அர்ஜுனனின் அழுகையும்! கோபமும்!! – துரோண பர்வம் பகுதி – 072-பாசறைக்குத் திரும்புகையில் தீய சகுனங்களை உணர்ந்த அர்ஜுனன் கிருஷ்ணனிடம் அச்சத்துடன் வினவியது; தன்னை வாழ்த்த அபிமன்யு வரதாததைக் கண்டு நிலைமையைப் புரிந்து கொண்டு புலம்பிய அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிய கிருஷ்ணன்; தன் சகோதரர்களிடம் கோபித்துக் கொண்ட அர்ஜுனன்; யுதிஷ்டிரன் பேச ஆரம்பித்தது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயிரினங்களின் படுகொலை நிறைந்த அந்தப் பயங்கர நாள் முடிந்து சூரியன் மறைந்த போது, மாலைவேளையின் அழகிய அந்திப் பொழுது தன்னைப் பரப்பிக் கொண்டது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இருதரப்பின் துருப்புகளும் தங்கள் பாசறைகளுக்கு ஓயச் சென்றன. அப்போது குரங்குக் கொடி கொண்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்} தன் தெய்வீக ஆயுதங்களால் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களைக் கொன்ற பிறகு, தனது அந்த வெற்றித் தேரில் ஏறித் தன் பாசறையை நோக்கிச் சென்றான்.
அப்படி அவன் {அர்ஜுனன்} சென்று கொண்டிருக்கையிலேயே, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்} அவன் {அர்ஜுனன்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் இதயம் ஏன் அஞ்சுகிறது? என் பேச்சு ஏன் தடுமாறுகிறது? தீச்சகுனங்கள் என்னைச் சந்திக்கின்றன, என் அங்கங்களும் பலவீனமாக இருக்கின்றன. பேரழிவு குறித்த எண்ணங்கள், அஃதை அனுபவிக்காமலே என் மனத்தைப் பீடிக்கின்றன. பூமியின் அனைத்துப் பக்கங்களிலும் பல்வேறு சகுனங்கள் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பல வகைகளிலான அந்தச் சகுனங்களும், அறிகுறிகளும் கொடிய பேரழிவையே முன்னறிவிக்கும் வகையில் எங்கும் காணப்படுகின்றன. என் மதிப்பிற்குரிய மூத்தவரான மன்னன் {யுதிஷ்டிரர்} தன் நண்பர்கள் அனைவருடன் நலமாக இருக்கிறாரா?” என்றான் {அர்ஜுனன்}.
வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “உன் சகோதரரும், அவரது நண்பர்களும் அனைத்து வகையிலும் நலமாக இருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. வருந்தாதே, வேறு திசையில் அற்பமான தீமையேதும் நடைபெற்றிருக்கலாம்” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு அந்த வீரர்கள் இருவரும் (கிருஷ்ணனும், அர்ஜுனனும்), அந்திப் பொழுதைப் போற்றிவிட்டுத் தங்கள் தேரில் ஏறி, வீரர்களுக்கு அழிவைத் தந்த அந்த நாளின் போரைக் குறித்துப் பேசிக் கொண்டே சென்றனர். அடைவதற்கு அரிதான மிகக் கடினமான சாதனைகளை அடைந்த வாசுதேவனும், அர்ஜுனனும் இறுதியாக (பாண்டவ) கூடாரத்தை அடைந்தனர்.
பகைவீரர்களைக் கொல்பவனான பீபத்சு {அர்ஜுனன்}, முகாம் மகிழ்ச்சியற்று, துக்கத்துடன் இருப்பதையும், அனைத்தும் குழம்பிப் போய் இருப்பதையும் கண்டு, இதய வேதனையுடன் கிருஷ்ணனிடம், “ஓ! ஜனார்த்தனா, துந்துபி மற்றும் உரத்த சங்கொலிகளுடன் கலந்த மங்கல எக்காளம் எதுவும் இன்று முழக்கப்படவில்லை. கைத்தாளத்துடன் கூடிய இனிய வீணையின் இசையும் எங்கும் இசைக்கப்படவில்லை. துருப்புகளுக்கு மத்தியில் உள்ள நமது பாணர்களால் துதி நிறைந்த மங்கலமான இனிய பாடல்கள் எங்கும் உரைக்கப்படவோ, பாடப்படவோ இல்லை.
வீரர்கள் அனைவரும் கூட, தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டபடியே கலைந்து செல்கின்றனர். முன்பு போல, என்னைக் கண்டதும், தாங்கள் அடைந்த சாதனைகளை அவர்கள் என்னிடம் சொல்லவில்லை. ஓ! மாதவா {கிருஷ்ணா}, என் சகோதரர்கள் நலமாக இருக்கிறார்களா? நம் மனிதர்கள் துயரத்தில் மூழ்கி இருப்பதைக் கண்டு நான் அமைதியை அடையவில்லை.
ஓ! மரியாதைகளைத் தருபவனே, ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {கிருஷ்ணா}, பாஞ்சாலர்களின் ஆட்சியாளன் {துருபதன்}, விராடன் ஆகியோரும், நம் வீரர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்களா? ஐயோ, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, போர்க்களத்தில் இருந்து திரும்பி வரும் என்னைப் புன்னகையோடு வரவேற்கத் தன் சகோதரர்களோடு இன்று வெளிவரவில்லையே” என்றான் {அர்ஜுனன்}.
சஞ்சயன் சொன்னான், “இப்படிப் பேசிக் கொண்ட அவ்விருவரும் (கிருஷ்ணனும், அர்ஜுனனும்) தங்கள் முகாமுக்குள் நுழைந்தனர். அவர்கள், பெரும் துயரத்தில் மூழ்கி உற்சாகமற்று அமர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும் கண்டனர். தன் சகோதரர்களையும், மகன்களையும் கண்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன் பெரிதும் உற்சாகமிழந்தவனானான்.
சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} காணாத அர்ஜுனன், “உங்கள் அனைவரின் முகங்களும் மங்கிய நிறத்தில் இருப்பதைக் காண்கிறேன். மேலும் நான் அபிமன்யுவைக் காணவில்லை. என்னை வாழ்த்தவும் அவன் வரவில்லை. துரோணர் இன்று சக்கர வியூகத்தை அமைத்தார் என்று நான் கேட்விப்பட்டேன். சிறுவன் அபிமன்யுவைத் தவிர உங்களில் எவராலும் அந்த வியூகத்தை உடைக்க முடியாது. எனினும், அவ்வியூகத்தைப் பிளந்த பிறகு, அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதை நான் அவனுக்குக் கற்பிக்கவில்லையே. அந்தச் சிறுவனை {அபிமன்யுவை} அந்த வியூகத்தில் நீங்கள் நுழையச் செய்தீர்களா?
பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்க வில்லாளியுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அந்த வியூகத்தைப் பிளந்து, போர்க்களத்தில் எண்ணிலா பகை வீரர்களைக் கடந்து, இறுதியாக அந்தப் போரில் விழுந்தானா? மலைச்சாரலில் சிங்கத்தைப் போல (நம் பரம்பரையில்) பிறந்தவனும், இந்திரனின் தம்பிக்கு {விஷ்ணுவுக்கு} இணையானவனும், வலிமைமிக்கக் கரங்களையும், சிவந்த கண்களையும் கொண்டவனான அந்த வீரன் போர்க்களத்தில் எவ்வாறு விழுந்தான்? ஓ! எனக்குச் சொல்வீராக.
சுபத்திரையின் அன்பு மகனும், கேசவனுக்கும், திரௌபதிக்கும் பிடித்தமானவனும், குந்தியால் எப்போதும் அன்புடன் விரும்பப்பட்டவனுமான அந்தக் குழந்தையைக் காலனால் அறிவை இழந்த எந்த வீரன் கொல்லத் துணிந்தான்? ஆற்றல், கல்வி, கண்ணியம் ஆகியவற்றில் விருஷ்ணி வீரனான உயர் ஆன்ம கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையான அவன் போர்க்களத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான்?
விருஷ்ணி குலமகளுக்கு {சுபத்திரைக்குப்} பிடித்தமான மகனும், ஐயோ, எப்போதும் என்னால் பேணி வளர்க்கப்பட்டவனுமான அவனை {அபிமன்யுவைக்} காணவில்லையெனில் நான் யமலோகம் செல்வேன். சுருள்முனை கேசம் கொண்டவனும், இளம் வயதினனும், இளம் மானைப் போன்ற கண்களைக் கொண்டவனும், மதம்கொண்ட யானையின் நடையைக் கொண்டவனும், சால மரத்தைப் போன்று நெடிந்து வளர்ந்தவனும், புன்னகையுடன் கூடிய இனிய பேச்சைக் கொண்டவனும், அமைதியானவனும், மூத்தோரின் உத்தரவுகளுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனும், வயதால் இளையவனெனினும் முதிர்ச்சியுடன் செயல்படுபவனும், ஏற்புடைய பேச்சு கொண்டவனும், செருக்கற்றவனும், பெரும் வீரமும், பெரும் சக்தியும் கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்களைக் கொண்டவனும், தனக்கு அர்ப்பணிப்புள்ளோரிடம் அன்பு கொண்டவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், இழிவெதையும் {இழிவானவர்கள் எவரையும்} பின்பற்றாதவனும், நன்றிமிக்கவனும், அறிவுடையவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், போரில் பின்வாங்காதவனும், போரில் எப்போதும் மகிழ்பவனும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவனும், சொந்தங்களின் நன்மையில் ஈடுபடுபவனும், தந்தைமாரின் வெற்றியை விரும்பியவனும், எப்போதும் முதலில் தாக்காதவனும், ஐயோ, போரில் முற்றாக அச்சமற்றவனுமான அந்த மகனை {அபிமன்யுவைக்} காணவில்லையெனில் நான் யமலோகம் செல்வேன்.
தேர்வீரர்களைக் கணக்கிடுகையில் எப்போதும் மகாரதனாகக் கருதப்பட்டவனும், என்னைவிட ஒன்றரை மடங்கு மேன்மையானவனும், இளம் வயதினனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், ஐயோ, பிரத்யும்னன், கேசவன் {கிருஷணன்} மற்றும் எனது அன்புக்கும் பாத்திரமான அந்த மகனை {அபிமன்யுவைக்} காணவில்லையெனில் நான் யமலோகம் செல்வேன்.
அழகிய மூக்கு, அழகிய நெற்றி, அழகிய கண்கள், புருவங்கள், இதழ்கள் ஆகியவற்றைக் கொண்ட அம்முகத்தைக் காணாது என் இதயத்துக்கு அமைதியேது? ஆண் குயிலின் குரலைப் போல மதுரமானதும், மகிழ்ச்சி நிறைந்ததும், வீணையின் அதிர்வுகளைப் போல இனிமையானதுமான அவனது {அபிமன்யுவின்} குரலைக் கேட்காது என் இதயத்துக்கு அமைதியேது? தேவர்களில் கூட அரிதான ஒப்பற்ற அழகைக் கொண்ட அந்த வடிவத்தின் மீது என் கண்களைச் செலுத்தாது என் இதயத்துக்கு அமைதியேது? (தனக்கு மூத்தவர்களை) மரியாதையுடன் வணங்குபவனும், ஐயோ, தன் தந்தைமாரின் உத்தரவுகளுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனுமான அவனை {அபிமன்யுவைக்} காணாது என் இதயத்துக்கு அமைதியேது?
போரில் துணிச்சல் கொண்டவனும், அனைத்து வசதிகளுக்கும் பழக்கப்பட்டவனும், மிருதுவான படுக்கைக்குத் தகுந்தவனுமான அவன் {அபிமன்யு}, தன்னைப் பார்த்துக் கொள்ளப் பாதுகாவலர்களைக் கொண்டோரில் முதன்மையானவனாக இருந்தும், ஏதோ தன்னைக் கவனிக்க யாரும் இல்லாததைப் போல, ஐயோ, இன்று வெறுந்தரையில் உறங்குகிறான். தன் படுக்கையில் கிடக்கும்போது, அழகிய பெண்களில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்ட அவன் {அபிமன்யு}, ஐயோ, கணைகளால் சிதைக்கப்பட்டுப் போர்க்களத்தில் அமங்கலமான நரிகளால் இன்று சூழப்பட்டிருப்பான். முன்பு தன் குறைத்தூக்கத்தில் சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியவர்களால் எழுப்பப்படும் அவன் {அபிமன்யு}, ஐயோ, இரைதேடும் கொடூர விலங்குகளால் இன்று நிச்சயம் எழுப்பப்படுவான். குடையின் நிழலில் இருக்கத்தக்க அந்த அழகிய முகம், ஐயோ, இன்று போர்க்களத்தின் புழுதியால் நிச்சயம் அழகை இழந்திருக்கும்.
ஓ! குழந்தாய், உன்னைப் பார்ப்பதில் எப்போதும் நிறைவுறாத என்னிடம் இருந்து மரணம் உன்னைப் பலவந்தமாக எடுத்துச் செல்கிறதே, நான் பாக்கியமற்றவனே. அறச்செயல்கள் செய்வோரின் இலக்காக எப்போதும் இருப்பதும், மகிழ்ச்சி மிக்க மாளிகையுமான அந்த யமனின் வசிப்பிடம், உன் காந்தியால் இன்று ஒளியூட்டப்பட்டு, உன்னால் மிக அழகாகப்போகிறது என்பதில் ஐயமில்லை. யமன், வருணன், சதக்ரது, குபேரன் ஆகியோர் உன்னைப் பிடித்தமான விருந்தினனாக அடைந்து, வீரனான உன்னைப் புகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை” என்றான் {அர்ஜுனன்}.
கப்பல் மூழ்கிப் போன வணிகன் ஒருவனைப் போலவே, இப்படிப் பல்வேறு புலம்பல்களில் ஈடுப்பட்ட அர்ஜுனன், பெரும் துயரால் பீடிக்கப்பட்டு, யுதிஷ்டிரனிடம், “ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, போர்க்களத்தில் முதன்மையான வீரர்களுடன் மோதி, எதிரியின் மத்தியில் பெரும் படுகொலையை நிகழ்த்திய பிறகு அவன் சொர்க்கத்திற்குச் சென்றானா? தீர்மானத்தோடு வீரமாகப் போரிட்டு, போர்வீரர்களில் முதன்மையானோர் எண்ணற்றோருடன் தனியொருவனாக மோதிக் கொண்டிருந்த போது, உதவியை விரும்பி அவனது இதயம் என்னிடம் திரும்பியிருக்கும் {என்னை நினைத்திருப்பான்} என்பதில் ஐயமில்லை. கர்ணன், துரோணர், கிருபர் மற்றும் இன்னும் பிறர் ஆகியோரின் கூரிய ஒளிமிக்க முனை கொண்ட பல்வேறு கணைகளால் பீடிக்கப்பட்ட போது, பலம் குறைந்த என் மகன் “இந்நெருக்கடியில் என் தந்தையே என்னைக் காப்பார்” என்று மீண்டும் மீண்டும் நினைத்திருப்பானே” என்றான் {அர்ஜுனன்}.
இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, “கொடூர வீரர்களால் அவன் தரையில் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அல்லது, என்னால் பெறப்பட்டவனும், மாதவனின் {கிருஷ்ணனின்} மருமகனும், சுபத்திரைக்குப் பிறந்தவனுமான அவன் {அபிமன்யு} அநேகமாக அப்படிப் புலம்பியிருக்க மாட்டான்.
கண்கள் சிவந்த, வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரனை நான் காணவில்லை எனினும், உடையாமல் இருப்பதால், என் இதயம் இடியின் சாரத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
கொடூர இதயம் கொண்ட அந்த வலிமைமிக்க வில்லாளிகள், என் மகனும், வாசுதேவனின் மருமகனும், வயதில் இளையோனுமான அந்தப் பிள்ளையின் மீது கணைகளை எவ்வாறு ஏவ முடியும்? உன்னத இதயம் கொண்ட அந்த இளைஞன் வழக்கமாகத் தினமும் என்னை வாழ்த்துவான், ஐயோ, எதிரியைக் கொன்று திரும்பும் என்னிடம் அவன் {அபிமன்யு} இன்று ஏன் வரவில்லை? வீழ்த்தப்பட்டுக் குருதியில் குளித்து வெறுந்தரையில் இன்று கிடக்கிறான் அவன் என்பதில் ஐயமில்லை. (ஆகாயத்தில் இருந்து) விழுந்த சூரியனைப் போலத் தன் உடலால் பூமியை அழுகூட்டியபடி கிடக்கிறான்.
எவள், பின்வாங்காத தன் மகன் போரில் இறந்தான் எனக் கேட்டு, கவலையால் பீடிக்கப்பட்டு, உயிரை இழப்பாளோ, அந்தச் சுபத்திரைக்காக நான் வருந்துகிறேன். அபிமன்யுவைத் தொலைத்த சுபத்திரை என்னிடம் என்ன சொல்வாள்? திரௌபதி என்னிடம் என்ன சொல்வாள்? துயரத்தில் பீடிக்கப்படும் அவர்களிடம் நான் என்ன சொல்வேன்?
துயரத்தால் துளைக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் என் மருமகளைக் {உத்திரையைக்} கண்டும் ஆயிரம் துண்டுகளாக உடையாததால் என் இதயம் இடியின் சாரத்தாலானது என்பதில் ஐயமேயில்லை.
உண்மையில், செருக்கால் பெருகும் திருதராஷ்டிரர்களின் சிங்க முழக்கங்கள் என் காதுகளில் நுழைந்தன. வீரர்களை நிந்தித்த யுயுத்சு, (திருதராஷ்டிரப் படையினரிடம் இந்த வார்த்தைகளில்) “வலிமைமிக்கத் தேர்வீரர்களே, பீபத்சுவை {அர்ஜுனனை} வீழ்த்த முடியாமல், ஒரு குழந்தையைக் கொன்றுவிட்டு ஏன் மகிழ்கிறீர்கள்? போரில் கேசவனுக்கும், அர்ஜுனனுக்கும் ஏற்பில்லாததைச் செய்துவிட்டு, உண்மையில் துன்பம் வரப்போகும் நேரத்தில், மகிழ்ச்சியால் சிங்கங்களைப் போல ஏன் முழங்குகிறீர்கள்? உங்கள் பாவச்செயல்களின் கனிகள் விரைவில் உங்களை வந்தடையும். நீங்கள் கொடிய குற்றத்தைப் புரிந்திருக்கிறீர்கள். எவ்வளவு காலம் அது கனிகளைக் கொடாமல் இருக்கும்?” என்று {யுயுத்சு} பேசுவதைக் கிருஷ்ணனும் கேட்டிருக்கிறான். இவ்வார்த்தைகளால் அவர்களை நிந்தித்தவனும், வைசிய மனைவி மூலம் திருதராஷ்டிரருக்குப் பிறந்த உயர் ஆன்ம மகனுமான அவன் {யுயுத்சு}, சினத்தாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டுத் தன் ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறான். ஓ! கிருஷ்ணா, போரின் போது இவையாவையும் நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை? கொடூர இதயங்களைக் கொண்ட அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் நான் அப்போதே எரித்திருப்பேனே” என்றான் {அர்ஜுனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் மகன் {அபிமன்யு} நிமித்தமாகத் துயரில் பீடிக்கப்பட்டிருந்தவனும், மிகுந்த துன்பத்தில் இருந்தவனும், கண்ணீரால் குளித்த கண்களைக் கொண்டவனும், உண்மையில், தன் பிள்ளையின் படுகொலையால் வேதனையில் மூழ்கியிருந்தவனுமான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆறுதல் சொல்லும் வகையில் அவனிடம் {அர்ஜுனனிடம்}, “துயருக்கு ஆட்படாதே. துணிச்சல் மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களும், குறிப்பாகப் போரைத் தொழிலாகக் கொண்ட க்ஷத்திரிய வீரர்கள் அனைவரின் வழியும் இதுவே. ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவனே {அர்ஜுனா}, போரில் ஈடுபட்டுப் புறமுதுகிடாத வீரர்களுக்கு, நமது சாத்திரங்களின் ஆசிரியர்களால் விதிக்கப்பட்ட இலக்கும் இதுவே. புறமுதுகிடாத வீரர்களுக்கு மரணம் உறுதியானதே. அபிமன்யு, அறச்செயல் செய்தோருக்காக ஒதுக்கப்பட்ட உலகங்களை அடைந்திருக்கிறான் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, போரில் இறக்கும் துணிவுடன் எதிரிகளை முகமுகமாகச் சந்திக்கும் அனைவரும் விரும்புவது இதையே.
அபிமன்யுவைப் பொறுத்தவரை, போரில் பல வீரர்களையும், வலிமைமிக்க இளவரசர்களையும் கொன்ற பிறகு, வீரர்களால் விரும்பப்படுவதைப் போலவே மரணத்தை முகமுகமாகச் சந்தித்திருக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, வருந்தாதே. பழங்காலத்தில் விதியை உண்டாக்கியவர்கள், க்ஷத்திரியர்களின் நிலைத்த தகுதியாக {புண்ணியமாக} போரில் மரணம் என்பதையே அறிவித்திருக்கிறார்கள். ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, இந்த உன் சகோதரர்கள், மன்னர் {யுதிஷ்டிரர்}, இந்த உன் நண்பர்கள் ஆகியோர் அனைவரும், துயரில் மூழ்கியிருக்கும் உன்னைக் கண்டு பெரிதும் உற்சாகமிழந்திருக்கின்றனர். ஓ! மரியாதைகளை அளிப்பவனே {அர்ஜுனா}, ஆறுதல் தரும் வார்த்தைகளால் அவர்களைத் தேற்றுவாயாக. அறியத்தக்கது உன்னால் அறியப்பட்டிருக்கிறது. வருந்துவது உனக்குத் தகாது” என்றான் {கிருஷ்ணன்}.
அற்புதச் செயல்களைப் புரியும் கிருஷ்ணனால் இப்படித் தேற்றப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, தன் சகோதரர்கள் அனைவரிடமும், சோகத்தால் தடைபட்ட குரலுடன் அந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களையும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான பெரிய கண்களையும் கொண்ட அந்த வீரன் அபிமன்யு எவ்வாறு போரிட்டான் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.
எதிரியை அவர்களது யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவற்றோடு நான் அழிக்கப்போவதையும், என் மகனைக் கொன்றோரையும் அவர்களைப் பின்தொடர்வோர் மற்றும் சொந்தங்களுடன் சேர்த்துப் போரில் அழிக்கப்போவதையும் நீங்கள் காண்பீர்கள்.
நீங்கள் அனைவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களே. சுபத்திரையின் மகன் {அபிமன்யு} வஜ்ரதாரியுடனேயே {இந்திரனுடனேயே} போரிட்டிருந்தாலும், நீங்கள் அனைவரும் ஆயுதம் தரித்திருக்கும்போது அவனை எப்படிக் கொல்ல முடியும்?
ஐயோ, பாண்டவர்களாலும், பாஞ்சாலர்களாலும் போரில் என் மகனைக் காக்க முடியாது என்று அறிந்திருந்தால், நானே அவனைக் {அபிமன்யுவைக்} காத்திருப்பேனே. அப்போது நீங்கள் உங்கள் தேர்களில் இருந்தீர்கள், நீங்கள் உங்கள் கணைகளை ஏவி கொண்டிருந்தீர்கள். ஐயோ, உங்கள் படையணிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தி எதிரியால் அபிமன்யுவை எவ்வாறு கொல்ல முடியும்?
ஐயோ, நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அபிமன்யு கொல்லப்பட்டதால், உங்களுக்கு ஆண்மையோ ஆற்றலோ இல்லை. அல்லது, நீங்கள் அனைவரும் பலமற்றவர்கள், கோழைகள், உறுதியற்றவர்கள் என்பதை அறிந்தும் நான் சென்றுவிட்டதால் என்னையேதான் நான் கடிந்து கொள்ள வேண்டும்.
ஐயோ, (நீங்கள் கவசங்களை அணிந்திருந்தாலும், தலையில் இருந்து பாதம் வரை ஆயுதம் தரித்திருந்தாலும், வார்த்தைகளால் உங்கள் தகுதிக்கேற்ப எனக்கு நீங்கள் உறுதியளித்திருந்தாலும்) என் மகனைக் காக்கத் தவறினீர்களே, உங்கள் கவசங்களும், அனைத்து வகை ஆயுதங்களும் உங்கள் மேனிகளை அலங்கரிக்கும் ஆபரணங்கள்தானா? சபைகளில் பேசுவதற்காக மட்டுமே உங்களுக்கு வார்த்தைகளா?” என்று கேட்டான் {அர்ஜுனன்}.
இந்த வார்த்தைகளைச் சொன்ன பார்த்தன் {அர்ஜுனன்}, வில்லையும், தன் சிறந்த வாளையும் பிடித்தபடி அமர்ந்தான். உண்மையில், அந்த நேரத்தில், கோபத்தில் அந்தகனுக்கு ஒப்பானவனாக மீண்டும் மீண்டும் நீண்ட மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்த பீபத்சுவை {அர்ஜுனனை} யாராலும் பார்க்கவும் முடியவில்லை. தன் மகன் {அபிமன்யு} நிமித்தமாக அதீத துயரில் பீடிக்கப்பட்டவனும், கண்ணீரால் குளித்த முகத்தைக் கொண்டவனுமான அர்ஜுனனைப் பார்க்கவோ, அவனிடம் பேசவோ அவனது நண்பர்கள், சொந்தங்கள் ஆகியோரில் எவரும் துணியவில்லை.
உண்மையில் வாசுதேவனையோ, யுதிஷ்டிரனையோ தவிர வேறு எவராலும் அவனை {அர்ஜுனனை} அணுக முடியவில்லை. இந்த இருவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அர்ஜுனனுக்கு ஏற்புடையவர்களாக இருந்தனர். அவர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டதாலும், அன்புடன் நேசிக்கப்பட்டதாலும், அவர்களால் மட்டுமே அத்தகு நேரங்களில் அவனைத் தனியாக அணுக முடிந்தது. பிறகு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், கோபத்தால் நிறைந்திருந்தவனும், தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்தவனுமான பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} மன்னன் யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளில் பேசினான்” {என்றான் சஞ்சயன்}.
அர்ஜுனன் ஏற்ற உறுதிமொழி! – துரோண பர்வம் பகுதி – 073-அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தை அர்ஜுனனிடம் சொன்ன யுதிஷ்டிரன்; அர்ஜுனன் உரைத்த வெஞ்சினம்; அவன் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி; கிருஷ்ணனும், அர்ஜுனனும் தங்கள் சங்குகளை முழக்கியது
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, நீ சம்சப்தகர்களை நோக்கிச் சென்ற பிறகு, ஆசான் துரோணர் என்னைப் பிடிப்பதற்காகக் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். எனினும், அந்தப் போரில், தீவிரமாகப் போராடும் தேர்ப்படைப்பிரிவை எதிரணியாக வகுத்து, வியூகத்தின் தலைமையில் நின்ற துரோணரை அனைத்துப் புள்ளிகளிலும் தடுப்பதில் நாங்கள் வென்றோம்.
பெரும் எண்ணிக்கையிலான வீரர்களால் தடுக்கப்பட்டிருந்த துரோணர், நன்றாகப் பாதுகாக்கப்பட்டிருந்த என்னையும், {நம்மைச் சேர்ந்த} அனைவரையும் தன் கூரிய கணைகளால் பீடித்துப் பெரும் சுறுசுறுப்புடன் தாக்க ஆரம்பித்தார். இப்படி அவரால் {துரோணரால்} பீடிக்கப்பட்ட எங்களால், அவரது படையை எதிர்கொள்ள மட்டுமல்ல, பார்க்கக்கூட முடியவில்லை. பிறகு, ஓ! தலைவா {அர்ஜுனா}, நாங்கள் அனைவரும், ஆற்றலில் உனக்குச் சமமான சுபத்திரையின் மகனிடம் {அபிமன்யுவிடம்} சென்று “ஓ! மகனே {அபிமன்யு}, துரோணரின் இந்த வியூகத்தைப் பிளப்பாயாக” என்று கேட்டோம். வீரியமிக்க அந்த வீரன் {அபிமன்யு}, இப்படி எங்களால் தூண்டப்பட்டு, சுமை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதை ஏற்கும் நல்ல குதிரையைப் போல, அந்தச் சுமையைத் தானே ஏற்றுக் கொண்டான்.
உனது சக்தியையும், உன்னிடம் இருந்து பெறப்பட்ட ஆயுத அறிவின் துணையையும் கொண்ட அந்தப் பிள்ளை {அபிமன்யு}, பெருங்கடலுக்குள் ஊடுருவும் கருடனைப் போல அந்த வியூகத்தினுள் ஊடுருவினான். (திருதராஷ்டிரப் படைக்குள்) ஊடுருவ விரும்பிய எங்களைப் பொறுத்தவரை, அந்தப் போரில், சுபத்திரையின் மகனான அந்த வீரன் அபிமன்யு அதற்குள் {வியூகத்தில்} நுழைந்த அதே பாதையில் அவனையே {அபிமன்யுவையே} பின் தொடர்ந்து சென்றோம். அப்போது, ஓ! ஐயா {அர்ஜுனா}, சிந்துக்களின் இழிந்த மன்னனான ஜெயத்ரதன், ருத்ரனால் {சிவனால்} அருளப்பட்ட வரத்தின் விளைவால் எங்கள் அனைவரையும் தடுத்தான்.
பிறகு, துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கோசலர்களின் மன்னன் {பிருஹத்பலன்}, கிருதவர்மன் ஆகிய இந்த ஆறு தேர்வீரர்களும் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். இப்படி அந்தப் பெரும் தேர்வீரர்கள் அந்தப் பிள்ளையைச் சூழ்ந்து கொண்ட பிறகு, அவர்கள் பலராக இருப்பினும், தன் சக்தி முழுவதையும் பயன்படுத்திப் போரிட்ட அவனது தேரை அவர்கள் இழக்கச் செய்தனர். அபிமன்யு தேரை இழந்ததும், அவனிடமிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய துச்சாசனன் மகன் [1], சந்தர்ப்பவசத்தால் அவனை {அபிமன்யுவை} அவனது முடிவை அடையச் செய்வதில் {அவனைக் கொல்வதில்} வென்றான்.
அபிமன்யுவைப் பொறுத்தவரை, பல்லாயிரம் மனிதர்கள், குதிரைகள், மற்றும் யானைகளையும் கொன்று, எட்டாயிரம் தேர்களை அழித்து, மேலும் தொள்ளாயிரம் யானைகள், இரண்டாயிரம் {2000} இளவரசர்கள், புகழை அறியாத பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் பலர் ஆகியோரையும் கொன்று, அந்தப் போரில் {கோசல} மன்னன் பிருஹத்பலனையும் சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டு, இறுதியாகத் தீயூழின் காரணமாகத் தன் மரணத்தைச் சந்தித்தான். நம் வருத்தத்தை அதிகரிக்கும் இந்த நிகழ்வு இப்படியே நடந்தது! அந்த மனிதர்களில் புலி {அபிமன்யு}, இப்படியே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்” என்றான் {யுதிஷ்டிரன்}.
மன்னன் யுதிஷ்டிரனால் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், “ஓ… மகனே” என்று சொல்லி பெருமூச்சுவிட்டபடி, பெரும் வலியோடு பூமியில் விழுந்தான். பிறகு பாண்டவர்கள் அனைவரும் துயரால் நிறைந்து, உற்சாகமிழந்த முகங்களுடன், தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு, கண்ணிமைக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சுயநினைவு மீண்ட வாசவனின் மகன் {இந்திரனின் மகன் அர்ஜுனன்}, சினத்தால் நிறைந்து மூர்க்கமடைந்தான். அடிக்கடி பெருமூச்சுவிட்ட அவன் {அர்ஜுனன்}, காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருந்தவன் போலவே தெரிந்தான். தன் கைகளைப் பிசைந்து கொண்டு, ஆழ்ந்த மூச்சுகளை விட்டு, கண்ணீரால் குளித்த கண்களுடன் ஒரு பைத்தியக்காரனைப் போலப் பார்த்துக் கொண்டே இருந்த அவன் {அர்ஜுனன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்.
அர்ஜுனன், “நாளை நான் ஜெயத்ரதனைக் கொல்லப் போகிறேன் என்று நான் உண்மையாகவே உறுதிகூறுகிறேன் {சத்தியம் செய்கிறேன்}. மரணப் பயத்தால் அவன் {ஜெயத்ரதன்} திருதராஷ்டிரர்களைக் கைவிடாதிருந்தாலோ, நமது பாதுகாப்பையும், மனிதர்களில் முதன்மையான கிருஷ்ணன் அல்லது {யுதிஷ்டிரராகிய} உமது பாதுகாப்பையும் அவன் மன்றாடிக் கேட்காதிருந்தாலோ, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நாளை அவனை {ஜெயத்ரதனை} நான் நிச்சயம் கொல்வேன்!
என்னிடம் கொண்ட நட்பை மறந்து, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்வதில் ஈடுபடும் அந்த இழிந்தவனே {ஜெயத்ரதனே} என் பிள்ளையின் {அபிமன்யுவின்} படுகொலைக்குக் காரணமானான்! {எனவே} நாளை நான் அவனைக் {ஜெயத்ரதனைக்} கொல்வேன். நாளைய போரில் அவனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பதற்காகத் துரோணரோ, கிருபரோ, எவரெல்லாம் என்னுடன் மோதுவார்களோ, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரையும் என் கணையால் நான் மறைப்பேன். மனிதர்களில் காளையரே, வீரர்களில் முதன்மையானோரே, (நாளைய) போரில் இதை நான் அடையவில்லையெனில், அறவோருக்கு ஒதுக்கப்படும் நல்லுகங்களை நான் அடையாதிருப்பேனாக!
தங்கள் தாய்மாரைக் கொன்றவர்கள், தங்கள் தந்தைமாரைக் கொன்றவர்கள், தங்கள் ஆசான்களின் படுக்கையைக் களங்கப்படுத்துபவர்கள் {குருதாரகமனம் செய்பவர்கள்}, தீயவர்கள், கொடூரர்கள், அறவோரிடம் பகைமை பாராட்டுபவர்கள், பிறர் மீது பழிகூறுபவர்கள், அடைக்கலப் பொருட்களைக் கவர்பவர்கள், நம்பிக்கை துரோகிகள், முன்பு தாங்கள் யாவரிடம் இன்புற்றனரோ அந்த மனைவிமாரை நிந்திப்பவர்கள், பிராமணர்களைக் கொன்றவர்கள் {பிரம்மஹத்தி செய்தவர்கள்}, பசுவைக் கொன்றவர்கள், சர்க்கரை கலந்த பால் மற்றும் அரிசி {பாயாசம்}, வாற்கோதுமை {பார்லி}, கீரைவகைகளால் செய்யப்பட்ட உணவு, பால், எள்ளுப்பொடி, அரிசி ஆகியவற்றால் செய்யப்பட்ட பண்டங்கள், கோதுமை மாவை நெய்யில் வறுத்துச் செய்யப்படும் அப்பங்கள், பிறவகை அப்பங்கள், இறைச்சி ஆகியவற்றைத் தேவர்களுக்கு அர்ப்பணிக்காமல் காரணமின்றி உண்போர் ஆகியோர் எந்த உலகங்களை அடைவார்களோ அந்த உலகங்கள், நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் விரைவாக எனதாகட்டும்.
வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் பிராமணர்கள், மரியாதைக்குரியவர்கள், தங்கள் ஆசான்களை அவமதிப்போர் ஆகியோர் எந்த உலகங்களை அடைவார்களோ (அந்த உலகங்கள், நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும்). பிராமணர்களையோ, நெருப்பையோ தங்கள் காலால் தீண்டுபவர்கள் எந்த முடிவை {கதியை} அடைவார்களோ, சளி {கபம்}, மலம் மற்றும் சிறுநீரை நீர்நிலையில் கழிப்பவர்கள் எந்த முடிவை அடைவார்களோ, அந்தத் துன்பகரமான முடிவு {அந்தத் துன்பகதி}, நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும்.
நிர்வாணமாக (நீர்நிலையில்) குளிப்பவனும், விருந்தினரை உபசரிக்காதவனும் எந்த முடிவை அடைவானோ, கையூட்டு பெறுவோர், பொய்மை பேசுவோர், பிறரை வஞ்சித்து ஏமாற்றுவோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ, தங்கள் ஆன்மாவுக்குக் குற்றமிழைத்தோர் {தற்புகழ்ச்சி செய்வோர்}, (பிறரைப்) பொய்யாகத் துதிப்போர், பணியாட்கள், மகன்கள், மனைவியர், தன்னை அண்டியிருப்பவர்கள் {நம்பியிருப்பவர்கள்} ஆகியோருக்குக் கொடாமல், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இனிய பண்டங்களை உண்ணும் {ம்ருஷ்டான்னபோஜனம் செய்யும்} இழிந்த பாவிகள் ஆகியோர் எந்த முடிவை {கதியை} அடைவார்களோ அந்தப் பயங்கர முடிவு, நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும்!
அறம்சார்ந்து கீழ்ப்படியும் சீடனை {அல்லது தன்னை அண்டியவனை} ஆதரிக்காமல் கைவிடும் இரக்கமற்ற ஆன்மா கொண்ட இழிந்த பாவியும், சிராத்தங்களின் காணிக்கைகளைத் தகுந்த அண்டைவீட்டாருக்குக் கொடாமல், அவற்றைத் தகாதவர்களுக்கு அளிப்பவனும் எந்த முடிவை அடைவானோ, மது குடிப்பவன், மரியாதைக்குத் தகுந்தவர்களை அவமதிப்பவன், நன்றிமறந்தவன், தன் சகோதரர்களைப் பழிப்பவன் எந்த முடிவை அடைவானோ அந்த முடிவு, நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும் [2]. நான் குறிப்பிட்ட பாவிகளும், குறிப்பிடாத பாவிகளும் எந்த முடிவை {கதியை} அடைவார்களோ அந்த முடிவு, இந்த இரவு கடந்ததும் நாளை நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் விரைவில் எனதாகட்டும்.எனது மற்றொரு உறுதிமொழியையும் கேட்பீராக! நாளை நான் அந்த இழிந்தவனைக் கொல்லாமல் சூரியன் மறைவானெனில், அப்போது இங்கே நான் சுடர்மிகும் நெருப்புக்குள் நுழைவேன். அசுரர்களே, தேவர்களே, மனிதர்களே, பறவைகளே, பாம்புகளே, பிதுர்களே, இரவு உலாவிகளே, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களே, தெய்வீக முனிவர்களே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களே, இன்னும் நான் குறிப்பிடாதவர்களே, என் எதிரியை என்னிடம் இருந்து காப்பதில் நீவிர் வெல்ல மாட்டீர்! அவன் பாதாளத்திற்கே சென்றாலும், ஆகாயத்திற்கு உயர்ந்தாலும், தேவர்களிடம் சென்றாலும், தைத்தியர்களின் மாநிலங்களுக்குச் சென்றாலும், இந்த இரவு கழிந்ததும், நூற்றுக்கணக்கான கணைகளால் அபிமன்யுவின் எதிரியுடைய {அந்த ஜெயத்ரதன்} தலையை நிச்சயம் நான் துண்டிப்பேன்” என்றான் {அர்ஜுனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், தன் இரு கைகளாலும் காண்டீவத்தை வளைக்கத் தொடங்கினான். அர்ஜுனனின் குரலையும் மீறி எழுந்த அந்த நாணொலி சொர்க்கங்களையே {வானத்தையே} எட்டியது. அர்ஜுனன் இந்த உறுதிமொழியை ஏற்றதும், கோபத்தால் நிறைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கினான். பல்குனனோ {அர்ஜுனனோ} தேவதத்தத்தை முழக்கினான். பெரும் சங்கான பாஞ்சஜன்யம், கிருஷ்ணனின் வாய்க்காற்றால் நன்கு நிரப்பப்பட்டுப் பெரும் ஒலியை உண்டாக்கியது. யுக முடிவில் நேர்வதைப் போல அவ்வொலி, முக்கிய மற்றும் துணைத் திசைகளின் ஆட்சியாளர்கள் {திக்பாலர்கள்}, பாதாள உலகங்கள் மற்றும் மொத்த அண்டத்தையும் அதிரச் செய்தது. உண்மையில், உயர் ஆன்ம அர்ஜுனன் அந்த உறுதிமொழியை ஏற்றதும், ஆயிரக்கணக்கான இசைக்கருவிகளின் ஒலிகளும், உரத்த சிங்க முழக்கங்களும் அந்தப் பாண்டவ முகாமிலிருந்து எழுந்தன” {என்றான் சஞ்சயன்}.
ஜெயத்ரதனுக்கு ஆறுதல் சொன்ன துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 074-அர்ஜுனனின் சபதத்தைக் கேட்டு அஞ்சிய ஜெயத்ரதன் களத்தை விட்டு வீட்டுக்குச் செல்வதாகச் சொன்னது; ஜெயத்ரதனுக்குத் தைரியமூட்டிய துரியோதனன்; துரோணரிடம் சென்ற ஜெயத்ரதன்; அவனுக்கு ஆறுதல் சொன்ன துரோணர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(துரியோதனனின்) ஒற்றர்கள் {சாரர்கள்}, வெற்றியை விரும்பிய பாண்டவர்களால் உண்டாக்கப்பட்ட அந்த உரத்த ஆரவாரத்தைக் கேட்டு, (அதன் காரணத்தைக் குறித்துத் தங்கள் தலைவர்களுக்கு) தகவல் சொன்ன போது, அடியற்ற பெருங்கடலில் மூழ்குபவனைப் போலத் துயரத்தால் இதயம் நிலைகுலைந்து, சோகத்தில் மூழ்கிய ஜெயத்ரதன், மெதுவாக எழுந்து, நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, மன்னர்களின் சபைக்குச் சென்றான்.
மனிதர்களில் தேவர்களான அவர்களின் முன்னிலையில் சிறிது நேரம் சிந்தித்த ஜெயத்ரதன், அபிமன்யுவின் தந்தையின் {அர்ஜுனன்} மீது கொண்ட அச்சத்தால் வெட்கமடைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான், “பாண்டுவின் மண்ணில் {மனைவியிடத்தில்}, ஆசையின் ஆதிக்கத்தின் கீழ் இந்திரனால் பெறப்பட்ட அந்த இழிந்தவன் {அர்ஜுனன்} என்னை யமனுலகுக்கு அனுப்ப நினைக்கிறான். நீங்கள் அருளப்பட்டிருப்பீராக.
எனவே, உயிர் மீது கொண்ட விருப்பத்தால் நான் என் வீட்டுக்குத் திரும்புகிறேன். அல்லது, க்ஷத்திரியரில் காளையரே, உங்கள் ஆயுதங்களின் பலத்தால் என்னைப் பாதுகாப்பீராக. பார்த்தன் {அர்ஜுனன்} என்னைக் கொல்ல முயல்கிறான், வீரர்களே, என்னை அச்சமற்றவனாக்குங்கள். துரோணர், துரியோதனன், கிருபர், கர்ணன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, பாஹ்லீகர், துச்சானன் மற்றும் பிறர், யமனால் பீடிக்கப்பட்டவனையே காக்க இயன்றவர்களாவர். எனினும், பல்குனனால் {அர்ஜுனனால்} மட்டுமே நான் அச்சுறுத்தப்படுகிறேன் எனும்போது, பூமியின் தலைவர்களான இவர்கள் அனைவரும், மற்றும் நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து என்னைக் காக்க இயலாதா?
பாண்டவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்ட பிறகு எனது அச்சம் பெரிதாக இருக்கிறது. பூமியின் தலைவர்களே, மரணத்தின் விளிம்பில் நிற்கும் மனிதர்களைப் போல எனது அங்கங்கள் பலமற்றனவாகின்றன. காண்டீவதாரி {அர்ஜுனன்} என் மரணத்துக்காக உறுதியேற்றிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. இதன்காரணமாகவே பாண்டவர்கள், தாங்கள் அழவேண்டிய இந்நேரத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர். மனித ஆட்சியாளர்களை விட்டுத் தள்ளுங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோர் கூட அர்ஜுனனின் சூளுரையைக் கலங்கடிக்கத் துணியமாட்டார்கள்.
எனவே, மனிதர்களில் காளையரே, அருளப்பட்டிருப்பீராக, (குரு முகாமை விட்டு அகல) எனக்கு அனுமதி அளிப்பீராக. என்னை நான் மறைத்துக் கொள்ள வேண்டுகிறேன். பாண்டவர்களால் இதற்கு மேல் என்னைக் காண முடியாது!” என்றான் {ஜெயத்ரதன்}.
அச்சத்தால் இதயம் நடுங்க இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனிடம், வேறு அனைத்தையும் விடத் தன் சொந்த வேலையைச் செய்து முடிப்பதையே எப்போதும் நோக்கும் துரியோதனன், “ஓ மனிதர்களில் புலியே {ஜெயத்ரதா}, அஞ்சாதே. ஓ! மனிதர்களில் காளையே, இந்த க்ஷத்திரிய வீரர்களுக்கு மத்தியில் இருக்கும் உன்னுடன் போரில் மோத யாரால் முடியும். {துரியோதனனாகிய} நான், விகர்த்தனன் மகன் கர்ணன், சித்திரசேனன், விவிம்சதி, பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், வெல்லப்பட முடியாத விருஷசேனன், புருமித்ரன், ஜயன், போஜன், காம்போஜன், சுதக்ஷிணன், பெரும்பலமுள்ள சத்யவிரதன், விகர்ணன், துர்முகன், துச்சாசனன், சுபாஹு, தன் ஆயுதங்களை உயர்த்தியிருக்கும் கலிங்கர்களின் ஆட்சியாளன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் (சகுனி) ஆகிய இவர்களும், எண்ணற்ற பிற மன்னர்களும் தங்கள் படைகளுடன் அனைத்துப் புறங்களிலும் உன்னைச் சூழ்ந்து கொண்டு போரைச் சந்திக்கின்றனர். எனவே, உனது இதய நோய் அகலட்டும்!
மேலும், நீயே தேர்வீரர்களில் முதன்மையானவனாகவும் இருக்கிறாய். ஓ!அளவிலா காந்தி கொண்டவனே, நீயே வீரனாகவும் இருக்கிறாய். ஓ! சிந்துக்களின் மன்னா {ஜெயத்ரதா}, இப்படிப்பட்ட நீ அச்சத்திற்கான காரணத்தை எவ்வாறு காண முடியும்? எனக்குச் சொந்தமான பதினோரு அக்ஷௌஹணி படைகளும் உன்னைப் பாதுகாப்பதற்காகக் கவனத்துடன் போராடும். எனவே, ஓ! சிந்துக்களின் மன்னா {ஜெயத்ரதா}, அச்சங்கொள்ளாதே. உன் அச்சங்கள் விலகட்டும்” என்றான் {துரியோதனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் {துரியோதனனால்} தேற்றப்பட்ட சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, துரியோதனன் துணையுடன் அன்றிரவே (குரு படைத்தலைவர்) துரோணரிடம் சென்றான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மரியாதையுடன் துரோணரின் கால்களைத் தொட்டுப் பணிவுடன் தன் இருக்கையில் அமர்ந்த அவன் {ஜெயத்ரதன்}, ஆசானிடம் {துரோணரிடம்} இந்த வார்த்தைகளில், “இலக்கை அடித்தல், தொலைவிலிருந்து அஃதை {இலக்கை} அடித்தல், கரங்களின் உறுதி, தாக்குதலின் பலம் ஆகியவற்றில் எனக்கும் பல்குனனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் உள்ள வேறுபாட்டை எனக்குச் சொல்வீராக! ஓ! ஆசானே {துரோணரே}, (ஆயுத அறிவியலில் உள்ள) திறனைப் பொறுத்தவரை எனக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைத் துல்லியமாக நான் அறியவிரும்புகிறேன்! அஃதை என்னிடம் உண்மையாகச் சொல்வீராக!” என்று கேட்டான் {ஜெயத்ரதன்}.
துரோணர் {ஜெயத்ரதனிடம்}, “ஓ! மகனே {ஜெயத்ரதா}, நீ மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் ஒரே அளவு கல்வியையே பயின்றீர்கள். எனினும், யோகம் {அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி} மற்றும் அவன் ஏற்ற கடின வாழ்வு {கடின முயற்சி} ஆகியவற்றின் விளைவால் அவன் உனக்கு மேம்பட்டவனாக இருக்கிறான்! எனினும், எக்காரணத்திற்காகவும் நீ பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} அஞ்சலாகாது. ஓ! மகனே {ஜெயத்ரதா}, இவ்வச்சத்தில் இருந்து நான் உன்னைப் பாதுகாப்பேன் என்பதில் ஐயமில்லை. என் கரங்களால் பாதுகாக்கப்படுபவனைத் தேவர்களே கூடத் தீங்கு செய்ய முடியாது.
பார்த்தனால் {அர்ஜுனனால்} துளைக்க {கடக்க [அ] பிளக்க} முடியாத வியூகம் ஒன்றை நான் அமைக்கப் போகிறேன். எனவே, உன் சொந்த வகையின் {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்றபடி அஞ்சாமல் நீ போரில் ஈடுபடுவாயாக. ஓ! வலிமைமிக்கத் தேர்வீரனே {ஜெயத்ரதா}, உன் தந்தைமார்கள் மற்றும் பாட்டன்மார்களின் வழியில் நீ நடப்பாயாக. வேதங்களை முறையாகக் கற்ற பிறகு நீ விதிப்படி நெருப்பில் காணிக்கைகளைச் செலுத்தியிருக்கிறாய் {அக்னியில் ஹோமம் செய்திருக்கிறாய்}. பல்வேறு வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய். எனவே, மரணம் என்பது உனக்கு அச்சத்தைத் தரும் பொருளாகாது. (ஒரு வேளை நீ இறந்தாலும்) தீய மனிதர்களால் அடைய முடியாத பெரும் நற்பேறைப் பெற்று, கர வலிமையால் ஒருவன் அடையும் சொர்க்கத்திலுள்ள அற்புத உலகங்கள் அனைத்தையும் நீ அடைவாய்.
கௌரவர்கள், பாண்டவர்கள், விருஷ்ணிகள், பிற மனிதர்கள், நான், என் மகன் ஆகியோரும் குறுகிய வாழ்நாளைக் கொண்ட மனிதர்களே. இஃதை எண்ணிப் பார்ப்பாயாக. அனைத்திலும் சக்தி வாய்ந்த காலத்தால், ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்படப் போகும் நாம் அனைவரும், தத்தமது வினையையே {செயற்பலனையே} அடுத்த உலகத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறோம். கடும் நோன்புகளை நோற்று துறவியர் எந்த உலகங்களை அடைவார்களோ, அதே உலகங்களைத் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்றே க்ஷத்திரியர்கள் அடைகிறார்கள்” என்றார் {துரோணர்}.
இவ்வாறே சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} ஆறுதல் சொல்லப்பட்டான். பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்த அச்சத்தை {தன்னிடமிருந்து} வெளியேற்றிய அவன் {ஜெயத்ரதன்}, தன் இதயத்தைப் போரில் நிலைநிறுத்தினான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் பெரும் மகிழ்ச்சியை அடைந்தன. சிங்க முழக்கங்களுடன் கலந்து, இசைக்கருவிகளின் உரத்த ஒலி அங்கே கேட்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.
கிருஷ்ணன் சொன்ன தகவல்! – துரோண பர்வம் பகுதி – 075-ஒற்றர்கள் மூலம் அறிந்த தகவலை கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது; ஜெயத்ரதன் துரியோதனனிடம் பேசியது; துரோணர் அமைக்கப்போகும் வியூகம் குறித்த தகவல்கள் ஆகியவற்றைச் சொன்ன கிருஷ்ணன் மீண்டும் மந்திரிகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்று அர்ஜுனனை முடுக்கியது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பார்த்தன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} மரணத்தைக் குறித்துச் சூளுரைத்த பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} “உன் சகோதரர்களின் சம்மதத்துடன் (மட்டுமே, என்னிடம் ஆலோசியாமல்), “சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வேன்” என்று உறுதியேற்றிருக்கிறாய்! இஃது (உன் தரப்பில்) பெரும் அசட்டைத் துணிவு கொண்ட ஒரு செயலாகும். என்னிடம் ஆலோசியாமலே, நீ பெரும் கனத்தை (உன் தோள்களில்) ஏற்றிருக்கிறாய். ஐயோ, அனைவரின் ஏளனத்தில் இருந்து நாம் எப்படித் தப்பிக்கப் போகிறோம்? [1]நான் திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} முகாமுக்கு சில ஒற்றர்களை அனுப்பிவைத்தேன். அந்த ஒற்றர்கள் விரைவாக என்னிடம் வந்து இந்தத் தகவலை எனக்கு அளித்தனர். அஃதாவது, ஓ! தலைவா {அர்ஜுனா}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} குறித்து நீ உறுதியேற்ற பிறகு, சிங்க முழக்கங்களுடன் கலந்த (நமது) இசைக்கருவிகளின் ஒலி, திருதராஷ்டிரர்களால் கேட்கப்பட்டது.
அந்த ஆரவாரத்தின் விளைவாக, அந்தத் திருதராஷ்டிரர்கள், தங்கள் நலன்விரும்பிகளுடன் கூடி அச்சமடைந்து, “இந்தச் சிங்க முழக்கங்கள் காரணமற்றவையல்ல” என்று நினைத்து (அடுத்தது என்ன நடக்கும் என்று) காத்திருந்தனர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, கௌரவர்களின் யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படைக்கு மத்தியில் இருந்து உரத்த முழக்கங்களைக் கொண்ட ஆரவாரம் எழுந்தது. அவர்களது தேர்களில் இருந்து பயங்கரச் சடசடப்பொலிகளும் கேட்கப்பட்டது. “அபிமன்யுவின் மரணத்தைக் கேட்கும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆழமாகத் துன்புற்றுக் கோபத்தில் இரவிலேயே கூடப் போரிடப் புறப்பட்டு வருவான்” என்று நினைத்து (போருக்குத் தயாராக) அவர்கள் காத்திருந்தனர்.
அப்படி அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கையில், ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, உண்மையில் பிணைப்புள்ள நீ, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல ஏற்றிருக்கும் உறுதியை உண்மையில் அறிந்து கொண்டனர். பிறகு, சுயோதனனின் ஆலோசகர்கள் அனைவரும் உற்சாகமிழந்து சிறு விலங்குகளைப் போல அச்சமுற்றனர்.
மன்னன் ஜெயத்ரதனைப் பொறுத்தவரை, சிந்துக்கள் மற்றும் சௌவீரர்களின் ஆட்சியாளனான அவன், துயரத்தில் மூழ்கி, முற்றிலும் உற்சாகத்தை இழந்து எழுந்து நின்று, தன் ஆலோசகர்கள் அனைவருடன் தன் பாசறைக்குள் நுழைந்தான். ஆலோசனை தேவைப்பட்டு நிற்கும் அந்நேரத்தில், தனக்கு நன்மையைத் தரும் அனைத்துத் தீர்வுகளையும் குறித்து (அவர்களுடன்) கலந்தாலோசித்த பிறகு, (கூட்டணியில் உள்ள) மன்னர்களின் சபைக்குச் சென்று சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.
{அவன் ஜெயத்ரதன்}, ”தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனது மகனைக் கொன்றவன் நானே என்று நினைத்து, நாளை என்னுடன் போரில் மோதுவான்! தன் படைக்கு மத்தியில் அவன் {அர்ஜுனன்} என்னைக் கொல்வதாகச் சபதமேற்றிருக்கிறான். தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோரும் கூடச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} அந்த உறுதிமொழியில் அவனைச் சலிப்படையச் செய்யத் துணியமாட்டார்கள். எனவே, நீங்களனைவரும் போரில் என்னைப் பாதுகாக்க வேண்டும். தனஞ்சயன் {அர்ஜுனன்} உங்கள் தலையில் தன் காலை வைத்து இலக்கை {அவனது இலக்கான என்னை} அடிப்பதில் வெல்லாதிருக்கட்டும். இக்காரியம் குறித்து உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அல்லது, ஓ! குருக்களை மகிழ்விப்பவனே {துரியோதனா}, போரில் என்னைக் காப்பதில் நீ வெல்ல முடியாது என நீ நினைத்தால், ஓ! மன்னா {துரியோதனா}, நான் வீட்டுக்குச் செல்ல அனுமதிப்பாயாக” என்றான் {ஜெயத்ரதன்}.
இப்படி (ஜெயத்ரதனால்} சொல்லப்பட்ட சுயோதனன் {துரியோதனன்} உற்சாகமற்றவனாக அமர்ந்து தன் தலையைத் தொங்கப்போட்டான். ஜெயத்ரதன் பெரும் அச்சத்தில் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்ட சுயோதனன் {துரியோதனன்} அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினான். குரு மன்னன் {துரியோதனன்} பெரிதும் துயருறுவதைக் கண்ட சிந்துக்களின் ஆட்சியாளனான மன்னன் ஜெயத்ரதன், தன் நன்மையைக் குறிப்பிட்டு மெதுவாக இந்த வார்த்தைகளைச் சொன்னான், ”பெரும்போரில் அர்ஜுனனின் ஆயுதங்களைத் தன் ஆயுதங்களால் கலங்கடிக்கும் மேன்மையான சக்தி கொண்ட எந்த வில்லாளியையும் நான் இங்கே காணவில்லை. சதக்ரதுவே {இந்திரனே} ஆனாலும், வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டீவ வில்லுடன் நிற்கும் அர்ஜுனன் முன்பு எவனால் நிற்க முடியும்?
முற்காலத்தில், இமயமலையில், உயர்ந்த சக்தியைக் கொண்ட தலைவன் மகேஸ்வரனே {சிவனே} காலாளாக நின்றிருந்த பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதினான் என்று கேள்விப்படுகிறோம். தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} தூண்டப்பட்ட அவன் {அர்ஜுனன்}, தனித்தேரில் சென்று, ஹிரண்யபுரத்தில் வசித்த ஆயிரம் தானவர்களைக் கொன்றான். அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} இப்போது பெரும் மதிநுட்பம் கொண்ட வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} கூட்டுச் சேர்ந்திருக்கிறான். அவன் {அர்ஜுனன்}, தேவர்களுடன் சேர்ந்த இந்த மூவுலகங்களையும் அழிக்கத் தகுந்தவனென நான் நினைக்கிறேன். (போர்க்களத்தை விட்டு என் வீட்டுக்குச் செல்ல) எனக்கு நீ அனுமதியளிக்க வேண்டும், அல்லது உயர் ஆன்ம வீரத் துரோணர் தன் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} சேர்ந்து என்னைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அல்லது, உன் விருப்பத்துக்காக நான் காத்திருப்பேன்” என்றான் {ஜெயத்ரதன்}.
ஓ! அர்ஜுனா, (ஜெயத்ரதனால் இப்படிச் சொல்லப்பட்ட) மன்னன் சுயதோனன் இக்காரியம் குறித்து ஆசானிடம் பணிவுடன் வேண்டினான் [2]. அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்களும், குதிரைகளும் அணிவகுக்கப்பட்டிருக்கின்றன. கர்ணன், பூரிஸ்ரவஸ், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வெல்லப்பட முடியாத விருஷசேனன், கிருபர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆகியோர் முன்னணியில் (ஜெயத்ரதனுக்கு முன்பாக) நிற்பார்கள்.அரைப்பங்கு சகடமும் {தேர்போன்ற வாகனம்}, அரைப்பங்கு தாமரையும் {பத்மும்} கொண்ட வியூகம் ஒன்றை துரோணர் அமைக்கப்போகிறார். அந்தத் தாமரையின் இதழ்களின் நடுவில் சூசிமுக {ஊசி வாய்} வியூகமும் இருக்கும். சிந்துக்களின் ஆட்சியாளனான அந்த ஜெயத்ரதன் அதற்குள் போரில் வெல்லப்பட முடியாத படி கடினமாக வீரர்களால் பாதுகாக்கப்படுவான். வில் (பயன்பாடு), ஆயுதங்கள், ஆற்றல், பலம், குலவழி [3] ஆகியவற்றில் இந்த ஆறு தேர்வீரர்களும் தாங்கிக் கொள்ள மிகக் கடினமானவர்கள் என்பதில் ஐயமில்லை. இந்த ஆறு தேர்வீரர்களையும் முதலில் வீழ்த்தாமல் ஜெயத்ரதனை அடையமுடியாது.ஓ! அர்ஜுனா, அந்த அறுவரில் ஒவ்வொருவரின் ஆற்றலையும் நினைத்துப் பார். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா} அவர்கள் ஒன்றுசேர்ந்து நிற்கும்போது எளிதில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருப்பார்கள். எனவே, நாம், நமது நன்மைக்காகவும், நமது நோக்கத்தில் வெற்றியடைவதற்காகவும், நம் நன்மையை விரும்புபவர்களும், கொள்கைகளை {ஆலோசனைகளை} அறிந்தவர்களுமான ஆலோசகர்களுடன் மீண்டும் ஆலோசிக்க வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்
அர்ஜுனனின் தன்னம்பிக்கை! – துரோண பர்வம் பகுதி – 076-அர்ஜுனன் தன் வல்லமையையும், கிருஷ்ணனின் பெருமையையும், தன் ஆயுதங்களின் சக்தியையும் கிருஷ்ணனுக்கு எடுத்துச் சொன்னது
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “நீ பலமாகக் கருதும் திருதராஷ்டிரப் படையின் இந்த ஆறு தேர்வீரர்களின் (ஒன்றுபட்ட) சக்தியும் என் சக்தியின் பாதி அளவுக்கும் இணையாகாது என்றே நான் நினைக்கிறேன்! ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, ஜெயத்ரதனைக் கொல்ல அவர்களை எதிர்த்து நான் செல்லும்போது, அவர்கள் அனைவரின் ஆயுதங்களும் என்னால் வெட்டப்பட்டுக் கலங்கடிக்கப் படுவதை நீ காண்பாய்!
துரோணரும், இந்த மனிதர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} தலையை நான் பூமியில் வீழ்த்துவதைக் கண்டு அவர்கள் புலம்பப் போகிறார்கள். சித்தர்கள், ருத்ரர்கள், வசுக்கள், அசுவினிகள், இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட மருத்துக்கள், பிற தேவர்களுடன் கூடிய விஸ்வதேவர்கள், பிதுர்கள், கந்தர்வர்கள், கருடன், பெருங்கடல், மலைகள், ஆகாயம், சொர்க்கம், பூமி, (முக்கிய மற்றும் துணைத்) திசைகள், அவற்றின் ஆட்சியாளர்கள் {திக்பாலர்கள்}, வீட்டு மற்றும் காட்டு உயிரினங்கள் அனைத்தும், உண்மையில், அசைவன, அசையாதன ஆகிய அனைவரும் சேர்ந்து சிந்துக்களின் ஆட்சியாளனைப் {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தாலும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நாளைய போரில் என் கணைகளால் ஜெயத்ரதன் கொல்லப்படுவதை நீ காண்பாய்!
ஓ! கிருஷ்ணா, உண்மையின் பெயரால் நான் உறுதிகூறுகிறேன், ஓ! கேசவா {கிருஷ்ணா}, இழிந்த பாவியான ஜெயத்ரதனின் பாதுகாவலராக இருக்கும் அந்த வலிமைமிக்க வில்லாளியான துரோணருடன் தொடக்கத்திலேயே மோதுவேன் என்று சொல்லி என் ஆயுதங்களைத் தொடுகிறேன் ({ஆயுதங்களைத்} தொட்டு அவற்றின் பெயரால் உறுதிகூறுகிறேன்). இந்த ஆட்டம் (போர்) துரோணரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனச் சுயோதனன் {துரியோதனன்} நினைக்கிறான். எனவே, துரோணரால் வழிநடத்தப்படும் படையின் முகப்பைத் துளைத்துச் சென்று நான் ஜெயத்ரதனை அடைவேன்!
இடியால் {வஜ்ரத்தால்} பிளக்கப்படும் மலை முகட்டைப் போல, மிக வலிமைமிக்க வில்லாளியான அவர் {துரோணர்}, போரில் கடும் சக்தி கொண்ட என் கணைகளின் மூலம் என்னால் பிளக்கப்படுவதை நாளை நீ காண்பாய். கூரிய கணைகள் தங்கள் மேல் பாய்ந்து, அதனால் பிளக்கப்பட்டு வீழ்ந்த மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் மார்புகளில் இருந்து குருதி (தாரைத்தாரையாகப்) பாயும்! மனம் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்ட காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உயிர்கள் ஆயிரக்கணக்கில் பறிக்கப்படும்!
நாளைய போரில், யமன், குபேரன், வருணன், இந்திரன் மற்றும் ருத்ரன் ஆகியோரிடம் நான் பெற்ற ஆயுதங்களை மனிதர்கள் காண்பார்கள். நாளைய போரில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாக்க வருவோர் அனைவரின் ஆயுதங்களும் என்னுடைய பிரம்ம ஆயுதத்தால் கலங்கடிக்கப்படுவதை நீ காண்பாய்! நாளைய போரில், ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் கணைகளின் சக்தியால் வெட்டப்பட்டு விழும் மன்னர்களின் தலைகள் இந்தப் பூமியில் விரவிக் கிடப்பதை நீ காண்பாய்! எதிரியை முறியடித்து, என் நண்பர்களுக்கு மகிழ்வூட்டி, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதரனை} நசுக்கி, ஊனுண்ணிகள் அனைவரையும் (நாளை) நான் மனம்நிறையச் செய்வேன்!
பெரும் குற்றவாளியும், ஓர் உறவினனைப் போல நடந்து கொள்ளாதவனும், பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவனுமான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} என்னால் கொல்லப்பட்டுத் தன் உறவினர்களைத் துக்கமடையச் செய்யப் போகிறான். பாவகர நடத்தை கொண்டவனும், அனைத்து வசதிகளுடனும் வளர்க்கப்பட்டவனுமான அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, என் கணைகளால் துளைக்கப்படுவதை நீ காண்பாய்! நாளை, ஓ! கிருஷ்ணா, எனக்கு நிகரான வில்லாளி எவனும் இந்தப் பூமியில் இல்லை என்று சுயோதனனை {துரியோதனனை} நான் சிந்திக்க வைக்கப் போகிறேன்.
தெய்வீக வில்லாகும் {இந்த} என் காண்டீவம்! போர்வீரன் நானே! ஓ! மனிதர்களில் காளையே, ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, தேரோட்டி நீயே! {அப்படியிருக்க} என்னால் எதைத்தான் வீழ்த்த முடியாது? ஓ! புனிதமானவனே {கிருஷ்ணா} உன் அருளால், போரில் நான் அடைய முடியாததுதான் எது? ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, என் ஆற்றல் தடுக்கப்பட முடியாதது என அறிந்தும், ஏன் என்னை நீ நிந்திக்கிறாய்? சோமத்தில் எப்போதும் லக்ஷ்மி இருப்பதைப் போல, பெருங்கடலில் எப்போதும் நீர் இருப்பதைப் போல, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா} என் சபதம் எப்போதும் சாதனையில் இருக்கும் என்பதையும் அறிவாயாக!
என் ஆயுதங்களை எளிதாக எண்ணாதே! உறுதியான என் வில்லை எளிதாக எண்ணாதே! என் கரங்களின் வலிமையை எளிதாக எண்ணாதே! தனஞ்சயனை {அர்ஜுனன் ஆகிய என்னை} எளிதானவனாக {எண்ணவே} எண்ணாதே! நான் உண்மையில் வெல்வேன், தோற்கமாட்டேன் எனும் அத்தகு வழியிலேயே நான் போரிடச் செல்வேன். நான் உறுதியேற்றேன் என்றதும், போரில் அந்த ஜெயத்ரதன் ஏற்கனவே கொல்லப்பட்டதாகவே அறிவாயாக!
உண்மையில், பிராமணனிடத்தில் உண்மை இருக்கிறது; உண்மையில், அறவோரிடம் பணிவு இருக்கிறது; உண்மையில், வேள்வியிலேயே செழிப்பு இருக்கிறது; உண்மையில், நாராயணனிடமே வெற்றியும் இருக்கிறது” என்றான் {அர்ஜுனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “வசுதேவர் மகனான ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தனக்குத் தானே அதைச் சொல்லிக் கொண்ட அர்ஜுனன், ஆழ்ந்த குரலில் மீண்டும் ஒருமுறை தலைவன் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினான், “ஓ! கிருஷ்ணா, கையில் இருக்கும் காரியம் பயங்கரமானது. ஆகையால் இந்த இரவு விடிவதற்குள், என் தேர் நல்ல தயார் நிலையில் இருக்குமடி செய்வாயாக” {என்றான் அர்ஜுனன்}.
சுபத்திரைக்கு ஆறுதல் கூறிய கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 077-அர்ஜுனனும், கிருஷ்ணனும் கோபமாக இருப்பதை நினைத்துக் கவலையடைந்த தேவர்கள்; கௌரவர்களுக்குத் தெரிந்த தீய சகுனங்கள்; சுபத்திரைக்கு ஆறுதலளிக்கக் கிருஷ்ணனை அனுப்பிய அர்ஜுனன்; கிருஷ்ணனின் ஆறுதல் வார்த்தைகள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும், கவலை மற்றும் துயரத்தால் பீடிக்கப்பட்டு, இரு பாம்புகளென அடிக்கடி பெருமூச்சைவிட்டுக் கொண்டே இரவில் தூங்காதிருந்தனர். நரன் மற்றும் நாராயணன் ஆகிய அந்த இருவரும் சினத்தில் இருப்பதை அறிந்த தேவர்களும், வாசவனும் {இந்திரனும்} “என்ன ஆகப்போகிறதோ?” என்றெண்ணி மிகவும் கவலையடைந்தனர்.
வறண்ட காற்று ஆபத்தை முன்னறிவித்தபடியே கடுமையாக வீசத் தொடங்கியது. சூரிய வட்டிலில் தலையற்ற முண்டமும், கதாயுதமும் {பரிகமும்} தோன்றின. மேகமற்றிருந்தாலும், மின்னலின் கீற்றுகளோடு கலந்த உரத்த இடிமுழக்கங்கள் அடிக்கடி கேட்கப்பட்டன. மலைகள், நீர்நிலைகள் மற்றும் காடுகளுடன் கூடிய பூமாதேவி குலுங்கினாள். மகரங்களின் வசிப்பிடமான கடல்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} கொந்தளித்துப் பெருகியது. வழக்கமாக ஓடும் திசைக்கு எதிராக ஆறுகள் பாய்ந்தன. தேர்வீரர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் கீழ் உதடுகளும், மேல் உதடுகளும் துடிக்கத் தொடங்கின. மனித ஊனுண்ணிகளை மகிழ்ச்சிப்படுத்தும்படியும், யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோர் பெருமளவில் அதிகரிக்கப் போவதை முன்னறிவித்தபடியும், விலங்குகள் (போர்க்களத்தில்) மலமும் சிறுநீரும் கழித்தவாறே துன்பத்துடன் உரக்கக் கதறின. மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்த செய்யும் இந்தக் கடும் சகுனங்களைக் கண்டும், வலிமைமிக்க அர்ஜுனனின் கடும் சபதத்தைக் கேட்டும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} உமது வீரர்கள் அனைவரும் மிகவும் கலக்கமடைந்தனர்.
அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாகசாசனனின் {இந்திரன்} மகன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம், “தன் மருமகளோடு {உத்தரையோடு} இருக்கும் உன் தங்கை சுபத்திரையைத் தேற்றச் செல்வாயாக. ஓ! மாதவா {கிருஷ்ணா} மருமகளையும் {உத்தரையையும்}, அவளது தோழிகளையும் தேற்றுவாயாக. ஓ! தலைவா {கிருஷ்ணா}, உண்மை நிறைந்த ஆறுதல் வார்த்தைகளால் அவர்களைத் தேற்றுவாயாக” என்றான் {அர்ஜுனன்}. இப்படிச் சொல்லப்பட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} உற்சாகமற்ற இதயத்தோடு அர்ஜுனன் வசிப்பிடத்திற்குச் சென்று, தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் ஏற்பட்ட துயரால் பீடிக்கப்பட்டுக் கவலையில் இருந்த தன் தங்கையைத் {சுபத்திரையைத்} தேற்றத் தொடங்கினான்.
வாசுதேவன் {கிருஷ்ணன் சுபத்திரையிடம்}, ”ஓ! விருஷ்ணி குலத்துப் பெண்ணே {சுபத்திரையே}, உனது மருமகளுடன் {உத்தரையுடன்} சேர்ந்து உன் மகனுக்காகத் {அபிமன்யுவிற்காகத்} துயரப்படாதே. ஓ! மருண்டவளே, அனைத்து உயிரினங்களுக்கும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு. பெருமைமிக்கப் பரம்பரையில் பிறந்த வீரனுக்கு, அதிலும் குறிப்பாக க்ஷத்திரியனுக்கு உரிய முடிவையே உன் மகன் அடைந்திருக்கிறான். எனவே நீ வருந்தாதே. பெரும் விவேகமும், தன் தந்தைக்கு இணையான ஆற்றலையும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, க்ஷத்திரிய வழக்கத்தின்படியே, வீரர்கள் ஆசைப்படும் ஒரு முடிவை அடைந்திருப்பது நற்பேறாலேயே.
எண்ணற்ற எதிரிகளை வீழ்த்தி, அவர்களை யமனின் முன்னிலைக்கு அனுப்பி வைத்த அவன் {அபிமன்யு}, அனைத்து விருப்பங்களையும் அருள்பவையும், அறவோருக்கு உரியவையுமான நித்தியமான உலகங்களை அடைந்திருக்கிறான். தவம், பிரம்மச்சரியம், சாத்திர அறிவு, ஞானம் ஆகியவற்றால் அறவோர் அடையும் முடிவையே உன் மகனும் அடைந்திருக்கிறான். வீரனின் தாயும், வீரனின் மனைவியும், வீரனின் மகளும், வீரர்களுக்கு உறவினருமான நீ, ஓ! இனியவளே {சுபத்திரையே}, உயர்ந்த முடிவை அடைந்திருக்கும் உன் மகனுக்காக {அபிமன்யுவிற்காக} வருந்தலாகாது.
ஓ! அழகான பெண்ணே, ஒரு குழந்தையைக் கொன்றவனும், பாவகரக் காரியத்தைச் செய்தவனுமான அந்தச் சிந்துக்களின் இழிந்த ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, இந்த இரவு கடந்ததும், தன் நண்பர்கள் மற்றும் உறவினருடன் சேர்ந்து தன் வெறியின் கனியை அடையப்போகிறான். அவன் {ஜெயத்ரதன்}, இந்திரனின் வசிப்பிடத்திற்கே சென்றாலும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களில் இருந்து தப்ப மாட்டான். அந்தச் சிந்துவின் {சைந்தவனின்} தலை அவனது உடலில் இருந்து வெட்டப்பட்டுச் சமந்தபஞ்சகத்திற்கு {குருசேத்திரத்திற்கு} வெளியே உருண்டது என்பதை நாளை நீ கேட்பாய்! உன் கவலையை விடுவாயாக; வருந்தாதே.
க்ஷத்திரியன் ஒருவனின் கடமைகளைத் தன் முன் கொண்ட உன் வீர மகன் {அபிமன்யு}, ஆயுதம் தாங்குவதைத் தொழிலாகக் கொண்ட பிறரும், அறவோரும் அடையும் முடிவையே {கதியையே} அடைந்திருக்கிறான். ஓ! அழகான பெண்ணே, அகன்ற மார்பு மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பின்வாங்காதவனும், தேர்வீரர்களை நசுக்குபவனுமான உன் மகன் {அபிமன்யு} சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறான். (உன் இதயத்திலிருந்து) இந்நோயை விரட்டுவாயாக.
தன் தந்தைமார், தாய்வழி உறவினர், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆகியோருக்கு கீழ்ப்படிந்த அந்த வீரன் {அபிமன்யு}, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்ற பிறகே மரணத்துக்கு இரையானான். ஓ! ராணி {சுபத்திரையே}, உன் மருமகளை {உத்தரையைத்} தேற்றுவாயாக. ஓ! க்ஷத்திரியப் பெண்ணே, அதிகமாக வருந்தாதே. ஓ! மகளே {தங்கை சுபத்திரையே}, நாளை நீ இனிய செய்தியைக் கேட்கவிருப்பதால் உன் துயரை விரட்டுவாயாக.
பார்த்தன் {அர்ஜுனன்} ஏற்ற உறுதிமொழி {சபதம்} சாதிக்கப்பட வேண்டும். அது வேறுவகையிலாகாது. உன் கணவன் {அர்ஜுனன்} செய்ய முயன்றது எதுவும் சாதிக்கப்படாமல் நீண்டதில்லை. மனிதர்கள் அனைவரும், பாம்புகள், பிசாசங்கள், இரவுலாவிகள் அனைவரும், பறவைகள், தேவர்கள் அனைவரும், அசுரர்கள் ஆகியோரும் போர்க்களத்தில் சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு {ஜெயத்ரதனுக்கு} உதவினாலும் கூட, அவன் {ஜெயத்ரதன்} நாளை இருக்கமாட்டான்” என்றான் {கிருஷ்ணன்}.
சுபத்திரையின் புலம்பல்! – துரோண பர்வம் பகுதி – 078-கிருஷ்ணனின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டுப் புலம்பத் தொடங்கிய சுபத்திரை; சுபத்திரை, திரௌபதி, உத்தரை ஆகியோர் அழுது புலம்பி மயங்கி விழுந்தது; நீர் தெளித்து அவர்களின் மயக்கத்தைத் தெளிவித்த கிருஷ்ணன் மீண்டும் அர்ஜுனனிடம் வந்தது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட சுபத்திரை, தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கினாள்: “ஓ! பேறற்றவளான என் மகனே, ஓ! உன் தந்தைக்கு {அர்ஜுனனுக்கு} இணையான ஆற்றல் கொண்டவனே, ஓ! குழந்தாய் {அபிமன்யு}, போருக்குச் சென்ற நீ எவ்வாறு அழிந்தாய்? ஓ! குழந்தாய் {அபிமன்யு}, அழகான பற்கள் மற்றும் சிறந்த கண்களால் அருளப்பட்டதும், நீலத் தாமரைக்கு {கருநெய்தலுக்கு} [1] ஒப்பானதுமான உன் முகம், ஐயோ, போர்க்களத்தின் புழுதியால் மறைக்கப்பட்டு இப்போது எவ்வாறு காணப்படும்?ஐயமில்லாத துணிவுடன் புறமுதுகிடாத உன்னை, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தலை, கழுத்து, கரங்கள், மார்பு, அடிவயிறு மற்றும் அங்கங்களுடன் களத்தில் விழுந்த உன்னை, அழகிய கண்களைக் கொண்ட உன்னை, ஆயுதக் காயங்களுடன் சிதைந்து போயிருக்கும் உன்னை உதிக்கும் சந்திரனைப் போலவே அனைத்து உயிரினங்களும் காண்கின்றன. ஐயோ, விலையுயர்ந்த மிக வெண்மையான படுக்கையில் கிடப்பவனான நீ, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுந்தவனான நீ, ஐயோ, கணைகளால் துளைக்கப்பட்ட உன் உடலுடன் வெறும் பூமியில் {தரையில்} எவ்வாறு இன்று உறங்குகிறாய்?
முன்னர், அழகிகளில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்ட வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {அபிமன்யு}, ஐயோ, போர்க்களத்தில் விழுந்து, நரிகளின் துணையுடன் தன் காலத்தை எவ்வாறு கழிக்கிறான்? முன்னர், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோரால் பாடிப் புகழப்பட்டவன், ஐயோ, கோரமாக ஊளையிடும் ஊனுண்ணும் விலங்குகளால் இன்று வரவேற்கப்படுவானே. ஓ! தலைவா {அபிமன்யு}, பாண்டவர்களையும், பாஞ்சாலர்கள் அனைவரையும் உன் பாதுகாவலர்களாகக் கொண்டும், ஐயோ, ஆதரவற்ற நிலையில் நீ யாரால் கொல்லப்பட்டாய்?
ஓ! மகனே, ஓ! பாவமற்றவனே {அபிமன்யு}, உன்னைக் கண்டு நான் இன்னும் நிறைவு கொள்ளவில்லையே. பேறற்றவளான நான் யமனின் வசிப்பிடத்திற்குச் செல்வேன் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. பெரிய கண்கள் மற்றும் அழகிய குழல்களைக் கொண்டதும், இனிய வார்த்தைகள், களிப்புமிக்க நறுமணம் ஆகியவற்றை வெளியிடுவதுமான பருக்களற்ற உன் மிருதுவான முகத்தை என் கண்களால் மீண்டும் எப்போது நான் காணப் போகிறேன்? பீமசேனரின் பலத்திற்கும், பார்த்தரின் {அர்ஜுனரின்} வில்வித்தகத்திற்கும், விருஷ்ணி வீரர்களின் ஆற்றலுக்கும், பாஞ்சாலர்களின் பலத்திற்கும் ஜயோ {இஃது இழிவே}! ஓ! வீரா {அபிமன்யு}, போரில் ஈடுபடுகையில் உன்னைப் பாதுகாக்க இயலாத கைகேயர்கள், சேதிகள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும் ஐயோ {இஃது இழிவே}!
நான் இந்தப் பூமியை வெறுமையானதாகவும், உற்சாகமற்றதாகவும் இன்று காண்கிறேன். என் அபிமன்யுவைக் காணாது என் கண்கள் துயரால் அல்லலுறுகின்றன. நீ வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை {சுபத்திரையின்} மகனும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} மகனும், வீரனும், அதிரதனும் ஆவாய். ஐயோ, கொல்லப்பட்ட உன்னை நான் எவ்வாறு காண்பேன்? ஐயோ ஓ! வீரா {அபிமன்யு}, கனவில் காணப்பட்ட பொக்கிஷமாகத் தோன்றி மறைந்தாயே. மனிதரைச் சேர்ந்த அனைத்தும் நீர்க்குமிழியைப் போல நிலையற்றனவே.
உனக்கு நேர்ந்த தீங்கால் இந்த உன் இளம் மனைவி {உத்தரை} துயரில் மூழ்கியிருக்கிறாள். ஐயோ, கன்றில்லா பசுவைப் போல இருக்கும் அவளை நான் எவ்வாறு தேற்றுவேன்? ஐயோ, ஓ! மகனே {அபிமன்யு}, உன்னைக் காண ஏங்கி, பெருமையின் கனியைத் தாங்கப் போகும் சமயத்தில், குறித்த காலத்திற்கு முன்பே என்னிடம் இருந்து சென்றுவிட்டாயே. கேசவரை {கிருஷ்ணரை} உன் பாதுகாவலராகக் கொண்டும், ஆதரவற்றவனைப் போல நீ கொல்லப்பட்டதால், ஞானியராலும் யமனின் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதில் ஐயமில்லை.
ஓ! மகனே {அபிமன்யு}, வேள்விகள் செய்வோர், தூய்மையடைந்த ஆன்மா கொண்ட பிராமணர்கள், பிரம்மச்சரியம் பயின்றோர், புனித நீர்நிலைகளில் நீராடியோர், நன்றிமிக்கோர், தொண்டாற்றுவோர், தங்கள் ஆசான்களுக்குச் சேவை செய்யத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோர், அபரிமிதமான வேள்விக் கொடை அளித்தோர் ஆகியோரின் உலகங்கள் உனதாகட்டும்.
போரிடுகையில் துணிச்சலுடன் புறமுதுகிடாதவர்கள், தங்கள் எதிரிகளைக் கொன்றுவிட்டுப் போரில் வீழ்ந்தவர்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை {கதியை} நீயும் அடைவாயாக.
ஆயிரம் பசுக்களைத் தானமளித்தவர்கள், வேள்விகளில் தானமளித்தவர்கள், தகுந்தோருக்கு வீடுகள் மற்றும் மாளிகைகளைத் தானமளித்தவர்கள் ஆகியோர் எந்த மங்கல முடிவை அடைவார்களோ, ரத்தினங்களையும், நகைகளையும் தகுந்த பிராமணர்களுக்குத் தானமளித்தோர், குற்றவாளிகளைத் தண்டிப்போர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.
பிரம்மச்சரியத்துடன் கடும் நோன்புகளை நோற்ற முனிவர்கள், ஒரே கணவனுடன் வாழ்ந்த பெண்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.
ஓ! மகனே {அபிமன்யு}, நன்னடத்தைக் கொண்ட மன்னர்கள், கடமைகளை முறையாக நோற்று, ஒன்றன்பின் ஒன்றாக வாழ்வின் நான்கு நிலைகளையும் வாழ்ந்தவர்கள் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.
ஓ! மகனே {அபிமன்யு}, ஏழைகளிடமும், துயருற்றோரிடமும் கருணை கொண்டோர், தங்களிடமும், தங்களை அண்டியிருப்போரிடமும் எந்தப் பாகுபாடுமின்றிச் சமமாக இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வோர், வஞ்சகம் மற்றும் கொடுமை ஆகியவற்றை எப்போதும் செய்யாதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.
ஓ! மகனே {அபிமன்யு}, நோன்புகள் நோற்பவர்கள், அறம் சார்ந்தோர், ஆசான்களின் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோர், விருந்தோம்பாமல் எவ்விருந்தினரையும் அனுப்பாதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.
ஓ! மகனே {அபிமன்யு}, துன்பத்திலும், மிகக் கடுமையான இக்கட்டான சூழல்களிலும் துன்பத்தீயில் எவ்வளவு அதிகமாக எரிக்கப்பட்டாலும், தங்கள் ஆன்மாக்களின் சமநிலையை {மன அமைதியை} இழக்காதோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.
ஓ மகனே {அபிமன்யு}, தங்கள் தந்தைமார், தாய்மார் மற்றும் பிறரின் சேவைக்கு எப்போதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோர், தங்கள் மனைவியரிடம் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.
ஓ! மகனே {அபிமன்யு}, பிறர் மனைவியரிடம் தங்களைத் தாங்களே தடுத்துக் கொள்வோர், பருவ காலங்களில் தங்கள் மனைவியரிடம் மட்டும் தோழமையை நாடுவோர் ஆகிய ஞானியர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.
ஓ! மகனே {அபிமன்யு}, அனைத்து உயிரினங்களையும் சமாதானக் கண்ணுடன் நோக்குவோர், பிறருக்கு எப்போதும் துன்பத்தை அளிக்காதோர், எப்போதும் மன்னிப்போர் {பொறுமையுடன் இருப்போர்} ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை நீயும் அடைவாயாக.
ஓ! மகனே {அபிமன்யு}, தேன், இறைச்சி, மது, செருக்கு, பொய்மை ஆகியவற்றில் இருந்து விலகியிருப்போர், பிறருக்குத் துன்பம் தருவதைத் தவிர்ப்போர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ அதே முடிவை {கதியை} நீயும் அடைவாயாக.
அடக்கமுடையோர், அனைத்து சாத்திரங்களின் அறிவு கொண்டோர், அறிவில் நிறைவு கொண்டோர், ஆசைகளைக் கட்டுக்குள் வைத்தோர் ஆகியோர் அடையும் இலக்கை நீயும் அடைவாயாக” என்றாள் {சுபத்திரை}.
{இப்படி சுபத்திரை} துயரத்தில் பீடிக்கப்பட்டு இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாஞ்சால இளவரசி (திரௌபதி), விராடன் மகளுடன் {உத்தரையுடன்} உற்சாகமற்ற அந்தச் சுபத்திரையிடம் வந்தாள். பெரும் துன்பத்தால் அவர்கள் அனைவரும், இதயத்தைப் பிளக்கும் புலம்பல்களில் ஈடுபட்டு அதிகமாக அழுதனர். சோகத்தால் நினைவிழந்த மனிதர்களைப் போல, அவர்கள் அனைவரும் மயங்கிப் பூமியில் விழுந்தனர்.
நீருடன் தயாராக நின்ற கிருஷ்ணன், இதயம் துளைக்கப்பட்டவளும், அழுது, சுயநினைவை இழந்து, நடுங்கிக் கொண்டிருந்தவளுமான தன் தங்கையின் {சுபத்திரையின்} மேல் நீரைத் தெளித்து, ஆழமாகத் துன்புற்று, அத்தகு சந்தர்ப்பத்தில் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னான். அந்தத் தாமரைக் கண்ணன் {கிருஷ்ணன்}, “ஓ! சுபத்திரையே, துன்புறாதே! ஓ! பாஞ்சாலி {திரௌபதியே}, உத்தரையைத் தேற்றுவாயாக! க்ஷத்திரியரில் காளையான அபிமன்யு மெச்சத்தகுந்த இலக்கையே அடைந்திருக்கிறான்.
ஓ! அழகிய முகம் கொண்டவளே {சுபத்திரையே}, பெரும்புகழ் கொண்ட அபிமன்யு அடைந்த இலக்கையே நம் குலத்தில் உயிருடன் இருப்போர் அனைவரும் அடையட்டும். ஓ! பெண்ணே {சுபத்திரையே}, எவருடைய உதவியுமில்லாமல் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு} அடைந்த சாதனையையே, எங்கள் நண்பர்களுடன் சேர்ந்த நாங்கள் அனைவரும் இந்தப் போரில் அடைய விரும்புகிறோம்” என்றான் {கிருஷ்ணன்}.
தன் தங்கையையும் {சுபத்திரையையும்}, திரௌபதியையும், உத்தரையையும் இப்படித் தேற்றிய பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த வலிமைமிக்கக் கரத்தைக் கொண்டோன் (கிருஷ்ணன்} பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} சென்றான். அப்போது, கிருஷ்ணன், அங்கிருந்த மன்னர்கள், நண்பர்கள் மற்றும் அர்ஜுனனை வணங்கியபடியே (பின்னவனின் {அர்ஜுனனின்}) அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். பிறகு அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்” {என்றான் சஞ்சயன்}.
தாருகனிடம் பேசிய கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 079-அர்ஜுனனின் படுக்கையைத் தயாரித்து, சிவனுக்கான அவனது இரவுப்பலியை முடிக்கச் செய்த கிருஷ்ணன்; நடு இரவில் தாருகனிடம் பேசிய கிருஷ்ணன்
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, தாமரையின் இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனின் ஒப்பற்ற மாளிகைக்குள் நுழைந்து நீரைத் தொட்டு {ஆசமனம் செய்து} [1], மங்கலகரமான சம தரையில், வைடூரியத்திற்கு ஒப்பான குச {தர்ப்பைப்} புற்களைப் படுக்கையாகப் பரப்பினான். அந்தப் படுக்கையைச் சுற்றிலும் சிறந்த ஆயுதங்களை வைத்த அவன் {கிருஷ்ணன்}, மேலும் அதை மலர்மாலைகள், அவல் {fried paddy}, நறுமணத் திரவியங்கள், பிற மங்கலப் பொருட்கள் ஆகியவற்றால் முறையாக அலங்கரித்தான். பார்த்தனும் நீரைத் தொட்ட {ஆசமனம் செய்த} [1] பிறகு, அமைதியும், பணிவும் கொண்ட பணியாட்கள் முக்கண்ணனுக்கு (மஹாதேவனுக்கு) உரிய வழக்கமான இரவு பலியைக் கொண்டு வந்தனர். அப்போது, மகிழ்ச்சியான ஆன்மா கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, நறுமணப்பொருட்களை மாதவன் {கிருஷ்ணன்} மேல் பூசி, மலர் மாலைகளால் அலங்கரித்து, மகாதேவனுக்கு இரவுப்பலியைச் செய்தான் [2]. பிறகு, கோவிந்தன் {கிருஷ்ணன்} மங்கிய புன்னகையுடன் பார்த்தனிடம், “நீ அருளப்பட்டிருப்பாயாக, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, படுத்துக் கொள்வாயாக, நான் உன்னிடம் விடைபெறுகிறேன்” என்றான். பிறகு நன்கு ஆயுதம் தரித்த வாயில் காப்போரையும், காவலாளிகளையும் நிறுத்திய அந்த அருளப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்} (தன் தேரோட்டியான) தாருகன் பின் தொடரத் தன் பாசறைக்குச் சென்றான்.
வெண்படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களைக் குறித்து ஆலோசித்தான். பிறகு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் (கேசவன்), (பார்த்தனின்) துயரையும், கவலையையும் களைவதற்காகவும், அவனது {அர்ஜுனனின்} ஆற்றலையும் காந்தியையும் அதிகரிப்பதற்காகவும் பல்வேறு வழிகளைக் குறித்துப் பார்த்தனுக்காக {அர்ஜுனனுக்காகச்} சிந்தித்தான். யோகத்தில் பொதிந்த ஆன்மா கொண்டவனும், அனைவரின் உயர்ந்த தலைவனும், பரந்த புகழைக் கொண்டவனும், ஜிஷ்ணுவுக்கு {அர்ஜுனனுக்கு} ஏற்புடையதையே எப்போதும் செய்பவனுமான அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, (அர்ஜுனனுக்கு) நன்மை செய்ய விரும்பி, யோகத்திலும், தியானத்திலும் லயித்தான்.
பாண்டவ முகாமில் அவ்விரவில் உறங்கியவர் எவரும் இல்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விழிப்புணர்வே அனைவரையும் ஆட்கொண்டது. (பாண்டவ முகாமில்) அனைவரும் இதையே சிந்தித்தனர், “தன் மகனின் மரணத்தால் துயரில் எரியும் உயர் ஆன்ம காண்டீவதாரி {அர்ஜுனன்}, சிந்துவை {ஜெயத்ரதனைக்} கொல்வதாகத் திடீரென உறுதிமொழி ஏற்றுவிட்டான். உண்மையில், பகைவீரர்களைக் கொல்பவனும், வாசவனின் {அர்ஜுனனின்} மகனும், வலிமைமிக்க வீரனுமான அவன் எவ்வாறு தனது உறுதி மொழியைச் சாதிக்கப் போகிறான்? உயர் ஆன்மப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} உண்மையில் மிகக் கடினமான தீர்மானத்தை எடுத்திருக்கிறான்.
மன்னன் ஜெயத்ரதன் வலிமையும் சக்தியும் கொண்டவனாவான். ஓ!, அர்ஜுனன் தன் உறுதி மொழியை நிறைவேற்றுவதில் வெல்லட்டும். தன் மகனின் {அபிமன்யுவின்} நிமித்தமாகத் துயரில் பீடிக்கப்பட்ட அவன் {அர்ஜுனன்}, அந்தக் கடின உறுதிமொழியை ஏற்றுவிட்டான். துரியோதனனின் தம்பியர் அனைவரும் பெரும் ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவனது படைகளும் எண்ணற்றவையாக இருக்கின்றன. திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, இவர்கள் அனைவரையும் ஜெயத்ரதனுக்கு (அவனது பாதுகாவலர்களாக) ஒதுக்கியிருக்கிறான். ஓ!, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்று, தனஞ்சயன் {அர்ஜுனன்} (முகாமுக்குத்) திரும்பட்டும். தன் எதிரிகளை வீழ்த்தி அர்ஜுனன் தனது உறுதிமொழியைச் சாதிக்கட்டும்.
நாளை சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதில் அவன் {அர்ஜுனன்} தோற்றால், சுடர்மிகும் நெருப்புக்குள் நிச்சயம் அவன் நுழைவான். பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் உறுதிமொழியைப் பொய்யாக்க மாட்டான். அர்ஜுனன் இறந்தால், தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு தன் நாட்டை மீட்பான்? உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் (யுதிஷ்டிரன்), (தன் நம்பிக்கைகள் அனைத்திலும்) அர்ஜுனனின் வெற்றியையே சார்ந்திருக்கிறான். நாம் ஏதாவது (அறத்) தகுதியை அடைந்திருந்தால், நாம் நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக எப்போதாவது ஊற்றியிருந்தால், அவற்றின் கனிகளின் துணையோடு சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் எதிரிகளை அனைவரையும் வீழ்த்தட்டும்” {என்றே பாண்டவ முகாமில் உள்ள அனைவரும் சிந்தித்தனர்}. ஓ! தலைவா, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} இவ்வாறு (நாளைய) வெற்றி குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே அவர்களது நீண்ட இரவு கடந்து போனது.
நடு இரவில் விழித்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பார்த்தனின் {அர்ஜுனனின்} உறுதிமொழியை நினைவுகூர்ந்து, (தன் தேரோட்டியான) தாருகனிடம், “அர்ஜுனன், தன் மகனின் மரணத்தால் ஏற்பட்ட துயரால் உறுதிமொழி செய்தான். இதைக் கேட்ட துரியோதனன், பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வாறு தன் நோக்கத்தை அடைவதில் தோல்வியுறுவான் என்று தன் அமைச்சர்களிடம் நிச்சயம் ஆலோசித்திருப்பான். அவனது {துரியோதனனின்} பல அக்ஷௌஹிணி துருப்புகள் ஜெயத்ரதனைப் பாதுகாக்கும். ஆயுதங்கள் அனைத்தையும் ஏவும் வழிகளை முழுமையாக அறிந்த துரோணரும், அவரது மகனும் {அஸ்வத்தாமனும்} அவனைப் {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பார்கள். ஒப்பற்ற வீரனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்களின் செருக்கை அழித்தவனுமான ஆயிரம் கண்ணனே {இந்திரனே} கூட, போரில் துரோணரால் பாதுகாக்கப்படும் ஒருவனைக் கொல்லத் துணியமாட்டான்.
எனவே, குந்தியின் மகனான அர்ஜுனன், சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைக் கொல்ல என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் செய்வேன். என் மனைவியர், என் சொந்தங்கள், என் உறவினர்கள் ஆகியோரிலும் கூட அர்ஜுனனை விட மிகுந்த அன்புக்குரியவர் எவருமில்லை. ஓ! தாருகா, அர்ஜுனன் இல்லாத பூமியில் ஒரு கணமும் நான் என் கண்களைச் செலுத்த மாட்டேன். பூமி அர்ஜுனன் அற்றதாகாது என நான் உனக்குச் சொல்கிறேன். குதிரைகளோடும், யானைகளோடும் கூடியவர்கள் அனைவரையும், அர்ஜுனனுக்காக நானே என் பலத்தைப் பயன்படுத்தி வீழ்த்தி, அவர்களோடு சேர்த்து கர்ணனையும், சுயோதனனையும் {துரியோதனனையும்} கொல்வேன்.
ஓ! தாருகா, பெரும்போரில் தனஞ்சயனுக்காக {அர்ஜுனனுக்காக} நாளை என் வீரத்தை நான் வெளிப்படுத்தும்போது, என் ஆற்றாலை மூன்று உலகங்களும் காணட்டும். ஓ! தாருகா, நாளை ஆயிரக்கணக்கான மன்னர்களும், நூற்றுகணக்கான இளவரசர்களும், தங்கள் குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் போரில் இருந்து ஓடப் போகின்றனர். ஓ! தாருகா, பாண்டுவின் மகனுக்காகக் கோபத்துடன் உள்ள நான், நாளை மன்னர்களின் படையை வீழ்த்தி, என் சக்கரத்தால் அவற்றை நசுக்கப் போவதைக் காண்பாய். ஓ! தாருகா, தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியவர்களுடன் கூடிய (மூன்று) உலகங்கள் என்னைச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} (உண்மை) நண்பனாக நாளை அறியும். எவன் அவனை {அர்ஜுனனை} வெறுக்கிறானோ, அவன் {கிருஷ்ணனாகிய} என்னை வெறுக்கிறான். எவன் அவனைப் பின்பற்றுகிறானோ, அவன் என்னைப் பின்பற்றுகிறான். புத்திக்கூர்மை கொண்ட நீ, அர்ஜுனன் என்னில் பாதியானவன் என்பதை அறிவாயாக.
ஓ! தாருகா, இரவு கழிந்து காலை வந்ததும், என் சிறந்த தேரில் கௌமோதகி என்றழைக்கப்படும் என் தெய்வீகக் கதாயுதத்தையும், என் ஈட்டி மற்றும் சக்கரத்தையும், என் வில் மற்றும் கணைகளையும், இன்னும் தேவையான பிற அனைத்தையும் படை அறிவியலின் படி தரிக்கச் செய்து, கவனத்துடன் என்னிடம் கொண்டு வருவாயாக. ஓ! சூதா {தாருகா}, என் தேர்த்தட்டில் எனது குடையை அலங்கரிக்கும் என் கொடிமரத்துக்கும், அதில் இருக்கும் கருடனுக்குமான இடத்தை ஒதுக்கி, வலாஹம், மேகபுஷ்பம், சைப்யம், சுக்ரீவம் என்று அழைக்கப்படும் என் முதன்மையான குதிரைகளை அதில் பூட்டி, சூரியன் மற்றும் நெருப்பின் காந்தியுடன் கூடிய தங்கக் கவசத்தால் அவற்றை அலங்கரித்து, நீயும் உன் கவசத்தை அணிந்து கொண்டு, கவனமாக அதில் நிற்பாயாக. ரிஷப சுரத்தின் [3] ஒலியை உமிழும் என் சங்கான பாஞ்சஜன்யத்தின் உரத்த, பயங்கரமான வெடிப்பொலியைக் கேட்டதும் விரைவாக நீ என்னிடம் வருவாயாக.ஓ! தாருகா, ஒரே நாளில் என் தந்தைவழி அத்தையின் {வசுதேவர் தங்கை குந்தியின்} மகனான என் மைத்துனனின் {அர்ஜுனனின்} பல்வேறு துயரங்களையும் கோபத்தையும் நான் விலக்கப் போகிறேன். திருதராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீபத்சு {அர்ஜுனன்} போரில் ஜெயத்ரதனைக் கொல்வதற்காக அனைத்து வழிகளிலும் நான் முயல்வேன். ஓ! தேரோட்டியே {தாருகா}, பீபத்சு இவர்களில் யாரையெல்லாம் கொல்ல முயல்வானோ, அவர்களைக் கொல்வதில் நிச்சயம் வெல்வான் என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.
தாருகன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, நீ யாருடைய தேரைச் செலுத்துகிறாயோ, அவனது வெற்றி உறுதியே. உண்மையில், அவனுக்கு எவ்விடத்தில் இருந்து தோல்வி வரும்? என்னைப் பொறுத்தவரை, நீ என்ன உத்தரவிடுகிறாயோ, அதையே நான் செய்வேன். இந்த இரவு (அதன் தொடர்ச்சியாக) அர்ஜுனனின் வெற்றிக்காக மங்கலமான காலைப் பொழுதைக் கொண்டுவரும்” என்றான் {தாருகன்}.
சிவனைத் துதித்த கிருஷ்ணனும்! அர்ஜுனனும்!! – துரோண பர்வம் பகுதி – 080-அர்ஜுனனின் கனவில் கிருஷ்ணன் தோன்றியது; சிவனை நினைக்கச் சொன்ன கிருஷ்ணன் அர்ஜுனனைக் கைலாசத்திற்கு அழைத்துச் சென்றது; சிவனைப் போற்றிய கிருஷ்ணனும், அர்ஜுனனும்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்ட குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் உறுதிமொழியை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்துச் சிந்தித்து, (வியாசரால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட) மந்திரங்களை நினைவுகூர்ந்தான். விரைவில் அவன் {அர்ஜுனன்} உறக்கத்தின் கரங்களில் அமைதியடைந்தான் [1]. துயரில் எரிந்து கொண்டிருந்தவனும், சிந்தனையில் மூழ்கியிருந்தவனுமான அந்தக் குரங்குக் கொடி வீரனின் {அர்ஜுனனின்) கனவில், கருடனைத் தன் கொடியாகக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} தோன்றினான்.
அற ஆன்மா கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கேசவன் {கிருஷ்ணன்} மீது கொண்ட அன்பு மற்றும் மரியாதையின் விளைவால் எப்போதும் எழுந்து நின்று, ஒரு சில எட்டுகள் முன்னேறிச் சென்று கிருஷ்ணனை வரவேற்பதை எந்தச் சூழ்நிலையிலும் தவிர்த்ததில்லை. எனவே, இப்போது அவன் {அர்ஜுனன்}, (தன் கனவிலும்) எழுந்து நின்று கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஓர் இருக்கையைக் கொடுத்தான். எனினும் அவன் {அர்ஜுனன்}, அந்நேரத்தில் இருக்கையில் தானும் அமர்ந்து கொள்ளத் தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை. வலிமையும் சக்தியும் கொண்ட கிருஷ்ணன், பார்த்தனின் {அர்ஜுனனின்} தீர்மானத்தை அறிந்து, இருக்கையில் அமர்ந்து, பின்னவன் {அர்ஜுனன்} நின்று கொண்டிருக்கையிலேயே அந்தக் குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, துயரில் உன் இதயத்தை நிலைநிறுத்தாதே.
காலம் வெல்லப்பட முடியாததாகும். காலம், அனைத்து உயிரினங்களையும் தவிர்க்க முடியாத வழியில் பலவந்தமாகத் தள்ளுகிறது. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, {அப்படியிருக்கையில்}, இந்த உனது துயரம் எதற்காக? ஓ! கற்றறிந்தவர்களுள் முதன்மையானவனே {அர்ஜுனா}, துயரில் ஈடுபடக்கூடாது! செயல்பாட்டுக்குத் துயரம் ஒரு தடையாகும். சாதிக்கப்பட வேண்டிய செயலைச் சாதிப்பாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, ஒருவனின் முயற்சிகள் அனைத்தையும் துறக்கச்செய்யும் துயரமானது உண்மையில் அவனது எதிரியாகும். துயரில் ஈடுபடும் ஒருவன், தன் எதிரிகளை மகிழ்வித்து, தன் நண்பர்களைக் கவலைகொள்ளச் செய்து, தன்னையும் பலவீனமாக்கிக் கொள்கிறான். எனவே, துயருறாமல் இருப்பதே உனக்குத் தகும்” என்றான் {கிருஷ்ணன்}.
அப்போது, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், எவராலும் வெல்லப்படாதவனும், பெரும் கல்வியைக் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, இந்தப் பயங்கர வார்த்தைகளைச் சொன்னான்: “ஜெயத்ரதன் படுகொலையைக் குறித்து நான் செய்த உறுதிமொழி பயங்கரமானது. ஓ கேசவா {கிருஷ்ணா}, நாளையே என் மகனைக் கொன்ற அந்த இழிந்தவனை {ஜெயத்ரதனை} நான் கொல்வேன் என்பதே எனது உறுதிமொழியாகும். என் உறுதிமொழியில் என்னைச் சலிக்கச் செய்வதற்காக, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவராலும் பாதுகாக்கப்படும் ஜெயத்ரதனைத் தார்தராஷ்டிரர்கள் தங்கள் பின்னால் நிறுத்திக் கொள்வார்கள்.
ஓ! மாதவா {கிருஷ்ணா}, பதினோரு அக்ஷௌஹிணி துருப்புகளில், படுகொலைக்குப் பிறகு எஞ்சியவர்களைத் தன் எண்ணிக்கையாகக் கொண்டுள்ள அவர்களது படை வீழ்த்துவதற்குக் கடினமானதே ஆகும். பெரும் தேர்வீரர்கள் அனைவராலும் சூழப்பட்ட சிந்துக்களின் தீய ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நாம் எவ்வாறு காண்போம்? ஓ! கேசவா, என் உறுதிமொழி நிறைவேறப் போவதில்லை. உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தோற்ற என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு உயிர்வாழ முடியும்? ஓ! வீரா {கிருஷ்ணா}, இது (இந்த என் உறுதி மொழி) சாதிக்கப்பட முடியாதது என்று தெளிவாகத் தெரிகிறது. அதுவே (என்) பெரும் துயரத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. (வருடத்தின் இந்தப் பருவக் காலத்தில்) சூரியன் விரைவாக மறைகிறான் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.
பறவை {கருடக்} கொடி கொண்ட கிருஷ்ணன், பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} துயரின் காரணத்தைக் கேட்டு, நீரைத் தொட்டு, கிழக்கு நோக்கி அமர்ந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், பெரும் சக்தியையும் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} படுகொலையைத் தீர்மானித்துப் பாண்டுவின் மகனுடைய {அர்ஜுனனுடைய} நன்மைக்காக இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பாசுபதம் என்ற பெயரில் அழிக்கப்பட முடியாத ஓர் உயர்ந்த ஆயுதம் இருக்கிறது. அதைக் கொண்டு தேவன் மகேஸ்வரன் {சிவன்}, தைத்தியர்கள் அனைவரையும் போரில் கொன்றான். அதை இப்போது நீ நினைவு கூர்ந்தால், நாளை ஜெயத்ரதனை உன்னால் கொல்ல முடியும். அதை நீ (இப்போது) அறியவில்லையெனில், உன் இதயத்திற்குள், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்ட தேவனை {சிவனைத்} துதிப்பாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} மனத்தில் அந்தத் தேவனைச் சிந்தித்து, அவனை {சிவனை} நினைவுகூர்வாயாக. நீ அவனது பக்தனாவாய். அவனது {சிவனின்} அருளால் நீ அந்த மகிமையான உடைமையை {பாசுபதத்தை} அடைவாய்” என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, நீரைத் தொட்டுக் குவிந்த மனத்தோடு பூமியில் அமர்ந்து, பவ தேவனை {சிவனை} நினைத்தான். அப்படி அவன் குவிந்த மனத்துடன் அமர்ந்ததும், மங்கலக் குறியீடுகளைக் கொண்ட பிரம்மம் என்று அழைக்கப்படும் காலத்தில் {பிரம்மமுகூர்த்தத்தில்}, அர்ஜுனன், தானும் கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} வானத்தில் பயணித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். மனோவேகத்தைக் கொண்ட பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குக்} கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} தானும் சேர்ந்து புனிதமான இமயமலையின் அடிவாரத்தையும், பல பிரகாசமான ரத்தினங்கள் நிறைந்ததும், சித்தர்கள் மற்றும் சாரணர்களால் அடிக்கடி அடையப்பட்டதுமான மணிமான் மலையையும் அடைந்ததாகத் தெரிந்தது. தலைவன் கேசவன் அவனது {அர்ஜுனனது} இடது கையைப் பற்றியிருந்ததாகவும் [2] தெரிந்தது. (அந்த இடத்தை அடைகையில்) பல அற்புதக் காட்சிகளைக் கண்டதாகவும் அவனுக்குத் தோன்றியது.பிறகு, அற ஆன்மா கொண்ட அர்ஜுனனுக்குத் தான் வடக்கின் வெண்மலையை அடைந்ததாகத் தெரிந்தது. பிறகு அவன் {அர்ஜுனன்}, குபேரனின் மகிழ்ச்சியான நந்தவனங்களில் {சைத்ரரதத்தில்} தாமரைகள் நிறந்த அழகிய தடாகத்தைக் கண்டான். மேலும் அவன் நதிகளில் முதன்மையான கங்கை முழுமையான நீருடன் செல்வதையும் கண்டான். பிறகு அவன் {அர்ஜுனன்} மந்தர மலைகளின் பகுதிகளை அடைந்தான். அந்தப் பகுதிகள் எப்போதும் மலர்களையும் கனிகளையும் தாங்கியிருக்கும் மரங்களால் நிறைந்திருந்தது. அவற்றில் ஸ்படிகக் கற்கள் எங்கும் விரவிக் கிடந்தன. அவற்றில் சிங்கங்களும், புலிகளும் வசித்தன, பல்வேறு வகைகளிலான விலங்குகளும் நிறைந்திருந்தன. அவை, மகிழ்ச்சிமிக்கப் பறவைகளின் இனிய சுரங்களை எதிரொலித்தபடி முனிவர்களின் அழகிய ஆசிரமங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கின்னரர்களின் பாடல்களும் அங்கே எதிரொலித்தன. தங்க மற்றும் வெள்ளி முகடுகளால் அருளப்பட்ட அவை, பல்வேறு மூலிகை செடிகளாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. மந்தர மரங்கள் பல அபரிமிதமான மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன.
பிறகு அர்ஜுனன், மைக்குவியல்களைப் போலத் தெரியும், காலம் என்றழைக்கப்படும் மலைகளை {காலபர்வதத்தை} அடைந்தான். பிறகு அவன் பிரம்மதுங்கம் என்றழைக்கப்படும் கொடுமுடியையும், பிறகு பல நதிகளையும், வசிப்போரற்ற பல மாகாணங்களையும் அடைந்தான். சதசிருங்கத்தை அடைந்த அவன், சர்யாதி என்ற பெயரில் அறியப்படும் காடுகளையும் {சர்யாதி வனத்தையும்} அடைந்தான். பிறகு குதிரைத் தலை {அஸ்வசிரஸ்} என்று அறியப்படும் ஒரு புனிதமான இடத்தையும், பிறகு அதர்வணம் என்ற பகுதியையும் அவன் கண்டான். விருதம்சம் என்றழைக்கப்படும் மலைகளின் இளவரசனையும், அப்சரசுகளால் நிறைந்ததும், கின்னரர்களின் இருப்பால் அருளப்பட்டதுமான பெரும் மந்தரத்தையும் {மகாமந்தரத்தையும்} அவன் கண்டான். அந்த மலையில் கிருஷ்ணனுடன் உலவிய பார்த்தன், சிறந்த நீரூற்றுகளால் அலங்கரிக்கப்பட்டும், தங்கத் தாது நிரம்பியதும், சந்திரக் கதிர்களின் காந்தியைக் கொண்டதும், பல பெருநகரங்களையும், நகரங்களையும் கொண்டதுமான பூமியின் ஒரு பகுதியைக் கண்டான். பல அற்புத வடிவங்களையும் பல செல்வச்சுரங்கங்களையும் கொண்ட பல கடல்களையும் அவன் கண்டான். வானம், ஆகாயம் மற்றும் பூமியில் இப்படிச் சென்று கொண்டிருந்த அவன் விஷ்ணுபதம் என்றழைக்கப்படும் இடத்தை அடைந்தான். கிருஷ்ணனின் துணையுடன் உலவிய அவன் (வில்லில் இருந்து) ஏவப்பட்ட கணையைப் போலப் பெரும் வேகத்துடன் கீழே இறங்கினான். விரைவில் பார்த்தன் {அர்ஜுனன்}, கோள்கள், நட்சத்திரங்கள் அல்லது நெருப்புக்கு இணையான காந்தியைக் கொண்ட சுடர் மிகும் மலையொன்றை {கைலாசத்தைக்} கண்டான்.
அந்த மலையை அடைந்த அவன் {அர்ஜுனன்}, அதன் உச்சியில், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்டவனும், தவத்துறவுகளில் {தபோநிஷ்டையில்} எப்போதும் ஈடுபடுபவனும், ஆயிரம் சூரியன்கள் ஒன்றாகச் சேர்ந்ததைப் போல இருப்பவனும், தன்னொளியாலேயே சுடர்விடுபவனுமான அந்த உயர் ஆன்மத் தேவனை {சிவனைக்} கண்டான். கையில் திரிசூலமும், தலையில் சடா முடியும், வெண்பனியின் நிறமும் கொண்ட அவன் {சிவன்}, மரப்பட்டை மற்றும் தோலாலான ஆடையை அணிந்திருந்தான். பெரும் சக்தியைக் கொண்ட அவனது உடல் ஆயிரம் கண்களுடன் சுடர்விட்டு எரிவதாகத் தெரிந்தது. அவன் {சிவன்} (தன்னைச் சுற்றி) பல வடிவங்களிலான உயிரினங்களால் சூழப்பட்டுப் பார்வதியுடன் அமர்ந்திருந்தான். அவனுடன் இருப்போர் பாடுவதிலும், இசைக்கருவிகளை இசைப்பதிலும், சிரிப்பதிலும், ஆடுவதிலும், அசைவதிலும், தங்கள் கைகளை நீட்டுவதிலும், உரத்த முழக்கங்களைச் செய்வதிலும் ஈடபட்டிருந்தனர். நறுமணச் சுகந்தங்களால் அந்த இடம் மணமூட்டப்பட்டிருந்தது. பிரம்மத்தை வழிபடும் {பிரம்மவாதிகளான தெய்வீக} முனிவர்கள், அனைத்து உயிர்களைக் காப்பவனும், (பினாகை என்றழைக்கப்படும் பெரும்) வில்லைக் கொண்டவனுமான அந்தத் தேவனை மங்கா மகிமை கொண்ட அற்புதப் பாடல்களால் துதித்தனர்.
அற ஆன்மா கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்து அவனைக் {சிவனைக்} கண்டு, தன் தலையால் பூமியைத் தொட்டு, வேதங்களின் அழியாச் சொற்களை உரைத்தான் [3]. அண்டத்தின் மூல முதல்வனும், சுயம்புவும், மங்காப்புகழ் கொண்டவனும், உயர்ந்தத் தலைவனுமான அந்தத் தேவனை {சிவனைக்} கிருஷ்ணன், தன் பேச்சாலும், மனத்தாலும், அறிவாலும், செயல்களாலும் துதித்தான். மனத்தின் உயர்ந்த காரணனும், வெளியும், காற்றும், (ஆகாயத்திலுள்ள) ஒளிக்கோள்கள் அனைத்தின் காரணனும், மழையை உண்டாக்குபவனும், உயர்ந்தவனும், பூமியின் மூலப் பொருளும், தேவர்கள், தானவர்கள், யக்ஷர்கள், மனிதர்கள் ஆகியோரின் துதிக்குத் தகுந்தவனும், யோகியரால் காணப்படும் உயர்ந்த பிரம்மமும், சாத்திரங்கள் அறிந்தோரின் புகலிடமும், உயிரினங்களில் அசைவன, அசையாத ஆகியவை அனைத்தையும் படைத்தவனும், அவர்களை அழிப்பவனும், யுக முடிவில் கோபத்துடன் அனைத்தையும் அழிப்பவனும், உயர்ந்த ஆன்மாவும், சக்ரனாகவும், சூரியனாகவும் இருப்பவனும், குணங்கள் அனைத்தின் மூலமும் ஆன அவனைக் கிருஷ்ணன் துதித்தான்.-நுட்பமானது, ஆன்மிகமானது என்று அழைக்கப்படுவதை {முக்தியை} [4] அடைய விரும்பும் ஞானியரால் காணப்படுபவனும், அனைத்துக் காரணங்களுக்கு ஆன்மாவான சுயம்புவான அந்தப் பவனின் {சிவனின்} பாதுகாப்பைக் கிருஷ்ணன் வேண்டினான். அந்தத் தேவனே {சிவனே} அனைத்து உயிர்களின் மூலம் என்றும், கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்திற்குக் காரணம் என்றும் அறிந்த அர்ஜுனன் அவனை மீண்டும் மீண்டும் துதித்தான்.-நரனும், நாராயணனும் வந்திருப்பதைக் கண்ட பவன் {சிவன்} உற்சாக ஆன்மாவுடன் {மகிழ்ச்சியுடன்} புன்னகைத்துக் கொண்டே அவர்களிடம், “மனிதரில் முதன்மையானோரே, உங்களுக்கு நல்வரவு. உங்கள் பயணக் களைப்பு நீங்கி எழுவீராக. ஓ வீரர்களே, உங்கள் இதய விருப்பம் என்ன? அதை விரைவாகச் சொல்லுங்கள். எக்காரியம் உங்களை இங்கே அழைத்து வந்தது? அதை அடையும் நான் உங்களுக்கு எது நன்மையோ அதைச் செய்கிறேன். நீங்கள் விரும்பும் அனைத்தையும் நான் அருள்வேன்” என்றான் {சிவன்}.
பிறகு கூப்பிய கரங்களுடன், களங்கமற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய பெரும் விவேகிகள் இருவரும் அந்த உயர் ஆன்மத் தேவனை {சிவனை} ஒரு சிறந்த பாடலால் நிறைவடையச் செய்யத் தொடங்கினர். கிருஷ்ணனும், அர்ஜுனனும், “பவனை {உலகங்கள் அனைத்தின் தலைவனை}, சர்வனை {உயிரினங்களைக் கொல்பவனை}, ருத்ரனை {அழச் செய்பவனை}, வரமளிக்கும் தேவனை நாங்கள் வணங்குகிறோம். உயிருடன் கூடிய உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவனை {பசுபதியை}, எப்போதும் கடுமையாக இருக்கும் தேவனை, கபார்தின் {கபார்தி – சடை கொண்டவன்} என்று அழக்கப்படுபவனை நாங்கள் வணங்குகிறோம். மகாதேவனை {தேவர்களுள் சிறந்தவனை}, பீமனை {பயங்கரமானவனை}, முக்கண்ணனை, அமைதியும் சமாதமுமானவனை நாங்கள் வணங்குகிறோம். (தக்ஷனின்) வேள்வியை அழித்த ஈசானனை நாங்கள் வணங்குகிறோம்.
அந்தகனை {அந்தகாசுரனை} அழித்தவனுக்கு, குமரனின் {முருகனின்} தந்தைக்கு, நீலகண்டனுக்கு, படைப்பாளனுக்கு எங்கள் வணக்கங்கள். பினாகைதாரிக்கு, தெளிந்த நெய்யினாலான காணிக்கையை {ஹவிஸைப்} பெறத் தகுந்தவனுக்கு, உண்மையானவனுக்கு, அனைத்திலும் இருப்பவனுக்கு வணக்கம். வெல்லப்படாதவனை, எப்போதும் நீலக் குழல்களைக் கொண்டவனை, திரிசூலம் தரித்தவனை, தெய்வீகப் பார்வை கொண்டவனை, அனைவரையும் பாதுகாக்கும் ஹோத்ரியை, முக்கண்ணனை, நோயாக இருப்பவனை [5], உயிர்வித்தை நெருப்பில் விட்டவனை, நினைத்துப் பார்க்க முடியாதவனை, அம்பிகையின் தலைவனை, தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனை, காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்டவனை, தைரியமானவனை, சடாமுடி தரித்தவனை, பிரம்மச்சாரியை, நீரில் தவம் செய்து நிற்பவனை, பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடன் உள்ளவனை, வெல்லப்பட முடியாதவனை, அண்டத்தின் ஆன்மாவை, அண்டத்தைப் படைத்தவனை, அண்டம் முழுமையும் வியாபித்திருப்பவனை, அனைத்து உயிர்களின் உண்மைக் காரணனை, அனைவரின் மரியாதைக்குத் தகுந்தவனான உன்னை நாங்கள் வணங்குகிறோம். பிரம்மச்சக்கரம் என்றழைக்கப்படும் உன்னை, சர்வன், சங்கரன், சிவன் என்று அழைக்கப்படும் உன்னை, பேருயிர்கள் அனைத்தின் தலைவனான உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஆயிரம் சிரங்களையும், ஆயிரம் கரங்களையும் கொண்ட உன்னை, மரணம் என்று அழைக்கப்படும் {மிருத்யு ஸ்வரூபியான} உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஆயிரம் கண்கள் மற்றும் ஆயிரம் கால்கள் கொண்ட உன்னை, எண்ணிலா செயல்களைச் செய்யும் உன்னை, தங்க நிறம் கொண்ட உன்னை, தங்கக் கவசம் பூண்ட உன்னை, பக்தர்களிடம் எப்போதும் கருணை கொண்ட உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஓ! தலைவா, எங்கள் விருப்பம் நிறைவேறட்டும்” என்றனர் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்}.சஞ்சயன் தொடர்ந்தான், “இம்முறையில் மகாதேவனை வழிபட்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் (பாசுபதம் என்றழைக்கப்படும் பெரும்) ஆயுதத்தை அடைவதற்காக அவனை {சிவனை} நிறைவு செய்யத் தொடங்கினர்” என்றான் {சஞ்சயன்}.
சிவன் அளித்த வரம்! – துரோண பர்வம் பகுதி – 081-சிவனும் கிருஷ்ணனும் ஒன்றெனக் கண்டு மலைத்த அர்ஜுனன்; கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் ஒரு தடாகத்திற்கு அனுப்பிய சிவன்; வில்லையும் அம்பையும் சிவனிடம் கொடுத்த கிருஷ்ணார்ஜுனர்கள்; ஆயுதம் பயன்படுத்த வேண்டிய முறையை அறிந்து கொண்ட அர்ஜுனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சிமிக்க ஆன்மாவுடன் கரங்களைக் குவித்து, காளையைத் தன் அடையாளமாக {காளையைக் கொடியாகக்} கொண்டவனும், அனைத்து சக்திகளின் கொள்ளிடமுமான அந்தத் தேவனை (ஆச்சரியத்தில்) கண்களை விரித்துப் பார்த்தான். ஒவ்வொரு இரவும் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அவன் செலுத்திய காணிக்கைகளை, அந்த முக்கண் தேவனின் {சிவனின்} அருகில் கண்டான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மனப்பூர்வமாகக் கிருஷ்ணன், சர்வன் {சிவன்} ஆகிய இருவரையும் வணங்கிப் பின்னவனிடம் {சிவனிடம்}, “தெய்வீக ஆயுதத்தை (அடைய) விரும்புகிறேன்” என்றான்.
விரும்பிய வரத்தை வேண்டிய பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவன் சிவன், புன்னகையுடன் வாசுதேவனிடமும், அர்ஜுனனிடமும், “ஓ! மனிதர்களில் முதன்மையானவர்களே, உங்களுக்கு நல்வரவு. உங்கள் மனத்தின் விருப்பத்தையும், நீங்கள் இங்கே வந்த காரியத்தையும் நான் அறிவேன். நீங்கள் விரும்பியதை நான் தருவேன். ஓ! எதிரிகளைக் கொல்பவர்களே, இந்த இடத்திற்கு வெகு அருகில், அமிர்தம் நிறைந்த தெய்வீகத் தடாகம் ஒன்று இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு, அந்த எனது தெய்வீக வில்லும், கணையும் அங்கே வைக்கப்பட்டன. அதைக் கொண்டே தேவர்களின் எதிரிகள் அனைவரையும் போரில் நான் கொன்றேன். கிருஷ்ணா, அந்தச் சிறந்த வில்லில் கணையைப் பொருத்தி இங்கே கொண்டு வருவாயாக” என்றான் {சிவன்}. சிவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனுடன் சேர்ந்து “அப்படியே ஆகட்டும்” என்றான்.
பிறகு, நூற்றுக்கணக்கான தெய்வீக அற்புதங்களைக் கொண்டதும், அனைத்துப் பொருளையும் அருள வல்லதும், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்ட தேவனால் {சிவனால்} குறிப்பிடப்பட்டதுமான அந்தப் புனிதத் தடாகத்திற்குச் சிவனின் துணைவர்கள் அனைவரின் துணையுடன் அந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றனர். முனிவர்களான நரனும், நாராயணனும் (அஃதாவது, அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}) அந்தத் தடாகத்திற்கு அச்சமில்லாமல் சென்றனர்.
சூரியவட்டிலைப் போன்றப் பிராகாசமுடன் இருந்த அந்தத் தடாகத்தை அடைந்த அர்ஜுனனும், அச்யுதனும் {கிருஷ்ணனும்}, அதன் நீருக்குள் ஒரு பயங்கரப் பாம்பைக் கண்டனர். மேலும் அங்கே ஆயிரம் {1000} தலைகளைக் கொண்ட மற்றுமொரு பாம்பையும் கண்டனர். நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அந்தப் பாம்பு {நெருப்பின்} கடுந்தழல்களைக் கக்கிக் கொண்டிருந்தது. அப்போது, கிருஷ்ணனும், அர்ஜுனனும், நீரைத் தொட்டுத் தங்கள் கரங்களைக் குவித்து, காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்ட தேவனை {சிவனை} வணங்கி அந்தப் பாம்புகளை அணுகினர். வேதங்களை அறிந்தவர்களான அவர்கள் அந்தப் பாம்புகளை அணுகும்போதே, அளவிலா சக்தி கொண்ட பவனை {சிவனைத்} தங்கள் நேர்மையான ஆன்மாக்களால் வணங்கியபடியே, ருத்ரனைப் புகழ்ந்து வேதங்களில் உள்ள {சதருத்ரியம் என்ற} நூறு பத்திகளை {ஸ்லோகங்களை} உரைத்தனர்.
அந்த ருத்ரத் துதிகளுடைய சக்தியின் விளைவால் அந்தப் பயங்கரப் பாம்புகள் இரண்டும், தங்கள் பாம்பு வடிவங்களைத் துறந்து, எதிரிகளைக் கொல்லும் வில் மற்றும் கணையின் வடிவை ஏற்றன. (தாங்கள் கண்டதில்) நிறைவுற்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும் பெரும் பிரகாசம் கொண்ட அந்த வில்லையும் கணையையும் கைப்பற்றினர். பிறகு அந்த உயர் ஆன்ம வீரர்கள் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} சிறப்புமிக்க மஹாதேவனிடம் {சிவனிடம்} அவற்றைக் கொண்டு வந்து கொடுத்தனர். அப்போது சிவனுடைய உடலின் ஒருபகுதியில் இருந்து பழுப்பு நிறக் கண்களைக் கொண்ட ஒரு பிரம்மச்சாரி வெளிவந்தான். தவத்தின் புகலிடமாக அவன் தெரிந்தான். நீலத் தொண்டையும், சிவப்பு குழல்களும் கொண்ட அவன் பெரும் பலம் கொண்டவனாகவும் இருந்தான்.அந்தச் சிறந்த வில்லை எடுத்த அந்தப் பிரம்மச்சாரி (வில் மற்றும் தனது பாதம் ஆகிய இரண்டையும் முறையாக வைத்துக் கொண்டு) நிலையாக நின்றான் [1]. கணையை வில்லின் நாணில் பொருத்திய அவன், பின்னதை {வில்லை} முறையாக வளைக்கத் தொடங்கினான். நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அவன் {அந்த பிரம்மச்சாரி} விற்பிடியைப் பிடித்திருக்கும், நாணை வளைக்கும், பாதங்களை நிலைநிறுத்தும் முறைகளைக் கண்டும், பவனால் {சிவனால்} உச்சரிக்கப்பட்ட மந்திரங்களைக் கேட்டும் அனைத்தையும் முறையாகக் கற்றான். வலிமையும், பலமும் மிக்க அந்தப் பிரம்மச்சாரி அந்தக் கணையை அதே தடாகத்தில் ஏவினான். மேலும் அவன் அந்த வில்லையும் அதே தடாகத்தில் மீண்டும் வீசியெறிந்தான்.நல்ல நினைவுத்திறனைக் கொண்ட அர்ஜுனன், தன்னிடம் பவன் {சிவன்} மனம்நிறைந்தான் என்பதை அறிந்தும், காட்டில் தனக்குப் பின்னவன் {சிவன்} அளித்த வரத்தையும், தனிப்பட்ட முறையில் தனக்குக் காட்சியளித்ததையும் நினைவுகூர்ந்தும், “இவை அனைத்தும் கனியை {பலனை} உண்டாக்குவதாக அமையட்டும்” என்று மனப்பூர்வமாக விரும்பினான். அவனது விருப்பத்தைப் புரிந்து கொண்ட பவன் {சிவன்}, அவனிடம் நிறைவடைந்து அவனுக்கு வரத்தை அளித்தான். மேலும் அந்தத் தேவன் {சிவன்}, பயங்கரப் பாசுபதாயுதத்தையும் [2], உறுதிமொழியின் நிறைவேற்றத்தையும் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} அருளினான். இப்படியே உயர்ந்த தேவனிடம் {சிவனிடம்} இருந்து மீண்டும் பாசுபதாயுதத்தை அடைந்தவனும், வெல்லப்பட முடியாதவனும், {தான் கண்ட காட்சியால்} மயிர் சிலிர்ப்பை அடைந்தவனுமான அர்ஜுனன், ஏற்கனவே தன் காரியம் சாதிக்கப்பட்டதாகவே கருதினான்.பிறகு மகிழ்ச்சியால் நிறைந்த அர்ஜுனனும், கிருஷ்ணனும், தங்கள் தலைகளைத் தாழ்த்தி, அந்தப் பெரும் தேவனிடம் {சிவனிடம்} தங்கள் வழிபாட்டைச் செலுத்தினர். பவனால் {சிவனால்} அனுமதிக்கப்பட்ட அர்ஜுனன், கேசவன் {கிருஷ்ணன்} ஆகிய வீரர்கள் இருவரும் மகிழ்ச்சியின் வரத்தால் நிறைந்து கிட்டத்தட்ட உடனேயே தங்கள் முகாமுக்குத் திரும்பினர். ஜம்பனைக் கொல்ல விரும்பிய இந்திரன், விஷ்ணு ஆகிய தேவர்கள் இருவரும், பெரும் அசுரர்களைக் கொல்பவனான பவனின் {சிவனின்} அனுமதியைப் பெற்று மகிழ்ச்சியை அடைந்ததைப் போலவே உண்மையில் அவர்களது {கிருஷ்ணார்ஜுனர்களின்} மகிழ்ச்சியும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.
யுதிஷ்டிரனின் அலங்காரம்! – துரோண பர்வம் பகுதி – 082-சூதர்களால் எழுப்பப்பட்ட யுதிஷ்டிரன் நீராடச் சென்றது; மூலிகைகளாலும், நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்ட யுதிஷ்டிரன்; நன்கு அலங்கரித்துக் கொண்டு, தியானித்த பிறகு நெருப்புக்கு ஆகுதி செலுத்திப் பிராமணர்களைச் சந்தித்துத் தானமளித்தது; வெளியறைக்கு வந்து அமர்ந்த அவனிடம் கிருஷ்ணனின் வரவு அறிவிக்கப்பட்டது; கிருஷ்ணனை வரவேற்ற யுதிஷ்டிரன்
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனும் தாருகனும் அப்படிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே அந்த இரவு கடந்து போனது. (காலை விடிந்த போது), மன்னன் யுதிஷ்டிரன் தன் படுக்கையில் இருந்து எழுந்தான். பனிஸ்வானிகர்கள் {Paniswanikas}, மாகதர்கள் [1], மதுபர்க்கிகர்கள் {Madhuparkikas}, சூதர்கள் [2] ஆகியோர் (பாடல்களாலும், இசையாலும்) மன்னனை {யுதிஷ்டிரனை} நிறைவு செய்தனர். ஆடற்கலைஞர்கள் தங்கள் ஆடலைத் தொடங்கினர், இனிய குரல் கொண்ட பாடகர்கள் குரு குலத்தின் புகழால் நிறைந்த தங்கள் இனிய பாடல்களைப் பாடினர் [3]. (தங்கள் தங்கள் இசைக்கருவிகளில்) நன்கு பழக்கப்பட்ட திறம்வாய்ந்த இசைக்கலைஞர்கள், மிருதங்கங்கள், ஜர்ஜரங்கள், பேரிகைகள், பணவங்கள், ஆனகங்கள், கோமுகங்கள், அடம்பறங்கள் {சிறு பறைகள்}, சங்குகள், பேரொலியுள்ள துந்துபிகள், பல்வேறு வகையிலான பிற இசைக்கருவிகள் ஆகியவற்றை இசைத்தனர். மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமான அந்தப் பேரொலி சொர்க்கங்களையே {வானத்தையே} தொட்டது. மன்னர்களில் முதன்மையான யுதிஷ்டிரனை அஃது உறக்கத்தில் இருந்து எழுப்பியது.தன் படுக்கையில் இருந்து எழுந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அவசியம் தேவையான செயல்களைச் செய்வதற்காக மஞ்சனசாலைக்கு {குளியலறைக்குச்} சென்றான். நீராடி வெள்ளுடைத் தரித்திருந்த நூற்றியெட்டு இளம் பணியாளர்கள் {ஸ்நாபகர்கள்}, விளிம்பு வரை {நீர்} நிறைந்திருந்த தங்கக் குடங்கள் பலவற்றுடன் மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகினர். மென்துணி உடுத்தித் தன் அரச இருக்கையில் [4] சுகமாக வீற்றிருந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, சந்தனம் மற்றும் தூய மந்திரங்களுடன் பல்வேறு வகைகளிலான நீரில் குளித்தான். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பலமான பணியாட்கள், பல்வேறு வகைகளிலான மருத்துவ மூலிகைகளில் ஊறிய நீரைக்கொண்டு அவனது {யுதிஷ்டிரனது} உடலைப் தேய்த்தனர். பின்னர்ப் பல்வேறு நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்ட அதிவாச நீரில் அவன் {யுதிஷ்டிரன்} நீராட்டப்பட்டான். பிறகு அவனுக்காகத் தளர்வாக வைக்கப்பட்டிருந்ததும், அன்னங்களின் இறகுகளைப் போன்ற வெண்மையானதுமான நீண்ட துணியைப் பெற்றுக் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, நீர் உலர்வதற்காகத் தன் தலையைச் சுற்றி அதைக் கட்டிக் கொண்டான்.அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் உடலில் சிறந்த சந்தனக்குழம்பைப் பூசிக்கொண்டு, மலர்மாலைகளை அணிந்து கொண்டு, தூய ஆடைகளை உடுத்திக் கொண்டு தன் கரங்களைக் கூப்பிய படி கிழக்கை நோக்கி அமர்ந்தான். அறவோரின் வழியைப் பின்பற்றுபவனான அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மனப்பூர்வமாகத் தன் வேண்டுதல்களைச் சொன்னான். பிறகு , (வழிபாட்டுக்காகச்) சுடர்மிக்க நெருப்பு வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பெரும் பணிவுடன் நுழைந்தான். அவன் {யுதிஷ்டிரன்}, புனித மரத்தாலான விறகுகளாலும், மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்ட தெளிந்த நெய்யின் காணிக்கைகளாலும் நெருப்பை வழிபட்ட பிறகு அந்த அறையை விட்டு வெளிவந்தான் [5].பிறகு, இரண்டாவது அறைக்குள் நுழைந்த அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்}, வேதங்களை அறிந்த பிராமணர்களில் காளைகள் பலரை அங்கே கண்டான். அவர்கள் அனைவரும் தன்னொடுக்கம் {புலனடக்கம்} கொண்டவர்களாகவும், வேதகல்வியிலும், நோன்புகளிலும் தூய்மையடைந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களால் செய்யப்பட்ட வேள்விகளின் நிறைவில் நீராடலை {அவபிருத ஸ்நானத்தை} முடித்திருந்தனர். சூரியனை வழிபடுபவர்களான அவர்கள் எண்ணிக்கையில் ஆயிரமாக இருந்தனர். அவர்களைத் தவிர அதே வர்க்கத்தைச் சேர்ந்த {பிராமணர்கள்} எட்டாயிரம் {8000} பேரும் அங்கே இருந்தனர்.
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அவர்களுக்குத் தேன், தெளிந்த நெய், சிறந்த வகையிலான மங்கலகரமான கனிகள் ஆகியவற்றைத் தானமாகக் கொடுத்து, ஏற்புடைய நல்வார்த்தைகளைத் தனித்துவமான குரல்களில் {தெளிவான ஒலியில்} அவர்களைச் சொல்ல வைத்து, அவர்கள் {பிராமணர்கள்} ஒவ்வொருக்கும் ஒரு நிஷ்கம் தங்கத்தையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு குதிரைகளையும், விலைமதிப்புமிக்க ஆடைகளையும், ஏற்புடைய பிற பரிசுகளையும் கொடுத்தான். மேலும், அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தீண்டும்போதெல்லாம் பாலைத் தருபவையும், கன்றுகளுடன் கூடியவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளையும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட குழம்புகளையும் கொண்ட காராம்பசுக்களையும் {அவர்களுக்குக்} கொடுத்து அவர்களை வலம் வந்தான்.
பிறகு அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, நற்பேற்றை அதிகரிப்பதும் நிறைவானதுமான சுவஸ்திகங்கள் [6], தங்கத்தாலான நந்தியாவர்த்தங்கள் [7], மலர் மாலைகள், நீர்க்குடங்கள், சுடர்மிகும் நெருப்பு, வெயிலில் காய்ந்த அரிசியால் நிறைந்த {அக்ஷதப்} பாத்திரங்கள், பிற மங்கலகரமான பொருட்கள், பசுவின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட மஞ்சள் வண்ணப்பொருள் {கோரோசனை}, மங்கலகரமானவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களுமான கன்னியர், தயிர், தெளிந்த நெய், தேன், மங்கலகரமான பறவைகள், புனிதமாகக் கருதப்படும் பல்வேறு பிற பொருட்கள் ஆகியவற்றைக் கண்டும் தொட்டும் வெளியறைக்கு வந்தான்.அப்போது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, வட்ட வடிவில் தங்கத்தாலான விலைமதிப்புமிக்கச் சிறந்த இருக்கை ஒன்றை, ஊழியர்கள் அந்த அறைக்குக் கொண்டு வந்தனர். முத்துக்கள், வைடூரியங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், விலைமதிப்புமிக்க விரிப்புக்கு மேல் மெல்லிய இழை கொண்ட மற்றொரு துணியாலும் மறைக்கப்பட்ட அந்த இருக்கை தேவதச்சனின் {விஸ்வகர்மாவின்} கைகளால் உருவானதாகவே தெரிந்தது.
அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் இருக்கையில் அமர்ந்ததும், விலைமதிப்புமிக்கதுமானப் பிரகாசமான ஆபரணங்களைப் பணியாட்கள் அவனிடம் கொண்டு வந்தனர். அந்த உயர் ஆன்மக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, ரத்தினங்களாலான அந்த ஆபரணங்களை அணிந்து கொண்டதும், அவனது அழகு, அவனது எதிரிகளின் துயரை அதிகரித்தது. தங்கப் பிடியையும், சந்திரனின் பிரகாசத்தையும் கொண்ட வெண்சாமரங்களைப் பணியாட்கள் வீசிய போது, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மின்னலுடன் கூடிய மேகங்களின் திரளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
சூதர்கள் அவனது புகழைப் பாடவும், வந்திகள் அவனது புகழை உரைக்கவும் தொடங்கினர். பாடகர்கள் அந்தக் குரு குலத்தை மகிழ்விப்பவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாடத் தொடங்கினர். ஒருக்கணத்தில் வந்திகளின் குரல்கள் பேரொலியாகப் பெருகிற்று. அப்போது, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், குதிரைக்குளம்படிகளும் கேட்கப்பட்டன. யானை மணிகளின் கிங்கிணி, சங்குகளின் முழக்கம் மற்றும் மனிதர்கள் நடக்கும் ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்ததன் விளைவாக அந்த ஒலியால் பூமியே நடுங்குவதாகத் தெரிந்தது.
அப்போது, கவசம் பூண்டவனும், வயதால் இளைஞனும், காது குண்டலங்களாலும், தன் இடையில் தொங்கும் வாளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான வாயில்காப்போன் ஒருவன், அந்தத் தனிப்பட்ட அறைக்குள் நுழைந்து, தரையில் மண்டியிட்டு, அனைத்து வழிபாட்டுக்கும் தகுந்தவனான அந்த ஏகாதிபதிக்கு {யுதிஷ்டிரனுக்குத்} தலைவணங்கி, உயர் ஆன்மா கொண்ட அந்தத் தர்மனின் அரசமகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} வந்து காத்திருப்பதாகச் சொன்னான். அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்}, “சிறந்த இருக்கை ஒன்றையும், ஆர்க்கியத்தையும் அவனுக்காகத் தயாராக வைப்பீராக” என்று தன் பணியாட்களுக்கு உத்தரவிட்டு, விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனை} வரச்செய்து அவனை விலைமதிப்புமிக்க இருக்கையில் அமரச் செய்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், வழக்கமான விசாரணைகளால் மாதவனை {கிருஷ்ணனை} வரவேற்றுப் பேசி, அந்தக் கேசவனை {கிருஷ்ணனை} முறையாக வழிபட்டான்” {என்றான் சஞ்சயன்}.
கிருஷ்ணனின் சொற்கள்! – துரோண பர்வம் பகுதி – 083-கிருஷ்ணனையும், மற்றப் பாண்டவவீரர்களையும் வரவேற்ற யுதிஷ்டிரன்; கிருஷ்ணனிடம் தன் கவலையைச் சொன்ன யுதிஷ்டிரன்; கிருஷ்ணன் சொன்ன ஆறுதல் வார்த்தைகள்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தேவகியின் மகனான ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வணங்கி, மகிழ்ச்சியுடன் அவனிடம், “ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இரவை வசதியாகக் கடத்தினாயா? ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் நோக்கங்கள் அனைத்தும் தெளிவாக இருக்கின்றனவா?” என்று கேட்டான். வாசுதேவனும் {கிருஷ்ணனும்} அதே போன்ற விசாரிப்புகளை யுதிஷ்டிரனிடம் செய்தான். அப்போது வாயில் காப்போன் வந்து, பிற க்ஷத்திரியர்கள் {பிரகிருதிகள் = அரசு அங்கத்தினர்} வந்து காத்திருப்பதாகச் சொன்னான்.
மன்னனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்ட அந்த மனிதன் {வாயில்காப்போன்}, {வந்திருந்த} அந்த வீரர்களின் கூட்டத்தில் அடங்கிய விராடன், பீமசேனன், திருஷ்டத்யும்னன், சாத்யகி, சேதிகளின் ஆட்சியாளர் திருஷ்டகேது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துருபதன் மற்றும் சிகண்டி, இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), கேகயர்களின் ஆட்சியாளன் சேகிதானன், குரு குலத்தின் யுயுத்சு, பாஞ்சாலர்களின் உத்தமௌஜஸ், யுதாமன்யு, சுபாகு, திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோரை உள்ளே அனுமதித்தான். இவர்களும், க்ஷத்திரியர்கள் பிறரும் க்ஷத்திரியர்களில் காளையான அந்த உயர் ஆன்மாவை {யுதிஷ்டிரனை} அணுகி சிறந்த இருக்கைகளில் அமர்ந்தனர். வலிமைமிக்கவர்களும், பெரும் காந்தி கொண்ட உயர் ஆன்ம வீரர்களுமான கிருஷ்ணன் மற்றும் யுயுதானன் {சாத்யகி} ஆகிய இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்தனர்.
அவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, யுதிஷ்டிரன், தாமரைக்கண்ணனான மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்} இனிய வார்த்தைகளில், “ஆயிரங்கண் தேவனான தெய்வீகமானவனை {இந்திரனைப்} போல உன்னை மட்டுமே நம்பி நாங்கள் போரில் வெற்றிக்கும், நித்தியமான மகிழ்ச்சிக்கும் முயற்சி செய்கிறோம். ஓ! கிருஷ்ணா, எங்கள் நாட்டை இழக்கச்செய்து எதிரிகளால் நாங்கள் நாடுகடத்தப்பட்டதையும், எங்களது பல்வேறு துன்பங்களையும் நீ அறிவாய். ஓ! அனைவருக்கும் தலைவனே, ஓ! உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்டோரிடம் கருணை கொண்டவனே, ஓ! மதுசூதனா, எங்கள் அனைவரின் மகிழ்ச்சியும், எங்கள் இருப்பும் கூட உன்னிடமே {உன்னை நம்பியே} இருக்கிறது. ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, என் இதயம் உன்னிலேயே நிலைத்திருக்க எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக. ஓ! தலைவா, அர்ஜுனன் ஏற்ற உறுதி மொழி எதனால் நிறைவேறுமோ அதையும் செய்வாயாக. ஓ!, துன்பம் மற்றும் சினம் ஆகியவற்றின் இந்தக் கடலில் இருந்து எங்களை இன்று மீட்பாயாக. ஓ! மாதவா, (அந்தக் கடலைக்) கடக்க விரும்பும் எங்களுக்கு இன்று நீ ஒரு படகாவாயாக.
போரில் எதிரியைக் கொல்லவிரும்பும் தேர்வீரர்களுக்கு, ஒரு தேரோட்டியானவன் கவனமாக முயன்றால் என்ன செய்ய முடியுமோ, அஃதை (அவனது நோக்கத்தின் வெற்றிக்காகச்) செய்வாயாக. ஓ! ஜனார்த்தனா, பேரிடர்கள் அனைத்திலும் இருந்து நீ விருஷ்ணிகளை எப்போதும் காப்பதைப் போலவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இந்தத் துயரில் இருந்து எங்களைக் காப்பதே உனக்குத் தகும். ஓ! சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதத்தைத் தாங்குபவனே, அடியற்ற குரு கடலில் படகற்று மூழ்கும் பாண்டுவின் மகன்களுக்கு ஒரு படகாகி, அவர்களை மீட்பாயாக. ஓ! தேவர்களின் தலைவனுக்குத் தேவனே {தேவதேவேசனே}, ஓ! நித்தியமானவனே, ஓ! அழிப்பவர்களில் உயர்ந்தவனே, ஓ! விஷ்ணுவே, ஓ! ஜிஷ்ணுவே, ஓ! ஹரியே, ஓ! கிருஷ்ணா, ஓ! வைகுண்டா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {புருஷோத்தமா} உன்னை வணங்குகிறேன். வரங்களை அளிப்பவரும், சாரங்க வில்லைத்தரிப்பவரும், அனைவரில் முதன்மையானவருமான (நாராயணன் என்று அழைக்கப்படும்) புராதனமான சிறந்த முனிவர் என்று நாரதர் உன்னைச் சொல்லியிருக்கிறார். ஓ! மாதவா, அவ்வார்த்தைகளை மெய்யாக்குவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.
அந்தச் சபைக்கு மத்தியில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், பேசுவபவர்களில் முதன்மையானவனுமான கேசவன் {கிருஷ்ணன்} மழை நிறைந்த மேகங்களின் ஆழ்ந்த குரலில் யுதிஷ்டிரனிடம், “ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, தேவர்களையும் சேர்த்து அடங்கிய உலகங்கள் அனைத்திலும், தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} நிகரான எந்த வில்லாளியும் கிடையாது. மனிதர்களில் முதன்மையான அர்ஜுனன், பெரும் சக்தி, ஆயுதங்களில் சாதனை, பெரும் ஆற்றல், பெரும்பலம், போரில் கொண்டாடப்படுதல், எப்போதும் கோபம் நிறைந்திருத்தல், பெரும் சக்தி ஆகியவற்றைக் கொண்டவனாவான். வயதில் இளமையையும், காளையின் கழுத்தையும், நீண்ட கரங்களையும் கொண்ட அவன் {அர்ஜுனன்}, பெரும் பலத்தைக் கொண்டவன் ஆவான். சிங்கத்தைப் போலவோ, காளையைப் போலவோ நடப்பவனும், பெரும் அழகனுமான அவன் {அர்ஜுனன்}, உமது எதிரிகள் அனைவரையும் கொல்வான்.
என்னைப் பொறுத்தவரை, பெருகும் காட்டுத்தீயைப் போலக் குந்தியின் மகனான அர்ஜுனன், திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} துருப்புகளை எரிக்கச்செய்யும்படி செய்வேன். பாவச் செயல்களைச் செய்தவனும், சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} கொன்றவனுமான அந்த இழிந்த ஈனனை (ஜெயத்ரதனை), தன் கணைகளால், எந்தச் சாலையில் இருந்து பயணிகள் எவரும் திரும்புவதில்லையோ அங்கே இந்நாளே அர்ஜுனன் அனுப்புவான். இன்று, கழுகுகளும், பருந்துகளும், மூர்க்கமான நரிகளும், ஊனுண்ணும் பிற உயிரினங்களும் அவனது {ஜெயத்ரதனது} சதையை உண்ணப்போகின்றன.
ஓ! யுதிஷ்டிரரே, அவனது பாதுகாவலர்களாக இந்திரனுடன் கூடிய அனைத்துத் தேவர்களும் வந்தாலும் கூட, நெருக்கமானப் போரில் கொல்லப்படும் ஜெயத்ரதன் யமனின் தலைநகரத்திற்குச் செல்வான். சிந்துக்களின் ஆட்சியாளனைக் {ஜெயத்ரதனைக்} கொன்ற பிறகு, (மாலையில்) ஜிஷ்ணு {அர்ஜுனன்} உம்மிடம் வருவான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமது துயரையும் (உமது இதய) நோயையும் கைவிட்டுச் செழிப்பால் அருளப்பட்டிருப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.
அர்ஜுனனின் சொற்கள்! – துரோண பர்வம் பகுதி – 084-யுதிஷ்டிரனிடம் வந்த அர்ஜுனன் தான் கண்ட கனவைச் சொன்னது; பாண்டவ வீரர்கள் ஆச்சரியமடைந்து உற்சாகம் கொண்டது; அர்ஜுனனுக்குத் தோன்றிய மங்கலச் சகுனங்கள்; சாத்யகிக்கு அர்ஜுனன் இட்ட பணி…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யுதிஷ்டிரன், வாசுதேவன் {கிருஷ்ணன்}, மற்றும் பிறர் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, பாரதக் குலத்தின் முதன்மையானவனான அந்த மன்னனையும் {யுதிஷ்டிரனையும்}, தனது நண்பர்களையும், நலன்விரும்பிகளையும் காண விரும்பி தனஞ்சயன் {அர்ஜுனன்} அங்கே வந்தான். அவன் {அர்ஜுனன்}, அந்த மங்கலகரமான அறைக்குள் நுழைந்து, மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கி, அவனுக்கு முன்பு நின்ற பிறகு, அந்தப் பாண்டவர்களில் காளை (மன்னன் யுதிஷ்டிரன்) தன் இருக்கையில் இருந்து எழுந்து, பெரும் பாசத்துடன் அர்ஜுனனைத் தழுவிக் கொண்டான். தன் கரங்களால் அவனை அணைத்துக் கொண்டு, அவனது தலையை முகர்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அவனை {அர்ஜுனனை} இதயப்பூர்வமாக வாழ்த்தினான்.
பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, அவனிடம் {அர்ஜுனனிடம்} சிரித்துக் கொண்டே, “ஓ! அர்ஜுனா, (பிரகாசமான, மகிழ்ச்சியான) உன் முகம் மற்றும் உன்னிடம் மிகவும் நிறைவுடன் இருக்கும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} என்ற உண்மைச் செய்திகளைக் கொண்டு தீர்மானிக்கையில், போரில் உனக்கு வெற்றியே நிச்சயம் காத்திருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.
அப்போது ஜிஷ்ணு {அர்ஜுனன்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அருளப்பட்டிருப்பீராக. கேசவனின் {கிருஷ்ணனின்} அருளால், மிக ஆச்சரியமான ஒன்றை நான் கண்டேன்” என்று சொல்லி தனக்கு நேர்ந்ததும், மிக உயர்ந்த அற்புதமுமான அந்தச் சம்பவத்தை அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான். பிறகு தனஞ்சயன் {அர்ஜுனன்}, முக்கண் தேவனுடன் {சிவனுடன்} ஏற்பட்ட தனது சந்திப்பைத் தன் நண்பர்களுக்கு உறுதி செய்யும் வகையில், தான் கண்டவாறே அனைத்தையும் சொன்னான். அப்போது அதைக் கேட்டவர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்து, தங்கள் தலைகளைத் தரைவரை தாழ்த்தினர். மேலும் காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தேவனை {சிவனை} வணங்கியபடியே அவர்கள், “நன்று, நன்று!” என்றனர்.
பிறகு (பாண்டவர்களின்) நண்பர்களும், நலன்விரும்பிகள் அனைவரும், தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} ஆணைக்கிணங்க, தங்கள் இதயங்களில் (எதிரிக்கு எதிராக) சினத்தால் நிறைந்து, விரைவுடனும், கவனத்துடனும் போருக்குச் சென்றனர். மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கிய யுயுதானன் {சாத்யகி}, கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன் ஆகியோர், மகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரனின் வசிப்பிடத்தை விட்டுப் புறப்பட்டனர். வெல்லப்பட முடியாத இரு வீரர்களான யுயுதானன் மற்றும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோர் இருவரும் ஒரே தேரில் சென்று அர்ஜுனனின் பாசறையை அடைந்தனர். அங்கே வந்த கிருஷ்ணன், (தொழிலால்) ஒரு தேரோட்டியைப் போலவே, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனுக்கு (அர்ஜுனனுக்குச்) சொந்தமானதும், குரங்குகளின் இளவரசனை {அனுமனை} அடையாளமாகத் தாங்குவதுமான {குரங்குக் கொடியைக் கொண்டதுமான} அந்தத் தேரைத் தயார்ப்படுத்தத் தொடங்கினான். புடம்போட்ட தங்கத்தின் பிரகாசத்தைக் கொண்டதும், மேகங்களுக்கு ஒத்த ஆழமான முழக்கத்துடன் கூடிய சடசடப்பொலியைக் கொண்டதும், (கிருஷ்ணனால்} தயார் நிலையில் நிறுத்தப்பட்டதுமான அந்த முதன்மையான தேர், காலைச் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது. அப்போது கவசம் பூண்ட அந்த மனிதர்களில் புலி (வாசுதவேன்), காலை வேண்டுதல்களை முடித்திருந்த பார்த்தனிடம், அவனது தேர் முறையாகத் தயாரிக்கப்பட்டு விட்டது என்ற செய்தியைச் சொன்னான். பிறகு, இவ்வுலக மனிதர்களில் முதன்மையானவனான அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), தங்கக் கவசம் பூண்டு, கையில் தன் வில் மற்றும் கணைகளுடன் அந்தத் தேரை வலம் வந்தான்.
தவத்துறவுகள், அறிவு மற்றும் வயது ஆகிவற்றில் முதிர்ந்தோரும், அறச்சடங்குகள் மற்றும் வேள்விகள் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களுமான பிராமணர்களால் வெற்றி குறித்த வாழ்த்தும், அருளும் ஆசிகளுடன் சொல்லப்பட்ட பின்பு, போரில் வெற்றியைத் தரவல்ல மந்திரங்களால் முன்பே தூய்மையாக்கப்பட்டிருந்த அற்புத வாகனமான அந்தத் தேரில், சுடர்மிகும் கதிர்களைக் கொண்ட சூரியன் கிழக்கு மலையில் ஏறுவதைப் போலவே அர்ஜுனன் ஏறினான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்வீரர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, தன் தங்க ஆபரணங்களின் விளைவால், மேருவின் சாரலில் சுடர்மிகும் காந்தி கொண்ட சூரியனைப் போலவே அந்தத் தேரில் தெரிந்தான். சர்யாதி வேள்விக்கு இந்திரனுடன் ஒரே தேரில் சென்ற அசுவினி இரட்டையர்களைப் போல, பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குப்} பிறகு, யுயுதானனும் {சாத்யகியும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, அந்தத் தேரில் ஏறினர். போரில் விருத்திரனைக் கொல்வதற்காக இந்திரன் சென்ற போது, அவனது தேரின் கடிவாளங்களைப் பிடித்த மாதலியைப் போலவே, தேரோட்டிகளில் சிறந்தவனான கோவிந்தன் (அந்தக் குதிரைகளின்) கடிவாளங்களைப் பிடித்தான்.
அந்த இரு நண்பர்களுடன் {கிருஷ்ணன் மற்றும் சாத்யகியுடன்} சிறந்த தேரில் ஏறியவனும், எதிரிகளின் பெரும் படைகளைக் கொல்பவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, புதனுடனும், சுக்கிரனுடனும் கூடி இரவின் இருளை அழிப்பதற்காக (ஆகாயத்தில்) எழும் சோமனைப் போலவோ, (பிருஹஸ்பதியின் மனைவியான) தாரகை கடத்தப்பட்ட நிகழ்வின் போது, வருணன் மற்றும் சூரியனுடன் கூடி (அசுரர்களுக்கு எதிராகப்) பெரும்போருக்குச் சென்ற இந்திரனைப் போலவோ சென்றான். அப்படிப் புறப்பட்ட வீர அர்ஜுனனை, இசைக்கருவிகளின் ஒலியாலும், நற்சகுனம் குறித்த மங்கலப் பாடல்களாலும், மாகதர்களும், இசைவல்லுனர்களும் நிறைவு கொள்ளச் செய்தனர். வெற்றிக்கான வாழ்த்தையும், {அந்த நாள்} நல்ல நாளாக அமைவதற்கான வாழ்த்தையும் பாடிய சூதர்கள் மற்றும் மாகதர்களின் குரல்கள் இசைக்கருவிகளின் ஒலியோடு கலந்து அவ்வீரர்களை நிறைவு கொள்ளச் செய்தன.
பார்த்தனை {அர்ஜுனனை} மகிழ்வித்து, அவனது எதிரிகளின் சக்திகளை உறிஞ்சியபடியே நறுமணம் மிக்க மங்கலமான தென்றல் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குப்} பின்னால் இருந்து வீசியது. அந்நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் வெற்றியையும், உமது வீரர்களின் தோல்வியையும் குறிக்கும் வகையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகைகளிலான பல மங்கலச் சகுனங்கள் அங்கே தோன்றின. வெற்றியின் அந்தக் குறியீடுகளைக் கண்ட அர்ஜுனன், தன் வலப்பக்கத்தில் இருந்த பெரும் வில்லாளியான யுயுதானனிடம் {சாத்யகியிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! யுயுதானா {சாத்யகி}, (மங்கலகரமான) சகுனங்களாக இவை அனைத்தும் காணப்படுவதால், ஓ! சினி குலத்தின் காளையே {சாத்யகி}, இன்றைய போரில் என் வெற்றி உறுதியானதாகவே தெரிகிறது. எனவே, என் சக்திக்காகவும் (என் சக்தி வெளிப்படுவதைப் பார்ப்பதற்காகவும்), யமலோகம் செல்வதற்காகவும் காத்திருக்கும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} எங்கிருக்கிறானோ அங்கே நான் செல்வேன்.
ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {சாத்யகி}, இன்று மன்னரின் {யுதிஷ்டிரரின்} பாதுகாவலனாக நீ இருப்பாயாக. நான் பாதுகாப்பதைப் போலவே நீயும் அவரைப் பாதுகாப்பாயாக. உன்னை வெல்லக்கூடிய மனிதர் எவரையும் நான் இவ்வுலகில் காணவில்லை. போரில் நீ வாசுதேவனுக்கே {கிருஷ்ணனுக்கே} நிகரானவனாவாய். தேவர்களின் தலைவனே {இந்திரனே கூட} உன்னை வீழ்த்த இயலாது. இந்தச் சுமையை உன் மீதோ, வலிமைமிக்கத் தேர்வீரனான பிரத்யும்னன் மீதோ வைத்துவிட்டு, ஓ! மனிதர்களில் காளையே {சாத்யகி}, கவலையில்லாமல் என்னால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல முடியும்.
ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, என்னைக் குறித்த எந்தக் கவலையும் கொள்ள வேண்டியதில்லை. உன் முழு இதயத்தோடு நீ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பாதுகாப்பாயாக. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} எங்கிருக்கிறானோ, நான் எங்கிருக்கிறேனோ, அங்கே அவனுக்கோ, எனக்கோ சிறு ஆபத்தும் ஏற்பட முடியாது என்பதில் ஐயமில்லை” என்றான் {அர்ஜுனன்}. இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான சாத்யகி, “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறினான். பிறகு, பின்னவன் {சாத்யகி}, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.
பிரதிஜ்ஞா பர்வம் முற்றிற்று
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply