும், அவர்களது உயிர்களுக்கு ஒப்பாகக் கருதியிருந்தவளுமான ரத்தினம் போன்ற இளவரசியை {திரௌபதியைக்} கடத்திச் செல்லத்தக்க மூடன் யார்?
இத்தகு வலிமைமிக்கப் பாதுகாவலர்களைக் கொண்டு, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} இதயங்களின் வெளி உருவமாக நடந்து கொண்டிருந்த அந்த இளவரசியைக் கடத்திச் செல்ல நினைத்த மனிதன் எவன் என்பதை நான் அறியவில்லையே? அவனது இதயத்தைத் துளைக்கும் கடும் கணைகள், பூமியில் இன்று விழப்போகின்றன? ஓ! மருட்சியுடைய மங்கையே, கிருஷ்ணை {திரௌபதி} இன்றே திரும்பிவிடுவாள். அவளுக்காக அழாதே. பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் எதிரிகளைக் கொன்று, மீண்டும் யக்ஞசேனியுடன் {திரௌபதியுடன்} இணைவார்கள்” என்றான்.
இப்படி அவனால் {இந்திரசேனனால்} சொல்லப்பட்ட தாத்ரேயிகை, தனது அழகிய முகத்தைத் துடைத்துக் கொண்டு, தேரோட்டியான இந்திரசேனனிடம், “ஐந்து இந்திரர்களைப் போன்ற பாண்டுவின் மகன்களை அலட்சியம் செய்து, கிருஷ்ணையை {திரௌபதியை} ஜயத்ரதன் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றான். அவன் சென்ற பாதை இன்னும் மறையவில்லை; இதோ மரங்களின் உடைந்த கிளைகள் இன்னமும் வாடவில்லை பாருங்கள். எனவே, உங்கள் தேர்களைத் திருப்பி அவளைப் பின் தொடருங்கள். இந்நேரத்திற்குள் அந்த இளவரசி வெகுதூரம் சென்றிருக்க முடியாது!
இந்திரனின் பராக்கிரமம் கொண்ட வீரர்களே {பாண்டவர்களே}, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் அடங்கி, தன் உணர்வையும், கன்னங்களின் நிறத்தையும் அவள் {திரௌபதி} இழந்தாள். வேள்விக் கரண்டி மூலம், சாம்பற்குவியலின் மேல் ஊற்றப்படும் புனிதமான காணிக்கையைப் போல, தகுதியற்ற மனிதனுக்குத் அடங்கி அவள் {திரௌபதி} சென்றாள். அழகாகச் செய்யப்பட்ட உங்கள் ஆடம்பர விற்களைத் {கவசங்களை என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்} தரித்துக் கொண்டு, விற்களையும், அம்பறாத்தூணிகளையும் எடுத்துக் கொண்டு, அவளை {திரௌபதியை} விரைவாகப் பின்தொடருங்கள்.
ஓ!, தெளிந்த நெய், எரியாத நெல் உமியின் மேல் ஊற்றப்படாமலும்; மலர்களாலான மாலை இடுகாட்டில் வீசப்படாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். ஓ!, வேள்வியைச் செய்யும் புரோகிதர்களின் கவனக்குறைவால், வேள்விக்கான சோமச்சாற்றை நாய் நக்கி விடாமல் {நாவினால் தொட்டுவிடாமல்} கவனமாக இருங்கள். ஓ!, நுழைய முடியாத காட்டில் இரை தேடிய அலையும் குள்ள நரியால் அல்லிமலர் முரட்டத்தனமாகக் கிழிக்கப்படாதிருக்கட்டும். ஓ!, தெளிந்த நெய் இருக்கும் வேள்விக்கான குடத்தை நாய் நக்குவதைப் {நாவினால் தொடுவதைப்} போல, அழகிய கண்களும், நேர்த்தியான மூக்கும் {நாசியும்}, சந்திரனின் கதிர்களைப் போன்ற நிறமும், அழகிய முகமும் கொண்ட உங்கள் மனைவியை {திரௌபதியை}, அந்த இழிந்த மனிதன் {ஜெயத்ரதன்} தனது நாவால் தொடாதிருக்கட்டும். இவ்வழியில் விரைவாகச் செல்லுங்கள். நேரம் உங்களைக் கடக்காதிருக்கட்டும் {நேரம் கடந்துவிடப்போகிறது}” என்றாள் {தாத்ரேயிகை}.
யுதிஷ்டிரன், “நன்மங்கையே {கல்யாணி}, இருப்பிடம் செல், உனது நாவை அடக்கு. எங்கள் முன்னிலையில் இது போன்று பேசாதே. யாராக இருப்பினும், அதிகாரத்தால் போதையுண்ட மன்னர்களும் இளவரசர்களும் துக்கம் வருவது நிச்சயம்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவர்கள் {பாண்டவர்கள்}, பாம்புகளின் இரைப்பைப் போல அடிக்கடி ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடியும், தங்கள் பெரிய விற்களின் நாணைச் சுண்டியபடியும், தங்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் தொடர்ந்து சென்றனர். ஜெயத்ரதன் படைக்குச் சொந்தமான குதிரைகளின் குளம்படிகள் ஏற்படுத்திய தூசிப்படலத்தை அவர்கள் கண்டார்கள். குடிகெடுத்தவனின் {ஜெயத்ரதனின்} காலாட்படைக்கு {ravisher’s infantry} மத்தியில் இருந்து கொண்டு, பீமனை விரைந்து செயல்படும்படி அறிவுறுத்திய தௌமியரைக் கண்டார்கள். பிறகு தாழாத மனம் கொண்ட அந்த இளவரசர்கள் (பாண்டுவின் மகன்கள்), அவருக்கு {தௌமியருக்கு} உற்சாகம் கொடுத்து, “மகிழ்ச்சியுடன் திரும்பி வாரும்” என்றனர்.
அதன் பின்னர்ப் பருந்துகள் தங்கள் இரையை நோக்கி கீழே பாய்வதைப் போல, பெருஞ்சீற்றத்துடன், அவர்கள் {பாண்டவர்கள்} அப்படையை நோக்கி விரைந்தனர். இந்திரனின் பராக்கிரமத்தைக் கொண்ட அவர்கள், திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தால் பெரும் கோபம் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜெயத்ரதனையும், அவனது தேரில் அமர்ந்திருந்த தங்கள் அன்புக்குரிய மனைவியையும் {திரௌபதியையும்} கண்ட பிறகு அவர்களது கோபம் எல்லையைக் கடந்தது. அந்தப் பெரும் வில்லாளிகளான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, இரட்டைச் சகோதரர்கள் {நகுலன், சகாதேவன்} மற்றும் மன்னன் {யுதிஷ்டிரன்} ஆகியோர் உரத்தவொலியுடன் ஜெயத்ரதனை நிற்கச் சொன்னார்கள். இதனால் அந்த எதிரி {ஜெயத்ரதன்} மனக்குழப்பமடைந்து, திசைகளின் அறிவை இழந்தான்.
பாண்டவர்களை அறிந்த ஜெயத்ரதன்! – வனபர்வம் பகுதி 268-பாண்டவர்களைக் கண்ட ஜெயத்ரதன் அஞ்சுவது; திரௌபதியிடம் அவளது கணவர்களைக் குறித்துச் சொல்லுமாறு ஜெயத்ரதன் கேட்பது; திரௌபதி ஒவ்வொருவரையும் சுட்டிக்காட்டி அவர்களது பெயர்களையும் தன்மைகளையும் சொல்வது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பீமசேனன் மற்றும் அர்ஜுனனைக் கண்டு எதிரி க்ஷத்திரியர்கள் ஆத்திரமடைந்து, அந்தக் காட்டில் உரத்த ஒலி எழுப்பினர். குரு குலக் காளைகளின் கொடிக்கம்பங்களைக் கண்ட தீய மன்னன் ஜெயத்ரதன், நம்பிக்கையிழந்தான். பிறகு பிரகாசத்துடன் தனது {ஜெயத்ரதனின்} தேரில் அமர்ந்திருந்த யக்ஞசேனியிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, வந்து கொண்டிருக்கும் அந்த ஐந்து வீரர்களும் உனது கணவர்கள் என நம்புகிறேன். ஓ! அழகான தலைமுடி கொண்டவளே, பாண்டுவின் மகன்களை நீ நன்கு அறிந்தவளாகையால், அவர்கள் பயணிக்கும் தேரைச் சுட்டிக்காட்டி, அவர்களை {பாண்டவர்களைக்} குறித்து ஒருவர் ஒருவராக விவரித்துச் சொல்!” என்றான் {ஜெயத்ரதன்}.
இப்படிச் சொல்லப்பட்ட திரௌபதி, “உனது வாழ்நாள் குறையும்படி இந்த வன்செயலைச் செய்த பிறகு, ஓ! முட்டாளே! இப்போது அந்தப் பெரும் வீரர்களின் பெயர்களை அறிவதால் உனக்கு என்ன பயன்? எனது வீரக் கணவர்கள் வந்துவிட்டார்கள், களத்தில் உள்ள உங்களில் ஒருவரது உயிரும் இப்போது மிஞ்சாது. எனினும் மரணத்தருவாயில் கேட்டுவிட்டாய். இது விதிக்கு இசைவானதாக இருப்பதால், நான் உனக்கு அனைத்தையும் சொல்கிறேன். தன் தம்பிகளுடன் கூடிய மன்னர் யுதிஷ்டிரரைக் கண்ட பிறகு, உன் நிமித்தமாகச் சிறு கவலையையோ, அச்சத்தையோ நான் அடையவில்லை.
தலைக்கு மேலே உள்ள கொடுக்கம்பத்தில் நந்தம், உபநந்தம் என்ற நிற்காமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அழகிய இரு ஒலிமிக்க மிருதங்கங்களைக் கொண்ட வீரர், ஓ! சௌவீரத் தலைவா {ஜெயத்ரதா}, தனது செயல்களின் அறநெறிகளைக் குறித்துச் சரியாக அறிந்தவராவார். வெற்றியடைந்த மனிதர்கள் எப்போதும் இவரைத் தொடர்கிறார்கள். சுத்தமான தங்கத்தைப் போன்ற நிறமும், உயர்ந்த மூக்கும், அகன்ற கண்களும் மெலிந்த தேகமும் கொண்ட இந்த எனது கணவரை தர்மனின் மகனும், குரு குலத்தின் முதன்மையானவருமான யுதிஷ்டிரர் என்ற பெயரில் மக்கள் அறிவார்கள். மனிதர்களின் இந்த அறம்சார்ந்த இளவரசர் {யுதிஷ்டிரர்}, சரணடைந்தவன் எதிரியாக இருந்தாலும் அவனுக்கு உயிரை அளிப்பவராவார். எனவே, ஓ! மூடா! உனது ஆயுதங்களைக் கீழே வீசி, உனது நன்மைக்காகக் குவிந்த கரங்களுடன் அவரிடம் ஓடிச்சென்று உனது பாதுகாப்பை நாடு.
நீண்ட கரங்களைக் கொண்டு, முழுதும் வளர்ந்த ஆச்சா {சால} மரத்தைப் போன்ற உயரத்துடன், உதடுகளைக் கடித்துக் கொண்டு, நெற்றியைச் சுருக்கி, புருவங்களை ஒன்றிணைத்துத் தேரில் அமர்ந்திருக்கும் அவர் எனது கணவர் விருகோதரராவார் {பீமர்}. பருத்த, வலுவான, உன்னதமான இனத்தைச் சார்ந்த, நன்கு பழகப்படுத்தப்பட்ட பெரும் சக்திகொண்ட குதிரைகளே அந்த வீரரின் {பீமரின்} தேர்களை இழுக்கின்றன. இவரின் சாதனைகள் அனைத்தும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகும். எனவே அவர் பீமன் என்ற பெயரால் பூமியில் அறியப்படுகிறார். அவருக்குத் தீங்கிழைத்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். பகைவரை அவர் ஒருபோதும் மறப்பதில்லை. சில போலிக் காரணம் {pretext} கொண்டோ அல்லது வேறு வழியிலோ தனது பழியைத் தீர்த்துக் கொள்வார். பழிவாங்காமல் அவர் அமைதியடைவதில்லை.
வில்லாளிகளில் முதன்மையானவரும், புத்திகூர்மை கொண்டவரும், புகழ்பெற்றவரும், புலன்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரியோரை மதிப்பவரும், யுதிஷ்டிரின் தம்பியும் சீடருமான எனது கணவர் தனஞ்சயர் {அர்ஜுனர்} அதோ இருக்கிறார். காமத்தாலோ, அச்சத்தாலோ, கோபத்தாலோ அறத்தை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. கொடுஞ்செயலை அவர் ஒருபோதும் செய்வதுமில்லை. நெருப்பின் சக்தி கொண்டு, எதிரியைத் தாக்கி அழிப்பவரான அவர் குந்தியின் மகனாவார்.
அறநெறி மற்றும் பொருள் குறித்த அனைத்துக் கேள்விகளை அறிந்தவரும், அஞ்சுபவர்களின் அச்சங்களை விலக்குபவரும், உயர்ந்த ஞானம் கொண்டவரும், இந்த முழு உலகிலும் உள்ள மனிதர்களிலேயே அழகானவராகக் கருதப்படுபவரும், பாண்டுவின் அனைத்து மகன்களாலும் பாதுகாக்கப்படுபவரும், தங்கள் மேல் அவர் கொண்ட பக்தியினால் தங்கள் உயிரை விட உயர்வாக அவர்களால் {மற்ற பாண்டவர்களால்} கருதப்படுபவருமான அந்த இளைஞர் எனது கணவரான நகுலராவார். கை லாவகம் கொண்டவரும், உயர்ந்த ஞானம் கொண்டவரும், சகாதேவனைத் தனது தம்பியாகக் கொண்டவருமான அவர், தனது கைகளின் திறமையால் வாள் கொண்டு போரிடுபவராவார். தைத்தியர்களுக்கு மத்தியில் இருக்கும் இந்திரனின் செயல்திறனைப் போல, போர்க்களத்தில் அவரது செயல்திறனை முட்டாள் மனிதனான நீ இன்று காண்பாய்.
ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவரும், புத்திக்கூர்மையும், ஞானமும் கொண்டவரும், தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} ஏற்புடையதைச் செய்யும் நோக்கம் உடையவரும், பாண்டவர்களில் இளையவரும் அனைவருக்கும் பிடித்தமானவருமான அந்த வீரர் எனது கணவரான சகாதேவராவார். வீரம், அறிவு, வெஞ்சினம் ஆகியவற்றைக் கொண்ட அவருக்கு நிகரான நுண்ணறிவு கொண்டவரோ, சொல்திறன் கொண்டவரோ ஞானிகளின் மத்தியிலும் கிடையாது. குந்தியால் தன் இன்னுயிரைவிட உயர்வாகக் கருதப்படும் அவர் {சகாதேவர்}, எப்போதும் க்ஷத்திரியக் கடமைகள் குறித்த மனத்தோடேயே இருப்பவர். அறம் மற்றும் அறநெறிகளுக்கு எதிராக எதையும் சொல்வதைவிடத் தனது உயிரைத் தியாகம் செய்வதையோ நெருப்புக்குள் புகுவதையோ சிறப்பென நினைப்பவர் அவர் {சகாதேவர்}.
போர்க்களத்தில் உனது வீரர்களைப் பாண்டுவின் மகன்கள் கொன்ற பிறகு, கடலில் நகைச்சரக்குகளுடன் செல்லும் கப்பல், திமிங்கலத்தின் முதுகில் மோதி சிதறுவதைப் போல உனது படை கலக்கப்படுவதை {சிதறுவதை} நீ காண்பாய். உனது முட்டாள்த்தனத்தால் அலட்சியப்படுத்திய பாண்டு மகன்களின் பராக்கிரமம் குறித்து இப்படியே விளக்கிவிட்டேன். சிறிதும் தீங்குறாமல் அவர்களிடம் தப்பினால், நீ புது வாழ்வை அடைவாய்” என்றாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்திரர்களைப் போன்ற, பிருதையின் {குந்தியின்} அந்த ஐந்து மகன்களும், கோபத்தால் நிறைந்து, கருணைக்காக மன்றாடும் பீதி நிறைந்த காலாட்படையை மட்டும் விட்டுவிட்டு, தேரோட்டிகளை நோக்கி விரைந்து, அவர்களை அனைத்துப் புறங்களில் இருந்தும் தாக்கினர். தங்கள் அடர்த்தியான கணை மழையால் அந்தப் பகுதியையே அவர்கள் {பாண்டவர்கள்} இருளாக்கினர்.”
பிடிபட்டான் ஜெயத்ரதன்! – வனபர்வம் பகுதி 269ஜெயத்ரதனின் படையினருக்கும், பாண்டவர்களுக்குமிடையில் மூண்ட போர்; பாண்டவர்களின் பராக்கிரமம்; சுரதனை வீழ்த்திய யுதிஷ்டிரன்; கோடிகாக்கியனைக் கொன்ற பீமன்; சௌவீர இளவரசர்கள் அனைவரையும் கொன்ற அர்ஜுனன்; திரௌபதியைவிட்டுவிட்டு ஓடிய ஜெயத்ரதன்; திரௌபதி, தௌமியர், இரட்டையர்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு யுதிஷ்டிரன் ஆசிரமம் திரும்புவது; பீமனும் அர்ஜுனனும் ஜெயத்ரதனைத் தொடர்ந்து செல்வது; ஜெயத்ரதன் பிடிபடுவது; அவனைக் கொல்ல வேண்டாம் என பீமனை அர்ஜுனன் வேண்டுவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதே வேளையில் சிந்து மன்னன் மற்ற இளவரசர்களுக்குக் கட்டளையிட்டபடி, “நில்லுங்கள், தாக்குங்கள், செல்லுங்கள், விரையுங்கள்” போன்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தான். பீமன், அர்ஜுனன், இரட்டைச் சகோதரர்களுடன் {நகுல சகாதேவர்களுடன்} கூடிய யுதிஷ்டிரன் ஆகியோரைக் கண்ட படைவீரர்கள் போர்க்களத்தில் உரத்த ஒலியை எழுப்பினர். சிபி, சௌவீர, சிந்து குலங்களின் போர்வீரர்கள், உக்கிரமான புலிகளைப் போல இருந்த அந்த வலிமைமிக்க வீரர்களைக் கண்டதும் உற்சாகமிழந்தனர். முழுமையாகச் சைக்கிய இரும்பினால் {உருக்கினால்} ஆனதும், பொன்னால் பொறிக்கப்பட்டதுமான கதாயுதத்தைத் தாங்கி வந்த பீமசேனன், மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் சைந்தவ ஏகாதிபதியை {ஜெயத்ரதனை} நோக்கி விரைந்தான். ஆனால் பலமிக்கத் தேரோட்டிகளுடன் விருகோதரனை {பீமனை} விரைவாகச் சூழ்ந்து கொண்ட கோடிகாக்கியன், இடையில் வந்து அந்தப் போராளிகளைப் பிரித்தான். வலிய கரம் கொண்ட பகை வீரர்களால் எண்ணற்ற ஈட்டிகளும், தண்டங்களும், இரும்புக்கணைகளும் பீமன் மீது வீசப்பட்டாலும், அவன் ஒரு கணம் கூடத் தடுமாறவில்லை. மறுபுறம், அவன் {பீமன்} தனது கதாயுதத்தைக் கொண்டு, பாகனோடு சேர்ந்த ஒரு யானையையும், ஜெயத்ரதனின் தேருக்கு முன்னணியில் போரிட்டுக்கொண்டிருந்த பதினான்கு காலாட்படை வீரர்களையும் கொன்றான்.
சௌவீர மன்னனைச் {ஜெயத்ரதனைச்} சிறைபிடிக்க விரும்பிய அர்ஜுனனும், சிந்து படையின் வாகனத்தில் இருந்து போரிட்டுக்கொண்டிருந்த ஐநூறு {500} வீரமிக்க மலைநாட்டு வீரர்களைக் கொன்றான். அந்த மோதலில், கண் இமைக்கும் நேரத்தில், மன்னன் {யுதிஷ்டிரன்}, சௌவீரத்தின் சிறந்த வீரர்களில் நூற்றுக்கணக்கானோரை கொன்றான். கையில் வாளுடன் தேரில் இருந்து குதித்த நகுலனும், விதைகளைத் தூவுவதைப் போல ஒரு கணத்தில் தன்னிடம் பின்புறமாகப் போரிட்ட வீரர்களின் தலைகளைச் சிதறடித்தான். சகாதேவன் தனது தேரில் இருந்தபடி யானைமேல் இருந்து போரிடும் பல வீரர்களைத் தனது இரும்புக்கணைகளால் அடித்து, மரத்தின் கிளைகளில் இருந்து விழும் பறவைகளைப் போல அவர்களை விழ வைத்தான்.
பின்னர்த் திரிகார்த்தர்களின் மன்னன் {சுரதன்}, கையில் வில்லுடன் தனது பெரும் தேரில் இருந்து இறங்கினான். அவன் {சுரதன்} மன்னனின் நான்கு குதிரைகளைத் தனது கதாயுதத்தால் அடித்துக் கொன்றான். எதிரி தனக்கு மிக அருகில் வருவதைக் கண்ட குந்தியின் மகனான நீதிமானான யுதிஷ்டிரன், பிறை வடிவ கணை கொண்டு அவனது மார்பைத் துளைத்தான். இப்படி மார்பில் காயம் பட்ட அந்த வீரன் இரத்தம் கக்கியபடி, வேரறுந்த மரம் போலப் பிருதையின் {குந்தியின்} மகனருகே தரையில் விழுந்தான். தனது குதிரைகள் கொல்லப்பட்டதால் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்திரசேனனோடு தனது தேரில் இருந்து இறங்கி, சகாதேவனின் தேரில் ஏறினான்.
க்ஷேமங்கரன் மற்றும் மகாமுக்ஷன் ஆகிய இரு வீரர்கள் நகுலனைத் தனிமைப்படுத்தி, இரண்டு பக்கங்களில் இருந்தும் கூர்முனை கொண்ட கணைகளை மழையெனப் பொழிந்தார்கள். இருப்பினும் அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, தன் மேல் மழைக்கால மேகங்கள் போல மழையெனக் கணையடித்த அந்த இருவரையும் இரு நீண்ட கணையால் கொல்வதில் வெற்றிக் கண்டான். யானைகளைச் செலுத்துவதில் வல்லவனான திரிகார்த்தர்களின் மன்னனான சுரதன், நகுலனின் தேருக்கு முன்பு வந்து, அந்தத் தேரை யானைகளைக் கொண்டு இழுக்கச் செய்தான். இதனால் சிறிது அச்சமடைந்த நகுலன், தனது தேரில் இருந்து குதித்து, பாதுகாப்பளிக்கும் சாதகமான ஒரு இடத்தை அடைந்து, கையில் கேடயத்துடனும் வாளுடனும் மலையென அசையாதிருந்தான். அதனால் நகுலனை உடனடியாகக் கொல்ல நினைத்த சுரதன், துதிக்கை உயர்த்தியபடி இருந்த பெரிய மதங்கொண்ட யானையை அவனை {நகுலனை} நோக்கிச் செலுத்தினான். ஆனால் அந்த விலங்கு தன் அருகில் வந்ததும், நகுலன் தனது வாளைக் கொண்டு அதன் தலையில் இருந்து தந்தங்களையும் துதிக்கையையும் அறுத்தான். அந்தக் கவசம் பூண்ட யானை, பயங்கர ஓலத்துடன், தலைகுப்புற தரையில் விழுந்து, அந்த வீழ்ச்சியால் தன் மீது சவாரி செய்தவர்களை நசுக்கியது. இந்தத் துணிகரச் செயலைச் செய்த வீரனான மாத்ரி மகன் {நகுலன்}, பீமசேனனின் தேரில் ஏறிக் கொண்டு சிறிது ஓய்வெடுத்தான்.
மோதலுக்கு விரைந்து வரும் இளவரசன் கோடிகாக்கியனைக் கண்ட பீமன், குதிரைலாடம் போன்ற கணை கொண்டு அவனது தோரோட்டியின் தலையை அறுத்தான். வலிய கரம் கொண்ட தன் எதிரியால் தனது தேரோட்டி கொல்லப்பட்டதை அவ்விளவரசன் {கோடிகாக்கியன்} காணவில்லை. சாரதி இல்லாத குதிரைகளைப் போர்க்களத்தின் அனைத்து திசைகளுக்கும் ஓடியது. சாரதியில்லாத இளவரசன் {கோடிகாக்கியன்} புறமுதுகிட்டதைக் கண்ட அடிப்பவர்களில் முதன்மையான பாண்டு மகன் பீமன், இறகு கொண்ட கணையால் {பிராசாயுதத்தால்} அவனைக் கொன்றான். தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, தனது கூர்முனை கொண்ட பிறை வடிவ கணைகளால் {அர்த்தச்சந்திர பாணம்} பனிரெண்டு சௌவீர வீரர்களின் விற்களையும், அவர்களது தலைகளையும் அறுத்தான். போர்க்களத்தில் அந்தப் பெரும் வீரர்கள் {அர்ஜுனனின்} கணைகளால், கொல்லப்பட்டதும், இக்ஷவாகு தலைவர்களையும், சிபிகளின் படைகளையும், திரிகார்த்தர்களையும், சைந்தவர்களையும் கொன்றான். மேலும் பலவண்ணக் கொடிகளுடன் இருந்த பல பெரிய யானைகளும், கொடிக்கம்பங்களுடன் கூடிய தேர்களும் அர்ஜுனன் கையால் வீழ்ந்தன.
உடலற்ற தலைகளும், தலையற்ற உடல்களும், முழுப் போர்க்களத்தையும் மூடியபடி கிடந்தன. நாய்கள், நாரைகள், அண்டங்காக்கைகள், காகங்கள், வல்லூறுகள், குள்ளநரிகள், கழுகுகள் ஆகியன அக்களத்தில் கொல்லப்பட்ட வீரர்களின் சதையையும் இரத்தத்தையும் விருந்தாக உண்டன. தனது வீரர்கள் கொல்லப்பட்டதைச் சிந்து மன்னன் ஜெயத்ரதன் கண்ட போது, பயமடைந்து கிருஷ்ணையை விட்டுவிட்டு ஓட எண்ணினான். அந்தக் குழப்பமான நேரத்தில், அந்தப் பாதகன் {ஜெயத்ரதன்} திரௌபதியை கீழே இறக்கி விட்டு, தான் வந்த அதே காட்டுப்பாதையில் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடினான்.
தனக்கு முன் தௌமியரை நடக்கவிட்டு வரும் திரௌபதியைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவளை மாத்ரியின் மகனான வீரன் சகாதேவனின் தேரில் ஏற்றிக் கொள்ளச் செய்தான். ஜெயத்ரதன் இப்படி ஓடிய போது, அவனைத் தொடர்ந்த ஓடிக்கொண்டிருக்கும் அவனது {ஜெயத்ரதனின்} தொண்டர்களில் ஒவ்வொரு படைவீரனின் பெயரையும் சொல்லி அழைத்த பீமன் தனது இரும்புக் கணைகளால் அவர்களைக் கத்தரிக்கத் தொடங்கினான். ஆனால் அர்ஜுனன், ஜெயத்ரதன் ஓடிவிட்டதைக் கண்டு, சைந்தவனக் கூட்டத்தில் எஞ்சிய சிலரையும் கொல்வதை நிறுத்துமாறு தனது அண்ணக்கு {பீமனுக்கு} வற்புறுத்தினான். அர்ஜுனன், “யாருடைய தவறால் மட்டுமே நாம் இந்தக் கசப்பான துன்பத்தை அனுபவித்தோமோ, அந்த ஜெயத்ரதனை நான் களத்தில் காணவில்லை. முதலில் அவனைக் கண்டுபிடியும். உமது முயற்சி வெற்றியால் மகுடம் சூட்டப்படட்டும்! இந்தப் படைவீரர்களை நீர் கொல்வதால் என்ன நன்மை விளையப்போகிறது? பயன்றற காரியத்தை நீர் ஏன் செய்கிறீர்” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு பெரும் ஞானம் கொண்ட அர்ஜுனனால் அறிவுறுத்தப்பட்ட பீமசேனன், யுதிஷ்டிரனை நோக்கித் திரும்பி, “எதிரி வீரர்கள் பெரும்பான்மையினர் கொல்லப்பட்டுவிட்டனர். சிலர் அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, திரௌபதி, இரட்டைச்சகோதரர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, தௌமியர் ஆகியோருடன் வீட்டுக்குத் திரும்பி, நமது ஆசிரமத்தை அடைந்ததும், இளவரசிக்கு ஆறுதல் கூறும்! மூடனான சிந்து மன்னனை {ஜெயத்ரதனை}, அவன் வாழும் வரை விடமாட்டேன். அவன் பாதாள லோகத்தைத் தஞ்சமடைந்திருந்தாலும், இந்திரனின் துணையைக் கொண்டிருந்தாலும் அவனைக் கொல்லாமல் விட மாட்டேன்” என்றான் {பீமன்}. அதற்கு யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே, (நமது தங்கை) துச்சலையையும், கொண்டாடப்படும் காந்தாரியையும் நினைவுகூர்ந்து, தீயவனாக இருப்பினும் சிந்து மன்னனை {ஜெயத்ரதனை} நீ கொல்லக்கூடாது” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி மிகவும் உணர்ச்சிவசப்பட்டாள். உணர்ச்சித் தூண்டலில் இருந்த அந்த உயர்ந்த புத்திக்கூர்மை கொண்ட மங்கை {திரௌபதி} கோபம் கலந்த அடக்கத்துடன், தன் இரு கணவர்களான பீமன் மற்றும் அர்ஜுனனிடம், “எனக்கு ஏற்புடையதைச் செய்ய வேண்டும் என்பதில் நீங்கள் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், தீயவனும், ஈனனும், பாவியும், மூடனும், இழிவானவனும் வெறுக்கத்தக்கவனுமான சைந்தவக் குலத்தின் தலைவனைக் {ஜெயத்ரதனைக்} கொல்ல வேண்டும். அடுத்தவன் மனைவியை அபகரிப்பவன், நாட்டைப் பறிப்பவன் ஆகிய எதிரிகள், அவர்களே கருணை கோரினாலும் போர்க்களத்தில் மன்னிக்கப்படக்கூடாது” என்றாள். இவ்வாறு கடிந்து கொள்ளப்பட்ட வீரமிக்க அந்த இரு வீரர்களும் சைந்தவத் தலைவனைத் {ஜெயத்ரதனைத்} தேடிச் சென்றனர்.
கிருஷ்ணையை {திரௌபதியை} தன்னுடன் அழைத்துக் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது ஆன்ம ஆலோசகருடன் {தௌமியருடன்} வீடு திரும்பினான். ஆசிரமத்திற்குள் நுழைந்ததும், மார்க்கண்டேயர் மற்றும் பிற அந்தணர்களின் முன்னிலையில் துறவிகளுக்கான இருக்கைகள் சிதறிக் கிடப்பதையும், சீடர்கள் {சோகத்துடன்} நிறைந்திருப்பதையும் அவன் {யுதிஷ்டிரன்} கண்டான். அந்த அந்தணர்கள் திரௌபதியைக் குறித்துப் பெரிதும் புலம்பிக்கொண்டிருந்தபோது, பெரும் ஞானம் கொண்ட யுதிஷ்டிரன் தனது தம்பிகளோடு கூடி அவர்களோடு சேர்ந்து கொண்டான். சைந்தவனையும் {ஜெயத்திரதனையும்}, சௌவீரக்கூட்டத்தையும் வீழ்த்தி, திரௌபதியை மீட்டுத் திரும்பியிருக்கும் மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} கண்ட அவர்கள் உற்சாகமடைந்து மகிழ்ச்சியை அடைந்தனர். மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்களுக்கு மத்தியில் அமர்ந்தான். அற்புதமான இளவரசியான கிருஷ்ணை {திரௌபதி}, அந்தச் சகோதரர்கள் இருவருடன் {தன் கணவர்களான நகுலன் மற்றும் சகாதேவனுடன்} ஆசிரமத்திற்குள் நுழைந்தாள்.
அதே வேளையில், பீமனும் அர்ஜுனனும், இரண்டு மைல்கள் {ஒரு குரோச தூரம்} தொலைவில்தான் எதிரி இருக்கிறான் என்பதை அறிந்து, அவனை {ஜெயத்ரதனை} அடைவதற்காகக் குதிரைகளை அதிவேகமாகச் செலுத்தினார்கள். இரண்டு மைல்கள் தொலைவில் இருந்தாலும், பலம்வாய்ந்த அர்ஜுனன், ஜெயத்ரதனின் குதிரையைக் கொன்று ஓர் அற்புதமான செயலை நிகழ்த்தினான். தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு, சிரமங்களுக்கு அஞ்சாமல், மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட அம்புகளைக் கொண்டு இந்தக் கடினமான சாதனையை அவன் {அர்ஜுனன்} செய்தான். பிறகு அந்த இரு வீரர்களான பீமனும், அர்ஜுனனும், குதிரைகள் கொல்லப்பட்டதால் மனக்குழப்பமும் அச்சமும் அடைந்திருக்கும் சிந்து மன்னனை {ஜெயத்ரதனை} நோக்கி விரைந்தனர். அவன் {ஜெயத்ரதன்}, தனது குதிரைகள் கொல்லப்பட்டதைக் கண்டு பெரும் துக்கமடைந்தான்.
இத்தகு துணிகரச் செயலைச் செய்த தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} கண்டு, ஓடிவிட எண்ணம் கொண்டு, {தேரில் இருந்து குதித்து} தான் வந்த காட்டுப்பாதையையே {ஜெயத்ரதன்} தொடர்ந்து சென்றான் {ஓடினான்}. பயத்தால் சுறுசுறுப்படைந்த சைந்தவத் தலைவனைக் {ஜெயத்ரதனைக்} கண்ட பல்குனன் {அர்ஜுனன்}, பின்தொடர்ந்தபடியே, அவனிடம், “ஆண்மையற்ற நீ, பலவந்தமாக ஒரு பெண்ணை அபகரிக்க எப்படித் துணியலாம்? ஓ! இளவரசே {ஜெயத்ரதா} திரும்பு; ஓடுவது உனக்குத் தகுந்ததன்று! எதிரிகளின் மத்தியில் உனது தொண்டர்களை {படை வீரர்களை} விட்டு விட்டு நீ எவ்வாறு இப்படிச் செய்யலாம்?” என்றான். பிருதையின் {குந்தியின்} மகன்களால் இப்படிச் சொல்லப்பட்டாலும் சிந்து நாட்டு ஏகாதிபதி {ஜெயத்ரதன்} ஒரு முறையேனும் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் தேர்ந்தெடுத்தபடி செய்ய விட்ட பலம் கொண்ட பீமன் நொடிப்பொழுதில் அவனை வென்றான். ஆனால் இரக்கம் கொண்ட அர்ஜுனன் அந்த இழிந்தவனை {ஜெயத்ரதனைக்} கொல்ல வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான்.
ஜெயத்ரதன் அவமானமும் விமோசனமும்! – வனபர்வம் பகுதி 270-ஜெயத்ரதன் பீமனிடம் பிடிபடுவது; பீமன் ஜெயத்ரதனின் சிரத்தை மழிப்பது; யுதிஷ்டிரனிடம் அழைத்துச் செல்வது; யுதிஷ்டிரனும், திரௌபதியும், ஜெயத்ரதனை விடுவிப்பது; அவமானத்தில் திரும்பிய ஜெயத்ரதன் சிவனை நோக்கி தவம் இருப்பது; ஜெயத்ரதன் பெற்ற வரம்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தனது உயிரைக் காத்துக் கொள்ள ஓடிய ஜெயத்ரதன், அந்த இரு சகோதரர்களையும் {பீமனையும், அர்ஜுனனையும்} கண்டு, உயர்த்திய கரங்களுடன் மிகுந்த துன்பத்துடனும், மிகுந்த வேகத்துடனும், முன் எச்சரிக்கையுடனும் ஓடினான். ஆனால் வலிமைமிக்கக் கோபக்கார பீமசேனன், தனது தேரைவிட்டு இறங்கி, ஓடிக்கொண்டிருந்த அவனைத் தொடர்ந்தோடி, அவனின் {ஜெயத்ரதனின்} தலை மயிரைப் பற்றிப் பிடித்தான். அப்படியே அவனைக் காற்றில் மேலே தூக்கி, வன்முறையுடன் தரையில் எறிந்தான். பிறகு அந்த இளவரசனின் {ஜெயத்ரதனின்} தலையைப் பற்றி அவனை அடித்தான். சுய நினைவு திரும்பிய பிறகு, அந்த இழிந்தவன் {ஜெயத்ரதன்} உரக்கத் தேம்பி அழுதான். பீமன் தனது கால் மற்றும் கை முட்டிகளால் அவனது மார்பைக் குத்தினான். இப்படி நையப்புடைக்கப்பட்ட அந்த இளவரசன் {ஜெயத்ரதன்} விரைவில் உணர்வை இழந்தான்.
(தங்கள் தங்கை) துச்சலை குறித்து யுதிஷ்டிரன் சொன்னதை ஞாபகப்படுத்தி, சினம் கொண்ட பீமசேனன், அந்த இளவரசனை {ஜெயத்ரதனை} மேலும் தண்டிக்காமல் பல்குனன் {அர்ஜுனன்} அவனை {பீமனை} அறிவுறுத்தினான். ஆனால் பீமன், “இந்த இழிந்த பாவி {ஜெயத்ரதன்}, கொடுமை தாங்கா கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} கொடுந்தீங்கைச் செய்திருக்கிறான். எனவே, இவன் என் கையால் இறக்கத்தக்கவன்! ஆனால் நான் என்ன செய்ய? மன்னர் எப்போதும் கருணையால் நிரம்பி வழிகிறார். நீயும் குழந்தைத்தனமான அறவுணர்வால் {தர்ம உணர்வால்} எனது வழியில் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்துகிறாய்!” என்று மறுமொழி கூறினான். இந்த வார்த்தைகளைச் சொன்ன விருகோதரன் {பீமன்}, தனது பிறைவடிவ அம்பை {அர்த்தச் சந்திரக் [பாதி நிலவு] கணையை} எடுத்து, அந்த இளவரசனின் {ஜெயத்ரதனின்} ஆங்காங்கே ஐந்து கொத்துகளை {குடுமிகளை} விட்டு விட்டு, தலையில் உள்ள மயிரைச் சிரைத்தான்.
ஜெயத்ரதன் இதுகுறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. பிறகு எதிரியிடம் பேசிய விருகோதரன் {பீமன்}, “நீ வாழ விரும்பினால், நான் சொல்வதைக் கேள். ஓ! மூடனே! உன் விருப்பத்தை நீ அடைவது குறித்து {எப்படி என்று} நான் உனக்குச் சொல்கிறேன். பொதுக்கூட்டங்களிலும், திறந்த சபைகளிலும் “நான் பாண்டவர்களின் அடிமை” என்று நீ சொல்ல வேண்டும். இந்த நிபந்தனையின் பேரில் மட்டுமே நான் உனது உயிரை உனக்குக் கொடுப்பேன்! இது போர்க்களம் வென்றவர்கள் செய்யும் வழக்கமான விதியே” என்றான். இப்படி நடத்தப்பட்டும், சொல்லப்பட்டும் இருந்த மன்னன் ஜெயத்ரதன், பார்க்க எப்போதும் கடுமையாக இருந்த கடும்வலிமைமிக்க வீரனிடம் {பீமனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். அவன் {ஜெயத்ரதன்} புழுதிபடிந்த தேகத்துடன் உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்தான். பிறகு அர்ஜுனனும் விருகோதரனும் {பீமனும்} சேர்ந்து அவனைச் சங்கிலியால் கட்டி தேரில் புகுத்தினார்கள். அர்ஜுனனுடன் தேரில் ஏறிய பீமன், அதை ஆசிரமத்திற்குச் செலுத்தினான். பிறகு அங்கே அமர்ந்திருந்த யுதிஷ்டிரனை அணுகி, அந்நிலையில் இருந்த ஜெயத்ரதனை மன்னன் {யுதிஷ்டிரன்} முன்பு கிடத்தினான். மன்னன் {யுதிஷ்டிரன்} சிரித்துக் கொண்டே, சிந்து நாட்டு இளவரசனை {ஜெயத்ரதனை} விடுவிக்குமாறு அவனிடம் {பீமனிடம்} சொன்னான்.
பிறகு பீமன், மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “இந்த இழிந்தவன் பாண்டவர்களின் அடிமையானன் என்பதைத் திரௌபதிக்குச் சொல்லும்” என்றான். அதற்கு அவனது {பீமனின்} அண்ணன் {யுதிஷ்டிரன்}, அவனிடம் {பீமனிடம்} பாசத்துடன், “நீ நம் மீது ஏதாவது மரியாதை வைத்திருக்கிறாயானால், இந்த இழிந்தவனை விடுவித்துவிடு” என்றான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} மனதைப் படித்த திரௌபதியும், “அவனை விட்டுவிடுங்கள். அவன் மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அடிமையாகிவிட்டான். மேலும் தலையில் ஐந்து குடிமிகளை வைத்து நீரும் அவனை உருகுலைத்து விட்டீர்” என்றாள். பிறகு சிகரத்தில் இருந்து விழுந்தவனான அந்த இளவரசன் {ஜெயத்ரதன்}, விடுதலையைப் பெற்று, மன்னன் யுதிஷ்டிரனை அணுகி, அவனை வணங்கினான். அங்கிருந்த முனிவர்களைக் கண்டு, அவர்களையும் வணங்கினான்.
பிறகு தர்மனின் மகனான இளகிய மனம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், அர்ஜுனனால் தாங்கப்பட்ட ஜெயத்ரதனின் நிலையைக் கண்டு, அவனிடம் {ஜெயத்ரதனிடம்}, “நீ இப்போது சுதந்திர மனிதன்; நான் உன்னை விடுவிக்கிறேன்! மீண்டும் இதுபோன்று செய்யாது கவனமாக இருப்பாயாக. இப்போது நீ போகலாம். தீய மனம் கொண்ட நீ, சக்தியற்றவனாக இருப்பினும், ஒரு மங்கையை வன்முறையால் அபகரிக்க முயன்றாய்! இஃது உனக்கு அவமானமே! உன்னைத் தவிர வேறு எந்தக் கேடுகெட்டவன் இச்செயலைச் செய்வான்?” என்றான். பிறகு பாரதகுலத்தின் முதன்மையான மன்னன் {யுதிஷ்டிரன்} தீய செயல்கள் புரிந்த அவன் மீது கருணைக் கண் கொண்டும், அவன் உணர்வை இழந்துவிட்டான் என்று உணர்ந்தும், “உனது இதயத்தில் அறம் வளரட்டும்! அறநெறி மீறிய செயல்களில் உனது இதயத்தைச் செலுத்தாதே! உன் தேரோட்டிகள், குதிரைப்படை, காலாட்படையுடன் இப்போது நீ அமைதியாகச் செல்லலாம்” என்றான் {யுதிஷ்டிரன்}.
யுதிஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த இளவரசன் {ஜெயத்ரதன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெரும் அவமானமடைந்து, தலையைத் தொங்கப்போட்டவாறு, ஒடுங்கிச் செல்லும் கங்கை, சமவெளிகளில் அகன்று செல்லும் ஓர் இடத்திற்கு அமைதியுடனும், துயரத்துடனும் சென்றான். உமையின் கணவனான முக்கண் தேவனின் {சிவனின்} பாதுகாப்பை இறைஞ்சி, அவ்விடத்தில் கடும் தவத்தைச் செய்தான். அவனது {ஜெயத்ரதனின்} தவத்தில் நிறைவு கொண்ட முக்கண் தேவனும் அவனது தகுதிக்குத்தக்க காணிக்கைகளை {தவத்தை} ஏற்க நேரடியாக வந்தான். அவன் {சிவன்}, அவனுக்கு {ஜெயத்ரதனுக்கு} ஒரு வரத்தையும் அருளினான். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த இளவரசன் {ஜெயத்ரதன்} எவ்வாறு வரத்தைப் பெற்றான் என்பதைக் கேள்.
அத்தேவனிடம் {சிவனிடம்} பேசிய ஜெயத்ரதன், “தங்கள் தேர்களில் இருக்கும் பாண்டுவின் ஐந்து மகன்களையும் போர்க்களத்தில் நான் வீழ்த்த வேண்டும்” என்ற ஓரு வரத்தைக் கேட்டான். எனினும், அந்தத் தேவன் {சிவன்}, “இது நடக்காது” என்றான். மகேஸ்வரன், “அவர்களைப் போர்க்களத்தில் வெல்லவோ, கொல்லவோ யாராலும் முடியாது. எனினும், அர்ஜுனனைத் தவிர்த்து, மீதம் உள்ளவர்களைப் போர்க்களத்தில் உன்னால் (ஒரு முறை மட்டும்) தடுக்க முடியும். வலிய கரங்கள் கொண்ட வீரனான அர்ஜுனன், நரனின் பாணி {Nara styled} கொண்ட தேவ அவதாரமாவான். அவன் {நரனான அர்ஜுனன்} பழங்காலத்தில் பதரியில் தவம் பயின்றவன். தேவனான நாராயணன் அவனது நண்பனாவான். எனவே, தேவர்களாலேயே அவனை வீழ்த்த முடியாது. நானே கூட அவனுக்குப் பாசுபதம் என்ற தெய்வீக ஆயுதத்தை வழங்கியிருக்கிறேன். திசைப்புள்ளிகளின் பத்து லோகபாலகர்களிடம் இருந்து, வஜ்ரம் முதற்கொண்ட பலமிக்கப் பல்வேறு ஆயுதங்களை அவன் {அர்ஜுனன்} பெற்றிருக்கிறான். தேவர்களுக்குத் தலைமை குருவும், எல்லையற்ற ஆவியைக் கொண்ட பெரிய தேவனுமான விஷ்ணுவே {நாராயணனே} குணங்களற்ற தலைமையானவனாவான். அவனே அண்டத்தின் ஆன்மாவாக இருந்து, முழுப் படைப்பிலும் உள்ளுறைந்து இருக்கிறான். காலங்களின் சக்கரம் முடியும்போது, அனைத்தையும் உட்கொள்ளும் நெருப்பு வடிவம் கொண்டு, மலைகள், கடல்கள், தீவுகள், குன்றுகள், காடுகள், வனங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் உட்கொள்கிறவன் அவனே {விஷ்ணுவே}. பாதாள லோகத்தில் இருக்கும் நாகலோகத்தையும் இவ்வாறே அழித்ததும், பலவர்ணக் குவியல்களாகப் பெருமுழக்கமிடும் மேகங்களையும், மின்னல்கீற்றுகளையும் முழு வானத்திலும் பரவி, உயரத்தில் தோன்றச் செய்து, பிறகு தேர்களின் அச்சு அளவு கனம் கொண்ட நீரை அடர்த்தியாகப் பொழிந்து, எங்கும் வெளியை {நீரால்} நிறைத்து, அனைத்தையும் எரிக்கும் நெருப்பை அணைக்கிறான்.
நாலாயிரம் {4000} யுகங்கள் முடியும் நெருக்கத்தில் இந்தப் பூமி முழுவதும் ஒரே பெரிய கடலாக நீரால் நிறைந்திருக்கும். அசையும் உயிரினங்கள் அனைத்தும் மாண்டு. சூரியன், சந்திரன், காற்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, கோள்கள் நட்சத்திரங்கள் அற்ற அண்டத்தில், ஆயிரம் தலைகளுடன், பல கண்கள் மற்றும் கால்கள் கொண்ட புலன்களால் உணரமுடியாத நாராயணன் என்று அழைக்கப்படும் பரமாத்மா ஓய்வெடுக்க விரும்பினான். ஆயிரம் தலைகளுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருக்கும் சேஷன் என்ற பாம்பு, பத்தாயிரம் சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டு, குருக்கத்திப்பூ {Kunda flower} போலவோ, சந்திரனைப் போலவோ, முத்துச்சரம் போலவோ, வெண்தாமரை போலவோ, பாலைப் {பால்} போலவோ, தாமரைத் தண்டின் இழைகளைப் போலவோ இருந்து, அவனது சங்காகச் {conch} {இங்கு படுக்கையாக என்ற பொருள் வர வேண்டும் என நினைக்கிறேன்} செயல்படுகிறது. வணங்கத்தக்க, எல்லாம்வல்ல தேவன், வெளிகள் அனைத்தையும் இரவின் அந்தகாரத்தில் மூழ்கடித்து, ஆழத்தின் மார்பில் இப்படியே உறங்கினான்.
பிறகு அவனது படைப்புத் தொழில் தூண்டப்பட்டதும், அவன் எழுந்திருந்து, எதுவுமில்லாமல் புறக்கணிக்கப்பட்ட அண்டத்தைக் காண்கிறான். நாராயணன் என்பதன் பொருளை மதித்து உரைக்கும், இது தொடர்பான ஒரு சுலோகம், “(முனிவர்) நரனால் நீர் படைக்கப்பட்டது. அதுவே {நீரே} அவனது உடலானது; எனவே அது நரனின் பாணி எனக் கேள்விப்படுகிறோம். அதுவே {நீரே} அவனது அயணத்தை (ஓய்வெடுக்கும் இடத்தை) உருவாக்கியதால், அவன் நாராயணன் {நரன் + அயணம் = நாராயணன்} என்று அறியப்படுகிறான்” என்கிறது. அண்டத்தின் மறு படைப்புக்காக, அந்த நித்தியமானவன் தியானத்தில் இருக்கும் போது, ஒரு தாமரை மலர் அவனது தொப்புளில் {நாபியில்} இருந்து உதித்தது. நான்முகனான பிரம்மன் அந்தத் தொப்புள்த்தாமரையில் இருந்து வெளியே வந்தான். பிறகு அனைத்து உயிரினங்களுக்கும் பெருந்தகப்பனான அவன் {பிரம்மன்}, அந்த மலரில் அமர்ந்து, முழு அண்டமும் வெறுமையாய் இருப்பதைக் கண்டு, தன் சுய விருப்பத்தின் பேரில், மரீசி மற்றும் பிறரரடங்கிய (ஒன்பது) [1] பெரும் முனிவர்களைப் படைத்தான்.(மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர், நாரதர், பிருகு ஆகியோர் அந்த ஒன்பது முனிவர்கள் என்று சொல்லப்படுகிறது.)
அவர்களும் {முனிவர்களும்}, தங்கள் பங்குக்கு அதையே {வெறுமையைக்} கண்டு, யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், ஊர்வன, மனிதர்கள் மற்றும் அனைத்து அசையும் அசையா உயிரினங்களைப் படைத்து, படைப்பை முழுமை செய்தனர். பரமாத்மா மூன்று நிலைகளில் இருக்கிறான். பிரம்மனின் உருவத்தில் அவன் படைக்கிறான்; விஷ்ணுவின் உருவத்தில் அவன் காக்கிறான்; ருத்ரனின் உருவத்தில் அவன் அண்டத்தை அழிக்கிறான். ஓ! சிந்து நாட்டு மன்னா {ஜெயத்ரதா}, வேதங்களை அறிந்த முனிவர்களாலும், அந்தணர்களாலும் சொல்லப்படும் விஷ்ணுவின் அற்புத சாதனைகளை நீ கேட்டதில்லையா? இப்படி ஒரு முறை பரந்த நீர்ப்பரப்புக் கொண்ட உலகம், ஒரே கடலாக, தனக்கு மேலே ஆகாயத்துடன் இருந்தபோது, மழைக்காலத்து இரவின் மின்மினிப் பூச்சிகள் போல, அந்தத் தலைவன் {விஷ்ணு}, தனது படைப்புகளுக்குப் புனர்வாழ்வு கொடுப்பதற்காக, நிலையான தரையைத் தேடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான். பிறகு நீரில் மூழ்கியிருந்த பூமியை உயர்த்த விருப்பம் கொண்டான்.
“இந்த வெள்ளத்திலிருந்து பூமியை மீட்க நான் என்ன வடிவம் எடுப்பது?” என்று நினைத்து, தெய்வீகப் பார்வையால் கண்டு, நீரில் விளையாட விரும்பும் காட்டுப் பன்றியின் வடிவம் {வராக அவதாரம்} கொள்ள நினைத்தான். பிறகு, வேதங்கள் மூலம் உள்ளுணர்வு கொண்டு பத்து யோஜனை நீளத்துடன், கூரிய தந்தங்களுடன், மேகம் போன்ற கரிய நிறத்துடன், மலை போன்ற பெரிய உருவத்துடன், மேகத்திரள் போன்று கர்ஜித்த அந்தத் தலைவன் நீருக்குள் மூழ்கி, தனது {பன்றியாக இருந்த தனது} ஒரு தந்தத்தால் பூமியை உயர்த்தி, அதைச் சரியான கோளத்தில் மாற்றி வைத்தான்.
இன்னுமொரு காலத்தில், அந்தப் பலம்வாய்ந்த தலைவன் {நாராயணன்}, பாதிச் சிங்கம் பாதி மனிதன் கொண்ட அற்புத வடிவம் {நரசிம்ம அவதாரம்} கொண்டு, தனது கைகளைப் பிசைந்து கொண்டு, தைத்தியர்களின் ஆட்சியாளன் சபைக்குச் சென்றான். தேவர்களின் எதிரியும், திதியின் மகனும் தைத்தியர்களின் மூதாதையுமானவன் {ஹிரண்யகசிபு}, அந்தத் தலைவனின் {நரசிம்மனின்} விசித்திர வடிவத்தைக் கண்டு, உணர்வுகளால் வெடித்து, கடுங்கோபம் கொண்டு, கொழுந்துவிட்டு எரியும் கண்களைக் கொண்டான். போர்க்குணம் மிக்கத் திதியின் மகனும், தேவர்களின் எதிரியுமான அந்த ஹிரண்யகசிபு, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, கருமேகத்திரள் போலக் காட்சியளித்து, கையில் திரிசூலம் கொண்டு, மேகமெனக் கர்ஜித்து, பாதிச் சிங்கம், பாதி மனிதன் வடிவம் கொண்டவனை நோக்கி விரைந்தான். பிறகு பாதிச் சிங்கம் பாதி மனிதனாக இருந்த வலிமைமிக்கவனான காட்டுவிலங்குகளின் மன்னன் {நாராயணன்}, ஒரே பாய்ச்சலில் காற்றில் எழுந்து, தனது கூரிய நகங்களால் அந்தத் தைத்தியனை {ஹரிரண்யகசிபுவை} இருகூறாக கிழித்துப் போட்டான். பெரும் பிரகாசம் கொண்ட, அந்தப் புகழத்தக்க தாமரைக் கண் தலைவன் {நாராயணன்}, அனைத்து உயிர்களின் நன்மைக்காக அந்தத் தைத்திய மன்னனைக் {ஹிரண்யகசிபுவைக்} கொன்று, மீண்டும் அதிதியின் கருவறையில் காசியபரின் மகனாகத் தனது பிறப்பை அடைந்தான்.
ஆயிரம் வருடங்கள் முடிந்ததும், அவள் {அதிதி} அந்தத் தெய்வீகக் கருவைப் பெற்றெடுத்தாள். பிறகு மழை நிறைந்த மேகங்களின் நிறத்துடன், பிரகாசமிக்கக் கண்களுடன், குள்ளமான வடிவத்துடன் அவன் {நாராயணன் வாமனனாகப்} பிறந்தான். அவன் துறவுக்கான தண்டத்தையும், நீர்க்குடத்தையும் {கமண்டலத்தையும்} கைகளில் கொண்டிருந்தான். அவனது மார்பில் ஒரு சுருட்டை முடி சின்னமாகக் {ஸ்ரீவத்சம்} குறிக்கப்பட்டிருந்தது. அந்த வணங்கத்தக்கவன் {வாமனன்} சடாமுடி தரித்து, பூணூல் அணிந்து, சற்றுப் பருமனான, அழகான, பிரகாசமான காந்தி கொண்ட உடலைப் பெற்றிருந்தான். தானவ மன்னனான பலியின் வேள்வி முடியும் தருவாயில் அந்த வேள்விக்கூட்டத்திற்குள் பிருஹஸ்பதியின் உதவியுடன் அவன் {வாமனன்} நுழைந்தான். குட்டை உடல் கொண்டவனைக் கண்ட அந்தப் பலி மனநிறைவு கொண்டு அவனிடம், “உம்மைக் கண்டு மகிழ்கிறேன், ஓ! அந்தணரே {வாமனரே}, என்னிடம் உமக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லும்” என்று கேட்டான்.
பலியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் குட்டை தேவன் {வாமனன்}, புன்சிரிப்புடன், “{ஸ்வஸ்தி} அப்படியே ஆகட்டும்! தானவர்கள் தலைவா {பலியே}, எனக்கு {என் காலடி அளவு கொண்ட} மூன்றடி நிலம் கொடு” என்று கேட்டான். எல்லையற்ற சக்திகொண்ட அந்த அந்தணன் கேட்டதைக் கொடுக்க பலி மனநிறைவு கொண்டான். பிறகு {தனது} காலடிகளால் பூமியை அளக்க எண்ணங்கொண்ட போது, அந்த ஹரி {வாமனன்}, அற்புதமான இயல்புக்குமிக்க வடிவத்தை அடைந்தான். மூன்று காலடிகளில் எல்லையற்ற உலகத்தை அளந்தான். பிறகு, என்றுமுள்ள தேவனான விஷ்ணு, அதை இந்திரனுக்குக் கொடுத்தான். இப்போது உனக்குச் சொல்லப்பட்ட வரலாறு, “வாமன அவதாரம்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அவனிலிருந்து அனைத்து தேவர்களும் தங்கள் நிலையை அடைந்தனர். அவனுக்குப் பிறகு, இந்த உலகம் வைஷ்ணவம் என்றும் விஷ்ணுவால் நிறைந்தது என்றும் சொல்லப்படுகிறது. தீயவர்களின் அழிவுக்காகவும், அறத்தைக் காக்கவும், அவனே இப்போது யது குலத்தில் அவதரித்திருக்கிறான். வணங்கத்தக்க விஷ்ணு இப்போது கிருஷ்ணனின் பாணியில் இருக்கிறான்.
ஓ! சிந்து நாட்டு மன்னா {ஜெயத்ரதா}, உலகே வணங்கும் தலைவனின் சாதனைகள் இவையே. கற்றவர்கள் அவனையே {நாராயணனையே} ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்றும், பிறப்பற்றவன் என்றும், தெய்வீகமானவன் என்றும் வர்ணிக்கிறார்கள். போர்க்கலைகளை அறிந்தவர்களில் சிறந்தவனாக, மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி, தெய்வீகமாக, சுருள்முடிச் சின்னம் {ஸ்ரீவத்சம் என்ற மச்சம்} தரித்து, கைகளில் கதாயுதம், சக்கரம், சங்கு ஆகியவற்றோடு கூடிய, வெல்லப்பட முடியாதவனை, கிருஷ்ணன் என்று அவர்கள் {கற்றவர்கள்} அழைக்கிறார்கள். இத்தகு குணங்களைக் கொண்ட கிருஷ்ணன் அர்ஜுனனைப் பாதுகாக்கிறான். எல்லையற்ற சக்தி கொண்ட புகழ்பெற்றவனான அந்தத் தாமரைக் கண் கொண்டவன் {கிருஷ்ணன்}, ஒரே தேரில் பிருதையின் {குந்தியின்} மகனுடன் {அர்ஜுனனுடன்} பயணித்து அவனைப் பாதுகாக்கிறான்! எனவே, அவன் {அர்ஜுனன்} வீழ்த்தப்பட முடியாதவன்; தேவர்களாலேயே அவனது சக்தியைத் தாங்க முடியாது. அப்படி இருக்கும்போது மனிதத் தன்மை கொண்டவர்களால் எப்படிப் பிருதையின் மகனைப் {அர்ஜுனனைப்} போர்க்களத்தில் வீழ்த்த முடியும்? எனவே, ஓ! மன்னா {ஜெயத்ரதா}, அவனைத் தனியாக விடு! {உன்னால் அர்ஜுனனை வெல்ல முடியாது}. எனினும், நீ ஒரு நாளைக்கு மட்டும் மீதியுள்ள யுதிஷ்டிரனின் படையினர் அனைவரையும், உனது எதிரிகளான பாண்டுவின் மற்ற நான்கு மகன்களையும் வீழ்த்துவாய்” என்றான் {சிவன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளை அந்த இளவரசனுக்கு {ஜெயத்ரதனுக்குச்} சொன்ன, பாவங்களை அழிப்பவனும், உமையின் கணவனும், காட்டுவிலங்குகளின் தலைவனும், {தக்ஷனின்} வேள்வியை அழித்தவனும், திரிபுரனைக் கொன்றவனும், பகனின் கண்களைப் பிடுங்கியவனும், குள்ளர்கள் மற்றும் கூன்முதுகர்களாலும், பயங்கரக் கண்களும், காதுகளும், உயர்த்திய கைகளும் கொண்ட பயங்கரத் தொண்டர்களாலும் சூழப்பட்டிருக்கும் வணங்கத்தக்க ஹரன் {சிவன்}, தனது மனைவியான உமையுடன், அந்த இடத்திலிருந்து மறைந்து போனான். அந்தத் தீய ஜெயத்ரதனும் தனது இல்லம் திரும்பினான். பாண்டுவின் மகன்கள் தொடர்ந்து காம்யக வனத்தில் வசிக்கலானார்கள்.”
யுதிஷ்டிரன் கேள்வி! – வனபர்வம் பகுதி 271-கானக வாழ்வில் துன்பத்தை அனுபவிக்கும் தன்னைப் போலப் பாதிக்கப்பட்டவர் யாரும் உண்டா என்று யுதிஷ்டிரன் மார்க்கண்டேயரிடம் கேட்பது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “திரௌபதி அபகரிக்கப்பட்டதன் விளைவாக இத்தகு துன்பத்தை அனுபவித்த பிறகு மனிதர்களில் புலிகளான அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஜெயத்ரதனை வீழ்த்தி, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட பிறகு, அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் அந்த முனிவர்களில் சிறந்தவரின் {மார்க்கண்டேயர்} அருகில் அமர்ந்தான். திரௌபதிக்கு நேர்ந்த கேட்டைத் தாங்கிக் கொண்டு, தங்கள் துயரை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்தத் துறவிகளில் முதன்மையானவர்களுக்கு மத்தியில், மார்க்கண்டேயரிடம், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், “ஓ! வணக்கத்தக்க ஐயா, பழங்காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்த முழு ஞானம் கொண்டவர் என்று தேவர்கள் மற்றும் துறவிகள் மத்தியில் நீர் அறியப்பட்டிருக்கிறீர். என் மனதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதை நீர்தான் தீர்த்துவைக்க வேண்டும்! துருபதன் மகளான இந்த மங்கை {திரௌபதி}, வேள்விப்பீடத்தில் உதித்தவளாவாள். மனித கர்ப்பத்தில் பிறந்தவளல்ல. இவள் உயர்ந்த அருளைக் கொண்டவளும் பாண்டுவின் சிறப்புமிக்க மருமகளுமாவாள். நான் காலத்தைக் குறித்துச் சிந்திக்கிறேன். மனிதனின் விதி அவனது செயல்களைப் பொறுத்து இருக்கிறது. இது உயிரினங்களைப் பொறுத்தமட்டில் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. (அது அப்படி இல்லையெனில்) நேர்மையான மனிதன் மீது சொல்லப்படும் போலி திருட்டுக் குற்றச்சாட்டைப் போல, அறம்சார்ந்து உண்மையுள்ளவளாக இருக்கும் எங்கள் மனைவி {திரௌபதி} எப்படி இத்தகு துரதிர்ஷ்டத்தால் துன்புற நேர்ந்தது?
துருபதனின் மகள் {திரௌபதி} ஒரு பாவச் செயலையோ, வரவேற்கத்தகாத எச்செயலையோ செய்யவில்லையே. மறுபுறம், அவள் அந்தணர்களிடம் உயர் அறங்களையல்லவா தொடர்ந்து பயின்று வந்தாள். இருப்பினும் மூடனான மன்னன் ஜெயத்ரதன் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றான். அவள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்செயலின் விளைவாக, அந்த இழிந்த பாவியின் {ஜெயத்ரதனின்} தலையைச் சிரைத்து, போர்க்களத்தில் அவனது கூட்டாளிகளையும் வீழ்த்தினோம். சிந்து நாட்டின் துருப்புகளைக் கொன்று அவளை {திரௌபதியை} மீட்டோம் என்பது உண்மையே. ஆனால், நாங்கள் எதிர்பாராத நேரத்தில் எங்கள் மனைவி பலவந்தமாகக் கடத்தப்பட்டாள் என்ற அவமானம் தொடரும் என்பது நிச்சயம். இந்தக் காட்டு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. இந்தக் காட்டிலேயே தங்கி, எங்களுடன் வாழும் இந்தக் காட்டின் விலங்குகளைக் கொல்லக் கடன் பட்டு, அந்த வேட்டையின் மூலமே எங்கள் உயிரைத் தாங்குகிறோம். இப்படிப்பட்ட இந்த வனவாசத்தையும், ஏமாற்றுகர உறவினர்களின் செயல்களாலேயே அனுபவிக்கிறோம். என்னைப்போன்ற பேறிலி வேறு யாரும் உண்டா? இது போன்ற ஒருவனை நீர் முன்னர்க் கண்டதோ கேட்டதோ உண்டா?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
இராமாயணம் ஆரம்பம்! – வனபர்வம் பகுதி 272-ராமன் மற்றும் சீதையின் பிறப்பு; ராவணனின் மூதாதையர் பற்றிய அறிமுகம்; குபேரன் பிறப்பு; குபேரன் பெற்ற நன்மைகள் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, {தசரத ராமனே} ராமனே கூட இணையற்ற துயரத்தைச் சந்தித்தான். ராட்சச மன்னனான தீய மனம் கொண்ட ராவணன், ஏமாற்றைக் {மாயையைக்} கைக்கொண்டு, ஜடாயு என்ற கழுகை வீழ்த்தி, அவனது {ராமனின்} மனைவியான சீதையை, அவனது {ராமனின்} ஆசிரமத்தில் இருந்து பலவந்தமாகக் கடத்திச் சென்றான். பிறகு உண்மையில், சுக்ரீவனின் உதவியைப் பெற்று, கடலில் பாலத்தைக் கட்டி தனது கூர்முனை கொண்ட கணைகளால் லங்கையை எரித்து, சீதையை மீட்டான்”
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ராமன் எந்தக் குலத்தில் பிறந்தான். அவனது பலம் மற்றும் பராக்கிரமத்தின் அளவு என்ன? ராவணன் யாருடைய மகன்? எதன் பேரில் அவன் ராமனுடன் முரண்பட்டான்? ஓ சிறப்புமிக்கவரே {மார்க்கண்டேயரே}, அனைத்தையும் விவரமாக எனக்குச் சொல்லும்; பெரும் சாதனைகள் கொண்ட ராமனின் கதையை நான் கேட்க மிக ஆவலாக உள்ளேன்” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குல இளவரசே {யுதிஷ்டிரா}, இந்தப் பழைய வரலாற்றை அது நடந்தவாறே சரியாகக் கேள்! தனது மனைவியுடன் சேர்ந்து ராமன் அனுபவித்த துன்பம் அனைத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன். இக்ஷவாகு குலத்தில் உதித்த அஜன் என்ற பெரும் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு {அஜனுக்கு}, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, எப்போதும் சுத்தமாக இருந்த தசரதன் என்ற பெயர் கொண்ட மகன் ஒருவன் இருந்தான். அந்தத் தசரதனுக்கு, அறநெறிகளையும், பொருளையும் அறிந்த ராமன், லட்சுமணன், சத்ருக்னன் மற்றும் பலம்பொருந்திய பரதன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர்.
ராமனுக்குக் கௌசல்யை என்ற தாயும், பரதனுக்குக் கைகேயி என்ற தாயும் இருந்தனர். எதிரிகளுக்குக் கசையாக இருந்த லட்சுமணனும், சத்ருக்னனும் சுமித்திரையின் மகன்கள். ஜனகன் விதேக நாட்டின் மன்னாக இருந்தான். சீதை அவனது மகளாக இருந்தாள். அவளை {சீதையை} ராமனின் அன்பிற்குரிய மனைவியாக்க விரும்பிய தஷ்திரி {பிரம்மன்} தானே அவளைப் படைத்தான். ராமன் மற்றும் சீதையின் பிறப்பு குறித்த வரலாற்றை இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.
இப்போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் ராவணனின் பிறப்பைக் குறித்து உரைக்கிறேன். அனைத்து உயிர்களின் தலைவனும், அண்டத்தைப் படைத்தவனும், பெரும் தவத்தகுதி படைத்த தேவனும், சுயம்புவுமான பிரஜாபதியே {பிரம்மனே} ராவணனின் பாட்டனாவான். புலஸ்தியருக்கு, பசுவிடம் பெறப்பட்ட வைஸ்ரவணன் {குபேரன்} என்ற பெயரில் அழைக்கப்பட்ட பலம்பொருந்திய மகன் ஒருவன் இருந்தான். ஆனால் அவரது {புலஸ்தியரின்} மகன் {வைஸ்ரவணன்}, தன் தந்தையை {புலஸ்தியரை} விட்டுவிட்டு, தன் பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றுவிட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதனால் கோபமடைந்த அவனது {வைஸ்ரவணனின்} தந்தை {புலஸ்தியர்}, தன்னிடமிருந்து இரண்டாவதாக ஒரு சுயத்தைப் படைத்தார். தன் சுயத்தின் மறுபாதியின் மூலமே அந்த மறுபிறப்பாளர், வைஸ்ரவணனிடம் கொண்ட கோபத்தைத் தீர்க்க விஸ்ரவஸ் என்றவனைப் பிறப்பித்தார்.
ஆனால் வைஸ்ரவணனிடம் {குபேரனிடம்} மனநிறைவு கொண்ட பெரும்பாட்டனோ {பிரம்மனோ}, அவனுக்கு {வைஸ்ரவணனுக்கு} இறவாமையையும், அண்டத்தில் உள்ள அனைத்துச் செல்வங்களின் மீது ஆட்சி அதிகாரத்தையும், திசைப்புள்ளிகளில் ஒன்றுக்குப் பாதுகாவலன் என்ற பொறுப்பையும், ஈசானனின் நட்பையும், நளகுபேரன் என்ற மகனையும் கொடுத்தான். அவன் {பிரம்மன்}, ராட்சசக் கூட்டத்தால் பாதுகாக்கப்பட்ட, அவனது தலைநகரான இலங்கையையும், செலுத்துபவன் விருப்பதிற்கேற்ப நினைத்த இடம் எங்கும் செல்லும் திறன் கொண்ட புஷ்பகம் என்று அழைக்கப்பட்ட தேரையும் {விமானத்தையும்} கொடுத்தான். யக்ஷர்களுக்கு மன்னனாகவும், மன்னர்களை ஆள்பவனாகவும் அவனை {வைஸ்ரவணனை} நியமித்தான்.”
ராவணன் பெற்ற வரம்! – வனபர்வம் பகுதி 273-ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கரன், சூர்ப்பனை பிறப்பு; அவர்கள் வைஸ்ரவணனிடம் கொண்ட பொறாமை; அவர்களின் கடுந்தவம்; தனது தலையை வெட்டி வேள்வி நெருப்பில் இட்ட ராவணன்; அவர்களுக்கு பிரம்மன் அருளிய வரம்; விபீஷணன் இறவாமை பெற்றது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “புலஸ்தியரின் பாதி ஆன்மாவாக இருந்த விஸ்ரவஸ் என்ற பெயர் கொண்ட முனிவன், பெரும் கோபத்துடன் வைஸ்ரவணனைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் மன்னனான குபேரன், தன்னிடம் தன் தந்தை {விஸ்ரவஸாக இருந்த புலஸ்தியர்} கோபமாக இருப்பதை அறிந்து, அவனை எப்போதும் ஆறுதல் படுத்த எண்ணினான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}. மனிதர்களின் தோள்களில் சவாரி செய்து இலங்கையில் வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுக்கு மன்னன் தனது தந்தைக்காகக் காத்திருப்பதற்காக மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பி வைத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புஷ்போத்கதை, ராகை, மாலினி என்பது அவர்களது பெயர்களாகும். பாடுவதில் ஆடுவதிலும் திறமை பெற்ற அவர்கள், எப்போதும் அந்த உயர் ஆன்ம முனிவரை சிரத்தையுடன் கவனித்து வந்தனர்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த முனிவரை மனநிறைவு கொள்ளச்செய்ய அந்தக் கொடியிடை மங்கையர் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். அந்த உயர் ஆன்மா கொண்ட வணங்கத்தக்கவர்கள் அவர்களிடம் மனநிறைவு கொண்டு, அவர்களுக்கு வரங்களை அருளினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப இளவரசர்கள் போன்ற மகன்களைக் கொடுத்தார். இவ்வுலகில் நிகரற்ற பராக்கிரமத்தைக் கொண்ட ராட்சசர்களில் முதன்மையான கும்பகர்ணன் மற்றும் பத்துத் தலை கொண்ட ராவணன் ஆகிய இரு மகன்களும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். மாலினி விபீஷணன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றாள். ராகை என்பவள் கரன் மற்றும் சூர்ப்பனகை என்ற இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றாள்.
அவர்கள் அனைவரிலும் விபீஷணன் மிகுந்த அழகைக் கொண்டிருந்தான். அந்த அருமையான மனிதன் பக்திமானாகவும், சிரத்தையுள்ளவனாகவும் இருந்து அறச் சடங்குகள் அனைத்தையும் செய்து வந்தான். அவன் அறம் சார்ந்தவனாக, சுறுசுறுப்புள்ளவனாக, பெரும் பலமும் பராக்கிரமமும் கொண்டவனாக இருந்தான். அவர்களில் ராட்சசனான கும்பகர்ணனே போர்க்களத்தில் பெரும் பலம் உள்ளவானாக இருந்தான். முரட்டுத்தனமும் பயங்கரமும் கொண்ட அவன் அனைத்து மாயக் கலைகளிலும் நிபுணனாக இருந்தான். கரண் விற்கலையில் நிபுணனாக இருந்தான். அவன் அந்தணர்களின் எதிரியாக இருந்து, {அவர்களது} இறைச்சியை உண்டு வாழ்ந்தான். கடுமை நிறைந்த சூர்ப்பனகை துறவிகளுக்கு எப்போதும் தொல்லை கொடுத்து வந்தாள்.
வேதங்களைக் கற்று, சடங்குகளில் விடாமுயற்சியுடன் இருந்த அந்த வீரர்கள் அனைவரும் தங்கள் தந்தையுடன் கந்தமாதனத்தில் வாழ்ந்தனர். அங்கே அவர்கள் செல்வத்தின் தலைவனான, மனிதர்களின் தோள்களில் பயணிக்கும் வைஸ்ராவணன் {குபேரன்} தங்கள் தந்தையின் அருகே அமர்ந்திருப்பதைக் கண்டனர். பொறாமையால் பீடிக்கப்பட்ட அவர்கள், தவங்கள் பயிலத் தீர்மானித்தனர். தங்கள் கடும் தவத்தால் அவர்கள் பிரம்மனை நிறைவடைய வைத்தனர். காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த பத்து தலை ராவணன், ஐந்து புனித நெருப்புகள் சூழ தியானத்தில் மூழ்கி, ஆயிரம் வருடங்களுக்கு ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான். உண்ணாதிருந்து தலைகீழாக நின்று கொண்டிருந்த கும்பகர்ணன், தனது தவத்தில் உறுதியாக இருந்தான். ஞானமும் மேன்மையும் மிக்க விபீஷணன் உண்ணா நோன்புகள் நோற்று, காய்ந்த இலைகளை உண்டு, தியானத்தில் ஈடுபட்டு, நீண்ட காலத்திற்குத் தவம் இருந்தான். அவர்கள் இப்படித் தவம் செய்து கொண்டிருந்த போது, கரணும், சூர்ப்பனகையும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தனர்.
ஆயிரம் வருடங்கள் முடியும் நெருக்கத்தில், பத்துத் தலை கொண்டவன் {ராவணன்}, தனது தலைகளை {ஒவ்வொன்றாக} வெட்டி வேள்வி நெருப்பில் காணிக்கையாக இட்டான். அவனது இச்செயலால் அண்டத்தின் தலைவன் {பிரம்மன்} நிறைவு கொண்டான். பிறகு பிரம்மன் நேரடியாக அவனிடம் வந்து, தவத்தைக் கைவிடுமாறும், அவர்கள் அனைவருக்கும் வரங்களை அருள்வதாகவும் உறுதி கூறினான். அந்த வணங்கத்தக்க பிரம்மன், “பிள்ளைகளே, நான் உங்களிடம் நிறைவு கொண்டேன்! தவத்தை நிறுத்துங்கள்; என்னிடம் வரங்களைக் கேளுங்கள்! இறவாமை தவிர்த்து, நீங்கள் கேட்கும் எந்த விருப்பங்களும் உங்களுக்குக் கிடைக்கும். பெரும் குறிக்கோளுடன், நீ காணிக்கையாக இட்ட உனது தலைகள், நீ விரும்பியபடி முன்பு போலவே உனது உடலை அலங்கரிக்கும். உனது உடல் உருகுலையாது. நீ விரும்பிய உருவம் எடுக்கவல்லவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளை வெல்பவனாகவும் இருப்பாய். இதில் சந்தேகமில்லை” என்றான் {பிரம்மன்}. அதற்கு ராவணன், “கந்தர்வர்கள், தேவர்கள், கின்னரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள் மற்றும் அனைத்து பிற உயிரனங்களிடமும் நான் தோல்வியடையாமலிருப்பேனாக!” என்றான். பிரம்மன், “மனிதர்கள் தவிர்த்து, நீ பெயரிட்டுச் சொன்னவர்கள் மூலம் உனக்கு எப்போதும் அச்சம் இருக்காது (அச்சமேற்படும் சந்தர்ப்பம் உனக்கு வாய்க்காது). உனக்கு நன்மை உண்டாகட்டும்! அப்படியே நான் உனக்கு விதித்திருக்கிறேன்!” என்றான்.
மார்க்கண்டேயர், “இப்படிச் சொல்லப்பட்ட பத்துத்தலையன் {தசக்கிரீவன்} {இராவணன்} மிகவும் மன நிறைவு கொண்டு, அவனது வக்கிரபுத்தியின் காரணமாக, மனிதர்களை உண்ணும் அவன் மனிதர்களை அலட்சியமாக எண்ணினான். பிறகு அந்தப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, முன்பு போலவே {ராவணனிடம் கேட்டது போலவே} கும்பகர்ணனிடமும் கேட்டான். இருளால் மூடப்பட்ட அறிவு கொண்ட அவன் நீண்ட தூக்கத்தைக் கேட்டான். “அப்படியே ஆகும்” என்று சொன்ன பிரம்மன் விபீஷணனிடம், “ஓ என் மகனே {விபீஷணா}, நான் உன்னிடம் மிகவும் நிறைவு கொண்டேன்! நீ விரும்பும் எந்த வரத்தையும் கேள்!” என்று கேட்டான். அதற்கு விபீஷணன், “பெரும் ஆபத்திலும் நான் நேர்மையில் இருந்து வழுவாமல் {அதர்மம் செய்யாமல்} இருக்க வேண்டும். நான் அறியாமையில் இருப்பதால், ஓ வணங்கத்தக்க ஐயா, தெய்வீக ஞான ஒளி எனக்குள் ஒளிர வேண்டும்” என்று கேட்டான். பிரம்மன், “ஓ ஏதிரிக்குத் தீமை விளைவிப்பவனே {விபீஷணா}, உன் ஆன்மா அறமின்மையை விரும்பாதாதல், நீ ராட்சசனாகப் பிறந்திருந்தாலும், உனக்கு இறவாமையை அருள்கிறேன்” என்றான் {பிரம்மன்}”
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்த வரத்தைப் பெற்றுக் கொண்ட பத்து தலை ராட்சசன் {ராவணன்}, போரில் குபேரனை வீழ்த்தி, இலங்கையின் ஆட்சியுரிமையை அவனிடம் இருந்து அடைந்தான். கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னரர்கள் ஆகியோர் தன்னைத் தொடர இலங்கையை விட்டகன்ற அந்தப் போற்றுதலுக்குரியவன் {குபேரன்}, கந்தமாதன மலையில் வாழ்வதற்குச் சென்றான். அவனிடம் {குபேரனிடம்} இருந்த தெய்வீகத் தேரான புஷ்பகத்தையும் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டான். இதனால் வைஸ்ரவணன் அவனிடம், “இந்தத் தேர் உன்னைச் சுமக்காது; போர்க்களத்தில் உன்னைக் கொல்வனை இது சுமக்கும்! உன் அண்ணனான என்னை நீ அவமதித்ததால்,விரைவில் நீ சாவாய்!” என்று சாபமிட்டான்.
பக்திமானான விபீஷணன், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்தவர்களும், பெரும் புகழ் கொண்டவர்களும் தொடரும் பாதையில் நடந்து, குபேரனைத் தொடர்ந்து சென்றான். போற்றுதலுக்குரிய அந்தச் செல்வத்தலைவன் {குபேரன்}, தன் தம்பிகளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு யக்ஷ, ராட்சசக் கூட்டத்திற்குத் தலைவனாக்கினான். மறுபுறம், மனிதர்களை உண்ணும் வலிமைமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும் ஒன்று கூடி பத்து தலை ராவணனிடம் தங்கள் ஆட்சியுரிமையைக் கொடுத்தார்கள். நினைத்த வடிவம் கொள்பவனும், பயங்கரப் பராக்கிரமம் கொண்டவனும், காற்றில் செல்பவனுமான அந்த ராவணன், தேவர்களையும், தைத்தியர்களையும் தாக்கி, அவர்களது மதிப்புமிக்க உடைமைகளை அவர்களிடம் இருந்து கவர்ந்தான். அனைத்து உயிர்களையும் நடுங்கச் செய்ததால் அவன் ராவணன் என்று அழைக்கப்பட்டான். எந்த அளவு சக்தியையும் திரட்டும் வல்லமை பெற்ற ராவணன், தனது பயங்கரத்தால் தேவர்களின் மனதிடத்தையே அகற்றினான்”
மந்தரை என்ற கூனி ! – வனபர்வம் பகுதி 274-ராவணன் செய்யும் தீமைகளைப் பொறுக்காத அக்னி, ராவணனின் அழிவைக் குறித்துப் பிரம்மனிடம் கேட்பது; பிரம்மன் முக்கியமான தேவர்கள் அனைவரையும் பூமியில் குரங்குகளாகவும், கரடிகளாகவும் பிறக்கச் சொன்னது; குரங்குகள் மற்றும் கரடிகளில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தேவர்கள் பிள்ளைகளைப் பெறுவது; பூசல்களை உருவாக்க பிரம்மன், துந்துபி என்ற கந்தர்வியை, பூமியில் கூனியான மந்தரையாகப் பிறக்கச் செய்தது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பின்னர்ப் பிரம்ம முனிவர்கள், சித்தர்கள், தேவமுனிவர்கள், ஆகியோர் ஹவ்யவாகனனை {அக்னியைத்} தங்கள் பேச்சாளனாகக் கொண்டு பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள். அக்னி {பிரம்மனிடம்}, “விஸ்ரவசின் சக்திமிக்க மகனான பத்துத் தலையனை {ராவணனை}, உமது வரத்தின் காரணமாகக் கொல்ல முடியவில்லை. பெரும் பலம் கொண்ட அவன் {ராவணன்} பூமியில் உள்ள உயிரினங்களை ஒடுக்குகிறான். ஓ! போற்றுதலுக்குரியவரே! எனவே எங்களைக் காப்பாற்றும்! எங்களைக் காப்பாற்ற உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று சொன்னான்.
பிரம்மன் {அக்னியிடம்}, “ஓ! அக்னி, தேவர்களாலோ அசுரர்களாலோ அவனை {ராவணனை} போர்க்களத்தில் வெல்ல முடியாது! அந்நோக்கத்திற்குத் தேவையானதை நான் ஏற்கனவே விதித்துவிட்டேன். உண்மையில் அவனது மரணம் அருகிலிருக்கிறது! எனது தூண்டுதலின் பேரில் நான்கு தலை கொண்ட தெய்வம் அக்காரணத்திற்காகவே அவதரித்துவிட்டான். அடிப்பவர்களில் முதன்மையான விஷ்ணு அந்நோக்கத்தைச் சாதிப்பான்” என்றான் {பிரம்மன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்தப் பாட்டன் {பிரம்மன்} அவர்களுக்கு மத்தியில் சக்ரனிடம் {இந்திரனிடம்}, “தேவர்களுடன் சேர்ந்து நீயும் பூமியில் பிறப்பாயாக! குரங்குகளும், கரடிகளும் விஷ்ணுவின் கூட்டாளிகளாவதற்காக நினைத்த உருவம் கொள்ளக்கூடிய பெரும் பலம் கொண்ட உங்கள் மகன்களாக அவர்களைப் பெறுவீர்களாக” என்று சொன்னான். இதனால், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தானவர்கள் ஆகியோர் விரைவாகக் கூடி தாங்கள் எவ்வாறு பிறக்க வேண்டும் என்பதை ஆலோசித்து, அவரவர்க்கு உரிய தன்மையுடன் பூமியில் பிறந்தார்கள். வரங்களை அருளும் தேவன் {பிரம்மன்}, அவர்கள் முன்னிலையிலேயே துந்துபி என்ற பெயர்கொண்ட கந்தர்வியை அழைத்து, “நோக்கம் நிறைவேற நீ அங்குச் செல்!” என்றான். பாட்டனின் {பிரம்மனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட துந்துபி, மனிதர்களின் உலகில் கூன்முதுகு கொண்ட மந்தரையாகப் பிறந்தாள்.
சக்ரனோடு {இந்திரனோடு} கூடிய முக்கியமான அனைத்து தேவர்களும் குரங்குகள், கரடிகள் ஆகியவற்றில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தங்கள் வாரிசுகளைப் பெற்றார்கள். அந்த மகன்களும் பலத்திலும் புகழிலும் தங்கள் தந்தைகளுக்கு ஈடாக இருந்தனர். அவர்கள் மலைச்சிகரங்களைப் பிளக்கவல்லவர்களாக இருந்தார்கள். கற்களும் ஆச்சா மரங்களும் {சால மரங்களும்}, பனை மரங்களும் {தால மரங்களும்} அவர்களது ஆயுதங்களாக இருந்தன. அவர்களது உடல்கள் உறுதி மிக்கதாவும் கடுமை நிறைந்ததாகவும் இருந்தன. அவர்கள் பெரும் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். போரில் வல்லவர்களாகவும், விருப்பத்திற்கேற்ற ஆற்றலைத் திரட்டும் திறன் அவர்களுக்கு இருந்தது. பலத்தால் அவர்கள் ஆயிரம் யானைகளுக்கு நிகராக இருந்தார்கள். வேகத்தால் அவர்கள் காற்றுக்கு ஈடாக இருந்தனர். சிலர் தாங்கள் விரும்பிய இடங்களிலெல்லாம் வசித்தார்கள், அதே வேளை மேலும் சிலர் கானகத்தில் வாழ்ந்தார்கள். அண்டத்தைப் படைத்த போற்றுதலுக்குரியவன் {பிரம்மன்}, இவ்வனைத்தையும் விதித்து, மந்தரை {கூனி} என்ன செய்ய வேண்டும் என்பதை அவளுக்கு உரைத்தான். மனோவேகம் கொண்ட மந்தரை, அவனது வார்த்தைகள் அனைத்தையும் புரிந்து கொண்டு, இங்கும் அங்கும் சென்று பூசல்களைத் தூண்டுவதில் ஈடுபட்டாள்”
காட்டுக்குச் சென்ற ராமன்! – வனபர்வம் பகுதி 275-ராமனுக்குப் பட்டம் சூட்ட தசரதன் தீர்மானம்; ராமனைக் காட்டுக்கு அனுப்பி, பரதனை நாடாள வைக்க வேண்டும் என்ற வரத்தைக் கைகேயி தரசதனிடம் கேட்டல்; ராமன் காட்டுக்குச் செல்வது; கரன் தூஷணனைக் கொல்வது; அங்கம் பழுதான சூர்ப்பனகை ராவணனிடம் சென்று தனது நிலையைத் தெரியப்படுத்துதல்; கோபம் கொண்ட ராவணன், ராமனை அழிப்பதற்குத் திட்டம் தீட்டி மாரீசனை அணுகுதல்…
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! போற்றுதலுக்குரியவரே {மார்க்கண்டேயரே}, ராமன் மற்றும் பிறரின் பிறப்பு வரலாற்றை நீர் எனக்கு விவரமாகச் சொன்னீர். நான் அவர்களது வனவாசத்திற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, தசரதன் மகன்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய சகோதரர்கள், மிதிலை இளவரசியுடன் {சீதையுடன்} காட்டுக்கு ஏன் சென்றார்கள் என்பதை உரைப்பீராக” என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “பக்திமானான மன்னன் தசரதன், எப்போதும் பெரியவர்களைக் கவனிப்பவனாகவும், அறச்சடங்குகள் செய்வதில் சிரத்தையுள்ளவனாகவும் இருந்தான். அவன் {தசரதன்} தனக்குப் பிறந்த மகன்களைக் குறித்துப் பெரும் மனநிறைவு கொண்டான். அவனது மகன்கள் பலத்திலும் வேதங்களிலும், அதன் புதிர்களிலும், ஆயுத அறிவியலிலும் படிப்படியாக வளர்ந்தனர். தங்கள் பிரம்மச்சரிய நோன்பை நிறைவேற்றிய அந்த இளவரசர்களுக்குத் திருமணமும் நடந்தது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியும் உயர்ந்த மனநிறைவையும் கொண்டான். அவர்கள் அனைவரிலும் மூத்தவனான புத்திகூர்மை கொண்ட ராமன், தனது அழகான நடத்தையால் மக்களைப் பெரும் மனநிறைவு கொள்ளச் செய்து, தன் தந்தைக்குப் பிடித்தமானவனாக ஆனான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தன் வயது முதிர்வை கவனத்தில் கொண்ட அந்த ஞானமுள்ள மன்னன் {தசரதன்}, தனது அமைச்சர்களிடமும், ஆன்ம ஆலோசகரிடமும் {வசிஷ்டரிடமும்}, ராமனைத் தன் பேரரசின் பிரதிநிதியாக {பட்டத்து இளவரசனாக} நியமிக்க ஆலோசனை செய்தான். அந்தப் பெரும் அமைச்சர்கள் அனைவரும், அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை ஏற்றனர். ஓ! குருகுலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, கௌசல்யையின் மகிழ்ச்சியைப் பெருக்குபவனும், கண்கள் சிவந்தவனும், தசை பொருந்திய கரங்கள் கொண்டவனுமான தன் மகனைக் {ராமனைக்} கண்ட மன்னன் தசரதன் பெரிதும் மனம் நிறைந்தான் . அவனது {ராமனின்} நடை காட்டு யானையைப் போல இருந்தது. அவன் {ராமன்} நீண்ட கரங்களும், உயர்ந்த தோள்களும், சுருண்ட கரிய தலைமுடியும் கொண்டிருந்தான். வீரனாகவும். பிரகாசம் கொண்டவனாகவும், போர்க்களத்தில் இந்திரனுக்கு எந்தவிதத்திலும் தாழாதவனாகவும் அவன் {ராமன்} இருந்தான். புனித ரித்துகள் அனைத்தையும் அறிந்த அவன் {ராமன்}, ஞானத்தில் பிருஹஸ்பதிக்கு இணையானவனாக இருந்தான். அனைத்து மக்களின் அன்புக்கு ஒரு பொருளாக இருந்த அவன் {ராமன்}, அனைத்து அறிவியலிலும் திறன்வாய்ந்தவனாக இருந்தான். புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அவனைக் கண்ட அவனது எதிரிகளே கூட அவனைக் கண்டதும் அவனிடம் {ராமனிடம்} மனநிறைவு கொண்டார்கள். தீயவர்களுக்குப் பயங்கரனாகவும், அறம்சார்ந்தவர்களைப் பாதுகாப்பவனாகவும், அவன் {ராமன்} இருந்தான். புத்திகூர்மையும், கலங்கடிக்கப்பட முடியாதவனாகவும் இருந்த அவன் {ராமன்}, அனைவரையும் வெல்பவனாகவும், எவ்வழியிலும் வீழ்த்தப்பட முடியாதவனாகவும் இருந்தான்.
ஓ! குருக்களின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, கௌசல்யையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான தனது மகனை {ராமனைக்} கண்ட மன்னன் தசரதன் மிகவும் மகிழ்ந்தான். ராமனின் நற்பண்புகளை நினைத்துப் பார்த்த சக்திமிக்கவனும் பலமிக்கவனுமான மன்னன் {தசரதன்}, மகிழ்ச்சியோடு தனது குடும்பப் புரோகிதரிடம் {வசிஷ்டரிடம்}, “ஓ! அந்தணரே, நீர் அருளப்பட்டிரும். இன்று இரவு பூச நட்சத்திரம், வெகு மங்களமான சேர்க்கையைக் கொண்டுவருகிறது. எனவே, அனைத்துப் பொருட்களும் சேகரிக்கப்படட்டும், ராமனும் அழைக்கப்படட்டும். இந்தப் பூச நட்சத்திரம் நாளை வரை நீடிக்கிறது. எனவே, ராமன் எனது குடிமக்களின் பட்டத்து இளவரசனாக என்னாலும், எனது அமைச்சர்களாலும் நியமிக்கப்பட வேண்டும்” என்றான்.
அதே வேளையில், (கைகேயியின் பணிப்பெண்ணான) மந்தரை, மன்னனின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, தனது தலைவியிடம் {கைகேயி} சென்று சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசினாள். அவள் {மந்தரை}, “ஓ! கைகேயி, உனது பெரும் தீயூழை {துரதிர்ஷ்டத்தை} இந்நாளில் மன்னர் {தசரதர்} பிரகடனம் செய்திருக்கிறார்! ஓ! பேறிலியே {துரதிர்ஷ்டசாலியே}, கோபம் மிகுந்த கரும்பாம்பு மறைந்திருந்து உன்னைக் கடிக்கிறது. தன் மகன் அரியணையில் நிறுவப்பட இருப்பதால், உண்மையில் கௌசல்யையே பேறு பெற்றவளாவாள். உன் மகன் {பரதன்} நாட்டை அடையாத போது, உனக்குச் செழிப்பு எங்கே இருக்கும்?” என்று கேட்டாள்.
தன் பணிப்பெண்ணின் {மந்தரையின்} வார்த்தைகளைக் கேட்ட, அழகிய கொடியிடை கொண்ட அந்தக் கைகேயி, தன் ஆபரணங்கள் அனைத்தையும் பூண்டுகொண்டு, தனது கணவனைத் தனிமையில் நாடினாள். மகிழ்ச்சியான இதயத்துடன், இனிமையாகப் புன்னகைத்து, அனைத்து பசப்புநயமான காதல் வார்த்தைகளுடன் சேர்த்து, “ஓ! மன்னா {தரசரதரே}, நீர் என்றும் உமது உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருப்பீர் {என்று நம்புகிறேன்}. முன்பே நீர் எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தீர். அந்த உறுதிமொழியை இப்போது நிறைவேற்றும். வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஏற்படும் பாவத்தில் இருந்து உம்மைக் காத்துக் கொள்ளும்!” என்று சொன்னாள். அதற்கு மன்னன் {தசரதன்-கைகேயியிடம்}, “நீ என்ன விரும்பினாலும் கேள், நான் உனக்கு அவ்வரத்தைத் தருவேன். கொல்லத்தகாத எந்த மனிதன் இன்று கொல்லப்பட வேண்டும்? கொல்லத்தகுந்த எவன் இன்று விடுதலை பெற வேண்டும்? யாருக்கு இன்று நான் செல்வம் அளிக்க வேண்டும்? யாருடைய செல்வத்தை இன்று பறிமுதல் செய்ய வேண்டும்? அந்தணர்களின் உடைமைகளைத் தவிர இவ்வுலகத்தில் உள்ள எந்தச் செல்வமானாலும், அது எனதே! நான் இந்த உலகத்தில் உள்ள மன்னர்களுக்கெல்லாம் மன்னனும், நால்வகை மனிதர்களின் பாதுகாவலனுமாவேன்! ஓ! அருளப்பட்ட மங்கையே {கைகேயி}, எந்தப் பொருளின் மீது உன் இதயம் நிலைத்திருந்தாலும், அதை விரைவாக என்னிடம் சொல்!” என்று கேட்டான்
மன்னனின் {தசரதனின்} வார்த்தைகளைக் கேட்டு, அவன் மீது தான் கொண்ட ஆளுமையை அறிந்து, அவன் கொடுத்திருந்த வாக்குறுதியில், அவனை உறுதி கொள்ள வைக்க முயன்று, அவள் {கைகேயி} அவனிடம் {தசரதனிடம்}, ராமனுக்காக நீர் வடிவமைத்த பதவியேற்பைப் பெறுபவனாகப் பரதன் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். சடாமுடி தரித்து, மரவுரியும், மான்தோலும் அணிந்து, தண்டகவனத்தில் பதினான்கு {14} வருடங்களுக்கு ராமன் வனவாசம் செய்யட்டும்” என்றாள். ஏற்கத்தகாத இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {தசரதன்}, ஓ! பாரதக் குல தலைவா {யுதிஷ்டிரா}, மிகவும் துன்புற்றுப் பேச்சற்றவனானான்!
ஆனால் வலிமையும் நல்லொழுக்கமும் கொண்ட ராமன், {கைகேயியால்} தன் தந்தை இப்படி வேண்டிக்கொள்ளப்பட்டதை அறிந்து, தன் தந்தை கொடுத்த உறுதிமொழி களங்கமடையாமல் இருக்கக் காட்டுக்குச் சென்றான். {யுதிஷ்டிரா} நீ அருளப்பட்டிரு, வில்லாளிகளில் முதன்மையான {தம்பி} லட்சுமணனும், விதேகநாட்டு இளவரசியும், ஜனகனின் மகளும்,அவனது மனைவியுமான சீதையும் அவனைப் {ராமனைப்} பின்தொடர்ந்தார்கள். ராமன் காட்டுக்குச் சென்றதும், காலத்தின் நிலைத்த விதிக்குக் கட்டுப்பட்டு மன்னன் தசரதன் தனது உடலைத் துறந்தான். ராமன் அருகில் இல்லாததையும், மன்னன் {தசரதன்} இறந்துவிட்டதையும் அறிந்த கைகேயி, தன் முன்னே பரதனை அழைத்து வரச் செய்து, அவனிடம் {பரதனிடம்} “தசரதர் சொர்க்கம் சென்றுவிட்டார். ராமனும் லட்சுமணனும் காட்டில் இருக்கின்றனர்! குந்தகம் விளைவிக்க எந்தப் பகைவரும் அற்ற இந்த அகன்ற அரசை {நாட்டை} நீ எடுத்துக் கொள்” என்றாள் {கைகேயி}.
நல்லொழுக்கமுடைய பரதன் அவளுக்கு {கைகேயிக்கு} மறுமொழியாக, “செல்வத்தில் மட்டுமே மோகம் கொண்டு, உன் கணவரைக் கொன்று, குடும்பத்தை அடியோடு அழித்து, தீச்செயலைச் செய்தாய்! ஓ! எம்குலத்தில் சபிக்கப்பட்டவளே, ஓ தாயே, நீ என் தலையில் புகழ்க்கேட்டைச் சுமத்தி, உனது இந்த நோக்கத்தை அடைந்தாய்” என்றான். இப்படிச் சொன்ன அந்த இளவரசன் {பரதன்} உரக்க அழுதான். அந்நாட்டுக் குடிமக்கள் அனைவரின் முன்பும் தன் களங்கமின்மையை மெய்ப்பித்து நிறுவி, ராமனைத் திரும்ப அழைக்க விரும்பி, அவனைத் {ராமனைப்} பின்தொடர்ந்து சென்றான். பிறகு, வரிசையாக உள்ள தனது வாகனங்களில், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோரை ஏற்றி, சத்ருக்னனுடன் கனத்த இதயத்தோடு முன்னேறினான்.
ராமனைத் திரும்ப அழைக்க விரும்பிய அவன் {பரதன்}, வசிஷ்டர், வாமதேவர் மற்றும் பிற ஆயிரக்கணக்கான அந்தணர்கள், நகரங்கள் மற்றும் மாநிலங்களின் மக்கள் ஆகியோருடன் சென்றான். பிறகு அவன் {பரதன்}, கையில் வில்லுடனும், துறவிகளின் ஆபரணங்கள் பூண்டும் சித்திரகூட மலைகளில் வாழ்ந்து வந்த ராமனை, லட்சுமணனுடன் சேர்ந்திருக்கக் கண்டான். எனினும், தந்தையின் {தசரதனின்} வார்த்தைகளுக்கிணங்க செயல்படத் தீர்மானித்திருந்த ராமன், பரதனை திருப்பி அனுப்பினான். இப்படித் திரும்பிய பரதன், தன் அண்ணனின் {ராமனின்} மரக்காலணிகளைத் {பாதுகைகளைத்} தன் முன்பு வைத்து, நந்திகிராமத்தில் இருந்து ஆட்சி செய்தான்.
அயோத்தியின் மக்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள் என்ற அஞ்சிய அவன் {ராமன்}, சரபங்கர் ஆசிரமம் இருக்கும் பெருங்காட்டுக்குள் நுழைந்தான். சரபங்கருக்குத் தனது மரியாதைகளைச் செலுத்தி, தண்டகக் காட்டுக்குள் நுழைந்த அவன் {ராமன்}, அழகிய கோதாவரி ஆற்றங்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான். அங்கே வாழ்ந்து கொண்டிருந்த போது, சூர்ப்பனகையின் காரணமாக, ஜனஸ்தானத்தில் வசித்த கரனிடம் அவன் {ராமன்} பகைமை கொள்ள நேரிட்டது. துறவிகளைப் பாதுகாப்பதற்காக, அந்த ரகு குலத்தின் நல்லொழுக்கம் கொண்ட வழித்தோன்றல் {ராமன்}, பூமியில் இருந்த பதினாலாயிரம் ராட்சசர்களைக் கொன்றான். கரன், தூஷணன் என்ற பெரும்பலமிக்க ராட்சசர்களைக் கொன்ற, ஞானமிக்க ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, அந்தப் புனிதமான காட்டை மீண்டும் ஆபத்தற்றதாக்கினான்.
அந்த ராட்சசர்கள் கொல்லப்பட்ட பிறகு, மூக்கும், உதடுகளும் அறுபட்டிருந்த சூர்ப்பனகை, தனது அண்ணனின் {ராவணனின்} வசிப்பிடமான இலங்கைக்குச் சென்றாள். துன்பத்தால் உணர்வற்று, முகத்தில் காய்ந்த ரத்தக்கறையுடன் ராவணன் முன்பு சென்ற அந்த ராட்சசப் பெண் {சூர்ப்பனகை}, அவனது {ராவணனின்} காலில் விழுந்தாள். இப்படிக் கடும் சேதத்திற்குள்ளாகியிருக்கும் அவளை {சூர்ப்பனகையைக்} கண்ட ராவணன் கோபத்தால், பற்களைக் {நறநறவெனக்} கடித்து, தனது இருக்கையை விட்டு எழுந்தான். பிறகு தன் அமைச்சர்களை அனுப்பிவிட்டு, அவளிடம் {சூர்ப்பனகையிடம்} தனிமையில், “அருளப்பட்ட தங்கையே {சூர்ப்பனகையே}, என்னை மறந்து, என்னை அவமதிக்கும்படி, உனக்கு இப்படிச் செய்தவன் எவன்? கூரிய ஈட்டியைத் தனது உடலில் தேய்த்துக் கொள்பவன் எவன்? தலைக்கருகே நெருப்பை வைத்துவிட்டு, பாதுகாப்பாக உணர்ந்து மகிழ்ச்சியுடன் தூங்குபவன் எவன்? பழியுணர்வும் கடும்நஞ்சும் கொண்ட பாம்பை மிதித்தவன் எவன்? பிடரிமயிர் கொண்ட சிங்கத்தின் வாய்க்குள் கையைத் திணித்துக் கொண்டு நிற்பவன் உண்மையில் எந்த மனிதன்?” என்று கேட்டான்.
பிறகு, நெருப்பில் இருக்கும் மரங்களின் துவாரங்களில் இருந்து வெளிப்படும் சுடர்களைப் போல, அவனது உடலில் இருந்து கோபம் எனும் சுடர் வெடித்தது. அவனது தங்கை {சூர்ப்பனகை}, ராமனின் பராக்கிரமத்தைக் குறித்தும், கரன் மற்றும் தூஷணனைத் தலைமையாகக் கொண்ட ராட்சசர்களின் தோல்வி குறித்தும் சொன்னாள். தன் உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், விதியால் உந்தப்பட்டு, ராமனைக் கொல்வதற்காக மாரீசனை நினைவுகூர்ந்தான். தான் பின்பற்ற வேண்டிய வழியைத் {திட்டத்தைத்} தீர்மானித்து, தனது தலைநகரை ஆள ஏற்பாடுகள் செய்துவிட்டு, தன் தங்கைக்கு {சூர்ப்பனகைக்கு} ஆறுதலளித்து, ஒரு வான்வழிப் பயணத்தை மேற்கொண்டான். திரிகூடம் மற்றும் கால மலைகளைத் தாண்டிய அவன், மகரங்களின் வசிப்பிடமான ஆழம்நிறைந்த நீரின் அகன்ற கொள்கலனைக் {கடலைக்} கண்டான். பிறகு அந்தக் கடலைக் கடந்த பத்து தலை ராவணன், திரிசூலம் ஏந்திய சிறப்புமிக்கத் தேவனுக்கு {சிவனுக்குப்} பிடித்த ஓய்விடமான கோகர்ணத்தை அடைந்தான். அங்கே, ராமன் மீது கொண்ட பயத்தின் காரணமாகத் துறவு வாழ்வை மேற்கொண்டிருந்த தனது பழைய நண்பனான மாரீசனை ராவணன் கண்டான்.
சீதையைக் கடத்திய ராவணன்! – வனபர்வம் பகுதி 276-மாரீசன் ராவணனுக்குப் புத்தி சொல்வது; ராவணன் மாரீசனை மிரட்டுவது; மாரீசன் மானுரு கொண்டு சீதைக்கு ஆசை காட்டுவது; ராமன் மானைத் துரத்துவது; ராமனால் அடிக்கப்பட்ட மாரீசன் ராமனின் குரலில் கதறுவது; அச்சமுற்ற சீதை ராமனைத் தேடி லட்சுமணனைப் போகச் சொல்வது; போகாத லட்சுமணனை சீதை நிந்திப்பது; லட்சுமணன் சென்றதும் ராவணன் வந்து சீதையைத் தூக்கிச் செல்வது..
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ராவணன் வருவதைக் கண்ட மாரீசன் அவனை மரியாதையுடன் வரவேற்று, அவனுக்குப் பழங்களும் கிழங்குகளும் கொடுத்தான். ராவணன் இருக்கையில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்த பிறகு, பேச்சில் வல்லவனான மாரீசன், ராவணன் அருகில் அமர்ந்து, பேச்சில் சொல்திறனுடன் அவனிடம் {ராவணனிடம்}, “உன்னுடைய நிறம் இயற்கைக்கு மாறான சாயலைக் கொண்டிருக்கிறதே, ஓ! ராட்சச மன்னா {ராவணனா}, உன் நாட்டில் அனைத்தும் சரியாக இருக்கிறதா? எது உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது? உனது குடிமக்கள் முன்பு போலவே உன்னிடம் பற்றுறுதியுடன் இருக்கிறார்களா? என்ன காரியம் உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது? அது {அக்காரியம்} சாதிப்பதற்கு எவ்வளவு கடினமானதாக இருப்பினும் அதை நிறைவேறிவிட்டதாக அறி” என்றான்.
கோபத்தாலும் அவமானத்தாலும் கொந்தளித்த இதயம் கொண்ட ராவணன், ராமனின் செயல்களைக் குறித்தும், இனி செய்ய வேண்டியவை குறித்தும் அவனிடம் சுருக்கமாகச் சொன்னான். அவனது கதையைக் கேட்ட மாரீசன், “நீ ராமனைத் தூண்டக்கூடாது. நான் அவனது சக்தியை அறிவேன். அவனது கணைகளின் வேகத்தைத் தாங்கும் திறன்மிக்க மனிதன் எவன்? அந்தப் பெரும் மனிதனே {ராமனே}, எனது தற்போதைய துறவு வாழ்க்கைக்குக் காரணமானவன். உனக்குச் சிதைவையும், அழிவையும் தரும் இத்திட்டத்தைத் தீட்டிய தீய மனம் கொண்டவன் எவன்?” என்று சுருக்கமாகவே கேட்டான். அதற்கு ராவணன் கோபத்துடன் மறுமொழி கூறி, நிந்தித்து {மாரீசனிடம்}, “நீ எனது கட்டளைகளுக்குக் கீழ்படியவில்லையென்றால், நிச்சயம் என் கைகளால் இறப்பாய்” என்றான் {இராவணன்}.
பிறகு மாரீசன் {ராவணனிடம்}, “மரணம் தவிர்க்க முடியாதது எனும்போது, மேன்மையானவன் கையால் இறப்பதே சிறந்தது. எனவே, நான் இவன் கேட்டதைச் செய்வேன்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். பிறகு அவன் {மாரீசன்}, ராட்சசர்கள் தலைவனிடம் {ராவணனிடம்}, “என்னால் முடிந்த உதவியை நான் உனக்கு நிச்சயம் செய்வேன்” என்றான். பிறகு, அந்தப் பத்துத்தலை ராவணன் அவனிடம் {மாரீசனிடம்}, “தங்கக் கொம்புகளும், தங்கத் தோலும் கொண்ட அழகிய மானின் வடிவம் தாங்கிச்சென்று சீதைக்கு ஆசை காட்டு. அப்படி இருக்கும் உன்னைக் காணும் சீதை, உன்னை வேட்டையாட நிச்சயம் ராமனை அனுப்பிவிடுவாள். பிறகு சீதை எனது ஆளுகையின் கீழ் நிச்சயம் வருவாள். நான் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்வேன். பிறகு, தனது மனைவியின் இழப்பால் வருந்தும் தீய ராமன் நிச்சயம் இறப்பான். இவ்வழியில் நீ எனக்கு உதவி செய்!” என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட மாரீசன், (எதிர்நோக்கியிருக்கும்) தனது ஈமச்சடங்குகளை முடித்துக் கொண்டு {எள்ளும் தண்ணீரும் இறைத்துவிட்டு}, தனக்கு முன் சென்ற ராவணனைத் தொடர்ந்து சோகமான இதயத்துடன் சென்றான். பிறகு, கடும்சாதனைகள் செய்திருந்த ராமனின் ஆசிரமத்தை அடைந்து, இருவரும் முன்பே தீர்மானித்து வைத்திருந்தபடி செயல்பட்டனர். கமண்டலமும் திரிதண்டமும் தரித்த ராவணன், துறவியின் கோலத்தில் மழித்த {மொட்டைத்} தலையுடன் தோன்றினான். மாரீசன் மானின் வடிவம் கொண்டான். அந்தக் கோலத்தில் மாரீசன் விதேக இளவரசியின் {சீதையின்} முன் தோன்றினான். விதியால் உந்தப்பட்ட அவள், மானுக்குப் பின்னே ராமனை அனுப்பிவிட்டாள். அவளை மனநிறைவு கொள்ளச் செய்யும் நோக்கத்துடன், விரைவாகத் தனது வில்லை எடுத்துக் கொண்ட ராமன், அவளை {சீதையைப்} பாதுகாப்பதற்கு லட்சுமணனை விட்டுவிட்டு, மானைத் துரத்திச் சென்றான்.
வில், அம்பறாத்தூணி மற்றும் கூன்வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, உடும்புத் தோலாலான உறையை விரல்களுக்கு அணிந்த ராமன், நட்சத்திர மானைத் [1] தொடர்ந்த ருத்திரனைப் போல, அந்த மானைத் தொடர்ந்து சென்றான். ஒருநேரம் தோன்றுவதும், மறுநேரம் அவனது பார்வையில் இருந்து மறைவதுமாக, அந்த ராட்சசன், வெகுதூரத்திற்கு ராமனைக் கவர்ந்திழுத்துச் சென்றான். கடைசியில், ராட்சசனே மான் என்பதை ராமன் அறிந்த போது, ரகு குலத்தின் அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, தவறாத கணையொன்றை எடுத்து, மானின் உருவம் கொண்டு வந்த அந்த ராட்சசனைக் {மாரீசனைக்} கொன்றான். ராமனின் கணையால் அடிக்கப்பட்ட அந்த ராட்சசன் {மாரீசன்}, ராமனின் குரலைப் பிரதிபலித்து, பெருந்துக்கத்துடன் அழுது, சீதையையும், லட்சுமணனையும் அழைத்தான்.(தார்த மிருகம் – முன்பொரு சமயம், பிரஜாபதி, மானின் உருவம் கொண்டு காமத்தால் தனது மகளைத் தொடர்ந்தார். திரிசூலம் கொண்ட ருத்திரன், பிரஜாபதியைத் தொடர்ந்து சென்று, அவன் தலையை அடித்தான் {துண்டித்தான்}. பிரஜாபதியின் அந்த மான் தலை உடலில் இருந்து அறுக்கப்பட்டு, மிருகசீரிஷம் {மிருகத்தின் அறுக்கப்பட்ட தலை} என்றழைக்கப்படும் நட்சத்திரமாகவோ, விண்மீன்கூட்டமாகவோ மாறியது)
அந்தத் துன்பக் குரலை விதேக இளவரசி {சீதை} கேட்ட போது, அந்தக் குரல் வந்த பகுதியை நோக்கி லட்சுமணனை விரையச் சொல்லி வலியுறுத்தினாள். பிறகு, லட்சுமணன் அவளிடம் {சீதையிடம்}, “அச்சமுள்ள பெண்ணே, நீ அஞ்சக் காரணமேதுமில்லை. ராமனை அடிக்கும் அளவு சக்தியுள்ளவன் எவன்? ஓ! இனிய புன்னகை கொண்டவளே {சீதை}, ஒரு நொடியில் நீ உனது கணவனைக் காண்பாய்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய சீதை, பெண்களுக்கே இயற்கையான அச்சத்துடன், புனிதமான லட்சுமணன் மீது சந்தேகம் கொண்டு, உரக்க அழுத் தொடங்கினாள். பிறகு கணவனுக்கு {ராமனுக்குத்} தன்னை அர்ப்பணித்திருந்த அந்தக் கற்புடைய மங்கை {சீதை}, “ஓ! மூடனே {லட்சுமணா}, உனது இதயத்தில் நீ கொண்டிருக்கும் நோக்கம் எப்போதும் ஈடேறாது! ஆயுதம் கொண்டோ, மலைமேல் இருந்து குதித்தோ, சுடர்விட்டெரியும் நெருப்புக்குள் புகுந்தோ என்னை மாய்த்துக் கொள்வேனேயன்றி, என் கணவர் ராமரைப் புறக்கணித்து, நரியின் பாதுகாப்பில் இருக்கும் பெண்புலியைப் போல, உன்னைப் போன்ற இழிந்தவனுடன் நான் வாழ மாட்டேன்” என்று சொல்லி கடுமையாக ஏசினாள் {சீதை}.
தன் அண்ணனை மிகவும் விரும்புபவனும், நல்ல இயல்பு கொண்டவனுமான லட்சுமணன், இவ்வார்த்தைகளைக் கேட்டு, தனது காதுகளைப் (தன் கைகளால்) பொத்தி, ராமன் சென்ற பாதையில் சென்றான். கோவைப்பழம் {Bimba Fruit} போலச் சிவந்து மென்மையாக இருக்கும் உதடுகளைக் கொண்ட அந்த மங்கையை {சீதையை} ஒரு முறையும் {திரும்பிப்} பாராமல் லட்சுமணன் சென்றான். அதே வேளையில், இதயத்தில் தீமையுடன் இருந்தாலும், மரியாதையான தோற்றத்தை அணிந்திருந்த அந்த ராட்சசனான ராவணன், சாம்பற்குவியால் மூடப்பட்ட நெருப்பு போல இருந்து, தன்னை வெளிப்படுத்தினான். களங்கமற்ற குணம் கொண்ட அந்த மங்கையைப் {சீதையைப்} பலவந்தமாகத் தூக்கிச் செல்ல அவன் துறவியின் கோலத்தில் அங்கே தோன்றினான்.
அவன் {துறவியின் வேடத்திலிருந்த ராவணன்} வருவதைக் கண்ட நல்லொழுக்கம் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, கனிகளும், கிழங்கும், இருக்கையும் கொடுத்து அவனை {ராவணனை} வரவேற்றாள். இவற்றையெல்லாம் அலட்சியம் செய்து, தன் சுயஉருவம் கொண்ட அந்த ராட்சசர்களில் காளை {ராவணன்}, விதேக இளவரசியிடம் {சீதையிடம்}, “ஓ! சீதை, ராவணன் என்ற பெயரில் அறியப்படும் நான், ராட்சசர்களின் மன்னனாவேன். இலங்கை என்ற பெயரில் அறியப்படும் காண்பதற்கினிய என் நகரம், பெருங்கடலைத் தாண்டிய அக்கரையில் இருக்கிறது! அங்கே அழகிய பெண்களுக்கு மத்தியில் என்னுடன் நீ ஒளிர்வாய்! ஓ! அழகிய உதடுகள் கொண்ட மங்கையே {சீதையே}, துறவியான ராமனைப் புறக்கணித்து, என் மனைவியாவாயாக!” என்ற வார்த்தைகளைச் சொன்னான்.
இவற்றையும், இதே வகையான வேறு வார்த்தைகளையும் கேட்ட அழகிய உதடுகள் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, தனது காதுகளைப் பொத்திக் கொண்டு, அவனிடம் {ராவணனிடம்}, “அப்படிச் சொல்லாதே! நட்சத்திரங்களுடன் கூடிய வானம் இடிந்து விழலாம், இந்தப் பூமித் தூள் தூளாக உடைந்து போகலாம், நெருப்பும் தனது இயல்பை விட்டுக் குளுமையடையலாம், இருப்பினும் என்னால் ரகுவின் வழித்தோன்றலைக் {ராமரைக்} கைவிட முடியாது! யானைக்கூட்டத்தில், நெற்றிப்பொட்டில் {temple} மதம் பெருகும் தலைமை யானையுடன் வாழ்ந்த பெண் யானை எப்படி அதைக் கைவிட்டு காட்டுப்பன்றியுடன் {hog} வாழும்? தேன் அல்லது {இலுப்பை} மலர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிய மதுவை ஒரு முறையே சுவைத்த ஒரு பெண், அரிசியில் தயாரிக்கப்பட்ட இழிந்த சாராயத்தை எப்படி விரும்பி அருந்துவாள்?” என்றாள்.
இந்த வார்த்தைகளைச் சொன்ன அவள் {சீதை}, கோபத்தால் உதடுகள் நடுங்க, உணர்ச்சி வசப்பட்டதால் கரங்கள் இங்கும் அங்கும் ஆட, அந்தக் குடிசைக்குள் நுழைந்தாள். எனினும், அங்கே அவளைத் தொடர்ந்து சென்ற ராவணன், மேலும் முன்னேறுவதில் இருந்து அவளை {சீதையை} இடைமறித்தான். முரட்டுத்தனமாக அந்த ராட்சசனால் வசைபாடப்பட்ட அவள் {சீதை} மயக்கமடைந்தாள். ஆனால் ராவணன் அவளது தலை முடியைப் பற்றிக்கொண்டு காற்றில் எழும்பினான். பிறகு {பிரஸ்ரவணம் என்ற} மலைச்சிகரத்தில் வாழும் ஜடாயு என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய கழுகானவன், இப்படி ராவணனால் தூக்கிச் செல்லப்படும் போது, அழுது கொண்டும், பெருந்துயரத்துடன் ராமனை அழைத்துக்கொண்டுமிருந்த ஆதரவற்ற அந்த மங்கையை {சீதையைக்} கண்டான்.
கவந்தன் வதம்! – வனபர்வம் பகுதி 277-சீதையை ராவணன் கடத்திச் செல்வதைத்தடுத்துப் போராடிய ஜடாயு; ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்துவது; ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைக் காண்பது; ராவணன் சென்ற திக்கை ஜடாயு குறிப்பால் உணர்த்துவது; கவந்தனிடம் லட்சுமணன் சிக்குவது; கவந்தனின் இரு கைகளை ராமனும் லட்சுமணனும் வெட்டுவது; கவந்தன் ராமனை சக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சம்பாதியைத் தனது உடன்பிறந்த அண்ணனாகவும், அர்ஜுனனைத் {அருணனைத்} தனது தந்தையாகவும் கொண்ட வீரமிக்கக் கழுகு மன்னனான ஜடாயு, தசரதனின் நண்பனாவான். தனது {தன் நண்பனின்} மருமகளான சீதை, ராவணனின் மடியில் இருப்பதைக் கண்ட அந்த விண்ணதிகாரி, அந்த ராட்சச மன்னனை {ராவணனை} எதிர்த்துக் கோபத்துடன் விரைந்தான். அந்தக் கழுகானவன் {ஜடாயு} ராவணனிடம், “மிதிலை இளவரசியை {சீதையை} விடு, அவளை விடு என நான் சொல்கிறேன்! ஓ ராட்சசா, நான் உயிருடன் இருக்கும்போது நீ எப்படி அவளைக் கடத்த முடியும்? நீ எனது மருமகளை {சீதையை} விடவில்லையெனில், என்னிடம் இருந்து நீ உயிருடன் தப்ப மாட்டாய்!” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைச் சொன்ன ஜடாயு, தன் நகங்களைக் கொண்டு அந்த ராட்சச மன்னனைக் {ராவணனைக்} கிழிக்கத் தொடங்கினான். அவனது உடலின் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பகுதிகளில் தனது அலகாலும், சிறகுகளாலும் அடித்து, அவனைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்தான். மலையின் ஊற்றில் இருந்து நீர் வடிவது போல, ராவணனின் உடலில் இருந்து இரத்தம் திரளாகப் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.
ராமனுக்கு நன்மை செய்ய விரும்பிய கழுகால் {ஜடாயுவால்} இப்படித் தாக்கப்பட்ட ராவணன், தனது வாளை எடுத்து அந்தப் பறவையின் {ஜடாயுவின்} இரு சிறகுகளையும் அறுத்தெரிந்தான். மேகங்களுக்கு மேலே காட்சித் தரும் பெரும் மலைச்சிகரம் போல இருந்த அந்தக் கழுகு மன்னனைக் {ஜடாயுவைக்} கொன்ற அந்த ராட்சசன் {ராவணன்}, மடியில் சீதையை வைத்துக் கொண்டு காற்றில் உயர எழும்பினான். எங்கெல்லாம் துறவிகளின் ஆசிரமங்கள், தடாகம், ஆறு, குளம் எங்கெல்லாம் தென்பட்டனவோ, அங்கெல்லாம், அந்த விதேக நாட்டு இளவரசி {சீதை}, தனது ஆபரணங்களில் ஒன்றை வீசி எறிந்தாள். ஒரு மலையின் மேல் குரங்களில் முதன்மையான ஐந்து குரங்குகள் இருப்பதைக் கண்ட அந்தப் புத்திக்கூர்மை கொண்ட மங்கை {சீதை}, தன் விலையுயர்ந்த ஆடையில் இருந்து ஒரு பெரும் துண்டை அவர்களுக்கு மத்தியில் வீசி எறிந்தாள். மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த அழகிய துணித்துண்டு, அந்தக் குரங்குகளில் முதன்மையான ஐவர் மத்தியல், மேகத்தில் இருந்து வரும் மின்னல் போலக் காற்றில் படபடத்துக் கொண்டு வந்தது. அதற்குள் அந்த ராட்சசன் {ராவணன்}, காற்றில் {விரைவாகச்} செல்லும் பறவை போல, வானத்தில் வெகு தொலைவு கடந்து சென்றுவிட்டான். விரைவில் அந்த ராட்சசன் {ராவணன்}, உயர்ந்த சுவர்களைக் கொண்டு அனைத்துப் பக்கங்களில் சூழப்பட்டதும், பல வாயில்களைக் கொண்டதும், விஸ்வகிரீத்தால் {விஸ்வகர்மாவால்} கட்டப்பட்டதுமான காண்பதற்கினிய தனது அழகிய நகரத்தைக் கண்டான். பிறகு அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, இலங்கை என்று அழைக்கப்பட்ட தனது நகரத்திற்குள் சீதையுடன் நுழைந்தான்.
இப்படிச் சீதைக் கடத்திச் செல்லப்பட்ட வேளையில், அந்தப் பெரும் மானைக் {மானுருவில் இருந்த மாரீசனைக்} கொன்ற புத்திக்கூர்மை கொண்ட ராமன், திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, (வழியில்) தன் தம்பி லட்சுமணனைக் கண்டான். தன் தம்பியைக் {லட்சுமணனைக்} கண்ட ராமன், “ராட்சசர்கள் நடமாடும் ஒரு காட்டில், விதேக இளவரிசயை {சீதையை} விட்டு விட்டு, நீ எப்படி இங்கே வரலாம்? என்று சொல்லிக் கடிந்து கொண்டான். மான் தோற்றத்தில் வந்த ராட்சசன் தன்னை நெடுந்தூரம் இழுத்துச் சென்றதையும், (சீதையை ஆசிரமத்தில் தனியாக விட்டுவிட்டு வந்த) தன் தம்பியின் வருகையையும் நினைத்துப் பார்த்த ராமன், வேதனையால் நிரம்பினான். லட்சுமணனைக் கடிந்து கொண்டே, அவனை நோக்கி விரைவாக முன்னேறிய ராமன், “ஓ! லட்சுமணா, விதேக இளவரசி {சீதை} இன்னும் உயிருடன் இருக்கிறாளா? அவள் இனி இல்லை என நான் அஞ்சுகிறேன்!” என்றான்.
பிறகு லட்சுமணன் சீதை சொன்ன அனைத்தையும், குறிப்பாகத் தகாத இழிவான மொழிகளை அடுத்தடுத்துச் சொன்னான். எரியும் இதயத்துடன் ராமன் ஆசிரமத்தை நோக்கி ஓடினான். வழியில் மரண வேதனையில் பெரும் மலைபோல் கிடந்த ஒரு பெரிய கழுகைக் கண்டான். அவன் {ஜடாயு}, ஒரு ராட்சசனாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்த காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, பெரும் சக்தியுடன் தனது வில்லை வட்டமாக வளைத்து, தன் தம்பி லட்சுமணனுடன் அவனை {ஜடாயுவை} நோக்கி விரைந்தான். எனினும் அந்தப் பெருங்கழுகானவன் {ஜடாயு}, அந்த இருவரிடமும், “அருளப்பட்டிருப்பீர்கள், நான் கழுகுகளின் மன்னனும், தசரதனின் நண்பனுமாவேன்” என்றான். அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமன் மற்றும் அவனது தம்பி ஆகிய இருவரும் தங்கள் அற்புதமான வில்லை ஒதுக்கி வைத்துவிட்டு, “நம் தந்தையின் பேரை இக்கானகத்தில் சொல்லும் இவன் யார்?” என்றனர்.
பிறகு அவர்கள் அந்த உயிரினத்தை {ஜடாயு என்ற கழுகை}, இரண்டு சிறகுகளும் அற்ற பறவை எனக் கண்டார்கள். அந்தப் பறவையானவன் {ஜடாயு}, சீதைக்காக {போராடி}, ராவணன் கையால் தான் வீழ்ந்ததைச் சொன்னான். பிறகு ராவணன் போன வழியைக் குறித்து ராமன் அந்தக் கழுகிடம் {ஜடாயுவிடம்} விசாரித்தான். அக்கழுகானவன் {ஜடாயு} தனது தலையசைவின் மூலம் பதிலளித்துத் தனது கடைசி மூச்சை விட்டான். ராவணன் தென் திசையில் சென்றான் என்ற அந்தக் கழுகின் குறிப்பைப் புரிந்த கொண்ட ராமன், தன் தந்தையின் நண்பருக்கு {ஜடாயுவிற்கு} அஞ்சலி செலுத்தி, அவனது {ஜடாயுவின்} ஈமச் சடங்குகளை முறைப்படிச் செய்தான்.
பிறகு எதிரிகளைத் தண்டிப்பவர்களான ராமனும் லட்சுமணனும், விதேக இளவரசி {சீதை} கடத்தப்பட்டதால் பெருந்துக்கத்தில் மூழ்கி, தண்டக வனம் செல்லும் தென் பாதையில் பயணித்தனர். அப்படி அவர்கள் போகும் வழியில், தர்ப்பை ஆசனங்கள் சிதறி, நீர்க்குடங்கள் உடைந்து, இலைகளைக் குடைகளாகக் கொண்டிருந்த துறவிகளின் பல ஆசிரமங்கள் ஆளற்று இருப்பதையும், நூற்றுக்கணக்கான நரிகள் அங்கு நிறைந்திருப்பதையும் கண்டனர். சுமித்திரையின் மகனுடன் {லட்சுமணனுடன்} சென்ற ராமன், அந்தப் பெரும் கானகத்தில், அனைத்துத் திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் மான்கூட்டங்களைக் கண்டான். விரைவாகப் பரவும் கானக நெருப்பின் போது {காடு எரியும்போது} கேட்கப்படும் ஒலியைப் போலப் பல்வேறு உயிரினங்களின் ஒலியைக் கேட்டான். விரைவில் அவர்கள் கொடூரமான முகத்தோற்றம் கொண்ட தலையில்லாத ராட்சசன் ஒருவனைக் கண்டனர். மேங்களைப் போலக் கருமையாகவும், மலையைப் போலப் பெரிதாகவும் இருந்த அந்த ராட்சன் சால {ஆச்சா} மரத்தைப் போல அகன்ற தோள்களும், பெரும் கரங்களையும் கொண்டிருந்தான். அவனது மார்பில் இரண்டு பெரிய கண்கள் இருந்தன. வாயின் திறப்பு அவனது அகன்ற தொந்தியில் இருந்தது.
அந்த ராட்சசன் {கவந்தன்} தன் கரம் கொண்டு லட்சுமணனை எந்தச் சிரமமும் இல்லாமல் {எளிதாகப்} பிடித்தான். ராட்சசனால் பிடிக்கப்பட்ட அந்தச் சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, முற்றிலும் குழம்பிப் போய் ஆதரவற்றவனானான். ராமனை நோக்கித் தன் பார்வையைச் செலுத்திய அந்தத் தலையில்லாத ராட்சசன் {கவந்தன்}, தன் உடலில் வாயிருக்கும் பகுதியை நோக்கி லட்சுமணனை இழுக்க ஆரம்பித்தான். அப்போது லட்சுமணன் துயரத்துடன் ராமனிடம், “என் அவலநிலையைப் பாரும்! உமது நாட்டை இழந்தீர், பிறகு நமது தந்தை இறந்தார், சீதை அபகரிக்கப்படாள், இறுதியாக இந்தப் பேரழிவு என்னை அடைந்திருக்கிறது! ஐயோ, விதேக இளவரசியுடன் {சீதையுடன்} கோசலத்துக்கு நீர் திரும்புவதையும், மூதாதையர் வழி வந்த அரியணையில் அமர்ந்து நீர் முழு உலகையும் ஆளப்போவதையும் என்னால் காண முடியாதே! தர்ப்பைப் புற்களாலும், நெற்பொரிகளாலும் {fried paddy}, கருப்புப் பட்டாணிகளாலும் {வன்னித்துளிர்களாலும்} சுத்தப்படுத்தப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்ட நீரில் பட்டமேற்புக்கான குளியலை முடித்து, மேகங்களில் இருந்து வெளிப்படும் சந்திரனைப் போல இருக்கும் உமது முகத்தை, பேறுபெற்றவர்களால்தானே காணமுடியும்!” என்றான் [1]. புத்திகூர்மை கொண்ட லட்சுமணன் இதையும், இதுபோன்ற வார்த்தைகளையும் இதே போன்ற தொனியில் சொல்லிப் புலம்பினான்.
அவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே,
‘வெவ்வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய்,
வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்;
செய்வது என் இவண்?’ என, செம்மல் சொல்லுவான்:
தோகையும் பிரிந்தனள்; எந்தை துஞ்சினன்;
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்;
ஆகலின், யான், இனி, இதனுக்கு ஆமிடம்;
ஏகுதி ஈண்டுநின்று, இளவலே!’ என்றான்.–கம்பனின் ராமகாதையில், ராமன் புலம்புவதாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த அழகிய வரிகள்.
எனினும் காகுஸ்த குலத்தைச் சேர்ந்த அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, ஆபத்துக்கு மத்தியில் அச்சமற்றவனாக இருந்து, லட்சுமணனிடம், “ஓ! மனிதர்களில் புலியே {லட்சுமணா}, துயருக்கு வழி கொடுக்காதே! நான் இங்கு இருக்கும்போது உன்னை இது {இந்த அசுரன்} என்ன செய்யும்? இவனது வலக்கரத்தை நீ வெட்டு, நான் இவனது இடக்கரத்தை வெட்டுகிறேன்” என்றான். ராமன் இப்படிப் பேசிக் கொண்டே, அந்த அரக்கனின் இடக்கரத்தை, கூர்மையான தனது கூன்வாள் கொண்டு, எள்ளுக்கட்டைக் வெட்டுவதுபோல வெட்டினான். தன் அண்ணன் தன் முன் நிற்பதைக் கண்ட சுமித்திரையின் பலம் பொருந்திய மகன் {லட்சுமணன்}, தன் வாளைக் கொண்டு, அந்த ராட்சசனின் வலக்கரத்தையும் துண்டித்தான். பிறகு அந்த லட்சுமணன், அந்த ராட்சசனை விலாப்புறத்தில் தொடர்ந்து அடிக்கவும் ஆரம்பித்தான். பிறகு தலையில்லாத அந்தப் பெரும் அரக்கன் தரையில் விழுந்து விரைவாக அழிந்தான்.
அப்போது அங்கே அந்த ராட்சசன் உடலில் இருந்து ஒரு தெய்வீக மனிதன் வெளிப்பட்டான். அவன் ஒரு நொடி வானத்தில் நின்று, ஆகாயத்தில் இருக்கும் ஒளி பொருந்திய சூரியனைப் போல அந்தச் சகோதரர்களுக்குக் காட்சியளித்தான். பேச்சில் வல்லவனான ராமன், அவனிடம், “நீ யார்? உன்னை விசாரிக்கும் எனக்குப் பதில் சொல்? எப்படி இது போன்ற ஒன்று நடக்கக்கூடும்? அனைத்தும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றன!” என்றான். ராமனால் இப்படிக்கேட்கப்பட்ட அவன் {ராட்சசன்}, “ஓ! இளவரசே {ராமா}, நான் விசுவாவசு என்ற பெயர் கொண்ட கந்தர்வனாவேன். ஒரு அந்தணரின் சாபத்தால் நான் ராட்சசனின் உருவத்தையும் இயல்பையும் அடைந்தேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ! ராமா, இலங்கையில் வசிக்கும் மன்னன் ராவணனால் சீதை பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டாள். உனக்குத் தனது நட்பைத் தரும் சுக்ரீவனிடம் செல். ரிஷ்யமூகச் சிகரத்திற்கு மிக அருகே புனிதமான நீரும், கொக்குகளும் நிறைந்த பம்பை என்ற பெயர் கொண்ட ஒரு தடாகம் இருக்கிறது. அங்கே பொன் மாலைத் தரித்த குரங்கு மன்னன் வாலியின் தம்பியான சுக்ரீவன், தனது நான்கு ஆலோசகர்களுடன் வசித்து வருகிறான். அவனிடம் சென்று உனது துயரத்தைச் சொல். உன்னைப் போலவே அவல நிலையில் இருக்கும் அவன், தனது உதவியை உனக்கு அளிப்பான். இதைத்தான் {இவ்வளவுமட்டும்தான்} நாம் சொல்ல முடியும். சந்தேகமற நீ ஜனகனின் மகளைக் {சீதையைக்} காண்பாய்! ராவணனையும், பிறரையும் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்} அறிந்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை!” என்றான் [2]. இந்த வார்த்தைகளைக் சொன்ன அந்தப் பெரும் ஒளி கொண்ட தெய்வீகமனிதன் தன்னைப் பார்வையில் இருந்து மறைத்துக் கொண்டான். ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய அந்த இரு வீரர்களும் இதனால் {இக்காட்சியினால்} மிகவும் ஆச்சரியப்பட்டனர்.
கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது’ என்றான்,–அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார்.–கவந்தன் ராமனை சுக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது :கம்பனின் மொழியில்
ராமனும், சீதையும் கொண்ட நட்பு! – வனபர்வம் பகுதி 278-சுக்ரீவனோடு நட்பு கொண்ட ராமன் வாலியைக் கொன்றது; கிஷ்கிந்தையில் ராமன் நான்கு மாதங்கள் இருந்தது; அசோகவனத்தில் ராட்சசிகள் பாதுகாப்புடன் சீதையை வைத்த ராவணன்; திரிஜடை சீதையைத் தோழி என்று அழைத்தது; அவிந்தியன் சொன்னது; சீதைக்குத் திரிஜடை நம்பிக்கையூட்டியது..
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சீதை கடத்தப்பட்ட துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த ராமன், பல்வேறு வகையான தாமரைகள் நிறைந்திருந்த பம்பை என்ற தடாகத்தை வெகு தூரம் செல்வதற்கு முன்னரே அடைந்தான். காட்டிலிருந்து வீசிய இனிய, நறுமணமிக்க, குளிர்ந்த காற்றால், திடீரென ராமன் தனது அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைவுகூர்ந்தான். ஓ! பலமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, தன் அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைத்துப் பார்த்த அவன் {ராமன்}, அவளது பிரிவின் நினைவால் மிகவும் துன்பப்பட்டுப் புலம்பி அழுதான். பிறகு சுமித்திரையின் மகன் {லட்சுமணன்} அவனிடம் {ராமனிடம்}, “ஓ! தகுந்தவர்களுக்கு முறையான மரியாதையளிப்பவரே, முறையான வாழ்வு வாழும் முதிர்ந்த மனிதனை நோய் அண்டுவதில்லை. எனவே, இது போன்ற {நோய் போன்ற} மனத்தளர்ச்சி உம்மை அண்டுவதற்கு விடாதீர். ராவணன் குறித்தும், விதேக இளவரசி {வைதேகி, சீதை} குறித்தும் நீர் தகவலைப் பெற்றீர்! இனி உமது முயற்சியாலும், புத்திக்கூர்மையாலும் அவளை விடுவியும்! இப்போது, நாம் மலையின் மேல் இருக்கும் குரங்குகளில் முதன்மையான சுக்ரீவனை அணுகலாம்! உமது சீடனும், அடிமையும், கூட்டாளியுமான நான் உம் அருகில் இருக்கிறேன் {என்பதை மறவாதீர்}. எனவே உம்மை ஆறுதல் படுத்திக் கொள்ளும்” என்றான் {லட்சுமணன்}.
லட்சுமணனால் சொல்லப்பட்ட இவையும், இவைபோன்ற வேறு வார்த்தைகளையும் கேட்ட ராமன் தனது இயற்கையான தன்மையை {இயல்பை} அடைந்து, காரியத்தைச் செய்யத் தொடங்கினான். பம்பையின் நீரில் குளித்து, தன் முன்னோர்களுக்கு நீர்க்காணிக்கைகள் செலுத்திய ராமன், லட்சுமணன் ஆகிய அந்த இரு வீரச் சகோதரர்களும் (ரிஷ்யமுகத்திற்கு) கிளம்பினார்கள். கனிகளும், கிழங்குகளும், மரங்களும் நிறைந்த ரிஷ்யமுகத்தை அடந்தை அந்த வீரர்கள், மலைச் சிகரத்தின் மேலே ஐந்து குரங்குகளைக் காண்டார்கள். அவர்கள் {அந்தச் சகோதரர்கள்} தங்களை அணுகுவதைக் கண்ட சுக்ரீவன், இமய மலை போன்ற பெரிய உருவம் படைத்த தனது ஆலோசகனான {அமைச்சனான} புத்திக்கூர்மை கொண்ட ஹனுமானை அவர்களை வரவேற்க அனுப்பினான். முதலில் ஹனுமானிடம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட அச்சகோதரர்கள், {பின்பு} சுக்ரீவனை அணுகினார்கள். பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராமன் சுக்ரீவனைத் தனது நண்பனாக்கிக் கொண்டான். ராமன் தன் மனதில் இருந்த நோக்கத்தைச் சுக்ரீவனிடம் சொன்ன போது, ராவணனால் தூக்கிச் சொல்லப்படுகையில், குரங்குகளுக்கு மத்தியில் சீதை வீசிய துணித்துண்டை சுக்ரீவன் அவனுக்குக் {ராமனுக்குக்} காட்டினான். அந்தச் சான்றுகளை அவனிடம் {சுக்ரீவனிடம்} இருந்து பெற்றுக் கொண்ட ராமன், பூமியில் உள்ள குரங்குகளுக்கு மன்னனாகச் சுக்ரீவனை நிறுவினான். மேலும் ராமன் போரில் வாலியைக் கொல்வதெனப் பற்றுறுதியை ஏற்றுக்கொண்டான்.
பிறகு ஒரு புரிதலை அடைந்து, ஒருவருக்கொருவர் முழு நம்பிக்கைவைத்த அவர்கள் அனைவரும் (வாலியுடன்) போரிட விரும்பி கிஷ்கிந்தைக்குச் சென்றார்கள். கிஷ்கிந்தையை அடைந்ததும், சுக்ரீவன், மலைவீழாறு போல ஆழ்ந்த கர்ஜனையை உரக்க எழுப்பினான். இந்த அறைகூவலைத் தாங்கிக் கொள்ளாத வாலி, வெளியே வந்தான். (ஆனால் அவனது மனைவி) தாரை அவனது வழியில் நின்று, “பெரும்பலத்தோடு கூடி சுக்ரீவர் கர்ஜிக்கும் முறை, அவர் ஏதோ துணையை அடைந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என நான் கருதுகிறேன். எனவே நீர் வெளியே செல்வது தகாது!” என்றாள். அவளால் {தாரையால்} இப்படிச் சொல்லப்பட்ட குரங்குகள் மன்னனும், தங்க மாலை அணிந்திருந்தவனும், நாநயமிக்கவனுமான வாலி, நிலவு போன்ற அழகு முகம் கொண்ட தாரையிடம், “அனைத்து உயிரினங்களின் குரலையும் நீ புரிந்து கொள்கிறாய். {எனவே}, பெயரளவுக்கே எனது தம்பியான இவன் {சுக்ரீவன்}, யாருடைய உதவியைப் பெற்றிருக்கிறான் என்பதைச் சிந்தித்துச் சொல்!” என்றான்.
அவனால் {வாலியால்} இப்படிச் சொல்லப்பட்டவளும், சந்திரனின் பிரகாசத்தைக் கொண்டவளும், ஞானமுள்ளவளுமான தாரை, ஒரு நொடியே சிந்தித்த பிறகு தனது தலைவனிடம் {வாலியிடம்}, “ஓ! குரங்குகளின் ஏகாதிபதியே, கேளும்! வில்லாளிகளில் முதன்மையானவனும், பெரும் வலிமை படைத்தவனும், தன் மனைவியை இழந்தவனும், தசரதன் மைந்தனுமான ராமன், தாக்குதலுக்காவும், தற்காப்புக்காகவும் சுக்ரீவருடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறான். சுக்ரீவரின் நோக்கம் வெல்வதற்காகச் சுமித்திரையின் வீழ்த்தப்பட முடியாத மகனும், வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனுமான லட்சுமணனும் அவன் {ராமன்} அருகில் நிற்கிறான். மயிந்தன் {Maind}, திவிவிதன் {Dwivida}, பவனனின் மகனான ஹனுமான் {ஹனுமான்} மற்றும் கரடி மன்னனான ஜாம்பவான் (Jamvuman} ஆகியோர் சுக்ரீவரின் அருகில் ஆலோசகர்களாக {அமைச்சர்களாக} இருக்கிறார்கள். இந்தச் சிறப்புமிக்கவர்கள் அனைவரும், பெரும் பலமும், புத்திக்கூர்மையும் கொண்டவர்களாவர். இவர்கள் அனைவரும் ராமனின் வலிமையையும் சக்தியையும் நம்பி, உம்மை அழிக்கத் தயாராக இருக்கின்றனர்!” என்றாள் {தாரை}.
தன் நன்மைக்காகச் சொல்லப்பட்ட அவளது {தாரையின்} வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரங்குகளின் மன்னன் {வாலி}, அவை அனைத்தையும் மொத்தமாக அலட்சியப்படுத்தினான். பிறகு பொறாமையால் நிறைந்த அவன், சுக்ரீவன் மீது அவள் {தாரை} இதயத்தை நிலைக்க வைத்திருக்கிறாள் எனச் சந்தேகப்பட்டான்! பிறகு தாரையிடம் கடும் வார்த்தைகள் பேசிவிட்டு, குகையை விட்டு வெளியேறி, மால்யவாத மலைகளின் {Malyavat} அருகில் நின்று கொண்டிருந்த சுக்ரீவனின் முன்பு வந்து, “முன்பு என்னால் அடிக்கடி வீழ்த்தப்பட்ட நீ, உனது உயிரை விரும்பியதால், என்னுடன் நீ கொண்ட உறவு முறைக்காக, {உயிருடன்} தப்பிச் செல்ல என்னால் அனுமதிக்கப்பட்டாய். இவ்வளவு விரைவாக உன்னை மரணத்தை விரும்ப வைத்தது எது?” என்று கேட்டான்.
வாலியால் இப்படிச் கேட்கப்பட்ட எதிரிகளைக் கொல்பவனான சுக்ரீவன், என்ன நடந்தது என்பதை ராமனுக்குச் சொல்வது போல, தன் அண்ணனிடம் {வாலியிடம்} “ஓ! மன்னா, உன்னால் மனைவியையும், நாட்டையும் இழந்த நான், உயிர் வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது? அதற்காகவே {மனைவிக்காகவும், நாட்டுக்காகவுமே} நான் வந்திருக்கிறேன் என்பதை அறி!” என்ற சிந்தனைக்குரிய வார்த்தைகளைப் பேசினான். பிறகு, இது போலவும், வேறு வார்த்தைகளாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட வாலியும், சுக்ரீவனும் மோதலுக்கு விரைந்தனர். பிறகு அவர்கள் ஆச்சா மரங்கள், பனை மரங்கள் மற்றும் கற்களைக் கொண்டு போரிட்டுக் கொண்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பூமியில் அடித்துக் கீழே வீழ்த்தினர். காற்றில் உயர குதித்த அவர்கள், தங்கள் கை முட்டிகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். தங்கள் நகங்களையும் பற்களையும் கொண்டு ஒருவரையொருவர் சிதைத்துக் கிழித்தனர். அவர்கள் இருவரும் ரத்ததால் மூடப்பட்டிருந்தனர் {ரத்தத்தில் நனைந்தனர்}.
அவர்கள் இருவரும் பூத்திருக்கிற புரசமரம் {Kinshuka} போல அப்போது விளங்கினார்கள். அவர்கள் அப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது (தோற்றத்தில்) அவர்களிடையே ஒரு வேற்றுமையும் காணப்படவில்லை. பிறகு ஹனுமான், சுக்ரீவனின் கழுத்தில் மலர்களால் ஆன மாலையை அணிவித்தான். பிறகு அந்த வீரன் {சுக்ரீவன்}, வரிசையான மேகங்களுடன் கூடிய மால்யா {மால்யாவாதம்} எனும் பெரும் சிகரத்தைப் போல அழகாக, கழுத்திலிருந்த அந்த {மலர்} மாலையால் ஒளிர்ந்தான். அந்தக் குறிப்பால் சுக்ரீவனை அடையாளம் கண்ட ராமன், விற்களில் முதன்மையான தனது பெரும் வில்லை எடுத்து, தனது இலக்காக வாலியைக் குறிவைத்தான். ராமனின் வில்லில் இருந்து புறப்பட்ட அந்த நாணொலி, பொறியைப் {இயந்திரத்தைப்} போல ஒலி பெருக்கியது. அக்கணையால் மார்பில் துளைக்கப்பட்ட வாலி, அச்சத்தில் நடுங்கினான். இதயம் துளைக்கப்பட்ட வாலி ரத்தம் கக்க ஆரம்பித்தான். பிறகு தன் முன் நின்ற ராமனையும், அவன் {ராமனின்} அருகில் நின்ற சுமித்திரையின் மகனையும் {லட்சுமணனையும்} கண்டான். காகுஸ்த குலத்தவனை {ராமனை} ஏசிய வாலி தரையில் விழுந்து உணர்வற்றவன் ஆனான். சந்திரனைப் போன்ற பிரகாசமுடைய தனது தலைவன் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைத் தாரைக் கண்டாள். இப்படி வாலி கொல்லப்பட்ட பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையையும், அதனுடன் சேர்த்து அழகிய நிலவு போன்ற முகம் கொண்ட தாரையையும் மீண்டும் அடைந்தான். பிறகு மால்யவாதமலையின் அழகிய மார்பில் நான்கு மாதங்கள் வசித்த புத்திக்கூர்மை கொண்ட ராமன், சுக்ரீவனால் எப்போதும் சரியான முறையில் வழிபடப்பட்டான்.
அதே வேளையில், காமத்தால் உந்தப்பட்ட ராவணன், தனது நகரான இலங்கையை அடைந்ததும், அசோகங்களின் {அசோகர மரங்கள் நிறைந்த} காட்டில், நந்தனத்தை ஒத்திருக்கும் வசிப்பிடத்தில், துறவிகளின் ஆசிரமம் போல இருக்கும் ஒரு ஆசிரமத்தில் சீதையை அமர்த்தினான். அகன்ற கண்கள் கொண்ட சீதை, கனிகளையும், கிழங்குகளையும் கொண்டு வாழ்ந்து, துறவியின் ஆடை (குறிப்பிட்ட வகை ஆடை) உடுத்தி, உண்ணா நோன்புகளுடன் கூடிய தவங்களைப் பயின்று, தனது கணவனின் பிரிவை எண்ணி நாளுக்கு நாள் மெலிந்து, தனது நாட்களைத் துன்பகரமாகக் கழித்தாள். ராட்சசர்களின் மன்னன் {ராவணன்}, சீதைக்குப் பாதுகாவலாகப் பராசங்களையும், வாள்களையும், சூலங்களையும், போர்க்கோடரிகளையும், தண்டாயுதங்களையும், எரிகொள்ளிகளையும் தாங்கிய பல ராட்சசிகளை நியமித்தான். அவர்களில் சிலர் இரண்டு கண்களுடனும், சிலர் மூன்றுடனும் இருந்தனர். சிலருக்கு நெற்றியில் கண்கள் இருந்தன. சிலருக்கு நீளமான நாக்கும், சிலருக்கு நாக்கு இல்லாமலும் இருந்தது. சிலருக்கு மூன்று கொங்கைகளும், சிலருக்கு ஒரே காலும் இருந்தன. சிலருக்குத் தலையில் மூன்று சடைகள் இருந்தன. சிலர் ஒரே கண்ணைக் கொண்டிருந்தனர். இவர்களும், சுடர்மிகும் கண்கள் கொண்ட பிறரும், ஒட்டகத்தின் முடி போல மேல்நோக்கிய முடி கொண்டவர்களும், சீதையின் அருகில் நின்று கொண்டு, இரவும் பகலும் கவனமாக அவளைச் சூழ்ந்திருந்தனர். பயங்கரக் குரலும் கொடூரத் தன்மையும் கொண்ட அந்தப் பெண்பிசாசங்கள், அந்த அகன்ற கண் கொண்ட மங்கையிடம் {சீதையிடம்} கடுமையான தொனியிலேயே பேசினார்கள். அவர்கள் {அந்தப் பிசாசுகள்}, “நமது தலைவனை அவமதித்து இங்கே வசிக்கும் இவளைத் தின்றுவிடுவோம், இவளைச் சிதைப்போம், இவளைத் துண்டு துண்டாகக் கிழிப்போம்” என்றனர்.
தன் தலைவனின் பிரிவால் துன்பம் நிறைந்த சீதை ஆழமான பெருமூச்சுவிட்டு, அந்த ராட்சசிகளிடம், “மரியாதைக்குரிய மங்கையரே {ராட்சசிகளே}, தாமதமில்லாமல் என்னை உண்ணுங்கள்! நீலநிறத்தவரும், அலைபாயும் கூந்தல் கொண்டவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்கள் கொண்டவருமான எனது கணவர் {ராமர்} இல்லாது நான் வாழ விரும்பவில்லை! உணவருந்தாமல், உயிர்மேல் கிஞ்சிற்றும் ஆசையில்லாமல், வேல மரத்திற்குள்ளிருக்கும் பெண் பாம்பு (ஒடுங்கி) {பனிக்ககாலத்தில் ஓய்வெடுக்கப் பாம்பு மரப்பொந்துக்குள் உறங்குதல்} போல இருந்து, என் அங்கங்களை மெலியச் செய்வேன். ரகு குல வழித்தோன்றலைத் {ராமரைத்} தவிர நான் வேறு எந்த மனிதனின் பாதுகாப்பையும் எப்போதும் நாடமாட்டேன் என்பது அறியுங்கள். இது நிச்சயம். இதை அறிந்த பிறகு, தகுந்ததென்று நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள்!” என்றாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட கரடுமுரடான குரல் கொண்ட அந்த ராட்சசிகள் ராட்சசர்களின் மன்னனிடம் {ராவணனிடம்} சென்று அவள் {சீதை} சொன்னது அனைத்தையும் சொன்னார்கள்.
இப்படி அந்த ராட்சசிகளை அனைவரும் சென்ற பிறகு, அவர்களில் {ராட்சசிகளில்} ஒருத்தியும், அறம்சார்ந்த, ஏற்புடைய பேச்சு கொண்டவளும், திரிஜடை என்ற பெயரால் அறியப்படுபவளுமான ராட்சசி, விதேக இளவரசிக்கு {சீதைக்கு} ஆறுதல் கூறத் தொடங்கினாள். அவள் {திரிஜடை}, “ஓ! சீதையே கேள்! நான் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன்! ஓ தோழி, நான்சொல்வதை நம்பு! ஓ! அழகிய இடை கொண்டவளே, உனது அச்சத்தை விலக்கி, நான் சொல்வதைக் கேள். புத்திக்கூர்மை கொண்டவனும், ராட்சசர்களின் முதிய தலைவனுமான ஒருவன் அவிந்தியன் என்ற பெயரில் அறியப்படுகிறான். அவன் {அவிந்தியன்}, ராமனின் நலத்தை எப்போதும் நாடுபவனாவான். அவன் {அவிந்தியன்}, உனக்காக என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.
{அவிந்தியன்} “என் பெயரைச் சொல்லி சீதைக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டி, நான் சொன்னதாக, “உனது கணவனான வலிமைமிக்க ராமன் நன்றாக இருக்கிறான். அவனை லட்சுமணன் காக்கிறான். ரகுவின் அருளப்பட்ட அந்த வழித்தோன்றல் {ராமன்} ஏற்கனவே குரங்குகள் மன்னன் சுக்ரீவனின் நட்பைப் பெற்று, உனக்காகச் செயல்படத் தயாராக இருக்கிறான். மேலும், ஓ! அச்சம் கொண்ட மங்கையே, முழு உலகும் நிந்திக்கும் ராவணனைக் கண்டு அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதே. ஓ! மகளே, அவன் {ராவணன்} நளகூபரனிடம் {நளகுபேரனிடம்} பெற்ற சாபத்தின் காரணமாக நீ பாதுகாப்பாகவே இருப்பாய். உண்மையில், இந்தப் பாவி {ராவணன்}, தனது மருமகளான ரம்பையைக் களங்கப்படுத்தியதால் முன்பே சபிக்கப்பட்டிருக்கிறான். இந்தக் காமாந்தகப்பாவி {ராவணன்}, எந்தப் பெண்ணையும் பலவந்தமாக அடைவதற்கு சக்தியுடையவனல்ல. சுக்ரீவனால் பாதுகாக்கப்பட்டு, புத்திக்கூர்மையுள்ள சுமித்திரையின் மகனால் {லட்சுமணனால்} பின்தொடரப்பட்டு விரைவாக வரும் உனது கணவன் {ராமன்}, உன்னை மிக விரைவில் மீட்டுச் செல்வான் என்று சொல்” என்றான் {அவிந்தியன்}.
ஓ! மங்கையே {சீதையே}, தீய சகுனமாக, புலஸ்திய குலத்தின் தீய மனம் கொண்ட பாவியின் அழிவைக் குறிக்கும் மிகப் பயங்கரக் கனவொன்றை நான் {திரிஜடை} கண்டேன். இழிந்த செயல்கள் புரியும் இரவு உலாவியான இவன், உண்மையில் மிகத் தீயவனும் கொடூரனுமாவான். தனது இயல்பின் குறைபாடுகளால் அவன் {ராவணன்} தீய நடத்தையையும், பயங்கரங்களையும் மேற்கொள்கிறான். விதியால் தனது அறிவை இழந்த அவன் {ராவணன்}, தேவர்களுக்கே அறைகூவல் விடுகிறான். அவனது வீழ்ச்சியைக் குறிக்கும் அனைத்து குறியீடுகளையும் நான் எனது பார்வையில் {அந்தக் கனவில்} கண்டேன். தலைகள் மழிக்கப்பட்ட அந்தப் பத்துத் தலையன் {the Ten-headed} {தசக்ரீவன்}, உடலெங்கும் எண்ணெய் பூசி, சகதியில் மூழ்கினான். அடுத்த நொடியில் கழுதைகளால் இழுக்கப்பட்ட வாகனத்தில் கூத்தாடினான். முழுவதும் நிர்வாணமாக, தலை மழிக்கப்பட்டவர்களாக, சிவப்பு மலர்மாலைகள் தரித்து, களிம்பு சிவப்பு மேற்பூச்சு} பூசியிருந்த கும்பகர்ணனும், மற்றவர்களும், தென்திசை நோக்கி ஓடினார்கள்.
தலைக்கு மேல் குடையுடனும் தலைப்பாகை அணிந்து, வெண்மாலைகள் தரித்து, களிம்பு {வெண்சந்தனம்} அணிந்திருந்த விபீஷணன் மட்டுமே, வெண்மலையின் உச்சியில் ஏறியதை நான் கண்டேன். வெண்மாலைகள் தரித்து, களிம்பு {வெண்சந்தனம்} அணிந்திருந்த அவனது நான்கு ஆலோசகர்களும் {அமைச்சர்களும்} அவனுடன் உச்சிக்கு ஏறுவதையும் நான் கண்டேன். எதிர்வரும் பயங்கரத்தில் இவர்கள் மட்டுமே காக்கப்படுவார்கள் என்பதையே இது குறிக்கிறது. ராமனின் கணைகளால், இந்தக் கடல் சூழ்ந்த பூமி மறைக்கப்படுப்போகிறது. ஓ! மங்கையே, உனது கணவன் {ராமன்}, தனது புகழால் இந்த முழு உலகையும் நிறைப்பான். (தனது கணைகளால்), லட்சுமணன் அனைத்துப் புறங்களையும் எரிப்பதையும், எலும்புக்குவியல் மீது ஏறி தேனும், கண்ணமுதும் பருகுவதையும் கண்டேன். ஓ! மங்கையே, அழுது கொண்டு, இரத்தத்தால் நனைந்து, ஒரு புலியால் பாதுகாக்கப்பட்ட நீ, வடதிசை நோக்கி ஓடுவதையும் கண்டேன்! ஓ! விதேக இளவரசியே, ஓ! சீதை, தம்பியின் துணையுடன் இருக்கும் ரகு குல வழித்தோன்றலான உனது கணவனுடன் {ராமனுடன்} மீண்டும் சேர்ந்து, நீ விரைவில் மகிழ்ச்சியை அடைவாய்!” என்றாள் {திரிஜடை}.
இளமான்களின் கண்களைக் கொண்ட அந்தப் பெண் {சீதை}, திரிஜடையின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் தலைவனுடன் சேரும் நம்பிக்கையை மீண்டும் வளர்க்க ஆரம்பித்தாள். கடுமையும் கொடுமையும் நிறைந்த பிசாசங்களான {ராவணனிடம் சென்ற} அந்தப் பாதுகாவலர்கள், திரும்பி வந்த போது, முன்பு போலவே திரிஜடையுடன் அமர்ந்திருக்கும் அவளைக் {சீதையைக்} கண்டனர்.”
சீதையை அணுகிய ராவணன்! – வனபர்வம் பகுதி 279-அசோக வனத்தில் சோகமாக இருக்கும் சீதையை அணுகி, தன்னைக் கணவனாக ஏற்கும்படி ராவணன் கேட்பது; சீதை ராவணனை அவமதிப்பது; ராவணன் அங்கிருந்து மறைந்து, தான் விரும்பிய இடம் சென்றது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தன் தலைவனை {ராமனைப்} பிரிந்த துயரத்தால் தாக்கப்பட்டு, எளிய ஆடை (குறிப்பிட்ட வகையிலான துணி) உடுத்தி, (மணிக்கட்டில் அணியும் திருமண நூல் {தாலியில்} கோர்க்கப்பட்டிருந்த) ஒரே ஒரு நகை மட்டும் அணிந்தபடி அங்கே {அசோக வனத்தில்} வசித்துவந்த கற்புடைய சீதை, ஒரு கல்லில் அமர்ந்து கொண்டு இடைவிடாமல் அழுது கொண்டிருந்தாள். அப்படி அமர்ந்திருந்த அவளுக்காக ராட்சசிகள் காத்திருந்தனர். அப்போது, காம தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்ட ராவணன் அங்கே அவள் முன்னிலையில் வந்து நின்றான். போர்க்களத்தில், தேவர்களாலும், தானவர்களாலும், கந்தர்வர்களாலும், யக்ஷர்களாலும், கிம்புருஷர்களாலும் வெல்லப்பட முடியாத அவன் {ராவணன்}, ஆசையில் எரிந்தான். தெய்வீக ஆடைகள் உடுத்தி, அழகிய அம்சங்களுடன், ரத்தினம் பொருந்திய காதுகுண்டலங்களும், அழகிய மாலையும், மகுடமும் தரித்து, இளவேனிற்காலத்தின் {வசந்த காலத்தின்} உருவகமாக அசோக வனத்துக்குள் அவன் {ராவணன்} நுழைந்தான். கவனமாக {அழகாக} உடுத்தியிருந்த ராவணன், இந்திரனின் நந்தவனத்தில் உள்ள கல்ப மரத்தைப் {கற்பகவிருக்ஷம்} போல இருந்தான். ஆனால், அனைத்தையும் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், கல்லறைக்கு மத்தியில் இருக்கும் அழகிய ஆல மரத்தைப் போலவே, அவன் {ராவணன்}, அவளுக்குப் {சீதைக்குப்} பயத்தை ஏற்படுத்தினான். இரவு உலாவியான அவன், அந்தக் கொடியிடை மங்கையின் {சீதையின்} முன்னிலையை அடைந்து, ரோகிணியின் {ரோகிணி நட்சத்திரத்தின்} முன்பு நிற்கும் சனிக்கிரகம் போல இருந்தான்.
பூக்களைத் தனது சின்னமாகக் கொண்ட தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்ட அவன் {ராவணன்}, பெண் வெள்ளாடு போல அச்சத்துடன் இருந்த அழகிய இடை கொண்ட அந்த ஆதரவற்ற மங்கையை {சீதையை} அணுகி, “ஓ! சீதை, உன் தலைவனை {ராமனை} நீ வெகுவாக மதிக்கிறாய்! ஓ! மென்மையான உறுப்புகள் கொண்டவளே {மென்மையானவளே}, என்னிடம் கருணை காட்டு. {இந்தப் பணிப்பெண்கள்} இப்போது உன் மேனியை அழகூட்ட அனுமதி கொடு. ஓ! அருமையானவளே, என்னை உன் தலைவனாக ஏற்றுக் கொள். ஓ! மிக அழகான நிறம் கொண்டவளே, விலையுயர்ந்த ஆடை ஆபரணகளைத் தரித்து, எனது வீட்டின் பெண்கள் அனைவரிலும் முதன்மையான இடத்தைப் பெறு. நான் கொண்டிருக்கும் அவர்களில் பலர், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் மகள்களாவர். நான் பல தானவ மற்றம் தைத்திய மங்கையருக்குத் தலைவனாக இருக்கிறேன். பதினான்கு கோடி {14,00,00,000_One hundred and forty million} பிசாசங்களும், அதைவிட இரண்டு மடங்கு மனிதனை உண்ணும் பயங்கர ராட்சசர்களும், அதைவிட மூன்று மடங்கு யக்ஷர்களும் என் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களில் சிலர் கரூவலத்தலைவனான {குபேரனின்} என் அண்ணனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ஓ! அழகிய தொடைகள் கொண்டவளே {சீதை}, என் மதுபான கூடத்தில் {Drinking Hall}, கந்தர்வர்களும் அப்சரசுகளும், என் அண்ணனுக்காகக் காத்திருப்பது போலவே எனக்காகக் காத்திருக்கின்றனர். மேலும், மறுபிறப்பாள {பிராமண} முனிவரான உயர்ந்த தவத்தகுதி படைத்த விஸ்வரசின் மகன் நான். நான் இந்த அண்டத்தின் ஐந்தாவது ஆட்சியாளனாக {லோகபாலகனாக} புகழ்பெற்றிருக்கிறேன். ஓ! அழகிய மங்கையே {சீதையே}, நான் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல மிகச்சிறந்த உணவும் பானமும் கொள்கிறேன். காட்டு வாழ்வின் தொடர்ச்சியாக உனக்கு ஏற்பட்ட தொல்லைகள் எல்லாம் நின்று போகட்டும். ஓ! அழகிய இடை கொண்டவளே {சீதை}, மண்டோதரியைப் போலவே, நீ எனது ராணியாகு” என்ற வார்த்தைகளைக் கூறினான் {ராவணன்}.
அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட விதேகத்தின் அந்த அழகிய இளவரசி {சீதை}, அப்புறம் திரும்பிக்கொண்டு, புல்லைவிட இழிந்தவனாக அவனை {ராவணனைக்} கருதி, அந்த இரவு உலாவிக்கு மறுமொழி கூறினாள். விதேக இளவரசியான அந்த அழகிய இடை கொண்ட பெண் {சீதை}, தொடர்ந்து அழுததால் ஏற்பட்ட மங்கலமற்ற கண்ணீர், அவளது பருத்த கச்சிதமான மார்புகளை அந்நேரத்தில் நனைத்தது. தன் கணவனைத் தேவனாகக் {தெய்வமாகக்} கருதிய அவள் {சீதை}, அந்த இழிந்த பாவியிடம் {ராவணனிடம்}, “ஓ! ராட்சசர்களின் மன்னா {ராவணா}, சுத்தமாகப் பேறு இல்லாததாலேயே உன்னால் பேசப்படும் இத்தகு துக்ககரமான வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. ஓ! சிற்றின்பத்தை விரும்பும் ராட்சசா {ராவணா}, என்னிடம் இருந்து உனது இதயத்தை விலக்கு. நீ அருளப்பட்டிருப்பாயாக! நான் வேறு ஒருவரின் மனைவி; கணவருக்கே என்னை எப்போதும் அர்ப்பணித்திருக்கிறேன். எனவே, நான் உன்னால் அடையத்தகாதவள்! ஆதரவற்ற மானுடப் பெண்ணான நான், உன் மனைவி ஆவதற்குத் தகுந்தவளல்ல! விருப்பமில்லாத பெண்ணை வன்முறையால் அடைவதால், நீ அடையப்போகும் மகிழ்ச்சிதான் என்ன? உனது தந்தை ஒரு ஞானமுள்ள அந்தணர்; பிரம்மனுக்குப் பிறந்தவர்; படைப்புத் தலைவனுக்கு {பிரம்மனுக்கு} நிகரானவர்! எனவே, அண்ட ஆட்சியாளனுக்கு {லோகபாலனுக்கு} நிகரான நீ ஏன் அறத்தைக் கடைப்பிடிக்கக்கூடாது? மகேஸ்வரனுக்கு {சிவனுக்கு} நண்பனும், யக்ஷர்களின் மன்னனும், கருவூலத் தலைவனுமான உனது அண்ணனை {குபேரனை} அவமதித்துவிட்டு, நீ எப்படி வெட்கப்படாமல் இருக்கிறாய்?” என்று கேட்டாள்.
இந்த வார்த்தைகளைச் சொன்ன சீதை, ஆடையால் தனது கழுத்தையும் முகத்தையும் மூடிக் கொண்டு, கலக்கத்தால் தன் மார்புகள் நடுங்க அழத்தொடங்கினாள். அழுது கொண்டிருந்த அந்த மங்கையின் {சீதையின்} தலையில் இருந்து விழுந்த, நன்றாகப் பின்னப்பட்ட, மிகக் கருமையான, பளபளப்பான நீண்ட சடை பார்ப்பதற்குக் கருநாகம் போல இருந்தது. சீதையால் சொல்லப்பட்ட இந்தக் கொடுஞ்சொற்களைக் கேட்ட அந்த முட்டாள் ராவணன், இப்படி அவளால் {சீதையால்} நிராகரிக்கப்பட்டாலும், அவளிடம் {சீதையிடம்} மீண்டும், “ஓ! மங்கையே, மகரத்தைச் சின்னமாகக் கொண்ட தேவன் என்னைச் சுட்டெரிக்கட்டும். இருப்பினும், ஓ! இனிய புன்னகையும், அழகிய இடையும் கொண்டவளே {சீதை}, விருப்பமற்ற உன்னை நான் எக்காரணம் கொண்டும் அணுக {அடைய} மாட்டேன். எங்களுக்கு உணவாக இருக்ககூடிய மனிதனான ராமனை இன்னும் உயர்வாகக் கருதும் உன்னை நான் என்ன செய்யக்கூடும்?” என்று சொன்னான். களங்கமற்ற மங்கையிடம் {சீதையிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்ன ராட்சச மன்னன் {ராவணன்}, பார்த்துக் கொண்டிருக்கும்போதே காட்சியில் இருந்து மறைந்து, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றான். ராட்சசிகளால் சூழப்பட்டிருந்த சீதை, திரிஜடையால் மென்மையாக நடத்தப்பட்டு துயரத்துடன் அங்கு வசிக்கத் தொடங்கினாள்.
கண்டேன் சீதையை ! – வனபர்வம் பகுதி 280-கோபம் கொண்ட ராமன், லட்சுமணனை சுக்ரீவனிடம் அனுப்பியது; சுக்ரீவனின் முன்னேற்பாடுகளை லட்சுமணன் அறிந்து கொள்வது; சீதையைக் கண்டு திரும்பிய ஹனுமான்; ஹனுமான் இலங்கையில் தான் கண்டதை ராமனிடம் விளக்கியது; சீதை கொடுத்தனுப்பிய மணியைப்பற்றி ராமனிடம் ஹனுமான் சொன்னது…
மார்க்கண்டேயர் {{யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதேவேளையில், ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, சுக்ரீவனால் விருந்தோம்பலுடன் நடத்தப்பட்டு, தினமும் தெளிந்த நீல வானத்தைக் கண்டபடி, மால்யவாத மலையின் மார்பில் தன் தம்பியுடன் தொடர்ந்து வசித்து வந்தான். ஒரு நாள் இரவில், மேகங்களற்ற தெரிந்த வானத்தில் கோள்களாலும், விண்மீன் கூட்டத்தாலும் சூழப்பட்ட பிரகாசமான சந்திரனை மலை மேல் இருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, தாமரை, அல்லி மற்றும் அதே வகையைச் சார்ந்த மலர்களின் நறுமணத்தைச் சுமந்த வந்த குளுமையான தென்றலால் அந்த எதிரிகளைக் கொல்பவன் {ராமன்} திடீரென எழுச்சியடைந்தான்.
பிறகு அறம்சார்ந்த ராமன், சீதை சிறைபிடிக்கப்பட்டு ராட்சசனின் வசிப்பிடத்தில் இருப்பதை நினைத்து மனச்சோர்வடைந்து, வீரனான லட்சுமணனிடம் காலையில், “லட்சுமணா போ. ஓ! ரகு குலத்தை நிலைநிறுத்துபவனே {லட்சுமணா}, சொந்த நலன்களை மட்டுமே நன்கு புரிந்து கொள்பவனும், இப்போது சிற்றின்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவனும், என்னால் அரியணையில் அமர்த்தப்பட்டவனும், தன் குலத்தின் இழிந்த மூடனும், {கொண்டை முசுறுகள்}, குரங்குகள், கரடிகள் ஆகியற்றால் முழு மனதுடன் நம்பப்படுபவனுமான நன்றிமறந்த அந்தக் குரங்குகள் மன்னனைத் {சுக்ரீவனை} தேடி கிஷ்கிந்தைக்குச் செல். ஓ! லட்சுமணா, துயரத்தில் மூழ்கியிருக்கும் என்னை அந்த இழிந்தவன் மறந்துவிட்டான். அதனால்தான், அந்தக் குரங்குகளில் இழிந்தவன் {சுக்ரீவன்} நன்றி மறந்திருக்கிறான் என்று கருதுகிறேன். மந்த புத்தியினால், தனக்கு இத்தகு சேவை செய்தவனை {என்னை} அவமதிக்கும் வகையில், தான் ஏற்ற உறுதியைச் செய்வதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறான் என நினைக்கிறேன். மந்தமாக, புலனின்பங்களில் அவன் உருண்டு கொண்டிருப்பதை நீ கண்டால், அனைத்து உயிர்களின் பொது இலக்குக்கு {யமலோகத்துக்கு}, வாலி சென்ற பாதையில் நீ அவனை {சுக்ரீவனை} அனுப்பி வைக்க வேண்டும்! மறுபுறம் அந்தக் குரங்குகளில் முதன்மையானவன் {சுக்ரீவன்}, நம் காரியத்தைச் செய்வதில் மகிழ்ச்சி கொண்டிருந்தானானால், ஓ! காகுஸ்தன் வழித்தோன்றலே {லட்சுமணா}, நீ அவனை {சுக்ரீவனை} என்னிடம் அழைத்து வா! விரைந்து செல். தாமதிக்காதே!” என்றான் {ராமன்}.
மூத்தோர் நலனில் அக்கறையிலும் அவர்களின் கொடுக்கும் உத்தரவுகளிலும் எப்போதும் கவனமாக இருப்பவனான லட்சுமணன் தனது அண்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், கைகளில் நாணுடன் கூடிய அழகிய வில்லுடனும், கணைகளுடனும் கிளம்பிச் சென்றான். கிஷ்கிந்தையின் வாயிலை அடைந்து, யாராலும் தடுக்கப்படாமல் அந்நகருக்குள்ளே நுழைந்தான். அவன் {லட்சுமணன்} கோபமாக இருப்பதை அறிந்த குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்}, அவனை வரவேற்பதற்காக முன் சென்றான். குரங்குகள் மன்னனான சுக்ரீவன் தனது மனைவியுடனும், எளிய இதயத்துடனும், மகிழ்ச்சியுடனும், உரிய மரியாதைகள் செய்து அவனை {லட்சுமணனை} வரவேற்றான். அந்த அச்சமற்ற சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ராமன் சொன்னதை அவனிடம் {சுக்ரீவனிடம்} சொன்னான். ஓ! பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அனைத்தையும் விவரமாகக் கேட்ட குரங்குகள் மன்னன் சுக்ரீவன், தனது மனைவியுடனும், பணியாட்களுடனும் கரங்கள் கூப்பி, மனிதர்களில் களிறான லட்சுமணனிடம் மகிழ்ச்சியாக, “ஓ! லட்சுமணா, நான் தீயவனோ, நன்றிகெட்டவனோ, அறமற்றவனோ கிடையாது! சீதை சிறைசெய்யப்பட்டிருக்கும் இடத்தை அறிய நான் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைக் கேள்! விடாமுயற்சி கொண்ட குரங்குகளை நான் அனைத்து திசையிலும் அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரு மாதத்திற்குள் திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறேன். ஓ! வீரா {லட்சுமணா}, காடுகள், மலைகள், கடல்கள், கிராமங்கள், நகரங்கள், பட்டணங்கள், சுரங்கங்கள் நிறைந்த முழு உலகத்தையும் அவர்கள் தேடுவார்கள். ஒரு மாதம் முடிய இன்னும் ஐந்து இரவுகளே இருக்கின்றன. பிறகு, ராமனோடு சேர்ந்த நீ பெரிய மகிழ்ச்சியான செய்தியைக் கேட்பாய்!” என்றான்.
புத்திக்கூர்மையுள்ள குரங்குகள் மன்னனால் {சுக்ரீவனால்} இப்படிச் சொல்லப்பட்ட, உயர் ஆன்ம {மகாத்மாவான} லட்சுமணன் அமைதியடைந்து, பதிலுக்குச் சுக்ரீவனை வழிபட்டான். பிறகு சுக்ரீவனையும் அழைத்துக் கொண்டு, மால்யவாத மலையின் மார்பில் இருந்த ராமனிடம் திரும்பினான். அவனை {ராமனை} அணுகிய லட்சுமணன், தங்கள் காரியத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டிருப்பவை குறித்துத் தெரிவித்தான். விரைவில் வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளைக் கவனமாகத் தேடிப் பார்த்துவிட்டு, ஆயிரக்கணக்கான குரங்கு தலைவர்கள், திரும்பத் தொடங்கினார்கள். ஆனால் தெற்கே சென்றவர்கள் யாரும் திரும்பவில்லை. ஏற்கனவே திரும்பி வந்தவர்கள், தாங்கள் கடல்களை இடைக்கச்சையாக அணிந்த முழு உலகத்தையும் தேடியும் தங்களால் விதேக இளவரசியையோ {சீதையையோ}, ராவணனையோ காண முடியவில்லை என்று சொன்னார்கள். இதனால் காகுஸ்தன் குல வழித்தோன்றல் {ராமன்} இதயம் தாக்கப்பட்டாலும், தெற்கே சென்ற பெரும் குரங்குகளின் மீது கொண்ட நம்பிக்கையால் (சீதையைக் குறித்த செய்திகளை அறிவோம் என்ற நம்பிக்கையால்) உயிரை விடாதிருந்தான்.
இரண்டு மாதங்கள் கழிந்ததும், சுக்ரீவனின் முன்னிலைக்கு விரைந்து வந்த பல குரங்குகள், “ஓ! மன்னா {சுக்ரீவா}, குரங்குகளில் முதன்மையானவர்களான பவனனின் மகனும், வாலியின் மகனான அங்கதனும், தென்திசைக்கு நீர் அனுப்பி வைத்த இன்னும் பிற பெரும் குரங்குகளும் திரும்பிவிட்டார்கள். அவர்கள், வாலியின் பாதுகாவலர்களாலும், உம்மாலும் எப்போதும் காக்கப்பட்டு, மதுவனம் என்ற பெயரால் அழைக்கப்படும் அற்புதமான பெரும் பழத்தோட்டத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பணியாட்களே இதைப் போலச் செயல்பட முடியும் என்பதால், தங்கள் பங்குக்கு இவ்வளவு சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளும் அவர்களது செயல்பாட்டைக் கேட்ட சுக்ரீவன் அவர்களது பணி வெற்றியடைந்திருக்கிறது என்பதை அனுமானித்தான். குரங்குகளில் புத்திசாலியும் முதன்மையானவனுமான அவன் {சுக்ரீவன்}, தனது சந்தேகங்களை ராமனுக்குத் தெரிவித்தான். இதனால், மிதிலையின் இளவரசி {சீதை} காணப்பட்டாள் என்று ராமனும் ஊகித்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அனுமானின் நடைபாணியையும், அவனது முகத்தின் நிறத்தையும் கண்ட ராமன், ஹனுமான் உண்மையில் சீதையைக் கண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையில் உறுதி கொண்டான். பிறகு ஹனுமானின் தலைமையில் வெற்றி பெற்ற குரங்குகள் ராமனையும், லட்சுமணனையும், சுக்ரீவனையும் முறைப்படி வணங்கினார்கள். பிறகு தனது வில்லையும் அம்பறாத்தூணியையும் எடுத்துக் கொண்ட ராமன் அக்குரங்குகளிடம், “நீங்கள் வெற்றியடைந்தீர்களா? நீங்கள் என்னை உயிரடையச் செய்வீர்களா? போர்க்களத்தில் எனது எதிரியைக் கொன்று ஜனகனின் மகளை {சீதையை} மீட்டு, அயோத்தி திரும்பி நான் மீண்டும் ஆட்சி செய்யச் செய்வீர்களா? விதேக இளவரசியை {சீதையை} மீட்காமல், எதிரியைப் போர்க்களத்தில் கொல்லாமல், மனைவியையும் மதிப்பையும் இழந்து நான் உயிர்வாழத் துணிய மாட்டேன்” என்றான்.
ராமனால் இப்படிச் சொல்லப்பட்ட பவனனின் மகன் {ஹனுமான்}, அவனிடம் {ராமனிடம்}, “ஓ! ராமா, நான் உனக்கு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன்; கண்டேன் ஜனகனின் மகளை {கண்டேன் சீதையை}. மலைகள், காடுகள், சுரங்கங்கள் ஆகியவற்றைக் கொண்ட தென் பகுதியை சில காலம் தேடிக் களைப்படைந்தோம். பிறகு ஒரு பெரும் குகையைக் கண்டோம். அதைக் கண்டபிறகு, பல யோஜனைகள் நீண்டிருந்த அந்தக் குகைக்குள் நுழைந்தோம். அது இருளடைந்து, மரங்கள் அடர்ந்து, புழுக்களில் தொல்லை நிறைந்து இருந்தது. அந்தப் பெரும் வழியில் நீண்ட தூரம் சென்ற பிறகு, நாங்கள் சூரியனின் வெளிச்சத்தையும், அழகிய அரண்மனை ஒன்றையும் கண்டோம். ஓ! ராகவா {ராமா}, அது தைத்தியன் மயனுடைய வசிப்பிடமாகும். அங்கே தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் துறவியான பிரபாவதியைக் கண்டோம். அவள் எங்களுக்கு உணவும், பலவகைப்பட்ட பானங்களையும் கொடுத்தாள். இதனால் உற்சாகமடைந்து, எங்கள் பலத்தை மீண்டும் அடைந்து, அவள் காட்டிய வழியில் மேலும் தொடர்ந்து சென்றோம்.
கடைசியாக நாங்கள் அந்தக் குகையை விட்டு வெளிய வந்து, உப்புக் கடலையும், அதன் கரைகளில் இருந்த சஹ்யம், மலயம், பெரும் தர்துரம் என்ற மலைகளையும் கண்டோம். பிறகு மலய மலையில் ஏறி அகன்ற கடலைக் கண்டோம் [1]. அதைக் கண்ட நாங்கள் மனதால் மிகவும் துயரப்பட்டோம். மனச் சோர்வடைந்து, வலியால் தாக்கப்பட்டு, பசியும் பட்டினியுமாக, உயிருடன் திரும்புவதில் ஆசையற்றவர்களானோம். திமிங்கலங்கள், முதலைகள், பிற நீர்வாழ்விலங்குகள் நிறைந்து பல நூற்றுக்கணக்கான யோஜனைகள் பரந்திருக்கும் பெரும் கடலைக் கண்களால் கண்ட நாங்கள் வருத்தமடைந்து ஆர்வமற்றுப் போனோம். பிறகு நாங்கள் ஒன்றுகூடி அமர்ந்து, பட்டினி கிடந்துச் சாவது என்று தீர்மானித்தோம். அப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, நாங்கள் கழுகான ஜடாயு குறித்துப் பேச நேர்ந்தது. அப்போதுதான், பயங்கர உருவமும், காணும் அனைத்து இதயத்துக்குப் பயங்கரத்தை உணரச் செய்பவனும், வினதையின் இரண்டாவது மகனைப் போல [2] இருந்தவனும், மலை போலப் பெரிதாக இருந்தவனுமான ஒரு பறவையானவனை நாங்கள் கண்டோம்.
திகைப்பூட்டும் விதத்தில் எங்களை விழுங்க வந்த அவன், “என் தம்பி ஜடாயுவைக் குறித்து இப்படிப் பேசுபவர்களான நீங்கள் யார்? நான் அவனது அண்ணன், என் பெயர் சம்பாதி, நான் பறவைகளின் மன்னனாவேன். ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் விஞ்ச எண்ணிய நாங்கள் இருவரும் சூரியனை நோக்கி முன்னேறினோம். எனது சிறகுகள் எரிந்து போயின. ஆனால் ஜடாயுவுக்கு எரியவில்லை. என் ஆருயிர் தம்பியும், கழுகுகளின் மன்னனுமான ஜடாயுவை நான் கடைசியாகக் கண்டது அப்போதுதான். எனது சிறகுகள் எரிந்ததும், நான் இப்போது இருக்கும் இதே பெருமலையில்தான் விழுந்தேன்” என்றான் {சம்பாதி}. அவன் பேச்சை நிறுத்தியதும், நாங்கள் அவனது தம்பியின் இறப்பைக் குறித்துச் சில வார்த்தைகள் பேசிவிட்டு, உனக்கு நேர்ந்த பெரும் தீங்கையும் சொன்னோம். ஓ! மன்னா {ராமா}, இந்தத் துன்பகரமான செய்தியைக் கேட்ட பலமிக்கச் சம்பாதி பெரும் துன்பமடைந்து, எங்களிடம், “யாரிந்த ராமன்? சீதை ஏன் கடத்தப்பட்டாள்? ஜடாயு எப்படிக் கொல்லப்பட்டான்? குரங்குகளின் முதன்மையானவர்களே, நான் அனைத்தையும் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்று மீண்டும் விசாரித்தான்.
பிறகு நாங்கள் உனக்கு ஏற்பட்ட துயர் அனைத்தையும் சொல்லி, அதன் காரணமாக, பட்டினி கிடந்து சாகப் போகும் எங்கள் நோன்பு குறித்தும் சொன்னோம். பிறகு அந்தப் பறவைகளின் மன்னன் {சம்பாதி} (எங்கள் நோன்பைக் கைவிட வலியுறுத்தி), “உண்மையில், ராவணனை நான் அறிவேன். இலங்கையே அவனது தலைநகரம். திரிகூட மலைகளின் பள்ளத்தாக்கில், கடலின் மறுபுறத்தில் நான் அதைக் {இலங்கையைக்} கண்டிருக்கிறேன். சீதை அங்குத் தான் இருக்க வேண்டும். இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் விரைந்து எழுந்து, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, கடலை கடப்பது எப்படி என்று ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்தோம்! யாரும் அதைக்கடக்கத் துணியவில்லை. என் தந்தையின் {வாயுத்தேவனின்} உதவியைப் பெற்ற நான், நூறு யோஜனைகள் அகன்ற அந்தப் பெரும் கடலைக் கடந்தேன். நீரில் இருந்த ராட்சசிகளைக் கொன்று, ராவணனின் அந்தப்புரத்தில், தவம் நோற்று, தன் தலைவனைக் காணும் அவலுடன், தலையில் ஜடை தரித்து, உடலில் புழுதி படிந்து, மெலிந்து போய், துன்பத்துடன் ஆதரவற்ற நிலையில் இருந்த கற்புடைய சீதையை நான் கண்டேன்.
வழக்கத்திற்கு மாறான அவளது குறிப்புகளைக் கண்டு, அவளே சீதையென உணர்ந்து, தனியாக இருந்த அந்த வழிபடத்தக்க மங்கையை அணுகி, “ஓ! சீதை, நான் ராமனின் தூதுவன்; பவனனால் பெறப்பட்ட குரங்கு [3]. உன்னைக் காண விரும்பியே, வானத்தில் பயணித்து இங்கே வந்திருக்கிறேன். (பவனன் என்றால் வாயுத்தேவன் )குரங்குகளின் ஏகாதிபதியான சுக்ரீவனால் பாதுகாக்கப்பட்ட அரசச் சகோதரர்களான ராமனும் லட்சுமணனும் அமைதியாக இருக்கிறார்கள். ஓ! மங்கையே, ராமனும், சுமித்திரையின் மகனும் {லட்சுமணனும்} உனது நன்னிலை குறித்து விசாரித்து அனுப்பினார்கள்! (ராமன் மற்றும் லட்சுமணனுடன் கொண்ட) நட்பின் காரணமாகச் சுக்ரீவனும் உனது நன்னிலை குறித்து விசாரித்து அனுப்பினான். அனைத்து குரங்குகளாலும் தொடரப்படும் உனது கணவன் விரைவில் இங்கு வருவான். ஓ! புகழத்தக்க மங்கையே, நான் ஒரு குரங்குதான்; ராட்சசனில்லை. என்னில் நம்பிக்கை கொள்” என்றேன்.
என்னால் இப்படிச் சொல்லப்பட்ட சீதை, ஒருக்கணம் தியானிப்பது போலத் தெரிந்தது, பிறகு, “அவிந்தியனின் வார்த்தைகளால் நீ ஹனுமான் என்பதை அறிந்தேன்! ஓ! பலமிக்கவனே, அவிந்தியன் முதிர்ந்த மதிக்கத்தக்க ராட்சசனாவார்! அவர், உன்னைப் போன்ற ஆலோசகர்களால் {அமைச்சர்களால்} சுக்ரீவன் சூழப்பட்டிருப்பதாகச் சொன்னார். நீ இப்போது செல்லலாம்” என்று சொல்லி இந்த மணியை ஒரு நற்சான்றாக அளித்தாள். உண்மையில், இந்த மணியின் காரணமாகவே களங்கமற்ற சீதை உயிர் தாங்க முடிந்திருக்கிறது. ஓ! மனிதர்களில் புலியே {ராமா}, மேலும் அந்த ஜனகனின் மகள் {சீதை}, அவளது அடையாளத்தைத் தெரிவிப்பதற்காக, சித்திரக்கூடம் என்ற பெயரால் அறியப்படும் பெரும் பலம் வாய்ந்த மலையின் மார்பில் நீ இருந்த போது (மந்திரங்கள் ஊட்டப்பட்டு, உயிர்க்கொல்லி ஆயுதமாக மாற்றப்பட்ட) ஒரு புல்லால் ஒரு காக்கையை அடித்ததாகச் சொன்னாள். நான் அவளைச் சந்தித்தற்கும், அவள்தான் உண்மையான விதேக இளவரசிதான் என்பதற்கும் சான்றாக இதைச் சொன்னாள். பிறகு ராவணன் படைவீரர்கள் பிடிக்குமாறு, நான் அவர்களுக்கு அகப்பட்டு, இலங்கை என்ற அந்த நகரத்திற்குத் தீ மூட்டினேன்” என்றான் {ஹனுமான்}.
இலங்கையை அடைந்தான் ராமன்! – வனபர்வம் பகுதி 281-குரங்குத் தலைவர்கள் ராமனையும், சுக்ரீவனையும் வந்து அடைவது; அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, ராமன் கடற்கரையை அடைவது; அங்கே ராமனும் லட்சுமணனும் தர்ப்பை புல் விரித்துப் படுப்பது; கனவில் வந்த பெருங்கடலரசன், குரங்குப் படையில் இருக்கும் நளனைக் கொண்டு பாலம் அமைக்கச் சொன்னது; தன்னைத் தஞ்சமடைந்த விபீஷணனுக்குப் பட்டம் சூட்டிய ராமன், இலங்கையை அடைந்தது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதே மலையின் {மால்யவாத மலையின்} மார்பில், குரங்குகளில் முதன்மையானவர்களுடன் ராமன் அமர்ந்திருந்த போது, சுக்ரீவனின் கட்டளையின் பேரில் குரங்குகளின் பெருந்தலைவர்கள் அங்கே ஒன்றுகூட ஆரம்பித்தனர். வாலியின் மாமனாரான சிறப்புமிக்கச் சுஷேணன், ஆயிரம் கோடி {1000,00,00,000} சுறுசுறுப்பான குரங்குகளுடன் ராமனிடம் வந்தான். குரங்குகளில் முதன்மையானவர்களான கயன் மற்றும் கவ்யன் [1] ஆகிய பலமிக்க சக்தி கொண்ட இருவரும், ஆளுக்கு நூறு கோடி {2 X 100,00,00,000} குரங்குகளுடன் அங்கே காட்சியளித்தனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடுமை நிறைந்த முகமும், மாடு போன்ற வாலும் கொண்ட கவக்ஷயன், அறுபதாயிரம் கோடி {60000,00,00,000} குரங்குகளைச் சேகரித்து அங்கே தோன்றினான். கந்தமாதன மலையில் வசிக்கும் புகழ்பெற்ற கந்தமாதனன் {என்ற குரங்கு}, நூறாயிரம் கோடி {100,000,00,00,000} குரங்குகளைச் சேகரித்தான். பனசன் என்ற பெயரில் அறியப்பட்ட புத்திசாலியும் பலசாலியுமான குரங்கானவன் ஐம்பத்திரண்டு கோடி {52,00,00,000} குரங்குகளைத் திரட்டினான் [2]. குரங்குகளில் சிறப்புமிக்க, முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான ததிமுகன் என்பவன், பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பெரிய குரங்குகள் படையைத் திரட்டினான். பயங்கரச் செயல் புரிபவையும், முகத்தில் திலகக் குறி கொண்டவையுமான [3] நூறாயிரம் {100,000} கருங்கரடிகளுடன் ஜாம்பவான் தோன்றினான்.
இவர்களும், இன்னும் பிற குரங்குத் தலைவர்களுக்குத் தலைவர்களும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராமனின் காரியத்தில் உதவுவதற்காக எண்ணிலடங்காதபடி அங்கே வந்தனர். மலைச்சிகரங்களைப் போன்ற பெரிய உடல் படைத்த அவை, சிம்மங்களைப் போன்று கர்ஜித்தன. அந்த உரத்த கர்ஜனையைக் கேட்ட குரங்குகள், ஓய்வில்லாமல் இடத்திற்கு இடம் மாறி ஓடிக் கொண்டிருந்தன. அவற்றில் சில {குரங்குகள்} பார்ப்பதற்கு மலைச்சிகரங்களைப் போல இருந்தன. சில எருமைகளைப் போல இருந்தன. சில இலையுதிர்கால மேகங்களின் நிறம் கொண்டிருந்தன. சில குங்குமத்தைப் போன்ற {ஜாதிலிங்கம் போல} சிவந்த நிறத்தில் இருந்தன. சில உயர எழுந்தன, சில கீழே விழுந்தன, சில மொட்டுகளை வெட்டிக் கொண்டும், சில புழுதியைக் கிளப்பிக் கொண்டும், பல திசைகளில் இருந்து வந்து ஒன்றுதிரண்டிருந்தன.
அலைகள் நிறைந்த கடலைப் போல, அகன்ற அந்தக் குரங்குப்படை, சுக்ரீவனின் உத்தரவின் பேரில் அங்கே இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது. அனைத்துத் திசைகளில் இருந்தும் அந்தக் குரங்குகளில் முதன்மையானவர்கள் திரண்ட பிறகு, சுக்ரீவனை அருகில் கொண்ட ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, அதிர்ஷ்டமான நட்சத்திர சேர்க்கை கொண்ட ஒரு மிக அற்புதமான நாளில், மங்களகரமான தருணத்தில் அணிவகுக்கப்பட்ட அந்தப் படையைக் கொண்டு, அனைத்து உலகங்களையும் அழிக்கும் காரியத்திற்குப் புறப்பட்டதுபோலப் போர்க்களத்திற்குக் கிளம்பிச் சென்றான். வாயுத்தேவனின் மகனான ஹனுமான், அந்தப் படையின் முன்னணியில் இருந்தான். அதே நேரம் படையின் பின்புறம் அச்சமற்ற சுமித்திரையின் மகனால் {லட்சுமணனால்} பாதுகாக்கப்பட்டது. கைவிரல்களுக்கு உடும்புத் தோலாலான கையுறைகளைத் தரித்தக் கொண்டு, குரங்குத் தலைவர்கள் சூழ சென்ற அந்த ரகுவீட்டு இளவரசர்கள் {ராமனும், லட்சுமணனும்}, கோள்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனும், சந்திரனும் போல ஒளிர்ந்தார்கள்.
கற்கள், ஆச்சா {சால} மரங்கள் மற்றும் பனை {தால} மரங்களை ஆயுதமாகக் கொண்ட அந்தக் குரங்குப் படை, காலை சூரியனுக்குக் கீழே இருக்கும் மிக நீண்ட சோள {செந்நெல் – வேறு பதிப்பு} வயல் போல இருந்தது. நளன், நீலன், அங்கதன், கிராதன், மைந்தன், துவிவிதன் ஆகியோரால் பாதுகாகப்பட்ட அந்தப் பலம்பொருந்திய படை, ராகவனின் காரியத்தை நிறைவேற்றுவதற்காக அணிவகுத்துச் சென்றது. பழங்கள், கிழங்குகள், நீர், தேன், இறைச்சி ஆகியவை நிறைந்த, பரந்த மற்றும் ஆரோக்கியமான நிலப்பரப்புகளிலும், பள்ளத்தாக்குகளிலும், எவ்வகையான இடையூறுகளும் இன்றித் தங்கிச் சென்ற அந்தக் குரங்குகள் படை, கடைசியாக உப்புக்கடலின் கரையை அடைந்து, அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்தது.
பிறகு தசரதனின் சிறப்புவாய்ந்த மகன் {ராமன்}, அனைத்து குரங்குகளிலும் முதன்மையான சுக்ரீவனிடம் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசினான். அவன் {ராமன்}, “இந்தப் படை மிகவும் பெரிதாக இருக்கிறது. கடலும் கடப்பதற்குக் கடினமானது. எனவே, கடல் கடந்து செல்வதற்குப் பாராட்டுக்குரிய என்ன திட்டம் உன்னிடம் இருக்கிறது?” என்று கேட்டான். இந்த வார்த்தைகளுக்கு, வெட்டிப் பெருமை பேசும் {பகட்டான} குரங்குகள், “நாங்கள் கடலைக் கடப்பதற்கு முழுமையான திறன் பெற்றிருக்கிறோம்” என்றன. எனினும், அனைவராலும் அதைச் செய்ய முடியாதாகையால், இப்பதில், அதிகப் பலனைக் கொடுக்க முடியவில்லை. சில குரங்குகள் கடலைப் படகுகளில் கடக்கலாம் என்றும், சில குரங்குகள் பலவிதமான தெப்பங்களிலும் கடக்கலாம் என்றும் முன்மொழிந்தன.
இருப்பினும் அவர்கள் அனைவரையும் இணக்கப்படுத்திய ராமன், “இது முடியாது. இங்கே இருக்கும் கடல் நூறு யோஜனைகள் அகன்றிருக்கிறது. வீரர்களே, அனைத்துக் குரங்குகளும் இதைக் கடக்க இயலாது. எனவே, நீங்கள் செய்திருக்கும் இந்த முன்மொழிவுகள் அறிவுக்கு ஒத்திசைபவையாக இல்லை. மேலும் நமது துருப்புகள் அனைத்தையும் சுமந்து செல்லத் தேவையான எண்ணிக்கையில் படகுகள் நம்மிடம் இல்லை. மேலும், நம்மைப் போன்ற ஒருவன், வணிகர்களின் பாதையில் எப்படி இத்தகு தடைகளை எழுப்புவான்? நமது படை மிகவும் பெரியது. ஒரு துளை {ஓட்டை} கண்டுபிடிக்கப்பட்டாலும், எதிரி, பெரும் அழிவைச் ஏற்படுத்துவான். எனவே, படகுகளிலும், தெப்பங்களிலும் கடலைக் கடப்பது என்பது எனக்கு ஏற்புடையதல்ல. இருப்பினும், தேவையான வழிகளுக்காகப் பெருங்கடலை நான் வேண்டிக் கொள்வேன். உணவைக் கைவிட்டு, நான் இந்தக் கரையில் படுத்துக் கொள்வேன். நிச்சயம் அவன் {பெருங்கடலரசன் = சமுத்திர ராஜன்} எனக்குக் காட்சிக் கொடுப்பான். அவன் எனக்குக் காட்சிக் கொடுக்கவில்லை என்றால், நெருப்பைப் போன்று பிரகாசிக்கும் கலங்கடிக்கப்படாத எனது பெரும் ஆயுதங்களைக் கொண்டு நான் அவனைத் தண்டிப்பேன்!” என்றான்.
இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு ராமனும், லட்சுமணனும் நீரைத் தொட்டு [4], அந்தக் கடற்கரையில் தர்ப்பைப் படுக்கையில் தங்களைக் கிடத்திக் கொண்டனர். ஆண் நதிகளுக்கும், பெண் நதிகளுக்கும் {நதங்கள் மற்றும் நதிகள் என்கிறார்கள்} தலைவனாக இருந்த அந்தத் தெய்வீகமான, சிறப்புமிக்கப் பெருங்கடலரசன் {சமுத்திர ராஜன்}, நீர்வாழ் விலங்குகள் சூழ, ராமனின் பார்வைக்குக் காட்சி கொடுத்தான். அந்தப் பெருங்கடலின் அதிமேதாவி {சமுத்திர ராஜன்}, எண்ணிலடங்கா ரத்தினச் சுரங்கங்கள் சூழ ராமனிடம் வந்து இனிய உச்சரிப்புகளுடன், “ஓ! கௌசல்யை மகனே {ராமா}, என்னிடம் என்ன உதவி வேண்டும்! ஓ மனிதர்களில் காளையே, நான் உனக்கு அதைச் செய்வேன்! நானும் இக்ஷவாகு குலத்தில் உதித்தவன்தான் [5], எனவே நான் உனது உறவினனும் ஆவேன்” என்றான். அதற்கு ராமன், “ஓ!ஆண் நதிகளுக்கும் பெண் நதிகளுக்கும் {நதங்களுக்கும் நதிகளுக்கும்} தலைவா {பெருங்கடலரசனே}, புலஸ்திய குலத்தில் இழிந்த பாவியான பத்துத் தலையனைக் {ராவணனைக்} கொல்வதற்கு எனது துருப்புகள் செல்ல, எனக்கு வழி கொடுக்க வேண்டும் என நான் உன்னிடம் விரும்பிக் கேட்கிறேன்! நான் உன்னிடம் இரந்து கேட்கும் வழியை நீ கொடுக்கவில்லையென்றால், பிறகு நான் மந்திரங்களால் உந்தப்பட்ட எனது தெய்வீகக் கணைகளைக் கொண்டு உன்னை வற்ற செய்வேன்!” என்றான்.(இக்ஷவாகு குலத்தைச் சார்ந்த, மன்னன் சகரனின் மகன்கள், கடலைத் தோண்டினர் என்பது மரபு. எனவேதான் பெருங்கடல் சாகரம் என்று அழைக்கப்படுகிறது)
ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வருணனின் வசிப்பிடத்தில் இருக்கும் அதிமேதாவி {பெருங்கடலரசன்}, கரங்கள் கூப்பி, பெருந்துன்பத்துடன், “நான் உன் வழியில் எந்தத் தடையையும் இட விரும்பவில்லை. நான் உனது பகைவன் இல்லை! ஓ! ராமா, இந்த வார்த்தைகளைக் கேள். அதைக் கேட்டு எது சரியோ அதைச் செய்! உனது உத்தரவின் பேரில் நான் உனது இந்தப் படைக்கு வழியைக் கொடுத்தேனென்றால், பிறகு மற்றவர்களும், தங்கள் விற்களின் பலத்தால் இவ்வாறு கட்டளையிடுவர்! உனது படையில் நளன் என்ற ஒரு குரங்கானவன் இருக்கிறான். அவன் ஒரு தொழில்நுட்ப வல்லுனனாவான். பெரும் பலம் கொண்ட நளன், அண்டத்தின் தெய்வீக கைவினைஞனான தஷ்த்ரியின் {விஸ்வகர்மாவின்} மகனாவான். அவன் {நளன்}, என் நீருக்குள் எறிவது, கட்டையாகவோ, புல்லாகவோ, கல்லாகவோ இருப்பினும் நான் அவற்றை என் பரப்பின் மேல் தாங்குவேன். இப்படி (நீ கடந்து செல்வதற்கு) உனக்கு ஒரு பாலம் கிடைக்கும்!” என்றான்.
இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெருங்கடல்மேதாவி {பெருங்கடலரசன்} அங்கேயே மறைந்து போனான். விழித்தெழுந்த ராமன், நளனை அழைத்து அவனிடம், “கடலின் மீது நீ ஒரு பாலத்தைக் கட்டுவாயாக! நீ மட்டுமே இதைச் செய்ய முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!” என்றான். இப்படியே காகுஸ்த குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் கொண்ட பாலத்தைக் கட்டச் செய்தான். இந்நாள் வரை அந்தப் பாலம் நளனின் பாலம் என்று அனைத்து உலகத்தாலும் கொண்டாடப்படுகிறது. பாலத்தை முடித்த மலை போன்ற பெரும் உடல் கொண்ட நளன் ராமனின் உத்தரவில் பேரில் அதை விட்டு வந்தான்.
ராமன், பெருங்கடலின் இக்கரையில் இருந்தபோது, ராட்சச மன்னனின் {ராவணனின்} தம்பியான அறம்சார்ந்த விபீஷணன், தன்னுடைய நான்கு ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} ராமனிடம் வந்தான். உயர் ஆன்ம {மகாத்மாவான} ராமனும் அவனை முறைப்படி நல்வரவு கூறினான். இருப்பினும், அவன் {விபீஷணன்} ஒற்றனாக இருக்கக்கூடும் என்று சுக்ரீவன் அஞ்சினான். அதே வேளையில் (விபீஷணனிடம்) பெரிதும் மன நிறைவு கொண்ட ராமன், அவனது செயல்களில் இருந்த நேர்மையையும், நன்னடத்தையின் பல குறிகளையும் அவனிடம் கண்டு, மரியாதையுடன் அவனை {விபீஷணனை} வழிபட்டான். பிறகு அவன் {ராமன்}, விபீஷணனை அனைத்து ராட்சசர்களுக்கு ஆட்சியாளனாக நிறுவி, அவனைத் {விபீஷணனைத்} தனக்கு இளநிலை ஆலோசகனாகவும் {இளநிலை அமைச்சனாகவும் = Junior Counsellor}, லட்சுமணனுக்கு நண்பனாகவும் செய்தான்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெருங்கடலின் மேல் இருந்த பாலத்தின் வழியாக ராமன் தன் அனைத்துத் துருப்புகளுடன் விபீஷணனின் வழிகாட்டுதலின் படியே, ஒரு மாத காலத்தில் கடந்தான். பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்த ராமன், அதன் {இலங்கையின்} எண்ணிலடங்கா விரிவான தோட்டங்களைத் தனது குரங்குகளைக் கொண்டு பேரழிவுக்குள்ளாக்கினான். ராமனின் துருப்புகள் அங்கே இருந்த போது, ராவணனின் அமைச்சர்களும் அதிகாரிகாளுமான சுகன், சாரணன் என்ற இருவர், குரங்குகள் உருவம் கொண்டு ஒற்றர்களாக வந்த போது விபீஷணனால் பிடிக்கப்பட்டனர். அந்த இரவு உலாவிகள் தங்கள் உண்மை உருவான ராட்சச உருவை அடைந்த போது, ராமன் அவர்களுக்குத் தனது துருப்பைக் காண்பித்து, அவர்களை அமைதியாக அனுப்பிவைத்தான். அந்நகரத்தைச் {இலங்கையைச்} சூழ்ந்திருந்த வனத்தில் தனது துருப்புகளைத் தங்க வைத்த ராமன், பெரும் ஞானம் கொண்ட குரங்கான அங்கதனைத் தனது தூதனாக ராவணனிடம் அனுப்பி வைத்தான்.
இலங்கையில் அனைத்தும் இலக்கானது! – வனபர்வம் பகுதி 282-ராமனுடைய சொல்லை அங்கதன் ராவணனிடம் சொன்னது; ராமனின் கட்டளையின் பேரில் குரங்குகள் இலங்கையைச் சூறையாடி ராட்சசர்களோடு போர் புரிந்தது; நகரத்தில் இருந்த அனைத்தும் தங்கள் படைக்கு இலக்காகத் தெரியும்படி செய்த பிறகு ராமன் குரங்குகளைப் பின்வாங்கும்படி சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பழங்கள், கிழங்குகள் என உணவும், நீரும் நிறைந்திருந்த அந்தத் தோப்புகளில் தனது படையை நிறுத்திய பிறகு, காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்} அவர்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ளத் தொடங்கினான். மறுபுறம் ராவணன், இராணுவ அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு தனது நகரத்தில் பல கருவிகளைப் பொருத்தினான். அவனது நகரம் {இலங்கை}, பலம் வாய்ந்த மதில்களாலும், வாயில்களாலும் இயற்கையாகவே தாக்குதல்களுக்கு அசைந்து கொடுக்காததாக இருந்தது. ஆழமான, விளிம்பு நிறைந்த நீர் கொண்ட ஏழு அகழிகளில் மீன்களும், சுறாக்களும், முதலைகளும் குவிந்திருந்தாலும் கூரிய கருங்காலி முளைகளை {Stakes of Khadira woods} {அவ்வகழிகளில்} நிறைத்து மேலும் {தன் நகரத்தை} அசைந்து கொடுக்காததாக்கினான் {ராவணன்}. கற்கள் குவிக்கப்பட்டிருந்த மதில்களில் கவண் பொருத்தி {அம்மதில்களை} மேலும் அசைந்து கொடுக்காததாக்கினான். (சுவர்களைக் காத்த) போர்வீரர்கள் நஞ்சுகொண்ட பாம்புகள் நிறைந்த மண்குடங்களையும், பலவகையான விஷப்பொடிகளையும் வைத்திருந்தனர். அவர்கள் தண்டம், எரிகொள்ளி, கணைகள், சூலங்கள், வாள்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றையும் ஏந்தியிருந்தனர். மேலும் அவர்கள் சதாக்னிகளையும் [1], மெழுகில் ஊறிய தடித்த கதாயுதங்களையும் [2] வைத்திருந்தனர்.
நகரத்தின் {இலங்கையின்} அனைத்து வாயில்களிலும், எண்ணற்ற யானைகளாலும், குதிரைகளாலும் தாங்கப்படும் பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையைக் கொண்ட, அசையும் மற்றும் அசையாத முகாம்கள் {ஸ்தாவர குல்மங்களும் ஜங்கமகுல்மங்களும்[3]} அமைக்கப்பட்டன. நகரத்தின் வாயில்களை அடைந்த அங்கதன் தன்னை ராட்சசர்கள் அறியச் செய்தான். சந்தேகமோ, அச்சமோ இல்லாமல் அவன் அந்நகரத்திற்குள் நுழைந்தான். கணக்கற்ற ராட்சசர்கள் சூழ சென்ற அந்த வீரன் {அங்கதன்} மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான். தனது ஆலோசகர்களுக்கு மத்தியில் இருந்த புலஸ்திய குல வீரனை {ராவணனை} அணுகிய நாவன்மை மிக்க அங்கதன் அம்மன்னனை வணங்கி, ராமனின் செய்தியை வழங்கத் தொடங்கினான். அவன் {அங்கதன்}, “ஓ! மன்னா {ராவணா}, கோசலத்தை ஆள்பவனும், முழு உலகம் பரந்த புகழைக் கொண்டவனுமான ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, இச்சூழலுக்குத் தகுந்த வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினான். அந்தச் செய்தியை ஏற்று, அதன்படி செயல்படு. {அது இதுதான்}, “தங்கள் ஆன்மாக்களைக் கட்டப்படுத்த திறனற்ற பாவி மன்னர்களின் தொடர்பின் விளைவால் மாநிலங்களும் {நாடுகளும்}, நகரங்களும் மாசடைந்து அழிவைச் சந்திக்கின்றன. சீதையைப் பலவந்தமாக அபகரித்ததால் நீ மட்டுமே என்னைக் காயப்படுத்தினாய்! எனினும், பல குற்றமற்ற மனிதர்களின் மரணத்திற்கு நீ காரணமாகிறாய். அதிகாரத்தாலும், கர்வத்தாலும், முன்பு நீ, காட்டில் வாழும் பல முனிவர்களைக் கொன்றாய்; தேவர்களையும் அவமதித்தாய். நீ பெரும் மன்னர்கள் பலரையும், அழுது கொண்டிருந்த பல பெண்களையும் கொன்றாய். அந்த உனது வரம்புமீறல்களுக்கான தண்டனை உன்னை மூழ்கடிக்கப்போகிறது! நான் உன்னை உனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} சேர்த்துக் கொல்வேன். போரிட்டு உனது வீரத்தைக் காட்டு [4]. ஓ இரவு உலாவியே, நான் அற்ப மனிதனாக இருப்பினும் எனது வில்லின் சக்தியைப் பார்! ஜனகனின் மகளான சீதையை விடுவி! நீ அவளை விடுவிக்கவில்லையெனில், நான் எனது கூரிய கணைகளால் இந்தப் பூமியை ராட்சசர்களற்றதாகச் செய்வேன்!” {என்று ராமன் சொன்னான்}” என்றான் {அங்கதன்}.
எதிரியின் இந்த இணக்கமற்ற வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ராவணன், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபத்தால் உணர்வற்றவனான். தங்கள் ஆசானின் அனைத்து குறிப்புகளையும் படிப்பதில் நிபுணர்களான நான்கு ராட்சசர்கள், நான்கு பருந்துகள் புலியைப் பிடிப்பது போலப் அங்கதனைப் பிடித்தனர். எனினும் தன்னை உறுதியாகப் பிடித்திருந்த அந்த ராட்சசர்களுடன் மேலே குதித்து அரண்மனையின் மொட்டைமாடியில் இறங்கினான். அப்படி அவன் பெரும் சக்தியுடன் குதித்த போது, அந்த இரவு உலாவிகள் {ராட்சசர்கள்} பூமியில் விழுந்து, அப்படிக் கடுமையாக விழுந்ததால் காயம்பட்டு, தங்கள் விலாக்களை {விலா எலும்புப் பகுதிகளை} உடைத்துக் கொண்டனர். பிறகு அவன் ஏறிய அந்தத் தங்க உப்பரிகையில் இருந்து கீழே குதித்தான். இலங்கையின் சுவர்களைத் தாண்டி குதித்து, தனது தோழர்கள் இருந்த இடத்தில் {சுவேல மலைக்கு அருகில்} இறங்கினான். பிறகு கோசலத் தலைவனின் {ராமனின்} முன்னிலையை அடைந்து, அவனிடம் அனைத்தையும் சொன்ன பெரும் சக்தியுடைய குரங்கான அங்கதன், உரிய மரியாதையுடன் ராமன் விடை கொடுத்ததும், ஓய்வெடுத்துப் புத்துணர்ச்சி பெறச் சென்றான்.
பிறகு, ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, காற்றின் வேகம் கொண்ட அந்தக் குரங்குகளை ஒருங்கிணைந்து தாக்குதல் மூலம் இலங்கையின் மதில்களை உடைக்கச் செய்தான். பிறகு விபீஷணனுடனும், கரடிகளின் மன்னனுடனும் {ஜாம்பவானுடனும்} கூடிய லட்சுமணன், படையின் முன்னணியில் இருந்து, தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காத அந்நகரத்தின் தென்வாயிலைத் தகர்த்தெறிந்தான். பிறகு ராமன், போர்க்களத்தில் பெரும் நிபுணத்துவம் கொண்டவையும், இளம் ஒட்டகங்களைப் {கரபம் = இளம் ஒட்டகம்} போன்ற சிவந்த நிறம் கொண்டவையுமான நூறாயிரம் கோடி {100000,00,00,000} குரங்குகளுடன் இலங்கையைத் தாக்கினான். பொதுவாகத் தங்கள் அகன்ற இடுப்பின் மூலமே தங்களைத் தாங்கிக் கொண்டு, நீண்ட கரங்களும், கால்களும், பெரும் பாதங்களும் கொண்ட கோடிக்கணக்கான {3 கோடி என்கிறது கும்பகோணம் பதிப்பு} சாம்பல் நிற கரடிகள், அத்தாக்குதலுக்கு உதவியாக இருந்தன. அந்தக் குரங்குகள் மேலும் கீழுமாகவும், குறுக்கும் நெடுக்குமாகவும் குதித்தன் விளைவாக எழுந்த தூசியால், சூரியனின் பிரகாசமான வட்டு முழுவதும் நிழலால் கவ்வப்பட்டு மறைந்து போனது
நெற்கதிர்கள் போன்ற மஞ்சள் நிறத்திலும், வாகைப்பூக்களைப் {Shirisha flowers = சீரிதம்} போன்ற சாம்பல் நிறத்திலும், உதயசூரியனைப் போன்ற செந்நிறத்திலும், சணலைப் போல வெள்ளை நிறத்திலும் இருந்த குரங்குகளால் மூடப்பட்ட தங்கள் நகரத்தின் சுவர்கள் பழுப்பு நிறத்தை அடைந்திருப்பதை இலங்கையின் குடிமக்கள் கண்டனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் மனைவியரோடும் மூத்தவர்களோடும் இருந்த ராட்சசர்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர். பிறகு அந்தக் குரங்குப் போர்வீரர்கள், விலையுயர்ந்த கற்களாலும் செய்யப்பட்ட தூண்களையும், உப்பரிகைகளையும், அரண்மனைகளின் உச்சிகளையும் இழுத்துப் போட தொடங்கினர். கவண்கள் மற்றும் பிற இயந்திரங்களின் விசைகளையும் சுக்குநூறாக உடைத்த அவர்கள், அவற்றை அனைத்துப் புறங்களிலும் தூக்கி வீசினர். வட்டுகள், தண்டங்கள், கற்களோடு கூடிய சதாக்னிகளைப் பெருத்த ஒலியுடனும், பெரும் சக்தியுடனும் கீழே இருந்த நகரத்தில் தூக்கி எறிந்தனர். அவற்றைப் பாதுகாப்பதற்காகச் சுவர்களில் இருந்த ராட்சசர்கள், அந்தக் குரங்குகளால் தாக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சடுதியில் தப்பி ஓடினர்.
பிறகு கடும் முகத்தோற்றமும், நினைத்த உருவை அடைய வல்லவர்களுமான நூறாயிரம் ராட்சசர்கள் மன்னனின் {ராவணனின்} உத்தரவின் பேரில் வெளியே வந்தனர். சரியான கணை மழையைப் பொழிந்து, காட்டுவாசிகளை {குரங்குகளை} ஓட்டிய அந்தப் போர்வீரர்கள், தங்கள் பெரும் பராக்கிரமத்தைக் காட்டியபடி, மதில்களை அலங்கரித்தனர். விரைவில், சதைப் பிண்டமாக இருக்கும் அந்தக் கடும் முகம் படைத்த இரவு உலாவிகள் {ராட்சசர்கள்}, அக்குரங்குகளைச் சுவர்களில் இருந்து பலவந்தமாக விரட்டினர். எதிரிகளின் சூலங்களால் சிதைக்கப்பட்ட எண்ணற்ற குரங்குத் தலைவர்கள் மதில்களில் இருந்து கீழே விழுந்தனர். அப்படி அவர்கள் விழுவதால் நடுக்கப்பட்ட தூண்களும், வாயில்களும், எண்ணற்ற ராட்சசர்களும் கூட மீண்டும் எழாத படிக்கு கீழே விழுந்தனர்.
அந்தக் குரங்குகளும், எதிரியைத் தின்ன வந்த வீரமிக்க ராட்சசர்களும் தலைமுடிகளைப் பற்றி ஒருவரை ஒருவர் சிதைத்து, ஒருவரை ஒருவர் தங்கள் நகங்களாலும் பற்களாலும் கிழித்தெறிந்தனர். அந்தக் குரங்குகளும் ராட்சசர்கள் பயங்கரமாகக் கதறவும், கர்ஜிக்கவும் செய்தனர். இருதரப்பிலும் பலர் மீண்டும் எழாதபடிக்கு கீழே விழுந்து கொல்லப்பட்டாலும், எந்தத் தரப்பும் போட்டியைக் கைவிடவில்லை. அதே வேளையில் ராமன், மேகங்களைப் போல, தனது கணைகளை மழையாகப் பொழிந்து கொண்டிருந்தான். இலங்கையை மூழ்கடிக்கும்படி அவன் அடித்த கணைகள் ராட்சசர்களைப் பெரும் எண்ணிக்கையில் கொன்றன. போர்க்களத்தில் களைப்படையாத பலம் மிக்க வில்லாளியான சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, மதில்களில் நின்று கொண்டிருந்த குறிப்பிட்ட ராட்சசர்களைப் பெயர் சொல்லி அழைத்து, தன் துணிக்கோல் கணைகளைக் {clothyard shafts} கொண்டு அவர்களைக் கொன்றான். இலங்கையின் கோட்டைகளை உடைத்து, அந்த நகரத்திற்குள் இருக்கும் அனைத்துப் பொருட்களும் முற்றுகையிட்டிருந்த படைக்கு இலக்காகத் தெரியும்படி செய்த பிறகு, வெற்றி அடைந்த அந்தக் குரங்குக் கூட்டம் ராமனின் கட்டளையின் பேரில் பின்வாங்கியது.
ராமனுடன் மோதிய ராவணன்! – வனபர்வம் பகுதி 283-வானரப் படைக்குள் கண்களுக்குப் புலப்படாதபடி ராட்சசர்கள் ஊடுருவுதல்; அதைக் கண்டறிந்த விபீஷணன் அவர்களது மாய சக்தியை விலக்குதல்; ஊடுருவிய ராட்சசர்கள் கொல்லப்படுதல்; ராவணன் ராமனோடும், இந்திரஜித் லட்சுமணனோடும் மோதியது; கடுமையும் பயங்கரமும் கொண்ட போர் நடந்தது.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்தப் படைகள் (இவ்வாறு திரும்பி) தங்கள் இடங்களுக்குச் சென்று இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, ராவணனைத் தலைவனாகக் கொண்ட அற்ப ராட்சசர்களும் பிசாசங்களும், அவர்களுக்கு மத்தியில் ஊடுருவினர். அவர்களில் பர்வணன், பதனன், ஜம்பன், கரன், குரோதவாசன், ஹரி, பிரருஜன், அருஜன், பிரகாசன் ஆகியோரும் பிறரும் இருந்தனர். கண்ணுக்குப் புலப்படாத இந்தத் தீயவர்கள் (குரங்குப் படைக்குள்) ஊடுருவிய போது, இதைக் குறித்து அறிந்த விபிஷணன், அவர்களது {கண்ணுக்குப் புலப்படாமல்} மறைந்திருக்கும் சக்தியை உடைத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பலமிக்கவர்களும், நீண்ட தூரம் தாவுபவர்களுமான அக்குரங்குகளுக்கு {அக்குரங்குகளின் கண்களுக்கு} அவர்கள் காணப்பட்டதும், அவர்கள் {ராட்சசர்கள்} கொல்லப்பட்டு, உயிரற்றவர்களாய் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தப்பட்டார்கள்.
இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ராவணன், அணிவகுத்திருந்த தனது துருப்புகளுக்குத் தலைமையேற்று புறப்பட்டான். இரண்டாவது உசானசைப் {சுக்கிராச்சாரியார்} போலப் போர் விதிகளை நன்கறிந்த ராவணன், ராட்சசர்களும் பிசாசங்களும் கொண்ட தனது பயங்கரப்படையால் சூழப்பட்டு, உசானசின் {சுக்கிரனின்} பெயராலேயே அழைக்கப்படும் வரிசையால் அணிவகுக்கப்பட்ட தனது படைகளை வெளியே அனுப்பினான். பிருஹஸ்பதியால் பரிந்துரைக்கப்பட்ட முறையைப் பின்பற்றிய ராமன், அந்த இரவு உலாவியை எதிர்த்து அணிவகுத்து, எதிர் வரிசையில் தனது படைகளை வெளியே அனுப்பினான். விரைவாக முன்னேறி வந்த ராவணன், ராமனுடன் போரிடத் தொடங்கினான். லட்சுமணன் இந்திரஜித்துடன் தனித்தும், சுக்ரீவன் விரூபாக்ஷனுடன் தனித்தும், நிகாவடன் தாரனோடும், நளன் துந்தனோடும் {பௌண்டரனோடும்}, படுசன் பனசனோடும் போரிட்டனர். தனக்கு ஒப்பானவன் என்று தான் கருதும் ஒருவனிடம் முன்னேறிய ஒவ்வொரு போர்வீரனும், தன் கரத்தின் பலத்தை நம்பி, போர்க்களத்தில் அவனோடு {தான் தேர்ந்தெடுத்த எதிரியோடு} போரிடத் தொடங்கினான். அச்சமுள்ளவர்களுக்கு அச்சமூட்டிய அது {மோதல்}, விரைவில் பயங்கரமானதாகவும், கடுமையானதாகவும், பழங்காலத்தில் நடைபெற்ற தேவாசுரப் போர் போலவும் மாறியது.
கணைகள், சூலங்கள், வாட்கள் ஆகியவற்றை மழையாகப் பொழிந்த ராவணன் ராமனை மறைத்தான். ராமனும், கூரிய முனை கொண்ட தனது இரும்புக் கணைகளால் ராவணனைத் துன்புறுத்தினான். அதே போல லட்சுமணனும் பெரும்பான்மையான உயிர்ப்பகுதிகளைத் துளைக்கும் வல்லமை கொண்ட தனது கணைகளால், தன்னுடன் மோதிய இந்திரஜித்தை அடித்தான். இந்திரஜித்தும் தனது கணை மழையால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} அடித்தான். விபீஷணன் பிரஹஸ்தன் மீதும், பிரஹஸ்தன் விபீஷணன் மீதும், கூர் முனையும் இறகும் படைத்த தங்கள் கணைகளை அடர்த்தியாகப் பொழிந்தனர். இப்படியே அந்தப் பெரும் பலம் கொண்ட போர்வீர்ர்களுக்கு இடையில் பெரும் சக்தி கொண்ட தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட மோதல் உருவானது. இதனால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களும் கடுந்துன்பத்தால் பாதிக்கப்பட்டன.
துயில்நீத்தான் கும்பகர்ணன்! – வனபர்வம் பகுதி 284-விபீஷணன் பிரஹஸ்தனைக் கொன்றது; ஹனுமான் தூம்ராக்ஷனைக் கொன்றது; வீரத்துடன் போராடிய குரங்குகள் ராட்சசர்களை இலங்கை நகரத்திற்குள் விரட்டியது; ராவணன் கும்பகர்ணனை எழுப்பியது; .
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “திடீரென விபீஷணனை நோக்கி முன்னேறி உரத்துக் கூவிய பிரஹஸ்தன், அவனைத் {விபீஷணனைத்} தனது கதாயுதத்தால் அடித்தான். பயங்கர சக்தியுடன் கதாயுதத்தால் அடிக்கப்பட்டாலும், வலிய கரமும், பெரும் ஞானமும் கொண்ட விபீஷணன், சற்றும் தடுமாறாமல் இமயத்தின் மலைகளைப் போல் அசையாமல் நின்றான். பிறகு விபீஷணன், நூறு மணிகளைக் கொண்டிருந்ததும், பெரியதும், பலம் வாய்ந்ததுமான ஒரு ஈட்டியை எடுத்து, மந்திரங்களால் அதற்கு ஊக்கமளித்து, தன் எதிரியின் { தலையை நோக்கி வீசினான். வஜ்ராயுதத்தின் சக்தியுடன் விரைந்த அந்த ஆயுதத்தின் மூர்க்கத்தால் பிரஹஸ்தனின் தலை துண்டிக்கப்பட்டது. அவன் {பிரஹஸ்தன்} காற்றில் முறிந்த மரம் போலத் தெரிந்தான்.
இரவு உலாவியான பிரஹஸ்தன் போர்க்களத்தில் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட தூம்ராக்ஷன், அந்தக் குரங்குக் கூட்டத்துக்கு எதிராக பெரும் வேகத்துடன் விரைந்தான். பயங்கரத் தோற்றம் கொண்ட மேகங்கள் போல முகத்தோற்றத்துடன் இருந்த தூம்ராக்ஷனின் படைவீரர்களை தங்களை நோக்கி விரைந்து வருவதைக் கண்ட குரங்குத் தலைவன் {சுக்ரீவனாக இருக்கும்} திடீரென {போரை} முறித்து {தவிர்த்து} ஓடினான். குரங்களில் முதன்மையானவன் திடீரென வழிவிடுவதைக் கண்ட குரங்குகளில் புலியான பவனனின் மகன் ஹனுமான் முன்னேறத் தொடங்கினான். பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்த குரங்குகள் அனைவரும், பவனின் மகன் {ஹனுமான்} போர்க்களத்தில் அசையாதிருப்பதைக் கண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விரைவாக {மீண்டும்} அணிவகுத்தனர். ராமனும், ராவணனும் ஒருவருக்கெதிராக ஒருவர் விரைவதைக் கண்டதன் விளைவாக இருதரப்பு வீரர்களுக்கு மத்தியில் பயத்துடன் கூடிய வலிய பெரிய கூச்சல் எழுந்தது. அந்தப் போரில் பயங்கர சேதத்தைக் கண்ட களம் விரைவில் ரத்தச்சேறானது.
தூம்ராக்ஷன், சிறகு படைத்த கணைகள் மூலம் அந்தக் குரங்குக் கூட்டத்தைத் துன்புறுத்தினான். பிறகு எதிரிகளை வெல்பவனான பவனனின் மகன் ஹனுமான், முன்னேறிக் கொண்டிருந்த அந்த ராட்சசத் தலைவனை {தூம்ராக்ஷனை} விரைந்து பிடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய அந்தக் குரங்குக்கும் {ஹனுமானுக்கும்}, அந்த ராட்சச வீரனுக்கும் {தூம்ராக்ஷனுக்கும்} நடைபெற்ற மோதல், (பழங்காலத்தில்) இந்திரனுக்கும் பிரஹலாதனுக்கும் இடையில் நடைபெற்றதைப் போல கடுமையாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அந்த ராட்சசன், அந்தக் குரங்கை தனது கதாயுதங்களாலும், பரிகங்களாலும் {#} அடித்தான். அதே வேளையில் அக்குரங்கு {ஹனுமான்}, வெட்டப்படாத கிளைகளுடன் கூடிய மரத்தின் தண்டைக் கொண்டு அந்த ராட்சசனை {தூம்ராக்ஷனை} அடித்தான். பிறகு பவனனின் மகனான ஹனுமான் பெருங்கோபம் கொண்டு, அந்த ராட்சசனையும், அவனது தேரோட்டி மற்றும் அவனது குதிரைகளையும் கொன்று, அவனது தேரைத் துண்டுகளாக உடைத்தெறிந்தான்.
ராட்சசர்களில் முதன்மையான தூம்ராக்ஷன் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்டக் குரங்குகள், தங்கள் அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்த ராட்சசப் படையை நோக்கி பெரும் வீரத்துடன் விரைந்தன. வெற்றிபெற்ற வலிமைநிறைந்த குரங்குகளால் பெரிய எண்ணிக்கையில் தங்கள் தரப்பில் கொல்லப்பட்டதால், அந்த ராட்சசர்கள் உற்சாகமிழந்து இலங்கைக்குள் ஓடினர். உயிருடன் மீந்த அந்தச் சேதமடைந்த ராட்சசப் படை, நகரத்தை அடைந்ததும், மன்னன் ராவணனிடம் நடந்தது அத்தனையும் தெரிவித்தனர். பிரஹஸ்தன், பலம்வாய்ந்த வில்லாளியான தூம்ராக்ஷன் ஆகிய இருவரும் தங்கள் படையினருடன் சேர்த்து அந்த வலிமைமிக்க குரங்குகளால் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன் நீண்டு பெருமூச்சு விட்டு, தனது அற்புதமான இருக்கையில் இருந்து எழுந்து “கும்பகர்ணன் செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன் {ராவணன்}, பலதரப்பட்ட உரத்த ஒலியெழுப்பும் கருவிகளைக் கொண்டு, ஆழ்ந்த நீண்ட துயிலில் இருந்த தனது தம்பி கும்பகர்ணனை எழுப்பினான்.
பெரும் முயற்சி செய்து அவனை எழுப்பிய அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, துயரத்துடன் அந்த பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் பேசினான். அவன் {கும்பகர்ணன்} தனது படுக்கையில் வசதியாக அமர்ந்து தன் சுயநினைவையும், தன்நிலைமையையும் அடைந்த பிறகு, “ஓ! கும்பகர்ணா உண்மையில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். நமக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பயங்கரப் பேரிடரை உணராது, இடையூறற்ற ஆழமான இளைப்பாறுதலை நீ அடையக்கூடாது. தனது குரங்குப் படையுடன் பெருங்கடலைப் பாலமமைத்துக் கடந்து வந்திருக்கும் ராமன், நம் அனைவரையும் அவமதிக்கும்படி, (நமக்கெதிராக) பயங்கரப் போரைத் தொடுத்திருக்கிறான். ஜனகனின் மகளான அவனது {ராமனின்} மனைவி சீதையை கள்ளமாக {Stealthily} நான் கொண்டு வந்தேன். பெருங்கடலின் மீது பாலமமைத்து அவளை {சீதையை} மீட்பதற்காகவே அவன் {ராமன்} இங்கே வந்திருக்கிறான். பிரஹஸ்தன் மற்றும் பிறர் கூடிய நமது பெரும் இரத்த உறவுகள் அனைவரும் அவனால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர். ஓ! உனது எதிரிகளை துன்புறச் செய்பவனே {கும்பகர்ணா}, உன்னைத் தவிர ராமனைக் கொல்ல வேறு யாராலும் முடியாது! எனவே, ஓ! வீரா, உனது கவசத்தை அணிந்து கொண்டு, ராமனையும், அவனைத் தொடர்பவர்களையும் அழித்தொழிக்கும் நோக்குடன் இந்த நாளே செல்வாயாக! தூஷணனின் தம்பிகளான வஜ்ரவேகனும், பிரமாதினும் தங்கள் படையினருடன் உன்னைச் சேர்வார்கள்” என்ற வார்த்தைகளைச் சொன்னான் {கும்பகர்ணனிடம் ராவணன்}. பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் இதைச் சொன்ன அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, வஜ்ரவேகனிடமும், பிரமாதினிடம், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தினான். அவனது அறிவரையை ஏற்ற அந்தப் போர்க்குணமிக்கவர்களான தூஷணனின் இரு தம்பிகள், நகரத்தில் இருந்து விரைந்து, கும்பகர்ணனை முன் கொண்டு அணிவகுத்து சென்றனர்.
மீளாத்துயில்கொண்ட கும்பகர்ணன்! – வனபர்வம் பகுதி 285-கும்பகர்ணனைக் கொன்ற லட்சுமணன்; வஜ்ரவேகனைக் கொன்ற ஹனுமான்; பிரமாதியைக் கொன்ற நளன்…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பிறகு கும்பகர்ணன் தனது தொண்டர்களுடன் நகரத்தைவிட்டுக் கிளம்பினான். வெற்றி பெற்ற குரங்கு துருப்புகள் முற்றுகையிட்டிருப்பதை விரைவில் தன் முன் கண்டான். ராமனைத் தேடும் நோக்கத்தோடு அவர்களைக் கடந்து சென்ற அவன் {கும்பகர்ணன்}, கையில் வில்லுடன் தனது நிலையில் நிற்கும் சுமித்திரையின் மகனைக் {லட்சுமணனைக்} கண்டான். பிறகு அந்தக் குரங்கு போர்வீரர்கள், அவனை {கும்பகர்ணனை} நோக்கி விரைந்து, அனைத்து புறத்திலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவர்கள் எண்ணிலடங்கா பெரிய மரங்களைக் கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தனர். அவர்களில் {குரங்குகளில்} பலர் அச்சமற்று, தங்கள் நகங்களைக் கொண்டு அவனது உடலைக் கிழிக்கத் தொடங்கினர். போர்க்கலை விதிகளால் அங்கீகரிக்கப்பட்ட பல வழிகளில் அந்தக் குரங்குகள் அவனுடனான தங்கள் போரைத் தொடங்கின. விரைவில் அவர்கள் அந்த ராட்சசர்களின் தலைவனை {கும்பகர்ணனை} பல வகைகளிலான பயங்கர ஆயுதங்களின் மழையால் மறைத்தனர்.
அவர்களால் இப்படித் தாக்கப்பட்ட கும்பகர்ணன், அவர்களைப் பார்த்துச் சிரிக்க மட்டுமே செய்து, அவர்களை உண்ண ஆரம்பித்தான். சலன், சண்டசலன், வஜ்ரபாகு என்ற பெயர்களால் அறியப்படும் குரங்குகளில் முதன்மையானவர்களை அவன் {கும்பகர்ணன்} விழுங்கினான். அந்த ராட்சசன் செய்த அஞ்சத்தக்க செயலைக் கண்ட பிற குரங்குகள் அச்சமடைந்தனர். அதனால் அவர்கள் அச்சமடைந்து உரத்த ஓலமிட்டனர். அந்தக் குரங்குத் தலைவர்களின் அலறலைக் கேட்ட சுக்ரீவன் துணிச்சலுடன் கும்பகர்ணனை நோக்கி முன்னேறினான். உயர் ஆன்மா கொண்ட அந்தக் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்}, அந்த ராட்சசனை {கும்பகர்ணனை} விரைவில் அணுகி, ஆச்சா {சால} மரத்தின் தண்டைக் கொண்டு அவனது தலையில் கடுமையாக அடித்தான். எப்போதும் விரைந்து செயல்படும் உயர் ஆன்ம சுக்ரீவன், கும்பகர்ணனின் தலையில் அடித்து அந்த ஆச்சாமரத்தை ஒடித்தாலும், அந்த ராட்சசன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறினான். பின்பு, அந்த அடியால் மந்த நிலையில் இருந்து எழுந்தவன் போல இருந்த கும்பகர்ணன், தனது கரங்களை நீட்டி, தன் பலத்தை மட்டுமே கொண்டு சுக்ரீவனைப் பிடித்தான். நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் சுமித்திரையின் வீர மகன் {லட்சுமணன்}, அந்த ராட்சசனால் {கும்பகர்ணனால்} சுக்ரீவன் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டு, கும்பகர்ணனை நோக்கி விரைந்தான்.
எதிரி வீரர்களைக் கொல்லும் லட்சமணன், கும்பகர்ணனை நோக்கி முன்னேறியவாறு, தங்கப் புங்கங்கள் {#} கொண்ட பலமிக்க மூர்க்கமான கணையை அவனை {கும்பகர்ணனை} நோக்கி அடித்தான். அந்தக் கணை, அவனது கவசத்தைப் பிளந்து, அவனது உடலுக்குள் ஊடுருவி, அப்பட்டமாக அதைக் {அவ்வுடலைக்} கடந்து, அந்த ராட்சசனின் ரத்தக் கறையுடன் பூமியைப் பிளந்து நின்றது. அப்படி மார்பு துளைக்கப்பட்ட கும்பகர்ணன், குரங்குகளின் மன்னனை {சுக்ரீவனை} விடுவித்தான். ஒரு பெரும் பாறையைத் தன ஆயுதமாக எடுத்துக் கொண்ட அந்தப் பலமிக்க வீரனான கும்பகர்ணன், சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} இலக்காக வைத்து அவனை நோக்கி விரைந்தான். அப்படி அந்த ராட்சசன் {கும்பகர்ணன்} அவனை {லட்சுமணனை} நோக்கி விரைந்த போது, அவனது {கும்பகர்ணனின்} உயர்த்தப்பட்ட {இரு} கரங்களை, கத்தியைப் போன்றிருந்த தனது கூரிய முனை கொண்ட கணைகளால் லட்சுமணன் வெட்டி வீழ்த்தினான்.
ஆனால், அந்த ராட்சசனின் இருகரங்களும் அப்படி வெட்டப்பட்ட போது, அக்கரங்களின் எண்ணிக்கையைப் போல இருமடங்கு கரங்கள் அவன் மேனியில் தோன்றின. எனினும், சுமித்திரையின் மகன், தனது ஆயுத நிபுணத்துவத்தைக் காட்டி, அதே போன்ற கணைகளைக் கொண்டு, கற்களைக் கொண்டிருந்த அக்கரங்களையும் வெட்டி வீழ்த்தினான். இதனால், அந்த ராட்சசன் {கும்பகர்ணன்}, பல தலைகளும், கால்களும், கரங்களும் கொண்ட மிகப்பெரிய உருவமெடுத்தான். பிறகு, சுமித்திரையின் மகனான அந்த வீரன் {லட்சுமணன்}, மலைக்குவியலைப் போல இருந்த அவனை {கும்பகர்ணனை} பிரம்ம ஆயுதத்தினால் பிளந்தான். அந்தத் தெய்வீக ஆயுதத்தால் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {கும்பகர்ணன்}, கிளைகள் விரித்த பெரும் மரம் ஒன்று, வானத்தின் இடியால் தாக்கப்பட்டு விழுவது போல, அந்தப் போர்க்களத்தில் விழுந்தான். அசுரன் விருத்திரனுக்கு ஒப்பானவனும், பெருஞ்செயல் புரியுபவனுமான கும்பகர்ணன் உயிரிழந்து போர்க்களத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட ராட்சச வீரர்கள் அச்சத்தால் பின்வாங்கி ஓடினார்கள்.
அப்படிப் போர்க்களத்தை விட்டு ஓடும் ராட்சச வீரர்களைக் கண்ட, தூஷணனின் தம்பி, அவர்களை அணிதிரட்டி, பெரும் கோபத்துடன் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} நோக்கி விரைந்தான். எனினும், சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, உரத்த கர்ஜனை செய்து, தனது இறகு படைத்த கணைகளைக் கொண்டு, தன்னை நோக்கி விரைந்து வரும் கோபக்கார போர்வீரர்களான வஜ்ரவேகனையும், பிரமாதினையும் வரவேற்றான். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு, தூஷணன் தம்பிகள் ஒரு புறமும், புத்திக்கூர்மை கொண்ட லட்சுமணன் ஒரு புறமும் எனக் காண்பவர்களுக்கு மயிர்க்கூச்சலை ஏற்படுத்தும் மிகக்கடுமையான போர் மூண்டது. லட்சுமணன், அந்த இரு ராட்சசர்களையும் கச்சிதமான தனது அம்பு மழையால் மூழ்கடித்தான். மறுபுறம் கோபத்தால் பரபரப்படைந்த அந்த இரு ராட்சச வீரர்களும், தங்கள் கணைகளால் கல்மாரி பொழிந்து லட்சுமணனை மறைத்தனர். வஜ்ரவேகன், பிரமாதின் ஆகியோருக்கும் வலிய கரங்கள் கொண்ட லட்சுமணனுக்கு இடையில் நடந்த அந்தப் பயங்கர மோதல் சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலம்} நீடித்தது.
பவனனின் மகனான ஹனுமான் ஒரு மலைச்சிகரத்தை எடுத்துக்கொண்டு விரைந்து, அந்த ஆயுதத்தால் {மலைச்சிகரத்தால}, அச்சகோதரர்களில் ஒருவனான ராட்சசன் வஜ்ரவேகனின் உயிரைப் பறித்தான். பலமிகுந்த குரங்கான நளனும் {நீலன் என்கிறது கும்பகோணம் பதிப்பு}, ஒரு பெரும் பாறையைக் கொண்டு, தூஷணனின் தம்பியான பிரமாதினை நசுக்கினான். எனினும், ஒருவருக்கொருவர் எதிர்த்து முன்னேறும் ராமன் மற்றும் ராவணனின் படைவீரர்களுக்கிடையேயான அந்தக் கொடிய போராட்டம், இதற்குப் பிறகும் ஒரு முடிவுக்கு வராமல், முன்பு போலவே உக்கிரத்துடன் நடந்தது. அந்தக் கானகவாசிகளால் {குரங்குகளால்} நூற்றுக்கணக்கான ராட்சசர்கள் கொல்லப்பட்டார்கள், அதே வேளையில் பல குரங்குகள் ராட்சசர்களாலும் கொல்லப்பட்டனர். எனினும், மரண இழப்பில் குரங்குகளை விட ராட்சசர்களுடைய இழப்பு மிக அதிகமாக இருந்தது.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தொண்டர்களுடன் {பின்தொடர்பவர்களுட்ன} கூடிய கும்பகர்ணனும், பெரும் போர்வீரனான பிரஹஸ்தனும், பெரும் சக்தி கொண்ட தூம்ராக்ஷனும் போர்க்களத்தில் விழுந்ததை அறிந்த ராவணன், தனது வீர மகன் இந்திரஜித்திடம், “ஓ! எதிரிகளைக் கொல்பவனே {இந்திரஜித்}, ராமன், சுக்ரீவன் மற்றும் லட்சுமணனை நீ கொல்வாயாக. எனது நன் மகனே, சச்சியின் தலைவனான, வஜ்ரத்தைத் தாங்கும் ஆயிரம் கண்கொண்டவனை {இந்திரனை} வீழ்த்தியதால், உன்னாலேயே எனக்கு இந்தப் பெரும்புகழ் கிடைத்தது. ஓ !எதிரிகளை அடிப்பவனே! உனது விருப்பத்துக்கேற்றவாறு தோன்றவும் மறையவும் கூடிய சக்தி கொண்ட நீ, (தேவர்களிடம்) வரமாகப் பெற்ற தெய்வீகக் கணைகளைக் கொண்டு எதிரிகளைக் கொல்வாயாக. உனது ஆயுதங்களின் சாதாரண ஸ்பரிசத்தையே ராமன், லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் ஆகியோரால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது, அவர்களது தொண்டர்களைக் குறித்த நான் என்ன சொல்வேன்? ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {இந்திரஜித்}, பிரஹஸ்தனாலோ, கும்பகர்ணனாலோ எந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லையோ, அது உன்னால் முடியட்டும். ஓ! மகனே {இந்திரஜித்}, உனது கூர்முனை கணைகளால், எனது எதிரிகளையும், அவர்களது படையினரையும் கொன்று, நீ முன்பொரு முறை வாசவனைக் கொன்று எனது மகிழ்ச்சியை எப்படி அதிகரிக்கச் செய்தாயோ, அப்படி இன்று செய்வாயாக” என்றான் {ராவணன்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட இந்திரஜித், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, கவசம் பூண்டு தனது தேரில் விரைந்து ஏறி, போர்க்களத்தை நோக்கி முன்னேறினான்.
பிறகு அந்த ராட்சசர்களில் காளை, {இந்திரஜித் என்ற} தனது பெயரை உரக்கக் கூறி, ஒற்றைக்கு ஒற்றைப் போர் புரிய {to a single combat}, நற்குறிகள் கொண்ட லட்சுமணனுக்கு அறைகூவல் விடுத்தான். இப்படிச் சவால்விடப்பட்ட லட்சுமணன், தனது வில் மற்றும் கணைகளை எடுத்துக் கொண்டு, அந்த வில்லின் நாணைத் தோல் உறை பூண்ட, தனது இடது கையால் சுண்டிவிட்டு, எதிரிகளின் இதயம் பயங்கரத்தை உணரச்செய்யும் வகையில், அந்த ராட்சசனை {இந்திரஜித்தை} நோக்கி விரைந்தான். தெய்வீக ஆயுதங்களை அறிந்த அந்த இரு வீரர்களுக்கிடையில், ஒருவருக்கொருவர் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தி, ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி நடைபெற்ற அந்த மோதல் பயங்கரத்தின் எல்லையைக் காட்டுவதாக இருந்தது. ஆனால், தனது கணைகளால் எதிராளி {லட்சுமணன்} மீது எந்த ஆதிக்கத்தையும் தான் பெற முடியாது என்பதைக் கண்டறிந்த வலிமைமிக்க வீரர்களில் முதன்மையான ராவணனின் மகன் {இந்திரஜித்}, தனது ஆற்றல்கள் அனைத்தையும் திரட்டினான். பிறகு, இந்திரஜித் பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற எறிவேல்களை {#} லட்சுமணனின் மீது வீசத் தொடங்கினான். எனினும், சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, தனது கூர்முனை கொண்ட கணைகளால், அவற்றை வெட்டிச் சிதறடித்தான். லட்சுமணனின் கூர்முனைக் கணைகளால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அந்த எறிவேல்கள் தரையில் விழுந்தன.
பிறகு வாலியின் மகனான அழகான அங்கதன், ஒரு பெரிய மரத்தை எடுத்து இந்திரஜித்தை நோக்கி மூர்க்கமாக விரைந்து, அதைக் கொண்டு அவனது தலையில் அடித்தான். இருப்பினும் அச்சமற்றிருந்த அந்த வலிமைமிக்க இந்திரஜித் சூலத்தைக் கொண்டு அங்கதனை அடிக்க முயன்றான். எனினும், சரியாக அந்நேரத்திலேயே, ராவணன் மகனால் {இந்திரஜித்தால்} எடுக்கப்பட்ட அந்தச் சூலத்தை லட்சுமணன் துண்டு துண்டாக வெட்டிப் போட்டான். பிறகு ராவணனின் மகன் கதாயுதத்தை எடுத்து, தன் அருகில் இருந்த அந்தக் குரங்குகளில் முதன்மையானவனும் வீரனுமான அங்கதனின் இடது விலாவில் அடித்தான். வாலியின் பலமிக்க மகனான அங்கதன், அந்த அடியை ஒரு பொருட்டாக எண்ணாமல், இந்திரஜித்தின் மேல் ஒரு பெரும் ஆச்சாமரத் தண்டை வீசினான். இந்திரஜித்தை அழிப்பதற்காகக் கோபம் கொண்ட அங்கதனால் வீசப்பட்ட அந்த மரம், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, குதிரைகள் மற்றும் தேரோட்டியோடு கூடிய இந்திரஜித்தின் தேரை அழித்தது. பிறகு குதிரைகளற்ற, தேரோட்டியற்ற தேரில் இருந்து குதித்த ராவணனின் மகன் {இந்திரஜித்}, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தனது மாய சக்திகளின் துணை கொண்டு, காட்சியில் இருந்து மறைந்தான்.
அபரிமிதமான மாய சக்திகளைக் கொண்ட அந்த ராட்சசன் {இந்திரஜித்}, திடீரென மறைந்ததைக் கண்டு, அந்த இடத்தில் ராமன் முன்னேறி வந்து, தனது துருப்புகளைக் கவனமாகக் காக்க ஆரம்பித்தான். எனினும், இந்திரஜித், தேவர்களின் வரங்களால் {தான்} அடைந்த கணைகளைக் கொண்டு, ராமன், பலமிக்க லட்சுமணன் ஆகிய இருவரது உடல்களின் அனைத்துப் பாகங்களையும் துளைக்க ஆரம்பித்தான். பிறகு, தனது மாய சக்திகள் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு போரிட்ட ராவணனின் மகனுக்கு எதிராக, வீரர்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும், தங்கள் கணைகளைக் கொண்டு தொடர்ந்து போராடினர். ஆனால் அந்த மனிதர்களில் சிங்கங்கள் மேல் முழுவதும் தனது கூர்முனை கொண்ட கணைகளை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தொடர்ந்து அடித்தான். தொடர்ச்சியாகத் தனது கணைகளைப் பொழிந்து கொண்டிருந்த மறைந்திருந்த அந்த வீரனை {இந்திரஜித்தை}, கற்குவியல்களை ஏந்திய குரங்குகள், ஆகாயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேடின. எனினும், அவர்களையும் {குரங்குகளையும்}, அந்த இரு சகோதரர்களையும், மறைந்திருந்த அந்த ராட்சசன் {இந்திரஜித்}, தனது கணைகள் மூலம் துன்புறுத்தத் தொடங்கினான். உண்மையில் அந்த ராவணனின் மகன், தனது மாய சக்திகளைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு, அந்தக் குரங்குப் படையைப் பெருஞ்சீற்றத்துடன் தாக்கினான். இப்படி உடல் முழுவதும் அவனது {இந்திரஜித்தின்} கணைகளால் துளைக்கப்பட்ட வீர சகோதரர்களான ராமனும் லட்சுமணனும், ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனையும், சந்திரனையும் போலத் தரையில் விழுந்தனர்.
மாயையை வென்ற மாயநீர்! – வனபர்வம் பகுதி 287-ராமலட்சுமணர்களின் உணர்வை மீட்ட விபீஷணனும், சுக்ரீவனும்; குபேரன் ராமனுக்காகக் கைலாசத்தில் இருந்து நீர் கொடுத்தனுப்பியது; அந்நீரால் கண்களை அலம்பிக் கொண்ட ராமனும் மற்றவர்களும் மறைந்திருக்கும் அனைத்தையும் தங்கள் கண்களால் காண முடிந்தது; லட்சுமணன் இந்திரஜித்தை கொன்றது; சீதையைக் கொல்ல விரும்பிய ராவணன்; ராவணனின் கோபத்தைத் தணித்த அவிந்தியன்; போருக்குத் தயாரான ராவணன்…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சகோதரர்களான ராமனும், லட்சுமணனும் நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் கிடப்பதைக் கண்ட ராவணனின் மகன் {இந்திரஜித்}, தான் வரங்களாகப் பெற்றிருந்த கணைகளால் வலை செய்து அவர்களைக் கட்டினான். இப்படி இந்திரஜித்தின் அம்புகளாலான வலையால் போர்க்களத்தில் கட்டப்பட்ட மனிதர்களில் வீரப்புலிகளான அவர்கள், சிறையிலடைபட்ட இரு பருந்துகளைப் போலத் தெரிந்தனர். அந்த வீரர்கள் நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைக் கண்ட சக்ரீவன், எல்லாப்புறங்களிலும் அனைத்துக் குரங்குகளும் சூழ நின்றான். சுஷேணன், மைந்தன், துவிவிதன், குமுதன், அங்கதன், ஹனுமான், நீலன், தாரன், நளன் ஆகியோருடன் அந்தக் குரங்குகளின் மன்னன் {சுக்ரீவன்} அங்கு நின்று கொண்டிருந்தான். களத்தின் வேறொரு பகுதியில் வெற்றியடைந்த விபீஷணன், விரைவில் அந்த இடத்திற்கு வந்து, பிரக்ஞம் [1] என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, உணர்வற்றிருந்த அந்த வீரர்களை {ராமன் மற்றும் லட்சுமணனை} {நினைவடையும்படி} எழுப்பினான்.
பிறகு சுக்ரீவன் விரைவாக அவர்களது உடலில் இருந்து அம்புகளைப் பிடுங்கினான். பிறகு, தெய்வீக மந்திரங்களுடன், மிகவும் பயனளிக்கக்கூடிய விசல்யை [2] எனும் மருந்தைப் {சுக்ரீவன்} பூசியதும், அந்த மனித வீரர்கள் {ராமனும், லட்சுமணனும்} தங்கள் சுயநினைவை அடைந்தனர். தங்கள் உடல்களில் இருந்து அம்புகள் அகற்றப்பட்டதும், அந்தப் பலமிக்கப் போர்விரர்கள் தங்கள் வலி மற்றும் சோர்வு ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, தங்கள் மயக்கநிலையில் இருந்து ஒரு கணத்தில் எழுந்தனர். இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றலான ராமன், துன்பம் நீங்கியவனாக இருப்பதைக் கண்டதும், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இரு கரங்கள் கூப்பிய நிலையில் இருந்த விபீஷணன் அவனிடம் {ராமனிடம்}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, குஹ்யர்கள் மன்னனின் {குபேரனின்} உத்தரவின் பேரில், வெண்மலைகளிலிருந்து நீரை [3] எடுத்துக் கொண்டு ஒரு குஹ்யன் {யக்ஷன்} இங்கு வந்திருக்கிறான். ஓ! பெரும் மன்னா {ராமா}, அந்த நீர் குபேரன் உனக்குக் கொடுத்தனுப்பியிருக்கும் பரிசாகும். அதனால், மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, உனக்குக் காட்சியளிக்கும்! இந்த நீரைக் கொண்டு கண்களை அலம்பினால் மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும் உனக்குக் காட்சியளிக்கும். இதை {இந்த நீரை} நீ யாருக்குக் கொடுக்கிறாயோ அவர்களுக்கும் காட்சியளிக்கும்” என்றான் {விபீஷணன்}
(விசல்யை என்பது வெட்டுகள் மற்றும் காயங்களைக் குணப்படுத்தும் ஒரு மருத்துவத் தாவரமாகும். இது இன்றும் வங்காளத்தின் பகல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இந்த எழுத்தாளரின் {கங்குலியின்} மருத்து நண்பர் ஒருவர், இப்பெயரில் இருக்கும் ஒரு தாவரத்தின் திறனைச் சோதித்துப் பார்த்தார். அப்போது அது, இரத்தத்தை உரையவைக்கும் காலிக் அமிலம் {gallic acid} அல்லது டேனிக் அமிலம்{tannic acid} ஆகியவற்றைவிடப் பெரும் வீரியம் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். என்கிறார் கங்குலி–இந்து தொன்மவியலில் {புராணங்களில்} குஹ்யர்கள் என்பவர்கள் தேவர்களுக்கு அடுத்த நிலையிலும், தெய்வீக ஆடல் பாடல் நிபுணர்களான கந்தர்வர்களை விட மேம்பட்டவர்களாகவும் சொல்லப்பட்டுள்ளது. சிவனின் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கும் கைலாசத்தின் மறுபெயரே வெண்மலை என்பதாகும் என்கிறார் கங்குலி.)
“அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன ராமன் அந்தப் புனித நீரைப் பெற்றுக் கொண்டு, அதைக் கொண்டு தனது கண்களைச் சுத்தப்படுத்தினான். உயர்ந்த மனம் படைத்த லட்சுமணனும் அதையே செய்தான். சுக்ரீவன், ஜாம்பவான், ஹனுமான், அங்கதன், மைந்தன், துவிவிதன், நீலன் மற்றும் குரங்குகளில் முதன்மையான பலர், தங்கள் கண்களை அந்நீர் கொண்டு அலம்பினர். அதன் பிறகு, அனைத்தும் விபீஷணன் சொன்னவாறே சரியாக நடந்தன. ஓ! யுதிஷ்டிரா, விரைவில் அவர்கள் அனைவரின் கண்களுக்கும், துணையில்லா கண்களால் காணமுடியாத பொருட்களைக் காணும் திறன் பெற்றன.
அதேவேளையில், தான் பெற்ற வெற்றிக்குப் பிறகு இந்திரஜித் தனது தந்தையிடம் சென்றான். தான் செய்த செயல்களை அனைத்தையும் சொன்ன அவன் களத்திற்கு விரைந்து வந்து, படையின் முன்னணியில் தன்னை நிறுத்திக் கொண்டான். பிறகு விபீஷணனின் வழிகாட்டுதல்படி, சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, திரும்பி வந்துகொண்டிருக்கும் கோபக்கார ராவணனின் மகனை {இந்திரஜித்தை} நோக்கி, அவனைத் தாக்குவதற்காக விரைந்தான். விபீஷணனிடம் இருந்து ஒரு துப்பைப் {குறிப்பைப்} பெற்ற லட்சமணன், உக்கிரமடைந்து, தனது தினசரி வேள்வியை அன்று செய்து முடிக்காத இந்திரஜித்தைக் கொல்ல விரும்பி, வெற்றியைப் பெற எரிந்து கொண்டிருக்கும் அந்த வீரனைத் {இந்திரஜித்தைத்} தனது கணைகளால் அடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த எண்ணி, அவர்களுக்கிடையில் நடைபெற்ற அந்த மோதல், {பழங்காலத்தில்} தேவர்களுக்கும் பிரகலாதனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல அற்புதமாக இருந்தது. உயிர் நிலைகளைத் துளைக்கும் கணைகளால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} துளைத்தான் இந்திரஜித். சுமித்திரையின் மகனும் {லட்சுமணனும்}, ராவணனின் மகனைக் கடும் சக்திகள் கொண்ட தனது கணைகளால் துளைத்தான். லட்சுமணனின் கணைகளால் துளைக்கப்பட்ட ராவணனின் மகன் {இந்திரஜித்} கோபத்தால் உணர்வற்றுப் போனான். பிறகு அவன் {இந்திரஜித்}, லட்சுமணனை நோக்கி, நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற எட்டு கடும் கணைகளை அடித்தான்.
ஓ! யுதிஷ்டிரா, சக்தியும், பிரகாசமும், மூன்று சிறகுகளும் கொண்ட கணைகளால் சுமித்திரையின் வீர மகன் {லட்சுமணன்}, தனது விரோதியின் {இந்திரஜித்தின்} உயிரை எப்படி எடுத்தான் என்பதை இப்போது நான் சொல்கிறேன் கேள். அவற்றில் {அந்த அம்புகளில்} ஒன்றைக் கொண்டு வில்லைப்பிடித்திருந்த இந்திரஜித்தின் கரங்களை உடலில் இருந்து துண்டித்தான். இரண்டாவதைக் கொண்டு, கணைகளைப் பற்றியிருந்த மற்றொரு கரமும் தரையில் விழும்படி செய்தான். கூரிலும் கூரானதும் பிரகாசமானதுமான மூன்றாவதைக் கொண்டு, அழகிய மூக்காலும், பிரகாசமான காது குண்டலங்களாலும் அலகங்கரிக்கப்பட்டிருந்த அவனது {இந்திரஜித்தின்} தலையை அறுத்தெரிந்தான். கரங்களும், தலையும் அற்ற அவனது உடல் காண்பதற்குப் பயங்கரமாக இருந்தது. எதிரியைக் கொன்ற பிறகு, பலமிக்க மனிதர்களில் முதன்மையானவனான அவன் {லட்சுமணன்}, தனது கணைகளைக் கொண்டு, தனது எதிரியின் தேரோட்டியைக் கொன்றான். பிறகு குதிரைகள் வெறும் தேரை நகரத்திற்குள் இழுத்துச் சென்றன.
ராவணன், தனது மகன் இல்லாது திரும்பிய தேரைக் கண்டான். தனது மகன் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், இதயம் நிறைந்த துன்பத்தால் பாதிக்கப்பட்டான். எல்லையில்லா துயரம் மற்றும் பாதிப்பில் மூழ்கிய அந்த ராட்சசர்களின் மன்னன் {ராவணன்}, திடீரென மிதிலையின் இளவரசியைக் {சீதையைக்} கொல்ல விரும்பினான். தனது வாளை எடுத்துக் கொண்ட அந்த ராட்சசன் {ராவணன்}, அசோக வனத்தில் தனது தலைவனைக் காண்பதற்காகக் காத்திருந்த மங்கையை நோக்கி விரைந்தோடினான். அந்த இழிந்த பாவியின் பாவம் நிறைந்த காரியத்தைக் கண்ட அவிந்தியன் அவனது கோபத்தைத் தணித்தான்.
ஓ! யுதிஷ்டிரா, அவிந்தியன் சொன்ன காரணங்களைக் கேள்! அந்த ஞானம் கொண்ட ராட்சசன் {அவிந்தியன்}, “ஒரு வல்லரசின் சுடர்மிகும் அரியணையில் அமர்ந்திருக்கும் நீ, ஒரு பெண்ணைக் கொல்வது தகாது! அதுபோக, உன் சக்தியைக் கொண்டு இவள் சிறைபிடிக்கப்பட்டதைக் கருதினால், இந்தப் பெண் ஏற்கனவே கொல்லப்பட்டவளே. இவளது உடல் மட்டும் அழிவதால் இவள் கொல்லப்பட்டவள் ஆக மாட்டாள் என்று நான் நினைக்கிறேன். இவளது கணவனைக் கொல்! அவனைக் கொன்றால், இவளும் கொல்லப்பட்டவளே! உண்மையில் நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கூடப் பராக்கிரமத்தில் உனக்கு நிகரானவனல்ல! இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் உன்னால் மீண்டும் மீண்டும் போர்க்களத்தில் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்!” என்று சொன்னான். மேலும் இது போன்ற வார்த்தைகளால் இதற்கு ஒப்பான இதே போன்ற பல வார்த்தைகளாலும், ராவணனைத் தணிப்பதில் வெற்றிக் கொண்டான் அவிந்தியன். உண்மையில் பின்னவன் {ராவணன்}, தனது ஆலோசகனின் {அமைச்சனின்} பேச்சைக் கேட்டான். பிறகு அந்த இரவு உலாவி, தானே போரில் ஈடுபடத் தீர்மானித்து, வாளை உறையில் இட்டு, தனது தேரைத் தயாராக நிறுத்த ஆணைகள் பிறப்பித்தான்.”
ராவணன் எரிந்தான்! – வனபர்வம் பகுதி 288-ராமனை எதிர்த்து வந்த ராவணன் ; ராவணனின் படைவீரர்களை மரத்தண்டுகள் கொண்டு தாக்கி குரங்குகள் வீழ்த்துவது; மாயை வெளிப்படுத்திய ராவணன்; மாயையால் உண்டான வீரர்களைக் கொன்ற ராமன்; ராமனையும் லட்சுமணனையும் போன்ற தோற்றம் கொண்ட வீரர்களை ராவணன் உண்டாக்குவது; ராமன் அவர்களையும் கொல்வது; மாதலி ராமனைச் சந்தித்து, இந்திரனின் தேரில் பயணிக்குமாறு வற்புறுத்துவது; பிரம்மாயுதம் கொண்டு ராமன் ராவணனை வீழ்த்துவது..
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தனது அன்பிற்குரிய மகனின் {இந்திரஜித்தின்} மரணத்தால் ஏற்பட்ட கோபத்தால் உந்தப்பட்ட பத்து கழுத்தோன் {ராவணன்}, தங்கத்தாலும், ரத்தினத்தாலும் இழைக்கப்பட்டிருந்த தனது தேரில் ஏறினான். பல வகையான ஆயுதங்களைக் கையில் கொண்டிருந்த பயங்கர ராட்சசர்கள் சூழ இருந்த ராவணன், எண்ணிலடங்கா குரங்கு தலைவர்களுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருந்த ராமனை நோக்கி முன்னேறினான். கோபம் கொண்ட அவன் {ராவணன்} குரங்குப்படையை நோக்கி விரைவதைக் கண்ட மைந்தன், நீலன், நளன், அங்கதன், ஹனுமான் மற்றும் ஜாம்பவான ஆகியோர் தங்கள் துருப்புகள் அனைத்துடன் அவனைச் {ராவணனைச்} சூழ்ந்தனர். குரங்குகளிலும், கரடிகளிலும் முதன்மையான அவர்கள், பத்துக்கழுத்தோனின் (ராவணனின்) படை வீரர்களை அவன் {ராவணன்} பார்வைக்கெதிரிலேயே மரத்தின் தண்டுகளைக் கொண்டு பூண்டோடு அழிக்கத் தொடங்கினர். எதிரி தனது துருப்புகளைக் கொன்றொழிப்பதைக் கண்ட பெரும் மாய சக்திகள் கொண்ட ராட்சச மன்னனான ராவணன், தனது மாயையைப் பயன்படுத்தத் தொடங்கினான். கைகளில் கணைகளும், சூலங்களும், இருபுறக்கூர் கொண்ட வாள்களையும் {ரிஷ்டிகளையும்} கொண்ட ராட்சச வீரர்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவனது {ராவணனின்} உடலில் இருந்து வெளிப்பட்டனர்.
இருப்பினும் ராமன் தனது தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு அந்த ராட்சசர்கள் அனைவரையும் கொன்றான். ராட்சசர்களின் மன்னன் {ராவணன்} மீண்டும் ஒருமுறை தனது மாயசக்தியை வெளிப்படுத்தினான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பத்து முகத்தோன் {ராவணன்} தனது உடலில் இருந்து ராமனையும், லட்சுமணனையும் போன்ற எண்ணிலடங்கா போர்வீரர்களை உற்பத்தி செய்து அந்த இரு சகோதரர்களை நோக்கி விரைந்தான். பிறகு, ராமனுக்கும், லட்சுமணனுக்கும் எதிரியான அந்த ராட்சசர்கள், விற்களையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி விரைந்தனர். அந்த ராட்சசர்கள் மன்னனால் {ராவணனால்} பிரயோகிக்கப்பட்ட மாயையின் சக்தியைக் கண்ட இக்ஷவாகு குல வழித்தோன்றலான சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ராமனிடம், “உமது தோற்றத்தில் இருக்கும் இந்த இழிந்த ராட்சசர்களை நீரே கொல்லும்” என்ற வீர வார்த்தைகளைச் சொன்னான். அதன் பேரில் ராமன், தனது உருவத்தில் இருந்தவர்களையும் மற்ற ராட்சசர்களையும் கொன்றான்.
அந்த நேரத்தில், பழுப்பு நிற {tawny hue = கபில நிறம், மஞ்சட்பழுப்பு நிறம்} {பச்சை நிறம் என்கிறது கும்பகோணம் பதிப்பு} குதிரைகள் பூட்டப்பட்டு, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தேரில் இந்திரனின் தேரோட்டியான மாதலி அந்தப் போர்க்களத்துக்கு வந்து ராமனை அணுகினான். மாதலி, “ஓ! காகுஸ்த குலத்தின் மகனே {ராமா}, ஒரு ஜோடி பழுப்புக் குதிரைகள் பூட்டுப்பட்டு, வெற்றிவாகை சூடும் இந்த அற்புதமான தேர் தேவர்கள் தலைவனுக்குச் சொந்தமானது! ஓ! மனிதர்களில் புலியே, இந்த அற்புதத் தேரில் இருந்தே நூற்றுக்கணக்கான தைத்தியர்களையும், தானவர்களையும் இந்திரன் போர்க்களத்தில் கொன்றான்! எனவே, ஓ! மனிதர்களில் புலியே, என்னால் செலுத்தப்படும் இந்தத் தேரில் பயணித்து விரைவாகப் போர்க்களத்தில் ராவணனைக் கொல்! இதைச் சாதிக்கத் தாமதிக்காதே!” என்றான் {இந்திரனின் தேரோட்டி மாதலி}.
எனினும், இப்படி அவனால் {மாதலியால்} சொல்லப்பட்ட ரகு குல வழித்தோன்றல் {ராமன்}, இதுவும் ராட்சசர்களின் மாயை என்று நினைத்து, மாதலியின் உண்மை நிறைந்த வார்த்தைகளில் சந்தேகங்கொண்டான். அப்போது விபீஷணன், “ஓ! மனிதர்களில் புலியே {ராமா}, இது தீய ராவணனின் மாயையன்று! ஓ! பெரும் பிரகாசமிக்கவரே, இந்திரனுக்குச் சொந்தமான இந்தத் தேரில் விரைவாக ஏறு!” என்றான். இதனால் மகிழ்ச்சி கொண்ட காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, விபீஷணனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, அத்தேரில் ஏறி ராவணன் மேல் கோபம் கொண்டு விரைந்தான்.
ராவணனும் தனது எதிரிக்கு எதிராக விரைந்த போது, பூமியில் இருந்த உயிரினங்கள் உரத்து அலறின, அதே நேரத்தில், சொர்க்கத்தில் இருந்த தேவர்கள், படக {#படகம்} ஒலியுடன் கூடிய சிம்ம கர்ஜனை புரிந்தனர். பிறகு பத்து கழுத்தோனான ராவணனுக்கும், ரகு குலத்தின் இளவரசனுக்கும் {ராமனுக்கும்} இடையில் தொடங்கிய மோதல் கடுமையாகவும், தீவிரமாகவும் இருந்தது. உண்மையில், அவர்களுக்கு இடையில் நடந்த போருக்கு வேறு எங்கும் இணையே கிடையாது. அந்த ராட்சசன் {ராவணன்} ராமனை நோக்கி, உச்சரிக்கப் போகும் நிலையில் இருக்கும் அந்தணரின் சாபம் போன்றதும் [1] {பிரம்ம தண்டம் போன்றதும்}, இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்றதுமான எறிவேலை {#} {சூலம்}எறிந்தான். இருப்பினும் ராமன் தனது கூரிய கணைகளால் அந்த எறிவேலை துண்டு துண்டாக அறுத்துப் போட்டான்.(வியாசர் மற்றும் வால்மீகி ஆகிய இருவரின் படியும், பிராமணச் சாபத்தைவிடக் கடுமையானது எதுவுமில்லை. இந்திரனின் வஜ்ராயுதமே பிராமணச் சாபத்துடன் ஒப்புநோக்கும்போது பலவீனமானதே. காரணம் தெளிவானது. வஜ்ராயுதம் யாரை நோக்கி ஏவப்படுகிறதோ அந்தத் தனிநபரையே அடிக்கும். பிராமணச் சாபமோ மொத்த குலத்தையும், மொத்த தலைமுறையையும், முழு நாட்டையுமே அடித்துவிடும்.)
செய்வதற்கு அரிதான அச்செயலைக் கண்ட ராவணன் அச்சத்தால் தாக்கப்பட்டான். ஆனால், விரைவில் கோபம் தூண்டப்பட்டுப் பத்து கழுத்து வீரன் {ராவணன்}, ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும், எண்ணிலடங்காதவாறும் ஏவுகணைகளையும் {புசுண்டி}, எறிவேல்களையும், தண்டங்களையும், போர்க்கோடரிகளையும், பலவிதமான கணைகளையும், சதாக்னிகளையும், கல்லில் கூராக்கப்பட்ட அம்புகளையும், மேலும் பலவகையான ஆயுதங்களையும் ராமன் மீது பொழிந்தான். பயங்கர உருவைக் காட்சிப்படுத்திய பத்து கழுத்து ராட்சசனின் {ராவணனின்} மாயையைக் கண்ட குரங்குகள் அச்சப்பட்டு அனைத்து திசைகளிலும் ஓடின.
பிறகு அந்தக் காகுஸ்தனின் வழித்தோன்றல் {ராமன்}, தனது அம்பறாத்தூணியில் இருந்த, அழகிய சிறகுகளும், தங்க இறகுகளும், பிரகாசமான, அழகிய தலை கொண்ட ஓர் அழகிய அம்பை எடுத்து பிரம்மாயுத {பிரம்மாஸ்திர} மந்தரத்துடன் சேர்த்து வில்லில் பொருத்தினான். இந்திரனைத் தலைமையாகக் கொண்டு தேவர்களும், கந்தர்வர்களும், சரியான மந்திரங்களால் பிரம்மாயுதமாக ராமனால் மாற்றபட்ட அற்புத கணையைக் கண்டு மகிழ ஆரம்பித்தனர். தேவர்களும், தானவர்களும் கின்னரர்களும் பிரம்மாயுதத்தின் அக்காட்சியால், எதிரியான ராட்சசனின் {ராவணனின்} உயிருக்கு முடிவு நெருங்கியது என்றே கருதத் தலைப்பட்டனர். பிறகு, ஒப்பற்ற சக்தி கொண்டதும், ராவணனின் மரணத்தை ஏற்படுத்த போவதும், உச்சரிக்கப்படும் நிலையில் இருக்கும் அந்தண சாபத்தைப் போன்றதுமான அந்தப் பயங்கர ஆயுதத்தை ராமன் அடித்தான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வில்லை வட்டமாக வளைத்து ராமனால் அக்கணை {பிரம்மாயுதம்} அடிக்கப்பட்டதும், தேர், தேரோட்டி, குதிரைகளுடன் கூடிய ராட்சச மன்னன் {ராவணன்} எல்லாப் பக்கங்களிலும் பயங்கர நெருப்பால் சூழப்பட்டு எரிக்கப்பட்டான். புகழ்பெற்ற சாதனையைச் செய்த ராமனால் ராவணன் கொல்லப்படுவதைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும் சாரணர்களும் மிகவும் மகிழ்ந்தனர். பிரம்மாயுதத்தின் ஆற்றலால் அண்ட மேலாட்சியை இழந்த சிறப்பு வாய்ந்த ராவணனை ஐங்கூறுகளும் {ஐம்பூதங்களும்} கைவிட்டன. ராவணனின் உடல் சார்ந்த மூலப்பொருட்கள் அனைத்தும் அந்தப் பிரம்மாயுதத்தால் எரிக்கப்பட்டன. அவனது சதை, குருதி ஆகியவை சாம்பல் கூடக் காணக்கிடைக்காதவாறு ஏதுமற்றவையாகக் குறைக்கப்பட்டன.
நான் பாவமிழைத்தவளானால்…! – வனபர்வம் பகுதி 289அ-ராமனிடம் சீதையை அவிந்தியன் அழைத்து வந்தது; ராமனின் கடுஞ்சொற்களைக் கேட்ட சீதை பூமியில் விழுந்தது; வாயு, அக்னி, வருணன், பிரம்மன் தசரதன் ஆகியோர் சீதையை ஏற்றுக் கொள்ளும்படி ராமனிடம் கேட்டது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அற்பனும், தேவர்களுக்கு எதிரியுமான ராட்சசர்கள் மன்னனை {ராவணனைக்} கொன்ற பிறகு தனது நண்பர்களுடனும், சுமித்திரையின் மகனுடனும் {லட்சுமணனுடனும்} ராமன் மிகுந்த மகிழ்ச்சியோடிருந்தான். அந்தப் பத்துக்கழுத்தோன் (ராட்சசன்) {ராவணன்} கொல்லப்பட்ட பிறகு, முனிவர்களைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள், வலிய கரங்கள் கொண்ட ராமனை வழிபட்டு, “ஜெயம்” என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரித்து அருள் வழங்கினர். தேவர்கள் அனைவரும், கந்தர்வர்களும், தேவலோகவாசிகளும் தாமரை இதழ்களைப் போன்ற கண் கொண்ட ராமனை, தங்கள் பாடல்களாலும், பூமாரியாலும் மனநிறைவு கொள்ளச் செய்தனர். இப்படி ராமனை முறையாக வழிபட்ட அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பினர். ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அப்போது வானத்தைப் பார்த்த போது, அங்கே ஏதோ பெரும் திருவிழா கொண்டாடப்பட்டது போல இருந்தது.
பத்து கழுத்து ராட்சசனைக் {ராவணனைக்} கொன்றபிறகு, உலகம் பரந்த புகழ் கொண்டவனும், எதிரி நகரங்களை வெல்பவனுமான தலைவன் ராமன், இலங்கையை விபீஷணனுக்கு அளித்தான். பிறகு முதிர்ந்த ஞானியான (ராவணனின்) ஆலோசகனான {அமைச்சனான} அவிந்தியன், சீதையைத் தனக்கு முன்னும், அதற்கு முன்னே நடந்து சென்ற விபீஷணனுக்குப் பின்னும் விட்டு, நகரத்தை விட்டு வெளியே வந்தான். பிறகு பெரும் பணிவு கொண்ட அவிந்தியன் காகுஸ்த குலத்தின் சிறப்புமிக்கவனிடம் {ராமனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவனே {ராமா}, அற்புதமான நடத்தை கொண்ட ஜனகனின் மகளான இந்தத் தேவியை ஏற்றுக் கொள்!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, அற்புதமான தனது தேரில் இருந்து இறங்கி, கண்ணீரால் குளித்திருக்கும் சீதையைக் கண்டான்.
துயரத்துடனும், புழுதி படிந்த மேனியுடனும், தலையில் சடாமுடியுடனும், அழுக்கடைந்த ஆடை உடுத்தியும் தனது வாகனத்தில் {பல்லக்கில்} அமர்ந்திருந்த அந்த அழகான மங்கையைக் {சீதையைக்} கண்ட ராமன், தனது மதிப்புக்கு ஏற்படப்போகும் களங்கத்திற்கு அஞ்சி அவளிடம் {சீதையிடம்}, “விதேகத்தின் மகளே {சீதை}, நீ விரும்பிய இடத்திற்குச் செல். இப்போது நீ விடுபட்டாய்! நான் என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்பட்டது! ஓ! அருளப்பட்ட மங்கையே, என்னைக் கணவனாகக் கொண்ட நீ, ஒரு ராட்சசனின் வசிப்பிடத்தில் கிடந்து முதிர்ந்து விடக்கூடாது! இதற்காகவே நான் அந்த இரவு உலாவியைக் கொன்றேன். ஆனால், அறநெறிகளின் அனைத்து உண்மைகளையும் அறிந்த எங்களைப் போன்ற ஒருவன், மாற்றான் கைகளில் விழுந்த ஒரு பெண்ணை எவ்வாறு ஒருக்கணமேனும் அணைக்க முடியும்? ஓ! மிதிலையின் இளவரசியே, நீ கற்புடையவளோ, கற்பற்றவளோ, நாயால் நக்கப்பட்ட வேள்வி நெய்யைப் போன்ற உன்னுடன் இன்பமாக இருக்க இனி நான் துணிய மாட்டேன்!” என்றான் {ராமன்}.
இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட அந்த வழிபடத்தக்க பெண் {சீதை}, இதயத்தில் ஏற்பட்ட துயரத்தால், வேர்களில் துண்டிக்கப்பட்ட வாழை மரம் போலத் திடீரெனக் கீழே விழுந்தாள். தான் அடைந்த மகிழ்ச்சியின் விளைவாக அவள் முகத்தை மூடியிருந்த நிறம், வாயிலிருந்து வெளிப்படும் மூச்சுக்காற்றால் ஊதப்படும் கண்ணாடியில் இருக்கும் நீர்த்துகள்கள் போல {கண்ணாடியில் ஊதினால் எப்படி அது மங்குமோ அதுபோல} விரைவில் காணாமல் போனது. ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைத்துக் குரங்குகளும், லட்சுமணனும் இறந்தவர் போல அசையாதிருந்தனர். பிறகு தெய்வீகமானவனும், புனித ஆன்மா கொண்டவனும், தாமரையில் இருந்து தானே உதித்த அண்ட படைப்பாளனும் நான்முகனுமான பிரம்மன், தனது தேரில் வந்து ரகுவின் மகனுக்குக் {ராமனுக்கு} காட்சி கொடுத்தான். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வாயு, யமன், வருணன், யக்ஷர்களின் சிறப்புமிக்கத் தலைவன், புனிதமான முனிவர்கள் மற்றும் மன்னன் தசரதனும் தங்கள் பிரகாசமான தெய்வீக உருவத்துடன், அன்னங்களால் இழுக்கப்பட்ட தேரில் காட்சி கொடுத்தனர். தேவர்களாலும் கந்தர்வர்களாலும் நிறைந்த ஆகாயம், நட்சத்திரங்களை ஆடையாகக் கொண்ட இலையுதிர்கால {சரதகால} வானம் போல இருந்தது.
பிறகு, தரையில் இருந்து எழுந்த அருளப்பட்டவளும், புகழ்பெற்றவளுமான விதேக இளவரசி {சீதை}, அங்கே இருந்தவர்களுக்கு மத்தியில் அகன்ற மார்பு கொண்ட ராமனிடம், “ஓ! இளவரசே, ஆண்களிடமும், பெண்களிடமும் எவ்வாறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் நீர். எனவே, எந்தத் தவறாலும் நான் உம்மைக் குற்றப்படுத்தவில்லை. ஆனால், எனது வார்த்தைகளையும் கேளும்! எப்போதும் நகரும் தன்மை கொண்ட காற்று {வாயு} அனைத்து உயிருக்குள்ளும் இருக்கிறது. நான் பாவமிழைத்திருந்தால், அவன் {வாயுத்தேவன்} எனது உயிர் சக்திகளைக் கைவிடட்டும் {எனது உயிரைப் பறிக்கட்டும்}. ஓ! நான் பாவமிழைத்திருந்தால், (நான் ஏற்கனவே அழைத்திருக்கும்) காற்றைப் {வாயுவைப்} போலவே, நெருப்பு {அக்னி}, நீர், ஆகாயம், பூமி ஆகியனவும் எனது உயிர்ச்சக்திகளைக் கைவிடட்டும். ஓ! வீரரே, நான் கனவிலும் வேறொருவனின் உருவத்தைக் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்பது உண்மையானால், முன்பு தேவர்களால் நியமிக்கப்பட்டது போலவே நீர் எனக்குத் தலைவராக இருப்பீராக!” என்றாள்.
சீதை பேசிய பிறகு, மொத்த பகுதிகளுக்கும் கேட்கும்படி, உயர் ஆன்மா கொண்ட குரங்குகளின் இதயத்தை மகிழ்விக்கும் வகையில் வானத்தில் ஒரு புனிதமான குரல் கேட்டது. “ஓ! ரகுவின் மகனே {ராமா}, சீதை உண்மையையே சொன்னாள்! நான் வாயுத்தேவன். மிதிலையின் இளவரசி பாவமற்றவள்! எனவே, ஓ! மன்னா, நீ உன் மனைவியைச் சேர்வாயாக!” என்று வாயுத்தேவன் சொன்னது கேட்டது. பிறகு, நெருப்பு தேவன் {அக்னி தேவன்}, “ஓ! ரகுவின் மகனே {ராகவா = ராமா}, நான் அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசிப்பவன்! ஓ! காகுஸ்தனின் வழித்தோன்றலே, மிதிலையில் இளவரசி {மைதிலி = சீதை} நுண்ணியத் தவறையும் செய்யாத குற்றமற்றவள் ஆவாள்!” என்றான். பிறகு வருணனும், “ஓ! ரகுவின் மகனே {ராமா}, “அனைத்து உயிர்களின் உடல்களில் உள்ள சுவைகள் {ரசங்கள் = ரசனைகள்}, என்னிடம் இருந்தே இருப்பை அடைகின்றன! நான் சொல்கிறேன், மிதிலையின் இளவரசியை ஏற்றுக் கொள்வாயாக!” என்றான்.
பிறகு பிரம்மன், “ஓ! காகுஸ்தனின் வழித்தோன்றலே {ராமா}, ஓ! மகனே, நேர்மையும், சுத்தமும், அரச முனிகளின் கடமைகள் அனைத்தையும் கொண்ட உனது இந்த நடத்தை விசித்திரமாக இல்லை {ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை}. இருப்பினும், எனது வார்த்தைகளைக் கேள்! ஓ! வீரா, தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷர்கள், தானவர்கள் மற்றும் பெரும் முனிவர்களுக்கு எதிரியானவனை {ராவணனை} நீ கொன்றிருக்கிறாய். எனது அருளாலேயே அவன் {ராவணன்} இதுவரை எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான். உண்மையில், ஒரு காரணத்திற்காகவே நான் அவனிடம் பொறுமை காத்து வந்தேன்! எனினும், அந்த இழிந்தவன் {ராவணன்} தனது அழிவிற்காகவே சீதையை அபகரித்தான். சீதையைப் பொறுத்தவரை, நளகூபரனின் சாபத்தினால் நான் அவளைப் பாதுகாத்தேன். பழங்காலத்தில், விருப்பமில்லாத பெண்ணை அவன் எப்போது அணுகினாலும் அவன் தலை நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும் என அவனே {நளகூபரனே} ராவணனைச் சபித்தான். எனவே, எந்தச் சந்தேகமும் கொள்ளாதே! ஓ பெரும் புகழ் கொண்டவனே, உனது மனைவியை ஏற்றுக் கொள்! ஓ! தெய்வீகப் பிரகாசம் கொண்டவனே, உண்மையில், தேவர்களின் நன்மைக்காகவே நீ இந்தப் பெரும் சாதனையைச் சாதித்திருக்கிறாய்!” என்றான் {பிரம்மன்}.
பின்பு அனைவரிலும் கடைசியாகத் தசரதன், “ஓ! குழந்தாய்! நான் உன்னிடம் நிறைவு கொண்டேன். நானே உன் தந்தையான தசரதன்; நீ அருளப்பட்டிருப்பாயாக! ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொண்டு, உனது நாட்டை ஆட்சி செய் என நான் உனக்கு உத்தரவிடுகிறேன்!” என்றான். அதற்கு ராமன், “ஓ! மன்னர்களுக்கு மன்னரே, நீர் எனது தந்தை என்றால், நான் உம்மை மதிப்புடன் வணங்குகிறேன். உண்மையில் நான், உமது உத்தரவின் பேரில் அழகிய நகரமான ஆயோத்யைக்குத் திரும்புவேன்” என்றான்.”
ஆட்சிக்கட்டிலில் ராமன்! – வனபர்வம் பகுதி 289ஆ-ராமன் தன் பரிவாரங்கள், லட்சுமணன் மற்றும் சீதையுடன் அயோத்திக்குப் புறப்பட்டது. வழியில் கிஷ்கிந்தையில் இறங்கி அங்கதனுக்குப் பட்டத்து இளவரசனாகப் பட்டம் சூட்டியது; நந்திகிராமத்தில் இருந்த பரதனிடம் ஹனுமானைத் தூதனுப்பியது; ராமனின் பட்டாபிஷேகம்; சுக்ரீவன், விபீஷணன் ஆகியோருக்குத் தகுந்த வெகுமதிகளை ராமன் கொடுத்தனுப்பியது; ராமன் கோமதியாற்றங்கரையில் பத்து குதிரை வேள்விகளைச் செய்தது…
“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, விழியோரம் சிவந்த ராமன் இப்படிப் பதிலளித்ததும், மகிழ்ந்த அவனது தந்தை {தசரதன்} “அயோத்தி திரும்பி நாட்டை ஆட்சி செய்! ஓ! பெரும் புகழ்கொண்டவனே {ராமா}, உனது {வனவாசத்தின்} பதினான்கு {14} வருடங்கள் முடிவடைந்தன” என்றான். தசரதனால் இப்படிச் சொல்லப்பட்டு, ராமன் தேவர்களை வணங்கி, நண்பர்களால் வழிபடப்பட்டு, புலோமனின் மகளுடன் இணைந்த தேவர்கள் தலைவனைப் போலத் தனது மனைவியுடன் இணைந்தான். பிறகு அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் அவிந்தியனுக்கு ஒரு வரத்தைக் கொடுத்தான். திரிஜடை என்ற ராட்சச பெண்ணுக்கு செல்வங்களையும் மரியாதைகளையும் அளித்தான். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களுடன் இருந்த பிரம்மன், ராமனிடம், “ஓ கௌசல்யையைத் தாயாகக் கொண்டவனே {ராமா}, உனது இதயத்தில் இருக்கும் எந்த வரங்களை நாங்கள் கொடுப்பது?” என்று கேட்டான்.
அதன்பேரில் ராமன், அவர்களிடம், அறத்தில் உறுதியான பற்றும், எதிரிகளைப் பொறுத்தமட்டில் வெல்லப்பட முடியாதவனாக இருக்க வேண்டும் என்றும், ராட்சசர்களால் கொல்லப்பட்ட அனைத்துக் குரங்குகளும் உயிர் மீள்வதையும் வேண்டினான். “அப்படியே ஆகட்டும்’ என்று பிரம்மன் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயிர்மீட்கப்பட்ட அந்தக் குரங்குகள் போர்க்களத்தில் இருந்து எழுந்து வந்தனர். பெரும் நற்பேறுபெற்ற சீதையும் ஹனுமானுக்கு ஒருவரம் அளித்தாள். “ஓ! மகனே {ஹனுமானே}, ராமரின் சாதனைகள் (புகழ்) நீடிக்கும் வரை உனது வாழ்வும் நீடிக்கட்டும்! மேலும், மஞ்சள் கண்களைக் கொண்ட ஹனுமானே, மேலும், தெய்வீக உணவுகளும், பானங்களும் எனது அருளால் உனக்கு எப்போதும் கிடைக்கட்டும்” என்றாள் {என்ற வரத்தை ஹனுமானுக்கு அளித்தாள் சீதை}.
பிறகு களங்கமற்ற சாதனைகள் செய்த அந்த வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் மறைந்தனர். ஜனகனின் மகளுடன் {சீதையுடன்} ராமன் இணைந்திருப்பதைக் கண்ட சக்ரனின் {இந்திரனின்} தேரோட்டி {மாதலி}, மிகவும் மனம் நிறைந்து, நண்பர்களுக்கு மத்தியில், “ஓ! கலங்கடிக்கமுடியாத பராக்கிரமம் கொண்டவனே, தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், நாகர்கள், மனிதர்கள் ஆகியோரின் துயரங்களை நீ விலக்கியிருக்கிறாய். எனவே, இந்தப் பூமி ஒன்றாக நிலைத்திருக்கும் வரை, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள் ஆகியோர் உன்னைக் குறித்துப் பேசிக் கொண்டே இருப்பார்கள்” என்றான்.
இவ்வார்த்தைகளை ராமனுக்குச் சொன்ன மாதலி, அந்த ரகுவின் மகனை வழிபட்டு, ஆயுதம் தாங்குவோரில் முதன்மையான அவனிடம் {ராமனிடம்} விடைபெற்றுக்கொண்டு, சூரியப் பிரகாசம் கொண்ட அதே தேரில் சென்றான். சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, விபீஷணன், சுக்ரீவனைத் தலைமையாகக் கொண்ட குரங்குகளுடன் சீதையை முன்னிட்டுச் சென்ற ராமன், இலங்கையின் பாதுகாப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அதே பாலத்தின் வழியாகக் கடலை மீண்டும் கடந்தான். பயணிப்பவனின் விருப்பத்திற்கேற்ற இடத்திற்குச் செல்ல வல்ல புஷ்பகம் என்று அழைக்கப்பட்ட வானுறையும் அந்த அழகிய தேரில் அவன் பயணித்தான். ஆசைகளை அடக்கிய அவனை {ராமனை}, அவனது முதன்மையான ஆலோசகர்கள் முன்னுரிமை வரிசையில் சூழ்ந்திருந்தனர். ஏற்கனவே தான் படுத்திருந்த கடற்கரை பகுதிக்கு வந்த அந்த அறம்சார்ந்த மன்னன் {ராமன்} அனைத்துக் குரங்குகளுடன் தனது தற்காலிக வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.
பிறகு ரகுவின் மகன் {ராமன்}, உரிய நேரத்தில் குரங்குகளைத் தனது முன்னிலைக்கு அழைத்து, அவர்கள் அனைவரையும் வணங்கி, தங்கமும், ரத்தினங்களும் கொடுத்து மனநிறைவு கொள்ளச் செய்து ஒவ்வொருவராக அவர்களுக்கு விடை கொடுத்தான். குரங்குத் தலைவர்கள், கரடிகள் மற்றும் மாட்டுவால் கொண்ட குரங்குகள் அனைவரும் சென்ற பிறகு, ராமன் சுக்ரீவனும் கிஷ்கிந்தைக்குள் மீண்டும் நுழைந்தான். விபீஷணன் மற்றும் சுக்ரீவன் ஆகிய இருவருடன் புஷ்பகத்தேரில் கிஷ்கிந்தைக்குள் மீண்டும் நுழைந்த ராமன், வழியெங்கும் விதேக இளவரசிக்கு {சீதைக்கு} காடுகளைக் காட்டிக் கொண்டே வந்தான். பிறகு கிஷ்கிந்தையை அடைந்த அடிப்பவர்களில் முதன்மையான ராமன் வெற்றிபெற்ற அங்கதனை அந்த நாட்டின் பட்டத்து இளவரசனாக நிறுவினான்.
பிறகு சுமித்திரையின் மகனையும் {லட்சுமணனையும்}, அதே நண்பர்களையும் அழைத்துக் கொண்டு, தான் வந்த வழியிலேயே தன் நகரத்தை {அயோத்தியை} நோக்கி மீண்டும் சென்றான் ராமன். அயோத்தி நகரத்தை அடைந்ததும், அந்த மன்னன் {ராமன்} ஹனுமானைத் தூதுவனாகப் பரதனிடம் அனுப்பினான். வெளிப்புறக் குறிப்புகளைக் கொண்டு பரதனின் நோக்கங்களை உறுதி செய்து கொண்ட ஹனுமான், அவனுக்கு {ராமனின் வரவைக் குறித்த} நற்செய்தியைச் சொன்னான். அதன்பிறகு பவன குமாரன் {ஹனுமான்} திரும்பி வந்ததும், ராமன் நந்திகிராமத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்திற்குள் நுழைந்த ராமன், புழுதி படிந்த தேகமும், கந்தலாடை உடுத்தியும், தன் முன்னிலையில் தனது அண்ணனின் {ராமனின்} பாதுகைகளை வைத்துக் கொண்டும் அமர்ந்து இருக்கும் பரதனைக் கண்டான். ஓ! பாரதக் குலத்தின் காளையே இப்படிப் பரதனுடனும், சத்ருக்னனுடனும் சேர்ந்த ரகுவின் பலம் வாய்ந்த மகன் {ராமன்}, சுமித்திரையின் மகனுடன் {லட்சுமணனுடன்} கூடி பெரும் மகிழ்ச்சி கொள்ள ஆரம்பித்தான். தங்கள் அண்ணனுடன் சேர்ந்த பரதனும் சத்ருக்னனும் சீதையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தனர். பிறகு, திரும்பி வந்த தனது அண்ணனை வழிபட்ட பரதன், மிகுந்த மகிழ்ச்சியுடனும் தன்னிடத்தில் புனிதமாக, அடைக்கலமாக வைக்கப்பட்டிருந்த நாட்டைத் திருப்பிக் கொடுத்தான். பிறகு வசிஷ்டரும், வாமதேவரும் சேர்ந்து, அந்த வீரனுக்குத் {ராமனுக்கு} திருவோணம் {சிரவண} நட்சத்திரத்தின் எட்டாவது முகூர்த்தத்தில் [1] (அயோத்தியின்} ஆட்சிக்கட்டிலில் அமர்த்திப் பட்டம் சூட்டினர். இப்படிப் பட்டம் நிறுவப்பட்ட பிறகு, மிகுந்த மனநிறைவோடிருந்த குரங்குகள் மன்னன் சுக்ரீவனுக்கும், அவனது தொண்டர்களுக்கும் மற்றும் புலஸ்திய குலத்தின் விபீஷணனுக்கும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்ல ராமன் விடை கொடுத்து அனுப்பினான்.(அபிஜித் முகூர்த்தமே {கிட்டத்தட்ட மதிய வேளை} ஒரு நாளின் எட்டாவது முகூர்த்தமாக இருக்கிறது. ஒரு முகூர்த்தம் என்பது 48 நிமிடங்களைக் கொண்டதாகும். ஒரு நாளுக்கு {அதாவது 24 மணி நேரம்} 30 முகூர்த்தங்களாகும். நீலகண்டரால் விளக்கப்பட்ட வைஷ்ணவ விண்மீன் அறிவியல் சிரவவம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார் கங்குலி.)
பலவகையான இன்பம்தரக்கூடிய பொருட்களைக் கொடுத்து அவர்களை வழிபட்டு, அந்த நேரத்திற்குத் தகுந்த அனைத்தையும் செய்து, துயரம் நிறைந்த இதயத்துடன் ராமன் தனது நண்பர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான். பிறகு புஷ்பகத் தேரை வழிபட்ட ரகுவின் மகன் {ராமன்}, அதை மகிழ்சியுடன் வைஸ்ரவணனிடம் திருப்பிக் கொடுத்தான். பிறகு தெய்வீக முனிவரைத் {வசிஷ்டரைத்} துணையாகக் கொண்டு, அந்தணர்களுக்கு மூன்று மடங்கு கொடையளித்து, எத்தடையுமின்றிக் கோமதி ஆற்றங்கரையில் பத்து குதிரை வேள்விகளை நடத்தினான்.
துயர்களைந்த யுதிஷ்டிரன்! – வனபர்வம் பகுதி 290-ராமன் கதையைச் சொல்லிய மார்க்கண்டேயர், யுதிஷ்டிரனுக்குத் துணைவர்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி அவனைத் தேற்றுவது…
“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, இப்படியே அளவிலா சக்தி கொண்டவனான ராமன், வனவாசத்தின் விளைவாகப் பெரும்பேரிடரைப் பழங்காலத்தில் அனுபவித்தான். ஓ! மனிதர்களில் புலியே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, கவலைப்படாதே, நீ ஒரு க்ஷத்திரியன்! மேலும் நீயும் கரங்களின் வலிமையைச் சோதிக்கும் பாதையிலேயே சொல்கிறாய். அந்த வழி உறுதியாகப் பரிசுகளை ஏற்க இட்டுச் செல்லும். உன்னிடம் ஒரு துகள் அளவும் பாவமில்லை. இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், அசுரர்களும் நீ செல்லும் பாதையிலேயே செல்ல நேர்ந்தது! இது போன்ற துயரங்களுக்குப் பிறகுதான் வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்}, மருதர்களின் துணை கொண்டு விருத்திரனையும், ஒப்பற்ற நமுசியையும், நீண்ட நாக்குடைய ராட்சசியையும் {தீர்க்கஜிஹவை} கொன்றான். துணையுள்ளவன், தனது நோக்கங்களின் சாதனையை {நிறைவை} எப்போதும் ஈட்டுவான்!
தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தம்பியாகக் கொண்டவனால் {உன்னால்} போர்க்களத்தில் வெல்ல முடியாதது எது? பயங்கரப் பராக்கிரமம் கொண்ட இந்தப் பீமனும் பலம் நிறைந்த மனிதர்களில் முதன்மையானவனாக இருக்கிறான். இளைஞர்களும் வீரர்களுமான மாத்ரவதியின் {மாத்ரியின்} மகன்களும் {நகுலனும் சகாதேவனும்} பலமிக்க வில்லாளிகளாக இருக்கின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரா}, இப்படிப்பட்ட துணை கொண்ட நீ ஏன் விரக்தியடைகிறாய்? இவர்கள் மருதர்களின் துணை கொண்ட வஜ்ரம் தாங்குபவனின் {இந்திரனின்} படையை அழிக்கும் திறன் கொண்டவர்களாவர். தெய்வீக வடிவில் இருக்கும் இந்தப் பலமிக்க வில்லாளிகளைத் துணையாகக் கொண்ட நீ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உனது அனைத்து எதிரிகளையும் போர்க்களத்தில் வெல்வாய் என்பது நிச்சயம்!
பலம் மற்றும் சக்தியில் கர்வமடைந்திருந்த தீய மனம் கொண்ட சைந்தவனால் {ஜெயத்ரதனால்}, துருபதனின் மகளான இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} பலவந்தமாக அபகரிக்கப்பட்ட போது, இந்தப் பலமிக்க வீரர்களின் பயங்கரச் சாதனைகளால் மீட்கப்பட்டாள் என்பதைப் பார். மன்னன் ஜெயத்ரதன் வீழ்த்தப்பட்டு, உனக்கும் முன்னால் சக்தியற்று கிடத்தப்பட்டான் என்பதைப் பார். கிட்டத்தட்ட எந்த உதவியுமற்று, பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பத்து கழுத்து ராட்சசனைப் {ராவணனைப்} போர்க்களத்தில் கொன்று, விதேக இளவரசி ராமனால் மீட்கப்பட்டாள்! உண்மையில், (அந்தப் போராட்டத்தில்) ராமனுக்குத் துணையாக இருந்தது, குரங்குகளும், கரிய முகம் கொண்ட கரடிகளுமே ஆவர். அவர்கள் மனிதர்கள் அல்லர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவை அனைத்தையும் உனது மனதில் நினைத்துப் பார்! எனவே, குருக்களில் முதன்மையானவனே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, (நடந்தது) அத்தனைக்கும் வருந்தாதே! உன்னைப் போன்ற சிறப்புமிக்க மனிதர்கள், ஓ! எதிரிகளை அடிப்பவனே {யுதிஷ்டிரா}, துன்பத்தில் நாட்டம் கொள்ளமாட்டார்கள்!” {என்றார் மார்க்கண்டேயர்}
வைசம்பயானர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படியே மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மார்க்கண்டேயர் ஆறுதலளித்தார். பிறகு, அந்த உயர் ஆன்மா கொண்டவன் {யுதிஷ்டிரன்}, தனது துயரங்களை விலக்கிவைத்து, மீண்டும் ஒரு முறை மார்க்கண்டேயரிடம் பேசினான்.”
திரௌபதி ஹரணப் பர்வம் முற்றிற்று*
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply