ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-57-80 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்

உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை

நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே

பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே.–57-

 

பதவுரை

மற்று ஒரு பேறு

ப்ரயோஜநாந்தரங்களை
மதியாது

கணிசியாமல்
அரங்கன் மலர் அடிக்கு

அழகிய மணவாளனாடைய திருவடித் தாமரைகளுக்கு
ஆள் உற்றவரே

அடிமை பட்டவர்களையே
தனக்கு உற்றவர் ஆ

தமக்கு ஆத்ம பந்துக்களாக
கொள்ளும்

திரு வுள்ளம் பற்றுகிற
உத்தமனை

உத்தம புருஷராயும்
நல் தவர் போற்றும்

ப்ரபந்நர்களாலே புகழப் பட்டவரா யுமிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
,நானிலத்தே பெற்றனன்

இந்த லோகத்திலே அடியேன் ஆச்ரயிக்கப் பெற்றேன்;
பெற்ற பின்

ஆச்ரயித்த பின்பு
மற்று ஒரு பேதைமை அறியேன்

(வேறு விஷயங்களை விரும்புகை முதலிய) எவ்வித அஜ்ஞான கார்யமும் அறிய மாட்டேன்

“இனி என் வாக்குரையாது, என்மனம் நினையாது மற்றொன்றை” என்று எப்படி நீர் சொல்லக்கூடும்?

இருள் தருமா ஞாலத்தில் இருக்கிறீராகையாலே அவிவேகம் வந்து மூடிக்கொள்ள எத்தனை நாழிகை செல்லும்? என்று சிலர் கூற,
எம்பெருமானாரை இந்த லோகத்திலே நான் ஆச்ரயித்தேனான பின்பு இனியொரு நாளும் அவிவேகியாக ஆகமாட்டேனென்கிறார்.

நல்தவர் போற்றும் = ப்ரபத்தியாகிற நல்ல தபஸ்ஸைக் கைப் பற்றினவாகளாலே போற்றப் படுவர்.

————–

பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம் நன்றென்

றோதி மற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள் மெய் விட்

டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்

வாதில் வென்றான், எம் இராமா னுசன் மெய்ம் மதிக் கடலே.–58-

 

பதவுரை

பேதையர்

(வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளாத) அவிவேகிகள்
இது வேதப் பொருள் என்ற உன்னி

நாங்கள் சொல்லுகிற இது தான் வேதத்தின் அர்த்தம்’ என்று நிரூபித்துக் கொண்டு
பிரமம் நன்று என்று ஒதி

ப்ர ப்ரஹமமான எவ்லாவற்றிலும் விலஷணம்’  என்று சொல்லி
மற்று எல்லா உயிரும் அஃது என்று

அந்தப் ப்ரஹ்மந் தவிர மற்ற எல்லா ஜீவ ராசிகளும் அந்த ப்ரஹமமே’ என்று சொல்லி
உயிர்கள் மெய் விட்டு

‘ஜீவாத்மாக்கள் தேஹத்தை விட்ட பின்பு
ஆதி பரனொடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம்

ஸர்வ காரண பூதுனான பரம புரஷனோடே ஐக்கியத்தை யடைகின்றன’  என்று சொல்லுகின்ற அந்த கோலா ஹலங்களையெல்லாம்.
மெய்  மதி கடல்

தத்வ ஜ்ஞாநக் கடலாகிய
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
வாதில் வென்றான்

வாதத்தில் நிரஹித்து வெற்றி பெற்றார்.

எம்பெருமானார் குத்ருஷ்டிகளின் குத்ஹிதமான வாதங்கனைக் கண்டித்த படிகளில் ஒருபடியைச் சொல்லி ஈடுபடுகிறார்.

சில மூர்க்கர்கள் தாங்கள் சொல்லுவதே வேதங்களின் உண்மையான பொருள் என்று கொக்கரித்துக்  கொண்டு அபார்த்தங்களைப் பிதற்றுவர்கள்.

பரப்ரஹமம் ஸர்வ லிலக்ஷணம்; ஜீவாத்மாக்களெல்லாம் பரப்ரஹ்மத்தில் ஒர் பகுதி;

இப்போது உபாதியினால் வெவ்வேறாகத் தோன்றுகின்றன;

அவ் வுபாதி கழிந்தபின் ஜீவாத்மாக்கள் பரப்ரஹ்மத்தோடு ஒற்றுமை அடைந்துவிடுகின்றன என்று மூர்க்கர் பிதற்றும் பிதற்றல்களை யெல்லாம் தத்வ ஜ்ஞான நிதியான எம்பெருமானார் வாதத்தில் கண்டித்து உண்மைப் பொருளை ஸ்தாபித்து வெற்றி பெற்றாரென்கிறது.

பிரமம் – ப்ரஹமம் என்ற வடசொல் விகாரம்

உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனொடு ஒன்றாம் = ஜீவரத்மாககள் பரப்ரஹ்மத்தோடு ஐக்கியப்படுவது தான் மோக்ஷம் என்று குத்ருஷ்டிகள் உபபாதிப்பார்கள்;

“தத் த்வமஸி” என்றும் “ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி” என்றுமுள்ள வேத வாக்கியங்களுக்கு இப்படி அபார்த்தம் பண்ணுவார்கள்.

வென்றான்  என்பதை வினை முற்றாகக் கொள்ளாமல் வினையாலணையும் பெயராகக் கொண்டு வாதில் வென்றவராகிய எம்பெருமானார், மெய்ம் மதிக் கடல் ஸத்ய ஜ்ஞாந ஸமுத்ரமா யிருப்பவர் என்று முடிப்பதாக வுரைத்தலுமாம்.

——————

கடலள வாய திசை யெட்டி னுள்ளும் கலி யிருளே

மிடை தரு காலத் திராமா னுசன்மிக்க நான் மறையின்

சுடரொளி யா லவ் விருளைத் துரத்தில னேல் உயிரை

உடையவன், நாரணன் என்றறிவா ரில்லை உற்றுணர்ந்தே.–59-

 

பதவுரை

கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும்

நான்கு ஸமுத்ரங்கள் சூழ்ந்த எல்லா விடங்களிலும்
கலி இருளே மிடைதரு காலத்து

கலி புருஷனாகிற அந்த காரமே நெருங்கிக் கிடந்த காலத்தில்
இராமாநுசன்

எம்பெருமானார் (திருவவதரித்து)
நால் மறையின்

நான்கு வேதங்களின்
மிக்க சுடர் ஒளியால்

அளவற்ற தேஜஸ்ஸைக் கொண்டு
அவ் விருளை துரந்திலனேல்

அந்த கலி தோஷத்தைப் போக்கியிராமற் போனால்
உயிரை உடையவன் நாரணன் என்று

‘எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி ஸ்ரீமந் நாராயணனே என்று
உற்று உணர்ந்து

யாரும் தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

என்னப் பனித்த ராமாநுசன் திருவலதரித்து வேதார்த்தங்களை விளங்கக் காட்டியருளா விடில் இவ்வுலகமனைத்தும் அஜ்ஞாநமயமாகவே கிடக்கும்; தைவாதீநமாக என்னப்பன் திருவவதரித்து எங்கும் வியாபித்துக் கிடந்த கலிபுருஷனுடைய தோஷங்களைத் தொலைத்து வேதச் சுடர் விளக்கேற்றி அஜ்ஞாநாந்தகாரங்களைப் போக்கடிக்கவே எல்லாரும் ஸ்ரீமந் நாராயணனே ஸர்வசேஷி யென்கிற பர மார்த்தத்தைத் தெரிந்து உய்வுபெறலாயிற்று என்றார்.

மிடை தருதல் – நெருங்கி யிருத்தல் இடைவிடாது எங்கும் பரவியிருத்தல்.

———–

உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்

மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்

புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு  நிற்கும்

குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக் கொழுந்தே.–60-

 

பதவுரை

குணம் திகழ்

ஆத்ம குணங்களால் விளங்குபவரும்
கொண்டல்

(ஔதார்யத்தில்) காள மேகத்தை ஒத்த வரும்
எம் குலம் கொழுந்து

எங்கள் குலத்துக்குத் தலைவருமான
இராமாநுசன்

எம்பெருமானார்

(எங்கே எழுந்தருளி யிருப்பரென்றால்)

உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தொறும்

கற்றுணர்ந்த தத்வஜ ஞானிகளுடைய கோஷடிகளெங்கும்
திருவாய் மொழியின் மணம் தரும் இன் இசை மன்னும் இடம் தொறும்

திருவாய் மொழியினுடைய பரிமளம் மிக்க இனிய இசையுள்ள இடங்களெங்கும்
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதிதொறும்

பிராட்டி நித்ய வாஸம் பண்ணுகிற அழகிய மார்பை யுடைய திருமால் எழுந்தருளி யிருக்கிற திவ்ய தேசங்களெங்கும்
புக்கு நிற்கும்

எழுந்தருளியிருப்பார்.

ஞானம் தலையெடுத்த மஹான்களுடைய திரள் எங்கெங்கும் இருக்கின்றதோ அங்கெல்லாம் எழுந்தருளியிருப்பவரும். திருவாய்மொழியின் பரம போக்யமான இசை எங்கெங்கு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் ஸேவை ஸாதிப்பவரும்

ஸ்ரீயபதியான ஸர்வேச்வரன் எங்கெங்கு ஸந்நிதாநம் பண்ணுகிறாறோ அந்தத் திருப்பதிகளெங்கும் புகுந்து நிற்பவருமான

எம்பெருமானார் அஸ்மத் குல கூடஸ்தராயிற்று.

————

கொழுந்து விட் டோடிப் படரும் வெங் கோள் வினையால்,நிரயத்

தழுந்தி யிட் டேனை வந் தாட் கொண்ட பின்னும், அரு முனிவர்

தொழுந் தவத் தோனெம் இராமானுசன் தொல் புகழ் சுடர் மிக்

கெழுந்தது, அத்தால் நல்லதிசயங் கண்ட திருநிலமே.–61-

 

பதவுரை

அரு முனிவர் தொழும்

அருமையான நிஷ்டையை யுடைய மஹான்களாலே ஸேவிக்கப் பெற்றவராயும்
தவத்தோன்

ப்ரபத்தி யாகிற தபஸ்ஸை யுடையவராயு மிருக்கிற
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானாருடைய
தொல் புகழ்

நித்யமான கல்யாண குணங்கள்
கொழுந்து விட்டு ஒடி படரும் வெம்கோள் வினையால்

மேன்மேலும் அதிகமாகப் பெருகுகின்ற க்ரூரமாய்ப் பரப்லமான துஷ்கர்மத்தாலே
நிரயத்து அழுந்தி யிட்டேனை

ஸம்ஸாரமாகிற நரகத்திலே அழுந்திக் கிடந்த என்னை
வந்து ஆள் கொண்ட பின்னும் சுடர் மிக்கு எழுந்தது

வந்து ஆட் படுத்திக் கொண்ட பின்பும் ஒளி குன்றாதே  முன்னிலும் விசேஷமாக விளங்கா நின்றன:
அத்தால்

அதைக் கண்டு
இரு நிலம்

விசாலமான இப் பூ மண்டலம்
நல்ல அதிசயம் கண்டது

மிக்க ஆச்சரியங் கொண்டது.

எம்பெருமானாருடைய குணங்கள் மஹாபாபியான என்னை ஆட் படுத்திக் கொண்டவளவோடு த்ருப்தி பெற்று விடமால்

இப்படிபட்ட பாபிகள் இன்னும் யாரேனும் கிடைப்பாருண்டோ? கிடைப்பாருண்டோ? என்று

இன்னமும் நாக்கு நீட்டிக்கிளர்ந்து செல்லுகின்றன – என்றும் கருத்தாகும்.

————-

இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்றி யான் இறையும்

வருந்தேன் இனி யெம் இராமானுசன்,மன்னு மா மலர்த் தாள்

பொருந்தா நிலை யுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மை செய்யாப்

பொருந் தேவரைப் பரவும், பெரியோர் தம் கழல் பிடித்தே.-62-

 

பதவுரை

எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானாருடைய
மன்னா மா தாள் மலர் பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு

சிறந்த திருவடித் தாமரைகளில் சேராத ஸ்வபாவத்தை யுடையவர்களான  நீசர் களுக்கு
ஒன்றும் நன்மை செய்ய

ஒரு விதமான உபகாரமும் செய்யாத
பெரு தேவரை

பெரிய பெருமாளை போற்றுகின்ற
பெரியோர் தம்

ஆழ்வானாகிற மஹானாடைய
சுழல் இன்று பிடித்து

திருவடிகளை இன்று ஆச்ரயித்தேனான பின்பு
இரு வினை பாசம் கழற்றி இருந்தேன்

புண்ணியம் பாவமென்று இரண்டு வகையான கரும பாசங்களினின்று விடுபட்டவனானேன்;
யான்

இப்படி நிர்மலனாகப் பெற்ற அடியேன்
இனி இறையும் வருந்தேன்

இனிமேல் கொஞ்சங்கூட வருத்தப்பட்ட மாட்டேன்.

ஸ்ரீ ராமநுஜ பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே ஸர்வ ஸ்வதாநம் பண்ண வல்ல பெரிய பெருமாளைப் போற்றா நின்ற கூரத்தாழவானை அடைந்து உஜ்ஜீவித்த அடியேனுக்கு இனி ஒரு வருத்தமும் விளையக் காரணமில்லை யென்று தம்முடைய க்ருதக்ருத்யத்வத்தைக் கூறினாராயிற்று.

இருவினைப் பாசங்கழற்றி = பாவம் போலலே புண்ணியமும் பர கதிக்குப் பிரதிபந்தகம் என்பதை உணர்க.

பாவம் இரும்பு விலங்கென்றும் புண்ணியம் பொன் விலங்கென்றும் சாஸ்திரங்கள் கூறும்.

————–

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்

அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்

செடியைத் தொடரும் மருள் செறிந் தோர் சிதைந் தோட வந்திப்

படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே!–63-

 

பதவுரை

அறு சமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர்

பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள்
சிதைந்து ஒட

பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக
வந்து இப் படியை தொடரும்

இப் பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீ கரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற
மிக்க பண்டிதன்

மஹா பண்டிதரான
இராமாநுச

எம்பெருமானாரே!,
பிடியை தொடரும் களிறென்ன யான்

யானைப் பேடையைப் பின் பற்றித் திரிகின்ற ஆண் யானை போல
யான்

அடியேன்
சீர்  பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும்

ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருள வேணும்.

ஸ்வாமி! யானை யானது தன் பேடையினிடத்துப் பெருங்காதல் கொண்டு அதனையே பின் பிற்றித் திரிவது போல் அடியேன் தேவரீருடைய அழகிய திருவடிகளையே அளவற்ற அபிநிவேசத் தோடு அநுவர்த்தித்துச் செல்லும்படியாக அருள் புரிய வேணுமென்று வேண்டினாராயிற்று.

————-

பண்டரு மாறன் பசுந் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்

விண்டிட எங்கள் இராமா னுச முனி வேழம் மெய்ம்மை

கொண்ட நல் வேதக் கொழுந் தண்ட மேந்திக் குவலயத்தே

மண்டி வந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே.–64-

 

பதவுரை

எங்கள் இராமநுச முனி வேழம்

எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்த கஜமானது.
மாறன்

நம்மாழ்வார்
பண்

இசைகளாலே
தரு

அருளிச் செய்த
பசுந்தமிழ் ஆனந்தம்

செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம்
பாய் மதம் ஆய் விண்டிட

பெருகு மத நீராக ஒழுகப் பெற்று
மெய்ம்மைகொண்ட நல்வேதம் கொழு தண்டம் எந்தி

ஸத்திய வாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக் கொண்டு
குவலயத்தே

இப் பூ மண்டலத்திலே
மணடி வந்து என்றது

உங்களுடைய பிழைப்பு
உங்கள் வாழ்வு அற்றது

உங்களுடைய பிழைப்பு போயிற்று

குத்ஹித வாதங்கள் பண்ணுகிற துர்வாதிகளே! இனி நீங்கள் பிழைக்க வழியில்லை யென்று நிச்சயித்துக் கொள்ளுங்கள்;

ஏன் என்கிறீர்களோ; எம்பெருமானாரென்னும் ஒரு மதயானை யானது உங்களைப் புடைப்பதாகப் பெரிய தடியை யெடுத்துக்கொண்டு எதிரிட்டு வாரா நின்றது; இதற்குத் தப்பிப் பிழைக்க உங்களாலாகாது-என்கிறார்.

யானைக்கு மதநீர் பெருகுமே; இந்த ஸ்ரீராமாநுஜ கஜராஜனாக்கு எது மதநீர் என்ன; முதலடியிற் கூறுகிறார்.

திருவாய் மொழியின் அறுபவத்தாலுண்டான ஆநந்தஸேமே இந்த கஜராஜனாக்கு மதநீர்ப் பெருக்காம்.

இதனால்,எம்பெருமானார் எப்போதும் திருவாய் மொழியை அநுபவித்துக் களிப்புறுவர் என்றதாகிறது.

—————–

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்

தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது, தத்துவ நூல்

கூழற்றது குற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்

நாழற்றது, நம் இராமா னுசந் தந்த ஞானத்திலே.–65-

 

பதவுரை

நம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
தந்க ஞானத்தில்

அருளின ஞானத்தினால் துர்வாதிகளுக்கு வாழ்ச்சி அற்றுப் போயிற்று;
மறையவர் தம் தாழ்வு

வைதிகர்களுடைய குறை
என்றும் அற்றது

இனி ஒருநாளும் இல்லாதபடி யாயிற்று
தாரணி

பூ மண்டவமானது
தவம் பெற்றது

பாக்கியம் பெற்றது;
தத்துவம் நூல்

தத்வ பரமான சாஸ்திரங்கள்
கூழ் அற்றது

ஸந்தேஹமற நிச்சயமான பொருளைத் தெரிவிப்பவை யாயின;
குற்றம் எல்லாம்பதித்த குணத்கினார்க்கு

பலவகைக் குற்றங்களும் நிறைந்த ஸ்வபாவத்தை யுடைய ஜனங்களுக்கு
ஆ நாழ் அற்றது

அந்தக் குற்றங்கள் தீர்ந்தன;

எம்பெருமானார் இவ்வுலகில் அவதரித்து உபதேசாதி முகத்தாலே உண்டாக்கின தத்துவ ஞானத்தால் பலித்த அம்சங்கள் எவை யென்றால்; துர்வாதிகளுடைய வாழ்வு மாண்டது;

வைதிகர்களுக்கு இருந்த ஸங்கடங்கள் அற்றுப்போயின;

பூமண்டலம் மஹாபாக்கம் பெற்றது;

தத்வ சாஸ்த்ரங்களில் எவ்விதமான ஸந்தேஹமும்  உண்டாகாதபடி நிச்சய ஞானமே உண்டாயிற்று;

பாவிகளின் பாவங்களெல்லாம் தொலைந்துபோயின;

ஆகிய இவை எம்பெருமானாரருளித்த தத்துவஞானத்தின் பயனாகத் தேறினவை – என்றாராயிற்று.

தொல்லைவாதியர் = வைதிகர்தாம் அநாதியாகவுள்ளவர்;

துர்வாதிகளும் அநாதியாக உண்டோவெனில்;

பயிருள்ளபோதே தொடங்கிக் களையுமுண்டாவதுபோல, பாஹ்யர் குக்ருஷ்டிகள் என்கிற வாதிகளும் பழையராகவே யுண்டென்க.

தரணி என்ற வடசொல் தாரணியென நீட்டல் விகாரம் பெற்றது.

கூழ்-ஸந்தேஹம் நாழ் – குற்றம்.

———-

ஞானம் கனிந்த நலங் கொண்டு நாடொரும் நைபவர்க்கு

வானம் கொடுப்பது மாதவன் வல் வினையேன் மனத்தில்

ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்

தானம் கொடுப்பது தன் தக வென்னும் சரண் கொடுத்தே.–66-

 

பதவுரை

மாதவன்

திருமால்
வானம் கொடுப்பது

மோக்ஷம் அளிப்பது

(எப்படிப் பட்டவர்களுக்கு கென்றால்)

ஞானம்  கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு

ஞானம் பக்தி ரூபமாகப் பரீபக்வமாகி அந்த பக்தியினால் நித்யம் உருகுகிறவர்களுக்கேயாம்;
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசன்

மஹா பாபியான எனது ஹ்ருதயத்திலிருந்த கல்மஷங்களைப் போக்கடித்த எம்பெருமானார்
தன்னை எய்தினர்க்கு

தம்மைப் பற்றினவர்களுக்கு
அத் தானம் கொடுப்பது

அந்த மோக்ஷ ஸ்தானத்தை அளிப்பது
(எவ்விதமாக வென்றால்)

 
தன் தகவு என்னும் சரன் கொடுத்து

தம்முடைய க்ருபையாகிற ஸாதனத்தை (அவர்களுக்குக் கைம் முதலாகக் கொடுத்து (தமது திவ்ய க்ருபையாலே)

 

அடியார்களுக்கு மோக்ஷமளிக்கிற அதிகாரம் எம்பெருமானாக்குமுண்டு, எம்பெருமானார்க்கு முண்டு.

எம்பெருமான் அளிப்பது மிகவும் ச்ரமப்படுத்தியே;

எம்பெருமானார் அளிப்பது கேவலம் தம்முடைய திருவருளாலே என்கிறார் இதில்.

ஞானமாது நன்றாகக் கனிந்து அது பக்தி பரமபக்தி பரமபக்தி என்னும்படியான அவஸ்தை களையடைந்து,

அதனால் இந்த ஸம்ஸாரத்தில் க்ஷணகால மிருப்பதும் அஸஹ்யமாய் ஆழ்வார்களைப்போல

“{ஒரு பகலாயிணரமூழியாலோ’ என்று துடிப்பவர்களுக்குத்தான்; எம்பெருமான் முக்தியளிப்பது;

எம்பெருமானாரோ வென்னில் –

க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யராகையாலே அடியார்களிடத்தில் எவ்விதமான க்லேசத்தையும் எதிர்பாராமல்

தமது திருவருளைக் கொண்டே அவர்களைக் கயரயேற்றுவர் என்றதாயிற்று.

வல்வினையேன் மனத்திலீனங்கடிந்த என்பதற்கு – மாதவனை அடி பணிந்து வருந்துகையாகிற ஈனத்தை எனக்குத் தவிர்த்த எம்பெருமானார் என்று உரைக்கவுமாம்.

——–

சரணம் அடைந்த தருமனுக்காப் ,பண்டு நூற்றுவரை

மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த

கரணவை யுமக் கன்றென்றி ராமா னுச னுயிர்கட்கு

அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வாருயிர்க்கே?–67-

 

பதவுரை

சரணம் அடைந்த தருமனாக்கு ஆ

தன்னைச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக
பண்டு

முற் காலத்திலே
நூற்றுவரை

துரியோதனன் முதலிய நூறு பேர்களை
மரணம் அடைவித்த மாயவன்

சாகும்படி செய்த எம்பெருமான்
தன்னை வணங்க வைத்த கரணம் இவை

தன்னை வழிபடுவதற்காகவே எற்படுத்தி வைத்த இந்திரியங்களாம் இவை;
உமக்கு அன்று

உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல;
என்று

என்று இவ்வாறாக உபதேசித்து
இராமாநுசன்

எம்பெருமானார்
உயிர்கட்கு

ஆத்மாக்களுக்கு
அரன் அமைத்திலனேல்

ரக்ஷையைக் கற்பித்தில ராகில்
,ஆர் உயிர்க்கு

இந்த அருமையான ஆத்மாக்களுக்கு
மற்று அரண் ஆர்

வேறு ரஷகராவார் ஆர்? (ஆருமில்லை.)

——————

ஆரெனக் கின்று நிகர் சொல்லில் மாயனன் றைவர்த் தெய்வத்

தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்

பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும் நல்லோர்

சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே.–68-

 

பதவுரை

மாயன்

ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான்
அன்று

முற் காலத்தில்
ஐயர்

பஞ்ச பாண்டவர்களுடைய
தெய்வம் தேரினில்

தெய்வத் தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்து கொண்டு)
செப்பிய

அருளிச் செய்த
கீதையின்

பகவத் கீதையினுடைய
செம்மை பொருள்

ஸ்வ ரஸமான அர்த்தத்தை
தெரிய

(அனைவரும் எளிதாகத்)தெரிந்து கொள்ளும் படி
பாரினில்

இப் பூமிலே
சொன்ன

(கீதா பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
இராமாநுசனை

எம்பெருமானாரை
பணியும்

ஆச்ரயித்திருக்கும்
நல்லோர்

விலக்ஷண புருஷர்களுடைய
சீரினில்

கல்யாண குணங்களிலே
என் ஆவியும் சிந்தையும்

எனது ஆத்மாவும் மநஸ்ஸூம்
சென்று பணிந்தது

சென்று சேர்ந்து விட்டன;
சொல்லில்

சொல்லுமளவில்
இன்று

இக் காலத்தில்
எனக்கு ஆர் நிகர்

எனக்கு ஆர் ஒப்பாவார்?

———————-

சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து, முன்னாள்

அந்த முற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்

தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து

எந்தை இராமானுசன் வந் தெடுத்தனன் இன்றென்னையே.–69-

 

பதவுரை

முன் நாள்

ஸ்ருஷ்டிருக்கு முற் காலத்தில்
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து

சிந்தையும் இந்திரியங்களு மெல்லாம் அழிந்து
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு

உப ஸம்ஹாரத்தை யடைந்து அசேதந ப்ராயமா யிருப்பதைப் பார்த்து
என் தனக்கு

(அப்படி அசேதந ப்ராயராய்க் கிடந்தவாகளில் ஒருவனான) எனக்கு
அவை

அந்த சரண களேபரங்களை
அன்று

அக் காலத்தில்
அருளால் தந்த அரங்கனும்

க்ருபையாலே உண்டாக்கின எம்பெருமானும்
தன்  சரண் தந்திலன்

தனது திருவடிகளைக் காட்டிக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்கவில்லை;

(அக் குறை நீங்க)

எந்தை இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
தான் வந்து

தாமாகவே வந்து
அது தந்து

அந்தத் திருவடிகளைத் தந்தருளி
இன்று என்னை எடுத்தனன்

இன்று என்னை ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பித்தார்.

—————

என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல் குணத்த

உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி யென்பால்

பின்னையும் பார்க்கில் நலமுளதே?உன் பெருங்கருணை

தன்னை யென் பார்ப்பர் இராமானுச! உன்னைச் சார்ந்தவரே?–70-

 

பதவுரை

இராமா நுச

எம்பெருமானாரே!
என்னையும் பார்த்து

(ஒரு குணமில்லாமல் குற்றமே நிறைந்திருக்கிற) என்னையும் நோக்கி
என் இயல்வையும் பார்த்து

(இனி மேலும் எவ்வித நன்மையும் ஸம்பாதித்துக் கொள்ள முடியாமலிருக்கிற) என்னுடைய தன்மையையும் நோக்கி
எண இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில்

எண்ணிறந்த பல திருக் குணங்களை யுடைய தேவரீரையும் நோக்கு மளவில்
அருள் செய்வதே நலம்

(இப்போது – எப்போதும்) அருள் செய் திருப்பதே நல்லது;
அன்றி

இதுவொழிய மேலும் ஆராயுமளவில்
என் பால் நலம் உளதே

என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ? (சிறிதும் இல்லை)

(நன்மையொன்று மில்லாவிடில் நாம் அருள் செய்யலாகாதென்று திருவுள்ளம் பற்றினால்)

உன்னை சார்ந்தவர்

தேவரீரை ஆச்ரயித்தவர்கள்
உன் பெரு கருணை தன்னை என் பார்ப்பர்

தேவரீருடைய கிருபையைப் பற்றி என்ன நினைப்பர்கள்?) இளப்பமாக நினையார்களோ.)

—————-

சார்ந்த தென் சிந்தை யுன் தாளிணைக் கீழ், அன்பு தான் மிகவும்

கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன் றன் குணங்களுக்கே

தீர்ந்த தென் செய்கை முன் செய் வினை நீ செய் வினையதனால்

பேர்ந்தது வண்மை இராமானுச! எம் பெருந் தகையே.–71-

 

பதவுரை

வண்மை

ஔதார்ய முடையரும்
எம்

எமக்கு ஸ்வாமியும்
பெரு தகை

பெருந்தன்மை யுடையருமான
இராமாநுசா

எம்பெருமானாரே! எனது நெஞ்சு
உன் தாள் இணை கீழ் சார்ந்தது அன்புதான்

தேவரீருடைய உபய பாதங்தளின் கீழ் அமர்ந்து விட்டது பக்தியும்
அத் தாமரை தாள்களுக்கு

அந்தத் திருவடித் தாமரைகள் விஷயத்திலேயே
மிகவும் கூர்ந்தது

மிகவும் அதிகரித்தது.
என் செய்கை

எனது செயலும்
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது

தேவரீருடைய திருக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது;
முன் செய் வினை

முன்னே செய்த பாவங்களெல்லாம்
நீ செய் வினை அதனால் பேர்ந்தது

தேவரீர் செய்தருளின் (கடாக்ஷமாகிற) காரியத்தாலே தொலைந்து போயின.

——-

——–

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே

உய்த்தனன் தூய மறை நெறி தன்னை,என்றுன்னி யுள்ளம்

நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறை புக ழோருடனே

வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே.–72-

 

பதவுரை

இராமாநுசன்

எம்பெருமானார்
மிக்க வண்மை செய்து

தமது ஒளதார்ய குணத்தை அதிகமாகக் காட்டி,
தீய சமயம கலகரை

தீய மதங்களிலிருந்து கொண்டு கலஹஞ் செய்கிறவர்களை
கைத்தனன்

ஒழித்து விட்டார்;
தூய

பரிசுத்தமான
முறை நெறி தன்னை

வேத மார்க்கத்தை
காசினிக்கு உய்த்தனன்

பூமியிலே ஸ்தாபித்தருளினார்;
என்று உன்னி

என்று அநுஸந்தித்து
உள்ளம் நெய்த்து

நெஞ்சு கனிந்து
அவ் வன்போடு இருந்து

அந்த ப்ரிதியோடே கூடியிருந்து
ஏத்தும்

(அவரை) ஸ்தோத்ரம் பண்ணுகிற
நிறை புகழோருடனே

புகழ் நிறைந்த மஹான்களோடே
என்னை வைத்தனன்

(என்னையும் ஒருவனாக எண்ணும்படி) என்னை வைத்தருளினார்.
நிறை புகழோருடனே வைத்தனன்:

அஸத்தக்களோடே பழகிக் கிடந்த என்னை ஸத்துக்களோட கூட்டி வைத்தார் என்னவுமாம்.

————–

வண்மையினாலுந் தன் மாதக வாலும் மதி புரையும்

தண்மையி னாலு மித் தாரணி யோர்கட்குத் தான்  சரணாய்

உண்மை நன் ஞானம் உரைத்த இராமா னுசனை யுன்னும்

திண்மை யல் லாலெனக் கில்லை, மற்றோர் நிலை தேர்ந்திடிலே.–73-

 

பதவுரை

தன் வண்மையினாலும்

தம்முடைய ஔதார்ய குணத்தாலும்
மா தகவாலும்

பரம க்குபையாலும்
மதி புரையும் தண்மையினாலும்

சந்திரனை யொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும்
இத் தரணியோர்கட்கு

இப் பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை

யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தை உப தேசிக்கிற எம்பெருமானாரை
உன்னும் திண்மை அல்லால்

சிந்திப்பதாகிற அத்யவஸாய மொன்று தவிர
தேர்ந்திடில்

ஆராயமளவில்
எனக்கு மற்று ஒர் நிலை இல்லை

அடியேனுக்கு வேறெரு அத்யவஸாய மில்லை.

————-

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்

கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை

ஏரார் குணத் தெம் இராமா னுசனவ் வெழில் மறையில்

சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே.–74-

 

பதவுரை

மறையின்  திறம் தேரார் என்று

(இப் பாலிகள்) வேதஞ் சொல்லிகிற வழியை நிரூபித்திகிற தில்லையென்று
தீயவரை

பாவிகளை
மாயவன்

எம்பெருமான்
குறைப்பது

தண்டிப்பது
கூர் ஆழி கொண்டு

கூர்மையான தனது திருவாழியாலே;
கொண்டல் அனையவண் மை

மேகம் போன்ற ஔதார்ய குண முடையவரும்
ஏர் ஆர் குணத்து

(மற்றும்) பல நல்ல குணங்களுடையவருமான
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
அ எழில் மறையில் சேராதவரை சிதைப்பது

அந்த சிறந்த வேதத்தில் அந்வயியாதவர்களே பங்கப் படுத்துவது (எப்படி யென்றால்)

எம்பெருமான் தனது ஆஜ்ஞா ரூபமான வேதங்களின் கட்டளைப்படி நடவாத கொடியவர்களைத் தனது திருவாழியைக் கொண்டு த்வம்ஸம் பண்ணிவிடுவன்;

எம்பெருமானாரோவென்னில் அவ்வளவு ஆயாஸம் எடுத்துக்கொள்வதில்லை;

வேதங்களை அடியோடு ஒப்புக்கொள்ளாத பாஹ்யர்களையும்,

வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக்கொண்டு அவற்றில் அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளையும்

வாதப் போரில் அப்போதப்போது திரு வுள்ளத்தில் ஸ்புரிக்கின்ற நல்ல யுக்கிகளைக் கொண்டு கண்டித்து விடுவர் என்கை.

————

செய்த்  தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர்

கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி, நங் கண் முகப்பே

மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின் புகழே

மொய்த் தலைக்கும் வந்து இராமா னுச! என்னை முற்று நின்றே.–75-

 

பதவுரை

செய் தலை

வயல்களில்
சங்கம்

சங்குகளானவை
செழு திரு முத்தம்

அழகிய முத்துக்களை
ஈனும் திரு அரங்கர்

உண்டாக்கு மிடமான திருவரங்க மா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள்
கைத்தலத்து

தமது திருக் கையிலே
ஆழியும் சங்கமும் எந்தி

திருவாழி திருக்கையிலே தரித்துக் கொண்டு
நம் கண் முகப்பே

நமது கண்ணெதிரில்
மொய்த்து

வந்து நெருங்கி
அலைத்து

புத்தியைக் கெடுத்து
உண்னை விடேன் என்று இருக்கிலும்

உன்னை விட மாட்டேன் என்று இருந்தாலும்
இராமாநுசா

எம்பெருமானரே
நின் புகழே

தேவரீருடைய திவ்ய குணங்களே
என்னை வந்து முற்றம் மொய்த்து  நின்று

என் பக்கல் வந்து சூழ்ந்து கொண்டு
அலைக்கும்

ஆகர்ஷிக்கின்றன

எம்பெருமான் தனது விலக்ஷணமான அழகைக் காட்டிக் கொண்டு வந்து என் கண்னெதிரே நின்றாலும்,

என்னை விடாதே வலியப் பற்றினாலும் அவனது அழகில் நான் மோஹிக்கப் பெறுவதில்லை;

தேவரீருடைய திருக் குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன

பகவத் குணங்களை நான் ஈடுபடுவதில்லை;

தேவருடைய திருக் குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன.

பகவத் குணங்களுக்கு நான் ஈடுபடுவதில்லை யென்றாராயிற்று.

“செய்த் தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும்” என்கிற விசேஷணம்-திருவரங்கர் என்பதன் பகுதியாகிய திருவரங்கத்தில் அந்வயிக்கும்.

திருவரங்கம் எப்படிப்பட்டதென்றால், முத்துக்களை யுதிர்க்கும் சங்குகள் நிறைந்த வயல் சூழ்ந்தது என்றவாறு.

ஈனுதல்-பிரஸவித்தல்.

———–

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும்,நிறை வேங்கடப் பொற்

குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்

உன்றனக் கெத்தனை இன்பந் தரும் உன் இணை மலர்த்தாள்

என்றனக் கும் அது,இராமா னுச! இவை யீந்தருளே.–76-

 

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை

நிலை நின்ற பெரும் புகழும் அதிகமான நீர்ப் பெருக்கும் நிறைந்துள்ள
வேங்கடம் பொன் குன்றமும்

திருவேங்கட மென்னும் அழகிய திருமலையும்
வைகுந்தம் நாடும்

ஸ்ரீ வைகுண்டமாகிய திருநாடும்
குவலிய பால் கடலும்

கொண்டாடத் தக்க திருப் பாற் கடலும்
உன் தனக்கு

தேவரீருக்கு
எத்தனை இன்பம் தரும்

எவ்வளவு ஆநந்த்தை விளைக்குமோ
உன் இணை மலர் தாள்

தேவரீருடைய உபய பாதாரவிந்தங்கள்
என் தனக்கும் அது

எனக்கும் அவ்வளவு ஆநந்தத்தை யுண்டாக்கும்;
இவை

இப்படிப்பட்ட திருவடிகளை.
ஈந்தருள்

அடியேனுக்குத் தந்தருள வேணும்.

கீழ்ப்பாட்டில் அமுதனார்  விளக்கிய பரமபக்தியை அறிந்த எம்பெருமனார் மிகவும் உகந்தருளி

‘இவருக்கு நாம் எதை செய்வோம்’ என்றிருப்பதாகக் கண்ட அமுதனார்,

ஸ்வாமிந்! அடியேனுக்கு தேவரீர் வேறொன்றும் செய்தருள வேண்டர்

அடியேனுக்கு ஸர்வஸ்மாகிய இந்தத் திருவடித் தாமரைகளைச் தந்தருள வேண்டுமத்தனை யென்கிறார்.

———–

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்

பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால்,இப்படிய னைத்தும்

ஏய்ந்தனன் கீர்த்தியினா லென் வினைகளை வேர் பறியக்

காய்ந்தனன் வண்மை இராமா னுசற் கென் கருத்தினியே?–77-

 

பதவுரை

ஈயாத

(இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத
இன் அருள்

விலக்ஷணமான க்ருபையை
ஈந்தனன்

அடியேனுக்குச் செய்தருளின வரும்
எண் இல் மறை குறும்பை

எண்ணிறந்த      வேத விரோதி மதங்களை
அம் மறை பல் பொருளால் பாய்ந்தனன்

அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித்தவரும்
கீர்த்தியினால்

தமது கீர்த்தியாலே
இப்படி அனைத்தும் ஏய்ந்தனன்

இப் பூமி யெங்கும் வியாபித்தவரும்
என் வினைகளை

எனது கருமங்களை
வேர் பறிய காய்ந்தனன்

வேரோடே அரும் படி போக்கினவரும்
வண்மை

ஔதார்யமே வடிவு கொண்ட வருமான
இராமாநுசற்கு

எம்பெருமானார்க்கு
இனி என் கருத்து

இன்னமும் (செய்யத் தக்கதாகத்) திருவுள்ளத்தில் ஏதேனா முண்டோ?

கீழ்ப் பாட்டில் தாம் அபேக்ஷித்தபடியே திருவருளைத் தந்தருளப் பெற்று, க்ருத க்ருத்ய ராய், அவர் செய்தருளின உபகாரங்களை அநுஸந்தித்து, இவை யெல்லாம் செய்த பின்பு இன்னமும் செய்தருள்வதாகத் திருவுள்ளம் பற்றிருப்பது எதுவோ என்கிறார்.

மறைக்குறும்பாவது- வேதத்திற்கு மாறாகச் சொல்லும் தப்புப் பொருள்கள்.

ஈந்தனன் பாய்த்தனன், எய்ந்தன், காய்ந்தனன், என்பவற்றை வினை முற்றாகலே கொண்டு உரைத்தலுமாம்.

————-

கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய

வருத்தத்தி னால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே

திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்

பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே.–78-

 

பதவுரை

எம் இராமாநுச

எம்பெருமானைரை!
நீ

தேவரீர்
கருத அரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து

நெஞ்சால் நினைக்க முடியாத பரிச் ரமங்கள் பட்டு என்னை நன்றாக ஏமாத்தி
கருத்தில் புகுந்து

(எனது) நெஞ்சிலே வந்து புகுந்து
உள்ளில் கள்ளம் கழற்றி

உள்ளே யிருந்த ஆத்மாப ஹார தோஷத்தைப் போக்கி
திருத்தி

சிக்ஷித்து
இந்த மண் அகத்தே

இந்த லோகத்திலே
திருமகள்  கேள்வனுக்கு

திருமாலுக்கு ஆளாம்படி
ஆக்கிய பின்

பண்ணிண பின்பு
மற்று ஒர் பொய்

(இதற்கு மாறான ) வேறு எந்த தப்பு விஷயமும்
பொருள் என் நெஞ்சில்

என் மனத்தில்
பொருத்தப் படாது

பொருந்த மாட்டாது.

எம்பெருமானார் தம்மைத் திருத்துகைக்காகப் பட்ட பாடுகளை எடுத்துச் சொல்லி,

இப்படி என்னைத் திருத்தி உத்தேச்யமான விஷயத்திலே ஆட்படுத்தின பின்பு

இனி வேறு எந்த விஷயமும் என்னெஞ்சுக்கு இசையமாட்டாதென்கிறார்.

————

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே

மெய்மைப் புரக்கும் இராமா னுசன் நிற்க, வேறு நம்மை

உய்யக் கொள வல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே

ஐயப் படா நிற்பர் வையத்துள்ளோர் நல் லறிவிழந்தே.–79-

 

பதவுரை

பொய்யை சுரக்கும் பொருளை துரந்து

பொய்யான விஷயத்தையே மேன் மேலும் வெளிப் படுத்துகிற (புற மதத்தவர்களின) அர்த்தங்களைக் கண்டித்து
இந்த பூதலத்தே

இப் பூமியிலே
மெய்யை புரக்கும்

ஸத்யத்தை ரக்ஷிக்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
நிற்க

எழுந்தருளி யிருக்கும் போது

(இவரைக் கணிசியாமல்)

வையத்து உள்ளோர்

இப் பூமியிலுள்ளவர்கள்
நம்மை உய்யக் கொள்ள வல்ல

நம்மை உஜ்ஜீவிக்கச் செய்யக் கூடிய
வேறு தெய்வம் இங்கு யாது என்று

வேறு எதாவது தேவதை இவ்வுலகில் உண்டோ என்று விசரித்துக் (கொண்டு)
உலர்ந்து

மன வருத்தத்தாலே உடம்பு உலர்ந்து
நல் அறிவு இழந்தே

(எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருக்கையாகிற) நல்ல ஞானம் பெறாமல்
அவமே

வீணாக
ஐயம் படா நிற்பர்

ஸம்சயப் படா நின்றார்கள் ஐயா!

பொய்யைச் சுரக்கும் பொருள் என்றது -பொய் தவிர வேறில்லாத அர்த்தம் என்றபடி

“ஸர்வம்அஸத்யம்” என்கிறாவர்களாகையாலே அஸத்யமயம்.

மெய்யைப் புரக்கு மிராமாநுசன் = “யதார்த்தம் ஸர்வ விஜ்ஞாநம்” என்று ஸ்தாபித்தருளினவர்.

புரத்தல்- காப்பாற்றுதல்.

————-

நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம் நம்ப

வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர், அவர்க்கே

எல்லா விடத்திலும்  என்றுமெப் போதிலும் எத் தொழும்பும்

சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே.–80-

 

பதவுரை

நல்லார் பரவும் இராமாநுசன்

ஸத்துக்களாலே கொண்டாடப் படுகிற எம் பெருமானாருடைய
திரு நாமம்

திரு நாமத்தை
நம்ப வல்லார் திறத்தை

(தங்களுக்குத் தஞ்சமாக நம்பி யிருக்க வல்லவர்களுடைய படிகளே
மறவாதவர்கள் எவர்

மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ,
அவர்க்கே

அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே
எல்லா இடத்திலும்

ஸகல தேசங்களிலும்
என்றும்

ஸகல அவஸ்தைகளிலும்
எத் தொழும்பும்

ஸகலவித கைங்கரியங்களையும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால்

மன மொழி மெய்களென்னும் த்ரிகரணங்களாலும்
சோர்வு இன்றி செய்வன்

பிரியாதே யிருந்து செய்வேன்.

தம்முடைய நிலைநின்ற நிஷ்டையைப் பேசுகிறார் இதில்.

ஸத்துக்களனைவரும் கொண்டாடும்படியான எமபெருமானுடைய திருநாமங்களையே

தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்கிற மஹான்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற

ஸ்ரீராமாநுஜ பக்தபக்தர்களுக்கே அடியேன் –

ஒமிவில் காலமெல்லாம் உடனய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்யக்கடவே னென்றாராயிற்று.

தொழும்பு = அடிமை.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading