நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை, என்
புலத்தில் பொறித்த வப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன் றன் நயப் புகழே.–34-
பதவுரை
| இராமாநுசன் தன் |
–
|
எம்பெருமானாருடைய |
| நயம் புகழ் |
–
|
கல்யாண குணங்களானவை |
| நிலத்தை செறுத்து உண்ணும் நீசம் |
–
|
பூலோகத்தை ஹிம்ஹித்ததுத் தின்கிற நீசனான |
| கலியை |
–
|
கலி புருஷனாடைய |
| நினைப்பு அரிய பலத்தை செறுத்தும் |
–
|
இவ்வளவென்று நினை முடியாதபடி அளவற்றதான பராக்ரமதைத் தொலைத்த வளலும் |
| பிறங்கியது இல்லை |
–
|
பிரகாசிக்கவில்லை; |
|
(பின்னை எப்போது பிரகாசித்தன? என்னில்;)
|
| என் பெய் வினை |
–
|
என்னாலே செய்யப்பட்ட பாவங்களை |
| தென் புலத்தில் |
–
|
யம லோகத்தில் |
| பொறித்த |
–
|
எழுதிவைத்த |
| அப் புத்தகம் சும்மை |
–
|
அந்த புஸ்தகக் கட்டுகளை |
| பொறுக்கிய பின் |
–
|
கொளுத்தி விட்ட பின்பு |
| நலத்தை பொறுத்தது |
–
|
விளக்கம் பெற்றன. |
எம்பெருமானாருடைய ஞானம், சக்தி முதலிய திருக்கல்யாண குணங்கள் எப்போது பிரகாசித்தனவென்றால்,
இந்நிலவுலகத்தில் கலிபுருஷன் செங்கோல் செலுத்த முடியாதபடி அவனுடைய வலிமையைத் தொலைத்துக்
கிருதயுக தர்மமே எங்கும் நடைபெறும் படி செய்தருளினவாதே
“இவர் மஹா புருஷர்; அரிய பெரிய ஞான சக்திகனை யுடையவர்” என்று உலகத்தா ரனைவரும் போற்ற நேர்ந்ததனால்
கலியின் கொடுமையைக் கெடுத்தது காரணமாகவே இவருடைய திருக்கல்யாண குணங்கள்; நன்றாக விளங்கின – என்பர் சிலர்;
அது தகுதியல்ல;
கலிதோஷத்தைப் போக்கினவளவிலும் எம்பெருமானாடைய திருக்குணங்கள் பொலிவு பெறவில்லை.
பின்னை எப்போது பொலிவு பெற்றனவென்றால்,
எனது அளவற்ற பாவங்களை யெல்லாம் சிந்திர குப்தன் எழுதி வைத்திருந்த பெரிய புத்தகச் சுமையைக் கொளுத்தி விட்டு
என்னை நிஷ்கல்மஷனாக்கி அடிமைகொண்டாரென்ற விஷயம் வெளி வந்த பிறகு தான்
அவருடைய திருக்குணங்கள் ஆச்சரியமாக விளங்கின என்கிறார்.
இதனால் தம்முடைய பாவங்கள் ஸர்வசக் தனாலும் போக்க முடியாதவை என்பதும்,
கலியின் கொடுமையிற் காட்டிலும் கொடுமையிற் காட்டிலும் தமது கொடுமை வலிதாயிருந்ததென்பதும்,
இப்படி மஹா பாபிஷ்டாராயிருக்க தம்மை க்ஷமித்தருளி உஜ்ஜீவிக்கச் செய்தமையைக் கண்டு
உலகத்தாரனைவரும் ஆச்சரியப்பட்டார்க ளென்பதும் தெரிவிக்கப் பட்டன.
—————-
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்
புயலே எனக் கவி போற்றி செய்யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை யெவ்வா றின் றடர்ப்பதுவே?–35–
பதவுரை
| ஒரு தெய்வம் |
–
|
வேறொரு தெய்வத்தை |
| நயவேன் |
–
|
விரும்ப மாட்டேன் |
| நால் நிலத்தே |
–
|
இவ் வுலகில் |
| சில மானிடத்தை |
–
|
சில நீச மனிதர்களைக் குறித்து |
| புயலே என |
–
|
‘மேகம் போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி |
| கவி போற்றி செய்யேன் |
–
|
கவிகள் கட்டி ஸ்தோத்ரம் செய்ய மாட்டேன்; |
| பொன் அரஙகம் என்னில் |
–
|
‘திருவரங்கம்’ என்று சொன்னவாறே |
| மயலே பெருகும் |
–
|
அளவற்ற வயாமோஹத்தை யடைகின்ற |
| இராமாநுசன் |
–
|
எம்பெருமானாருடைய |
| மன்னு மா மலர் தாள் |
–
|
பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை |
| அயரேன் |
–
|
மறக்க மாட்டேன்; |
|
(ஆன பின்பு)
|
| அயரேன் |
–
|
கொடிய பாவங்கள் |
| என்னை |
–
|
என்னை |
| இன்று |
–
|
இன்று முதலாக |
| எவ்வாறு அடர்ப்பது |
–
|
எப்படி ஆக்ரமிக்கக் கூடும்? |
—————–
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டளிப்பப்,பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திடத் தானு மவ் வொண் பொருள் கொண்டவர் பின்
படரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே.–36-
பதவுரை
| அடல் கொண்ட நேமியன் |
–
|
(ஆச்ரித விரோதிகளை அழிக்க வல்ல) மிடுக்கையுடைய திருவாழியை ஏந்தினவனாய் |
| ஆர் உயிர் நாதன் |
–
|
ஸகல ஆத்மாக்களுக்கும் சேஷியான எம்பெருமான் |
| அன்று |
–
|
அர்ஜுனனுக்கு ஸாரதி யாயிருந்த வக் காலத்தில் |
| ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப |
–
|
வேதங்களாகிற கடலில் மறைந்து கிடந்த நல்ல அர்த்தங்களை ஆராய்ந்து கீதா மூலமாக) உபதேசிக்க |
| பின்னும் |
–
|
அதற்குப் பின்பும் |
| காசினியோர் |
–
|
பூமியிலுள்ளவர்கள் |
| இடரின் கண் வீழ்ந்திட |
–
|
ஸம்ஸார துக்கத்தில் அழுந்திக் கிடக்க, |
| தானும் |
–
|
(எம்பெருமானாராகிற தாமும் |
| அ வொண் பொருள் கொண்டு |
–
|
(முன்பு ஸர்வேச்வரனருளிச் செய்த) அந்தச் சிறந்த அர்த்தங்களைக் கொண்டு |
| அவர் பின் படரும் குணன் |
–
|
அந்த ஸர்ஸாரிகளைப்பின் எம்பெருமானாருடைய |
| படி இது |
–
|
ஸ்வபாவம் இது. |
முன்பு பகவான் பல சிறந்த அர்த்தங்களை ஸ்ரீ பகவத் கீதா முகத்தாலே வெளிப்படுத்தின வளவிலும் பாழும் ஸம்ஸாரிகள் அவ் வர்தங்களைத் தெரிந்து கொண்டு உஜ்ஜீவிக்க மாட்டாமல் மேன்மேலும் ஸம்ஸாரத்தையே பெருக்கிக்கொண்டு அதோ கதியை யடைந்து விடவே,
“ஐயோ! இப்படி நிந்ய ஸம் ஸாரிகளாய்க் கெட்டுப்போகிறார்களே!” என்று அநுதாபங்கொண்ட எம்பெருமானார்
அந்த கீதா சாஸ்த் ரத்திலுள்ள பொருள்களையே விளங்க உரைத்துக் கொண்டு,
இது கேட்டுத் திருந்துவார் ஆரேனு முண்டோ? என்று ஸம்ஸாரிகளைப் பின் தொடர்ந்து செல்லுகிறார்;
நம்மைப் பெறுகற்கு அவர் தாமே முயற்சி செய்துகொண்டு – ஆள் பார்த்து உழிதருகின்றார்;
இந்தக் திருக்குணம் உங்களுக்குப் தெரிய வில்லையா? என்கிறார்.
தானும் அவ் வொண் பொருள் கொண்டு = கீதா பாஷ்யம் அருளிச் செய்து என்று கருத்து
திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே சரம ச்லோகார்த்தத்தை ஏகாந்தமாகக் கேட்டு அதனை யெல்லாரு மறிந்து உஜ்ஜீவிக்குமாறு கோபுரத்தின் மேலேறி விளம்பரப்படுத்தின திருக் குணத்தை இப்பாட்டில் பேசுகின்றாரென்னவுமாம்.
————–
படி கொண்ட கீர்த்தி இராமாயண மென்னும் பத்தி வெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமா னுசன் குணங் கூறும், அன்பர்
கடி கொண்ட மா மாலர்த் தாள் கலந் துள்ளங் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே.–37-
பதவுரை
| படி கொண்ட கீர்த்தி |
–
|
உலக மெங்கும் பரந்த புகழை யுடைத்தான |
| இராமாயணம் என்னும் |
–
|
ஸ்ரீ ராமாயண மென்கின்ற |
| பக்தி வெள்ளம் |
–
|
பக்தி ஸமுத்திரம் |
| குடி கொண்ட கோயில் |
–
|
நித்ய வாஸம் பண்ணுகிற திவ்ய ஸ்தாநமாயிருக்கின்ற |
| இராமாநுசன் |
–
|
எம்பெருமானாருடைய |
| குணம் கூறும் அன்பர் |
–
|
திருக் குணங்களைப் பேசுகின்ற பக்திமான்களுடைய |
| கடி கொண்ட மா தாள் மலர் |
–
|
மணம் மிக்குச் சிறந்த பாதாரவிந்தங்களில் |
| உள்ளம் கலந்து |
–
|
நெஞ்சு பொருந்தி |
| கனியும் |
–
|
ஸ்நேஹித்திருக்கின்ற |
| நல்லோர் |
–
|
மஹாநுபவர்கள் |
| அடி கண்டு கொண்டு |
–
|
(இவ் வாதம வஸ்துவானது உடையவர்க்கு சேஷப்பட்ட தென்கிற) மூலப் பொருளைத் தெரிந்து கொண்டு |
| உகந்து |
–
|
ஆதரித்து |
| என்னையும் |
–
|
அடியேனையும் |
| அவர்க்கு |
–
|
அவ்வெம்பெருமானார்க்கு |
| ஆள் ஆக்கினர் |
–
|
ஆட்படுத்தினார்கள் |
இப்படிப்பட்ட எம்பெருமானாரை நீரே சென்று பற்றினீரோ? அன்றி அவர் தாமே ஸ்வீகரித்தருளினாரே? என்று அமுதனாரைச் சிலர் கேட்க, நானாம் பற்றவில்லை, அவரும் ஸவீகரிக்க வில்லை; அவருடைய ஸம்பந்த ஸம்பந்திகள் என்னைக் கொண்டு சேர்த்தார்கள் என்கிறார்.
அடி கண்டு கொண்டு = அடியாவது மூலம்; எம்பெருமானார்க்கு உரித்தா யிருக்கையாகிற மூலத்தைத் தெரிந்து கொண்டு சேர்த்தார்கள் – மருமறிந்து காரியஞ்செய்தார்க்ளென்றவாறு-
———-
ஆக்கி யடிமை நிலைப்பித்தனை யென்னை இன்று, அவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொரு ளா?முன்பு புண்ணியர் தம்
வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரி தால், உரை யாயிந்த நுண்பொருளே.-38-
பதவுரை
|
(ஸ்வாமிந்!)
|
| என்னை |
–
|
(நெடுநாளாக அஹங்காரியாய்க் கிடந்த) என்னை |
| இன்று |
–
|
இன்றைகத் தினத்தில் |
| ஆக்கி |
–
|
ஒரு பொருளாக்கி |
| அடிமை |
–
|
சேஷத்வத்தில் |
| நிலைப்பித்தனை |
–
|
நிலை நிறுத்தினீர்; (இன்று இப்படி செய்தருளின தேவரீர்) |
| முன்பு |
–
|
முற்காலமெல்லாம் |
| அவமே போக்கி |
–
|
வீணுகப் போக்கி |
| புறந்து இட்டது |
–
|
வெளி விஷயங்சளிலே தள்ளி விட்டு வைத்தது |
| என்பொருளா |
–
|
என்ன நிமித்தாக? |
| புண்ணியர் தம் |
–
|
(தேவரீரை இடைவிடாது அநுபவிக்கும்) பாக்கியசாலிகளுடைய |
| வாக்கில் பிரியா |
–
|
வாக்கை விட்டுப் பிரியாத |
| இராமாநுச |
–
|
எம்பெருமானாரே! |
| தெரிவு அரிது |
–
|
அறிய முடியாததாய் இரா நின்றது; |
| இந்த நுண் பொருள் |
–
|
இந்த ஸுக்ஷ்மமான விஷயத்தை |
| உரையாய் |
–
|
தேவரீரே அருளிச் செய்யவேணும் |
கூரத்தாழ்வானைக் கொண்டு அடியேனை இன்று திருத்திப் பணி கொண்ட தேவரீர் இதற்கு முற்கால மெல்லாம் இந்த சேஷத்வ ரஸத்தை அடியேனுக்கு ஊட்டாமல் வீணாக விஷயாந்தரங்களிலே அகல வைத்திருந்ததற்கு என்ன காரணம்?
இன்று இங்ஙனே திருவுள்ளம் பற்றும்படியாக என்னிடத்தில் என்ன ஸுக்ருக முண்டாயிற்று? ஒன்றுமில்லை;
அப்படியிருக்கச் செய்தேயும் தேவரீர் தம்முடைய நிர்ஹேதுக க்ருபையைக் கொண்டே யன்றோ இன்று ஆட்படுத்திக் கொண்டது.
ஹா ஹா! இப்படியும் ஒரு க்ருபையுண்டோ? இவ்வருளின் திறத்தை அறிவாரார்! ஆறிந்த தேவரீரே அருளிச் செய்யவேணும் என்றாராயிற்று.
நிலைப்பித்தனை = முன்னிலை யொருமை வினைமுற்று
அவம் – வீண்.
“இன்று என்னை ஆக்தி அடிமை நிலைப்பித்தனை; முன்பு அவமே போக்கிப் புறத்திட்டது என் பொருளா!”
இன்று ஸ்வீகரித்ததற்கும் இத்தனை நாள் ஒதுக்கி வைத்ததற்கும் என்ன காரணம்?
———–
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள் கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று உளார் தரமோ?
இருள் கோண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே.–39-
பதவுரை
| பொருள் என்றும் |
–
|
த்ரவ்யம் என்று சொல்லிக் கொண்டும் |
| புதல்வர் என்றும் |
–
|
புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டும் |
| பூமி என்றும் |
–
|
க்ஷேத்ரமென்று சொல்லிக் கொண்டும் (அர்த்த புத்திராதிகளையே விரும்பி) |
| மருள் கொண்டு |
–
|
அறிவு கெட்டு |
| இளைக்கும் நமக்கு |
–
|
வருந்திக் கொண்டு கிடக்கிற நமக்கு |
| இருள் கொண்ட |
–
|
அஜ்ஞாநத்தோடு கூடிய க்ரூரமான துக்கங்களை |
| மாற்றி |
–
|
போக்கடித்து |
| தன் ஈறு இல் பெரு புகழே தெருளும் தெருள் |
–
|
தம்முடைய முடிவில்வாத சிறந்தகல்யாண குணங்களையே சிந்திக்கக் கடவதான ஞானத்தை |
| தந்து |
–
|
அருளித்தருளி |
| இராமாநுசன் |
–
|
எம்பெருமானார் |
| செய்யும் சேமங்கள் |
–
|
செய்கிற க்ஷேமங்களானவை |
| நெஞ்சே |
–
|
ஒ மனமே! |
| மற்று உளார் தரமோ |
–
|
மற்ற பேர்களுக்குச் செய்கிற மாதிரியோ (அல்ல; விலக்ஷணம் என்ற படி.) |
எம்பெருமானாருடைய திருவருளாலே தாம் பெற்ற நன்மைகளை நினைத்து நினைத்து ஆநந்தமுள்ளடங்காமல் அவ்வாநந்தத்தை நெஞ்சோடே கூடி உலாவுகிறார்.
நெஞ்சே! – அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாசவார் குழலாள் என்று மயங்கிப் புத்ர தார க்ருஹ க்ஷேத்ரங்களுக்கு மேற்படி வேறொன்று மறியாமல் உடலுக்கே கரைந்து நைந்து கிடந்த நமக்கு அஜ்ஞாநங்களையும் அது காரணமாக வரும் பாவங்களையும் தொலைத் தருளித் தமது திவ்ய கீர்த்திகளையே அநவரதம் பேசும்படியான நிலைமையிலே நம்மைக் கொண்டு நிறுத்தினார் எம்பெருமானார்;
இப்படியாக அவர் நமக்குச் செய்தருளும் க்ஷேமங்கள் இவ்வுலகில் வேறு யார்க்காவது கிடைக்கக்கூடியதோ? நம்முடைய பாக்கியமே பாக்கியமன்றே என்றாராயிற்று.
மற்றுளார் தரமோ? என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; இப்படிப்பட்டக்ஷேமங்களை நமக்கு எம்பெருhனார் தவிர வேறு யாரேனும் அளிக்கக் கூடுமோ? என்றும்
இப்படிப்பட்ட க்ஷேமங்கள் நமக்குத் தவிர வேறு ஆர்க்கேனும் கிடைக்கத் தகுமோ? என்றும்.
—————
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம் பொருள் வீடுதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன், இராமானுசனிந்த மண் மிசையே.–40-
பதவுரை
| சேமம் நல் வீடும் |
–
|
(அனைவர்க்கும்) க்ஷேம ரூபமான சிறந்த மோக்ஷம் |
| பொருளும் |
–
|
அர்த்தமும் |
| தருமமும் |
–
|
தர்மமும் |
| சீர்ய நல் காமமும் |
–
|
மிகவுஞ் சிறந்த காமமும் |
| என்ற இவை |
–
|
ஆக இப்படி சொல்லப்பட்டுள்ள இவை |
| நான்கு என்பர் |
–
|
நான்கு புருஷார்த்தங்கள் என்று (வைதிகர்கள்) கூறுவார்கள்; |
| நான்கினும் |
–
|
இந்த நான்கு புருஷார்த்தங்களுள் |
| காமம் |
–
|
காமமாவது |
| கண்ணனுக்கே ஆமது |
–
|
எம்பெருமான் விஷயத்திலேயே உண்டாமது; |
| அறம் பொருள் வீடு |
–
|
தர்ம அர்த்த மோக்ஷங்கள் மூன்றும் |
| இதற்கு என்று |
–
|
இந்தக் காம புருஷார்த்தததிற்கு சேஷ பூதங்கள் என்று |
| வாமநன் சீலன் இராமாநுசன் |
–
|
வாமநாவதாரம் செய்த பெருமானொடு ஒத்த சீலத்தை யடையரான எம்பெருமானார் |
| இந்த மண் மிசை உரைத்தான் |
–
|
இவ் வுலகத்தில் அருளிச் செய்தார் |
எம்பெருமானார் இவ்வுலகத்தார்க்கு உபதேசித்தருளின அர்த்தங்களில் ஒரு அர்த்த விசேஷத்தை இப்பாட்டில் எடுத்துரைக்கின்றார்:-
ஸகல சாஸ்த்ரங்களாலும் பிரதி பாதிக்கப்படுமவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என நான்கு புருஷார்த்தங்களாம்;
அந்த நான்கினுள் காமமென்பது பகவத்விஷய காமம்; விஷயாந்தரங்களைப் பற்றின காமம் சிற்றின்ப மாதலால் அது புருஷார்த்தமன்று;
பேரின்பமாகிய பகவத் காமமே காமம். அதுவே புருஷார்த்தம். மற்ற மூன்று புருஷார்த்தமன்று; சொன்ன காம புருஷார்த்தத்திற்கு சேஷப் பட்டவைகள்; காமமே ப்ரதாந சேஷியான புருஷார்த்தம் என்று உலகத்தாரெல்லார்க்கும் உபதேசித்தருளினர் எம்பெருமானார் என்றாராயிற்று.
சேம நல் வீடு மென்று தொடங்கி அறம் பொருள் வீடிதற்கு என்னுமளவும் எம்பெருமானாருடைய உபதேச வடிவம்
கண்ணுக்கே யாமது காமம் = காம க்ரோதங்களைக் கெட்ட குணமாகத் கூறி யிருப்பது தகாத விஷயங்களில் காமம் கூடாதென்பது பற்றி பகவத் விஷயத்தில் காமம் சாஸ்த்ர விஹிதம். ஆழ்வார் =ஸுக்திகளில் இக் காமமே பொலியும்.
வாமநன் சீலன் = வாமன அவதாரம் செய்த எம்பெருமானாருடைய சீலம் போன்ற சீலத்தை யுடையவர் என்கை.
ஒருவரும் அபேக்ஷியா திருக்கத் தன் பேறாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து திரிவிக்ரம அவதாரத்தாலே போலவே தனது சீல குணத்தை வெளியிடுபவர் எம்பெருமானார் என்கிறது.
————–
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர் களெல்லாம்
அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே.–41–
பதவுரை
| எங்கள் மாதவனே |
–
|
நமக்கு நாதனான திருமால் தானே |
| மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து |
–
|
(இப் பூமியிலுள்ள மநுஷ்யாதி) யோனிகள் தோறும் அவதரித்து |
| கண் உற நிற்கிலும் காண கில்லா உலகோர்கள் எல்லாம் |
–
|
எல்லாருடைய கண்ணுக்கும் தன்னை இலக்காக்கிக் கொண்டு நின்ற விடத்திலும் (அவனை நம்முடைய நாதனென்று) காண மாட்டாதிருக்க இவ் வுலகத்தாரெல்லாரும் |
| அண்ணல் இராமாநுசன வந்து தோன்றிய அப்பொழுதே |
–
|
ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானார் இங்கே வந்தவதரித்தவுடனே |
| நண்ண அரு ஞானம் தலைக் கொண்டு |
–
|
பெறுதற்கரிதான ஞானம் அதிகரிக்கப் பெற்று |
| நாரணற்கு ஆயினர் |
–
|
ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப்பட்டனர். |
எம்பெருமானுடைய அவதாரத்திற்காட்டிலும் எம்பெருமானாருடைய அவதாராமே சிறப்புற்ற தென்கிறார்.
எம்பெருமான் பலபலயோனிகளிற் பலவகைப் பிறவி பிறந்து கண் காண வந்து நின்று உபதேசங்களாலே ஸ்வ ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுத்த விடத்திலும் யாரும் அவனை லக்ஷியம் பண்ணவில்லை;
“அவஜாநந்தி மாம் மூடா:” (என்னை மூடர்கள் அவமானப்படுத்துகிறார்கள்) என்று அவன்றானே சொல்லிக் கொண்டு வருத்தப்பட வேண்டிற்றாயிற்று
ஆகையாலே பகவானுடைய அவதாரம் ஸம்ஸாரிகளுடைய தெள்ளறிவுக்கு உறுப்பாகவில்லை.
எம்பெருமானாருடை அவதாரமோ வென்னில்; பயன் பெற்றது.
இவர் தாம் திருவவதரித்த வுடனே எல்லா வுலகத்தாரும் ஆச்சரியமான ஞானத்தைப் பெற்று உஜ்ஜீவித்தார்கள் – என்றாராயிற்று.
————–
ஆயிழையார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன் தீதில் இராமா னுசன் தொல் லருள் சுரந்தே.–42-
பதவுரை
| மா மலராள் நாயகன் |
–
|
லக்ஷ்மீ பதியான |
| அரங்கன் |
–
|
பெரிய பெருமாள் |
| எல்லா உயிர்கட்கும் நாதன் என்னும் |
–
|
ஸகல ஆத்துமாக்களுக்கும் சேஷி என்று உபதேசிப்பவரும் |
| தூயவன் |
–
|
பரம பரிசுத்தரும் |
| தீது இல் |
–
|
எவ்வகைக் குற்றமுமில்லாதவருமான |
| இராமாநுசன் |
–
|
எம்பெருமானார்; |
|
(என்னசெய்தாரென்றால்)
|
| ஆய் இழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளறு அழுந்தி மாயும் என் ஆவியை |
–
|
அழகிய ஆபரணங்களணிந்த ஸ்த்ரிகளுடைய கொங்கைத் தடத்தில் தங்கும் ஆசையாகிற சேற்றிலே அழுந்தி) நசித்துப் போகிற என் ஆத்மாவை |
| தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான் |
–
|
இன்று நிர்ஹேதுக க்ருபை பண்ணி வந்து உத்தரித் தருளினார். |
பகவானுடைய அவதார காலங்களில் திருந்தாத ஸம்ஸாரிகளும் எம்பெருமானார் காலத்தில் திருந்திவிட்டார்களென்று கீழ்ப் பாட்டில் கூறியதற்கு வேறு த்ருஷ்டாந்தம் காட்ட வேணுமோ?
என்னைத் திருத்திப் பணி கொண்ட விஷயமொன்றே போராதோ வென்பார் போலத் தம்மைத் திருத்தினதைச் சொல்லி ஆநந்தப்படுகிறார்.
————-
சுரக்கும் திருவும் உணர்வும் சொலப் புகில் வாயமுதம்
பரக்கும் இரு வினை பற்றற வோடும் படி யிலுள்ளீர்
உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே.–43-
பதவுரை
| படியில் உள்ளீர் |
–
|
இப்பூமியிலுள்ளவர்களே! |
| யான் உமக்கு உரைக்கின்றனன் |
–
|
நான் உங்களுக்கு (ஒரு ஹிதம்) சொல்லுகிறேன்; (என்னவென்றால்) |
| அறம் சீறும் உறு கலியை துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமின் |
–
|
தர்ம மார்க்கத்தில் சீற்றமுடையத் தாய் ப்ரபலமான கலியை ஒட்டி விடும் எம்பெருமானாருடைய திருநாமத்தைச் சொல்லுங்கள்; (அப்படி சொன்னால்) |
| திருவும் |
–
|
பக்திப் பெருஞ்செல்வமும் |
| உணர்வும் |
–
|
ஞானமும் |
| சுரக்கும் |
–
|
மேன் மேலும் பெருகும் |
| சோல புகில் |
–
|
அந்தத் திருநாமத்தைச் சொல்லத் தொடங்கும் போதே |
| வாய் அமுதம் பரக்கும் |
–
|
வாக்கிலே அம்ருதரஸம் வியாபிக்கும் |
| இரு வினை |
–
|
மஹாபாபங்கள் |
| பற்று அற ஓடும் |
–
|
அடியோடே போய் விடும். |
உலகத்தாரை நோக்கி நீங்களெல்லாரும் ஸ்ரீ ராமாநுஜ திவ்ய நாயத்தை வாயாரச் சொல்லுங்கள்,
உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகுமென்கிறார்.
ஓ ஜனங்களே! உங்களுக்கு ஓர் அருமையான அர்த்தத்தை உபதேசிக்கிறேன், கேளுங்கள்,
எம்பெருமானுடைய ஸம்பந்தமுள்ள தேசத்தில் தருமத்திற்கு மாறான கலி புருஷன் நிற்கப் பெற மாட்டான்;
அன்னவரது திருநாமங்களை நீங்கள் அநுஸந்தாநம் பண்ணுங்கள்;
உங்களுக்கும் ஜ்ஞாந பக்திகள் தலையெடுக்கும் பாவங்களும் தொலையும்.
அத்திரு நாமங்கள் நாவுக்கும் இனிதாயிருக்கும். சொல்லிப்பாருங்கள்.
உமக்கு-யான், உமக்கியான். “யவ்வரீன் இய்யாம்” என்பது நன்னூல்.
நேர்பதினாறே நிரைபதினேழென் றோதினர் கலித்துறையோரடிக் கெழுத்தே” என்ற இலக்கணத்திற்கு மாறாக இப்பாட்டின் மூன்றாமடியில் (ஒற்றொழித்துப்) பதினெட்டெழுத்து வந்தது என்னெனில்; உமக்கியான் என்ற விடத்தில் ககரத்தின் மேலேறின இகரம் குற்றிய விகர மாகையாவே வண்ணங்கெடாமைக்குக் கழித்து கீழோடே ஒன்றுவித்துப் பதினேழெழுத்தாகவே எண்ணத்தக்கது.
கம்பர் இயற்றிய சடகோபரந்தாதியில் “என் முடியா தெனக்கியாதே திரா வணன்றன்” என்ற இருபத்தொன்பதாம் பாட்டிலும் இப்படியே பிரயோகம் வந்தமை காண்க.
இந்த நூற்றந்தாதியிலும் மேல் ஐம்பத்து மூன்றாம் பாட்டில் “பற்பல்லுயிர்களும் பல்லுலகியரவும் பரனதென்றும்” என்ற விடத்திலும் இங்ஙனமே கொள்க.
———–
சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கு மெல்லை
இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர், எது பேறென்று காமிப்பரே.–44-
பதவுரை
| அகல் இடத்தோர் |
–
|
விசாலமான இப் பூமி யிலுள்ளவர்கள், |
| சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் |
–
|
சொல் நிரம்பிய இயல் இசை நாடகம் என்கிற ஒப்பற்ற முத்தமிழையும் |
| சுருதிகள் நான்கும் |
–
|
நான்கு வேதங்களையும் |
| எல்லை இல்லா அறம் நெறி யாவும் |
–
|
கணக்கில்லாத தரும சாஸ்திரங்களையும் மற்றும் எல்லாக் கலைகளையும் |
| தெரிந்தவன் |
–
|
அறிந்தவராயும், |
| எண் அரு சீர் |
–
|
எண்ண முடியாத குணங்களை வுடையவராயும் |
| நல்லார் பரவும் |
–
|
ஸத்துக்களான் துதிக்கப் படுபவராயு மிருக்கிற |
| இராமாநுசன் |
–
|
எம்பெருமானாருடைய |
| திருநாமம் |
–
|
திரு நாமத்தை |
| நம்பி கல்லார் |
–
|
(என் வார்த்தையை) நம்பிக் கற்கின்றார்களில்லை; |
|
(ஸ்ரீ ராமாநுஜ நாமஸங்கீர் த்தநமே புருஷார்த்த மென்று அறியாதவர்களாய்)
|
| எது பேறு என்று காமிப்பரே! |
–
|
நமக்குப் புருஷார்த்தம் எது? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஐயோ! |
சொல் ஆர் தமிழொரு மூன்றும் = இயல் இசை நாடகம் என மூவகைப்படும் தமிழ் –
‘எழுத்துப் பதின்மூன்று இரண்டசை சீர்முப்பதேழ் தளை ஐந்து, இழுக்கிலடிதொடை நாற்பதின் மூன்று ஐந்துபா இனம் மூன்று, ஒழுகிய வண்ணங்கள் நூறு ஒன்பது ஒண்பொருள் கோள் இருமூ, வழுக்கில் விகாரம் வனப்பெட்டு யாப்புள் வகுத்தனவே” என்று தொகுத்து உணர்த்தப்படும் இயற்றமிழின் இலக்கணங்கள்
குறிஞ்சி, செருந்தி, இந்தளம், கொல்லி, நாமரம், தக்கேசி, பஞ்சமம், கைசிகம் காந்தாரம் பாலை யாழ் முதலிய பண்களைக் கொண்டுள்ள தமிழ் இசைத்தமிழாம்
இயலுக்கும் இசைக்கும் பொது வானது நாடகத் தமிழாம் தராவிட சாஸ்த்ரங்களெல்லாவற்றையும் அறிந்தவர் எம்பெருமானார் என்கிறது.
சுருதிகள் நான்கும் = ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என வேதங்கள் நான்காம்.
எல்லை யில்லா அறநெறி = தர்மசாஸ்த்ரங்கட்கு அளவே யில்லை.
யாவும் = கீழ்ச் சொன்னவற்றையும் மற்றுமுள்ள கலைகளையும்.
————-
பேறொன்று மற்றில்லை நின் சரண் அன்றி, அப் பேறளித்தற்
ஆறொன்று மில்லை மற்றச் சரண் அன்றி,என்றிப் பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே.-45-
பதவுரை
| இராமாநுச |
–
|
எம்பெருமானாரே! |
| நின் சரண் அன்றி |
–
|
தேவரீருடைய திருவடிகளைத் தவிர |
| மற்று பேறு ஒன்றும் இல்லை |
–
|
உபேயம் வேறொன்று மில்லை; |
| அப்பேறு அளித்தற்கு |
–
|
தேவரீர் திருவடிகளாகிற அந்த உபேயத்தைத் தருவதற்கு |
| அச் சரண் அன்றி |
–
|
அத் திருவடிகள் தவிர |
| மற்று ஆறு ஒன்றும் இல்லை |
–
|
வேறு உபாயம் ஒன்று மில்லை; |
| என்ற இப் பொருளை |
–
|
என்கிற இவ்வுண்மைப் பொருளை |
உபாயமும் உபேயமும் எம்பெருமானார் திருவடிகளே’ என்றிருக்கும் மஹான்களுக்கும் தேவரீர் எவ்வாறு அருள் புரிகின்றதோ அவ்வாறாகவே சிறிதும் வாசி வையாமல் பாவியேனுக்கும் அருள் புரிகின்றதே!
இஃது என்ன பெருங்குணம்!!
த்ருட விச்வாஸ முடைய ஆழ்வான் ஆண்டான் போல்வாரை அடிமை கொள்வது போலவே அவிச்வாஸியான என்னையும் அடிமை கொள்வதே!
இச் செம்மைக் குணத்தின் பெருமையைப் பாசுரமிட்டுச் சொல்ல எனக்கு சக்தி யில்லையே யென்று தடுமாறுகின்றார்.
———–
கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம் புதுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே.–46-
பதவுரை
| கூறும் சமயங்கள் ஆறும் குலைய |
–
|
மனம் போன படி சொல்லிக் கொண்டிருக்கிற ஆறு பாஹ்ய மதங்களும் தலை மடங்கும்படி |
| குவலயத்தே |
–
|
இப் பூ மண்டலத்திலே |
| மாறன் பணித்த மறை |
–
|
நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதத்தை |
| உணர்ந்தோனை |
–
|
கற்று அறிந்தவராயும் |
| மதியிலியேன் தேறும்படி |
–
|
ஜ்ஞாந ஹீநனான நானும் தெளியும் படியாக |
| என் மனம் புகுந்தானை |
–
|
என் ஹ்ருதயத்தலே வந்து புகுந்தவராயும் |
| திசை அனைத்தும் ஏறும் குணனை |
–
|
எல்லாத் திக்குக்களிலும் பரவிய திருக் குணங்களை யுடையவராயு மிருக்கிற |
| இராமாநுசனை |
–
|
எம்பெருமானாரை |
| இறைஞ்சினம் |
–
|
வணங்கினோம். |
எம்பெருமானார் செய்தருளின அரிய பெரிய உபகாரங்கள் நெஞ்சில் ஊற ஊற, பரவசராய்த் திருவடிகளிலே வணங்குகிறார்:-
உலகத்தில் பிரமாணமில்லாமலும் யுக்தியில்லாமலும் மனம் போனபடி சொல்லிக் கொண்டு திரிகிற மத’ ந்தரஸ்தர்களை யெல்லாம் பங்கப் படுத்துவதற்காக நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமானது திருவாய்மொழியை ஒதியுணர்ந்தவரும்,
அவிவேகியான நான்கூடத் கேறுதலடையும்படி என் நெஞ்சினுள்ளே புகுந்து என் ஸக்தையை நோக்குபவரும்,
திசைகளெங்கும் பரவிய புகழையுடையருமான எம்பெருமானாரை வணங்கினொமென்றாராயிற்று.
சமயங்கள் ஆறும் = தேஹாத்மவாதி; தேஹ பரீணமாத்மவதி, விஜ்ஞாநத்மவாதி, சூந்யவாதி, அத்வைதவாதி, சிவபரத்வவாதி என்றிப்படி ஆறுமதஸ்தர்களுண்டு.
வேறு வகைகளும் உண்டு
எல்லாமதங்களும் திருவாய் மொழியில நெற்; செய்யப் புல் தேயுங்கணக்கிலே தொலைக்கப்பட்டனவென்க.
குவலயம் – வடசொல்,
தேறும்படி – ‘ஒரு வழியாலும் நாம் உஜ்ஜீவிக்க வகையில்லையே! என்செய்வோம், என்று தடுமாறிக் கிடந்த
நானாம் ‘இனி நமக்கொரு குறையுமில்லை’ என்று தேறி மார்விலே கை வைத் துறங்குபடியாக என்கை.
————–
இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்,என் அருவினையின்
திறம் செற்றிரவும் பகலும் விடாதென் றன் சிந்தையுள்ளே
நிறைந் தொப்பற விருந்தான், எனக் காரும் நிகரில்லையே!–47-
பதவுரை
| இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று |
–
|
‘எல்லாராலும் வணங்கத் தக்க பர தெய்வம் (எது வென்றால்) ஈசனாகிய ஸ்ரீரங்க நாதனேயாம்’ என்று |
| இ உலகத்து |
–
|
இப் பூ மண்டலத்திலே |
| அறம் செப்பும் |
–
|
ஸாக்ஷாத் தர்மத்தை அருளிச் செய்யுமவராய் |
| அண்ணல் |
–
|
ஸர்வ ஸ்வாமியான |
| இராமாநுசன் |
–
|
எம்பெருமானார் |
| என் அரு வினையின் திறம் செற்று |
–
|
என்னுடைய போக்க முடியாத கர்ம ஸமூஹத்தைப் போக்கி |
| பகலும் இரவும் விடாது |
–
|
ஸர்வ காலத்திலும் |
| என் தன் சிந்தை |
–
|
என் ஹ்ருதயத்தினுள்ளே |
| நிறைந்து |
–
|
பரி பூர்ணராகி |
| ஒப்பு அற இருந்தான் |
–
|
(இவ் விருப்புக்கு) ஒப்பில்லாதபடி எழுந்தருளி யிருக்கிறார்; |
| எனக்கு |
–
|
இப்படிப் பட்ட அருளைப் பெற்ற எனக்கு |
| ஆரும் நிகர்இல்லை |
–
|
ஒப்பாவார் ஆருமில்லை. |
ஸ்ரீரங்கநாதனே எல்லாரும் வணங்கத்தக்க பர தெய்வமென்னும் உண்மையை உலகத்தார்க்கு உபதேசித்து
எல்லாரையும் பகவத் ஸமாச்ரயணத்தில் ருசி யுடையவர்களாக்கிப் போருகின்ற எம்பெருமானார்
என்னுடைய தீவினைகளை வேரோடே களைந்தொழித்து அநவரதமும் எனது ஹருதயத்தினாள்ளே பரிபூர்ணரா யெழுந்தருளிராநின்றார்;
இப்படிப் பட்ட பரம பாக்கியம் பெற்றவன் இவ் வுலகில் நானொருவனேயாகையால் – இல்லை யெனக் கெதிரில்லை யெனக் கெதிரே.
————
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்குமஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மான பின்னே?–48-
பதவுரை
| புன்மையிலோர் பகரும் பெருமை இராமாநுச |
–
|
மஹான்கள் பேச வேண்டும் படியான பெருமையை யுடைய எம்பெருமானாரே! |
| நிகர்இன்றி நின்ற என்நீசதைக்கு |
–
|
என்னுடைய ஒப்பற்ற தாழ்மைக்கு |
| நின் அருளின் கண் அன்றி |
–
|
தேவரீருடைய க்ருபை யினிடத்தில் தவிர |
| புகல் ஒன்றும் இல்லை |
–
|
வேறு எவ்விடத்திலும் ஒதுங்க இடமில்லை |
| அருட்கும் |
–
|
தேவரீருடைய அந்த க்ருபைக்கும் |
| அஃதே புகல் |
–
|
(என் போல்வாருடைய) அந்தத் தாழ்மையே சரணம்; (ஆக இவ்வகையாலே) |
| இருவோமுக்கும் பயன் ஆன பின் |
–
|
அடியேனால் தேவரீருக்குப் பயன், அடியேனுக்குப் பயன் என்று ஸித்தமான பின்பு |
| இனி |
–
|
இனி மேலும் |
| பழுதே |
–
|
வியர்த்தமான |
| அகலும் பொருள் என்ன |
–
|
பிரிந்திருக்கைக்குக் காரணம் என்ன? |
“எனக்காரும் நிகரில்லையே” என்று களித்துக் கூறின அமுதனாரை நோக்கி எம்பெருமானார்
“இக் களிப்பு உமக்கு எத்தனை நாளைக்கு நிற்கும்? நான் உம்மை விட்டுவிடவுங் கூடும்; நீர் என்னை விட்டுவிடவுங்கூடும், இரண்டத் தொன்று நேர்ந்தால் இக்களிப்பு மாறக்கூடாது தானே” என்ன -;
இனி நாம் வீணுக விட்டுப் பிரிவதற்குக் காரணமே யில்லை யென்கிறார்.
(“ததஹம் த்வத்ருதேந நாதவாந் மத்ருதே த்வம் தயநீயவாந் நச-விதிநிர்மிதமேதத்ந்வயம் பகவந் பாலய மாஸ்மஜீஹப:”) என்ற ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ந ச்லோகமும் இப்பொருள் கொண்டதே.
(ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம்,
தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கை விடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.
ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||-ஶ்லோகம் 51 –
ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.)
அருட்கும் அஃதே புகல் = நீசர்கள் விஷயத்தில் க்ருபை பண்ணினா லன்றோ அருள் விளங்குவதும் பயன் பெறுவதும்.
——–
ஆனது செம்மை அற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி யிறந்தது வெங் கலி பூங்கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே.–49-
பதவுரை
| பூ கமலம் தேன் |
–
|
தாமரைப் பூக்களிலுண்டான மகரந்தமானது |
| நதி பாய் |
–
|
ஆறாகப் பெருகப் பெற்ற |
| வயல் |
–
|
கழனிகளையுடைய |
| தென் அரங்கன் |
–
|
ஸ்ரீரங்கத்திலே எழுந்தருளியிருக்கிற பெரிய பெருமாளுடைய |
| கழல் |
–
|
திருவடிகளை |
| சென்னி வைத்து |
–
|
சிரஸா வஹித்துக் கொண்டு |
| தான் அதில் மன்னும் |
–
|
தாம் அத் திருவடிகளிலேயே ப்ரவணாயிருக்கிற |
| இராமாநுசன் |
–
|
எம்பெருமானார் |
| இ தலத்து உதித்து |
–
|
இப் பூமியிலே திருவவதரித்ததனால் |
| செம்மை அறம் நெறி |
–
|
ருஜூவான தர்ம மார்க்கமானது |
| ஆனது |
–
|
ஸத்தை பெற்றது; |
| பொய்ம்மை அறு சமயம் |
–
|
பொய்யே நிறைந்து கிடக்கிற அறு சமயங்களும் |
| பொன்றி போனது |
–
|
நாசமடைந்தன; |
| வெம் கலி இறந்தது |
–
|
கொடிய கலியுகமும் மாண்டது |
எம்பெருமானார் திருவவதரித்தனாலே இவ்வுலகத்துக்கு உண்டான நன்மைகளை அருளிச் செய்கிறார் இதில்.
முன்பு குத்ருஷ்டிகளினால் அழிந்து கிடந்த தர்ம மார்க்கம் மீண்டு நிலை பெற்றது;
சாஸ்த்ர விருத்தமான புறமதங்களெல்லாம் தலை சாய்ந்தன; கலிதோஷமும் கெட்டுப் போயிற்று.
—————–
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றமெல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் றன் இணை யடியே.–50-
பதவுரை
| பரவு தொல் சீர் |
–
|
உலகமெங்கும் பரவின நித்ய கலயாண குணங்களை யுடையவரும் |
| எதி தலை நாதன் |
–
|
யதிகளுக்குத் தலையான நாயகருமான |
| இராமாநுசன் தன் |
–
|
எம்பெருமானாருடைய |
| இணை அடி |
–
|
திருவடியிணைகள் |
|
(எப்படிப் பட்டவை யென்றால்)
|
| உத்தமர் சிந்தையுள் உதிப்பன |
–
|
உத்தமாதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிப்பவை; |
| ஒன்னலர் நெஞ்சம் |
–
|
பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது |
| அஞ்சி கொதித்திட |
–
|
பயப்பட்டுப் பரீதவிக்கும்படி |
| மாறி நடப்பன் |
–
|
மாறி மாறி யிட்டு நடக்குந்தன்மை யுடையன; |
| கொள்ளை வன் குற்றம் எல்லாம் பதித்த |
–
|
அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக் கிடக்கிற |
| என் புன் கவி |
–
|
என்னுடைய க்ஷுத்ரமான கவியாகிய |
| பா இனம் பூண்டன |
–
|
பாசுரங்களைப் (ஸ்தோத்ரமாகப்) பெற்றுக் கொண்டவை. |
தமக்குப் பரமப்ராப்யமான எம்பெருமானார் திருவடிகளை வருணிக்கிறார் இதில்
வடுக நம்பி போல்வாரான உத்தமாதிகாரிகளாலே இடைவிடாது சிந்திக்கப்படுவன;
பிரதி பக்ஷிகளுடைய நெஞ்சிலே பரீதாபத்தை உண்டுபண்ணுவன;
பல் வகைக் குற்றங்கள் நிறைந்த எனது கவிகளையும் ஏற்றுக் கொள்வன – அத்திருவடிகள், என்றாராயிற்று.
ஒன்னவர் நெஞ்ச மஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன – பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸிப்பதற்காதப் பல இடங்களிலும் ஸஞ்சரித்தருளினமை அறிக.
மாறி நடத்தல் – ஒரு அழகான நடை. –நம்பெருமாள் நடை போலே.
————–
அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமா னுச னென்னை ஆள வந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே.–51-
பதவுரை
| அன்று |
–
|
முற் காலத்தில் |
| அடியை தொடர்ந்து |
–
|
திருவடிகளை அவலம்பித்து |
| எழும் |
–
|
செருக்கிக் கிளர்ந்த |
| ஐவர்கட்கு ஆய் |
–
|
பஞ்ச பாண்டவர்களுக்காக (பக்ஷ பாதம் பூண்டு) |
| பாரதப் போர் |
–
|
பாரத யுத்தத்திலே |
| முடிய |
–
|
(துரியோதநாதிகள்) மாளும்படியாக |
| பரி நெடு தேர் |
–
|
குதிரை பூண்ட பெரிய தேரை |
| விடும் |
–
|
நடத்தின |
| கோனை |
–
|
ஸர்வேச்வரனை |
| முழுது உணர்ந்த |
–
|
(ஸ்வரூப ஸவபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத் தெரிந்து கொண்ட |
| அடியர்க்கு |
–
|
பாகவதர்களுக்கு |
| அமுதம் |
–
|
பரம போக்யமான |
| இப்படியில் |
–
|
இப் பூமண்டலத்தில் |
| வந்து பிறந்தது என்னை ஆள |
–
|
வந்து அவதரித்தது (எதற்காக வெனில்) அடியேனை ஆட் கொள்ளுகைக்காகவேயாம்; |
பார்த்திடில் மற்று காரணம் இல்லை – ஆராய்ந்து பார்க்குமளவில் இது தவிர வேறொரு காரணமில்லை.
————-
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப, இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையி னேனிடைத் தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்தரங்கன் செய்ய தாளிணையோ
டார்த்தான் இவை யெம் இராமா னுசன் செய்யும் அற்புதமே.–52-
பதவுரை
|
(எம்பெருமானாரானவர்)
|
| அறு சமயங்கள் |
–
|
(வேத பாஹ்யங்களான) ஆறு தர்சநங்களும் துடிக்கும் படியாக |
| பதைப்ப பார்த்தான் |
–
|
திருக் கண் செலுத்தினார்; |
| இப் பார் முழுவதும் |
–
|
இப் பூ மண்டலம் முழுவதையும் |
| புகழ் கொண்டு |
–
|
தமது கீர்த்தியினாலே |
| போர்த்தான் |
–
|
மூடி விட்டார்; |
| புன்மையினேனிடை |
–
|
நீசனான அடியேன் பக்கலிலே |
| தான் புகுந்து |
–
|
தாமாகவே (நிர்ஹேதுக க்ருபையினால்) வந்து புகுந்து |
| இரு வினை |
–
|
பெரிய பாவங்களை |
| தீர்த்தான் |
–
|
போக்கி யருளினார்; |
| தீர்த்து |
–
|
பாவங்களைப் போக்கினது மன்றியில் |
| அரங்கன் |
–
|
ஸ்ரீ ரங்கநாதனுடைய |
| செய்ய தாள் இணையோடு ஆர்த்தான் |
–
|
அழகிய திருவடிகளோடே (என்னை)அந்வயிப்பித்தார்; |
| இவை |
–
|
ஆகிய இக் காரியங்களெல்லாம் |
| எம் இராமாநுசன் செய்யும் அற்புதம் |
–
|
எமக்கு ஸ்வாமியான எம்பெருமானார் செய்தருளின ஆச்சரியச் செயல்களாம் |
எம்பெருமானாருடைய ஆச்சரியமான சில செயல்களை எடுத்துக் கூறுகின்றார்:-
சாகயர் உலூக்யர் பௌத்தர் சார்வாகர் பாசுபதர் காணுதர் என்றிப்படி சொல்லப்படுகிற புற மதத்தவர்களையெல்லாம் நடுங்கச்செய்தார்;
இப் பூமண்டலமெங்கும் தமது திருப்புகழே பரவும்படி செய்தார்;
இப் பூ மண்டலமெங்கும் தமது திருப்புகழே பரவும்படி செய்தார்;
ஆத்ம குணமொன்றில்லாத என்னுடைய ஹ்ருதயத்திலே பகுந்து என் பாவங்களைப் போக்கி அழகிய மணவாளனுடைய பாதங்களிலே என்னை ஆச்ரயிக்கச் செய்தார்;
இப்படியாக எம்பெருமானார் செய்தருளுமவை யெல்லாம் மிக அற்புதமானவை.
————
அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்
நற் பொருள் தன்னை, இந் நானிலத்தே வந்து நாட்டினனே.–53-
பதவுரை
| என்னை ஆள வந்த |
–
|
என்னை ஆட் கொள்வதற்காக அவதரித்த |
| கற்பகம் |
–
|
உதாரரும் |
| கற்றவர் காமூது சீலன் |
–
|
ஞானிகள் ஆசைப் படும் படியான சீல குணத்தை யுடையவரும் |
| அற்புதன் |
–
|
ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவரும் |
| செம்மை |
–
|
ருஜூவாயிருக்குந் தன்மை பொருந்திய வருமான |
| இராமாநுசன் |
–
|
எம்பெருமானார், |
| கருத அரிய பல் பல் உயிர்களும் |
–
|
நினைக்கவும் முடியாத படி எண்ணிறந்திருக்கிற ஆத்ம வர்க்கங்களும் |
| பல் உலகு யாவும் |
–
|
அவ் வாத்மாக்களுக்கு இருப்பிடமான) அளவிறந்த எல்லா வுலகங்களும் |
| பரனது என்னும் நல் பொருள் தன்னை |
–
|
எம்பெருமானாடைய ஸொத்துக்களாம் என்கிற ஸாரர்த்தத்தை |
| இ நானிலேததே |
–
|
இவ் வுலகத்திலே |
| வந்து |
–
|
வந்தவதரித்து |
| நாட்டினன் |
–
|
ஸ்தாபித்தருளினார். |
எம்பெருமானார் மதாந்தரங்களைக் கண்டித்து நிலைநாட்டிய ஸித்தாந்தம் இன்னதென்கிறார்.-
சிறந்த ஞானிகளனைவரும் கொண்டாடுதற்குரிய திருக் குணங்களையும் அதி மாநுஷ வ்யாபாரங்களுக்கு இருப்பிடமாயுள்ள ஸகல லோகங்களும் ஸ்ரீமந் நாராயணனாக்கே உரிமைப் பட்டவை” என்கிற பரமார்த்தத்தை நிலை நாட்டி யளினர் என்கை.
உலகு- யாவும், உலகியாயும்; “யவ்வரீனிய்யாம்” என்பது நன்னூல் விதி.
—————
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகைவள்ளல்
வாட்டமிலா வண் டமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன் றன் இயல்வு கண்டே.–54-
பதவுரை
| மண் உலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் |
–
|
இப் பூ லோகத்தில் மேன் மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை யுடையரான எம்பெருமானாருடைய |
| இயல்வு |
–
|
ஸ்வபாவத்தை |
| கண்டு |
–
|
பார்த்து, |
| நாட்டிய நீச சமயங்கள் மாண்டன |
–
|
(துஷ்ட யுக்திகளாவே) நிலை நிறுத்தப் பட்டிருந்த ஷூத்ர மதங்களெல்லாம் ஒழிந்தன; |
| நாரணனை காட்டிய |
–
|
ஸ்ரீமந் நாராயணனைப் பிரதிபாதிக்க |
| வேதம் |
–
|
வேதங்களானவை |
| களிப்பு உற்றது |
–
|
(நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக் கடைந்தன; |
| தென் குருகை வள்ளல் |
–
|
அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த) |
| வாட்டம் இலா |
–
|
ஒரு குறையுமற்ற |
| வண் தமிழ் மறை |
–
|
சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி |
| வாழ்ந்தது |
–
|
வாழ்வு பெற்றது. |
சிங்கத்தைக் கனவில் கண்டாலும் ஸாமன்ய மிருகங்கள் நசித்தொழியும்;
அவற்றைக் கொல்லுவதற்காகச் சிங்கம் ஒரு முயற்சி செய்யவேண்டா
அதுபோல, இவ் வுலகில் கிளர்ந்து கிடந்த பஹ்ய குத்ருஷ்டி மதங்களைத் தொலைப்பதற்காக எம்பெருமானார்
ஒரு பிரயத்நமும் எடுத்துக் கொள்ள வில்லை;
அவை மாளவே ஸ்ரீ மந் நாராயண பரங்களான வேதங்களின் ஸாரமாகிய அருளிச் செயல்களும் பொலிவு பெற்று ஒங்கின – என்றாராயிற்று.
————-
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குலமே.–55-
பதவுரை
| தொகை இறந்த |
–
|
கணக்கில்லாத |
| பண் தரு வேதங்கள் |
–
|
ஸ்வர ப்ரதாநங்களான வேதங்கள் |
| பார் மேல் |
–
|
இப் பூமியிலே |
| நிலவிட |
–
|
ஒங்கி வளரும்படி |
| பார்த்தருளும் |
–
|
செய்தருளினவரும் |
| கொண்டலை |
–
|
பரம உதாரரும், |
| கண்டவர் சிந்தை கவரும் |
–
|
கணடவர்களின் நெஞ்சைக் கவர்கின்ற |
| கடி பொழில் |
–
|
மண மிக்க சோலைகள் சூழ்ந்த |
| தென் அரங்கன் |
–
|
தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால் |
| குலாவும் |
–
|
கொண்டாடப் படுபவருமான |
| இராமாநுசனை |
–
|
எம்பெருமானாரை |
| மேவித் தொழும் குடி |
–
|
பொருந்தி ஆச்ரயிக்கிற குலம் |
| எங்கள் கோக்குலம் ஆம் |
–
|
எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடிய குலமாம். |
எம்பெருமானாரை அடிபணிந்து உஜ்ஜீவிக்கும் மஹான்கள் தாம் அடியேனை ஆள்வற்கு உரியவர்கள் என்றாராயிற்று
ஸ்ரீ ராமாநுஜ பக்தர்களுக்கு அடியேன் தாஸனாயிருப்பேன் என்றாவது
இராமாநுனை மேவித் தொழுங்குடி எங்கள் கோக்குலமாம்
ஸ்ரீ எம்பெருமானாரன்று எமக்கு ஸ்வாமி; அவரை ஆச்ரயிப்பவர்களே எமக்கு ஸ்வாமிகள்.
கோ என்பதற்கு மேன்மையென்றும் பொருள் உண்டாதலால், எங்கள் கோக்குலம் – எங்களுடைய மேன்மையான குலம் (எப்படிப்பட்டதென்றால்), இராமாநுசனை மேவித் தொழுங்குடியாம் -, என்பதாகவும் உரைக்கலாம்.
“எங்கள் கோக் குடியே” என்றும் பாடமுண்டு; பொருள் ஒன்றே.
——–
கோக்குல மன்னரை மூ வெழு கால், ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை அடைந்தபின், என்
வாக்குரையாது, என் மனம் நினை யாதினி மற்றொன்றையே.–56-
பதவுரை
| கோக்குலம் மன்னரை |
–
|
க்ஷத்திரிய குலத்து அரசர்களை |
| மூ எழு கால் |
–
|
இருபத்தொரு தலைமுறையளவும் |
| ஒரு கூர் மழுவால் |
–
|
கூர்மை பொருந்திய ஒரு மழுவாலே |
| போக்கிய |
–
|
(பரசுராமாவதாரத்தில்) தொலைத்தருளின |
| தேவனை |
–
|
எம்பெருமானை |
| போற்றம் |
–
|
துதிக்கின்ற |
| புனிதன் |
–
|
பரம பரிசுத்தரும், |
| புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி |
–
|
உலகமெங்கும் பரவின புகழை யுடையவருமான |
| இராமாநுசனை |
–
|
எம்பெருமானாரை |
| அடைந்த பின் |
–
|
ஆச்ரயித்த பின்பு |
| இனி |
–
|
மேலுள்ள காலமெல்லாம் |
| மற்று ஒன்றை |
–
|
வேறு எந்த விஷயத்தையும் |
| என் வாக்கு |
–
|
எனது வாக்கானது |
| உரையாது |
–
|
சொல்லமாட்டாது; |
| என் மனம் |
–
|
எனது மனமும் |
| நினையாது |
–
|
நினைக்கமாட்டாது. |
அடைந்ததற்பின் வாக்குரையாது என்மனம் நினையாது” என்றும் பாடமுண்டாம்.
——————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –