துச்சாசனன் ஆலோசனை! – விராட பர்வம் பகுதி 26-துரியோதனன் தன் அவையோரின் ஆலோசனைகளை வேண்டல்; கர்ணன் தனது ஆலோசனையை வழங்கல்; துச்சாசனன் தனது ஆலோசனையை வழங்கல்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் ஒற்றர்களின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், தனக்குள்ளேயே சிறிது நேரம் சிந்தித்த பிறகு, தனது அவையினரிடம், “நிகழ்வுகளின் போக்கைத் தெரிந்து கொள்வது கடினமாக உள்ளது. நம்மால் கண்டறியப்படாமல், அவர்கள் {பாண்டவர்கள்} வாழ வேண்டிய பதிமூன்றாவது வருடத்தின் பெரும்பகுதி கழிந்துவிட்டது. மீதம் இருப்பது {மீதம் இருக்கும் காலம்} மிகவும் குறைவு. எனவே, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} எங்கிருக்கிறார்களோ அந்த இடத்தைக் கண்டுபிடியுங்கள்.
உண்மை {சத்திய} நோன்புக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களான பாண்டுவின் மகன்களால், இந்த வருடத்தில் எஞ்சியிருக்கும் காலத்தையும் கண்டறியப்படாமல் உண்மையில் கழிக்கமுடியுமானால், அவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றியவர்கள் ஆவார்கள். பிறகு, மதநீர் பாயும் பலமிக்க யானைகளைப் போலவோ, கடும் நஞ்சு கொண்ட பாம்புகளைப் போலவோ அவர்கள் திரும்பி வருவார்கள். {அப்படி வந்தால்} கோபம் நிறைந்த அவர்கள், குருக்களுக்குக் கொடூரத் தண்டனையை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, காலத்தின் தன்மைகளை நன்கறிந்த பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, வலிநிறைந்த வேடங்களில் இப்போது இருப்பது போலவே நீடிக்கவும், தங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு மீண்டும் கானகம் செல்லவும், {நாம் எடுக்க} வேண்டிய முயற்சிகளைக் காலந்தாழ்த்தாமல் எடுப்பதே உங்களுக்குத்தகும். உண்மையில், நாடு அமைதியாகவும், எதிரிகளற்றதாகவும், எந்தக் குறைவும் இல்லாததாகவும், நாட்டிற்காகச் சண்டை நடவாதிருக்கவும், சண்டைக்கான அனைத்துக் காரணங்களையும் களையும்படியான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்” என்றான் {துரியோதனன்}.
துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {துரியோதனனிடம்}, “ஓ! பாரதா {துரியோதனா}, திறன்வாய்ந்தவர்களும், இன்னும் அதிகத் தந்திரமிக்கவர்களும், நோக்கத்தைச் சாதிக்கவல்லவர்களுமான வேறு ஒற்றர்களை விரைந்து அனுப்பு. நல்ல வேடந்தரித்து, பெரிய நாடுகளிலும், மக்கள் நிறைந்த மாகாணங்களிலும் திரிந்து, கற்றோர் சபைகளையும், மாகாணங்களில் இருக்கும் காண்பதற்கினிய இடங்களையும் அவர்கள் வேவு பார்க்கட்டும். அரண்மனைகளின் அந்தப்புரங்களிலும், சன்னதிகளிலும், புனித இடங்களிலும், சுரங்கங்களிலும், வித்தியாசமான பிற பகுதிகளிலும், நன்கு வழிகாட்டப்பட்ட ஆவலுடன் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} தேடப்பட வேண்டும்.
மாற்றுருவில் வாழும் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, வேலையில் அர்ப்பணிப்புக் கொண்ட, நல்ல வேடந்தரித்த, தேடுவதற்கான நோக்கங்களை நன்கு அறிந்த, நல்ல திறன்வாய்ந்த அதிக எண்ணிக்கையிலான ஒற்றர்களால் தேடப்படட்டும். ஆற்றங்கரைகளிலும், புனித இடங்களிலும், கிராமங்களிலும், நகரங்களிலும், துறவியரின் இடங்களிலும், காண்பதற்கினிய மலைகள் மற்றும் மலைக்குகைகளிலும் {அந்த பாண்டவர்கள்} தேடப்படட்டும்” என்றான் {கர்ணன்}.
கர்ணன் நிறுத்தியதும், துரியோதனனின் இரண்டாவது தம்பியும் {துரியோதனனுக்கு உடன்தம்பியும்}, {துரியோதனனின்} பாவச்செயல்களுக்குக் கைகோர்ப்பவனுமான துச்சாசனன், தனது அண்ணனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனரே}, நமது வெகுமதிகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டு, நாம் நம்பிக்கை வைத்திருக்கும் ஒற்றர்கள் மட்டும் மீண்டும் தேடச் செல்லட்டும். இதுவும், கர்ணன் சொன்ன வேறு யாவும் நமது முழு ஏற்பைப் பெற்றவையாகும். ஏற்கனவே கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி {மற்ற} அனைத்து ஒற்றர்களும் இந்தத் தேடலில் ஈடுபடட்டும். அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் படி, ஒவ்வொரு மாகாணத்திலும் தேடுவதில் இவர்களும், பிறரும் ஈடுபடட்டும்.
எனினும், பாண்டவர்கள் தொடர்ந்து சென்ற பாதையையோ, அவர்கள் தற்போது இருக்கும் வசிப்பிடத்தையோ, {அவர்கள்} மேற்கொண்டிருக்கும் தொழிலையோ கண்டுபிடிக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. ஒருவேளை, அவர்கள் {அந்த பாண்டவர்கள்} நன்றாக மறைந்திருக்கலாம்; ஒருவேளை, அவர்கள் {அந்த பாண்டவர்கள்} கடலின் மறுபுறத்திற்கே சென்றிருக்கலாம். அல்லது தங்கள் பலத்திலும் வீரத்திலும் கொண்ட கர்வத்தினால், ஒருவேளை அவர்கள் காட்டுவிலங்குகளால் விழுங்கப்பட்டிருக்கலாம்; அல்லது அவர்கள் {அந்த பாண்டவர்கள்} ஏதாவது எதிர்பாரா ஆபத்தை அடைந்து, ஒருவேளை நித்தியமாக அழிந்துபோயிருக்கலாம். எனவே, ஓ! குருகுலத்தின் இளவரசே {துரியோதனரே}, உமது இதயத்தில் இருந்து அனைத்து துயரங்களையும் அகற்றி, உமது சக்திக்கேற்றபடி எப்போதும் போலச் செயல்பட்டு, உம்மால் முடிந்ததைச் சாதியும். {செய்யக் கருதும் காரியத்தைச் செய்யும்}” என்றான் {துச்சாசனன்}.
துரோணர் ஆலோசனை! – விராட பர்வம் பகுதி 27-பாண்டவர்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்றும், நற்பண்புகள் கொண்ட அவர்கள் அழிந்திருக்க மாட்டார்கள் என்றும், அவர்களை விரைந்து கண்டுபிடிக்க ஆளனுப்ப வேண்டும் என்றும் துரோணர் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும்சக்தியும், பெரும் விவேகமும் கொண்ட துரோணர், “பாண்டுவின் மகன்களைப் போன்றோர் அழிவடையவோ, ஏமாற்றமடையவோ மாட்டார்கள். வீரமும், அனைத்து அறிவியல்களில் நிபுணத்துவமும், புத்திக்கூர்மையும், புலனடக்கமும், அறச்சார்பும், பெருந்தன்மையும் கொண்டு, கொள்கை முடிவுகள், அறம் பொருள் ஆகியவற்றை அறிந்தவனும், ஒரு தந்தையைப் போலத் தங்களிடம் பிணைப்புடன் இருப்பவனும், அறத்தைக் கடுமையுடன் பின்பற்றுபவனும், உண்மையில் உறுதியுள்ளவனும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவனும், யாரையும் புண்படுத்தாதவனும், தனது தம்பிகளுக்குக் கீழ்ப்படிபவனுமான தங்கள் அண்ணன் {யுதிஷ்டிரன்} அறிய அவனைப் பின் தொடர்பவர்களும், நீதிமானான யுதிஷ்டிரனும் இவ்வகையில் எப்போதும் அழிவடைய மாட்டார்கள்.
கொள்கை அறிவு கொண்ட பிருதையின் மகனால் (குந்தியின் மகன் யுதிஷ்டிரனால்), அர்ப்பணிப்பும், கீழ்ப்படியுந்தன்மையும், பெரும்ஆன்மாவும் கொண்டவர்களான தன் தம்பிகளின் செழுமையை, பிறகேன் மீட்டெடுக்க முடியாது? இதற்காகவே, இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே அவர்கள் {பாண்டவர்கள்} கவனமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் போன்ற மனிதர்கள் எப்போதும் அழிவடையமாட்டார்கள். என் அறிவின் மூலம் இதையே நான் காண்கிறேன். எனவே, சரியாக ஆலோசித்த பிறகு என்ன செய்ய வேண்டுமோ, அதைத் தாமதிக்காமல் விரைவாகச் செய்யுங்கள். தங்கள் ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள், தங்கள் வாழ்வின் அனைத்துத் தேவைகளையும் எதிர்கொள்ள, {அந்த பாண்டவர்கள்} வசிப்பதற்கு ஏற்ற இடத்தை நாம் இப்போது தீர்மானிக்க வேண்டும்.
வீரர்களும், பாவமற்றவர்களும், தவத்தகுதி படைத்தவர்களுமான பாண்டவர்களைக் (அவர்களது அஜ்ஞாதவாத காலத்திற்குள்ளாகவே) கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். புத்திசாலித்தனமும், அனைத்து அறங்களும், உண்மையில் அர்ப்பணிப்பும், கொள்கை தத்துவங்கள் அறிதலும், சுத்தமும், புனிதமும், அளவிட முடியாத சக்தியும் கொண்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் யுதிஷ்டிரன்}, (தன் எதிரிகளைப்) பார்வையாலேயே எரித்துவிடும் திறன்பெற்றவனாவான். இவை யாவையும் அறிந்து, முறையானதைச் செய்யுங்கள். எனவே, அந்தணர்களையும், சாரணர்களையும், தவத்தில் வெற்றி மகுடம் சூட்டப்பட்டவர்களையும், அந்த வீரர்களைக் குறித்து அறிந்த இதே போன்றோரையும் அனுப்பி, மீண்டும் ஒருமுறை அவர்களை நாம் தேடுவோமாக!” என்றார் {துரோணர்}.
பீஷ்மர் ஆலோசனை! – விராட பர்வம் பகுதி 28-பாண்டவர்களைக் கண்டுபிடிக்க வேண்டாம் என்று பீஷ்மர் சொல்வது; யுதிஷ்டிரன் இருக்கும் இடங்களில் எத்தகு பண்புகள் நிறைந்திருக்கும் என்பதைப் பீஷ்மர் சொல்வது; …
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, துரோணர் தனது பேச்சை முடித்ததும், வேதங்களை அறிந்தவரும், காலம் மற்றும் இடத்தின் தன்மைகளை அறிந்தவரும், அறநெறிகளின் அனைத்து கடமைகளைக் குறித்த அறிவைக் கொண்டவரும், பாரதர்களின் பெரும்பாட்டனும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், அந்த ஆசானின் {துரோணரின்} வார்த்தைகளைப் பாராட்டிவிட்டு, நேர்மையற்றவர்களால் அதிகம் பேசப்படாதவனும், நேர்மையானவர்களால் விரும்பி சந்திக்கப்பட்டுப் புகழப்படுபவனுமான அறம்சார்ந்த யுதிஷ்டிரன் மீது தாம் கொண்ட பிணைப்பை வெளிப்படுத்தும் வண்ணமும், பாரதர்களின் நன்மைக்கு வழிவகுக்கும் வண்ணமும், அறம்சார்ந்த வார்த்தைகளைப் பேசினார். பீஷ்மர் பேசிய வார்த்தைகள் பாகுபாடற்றவையாகவும், ஞானிகளால் வழிபடப்படுபவையாகவும் இருந்தன.
குருக்களின் பெரும்பாட்டன் {பீஷ்மர்}, “மறுபிறப்பாளரும் {பிராமணரும்}, ஒவ்வொரு காரியத்தின் உண்மையை அறிந்தவருமான துரோணர் சொன்ன வார்த்தைகளை நான் ஏற்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அனைத்து நற்குறிகள், அறம்சார்ந்த நோன்புகள், வேத கல்வி ஆகியவற்றைப் பெற்று, அறச் சடங்குகளுக்குத் தன்னை அர்ப்பணித்து, பல்வேறு அறிவியல்களை அறிந்து, முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, சத்திய நோன்பைப் பின்பற்றி, காலத்தின் தன்மை அறிந்து, {அஜ்ஞாத வாசம் குறித்து} தாங்கள் கொடுத்த வாக்குறுதியின் படி நடந்து, நடத்தையில் சத்தத்துடன், க்ஷத்திரிய வகைக்கான கடமைகளை எப்போதும் செய்து, கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} எப்போதும் கீழ்ப்படிந்து, உயர் ஆன்மாவும், பெரும் பலமும் கொண்டு, எப்போதும் ஞானிகளின் சுமைகளைத் தாங்கி வரும் அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} கெடுபேறால் கவிழ்ந்து போக மாட்டார்கள்.
அறத்திற்குக் கீழ்ப்படிந்து மறைந்திருக்கும் வாழ்வை வாழ்ந்து வருபவர்களும், தங்கள் சக்தியின் துணை கொண்டவர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, நிச்சயம் அழிவை அடைய மாட்டார்கள். இதைத்தான் எனது மனது உத்தேசமாகக் கணிக்கிறது. எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, பாண்டுவின் மகன்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய நேர்மையான ஆலோசனைக்கு நான் உதவுவேன். ஒற்றர்களைக் கொண்டு அவர்களைக் கண்டுபிடிக்கச் செய்வது விவேகமுள்ளவனின் கொள்கையாக இருக்காது [1]. எனது அறிவின் துணை கொண்டு சிந்தித்துப் பார்த்து பாண்டுவின் மகன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்வேன். நான் உங்கள் மீது கொண்ட அதிருப்தியால் எதையும் சொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
என்னைப் போன்ற மனிதர்கள் நேர்மையற்றவர்களுக்கு இத்தகு ஆலோசனைகளை வழங்கக்கூடாது. (நான் சொல்வது போன்ற) ஆலோசனைகள் நேர்மையானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். எனினும், தீமையான ஆலோசனைகளை எத்தகு சூழ்நிலையிலும் வழங்கக்கூடாது {என்பதைக் கருத்தில் கொள்கிறேன்}. ஓ! குழந்தாய் {துரியோதனா}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, முதிர்ந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்து, விவேகமுள்ளவனாக இருக்கும் ஒருவன், அறத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், ஒரு சபையின் மத்தியில் பேசும்போது, எத்தகைய சந்தர்ப்பத்திலும் அவன் உண்மையையே பேச வேண்டும். எனவே, வனவாசத்தின் பதிமூன்றாம் {13} வருடத்தில் இருக்கும் நீதிமானான யுதிஷ்டிரனின் வசிப்பிடம் குறித்துப் பேசும்போது, நான் இங்கிருக்கும் மக்கள் அனைவரையும்விட வித்தியாசமாக எண்ணுகிறேன் என்றே நான் சொல்ல வேண்டும்.
ஓ! குழந்தாய் {துரியோதனா}, மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் மாகாணத்தையோ, நகரத்தையோ ஆளும் ஆட்சியாளனை எந்தத் தீப்பேறும் அணுகாது. மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் நாடு, தொண்டுள்ளமும், தாராளமும், மனத்தாழ்மையும் {பணிவும்}, அடக்கமும் கொண்ட மக்கள் நிறைந்ததாக இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் நாட்டில் இருக்கும் மக்கள், ஏற்புடைய {இனிமையான} பேச்சும், ஆசை அடக்கமும், உண்மை நோற்றலும், உற்சாகமும், உடல் நலமும் {ஆரோக்கியமும்}, சுத்தமான நடத்தையும், வேலையில் நிபுணத்துவமும் கொண்டிருப்பார்கள். யுதிஷ்டிரன் இருக்கும் இடத்தில் உள்ள மக்கள் பொறாமைகொண்டவர்களாகவோ, தீங்கிழைப்பவர்களாகவோ, வீணர்களாகவோ, கர்விகளாகவோ இருக்க முடியாது. ஆனால் அவர்கள் {அந்த மக்கள்} அனைவரும் தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். உண்மையில், யுதிஷ்டிரன் வசிக்கும் இடத்தில் அனைத்துப்புறங்களிலும் வேத மந்திரங்கள் ஓதப்படும், வேள்விகள் செய்யப்படும், {அவ்வேள்வியில்} கடைசி நீர்க்காணிக்கைகள் {நெய் போன்றவை} எப்போதும் முழுமையாக உற்றப்படும் [2]. {அவ்வேள்வியில்} அந்தணர்களுக்குக் கொடுக்கப்படும் பரிசுகள் அபரிமிதமாக இருக்கும்.(வேள்வி தடையில்லாமல் நிறைவேறியது என்பதைக் குறிப்பது)
அங்கே மேகங்கள் அபரிமிதமான மழையைப் பொழியும் என்பதில் சந்தேகமில்லை. நல்ல அறுவடையின் காரணமாக அந்த நாடு எப்போது அச்சமற்றதாக இருக்கும். அங்கே நெல்லில் தானியம் இல்லாதிருக்காது; பழங்கள் சாறற்றவையா {ரசமற்றவையாக} இருக்காது; மலர் மாலைகள் நறுமணமற்றவையாக இருக்காது; மனிதர்களின் விவாதங்கள் ஏற்புடைய {இனிமையான} சொற்கள் நிறைந்தவையாகவே எப்போதும் இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் தென்றல் சுகமாக வீசும், மனிதர்களின் கூடுகைகள் நட்புடன் இருக்கும். அச்சத்திற்கான எந்தக் காரணமும் இருக்காது. மெலிந்தோ, பலமற்றதாகவோ எந்தப் பசுவும் இருக்காது. அங்கே பசுக்கள் நிறைந்திருக்கும். பால், தயிர், நெய் ஆகிய அனைத்தும் சுவைமிக்கதாகவும் சத்தானதாகவும் இருக்கும்.
மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், அனைத்துவகைப் பயிர்களும் ஊட்டச்சத்து மிக்கதாகவும், சமையலுக்குகந்த நல்ல சுவையுடனும் இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், {நாக்கு உணரும்} சுவை, {உடல் உணரும்} தொடுதல், {நாசி [மூக்கு] உணரும்} மணம் {வாசனை}, {காது உணரும்} கேள்வித்திறன் ஆகியவை அற்புத தன்மைகளைக் கொண்டிருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், பார்வையும் காட்சிகளும் மகிழ்ச்சி தருவனவையாக இருக்கும். அந்த இடத்தின் மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அறம்சார்ந்தவர்களாகவும், தங்களுக்கு உரிய கடமைகளைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள். உண்மையில், அவர்களது வனவாசத்தின் பதிமூன்றாவது {13} வருடத்தில் இருக்கும் பாண்டுவின் மகன்கள் வசிக்கும் நாட்டில் உள்ள மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், சுத்தமான நடத்தையோடும், எந்த வகைத் துன்பமும் இல்லாதவர்களாக இருப்பார்கள். {அந்த மக்கள்} தேவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தங்கள் முழு ஆன்மாவோடு அவர்களை {தேவர்களையும் விருந்தினர்களையும்} வழிபடுபவர்களாகவும், தாங்கள் விரும்பியவற்றைத் தானம் செய்பவர்களாகவும், பெரும் சக்தி நிறைந்தவர்களாகவும், நித்தியமான அறத்தைப் பின்பற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.
மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் இருக்கும் மக்கள் தீமையானவை அனைத்தையும் தவிர்த்து, நல்லதை மட்டுமே சாதிக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் இருப்பவர்கள் எப்போதும் வேள்விகளைச் செய்பவர்களாகவும், சுத்தமான நோன்புகளையும் நோற்பவர்களாகவும், பேச்சில் பொய்மையை வெறுப்பவர்களாகவும் இருந்து, நன்மையான, மங்களகரமான பயனுள்ளவற்றை அடைய எப்போதும் விரும்புபவர்களாக இருப்பார்கள். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் உள்ள மக்கள் நன்மையைப் பெற நிச்சயம் விரும்புவார்கள். அவர்களது இதயங்கள் எப்போதும் அறத்தை நோக்கி உயர்ந்தே இருக்கும். ஏற்புடைய {இனிய} நோன்புகளைச் செய்து எப்போதும் அறத்தகுதிகளை அடைவதிலேயே, எப்போதும் அவர்கள் {அம்மக்கள்} ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஓ! குழந்தாய் {துரியோதனா}, சாதாரண மனிதர்களை விட்டுவிடு, புத்திக்கூர்மை, தொண்டுள்ளம், உயர்ந்த மன அமைதி, ஐயமற்ற பொறுமை {மன்னிக்கும் குணம்}, அடக்கம், செழிப்பு, புகழ், பெரும் சக்தி, அனைத்து உயிர்களிடமும் அன்பு ஆகியவற்றைக் கொண்ட பிருதையின் மகனை {யுதிஷ்டிரனை}, (அவன் இப்போது தன்னை மறைத்துக் கொண்டிருப்பதால்) அந்தணர்களால் கூடக் கண்டுபிடிக்க இயலாது. நான் விவரித்த பண்புகள் கொண்ட {மக்கள் வசிக்கும்} பகுதியில்தான் ஞானியான யுதிஷ்டிரன் மாறுவேடத்தில் வசிக்க வேண்டும். அவனின் {யுதிஷ்டிரனின்} சிறந்த வாழ்வு முறையைக் குறித்து மேலும் எதையும் சொல்ல நான் துணிய மாட்டேன். இவை யாவையும் நினைத்துப் பார்த்து, ஓ! குருகுலத்தின் இளவரசே {துரியோதனா}, உண்மையில் என் மீது நீ ஏதாவது நம்பிக்கை கொண்டிருந்தாயானால், எது நன்மையைத் தரும் என்று நீ நினைக்கிறாயோ அதைக் காலந்தாழ்த்தாமல் செய்” என்றார் {பீஷ்மர்}.
கிருபர் ஆலோசனை! – விராட பர்வம் பகுதி 29-பாண்டவர்கள் வருவதற்குள் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள் எனக் கிருபர் துரியோதனனிடம் சொல்வது …
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு சரத்வானின் மகன் கிருபர் {துரியோதனனிடம்}, “முதிர்ந்த பீஷ்மர் பாண்டவர்களைக் குறித்துச் சொன்னவை அனைத்தும், காதுக்கு இனியதாகவும், அறம் பொருளுக்கு இசைவானதாகவும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாகவும், மிக நியாயமானதாகவும், அவரது {பீஷ்மரது} தகுதிக்கு ஏற்றனவாகவும் உள்ளன. இது குறித்து நான் சொல்வதையும் கேள். அவர்கள் {பாண்டவர்கள்} தொடர்ந்து சென்ற பாதையையும், அவர்கள் இருப்பிடத்தையும் ஒற்றர்கள் மூலமாக அறிந்து, உனக்கு நன்மையைக் கொடுக்கும் கொள்கையை ஏற்பதே உனக்குத் தகும்.
ஓ! குழந்தாய் {துரியோதனா}, தனது நலனில் அக்கறையுள்ளவன், சாதாரண எதிரியைக் கூடப் புறக்கணிக்கக்கூடாது. ஓ! குழந்தாய் {துரியோதனா}, அப்படியிருக்கும்போது போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆயுதங்களிலும் முழு நிபுணர்களான பாண்டவர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன்? எனவே, கானகம் புகுந்து இப்போது மாறுவேடத்தில் தங்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் உயர் ஆன்ம பாண்டவர்களின் மறு தோன்றலுக்கான நேரம் வந்துவிட்டது எனும்போது, நீ உனது நாட்டிலும், பிற மன்னர்களின் நாடுகளிலும் உனது பலத்தை உறுதி செய்ய வேண்டும்.
பாண்டவர்கள் திரும்பும் நேரம் வந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. தாங்கள் உறுதியளித்த வனவாச காலம் முடிந்ததும், சிறப்புமிக்கவர்களும், பலமிக்கவர்களும், அளவிலா பராக்கிரமம் கொண்டவர்களுமான பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்}, சக்தியுடன் இங்கே வெடித்து வருவார்கள். எனவே, அவர்களுடன் ஒரு சாதகமான உடன்படிக்கையை முடிக்கும்பொருட்டு, நல்ல கொள்கைகளைக் கொண்டு, உனது படைபலத்தைப் பெருக்கு, கருவூலத்தை மேம்படுத்து. ஓ! குழந்தாய் {துரியோதனா}, இவையாவையும் உறுதி செய்து கொண்டு, பலவீனமான மற்றும் வலுவான உனது நட்பு நாடுகளைக் கொண்டு உனது சொந்த பலத்தைக் கணித்திடு!
உனது படைகளின் செயல்திறன், பலவீனம், வேறுபாடுகள் ஆகியவற்றையும், அவர்களில் யார் வேண்டியவர்கள், யார் வேண்டப்படாதவர்கள், என்பதை உறுதி செய்து கொண்டு, {ஒன்று} நாம் எதிரியுடன் போரிட வேண்டும் அல்லது அவனிடம் {எதிரியிடம்} உடன்படிக்கை செய்ய வேண்டும். சமரசம், வேற்றுமை, தண்டனை, கையூட்டு {இலஞ்சம்} ஆகிய கலைகளைத் தஞ்சமாகக் கொண்டு, எதிரிகளை அடக்கி, பலவீனர்களைப் பலத்தால் வீழ்த்தி, கூட்டாளிகளையும் துருப்புகளையும் உனது மென்மையான பேச்சால் வெற்றி கொள். (இந்த வழிகளில்) நீ உனது படைகளைப் பலப்படுத்தி, உனது கருவூலத்தை நிறைத்தால், முழு வெற்றியும் உனதாகும். இவை யாவற்றையும் நீ செய்துவிட்டால், துருப்புகளிலும் {காலாட்படையிலும்}, விலங்குகளிலும் {யானை, குதிரை போன்றவைகளிலும்} குறைபாடுள்ள பாண்டுவின் மகன்கள் ஒரு புறமிருந்தாலும், தங்களை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த எதிரிகளிடம் உன்னால் போரிட முடியும். உனது வகை வழக்கங்களுக்கு உகந்த அனைத்தின்படியும் நீ நடந்து கொண்டால், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, குறித்த நேரத்தில் நீ மகிழ்ச்சியை அடைவாய்” என்றார் {கிருபர்}.
திரிகார்த்தன் சுசர்மன் ஆலோசனை! விராட பர்வம் பகுதி 30-மத்ஸ்ய நாட்டை இப்போது தாக்குவது உசிதம் எனத் திரிகார்த்தர்களின் மன்னன் சுசர்மன் துரியனுக்கு ஆலோசனை வழங்கியது …
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மத்ஸ்யர்கள் மற்றும் சல்லியர்களின் துணை கொண்டு மத்ஸ்ய சூதனான கீசனால் அடிக்கடி பல முறை தோற்கடிக்கப்பட்டவனும், எண்ணிலடங்கா தேர்களுக்குச் சொந்தக்காரனும், பலம்பொருந்திய திரிகார்த்தர்களின் மன்னனுமான சுசர்மன், இச்சந்தர்ப்பத்தைச் சாதகமானதாகக் கருதி, நேரங்கடத்தாமல் இந்த வார்த்தைகளைக் கூறலானான்.
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பலமிக்கக் கீசகனால், தன் உறவினர்களோடு சேர்த்துப் பலவந்தமாகத் தோற்கடிக்கப்பட்ட மன்னன் சுசர்மன், கர்ணனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான். அவன் {சுசர்மன்}, “எனது நாடு மத்ஸ்யர்களின் மன்னனால் {விராடனால்} பல முறை பலவந்தமாகப் படையெடுக்கப்பட்டுள்ளது. பலமிக்கக் கீசகனே {அப்போது} மன்னனின் தளபதியாக இருந்தான்.
குறுக்குப்புத்தியும், வெஞ்சினமும் கொண்டு, உலகம் முழுவதும் அவனது {கீசகனது} பராக்கிரமத்திற்காகப் புகழ்பெற்று, பாவச்செயல்கள் செய்து வந்த மிகக் கொடூரமான அந்த ஈனன் {கீசகன்} எப்படியோ கந்தர்வர்களால் கொல்லப்பட்டிருக்கிறான். கீசகன் இறந்ததால், மன்னன் விராடன் கர்வமிழந்து, {கீசகன் என்ற} புகலிடம் இல்லாமல் தைரியத்தையும் அனைத்தையும் இழந்திருப்பான் என நான் நினைக்கிறேன். உங்களுக்கும், சிறப்புமிக்கக் கர்ணனுக்கும் மற்றும் கௌரவர்கள் அனைவருக்கும் விருப்பம் இருக்குமானால் இப்போதே நாம் அந்த நாட்டின் மீது படையெடுக்கலாம்.
நடந்த விபத்து {கீசகனின் மரணம்} நமக்குச் சாதகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே சோளம் நிறைந்த விராட நாட்டுக்கு நாம் {படையெடுத்துச்} செல்லலாம். நாம் {அங்கு} சென்று, அவனது {விராடனின்} ரத்தினங்கள் மற்றும் பல்வேறு வகையான பிற சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவனது கிராமங்களையும் நாட்டையும், நமக்குள் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது நாம் அவனது {விராடனது} நகரத்திற்குள் பலம்கொண்ட படையெடுப்படை நடத்தி, பல இனங்களிலான அவனது {விராடனின்} சிறந்த பசுக்களை ஆயிரக்கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஓ! மன்னா {துரியோதனா}, கௌரவப் படைகளையும் திரிகார்த்தர்கள் படைகளையும் ஒன்றாகச் சேர்த்து அவனது {விராடனது} கால்நடை மந்தைகளைக் கவர்ந்து வருவோம். அல்லது நமது படைகளை இணைத்து, அவனே {விராடனே} வந்து சமாதானம் கோரும் வண்ணம் அவனது அதிகாரத்தைத் தடுக்கலாம். அல்லது அவனது {விராடனது} முழுப் படையையும் அழித்து, மத்ஸ்யனை அடிபணியச் செய்யலாம். நீதிக்குடன்பட்டு அப்படி அவனை {விராடனை} அடிபணியச் செய்ததும், நாம் நமது நாட்டில் மகிழ்ச்சியாக வாழலாம். அதே வேளையில் உனது பலமும் மேம்படுவதில் ஐயமில்லை” என்றான் {திரிகார்த்தர்களின் மன்னன் சுசர்மன்}.
சுசர்மனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், மன்னனிடம் {துரியோதனனிடம்}, “சுசர்மன் நன்று சொன்னான். சந்தர்ப்பம் சாதகமானதாகவும், உறுதியாக, நமக்கு லாபகரமானதாகவும் இருக்கிறது. எனவே, நீ விரும்பினால், ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, நமது படைகளை அணிவகுக்கச் செய்து, அவற்றைப் பிரிவுகளாகத் திரட்டி விரைந்து புறப்படுவோம். அல்லது, சரத்வானின் மகன் கிருபர், ஆசானான துரோணர், வயது முதிர்ந்த குருக்களின் ஞானியான பாட்டனாரும் {பீஷ்மரும்} சொல்வது போல இப்படையெடுப்பு நிர்வகிக்கப்படட்டும். ஒருவருடன் ஒருவர் ஆலோசித்து, ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, நமது இலக்கை விரைந்து அடைய புறப்படுவோம். செல்வம், பலம், பராக்கிரமம் ஆகியவற்றை இழந்திருக்கும் பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நமக்கு ஆக வேண்டியது என்ன? அவர்கள் முற்றிலும் காணாமல் போய்விட்டனர், அல்லது யமனின் வசிப்பிடம் சென்றுவிட்டனர். ஓ! மன்னா {துரியோதனா}, துயரப்பட்டுக்கொண்டிராமல் நாம் விராடனின் நகரத்திற்குச் சென்று, அவனது கால்நடைகள் மற்றும் பல்வேறு வகையான பிற சொத்துக்களையும் கொள்ளையடிப்போம்” என்றான் {கர்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சூரியனின் மகனான கர்ணனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட மன்னன் துரியோதனன், தனது உடன்தம்பியும், தனது விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனுமான தனது தம்பி துச்சாசனனை அழைத்து, “மூத்தவர்களுடன் ஆலோசித்து, தாமதமில்லாமல் நமது படைகளை அணிவகுக்கச் செய். கௌரவர்கள் அனைவருடன் கூடி, நாம் நிர்ணயித்த இடத்திற்குச் செல்வோம். பலம் பொருந்திய வீரனான மன்னன் சுசர்மன், திரிகார்த்தர்களுடனும் வாகனங்கள் மற்றும் விலங்குகளுடன் கூடிய போதுமான படைகளுடனும் மத்ஸ்யனின் நாட்டுக்குப் புறப்படட்டும்.
தனது நோக்கத்தைக் கவனமாக மறைத்துக் கொண்டு, சுசர்மன் முதலில் செல்லட்டும். அதைத் தொடர்ந்து அவர்களறிய அடுத்த நாள் நெருக்கமான அணிகளுடன் நாம், மத்ஸ்ய மன்னின் செழிப்புமிக்க நாட்டுக்குப் புறப்படுவோம். திரிகார்த்தார்கள் விராட நகரத்திற்குத் திடீரெனச் சென்று, பசுக்கூட்டங்களையும், அபரிமிதமான செல்வங்களையும் கைப்பற்றட்டும். நாம் இரு பிரிவுகளாக அணிவகுத்துச் சென்று, மங்களக்குறிகள் கொண்ட அற்புதமான பசுக்களை ஆயிரக்கணக்கில் பிடிப்போம்” என்றான் {துரியோதனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ பூமியின் தலைவா {ஜனமேஜயா}, கடும் பராக்கிரமம் கொண்ட தங்கள் காலாட்படை துணையுடன் தென்கிழக்குத் திசையில் அணிவகுத்துச் சென்று, அவனது {விராடனின்} பசுக்களைக் கைப்பற்ற விரும்பி, விராடனிடம் பகைதீர்க்க திரிகார்த்தர்கள் நினைத்தனர். தேய்பிறையின் ஏழாவது நாளில் பசுக்களைக் கைப்பற்ற சுசர்மன் புறப்பட்டான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தேய்பிறையின் எட்டாவது நாளில், அனைத்து துருப்புகளின் துணைகளையும் கொண்ட கௌரவர்கள், பசுக்களை ஆயிரக்கணக்கில் கைப்பற்றத் தொடங்கினர்.” {என்றார் வைசம்பாயனர்}.
விராடப் படை அணிவகுப்பு! விராட பர்வம் பகுதி 31-விராடனின் பசுமந்தைகளைத் திரிகார்த்தர்கள் கைப்பற்றிச் செல்வதை மன்னன் விராடனிடம் வந்து மந்தையாளர்கள் சொல்வது; விராடன், பாண்டவர்களையும் தன்னுடன் சேர்ந்து போராடச் சொல்வது; பாண்டவர்கள் உற்சாகத்தோடு போருக்குப் புறப்பட்டது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பலம்வாய்ந்த மன்னா {ஜனமேஜயா}, மன்னன் விராடனுக்குச் சேவை செய்யப் புகுந்து, அவனது {விராடனின்} சிறந்த நகரத்தில் மாறுவேடத்தில் வசித்து வந்த அந்த அளவிலா பராக்கிரமம் கொண்ட உயர் ஆன்ம பாண்டவர்கள், பிறரறியாமல் வாழ்வதாகத் தாங்கள் வாக்குறுதி அளித்திருந்த {அஜ்ஞாதவாச காலத்தை} காலத்தை நிறைவு செய்தார்கள். பகைவீரர்களைக் கொல்பவனான பலம்பொருந்திய மன்னன் விராடன், கீசகன் கொல்லப்பட்ட பிறகு, குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்} மீது தனது நம்பிக்கையை வைக்கத் தொடங்கினான். அவர்களது {பாண்டவர்களின்} வனவாச காலத்தின் பதிமூன்றாவது வருட நிறைவில்தான் விராடனின் கால்நடைகளை {பசுக்களை} அந்தச் சுசர்மன் ஆயிரக்கணக்கில் கைப்பற்றினான். கால்நடைமந்தைகள் அப்படிக் கைப்பற்றப்பட்ட போது, விராடனின் மந்தையாளர்கள் {இடையர்கள்} பெருவேகத்துடன் நகருக்கு வந்து, விவேகமுள்ள சபை உறுப்பினர்கள், மனிதர்களில் காளையரான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} மற்றும் காதுகுண்டலங்களும், கடகங்களும் அணிந்திருந்த துணிச்சல் மிக்க வீரர்கள் ஆகியோரின் மத்தியில் மத்ஸ்யர்கள் மன்னனான தங்கள் ஆட்சியாளன் {விராடன்} அரியாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.
தன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை மேம்படுத்தும் மன்னன் விராடன், தனது சபையில் அமர்ந்திருந்தபோது, அவனுக்கு {விராடனுக்கு} முன்பு தோன்றிய அந்த மந்தையாளர்கள், அவனை {விராடனைப்} பணிந்து வணங்கி, அவனிடம் {விராடனிடம்}, “ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {விராடரே}, நண்பர்களோடு கூடிய எங்களை வீழ்த்தி அவமதித்த திரிகார்த்தர்கள் உமது மந்தைகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் {அறுபதினாயிரம் என்கிறது ஒரு பதிப்பு} கைப்பற்றினர். எனவே, விரைந்து அவற்றை மீட்பீராக. ஓ!, அவற்றை {பசுமந்தைகளை} நீர் தொலைத்துவிடாதிருக்க ஆவன செய்யும்” என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {விராடன்}, தேர்களும், யானைகளும், குதிரைகளும், காலாட்படைகளும், கொடிக்கம்பங்களும் நிறைந்த மத்ஸ்ய படையை அணிவகுக்கச் செய்தான்.
ஒளிர்ந்து கொண்டிருந்த வீரர்கள் அணியத்தக்க அழகான கவசங்களை மன்னர்களும், இளவரசர்களும், அதனதன் சரியான இடங்களில் விரைவாகப் பொருத்தினர். விராடனின் அன்பிற்குரிய தம்பியான சதானீகன் {Satanika}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பிளக்க இயலாத எஃகால் {எஃகு} செய்யப்பட்ட கவசத்தைத் தரித்தான். சதானீகனுக்கு அடுத்து பிறந்தவனான மதிராக்ஷன் {Madirakshya}, தங்கம் பூசப்பட்டு, அனைத்து ஆயுதங்களையும் தாங்கவல்ல வலுவான கவசத்தை அணிந்தான். மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்} அணிந்த கொண்ட கவசமானது, நூறு வட்டங்களும், நூறு புள்ளிகளும், நூறு கண்களும் கொண்டு நூறு சூரியன்களால் அலங்கரிக்கப்பட்ட பிளக்கமுடியாத கவசமாக இருந்தது. சூரியதத்தன் {Suryadatta} [1] அணிந்த கவசமானது, சூரியனைப் போன்று பிரகாசமாகவும், தங்கத்தால் பூசப்பட்டதாகவும், மணமிக்க (கல்லார {Kahlar}) இனத்தைச் சார்ந்த நூறு தாமரைகளைப் {செங்கழுநீர் மலர்களைப்} போல அகன்று இருந்தது. விராடனின் மூத்த மகனும் வீரனுமான சங்கன் {Sanksha} ஆயிரங்கண் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பளபளக்கும் எஃகினால் செய்யப்பட்டதாகத் துளைக்கப்பட முடியாத கவசத்தை அணிந்தான்.
இப்படியே தேவர்களைப் போன்றிருந்த அந்தப் பலமிக்க நூறு வீரர்களும், தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, போர் செய்யும் ஆர்வத்துடன், தங்கள் கவசங்களைப் பூட்டினர். பிறகு கவசம் பூட்டப்பட்ட வெள்ளை நிறக் குதிரைகளைத் தங்கள் அற்புதமான தேர்களில் பூட்டினர். பிறகு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பிரகாசத்தில் சூரியனையோ, சந்திரனையோ ஒத்திருந்த மத்ஸ்யனின் {விராடனின்} அற்புதமான தேரில் இருந்த {கொடிமரத்தில்} அவனது {விராடனது} மகத்தான கொடி ஏற்றப்பட்டது. பிறகு மற்ற க்ஷத்திரிய வீரர்களும், தங்கள் தங்கள் தேர்களில் உள்ள தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் பல்வேறு வடிவகளில், பல கருவிகளைக் கொண்டிருந்த கொடிகளை ஏற்றினர்.
பிறகு மன்னன் மத்ஸ்யன், தன் உடன்தம்பியான சதானீகனிடம், “பெரும் சக்தி கொண்ட கங்கன், வல்லவன், தந்திரீபாலன் மற்றும் தமக்கிரந்தி {கிரந்திகன் [நகுலன்]} ஆகியோர் போரிடுவார்கள் என்பது ஐயமின்றி எனக்குத் தெரிகிறது. கொடிகளுடன் கூடிய தேர்களை அவர்களுக்கு நீ கொடு. எளிமையாக அணிந்து கொள்ளும் வகையில் {எடை குறைந்த} பிளக்கமுடியாதவையான அழகான கவசங்களை அவர்கள் அணிந்து கொள்ளட்டும். அவர்கள் ஆயுதங்களைப் பெற {ஏற்பாடு} செய். {கவசம் போன்ற} தற்காப்பு வடிவங்களைத் தாங்கி, யானையின் பலமிக்கத் துதிக்கைகளைப் போன்ற கரங்களைக் கொண்ட அவர்களால் போரிட முடியாது என்று என்னால் சொல்ல முடியாது” என்றான் {விராடன்}.
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சதானீகன், அரசமகன்களான யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய பிருதையின் மகன்களுக்கு {குந்தியின் மகன்களான பாண்டவர்களுக்கு} தேர்களை உடனே வரவழைத்தான். மன்னனால் உத்தரவு கொடுக்கப்பட்டதும், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடனும், மாறாபற்றைக் {விசுவாசத்தைக்} கருத்தில் கொண்ட தேரோட்டிகள் (பாண்டவர்களுக்காக) விரைந்து தேர்களைத் தயார் செய்தார்கள். பிறகு விராடனால் உத்தரவிடப்பட்ட வகையில், எளிமையாக அணிந்துகொள்ளத்தக்க, பிளக்கமுடியாதபடி இருந்த அழகிய கவசங்களை அந்தக் களங்கமற்ற புகழ் கொண்ட வீரர்கள் {பாண்டவர்கள்} அணிந்து கொண்டனர். நல்ல குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறிய அந்த மனிதர்களில் முதன்மையானவர்களும், பகைக்கூட்டத் தலைவர்களை அடிப்பவர்களுமான பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள்}, மகிழ்ச்சிகரமான இதயத்துடன் புறப்பட்டனர்.
உண்மையில், போர்க்கலையில் நிபுணர்களான அந்தப் பெரும் பலம்வாய்ந்த வீரர்களும், குருகுலத்தின் காளையரும், பாண்டுவின் மகன்களும், கலங்கடிக்கப்படாத பராக்கிரமம் கொண்டவர்களுமான அந்த நான்கு வீரச் சகோதரர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஏறி, விராடனின் உத்தரவுக்கிணங்க ஒன்றாகப் புறப்பட்டனர். பயங்கர வடிவம் கொண்டவைகளும், மதப்பெருக்குடையவையும், அறுபது வயதைக் கடந்தவையும், நல்ல வடிவம் கொண்ட தந்தங்கள் கொண்டவைகளும், போரில் நிபுணர்களாக இருக்கும் வீரர்களால் ஏறப்பட்டவையும், மழைபொழிகின்ற மேகங்களைப் போன்றவையுமான யானைகளைப் போல, மன்னனைப் {விராடனைப்} பின்தொடர்ந்து, அசைந்து செல்லும் மலைகளைப் போல அவர்கள் {பாண்டவர்கள்}, சென்றார்கள்.
ஆவலுடன் மன்னனை {விராடனைத்} தொடர்ந்து சென்ற மத்ஸ்யனின் {விராடனின்} வீரர்களிடம், எட்டாயிரம் {8000} தேர்களும், ஆயிரம் {1000} யானைகளும், அறுபதினாயிரம் {60,000} குதிரைகளும் இருந்தன. மேலும், ஓ! பாரதர்களில் காளையே {ஜனமேஜயா}, விராடனின் அந்தப் படை, ஓ! மன்னா {ஜனமேஜயா}, கால்நடைகளின் பாதச்சுவடுகளைக் குறித்துக் கொண்டு அணிவகுத்துச் சென்ற காட்சியைக் காண மிக அழகாக இருந்தது. உறுதிமிக்க ஆயுதங்களைத் தாங்கிய வீரர்கள் நிறைந்ததும், யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்ததுமான விராடனின் படைகளில் முதன்மையான அந்தப் படையின் அணிவகுப்பைக் காண உண்மையில் அற்புதமாக இருந்தது.” {என்றார் வைசம்பாயனர்}.
சுசர்மன் விராடன் மோதல்! விராட பர்வம் பகுதி 32-திரிகார்த்தர்களுக்கும், மத்ஸ்யர்களுக்கு இடையில் நடந்த போர்; சுசர்மனுக்கும் விராடனுக்கும் இடையே நடந்த மோதல் ஆகியவற்றைக் குறித்த வர்ணனை…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நகரத்தில் இருந்து புறப்புட்டு வெளியே சென்று, போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற வீரர்களான மத்ஸ்யர்கள், சூரியன் தீர்க்க ரேகையை {meridian} கடக்கும்போது {சூரிய அஸ்தமனத்தின்போது} திரிகார்த்தர்களை முறியடித்தார்கள். உக்கிரத்தால் உற்சாகமடைந்து, {எதிரி} மன்னனை அடைய விரும்பிய அந்த ஈரணியினரும் {இரு அணியினரும்}; போரில் அடக்கப்படமுடியாதவர்களான அந்தப் பெரும் பலமிக்கத் திரிகார்த்தர்களும், மத்ஸ்யர்களும் பெரும் கர்ஜனை செய்தார்கள். பிறகு, ஈரணிகளையும் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த போராளிகளால் நடத்தப்பட்ட பயங்கரமான மதம் கொண்ட யானைகள், தோமரங்களாலும், அங்குசங்களாலும் தூண்டப்பட்டு ஒன்றுக்கொன்று மோத வைக்கப்பட்டன.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூரியன் கீழே அடிவானத்தில் இருந்தபோது, ஈரணியினரின் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைகள் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற அந்த மோதல், மயிர்க்கூச்சரியும் வகையிலும், யமனுடைய நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்கக் கணிக்கப்பட்டதாகவும், கடுமையாகவும், பயங்கரமாகவும், பழங்காலத்தில் நடந்த தேவாசுரப் போரைப் போலவும் இருந்தது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதற்காகப் போராளிகள் விரைந்தபோது, அடர்த்தியான தூசிப்படலம் எழுந்தது. எனவே, {யாராலும்} எதையும் பார்க்க முடியவில்லை.
படைகளின் மோதலால் ஏற்பட்ட அந்தத் தூசிப்படலத்தால், பறவைகள் பூமியில் விழத்தொடங்கின. அடர்த்தியாக இருந்த கணைமழைக்குப் பின்னால் சூரியனே மறைந்து போனான். ஆநேகமாயிரம் மின்மினிப்பூச்சிகள் இருப்பது போல ஆகாயம் பிரகாசமாக இருந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தண்டுகளைக் கொண்ட தங்கள் விற்களை ஒரு கையில் இருந்து மறுகைக்கு மாற்றிய அந்த வீரர்கள், இடமாகவும், வலமாகவும் தங்கள் கணைகளை அடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தேர்கள் தேர்களோடும், காலாட்படை காலாட்படையோடும் குதிரையில் இருப்போர் குதிரையிலிருப்போராடும், யானைகள் பெரும் பலமிக்க யானைகளோடும் மோதிக் கொண்டன. வாட்கள், கோடரிகள், பராசங்கள், எறிவேல்கள், இரும்பு கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த வலிய கரங்கள் கொண்ட போர்வீரர்கள் ஒருவருக்கொருவர் உக்கிரமாகத் தாக்கிக் கொண்டாலும், அந்த மோதலில் எந்த அணியாலும் மற்ற அணியை முறியடித்து வெற்றி காண முடியவில்லை. அழகான மூக்குகளுடன் சிலவும், மேல் உதடு ஆழமாக வெட்டப்பட்ட சிலவும், காது வளையங்களுடன் சிலவும், காயங்களால் வகுக்கப்பட்ட சிலவும், நன்கு வெட்டி நேர்த்தியாக்கப்பட்ட முடிகளோடு கூடிய சிலவும் எனப் பல தலைகள் தூசி படிந்த தரையில் உருண்டன.
விரைவில், கணைகளால் அறுக்கப்பட்டு. ஆச்சா மரங்களின் அடிமரத்தைப் போலக் கிடந்த க்ஷத்திரிய வீரர்களின் அங்கங்களால், அந்தப் போர்க்களமே நிறைந்தது. காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும், பாம்புகளின் உடல்களைப் போல இருந்த சந்தனம் பூசப்பட்ட கரங்களும் சிதறிக் கிடந்ததால், அந்தப் போர்க்களம் பார்ப்பதற்கு மிக அழகாக ஆனது {became exceedingly beautiful}. தேர்கள் தேர்களோடும், குதிரையில் இருப்போர் குதிரையிலிருப்போராடும், காலாட்படையினர் காலாட்படையினரோடும், யானைகள் யானைகளோடும் மோதிக்கொண்ட போது எழுந்த பயங்கரமான தூசிப்படலம், விரைவில் இரத்த ஊற்றால் நனைந்தது. போராளிகளில் சிலர் மயக்கமடைந்தனர். மனிதம், நட்பு, உறவு என்பனவற்றைக் கருதாமல், ஈவிரக்கம் பாராமல் வீரர்கள் போரிடத் தொடங்கினர். கணைமழையால் அவர்களது பார்வையும், வழியும் தடைசெய்யப்பட்டபோது, கழுகுகள் தரையில் இறங்கத் தொடங்கின. ஆனால், என்னதான் அந்த வலிய கரங்கள் கொண்ட போராளிகள் மூர்க்கமாகத் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டாலும், ஈரணியைச் சேர்ந்த வீரர்களாலும் தங்கள் எதிரிகளை வீழ்த்துவதில் வெல்ல முடியவில்லை.
எதிரிகளில் நூறு பேரைக் கொன்ற சதானீகனும், நானூறு பேரைக் கொன்ற விசாலாக்ஷனும் {மதிராக்ஷனும்} அந்தப் பெரும் திரிகார்த்தப் படையின் மத்தியில் நுழைந்தனர். அந்த அடர்ந்த திரிகார்த்தப்படைக்குள் புகுந்த அந்தப் புகழ்பெற்ற வலிமைமிக்க வீரர்கள், தங்கள் எதிரிகளுடன் நெருக்கமாகப் போர் புரிந்தனர். அந்தப் போராளிகள் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு, தங்கள் நகங்களைக் கொண்டு ஒருவரையொருவர் கிழித்தனர். வலுவான எண்ணிக்கை கொண்ட திரிகார்த்தர்களின் தேர்கள், ஒன்றுதிரட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்ட அந்த வீரர்கள், கடைசியாக அதை நோக்கித் தங்கள் தாக்குதலைச் செய்தனர்.
சூரியதத்தனைத் தனது தேரிலும், மதிராக்ஷனைத் தனக்குப் பின்னாலும் கொண்டிருந்த தேர் வீரர்களில் முதன்மையான மன்னன் விராடன், அந்த மோதலில் ஐநூறு தேர்களையும், எண்ணூறு குதிரைகளையும், பெரும் தேர்களில் இருந்த ஐந்து வீரர்களையும் அழித்து, அந்தப் போர்க்களத்தில் தனது தேரின் மீது இருந்து தனது பல்வேறு திறமைகளை {தந்திர உத்திகளை} வெளிப்படுத்தினான். இறுதியில் மன்னன் {விராடன்}, தங்கத்தேரில் இருந்த திரிகார்த்த ஆட்சியாளனை {சுசர்மனை} எதிர்த்தான். உயர் ஆன்மா கொண்டவர்களும், பலமிக்க வீரர்களுமான அவர்கள், {தங்களுக்குள்} சண்டையிட விரும்பி, மாட்டுக்கொட்டகையில் உள்ள இரு காளைகள் போல உறுமிக் கொண்டு விரைந்தனர்.
பின்பு, மனிதர்களில் காளையும், போரில் கட்டுக்கடங்காதவனுமான திரிகார்த்தர்களின் மன்னன் சுசர்மன், தேரில் இருந்து புரியும் தனிப்போர் செய்ய மத்ஸ்யனுக்கு {விராடனுக்குச்} சவால்விட்டான். பிறகு சினத்தால் துடித்த அந்தப் போர்வீரர்கள் தங்கள் தேர்களில் ஒருவரை ஒருவர் எதிர்த்தபடி மழையூற்றைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமழையைப் பொழியத் தொடங்கினர். ஒருவரிடம் ஒருவர் சினம் கொண்டவர்களும், ஆயுதங்களில் நிபணத்துவம் கொண்டவர்களுமான அந்த இரு கடும் போர்வீரர்களும் வாட்கள், கணைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைத் தாங்கி, ஒருவரை ஒருவர் கூர்மையான கணைகளால் தாக்கிக் கொண்டு (போர்க்களத்தில்) களமாடினர்.
மன்னன் விராடன், சுசர்மனை பத்து கணைகளாலும், அவனது நான்கு குதிரைகளில் ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளாலும் துளைத்தான். அபாயகரமான ஆயுதங்களை அறிந்த, போர்க்களத்தில் கட்டுக்கடங்காத சுசர்மனும், மன்னன் மத்ஸ்யனை {விராடனை} கூர்மையான ஐம்பது கணைகளால் துளைத்தான். பிறகு, ஓ! பலமிக்க ஏகாதிபதியே {ஜனமேஜயா}, போர்க்களத்தில் எழுந்த புழுதியின் விளைவாக, சுசர்மன் மற்றும் மத்ஸ்ய மன்னன் ஆகியோரது படைவீரர்களால் ஒருவரை ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.” {என்றார் வைசம்பாயனர்}.
சுசர்மனின் ஏமாற்றம்! விராட பர்வம் பகுதி 33-போரில் திரிகார்த்தனின் கை ஓங்கியது; திரிகார்த்தன் விராடனை சிறைபிடித்தது; யுதிஷ்டிரன் விராடனை விடுவிக்கச் சொல்லி பீமனுக்கு உத்தரவிட்டது; பீமன் விராடனை மீட்டது; யுதிஷ்டிரன் சுசர்மனை விடுவிக்கச் சொன்னது
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, இந்த உலகமே புழுதியாலும், இரவின் இருளாலும் சூழப்பட்டிருந்தபோது, அவ்விரு அணிகளையும் சேர்ந்த போர்வீரர்கள், படையணிகளை உடைக்காமல், சிறிது நேரம் [1] {போர் செய்யாமல்} நிறுத்தினர். பிறகு, இருளை அகற்றியபடி, இரவை ஒளியூட்டியபடி, க்ஷத்திரிய வீரர்களின் இதயங்கள் மகிழ்வுறும்படி சந்திரன் உதித்தான். அனைத்தும் கண்களுக்குப் புலப்பட்டன. போர் மீண்டும் தொடங்கியது. போராளிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுத்திப் பார்க்காதவாறு அது {அந்தப் போர்} அப்படியே உக்கிரமாய் நடந்தது.
பிறகு, தனது தம்பியோடு இருந்த திரிகார்த்தர்களின் தலைவனான சுசர்மன், தனது அனைத்து தேர்களின் துணையோடு மத்ஸ்ய மன்னனை {விராடனை} நோக்கி விரைந்தான். தங்கள் தேர்களில் இருந்து இறங்கிய அந்த க்ஷத்திரியர்களில் காளையரான (அரச) சகோதரர்கள் {சுசர்மனும் அவனது தம்பியும்}, தங்கள் கைகளில் கதாயுதத்துடன், எதிரியின் {விராடனின்} தேரை நோக்கி மூர்க்கமாக விரைந்தனர். கதாயுதங்கள், வாட்கள், குறுவாள்கள், போர்க்கோடரிகள், கூரிய முனைகளும் கடினமும் கொண்ட பராசங்கள் ஆகியவற்றைக் கொண்டு அந்தப் பகைக்கூட்டத்தினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
திரிகார்த்தர்களின் தலைவனான மன்னன் சுசர்மன், தனது சக்தியால் மத்ஸ்யர்களின் முழுப் படையையும் ஒடுக்கி வீழ்த்தியபடி, பெரும் சக்தி கொண்ட விராடனை நோக்கி அவசரமாக விரைந்தான். அந்த இரு சகோதரர்களும் {சுசர்மனும் அவனது தம்பியும்}, விராடனின் இரு குதிரைகளையும், அவனது தேரோட்டியையும், பின்புறம் இருந்து அவனைப் {விராடனைப்} பாதுகாத்த படைவீரர்களையும் தனித்தனியாக வெட்டிப் போட்டனர். {அந்த நேரத்தில்} அவன் {விராடன்} தேரை இழந்திருந்தபோது, அவனை {விராடனை} உயிருடன் சிறைபிடித்தனர். பிறகு, பாதுகாப்பற்ற ஒரு காரிகையைத் துன்புறுத்தும் ஒரு காமாந்தகன் போல, அவனைத் {விராடனைத்} துன்புறுத்திய சுசர்மன், விராடனைத் தனது தேரில் ஏற்றி, களத்தை விட்டு விரைந்து சென்றான்.
பலமிக்க விராடன், தேரை இழந்து சிறைபிடிக்கப்பட்டதும், திரிகார்த்தர்களால் முற்றிலும் அலைக்கழிக்கப்பட்ட மத்ஸ்யர்கள், அச்சத்தால் எல்லாப்புறங்களிலும் சிதறி ஓடினர். பீதியுற்ற அவர்களைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், எதிரிகளை அடக்குபவனான பலமிக்கக் கரங்கள் கொண்ட பீமனிடம், “மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, திரிகார்த்தர்களால் தூக்கிச் செல்லப்படுகிறான். ஓ! பலமிக்கக் கரங்கள் கொண்டவனே {பீமா}, வலுமிக்க எதிரியிடம் {சுசர்மனிடம்} அவன் {விராடன்} வீழாதவாறு அவனைக் காப்பாற்று. நமது விருப்பங்கள் ஈடேறி, விராடனின் நகரில் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததால், ஓ! பீமசேனா, (அம்மன்னனை {விராடனை} விடுவித்து) அந்தக் கடனை அடைப்பதே உனக்குத் தகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்குப் பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, “உமது கட்டளையின் பேரில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அவனை {விராடனை} விடுவிப்பேன். எனது கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி, எதிரியிடம் போரிட்டு, (இன்று) நான் செய்யப்போகும் சாதனையைக் குறித்துக் கொள்ளும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நமது தம்பிகளுடன் ஒரு புறம் ஒதுங்கி இருந்து, எனது பராக்கிரமத்தை இன்று சாட்சியாகப் பாரும். கதாயுதம் போன்ற பெரும் அடிமரம் கொண்ட இந்தப் பலமிக்க மரத்தை வேரோடு பிடுங்கி, நான் எதிரியை முறிப்பேன்” என்றான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மதம் கொண்ட யானைப் போல அந்த மரத்தின் மீது கண்களைச் செலுத்திய பீமனைக் கண்ட நீதிமானான வீரமிக்க மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பியிடம் {பீமனிடம்}, “ஓ! பீமா, இத்தகு மூர்க்கமான செயலைச் செய்யாதே. அந்த மரம் அங்கேயே நிற்கட்டும். நீ அந்த மரத்தைக் கொண்டு மனிதசக்திக்கு அப்பாற்பட்ட முறையில் இத்தகு சாதனைகளை அடையக்கூடாது. நீ அப்படிச் செய்தால், ஓ! பாரதா {பீமா}, “இவன் பீமன்” என்று மக்கள் உன்னை அடையாளம் காண்பார்கள். எனவே, மனித ஆயுதங்களான, (கணைகளுடன் கூடிய) வில்லையோ, வேலையோ, வாளையோ, போர்க்கோடரியையோ எடுத்துக் கொள். ஓ! பீமா, சில மனித ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உன்னை அடையாளம் காணும் வழிகளை யாருக்கும் அளிக்காமல், மன்னனை {விராடனை} விடுவிப்பாயாக. பெரும் பலம் கொண்ட இரட்டையர்கள் உனது சக்கரங்களைப் பாதுகாப்பார்கள். ஒன்றுகூடிப் போரிட்டு, ஓ! குழந்தாய் {பீமா}, மத்ஸ்யர்களின் மன்னனை {விராடனை} விடுவிப்பாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட பெரும் வேகம் கொண்ட பலமிக்கப் பீமன், ஒரு சிறந்த வில்லை விரைவாக எடுத்துக் கொண்டு, மழை நிறைந்த மேகம் பொழிவது போல, அதிலிருந்து {அந்த வில்லில் இருந்து} கணைமழையை விரைவாகப் பொழிந்தான். பிறகு பீமன் பயங்கரச் செயல்கள் புரியும் சுசர்மனை நோக்கிச் சினத்துடன் விரைந்து, “ஓ! நல்ல மன்னா!” என்று அழைத்து, விராடனுக்கு உறுதி கூறிக் கொண்டே [2], திரிகார்த்தர்களின் தலைவனிடம் {சுசர்மனிடம்}, “நில்! நில்!” என்றான். “நில்! நில்! இந்த மோதலில் நடக்கும் இந்தப் பலமிக்கச் சாதனையைச் சாட்சியாகப் பார்” என்று சொல்லித் தனக்குப் பின்னால் யமனைப் போல இருக்கும் பீமனைக் கண்ட வீரர்களில் காளையான சுசர்மன், (அச்சூழ்நிலையைத்) தீவிரமாகக் கருதிப்பார்த்து, தனது வில்லை எடுத்துக் கொண்டு, தனது சகோதரர்களுடன் மீண்டும் திரும்பினான்.
கண்மூடித் திறப்பதற்குள், தன்னை எதிர்த்து வந்த தேர்களைப் பீமன் அழித்தான். விரைவில் மீண்டும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தேர்களும், யானைகளும், குதிரைகளும், குதிரை வீரர்களும், துணிச்சலும் கடுமையும் கொண்ட வில்லாளிகளும் விராடனின் கண் முன்பாகவே பீமனால் வீழ்த்தப்பட்டனர். கையில் கதாயுதம் கொண்ட சிறப்புமிக்கப் பீமனால் பகையணியின் காலாட்படையும் படுகொலைக்கு ஆளாகத் தொடங்கியது. அந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டு, போரில் கட்டுக்கடங்காத சுசர்மன் தனக்குள்ளாகவே, “இவனது பலமிக்கப் படைக்கு மத்தியில் என் தம்பி ஏற்கனவே பலியாகிவிட்டான் என்றே தெரிகிறது. எனது படை அழிவடையப் போகிறதா?” என்று நினைத்துக் கொண்டான் {சுசர்மன்}.
பிறகு, தனது வில்லின் நாணை காது வரை இழுத்த சுசர்மன் உடலைத் திருப்பி, கூரிய கணைகள் கொண்டு தொடர்ச்சியாக அடிக்க ஆரம்பித்தான். பாண்டவர்கள் தங்கள் தேரில் வருவதைக் கண்ட மத்ஸ்ய வீரர்களைக் கொண்ட பெரும்படை, தங்கள் குதிரைகளை விரைந்து செலுத்தி, திரிகார்த்த படைவீரர்களைக் கலங்கடிக்கும் சிறந்த ஆயுதங்களை அடித்தார்கள். மிகுதியாக எரிச்சலடைந்திருந்த விராடனின் மகனும், மிகப்பெரும் பயத்தால் வீரத்தை வெளிப்படுத்தத் தொடங்கினான். குந்தியின் மகன் யுதிஷ்டிரனும் (எதிரிகளில்) ஆயிரம் {1000} பேரைக் கொன்றான். பீமன் ஏழாயிரம் {7000} பேருக்கு யமனின் வசிப்பிடத்தைக் காட்டினான். நகுலன் தனது கணைகள் கொண்டு எழுநூறு {700} பேரை (அவர்கள் கடைசிக் கணக்கை முடித்து) அனுப்பினான். யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட பலமிக்கச் சகாதேவன் துணிவுமிக்க முன்னூறு {300} வீரர்களைக் கொன்றான்.
இவ்வளவு எண்ணிக்கையில் {எதிரிகளைக்} கொன்ற பலமிக்க வீரனான யுதிஷ்டிரன் ஆயுதங்களை உயர்த்தியபடி சுசர்மனை எதிர்த்து விரைந்தான். தேர் வீரர்களில் முதன்மையான சுசர்மனை நோக்கி விரைவாகச் சென்ற மன்னன் யுதிஷ்டிரன், அவனைத் தனது கணைகளால் சரமாரியாகத் தாக்கினான். பெரும் கோபம் கொண்ட சுசர்மனும் யுதிஷ்டிரனை ஒன்பது கணைகளாலும், அவனது நான்கு குதிரைகளில் ஒவ்வொன்றையும் நான்கு கணைகளாலும் துளைத்தான். பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, விரைவான அசைவுகள் கொண்ட குந்தியின் மகன் பீமன், சுசர்மனை அணுகி அவனது குதிரைகளை நசுக்கினான். {சுசர்மனுடைய தேரின்} பின்புறத்தைக் காத்த வீரர்களைக் கொன்ற அவன் {பீமன்}, தனது எதிரியின் தேரோட்டியை தரையில் இழுத்துச் சென்றான்.
{விராடனின்} தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பதில் புகழ்பெற்றவனும் துணிவுமிக்கவனுமான மதிராக்ஷன், தேரோட்டியில்லாமல் திரிகார்த்த மன்னனின் தேர் இருப்பதைக் கண்டு அவனது {பீமனின்} துணைக்கு வந்தான். அதன்பேரில், சுசர்மனின் தேரில் இருந்து குதித்து, பின்னவனின் {சுசர்மனின்} கதாயுதத்தை அடைந்த பலமிக்க விராடன், அவனைப் {மதிராக்ஷனைப்} பின்தொடர்ந்து ஓடினான். முதிர்ந்தவனாக இருந்தாலும், கையில் கதாயுதத்துடன் களத்தில் நகர்ந்த அவனைப் {விராடனைப்} பார்ப்பதற்கு, மிளிர்வு கொண்ட இளைஞனைப் போலத் தெரிந்தது. சுசர்மன் ஓடுவதைக் கண்ட பீமன் அவனிடம் {சுசர்மனிடம்}, “நில். ஓ இளவரசே! இப்படி நீ ஓடுவது உனக்குத் தகாது! இந்த உனது பராக்கிரமத்தைக் கொண்டு, மந்தையை நீ எப்படிப் பலவந்தமாகக் கைப்பற்ற முடியும்? உனது தொண்டர்களையெல்லாம் கைவிட்டு, எதிரிகள் மத்தியில் நீ தாழ்வடையலாமா?” என்று கேட்டான் {பீமன்}.
பிருதையின் மகனால் {பீமனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், எண்ணிலடங்கா தேர்களுக்குத் தலைவனுமான பலமிக்கச் சுசர்மன் பீமனிடம், “நில்! நில்!” என்று சொல்லித் திடீரெனத் திரும்பி அவனை நோக்கி விரைந்து வந்தான். பிறகு பாண்டுவின் மகனான பீமன், தன்னால் மட்டுமே ஆகக்கூடிய வகையில் தனது தேரில் இருந்து குதித்து, சுசர்மனின் உயிரை எடுக்க விரும்பி, அலட்சியமாக முன்னேறி வந்தான். திரிகார்த்த மன்னனைப் பிடிக்க விரும்பி அவனை நோக்கி முன்னேறிய பலமிக்கப் பீமசேனன், சிறு மானைப் பிடிக்க விரைந்து வரும் சிங்கம் போல அவசரமாக விரைந்து வந்தான். அப்படி அவசரமாக முன்னேறி வந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பீமன், கோபத்தில் சுசர்மனின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி, கீழே எறிந்து தரையில் மோதச் செய்தான். துயரத்தால் அவன் {சுசர்மன்} அழுது கிடந்த போது, வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பீமன் அவனது தலையில் எட்டி உதைத்தான். பிறகு தனது {பீமனின்} முட்டியை அவனது {சுசர்மனின்} மார்பில் வைத்து {அழுத்தி}, அவனைக் கடுமையாக அடித்தான். அந்த உதைகளால் மிகவும் துன்பப்பட்ட திரிகார்த்த மன்னன் {சுசர்மன்} உணர்வற்றுப் போனான்.
தேரை இழந்த திரிகார்த்தர்களின் மன்னன் {சுசர்மன்} இப்படிப் பிடிப்பட்டதும், மொத்த திரிகார்த்தப்படையும் பீதியடைந்து எல்லாத் திக்குகளிலும் ஓடின. நோன்பு நோற்றலும், பணிவும் கொண்ட பாண்டுவின் வலிமைமிக்க மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி சுசர்மனை வீழ்த்தி, பசுக்களையும், அனைத்து வகைச் செல்வங்களையும் மீட்டு, விராடனின் துயரை அகற்றி, அந்த ஏகாதிபதியின் {விராடனின்} முன்பு ஒன்றாகக் கூடி நின்றனர்.
பிறகு பீமசேனன், “தீய செயல்களைச் செய்யும் இந்த இழிந்தவன் என்னிடம் இருந்து உயிரோடு தப்பத் தகாதவன். ஆனால், என்ன செய்ய? மன்னர் {யுதிஷ்டிரர்} மிகவும் கருணை கொண்டவராக இருக்கிறாரே!” என்று சொன்னான். பிறகு தூசு படிந்த தரையில் உணர்வற்றுக் கிடந்த சுசர்மனின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, அவனை இறுகக் கட்டிய பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமன்}, அவனைத் தனது தேரில் ஏற்றி, களத்திற்கு மத்தியில் யுதிஷ்டிரன் இருக்கும் இடத்திற்குச் சென்றான். பிறகு, பீமன் சுசர்மனை அந்த ஏகாதிபதியிடம் {யுதிஷ்டிரனிடம்} காட்டினான். பீதியடைந்திருக்கும் சுசர்மனைக் கண்ட மனிதர்களில் புலியான மன்னன் யுதிஷ்டிரன், சிரித்துக் கொண்டே போர்க்களத்தின் ரத்தினமான பீமனிடம், “மனிதர்களில் இழிந்த இவன் விடுதலை பெறட்டும்” என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட பீமன், பலமிக்கச் சுசர்மனிடம், “ஓ! பாதகா {சுசர்மா}, நீ வாழ விரும்பினால், எனது இந்தச் சொற்களைக் கேள். அனைத்துச் சபைகளிலும், மனிதர்களின் கூடுகைகளிலும் “நான் ஓர் அடிமை” என்று நீ சொல்ல வேண்டும். இந்த நிபந்தனையின் பேரில் மட்டுமே நான் உனக்கு உயிரை அளிப்பேன். தோற்றவர்களுக்கு, நிச்சயமாக இதுவே விதியாகிறது” என்றான். அதன் பேரில் மூத்த சகோதரன் {யுதிஷ்டிரன்}, பீமனிடம் பாசமாக, “நீ எம்மை அதிகாரம் கொண்டவராகக் கருதினால், இந்தப் பொல்லாதவனை விடுவித்துவிடு. இவன் ஏற்கனவே மன்னன் விராடனின் அடிமையாகிவிட்டான்” என்றான். பிறகு சுசர்மனை நோக்கித் திரும்பிய அவன் {யுதிஷ்டிரன்}, “நீ விடுதலையடைந்தாய். சுதந்திர மனிதனாக நீ செல்லலாம். இனியும் இவ்வழியில் செயல்படாதே” என்று சொன்னான் {யுதிஷ்டிரன்}.
வெற்றிப் பிரகடனம்! – விராட பர்வம் பகுதி 34-விராடன் பாண்டவர்களுக்கு அபரிமிதமான செல்வங்களைப் பரிசாக அளித்தது; தனது வெற்றியைப் பிரகடனப்படுத்த தனது வீரர்களை நகரத்திற்கு அனுப்பியது;
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி யுதிஷ்டிரனால் சொல்லப்பட்ட சுசர்மன் அவமானத்தில் மூழ்கித் தனது தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான். (அடிமைத்தனத்தில் இருந்து) விடுபட்ட அவன் {சுசர்மன்}, மன்னன் விராடனிடம் சென்று அந்த ஏகாதிபதியை வணங்கிய பிறகு {அங்கிருந்து} புறப்பட்டான். நோன்புகள் நோற்றுப் பணிவுடன் இருந்த பாண்டவர்கள் தங்கள் சொந்த கரங்களின் பலத்தால் பதிலளிக்கும் வகையில் தங்கள் எதிரிகளைக் கொன்று, சுசர்மனை விடுவித்த பிறகு, அந்த இரவை மகிழ்ச்சியாகப் போர்க்களத்திலேயே கழித்தார்கள். அந்த வலிமைமிக்க வீரர்களும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட பராக்கிரமம் கொண்டவர்களுமான குந்தியின் மகன்களுக்குச் செல்வமும் மரியாதையும் அளித்து விராடன் மனநிறைவு கொண்டான்.
பிறகு விராடன், “எனது இந்த ரத்தினங்கள் அனைத்தும் எப்படி என்னுடையவையோ, அது போலவே அவை உங்களுடையவையும் ஆகும். உங்கள் இன்பத்துக்குத் தக்க நடந்து கொண்டு, நீங்கள் இங்கே மகிழ்ச்சியாக வாழுங்கள். போர்க்களத்தில் எதிரிகளை அடிப்பவர்களே, நான் உங்களுக்கு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட காரிகைகளையும், அபரிமிதமான செல்வத்தையும், நீங்கள் விரும்பும் பிறவற்றையும் அளிப்பேன். உங்கள் வலிமையினால் இன்றைய துயரில் இருந்து விடுவிக்கப்பட்ட நான், இப்போது வெற்றி மகுடம் சூட்டப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் மத்ஸ்யர்களுக்குத் தலைவர்களாவீர்கள்” என்றான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மத்ஸ்யர்களின் மன்னனால் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} இப்படிச் சொல்லப்பட்டதும், யுதிஷ்டிரன் தலைமையிலான அந்தக் குருக்குல வழித்தோன்றல்கள் தங்கள் கரங்களைக்கூப்பித் தனித்தனியாக அவனுக்கு {விராடனுக்கு} மறுமொழி கூறும் வகையில், “ஓ! ஏகாதிபதி {விராடரே}, நீர் சொல்வது அனைத்தாலும் நாங்கள் பெரும் மன நிறைவு கொண்டாலும், எதிரிகளிடம் இருந்து இன்று நீர் விடுபட்டத்தே எங்களுக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுக்கிறது” என்றனர்.
இப்படிப் பதிலளிக்கப்பட்ட மன்னர்களில் முதன்மையானவனும், மத்ஸ்யர்களின் தலைவனுமான விராடன் மீண்டும் யுதிஷ்டிரனிடம், “வாரும், நாம் உம்மை மத்ஸ்யர்களின் ஆட்சிக்கட்டிலில் நிறுவுகிறோம். மேலும் பூமியில் கிடைத்தற்கரிய பொருட்களையும், ஆசைக்குகந்த பொருட்களையும், நாங்கள் உமக்கு அளிப்போம். எங்கள் கைகளில் அனைத்தையும் பெற நீர் தகுதியுடையவர். ஓ! வியாக்ர வகை அந்தணர்களில் முதன்மையானவரே {கனகரே}, ரத்தினங்கள், பசுக்கள், மாணிக்கங்கள், முத்துகள் ஆகியவற்றை நான் உமக்கு அளிப்பேன். நான் உம்மை வணங்குகிறேன். உம்மாலேயே நான் இன்று எனது மகன்களையும் நாட்டையும் மீண்டும் ஒருமுறை பார்க்கிறேன். பேரழிவு மற்றும் ஆபத்தால், பாதிப்பும் அச்சமும் அடைந்த நான், உமது வலிமையினாலேயே எதிரியிடம் விழாமலிருந்தேன்” என்றான் {விராடன்}.
பிறகு, யுதிஷ்டிரன் மீண்டும் மத்ஸ்யனிடம் {விராடனிடம்}, “நீர் பேசும் இனிமையான சொற்களால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் மனிதத்தன்மையுடன் நடந்துகொண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீராக. நமது நண்பர்களுக்கு இந்த நல்ல செய்தியைச் சொல்லும் பொருட்டும், உமது வெற்றியைப் பிரகடனப்படுத்தும் பொருட்டும், உமது உத்தரவின் பேரில் தூதர்கள் இப்போதே நகரத்திற்கு விரைந்து செல்லட்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}. அவனது இந்தச் சொற்களைக் கேட்ட மன்னன் மத்ஸ்யன் {விராடன்} தூதுவர்களைக் அழைத்து, “நீங்கள் நகரத்திற்குத் திரும்பி, போர்கள வெற்றியைப் பிரகடனப்படுத்துங்கள். நன்கு அலங்கரிக்கப்பட்ட காரிகைகளும், தாதிகளும் அனைத்துவகை இசைக்கருவிகளை வாசித்தபடி நகரத்தை விட்டு வெளியே {எங்களை எதிர் கொண்டழைக்க} வரட்டும்” என்றான் {விராடன்}. மத்ஸ்யர்கள் மன்னனால் {விராடனால்} இப்படி உத்தரவிடப்பட்ட அந்த மனிதர்கள், அந்த ஆணையைத் தலைமேல் கொண்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் {அங்கிருந்து} புறப்பட்டுச் சென்றனர். அந்த இரவிலேயே நகரம் {நோக்கி} திரும்பிய அவர்கள், மன்னன் அடைந்த வெற்றியை சூரிய உதயத்தின் போது நகரவாயிலில் பிரகடனப்படுத்தினார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.
உத்தரனிடம் பேசிய மந்தையாளன்! – விராட பர்வம் பகுதி 35-பசுக்களை மீட்க திரிகார்த்தர்களைத் தொடர்ந்து ஒருபுறம் விராடன் சென்ற போது, மறுபுறத்தில் துரியோதனனும் அவனது பரிவாரங்களும் நாட்டின் வேறு பகுதி மீது படையெடுத்துப் பசுக்களைக் கவர்வது; இச்செய்தியை மந்தையர்த்தலைவன் உத்தரனிடம் சென்று சொல்வது; உத்தரன் தற்புகழ்ச்சியாகப் பேச ஆரம்பிப்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பசுக்களை மீட்க ஆவல் கொண்ட மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, திரிகார்த்தர்களைத் தொடர்ந்து சென்ற போது, தனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய துரியோதனன், விராடனின் ஆளுகைக்குட்பட்ட {வேறொரு} பகுதி மீது படையெடுத்தான். பீஷ்மர், துரோணர், கர்ணன், சிறந்த ஆயுதங்களை அறிந்த கிருபர், அசுவத்தாமன், சுபலனின் மகன் {சகுனி}, துச்சாசனன், விவிம்சதி, விகர்ணன், பெரும் சக்தி கொண்ட சித்திரசேனன், துர்முகன், துஸ்ஸகன் ஆகியோரும், ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, இன்னும் பிற பெரும் வீரர்களும் மத்ஸ்ய ஆட்சிப் பகுதியை அடைந்து, மன்னன் விராடனின் மந்தையாளர்களை {இடையர்களை – கோ-பாலர்களை} விரைவாக விரட்டிவிட்டு, பசுக்களைப் பலவந்தமாகக் கவர்ந்தனர்.
தேர்க்கூட்டங்களால் அனைத்துப்புறங்களிலும் சூழப்பட்ட கௌரவர்கள், அறுபதினாயிரம் {60,000} பசுக்களைப் பிடித்தனர். அந்தப் பயங்கர மோதலில் அடிபட்ட மந்தையாளர்கள் {கோ-பாலர்கள்}, துயரத்தால் உரக்கக் கதறினார்கள். {அப்போது} மந்தையாளர்களின் தலைவன் {மந்தையர்த்தலைவன்} ஒருவன், பெருவேகத்துடன் தேரில் ஏறி, துக்கத்தில் அழுது கொண்டே நகரத்திற்குப் புறப்பட்டான். மன்னனின் {விராடனின்} நகரத்திற்குள் நுழைந்த அவன், அந்த இடத்திற்கு முன்னேறி, தேரில் இருந்து விரைந்து இறங்கி, (என்ன நடந்தது) என்பதை உரைக்கலானான். பூமிஞ்சயன் {உத்தரன்} என்ற பெயர் கொண்ட மத்ஸ்யனின் பெருமிக்க மகனைக் கண்டு, அரச பசுக்கள் பிடிப்பட்டது குறித்த அனைத்தையும் அவனிடம் {உத்தரனிடம்} தெரிவித்தான்.
மேலும் அவன் அறுபதினாயிரம் {60,000} பசுக்களைக் கௌரவர்கள் பிடித்ததாகவும் சொன்னான். {பிறகு, அவன்-மந்தையர்த்தலைவன்}, “எனவே, ஓ! நாட்டின் புகழை மேம்படுத்துபவனே {உத்தரா}, உனது கால்நடைகளைத் திரும்பக் கொண்டுவருவதற்காக எழு! ஓ! இளவரசே {உத்தரா}, (நாட்டின்) நன்மையை அடைய நீ விரும்பினால், நேரத்தைக் கடத்தாமல் உடனே புறப்படு. உண்மையில், மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} உன்னை வெறுமையான நகரத்தில் விட்டுச் சென்றிருக்கிறார். (உனது தந்தையான) மன்னர் {விராடர்}, “எனது மகன் எனக்கு நிகரான வீரனாவான். எனது குலத்தைத் (குலத்தின் பெருமையைத்) தாங்குபவன் அவனே. கணைகளிலும் ஆயுதங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த போர்வீரனான எனது மகன் {உத்தரன்} பெரும் துணிவு கொண்டவனாவான்” என்று சபையில் உன்னைக் குறித்துப் {எப்போதும்} பெருமையாகப் பேசுவார்.
ஓ!, அந்த மனிதர்களின் தலைவனுடைய {விராடனுடைய} சொல் உண்மையாகட்டும்! ஓ! மந்தை உரிமையாளர்களின் தலைவா {உத்தரா}, உனது கணைகளின் பயங்கர சக்தியால் குருக்களின் {கௌரவர்களின்} துருப்புகளை எரித்து, அவர்களை வீழ்த்தி, பசுக்களை மீட்டு வா. {யானைகளில்} தலைமை யானை, {வேறு யானை} மந்தையை விரட்டுவது போல, உனது வில்லில் இருந்து புறப்படும், தங்க இறகுகள் கொண்ட நேரான கணைகளைக் கொண்டு எதிரி தலைவர்களைத் துளைத்திடு. உனது வில் வீணையைப் போல இருக்கிறது. அதன் இரண்டு முனைகளும் தந்தத்தாலான தலையணையை ஒத்திருக்கிறது. அதன் முக்கியக் கம்பியான அதன் நாண், அதன் தண்டு, விரல்களைத் தாங்கும் இடம், அதில் இருந்து அடிக்கப்படும் அம்புகள் ஆகியன இசைக்குறிப்புகளைப் போல இருக்கின்றன. எதிரிகளுக்கு மத்தியில் இந்த வீணையின் {வில்லின்} இசையொலியால் {கணைமழையால்} {அவர்களை} அடித்திடு! [1]
ஓ! தலைவா {உத்தரா}, வெள்ளி நிறம் கொண்ட உனது குதிரைகள் தேரில் பூட்டப்படட்டும். தங்க சிங்க இலச்சனை கொண்ட உனது கொடி ஏற்றப்படட்டும். தங்க இறகுகளும், கூரிய முனைகளும் கொண்ட கணைகள், உனது வலிய கரங்களால் அடிக்கப்பட்டு, சூரியனைத் தடுக்கும் கிரகணம் போல, அந்த மன்னர்களின் வழிகளைத் தடுக்கட்டும். அசுரர்களை வீழ்த்தும் வஜ்ரம் தாங்குபவனைப் {இந்திரனைப்} போல, அனைத்துக் குருக்களையும் {கௌரவர்களையும்} போர்க்களத்தில் வீழ்த்தி, பெரும் புகழை அடைந்து நகரம் திரும்புவாயாக. மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} மகனாக நீ இருப்பதால், அறம்சார்ந்த வீரர்களில் முதன்மையான பாண்டு மகன்களில் அர்ஜுனன் போல நீயே இந்த நாட்டின் ஒரே புகலிடம். அவனது சகோதரர்களுக்கு அர்ஜுனன் எப்படியோ, அதே போல, இந்த நாட்டிற்குள் வசிப்போருக்கும் நீயே புகலிடம் என்பதில் ஐயமில்லை. உண்மையில், இந்த ஆட்சியின் குடிமக்களாகிய நாங்கள் உன்னில் எங்கள் பாதுகாவலனைக் கொண்டிருக்கிறோம்” என்றான் {மந்தையர்த்தலைவன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு, பெண்களுக்கு மத்தியில் மூச்சுக்கு மூச்சு வீரச் சொற்களைப் பேசிய அந்த மந்தையாளனால் {கோபாலனால்} இப்படிச் சொல்லப்பட்ட இளவரசன் {உத்தரன்}, தற்புகழ்ச்சியின் வெளிப்பாடாக {பின்வரும்} இச்சொற்களைச் சொன்னான்”
பிருஹந்நளை தேரோட்டலாமே! – விராட பர்வம் பகுதி 36-ஒரு தேரோட்டி மட்டும் இருந்தால் நான் கௌரவர்களை விரட்டி விட்டுப் பசுக்களை மீட்டு விடுவேன் என்று உத்தரன் பெண்களுக்கு மத்தியில் தற்பெருமை பேசுவது; இதைக் கேட்ட அர்ஜுனன் திரௌபதியிடம் சொல்லி உத்தரன் தன்னைத் தேரோட்டியாக அமர்த்த ஆவன செய்யுமாறு பணித்தது; திரௌபதி உத்தரையிடம் சென்று பிருஹந்நளன் குறித்துச் சொன்னது…
உத்தரன் சொன்னான், “குதிரைகளின் மேலாண்மையில் திறனுடைய ஒரு தேரோட்டி வந்தால், வில்லைப் பயன்படுத்துவதில் உறுதியுடன் இருக்கும் நான், பசுக்களின் பாதையைத் தொடர்ந்து இன்றே புறப்படுவேன். எனினும், எனக்குத் தேரோட்டியாக இருக்கத்தக்க மனிதனை நான் அறியவில்லை. எனவே, காலந்தாழ்த்தாமல், புறப்படத் தயாராக இருக்கும் எனக்கு ஒரு தேரோட்டியைத் தேடுங்கள். ஒரு மாதம் முழுமையோ அல்லது இருபத்தெட்டு இரவுகளோ {நாட்களோ} நாளுக்கு நாள் {தினமும்} தொடர்ச்சியாக நடந்த பெரும்போரில், எனது தேரோட்டி கொல்லப்பட்டான். குதிரைகளின் மேலாண்மையை அறிந்த மற்றொரு மனிதன் கிடைத்தவுடன், எனது கொடியை உயர ஏற்றி, உடனே புறப்படுவேன். பிறகு, யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த எதிரிப்படைக்கு மத்தியில் ஊடுருவி, ஆயுத வலிமையில் அற்பர்களும், பலவீனர்களுமான குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தி, பசுக்களை நான் மீட்டு வருவேன்.
தானவர்களை அச்சுறுத்தும் இரண்டாவது வஜ்ரதாங்கியைப் {இந்திரனைப்} போல, துரியோதனன், பீஷ்மர், கர்ணன், கிருபர், துரோணர் மற்றும் அவரது மகன் {அஸ்வத்தாமன்}ஆகியோரையும், அங்கே கூடியிருக்கும் வலிய வில்லாளிகளையும் போரில் அச்சுறுத்தி, இக்கணத்திலேயே நான் பசுக்களை மீட்டு வருவேன். (எதிர்க்க) யாருமற்றதாலேயே, குருக்கள் {கௌரவர்கள்} பசுக்களைக் கவர்ந்து செல்கின்றனர். நான் அங்கில்லாத போது, என்னால் என்ன செய்ய முடியும்? ஒன்றுகூடி வந்திருக்கும் குருக்கள் {கௌரவர்கள்} எனது பராக்கிரமத்தை இன்று சாட்சியாகக் காண்பார்கள். “நம்மை எதிர்ப்பது அர்ஜுனனா?” என்று அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள்” என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அனைத்தையும் அறிந்த அர்ஜுனன், இளவரசனால் {உத்தரனால்} பேச்சப்பட்ட வார்த்தைகளைக் கேட்டான். பிறகு, சிறிது நேரம் கழித்து, துருபதன் மகளும், பாஞ்சால இளவரசியும், களங்கமற்ற அழகு கொண்டவளும், கொடியால் செய்யப்பட்டவளும், நெருப்பில் உதித்தவளும், உண்மை, நேர்மை ஆகிய அறங்களைக் கொண்டு, தனது கணவர்களின் நன்மையில் எப்போதும் கவனமுள்ளவளும், தனது அன்பிற்குரிய மனைவியுமான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} தனிமையில் பேசினான் {அர்ஜுனன்}. வீரனான அந்த அர்ஜுனன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகியே {திரௌபதி}, எனது வேண்டுதலின் படி உத்தரனிடம் தாமதமில்லாமல் சென்று, “திறமையும் உறுதியும் கொண்ட இந்தப் பிருஹந்நளன், பாண்டு மகனின் {அர்ஜுனனுடைய} தேரோட்டியாக இருந்தான். பல போர்களில் பங்குபெற்ற அவன் {பிருஹந்நளன்} உனது தேரோட்டியாகட்டும்” என்று சொல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மகளிருக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் இளவரசன் {உத்தரன்} சொல்லிக் கொண்டிருந்த சொற்களைக் கேட்ட பாஞ்சாலியால் {திரௌபதியால்}, {அச்சொற்களில் இருந்த} பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} குறித்த மறைமுகக் குறிப்புகளை அமைதியாகத் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாணத்துடன் பெண்கள் மத்தியில் இருந்து வெளியேறிய அப்பாவியான அந்தப் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அவனிடம் {உத்தரனிடம்} இச்சொற்களை மெதுவாகப் பேசினாள். “வலிமைமிக்க யானைப் போன்றவரும், பிருஹந்நளன் என்ற பெயரில் அறியப்படுபவருமான அந்த அழகிய இளைஞர், முன்னர் அர்ஜுனருக்குத் தேரோட்டியாக இருந்தார். அந்தச் சிறப்புமிக்க வீரரின் {அர்ஜுனரின்} சீடரும், வில்லைப்பயன்படுத்துபவர்களில் யாருக்கும் சளைக்காதவருமான அவரை, நான் பாண்டவர்களுடன் வாழ்ந்து வந்த போதே அறிவேன். அக்னியால் காண்டவ வனம் எரிக்கப்பட்ட போது, அர்ஜுனருடைய அற்புதமான குதிரைகளின் கடிவாளத்தை இவரே பிடித்திருந்தார். இவரைத் தேரோட்டியாகக் கொண்ட பார்த்தர், காண்டவப்பிரஸ்தத்தின் அனைத்து உயிரினங்களையும் வீழ்த்தினார். உண்மையில், அவருக்கு {பிருஹந்நளனுக்கு} நிகரான தேரோட்டி வேறு ஒருவருமில்லை” என்றாள் {திரௌபதி}.
உத்தரன் {திரௌபதியிடம்}, “ஓ! சைரந்திரி, இந்த இளைஞனை நீ அறிவாயா? இந்த அலியால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை நீ அறிந்திருக்கிறாய். எனினும், ஓ! அருளப்பட்டவளே {மாலினி}, என் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடிக்குமாறு நானே பிருஹந்நளையிடம் கோர முடியாது” என்றான்.
அதற்குத் திரௌபதி {உத்தரனிடம்}, “ஓ! வீரரே, அழகிய இடைகள் கொண்ட காரிகையான உனது தங்கையின் {உத்தரையின்} சொற்களுக்குப் பிருஹந்நளன் கீழ்ப்படிவார் என்பதில் ஐயமில்லை. அவர் {பிருஹந்நளன்} உனக்குத் தேரோட்டியாக இருக்கச் சம்மதித்தால், நீ குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தி, பசுக்களை மீட்டுத் திரும்புவாய் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்காது” என்றாள் {திரௌபதி}.
சைரந்திரியால் இப்படிச் சொல்லப்பட்ட உத்தரன், தனது தங்கையிடம் {உத்தரையிடம்}, “ஓ! களங்கமற்ற அழகுடையவளே {உத்தரை}, நீயே சென்று பிருஹந்நளையை இங்கே அழைத்து வருவாயா?” என்று கேட்டான். தனது அண்ணனால் அனுப்பப்பட்ட அவள் {உத்தரை}, வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மாறுவேடத்தில் தங்கியிருந்த ஆடற்கூடத்திற்கு விரைந்து சென்றாள்.” {என்றார் வைசம்பாயனர்}.
போருக்குப் புறப்படுதல்! – விராட பர்வம் பகுதி 37-உத்தரனுக்குத் தேரோட்டியாகும்படி உத்தரை பிருஹந்நளையை வேண்டுவது; பிறகு உத்தரனும் வேண்டுவது; அர்ஜுனன் உத்தரனுடன் தேரில் புறப்படுவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படித் தனது தமையனால் {உத்தரனால்} அனுப்பப்பட்டவளும், தங்க அட்டிகையால் அலங்கரிக்கப்பட்டவளும், தன் தமையனுக்கு எப்போதும் கீழ்ப்படிபவளும், குளவி போன்ற மெல்லிய இடுப்பு கொண்டவளும், லட்சுமியைப் போன்ற பிரகாசமிக்கவளும், மயிலின் மென்மையான இறகைப் போன்ற அழகிய அங்கங்கள் கொண்டவளும், முத்து வலயங்கள் {zone of pearls) படர்ந்த இடுப்பு கொண்டவளும், சற்றே சரிந்த கண்ணிமைகள் கொண்டவளும், அனைத்து மங்கலங்களையும் தனது உருவில் கொண்டவளுமான தொலைபுகழ் கொண்ட மத்ஸ்யமன்னன் மகள் {உத்தரை}, கருமேகங்களை நோக்கி மின்னல் கீற்று விரைவதைப் போல ஆடற்கூடத்திற்கு விரைந்து சென்றாள்.
களங்கமற்றவளும் மங்களகரமானவளும், அழகிய பற்கள் கொண்டவளும், மெல்லிய இடுப்புடையவளும், யானையின் துதிக்கையைப் போன்ற தொடைகளும், அவை ஒன்றுக்கொன்று நெருக்கமானதாக அமையப்பட்டவளும், மேனியில் அற்புதமான மாலையைத் தரித்தவளுமான விராடன் மகள் {உத்தரை}, தன் துணையை நாடும் பெண் யானையைப் போலப் பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனை} அடைந்தாள். விலைமதிப்பற்ற ரத்தினம் போன்றவளும், இந்திரனுடைய செழிப்பின் உருவம் போன்றவளும், மிகுந்த அழகுடையவளும், அகன்ற கண்களுடையவளும், வழிபடப்பட்டுக் கொண்டாடப்படுபவளுமான அந்த அழகிய காரிகை அர்ஜுனனை வணங்கினாள். அவளால் {உத்தரையால்} வணங்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, நெருக்கமான தொடைகளும், தங்க நிறமும் கொண்ட அந்தக் கன்னிகையிடம் {உத்தரையிடம்}, “அட்டிகை பூட்டி வந்த காரிகையே, எது உன்னை இங்கு அழைத்து வந்தது? ஓ! மருண்ட பார்வை கொண்ட கன்னிகையே, உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்? ஓ! அழகிய பெண்ணே {உத்தரை}, உனது முகம் ஏன் உற்சாகமற்றிருக்கிறது? இவை யாவையும் தாமதமில்லாமல் எனக்குச் சொல்!” என்று கேட்டான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, (துயரத்தில் இருக்கும்) தோழியான அகன்ற கண்களுடைய இளவரசியைக் {உத்தரையைக்} கண்ட அவளது {உத்தரையின்} தோழன் (அர்ஜுனன்), உற்சாகத்துடன் (இச்சொற்களைச்) சொல்லி, அங்கே வந்த அவளது வருகைக்கான காரணத்தை விசாரித்தான். அந்த மனிதர்களில் காளையை {அர்ஜுனனை} அணுகிய அந்த இளவரசி {உத்தரை}, தனது பெண் பணியாட்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, தனது பணிவைச் சரியாகக் காட்சிப்படுத்தி, அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பிருஹந்நளா, இந்த ஆட்சிக்குட்பட்ட பசுக்கள், குருக்களால் {கௌரவர்களால்} ஓட்டிச் செல்லப்படுகின்றன. அவற்றை வெற்றிக் கொள்ள எனது தமையன் {உத்தரன்} கையில் வில்லுடன் புறப்பட இருக்கிறார். சமீபத்தில்தான் அவரது தேரோட்டி போர்க்களத்தில் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட எனது தமையனின் தேரோட்டிக்கு நிகராகச் செயல்படக்கூடியவர் வேறு ஒருவரும் இல்லை. ஒரு தேரோட்டியை அடைய முயன்று வரும் அவரிடம் {உத்தரரிடம்}, ஓ! பிருஹந்நளா, குதிரைகளின் மேலாண்மையில் உனக்கிருக்கும் நிபுணத்துவத்தைக் குறித்துச் சைரந்திரி {மாலினி} பேசினாள். முன்பொரு சமயத்தில் நீயே அர்ஜுனரின் தேரோட்டியாக இருந்திருக்கிறாய். உன்னுடன் சேர்ந்துதான் அந்தப் பாண்டு மகன்களின் காளை {அர்ஜுனர்} தனியாக முழு உலகையும் அடக்கியிருக்கிறார். எனவே, ஓ! பிருஹந்நளா, நீ எனது தமையனின் {உத்தரனின்} தேரோட்டியாகச் செயல்படுவாயாக. (இந்நேரத்தில்) நமது பசுக்களைப் பெருந்தூரத்திற்குக் குருக்கள் {கௌரவர்கள்} ஓட்டிச் சென்றிருப்பார்கள். என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டும், என் சொற்களுக்கு நீ செயலாற்றவில்லையென்றால், பாசத்துடன் இந்தச் சேவையை உன்னிடம் கேட்கும் நான் எனது உயிரை விடுவேன்” என்றாள் {உத்தரை}.
இப்படி, அழகிய இடுப்புக் கொண்ட தனது தோழியால் சொல்லப்பட்ட அந்த எதிரிகளை ஒடுக்குபவனான அளவிலா பராக்கிரமம் கொண்டவன் {அர்ஜுனன்}, அந்த இளவரசனின் {உத்தரனின்} முன்பு சென்றான். கன்றுக்குப் பின் ஓடும் பெண்யானையைப் போல, அகன்ற கண்களைக் கொண்ட அந்த இளவரசியும் {உத்தரையும்}, மதநீர் பெருகிய யானை போல விரைந்த நடையுடன் சென்ற அந்த வீரனைப் {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றாள். தூரத்திலேயே அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட அந்த இளவரசன் {உத்தரன்}, “உன்னைத் தனது தேரோட்டியாகக் கொண்டே, காண்டவ வனத்தில், குந்தியின் மகனான தனஞ்சயர் {அர்ஜுனர்}, அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்து, முழு உலகையும் அடக்கியிருக்கிறார். சைரந்திரி உன்னைக் குறித்து என்னிடம் சொன்னாள். அவள் பாண்டவர்களை அறிவாள். எனவே, ஓ! பிருஹந்நளா, எனது குதிரைகளின் கடிவாளங்களை நீ பிடிப்பாயாக, எனது செல்வங்களான பசுக்களை மீட்கும்பொருட்டு, நான் குருக்களுடன் {கௌரவர்களுடன்} மோத விரும்புகிறேன். முன்னர், நீ அர்ஜுனரின் அன்புக்குரிய தேரோட்டியாக இருந்திருக்கிறாய். உன்னுடன் சேர்ந்தே அந்தப் பாண்டு மகன்களில் காளை {அர்ஜுனர்} இந்த முழு உலகையும் தனி ஆளாக அடக்கியிருக்கிறார்!” என்றான் {உத்தரன்}. இப்படிச் சொல்லப்பட்ட பிருஹந்நளை, அந்த இளவரசனிடம் {உத்தரனிடம்}, “போர்க்களத்தில் தேரோட்டியாகச் செயல்பட எனக்குத் திறன் ஏது? பாடலோ, இசைக்கருவிகளுடன் கூடிய ஆடலோ அல்லது அவை போன்ற பிறவோ என்றால், நான் உன்னை மகிழ்விப்பேன். ஆனால் ஒரு தேரோட்டி ஆவதற்கான திறன் என்னிடம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டாள்.
அதற்கு உத்தரன் {அர்ஜுனனிடம்}, “ஓ பிருஹந்நளா, நீ பாடகராகவோ, ஆடற்கலைஞராகவோ இரு {இருந்து கொள்}. (இப்போது) காலந்தாழ்த்தாமல், எனது அற்புதக் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு எனது தேரில் ஏறுவாயாக!” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த எதிரிகளை ஒடுக்குபவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அனைத்தையும் அறிந்திருந்தாலும், உத்தரனின் முன்னிலையில், பல தவறுகளை வேடிக்கையின் பொருட்டுச் {கேலிக்காகச்} செய்யத் தொடங்கினான். அவன் {அர்ஜுனன்} கவசத்தை எடுத்து தலைகீழாக அணிந்து கொள்ள முயன்றபோது, அதைக் கண்ணுற்ற அகன்ற விழிகள் கொண்ட மாதரனைவரும் உரத்த சிரிப்பை வெடித்துச் சிரித்தனர். அவன் கவசம் அணிவதைக் கூட அறியாதிருப்பதைக் கண்ட உத்தரன், தானே பிருஹந்நளைக்கு விலையுயர்ந்த கவசத்தை அணிவித்தான். சூரியப்பிரகாசம் கொண்ட கவசத்தைத் தன் மேனியில் தரித்துக் கொண்டு, சிங்க உருவம் பொறித்த கொடியைத் தனது கம்பத்தில் உயர்த்திய இளவரசன் {உத்தரன்}, பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாக்கிக் கொண்டான். கடிவாளத்தைப் பிருஹந்நளை பற்றும்படி செய்த அந்த வீரன் தன்னுடன் பல விலையுயர்ந்த விற்களையும், அதிக எண்ணிக்கையிலான அழகிய கணைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். பிறகு, {அர்ஜனனின்} தோழியான உத்தரை தனது பணிப்பெண்களுடன் சேர்ந்து பிருஹந்நளையிடம், “ஓ! பிருஹந்நளா, கூடியிருக்கும் குருக்களில், போர்க்களத்தில் முதன்மையான பீஷ்மர் மற்றும் துரோணரை வீழ்த்திய பிறகு, (நீ திரும்பி வரும்போது) நமது பாவையருக்கு பலவிதமான நல்ல அழகிய துணிகளைக் கொண்டுவா” என்றாள் {உத்தரை}. இப்படிச் சொல்லப்பட்ட பாண்டு மகனான பார்த்தான் {அர்ஜுனன்}, மேகங்களின் உறுமலைப் போன்ற ஆழ்ந்த குரலில், அந்த மங்கையர்க்கூட்டத்திடம் சிரித்துக் கொண்டே, “அந்த வலிமைமிக்கப் போர்வீரர்களை உத்தரன் வீழ்த்தினால், நான் நிச்சயம் அற்புதமான அழகிய துணிகளைக் கொண்டு வருவேன்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இச்சொற்களைச் சொன்ன வீரனான அர்ஜுனன், எண்ணற்ற கொடிகள் பறக்கும் குரு {கௌரவப்} படையை நோக்கி குதிரைகளை விரைந்து செலுத்தினான். எனினும், அவர்கள் புறப்படுவதற்குச் சற்று முன்பு, பிருஹந்நளையைத் தேரோட்டியாகக் கொண்டு, உயர்ந்து பறக்கும் பெரும் கொடியைக் கொண்ட தனது அற்புதத் தேரில் அமர்ந்திருக்கும் உத்தரனைக் கண்ட முதிய பெருமாட்டிகளும் {பேரிளம்பெண்களும்}, கன்னியரும், கடும் நோன்புகள் கொண்ட அந்தணர்களும், அந்த வீரனை {உத்தரனை} வாழ்த்தும் வகையில் தேரை வலம் வந்தனர். அப்போது பெண்கள், “ஓ! பிருஹந்நளா, இன்று நீ இளவரசன் உத்தரனுடன் சேர்ந்து குருக்களிடம் மோதும்போது, பழங்காலத்தில் காண்டவ வனத்தை எரித்த போது காளையைப் போல நடக்கும் அர்ஜுனன் பெற்ற அதே வெற்றி {அப்போது} உனதாகட்டும்” என்று வாழ்த்தினர்.
உத்தரனை இழுத்து வந்த அர்ஜுனன்! – விராட பர்வம் பகுதி 38-கௌரவப் படையைக் கண்ட உத்தரன் அஞ்சி ஓடுவது; கௌரவர்கள் பிருஹந்நளையே அர்ஜுனன் எனச் சந்தேகம் கொள்வது; ஓடும் உத்தரனை அர்ஜுனன் இழுத்து வருவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நகரத்தில் இருந்து வெளியே வந்த அச்சமற்ற விராடனின் மகன் {உத்தரன்}, தனது தேரோட்டியிடம் {பிருஹந்நளையிடம்}, “குருக்கள் {கௌரவர்கள் } எங்கே இருக்கிறார்களோ, அங்கே செல். வெற்றியை விரும்பி இங்கே கூடியிருக்கும் குருக்களை வீழ்த்தி, எனது பசுக்களை அவர்களிடமிருந்து மீட்ட பிறகே, எனது தலைநகரத்திற்கு நான் திரும்புவேன்” என்றான். இளவரசனின் {உத்தரனின்} இந்தச் சொற்களைக் கேட்ட, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, குதிரைகளை விரைந்து நடத்தினான். காற்றின் வேகம் கொண்டவையும், தங்க அட்டிகைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், மனிதர்களில் சிங்கத்தால் {அர்ஜுனனால்} நடத்தப்பட்டவையுமான அக்குதிரைகளைப் பார்க்க காற்றில் பறப்பன போலத் தெரிந்தன.
வெகுதூரம் செல்வதற்கு முன்னரே அந்த எதிரிகளை அடிப்பவர்களான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, மத்ஸ்யனின் மகனும் {உத்தரனும்}, பலமிக்கக் குருக்களின் {கௌரவர்களின்} படையைக் கண்டனர். மயானத்தை நோக்கிச் செல்லும் வழியில், அவர்கள் {அர்ஜுனனும், உத்தரனும்} போருக்காக அணிவகுத்திருக்கும் குருக்களின் {கௌரவர்களின்} படையைக் கண்டனர். பெருந்திரளான கடலைப் போலவும், எண்ணிலடங்கா மரங்களுடன் வானத்தில் நகரும் காட்டைப் போலவும் அந்தப் பெருஞ்சேனை தெரிந்தது. ஓ! குருக்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்தப் படை நகர்ந்ததால் ஏற்பட்ட புழுதிப்படலம் வானத்தை அடைந்து, அனைத்து உயிரினங்களின் பார்வையையும் தடை செய்தது.
யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த அந்தப் பெரும்படை, கர்ணனாலும், துரியோதனனாலும், கிருபராலும், சந்தனுவின் மகனாலும் {பீஷ்மராலும்}, புத்திசாலியும் பெரும் வில்லாளியுமான துரோணராலும், அவரது மகனாலும் {அஸ்வத்தாமனாலும்} பாதுகாக்கப்படுவதைக் கண்ட விராடனின் மகன் {உத்தரன்} அச்சத்தால் பீதியடைந்து, தன்னுடலில் இருந்த முடிகள் அனைத்தும் முனைவரை முள் போல நீண்டு நிற்க {மயிர்க்கூச்சுடன் = புளகத்துடன்} பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “குருக்களுடன் {கௌரவர்களுடன்} போரிட நான் துணியேன். என் உடல் புளகமடைவதைப் {மயிர் சிலிர்ப்பதைப்} பார். கடுமை மிகுந்தவர்களும், தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவர்களுமான எண்ணிலடங்கா போர்வீரர்கள் நிறைந்த குருக்களின் படையோடு போரிட எனக்குத் தகுதி கிடையாது. குதிரைகளும், யானைகளும், தேர்களும், காலாட்படைவீரர்களும், பதாகைகளும் நிறைந்ததும், பயங்கர வில்லாளிகளைக் கொண்டதுமான பாரதர்களின் படைக்குள் ஊடுருவ நான் முயலமாட்டேன். போர்களத்தில் நிற்கும் துரோணர், பீஷ்மர், கிருபர், கர்ணன், விவிம்சதி, அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தன், பாஹ்லிகன், ரதவீரர்களில் முதன்மையான வீரமன்னன் துரியோதனன் மற்றும் போரில் நிபுணத்துவம் வாய்ந்த இன்னும் பிற அற்புத வில்லாளிகளை, போர்க்களத்தில் நிற்கும் எதிரிகளாகக் கண்டமாத்திரத்தில், என் மனம் மிகவும் கவலை கொள்கிறது. அடிப்பவர்களான இந்தக் குருக்கள் {கௌரவர்கள்}, போர்க்களத்தில் அணிவகுத்து நிற்பதைக் கண்டதும் மயிர்ச்சிலிர்ப்புடன் கூடிய அச்சத்தை நான் அடைகிறேன்” என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இழிந்த மனம் கொண்ட மூடனான உத்தரன், மடத்தனத்தால் (தேரோட்டியாக) வேடந்தரித்திருந்த உயர் ஆன்மா கொண்டவனின் (அர்ஜுனனின்) முன்னிலையில், (தனது விதியை நினைத்துப்) புலம்பத் தொடங்கினான். அவன் {உத்தரன்}, “வெறுமையான நகரத்தை மட்டும் எனக்கு விட்டுவிட்டு, முழுப் படையையும் அழைத்துக் கொண்டு திரிகார்த்தர்களைச் சந்திக்க எனது தந்தை சென்றுவிட்டார். எனக்கு உதவி செய்ய எந்தத் துருப்புகளும் இல்லை. சிறுவனும், தனியாக இருப்பவனும், ஆயுதங்களில் அதிகப் பயிற்சி இல்லாதவனுமான {உத்தரனாகிய} நான், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்ட எண்ணிலடங்கா வீரர்களுடன் மோத இயலாதவனாக இருக்கிறேன். எனவே, ஓ! பிருஹந்நளா, முன்னேறுவதை நிறுத்து!” என்றான் {உத்தரன்}.
அதற்குப் பிருஹந்நளை {அர்ஜுனன் உத்தரனிடம்}, “அச்சத்தால் வெளிறிப்போய், உன்னுடைய எதிரிகளின் மகிழ்ச்சியை நீ ஏன் அதிகரிக்கிறாய்? போர்க்களத்தில், எதிரிகளிடம் நீ எக்காரியத்தையும் இன்னும் செய்யவில்லை. “கௌரவர்களிடம் என்னை அழைத்துச் செல்” என்று நீயே எனக்குக் கட்டளையிட்டாய். எனவே, அதோ எண்ணிலடங்கா கொடிகள் இருக்கும் அந்த இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்வேன். ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {உத்தரா}, ஊனுக்காகப் {இறைச்சிக்காகப்} போரிடும் பருந்துகளைப் போல, உனது பசுக்களுக்காகப் போரிடத் தயாராக இருக்கும் எதிரிகளான குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} மத்தியில் நான் உன்னை நிச்சயம் அழைத்துச் செல்வேன். பூமியின் ஆட்சியைக் கோருவதான உயர்ந்த நோக்கத்துக்காக அவர்கள் வந்திருந்தாலும், நான் அதையே செய்வேன்.
புறப்படும்போது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் பெரும் ஆண்மையுடன் பேசிவிட்டு, இப்போது போரில் இருந்து ஏன் விலகுகிறாய்? பசுக்களை மீட்காமல் நீ வீடு திரும்பினால், வீரமிக்க ஆண்களும், ஏன் பெண்களும்கூட அவர்களுக்குள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது உன்னைச் சொல்லி (ஏளனமாகச்) சிரிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, தேரோட்டுவதில் எனக்கிருக்கும் திறன் குறித்துச் சைரந்திரி {மாலினி} உயர்வாகச் சொல்லி பாராட்டியிருக்கிறாள் (அதற்காகவே நான் வந்தேன்). எனவே, குருக்களிடம் {கௌரவர்களிடம்}, நான் ஏன் போரிடக்கூடாது? (உன்னைப் பொறுத்தவரை) நீ உறுதியுடன் நில் {போதும்}.” என்றாள் {பிருஹந்நளை}.
உத்தரன் {பிருஹந்நளாவிடம்}, “மத்ஸ்யர்களின் செல்வமனைத்தையும் குருக்கள் கொள்ளையிடட்டும். ஓ! பிருஹந்நளா, ஆண்களும் பெண்களும் என்னைக் கண்டு சிரிக்கட்டும். எனது பசுக்கள் அழியட்டும், எனது நகரம் பாலைவனமாகட்டும். நான் எனது தந்தையின் முன் வெளிப்பட்டு நின்றாலும்கூட, போருக்கான தேவை எதுவும் {எனக்கு} இல்லை” என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அச்சமுற்ற இளவரசன் {உத்தரன்} இதைச் சொல்லிவிட்டு, தேரில் இருந்து குதித்து, வில்லையும் அம்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு மதிப்பையும் பெருமையையும் துறந்து ஓடத்தொடங்கினான். எனினும், பிருஹந்நளன் {உத்தரனிடம்}, “போர்க்களத்தில் இருந்து ஓடுவது, வீரமிக்க க்ஷத்திரியர்களின் செயலன்று. பயத்தில் ஓடுவதைவிடப் போர்க்களத்தில் ஏற்படும் மரணமே சிறந்தது” என்று உரத்துச் சொன்னான். இதைச் சொன்ன குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, {களத்தைவிட்டு} ஓடிவிட்ட இளவரசனைத் தொடர்ந்து {செல்லும் பொருட்டு}, தனது நீண்ட பின்னலும், சுத்தமான சிவந்த ஆடைகளும் காற்றில் படபடக்கும்படி, அந்த அற்புதமான தேரில் இருந்து இறங்கி {உத்தரனைப் பின்தொடர்ந்து} ஓடினான்.
இப்படி, பின்னல் காற்றில் படபடக்க ஓடிக்கொண்டிருப்பது அர்ஜுனன் என்பதை அறியாத சில போர்வீரர்கள், இக்காட்சியைக் கண்டு வெடித்துச் சிரித்தனர். அவன் {அர்ஜுனன்} இப்படி ஓடிக்கொண்டிருப்பதைக் கண்ட குருக்கள் {கௌரவர்கள்}, “சாம்பலுக்குள் மறைந்திருக்கும் நெருப்பு போல, {இப்படி} வேடம்பூண்டிருக்கும் இந்த மனிதன் யார்? இவன் பகுதி {சிறிது} ஆணாகவும், பகுதி {சிறிது} பெண்ணாகவும் இருக்கிறானே. அலியின் உருவத்தைத் தாங்கியிருந்தாலும், இவன் அர்ஜுனனைப் போல இருக்கிறானே. இவனது தலைகளும், கழுத்தும், கதாயுதங்களைப் போன்ற இரு கரங்களும் அவனைப் {அர்ஜுனனைப்} போலவே உள்ளன. இவனது நடையும் அவனைப் {அர்ஜுனனைப்} போலவே உள்ளது. தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தவிர இவன் வேறு யாரும் அல்ல.
மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் அர்ஜுனன், தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் இந்திரனைப் போன்றவனாவான். தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர வேறு எவன் நமக்கு எதிராகத் தனியாக வருவான்? தனது ஒரு மகனை மட்டுமே விராடன் அந்த வெறும் நகரத்தில் விட்டுச் சென்றான். அவன் {அந்த மகன்} வீரத்தாலல்ல, சிறுபிள்ளைத்தனத்தால் வெளியே வந்திருக்கிறான். நகரத்தை விட்டு வெளியே வந்தவன் உத்தரனாக இருக்க வேண்டும். இப்போது மாறுவேடத்தில் இருக்கும் பிருதையின் மகனான அர்ஜுனனை, அவன் {உத்தரன்} தேரோட்டியாக வரித்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. நமது படையைக் கண்ட அவன் {உத்தரன்} பீதியடைந்து ஓடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவனைத் திரும்பிக் கொண்டுவரவே, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஓடிக்கொண்டிருக்கிறான் என்பதில் ஐயமில்லை” என்று {கௌரவர்கள்} தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மாறுவேடத்தில் இருக்கும் பாண்டுவின் மகனைக் கண்ட கௌரவர்கள், ஓ! பாரதா {ஜனமேஜயா}, இந்த உத்தேசக் கணிப்பீடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினர். ஆனால், அவர்களால் திட்டவட்டமாக எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அதே வேளையில் புறமுதுகிட்டு ஓடிய உத்தரனைத் தொடர்ந்து, விரைந்து சென்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரு நூறு அடிகள் எடுத்து வைப்பதற்குள் அவனது தலைமுடியைப் பற்றினான். அர்ஜுனனால் பிடிக்கப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, பெரும் துன்பத்தில் இருப்பவனைப் போல மிகவும் வருந்திப் புலம்பத் தொடங்கி, “ஓ! நல்ல பிருஹந்நளா, ஓ! அழகிய இடை கொண்டவளே கேள். தேரின் பாதையை விரைந்து திருப்பு. எவன் {உயிருடன்} வாழ்கிறானோ, அவனே செழிப்பைச் சந்திக்கிறான் {அடைகிறான்}. பசும்பொன்னாலான நூறு நாணயங்களையும் {பொற்காசுகளையும்}, பொன்னால் இழைக்கப்பட்ட எட்டு பிரகாசமான வைடூரியங்களையும், அற்புத குதிரைகளால் இழுக்கப்படும் தங்கக் கொடிக்கம்பமுடைய ஒரு தேரையும், பராக்கிரமம் மிக்கப் பத்து அராளங்களையும் {மதயானைகளையும்} நான் உனக்குத் தருகிறேன். ஓ! பிருஹந்நளா, என்னை விட்டு விடு” என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “{உத்தரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்த மனிதர்களில் புலி {அர்ஜுனன்} சிரித்துக் கொண்டே, கிட்டத்தட்ட உணர்வை இழந்து, இச்சொற்களைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த உத்தரனைப் பிடித்துத் தேரை நோக்கி இழுத்து வந்தான். பிறகு, அச்சத்தால் உணர்வை இழக்கும் தருவாயில் இருந்த அந்த இளவரசனிடம் {உத்தரனிடம்}, பிருதையின் மகன் {அர்ஜுனன்}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, எதிரியிடம் போரிட உனக்குத் துணிவில்லையென்றால், நான் எதிரியிடம் போரிடுவதற்கேதுவாக வந்து குதிரைகளின் கடிவாளத்தைப் பிடி. வீரர்களாலும், வலிமைமிக்கவர்களாலும் பாதுகாக்கப்பட்டு, வலிமைமிக்கதாகவும், வெல்லமுடியாததாகவும் இருக்கும் தேர்களின் ஒப்பற்ற வரிசையிருக்கும் அவ்விடத்திற்கு, எனது கரங்களின் பலத்தால் உண்டான பாதுகாப்புடன் ஊடுருவிச் செல்.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {உத்தரா}, அஞ்சாதே, நீ ஒரு க்ஷத்திரியன். மேலும் நீ ஓர் அரசின் இளவரசர்களில் முதன்மையானவனுமாவாய். ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, எதிரிகளின் மத்தியில் நீ ஏன் அடங்கிச் செல்கிறாய்? நான் நிச்சயம் குருக்களுடன் {கௌரவர்களுடன்} போரிட்டு, வல்லமைமிக்கதும், அணுக இயலாததுமான தேர்களின் வரிசைக்குள் ஊடுருவிச் சென்று, பசுக்களை மீட்பேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே {உத்தரா}, நான் குருக்களுடன் போரிடுவேன். நீ எனது தேரோட்டி ஆவாயாக” என்றான் {அர்ஜுனன்}. இப்படி விராடனின் மகனான உத்தரனிடம் பேசியவனும், இதுவரை போரில் வீழாதவனுமான பீபத்சு {பீபத்சு-அர்ஜுனன்}, சிறிது நேரம் அவனைத் {உத்தரனைத்} தேற்றினான். பிறகு, பயத்தால் பீதியுற்று, மயக்கமும் தயக்கமும் கொண்ட இளவரசனை {உத்தரனை}, அடிப்பவர்களில் முதன்மையான அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} தேரில் ஏற்றினான்” {என்றார் வைசம்பாயனர்}.
துரோணரின் எச்சரிக்கை! – விராட பர்வம் பகுதி 39-இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்துக் கொண்ட துரோணர், கௌரவர்களை எச்சரித்தது; கர்ணன் கோபம் கொண்டது; துரியோதனன் விளக்கம்..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “{புறமுதுகிட்டு} (ஓடிய) உத்தரனை ஏற்றிக் கொண்டு, வன்னி மரத்தை நோக்கிச் செல்பவனும், மூன்றாம் பாலினப் பழக்கத்தில் இருப்பவனும் தேரில் அமர்ந்திருப்பவனுமான அந்த மனிதர்களில் காளையைக் {அர்ஜுனனைக்} கண்டவர்களும், பீஷ்மர், துரோணர் ஆகியோரைத் தலைமையாகக் கொண்டவர்களுமான பெரும் தேர்வீரர்கள் யாவரும், வந்தவன் தனஞ்சயனே {அர்ஜுனனே} என்று சந்தேகித்து இதயத்தில் பயங்கொண்டனர்.
அவர்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டதைக் கண்டும், அற்புதமான அத்தாட்சிகள் பலவற்றைக் குறித்தும் கொண்ட ஆயுதம் தாங்குபவர்களின் முதன்மையானவரும், பரத்வாஜரின் மகனுமான ஆசான் துரோணர், “கடுமையாகவும், வெப்பமாகவும் வீசும் காற்று, கீழே கற்களைத் தாராளமாகப் பொழிகிறது. வானம் மேகமூட்டத்துடன் சாம்பல் நிறத்தில் இருண்டிருக்கிறது. உலர்ந்ததும், வறண்டதுமான விசித்திரமான காட்சியை மேகங்கள் முன்வைக்கின்றன. நமது பல்வேறு விதமான ஆயுதங்களும், உறைகளில் இருந்து நழுவுகின்றன. அனைத்துப்புறங்களிலும் ஏற்படும் காட்டுத்தீயைக் கண்டு அச்சமுறும் நரிகள் கொடூரமாக ஊளையிடுகின்றன.
குதிரைகளும் கண்ணீர் வடிக்கின்றன. யாரும் அசைக்காத போதே நமது பதாகைகள் நடுங்குகின்றன. இத்தகு மங்கலமற்ற குறியீடுகள், வரப்போகும் பெரும் ஆபத்தையே குறிக்கின்றன. எச்சரிக்கையுடன் இருப்பீராக. உங்களை நீங்களே பாதுகாத்துக் கொண்டு, துருப்புகளைப் போருக்காக அணிவகுத்திடுங்கள். பசுக்களைப் பாதுகாத்துக் கொண்டு, கொடும் படுகொலைகளை எதிர்பார்த்து நில்லுங்கள். மூன்றாம் பாலினப் பழக்கம் கொண்டு இங்கே வந்திருக்கும் இந்த வலிமைமிக்க வில்லாளி, ஆயுதங்கள் தாங்குபவர்களில் முதன்மையான பிருதையின் மகனே {குந்தியின் மகன் அர்ஜுனனே}, இதில் ஐயமில்லை” என்றார் {துரோணர்}.
பிறகு பீஷ்மரிடம் பேசும் வகையில் தொடர்ந்த அந்த ஆசான் {துரோணர்}, “ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, இங்கே பெண்ணாடை பூண்டு வந்தவன், இலங்கைத் தலைவனின் {ராவணனின்} நந்தவனத்தை அழித்தவனைத் {அனுமானைத்} தனது பதாகையில் {கொடியில்} தாங்கியிருப்பவனும், மரத்தின் பெயரால் அழைக்கப்படுபவனும், மலைகளின் எதிரியுடைய {இந்திரனுடைய} மகனுமான கிரீடியாவான் {அர்ஜுனனாவான்}. இவன் நிச்சயம் இன்று நம்மை வீழ்த்தி பசுக்களை எடுத்துக் கொள்வான்! இந்த எதிரிகளைத் தண்டிப்பவன், சவ்யசச்சின் என்ற புனைப்பெயர் கொண்ட வீரம்செறிந்த பிருதையின் மகனாவான் {குந்தியின் மகன் அர்ஜுனனாவான்}. தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து வந்தாலும் அவன் {அர்ஜுனன்} போரில் இருந்து விலகமாட்டான். கானகத்தில் பெரும் துன்பத்துக்குள்ளாக்கப்பட்ட அவன் {அர்ஜுனன்}, கோபத்துடன் வந்திருக்கிறான். இந்திரனால் கற்பிக்கப்பட்ட அவன், போர்க்களத்தில் இந்திரனைப் போலவே இருப்பான். எனவே, கௌரவர்களே, அவனிடம் {அர்ஜுனனிடம்} தாக்குப்பிடிக்கக்கூடிய எந்த வீரனையும் நான் காணவில்லை. இமயத்தின் மலைகளில், வேடனாக மாறுவேடத்தில் வந்த தலைவன் மகாதேவனையே {சிவனையே}, இந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, போரில் மனநிறைவு கொள்ளச் செய்தான் என்று சொல்லப்படுகிறது” என்றார் {துரோணர்}.
இச்சொற்களைக் கேட்ட கர்ணன், “பல்குணனின் {அர்ஜுனனின்} அறங்களைப் பேசி, எப்போதும் நீர் எங்களை நிந்திக்கிறீர். எனினும், என்னிலோ, துரியோதனனிலோ பதினாறில் ஒரு பங்குக்குக் கூட {1/16} அர்ஜுனன் ஈடாகமாட்டான்!” என்றான். பிறகு துரியோதனன், “இது பார்த்தனாக {அர்ஜுனனாக} இருந்தால், ஓ! ராதேயா {கர்ணா}, எனது காரியம் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகவே ஆகும். ஓ! மன்னா {கர்ணா}, பாண்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், மீண்டும் பனிரெண்டு வருட காலத்திற்கு உலவித் திரிய வேண்டியிருக்கும். அல்லது அலியின் ஆடியில் இருந்த அவன், வேறு எவனாகவாவது இருந்தால், என் கூரிய கணைகளால் விரைவில் நான் அவனைப் பூமியில் சாய்ப்பேன்” என்றான் {துரியோதனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்} இப்படிச் சொன்னதும், பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அவனது {துரியோதனனின்} ஆண்மையைப் பாராட்டினர்!”
காண்டீவம் கடினமானது! – விராட பர்வம் பகுதி 40-அர்ஜுனன் வன்னி மரத்தில் இருக்கும் தங்களது ஆயுதங்களை உத்தரனிடம் எடுக்கச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வன்னி மரத்தை அடைந்ததும், போரில் அனுபவமற்றவனும், மிக மென்மையான சுபாவமுடையவனுமான விராடன் மகனின் {உத்தரனின்} நிலையை உறுதி செய்து கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} அவனிடம் {உத்தரனிடம்}, “ஓ! உத்தரா, நான் ஏவுவது போல் {சொல்வது போல்}, (இந்த மரத்திலிருந்து) அங்கே இருக்கும் சில விற்களை விரைந்து கீழே இறக்கு. அதிக எடையைக் கொண்டு எனது கரங்களை நீட்டி விரித்து, குதிரைகளையும், யானைகளையும் அடித்து, எதிரிகளை நான் வெற்றிகொள்வதற்கு, எனது பலத்தை இந்த உனது விற்களால் தாங்கமுடியாது.
எனவே, ஓ! பூமிஞ்சயா {உத்தரா}, இந்த மரத்தில்தான் பாண்டுவின் வீர மகன்களான யுதிஷ்டிரர், பீமர், பீபத்சு {பீபத்சு} மற்றும் இரட்டையர்களின் {நகுல சகாதேவர்களின்} அற்புதமான கவசங்களும், பதாகைகளும், கணைகளும், விற்களும் கட்டி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அடர்த்தியான இலைகளுடன் இருக்கும் இந்த மரத்தில் ஏறு. அங்கே தான், மற்ற பிற ஆயிரம் விற்களுக்குத் தனிச்சமமாக இருப்பதும், ஒரு நாட்டின் வரம்புகளை {எல்லைகளை} விரிவாக்கும் திறன் கொண்டதும், பெரும் சக்தி வாய்ந்த வில்லுமான அர்ஜுனனின் காண்டீவம் இருக்கிறது. மிகப்பெரும் அழுத்தத்தைத் தாங்கவல்ல பெரிய பனை மரம் போன்றதும், ஆயுதங்கள் அனைத்திலும் பெரியதும், எதிரிகளைத் தடுக்கவல்லதும், அழகானதும், மிருதுவானதும், அகன்றதும், முடிச்சற்றிருப்பதும் {முடிச்சு அற்று இருப்பதும்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், அழகிய வடிவமைப்புடையதுமான அது {காண்டீவம்}, கடினமானதும், பெரும் எடையைத் தாங்கவல்லதுமாகும். யுதிஷ்டிரர், பீமர், பீபத்சு {பீபத்சு}, இரட்டையர்கள் ஆகியோரின் பிற விற்களும் இதற்கு நிகரான பலமும் கடினமும் கொண்டவையே” என்றான் {அர்ஜுனன்}.
பொதி அவிழ்த்த உத்தரன்! – விராட பர்வம் பகுதி 41-மரத்தில் ஏற முதலில் தயங்கிய உத்தரன், பிறகு அதில் ஏறி ஆயுதங்களைக் கீழ இறக்கி, பொதிகளை அவிழ்த்து ஆயுதங்களைப் பார்த்தல்…உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “இந்த மரத்தில் ஒரு பிணம் கட்டப்பட்டுள்ளது என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, பிறப்பால் இளவரசனான நான், எனது கைகளால் அதை எப்படித் தொட முடியும்? க்ஷத்திரிய வகையில் உள்ள ஒரு பெரும் மன்னனுக்கு மகனாகப் பிறந்து, மந்திரங்களையும் மற்றும் நோன்புகளையும் எப்போதும் நோற்கும் நான் அதைத் தொடலாகாது. ஓ! பிருஹந்நளா, ஒரு பிணத்தைத் தொட வற்புறுத்தி, பிணங்களைச் சுமக்கும் சுத்தமற்றவனாகவும் மாசுபட்டவனாகவும் என்னை ஏன் ஆக்கப் பார்க்கிறாய்?” என்று கேட்டான் {விராடனின் மகன் உத்தரன்}.
அதற்குப் பிருஹந்நளை {அர்ஜுனன் – உத்தரனிடம்}, “ஓ! மன்னர்களுக்கு மன்னா {உத்தரா}, நீ சுத்தமானவனாகவும், மாசற்றவனாகவும் நீடிப்பாய். அஞ்சாதே, இம்மரத்தில் விற்களே இருக்கின்றன. பிணங்கள் அல்ல. மத்யர்கள் மன்னனின் வாரிசே {உத்தரா}, மகத்தான குடும்பத்தில் பிறந்த உன்னை, ஓ! இளவரசே {உத்தரா}, எப்படி நான் நிந்திக்கத்தக்க செயலைச் செய்ய வைப்பேன்?” என்று கேட்டாள்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, பார்த்தனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான விராடனின் மகன் {உத்தரன்}, தேரில் இருந்து இறங்கி, தயக்கத்துடன் அந்த வன்னி மரத்தில் ஏறினான். தேரிலேயே நின்றிருந்த எதிரிகளைக் கொல்பவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனிடம் {உத்தரனிடம்}, “மரத்தின் உச்சியில் இருந்து அந்த விற்களை விரைவாகக் கொண்டு வா” என்றான். {ஆயுதங்களைக் கீழே இறக்கிய பிறகு}, முதலில் பொதிகளை {wrappings} அறுத்து, பிறகு அவற்றில் கட்டப்பட்டிருந்த கயிறுகளையும் அறுத்த அந்த இளவரசன் {உத்தரன்}, வேறு நான்கு விற்களுடன் காண்டீவம் இருப்பதைக் கண்டான். அப்படி அவை அவிழ்க்கப்படும்போது, சூரியப் பிரகாசம் கொண்ட அந்த விற்கள், கோள்கள் உதிக்கும் நேரத்தில், அவை உமிழும் பேரொளியால் பிரகாசிப்பது போல ஒளிர ஆரம்பித்தன. சீறும் பாம்புகள் போன்ற வடிவங்களில் இருந்த அவற்றைக் {விற்களைக்} கண்ட அவன் {உத்தரன்} அச்சத்தால் பீடிக்கப்பட்டு, ஒரு நொடியில் மயிர்ச்சிலிர்த்து நின்றான். பிறகு பெரும்பிரகாசம் கொண்ட அந்தப் பெரிய விற்களைத் தொட்ட விராடனின் மகன் {உத்தரன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அர்ஜுனனிடம் இப்படிப் பேசினான்.”
ஆயுத விசாரணை! – விராட பர்வம் பகுதி 42-பிரித்துப் பார்த்த ஆயுதங்களில், ஒவ்வொரு ஆயுதத்தையும் சுட்டி, அவை யாருடையவை எனப் பிருஹந்நளையான அர்ஜுனனிடம் உத்தரன் கேட்பது…
உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “நூறு பொன் பொட்டுகளும், பிரகாசமிக்க முனைகளும் கொண்ட இந்த அற்புதமான வில் எந்தப் புகழ்பெற்ற வீரனுக்குச் சொந்தமானது? இத்தகு பிரகாசத்துடன் ஒளிர்வதும், தங்க யானைகளைத் தண்டில் கொண்டிருப்பதும், நல்ல மேற்புறங்கள் கொண்டதும், பிடிப்பதற்கு எளிமையானதுமான இந்த அற்புத வில் யாருடையது? பசும்பொன்னால் {சுத்த தங்கத்தால்} ஆன மூன்று வரிசை இந்திரகோபங்களைத் சரியான இடைவெளில் தண்டில் கொண்டுள்ள இந்த அற்புத வில் யாருடையது? பெரும் பிரகாசம் கொண்ட மூன்று தங்கச் சூரியன்கள் பொறிக்கப்பட்டு இத்தகு பிரகாசத்தால் சுடர்விடும் இந்த அற்புத வில் யாருடையது? பல வண்ணங்களிலான ரத்தினங்களாலும் தங்கத்தாலும் இழைக்கப்பட்டு, அழகிய கற்களுடன் கூடிய பொன்வண்டுகளைக் கொண்டிருக்கும் இந்த அழகிய வில் யாருடையது?
தங்கத்தலைகளுடன் {இறுதியில்} இறகுடையதும், பொன் அம்பறாத்தூணியில் இருப்பதும், ஆயிரம் எண்ணிக்கை கொண்டதுமான இந்தக் கணைகள் யாருடையவை? கழுகுச் சிறகுகள் கொண்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், மஞ்சள் நிறத்தில் இருப்பதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், கூரிய முனைகள் கொண்டதும், கனமானதும், முழுவதும் இரும்பாலானதுமான இந்தப் பெரிய பராசங்களும் யாருடையவை? பன்றியின் காது போன்ற முனைகள் கொண்ட பத்து கணைகளையும், இன்னும் பிற கணைகளையும் தாங்கியிருப்பதும், ஐந்து புலி உருவங்களைக் கொண்டதும் கரிய நிறம் கொண்டதுமான இந்த அம்பறாத்தூணி யாருடையது? பிறை வடிவ சந்திரனைப் போலத் தெரிவதும், (எதிரியின்) இரத்தத்தைக் குடிக்கவல்லதும், நீண்டதும், தடித்ததுமான இந்த எழுநூறு கணைகள் யாருடையவை? அடியில் பாதி, கிளிகளின் இறகாலானதும், மேல்பாதி நன்கு கடினமாக்கப்பட்ட இரும்பாலானதும், கல்லில் கூராக்கப்பட்டதுமான இந்தத் தங்கக் கொண்டை கொண்ட கணைகள் யாருடையவை? தவளைச் சின்னம் பொறிக்கப்பட்டதும், தவளையின் தலை போன்ற முனை கொண்டதும், எதிரிகளுக்குக் கொடூரமானதும், தடுக்கமுடியாததுமான இந்த அற்புத வாள் யாருடையது?
பல வண்ணத்திலான புலித்தோலுறையில் இருப்பதும், பலவண்ண தங்கத்தாலும், ஒலிபெருக்கும் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், கூரிய அற்புதமான முனைகள் கொண்டதுமான இந்தப் பெரும் வாள் யாருடையது? பளபளப்பான முனைகளும், தங்கக் கைப்பிடியும் கொண்ட இந்தக் கூன்வாள் யாருடையது? நிஷாத நாட்டில் தயாரிக்கப்பட்டதும், தடுக்க முடியாததும், உடைக்க முடியாததும், மாட்டுத்தோலுறையில் இருப்பதும், பளபளக்கும் முனைகள் கொண்டதுமான இந்த வாள் யாருடையது?
ஆட்டத்தோலுறையில் இருப்பதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், தங்கப்பிடி கொண்டதும், வானம் போன்ற கரிய நிறம் கொண்டதும், நீண்டிருப்பதுமான, இந்த அழகிய வாள் யாருடையது? கனமானதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், முப்பது விரல்கட்டைகளுக்குச் சற்றே நீண்டதும், பிற ஆயுதங்களுடன் ஏற்பட்ட மோதலால் பளபளப்பாக்கப்பட்டதும், தங்க உறையிலிருப்பதும், நெருப்பு போன்று பிரகாசமாக இருப்பதுமான இந்த அகன்ற வாள் யாருக்குச் சொந்தமானது? தங்கப்பொட்டுகள் நிறைந்ததும், எதிரிகளின் உடல்களை வெட்டவல்லதும், நஞ்சுமிக்கப் பாம்புகளின் மரணத் தீண்டல் கொண்டதும், எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுமான கரிய முனைகள் கொண்ட இந்த அழகிய கூன்வாள் யாருடையது?
ஓ! பிருஹந்நளா, என்னால் கேட்கப்படும் நீ, உண்மையைச் சொல்வாயாக. இந்த அற்புதப் பொருட்கள் அனைத்தையும் காணும் எனக்குப் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றான் {உத்தரன்}.
ஆயுத விளக்கம்! – விராட பர்வம் பகுதி 43-ஒவ்வொரு ஆயுதமும் யாருடையவை என்று உத்தரனுக்குப் பிருஹந்நளையான அர்ஜுனன் சொன்னது…
பிருஹந்நளை {அர்ஜுனன் உத்தரனிடம்} சொன்னாள், “நீ முதலில் விசரித்தது, எதிரிகள் படையைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் திறன் கொண்டதும், உலகம் பரந்த புகழ் கொண்டதுமான அர்ஜுனனின் வில்லான காண்டீவமாகும். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்தக் காண்டீவம் அர்ஜுனனுக்குச் சொந்தமான அனைத்து ஆயுதங்களிலும் உயர்ந்ததும் பெரியதுமாகும். தனியாகவே இது நூறாயிரம் ஆயுதங்களுக்குச் சமமானதாகும். நாடுகளின் எல்லைகளை விரிவு படுத்தும் ஆற்றல் இதற்குண்டு. மனிதர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய இருவரையும் இதைக் கொண்டே பார்த்தன் {அர்ஜுனன்} வெற்றிகொண்டான். தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரால் எப்போதும் வழிபடப்படுவதும், அற்புதமான வண்ணங்கள் பல கொண்டதும், பெரியதும், மிருதுவானதுமான இந்த வில்லில் ஒரு முடிச்சோ கறையோ எங்கும் இருக்காது.
சிவன், இதை {காண்டீவத்தை} ஆயிரம் {1000) வருடங்கள் வைத்திருந்தான். அதன்பிறகு பிரஜாபதி, இதை ஐநூற்றுமூன்று வருடங்கள் {503} வைத்திருந்தான். அதன் பிறகு, சக்ரன் {இந்திரன்}, இதை எண்பத்தைந்து {85} வருடங்கள் வைத்திருந்தான். அதன் பிறகு சோமன் {சந்திரன்}, இதை ஐநூறு {500} வருடங்கள் வைத்திருந்தான். அதன் பிறகு வருணன், இதை, நூறு {100} வருடங்கள் வைத்திருந்தான். கடைசியாக ஸ்வேதவாஹனன் [1] என்ற பட்டப் பெயர் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} இதை அறுபத்தைந்து {65} வருடங்கள் [2] வைத்திருந்தான். பெரும் சக்தியும், உயர்ந்த தெய்வீகப் பிறப்பும் கொண்ட இது {காண்டீவம்}, விற்கள் அனைத்திலும் சிறந்ததாகும். தேவர்களாலும் மனிதர்களாலும் கொண்டாடப்படும் இது {காண்டீவம்} அழகிய வடிவம் கொண்டதாகும். பார்த்தன் {அர்ஜுனன்}, இந்த அழகிய வில்லை வருணனிடம் இருந்து பெற்றான்.
அழகிய மேற்புறங்கள் கொண்டதும், தங்கப்பிடி கொண்டதுமான இந்த மற்றொரு வில்லைக் கொண்டுதான் எதிரிகளைத் தண்டிப்பவரும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பீமர் கிழக்குப் பகுதிகள் முழுமையையும் வென்றார். அழகிய வடிவமும், இந்திரகோபக இலச்சனைகள் கொண்டதுமான இந்த மற்றொரு வில், ஓ! விராடனின் மகனே {உத்தரா}, மன்னர் யுதிஷ்டிரருக்குச் சொந்தமானது. சுடர்விடும் பிரகாசத்துடன் அனைத்துப் புறங்களிலும் கதிரை அள்ளி வீசும் தங்கச் சூரியன்களைக் கொண்ட இந்த மற்றொரு வில் நகுலனுக்குச் சொந்தமானது. வண்டுகளின் வடிவத்தில் தங்கத்தாலான படங்கள், ரத்தினங்கள் மற்றும் கற்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இந்த வில் சகாதேவன் என்று அழைக்கப்படும் மாத்ரியின் மகனுடையது.
கத்தி போன்று கூர்மையானவையும், பாம்புகளின் நஞ்சு போல அழிவை உண்டாக்குபவையும், இறகுகள் கொண்டவையுமான இந்த ஆயிரம் {1000} கணைகளும், ஓ! விராடனின் மகனே {உத்தரா}, அர்ஜுனனுடையவையாகும். போர்க்களத்தில் இவற்றை எதிரிகள் மீது ஏவும்போது, இந்த வேகமான கணைகள் இன்னும் அதிகமாகப் பிரகாசித்து {எதிரிகளை அழித்த பிறகு} அழிவடையாமல் திரும்பும். கூரிய முனைகள் கொண்டவையும், எதிரி தலைவர்களை {அவர்களின் எண்ணிக்கையைக்} குறைப்பவையும், சந்திரப்பிறை போன்ற வடிவம் கொண்டவையுமான இந்த நீண்ட, தடித்த கணைகள் பீமருடையவை. புலிகளின் ஐந்து படங்களைச் சுமந்து, கல்லில் கூராக்கப்பட்டு, தங்க இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, மஞ்சள் நிறக் கணைகளைக் கொண்டிருக்கும் இந்த அம்பறாத்தூணி நகுலனுடையது. மாத்ரியின் புத்திசாலி மகன் {நகுலன்}, மேற்குப் பகுதிகள் முழுவதையும் இந்த அம்பறாத்தூணியைக் கொண்டுதான் வென்றான். சூரியப் பிரகாசம் கொண்டவையும், பல வண்ணங்களால் பூசப்பட்டவையும், எதிரிகளை ஆயிரக்கணக்கில் அழிக்கவல்லவையுமான இந்தக் கணைகள் சகாதேவனுடையவை.
நீண்ட இறகுகள் மற்றும் தங்கத் தலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், மூன்று முடிச்சுகள் கொண்டதுமான நீளம் குறைந்தவையும் நன்கு கடினமாக்கப்பட்டவையுமான இந்தத் தடித்த கணைகள் மன்னர் யுதிஷ்டிரருடையவை. தவளைப் படம் செதுக்கப்பட்டு, தவளையின் வாயைப் போன்ற தலை வடிவமைப்பு செய்யப்பட்டு, பலமானதாகவும், தாங்கமுடியாததாகவும் இருக்கும் இந்த நீண்ட வாள் அர்ஜுனனுடையது. புலித்தோலுறையில் இருப்பதும், நீண்டதும், தாங்கமுடியாததும், எதிரிகளுக்குப் பயங்கரமானதுமான இந்த வாள் பீமசேனருடையது. நல்ல வண்ணம் பூசப்பட்ட உறையில், தங்கக் கைப்பிடியுடன் இருக்கும் இந்த அழகிய வாள், கௌரவர்களில் விவேகியான நீதிமானான யுதிஷ்டிரருடையது. ஆட்டுத்தோலுறையில் இருப்பதும், பல அற்புதப் போர்முறைகளுக்கு உகந்ததும், தாங்கமுடியாததும், பலமிக்கதுமான இந்த வாள் நகுலனுடையது. மாட்டுத் தோலுறையில் இருப்பதும், பலமிக்கதும், தாங்கமுடியாததுமான இந்தப் பெரும் கூன்வாள் சகாதேவனுடையது” என்றாள் {பிருஹந்நளை}.
“நான் அர்ஜுனன்!” – விராட பர்வம் பகுதி 44-பிருஹந்நளை, தானே அர்ஜுனன் என்பதை உத்தரனுக்குச் சொல்வது; விராடனின் அலுவல்களில் ஈடுபட்டிருந்த பிற பாண்டவர்களின் அடையாளங்களையும் பிருஹந்நளை சொன்னது; உத்தரன் அர்ஜுனனின் பத்து பெயர்களையும் அதற்கான காரணங்களையும் சொன்னால்தான், இவையாவையும் தன்னால் உண்மை என்று நம்ப முடியும் என்று பிருஹந்நளையிடம் சொன்னது; அர்ஜுனன் தனது பெயர்களையும், அதற்கான காரணங்களையும் உத்தரனிடம் சொன்னது; உத்தரனின் அச்சம் விலகியது..
உத்தரன் {பிருஹந்நளையான அர்ஜுனனிடம்} சொன்னான், “வேகமான கரங்களும், உயர் ஆன்மாவும் கொண்ட பார்த்தனின் {அர்ஜுனனின்}, இந்த ஆயுதங்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையாகக் காண்பதற்கு அழகு மிகுந்தவையாக இருக்கின்றன என்பது நிச்சயம். ஆனால், பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன், குரு குலத்தின் யுதிஷ்டிரன், பாண்டுவின் {பிற} மகன்களான நகுலன், சகாதேவன், பீமசேனன் ஆகியோர் {இப்போது} எங்கே இருக்கின்றனர்? பகடையால் நாடிழந்தவர்களும், எதிரிகளை அழிப்பவர்களுமான அந்த உயர் ஆன்ம பாண்டவர்களைக் குறித்து ஒன்றும் கேள்விப்பட முடியவில்லையே. பகடைத் தோல்விக்குப் பிறகு பாண்டு மகன்களைக் காட்டுக்குத் தொடர்ந்து சென்றவளும், பாஞ்சால இளவரசியும், மங்கையரில் ரத்தினமுமான திரௌபதி {இப்போது} எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டான் {உத்தரன்}.
அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “பார்த்தன் என்றும் அழைக்கப்படும் நானே அர்ஜுனன். உனது தந்தையின் அரசவை {தலைமை} உறுப்பினராக இருப்பது யுதிஷ்டிரர் என்றும்; உனது தந்தையின் சமையற்காரனான வல்லவனே பீமர் என்றும்; குதிரை கண்காணிப்பாளனே நகுலன் என்றும்; மாட்டுக் கொட்டகையில் இருப்பவனே சகாதேவன் என்றும்; யார் பொருட்டுக் கீசகர்கள் கொல்லப்பட்டார்களோ, அந்தச் சைரந்திரியே திரௌபதி என்றும் அறிந்து கொள்” என்றான் {அர்ஜுனன்}.
உத்தரன் {அர்ஜுனனிடம்}, “நான் முன்பு கேள்விப்பட்டிருக்கும், பார்த்தனின் {அர்ஜுனனின்} பத்துப் பெயர்களை நீ கணக்கிட்டுச் சொல்லிவிட்டால், நான் இவை யாவையும் {உண்மையென} நம்புவேன்!” என்றான்.
அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! விராடனின் மகனே {உத்தரா}, நான் எனது பத்துப் பெயர்களை உனக்குச் சொல்கிறேன். அவற்றைக் கேட்டு, நீ ஏற்கனவே கேள்விப்பட்டதோடு ஒப்பீடு செய்து கொள். அவற்றைக் குவிந்த மனத்துடனும், நெருக்கமான கவனத்துடனும் கேள். அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்சு, விஜயன், கிருஷ்ணன் [1], சவ்யசச்சின், தனஞ்சயன் என்பவையே அவை” என்றான்.
உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “நீ விஜயன் என்றும் ஸ்வேதவாகனன் என்றும் எதனால் அழைக்கப்படுகிறாய் என்பதை உண்மையாகச் சொல். கிருஷ்ணன், அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, பீபத்சு என்றெல்லாம் உனக்கு ஏன் பெயர்கள் ஏற்பட்டன. எதற்காக நீ தனஞ்சயன் என்றும் சவ்யசச்சின் என்று அழைக்கப்படுகிறாய்? அந்த வீரனின் {அர்ஜுனனின்} பல்வேறு பெயர்களின் மூலத்தைக் குறித்து நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் உன்னால் சொல்ல முடிந்தால்தான் நான் உனது சொற்களில் நம்பிக்கை கொள்ள முடியும்” என்றான்.
அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்},
“செல்வத்தின் மத்தியில் நான் வாழ்ந்ததாலும், அனைத்து நாடுகளையும் அடக்கி, அவர்களது செல்வங்களைக் கொள்ளை கொண்டதாலும், என்னைத் தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.
ஒப்பற்ற மன்னர்களுடன் போர்புரியச் சென்று, அவர்களை வீழ்த்தாமல் (களத்தைவிட்டு) நான் திரும்பியதில்லை என்பதால், என்னை விஜயன் என்று அழைக்கிறார்கள்.
எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், என்னை ஸ்வேதவாஹனன் என்று அழைக்கிறார்கள்.
அடிவானில் உத்திர நட்சத்திரக்கூட்டம் {உத்தரப் பல்குனி} தோன்றிய நாளில் {உத்திரம் நட்சத்திரம் கொண்ட நாளில்} இமயத்தின் மார்பில் நான் பிறந்ததால், என்னைப் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.
முன்னர், வலிமைமிக்கத் தானவர்களுடன் நான் மோதும்போது, சூரியப்பிரகாசம் கொண்ட ஒரு மணிமுடியை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், நான் கிரீடி என்று பெயர் பெற்றேன்.
போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் பீபத்சு என்று நான் அறியப்படுகிறேன்.
காண்டீவத்தை எனது இருகரங்களாலும் இழுக்கவல்லவனாக நான் இருப்பதால், சவ்யசச்சின் {சவ்யசாசி} என்று தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் நான் அறியப்படுகிறேன்.
பூமியின் நான்கு எல்லைகளுக்குள் எனது நிறம் மிக அரிதானதாலும், எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.
அணுகமுடியாதவனாகவும், அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், பகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகனாகவும் இருப்பதால் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில், நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.
எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் [2] என்பது, கரிய தோலும் {நிறமும்} பெரும் தூய்மையும் கொண்ட சிறுவனான என் மீது பாசம் கொண்ட எனது தந்தையால் {பாண்டுவால்} எனக்கு வழங்கப்பட்டதாகும்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு பார்த்தனை {அர்ஜுனனை} நெருக்கமாக அணுகி, வணங்கிய விராடனின் மகன் {உத்தரன்}, “என் பெயர் பூமிஞ்சயன். நான் உத்தரன் என்றும் அழைக்கப்படுகிறேன். ஓ! பார்த்தரே, நற்பேறாலேயே நான் உம்மைக் காணும்படி நேர்ந்தது. ஓ! தனஞ்சயரே, உமக்கு நல்வரவு. ஓ! சிவந்த கண்கள் கொண்டவரே, யானையின் துதிக்கையைப் போன்ற இரு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {அர்ஜுனரே}, அறியாமையால் நான் சொன்ன யாவற்றையும் பொருத்தருள்வதே உமக்குத் தகும். மேலும், இதற்கு முன்பு, உம்மால் சாதிக்கப்பட்ட அற்புதமானவையும், கடினமானவையுமான செயல்களால், எனது அச்சங்கள் விலகிவிட்டன. உண்மையில், எனக்கு உம்மிடம் அதிகமான அன்பு உண்டாகியிருக்கிறது” என்றான் {உத்தரன்}.
“நீர் ஏன் அலியானீர்?” – விராட பர்வம் பகுதி 45-உத்தரன் அர்ஜுனனிடம் அவன் ஏன் அலியாக நேரிட்டது என்பது குறித்து வினவுவது; அர்ஜுனன் அளிக்கும் விளக்கம்; அர்ஜுனன் தனியாகவும், கௌரவர்கள் அணியாகவும் இருப்பதைச் சுட்டிக் காட்டி உத்தரன் அஞ்சுவது; அர்ஜுனன் உத்தரனுக்குத் துணிவூட்டி தேரை நடத்தச் செய்தது…
உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “ஓ! வீரரே {அர்ஜுனரே}, என்னைத் தேரோட்டியாகக் கொண்ட இந்தப் பெரிய தேரில் ஏறும். (எதிரிப்) படையின் எந்தப் பகுதிக்குள் நீர் ஊடுருவ வேண்டும்? உம்மால் கட்டளையிடப்படும் நான், உம்மை அங்கே அழைத்துச் செல்வேன்!” என்றான்.
அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அஞ்சுவதற்கான எந்தக் காரணமும் உனக்கில்லை. ஓ! பெரும் வீரா, நான் உனது எதிரிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பேன். ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, நீ வசதியாக {சுகமாக} இரு. நடக்கவிருக்கும் அடிதடிச்சண்டையில் {melee}, பயங்கரமான பெரிய சாதனைகளைச் செய்து, நான் உன் எதிரிகளுடன் போரிடுவேன். எனது தேரில் அந்த அம்பறாத்தூணிகள் அனைத்தையும் விரைந்து கட்டு. (அவற்றுக்கிடையில்) இருக்கும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், முனை பளபளப்பாக்கப்பட்டதுமான ஒரு வாளை {பட்டாக்கத்தியை} எடுத்துக் கொள்” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனனின் இந்தச் சொற்களைக் கேட்ட உத்தரன் அனைத்துச் சோம்பலையும் கைவிட்டான். மரத்தில் இருந்து விரைந்து இறங்கி, தன்னுடன் அர்ஜுனனின் ஆயுதங்களைக் கொண்டு வந்தான். பிறகு அர்ஜுனன் அவனிடம் {உத்தரனிடம்}, “நான் கௌரவர்களுடன் போரிட்டு, உனது பசுக்களை மீட்பேன். என்னால் பாதுகாக்கப்பட்ட நிலையில், இந்தத் தேரின் மேல் பாகம் உனக்கு ஒரு அரணாக இருக்கும். வழிகளும், குறுகிய சந்துகளும் மற்றும் தெருக்களின் இதர பகுதிகளும் அந்த அரண் {கோட்டை} கொண்ட நகரத்தின் மாளிகைகளாக இருக்கும். இந்த எனது கரங்கள், அதன் {அரணின்} மதில்களாகவும் நுழைவாயில்களாகவும் இருக்கும். இந்தத் திரிதண்டமும் {ஏர்க்கலப்பை போன்ற இந்தத்தண்டும்}, எனது அம்பறாத்தூணியும் எதிரிகள் அணுகாதபடி தற்காப்பு படைகளாக அமையும். ஒற்றையானதும், பிரம்மாண்டமானதுமான எனது இந்தப் பதாகையே {கொடியே}, உனது நகரத்தில் இருக்கும் அனைத்துக் கொடிகளுக்கும் சமமாக இருக்காதா? இந்த எனது வில்லின் நாண், கவண்பொறிகளாகவும் {Catapult – உண்டிவில் போன்று கோட்டை மதில்களில் பொருத்தப்படும் ஒரு பொறி}, தகரிகளாகவும் {பழங்காலத்தில் இருந்த பீரங்கி போன்ற ஒரு பொறி} செயல்பட்டு, முற்றுகையிட்டிருப்போரின் ஆவிகளின் மீது ஏவுகணைகளை உமிழும். தூண்டப்பட்ட எனது கோபம் அவ்வரணை வல்லமைமிக்கதாகச் செய்யும். {அப்போது எழும்} எனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி உனது தலைநகரின் பேரிகைகளை ஒத்திருக்காதா? காண்டீவம் தாங்கிய என்னால் ஓட்டப்படும் இந்தத் தேர், எதிரிப்படையால் வீழ்த்த முடியாததாக இருக்கும். ஓ! விராடனின் மகனே {உத்தரா}, உனது அச்சங்கள் விலகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.
உத்தரன் {அர்ஜுனனிடம்}, “நான் இவற்றைக் கண்டு இனியும் அஞ்சமாட்டேன். போரில், கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, இந்திரனுக்கும் உள்ள உறுதியைப் போன்ற உமது உறுதியை நான் அறிவேன். ஆனால் இவற்றை நினைத்துப் பார்க்கும்போது, நான் தொடர்ந்து மனக்குழப்பத்துக்கு உள்ளாகிறேன். ஒரு நிச்சயமான முடிவுக்கு வர இயலாத மூடனாக இருக்கிறேன். இவ்வளவு அழகிய அங்கங்களும், மங்கலக்குறிகளையும் கொண்ட ஒரு மனிதன், எத்தகு துயர்நிறைந்த சூழல் வந்தால் தனது ஆண்மையை இழப்பான் {அலியாவான்}? உண்மையில் உம்மைக் கண்டால் மகாதேவனோ {சிவனோ}, இந்திரனோ, கந்தர்வர்களின் தலைவனோ {குபேரனோ}, மூன்றாவது பாலினப் போர்வையில் {மாறுவேடத்தில்} வசிப்பது போலத் தெரிகிறது” என்றான் {உத்தரன்}.
அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “நான் எனது அண்ணனின் {யுதிஷ்டிரரின்} ஆணையை ஏற்றுக் கொண்டு, ஓராண்டு முழுவதும் இந்த நோன்பை நோற்று வருகிறேன் என்பதை உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {உத்தரா}, உண்மையில் நான் அலியில்லை. ஆனால், இன்னொருவரின் {ஊர்வசியின்} விருப்பத்திற்கு {சாபத்துக்கு} அடிபணிந்தும், அறத்தகுதிகளில் விருப்பம் கொண்டுமே, நான் இந்த அலித்தன்மையேற்கும் நோன்பை நோற்று வந்தேன். ஓ! இளவரசே {உத்தரா}, நான் இப்போது அந்த நோன்பை முடித்துவிட்டேன் என்பதை அறிந்து கொள்” என்றான் {அர்ஜுனன்}.
உத்தரன் {அர்ஜுனனிடம்}, “இப்போது என் சந்தேகம் முற்றிலும் ஆதாரமற்றது என்று என்னைக் காணச் செய்ததால், ஒரு மகத்தான உதவியை இன்று நீர் எனக்குச் செய்திருக்கிறீர். உண்மையில், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, உம்மைப் போன்ற ஒரு மனிதன் அலியாக இருக்க முடியாது. போர்க்களத்தில் எனக்கு இப்போது ஒரு கூட்டாளியைப் பெற்றுவிட்டேன். என்னால் இப்போது தேவர்களுடன் கூடப் போரிட முடியும். எனது அச்சங்கள் விலகின. நான் என்ன செய்ய வேண்டும்? எனக்குக் கட்டளையிடும். கற்ற ஆசானால் தேரோட்டப் பயிற்றுவிக்கப்பட்ட நான், ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனரே}, எதிரிப் படைத்தலைவர்களின் தேர்களை உடைக்கவல்ல உமது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பேன். ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனரே}, வாசுதேவனின் தாருகனைப் போன்றோ, சக்ரனின் {இந்திரனின்} மாதலி போன்றோ, நான் திறமைமிக்கத் தேரோட்டி {ரதசாரதி} என்பதை அறிந்து கொள்ளும்.
(உமது தேரின்) வலதுகை துருவத்தில் {நுகத்தடியில்} பூட்டப்பட்டிருப்பதும், ஓடும்போது {அதன்} குளம்புகள் {பாதம்போன்ற அடிக்கால்கள்} தரையில் படுவது அரிதாகவே தெரிவதுமான இந்தக் குதிரை, கிருஷ்ணனின் சுக்ரீவத்திற்கு {சுக்ரீவம்} ஒப்பாயிருக்கிறது. தன் இனங்களில் முதன்மையானதும், இடது துருவத்தில் {நுகத்தடியில்} பூட்டப்பட்டதுமான இந்த மற்றொரு அழகிய குதிரையை, மேகபுஷ்பத்துக்கு {மேகபுஷ்பம்} இணையான வேகம் கொண்டதாக நான் கருதுகிறேன். தங்கக்கவசம் பூண்டதும், இடதுபுறத்தின் பின்புறத்தில் பூட்டப்பட்டதுமான இந்த (மூன்றாவது) அழகிய குதிரையை, வேகத்தில் சைப்பியத்திற்கு {சைப்பியம்} நிகரானதாகவும், அதைவிடப் பலத்தில் மேன்மையானதாகவும் நான் கருதுகிறேன். வலப்புறத்தின் பின்புறத்தில் பூட்டப்பட்டிருக்கும் இந்த (நான்காவது) அழகிய குதிரையை, வேகத்திலும் பலத்திலும் வலாஹகத்திற்கு {வலாஹகம்} மேன்மையானதாக நான் கருதுகிறேன். உம்மைப்போன்ற ஒரு வில்லாளியைப் போர்க்களத்தில் சுமப்பதற்கு இந்தத் தேர் தகுதிவாய்ந்ததாக இருக்கிறது. நீரும் இந்தத் தேரில் இருந்து போரிடத் தகுதி வாய்ந்தவராக இருக்கிறீர். இதைதான் நான் நினைக்கிறேன்” என்றான் {உத்தரன்}.
வைம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு பெரும் சக்தி கொண்ட அர்ஜுனன், தனது கரங்களில் இருந்த கடகங்களைக் {சங்கு வளையங்களைக்} களைந்து, தங்கத்தால் இழைக்கப்பட்ட அழகிய கையுறைகளை அணிந்து கொண்டான். பிறகு, சுருண்ட தனது கரிய கூந்தலை, ஒரு வெண்துணியால் கட்டினான். பிறகு முகம் கிழக்கு பார்த்தபடி, அந்த அற்புதத் தேரில் அமர்ந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தனது உடலைச் சுத்திகரித்து, ஆன்மாவைக் குவித்து, தன் மனதில் தனது அனைத்து ஆயுதங்களையும் நினைவுகூர்ந்தான் {தியானித்தான்}. அனைத்து ஆயுதங்களும் வந்து, அரசமகனான பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! ஒப்பற்றவனே {அர்ஜுனா}, நாங்கள் இங்கே இருக்கிறோம். ஓ! இந்திரனின் மகனே, நாங்கள் உனது பணியாட்கள்” என்று சொல்லின. அவற்றை வணங்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, அவற்றைத் தனது கரங்களில் பெற்றுக் கொண்டு, அவற்றிடம் {அந்த ஆயுதங்களிடம்}, “எனது நினைவில் வசிப்பீர்களாக” என்றான் {அர்ஜுனன்}.தன் அனைத்து ஆயுதங்களையும் அடைந்த அந்த வீரன் {அர்ஜுனன்} மகிழ்ச்சியாகத் தெரிந்தான். பிறகு, விரைந்து தனது வில்லான காண்டீவத்தில் நாணேற்றி, அதில் நாணொலி எழுப்பினான். அவ்வில்லின் நாணொலி இரு பலமிக்கக் காளைகளின் மோதலைப் போல் அதிக ஒலியுடன் இருந்தது. அப்படிப் பூமியை நிறைத்த அவ்வொலி பயங்கரமானதாக இருந்தது. எல்லாப்புறங்களிலும் வீசிய காற்று உக்கிரமாக வீசியது-விழுந்து கொண்டிருந்த விண்கற்களின் மழை அடர்த்தியாக இருந்தது [1]. அனைத்துப்புறங்களும் இருளில் மூழ்கின. வானத்தில் பறவைகள் அங்குமிங்கும் பறந்தன. பெருமரங்கள் நடுங்கத் தொடங்கின [2]. இடியின் வெடிச்சத்தம் பெருவொலியாக இருந்தது. தனது தேரில் இருந்து விற்களில் சிறந்த தனது வில்லின் நாணில், அர்ஜுனன் எழுப்பிய நாணொலியே அது என்பதை அவ்வொலியில் இருந்தே குருக்கள் {கௌரவர்கள்} அறிந்து கொண்டனர்.
பிறகு உத்தரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாண்டவர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, நீர் தனியாக இருக்கிறீர். இந்தப் பலமிக்கத் தேர்வீரர்களோ பலராக இருக்கின்றனர். அனைத்து வகை ஆயுதங்களிலும் திறம்பெற்ற இந்த அனைவரையும் போர்க்களத்தில் நீர் எப்படி வெல்லப்போகிறீர்? ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனரே}, நீர் ஒரு தொண்டருமற்றிருக்கிறீர்; அதே வேளையில் கௌரவர்களுக்குப் பலர் இருக்கின்றனர். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {அர்ஜுனரே}, உம்மருகில் இருக்கும் நான் இதற்காகவே அச்சத்தால் பீடிக்கப்படுகிறேன்” என்றான் {உத்தரன்}.
உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவனை {உத்தரனை} நோக்கி, “ஓ! வீரா {உத்தரா}, அஞ்சாதே. கோஷயாத்திரை நிகழ்வில், வலிமைமிக்கக் கந்தர்வர்களுடன் நான் போரிட்ட போது, நட்புடன் என்னைப் பின்பற்றி வந்த {தொண்டர்} யாரை பெற்றிருந்தேன்? காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} தேவர்கள் மற்றும் தானவர்கள் பலருடன் பயங்கர மோதலில் ஈடுபட்ட எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்? வலிமைமிக்க நிவாடகவசர்கள் மற்றும் பௌலோமர்களுடன் தேவர்களின் தலைவன் {இந்திரன்} சார்பாக நான் போரிட்ட போது, எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்? ஓ! குழந்தாய் {உத்தரா}, பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} சுயம்வரத்தில் எண்ணற்ற மன்னர்களுடன் நான் மோதிய போது, அந்தப்போர்க்களத்தில் எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்?
ஆசான் துரோணராலும், சக்ரனாலும் {இந்திரனாலும்}, வைஸ்ரவணனாலும், யமனாலும், வருணனாலும், அக்னியாலும், கிருபராலும், மதுகுலத்தின் கிருஷ்ணனாலும், பினகைதாங்கியாலும் (சிவனாலும்) ஆயுதங்களில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கும்போது, நான் ஏன் இவர்களுடன் போரிட முடியாது? எனது தேரை விரைந்து நடத்து. உனது இதய நோய் அகலட்டும்” என்றான் {அர்ஜுனன்}.
மீண்டும் எச்சரித்த துரோணர்! – விராட பர்வம் பகுதி 46-அர்ஜுனனின் சங்கொலியைக் கேட்டு உத்தரன் நடுங்குவது; அர்ஜுனனின் குதிரைகள் தரையில் விழுவது; அர்ஜுனன் அவற்றை நிமிர்த்தி, உத்தரனுக்குத் துணிவூட்டியது; துரோணர் கண்ட துர்நிமித்தங்கள்; துரோணர் துரியோதனனை எச்சரிப்பது; பிறகு பசுக்களை முன்னே விட்டு, அனைவரையும் போருக்குத் தயாராக அணிவகுக்கச் செய்யும்படி துரோணர் துரியோதனனிடம் கோருவது…வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உத்தரனைத் தனது தேரோட்டியாகக் கொண்டு, அந்த வன்னிமரத்தை வலம் வந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனது ஆயுதங்கள் அத்தனையையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சிங்க உருவம் பொறிக்கப்பட்ட பதாகையை இறக்கி, வன்னிமரத்தின் அடியில் வைத்த அந்தப் பலமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, தனது தேருக்கு உத்தரனைத் தேரோட்டியாக வைத்துக் கொண்டு புறப்பாட்டான். விஸ்வகர்மனால் வகுக்கப்பட்ட தெய்வீக மாயையில் உருவானதும், சிங்க வால் கொண்ட குரங்கின் உருவம் தாங்கியதுமான தனது தங்கப்பதாகையை அந்தத் தேரில் ஏற்றினான். உண்மையில் அவன் {அர்ஜுனன்} அக்னி அளித்த கொடையை எண்ணிப் பார்த்தவுடனேயே, அவனது {அர்ஜுனனின்} விருப்பத்தை அறிந்து கொண்டு, மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயிரினங்களை அந்தப் பதாகையில் இடம்பெறச் செய்தான் {விஸ்வகர்மன்}.
அழகிய தயாரிப்பான அந்தக் கொடியையும், அதனுடன் இணைக்கப்பட்ட அம்பறாத்தூணிகளையும் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக அழகுடையதுமான அந்த அற்புத கொடிக்கம்பம் வானத்தில் இருந்து திடீரென அவனது தேரில் விழுந்தது. அந்தப் பதாகை {கொடி}, தனது தேருக்கு வந்ததைக் கண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, அதை முறையாக வலம் வந்தான். குரங்கு பதாகை கொண்ட குந்தியின் மகனும், ஸ்வேதவாகனன் என்று அழைக்கப்பட்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, உடும்புத் தோலாலான விரலுறைகளை அணிந்து கொண்டு, தனது வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டான்.
பெரும் பலம் கொண்டவனான அந்த எதிரிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தனது பெரிய சங்கை எடுத்துப் பலமாக ஊதி, எதிரிகளை மயிர்ச்சிலிர்க்கச் செய்யும் இடியின் ஓசையை எழுப்பினான். அவ்வொலியைக் கேட்ட, வேகம் கொண்ட அந்தக் குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கித் தரையில் விழுந்தன. பெரிதும் அஞ்சிய உத்தரனும் கீழே தேர்க்காலில் அமர்ந்தான். பிறகு குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தானே கடிவாளத்தைப் பிடித்து, குதிரைகளை எழுப்பி, அவற்றைச் சரியான நிலைக்குக் கொண்டு வந்தான்.
பிறகு உத்தரனை ஆரத்தழுவி, அவனுக்கு உற்சாகமூட்டும் வகையில், “ஓ! இளவரசர்களில் முதன்மையானவனே {உத்தரா}, அஞ்சாதே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, பிறப்பால் நீயொரு க்ஷத்திரியன். ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, பிறகேன் எதிரிகளுக்கு மத்தியில் நீ உற்சாகமிழக்கிறாய்? பல சங்குகளின் ஒலிகளையும், பல பேரிகைகளையும், போருக்காக அணிவகுக்கப்பட்ட தலைவர்களுக்கு மத்தியில் பல யானைகளின் பிளிறல்களையும் கர்ஜனைகளையும் இதற்கு முன்னர் நீ கேட்டிருப்பாயே. எனினும், ஏதோ சாராரண மனிதனைப் போல, இந்தச் சங்கொலியால் உற்சாகமிழந்து, கலக்கமடைந்து, நீ ஏன் பயந்து போயிருக்கிறாய்?” என்றான் {அர்ஜுனன்}.
உத்தரன் {அர்ஜுனனிடம்}, “பல சங்கொலிகளையும், படையணியில் நிறுத்தப்பட்டிருக்கும் பல யானைகளின் பிளிறல்களையும் கர்ஜனைகளையும் நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இத்தகு சங்கொலியை நான் எப்போதும் கேட்டதில்லை. மேலும் இது போன்ற ஒரு பதாகையை நான் எப்போதும் கண்டதில்லை. இது போன்ற நாணொலியை இதற்கு முன்னர் நான் எப்போதும் கேட்டதில்லை. அய்யா, உண்மையில், இந்தச் சங்கொலியாலும், வில்லின் நாணொலியாலும், இந்தப் பதாகையில் இருக்கும் உயிரினங்களின் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட கதறல்களாலும், இந்தத் தேரிச் சக்கரங்களின் சடசடப்பொலியாலும், எனது மனம் மிகவும் குழப்பமடைந்துள்ளது. திசை குறித்த எனது பார்வையும் குழம்பிப் போயிருக்கிறது. எனது இதயம் வலியால் பீடிக்கப்பட்டிருக்கிறது. முழு வானமே இந்தப் பதாகையால் மூடப்பட்டது போல எனக்குத் தெரிகிறது. அனைத்தும் எனது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதைப் போல எனக்குத் தோன்றுகிறது. காண்டீவத்தின் நாணொலியால் எனது காதும் செவிட்டு நிலையை அடைந்துவிட்டது” என்றான் {உத்தரன்}.
அர்ஜுனன் {உத்தரனிடம்}, “நான் மீண்டும் எனது சங்கை ஊதப் போகிறேன். ஆகையால், பாதங்களைத் தேரில் அழுத்தி உறுதியாக நில். கடிவாளத்தை இறுக்கமாக பற்றிக் கொள்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு அர்ஜுனன் மீண்டும் தனது சங்கை ஊதினான். அந்தச் சங்கு, எதிரிகளைத் துன்பத்தால் நிறைத்து, நண்பர்களின் இன்பத்தை அதிகரித்தது. மலைகளைப் பிளப்பது போலவும், மலைக்குகைகளையும், திசைப்புள்ளிகளையும் துளைப்பது போலவும் அவ்வொலி பெருத்த ஒலியாக இருந்தது. அந்தச் சங்கொலியாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் பூமி நடுங்குவதாகத் தெரிந்தது. உத்தரனின் அச்சத்தைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளித்தான்.
அதே வேளையில் துரோணர், “தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும், மேகங்கள் வானத்தை மூடியிருக்கும் விதத்தாலும், இந்தப் பூமியே நடுங்குகிறது. இந்தப் போர்வீரன் சவ்யசச்சினை {அர்ஜுனனைத்} தவிர வேறு யாருமில்லை. நமது ஆயுதங்கள் ஒளிரவில்லை; நமது குதிரைகள் உற்சாகமிழந்திருக்கின்றன; நமது நெருப்புகளுக்கு எரிபொருள் கொடுக்கப்பட்டாலும் அவை சுடர்விடவில்லை. இவையாவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. நமது விலங்குகள் அனைத்தும் சூரியனை நோக்கி வெறித்துப் பார்த்தபடி, பயங்கரமாக அலறுகின்றன. நமது பதாகைகளில் காக்கைகள் அமர்கின்றன. இவையாவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. இதோ, அது {நரி} அடிபடாமல் தப்பி விட்டது
நமது படைகளுக்கு மத்தியில் பரிதாபமாக ஊளையிட்டபடியே நரி ஓடுகிறது.
இவையாவும் கடுமையான பேரிடரை முன்னறிவிக்கின்றன. உங்கள் அனைவருக்கும் மயிர்ச்சிலிர்த்திருக்கிறது. நிச்சயமாக, இது போரில் க்ஷத்திரியர்களுக்கு ஏற்படும் பெரும் அழிவை முன்குறிக்கிறது. ஒளிகொண்ட அனைத்துப் பொருட்களும் மங்கியிருக்கின்றன; விலங்குகளும் பறவைகளும் பார்ப்பதற்குக் கடுமையாக இருக்கின்றன; க்ஷத்திரிய அழிவுக்கு அறிகுறியாகப் பல பயங்கர அத்தாட்சிகள் சாட்சியாகக் காணப்படுகின்றன. இந்தச் சகுனங்கள், நமக்கு மத்தியில் நிகழப்போகும் பெரும் அழிவை முன்னறிவிக்கின்றன. ஓ! மன்னா {துரியோதனா}, எரியும் விண்கற்களால் உனது அணிகள் குழப்பத்துக்கு ஆழ்வதாகத் தெரிகிறது.
உனது விலங்குகள் உற்சாகமிழந்ததாகத் தெரிகிறது. அவை அழுகின்றன. கழுகுகளும் பறவைகளும் உனது துருப்புகளைச் சுற்றிப் பறக்கின்றன. பார்த்தனின் கணைகளால் உனது படை துன்புறுவதைக் கண்டு நீ வருந்த வேண்டியிருக்கும். உண்மையில், நமது அணிகள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே தெரிகிறது. அவர்களில் யாரும் போரிட ஆவலாக இல்லை. நமது வீரர்களின் முகங்கள் அனைத்தும் மங்கிப்போய் உணர்விழந்து இருக்கின்றன. பசுக்களை முன்னே விட்டு, நமது வீரர்களைப் போருக்காக அணிவகுக்கச் செய்து, தாக்குவதற்குத் தயாராக நாம் இங்கேயே நிற்கலாம்” என்றார் {துரோணர்}.
துரோணரை நிந்தித்த கர்ணன்! – விராட பர்வம் பகுதி 47-பாண்டவர்கள் குறித்த காலத்திற்கு முன்பே வெளிப்பட்டதாகத் துரியோதனன் பீஷ்மரிடம் சுட்டிக் காட்டுவது; துரியோதனனும் கர்ணனும் துரோணரை நிந்திப்பது; துரோணரை அலட்சியப்படுத்தி, படைகளைப் போருக்காக அணிவகுக்கச் செய்யும்படி கர்ணன் துரியோதனனை வேண்டுவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு மன்னன் துரியோதனன் போர்க்கள வீரர்களில் புலிகளான பீஷ்மர், துரோணர் மற்றும் பெருந்தேர் வீரரான கிருபரிடம் இச்சொற்களில், “நான், கர்ணன் ஆகிய இருவரும் ஆசான்களிடம் இதைச் {ஏற்கனவே} சொல்லியிருக்கிறோம் [1]. அதை ஒருமுறை சொல்லி மனநிறைவு கொள்ளவில்லையாதலால், அதை மீண்டும் குறிப்பிடுகிறேன். பனிரெண்டு {12} ஆண்டுகளை நாடுகளிலும் கானகங்களிலும் கழிப்பது என்பதும், மேலும் ஒரு வருடத்தை நாமறியாதவாறு கழிப்பது என்பதும், நமது அறிவுக்கு எட்டிய வகையில் (பகடையாட்டத்தின்போது) பாண்டு மகன்கள் (பாண்டவர்கள்) கொடுத்த வாக்குறுதிகளாகும்.
அந்தப் பதிமூன்றாவது {13} வருடம் நடப்பில் இருக்கிறது. அஃது இன்னும் முடியவில்லை. எனவே, இன்னும் தலைமறைவாக வாழவேண்டிய பீபத்சு {அர்ஜுனன்}, நம் முன்னிலையில் தோன்றிவிட்டான். குறித்த வனவாச காலம் முடிவதற்கு முன்னரே பீபத்சு {அர்ஜுனன்} வந்திருக்கிறான் என்றால், பாண்டவர்கள் மற்றுமொருமுறை, மேலும் பனிரெண்டு வருடங்களைக் காட்டில் கழிக்கவேண்டும். (அவர்கள்) (பாண்டவர்கள்) மறந்துவிட்டார்களா? அரசாட்சி மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டு இதை அறியாமல் இருக்கிறார்களா? அல்லது இதில் நமது தவறு {ஏதேனும்} உள்ளதா?என்பதையும், (அவர்கள் (பாண்டவர்கள்) வாக்குறுதி கொடுத்த அந்தக் குறித்த காலத்தின்) குறைவையும் மிகுதியையும் பீஷ்மர் கணக்கிடுவதே தகும். ஆசைக்குகந்த பொருள் அடையப்படுதல் மற்றும் அடையாது போகுதல் ஆகிய இரு நிலைகளில் ஒன்றில் {எப்போதும்} சந்தேகம் ஏற்படும். ஒருவழியில் தீர்மானிக்கப்படுவது, முடியும்போது எப்போதும் வேறுபடுகிறது [2]. ஒழுக்கவியலாளர்கள் {moralists} கூட, தங்கள் சொந்தச் செயல்களை ஆராய்வதில் குழப்பமடைகின்றனர் [3]. என்றான் {துரியோதனன்}.
நம்மைப் பொறுத்தமட்டில், மத்ஸ்யர்களிடம் போரிடவும், வடக்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் அவர்களது பசுக்களைப் பிடிக்கவும் இங்கே வந்திருக்கிறோம். அதே வேளையில், அர்ஜுனன் இங்கே வந்தான் என்றால், என்ன தவறு நம்முடன் இணையும்? {இதில் நமது தவறு என்ன?}. மத்ஸ்யர்கள் இழைத்த எண்ணிலடங்கா கொடுமையெல்லாம் நமக்குச் சொல்லப்பட்டதால், திரிகார்த்தர்கள் சார்பாக நாம் மத்ஸ்யர்களை எதிர்த்துப் போரிட இங்கே வந்திருக்கிறோம். அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த திரிகார்த்தர்களுக்கு இதன் காரணமாகவே நாம் துணைக்கு வருவதாக வாக்களித்தோம். மத்ஸ்யர்களின் அபரிமிதமான செல்வமான பசுக்களை ஏழாம் சந்திர நாளில் {சப்தமியில்}, மத்திய வேளையில், அவர்கள் {திரிகார்த்தர்கள்} முதலில் பிடிப்பதென்பதும், அப்படி முதலில் எடுத்துச் செல்லப்பட்ட பசுக்களைத் தொடர்ந்து மத்ஸ்ய மன்னன் {விராடன்} செல்லும்போது, எட்டாம் சந்திர நாளின் {அஷ்டமியின்} சூரிய உதய நேரத்தில், இந்தப் பசுக்களை நாம் பிடிக்க வேண்டும் என்பதும் நாம் அவர்களுடன் {திரிகார்த்தர்களுடன்} ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தமாகும்”, என்றான் {துரியோதனன்}.
“திரிகார்த்தர்கள் பசுக்களை {இங்கே} இப்போது கொண்டு வரலாம்; அல்லது தோற்றுவிட்ட காரணத்தால், மத்ஸ்யர்களின் மன்னனுடன் (விராடன்) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கலாம்; அல்லது, திரிகார்த்தர்களைத் துரத்திவிட்ட மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்}, இம்மக்களின் தலைமையேற்று, கடும் வீரர்களைக் கொண்ட தனது மொத்தப் படையையும் அழைத்துக் கொண்டு, {இங்கே} காட்சியில் தோன்றி, நம்மீது இரவு தாக்குதல் நடத்த முன்னேறிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஏதோ ஒரு சக்திமிக்கத் தலைவன் நம்மை வீழ்த்துவதற்காக முன்னேறி வந்து கொண்டிருக்கலாம். அல்லது மத்ஸ்யர்களின் மன்னனே {விராடனே} கூட வந்து கொண்டிருக்கலாம். ஆனால், {வருவது} மத்ஸ்யர்கள் மன்னனாக இருப்பினும், பீபத்சுவாக {அர்ஜுனனாக} இருப்பினும் நாம் அனைவரும் {அவனிடம்} போரிட வேண்டும். இதுவே நமது வாக்காகும்”, என்றான் {துரியோதனன்}.
“தேர்வீர்களில் முதன்மையான இந்தப் பீஷ்மர், துரோணர், கிருபர், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அனைவரும் ஏன் துக்கத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் போலத் தங்கள் தேர்களில் அமர்ந்திருக்கிறார்கள்? தற்போது போரிடுவதைத் தவிரச் சிறந்தது எதுவும் கிடையாது. எனவே, உங்கள் மனங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நாம் பிடித்திருக்கும் கால்நடைக்காக வஜ்ரதாங்கியிடமோ {இந்திரனிடமோ}, ஏன் யமனிடமோ கூட ஒரு மோதல் ஏற்பட்டால், {இங்கே இருக்கும்} யார் ஹஸ்தினாபுரத்தை அடைய நேரிடும்? (எதிரியின்) குதிரைப்படையே தப்புவது சந்தேகம் எனும்போது, கணைகளால் துளைக்கப்படும் காலாட்படை வீரர்கள் ஆழ்ந்த கானகத்திற்குள் புறமுதுகிட்டோடி உயிருடன் எப்படித் தப்பிக்க முடியும்?” என்றான் {துரியோதனன்}.
துரியோதனனின் இச்சொற்களைக் கேட்ட கர்ணன் {துரியோதனனிடம்} , “ஆசானை {துரோணரை} அலட்சியம் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய். அவர் {துரோணர்}, பாண்டவர்களின் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டு, நமது இதயங்களில் அச்சமூட்டுகிறார். அர்ஜுனனிடம் அவர் {துரோணர்} கொண்ட பாசம் மிகப் பெரிதென நான் காண்கிறேன். அவன் {அர்ஜுனன்} வருவதைப் பார்த்தாலே, அவனது புகழை இவர் பாடுகிறார். நமது துருப்புகள் உடையாதிருக்க உரிய ஏற்பாடுகளைச் செய். {அர்ஜுனனுடைய} குதிரைகளின் கனைப்பொலியைக் கேட்டே துரோணர் அனைவரையும் குழப்பிவிடுகிறார். இந்த வெப்பகாலத்தில் தொலைவான நிலத்தில் இருக்கும் இந்தப் பெரும் வனத்திற்கு மத்தியில் இந்தத் துருப்புகள் வந்திருக்கின்றன. எனவே அவை குழப்பமடைந்து எதிரிகளிடம் வீழாமல் இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்.
நமது ஆசானுக்குப் {துரோணருக்கு} பிடித்தவர்களில் சிறந்தவர்களாக எப்போதுமே பாண்டவர்கள் இருக்கின்றனர். தன்னலம் கொண்ட பாண்டவர்கள் நமக்கு மத்தியில் துரோணரை நிறுத்தியிருக்கின்றனர். உண்மையில், இவர் தனது பேச்சால் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறார். ஒருவனது குதிரைகளின் கனைப்பொலியை மட்டுமே கேட்டு, யாரால் ஒரு மனிதனை இப்படிப் போற்ற முடியும்? நடந்தாலும், நின்றாலும் எப்போதும் குதிரைகள் கனைக்கவே செய்யும்; காற்று எல்லாக் காலங்களிலும் வீசத்தான் செய்கிறது. இந்திரன் எப்போதும் மழையைப் பொழிந்து கொண்டுதான் இருக்கிறான். மேகங்களின் கர்ஜனை அடிக்கடி கேட்கப்பட்டே வருகிறது. இவை யாவற்றுக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்ன செய்தான்? இவற்றுக்காக அவன் {அர்ஜுனன்} ஏன் புகழப்பட வேண்டும்? எனவே, (துரோணரின் பங்குக்கு), அவர் அர்ஜுனனுக்கு நல்லது செய்ய விரும்புகிறார் அல்லது கோபத்தால் நம்மீது வெறுப்புக் கொண்டிருக்கிறார்”, என்றான் {கர்ணன்}.
விவேகிகளும், பாவமற்றவர்களும், அனைத்துயிர்களிடமும் கருணை கொண்டவர்களும் தான் ஆசான்கள் ஆவார்கள். எனினும், ஆபத்துக் காலங்களில் அவர்களிடம் {ஆசான்களிடம்} எப்போதும் ஆலோசிக்கக் கூடாது. பேசும் வல்லமை பெற்ற கற்ற மனிதர்கள், ஆடம்பர மாளிகைகளிலும், சபைகளிலும், இன்பத் தோட்டங்களிலுமே தங்கள் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. சபைகளில் அற்புதமான காரியங்களைச் செய்யும் கற்ற மனிதர்கள், அங்கேயோ அல்லது வேள்வி பொருட்கள் சரியாக வைத்து கழுவப்பட வேண்டிய இடங்களிலோதான் தங்கள் நிலையை அடைகின்றனர். பிறர் குறை அறிவது, மனிதர்களின் குணங்களைப் படிப்பது, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களின் அறிவியல், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுகள் மற்றும் பசுக்களின் நோய்களைக் குணப்படுத்துவது, கட்டடங்கள் மற்றும் நுழைவாயில்களைத் திட்டமிடுவது, உணவு மற்றும் பாணங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றிலேயே உண்மையில் கற்ற மனிதர்கள் தங்கள் நிலையை அடைகின்றனர். எதிரியின் வீரத்தைப் புகழும் கற்ற மனிதர்களை அலட்சியம் செய்து, அவ்வெதிரி அழிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய். பசுக்களைப் பாதுகாப்பாக நிறுத்தி, போரிடுவதற்காக இந்தத் துருப்புகளை அணிவகுக்கச் செய். எதிரியிடம் நாம் போரிடும் வகையில், உரிய இடங்களில் காவலர்களை நிறுத்து” என்றான் {கர்ணன்}.
கர்ணனின் சொற்கள்! – விராட பர்வம் பகுதி 48-தான் அர்ஜுனனை அடிக்கப் போகும் விதத்தைக் கர்ணன் விவரிப்பது…
கர்ணன் {துரியோதனனிடம்} சொன்னான், “இந்த அருளப்பட்டவர்கள், அச்சத்தில் இருப்பவர்களாக, துயரத்தில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியாதவர்களாக, போர் செய்ய விருப்பமில்லாதவர்களாக இருப்பதைக் காண்கிறேன். வருவது மத்ஸ்யர்களின் மன்னனாக {விராடனாக} இருந்தாலும், பீபத்சுவாக {அர்ஜுனனாக} இருந்தாலும், பெருகிவரும் கடலைத் தடுக்கும் கரைகளைப் போல நான் அவனைத் தடுப்பேன். எனது வில்லில் இருந்து அடிக்கப்படும் இந்த நேரான பறக்கும் கணைகள், சீறிச் செல்லும் பாம்புகளைப் போல இலக்குத் தப்பாதவையாகும். எனது இலகுவான கரங்களால் அடிக்கப்படும் இந்தக் கூரிய முனைகளும், தங்க இறகுகளும் கொண்ட கணைகள், வெட்டுக்கிளிகளால் மூடப்படும் மரம் போலப் பார்த்தனை {அர்ஜுனனை} எல்லாப்புறங்களிலும் மூடும். இந்த இறகு படைத்த கணைகளால் அழுத்தப்படும் இந்த வில்லின் நாண், தோலாலான எனது கையுறைகளால் ஒலி எழுப்பும். அதனால் கேட்கப்படும் ஒலி இரு முரசுகளின் ஒலியை ஒத்திருக்கும்.
(கடந்த) பதிமூன்று {13} ஆண்டுகளாகத் தவ நோன்புகளில் ஈடுபட்ட பீபத்சுவால் {அர்ஜுனனால்}, இந்த மோதலில் என்னை மென்மையாகவே தாக்க முடியும். நற்குணங்கள் கொண்ட அந்தணனாக மாறியிருக்கும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, என்னால் அடிக்கப்படும் ஆயிரம் கணைகளை அமைதியாகத் தாங்கிக் கொள்வதற்குத் தகுந்த மனிதனாக மாறியிருக்கிறான். உண்மையில், இந்த வலிமைமிக்க வில்லாளி மூவுலகங்களிலும் கொண்டாடப்படுகிறான். மனிதர்களில் முதன்மையான அந்த அர்ஜுனனுக்கு, நானும், எந்த வகையிலும் சளைத்தவனல்ல. என்னால் அடிக்கப்படும் கழுகின் இறகுகளைக் கொண்ட எனது தங்கக் கணைகள் மின்மினி பூச்சிகள் மொய்ப்பதைப் போல இன்று வானத்தில் தெரியட்டும்.
போர்க்களத்தில் அர்ஜுனனைக் கொன்று, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} நான் வாக்குறுதி அளித்திருந்ததும், திரும்பச் செலுத்துவதற்குக் கடினமானதுமான எனது கடனை இன்று செலுத்துவேன். எனது வில்லில் இருந்து அடிக்கப்படும் நேரான கணைகளின் பற்களுக்கிடையில் நிற்பதற்குத் தேவர்களிலோ அசுரர்களிலோ யாரும் இல்லையெனும்போது, வேறு எந்த மனிதன் இருக்க முடியும்? இறகு படைத்து, அழுந்திய கணுக்களுடன் பறக்கும் எனது கணைகள் மின்மினிப் பூச்சிகளாக வானத்தில் தெரியட்டும். இந்திரனின் வஜ்ரத்தைப் போல அவன் கடினமாக இருந்தாலும், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} சக்தியை அவன் {அர்ஜுனன்} பெற்றிருந்தாலும், எரிகொள்ளிகளைக் கொண்டு ஒரு யானையைத் துன்புறுத்துவதைப் போல, நான் இன்று நிச்சயம் பார்த்தனை {அர்ஜுனனை} அடிப்பேன்.
ஒரு பாம்பைக் கருடன் பிடிப்பது போல, பலமிக்கத் தேர்வீரனும், துணிவுமிக்கவனும், ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவனும், {என்னைத்} தடுத்து நிறுத்த இயலாதவனுமான அந்தப் பார்த்தனை {அர்ஜுனனை} நான் பிடிப்பேன். கட்டுக்கடங்காத நெருப்பு போல, வாட்கள், பராசங்கள் மற்றும் கணைகள் என்ற எரிபொருளால் சுடர்விட்டெரிந்து எதிரிகளை எரிக்கும் அந்தப் பாண்டவ நெருப்பு {அர்ஜுனன்}, (நான் வழிநடத்தும்) எண்ணிலடங்கா தேர்களை இடியாகவும், எனது குதிரைகளின் வேகத்தைக் காற்றாகவும் கொண்டிருக்கும் வலிமைமிக்க மேகம் போன்ற நான் அடிக்கும் தொடர்ச்சியான கணை மழையால் அணைக்கப்படும். பாம்புகள் எறும்புப் புற்றைத் துளைப்பதைப் போல, எனது வில்லில் இருந்து புறப்படும் நஞ்சுமிக்கப் பாம்புகளான எனது கணைகள் பார்த்தனின் {அர்ஜுனனின்} உடலைத் துளைக்கும். கோங்கு மலர்களால் { Karnikara flowers} மூடப்படும் மலையைப் போல, நன்கு கடினமாக்கப்பட்டதும், நேரானதும், தங்க இறகுகள் கொண்டதும், பெரும் சக்தி கொண்டதுமான எனது கணைகளால் குந்தியின் மகன் {அர்ஜுனன்} துளைக்கப்படுவதை நீ இன்று பார்ப்பாய்.
துறவியரில் சிறந்தவரான ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த நான், அவற்றின் சக்தியை நம்பி, தேவர்களுடன் கூடப் போரிட முடியும். எனது எறிவேலால் அடிக்கப்பட்டு, அவனது {அர்ஜுனனது} தேரின் கொடியின் மேல் அமர்ந்திருக்கும் குரங்கு, இன்று பயங்கரமாகக் கதறிக் கொண்டு தரையில் விழும். எதிரியின் {அர்ஜுனனின்} கொடிக்கம்பத்தில் அமர்ந்திருக்கும் (மனித சக்திக்கு அப்பாற்பட்ட) உயிரினங்களின் கதறல்கள் இன்று விண்ணை நிறைக்கும். அவை {அந்த உயிரினங்கள்} அனைத்து திக்குகளுக்கும் பறந்து போகும். அர்ஜுனனை அவனது தேரில் இருந்து கீழே வீசி, துரியோதனனின் இதயத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் கணையின் வேரை நான் இன்று பிடுங்குவேன். தேர் உடைந்து, குதிரைகள் கொல்லப்பட்டு, வீரம் குன்றி, பாம்பு போலப் பெருமூச்சு விடும் பார்த்தனை {அர்ஜுனனை}, இன்று கௌரவர்கள் காண்பார்கள். தங்கள் விருப்பப்படி செல்வங்களான பசுக்களைக் கௌரவர்கள் எடுத்துச் செல்லட்டும். ஆனால் அவர்கள் விரும்பினால், தங்கள் தேர்களில் இருந்து கொண்டு, நான் செய்யும் போரைச் சாட்சியாகக் காணட்டும்” என்றான் {கர்ணன்}
கர்ணனிடம் வாதிட்ட கிருபர்! – விராட பர்வம் பகுதி 49-கர்ணனை கிருபர் நிந்திப்பது; அர்ஜுனனின் பராக்கிரமத்தை விவரித்து, அவற்றில் ஒன்றையாவது கர்ணன் செய்திருக்கிறானா என்று கிருபர் அவனை மட்டம்தட்டுவது; எனினும் அறுவரும் சேர்ந்து அர்ஜுனனுடன் போரிட்டே ஆக வேண்டும் என்று கிருபர் சொல்வது…
கிருபர் {கர்ணனிடம்} சொன்னார், “ஓ! ராதேயா {கர்ணா}, உனது கொடிய இதயம் எப்போதும் போரை விரும்புகிறது. பொருட்களின் உண்மை இயல்பை நீ அறிவதில்லை; அதனால் {போரினால்} ஏற்படும் பின்விளைவுகளையும் நீ கணிப்பதில்லை. ஊகித்தறியும்படி சாத்திரங்களில் பல்வேறு விதமான தகுமுறைகள் {expedients வழிமுறைகள்} உண்டு. கடந்த காலத்தை அறிந்தவர்கள் போர் மிகப்பாவகரமானது என்று கருதி, அதை அவற்றில் {சாத்திரங்களில்} சொல்லியிருக்கிறார்கள். காலமும் இடமும் சாதகமாக இருக்கும்போதுதான் படையெடுப்புகள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
எனினும், தற்போதைய நிகழ்வில், காலம் சாதகமற்று இருப்பதால், நல்ல முடிவுகள் இல்லாது போகும். சரியான காலத்திலும், இடத்திலும் காட்டப்படும் பராக்கிரமம் நன்மையைத் தரும். அதன் {காலம் மற்றும் இடம் ஆகியவற்றின்} சாதகம் மற்றும் பாதகமே ஒரு செயலுடைய வாய்ப்புகளின் தன்மையைத் தீர்மானிக்கிறது. தேர் செய்பவனின் கருத்துப்படி கற்றமனிதர்களால் செயல்பட முடியாது. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால், பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} மோதல் நமக்கு நல்லதல்ல!
குருக்களை {கௌரவர்களை} (கந்தர்வர்களிடம் இருந்து) தனியாகவே அவன் {அர்ஜுனன்} காத்தான். தனியாகவே அவன் அக்னியை நிறைவு கொள்ளச் செய்தான். ஐந்து வருடங்கள் தனியாகவே அவன் (இமயத்தின் மார்பில்} பிரம்மச்சர்ய வாழ்வை நோற்றான். தனது தேரில் சுபத்திரையைக் கடத்திச் சென்ற அவன் {அர்ஜுனன்}, தனியாகவே கிருஷ்ணனை தனிப்போருக்கு அறைகூவி அழைத்தான். தன் முன் காட்டுவாசியாக நின்ற ருத்திரனுடன் {சிவனுடன்} தனியாகவே அவன் போரிட்டான்.
(ஜெயத்ரதனால்) கடத்தி செல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியை} இதே காட்டில்தான் பார்த்தன் மீட்டான். இந்திரனுக்குக் கீழிருந்து ஐந்து வருடங்கள் ஆயுதங்களின் அறிவியலைக் கற்றவன் அவன் {அர்ஜுனன்} ஒருவனே. தனியாகவே அனைத்து எதிரிகளையும் வீழ்த்திய அவன் {அர்ஜுனன்} குருக்களின் {கௌரவர்களின்} புகழைப் பரப்பினான். அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {அர்ஜுனன்}, {ஒருகணத்தில்} கந்தர்வர்களின் மன்னனான சித்திரசேனனையும், மறுகணத்தில் அவனது {சித்திரசேனனின்} ஒப்பற்ற துருப்புகளையும், தனியாகவே போர்க்களத்தில் வீழ்த்தினான். தேவர்களாலும் கொல்லமுடியாதவர்களான நிவாடகவசர்களையும், காலகஞ்சர்களையும் தனியாகவே அவன் தூக்கியெறிந்தான்.
எனினும், ஓ! கர்ணா, தனியாளாகவே இந்தப் பூமியின் பல தலைவர்களை அடக்கிய, அந்தப் பாண்டு மகன்களில் யாராவது ஒருவரைப் போலாவது, நீ என்ன செய்திருக்கிறாய்? போர்க்களத்தில் பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதுவதற்கு இந்திரனே கூடத் தகுதியற்றவனே. எனவே, அர்ஜுனனுடன் போரிட விரும்பும் ஒருவன், மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். உன்னைப் பொறுத்தவரை, நீ உன் வலக்கரத்தை விரித்து, உனது சுட்டுவிரலை நீட்டி, கொடும் நஞ்சு கொண்ட கோபக்காரப் பாம்பின் நச்சுப்பற்களைப் பிடுங்க விரும்புகிறாய். அல்லது தெளிந்த நெய்யை பூசிக் கொண்டு, {பட்டு போன்ற} மென்மையான ஆடை உடுத்திக் கொண்டு, கொழுப்பு, ஊனீர் {இறைச்சியில் கிடைக்கும் கொழுப்பு}, தெளிந்த நெய் ஆகியவற்றை உண்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்குள் {ஊடுருவி, அதைக்} கடந்து செல்ல விரும்புகிறாய்.
தனது கைகளையும், கால்களையும் கட்டிக் கொண்டும், கழுத்தைச் சுற்றி ஒரு பெருங்கல்லைக் கட்டிக் கொண்டும், வெறுங்கையால் கடலைக் கடக்க நினைப்பவர்கள் இங்கே யார் இருக்கிறார்கள்? இத்தகு செயலில் இருக்கும் ஆண்மைதான் என்ன? ஓ! கர்ணா, ஆயுதங்களில் திறமையற்றுப் பலவீனமாக இருப்பவன், ஆயுதங்களில் பலமிக்கவனும் திறமைசாலியுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போரிட விரும்பினால் அவன் மூடனே. நேர்மையற்ற முறையில் நம்மால் ஏமாற்றப்பட்டு, பதிமூன்று {13} வருட வனவாசத்தில் இருந்து விடுபட்ட அந்த ஒப்பற்ற வீரன் {அர்ஜுனன்} நம்மை நிர்மூலமாக்கமாட்டானா? கிணற்றுக்குள் மறைந்திருந்த நெருப்பு போலப் பார்த்தன் {மறைந்து} இருந்த இடத்திற்கு அறியாமையின் காரணமாக வந்ததால், உண்மையில், நாம் பெருத்த ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டோம்.
அவன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் எதிர்க்கப்பட இயலாதவனாக இருப்பினும், நாம் அவனை எதிர்த்துப் போரிட்டே ஆக வேண்டும். எனவே, கவசமணிந்து அணிவகுக்கப்படும் நமது துருப்புகள், தாக்குவதற்குத் தயாராக இருக்கட்டும். துரோணர், துரியோதனன், பீஷ்மர், {கர்ணனாகிய} நீ, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, நாம் ஆகிய அனைவரும் சேர்ந்து பிருதையின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். ஓ! கர்ணா, தனியாகப் போரிட்டு, இப்படித் துடுக்காகச் செயல்பட்டுவிடாதே! நாம் ஆறு தேர்வீரர்களும் ஒன்றுபட்டு, அவனுக்கு இணையானவர்களாகி, வஜ்ரதாங்கியைப் போலக் கடுமையாக இருப்பவனும், போரிடத் தீர்மானத்துடன் இருப்பவனுமான அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். பெரும் வில்லாளிகளான நாம், அணிவகுக்கப்பட்ட நமது துருப்புகளின் உதவியைப் பெற்று, கவனமாக நின்று, தானவர்கள் வாசவனுடன் {இந்திரனுடன்} போரிடுவது போல {அர்ஜுனனிடம்} போரிடுவோம்” என்றார் {கிருபர்}.
கர்ணனைக் கண்டித்த அஸ்வத்தாமன்! – விராட பர்வம் பகுதி 50-தற்பெருமை பேசும் கர்ணனை அஸ்வத்தாமன் கண்டித்தது; துரியோதனன் பாண்டவர்களை ஏமாற்றியதைச் சுட்டிக் காட்டுவது; தான் அர்ஜுனனுடன் போரிட மாட்டேன் என்று சொன்னது………
அஸ்வத்தாமன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, இந்தப் பசுக்கள் இன்னும் வெல்லப்படவில்லை. அல்லது அவை (தங்கள் உரிமையாளரின் ஆட்சிக்குட்பட்ட) எல்லையைக் கடக்கவில்லை. அல்லது அவை இன்னும் ஹஸ்தினாபுரத்தை அடையவில்லை. எனவே, ஏன் நீ தற்பெருமை பேசுகிறாய்? எண்ணிலடங்கா போர்களை வென்று, அபரிமிதமான செல்வத்தை அடைந்து, எதிரிப்படைகளை வீழ்த்திய உண்மையான வீரர்கள் தங்கள் பராக்கிரமம் குறித்து ஒரு வார்த்தையும் பேசமாட்டார்கள். நெருப்புப் பேசாமல் எரிகிறது. பேசாமல்தான் சூரியனும் ஒளிர்கிறான். பேசாமல்தான் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களை இந்தப் பூமி சுமக்கிறது. கண்டனம் இல்லாமல் ஒவ்வொருவரும் செல்வத்தை அடைய நான்கு வகையினருக்குமான அலுவல்கள் சுயம்புவால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
வேதங்களைக் கற்கும் ஓர் அந்தணன், தானே வேள்விகள் செய்து கொண்டு, பிறரது வேள்விகளையும் நடத்திக் கொடுக்க வேண்டும். ஒரு க்ஷத்திரியன், தனது வில்லை நம்பி, தனது வேள்விகளை மட்டும் செய்ய வேண்டும். அவன் மற்றவர்களுக்காக வேள்விகளை நடத்தக்கூடாது. செல்வங்களை ஈட்டும் ஒரு வைசியன், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்குகளைத் தனக்காக மட்டும் செய்து கொள்ள வேண்டும். ஒரு சூத்திரன் பிற மூன்று வகையினருக்கும் சேவை செய்து அவர்களுக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும். மலர்கள் மற்றும் இறைச்சி விற்பதைத் தொழிலாகக் கொண்டு தங்கள் வாழ்வை நடத்துபவர்களைப் பொறுத்தவரை, ஏமாற்றியும் மோசடியும் செய்து அவர்கள் தங்கள் செல்வத்தை ஈட்டிக் கொள்ளலாம்.
எப்போதும் சாத்திரங்களின் விதிப்படி நடந்து கொள்ளும் மேன்மிக்கப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} இந்த முழு உலகத்தின் ஆட்சியையும் பெற்றார்கள். பெரியவர்கள் அவர்களிடம் பகைகொண்டாலும், அவர்களிடம் {அந்தப் பெரியவர்களிடம்} எப்போதும் மரியாதையுடனே அவர்கள் {பாண்டவர்கள்} நடந்து கொள்கிறார்கள். வெட்கங்கெட்ட இந்தத் தீய திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} பகடையாட்டத்தின் மூலம் அடைந்த நாட்டைப் பார்த்து எந்த க்ஷத்திரியன் மகிழ்ச்சி கொள்வான்? இறைச்சி விற்பவன் போல ஏமாற்றுத்தனத்தாலும், மோசடியாலும் செல்வத்தை அடைந்தால், எந்த விவேகியால் அது குறித்துத் தற்பெருமையாகப் பேசிக் கொள்ள முடியும்? {[அதாவது] நீ விவேகி இல்லை என்று கர்ணனிடம் சொல்கிறான் அஸ்வத்தாமன்}
அவர்களது செல்வத்தைத் திருடிக் கொண்டாலும், தனஞ்சயனையோ {அர்ஜுனனையோ}, நகுலனையோ, சகாதேவனையோ எந்தத் தனிப்போரில் {ஒற்றைக்கு ஒற்றையான எந்த மோதலில்} நீ வென்றாய்? யுதிஷ்டிரனையோ, பலசாலிகளில் முதன்மையான பீமனையோ எந்தப் போரில் நீ வென்றாய்? இந்திரப்பிரஸ்தத்தை எந்தப் போரில் நீ வென்றாய்? ஓ! இழிந்த செய்கைகள் செய்பவனே, நீ செய்ததெல்லாம், நோய்வாய்ப்பட்டு ஒற்றையாடையுடன் இருந்த இளவரசியை {திரௌபதியைச்} சபை நடுவே இழுத்து வந்ததுதான். சந்தனம் போன்று மென்மையான பாண்டவ மரத்தின் வேரை நீ வெட்டிவிட்டாய்.
செல்வத்தின் மீது கொண்ட ஆசையால் செயல்பட்டு, பாண்டவர்களை அடிமைகளைப் போல நீ நடத்திய போது, விதுரர் என்ன சொன்னார் என்பதை நினைத்துப் பார்! மனிதர்களும் பிறரும், ஏன் பூச்சிகளும் எறும்புகளும் கூடத் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி பொறுத்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம். {[அதாவது] ஒரு கட்டத்திற்கு மேல் அவையும் தங்கள் சக்திக்கேற்ற கோபத்தை வெளிப்படுத்தும் என்பதைப் பார்க்கிறோம்}. எனினும், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} திரௌபதியின் துன்பங்களைப் பொறுக்க இயலாது. திருதராஷ்டிரன் மகன்களின் அழிவுக்காகவே தனஞ்சயன் {அர்ஜுனன்} இங்கு வந்திருக்கிறான் என்பது நிச்சயம். பெருஞானம் பாதிப்படையும் வகையில் உரையாற்றுவதற்கே நீ தகுந்தவன். ஆனால் எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, நம் அனைவரையும் நிர்மூலமாக்கிவிடுவான் என்பதே உண்மை. தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, ராட்சசர்களோ, {வந்திருப்பது} எவராக இருப்பினும் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} பீதியடைந்து போரில் இருந்து விலகிவிடுவானா?
கோபத்துடன் அவன் யார் மீது விழுகிறானோ, கருடனின் பாரத்தில் அழுந்தும் மரத்தைப் போல அவனை வீழச் செய்வான். பராக்கிரமத்தில் உன்னைவிட மேன்மையானவனும், தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} நிகரான வில்லாளியும், போரில் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நிகரானவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} யார் தான் புகழ மாட்டார்கள்? தெய்வீக ஆயுதங்களை தெய்வீக ஆயுதங்களாலும், மனித ஆயுதங்களை மனித ஆயுதங்களாலும் முறியடிக்கும் அர்ஜுனனுக்கு எந்த மனிதன் இணையாக முடியும்? மகன் என்ற ஸ்தானத்திற்குச் சீடன் எவ்வகையிலும் குறைவில்லாதவன் என்று சாத்திரங்களை அறிந்தவர்கள் தீர்மானிக்கின்றனர். {ஒரு மகனைக் காட்டிலும் சீடன் குறைந்தவனல்ல என்று சாத்திரங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்}. அதனால்தான் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} துரோணருக்குப் பிடித்தமானவனாக {மகனைப் போன்று பிடித்தமான சீடனாக} இருக்கிறான்.
பகடையாட்டத்தின் போது கைக்கொண்ட அதே வழிகளை இப்போது கைக்கொள். இந்திரப்பிரஸ்தத்தைக் கவர்ந்ததைப் போல, திரௌபதியை சபைக்கு நீ இழுத்து வந்ததைப் போல அதே வழிகளைக் கைக்கொள்! க்ஷத்திரிய வகைக் கடமைகளை நன்கு அறிந்தவனும் விவேகம் நிறைந்தவனும், காந்தார இளவரசனும், ஏமாற்றுகரச் சூதாடியுமான இந்த உனது மாமன் சகுனி இப்போது போரிடட்டும்! எனினும், காண்டீவம், கிருதம் {பகடைக்காயின் நான்கு எண்ணுள்ள பக்கம்} என்றும், துவாபரம் {பகடைக்காயின் இரண்டு எண்ணுள்ள பக்கம்} என்றும் பகடைக்காய்களை வீசாது. ஆனால் அது {காண்டீவம்} சுடர்விட்டெரியும் கூரிய முனை கொண்ட எண்ணற்ற கணைகளை அடிக்கும்.
காண்டீவத்தில் இருந்து அடிக்கப்படும் கழுகு இறகு கொண்டதும் சக்திமிக்கதுமான கடும் கணைகள் மலைகளைக் கூடத் துளைக்கும். யமன் என்ற பெயரைக் கொண்ட அனைத்தையும் அழிப்பவனும், வாயுவும், குதிரை முகம் கொண்ட அக்னியும் கூடச் சில மிச்சங்களை விட்டுச் செல்வார்கள். ஆனால் கோபம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} அதைக் கூட விடமாட்டான் {மிச்சமில்லாமல் அழிப்பான்}. உனது மாமனின் {சகுனியின்} துணை கொண்டு, எப்படிச் சபையில் பகடை விளையாடினாயோ, அதே போல அந்தச் சுபலனின் மகனால் {சகுனியால்} பாதுகாக்கப்பட்டு இந்தப் போரில் நீ போரிட்டுக் கொள். போரிடுவதாகத் தீர்மானித்தால் ஆசான் {கிருபர்} போரிட்டுக் கொள்ளட்டும். எனினும், நான் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} போரிட மாட்டேன். பசுக்களின் பாதையைப் பற்றிக் கொண்டு மத்ஸ்ய மன்னன் வந்தால், அவனுடன் போர் புரிய வேண்டும் என்பதற்காகவே உண்மையில் நாம் வந்தோம்” என்றான் {அஸ்வத்தாமன்}.
கங்கையின் மகனே உண்மையைச் சொல்லும்! – விராட பர்வம் பகுதி 51-பீஷ்மர் துரோணரிடம் அஸ்வத்தாமனிடமும் கோபம் தணியச் சொல்வது; அஸ்வத்தாமன் என்னிடம் சொல்லாதீர் என்பது; துரியோதனன் துரோணரின் கோபத்தைத் தணிப்பது; துரோணர் பாண்டவர்களின் வனவாச காலம் முடிந்து விட்டதா என்பதைப் பீஷ்மரே சொல்ல வேண்டும் என்று சொன்னது…
பீஷ்மர் சொன்னார், “துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} நன்றாகக் கவனித்திருக்கிறான், கிருபரும் சரியாகவே கவனித்திருக்கிறார். கர்ணனைப் பொறுத்தவரை, க்ஷத்திரிய வகையின் கடமைகளைக் கருத்தில் கொள்வதால் மட்டுமே அவன் {கர்ணன்} போரிட விரும்புகிறான். ஞானம் கொண்ட எந்த மனிதனும் ஆசானைப் பழிக்கலாகாது. எனினும், காலத்தையும் இடத்தையும் கருத்தில் கொள்ளும் நான், நாம் போரிட வேண்டும் என்றே கருதுகிறேன். தங்கள் சிரமகாலத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் ஐந்து பிரகாசமிக்கச் சூரியன்களைப் போன்ற, ஐந்து வீரப் போராளிகளை எதிரிகளாகக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் {துரியோதனன்} ஏன் குழம்பமாட்டான்? அறநெறிகளை அறிந்தவர்களே கூடத் தங்கள் சுய விருப்பங்களில் குழப்பம் கொள்கின்றனர். ஓ! மன்னா {துரியோதனா}, என் சொற்களை நீ ஏற்றாலும், ஏற்காவிடினும் அதற்காகவே நான் இதைச் சொல்கிறேன்.
(தளரும்) நமது வீரம் எழுச்சியடையவே கர்ணன் உன்னிடம் இப்படிச் சொன்னான். ஓ! ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, உன்னைப் பொறுத்தவரை, அனைத்தையும் மன்னிப்பாயாக. ஆபத்து அருகில் இருக்கிறது. குந்தியின் மகன் {அர்ஜுனன்} வந்திருக்கும்போது, {நமக்குள்} சண்டையிட இது நேரமில்லை. அனைத்தும் {அஸ்வத்தாமனான} உன்னாலும், ஆசானான கிருபராலும் பொறுத்துக்கொள்ளப்பட வேண்டும். சூரியனில் இருக்கும் ஒளி போல, உன்னிடம் அனைத்து ஆயுதங்களின் திறமையும் வசிக்கின்றன. சந்திரனில் இருந்து அழகு பிரிக்கப்படாதது போல, வேதங்கள் மற்றும் பிரம்ம ஆயுதம் ஆகிய இரண்டும் உன்னில் நிறுவப்பட்டுள்ளன. ஒரு பொருளில் {மனிதனில்} நான்கு வேதங்கள் வசிப்பதையும், மற்றொன்றில் க்ஷத்திரிய குணங்கள் வசிப்பதையும் நாம் எப்போதும் காண்கிறோம்.
பாரதக் குல ஆசானிடமும் {துரோணரிடம்}, அவரது மகனிடமும் {அஸ்வத்தாமனான உன்னிடம்} தவிர வேறு எந்த மனிதனுக்குள்ளும் அவ்விரண்டும் ஒன்றாக வசிப்பதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இதையே நான் நினைக்கிறேன். வேதாந்தங்களிலோ, புராணங்களிலோ, பழம் வரலாறுகளிலோ, ஓ! மன்னா {துரியோதனா}, ஜமதக்னியைத் {பரசுராமரைத்} தவிர, துரோணரைவிட மேலானவனாக வேறு எவன் இருக்கிறான்? வேதங்களுடன் சேர்ந்த பிரம்ம ஆயுதம் எனும் கலவை வேறு எங்கும் காணப்படுவதில்லை. ஓ! ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, பொறுத்துக்கொள். ஒற்றுமையின்மைக்கு இது நேரமல்ல. நாம் அனைவரும் ஒன்றுபட்டு, {எதிர்த்து} வந்து கொண்டிருக்கும், இந்திரனின் மகனிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவோம். ஞானம் கொண்ட மனிதர்கள் நிறைந்த ஒரு படைக்கு நேரும் அழிவுகள் அனைத்திலும், தலைவர்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையே {ஒற்றுமையின்மையால் ஏற்படும் அழிவே} மோசமானதாகும்” என்றார் {பீஷ்மர்}.
அதற்கு அஸ்வத்தாமன் {பீஷ்மரிடம்}, “ஓ! மனிதர்களில் காளையே {பீஷ்மரே}, இந்த உமது அவதானிப்புகள் எங்கள் முன்னிலையில் சொல்லத்தக்கதல்ல; எனினும், கோபத்தில் நிறைந்திருக்கும் ஆசான் {துரோணர்}, அர்ஜுனனின் நற்குணங்களைக் குறித்துப் பேசினார். ஒருவனுடைய ஆசானின் குறைகள் கூடச் சுட்டிக்காட்டப்படலாம் எனும்போது, எதிரியின் நற்குணங்களையும் {நாம்} ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே, தனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு, ஒருவன் தனது மகன் அல்லது சீடனின் தகுதிகளை அறிவிக்க வேண்டும்” என்றான் {அஸ்வத்தாமன்}.
அதற்குத் துரியோதனன், “ஆசான் தனது மன்னிப்பை அருளட்டும். அமைதி திரும்பட்டும். நம்மில் ஒருவராக ஆசான் {துரோணர்} இருக்கும்போது, (தற்போதையை அவசர நிலையில்) என்னவெல்லாம் செய்யப்பட வேண்டுமோ, அவை அனைத்தும் ஏற்கனவே செய்யப்பட்டதாகவே தெரிகிறது” என்றான் {துரியோதனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, கர்ணன், கிருபர், உயர் ஆன்ம {மகாத்மாவான} பீஷ்மர் ஆகியோரின் உதவியுடன் துரியோதனன், துரோணரைத் சமாதானப் படுத்தினான் {அவரது கோபத்தைத் தணித்தான்}.”
துரோணர், “சந்தனு மகனான பீஷ்மர் பேசிய முதல் வார்த்தைகளிலேயே நான் சமாதானமடைந்துவிட்டேன். போர்களத்தில் துரியோதனனைப் பார்த்தன் {அர்ஜுனன்} அணுகமுடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்படட்டும். துடுக்குத்தனம் மற்றும் தீர்மானமற்ற தன்மை ஆகியவற்றின் விளைவாக, மன்னன் துரியோதனன் எதிரியால் சிறைபிடிக்கப்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். வனவாசத்தின் குறித்த காலம் முடிவதற்கு முன்னரே அர்ஜுனன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டான் என்பது உறுதி. அதே போலவே, பசுக்களை மட்டும் மீட்டுக் கொண்டு, இன்று (நமது) இந்தச் செயல்களை மன்னித்துவிடமாட்டான். எனவே, நமது துருப்புகளை வீழ்த்தி, திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தாக்குவதில், அவன் {அர்ஜுனன்} வெல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். (குறித்த வனவாச காலத்தின் நிறைவில் உள்ள சந்தேகத்தோடு) என்னைப் போலவே முன்பு துரியோதனனும் சொன்னான். இதை மனதில் கொண்டு, எது உண்மை என்பதைச் சொல்வதே கங்கையின் மகனுக்குத் {பீஷ்மருக்குத்} தகும்” என்றார் {துரோணர்}.
நல்லதோ அல்லதோ விரைந்து செய்! – விராட பர்வம் பகுதி 52-வனவாசத்தின் குறித்த காலம் சரியாக முடிந்தது என்று பீஷ்மர் உரைப்பது; பாண்டவர்களின் பெருமையைச் சொல்வது; நல்லதோ அல்லதோ அதை விரைந்து செய்யுமாறு துரியோதனனை பீஷ்மர் பணித்தது; பாண்டவர்களுக்கு நாட்டைக் கொடுக்க மாட்டேன் என்று துரியோதனன் சொல்வது; பீஷ்மர் கூறிய ஆலோசனை; பீஷ்மர் படையை அணிவகுக்கத் தொடங்கியது…
பீஷ்மர் சொன்னார், “கலைகள் {1.6 நிமிடம்}, காஷ்டைகள் {3.2 விநாடிகள்}, முகூர்த்தங்கள் {48 நிமிடங்கள்}, நாட்கள் {30 முகூர்த்தங்கள்}, அரைத்திங்கள்கள் {15 நாட்கள்} [1], மாதங்கள் {30 நாட்கள்}, நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} {இரண்டு மாதங்கள்}, ஆண்டுகள் {360 நாட்கள் [கவனிக்க: 365 நாட்கள் அல்ல]} ஆகிய பிரிவுகளைக் கொண்டு காலச்சக்கரம் [2] சுழன்று வருகிறது. அதில் வரும் கூடுதல் பகுதிகள் {காலாதிக்யம்} மற்றும் வானத்தின் கோள்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றின் விளைவாக, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் இரண்டு மாதங்கள் கூடுகின்றன. இவ்வழியில் கணக்கிட்டால் பதிமூன்று வருடங்களுக்கு ஐந்து மாதங்களும் பனிரெண்டு நாட்களும் அதிகமாக வரும் எனத் தெரிகிறது. எனவே, பாண்டுவின் மகன்கள் வாக்குறுதி அளித்ததுபோல, அந்தக் காலம் அவர்களால் சரியாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. {அந்தக் குறிப்பிட்ட காலம் நேற்றே முடிந்துவிட்டது}.
இதை உறுதிப்பட அறிந்ததால்தான் பீபத்சு {Vibhatsu_அர்ஜுனன்} இங்கே தோன்றியிருக்கிறான். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் உயர் ஆன்மா கொண்டவர்களும் {மகாத்மாக்களும்}, சாத்திரங்களின் பொருள் அறிந்தவர்களும் ஆவார்கள். யுதிஷ்டிரனைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்ட அவர்கள் அறத்தில் இருந்து எப்படி விலகுவார்கள்? குந்தியின் மகன்கள் எப்போதும் சலனமடைய {மோகம் கொள்ள} மாட்டார்கள். அரிதான சாதனையை அவர்கள் அடைந்துவிட்டார்கள். நியாயமற்ற முறையில் தங்கள் நாட்டை அடைய வேண்டும் என்று நாட்டங்கொண்டிருந்தால், அந்தக் குருக்குல வழித்தோன்றல்கள் {பாண்டவர்கள்}, பகடையாட்டம் நடைபெற்ற நேரத்திலேயே தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அறத்தின்கண் கட்டுப்பட்டு, க்ஷத்திரிய வகைக்குரிய தங்கள் கடமையில் இருந்து அவர்கள் {அன்று} வழுவாதிருந்தார்கள்.
அவர்கள் பொய்மையுடன் நடந்து கொள்வதாகக் கருதுபவன் நிச்சயம் தோல்வியை அடைவான். பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்}, பொய்மைக்குப் பதில் மரணத்தையே விரும்புவார்கள். {மரணத்தை அடைந்தாலும் அடைவார்களேயொழிய பொய்யை விரும்ப மாட்டார்கள்}. எனினும், நேரம் வரும்போது, சக்ரனைப் {இந்திரனைப்} போன்ற சக்தி கொண்ட மனிதர்களில் காளையரான அந்தப் பாண்டவர்கள், தங்களுடையவை எவையும் வஜ்ரதாங்கியால் {இந்திரனால்} பாதுகாக்கப்பட்டாலும், அவற்றை {தங்கள் உடைமைகளை} விடமாட்டார்கள். ஆயுதங்களைத் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களை {பாண்டவர்களை}, நாம் போரில் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
எனவே, நம்முடைய உடைமைகளை எதிரி கையகப்படுத்தமுடியாதவாறு, நல்லவர்கள் மற்றும் நேர்மையாளர்களின் அனுமதியோடு கூடிய சாதகமான ஏற்பாடுகள் செய்யப்படட்டும். ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! கௌரவா {துரியோதனா}, “நாம் நிச்சயம் வெல்வோம்” என்று இருதரப்பில் எந்தத் தரப்பாலும் சொல்ல முடிந்த எந்தப் போரையும் நான் இதுவரை கண்டதில்லை. ஒரு போர் ஏற்படும்போது, அங்கே {ஒரு தரப்புக்கு} வெற்றியோ தோல்வியோ அல்லது செழுமையோ சிரமமோ {நிச்சயம்} ஏற்படும். போர்க்களத்தில் இருக்கும் ஒரு தரப்பு இவ்விரண்டில் ஒன்றை நிச்சயம் அடைய வேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, இப்போது போர் உகந்ததாக இருப்பினும், அறத்தின்கண் நிலையற்றோ அல்லாமலோ இருப்பினும் {உகந்தது இல்லாவிடினும்}, உனது ஏற்பாடுகளை விரைந்து செய். தனஞ்சயன் {Dhananjaya_அர்ஜுனன்} அருகில் வந்துவிட்டான்” என்றார் {பீஷ்மர்}.
அதற்குத் துரியோதனன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா {பீஷ்மரே}, பாண்டவர்களுக்கு அவர்களது நாட்டை நான் திரும்பத் தரமாட்டேன். எனவே, போருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தாமதமில்லாமல் நடைபெறட்டும்” என்றான் {துரியோதனன்}.
பீஷ்மர் {துரியோதனனிடம்}, “நான் சரியாகக் கருதுவதை, உனக்கு விருப்பமிருந்தால் கேள். உனக்கு எது நன்மையோ அதையே நான் எப்போதும் சொல்ல வேண்டும். ஓ! கௌரவா {துரியோதனா}, நேரத்தை இழக்காமல் {காலவிரையம் செய்யாமல்} படையில் நாலில் ஒரு பங்கை அழைத்துக் கொண்டு தலைநகர் நோக்கி நீ முன்னேறு. படையின் மற்றொரு நாலில் ஒரு பாகம், பசுக்களுக்குக் காவலாக அணிவகுத்துச் செல்லட்டும். {மீதமுள்ள} பாதித் துருப்புகளைக் கொண்டு, நாங்கள் அந்தப் பாண்டவனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுவோம். நான், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமன் மற்றும் கிருபர் ஆகியோர் சேர்ந்து, நம்மை அணுகிவரும் பீபத்சுவையோ {அர்ஜுனையோ}, மத்ஸ்யர்களின் மன்னனையோ {விராடனையோ}, ஏன் இந்திரனையோ கூட, தீர்மானத்துடன் எதிர்த்து நிற்போம். உண்மையில், துள்ளும் கடலைத் தாக்குப்பிடிக்கும் கரைகளைப் போல, அவர்களில் எவரையும் நாங்கள் எதிர்த்து நிற்போம்” என்றார் {பீஷ்மர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம {மகாத்மாவான} பீஷ்மர் பேசிய இச்சொற்கள் அவர்களுக்கு ஏற்புடையனவாக இருந்தன. கௌரவர்களின் மன்னன் {துரியோதனன்}, அதற்குத் தக்க, தாமதமில்லாமல் செயல்பட்டான். மன்னனையும் {துரியோதனனையும்}, பசுக்களையும் அனுப்பிவிட்ட பிறகு, பீஷ்மர் படைகளை அணிவகுக்கத் தொடங்கினார். ஆசானிடம் {துரோணரிடம்} பேசும் வகையில் அவர் {பீஷ்மர்}, “ஓ! ஆசானே {துரோணரே}, நீர் {படைவரிசையின்} நடுவில் நில்லும், அஸ்வத்தாமன் இடது பக்கத்தில் நிற்கட்டும், சரத்வானின் மகனான ஞானமிக்கக் கிருபர் {படையின்} வலது பக்கத்தைப் பாதுகாக்கட்டும். கவசம் பூண்டிருக்கும் சூத குலத்தின் கர்ணன் முன்னணியில் நிற்கட்டும். நான் படையனைத்தையும் பாதுகாத்துக் கொண்டு பின்புறத்தில் நிற்பேன்” என்றார் {பீஷ்மர்}.
துரோணரை வணங்கிய அர்ஜுனன்! – விராட பர்வம் பகுதி 53-உத்தரனுக்குத் துரோணரையும், பிற கௌரவத் தலைவர்களையும் அர்ஜுனன் காட்டியது; அம்புகள் இரண்டை துரோணரின் பாதத்தில் விழச் செய்து, அர்ஜுனன் துரோணரை வணங்கியது; அங்கே துரியோதனன் இல்லாததைக் கண்டு உத்தரனிடம் தேரைத் திருப்பச் சொன்னது; அர்ஜுனனின் நோக்கத்தை அறிந்த கிருபர் அவனைப் பக்கவாட்டில் தாக்கலாம் என்றது; அர்ஜுனனின் சரமாரி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, வரிசைப்படி தங்கள் நிலைகளில் கௌரவர்கள் நின்ற பிறகு, அர்ஜுனன் தனது தேர் சடசடப்பின் எதிரொலி காற்றில் நிரம்பும் வகையில் அவர்களை நோக்கி விரைந்து வந்தான். குருக்கள் {கௌரவர்கள்} அவனது கொடியைக் கண்டனர்; தேர் சடசடப்பின் எதிரொலியையும் நீட்டிவிரிக்கப்பட்ட காண்டீவத்தின் நாணொலியையும் தொடர்ச்சியாகக் கேட்டனர். இவை யாவையும் கவனித்து, அந்தப் பெரும் தேர்வீரனான காண்டீவந்தாங்கியைக் {அர்ஜுனனைக்} கண்ட துரோணர், “தூரத்தில் ஒளிர்ந்து வருவது பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடியாகும். இஃது அவனது தேரின் ஒலி, பயங்கரமாகக் கர்ஜனை செய்வது {அவனது கொடியிலிருக்கும்} அந்தக் குரங்காகும். உண்மையில் அந்தக் குரங்கு நமது துருப்புகளைப் பயத்தில் பீடிக்கச் செய்கிறது. இடியொலி போல நாணொலியெழுப்பிவரும் விற்களில் சிறந்த வில்லான காண்டீவத்தை இழுக்கும் தேர்வீர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} அந்த அற்புதமான தேரில்தான் இருக்கிறான்.
எனது பாதங்களில் வந்து விழும் இவ்விரு கணைகளை இதோ பாருங்கள். மற்றும் இரண்டு கணைகள் வெறுமனே எனது காதுகளைத் தொட்டுச் செல்கின்றன. வனவாச காலத்தை நிறைவு செய்து, பல அற்புத சாதனைகளை அடைந்திருக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்னை வணங்கி, எனது காதுகளில் மெதுவாகப் பேசுகிறான் [1]. ஞானம் கொண்டவனும், உறவினர்களால் விரும்பப்படுபவனும், நீண்ட காலம் கழித்து நம்மால் பார்க்கப்படுபவனும் பாண்டுவின் மகனுமான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உண்மையில் அழகாலும், அருளாலும் சுடர்விடுகிறான். தேர், கணைகள், கையுறைகள், அம்பறாத்தூணி, சங்கு, கொடி, கவசம், கிரீடம், கூன்வாள், வில் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பிருதையின் மகன் {son of Pritha – குந்தியின் மகன் அர்ஜுனன்}, வேள்விக்கரண்டிகள் சூழ, தெளிந்த நெய்யை உண்ணும் (ஹோம) நெருப்பு போலச் சுடர்விட்டு ஒளிர்கிறான்.” என்றார் {துரோணர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “போருக்குத் தயாராக இருக்கும் குருக்களை {கௌரவர்களைக்} கண்ட அர்ஜுனன், மத்ஸ்யன் மகனிடம் {உத்தரனிடம்} அச்சூழ்நிலைக்கு ஏற்ற சொற்களில், “ஓ! தேரோட்டி {உத்தரா}, எனது கணைகள் எதிரியைச் சென்றடையும் தூரத்தில் குதிரைகளை நிறுத்து. அதேவேளையில், இந்தப் படையின் மத்தியில் அந்தக் குருகுலத்தின் இழிந்த பாவி {துரியோதனன்} எங்கிருக்கிறான் என்பதை நான் காணும்படி செய். இவர்கள் அனைவரையும் கருத்தில் கொள்ளாமல், அந்த இளவரசர்களில் வீணனைத் {துரியோதனனைத்} தனித்திருக்கச் செய்து, அவன் தலையில் விழுவேன். அந்தப் பாவியை {துரியோதனனை} வீழ்த்திவிட்டால், தாங்கள் வீழ்ந்துவிட்டதாகவே பிறர் கருதுவார்கள்.
துரோணர் அதோ நிற்கிறார், அவருக்கு அடுத்து அவரது மகன் {அஸ்வத்தாமன்} நிற்கிறார். அங்கே பெரும் வில்லாளிகளான பீஷ்மர், கிருபர் மற்றும் கர்ணன் ஆகியோர் இருக்கின்றனர். எனினும், நான் மன்னனைக் {துரியோதனனைக்} காணவில்லை. தனது உயிரைக் காத்துக்கொள்ள அவன் {துரியோதனன்}, தெற்கு சாலையின் வழியே, கவர்ந்த பசுக்களை அழைத்துக் கொண்டு பின்வாங்கிக் கொண்டிருக்கிறான் என்று சந்தேகிக்கிறேன். இந்தத் தேர்வீரர்களின் வரிசையைத் தவிர்த்து, சுயோதனன் {Suyodhana _ துரியோதனன்} இருக்கும் இடத்திற்குச் செல். போர் பலனற்றதாகிவிடும் என்பதால், ஓ! விராடனின் மகனே {உத்தரா}, அங்கே அவனிடம் போரிட்டு, அவனை வீழ்த்திய பிறகு, பசுக்களை அழைத்துக் கொண்டு திரும்பி வரலாம்” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட விராடனனின் மகன் {உத்தரன்}, சற்று முயன்று குதிரைகளை நிறுத்தி, குரு குல காளையர் இருக்கும் இடத்தில் இருந்து கடிவாளத்தை ஓர் இழு இழுத்து, அவற்றைத் துரியோதனன் இருக்கும் இடம் நோக்கிச் செலுத்தினான். அப்படி அர்ஜுனன் அந்தப் படையின் அடர்த்தியான வரிசையைத் தவிர்த்து விட்டுச் சென்ற போது, அவனது நோக்கத்தை அறிந்த கிருபர், தனது தோழர்களிடம், “பீபத்சு {அர்ஜுனன்}, மன்னனைத் {துரியோதனனைத்} தவரித்து வேறு யாரிடமும் நிற்க விரும்பமாட்டான். முன்னேறிச் செல்லும் அந்த வீரனின் {அர்ஜுனனின்} பக்கவாட்டுப் பகுதியை நாம் தாக்குவோம். கோபத்தால் எரிந்து கொண்டு, எவர் துணையும் அற்று வரும் அவனிடம்{அர்ஜுனனிடம்} ஆயிரம் கண் தெய்வத்தையோ {இந்திரனையோ} அல்லது தேவகியின் மகனான கிருஷ்ணனையோ தவிர வேறு யாரும் {தனியாக} மோத முடியாது. பார்த்தன் {அர்ஜுனன்} என்ற பெருங்கடலில் வீழும் படகைப் போலத் துரியோதனன் மூழ்கிவிட்டால் இந்தப் பசுக்களாலோ, இந்த அபரிமிதமான செல்வத்தாலோ நமக்கு என்ன பயன்?” என்றார் {கிருபர்}.
அதேவேளையில், அந்தக் குறிப்பிட்ட படைப்பிரிவை நோக்கி முன்னேறிய பீபத்சு {அர்ஜுனன்}, தனது பெயரை விரைந்து அறிவித்துக் கொண்டு, வெட்டுக்கிளிகள் போலத் தடித்திருந்த அவனது அம்புகளால் அத்துருப்புகளை மூடினான். பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட எண்ணற்ற கணைகளால் மூடப்பட்ட எதிரி வீரர்களால் எதையும் காணமுடியவில்லை. பூமியும், வானமும் கூட அதனால் {அம்புகளால்} மறைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. போருக்குத் தயாராக இருந்த வீரர்கள் குழம்பிப் போனதால் யாராலும் களத்தை விட்டு ஓடிப்போகவும் முடியவில்லை. பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} கரங்களின் இலகுத்தன்மையைக் கண்ட அவர்கள் {கௌரவப் படையினர்} அனைவரும் மனதுக்குள் {அச்செயலைப்} பாராட்டினார்கள்.
பிறகு அர்ஜுனன், எதிரிகளை எப்போதுமே மயிர்ச்சிலிர்க்கச்செய்யும் தனது சங்கை எடுத்து ஊதினான். விற்களில் சிறந்த தனது வில்லில் நாணொலி எழுப்பி, தனது கொடியில் இருந்து உயிரினங்களை மேலும் பயங்கரமாகக் கர்ஜிக்கச் செய்தான். அந்தச் சங்கொலியாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும், காண்டீவத்தின் நாணொலியாலும், கொடியில் இருந்த மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயிரினங்களின் கர்ஜனையாலும், பூமியே நடுங்கத் தொடங்கியது. பிறகு தெற்கு சாலையில் சென்று கொண்டிருந்த பசுக்கள் உயர்ந்த தங்கள் வால்களை அசைத்து, ஒன்றாக இறங்கித் திரும்பின” என்றார் {வைசம்பாயனர்}.
புறமுதுகிட்டான் கர்ணன்! – விராட பர்வம் பகுதி 54-அர்ஜுனன் தனது தேரை கர்ணனிடம் கொண்டு செல்லுமாறு உத்தரனைப் பணித்தது; கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; போர்க்களத்தை விட்டு ஓடிய கர்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “எதிரிக் கூட்டத்தைச் சீர்குலைத்து, பசுக்களை மீட்ட பிறகு, மீண்டும் போரிட விரும்பிய அந்த வில்லாளிகளில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, துரியோதனனை நோக்கி முன்னேறினான். மத்ஸ்யர்களின் நகரத்தை நோக்கி பசுக்கள் முரட்டுத்தனமாகத் திரும்புவதைக் கண்ட குரு வீரர்களில் முதன்மையானவர்கள் {கௌரவர்கள்}, கிரீடி {Kiritin – அர்ஜுனன்} ஏற்கனவே வெற்றியை அடைந்துவிட்டதாகவே கருதினார்கள். பிறகு, துரியோதனனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த அர்ஜுனன் மீது, அவர்கள் {கௌரவர்கள்} அனைவரும் தீடிரெனப் பாய்ந்தனர்.
எண்ணற்ற கொடிகள் பறக்க, அவர்களது எண்ணற்ற பிரிவுகள் போருக்காக வரிசையாக நிற்பதைக் கண்ட அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, மத்ஸ்ய மன்னனின் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்கக் கடிவாளங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த வெள்ளைக் குதிரைகளை, அவற்றால் முடிந்த அளவு சிறப்பாக, இச்சாலையின் வழியே செலுத்துவாயாக. நான் அந்தக் குரு சிங்கங்களின் கூட்டத்தை அணுகும் வகையில் நன்றாக முயற்சி செய். வேறு யானையுடன் மோத விரும்பும் யானை போல அந்தத் தீய ஆன்மாக் கொண்ட சூதனின் மகன் {கர்ணன்}, என்னுடன் போரிட ஆவல் கொண்டிருக்கிறான். ஓ! இளவரசே {உத்தரா}, துரியோதனனின் ஆதரவின் கீழ், கர்வத்துடன் வாழும் அவனிடம் {கர்ணனிடம்} என்னை அழைத்துச் செல்.
இப்படிச் சொல்லப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, தங்கக்கவசம் பூண்டிருந்தவையும், காற்றின் வேகம் கொண்டவையுமான அந்தப் பெரிய குதிரைகளைச் செலுத்தி, போர்க்களத்தின் மத்தியில் அந்தப் பாண்டவனை {அர்ஜுனனை} அழைத்துச் சென்றான். இதைக் கண்ட சித்திரசேனன், சங்கிராமஜித்தன் {கர்ணனின் தம்பி}, சத்ருசஹன், மற்றும் ஜயன் ஆகிய தேர்வீரர்கள் கர்ணனுக்கு உதவ விரும்பி, முன்னேறி வந்து கொண்டிருந்த பாரதகுல வீரனை {அர்ஜுனனை} எதிர்த்து, தங்கள் நீண்ட கணைகளுடன் விரைந்தார்கள். பிறகு, கோபத்தால் எரிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, தனது வில்லில் இருந்து நெருப்பு போன்ற கணைகளை அடித்தான். அங்கே கூடியிருந்த குருக்களில் {கௌரவர்களில்} காளையருக்குச் சொந்தமான தேர்வரிசை காடு எரிவது போல எரிந்தது.
பிறகு, போர் மிகவும் உக்கிரமடையத் தொடங்கியது. பீமனுக்குத் தம்பியும், தேர்வீர்களில் முதன்மையானவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} மீது, தனது தடித்த நீண்ட கணைகளைப் பொழிந்து கொண்டேயிருந்த குரு வீரனான விகர்ணன், தனது தேரில் அவனை {அர்ஜுனனை} அணுகினான். கடினமான நாணால் கட்டப்பட்டிருந்த விகர்ணனின் வில்லை அறுத்த அர்ஜுனன், பிறகு, அவனது கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான். தனது கொடிக்கம்பம் அறுபட்டதைக் கண்ட விகர்ணன், {போர்க்களத்தை விட்டு} விரைவாக ஓடினான்.
விகர்ணன் ஓடிப்போனதும், சினத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாத சத்துருந்தபன், எதிரிகளைத் தடுப்பவனும், மனித சாதனைக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்பவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} அடிக்கத் தொங்கினான். குரு {கௌரவப்} படை வரிசைக்கு மத்தியில் மூழ்கியவன் போல இருந்த அர்ஜுனன், அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மன்னன் சத்ருந்தபனால் துளைக்கப்பட்டான். பிறகு, அவன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அவனை {சத்ருந்தபனை} ஐந்து கணையால் தாக்கி, அவனது தேரோட்டியை பத்து கணைகளால் தாக்கினான். பிளக்கக் கடினமான தடித்த கவசம் பூண்டிருந்த சத்ருந்தபனை அந்தப் பாரதக் குலக் காளை {அர்ஜுனன்} அடித்த கணை துளைத்தது. காற்றால் கிழிக்கப்பட்டு மலைமேல் இருந்து விழும் மரம் போல. அந்தப் போர்க்களத்தில் அவன் {சத்ருந்தபன்} இறந்து விழுந்தான்.
மனிதர்களில் துணிச்சல் மிக்கவனால் {அர்ஜுனனால்}, போரில் சிதைக்கப்பட்ட அந்த மனிதர்களில் வீரக்காளைகள் {கௌரவர்கள்}, அண்ட அழிவின் போது வீசும் கடும் காற்றால் அசைக்கப்பட்ட பெரும் கானகம் போல, தடுமாற்றத்துடன் நடுங்க ஆரம்பித்தனர். வாசவனின் {இந்திரனின்} மகனான பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் தாக்கப்பட்டவர்களும், வாசவனின் {இந்திரனின்} சக்தியைக் கொண்டவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கரிய கவசம் பூண்டவர்களும், முழுதாய் வளர்ந்த இமாலய யானைகளைப் போன்றவர்களும், பெரும் கொடையாளிகளுமான, அந்த மனிதர்களில் நன்கு உடுத்திய வீரர்கள், {அர்ஜுனனிடம்} தோல்வியுற்று, உயிரிழந்து, தங்கள் {உடலின்} நீளத்தால் தரையை அளக்க ஆரம்பித்தனர்.
கோடைகாலத்தின் நெருக்கத்தில் {முதுவேனிற்காலத்தில்} பொங்கியெழும் தீ, கானகத்தை எரிப்பது போலப் பொங்கியெழுந்த, அந்த மனிதர்களில் முதன்மையானவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் தனது எதிரிகளை அனைத்துப் புறங்களிலும் கொன்று கொண்டிருந்தான். மேகக்கூட்டங்களைக் கலைக்கும் காற்று, வசந்த காலத்தில், சருகுகளைக் கீழே உதிர்ப்பது போல, தேர்வீரர்களில் முதன்மையானவனான {அதிரதனான} கிரீடி {அர்ஜுனன்}, தனது எதிரிகள் அனைவரையும் உதிர்த்துக் கொண்டு, போர்க்களத்தில் உலவினான்.
கிரீடத்தைத் தரித்தவனான பெருந்தீரமுடையவன் {அர்ஜுனன்}, விரைவில், விகர்த்தனன் மகனின் {கர்ணனின்} தம்பியான சங்கிராமஜித்தின் தேரில் பூட்டப்பட்டிருந்த சிவப்பு குதிரைகளைக் கொன்றான். பிறகு, ஒரு பிறை வடிவக் கணையால், தனது எதிரியின் {சங்கிராமஜித்தினுடைய} தலையை அறுத்தான். தனது தம்பி கொல்லப்பட்டதும், சூத சாதியைச் சேர்ந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தனது பராக்கிரமம் அனைத்தையும் திரட்டி, தந்தங்களை நீட்டி வரும் பெரிய யானையைப் போலவோ, பெருங்காளையை எதிர்த்து வரும் புலியைப் போலவோ அர்ஜுனனை நோக்கி விரைந்தான்.
பாண்டுவின் மகனைப் {அர்ஜுனனைப்} பனிரெண்டு கணைகளால் அந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்} துளைத்தான். அவனது {அர்ஜுனனது} குதிரைகளின் உடம்பில் அனைத்துப் பகுதிகளிலும் அடித்தான். {ஒரு கணையால்} விராடன் மகனைக் {உத்தரனை} அவனது கையில் அடித்தான். தன்னை நோக்கித் திடீரென முன்னேறி வரும் விகர்த்தனன் மகனை {கர்ணனை} நோக்கி அவசரமாக விரைந்த கிரீடி {அர்ஜுனன்}, பலவண்ணத் தோகை கொண்ட கருடன், கீழிருக்கும் பாம்பின் மீது பாய்வது போல, அவனைக் {கர்ணனைக்} கடுமையாகத் தாக்கினான். அவ்வீரர்கள் இருவரும் வில்லாளிகளில் முதன்மையானவர்களாக இருந்தனர்; இருவரும் பெரும் சக்தியுடன் இருந்தனர்; இருவரும் எதிரிகளைக் கொல்லும் வல்லமையைப் பெற்றிருந்தனர். அவர்களுக்குள் நடைபெற்ற மோதலைச் சாட்சியாகக் காண, ஆவலுடன் வந்த கௌரவர்கள், வெறும் பார்வையாளர்களாகத் தொலைவிலேயே நின்றுவிட்டனர்.
குற்றவாளியான கர்ணனைக் கண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் வெகுண்டெழுந்தாலும், அவன் {கர்ணன்} கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்து, விரைவில் எண்ணற்ற கணைகளைப் பயங்கர மழையாகப் பொழிந்து, அவனையும் {கர்ணனையும்}, அவனது குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் {கணை மழையால்} மறைத்தான். பீஷ்மரைத் தலைமையாகக் கொண்ட வீரர்கள், தங்கள் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவை, கிரீடியால் {அர்ஜுனனால்} துளைக்கப்பட்டு, அவனது கணைகளால் மறைக்கப்பட்டு, தங்கள் படைகள் சிதறிப் போனதால் உடைந்து போய், துயரத்தில் பெருத்த ஓலமிடத் தொடங்கினார்கள்.
எனினும், அர்ஜுனன் கரங்களால் அடிக்கப்பட்ட அந்தக் கணைகளைத் தனது எண்ணற்ற கணைகளால் எதிர்கொண்ட ஒப்பற்றவனும், வீரனுமான கர்ணன், விரைவில், தனது அம்புகளையும் வில்லையும் கொண்டு {அவற்றை} வெடிக்கச் செய்து, சுடர்மிகும் நெருப்பெனக் காட்சியில் தோன்றினான். அப்போது, வில்லின் நாண் கையுறைகளில் பட்டதால் ஏற்பட்ட நாணொலியால், அச்சூழலை அந்த விகர்த்தனன் மகன் {கர்ணனை} நிரப்பினான். அவனைப் {கர்ணனைப்} பாராட்டும் வகையில் கௌரவர்கள் எழுப்பிய கரவொலிகளாலும் {கை தட்டல்களாலும்}, சங்கொலிகளாலும், எக்காளம் மற்றும் பேரிகைகளாலும் அங்கே பெருத்தவொலி எழுந்தது.
காண்டீவத்தின் நாணொலியால் காற்றை நிரப்பிய கிரீடியையும் {அர்ஜுனனையும்}, அவனது கொடிக்கம்பத்துக்கு மேல் இருந்த கொடியில் பயங்கரமாகக் கதறிக் கொண்டிருக்கும் உயர்ந்த வாலுடைய குரங்கையும், {அக்கொடியிலிருக்கும்} பயங்கரமான உயிரினங்களையும் கண்ட கர்ணன், உரத்த கர்ஜனையை எழுப்பினான். குதிரைகளோடு இருந்த விகர்த்தனன் மகனைத் {கர்ணனைத்} தனது கணைகளால் துன்புறுத்திய கிரீடி, தனது பாட்டன் {பீஷ்மர்}, துரோணர், கிருபர் ஆகியோர் மீது பார்வையைச் செலுத்தியபடியே, துரிதமான கணை மழையை அவன் {கர்ணன்} மீது விரைந்து பொழிந்தான். பதிலுக்கு, விகர்த்தனன் மகனும் {கர்ணனும்}, கணைகளின் அடர்த்தியான மழையைப் பார்த்தன் {அர்ஜுனன்} மீது, மழைபொருந்திய மேகம் போலப் பொழிந்தான்.
கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அர்ஜுனன், கூரிய முனை கொண்ட தனது கணைகளால் கர்ணனை மூடினான். கூரிய முனை கொண்ட கணைகளின் மேகங்களைத் தங்கள் தேர்களில் இருந்து உற்பத்தி செய்த அந்த இரு வீரர்களும் எண்ணற்ற கணைகளையும், ஆயுதங்களையும் கொண்டு மோதிய போது, அவர்கள், மேகங்களால் மூடப்பட்ட சூரியனும் சந்திரனும் போலப் பார்வையாளர்களுக்குத் தோன்றினார்கள். எதிரியைப் பார்க்க முடியாதவனும், இலகுவான கரங்கள் கொண்டவனுமான கர்ணன், கிரீடம் அணிந்த அந்த வீரனின் {அர்ஜுனனின்} நான்கு குதிரைகளைத் தனது கூரிய கணைகளால் துளைத்தான். பிறகு அவனது தேரோட்டியை {உத்தரனை} மூன்று கணைகளாலும், அவனது கொடிக்கம்பத்தை மூன்றாலும் அடித்தான்.
இப்படி அடிக்கப்பட்டவனும், போரில் எதிரிகளை அடிப்பவனும், குரு குலத்தின் காளையுமான காண்டீவத்தைத் தாங்கும் ஜிஷ்ணு {அர்ஜுனன்}, துயில் நீத்த சிங்கமென எழுந்து, நேராகச் செல்லும் கணைகளால் கர்ணனைக் கடுமையாகத் தாக்கினான். (கர்ணனால் அடிக்கப்பட்ட) கணைமழையால் துன்புற்றவனும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களைச் சாதிப்பவனுமான அந்த ஒப்பற்றவன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். பல்வேறு உலகங்களைத் தனது கதிர்களால் மூடும் சூரியனைப் போல, அவன் {அர்ஜுனன்}, எண்ணற்ற கணைகளால் கர்ணனின் தேரை மறைத்தான். யானையால் தாக்கப்பட்ட சிங்கம் போன்ற அர்ஜுனன், தனது அம்பறாத்தூணியில் இருந்து சில கூரிய பிறைவடிவக் கணைகளை எடுத்து, தனது வில்லைக் காதுவரை இழுத்து, அந்தச் சூத மகனின் {கர்ணனின்} உடலெங்கும் {அந்தப் பிறைவடிவ அம்புகளை} அடித்தான்.
அந்தப்போரில், வஜ்ர வேகம் கொண்ட தனது கூரிய கணைகளால், கர்ணனின் கரங்கள், தொடைகள், தலை, நெற்றி, கழுத்து மற்றும் {அவனது} உடலின் பிற முக்கிய உறுப்புகள் ஆகியவற்றை, அந்த எதிரிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தில் இருந்து அடித்தான். பாண்டுவின் மகனான பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட கணைகளால் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, போர்க்களத்தின் முன்னணியை விட்டு அகன்று, ஒரு யானையால் வீழ்த்தப்பட்ட மற்றொரு யானை போல {அந்தப் போர்க்களத்தைவிட்டு} விரைந்து ஓட்டமெடுத்தான்.”
பீஷ்மர் எனக்குத் தடையாக முடியும்! – விராட பர்வம் பகுதி 55-போரில் அர்ஜுனன் செய்த சாகசம்; அர்ஜுனன் உத்தரனுக்கு எதிரிணியின் படைத்தலைவர்களை அறிமுகப்படுத்தியது; உத்தரன் கிருபரை நோக்கித் தேரை நடத்திச் சென்றது….
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ராதையின் மகன் {கர்ணன்} களத்தை விட்டு ஓடியதும், துரியோதனன் தலைமையிலான பிற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தங்களுக்குரிய படைப்பிரிவுகளில் இருந்து பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். துள்ளும் கடலின் கோபத்தைத் தாங்கும் கரையைப் போல, போர்க்களத்தில் வரிசையாக அணிவகுத்து, தன்னை எதிர்த்து விரைந்தோடி வந்த எண்ணிலடங்கா தலைவர்களின் சீற்றத்தைத் தாங்கிக் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, {அவர்கள் மீது} கணைகளின் மேகங்களைப் பொழிந்தான். தேர்வீரர்களில் முதன்மையானவனும், வெள்ளைக் குதிரைகளைக் கொண்டவனும், குந்தியின் மகனுமான பீபத்சு {அர்ஜுனன்}, எந்நேரமும் தெய்வீக ஆயுதங்களை அடித்துக் கொண்டே எதிரியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்.
விரைவில், சூரியன் தனது கதிர்களால் முழு உலகத்தையும் மூடுவதைப் போல, பார்த்தன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட எண்ணிலடங்கா கணைகளால், வானத்தின் அனைத்து திக்குகளையும் நிறைத்தான். தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றில் இருந்து போரிட்டவர்கள் மற்றும் கவசம் பூண்டு தரைப்படையில் போரிட்ட வீரர்கள் ஆகியோரில், கூர்மையான அம்புகளால் காயம்படாதவாறு தங்கள் உடலில் இரண்டு விரல் அகலத்தில் எஞ்சிய இடம் கொண்டவர்கள் எவரும் இல்லை. தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} இருந்த திறமையாலும், அந்தக் குதிரைகள் பெற்றிருந்த பயிற்சியாலும், உத்தரனனின் திறமையாலும், அவனது {அர்ஜுனனின்} ஆயுதங்கள் சென்ற விதத்தாலும், அவனது பராக்கிரமத்தாலும், இலகுவான கரங்களாலும், அர்ஜுனனை, படைக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் அண்ட அழிவின் போது, உட்கொள்ளும் சுடர்மிக்க நெருப்பாக மக்கள் கருதத் தொடங்கினர்.
எதிரிகள் மத்தியில் எவராலும், சுடர்விடும் தீ போலப் பெரும் பிரகாசத்துடன் ஒளிர்ந்த அர்ஜுனன் மீது தங்கள் கண்களைச் செலுத்த முடியவில்லை. அர்ஜுனனின் கணைகளால் சிதைக்கப்பட்ட எதிரிப்படை தலைவர்கள், மலையின் மார்பில் புதிதாக உதித்திருக்கும் மேகங்கள் சூரியக் கதிர்களைப் பிரதிபலிப்பதைப் போலவும், அசோக மரங்கள் நிறைந்த தோப்பு, கொத்து கொத்தான மலர்களால் பிரகாசிப்பது போலவும் தோன்றினர். உண்மையில், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் துன்புற்ற படைவீர்கள் இவற்றைப் போலவே இருந்தனர். அல்லது மலர்கள் படிப்படியாகத் தளர்ந்து விழும் அழகிய பூமாலை போல இருந்தனர். அனைத்திலும் வியாபித்துள்ள காற்று, எதிரிப்படை தலைவர்களுடைய கிழிந்த கொடிகளையும், குடைகளையும் தனது சிறகுகளில் தாங்கிச் சென்றது.
மேலும், தங்கள் அணிகளின் மத்தியில் ஏற்பட்ட அழிவைக் கண்டு பயந்த குதிரைகள், பார்த்தனின் அம்புகளால் {தேர்களின்} நுகங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, தேர்களின் உடைந்த பாகங்களை இழுத்தபடியே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின. காதுகளிலும், விலாப்புறங்களிலும், தந்தங்களிலும், கடைவாயருகிலும், உடலின் முக்கியப் பகுதிகளிலும் தாக்கப்பட்ட யானைகள், அந்தப் போர்க்களத்தில் கீழே விழ ஆரம்பித்தன. மேலும், கௌரவர்களைச் சார்ந்த யானைகளின் சடலங்கள் குறுகிய காலத்தில் பரவலாகச் சிதறுண்டதால், அந்தப் பூமியைக் காண பெருந்திரளான கருமேகங்கள் நிறைந்த மேகமூட்டமான வானம் போல இருந்தது. யுகத்தின் முடிவில் தோன்றும் சுடர்விடும் தழல்களைக் கொண்ட நெருப்பு, உலகத்தில் அழிந்து போகக்கூடிய அசைவன, அசையாதன ஆகிய அனைத்துப் பொருட்களையும் எரிப்பது போல, அந்தப் போர்க்களத்தில் அனைத்து எதிரிகளையும் பார்த்தனும் {அர்ஜுனனும்} எரித்தான். தனது ஆயுதங்களின் சக்தியாலும், தனது வில்லின் நாணொலியாலும், கொடிக்கம்பத்தில் நிலைத்திருக்கும் உயிரினங்களின் இயல்புக்கு மிக்கக் கதறல்களாலும், அந்தக் குரங்கின் பயங்கரமான கர்ஜனையாலும், சங்கொலியின் வெடிப்பாலும், எதிரிகளைப் பலமாக அடிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்}, துரியோதனனுடைய துருப்பினரின் இதயங்களில் திகிலை உணரச் செய்தான்.
அர்ஜுனன் பார்வைக்கெதிரிலேயே, எதிரி வீரர்கள் ஒவ்வொருவரின் வலிமையும் தூசிக்குச் சமானமாக மாறுவது தெரிந்தது. பாதுகாப்பற்றவர்களைக் கொல்லும் பாவத்தைச் செய்யத் துணிய விரும்பாத அர்ஜுனன், திடீரெனத் திரும்பி, தங்கள் இலக்கைக் கூர்முனை கணை மேகங்களால் தாக்குவதற்காகப் பருந்துகளைத் தப்பவிடும் வேடர்களைப் போல அப்படையைப் பின்னால் இருந்து தாக்கினான். அவன் {அர்ஜுனன்} விரைவில், இரத்தம் குடிக்கும் அம்புகளைக் கொத்துக் கொத்தாக ஆகாயம் முழுவதும் நிரப்பினான். சக்தி மிக்கச் சூரியனின் (முடிவிலியான} கதிர்கள் சிறு பாத்திரத்திற்குள் நுழைந்து, அதை முழுவதுமாக நிரப்புவது போல, அர்ஜுனனின் எண்ணற்ற கணைகள் விரிவடைவதற்கு ஆகாயத்தில் இடம் இல்லாமல் போயிற்று.
அருகில் இருக்கும்போது ஒரே ஒரு முறை மட்டுமே எதிரிகளால் அர்ஜுனனின் தேரைக் காண முடிந்தது. ஏனெனில், அதன் பிறகு {அப்படிப் பார்த்த} உடனேயே அவர்கள் தங்களுடைய குதிரைகளுடன் சேர்த்து அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர் {அடுத்த நொடியிலேயே கொல்லப்பட்டனர்}. அவனது கணைகள் எப்படி எதிரிகளின் உடலைத் தடங்கலற்றுக் கடந்து சென்றனவோ, அதே போல, அவனது தேரும் எதிரி தலைவர்கள் மத்தியில் தடங்கலற்று கடந்து சென்றது. உண்மையில், பெருங்கடலில் விளையாடும் ஆயிரம் தலை கொண்ட வாசுகியைப் போல, அவன் எதிரி துருப்புகளைப் பெரும் வன்முடையுடன் தூக்கியெறிந்து கலங்கடிக்கத் தொடங்கினான். இடையறாது கிரீடி {அர்ஜுனன்} தனது கணைகளை அடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வில்லின் நாணொலி, மற்ற உயிரினங்களால் ஏற்கனவே கேட்கப்படாத அளவுக்கு அனைத்து ஒலிகளையும் விஞ்சி இருந்தது. சூரியக் கதிர்களால் பளிச்சென ஒளிர்ந்த கருமேகங்கள் போல, களத்தை நிரப்பிய யானைக்கூட்டம், தங்கள் உடல்கள் (கொழுந்துவிட்டெரியும்) கணைகளால் துளைக்கப்பட்டு ஒளிவீசின. அனைத்துத் திசைகளிலும் உலவி, வலதிலும் {வலது கையாலும்}, இடதிலும் {இடது கையாலும்} (கணைகளை) அடித்த அர்ஜுனனின் வில் இழுக்கப்பட்டு எப்போதும் சரியான வட்டமாகத் தெரிந்தது. அழகற்ற எதன் மீதும் கண்கள் நிலைக்காததைப் போல, அந்தக் காண்டீவந்தாங்கியின் {அர்ஜுனனின்} கணைகள் இலக்கைத் தவிர வேறு எதையும் அடையவில்லை. யானைக்கூட்டத்தின் நடையால் பாதை உண்டாவது போல, அந்தக் கிரீடியின் {அர்ஜுனனின்} தேரால் அங்குப் பாதை உண்டாக்கப்பட்டது. பார்த்தனால் அடிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இருந்த எதிரி வீரர்கள், “பார்த்தனின் வெற்றியை விரும்பும் இந்திரனே இறவாதவர்கள் {தேவர்கள்} அனைவரையும் அழைத்து வந்து நம்மைக் கொன்று கொண்டிருக்கிறானோ” என்று எண்ணினார்கள்.
சுற்றிலும் பயங்கரப் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த விஜயனை {அர்ஜுனனை} கண்ட அவர்கள், அனைத்து உயிரினங்களையும் கொல்வதற்காக மரணமே அர்ஜுனனின் உருவில் வந்திருப்பதாகவும் கருதினார்கள். பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட குருக்களின் {கௌரவர்களின்} துருப்புகள், பார்த்தனின் மோதல்களில் மட்டுமே காணக்கூடிய வகையிலும், பார்த்தனின் சாதனையை விவரிக்கும் வண்ணமும் சிதைக்கப்பட்டு, சிதறப்பட்டு இருந்தன. {பருவ காலத்தில்} இலையுதிர்க்கும் மூலிகைச் செடிகளின் மேல்புறத்தைத் துண்டிப்பதைப் போல, அவன் {அர்ஜுனன்} பகைவரின் தலைகளை வெட்டிச் சாய்த்தான். அர்ஜுனனால் ஏற்பட்ட பயங்கரத்தைக் கண்ட குருக்களின் சக்தி அனைத்தும் தொலைந்து போயிற்று. அர்ஜுனனின் எதிரிகள் நிரம்பிய காடு, அர்ஜுனன் என்ற புயலால் சிதைக்கப்பட்டுக் கலங்கடிக்கப்பட்டது போல, ஊதா நிற சுரப்பு நீரால் {purple secretions} பூமியைச் சிவப்பாக்கியது. குருதி கலந்த புழுதி காற்றால் உயர்த்தப்பட்டு, சூரியனின் கதிர்களையே கூட, மேலும் சிவப்பாக்கியது. விரைவில் சூரியனால் அலங்கரிக்கப்பட்ட வானம் மாலைவேளை வந்துவிட்டதைப் போல அதிகச் சிவப்பாக இருந்தது. உண்மையில், சூரியன் கூட அஸ்தமித்ததும் தனது கதிர்களை நிறுத்திவிடுவான், ஆனால் பாண்டுவின் மகன் தனது கணையடிப்பை நிறுத்தினானில்லை. எதிரியின் பெரும் வில்லாளிகள் அனைவரும் பெரும் சக்தியும் பராக்கிரமமும் கொண்டிருந்தாலும், நினைத்துப் பார்க்க முடியாத சக்தி கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தனது அனைத்து தெய்வீக ஆயுதங்களாலும் அவர்களை மூழ்கடித்தான்.
பிறகு அர்ஜுனன், துரோணர் மீது கூர்முனை கொண்ட எழுபத்துமூன்று {73} அம்புகளை அடித்தான். துஸ்ஸஹன் மீது பத்தும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது எட்டும், துச்சாசனன் மீது பனிரெண்டும், சரத்வானின் மகன் கிருபர் மீது மூன்றும் அடித்தான். பிறகு, அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, சந்தனுவின் மகனான பீஷ்மரையும், மன்னன் துரியோதனனையும் நூறு அம்புகளால் துளைத்தான். கடைசியாக, பராசத்தைக் கொண்டு கர்ணனுடைய காதைத் துளைத்தான். அனைத்து ஆயுதங்களிலும் திறமைபெற்ற பெரும் வில்லாளியான கர்ணன் அப்படித் துளைக்கப்பட்ட போது, அவனது குதிரைகளும், தேரும், தேரோட்டியும் என அனைத்தும் அழிக்கப்பட்டன. அவனுக்கு {கர்ணனுக்கு} ஆதரவாக இருந்த துருப்புகள் உடைய ஆரம்பித்தன. அப்படி அந்த வீரர்கள் உடைவதைதக் கண்ட விராடன் மகன் {உத்தரன்}, பார்த்தனின் நோக்கத்தை அறிந்து அவர்களுக்கு வழி கொடுத்தபடியே அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தரே {அர்ஜுனரே}, என்னைத் தேரோட்டியாகக் கொண்டு, இந்த அழகிய தேரில் நின்று கொண்டிருக்கும் உம்மை, நான் எந்தப் பிரிவுக்கு {எந்தப் பிரிவின் பக்கம்} அழைத்துச் செல்லட்டும்? நீர் உத்தரவிட்டால், நான் உடனே அங்கு அழைத்துச் செல்வேன்” என்றான் {உத்தரன்}.
அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! உத்தரா, புலித்தோலைக் கவசமாக அணிந்து, சிவப்பு நிற குதிரைகளால் இழுக்கப்படும் நீலக்கொடி பொருந்திய தேரில் இருக்கும் மங்கலவீரரான கிருபர் அதோ இருக்கிறார். கிருபரின் படைப்பிரிவின் முகப்பு அதோ தெரிகிறது. அங்கே என்னை அழைத்துச் செல். அந்தப் பெரும் வில்லாளிக்கு {கிருபருக்கு}, நான் வில்வித்தையில் எனது வேகமான கரங்களின் திறனைக் காட்ட விரும்புகிறேன்.
தனது கொடியில் தங்க வேலைப்பாடு கொண்ட நேர்த்தியான நீர்க்குடத்தைக் கொண்டிருக்கும் அந்த வீரரே அனைத்து ஆயுதங்களிலும் முதன்மையானவரான ஆசான் துரோணராவார். ஆயுதம் தாங்கும் அனைவரைக்காட்டிலும், நான் அவர் மீது எப்போதும் மிகுந்த மதிப்பைக் கொண்டிருக்கிறேன். எனவே, நீ உற்சாகமாக அவரை {துரோணரை} வலம் வா. அங்கே நமது சிரம் தாழட்டும். அதுவே நிலைத்த அறமாகும். எனது உடலை துரோணர் முதலில் தாக்கிய பிறகே நான் அவரைத் தாக்குவேன். ஏனெனில், அப்போதுதான் அதற்காக அவரால் சீற்றங்கொள்ள இயலாது.
அதோ, அங்கே துரோணருக்கு அருகில், வில்லைக் கொடியில் தாங்கியிருக்கும் வீரர், ஆசானின் {துரோணரின்} மகனான பெரும் தேர்வீரர் அஸ்வத்தாமன் ஆவார். ஆயுதம் தாங்கும் அனைவரிலும் நான் பெரிதும் மதிப்பவர்களில் அவரும் {அஸ்வத்தாமரும்} ஒருவராவார். எனவே, நீ அவரது தேர் அருகே செல்லும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் நிறுத்துவாயாக.
அதோ, தங்கக்கவசம் பூண்டு, {நான்காகப் பிரிக்கப்பட்ட படையின்} மூன்றாவது பிரிவான மிகத் திறமையான துருப்பால் சூழப்பட்டு, தங்கத்தரையில் இருக்கும் யானையைத் தனது கொடியில் கொண்டிருப்பவன், திருதராஷ்டிரரின் மகனான துரியோதனனாவான். ஓ! வீரா {உத்தரா}, எதிரிப்படையின் தேர்களைக் கலங்கடிக்கும் உனது தேரை அவனுக்கு முன்பாக நடத்து. இம்மன்னன் {துரியோதனன்} போர்க்களத்தில் வீழ்த்தப்படக் கடினமானவனும், அனைத்து எதிரிகளையும் கலங்கடிக்க வல்லவனும் ஆவான். கரங்களின் வேகத்தில் இவனே துரோணரின் சீடர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். நான் விற்கலையில் மேன்மையான வேகத்தைப் போர்க்களத்தில் அவனுக்குக் காட்டுவேன்.
அதோ, யானைகளைக் கட்டும் தடித்த கயிறைத் தனது கொடியில் தாங்கியிருப்பவன் விகர்த்தனன் மகனான கர்ணனாவான். அவனை நீ ஏற்கனவே அறிவாய். ராதையின் அந்தத் தீய மகனருகே {கர்ணனருகே} நீ செல்லும் போது, நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவன் என்னிடம் எப்போதும் மோதலுக்குச் சவால் விடுவான்.
அதோ, (நடுவில்) சூரியனையும், ஐந்து நட்சத்திரங்களையும் தனது நீல நிறக் கொடியில் கொண்டவரும், பெரும் சக்தியுடன் தனது தேரில் நிற்பவரும், கையில் பெரும் வில்லுடன் இருப்பவரும், அற்புதமான கையுறைகளை அணிந்திருப்பவரும், சுத்தமான வெள்ளை நிறத்திலான குடையைத் தனது தலைக்கு மேலே கொண்டவரும், பெருந்திரளான கருமேகங்களுக்கு முன்னிலையில் இருக்கும் சூரியனைப் போல, பல்வேறு கொடிகளும் பதாகைகளும் தாங்கி வரிசையாக நிற்கும் பெருந்தேர்களுக்குத் தலைமையாக நிற்பவரும், சூரியனைப் போன்றும், சந்திரனைப் போன்றும் பிரகாசமிக்கத் தங்க கவசத்தை அணிந்தவரும். தலையில் அணிந்திருக்கும் தங்கக் கவசத்தால் எனது இதயத்தை அச்சமூட்டுபவரும், எங்கள் அனைவருக்கும் பாட்டனுமான சந்தனுவின் மகன் பீஷ்மர் அவரே ஆவார்.
துரியோதனனால், அரசருக்குரிய பிரகாசத்துடன் தான் உற்சாகமூட்டப்படுவதால், அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} அவர் {பீஷ்மர்} பாசம் கொண்டு மிகுந்த பாகுபாட்டுடன், இருக்கிறார். அவரை நாம் கடைசியாக அணுகுவோமாக. ஏனெனில், இப்போது கூட அவரால் {பீஷ்மரால்} எனக்குத் தடையாக இருக்க முடியும். என்னோடு {அவர்} போரிடும்போது, குதிரைகளை நீ கவனமாகச் செலுத்துவாயாக” என்றான் {அர்ஜுனன்}. அவனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் அவசரத்துடன், அந்தச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தேரை, போரிட ஆவலாக நின்று கொண்டிருந்த கிருபரிடம் நடத்திச் சென்றான்.”
இந்திரனின் வருகை! – விராட பர்வம் பகுதி 56-கௌரவர்களுக்கு அர்ஜுனனுக்கும் இடையில் நடக்கும் போரைக் காண வந்திருந்த தேவர்களும் இந்திரனும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மழைக்காலத்தில், மென்மையான காற்றின் முன்னிலையில் செல்லும் மேகத்திரள் போல, அந்தக் கடும் வில்லாளிகளின் படைகள் {காலாட்படைகள்} தெரிந்தன. (அந்தக் காலாட்படையின்) அருகில் பயங்கரமான போர்வீரர்களால் நடத்தப்படும் எதிரிகளின் குதிரைகள் {குதிரைப்படைகள்} நின்றிருந்தன. அங்கே, பயங்கர முகம் கொண்டவையும், அழகிய கவசத்தால் ஒளிருபவையும், திறமையான போராளிகளால் நடத்தப்படுபவையும், இரும்பு அங்குசங்களால் தூண்டப்படுபவையுமான யானைகளும் {யானைப்படைகளும்} இருந்தன.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, விஸ்வர்கள் மற்றும் மருதர்களாகிய தேவர்கள் துணையுடன், ஓர் அழகிய தேரில் ஏறி சக்ரன் {இந்திரன்} அங்கே வந்திருந்தான். தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் கூட்டத்தாலும், அந்த மேகங்களற்ற இரவில் மின்னிக் கொண்டிருந்த கோள்கள் மற்றும் விண்மீன் கூட்டத்தாலும் ஆகாயவிரிவு பிரகாசத்துடன் இருந்தது. மேலும், பீஷ்மர் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் சந்திக்கும்போது நடைபெறும் கடுமையான வலிமைமிக்க மோதலைச் சாட்சியாகக் காணவும், மானுடப் போர்களில் தங்கள் தெய்வீக ஆயுதங்களின் பலாபலனைக் கண்ணுறவும் விரும்பிய தேவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் தங்கள் தேர்களில் அங்கே வந்தனர்.
ஓட்டுநரின் விருப்பப்படி நினைத்த இடத்திற்குச் செல்ல வல்லதும், ஆயிரம் தூண்களால் தாங்கப்பட்ட கூரை கொண்டதும், ரத்தினங்களாலும் தங்கத்தாலும் ஆன நடுத்தூணைக் கொண்டதும், அனைத்து வகை ரத்தினங்களால் அழகுபடுத்தப்பட்டிருந்ததுமான தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தெய்வீகத் தேர், தெளிந்த வானில் அழகாகத் தெரிந்தது.
வாசவனுடன் (வாசவனைத் தலைமையாகக் கொண்ட} {இந்திரனுடன்} கூடிய முப்பத்துமூன்று {33} தேவர்களும், பெரும் முனிவர்களுடன் ஒன்றாக வந்த கந்தர்வர்கள், ராட்சசர்கள், நாகர்கள், பித்ருக்கள் ஆகியோரும் அங்கே காட்சியில் தோன்றினர். தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தேரில், பிரகாசமிக்க மேனிகள் கொண்ட மன்னர்களான வசுமனஸ், பலாக்ஷன், சுப்ரதர்த்தனன், அஷ்டகன், சிபி, யயாதி, நகுஷயன், கயன், மனு, பூரு, ரகு, பானு, கிரிசாஸ்வன், சகரன், நளன் ஆகியோர் இருந்தனர். அங்கே அக்னி, ஈசானன், சோமன், வருணன், பிரஜாபதி, தத்ரி, விதத்ரி, குபேரன், யமன், ஆலம்புசன், உக்கிரசேனன், கந்தர்வன் தம்புரு ஆகியோரும், அந்தப் பிரகாசமிக்க வரிசையில் ஒளிர்ந்து கொண்டு, தங்கள் தேரில் வந்திருந்தனர்.
தேவர்கள், சித்தர்கள் ஆகிய அனைவரும், முனிவர்களில் முதன்மையானவர்களும் அர்ஜுனனுக்கும் குருக்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதலைக் காண அங்கே வந்திருந்தனர். தேவர்களின் பூமாலையில் இருந்து வீசிய புனிதமான நறுமணம், வசந்தகாலத்தில் பூத்துக்குலுங்கும் கானகத்தைப் போலக் காற்றில் நறுமணத்தை நிறைத்தன. அங்கே இருந்த சிவப்புக் குடைகள், அங்கிகள், பூமாலைகள், மற்றும் தேவர்களின் சாமரங்கள் ஆகியன மிகுந்த அழகுடன் இருந்தன. பூமியில் இருந்த புழுதிப்படலம் உடனே மறைந்தது. (தெய்வீக) ஒளி அனைத்தையும் வெளிச்சமாக்கியது. தெய்வீக வாசனைத்திரவியங்களால் நறுமணம் பரவி தென்றலுடன் சேர்ந்து போராளிகளுக்கு ஆறுதலளித்தது.
தேவர்களில் முதன்மையானோர் அங்கே கொண்டுவந்திருந்த வித்தியாசமான பிரகாசமிக்க நகைகளாலும் அங்கே ஏற்கனவே வந்திருந்த பல்வேறு தயாரிப்புகளிலான அழகிய தேர்களாலும் நிறைந்த ஆகாயவிரிவைக் காண அழகாக இருந்தது. தேவர்களால் சூழப்பட்டவனும், தாமரை மற்றும் அல்லி மலர்களால் ஆன மாலைகளை அணிந்தவனுமான வஜ்ரத்தைத் தாங்கிய சக்திமிக்கவன் {இந்திரன்}, தனது தேரில் பார்ப்பதற்கு அழகாக இருந்தான். அந்தப் பலனைக் கொன்றவன் {இந்திரன்}, போர்க்களத்தில் இருந்த தனது மகனை {அர்ஜுனனை} நிலைத்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படிப்பார்த்தாலும் அவனது மனம் நிறைவை அடையவில்லை” {என்றார் வைசம்பாயனர்}.
தேரொடிந்த கிருபர்! – விராட பர்வம் பகுதி 57-அர்ஜுனனுக்கும் கிருபருக்கும் இடையில் நடந்த மோதல்…
வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், “போர்க்களத்தில் வரிசையாக நிற்கும் குரு படையினரைக் கண்ட குரு குலக் கொழுந்தான பார்த்தன் {அர்ஜுனன்}, விராடன் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்க பலிப்பீடத்தைத் தாங்கிக் காணப்படும் கொடியைக் கொண்ட தேரில், தெற்கு நோக்கி விரையும் சரத்வானின் மகன் கிருபரைத் தொடர்ந்து செல்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} சொற்களைக் கேட்ட விராடன் மகன் {உத்தரன்}, ஒரு நொடியும் தாமதியாமல், தங்கக் கவசம் பூண்ட வெள்ளி நிறக் குதிரைகளை விரைந்து செலுத்தினான். மேலும், சந்திரனின் நிறத்தைப் பிரதிபலிக்கும் அந்த நெருப்பு போன்ற குதிரைகளை, ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு வகையான வேகமான எட்டுகளை எடுத்துவைக்கும்படி செய்தான். குதிரை சாத்திரம் அறிந்த உத்தரன், குரு படையை அணுகியதும், காற்றின் வேகம் கொண்ட அந்தக் குதிரைகளைத் திருப்பினான். வாகனங்களைச் {தேர்களைச்} செலுத்துவதில் திறமை கொண்ட அந்த மத்ஸ்ய இளவரசன் {உத்தரன்}, சில நேரங்களில் அங்கே சுழன்று கொண்டும், சில நேரங்களில் சிக்கலான வட்டப்பாதையில் சென்றும், சில நேரங்களில் இடது புறம் திரும்பியும் சென்று குருக்களை அலங்கமலங்க விழிக்க வைக்கத் தொடங்கினான். அப்படிச் சுற்றிலும் சுழன்ற அந்தத் துணிச்சல் மிக்க விராடன் மகன் {உத்தரன்}, கடைசியாகக் கிருபரின் தேரை அணுகி, அவரை எதிர்கொள்ளும் விதமாக நின்றான்.
பிறகு, தனது பெயரை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன், தேவதத்தம் என்று அழைக்கப்பட்ட சங்குகளில் சிறந்த சங்கை எடுத்து வலுவுடன் ஊதி, உரத்த சங்கொலியை ஒலித்தான். வலிமைமிக்க ஜிஷ்ணுவால் {அர்ஜுனனால்}, போர்க்களத்தில் ஒலிக்கப்பட்ட சங்கொலி, மலையைப் பிளப்பது போலக் கேட்கப்பட்டது. அர்ஜுனனால் ஊதப்படும்போது அந்தச் சங்கு நூறு துண்டுகளாக உடைந்து போகாததைக் கண்ட குருக்கள் {கௌரவர்கள்}, தங்கள் வீரர்கள் அனைவருடன் சேர்ந்து அதை உயர்வாக மெச்சத் தொடங்கினர். சொர்க்கத்தை அடைந்த அவ்வொலி, திரும்பி வரும்போது, மலையின் மார்பில் மகவத்தால் {இந்திரனால்} வீசப்படும் வஜ்ரத்தின் ஒலி {இடியோசை} போலக் கேட்கப்பட்டது.
அதன்பின்பு, வீரரும், துணிச்சல்மிக்கவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், பலமும் பராக்கிரமும் நிறைந்தவருமான சரத்வானின் மகன் கிருபர், அவ்வொலியைத் தாங்கொணாது, அர்ஜுனன் மீது கோபம் கொண்டு, {அவனுடன்} போரிட விரும்பி, கடலில் பெறப்பட்ட தனது சங்கை எடுத்துப் பலமாக ஊதினார். அவ்வொலியால் மூன்று உலகங்களையும் நிரப்பிய அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவர் {கிருபர்}, தனது பெரிய வில்லை எடுத்து, அந்த வில்லின் நாணைப் பலமாகச் சுண்டி நாணொலி எழுப்பினார். இரு சூரியன்களுக்கு ஒப்பான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஒருவரை எதிர்த்து மற்றவர் நின்றபோது, இலையுதிர்கால மேகங்களின் பெருந்திரளைப் போல அவர்கள் பிரகாசித்தனர்.
பிறகு, எதிரி வீரர்களைக் கொல்பவரான சரத்வானின் மகன் {கிருபர்}, உயிர் நிலைகளில் நுழையவல்லவையும். வேகமானவையுமான கூரிய பத்து கணைகளால், விரைவாகப் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தார். அந்தப் பிருதையின் மகனும் {குந்தியின் மகன் அர்ஜுனனும்}, தனது பங்குக்கு, உலகத்தால் கொண்டாடப்படும் ஆயுதங்களில் முதன்மையான காண்டீவத்தை இழுத்து, உடலின் முக்கியமான பகுதிகளைத் துளைக்கவல்ல எண்ணிலடங்கா இரும்புக் கணைகளை அடித்தான். அதன்பேரில், கிருபர், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகள் {தன்னிடம்} வருமுன்பே கூரிய கணைகளைக் கொண்டு, அவற்றை நூறாகவும் {100}, ஆயிரமாகவும் {1000} வெட்டிப் போட்டார். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோபத்தில் பல்வேறு தந்திரங்களை வெளிப்படுத்தி, கணைகளின் மழையால் அனைத்துப் புறங்களையும் மூடினான். முழு வானத்தையும் தனது கணைகளால் மறைத்த அளவிடமுடியா ஆன்மா கொண்ட அந்த வலிமைமிக்க வீரனான பிருதையின் மகன் {அர்ஜுனன்}, நூறு கணைகளால் கிருபரைச் சூழந்தான். தீச்சுடர்களைப் போன்ற அந்தக் கூரிய கணைகளால் துன்புற்ற கிருபருக்குக் கோபம் பெருகியதால், அளவிடமுடியாத பராக்கிரமம் கொண்ட உயர் ஆன்ம பார்த்தனை {அர்ஜுனனை}, பத்தாயிரம் கணைகளால் விரைவாகப் பீடிக்கச் செய்து, அந்தப் போர்க்களத்தையே அவர் {கிருபர்} கர்ஜிக்கச் செய்தார்.
பிறகு வீரனான அர்ஜுனன், தனது எதிரியின் {கிருபரின்} நான்கு குதிரைகளை, காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்டவையும், கூரானவையும், நேரானவையும், தங்க இறகுகள் கொண்டவையுமான நான்கு மரணக்கணைகளால் துளைத்தான். தீச்சுடர் போன்ற அந்தக் கூரிய கணைகளால் துளைக்கப்பட்ட அந்தக் குதிரைகள் திடீரெனப் பின்வாங்கின. அதன் விளைவாகக் கிருபர் தனது இடத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டார். கௌதமர் {கிருபர்} தனது இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதைக் கண்ட குருகுலத் தோன்றலான அந்த எதிரி வீரர்களைக் கொல்பவன் {அர்ஜுனன்}, எதிராளியின் {கிருபரின்} கண்ணியத்தை மதித்த காரணத்தால், அவர் மீது கணைகள் தொடுப்பதை நிறுத்தினான்.
பிறகு, மீண்டும் தனது இடத்தை அடைந்த கௌதமர் {கிருபர்}, கங்கப் பறவையின் இறகுகளைக் கொண்ட பத்து கணைகளால் சவ்யசச்சினை {அர்ஜுனனை} விரைவாகத் துளைத்தார். பிறகு பார்த்தன், கூரிய முனை கொண்ட ஒரு பிறை வடிவ கணையைக் கொண்டு, கிருபரின் வில்லையும், கையுறைகளையும் வெட்டியெறிந்தான். உயிரையும் துளைக்கவல்ல கணைகளால் கிருபரின் கவசத்தையும் வெட்டியெறிந்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவரது உடலுக்குக் காயத்தை ஏற்படுத்தவில்லை. கவசத்தை இழந்த அவரது {கிருபரின்} உடல், பருவகாலத்தில் சதுப்பு நிலத்தைவிட்டகன்ற பாம்பை ஒத்திருந்தது. தனது வில் பார்த்தனால் வெட்டப்பட்டவுடன், மற்றொன்றை எடுத்த கௌதமர் {கிருபர்}, அதில் மூன்று நாண்கயிறுகளைச் சேர்த்துக் கட்டினார்.
சொல்வதற்கே அதிசயமாக இருந்தாலும், அந்த அவரது வில்லும், குந்தி மகனின் {அர்ஜுனனின்} நேரான கணைகளால் வெட்டப்பட்டது. எதிரி வீரர்களைக் கொல்பவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சரத்வானின் மகனால் {கிருபரால்} ஒன்றன் பின் ஒன்றாக {மேலும்} பிற விற்கள் எடுக்கப்பட்ட போதெல்லாம், அவற்றையும் இவ்வழியிலேயே வெட்டியெறிந்தான். தனது அனைத்து விற்களும் வெட்டியெறியப்பட்ட பிறகு, அந்த வலிமைமிக்க வீரர் {கிருபர்}, தனது தேரில் இருந்து வஜ்ரம் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த ஓர் எறிவேலை வீசினார். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த எறிவேல், எரிகல்லைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு காற்றில் வந்த போது, அர்ஜுனன் அதைப் பத்துக் கணைகள் கொண்டு வெட்டியெறிந்தான்.
புத்திசாலியான அர்ஜுனனால் தனது எறிவேல் இப்படி வெட்டப்பட்டதைக் கண்ட கிருபர், மற்றுமொரு வில்லை விரைந்து எடுத்து, எண்ணற்ற பிறைவடிவ கணைகளைத் தொடர்ச்சியாக அடித்தார். எனினும், பார்த்தன், கூரிய முனை கொண்ட தனது பத்து {10} கணைகளால் அவற்றை வெட்டியெறிந்தான். பிறகு அந்தப் போர்க்களத்தில் மிகவும் கோபம் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும் தீச்சுடர்களுக்கு ஒப்பானவையுமான பதிமூன்று {13} கணைகளை அடித்தான். அவற்றில் ஒன்றைக் கொண்டு, எதிரி {கிருபருடைய} தேரின் நுகத்தடியை வெட்டினான். {அவற்றில்} நான்கைக் கொண்டு நான்கு குதிரைகளைத் துளைத்தான். ஆறாவதைக் கொண்டு தனது எதிரியுடைய {கிருபருடைய} தேரோட்டியின் தலையை அவனுடைய உடலில் இருந்து துண்டித்தான். {அவற்றில்} மூன்றைக் கொண்டு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், அந்த மோதலில் கிருபருடைய தேரின் மூங்கில் திரிதண்டத்தையும், {அவற்றில்} இரண்டைக் கொண்டு {தேரின்} சக்கரங்களையும் தாக்கினான். பனிரெண்டாவது கணையைக் கொண்டு கிருபரின் கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான்.
இந்திரனைப் போல ஏளனமாகச் சிரித்த பல்குனன் {அர்ஜுனன்}, பதிமூன்றாவதைக் கொண்டு கிருபரின் மார்பைத் துளைத்தான். பிறகு, தனது வில் வெட்டப்பட்டு, தேர் உடைக்கப்பட்டு, குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்டதையும் கண்ட கிருபர் கீழே குதித்து, ஒரு கதாயுதத்தை எடுத்து விரைவாக அர்ஜுனன் மீது வீசினார். ஆனால், கிருபரால் வீசப்பட்ட அந்தக் கனமிக்கப் பளபளப்பான கதாயுதம், அர்ஜுனனின் கணைகளால் தாக்குண்டு, மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.
பிறகு, சரத்வான் மகனை {கிருபரைக்} மீட்க விரும்பிய வீரர்கள் (கிருபர் இருந்த படைப்பிரிவின் வீரர்கள்) அனைத்துப் புறங்களில் இருந்தும் பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதி, அவனைத் தங்கள் கணைகளால் மூடினர். குதிரைகளை இடதுபுறம் திருப்பிய விராடன் மகன் {உத்தரன்}, யமகம் என்றழைக்கப்பட்ட சுற்றிவளைக்கும் பரிணாமத்தைச் செய்யத் தொடங்கி, அதன் காரணமாக அவ்வீரர்களின் எதிர்ப்பைத் தடுத்தான். பிறகு அந்த மனிதர்களில் ஒப்பற்ற காளைகள், தேரை இழந்த கிருபரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, குந்தியின் மகனான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருகில் இருந்து {தூரமாக} அவரை {வேறுபக்கம்} வழிநடத்திச் சென்றனர்.
துரோணர் விலக வாய்ப்பளித்த பார்த்தன்! – விராட பர்வம் பகுதி 58-அர்ஜுனனுக்கும் துரோணருக்கும் இடையில் நடந்த மோதல்; அவர்களுக்குள் நடந்த மோதலில் இடைமறித்த அஸ்வத்தாமன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருபர் இப்படி அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, சிவப்புக் குதிரைகள் கொண்ட ஒப்பற்ற துரோணர், ஏற்கனவே நாணில் கணை பொருத்தப்பட்ட தனது வில்லை எடுத்துக் கொண்டு, வெண்குதிரைகள் கொண்ட அர்ஜுனனை நோக்கி விரைந்தார். தனது தங்கத் தேரில் முன்னேறி வரும் ஆசானை சிறிது தொலைவில் கண்ட வெற்றி வீரர்களில் முதன்மையான அர்ஜுனன், உத்தரனிடம், “ஓ! நண்பா, நீ அருளப்பட்டிருப்பாயாக. சுடர்விடும் நெடும் நெருப்பைப் போன்ற தங்க பலிப்பீடத்தைத் தனது உயர்ந்த பதாகையின் தலைப்பில் கொண்டவரும், {தேரைச்} சுற்றிலும் நிறையக் கொடிகள் கொண்டவரும், அமைதியான இனிய முகமும், பவளம் மற்றும் தாமிர வண்ணமும், உயர்ந்த பயிற்சியும் கொண்ட, மிக அழகான பெரிய குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் வருபவரான துரோணரிடமே நான் போரிட விரும்புகிறேன்.
நீண்ட கரங்களும், பெரும் சக்தியும், பலமும், அழகான மேனியும் கொண்ட அவர் {துரோணர்}, உலகங்களால் தனது பராக்கிரமத்திற்காகக் கொண்டாடப்படுபவரும், புத்திக்கூர்மையில் உசானஸைப் {சுக்கிராச்சாரியாரைப்} பிரதிபலிப்பவரும், அறநெறி அறிவில் பிருகஸ்பதியைப் போன்றவரும், நான்கு வேதங்களையும் அறிந்து, பிரம்மச்சரிய அறங்களைப் பயின்று வருபவராவார். ஓ! நண்பா {உத்தரா}, தெய்வீக ஆயுதங்களை ஏவுதல் மற்றும் திரும்ப அழைத்தல் ஆகியவையும், மொத்த ஆயுத அறிவியலும் அவருள் எப்போதும் வசிக்கின்றன. பொறுமை {மன்னிக்கும் தன்மை}, தற்கட்டுப்பாடு, உண்மை {சத்தியம்}, ஊறிழைக்காமை {அகிம்சை}, நடத்தையில் ஒழுங்கு ஆகியவையும் எண்ணற்ற பிற பண்புகளும் அந்த மறுபிறப்பாளரிடம் {பிராமணரிடம்_துரோணரிடம்} எப்போதும் வசிக்கின்றன. போர்க்களத்தில் இருக்கும் அந்த உயர்ந்த அருள் பெற்றவருடன் நான் போரிட விரும்புகிறேன். எனவே, ஓ! உத்தரா, அங்கே ஆசானின் முன்பு என்னை அழைத்துச் செல்” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனனால் இப்படிச் சொல்லப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது குதிரைகளை, பரத்வாஜரின் மகனுடைய {துரோணரின்} தேர் நோக்கிச் செலுத்தினான். தேர்வீரர்களில் முதன்மையானவரான துரோணரும், கோபமுற்ற யானை போல், தன்னைப் போலவே கோபங்கொண்டு அவசரமாக முன்னேறிக் கொண்டிருந்த பாண்டுவின் மகனான பார்த்தனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தார். பிறகு அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, நூறு எக்காளங்களின் ஒலிக்கு நிகரான தனது சங்கொலியை எழுப்பினார். கடலைக் கலங்கடிக்கும் புயல் போல அவ்வொலி மொத்த படையையும் கலங்கடித்தது. அவரது {துரோணரது} செந்நிறக் குதிரைகளும், மனோவேகம் கொண்டவையும், அன்னம் போன்ற வெண்மையானவையுமான அர்ஜுனனின் குதிரைகளும் போரில் கலப்பதைக் கண்ட பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
பராக்கிரமம் மிக்கவர்களும், ஒப்பற்றவர்களும், நன்கு பயிற்சிபெற்றவர்களும், பெரும் சக்தியும் பலமும் படைத்தவர்களுமான அவ்விரு தேர்வீரர்களான ஆசான் துரோணரும், அவரது சீடன் பார்த்தனும் {அர்ஜுனனும்} ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர்க்களத்தில் நிற்பதைக் கண்ட பாரதர்கள் கூட்டம் அடிக்கடி நடுங்கத் தொடங்கின. பெரும் பராக்கிரமம் கொண்ட பலமிக்கத் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் தேரைத் தனது தேர் மூலம் அடைந்து, மகிழ்ச்சியில் நிறைந்து, தனது ஆசானை {துரோணரை} வணங்கினான். எதிரி வீரர்களைக் கொல்பவனும், வலிய கரங்கள் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, துரோணரிடம் எளிமையான மற்றும் இனிமையான தொனியில், “எங்கள் வனவாசத்தை முடித்த நாங்கள், எங்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகளுக்குப் பழிதீர்க்க விரும்புகிறோம். போரில் ஒப்பற்றவரான நீர் எங்களிடம் கோபம் கொள்ளுதல் தகாது. ஓ! பாவமற்றவரே, என்னை நீர் முதலில் தாக்காமல், நான் உம்மைத் தாக்க மாட்டேன். இதுவே எனது நோக்கம். நீர் விரும்பிய செயலைச் செய்வீராக” என்றான் {அர்ஜுனன்}.
இப்படிச் சொல்லப்பட்ட துரோணர், அவன் மீது இருபதுக்கும் மேற்பட்ட கணைகளை அடித்தார். ஆனால், இலகுவான கரங்கள் படைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவை தன்னை அடையுமுன்பே வெட்டிப் போட்டான். இதைக் கண்ட பலமிக்கத் துரோணர், தனது கரங்களின் இலகுத்தன்மையை வெளிக்காட்டும்படி, ஆயிரம் {1000) கணைகளால் பார்த்தனின் தேரை மூடினார். பார்த்தனைக் கோபமூட்ட விரும்பிய அந்த அளவிடமுடியா ஆன்மா கொண்டவர் {துரோணர்}, வெள்ளி போன்ற வெண்மையான அவனது குதிரைகளை, கல்லில் கூராக்கப்பட்டவையும் கங்கப் பறவையின் இறகுகள் படைத்தவையுமான தனது கணைகளால் மூடினார். துரோணருக்கும், கிரீடிக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் போர் தொடங்கியது. அந்த மோதலில் சுடர்மிகும் பிரகாசம் கொண்ட கணைகளை இருவரும் அடித்தனர். தங்கள் சாதனைகளுக்காக இருவரும் அறியப்பட்டவர்களாக இருந்தனர். காற்றின் வேகம் கொண்ட அந்த இருவரும் தெய்வீக ஆயுதங்களை அறிந்திருந்தனர். இருவரும் பெரும் சக்தி படைத்திருந்தனர். அப்படிப்பட்ட அந்த இருவரும் அரசகுல க்ஷத்திரியர்கள் அழியும் வண்ணம் மேகங்கள் போலக் கணைகளை அடிக்கத் தொடங்கினர்.
அங்கே கூடியிருந்த வீரர்கள் அனைவரும் இக்காட்சிகள் அனைத்தையும் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தனர். அவர்கள் அனைவரும் கணைமேகங்களை அடித்த துரோணரைக் கண்டு “நன்று செய்தீர்! நன்று செய்தீர்!” என்று போற்றினர், “போர்க்களத்தில் துரோணரிடம் போரிட பல்குனனை {அர்ஜுனனைத்} தவிரத் தகுந்தவன் வேறு எவன்?” “அர்ஜுனன் தன் சொந்த ஆசானிடமே போரிடுகிறானே. நிச்சயம் க்ஷத்திரியக் கடமைகள் கண்டிப்பானவை” என்றும் உரைத்தனர். அந்தப்போர்க்களத்தில் நின்றவர்கள் இப்படியே தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் வெல்லவல்லவர்களும், வலிய கரங்கள் கொண்டவர்களுமான அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கணைமழையால் மூடினர்.
கோபம் பெருகிய பரத்வாஜர் மகன் {துரோணர்}, பின்புறத்தில் தங்கத்தால் முலாமிடப்பட்டதும், வெல்லப்பட முடியாததுமான தனது பெரிய வில்லை உருவி, தனது கணைகளால் பல்குனனை {அர்ஜுனனைத்} துளைத்தார். சூரியப் பிரகாசம் கொண்ட எண்ணற்ற கூரிய கணைகளை அர்ஜுனனின் தேர் மீது அடித்து, {அர்ஜுனனுக்கு} முற்றிலுமாகச் சூரிய ஒளியை மறைத்தார். வலிய கரங்கள் கொண்ட அந்தப் பெரும் ரதவீரர் தனது கூரிய கணைகளைக் கொண்டு, மலையில் பொழியும் மேகம் போலப் பிருதையின் மகனைக் கடுமையாகத் துளைத்தார். பிறகு விற்களில் முதன்மையானதும், எதிரிகளை அழிக்க வல்லதும், பெரும் சிரமங்களைச் சமாளிக்கக்கூடிய திறம் கொண்டதுமான காண்டீவத்தை எடுத்த பாண்டுவின் மகன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட எண்ணற்ற கணைகளை விரைவாக அடித்தான். ஒரு நொடியில் அந்தப் பலமிக்க வீரனும் {அர்ஜுனனும்}, தனது வில்லில் இருந்து அடிக்கப்பட்ட பல்வேறு கணைகளின் மழையால், துரோணரை நிலைகுலையச் செய்தான். இதைக் கண்ட பார்வையாளர்கள் பெரிதும் ஆச்சரியமடைந்தனர்.
பிறகு, பிருதையின் {குந்தியின்} மகனான அந்த அழகிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது தேரில் உலவி, ஒரே நேரத்தில் பல பக்கங்களில் இருந்து தனது ஆயுதங்களை வீசினான். முழு ஆகாய விரிவும் அவனது கணைகளால் மூடப்பட்டதால், ஒரு பெரும் நிழல் பரப்பு அங்கே தோன்றிற்று. துரோணர், மலைமீதிருக்கும் நெருப்பு போல இருந்தார். பிருதையின் {குந்தியின்} மகனுடைய {அர்ஜுனனுடைய} கணைகளால் தனது தேர் முழுவதும் மறைக்கப்பட்டதைக் கண்ட போர்க்களத்தின் ரத்தினமான துரோணர், மேக கர்ஜனை புரியும் விற்களில் முதன்மையானதும், பயங்கரமானதுமான தனது வில்லை வளைத்தார். நெருப்பு வட்டம் போலிருந்த அந்த ஆயுதங்களில் முதன்மையானதை {அந்த வில்லை} இழுத்து, கூர்முனை கொண்ட கணைகளை அவர் {துரோணர்} அடித்தார்.
பிறகு, நெருப்பிலிடப்பட்ட மூங்கில்கள் பிளப்பது போல, போர்க்களமெங்கும் ஒலிகள் கேட்டன. அளவிலா ஆன்மா கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தங்க இறகுகள் கொண்ட கணைகளைத் தனது வில்லில் இருந்து அடித்து, அனைத்துப் புறங்களையும் மூடி, {துரோணருக்குச்} சூரிய ஒளியைத் தடுத்தான். துரோணரால் அடிக்கப்பட்ட கணைகள், ஒன்றின் இறகை மற்றொன்று தொட்டுக் கொண்டிருந்ததால், வானத்தில் செல்லும் முடிவிலா கோடு போல அவை தெரிந்தன. முடிச்சுகள் நன்றாக உரிக்கப்பட்ட {அழுந்திய கணுக்களுடைய} அந்தக் கணைகள், தங்க இறகுகள் கொண்ட பறவை கூட்டம் போல வானத்தில் தெரிந்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளை அடித்த அந்த வீரர்கள், வானத்தை எறிகற்களால் நிறைப்பது போலத் தெரிந்தது. கங்கப் பறவையின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கணைகள், இலையுதிர்கால வானில் உலவும் வரிசையான கொக்குகள் போலத் தெரிந்தன.
ஒப்பற்ற துரோணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற அந்தக் கடுமையான, பயங்கரமான மோதல், பழங்காலத்தில் விருத்திரனுக்கும் வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் போல இருந்தது. வில்லின் முழு நீளத்திற்கு இழுக்கப்பட்ட விற்களில் இருந்து கணைகளை அடித்த அந்த இருவரும், தந்தங்களால் மோதிக்கொள்ளும் இரு யானைகளைப் போல இருந்தனர். கோபக்கார வீரர்களும், போர்க்களத்தின் ரத்தினங்களுமான அந்த இருவரும், நிறுவப்பட்ட வழிமுறைகளின் படி கண்டிப்புடன் நடந்து கொண்டு, முறையான வரிசையில் பல்வேறு தெய்வீக ஆயுதங்களைக் காட்சிப்படுத்தினர். பிறகு அறம்சார்ந்த மனிதரில் முதன்மையான அர்ஜுனன், தனது கூரிய கணைகள் கொண்டு, ஆசான்களில் சிறந்தவர் {துரோணர்} அடித்த கூரிய கணைகளைத் தடுத்தான். பிறகு பார்வையாளர்கள் முன்னிலையில் பல்வேறு ஆயுதங்களைக் காட்டிய அந்தப் பயங்கரப் பராக்கிரமம் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, பல்வேறு வகையான கணைகளால் வானத்தை மூடினான்.
கடும் சக்தியுடன் தன்னைத் தாக்கும் நோக்கத்துடன் இருந்த மனிதர்களில் புலியான அர்ஜுனனைக் கண்ட அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவரான ஆசான்களில் சிறந்தவர் {துரோணர்}, (பாசத்தால்) இலகுவான நேரான கணைகளைக் கொண்டு அவனுடன் {அர்ஜுனனுடன்} விளையாட்டுத்தனமாகப் போரிட ஆரம்பித்தார். முன்னவனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட தெய்வீக ஆயுதங்களைத் தனதைக் {தன் தெய்வீக ஆயுதங்களைக்} கொண்டு தடுத்தார். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளாமல், சீற்றமிக்க மனிதர்களில் சிங்கங்கள் போலப் போரிட்டுக் கொண்டிருந்த அவர்களது மோதல், தேவர்களுக்கும் தானவர்களுக்கும் {அசுரர்களுக்கும்} இடையில் நடைபெற்ற போரைப் போல இருந்தது. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, துரோணர் அடித்த ஐந்திரம், வாயவ்யம், ஆக்னேயம் ஆகிய ஆயுதங்களை, தன்னிடம் இருந்த அதே
வகை ஆயுதங்களால் திரும்பத்திரும்பக் கலங்கடித்தான். கூரிய கணைகளை அடித்துக் கொண்டிருந்த அந்தப் பலமிக்க வில்லாளிகள், தங்கள் கணை மழையால் முழு வானத்தையும் மூடி, பெரும் நிழல் பரப்பை உண்டாக்கினார்கள்.
அர்ஜுனனால் அடிக்கப்பட்ட கணைகள், எதிரி வீரர்களின் மேல் பட்டு, இடியின் ஒலியை எழுப்பின. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இரத்தத்தில் குளித்த யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியன மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பலாச மரங்களைப் போலத் தெரிந்தன. துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்த மோதலின் போது, அந்தக் களத்தில் வளையங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களும், அழகாக உடுத்தியிருந்த தேர்வீரர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பலவண்ண கவசங்களும், கொடிகளும் என அனைத்தும் சிதறிக் கிடந்தன. பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்ட வீரர்களைக் கண்ட குரு படை பீதியடைந்தது. கடும் சிரமத்தைத் தாங்கவல்ல தங்கள் விற்களை அசைத்த அந்த எதிராளிகள் இருவரும், தங்கள் கணைகளால் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்த தொடங்கினர்.
ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரோணருக்கும், குந்தியின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்த மோதல், பலிக்கும் {மகாபலிக்கும்} வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற எல்லையற்ற பயங்கரம் நிறைந்த போரைப் போல இருந்தது. பிறகு, அவர்கள் {ஆசானும் சீடனும்} தங்கள் உயிரைப் பணயம் வைத்து, முழுதாக இழுக்கப்பட்ட தங்கள் வில்லின் நாண்களில் இருந்து நேரான கணைகளை அடித்து ஒருவரை ஒருவர் துளைத்தனர். அப்போது, வானத்தில் இருந்து ஒரு குரல், “எதிரிகளை அடிப்பவனும், பெரும் சக்தியுடைவனும், உறுதியான பிடி கொண்டவனும், போரில் ஒப்பற்றவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், தேவர்கள் மற்றும் தைத்தியர்களையே வீழ்த்தியவனுமான அர்ஜுனனுடன் போரிடும் துரோணரின் செயல் கடின
மானதாகும்” என்று துரோணரைப் பாராட்டியது.
பார்த்தனின் {அர்ஜுனனின்}, தவறற்ற தன்மை {குறி தவறாத்தன்மை}, பயிற்சி, கரங்களின் வேகம், அர்ஜுனனின் அம்பு வீச்சு ஆகியவற்றைக் கண்ட துரோணர் மிகவும் வியந்தார். ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, பிறகு, அற்புதமான வில்லான காண்டீவத்தை உயர்த்திய பார்த்தன் {அர்ஜுனன்}, இருகரங்களாலும் கணைகளை மழையாகப் பொழிந்தான். அம்மழை வெட்டுக்கிளிகள் பறப்பதைப் போலத் தெரிந்தது. பார்வையாளர்கள், அவனை {அர்ஜுனனை} பார்த்து, “அற்புதம்! அற்புதம்!” என்றனர். அவனுடைய {அர்ஜுனனுடைய} அம்புகளுக்கிடையில் காற்றும் புகுவதற்கு சக்தியற்றதாய் இருந்தது. அவன் {அர்ஜுனன்}, கணைகளைத் தொடுப்பதற்கும் விடுப்பதற்கும் எடுத்துக் கொள்ளும் இடைவெளியைப் பார்வையாளர்கள் எவரும் காணவில்லை. கரங்களின் வேகத்தை வகைப்படுத்தும் வகையில் அந்தக் கடும்போரில் ஆயுதங்கள் அடிக்கப்பட்டன. பார்த்தன் {அர்ஜுனன்}, தனது கணைகளை முன்பை விட வேகமாக அடிக்கத் தொடங்கினான். பிறகு திடீரென நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான நேரான கணைகள் துரோணரின் தேரைத் தாக்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, காண்டீவத்தைத் தாங்கியவனுடைய {அர்ஜுனனுடைய} கணைகளால் முழுவதுமாக மறைக்கப்பட்ட துரோணரைக் கண்ட குரு படையினர், “ஓ” என்றும், “ஐயோ” என்றும், கதறினர். அங்கே கந்தர்வர்களுடனும் அப்சரஸ்களுடனும் வந்திருந்த மகவத் {இந்திரன்}, பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} கரங்களின் வேகத்தைப் பாராட்டினான்.
பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான ஆசானின் {துரோணரின்} மகன் {அஸ்வத்தாமன்} பலமிக்கத் தேர்களின் வரிசையைக் கொண்டு, அந்தப் பாண்டவனைத் {அர்ஜுனனைத்} தடுத்தான். அர்ஜுனனிடம் கோபம் கொண்டிருந்தாலும், அஸ்வத்தாமன், அந்தப் பிருதையின் {குந்தியின்} உயர் ஆன்ம மகனுடைய சாதனையை மனதில் புகழ்ந்தான். பிறகு கோபம் பெருக, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} விரைந்து சென்ற அவன் {அஸ்வத்தாமன்}, மேகத்தில் இருந்து பொழியும் பெரும் மழையைப் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி கணை மழையைப் பொழிந்தான். துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கித் திரும்பிய பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணர் களத்தை விட்டு அகல ஒரு வாய்ப்பை அளித்தான். அந்தப் பயங்கரப் போரில் காயம்பட்ட பின்னவர் {துரோணர்}, தனது கவசம் மற்றும் கொடியுடன், வேகமான குதிரைகளின் உதவியைக் கொண்டு விரைந்து சென்றார்.
அம்பறாத்தூணி தீர்ந்த அஸ்வத்தாமன்! – விராட பர்வம் பகுதி 59-அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அவர்களுக்குள் நடந்த மோதலில் இடைமறித்த கர்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! வலிமைமிக்க மன்னா {ஜனமேஜயா}, போர்க்களத்தில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அர்ஜுனனுடன் மோதினான். கணைகளை மழையெனப் பொழிந்து, மோதலுக்கு விரைந்து வந்த அவனைக் {அஸ்வத்தாமனைக்} கண்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, கணைகளின் மேகத்தால் அவனை {அஸ்வத்தாமனை} வரவேற்றான். தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலைப் போன்று, அந்த மோதல், பயங்கரமாக இருந்தது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விருத்திரனையும் வாசவனையும் {இந்திரனையும்} போலக் கணைகளை அடித்துக் கொண்டனர். கணைகளைக் கொண்டு ஆகாய விரிவின் அனைத்துப் பக்கங்களையும் மறைத்து, சூரியனை முழுமையாக மறைத்து, காற்றே நின்று போகும்படி போரிட்டனர்.
ஓ! எதிரி நகரங்களை வெல்பவனே {ஜனமேஜயா}, அப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டபோது, நெருப்பிலிடப்பட்ட மூங்கில்களில் எழுவது போல உரத்த ஒலிகள் அங்கே எழுந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அர்ஜுனனால் கடுமையாகத் தாக்கப்பட்ட அஸ்வத்தாமனின் குதிரைகள் குழப்பத்தில் ஆழ்ந்து, எந்தத் திக்கில் செல்ல வேண்டும் என்பதில் நிலை குலைந்து நின்றன. அப்படிப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} களத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, துரோணரின் பலமிக்க மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு சந்தர்ப்பத்தைக் கண்டுபிடித்து, குதிரை லாடத்தின் உருவிலான ஒரு கணையால், காண்டீவத்தின் நாணை அறுத்தான். அந்த இயல்புக்குமிக்கச் சாதனையைக் கண்ட தேவர்கள் அவனை {அஸ்வத்தாமனை} உயர்வாகப் புகழ்ந்தனர்.
“நன்று செய்தாய்! நன்று செய்தாய்!” என்று ஆச்சரியப்பட்ட துரோணர், பீஷ்மர், கர்ணன், வலிமைமிக்க வீரரான கிருபர் ஆகிய அனைவரும் அவனது அந்தச் சாதனையைப் பெரிதும் பாராட்டினர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தனது அற்புதமான வில்லை வளைத்து, கங்கப்பறவையின் இறகுகளைக் கொண்ட கணைகளால், வீரர்களில் காளையான பார்த்தனின் {அர்ஜுனனின்} மார்பில் அடித்தான். அதன் பேரில், உரக்கச் சிரித்த, வலிமையான கரங்களைக் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் புதிய வலிமையான நாணைப் பொருத்தினான். பிறகு, பிறைச்சந்திரனை ஒத்திருந்த தனது நெற்றியில் இருந்த வியர்வையால், தனது வில்லின் நாணை ஈரப்படுத்திய பிருதையின் மகன் {அர்ஜுனன்}, யானைகள் மந்தையின் சீற்றமிகு தலைவன் மற்றொரு யானையை நோக்கி விரைவதைப் போலத் தனது எதிரியை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான். அந்த ஒப்பற்ற இரு வீரர்களுக்கிடையில் நடந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அதைக் கண்டவர்களுக்கு அது மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
இரு வலிமைமிக்க யானைகள் போல, அந்த இரு வீரர்களும் போரிட்டபோது, குருக்கள் {கௌரவர்கள்}, அதை ஆச்சரியத்துடன் கண்டனர். மனிதர்களில் வீரமிக்கக் காளைகளான அவர்கள், பாம்பு மற்றும் சுடர் மிகும் நெருப்பைப் போன்ற வடிவங்களிலான கணைகளைக் கொண்டு, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பாண்டவனுக்கு {அர்ஜுனனுக்குச்} சொந்தமான அம்பறாத்தூணிகள் இரண்டும் வற்றாதவையாக இருந்ததால், அவ்வீரன் {அர்ஜுனன்} அசையாத மலையென அந்தப் போர்க்களத்தில் நின்றான். அந்த மோதலில் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருந்ததின் விளைவாக அஸ்வத்தாமனின் கணைகள் விரைவாகத் தீர்ந்தன.இதனாலேயே அர்ஜுனன், தனது எதிரியை {அஸ்வத்தாமனை} வெற்றிக் கொண்டான்.
பிறகு, தனது பெரிய வில்லை எடுத்து கர்ணன் நாணொலி எழுப்பினான். அப்போது, அங்கே, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் ஆச்சரிய ஒலிகள் எழுந்தன. வில்லின் நாண் சுண்டப்பட்ட இடத்தை நோக்கித் தன் கண்களைச் செலுத்திய பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தன் முன்னே ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்டான். அந்தக் காட்சியால் அவனது கோபம் பெரிதும் தூண்டப்பட்டது. சினமும், கர்ணனைக் கொல்லும் விருப்பமும் தூண்டப்பட்ட அந்தக் குரு குலத்தின் காளை {அர்ஜுனன்}, நிலைத்த பார்வையுடனும், உருளும் கண்களுடனும், அவனை {கர்ணனை} வெறித்துப் பார்த்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பார்த்தன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமனிடம் இருந்து திரும்புவதைக் கண்ட குரு {கௌரவ} வீரர்கள், அவன் {அர்ஜுனன்} மீது ஆயிரக்கணக்கான கணைகளை அடித்தனர். அந்த எதிரிகளைக் கொல்பவனான வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} விட்டுவிட்டு, திடீரெனக் கர்ணனை நோக்கி விரைந்தான். கோபத்தால் கண்கள் சிவக்க, கர்ணனை நோக்கி விரைந்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அவனுடன் தன்னந்தனியாக {ஒற்றைக்கு ஒற்றையாகப்} போரிட விரும்பி, இந்த வார்த்தைகளைச் சென்னான்.”
வடதிசை நோக்கி ஓடிய கர்ணன்! – விராட பர்வம் பகுதி 60-கர்ணனுக்குச் சவால் விட்ட அர்ஜுனன்; அர்ஜுனனை இகழ்ந்த கர்ணன்; ஏற்கனவே கர்ணன் தன்னிடம் இருந்து தப்பி ஓடியதைச் சுட்டிக் காட்டிய அர்ஜுனன்; கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த போர்; அர்ஜுனன் கர்ணனின் மார்பைத் துளைத்தது; கர்ணன் போர்க்களத்தை விட்டு வடதிசை நோக்கி ஓடி மீண்டும் புறமுதுகிடுவது…
அர்ஜுனன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, போரில் உனக்குச் சமமான எவனும் இல்லை என்று சபா மண்டபத்தின் மத்தியில் நீ பேசிய இறுமாப்பான பேச்சுக்கு நல்லது செய்யும் நேரம் {இதோ} வந்துவிட்டது. இன்று, ஓ! கர்ணா, என்னிடம் நீ மோதப் போகும் இந்தப் பயங்கர மோதலால், உனது சொந்த பலத்தை நீ அறிந்து கொள்வாய்; இதற்கு மேலும் யாரையும் நீ அவமதிக்கமாட்டாய். நற்பிறப்பைத் துறந்து, நீ பல கொடுஞ்சொற்களைப் பேசியிருக்கிறாய். ஆனால், இப்போது நீ செய்ய முயலும் இது, மிகக் கடுமையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, குருக்களின் {கௌரவர்களின்} பார்வையில் என்னிடம் மோதும் நீ, இதற்கு முன் என்னை அவமதித்ததற்கு நல்லது செய்வாயாக. {அந்த வார்த்தைகளை உண்மையென நிரூபிப்பாயாக}.
சபையின் நடுவில் பாஞ்சால இளவரசி {திரௌபதி} தீயவர்களின் அட்டூழியத்திற்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டாயே, {நீயும் அதற்கொரு காரணமாய் இருந்தாயே}, அந்த உனது செயலுக்கான கனியை {பலனை} இப்போது அறுவடை செய்வாயாக. முன்பு, அறநெறியின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததால், அப்போது நான் பழிவாங்கவில்லை. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அந்தக் கோபத்தின் கனியை நடக்கப் போகும் இம்மோதலில் இப்போது நீ காண்பாய். ஓ! தீயவனே {கர்ணனே}, அந்தக் காட்டில் முழுப் பனிரெண்டு {12} வருடங்களும் பெருந்துன்பத்தை நாங்கள் அனுபவித்தோம். நீ இன்று அந்தச் செறிவூட்டப்பட்ட பழியுணர்வின் {concentrated vengeance} கனிகளை {பலன்கள்} அறுவடை செய்வாயாக. வா, ஓ! கர்ணா, வந்து போரில் என்னைச் சமாளி. இந்தக் கௌரவ வீரர்கள் இம்மோதலைச் சாட்சியாகக் காணட்டும்” என்றான் {அர்ஜுனன்}.
இச்சொற்களைக் கேட்ட கர்ணன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சொற்களால் நீ சொல்வதையெல்லாம் செயலால் சாதிப்பாயாக. நீ சாதிக்கும் செயலைவிட நீ அதிகமாகப் பேசுவாய் என்பதை இவ்வுலகம் அறியும். உனது இயலாமையின் காரணமாக எதையும் செய்ய முடியாத நிலையிலேயே நீ முன்பு பொறுமையாக இருந்தாய். இப்போதாவது உனது பராக்கிரமத்தை சாட்சியாக நாங்கள் கண்டால், அக்கூற்று உண்மை என நாங்கள் அங்கீகரிக்கூடும். அறநெறிக்கு நீ கட்டுப்பட்டதால் கடந்த காலத்தில் {பழிதீர்க்காமல்} பொறுத்தாயென்றால், {அக்கட்டில் இருந்து} விடுபட்டவன் என்று உன்னை நீயே நினைத்துக் கொண்டாலும், இப்போதும் அதற்குச் சமமாகக் கட்டுப்பட்டே இருக்கிறாய். நீ சொன்னவாறே, உனது வாக்குறுதியின்படி கடும் விதிமுறைகளுடன் உனது வனவாசத்தை நீ கழித்திருந்தாலும், அந்தத் தவ வாழ்வின் பலனாகப் பலவீனமடைந்து இருக்கும் நீ, இப்போது என்னுடன் போரிட விரும்புவது எவ்வாறு? ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, உனது பக்கத்தில் இருந்து சக்ரனே (இந்திரனே} போரிட்டாலும் கூட, எனது பராக்கிரமத்தைக் காட்டுவதில், நான் எந்தத் தயக்கமும் கொள்ளமாட்டேன். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உனது விருப்பம் நிறைவேறப் போகிறது. என்னுடன் இப்போது போரிட்டு, எனது பலத்தை நீ காண்பாயாக” என்றான் {கர்ணன்}.
இதைக்கேட்ட அர்ஜுனன் {கர்ணனிடம்}, “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, இப்போது கூட என்னுடனான போரில் நீ {தோற்று} ஓடினாயே. அதனால்தானே, உன் தம்பி கொல்லப்பட்டாலும், நீ {இன்னும்} உயிருடன் இருக்கிறாய். தன் தம்பி கொல்லப்படுவதைக் கண்டு களத்தைவிட்டு ஓடிய பிறகும், உண்மையான நல்ல மனிதர்களுக்கு மத்தியில் நின்று தற்பெருமை பேசுபவன், உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்?” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இச்சொற்களைக் கர்ணனிடம் சொன்ன ஒப்பற்ற பீபத்சு {அர்ஜுனன்}, அவனிடம் விரைந்து சென்று, கவசத்தை ஊடுருவி செல்லும் கணைகளைச் சரமாரியாக அடித்தான். ஆனால், வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், பெரும் சுறுசுறுப்புடன், மேகத்தின் பொழிவு போன்ற தனது கணை மழையால் அவற்றைத் தடுத்தான். கணைகளின் அந்தக் கடும் ஊற்று அனைத்துப் புறங்களையும் மூடி, குதிரைகளையும், கரங்களையும், போராளிகளின் தோலுறைகளையும் பல இடங்களில் துளைத்தன. அந்தத் தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாத அர்ஜுனன், தனது நேரான கூரிய கணையால் கர்ணனுடைய அம்பறாத்தூணியின் கயிறுகளைத் துண்டித்தான்.
உடனே தனது அம்பறாத்தூணியில் இருந்து மற்றொரு கணையை எடுத்த கர்ணன், அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} வில் தாங்கிய கரங்கள் தளரும் வகையில் அவற்றைத் துளைத்தான். பிறகு வலிமையான கரங்கள் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனின் வில்லைத் துண்டுகளாக {சுக்குநூறாக} வெட்டிப்போட்டான். பிறகு கர்ணன், தனது எதிரியின் {அர்ஜுனனின்} மீது ஒரு பராசத்தை வீசினான். ஆனால் அர்ஜுனன் தன் கணைகளால் அதைத் துணித்தான். பிறகு ராதையின் மகனைப் {கர்ணனைப்} பின்தொடர்ந்து வந்த வீரர்கள் கூட்டமாக அர்ஜுனனிடம் விரைந்தனர். ஆனால் பார்த்தன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட கணைகளின் மூலம் அவர்கள் அனைவரையும் யமனுலகு அனுப்பி வைத்தான்.
வில்லின் நாணைக் காதுவரை இழுத்து அடிக்கப்பட்ட கூரிய கடும் கணைகளால் கர்ணனின் குதிரைகளைப் பீபத்சு {அர்ஜுனன்} கொன்றான். அவை {அக்குதிரைகள்} உயிரற்றுத் தரையில் கீழே விழுந்தன. பெரும் சக்தி கொண்ட சுடர்மிகும் மற்றொரு கூரிய கணையை எடுத்த வலிமைமிக்கக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கர்ணனின் மார்பைத் துளைத்தான். அந்தக் கணை அவனது {கர்ணனின்} கவசத்தைப் பிளந்து கொண்டு அவனது உடலைத் துளைத்தது. இதனால் கர்ணனின் பார்வை தடைபட்டு, அவனது உணர்வுகள் அவனை விட்டகன்றன. பிறகு உணர்வுகள் மீண்ட அவன் {கர்ணன்}, பெரும் வலியை உணர்ந்து, போர்க்களத்தை விட்டு வடதிசையை நோக்கி ஓடினான். இதனால், வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன் மற்றும் உத்தரன் ஆகிய இருவரும் அவனிடம் {கர்ணனிடம்} தரக்குறைவாகப் பேசத் தொடங்கினர்.
புறமுதுகிட்ட துச்சாசனன்! – விராட பர்வம் பகுதி 61-பீஷ்மரை நோக்கி அர்ஜுனன் முன்னேறுவது; துச்சாசனன் தடுப்பது; துச்சாசனனை ஒரு நொடியில் களத்தைவிட்டு ஓடச் செய்த அர்ஜுனன்; திருதராஷ்டிரனின் மற்ற மகன்களை அர்ஜுனன் வீழ்த்துவது
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விகர்த்தனன் மகனை {கர்ணனை} வீழ்த்திய பிறகு, அர்ஜுனன், விராடனின் மகனிடம் {உத்தரனிடம்}, “தங்கப் பனைமரம் தெரியும் பிரிவை நோக்கி என்னை அழைத்துச் செல்வாயாக. அங்கே எங்கள் பாட்டனான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, என்னுடன் மோதுவதற்கு விரும்பி தேவனைப் போலக் காத்திருக்கிறார்” என்றான் {அர்ஜுனன்}.
உடனே, கணைகளால் கடுமையாகத் துளைக்கப்பட்டிருந்த உத்தரன், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நெருக்கமாக இருந்த அந்த வலிமைமிக்கப் படையைக் கண்டு, “ஓ! வீரரே {அர்ஜுனரே}, என்னால் இனிமேலும் உமது அற்புத குதிரைகளை வழிநடத்த இயலாது. எனது ஆவியில் உற்சாகம் குறைகிறது. என் மனது மிகவும் குழம்பிப் போயுள்ளது. உம்மாலும் குருக்களாலும் பயன்படுத்தப்பட்ட தெய்வீக ஆயுதங்களுடைய சக்தியின் விளைவாக அனைத்துப் புறங்களும் எனது கண்களுக்கு முன்பாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. முடைநாற்றம் கொண்ட கொழுப்பு, இரத்தம் மற்றும் சதை ஆகியவற்றால் நான் எனது உணர்வுகளை இழந்துவிட்டேன். இவை அனைத்தையும் கண்ட எனது மனது பயங்கரத்தால், இருந்த இடத்திலேயே இரண்டாகப் பிளக்கிறது {மனம் உடைந்து போகிறது}. இதற்கு முன்னர் நான் போரில் குதிரைகளின் இத்தகு திரட்சியைக் கண்டதில்லை. ஓ! வீரரே {அர்ஜுனரே}, வீரர்களால் ஏற்படும் கையுறைகள் உராயும் ஒலி {சிறகடிப்பு}, சங்கொலி, சிம்ம கர்ஜனைகள், யானைகளின் பிளிறல்கள், இடியைப் பிரதிபலிக்கும் காண்டீவத்தின் நாணொலி ஆகியவற்றைக் கேட்டும் நினைத்துப் பார்த்தும் வாயடைத்துப் போகிறேன்.
ஓ! வீரரே {அர்ஜுனரே}, மோதலின் போது நெருப்பு வட்டத்தைப் பிரதிபலிக்கும் காண்டீவத்தை இடைவிடாமல் நீர் வட்டமாக வளைத்ததைக் கண்டதால், எனது கண்கள் தோற்று {செயலிழந்து}, இதயம் பிளக்கிறது. கோபத்தில் இருக்கும் பினகைதாங்கியைப் {சிவனைப்} போலப் போர்க்களத்தில் உமது கடும் வடிவத்தையும், உம்மால் அடிக்கப்படும் பயங்கரக் கணைகளையும் கண்டு நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன். நீர் உமது அற்புதமான கணைகளை எப்போது எடுக்கிறீர், வில்லின் நாணில் எப்போது பொருத்துகிறீர், அவற்றை எப்போது விடுகிறீர் என்பதைக் காண்பதில் நான் தோற்றேன். இவையாவையும் நீர் எனது கண்களுக்கு முன்பே செய்திருந்தாலும், உணர்வுகளை நான் இழந்திருந்ததால் என்னால் அவற்றைக் காண முடியவில்லை. எனது உற்சாகம் குன்றுகிறது, உலகமே எனது முன்னிலையில் நீந்திக் கொண்டிருப்பதைப் போல எனக்குத் தெரிகிறது. சாட்டையையும், கடிவாளங்களையும் பிடிக்க என்னிடம் பலம் இல்லை” என்றான் {உத்தரன்}.
இச்சொற்களைக் கேட்ட அர்ஜுனன் {உத்தரனிடம்}, “அஞ்சாதே. ஓ! மனிதர்களில் காளையே {உத்தரா}, நீயும் இப்போர்க்களத்தில் அற்புதச் சாதனைகளைச் செய்தாய். மத்ஸ்யர்களின் ஒப்பற்ற வழியில் பிறந்து, இளவரசனாக இருக்கும் நீ அருளப்பட்டிருப்பாயாக. எதிரிகளைத் தண்டிப்பதில் நீ உற்சாகமிழக்கலாகாது. எனவே, ஓ! இளவரசே {உத்தரா}, நான் மீண்டும் போரில் ஈடுபடும்போது, எனது தேரில் இருந்துகொண்டு, உனது மனோபலத்தைப் பெருக்கிக் கொண்டு, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {உத்தரா}, எனது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பாயாக” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விராடனின் மகனிடம் {உத்தரனிடம்} இதைச்சொன்ன, அந்த மனிதர்களில் சிறந்தவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், வலிய கரங்கள் கொண்டவனுமான அர்ஜுனன், விராடன் மகனிடம் {உத்தரனிடம்} மீண்டும், “பீஷ்மரின் படைப்பிரிவின் முன்னணிக்குத் தாமதமில்லாமல் என்னை அழைத்துச் செல்வாயாக. இந்தப் போரில் நான் அவரது {பீஷ்மரின்} வில்லின் நாணை அறுப்பேன். வானில் இருக்கும் மேகங்களுக்கு மத்தியில் இருந்து வெளிப்படும் மின்னல் கீற்றுகளைப் போலச் சுடர்மிகும் அழகுடன் கூடிய தெய்வீக ஆயுதங்களை நான் அடிப்பதை இன்று நீ காண்பாய். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் காண்டீவத்தின் பின்புறத்தை இன்று கௌரவர்கள் காண்பார்கள். கூடியிருக்கும் எதிரிகள் பிறகு “இவன் எந்தக் கையில் அடிக்கிறான். வலதிலா இடதிலா” என்று தங்களுக்குள் சச்சரவு செய்வார்கள்.
நான் இன்று பயங்கரமான (மரண) ஆற்றை மறு உலகத்தை நோக்கிப் பாயச் செய்வேன். அது {அந்த ஆறு} இரத்தத்தை நீராகவும், தேர்களை எதிர்சுழிப்புகளாகவும், யானைகளை முதலைகளாகவும் கொண்டிருக்கும். எனது நேரான கணைகளால், கரங்களையும், பாதங்களையும், தலைகளையும், முதுகுகளையும், தோள்களையும் கிளைகளாகக் கொண்டிருக்கும் மரங்கள் அடர்ந்த குரு காட்டை {கௌரவக் காட்டை} நான் இன்று முற்றாக ஒழிப்பேன். கையில் வில்லுடன் தனியாக நான் கௌரவப் படையை வீழ்த்துவதால், எரியும் காட்டில் இருந்து எனக்கு நூறு வழிகள் திறக்கும். என்னால் தாக்கப்படும் குரு படை (களத்தைவிட்டு ஓட இயலாமல்) திரும்பத் திரும்பச் சக்கரத்தைப் போலச் சுழன்று வருவதை நீ இன்று காண்பாய். கணைகளிலும் ஆயுதங்களிலும் எனக்கு உள்ள அற்புதப் பயிற்சியை நான் இன்று உனக்குக் காட்டுவேன்.
{போர்க்களத்} தரை, சமமானதாகவோ, சமமற்றதாகவோ இருப்பினும், நீ எனது தேரில் உறுதியாக நிற்பாயாக. இறகு படைத்த எனது கணைகளால் சொர்க்கத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் மேரு மலையைக் கூட என்னால் துளைக்கமுடியும். பழங்காலத்தில், இந்திரனின் கட்டளையின்பேரில், பௌலோமர்களையும் காலகஞ்சர்களையும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் போர்க்களத்தில் கொன்றேன். நான் எனது பிடியின் உறுதியை இந்திரனிடம் பெற்றேன். எனது கரங்களின் இலகுத்தன்மையைப் பிரம்மனிடம் பெற்றேன். எதிரிக்கூட்டத்தின் மத்தியில் போரிடும் வகையில் தற்காப்பு மற்றும் கடுந்தாக்குதல்களில் உள்ள பல்வேறு முறைகளைப் பிரஜாபதியிடம் இருந்து கற்றிருக்கிறேன். பெருங்கடலுக்கு அப்பாலுள்ள ஹிரண்யபுரத்தில் {தங்கத்தாலான மிதக்கும் நகரம் – பௌலோமர்களுடைய தலைநகரம்} வசித்த கடும் வில்லாளிகளான அறுபதினாயிரம் தேர்வீரர்களை முன்பு வீழ்த்தினேன். பஞ்சுப் பொதியைச் சிதறடிக்கும் புயலென நான் குருக்களின் {கௌரவர்களின்} பெரும்படையை வீழ்த்தப்போவதை இப்போது பார்.
பதாகைகளை மரங்களாகவும், காலாட்படையைச் செடிகொடிகளாகவும், தேர்வீரர்களை இரைதேடும் விலங்குகளாகவும் கொண்டிருக்கும் இந்தக் குரு என்ற காட்டை {கௌரவக்காட்டை}, தீ போன்ற எனது கணைகளால் நான் இன்று எரிப்பேன். வஜ்ரதாங்கி {இந்திரன்} தானவர்களை {அசுரர்களை} வீழ்த்துவது போல, தங்கள் சிறந்த சக்தியைப் பயன்படுத்திப் போரிட்டுவரும் குரு படையின் வலிமைமிக்க வீரர்களை, நான் தனியாகவே, எனது நேரான கணைகளால், அவர்களுடைய தேர்க்கூண்டுகளில் இருந்து விழ வைப்பேன். ருத்ரனிடம் {சிவனிடம்} இருந்து ரௌத்திரத்தையும், வருணனிடம் இருந்து வருணத்தையும் {வருணபாசத்தையும்}, அக்னியிடம் இருந்து ஆக்னேயத்தையும், காற்றின் தேவனிடம் {வாயுவிடம்} இருந்து வாயவ்யத்தையும், சக்ரனிடம் {இந்திரனிடம்} இருந்து வஜ்ரத்தையும் இன்னும் பிற ஆயுதங்களையும் நான் பெற்றிருக்கிறேன். சிங்கம் போன்ற பல வீரர்களால் காக்கப்பட்டாலும் அந்தக் கடும் தார்த்தராஷ்டிர காட்டை நான் நிச்சயம் அழிப்பேன். எனவே, ஓ! விராடனின் மகனே {உத்தரா}, உனது அச்சங்கள் விலகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} உறுதிகூறப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, பீஷ்மரால் பாதுகாக்கப்பட்டிருந்த கடுந்தேர்களின் வரிசைக்குள் ஊடுருவினான். எனினும் கடுஞ்செயல்கள் புரியும் கங்கையின் மகன் {பீஷ்மர்}, போர்க்களத்தின் வீரர்களை வீழ்த்த விருப்பம் கொண்டு முன்னேறி வரும் வலிய கரங்கள் கொண்ட வீரனை {அர்ஜுனனை} மகிழ்ச்சியுடன் எதிர்த்து நின்றார். எதிர்த்து நின்ற பீஷ்மரின் கொடிக்கம்பத்தை, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது கணையைக் கொண்டு ஜிஷ்ணு {அர்ஜுனன்} வேரோடு வெட்டி வீழ்த்தினான். இதனால், அழகிய மலர்மாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த துச்சாசனன், விகர்ணன், துஸ்ஸஹன், விவிங்சதி ஆகிய நான்கு வீரர்களும் அந்தக் கடும் வில்லாளியை நோக்கி விரைந்து வந்தனர். கடும் வில்லாளியான பீபத்சுவை {அர்ஜுனனை} நோக்கி விரைந்து வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு, வீரனான துச்சாசனன், ஒரு பிறை வடிவக் கணையால் விராடன் மகனையும் {உத்தரனையும்}, மற்றொரு கணையால் அர்ஜுனனின் மார்பையும் துளைத்தான்.
துச்சாசனனை எதிர்த்த ஜிஷ்ணு {அர்ஜுனன்}, கழுகின் இறகுகளைப் படைத்த தனது கூரிய கணைகளால், தனது எதிரியின் {துச்சாசனனின்} தங்க முலாம் பூசப்பட்ட வில்லை வெட்டி, ஐந்து கணைகளால் அவனது மார்பைத் துளைத்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் துன்புற்ற துச்சாசனன், போரை விட்டு விலகி {புறமுதுகிட்டு} ஓடினான். பிறகு திருதராஷ்டிரன் மகனான விகர்ணன், எதிரி வீரர்களைக் கொல்லும் அர்ஜுனனை கழுகின் இறகுகள் கொண்ட நேரான கூரிய கணைகளால் துளைத்தான். ஆனால் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது நேரான கணைகள் மூலம் ஒரு நொடிக்குள் அவனது {விகர்ணனின்} நெற்றியில் அடித்தான். அர்ஜுனனால் துளைக்கப்பட்ட அவன் தனது தேரில் இருந்து விழுந்தான். இதைக் கண்ட துஸ்ஸஹன், விவிங்சதியை ஆதரித்தபடி, தனது சகோதரனை மீட்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு மேகம் போன்ற கூரிய கணைகளால் அர்ஜுனனை மறைத்தான்.
எனினும், இதற்குக் கிஞ்சிற்றும் கவலைப்படாத தனஞ்சயன் {அர்ஜுனன்}, அதே நொடியிலேயே இரு கணைகளால் அவர்கள் இருவரையும் துளைத்து, அவர்கள் இருவரது குதிரைகளையும் கொன்றான். இதனால், குதிரைகளை இழந்து, தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்ட அந்த இரு திருதராஷ்டிரன் மகன்களையும், மற்ற தேர்களில் அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பிற வீரர்கள் தூக்கிச் சென்றனர். வீழ்த்தப்பட முடியாதவனும், கிரீடம் தரித்தவனும், குந்தியின் பலமிக்க மகனுமான பீபத்சு {அர்ஜுனன்}, தனது கணைகளைக் கொண்டு, குறிதவறாமல் அனைத்துப்புறங்களிலும் அடித்துக் கொண்டிருந்தான்.
அர்ஜுனனின் பராக்கிரமம்! – விராட பர்வம் பகுதி 62-போர்க்களத்தில் அர்ஜுனனின் கோரத்தாண்டவம்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! பாரதக் குலத்தவனே {ஜனமேஜயா}, குருக்களில் பெரும் தேர்வீரர்கள் அனைவரும் ஒன்றுகூடி, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி அனைத்துப் புறங்களில் இருந்தும் அர்ஜுனனைத் தாக்கினர். ஆனால் அளவிலா ஆன்மா கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, அந்த வலிய தேர்வீரர்களை, மலைகளை மூடும் பனி போலத் தனது கணை மேகங்களால் மூடினான். பெரும் யானைகளின் பிளிறல்களும், சங்கொலிகளும் ஒன்றாகக் கலந்து அங்கே பெரும் ஒலியை உண்டாக்கின. யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும், இரும்புக்கவசங்களையும் பார்த்தன் {அர்ஜுனன்} அடித்த அம்புகள் துளைத்து வெளியேறி ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன. மிகுந்த வேகத்துடன் கணைகளை அடித்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் போட்டியில், கூதிர்காலத்தின் {இலையுதிர் காலத்தின்} நண்பகல் வேளையில் சுட்டெரிக்கும் சூரியனை நினைவுபடுத்தினான்.
அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும், குதிரை வீரர்கள் தங்கள் குதிரைகளில் இருந்தும் கீழே குதித்து, காலாட்படையினருடன் சேர்ந்து அனைத்துப் புறங்களிலும் {புறமுதுகிட்டு} ஓடினர். தாமிரம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பலமிக்க வீரர்களின் கவசங்களை அர்ஜுனனின் கணைகள் பிளந்த போது ஏற்பட்ட சடசடப்பொலி பெருவொலியாக இருந்தது. பாம்புகள் போலச் சீறிக்கொண்டு விரைந்து சென்ற பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் சிதைக்கப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள் மேலிருந்த போர்வீரர்கள் அனைவரும் விரைவில் அந்தக் களத்தில் பிணங்களாக விழுந்தனர்.
கையில் வில்லுடன் போர்க்களத்தில் தனஞ்சயன் {அர்ஜுனன்} நாட்டியம் ஆடுவதைப் போலத் தெரிந்தது. இடி போன்ற காண்டீவத்தின் நாணொலியால் பீதியடைந்தவர்களில், அந்தப் போர்க்களத்தை விட்டு ஓடியவர்கள் பலராக இருந்தனர். தலைப்பாகைகள், காது குண்டலங்கள், தங்க ஆரங்களுடன் கூடிய வெட்டப்பட்ட தலைகள் அந்தப் போர்க்களத்தில் நிறைந்திருந்தன. ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட கைகளில் விற்களை ஏந்திய மனித உடல்கள், கணைகளால் சிதைக்கப்பட்டு எங்கும் சிதறிக் கிடந்ததால் பூமி அழகாகத் தெரிந்தது. ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, கூரிய கணைகளால் வெட்டப்பட்ட தலைகள் தொடர்ச்சியாகப் பூமியில் விழுவதைக் காண, வானத்தில் இருந்து கல் மழை பொழிவது போல இருந்தது.
அஞ்சத்தக்க பராக்கிரமம் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} தனது கடுமையை வெளிக்காட்டியபடி போர்க்களத்தில் உலவி, திருதராஷ்டிரன் மகன்கள் மீது கோபத்தால் பயங்கர நெருப்பை ஊற்றிக் கொண்டிருந்தான். அர்ஜுனனின் கடும் பராக்கிரமத்தைக் கண்ட எரிக்கப்பட்ட அந்த எதிரிப்படையின் குரு வீரர்கள் துரியோதனன் முன்னிலையிலேயே உற்சாகமிழந்து போரிடுவதை நிறுத்தினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் படையைப் பயங்கரத்தால் பீடிக்கச் செய்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கதிகலங்கச் செய்த அந்த வெற்றியாளர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} களத்தில் இப்படியே உலவி கொண்டிருந்தான்.
இறந்தவர்களின் கலைந்த கேசத்தை மிதக்கும் தக்கையாகவும், விற்களையும் அம்புகளையும் படகுகளாகவும், இறைச்சியையும் விலங்குச் சாறுகளையும் சேறாகவும் கொண்ட யுகமுடிவின் மரண ஆறு போல, பாண்டுவின் மகன் அந்தப் போர்க்களத்தில், அலையடிக்கும் கடுமையான ரத்த ஆற்றை உற்பத்தி செய்தான். கவசங்களும், தலைப்பாகைகளும் அதன் பரப்பில் அடர்த்தியாக மிதந்து சென்றன. யானைகள் முதலைகளாகவும், தேர்கள் அதன் கட்டுமரங்களாகவும், கொழுப்பு, இரத்தம் ஆகியன அதன் ஊற்றாகவும் இருந்தன. பார்வையாளர்களின் இதயங்களில் பயங்கரம் பீடிக்கச்செய்ய அது {அந்த இரத்த ஆறு} கணக்கிடப் பட்டிருந்தது.
காணக் கொடூரமாகவும், சீற்றமிகு விலங்குகளின் கதறல்களை எதிரொலிக்கும் அச்சத்தின் எல்லையாகவும் இருந்த கூரிய கணைகள் அதன் {அந்த இரத்த ஆற்றின்} முதலைகளாக இருந்தன. ராட்சசர்களும் மற்ற மனித ஊனுண்ணிகளும் {நரமாமிசம் உண்பவர்களும்} அதன் ஓர் எல்லையில் இருந்து மற்ற எல்லைவரை நடமாடினர். முத்துச் சரங்கள் அதன் {அந்த இரத்த ஆற்றின்} அதிர்வலைகளாக இருந்தன. பிற அற்புத ஆபரணங்கள் அதன் குமிழிகளாக இருந்தன. மொய்க்கும் கணைகள் அதன் கடும் சுழிக்காற்றாகவும், குதிரைகள் அதன் ஆமைகளாகவும் இருந்தன. அந்த வலிமைமிக்கத் தேர் வீரன் {அர்ஜுனன்} அதன் {அந்த இரத்த ஆற்றில் இருக்கும்} பெரிய தீவாக இருந்தான். அது சங்கொலிகளையும், பேரிகையொலிகளையும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பார்த்தன் {அர்ஜுனன்} உண்டாக்கிய அந்த இரத்த ஆறு கடக்கமுடியாததாக இருந்தது. அர்ஜுனன் தனது கணைகளை எடுப்பதையும், வில்லின் நாணில் அவற்றைப் பொருத்துவதையும் அக்காண்டீவத்தில் இருந்து நீட்டி இழுத்து அவற்றை விடுவதையும் பார்வையாளர்களால் காண முடியாத அளவுக்கு அவனது {அர்ஜுனனது} கரங்கள் இலகுவாக {வேகமாக} இருந்தன.
பீஷ்மர் மயங்கினார்! – விராட பர்வம் பகுதி 63-பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற கடும் போர்; வானத்தில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிவது; இருவரும் கடுமையாகப் போரிடுவது; அர்ஜுனன் அடித்த கணைகளால் பீஷ்மர் மயங்குவது; தேரோட்டிகள் அவரைப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்வது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்களுக்கு மத்தியில் பெரும் அழிவு ஏற்பட்ட போது, சந்தனுவின் மகனும், பாரதர்களின் பாட்டனுமாகிய பீஷ்மர், அர்ஜுனனை நோக்கி விரைந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தனது அற்புத வில்லையும், எதிரிகளின் முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்ல கூரிய முனை கொண்ட பல கணைகளையும் எடுத்து, அடித்து அவனைக் {அர்ஜுனனைக்} கடும் வேதனைக்குள்ளாக்கினார். அவரது {பீஷ்மரது} தலைக்கு மேலே வெண்குடை ஏந்தப்பட்டதன் விளைவாக அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சூரிய உதயத்தின் போது காணப்படும் அழகிய மலை போலத் தெரிந்தார்.
பிறகு அந்தக் கங்கையின் மகன் {பீஷ்மர்}, திருதராஷ்டிரன் மகன்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தனது சங்கை ஒலித்துக் கொண்டு, தனது வலப்புறத்தில் சுழன்று பீபத்சுவை {அர்ஜுனனை} அடைந்து அவனது போக்கைத் தாமதப்படுத்தினார். எதிரி வீரர்களைக் கொல்லும் அவர் {பீஷ்மர்}, தன்னை நோக்கி குந்தியின் மகன் {அர்ஜுனன்} வருவதைக் கண்டு, மழை நிறைந்த மேகத்தை வரவேற்கும் மலை போல, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனை {அர்ஜுனனை} வரவேற்றார். பெரும் சக்தி கொண்ட பீஷ்மர், பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடிக்கம்பத்தை எட்டு {8} கணைகளால் துளைத்தார். பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கொடியை அடைந்த அக்கணைகள், அங்கே சுடர்விட்டுக் கொண்டிருந்த குரங்கையும், பதாகையின் மேல் இருந்த அந்த {மற்ற} உயிரினங்களையும் அடித்தன.
பிறகு, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய முனை கொண்ட வலிமைமிக்க ஓர் எறிவேலைக் கொண்டு பீஷ்மரின் குடையை வெட்டினான். அக்கணமே அது {அந்தக்குடை} தரையில் விழுந்தது. இலகுவான கரங்களைக் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது எதிரியின் கொடிக்கம்பத்தையும், பிறகு அவரது {பீஷ்மரின்} குதிரைகளையும், பிறகு பீஷ்மரின் பக்கவாட்டுப் பகுதிகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்த ஓட்டுனர்கள் இருவரையும் பல கணைகளால் அடித்தான். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத பீஷ்மர், அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} பலத்தைக் குறித்து அறிந்திருந்தாலும், ஒரு வலிமைமிக்க தெய்வீகக் ஆயுதத்தால் தனஞ்சயனை {அர்ஜுனனை} மூடினார். அளவிடமுடியாத ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பீஷ்மரை நோக்கி ஒரு தெய்வீக ஆயுதத்தை அடித்து, பீஷ்மரிடம் இருந்து வந்த ஆயுதத்தை, அடர்த்தியான மேகத்திரளை வரவேற்கும் மலை போல ஏற்றுக் கொண்டான்.
பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதல் கடுமையாக இருந்தது. படைகளுடன் இருந்த மற்ற கௌரவ வீரர்கள் வெறும் பார்வையாளர்களாகவே அங்கே இருந்தனர். பீஷ்மருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையிலான அம்மோதலில், கணைகளை எதிர்த்து அடித்த மற்ற கணைகள், மழைக்காலத்தின் விட்டில்பூச்சிகளைப் போலக் காற்றில் ஒளிர்ந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, பார்த்தன் {அர்ஜுனன்}, வலது மற்றும் இடது ஆகிய தனது இரண்டு கைகளாலும் மாற்றி மாற்றிக் கணைகளை அடித்துக் கொண்டிருந்ததன் விளைவாக வளைந்திருந்த காண்டீவம், தொடர் நெருப்பு வளையம் போலக் காட்சியளித்தது. பிறகு, கனமழையால், மலையின் மார்பை மறைக்கும் மேகம் போல, நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் பீஷ்மரை அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} மறைத்தான்.
ஆர்ப்பரிக்கும் கடலைத் தாங்கிக் கொள்ளும் கரையைப் போல, அந்தக் கணை மழையைத் தனது கணைகளால் கலங்கடித்த பீஷ்மர், பதிலுக்கு அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} தனது கணைகளால் மறைத்தார். அந்தப் போரில் ஆயிரம் துண்டுகளாக வெட்டப்பட்ட வீரர்கள், பல்குனனின் {அர்ஜுனனின்} தேருக்கு அருகே வேகமாகச் சரிந்து விழுந்தனர். பிறகு, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} தேரில் இருந்து, தங்க இறகுகள் கொண்ட கணை மழை வானத்தில் இருந்து வெட்டுக்கிளிகள் பறந்து வருவது போலப் பொழிந்தன. அவனால் {அர்ஜுனனால்} அப்படி அடிக்கப்பட்டவற்றை, மீண்டும் பீஷ்மர், தனது கூரிய கணைகளால் தடுத்தார். இதற்குக் கௌரவர்கள், “அற்புதம்! அற்புதம்!! அர்ஜுனனுடன் போரிடுவதில், பீஷ்மர் மிகக் கடுமையான சாதனையைச் சாதித்திருக்கிறார். பலமிக்கவனும், இளமைநிறம்பியவனும், இலகுவான திறமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும் ஆவான் தனஞ்சயன் {அர்ஜுனன்}. தேவகியின் மகன் கிருஷ்ணன், ஆசான்களில் முதன்மையானவரான பரத்வாஜரின் வலிமைமிக்க மகன் {துரோணர்}, சந்தனுவின் மகன் பீஷ்மர் ஆகியோரைத் தவிர வேறு யாரால் பார்த்தனின் {அர்ஜுனனின்} வேகத்தைப் போர்க்களத்தில் தாங்கிக் கொள்ள முடியும்?” என்று ஆச்சரியப்பட்டனர்.
ஆயுதங்களை ஆயுதங்களால் தடுத்த, அந்த இரு வலிமைமிக்கப் பாரதக் குலத்தின் காளைகளும், விளையாட்டாகப் போரிட்டபடி அனைத்து உயிர்களின் கண்களையும் கவர்ந்தனர். அந்த ஒப்பற்ற வீரர்கள், பிரஜாபதி, இந்திரன், அக்னி, கடும் ருத்திரன் {சிவன்}, குபேரன், வருணன், யமன், வாயு ஆகியோர்களிடம் பெற்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியபடியே களத்தில் உலவிக் கொண்டிருந்தனர். அந்த வீரர்களின் மோதலைக் கண்ணுற்ற அனைவரும் பெரிதும் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அனைவரும், “நீண்ட கரங்கள் கொண்ட பார்த்தா {அர்ஜுனா} நன்று செய்தாய்!”, “பீஷ்மரே நன்று செய்தீர்!”, “உண்மையில் பீஷ்மருக்கும் பார்த்தனுக்கும் இடையில் நடைபெறும் இம்மோதலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மனிதர்களுக்கு மத்தியில் அரிதானவையாகும்” என்றனர்.”
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படியே அனைத்து ஆயுதங்களையும் அறிந்த அந்த வீரர்களுக்கிடையிலான மோதல் நடந்து கொண்டிருந்தது. தெய்வீக ஆயுதங்களின் மோதல் நின்றதும், கணைகளின் தாக்குதல் தொடர்ந்தது. எதிராளியை {பீஷ்மரை} அணுகிய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தனது கூரிய கணையால் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீஷ்மரின் வில்லை வெட்டினான். எனினும், வலிய கரங்கள் கொண்டவரும், பெரும் தேர்வீரருமான பீஷ்மர், கண் இமைப்பதற்குள் மற்றொரு வில்லை எடுத்து அதற்கு நாண் பொருத்தினார். மிகுந்த கோபமடைந்த அவர் {பீஷ்மர்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கணைமழையைப் பொழிந்தார்.
பெரும் சக்தி கொண்ட அர்ஜுனனும், பீஷ்மர் மீது கூரிய கணைகளைப் மழையெனப் பொழிந்தான். பீஷ்மரும் மேகங்கள் போன்ற கணைகளைப் பாண்டு மகனின் {அர்ஜுனன்} மீது அடித்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, தெய்வீக ஆயுதங்களை அறிந்து, கூரிய கணைகளை அடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த இருவரிடமும், யாராலும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. கிரீடம் தரித்த வலிமைமிக்கத் தேர்வீரனான குந்தியின் மகனும் {அர்ஜுனனும்}, சந்தனுவின் வீரமிக்க மகனும் {பீஷ்மரும்} தங்கள் கணைகளால் பத்து {10} திசைகளையும் தெளிவற்றதாக்கினர்.
மேகம் போன்ற கணைகளால் அந்தப் பாண்டவன் {அர்ஜுனன்} பீஷ்மரை மூடினான்; பீஷ்மரும் அந்தப் பாண்டவனை {அர்ஜுனனை} மூடினார். ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களின் உலகில் நடைபெற்ற அற்புதப் போராக அஃது இருந்தது. பீஷ்மரின் தேரைப் பாதுகாத்துக் கொண்டிருந்த வீரர்கள், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, அந்தக் குந்தி மகனுடைய {அர்ஜுனனுடைய} தேரின் அருகிலேயே தரையில் விழுந்தனர். காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட ஸ்வேதவாகனனின் {அர்ஜுனனின்} இறகு படைத்த கணைகள், அனைத்துப் புறங்களிலும் பாய்ந்து எதிரிகளை மொத்தமாகப் படுகொலை செய்தன. அவனது தேரில் இருந்து வெளிப்பட்ட, இறகுகள் படைத்த சுடர்மிகும் கணைகளைக் காண வானத்தில் செல்லும் அன்னப்பறவைகளின் வரிசையைப் போலத் தெரிந்தன.
ஆகாயத்தில் இருந்த இந்திரனுடன் கூடிய தேவர்கள், அற்புதமான வில்லாளியான அர்ஜுனனால் பெருஞ்சக்தியுடன் அடிக்கப்பட்ட மற்றொரு தெய்வீக ஆயுதத்தை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். பெரும் அழகுபடைத்த அற்புத ஆயுதமான வலிமைமிக்கக் காண்டீவத்தைக் கண்ணுற்ற {கந்தர்வனான} சித்திரசேனன், தேவர்கள் தலைவனிடம் {இந்திரனிடம்}, “பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்படும் கணைகள் வானத்தில் ஒரே நேர்கோட்டில் செல்வதைப் பாரும். இந்தத் தெய்வீக ஆயுதத்தைப் {காண்டீவத்தைப்} பயன்படுத்துவதில் ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} கைத்திறம் அற்புதமாக இருக்கிறது. மனிதர்களுக்கு மத்தியில் இஃது இல்லாததால், இது மனிதர்கள் பயன்படுத்தத்தக்க ஆயுதமன்று. பழங்காலத்தில் இருந்து பயன்பட்டு வரும் வலிமைமிக்க அந்த ஆயுதங்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றன? கணைகளை எடுப்பதற்கும், வில்லில் பொருத்துவதற்கும், காண்டீவத்தை வளைத்து அடிப்பதற்குமான இடைவெளியே காணப்படவில்லையே. நாளின் மத்திய வேளை சூரியனைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பாண்டுவின் மகனைக் {அர்ஜுனனைக்} காணும் சக்தி கூட அந்தப் படை வீரர்களுக்கு இல்லையே. அதே போல, கங்கையின் மகனான பீஷ்மரையும் யாராலும் பார்க்க முடியவில்லை. இருவரும் புகழ்பெற்ற சாதனையாளர்களே. இருவரும் கடும் பராக்கிரமம் மிக்கவர்களே, வீரத்தில் அவ்விருவரும் இணையாகவே இருக்கின்றனர். இவர்கள் இருவரையுமே போர்க்களத்தில் வீழ்த்த முடியாது” என்றான் {கந்தர்வனான சித்திரசேனன்}.
பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, பீஷ்மருக்கும் இடையில் நடந்த அந்த மோதலைக் குறித்து அந்தக் கந்தர்வனால் இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவர்கள் இருவர் மீதும் தெய்வீகப் பூமாரியைப் பொழிந்து, அவர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தினான். அதேவேளையில், சந்தனுவின் மகனான பீஷ்மர், இருகைகளாலும் தன்னைத் துளைத்துக் கொண்டிருந்த அர்ஜுனனை, இடதுபுறமாகத் தாக்கினார். இதைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, உரக்கச் சிரித்தபடி, கழுகு இறகுகள் படைத்த கூரிய கணையொன்றால், சூரியப் பிரகாசமிக்கப் பீஷ்மரின் வில்லை வெட்டினான்.
பிறகு, என்னதான் பின்னவர் {பீஷ்மர்} தனது பராக்கிரமம் அனைத்தையும் செலுத்திப் போராடிக் கொண்டிருந்தாலும், குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, பத்து கணைகளால் பீஷ்மரின் மார்பைத் துளைத்தான். கடும் வலியால் வேதனையுற்ற வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான கங்கையின் மகன் {பீஷ்மர்}, தனது தேரின் கம்பத்தில் சாய்ந்தபடி அப்படியே நீண்ட நேரம் நின்றார். மயக்கத்தில் இருக்கும் வீரர்களைப் பாதுகாக்கும் முறையை அறிந்தவர்களான குதிரைத்தேரோட்டிகள், அவர் {பீஷ்மர்} சுயநினைவை இழந்ததைக் கண்டு, அவரைப் பாதுகாப்பாக {அங்கிருந்து} அழைத்துச் சென்றனர்.
ஆராயாமல் தப்பி ஓடிய துரியோதனன்! – விராட பர்வம் பகுதி 64-துரியோதனனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; துரியோதனன் அர்ஜுனனைத் தாக்கியது; விகர்ணன் துரியோதனனின் உதவிக்கு வந்து புறமுதுக்கிட்டு ஓடியது; அவனைக் கண்ட மற்ற படைவீரர்களும் களத்தைவிட்டு புறமுதுகிட்டு ஓடுவது; துரியோதனனும் புறமுதுகிடுவது; அர்ஜுனன் துரியோதனனை நிந்திப்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “களத்தின் முன்னணியை விட்டு பீஷ்மர் ஓடியதும், திருதராஷ்டிரனின் சிறப்புமிக்க மகன் {துரியோதனன்}, தனது கொடியை உயர்த்தியபடி, கையில் வில்லுடனும், உரத்த கர்ஜனையுடனும் அர்ஜுனனை அணுகினான். தனது வில்லைக் காது வரை இழுத்து ஈட்டி முனை கொண்ட கணையை அடித்து, எதிரிகளுக்கு மத்தியில் உலாவி கொண்டிருந்த கடும் பராக்கிரமமிக்கப் பயங்கர வில்லாளியான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நெற்றியைத் துளைத்தான். தனது புகழ்பெற்ற செயல்களின் காரணமாகப் பிரகாசமாக இருந்தவனான அந்த வீரன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா} கூரிய தங்க முனை கொண்ட அந்தக் கணையால் நெற்றியில் துளைக்கப்பட்டு, ஒற்றைச் சிகரமுடைய அழகிய மலை போல இருந்தான். அந்தக் கணையால் வெட்டப்பட்டு உண்டான புண்ணிலிருந்து உயிரோட்டமான சூடான இரத்தம் அதிகமாகப் பாய்ந்தது. அப்படி அவனது {அர்ஜுனனின்} உடலில் சொட்டிய இரத்தம், தங்க மலர்களால் ஆன மாலை போல அழகாக ஒளிர்ந்தது.
அந்தக் கணையைக் கொண்டு துரியோதனனால் தாக்கப்பட்டவனும், வேகமான கரங்களும், பொய்க்கா பலமும் கொண்டவனுமான அர்ஜுனன், கோபத்தின் பெருக்கத்தால், கடும் சக்தி கொண்ட நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற கணைகளைக் கொண்டு துரியோதனனை அடித்தான். வல்லமையும், சக்தியும் கொண்ட துரியோதனன் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தாக்கினான். வீரர்களில் முதன்மையான பார்த்தனும் {அர்ஜுனனும்} துரியோதனனைத் தாக்கினான். *அஜமீட குலத்தில் பிறந்த அந்த மனிதர்களில் முதன்மையான இருவரும் அந்த மோதலில் ஒருவரை ஒருவர் இப்படியே தாக்கிக் கொண்டனர்.
பிறகு நான்கு தேர்களின் துணையுடன், மலை போன்ற பெரிதான யானையின் மீது அமர்ந்தபடி, விகர்ணன், குந்தியின் மகனான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} நோக்கி விரைந்து வந்தான். பெரும் யானை தன்னை நோக்கி வேகத்துடன் வருவதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது வில்லின் நாணை காதுவரை இழுத்து பெரும் வேகத்துடன் ஓர் இரும்புக் கணையை அதன் {யானையின்} நெற்றிப் பொட்டில் அடித்தான். வஜ்ரத்தைக் கொண்டு மலையைப் பிளக்கும் இந்திரன் போல, கழுகின் இறகுகள் கொண்ட கணையைக் கொண்டு பெரும் மலையைப் போன்ற அந்த யானையைப் பார்த்தன் {அர்ஜுனன்} துளைத்தான். அந்தக் கணையால் பெரிதும் வேதனையுற்ற அந்த யானைவகையின் தலைமை யானை, நடுங்கத் தொடங்கி, இடியால் தாக்கப்பட்ட மலைச்சிகரம் போல, தரையில் விழுந்தது.
யானைகளில் சிறந்த யானை, அப்படிப் பூமியில் விழுந்ததும், பெரும் அச்சத்துடன் அதில் இருந்து திடீரென இறங்கிய விகர்ணன், எண்ணூறு {800} அடிகள் பின்னோக்கி ஓடி விவிங்சதியின் தேரில் ஏறிக் கொண்டான். மேகத்திரள் போலவும், மலை போலவும் இருந்த பெரும் யானையை இடிபோன்ற கணையால் கொன்ற பிருதையின் மகன் {அர்ஜுனன்}, அதே போன்ற மற்றொரு கணையால் துரியோதனனை, அவனது மார்பில் அடித்தான். யானையும், மன்னனும் {துரியோதனனும்} காயப்பட்டதையும், மன்னனின் தேரைத் தாங்கிய வீரர்களுடன் சேர்ந்து விகர்ணன் ஓடியதையும் கண்ட மற்ற வீரர்கள், காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட கணைகளால் துன்புற்றுக் களத்தை விட்டு ஓடினர்.
பார்த்தனால் யானை கொல்லப்பட்டதையும், பிற வீரர்கள் அனைவரும் ஓடுவதையும் கண்ட குருக்களில் முதன்மையான துரியோதனன், எதையும் ஆராயாமலேயே, தனது தேரைத் திருப்பி, பார்த்தன் {அர்ஜுனன்} இல்லாத திசையில் தப்பி ஓடினான். அந்தக் கணையால் துளைக்கப்பட்டு, இரத்தம் கக்கியபடி, அச்சத்தால் துரியோதனன் ஓடிய போது, அனைத்து எதிரிகளையும் எதிர்க்கவல்ல கிரீடி {அர்ஜுனன்}, மேலும் போரிட விரும்பி, கோபத்தால் அவனை {துரியோதனனை} நிந்திக்கும் வகையில், “உனது பெரும் பெயரையும், புகழையுந்துறந்து, புறமுதுகிட்டு ஏன் இப்படி ஓடுகிறாய்? உனது நாட்டை விட்டுக் கிளம்பிய போது உனது எக்காளம் எப்படி ஒலித்ததோ, அப்படி ஏன் இப்போது ஒலிக்கவில்லை? இதோ பார், நான் யுதிஷ்டிரருக்குக் கீழ்ப்படிந்த ஒரு பணியாளும், பிருதையின் {குந்தியின்} மூன்றாவது மகனுமாவேன். நானே போருக்காக உறுதியாக நிற்கிறேன். திரும்பு. ஓ! திருதராஷ்டிரர் மகனே {துரியோதனா}, உனது முகத்தை எனக்குக் காட்டு. மன்னர்களின் நடத்தையை மனதில் கொள். துரியோதனன் {பிறரால் எதிர்த்துப் போரிடப்பட முடியாதவன்} என்று உனக்கு முன்பு கொடுக்கப்பட்ட பெயர் இதன்மூலம் பொருளற்றதாகிவிடும். இப்படிக் களத்தை விட்டு ஓடுவதால் உனது நிலைத்த பேறு என்னவாகும்? ஓ! துரியோதனா, உனக்கு முன்னும் பின்னும் எந்தப் பாதுகாவலரையும் நான் காணவில்லையே. ஓ மனிதர்களில் முதன்மையானவனே, உனக்கும் மிகவும் பிடித்தமான உனது உயிரைக் காத்துக் கொண்டு, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} கைகளில் இருந்து தப்பித்து ஓடிக்கொள். போ” என்றான் {அர்ஜுனன்}
தோற்றுத் திரும்பிய குருக்கள்! – விராட பர்வம் பகுதி 65-அர்ஜுனனின் வசைகளைத் தாங்கிக் கொள்ளாமல் திரும்பி வந்த துரியோதனனைக் கர்ணன் தடுத்து தானே அர்ஜுனனை எதிர்த்துச் சென்றது; கௌரவர்கள் அனைவரும் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டு தாக்குவது; சம்மோகனம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அர்ஜுனன் கௌரவர்களை மயக்குவது; அவர்களது ஆடைகளை எடுத்துக் கொள்வது; பீஷ்மர் துரியோதனனை ஹஸ்தினாபுரம் திரும்புமாறு வேண்டுவது; அர்ஜுனன் அடைந்த வெற்றி..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி அந்த ஒப்பற்ற வீரனால் {அர்ஜுனனால்} அழைக்கப்பட்ட அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, அந்தக் கண்டனங்களால் குத்தப்பட்டு, அங்குசத்தால் குத்தப்பட்ட வலிமையும் சீற்றமும் மிக்க யானையைப் போலத் திரும்பினான். தன்னால் தாங்கிக் கொள்ளமுடியாத நிந்தனைகளால் குத்தப்பட்ட அந்த வலிமையும் துணிச்சலும் மிக்கத் தேர்வீரன் {துரியோதனன்}, பாம்பை மிதித்துவிட்டவன் போலப் பெரும் வேகத்துடன் தனது தேரைத் திருப்பினான். தங்க அட்டிகையால் அலங்கரிக்கப்படவனும், மனிதர்களில் வீரனுமான கர்ணன், காயங்களுடன் துரியோதனன் திரும்புவதைக் கண்டு, அம்மன்னனை {துரியோதனனை} வழியிலேயே தடுத்து நிறுத்தி, அவனுக்கு {துரியோதனனுக்கு} ஆறுதல் அளித்து, துரியோதனனின் தேருக்கு வடக்கில் இருந்த பார்த்தனைப் {அர்ஜுனனைப்} போரில் சந்திக்க அவனே {கர்ணனே} சென்றான்.
சந்தனுவின் மகனான பீஷ்மரும், பார்த்தன் {அர்ஜுனன்} கையில் இருந்து துரியோதனனைக் காக்க, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது பெரிய பழுப்பு நிற குதிரைகளைத் திருப்பி, கையில் வில்லுடன் விரைந்தார். துரோணர், கிருபர், விவிங்சதி, துச்சாசனன், மற்றும் பிறரும், இழுத்துப் பிடித்த விற்கள் மற்றும் வில்லின் நாணில் பொருத்தப்பட்ட கணைகளுடன் துரியோதனனைக் காப்பதற்காக விரைவில் திரும்பினார்கள். அலைகள் பெருகும் கடலெனத் தன்னை நோக்கி முன்னேறி வரும் படைப்பிரிவுகளைக் கண்டப் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தாழும் மேகத்தை நோக்கி கொக்கு விரைவதைப் போல அவர்களை நோக்கி விரைந்தான். கையில் தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட அவர்கள் பிருதையின் மகனை {அர்ஜுனனை} முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டு, மலைமீது மேகங்கள் கனத்த மழையைப் பொழிவதைப் போல, அவன் {அர்ஜுனன்} மீது அனைத்துப் புறங்களில் இருந்தும் கணை மழையைப் பொழிந்தனர்.
தனது ஆயுதங்களைக் கொண்டு, அந்த அனைத்து ஆயுதங்களையும் தள்ளியவனும், குருக்களில் காளையும், அனைத்து எதிரிகளையும் எதிர்க்க வல்லவனுமான அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, இந்திரனிடம் இருந்து தான் பெற்ற, {யாராலும்} தாங்கிக் கொள்ள முடியாத ஆயுதமான சம்மோகனம் {ஸம்மோஹனம்} என்ற ஆயுதத்தை அடித்தான். அனைத்துப் புறங்களையும் திசைப்புள்ளிகளையும், அழகிய இறகுகள் கொண்ட தனது கூர்முனைக் கணைகளால் நிறைத்த அந்த வலிமைமிக்க வீரன் {அர்ஜுனன்}, தனது காண்டீவத்தின் நாணொலியால் அவர்களது உணர்வுகளை மழுங்கடித்தான். பிறகு, தனது இரு கைகளாலும் சங்கை எடுத்து மீண்டும் ஒருமுறை, வலிமையுடன் உரக்க ஊதிய எதிரிகளைக் கொல்பவனான பார்த்தன் {அர்ஜுனன்}, அனைத்து திசைப்புள்ளிகளையும், முழு உலகத்தையும், வானத்தையும் அவ்வொலியால் நிறைத்தான்.
பார்த்தனால் {அர்ஜுனனால்} ஊதப்பட்ட அந்தச் சங்கொலியால், குருவீரர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்தனர். எப்போதும் பிரியாத தங்கள் விற்கள் கைகளில் இருந்து விழும்வண்ணம் அவர்கள் அனைவரும் அப்படியே நின்றனர். அந்தக் குரு படை மயங்கியிருந்த அவ்வேளையில், உத்தரையின் சொற்களை மனதில் நினைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, மத்ஸ்ய மன்னனின் மகனிடம் {உத்தரனிடம்}, “ஓ! மனிதர்களில் சிறந்தவனே {உத்தரா}, குருக்கள் மயங்கியிருக்கும் வரையில் நீ அவர்கள் மத்தியில் சென்று துரோணர், கிருபர் ஆகியோருடைய வெள்ளாடைகளையும், மஞ்சள் நிறத்தில் அழகாக இருக்கும் கர்ணனின் ஆடையையும், மன்னன் {துரியோதனன்} மற்றும் துரோணரின் மகனுடைய {அஸ்வத்தாமனுடைய} நீல நிற ஆடைகளையும் எடுத்து வா. பீஷ்மர் மயக்கத்திலில்லை என்று நான் நினைக்கிறேன். அவரால் எனது ஆயுதங்களுக்கு எதிர்வினை புரிய முடியும். எனவே அவரது குதிரைகளை இடது புறம் கொண்டு கடந்து போ. மயக்கத்திலில்லாதவர்களை இப்படியே தவிர்க்க வேண்டும்” என்றான் {அர்ஜுனன்}.
இச்சொற்களைக் கேட்ட மத்ஸ்யனின் ஒப்பற்ற மகன் {உத்தரன்}, குதிரைகளின் கடிவாளத்தைவிட்டு, தேரில் இருந்து இறங்கி, அவ்வீரர்களின் ஆடைகளை எடுத்துக் கொண்டு, தன்னிடத்திற்குத் திரும்பி வந்தான். பிறகு அந்த விராடன் மகன் {உத்தரன்}, தங்கக் கவசம் பூண்ட நான்கு குதிரைகளையும் விரைந்து ஓட்டினான். அப்படி விரைந்து ஓடிய வெள்ளைக் குதிரைகள், கைகளில் கொடிதாங்கிய காலாட்படையினரின் வரிசைக்கப்பால், அர்ஜுனனை அவர்களுக்கு வெளியே இட்டுச் சென்றன. மனிதர்களில் சிறந்தவன் {அர்ஜுனன்} இப்படிச் செல்வதைக் கண்ட பீஷ்மர், தனது கணைகளால் அவனைத் தாக்கினார்.
பீஷ்மரின் குதிரைகளைக் கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, பத்து கணைகளால் அவரையும் {பீஷ்மரையும்} துளைத்தான். அவரது தேரோட்டியை முதலில் கொன்ற அர்ஜுனன், கையில் அழகிய வில்லுடன், எண்ணற்ற தேர்களைக் கடந்து, மேகங்களை விட்டு வெளியேறும் சூரியனைப் போல வெளியே வந்தான். குருவீரர்களில் முதன்மையான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தனது உணர்வு மீண்டு {மயக்கம் தெளிந்து}, தேவர்களின் தலைவனைப் போல {இந்திரனைப் போல}, அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, போர்க்களத்தில் தனியாக நிற்பதைக் கண்டான். அவன் {துரியோதனன்} விரைந்து (பீஷ்மரிடம்), “அவன் எப்படி உம்மிடம் இருந்து தப்பினான்? அவன் தப்பாதவாறு நீர் அவனைத் தாக்குவீராக” என்றான்.
அதற்கு, சிரித்தபடியே அவனிடம் {துரியோதனனிடம்} சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, “அழகிய வில்லையும், உனது கணைகளையும் துறந்து நீ மயங்கி இருந்தபோது, இந்த உனது உணர்வும், பராக்கிரமமும் எங்கிருந்தன? பீபத்சு {அர்ஜுனன்}, அட்டூழியங்கள் புரிவதற்கு அடிமையானவனல்ல {அட்டூழியங்கள் புரியமாட்டான்}; அல்லது அவன் ஆன்மா எப்போதும் பாவத்தை நோக்காது. மூன்று உலகங்களுக்காகவும் அவன் {அர்ஜுனன்} தன் கொள்கைகளை விட்டுக் கொடுப்பவனல்ல. அதனால்தான் நாம் அனைவரும் {இப்படி மயக்கமடைந்த போதிலும்} இந்தப் போரில் கொல்லப்படாமல் இருக்கிறோம். ஓ! குருவீரர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, குருக்களின் நகரத்திற்குத் திரும்புவாயாக. பசுக்களை வென்று பார்த்தனும் திரும்பிச் செல்லட்டும். மூடத்தனமாக உனது நன்மையைத் தூக்கி வீசாதே. உண்மையில், ஒருவனுக்கு நன்மை எதுவோ, அதுவே {அவனால்} சாதிக்கப்பட வேண்டும்” என்றார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனது நன்மைக்காகச் சொல்லப்பட்ட பாட்டனின் சொற்களைக் கேட்ட கோபக்கார மன்னன் துரியோதனன், மேலும் போரிட ஆர்வமில்லாததால், நீண்ட பெருமூச்சு விட்டபடி அமைதியடைந்தான். பீஷ்மர் சொன்ன அறிவரை தனக்கு நன்மையே தரும் என்பதை நினைத்தும், பலத்தில் வளர்ந்திருக்கும் பாண்டவர்களைக் கண்டு அவனும் {துரியோதனனும்}, துரியோதனனைக் காக்க விரும்பிய பிற வீரர்களும் {தங்கள் நாட்டுக்குத்} திரும்பிச் செல்லத் தீர்மானித்தனர். அந்தக் குரு வீரர்கள் தங்கள் நகரத்திற்குத் திரும்பிச் செல்வதைக் கண்டப் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவர்களிடம் பேசவும், அவர்களை வழிபடவும் விரும்பி, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சிறிது நேரம் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். சந்தனுவின் மகனான வயது முதிர்ந்த பாட்டனையும் {பீஷ்மரையும்}, ஆசானான துரோணரையும் வழிபட்ட பிறகு, துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, கிருபரையும், பிற மதிப்பிற்குரிய வீர்களையும் அழகிய கணைகளால் வணங்கிய பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, மற்றொரு கணையால், மதிப்புமிக்க ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த துரியோதனனின் கிரீடத்தைத் துண்டுகளாக உடைத்தான்.
துணிச்சலும் மதிப்பும் மிக்க, அனைத்து வீரர்களையும் வணங்கிய பிறகு, அவன் {அர்ஜுனன்}, காண்டீவத்தின் நாணொலியால் மூன்று உலகங்களையும் நிறைத்தான். திடிரெனத் தனது சங்கான தேவதத்தத்தை எடுத்து ஊதி, தனது எதிரிகளின் இதயங்களை அவ்வீரன் {அர்ஜுனன்} துளைத்தான். எதிரிகளை {இப்படிச்} சிறுமைபடுத்தியபிறகு, அவன் {அர்ஜுனன்}, அழகிய கொடியுடன் கூடிய தேரில் பிரகாசமாகத் தெரிந்தான். குருக்கள் திரும்புவதைக் கண்ட கிரீடி {அர்ஜுனன்}, மத்ஸ்யன் மகனிடம் {உத்தரனிடம்} மகிழ்ச்சியாக, “உனது பசுக்களை மீட்டு, உனது குதிரைகளைத் திருப்புவாயாக; எதிரிகள் செல்கின்றனர். நீயும் உனது நகரத்திற்கு மகிழ்ச்சிநிறைந்த இதயத்துடன் திரும்புவாயாக” என்றான். பல்குனனுக்கும் {அர்ஜுனனுக்கும்} குருக்களுக்கும் இடையில் நடைபெற்ற மிக அற்புதமான இந்த மோதலைச் சாட்சியாகக் கண்ட தேவர்களும் பெருமகிழ்ச்சியுடன், பார்த்தனின் {அர்ஜுனனின்} சாதனைகளை நினைத்துப் பார்த்தபடி, தங்களுக்கு உரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.
அதே வன்னிமரம்! – விராட பர்வம் பகுதி 66-அர்ஜுனனைத் தஞ்சம் அடைந்த கௌரவப் படைவீரர்கள்; அபயமளித்த அர்ஜுனன்; அர்ஜுனனும் உத்தரனும் மீண்டும் வன்னிமரத்தை அணுகி உடை மாற்றிக் கொள்வது; அர்ஜுனன் உத்தரனிடம் உத்தரனே இப்போரை வென்றதாக அவனது தந்தையிடம் சொல்லச் சொல்வது; விராட நகரத்தை அடைவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்களைப் போரில் வீழ்த்தியபிறகு, காளையின் கண் போன்ற கண்களைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, பெரும் அளவிலான விராடனின் கால்நடைச் செல்வங்களை {பசு மந்தையை} திரும்ப மீட்டான். திருதராஷ்டிரர்கள் {திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும்} படுதோல்வியடைந்து சென்ற பிறகு, பெரும் எண்ணிக்கையிலான குரு படைவீரர்கள், ஆழ்ந்த கானகத்தில் இருந்து வெளியேறி, இதயத்தில் அச்சத்துடன், பார்த்தனின் {அர்ஜுனனின்} முன்பு வந்தனர். கலைந்த கேசத்துடனும், கூப்பிய கரங்களுடனும் அவர்கள் அவன் {அர்ஜுனன்} முன்பு வந்தனர். அந்நிய நிலத்திற்கு வந்து, பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்து, அச்சத்தால் உணர்வற்றுப் போய், மனக் குழப்பமடைந்திருந்த அவர்கள் அனைவரும், பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} முன்பு வந்து, “நாங்கள் உமது அடிமைகள்” என்றனர்.
அர்ஜுனன் {சரணடைந்த கௌரவப் படைவீரர்களிடம்}, “நல்வரவு. நீங்கள் அருளப்பட்டிருங்கள். நீங்கள் செல்லலாம். நீங்கள் அஞ்ச வேண்டிய காரணமேதும் இல்லை. துக்கமுற்றவர்களை நான் கொல்வதில்லை. உங்கள் பாதுகாப்புக்கான உறுதியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உறுதிகூறப்பட்ட இச்சொற்களைக் கேட்டு, கூடியிருந்த அவ்வீரர்கள், அவனது {அர்ஜுனனின்} சாதனைகள், புகழ் ஆகியவற்றைப் பாராட்டி, அவனது {அர்ஜுனனின்} நீண்ட வாழ்நாளுக்கான {நீண்ட ஆயுளுக்கான} நன்மொழிகளையும் {ஆசீர்வாதங்களையும்} கூறினர். எதிரியை முறியடித்து, மதங்கொண்ட யானையைப் போல விராடனின் நகரத்தை நோக்கி முன்னேறிய அர்ஜுனனைக் கௌரவர்களால் எதிர்கொள்ளமுடியவில்லை. மேகங்களைக் கலைக்கும் கடுங்காற்றைப் போல, மொத்த குரு {கௌரவப்} படையையும் முறியடித்த எதிரிகளைக் கொல்பவனான பார்த்தன் {அர்ஜுனன்}, மதிப்புடன், மத்ஸ்ய இளவரசனிடம் {உத்தரனிடம்}, “ஓ! குழந்தாய் {உத்தரா}, பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்} அனைவரும் உனது தந்தையுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நீ மட்டுமே அறிவாய். நகரில் நுழைந்ததும் அவர்களைப் {பாண்டவர்களைப்} புகழ்ந்துவிடாதே. ஏனெனில், அதனால் மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} அச்சங்கொண்டு, ஒளிந்து கொள்ள நேரிடும். அதற்குப் பதில், நகரத்தில் நுழைந்ததும், உனது தந்தையின் முன்னிலையில், “குருக்களின் படை என்னால் வீழ்த்தப்பட்டது. எதிரியிடமிருந்து பசுக்களும் என்னால் மீட்கப்பட்டன” என்று சொல்லி, இந்தச் செயல் உன்னால் ஆனதே என்று அறிவிப்பாயாக” என்றான் {அர்ஜுனன்}.
அதற்கு உத்தரன் {அர்ஜுனனிடம்}, “நீர் அடைந்த சாதனை எனது சக்திக்கு அப்பாற்பட்டது. அதை அடைவதற்கான திறனை நான் பெற்றிருக்கவில்லை. எனினும், ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனரே}, நீர் அதைச் செய்யச் சொல்லாத வரை, நான் எனது தந்தையிடம், உம்மைக் குறித்துச் சொல்ல மாட்டேன்” என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “எதிரி படையை வீழ்த்தி, குருக்களிடம் இருந்து, கால்நடைச் செல்வங்கள் முழுவதும் கைப்பற்றப்பட்ட பிறகு, ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மீண்டும் அந்த மயானத்திற்குத் திரும்பி வந்து, அதே வன்னி மரத்தை அடைந்து, எதிரிகளின் கணைகளால் சிதைக்கப்பட்ட உடலுடன் அங்கே நின்றான். பிறகு, நெருப்பு போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்தப் பயங்கரக் குரங்கு அந்தக் கொடிக்கம்பத்தில் இருந்த பிற உயிரினங்களுடன் சேர்ந்து வானத்தில் உயர்ந்தது {அந்தப் பெரிய வானரம், பூதங்களுடன் சேர்ந்து ஆகாயத்தில் கிளம்பியது}. (விஸ்வகர்மாவால்} உண்டாக்கப்பட்ட அந்த மாயை கறைந்து போய், சிங்க இலச்சனை பொறித்த உத்தரனின் கொடி அந்தத் தேரில் நிறுவப்பட்டது. அந்தக் குரு இளவரசர்களில் முதன்மையானவனின் {அர்ஜுனனின்} கணைகளையும், அம்பறாத்தூணிகளையும், போர்க்களத்தின் கடுமையை அதிகரிக்கும் வேறு ஆயுதத்தையும் (காண்டீவத்தையும்) {வன்னி மரத்தில்} மீண்டும் வைத்துவிட்டு, கிரீடியைத் {அர்ஜுனனைத்} தேரோட்டியாகக் கொண்டு மத்ஸ்யத்தின் ஒப்பற்ற இளவரசன் {உத்தரன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் நகரத்திற்குப் புறப்பட்டான். வலிமைமிக்கப் பெரும்சாதனையை அடைந்த எதிரியைக் கொல்பவனான பார்த்தனும் {அர்ஜுனனும்}, தனது தலைமுடியை முன்பு போலவே பின்னலாகக் கட்டி, உத்தரனின் கரங்களில் இருந்து கடிவாளங்களைப் பெற்றுக் கொண்டான். பிறகு அந்த ஒப்பற்ற வீரன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் மீண்டும் பிருஹந்நளையாக மாறி, உத்தரனின் தேரோட்டியாக விராடனின் நகரத்திற்குள் நுழைந்தான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கௌரவர்கள் அனைவரும் முற்றிலும் முறியடிக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டு, தளர்ந்த மனநிலையுடன் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றதும், {நகரம் நோக்கித்} திரும்பிக் கொண்டிருந்த பல்குனன் {அர்ஜுனன்}, உத்தரனிடம், “ஓ! இளவரசே, ஓ! வலிய கரங்கள் கொண்ட வீரா {உத்தரா}, பசுமந்தையாளர்களால் {மாட்டிடையர்களால்}, பாதுகாக்கப்பட்டபடியே பசுக்கள் முன்னே செல்லட்டும். குதிரைகளைக் {நீர்} குடிக்கச் செய்து {நீர்காட்டி}, குளிக்கச் செய்து, அவற்றை நன்றாகத் தேற்றிய பிறகு, பிற்பகலில் {மதிய வேளையில்} நாம் தலைநகருக்குள் நுழையலாம். உன்னால் அனுப்பப்படும் பசுமந்தையாளர்கள் {கோபாலர்களான மாட்டிடையர்கள்}, {இந்த} நற்செய்தியோடு நகரத்திற்கு விரைந்து சென்று, உனது வெற்றியை {முன்} அறிவிக்கட்டும் {பிரகடனம் செய்யட்டும்}” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனனின் சொற்களுக்கு இசைவாக, உத்தரன் தூதுவர்களிடம், “சென்று மன்னனின் {விராடரின்} வெற்றியை அறிவியுங்கள்” என்று விரைந்து கட்டளையிட்டான். எதிரி முறியடிக்கப்பட்டு, பசுக்கள் மீட்கப்பட்டதும், அந்த மத்ஸ்யனும் {உத்தரனும்}, பாரத இளவரசனும் {அர்ஜுனனும்} தங்களுக்குள் ஆலோசித்தபடியே மீண்டும் வன்னி மரத்தை அணுகினர். தாங்கள் பெற்ற வெற்றியால் மனம் நிறைந்த அவர்கள், வன்னி மரத்தின் அடியை அடைந்து, அங்கே அவர்கள் விட்டுச் சென்ற தங்கள் ஆடை ஆபரணங்களைத் தங்கள் தேரில் எடுத்துக் கொண்டு, அந்த இடத்தை விட்டு அகன்றனர். எதிரியின் மொத்தப் படையையும் வீழ்த்தி, குருக்களிடமிருந்து மொத்த செல்வத்தையும் {மொத்த கால்நடைச் செல்வத்தையும்} மீட்ட பிறகு, பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாகக் கொண்ட விராடனின் வீரமகன் {உத்தரன்} நகரத்திற்குத் திரும்பினான்.
பகடைக்காயால் யுதிஷ்டிரனை அடித்த விராடன்! – விராட பர்வம் பகுதி 67-திரிகார்த்தர்களை வீழ்த்திய பிறகு, விராடன் தனது நகருக்குத் திரும்புவது; உத்தரன் குருக்களை எதிர்த்துத் தனியாகச் சென்றிருப்பதை அறிந்து வருந்துவது; பிருஹந்நளன் உடன் சென்றிருந்ததால் வருந்த வேண்டாம் என்று கங்கராக இருக்கும் யுதிஷ்டிரன் விராடனிடம் சொல்வது; உத்தரன் வென்றான் என்ற செய்தியை விராடன் கேள்விப்பட்டு மகிழ்வது; கங்கரை விராடன் சூதாட அழைப்பது; சூதாடும்போது தனது மகன் உத்தரனை விராடன் புகழ்வது; பிருஹந்நளனே அதற்குக் காரணம் என்பது போலக் கங்கரான யுதிஷ்டிரன் சொல்வது; கோபமடையும் விராடன் யுதிஷ்டிரனைப் பகடைக் காய்களால் தாக்குவது; யுதிஷ்டிரனின் மூக்கில் இருந்து இரத்தம் வழிவது; அதைத் திரௌபதி பிடிப்பது;…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விரைவாகத் தனது செல்வத்தை மீட்ட விராடன், நான்கு பாண்டவர்களின் துணையோடு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், பெரும்படையுடனும் தனது நகரத்திற்குள் நுழைந்தான். போரில் திரிகார்த்தர்களை வீழ்த்தி, பசுக்களை மீட்ட அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {விராடன்}, பிருதையின் {குந்தியின்} மகன்களுடன் சேர்ந்து பிரகாசமடைந்து, அழகில் ஒளிர்ந்தான். நண்பர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்துபவனான அந்த வீரமிக்க மன்னன் {விராடன்}, தனது அரியணையில் அமரந்ததும், அந்தணர்களின் தலைமையிலான அவனது குடிமக்கள் அவன் {விராடன்} முன் வந்து நின்றனர். அவர்களால் வழிபடப்பட்ட மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்}, தனது படையின் தலைமையில் நின்று, அந்த அந்தணர்களையும், குடிமக்களையும் பதிலுக்கு வணங்கி, அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தனுப்பினான். பெரிய படையைக் கொண்டவனான மத்ஸ்யர்கள் மன்னன் விராடன், உத்தரனைக் குறித்து விசாரிக்கும் வகையில், “உத்தரன் எங்கே சென்றிருக்கிறான்?” என்று கேட்டான்.
அரண்மனையில் இருந்த பெண்களும், கன்னிகைகளும், அந்தப்புரத்தில் வாழ்ந்த மற்ற மகளிரும், அவனிடம் {விராடனிடம்}, மகிழ்ச்சியுடன், “நமது பசுக்களைக் குருக்கள் {கௌரவர்கள்} கைப்பற்றினர். இதனால் கோபமுற்ற பூமிஞ்சயன் {உத்தரன்}, அந்தக் குரு {கௌரவப்} படையுடன் வந்திருக்கும் சந்தனுவின் மகன் பீஷ்மர், கிருபர், கர்ணன், துரியோதனன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகிய ஆறு பலமிக்கத் தேர்வீரர்களை வீழ்த்த எண்ணி, மிகுந்த துணிச்சலுடன், பிருஹந்நளையைத் துணைக்கழைத்துக் கொண்டு, தனியாகச் சென்றிருக்கிறான்” என்றனர்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஒரே தேருடன், பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாகக் கொண்டு, தனது வீர மகன் {உத்தரன்} சென்றிருப்பதைக் கேட்ட மன்னன் விராடன், துயரில் மூழ்கி, தனது தலைமை ஆலோசகர்களிடம் {அமைச்சர்களிடம்}, “திரிகார்த்தர்களின் தோல்வியை அறிந்த கௌரவர்களும், பூமியின் பிற தலைவர்களும் தங்கள் நிலையில் நிற்க மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, திரிகார்த்தர்களால் காயங்கொள்ளாத எனது பிற வீரர்கள், இந்தப்பெரும்படையைத் துணைக்கழைத்துக் கொண்டு உத்தரனின் பாதுகாப்புக்காகச் செல்லட்டும்” என்றான் {விராடன்}.
இதைச் சொன்ன மன்னன் {விராடன்}, குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்களைத் தனது மகனுக்காக விரைந்து அனுப்பினான். பெரும்படைக்குச் சொந்தக்காரனான மத்ஸ்யர்கள் மன்னன் விராடன், இப்படியே, நால்வகைத் துருப்புகளைக் கொண்ட தனது படையின் பெரும்பிரிவை விரைந்து செல்ல கட்டளையிட்டான். இதைச் செய்த பிறகு, அவன் {விராடன்}, “இளவரசன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பதைத் தாமதிக்காமல் அறியுங்கள்! அலியைத் தேரோட்டியாகக் கொண்டு சென்றிருக்கும் ஒருவன் உயிரோடு இருக்க மாட்டான் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், துன்பத்திலிருந்த மன்னன் விராடனிடம், சிரித்துக் கொண்டே, “ஓ! ஏகாதிபதி {விராடரே}, பிருஹந்நளன் அவனது {உத்தரனது} தேரோட்டியாகச் சென்றிருந்தால், உமது பசுக்களை எதிரியால் இன்று கைப்பற்ற இயலாது. அந்தத் தேரோட்டியால் பாதுகாக்கப்படும் உமது மகன், குருக்களுடன் கூடி வரும் பூமியின் அனைத்து தலைவர்களையும், ஏன், தேவர்களோ, அசுரர்களோ, சித்தர்களோ, யக்ஷர்களோ உண்மையில் வந்தால் கூட, அவர்களையும் போரில் வீழ்த்தவல்லவனாவான்”, என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதே வேளையில், உத்தரனால் அனுப்பப்பட்ட, வேகமான பாதங்களைக் கொண்ட தூதர்கள், விராடனின் நகரத்தை அடைந்து, வெற்றிச் செய்தியைத் தந்தனர். பிறகு தலைமை அமைச்சர், பெரும் வெற்றி அடையப்பட்டதையும், உத்தரனின் வருகை ஆகிய அனைத்தையும் மன்னனிடம் {விராடனிடம்} தெரிவித்தார். அவர் {தலைமை அமைச்சர்}, “அனைத்துப் பசுக்களும் திரும்பக் கொண்டு வரப்பட்டன, குருக்கள் வீழ்த்தப்பட்டனர். எதிரிகளைக் கொல்பவனான உத்தரனும், அவனது தேரோட்டியும் {உடல்நலத்துடன்} நன்றாக இருக்கின்றனர்” என்றார். பிறகு யுதிஷ்டிரன் {மன்னன் விராடனிடம்}, “நற்பேறாலேயே, பசுக்கள் மீட்கப்பட்டு, குருக்கள் {கௌரவர்கள்} முறியடிக்கப்பட்டுள்ளனர். எனினும், பிருஹந்நளனைத் தேரோட்டியாகக் கொண்டவனுக்கு வெற்றி உறுதி என்பதால், உமது மகன் {உத்தரன்}, குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தியதை நான் வியப்பாகக் கருதவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அளவிலா பலம் கொண்ட தனது மகன் {உத்தரன்} அடைந்த வெற்றியைக் கேட்ட மன்னன் விராடன், மயிர்சிலிர்க்கும் வண்ணம் மகிழ்ச்சியை அடைந்தான். தூதர்களுக்கு ஆடைகளைப் பரிசாக வழங்கிய பிறகு, அவன் தனது அமைச்சர்களிடம், “நெடுஞ்சாலைகள் {ராஜபாட்டைகள்} கொடிகளால் அலங்கரிக்கப்படட்டும், மலர்க்காணிக்கைகளால் அனைத்து தேவர்களும், தேவிகளும் வழிபடப்படட்டும். இளவரசர்களும், துணிவுமிக்க வீரர்களும், இசைக்கலைஞர்களும், கணிகையரும் {பொதுமகள் = வேசி = harlots} வெளியே அணிவகுத்து எனது மகனை வரவேற்கட்டும். கிங்கரர்கள் {மணியாட்டிகள் – bellmen}, மதங்கொண்ட யானைகளில் விரைந்து சென்று, நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் எனது வெற்றியை அறிவிக்கட்டும். கன்னியராலும், துதிபாடுவோராலும் சூழப்பட்டு, அழகான ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட {எனது மகள்} உத்தரையும், எனது மகனை {உத்தரனை} எதிர்கொண்டழைக்கச் செல்லட்டும்” என்றான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னனின் இச்சொற்களைக் கேட்ட குடிமக்கள் அனைவரும், தங்கள் கைகளில் மங்கலகரமான பொருட்களுடன் சென்றார்கள். அவர்களில் பலர் கைத்தாளங்களுடனும் {வெண்கலத்தாளம்}, பூரிகைகளுடனும், சங்குகளுடனும் சென்றார்கள். அழகான ஆடைகள் உடுத்திய அழகிய பெண்டிரும், துதிபாடுவோரும், புனித பாடல்களைப் பாடுவோரும், முகமன் கூறுவோரும் {encomiasts}, பாணபத்திரரும் {minstrels}, பேரிகையிசைப்பவர்களும், இன்னும் பிறவகை இசைக்கலைஞர்களும் அளவிலா பராக்கிரமம் கொண்ட உத்தரனை வரவேற்பதற்காக, வலிமைமிக்க விராடனின் நகரத்தில் இருந்து வெளியே வந்தனர். துருப்புகளையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கன்னியரையும், கணிகையரையும் {வேசிகளையும்} அனுப்பிய பிறகு, விவேகம் நிறைந்த மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} மகிழ்ச்சியுடன், “ஓ! சைரந்திரி {மாலினி}, பகடையைக் கொண்டு வா. ஓ! கங்கரே, ஆட்டம் ஆரம்பமாகட்டும்” என்றான். அதற்குப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, “மகிழ்ச்சி நிறைந்த இதயம் கொண்டவன், தந்திரமான ஒரு சூதாடியுடன் விளையாடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளதை நாம் கேள்விப்படுகிறோம். எனவே, மகிழ்ச்சியாக இருக்கும் உம்முடன் நான் சூதாடத் துணிய மாட்டேன். எப்போதும் நான் உமக்கு நன்மையே செய்ய விரும்புகிறேன். எனினும், உமக்கு விருப்பமுண்டானால் விளையாட்டு ஆரம்பிக்கட்டும்” என்றான்.
அதற்கு விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “நான் சூதாடாவிட்டாலும், எனது அடிமைப்பெண்கள், பசுக்கள், தங்கம், மற்றும் நான் கொண்டுள்ள அனைத்துச் செல்வங்கள் ஆகிய இவை யாவற்றையும் உம்மால் இன்று காக்க முடியாது” என்றான். அதற்குக் கங்கன் {யுதிஷ்டிரன் விராடனிடம்}, “ஓ! ஏகாதபதி, ஓ! வெகுமதிகள் அளிப்பவரே {விராடரே}, எண்ணற்ற தீமைகள் நிறைந்த சூதாட்டத்தால் உமக்கு என்ன பயன்? சூதாட்டம் பல தீமைகளைக் கொண்டது; எனவே, அதை விலக்க வேண்டும். பாண்டுவின் மகனான யுதிஷ்டிரரை நீர் பார்த்திருக்கலாம், அல்லது {அவரைக் குறித்துக்} கேட்டிருக்கலாம். அவர், தனது விரிந்த செழிப்பான நாட்டையும், தேவர்களைப் போன்ற தம்பிகளையும் பகடையால் இழந்தார். இதற்காகவே, நான் சூதாடத் தயங்குகிறேன். ஆனால் நீர் விரும்பினால், ஓ! மன்னா {விராடரே}, நான் விளையாடுவேன்” என்று பதிலளித்தான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விளையாட்டு நடந்து கொண்டிருந்த போது, மத்ஸ்யன் {விராடன்}, அந்தப் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “பாரும், பெரும் வல்லமை கொண்ட கௌரவர்களை எனது மகன் {உத்தரன்} போரில் வீழ்த்திவிட்டான்” என்றான். அதற்குச் சிறப்புமிக்க மன்னனான யுதிஷ்டிரன் {விராடனிடம்}, “பிருஹந்நளனைத் தேரோட்டியாகக் கொண்ட அவன் {உத்தரன்} ஏன் வெல்லமாட்டான்?” என்று கேட்டான்.
இப்படிச் சொல்லப்பட்டதும், மிகுந்த கோபம் கொண்ட மத்ஸ்ய மன்னன் {விராடன்}, பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தணர்களில் இழிந்தவனே, அலியோடு எனது மகனை ஒப்பிடுகிறாயா? ஒருவரிடம் எதைச் சொல்வது சரி, எது சரியன்று என்ற அறிவு உனக்கில்லையா? நீ என்னை அவமதிக்கிறாய் என்பதில் ஐயமில்லை. பீஷ்மரையும், துரோணரையும் தலைவர்களாகக் கொண்ட அவர்களை {கௌரவர்களை} எனது மகன் ஏன் வீழ்த்த முடியாது? ஓ! பிராமணா {கங்கா}, நட்பால் மட்டுமே, நான் உனது இக்குற்றத்தை மன்னிக்கிறேன். எனினும், நீ வாழ விரும்பினால் {உயிரோடிருக்க விரும்பினால்} மீண்டும் அவ்வாறு சொல்லாதே” என்றான் {விராடன்}.
யுதிஷ்டிரன் {விராடனிடம்}, “பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விகர்த்தனன் மகன் {கர்ணன்}, கிருபர், மன்னர் துரியோதனன் மற்றும் பிற பலமிக்க அரசர்களான தேர்வீர்கள் கூடியிருந்தாலும், மருதர்களால் சூழப்பட்ட இந்திரனே கூட இருந்தாலும், அவர்கள் அனைவரிடமும் மோதிப் போரிட பிருஹந்நளனைத் தவிர வேறு எந்த மனிதனால் முடியும்? கரங்களின் வலிமையில் அவனுக்கு நிகர் யாரும் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை! உண்மையில், ஒரு பயங்கரப் போரைப் பார்க்கும்போதும் பிருஹந்நளனின் இதயமே மகிழ்ச்சியில் நிறையும். தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் கூடி வந்த போதும் அவனே அவர்களை வீழ்த்தியிருக்கிறான். அப்படிப் பட்ட ஒருவனைக் கூட்டாளியாகக் கொண்டிருப்பவனான உமது மகன் {உத்தரன்}, ஏன் எதிரியை வெல்லக் கூடாது?” என்றான். அதற்கு விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “மீண்டும் மீண்டும் தடுத்தும் நீ உனது நாவை அடக்க மறுக்கிறாய். தண்டிக்க எவரும் இல்லையாயின், யாரும் அறம் பயிலமாட்டார்கள்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன மன்னன் {விராடன்}, கோபத்தால் எரிந்து, பகடைக் காயால் யுதிஷ்டிரனை வலிந்து அடித்து, அவனை நிந்தித்தபடி, “இது மீண்டும் நடவாதிருக்கட்டும்!” என்றான். இப்படிக் கடுமையாகத் தாக்கப்பட்டதால், அவனது {யுதிஷ்டிரனின்} மூக்கில் இருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. ஆனால், அது தரையில் விழும் முன்னரே குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அதைத் தனது கைகளில் பிடித்தான். பிறகு தன்னருகே நின்று கொண்டிருந்த திரௌபதியை அறம் சார்ந்த அந்த யுதிஷ்டிரன் பார்த்தான். தனது தலைவனின் விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படிபவளான களங்கமற்ற திரௌபதி, {அந்தப் பார்வையின்} பொருளை உணர்ந்து, நீர் நிறைந்த ஒரு தங்கப் பாத்திரத்தைக் கொண்டுவந்து, அவனது {யுதிஷ்டரனின்} மூக்கில் இருந்து வழிந்த இரத்ததைப் பிடித்தாள் [1].
அதே வேளையில், பலவிதமான இனிய நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் ஊக்கப்படுத்தப்பட்ட உத்தரன், குடிமக்களாலும், பெண்களாலும், மாகாணங்களின் மக்களாலும் வரவேற்கப்பட்டு, மெதுவாக நகரத்திற்குள் நுழைந்தான். அரண்மனையின் வாயிலை அடைந்த அவன் {உத்தரன்}, தனது வருகையைக் குறித்துத் தனது தந்தைக்கு {மன்னன் விராடனுக்குச்} செய்தி அனுப்பினான். பிறகு மன்னனை அணுகிய சுமைதூக்கி {porter} {வாயில் காப்போன் = gatekeeper} ஒருவன், “பிருஹந்நளையைத் துணையாகக் கொண்ட உமது மகன் உத்தரன் வாயிலில் காத்திருக்கிறான்” என்றான். மத்ஸ்ய மன்னன் {விராடன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம், “நான் அவர்களைக் காண ஆவலுடன் இருப்பதால், அவர்கள் இருவரையும் இங்கே வரவேற்று அழைத்துவா” என்றான்.
பிறகு, குருக்களின் மன்னனான யுதிஷ்டிரன், {அந்தப்} பாதுகாவலனின் காதுக்கருகில் மெதுவாக, “உத்தரன் மட்டும் உள்ளே வரட்டும். பிருஹந்நளன் உள்ளே வரக்கூடாது. போரிலின்றி வேறு நேரத்தில் எவன் என் மேனியில் காயமேற்படுத்தவோ, இரத்தம் சிந்தவோ செய்கிறானோ, அவன் உயிருடன் இருக்க மாட்டான் என்பது அந்த வலிய கரங்கள் கொண்ட வீரன் {பிருஹந்நளன்} ஏற்றிருக்கும் நோன்பாகும். {இதைக் கண்டால்} ஆத்திரத்தில் அழற்சியுறும் அவன், நான் இரத்தம் சிந்துவதைப் பார்க்கப் பொறாமல் {பொறுக்க முடியாமல்}, ஆலோசகர்கள், துருப்புகள், குதிரைகளுடன் சேர்த்து விராடரையும் இப்போதே கொன்று விடுவான்” என்றான் {யுதிஷ்டிரன்}.
இரத்தம் தரையில் விழுந்திருந்தால்? – விராட பர்வம் பகுதி 68-சபைக்குள் நுழைந்த உத்தரன், இரத்தம் சொட்ட ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் கங்கனைக் கண்டு பயந்து விராடனை அதட்டுவது; கங்கனிடம் விராடனை மன்னிப்பு கோரச் சொல்வது; விராடன் யுதிஷ்டிரனிடம் மன்னிப்பு கோரியது; யுதிஷ்டிரனுக்கு இரத்தம் சொட்டுவது நின்றதும், அர்ஜுனன் உள்ளே நுழைவது; அர்ஜுனன் கேட்கும்படி விராடன் உத்தரனைப் புகழ்வது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு மன்னனின் {விராடனின்} மூத்த மகனான பூமிஞ்சயன் {உத்தரன்}, உள்ளே நுழைந்து, தனது தந்தையின் {விராடனின்} பாதங்களை வழிபட்டு, கங்கனை {யுதிஷ்டிரனை} அணுகினான். இரத்தத்துடன் இருக்கும் கங்கன், சபையின் ஒரு மூலையில், தரையில் அமர்ந்திருப்பதையும், சைரந்திரி {திரௌபதி} அவனுக்காகக் காத்திருப்பதையும் அவன் {உத்தரன்} கண்டான். இதைக் கண்ட உத்தரன், தனது தந்தையிடம் {விராடனிடம்} அவசரமாக, “ஓ! மன்னா {விராடரே}, இவர் யாரால் அடிக்கப்பட்டார்? இந்தப் பாவச்செயல் யாரால் மேற்கொள்ளப்பட்டது?” என்று கேட்டான்.
அதற்கு விராடன் {உத்தரனிடம்}, “இந்த இழிந்த பிராமணன் என்னாலேயே தாக்கப்பட்டான். இதைவிட இன்னும் அதிகம் பெற இவன் {கங்கன்} தகுந்தவனே. நான் உன்னைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, இவன் {கங்கன்} அந்த மூன்றாம் பாலினத்தவனைப் {பிருஹந்நளனைப்} புகழ்ந்தான்” என்றான் {விராடன்}.
உத்தரன் {விராடனிடம்}, “ஓ! மன்னா {விராடரே}, நீர் முறையற்ற செயலைச் செய்துள்ளீர். கடும் நஞ்சான ஓர் அந்தணச்சாபம், உமது வேர் வரை உம்மை எரித்துவிடாமலிருக்க, விரைவாக அவரை {கங்கரை} அமைதிப்படுத்தும்!” என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தனது நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தும் விராடன், தனது மகனின் {உத்தரனின்} இச்சொற்களைக் கேட்டு, சாம்பலில் மறைந்திருக்கும் நெருப்பு போல இருந்த குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} {அணுகி}, அவனிடம் மன்னிப்பைப் பெறும் வகையில் அமைதிப்படுத்தத் தொடங்கினான். தனது மன்னிப்பைப் பெற விரும்பும் மன்னனிடம் {விராடனிடம்}, அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, “ஓ! மன்னா {விராடரே}, நான் நீண்ட நேரத்திற்கு முன்னரே அதை மன்னித்துவிட்டேன். எனக்குக் கோபம் இல்லை. எனது மூக்கிலிருந்து இந்த இரத்தம் தரையில் விழுந்திருந்தால், ஓ! ஏகாதிபதி {விராடரே}, உமது நாட்டுடன் நீரும் அழிவுக்குள்ளாகியிருப்பீர் என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! மன்னா {விராடரே}, ஓர் அப்பாவியை அடித்துவிட்டீர் என்று நான் உம்மைக் குற்றஞ்சாட்ட மாட்டேன். ஏனென்றால், ஓ! மன்னா {விராடரே}, சக்தி வாய்ந்தவர்கள் பொதுவாகவே காரணமற்ற தீவிரத்துடனேயே செயல்படுவார்கள்” என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இரத்தப்பெருக்கு நின்றதும், விராடனையும், கங்கனையும் வணங்கியவாறு பிருஹந்நளை (சபை அறைக்குள்) நுழைந்து அமைதியாக நின்றாள். குருக்களின் தலைவனை {யுதிஷ்டிரனை} அமைதிப்படுத்திய மன்னன் {விராடன்}, சவ்யசச்சின் {அர்ஜுனன்} கேட்கும்படி, போர்க்களத்தில் இருந்து திரும்பியிருந்த உத்தரனைப் புகழ ஆரம்பித்தான். அந்த மன்னன் {விராடன்}, “ஓ! கேகேய இளவரசியின் {சுதேஷ்ணையின்} மகிழ்ச்சியை அதிகரிப்பவனே {உத்தரா}, உண்மையில், உன்னிலேயே நான் என் மகனைக் கொண்டிருக்கிறேன். {உன்னால் நான் மகனுள்ளவன் ஆனேன்}. உனக்கு நிகரான மகன் எனக்கு இருந்ததும் இல்லை, இனி இருக்கப் போவதுமில்லை! உண்மையில், ஓ! குழந்தாய் {உத்தரா}, ஒரே நேரத்தில் ஆயிரம் குறிகளை அடித்தாலும், ஒரு குறியும் தவறாமல் அடிப்பவனான கர்ணனுடன், எப்படி நீ மோதினாய்? ஓ! குழந்தாய், மொத்த உலகத்தில் உள்ள மனிதர்களிலும் தனக்கு நிகரில்லாத பீஷ்மரிடம், எப்படி நீ மோதினாய்? ஓ! குழந்தாய், அனைத்து க்ஷத்திரியர்களுக்கும் ஆசானாகக் கருதப்படும் இருபிறப்பாளரும் {பிராமணரும்}, கௌரவர்கள் மற்றும் விருஷ்ணிகளின் ஆசானும், ஆயுதம் தாங்கும் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணரிடம், எப்படி நீ மோதினாய்? கொண்டாடப்படும் அஸ்வத்தாமனைப் போர்க்களத்தில், எப்படி நீ சந்தித்தாய்? ஓ! குழந்தாய், தனது வலிமைமிக்கக் கணைகளால் மலையைக் கூடத் துளைக்கவல்ல இளவரசனான துரியோதனனிடம், எப்படி நீ மோதினாய்? எனது எதிரிகள் அனைவரும் அடிக்கப்பட்டுவிட்டனர். இனிமையான தென்றல் என்னைச் சுற்றி வீசுவது போலத் தோன்றுகிறது. குருக்களால் கைப்பற்றப்பட்ட எனது செல்வமனைத்தையும் நீ மீட்டு வந்துவிட்டமையால், அந்த வலிமைமிக்க வீரர்கள் அனைவரும் பீதியால் தாக்கப்பட்டார்கள் என்றே தெரிகிறது. ஓ! மனிதர்களில் காளையே {உத்தரா}, புலியிடம் இருந்து அதன் இரையைப் பறிப்பதைப் போல, எனது செல்வங்களான பசுக்களை என்னிடம் இருந்து பறித்துச் சென்ற எதிரியை முறியடித்துவிட்டாய் என்பதில் ஐயமில்லை” என்றான் {விராடன்}.
தெய்வ மகன்? – விராட பர்வம் பகுதி 69-பசுக்கள் மீட்கப்பட்டதும், கௌரவர்கள் வெல்லப்பட்டதும் தன்னாலல்ல என்றும் ஒரு தெய்வ மகன் வந்து அவற்றைச் சாதித்தானென்றும் விராடனிடம் உத்தரன் சொல்வது; விராடனிடம் அனுமதி பெற்று, அர்ஜுனன் உத்தரைக்கு ஆடைகளைப் பரிசளிப்பது…
உத்தரன் {மன்னன் விராடனிடம்} சொன்னான், “பசுக்கள் என்னால் மீட்கப்படவில்லை; எதிரிகளும் என்னால் வீழ்த்தப்படவில்லை. அவை யாவும் ஒரு தெய்வ மகனால் நிறைவேற்றப்பட்டன. வஜ்ரத்தைப் போலத் தாக்கவல்ல அந்தத் தெய்வீக இளைஞன், அச்சத்தால் ஓடும் என்னைக் கண்டு, என்னை நிறுத்தி தானே எனது தேரில் ஏறிக் கொண்டான். அவனாலேயே பசுக்கள் மீட்கப்பட்டு, கௌரவர்கள் வீழ்த்தப்பட்டனர். ஓ! தந்தையே, அக்காரியம் அந்த வீரனால் ஆனது, என்னாலல்ல. கிருபரையும், துரோணரையும், பலமிக்க சக்தி கொண்ட துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சூதனின் மகனையும் {கர்ணனையும்}, பீஷ்மரையும் அவனே கணைகளால் துரத்தினான். யானை மந்தையின் தலைமை யானை ஓடுவதைப் போல அச்சத்தால் ஓடிக்கொண்டிருந்த இளவரசன் துரியோதனனிடம் அந்த வலிமைமிக்க வீரன் {தெய்வ மகன்}, “ஓ! குரு குலத்தின் இளவரசே, ஹஸ்தினாபுரத்திலும் நீ பாதுகாப்பாக இருப்பதற்கான எந்தக் காரணிகளையும் நான் காணவில்லை. உனது பலத்தை வெளிப்படுத்தி, உனது உயிரைக் காத்துக் கொள். ஓடுவதால் நீ என்னிடமிருந்து தப்ப இயலாது. எனவே, உனது மனதைப் போருக்குத் தயார் செய்வாயாக. வெற்றியடைந்தால், பூமியின் ஆட்சியுரிமை உனதாகும், கொல்லப்பட்டால், சொர்க்கமேகூட உனதாகும்” என்ற சொற்களைச் சொன்னான்.
ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} சூழ இருந்த அந்த மனிதர்களில் புலியான மன்னன் துரியோதனன், இப்படிச் சொல்லப்பட்டதும், பாம்பு போலத் தனது தேரில் பெருமூச்சுவிட்டுத் திரும்பி, வேகமான கணைகளை வஜ்ரம் போன்ற சக்தியுடன் மழையாகப் பொழிந்தான். மதிப்பிற்குரிய ஐயா {தந்தையே}, இவையனைத்தையும் கண்ட எனக்குத் தொடைகள் நடுங்க ஆரம்பித்தன. பிறகு, சிங்கம் போன்ற வீரர்களைக் கொண்ட குரு படையைத் தனது கணைகளால் அந்தத் தெய்வீக இளைஞன் துளைத்தான். அப்படி அந்தத் தேர்க்கூட்டத்தைத் துளைத்து துன்புறுத்திய சிங்கம்போன்று பருத்திருந்த அந்த இளைஞன், அவர்களைக் கண்டு சிரித்து, அவர்களது துணிகளையும் ஆடைகளையும் களவாடினான். உண்மையில், குருக்களின் அந்த ஆறு பெரும் தேர்வீரர்களையும், விலங்கு மந்தையைக் காட்டில் கோபத்துடன் விரட்டும் தனிப்புலி போல அந்த வீரனே தனியாக வீழ்த்தினான்” என்றான் {உத்தரன்}.
விராடன் {உத்தரனிடம்}, “குருக்களால் {கௌரவர்களால்} கைப்பற்றப்பட்ட எனது செல்வத்தைப் போரிட்டு மீட்ட வலிமைமிக்கக் கரங்களும், தெய்வீகப் பிறப்பும் கொண்ட புகழ்மிக்க அந்த இளைஞன் எங்கே? உன்னையும் எனது பசுக்களையும் காத்த தெய்வீக பிறப்புடைய அந்த வலிமைமிக்க வீரனைக் காணவும், வழிபடவும் ஆவலாக இருக்கிறேன்” என்றான் {விராடன்}.
அதற்கு உத்தரன் {தந்தை விராடனிடம்}, “வலிமைமிக்க அந்தத் தெய்வமகன் அங்கேயே மறைந்து போனான். எனினும், அவன் நாளையோ அல்லது அதற்கு மறுதினமோ தன்னை வெளிக்காட்டுவான் என்று நினைக்கிறேன்” என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும்படைக்குச் சொந்தக்காரனான விராடன், உத்தரனால் தனக்கு விவரிக்கப்பட்டவனும், தனது அரண்மனையிலேயே மாறுவேடத்தில் வாழ்ந்து வருபவனுமான பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} அறியாமலேயே இருந்தான். உயர் ஆன்ம விராடனால் அனுமதிக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, விராடன் மகளுக்கு {உத்தரைக்குத்} தான் கொண்டு வந்த ஆடைகளைத் தனது கரங்களாலேயே கொடுத்தான். பல விதங்களில் இருந்த அந்த விலையுயர்ந்த புதிய ஆடைகளைப் பெற்றுக் கொண்ட அழகிய உத்தரை, மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} மகனுடன் {உத்தரனுடன்} சேர்ந்து பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
அறத்தின் திருவுருவம் யுதிஷ்டிரன்! – விராட பர்வம் பகுதி 70-பாண்டவர்கள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு விராடனின் சபையில் மன்னர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்வது; அங்கே வந்த விராடன் அதைக் கண்டு கோபமுற்று, கங்கனை நிந்திப்பது; அர்ஜுனன் விராடனைப் பரிகசிக்கும் வகையில் யுதிஷ்டிரனின் புகழைச் சொல்வது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, {அன்றிலிருந்து} மூன்றாவது நாளில் [1] குளித்து முடித்து வெள்ளுடை உடுத்தி, அனைத்து வகைகளிலாலான ஆபரணங்களும் தரித்துக் கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களான ஐந்து பாண்டவ சகோதரர்களும், தங்கள் நோன்பை முடித்து, ஐந்து மதங்கொண்ட யானைகளைப் போல யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்டு, பிரகாசத்துடன் அரண்மனை வாயிலுக்குள் நுழைந்தனர். விராடனின் சபா மண்டபத்துக்குள் நுழைந்த அவர்கள், மன்னர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அரியணைகளில் அமர்ந்து கொண்டு, வேள்விப்பீடத்தில் இருக்கும் நெருப்புகள் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தனர். அப்படிப் பாண்டவர்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்த பிறகு, பூமியின் தலைவனான விராடன், தனது அரச அலுவல்களை முடித்து, தனது சபையை நடத்த அங்கே வந்தான். சுடர்விடும் நெருப்புகளைப் போன்ற ஒப்பற்ற பாண்டவர்களைக் கண்டு சிறிது நேரம் அந்த மன்னன் {விராடன்} சிந்தித்தான். பிறகு, கோபம் நிறைந்த மத்ஸ்ய மன்னன், மருதர்களால் சூழப்பட்ட தேவர்கள் தலைவனைப் போல அமர்ந்திருந்த கங்கனிடம் பேசினான். அவன் {விராடன்}, “பகடையாட்டக்காரனான நீ என்னால் சபை உறுப்பினராகவே அமர்த்தப்பட்டாய்! அழகிய ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து கொண்டு, அரச ஆசனத்தில் நீ எப்படி அமரலாம்?” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, விராடனின் சொற்களைக் கேட்டு அவனைக் கேலி செய்ய விரும்பிய அர்ஜுனன், அவனிடம் {விராடனிடம்} புன்னகையுடன், “இந்த மனிதர், ஓ! மன்னா {விராடரே}, இந்திரனுடன் சேர்ந்து ஒரே ஆசனத்தில் அமரத் தகுந்தவராவார். அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, வேதங்களை அறிந்து, ஆடம்பரம் மற்றும் உடல் இன்பங்களை அலட்சியப்படுத்தி, வேள்விகள் செய்வதை வழக்கமாகக் கொண்டு, நோன்புகளில் நிலைத்து நின்று, சக்தி கொண்ட அனைத்து மனிதர்களிலும், முதன்மையானவரும், பூமியில் உள்ள அனைவரிலும் புத்திசாலித்தனத்தில் மேன்மையானவரும், தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், பல்வேறு ஆயுதங்களை அறிந்தவருமான இவர் உண்மையில் அறத்தின் உருவமாவார் {உடல் கொண்டு வந்த தர்மம் [தர்மதேவன்] ஆவார்}.
மூன்று உலகத்திலும் உள்ள அசையும் மற்றும் அசையாத உயிரினங்களில் யாரும் இத்தகு {இவர் கற்று வைத்திருக்கும்} ஆயுதங்களின் அறிவை இதுவரை அடைந்தது இல்லை, இனி அடையப்போவதும் இல்லை. தேவர்களிலோ, அசுரர்களிலோ {Asuras}, மனிதர்களிலோ, ராட்சசர்களிலோ {Rakshasas}, கந்தர்வர்களிலோ {Gandharvas}, யக்ஷத் தலைவர்களிலோ {Yaksha chiefs}, கின்னர்களிலோ {Kinnaras}, ஊர்க்கர்களிலோ {Uragas} இவரைப் போன்ற ஒருவரும் இல்லை. பெரும் முன்னறிதிறமும் {தீர்க்கதரிசனமும்}, சக்தியும் கொண்டு, குடிமக்கள், மாகாணங்களில் வசிப்பவர்கள் ஆகியோரால் விரும்பப்படும் இவரே பாண்டு மகன்களில் {பாண்டவர்களில்} பெரும்பலமிக்கத் தேர்வீரராவார். வேள்விகளைச் செய்பவரும், அறநெறிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், ஆசைகளை அடக்கியவரும், பெரும் முனிவரைப் போன்றவருமான இந்த அரசமுனி அனைத்து உலகங்களாலும் கொண்டாடப்படுபவராவார். பெரும் பலமும், பெரும் புத்திசாலித்தனமும், திறனும், உண்மையும் {சத்தியமும்}, கொண்ட இவர் தனது புலன்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராவார். செல்வத்தில் இந்திரனுக்கும், குவியல்களால் குபேரனுக்கும் நிகரான இவர் பெரும் பராக்கிரமம் மிக்க மனுவைப் போல உலகங்களைப் பாதுகாப்பவராவார். இவர் பெரும் பலமிக்கவராவார். அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு பாராட்டும் இவர், குருகுலத்தின் காளையும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்திரரைத் தவிர வேறு யாருமில்லை.
இந்த மன்னனின் சாதனைகள் சூரியனைப் போன்ற சுடர் மிகும் பிரகாசம் கொண்டவையாகும். அந்தச் சூரியனின் கதிர்களைப் போலவே இவரது புகழும் அனைத்துத் திக்குகளுக்கும் பயணித்துக் கொண்டே இருக்கிறது. உதயச் சூரியனின் கதிர்களைப் போன்ற சுடர்மிகும் பிரகாசம் கொண்ட இவர் குருக்களின் மத்தியில் வசித்தபோது, ஓ! மன்னா {விராடரே}, வேகமான பத்தாயிரம் {10000} யானைகள் இவரைப் பின்தொடர்ந்து செல்லும். ஓ! மன்னா {விராடரே}, சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட முப்பதாயிரம் {30000} தேர்கள் இவரைப் பின்தொடர்ந்து செல்வது வழக்கம். ரத்தினங்கள் ஒளிரும் காது வளையங்கள் அணிந்த எண்ணூறு {800} துதிபாடிகளும், பாணர்களும், இந்திரனைப் புகழும் முனிவரைகளைப் போல, இவரது புகழையே அந்தக் காலத்தில் பாடிக் கொண்டிருந்தனர்.
ஓ! மன்னா {விராடரே}, கௌரவர்களும், இந்தப் பூமியின் பிற தலைவர்களும், தேவர்கள் குபேரனுக்காகக் காத்திருப்பது போல், இவருக்காக எப்போதும் அடிமைகள் போலக் காத்திருப்பார்கள். பிரகாசமான கதிர்கொண்ட சூரியனைப் போல இருக்கும் இந்த உயர்ந்த மன்னன் {யுதிஷ்டிரர்}, இந்தப் பூமியின் அனைத்து மன்னர்களையும், உழவர் வர்க்கத்தினர் போலத் தனகு கப்பம் கட்ட வைத்தார். உயர் ஆன்ம ஸ்நாதகர்கள் எண்பத்தெட்டாயிரம் {88000} பேர், தங்கள் வாழ்வாதாரத்திற்காக அற்புத நோன்புகள் பயிலும் இந்த மன்னனையே நம்பி இருந்தனர். இந்த ஒப்பற்ற தலைவன் {யுதிஷ்டிரன்}, முதிர்ந்தவர்களையும், ஆதரவற்றவர்களையும், முடமானவர்களையும், குருடர்களையும் தனது மகன்களைப் போலப் பாதுகாத்து, தனது குடிகளை அறம் சார்ந்து ஆட்சி செய்தார்.
அறநெறியில் உறுதியாக, தன்னடக்கத்துடன், கோபத்தை அடக்கும் திறனுடன், தாராளக் குணம் மிகுந்து, அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, உண்மையுடன் {சத்தியத்துடன்} இருந்த இவர் பாண்டுவின் மகனாவார். இவரது {யுதிஷ்டிரனது} செழுமையும் பராக்கிரமமும், மன்னன் சுயோதனனையும் {துரியோதனனையும்}, கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} அடங்கிய அவனது தொண்டர்களையும் துன்புறுத்தியது. ஓ! மனிதர்களின் தலைவரே {விராடரே}, இவரது அறங்கள் எண்ண இயலாத முடிவிலி தன்மை கொண்டவை. அறநெறிக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் இந்தப் பாண்டுவின் மகன் எப்போதும் ஊறிழைப்பதைத் தவிர்ப்பவராவார் {அஹிம்சாவாதியாவார்}. இத்தகு குணங்களைக் கொண்ட மன்னர்களில் காளையான இந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! ஏகாதிபதி {விராடரே}, {இந்த} அரச ஆசனத்தை அடையத் தகுதி வாய்ந்தவரே ஆவார்.
உமது மகள் எனது மருமகளாகலாம்! – விராட பர்வம் பகுதி 71-விராடன் அர்ஜுனனிடம் மற்ற பாண்டவர்களை அடையாளங்காட்டச் சொல்வது; அர்ஜுனன் ஒவ்வொருவராக அடையாளங்காட்டுவது; உத்தரன் மீண்டும் பாண்டவர்களை வர்ணித்து அடையாளங்காட்டுவது; விராடன் தனது மகளை அர்ஜுனனுக்குக் கொடுக்க முன் வருவது; அர்ஜுனன் உத்தரையைத் தனது மருமகளாக ஏற்பதாகச் சொல்வது…
விராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “உண்மையில், இவரே குந்தியின் மகனான குரு மன்னன் யுதிஷ்டிரர் என்றால், இவர்களில் யார் இவரது தம்பி அர்ஜுனன். இதில் யார் பலமிக்கப் பீமன். இவர்களில் யார் நகுலன், யார் சகாதேவன், கொண்டாடப்படும் அந்தத் திரௌபதி எங்கே? பகடையாட்டத்தில் வீழ்ந்த பிறகு, பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} குறித்து யாராலும் எதுவும் கேள்விப்படவில்லை” என்றான் {விராடன்}.
அதற்கு அர்ஜுனன் {விராடரிடம்}, “ஓ! மன்னா {விராடரே}, வல்லவன் என்று அழைக்கப்படும் உமது சமையற்கலைஞரான இவரே வலிமைமிக்கக் கரங்களும், பயங்கர வலிமையும், சீற்றமிகு உத்வேகமும் கொண்ட பீமராவார். கந்தமாதன மலைகளில் ராட்சசர்களைக் கொன்று, பெரும் நறுமணமிக்க தெய்வீக மலர்களை {செங்கழுநீர் மலர்களைக்} கிருஷ்ணைக்கு {திரௌபதிக்குக்} கொணர்ந்தவர் இவரே. தீய ஆன்மா கொண்ட கீசகனைக் கொன்றவர் இவரே {பீமரே}. உமது அரண்மனை அந்தப்புரத்தில், புலிகளையும், கரடிகளையும், காட்டுப்பன்றிகளையும் கொன்றவர் இவரே {பீமரே}.
உமது குதிரைகளைப் பாதுகாப்பவனே நகுலன் என்று அழைக்கப்படும் எதிரிகளைக் கொல்பவனாவான். உமது பசுக்களைப் பாதுகாக்கும் இவனே சகாதேவன். பெரும் புகழையும், மேனி அழகும் கொண்ட இந்த இரு மாத்ரி மகன்களும் பெரும் தேர்வீரர்களாவர்.
உமது மனைவியின் {சுதேஷ்ணையின்}, {பணிப்பெண்ணான} சைரந்திரியும், தாமரையிதழ் போன்ற கண்களும், கொடியிடையும், இனிய புன்னகையும் கொண்ட இந்த மங்கையே துருபதன் மகள் {திரௌபதி} ஆவாள். இவள் பொருட்டே, ஓ! மன்னா {விராடரே} கீசகர்கள் கொல்லப்பட்டனர். ஓ! மன்னா {விராடரே}, பிருதையின் {குந்தியின்} மகனும், பீமருக்கு இளையவனும், இரட்டையர்களுக்கு மூத்தவனுமான நானே அர்ஜுனன். இதை நீர் கேள்விப்பட்டிருப்பீர் என்பது தெளிவு. ஓ! மன்னா {விராடரே}, கண்டறியப்படக்கூடாத {அஞ்ஞாதவாச} காலத்தை, கருவறைக்குள் இருக்கும் குழந்தைகளைப் போல, உமது வசிப்பிடத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகக் கழித்தோம்!” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வீரர்களான அந்த ஐந்து பாண்டவர்களையும் அர்ஜுனன் சுட்டிக்காட்டிய பிறகு, அர்ஜுனனுடைய பராக்கிரமம் குறித்து விராடனின் மகன் {உத்தரன்} பேசினான். உத்தரன் மீண்டும் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} அடையாளம் காட்டினான். பிறகு அந்த இளவரசன் {உத்தரன்}, “சுத்தமான தங்கம் போன்ற பிரகாசமான நிறமும், முழுதாய் வளர்ந்த சிங்கம் போலப் பருத்திருப்பவரும், நேர்த்தியான மூக்கு உடையவரும், விரிந்த பெரிய கண்களைக் கொண்டவருமான தாமிர நிறத்திலான அகன்ற முகத்தைக் கொண்டவரே குருக்களின் மன்னன் {யுதிஷ்டிரர்} ஆவார்.
மதங்கொண்ட யானையின் நடையும், புடம்போட்ட தங்கம்போன்ற நிறமும், அகன்று விரிந்த தோள்களும், நீண்ட பருத்த கரங்களும் கொண்ட இந்த விருகோதரைப் {பீமரைப்} பாரும். அவரது அருகில் கரிய நிறத்தில், யானை மந்தையின் தலைமை யானையைப் போல, சிங்க போன்ற அகன்ற தோள்களும், பலமிக்க யானையின் நடையும், தாமரை இதழ்களைப் போன்ற விரிந்த பெரிய கண்களும் கொண்டு நிற்பவரே வில்லாளிகளில் முதன்மையான அர்ஜுனர் ஆவார். மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அருகே விஷ்ணுவையும், இந்திரனையும் போல இருப்பவர்களும், மனிதர்களின் உலகத்தில், அழகிலும், பலத்திலும், நடத்தையிலும் தனக்கு நிகர் இல்லாதவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான இரட்டையர்களை இதோ அனைவரும் பாருங்கள். அவர்களுக்கு அருகே, தங்கம் போன்ற அழகுடனும், ஒளியே உருவம் கொண்டு வந்தது போலவும், நீலத்தாமரையின் {நீலோத்பலமலரின்} நிறத்துடனும், தெய்வீக மங்கையைப் போலவும், லட்சுமியின் வாழும் உருவத்தைப் பிரதிபலிப்பது போலவும் நிற்கும் அவரே கிருஷ்ணையாவார்” என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு விராடனின் மகன் {உத்தரன்}, அர்ஜுனனின் பராக்கிரமத்தை விவரிக்க எண்ணி, “மான்கூட்டத்தை நாசம் செய்யும் சிங்க போல எதிரிகளைக் கொன்றவர் இவரே. எதிரிகளின் தேர்க்கூட்டத்திற்கு மத்தியில் உலவி, அவர்களது சிறந்த தேர்வீரர்களைக் கொன்றவர் இவரே. மதங்கொண்ட ஒரு பெரிய யானை இவரது ஒரே கணையால் கொல்லப்பட்டது. தங்கக் கவசம் பூண்டிருந்த அந்தப் பெரிய விலங்கு, இவரால் துளைக்கப்பட்டு, தனது தந்தங்களால் பூமியைத் துளைத்தவண்ணம் கீழே விழுந்தது. பசுக்களை மீட்டதும், போரில் கௌரவர்களை வீழ்த்தியதும் இவரே. இவரது சங்கொலியால் எனது காதுகள் செவிடாகின. துரியோதனனுடன் கூடிய பீஷ்மர், துரோணர் ஆகியோர் இந்தக் கடுஞ்செயல் புரியும் வீரராலேயே வீழ்த்தப்பட்டனர். அந்தச் சாதனை அவருடையதே! எனதல்ல” என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட மத்ஸ்யர்களின் வலிமைமிக்க மன்னன் {விராடன்}, யுதிஷ்டிரனுக்குக் காயமேற்படுத்தியதைக் குற்றமாகக் கருதி உத்தரனிடம், “பாண்டு மகன்களை {பாண்டவர்களை} அமைதிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது என நான் நினைக்கிறேன். நீ விரும்பினால், எனது மகள் உத்தரையை அர்ஜுனனுக்கு அளிப்பேன்” என்றான் {விராடன்}.
உத்தரன் {விராடனிடம்}, “நம்மால் வழிபடத்தகுந்தவர்களும், நமது போற்றுதலுக்கும், வழிபாட்டுக்கும், மதிப்புக்கும் உரிய பாண்டுவின் ஒப்பற்ற மகன்களை {பாண்டவர்களை} வழிபடும் நேரம் வந்துவிட்டது” என்றான்.
விராடன் {உத்தரனிடம்}, “போரில் நான் எதிரிகளிடம் அகப்பட்ட போது, பீமசேனனே என்னைக் காத்தான். எனது பசுக்களும் அர்ஜுனனால் மீட்கப்பட்டுள்ளன. உங்கள் கரங்களின் பலத்தினாலேயே நாங்கள் போரில் வெற்றியை அடைந்திருக்கிறோம். இப்படியே அனைத்தும் நடந்திருப்பதால், நமது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய நாங்கள் அனைவரும் குந்தியின் மகனான யுதிஷ்டிரரை அமைதிப்படுத்துவோம். ஓ! பாண்டு மகன்களில் காளையே {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளுடன் கூடிய நீர் அருளப்பட்டிரும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சொல்லாலோ, செயலாலோ, இதற்கு முன்னர், அறியாமையின் காரணமாக நான் எப்போதாவது தீங்கிழைத்திருந்தால், எங்களை மன்னிப்பதே உமக்குத் தகும். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அறம்சார்ந்தவரல்லவா?” என்று கேட்டான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்த உயர் ஆன்ம விராடன், பெரிதும் மகிழ்ந்து மன்னன் யுதிஷ்டிரனை அணுகி அவனிடம் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு, செங்கோல், கருவூலம் மற்றும் தலைநகரம் ஆகியவை அனைத்தையும் கொண்ட தனது முழு {மத்ஸ்ய} நாட்டையும் அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அளித்தான். பிறகு அனைத்துப் பாண்டவர்களிடமும், குறிப்பாகத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, அந்த வலிமைமிக்க மத்ஸ்ய மன்னன் {விராடன்} மீண்டும் மீண்டும், “நற்பேறாலேயே நான் உன்னைக் காண்கிறேன்” என்று சொன்னான். பிறகு மீண்டும் மீண்டும், யுதிஷ்டிரனையும், பீமனையும் மாத்ரியின் மகன்களையும் தழுவி, அவர்களது உச்சந்தலையை முகர்ந்து பார்த்த பெரும்படைக்குச் சொந்தக்காரனான விராடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் திருப்தியடையவில்லை.
பிறகு மிகவும் மகிழ்ந்த அவன் {விராடன்}, மன்னன் யுதிஷ்டிரனிடம், “நற்பேறாலேயே, காட்டிலிருந்து பாதுகாப்பாக நீர் வந்ததைக் கண்டேன். நற்பேறாலேயே அடைவதற்குக் கடினமான வனவாச காலத்தையும், அந்தத் தீயவர்களால் கண்டறியப்படாமல் நிறைவு செய்திருக்கிறீர்கள். என்னிடம் உள்ள அனைத்தையும், எனது மொத்த நாட்டையும் நான் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொடுக்கிறேன். சிறு தயக்கமும் இன்றிப் பாண்டுவின் மகன்கள் இவற்றை ஏற்கட்டும். சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உத்தரையின் கரங்களை ஏற்கட்டும். மனிதர்களில் சிறந்த அவனே {அர்ஜுனனே} அவளுக்கு {உத்திரைக்குத்} தலைவனாக இருக்கத் தகுந்தவன்” என்றான் {விராடன்}. இப்படிச் சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது பார்வையைச் செலுத்தினான். தனது அண்ணனால் இப்படிப் பார்க்கப்பட்ட அர்ஜுனன், மத்ஸ்ய மன்னனிடம் {விராடனிடம்}, “ஓ! ஏகாதிபதி {விராடரே}, உமது மகளை {உத்திரையை} நான் எனது மருமகளாக ஏற்பேன். மத்ஸ்யருக்கும், பாரதருக்கும் இடையிலான கூட்டணி இந்த வகையில் அமைவதே உண்மையில் விரும்பத்தக்கதாகும்” என்றான் {அர்ஜுனன்}.
அபிமன்யு உத்தரை திருமணத்திருவிழா! – விராட பர்வம் பகுதி 72- உத்தரையை மருமகளாக ஏற்றது ஏன் என்று அர்ஜுனன் விராடனுக்குச் சொன்னது; அர்ஜுனனின் திட்டத்தை விராடன் ஏற்பது; அபிமன்யு உத்தரை திருமணத்திற்காக அர்ஜுனனும் விராடனும் நண்பர்களையும் உறவினர்க்ள அனைவரையும் அழைத்தது; கிருஷ்ணனுடன் கூடிய யாதவர்கள் அனைவரும் பெருஞ்செல்வத்துடன் அங்கே வந்தது; காசி மன்னனும், சைப்பியனும் படைகளுடன் வந்தது; துருபதன் தனது உறவினர்களுடன் வந்தது; அபிமன்யு உத்தரை திருமணம் நிறைவு பெற்றது; அந்தணர்களுக்கு யுதிஷ்டிரன் வழங்கிய கொடை…
விராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “ஓ! பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நான் உனக்குத் தந்த எனது மகள் உத்தரையை நீ ஏன் மனைவியாக ஏற்க விரும்பவில்லை?” என்று கேட்டான்.
அதற்கு அர்ஜுனன் {விராடனிடம்}, “நான் உமது அந்தப்புரத்தில் வசித்தபோது, உமது மகளை {உத்தரையைப்} பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு எப்போதும் வாய்த்தது. தனிமையிலோ, துணையுடனோ இருக்கும்போதெல்லாம் அவளும் {உத்தரையும்} என்னை ஒரு தந்தையை நம்புவது போல நம்பினாள். பாடலையும் ஆடலையும் நன்கு அறிந்ததால், நான் அவளால் விரும்பப்பட்டு, மதிக்கப்பட்டேன். உண்மையில் உமது மகள் என்னை அவளது பாதுகாவலனாகவே [1] எப்போதும் கருதுகிறாள். ஓ! மன்னா, அவள் பூப்படையும் வயதை அடைந்தும் கூட நான் அவளுடன் ஓர் ஆண்டு முழுவதும் வாழ்ந்தேன். இந்தச் சூழ்நிலையில், நீரோ, பிற மனிதர்களோ அவள் மீதோ என் மீதோ காரணமில்லாமலேயே சந்தேகங்கொள்ள இஃது ஏதுவாக இருக்கும்.(உத்தரை தன்னை ஆசானாகக் கருதுகிறாள் என்று அர்ஜுனன் சொல்வதாக வருகிறது.)
எனவே, ஓ! மன்னா {விராடரே}, என் உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தித் தூய்மையாக இருக்கும் நான், ஓ! ஏகாதிபதி {விராடரே}, உமது மகளை {உத்தரையை} எனக்கு மருமகளாய்க் கொடுக்குமாறு உம்மிடம் இரந்து கேட்கிறேன். இப்படியே நான் அவளது தூய்மையை அங்கீகரிக்கிறேன். ஒரு மகனுக்கும் அந்த மகனின் சுயத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லாதது போலவே, ஒரு மருமகளுக்கும் மகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே, இவ்வழியைப் மேற்கொள்வதால் அவளது தூய்மை நிரூபிக்கப்படும். நான் அவதூறுக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் அஞ்சுகிறேன். எனவே, ஓ! மன்னா {விராடரே}, நான் உமது மகள் உத்தரையை எனது மருமகளாக ஏற்கிறேன். ஆயுத அறிவுடையவர்கள் அனைவரையும் விஞ்சியவனும், அழகில் தெய்வீக இளமையைக் கொண்டவனுமான அந்த வலிய கரங்கள் கொண்ட அபிமன்யு, சக்கரம் தாங்குபவனான வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பிடித்தமான மருமகனாவான். ஓ! மன்னா {விராடரே}, உமக்கு மருமகனாகவும், உமது மகளுக்குக் கணவனாகவும் தகுந்தவன் அவனே {அபிமன்யுவே}”, என்றான் {அர்ஜுனன்}.
விராடன் {அர்ஜுனனிடம்} ,“அறத்தில் நிலைபெற்ற விவேகியும், குருக்களில் சிறந்த குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} சொல்வதால் இது தகுந்ததே. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, அதைச் செய்வாயாக. தனது மருமகனின் தந்தையாக {தனது சம்பந்தியாக} அர்ஜுனனைக் கொண்டிருப்பவன் தனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறியவனாக இருப்பான்” என்றான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த ஏகாதிபதி {விராடன்} இதைச் சொன்னதும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், மத்ஸ்ய மன்னனுக்கும் {விராடனுக்கும்}, அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்த ஒப்பந்தத்திற்குத் தனது ஏற்பைத் தெரிவித்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு, வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} அழைப்பை அனுப்பினான். விராடனும் அதையே செய்தான். பதிமூன்றாம் வருடத்தின் நிறைவுக்குப் பிறகு, அந்த ஐந்து பாண்டவர்களும், விராடனின் நகரங்களில் ஒன்றான உபப்லாவியத்தில் {Upaplavya} தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, ஆனர்த்த நாட்டில் இருந்து தாசார்ஹ குலத்தின் மக்கள் பலரையும், அபிமன்யுவையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} அழைத்து வந்தான்.
யுதிஷ்டிரனுக்கு மிக நெருங்கிய நண்பர்களான காசியின் மன்னனும், சைவியனும் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணி* துருப்புகளுடன் அங்கே வந்தனர். வலிமைமிக்கத் துருபதன், திரௌபதியின் வீரமிக்க மகன்களுடனும், வீழ்த்தப்பட முடியாத சிகண்டியுடனும், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையான ஒப்பற்ற திருஷ்டத்யும்னனுடனும், ஓர் அக்ஷௌஹிணி* துருப்புகளுடனும் வந்தான். அங்கு வந்த மன்னர்கள் அனைவரும் அக்ஷௌஹிணி தலைவர்களாக மட்டும் இல்லாமல், வேள்விகளில் அந்தணர்களுக்கு அபரிமிதமாகக் கொடையளிப்பவர்களாகவும், வேத அறிவுடன் வீரம் கொண்டவர்களாகவும், போரில் மரணத்தைத் தழுவத் தயாராக இருப்பவர்களாகவும் இருந்தனர்.
(ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள், மூன்று குதிரைகள் அடங்கியது ஒரு பட்டி, மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படும். மூன்று குல்மாக்கள் ஒரு கணம், மூன்று கணங்கள் ஒரு வாகினி, மூன்று வாகினிகள் சேர்ந்தது ஒரு பிருதனை என்றழைக்கப்படும். மூன்று பிருதனாக்கள் சேர்ந்தது ஒரு சம்மு, மூன்று சம்முக்கள் ஒரு அனீகினி, பத்து அனீகினிக்கள் சேர்ந்ததுதான் ஒரு அக்ஷௌஹிணி. ஓ அந்தணர்களே, கணிதவியலாளர்கள், ஒரு அக்ஷௌஹிணியில் இருபத்து ஓராயிரத்து எண்ணூற்று எழுபது {21870} தேர்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும் {21870}, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றி ஐம்பது {109350} காலாட்படைவீரர்களும், அறுபத்தைந்து ஆயிரத்து அறுநூற்று பத்தும் {65610} குதிரைகளும் ஆகும். ஓ அந்தணர்களே! இதுதான் ஒரு அக்ஷௌஹிணியின் கணக்காகும் என்று எண்களின் இலக்கணப்படிச் சொல்கிறார்கள். இந்தக் கணக்குப்படி கௌரவர்களும் பாண்டவர்களுமாக பதினெட்டு{18} அக்ஷௌஹிணி படைகள் இருந்தன.)
அவர்கள் வந்ததைக் கண்ட அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, முறைப்படி அவர்களை வணங்கி, அவர்களது துருப்புகளையும், பணியாட்களையும், சுமை தூக்கிகளையும் மகிழ்வித்தான். அவன் {விராடன்} தனது மகளை {உத்தரையை} அபிமன்யுவுக்கு அளிப்பதில் மிகவும் மகிழ்ந்திருந்தான். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மன்னர்கள் வந்த பிறகு, மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அங்கு வந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஹலாயுதன் {பலராமன்}, ஹ்ருதிகனின் மகன் கிருதவர்மன், சத்யகனின் மகன் யுயுதானான், ஆனாத்ருஷ்டி, அக்ரூரர், சாம்பன், நிசடன் ஆகியோருடன் வந்தான். எதிரிகளை அழிப்பவர்களான அவர்கள் {அந்த யாதவர்கள்} தங்களுடன் அபிமன்யுவையும், அவனது தாயையும் {சுபத்திரையையும்} அழைத்து வந்தனர். ஒரு வருடம் முழுவதும் துவாரகையில் வசித்த இந்திரசேனனும் மற்றவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட பாண்டவர்களின் தேர்களைத் தங்களுடன் கொண்டு வந்தனர். அந்த விருஷ்ணிகளில் புலியான பெரும் பிரகாசமிக்க வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தொடர்ந்து, பத்தாயிரம் {10,000} யானைகளும், பத்தாயிரம் {10,000} தேர்களும், பத்து கோடி {10,00,00,000 Hundred Million} குதிரைகளும், பத்தாயிரம் கோடி {10000,00,00,000 Hundred Billion} காலாட்படையினரும், பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற விருஷ்ணிகளும், அந்தகர்களும், போஜர்களும் அங்கே வந்தனர்.
ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் ஒவ்வொருவருக்கும், எண்ணற்ற அடிமைப்பெண்களையும், ரத்தினங்களையும், ஆடைகளையும் கிருஷ்ணன் கொடுத்தான். பிறகு மத்ஸ்ய மன்னன் {விராடன்} மற்றும் பாண்டவர் குடும்பங்களின் திருமணத் திருவிழா ஆரம்பித்தது. பாண்டவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சங்குகள், கைத்தாளங்களும், கொம்புகளும், பேரிகைகளும் மற்றும் பிற இசைக்கருவிகள் விராடனின் அரண்மனையில் ஒலிக்கத் தொடங்கின. பல்வேறு வகையான மான்களும், தூய்மையான விலங்குகளும் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டன. பல்வேறு வகையான மதுவகைகளும், மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட போதைச் சாறுகளும் அபரிமிதமாகச் சேகரிக்கப்பட்டன. பாடுவதில் வல்லவர்களும், பழங்கதைகள் அறிந்தவர்களுமான நாடகக் கலைஞர்களும், புலவர்களும், துதிபாடிகளும் மன்னர்களுக்காகக் காத்திருந்து, அவர்களது புகழையும் குல வரிசைகளையும் {வம்ச வரலாறுகளையும்} பாடினர்.
சமச்சீரான உடல்கள் மற்றும் கால்கள் கொண்ட முதிர்வயது பெண்கள், திருமண முடிச்சுக் கட்டப்படும் இடத்திற்கு {திருமண மண்டபத்திற்கு} சுதேஷ்ணையின் தலைமையில் வந்தனர். அழகிய நிறமும், அற்புத ஆபரணங்களும் கொண்ட அந்த அழகிய பெண்களுக்கு மத்தியில், அழகிலும், புகழிலும், காந்தியிலும் கிருஷ்ணையே {திரௌபதியே} முதன்மையானவளாக இருந்தாள். பெரும் இந்திரனின் மகளைப் போல அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த இளவரசி உத்தரையை அழைத்துக் கொண்டு அவர்கள் அனைவரும் அங்கே வந்தனர்.
பிறகு, குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சுபத்திரையின் மூலம் பிறந்த தனது மகன் {அபிமன்யு} சார்பாக, குறைகளற்ற அங்கங்கள் கொண்ட விராடனின் மகளை {உத்தரையை} ஏற்றுக் கொண்டான். இந்திரனைப் போல அங்கே நின்று கொண்டிருந்த பெரும் மன்னனான குந்தியின் மகன் யுதிஷ்டிரனும் அவளை {உத்தரையை} தனது மருமகளாக ஏற்றுக் கொண்டான். அவளை ஏற்றுக் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் முன் ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} கொண்டு, சுபத்திரையின் ஒப்பற்ற மகனின் {அபிமன்யுவின்} திருமண விழாவை நடத்தச் செய்தான்.
பிறகு அவனுக்கு {அர்ஜுனனுக்கு}, விராடன், காற்றின் வேகம் கொண்ட ஏழாயிரம் {7000} குதிரைகளையும், சிறந்த வகையிலான இருநூறு {200} யானைகளையும், பெருஞ்செல்வத்தையும் (வரதட்சணையாகக்) கொடுத்தான். சுடர்விடும் நெருப்புக்குள் தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாகக் கொடுத்து, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} மரியாதை செலுத்திய விராடன், பாண்டவர்களுக்குத் தனது நாடு, படை, கருவூலம், மற்றும் தன்னையே காணிக்கையாகக் கொடுத்தான்.
திருமணம் நிறைவு பெற்றதும், தர்மனின் மகனான யுதிஷ்டிரன், மங்காப்புகழ் கொண்ட கிருஷ்ணன் கொண்டு வந்த செல்வத்தை அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கையாகக் கொடுத்தான். மேலும், ஆயிரக்கணக்கான பசுக்களையும், பல்வேறு வகைகளிலான ஆடைகளையும், அற்புத ஆபரணங்களையும், வாகனங்களையும், படுக்கைகளையும், பல்வேறு வகைகளிலான இனிய பானங்களையும், பல்வேறு இனங்களிலான சிவந்த பானங்களையும் கொடுத்தான். அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தணர்களுக்கு, நிலக்கொடையும், ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் உரிய சடங்குகளுடன் அளித்தான். ஆயிரக்கணக்கான குதிரைகளையும், தங்கம் மற்றும் பிற வகைச் செல்வங்களையும் அதிகமாக, வயது முதிர்ந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்தான். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, நன்கு உண்டு மகிழ்ச்சியுடனிருந்த மனிதர்களால் நிரம்பிய அந்த மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} நகரம், பெரும் திருவிழா நடைப்பதைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது” என்றார் {வைசம்பாயனர்}.
கோஹரணப் பர்வம் முற்றிற்று –
விராட பர்வம் முற்றிற்று *
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply