ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-81-108 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

சோர்வின்றி உன்றன் துணை யடிக் கீழ்த்,தொண்டு பட்டவர் பால்

சார்வின்றி நின்ற எனக்கு, அரங்கன் செய்ய தாளிணைகள்

பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனி யுன்

சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே.–81-

 

பதவுரை

உன் தன் துணை அடி கீழ் சோர்வு இன்றி

தேவரீருடைய உபய பாதங்களின் கீழே
தொண்டு பட்டவர் பால்

சோராமல் அடிமைப் பட்டவர்கள் விஷயத்தில்
சார்வு இன்றி நின்ற எனக்கு

பொருத்த மில்லாமலிருந்த எனக்கு
இன்று

இன்றைத் தினத்தில்
அரங்கன் செய்ய தாள் இணைகள்

பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடி யிணைகளே
பேர்வு இன்றி பெறுத்தும் இராமா நுசா

ஒரு காலும் விட்டு நீங்காத படி சிரோ பூஷணமாகத் தந்தருளின எம்பெருனாரே!
இனி

இப்படியான பின்பு
தெரிவுறில்

ஆராயுமளவில்
உன்

தேவரீருடைய
சீர் ஒன்றிய கருணைக்கு

சிறந்த திருவருளுக்கு
மாறு இல்லை

ஒப்பு இல்லை

 

————-

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீவினையால்

உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்

பொருவற்ற கேள்விய னாக்கி நின் றானென்ன புண்ணியனோ!

தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர் முகிலே.–82-

 

பதவுரை

தெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது

தெளிவான ஞானத்தைச் சேரப் பெறாமல்
வெம் தீ வினையால்

மிகவுங் கொடிகான கருமத்தாலே
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை

உபயோகமற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலை யில்லாமல்) திரிகிற என்னை
ஒரு பொழுதில்

ஒரு க்ஷண காலத்தில்
பொருவு  அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான்

ஒப்பற்ற பஹூ ச்ருதனாக ஆக்கி யருளினவரும்
தெரிவு உற்ற கீர்த்தி

ப்ரஸித்தமான புகழை யடையவரும்
சீர் முகில் என்னும்

(ஔதார்யத்தில்) சிறந்த மேகமென்னத் தக்க வருமான
இராமாநுசன்

எம்பெருமானார்
என்ன புண்ணியனோ

என்ன தார்மிகரோ? (ஒப்பற்ற தர்மிஷ்டரென்றபடி.)

———

சீர் கொண்டு பேரறம் செய்து,நல் வீடு செறிதும் என்னும்

பார் கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்,உன் பத யுகமாம்

ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய

கார் கொண்ட வண்மை இராமா னுச! இது கண்டு கொள்ளே.–83-

 

பதவுரை

இராமநுசா

எம்பெருமானாரே!,
சீர் கொண்டு

சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய்
பேர் அறம் செய்து

சிறந்த தருமமாகிய சரணாகதி யோகத்தை யநுஷ்டித்து
நல் வீடு செறிதும் என்னும்

பரம புருஷார்த்தமான மோக்ஷத்தை அடைந்திடுவோம் என்றிருக்கிற
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன்

ப்ரஸித்தமான ப்ரபாவத்தையுடைய  ப்ரபந்நர்களுடைய கோஷ்டியில் நான் சேர்ந்தவனல்லேன்;
உன் பத யுகம் ஆம்

தேவரீருடைய உபய பாதங்களாகிற
ஏர் கொண்ட வீட்டை

பரம விலக்ஷணமான மோக்ஷத்தை
எளிதினில் எய்துவன்

ஸுலபமாக அடைந்திடுவேன்;
கார் கொண்ட

(ஔதார்யத்தில்) மேகத்தை வென்றிருக்கிற தேவரீருடைய
வண்மை இது

ஔதார்யம் இப்படிப்பட்டது;
கண்டுகொள்

தேவரீரே இதனைக் கண்டு கொள்ளலாம்.

(அடியேன் சொல்ல வேணுமோ?)

 

சரம ச்லோகத்திலே கண்ணபிரான் நியமித்தபடியே நாம் சரணாகதியை அநுஷ்டித்து விட்டோமாகையால்

நமக்கு மோக்ஷம் கைபுகுந்துவிட்ட தேயாமென்று அறுதியிட்டிருக்கும் மஹான்களில் அடியேன் சோர்ந்தவனல்லேன்;

அப்படி அடியேன் ஒன்றும் அநுஷ்டிக்கவில்லை.

தேவரீருடைய திருவடிகளாகிற மோக்ஷத்தை அடைந்திடத் தடையில்லை யென்கிற மனவுறுதியே அடியேனுக்குள்ளது என்றாராயிற்று.

———

கண்டு கொண் டேனெம் இராமா னுசன் றன்னை காண்டலுமே

தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற் றாளில் என் தொல்லை வெந் நோய்

விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்று

உண்டு கொண்டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.–84-

 

பதவுரை

எம் இராமாநுசன் தன்னை

ஸ்வாமி எம்பெருமானாரை
இன்று கண்டு கொண்டேன்

இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்;
காண்டலுமே

இப்படி தெரிந்து கொண்டவளலிலே
அவன் தொண்டர் பொன் தாளில்

அவரது பக்தர்களுடைய அழகிய திருவடிகளில்
தொண்டு கொண்டேன்

அடிமைப் பட்டேன்; (அதனால்)
என் தொல்லை வெம் நோய்

எனது பழைய கொடு வினைகளை
விண்டு கொண்டேன்

நீக்கிக் கொண்டேன்,
அவன் சீர் வெள்ளம் வாரியை

அவருடைய கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலை
வாய் மடுத்து உண்டு கொண்டேன்

வாயார அநுபவிக்கப் பெற்றேன்;
இன்னம் உற்றன

இப்படியாக இன்னமும் நான் பெற்ற நன்மை களை
ஒதில்

சொல்லத் தொடங்கினால்
உலப்பு இல்லை

(அதுக்கு) ஒரு முடிவு கிடையாது.

—————-

ஓதிய வேதத்தின் உட் பொருளாய், அதன் உச்சி மிக்க

சோதியை நாதன் என வெறியா துழல் கின்ற தொண்டர்

பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும் பெரியோர்

பாத மல்லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை.–85-

 

பதவுரை

ஓதிய வேகத்தின் உள் பொருள் ஆய்

அத்யயநம் பண்ணப்படுகிற வேதங்களின்

உட் பொருளாயும்

அதன் உச்சி மிக்க சோதியை

அந்த வேதங்களின் முடிவாகிய உபநிஷத்துககளிலே மிகவும் விளங்குபவனாயுமிள்ள ஸ்ரீ மந் நாராயணனை
நாதன் என அறியாது

ஸர்வ சேஷி யென்று தெரிந்து கொள்ளாமல்
உழல்கின்ற தொண்டர்

கண்ட விடங்களிலும் அடிமை செய்து திரிகின்ற பாமரர்களுடைய
பேதைமை

அவிவேகத்தை
தீர்த்த

போக்கடித்த
இராமாநுசனை

எம்பெருமானாரை
தொழும்

ஸேவிக்கின்ற
பெரியோர்

மஹான்களுடைய
பாதம் அல்லால்

திருவடிகள் தவிர
என் தன் ஆர் உயிர்க்கு

எனது அருமையான ஆத்மாவுக்கு
யாது ஒன்றும் பற்று இல்லை

வேறு ஏதேனும் புகலிடமில்லை.

கீழ்ப் பாட்டிற் கூறின அத்யவஸாயம் எனக்கு கலியன் கொடுமையினால் ஒருகாலத்தில் மாறி விடக் கூடுமென்று நினைக்கிறீர்களோ,

அப்படி நினைக்க வேண்டா; இராமாநுசனடியார் திறத்தில் கலி புருஷன் ஒரு கொடுமையும் செய்ய முடியாதவன்;

மற்றவர்களைத் தான் கலி புருஷன் கெடுப்பன். எனது அத்யவஸாயம் நெடுநாளளவும் நிலை நிற்கக் கூடியதே என்றாராயிற்று.

———-

பற்றா மனிசரைப் பற்றி, அப் பற்று விடாதவரே

உற்றா ரென வுழன்றோடி நையேனினி, ஒள்ளிய நூல்

கற்றார் பரவும் இராமா னுசனைக் கருது முள்ளம்

பெற்றார் எவர், அவரெம்மை நின்றாளும் பெரியவரே.–86-

 

பதவுரை

பற்றா மனிசரை பற்றி

உபயோக மற்ற மநுஷ்யர்களைப் பற்றி
அப் பற்று விடாது

அந்தப் பற்றுதலை விடாமல்
அவரே உற்றார் என

அவர்களையே உறவினராகக் கொண்டு
உழன்று

அவர்கள் பினனே அலைந்து
ஓடி

அவர்களிட்ட காரியங்களைச் செய்ய ஓடி
இனி நையேன்

இனி மேல் துவள மாட்டேன்;
ஒள்ளிய நூல் கற்றார்

சிறந்த சாஸ்த்ரங்களைக் கற்றவர்களாலே
பரவும்

கொண்டாடப் படுகிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
கருதும் உள்ளம் பெற்றார் யவர்

அநுசந்திக்கும்படியான நெஞ்சை யுடையோர் யாவரோ,
அவர்

அந்த மஹான்களே
எம்மை

நம்மை
நின்று ஆளும் பெரியவர்

சாஸ்வதமாக அடிமை கொள்ளும் மஹாத்மாக்கள்.
ஒள்ளிய நூல்

“சுடர்மிகு சுருதி” என்றார் ஆழ்வாரும்.

———–

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட்

குரிய சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர்

தெரியும் வண் கீர்த்தி இராமா னுசன் மறை தேர்ந்துலகில்

புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே.–87-

 

பதவுரை

பெரியவர் பேசிலும்

ஞான சக்திகளால் நிறைந்த மஹான்கள் பேசினாலும்
பேதையர் பேசிலும்

ஒன்றுந் தெரியாதவர்கள் பேசினாலும்
தன் குணங்கட்கு உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று

தனது திருக்குணங்களுக்கு ஏற்ற சொற்களை எப்போதும் உடையவரென்று பலகாலுஞ் சொல்லி
உணர்வில் மிக்கோர் தெரியும்

சிறந்த ஞானிகள் அநுஸந்திக்கிற
வண் கீர்த்தி

திவ்ய கீர்த்தியை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானார்
மறை தேர்ந்து

வேதங்களை ஆராய்ந்து
உலகில்

இவ் வுலகத்தில்
புரியும்

உபதேசித்தருளின
நல் ஞானம் பொருந்தாதவரை

நல்ல ஞானத்தில் சேராதவர்களை
கலி பொரும்

கலி புருஷன் பீடிப்பன்.

கீழ்ப்பாட்டில் “அவன் சீர் வெள்ளவாரியை வாய்மடுத்து. உண்டு கொண்டேன்” என்றும்

“அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன்” என்றும் சொன்ன இரண்டு விஷயங்களுள்

முதற்சொன்ன விஷயமே (அதாவது-ஸ்ரீராமாநுஜ பக்தர்களுக்கு பக்தனாயிருப்பதே) எனக்குள் சிறந்த உத்தேச்யமென்றாகிறார் இதில்.

(பெரியவர் பேசிலும் இத்யாதி) இதன் கருத்து யாதெனில்-

எம்பெருமானாருடைய திருக்குணங்களை மஹா ஞானிகள் தாம் பேசி முடிக்க வல்லவர்கள்;

அற்பஞானிகள், நம்மால் பேசமுடியாதென்று பின் வாங்கக் கூடியவர்கள்; என்பதில்லை;

“ தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப” என்றும்

“பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வாச மலர்த் துழாய் மாலையான் -வடிவு” என்றும் சொன்னாற்போல,

பெரியோர் சொன்னாலும் சிறியோர் சொன்னாலும் அவரவர் களுடைய யோக்யதைக்குத் தக்கபடி சொல்லித்

துதிக்கத் தகுந்தவர் எம்பெருமானார் என்று பெரியோர்கள் தெரிந்துகொண்டு,

நாம் நமது சக்திக்குத்தக்கபடி ஸ்தோத்ரம் பண்ணுவோமென்று துதிக்கின்றார்களென்கை.

அப்படி துதிக்கப்படுகின்ற எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தை அநாதரித்து

அவ் வுபதேசத்தின்படி நடவாதவர்களே கலி தோஷத்தினால் வருந்துவார்களென்றதாயிற்று.

———

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்

ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால்

வலி மிக்க சீயம் இராமா னுசன் மறை வாதியராம்

புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.-88

 

பதவுரை

கலி மிக்க

நில வளம் மிகுந்த
செந்நெல் கழனி

செந்நெல் கழனிகளை யுடைய
குறையல்

திருக் குறையலூரில் அவதரித்தவராய்
கலை பெருமான்

சாஸ்த்ர மென்னும்படியான திவ்ய ப்ரபந்தகளை யருளிச் செய்த திரு மங்கை யாழ்வாருடைய
மிக்க ஒலி பாடலை

அதிசயித்த இசையை யுடைய பெரிய திருமொழியை
உண்டு

அநுபவித்து
தன் உள்ளம் தடித்து

தமது திருவுள்ளம்
அதனால் வலி மிக்கம்

அத்தால் மிடுக்கு அதிகரித்த
சீயம்

சிங்கம் போன்ற
இராமாநுசன்

எம்பெருமானார்,
மறை வாதியர் ஆம் புலி மிக்கது என்று இப்புவனத்தில் வந்தமை

வேதத்தில் துர்வாதங்கள் பண்ணுகிற குத்ருஷ்டிகளாகிற புலிகள் அதிகமாய் விட்டன வென்று (அவற்றைத் தண்டிப்பதற்காக ) இவ்வுலகில் அவதரித்த படியை
போற்றுவன்

புகழ்ந்திடக் கடவேன்.

கலிமிக்க செந்நெற்கழனி = கலியாவது ஆரவாரம்; உழுவது நடுவது அறுப்பதாய்ச் செல்லுகிற கோலாஹலம்.

————

போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ் தெரிந்து

சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர் தனக்கோர்

ஏற்றமென் றே கொண் டிருக்கிலுமென் மனம் ஏத்தி யன்றி

ஆற்றகில்லாது, இதற் கென்னினைவா யென்றிட் டஞ்சுவனே.–89-

 

பதவுரை

போற்ற அரு சீலத்து

புகழ்ந்து தலைக் கட்ட முடியாத சீல குணத்தையுடைய
இராமாநுச

எம்பெருமானாரே;
நின் புகழ்

தேவரீருடைய திருக் குணங்களை
தெரிந்து சாற்றுவனேல்

உணர்ந்து பேசுவேனாகில்
அது

(நீசனாகிய நான் ) பேசுகிறவது
தாழ்வு

(தேவரீருக்கு) அவத்யமாம்;
அது தீரில்

அப்படி நான் பேசுவது தவிர்த்தல்
உன் சீர் தனக்கு ஒர் ஏற்றம்

தேவரீருடைய திருக் குணங்களுக்கு மேன்மை யாகும்
என்றே கொண்டு இருக்கிலும்

என்று நான் தெரிந்து கொண்டிருந்தாலும்
என் மனம்

எனது நெஞ்சானது
ஏத்தி அன்றி

(தேவரீருடைய திருக் குணங்களைப்) புகழ்ந்தல்லது
ஆற்ற கில்லாது

தரித்திருக்க மாட்டாது;
இதற்கு

இவ்விஷயத்திலே
என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவன்

தேவரீர் என்ன நினைக்குமோ வென்று பயப்படுகிறேன்.

———-

நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே

எனையாள வந்த இராமா னுசனை இருங்கவிகள்

புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்

வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே.–90-

 

பதவுரை

பிறவியை நீக்கும் பிரானை

ஸம்ஸாரத்தை யொழிக்கும் உபகாரகராயும்
இ நீள் நிலத்தே

இப் பெரிய பூமியிலே
எனை ஆள

என்னை அடிமை கொள்வதற்கே
வந்த

அவதரித்தவராயுமுள்ள
இராமாநுசனை

எம்பெருமானாரை
நினையார்

சிந்தியாதவர்களாயும்,
இரு கவிகள் புனையார்

(அவர் விஷயமாக) நல்ல பாடல்களையும் பாடாதவர்களாயும்
புனையும் பெரியவர் தாள்களில்

(ஏதோ பாக்கியத்தாலே) பாடல்களைப் பாடுகிற மஹான்களின் திருவடிகளில்
பூ தொடையல்வனை யார்

புஷ்ப மாலைகளை ஸமர்ப்பியாதவர்சளாயுமுள்ள
மாந்தர்

மனிசர்கள்
மருள் சுரந்து

அஜ்ஞானம் அதிகமாகப் பெற்று
பிறப்பில் வருந்துவர்

ஸம்ஸாரத்ததிற் கிடந்து துன்பப்படுவர்கள்.

கீழ்ப்பாட்டில் அஞ்சுவனே என்ற விவருடைய அச்சம் தீரும்படி குளிரக் கடாக்ஷித்தார் எம்பெருமானார்;

அந்தக் கடாக்ஷ வைபவத்தாலே அச்சம் தீரப்பெற்றுத் தேறுதலடைந்து,

மநோவாக்காயங்களில் ஏதேனாமொன்றால் எம்பெருமான்றால் எம்பெருமானார் விஷயத்தில் ஒரு நன்மை செய்து

வாழ்ந்து போகலாமாயிருக்க, பாவிகள் அதுசெய்யாதே பாழாய்ப் போகிறார்களே! என அநுதபிக்கிறார் இதில்.

———–

மருள் சுரந் தாகம வாதியர் கூறும்,அவப் பொருளாம்

இருள் சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டிய  சீர்

அருள் சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்

பொருள் சுரந் தான், எம் இராமா னுசன் மிக்க புண்ணியனே.–91-

 

பதவுரை

ஆகம வாதியர்

(சிவன் சொன்ன) சைவ ஆகமத்தைப் பிரமாணமாகக் கொண்டு வாதம் பண்ணுகிற பாசுபதர்கள்
மருள் சுரந்து

அஜ்ஞானம் அதிகரிக்கப் பெற்று
கூறும்

(சிவனுடைய பரத்துவ விஷயமாகச் சொல்லுகிற
அவம் பொருள் ஆம் இருள் சுரந்து

நீசமான அர்த்தங்களாகிற இருள் மேலிட்டு (அதனால்)
எய்த்த

கெட்டுப் போன
உலகு

உலகத்தவர்களுடைய
இருள்

அஜ்ஞாநாந்தகாரமானது
நீங்க

போகும்படியாக
தன்

தம்முடைய
ஈண்டிய சீர் அருள் சுரந்து

விலக்ஷணமான க்ருபையைப் பெருக்கி
எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள்

“எல்லாப் பிராணிகளுக்கும் ஸ்வாமி ஸ்ரீரங்க நாதனே’ என்கிற அர்த்தத்தை
சுரந்தான்

வெளியிட்டவரான
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
மிக்க புண்ணியன்

சிறந் புண்ணியாத்மா

இந்த ஸம்ஸாரிகளுடன் இப்படி விமுகராயிருக்கச் செய்தேயும் இவர்களைத் தம்பேற்க. உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக எம்பெருமானார் முயன்றதைச் சிந்தித்து அவரைக் கொண்டாடுகிறார்.

மிக்க புண்ணியனான எம்மிராமாநுசன் பொருள் சுரந்தான் என்றும், பொருள் சுரந்தவனான எம்மிராமாநுசன் மிக்க புண்ணியன் என்றும் இரண்டுபடியும் யோஜிக்கலாம்;.

———-

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,அடி போற்றி செய்யும்

நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன்,செம்மை நூற் புலவர்க்

கெண்ணருங் கீர்த்தி இராமா னுச! இன்று நீ புகுந்தென்

கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே.–92-

 

பதவுரை

செம்மை நூல் புலவர்க்கு

நல்ல சாஸ்த்ரங்களைக் கற்றுக் கவி சொல்ல வல்லவர்களுக்கும்
எண்ண அரு கீர்த்தி இராமாநுச

அளவிட முடியாத கீர்த்தியை யுடைய
இராமாநுச

எம்பெருமானாரே!,
புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன்

புண்ணியமான ஒரு விரதத்தையும் அடியேன் அநுஷ்டிக்க வில்லை;
அடி போற்றி செய்யும்

தேவரீருடைய திருவடிகளை வாழ்த்துகைக்கு உறுப்பான
நுண் அரு கேள்வி

ஸுக்ஷ்மமாய் அருமையான ஸ்ரவணத்தை
நுவன்றும் இலேன் இன்று

(செய்ய வேணு மென்று வாயாலே) சொல்லவுமில்லை (அப்படி யிருந்தும் இன்று
 

 
என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்

அடியேனது கண்ணினுள்ளேயும் நெஞ்சினுள்ளேயும்
புகுந்து நின்ற இக் காரணம் கட்டுரை

புகந்து எழுந்தருளி யிருப்பதற்குக் காரண மருளிச் செய்ய வேணும்.

———–

கட்டப் பொருளை மறைப் பொரு ளென்று கயவர் சொல்லும்

பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே,என் பெரு வினையைக்

கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னு மொள் வாளுருவி

வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே.–93-

 

பதவுரை

கிட்டி

அடியேன் பக்கல் வந்து நெருங்கி
தன் அருள் என்னும் ஒரு வாள் உருவி

தம்முடைய கிருபையாகிற அழகிய வாளை உறையில் நின்றும் கழற்றி (அதனால்)
என் பெரு வினையை கிழங்கொடு வெட்டி களைந்த

எனது மஹா பாபங்களை வேரோடே அறுத்தொழித்த
இராமாநுசன் என்னும் மெய் தவன்

எம்பெருமானா ரென்கிற மா முனிவர் எப்படிப் பட்டவரென்றால்
கயவர்

துஷ்டர்களான குத்ருஷ்டிகள்
கட்டம் பொருனை மறை பொருள் என்று சொல்லும் பெட்டை

தப்பான அர்த்தங்களை வேதங்களின் அர்த்தமாகக்கொண்டு சொல்லுகிற பிரட்டுப் பேச்சுகளை
கெடுக்கும் பிரான் அல்லனே

கண்டித் தொழித்த மஹா நுபவரமனறோ.

கட்டம்-கஷ்டம்; கட்டப்பொருளொன்றது கஷ்டப்பட்டுச் சொல்லும் பொருள் என்றபடி;

மதாந்தரஸ்தர்கள் சொல்லும் பொருள்கள் அஸ்வரஸமாகையால் க்லிஷ்டங்களாயிருக்குமென்க.

கயவர்-நீசர்,

துஷ்டர் பெட்டு = பிறரை வஞ்சிக்கச் சொல்லும் பொய்ப் பேச்சு.

மெய்த்தவனே-மெய்த்–தவமாவது சரணாகதி யோகம்.

———–

தவந் தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப் பிறவிப்

பவந் தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்

திவந் தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்

குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள் மகிழ்ந்தே.–94-

 

பதவுரை

தீது இல் இராமாநுசன்

எவ்வகைக் குற்றமும் அற்றவரான எம்பெருமானார்
தன்னை சார்ந்தவர்கட்கு

தம்மை வந்து அடைந்த வர்களுக்கு
தவம் தரும்

சரனாகதி நிஷ்டையைக் கொடுத்தருள்வர்;
சரியா பிறவி பவம் தரும் தீவினை

நிவர்த்திக்க முடியாத ஜந்ம ஸம்ஸாரங்களை உண்டாக்குகின்ற கொடு வினைகளை
பாற்றி தரும்

போக்கடித் தருள்வர்;
பரம் தாமம் என்னும் திவம் தரும்

பரமபத மென்று சொல்லப்படுகிற வானுலகத்தை அளிப்பர்; (ஆன பின்பு)
யான்

அடியேன்
அவன் சீர் அன்றி

அவ் வெம்பெருமானாருடைய திருக்குணங்களைத் தவிர்த்து
ஒன்றும்

வேறொன்றையும்
உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன்

மனக் காதலோடே விரும்பி அநுபவிக்க மாட்டேன்.

இப்பாட்டில், தரும் என்னும் பதம் ஐந்து இடங்களில் வருகின்றது.

இரண்டாமடியின் முதலிலுள்ள தரும் என்பது மாத்திரம் தீவினைக்கு விசேஷணம்;

மற்ற நான்கும் எம்பெருமானார் பக்கல் அந்வயிக்குமட் வினைமுற்றுக்கள்.

“சலியாப்பிறவி, சரியாப்பிறவி” என்பன பாட பேதங்கள்.

பவம். வடசொல்.

பரந்தாம. வடசொல்.

திவம். வடசொல் விகாரம்.

———

உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே

பண்ணும் பரனும் பரிவில னாம்படி பல் லுயிர்க்கும்

விண்ணின் தலை நின்று வீடளிப்பானெம் இராமானுசன்

மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே.–95-

 

பதவுரை

உயிர்களுக்கு உள் நின்று

எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி யாயிருந்து கொண்டு
உற்றனவே செய்து

ஹிதமானவற்றையே நடத்திக் கொண்டு
அவர்க்கு

அவ் வாத்மாக்களுக்கு
உயவே பண்ணும் பரனாம்

உஜ்ஜீவநத்தையே பண்ணிக் கொண்டிருக்கிற எம்பெருமானாம்
பரிவு இலன் ஆம படி

(ஆத்மாக்களிடத்தில் எம்பெருமானாரைப் போல்) ப்ரதியுடையவனால்லன் என்ன வேண்டும் படியா
பல் உயிர்க்கும்

ஸகல ஆத்மாக்களுக்கும்
வீடு அளிப்பான்

மோக்ஷத்தை அருள்வதற்காக
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
விண்ணின் தலை நின்று

ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும்
மண்ணின் தலத்து உதித்து

இப் பூதலத்திலே அவதரித்து
உய் மறை நாலும்

எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவான நான்கு வேதங்களையும்
வளர்த்தனன்

குறைவின்றி வளரச் செய்தருளினார்.

*இப்பாட்டின் ஈற்றடியை “மண்ணின் தலத்துதித்து மறை நாலும் வளர்த்தனனே” என்றே அத்யாபகர்கள் ஒதுவர்கள்.

“நேர் பதினாறே” என்ற கட்டளைக் கலித் துறையின் இலக்கணப்படி பதினாறெழுத்து ஒத்திருந்தாலும் தளை தட்டுகிறபடியாலும்,

மணவாளமாமுனி களுரையில் “ஸர்வோஜ்ஜீவந சாஸத்ரமான” என்கிற ஒரு வாக்கியம் வ்யர்த்தமாக வேண்டி வருகையாலும்

இவ்விரண்டு குறைகட்கும் இடமறும்படி “ உய் மறைநாலும்” என்கிற ப்ராசீந பாடம் கொள்ளத்தக்கது:

உய் என்பதற்குப் பொருளாகவே மணவாள மாமுனிகள் ஸர்வோஜ்ஜீவந சாஸ்த்ரமான” என்கிற வாக்கியமருளிச் செய்தாரென்க.

———-

வளரும் பிணி கொண்ட வல் வினையால்,மிக்க நல் வினையில்

கிளரும் துணிவு கிடைத் தறி யாது முடைத் தலை யூன்

தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்

குளரெம் இறைவர் இராமா னுசன் றன்னை உற்றவரே.–96-

 

பதவுரை

வளரும் பிணி கொண்ட வல் வினையால்

அளவற்ற துன்பங்களை யுண்டாக்க வல்ல கொடிய கருமங்களாலே
மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத் தறியாது

மஹா விச்வாஸம் கிடைக்காததனால்
முடை தலை ஊன் தளரும் அளவும்

கெட்ட நாற்றங்களுக்கு இருப்பிடமான சரீரம் கட்டுக் குலையும் வரையில்
தரித்தும் விழுந்தும்

ஒருவாறு தரித்திருந்தும் (சப்தாதி விஷயங்களிலே) போய் விழுந்தும்
தனி திரிவேற்கு

துணை யின்றித் திரிகிற எனக்கு
இறைவர்

ஸவாமிகள் (யாரென்றால்,
எம் இராமாநுசன் தன்னை உற்றவர்

நம் எம்பெருமானாரை ஆச்ரயித்த மஹான்கள்
உளர்

இருக்கிறார்கள்.

————-

தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினோர்,மன்னு தாமரைத் தாள்

தன்னை யுற் றாட் செய்ய என்னை யுற் றானின்று தன் தகவால்

தன்னை யுற்  றாரன்றித் தன்மை யுற் றாரில்லை என்றறிந்து

தன்னை யுற் றாரை இராமா னுசன் குணம் சாற்றிடுமே.–97-

 

பதவுரை

இராமாநுசன்

எம்பெருமானாரானவர்,
தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து

தம்மைப் பற்றி யிருப்பாருண்டே யொழிய தம்மைப் பற்றிய யிருப்பவர்களுடைய குண கீர்த்தனம் பண்ணும் ஸ்வ பக்த பக்தர்கள் ஒருவருமில்லை யென்று திரு வுள்ளம் பற்றி
என்னை

அடியேனை
இன்று

இன்றைத் தினத்தில்
தன் தகவால்

தமது அருளாலே

(என்ன செய்தாரென்றால்)

தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர்

தம்மை யடைந்து கைங்கரியம் பண்ணும் ஸ்வபாவ முடையரான ஸ்வ பக்தர்களுடைய
மன்னு தாமரை தாள் தன்னை உற்று ஆள் செய்ய

ஒன்றோடொன்று சேர்ந்த திருவடித் தாமரைகளை நான் அடைந்து ஆட் செய்யும்படி
உய்த்தான்

வைத்தருளினார்.

எம்பெருமானார் என்னைத் தம்மிடத்து ஆட்படுத்திக் கொள்ளாமல் தம்மை அடுத்தவர்கள் பக்கல் என்னை ஆட்படுத்தினார்.

இதற்கு என்ன காரண மென்கிறீர்களோ?

எல்லாரும் நம்மையே நேராக வந்து ஆச்ரயிக்கிறார்களே யொழிய நம்மை ஆச்ரயித்தவர்களை ஆச்ரயிப்பார் ஆருமில்லையே,

இவ்வமுதனார், நம்மை ஆச்ரயித்தவர்களை ஆச்ரயிக்கிற அதிகாரியாக இருக்கட்டும் – என்று திருவுள்ளம் பற்றிச் செய்தார்.

இப்பாட்டின் அந்வய க்ரமம் சிறிது வருத்தப்படுத்தும்;  ஜாகரூகராயிருந்து அந்வயித்துக்கொள்க;-

தன்னையுற்றாரன்றித் தன்னை யுற்றாரைக் குணம் சாற்றிடுந் தன்மை யுற்றாரில்லை யென்றறிந்து, இராமாநுசன்,

தன்னை யுற்றாட்செய்யுந் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள் தன்னை யுற்று ஆட்செய்யத் தன் தகவால் இன்று என்னை யுய்த்தான்-என்று அந்வயம்.

சாற்றிடும் என்கிற விசேஷண பதம் பாட்டின் முடிவில் வந்து நின்றது அபூர்வப் பிரயோகமென்பர்.

என்னை யுற்றான் என்று ஓதுவர்கள்.

———–

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்

சுடுமே யவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்

நடுமே யினி நம் இராமா னுசன் நம்மை நம் வசத்தே

விடுமே சரண மென் றால், மனமே! நையல் மேவுதற்கே?–98-

 

பதவுரை

நம் இராமாநுசன்

நம் எம்பெருமானார்,
சரணம் என்றால்

உமது திருவடிகளே சரணமென்று நாம் சொல்லி விட்டோ மானால்
இனிய சுவர்க்கத்திலே இடுமே

(சிலர்க்கு) இனிதாகத் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே நம்மைக் கொண்டு சேர்த்திடுவரோ?
இன்னம்

அல்லது
நரகில் இட்டு சுடுமே

நரகத்திலே கொண்டு தள்ளி தஹிக்கச் செய்வரோ?
அவற்றை தொடர் தரு

அந்த ஸ்வர்க்க நகரங்களைத் தொடர்ந்து கிடக்கிற
தொல்லை சுழல் பிறப் பில்

அநாதியாயும் சுழன்று வருவதாயுமுள்ள ஜன்மத்திலே
நடுமே

நிறுத்துவரோ?
இனி

மேலுள்ள காலங்களில்
நம்மை

நம்மை
நம் வசத்தே விடுமே

நாம் போகிற வழியே விட்டு வைப்பரோ?

(இவை செய்ய மாட்டாரான பின்பு)

மனமே!

ஒ நெஞ்சே!
மேவுதற்கு

பேறு பெறும் விஷயமாக
நையல்

நீ கரைய வேண்டா.

————-

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்

சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும்

நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே

பொற் கற் பகம், எம் இராமா னுச முனி போந்த பின்னே.-99–

 

பதவுரை

தற்கம் சமணரும்

தர்க்கம் பண்ணுகிற சமணர்களும்
பேய்

பேய் போலே பிடித்த பிடி விடாதே நிற்கிற
சாக்கியர்களும்

பௌத்தர்களும்
தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்

ருத்ரனாடைய சொல்லாகிய சைவ மதத்தைக் கற்ற தாமஸர்களான சைவர்களும்
சூனிய வாதரும்

சூந்நிய வாதிகளும்
நால் மறையும் நிற்க

நான்கு வேதங்களும் விளங்கிக் கொண்டி ருக்கச்செய்தே
குறும்பு செய் நீசரும்

(அவற்றுக்குச் சேராத) அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும்
மாண்டனர்

ஒழிந்தார்கள்;

(எப்போது ? என்றால்)

பொன் கற்பகம் எம் இராமாநுச முனி

சிறந்த கல்ப வ்ருக்ஷம் போலே உதாரான ஸ்வாமி எம்பெருமானார்
நீள் நிலத்தே போந்த பின்

விசாலமான இப் பூமியிலே திரு வவதரித்த பின்பு.

———

போந்த தென் னெஞ்சென்னும் பொன் வண்டு உன தடிப் போதில் ஒண் சீர்

ஆம் தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி, நின் பாலதுவே

ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்

மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.–100-

 

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
என் நெஞ்சு என்னும் பொன் வண்டு

எனது நெஞ்சாகிற அழகிய வண்டானது
உனது அடி போதில்

தேவரீருடைய திருவடித் தாமரைகளில்
ஒண் சீர் ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி

அழகிய குணங்களாகிற தேனைப் பருகி நித்ய வாஸம் பண்ண விரும்பி
நின் பால்

தேவரீரிடந்தில்
போந்தது

வந்து சேர்ந்தது;
அதுவே

அத் திருக்குணங்களையே
ஈந்திட வேண்டும்

அளித்தருள வேணும்;
இது அன்றி

இத் திருக்குணங்களைத் தவிர
ஒன்றும்

வேறொன்றையும்
மாந்த கில்லாது

(நெஞ்சு) புஜிக்க மாட்டாது;
இனி

இப்படியான பின்பு
மற்று ஒன்று காட்டி

வேறொரு விஷயத்தைக் காட்டி
மயக்கிடல்

மயக்க வேண்டா

ஸ்வாமிந்! அடியேனுடைய நெஞ்சு தேவரீருடைய திருக் குணங்களையே எப்போதும் அநுபவிக்க விருப்பங் கொண்டு மேல் விழுந்து தேவரீரிடம் வந்து சேர்ந்தது. இது இனி வேறொன்றை விரும்பாது; தேவரீரும் இனி இதை ஸம்ஸாரத்தில் போக வொடட்டாமல் தேவரீனிடத்திலேயே நிலை நிறுத்திக் கொள்ள வேணும். என்றாராயிற்று.

தமது நெஞ்சை ஒரு வண்டாக ரூபணம் பண்ணினதற்கு ஏற்ப எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை மதுவாக ரூபணம் பண்ணினார்.

இந்த வண்டுக்கு அந்தந் தேன் தவிர வெறொன்றும் ரஸிக்க மாட்டாது.

மயக்கிடல் = முன்னிலை யெதிர் மறை வினை முற்று. –மயக்காதே என்றபடி

———-

மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதி மயங்கித்

துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி

உயக் கொண்டு நல்கும் இராமா னுச! என்ற துன்னை யுன்னி

நயக்கும் அவர்க்கி திழுக்கென்பர், நல்லவர் என்றும் நைந்தே.–101-

 

பதவுரை

மயக்கும்

“அஜ்ஞானத்தை விளைக்க வல்ல
இரு வினை

புண்ய பாப மென்னும் இரு கருமங்களாகிற
வல்லியல்

விலங்கில்
பூண்டு

அகப்பட்டுக் கொண்டு
மதி மயங்கி

அறிவுகெட்டு
துயக்கும்

ப்ரமிச்கச் செய்கிற
பிறவியியல்

ஸம்ஸாரத்திலே
தோன்றிய என்னை

சிறந்த அடியேனை
துயர் அகற்றி உய கொண்டு

துக்கங்களைப் போக்கி உஜ்ஜீவிக்கச் செய்து
நல்கும்

அருள்செய்கின்ற
இராமாநுச

எம்பெருமானாரே!
என்றது இது

என்று தேவதீருடைய பாவநத்வத்தைப்பேசு கையாகிற ஈது
உன்னை உன்னி நைந்து

தேவரீரை அநுஸந்தித்து உருகி
என்றும் நயக்கு

எப்போதும் ஆசையுடனிருப் பவர்களுக்கு
இழுக்கு என்பர் நல்லவர்

தகாதது என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.

எம்பெருமானார்க்கு பாவநத்வம் என்றும் போக்யத்வம் என்றும் இரண்டு படிகள் உண்டு.

பாவநத்வமாவது-பக்தர்களுடைய பாவங்களைப்போக்கிப் பரிசுத்தப்படுத்தல்.

போக்யத்வமாவது எப்போதும் அநுபவிக்கக் கூடியவராயிருக்கை.

இவ்விரண்டில் பாவநத்வத்தைவிட போக்யத்வமே சிறந்தது;

ஏனென்றால், நம்முடைய பாவங்களைப் போக்கினாரென்கிற காரணத்தாலே நாம் அவரைப் பாவநர் என்று அநுஸந்திக்க வேண்டும்;

இது ஒரு உபாதியைப்பற்றி வருவது;

போக்யத்வத்தை அநுஸந்திப்பதோ இப்படிப்பட்டதல்ல. அது ஸ்வரூப ப்ரயுக்தம்.

ஆகையாலே, பாவநத்வத்தை அநுஸந்திப்பதைவிட யோக்யதையை அநுஸந்திப்பதே சிறந்தது.

அப்படி யிருக்க இவ்வமுதனார் இப் பிரபந்தத்தில் அடிக்கடி எம்பெருமானாருடைய பாவநத்வத்தை அநுஸந்தித்தார்;

‘என்னுடைய பாவங்களை யெல்லாம் போக்கினார், என்னுடைய குற்றங்களை யெல்லாம் நீக்கினார்’ என்று அடிக்கடி சொல்லி யிருக்கிறார்.

அப்படி சொன்னதற்கு அநுதாபப்படுகிறார் இப்பாட்டில்,

போக்யதையில் ஈடுபட்டுப் பேசவேண்டியிருக்க, பாவநத்வத்தில் ஈடுபட்டமை தோற்றப் பேசினது பிசகு என்று பெரியோர்கள் சொல்லுவர்கள் என்றாராயிற்று.

———-

நையும் மனமும் குணங்களை உன்னி, என் நா விருந்தெம்

ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன்

கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ்

வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே?–102-

 

பதவுரை

(எம்பெருமானாரே!)

மனம்

எனது நெஞ்சானது
உன் குணங்களை உன்னி

தேவரீருடைய திருக் குணங்களைச் சிந்தித்து
நையும்

கரைகின்றது;
என் நா

எனது வாக்கானது
இருந்து

நிலை நின்று
எம் ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும்

எமக்கு ஸ்வாமியான எம் பெருமானாரே! என்று அழைகின்றது.
அரு வினையேன்

மஹா பாபியான என்னுடைய
கையும்

கைகளும்
தொழும்

அஞ்ஜலி பண்ணு கின்றன;
கண்

கண்களானவை
காண கருதிடும்

(தேவரீரை) ஸேவிக்க ஆசைப்படுகின்றன;
கடல் புடை சூழ் வையம் இதனில்

சுற்றிலும் கடல் சூழப்பெற்ற இப்பூமண்டலத்தினாள்ளே
உன் வண்மை

தேவரீருடைய ஔதார்ய குணம்
என்பால் வளர்ந்தது என்

அடியேன் மீது (இவ்விதமாக) வளர்ந்ததற்குக் காரணம் யாதோ?.

—————

வளர்ந்த வெங் கோப மடங்க லொன் றாய்,அன்று வாளவுணன்

கிளர்ந்த பொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து

விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய் வினை நோய்

களைந்து நன் ஞானம் அளித்தனன் கையிற் கனி யென்னவே.–103-

 

பதவுரை

அன்று

முன்னொரு காலத்தில்
வளர்ந்த வெம் கோபம் மடங்கல் ஒன்று ஆய்

கடூரமான கோபம் மேலிடப் பெற்ற ஒரு நரசிங்க மூர்த்தியாகி
வாள் அவுணன்

வாளை யுடைய ஹிரண்யா ஸுரனது
கிளர்ந்த

செருக்கினால் நெறித்திருந்த
பொன் ஆகம்

பொன் போன்ற மார்வை
கிழித்தவன்

கிழித்துப் பொகட்டவனான எம்பெருமானாடைய
கீர்த்தி பயிர் எழுந்து

திருப்புகழ்களாகிற பயிர் வளர்ந்து
விளைந்திடும் சிந்தை

விளையப் பெற்ற திரு வுள்ளத்தை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானார்
என் தன் மெய் வினை நோய் களைந்து

எனது உடலைப் பற்றி யிருக்கிற வினை நோய்களை யெல்லா மொழித்து
கையில் கனி என்ன

கை யிலங்கு நெல்லிக் கனி போலே ஸுலபமாக
நல் ஞானம் அளித்தனன்

விலக்ஷணமான ஞானத்தைத் தந்தருளினார்

—————-

கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன்

மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்

தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் வருள் நீ

செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங்கொண்டலே!–104-

 

பதவுரை

செழு கொண்டல்

ஔதார்யத்தில்) விலக்ஷணமான மேகம் போன்ற
என் இராமாநுச

எம்பெருமானாரே!

(தேவரீர்)

கண்ணனை

எம்பெருமானை
கையில் கனி என்ன

உள்ளங்கை நெல்லிக் கனி போலே
காட்டி தரிலும்

காட்டிக் கொடுத்தாலும்
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி யான் வேண்டிலன்

தேவரீருடைய திருமேனியில் விளங்குகிற ஸௌந்தரியமும் முதலிய குணங்களைத் தவிர வேறொன்றிலும் நான் கண் வைக்க மாட்டேன்;
நிரயம் தொய்யில்

ஸம்ஸார நரகக் குழியில்
கிடக்கிலும்

அழுந்திக் கிடந்தேனாகிலும்
சோதி விண் சேரிலும்

சோதி மயமான பரம பதத்தை அடைந்தேனாகிலும்
இவ் அருள்

(தேவரீருடைய திரு மேனி யழகை அநுபவித்திருக்கைக்கு உறுப்பான) கிருபையை
நீ செய்யில்

தேவரீர் செய்தருளினால் தான்
தரிப்பான்

(ஸம்ஸாரத்திலோ மோக்ஷத்திலோ) கால் பாவி நிற்பேன்.

நிரயத் தொய்யில் = நிரயமாவது நரகம்.

இந்த ஸம்ஸார நிலமே நரகமெனப்படும்.

தொய்யில்-சேறு. ஏழனாருபு தொக்கி யிருக்கிறது. தொய்யல் என்பாருமுளர்.

—————

செழுந் திரைப் பாற் கடல் கண்டுயில் மாயன் திருவடிக் கீழ்

விழுந்திருப் பார் நெஞ்சில் மேவு நன் ஞானி,நல் வேதியர்கள்

தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும் பெரியோர்

எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே.–105-

 

பதவுரை

செழு திரை பால் கடல்

அழகிய அலைகளை யுடைய திருப்பாற் கடலில்
கண் துயில்

பள்ளிகொண்டிராநின்ற
மாயன்

ஸர்வேச்வரனாடைய
திரு அடி கீழ்

திருவடிகளின் கீழே
விழுந்து இருப்பார்

விழுந்துகிடக்கும் மஹான்களுடைய
நெஞ்சில்  மேவும்

ஹருதயத்திலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற
நல் ஞானி

சிறந்த ஞானியாயும்
நல்வேதியர்கள் தொழும் திரு பாதன்

நல்ல வைதிகர்களால் ஸேவிக்கப்பட்ட திருவடிகளை யுடையரா யுமிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
தொழும்

ஸேவிக்கின்ற
பெரியோர்

மஹாத்மாக்கள்
எழுந்து இரைத்து ஆடும் இடம்

உடம்பு இருந்த விடத்தில் இராமல் கிளர்ந்து கோஷித்துக் கொண்டு கூத்தாடும் இடம்
அடியேனுக்கு இருப்பு இடம்

அடியேன் வஸிக்குமிடமாகும்.

கீழ்ப்பாட்டில் “ நிரயத் தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும்” என்று ஸம்ஸாரத்தையும் பரமபதத்தையும் வாசியற்றதாகச் சொன்ன அமுதனாரை நோக்கிச் சிலர், ‘உலகத்தில் எல்லாரும் ஸம்ஸாரத்தை வெறுத்துப் பரமபதத்தை ஆசைப்படா நிற்க நீர் ஸம்ஸாரத்தையும் பரமபதத்தையும் துன்பமாகக் கருதிப் பேசுகின்றீரோ, உமக்கு உத்தேச்யமான ஸ்தானம் எது? சொல்லும், என்ன; ஸ்ரீராமாநுஜபக்தர்கள் களித்துக் கூத்தாடுகின்ற இடமே எனக்குப் பரமோத்தேச்யமான ஸ்தானம் என்றார்.

———–

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலை யென்னும்

பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல் லோர், அவை தன்னொடு வந்

திருப்பிடம் மாயன் இராமானுசன் மனத் தின்றவன்வந்

திருப்பிடம் என்றன் இதயத்துள்ளே தனக் கின்புறவே.–106-

 

பதவுரை

மாயனுக்கு

ஸர்வேச்வரனுக்கு
இருப்பு இடம்

வாஸஸ்தானம் (எவை யென்றால்)
வைகுந்தம்

பரம பதமும்
வேங்கடம்

திருவேங்கட மலையும்
மாலிருஞ் சோலை என்னும் பொருப்பு இடம்

திருமாலிருஞ் சோலை யென்கிற திருமலையும் (ஆகிய இவையும்)
என்பர் நல்லோர்

என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.
மாயன்

(இவற்றை இருப்பிடமாக வுடைய) ஸர்வேச்வரன்
அவை தன்னொடும்

அந்த ஸ்ரீவைகுண்டம் முதலியவற்றோடே கூட வந்து எழுந்தருளி யிருப்பது
வந்து இருப்பிடம்

எம்பெருமானாருடைய
இராமாநுசன் மனத்து

திரு வுள்ளத்திலேயாம்;
அவன்

அவ் வெம்பெருமானார் தாம்
இன்று வந்து

இப்போது வந்து
தனக்கு இன்பு உற இருப்பிடம்

தமக்கு ஆநந்தமாக எழுந்தருளி யிருப்பது
என் தன் இதயத்து உள்ளே

அடியேனுடைய ஹ்ருதயத்தினுள்ளேயாம்.

கீழ்ப் பாட்டிற் கூறிய படியே அமுதனாருடைய எல்லை கடந்த ப்ராவண்யத்தை அறிந்த எம்பெருமானார் ‘நம்மேல் இவ்வளவு காதல் கொண்டிருக்கிற இவருடைய நெஞ்சை நாம் விட்டு நீங்கலாகாது, என்று கொண்டு அமுதனாருடைய திருவுள்ளத்தை மிகவும் விரும்பி யருள, அதனைக் கண்டு மகிழ்ந்து பேசுகிறார்.

————

இன்புற்ற சீலத் திராமானுச, என்றும் எவ் விடத்தும்

என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய

துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே

அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கி யங் காட்படுத்தே.-107–

 

பதவுரை

இன்பு உற்ற

ஆநந்த பூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்ய குணமுடைய
சீலத்து இராமாநுசா

எம்பெருமானாரே!
சொல்லுவது ஒன்று உண்டு

தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு
என்பு உற்ற நோய் உடல் தோறும்

எலும்பிலே உறைந்து நலியக் கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம்
பிறந்து இறந்து

பிறப்பதும் இறப்பதுமாகி
எண்ண அரிய துன்பு

எண்ண முடியாத துன்பங்களை யநுபவித்து
உற்ற வீயினும்

முடிந்து போனாலும்
என்றும்

எல்லாக் காலங்களிலும்
எவ் இடத்தும்

எல்லா விடங்களிலும்
உன் தொண்டர்கட்கே

தேவரீருடைய பக்தர்கள் விஷயத்திலேயே
அன்பு உற்று இருக்கும்

பக்தனா யிருக்கும் படி
படி என்னை ஆக்கி

அடியேனைச் செய்தருளி
அங்கு

அந்த பக்தர்களிடத்தில்
ஆள் படுத்து

(அடியேனை) ஆட் படுத்தி யருள வேணும்;

(இதுவே அடியேனுடைய வேண்டுகோள்)

—————

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன், அணி ஆக மன்னும்

பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்

தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே

பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே.–108–

 

பதவுரை

நெஞ்சே

ஓ மனமே!
பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து

பக்தி யெல்லாம் நம் மிடத்திலே குடி கொண்ட தென்று சொல்லும் படியாக வீறு பெற்று,
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ

பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள்
நம் தலை மிசையே மன்ன

நமது தலை மேலே நித்ய வாஸம் பண்ணும் படியாக,

(நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன வென்றால்)

அம் கயல் பாய் வயல் தென் அரங்கன்

அழகிய கயல் மீன்கள் பாய்கிற கழனிகள் சூழ்ந்த தென்னரங்கத்தில் உறையும் பெருமானாடைய
அணி ஆகம் மன்னும்

அழகிய திருமார்பிலே நித்ய வாஸம் பண்ணுகிறவளாய்
பங்கயம் மா மலர் பாவையை

சிறந்த தாமரைப் பூவில் பிறந்தபதுமை போன்றவளான ஸ்ரீ மஹா லக்ஷ்மியை
போற்றதும்

வாழ்த்துவோம்.

இப் பிரபந்தத்தின் தொடக்கத்தில் “இராமாநுசன் சரணாவிந்தம் நாம் மன்னிவாழ” என்று எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளைப் பொருந்தி வாழ்வதே தமக்குப் பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தவராகையாலே அந்தப் புருஷார்த்தம் நமக்கு யாவஜ்ஜீவம் ஹித்திக்கும்படியாக -எல்லாச் செல்வங்களையும் அளிக்க வல்ல பெரிய பிராட்டியாரைப் பிரார்த்திப் போமென்கிறார்-முடிவான இப்பாட்டில்.

ஸாமாந்ய ஸம்பத்தை அளிக்க வல்ல பிராட்டியே இந்த விசேஷ ஸம்பத்தையும் அளிக்கக் கடவுள் என்றதாயிற்று.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading