Archive for February, 2022

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகர் ஊஞ்சல் –

February 24, 2022

சீரங்கநாயகரூசல்.

சீரங்கநாயகரைப்பற்றிப் பாடிய ஊசல் என விரியும்.
ஊசலாவது – ஆசிரியவிருத்தத்தாலாதல், கலித்தாழிசையாலாதல்,
‘ஆடிரூசல்,’ ‘ஆடா மோவூசல்,’ ‘ஆடுகவூசல்’ என ஒன்றால் முடிவுறக் கூறுவது;
இது, தொண் ணூற்றாறுவகைப்பிரபந்தங்களுள் ஒன்று.

——-

தனியன் –

அண்டப் பந்தரில் பற்று கால்களாக அறிவு விட்டம் கரணம் சங்கிலிகள் ஆக
கொண்ட பிறப்பே பலகை வினை அசைப்போர் கொடு நரகம் ஸ்வர்க்கம் பூ வெளிகள் தம்மில்
தண்டல் இல் ஏற்றம் இறக்கம் தங்கல் ஆக தடுமாறி இடர் உழக்கம் ஊசல் மாற
தொண்டர்க்கு ஆம் மணவாளர் பேரர் கூடித் தொகுத்திட்டார் திருவரங்கத்து ஊசல் தானே —

(இ – ள்.) அண்டம் பந்தரில் – உலகமாகிய பந்தலிலே,
பற்று – பாசமே, கால்கள் ஆக – (விட்டத்தைத்தாங்குவதற்குஉரிய) தூண்களாகவும், –
அறிவு – அறிவே, விட்டம் (ஆக) – (சங்கிலியைமாட்டுதற்குஉரிய) உத்தரமாகவும், –
கரணம் – இந்திரியங்களே, சங்கிலிகள் ஆக – சங்கிலிகளாகவும், –
கொண்ட பிறப்பே – எடுத்த பிறவியே, பலகை (ஆக) – ஊஞ்சற்பலகையாகவும், –
வினை – இருவினைகளே, அசைப்போர் (ஆக) – (அவ்வூஞ்சலை) ஆட்டுபவராகவும், –
கொடு நரகம் – கொடிய நரகமும், சுவர்க்கம் – சுவர்க்கமும், பூ – பூமியும், (ஆகிய)
வெளிகள் தம்மில் – வெளியிடங்களில் (செல்லுதலே), இறக்கம் -இறங்குதலும்,
தண்டல் இல் ஏற்றம் – தடையின்றி ஏறுதலும், தங்கல் – நிலைபெறுதலும், ஆக – ஆகவும், –
(இவ்வாறு), தடுமாறி – அலைந்து, இடர் உழக்கும் – துன்பமனுபவிக்கின்ற,
ஊசல் – ஊசலாட்டம்,
மாற – நீங்கும்படி, –
தொண்டர்க்கு ஆ – அடியார்கள் அநுசந்திக்குமாறு, –
மணவாளர் – அழகியமணவாளதாசரும்,
பேரர் – (அவரது) திருப்பேரனாராகிய கோனேரியப்பனையங்காரும்,
கூடி – சேர்ந்து,
திருவரங்கத்து ஊசல் – ஸ்ரீ ரங்கத்தைக் குறித்ததான ஊசலென்னும் பிரபந்தத்தை,
தொகுத்திட்டார் – பாடியருளினார்; (எ – று.)

இது சீரங்கநாயகரூசல் சீரங்கநாயகியாரூசல் என்ற இரண்டு பிரபந் தங்கட்குந் தனியனாகும்:
அதுபற்றியே, ‘திருவரங்கத்தூசல்’ எனப் பொதுப்படக் கூறினர்.
பிள்ளைப்பெருமாளையங்கார் பாடியது – சீரங்கநாயகரூசல் என்றும்,
அவரது திருப்பேரனாராகிய கோனேரியப்பனையங்கார் பாடியது – சீரங்கநாயகியாரூசல் என்றும் அறிக.
உயிர் ஊசலாடுவதுபோல அலைகிற பிறவித் தடுமாற்றத்தினின்று நீங்கித் தொண்டர்கள் உய்யுமாறு
இந்த இரண்டு பிரபந்தங்களும் செய்யப்பட்டன வென்க.
ஊசல்நீங்க ஊசல்பாடினார் என்ற நயம் கருதத்தக்கது; இது – தொடர்பின்மையணி யெனப்படும்.
வடநூலார் இதனை அஸங்கத்யலங்கார மென்பர்: ஒன்றைச்செய்யத் தொடங்கி அதற்குமாறான செயலைச் செய்தல்,
இதன் இலக்கணம். பிறவித்தடுமாற்றத்தை ஊசலாக உருவகஞ்செய்ததற்கு ஏற்ப, அண்டத்தைப் பந்தலாகவும்,
பற்றைக் கால்களாகவும், அறிவை விட்டமாகவும், கரணங்களைச் சங்கிலிகளாகவும், பிறப்பைப் பலகையாகவும்,
வினைகளை ஆட்டுபவராகவும், நரக சுவர்க்க பூமிகளிற் செல்லுதலை இறக்கம் ஏற்றம் தங்குதலாகவும்
உருவகஞ் செய்தன ரென்க; முற்றுருவகவணி.
நரக சுவர்க்க பூ வெளிகள் என்றதற்கு ஏற்பக் கூறாது ஏற்ற மிறக்கம் தங்கல் என மாற்றிக் கூறியது – எதிர்நிரனிறைப்பொருள்கோள்.
தான், ஏ – ஈற்றசைகள்.

———-

காப்பு –

புதுவை நகர்ப் பட்டர் பிரான் சரண்கள் போற்றி பொய்கை பூதன் பேயார் பாதம் போற்றி
சது மறைச் சொல் சடகோபன் சரணம் போற்றி தமிழ்ப் பாணன் தொண்டர் அடிப் பொடி தாள் போற்றி
முது புகழ் சேர் மழிசையர் கோன் பதங்கள் போற்றி முடிக் குல சேகரன் கலியன் கழல்கள் போற்றி
மதுர கவி எதிராசன் கூரத் தாழ்வான் வாழ்வான பட்டர் திருவடிகள் போற்றி —

(இ – ள்.) புதுவை நகர் – ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்தருளிய,
பட்டர்பிரான் – பெரியாழ்வாருடைய,
சரண்கள் – திருவடிகள்,
போற்றி – வாழ்வனவாக;
பொய்கை – பொய்கையாழ்வாரும்,
பூதன் – பூதத்தாழ்வாரும்,
பேயார் – பேயாழ்வாரும், (ஆகிய முதலாழ்வார்களுடைய),
பாதம் – திருவடிகள், போற்றி -;
சது மறை சொல் – வடமொழி நான்குவேதங்களின் பொருளையும் தமிழ்ச்சொல்லாற் பாடியருளிய,
சடகோபன் – நம்மாழ்வாரது,
சரணம் – திருவடிகள், போற்றி -;
தமிழ் பாணன் – செந்தமிழ்ப்பாடலில்வல்ல திருப்பாணாழ்வாரும்,
தொண்டர் அடி பொடி – தொண்டரடிப் பொடியாழ்வாரும் ஆகிய இவர்களது,
தாள் – திருவடிகள், போற்றி -;
முது புகழ் சேர் – பழமையாகிய கீர்த்தி பொருந்திய,
மழிசையர்கோன் – திருமழி சைப்பிரானுடைய,
பதங்கள் – திருவடிகள், போற்றி -;
முடி குலசேகரன் – கீரிடமணிந்த (அரசரான) குலசேகராழ்வாரும்,
கலியன் – திருமங்கையாழ்வாரும், (ஆகிய இவர்களது),
கழல்கள் – திருவடிகள், போற்றி -;
மதுரகவி -மதுரகவியாழ்வாரும்,
எதிராசன் – உடையவரும்,
கூரத்தாழ்வான் – கூரத்தாழ்வானும்,
வாழ்வு ஆன பட்டர் – நல்வாழ்வுபெற்ற பட்டரும், (ஆகிய இவர்களது), திருவடிகள் -, போற்றி -; (எ – று.)

————

திரு வாழ திரு ஆழி சங்கம் வாழ திரு அனந்தன் கருடன் சேனையர் கோன் வாழ
அருள் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ அளவில் குணத்து எதிராசன் அடியார் வாழ
இரு நாலு திரு எழுத்தின் ஏற்றம் வாழ ஏழ் உலகும் நான் மறையும் இனிது வாழ
பெரு வாழ்வு தந்தருள் நம் பெருமாள் எங்கள் பெரிய பெருமாள் அரங்கர் ஆடீர் ஊசல் –1-

(இ – ள்.) திரு – இலக்குமி, வாழ – வாழவும், –
திரு ஆழி சங்கம் – சங்க சக்கரங்கள், வாழ -,-
திரு அனந்தன் – திருவனந்தாழ்வானும்,
கருடன் – பெரியதிருவடியும்,
சேனையர்கோன் – சேனைமுதலியாரும், வாழ -,-
அருள் மாறன் முதல் ஆம் ஆழ்வார்கள் – (எம்பெருமானது) திருவருளைப் பெற்ற நம்மாழ்வார் முதலாகிய ஆழ்வார்கள் பன்னிருவரும், வாழ -,-
அளவு இல் குணத்து எதிராசன் – எல்லையில்லாத நற்குணங்களையுடைய எம்பெருமானாரும்,
அடியார் – (அவரது) அடியார்களும், வாழ -,-
இரு நாலு திருவெழுத்தின் ஏற்றம் – திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தின் சிறப்பு, வாழ -,-
ஏழ் உலகும் – மேலேழ் கீழேழ் என்ற பதினான்கு லோகங்களும்,
நால்மறையும் – நான்குவேதங்களும்,
இனிது வாழ – இனிமையாக வாழவும், –
பெரு வாழ்வு தந்தருள் – பெரியவாழ்ச்சியைக் கொடுத்தருள்கின்ற,
நம்பெருமாள் – நம்பெருமாளே!
எங்கள் பெரிய பெருமாள் – எமது பெரியபெருமாளே!
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் – ஊசலாடு வீராக; (எ – று.)

‘வாழ’ என்னும் எச்சங்கள் யாவும் ‘பெருவாழ்வுதந்தருள்’ என்பத னோடு இயையும். வாழ ஊசலாடிர் என இயைப்பினுமாம்.

————————————————–

உயரவிட்ட கற்பகப் பூம் பந்தர் நீழல் ஒண் பவளக் கால் நிறுவி ஊடு போட்ட
வயிரவிட்டத்து ஆடகச் சங்கிலிகள் நாற்றி மரகதத்தால் பலகை தைத்த ஊசல் மீதே
தயிரிலிட்ட மத்து உழக்கும் வெண்ணெய்க்கு ஆடி தட மறுகில் குடமாடி தழல் வாய் நாகம்
அயரவிட்டு அன்றாடிய நீர் ஆடீர் ஊசல் அணி அரங்க நம்பெருமாள் ஆடீர் ஊசல் –2-

———-

மீன் பூத்த விசும்பது போல் தரளம் கோத்து விரித்த நீலப்பட்டு விதானம் தோன்ற
வான் பூத்த கலை மதி போல் கவிகை ஓங்க மதிக்கதிர் போல் கவரி இரு மருங்கும் வீச
கான் பூத்த தனிச் செல்வன் சிலையுள் மின்னல் கரு முகில் போல் கணமணி வாசிகையின் நாப்பண்
தேன் பூத்த தாமரையாள் மார்பில் ஆட தென் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –3-

(இ – ள்.) மீன் பூத்த விசும்பு அது போல் – நட்சத்திரங்கள் விளங்குகிற ஆகாசம்போல,
தரளம் கோத்து விரித்த நீலப்பட்டு விதானம்தோன்றமுத்துக்கள் கோக்கப்பெற்றுப் பரப்பிய நீலப்பட்டினாலியன்ற மேற்கட்டு விளங்கவும், –
வான் பூத்த கலை மதி போல் – ஆகாயத்தில்தோன்றி விளங்குகின்ற பதினாறுகலைகளும் நிரம்பிய பூரணசந்திரன்போல,
கவிகை ஒங்கவெண்கொற்றக்குடை உயர்ந்துவிளங்கவும், –
மதி கதிர் போல் – சந்திரனுடைய கிரணங்கள்போல, கவரி இரு மருங்கும் வீச-வெண்சாமரங்கள் இரண்டுபக்கத்திலும் வீசப்பெறவும்,-
கான் பூத்த தனி செல்வன் சிலையுள்கற்பகக்காட்டில் விளங்குகின்ற ஒப்பற்ற செல்வத்தையுடையவனான இந்திரனது தநுசின் மத்தியில் தோன்றுகின்ற,
கரு முகில் மின்னல் போல்காளமேகத்து மின்னற்கொடிபோல, கணம் மணி வாசிகையின் நாப்பண்கூட்டமாகிய நவரத்தினங்களினாலியன்ற மாலையி னிடையிலே,
தேன் பூத்த நாமரையாள் – தேன்நிறைந்த செந்தாமரைமலரில்வாழ்கின்ற பெரியபிராட்டியார்,
மார்பில் ஆட – (தேவரீரது) மார்பில் அசையாநிற்கவும், –
தென் அரங்க மணவாளர் – தெற்கின்கணுள்ள திருவரங்கம்பெரியகோயிலி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

கான்பூத்ததனிச்செல்வன்சிலை –
இந்திரதநுசு. பல நிறங்களையுடைய இந்திரதநுசு – பலவகையிரத்தினங்களினாலியன்ற வாசிகைக்கும்,
கருமுகிலில் தோன்றும் மின்னல் – அத்திருமாலினதுமார்பில்தோன்றுகின்ற பெரிய பிராட்டியார்க்கும் உவமை.

————-

பூசுரரும் புரவலரும் வான நாட்டுப் புத்தேளிர் குழுவும் அவர் பூவை மாரும்
வாசவனும் மலரவனும் மழு வலானும் வணங்குவான் அவசரம் பார்த்து இணங்கு கின்றார்
தூசுடைய கொடித் தடந்தேர் மானம் தோன்று அச்சுடர் இரண்டும் பகல் விளக்காத் தோன்ற தோன்றும்
தேசுடைய திருவரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –4-

(இ – ள்.) பூசுரரும் – பூமியில் தேவர்போல விளங்குகின்ற பிராமணரும்,
புரவலரும் – காத்தல்தொழிலில்வல்ல அரசர்களும்,
வானம் நாட்டுபுத்தேளிர் குழுவும் – வானுலகத்தவரான தேவர்களின் கூட்டமும்,
அவர் பூவைமாரும் – அத்தேவர்களது மனைவியரும்,
வாசவனும் – (அத்தேவசாதியார்க்குத்தலைவனான) தேவேந்திரனும்,
மலர் அயனும் – (திருமாலின்நாபித்) தாமரைமலரில் தோன்றி பிரமதேவனும்,
மழு வலானும் – மழுவென்னும் ஆயுதத்தை யேந்திய சிவபிரானும், (ஆகிய இவர்கள்யாவரும்),
வணங்குவான் – (தேவரீரைத்) தொழுதற்காக,
அவசரம் பார்த்து – சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டு,
இணங்குகின்றார் – கூடுகின்றார்கள்; (அவர்கள்சேவிக்கும்படி), –
தூசு உடைய கொடி தட தேர் – சீலையினாலியன்ற துவசங்கள் கட்டிய பெரியதேரின்மீதும்,
மானம் – விமானத்தின்மீதும்,
தோன்று – காணப்படுகின்ற,
அ சுடர் இரண்டும் – (சூரியன் சந்திரன் என்ற) அந்த இருசுடர்களும்,
பகல் விளக்கு ஆ தோன்ற – பகற்காலத்தில் ஏற்றிய விளக்குப்போல (த் தேவரீரது ஒளிக்குமுன்னே) ஒளிமழுங்கும்படி,
தோன்றும் – விளங்கிக்காணப்படுகின்ற,
தேசு உடைய – பேரொளியையுடைய,
திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதரே!
ஊசல்ஆடிர் -; சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ – று.)

தேரின் மீது வருகின்ற சூரியனும், விமானத்தின் மீது வருகின்ற சந்திரனும், கோடிசூரியபிரகாசரான பெருமானது
பேரொளிக்குமுன்னே பகல்விளக்குப்போலத் தோன்றுவ ரென்க. அ – உலகறிசுட்டு. மானம் – விமான மென்பதன் முதற்குறை.

———–

மலை மகளும் அரனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட வாசவனும் சசியும் ஒரு வடம் தொட்டு ஆட்ட
கலை மகளும் அயனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட கந்தனும் வள்ளியும் கலந்து ஓர் வடம் தொட்டு ஆட்ட
அலை மகரப் பாற் கடலுள் அவதரித்த அலர் மகளும் நில மகளும் ஆயர் காதல்
தலை மகளும் இரு மருங்கில் ஆட எங்கள் தண் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –5-

(இ – ள்.) மலைமகளும் – பார்வதியும்,
அரனும் – (அவளதுகணவனான) சிவபிரானும்,
ஒரு வடம் தொட்டு ஆட்ட – ஒருசங்கிலியைப் பிடித்து ஆட்ட, –
சசியும் – இந்திராணியும்,
வாசவனும் – (அவளதுகணவனான) இந்திரனும்,
ஒரு வடம் தொட்டு ஆட்ட -, –
கலைமகளும் – சரசுவதியும்,
அயனும் – (அவளது கணவனான) பிரமனும்,
ஒரு வடம் தொட்டு ஆட்ட -, –
வள்ளியும் – வள்ளியம்மையும்,
கந்தனும் – (அவளதுகணவனான) சுப்பிரமணியமூர்த்தியும்,
கலந்து – ஒன்றுகூடி,
ஓர் வடம் தொட்டு ஆட்ட -, –
அலைமகரம் பாற்கடலுள் அவதரித்த அலர்மகளும் – அலைகளையும் சுறாமீன்களையுமுடைய திருப்பாற்கடலில் (கடைந்தபோது)
தோன்றியவளாகிய தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளும்,
நிலமகளும் – பூமிப்பிராட்டியும்,
ஆயர் காதல் தலைமகளும் – இடையராற் பெற்றுவளர்க்கப்பட்ட அன்பிற்குஉரிய தேவியாகிய நீளாதேவியும்,
இரு மருங்கில் ஆட – (தேவரீரது) இருபக்கத்திலும் உடனிருந்து ஆடும்படி,
எங்கள் தண் அரங்கம் மணவாளர் – எமது குளிர்ந்த ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளியுள்ள அழகியமணவாளரே!
ஊசல் ஆடிர் -;

—————————————————————————–

திருவழுதி வளநாடன் பொருனைச் சேர்ப்பன் சீ பராங்குச முனிவன் வகுளச் செல்வன்
தரு வளரும் குருகையர் கோன் காரி மாறன் சடகோபன் தமிழ் வேதம் ததியர் பாட
கருணை பொழி முக மதியம் குறு வேர்வு ஆட கரிய குழல் கத்தூரி நாமத்து ஆட
அருகிருக்கும் தேவியர்கள் அது கொண்டாட அணி அரங்கத்து எம்பெருமான் ஆடீர் ஊசல் –6-

(இ – ள்.) திரு வழுதி வளம் நாடன் – வளப்பமுள்ள பாண்டியநாட்டில் திருவவதரித்தவரும்,
பொருநை சேர்ப்பன் – தாமிரபர்ணிநதியின் கரையில் வாழ்பவரும்,
சீபராங்குசமுனிவன் – (அந்யமதஸ்தராகிய யானைகட்கு அங்குசம்போன்றிருத்தலால்) ஸ்ரீபராங்குசனென்று திருநாமம்பெற்ற யோகியும்,
வகுளம் செல்வன் – மகிழமலர்மாலையையணிந்த சிறப்புடையோரும்,
தரு வளரும் குருகையர் கோன் – மரச்சோலைகள் ஓங்கிவளர்தற்கு இடமான திருக்குருகூரி லுள்ளார்க்குத் தலைவரும்,
காரி மாறன் – காரியென்பவர்க்குத் திருக்குமாரராய் மாறனென்று ஒருதிருநாமம்பெற்றவரும்,
சடகோபன் – சடகோபனென்னுந் திருநாமமுடையவருமான நம்மாழ்வார் அருளிச்செய்த,
தமிழ்வேதம் – வடமொழி வேதத்தின்சாரமாகித் தமிழ் மொழியினாலியன்ற திருவாய்மொழி முதலிய திவ்யபிரபந்தங்களை,
ததியர்(ததீயர்) பாட – பாகவதர்கள் பாடாநிற்கவும், –
கருணை பொழி முகம் மதியம் – திருவருளைச் சொரிகின்ற பூர்ணசந்திரன்போன்ற திருமுகத்திலே,
குறுவேர்வு ஆட – சிறிய வேர்வைநீர் தோன்றி அசையவும்,
கரிய குழல் கத்தூரி நாமத்து ஆட – கருங்குழற்கற்றையும் கத்தூரித்திருநாமமும் ஒருசேர அசையவும், –
அருகு இருக்கும் தேவியர்கள் அது கொண்டாட – இருமருங்கிலுமுள்ள தேவிமார்கள் அந்தவைபவத்தைக் கண்டு கொண்டாடவும், –
அணி அரங்கத்து எம்பெருமான் – அழகிய திருவரங்கநாதனே!
ஊசல் ஆடிர் -;

நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என நான்காம்.

——————————————————————-

வையம் ஒரு பொன் தகட்டுத் தகளியாக வார் கடலே நெய்யாக அதனுள் தேக்கி
வெய்ய கதிர் விளக்காக செஞ்சொல் மாலை மெல்லடிக்கே சூட்டினான் மேன்மையாட
துய்ய மதி மண்டலத்தின் மறுவே ஒப்பச் சோதி விடு கத்தூரி துலங்கு நாமச்
செய்ய திரு முகத்து அரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –7-

(இ – ள்.) வையம் – நிலவுலகத்தையே,
ஒரு பொன் தகடு தகளி ஆக – ஒப்பற்ற பொன்தகட்டினாற் செய்த அகலாகக்கொண்டு,
வார் கடலே – நீண்ட சமுத்திரத்தையே,
நெய் ஆக -,
அதனுள் தேக்கி – அவ்வகலில் நிறைத்து,
வெய்ய கதிர் – உஷ்ணகிரணனான சூரியனையே,
விளக்கு ஆக – விளக்காகக்கொண்டு (இவ்வாறானபொருளைத் தெரிவிக்கின்ற பாடலைத் தொடங்கி),
செஞ் சொல் மாலை – செவ்விய தமிழ்ச்சொற்களினாலாகிய பாமாலையை,
மெல் அடிக்கே சூட்டினான் – மேன்மையான (தேவரீரது) திருவடிகளில் அணிந்தவராகிய பொய்கையாழ்வார் அருளிச்செய்த,
மேன்மை – (தேவரீரது) மேன்மையைத் தெரிவிக்கின்ற திவ்யப்ரபந்தத்தை,
பாட – (ததீயர்)எடுத்துப்பாடாநிற்க, –
துய்ய மதி மண்டலத்தின் மறுவே ஒப்ப – பரிசுத்தமாகிய சந்திரமண்டலத்திலுள்ள களங்கத்தைப் போல,
சோதி விடு கத்தூரி நாமம் துலங்கு – ஒளிவிடுகின்ற கஸ்தூரிதிலகம் விளங்கப்பெற்ற,
செய்ய திருமுகத்து – அழகிய திருமுகத்தையுடைய,
அரங்கர் – திருவரங்கநாதரே!
ஊசல் ஆடிர் -;
சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ – று.)

முதலாழ்வார்மூவரும் திருக்கோவலூரில் ஓர்இடைகழியில் மழைக்காலத்து ஒருநாளிரவில் தங்கியிருக்கையில்,
எம்பெருமான் இருட்டில் அவர்களோடு தானும் ஒருவனாய் நின்று நெருக்க, அப்பொழுது பொய்கையாழ்வார்
“வையந் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்யகதிரோன் விளக்காகச் செய்ய,
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை, யிடராழிநீங்குகவே யென்று” என்று முதல்திருவந்தாதிப் பிரபந்தத்தைத் தொடங்கி
வெய்யகதிரினால் விளக்கேற்றின ரென்க.
கீழ்ச்செய்யுளில், ‘சடகோபன்தமிழ்வேதம் ததியர்பாட’ என்று கூறியதற்கு ஏற்ப, இச்செய்யுளிலும் ‘ததீயர்’ என்று
வருவித்துப் பொருளுரைக்கப்பட்டது; மேலும் இங்ஙனமே கூறப்படும்.
இப்பொருளில், மேன்மை – மேன்மையான பிரபந்தத்திற்கு, இலக்கணை;
இனி, பொய்கையாழ்வார் தேவரீரது மேன்மைகளைப் பாட என்றும்,
பொய்கையாழ்வாரது மேன்மையைத் ததீயர்பாட என்றும் கூறுவாரு முளர்; மேலும் இங்ஙனமே காண்க.

————

அன்பு என்னும் நன் பொருள் ஓர் தகளியாக ஆர்வமே நெய்யாக அதனுள் தேக்கி
இன்புருகு சிந்தை இடுதிரியா ஞானத்து இலகு விளக்கு ஏற்றினான் இசையைப் பாட
பொன் புரையும் புகழ் உறையூர் வள்ளி யாரும் புதுவை நகர் ஆண்டாளும் புடை சேர்ந்து ஆட
முன்பிலும் பின்பு அழகிய நம்பெருமாள் தொல்லை மூ வுலகுக்கும் பெருமாள் ஆடீர் ஊசல் –8-

(இ – ள்.) அன்பு என்னும் நல் பொருள் – அன்புஎன்கிற நல்ல பொருளையே,
ஓர் தகளி ஆக – ஒரு அகலாகக் கொண்டு,
ஆர்வமே – பக்தியையே,
நெய் ஆக -,
அதனுள் தேக்கி – அவ்வகலுள் நிறைத்து,
இன்பு உருகு சிந்தை – ஆனந்தத்தினாலே உருகுகின்ற மனத்தையே,
இடு திரி ஆ – அதிலிட்ட திரியாகக்கொண்டு,
ஞானத்து இலகுவிளக்கு ஏற்றினான் – தத்துவஞானத்தினால் விளங்குகின்ற விளக்கை ஏற்றினவராகிய பூதத்தாழ்வாருடைய,
இசையை – புகழ்பெற்ற திவ்யப்ரபந்தத்தை,
பாட – (ததீயர்) பாடாநிற்கவும், –
பொன் புரையும் புகழ் உறையூர் வல்லியாரும் – பெரியபிராட்டியாரைப் போன்ற கீர்த்தியையுடைய திருவுறையூர்நாச்சியாரும்,
புதுவைநகர் ஆண்டாளும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்த ஆண்டாளும்,
புடை சேர்ந்து ஆட – தேவரீரது இருபக்கத்திலும் சேர்ந்து ஆடவும், –
முன்பிலும் பின்பு அழகிய நம்பெருமாள் – முற்பக்கத்திலும் பிற்பக்கம் அழகியவரான நம்பெருமாளே!
தொல்லை மூவுலகுக்கும் பெருமாள் – பழமையான மூன்று லோகங்களுக்கும் நாயகரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

“அன்பே தகளியா வார்வமேநெய்யாக, இன்புருகுசிந்தையிடுதிரியா –
நன்புருகி, ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு, ஞானத்தமிழ் புரிந்த நான்” என்பது,
பூதத்தாழ்வார் அப்போது அருளிச்செய்த இரண்டாந்திருவந்தாதியின் முதற்பாசுரம்.

——————————————————-

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் என்ற திகழ் அருக்கன் அணி நிறமும் திகிரி சங்கும்
இருள் கொண்ட கருங்கங்குல் இடையே கோவல் இடை கழியில் கண்ட பிரான் ஏற்றம் பாட
மருக்கொண்ட கொன்றையான் மலரின் மேலான் வானவர் கோன் முதலானோர் மகுட கோடி
நெருக்குண்ட தாள் அரங்கர் ஆடீர் ஊசல் நீளைக்கு மணவாளர் ஆடீர் ஊசல் –9-

(இ – ள்.) இருள் கொண்டகருங் கங்குலிடையே – அந்தகாரம் மிகுந்த கரிய நடுராத்திரியில்,
கோவல் இடைகழியில் – திருக்கோவலூரிலுள்ள ஓர் இடைகழியிலே,
“திரு கண்டேன் – இலக்குமியைக் கண்டேன்,
பொன்மேனி கண்டேன் – அழகிய திருமேனியைக் கண்டேன்,
திகழ் அருக்கன் அணி நிறமும் – விளங்குகின்ற சூரியன்போன்ற அழகிய திரு நிறத்தையும்,
திகிரி சங்கும் – (திவ்வியாயுதங்களாகிய) சக்கரத்தையும் சங்கத்தையும்,
(கண்டேன்-“) என்ற – என்று பாடினவரும்,
கண்ட – (திரு முதலானவர்களை நேரில்) தரிசித்தவருமாகிய,
பிரான் – தலைவரான பேயாழ்வாருடைய,
ஏற்றம் – சிறப்புள்ள பிரபந்தத்தை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
மரு கொண்ட கொன்றையான் – வாசனையையுடைய கொன்றைமலர்மாலையைத் தரித்த சிவபிரானும்,
மலரின்மேலான் – தாமரைமலரில் வீற்றிருப்பவனாகிய பிரமனும்,
வானவர் கோன் – தேவராசனாகிய இந்திரனும்,
முதலானோர் – முதலிய அடியவர்களது,
மகுடம் கோடி – கிரீடங்களின் வரிசைகள்;
நெருக்குண்ட – (அந்தத் தேவர்கள் கீழ்வீழ்ந்து தேவரீரைச் சேவிக்கும்போது) நெருங்கப்பெற்ற,
தாள் – திருவடிகளையுடைய,
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -;
நீளைக்கு மணவாளர் – நீளாதேவிக்கு மணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

“திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் றிக”, மருக்கனணிநிற முங்கண்டேன் –
செருக்கிளரும், பொன்னாழிகண்டேன் புரிசங்கங்கைக் கண்டேன், என்னாழிவண்ணன்பாலின்று” என்பது,
பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாந்திருவந்தாதியின் முதற்பாசுரம்.

———————————————————————-

நான்முகனை நாரணனே படைத்தான் அந்த நான்முகனும் நக்க பிரானைப் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி அறிவித்தேன் என்று யார்க்கும் வெளியிட்ட பிரான் இயல்பைப் பாட
பால் முகம் ஆர்வளை நேமி படைகள் காட்ட பாசடைகள் திரு மேனிப் படிவம் காட்ட
தேன் முக மா முளரி அவயவங்கள் காட்ட செழும் தடம் போல் அரங்கேசர் ஆடீர் ஊசல் –10-

(இ – ள்.) ‘நாரணனே – நாராயணனே,
நான்முகனை – நான்கு முகங்களையுடைய பிரமதேவனை,
படைத்தான் – சிருஷ்டித்தான்;
அந்த நான்முகனும் – அந்தப் பிரமனும்,
நக்கபிரானை படைத்தான் – சிவபிரானைச் சிருஷ்டித்தான், (என்கிற இந்த அர்த்தவிசேஷத்தை),
யான் – (எம்பெருமானதுநல்லருளாலே தத்துவஞானம் உதிக்கப்பெற்ற) நான்,
முகம் ஆய் – (பிரசாரஞ்செய்வதில்) முக்கியனாய்க்கொண்டு,
அந்தாதி – அந்தாதி யென்னும்பிரபந்தத்தினால்,
அறிவித்தேன் – (அஜ்ஞான உலகத்தோர்க்குத்) தெரிவிக்கலானேன்,’
என்று – என்றுதொடங்கி,
யார்க்கும் வெளியிட்ட – யாவர்க்கும் (தத்துவத்தை) வெளியிட்டருளிய,
பிரான் – திருமழிசைப் பிரானது,
இயல்பை – சிறந்த தன்மையுள்ள பிரபந்தங்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
பால் முகம் ஆர் வளை – பால்போன்ற வெண்ணிறத்தைக் கொண்டுள்ள சங்குபூச்சிகளும்,
நேமி – சக்கரவாகப் பறவைகளும்,
படைகள் – (தேவரீரது) திவ்வியாயுதங்களை,
காட்ட – காட்டாநிற்கவும்,
பசு அடைகள் – பசிய தாமரையிலைகள்,
திருமேனி படிவம் காட்ட – (தேவரீரது) திருமேனிநிறத்தைக் காட்டாநிற்கவும்,
தேன் முகம் மா முளரி – தேனைக் கொண்ட சிறந்த தாமரைமலர்கள்,
அவயவங்கள் காட்ட – (தேவரீரது திருக்கை திருவடி முதலிய) திருவவயவங்களைக் காட்டாநிற்கவும்,
செழுந் தடம் போல் – செழித்த தடாகத்தை யொத்திருக்கிற,
அரங்கேசர் – ஸ்ரீரங்கராஜரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனுந், தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் –
யான்முகமாய், அந்தாதிமேலிட்டறிவித்தே னாழ்பொருளைச், சிந்தாமற்கொண்மினீர் தேர்ந்து” என்பது,
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த நான்முகன்றிருவந்தாதியின் முதற்பாசுரம்.
இதுவன்றி, இவ்வாழ்வார் திருச்சந்தவிருத்தம் என்னும் பிரபந்தமும் அருளிச்செய்திருக்கின்றனர்.
“மாயக்கூத்தா வாமனா வினையேன்கண்ணா கண்கைகால்,
தூயசெய்ய மலர்களாச் சோதிச்செவ்வாய் முகிழதாச்,
சாயச் சாமத்திருமேனி தண்பாசடையாத் தாமரைநீள்,
வாசத்தடம்போல் வருவானே யொருநாள் காணவாராயே” என்ற பாசுரம் பின்னிரண்டடிகளில் கருதத்தக்கது.

————

மருள் இரிய மறம் இரிய அனைத்து உயிர்க்கும் மயல் இரிய வினை இரிய மறையின் பாடல்
இருள் இரிய என்று எடுத்துத் தொண்டர் தங்கள் இடர் இரிய உரைத்த பிரான் இட்டம் பாட
அருள் இரிய அறம் இரிய உலகை ஆண்ட ஆடகத்தோன் அகம் பரன் என்று அபிமானித்த
பொருள் இரிய சொல் இரிய மார்வம் கீண்ட பொன்னி சூழ் திரு வரங்கர் ஆடீர் ஊசல் –11–

(இ – ள்.) அனைத்து உயிர்க்கும் – எல்லாச்சீவராசிகளுக்கும்,
மருள் இரிய – அஜ்ஞாநம் நீங்கவும்,
மறம் இரிய – கொடுமை நீங்கவும்,
மயல் இரிய – (அஜ்ஞாநத்தினால் விளைகின்ற) மதிமயக்கம் நீங்கவும்,
வினை இரிய – இருவினைகளும் நீங்கவும்,
மறையின் பாடல் – வேதத்தின் பொருளமைந்த பாடல்களை,
இருள் இரிய என்று எடுத்து, – “இருளிரிய” என்றுதொடங்கி,
தொண்டர்தங்கள் இடர் இரிய – (அதனைப்பாடுகின்ற) அடியார்களது பிறவித்துன்பமெல்லாம் நீங்கும்படி,
உரைத்த – (பிரபந்தத்தைத்) திருவாய்மலர்ந்தருளிய,
பிரான் – குலசேகரப்பெருமாளுடைய,
இட்டம் – விருப்பான பெருமாள் திருமொழியென்னும்பிரபந்தத்தை,
பாட – (ததீயர்)பாடா நிற்க, –
அருள் இரிய – கருணையில்லாமற்போக,
அறம் இரிய – தருமம் விலகும்படி,
உலகை ஆண்ட – மூவுலகங்களையும் (தானொருவனாகவே) தனியரசாட்சிசெய்த,
ஆடகத்தோன் – இரணியன்,
அகம் பரன் என்று அபிமானித்த பொருள் இரிய – ‘நான்தான் பரதேவதை’ என்று செருக்கியிருந்த தன்மை ஒழியுமாறும்,
சொல் இரிய – (அப்பொருளுக்கு இடமாகிய) சொற்களும் ஒழியுமாறும்,
மார்வம்கீண்ட – (அவ்வசுரனது) மார்பத்தை (நரசிங்கரூபியாய்த்தோன்றிப்) பிளந்தழித்த,
பொன்னிசூழ் திருவரங்கர் – காவேரிநதியினாற் சூழப்பெற்ற திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று,)

“இருளிரியச் சுடர்மணிகளிமைக்குநெற்றி யினத்துத்தியணிபணமாயி ரங்களார்ந்த,
அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்னு மணிவிளங்குமுயர் வெள்ளையணையைமேவித்,
திருவரங்கப் பெருநகருள், தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடிவருடப் பள்ளிகொள்ளுங்,
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண் டென்கண்ணிணைக ளென்றுகொலோ களிக்குநாளே” என்பது,
குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள்திருமொழியின் முதற்பாசுரம்.
ஹாடகம் – பொன். நரசிங்கமூர்த்தியாய் இரணியாசுரனது மார்பைக் கீண்டமாத்திரத்தில்
அகம்பர னென்ற சொல்லும் பொருளும் ஒழிந்தன வென்க.

——-

அரன் என்றும் அயன் என்றும் புத்தன் என்றும் அலற்றுவார் முன் திரு நாரணனே ஆதி
பரன் என்று மறை உரைத்து கிழி அறுத்த பட்டர் பிரான் பாடிய பல்லாண்டு பாட
கரன் என்ற மாரீசன் கவந்தன் என்ற கண்டகரார் உயிர் மடியக் கண்டு இலங்கா
புரம் வென்ற சிலை அரங்கர் ஆடீர் ஊசல் புகழ் உறையூர் வல்லியோடு ஆடீர் ஊசல்-12–

(இ – ள்.) (பரதேவதை), அரன் என்றும் – சிவபெருமானே யென்றும்,
அயன் என்றும் – பிரமதேவனே யென்றும்,
புத்தன் என்றும் – புத்தனே யென்றும்,
அலற்றுவார் முன் – (இவ்வாறு தமக்குத்தோன்றியவாறெல்லாம் வாயினாற்) பிதற்றுகின்ற அந்யமதஸ்தர்கட்கு எதிரில்,
திருநாரணனே ஆதிபரன் என்று – ‘ஸ்ரீமந்நாராயணனே முதலாகிய பரதேதைவ’ என்று,
மறை உரைத்து – (அதற்கு ஆதாரமாகிய) வேதபிரமாணங்களை எடுத்துக்கூறி,
கிழி அறுத்த – (வல்லபதேவபாண்டியன் வித்யாசுல்கமாகக்கட்டிவைத்த) பொற்கிழியை அறுத்துக்கொண்ட,
பட்டர்பிரான் – (அவ்வாறு அந்யமதஸ்தரரீன வித்துவான்களையெல்லாம் வென்றிட்டதனால்) பட்டர்பிரானென்று பட்டப்பெயர்பெற்ற பெரியாழ்வார்,
பாடிய – திருவாய்மலர்ந்தருளிய, பல்லாண்டு. ‘திருப்பல்லாண்டு’ என்னுந் திவ்யப்ரபந்தத்தை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
கரன் என்ற (கண்டகன்) – கரனென்று சொல்லப்பட்ட கொடியவனும்,
மாரீசன் கவந்தன் என்ற கண்டகர் – மாரீசன் கவந்த னென்ற கொடியவரும்,
ஆர் உயிர் மடிய கண்டு – அருமையான உயிர் மடியும்படி கொன்று,
இலங்காபுரம் வென்ற – இலங்காபட்டணத்தைச் சயித்த,
சிலை – (கோதண்டமென்னும்) வில்லையேந்திய,
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -;
புகழ் உறையூர் வல்லியோடு – புகழ்பெற்ற உறையூர்நாச்சியாரோடு, ஊசல் ஆடிர் -; (எ – று.)

பல்லாண்டு – முதற்குறிப்பால், ‘பல்லாண்டு’ என்றுதொடங்கிய பிரபந்தத்தைக் காட்டும்.
இவர்பாடிய பிரபந்தங்கள் – திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும்.

—————————————————————————

மருமாலைப் பசுந்துளவத் தொடைகளோடு வைகறையில் வந்து திருத் துயில் உணர்த்தித்
திரு மாலை திருவடிக்கே சூட்டி நிற்கும் தரு மண்டங்குடிப் பெருமான் சீர்மை பாட
பெருமாலை அடைந்து உலகம் மதி மயங்க பேணாதார் படக் கதிரோன் காணாது ஏக
ஒரு மாலை பகலில் அழைத்து ஒளித்த நேமி ஒளி உள்ளார் அரங்கேசர் ஆடீர் ஊசல் –13-

(இ – ள்.) மரு மாலை – (திருமகளோடு) மருவியுள்ள திருமாலை,
பசுந்துளவம் தொடைகளோடு – பசுமையாகிய திருத்துழாய்மாலையுடனே,
வைகறையில் – விடியற்காலத்தில்,
வந்து – (சந்நிதிக்கு) வந்து,
திருதுயில் உணர்த்தி – (திருப்பள்ளியெழுச்சிபாடித்) துயிலுணரச்செய்து,
திரு மாலை – திருமாலையென்னுந் திவ்வியபிரபந்தத்தை,
திருவடிக்கே சூட்டி நிற்கும் – திருவடிகளிற் சமர்ப்பித்துநிற்கின்ற,
திருமண்டங்குடி பெருமான் – திருமண்டங்குடியில் திருவவதரித்த தொண்டரடிப்பொடியாழ்வாராது,
சீர்மை – சிறப்புள்ள பிரபந்தங்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
உலகம் – உலகத்திலுள்ளார்,
பெரு மாலை அடைந்து – பெரிய மயக்கத்தை யடைந்து,
மதி மயங்க – அறிவு கலங்கவும்,
பேணாதார் பட – பகைவர்கள் அழியவும்,
கதிரோன் காணாது ஏக – சூரியன் தோன்றாது மறையவும்,
ஒரு மாலை – ஓரிரவை,
பகலில் – பகற்பொழுதிலே,
அழைத்து – வருவித்து,
ஒளித்த – (சூரியனை) மறைத்த,
ஒளி நேமி உள்ளார் – கோடிசூரியபிரகாசமான திருவாழியாழ்வானை யுடையவராகிய,
அரங்கேசர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

இனி, மருமாலைப்பசுந்துளவத்தொடைகளோடு – நறுமணமுள்ள மாலைகளாகிய திருத்துழாய்மாலைகளோடு
என்று பொருளுரைப்பாருமுளர்,
தொண்டரடிப்பொடியாழ்வார், ஸ்ரீரங்கநாதனுக்குத் திருத்துளவத்தொண்டு செய்து வந்ததோடு, திருப்பள்ளியெழுச்சி, திருமாலை
என்னுந் திவ்வியப்ரபந்தங்களையும்பாடின ரென்க.
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவவதாரஸ்தலமாகிய திருமண்டங்குடியென்னுந் தலம்,
சோழநாட்டில் கபிஸ்தலத்திற்கு வடகிழக்கேயுள்ளது.
‘நிரவதிகதேஜோரூபமான திருவாழியாலே ஆதித்யனை மறைத்தாலும் லோகத்துக்கு மிகவும் வெளிச்சிறப்பு உண்டா மித்தனையன்றோ?
ஆதித்யன் அஸ்தமித்தானென்னும்படி கண்களுக்கு இருண்டுதோற்றுவான் என்’ என்னில், –
இந்தஆதித்யனுடைய தேஜசு கண்ணாலே முகக்கலாம்படி அளவுபட்டிருக்கையாலே தமஸ்ஸு போம்படியாயிருக்கும்;
அங்ஙனன்றிக்கே, திருவாழியாழ்வானுடைய தேஜசு நேர்கொடுநேர் கண்கொண்டு பார்க்கவொண்ணாதபடி
மிக்கிருக்கையாலே பளபளத்துக் கண்ணையிருளப் பண்ணிற்று’ என்ப வாதலால்,
‘ஒருமாலை பகலிலழைத்தொளித்த நேமியொளியுள்ளார்’ என்றார்.

————-

கார் அங்கத் திரு உருவம் செய்ய பாத கமலம் முதல் முடி அளவும் கண்டு போற்ற
சாரங்க முனியை ஊர்ந்து அமலன் ஆதி தனை உரைத்த பாண் பெருமாள் தகைமை பாட
ஆரம் கொள் பாற் கடல் விட்டு அயன் ஊர் ஏறி அயோத்தி நகர் இழிந்து பொன்னி ஆற்றில் சேர்ந்த
சீ ரங்க மணவாளர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –14-

(இ – ள்.) கார் அங்கம் திருஉருவம் – காளமேகம்போன்ற திருவுருவத்தை,
செய்ய பாத கமலம் முதல் – செந்நிறமாகிய திருவடித்தாமரையென்ற உறுப்புமுதல்,
முடிஅளவும் – திருமுடிவரையிலும்,
கண்டுபோற்ற – சேவித்துத்துதிக்கும்படி,
சாரங்கமுனியை ஊர்ந்து – லோகசாரங்கமகாமுனிவர்மேல் ஏறிவந்து,
அமலனாதிதனை உரைத்த – ‘அமலனாதிபிரான்’ என்று தொடங்கும் பிரபந்தத்தைப்பாடியருளிய,
பாண்பெருமாள் – திருப்பாணாழ்வாரது,
தகைமை – பெருமையுள்ள (‘அமலனாதிபிரான்’ என்னும்) பிரபந்தத்தை,
பாட – (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, –
ஆரம் கொள் பாற்கடல் விட்டு – முத்துக்களையுடைய திருப்பாற்கடலை விட்டுநீங்கி,
அயன் ஊர் ஏறி – பிரமதேவனது நாடாகிய சத்தியலோகத்திற் சென்றிருந்து,
அயோத்திநகர் இழிந்து – திருவயோத்தியில் இறங்கிச் சிலகாலம் வாழ்ந்து, (பின்பு),
பொன்னி ஆற்றில் சேர்ந்த – உபயகாவேரியின் மத்தியிற் சேர்ந்த,
சீரங்கமணவாளர் – ஸ்ரீரங்கக்ஷேத்திரத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே!
ஊசல் ஆடிர் -; சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ – று.)

லோகசாரங்கமகாமுனிவர் திருவரங்கநாதனுக்குத் திருமஞ்சனம் சமர்ப்பித்துவரும்நாளில் ஒருகால் திருமஞ்சனங்கொணருமாறு
தென்திருக்காவேரிக்குச் செல்லுகையில், வீணையுங் கையுமாய் மெய்ம்மறந்து ஸ்ரீரங்கநாதனைப் பாடிக்கொண்டிருந்த
திருப்பாணாழ்வார் திருவடிகளில் அபசாரப்பட்டு, அந்தஅபசாரம் தீருமாறு ஸ்ரீரங்கநாதனது நியமனத்தால்
அவ்வாழ்வாரைத்தமதுதோளின்மேலெழுந்தருளப்பண்ணிக்கொண்டு ஸ்ரீரங்கநாதனது திருமுன்பேவிட,
அவ்வாழ்வார் “அமலனாதிபிரானடியார்க்கென்னையாட்படுத்த,
விமலன்விண்ணவர்கோன்விரையார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீண்மதிளரங்கத்தம்மான்,
திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றவே” என்று தொடங்கிப் பாதாதிகேசாந்தமாக அப்பிரானை அநுபவித்தனரென்க.
பிரமதேவன் திருப்பாற்கடலினின்று ஆவாகநம்பண்ணிப்பிரதிஷ்டைசெய்த விஷ்ணுமூர்த்தியைத் திருவாராதனஞ்செய்து கொண்டிருக்க,
பின்பு, சூரியவமிசத்துத்தோன்றிய இக்ஷ்வாகுமன்னன் அப்பிரமனிடத்தினின்று அப்பெருமானைப்பெற்றுத்
திருவயோத்தியில் திருவாராதனஞ்செய்துவர, பிறகு குலமுறையாகத் தனக்குக்கிடைத்த அப்பெருமானை இராமபிரான்
தனக்கு அந்தரங்கனான ஸ்ரீவிபீஷணாழ்வானுக்குத் தந்தருள, அவன் அப்பிரானை எழுந்தருள்வித்துக் கொண்டு
தனது இலங்கைநோக்கிச் செல்லுகையில், அப்பெருமான் இடைவழியில் உபயகாவேரி மத்தியிலே புடைபெயராது
விமானத்துடனே நிலைநின்றருளினான்; அவ்விடமே ஸ்ரீரங்க மெனப்படுவது.

———————————————————————————

விழி பறித்து வெள்ளியை மா வலியை மண்ணும் விண்ணுலகும் பறித்த குறள் வேடத்து உம்மை
வழி பறித்து மந்திரம் கொண்டு அன்பர் தங்கள் வல்வினையைப் பறித்த பிரான் வண்மை பாட
சுழி பறித்த கங்கை முடி அடியில் தோயத் தொழுது இரக்கும் முக்கணன் நான் முகனைச் செய்த
பழி பறித்துப் பலி ஒழித்தார் ஆடீர் ஊசல் பள்ளி கொண்ட திரு அரங்கர் ஆடீர் ஊசல் –15–

(இ – ள்.) வெள்ளியை – சுக்கிராசாரியனது,
விழி – ஒற்றைக்கண்ணை,
பறித்து – (தருப்பைப்புல்நுனியாற்) குத்திக்கிளறி,
மாவலியை – மகாபலிசக்கரவர்த்தியினிடத்தினின்றும்,
மண்ணும் – பூலோகத்தையும்,
விண் உலகும் – தேவலோகத்தையும்,
பறித்த – தன்னுடையனவாக்கிக்கொண்ட,
குறள் வேடத்து – வாமநவடிவத்தையுடைய,
உம்மை, தேவரீரை,
வழிபறித்து – (மணவாளக்கோலத்தோடு திருமணங்கொல்லையிற்சென்றபோது) இடைவழியே மடக்கி (த் தேவரீரது) பொருள்களைக் கவர்ந்து,
மந்திரம் கொண்டு – (தேவரீரிடத்தில்) திருமந்திரோபதேசம் பெற்றுக்கொண்டு, (அந்தத்திருமந்திரத்தினால்),
அன்பர்தங்கள் வல் வினையை பறித்த – அடியார்களது கொடிய இருவினைப்பற்றையும் ஒழித்தருளிய,
பிரான் – திருமங்கையாழ்வாரது,
வண்மை சிறந்தபாடல்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
சுழி பறித்த கங்கை முடிசுழிகளினாற் கல்லுந் தன்மையுள்ள (சுழிகளையுடைய) கங்காநதியைத் தரித்த சிரசானது,
அடியில் தோய – திருவடியிற் பொருந்தும்படி,
தொழுது இரக்கும் – (தேவரீரை) வணங்கிப்பிரார்த்திக்கின்ற,
முக்கணன் – மூன்றுகண்களையுடைய சிவபிரான்,
நான்முகனை செய்த – நான்குமுகங்களையுடைய பிரமனது சிரசைக் கொய்ததனா லுண்டாகிய,
பழி – பிரமகத்திதோஷத்தை,
பறித்து – நீக்கி,
பலி ஒழித்தார் – (அச்சிவபிரான் தனது பிரமகத்திதீருமாறு செய்த) பிக்ஷாடநத்தைத் தீர்த்த நம்பெருமாளே!
ஊசல் ஆடிர் -;
பள்ளி கொண்ட திருவரங்கர் – (திருவநந்தாழ்வான்மீது) பள்ளிகொண்டருளிய திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திவ்யப்ரபந்தங்கள் – பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்,
திருவெழுகூற்றிருக்கை, சிறியதிருமடல், பெரியதிருமடல் என்னும் ஆறுபிரபந்தங்கள்;
இவை – நம்மாழ்வார் நான்குவேதங்களின் சாரமாக அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்கட்கு ஆறுஅங்கம்போலு மென்பர்.
விழிபறித்து மண்ணும் விண்ணும் பறித்த தேவரீரிடத்துத் திருமங்கையாழ்வார்
வழிபறித்து உலகோர் இருவினையைப் பறித்தார் என்னும் நயமும்,
மாவலியினிடத்து இரந்த தேவரீர் சிவபிரானது இரத்தலைப் போக்கினீர் என்னும் நயமும் கருதத்தக்கன.
பறித்த என்ற சொல் ஒருபொருளிற் பலமுறை பயின்றுவந்தது – சொற்பொருட்பின்வருநிலையணியாம்.

———

போதனார் நெட்டு எழுத்தும் நமனார் இட்ட குற்று எழுத்தும் புனல் எழுத்தாய்ப் போக மாறன்
வேதம் ஆயிரம் தமிழும் எழுதி அந்நாள் மேன்மை பெறு மதுரகவி வியப்பைப் பாட
ஓதம் ஆர் மீன் வடிவாய் ஆமை ஏனத்து உருவாகி அரி குறள் மூ இராமராகி
கோது இலாக் கண்ணனாய் கற்கி ஆகும் கோயில் வாழ் அரங்கேசர் ஆடிர் ஊசல் –16-

(இ – ள்.) போதனார் நெட்டெழுத்தும் – தாமரைமலரில் வாழ்கின்ற பிரமன் விதித்துஎழுதிய நெட்டெழுத்தும்,
நமனார் இட்ட குற்றெழுத்தும் – யமன் எழுதிய குற்றெழுத்தும்,
புனல் எழுத்து ஆய் போக – நீரில் எழுதிய எழுத்துப்போல மறைந்து விடும்படி, –
மாறன் வேதம்ஆயிரம் தமிழும் எழுதி – நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்வேதமாகிய திருவாய்மொழி ஆயிரம்பாசுரங்களையும் பட்டோலைகொண்டு எழுதி,
(அதனால்), அ நாள் மேன்மை பெறு – அக்காலத்திற்பெருமைபெற்ற,
மதுரகவி – மதுரகவிகளது,
வியப்பை – கொண்டாடத்தக்க பாடல்களை,
பாட – (ததீயர்) பாடா நிற்க, –
ஓதம் ஆர் மீன்வடிவு ஆய் – கடலில் திரிகின்ற மத்ஸ்யத்தின் வடிவாகியும்,
ஆமை ஏனத்து உரு ஆகி – கூர்மம் வராகம் இவற்றின் உருவமாகியும்,
அரி குறள் மூ இராமர் ஆகி – நரஸிம்ஹமும் வாமநமும் பரசுராமரும் தசரதராமரும் பலராமரும் ஆகியும்,
கோது இலா கண்ணன் ஆய் – குற்றமில்லாத கிருஷ்ணனாகியும்,
கற்கி ஆகும் – கல்கியாகத் திருவவதரிக்கவும் போகின்ற,
கோயில் வாழ் அரங்கேசர் – திருவரங்கம் பெரியகோயிலில் வாழ்கின்ற ஸ்ரீரங்கராஜரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

ஓருயிர் பிறப்பதுமுதல் இறக்குமளவும் அநுபவிக்கவேண்டியவை முழுவதையும் விதித்துப் பிரமன் எழுதியது
விரியுமாதலால், அதனை ‘நெட்டெழுத்து’ என்றும்;
யமன் தண்டனை விதித்தற்பொருட்டாக அவனது கணக்கனாகிய சித்திரகுப்தனென்பவன் ஓருயிர்செய்கின்ற
பாவத்தைமாத்திரங் குறித்துக்கொள்வது பிரமனது எழுத்துப்போல அத்துணை விரியாதாகலின், அதனை ‘குற்றெழுத்து’ என்றுங் கூறினார்.
நம்மாழ்வார் வேதத்தின் சாரமாக அருளிச்செய்த திருவாய்மொழி ஆயிரம்பாசுரங்களையும்
அவரது சீடரான மதுரகவியாழ்வார் பட்டோலைகொண்டன ரென்க.
மதுரகவியாழ்வார் அருளிச்செய்த பிரபந்தம், கண்ணிநுண்சிறுத்தாம்பு எனப்படும்.
இது பகவானது அமிசமான நம்மாழ்வாரைப் பற்றிப் பாடியது ஆதலாலும், நம்மாழ்வார் எம்பெருமானுக்குப் புத்ரஸ்தாநீயராதலாலும்,
இப்பாசுரத்தைப் பாடுவதனால், ஸ்ரீரங்கநாதர் திருவுள்ளமுவப்பரென்க.
“தேவுடைய மீனமாயாமையா யேனமா யரியாய்க் குறளாய்,
மூவுருவிலிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில், …… அரங்கமே” என்ற பெரியாழ்வார் பாசுரத்தை
அடியொற்றியன, இச்செய்யுளின் பின்னிரண்டடிகள்.

————–

ஆர் அமுதின் இன்பமிகு சடகோபன் சொல் ஆயிரமும் தெரிந்து எடுத்தே அடியார்க்கு ஓதி
நாரதனும் மனம் உருக இசைகள் பாடும் நாதமுனி திருநாம நலங்கள் பாட
பாரதனில் பாரதப் போர் முடிய மூட்டி பகை வேந்தர் குலம் தொலைய பார்த்தன் தெய்வத்
தேரதனில் வரும் அரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –17–

(இ – ள்.) ஆர் அமுதின் – அருமையாகிய தேவாமிருதத்தைக்காட்டிலும்,
இன்பம்மிகு – இன்சுவைமிக்க,
சடகோபன் சொல் ஆயிரமும் நம்மாழ்வார்திரு வாய்மலர்ந்தருளிய ஆயிரம்பாடல்களையும்,
தெரிந்து எடுத்து – கண்டுஎடுத்து,
அடியார்க்கு ஓதி – பக்தர்களுக்கு (அவற்றை) உபதேசித்து,
நாரதனும் மனம்உருக இசைகள் பாடும் – (இசைபாடுதலில்வல்ல) நாரதமுனிவனும் மனங்கரையும்படி தேவகானத்தாற்பாடுகின்ற,
நாதமுனி – ஸ்ரீமந்நாதமுனிகள் அருளிச்செய்துள்ள,
திருநாமம் நலங்கள் – (எம்பெருமானது) திருநாம வைபவத்தைப்புலப்படுத்துகின்ற பாடல்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
பார் அதனில் – பூமியிலே,
பாரதம் போர் முடிய மூட்டி – பாரதயுத்தத்தை (ப் பூமிபாரம்) தொலையும்படி மூள்வித்து,
பகை வேந்தர் குலம் தொலைய – பகையரசர்களாகிய துரியோதனாதியரது வம்சம் அழியும்படி, (ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திலே),
பார்த்தன் தெய்வம் தேர்அதனில் வரும் – அருச்சுனனது (அக்கினியாற் கொடுக்கப்பட்டுத்) தெய்வத்தன்மை யமைந்த தேரின்மீது ஏறிச் சாரத்தியஞ்செய்த,
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் – சீரங்கநாயகியோடு ஊசல்ஆடிர் -; (எ – று.)

மதுரகவிகள் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னுந் திவ்ய ப்ரபந்தத்தை நாதமுனிகள் பன்னீராயிரம் உரு
தேவகானத்தாற் பாடி நம்மாழ்வாரது திருவருளைப் பெற்று அவர்முகமாகத் திருவாய்மொழி முதலானவற்றை யடைந்து
உலகோர்க்கு உபகரித்தன ரென்க. நாதமுனி திருநாம நலங்கள் என்பதற்கு – நாதமுனிகளது திருநாமச்சிறப்பை யென்று பொருள்கூறினுமாம்.

————

வம்பமரும் சிகை முந்நூல் தரித்த ஞானி வாதியரை வெல் ஆளவந்தார்க்கு அன்பாம்
எம்பெருமானார்க்கு எட்டும் இரண்டும் பேசி இதம் உரைத்த பெரிய நம்பி இரக்கம் பாட
தும்புரு நாரதர் கீதம் பாட தொண்டர் குழாம் இயல்பாட சுருதி பாட
நம்பெருமாள் திருவரங்கர் ஆடீர் ஊசல் நான்முகனார் தாதையார் ஆடீர் ஊசல் –18-

(இ – ள்.) சிகை – குடுமியையும்,
முந்நூல் – யஜ்ஞோபவீதத்தையும்,
தரித்த -, வம்பு அமரும் – புதுமை பொருந்திய,
ஞானி – தத்துவஞான முடையவராகிய,
வாதியரைவெல் – (தம்மோடு) வாதஞ்செய்யவருபவர்களை யெல்லாம் வென்ற,
ஆளவந்தார்க்கு – ஸ்ரீஆளவந்தாரிடத்தில்,
அன்புஆம்-பக்தியுடையவராகிய,
எம்பெருமானார்க்கு-உடையவர்க்கு,
எட்டும்- திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தையும்,
இரண்டும் – திருத்வயத்தையும்,
பேசி – உபதேசித்து,
இதம் – நன்மைபயக்கத்தக்க சரமச்லோகத்தையும்,
உரைத்த – உபதேசித்த,
பெரியநம்பி – பெரியநம்பியென்னும் ஆசாரியர் அருளிச்செய்த,
இரக்கம் – (பகவானது) கிருபாவிசேஷத்தைத் தெரிவிக்கும் பாடல்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்கவும், –
தும்புரு நாரதர் – தும்புரு நாரதர் என்கின்ற இருவரும்,
நாத கீதம் பாட – இன்னோசையுள்ள கீதங்களைப் பாடவும், –
தொண்டர் குழாம் – அடியார்களின் கூட்டங்கள்,
இயல் பாட – இயலுக்கென்று அமைந்த திவ்யப்ரபந்தங்களை யெடுத்துப்பாடவும், –
(பின்னும் சில அடியார்களின் கூட்டங்கள்), சுருதிபாட – வேதபாராயணஞ்செய்யவும், –
நம்பெருமாள் – நம்பெருமாளே! திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர் -;
நான்முகனார் தாதையார் நான்குமுகங்களையுடைய பிரமனுக்குத் தந்தையாரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

விஸிஷ்டாத்வைதஸந்யாஸிகள்மற்றைச்சன்னியாசிகள் போலவல்லாமல் சிகாயஜ்ஞோபவீதங்களைப் பெற்றிருப்ப ராதலால்,
அவ்வகையிற்சேர்ந்த ஸ்ரீஆளவந்தாரை “சிகை முந்நூல் தரித்த ஞானி’ என்றார்.
வம்பமரும் ஞானிக்கு அடை, அவர் வாதியரை வென்றமையை, ஆக்கியாழ்வானை
வென்று ஆளவந்தாரென்று பெயர். பெற்றவிடத்துங் காண்க.
ஆளவந்தார் திருநாடலங்கரித்தபோது அவர்கொண்டிருந்த மூன்றுகுறைகளையும் எம்பெருமானார் நீக்கியவ ராதலால்,
“ஆளவந்தார்க்கன்பாமெம்பெருமானார்’ என்றார்.

பெரியநம்பி ஸ்ரீராமாநுசனுக்குத் திருவிலச்சினைசாதித்துத் திருமந்திரம் யவற்றை உபதேசித்தன ராதலால்,
“எம்பெருமானார்க்கு எட்டு மிரண்டும் பேசி யிதமுரைத்த பெரியநம்பி’ எனப்பட்டார்.
இங்குக் கூறியவற்றின் விவரங்களையெல்லாம் குருபரம்பாராப்ரபாவத்திற் பரக்கக்காணலாம்.
எட்டு இரண்டு என்பன – எண்ணலளவையாகுபெயர்கள்.
இதமுரைத்த என்பதற்கு – ஆத்மஹிதமான அர்த்தவிசேஷங்களை உபதேசித்த என்று பொருள்கூற இடமுண்டு.
இயல்என்பது – இயற்பா; அன்றி, எம்பெருமானுக்கு முன்பு சேவிக்கப்படுகின்ற தமிழ்வேதபாராயணமுமாம்.
பெரியநம்பிஇரக்கம் – பெரியநம்பிகளது கிருபாவிசேஷத்தை, பாட – (ததீயர்) பாடாநிற்க என்று உரைத்தல் சாலும்

————

ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க் கோலம் போல் அழிய முனிந்து அறு சமயம் அகற்றி எங்கள்
செங்கோலே உலகு அனைத்தும் செல்ல முக்கோல் திருக்கையில் கொள் எதிராசன் செயத்தைப் பாட
சங்கு ஓலம் இடும் பொன்னித் துறையின் நின்றே தவழ்ந்து ஏறி மறுகு தொறும் தரளம் ஈனும்
நம் கோயில் நம் பெருமாள் ஆடீர் ஊசல் நக்கன் மூதாதையர் ஆடீர் ஊசல் –19–

(இ – ள்.) ஐங்கோலும் – (மன்மதனது) பஞ்சபாணங்களும்,
ஒருகோலும் – (அத்வைதஸந்யாஸிகட்குஉரிய) ஏகதண்டமும்,
நீர் கோலம் போல் அழிய – நீரிலிட்ட கோலம்போல அழியும்படி,
முனிந்து – கண்டித்து,
அறு சமயம் அகற்றி – (புறச்சமயங்களாகிய) ஷண்மதங்களையும் நிரஹித்து, –
எங்கள் செங்கோலே – வைஷ்ணவர்களாகிய எங்களது செவ்விய ஆட்சியே (வைஷ்ணவமதமே),
உலகு அனைத்தும் செல்ல – உலகமுழுதுஞ் சென்றுபரவும்படி,
முக்கோல் திரு கையில் கொள் – திரிதண்டத்தைத் தமது திருக்கையிற் கொண்டுள்ள,
எதிராசன் – ராமாநுஜமுனிவரது,
செயத்தை – வெற்றியை,
பாட – (ததீயர்) எடுத்துப்பாடாநிற்க, –
சங்கு – சங்குப்பூச்சிகள்,
ஓலமிடும் பொன்னி துறையினின்று – ஒலிக்கின்ற காவேரியின் துறையிலிருந்து,
தவழ்ந்து ஏறி – ஊர்ந்துஏறிவந்து,
மறுகு தொறும் – தெருக்களிலெல்லாம்
தரளம் ஈனும் – முத்துக்களைப் பெறுதற்கு இடமான,
நம் கோயில் – நமது திருவரங்கம்பெரியகோயிலி லெழுந்தருளியுள்ள, நம்பெருமாள் -! ஊசல் ஆடிர் -;
நக்கன் மூதாதையார் – சிவபெருமானுக்குப் பாட்டனாரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

உடையவர் மன்மதபாணங்கட்கு இலக்காகாது விரக்தராய், அத்வைத நிரஸநம் செய்து வேதபாஹ்யமதங்களின்
கொண்டாட்டத்தையும் ஒழித்து, உலகமெங்கும் வைஷ்ணவமதத்தைப் பரவச்செய்து தமது ஜயஸ்தம்பத்தை
ஸ்ரீரங்கத்தில் நாட்டியமை முதலிரண்டடிகளில் விளக்கப்பட்டது.
எதிராசன் செயத்தை என்பதற்கு – உடையவர் அருளிச் செய்த (எம்பெருமான்விஷயமான) வெற்றிப்பாடல்களைத்
ததீயர்பாடாநிற்க என்று உரைப்பாரு முளர். நக்கன் = நக்நன்; திகம்பரன்.

———–

அவத்தப் புன் சமயச் சொல் பொய்யை மெய் என்று அணி மிடறு புழுத்தான் தன் அவையின் மேவி
சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு என்று தீட்டும் திருக் கூர வேதியர் கோன் செவ்விட பாட
பவத்துக்கம் பிணி நீங்க நரகம் தூர பரம பதம் குடி மலிய பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனி வாய்க் கரிய மேனி நம்பெருமாள் அரங்கேசர் ஆடீர் ஊசல் –20-

(இ – ள்.) அவத்தம் புல் சமயம் சொல் பொய்யை – பயனற்றதும் இழிந்ததுமாகிய சைவசமயத்தைச்சார்ந்த பொய்ச்சொற்களையெல்லாம்,
மெய் என்று – மெய்ப்பொருளென்று நம்பி, (அதனால் ஸ்ரீஉடையவர் திருவடிகளில் அபசாரப்பட்டு, அத்தீவினையின்பயனாக),
அணிமிடறு புழுத்தான் தன் – அழகிய கழுத்துப்புழுத்தவனாகிய க்ரிமிகண்டசோழனது,
அவையில் – சபையிலே,
மேவி – தாம் எழுந்தருளி,
“சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு’ என்று -, தீட்டும் – எழுதின,
திரு கூர வேதியர் கோன் – திருக்கூரமென்னும் ஊரிற் பிறந்த பிராமணசிரேஷ்டரான கூரத்தாழ்வானது,
செவ்வி – சிறப்புக்களை,
பாட – (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, –
பவம் துக்கம் பிணி நீங்க – இப்பிறவியில்நேரக்கூடிய துன்பமும் நோயும் நீங்கவும்,
நரகம் தூர-நரகக்குழிகள் தூர்ந்துபோகவும்,
பரமபதம் குடி மலிய – பரமபதத்தில் குடிகள் நிறையவும்,
பள்ளிகொள்ளும் – சயனத்திருக்கோலமாகச் சேவைசாதிக்கின்ற,
நவம் துப்பு செங் கனி வாய் – புதிய பவழத்தையும் செந்நிறமுள்ள கொவ்வைக்கனிபோன்ற வாயையும்,
கரிய மேனி – கார்நிறமுள்ள திருமேனி நிறத்தையுமுடைய, நம்பெருமாள் -! அரங்கேசர் -! ஊசல் ஆடிர் -; (எ – று.)

ஒருசோழன் கள்ளப்பொய்ந்நூலாகிய சைவாகமத்தை மெய்யென்றுநம்பி, சிவனுக்கு மேற்பட்ட பரம்பொருள்இல்லை
என்னும் பொருளுள்ள “சிவாத்பரதரம் நாஸ்தி’ என்னும் வாக்கியத்தை எழுதி வித்வான்களிடம் நிர்ப்பந்தித்துக்
கையெழுத்துவாங்கிவருகையில், தன்சபைக்குவருவித்த கூரத்தாழ்வானையும் அதனிற்கையெழுத்திடும்படி நிர்ப்பந்திக்க,
சிவமென்பதற்கு – குறுணியென்னும் பொருளும் உள்ள தாதலால்,
அச்சிவத்துக்குமேல் பதக்கு என்பது உண்டு என்னும் பொருளுள்ள “த்ரோணம் அஸ்தி தத: பரம்’ என்னும் வாக்கியத்தை எழுதிக்
கூரத்தாழ்வான் கையெழுத்திட்டன ரென்க.
சோழன் செய்கின்ற உபத்திரவம் தாங்கமாட்டாது ஸ்ரீஉடையவர் அவன் மிடறு புழுத்துச் சாகும்படி அபிசாரம் செய்ததனால்,
அவன் மிடறுபுழுத்து க்ரிமிகண்டனாயின னென்பது, இங்கு அறியத்தக்கது.
“திருக்கூரவேதியர் கோன்செவ்விபாட’ என்பதற்கு – கூரத்தாழ்வான் அருளிச்செய்த அழகிய தோத்திரப்
பாடல்களைத் ததீயர் பாடாநிற்க என்று பொருள்கூறவும் இடமுண்டு.

————–

சந்து ஆடும் பொழில் பூதூர் முக்கோற் செல்வன் தன் மருகனாகி இரு தாளுமான
கந்தாடைக் குலதீபன் முதலியாண்டான் கடல் ஞாலம் திருத்தி யருள் கருணை பாட
கொந்தாரும் துளவாட சிறை வண்டாட குழலாட விழி ஆட குழைக்காது ஆட
நந்து ஆட கதை ஆட திகிரி ஆட நல் மாடத் திருவரங்கர் ஆடீர் ஊசல் -21-

(இ – ள்.) சந்து ஆடும் பொழில் – அழகுநிறைந்த சோலைகளையுடைய,
பூதூர் – ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்த,
முக்கோல் செல்வன்தன் – திரிதண்டத்தை யேந்திய உடையவரது,
மருகன் ஆகி – மருமகனாய்,
இரு தாளும் ஆன – (அவரது) இரண்டு திருவடிநிலைகளுமாகிய,
கந்தாடை குலம் தீபன் முதலியாண்டான் – கந்தாடைக்குலத்திற்கு விளக்குப்போன்ற முதலியாண்டான்,
கடல் ஞாலம் திருத்திஅருள் – கடலினாற் சூழப்பெற்ற நிலவுலகத்தி லுள்ளாரை (வைஷ்ணவராகுமாறு) சீர்திருத்தியருளிய,
கருணை – கிருபாவிசேஷத்தை,
பாட – (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, –
கொந்து ஆரும் துளவு ஆட – கொத்துக்கொத்தாக நிரம்பிய திருத்துழாய்மாலை அசையவும்,
சிறை வண்டு ஆட – (அந்தத்திருத்துழாய்மாலையில் மொய்க்கின்ற) சிறகுகளையுடைய வண்டுகள் அசையவும்,
குழல் ஆட – (அத்திருத்துழாய்மாலையைச்சூடிய) திருக்குழற்கற்றை அசையவும்,
விழி ஆட – திருக்கண்கள் அசையவும்,
குழை காது ஆட – குண்டலமணிந்த திருச்செவிகள் அசையவும்,
நந்து ஆட – (இடப்பால் மேல்திருக்கையிலேந்திய பாஞ்சசந்யமென்னுஞ்) சங்கு அசையவும்,
கதை ஆட – (இடப்பாற்கீழ்க்கரத்திலேந்திய கௌமோததீயென்னுங்) கதாயுதம் அசையவும்,
திகிரிஆட – (வலப்பால் மேல்கரத்தில் தரித்துள்ள சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதம் அசையவும்,
நல் மாடம் திருவரங்கர் – அழகிய மாளிகைகள் நிறைந்த ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியிருப்பவரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

எம்பெருமானாரது திருவடிநிலைகளை முதலியாண்டானென்று வழங்குவது, சம்பிரதாயம். மருகன் – உடன்பிறந்தாள் குமாரன்.

————-

திருக் கலியன் அணுக்கர் திருப்பணி செய் அன்பர் சீ ரங்க நான் மறையோர் உள்ளூர்ச் செல்வர்
தருக்கும் இசைப் பிரான்மார் பார் அளந்தார் பாதம் தாங்குவோர் திருக் கரகம் தரித்து நிற்போர்
இருக்கு முதல் விண்ணப்பம் செய்வோர் வீரர்க்கு இறையவர்கள் சீ புண்டரீகர் மற்றும்
பெருக்கம் உள்ள பரிசாரங்கள் தொழுது ஆட்செய்ய பிரமமாம் திருவரங்கர் ஆடீர் ஊசல் –22-

(இ – ள்.) திருக்கலியனணுக்கர் – திருக்கலியனணுக்கரும்,
திருப்பணி செய் அன்பர் – திருப்பணிசெய்யன்பரும்,
சீரங்கநான்மறையோர் – சீரங்கநான்மறையோரும்,
உள்ளூர்ச் செல்வர் – உள்ளூர்ச்செல்வரும்,
தருக்கும் இசைப்பிரான்மார் – (இசைபாடுவதிற்) சிறந்தோரான இசைப்பிரான் மாரும்,
பார் அளந்தார் பாதம் தாங்குவோர் – (திரிவிக்கிரமனாகி) உலகங்களையளந்த நம்பெருமாளது ஸ்ரீபாதந்தாங்குவோரும்,
திருக்கரகம் தரித்து நிற்போர் – திருக்கரகந் தரித்து நிற்பவரும்,
இருக்கு முதல் விண்ணப்பம் செய்வோர் – இருக்கு முதலிய வேதவிண்ணப்பஞ் செய்பவர்களும்,
வீரர்க்கு இறையவர்கள் – வீரர்க்கிறையவர்களும்,
சீபுண்டரீகர் – ஸ்ரீபுண்டரீகரும், (ஆகிய பத்துக்கொத்துப் பரிஜநங்களும்),
மற்றும் பெருக்கம் உள்ள பரிகரங்கள் – மற்றும் மிகத்தொகுதியான அனைத்துக் கொத்துப் பரிஜநங்களும்,
தொழுது – வணங்கி, ஆள் செய்ய – (தம்தமது) கைங்கர்யங்களைச் செய்துகொண்டிருக்க,
பிரமம் ஆம் திருவரங்கர் – பரப்பிரமமாகிய திரு வரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

திருக்கலியனணுக்கர் என்ற கொத்து – குறட்டுமணியகாரர் முதலிய பிரதாந கைங்கரியபரர்கள் அடங்கிய தொகுதி யென்று தோன்றுகின்றது.
திருப்பணிசெய் அன்பர் என்ற கொத்து – இப்போது ஆயனார்கொத்துஎன் னும் பெயரோடு நீர்தெளித்தல் முதலிய கைங்கரியங்களைச்செய்யுங் கொத்து என்பர். சீரங்கநான்மறையோர் – அத்யாபகர். உள்ளூர்ச்செல்வர் – ஸ்தலத்தார்- இசைப்பிரான்மார் -அரையர். பாதந்தாங்குவோர் – ஸ்ரீபாதந்தாங்கிகள்.
திருக்கரகம் தரித்துநிற்போர் – பரிசாரகர்என்னலாம்.
இருக்குமுதல் விண்ணப்பஞ்செய்வோர் – பட்டர். வீரர்க்குஇறையவர் – வாளும் கையுமாய் எம் பெருமானுக்குத் திருமேனிக்காவல் புரிபவர்.
ஸ்ரீபுண்டரீகர் – பந்தம்பிடித்தல் முதலிய கைங்கரியங்களைச் செய்யுந் தாசநம்பிகள் என்பர்.
இவர்கள் பத்துக்கொத்தாக ஸ்ரீஉடையவர்காலத்தில் தொகுக்கப்பெற்றார்கள்: அம்முறை காலக்கிரமத்திலே சிற்சில மாறுபாடுகளை யடைந்தது.
மற்றும் பெருக்க முள்ள பரிகரங்கள் என்பது – வேத்ரபாணியுத்யோகம் ஸம்ப்ரதியுத்யோகம் அமுதுபடியளந்து
கொண்டுவரும் உத்யோகம் முதலிய கைங்கரியங்களைச் செய்யும் அடியார்களின் வகைகளைக் குறிக்கும்.

————–

உடுத்திரளோ வானவர்கள் சொரிந்த பூவோ உதித்து எழுந்த கலை மதியோ உம்பர் மாதர்
எடுத்திடு கர்ப்பூர ஆரத்தி தானோ யாம் தெளியோம் இன்று நீள் திருக்கண் சாத்திப்
படுத்த திருப் பாற் கடலுள் நின்று போந்து பாமாலை பூமாலை பாடிச் சூடிக்
கொடுத்த திருக் கோதையுடன் ஆடீர் ஊசல் கோயில் மணவாளரே ஆடீர் ஊசல் –23–

(இ – ள்.) (வானத்தில் இப்போது திரள்திரளாகத் தோன்றுபவை), – உடு திரளோ – நட்சத்திரங்களின் கூட்டங்களோ? (அன்றி),
வானவர்கள் சொரிந்த பூவோ – (தேவரீரைச்சேவிக்கின்ற) தேவர்கள் (மிக்கஅன்போடு) சொரிந்த மலர்களோ? –
(இப்போதுஒளிப்பிழம்பாகத்தோன்றுவது), – உதித்து எழுந்த கலை மதியோ – உதயமாகிவிளங்குகின்ற பதினாறுகலைகளும் நிரம்பிய சந்திரனோ? (அன்றி),
உம்பர் மாதர் எடுத்திடு கர்ப்பூரம் ஆரத்தி தானோ – தேவமாதர்கள் (மங்களார்த்தமாக) எடுத்துச்சுழற்றிய கர்ப்பூர வாரத்தித்தட்டேயோ?
யாம் தெளியோம் – யாம் இன்னதென்று உணர்ந்திலோம்; (இப்படிப்பட்ட பெருவிபவத்துடன்),
இன்று – இப்போது, –
நீள் திருக்கண் சாத்தி படுத்த – நீண்ட திருக்கண்கள் மூடி யோகநித்திரை செய்வதற்கு இடமான,
திருப்பாற்கடலுள் நின்று – திருப்பாற்கடலிலிருந்து,
போந்து – எழுந்தருளிவந்து, (சேவைசாதிக்கின்ற நம்பெருமாளே!)
பாமாலை பூமாலை பாடி சூடி கொடுத்த – பாமாலைகளையும் பூமாலைகளையும் (முறையே) பாடியும் சூடியும் சமர்ப்பித்த,
திருக்கோதையுடன் – ஸ்ரீஆண் டாளோடு, ஊசல்ஆடிர்-;
கோயில் மணவாளரே – ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

இரவில் வானத்தில் தோன்றும் நக்ஷத்திரக்கூட்டங்களை உடுத்திரளோ? வானவர்கள் பக்தியோடு திருவரங்க
நாதனுக்காகச் சொரிந்த பூத்திரளோ? என்று ஐயவணிதோன்றக் கூறினர்.
“உடுத்திரளோ வானவர்கள்சொரிந்த பூவோ’ என்ற தொடர்,
“இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த வந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி – முறைமுறையின்,
தாதிலகிப் பூத் தெளித்தா லொவ்வாதே தாழ்விசும்பின்,
மீதிலகித் தான்கிடக்கும் மீன்”என்ற பாசுரத்தை ஒருவாறு ஒத்துவந்தது.
இவ்வாறே, வானத்தில் தோன்றிய முழுமதியைத் தேவமாதர்கள் ஸ்ரீரங்கநாதனுக்கு மங்களார்த்தமாக எடுத்துச்
சுழற்றிய கர்ப்பூரவாரத்தித்தட்டேயோ முழுமதியோ எனக் கூறினர்.
இந்தஐயவணியால், அந்தஎம்பெருமான் தேவர்களும் தேவமாதர்களும் வழிபடுமாறு உள்ளா னென்பது, தொனிக்கும்.

————————————————————————–

வென்றி வேல் கரு நெடும் கண் அசோதை முன்னம் வேர்வாட விளையாடும் வெண்ணெய் ஆட்டும்
குன்று போல் நால் தடம் தோள் வீசி ஆடும் குரவைதனைப் பிணைந்து ஆடும் கோள் அறு ஆட்டும்
மன்றினூடு உவந்து ஆடும் மரக்கால் ஆட்டும் வலி அரவில் பாய்ந்து ஆடும் வடு இல் ஆட்டும்
அன்று காணா இழந்த அடியோம் காண அணி அரங்க ராசரே ஆடீர் ஊசல் –24–

(இ – ள்.) அணி அரங்கராசரே -! (நீர்), வென்றி வேல் கரு நெடுங் கண் – வெற்றி பெற்ற வேலாயுதம்போன்று கருமையாகி நீண்ட கண்களையுடைய,
அசோதை – யசோதையினது,
முன்னம் – எதிரில்,
வேர்வு ஆட – வேர்வை யுண்டாகும்படி,
விளையாடும் – விளையாடின,
வெண்ணெய் ஆட்டும் – வெண்ணெய்க்கு ஆடின கூத்தாட்டையும், –
குன்றுபோல் – மலைகள்போல,
நால்தட தோள் – (தேவரீரது) நான்குபெரியதோள்களையும்,
வீசி ஆடும் – வீசிக் கொண்டு கூத்தாடுவதற்கு உரியதான,
பிணைந்து – (பலமங்கையரோடு) சேர்ந்து,
குரவைதனை ஆடும் – குரவைக்கூத்தை ஆடுகின்ற,
கோள்அறுஆட்டும் – குற்றமற்ற ஆட்டத்தையும், –
மன்றின் ஊடு உவந்து ஆடும் – (பலர்கூடும்) பொது விடத்தில் மனமகிழ்ந்து ஆடுகின்ற,
மரக்கால் ஆட்டும் – மரக்கால்கூத்தையும், –
வலி அரவில் பாய்ந்து ஆடும் – வலிமையையுடைய (காளியனென்னும்) பாம்பின்மீது தாவியாடின,
வடு இல் ஆட்டும் – குற்றமற்ற நர்த்தனத்தையும்,
அன்று – அவ்வவ்வாடல்கள் நடந்த காலங்களில்,
காணா (து) – தரிசிக்கப் பெறாமல்,
இழந்த -, அடியோம் – அடியோங்கள்,
காண – (இன்று) தரிசிக்கும்படி, ஊசல் ஆடிர்-; (எ – று.)

முன்பு தேவரீர் பலஆடல்களை ஆடியுள்ளீர்; அவ்வாறு ஆடிய ஆடல்களை அவ்வக்காலத்தில் தரிசிக்கப்பெறாத
அடியோங்களது குறை தீருமாறு இன்று ஊசலாடவேண்டு மென்பதாம்.
“மரக்காலாட்டு’ என்பது, பதினோ ராடலுள் ஒன்று.
“கோளராட்டு’ என்ற பாடத்துக்கு – (மாதரிடத்துப்) பற்றுள்ளவர் ஆடுகின்ற குரவைக்கூத்தை என்றும்,
“வடிவு இல் ஆட்டு’ என்ற பாடத்திற்கு – குறைதலில்லாமல் தொடர்ச்சியாக ஆடுகின்ற கூத்தை என்றும் பொருள்கூறுவர்.
“[மடுவிலாட்டும்’ என்று பாடம் ஓதுவாரும் உளர்.

————

ஆரணங்கள் ஒரு நான்கும் அன்பர் நெஞ்சும் அணி சிலம்பும் அடிவிடாது ஊசல் ஆட
வாரணங்கு முலை மடவார் கண்ணும் வண்டும் வண் துளவும் புயம் விடாது ஊசல் ஆட
காரணங்களாய் அண்டர் அண்டம் எல்லாம் கமல நாபியில் படைத்துக் காத்து அழிக்கும்
சீரணங்கு மணவாளர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகனார் ஆடீர் ஊசல் –25–

(இ – ள்.) காரணங்கள் ஆய் – மூவகைக்காரணங்களுமாகி,
அணடர் – அண்டங்களிலிருப்பவர்களும்,
அண்டம் – உலகவுருண்டைகளும்,
எல்லாம் – ஆகிய எல்லாவற்றையும்,
கமலம் நாபியில் படைத்து – திருவுந்தித்தாமரையிற் சிருஷ்டித்து,
காத்து – பாதுகாத்து,
அழிக்கும் – (பிரளயகாலத்தில்) ஸம்ஹாரஞ்செய்கின்ற,
சீர் அணங்கு மணவாளர் – சிறப்புப்பொருந்திய தெய்வமகளாகிய இலக்குமிக்குக் கணவரே! –
ஆரணங்கள் ஒரு நான்கும் – நான்குவேதங்களும்,
அன்பர் நெஞ்சும் – அடியார்களது மனமும்,
அணி சிலம்பும் – அழகிய சிலம்புகளும்,
அடி விடாது – (தேவரீரது) திருவடிகளை விடாமலிருந்து,
ஊசல் ஆட – ஊசலாடவும், –
வார் அணங்கு முலை மடவார் கண்ணும் – (தமது சம்பந்தத்தாற்) கச்சு நிறம்பெறும்படியான
(தம்மீது அணியப்பெறுதலாலே கச்சுக்கு அழகையுண்டாக்குகிற) தனங்களையுடைய இளமகளிரது கண்களும்,
வண்டும் – வண்டுகளும்,
வள் துளவும் – வளப்பமான திருத்துழாய்மாலையும்,
புயம் விடாது – திருத்தோள்களை விடாமலிருந்து,
ஊசல் ஆட – ஊசலாடவும், ஊசல் ஆடிர் -! சீரங்கநாயகனார் – ஸ்ரீரங்க நாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

வேதங்கள்நான்கும் அடிவிடாதிருத்தலாவது – நான்குவேதங்களும் எம்பெருமானது ஸ்வரூபத்தையே நாடிச்சொல்லுதலாம்.
திருவடியைச் சொன்னது – திருமேனிக்கும் உபலக்ஷணம்.
ஸேஷபூதர் (அடியவர்) இழியுந்துறை ஸேஷியின் (தலைவனது) திருவடியே யாதலால், அன்பர்நெஞ்சு அந்தப்பரமனது
திருவடியை விடாது பற்றுவதாயிற்று. அணிசிலம்பு – அப்பெருமானது திருவடியி லணியப்பெற்ற அழகிய பாததண்டைகள்.
இளமகளிர் எம்பெருமானதுதோளழகில் ஈடுபட்டு அவற்றையே கண்டுகொண்டு நிற்றலால், மடவார் கண் ஊசலாடும்புய மென்றார்.
வண்டு – திருத்துழாய் மலர்மாலையில் மொய்த்தற்காக வந்த வண்டு என்றாவது,
தலைமகளிரால் தூதுவிடப்பட்ட வண்டு என்றாவது கொள்க.
சீரணங்குமணவாளர் என்பதற்கு – தமதுகுணங்களால் (யாவரையும்) விரும்பும்படி செய்கின்ற அழகிய மணவாளரே! என்றும் பொருளுரைக்கலாம்.

காரணங்கள் மூன்றுவகைப்படும்; அவையாவன – முதற்காரணம் துணைக்காரணம் நிமித்தகாரணம் என்பன.
முதற்காரணமாவது – பானையுண் டாவதற்கு மண்போல உபாதானமாயிருப்பது;
துணைக்காரணமாவது – அப்பானையுண்டாவதற்குத் தண்டசக்கரங்கள்போல ஸஹகாரியாயிருப்பது;
நிமித்தகாரணமாவது – அப்பானையுண்டாவதற்குக் குயவன் போல நிமித்த மாயிருப்பது:
இவ்வாறே ஸ்தூலமான சித் அசித் என்ற இவற்றுடன் கூடிய இவ்வுலகம் உண்டாவதற்குப் பரப்பிரமம் மூன்று காரணமாயும் இருக்குமென்றும்,
அவற்றுள் ஸூக்ஷ்மமான சித் அசித் என்ற இவற்றுடன் கூடிய பிரமம் முதற்காரணமா மென்றும்,
ஜ்ஞாநம் சக்தி முதலிய குணங்களுடன் கூடிய பிரமம் துணைக்காரணமா மென்றும்,
“பஹுஸ்யாம் (பகுவாக ஆகக்கடவேன்)” என்ற ஸங்கல்பத்துடன் கூடிய பிரமம் நிமித்தகாரணமா மென்றும் வேதாந்தங்களினால் உணரலாம்.

———————————————————–

அடித்தலத்தில் பரிபுரமும் சிலம்பும் ஆட அணி மார்பில் கௌத்துவமும் திருவும் ஆட
தொடித் தலத்தில் மணி வடமும் துளவும் ஆட துணைக்கரத்தில் சக்கரமும் சங்கும் ஆட
முடித்தலத்தில் கரும் குழலும் சுரும்பும் ஆடமுகமதியில் குறு வேர்வும் குழையும் ஆட
கடித்தலத்தில் அரை நாணும் கலையும் ஆட காவிரி சூழ் அரங்கேசர் ஆடிய ஊசல் –26-

(இ – ள்.) காவிரி சூள் அரங்கேசர் திருக்காவேரிநதியாற் சூழப்பெற்ற திருவரங்கத்திற்குத் தலைவரே! –
அடி தலத்தில் – திருவடிகளில்,
பரிபுரமும் – கிண்கிணிகளும்,
சிலம்பும் – பாததண்டைகளும்,
ஆட – அசைந்தாடவும், –
அணி மார்பில் – அழகிய திருமார்பில்,
கௌத்துவமும் – கௌஸ்துபரத்தினமும்,
திருவும் – இலக்குமியும்,
ஆட – அசைந்தாடவும், –
தொடி தலத்தில் – திருத் தோள்களில்,
மணி வடமும் – இரத்தினவாரமும்,
துளவும் – திருத்துழாய் மாலையும்,
ஆட – அசைந்தாடவும், –
துணை கரத்தில் – இரண்டு திருக்கைகளிலும்,
சக்கரமும் சங்கும் – திருவாழியுந் திருச்சங்கமும்,
ஆட – அசைந்தாடவும், –
முடி தலத்தில் – திருமுடியில்,
கரு குழலும் – கரிய மயிர்முடியும்,
சுரும்பும் – (அதில்அணிந்துள்ள மலர்மாலைகளில் மொய்க்கின்ற) வண்டுகளும்,
ஆட – அசைந்தாடவும், –
முகம் மதியில் – பூர்ணசந்திரன்போன்ற திருமுகமண்டலத்தில்,
குறு வேர்வும் – சிறுத்து அரும்புகின்ற வேர்வை நீரும்,
குழையும் – காதணிகளும்,
ஆட – அசைந்தாடவும், –
கடி தலத்தில் – திருவரையில்,
அரைநாணும் -, கலையும் – திருப்பரியட்டமும்,
ஆட – அசைந்தாடவும், சல் ஆடில் -; (எ -று.)

——————————————————-

பரந்து அலைக்கும் பாற் கடலுள் பசும் சூல் கொண்டல் படிந்ததென கிடந்த படி படி மேல் காட்டி
வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி மண் உலகை வாழ வைத்த வளத்தைப் பாட
புரந்தரற்கும் பெருமாளே ஆடீர் ஊசல் போதனுக்கும் பெருமாளே ஆடீர் ஊசல்
அரன் தனக்கும் பெருமாளே ஆடீர் ஊசல் அணி அரங்கப் பெருமாளே ஆடீர் ஊசல் –27-

(இ – ள்.) பரந்து அலைக்கும் பாற்கடலுள் – பரவி அலைவீசுகின்ற திருப்பாற்கடலிலே,
பசு சூல் கொண்டல் படிந்தது என – கரிய நீர்கொண்ட மேகம் படிந்தாற்போல,
கிடந்த – சயனத்திருக்கோலமாக எழுந்தருளியுள்ள,
படி – தன்மையை,
படிமேல் காட்டி – நிலவுலகத்திற் பிரதியக்ஷமாக்கி,
வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி – (அன்பர்களது) வேண்டுகோளை மிகுதியாகத்
தந்தருளுமாறு உபயகாவேரிமத்தியில் (ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தில் அர்ச்சாரூபியாக) ஆவிர்ப்பவித்து,
மண் உலகை வாழவைத்த – நிலவுலகத்தை வாழச்செய்த,
வளத்தை – பெருமையை,
பாட – (அடியோங்கள்) பாடாநிற்க, –
புரந்தரற்கும் பெருமாளே – தேவேந்திரனுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -;
போதனுக்கும் பெருமாளே – பிரமதேவனுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -;
அரன்தனக்கும் பெருமாளே – சிவபெருமானுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -;
அணி அரங்கம் பெருமாளே – ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

—————————————————————–

உடுமாய கதிர் உதிர சண்ட வாயு உலகு அலைப்ப வடவை சுட உத்தி ஏழும்
கெடுமாறு திரி தருகால் உயிர்கள் எல்லாம் கெடாது வயிற்ருள் இருந்தும் கீர்த்தி பாட
நெடுமாயப் பிறவி எல்லாம் பிறந்து இறந்து நிலத்தோடும் விசும்போடும் நிரயத்தோடும்
தடுமாறித் திரிவேனை அருள் செய்து ஆண்ட தண் அரங்க நாயகனார் ஆடீர் ஊசல் –28-

(இ – ள்.) உடு மாய – நக்ஷத்திரங்கள் அழிந்தொழியவும்,
கதிர் உதிர – சூரியசந்திரர்கள் உதிரவும்,
சண்ட வாயு – பிரசண்டமாருதம்,
உலகு அலைப்ப – வீசிஉலகங்களை யழிக்கவும்,
வடவை சுட – வடவாமுகாக்கினி எரித்தழிக்கவும்,
உததி ஏழும் – கடல்களேழும்,
கெடும் ஆறு – (இவ்வண்ட மெல்லாம்) அழியும்படி,
திரிதரு கால் – பொங்கிப்பரவுங் காலத்தில்,
உயிர்கள் எல்லாம் – (அவற்றிலுள்ள) ஜீவராசிகளெல்லாவற்றையும்,
கெடாது – அழியாமல்,
வயிற்றுள் இருத்தும் – திருவயிற்றில்வைத்துப் பாதுகாக்கின்ற,
சீர்த்தி – (தேவரீரது) பெருங்கீர்த்தியை,
பாட – (அடியோங்கள்) எடுத்துப்பாடாநிற்க, –
நெடு மாயம் பிறவி எல்லாம் – பெரிய மாயையையுடைய எல்லாப் பிறவிகளிலும், பிறந்து -, இறந்து -,
நிலத்தோடும் – நிலவுலகத்திலும்,
விசும்போடும் – வானுலகத்திலும்,
நிரயத்தோடும் – நரகத்திலும்,
தடுமாறி திரிவேனை – தடுமாறித்திரிகின்ற என்னை,
அருள் செய்து ஆண்ட – கருணைசெய்து ஆட்கொண்ட,
தண் அரங்க நாயகனார் – குளிர்ந்த ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடில் -; (எ – று.)

அநாதியான புண்யபாபங்களினாலும் பிறந்து இறக்கும்போது இடையிடையே நேர்கிற புண்ய பாபங்களினாலும்
சுவர்க்க மத்திய பாதாளங்களிற் பலபிறவி பிறந்து இறந்து அலைச்சற்பட்ட தமதுநிலையைப் பின்னிரண்டு அடிகளினால் விளக்கினார்.

———————————————————–

முருகன் உறை குறிஞ்சித் தேன் முல்லை பாய முல்லை நிலத் தயிர் பால் நெய் மருதத்து ஓட
மருத நிலக் கொழும் பாகு நெய்தல் தேங்க வரு புனல் காவிரி சூழ்ந்த வளத்தைப் பாட
கரு மணியே மரகதமே முத்தே பொன்னே கண் மணியே ஆர் உயிரே கனியே தேனே
அருள் புரிவாய் என்றவர் தம் அகத்துள் வைகும் அணி அரங்க மாளிகையார் ஆடீர் ஊசல் –29-

(இ – ள்.) “கரு மணியே – நீலமணிபோன்றவனே!
மரகதமே – பச்சை யிரத்தினம்போன்றவனே!
முத்தே – முத்துப்போன்றவனே!
பொன்னே – பொன்போல் அருமையானவனே!
கண்மணியே – கண்ணிற்குள்ளிருக்குங் கருவிழிபோன்றவனே!
ஆர் உயிரே – அருமையான உயிர்போன்றவனே!
கனியே – இனிய கனிபோன்றவனே!
தேனே – தேன்போல் மதுரமானவனே!
அருள் புரிவாய் – (எம்மீது) கருணைபுரிவாயாக,
‘ என்றவர் தம் – என்று பிரார்த்தித்தவரது,
அகத்துள் – மனத்தில்,
வைகும் – (அவர்நினைந்த வடிவோடு) தங்கியிருக்கின்ற,
அணி அரங்கமாளிகையார் – அழகிய திருவரங்கந்திருப்பதியி லெழுந்தருளியுள்ள எம்பெருமானே! –
முருகன் உறை குறிஞ்சி தேன் – முருகக்கடவுள் வாழ்கின்ற குறிஞ்சிநிலக்கருப்பொருளாகிய தேன்,
முல்லை பாய – முல்லைநிலத்திற் பாயவும், –
முல்லைநிலம் – முல்லை நிலத்துக்கருப்பொருளாகிய,
தயிர் பால் நெய் – தயிரும் பாலும் நெய்யும்,
மருதத்து ஓட – மருதநிலத்திற் பெருகியோடவும், –
மருதம் நிலம் கொழும்பாகு – மருதநிலத்தில் விளைகின்ற கரும்பின்சாற்றைக் காய்ச்சியதனாலாகிய வளமுள்ள வெல்லப்பாகு,
நெய்தல் தேங்க – நெய்தல்நிலத்தில் தேங்கிநிற்கவும்,
வரு – பெருகுகின்ற,
புனல் – நீரையுடைய,
காவிரி – காவேரிநதியினாலே,
சூழ்ந்த – சூழப்பெற்றுள்ள,
வளத்தை – வளப்பத்தை,
பாட – (அடியோங்கள்) பாடாநிற்க, ஊசல் ஆடிர் -; (எ – று.)

இதனால், காவிரிபாயப்பெற்ற இந்நாட்டில் நான்குநிலங்களும் அமைந்திருத்தல் கூறினார்.
தொல்காப்பியத்தில், “முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச், சொல்லியமுறையாற் சொல்லவும்படுமே” என்றவிடத்து,
சொல்லாதமுறையாற் சொல்லவும்படு மென்று பொருள்படுதல் பற்றி, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என முறைப்பட வைத்தார்;
கலித்தொகையிலும், ஐங்குறுநூற்றிலும் பிறவற்றிலும் வேறுபடக்கோத்தவாறுங் காண்க.
நெடுந்தூரத்தும் விளங்குதலின் மலையாகிய குறிஞ்சிநிலத்தை முன்னும், மலையைக் காடும், காட்டை நாடும்,
நாட்டைக் கடலும் அடுத்துண்மையால், அவற்றை அதனதன்பின்னும் வைத்தன ரென்க.
நீரும் நிழலு மில்லாத பாலைநிலம் மனிதசஞ்சாரத்திற்கு இடமாகாது ஆதலின், நீக்கப்பட்டது.
பாலைக்கு நிலமில்லை யென்றும், மற்றைநிலங்கள் தம்நிலைதிரியின் அதுவே பாலையா மென்றும் சில ஆசிரியர் கொள்கை.
“சேயோன்மேய மைவரையுலகமும்” என்பதனால், முல்லைக்கு முருகன் தெய்வமாதல் பெறப்படும்.

—————————————————————-

புண்டரிகத் தவன் தவம் செய்து இறைஞ்சும் கோயில் புரி சடையோன் புராணம் செய்து ஏத்தும் கோயில்
பண்டு இரவி குலத்து அரசர் பணிந்த கோயில் பரிந்து இலங்கைக் கோன் கொணர்ந்து பதித்த கோயில்
மண்டபமும் கோபுரமும் மதிலும் செம்பொன் மாளிகையும் தண்டலையும் மலிந்த கோயில்
அண்டர் தொழும் திருவரங்கம் பெரிய கோயில் அமர்ந்து உறையும் பெருமானார் ஆடீர் ஊசல் –30-

(இ – ள்.) புண்டரிகத்தவன் – (திருமாலின்) நாபீகமலத்தில் தோன்றி யவனான பிரமதேவன்,
தவம் செய்து -,
இறைஞ்சும் – பிரதிஷ்டைபண்ணித் திருவாராதனஞ்செய்து வணங்கின,
கோயில் – கோயிலும், –
புரி சடையோன் – முறுக்கிவிட்ட சடைமுடியையுடைய சிவபிரான்,
புராணம் செய்து -,
ஏத்தும் – துதித்த,
கோயில் – கோயிலும், –
பண்டு – முன்னே,
இரவி குலத்து அரசர் – சூரியகுலத்து ராஜாக்கள்,
பணிந்த – வணங்கிய,
கோயில் – கோயிலும், –
இலங்கை கோன் – இலங்கைக்கு அரசனாகிய விபீஷணாழ்வான்,
பரிந்து – விரும்பி,
கொணர்ந்து பதித்த – கொண்டுவந்து தாபித்த,
கோயில் – கோயிலும், –
மண்டபமும் – மண்டபங்களும்,
கோபுரமும் – கோபுரங்களும்,
மதிலும் – மதில்களும்,
செம் பொன் மாளிகையும் – சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட மாளிகைகளும்,
தண்டலையும் – சோலைகளும்,
மலிந்த – நிறைந்துள்ள,
கோயில் – கோயிலுமான,
அண்டர் தொழும் – தேவர்கள் யாவரும் வணங்குகின்ற,
திருவரங்கம் பெரியகோயில் – திருவரங்கம் பெரியகோயிலில்,
அமர்ந்து உறையும் – பொருந்தி நித்தியவாசஞ் செய்கின்ற, பெருமானார் – நம்பெருமாளே! ஊசல் ஆடில் -; (எ – று.)

இங்கு “கோயில்’ என்று கூறியது, அத்திருப்பதியி லெழுந்தருளிய ஸ்ரீரங்கநாதனையும், உபலக்ஷணவகையாற் குறிக்கும்.
பிரணவாகாரமான ஸ்ரீரங்கவிமானத்திலே ஆதிசேஷசயநத்தில் திருமகளும் நிலமகளும் திருவடிவருடப் பள்ளிகொள்ளுந்
திருமால் ஆதியிற் சத்தியலோகத்தில் பிரமனது திருவாராதனத்திருவுருவமாக இருந்ததனால்,
“புண்டரிகத்தவன்தவஞ் செய்து இறைஞ்சுங்கோயில்’ என்றார்.
சிவபிரான் ஸ்ரீரங்கமாஹாத்ம்யத்தை நாரதமுனிவர்க்கு எடுத்துக்கூறியதாகப் புராணம் இருப்பதால்,
‘புரிசடையோன் புராணஞ்செய்து ஏத்துங் கோயில்’ எனப்பட்டது.
சூரியகுலத்து மநுகுமாரனான இக்ஷ்வாகுமகாராஜன் பிரமனைக்குறித்துப் பலகாலம் அரும்பெருந்தவம்புரிந்து
அத்தேவனருளால் அவ்வெம்பெருமானைத் தான் பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டுவந்து
பிரதிஷ்டைசெய்து திருவாராதநஞ்செய்து வந்தனன்; அந்தஸ்ரீரங்கநாதனே இக்ஷ்வாகுமுதல் இராமபிரான்வரையிலுள்ள
இரவிகுலமன்னவரெல்லார்க்குங் குலதெய்வமாகி விளங்கினா னாதலால் “பண்டிரவிகுலத்தரசர் பணிந்த கோயில்’ என்றும்,
இராமபிரான் வனவாசஞ்சென்று விபீஷணனுக்கு அபயமளித்துக் கடல்கடந்து இலங்கை சேர்ந்து
இராவணாதி ராக்ஷஸ சங்காரஞ் செய்து திருவயோத்திக்கு மீண்டு பட்டாபிஷேகஞ்செய்துகொண்டபின்பு
சுக்கிரீவன் முதலிய அனைவர்க்கும் விடைகொடுத்து அவரவரை ஊர்க்கு அனுப்பும்பொழுது,
தனது திருவாராதனமூர்த்தியான நம்பெருமாளைத் தனக்கு மிகவும்அந்தரங்கனாகிய விபீஷணாழ்வானிடங் கொடுத்து
ஆராதித்துவரும்படி நியமித்துஅனுப்ப, அங்ஙனமே அவ்வரக்கர்பெருமான் அவ்வமரர்பெருமானை அவ்விமானத்துடனே
எழுந்தருளப்பண்ணிக்கொண்டு இலங்கைநேக்கிச் செல்லும்பொழுது இடைவழியில் உபயகாவேரிமத்தியிலே
பெருமான் புடைபெயராது விமானத்துடனே நிலைநின்றருளினனாதலால், “பரிந்திலங்கைக்கோன் கொணர்ந்து பதித்த கோயில்’ என்றுங் கூறினார்.

———————————————————————-

அருவரங்கள் தரு பராங்குசனே ஆதி ஆழ்வார்கள் தம்பிரான் ஆடீர் ஊசல்
இருவர் அங்க ஒளிக்கு அகலா இருள் அகற்றும் எதிராசன் தம்பிரான் ஆடீர் ஊசல்
தருவரங்கர் நீள் பொழில் கூரத்து வேதா சாரியனார் தம்பிரான் ஆடீர் ஊசல்
திருவரங்கத்து அணி அரங்கன் திரு முற்றத்துத் தெய்வங்கள் தம்பிரான் ஆடீர் ஊசல் –31-

(இ – ள்.) அரு வரங்கள் தரு – (தன்னையடைந்த அடியார்க்கு) அரிய வரங்களைக் கொடுக்கின்ற,
பராங்குசனே ஆதி – நம்மாழ்வார் முதலாகிய,
ஆழ்வார்கள் – ஆழ்வார்கட்கு,
தம்பிரான் – தலைவரே!
ஊசல் ஆடிர் -;
இருவர் அங்கம் ஒளிக்கு அகலா – (சூரிய சந்திரர் என்னும்) இருவருடைய மேனியிலிருந்துவீசுகிற (வெயில் நிலவு என்கின்ற) ஒளிக்கும் போகாத,
இருள் – அஜ்ஞாந அந்தகாரத்தை,
அகற்றும்- நீக்குகின்ற,
எதிராசன் – எம்பெருமானார்க்கு,
தம்பிரான் – தலைவரே! ஊசல் ஆடிர்-;
தரு வரங்கள் நீள் பொழில் – சிறந்தமரங்கள் மிகுதியாக நீண்டுவளரப்பெற்ற சோலைகள்சூழ்ந்த,
கூரத்து – திருக்கூரமென்னுந் தலத்தில் அவதரித்த,
வேத ஆசாரியனார் – வேதத்தில் தேர்ந்த ஆசிரியராகிய கூரத்தாழ்வானுக்கு,
தம்பிரான் – தலைவரே! ஊசல் ஆடிர் -;
திருவரங்கத்து – திருவரங்கம் பெரிய கோயிலிலேயுள்ள,
அணி அரங்கன் திருமுற்றத்து தெய்வங்கள் – திருவரங்கன்திருமுற்ற மென்னும் இடத்தில் வந்து வணங்குகின்ற
தெய்வங்கட்கெல்லாம், தம்பிரான் – தலைவரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

—————————————————————–

உணராத முதலை இளங்குதலைச் சொல்லை உளமுருகித் தந்தை தாய் உவக்கு மா போல்
தணவாமல் கற்பிப்பார் தம் சொற் கேட்டுத் தந்தை உரைத்தத்தை ஆதரிக்குமா போல்
பணவாள் அரா முடி மேல் படி ஏழ் போற்றும் பட்டர் திருத் தாட்கு அடிமைப் பட்ட காதல்
மணவாள தாசன் தன் புன் சொல் கொண்ட மதில் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –32–

(இ – ள்.) உணராத – நன்றாகப்பேசத்தெரியாத,
மதலை – சிறுகுழந்தையின்,
இள குதலை சொல்லை – நிரம்பாத மழலைச்சொல்லை,
தந்தை தாய் – (அக்குழந்தையைப்பெற்ற) தாய்தந்தையர்,
உளம்உருகி – மனங்கரைந்து,
உவக்கும் ஆ போல் – சந்தோஷிப்பதுபோலவும், –
தணவாமல் – இடைவிடாமல்,
கற்பிப்பார் – கற்பிப்பவர்,
தம் சொல் கேட்டு – தாம் சொன்ன சொற்களைக் கேட்டுக்கொண்டு,
தத்தை உரைத்தத்தை – கிளி பேசினதை,
ஆதரிக்கும் ஆ போல் – விரும்பிமகிழும் விதம்போலவும், –
பணம் வாள் அரா முடிமேல் – படமும் ஒளியு முடைய ஆதிசேஷனது முடிமேலுள்ள,
படி ஏழ் – ஏழுதீவுகளிலுள்ளாரும்,
போற்றும் – வணங்கித்துதிக்கின்ற,
பட்டர் திருத்தாட்கு – ஸ்ரீபராசரபட்டரது திருவடிகட்கு,
அடிமைப்பட்ட – அடிமையாகிய,
காதல் – பக்தியையுடைய,
மணவாளதாசன்தன் – அழகிய மணவாளதாசனென்னும் அடியேனது,
புல் சொல் – இழிவான சொல்லாகிய பிரபந்தங்களையும்,
கொண்ட – ஏற்றுக்கொண்டருளிய,
மதில் அரங்கம் மணவாளர் – ஸப்தப்ராகாரங்கள் சூழ்ந்த திருவரங்கத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் – ; (எ – று.)

தாம்பாடிய பிரபந்தங்களை ஸ்ரீரங்கநாதன் அங்கீகரித்தருளியதற்கு, சிறுகுழந்தையின் குதலைச்சொற்களைப் பெற்ற
தாய்தந்தையர்கேட்டு மகிழ்தலையும், கிளியின்சொற்களைக் கற்பிப்பவர் கேட்டு உவத்தலையும் உவமை கூறினர்.
மணவாளதாசன் – தன்மைப்படர்க்கை.

——————————————————————–

தற்சிறப்புப் பாசுரம்

போதாரு நான் முகனே முதலா யுள்ள புத்தேளிர் தொழு நாதன் புவனிக்கு எல்லாம்
ஆதாரமாம் தெய்வ மான நாதன் அனைத்து உயிர்க்கு நாதன் அணி யரங்க நாதன்
சீதார விந்த மலர்த் திரு வினாதான் திரு ஊசல் திரு நாமம் ஒரு நால் எட்டும்
வேதா சாரிய பட்டர்க்கு அடிமையான வெண் மணிப் பிள்ளைப் பெருமாள் விளம்பினானே —

(இ – ள்.) போது ஆரும் நான்முகனே முதல் ஆய் உள்ள – தாமரை மலரில் வாழ்கின்ற நான்குமுகங்களையுடைய பிரமதேவன் முதலான,
புத்தேளிர் – தேவர்கள்யாவரும்,
தொழும் – வணங்குகின்ற,
நாதன் – தலைவனும்,
புவனிக்கு எல்லாம் – எல்லாவுலகங்கட்கும்,
ஆதாரம் ஆம் தெய்வம் ஆன – ஆதாரமாகவுள்ளதெய்வமாக இருக்கின்ற,
நாதன் – தலைவனும்,
அனைத்து உயிர்க்கும் – ஜீவவர்க்கங்களெல்லாவற்றிற்கும்,
நாதன் – தலைவனும்,
சீத அரவிந்தம் மலர் திருவின் நாதன் – குளிர்ந்த தாமரைமலரில் வாழ்கின்ற இலக்குமிக்குத் தலைவனுமான,
அணி அரங்கம் நாதன் – அழகிய திருவரங்க நாதனைப்பற்றி,
திருவூசல் திருநாமம் ஒரு நால் எட்டும் – திருவூசல் என்று பெயர்பெற்ற முப்பத்திரண்டுபாடல்களையும்,
வேதஆசாரியபட்டர்க்கு அடிமைஆன வெள்மணிபிள்ளைப்பெருமாள் – வேதத்தில்தேர்ந்த ஆசாரியரான பட்டர்க்குச் சிஷ்யராகிய
வெண்மைநிறமுள்ள மணிபோலச் சத்துவகுணம் மிகுந்த பிள்ளைப்பெருமாளையங்கார்,
விளம்பினான் – பாடினார்; (எ – று.)

நூலாசிரியர் தம்மைப் பிறன்போலக் கூறிய தற்சிறப்புப்பாயிரம், இது. கூரத்தாழ்வானது திருக்குமாரர்க்கு
வேதாசார்யபட்டரென்று ஒரு திருநாம முண்டெனக் கொள்ளினுமாம்.

சீரங்கநாயகரூசல் முற்றும்.

அஷ்டபிரபந்தம் முற்றிற்று.

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி –தொண்டை நாட்டுத் திருப்பதிகள் -74-95—/வட நாட்டுத் திருப்பதிகள் -96-107/ திரு நாட்டுத் திருப்பதி –108-

February 24, 2022

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்–22-

74-திருக்கச்சி -அத்திகிரி-

பொருள் ஆசை மண் ஆசை பூங்குழலார் போகத்து
இருள் ஆசை சிந்தித்து இராதே அருளாளன்
கச்சித் திருப்பதி ஆம் அத்தியூர்க் கண்ணன் தாள்
இச்சித் திருப்பது யாம் என்று –74–

(இ – ள்.) பொருள் ஆசை – செல்வத்தினிடத்து ஆசையையும்,
மண் ஆசை – பூமியினிடத்தி லாசையையும்,
பூ குழலார் போகத்து இருள் ஆசை – மலரையணிந்த கூந்தலையுடைய மகளிரது இன்பத்திலே வைக்கின்ற
மனம் மேன்மேலும் இருளுவதற்குக்காரணமான பெண்ணாசையையும்,
சிந்தித்துஇராதே – மனத்திற்கொண்டிடாமல், –
அருள் ஆளன் – பேரருளாளனாகிய,
கச்சி திருப்பதி ஆம் அத்தியூர் கண்ணன் – காஞ்சீபுரத்திலுள்ள திவ்விய தலமாகிய திருவத்தியூரில் எழுந்தருளியிருக்கும் திருமாலினது,
தாள் – திருவடிகளை, யாம் -,
இச்சித்து இருப்பது – உபாயமும் உபேயமுமாக விரும்பிச் சிந்தையற்றிருப்பது,
என்று – எந்நாளோ? (எ – று.)

மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யெனப்படுகின்ற ஈஷணா த்ரயங்களும் ஒழிந்து எம்பெருமான் திருவடிகளையே
உபாயமும் உபேயமுமாகப் பற்றிக் கவலையற்றிருக்கும் நாள் எப்பொழுது அடியேனுக்கு நேருமோ? என்று பேற்றில்
த்வரையால் அந்நாளை ஐயங்கார்எதிர்நோக்குகின்றனரென்க.
“திணரார்சார்ங்கத்துனபாதம் சேர்வ தடியே னெந்நாளே” என்றார் ஆழ்வாரும்.
ஈஷணாத்ரயத்தினுள்ளும் பெண்ணாசை மிகக்கொடியதென்பதைத் தெரிவித்தற்கு, “பூங்குழலார் போகத்திருளாசை’ என்றார்.

கச்சி = காஞ்சீ என்னும் வடசொல்லின் சிதைவு; பிரமனாற் பூசிக்கப்பட்ட தலம் என்பது, பொருள்;
இனி, பூமியாகிய பெண்ணுக்கு அரையில் அணியும் அரைநூல்மாலைத் தானத்தி லுள்ளதுபற்றி வந்த பெயரென்று கூறுவாருமுளர்.
அத்தியூர் = ஹஸ்திகிரி; ‘கோயில் திருமலை பெருமாள் கோயில்’ என்று சிறப்பாக எடுத்துக்
கூறப்படுகின்ற மூன்று தலங்களில் ஈற்றுத்தலம், இது; இது, தியாகமண்டபம் எனப்படும்.
நெடுநாள் தவஞ்செய்தும் மனத்தூய்மைபெறாத பிரமதேவன் ஆகாயவாணிகூறியபடி பூலோகத்தில் புண்ணிய
க்ஷேத்திரங்களெல்லாவற்றுள்ளும் உத்தமமானதும் ஒன்று ஆயிரமாகப் பயன்தருவதுமாகிய சத்திய விரத
க்ஷேத்திரத்தை யடைந்து, அங்கு அநந்தஸரஸின்கரையிலுள்ள ஹஸ்திகிரியை உத்தரவேதியாகக் கொண்டு
யாகசாலையையமைப்பித்து, அசுவமேதயாகஞ்செய்து அதனால் ஸ்ரீமந்நாராயணனை யாராதிக்க,
அந்தயாகாக்கினியினின்று எழுந்த புண்ணிய கோடிவிமானத்தில் தேவராஜனான திருமால் பிரசன்னனாயின னென்றும்,
அந்த வரதராஜஸ்வாமியைப் பின்பு கஜேந்திராழ்வான் பூசித்து முதலையினாலாகிய துயர்தீர்ந்து மேன்மைபெற்ற தென்றும்,
தைவத்தச்சரிலொருவனான மயன் பிரமன் கட்டளையால் அங்கு எம்பெருமானுக்குத் திருக்கோயில் கட்டியமைத்தன னென்றும் அறிக.
இந்திரனது யானையாகிய ஐராவதம் நெடுநாள் தவஞ்செய்து மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத் தரித்தலால்,
அம்மலைக்கு ‘ஹஸ்திகிரி’ என்று பெயர்;
கஜேந்திராழ்வான் பூஜித்துப் பேறுபெற்ற தலமாதலால், இப்பெயர்நிகழ்ந்த தென்றலு முண்டு.
இங்கு, மலையடிவாரத்திலுள்ள அழகியசிங்கப்பெருமானே ஆழ்வாரதுமங்களாசாசனம் பெற்றவரென்பது, பலரது கொள்கை.

———

75-திருவட்ட புயங்கம் –

என்றும் துயர் உழக்கும் ஏழை காள் நீங்கள் இளங்
கன்று போல் துள்ளிக் களித்து இரீர் அன்று நடம்
இட்ட புயங்கத்து இரு சரணமே சரண் என்று
அட்ட புயங்கத் தாற்கு ஆள் ஆய் –75-

(இ – ள்.) என்றும் – எப்போதும்,
துயர் உழக்கும் – (தாபத்திரயங்களி லடிபட்டு) வருந்துகின்ற,
ஏழைகாள் – அறிவில்லாத ஜநங்களே! – நீங்கள் -,
‘அன்று – முற்காலத்தில் (கிருஷ்ணாவதாரத்தில்),
புயங்கத்து நடம் இட்ட – (காளியனென்னுஞ்) சர்ப்பராசன்மீது கூத்தாடிய,
ஒரு சரணமே – (எம் பெருமானது) இரண்டுதிருவடிகளே,
சரண் – தஞ்சமாகும்,’ என்று – என்று உறுதிகொண்டு,
அட்டபுயங்கத்தற்கு ஆள் ஆய் – திருவட்டபுயங்கம் என்னுந் திருப்பதியி லெழுந்தருளியுள்ள திருமாலுக்கு அடிமைப்பட்டு, –
இளங் கன்றுபோல் துள்ளி களித்து இரீர் – இளங்கன்றுபோல (ப் பயமறியாமல்) துள்ளிக் குதித்து அகமகிழ்ந்திருங்கள்; (எ – று.)

அட்டபுயத்தி லெழுந்தருளியுள்ள பெருமானுக்கு ஆட்பட்டு, பிறவித் துன்பங்கள்யாவும் ஒழிய இளங்கன்று
போலப் பயமறியாது துள்ளிக் களித்து வாழுங்களென, உலகத்து ஸாம்ஸாரிகதாபத்தால் வருந்துஞ் சேத நர்க்கு
அறிவுறுத்தியவாறு. அட்டபுயங்கத்தர்க்குஆளாய்க் களித்திரீர்என்க.

இத்தலத்து எம்பெருமானுக்கு எட்டுத்திருக்கைகள் உள்ளதுபற்றி ‘அஷ்டபுஜம்’ என்று திருப்பெயராக,
அச்சொல் ‘க’ப்ரத்யயம்பெற்று ‘அஷ்டபுஜகம்’ என்று ஆகி, தமிழில் அட்டபுயங்கம் எனத் திரிந்தது.
இனி, இத்திருப்பதி அட்டபுயகரம் என்று வழங்கப்பெறுதலுமுண்டு;
அஷ்டபுஜன் எழுந்தருளியிருக்கின்ற கரம் (கிருகம்) ஆதல்பற்றி, இப்பெயர் வந்தது போலும்: அட்டபுயவகரம் என்பதன் மரூஉ வென்பாரு முளர்.

————-

76-திருத் தண் கா -பிரிந்து ஆற்றாளாய தலைவி தலைவன் இடம் தனக்கு உள்ள அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –

ஆட்பட்டேன் ஐம் பொறியால் ஆசைப் பட்டேன் அறிவும்
கோட்பாட்டு நாணும் குறை பட்டேன் சேண் பட்ட
வண் காவை வண் துவரை வைத்த விளக்கு ஒளிக்கு
தண் காவைச் சேர்ந்தான் தனக்கு –76–

(இ – ள்.) சேண் பட்ட – தேவலோகத்திலுள்ள,
வள் காவை – வளப்ப மான சோலைபோலத்தழைத்த பாரிஜாதவிருக்ஷத்தை,
வள் துவரை – செழிப் பான (தனது) துவாரகாபுரியில்,
வைத்த – கொண்டுவந்துநாட்டிய,
தண்காவை சேர்ந்தான்தனக்கு -திருத்தண்காவென்னுந் திவ்வியதேசத்தி லெழுந் தருளியிருப்பவனாகிய,
விளக்கொளிக்கு – தீபப்ரகாசனென்னும் எம்பெருமான் திறத்தில்,
ஆள் பட்டேன் – அடிமைப்பட்டேன்;
ஐம் பொறியால் ஆசைப்பட்டேன் – (எனது) பஞ்சேந்திரியங்களாலும் (அப்பெருமானையநுப விக்கும்படி) ஆசைகொண்டேன்;
அறிவும் கோள்பட்டு – எனது அறிவும் அப் பெருமானாற் கவரப்பட்டு,
நாணும் குறைபட்டேன் – (மகளிர்க்குச் சிறந்த) நாணமென்னுங் குணமும் குறைந்துவிடப்பெற்றேன்; (எ – று.)

திருமாலாகிய தலைமகனைக் கலந்துபிரிந்த தலைமகள் தான் அவன்பக்கற்கொண்ட காதலின் மிகுதியைத்
தோழிக்கு எடுத்துக்கூறியது, இது. இவ்வாறு தன்காதலைத் தோழிக்கு எடுத்துக்கூறுவது –
அவள்மூலமாகச் செவிலிக்கும், அவள்மூலமாக நற்றாய்க்கும், அவள்மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்குந் தெரிவித்து,
விரைவில் தன்னை அவனுக்கு மணஞ்செய்து வைக்கும்படி செய்துகொள்ள விரும்பியதனா லாகும்.
தன்னிலையைக் கரந்து வைக்கமுடியாது வாய்கொண்டு சொல்லவேண்டும்படி ஆற்றாமை விஞ்சுதலால், ‘நாணுங்குறைபட்டேன்’ என்றாள்.
ஐம்பொறியாலாசைப்படுதலாவது – மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்சேந்திரியங்களுள்,
கண் எம்பெருமானையே தரிசிப்பதும், செவி அப்பெருமானது வைபவங்களையே கேட்பதும்,
வாய் அவனையேதுதிப்பதும், மூக்கு அவன்சாத்தியமாலையின் திவ்வியபரிமளத்தையே மோப்பதும்,
கை கால் தலை முதலிய உறுப்புக்களை யுடைய மெய் அவனைத்தொழுதல் வணங்குதல் பரிசித்தல் முதலியன செய்வதுமாக,
இங்ஙனம் எல்லாப்பொறிகளும் அத்தலைவனது விஷயமான செயலைப் பெறவிரும்புதல்.
திருத்தண்காவில் எம்பெருமான் தண்காக்கொணர்ந் தானெனச் சமத்காரமாகக் கூறினார்.

நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானைத் தரிசித்த ஐயங்கார் அவன்பக்கல் தமக்குஉண்டான
வியாமோகத்தைத் தமக்குப்புருஷகாரராக நிற்கும் ஆசாரியரிடத்து உரைக்கவேண்டி, தம்மோடொத்த ஞானிகளான
நண்பர்க்கு எடுத்து உரைத்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
ஐம்பொறியாலாசைப்பட்டேன் – “உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையுமெல் லாங்கண்ணன்,’
‘வாஸுதேவஸ் ஸர்வம்” என்றபடி தாரகபோஷக போக்யங்களெல்லாம் அவனேயாம்படி என்னுள்ளத்துக்கொண்டே னென்றபடி.

திருத்தண்கா என்பது – குளிர்ந்தசோலைகளை யுடைமைபற்றி வந்த பெயர்போலும். இத்தலத்து எம்பெருமான் திருநாமம் – விளக்கொளி.

————

77-திரு வேளுக்கை –

தனக்கு உரியனாய் அமைந்த தானவர் கோன் கெட்டான்
உனக்கு உரியன் ஆய மைந்தன் உய்ந்தான் நினைக்கும் கால்
வேளுக்கை ஆள் அரியே வேறு உதவி உண்டோ உன்
தாளுக்கு ஆள் ஆகா தவர்க்கு –77–

(இ – ள்.) வேளுக்கை ஆள் அரியே – திருவேளுக்கையென்னுந் திவ்விய தலத்திலெழுந்தருளிய நரசிங்கமூர்த்தியே! –
தனக்குஉரியன் ஆய்அமைந்த – (உனக்குஆட்படாமல்) தனக்குத்தானே ஸ்வதந்த்ரனென்று இருந்த (தானே தெய்வமென்று செருக்கியிருந்த),
தானவர்கோன் – அசுரராசனாகிய இரணியன்,
கெட்டான் – அழிந்தொழிந்தான்;
உனக்கு உரியன் ஆய மைந்தன் – (செருக்குக்கொள்ளாது) உனக்கே அடிமையாகப்பொருந்திய (அவனது) குமாரனாகிய பிரகலாதாழ்வான்,
உய்ந்தான் – நல்வாழ்வுபெற்று ஈடேறினான்; (ஆதலால்),
நினைக்கும் கால் – ஆலோசிக்குமிடத்து, –
உன் தாளுக்கு ஆள் ஆகாதவர்க்கு – உனதுதிருவடிகட்கு அடிமைப்படாதவர்க்கு,
வேறு உதவி உண்டோ – (ஆபத்துக்காலத்தில் பாதுகாத்தற்குஉரிய) துணை வேறு உளதோ? (இல்லை யென்றபடி); (எ – று.)

ஸர்வேஸ்வரனது திருவடிகளை வணங்காமல் தானே ஸர்வேஸ்வர னென்று சொன்ன இரணியனை
அப்பெருமான் நிக்கிரகித்ததையும் ஸர்வேஸ்வரனுக்கு அடிமையென்று தன்னையெண்ணின இரணியபுத்திரனான
பிரகலாதாழ்வானை அப்பெருமான் அநுக்கிரகித்ததையும் ஆலோசிக்குமிடத்து, எம்பெருமானது திருவடிகளிடத்து
ஆட்படாதார்க்கு ஆபத்துக்காலத்தில் ஒருதுணையுமின்றி அழியவேண்டிவரு மென்பது பெறப்படு மென்பதாம்.
“ஆளென்று தன்னையெண்ணாத் தானவனாகநினைந்திருப்பார்க் கென்றுந் தானவனே” என்பர் திருவேங்கடத்தந்தாதியிலும்.
‘தனக்குரியனாயமைந்த தானவர்கோன் கெட்டான்’ என்ற சிறப்புப்பொருளை
‘உன்தாளுக்கு ஆளாகாதவர்க்கு வேறு உதவியுண்டோ’ என்ற பொதுப்பொருள்கொண்டு சமர்த்தித்தது – வேற்றுப்பொருள்வைப்பணியாம்.
ஆள் அரி – நரங்கலந்த சிங்கம்; இத்தலத்து எம்பெருமான்திருநாமம் – ஆளழகியசிங்கர்.

————

78-திருப்பாடகம் –

தவம் புரிந்த சேதனரை சந்திரன் ஆதித்தன்
சிவன் பிரமன் இந்திரனாச் செய்கை உவந்து
திருப் பாடகம் மருவும் செங்கண் மால் தன் மார்பு
இருப்பாள் தகவு உரையாலே –78–

(இ – ள்.) உவந்து – திருவுள்ளத்தில் மகிழ்ந்து,
திருப்பாடகம் மருவும் – திருப்பாடகமென்னுந்திவ்வியதலத்தில் நித்தியவாசஞ்செய்கின்ற,
செங்கண் மால் – சிவந்தகண்களையுடைய திருமால், –
தவம் புரிந்த சேதநரை – (சந்திரன் ஆதித்தன் முதலிய பட்டம்பெறுமாறு தன்னைநோக்கித்) தவஞ்செய்த ஆன்மாக்களை,
(அவரவர்கள் விருப்பத்தின்படியே),
சந்திரன் – சந்திரனும்,
ஆதித்தன் – சூரியனும்,
சிவன் – உருத்திரனும்,
பிரமன் – பிரமதேவனும்,
இந்திரன் – தேவேந்திரனும்,
ஆ – ஆக,

செய்கை – செய்வது, – தன் மற்பு இருப்பாள் – தனதுவலத்திருமார்பில் வீற்றிருப்பவளான திருமகளினது,
தகவு உரையாலே – புருஷகாரவார்த்தையாலேயாகும்; (எ – று.)

எம்பெருமான் பிராட்டியினது புருஷகாரத்தால்தான் தன்னைக்குறித்துத் தவம்புரியும் அடியார்கட்கு அதன்பயனாக
மறுமையில் சந்திரன் சூரியன் முதலான தேவர்களின் பதவிகளை ஈந்தருளுவ னென்பதாம்.
சேதநர் மறுமையில் எவ்வகையான நற்கதிபெறவேணுமென்று விரும்பினாலும்
அவற் றையெல்லாம் அளிக்கத்தக்கவன் திருமாலே யென்பதும், அவ்வாறு திருமால் அளிக்குமிடத்துத்
திருமகளின்புருஷகாரம் அவசியமென்பதும், இங்கு விளக்கப்பட்டன. திருப்பாடகம் – பாண்டவதூதர் சந்நிதி.

————-

79-திரு நீரகம் –

ஆலத்து இலை சேர்ந்து அழி உலகை உட்புகுந்த
காலத்தில் எவ்வகை நீ காட்டினாய் ஞாலத்துள்
நீரகத்தாய் நின் அடியேன் நெஞ்சகத்தாய் நீள் மறையின்
வேரகத்தாய் வேதியற்கு மீண்டு –79–

(இ – ள்.) ஞாலத்துள் – இந்தப்பூமியிலே,
நீரகத்தாய் – திருநீரகமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியிருப்பவனே!
நின் அடியேன் நெஞ்சு அகத்தாய் – நினக்கு ஆட்பட்ட அடியேனது மனத்தி லெழுந்தருளியிருப்பவனே!
நீள் மறையின் வேர் அகத்தாய் – நீண்ட வேதங்களாற் பிரதிபாதிக்கப்படுகிற மூலப்பொருளாயுள்ளவனே! –
வேதியற்கு – (பிரளயக்காட்சியைக் காணவேணுமென்று விரும்பிய) வேதம்வல்லவனான மார்க்கண்டேயனுக்கு,
நீ -, உள் புகுந்த காலத்தில் – (அம்முனிவன் உனது) திருவயிற்றினுள்ளே பிரவேசித்த காலத்தில்,
ஆலத்து இலை சேர்ந்து – நீ ஆலிலையின்மீது பள்ளி கொண்டு, –
அழி உலகை – (பிரளயகாலத்தில்) அழிந்துபோன லோகங்களை,
ஏ வகை – எவ்வாறு,
மீண்டு – மறுபடியும்,
காட்டினாய் – காட்டியருளினாய்? (இது என்ன வியப்போ!) (எ – று.)

என்றும்பதினாறாக நெடிதூழிவாழும்படி நீண்டஆயுள்பெற்ற மார்க் கண்டேயமுனிவன் பத்திரநதிக்கரையில் தவம்புரிந்து
பிரளயக்காட்சியைக் காணுமாறு நரநாராயணர்களால் அநுக்கிரகிக்கப்பெற்று, பின்பு மாயவன் மாயையால் மகாபிரளயம் தோன்ற,
அப்பிரளயப்பெருங்கடலிற் பலவாறு அலைப்புண்டு வருந்திய அம்மார்க்கண்டேயமுனிவனுக்கு அவ்வெள்ளத்தில்
ஆலிலையின்மீது ஒருகுழந்தைவடிவமாய் அறிதுயிலமர்ந்த நீ முன்பே அழிந்த உலகங்களையும் எல்லாச்சராசரங்களையும்
உனது திருவயிற்றினுட் காட்டியது என்னஆச்சரியமென்று எம்பெருமானது திவ்வியகுணத்தி லீடுபட்டு ஐயங்கார் கூறின ரென்க.
“எய்த்தமார்க்கண்டன் கண்டிட வமலைக்குமுல கழியாதுள்ளிருந்த தென்னே” என்பர் திருவரங்கத்தந்தாதியிலும்.
மூன்று நான்காமடிகளில், முற்றுமோனை காண்க.

————

80-திரு நிலாத் திங்கள் துண்டம் –

மீண்டும் தெளியார்கள் மேதினியோர் நின் அடிப் பூப்
பாண்டரங்க மாடிப் படர் சடை மேல் தீண்டி
கலாத் திங்கள் துண்டத்தின் மீது இருப்பக் கண்டும்
நிலாத் திங்கள் துண்டத் தானே –80–

(இ – ள்.) நிலாத்திங்கள் துண்டத்தானே – திருநிலாத்திங்கள்துண்ட மென்னுந் திவ்வியதேசத்தி லிருப்பவனே! –
நின் அடி பூ – (பதின்மூன்றாம் போர்நாளிரவில் அருச்சுனன் கைலாசயாத்திரையில்) உனதுதிருவடிகளிற் சாத்திய புஷ்பங்கள்,
பாண்டரங்கமாடி – பாண்டரங்கக்கூத்தாடிய சிவபெருமானது,
படர் சடைமேல் – பரந்த சடையின்மீது,
தீண்டி – பொருந்தி,
கலா திங்கள் துண்டத்தின்மீது – (அச்சடையின்மேல் சிவபிரானணிந்துள்ள) இளம்பிறைச்சந்திரனுக்கும் மேலே,
இருப்ப – இருக்க,
கண்டும் – அதனைப் பார்த்திருந்தும், –
மேதினியோர் – இப்பூமியிலுள்ளவர்கள்,
மீண்டும் – மறுபடியும்,
தெளியார்கள் – (நீயே பரம்பொருளென்ற உண்மையை) அறியாதொழிகின்றனர்; (இது என்ன பேதைமை?) (எ – று.)

அருச்சுனன் கண்ணனது திருவடிகளி லிட்டு அருச்சித்த மலர்கள் சிவபிரானது முடிமேலிருத்தலைக் கண்டபிறகும்
திருமாலே பரம்பொருளென்றஉறுதியான உணர்ச்சி கொள்ளாமல் தடுமாறுவது என்ன பேதைமையோ? என்று
உலகத்தோரது அறியாமையை வியந்தவாறு.
“தீர்த்தனுலகளந்த சேவடிமேற் பூந்தாமஞ், சேர்த்தியவையே சிவன்முடிமேல் தான்கண்டு,
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை, பேர்த்து மொருவராற் பேசக்கிடந்ததே” என்று நம்மாழ்வார்
இச்சரித்திரத்தில் ஈடுபட்டுக் கூறியமை காண்க.
மேதினியோர் கண்ணபிரானடிப்பூவைச் சிவபிரான்சடை மேற் காண்பது – ஆகமபிரமாணத்தினா லென்க.

பாண்டரங்கம் – பதினோராடலு ளொன்று: அது – பூமிதேவியாகிய தேரில் முன்னின்ற பிரமன் காணும்படி
பைரவ வடிவாகிய பரமசிவன் திரி பாசங்காரகாலத்தில் வெண்ணீற்றையணிந்து ஆடியது.
“தேர்முனின்ற திசைமுகன்காணப், பாரதியாடிய வியன்பாண்டரங்கம்,”
“பாண்டரங்க முக்கணானாடிற்று,”
“மண்டமர்பலகடந்து மதுகையானீறணிந்து, பண்ட ரங்கமாடுங்கால்,”
“ஏறமர்கடவுள் மூவெயிலெய்வுழிக், கூறுகூறாக் கொடியொடும் படையொடும்,
வேறுவேறுருவின் விண்மிசைப் பரந்தன, ரவ்வழி யொளியொடு
முருவொடுந்தோன்றித், தேர்முனின்று திசைதலைபனிப்பச், சுவையுங்
குறிப்பு மொழிவில தோன்றி, யவையவை யவ்வழி யாடின னாட,
மைந்தருமகளிருந் தந்நிலையழிய, மெய்ப்படுசுவையொடு கைப்படைமறப்பக்,
கடியகாலக்காற்றென வேற்றவன், படிநிலைதிரியாப் பாண்டரங்கம்மே” என்பவற்றா லுணர்க.

———–

81-திரு ஊரகம் —

நேசத்தால் அன்று உலகை நீர் வார்க்க வைத்து அளந்த
வாசத்தாள் என் தலை மேல் வைத்திலையேல் நாசத்தால்
பாரகத்துள் அன்றி யான் பாழ் நரகில் வீழ்ந்து என் கொல்
ஊரகத்துள் நின்றாய் உரை –81–

(இ – ள்.) ஊரகத்துள் நின்றாய் – திருவூரகமென்னுந் திருப்பதியி லெழுந்தருளியிருப்பவனே! –
நீர் வார்க்க – (நீ வாமனனாய்ச்சென்று இரந்தபோது தான்கொடுத்ததற்கு அறிகுறியாக உனதுகையில் மகாபலி) நீரை வார்த்தபோது,
அன்று – முன்னாளில் (திரிவிக்கிரமாவதார காலத்தில்),
நேசத்தால் – (உயிர்களினிடத்துக்) கருணையினால்,
உலகை – மூவுலகங்களையும்,
வைத்து அளந்த – (அளவுகருவியாகக்) கொண்டு அளந்த,
வாசம் தாள் – நறுமணமுடைய தாமரைமலர்போன்ற திருவடிகளை,
என் தலைமேல் – எனது தலையின்மீது,
வைத்திலை ஏல் – பொறித்துவைத்திடாயானால், – நான் -,
பார் அகத்துள் அன்றி – இப்பூமியில் வாழ்தலு மில்லாமல்,
நாசத் தால் – நாசமடைந்து,
பாழ் நரகில் வீழ்ந்து என்கொல் – பாழான நரகத்தில் வீழ்ந்தால்தான் என்ன?
உரை – நீகூறுவாய்; (எ – று.)

திரிவிக்கிரமாவதாரகாலத்தில் உயிர்கள் அறியாதிருக்கையிலும் தான் அறிந்த தொடர்பே பற்றாசுஆகக் கொண்டு
அவ்வுயிர்களிடத்துக் காரண மின்றியெழுந்த பெருங்கருணையினால் அவற்றை ஆட்கொள்ளவேண்டி
மகாபலிசக்கரவர்த்தி தந்த புவியை யளத்த லென்ற ஒருவியாஜத்தைக்கொண்டு உலகத்திலுள்ள எல்லாவுயிர்களின்
தலைமீதும் நினது திருவடிகளை வைத்தது போலவே,
“பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து, போதிற் கமலவன் னெஞ்சம் புகுந்தும் என்சென்னித்திடரில்,
பாதவிலச்சினைவைத்தான்” என்றபடி உனதுதிருவடிகளை எனதுதலையின்மீது பொறித்து என்னை ஆட்கொள்ளாது
உபேக்ஷித்தனையாயின், யான் ஈடேறுதலின்றிக் கொடுநரகத்தில் வீழ்வது திண்ணம்;
அவ்வாறு உபேட்சித்தல் நினக்குத் தகுதியோ? என்று தமது ஆற்றாமையை அறிவுறுத்தியவாறு.
திரிவிக்கிரமாவதாரத்தில் திருவடிகள் வைக்கப்பெற்றும் உயிர்கள்யாவும் உய்வுபெறாதது – அவைகட்கு எம்பெருமானது
திருவடி நமதுதலையின்மீது வைக்கப்படுகின்றது என்னும் அறிவு இன்மையாலாகும்;
அவ்வாறன்றி உனதுநல்லருளால் சிறிது அறிவு பெற்ற எனது முடியின்மீது நினதுதிருவடிகளைப் பொறித்தால் நான் உய்வு பெறுவேன்;
அறிவின்றியிருந்த உயிர்களின்மீது திருவடிகளை வைத்தருளிய நீ, அறிவுபெற்ற என்தலைமீது அத்திருவடிகளைப் பொறித்த லாகாதோ?
வேண்டற்பாடில்லாத உயிர்களின் தலைமீது திருவடியைப் பொறித்த நீ, வேண்டற்பாடுடைய எனது தலைமீது
அவற்றைப் பொறித்த லாகாதோ? நீயறிந்த சம்பந்தங்கொண்டுமாத்திரந்தானோ திருவடிகளைப்பொறிப்பது?
யான் அறிந்த சம்பந்தம் உளதாயின் திருவடிகளைப் பொறித்த லாகாதோ? என்ற கருத்துக்கள் இச்செய்யுளில் தோன்றும்.

வாசத்தாள் – மெய்யடியார்கள் அருச்சித்த திருத்துழாய் முதலியவற்றின் சம்பந்தத்தால் நறுமணம் வீசப்பெற்ற திருவடி.
பூமியையளப்பதுஎன்று ஒருவியாஜம்; உலகத்தார்க்குத் திருவடிகளைக் காட்டியருளவேணுமென்பதே உட்கருத்து என்பார்
‘நேசத்தால் உலகையளந்த’ என்றார்;
“பாரளப்பான் போல் எவர்க்குங் கஞ்சவடிகாட்டினான்” என்ற திருவேங்கடமாலையையுங்காண்க.
நேசத்தால் நீர்வார்க்க என்று இயைத்து – கொடுக்கலாகாது என்று தடுத்த சுக்கிரனது உபதேசத்தையும் உபேக்ஷித்து
வாமனரூபியாய்வந்த திருமாலினிடத்து அன்போடு தாரைவார்த்துக்கொடுத்த என்று பொருள் கூறினுமாம்.

இத்தலத்தில் திருமால் உரகரூபியாய்ச் சேவைசாதிப்பதுபற்றி, இத் திருப்பதிக்கு ‘ஊரகம்’ என்று திருநாமம்போலும்; உரகம் – பாம்பு.

————

82-திரு வெக்கா-

உரை கலந்த நூல் எல்லாம் ஓதி உணர்ந்தாலும்
பிரை கலந்த பால் போல் பிறிதாம் தரையில்
திரு வெக்கா மாயனுக்கே சீர் உறவு ஆம் தங்கள்
உரு வெக்கா உள்ளத்தினோர்க்கு –82–

(இ – ள்.) தரையில் – இப்பூமியில்,
திருவெஃகா – திருவெஃகாவென் னுந் திவ்வியதலத்திலெழுந்தருளிய,
மாயனுக்கே – சொன்னவண்ணஞ்செய்த பெருமாளுக்கே,
சீர் உறவு ஆம் – சிறந்த (ஒருபோதும் நீங்காத) சம்பந்தம்பெற்ற,
தங்கள் உரு – தமது ஸ்வரூபத்தை,
வெஃகா -விரும்பியறியாத,
உள்ளத்தினோர்க்கு – மனத்தையுடையவர்க்கு, –
உரை கலந்த நூல் எல்லாம் – உரையோடுகூடிய சாஸ்திரங்களெல்லாவற்றையும்,
ஓதி உணர்ந்தாலும் – கற்று அறிந்திருந்தாலும்,
பிரை கலந்த பால்போல் – பிரைசேர்ந்த பாலைப்போல,
பிறிது ஆம் – (அவ்வறிவு) திரியுந்தன்மையதாய்விடும்; (எ – று.)

“கற்றதனாலாய பய னென்கொல் வாலறிவன், நற்றா டொழாஅ ரெனின்,”
“கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க வதற்குத் தக” என்றபடி கற்றற்குஉரிய உறுதிநூல்களைக் கற்றவர்கள்,
அக்கல்வியறிவின்பயனாக அந்நூல்களிற் கூறியபடி “எம்பெருமானுக்கு அடிமைப்பொருள் இவ்வுயிர்’ என்னும்
உண்மையுணர்வு மனத்திற் பதிந்தால்தான் கருமம் ஒழிய வீடுபெறுவரே யன்றி, அநுஷ்டாநமில்லாத வெறுங்கல்வியறிவு,
பிரையால்திரிந்த பால் ஒன்றுக்கும் உதவாததுபோலப் பயனற்றதாகு மென்பதாம்.
உரை கலந்த நூல் – பாஷ்யத்தோடுகூடிய சாஸ்திரம் என்றபடி. ‘பிரைகலந்த’ என்ற சொல்லாற்றலால்,
பாலைப்பருகவேண்டுமென்னும் எண்ணத்துடன் காய்ச்சுகையில் காய்ச்சுபவர்க்குத்தெரியாமலே
அப்பாலைத் திரிக்கும்படி பிரைப்பொருள் கலந்தமை பெறப்படும்.

“பிதாச ரக்ஷகஸ் ஸேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி: – ஸ்வாம் யாதாரோ மமாத்மாச போக்தாசாயமநூதித;” என்கிறபடி
கடவுளுக்கும் ஆத்மாவுக்கும் – பிதாபுத்ர ஸம்பந்தமும், ரக்ஷ்யரக்ஷகஸம்பந்தமும், ஸேஷ ஸேஷிஸம்பந்தமும்,
பர்த்ருபார்யாஸம்பந்தமும், ஜ்ஞாத்ருஜ்ஞேயஸம்பந்தமும், ஸ்வஸ்வாமிஸம்பந்தமும், ஆதாரஆதேயஸம்பந்தமும்,
ஸரீரஸரீரி ஸம்பந்தமும், போக்த்ருபோக்ய ஸம்பந்தமும் ஆக ஒன்பதுவகையான ஸம்பந்தம் உள்ளதனால்,
‘மாயனுக்கே உறவாந் தங்களுரு’ என்றார். இதன் விவரத்தை ‘நவவிதஸம்பந்தம்’ என்ற நூலிற் பரக்கக்காணலாம்.
உலகத்தில் ஒரு ஆத்மாவுக்கும் மற்றொரு ஆத்மாவுக்கும் கர்மசம்பந்தத்தினால் நேர்கிற பிதாபுத்ராதி ஸம்பந்தங்கள்
அக்கருமத்தின்தொடர்பு நீங்கும்போதெல்லாம் மாறிவிடுதல்போல நீங்குதலில்லாமல், பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்குமுள்ள
இந்தஒன்பதுவகைத்தொடர்பும் “உன்தன்னோடுறவேல் நமக்கு இங்கு ஒழிக்க வொழியாது” என்றபடி
என்றும் அழியாதிருத்தலால், ‘சீருறவு’ எனப்பட்டது.

திருவெஃகாவிலெம்பெருமான் பிரமதேவன்செய்த வேள்வியை யழிக்க வந்த வேகவதிநதியைத் தடுத்தற் பொருட்டு
அதற்கு அணையாகக் குறுக்கிற் பள்ளிகொண்டருளினவ னாதலால், அப்பிரானுக்கு வடமொழியில் ‘வேகாஸேது’ என்று பெயர்;
அது, தமிழில் ‘வேகவணை’ என்று மொழிபெயர்ந்து, அது பின்பு (நாகவணையென்பது நாகணையென்று விகாரப்படுதல்போல)
‘வேகணை’ என விகாரப்பட்டு, அது பின்னர் ‘வெஃகணை’ எனத் திரிந்து, தானியாகுபெயராய்த் தலத்தைக் குறித்து,
அது, பின்பு “வெஃகா’ என மருவி வழங்கிற்றென நுண்ணிதின் உணர்க.

————–

83-திருக்காரகம் –

ஓராதார் கல்வி உடையேம் குலம் உடையேம்
ஆராதனம் உடையேம் யாம் என்று சீர் ஆயன்
பூங்காரகம் காணப் போதுவார் தாள் தலை மேல்
தாங்கார் அகங்காரத் தால் –83-

(இ – ள்.) ஓராதார் – விவேகமில்லாதவர்கள், –
‘யாம்-, கல்வி உடையேம் – நிரம்பக் கற்றிருக்கின்றோம்;
குலம் உடையேம் – உயர்குடியிற் பிறந்துள்ளோம்;
ஆராதனம் உடையேம் – (நாடோறுந் தவறாது) திருவாராதநஞ் செய்கின்றோம்,’
என்று – என்றுகருதி, –
அகங்காரத்தால் – செருக்கினால்,
சீர் ஆயன் – சிறப்புப்பொருந்திய ஆயர்குலத்தினில் வந்துதோன்றிய திருமாலினது,
பூ காரகம் – அழகிய திருக்காரகமென்னுந் திவ்வியதலத்தை,
காண – சேவிக்குமாறு,
போதுவார் – யாத்திரைசெய்கின்ற அடியார்களது,
தாள் – திருவடிகளை,
தலைமேல் தாங்கார் – தமது முடிக்கு அலங்காரமாகச் சூடமாட்டார்கள்; (எ – று.)

ஆராய்ச்சியில்லாத சிலர் – வித்யாமதம் குலமதம் முதலியவற்றினால் தம்மினும்மிக்கவர் இல்லையென்றுகொண்டு,
ஸர்வவேதஸாரதமமான திருமந்திரத்தின்கருத்து
“உற்றதுமுன்னடியார்க்கடிமை, மற்றெல்லாம்பேசிலு நின்திருவெட்டெழுத்துங்,
கற்று நான் கண்ணபுரத்துறை யம்மானே” என்றபடி பாகவத ஸேஷத்வமாயிருக்கவும் அவ்வுண்மையையறிந்து
“எம்பெருமான்தாள் தொழுவார் காண்மின் என்தலைமேலாரே,”
“வாழ்த்துவார் தம்மலரடி என்சென்னிக்கு மலர்ந்தபூவே” என்றபடி அந்தப்பாகவதர்களின் திருவடிகளைத் தமது
சென்னிக்கு மலர்ந்தபூவாகக் கொள்ளவேண்டியதாக விருக்க அவ்வாறு கருதாமல்,
தம்மினும் மிக்கவர் வேறொருவரும் இல்லையென்றுகருதி அகங்காரப்பட்டு அழிவரென்பதாம்.
பாகவத சேஷத்வமில்லாதவர்க்குக் கேவலமான கல்வி குலம் முதலியன இருந்தும் பயன்படாஎன்பது, கருத்து.
“அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ண ஆஸ்ரம வித்யா வ்ருத்தங்களை – கர்த்தபஜந்மம் ஸ்வபசாதமம் ஸில்பநைபுணம்
பஸ்மாஹுதி ஸவவிதவாலங்காரம் என்று கழிப்பர்கள்” என்பது, ஆசார்யஹ்ருதயம்
‘பூங்காரகங்காணப் போதுவார்’ என்று பொதுப்படக் கூறியதனால், அவர்களது ஜந்மவித்யா வ்ருத்தங்கள்
முதலியவற்றைக் கருதவேண்டா என்பது பெறப்படும்.

————

84-திருக் கார் வானம் –

தாலேலோ என்று ஆய்ச்சி தாலாட்டி தன் முலைப்பா
லாலே எவ்வாறு பசி ஆற்றினள் முன் மாலே பூங்
கார் வானத்து உள்ளாய் கடலோடும் வெற்பொடும் பார் வானம்
உண்டாய் நீ பண்டு –84-

(இ – ள்.) மாலே – திருமாலே!
பூ கார்வானத்து உள்ளாய் – அழகியதிருக்கார்வானமென்னுந்திவ்வியதலத்தி லெழுந்தருளியிருப்பவனே! –
கடலோடும் – சமுத்திரத்தோடும்,
வெற்போடும் – மலைகளோடும்,
பார் – பூமியையும்,
வானம் – ஆகாயத்தையும்,
பண்டு – முற்காலத்தில் (பிரளயகாலத்தில்) நீ -,
உண்டாய் – அமுதுசெய்தருளினாய்; (அப்படிப்பட்ட உன்னை),
முன் – கிருஷ்ணாவதாரத்தில்,
ஆய்ச்சி – இடைச்சியாகிய யசோதைப்பிராட்டி,
தாலேலோ என்று தாலாட்டி – தாலேலோவென்று பாடித் தாலாட்டுதல் செய்து,
தன் முலை பாலாலே – தனது ஸ்தந்யத்தால்,
எ ஆறு பசி ஆற்றினள் – எப்படி பசியைத் தணித்தாளோ! (எ – று.)

உனது உலகமுண்ட பெருவயிற்றுக்கு ஆய்ச்சியின் முலைப்பால் எவ்வாறு பசிதணிக்கவல்லது?
உன்னுடைய மாயை என் தான்! என்பதாம். இதனால், எம்பெருமான் தன்தன்மை தோன்றாதவாறு கரந்து
உலகத்திற் சாதாரண மானுடர்போலவே பிறந்துவளர்ந்த கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபட்டுக் கூறியவாறு,
“வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்த், தேனாகிப் பாலாந் திருமாலே –
ஆனாய்ச்சி, வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொருநாள், மண்ணையுமிழ்ந்த வயிறு” என்ற பாசுரமும்,
“அவ்வச்சாதிகளிலே அவதரித்து அதிலுள்ளாருடைய தாரகமே தனக்குத் தாரகமாயிருக்கிறபடி.
ஸ்ரீ வராஹ மானா னாகில் கோரைக்கிழங்கு தாரகமாம்; இடையனானானாகில் வெண்ணெய் தாரகமாயிருக்கிறபடி,”
“ப்ரளயங்கொள்ளாதபடி வயிற்றிலே வைத்து வெளிநாடுகாணப் புறம்பேயுமிழ்ந்து ரக்ஷித்த வயிறு
இத்தனை வெண்ணெயாலே நிறைக்க வேண்டியிருந்ததோ!” என்ற வ்யாக்யாநவாக்கியங்களும் இங்குக் காணத்தக்கன.

————

85–திருக் கள்வனார் –

பண்டே உன் தொண்டு ஆம் பழஉயிரை என்னது என்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே மண் தலத்தோர்
புள் வாய் பிளந்த புயலே உன்னை கச்சிக்
கள்வா என்று ஓதுவது என் கண்டு –85-

(இ – ள்.) புள் வாய் பிளந்த – (கொக்கென்னும்) பறவையினது (வடிவங் கொண்டுவந்த அசுரனது) வாயைப் பிளந்து கொன்ற,
புயலே – நீர்கொண்ட மேகம்போன்றவனே! –
மண் தலத்தோர் – பூமியிலுள்ளவர்கள், –
பண்டே உன் தொண்டு ஆம் – அநாதிகாலமாக உனக்கு அடிமைப்பட்டிருப்பதாகிய,
பழ உயிரை – அநாதியாயுள்ள ஆத்மாவை,
என்னது என்று கொண்டேனை – என்னுடையது (ஸ்வதந்த்ரமானது) என்று கருதியிருந்த என்னை,
கள்வன் என்று கூறாது – திருடனென்று சொல்லவேண்டியதாக இருக்க அவ்வாறு கூறாமல்,
உனை – (ஸர்வஸ்வாமியான) உன்னை,
கச்சி கள்வா என்று ஓதுவது – கச்சிக்கள்வனேயென்று சொல்வது,
என் கண்டு – என்னகாரணங்கண்டோ?

கள்ளமென்பது – ஒருவர்க்குஉரிய பொருளைத் தன்னதாகக்கொள்வது; ஆகவே, அநாதியாக உனக்கே அடிமையாகக்
கிடந்த உயிரை நான் என்னுடையதென்று கொள்வதனால் என்னைக் கள்வனென்றல் தரும்;
உலகத்திலுள்ள பொருள்கள்யாவும் நின்னுடையனவே யாதலால், வெண்ணெய்கொள்ளுதல் முதலிய தொழில்களைச்
செய்யினும் உன்னைக் கள்வனென்றல் தகாது; இவ்வாறு இருக்க, உலகத்தார் இத்தன்மையை ஆய்ந்து அறியாமலே
என்னை யானே திருடிக்கொண்ட பெருந்திருடனாகிய என்னைக் கள்வனென்னாமல் ஸர்வஸ்வாமியான
உன்னைக் கள்வனென்கின்றனரே! இது என்னபேதைமையென்று சமத்காரந்தோன்றக் கூறியவாறு.
ஸேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகையாலே, அதற்குமாறாக ஸ்வதந்த்ரமென்று நினைக்கை ஆத்மாபஹார மாதல் காண்க.
நித்யனான ஆத்மா அநாதியாகவே எம்பெருமானுக்கு அடியவ னாதலால், ‘பண்டே உன்தொண்டாம் பழவுயிர்’ என்றார்.
‘கொண்டேனை’ என்று இறந்தகாலத்தாற் கூறியதனால், இப்போது ஐயங்கார் உண்மையறிவு தோன்றித் தம்முயிரை
அடியவனென்று கருதியிருக்கின்றன ரென்பது விளங்கும். ‘என்கண்டு’ என்பது – மண்டலத்தோரது அறியாமையே
இவ்வாறுகூறக் காரணமென்பதைப் புலப்படுத்தும்.

———-

86-திருப் பவள வண்ணம் –

கண்டு அறிந்தும் கேட்டு அறிந்தும் தொட்டு அறிந்தும் காதலால்
உண்டு அறிந்தும் மோந்து அறிந்தும் உய்யேனே -பண்டைத்
தவள வண்ணா கார் வண்ணா சாம வண்ணா கச்சிப்
பவள வண்ணா நின் பொற் பாதம் –86-

(இ – ள்.) பண்டை – பழமைக்காலத்தில் (கிருதயுகத்தில்);
தவளம் வண்ணா – (பால்போல்) வெண்ணிறமானவனே!
கார் வண்ணா – மேகத்தின் தன்மையை யுடையவனே!
சாம வண்ணா – (இயற்கையில்) கருநிறமானவனே!
கச்சி பவளம் வண்ணா – காஞ்சீபுரத்தி லெழுந்தருளியுள்ள பவளவண்ணனே! –
நின் பொன் பதம் – உனது அழகிய திருவடிகளை, –
காதலால் – பக்தியோடு, –
கண்டு அறிந்தும் – (எனதுகண்களால்) தரிசித்துஉணர்ந்தும்,
கேட்டு அறிந்தும் – (காதுகளாற்) கேட்டுஉணர்ந்தும்,
தொட்டுஅறிந்தும் – (மெய்யினாற்) பரிசித்து உணர்ந்தும்,
உண்டு அறிந்தும் – (வாயினாற்) புசித்து உணர்ந்தும்,
மோந்து அறிந்தும் – (மூக்கினால்) மோந்துஉணர்ந்தும்,
உய்யேன் – ஈடேறுகின்றேனில்லை; (எ – று.) – ஏ – இரக்கப்பொருளது.

“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம், கண்ணன்,”
“வாஸுதேவஸ் ஸர்வம்” என்பவை முதலியவற்றிற் கூறுகிறபடி ஐம்பொறிகளாலும் எம்பெருமானையே நுகரப்படு
பொருளாகக் கொண்டு ஈடேறவேண்டியதாயிருக்க, யான் அவ்வாறிருத்தலை விட்டு,
“கண்டுகேட்டுண்டுயிர்த்துற்றறியுமைம்புலனும், ஒண்டொடிகண்ணேயுள” என்றவாறு சிற்றின்பத்தில் அழிந்து வருந்துகின்றேனே;
இவற்றைப்போக்கி என்னைப் பாதுகாத்தருளவேண்டு மென்பதாம்;
“உரைமாற்ற முண் டென்பொறி யைந்து முன்னிடத்தன்றி யுண்ணு,
மிரை மாற்றவேண்டு மிதுவே யென்விண்ணப்பம் என்னப்பனே” என்றார் அழகரந்தாதியிலும்.
வேறுவேறு காலங்களில் வேறுவேறுபொருள்களால் அநுபவிக்கப்படுவன ஒருகாலத்து இத்திருவடியின்கண்ணே அநுபவிக்கப்படு மென்க.

இனி, கார்வண்ணா சாமவண்ணா என்பதற்கு – (கலியுகத்தில்) காளமேகம்போன்ற நீலநிறமுள்ளவனே!
(துவாபரயுகத்தில்) பசுமைநிறமுள்ளவனே! என்று பொருள்கூறி, எம்பெருமான் நான்கு யுகங்களிலும் நான்கு
நிறமுடையவனாயிருக்கின்றபடியை இச்செய்யுளிற் பின்னிரண்டடிகளினாற் கூறியதாகக் கொள்ளுதல் ஏற்கும்;
“க்ருதயுகத்திலேவந்தால் க்ருதயுகபுருஷர்கள் ஸத்வோத்தரராகையாலே அவர்களுடைய ருசி(க்கு) அநுகுணமாகச்
சுக்லவர்ணமான வடிவையுடையனாயிருக்கும்,”
“திரேதாயுகத்தில்வந்தால் சிவந்தவடிவையுடையனாயிருக்கும்; அக்காலத்திலே புருஷர்கள் ரஜ: ப்ரசுரராகையாலே
சிவப்பிலேயாயிற்று ருசியுண்டாயிருப்பது; அந்தருசி(க்கு) அநுகுணமாகச் சிவந்தவடிவைக்கொண்டுமுகங்காட்டும்,”
“த்வாபரயுகத்திலுள்ளார் ரஜஸ்தமோமிஸ்ரராயிருக்கையாலே அவர்களுடைய ருசி(க்கு) அநுகுணமாகச்
சிவப்புமன்றியிலே நீலமுமன்றியிலே பாசியினுடைய புறத்திற் பசுமைபோலே ஸ்ரமஹரமான திருமேனியை யுடையனாயிருக்கும்,”
“கலிகாலத்தில் தன்பக்கல் அபிமுகராய் ஒருவர்ணவிஸேஷத்திலே ருசி பண்ணுவார் இல்லாமையாலே
ஸ்வாபாவிகமான வடிவுதன்னை (கருநிறத்தை)க் கொண்டிருக்கும்,”
“பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும்புறம், போலு நீர்மை பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலா,
நீலநீர்மை யென்றிவை நிறைந்தகால நான்குமாய், மாலினீர்மை வையகம் மறைத்த தென்னநீர்மையே,”
“திருவடிவிற் கருநெடுமாற் சேயனென்றுந் திரேதைக்கண் வளை
யுருவாய்த் திகழ்ந்தானென்றும், பெருவடிவிற் கடலமுதங் கொண்டகாலம்” என்பன காண்க.

———–

87-திருப் பரமேச்வர விண்ணகரம் –

பதத் தமிழால் தன்னையே பாடுவித்து என்னைத் தன்
பதத்து அடியார்க்கே ஆட்படுத்தான் இதத்த
பரமேச்சுர விண்ணகரான் பல ஆன்
வர மேச்சு உரல் அணைந்த மால் –87-

(இ – ள்.) பல ஆன் வர – பலபசுக்கள் ஒருங்குதிரண்டுவர,
மேச்சு – (அவற்றை) மேய்த்து,
உரல் அணைந்த – (வெண்ணெய் களவாடியதற்காக யசோதைப்பிராட்டியால்)
உரலிற் பிணிப்புண்டிருந்த, மால் – திருமாலாகிய இதத்த பரமேச்சுர விண்ணகரான் –
(தன்னடியார்க்கு) நன்மைசெய்கின்ற பரமேச்சுரவிண்ணகரமென்னுந் திவ்வியதலத்திலெழுந்தருளிய பரமபதநாதன், –
பதம்தமிழால் – பக்குவமாயுள்ள தமிழ்ப்பாடல்களினால்,
தன்னையே பாடுவித்து – (பிறரைத் துதியாமல் பரதேவதையாகிய) தன்னையே பாடும்படி செய்து, என்னை -,
தன் பதத்து அடியார்க்கே – தனது திருவடிகளில் தொண்டுபூண்டவர்கட்கே,
ஆள்படுத்தான் – அடிமையாக்கினான்; (எ – று)

பரமேச்சுரவிண்ணகரத்தி லெழுந்தருளியிருக்கிற திருமால், தன்னைக் கவிபாடுதற்கு ஏற்ற ஜ்ஞாநஸக்திகள்
முதலியன என்னிடத்திலில்லாதிருக்கவும், தனது நிர்ஹேதுககிருபையால் அவற்றை எனக்கு உண்டாக்கி,
வேதங்களாலும் அளவிட்டுச் சொல்லமுடியாத தன்னைப்பற்றிக் கவிபாடித் துதிக்குமாறு செய்து என்னைத்
தன்னடியார்க்கு ஆட்படுமாறு செய்தன னென்பதாம்.
எம்பெருமானது அடிமை நிலைத்து நிற்பது அவனடியார்க்கு அடிமைப்பட்டபின்னரேயாகு மாதலால்,
“எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே” என்றபடி தாம் அவர்க்கு ஆட்பட்டிருத்தலால்,
‘தன்பதத்தடியார்க்கேயாட்படுத்தான்’ என்றது. விஷயகௌரவத்தாலும் இயற்கையாகவே பாஷை
இனியதாயிருத்தலாலும், ‘பதத்தமிழால்’ என்றார்;
“என்னால் தன்னை யின்றமிழ்பாடிய வீசனை” என்பது, நம்மாழ்வார்பாசுரம்,
எம்பெருமான் எப்போதும் ‘உயிர்கள் எவ்வாறு கரைமரஞ்சேருமோ?’ என்று அவர்களின் நன்மையையே
எதிர்பார்த்து நிற்பவனாதலால், ‘இதத்த பரமேச்சுரவிண்ணகரான்’ எனப்பட்டான். மேச்சு = மேய்த்து: மரூஉ.

பரமேச்சுரன் (தேவாதிதேவன்) எழுந்தருளியிருக்கின்ற விண்ணகரமாதல்பற்றி, இத்தலத்திற்குப்
பரமேச்சுரவிண்ணகர மென்று திருநாமம்; வைகுண்டப்பெருமாள்ஸந்நிதி யெனப்படுவது, இதுவே.

———–

88-திருப் புட்குழி –

மால் வேழமும் அரவும் மாயையும் வெற்பும் கடலும்
மேல் வீழ் படையும் விடமும் போய் பாலன்
நெருப்பு உள் குழி குளிர நின்றதும் கேட்டு ஓதார்
திருப் புட்குழி அமலன் சீர் –88-

(இ – ள்.) (இரணியாசுரன் தனக்குஇணங்கிவராத தனதுகுமாரனான பிரகலாதாழ்வானை உபத்திரவிக்கும்பொருட்டு ஏவியனவான),
மால் வேழமும் – பெரிய மதயானைகளும்,
அரவும் – பெரும்பாம்புகளும்,
மாயையும் – (சம்பரனென்னும்அசுரனாற்செய்யப்பட்ட) மாயையும்,
வெற்பும் – மலையும்,
கடலும் – சமுத்திரமும்,
மேல் வீழ் படையும் – மேலேவிழுகின்ற வாள்முதலிய ஆயுதங்களும்,
விடமும் – விஷமும்,
போய் – (உபத்திரவஞ்செய்யமாட்டாமல் வலியொடுங்கிப்) போக,
பாலன் – (எம்பெருமானது திருவஷ்டாக்ஷரத்தின் மகிமையை யறிந்து உச்சரித்த) சிறுவனாகிய பிரகலாதாழ்வான்,
குழி உள் நெருப்பு குளிர நின்றது – பள்ளத்திலே மூட்டிய நெருப்புச் சுடாமற் குளிரும்படி நின்றதை,
கேட்டுஉம் – கேட்டிருந்தும், –
திருப்புட்குழி அமலன் சீர் – திருப்புட்குழியென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய திருமாலினது சிறப்புக்களை,
ஓதார் – (இவ்வுலகத்துச்சனங்கள்) கூறமாட்டார்கள்; (எ – று.)

எம்பெருமானது திருவடிகளையே சரணமாக நம்பியிருந்த சிறுவனாகிய பிரகலாதாழ்வான் தன் தந்தையாகிய
இரணியாசுரனது சூழ்ச்சியினால் தோன்றிய பலவகையாபத்துக்களினின்று நீங்கியதைக் கேட்டறிந்தும்,
உலகத்துச்சனங்கள் அப்பெருமானது குணங்களை யநுசந்தித்து நற்கதிபெறாது அழிகின்றனரே!
இது என்ன பேதைமை? என்று இரங்கியவாறு.
இரணியன் அருந்தவம்புரிந்து பெருவரங்கள்பெற்றுச் செருக்கித் தன்னையே அனைவரும் கடவுளாகக்கொண்டு வணங்கி
வழிபடவேண்டுமென்று கட்டளையிட்டகாலத்தில் எல்லாத்தெய்வங்களும் இருந்தஇடம் தெரியாதபடி மறைந்துகிடக்க,
அவ்விரணியனது செருக்கை யொழிக்குமாறு எம்பெருமான் பிரகலாதனுக்கு அநுக்கிரகித்து நரசிங்க
மூர்த்தியாய்த் தோன்றிய பின்பு பிறதெய்வங்கள் தலையெடுத்ததனால் ஸ்ரீமந்நாராயணனே பரதேவதையென்று
அப்பிரானதுசீரையே ஓதவேண்டியதாக இருக்க, அதனைவிட்டுப் பிறதெய்வங்களின்சீரையும் ஓதுகின்றார்களே!
இது என்ன அறிவு! என்ற கருத்தும் ‘நெருப்புட்குழிகுளிர நின்றதுகேட்டும் ஓதார் திருப்புட்குழி அமலன்சீர்’ என்றவிடத்துத் தோன்றும்.

இரணியாசுரனது ஏவுதலினால் திக்கஜங்கள் பிரகலாதனைப் பூமியிலே வீழ்த்தித் தந்தங்களினாலே பாய்ந்து இடிக்க,
அந்தத்தந்தங்கள் முறிந்து பொடியாய்ப்போயினதனால், மால்வேழமும்; தக்ஷகன் முதலான கொடிய மகாசர்ப்பங்கள்
உக்கிரமான விஷங்களைக் கக்கிக்கொண்டுவந்து அவனது சகல அவயவங்களிலும் கடிக்கவும்
அவனது தேகத்திலுள்ள தோலிற் கிஞ்சித்தாயினும் சேதமுண்டாகவில்லை யாதலால், அரவும்;
மகாமாயாவியாகிய சம்பராசுரன் செய்த மாயைகளெல்லாம் ஸ்ரீமந்நாராயணனுடைய நியமநத்தினாலே திருவாழியாழ்வான்
அவரைப் பாதுகாக்கும்பொருட்டு அங்கே எழுந்தருளித் தகித்துச் சாம்பராக்கிவிட்டதனால், மாயையும்;
பருவதங்களினாலே அமுக்கப்பட்டபோதிலும் ஸ்ரீவிஷ்ணுஸ்மரணமாகிற கவசத்தினாலே காக்கப்பட்டதனால், வெற்பும்;
தைத்தியர்கள் நாகபாசங்களினாலே கட்டிக் கடலிலே போகட அவன் அதில்வீழ்ந்து அசைந்துகொண்டு அதனை
விட்டுப் புறப்பட்டு வெளியில்வந்துவிட்டதனால், கடலும்; அங்கிருந்த அசுரர்களெல்லாரும் ஒன்றாய்ச்சேர்ந்து
பலவிதஆயுதங்களையெடுத்துப் பிரகரித்து வதைக்கும்படி யத்தனிக்க, அவன் அவற்றினாற் கிஞ்சித்தும் வேதனை
யுறாமல் விளங்கியதனால், மேல்வீழ்படையும்; பாகஞ்செய்வோர் போஜநங்களிலெல்லாம் கலந்துகொடுத்த மகாவிஷம்
ஸ்ரீஅநந்தநாமோச்சாரண பிரபாவத்தினாலே நிர்வீரியமாகி அவனுடைய உதரத்தில் ஜீரணமாகிவிட்டதனால், விடமும்;
அசுரர்கள் அக்கினியை வளர்த்து அவனை அதிலே மறையவைத்து அனலை மூட்டிக்கொளுத்த அவ்வக்கினி கொஞ்சமாகிலும்
அவனைத் தகிக்கமாட்டாமல் அதிசீதளமானதனால், நெருப்பும் ஒன்றுஞ்செய்யமாட்டாமற் போயினமை பிரசித்தம்.
“நம்பெருமா ளெழுத்தெட்டின் பெருமை நவிலுமதோ,
சம்பரன்மாயம் புரோகிதர்சூழ்வினை தாரணிவாள்,
வெம்படை மாசுணம் மாமதவேழம் விடந்தழல் கால்,
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்.

புள்ளை (சடாயுவென்னும் பெரியவுடையாரைக்) குழியிலிட்டு ஸம்ஸ்கரித்ததுபோல எம்பெருமான்
சேவை சாதிக்கின்ற தலமாதல்பற்றி, திருப்புட்குழியென்று இத்தலத்திற்குத் திருநாம மென்பர்.

————-

89-திரு நின்ற ஊர் -தலைவி தோழி யார்க்கு அறத்தொடு நிற்றல் –

சீர் அறிந்து தோழி மீர் சென்று கொணர்ந்து எனக்குப்
போர முலை முகட்டில் பூட்டுமினோ நீர் அவுணர்
பொன்ற ஊர் புட் கழுத்தில் பொன்னை மாணிக்கத்தை
நின்ற ஊர் நித்திலத்தை நீர் –89-

(இ – ள்.) தோழிமீர் – (எனது) பாங்கிமார்களே! –
நீர் – நீங்கள், –
நேர் அவுணர் பொன்ற – எதிர்த்துப்பொருத அசுரர்கள் அழியும்படி,
ஊர் – ஏறிநடத்துகின்ற,
புள் – கருடாழ்வானது,
கழுத்தில் – கழுத்திலே,
பொன்னை – பொன்போலப் பிரகாசிப்பவனும்,
மாணிக்கத்தை – (இயற்கையில்) கருமாணிக்கம்போன்ற கருநிறமுள்ளவனுமாகிய,
நின்றவூர் நித்திலத்தை – திருநின்றவூரென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய முத்துப்போன்றவனை,
சீர் அறிந்து – (அவனது) சிறப்பை யுணர்ந்து, –
சென்று – போய்க்கிட்டி,
கொணர்ந்து – கொண்டுவந்து,
எனக்கு போர – எனக்குத் திருப்தியுண்டாகும்படி
முலை முகட்டில் – (எனது) தனங்களது உச்சியின்மீது,
பூட்டுமின் – அணியுங்கள்; (எ – று.)

திருநின்றவூர்ப் பத்தராவியாகிய தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைவி
அப்பிரிவாற்றாமையாற் பலவாறு நோவுபட, அத்துயர மாத்திரத்தையே கண்ட தோழியர்
அந்நோயின்காரணமும் அதற்குப்பரிகாரமும் இன்னவென்று உணராது வேறுபலவகையாக ஆராய்ந்து
பரிகாரஞ்செய்யத் தொடங்கியபோது நோயொன்றும் மருந்தொன்று மாகையாலே அந்நோய் தீராது வளர,
அதனை ஆற்றமாட்டாத அந்தத்தலைவி நாணந்துறந்து தானே தனது நோயையும் நோயின்காரணத்தையும்
அந்நோய் தீர்க்கும் மருந்தையும் அம்மருந்தைப் பிரயோகிக்கும் விதத்தையும் உணர்த்துதல், இச்செய்யுளிற் கூறிய விஷயம்.
இங்ஙனம் களவைவெளிப்படுத்துதலின் காரணம் – தன்கருத்தைத் தோழியர்மூலமாகத் தாய்மார்க்கும் அவர்கள்
மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்கும் தெரிவித்துத் தன்னை அவனுக்கே விரைவில் வெளிப்படையாக
மணஞ்செய்துவைக்கும்படி கொள்ளும் விருப்பம்.

எம்பெருமானை – பெறுதற்கு அருமையும் ஒண்மையும் பற்றிப் பொன்னாகவும், கருநிறம்பற்றி மாணிக்கமாகவும்,
ஸ்ரமஹரமாயிருத்தல்பற்றி முத்தாகவும் கூறினள்;
“வெள்ளறையுள் கல்லறைமேற்பொன்னை மரதகத்தை,”
“நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை,”
“நின்றவூர் நித்திலத்தை” என்ற ஆன்றோர் அருளிச்செயல்கள் காண்க.
எம்பெருமானொருத்தனையே இவ்வாறு பொன்னாகவும் மாணிக்கமாகவும் நித்திலமாகவும் குணபேதத்தால் வியப்புத்தோன்றக் கூறியது –
பலபடப்புனைவணியாம். எம்பெருமானைப் பொன்மாணிக்கம் முத்து என்று உருவகத்தாற் கூறியதற்கு ஏற்ப,
“முலை முகட்டிற்பூட்டுமின்’ என்று தலைவி சமத்காரந்தோன்றக் கூறினள்;
பொன் முதலியவை முலைமுகட்டிற் பூணத்தக்க பொருள்களாதல் காண்க. ‘முலைமுகட்டிற்பூட்டுமினோ’ என்றதனால்,
“மலராள்தனத்துள்ளான்” என்றவாறு அப்பிராட்டியோடொப்ப எம்பெருமானைத் தான் அநுபவிக்கப்
பாரிக்கின்றனள் இத்தலைவி யென்பது பெறப்படும்.
சீர் அறிந்து என்பதற்கு – “மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலை யெம்மாயற்கல்லால்” என்றபடி
அவ்வெம்பெருமானுக்கன்றி மற்றொருத்தற்குப் பேச்சுப்படாதபடி அநந்யார்ஹையான எனது சிறப்பை யறிந்து என்றும் உரைக்கலாம்.

எம்பெருமான் ஒருகால் காட்சிகொடுத்து மறைய, பின்பு பிரிவாற்றாது வருந்துகின்ற ஐயங்கார் தம்பக்கல்
பரிவுடையாரை நோக்கி ‘எம்பெருமானை என்னிடத்திற்சேர்த்து என்னை ரக்ஷிக்கப் பாருங்கள்’ என்று பிரார்த்தித்தல்,
இதற்கு உள்ளுறைபொருள். விவரம் உய்த்து உணர்க.

———-

90-திரு எவ்வுளூர்-

நீர்மை கெட வைத்தாரும் நின்னோடு எதிர்ந்தாரும்
சீர்மை பெற நின் அடிக்கீழ்ச் சேர்க்கையினால் நேர்மை இலா
வெவ் உளத்தனேன் செய் மிகையைப் பொறுத்து அருளி
எவ்வுள் அத்தனே நீ இரங்கு–90-

(இ – ள்.) எவ்வுள் அத்தனே – திருவெவ்வுளூர் என்னுந் திவ்வியதலத்தில் எழுந்தருளிய தலைவனே! – நீ -, –
நீர்மை கெட – (தமது) தன்மை அழியும்படி,
வைதாரும் – (உன்னை) நிந்தித்தவரும்,
நின்னோடு எதிர்த்தாரும் – உன்னோடு எதிர்த்துப் போர்செய்தவரும், (தாங்கள் செய்த அபராதத்தினால் அழிந்துபோகாமல்),
சீர்மை பெற – சிறப்பு அடையும்படி,
நின் அடிக்கீழ் சேர்கையினால் – உனது திருவடிகளிற் சேர்தலினாலே, –
நேர்மை இலா – நல்லகுணமில்லாத,
வெம் உளத்தனேன் – கொடிய சிந்தனையையுடைய யான்,
செய் – செய்த,
மிகை – குற்றங்களையும்,
பொறுத்து அருளி – உனது திருவருளினாற் பொறுத்துக்கொண்டு,
இரங்கு – (என்திறத்தில்) திருவுள்ளமிரங்கி (உனக்கு) ஆட்கொள்வாயாக; (எ – று.)

வைதார் – சிசுபாலன் முதலானோர். எதிர்த்தார் – தந்தவக்ரன் முதலானோர். எம்பெருமான் தன்னை விரும்பி
இடைவிடாது மனத்திற்கொண்டு பக்தியோடு வாழ்த்தியவர்க்கும் வழிபட்டவர்க்கும் பரமபதம் அளித்தல் போலவே,
தன்னை வெறுத்து இடைவிடாது மனத்திற்கொண்டு வைதவர்க்கும் எதிர்த்துப் போர்செய்தவர்க்கும் பரமபதம்
அளித்தருள்கின்றன னென்பதையும்; அபாரகருணாநிதியான அப்பெருமான் உயிர்கட்கு நற்கதியளித்தற்குத்
தன்சம்பந்தமான ஏதேனும் ஒன்றை வியாஜமாகக்கொண்டு அருள் செய்கின்றன னென்பதையும்;
எவ்விதத்திலும் சேதநரை உஜ்ஜீவிப்பிப்பது எம்பெருமானது இயல்பு என்பதையும்;
ஏதேனும் ஒருவியாஜத்தை அபேக்ஷிக்கும் எம்பெருமான் த்வேஷாதிகளினாலாவது செய்யும் நாமஸங்கீர்த்தனாதிகளையும்
திருவுள்ளம்பற்றியருளும்படியான மகோதாரனென்பதையும் இங்கு உணரலாம்;
“வைதாரையு முன்மலைந்தாரையு மலர்த்தாளில்வைத்தாய்,
மொய்தாரையத்தனை தீங்கிழைத்தேனையு மூதுலகிற்,
பெய்தாரை வானிற் புரப்பா னிடபப்பெருங்கிரியாய்,
கொய்தாரைவேய்ந்த திருவடிக்கீழ்த் தொண்டுகொண்டருளே” என்றார் அழகரந்தாதியிலும்.
‘எம்பெருமானது திருவடியே வீடு’ என்ற கொள்கை, இரண்டாமடியில் விளங்குகின்றது. ‘எவ்வுளத்தனே’ என்ற விளியால்,
வைதாரையும் எதிர்த்தாரையும் கூடக்கைவிடமாட்டாது திருவடிக்கீழ்ச்சேர்த்துக்கொள்ளும்
உரிமையுடையவன் எம்பெருமா னென்பது, பெறப்படும்.
“செய்தகுற்றம் நற்றமாகவே கொள் ஞாலநாதனே” என்பது திருமழிசையார் பாசுரம்.

திருமால் சாலிஹோத்திர மகாரிஷிக்குப் பிரதியக்ஷமாகி, உறைதற்கு உரிய உள் ‘எவ்வுள்’ என வினாவியதனால்,
இத்தலத்திற்குத் திருவெவ்வுளூரென்று திருநாமமாயிற் றென்பர்.

—————-

91-திரு நீர் மலை –

இரங்கும் உயிர் அனைத்தும் இன் அருளால் காப்பான்
அரங்கன் ஒருவனுமே ஆதல் கரங்களால்
போர் மலை வான் வந்த புகழ் வாணன் காட்டினான்
நீர் மலை வாழ் எந்தை எதிர் நின்று –91–

(இ – ள்.) இரங்கும் – வருந்துகின்ற,
உயிர் அனைத்தும் – எல்லாவுயிர்களையும்,
இன் அருளால் – (தனது) இனியகருணையினால்,
காப்பான் – பாதுகாப்பவன்,
அரங்கன் ஒருவனுமே ஆதல் – திருவரங்கநாதன் ஒருத்தனேயாவனென்ற விஷயத்தை,
கரங்களால் – (தனது) ஆயிரங்கைகளினாலும்,
போர் மலைவான்வந்த – போர்செய்யும்படி வந்த,
புகழ் வாணன் – பிரசித்திபெற்ற பாணாசுரன்,
நீர்மலை வாழ் எந்தை எதிர் நின்று – திருநீர்மலையென்னுந் திவ்வியதலத்தில் நித்தியவாசஞ்செய்கின்ற எம்பெருமானது எதிரிலே நின்று, காட்டினான் -; (எ – று.)

பாணாசுரன் முதலிற் சிவபிரானை யடுத்து அவனது துணைவலியாற் செருக்கிக் கண்ணபிரானோடு போர்செய்யத்தொடங்கி,
இடையிலே தனது பரிவாரங்களோடு சிவபிரான் கைவிட்டு ஓடியதனால் தனது குறைகள் தீரவும் தன்விருப்பம் கைகூடவும்
பெறாமையோடு அப்பிரானது சக்கராயுதத்தினாற் கைகள் அறுப்புண்டு, சிவபிரான் பிரார்த்தனைக்கு இணங்கி
நான்கு கைகளோடும் உயிரோடும் தன்னை அக்கண்ணபிரான் விட்டிட்டதைக் காணவே,
அவ்வசுரன் ஸ்ரீகிருஷ்ணனே ரக்ஷகனென்று துணிந்து அப்பிரானை வணங்கி உறவுபூண்டு அத்திருமாலருளாற் பேறு
பெற்று உய்ந்தனனென்பது பிரசித்தமாதலால், ஸ்ரீரங்கநாதனே எல்லாவுயிர்களையுந் தடுமாற்றத்தினின்று
நீக்கிக் காக்கின்ற கடவுளாவ னென்றதைக் காட்டியவ னாவான்;
“வணங்கரியா னரங்கன் னடியார்தொழ வாளரவு,
வணங்கரியாடல்பரிதேர் நடத்தெந்தை வானவர்க்கும்,
வணங்கரியா னன்றிக் காப்பாரில்லாமை விண்மண்ணறியும்,
வணங் கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.

“புகழ்வாணன்’ என்றது அவன் சிவபிரான் தனதுவாயிலிற் கணங்களோடு பாதுகாவலாகும் பெருமை பெற்றிருந்தவ னென்பதையும்,
‘கரங்களால் போர்மலைவான்’ என்றது – தான் ஆயிரங்கைகள் கொண்டதனால் போர்த்தினவு விஞ்சப்பெற்றிருந்தவ னென்பதையுங் காட்டும்.
“ருத்ரனும் ஸகலப்ராணிகளையும் ஸம்ஹரிக்கையே தொழிலாகவுடையனாய், விடாயர் முகத்திலே
நெருப்பைச் சொரிந்தாற்போலே யிருக்கத் தழல்நிறவண்ணனாய்,
தன்னையாஸ்ரயித்தவர்களை ‘அறுத்துத்தா, பொசித்துத்தா’ என்று கொடுந்தொழில்களைச் செய்வித்துக் கொள்ளுகையாலும்,
தன்னை ஆஸ்ரயித்த வாணனை ‘தலையிற்பூவாடாதே நோக்குகிறேன்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணித் தன்னைத்
தொழுத கைகளைக் கள்ளிக்காடுசீய்த்தாப்போலே சீய்க்கக்கண்டு ‘உயிருண்டாகில் உப்புமாறியுண்ணலாம்’ என்று
நெற்றியிற் கண்ணைப் புதைத்துக்கொண்டு நழுவினவனாகையாலும் ………… ரக்ஷகனாகமாட்டான் ………
ஈஸ்வரன் மாதாக்கள்கைவிட்ட அவஸ்தையிலும்
“பின்னுநின்றடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான்” என்கிறபடியே தன்னுருக்கெடுத்து
வேற்றுருக்கொண்டு தாய்முகங்காட்டியும், இன்சொல்லுச் சொல்லியும், ப்ராதாக்களும் பர்த்தாக்களும் நெகிழ
நின்றவன்று தான் ஏறிட்டுக்கொண்டு கழுத்திலே ஓலைகட்டித் தூதுபோயும், புருவம்நெரித்த விடத்திலே தேரைநடத்தியும்,
மார்பிலே அம்பேற்றும், சாவாமல் நோக்கியும், செத்தாரை மீட்டும் நாராயணத்வப்ரயுக்தமான உதரத்தெரிப்பாலே
அகவாயிலேநின்று ஸத்தையைநோக்கிக்கொண்டுபோருகையாலே இவனே எல்லார்க்கும் ரக்ஷகன்” என்ற
ப்ரபந்நபரித்ராணம் இங்குக் காணத்தக்கது.
“வாணபுரம்புக்கு முக்கட்பிரானைத் தொலைய வெம்போர்கள்செய்து,
வாணனை யாயிரந்தோள் துணித்தான் சரணன்றி மற்றொன்றிலமே” என்பது, நம்மாழ்வார் பாசுரம்.
நீரானது அரண்போலச் சூழப்பெற்ற மலையாதல்பற்றி, இத்தலம், திருநீர்மலை யெனப் பெயர்பெறும்.

————–

92-திரு இட வெந்தை —

நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து
கொன்று திரியும் கொடு வினையார் இன்று
வெருவிட எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன்
திருவிட வெந்தைக்கே செறிந்து –92-

(இ – ள்.) நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து – நிலைத்திணைப் பொருளும் (ஸ்தாவரமும்) இயங்கு
திணைப்பொருளும் (ஜங்கமமும்) ஆகிய எல்லாப்பிறவிகளையும் (எனக்கு) உண்டாக்கி,
கொன்று திரியும் – (என்னை) மிகவும் வருத்திக்கொண்டு திரிகின்ற,
கொடு வினையார் – மிகக்கொடிய தீவினைகள்,
இன்று -இப்போது,
வெருவிட – அஞ்சியோடும்படியாக, (யான்),
திருவிடவெந்தைக்கே செறிந்து – திருவிடவெந்தையென்னுந் திவ்வியதலத்தில் நெருங்கி,
எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன் – (அத்தலத்தில் எழுந்தருளிய) எமது ஸ்வாமியாகிய நித்யகல்யாணப்பெருமானுக்கே சிறந்த அடியவனாயினேன்; (எ – று.)

எம்பெருமானுக்கே அடிமைப்பட்டதனால், எனக்குப் பிறவித்துன்பங்களை இதுகாறும் விளைத்து என்னை வருத்தி
வந்த பாவங்களெல்லாம் இனி என்னையணுகாது அஞ்சியோடு மென்பதாம்.
“அகஞ்சிவந்த கண்ணினராய் வல்வினையராவார்,
முகஞ்சிதைவராமன்றேமுக்கி – மிகுந்திருமால்,
சீர்க்கடலையுள் பொதிந்த சிந்தனையேன்றன்னை,
யார்க்கடலாஞ் செவ்வேயடர்த்து,”
“வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ,
கானோ வொருங்கிற்றுக் கண்டிலமால் – ஆனீன்ற,
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்றுயரையாவா மருங்கு” என்பன நம்மாழ்வார்பாசுரம்.
செறலினால், ‘கொடுவினையார்’ என அஃறிணையை உயர்திணையாக் கூறினார்; திணைவழுவமைதி.

இத்தலத்தி லெழுந்தருளிய வராகப்பெருமாள் தமதுதேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால்,
இத்தலத்திற்குத் திருவிடவெந்தையென்று திருநாமமாயிற்று.

————–

93-திருக் கடன் மல்லை–

செறிந்த பணை பறித்து திண் களிற்றைச் சாடி
முறிந்து விழப் பாகனையும் மோதி எறிந்து
தருக்கு அடல் மல்லைக் மைத்தான் தஞ்சம் என்று நெஞ்சே
திருக்கடல் மல்லைக்குள் திரி –93–

(இ – ள்.) நெஞ்சே – (எனது) மனமே! –
செறிந்த – நெருங்கியுள்ள.
பணை – தந்தங்களை,
பறித்து – பிடுங்கி, (அவற்றைக்கொண்டே),
திண் களிற்றை – வலிய (குவலயாபீடமென்னும்) மதயானையை,
சாடி – அடித்துக்கொன்று, –
பாகனையும் – (அவ்யானையை நடத்துபவனான) பாகனையும்,
முறிந்து விழ – இறந்து கீழ்விழும்படி,
மோதி எறிந்து – அடித்துத் தள்ளி, –
தருக்கு அடல் மல்லை – செருக்கையும் தேகவலிமையையுமுடைய மல்லர்களை,
குமைத்தான் – பொருது கொன்றவனாகிய திருமாலே,
தஞ்சம் என்று – ரக்ஷகமென்று (அறுதியிட்டு),
திருக்கடன்மல்லைக்குள் திரி – திருக்கடன்மல்லையென்னுந் திவ்வியதலத்திற் சென்று திரிவாயாக; (எ – று.)

எம்பெருமானையே ரக்ஷகமாக நினைத்துத் திருக்கடன்மல்லையிற் சென்று வசித்தால் அப்பெருமான்
விரோதிகளையெல்லாம் போக்கி நற்கதியளிப்ப னென்பதாம்.
இது, பூதத்தாழ்வார் திருவவதாரஸ்தலம்.

————-

94- திருவல்லிக்கேணி —

திரிந்து உழலும் சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
புரிந்து புகன்மின் புகன்றால் மருந்து ஆம்
கருவல்லிக்கு ஏணி ஆம் மாக்கதிக்கு கண்ணன்
திருவல்லிக்கேணி யான் சீர் –94-

(இ – ள்.) திரிந்து உழலும் – (ஐம்புலவாசைகளிற்) சென்று அலைகின்ற,
சிந்தைதனை – உங்கள் மனத்தை,
செவ்வே நிறுத்தி – (அவ்வாறு செல்லவொட்டாது) நேராக நிறுத்தி,
திருவல்லிக்கேணியான் – திருவல்லிக்கேணியென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய,
கண்ணன் – கண்ணபிரானாகிய வேங்கடகிருஷ்ணனது,
சீர் – கீர்த்தியை,
புரிந்து புகன்மின் – விரும்பிக் கூறுங்கள்;
புகன்றால் – அவ்வாறு புகழ்ந்துகூறினால், (அது), –
கரு வல்லிக்கு – கருப்பமாகிய கொடிக்கு,
மருந்து ஆம் – (நசிக்கச்செய்யும்) ஒளஷதமாம்;
மா கதிக்கு – சிறந்த முத்தியுலகத்துக்கு,
ஏணி ஆம் – (ஏறிச்செல்லுதற்குஉரிய) ஏணியாகும்; (எ – று.)

மனத்தைப் பல விஷயங்களிற்செல்லாது ஒருவழிப்படுத்தித் திருவல்லிக்கேணியி லெழுந்தருளிய திருமாலின்
கீர்த்தியை யெடுத்துக்கூறினால், அது கொழுந்தோடிப்படர்கின்ற கர்ப்பபரம்பரைகளை நீக்கி முத்தி
நெறியிலேறுதற்கு எளியஉபாயமாகு மென்பதாம்.
கருவல்லிக்கு மருந்து – பிறப்புக்களை இனி உண்டாகவொட்டாது தடுக்குந் திவ்யௌஷதம்,
கீழிடத்திலிருந்து மேலிடத்திலேறுதற்கு ஏணி இன்றியமையாக் கருவியாதல்போல
நிலவுலகத்திலிருந்து மேலுலகமாகிய முத்தியுலகத்தி லேறுதற்குக் கண்ணபிரானது புகழ்கள்
இன்றியமையாத உபாயமாமென்பது, ‘ஏணியாம் மாக்கதிக்கு’ என்றதன் கருத்து. கண்ணன் – பார்த்தசாரதியுமாம்.

இது – தொண்டைமான்சக்கரவர்த்தியின் பிரார்த்தனைப்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத்
தனது குடும்பத்தோடு சேவைசாதித்த தலம்;
இத்தலத்துப்புஷ்கரிணி – அல்லிப்பூக்கள் நிறையப்பெற்றதனால், கைரவிணியென்று வடமொழியிலும்,
திருவல்லிக்கேணி யென்று தென்மொழியிலும் பெயர்பெறும்.
இந்தப் புண்ணியதீர்த்தத்தின்பெயரே இத்தலத்திற்கும் பெயராயிற் றென்க.
இது மயிலையை யடுத்திருத்தலால், மயிலைத்திருவல்லிக்கேணி யெனப் பெயர்பெறும்;
இம்மயிலையே பேயாழ்வாரது திருவவதாரஸ்தலமாம்.

———–

95-திருக்கடிகை -சோளிங்க புரம்–

சீர் அருளால் நம்மைத் திருத்தி நாம் முன் அறியாக்
கூர் அறிவும் தந்து அடிமை கொண்டதற்கே நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான் –95-

(இ – ள்.) மனமே – ! – சீர் அருளால் – சிறந்த திருவருளினால், நம்மை – ,
திருத்தி – நல்லவழியிற் செல்லுமாறு செய்து,
நாம் முன் அறியா கூர் அறிவும் தந்து – நாம் இதற்குமுன்னே அறிந்திராத நுட்பமான அறிவையும் (நமக்குக்) கொடுத்து,
அடிமை கொண்டதற்கு – (நம்மை) ஆட்கொண்டதற்காக, –
முத்தி தரு கடிகை மாயவனை – (தன்னையடைந்தார்க்கு) நற்கதியையளிக்குந் திருக்கடிகை
யென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய எம்பெருமானை,
நேரே – நேராக,
ஒரு கடிகையும் – ஒரு நாழிகைப் பொழுதாவது,
உள்ளுகிலாய் – நினைக்கமாட்டாய்; (எ – று.) – தான் – ஈற்றசை.

எம்பெருமான் தனது நிர்ஹேதுக கிருபையினால் நம்மைத்திருத்தி நுண்ணியபகுத்தறிவைக் கொடுத்து
நம்மையாட்கொண்டதற்காக, அப்பெருமானைச் சிறிதுபொழுதாவது சிந்திக்கலாமே!
அதுவுஞ்செய்யாது செய்ந்நன்றி மறந்தவனாய் வாளா கிடக்கின்றனையே! இது என்ன துர்ப்புத்தி! என்று
தமது நெஞ்சத்தின் நிலையை இகழ்ந்தவாறு, நம்மிடத்து நன்மை சிறிதுமில்லாதிருக்கையிலும்
அவ்வெம்பெருமான் வலியக் கருணைசெய்து திருத்தி நம்மை அடிமைகொண்டதற்குக் கைம்மாறு –
அப்பிரான் விஷயத்தில் உபகாரஸ்மிருதி செய்யவேண்டுவதன்றி, வேறுதொழிலின்று என்பது இங்குப் போதரும்.

ஒருவர் ஒருகடிகைப்பொழுது இத்தலத்தி லுறைந்தாலும் அவர்க்கு முத்தி கிடைக்கு மாதலால்,
இத்தலத்திற்குக் கடிகையென்று திருநாமம்; கடிகாசல மெனப்படும்.
இது, சோளதேசம்போன்று வளம்மிக்கு நரசிங்கமூர்த்தி உறைதற்கு இடமாயிருத்தல்பற்றி,
சோளஸிம்ஹபுரமென்றும் வழங்கப்பெறும். சோளஸிம்ஹராஜனது புர மெனினுவாம்.

தொண்டைநாட்டுத்திருப்பதிகள் முற்றும்.

——————————-

வட நாட்டுத் திருப்பதிகள்–12-

96-திருவேங்கடம் –

தானே சரணமுமாய் தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான் தேன் ஏய்
திருவேங்கடம் தொழுதேம் தீய விபூதிக்குள்
மருவேம் கடந்தனெம் இவ்வாழ்வு –96–

(இ – ள்.) தானே -, சரணமும் ஆய் – உபாயமாகியும்,
தானே -, பலமும் ஆய் – உபேயமாகியும்,
தானே குறை முடிக்கும் தன்மையான் – தானே (அடியார்களது) மனக்குறையைப் போக்கி
அவரெண்ணத்தை ஈடேற்றுந் தன்மையுடையவனாகியு மிருக்கின்ற திருவேங்கடமுடையானது,
தேன்ஏய் திருவேங்கடம் – தேன்நிறைந்த (பொழில்கள்சூழ்ந்த) திருவேங்கடமென்னுந் திவ்வியதலத்தை,
தொழுதேம் – வணங்கினோம்; (அதன்பயனாக),
தீய விபூதிக்குள் – கொடிய இந்தலீலாவிபூதியில்,
மருவேம் – இனிப் பொருந்த மாட்டோம்;
இ வாழ்வு – இந்த ஸாம்ஸாரிகவாழ்க்கையை,
கடந்தனெம் – இனிக் கடந்துவிட்டோம்; (எ – று.)

எம்பெருமான் தன்னைச் சேர்தற்குத் தானே உபாயமாகியும், அவ்வாறு சேர்ந்தால் பயனாகியும்,
அவ்வாறு சேரவொட்டாமல் குறுக்கேவருகின்ற விரோதிகளைப் போக்கிப் பயனளிப்பவனாகியும் நிற்பனென்று
அந்த எம்பெருமானது ஸ்வரூபத்தை முன்னிரண்டடிகளினால் விளக்கினார்.
இவ்வாறான எம்பெருமானைத் தாம் அடைக்கலமாகச் சேர்ந்ததனால், இனி, இந்தஸம்ஸார வாழ்க்கை யொழிந்து
இந்த லீலாவிபூதியைவிட்டு நித்யவிபூதியாகிய மோட்சத்தைச் சேர்தல் திண்ண மென்பதாம்.
த்ரிபாத்விபூதியைப்போலல்லாது பலவகைத்துன்பங்கட்கும் இடமாயிருத்தல்பற்றி, லீலாவிபூதியை ‘தீயவிபூதி’என்றார்.
கடந்தனெம் – தெளிவுபற்றி எதிர்காலத்தை இறந்தகாலத்தாற் கூறிய காலவழுவமைதி.

————

97-திருச் சிங்கவேள் குன்றம் -திரு அஹோபிலம் –

வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே
சூழ் கருணையும் முனிவும் தோன்றினவால் கேழ் கிளரும்
அங்கவேள் குன்ற அழல் சாபத்தைப் பிளந்த
சிங்கவேள் குன்றத்தினார்க்கு –97-

(இ – ள்.) கேழ் கிளரும் – நிறம்விளங்குகின்ற,
அங்கம்வேள் – அழகிய தேகத்தையுடைய மன்மதன்,
குன்ற – சாம்பலாயழியும்படி,
அழல் – (தனது நெற்றிக்கண்ணைத்திறந்து) கோபித்த,
சரபத்தை – (சிவபிரானது அவதாரமாகிய) சரபமென்னும் விலங்கை,
பிளந்த – பிளந்துஅழித்த,
சிங்கவேள்குன்றத்தினார்க்கு – சிங்கவேள்குன்றமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய நரசிங்கப்பிரானுக்கு,
வாழ் குமரன்மேல் – கடவுளினருள்பெற்ற பிரகலாதனென்னும் சிறுவனிடத்து,
ஓர் முகத்து – ஒருபால்,
சூழ் கருணையும் – நிறைந்த பேரருளும், –
கனகம் வஞ்சகன்மேல் – (அவனதுதந்தையான) வஞ்சனைக்குணமுடைய இரணியன்மீது,
(ஓர்முகத்து – ஒருபால்),
முனிவும் – கடுங்கோபமும்,
தோன்றிய – உண்டாயின; (எ – று.) ஏ, ஆல் – ஈற்றசைகள்.

தனதுமெய்யடியானான பிரகலாதனை இரணியன் வருத்தியதுபற்றி அன்னான்மீது பெருஞ்சினமும்,
பெற்றதந்தை தன்னைப் பலவாறாக நலியவும் அந்நிலையிலும் தனது மெய்யன்பு மாறாமலிருந்ததுபற்றிப்
பிரகலாதாழ்வான்மீது திருவருளும் நரசிங்காவதாரமூர்த்திக்கு ஒருங்கே தோன்றின வென்க;
இவ்வாறு ஒன்றற்குஒன்று மாறான குணங்களை ஒருங்கே எம்பெருமான்கொண்டது, அப்பிரானது ஆஸ்சர்யகுணயோகத்தை விளக்கும்.

சரபம் – இரண்டுதலைகளையும் சிறகுகளையும் கூரியநகமுள்ள எட்டுக்கால்களையும் மேல்நோக்கிய
கண்களையு முடைய தொரு மிருகவிசேடம்; இதனைப் பறவையென்றலு முண்டு.
இது, சிங்கத்தை எளிதிற்கொல்லுந் திறமுடையது. வெறுஞ்சிங்கமன்றி நரசிங்க மாதலாலும்,
ஸாமாந்யஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலுடையபுருஷோத்தமனது அவதாரமான திவ்யஸிம்ஹ மாதலாலும், இது சரபத்தைக் கொன்றிட்டது.
இரணியனென்ற பெயர் பொன்னிறமானவ னென்று பொருள்படுதலால், அதன்பரியாயநாமமாக ‘கனகன்’ என்றார்;
இரணியம் கனகம் என்பன – பொன்னின் பெயர்கள். முதலடியில் முறைநிரனிறைப்பொருள்கோள் காண்க.

சிங்கமாகிய யாவரும் விரும்பப்படுகின்ற கட்டழகுடைய பெருமான் எழுந்தருளிய திருமலையாதலால்,
சிங்கவேள்குன்றம் என்று இத்தலத்திற்குப் பெயர்; ‘சிங்கவேழ்குன்றம்’ என்று வழங்குதலு முண்டு;
அப்போதைக்கு நரசிங்கமூர்த்திகள் எழுந்தருளியிருக்கின்ற ஏழுகுன்றங்களையுடையது எனப்பொருள் காண்க;
இதுவே அஹோபில மெனப்படும்.

————

98-திருவயோத்தி –

ஆர்க்கும் இது நன்று தீது ஆனாலும் நெஞ்சே நீ
பார்க்கும் பல கலையும் பன்னாதே சீர்க்கும்
திரு ஐ யோதிப் புயலை சீரிய மெய்ஞ்ஞானத்து
உருவை ஒத்தின் பொருளை ஓர் –98–

(இ – ள்.) நெஞ்சே – (எனது) மனமே! –
இது – (யான்சொல்லுகின்ற) இவ்விஷயம்,
ஆர்க்கும் நன்று – எல்லோர்க்கும் நல்லதே;
தீது ஆனாலும் – (ஒருகால்அதனால்) தீமையேநேர்வதானாலும், – நீ -,
பார்க்கும் பல கலையும் – (உலகத்திற்) காணப்படுகின்ற பலவகைச்சாஸ்திரங்களையும்,
பன்னாது – கண்டபடி கற்காமல்,
சீரிய மெய் ஞானத்து உருவை – சிறந்த தத்துவஞான சொரூபியானவனும்,
ஓத்தின் பொருளை – வேதத்தின் அர்த்தமாகி யிருப்பவனுமாகிய.
சீர்க்கும் திரு ஐயோத்தி புயலை – சிறப்புப்பொருந்திய திருவயோத்தியென்னுந்திவ்வியதலத்தி லெழுந்தருளிய
காளமேகம்போலக் கருநிறமுடைய ஸ்ரீராமபிரானை,
ஓர் – தியானிப்பாயாக; (எ – று.)

தர்க்கம் வியாகரணம் முதலிய உலகத்துச்சாஸ்திரங்கள் பலவற்றையும் படித்துப் பழுதே பலபகலும்போக்காமல்,
தத்துவஞானஸ்வரூபியாகிய கடவுளையே தியானஞ் செய்வாயாக என்று மனத்திற்கு உபதேசித்தனரென்க.
உலகத்துவழங்குகின்ற சாஸ்திரங்களிற் பயிலுதல் வேதத்தின்நுண்ணியபொருளை உணர்தற்பொருட்டே யாதலாலும்,
வேதப்பொருளாகிய கடவுளையறியாது மற்றைச்சாஸ்திரங்களிற் பயில்வது பயனற்றதாதலாலும் அதனை விட்டு
வேதப்பொருளாகிய கடவுளைத் தியானித்தலே சிறந்த செயலாகுமென்பதாம்.
அன்றியும், கலைகளிற்பயிலுதல் மிகவும்வருத்தமாயிருத்தலோடு புத்தியில்நிஷ்கர்ஷம் தோன்றாமல்
புத்திசலித்தற்குங் காரணமாயிருத்தலால் அதனைநீத்து, கடவுளை உபதேசத்தினா லுணர்ந்து வழிபடுக வென்று போதித்தன ரென்க;
“ஸாஸ்த்ரஜ்ஞாநம் பஹுக்லேஸம் – புத்தே: சலநகாரணம் : உபதேஸாத் ஹரிம் புத்வா – விரமேத்ஸர்வகர்மஸு” என்ற
மேற்கோள் இங்கு உணரத்தக்கது. கடவுளைத் தியானித்தலென்பது அனைவர்க்குங்கடமை யாதலால்
‘ஆர்க்கும் இதுநன்று’ என்றும், அவ்வாறு செய்தலில் தீதுஒன்றுமில்லை யென்பதை வற்புறுத்துதற்பொருட்டு
‘தீதானாலும்’ என்றும் கூறினர்.
திருவயோத்தியென்பது – திரிபுநோக்கி, திருவையோத்தி என வந்தது. ஓதப்படுதலினால், வேதத்திற்கு ‘ ஓத்து’ எனப்பெயர்.

அயோத்தி – பகைவர்களாற் போர்செய்து வெல்லமுடியாதது எனப்பெயர் பெறும்: அரண்
முதலியவற்றால் மிக்கபாதுகாவலையுடையது என்பது கருத்து;
இது, ஸ்ரீராமபிரானது திருவவதாரஸ்தலம்: முத்திதரும் நகரமேழனுள் ஒன்று.

————

99-திரு நைமிசாரணியம் –

ஒரு அறிவும் இல்லாத என் போல்வார்க்கு உய்யலாம்
பேர் அறிவு உண்டேனும் பிறர்க்கு அரிது பார் அறிய
நைமிசாரண்யத்து நாதர் அடியாரோடும்
இம்மிசார்வு உண்டாயினால் –99-

(இ – ள்.) பார் அறிய – உலகத்தார் அறியும்படி,
நைம்மிசாரண்ணியத்து நாதர் அடியாரோடும் – திருநைமிசாரணியத்தி லெழுந்தருளிய ஸர்வஸ்வாமியினது பக்தர்களோடும்,
இம்மி சார்வு உண்டாயினால் – கொஞ்சமாவது சம்பந்தம் ஏற்படுமேயாயின், –
ஓர் அறிவும் இல்லாத – சிறிதேனும் அறிவில்லாத,
என் போல்வார்க்கு – என்னைப்போன்றவர்கட்கும்,
உய்யல் ஆம் – ஈடேறுதல் கூடும்;
பிறர்க்கு – (அவ்வாறு பாகவதசம்பந்தம்பெறாத) மற்றையோர்க்கு,
பேர் அறிவு உண்டு ஏனும் – விசேஷஞானம் உளதாயினும்,
அரிது – (ஈடேறுதல்) முடியாத காரியமாகும்; (எ – று.)

வீடுபேற்றுக்கு அறிவு பிரதானகாரண மன்று; பாகவத சம்பந்தமே முக்கியமானகாரண மென்பதாம்.
“ஜ்ஞாந அநுஷ்டாநங்களை யொழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள்பக்கல் ஸம்பந்தமே அமைகிறாப்போலே” என்கிற ஸ்ரீவசநபூஷணமும்,
“பகவலலாபஹேதுவான தத்வஜ்ஞாநமும், ததநுரூப (அந்தஞானத்திற்குஏற்ற) அநுஷ்டாநமு மின்றிக்கே யொழிந்தாலும்
பகவல்லாபத்துக்கு “பஸுர்மநுஷ்ய: பக்ஷீவா – யேசவைஷ்ணவஸம்ஸ்ரயா:) தேநைவதேப்ரயாஸ்யந்தி –
தத்விஷ்ணோ:பரமம்பதம் (பசுவாயிருந்தாலும் மநுஷ்யனாயிருந்தாலும் பக்ஷியாயிருந்தாலும் யாராயிருந்தாலும்
ஸ்ரீவைஷ்ணவர்களை யாஸ்ரயித்தவர் – அந்தஸம்பந்தத்தினாலேயே அந்தவிஷ்ணுவினுடைய பரமபதத்தைச் சார்வர்)” என்றும்,
“யம்யம்ஸ்ப்ரூஸதிபாணிப்யாம் – யம்யம்பஸ்யதி சஷுஷா ஸ்தாவராண்யபிமுச்யந்தே –
கிம்புநர்பாந்தவா ஜநா: (விஷ்ணுபக்தன துஸ்பர்ஸம் நேரிட்டாலும் பார்வைக்கு இலக்கானாலும் ஸ்தாவரங்களும் மோக்ஷம் பெறும்;
அப்படியிருக்க, பந்துக்களைப் பற்றிச் சொல்லவேண்டுமோ?)” என்றும் சொல்லுகிறபடியே
பாகவதஸம்பந்தமே நிரபேக்ஷஸாதநமாகிறாப்போலே” என்ற அதன்வியாக்கியானமும் இங்குக் காணத்தக்கன.
(பாகவதர்கட்கு இடைவழியில் இளைப்புத்தீருமாறு நிழல்கொடுத்து உதவின புளியமரமொன்று
ஸ்ரீமணவாளமாமுனிகளின் திருவருளால் முத்திபெற்ற வரலாறு இங்குக் கருதத்தக்கது.)

ஒருகாலத்தில் முனிவர்கள் ‘தவஞ்செய்தற்குச் சிறந்த இடம் நிலவுலகத்தில் யாது?’ என்று தங்களுக்கு விளக்கிக்
காட்டுதற்பொருட்டுப் பிரமனை வேண்டியபோது, அம்முனிவர்க்கு, அப்பிரமதேவன் தான் ஒரு தருப்பை யாழியைச்செய்து
மண்ணுலகத்திலுருட்டி அதுசென்று நின்ற இடத்தையே சிறந்ததென்று காட்டினனாதலால்,
அதற்கு இடமான இத்தலம் நைமிச மெனப் பெயர்பெற்றது. நைமிசம் – நேமிவிழுந்த இடம்.

————–

100-திருச் சாளக்கிராமம் –

உண்டாம் முறைமை உணர்ந்து அடிமைப் பேர் பூண்டேன்
பண்டம் குடி குலத்தால் பல் மதத்தால் கொண்டாட்டால்
ஆளாம் கிராமத்தால் அல்லல் பேர் பூணாமல்
சாளக்கிராமத்தார் தாட்கு –100-

(இ – ள்.) பண்டு ஆம் – தொன்று தொட்டுவருகிற,
குடி (ஆல்) – குடியினாலும்,
குலத்தால் – குலத்தினாலும்,
பல் மதத்தால் – பலவகையாகவுள்ள மதத்தினாலும்,
கொண்டாட்டால் – (தாம்தாம்செய்யுந் தொழில்முதலியவற்றாலுண்டாகின்ற) ஏற்றத்தினாலும்,
ஆள் அ கிராமத்தால் – உரிமைகொண்டு வசிக்கிற தம்தமதுகிராமத்தினாலும்,
அல்லல் பேர் பூணாமல் – துன்பத்திற்கு இடமாகிய பெயரை வைத்துக்கொள்ளாமல், –
சாளக்கிராமத்தார் தாட்கு – சாளக்கிராமமென்னுந் திவ்வியதலத்திலெழுந்தருளியுள்ள திருமாலினது திருவடிகளோடு,
உண்டாம் – பொருந்திய,
முறைமை – சம்பந்தத்தை,
உணர்ந்து – ஆராய்ந்து தெரிந்துகொண்டு,
அடிமை பேர் – (அப்பெருமானுக்கு) அடியவனென்கின்ற பேரை (தாஸ்யநாமத்தை),
பூண்டேன் – வைத்துக்கொண்டேன்; (எ – று.)

குடி முதலியவற்றால் வருகின்ற பேர்கள் அகங்காரத்திற்கே இடனாகி அழிதற்கே யுரியனவாதலோடு தாமும்
நிலையாதன வாதலால் அவற்றை நல்லாசிரியரது உபதேசம் முதலியவற்றால் அறநீத்து,
ஆத்மாவுக்கு நிலைநின்ற பேராகிய ஸ்ரீவைஷ்ணவதாஸனென்கின்ற அடிமைப்பேரைப் பூண்டு கொண்டே னென்று
தாம் நல்லுணர்ச்சிபெற்றிருத்தலை இப்பாசுரத்தால் தெரிவிக்கின்றன ரென்க.
“அஹங்காரமாகிற ஆர்ப்பை (மாலிந்யத்தை)த் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியா னென்றிற.
க்ராம குலாதிகளால் வரும் பேர் அநர்த்தஹேது” என்ற ஸ்ரீவசநபூஷணவாக்கியங்கள் இங்குக் கருதத்தக்கன.
குடி குலம் முதலியவற்றால் வரும் பெயர்கள் உடலைப்பற்றி வருவன வாதலால், அவற்றிற்கும் ஆத்துமாவுக்கும்
யாதொரு தொடர்பு மில்லாது நின்று உடலொழியும்போது அவை தாமும் ஒழியும்;
ஆகலான், அவற்றால் ஆத்மாவுக்கு எவ்வகைப்பயனும் விளையாது; அடிமைப்பேரோ என்றும் உளதாகையால்
அதனையுணர்ந்து பூண்டோர்க்கு எம்பெருமானதுபேரருள் சித்திக்கு மென்க.
இங்ஙனம் குலம்குடி முதலியவற்றால் வரும் பேர்கள் கேவலம் அகங்காரத்திற்கே காரணமாய்
ஸ்வரூப ஹாநியையு முண்டாக்கு மென்பார் ‘அல்லற்பேர்’ என்றார்.
குடியென்பது – பிறந்த வமிசம்; குடியால்வரும் பேராவன – கந்தாடையார் ப்ரதிவாதிபயங்கரத்தார் சக்கரவர்த்தியார் என்றாற் போல்வன.
குலம் – வர்ணம்; குலத்தால்வரும் பேராவன – பிராமணன் க்ஷத்திரியன் என்றாற் போல்வன.
மதத்தால் வரும் பேராவன – சைவன் வைஷ்ணவன் என்றாற் போல்வன.
கொண்டாட்டால்வரும் பேராவன – சதாவதானி மஹோபாத்யாயன் சமயகோளரி மகாபண்டிதன் என்றாற் போல்வன.
ஈகிராமத்தால் வரும் பேராவன – திருமலையார் நாவற்பாக்கத்தார் என்றாற் போல்வன.

————–

101-திருவதரியாச்சிரமம் —

தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு எட்டெழுத்தும்
கேட்க வெளியிட்டருளும் கேசவனை வேட்கையொடு
போவது அரிது ஆனாலும் போய்த் தொழுவோம் நெஞ்சமே
மாவதரியாச்சிரமத்து –101-

(இ – ள்.) நெஞ்சமே – (எனது) மனமே! –
தாட்கு – (தனது) திருவடிகட்கு,
அடிமை என்று – அடிமைப்பட்டவ ரென்று,
தமை – தங்களது ஸ்வரூபத்தை,
உணரார்க்கு – அறியாத இவ்வுலகத்தவர்க்கு,
எட்டு எழுத்தும் – (ஆத்மாவினது ஸ்வரூபத்தை உள்ளபடிஉணர்த்துவதான) திருவஷ்டாக்ஷர மகாமந்திரத்தை,
கேட்க – காதிற்படும்படி,
வெளியிட்டு அருளும் – கருணையோடு வெளியிட்ட,
கேசவனை – திருமாலை, –
போவது அரிது ஆனாலும் – யாத்திரைசெய்வது வருத்தமுடையதாயிருந்தாலும்,
மா வதரியாச்சிரமத்து – சிறந்தபதரிகாச்சிரம மென்னுந் திவ்வியதலத்தில்,
வேட்கையொடு – பக்தியுடனே,
போய் -, தொழுவோம் – வணங்குவோம்; (எ – று.)

முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் விளக்குதற்பொருட்டு
நரனென்னும் ஸிஷ்யனும், நாராயணனென்னுங் குருவுமாகப் பதரிகாச்சிரமத்தில் திருமால் தோன்றி,
சிஷ்யனுக்குக் குரு திருமந்திரத்தை உபதேசித்தருளி, தன்னை உணராத உலகோர்க்குத் தான் அறிந்த தொடர்பையே
பற்றாசுஆகக்கொண்டு ஈடேறுதற்கு ஏற்ற வழியைக் காட்டியருளியதனால், அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற
தலம்போய்த் தொழுதற்கு அரியதாயிருந்தாலும், அப்பிரான்செய்த உபகாரஸ்மிருதியால் அங்கு அருமைப்பட்டாயினுஞ் சென்று
அப்பிரானைத் தொழுது உய்வுபெற வேண்டுமென்று தமதுநெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றன ரென்க.
“நரநாரணனா யுலகத்தறநூல், சிங்காமைவிரித்தவன்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும்,
“ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வரகைங்கர்யத்தையுமிழந்து இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே
ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேஸ்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னையறிந்து
கரைமரஞ் சேரும்படி தானே ஸிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான்.
ஸிஷ்யனாய் நின்றது, ஸிஷ்யனிருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக” என்ற
முழுக்ஷுப்படியும் இங்குக் காணத்தக்கன.
திருமாலால் வெளியிடப்பட்ட திருமந்திரம் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி காட்டவல்ல தென்பார்
‘தமையுணரார்க்கு எட்டெழுத்துங் கேட்க வெளியிட்டருளுங் கேசவன்’ என்றார். எட்டெழுத்து – திருவஷ்டாக்ஷரம்.

பதரிகாஸ்ரமம் என்ற வடசொல் திரிந்துவந்தது; (பதரி – இலந்தை மரம்.) இலந்தைமரங்களடர்ந்த ஆஸ்ரமமென்பது, பொருள்;
இது – இமயமலையிலுள்ளது; அதுபற்றியே, “போவதரிதானாலும்” என்றார்.

—————

102-திருக் கங்கைக் கறைக் கண்டம் என்னும் கடி நகர் –

மத்தால் கடல் கடைந்து வானோர்க்கு அமுது அளித்த
அத்தா எனக்கு உன் அடிப் போதின் புத்தமுதை
கங்கைக் கரை சேரும் கண்டத்தாய் புண்டரிக
மங்கைக்கு அரசே வழங்கு –102-

(இ – ள்.) மத்தால் – (மந்தரமலையாகிய) மத்தினாலே,
கடல் கடைந்து – திருப்பாற்கடலைக்கடைந்து,
வானோர்க்கு – தேவர்களுக்கு அமுது அளித்த – அமிருதத்தைக் கொடுத்தருளிய,
அத்தா – தலைவனே!
புண்டரிக மங்கைக்கு அரைசே – செந்தாமரைமலரில் வாழ்கின்ற பெரியபிராட்டியார்க்குத்தலைவனே!
கங்கை கரைசேரும் கண்டத்தாய் – கங்கைநதிக்கரையிற்பொருந்திய கண்டமென்னுங் கடிநகரி லெழுந்தருளியிருப்பவனே! –
எனக்கு – அடியேனுக்கு,
உன் அடி போதின் புது அமுதை – உனது திருவடித்தாமரையில்) தோன்றுகின்ற புதிய அமிருதத்தை,
வழங்கு – கொடுத்தருள்வாயாக; (எ – று.)

இதனால், ஐயங்கார், எம்பெருமானை நோக்கி, உனது திருவடிகளின் போக்யதையை அனுபவிக்குமாறு
எனக்கு நல்லறிவைத்தந்தருள்வாயென்று பிரார்த்திக்கின்றனர்.
“தேனேமலருந் திருப்பாதம்,”
“விஷ்ணோ: பதே பரமேமத்வஉத்ஸ: (விஷ்ணுவினது சிறந்ததிருவடிகளிலே தேனின்பெருக்கு உள்ளது)” என்றபடி
எம்பெருமானது திருவடிகளில் போக்யதை விஞ்சியிருக்குமென்க. பாற்கடலைக் கையினால் வருந்திக் கடைந்து
அதனினின்று எழுந்த அமிருதத்தைப் பிரயோஜநாந்தரபரரான தேவர்கட்குக் கொடுத்தது போலன்றி,
அநந்யப்ரயோஜநனான அடியேனுக்கு உன் திருவடிகளினிடத்து இயற்கையாகவேயுள்ள இனிமையைத் தருவது
மிகவும் எளிதாகு மென்ற கருத்து,
‘மத்தாற் கடல்கடைந்து வானோர்க்கு அமுதுஅளித்த அத்தா! எனக்கு உன்னடிப்போதிற் புத்தமுதை வழங்கு’ என்ற
தொடரில் தோன்றும் அமுதம் வேண்டுமென்று பிரார்த்தியாத தேவர்கட்கு அதனை உண்டாக்கியளித்த
நீ அதனைவேண்டுகின்ற எனக்கு இயற்கையாக உன்னிடத்திலுள்ள அதனை அளிக்கலாகாதோ?
சமயம் வந்தபோதுமாத்திரம் காலைக்கட்டிக் காரியங்கொண்டு மற்றைச்சமயங்களில் விலகிநிற்பவர்க்குத்தான் உதவவேண்டுமோ?
எப்போதும் உன்னையே அணுகிநின்று உன்னாலல்லது மற்றையாவராலும் ஒன்றுங்குறைவேண்டாத எனக்கு உதவலாகாதோ?
என்பவை முதலிய கருத்துக்களும் இங்குத்தொனிக்கும்.
புத்தமுதுஎன்றது – எத்துணைக்காலம் அனுபவித்தாலும் தெவிட்டுதலில்லாது மேன்மேலும் இன்சுவைபயப்பதும்,
‘தேவாமிருதம்போல அசுரர்கள் கைக்கொள்ளப்புகுகிறார்களே!’ என்று அஞ்சவேண்டாததுமாகிய அமிருத மென்றபடி.

இத்தலம் இப்பொழுது தேவப்ரயாகை யென்று வழங்குகின்ற தென்பர். புண்டரீகமங்கையென்பது – இத்தலத்துநாச்சியார்திருநாமம்.

—————-

103-திருப்பிருதி –

வழங்கும் உயிர் அனைத்தும் வாரிவாய்ப் பெய்து
விழுங்கும் கவந்தன் விறல் தோட் கிழங்கை
பொருப்பு இருதிக்கும் கிடந்தால் போல் துணித்து வீழ்த்தான்
திருப்பிருதிக்கு என் நெஞ்சே செல் -103-

(இ – ள்.) என் நெஞ்சே – எனது மனமே! –
வழங்கும் உயிர் அனைத்தும் – சஞ்சரிக்கின்ற எல்லாப்பிராணிகளையும்,
வாரி – (தனது இரண்டு கைகளாலும் ஒருசேரத்) திரட்டியெடுத்து,
வாய் பெய்து – (தனது) வாய்க்குள் தள்ளி,
விழுங்கும் – விழுங்குந்தன்மையுள்ள,
கவந்தன் – கபந்தனென்னும் அசுரனது,
விறல் தோள் கிழங்கை – வலிமையுள்ள தோள்களின் மூலபாகத்தை,
பொருப்பு இரு திக்கும் கிடந்தால் போல் – மலை இரண்டுபக்கத்திலும்வீழ்ந்து கிடந்ததுபோலக் (கிடக்கும்படி),
(இராமாவதாரத்தில்) துணிந்து வீழ்த்தான் – வெட்டித்தள்ளிய திருமாலினது,
திருப்பிருதிக்கு – திருப்பிருதியென்னுந் திவ்வியதலத்திற்கு,
செல் – நீ சென்று சேர்வாயாக; (எ – று.)

திருமாலினது திருப்பிருதியென்னுந் திவ்வியதலத்தைப் போய்ச்சேர்ந்தாயாயின், உனது சகலவிரோதிகளும் போய்
நற்கதிபெறுவது திண்ணமென்பது, கருத்து. இராமபிரான் கவந்தனது வலத்தோளையும்,
லஷ்மணன் அவனது இடத்தோளையும் வெட்டித் தள்ளியதாகக் ஸ்ரீராமாயணத்திற் கூறியிருக்க,
இங்கு இவ்வாசிரியர் கவந்தனது இருதோள்களையும் இராமபிரானே வெட்டித்தள்ளியதாக கூறியது –
“ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:” என்றபடி லஷ்மணனை இராமபிரானது வலக்கையாகக் கூறியிருப்பதுகொண்டு
அவ்விலக்குமணனது செயலையும் இராமபிரானது செயலாகவே கொண்டதனாலாகுமென்க.
இது, ஒருவகை உபசாரவழக்கின்பாற்படுமென்னலாம். கவந்தனதுதோள்கள் யோசனைதூரம் நீண்டிருந்தன வாதலால்
அவை வெட்டப்பட்டுக் கீழ்வீழ்ந்துகிடந்ததற்கு – இருபொருப்புக்கள் கீழ்வீழ்ந்திருத்தலை உவமை கூறினார். தோட்கிழங்கு – புஜமூலம்.

————–

104-திருவட மதுரை –

செல்வம் உயிர் உடம்பு சேர உரித்தாக்கி
வல்வினையை நீக்குமினோ மாந்தர்காள் தொல்லை
வடமதுரையான் கழலே வாய்த்த தஞ்சம் என்று
திடமது உரை செய்தான் திறத்து –104-

(இ – ள்.) மாந்தர்காள் – மனிதர்களே! – (அனைவர்க்கும்),
“கழலே – எனது திருவடிகள்தாம்,
வாய்த்த தஞ்சம் – பொருந்திய ரக்ஷகமாகும்,’ என்று -,
திடம்அது உரைசெய்தான் – உறுதியாக உபதேசித்தவனும்,
தொல்லை வடமதுரையான் திறத்து – பழமையான (முதற்கடவுளான) வடமதுரையிற் பிறந்தவனுமாகிய பெருமானிடத்தில், –
செல்வம் – (நுமது) செல்வங்களையும்,
உயிர் – பிராணனையும்,
உடம்பு – உடம்பையும்,
சேர – ஒருசேர,
உரித்து ஆக்கி – உரியனவாகச் சமர்ப்பித்து,
வல் வினையின் நீங்குமின் – வலிய இருவினைத் தொல்லைகளினின்று நீங்குங்கள்; (எ – று.)

கர்மம் ஜ்ஞாநம் பக்தி ப்ரபத்தி முதலிய உபாயங்களையெல்லாம் ஒழித்துத் தனது திருவடிகளையே தஞ்சமாகப்
பற்றும்படி உபதேசித்த ஸ்ரீகிருஷ்ண பகவான்திறத்தில் உமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஒருசேர அர்ப்பணம்பண்ணி,
அப்பிரானருளால் இருவினைத் தொல்லைகளினின்றும் நீங்கி உய்வுபெறுவீர்களென்று உலகத்தார்க்கு உபதேசித்தவாறு,
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய – மாமேகம்ஸரணம்வ்ரஜ” என்று அப்பிரான் சரமஸ்லோகத்தில் தன்னையே ரக்ஷகமாக
அடையுமாறு கூறியிருக்கவும், ஸேஷபூதன் இழியுந் துறை ஸேஷியின் திருவடிகளே யாதலால்,
‘கழலே வாய்த்ததஞ்சமென்று திடமது உரைசெய்தான்’ என்றார்.
திடம் = த்ருடம்; அது – பகுதிப்பொருள்விகுதி. செல்வமுயிருடம்பு உரித்தாக்கி – பன்மையொருமை வழுவமைதி.

இது – ஸ்ரீகிருஷ்ணபகவானது திருவவதாரஸ்தலம்; முத்திதரும் நகரமேழனுள் இதுவும்ஒன்று.
கண்ணுக்கு மதுரமாயிருத்தலாலும், மதுவென்ற அசுரனை யழித்த இடமாதலாலும், இதற்கு மதுரையெனப் பெயர்வந்ததென்பர்.

————–

105-திருத் துவாரகை –

திறம் திறமாத் தாம் துய்க்கும் தீம் சுவையை நாடி
அறம் திறம்பி பாதகர் ஓர் ஐவர் நறுந்துளவ
மாதுவரை யோனே மனம் துணையாகக் கொண்டு என்னைக்
காதுவர் ஐயோ மெய் கலந்து –105-

(இ – ள்.) நறுந் துளவம் – நறுமணமுடைய திருத்துழாய்மாலையைத் தரித்த,
மா துவரையோனே – பெருமைபெற்ற துவாரகையென்னுந் திவ்வியதலத்தை வாழுமிடமாகக்கொண்டவனே! –
பாதகர் ஓர் ஐவர் – மிகக்கொடிய பாதகங்களைச் செய்வதற்குக் காரணமாய்நிற்கின்ற பஞ்சேந்திரியங்கள்,
திறம்திறம் ஆ – விதம்விதமாக,
தாம் துய்க்கும் – தாம் அனுபவித்தற்கு உரிய.
தீஞ்சுவையை – இன்சுவையுள்ளபொருள்களை,
நாடி – தேடிக்கொண்டு,
அறம் திறம்பி – தருமமார்க்கத்தினின்று தவறி,
மனம் துணை ஆ கொண்டு – (எனது) மனத்தை(த் தமக்கு) உற்றதுணையாகக்கைக்கொண்டு,
மெய் கலந்து – எனது உடலிற் பொருந்தி,
என்னை -, காதுவர் – இடைவிடாது வருத்துவார்கள்; ஐயோ -! (எ – று.)

“மனமாளு மோரைவர்” என்றபடி கொடிய பஞ்சேந்திரியங்கள் மனத்தைத் தமக்கு உற்ற துணையாகக்கொண்டு
சரீரத்திற்கு உள்ளாகவே இருந்து தம்தமக்குஉரிய விஷயங்களில் விரும்பி என்னுயிரை வருத்திக் கொல்கின்றன;
இவற்றை உனது அருளென்னுந் தண்டா லடித்து வலியொடுக்கி நற்கதி யளிக்கவேண்டுமென்பதாம்.
எம்பெருமான் சேதநர்கள் தன்னையுணர்ந்து வழிபட்டு ஈடேறுதற்பொருட்டே கரணகளேபரங்களை அவர்கட்கு அளித்திருக்க,
இந்திரியங்கள் அவ்வெம்பெருமானை வழிபடுதற்கு இசையாது மனத்தைத் துணைக்கொண்டு வேறுவழியிற் செல்லுதலால்
“பாதகர்ஓரைவர் அறந்திறம்பிக் காதுவர்’ என்றார். பஞ்சேந்திரியங்கள் புறம்பே விலகிநின்றால் ஒருவாறு உய்தல்கூடும்;
உள்ளேபுகுந்து உற்றதுணைவர் போன்று உயிரை வருத்துதலால், உய்யும் வகை யில்லை யென்பது, ‘
காதுவ ரையோ மெய்கலந்து’ என்பதன் கருத்து;
“புறப்பகைகோடியின் மிக்குறினு மஞ்சார், அகப்பகையொன்றஞ்சிக் காப்ப” என்றது காண்க.
‘திறந்திறமாத் தாம்துய்க்குந் தீஞ்சுவை’ என்றது – மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்சேந்திரியங்களும்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐவகைப் புலன்களைத் தமக்கு விஷயமாகக் கொண்டிருத்தலால் என்க.
செறலினால் ‘ஐவர்’ என அஃறிணையை உயர்திணையாக் கூறினார்.

துவரை – த்வாரகா என்ற வடசொல்லின் சிதைவு; அகன்ற துவாரத்தையுடையது எனக் காரணப்பொருள்படும்.
இதுவும் முத்திதரும் நகரமேழனுள் ஒன்று. இந்நகரம் – காலயவனன் பெருஞ்சேனையோடு வடமதுரையை
முற்றுகைசெய்தபோது அவனால் யாதவர்க்கு எங்குத் தீங்குவருமோ? என்ற கருத்தினால்
ஸ்ரீகிருஷ்ணபகவான் சமுத்திரத்தினிடையே அவ்யாதவரைப் பாதுகாக்குமாறு ஏற்படுத்தி அரசாண்ட நகரம்.
“பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்யத் துவரையென்னு, மதில் நாயகராகிவீற்றிருந்த மணவாளர்” என்பது, பெரியார்பாசுரம்.

———–

106-திருவாய்ப்பாடி –

கலந்து அமரரோடும் கரை கண்டாரோடும்
பொலிந்து திரு நாட்டு இருக்கப் போவீர் மலிந்த புகழ்
அண்டராய்ப் பாடி அமலர் அடியார் அடியார்
தொண்டராய்ப் பாடித் தொழும்–106-

(இ – ள்.) (உலகத்தவர்களே!) –
மலிந்த புகழ் – நிறைந்த கீர்த்தியையுடைய,
அண்டர் – இடையர்கள்வாழ்கின்ற,
ஆய்ப்பாடி – திருவாய்ப்பாடி யென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளியிருக்கின்ற,
அமலர் – குற்றமற்ற கண்ணபிரானது,
அடியார் அடியார் தொண்டர் ஆய் – தாஸஅநுதாஸர்க்கு அடிமைப்பட்டவராய்,
பாடி – (அவரது குணங்களைப்) பாடி,
தொழும் – (அவரை) வணங்குங்கள்; (அவ்வாறு வணங்கினால்), –
அமரரோடும் – நித்ய ஸூரிகளோடும்,
கரைகண்டாரோடும் – (இவ்வுலகத்தினின்று) அக்கரை சேர்ந்தவரான முக்தர்களோடும்,
கலந்து – ஒருசேரக்கலந்து,
பொலிந்து – சிறப்புப்பெற்று,
திருநாடு – பரமபதத்தில்,
இருக்க – அழிவின்றி இருக்கும்படி,
போவீர் – செல்வீர்கள்; (எ – று.)

திருமால் ஸ்ரீகிருஷ்ணனாகத் திருவவதரித்து விளையாடின இடமாகிய திருவாய்ப்பாடியி லுள்ள அடியாரின்
அடியார்கட்கு அடியவராகி அவரது குணங்களைப் பாடித் துதித்தால், அதன்பயனாக, நீங்கள் ஸ்ரீவைகுண்டலோகத்தில்
அநாதியாய் வாழ்கின்ற நித்யஸூரிகளோடும் ஸம்ஸாரத்தினின்று வீடுபெற்றுச்சென்ற முக்தரோடும்
ஒருகோவையாகக்கலந்து பேராநந்தமநுபவிக்கப்பெறுவீ ரென்று உலகத்தோர்க்கு உபதேசித்தவாறு:
இச்செய்யுளால், பாகவதசேஷத்தின் சிறப்பைக் கூறின ரென்க.

அமரர் – என்றும் மரணமில்லாதவர்; நித்யஸூரிகள் எனப்படுவர்; அவராவார் – அநந்த கருட விஷ்வக்ஸேநர் முதலியோர்.
கரைகண்டோர் – எம்பெருமானது நிர்ஹேதுககிருபையினால் தத்துவஞானம் தோன்றப்பெற்று ஸாம்ஸாரிக
ஸகலபாபங்களையும் ஒழித்து முக்தியிற் சேர்ந்தவர்கள்;
“கரைகண்டோர், துளக்கமில்லாவானவர்” என்றார் நம்மாழ்வாரும்.
இங்கு கலை கண்டார், என்ற பாடம் சாஸ்திரங்களில்வல்லவரெனப் பொருள்படுமாயினும, இனிதுபொருந்தாமை உணர்க.
அண்டர் ஆய்ப்பாடி அமலர் என்பதற்கு – இடையர்களது ஆய்ப்பாடியில் தோன்றிய குற்றமற்ற பாகவதர் என்றும்,
அண்டராகிய ஆய்ப்பாடியமல ரென்றும் பொருள் கூறினுமாம்.

ஆய்ப்பாடி – இடையர்கள்வசிக்கின்ற சேரி யெனப் பொருள்படும்; ‘கோகுலம்’ என்று வடமொழியில் வழங்கப்பெறும்.

—————

107–திருப்பாற் கடல் –

தொழும் பாய நான் நல்ல சூது அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும்
திருப்பாற் கடலான் தாள் சேர்ந்தார் அடி சேர்ந்து
இருப்பாற்கு அடலாம் இடர் –107-

(இ – ள்.) தொழும்பு ஆய – (எம்பெருமானுக்கு) அடியவனாகிய, நான் –
நல்ல சூது – நல்ல உளவை,
அறிந்து கொண்டேன் -; (அதாவது), – செழும்பாய் அலை – செழித்த பாய்கின்ற அலைகளினால்,
முத்தம் சிந்தி – முத்துக்களைக் கொழித்து,
முழங்கும் – ஒலிக்கின்ற,
திருப்பாற்கடலான் – திருப்பாற்கடலென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய க்ஷீராப்திநாதனது,
தாள் – திருவடிகளை,
சேர்ந்தார் – உபாயமாக அடைந்த பாகவதர்களது,
அடி – திருவடிகளை,
சேர்ந்து இருப்பாற்கு – தஞ்சமாகப்பற்றிக் கவலையற்று இருப்பவனுக்கு,
இடர் – பிறவித்துன்பங்களையெல்லாம்,
அடல் ஆம் – ஒழித்தல் எளிதிற்கூடும் (என்பதே) ; (எ – று.)

பாகவதர்களின் திருவடிகளை யாச்சிரயித்தலே பிறவித்துன்பங்கள் யாவும் ஒழிந்து எளிதில் ஈடேறுதற்கு உரிய
உபாயமென்பதனை யான்அறிந்து கொண்டு கடைப்பிடிக்கலானே னென்பதாம்.
அற்பச்செயலாற் பெரும்பேறு சித்திக்கும் உபாய மாதலால், “நல்லசூது’ என்றார்.

எம்பெருமானது ஐவகை நிலைகளுள், திருப்பாற்கடலி லெழுந்தருளியிருப்பவன் வியூகமூர்த்தியாவன்;
“வ்யூஹமாவது – ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரார்த்தமாகவும், ஸம்ஸாரிஸம்ரக்ஷணார்த்தமாகவும்,
உபாஸகாநுக்ரஹார்த்தமாகவும் ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த ரூபணே நிற்கும் நிலை”.

வடநாட்டுத்திருப்பதிகள் முற்றும்.

————-

திரு நாட்டுத் திருப்பதி -108-

இடருடையேன் சொல்ல எளிதோ பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே -தொடரும்
கருவைகும் தம் பிறவிக் கட்டு அறுத்து மீளாத்
திருவைகுந்தம் பெறுவார் சீர் –108-

(இ – ள்.) தொடரும் – (இருவினைப்பயன்காரணமாகத்) தொடர்ந்து வருவதும்,
கரு வைகும் – கர்ப்பத்தினிடத்திற் பிரவேசிப்பதற்குக் காரணமானதுமான,
தம் பிறவி கட்டு – தமது ஜந்மபந்தத்தை,
அறுத்து – (எம்பெரு மானது திருவருளால் அடியோடு) ஒழித்து,
மீளா – (தன்னிடத்துச்சேர்ந்த வர்கள்) திரும்பிவருதலில்லாததாகிய,
திரு வைகுந்தம் – ஸ்ரீவைகுண்ட லோகத்தை,
பெறுவார் – அடையப்பெறுபவர்களது,
சீர் – சிறப்பானது, –
பிரமன் – பிரமதேவனுக்கும்,
அடரும் விடையோற்கும் – போர்செய்யுந்தன்மையுள்ள ருஷபத்தை வாகனமாகவுடைய சிவபெருமானுக்கும்,
அரிது – சொல்லமுடியாதது; (என்றால்), –
இடர் உடையேன் – ஸம்ஸாரத்தில் மிகவும் உழலுகின்ற யான்,
சொல்ல – புகழ்ந்து கூறுதற்கு, எளிதோ – எளியதாகுமோ? (எ – று.)

“முதலாவார் மூவர்” என்றபடி திருமாலோடு சேர்த்து எண்ணப்படு கின்ற பிரமருத்திரராகிற மற்றை
யிருமூர்த்தியராலுமே ஸ்ரீவைகுண்டலோகத்தை யடைந்த முக்தர்களின் பெருமை சொல்லமுடியா தென்றால்,
கேவலம் ஸம்ஸாரத்தில் உழலுகின்ற ஜ்ஞாநஹீநனான என்னால் எவ்வாறு சொல்லப் போகு மென்பதாம்;
இங்குக் கைமுதிகநியாயத்தினால் (கைமுதிகநியாய மாவது – ஓர்எலி தண்டத்தை விழுங்கியதென்றால்
அதிற்கட்டப்பட்டிருந்த அபூபமும் – (பக்ஷணமும்) விழுங்கியமை பெறப்படுவதுபோல்வது.)
பிரமருத்திரர்க்கே திருவைகுந்தம் பெறுவார் சீர் சொல்ல அரிதாயின் என்னால் எவ்வாறு சொல்ல முடியு மெனக் கூறியது –
தொடர்நிலைச் செய்யுட்பொருட் பேறணியாம்.

இது – திருமாலினது ஐவகைநிலையகளுள் பரத்வம் விளங்குந் தானம்.
“பரத்வமாவது – அகால கால்யமான நலமந்தமில்லதோர்நாட்டிலே நித்ய முக்தர்க்குப் போக்யனாய்க்
கொண்டு எழுந்தருளியிருக்கும் இருப்பு.” இதுவே – பரமபதமெனவும், நித்தியவிபூதி யெனவும்படும்.

———–

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற் பாதம் என் தலை மேல் பூ –

(இ – ள்.) மண்ணில் அரங்கம் முதல் – நிலவுலகத்திலுள்ள திருவரங்கம் பெரியகோயில் முதலாக,
வைகுந்தம் நாடு அளவும்- பரமபதநாடு வரையிலும்,
எண்ணு திருப்பதி நூற்றெட்டினையும் – நன்குமதிக்கப்படுகின்ற நூற்றெட்டுத் திருமால்திருப்பதிகளையும்,
நண்ணுவார் – சென்று சேர்பவர்களும்,
கற்பார் – (வாயினாற்) சொல்லுபவர்களும்,
துதிப்பார் – தோத்திரஞ்செய்பவர்களும்,
கருதுவார் – மனத்தினால் நினைப்பவர்களும்,
கேட்டு இருப்பார் – (பிறர் சொல்லக்) கேட்டிருப்பவர்களுமாகிய பரமபாகவதர்களது,
பொன்பாதம் – அழகிய திருவடிகள்,
என் தலைமேல் பூ – நான் முடிக்கு அணியாகச் சூடும் மலர்களாகும்; (எ – று.)

நூற்றெட்டுத்திருமால்திருப்பதிகளைப்பற்றி யாத்திரைமுதலியன செய்கின்ற அடியவர்களது திருவடித்
தாமரைகளை முடிமேற்கொள்வே னென்பதாம்.
“நூலோதி வீதி, வாழியெனவருந்திரளை வாழ்த்துவார்தம் மலரடிஎன் சென்னிக்கு மலர்ந்தபூவே” என்றது, இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

———–

பதின்மர் உரைத்த பதி ஒரு நூற்று எட்டும்
துதி செய்ய அந்தாதி சொன்னான் அதிக
குணவாள பட்டர் இரு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் வகுத்து

(இ – ள்.) அதிகம் குணம் ஆளர் பட்டர் – மிக்க நற்குணங்கள் வாய்ந்த வரான பெரியபட்டரது,
இரு கோகனகம் தாள் – தாமரைமலர்போன்ற திரு வடித்தாமரைக ளிரண்டையும்,
சேர் – (தஞ்சமென்று) பற்றின,
மணவாள தாசன் – அழகியமணவாளதாசன், –
பதின்மர் உரைத்த – ஆழ்வார்கள் பதின்மரும் மங்களாசாசனஞ்செய்தருளிய,
பதி ஒரு நூற்றெட்டும் – திருமாலின் நூற்றெட்டுத் திருப்பதிகளையும்,
துதி செய்ய – தோத்திரஞ் செய்யுமாறு,
வகுத்து – (சோழநாடு முதலியனவாகப்) பகுத்துக்கொண்டு,
அந்தாதி சொன்னான் – இந்த அந்தாதிப்பிரபந்தத்தைப் பாடினான்; (எ – று.)

ஆழ்வார் பதின்மரும் மங்களாசாசனஞ் செய்தருளிய நூற்றெட்டுத் திருப்பதிகளையும் யாவரும் உணர்ந்து துதிக்குமாறு
சோழநாடு முதலாகப் பிரித்துக்கொண்டு நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியைப் பிள்ளைப்பெருமாளையங்கார் பாடின ரென்பதாம்.

இச்செய்யுளிரண்டும் – நூலாசிரியர் தம்மைத் தானே பிறன்போலும் பாயிரங்கூறியன; பிரயோகவிவேகநூலார் –
‘இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது. வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார்:
இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும்
முன்னாகப் பின்னாகப் பதிகங்கூறுவதுங் காண்க’ என்றவை கருதத்தக்கன. இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி முற்றிற்று.

இதுவரையிற் கூறிவந்த திருப்பதிகள் மயர்வறமதிநலம்அருளப் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாஸனம்
செய்யப்பட்டு மிகவும்ஏற்றம்பெற்றன.
இவைகளன்றி, முனிவர்முதலியோரால் ப்ரதிஷ்டைசெய்யப்பட்டு ஏற்றம் பெற்ற புராணஸ்தலங்களும்,
ஆழ்வாராசாரியர்களின் திருவவதாரம் முதலியசம்பந்தங்களினால் ஏற்றம்பெற்ற தலங்களும், உண்டு அவையாவன:-

1. திருநாராயணபுரம் – செல்வப்பிள்ளை’ எழுந்தருளிய தலம். ஸ்ரீபாஷ்ய காரர், திருநாராயணன் செல்வப்பிள்ளை
என்ற இவர்கட்குச் சந்நிதி முதலியன நிர்மாணம்செய்து செல்வப்பிள்ளையை எழுந்தருளப் பண்ணி
உத்ஸவாதிகளையெல்லாம் நடப்பித்தருளினர்.
நாராயணா த்ரியென்றும், வேதாத்ரியென்றும், யாதவாத்ரியென்றும், யதிசைலமென்றும் மறுபெயர்களையுடைய
பிரசித்தமான தலம் இதுவே. இது மேல்நாட்டி லுள்ளது.

2. ராஜமன்னார் கோயில் – ராஜகோபாலன் எழுந்தருளிய தலம்.

3. ஜநார்த்தநம் – ஜநார்த்தநப்பெருமாள் எழுந்தருளிய தலம்; இப்பெருமான் தமது கையிற் கொண்டுள்ள நீரை
யுகமுடிவில் ஆசமநஞ் செய்வரென்பர்; இது, மேலைக்கடற்கரையி லுள்ளது.

4. ஸ்ரீழமுஷ்ணம் – ஆதிவராகப்பெருமாள் எழுந்தருளியதலம். இது, எட்டு ஸ்வயம்வ்யக்தஸ்தலங்களில் ஒன்று. சோழநாட்டி லுள்ளது.

5. புஷ்கரம் – தீர்த்தஸ்வரூபியாகிய எம்பெருமான் எழுந்தருளிய தலம். இது, ஸ்வயம்வ்யக்தஸ்தலங்களில் ஒன்று.

6. ஜகந்நாதம் – ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி எழுந்தருளிய தலம். புருஷோத்தமம் என்னும் மறுபெயருடையது. வடநாட்டி லுள்ளது.

7. ஸ்ரீகூர்மம் – ஸ்ரீவராகப்பெருமாள் எழுந்தருளிய தலம்.

8. சிங்கப்பெருமாள்கோயில் – இது, தொண்டைநாட்டிலுள்ளது; நரசிங்க மூர்த்தி எழுந்தருளியுள்ள தலம்.

9. அவந்தி – கண்ணன் எழுந்தருளிய தலம். உஜ்ஜயினி என்னும் மறுபெய ருடையது. இது, முத்திதரும்நகரங்கள் ஏழனுள் ஒன்று.

10. கயா – பல்குனி நதிக்கரையி லுள்ளது. சிராத்தபிண்டம் போடும்படி யான விஷ்ணுபாதத்தை யுடையது.

11. ப்ரயாகை – மாதவப்பெருமாள் ஆலிலையில் பள்ளிகொண்டுள்ள தலம் அலகபாத் என்னும் மறுபெயருடையது.

12. மயிலாப்பூர் – இது, முதலாழ்வார்கள் மூவரில் பேயாழ்வார் திருவவதரித்த தலம்.

13. திருமழிசை – திருமழிசையாழ்வார் திருவவதரித்த தலம். மஹீஸாரக்ஷேத்ரம் என்னும் மறுபெய ருடையது.

14. திருவஞ்சிக்களம் – குலசேகராழ்வார் திருவவதரித்த தலம். மலை நாட்டி லுள்ளது.

15. திருமண்டங்குடி – தொண்டரடிப்பொடியாழ்வார் திருவவதரித்த தலம்.

16. திருக்குறையலூர் – திருமங்கையாழ்வார் திருவவதரித்த தலம்.

17. காட்டுமன்னார்கோவில் – ஸ்ரீமந்நாதமுனிகளும் ஸ்ரீஆளவந்தாரும் திருவவதரித்த தலம்.

18. பூவிருந்தவல்லி – திருக்கச்சிநம்பிகள் திருவவதரித்த தலம்.

19. ஸ்ரீபெரும்பூதூர் – ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதரித்த தலம். இவர்க்குப் பெரிய நம்பிகள் தவயம் உபதேசம்செய்த தலம் – ஸ்ரீ மதுராந்தகம்.

20. கூரம் – கூரத்தாழ்வான் திருவவதரித்த தலம்.

21. மழலைமங்கலம் – எம்பார் திருவவதரித்த தலம்.

22. பச்சைப்பெருமாள்கோயில் – முதலியாண்டான் திருவவதரித்த தலம்.

மற்றும் பல வுள.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி –பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் —41-58–/மலை நாட்டுத் திருப்பதிகள் –59-71–/நடு நாட்டுத் திருப்பதிகள் -72-73–

February 23, 2022

பாண்டிநாட்டுத்திருப்பதிகள்–18-

41- திரு மால் இருஞ்சோலை —

பணிந்தேன் திருமாலை பாமாலை தாளில்
அணிந்தேன் அருள் தஞ்சமாகத் துணிந்தேன்
திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன் எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் –41–

(இ – ள்.) (நான்), – திருமாலிருஞ்சோலை – (அழகன் எழுந்தருளியுள்ள) திருமாலிருஞ்சோலை யென்னுந் திவ்வியதலத்தை,
சேர்ந்தேன் – அடைந்தேன்;
திருமாலை – ஸ்ரிய:பதியான அவ்வெம்பெருமானை,
பணிந்தேன் – வணங்கினேன்;
பா மாலை – தமிழ்ப்பாடலினாலாகிய மாலையை,
தாளில் – (அவனது) திருவடிகளில்,
அணிந்தேன் – சூட்டினேன்;
அருள் – (அவனது) திருவருளையே,
தஞ்சம் ஆக – பற்றுக்கோடாக,
துணிந்தேன் – நிச்சயித்தேன்; (அங்ஙனந் துணிந்ததனால், இனி), எனக்கு -,
இருஞ் சோதி வான் – பெரிய ஒளிவடிவமான பரமபதம்,
வரும் – கிடைக்கும்; (எ – று.) – ஆல் – ஈற்றசை; தேற்றமுமாம்.

திருமாலிருஞ்சோலைமலையைச் சேர்ந்து அங்கு எழுந்தருளியுள்ள அழகப்பிரானைச் சேவித்து அப்பிரான்
திருவடிகளிற் பாமாலைசூட்டி அவனது அருளையே தஞ்சமாகத் துணிந்திருத்தலால்,
அவனருளால் எனக்கு நற்பேறுவாய்த்தல் திண்ண மென்பதாம்.
“பணிந்தேன்திருமேனி பைங்கமலங் கையால், அணிந்தேன் உன்சேவடிமே லன்பாய்த் –
துணிந்தேன், புரிந்தேத்தி உன்னைப் புகலிடம்பார்த்து ஆங்கே, இருந்தேத்திவாழுமிது” என்ற பாசுரத்தை அடியொற்றியது, இச்செய்யுள்.
இறைவன் எழுந்தருளியிருக் கின்ற பரமபதம், முச்சுடர்களின் ஒளியினும் மிக்கபேரொளியுடைமையால், “இருஞ்சோதிவான்’ என்றார்.
வரும் மால் இருஞ்சோதி வான் என்று பிரித்து, திருமாலினது பரமபதம் கிடைக்குமென்றும் பொருள்கூறலாம்.

————

42-திருக் கோட்டியூர் –

வான்பார்க்கும் பைங்கூழ் போல் வாளா உனது அருளே
யான் பார்க்க நீ பார்த்து இரங்கினாய்-தேன் பார்ப்பின்
ஓசைத் திருக் கோட்டி யூரானே இன்னமும் என்
ஆசைத் திருக்கு ஒட்டி ஆள் –42-

(இ – ள்.) தேன் பார்ப்பின் ஓசை – இளவண்டுகளுடைய ரீங்காரவோசை மிகுந்த,
திருக்கோட்டியூரானே – திருக்கோட்டியூ ரென்னுந் திவ்விய தலத்தி லெழுந்தருளியிருக்குந் திருமாலே! –
வான் பார்க்கும் பைங்கூழ் போல் – வானத்துஎழுகின்ற மழையையே யெதிர்நோக்குகின்ற பசியபயிரைப்போல,
வாளா – சும்மா (எப்போதும்),
உனது அருளே – உன்னுடைய திருவருளையே,
யான் பார்க்க – நான் ஆதரத்தோடு எதிர்நோக்க,
நீ பார்த்து இரங்கினாய் – நீ (அதனைக்) கடாக்ஷித்து (என்மீது) அருள்புரிந்தாய்;
இன்னமும் – இனிமேலும்,
என் – எனது,
ஆசை திருக்கு – இவ்வுலகப் பற்றாகிய மாறுபாட்டை,
ஓட்டி – போக்கி,
ஆள் – (என்னை) ஆட்கொள்வாயாக; (எ – று.)

தாபத்தைத்தணித்துத் தன்னைக்காத்தற்குஉரிய மேகம் மழைபொழியாது நீட்டிக்க நீட்டிக்கப் பயிர் அதனை ஆவலோடு
எதிர்பார்க்குந் தன்மை மிகுதல்போல, பிறவித்துன்பத்தை யொழித்து என்னைப் பாதுகாத்தற்கு உரிய நீ
தண்ணளிசெய்யாது உபேக்ஷிக்க உபேக்ஷிக்க என்மனம் உன்பக்கலிலே ஒருகாலைக்கு ஒருகால் மிகவும்
அன்புகொண்டு ஆழ்ந்துநிற்க, அதனைக் கண்ட நீ வெகுகாலத்திற்குப் பின்பு என்னிடத்துத் திருவருட் பார்வையை
வைத்துள்ளாயாதலால், இனிப் பலவகைப்பற்றுக்களால் என்மனம் தீயவழிச்செல்லாதபடி அதன்மாறுபாட்டை நீக்கி
என்னை அடிமைகொள்ளவேண்டு மென்பதாம்.

பயிர் வானையே பார்த்திருத்தற்குக் காரணம் வேறொரு நீர்நிலத்தைத் தேடிப்போகமாட்டாமைபோலவே,
ஐயங்கார் இங்ஙனம் ஆதற்குக் காரணம் வேறொருபுகலிடத்தைப் பெறாமையென்க.
வாளாஎன்பதற்கு – உன் கருணையைப் பெறுவதற்குஉரிய உபாயம் என்னிடத்து இல்லாதிருக்கவும் என்று
கருத்துக் கொள்ளினும் அமையும். எம்பெருமான் திருவருளைப் பெற்றபிறகு ‘என்னாசைத்திருக்கோட்டியாள்’ என்று
பிரார்த்திப்பதற்குக் காரணம் என்னையோ வெனின், – “விண்ணுளார்பெருமாற்கடி மைசெய்வாரையுஞ் செறும் ஐம்புலனிவை,”
“இருள்தருமாஞாலம்” என்றபடி நிலத்தின்தன்மையாலும் ஐம்பொறிகளின்வலிமையாலும் ஒருகால் மீண்டும் அவனது
திருவருளுக்கு விலக்காய்ச் செல்லுமாறு நேர்ந்திடுமோ? என்று அதிசங்கை கொண்டமை யென்க.
ஆசை யென்பது – மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென்ற மூன்றையும் குறிக்கும்.

இரணியாசுரன் மூவுலகத்தையும் ஆட்சிசெய்தகாலத்தில் தேவர்கள் அவ்வசுரனையொழித்தற்கு வேண்டும்
உபாயத்தை ஆலோசிப்பதற்கு ஏற்றதாய், அசுரரூபத்திரவமில்லாத இடத்தைத் தேடுகையில் கதம்ப முனிவரது சாபத்தால்
‘துஷ்டர்ஒருவரும் வரக்கூடாது’ என்று ஏற்பட்டிருந்த இந்தக்ஷேத்ரம் அவர்கள் கூட்டமாக இருந்து ஆலோசித்தற்கு ஏற்ற
இடமாயிருந்த காரணம்பற்றி, இத்தலத்திற்கு ‘கோஷ்டீபுரம்’ என்று வடமொழியிற் பெயர்;
அதுவே, ‘கோட்டியூர்’ எனத் தமிழில் வழங்குகின்றது.

இத்தலத்திற்கு ‘தேன்பார்ப்பினோசை’ என்று அடைமொழி கொடுத்துக் கூறியதனால், இத்தலம் வசித்தற்கு இனிய
சோலையைக்கொண்டுள்ளதாய் நீர்வளநிலவளங்களால் மிக்கிருக்கு மென்பது பெறப்படும்.
‘தேன்பார்ப்பின்ஓசைத்திருக்கோட்டியூர்’ என்பதற்கு – ‘வண்டுபோல் ஸாரக்ராஹியான எம்பெருமானார்
திருக்கோட்டியூர் நம்பியினிடத்துத் திருமந்திரத்தை உபதேசங்கொண்டருளி, விமானத்தின்மீது ஏறியிருந்து
பரமரஹஸ்யமான அந்தத்திருமந்த்ரத்தை எல்லாருங்கேட்டு உய்வுபெறுமாறு உரத்துவெளியிட்டதற்கு
இடமான திருக்கோட்டியூர்’ என்று ஸ்வாபதேசார்த்தங் கூறுவர்.
“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை” என்ற தொல்காப்பியத்தால், இளவண்டை “தேன்பார்ப்பு’ என்றார்.
தேன் – வண்டின் சாதிபேதம்.

————-

43-திரு மெய்யம்-பிரிவாற்றாத தலைவி இரங்கிக் கூறுதல் –

ஆள் ஆய் உனக்கு அன்பு ஆய் ஆசை ஆய் நாணிலி ஆய்
வாளா மனைவி என்று வாழ்வேனைக் கேளாய்
திரு மெய்ய மாயா சிலைகால் வளைத்து
வரும் எய்ய மாயா மதன் –43-

(இ – ள்.) திருமெய்யம் மாயா – திருமெய்யமென்னுந் தலத்தி லெழுந்தருளியுள்ள ஆச்சரியமான குணசேஷ்டிதங்களையுடையவனே! –
உனக்கு – உன்னிடத்தில்,
ஆள் ஆய் – அடிமைப்பட்டு,
அன்பு ஆய் – அன்புடையவளாய்,
ஆசை ஆய் – ஆசைகொண்டு,
நாண் இலி ஆய் – வெட்கமற்றவளாய்,
வாளா – வீணாக (பெயர்மாத்திரத்தால்),
மனைவி என்று வாழ்வேனை – மனைவியென்று வாழ்கின்ற என்னை,
கேளாய் – நீ கேளாமல் உபேக்ஷித்துவிட்டாய்;
மாயா மதன் – அழிந்தொழியாத மன்மதன்,
சிலை கால் வளைத்து – (தனது) கருப்புவில்லை (நாணேற்றி) நுனிப்புறங்களில் வளைத்துப் பிடித்துக்கொண்டு,
எய்ய – (என்மீது மலரம்புகளை) எய்துவருத்துமாறு,
வரும் – வருவானே! (என் செய்வேன்!!) (எ – று.)

தலைமகன் பரத்தையிற்பிரிவிற் பிரிந்தனனாக, அப்பிரிவுத்துயரை யாற்றாது வருந்துகின்ற தலைவி அவ்வாற்றாமையே
வாயிலாக உருவெளித்தோற்றத்தில் எதிரில் நிற்கின்ற தலைவனை முன்னிலைப்படுத்திக் கூறியது, இது.
காமநோய் மிகமுதிர்தற்கு உரிய காலத்தில் ஆற்றாமைமிகுதியால் தன்னுயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேறு
விரகு இல்லாமல் தலைமகள் தலைமகனைக் கருதி இவ்வாறு கூறி முறையிடுகின்றன ளென்க.
எனக்கு நீ அருள்புரியாயாயின் நினதுபிரிவுத்துயரை யாற்றாது இறந்துபடுவே னென்பது, குறிப்பு.

“பரத்தையிற்பிரிதல் ஓதற்குப்படர்தல், அருட்டகுகாவலொடு தூதிற்கு அகறல்,
உதவிக்குஏகல் நிதியிற்குஇகத்தல் என்று, உரைபெறுகற்பிற் பிரிவு அறுவகைத்தே” என்று கூறப்படுகின்ற அறுவகைப்பிரிவுகளுள்,
இது- ‘வாளாமனைவியென்றுவாழ்வேனை’ என்று புலந்துகூறுதலால், பரத்தையிற் பிரிவாதல் பெறப்படும்.
தலைமகள் தலைமகனிடத்துத் தான்பேரன்புவைத்து அவனையன்றி வேறொன்றை யறியாத கற்புடையா ளென்பாள்,
‘ஆளாய் உனக்கன்பாய் ஆசையாய் நாணிலியாய் வாளா மனைவியென்று வாழ்வேனை’ என்றாள்.
அன்பு என்பது – ஒரு பொருளினிடத்து முதலில்தோன்றுகின்ற விருப்ப மென்றும்,
ஆசை என்பது – அவ்வன்பு முதிர்ந்து அதை விட்டுப் பிரிந்தால் தரிக்கமுடியாத நிலையென்றும் வேறுபாடு உணரத்தக்கது.
தமது காமத்தின் தன்மையைத் தாமே சொல்வது குலமகளிர்க்கு அடுப்பதன்று;
ஆயினும், யான் அக்காமமிகுதியால் மரணவேதனையை யடையும் படியான நிலையைப் பெற்றதனால்,
யானே எனது காமத்தை இப்பொழுது வெளியிட்டுக்கூறுமாறு நேர்ந்த தன்மைக்கு இரங்குவே னென்பாள், ‘நாணிலியாய்’ என்றாள்.
மன்மதன் சிவபிரானது நெற்றிக்கண்ணின் நெருப்பினால் இறந்ததாக உலகத்தார் கூறுகின்றனரே,
அது என்னளவில் இல்லையாயிற்றோ? என்ற கருத்தும்; கண்ணோட்டமின்றி உலகத்துஉயிர்களைக் கொள்ளைகொள்ளுகின்ற
யமன் இம்மன்மதனுயிரையுங் கொள்வானாயின் யான் உய்வேனே, இம்மன்மதனுக்கு அக்கூற்றுவனால் மாய்வு நேரவில்லையே!
இதுவும் என்வினையோ? என்ற கருத்தும் “வருமெய்யமாயாமதன்’ என்ற தொடரில் தோன்றும்.
கேளாய் என்பதை, உடன் பாட்டுமுற்றாகக் கொண்டு, என்சொல்லைக் கேட்டருளவேண்டு மென்றும் பொருளுரைக்கலாம்;
கேட்டால்தான் யான் வாழ்வுபெறுவே னென்பது, கருத்து.

ஐயங்கார் தமதுஞானக்கண்ணுக்குச் சிற்சிலசமயங்களில் எம்பெருமான் இலக்காகின்றபொழுதே அவனைக் கிட்டி
முத்தியின்பமனுபவிக்கும் படியான ஆசை கொள்ள, அவரை அப்பெருமான் அப்பொழுதே தன்பக்கல் சேர்த்துக்
கொள்ளாது காரியாந்தரங்களிற் கருத்தூன்றி மறைய, அதனாலுண்டான துயரமிகுதியினால் ஐயங்கார்
அவனையே இடைவிடாது சிந்தித்துக்கொண்டு மிகவருந்தி அவனை நொந்துகூறுவது, இதற்கு உள்ளுறைபொருள்.
தனது ஸ்வரூபத்திற்கு ஒவ்வாமையாலே உபேக்ஷித்தாலும் எதிராக உபேக்ஷியாமலும்,
வேறுகதியை நாடாமலும் முன்புள்ள அவனது சம்பந்தத்தையே நினைத்து மற்றும் அவனால் உதவியைப் பெற நாடி
அவன் காலிலேயே விழுந்துகிடக்குந்தன்மையை யுடையவர் ஐயங்கார் என்பது, இங்குப் பெறப்படும்.

ஸத்யதேவதைகள் திருமாலைநோக்கித் தவஞ்செய்த தலமாதல்பற்றி, அத்திருமலை ஸத்யகிரியென்றும்,
அங்குத்தோன்றிய திருமால் ஸத்யகிரிநாதனென்றும் பெயர்பெறுவர்;
சத்தியகிரியென்ற அச்சொல்லே திருமெய்யமலையென்றும், அத்திருப்பதி திருமெய்யமென்றும் வழங்கப்பெறும்.

————

44-திருப் புல்லாணி –

மத யானைக் கோள் விடுத்து மா முதலை கொன்ற
கதையால் இதயம் கரையும் முதல் ஆய
புல்லாணி மாலே புறத்தோர் புகழ் இருப்பு
வல் ஆணி என் செவிக்கு மாறு –44-

(இ – ள்.) முதல் ஆய – முழுமுதற்கடவுளாகிய,
புல்லாணி மாலே – திருப்புல்லாணியென்னுந் திவ்வியதலத்தில் எழுந்தருளியுள்ள திருமாலே! –
மதம் யானை கோள்விடுத்து – மதம்பெருகுந்தன்மையுள்ள கஜேந்திராழ்வானது (முதலை பற்றியதனாலாகிய) துன்பத்தைப் போக்கி,
மா முதலை கொன்ற – (அதனைப்பிடித்துவருத்திய) பெரிய அம்முதலையை
(அவ்யானை ஆதிமூலமே! என்றுகூவியபோது தன்சக்கராயுதத்தாற்) கொன்ற,
கதையால் – வரலாற்றினால்,
இதயம் கரையும் – (எனது) மனம் உருகும்; (அத்தகைய உனது புகழல்லாமல்),
புறத்தோர் புகழ் – தேவதாந்தரங்களினுடைய புகழ்,
என் செவிக்கு – எனது காதுகளுக்கு,
மாறு – விரோதமான,
இரும்பு வல் ஆணி – வலிய இருப்பாணிபோன்றதாம்; (எ – று.)

பரதேவதையான உனது புகழ் என்செவிக்கு இன்பந்தருமே யன்றி, தேவதாந்தரங்களினது புகழ் என்செவிகளுக்கு
இன்னாதாகு மென்பதாம். “செவிக்குஇனாத கீர்த்தியார்” என்ற ஆழ்வாரருளிச்செயலும்,
“த்ரஷ்டவ்ய ரல்லாதவோபாதிஸ்ரோதவ்யருமல்லர்; கேட்கவேண்டியிருந்திகோளேயாகிலும், பித்ருவதப்ரஹித்தியென்ன,
தத்பலமான பிக்ஷாடநசாரித்ரப்ரதையென்ன, அத்வரத்வம்ஸகதையென்ன, ஸ்வஸுரவதகதையென்ன இத்யாதி
ஸ்ரவணகடுகமான கீர்த்தியையுடையராயிருப்பர்.
ம்ருதனான புத்ரனை ஸாந்தீபநிக்கு மீட்டுக்கொடுத்தான்; புநராவ்ருத்தியில்லாத தேசத்தினின்றும் வைதிகன்
புத்ரர்களை மீட்டுக்கொடுத்தான் என்றும் இத்யாதிகளாலே ஸம்ஸ்ரவேமதுரமான கீர்த்தியனிறே” என்ற அதன்வ்யாக்யாநமும்,
‘புறத்தோர் புகழ் என்செவிக்கு மாறு’ என்றவிடத்துக் கருதத்தக்கன.
“மறந்தும் புறந்தொழாமாந்தர்,”
“சிந்தைமற்றொன்றின் றிறத்ததல்லாத்தன்மை தேவபிரானறியும்” என்றபடி
முழுமுதற்கடவுளான திருமாலையன்றிப் பிறப்பு இறப்புத் துன்பமுடைய பிறிதொருதெய்வத்தைச் சிறிதும்
பொருள்செய்யாத நிறைவுடையவர் ஐயங்கா ரென்பது, இச்செய்யுளிற் போதரும்,
உயர்திணைப்பிறவியாதல் பகுத்தறிவாதல் நல்லொழுக்கமாதல் ஒன்றுமின்றிக்கே கேவலம் தன்னிடத்துப்
பக்திகொண்டு தனக்கு அடிமையான பிராணியினிடத்து அருளினால், அதற்குத் துன்பஞ்செய்த பிராணியின்
விஷயமாகப் பெருமான் தனதுகுளிர்ந்ததிருவுள்ளத்திலே கொடியசீற்றத்தைக் கொண்டு அரைகுலையத் தலைகுலைய
மடுக்கரைக்கே வந்துஉதவின மகாகுணத்தில் “இது என்னநீர்மையோ!’ என்று ஈடுபட்டு
“மாமுதலைகொன்ற கதையா விதயங்கரையும்’ என்றனர். தன்னிலமாகிய நீரிலே மலையொத்த யானையையும்
வெல்லவல்ல வலிமையுடைய தென்பார், “மாமுதலை’ என்றார்.
‘இருப்பு வல்லாணி’ என்றது, நாராசம்போலக் கொடியது என்ற கருத்தைப் புலப்படுத்தும்.

புல்லாணி – புல்லணை யென்பதன் மரூஉ; இது, சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லுதற்பொருட்டு
இராமபிரான் வானரசேனையுடனே புறப்பட்டுச் சென்று தென்கடற்கரையை யடைந்து கடல் கடக்க உபாயஞ்சொல்ல
வேண்டு மென்று அக்கடலரசனான வருணனைப் பிரார்த்தித்துத் தருப்பத்திற் படுத்து ஏழுநாளளவும்
பிராயோபவேசமாகக் கிடந்த தல மாதலால், இது வடமொழியில் தர்ப்பஸயநம் எனப்படும்;
புல்லணை என்பது – அதற்கு ஏற்ற தென்மொழி.

————

45-திருத் தண் காலூர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்தி இரங்கல் –

மாறு பட வாடை எனும் வன்கால் எனமுலை மேல்
ஊறு பட ஊர்ந்த உளைவு எல்லாம் மாற
திருத் தண் காலூரான் திருத் தண் துழாயின்
மருத் தண் கால் ஊராதோ வாய்ந்து –45–

(இ – ள்.) வாடை எனும் வல் கால் – வாடையென்கின்ற வலியகாற்றானது,
மாறுபட – (எனக்கு) விரோதமாக,
வந்து -, என் முலைமேல் – எனது தனங்களின்மீது,
ஊறுபட – தாபமுண்டாகும்படி,
ஊர்ந்த – தவழ்ந்துசென்றதனாலுண்டாகிய,
உளைவு எல்லாம் – வருத்தம்முழுதும்,
மாற – (அடியோடு) நீங்கும்படி, –
திருத்தண்காலூரான் – திருத்தண்கா லென்னுந் திவ்வியதலத்திலெழுந்தருளியிருக்குந் தலைவனணிந்த,
திரு தண் துழாயின் – அழகிய குளிர்ந்த திருத்துழாயினது,
மரு – வாசனைபொருந்திய,
தண் கால் – குளிர்ந்த காற்றானது,
வாய்ந்து – இனிதாகப்பொருந்தி,
ஊராதோ – (என் மீது) தவழ்ந்துவீசாதோ? (எ – று.)

களவொழுக்கத்தால் தலைமகனோடு கூடிப்பிரிந்த தலைமகள் காமோத் தீபகப்பொருள்களுளொன்றான காற்றுத்
தன்மீது வீசிவருத்த அதற்குப் பொறாளாய், ‘இனித் தலைவனுடைய சம்பந்தம்பெற்ற பொருளினது தொடர்பினாலாவது
ஒருவாறு இந்நோய் தணியப்பெறலாம்’ என்று கருதி, தலைவனணிந்த திருத்துழாய்மீது பட்டு அந்நறுமணத்தோடு
வருகின்ற காற்றாவது தன்மேல் வீசப்பெறுமோ? என்று ஏங்கிக் கூறுகின்றன ளென்பதாம்.
கந்தவஹ னென்றும், கந்தவாஹனென்றும் பெயர்பெறுமாறு ஆங்காங்குள்ள மணத்தைக்கொண்டுவீசும் இயல்பினதும்,
பொதுப்பட எல்லாவுயிர்கட்குங் குளிர்ச்சியைச்செய்வதுமான காற்றானது தனதுதலைவர் சாத்திக்கொண்டுள்ள
திருத்துழாயின்மேற் பட்டு அதன்நறுமணத்தைக் கொண்டுவந்து தன்மேல் வீசும்போது அவரைப்பிரிந்து நிற்கின்ற
தனக்கு அமிருதம்போலுமென்று கருதி அக்காற்றைத் தலைவி வேண்டுகின்றன ளென்க.
ஒருபொருளே தலைவன் சம்பந்தத்தைப் பெற்றபோது, இனிமைதருதலும் பெறாதபோது துன்பம் விளைத்தலும் கருதத்தக்கன.
பிரிந்தாரை வருத்துதலில், துணைவேண்டாமல் அஸஹாயமான திறமையுள்ள தென்பார், ‘வாடையெனும்வன்கால்’ என்றார்.

ஐயங்கார், எம்பெருமானைச் சேராதபோது லௌகிகபதார்த்தங்கள் தம்மை வருத்த, அந்த எம்பெருமானது சாந்நித்தியம்
கிடையாவிடினும் பாகவதர்களுடைய சம்பந்தங் கிடைத்தாலும் அதுகொண்டு ஈடேறலாமென்று எதிர்பார்ப்பது,
இதற்கு உள்ளுறைபொருள். விவரம்உய்த்துணர்க.

————

46-திருமோகூர் -அன்னத்தைத் தூது விடுத்த தலைவி அதனைக் குறித்து ஐயுறுதல் —

வாயால் மலர் கோதி வாவி தொறும் மேயுமோ
மேயாமல் அப்பால் விரையுமோ மாயன்
திரு மோகூர் வாய் இன்று சேருமோ நாளை
வருமோ கூர் வாய் அன்னம் வாழ்ந்து –46-

(இ – ள்.) கூர் வாய் அன்னம் – கூர்மையுள்ள வாயையுடைய (என்னால் தூதுவிடுக்கப்பட்ட) அன்னப்பறவையானது, –
வாயால் – தன்வாயலகினால்,
மலர் கோதி – தாமரைமலரினிதழ்களைக் கோதிக்கொண்டு,
வாவிதொறும் – (இடைவழியிலுள்ள) தடாகங்கள்தோறும்,
மேயுமோ – மேய்ந்து கொண்டிருக்குமோ?
மேயாமல் – அவ்வாறு தன்காரியத்தைச்செய்யாமல்,
வாழ்ந்து – வாழ்ச்சிபெற்று,
அப்பால் – அப்புறம்,
விரையுமோ – (என்காரி யத்தைச் செய்வதாக) விரைந்துசெல்லுமோ?
மாயன் – ஆச்சரியமான குணசேஷ்டிதங்களையுடைய (எனதுதலைவனாகிய) திருமாலினது,
திருமோகூர்வாய் – திருமோகூரினிடத்து,
இன்று – இன்றைக்கு,
சேருமோ – சென்றுசேருமோ?
நாளை வருமோ – (எனது நிலைமைகளைத் தலைவன்பக்கற் சொல்லிவிட்டு) நாளைக்கு திரும்பிவருமோ? (எ – று.)

தலைவனைப்பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாது வருந்தும்போது அங்ஙனம் இரங்குமிடம் நெய்தனில மாதலால்,
திருமோகூரைச்சார்ந்த மருதநிலத்து வாழ்கின்ற அன்னப்பறவை அந்நெய்தனிலத்துக்கழிக்கரையில் இரைதேடுதற்கு வர,
அதனை நோக்கி, ‘எனதுநிலைமைகளை என்தலைவனான காளமேகப் பெருமான்பக்கல் சொல்லுதற்கு
எனக்குத் தூதாகவேண்டும்’ என்று வேண்டி விடுத்து, தனது ஆற்றாமைமிகுதியால்,
‘நான் தூதுவிடுத்த அன்னம் என்னை மறந்திட்டுத் தன்காரியத்தைச் செய்யுமோ? அன்றி, என்காரியத்தைச் செய்யுமோ?’ என்று
ஐயுற்றுக் கூறியது, இது,
“விதியினாற் பெடை மணக்கும் மென்னடைய வன்னங்காள்,”
“இடரில்போகம்மூழ்கி யிணைந் தாடும் மடவன்னங்காள்,”
“அலர்மேலசையு மன்னங்காள்,”
“தடம்புனல் வா யிரைதேர்ந்து, மிகவின்பம்பட மேவும் மென்னடைய வன்னங்காள்” என்றபடி அன்னப் பறவை சிரமம்
பொறாததும் மந்தகதியுடையதும் இனிய இடத்தில் வீற்றிருந்து கிடைத்த இரையை யுண்டு பிரிவுத்துயரறியாது
தானும் தன்துணையுங் கூடிவாழ்ந்து களித்திருப்பதும் தன்னலம்பேணுவது மாதலால், அது அந்தப்போகத்தை விட்டு
எனக்காக அவ்வளவுதூரம் வருந்திச்சென்று விரைவில் எனது நிலைமையைத் தலைவர்க்குச்சொல்லி
நேரில் மீண்டுவந்து அவர்சொல்லை எனக்குச் சொல்லுமோ? சொல்லாதோ? என்று ஐயுறவேண்டுவதாயிற் றென்க.

‘வாவிதொறும் மேயுமோ, அப்பால் விரையுமோ’ என்பன – தலைவியின் ஐயத்தையும்,
‘திருமோகூர்வாய் இன்றுசேருமோ, நாளைவருமோ’ என்பன – அன்னப்பறவை அவ்வாறு விரைந்து செல்வதானால்
இன்றுபோய்ச்சேர்ந்து நாளை மீண்டுவரக் கூடுமோ? என்று தலைவி மனோரதித்துநிற்பதையும் காட்டும்.
பிரிந்த தலைவன் வந்திடுவ னென்று ஆறியிருக்கவொண்ணாதே அதன்வரவுக்கு விரைந்து ஆள்விடும் படியாயிற்று ஆற்றாமைமிகுதி.
“இயம்புகின்றகாலத்து எகினம் மயில் கிள்ளை, பயன்பெறுமேகம் பூவை பாங்கி –
நயந்தகுயில், பேதைநெஞ்சம் தென்றல் பிரமர மீரைந்துமே, தூதுரைத்து வாங்குந் தொடை” என்ற இரத்தினச் சுருக்கத்தால்
தூதிற்குஉரியவை இன்னவை யெனக் காண்க.
“மறக்குமோ, காவின் மதுவருந்தி யப்பாற்,
பறக்குமோ சந்நிதிமுன்பாமோ – சிறக்கத்,
தருவரங்கள் கேட்குமோ தாழ்க்குமோ நெஞ்சே,
திருவரங்கர்பாற் போனதேன்” என்ற திருவரங்கக் கலம்பகச் செய்யுளோடு ஒத்த வாய்பாடுடையது, இச்செய்யுள்.
“இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல், இவ்வளவிற் காதலியம்புங்கொல் –
இவ்வளவில், மீளுங்கொ லென்றுரையா விம்மினான்” என்ற புகழேந்திவாக்கு இங்குக் கருதத்தக்கது.

ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே அவனது நிரந்தராநுபவத்தைப் பெற விரும்பிய
ஐயங்கார் தமது நிலைமையை அப்பெருமான்சந்நிதியில் விண்ணப்பஞ்செய்யும்படி ஆசாரியர்களைப் பிரார்த்தித்து
அவர்கள் நமதுகாரியத்தைக் கைகூட்டுவிக்க வேண்டுமே யென்று கவலுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
வெண்ணிறமுடையதாய் இரண்டு இறகுகளுடன் கூடி, எங்குங் கவலையற்றுத்திரிந்து, தன்னையேயன்றித்
தனது பரிவாரத்தையும் பாதுகாப்பதாய், கருமமே கண்ணாயிருந்து உத்தேசித்த காரியத்தைச் சமயம் வாய்க்கும் போது
தவறாது செய்து முடித்துக் கொள்வதான அன்னப்பறவையை –
சுத்தசத்துவகுணமுடைமையால் உள்ளும்புறமும் ஒக்க நிர்மலஸ்வபாவராய், ஞானம் ஒழுக்கம் என்னும் இரண்டு
சாதனங்களுடன் கூடித் திவ்வியதேசங்களிலெல்லாம் கவலையற்று யாத்திரைசெய்பவராய்,
தம்மையே யன்றித் தம்மையடுத்தவர்களையும் பாதுகாப்பவராய், காரியமே கருத்தாயிருந்து அதனை உரிய
காலத்தில் தவறாதுசெய்து முடிக்கவல்ல ஆசாரியர் என்னத் தகும். விவரம் கேட்டுஉணர்க.

திருமோகூர் – வடமொழியில் ஸ்ரீமோஹநபுரம் எனப்படும்.

—————-

47-திருக் கூடல் –

வாழ்விப்பான் எண்ணமோ வல்வினையில் இன்னம் எனை
ஆழ்விப்பான் எண்ணமோ அஃது உரையாய் தாழ்வு இலாப்
பாடல் அழகு ஆர் புதுவைப் பட்டர் பிரான் கொண்டாடும்
கூடல் அழகா நின் குறிப்பு –47–

(இ – ள்.) தாழ்வு இலா – இழிவில்லாத,
பாடல் – பாசுரங்களின்,
அழகு – அழகானது,
ஆர் – பொருந்திய,
புதுவை பட்டர்பிரான் – ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்த பெரியாழ்வார்,
கொண்டாடும் – புகழ்ந்துபாடிய,
கூடல் – திருக்கூடலென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளிய,
அழகா – அழகனென்னுந் திருநாமமுடையவனே! –
நின் குறிப்பு – உனது திரு வுள்ளக்கருத்து, –
என்னை – அடியேனை,
வாழ்விப்பான் – நல்வாழ்வுபெறும் படி,
எண்ணமோ – திருவுள்ளமோ? (அன்றி),
இன்னம் – இன்னமும்,
வல்வினையில் – கொடிய இருவினைகளில்,
ஆழ்விப்பான் – அழுந்தச்செய்யும்படி,
எண்ணமோ – திருவுள்ளமோ?
அஃது அறியேன் – அதனை இன்னதென்று தெரிந்திலேன்; (எ – று.)

‘அவனன்றி யோரணுவும் ‘அசையாது’ என்றபடி எல்லாம் உனது ஸங்கல்பத்தின்படியே யாகுமாதலால்,
நற்கதியிற்சேர்ப்பாயோ? அன்றி, இவ்வுல கத்தில் அலையவிடுவாயோ? என்னைக்குறித்து நீ கொண்டிருக்கின்ற
உனது திருவுள்ளம் இன்னதென்று அறியாது அடியேன் தியங்குகின்றே னென்பதாம்.
எம்பெருமானே ஆன்மாக்களை உஜ்ஜீவிப்பித்தற்கு ஏற்ற உபாய மாதலாலும், அப்பிராமன அடைதற்கு ஏற்ற உபாயங்களைச் செய்து
அவனைக் கூடுவோ மென்றற்கு ஸ்வரூபாநுரூபமாயும் ஸுகரமாயு முள்ள உபாயம் வேறொன்றும் இல்லாமையாலும்,
நன்மை தீமைகட்கு அப்பிரானது திரு வருளே ஏற்ற உபாயமா மென்பதை, இதனால் அறிவித்தன ரென்க.
“சதுமுகத்துத், தெய்வந் தொழுந் தெய்வமே யென்கொலோ வுன்திருவுளமே” என்றார் அழகரந்தாதியிலும்.

புதுவை – புத்தூர் என்பதன் மரூஉ. பெரியாழ்வார் மதுரைநகரின் அதிபதியான வல்லபதேவபாண்டியனது
வேண்டுகோளின்படி பரதத்வநிர் ணயஞ் செய்ய, அதுகண்ட அம்மன்னவன் மனமுவந்து இவரை யானையின் மேலேற்றிக்
கூடல்நகரை வலஞ்செய்வித்தபோது தன்புத்திரன்பவனி வருதலைப்பார்த்து ஆனந்தமடைகிற தாய்தந்தையர்போலத்
தன்பக்தன் உலாக் கொள்ளுதலை நோக்கி உவத்தற்குப் பிராட்டியுடனே பெருமாள் விண்ணவர் புடைசூழ வானத்தி லெழுந்தருள,
அக்காட்சியைக் கண்டு பாகவத சிரோமணியாகிய அப்பெரியாழ்வார் தாம் சிறிதும் இறுமாப்புக் கொள்ளாமல்,
அத்தேவாதிதேவனுடைய ஸர்வஜ்ஞத்வம் ஸர்வசக்தித்வம் முதலிய மங்களகுணங்களைக் கருதுதற்கு முன்னே
அக்கருடவாகனனது சௌந்தரி யத்திற் கண்செலுத்தி அதனையே சேவித்து அதில்ஈடுபட்டு ஆழ்ந்து பரவசராய்,
அதனால் தம்நிலையையும் எம்பெருமான் நிலையையும் மறந்து பயசங்கை கொண்டு
‘இத்திருமேனிக்கு எவ்வாற்றாலும் ஒருகுறைவாராதிருக்கவேணும்’ என்று வாழ்த்துபவராய்
யானைமணிகளையே தாளமாகக்கொண்டு ‘திருப் பல்லாண்டு’ என்னுந் திவ்வியப்பிரபந்தத்தைப் பாடியருளின ராதலால்,
“தாழ்விலாப் பாடலழகார் புதுவைப் பட்டர்பிரான் கொண்டாடுங் கூட லழகா’ என்றார்.
இவ்வாழ்வார்க்குச் சேவைசாதித்த அவ்வெம்பெருமான், “அஷ்டாங்கவிமானத்தின்மீது எழுந்தருளியிருக்கின்ற
‘வையந்தாயபெருமான்’ என்பர். கூடல் என்பது – தென்மதுரைக்கு ஓர்பெயர்.

—————-

48-ஸ்ரீ வில்லி புத்தூர் –

குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ கோதை
நிறத்த ஊர் விண்டு சித்தர் நீடு ஊர் பிறப்பு இலி ஊர்
தாழ்வு இல் இ புத்தூர் என்று ஐவர்க்குத் தான் இரந்தான்
வாழ் வில்லி புத்தூர் வளம் –48-

(இ – ள்.) கோதை நிறத்த ஊர் – ஆண்டாளின் திருவவதாரத்தால் மேம்பாடுபெற்ற ஊரும், –
விண்டுசித்தர் நீடு ஊர் – பெரியாழ்வார் வாழ்ந்த பெரியஊரும், –
பிறப்புஇலி – ஜநநமில்லாதவனும்,
தாழ்வு இல்லி புதுஊர் என்று ஐவர்க்கு தான் இரந்தான் – தாழ்வில்லாத (பெருஞ்சிறப்புடைய) துரியோதநனே!
புதியஊர்களை (க் கொடுப்பாயாக’) என்று பஞ்சபாண்ட வர்க்காகத் தான் தூதுசென்று இரந்தவனுமாகிய திருமால்,
வாழ் – எழுந்த ருளியிருக்கின்ற,
ஊர் – ஊருமான,
வில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூரினது,
வளம் – செழிப்பானது,
ஒருவர் குறித்து கொண்டாடும் கொள்கைத்தோ – ஒருவரால் நினைத்துப் பாராட்டுந் தன்மையுடையதோ? (அன்று என்றபடி).

பிரணவமானது அகார உகார மகாரங்களினால் பெருமாள் பிராட்டி சேதநன் என்னும் மூவரையும் தோற்றுவிப்பதுபோல,
வடபெருங்கோயிலு டையான் ஆண்டாள் பெரியாழ்வார் என்கிற மூவரையும் தன்னிடத்திற் கொண்டிருப்பதனால் மிகவும்
உத்தேசியமான ஸ்ரீவில்லிபுத்தூரினது பெருமையை எவராலுஞ் சொல்லமுடியா தென்பதாம்.
“பொன்னும் முத்தும் மாணிக்கமு மிட்டுச்செய்த ஆபரணம்போலே, நாச்சியாரும் பெரியாழ்வாரும்
வடபெருங்கோயிலுடையானு மான அலங்காரமுள்ள தேசமிறே” என்ற பெரியார்வாக்கு இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
“பிராட்டிக்கு ஸ்ரீமிதி லையும் திருவயோத்யையும் போலவும், நப்பின்னைப்பிராட்டிக்குக் கும்பகுலமும்
திருவாய்ப்பாடியும் போலவு மன்றிக்கே ஆண்டாளுக்குப் பிறவியும் புக்கவிடமும் ஓரூரிலேயான
ஏற்றம் இவ்வூர்க்கேயிறே உள்ளது” என்ப வாதலால், ‘கோதைநிறத்த வூர்’ என்றார்.
‘குறித்தொருவர்கொண்டாடுங் கொள்கைத்தோ’ என்ற வாக்கியத்தை, கோதை நிறத்தவூர், விண்டுசித்தர் நீடூர், பிறப்பிலியூர்
என்ற தொடர்கள் சமர்த்தித்துநிற்பது – தொடர்நிலைச்செய்யுட்குறியணியாம்.

இளமைதொடங்கி எப்பொழுதும் தமதுசித்தத்தை விஷ்ணுவினிடத்திலே செலுத்தி
“மார்வமென்பதோர் கோயிலமைத்து மாதவனென்னுந் தெய்வத்தை நாட்டி,
ஆர்வமென்பதோர் பூவிடவல்லார்க் கரவதண்டத்தி லுய்யலுமாமே” என்னும்படி அப்பெருமானை மனத்திலே
நிலைநிறுத்தித் தியானித்து வந்ததனால், பெரியாழ்வார் ‘விஷ்ணுசித்தர்’ என்று பெயர்பெற்றனர்.
விண்டு = விஷ்ணு. ஏற்பவர் ஈபவரிடத்திற் சென்று அவரைப் புனைந்துகூறும் உலகவியல்புபற்றி,
பஞ்சவர்க்குத் தூதுவனாய்ச் சென்ற ஸ்ரீகிருஷ்ணன் துரியோதநனை நோக்கி ‘தாழ்வில்லி’ என்று புகழ்ந்துவிளித்தன னென்க:
இனி, இத்தொடர்க்கு – துரியோதனன் எவரையும் பணியாத இயல்பினனாதல்பற்றி, அவனை ‘வணங்காமுடிமன்னனே’ என்று
விளித்ததாகக் கொள்ளினுமாம். மூன்றாமடியில் ஏற்ற வினைமுற்று வருவித்து உரைக்கப்பட்டது.
அன்றி, தாழ்வுஇல் இ புத்தூர் என்று பிரித்து, இ என்பதை ‘ஈ’ என்ற ஏவல் வினைமுற்றின் குறுக்கலெனக் கொண்டு,
தாமதித்தலில்லாமல் புதியஊர்க ளைக்கொடு என்று பொருள் உரைப்பினுமாம்.
ஐவர் – தொகைக்குறிப்பு. ஜீவாத்மாக்கள் தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவரி ரூபங்களாய்ப் பிறப்பது போலப்
பரமாத்துமா உபேந்த்ர மத்ஸ்ய கூர்மாதிஅவதாரங்கள் செய்வது கருமவசத்தினாலன்றித் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின் பொருட்டும்,
தருமத்தை நிலைநிறுத்துதற்பொருட்டும் அப்பெருமான்கொண்ட இச்சையினாலேயே யாகு மென்ற இவ்வுண்மையை யுணர்த்த,
‘பிறப்பிலி – தாழ்வில்லிபுத்தூரென்றைவர்க்குத்தான்இரந்தான்’ என்றார்;
இவ்வுண்மை யையுணர்தல் – அவதாரரஹஸ்யஜ்ஞாநம் எனப்படும்.
‘தாழ்வில்லிபுத்தூ ரென்றைவர்க்குத்தான் இரந்தான்’ என்ற தொடரில், பக்தபராதீநனாய் எம்பெருமான் தூதுசென்ற நீர்மையை விளக்கியபடி.

வில்லி கண்டர் என்பவர்களில் மூத்தவனான வில்லியென்பவனால் ஏற்படுத்தப்பட்ட புதியநகரமாகையால்,
இதற்கு, ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்று திருநாம மென்பர்.

————

49-திருக் குருகூர் –

வளம் தழைக்க உண்டால் என் வாசம் மணத்தால் என்
தெளிந்த கலை கற்றால் என் சீ சீ குளிர்ந்த பொழில்
தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள்
வண் குருகூர் என்னாத வாய் –49-

(இ – ள்.) ‘குளிர்ந்த பொழில் – (மரச்செறிவாற்) குளிர்ச்சி பொருந்திய சோலைகள்சூழ்ந்த,
குருகு ஊர் தண் வாவி – குருகுஎன்னும் நீர்வாழ்பறவைகள் வாழப்பெற்றுக் குளிர்ந்த நீர்நிலைகளையுடைய,
சடகோபன் ஊர் – நம்மாழ்வார் திருவவதரித்த தலமானது,
எங்கள் வள் குருகூர் – வளப்பம்பொ ருந்திய எங்கள்திருக்குருகூர்’
என்னாத – என்று ஒருதரமேனுஞ் சொல்லாத,
வாய் – வாயானது, –
வளம் தழைக்க – வளமாக,
உண்டால் என் – உணவுகளைப் புசித்தால் என்னபயனுண்டாகும்?
வாசம் மணந்தால் என் – முகவாசப்பொருள்களையுண்டு மணம் வீசினால் தான் என்ன பயன்?
தெளிந்த கலை கற்றால் என் – மனந்தெளிவடைதற்குஉரிய சாஸ்திரங்களைக் கற்றால் தான் என்னபயன்?
(ஒன்றினாலும் ஒருபயனும் உண்டாகாது என்றபடி); (எ – று.) – சீசீ – இகழ்ச்சிக்குறிப்பிடைச்சொல்.

சிலர் வாய்படைத்த பயன் வளப்பமானஉணவை உண்ணுதலே யென்பர்;
வேறுசிலர் முகவாசப் பொருள்களால் வாயை மணக்கச்செய்தலே வாய் படைத்தபயனென்பர்:
ஞானநூல்களைக் கற்றலே வாய்படைத்த பயனென்பர் மற்றுச்சிலர்: உண்மையிலோ இவையொன்றுமன்று:
திருத்துழாய் பரிமளத்தோடே அங்குரிக்குமாறுபோலத் திருவவதரிக்கும்போதே ஞானநலத்தோடு திருவவதரித்த
நம்மாழ்வாரது திருவவதாரஸ்தலம் திருக்குருகூரென்று ஒருதரமேனுஞ் சொல்லுதலே வாய்படைத்தபய னென்பதாம்.
அங்ஙனம் அவ்வூரின் திருநாமத்தை ஒருமுறைகூறினாலும் முத்தி சித்திக்கு மென்பது, போதரும்.
உயிர்கட்குக் கரணகளேபரங்களைக் கடவுள் அளித்ததற்குக் காரணம் – தன்னையும் தன்னடியாரையும் அடைந்து
ஈடேறுதற்பொருட்டே யாகு மென்ற நூற்கொள்கை இங்குக் கருதத்தக்கது.

வளந்தழைக்க உண்ணுதல் – அறுசுவையுணவை அமர்ந்துஉண்ணுதல். முகவாசப்பொருள்களாவன –
“தக்கோலந் தீம்பூத் தகைசாலிலவங்கங், கர்ப்பூரம் சாதியோ டைந்து”.
“கற்றதனாலாய பய னென்கொல் வாலறிவ, னற்றாடொழாஅ ரெனின்,”
“கற்ககசடறக்கற்பவை கற்றபின், நிற்க வதற்குத்தக” என்றவாறு நூற்பொருள்களைக் கற்றாலும்
அதற்குத்தக்க ஒழுக்க மில்லாவிடின் பயனில்லை யாதலால், ‘தெளிந்தகலை கற்றா லென் சீசீ என்றார்.
நூற்பொருளைக் கற்காவிடினும், “சடகோபனூற் – குரு கூர்” என்று சொல்லவே, வாய்படைத்த பயன் பெறுவரென்ற
கருத்து இங்குத் தொனிக்கும். கர்ப்பத்திலிருக்கிறபொழுது ஞானமுடையனவாயிருக்கின்ற குழந்தைகளைப் பிறந்தவுடனே
தனது ஸ்பரிசத்தால் அஜ்ஞாநத்துக்குஉள்ளாக்கி அழுதல் அரற்றுதல் முதலியன செய்யும்படி பண்ணிவிடுந் தன்மையதான
ஸடம் என்னும் வாயு இவ்வாழ்வார் திருவவதரித்தபொழுது இவரையுந் தொடுதற்குவர, அப்பொழுது இவர்
அதனை உங்காரத்தால் ஒறுத்து ஓட்டி ஒழித்ததனால், ‘சடகோபர்’ என்று இவர்க்குத் திருநாமமாயிற்று.

ஒருகால் பிரமன் எங்குத் தவஞ்செய்வது? என்று சிந்தைகொண்டிருக் கையில், “க – பிரமனே! குரு – (இங்குத் தவஞ்) செய்’ என்று
இத்தலத்தைச் சுட்டி ஆகாயவாணி மொழிந்ததனால் இதற்கு ‘குருகாபுரீ’ என்று பெயர்வந்த தென்பர்.
இத்தலம், நம்மாழ்வார்திருவவதரித்த தலமாதல்பற்றி, ‘ஆழ்வார் திருநகரி’ என்று பெயர்பெறும்.

—————

50-திருத் தொலைவில்லி மங்கலம் —

வாயும் மனைவியர் பூ மங்கையர்கள் எம்பிராற்கு
ஆயுதங்கள் ஆழி முதல் ஐம் படைகள் தூய
தொலை வில்லி மங்கலம் ஊர் தோள் புருவம் மேனி
மலை வில் இமம் கலந்த வான் –50–

(இ – ள்.) எம் பிராற்கு – எமது ஸ்வாமிக்கு, –
வாயும் மனைவியர் – பொருந்திய தேவிமார்,
பூமங்கையர்கள் – தாமரைமலரில் வாழ்கின்ற ஸ்ரீ தேவியும் பூதேவியு மாவர்;
ஆயுதங்கள் – படைக்கலங்கள்,
ஆழி முதல் ஐம்படைகள் – சக்கரம் முதலிய பஞ்சாயுதங்களாம்;
ஊர் – திவ்வியதலம்,
தூய தொலைவில்லிமங்கலம் – பரிசுத்தமாகிய தொலைவில்லிமங்கல மென்பதாம்;
தோள் – தோளும்,
புருவம் – புருவமும்,
மேனி – திருமேனிநிறமும், (முறையே),
மலை – பருவதமும்,
வில் – வில்லும்,
இமம் கலந்த வான் – குளிர்ச்சி பொருந்திய ஆகாசமும் போலும்; (எ – று.)

‘பூமங்கையர்’ என்பதில், இரட்டுறமொழிதலால், பூ என்பதைத் தமிழ்மொழியாகக் கொண்டு,
தாமரைமலரில்வாழ்கிற என்றும், ‘பூ’ என்ற வடமொழியின் திரிபாகக்கொண்டு பூமியாகிய என்றும்
இருவகைப் பொருளும் ஒருங்கே கொள்ளப்பட்டன;
“பங்கயமின்னொடு பார்மகள் தேவி,”
“பூமடந்தையும் நிலமடந்தையும் தேவியர்,”
“தேவிமாராவார் திருமகள் பூமி” என்பன காண்க. ‘தோள் – மலை, புருவம் – வில், மேனி – வான்’ என்று முறையே
சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
இமங்கலந்தவான் என்பதற்கு – பனிபொருந்திய விசும்பு எனவும், குளிர்ச்சி பொருந்திய காளமேகம் எனவும் பொருள்கூறினுமாம்.

————-

51-ஸ்ரீ வர மங்கை –

வானோர் முதலா மரம் அளவா எப்பிறப்பும்
ஆனேற்கு அவதியிடல் ஆகாதோ தேன் ஏயும்
பூவர மங்கை புவி மங்கை நாயகனே
சீ வர மங்கை அரை சே –51-

(இ – ள்.) தேன் ஏயும் பூ வர மங்கை – தேன்நிரம்பிய தாமரைமல ரில் வசிக்கின்ற சிறந்த பெரியபிராட்டியார்க்கும்,
புவிமங்கை – பூமிப்பிராட்டி யார்க்கும்,
நாயகனே – தலைவனே!
சீவரமங்கை அரசே – ஸ்ரீவரமங்கை யென்னுந் திவ்விய தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனே! –
வானோர் முதல் ஆ – தேவர்பிறவி முதலாக,
மரம் அளவு ஆ – தாவரப்பிறவி ஈறாக வுள்ள,
எ பிறப்பும் ஆனேற்கு – எல்லாப்பிறவிகளையும் எடுத்து வருந்திய எனக்கு,
அவதி இடல் ஆகாதோ – (இனி யாயினும்) ஒருமுடிவை யேற் படுத்துதல் கூடாதோ? (எ – று.)

தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவரங்களாகின்ற நால்வகையோனிகளிலும் பிறந்து பிறந்து வருந்தி உன்னை யடைக்கலம்
புகுதாது எய்த்த பாவியாகிய எனக்கு, இப்போது உன்னைச் சரணமாக அமர்ந்துபுகுந்து நிற்கின்ற நல்லறிவை நீ அருளியிருத்தலால்,
இனியாவது அப்பிறவித்துயரம் நேராதவாறு என்னைக் கடைக்கணித்துப் பாதுகாக்கவேண்டு மென்பதாம்.
வானோர்முதலா மரம் அளவா எப்பிறப்பு என்பதற்கு – தேவர் மனிதர் விலங்கு புள் ஊர்வன நீர்வாழ்வன தாவரம்
எனப்படுகின்ற ஏழுவகைப்பிறப்பு எனக் கூறுதலு முண்டு.
“முன்னம்பிறந்த பிறப்போ முடிவில்லை.
யின்னம் பிறப்பிக்க வெண்ணாதே – தென்னரங்கம்,
மேவிக்கிடந்தானே வீற்றிருக்க நின்பதத்தென்,
னாலிக் கிடந்தா னருள்’ என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.

சீவரமங்கையென்பது – அத்தலத்திற்கு, அங்குஎழுந்தருளியுள்ள நாச்சியாரின் திருநாமத்தால் வந்தது;
அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் திருநாமத்தைக்கொண்டு, இந்தத் திவ்வியதேசத்தை ‘வானமாமலை’ என்றும் வழங்குவர்;
அதற்கு ஏற்றவடமொழித்திருநாமம், “தோதாத்ரி’ என்பது.

—————

52-திருப்பேரை –

அரைசு ஆகி வையம் முழுது ஆண்டாலும் இன்பக்
கரைசார மாட்டார்கள் கண்டீர் முரைசு ஆரும்
தென் திரைப் பேரைப் பதியான் சீர் கேட்டு நாவில் அவன்
தன் திருப் பேரைப் பதியா தார் –52-

(இ – ள்.) முரைசு ஆகும் – பேரிகைவாத்தியம் முழங்கப்பெற்ற,
தென் திருப்பேரை பதியான் – தெற்கின்கணுள்ள திருப்பேரையென்னுந் திவ்விய தலத்தி லெழுந்தருளிய திருமாலினது,
சீர் – சிறப்பை,
கேட்டு – காதினாற் கேட்டு,
அவன்தன் திருப்பேரை – அப்பிரானது (மகரநெடுங்குழைக்காதன் என்னுந்) திருநாமத்தை,
நாவில் பதியாதார் – தமதுநாக்கினிடத்தில் திருத்தமாக உச்சரியாதவர்கள், –
அரைசு ஆகி – ஒருநாயகமாய்,
வையம் முழுது ஆண்டாலும் – நிலவுலகமுழுவதையும் அரசாட்சிசெய்தாலும்,
இன்பம் கரை சார மாட்டார்கள் – பேரின்பத்திற்குஎல்லைநிலமாகிய முத்தியுலகத்தை அடையமாட்டார்கள்; (எ – று.) –
கண்டீர் – முன்னிலையசை; தேற்றமுமாம்.

தென்திருப்பேரைத்திருமாலினது திருநாமத்தைச் செவியினாற்கேட் டாலும் நாவினாலுச்சரித்தலும் செய்தால்,
பேரின்பத்திற்குஇடமாகிய முத்தியுலகம் வாய்க்கு மென்பதாம். இம்மையிற் பெருஞ்செல்வம்பெற்றுப்
பெரு வாழ்வு வாழ்ந்தாலும் அது இம்மையிலேயே யொழிந்திடுவ தன்றி,
அதனால் மறுமையில் யாதொருநற்பயனுங் கைகூடா தென்க.

அரைசு = அரசு: முரைசு = முரசு: எதுகைநோக்கிய இடைப்போலிகள்.
முரசுஎன்பது – வெற்றிமுரசு கொடைமுரசு மங்கலமுரசு என்ற மூன்றையுங் குறிக்கு மென்றாவது,
சிறப்புப்பெயர் பொதுப்பொருளின்மேலதாய் மங்கலத்தின் பொருட்டு முழங்குகின்ற
வாச்சியங்களெல்லாவற்றையுங் குறிக்கு மென்றாவது கொள்க.

———–

53-ஸ்ரீ வைகுந்தம் –தலைவி இளமை கண்டு செவிலி இரங்குதல் –

தார் உடுத்துத் தூசு தலைக்கு அணியும் பேதை இவள்
நேர் உடுத்த சிந்தை நிலை அறியேன் போர் உடுத்த
பாவைகுந்தம் பண்டு ஒசித்தான் பச்சைத் துழாய் நாடும்
சீ வைகுந்தம் பாடும் தெளிந்து -53–

(இ – ள்.) தார் உடுத்து – (முடியிற்சூடவேண்டிய) பூமாலையை (அரையில்) உடுத்துக்கொண்டு,
தூசு தலைக்கு அணியும் – (அரையில் அணியவேண்டிய) ஆடையை முடியின்மீது தரித்துக்கொள்ளுகின்ற,
பேதை – அறிவு நிரம்பாப் பருவத்தளாகிய,
இவள் – இந்தப்பெண், –
தெளிந்து – மனத் தெளிவுகொண்டு,
போர் உடுத்த – போர்புரிதற்குச் சித்தமாய்நின்ற,
பாவை – பெண்ணாகிய தாடகையானவன் (தன்மீது எறிந்த),
குந்தம் – சூலாயுதத்தை,
பண்டு – முற்காலத்தில் (இராமாவதாரத்தில்)
ஒசித்தான் – (தனது வில்லம்பையேவி முறித்த) திருமாலினது,
பச்சை துழாய் – பசுமை யாகிய திருத்துழாய்மாலையை,
நாடும் – விரும்புவாள்;
சீவைகுந்தம் பாடும் – (அத்திருமாலெழுந்தருளியிருக்கிற) ஸ்ரீவைகுண்டமென்னுந் திவ்வியதலத் தைப்பற்றிப் பாடல்பாடுவாள்;
நேர் உடுத்த சிந்தை நிலை அறியேன் – நேர்மையாகச் சென்றுகொண்டிருந்த (இவளது) மனம்
(இவ்வாறு மாறிய) நிலையைப்பற்றி (யான்) அறியகில்லேன்; (எ – று.)

தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைமகள் அவன் தன்னைப்பிரிந்ததனா லாற்றாது மிகவருந்தி,
மேனிமெலிந்து அப்பிரானது திருத் துழாய்மாலையைச் சூடுவது அப்பிரானது திவ்வியதலத்தைச் சொல்வது
முதலியன செய்து ஒருவாறு ஆறியிருக்கப் பார்க்க, அவ்வேறுபாடுகண்ட செவிலித்தாய்,
“மிக்கஇளமைப்பருவத்தளாகிய இவளுக்குப் பருவம்நிரம்பிய வர்க்கு வரக்கடவ தன்மை நேர்ந்தது என்னோ!’ என்று
இரங்கிக் கூறியது, இது. தலைமகளதுஇளமைப்பருவத்தை விளக்குவாள், இன்னஇடத்தில் ஆடையையுடுப்பது,
இன்னவிடத்தில் மாலையையணிவது என்னவும் தெரியாத பேதை என்றாள்:
“செய்யநூலின்சிற்றாடை செப்பனுடுக்கவும்வல்லளல்லள்,”
“பேசவுந்தெரியாத பெண்மையிற் பேதையேன் பேதை யிவர்” என்றார் பெரியாழ்வாரும்.
இவள் யௌவநபருவத்தையடைந்திருந்தும் இவள்தாய்மார்க்கு அன்புமிகுதியால் இவளது மிக்கஇளமையே தோற்றுவதென்க.
மகளிர்க்குஉரிய பருவம் ஏழனுள் முதலதாகிய பேதைப்பருவத்திலேயே இவளுக்கு இத்தன்மையதான வியாமோகம் உண்டானால்,
யாம் சொல்லத்தகுவது யாது? என்பதாம். பேதைப்பருவத்திற்கு வயதுஎல்லை – ஐந்துமுதல் ஏழளவும் என்பர்.
“பிஞ்சாப்பழுத்தாளையாண்டாளை” என்றாற் போல வேட்கைபிறவாப் பருவமே தொடங்கி இவள் வேட்கை விஞ்சின ளென்றவாறு.
பேதை இவள் தாருடுத்துத் தூசு தலைக்கு அணியும் என இயைத்து – பேதையாகிய இவள்
(தலைமகனிடத்துஈடுபாட்டினால்) தாரை அரையி லுடுப்பதும், தூசைத் தலையிலணிவதும் செய்கின்றாளெனப் பொரு ளுரைப்பினும் அமையும்:
இவ்வாறாகிய செய்கைமாறாட்டம், மந்மதாவஸ்தைகள் பத்தனுள் உந்மாதாவஸ்தையின் செயலாகும்.
பாவைகுந்தம் பண்டொசித்தான் பச்சைத்துழாய்நாடும் சீவைகுந்தம்பாடும் –
“வெற்பென்று வேங்கடம்பாடும்வியன் துழாய்க், கற்பென்றுசூடுங் கருங்குழல்மேல்” என்பது பேயாழ்வார்பாசுரம்.

ஐயங்காரது ஆற்றாமையைக்கண்டஞானிகள் ‘எம்பெருமானைச் சேரப் பெறுதற்கு உபாயமான பக்திமுதலியன
பூர்ணமின்றியிருக்க, இவருக்கு உண்டாகிய விரைவு என்னோ?’ என்றுசொல்லும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.

விசுவாமித்திரமுனிவரது வேண்டுகோளினால் தசரதசக்கரவர்த்தி ராம லக்ஷ்மணர்களை அவர்செய்யும்
யாகத்தைப் பாதுகாத்தற் பொருட்டாக அம்முனிவரின் பின்னே அனுப்பியபோது, அவர்பின்சென்ற இராமபிரான்
எதிர்த்துப்போர்செய்த தாடகையென்பாள் தன்மீது வீசியெறிந்த சூலாயுதத்தைத் தனதுவில்லினால் முறித்துத் தள்ளிய விவரத்தை,
“கங்கைத் தீம்புனனாடன் கருத்தையும், மங்கைத்தீயனையாளு மனக்கொளாச்,
செங் கைச்சூலவெந்தீயினைத் தீயதன், வெங்கட்டீயொடு மேற்செலவீசினாள்,”
“மாலு மக்கணம் வாளியைத்தொட்டதும், கோலவிற் கால்குனித்ததுங் கண்டிலர்,
காலனைப்பறித்தக்கடியாள்விட்ட, சூலமற்றனதுண்டங்கள் கண்டனர்” என்ற கம்பராமாயணத்தால் அறிக.

—————–

54-திருப் புளிங்குடி-தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல் –

தெளியும் பசும் பொற் சிறைக் காற்று வீச
விளியும் துயர் போய் விடுமே எளியேற்கு
அருளப் புளிங்குடி வாழ் அச்சுதனைக் கொண்டு
கருளப் புள் இங்கு வந்தக் கால் –54–

(இ – ள்.) எளியேற்கு ஏழையேனாகிய எனக்கு,
அருள – திருவருள் புரியுமாறு,
புளிங்குடி வாழ் – திருப்புளிங்குடியென்னுந் திவ்வியதலத்தில் வாழ்கின்ற,
அச்சுதனை – அழிவில்லாத கடவுளை,
கொண்டு (தனதுதோ ளின்மீது) எழுந்தருளப் பண்ணிக்கொண்டு,
கருளப்புள் – கருடாழ்வான்,
இங்கு வந்தக்கால் – (நான்வசிக்கின்ற) இவ்விடத்து வந்தால், –
(அப்போது), தெளியும் – தெளிந்த,
பசும் பொன் – பசிய பொன்மயமாகிய,
சிறை – (அப் பெரிய திருவடியின்) இறகுகளினின்று,
காற்று வீச – காற்று (என்மீது) வீசுதலாலே,
விளியும் துயர் – (இப்பொழுது எனக்குநேர்ந்துள்ள) மரணத்தை யுண்டாக்குவது போலும் பெருந்துயரமும், போய்விடும் -; (எ – று.)

தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைமகள் அப்பிரிவுத் துயரை யாற்றி யடக்கும் வல்லமை யிலளாகித்
தன் நிலையை அன்புடைத் தோழியர்க்கு வெளிப்படையாக உரைத்தது இது.
இப்பொழுதே எனது தலைவனாகிய எம்பெருமான் கருடாரூடனாகவந்து என்னைச் சார்ந்தால்மாத் திரமே எனது உயிர் நிற்கும்;
இல்லாவிடின் இறந்துபடு மென்று தன்னிலையைத் தெரிவிக்கின்றன ளென்க.
அவன் இங்கு எழுந்தருளினால் அவனது முகத்தைக் கண்டு பிழைக்கலா மென்பதும்,
அவன் கண்ணோட்டத்தைப் பெற்று உய்யலா மென்பதும் அவள் உட்கோள், தான்விரும்பிய பொருளைக் கொண்டு
வருவதுபற்றி, ‘தெளியும்பசும்பொற்சிறை’ என்று புகழ்ந்துகூறு வாளாயினாள்.
அத்தலைவனது சம்பந்தம் பெற்ற பெரியதிருவடியினது சிறைக்காற்று எனதுநோய் தணித்தற்கு ஏற்ற அருமருந்தாம் என்றவாறு.
தூது விடுத்தபொழுது, ஆழ்வார் “அவராவி துவராமுன், அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாளென்று,
அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி, யருள் ஆழிவரிவண்டே” என்று கூறியது காண்க.

எம்பெருமானை இடையீடின்றிச் சேரப்பெறாது வருந்துகின்ற ஐயங்கார் தமதுநிலைமையை அன்பர்க்கு உரைத்தல்,
இதற்கு உள்ளுறைபொருள். நம்மாழ்வார் இத்திருப்பதியை மங்களாசாசனஞ்செய்கையில்,
“பளிங்குநீர்முகிலின் பவளம்போற் கனிவாய்சிவப்ப நீகாணவாராயே” என்பது முதலிய பாசுரங்களால்
அப்பிரானைத் தாம் உள்ளவிடத்தில் வருமாறு வேண்டுவது, இங்குக் கருதத்தக்கது.

————-

55-திருவர குண மங்கை -பாங்கி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல் –

காலமும் நோயும் கருதாத அன்னைமீர்
வேலன் வெறியை விலக்குமின்கள் மால் ஆம்
வரகுண மங்கையன் தாள் வண் துழாய் மேல் ஆ
தர குணம் மங்கை தனக்கு –55–

(இ – ள்.) காலமும் – (இவளது) பருவத்தையும்,
நோயும் – (இவளுக்கு இப்பொழுது நேர்ந்துள்ள) நோயின் தன்மையையும்,
கருதாத – ஆராய்ந்து (உண்மை) அறியமாட்டாத,
அன்னைமீர் – தாய்மார்களே! –
மங்கை தனக்கு – (உங்கள்) பெண்ணுக்கு, –
மால் ஆம் – திருமாலாகிய,
வரகுணமங்கையன் – திருவரகுணமங்கையென்னுந் தலத்தி லெழுந்தருளிய பெருமானது,
தாள் – திருவடிகளிற்சாத்திய,
வன் துழாய்மேல் – வளப்பமுள்ள திருத்துழாயின் மீது,
ஆதர குணம் – ஆசையாகிய குணம், (உளது): (ஆதலால்),
வேலன் வெறியை – வேன்மகனது வெறியாட்டை,
விலக்குமின்கள் – நீக்கிவிடுங்கள்; (எ – று.)

களவொழுக்கத்தால் தலைமகளைக் கூடிய தலைமகன் பின்பு அவளை வெளிப்படையாக மணஞ்செய்து
கொள்ளுதற்பொருட்டுப் பொருள்தேடிவருதற்காக அவளைப்பிரிந்துசென்று வரவுகுறித்தகாலத்தில் வாராது நீட்டிக்க,
அந்நிலையிற் பிரிவாற்றாது மிகவருந்திய தலைமகளைச் செவிலித்தாய்மார் எதிர்ப்பட்டு அவளது வடிவுவேறுபாட்டை நோக்கி
“இவள் இங்ஙனம் மெலிதற்குக் காரணம் என்னோ?’ என்று கவலையுற்றுக் கட்டுவிச்சியைக் குறிகேட்க,
அவளும் தன்மரபின்படி ஆராய்ந்து ‘இவளுக்கு முருகக்கடவுள் ஆவேசித்ததொழியப் பிறிது ஒன்றுமில்லை’ என்று கூற,
அதுகேட்ட செவிலித்தாயர் உடனே தலைமகள்பக்கல் தமக்குஉள்ள அன்பின்மிகுதியால்
‘ஏதேனும் ஒருதெய்வத்தை வழிபட்டாகிலும் இவளை உயிர்த்திருக்கப்பெறில் அதுவே நமக்கு ஆத்மலாபம்’ என்று
எண்ணி வழியல்லாவழியிலே யிழிந்து அதற்குப் பரிகாரமாக வேலனெனப்படுகிற வெறியாட்டாளனை
யழைப்பித்து அவனைக்கொண்டு ஆவேசமாடுவிக்க முயல, நோயொன்றும் மருந்தொன்று மாதலால்
தான் காதலித்த புருஷோத்தமனான தலைமகனது தகுதிக்கு ஏலாத அச்செயலை நோக்கித் தலைமகள் மேன்மேல் மிகவருந்த,
அவளது துன்பத்தின் உண்மைக்காரணத்தை யுணர்ந்த தோழி அச்சமயத்திற் செவிலியரை நோக்கி வெறிவிலக்குமாறு கூறி,
தலைவியினது துன்பத்தின் உண்மைக்காரணத்தை யுணர்த்துகின்ற துறை இது.
ஆழ்வார் திருவாய்மொழியில் “தீர்ப்பாரையாமினி” என்று தொடங்குகிற வெறிவிலக்குப்பதிகத்திலும்
“இதுகாண்மினன்னைமீரிக் கட்டுவிச்சிசொற்கொண்டுநீ,
ரெதுவானுஞ்செய்தங்கோர்கள்ளுமிறைச்சியுந் தூவேன்மின்,
மதுவார்துழாய்முடிமாயப் பிரான்கழல்வாழ்த்தினா,
லதுவே யிவளுற்றநோய்க்கு மருமருந்தாகுமே” என்று அருளிச்செய்தமை யறிக.

முருகக்கடவுளது வேலைத் தனக்குஅடையாளமாக ஏந்திக்கொண்டு நின்று ஆடுதலால், ‘வேலன்’ எனப்பட்டான்;
‘வேன்மகன்’ என்றும் இவனை வழங்குவர். ‘இவ்வகம் தேவதாந்தரசம்பந்தமுடையார் புகும் அகமன்றுகாண்’ என்று வெருட்டுபவளாய்
‘வேலன்வெறியை விலக்குமின்கள்’ என்றாள்;
“கூராராழிவெண்சங்கேந்தி” என்று சொல்லுகிறபடியே கையுந்திருவாழியுமாகக் காணவேண்டியிருக்கிறவிடத்தே
கையும் வேலுமாக இவன் வந்து தோற்றுவதே! என்று வெறுத்தவாறு.
அன்னைமீர் – உண்மைக்காரணம் உரைக்கப்படுதற்கு உரிமையையும் இவளியல்பிற்கு ஏற்றபடி நன்மை
செய்யும் வாற்சலியத்தையும் உடையவர்களே! என்றபடி. தலைவனது திருமேனி யழகிலும் திவ்யாத்ம
குணத்திலும் ஈடுபட்டனள் இம்மங்கை யென்பாள், ‘மாலாம்வரகுணமங்கையன்’ என்றாள்.
திருமாலாகிய தலைமகனால் நேர்ந்த நோய்க்கு அவனது தொடர்புடைய பொருளல்லது மாற்றுமருந்தில்லை யென்பது, தேர்ந்தபொருள்.

தமதுஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்தவளவிலே அவனதுபிரிவைப் பொறாமல் வருந்துகின்ற
ஐயங்காரது துயரத்தைக் கண்ட ஞானிகள், அவர்பக்கல் வைத்த பரிவா லுண்டான கலக்கத்தால் எம்பெருமான்
உபாயாந்தரங்களால் அடையத்தக்கவனல்ல னென்பதை மறந்து, தேவதாந்தரபஜநத்தாலாவது இவரது
ஆற்றாமையைத் தணிப்பிக்கலாமோ? என்று தொடங்கியநிலையில்,
ஐயங்காரதுதன்மையை யறிந்த அன்பர்கள் விலக்கிக்கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.
“வேலன் வெறியை விலக்குமின்கள்’ என்றவிடத்து தேவதாந்தரசம்பந்தமுடையாரது சேர்க்கையும் மறந்தும்
புறந்தொழா மாந்தரான பாகவதர்க்குக் குறிக்கொண்டுவிலக்கத்தக்க தென்பது, பெறப்படும்.
ஞானிகள்தாம் அங்ஙனம் வழியல்லாவழியில் இழிவார்களோ என்னில்? – ஐயங்கார்பக்கல் தாம்கொண்ட பரிவின்மிகுதி
தம்மைக் கலங்கப்பண்ணுகையால், அமார்க்கங்களாலே யாகிலும் பரிகரிக்கப்போமோ வென்று முயன்றன ரென்க;
(இதனை, “அயோத்யாபுரியிலுள்ள ஜநங்களெல்லாரும் இராமபிரானுடைய க்ஷேமத்தின்பொருட்டு எல்லாத்
தேவர்களையும் வணங்கினர்’ என்றதனோடு ஒப்பிடுக.) அன்னைமீர் என்று விளித்ததனால், முதியரான நீர் இளையரான
எமது வார்த்தையை உபேக்ஷிக்கலாகா தென்று குறிப்பித்தபடி.
ஸேஷபூதர் இழியுந் துறை ஸேஷியின் திருவடிகளே யாதலால், ‘தாள்துழாய்மேலாதரம்’ என்றனர்.

———–

56-திருக்குளந்தை

தனக்கு உடலம் வேறான தன்மை உணரார்
மனக் கவலை தீர்ந்து உய்ய மாட்டார் நினைக்கில்
திருக் குளந்தை யார் உரைத்த சீர்க் கீதை பாடும்
தருக்கு உளம் தையாமல் இருந்தால் –56-

(இ – ள்.) நினைக்கில் – ஆராய்ந்துபார்க்குமிடத்து, –
திருக்குளந்தையார் உரைத்த – திருக்குளந்தையென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய திருமால் திருவாய்மலர்ந்தருளிய,
சீர் கீதை – சிறந்தபகவத்கீதையை,
பாடும் – படிப்பதனாலுண்டாகிய,
தருக்கு – மனக்களிப்பு,
உளம் – (ஒருவனது) மனத்தில்,
தையாமல் இருந்தால் – பதியாமலிருந்தால், – (அவன்),
தனக்கு – (ஆன்மாவாகிய) தன்னைக்காட்டிலும்,
உடலம் – உடம்பு,
வேறு ஆன – வேறுபட்டுள்ள,
தன்மை – நிலையை,
உணரான் – அறியமாட்டான்;
மனம் கவலை தீர்ந்து – (ஸம்ஸாரபாசத்தால்நேரும்) மனக்கவலை மாறி,
உய்யமாட்டான் – நற்கதியடையமாட்டான்; (எ – று.)

பாரதயுத்தத்து முதனாட்போரில் “உற்றாரையெல்லாம் உடன்கொன்று அரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்” என்று
எண்ணி, ஸ்வதர்மத்தில் அதர்மபுத்தியால் போர்புரியேனென்று காண்டீவம் கைந்நெகிழத் தேர்த்தட்டின்மீதே
திகைத்துநின்ற அருச்சுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் தத்துவோபதேசஞ்செய்து அவனது கலக்கத்தைப் போக்கிய
கீதையைப் படித்து அதன்பொருளை மனத்திற்கொண்டு ஆனந்தமடைபவரே “ஆத்மா வேறு, சரீரம் வேறு’ என்கிற
தேஹாத்மவிவேகம் பிறந்து, தத்துவவுணர்ச்சியால் மனக்கவலைதீர்ந்து வாழ்வ ரென்பதாம்.

ஸ்ரீகிருஷ்ணன் கீதையில் முதலிலே அர்ஜ்ஜுநனுக்கு தேஹாத்மவிவேகத்தைப் போதித்து அதன்மூலமாகக்
கர்மயோகம் புருஷோத்தமவித்யை அவதாரரஹஸ்யஜ்ஞாநம் விச்வரூபம் முதலியவற்றை உபதேசிக்க,
அர்ஜ்ஜுநன் அந்த எம்பெருமான் உபதேசித்த உபாயவிசேஷங்களைக் கேட்டு அவை செயற்கரியனவென்றும்
ஸ்வரூபவிரோதிகளென்றும் நினைத்துக் கலக்கமடைய, அவனுடைய கலக்கந் தீருமாறு எல்லாவுபாயங்களினும்
மேம்பட்ட பிரபத்தியுபாயத்தை உபதேசித்து, “அஹந்த்வாஸர்வபாபேப்யோமோக்ஷயிஷ்யாமிமாசுச:
(நீ என்னையே சரணமாகப்பற்றினால் நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிப்பேன்; கலங்கவேண்டா)” என்று
அவனது கலக்கத்தைப் போக்கியமை காண்க.
இங்கு, கீதையின் முதலிற் கூறிய தேஹாத்ம விவேகமும், இறுதியிற் கூறிய எம்பெருமானால் அபயமளிக்கப்
பெற்றுக் கலக்கம் நீங்குதலும் கீதையைப் படியாதார்க்கு உளவாகா வென்று கூறிய முகத்தால்,
அந்நூலின் இடையிற் கூறிய கர்மயோகம் முதலியவற்றைப்பற்றிய விஷயங்களையும் பெறவைத்தன ரென்க.

“அறிவினாற்குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய,
நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத்தொருமூர்த்தி” என்றபடி
ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரன் தனது திருவாக்கினின்று உலகத்தார் நற்கதிபெறவேணுமென்ற கருத்தோடு
உபநிஷத்துக்களின் ஸாரமாக வெளியிட்ட தாதலின், இந்தக்கீதை, எல்லாநூல்களினுஞ் சிறந்த பிரமாணமாய்த்
தன்னை யுணர்ந்தார்க்குத் தத்துவஞானத்தைப் பிறப்பித்து நற்கதியளிக்குந் திறத்தது;
பதினெட்டு அத்தியாயங்களை யுடையது; ஸ்ரீமகாபாரதத்தில் பீஷ்மபர்வத்திலுள்ளது.

இந்தத்தலம் – பெரியகுளத்தையுடைய தாதலின், ‘பெருங்குளம்’ என்று வழங்குகின்றது;
ஆகவே, குளந்தை யென்பது மரூஉமொழிபோலும்.

————-

57-திருக் குறுங்குடி —

தாலத்து இழி குலத்துச் சண்டாளர் ஆனாலும்
மேல் அத்தவத்தோரின் மேன்மைத்தே -கோலக்
குறுங்குடி வாழ் மாயன் குறை கழற்கு ஆள் ஆகப்
பெறும் குடியாய் வாழ்வார் பிறப்பு –57-

(இ – ள்.) கோலம் – அழகிய,
குறுங்குடி – திருக்குறுங்குடி யென்னுந் திவ்வியதலத்தில்,
வாழ் – நித்தியவாசஞ்செய்கின்ற,
மாயன் – திருமாலினது,
குரை கழற்கு – ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகட்கு,
ஆள் ஆக பெறும் – அடிமையாகப்பெறுகின்ற,
குடி ஆய் – சந்ததியிற் பொருந்துபவராய்,
வாழ்வார் – வாழ்கின்றவர்களுடைய,
பிறப்பு – ஜந்மமானது, –
தாலத்து – இந்நிலவுலகில்,
இழி குலத்து – தாழ்ந்தசாதியைச்சேர்ந்த,
சண்டாளம் ஆனாலும் – சண்டாளஜந்மமேயானாலும், –
மேல் – உயர்குடிப்பிறப்பையுடைய,
அ தவர்அதனின் – அந்தமுனிவரது பிறவியைக்காட்டிலும்,
மேன்மைத்து – உயர்வையுடையதாம்; (எ – று.)

திருக்குறுங்குடியி லெழுந்தருளியுள்ள நம்பியென்னுந் திருமாலினது திருவடிகட்கு ஆட்பட்டார் சண்டாள
ஜந்மத்திற் பிறந்தாராயினும் உயர்குடிப்பிறந்த அந்தணாளரினும் மிகவும் மேம்பட்டவராவ ரென்பதாம்.
ஐயங்கார் இத்தலத்தைப் பாடுகையில் இவ்வாறுகூறியது – சண்டாள ஜந்மத்திற் பிறந்த நம்பாடுவான்
தன்னை யுண்ணுமாறு வந்த பிரமரக்ஷஸுக்கு முன்பு சபதஞ்செய்துகொடுத்து, இத்தலத்து எம்பெருமானைக்
குறித்துக் கைசிகமென்னும் பண்பாடி வழிபட்டு மீண்டு, முன்னர்ப் பிராமணனாகிக் கருமா நுஷ்டாநத்திற் கொத்தையினால்
பிரமரக்ஷஸான அவனை உய்விக்குமாறு அவனினும் மேம்பட்டா னென்ற சரிதத்தை உட்கொண்டுபோலும்.
ஒருவனுக்கு உயர்வு “ஆக்குமறிவானலது பிறப்பினால், மீக்கொளுயர்விழிவு வேண்டற்க” என்றபடி
தத்துவவுணர்ச்சியினாலேயன்றிப் பிறவியினாலன்று என்பது, இதன் கருத்து.

உயர்குடிப்பிறந்தோராயினும் தத்துவவுணர்ச்சியின்மையால் திருமாலை வழிபடாதவர்
சண்டாளரினும் தாழ்ந்தவராவ ரென்பது, இங்குப்போதரும்;
“அடிமையிற் குடிமையில்லா அயல்சதுப்பேதிமாரில்,
குடிமையிற்கடைமைப்பட்ட குக்கரிற் பிறப்பரேனும்,
முடியினிற் றுளபம்வைத்தாய் மொய்கழற்கன்புசெய்யும்,
அடியரை யுகத்திபோலும் அரங்கமாநகருளானே,”
“அமரவோரங்கமாறும் வேதமோர்நான்கு மோதித்,
தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும்,
நுமர்களைப்பழிப்பராகில் நொடிப்பதோரளவிலாங்கே,
அவர்கள்தாம் புலையர்போலும் அரங்கமாநகருளானே” என்ற திருமாலைப்பாசுரங்களும்,
“ப்ராஹ்மண்யம் விலைச்செல்லுகிறது – வேதாத்யயநாதி முகத்தாலே பகவல்லாபஹேதுவென்று;
அதுதானே இழவுக்கு உறுப்பாகில், த்யாஜ்றமாமியே, ஜந்மவ்ருத்தங்களினுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும்
பேற்றுக்கும் இழவுக்கும் அப்ரயோஜகம்; ப்ரயோஜகம் – பகவத்ஸம்பந்தமும் ததஸம்பந்தமும்” என்பவை முதலிய
ஸ்ரீவசநபூஷணவாக்கியங்களும் இங்குக் காணத்தக்கன.
“பாதியாயழுகிய கால்கையரேனும் பழிதொழிலு மிழிகுலமும் படைத்தாரேனும்,
ஆதியாயரவணையாயென்பராகி லவரன்றோ யாம்வணங்குமடிகளாவார்,
சாதியாலொழுக்கத்தால் மிக்கோரேனும் சதுமறையால் வேள்வியால் தக்கோரேனும்,
போதில்நான்முகன் பணியப் பள்ளிகொள்வான் பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாமே” என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.

தாலம் – தலம் என்பதன் நீட்டல். ‘அத்தவர்’ என்பதில், அகரச்சுட்டு – பிரசித்திபற்றியது.
இனி, மேலத்தவர் என்பதை ஒருசொல்லாகக்கொண்டு, மேன்மையுள்ளவர் எனப் பொருள் கூறுவாரு முளர்;
இதில், அத்து அ – சாரியைகள்.

குறுகியவனான வாமனனது க்ஷேத்ர மாதலால், இத்தலத்திற்குக் குறுங்குடியென்று பெயர்வந்த தென்பர்.
இத்தலத்திலுள்ள எம்பெருமான்களுள் ஒரு எம்பெருமான் ஸ்ரீபாஷ்யகாரர்பக்கலிலே வேதாந்தார்த்தம் கேட்டு ஸிஷ்யனாய்
‘நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்’ என்கையாலே, அப்பெருமானுக்கு வைஷ்ணவநம்பியென்று திருநாமம்.
நம்மாழ்வார்திருவவதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தலத்துநம்பியே.

———-

58-திருக் கோளூர் –

பிறப்பு அற்று மூப்புப் பிணி அற்று நாளும்
இறப்பு அற்று வாழ இருப்பீர் புறப்பற்றுத்
தள்ளுங்கோள் ஊர் அரவில் தாமோதரன் பள்ளி
கொள்ளும் கோளூர் மருவுங்கோள் –58–

(இ – ள்.) பிறப்பு அற்று – பிறப்பு ஒழிந்து,
மூப்பு பிணி அற்று – கிழத்தனமும் வியாதியும் நீங்கி,
இறப்பு அற்று – மரணந் தவிர்ந்து,
நாளும் – எந்நாளும்,
வாழ – (முத்தியில் நிலைபெற்று) வாழும்படி,
இருப்பீர் – விருப்பங்கொண்டிருப்பவர்களே! – (நீங்கள்),
புறம் பற்று தள்ளுங்கோள் – மமகாரத்தை யொழியுங்கள்;
ஊர் அரவில் – மார்பினாலூர்ந்து செல்லுந்தன்மையதான சர்ப்பசாதியிற்சேர்ந்த திருவநந்தாழ்வான்மீது,
தாமோதரன் – திருமால்,
பள்ளிகொள்ளும் – சயனத்திருக்கோலமாகக் கண்வளர்ந்தருளுகின்ற,
கோளூர் – திருக்கோளூ ரென்னுந் திவ்வியதலத்தை,
மருவுங்கோள் – சென்று சேருங்கள்; (எ – று.)

திருவநந்தாழ்வானாகிய திருவணையின்மீது வைத்தமாநிதிப்பெருமாள் கண்வளர்ந்தருளப்பெற்ற திருக்கோளூரைச் சார்ந்தால்,
பிறப்பு இறப்பு முதலிய பிறவித்துன்பங்கள் யாவும் நீங்கி முத்திபெறலா மென்பதாம்.
புறப்பற்றைக் கூறியது – அகப்பற்றுக்கும் உபலக்ஷணம்.
அகப்பற்றாவது – தான் அல்லாத உடம்பை யானென்று கருதி அதனிடத்துப் பற்றுச் செய்வது.
புறப்பற்றாவது – தன்னோடு இயைபில்லாத உலகத்துப்பொருளை எனது என்று கருதி அதனிடத்துப் பற்றுச்செய்வது,
“யானெனதென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்தவுலகம் புகும்” என்ற திருக்குறளிலும்
இவ்விருவகைப் பற்றுக்களையும் அறுத்தவரே. உயர்கதிபுகுவ ரென்று கூறியிருத்தல் காண்க.
இருபற்றையுங் கெடுத்தலாவது – “தேசிகர்பாற்பெற்ற உறுதிமொழிகளாலேனும்,
யோகப்பயிற்சியாலேனும் அவை யான் எனது அன்மை தெளிந்து அவற்றின்கண் பற்றைவிடுதலாம்.’
“அற்றதுபற்றெனி லுற்றதுவீடுயிர்” என்பது – நம்மாழ்வார் பாசுரம்.
தள்ளுங்கோள், மருவுங்கோள் – தள்ளுங்கள், மருவுங்கள் என்பவை திரிந்துவந்தன.

நவநிதிகள் இங்கே ஒளித்துக்கொண்டிருக்கின்றன என்று அதருமம் குபேரனுக்குக் கோள்சொல்லிய இடமாதல்பற்றி,
இத்தலத்திற்குத் திருக்கோளூ ரென்று பெய ரென்பர்; பிஸுநக்ஷேத்ரம் என்று வடமொழியிற் பெயர்வழங்கும்;
மதுரகவியாழ்வார் திருவவதரித்த தலம் இது.

பாண்டியநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.

—————

மலை நாட்டுத் திருப்பதிகள் -13-

59–திருவனந்த புரம் –

கோள் ஆர் பொறி ஐந்தும் குன்றி உடலம் பழுத்து
மாளா முன் நெஞ்சே வணங்குதியால் கேளார்
சினந்த புரம் சுட்டான் திசை முகத்தான் போற்றும்
அனந்த புரம் சேர்ந்தான் அடி –59–

(இ – ள்.) நெஞ்சே – (எனது) மனமே! –
கோள் ஆர் பொறி ஐந்தும் – (விஷயங்களில் உன்னை) இழுத்துச் செல்லுந் தன்மை பொருந்திய ஐம்பொறிகளும்,
குன்றி – (தம்தமக்குஉரிய) வலிமையொடுங்கி,
உடலம் – உடம்பானது,
பழுத்து – (முதுமையினால்) தளர்ச்சியடைந்து,
மாளாமுன் – இறப்பதற்குமுன்னே, –
கேளார் – பகைவர்களாகிய அசுரர்கள்,
சினந்த – கோபித்துப்பொருதற்கு இடமாயிருந்த,
புரம் – திரிபுரங்களை,
சுட்டான் – (நெற்றிக்கண்ணினால்) எரித்தழித்தவனான சிவபெருமானும்,
திசைமுகத்தான் – நான்குதிசையையும் நோக்கிய நான்குமுகங்களையுடையவனான பிரமதேவனும்,
போற்றும் – துதித்துவணங்கப்பெற்ற,
அனந்தபுரம் சேர்ந்தான் – திருவனந்தபுரமென்னுந் திருப்பதியில் (சயனத்திருக்கோலமாக) எழுந்தருளியுள்ள பத்மநாபப்பெருமானுடைய,
அடி – திருவடிகளை,
வணங்குதி – வணங்குவாயாக; (எ – று.) – ஆல் – ஈற்றசை.

திரிமூர்த்திகளில் மற்றையிருமூர்த்திகளாலும் வணங்கப்பெற்ற திருமாலை மூப்பு முதிர்ந்து இறப்பு
நேர்தற்கு முன்னம் வணங்குவாயாக வென்று நெஞ்சைநோக்கி இதமுரைத்தவாறு;
“தடமுடைவயலனந்தபுரநகர் புகுதுமின்னே” என்றார் நம்மாழ்வாரும்.
திருவனந்தபுரத்துத் திருமாலின் திருவடியை வணங்குவதே ஆத்மாவுக்குப் பரமபிரயோஜந மென்க.
நினைத்தல் பேசுதல் தொழில்செய்தல் என்பன முறையே மனம்மொழி மெய் என்னுந் திரிகரணங்களின் செயலாதலால்,
அவற்றில் மெய்யின் செயலான வணங்குதலை மனத்தின்மேலேற்றி “நெஞ்சே வணங்குதி’ என்றது .
ஓருறுப்பின் வினையை மற்றோருறுப்பின்மேலேற்றிக் கூறும் ஒருவகையுபசாரவழக்காம்.
மெய்யினால் வணங்குதற்கும் மனத்தின் நினைப்பு இன்றியமையாது வேண்டுதலால், அத்தலைமைபற்றி,
இங்ஙனம் புறக்கரணத்தின்செயல் அகக்கரணத்தின்மே லேற்றப்பட்ட தென்க.
“நிலையாமையானவுடலு முயிரு நினைவுந்தம்மிற்,
கலையா மையானங்கலக்குமுன்னே கங்கைவைத்தசடைத்,
தலையாமையானனன் தாமரையான் தொழுந்தாளழகன்,
அலையாமையானவன் மாலிருஞ்சோலையடை நெஞ்சமே” என்ற அழகரந்தாதியோ டொத்த வாய்பாடுடையது, இச்செய்யுள்.
“குமரனார்தாதை துன்பந்துடைத்த கோவிந்தனார்” என்றபடி அங்குஎழுந்தருளிய எம்பெருமான் சிவபெருமானது
துயரத்தைப் போக்கினவ ராதலாலும், பிரமன் அப்பெருமானது நாபீகமலத்தில் தோன்றி எப்போதும் சேவித்துக் கொண்டிருத்தலாலும்,
‘கேளார் சினந்தபுரஞ்சுட்டான் திரைமுகத்தான் போற்றும் அனந்தபுரஞ்சேர்ந்தான்’ என்றார்.

————-

60-திரு வண் பரிசாரம் -பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கல்

அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள்
முடிகின்றாள் மூச்சு அடங்கு முன்னே கடிது ஓடி
பெண் பரிசு ஆர் அங்குப் பிறப்பித்து மீளுவார்
வண் பரிசாரம் சிறந்த மாற்கு –60-

(இ – ள்.) (தலைமகள்), – அடியும் குளிர்ந்தாள் – கால்களும் குளிரப் பெற்று,
அறிவும் குலைந்தாள் – அறிவும் அழியப்பெற்று,
முடிகின்றாள் – மரணமடையுந்தறுவாயி லிருக்கின்றாள்;
மூச்சு அடங்கும் முன்னே – (இவளது) சுவாசம் ஒடுங்குவதற்குமுன்னே (உயிரோடிருக்கையில்),
வண்பரிசாரம் கிடந்த மாற்கு – திருவண்பரிசாரமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியுள்ள திருவாழ்மார்பரென்னுந் திருமாலினிடத்தில்,
கடிது ஓடி – விரைந்துசென்று,
பெண் பரிசு – இப்பெண்ணின் தன்மையை,
பிறப்பித்து – விளங்கும் படி சொல்லித்தெரிவித்து,
மீளுவார் – திரும்ப வல்லவர், ஆர் – யாவர்? (எ – று.) – அங்கு – அசை; அவ்விடத்து எனினுமாம்.

தலைமகனோடு கூடிப்பிரிந்த தலைமகள் பிரிவாற்றாமையாற் படுகின்ற பெருந்துயரமுழுவதும் கண்டு
ஆற்றமாட்டாளான செவிலித்தாய், தன்னாற்றாமை மிகுதியால் தலைமகளினது நிலைமையைத் தலைமகனிடத்துச் சொல்லுதற்கு
ஏற்ற தூதுவர் இல்லாமை கண்டு இரங்கிக்கூறியது, இது.
மன்மதாவஸ்தை ஐந்தனுள் அயர்ப்பும் மயக்கமு முடைய மரணாவஸ்தை, இச்செய்யுளில் எடுத்துக்காட்டப்பட்ட தென்க.
அடிகுளிர்தல் – மரணத்திற்கு முற்குறி. மூச்சடங்குமுன்னே பிறப்பித்து மீளுவார் என இயையும்.
இவன் உயிரோடிருக்கையிலேயே இவளது செய்தியைத் தலைமகனிடத்துத் தெரிவித்துத் தலைமகனை இவளிடம் வந்து
சேருமாறு செய்தால்தான் இவள்உயிர்பெறுவளென்றாளாம்.
தலைமகனிடத்துச் சென்றுமீண்டுவருவதற்குச் சிறிது தாமதிக்குமாயின், இப்பெண்மகள் இறந்துபடுவளென்பாள்,
‘கடிது ஓடி மீளுவார் ஆர்’ என்றாள்.

வண்பரிசாரங்கிடந்தமாற்கு என்பதற்கு – திருவண்பரிசாரத்தில் சயனத் திருக்கோலமாகப் பள்ளிகொண்டிருக்கின்ற
திருமாலுக்கு எனப்பொருளுரைத்தல், சரியன்று;
“வண்பரிசாரத்திருந்தவென், திருவாழ்மார்பற்கு என்திறம்சொல்லார் செய்வதென்” என்ற நம்மாழ்வார் பாசுரத்தின்படி,
இத்திருப்பதியில் எம்பெருமான் வீற்றிருந்த திருக்கோலமாக எழுந்தருளியிருத்தலா லென்க.
“வண்பரிசாரம்மிகுந்தமாற்கு” எனப் பாடமோதுவாரு முளர்.

எம்பெருமானது பூர்ணாநுபவத்தைப் பெறாதபோது பலவாறுவருந்துகின்ற ஐயங்காரது நிலைமைகளை அவர்பக்கல்
பரிவுடையார் அறிந்து, அவரது நிலைமையை அப்போதே புருஷகாரமாகச்சென்று உரைப்பவர் இல்லாமை
நோக்கிப் பரிந்துகூறிய பாசுரம், இதற்கு உள்ளுறைபொருள்; பிறவும் உய்த்துஉணர்க.

———–

61-திருக் காட்கரை –

மாற்கமும் தாம் தாம் வழிபாடும் தெய்வமும்
ஏற்க உரைப்பார் சொல் எண்ணாதே தோற் குரம்பை
நாள் கரையா முன்னமே நல் நெஞ்சே நாரணன் ஆம்
காட்கரையார்க்கு ஆள் ஆகாய் காண் –61-

(இ – ள்.) நல் நெஞ்சே – (எனது) நல்லமனமே! –
தாம் தாம் – (உலகத்து மானுடரில்) அவரவர்கள்,
வழிபடும் – (கடவுளையடைதற்குக்) கைக்கொள்ளுகிற,
மார்க்கமும் – வழிகளும், (தாம் தாம் வழிபடும்) – அவரவர்கள் வணங்குகின்ற,
தெய்வமும் – தெய்வங்களும், (ஆகிய இவற்றிற்கு),
ஏற்க – பொருந்துமாறு,
உரைப்பார் – வலியுறுத்திப்பேசுகின்ற அந்நிய மதஸ்தரது,
சொல் – வார்த்தைகளை,
எண்ணாது – (நன்மைதருவனவாக) மதியாமல், –
தோல்குரம்பை நாள் கரையா முன்னமே – உயிர்வாழுதற்கென்று தோலினால் வேய்ந்த குடிசைபோன்ற
உடம்பின் வாழ்நாள் கழிதற்குமுன்னமே (இறப்பதற்குள்ளே),
நாரணன் ஆம் காட்கரையாற்கு – திருக்காட்கரை யென்னுந் திருப்பதியி லெழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நாராயணனுக்கு,
ஆள் ஆகாய் – அடிமைப்படுவாயாக; (எ – று.) – காண் – முன்னிலையசை; தேற்றமுமாம்.

புல்லோர் தமது ஆராய்ச்சிக்குறைவினால் பற்பல தேவதாந்தரங்களையும் அவரைப்பற்றிய பொய்ந்நூல்களையும்
உண்மையென்று பாராட்டிக் கூறுவதைச் சிறிதும்மதியாமல், திருக்காட்கரையப்பனே உபாயமும் உபேயமு மாவனென்னும்
உண்மையை யுணர்ந்து அவனுக்கு ஆட்படவேண்டுமென்று தமது நெஞ்சிற்கு அறிவுஉறுத்தியவாறு.
நெஞ்சே! நீ புல்லோர் வழியிற் புகுதாது நல்லோர்நெறியில் நிற்பா யென்று குறிப்பித்தபடி.
“வணங்குந் துறைகள்பலபலவாக்கி மதிவிகற்பாற்,
பிணங்குஞ்சமயம் பலபலவாக்கியவையவைதோ,
றணங்கும்பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பிவைத்தாய்” என்ற பாசுரம் இங்குக் கருதத்தக்கது.
“தெய்வம்பல வவர்நூலும் பல” என்றார் அழகரந்தாதியிலும்.
‘தாம்தாம்வழிபடும்’ என்பது, முன்னுள்ள ‘மார்க்கம்’ என்பதனோடும், பின்னுள்ள ‘தெய்வம்’ என்பதனோடும் கூட்டி யுரைக்கப்பட்டது;
இவ்வாறு வருவது – இடைநிலைத்தீவகம் எனப்படும்.
தாம்தாம் வழிபடும் மார்க்கம் – பக்தி ப்ரபத்தி முதலியனவாகக் கூறப்படுகின்ற பலவேறு சாதநங்கள்.
‘தாம்தாம்வழிபடுந்தெய்வம்’ என்றது – சிவன் குமாரன் கணபதி புத்தன் ஜிநன் முதலியனவாக உலகத்துப்
பலவேறுதெய்வங்கள் வழங்குதல்பற்றியாம். எண்ணாதே என்பதை ஏவலொருமைமுற்றாகக்கொண்டு உரைப்பினுமாம்.

————

62- திரு மூழிக் களம் –

காண்கின்ற ஐம் பூதங்கட்கும் இரு சுடர்க்கும்
சேண் கலந்த இந்திரற்கும் தேவர்க்கும் -மாண் கரிய
பாழிக் களத்தாற்கும் பங்கயத்து நான்முகற்கும்
மூழிக் களத்தான் முதல் –62-

(இ – ள்.) காண்கின்ற – கண்ணுக்குப் புலப்படுகின்ற,
ஐம்பூதங்கட்கும் – (பிருதிவி முதலிய) பஞ்சபூதங்களுக்கும்,
இருசுடர்க்கும் – சூரியசந்திரரென்னும் ஒளியுள்ள பொருளாகிய இருவர்க்கும்,
சேண் கலந்த – வானுலகத்தில் வாழ்கின்ற,
இந்திரற்கும் – தேவேந்திரனுக்கும்,
தேவர்க்கும் – (அவனுக்குக் கீழ்ப்பட்ட மற்றைத்) தேவர்கட்கும், –
மாண் – மாட்சிமையுடைய,
கரிய (விடமுண்டதனாற்) கறுத்த,
பாழி – வலிமைகொண்ட,
களத்தாற்கும் – கழுத்தையுடைய உருத்திரமூர்த்திக்கும்,
பங்கயத்து நான்முகற்கும் – தாமரை மலரில் வாழ்கின்ற நான்குமுகங்களையுடைய பிரமதேவனுக்கும், –
மூழிக்களத்தான் – திருமூழிக்களமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய திருமாலே,
முதல் – மூலகாரணமாவன்; (எ – று.)

மண்முதல் பிரமன் ஈறாகவுள்ள எல்லாப்பொருள்களையும் படைத்த முதற்கடவுள் திருமாலேயென்பதாம்.
“காண்கின்ற’ என்ற அடைமொழியை, மற்றைப்பொருள்கட்குங் கூட்டுக.
தேவர்க்கும் – இந்திரனினும்மேம்பட்ட பிருகஸ்பதி முதலிய கடவுளர்க்கும் எனினுமாம்.

————

63-திருப் புலியூர் -தலைவி தோழியற்கு அறத்தொடு நிற்றல்

முதல் வண்ணம் ஆமே முலை வண்ணம் முன்னை
விதி வண்ணம் நீங்கி விடுமே சதுரத்
திருப் புலியூர் நின்றான் திருத் தண் துழாயின்
மருப்புலி ஊர் தென்றல் வரின் –63-

(இ – ள்.) சதுரம் – அழகிய,
திருப்புலியூர் – திருப்புலியூரென்னுந் திவ்வியதலத்தில்,
நின்றான் – நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்றமாயப்பிரானது,
திரு தண் துழாயின் – குளிர்ந்த திருத்துழாய்மாலையினது,
மரு – நறுமணத்தை,
பு(ல்)லி – பொருந்தி,
ஊர் – தவழ்ந்துசெல்லுந்தன் மையுடைய,
தென்றல் – தென்றற்காற்றானது,
வரின் – வந்துவீசுமாயின், – (அப்பொழுது, எனக்கு),
முலை வண்ணம் – தனத்தின் நிறம், (காமவிகாரத்தால் ஏற்பட்ட பசலைநிறம் மாறி),
முதல் வண்ணம் ஆம் – முன்னைய நிறமே வந்து சேரும்;
முன்னே விதிவண்ணம் – முற்பிறப்பிற்செய்த தீவினையின் பயனாக நேர்ந்த பிரிவுத்துயர் முழுவதும்,
நீங்கிவிடும் – அடியோடு போய்விடும்; (எ – று.)

தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைமகள் அப்பிரிவுத்துயரை யாற்றியடக்கும் வல்லமை யிலளாகி,
தனது நிலைமையை அன்புடைத் தோழியர்க்கு வெளிப்படையாக உரைத்து,
‘இனித் தலைமகனது திருத்துழாயின்நறுமணத்தைக் கொண்டுவந்து இளங்காற்று என்மீது வீசினால்தான்
யான் உயிர்பிழைத்து முன்னையநிலையைப் பெறுதல் கூடும்’ என்று தனது வேறுபாட்டைப் போக்குதற்கு
உரிய உபாயத்தைக் கூறி, அறத்தொடுநின்றது, இது. இதனை, தோழி செவிலியர்க்கு அறத்தொடுநிற்றலாகக் கொள்வாருமுளர்.

எம்பெருமானை இடையீடின்றிச் சேரப்பெறாத நிலையில் காலவிளம்பம் பொறுக்கமாட்டாமையாற் காலம் நீட்டித்ததாகத் தோன்ற,
வருந்துகின்ற ஐயங்கார் தமது அன்பர்களைநோக்கி எம்பெருமானது திருவருளைப் பெற்ற வளவிலே
யான் உய்வுபெறுவே னென்று கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
எம்பெருமான் திருவருள்புரிந்தால், நிலைகலங்குதலில்லாது பக்தி உறுதிப்படுமென்பது, முதலடியின் உள்ளுறை.
“போயபிழையும் புகுதருவானின் றனவும், தீயினிற்றூசாகும்” என்றபடி எம்பெருமானது திருவருளைப் பெற்றார்க்கு
முன்னையவினைகள்யாவும் அகலு மாதலால், “முன்விதிவண்ணம் நீங்கிவிடும்’ என்றன ரென்க.
விவரம் உய்த்துணர்க. “முன்னை, விதி வண்ணம்’ என்றும் பாடம் வழங்கும்.

————-

64-திருச் செங்குன்றூர் –

வர வேண்டும் கண்டாய் மதி கலங்கி விக்குள்
பொரவே உயிர் மாயும் போழ்து பரமேட்டி
செங்குன்றூர் மாலே சிறைப் பறவை மேல் கனகப்
பைங்குன்று ஊர் கார் போல் பறந்து –64-

(இ – ள்.) பரமேட்டி – பரமபதத்தில் வீற்றிருப்பவனே!
திரு செங்குன்றூர் மாலே – திருச்செங்குன்றூரென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியிருக்கிற திருமாலே! –
மதி கலங்கி – (எனது) அறிவு ஒடுங்கி,
விக்குள் பொர – விக்கலானது உபத்திரவிக்க,
உயிர் மாயும் போழ்து – (எனது) உயிர் நீங்கும் அந்திம காலத்தில்,
சிறைபறவை மேல் – இறகுகளையுடைய கருடாழ்வான்மீது,
பைங் கனகம் குன்று ஊர் கார்போல் – பசும்பொன் மயமான மலையின் மீது ஏறிவருகின்ற காளமேகம்போல,
பறந்து வரவேண்டும் – விரைந்துஎழுந்தருளிச் சேவைசாதிக்கவேண்டும்; (எ – று.) –
கண்டாய் – முன்னிலையசை;
நீ அந்திமகாலத்தி லெழுந்தருளிவந்து சேவைசாதித்தால்தான் எனக்கு நற்கதியுண்டு என்ற தேற்றப்பொருளை யுட்கொண்டதாம்.

இப்பிறப்பின் முடிவிலே, மறுபிறப்பில்லாதபடி என்னைக்காக்குமாறு நீ பெரிய திருவடியின்மே லெழுந்தருளிவந்து
காட்சிதரவேண்டு மென்பதாம்.
“சாமிடத் தென்னைக் குறிக்கொள்கண்டாய் சங்கொடுசக்கரமேந்தினானே,”
“உடலம்புயங்கத்துரிபோல்விடுமென்றுவணப்புள்ளி, னடலம்புயமிசைநீவர வேண்டும்” என்றபடி,
ஐம்பொறிகளுங் கலங்கி மரணநோய் நேர்கின்ற அப்போதையில் எம்பெருமானை நினைத்து வேண்டுதல் அரியதாகு மாதலால்
ஐம்பொறிகளும் தமதுநிலையில்நிற்க மனம் செம்மைப்பட்டிருக்கின்ற இப்போதே சொல்லிவைத்தன ரென்க.
பரமேட்டி = பரமேஷ்டீ; சிறந்ததானமாகிய பரமபதத்தில் நிலையாக வீற்றிருப்பவ னென்பது, அவயவப்பொருள்.
பெரிய திருவடிக்குப் பொற்குன்றும், அத்திருவடியின்மீது எழுந்தருளுந் திருமாலுக்குக் காளமேகமும் உவமையாம்;
“கருமுகில் தாமரைக்காடு பூத்து நீ, டிருசுட ரிருபுறத்தேந்தி யேடவிழ்,
திருவொடும் பொலியவோர்செம்பொற்குன்றின்மேல்,
வருவபோற் கலுழன்மேல்வந்து தோன்றினான்” என்ற கம்பராமாயணம் இங்குக் காணத்தக்கது.
பெரிய திருவடியினது தொழிலாகிய ‘பறந்து’ என்பதனை அதனையூருந் திருமாலின் மேலேற்றிப்
பறந்துவரவேண்டு மென்று கூறினார்போலும்.

————-

65-திருநாவாய் –

பறந்து திரிதரினும் பாவியேன் உள்ளம்
மறந்தும் பிறிது அறிய மாட்டா சிறந்த
திரு நாவாய் வாழ் கின்ற தேவனை அல்லால் என்
ஒரு நாவாய் வாழ்த்தாது உகந்து –65–

(இ – ள்.) பாவியேன் – தீவினையுடைய எனது,
உள்ளம் – மனமானது,
பறந்து திரிதரினும் – ஒருநிலையில்நில்லாது விரைந்து அலையுந்தன்மையதாயினும்,
மறந்தும் – மறந்தாயினும்,
பிறிது – திருமாலையன்றி வேறொருதெய்வத்தை,
அறியமாட்டா(து) – (தியானிக்கும்பொருளாக) மதியாது;
என் ஒரு நா வாய் – எனது ஒருபடிப்பட்ட நாக்கையுடைய வாயானது,
சிறந்த – மேம்பட்ட,
திருநாவாய் – திருநாவா யென்னுந் திவ்வியதலத்தில்,
வாழ்கின்ற – நித்திய வாசஞ்செய்கின்ற,
தேவனை அல்லால் – ஸ்ரீமந்நாராயணனையல்லாமல், (பிறிதொருதெய்வத்தை),
உகந்து வாழ்த்தாது – விரும்பித் துதியாது; (எ – று.)

“மறந்தும்புறந்தொழா மாந்தர்” ஆதலால், தேவதாந்தரங்களினிடத்தில் தமக்குஉள்ள உபேட்சையையும்
பரதேவதையினிடத்தில் தமக்குஉள்ள அபேட்சையையும் இங்ஙனம் கூறி வெளியிட்டனர்.
கணவனையே தெய்வமாகக்கொண்டொழுகுங் கற்புடைமகளிர்க்குப் பிறிதோராடவரது தொடர்பில்லாமலிருத்தல்
இன்றியமையாதவாறுபோல, எம்பெருமானைச் சரண
மடைந்து உய்யும் பிரபந்நர்க்குத் தேவதாந்நரபஜதஞ்செய்யாமை இன்றியமையாத தாகு மென்க.
ஒருநாவாய் தேவனையல்லால் வாழ்த்தாது என்ற தொடரில் – எனக்கு நாவொன்றாதலால்,
பரதேவதையாகி அடியார் துயரைப் போக்கிப் பாதுகாக்க வல்ல பரமபுருஷனொருவனைத் துதித்தலே அதற்கு ஏற்கு மென்பதும்,
சரணமடைபவர்களைச் சமயத்திலே கைவிடும் பிறதெய்வங்களைச் சிறிதும் பொருள்செய்யா தென்பதும், தொனிக்கும்.
“உனையன்றி நான் மறந்தும், தீதாக வந்தனைசெய்யேன் புறஞ்சிலதேவரையே” என்பர், அழகரந்தாதியிலும்.
ஒருகால் தேவதாந்தரங்களை யான் வாழ்த்தக் கருதினாலும் என்வாய் வாழ்த்தாது; அது எம்பெருமானையே வாழ்த்தப் பழகியதும்,
பிறதெய்வங்களை வாழ்த்தப் பழகாதது மாதலால் என்னுங் கருத்து அமைய
‘திருநாவாய்வாழ்கின்ற தேவனையல்லால் என்னொருநாவாய் வாழ்த்தா துகந்து’ என வாயின்மே லேற்றிக்கூறினா ரென்னலாம்.
“வாயவனையல்லது வாழ்த்தாது” என்றார் பெரியாரும்.

————–

66-திருவல்ல வாழ்

உகந்தார்க்கு எஞ்ஞான்றும் உளனாய் உகவாது
இகந்தார்க்கு எஞ்ஞான்றும் இலனாய் திகழ்ந்திட்டு
அருவல்ல வாழ் உருவம் அல்ல என நின்றான்
திருவல்ல வாழ் உறையும் தே–66-

(இ – ள்.) திருவல்லவாழ் உறையும் தே – திருவல்லவாழென்னுந் திவ்விய தலத்திலெழுந்தருளியுள்ள திருமால், –
உகந்தார்க்கு – (தன்னை) விரும்பின மெய்யடியார்கட்கு,
எ ஞான்றும் – எக்காலத்தும்,
உளன் ஆய் – உள்ளவனாகியும், –
உகவாது – தன்னைவிரும்பாமல்,
இகந்தார்க்கு – இல்லையென்று சொல்லும் நாஸ்திகர்க்கு,
எ ஞான்றும் – எக்காலத்தும்,
இலன் ஆய் – இல்லாத வனாகியும்,
திகழ்ந்திட்டு – விளங்கி, –
‘அரு அல்ல – அருவப்பொருளுமாகான்,
வாழ் உருவம் அல்ல – கண்களுக்குப்புலப்பட்டுத்தோன்றுகின்ற உருவப்பொருளு மாகான்’,
என – என்று கூறுமாறு, நின்றான் – இருக்கின்றான்; (எ – று.)

திருமால் – கடவுள் உண்டென்றுசொல்லும் ஆஸ்திகர்க்கு அவர்வேண்டியபடியே உளனென்று சொல்லுமாறு உருவப்பொருளாகியும்,
எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாததொரு பொருள் வழக்கில் வருதற்கே வழியில்லையாதலால்,
கடவுள் இல்லையென்றுசொல்லும் நாஸ்திகர்க்கும் கடவுளென்று எடுத்து அவனுடைய இன்மையைச் சாதிக்க
வேண்டிநிற்றலின் அப்போது அருவப்பொருளாகியும் தோன்றுவன்;
ஆதலால், உண்டென்பார்க்கு உருவப் பொருள்களிலெல்லாம் அந்தராத்மாவாகியும்,
இல்லையென்பார்க்கும் அவ்வருவப்பொருளாகியும் திருமால் எப்போதும் உளனேயாவ னென்பதாம்;
“உளனெனி லுள னவனுருவ மிவ்வுருவுகள்,
உளனலனெனி லலனவனருன மிவ்வருவுகள்,
உளனென விலனென விகைகுணமுடைமையில்,
உளனிருதகைமையொ டொழிவிலன் பரந்தே” என்ற அருளிச்செயலும்,
“சூந்யவாதியான உன்னைக் கேட்போம்; ஈஸ்வரனுடைய இல்லாமையைச் சாதிக்கிற நீ ஈஸ்வரனுளனென்றோ
இலனென்றோ ப்ரதிஜ்ஞைபண்ணுவது? இவையிரண்டு ப்ரகாரத்தாலும் நீ நினைக்கிற இல்லாமை ஸம்பவியாது;
எத்தாலே யென்னில்? – லோகத்தில் பாவ அபாவ (உண்டு இல்லை என்கிற) சப்தங்களும், பாவஅபாவப்ரதீதிகளும் (அறிவுகளும்)
வித்யமாந (இருக்கிற) வஸ்துவினுடைய அவஸ்தாவிஸேஷகோசரமாகக் காண்கையாலே,
ஆதலால், ஈஸ்வரன் உளனென்னில், அஸ்தித்வ தர்மவிஸிஷ்டனாய் இருக்குமென்று சொல்லிற்றாய்வரும்;
ஈஸ்வரன் உளனலனென்னில், நாஸ்தித்வதர்மவிஸிஷ்டனாயிருக்குமென்று சொல்லிற்றாய்வரும்.
இப்படி ஈஸ்வர வ்யதிரிக்தபதார்த்தங்களை உளவென்னில், அவையும் அஸ்தித்வதர்மவிஸிஷ்டங்களாய்க்கொண்டு
உளவென்று சொல்லிற்றாய்வரும்; தத்வ்யதிரிக்த பதார்த்தங்களை இல்லையென்னிலும்,
அவை நாஸ்தித்வதர்மவிஸிஷ்டங்களென்று சொல்லிற்றாய்வரும். அந்த அஸ்திநாஸ்திரூபபதார்த்தங்களும் அவனுக்கு ரூபமாயிருக்கும்;
கீழ்ச்சொன்ன ப்ரமாணங்களாலே இப்படி அஸ்தித்வ நாஸ்தித்வங்களாகிற குணங்களையுடையனென்று சொல்லுகையாலே,
அஸ்தியென்னிலும் உளன், நாஸ்தியென்னிலும் உளன்; உளனாமிடத்து ஸர்வாந்தராத்மாவாய்க்கொண்டு உளனென்கிறார்” என்ற
வ்யாக்யாநமும் இங்கு உணரத்தக்கன. “சமயிகளாய்ந்தவண்ணம், உளவிலையா யருவா யருவாய வொருமுதலே” என்பர் அழகரந்தாதியிலும்.

புதியன புகுதலாக, இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொதுவாய் வரும் எதிர்மறைக்குறிப்புமுற்றான
“அல்ல’ என்னுஞ் சொல் இங்கு ஆண்பாலுக்கு வந்தது.

————-

67-திருவண் வண்டூர்-

தேவும் உலகும் உயிரும் திரிந்து நிற்கும்
யாவும் படைத்த இறை கண்டீர் பூவில்
திரு வண் வண்டூர் உறையும் தேவாதி தேவன்
மரு வண் வண்டு ஊர் துளவ மால் –67–

(இ – ள்.) பூவில் – இப்பூமியிலுள்ள,
திருவண்வண்டூர் – திருவண்வண்டூரென்னுந் திவ்வியதலத்தில்,
உறையும் – நித்தியவாசஞ்செய்கின்ற,
தேவாதி தேவன் – தேவர்கட்கெல்லாந் தேவனான, –
மரு – வாசனையுடையதும்,
வள் – வளப்பமுடையதும்,
வண்டு ஊர – வண்டுகள் மொய்க்கப் பெற்றதுமாகிய,
துளவம் – திருத்துழாய்மாலையை யணிந்த,
மால் – திருமால், –
தேவும் – (பிரமன் முதலிய) தேவர்களையும்,
உலகும் – உலகங்களையும்,
உயிரும் – (அவ்வுலகங்களிலுள்ள) பிராணிகளையும்,
திரிந்து நிற்கும் யாவும் – (கீழ்க்கூறிய பொருள்களைவிட) வேறாகநிற்கின்ற அசேதநப்பொருள்க ளெல்லாவற்றையும்
படைத்த – ஆதியிற்சிருட்டித்த,
இறை – கடவுளாவன்; (எ – று.) – கண் டீர் – முன்னிலையசை; தேற்றமுமாம்.

திருமாலே சேதநம் அசேதநம் என்னும் எல்லாப்பொருள்கட்கும் ஆதிகாரணனென்பதாம்.
“ஒன்றுந் தேவுமுலகு முயிரும் மற்றும்யாது மில்லா,
வன்று நான்முகன்றன்னொடு தேவருலகோ டுயிர்படைத்தான்,
குன்றம்போல்மணிமாடநீடு திருக்குருகூரதனுள், நின்றவாதிப்பிரான்” என்றார் நம்மாழ்வாரும்.
நித்தியமான உயிர்களைப் படைத்தலாவது – அவற்றிற்குக் கரணகளேபரங்களைக் கொடுத்தல்.
இனி, தேவும் உலகும் உயிருமாகிய, திரிந்து நிற்கும் – ஜங்கமமாகியும் ஸ்தாவரமாகியு முள்ள, யாவும் எனப் பொருள்கூறுவாரு முளர்.

————

68–திருவாட்டாறு –

மாலை முடி நீத்து மலர்ப்பொன் அடி நோவப்
பாலை வனம் புகுந்தாய் பண்டு என்று -சாலவும் நான்
கேட்டால் துயிலேன் காண் கேசவனே பாம்பணை மேல்
வாட்டாற்றுக் கண் துயில் கொள்வாய் –68-

(இ – ள்.) கேசவனே – கேசவனென்னுந் திருநாமத்தையுடையவனே! –
‘மாலை முடி நீத்து – (அரசர்க்குஉரிய அடையாளப்பூ) மாலையையும் கிரீடத்தையும் (கைகேயியின்சொற்படியே பித்ருவாக்யபரிபாலநஞ் செய்யுமாறு) பூணாமல் துறந்து,
மலர்பொன் அடி நோவ – தாமரைமலர்போன்ற அழகிய (உனது) திருவடிகள் வருந்தும்படி,
பாலை வனம் – (தண்டகாரணியம் முதலிய) கொடுங்காட்டில்,
பண்டு – முற்காலத்தில் (ஸ்ரீராமாவதாரத்தில்), நீ -,
புகுந்தாய் – நடந்து சென்றாய்,’
என்று கேட்டால் – என்று (இதிஹாஸம் வல்லோர் சொல்லக்) கேட்டால்,
நான் -, சாலவும் துயிலேன் காண் – அடியோடு கண்டுயில்கொள்ளேன்; (அவ்வாறு இருக்க, நீயோ),
வாட்டாறு – திருவாட்டாறென்னுந் திவ்வியதலத்தில்,
பாம்பு அணைமேல் – ஆதிசேஷ சயனத்தின்மீது,
கண்துயில் கொள்வாய் – (கவலையின்றிக்) கண்ணுறங்குகின்றாய்; (எ – று.) – காண் – அசை.

நெடுநாள்முன்பு நடந்த ராமாவதாரத்தில் நீ காலினால்வருந்திக் கானகத்திற்சென்ற செய்தியை இப்போது
பிறர்சொல்லக்கேட்டாலும், கல்நெஞ்சனாகிய எனதுமனமும் நெகிழ்ந்து நெகிழ்ந்து கரைந்து உருக எனக்குத் தூக்கம் பிடிப்பதில்லை;
பதினான்கு வருடம் காலினாற் பாலைவனங்களிலெல்லாம் அலைந்து திரிந்து வருந்திய நீயோ சிறிதுங் கவலையின்றித்
திருவாட்டாற்றில் நெடுநாளாகக் கண்ணுறங்குகின்றாயே? இது என்ன வியப்பு? என்று எம்பெருமான் திறத்து ஈடுபட்டு
ஐயங்கார் கூறுகின்றன ரென்க. துயரமனுபவித்தவன் யாதொருகவலையுமின்றி நிச்சிந்தையாகத் துயிலத் துயரமனுபவியாதவன்
கவலையினாற் கண்ணுறங்குவதில்லை யென்று, காரணமில்லாத விடத்துக் காரியம் நிகழ்ந்ததாகக் கூறினமையால்,
இச்செய்யுள் – விபாவனையணியின் பாற்படும். கேசவன் என்பது – அத்தலத்து எம்பெருமான் திருநாமமென்பர். இத்தலம் – நதியாற் பெயர்பெற்றது.

————-

69-திரு வித்துவக் கோடு-

வாய்த்த கருமம் இனி மற்று இல்லை நெஞ்சமே
தோய்த்த தயிர் வெண்ணெய் தொட்டு உண்ட கூத்தன்
திரு வித்துவக் கோடு சேர்ந்தால் பிறவிக்
கருவின் துவக்கு ஓடும் காண் –69-

(இ – ள்.) நெஞ்சமே – (எனது) மனமே! – (கிருஷ்ணாவதாரத்திலே),
தோய்த்த தயிர் – தோய்த்தபடியேயுள்ள தயிரையும்,
வெண்ணெய் – வெண்ணையையும்,
தொட்டு உண்ட – களவுகண்டு புசித்த,
கூத்தன் – திருவிளையாட்டையுடைய திருமாலினது,
திருவிற்றுவக்கோடு – திருவிற்றுவக்கோடென்னுந் திவ்வியதலத்தை,
சேர்ந்தால் – சென்று சேர்ந்தமாத்திரத்தில், –
பிறவி – பிறப்புக்குக்காரணமான,
கருவின் துவக்கு – கர்ப்பத்தின் சம்பந்தம்,
ஓடும் – நீங்கும்; (ஆதலால்),
வாய்த்த கருமம் – நாம்செய்யக்கிடந்த தொழில்,
இனி மற்று இல்லை – இனிமேல் வேறொன்று மில்லை; (எ – று.) – காண் – அசை தேற்றமுமாம்.

மனமே! திருவிற்றுவக்கோடென்னுந் திவ்வியதலத்தைச் சேர்ந்தாயாயின், பிறப்புக்குக்காரணமான கரும சம்பந்தமெல்லாம்
ஒழிந்து நற்கதி பெறுவையென்பதாம். இவ்வாறு சுகரமான உபாயத்தாற் பெரும்பேறு பெறலாயிருக்க,
அதனைச் செய்யாது வீணேயுழல்வது என்னே! என்ற கருத்து இங்குத் தொனிக்கும்.
இங்குத் திருவிற்றுவக்கோடு என்றது – அத்திருப்பதியி லெழுந்தருளியிருக்கும் எம்பெருமானையுங் குறிக்கும்;
உபலக்ஷணம். ‘திருவித்துவக்கோடு’ என்றும் வழங்குவர்.

—————-

70-திருக் கடித்தானம் –

காண விரும்பும் என் கண் கையும் தொழ விரும்பும்
பூண விரும்பும் என் தன் புன் தலை தான் வாணன்
திருக்கு அடித்தான் நத்தான் திகிரியான் தண்டான்
திருக் கடித் தானத்தானைச் சென்று –70-

(இ – ள்.) வாணன் – பாணாசுரனது,
திருக்கு – மாறுபாட்டை,
அடித்தான் – ஒழித்தவனும்,
நத்தான் – சங்கத்தையுடையவனும்,
திகிரியான் – திருவாழியாழ்வானை யுடையவனும்,
தண்டான் – கதாயுதத்தையுடையவனுமாகிய,
திருக்கடித்தானத்தானை – திருக்கடித்தானமென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளிய திருமாலை,
சென்று – போய்க்கிட்டி, –
என் கண் – எனது கண்கள்,
காண – தரிசிப்பதற்கு,
விரும்பும் – ஆசைகொள்ளும்;
கையும் – (எனது) கைகளும்,
தொழ – கூப்பிவணங்குதற்கு, விரும்பும் -;
என்தன் – எனது,
புல் தலைதான் – இழிவான தலையும்,
பூண – (அப்பிரானது திருவடித்தாமரைகளைச்) சூடிக்கொள்வதற்கு, விரும்பும் -; (எ – று.)

பாணாசுரனது விருத்தாந்தத்தை அநுசந்தித்த ஐயங்கார், அதனால் எம்பெருமானே பரதத்துவப்பொருளாவ னென்ற
உண்மையை யுணர்ந்து தமது கண் முதலிய பொறிகள் வகுத்தவிஷயமான அவ்வெம்பெருமானிடத்தே சென்று
தத்தமக்கு உரிய திருத்தொண்டுபுரிய விரும்புவதை இதனால் தெரிவிக்கின்றன ரென்க.
“காண்காணென விரும்புங் கண்கள் கதிரிலகு, பூண்டாரகலத்தான் பொன்மேனி” என்றார் ஆன்றோரும்.
புன்றலை யென்றது – நைச்யாநுஸந்தாநம்.

————-

71–திரு வாறன் விளை –

சென்று புனல் மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
வென்று புலன் அடக்கி விட்டாலும் இன் தமிழால்
மாறன் விளைத்த மறை ஒதார்க்கு இல்லையே
ஆறன் விளைத் திருமால் அன்பு –71–

(இ – ள்.) சென்று – தீர்த்தயாத்திரையாகச் சென்று,
புனல் மூழ்கி – புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நாநஞ்செய்து,
செய் தவங்கள் செய்தாலும் செய்தற்கு உரிய (சிறந்த) தவங்களைச் செய்தாலும்,
புலன் ஐந்து வென்று அடக்கி விட்டாலும் – தமது ஐம்பொறிகளையும் (தமக்குஉரிய ஐம்புலன்களிற் செல்லவொட்டாது) சயித்துஅடக்கினாலும்,
மாறன் – நம்மாழ்வார்,
இன் தமிழால் விளைத்த மறை – செவிக்கினிய தமிழ்ப்பாடலாகச் செய்தருளிய வேதத்தை,
ஓதார்க்கு – ஓதியுணராதவர்க்கு,
ஆறன்விளை திருமால் அன்பு – திருவாறன் விளையென்னுந் திருப்பதியி லெழுந்தருளிய எம்பெருமானது திருவருள்,
இல்லை – உண்டாகாது; (எ – று.)

நம்மாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திருவாய்மொழியை ஓதியுணர்ந்தவரிடத்துத் திருமால் எளிதில் எவ்வாறு திருவருள் புரிவானோ,
அவ்வாறாகப் புண்ணியதீர்த்தங்களில் ஸ்நாநஞ்செய்தல் உக்கிரமான தவங்களைச்செய்தல் ஐம்பொறிகளையடக்குதல்
முதலிய அரும்பெருந்தொழில்களைச் செய்பவரிடத்தும் திருவருள்செய்யா னென்பதாம்.
வேதத்தின் முற்பகுதியாகிய கர்மகாண்டத்தை முக்கியமாகக்கொண்டு அதன்படி தவம்முதலியன செய்தால்
அவை அழியுமியல்பினவான சுவர்க்கம் முதலிய காமியபயன்களைத் தருவனவாய் முத்திக்கே நேரே காரணமாகாமையால்
அவ்வாறாகிய அரிய தொழிலை மேற்கொள்பவரிடத்தில் திருமாலின் திருவருள் எளிதி லுண்டாகாது;
திருக்குருகூரில் அவதரித்து லோகோபகாரமாகப் பரப்பிரமசுவரூபத்தை உள்ளபடி உணர்ந்து யாவரும் அறியும்படி
“ஆரார்வானவர்கள் செவிக்கினியசெஞ்சொல்லே” என்றவாறு இனியசெஞ்சொற்களாக வெளியிட்டு
உயிர்களை இனிஒருபிறப்புமின்றி முத்திபெறுமாறு செய்த பொய்யில்புலவராகிய நம்மாழ்வாருடைய அருளிச்செயலைக்
கேட்டும் ஓதியும் உணர்ந்து நிற்பவரிடத்துத் திருமாலின் திருவருள் எளிதில் சித்திக்கு மென்க.
‘அராஜகமான தேசத்திலே பட்டத்துக்கு உரிய யானையைக் கண்ணைக்கட்டிவிட்டால் அது எடுத்துத் தன்கழுத்திலே
வைத்துக்கொள்ளப்பெற்றவன் அரசனாய்விடுமாறுபோல இவ்வுலகத்தில் வைதிகமரியாதை அழிந்துபோன
சமயத்திலே அதனை நிலைநிறுத்துதற்பொருட்டு எம்பெருமான் தனது நிரங்குசஸ்வாதந்த்ரியத்தால் பத்தாத்மாக்களிலொருவர்
பக்கல் விசேஷகடாக்ஷஞ்செய்ய, அதனால் அவர் மற்றையோரையும் சீர்திருத்தும்படி சிறப்புற்றனர்’ என்று ஆன்றோர் கூறுமாறு
எம்பெருமான் உலகத்தைத் திருத்துவதற்காகவே விசேஷகடாக்ஷஞ்செய்து நம்மாழ்வாரைத் திருவவதரிப்பித்தானாதலால்,
அவரது அருளிச்செயலை யோதினவரிடத்துத் திருமாலருள் சித்திக்கு மென்னலாம்.
“தவஞ்செய்வதும் தழல்வேள்விமுடிப்பதும் தம்மையொறுத்,
தெவன்செய்யு மெய்யன் குருகைப்பிரா னெம்மை யின்னமொரு,
பவஞ்செய்கைமாற்றிய பண்டிதன் வண்டமிழ்ப்பாவு முண்டே,
யவஞ்செய்கைமாற்றச் செவியுண்டு நாவுண் டறிவுமுண்டே” என்ற சடகோபரந்தாதி இங்குக் காணத்தக்கது.
இனி, பலவிஷயங்களையும்பற்றிக் கண்டபடி கூறுகின்ற வடமொழிவேதம்போலவன்றி, எம்பெருமானது
ஸ்வரூபரூபகுண விபூதிகளையே கூறிக்கொண்டுசெல்லுந் திருவாய்மொழியை யோதினோர்க்கே
திருமாலினிடத்துப் பக்தியுண்டாகு மென்று இச்செய்யுட்குப் பொருள் கூறினுமாம். ‘ஓதாதார்க்கு’ என்றும் பாடம்.

மலைநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.

———-

நடு நாட்டுத் திருப்பதிகள்–2-

72-திருவயிந்த புரம் –

அன்பு அணிந்த சிந்தையராய் ஆய்ந்த மலர் தூவி
முன் பணிந்து நீர் எமக்கு மூர்த்தியரே என்பர்
எம் ஐயிந்திர புரத்தார்க்கு இன் தொண்டர் ஆனார்
தமை இந்திர புரத்தார் தாம் –72-

(இ – ள்.) எம் – எமது,
ஐயிந்திரபுரத்தார்க்கு – திருவயிந்திரபுரமென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளிய தெய்வநாயகப்பெருமானுக்கு,
இன்தொண்டர் ஆனார்தமை – நல்லடியாரானவர்களை, –
இந்திரபுரத்தார்தாம் – தேவேந்திரனது அமராவதி நகரத்தில் வாழ்கின்ற தேவர்கள், –
அன்பு அணிந்த சிந்தையர் ஆய் – பக்திகொண்ட மனமுடையவராய்,
ஆய்ந்த மலர் தூவி – (அவர்கள் மீது) ஆராய்ந்துஎடுத்த (சிறந்த) கற்பகமரத்தின்மலர்களைச் சொரிந்து,
முன் பணிந்து – (அவர்கட்கு) முன்னே வந்து நமஸ்கரித்து,
நீர் எமக்கு மூர்த்தியரே என்பர் – “நீவிர் எங்கட்குக் கடவுளாவீர்கள்’ என்று கொண்டாடுவார்கள்; (எ – று.)

“மணியாழிவண்ணனுகந்தாரைத் தன்வடிவாக்குமென்றே, துணியாழியமறை சொல்லும்” என்றபடி எம்பெருமானுக்கு
அடிமைப்பட்ட மாத்திரத்தில் எம்பெருமானோடு பரமஸாம்யத்தைப் பெறுதலால், அப்படிப்பட்ட அடியார்களை,
நல்வினையொழிந்தமாத்திரத்தில் நசிக்குந் தன்மையுள்ள சாதாரணதேவர்கள் தாங்கள் நற்பேறுபெறுமாறு
வணங்குவ ரெனத் திருமாலடியார்களின் மேன்மையைக் கூறினார்.
தெய்வநாயகனுக்கு அடிமைப்பட்ட மாத்திரத்தில் அவ்வாறு அடிமைப்பட்டவர்களும் தெய்வநாயக ராவரெனச் சமத்காரந்தோன்றக் கூறியவாறு.
“வழிநின்று நின்னைத் தொழுவார் வழுவா, மொழிநின்ற மூர்த்தியரேயாவர்,”
“மாதவன்றமரென்று வாசலில்வானவர்,
போதுமினெமதிடம் புகுதுகவென்றலும்,
கீதங்கள்பாடினர் கின்னரர்கெருடர்கள்,
வேதநல்வாயவர் வேள்வியுள்மடுத்தே” என்பவை இங்குக் கருதத்தக்கன. தூவி – அருச்சித்து எனினுமாம்.

ஐயிந்திரபுரம் = அயிந்திரபுரம்; எதுகை பற்றியபோலிவிகாரம். அஹீந்த்ரனெனப்படுகிற திருவனந்தாழ்வான்
பூஜித்த தலமாதல் பற்றி, ‘அஹீந்த்ரபுரம்’ என்று இத்திருப்பதிக்குத் திருநாமம்.

———-

73-திருக் கோவலூர் –

தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன
சேம உயிரும் செகம் அனைத்தும் பூ மடந்தைக்கு
ஆம் கோ அலாயுதன் பின்னா அவதரித்த
பூங்கோ வல் ஆயன் பொருள் –73–

(இ – ள்.) தாமரையான் ஆதி ஆய் – தாமரைமலரில்வாழ்கின்ற பிரமன் முதலாக,
தாவரங்கள் ஈறு ஆன – தாவரப்பொருள்கள் இறுதியாகவுள்ள,
சேமம் உயிரும் – உலகத்துவாழ்கின்ற ஜீவராசிகளும்,
செகம் அனைத்தும் – (அவற்றிற்கெல்லாம் இடமான) எல்லாவுலகங்களும், –
பூ மடந்தைக்கு ஆம் கோ – தாமரைமலரில்வசிக்கின்ற இலக்குமிக்கு உகந்த தலைவனும்,
அலாயுதன் பின்ஆ அவதரித்த – கலப்பையை ஆயுதமாகவுடைய பலராமனுக்குத் தம்பியாகத் திருவவதரித்தவனுமாகிய,
பூ கோவல் ஆயன் – அழகிய திருக்கோவலூரென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளிய ஆயனாரது,
பொருள் – படைப்புப்பொருள்களாம்; (எ – று.)

பிரமன்முதல் தாவரமீறான எல்லாப்பொருள்களும் திருமாலாற் படைக்கப்பெற்று அவனிட்டவழக்காயிருக்கு மென்பதாம்.

கோபாலன் எனப்படுகிற ஆயனார் எழுந்தருளியிருக்குந் திவ்விய தலமாதல் பற்றி, இதற்கு ‘திருக்கோவலூர்’ என்று திருநாமமாயிற்று;
வடமொழியில், இது, ‘கோபாலபுரம்’ எனப்படும்.
“பாவருந்தமிழாற் பேர்பெறுபனுவற்பாவலர்பாதிநாளிரவின்,
மூவரு நெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு” என்று புகழ்ந்து கூறும்படி
முதலாழ்வார்மூவரும் ஒருவரையொருவர் சந்தித்து அந்தாதிபாடின தலம். இது.

நடுநாட்டுத்திருப்பதிகள் முற்றும்.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிக—ளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி -1-சோழ நாட்டுத் திருப்பதிகள் —1-40–

February 23, 2022

மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் மங்களாசாசனஞ்செய்த நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளைப் பற்றிப்
பாடிய அந்தாதித்தொடை யாலமைந்த நூல் என்பது பொருள்.
திருப்பதி – திருமால் அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தருளியிருக்குந் திவ்வியதலம்.
உகந்தருளிய நிலங்களாகையால், இவற்றிற்கு ‘திரு’ என்று அடைமொழி கொடுக்கப்பட்டது.
‘திருப்பதி’ என்பது – அத்தலங்களையும், அவற்றில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்களையுங் குறிக்கும்.

———

தனியன் -சிறப்புப் பாசுரம் –

ஏற்ற மணவாளர் இசைத்தார் அந்தாதி வெண்பா
தோற்றக் கேடில்லாத தொன் மாலைப் போற்றத்
திருப்பதியா நூற்று எட்டினையும் சேவிப்போர்
கருப்பதியா வண்ணம் உண்டாக –

(இ – ள்.) திருப்பதி ஆம் நூற்றெட்டினையும் – நூற்றெட்டுத் திருப்பதி களையும்,
சேவிப்போர் – சேவிப்பவர்கள்,
கரு பதியா வண்ணம் உண்டாக – (தமக்கு) மீண்டும் (தாயின்) கருப்பத்திற் பொருந்தாத விதம் உண்டாகுமாறு (மீண்டும் பிறப்பின்றி முத்தியைச்சேருமாறு), –
தோற்றம் கேடு இல்லாத தொல் மாலை போற்ற – பிறப்பும் இறப்பு மில்லாத பழமையாகிய திருமாலைச் சொல்லித் துதிக்கும்படியாக, –
ஏற்றம் மணவாளர் – சிறப்பினையுடைய அழகியமணவாளதாசரென்பவர்,
அந்தாதி வெண்பா – வெண்பாவினாலாகிய நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியை,
இசைத்தார் – பாடியருளினார்; (எ – று.)

அடியவர்கள் திருமாலின் நூற்றெட்டுத்திருப்பதிகளையும் தாம் சேவிக் கக்கருதுங்காலத்தில்
அத்திருப்பதிகளைப் பாடித் துதித்துப் பிறவித்துயர் தீர்ந்து மோக்ஷஸாம்ராஜ்யத்தைப் பெறும்படி
அழகியமணவாளதாசரால் இந்நூல் அருளிச்செய்யப்பட்ட தென்பது, கருத்து.
இதனால், இந்நூலின் சிறப்பும், இந்நூலாசிரியரது தெய்வப்புலமையும் விளங்குதல் காண்க.
சிறப்புப்பாயிரவிலக்கணங்களுள், “மணவாளர்’ என்றதனால் ஆக்கியோன்பெய ரும்
அந்தாதி வெண்பா என்றதனால் நூற்பெயரும் “வெண்பா என்றதனால் – யாப்பும்,
‘நூற்றெட்டினையும் சேவிப்போர் கருப்பதியாவண்ண முண்டாகத் தொன்மாலைப்போற்ற’ என்றதனால்
நுதலியபொருளும் பயனும் நூல்செய் தற்குக் காரணமும்,
இச்செய்யுளில் செம்பொருளாகவும் குறிப்புப்பொரு ளாகவும் விளங்குமாறு உணர்க.

சொல்நோக்கு பொருள்நோக்கு தொடைநோக்கு நடைநோக்கு முதலிய இனிய நோக்கங்கள்யாவும் அமைய
ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் என்னும் நால்வகையிலும் திவ்வியகவிகளைப் பாடவல்ல புலவர்
பெருமானாதலால், இவர்க்கு ‘ஏற்றம்’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
ஏற்ற மணவாளர் என்று பிரித்து – (எம்பெருமானது விஷயமான கவிகளைச் சொல்லுதற்குத்) தகுதியுடைய
மணவாளர் என்று உரைத்தலும் பொருந்தும்;
எம்பெருமானைத் துதிப்பதற்கு ஏற்ற ஞானம் முதலிய குணங்களை யுடைமையால், இவரை இவ்வாறு கூறுதல் தகுமென்க.
ஒருபெயரின் ஒருபகுதியைக் கொண்டு அப்பெயர் முழுவதையுங் குறிப்பதொரு மரபுபற்றி,
அழகியமண வாளதாசரை ‘மணவாளர்’ என்றார்; (இதனை, வடநூலார் “நாமைகதேஸே நாமக்ரஹணம்’ என்பர்.)
திருமால் துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலநத்தின் பொருட்டும் தருமத்தை நிலைநிறுத்துதற் பொருட்டும்
தனது இச்சையினாலேயே மத்ஸ்ய கூர்மாதிகளான திருவவதாரங்களைச் செய்தபோதிலும்,
ஜீவாத்மாக்கள் தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவரரூபங்களாய்க் கருமவசத்தினாற் பிறந்தழிவதுபோலப்
பிறப்பு இறப்புக்களை யுடையவ னாகாமையால், அவனை “தோற்றக்கேடில்லாத மால்’ என்றார்.
தொல்மால் – எப்போதுமுள்ள புராணபுருஷன்.
மால் – பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திருமகளிடத்துக்காதல், மாயை, கருநிறம், இவற்றை யுடையவன்.

தோற்றம் – தோன்றுதல்; தொழிற்பெயர். கேடு – “கெடு’ என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
போற்ற, உண்டாக என்னுஞ் செயவெனெச்சங்கள் – காரியப்பொருளனவாய் எதிர்காலங் குறிக்கும்.
உண்டாக, போற்ற, இசைத்தா ரென்க. உம்மை – முற்றுப்பொருளது.
போற்றவும் உண்டாகவும் இசைத்தார் என வினைச்செவ்வெணாக்கி உரைப்பாரு முளர். பதியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

இக்கவி அபியுக்தரி லொருவர்செய்த தென்பர். இது, வைஷ்ணவ சம்பிரதாயத்தில்’தனியன்’ எனப்படும்.
(நூலினுள் அடங்காது தனியே பாயிர மாய் நிற்றல்பற்றியது, அப்பெயர்; ‘அன்’ விகுதி – உயர்வுப்பொருளது.)

———

காப்பு – காத்தல்: அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்:
ஆகவே, கவி தமக்கு நேரிடக்கூடிய இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்கவல்ல தலைமைப்
பொருளின்விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது, கருத்து.
இக்காப்புச்செய்யுள் ஆழ்வார்கள் பன்னிருவரையும் பற்றியது. ஸ்ரீவைஷ்ணவசமயத்தவரான இந்நூலாசிரியராற்
கூறப்பட்ட இக்காப்புச்செய்யுள் விஷ்ணுபக்தர்களிற் சிறந்த ஆழ்வார்களைக் குறித்ததாதலால், வழிபடுகடவுள்வணக்கமாம்.
தம் தமது மதத்திற்கு உரிய கடவுளை வணங்குதலேயன்றி, அக்கடவுளது அடியார்களை வணங்குதலும்
வழிபடுகடவுளின்வணக்கத்தின்பாற் படுமென அறிக. ஆழ்வார்களால் வெளியிடப்பட்டுள்ள திவ்வியப்
பிரபந்தங்களின் சொற்பொருட் கருத்துக்களமையுமாறு அவர்களால் மங்களாசாஸநஞ்செய்யப்
பெற்ற நூற்றெட்டுத்திருப்பதிகளின் விஷயமாகவே அம்முதனூல்கட்கு வழிநூல்போல
இவராற் செய்யப்படுவது இப்பிரபந்த மென்பதுபற்றி, இந்நூலின் இக்காப்புச்செய்யுளை ஏற்புடைக்
கடவுள்வணக்க மென்று கொள்ளவும் அமையும். இப்பன்னிரண்டுஆழ்வார்களும் திருமாலினிடத்துப் பரிவராய்
அப்பிரானுக்கு ரக்ஷையாக நிற்கின்ற ஆயுதபரிஜனங்களின் அம்ஸமாவ ராதலால்,
அவர்களை ரக்ஷையாகக் கொள்ளுதல் ஏற்கு மென்க.

காப்பு –

ஆழ்வார்கள் பன்னிருவர்

பொய்கை பூதன் பேயார் பொன் மழிசைக் கோன் மாறன்
செய்ய மதுரகவி சேரர் பிரான் வையகம் எண்
பட்டர் பிரான் கோதை தொண்டர் பாதப் பொடி பாணன்
கட்டவிழ் தார் வாட் கலியன் காப்பு –

(இ – ள்.) பொய்கை – பொய்கையாழ்வாரும்,
பூதன் – பூதத்தாழ்வாரும்,
பேயார் – பேயாழ்வாரும்,
பொன் மழிசை கோன் – திருமழிசையாழ்வாரும்,
மாறன் – நம்மாழ்வாரும்,
செய்ய மதுரகவி – செம்மையையுடைய மதுரகவியாழ்வாரும்,
சேரர் பிரான் – குலசேகராழவாரும்,
வையகம் எண் பட்டர்பிரான் – உலகத்தவரால் நன்குமதிக்கப்பெற்ற பெரியாழ்வாரும்,
கோதை – ஆண்டாளும்,
தொண்டர் பாதம் பொடி – தொண்டரடிப்பொடி யாழவாரும்,
பாணன் – திருப்பாணாழ்வாரும்,
கட்டு அவிழ் தார் வாள் கலியன் – (அரும்புகளின்) முறுக்கு விரிந்த மாலையைத் தரித்த வாட்படையை யேந்திய திருமங்கையாழ்வாரும்,
காப்பு – (நமக்கு) ரக்ஷகமாவர்; (எ – று.)

ஆசீர்வாதம் (வாழ்த்து), நமஸ்காரம் (வணக்கம்), வஸ்துநிர்த்தேசம் (தலைமைப்பொருளுரைத்தல்) என்ற
மூன்றுவகை மங்களங்களுள், இது – நமஸ்காரத்தின்பாற்படு மென்க.
“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை, யைய னருண்மாறன் சேரலர்கோன் –
துய்யபட்ட, நாத னன் பர்தாள்தூளி நற்பாணன் நன்கலிய, னீதிவர்தோற்றத்தடைவா மிங்கு” என்றபடி திருவவதாரகிரமத்தால்,
பொய்கையார் பூதத்தார் பேயார் திருமழிசைப்பிரான் மாறன் குலசேகரன் பெரியாழ்வார் தொண்டரடிப்பொடி
திருப்பாணர் திருமங்கையாழ்வார் என முறைப்படுத்தி, நம்மாழ்வாரது சிஷ்யரான மதுரகவியை அவரையடுத்தும்,
பெரியாழ்வாரது திருமகளாரான ஆண்டாளை அவரையடுத்தும் கூறின ரென உணர்க.

பொய்கை – குளம்; கச்சித்திருப்பதியிலே திருவெஃகாவென்னுந் திவ் வியதலத்தின் வடபுறத்திலுள்ள
பொற்றாமரைப்பொய்கையில் திருவவதரித்த ஆழ்வாரை “பொய்கை’ என்றது – இடவாகுபெயர்;
இனி, உவமவாகுபெயராய் ஊர்நடுவேயுள்ள குளம்போல எல்லார்க்கும் எளிதிற்பயன்கொடுப்பவ ரென்று உரைத்தல், சம்பிரதாயமன்று.

பூதன் – எம்பெருமானையறிதலாலே தமதுஉளனாகையை யுடையவ ராதலால், இவர்க்கு இத்திருநாமம்;
‘பூஸத்தாயாம்’ என்றபடி ஸத்தையென்னும் பொருள்கொண்ட ‘பூ’ என்னும் வடமொழி
வினையடியினின்று பிறந்த பெய ராதலால்,
‘பூதன்’ என்பதற்கு – ஸத்தை (உள்ளவனாயிருக்கை) பெறுகின்றவ னென்று பொருளாயிற்று:
இனி, இத்திருநாமத்துக்கு – (உலகத்தவரோடு சேராமையால்) பூதம் போன்றவ ரென்று பொருளுரைத்தல், சம்பிரதாயமன்று.

பேயார் – உலகத்தவராற் பேய்போல எண்ணப்படுபவர்; அல்லது, அவர்களைத் தாம் பேய் போல எண்ணுபவர்;
“பேயரே யெனக்கி யாவரும் யானுமோர், பேயனே யெவர்க்குமிதுபேசியென்,
ஆயனே யரங்கா வென்றழைக்கின்றேன், பேயனாயொழிந்தே னெம்பிரானுக்கே” என்ற கொள்கைப்படி
இவர் பகவத்பக்தியாற் பரவசப்பட்டு நெஞ்சழிதல் கண்சுழலுதல் அழுதல் சிரித்தல் தொழுதல் மகிழ்தல் ஆடுதல் பாடுதல் அலறுதல்
முதலிய செய்கைகளையே எப்பொழுதுங் கொண்டு காண்பவர் பேய்பிடித்தவரென்னும்படி யிருந்ததனால், பேயாழ்வாரென்று பெயர்பெற்றனர்.

பொன்மழிசைக்கோன் – திருமழிசை யென்று வழங்குகின்ற மஹீஸாரக்ஷேத்ரத்தில் திருவவதரித்த பெரியோன்;
இத்தலம், தொண்டைநாட்டிலுள்ளது.

நம்மாழ்வார்க்கு அநேகந்திருநாமங்கள் இருப்பினும், அவற்றில் ‘மாறன்’ என்பது, முதலில் தந்தையார் இட்ட குழந்தைப்பெய ராதலால்,
அதில் ஈடுபட்டு அப்பெயரினாற் குறித்தார். பிறந்த பொழுதே தொடங்கி அழுதல் பாலுண்ணுதல் முதலியன செய்யாமல்
உலக நடைக்கு மாறாயிருந்ததனால், இவர்க்கு ‘மாறன்’ என்ற இத்திருநாமம் இடப்பட்டதுபோலும்;
வலியவினைகட்கு மாறாக இருத்தலாலும், அந்நியமத ஸ்தர்களை அடக்கி அவர்கட்குச் சத்துருவாயிருத்தலாலும்,
பாண்டியநாட்டில் தலைமையாகத் தோன்றியதனாலும் வந்த பெய ரென்றலும் உண்டு.

மதுரகவி – இனிமையானபாடல் பாடுபவர். மதுரகவிக்குச் செம்மை – மற்றை யாழ்வார்கள்போல
எம்பெருமானுக்கு அடிமைப்படாமல் அப்பெருமானது அடியவரான நம்மாழ்வார்க்கு அடிமைபூணுதல்;
பகவத்பக்தியினும் பாகவத பிரதிபத்தி விசேஷமென்பது, ஸ்ரீவைஷ்ணவசித்தாந்தம்.

சேரர்பிரான் – சேரநாட்டிலுள்ளார்க்கு அரசர்.

பட்டர்பிரான் – வித்துவான்களுக்கெல்லாந் தலைவர். வல்லபதேவனென்னும் பாண்டியராஜன் வேதாந்த
சித்தாந்தமான பரதத்துவத்தை நிர்ணயம்பண்ணவேண்டுமென்று ஏற்படுத்திய வித்யாசுல்க மாகிய பொற்கிழியை,
இவர் அங்குத்திரண்டுவந்த வித்துவான்களையெல்லாம் வாதத்தில்வென்று அறுத்துக் கொண்டது கண்ட
அவ்வரசன் அக்காலத்தில் பண்டிதர்கட்கெல்லாந் தலைவராய் விளங்கிய தகுதிக் கேற்ப, இவர்க்கு இத்திருநாமத்தைச் சாற்றின னென்க.
இவர் மற்றையாழ்வார்கள்போலத் தமதுநன்மையை நாடாமல் எம்பெருமானது நன்மையை நாடி
அவனுக்குப் பல்லாண்டுபாடிய சிறப்புத்தோன்ற ‘வையகமெண்பட்டர்பிரான்’ என்றார்.
‘வையகம்’ என்பது – இங்கு இடவாகுபெயராய், உலகத்திலுள்ளாரை உணர்த்திற்று.

கோதை – மாலை; எம்பெருமானுக்கு மாலைபோல மிக இனியளாயிருப்பவள்: அல்லது,
எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தற்காகத் தனதுதந்தையார் அமைத்துவைத்த பூமாலையை
அவரில்லாதசமயத்தில் தான்சூடிக்கொண்டு அழகுபார்த்துப் பின்பு, கொடுத்தவள்;
அன்றி, எம்பெருமானுக்குப் பாமாலைசூட்டினவள்.

தொண்டர்பாதப்பொடி – உள்ளும் புறமும் ஒத்துத் தொண்டுசெய்யும் மெய்யடியாரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
திருவடித்தூளிபோல அவர்கட்குக் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகுபவராதலால், இவர்க்கு ‘தொண்டரடிப்பொடி’ என்று திருநாமம்.

பாணன் – வீணையுங் கையுமாய்ப் பெரியபெருமாள் திருவடிக்கீழே நிரந்தரசேவைபண் ணிக்கொண்டு பாட்டுப்பாடிப் புகழ்பவர்;
பாண் – இசைப்பாட்டு.

கலியன் – மிடுக்குடையவர்; சோழராசன் கட்டளைப்படி மங்கைநாட்டார்க்கரசராகிய இவர் குமுதவல்லியென்னுங்
கட்டழகியை மணஞ்செய்துகொள்ளுதற்பொருட்டு அவள் சொற்படி நாடோறும் ஆயிரத்தெட்டு
ஸ்ரீவைஷ்ணவர்களைஅமுதுசெய்வித்துவருகையில், கைப்பொருள் முழுவதுஞ் செலவாய்விட்டத னால் வழிபறித்தாகிலும்
பொருள்தேடிப் பாகவத ததீயாராதநத்தைத் தடையற நடத்தத் துணிந்து வழிச்செல்வோரைக் கொள்ளையடித்து வரும்போது
ஸ்ரீமந்நாராயணன் இவரையாட்கொள்ளக் கருதித் தாம் ஒருபிராம ணவேடங்கொண்டு பலஅணிகலங்களைப் பூண்டு
மணவாளக் கோலமாய் மனைவியுடனே இவரெதிரில் எழுந்தருள, இவர் கண்டு களித்து ஆயுதபாணி யாய்ப்
பரிவாரத்துடன் சென்று அவர்களை வளைத்து வஸ்திரஆபரணங் களையெல்லாம் அபகரிக்கையில்
அம்மணமகன் காலிலணிந்துள்ள மோதிர மொன்றைக் கழற்றமுடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே கடித்து வாங்க,
அம்மிடுக்கை நோக்கி, எம்பெருமான், இவர்க்கு ‘கலியன்’ என்று ஒருபெயர் கூறினா னென உணர்க.
இவர் தமதுகுடிக்குஏற்ப இளமையிலேயே ஆயுதவித்தையில் தேர்ச்சிபெற்றுச் சோழராஜனையடுத்துச்
சேனா பதியுத்தியோகத்தி லமர்ந்து கொற்றவனுக்குக் கொடியவரோடு கடும்போர் நேருங்காலங்களிற் படைகளோடு
முன்சென்று பராக்கிரமத்தாற் பகைவென்று பரகாலனென்று பெயர்பெற்றுப் பலமுறை வாகைசூடிவந்தவ ராதலால்,
‘கட்டவிழ்தார்வாட்கலியன்’ என்றார்; தாரை வாளுக்கும் அடை மொழியாக்கலாம். தார் – முள்ளிமலர்மாலை யெனினுமாம்.
இவர்க்கு இம்மலர் மாலை உரியதாதலை, “முள்ளிச்செழுமலரோ தாரான்” என்பதனா லுணர்க.

———-

நம்மாழ்வார் –

பிறவாத பேறு பெறுதற்கு எஞ்ஞான்றும்
மறவா திறைஞ்சு என் மனனே துறவாளன்
வண் குருகூர் வாவி வழுதி வளநாடுடைய
தண் குருகூர் நம்பி திருத் தாள் –

(இ – ள்.) என் மனனே – எனது மனமே, –
துறவு ஆளன் – பற்றின் மையுடையவரும் (பற்றற்றவரும்),
வள் குருகு ஊர் வாவி வழுதி வளம் நாடு உடைய தண் குருகூர் நம்பி – அழகிய நீர்வாழ்பறவைகள் உலாவப்பெற்ற
நீர்நிலைகள் சூழ்ந்த பாண்டிவளநாட்டிலுள்ள குளிர்ந்த திருக்குருகூரில் திருவவதரித்த பெரியவருமான நம்மாழ்வாரது,
திரு தாள் – திருவடிகளை, – பிறவாத பேறு பெறுதற்கு – மீண்டும் பிறவாமையாகிற இலாபத்தையடையும் பொருட்டாக,
எ ஞான்றும் – எப்பொழுதும்,
மறவாது – மறவாமல்,
இறைஞ்சு – வணங்குவாயாக; (எ – று.)

திருமாலடியார்களிற் சிறந்த ஆழ்வார்கள் பன்னிருவருள் ஐந்தாமவராகிய நம்மாழ்வார் –
மற்றையாழ்வார்கள்போல லௌகிகவிஷயஞானம் நடை யாடுகையில் எம்பெருமானருளால் ஒருகாலவிசேஷத்தில்
தத்துவஞானாதிகள் தோன்றப்பெற்று அந்தப்பகவானை யனுபவிப்பதன்றித் திருத்துழாய் பரிமளத்துடனே
அங்குரிப்பதுபோல இயற்கையிலேயே விலக்ஷணமான ஞானபக்திகளையுடையவ ராதலால்,
மிகுந்த ஏற்றமுள்ளவராய்த் தத்துவ ஞான பிரவர்த்தநத்திற் சிறந்தவராதலோடு ஸ்ரீவைஷ்ணவர்கட்கு
இந்தப் பூலோகத்திற் பிரதமாசாரியருமாவர். ஆகவே, கவி இவரைப்பற்றித் தனியே காப்புச்செய்யுள் கூறின ரென்க.
இவ்வாழ்வார் – பகவானது அம்சமும், ஸ்ரீகௌஸ்துபத்தினது அம்சமும், சேனைமுதலியாரது அம்சமுமாவர்.
சடகோபன், வகுளாபரணன், பராங்குசன் என்ற பெயர்களும் இவர்க்கு வழங்கும்.

இதனால், நம்மாழ்வாரது திருவடிகளை வணங்கினால் மீண்டும் இவ்வுல கத்திற்பிறந்திறத்தலாகிய பிறவித்துயர் தீருமென,
தம்மனத்துக்கு இதோப தேசஞ் செய்கின்றனரென்க. பேறு – பெறுதற்கு உரியது; புருஷார்த்தம்.
எஞ்ஞான்றும் மறவாது இறைஞ்சுதல் – எப்பொழுதும் விடாமல் மனத்திற் கொண்டு வணங்குதல்.
மனம் – மனன்: ஈற்றுப்போலி. நம்மாழ்வார் பிறந்த பொழுதேதொடங்கி உலகப்பற்றுச் சிறிதுமின்றி யிருந்தவ ராதலால்,
அவரை ‘துறவாளன்’ என்றார். நம்பி – ஆண்பாற் சிறப்புப்பெயர்.

இச்செய்யுளின் பின்னிரண்டடிகள் – திரிபு என்னுஞ் சொல்லணியின் பாற்படும்:
திரிபாவது – அடிகளின் முதலெழுத்துமாத்திரம் வேறுபட்டிருக்க,
இரண்டுமுதலிய பலஎழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறுபடுவது:
இதனையும் யமகவகையி லடக்குவர் ஒருசாரார். அடுத்த இரண்டுசெய்யுள் களிலும் இவ்வணி காண்க.

———

உடையவர் –

முன்னே பிறந்து இறந்து மூதுலகிற் பட்ட எல்லாம்
என்னே மறந்தனையோ என் நெஞ்சே சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி —

(இ – ள்.) என் நெஞ்சே – எனது மனமே! –
முன்னே – இதற்குமுன்பு,
பிறந்து இறந்து – ஜநநமரணங்களை யடைந்து,
முது உலகில் பட்ட எல்லாம் – பழமையாகிய இவ்வுலகத்தில் அநுபவித்த கஷ்டங்களையெல்லாம்,
மறந்தனையோ – மறந்துவிட்டாயோ!
என்னே – (மீண்டும் ஸம்ஸாரத்திற் செல்லாமலிருத்தற்கு உரிய வழியைத் தேடாமல் அதனிடத்திலேயே செல்கின்ற இது) என்ன விபரீதபுத்தி!
சொன்னேன் – (நான் இப்பொழுது ஓர் உறுதி மொழி) கூறுகின்றேன்: (அதாவது), –
இன்றுமுதல் – இன்றுதொடங்கி,
பூதூர் முனி எதிராசன் பேர் மொழி – ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்த துறவியாகிய யதிராஜனது திருநாமத்தைச் சொல்லுவாய்;
(நீ அவ்வாறு சொல்வையாயின்), சன்மங்கள் இனி எதிரா – பிறப்புக்கள் இனி (உனக்கு) உண்டாகமாட்டா; (எ – று.)

இதனால், யதிராஜனது திருநாமத்தை வாயினாற்சொல்லுதலாகிய இந்தச் சிறுதொழிலொன்றினாலேயே
பிறவித்துயரைக் கடத்தலாகிய பெரும்பேறு கிடைப்பதாயிருக்க, அதனைப்பெறாது ஜநநமரணங்கட்கே இடமாகிய
உலகவாழ்க்கையிற் கிடந்து உழல்கின்ற தமது மனத்துக்கு நல்லுபதேசஞ் செய்கின்றனரென்க.
என்னே – ‘பட்டபிறகும் அறிவுவரவில்லையே!’ என்று மனத்தின் அறியாமைக்கு இரங்கிக்கூறியவாறு: இகழ்ச்சிக்குறிப்புமாம். எம்

பெருமான் “உடையவர்’ என்று ஒருநாமதேய முண்டாகுமாறு எதிராஜரை நோக்கி,
“உமக்கும் உம்முடையார்க்கும் உபயவிபூதி ஐஸ்வர்யமும் தந்தோம்’ என்று அருளிச்செய்கையாலும்,
உடையவர்க்கு முற்பட்ட ஆசாரியர்கள் அவர்திருமுடிசம்பந்தத்தாலும் பிற்பட்ட ஆசாரியர்கள் அவரது திருவடி சம்பந்தத்தாலும்
உய்வுபெறுவரென்பது, ஸ்ரீவைஷ்ணவர்களின் துணிபாதலாலும்,
முனியெதிராசன் பேர் மொழிந்தால் இனிச் சந்மம் எதிரா என்று கூறின ரென்னலாம்.

“சொன்னேன்’ = சொல்லுகின்றேன்: இயல்புபற்றிவந்த காலவழுவமைதி. சன்மம் – ஜந்மம்: வடமொழி.
முனி – மநநசீலன்: தத்துவஞான முடையவன்: இப்பெயர், துறவறமுடையோனைக் குறிக்கும்.
எதிராசன் = யதிராஜன்: யதிகட்குத் தலைவன்: யதிகள்யாவரினும் மேம்பட்டிருப்பவன். பேர் – பெயர்: மரூஉ.

ஸ்ரீவைஷ்ணவ விஸிஷ்டாத்வைத மத ஸ்தாபநாசார்யரும் ஸ்ரீ பாஷ்யகாரருமாகிய யதிராஜர் தமது திருவடி சம்பந்தத்தாற்
பின்புள்ளோரும் தமது திருமுடி சம்பந்தத்தால் முன்புள்ளோரும் ஈடேறுமாறு குருபரம் பரையில் நடுநாயக மணியாய்ச் சிறத்தலால்,
அவரைப்பற்றி, இந்நூலாசிரியர் இங்குத் துதிகூறின ரென்க.
இவர், தொண்டைநாட்டில் ஸ்ரீபெரும்பூதூரில் ஸ்ரீகேசவஸோமயாஜியாரின் திருக்குமாரராய்த் திருவவதரித்தவர்;
இவருக்கு நல்லம்மானாகிய பெரியதிருமலைநம்பியால் இளமையில் இடப்பட்ட திருநாமம் – இளையாழ்வாரென்பது;
பின்பு பஞ்சஸம்ஸ்காரஞ்செய்தபோது பெரியநம்பி ‘ராமாநுஜன்’ என்ற பெயரை யிட்டனர்.
இவர் ஸந்யாஸாச்ரமம் பெற்றபோது திருக்கச்சிப்பேரருளாளப்பெருமாள் ‘ராமாநுஜமுநி’ என்று பேரிட்டழைத்தனர்;
உடையவர் எம்பெருமானார் பாஷ்யகாரர் கோயிலண்ணன் சடகோபன்பொன்னடி என்ற திருநாமங்களும் இவர்க்கு உண்டு;
இவர் – ஆதிசேஷாம்மாவர். இவரதுசம்பந்தம் பெற்ற காரணத்தால், ஸ்ரீவைஷ்ணவசமயம், “எம்பெருமானார்தரிசனம்’ என்று சிறப்பித்துக் கூறப்படும்.

————-

கூரத் தாழ்வான் –

முக்கால மில்லா முகில் வண்ணன் வைகுந்தத்தது ‘
எக்காலம் செல்வான் இருக்கின்றேன் தக்கார் எண்
கூரத் தாழ்வான் அடியைக் கூடுதற்கு நாயடியேன்
போரத் தாழ்வான சடம் போட்டு —

(இ – ள்.) நாய் அடியேன் – நாய்போற் கடைப்பட்டவனாகிய யான், –
போர தாழ்வு ஆன சடம் போட்டு – மிகவும் இழிவையுடையதாகிய இவ்வுடம்பை (இங்கு) விட்டிட்டு, –
தக்கார் எண் கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு. பெரியோர்களால் நன்குமதிக்கப்பெற்ற கூரத்தாழ்வானது திருவடிகளைச் சேர்தற்கு –
முக்காலம் இல்லா முகில் வண்ணன் வைகுந்தத்து – (இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும்) மூன்றுகாலங்களுமில்லாததாகிய
காளமேகம்போன்ற திருநிறமுடைய திருமாலினது ஸ்ரீ வைகுண்டலோகத்தில்,
எக்காலம் – எந்நாளில்,
செல்வான் இருக்கின்றேன் – சென்று சேரப்போகின்றேன்? (எ – று.)

இந்நூலாசிரியர்க்கு ஸ்வாசார்யரான பட்டர்க்குக் கூரத்தாழ்வான் திருத்தமப்பனா ராதல்பற்றியும்
தம்குலமுதல்வரான திருவரங்கத்தமுதனார் ஸ்ரீபாஷ்யகாரருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்தற்குக் கூரத்தாழ்வான்
புருஷகாரமாயிருந்தமைபற்றியும், அவ்வாழ்வானைப்பற்றி வணக்கம் கூறப்பட்ட தென்க.
கூரமென்னுந்தலத்தில் திருவவதரித்து, எம்பெருமானுடைய திருக் கலியாணகுணகணங்களாகிய அமுதவெள்ளத்தில் முழுகி
மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்பவ ராதலால், இவர்க்கு இத்திருநாமம்.
கூரம் – தொண்டைநாட்டில் காஞ்சீபுரத்துக்கு வடமேற்கிலுள்ள தொரு தலம்.
இவர் – ஹாரீதகுல திலகரான ஸ்ரீராமஸோமயாஜியாரின் குமாரர்; இராமாம்சம் சங்காம்சம் ஸர்வநேத்ராம்சம்:
இவரது வேறுதிருநாமங்கள் – ஸ்ரீவத்ஸசிஹ்நர், திருமறு மார்பர், நடையாடுபதஞ்சலி, ஸஞ்சாரிமஹாபாஷ்யர், யதீந்த்ரசரணர் என்பன.
கூரத்தாழ்வான் அடி என்பதற்கு – பட்டர்எனப் பொருள்கொள்ளுதலும் தகும்:
பட்டர் – கூரத்தாழ்வானது திருக்குமாரராதலாலும், அத்தமப் பனாரிடத்தினின்று முக்கியமான வித்யைகளை
யெல்லாம் அதிகரித்த சிஷ்ய ராதலாலும், ஸிஷ்யரை ஆசாரியரது திருவடியாகக் கூறுதல் மரபாதலாலுமென்க.

மிகவும் நிக்ருஷ்டமாகிய இந்தமாம்ஸதேகத்தை ஒழித்துவிட்டுத் தே ஜோமயமான திவ்யசரீரத்தோடு
அந்தமில்பேரின்பத்தழிவில் வீட்டுலகத்தை யடைந்துள்ள தமதுபரமாசாரியராகிய கூரத்தாழ்வானது திருவடிகளை
எப்போது கூடுவே னென்று, நூலாசிரியர் ஸம்ஸாரத்தில் வெறுப்புக்கொண்டு மிக்கஆற்றாமையோடு கூறுகின்றனரென்க.
நிமிஷம் காஷ்டை கலை நாழிகை முகூர்த்தம் நாள் மாதம் வருஷம் யுகம் கற்பம் முதலிய காலவரையறை
பரமபதத்தில் இல்லையாதலால், ‘முக்காலமில்லாவைகுந்தம்’ எனப்பட்டது.
இனி, ‘முக்காலமில்லா’ என்பதை ‘முகில்வண்ணனுக்கு’ அடைமொழி யாக்கி, காலத்தினால் தோன்றுங் குற்றமற்று
என்றும் ஒருபடிப்பட இருக்கிற முகில்வண்ணனென்று உரைகூறலு மொன்று.
திருமாலுக்குக் காளமேகம் உவமை – கருநிறத்திலும் நெய்ப்பிலும் குளிர்த்தியிலும் கண்டோரை
மகிழ்வித்தலிலும் கைம்மாறுகருதாது கருணைமழை பொழிதலிலு மென்க.

வைகுந்தம் – வைகுண்டம் என்ற வடசொல்லின் சிதைவு: குண்டம் – பாபம்; அஃது இல்லாதவர் – விகுண்டர்:
அவருடைய சம்பந்தமுள்ள உலகம் – வைகுண்டம்.
“வஞ்சமுக்குறும்பாங் குழியைக் கடக்கும் நங்கூரத்தாழ்வான்” என்றபடி நீக்குதற்குஅரிய வித்யாமதம் தநமதம் குலமதம்
என்கின்ற மும் மதங்களையும், மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென்கிற மூவகைப் பற்றுக்களையும் ஒழித்தவராய்,
உடையவரதுபேரருளுக்குப் பிரதமபாதரமாய் அவருக்கு அந்தரங்கசிஷ்யராயிருந்ததுபற்றி, ‘தக்காரெண் கூரத்தாழ்வான்’ என்றார்.
அடியேன் – இரட்டுறமொழிதலால், சரமாங்கமாகிய அடிபோன்றவ னென்றும், அடிமைப்பட்டவ னென்றும் பொருள்படும்.
‘அடியேன்’ என்றது, ஆத்துமாவை. சடம் = ஜடம்: அறிவில்லாத பொருள்; அசித்து.
போரத்தாழ்வான சடம் – புழுநெளிந்து புண்ணழுகி யோசனைநாறுங் கழிமுடை நாற்றத்தையுடைத்தாய்,
ஊறி யுவர்த்தக்க ஒன்பதுவாய்ப்புலனுங் கோதிக்குழம்பலைக்குங் கும்பமான மாமிசதேகம்.
‘போட்டு’ என்றதனால், இந்தச்சரீரம் இவர்க்குப் பெருஞ்சுமையாயிருக்கின்ற தென்பது, போதரும்.

———

பட்டர் –

நான் கூட்டில் வந்தவன்றே நானறியா நன்மை எல்லாம்
தான் கூட்டி வைத்த நலந்தான் கண்டீர் -ஆம் கூட்டச்
சிட்டருக்கு வாய்ந்த திருவரங்கன் இன்னருளால்
பட்டருக் காட்பட்ட பயன் –

(இ – ள்.) கூட்டம் ஆம் சிட்டர்க்கு – திரள்திரளாகவுள்ள பெரியோர் கட்கு,
வாய்த்த – (கருணைசெய்யுமாறு வாத்ஸல்யத்துடன்) பொருந்தியிருக்கின்ற,
திருவரங்கன் – ஸ்ரீரங்கநாதன்,
இன் அருளால் – (தனது) இனிமையான (நிர்ஹேதுக) கிருபையினால், –
நான் -, கூட்டில் – இந்தச் சரீரத்தில்,
வந்த – வந்துபிறந்த,
அன்றே – அப்பொழுதே,
நான் அறியா நன்மை எல்லாம் – என்னால் அறியப்படாத நல்வினைகளையெல்லாம்,
தான் கூட்டி வைத்த – தான் உண்டாக்கிய,
நலம் – நன்மையென்பது, –
பட்டருக்கு – ஸ்ரீபராசரபட்டர்க்கு,
ஆள்பட்ட – சிஷ்யனாக அமையப்பெற்றதாகிய,
பயன் – பயனாகும்; (எ – று.) – கண்டீர் – முன்னிலையசை; தேற்றமுமாம். தான் – அசை.

ஸர்வேஸ்வரன் என்னையும் அறியாமல் என்னிடத்து நிகழ்ந்த சுகிருத விசேஷங்களையே காரணமாகக்கொண்டு,
ஸ்ரீ பராசரபட்டரது திருவடிகளில் ஆஸ்ரயிக்குமாறு செய்து அதனால் என்னை ஈடேற்றின னென்பதாம்.
‘நான் அறியா நன்மை’ என்பது – அஜ்ஞாதஸுக்ருத விஸேஷங்க ளெனப்படும்; அவையாவன –
‘என்னூரைச் சொன்னாய், என்பேரைச் சொன்னாய், என்னடியாரை நோக்கினாய், அவர்கள் விடாயைத் தீர்த்தாய்,
அவர்கட்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்’ என்றாற்போல எம்பெருமான் தானே வியாஜமாகக் கொள்ளுமவை:
இவ்வாறு அப்பிரான் கொள்வதற்குக் காரணம் – ஸர்வமுக்திப்ரஸங்கம் வராமைக்காக என்பர்:

ஆயின், எம்பெருமானது திருவருள் நிர்ஹேதுகம் என்பது எவ்வாறு? ஸஹேதுகமாகவன்றோ தோற்றுகின்றது? என்னில், – அன்று:
சிருஷ்டிகாலத்திலே இவ்வாத்மா உருமாய்ந்து கரணகளேபரங்களின்றி இறகொடிந்த பறவை போலவாகி
உரை மெழுக்கிற் பொன் போல மூலப்ரக்ருதியிற் கிடக்கையில்,
எம்பெருமான் ‘இவ்வாத்மா நம்மை யடைந்து உஜ்ஜீவநம் அடையவேணும்’ என்று தனது நிர்ஹேதுகமான பரமகிருபையாலே
கரண களேபரம் முதலியவற்றைக் கொடுத்து ஸ்ருஷ்டித்த பின்பன்றோ, இவ்வாத்மாவுக்கு அஜ்ஞாதஸுக்ருத விஸேஷங்களைக்
கற்பிக்கத்தக்க நிலைமை வந்தது. ஆகையால், எம்பெருமானது நிர்ஹேதுககிருபையே ஆத்மா ஈடேறுவதற்குக் காரணமாம்: இதனை விளக்குதற்காகவே, ‘திருவரங்கன் இன்னருளால் நான் கூட்டில் வந்தஅன்றேநானறியாநன்மையெல்லாம் கூட்டிவைத்த’ என்றார்.
(கூடு – பால்பகாவஃறி ணைப்பெயராய்ச் சரீரங்களை யுணர்த்துமென்க.)

இதன்விவரத்தை, ஸ்ரீவசந பூஷணம் முமுக்ஷுப்படி முதலிய ரஹஸ்யக்ரந்தங்களிலும், அவற்றின்வியாக் யாநங்களிலும் பரக்கக்காணலாம்.
“ஞான மநுட்டாந மிவை நன்றாகவே யுடைய, னான குருவை யடைந்தக்கால் – மாநிலத்தீர்,
தேனார்கமலத் திருமாமகள் கொழுநன், தானே வைகுந்தந்தரும்” என்றபடி ஸதாசார்ய ஸம்பந்தம் முக்திக்குக் காரணமாய் நிற்றலாலும்,
அதுவும் அவ்வெம்பெருமானது இன்னருளாலேயே நிகழவேண்டிய தாகையாலும்,
“நானறியா நன்மையெல்லாந் தான்கூட்டிவைத்த நலம் – பட்டர்க்கு ஆட்பட்ட பயன் கண்டீர்’ என்றார்.
கூட்டமாம் சிட்டர்க்கு வாய்த்த திருவரங்கன் – “பத்துடை யடியவர்க் கெளியவன்”. சிட்டர் = ஸிஷ்டர்: நல்லொழுக்க முடையவர்:
பெரியோர். பண்டிதரைக் குறிக்கின்ற “பட்டர்’ என்ற பொதுப்பெயர், சிறப்பாக இவர்க்கு இட்டு வழங்கப் பெற்றது.

———-

திருப்பதிகளின் வகை –

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–

(இ – ள்.) சோழம் – சோழநாட்டுத் திருப்பதிகள், –
ஈர் இருபது ஆம் – நாற்பதாகும்;
பாண்டி – பாண்டியநாட்டுத் திருப்பதிகள், –
ஈர் ஒன்பது ஆம் – பதினெட்டாகும்;
மலை நாடு – மலைகள் நிறைந்த சேரநாட்டுத் திருப்பதிகள், –
ஓர் பதின்மூன்று ஆம் – பதின்மூன்றாகும்;
சீர் நடுநாடு – சிறப்புப் பொருந்திய நடுநாட்டுத் திருப்பதிகள், –
ஓர் இரண்டு ஆம் – இரண்டாகும்;
தொண்டை – தொண்டைநாட்டுத் திருப்பதிகள், –
ஆறோடு ஈர் எட்டு – இரு பத்திரண்டாகும்;
அ வட நாடு – தூரத்திலுள்ள வடநாட்டுத் திருப்பதிகள், –
ஆறு இரண்டு – பன்னிரண்டாகும்;
கூறு – சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற,
திருநாடு – பரமபதமென்ற திவ்வியலோகம்,
ஒன்று – ஒன்றாகும்;
ஆ – இவ்வாறாக,
கொள் – (திருமாலின் திருப்பதிகள் நூற்றெட்டென்பதை) அறிந்துகொள்வாயாக; (எ – று.) –
இச்செய்யுள், நூலாசிரியர் தமது மனத்தை விளித்துக் கூறியதாகவேனும், சீடனைநோக்கிக் கூறியதாகவேனும் கொள்ளத்தக்கது.

சோழம் முதலிய நாட்டின் பெயர்கள் – அந்நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளைக் குறித்தன: இடவாகுபெயரின் பாற்படும்.
நடுநாடு – தொண்டைநாட்டுக்கும் சோழநாட்டுக்கும் இடையிலுள்ள தேசம்.
தொண்டை – தொண்டைமா னென்னும் அரசனால் ஆளப்பட்ட நாடு; தொண்டை மான்’ என்றது, குலத்து
முன்னோரில் ஒருவனது பெயராய் அவ்வரசனது பரம்பரையோர்க்கெல்லாம் வழங்கும்;
இப்பெயரின் காரணம் வருமாறு:- தொண்டைநாட் டிராசதானியான காஞ்சீபுரத்தி லிருந்த தொண்டைமா னிளந்திரையனைக்
குறித்துப் பாடியதாகிய பெரும்பாணாற்றுப்படையில்
“அந்நீர்த், திரை தருமரபின்…. பல்வேல்திரையன்” என்றவிடத்து
“நாகப ட்டினத்துச்சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியை மணந்தகாலத்து அவள்
‘யான்பெற்ற புதல்வனை என்செய்வேன்?’ என்ற பொழுது, ‘தொண்டையை (தொண்டை – ஓர்கொடி) அடையாளமாகக்
கட்டிக் கடலிலே விட, அவன் வந்து கரையேறின், அவற்கு யான் அரச வுரிமையை எய்துவித்து நாடாட்சிகொடுப்பல்’ என்று அவன்கூற,
அவளும் புதல்வனை அங்ஙனம் வரவிட, திரைதருதலின் ‘திரையன்’ என்று பெயர் பெற்ற கதை கூறினார்’ என்றும்
“தொண்டையோர்மருக” என்றவிடத்து
‘தொண்டையைச் சூடினோருடைய குடியி லுள்ளவனே!’ என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரைத்தவாற்றால் விளங்கும்.
இனி, ‘தொண்டை’ என்பதற்கு – நிலமகட்குத் தொண்டை (கழுத்துப்) போல முக்கியஸ்தாநமாகவுள்ளதென்றும்,
தொண்டர்கள் வசிக்கின்ற இடமென்றும் காரணப்பொருள் – கூறுவாரு முளர்.
வடநாடு – தமிழ்நாட்டின் வடவெல்லையாகிய திருவேங்கடமலை தொடங்கி வடக்கேயுள்ள நாடு. அகரச்சுட்டு – சேய்மையைக் குறிக்கும்.
நலமந்தமில்லதோர் நாடாகிய ஸ்ரீவைகுண்டம் எல்லாநாடுகளினுஞ் சிறந்த தாதலால், ‘திருநாடு’ என்று தனியே சிறப்பித்துக் கூறப்படும்.

“கடல்கிழக்குத் தெற்குக் கரைபொருவெள்ளாறு, குடதிசையிற்கோட் டைக்கரையாம் –
வடதிசையி, லேணாட்டுப்பெண்ணை யிருபத்துநாற்காதம், சோணாட்டுக் கெல்லையெனச்சொல்”,
“வெள்ளாறதுவடக்கா மேற்குப்பெரு வழியாம், தெள்ளார்புனற் கன்னி தெற்காகு –
முள்ளாரா, வாண்ட கடல் கிழக்கா மைம்பத்தறுகாதம், பாண்டிநாட் டெல்லைப் பதி”,
“வடக்குத் திசைப்பழனி வான்கீழ் தென்காசி, குடக்குத்திசை கோழிக்கூடாம் –
கடற்கரையி, னோரமோ தெற்காகு முள்ளெண்பதின்காதம், சேரநாட்டிற் கெல்லையெனச் செப்பு,”
“மேற்குப் பவளமலை வேங்கட நேர்வடக்கா, மார்க்குமு வரி யணிகிழக்குப் –
பார்க்குளுயர், தெற்குப் பினாகிதிகழிருபதின்காதம், நற்றொண்டை நாடெனவே நாட்டு” என்பவற்றால்
சோழ பாண்டிய சேர தொண்டை நாட்டி னெல்லையை யறிக.

———-

1–திருவரங்கம் பெரிய கோயில் –

சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என்
சோர்வந்த சொல்லில் சுருங்குமோ ஆர்வம்
ஒருவர் அங்கு அங்கு ஒயில் உகந்து அவரை ஆள்வான்
திரு அரங்கம் கோயில் சிறப்பு -1-

(இ – ள்.) ஒருவர் – ஒருத்தர்,
அங்கு அங்கு – அந்த அந்த விஷயங்களில் (பலவகையான உலகப்பற்றுக்களில்),
ஆர்வம் ஓயில் – ஆசையொழிந்தால்,
அவரை – அவ்வாறு பற்றற்ற அன்பரை,
உகந்து – விரும்பி,
ஆள்வான் – அடிமைகொள்பவனாகிய எம்பெருமானது,
திருவரங்கம் கோயில் – திருவரங்கம்பெரியகோயி லென்னுந் திருப்பதியின்,
சிறப்பு – பெருமையானது, –
சீர் வந்த உந்தி திசைமுகனால் அல்லாது – சிறப்புப்பொருந்திய (திருமாலின்) நாபீகமலத்திற் பிறந்த நான்கு
திக்கையும் நோக்கிய நான்குமுகங்களையுடைய பிரமதேவனா வல்லாமல்,
என் சோர்வந்த சொல்லில் சுருங்குமோ – எனது குற்றம் பொருந்திய சொற்களில் அடங்குமோ? (எ – று.)

எம்பெருமானது திருநாபீகமலத்தில் தோன்றி அவனதுஅருளைப் பெற்றுத் தேவர்களுட்சிறந்தவனாய் அந்த எம்பெருமானது
ஸ்வரூபரூபகுண விபவங்களைத் துதித்தற்கு ஏற்ற பலமுகங்களையுடையனான பிரமன்
ஸ்ரீரங்கத்தின் சிறப்பை ஒருகால் கூறிமுடித்தால் முடிக்கலாமே யொழிய,
சாதாரணமனிதனாய் அற்பஞானமுடையவனான என்னால் எவ்வாறு கூற முடியும்? முடியா தென்பதாம்;
பிரமதேவன் நான்முகனா யிருத்தலும், எம்பெருமானது புதல்வனாயிருத்தலுமன்றி ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியுள்ள
கடவுளை முதலில் ஆராதித்தவனுமாயிருத்தலால், ‘சீர்வந்த வுந்தித்திசைமுகனா லல்லாது’ என்றனரென்க.
எம்பெருமானது திருவருளுக்குப் பாத்திரமாவதற்குப் பற்றறுதலே முதற்காரண மென்பதை, மூன்றாமடியாய் விளக்கினார்.
‘அங்கங்கு’ என்ற அடுக்கு – பற்றுண்டாதற்குஉரிய வழிகள் பலவாதல்பற்றியதாம்.
‘ஓயில்’ என்ற எதிர்காலவினையெச்சம், ஓய்வதுஅருமை யென்பதைக் குறிப்பிக்கும்.
கோ + இல் = கோயில்; “கோவில்’ என வகரவுடம்படுமெய் பெற்று வரற்பாலது யகரவுடம்படுமெய்பெற்று வந்தது: இலக்கணப்போலி.

திருவரங்கமென்பது – திருமாலின் திவ்யதேசங்கள் நூற்றெட்டனுள் தலைமைபூண்டதும்,
சோழநாட்டுத்திருப்பதிகள் நாற்பதில் முக்கியமானதும்,
‘கோயில் திருமலை பெருமாள்கோயில்’ என்று பிரதானமாக எடுத்துக் கூறப்படுகின்ற மூன்றுதலங்களுள் முதலதும்,
‘கோயில்’ என்றும் ‘பெரிய கோயில்’ என்றும் மறுபெயருடையதும்,
‘பூலோகவைகுண்டம்’ எனப்படுகின்ற மகிமையுடையதும், ‘போகமண்டபம்’ எனப்படுவது மாகிய தலம்.

பிரணவாகாரமான ஸ்ரீரங்கவிமானத்திலே ஆதிசேஷசயனத்திற் பள்ளிகொண்டருளுந் திருமால் ஆதியிற் சத்தியலோகத்தில்
பிரமனது திருவாராதனத் திருவுருவமாயிருந்தான்:
பின்பு, சூரியகுலத்து மநுகுமாரனான இக்ஷ்வாகு மகாராஜன் பிரமனைக்குறித்துப் பலகாலம் அரும்பெருந்தவம் புரிந்து
அத் தேவனருளால் அப்பெருமானைத் தான்பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்த ருளப்பண்ணிக்கொண்டுவந்து
பிரதிஷ்டித்துத் திருவாராதனஞ்செய்துவந்தனன்.
அந்தஸ்ரீரங்கநாதனே இக்ஷ்வாகுமுதல் இராமபிரான்வரையிலுள்ள இரவிகுலமன்னவரெல்லார்க்கும் குலதெய்வமாகி விளங்கினான்.
இங்ஙனம் மனிதவுருவங்கொண்ட பெருமாளாகிய இராமபிரானால் வணங்கப்பட்ட மைபற்றி,
ரங்கநாதனுக்கு ‘பெரிய பெருமாள்’ என்று திருநாமம்.

இராமபிரான். வனவாசஞ்சென்று விபீஷணனுக்கு அபயமளித்துக் கடல்கடந்து இலங்கைசேர்ந்து இராவணாதிராக்ஷஸசங்காரஞ்செய்து,
திருவயோத்திக்கு மீண்டுஎழுந்தருளிப் பட்டாபிஷேகஞ் செய்துகொண்டபின்பு சுக்கிரீவன் முதலிய அனைவர்க்கும் விடைகொடுத்து
அவரவரைத் தந்தம் இருப்பிடங்கட்கு அனுப்பும்பொழுது தனதுதிருவாராதனமூர்த்தியும் குலதனமுமான திருவரங்கநாதனைத்
தனக்கு மிகவும்அந்தரங்கனான விபீஷணாழ்வானிடங் கொடுத்து ஆராதித்துவரும்படி நியமித்து அனுப்பினான்.
அங்ஙனமே அவ்வரக்கர்பெருமான் அவ்வமரர்பெருமானை அவ்விமானத்துடனே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு
இலங்கை நோக்கிச் செல்லும்பொழுது இடைவழியில் உபயகாவேரிமத்தியிலே
பெருமான் புடைபெயராது விமானத்துடனே நிலைநின்றருளினான். அவ்வாறு திருமால் திருவுள்ளமுவந்து தங்கிய இடமே ஸ்ரீரங்க மெனப்படுவது.

இராமபிரான், திருவவதாரத்தை முடித்துக்கொண்டு தன்னடிச்சோதிக்கு எழுந்தருளும்பொழுது வந்து தன்னைவணங்கித் தனது பிரிவை யாற்றமாட்டாது நின்ற விபீஷணனுக்கு இக்ஷ்வாகு குலதெய்வமும் தனது திருவாராதனமூர்த்தியு மான திருவரங்கநாதனைத் தந்தருளினனென வரலாறு கூறுதலுமுண்டு.

(ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற்கடல் சூரியமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்தினும் இனியதென்று திருமால்)
திரு வுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கு மிடமான தென்பதுபற்றி, “ரங்கம்’ என்று அவ்விமானத்திற்குப் பெயர்;
திருமால் இங்கு ரதியை (ஆசைப்பெருக்கத்தை) யடைகின்றன னென்க.
‘ரங்கம்’ என்னும் வடமொழி அகரம் மொழிமுதலாகி முன்வரப்பெற்று ‘அரங்கம்’ என நின்றது;
இங்கு, ‘அரங்கம்’ என்பது – விமானத்தின்பெயர் திருப்பதிக்கு ஆனதோர் ஆகுபெயர் (தானியாகுபெயர்.)
இனி, திருமகளார் திருநிருத்தஞ்செய்யு மிடமாயிருத்த லாலும், ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திருவுக்கு
(மேன்மைக்கு)க் கூத்துப் பயிலிடமா யிருத்தலாலும்,
ஆற்றிடைக்குறை (நதியினிடையே உயர்ந்த திடர்) ஆதலாலும், திருவரங்கம்’ என்னும் பெயர் வந்த தெனினுமாம்.

(பரத்வம்வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சை என்ற திருமால்நிலைகள் ஐந்தனுள், பரமாகிய திருநாடும் வ்யூஹமாகிய
திருப்பாற்கடலும்ஒழியமற்றைத்தலங்கள் – அர்ச்சையின் வகையினைச் சேர்ந்தவை;
இந்த அர்ச்சை – மாநுஷம் ஆர்ஷம் தைவம் ஸ்வயம்வ்யக்தம் என நான்குவகைப்படும்;
இவற்றுள், சாதாரணமநுஷ்யரால் பிரதிஷ்டைசெய்து பூஜிக்கப்பட்டு வருபவை – மாநுஷமாம்;
வ்யாஸர் முதலிய மஹரிஷிகளால் பிரதிஷ்டைசெய்து பூஜிக்கப்பட்டு வந்தவை – ஆர்ஷமாம்;
பிரமன்முதலிய தேவர்களால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்டுவந்தவை – தைவமாம்.
இவ்வாறன்றி, எம்பெருமான் ஸ்வயமாகவே ஆவிர்ப்பவிக்கப் பிறகு தேவர்முதலியோராற் பூஜிக்கப்பட்டு வந்தவை – ஸ்வயம்வ்யக்தமாம்.
அந்த ஸ்வயம்வ்யக்த க்ஷேத்ரம் எட்டாகும்; அவையாவன –
ஸ்ரீரங்கம், திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், வானமாமலை, புஷ்கரம், நைமிசாரணியம், பதரிகாச்சிரமம், சாளக்கிராமம் என்பன.
திருமாலின் நூற்றெட்டுத் திருப்பதிகள் – மாநுஷமொழிந்த மற்றை மூவகை யர்ச்சையினைச் சேர்ந்தவையென்றும்,
மூவகையர்ச்சையிற் சேர்ந்த திருப்பதிகளுள்ளுஞ் சில – ஆழ்வார்களது மங்களாசாசனம்பெற்ற நூற்றெட்டுத்திருப்பதிகளிற் சேர்ந்தனவாகாமல்,
புராணஸ்தலங்களென்று சிறப்பித்துக்கூறப்படுமென்றும் அறிக.)

“ஸ்ரீரங்கம்’ என்ற திவ்வியதேசம் பூமண்டலத்திலுள்ள திருமால் திருப்பதிக ளெல்லாவற்றினும் சிறத்தல்பற்றியும்,
அத்தலத்தினிடத்துத் தமக்கு அன்புமிகுதல்பற்றியும், அத்தலத்தைத் தன்னிலேயுடைய சோழநாட்டை
முதலாகவே இந்நூலாசிரியர் கூறலாயின ரென்க.

நூல் தொடங்கும்போது மங்கலமொழியை முதலில்வைத்துக்கூறுவது மரபாதலின், “சீர்’ என்று தொடங்கினார்.

இந்தநூல், நேரிசைவெண்பாவினா லியன்று, பின்னிரண்டடிகள்தோறும் திரிபு என்னுஞ் சொல்லணி யமையச் செய்யப்பெற்றுள்ளது.

————–

2– திரு உறையூர்

சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போலே
மறப்புடைய நாயேன் மனத்துள் உறப் போந்து
அறம்தையா நின்ற அரங்கா திரு வாழ்
உறந்தையாய் இங்கு உறைந்தது ஒது —

(இ – ள்.) மறப்பு உடைய – மறதியையுடைய,
நாயேன் – நாய்போலக் கடைப்பட்டவனான எனது,
மனத்துள் – மனத்திலே,
உறபோந்து – நன்றாக எழுந்தருளியிருந்து,
அறம் தையாநின்ற – தருமத்தைப் பதியுமாறுசெய்கின்ற,
அரங்கா – திருவரங்கநாதனே!
திரு வாழ் உறந்தையாய் – இலக்குமி வாழ்கின்ற திருவுறையூரென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியிருப்பவனே! –
(நீ), – சிறப்பு உடைய செல்வம் திருப்பதிகள் போல – பெருமை பெற்ற செல்வம் நிறைந்த திவ்விய ஷேத்திரங்கள் போல,
இங்கு – இந்த என் மனத்தில்,
உறைந்தது – நித்தியவாசஞ் செய்வதற்குக் காரணத்தை,
ஓது – கூறியருள்வாய்; (எ – று.)

திருப்பதிகளில் திருவுள்ளமுவந்து வாழ்வதுபோல, மிகவுந்தண்ணியனான எனது மனத்தில் வாழ்வது உனது
நிர்ஹேதுகமான கிருபாகடாக்ஷமேயென ஈடுபட்டுக் கூறியவாறு.
எம்பெருமான் திவ்வியதேசங்களில் எழுந்தருளியிருக்குமாறுபோல, நின்றதிருக்கோலமாகவும் கிடந்ததிருக்கோலமாகவும்
வீற்றிருந்த – திருக்கோலமாகவும் அந்த எம்பெருமானை அடியேன் மனத்தினால் அன்போடு தியானித்தல்பற்றி,
அப்பெருமான் நான் நினைத்தபடியெல்லாம் எனது மனத்தில் திருவுள்ளமுவந்து வந்து
எழுந்தருளியிருக்கின்றன னென்பது தோன்ற, இங்ஙனங் கூறினார்.
திருப்பதிகள் யாவும் என்றும் அழியாததான ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயை யுடையன வாதலால், “சிறப்புடைய செல்வத்திருப்பதிகள்’ என்றார்.
நீ இவ்வாறு காரணமின்றிச் செய்யும் பெருங்கருணையை நினைத்தற்கும் வல்லமையற்றவன் யா னென்பார், ‘மறப்புடைய நாயேன்’ என்றார்;
எம்பெருமானிடத்துச் செல்லும்போது, தமதுகுற்றத்தை முன்னிட்டுக்கொண்டு செல்லுதல் முறைமையாகு மென்பது, இங்கு உணரத்தக்கது.
இங்குக்கூறிய “மறப்பு’ – எம்பெருமானை ஸ்வாமியென்றும்,
தன்னை ‘ஸ்வம் (உடைமை)’ என்றும் அறியாமையை உணர்த்து மென்னலுமாம்;
“மறந்தே னுன்னை முன்னம்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும்,
அதன் வ்யாக்யாநத்தில், ‘ஸம்பந்தம் ஸ்வாபாவிகமே யாகையாலே முன்பு நெடுநாள் மறந்துபோகச் செய்தேயும்
சிலநாள் ஸ்மரித்து மறந்தாற்போலே யிருக்கத் தோற்றிற்று’ என்று பெரியாரருளியதும் இங்கு உணரத்தக்கன.
திருவரங்கநாதனே அழகியமணவாளக்கோலமாக இத்தலத்தில் எழுந்தருளியிருத்தலால்,
‘அரங்கா திருவாழுறந்தையாய்’ எனச் சேர்த்துக்கூறினார்.

திருஉறைந்த காரணம்பற்றி, இத்திருப்பதிக்கு, ‘திருவுறையூர்’ என்று திருநாமமாயிற்று;
உறையூர் = உறந்தை : மரூஉ. இஃது, அழகிய மணவாளனுக்கும் உறையூர்வல்லிக்கும் திருமணம் நடந்த தலம்;
திருப்பாணாழ்வார் திருவவதரித்த தலம்.

———-

3-திருத் தஞ்சை –

ஓதக்கேள் நெஞ்சே உனக்கும் இது நன்று எனக்கும்
மேதக்க நன்மை இதின் வேறு இல்லை போதப்
பெருந்தஞ்சை மா மணியைப் பேணி வடிவம்
பொருந்து அஞ்சை மா மணியைப் போற்று —

(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
ஓத – (நான்) சொல்வதை,
கேள் – (நீ) கேட்பாயாக;
(கேட்டால்), இது உனக்கும் நன்று – நான் சொல்லுகின்ற இவ்விஷயம் உனக்கும் நன்மையை யுண்டாக்கும்;
எனக்கும் மேதக்க நன்மை இனி வேறு இல்லை – எனக்கும் மிக்கநன்மையை யுண்டாக்குவது இதனினும் வேறொன்று இல்லையாம்;
(இவ்வாறு நம்மிருவர்க்கும் ஒருங்கே நன்மை பயக்கக்கூடிய உபாயம் யாதெனில்), –
பெருந் தஞ்சை மா மணியை போத பேணி – பெரிய திருத்தஞ்சையென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய
சிறந்த மாணிக்கம்போன்ற கடவுளை நன்றாக விரும்பித் துதித்து,
வடிவம் பொருந்து – (அப்பெருமானது) திருமேனியிற் பொருந்திய,
அஞ்சை – பஞ்சாயுதங்களையும்,
மா – லஷ்மியையும்,
மணியை – கௌஸ்துபரத்நத்தையும்,
போற்று – வாழ்த்துவாயாக; (எ – று.)

திருத்தஞ்சையி லெழுந்தருளியுள்ள எம்பெருமானையும், அவனது திருமேனியில் அமைந்துள்ள பஞ்சாயுதம்
முதலியவற்றையும் போற்றினால் விஷயாந்தரங்களைப் பற்றியுள்ள உனக்கும் அதனாலுண்டான மாசு ஒழிய
எனக்கும் நற்பேறுவாய்க்கு மென்பதாம். தமக்குள்ளடங்கிய மனத்தை இங்ஙனம் வேறுபடுத்துக் கூறியது,
இதுவரையில் மனம் தமக்கு வசப்படாமல் விஷயாந்தரங்களிற் சென்று தமக்குப் பலபடியாலும்
அநர்த்தத்தை விளைத்து வந்ததனா லென்க.

‘தஞ்சைமாமணி’ என்பது, இத்தலத்து எம்பெருமானது திருநாமம். இதனால்,
இத்தலத்திற்குத் தஞ்சை மா மணிக்கோயிலெனத் திருநாமமுண்டாயிற்று.
வடிவம்பொருந்து அஞ்சு – சுதர்ஸநமெனப்படுஞ் சக்கரமும், பாஞ்சஜந்ய மெனப்படுஞ் சங்கமும்,
கௌமோ தகீ யெனப்படுங் கதையும், நந்தகமெனப்படும் வாளும், சார்ங்கமெனப்படும் வில்லுமாம்.
‘வடிவம்பொருந்து’ என்ற தொடர், ‘மா’, ‘மணி’ என்றவற்றோடும் இயையும்.
திருமாலின் வலப்பால் மேற்கரத்திற் சக்கரமும், இடப்பால் மேற்கரத்திற் சங்கும், வலப்பாற்கீழ்க்கரத்திற் கதையும்,
இடப்பாற் கீழ்க்கரத்தில் வில்லும், அரையில் உடைவாளும், வலத்திருமார்பில் இலக்குமியும்,
இடத்திருமார்பிற் கௌஸ்துபரத்நமும் உள்ளனரென்க.
இனி, ‘வடிவம்பொருந்து அஞ்சை’ என்பதற்கு – திருமால் திருவுருவங்கொண்டுள்ள ஐவகைநிலையை எனக் கூறலு மொன்று.
அவை – பரத்வம், வ்யூஹம், விபவம் அந்தர்யாமித்வம், அர்ச்சை என்பன.
(அவற்றுள், பரத்வமாவது – பரமபதத்தில் பரவாசு தேவராய் எழுந்தருளியிருக்கும் நிலை;
வ்யூஹமாவது – திருப்பாற்கடலில் (வாசுதேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்குரூபத்துடன்) எழுந்தருளியிருக்கும் நிலை;
விபவமாவது – ராமக்ருஷ்ணாதி யவதாரங்கள்.
அந்தர்யாமித்வமாவது – சராசரப்பொருள்களெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள் எண்ணெய்போல மறைந்துவசித்தலும்,
அடியார்மனத்தில் வீற்றிருத்தலும்; அர்ச்சையாவது – விக்கிரகரூபத்தில் ஆவிர்ப்பவித்தல்.)
‘அஞ்சு’ என்பது – இவ்விருவகைப்பொருளிலும் எண்ணலளவையாகுபெயர்; இச்சொல், ‘ஐந்து’ என்பதன் முழுப்போலியாம்,
“போதம்’ என்று பிரித்து – அறிவு விளங்குகின்ற என்று உரைப்பாரு முளர்.
உம்மைகள் இரண்டும் – ஒன்றை யொன்று நோக்கி இறந்ததும் எதிரதுந் தழுவியன.

தஞ்சாசுரனைக் கொன்ற தலமாதல்பற்றி, இதற்குத் தஞ்சையென்று நாமதேய முண்டாயிற் றென்பர்.

————–

4-திருவன்பில் –

போற்றி செய வோர் குடைக் கீழ்ப் பொன்னாடும் இந்நாடும்
நால் திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை தோற்றம் இலா
எந்தை அன்பில் ஆதி இணைத் தாமரை அடிக்கே
சிந்தை அன்பிலாதார் சிலர் –4-

(இ – ள்.) தோற்றம் இலா எந்தை – பிறப்பில்லாத எமதுதந்தையும்,
அன்பில் ஆதி – திருவன்பி லென்னுந் திருப்பதியி லெழுந்தருளியிருக்கின்ற முழுமுதற்கடவுளுமான எம்பெருமானது,
இணை தாமரை அடிக்கு – இரண்டு திருவடித்தாமரைகளினிடத்தில்,
சிந்தை அன்பு இலாதார் சிலர் – தமது மனத்திற் பக்தியைக்கொள்ளாதவராகிய சிலபேர், –
போற்றி செய – (யாவரும் தமக்கு) வாழ்த்துக்கூற,
ஓர் குடை கீழ் – ஒற்றைவெண்கொற்றக்குடையின் நிழலிலே,
பொன் நாடும் – பொன்னுலகமாகிய தேவலோகத்தையும்,
நால்திசையும் இ நாடும் – நான்குதிக்கின் எல்லைவரையிலுமுள்ள இம்மண்ணுலகத்தையும்,
ஆண்டாலும் – தனியரசாட்சிசெய்தாலும்,
நன்கு இல்லை – (அதனால் அவர்க்கு யாதொரு) நன்மையும் உண்டாகாது; (எ – று.)

அழியாப் பேரின்பத்தைப் பெற்று உய்யுமாறு எம்பெருமானிடத்துப் பக்திசெலுத்துவதைவிட்டு அழிந்தொழியுந்
தன்மையதாகிச் சிற்றின்பத்திற்கே இடமான இந்திரபதவிமுதலிய சிறப்புக்களை ஒருங்கேயடைந்து
எல்லாவுலகங்களையும் தனிச்செங்கோல் செலுத்தும் பெருமை பெற்றாலும் அஃது நற்கதிபெறுதற்குச் சிறிதுங்காரணமாகா தாதலால்,
அதனால் யாதொரு பயனு மில்லை யென்பதாம்.
அரசாட்சியை – குடையென்றும், கோலென்றும், சக்கரமென்றுங் கூறுதல், கவிசமயம்.
பொன்னாடும் இந்நாடும் என்பது, மேல் கீழ் உலகங்க ளெல்லாவற்றிற்கும் உபலக்ஷணம்.
ஸ்வர்க்க லோகத்திலுள்ளன யாவும் பொன்மயமா யிருக்குமென்பது நூல்துணிபாதலின், அது ‘பொன்னாடு’ எனப்படும்.
தோற்றத்தைக்கூறியது – இறப்பிற்கும் உபலக்ஷணம்; தோற்றமிலாவெந்தை – ஆதிமத்யாந்தரஹித னென்றவாறு,
ஒருபிறப்பில் மாத்திரம் மக்களானவர்க்கு உவந்தபோது உபகாரத்தைச் செய்யும் தந்தைபோலவல்லாமல்
எப்போதும் இடைவிடாமல் அடியவரான தமக்கு அன்போடு ஆவன எல்லாவற்றையும் செய்த
உபகாரகனாதலால், எம்பெருமானை ‘எந்தை’ என்றார்; இது, ஸர்வவிதபந்துவாயிருத்தற்கு உபலக்ஷணம்.
ஆதி – “முதலாவார் மூவரே யம்மூவருள்ளும், முதலாவான் மூரிநீர் வண்ணன்” என்றார் பெரியாரும்.

போற்றி – இகரவிகுதிபெற்ற தொழிற்பெயர்;
இனி, போற்றிசெய என்பதற்கு- போற்றியென்ற சொல்லைக் கொண்டு வாழ்த்த எனினுமாம்;
இப் பொருளில், “போற்றி’ என்பது – ‘போற்றிய’ என்னும் வியங்கோளின் அங கரணம்; ஈறுதொக்குவந்த தென்க.
உம்மைகள் நான்கனுள், முன்னைய இரண்டும் – எண்ணுப்பொருளன; மூன்றாவது – முற்றுப்பொருளது;
நான்காவது – உயர்வுசிறப்புப்பொருளது. அடிக்கு – உருபுமயக்கம். ஏகாரம் – இசை நிறை: சிறப்புப்பொருளுமாம்.

————

5-திருக் கரம்பனூர்

சிலமா தவம் செய்தும் தீ வேள்வி வேட்டும்
பலமா நதியில் படிந்தும் உலகில்
பரம்ப நூல் கற்றும் பயன் இல்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமன் பேர் கல் -5-

(இ – ள்.) நெஞ்சே – எனதுமனமே! –
உலகில் – இவ்வுலகத்தில்,
சில மாதவம் செய்தும் – சில பெருந்தவங்களைச் செய்தும்,
தீ வேள்வி வேட்டும் – ஓமாக்கினியையுடைய யாகத்தைச் செய்தும்,
பல மா நதியில் படிந்தும் – பல சிறந்தநதிகளில் மூழ்கியும்,
பரம்ப நூல் கற்றும் – விரிவாக நூல்களைப் படித்தும்,
பயன் இல்லை – (அவற்றால்) யாதொருபயனுமுண்டாகாது;
(ஆதலால், அவ்வாறெல்லாம் செய்வதைவிட்டுத் தவறாமற்பயன் பெறும்படியாக).
கரம்பனூர் உத்தமன் பேர் கல் – திருக்கரம்பனூரென்னுந் தலத்தி லெழுந்தருளியுள்ள புருஷோத்தமனது
திருநாமத்தைப் பலதரம் கூறுவாயாக; (எ – று.)

பகவத்ப்ராப்திக்கு விரோதியான சரீரஸம்பந்தாதிகளை யறுத்துக்கழித்து எம்பெருமானைப் பெறவேண்டுமென்று
கருதி அரும்பெருந்தவஞ்செய்தும் மகாயாகங்களைப்புரிந்தும் புண்ணியநதிகளில் மூழ்கியும்
‘சித்திக்கு வித்து அதுவோ இதுவோ’ என்று பலநூல்களைப் படித்தும் புருஷார்த்தம் கை கூடாமல் வருந்தல் வேண்டா;
அடியார்கள்பக்கல் பேரருளுடையனாகிய திருக்கரம்பனூரிலெழுந்தருளியுள்ள எம்பெருமானது திருநாமசங்கீர்த்தன மென்ற
இந்த எளிய உபாயத்தினாலேயே சகலவிரோதிகளும் ஒழிய நற்கதி பெறுவாயென்று தமது நெஞ்சிற்கு ஹிதோபதேசஞ் செய்கின்றார்.
“ஊன் வாடவுண்ணாதுயிர்காவலிட்டு உடலிற்பிரியாப்புலனைந்தும் நொந்து, தாம் வாடவாடத் தவஞ்செய்யவேண்டா”,
“காயோடு நீடுகனியுண்டு வீசுகடுங் கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து, தீயோடுநின்று தவஞ்செய்யவேண்டா …..
தில்லைத் திருச்சித்திரகூடஞ் சென்று சேர்மின்களே” என்ற வாய்பாடு கொண்டது, இச்செய்யுள்.
“செய்தவராகவருந்தியுந் தீர்த்தத்துறைபடிந்துங், கைதவராகமங்கற்று மென்னாம்” என்றார் அழகரந்தாதியிலும்.
உத்தமன் – ‘புருஷோத்தமன்’ என்ற சொல்லின் நாமைகதேஸே நாமக்ரஹணம்.
கதம்பமஹர்ஷிக்குத் திருமால் ப்ரத்யக்ஷமான தல மாதல்பற்றி, இது ‘கரம்பனூர்’ என்று பெயர்பெற்றதுபோலும்.
கரம்பனூர் – கதம்பனூர் என்பதன் மரூஉவென்க. இத்தலம் – ‘உத்தமர்கோயில்’ என்று வழங்கப்பெறும்.

———

6-திரு வெள்ளறை-

கல் இருந்தான் தந்தை கமலத்தோன் அக்கமலத்
தில் இருந்தான் தந்தை அரங்கேசன் என்றே தொல்லை மறை
உள் அறையா நின்றமையால் உள்ளமே கள்ளம் இன்றி
வெள்ளறையான் தானே விரும்பு –6-

(இ – ள்.) உள்ளமே -எனது மனமே! –
‘கல் இருந்தான் தந்தை – கை லாசமலையி லிருப்பவனாகிய சிவபெருமானது திருத்தந்தை,
கமலத்தோன் – (திருமாலினதுநாபித்) தாமரையில் தோன்றியவனாகிய பிரமனாவன்;
அக் கமலத்தில் இருந்தான் தந்தை – அந்தத்தாமரைமலரில் வாழ்பவனாகிய பிரமனது திருத்தந்தை,
அரங்கேசன் – திருவரங்கநாதனாவன்;
என்று -,
தொல்லை மறையுள் அறையாநின்றமையால் – பழமையாகிய வேதங்களிற் சொல்வதனால், –
கள்ளம் இன்றி – கபடமில்லாமல்,
வெள்ளறையான் தாளே – திருவெள்ளறையென்னுந்தலத்தி லெழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவடிகளையே,
விரும்பு – விரும்பிச்சேர்வாயாக; (எ – று.)

இதனால், பிரமருத்திரர்களுக்கும் காரண மென்று வேதத்திற் சிறப்பித்துக் கூறப்படுந் தலைமை பெற்றுள்ள
எம்பெருமானது திருவடிகளை நீ விரும்பிச் சரணமடைவா யென்று தமதுநெஞ்சிற்கு உபதேசஞ் செய்கின்றனர்.
பரதெய்வம் இன்னதென்று தெரியாமல் தடுமாறவொட்டாதபடி இதுவே பரதெய்வமென்று நிச்சயித்துக் கூறினரென்க.
“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும், தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்” என்றார் திருமழிசைப்பிரானும்.

கல் – கற்களையுடைய மலைக்குச் சினையாகுபெயர்; இது, சிறப்பாய்க் கைலாசகிரியை யுணர்த்திற்று.
கமலம் – நீரையலங்கரிப்பதென்று காரணப் பொருள்படுந் தற்சமவடசொல்.
கமலத்தில்லிருந்தான் – எதுகைநோக்கிய விரித்தல். அரங்க + ஈசன் = அரங்கேசன்: குணசந்திபெற்ற வடமொழித் தொடர்.
ஓதலாகாதென்று சிலர்க்கு மறுக்கப்படுதல்பற்றி, மறையென்று பெயர்;
இனி, இச்சொல்லுக்கு – (எளிதிலுணரலாகாதபடி) மறைந்துள்ள பொருள்களையுடையதென்று காரணப்பொருள்கூறவுமாம்.

வெள்ளறை – வெண்மையான பாறைகளா லியன்ற மலை; (அறை – பாறை;) இது, வடமொழியில் ‘ஸ்வேதாத்ரி’ எனப்படும்.

———–

7-திருப் புள்ளம் பூதங்குடி –

விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும்
அரும்பரம வீடு அடைவீர் பெரும் பொறிகள்
கள்ளம் பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள்
புள்ளம் பூதங்குடியில் போம் –7-

(இ – ள்.) பெரும் பொறி கொள் – வலிய ஐம்பொறிகளைக்கொண்டதும்,
கள்ளம் பூதம் குடி கொள் – வஞ்சனைக்குணமும் பஞ்சபூதங்களும் பொருந்தப் பெற்றதுமான,
காயம் – சரீரத்தை,
உடையீர் – உடையவரான ஜநங்களே! (நீங்கள்), –
அடிகள் புள்ளம்பூதங்குடியில் போம் – எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருப்புள்ளம் பூதங்குடியென்னுந் தலத்திற் போய்ச் சேருங்கள்;
(சேர்ந்தமாத்திரத்தில்), – விரும்பினவை எய்தும் – (நீங்கள்) விரும்பியவை எல்லாம் கைகூடும்;
வினை அனைத்தும் தீரும் – (உங்களது) எல்லாவினைகளும் நீங்கும்;
அரும் பரம வீடும் அடைவீர் – பெறுதற்கு அரிய சிறந்த முத்தியுலகத்தையும் சேர்வீர்கள்; (எ – று.)

திருப்புள்ளம்பூதங்குடி யென்னுந் திருப்பதியைச் சேர்ந்தமாத்திரத்தில், அதன்மகிமையால் நீங்கள்
இம்மையில் விரும்பிய எல்லாவற்றையும் பெற்று வினையனைத்துந்தீர்ந்து மறுமையில் மோக்ஷத்தையும் பெறுவீ ரென்பதாம்.
நல்வினையும் பிறப்பிற்கு ஏதுவாதலால் அதனையுஞ்சேர்த்து ‘வினை யனைத்துந் தீரும்’ என்றார்.
“இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார்மாட்டு” என்றார் திருவள்ளுவனாரும்.
தேவஜந்மம் நல்வினைப்பயனாற் பெரிதும் இன்பநுகருமாறு நேர்வதாயினும் அத்தேவர்களும் நல்வினை முடிந்தவளவிலே
அவ்வுடம்புஒழிய மீளவும் இவ்வுலகத்திற் கருமவசத்திற்குஏற்ப வேறுபிறவி கொள்பவ ராதலும்,
உயிரைப் பந்தப் படுத்துவதில் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போலப் புண்ணியஜந்மமும் பாபஜந்மமும் சமமேயாதலும்,
எல்லாக்கருமங்களையும் முற்றுமொழித்தவர்களே சிற்றின்பத்திற்கும் பெருந்துன்பத்திற்கும் இடமான எழுவகைப்பிறப்புக்களிலும்
புகுதாமல் பேரின்பத்திற்கே இடமான மீளாவுலகமாகிய முத்தியிற் சேர்ந்து மீளவும் பிறத்தலிலராவ ரென்பதும் உணர்க.
சஞ்சிதகருமமும் ஆகாமியகருமமும் அநப்யுபகதப்ராரப்தமும்ஆகிய எல்லாக்கருமங்களும் காட்டுத்தீயின்முன்
பஞ்சுப்பொதிபோலவும் விளக்கின்முன் இருள்போலவும் மிக எளிதில் அதிசீக்கிரத்தில்
அழிந்தொழிதலால், ‘வினையனைத்துந் தீரும்’ என்றாருமாம்.
(பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரால் அளவின்றி ஈட்டப்பட்டுள்ள வினைகள் – சஞ்சிதம்;
அவற்றுள் இறந்த உடம்புகளால் அநுபவித்தன ஒழியப் பிறக்கும் உடம்புகளால் அநுபவிக்கக் கடவனவாய் நின்றவை – ப்ராரப்தம்;
ஆகாம்யம் – பிறக்கும்உடம்புகளால் புதியனவாக ஈட்டப்படுபவை. எடுத்த உடம்பால் அநுபவிப்பவை – அப்யுபகதப்ராரப்தமும்,
இனிவரும் உடம்புகளால் அநுபவிக்கப்படுபவை – அநப்யுபகதப்ராரப்தமுமாம்.)

துஷ்டமிருகங்களை யகப்படுத்தும் பொறியை (யந்திரத்தை)ப் போன்று ஆத்துமாவை இந்திரியங்கள்
அகப்படுத்துதலால், அவை ‘பொறி’ எனப்படும். அவைகளின் வலிமையை நோக்கி ‘பெரும்பொறி’ என்றார்.
நிலம் நீர் தீ காற்று வானம் என்னும் பஞ்சபூதங்களினால் இவ்வுடம்பு அமைக்கப் பட்டிருத்தலின், ‘பூதங்குடிகொள்காயம்’ எனப்பட்டது;
“மண்ணாய் நீ ரெரிகால்மஞ்சுலாவுமாகாசமுமாம், புண்ணாராக்கை” என்னும் பாசுரங் காண்க.
இது நிலையற்றதாயிருந்தும் நிலையுள்ளதுபோலத் தோன்றி அஜ்ஞாநத்தை விளைத்தலின்,
இதற்கு, ‘கள்ளம்’ என்ற அடைமொழி கொடுத்துக் கூறினார்.
அடிகள் – பெரியவ ரென்னும் பொருளது; வடமொழியில் ‘பாதா:’ என்பது போல.

பரமம், பூதம், காயம் – வடசொற்கள். வீடு – எல்லாப்பற்றுக்களையும் விட்டு அடையப்படு மிடம்:
‘முக்தி’ என்னும் வடசொல்லும் இப்பொருளதே. போம் – ‘போகும்’ என்ற ஏவற்பன்மைமுற்றின் ஈற்றுஉயிர்மெய் சென்றது.

ஜடாயுவென்ற புள்ளிற்கு (பக்ஷிக்கு)ப் பிரதியக்ஷமாய் இராமபிரான் மோக்ஷங்கொடுத்த தலமென்பது,
‘புள்ளம்பூதங்குடி’ என்பதற்குப் பொருளாகலாம்.

————–

8-திருப் பேர் நகர் –

போம்மானை எய்து பொரும் ஆனைக் கொம்பு பறித்து
ஆம் ஆனை மேய்த்து உவந்த அம்மானை தாமச்
செழும் திருப் பேரானை சிறு காலே சிந்தித்து
எழுந்து இருப்பேற்கு உண்டோ இடர் -8-

(இ – ள்.) போம் மானை எய்து – (தனக்கு முன்னே மாயமாக) ஓடிச் சென்ற (மாரீசனாகிய) பொன்மானை அம்பெய்து கொன்றும்,
பொரும் ஆனை கொம்பு பறித்து – யுத்தஞ்செய்யவந்த (குவலயாபீடமென்னும்) யானையினது தந்தங்களைப் பிடுங்கியும்,
ஆம் ஆனை மேய்த்து – மந்தையாகத்திரண்ட பசுக்களை மேய்த்தும்,
உவந்த – மகிழ்ந்த,
அம்மானை – ஸ்வாமியும்,
தாமம் செழுந் திருப்பேரானை (செழுந்திருப்பேர் தாமத்தானை) – வளப்பமமைந்த திருப்பேரென்னுந் தலத்தி லெழுந்தருளியிருப்பவனுமான திருமாலை,
சிறுகாலை – சிற்றஞ்சிறுகாலையில்,
சிந்தித்து – தியானித்துக்கொண்டே,
எழுந்திருப்பேற்கு – எழுந்திருக்கும் எனக்கு,
இடர் – பிறவித்துன்பம்,
உண்டோ – உள்ளதாகுமோ? (உண்டாகா தென்றபடி); (எ – று.)

நான்தினந்தோறும் வைகறைப்பொழுதில் எம்பெருமானைத் தியானித்துக் கொண்டே துயிலொழிந்து எழுதலால்,
அந்த எம்பெருமான் என்னைப் பிறவித்துயர் சிறிதும் அணுகாதவாறு பாதுகாப்ப னென்பதாம்.
போமானை பொருமானை ஆமானை அம்மானை என்று வந்துள்ள சொல்நயம் பாராட்டத் தக்கது.
அம்மான் = அந்தமஹான். ‘தாமச்செழுந்திருப்பேரானை’ என்றவிடத்து, விகுதியும் உருபும் பிரித்துக் கூட்டப்பட்டன.
தாமம் – வடசொல்; இடமென்னும் பொருளது: இனி, பிரித்துக்கூட்டாமல்,
தாமம் – மாலையையணிந்த, செழுந்திருப்பேரானை யென்று கூறுவாரு முளர்.
சிறுகாலை – விடியற் காலத்துக்கு ஐந்துநாழிகைநேரம் முற்பட்ட காலம்; உஷ:கால மென்றும் ப்ராஹ்மமுகூர்த்த மென்றும் சொல்லப்படும்.
‘ப்ராஹ்மமுகூர்த்தத்தில் பகவானைச் சிந்தித்துக்கொண்டு துயிலெழவேண்டும்’ என்று ஆஹ்நிகங்கள் கூறும்.
சிந்தித்து எழுந்திருப்பேற்கு = சிந்தியாநின்று எழுந்திருப்பேற்கு என்றுபொருள்.
துயிலொழியுங்காலத்தல்லது முன்னே உணர்வு இல்லாமையால், உணர்வு உண்டாகுங் காலந் தொடங்கியே
சிந்திப்பவனாகிய எனக்கு என்றவாறு: “கொழுநற் றொழுதெழுவாள்” என்றவிடத்தில் “தொழுது’ என்பது போல; எச்சத்திரிபு.

———————————————————————–

9-திருவாதனூர்-

இடர் ஆன ஆக்கை இருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது என்னார் அமலன்
ஆதனூர் எந்தை அடியார் –9-

(இ – ள்.) அமலன் – குற்றமற்றவனும்,
ஆதனூர் எந்தை – திருவாதனூ ரென்னுந் தலத்தி லெழுந்தருளியுள்ளவனுமாகிய எம்பெருமானது,
அடியார் – பக்தர்கள், –
இடர் ஆன ஆக்கை இருக்க முயலார் – (பலவகைத்) துன்பங்கட்கும் இடமாகிய தமது உடம்பு நிலைத்திருக்குமாறு முயற்சிசெய்ய மாட்டார்கள்;
மடவார் மயக்கில் மயங்கார் –இளமகளிரது மோகவலையிற் சிக்கித் தியங்கமாட்டார்கள்;
கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார் – தேவர்கட்குத் தலைவனான இந்திரனது ஊரையும் (சுவர்க்கலோகவின்பத்தையும்) விரும்பமாட்டார்கள்;
நான் எனது என்னார் – அகங்கார மமகாரச்சொற்களையும் சொல்லமாட்டார்கள்; (எ – று.)

திருமாலடியார்கள் – தேகாபிமானங் கொள்ளாமலும் காமமயக்கத் திற்கு உட்படாமலும் நின்று
சிற்றின்பவாசையை அறவொழித்து அகங்கார மமகாரங்களின்றி யிருப்ப ரென்பதாம்;
இதனால், ஸ்ரீவைஷ்ணவலக்ஷணங் கூறியவாறு.
இவர்கள் என்றும் அழியாத பேரின்பத்தினிடத்து ஆசையுள்ள வராய் உண்மையுணர்ந்தவ ராதலால், இவ்வாறாவ ரென்க.

ஆக்கை – யாக்கை என்பதன் மரூஉ: (தோல் முதலிய எழுவகைத் தாதுக்களால்) யாக்கப்பட்டதென்று பொருள்படும்;
(யாத்தல் – கட்டுதல்.)
இடரான ஆக்கை –
“வினையின்வந்தது வினைக்குவிளைவாயது,
புனைவனநீங் கிற் புலால்புறத்திடுவது,
மூத்துவிளிவுடையது தீப்பிணியிருக்கை,
பற்றின் பற்றிடம் குற்றக்கொள்கலம்,
புற்றடங்காவிற் செற்றச்சேக்கை,
அவலக் கவலை கையாறழுங்கல்,
தவலாவுள்ளந் தன்பாலுடையது, மக்கள்யாக்கை” என்பது, மணிமேகலை.
மடவார் – இளமகளிர். இனி, மடமைக்குணமுடைய மகளிருமாம்; மடமையாவது – அறிந்தும் அறியாதுபோலிருத்தல்.
மயக்கு – முதனிலை திரிந்த தொழிற்பெயர். ஆதரியார் – ஆதரம் என்னும் வடமொழிப் பெயரினடியாப் பிறந்த எதிர்மறைமுற்று.
நான் என்பது – பகவானுக்கு அடியவனாய் ஸ்வதந்த்ரனல்லாத தன்னை ஸ்வதந்த்ரனென்பது;
இது, அகப் பற்றெனவும், அஹங்கார மெனவும்படும்.
எனது என்பது – எம்பெருமானது உடைமையாய்த் தன்னுடைமையல்லாதவற்றைத் தன்னுடைமையாகச் சொல்வது;
இது – புறப்பற்றெனவும், மமகார மெனவும்படும்.
‘அமலன்’ என்ற திருநாமம் – இயல்பிலே யாதொருகுற்றமும் தன்னிடத்திலில்லாத வனென்னும் பொருளோடு,
தனக்குச் சரீரமாக அமைகின்ற சராசரங்களின் வினைத்தொடர்பு ஒன்றும்
தன்னிடத்திற் பொருந்தப்பெறாதவ னென்ற கருத்தையுங் கொண்டது.

காமதேநுவுக்குப் பிரதியக்ஷமான தல மாதல்பற்றி, இதற்கு “ஆதனூர்’ என்று திருநாம மாயிற்றுப் போலும்

————————————————————————

10-திரு அழுந்தூர் –

அடியாராய் வாழ்மின் அறிவு இலாப் பேய்காள்
செடி ஆர் வினை அனைத்தும் தீரும் முடிவில்
செழுந்தூரத் தன் எனினும் செங்கண் மால் எங்கள்
அழுந்தூர் அத்தன் அணியன் ஆம் –10-

(இ – ள்.) அறிவு இலா பேய்காள் – புத்தியில்லாமையாற் பேய்போன் றிருப்பவர்களே! (நீங்கள்), –
அடியார் ஆய் வாழ்மின் – (எம்பெருமானுக்குத்) தொண்டர்களாய் நல்வாழ்ச்சியை யடையுங்கள்; (அவ்வாறுசெய்தால்), –
செடி ஆர் வினை அனைத்தும் தீரும் – செடிபோலடர்ந்துள்ள (உங்களது), தீவினைகள்யாவும் ஒழியும்;
செம் கண் மால் – சிவந்த திருக்கண்களையுடைய திருமாலும்,
அழுந்தூர் எங்கள் அத்தன் – திருவழுந்தூரென்னுந் திருப்பதியிலெழுந்தருளிய எங்கள் ஸ்வாமியுமாகிய எம்பெருமான்,
செழுந் தூரத்தன் எனினும் – (சாதாரணமான நிலையில்) மிக்க தூரத்திலிருப்பவன் போலத் தோன்றினாலும்,
முடிவில் – அந்திமகாலத்தில்,
அணியன் ஆம் – சமீபத்தில் வந்து காட்சிதந்து உங்களுக்கு நற்கதியை அளிப்பவனாவன்; (எ – று.)

மெய்யடியராக வாழ்பவர்கட்கு இருவினையும் எம்பெருமானதுதிருவருளால் ஒழிந்துபோக, அவரது அந்திமதசையில்
அவ்வெம்பெருமான் கருடா ரூடனாய் வந்து ஸேவைஸாதித்துத் தானே வழித்துணையாகி நற்கதியிற் சேர்ப்ப னென்பதாம்;
இத்தன்மையை, அர்ச்சிராதி முதலிய நூல்களிற் பரக்கக் காண்க.
எம்பெருமான் எங்குமுளனாயினும் அவனை “செழுந்தூரத்தன்’ என்றது – அடியவர் இங்கு இருக்கும் நாளில்
அவ்வெம்பெருமான் பிரதியட்சமாகத் தோன்றிக் காட்சிதாராமையா லென்க.
“முடிவில் செழுந்தூரத்தன்’ என இயல்பான பாடத்துக்கு – அளவில்லாத மிக்கதூரத்தி லிருப்பவனென்று பொருள்:
இப்பொருளில், பின்னிரண்டடிக்கு – “பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய வித்தகன்” என்பது, கருத்து.
நிலைநின்ற புருஷார்த்தமாகிய எம்பெருமானைப் பற்றுதலிற் பக்திசெலுத்து தலை விட்டு நிலையில்லாத
புருஷார்த்தங்களான அறம்பொருளின்பங்களை விரும்புகின்றவர்களை “அறிவிலாப்பேய்காள்’ என விளித்தார்.
செடியார் வினை – புதர்போல அடர்ந்துள்ள வினை; “செடியாய வல்வினைகள் தீர்க்குந் திருமால்” என்பது, குலசேகராழ்வார்பாசுரம்.
செங்கண்மால் – அடியவர்களை அன்புடன் நோக்கிநோக்கிக் கண்கள் சிவந்த திருமா லென்க.
“செழுந்தூரத்தன்னெனினும்,’ அழுந்தூரத்தன்னணியனாம்’ – னகரமெய் – விரித்தல்விகாரம்.

தனது தபோபலத்தால் விமானத்துடன் ஆகாசத்திற் சஞ்சரிக்குந் தன்மையனான உபரிசரவஸுவென்னும் அரசன்
தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த விவாதத்தில் பக்ஷபாதமாகத் தீர்ப்புச்சொன்னமையால் ரிஷிகளாற் சபிக்கப்பட்டுப்
பூமியில் விழுகையில் அவனதுதேர் அழுந்தப்பெற்ற இட மாதல்பற்றி,
இதற்கு, அழுந்தூர்’ என்று பெயர்வந்த தென்பர்; ‘தேரழுந்தூர்’ எனவும் வழங்கும்.

—————————————————————————

11- திருச் சிறு புலியூர் –

ஆ மருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார்
தாம் மருவி வாணனைத் தோள் சாய்த்த நாள் சேமம்
உறு புலி ஊர் வன் தோல் உடையான் உடைந்தான்
சிறு புலியூர் எந்தை மேல் சென்று –11-

(இ – ள்.) தாம் – திருவரங்கநாதர்தாம்,
(கிருஷ்ணாவதாரத்தில்), வாணனை மருவி – பாணாசுரனைக் கிட்டி,
தோள் சாய்த்த – (போரில்அவனது) ஆயிரந் தோள்களையும் அறுத்துத்தள்ளிய,
நாள் – காலத்தில், –
சேமம் உறு – (அந்தப் பாணாசுரனுக்குக்) காவலாக அமைந்தவனான,
புலி ஊர் வல் தோல் உடையான் – புலியானது மேற்கொண்டுள்ள வலியதோலை (வலியபுலித்தோலை)ஆடையாகவுடைய சிவபெருமான்,
சிறுபுலியூர் எந்தைமேல் சென்று – சிறு புலியூரென்னுந் தலத்தி லெழுந்தருளிய எமது தந்தையாகிய அவ்வெம்பெருமானை யெதிர்த்துச்சென்று,
உடைந்தான் – தோற்றோடினான்; (ஆதலால்), –
ஆ மருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார் – (கிருஷ்ணாவதாரத்தில்) பசுக்களை விரும்பிமேய்த்த
ஸ்ரீரங்கநாதருக்கு முன்பாக எவர்தாம் எதிர்த்து நிற்கவல்லவர்? (எத்தேவராலும் எதிர்த்துநிற்றல் முடியாது); (எ – று.)

“அவரிவரென்றில்லை யனங்கவேள்தாதைக்கு, எவருமெதிரில்லை கண்டீர்,
உவரிக் – கடல்நஞ்சமுண்டான் கடனென்றே வாணற்கு, உடனின்று தோற்றா னொருங்கு” என்ற பாசுரம், இங்குக் காணத்தக்கது.
சிவபெருமான் பரிவாரங்களோடு எதிர்த்தும் எம்பெருமான் முன்னே நிற்கமாட்டாமல் புறங்கொடுத்தோடினனென்றபொருளை,
‘ஆமருவிமேய்த்தவரங்கரெதிரார்நிற்பார்?’ என்ற வாக்கியங்கொண்டு சமர்த்தித்ததனால்,
இது – தொடர்நிலைச்செய்யுட்குறியணியாம்; இதனை, வடநூலார் காவ்யலிங்காலங் கார மென்பர்.
இச்செய்யுளினால், எம்பெருமானே தேவாதிதேவனென்று அறுதியிட்டவாறு.
‘உடையான் உடைந்தான்’ என்ற தொடர்மொழி, சொல்லால் முரணுதலின் முரண்தொடையாம்;
“சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றது காண்க.

எம்பெருமான் வியாக்கிரபாத மஹர்ஷிக்குப் பாலசயனமாய்ச் சேவை சாதித்த தலமாதல்பற்றி,
இதற்கு ‘சிறுபுலியூர்’ என்று திருநாமம்.

————————————————————

12-திருச்சேறை –

சென்று சென்று செல்வம் செருக்குவார் வாயில் தொறும்
நின்று நின்று தூங்கும் மட நெஞ்சமே இன் தமிழைக்
கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே பேறு ஆகச்
சேறைக்கு நாயகன் பேர் செப்பு –12-

(இ – ள்.) செல்வம் செருக்குவார் வாயில்தொறும் – செல்வத்தினால் இறுமாப்புக்கொண்டவரது வீட்டுவாசல்கள்தோறும்,
சென்று சென்று – போய்ப்போய்,
நின்று நின்று – அங்கங்கே நெடுநேரம் நின்று,
தூங்கும் – சோர்வையடைகின்ற,
மடம் – அறியாமையையுடைய,
நெஞ்சமே – (எனது) மனமே! – (நீ),
இன் தமிழை – இனிய தமிழ்ப்பாடலை,
கூறைக்கும் – வஸ்திரத்தின்பொருட்டும்,
சோற்றுக்கும் – சோற்றின்பொருட்டும்,
கூறாது – (மநுஷ்யரைப்) பாடாமல்,
பேறு ஆக – முத்திப்பயன் கைகூடும்படி,
சேறைக்கு நாயகன் பேர் செப்பு – திருச்சேறையென்னுந் திவ்யதலத்திற்குத் தலைவனான எம்பெருமானது திருநாமத்தைப் பாடுவாயாக; (எ – று.)

நிலையில்செல்வத்தையும் அஹங்காரம் மமகாரம் முதலிய இழிகுணங் களையு முடையவரான அற்பமனிதரைக்
கூறைசோறுகளாகிய நிலையற்ற பயனைப் பெறுதற்பொருட்டுக் கவிபாடித் துதித்து நரகத்தைவிளைத்துக் கொள்ளாமல்,
எல்லையில்பெரும்பொருளையுடையவனும் அநந்தகல்யாண குணகணநிதியும் புருஷோத்தமனுமான
எம்பெருமானைப் பாடித் துதித்து என்றும்அழிவில்லாததான பரமபதத்தை யடைந்து
பேராநந்தத்தைப் பெறுவா யென்று தமதுமனத்திற்கு நல்லறிவு கூறியவாறு.

செல்வர்வாயில் தொறும் செல்லுதற்குக் காரணம் மனமே யாதலால், அவ்வாறுசென்று தூங்குந் தமது
செயலைத் தம்மனத்தின்மே லேற்றிக் கூறினார்; இது – ஒரு வகை உபசாரவழக்கு.
“அகத்தாரேவாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்,
புக த்தாம்பெறாஅர் புறங்கடைபற்றி, மிகத்தாம் வருந்தியிருப்பர்” என்றபடி காவல் மிகுதியால் செல்வரது
வீட்டினுள்ளே நுழைவது அருமையாகின்றத னால் ‘செல்வஞ்செருக்குவார்வாயில்தொறும் நின்றுநின்று தூங்கும்’ என்றார்;
இவ்வாறு அவர் தமதுவீட்டுவாயிலில் காவலாளரைவைப்பது செல்வச்செரு க்கைத் தோற்றுவிக்கு மென்க.
‘இன்தமிழைக் கூறைக்குஞ் சோற்றுக்குங் கூறாதே’ என்றதனால், தமிழ்ப் பாடலின் அருமை பெருமைகளைச்
சிறிதுங்கரு தாது அற்பப்பயனுக்காகப் பாழ்படுத்துவதைப்பற்றி இரங்கியவாறு.

இத்தலத்தில் எம்பெருமான் நாய்ச்சியார் விமானம் தீர்த்தம் நிலம் என்ற ஐந்து ஸாரமுள்ள பொருள்கள் அமைந்திருத்தலால்,
இத்தலத்திற்கு ‘திருச்சேறை’ என்று திருநாம மாயிற்று.
இது, வடமொழியில் ‘பஞ்சஸார க்ஷேத்ரம்’ என வழங்கப்படுதலுங் காண்க.
இவ்வாறு ஸாரமுள்ள பொருள்களையுடைய இத்தலத்தில் காவேரிநதி தவஞ்செய்து
கங்காநதியைக்காட்டிலும் சிறப்புப்பெற்றன ளென்பர்.

——————————————————————

13-திருத் தலைச் சங்க நாண் மதியம் –

செப்புங்கால் ஆதவனும் திங்களும் வானும் தரையும்
அப்பும் காலும் கனலும் ஆய் நின்றான் கைப்பால்
அலைச் சங்கம் ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்
தலைச் சங்க நாண் மதியத்தான் –13–

(இ – ள்.) கைப்பால் – கையினிடத்தில்,
அலை சங்கம் – அலைகளையுடைய கடலினிடத்துத் தோன்றிய (பாஞ்சஜந்யமென்னுஞ்) சங்கத்தை,
ஏந்தும் – தரித்துள்ள,
அணி அரங்கத்து அம்மான் – திருவரங்கத்தி லெழுந்தருளியுள்ள ஸ்வாமியும்,
தலைச்சங்கநாண்மதியத்தான் – திருத்தலைச்சங்க நாண்மதியமென்னுந் திவ்விய தலத்திலெழுந்தருளியுள்ள வனுமான எம்பெருமான், –
செப்பம் கால் – சொல்லுமிடத்தில், –
ஆதவனும் – சூரியனும்,
திங்களும் – சந்திரனும்,
வானும் – ஆகாயமும்,
தரையும் – பூமியும்,
அப்பும் – ஜலமும்,
காலும் – காற்றும்,
கனலும் – அக்கினியும்,
ஆய் – ஆகி, நின்றான் – (எங்கும் பரவி) நிற்பவ னாவன்; (எ – று.)

சராசரங்களாகிய யாவும் எம்பெருமானது வடிவமே யென்பது, கருத்து;
“உலவுதிரையுங் குலவரையு மூழிமுதலா வெண்டிக்கும்,
நிலவுஞ் சுடரு மிருளுமாய் நின்றான்” என்பது முதலிய பெரியார்பாசுரங்களைக் காண்க.
ஆதபன் – எங்கும் நன்றாகத் தபிப்பவன்; சூரியன்; வடசொல். செய்யுளாதலின், பஞ்சபூதங்களை முறைபிறழ வைத்தார்.
எம்பெருமான் திருக்கையில் தரித்துள்ள பாஞ்சஜந்யமென்னுஞ் சங்கமானது கடலிலேதோன்றிய பஞ்சஜநனென்னும்
அசுரனது உடலிற் பிறந்த தென்பதை,
“கடலிற் பிறந்து கருதாது பஞ்சசன, னுடலில் வளர்ந்துபோ யூழியான்
கைத்தலத்திடரிற் குடியேறித் தீயவசுரர். நடலைப்பட முழங்குந் தோற்றத்தாய் நற்சங்கே” என்பதனாலும் அறிக.
இனி, அலைச்சங்கம் என்பதற்கு – (பகைவரைத் தனதுபேரொலியால்) அலைத்தலை (வருத்துதலை)
யுடைய சங்கமென்றும் பொருள்கொள்ளலாம்.

சிறந்த சங்கத்தை யேந்திய நாண்மதியப்பெருமானை யுடைய தலமா தல்பற்றி,
இத்தலத்திற்கு ‘தலைச்சங்கநாண்மதியம்’ என்று திருப்பெய ரென்பர்.

———————————————————————-

14- திருக் குடந்தை –

தானே படைத்து உலகத் தானே அளித்து நீ
தானே அழிக்கும் தளர்ச்சியோ வானில்
திரு மகுடம் தைக்கச் சிறு குறளாய் நீண்ட
பெரும குடந்தைக் கிடந்தாய் பேசு –14-

(இ – ள்.) சிறு குறள் ஆய – (முதலில்) சிறிய வாமனாவதாரமாகி,
(பின்பு), வானில் – ஆகாயமுகட்டில்,
திரு மகுடம் தைக்க – அழகிய கிரீடம் முட்டும் படி,
நீண்ட – (திரிவிக்கிரமனாகி) நீண்டுவளர்ந்தருளிய,
பெரும – பெருமானே!
உலகை – உலகங்களை,
நீ தானே – நீயே,
படைத்து – (பிரமனாகிச்) சிருஷ்டித்து,
(நீ) தானே -, அளித்து (தானானநிலையில் நின்று) பாதுகாத்து,
(நீ) தானே -, அழிக்கும் – (சிவனாகி) அழிப்பதனாலாகிய,
தளர்ச்சியோ – இளைப்பினாலோ,
குடந்தை கிடந்தாய் – திருக்குடந்தையென்னுந் தலத்திற் பள்ளிகொண்டிருக்கின்றாய்?
பேசு – (இதன்காரணத்தைக்) கூறியருள்வாயாக; (எ – று.)

எல்லா வுலகங்களையும் நீ ஒருவனாகவே படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையுஞ் செய்ததனால்
நேர்ந்த தளர்ச்சி நீங்குவதற்காகவோ இவ்வாறு இந்தத்திருக்குடந்தையிற் பள்ளிகொண்டருள்வா யென்று வினவியவாறு.
வரம்பிலாற்றலுடையவனான எம்பெருமானுக்கு எந்தநிலையிலும் ஒருவகை வருத்தமும் தோன்றாதாயினும் இவ்வாறு கூறியது –
இவ்வாசிரியர்க்கு அப்பெருமான் பக்கலுள்ள பொங்கும் பரிவினா லென்க.
“நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞால மேனமாய்,
இடந்த மெய் குலுங்கவோ இலங்குமால்வரைச்சுரம்,
கடந்தகால்பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்,
கிடந்தவா றெழுந்திருந்து பேசு வாழிகேசனே” என்ற திருமழிசையாழ்வார் பாசுரத்தை அடியொற்றியது, இச்செய்யுள்.
எம்பெருமான் பிரமருத்திரரைச் சிருஷ்டித்து, அவர்கட்கு அந்தராத்மாவாய் நின்று அவர்களைக்கொண்டு
ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை நடத்துதலால், அவனே முத்தொழில்களையும் நடத்துபவனெனக் கூறினார்;
இனி, ஸத்வாரகமான (ஒருவரை முன்னிட்டுச்செய்கின்ற) ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைக் குறிப்பதெனக் கொள்ளாமல்,
அத்வாரகமாகச் செய்கின்ற ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களையே கூறியதாகக் கொள்ளுதலும் பொருந்தும்.
‘நீ’ என்பதை ‘படைத்து’ ‘அழிக்கும்’ என்பவற்றோடும் கூட்டுக.

———————————————————————–

15-திருக் கண்டியூர்

பேசவரின் தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக வாய்
கேசவனைக் காண்க விழி கேட்க செவி ஈசனார்
உண்டி ஊர் தோறும் உழன்று இரவாமல் தவிர்த்தான்
கண்டியூர் கூப்புக என்கை –15-

(இ – ள்.) வாய் – (எனது) வாயானது, –
பேச வரின் – பேசத் தொடங்கினால்,
தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக – அழகிய ஸ்ரீரங்கநாதனது திருநாமங்களை யெல்லாம் பேசக்கடவது;
விழி – (எனது) கண்கள், –
கேசவனை காண்க – கேசவனென்னுந் திருநாமத்தையுடைய எம்பெருமானைத் தரிசிக்கக்கடவன;
செவி (எனது) காதுகள், –
கேட்க – (அவனது புகழ்களையே) கேட்கக்கடவன;
என் கை – எனது கைகள், –
ஈசனார் – சிவபெருமானை,
ஊர்தோறும் உழன்று உண்டி இரவாமல் – ஊர்கள்தோறும் அலைந்துசென்று உணவை யாசிக்க வொட்டாமல்,
தவிர்த்தான் – (அவனது சாபத்தை) நீக்கி யருளியவனுடைய,
கண்டியூர் – திருக்கண்டியூரென்னுந் தலத்தை நோக்கி,
கூப்புக – குவித்து அஞ்சலிசெய்யக்கடவன; (எ – று.)

எம்பெருமானே வாய் முதலிய உறுப்புக்களை யளித்து மாநுடர்களைப் பிறப்பித்ததன் காரணம் எல்லாவகையாலும்
இவர்கள் தன்னையடைந்து வழிபட்டு நற்கதிபெறுதற்பொருட்டே யாதலால்,
அப்பெருமானது திருநாமங்களைச் சொல்லித் துதிக்குமாறு வாயையும்,
அவனது திருவுருவத்தைத் தரிசிக்குமாறு கண்களையும், அவனது வைபவங்களைக் கேட்குமாறு செவிகளையும்,
அவனது திவ்வியதேசத்தைக் கூப்பித் தொழுமாறு கைகளையும் வேண்டுகின்றன ரென்க;

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பஞ்சேந் திரியங்களுள், மூக்கை நோக்கி அவ்வெம்பெருமானுக்குச் சாத்திய
பத்திர புஷ்பாதிகளின் திவ்யகந்தத்தை மோந்து நுகருமாறு வேண்டியதாக உபலக்ஷணத்தாற் கொள்க.
“கேசவனையே செவிகள்கேட்க திருவரங்கத்,
தீசனையே சென்னியிறைஞ்சிடுக –
நேசமுடன், கண்ணனையேகாண்க விருகண் ணிணர்கொள்
காயாம்பூ, வண்ணனையே வாழ்த்துக வென்வாய்” என்றார் திருவரங்கக்கலம்பகத்திலும்.
“வாழ்த்துகவாய் காண்ககண் கேட்கசெவி மருடந்,
தாழ்த்துவணங்குமின்கள் தண்மலரால் –
சூழ்த்ததுழாய், மன்னுநீண் முடியென் தொல்லைமால்தன்னை,
வழாவண்கைகூப்பி மதித்து” என்ற திருமழிசைப்பிரான் பாடலை ஒருவாறு அடியொற்றியது இச்செய்யுள்.
தென்னரங்கன் – தெற்கேயுள்ள திருவரங்கத்திலுள்ளவனெனினுமாம்.
கேசவன் – பிரமனையும் சிவனையும் தன்னங்கத்திற்கொண்டவ னென்றும்,
அழகியமயிர் முடியையுடையவ னென்றும்,
கேசியென்னும் அசுரனைக் கொன்றவ னென்றும் பொருள்படும் வடசொல்.
இத்தலத்து எம்பெருமான் திருநாமம் ‘அரன் சாபந்தீர்த்தபெருமாள்’ என்ப தாதலால்,
இங்கு, அப்பெருமானை ‘ஈசனார் உண்டியூர்தோறு முழன்றிரவாமல் தவிர்த்தான்’ என்றார்.
“பிண்டியார்மண் டையேந்திப் பிறர்மனை திரிதந்துண்ணு,
முண்டியான் சாபந்தீர்த்த ஒருவனூர் உலகமேத்துங், கண்டியூர்” என்ற திருமங்கையாழ்வார் வாக்கு இங்குக் கருதத்தக்கது.
‘என்’ என்பதை, ‘வாய்’ முதலியவற்றோடுங் கூட்டுக.

சிவபெருமானது சாபத்தைக் கண்டநஞ்செய்ததுபோலச் சேவைசாதித்த இடமாதலால்,
இத்தலத்திற்கு ‘திருக்கண்டியூர்’ என்று திருநாம மாயிற்று; இது – வடமொழியில், “கண்டநபுரம்’ எனப்படும்.

————————————————————————–

16-திரு விண்ணகர் -ஒப்பிலியப்பன் சந்நிதி –

கையும் உரையும் கருத்தும் -உனக்கே அடிமை
செய்யும் படி நீ திருத்தினாய் ஐயா
திரு விண்ணகராளா சிந்தையிலும் எண்ணேன்
பெரு விண்ணகர் ஆளும் பேறு –16-

(இ – ள்.) ஐயா – தலைவனே!
திருவிண்ணகர் ஆளா – திருவிண்ணகர மென்னுந் திருப்பதிக்குத் தலைவனே! –
கையும் – (எனது) கைகளும்,
உரையும் – வாக்கும்,
கருத்தும் – எண்ணமும், (ஆகிய திரிகரணங்களையும்),
உனக்கே அடிமை செய்யும் படி -, நீ திருத்தினாய் – நீ திருத்தமான வழியிற் போகச் செய்தாய்;
(ஆதலால், இனிமேல்), பெரு விண் நகர் ஆளும் பேறு – பெருமை பெற்ற தேவலோகத்தை அரசாளுஞ்செல்வத்தை (தேவேந்திரபதவியையும்),
சிந்தையிலும் எண்ணேன் – (ஒருபொருட்டாக) மனத்திலும் நினைக்க மாட்டேன், (யான்); (எ – று.)

வேறுவிஷயங்களிற் செல்லாது உன்விஷயத்தில் உபயோகிக்குமாறு எனது திரிகரணங்களையும் நீ
நிர்ஹேதுககடாக்ஷத்தாற்செய்தா யாதலால், இனி மீளாவுலகமாய்ப் பேரின்பத்திற்கு உரிய இடமான
பரமபதத்திற்குச் செல்ல இணங்குவேனேயன்றிச் சிலகாலம் சிற்றின்பங்களை யநுபவித்தற் கேயுரிய
சுவர்க்கலோகத்து இந்திரபதவியைக் கொடுத்தாலும் அதனையும் சிறிதும் பொருள்செய்யேன் யா னென்பதாம்.
“ஆனாதசெல்வத்தரம்பையர்க டற்சூழ,
வானாளுஞ்செல்வமு மண்ணரசும் யான்வேண்டேன்” என்று குல சேகராழ்வார் அருளிச்செய்தமை காண்க.
இவ்வாறு நினைப்பது, திருமா லடியார்களுக்கு இயல்பாகு மென்க.
‘அரங்கன் தமர்கள் பொருந்தார் அணிதான வமராவதியும் தருநிழலும்,
தாரணி தான வயிராவதமுந் தருகினுமே” என்றதும்,
பிரமன் கட்டளையால் இந்திரன் சரபங்க மஹர்ஷியைச் சத்திய லோகத்துக்கு அழைத்தபோது மகாவிஷ்ணுபக்தனான
அம்முனிவன் அம்மேலுலகையுமுட்பட இகழ்ந்து “அற்பங்கருதேன்” என்றும்,
“மறுகாநெறி யெய்துவன்” என்றும் உரைத்ததும் உணரத்தக்கன.
முதலில் நினைந்து பிறகு மொழிந்து பின்பே ஒருதொழில் செய்யப்படுதலால், அம்முறைபற்றி,
‘மனோ வாக் காயம்’ என்று வழங்கப்படுகின்ற திரிகரணங்களை இங்கே மாற்றிக்கூறினர்.
விண்ணகரென்பது – தேவலோகம்போன்ற தென்ற காரணம்பற்றி வந்த பெய ரென்னலாம்;
இதுவே, உப்பிலியப்பன்ஸந்நிதி யெனப்படுவது. இத்தலத்து எம்பெருமான் திருநாமம் – உப்பிலியப்பன்;
(ஒப்பிலியப்பனென்றும் வழங்குவர்.) இத்தலத்து எம்பெருமான் திருவேங்கட முடையான் போன்ற திருவுருவ முள்ளவராய்,
அன்பர்களின் அபிமதத்தைப் பூர்த்திசெய் கின்றன ரென்றும், மிருகண்டுமுனிவர் பத்தினியினது விருப்பத்தின்படி
உப்பில்லாத பிரசாதங்களையே அமுதுசெய்கின்றன ரென்றும் அறிக.

————–

17-திருக் கண்ணபுரம் –

பேறு தரினும் பிறப்பு இறப்பு நோய் மூப்பு
வேறு தரினும் விடேன் கண்டாய் ஏறு நீர்
வண்ண புரத்தாய் என் மனம் புகுந்தாய் வைகுந்தா
கண்ண புரத்தாய் உன் கழல் –17-

(இ – ள்.) ஏறு நீர் வண்ணம் புரத்தாய் – (அலைகள் கரைமேற்) புரளப் பெற்ற நீரையுடைய கடல்போன்ற கருநிறத்தைக்கொண்ட திருமேனியை யுடையவனே!
என் மனம் புகுந்தாய் – எனது மனத்திற் குடிபுகுந்துள்ளவனே!
வைகுந்தா – ஸ்ரீவைகுண்டத்தில் எப்போதும் வாழ்பவனே!
கண்ணபுரத்தாய் – திருக்கண்ணபுரமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியிருப்பவனே! –
(நீ அடியேனுக்கு), பேறு தரினும் – பரமபுருஷார்த்தமாகிய மோக்ஷத்தைக் கொடுத்தாலும்,
வேறு – அதற்குமாறாக,
பிறப்பு இறப்பு நோய் மூப்பு தரினும் – ஜநநத்தையும் மரணத்தையும் வியாதியையும் கிழத்தனத்தையும் தந்தாலும்
(இந்த லீலாவிபூதியிலேயே அலையவைத்தாலும்),
உன் கழல் – உனது திருவடிகளை,
விடேன் – (உபாயமாகக் கொண்டிருப்பேனேயன்றி ஒருபோதும்) விட்டு நீங்கேன்; (எ – று.) – கண்டாய் – முன்னிலையசை; தேற்றமுமாம்.

பேறு – புருஷனால் அர்த்தித்துப்பெறப்படும் பரமபுருஷார்த்தம்; மோக்ஷைஸ்வர்யம்.
உம்மைகள் – விகற்பப்பொருளன. ‘வண்ணப்புரத்தாய்’ என வலிமிக்குவரற்பாலது, எதுகைநயம்நோக்கி இயல்பாயிற்று.
புரமென்ற வடசொல் – சரீரம் பட்டணம் என்னும் இருபொருளையுங் காட்டவல்லது.
ஏறு நீர் – வினைத்தொகையன்மொழி. கழல் – வீரர்கள் தமது வீரத்துக்கு அறி குறியாகப் பாதங்களில் அணியும் ஓர்வடம்;
“வீரத்தின்வீக்கியகழலே யாட வர்கான்மிசை யணிவடம்” என்றது காண்க:
இச்சொல் – இங்கு, தானியாகு பெயராய், திருவடியை உணர்த்திற்று.

தலைவனான நீ உனது நிர்ஹேதுக கிருபையாலே அடியேனுக்கு நிரதி சயாநந்தத்தையுடைய மோக்ஷத்தை யளித்தாலும் சரி:
அன்றி, என்னைப் பரிசோதிப்பதற்காகவாதல் உனது நிரங்குஸஸ்வாதந்த்ரியத்தாலேயாதல் இந்த ஸம்ஸாரத்திலேயே
அலையவைத்தாலும் சரி: அவற்றால் அடியேனுக்கு ஒருவகை லாபலோபங்களு மில்லை;
எல்லாத்திசையிலும் உனது திருவடிகளையே சரணமாகக்கொண்டு உன்னுடைய விருப்பத்தினால்
அடியேனுக்கு நேர்கின்ற அவ்வந்நிலையிலேயே பரிபூர்ணதிருப்தியுட னிருப்பே னென்று தமது உறுதியான
உபாயாத்யவஸாயத்தை வெளியிடுகின்றனரென்க.

“களைவாய் துன்பங் களையாதொழிவாய் களைகண்மற்றிலேன்” என்ற திருவாய் மொழியும்,
“இன்பந்தரு பெருவீடு வந்தெய்திலென் எண்ணிறந்த,
துன்பந் தருநிரயம்பலசூழிலென்?*** இராமாநுசனென்னை யாண்டனனே” என்ற இராமாநுசநூற்றந்தாதியும் இங்குக் காணத்தக்கன.
“நானந்த வைகுந்த நாடெய்தி வாழிலென் ஞாலத்தன்றி,
ஈனந்தவாத நிரயத்து வீழிலென் யானடைந்தேன், *** அரங்கனையே” என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.

திருக்கண்ணபுரமென்பது, பஞ்சகிருஷ்ணக்ஷேத்ரங்களுள் ஒன்று;
(மற்றவை – திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணன் கவித்தலம், திருக்கோவலூர் என்பன என்பர்.)
இத்தலத்தின் மறுபெயர், கண்வபுரம். இத்தலத்தில் விமானம் – உத்பலாவதகம்:
அதன்பொருள் வருமாறு:- பலம் – மாமிசம், அது சோஷிக்கப்பெற்றவர் – உத்பலர்: அவராவார் –
தேகத்தை உபேக்ஷிக்கின்ற முழுக்ஷுக்கள்:
அவர்களைக் காக்கின்ற கடவுள் எழுந்தருளியிருக்கும் விமான மாதலால், இதற்கு ‘உத்பலாவதகம்’ என்று திருநாமம்.
இதுபற்றியே, “மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான்” என்று நம்மாழ்வார் மங்களாசாசனஞ்செய்ததும்.
இவ்விமானம் பிரதக்ஷிணஞ் செய்யும்போது கட்புலனாகாதவாறு கட்டப்பெற்றுள்ள தென்பர்.

——————————————————————————–

18-திருவாலி –

கழன்று போம் வாயுவினைக் கட்டாமல் தீர்த்தம்
உழன்று போய் ஆடாமல் உய்ந்தேன் அழன்று
பொரு வாலி காலன் பரகாலன் போற்றும்
திருவாலி மாயனையே சேர்ந்து –18-

(இ – ள்.) அழன்று – கோபித்து,
பொரு – போர்செய்த,
வாலி – வாலிக்கு,
காலன் – யமனாய்நின்றவனும்,
பரகாலன் போற்றும் திருவாலி மாயனை – திருமங்கையாழ்வாரால் பாடித் துதிக்கப்பெற்ற திருவாலியென்னுந்
திருநகரியி லெழுந்தருளி யிருப்பவனுமான ஆஸ்சரியகுண சேஷ்டிதங்களையுடைய எம்பெருமானை,
சேர்ந்து – உபாயமாகப்பற்றியதனால், –
கழன்றுபோம் வாயு வினை கட்டாமல் – (உடம்பிலிருந்து) வெளிச்செல்லுகின்ற மூச்சுக்காற்றைப் (பிராணயாமத்தால்) அடக்காமலும்,
உழன்று போய் தீர்த்தம் ஆடாமல் – வருந்திப் பலவிடங்களிலுஞ்சென்று புண்ணியதீர்த்தங்களில் மூழ்காமலும்,
உய்ந்தேன் – நற்கதிபெற்றேன், (யான்); (எ – று.)

எம்பெருமானுக்கே யடியவனாயிருக்கின்ற ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விருத்தமான தவஞ்செய்தல் முதலிய
உபாயாந்தரத்தை மேற்கொண்டு வருத்தப்படாமல், ஆத்ம ஸ்வரூபத்திற்கு அநுகூலமாய் ஸித்தோபாயமான
எம்பெருமானைப் பற்றுதலாகிய பிரபத்தியுபாயத்தை மேற்கொண்டு எளிதில் நற்கதி பெற்று ஈடேறினே னென்பதாம்.
காலன் – (பிராணிகளின் ஆயுட்) காலத்தை முடிவுசெய்பவ னென்று பொருள்படுங் காரணக்குறி.
திருவாலியென்பது திருமங்கையாழ்வாரின் திருவவதாரஸ்தல மாதலால், அத்தலத்து எம்பெருமானை
‘பரகாலன்போற்றுந் திருவாலிமாயன்’ என்றார்.
திருமங்கையாழ்வார் தாம் பிறந்த கள்ளக்குடிக்கு ஏற்ப இளமையிலேயே ஆயுதவித்தையில் தேர்ச்சிபெற்றுச்
சோழராஜனையடுத்துச் சேனாபதியுத்தியோகத்தி லமர்ந்து கொற்றவனுக்குக் கொடியவரோடு
கடும்போர் நேருங் காலங்களிற் படைகளோடு முன்சென்று பராக்கிரமத்தாற் பகைவென்று வந்தவ ராதலின்,
இவர்க்கு ‘பரகாலன்’ என்று பெயர்.

எம்பெருமானைத் திருமகள், ஆலிங்கனஞ்செய்து கொண்ட தல மாதல் பற்றி, இதற்கு, ‘திருவாலி’ என்று பெயர்.

—————————————————————————–

19-திரு நாகை –

சேர்ந்து உனக்குக் குற்றேவல் செய்திலன் என் சிந்தையில் நீ
ஆர்ந்ததற்கு ஓர் கைம்மாறு அறிகிலேன் பூந்துவரை
மன்னா கை ஆழி வலவா வலம் புரியாய்
தென் நாகாய் அருளிச் செய் –19-

(இ – ள்.) பூ துவரை மன்னா – அழகிய துவாரகாபுரிக்கு அரசனே!
கை ஆழி வலவா (வலம் கை ஆழியாய்) – வலத்திருக்கையில் (சுதர்சநமென்னுஞ்) சக்கரத்தையுடையவனே!
வலம் புரியாய் – (இடத்திருக்கையில் பாஞ்ச ஜந்யமென்னும்) வலம்புரிச்சங்கத்தை யுடையவனே!
தென் நாகையாய் – அழகிய திருநாகையென்னுந்தலத்தி லெழுந்தருளி யிருப்பவனே! –
சேர்ந்து உனக்கு குறு ஏவல் செய்திலன் – (அடியேன் இதுவரையில் உன்னைச்) சரணமாக அடைந்து உனக்குச்
சிறிய கைங்கரியத்தையும் செய்தேனில்லை; (அவ்வாறு இருக்கவும்),
என் சிந்தையில் – அடியேனது மனத்தில்,
நீ ஆர்ந்ததற்கு – (காரணமின்றியெழுந்த பெருங்கருணையோடு) நீ நன்றாக எழுந்தருளியிருப்பதற்கு,
ஓர் கைம்மாறு அறிகிலேன் – ஒருபிரதியுபகாரத்தையும் அறியேன்;
அருளிச்செய் – (ஏதேனும் இருப்பின் அதனை இன்னதென்று நீ அடியேனுக்குக்) கூறியருள்வாயாக; (எ – று.)

நானே உன்னைச் சரணமடைந்து ஏதேனும் ஒரு திருத்தொண்டைச் செய்தேனாயின், அதனையே பற்றாசு ஆகக் கொண்டு
நீ அடியேன்மனத்தி லெழுந்தருளலாம்; அவ்வாறு ஒன்றுமில்லா திருக்கையிலும்
நீ உனது நிர்ஹேதுக கிருபையாலேயே அடியேனது மனத்தில் வந்து குடிபுகுந்தாய்;
நீ இவ்வாறு எழுந்தருளியது செய்யாமற் செய்த பேருதவி யாதலால், அதற்குத் தக்க கைம்மாறு இல்லாவிடினும்
எல்லாவிதத்தினாலும் பரிபூர்ணனான உனக்குப் போலியாயிருப்பதொருபிரதியுபகாரமும் காண்கின்றிலே னென்பதாம்.
“ஆறெனக்கு நின்பாதமே சரணாகத்தந்தொழிந்தாய் உனக்கோர் கைம்,
மாறு நானொன்றிலேன் எனதாவியு முனதே” என்ற நம்மாழ்வார் பாசுரத்தின் கருத்துக்கொண்டது, இது.
குற்றேவல் – கைங்கர்யம். துவரை – த்வாரகா என்ற வடமொழியின் சிதைவு:
இது – முத்திதரும் நகர மேழனுள் ஒன்று;
(மற்றவை – அயோத்யை மதுரை மாயை காசி காஞ்சி அவந்தி என்பன.)
கையாழிவலவா – விகுதி பிரித்துக்கூட்டப்பட்டது. இனி, இத்தொடர்க்கு – விகுதிபிரித்துக்கூட்டாமல், கையிலேந்தியுள்ள
ஆழியைப் பிரயோகிப்பதில் வல்லவனே! என்றும் உரைக்கலாம்.
ஆழி – பகைவரையழிப்பதென்பது பற்றி வந்த பெயர்.
வலம்புரி – வலப்பக்கமான உட்சுழியை யுடையது; காரணக்குறி. தென்னாகை – தெற்கின்கணுள்ள நாகையுமாம்.

நாகை – நாகபட்டணமென்பதன் மரூஉ. நாகராஜனுக்குப் பிரதியக்ஷமான தல மாதலால், இதற்கு ‘திருநாகை’ என்று பெயர்.

————

20-திரு நறையூர் –

செய்ய சடையோன் திசை முகத்தோன் வானவர் கோன்
ஐயம் அறுத்து இன்னம் அறியாரே துய்ய
மரு நறை ஊர் வண் துழாய் மாயோன் செவ் வாயான்
திரு நறையூர் நின்றான் செயல் –20-

(இ – ள்.) துய்ய – பரிசுத்தமாகிய,
மரு நறை ஊர் வள் துழாய் – நறுமணமும் தேனும் பொருந்திய செழிப்பான திருத்துழாயை யணிந்த,
மாயோன் – ஆச்சரியமான குணசேஷ்டிதங்களையுடையவனும்,
செவ் வாயோன் – (செந் தாமரைமலர்போலச்) சிவந்த திருவதரத்தை யுடையவனும்,
திருநறையூர் நின்றான் – திருநறையூரென்னுந் திவ்வியதலத்தில் நின்றதிருக்கோலமாக எழுந்தருளியிருப்பவனு மான எம்பெருமானது,
செயல் – செய்கையைப் பற்றி, –
செய்ய சடையோன் – செந்நிறமான (கபர்த்தமென்னுஞ்) சடையையுடைய சிவபிரானும்,
திசைமுகத்தோன் – நான்குதிக்கையும் நோக்கிய நான்குமுகங்களையுடைய பிரமனும்,
வானவர் கோன் – தேவர்கட்கெல்லாந் தலைவனான இந்திரனும்,
ஐயம் அறுத்து – சந்தேகத்தையொழித்து (நிஸ்ஸந் தேஹமாய்),
இன்னம் அறியார் – இன்னமும் அறியமாட்டார்கள்; (எ – று.)

எம்பெருமானது வலப்பக்கத்தில் வாழ்கின்ற சிவபெருமானும், அவனது திருவுந்திக்கமலத்திலேயே யிருக்கின்ற பிரமனும்,
தேவர்கட்கெல்லாந் தலைவனென்று பேரிட்டுக்கொண்டிருக்கின்ற இந்திரனுமே எம்பெருமானது செயலை
உள்ளபடியறியமாட்டார்க ளென்பதாம்; எனவே, நம்போலியரால் அவ்வெம்பெருமானதுசெயலை அறியமுடியுமோ? என்பது கருத்து.
“எம்பெம்மானை ஆரே யறிவா ரதுநிற்க – நேரே, கடிக்கமலத்துள்ளிருந்துங்
காண்கிலான் கண்ண, னடிக்கமலந்தன்னை யயன்,”
“ஆரேயறிவா ரனைத் துலகு முண்டுமிழ்ந்த, பேராழியான்தன் பெருமையைக் –
கார்செறிந்த, கண்டத்தா னெண்கண்ணான் காணான்” என்பன காணத்தக்கன.

துய்ய = தூய. துழாய் – துளஸீ யென்ற வடமொழியின் சிதைவென்பர். வாய்சிவந்திருத்தல், உத்தமலக்ஷணம்.

நறுமணம்மிக்கதல மென்பதுபற்றி, இதற்கு ‘திருநறையூர்’ என்று திரு நாமம்;
வடமொழியில், “ஸுகந்தகிரி’ என்று எம்பெருமான் எழுந்தருளியிரு க்குமிடத்தை வழங்குவதுங் காண்க.
இங்கு, கந்யாசுல்கமாக நாச்சியாருக்குப் பிராதானியத்தை எம்பெருமான் அளித்ததனால்,
இத்தலத்திற்கு ‘நாச்சி யார்கோவில்’ என்று ஒருபெயர் வழங்குகின்றது.
இத்தலத்து எம்பெருமான், மேதாவிமுனிவரின்கன்னிகையைப் பலியென்னும்அசுரன் கவர்ந்துசெல்ல அவனைச் சபித்து
அக்கன்னிகையை அம்முனிவர்க்கு அருள்செய்தன ரென்றும், திருமங்கையாழ்வார்க்கு எம்பெருமான் திருவிலச்சினை பிரசாதித்தன னென்றும் அறிக.

———-

21-திரு நந்திபுர விண்ணகரம்

செயற்கு அரிய செய்வோமைச் செய்யாமை -நெஞ்சே
மயக்குவார் ஐவர் வலியால் நயக்கலவி
சிந்தி புர விண்ணகரம் என்பர் திருச் செங்கண் மால்
நந்தி புர விண்ணகரம் நாடு –21-

(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
செயற்கு அரிய செய்வோமை – செய்வதற்கு அருமையான தொழில்களையும் செய்யவல்ல நம்மை,
செய்யாமல் – செய்யவொட்டாமல்,
வலியால் மயக்குவார் – (தமது) வலிமையால் மயங்கச் செய்பவர்களாகிய,
ஐவர் – பஞ்சேந்திரியங்கள், (உன்னைநோக்கி),
‘நயம் கலவி சிந்தி – இனிமையைத் தருகின்ற சிற்றின்பத்தையே எப்போதும் நினைப்பாய்;
விண் நகரம் புர – ஸ்வர்க்கலோகத்தை யரசாட்சிசெய்வாய்’,
என்பர் – என்று துர்ப்போதனை செய்வார்கள்; (நீ அந்தப்பஞ்சேந்திரியங்கட்கு வசப்பட்டு அவற்றைக்கொள்ளாமல்),
திரு செங் கண் மால் – (அழகிய செந்தாமரை மலர் போன்ற) சிவந்த திருக்கண்களையுடைய திருமாலினது,
நந்திபுர விண்ணகரம் – திருநந்திபுரவிண்ணகரமென்னுந்தலத்தை,
நாடு – (எப்போதும்) விரும்புவாயாக; (எ – று.)

தவம் முதலிய அரும்பெருந்தொழிலைச் செய்து எமபெருமானையடைய வேண்டு மென்றாலும் அவற்றைச்செய்து
அவ்வெம்பெருமானையடையும் வல்லமை பெற்றுள்ள நம்மைப் பஞ்சேந்திரியங்கள் நற்றொழிலொன்றையுஞ் செய்ய
வொட்டாமல் மயக்கிச் சிற்றின்பத்திலேயே வலியஇழுக்கின்றன;
மனமே! நீ அவற்றின்வழியிற் சேராமல், எம்பெருமானெழுந்தருளியிருக்கின்ற நந்திபுரவிண்ணகரத்தை நாடுதலாகிற
இச்சிறுதொழிலைக் கைக்கொண்டாலும் பேரின்பங் கைகூடுமென மனத்திற்கு உபதேசஞ்செய்கின்றன ரென்க.
‘செயற்கரியசெய்வோம்’ என்று மேம்பாடுதோன்றக் கூறியது, மனத்தை நல்வழிப்படுத்துதற்பொருட்டாம்;
“நெஞ்சமே நல்லை நல்லை” என்றவிடத்துப் போல.
“உய்வந்தொழும்புசெய்தென் றிருப்போமை யுய்யாம லைவர், பெய்வந்தொழுவினைக்கேயென்பரால்” என்றது,
இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
செயற்கு எளியவாவன – வேண்டியவாறே மனத்தைப் பஞ்சேந்திரியங் களின்வழிகளால் ஐம்புலன்களிற் செலுத்துதலும்,
கண்டபொருளை விரும்புதலும், அவை கிடையாதபோது கோபித்தலும் முதலாயின;
செயற்குஅரியவாவன – இயமம் நியமம் முதலான எண்வகை யோகவுறுப்புக்கள்.
இனி, செயற்கரிய என்பதற்கு – எம்பெருமானது முகமலர்த்திக்காகச் செய்யுங் குற்றேவல்களென்றலும் பொருந்தும்.
‘நயக்கல்வி’ என்ற பாடத்துக்கு – இனிமையைத் தருகின்ற படிப்பு என்று பொருள்;
அவையாவன – வாத்ஸ்யாயநம் கொக்கோஹம் முதலிய காமசாஸ்திரங்கள்.
எம்பெருமானைத் தியானஞ் செய்து உய்யாமல், நயக்கல்வியை விரும்பிக்கற்றும் ஸ்வர்க்கத்தை
அரசாண்டும் பயனில்லை யென்பது, கருத்து. அடியார்களை அன்புடன்நோக்கிநோக்கி எம்பெருமானது திருக்கண்கள் சிவந்தனபோலும்.

ஐம்பொறிகளை “ஐவர்’ என உயர்திணையாகக்கூறியது இழிப்புப்பற்றிய திணைவழுவமைதி;
தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர் “தாம்வந்தார் தொண்டனார்’ என்பது, உயர்சொல் குறிப்புநிலையின் இழிபு விளக்கிற்று’ என்றது,
இங்கு உணரத்தக்கது. ஐவர் – தொகைக்குறிப்பு.

நந்திதேவர்க்குப் பிரதியக்ஷமான சிறந்த நகர மாதல்பற்றி, இத்தலத் திற்கு, “திருநந்திபுரவிண்ணகரம்’ என்று திருநாமம்:
இது, “நாதன்கோவில்’ என வழங்கும்.

————

22-திரு இந்தளூர் –

நாடுதும் வா நெஞ்சமே நாராயணன் பதிகள்
கூடுதும் வா மெய்யடியார் கூட்டங்கள் சூடுதும் வா
வீதி யிந்தளத்த கிலின் வீசு புகை வாசம் எழும்
ஆதி இந்தளூரான் அடி –22-

(இ – ள்.) நெஞ்சமே – (எனது) மனமே! –
நாராயணன் பதிகள் – திரு மாலினது திருப்பதிகளை,
நாடுதும் – சென்று தரிசிப்போம்; வா -;
மெய் அடியார் கூட்டங்கள் – உண்மையான பக்தர்களது கூட்டங்களை,
கூடுதும் – போய்ச் சேருவோம்: வா -;
இந்தளத்து – தூபக்கால்களிற் போகடப்பட்ட,
அகிலின் – அகிற்கட்டைகளினின்று,
வீசு – வீசுகின்ற,
புகை – புகையினது,
வாசம் – நறுமணமானது,
வீதி – தெருக்களில்,
எழும் – கமழ்ந்து எழப்பெற்ற,
ஆதி இந்தளூரான் – முதன்மையாகிய திருவிந்தளூரென்னுந் தலத்தி லெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானது,
அடி – திருவடித் தாமரைகளை,
சூடுதும் – (தலைமேற்) சூடிக்கொள்ளுவோம்: வா -; (எ – று.)

திருமாலின் திருப்பதிகளிற் சென்று அடியார் கூட்டங்களுடன் கூடி எம்பெருமானது திருவடித் தாமரைகளை
முடிக்கு அணியாகச் சூடுமாறு இணங்கிவரும்படி தமதுநெஞ்சை யழைக்கின்றன ரென்க.
நாராயணன் என்ற திருநாமம் – நித்யவஸ்துக்களையெல்லாம் தனக்குஇருப்பிடமாகவுடையவ னென்றும்,
நித்யவஸ்துக்களுக்கு ஆதாரமாயிருப்பவனென்றும், பிரளயப் பெருங்கடலை வாழுமிடமாகக்கொண்டவ னென்றும்
இவ்வாறாகப் பொருள்படும். “சூடுதும்’ என்ற வினைக்கு ஏற்ப, திருவடி தாமரையாக்கி உரைக்கப்பட்டது.

சந்திரன் தனது சாபம் நீங்கப்பெற்ற தல மாதலால், ‘திருவிந்தளூர்’ என்று இத்தலத்திற்குப் பெய ரென்பர்.
இதற்கு வடமொழியில் ‘ஸுகந்த வநம்’ என்று ஒருதிருநாமம் வழங்குகின்றது.

————-

23-திருச் சித்திர கூடம்

அடியால் உலகு எல்லாம் அன்று அளந்து கொண்ட
நெடியானைக் கூடுதியேல் நெஞ்சே கொடிது ஆய
குத்திர கூடு அங்கி கொளுந்தா முன் கோவிந்தன்
சித்திர கூடம் கருதிச் செல் –23–

(இ – ள்.) நெஞ்சே – மனமே ! –
அடியால் – (தனது) திருவடிகளினால்,
உலகு எல்லாம் – எல்லாவுலகங்களையும்,
அன்று – முற்காலத்தில்,
அளந்து கொண்ட – அளந்து தன்னுடையனவாக்கிக்கொண்ட,
நெடியானை – திரிவிக் கிரமாவதாரஞ்செய்த கடவுளை,
கூடுதி ஏல் – சேரவேண்டுமென்று விரும்பினையானால், –
கொடிது ஆய – கொடுமையுள்ளதாகிய,
குத்திரம் – இழிகுணத்தைக்கொண்ட,
கூடு – இந்தச்சரீரத்தை,
அங்கி – அக்கினியானது,
கொளுந்தா முன் – எரித்துவிடுதற்குமுன்னமே,
கோவிந்தன் – கோவிந்தராஜ னெழுந்தருளியிருக்கின்ற,
சித்திரகூடம் – திருச்சித்திரகூடமென்னுந் திவ்வியதலத்தை,
கருதி – நினைத்து,
செல் – செல்வாயாக; (எ – று.)

இறப்பதற்குமுன்னம் சித்திரகூடத்தைச் சென்று சேர்வாயானால், என்றும் எம்பெருமானைக் கூடிவாழும் நற்கதி வாய்க்கு மென்பதாம்.
உயிர்கள் தன்னையுணராதநிலையிலும் தனக்கும் அவைகட்கு முள்ள தொடர்பையே பற்றாசெனக்கொண்டு
தேவேந்திரனுக்கு மூவுலகத்தையும் மீட்டுக்கொ டுத்த லென்ற ஒருவ்யாஜத்தை முன்னிட்டுக்
காடும் ஓடையு மான நிலப் பரப்பையெல்லாம் தனதுமலர்போன்ற மெல்லிய திருவடிகளால் அளந்து
அவ்வுயிர்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்ட பரமகாருணிகனான அந்தத்திரிவிக்கிரமனே
சரணமடைதற்கு உரியவ னென்பது தோன்ற, அப்பெருமானை ‘அடியாலுலகெல்லாமன் றளந்து கொண்ட நெடியான்’ என்றார்.

நிலவுலகத்தையளந்ததில் நிலவுலகத்தோடு அதன்கீழுள்ள ஏழுலகங்களும்,
வானத்தையளந்ததில் நிலவுலகத்திற்குமேலுள்ள ஆறுலகங்களும் அடங்கியதனால் ‘உலகெல்லாம் அளந்துகொண்ட’ எனப்பட்டது.
ஸம்ஸாரத்தை மேன்மேலும் விளைப்பதாய்ப் பலதுன்பங்கட்கும் அசுத்தங்கட்கும் இடமாய் ஆத்மா சேர்ந்திருத்தற்கு
ஒருகூடுபோல நிற்றலால், உடம்பை ‘கொடிதாய குத்திர கூடு’ என்றார்.
‘இறப்பதற்குமுன்’ என்ற பொருளில் ‘குத்திர கூடங்கிகொளுந்தாமுன்’ என்றது – காரணத்தைக் காரியமாகக் கூறிய
உபசாரவழக்கின்பாற்படும்.
கோவிந்த னென்ற திருநாமத்துக்கு – பசுக்களைக் காத்தவ னென்றும்,
உயிர்களை அடிமையாகவுடையவ னென்றும்,
சூரியகிரணத்தில் தங்கியிருப்பவ னென்றும்,
வேதத்தை (ஹம்ஸரூபியாகிப் பிரமனுக்கு) உபதேசித்தவ னென்றும்,
(வராஹாவதாரஞ்செய்து நஷ்டமான) பூமியை யடைந்தவ னென்றும் இன்னுஞ்சிலவாறாகவும் பொருளுரைக்கப்படும்.
திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாஸநஞ்செய்கையில் “தில்லைத்திருச்சித்திரகூடஞ் சென்று சேர்மின்களே” என்று
உபதேசமுகத்தாற் கூறியிருத்தலால், இவ்வாசிரியரும் தமதுமனத்தைநோக்கி உபதேசமாகக் கூறினர்போலும்.

சித்திரகூடம் – விசித்திரமான சிகரங்களை யுடையதெனப் பொருள் படுங் காரணப்பெயர்.
இது, இராமபிரான் வனவாசஞ்செய்தபொழுது அவ்வெம்பெருமானது திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருந்ததொருமலை;
அதனைப்போலவே, இத்தலமும் எம்பெருமானது திருவுள்ளத்திற்கு மிகவும்பாங்காயிருப்ப தென்பதுபற்றி,
அப்பெயரே இதற்கும் இடப்பட்ட தென்பர். இங்கு உத்ஸவமூர்த்தி, இராமபிரான் வனவாசஞ்செய்கையில்
சித்திரகூடபருவதத்தில் வீற்றிருந்தவண்ணமாக எழுந்தருளியிருக்கின்றனர்;
மூலமூர்த்தி, க்ஷீராப்திநாதன்போலச் சயனத்திருக்கோலமாகிச் சிவபிரானது நடனத்தைப் பார்த்து ஆமோதித்துக்
கொண்டு எழுந்தருளியிருக்கின்றனர்.
இது, தில்லைமரங்க ளடர்ந்த காடா யிருந்ததனால், ‘தில்லைத் திருச்சித்திரகூடம்’ என்று வழங்கப்படும்.
இது, எம்பெருமான் தேவர்களும் முனிவர்களும் சூழக் கொலுவீற்றிருந்தசபை.

—————

24-திருச் சீராம விண்ணகரம் –

செல்லும் தொறும் உயிர்ப்பின் செல்லும் இரு வினையை
வெல்லும் உபாயம் விரும்புவீர் தொல் அரங்கர்
சீராம விண்ணகரம் சேர்மின் பின் மீளாத
ஊர் ஆம் அவ் விண்ணகரம் உண்டு –24-

(இ – ள்.) செல்லும் தொறும் – (உடலைவிட்டு உயிர்) போகின்ற இடங் களிலெல்லாம்,
உயிர் பின் செல்லும் – அவ்வுயிரின்பின்னே விடாதுதொ டர்ந்துசெல்லுகின்ற,
இரு வினையை – (நல்வினை தீவினையென்னும்) இரண்டு வினைகளையும்,
வெல்லும் – கடத்தற்குத் தக்க,
உபாயம் – வழியை,
விரும்புவீர் – இச்சிக்கின்றவர்களே! – (நீங்கள்),
தொல் அரங்கர் சீராமவிண்ணகரம் சேர்மின் – பழைய திருவரங்கநாதனுடைய திருச்சீராமவிண்ணகர மென்னுந் தலத்தைப் போய்ச் சேருங்கள்;
பின் – அவ்வாறுசேர்ந்தபிறகு,
மீளாத ஊர் ஆம் அ விண்நகரம் – (தன்னைச்சேர்ந்தவர்) திரும்பிச் செல்லுதலில் லாத திருநகரமாகிய அந்தப்பரமபதம்,
உண்டு – (உங்களுக்குச்) சித்திக்கும்.

திருச்சீராமவிண்ணகரத்தைச் சேர்ந்தால், இருவினைகளையுமொழித்து மீளாவுலகமாகிய பரமபதத்தில் நிலைத்து
வாழ்வீ ரென்று ஜநங்கட்கு ஹிதோபதேசஞ் செய்தவாறு.
திருமங்கையாழ்வாரும் “காழிச்சீராமவிண்ணகரே சேர்மினீரே” என்று பரோபதேசமாகக் கூறியது, கருதத்தக்கது.
இருவினைகளும் தம்மைச்செய்த உயிர்கள் எத்தனை பிறப்பெடுத்தாலும் அத்தனை பிறப்புக்களிலும்
அவ்வுயிர்களைப் பின்தொடர்ந்துசென்று தத்தம்பயனைத் தவறாதுவிளைக்கு மென்பதை,
செல்லுந்தொறு முயிர்ப்பின் செல்லு மிருவினை’ என்றதனால் விளக்கினார்.

தாம் செய்த அவ்வவ்வினைகளின் பயனாகச் சுவர்க்கம் முதலிய இடங்களிற் சேர்ந்தவர் அவ்வினைகள்
கழிந்த பிறகு அவ்வவ்விடங்களினின்று திரும்பிவிடுதல்போல, பரமபதத்தைச் சேர்ந்தவர் தொல்லை யிருவினைகளும் ஒழிதலால்
அங்கு நின்று திரும்பிச்செல்லாராவ ரென்பதுபற்றி அம்முத்தியுலகத்தை ‘மீளாதவூராம் அவ்விண்ணகரம்’ என்றார்.
இந்நூலாசிரியர்க்கு ஸ்ரீரங்கநாதனிடத்துள்ள பத்திப்பேரன்பினாலும்,
நூற்றெட்டுத் திருப்பதிகளுட் சிறந்த தலம் திருவரங்கமே யாதலாலும்,
மற்றைத் திருப்பதிகளிலுள்ள எம்பெருமான்களையும் “அரங்கர்’ என்றே ஆங்காங்குக் கூறுவதென்க.

சக்கரவர்த்தித்திருமக னெழுந்தருளியிருக்கின்ற சிறந்தநகரமாதல்பற்றி, இத்தலத்திற்கு ‘சீராமவிண்ணகரம்’ என்று பெயர்.
காளி வாசஞ்செய்கிற காரணம்பற்றி இத்தலத்திற்குக் காழிச்சீராமவிண்ணகர மென்றும் பெயருண்டு.
(இது, சீர்காழி யென்றும் வழங்கப்படும்.)

இது, திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரைத் திருமங்கையாழ்வார் தமது கவித்திறத்தினால் வென்று
அவரது வெற்றிவேலைத் திருமுன்காணிக்கையாகப் பெற்ற தலம்.

————-

25–திருக் கூடலூர் –

உண்டு கேட்டு உற்று மோந்துப் பார்க்கும் ஐவர்க்கே
தொண்டு படலாமோ உன் தொண்டனேன் விண்டு இலங்கும்
ஆடல் ஊர் நேமி முதல் ஐம்படையாய் அன்பு உடையாய்
கூடலூராய் இதனைக் கூறு –25-

(இ – ள்.) விண்டு இலங்கும் – விட்டுவிட்டுப் பிரிகாசிக்கின்ற,
ஆடல் ஊர் – வெற்றி பொருந்திய,
நேமிமுதல் – சக்கரம் முதலிய,
ஐம் படையாய் – பஞ்சாயுதங்களையுடையவனே!
அன்பு உடையாய் – (உயிர்களிடத்தில் நிர்ஹேதுகமான) கிருபையையுடையவனே!
கூடலூராய் – திருக்கூடலூரென் னுந் தலத்தி லெழுந்தருளியிருப்பவனே ! –
உன் தொண்டனேன் – உனக் கேயடியவனாகிய நான், (அவ்வாறு அடிமையாயிருத்தலைவிட்டு), –
உண்டு – (இனியவுணவுகளைச்) சுவைத்தும்,
கேட்டு – (இனியஇசைமுதலியவற்றைக்) கேட்டும்,
உற்று – (இன்பமுண்டாக்கும் பொருள்களைப்) பரிசித்தும்,
மோந்து – (நறுமணமுள்ள பொருள்களை) மோந்தும்,
பார்க்கும் – (நற்காட்சியுள்ள பொருள்களைக்) கண்டும் மகிழ்கின்ற,
ஐவர்க்கே – பஞ்சேந்திரியங் கட்கே,
தொண்டு படல் ஆமோ – அடிமைப்படுதல் தகுதியாகுமோ? (எ – று.)

மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளுள் கண் எம் பெருமானையே தரிசிப்பதும்,
செவி அப்பெருமான துவைபவங்களையே கேட்பதும், வாய் அவனையே துதிப்பதும்,
மூக்கு அவனது திவ்வியபரிமளத்தையே மோப்பதும், கை கால் தலை முதலிய உறுப்புக்களையுடைய மெய்
அவ் வெம்பெருமானைத் தொழுதல் வலஞ்செய்தல் வணங்குதல் முதலியன செய்வதுமாக,
இங்ஙனம் எல்லாப்பொறிகளும் ஸர்வஸ்வாமியான எம்பெருமானது விஷயங்களையே நுகரும் பொருளாகக் கொள்வதனால்
நான் ஈடேறும்வகை எளிதில் அமைந்திருக்க, அதனை விட்டு,
“கண்டுகேட் டுண் டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண்டொடிகண்ணே யுள” என்றபடி சிற்றின்ப விருப்பத்தால்
விஷயாந்தரங்களிற் சென்று பஞ்சேந்திரியங்கட்கு வசப்பட்டு நாசமடையலாமோ?
நான் அவ்வாறு வசப்பட்டு அழியாதவாறு பாது காப்பது உனதுகடமை யென்று வேண்டியவாறாம்.
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம், கண்ணன்,”
“வாஸுதேவஸ்ஸர்வம்,”
“ஸர்வகந்த: ஸர்வரஸ:” என்றவற்றால் தாரக போஷக போக்யாதிகளெல்லாம் அவ்வெம்பெருமானே யாதலை யுணர்க.
“ஐவர்க்குத் தொண்டுபடலாமோ வுன்தொண்டனேன்’ என்ற தொடரில், ஸாஸ்வதமும் ஸர்வரஸமுமான நீ இருக்கையில்,
நஸ்வரமும் அஸாரமுமான பஞ்சேந்திரியங்கட்கு ஆட்படுதல் தகா தென்பது, போதரும்:
வெண்டளைபற்றி “மோந்துப்பார்க்கும்’ என, அல்வழியில் மென்றொடர்முன் வலிமிக்குவந்தது. ஆடல் = அடல்: நீட்டல்விகாரம்.

தேவர்கள் கூட்டமாகவந்து எம்பெருமானைச் சேவிக்குந் தலமாதலால், ‘திருக்கூடலூர்’ என்று இத்தலத்திற்குத் திருநாம மென்பர்.

—————

26-திருக் கண்ணங்குடி –

கூறு புகழ்த் தன் அடிக்கே கூட்டுவனோ இன்னம் எனை
வேறுபடு பல் பிறப்பில் வீழ்த்துவனோ தேறுகிலேன்
எண்ணம் குடியாய் இருந்தான் நின்றான் கிடந்தான்
கண்ணங்குடியான் கருத்து –26-

(இ – ள்.) எண்ணம் – (எனது) மனத்தை,
குடி ஆய் – (தான்) வாழுமிட மாகக்கொண்டு,
இருந்தான் நின்றான் கிடந்தான் – (அந்நெஞ்சினில்) வீற்றிருத்தலையும் நிற்றலையும் சயனித்தலையும் செய்பவனும்,
கண்ணங்குடியான் – திருக்கண்ணங்குடியென்னுந் தலத்தி லெழுந்தருளியிருப்பவனுமான எம் பெருமான், –
என்னை – அடியேனை,
கூறு புகழ் தன் அடிக்கே கூட்டுவனோ – (வேதங்களிற் சிறப்பித்துக்) கூறப்படுகின்ற கீர்த்தியையுடைய
தனதுதிருவடிகளிலே சேர்த்துக்கொள்வனோ? (அன்றி),
இன்னம் – இனி மேலும்,
வேறுபட – (அவ்வாறு தன்திருவடிகளிற் சேர்த்துக்கொள்ளுவதற்கு) மாறாக,
பல் பிறப்பில் – பலவகைப்பிறப்புக்களிலும்,
வீழ்த்துவனோ – தள்ளி வருத்துவனோ?
கருத்து – (அவனது) திருவுள்ளக்கருத்தை,
தேறுகிலேன் – (இன்னதென்று) அறியேன், (யான்); (எ – று.)

என்மனத்திலே வந்துபுகுந்து நிற்பதும், அவ்வாறுநிற்குமிடத்து வருத்தந்தட்டுகையில் வீற்றிருப்பதும்,
அவ்வாறு இருக்குமிடத்தும் வருத்தந்தோற்றினாற் பள்ளிகொள்வதுமாக இவ்வாறு நிலையாகவாழ்கின்ற
எம்பெருமான் அடியேனுக்கு நற்கதியருள்வனோ? அன்றி,
இதுவரையிலும்போலவே இன்னமும் பலவகைப்பிறப்புக்களில் அலைந்துழலவைப்பனோ?
நிரங்குசஸ்வதந்த்ரனான அவ்வெம்பெருமான் யாதுசெய்வனோ? அறிய னென்பதாம்.

இவ்வாறு ஐயங்கார் ஐயமுறுதற்குக் காரணம்,
எம்பெருமான் தம்மிடத்துக் காரணமின்றியெழுந்த பெருங்கருணையோடு பேரன்புபாராட்டுதலும்,
இயற்கையான அடிமைப்பொருளாகிய தாம் இத்தனைகாலம் அவ்வெம்பெருமானுக்கு ஆட்படாமல்
ஸ்வதந்த்ரராய்த் திரிந்து விமுகராகக்கிடந்தமையுமென்க.
“பின்பிறக்கவைத்தனன்கொலன்றி நின்றுதன்கழற்கு,
அன்புறை க்கவைத்தநாளறிந்தனன்கொல் ஆழியான்,***,
என் திறத்தி லென்கொல் எம்பிரான் குறிப்பில்வைத்ததே” என்ற பெரியார்பாசுரத்தை அடியொற்றியது, இது.
எம்பெருமான் தனது அடியார்களின் சரீரத்தில் நூற்றெட்டுத் திருப்பதிகளிற்செய்துள்ள விருப்பத்தைச் செய்வானென்ற
கொள்கை விளங்குமாறு ‘எண்ணங்குடியா யிருந்தான் நின்றான் கிடந்தான்’ என்றார்;

“நிற்பதுமோர் வெற்பகத்து இருப்புவிண் கிடப்பதும், நற்பெருந்திரைக்கடலுள் நானிலாதமுன்னெலாம்,
அற்புத னநந்தசயன னாதிபூதன் மாதவன், நிற்பதும் இருப்பதுங் கிடப்பதும் என்னெஞ்சுளே,”
“நின்ற தெந்தை யூரகத் திருந்த தெந்தை பாடகத்து, அன்றுவெஃகணைக்கிடந்த தென்னிலாதமுன்னெலாம், ***
நின்றது மிருந்ததுங் கிடந்தது மென்னெஞ்சுளே” என்ற திருமழிசையாழ்வார் பாசுரங்களும்,
“உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய ஸரீரைகதேஸத்திலே பண்ணும்.
அங்குத்தை வாஸம் ஸாதநம்; இங்குத்தை வாஸம் ஸாத்யம். “கல்லுங் கனை கடலும்” என்கிறபடியே
இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும்” என்ற ஸ்ரீவசநபூஷணவாக்கியங்களும் இங்குஉணரத்தக்கன.
பல்பிற ப்புக்களாவன – மக்கள் தேவர் விலங்கு புள் ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என்னும் எழுவகைப்பிறப்புக்கள்.

கண்ணன் வாழ்கின்ற இடமாதலால், இத்தலத்திற்கு ‘திருக்கண்ணன் குடி’ என்று பெயர்;
அதுவே கண்ணங்குடியென்று வழங்குவதாயிற்று.
இத்தலத்தைக்குறித்து ‘உறங்காப்புளி, ஊறாக்கிணறு, காயாமகிழ், தீராவழக்கு, திருக்கண்ணங்குடி’ என்று ஒருபழமொழி வழங்கும்.

————

27-திருக் கண்ண மங்கை –

கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா
ஒருத்தனை நீ நெஞ்சே உணரில் பெருத்த முகில்
வண்ணம் அம்கை கண் கால் வனசம் திரு அரங்கம்
கண்ணமங்கை ஊர் என்று காண் –27-

(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
கருத்தினால்- மனத்தினாலும்,
வாக்கினால்-வாக்கினாலும்,
நால் மறையும் – நான்குவேதங்களும்,
காணா – கண்ட றியமுடியாத,
ஒருத்தனை – ஒப்பற்ற திருமாலை,
நீ உணரின் – நீஅறியவிரும்பினால், – (அவனுக்கு),
“வண்ணம் – திருமேனிநிறம்,
பெருத்த முகில் – பெரிய காளமேகமாம்;
அம் கை – அழகிய திருக்கைகளும்,
கண் – திருக்கண்களும்,
கால் – திருவடிகளும்,
வனசம் – செந்தாமரைமலர்களாம்;
ஊர் – இருப்பிடம்,
திருவரங்கம் – ஸ்ரீரங்கமும்,
கண்ணமங்கை – திருக்கண்ணமங்கையு மாம்,’ என்று -,
காண் – அறிவாயாக; (எ – று.)

எம்பெருமானது ஸ்வரூபத்தை உள்ளபடியறிய விரும்பினால், அவனது திருமேனிநிறம் காளமேகத்தைப்போலு மெனவும்,
அவனது கை கால் கண்க ளென்ற உறுப்புக்கள் செந்தாமரைமலர்போலு மெனவும்,
அவனெ”ந்தருளியிருக்கின்ற இடங்கள் ஸ்ரீரங்கமும் திருக்கண்ணமங்கையும் போன்ற திருப்பதிகளெனவும்
இவ்வாறு தனித்தனியே உவமைப்பொருள்களைக் கொண்டு ஒருவாறு ஊகித்து உணரலாமேயன்றி,
வேதபுருஷனது மனோவாக்குக்களுக்கும் எட்டாத அந்தஎம்பெருமானது ஸ்வரூபத்தை நேர் கொடு நேரே நிரூபித்து
உணர்தல் அற்பஞானமுள்ள நம்மால் எவ்வாற்றாலும் முடியா தென்பது, கருத்து.

(“மைவளர்க்கும் மணியுருவம் மாதகமோ மழைமுகிலோ வென்கின்றாளால்,”
“அடித்தலமும் தாமரையே அங்கை களும் பங்கயமே யென்கின்றாளால்,”
“கைவண்ணந் தாமரை வாய்கமலம் போலும் கண்ணினையுமரவிந்தம் அடியுமஃதே”,
“தமருள்ளந் தஞ்சை தலையரங்கந் தண்கால், *** ஏவல்லவெந்தைக்கிடம்” என்னும் பெரியார்பாசுரங்களை இங்கே அறிக.)

ஆநந்தவல்லியில் எம்பெருமானது ஆனந்தகுணத்தை அளவிடப்புக்க வேதபுருஷன்
“யதோவாசோநிவர்த்தந்தே, அப்ராப்ய மநஸாஸஹ, ஆநந்தம்ப்ரஹ்மண:” என்று தனது
வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாமல் மீண்டமைபற்றி எம்பெருமானது தன்மைஅறிதற்கு அரியதென்பது தானே பெறப்படுதலால்,
‘கருத்தினால் வாக்கினால் நான்மறையுங் காணவொருத்தன்’ என்றார்.
ஒருத்தன் – அத்விதீயன்: ஈடுமெடுப்புமில்லாத ஒரு தெய்வம்.

நான்மறை – ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன:
அன்றி, தைத் திரியம், பௌடியம், தலவகாரம், ஸாமவேதம் என்பனவுமாம்.
வண்ணம் – வர்ணம் என்பதன் சிதைவு. அங்கை – அகங்கை யென்பதன் திரிபுமாம்: அகங்கை – உள்ளங்கை;
“அகமுனர்ச் செவி கை வரி னிடையன கெடும்.” வநஜம் – நீரில்தோன்றுவ தெனத் தாமரைக்குக் காரணவிடுகுறி.

திருமங்கையாழ்வார் இத்தலத்தில் வந்து இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமானைப் பதிகம்பாடித் துதிக்கையில்,
திருநின்றவூர்ப் பத்தராவிப் பெருமாள் முன்பு திருக்கடன்மல்லையில் ஒருபாடல்பெற்றது போதாதெ ன்று மீட்டும்
அவ்வூரிலுள்ள நாய்ச்சியாரான என்னைப்பெற்ற அன்னையால் ஞாபிக்கப்பட்டவராய், ஆழ்வாரெதிரில் வந்து காட்சியளிக்க,
ஆலிநாடர் “நின்றவூர்நின்ற நித்திலத்தொத்தினை *** கண்ணமங்கையுட் கண்டு கொண்டேனே” என்று
அப்பிரானையுஞ் சேர்த்துத் துதிசெய்தன ரென்க.

———–

28-திருக் கவித்தலம் –

காணியும் இல்லமும் கைப் பொருளும் ஈன்றோரும்
பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் சேணில்
புவித் தலத்தில் இன்பமும் பொங்கு அரவம் ஏறிக்
கவித் தலத்தில் கண் துயில்வோன் காண் –28-

(இ – ள்.) (அடியேனுக்கு), காணியும் – பூமியும்,
இல்லமும் – வீடும்,
கை பொருளும் – கையிலுள்ள திரவியமும்,
ஈன்றோரும் – பெற்ற தாய்தந்தை யரும்,
பேணிய வாழ்க்கையும் – விரும்பிய நல்வாழ்வும்,
பேர் உறவும் – நெருங்கிய சுற்றத்தாரும்,
சேணில் புவித்தலத்தில் இன்பமும் – மறுமையிலும் இம்மையிலும் உண்டாகக்கூடிய இன்பங்களும், –
கவித்தலத்தில் – திருக்கவித்தல மென்னுந் தலத்தில்,
பொங்கு அரவம் ஏறி – சீறுந்தன்மையுள்ள ஆதிசேஷன்மீது ஏறி,
கண் துயில்வோன் – திருக்கண்வளர்ந்தருளுந் திரு மாலினுடைய,
கால் – திருவடிகளேயாம்; (எ – று.)

போக்ய போகோபகரண போகஸ்தாநங்களாகிய யாவும் எனக்கு எம் பெருமான் திருவடிகளே யென்பது, கருத்து.
“தோட்டமில்லவளாத்தொழு வோடை துடவையுங் கிணறுமிவையெல்லாம்,
வாட்டமின்றி யுன்பொன்ன டிக்கீழே வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்,”
“பெற்றதாய்நீயே பிறப்பித்ததந்தை நீ, மற்றையாராவாரும்நீ பேசில்,”
“ஒருநற்சுற்றமெனக்குயி ரொண்பொருள், வருநல்தொல்கதியாகிய மைந்தன்” என்ற
ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் இங்குக் கருதத்தக்கன.

காணி – விளைநிலம். உறவுக்குப் பெருமையாவது, வறுமைக்காலத்திலும் தம்மைவிட்டுப் பிரியாமல் உடனிருந்து உதவிசெய்தல்.
சேண் – மேலுலகம். இறந்தபின் மறுமையிற் பெறக்கூடிய இன்பம் பெரும்பாலும் மேலுலகத்திற்சென்று பெறக்கூடியதா யிருத்தலால்,
அம்மறுமையின்பத்தை ‘சேணிலின்பம்’ என்றார்.
திருக்கவித்தலத்தில் எம்பெருமான் புஜங்கசயநத்திற் பள்ளிகொண்டிருத்தலால்,
அப்பிரான் ‘பொங்கரவமேறிக் கவித்தலத்திற் கண்டுயில்வோன்’ எனப்பட்டான்.
தன்மீது திருக்கண்வளர்கின்ற எம்பெருமானுக்கு எச்சமயத்தில் யாவரால் என்னதீங்கு விளையுமோ? என்று,
தீங்கு உண்டாதற்கு இடமாகாத எம்பெருமான்திறத்திலும் பொங்கும்பரிவினாற் பயசங்கைகொண்டு
மங்களாஸாஸநபரனான ஆதிசேஷன் எப்போழ் துஞ் சீறிக்கொண்டிருப்ப னென்னுங் கருத்தைக்
குறிப்பித்தற்கு, அரவத்திற்கு ‘பொங்கு’ என்ற அடைமொழி கொடுத்தார்.
பக்தர்கள் கோஷித்துத் துதிக்கும்போது பயசங்கையினால் திருவநந்தாழ்வான் அழலுமிழ்வனென்று
“ஆங்காரவாரமதுகேட்டு அழலுமிழும் பூங்காரரவணையான்” என்று திருமழிசைப்பிரான் கூறியிருத்தலுங் காண்க.

அநுமானுக்குப் பிரதியக்ஷமான தல மாதலால், இத்திருப்பதிக்கு, “திரு க்கவித்தலம்’ என்று பெய ரென்பர்.

—————

29-திரு வெள்ளியங்குடி –

கால் அளவும் போதாக் கடல் ஞாலத் தோர் கற்ற
நூல் அளவே அன்றி நுவல்வார் ஆர் கோலப்
பரு வெள்ளி அம் குடியான் பாதக ஊண் மாய்த்த
திரு வெள்ளி யங்கு டியான் சீர் –29-

(இ – ள்.) கோலம் பரு வெள்ளி அம் குடியான் – அழகிய பெரிய (கைலாசமென்னும்) வெள்ளிமலையை வாழுமிடமாகவுடையனான சிவபிரானது,
பாதகம் ஊண் – (பிரமஹத்தியாகிய) பாவத்தினால் நேர்ந்த இரந்துண்ணுதலை
மாய்த்த – ஒழித்தருளிய,
திருவெள்ளியங்குடியான் – திருவெள்ளியங்குடி யென்னுந் தலத்தி லெழுந்தருளிய எம்பெருமானது,
சீர் – சிறப்பை, –
கால் அளவும் போதா கடல் ஞாலத்தோர் – (திரிவிக்கிரமாவதாரகாலத்தில் எம்பெருமானது) ஒருதிருவடியினாலளவிடுதற்கும்
போதாத கடல்சூழ்ந்த நிலவுலகத்திலுள்ளவர்களில்,
கற்ற (தாம்) படித்தறிந்த,
நூல் அளவே அன்றி – நூல்களின் அளவாகக் கூறுவதேயல்லாமல்,
நுவல்வார் – முழுதும் உணர்ந்து சொல்லவல்லவர்,
ஆர் – யாவருளர்? (எ – று.)

எம்பெருமானது திருக்கல்யாணகுணங்களை முழுவதுந் தெரிவிக்கின்ற நூல்களும் இவ்வுலகத்திலில்லை;
ஆகவே, “நூலளவேயாகுமாம் நுண்ணறிவு” என்றபடி,
அவ்வெம்பெருமானது குணங்களைச் சிறிதே கூறுகின்ற அந்நூல்களைக் கற்றவர்கள் அதனால் தாம் உணர்ந்து
கொண்ட சிறிதளவே எம்பெருமானது குணங்களைக் கூறவல்லவ ராவரேயன்றி
முற்றுமுணர்ந்து கூறவல்லவர் ஒருவருமில்லை யென்பதாம்.
பூமியைப்பார்க்கிலும் எம்பெருமானது திருவடி பெரிதாயிருந்த தென்பார் ‘காலளவும் போதாக் கடன்ஞாலம்’ என்றார்;
இதனால், அத்திரிவிக்கிரமாவதாரங்கொண்ட எம்பெருமானது உருவத்தின் பெருமை அளவிடுதற்கு அரியதென விளக்கியவாறு,
‘காலளவும் போதாக் கடன்ஞாலம்’ என்ற தொடரால், எம்பெருமானது சரமாவயவமான திருவடிகளில் ஒன்றின்
அளவையே கண்டறியமாட்டாத நிலவுலகத்தார் அவ்வெம்பெருமானது சீர்முழுவதையும் எவ்வாறு காணமாட்டுவர்? என்ற பொருள் தோன்றும்;
இங்கு, ஞாலத்திற்குக்கொடுத்துள்ள ‘காலளவும்போதா’ என்ற அடைமொழி இவ்வாறு ஒருகருத்தை உட்கொண்டிருத்தலால்,
கருத்துடையடைமொழியணியாம்.
எம்பெருமானது நித்யவிபூதியாகிய பரமபதம் “த்ரிபாத் (முக்காற்பங்குள்ள) விபூதி’ என்று பெயர்பெறுமாறு
இந்த லீலாவிபூதி முழுதும் அந்தஎம்பெருமானது பெருஞ்செல்வத்தில் நான்கிலொருபங்கே யாதல்பற்றி,
‘காலளவும்போதாக் கடன்ஞாலம்’ என்றாருமாம்.
“முதலாவார் மூவர்” என்றபடி முதல்மூர்த்திகளாகிய மூவரில் ஒருவன் தலையறுப்புண்டான்;
ஒருவன் தலையைக் கொய்து அப்பாதகத்தால் வருந்தி யலைந்து அதைப் போக்கிக் கொள்வதற்கு
உபாயந்தேடி உலகமெங்கும் இரந்து திரிந்தான்;
ஒருவன் அவனது பாதகத்தை மிக எளிதில் அகலுமாறு அருள்செய்தான்;
ஆகவே, அவ்வாறு அருள்செய்த திருமாலே மற்றையிருமூர்த்தியினும் பரதேவதையாவ னென்றற்கு,
அவனை ‘பருவெள்ளியங்குடியான் பாதகவூண் மாய்த்த திருவெள்ளியங்குடியான்’ என்றார்;
“பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும், நாயகனவனே கபால நன்மோக்கத்துக் கண்டுகொண்மின்” என்றது காண்க.

சுக்கிராசாரியனுக்குப் பிரதியக்ஷமான தலமாதலால், இத்திருப்பதிக்கு “திருவெள்ளியங்குடி’ என்று பெயர்;
‘பார்க்கவபுரி’ என்று இத்தலத்திற்கு வடமொழியில் ஒருபெயர் வழங்குதலுங் காண்க.

———

30-திருமணி மாடக் கோயில் –

சீரே தரும் கதியில் சேருகைக்கு நான் உன்னை
நேரே வணங்கினேன் நெஞ்சே நீ பாரில்
அணி மாடக் கோயில் அரங்கனார் நாங்கூர்
மணி மாடக் கோயில் வணங்கு –30-

(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
சீரே தரும் கதியில் சேருகைக்கு – சிறப்பையே தருகின்ற நல்லகதியில் (முத்தியுலகத்தில்) சென்றுசேர்வதற்காக,
நான் -, உன்னை – (எனது நன்மைதீமைகட்குக் காரணமாயிருக்கின்ற) உன்னை,
நேரே வணங்கினேன் – நன்றாகத்தொழுகின்றேன்;
நீ -, (யாது செய்யவேண்டுமெனின்), –
பாரில் – இந்நிலவுலகத்தில்,
அணி மாடம் கோயில் அரங்கனார் – அழகிய மாடமாளிகைகளையுடைய கோயிலென்று சொல்லப்படுகின்ற
ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியுள்ள ரங்கநாதனது,
நாங்கூர் மணிமாடக்கோயில் – திருநாங்கூரைச்சார்ந்த திருமணிமாடக்கோயி லென்னுந் திவ்வியதலத்தை,
வணங்கு – தொழுவாயாக; (எ – று.)

அத்திருப்பதியை வணங்குமாறு நீ இசைவாயானால், நமக்குத் தவறாமல் நற்கதிவாய்க்குமென்று தமது
நெஞ்சைநோக்கி இதமுரைத்தவாறு. தமக்கு நற்கதிவாய்த்தற்கும், அன்றித்தீநரகிற்கிடந்துழைத்தற்கும் எல்லாவற்றிற்கும்
மனமே காரண மாதலால், நற்கதிகிடைப்பதற்கு முயற்சிசெய்யவேண்டுமென்று கருதிய ஆசிரியர்
தமது விருப்பத்தின்படி வருதற்பொருட்டு அந்நெஞ்சை வணங்கி வேண்டுகின்றன ரென்க;
“நெஞ்சமே நல்லைநல்லை யுன்னைப்பெற்றா, லென்செய்யோ மினியென்னகுறைவினம்,
மைந்தனை மலராண்மணவாளனைத், துஞ்சும்போதும் விடாது தொடர் கண்டாய்” என்ற நம்மாழ்வார்பாசுரம், இங்குக் கருதத்தக்கது.

இதுமுதற் கூறப்படுகின்ற திருப்பதிகள் பதினொன்றையும், “திருநாங் கூர்த்திருப்பதிகள்’ என வழங்குவர்.
நாங்கூர் – வடமொழியில், நாகபுரி யெனப்படும்.

அழகிய உபரிகைவீடுகள் நிறைந்த எம்பெருமானெழுந்தருளியிருக்கின்ற தலமாதலால்,
இத்தலத்திற்கு, “திருமணிமாடக்கோயில்’ என்று பெயர் வந்ததுபோலும்.

————

31-திரு வைகுந்த விண்ணகரம் –

வணங்கேன் பிற தெய்வம் மால் அடியார் அல்லாக்
குணங்கேடர் தங்களுடன் கூடேன் இணங்கி நின்று
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவேன் ஈது அன்றோ
வைகுந்த விண்ணகர வாழ்வு –31-

(இ – ள்.) (நான்), – பிற தெய்வம் – திருமாலல்லாத வேறுதெய்வங்களை,
வணங்கேன் – வணங்கமாட்டேன்;
மால் அடியார் அல்லா – திருமாலினது அடியவரல்லாத,
குணம் கேடர்தங்களுடன் – நற்குணமில்லாதவரோடு,
கூடேன் – சேரமாட்டேன்;
இணங்கிநின்று – (திருமாலடியாருடன்) கூடிநின்று,
வைகுந்த விண்ணகரம் – திருவைகுந்தவிண்ணகரமென்னுந் திவ்வியதலத்தை,
வாழ்த்துவேன் – துதிப்பேன்;
ஈது அன்றோ – இவ்வாறு அடியவருடன் கூடித் துதித்தலல்லவோ,
வைகுந்த விண் நகரம் வாழ்வு – ஸ்ரீவைகுண்டமென்னுந் திவ்வியநகரத்தி லுண்டாகின்ற நல்வாழ்க்கையாவது; (எ – று.)

“அடியார்நிலாகின்ற வைகுந்தம்” என்னுஞ் சிறப்பினையுடைய ஸ்ரீவைகுண்டத்துச் சென்றாலும் அங்கு உண்டாகும்
நல்வாழ்வென்பதும் திருமாலடியார்களுடன் கூடி எம்பெருமானைத் துதித்தலே யாதலால்,
இந்நிலவுலகத்திலேயே மறந்தும் புறந்தொழாமலும் அவைஷ்ணவஸஹவாஸ மில்லாமலும் நின்று
ஸ்ரீவைஷ்ணவர்களுடன் கூடி எம்பெருமானை யேத்தி ஜீவந் முக்தனாவேன் அடியேன் என்பதாம்.
பரதேவதையான திருமாலையன்றி, பிரளயகாலத்தில் பிறவுயிர்களோடொப்ப அவனது திருவயிற்றினுட் புக்குப் பின்பு
வெளிப்படுபவர்களும் தமக்கு ஆபத்துநேர்ந்த காலத்தில் அவனையே சரணமடைந்து தேறி மற்றைச்சமயங்களிற்
செருக்கித் திரிபவர்களு மான அபரதேவதைகளைச் சிறிதும் பொருள்செய்யாமையில் தமக்குஉள்ள உறுதியான துணிவை
‘வணங்கேன் பிறதெய்வம்’ என்பதனால் வெளியிட்டார்;

“அரங்கா! உன்னையன்றித் தெய்வமாக மதிக்குள்வையே னடியேன் பிறராரையுமே,”
“உலகமுண்ட திருக்கந்தரத்தனையல்லாது எண்ணே னொரு தெய்வத்தையே” என்றார் பிறவிடங்களிலும்,
கணவனையே தெய்வமாகக் கொண்டொழுகுங் கற்புடைமகளிர்க்குப் பிறிதோராடவரது தொடர்பில் லாதிருத்தல்
இன்றியமையாதவாறுபோல, எம்பெருமானைச் சரணமடைந்து உய்யும் பிரபந்நர்க்குத் தேவதாந்தரபஜநம்
பண்ணாமை அவசியமென்பர் ஆன்றோர்.

பிணி பசி மூப்புப் பிறப்பு இறப்புத் துன்பங்க ளின்றித் தாம் உய்யமாட்டாதவரும் தம்மைச் சரணமடைந்தவர்களைச்
சமயத்திலே கை விடுபவர்களுமான பிறதேவதைகளையும் அவரைப்பற்றிய பொய்ந்நூல்களையும்
தமது ஆராய்ச்சிக்குறைவினால் உண்மையென்று நம்பிப் பாராட்டிப் பழுதே பலபகலும் போக்குகின்ற
வம்பருடன் கூடுதல் அறிவின்கேட்டிற்குக் காரணமாய் ஸம்ஸாரத்திற்கே வித்தாமாதலால்,
‘மாலடியாரல்லாக் குணங்கேடர்தங்களுடன் கூடேன்” என்றார்.
“சிரவார்க்கெழுதுணையாஞ் செங்கண்மால்நாமம், மறந்தாரை மானிடமாவையே,” என்பது பூதத்தார் பாசுரம்.
தம்மோடுகூடினவர்களைத் தீக்கதியிற் சேர்த்தலால், மாலடியாரல் லாதவர் குணங்கேட ராவர்.
ஸ்ரீவைஷ்ணவர்களேற்றமறிந்து உகந்திருக்கையும் *** ஜ்ஞாநமும் விரக்தியும் ஸாந்தியு முடையனாயிருக்கும்
பரமஸாத்விகனோடே ஸஹவாஸம்பண்ணுகையும் வைஷ்ணவாதிகாரிக்கு அவஸ்யாபேக்ஷிதமாகையால்,
“இணங்கிநின்று வாழ்த்துவேன்’ என்றார்.

ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதுபோலவே இத்தலத்தில் வீற்றிருந்ததிருக்கோலமாகச்
சேவைசாதித்தலால், இத்திருப்பதிக்கு, “திருவைகுந்தவிண்ணகரம்’ என்று பெய ரென்பர்.

————-

32-திரு அரிமேய விண்ணகரம் –

வாழும் அடியார் மட நெஞ்சே நம் அளவோ
தாழும் சடையோன் சது முகத்தோன் பாழிக்
கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய்
அரிமேய விண்ணகரத் தார்க்கு –32-

(இ – ள்.) மடம்நெஞ்சே – அறியாமையையுடைய மனமே! –
அரிமேய விண்ணகரத்தார்க்கு – திருவரிமேயவிண்ணகர மென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு,
வாழும் அடியார் – அடியவராக வாழ்கின்றவர்கள் நம் அளவோ – நாம்மாத்திரந்தானோ? (அன்று) ;
தாழும் சடையோன் – தொங்குகின்ற (கபர்த்தமென்னுஞ்) சடையையுடைய சிவபிரானும்,
சதுமுகத்தோன் – நான்குமுகங்களையுடைய பிரமதேவனும்,
பாழி கரிமேய விண் நகரம் காவலோன் – பலம்பொருந்திய (ஐராவதமென்னும்) யானைமேல் ஏறிச் செல்லுகின்ற
சுவர்க்கலோகத்துக்கு அரசனாகிய இந்திரனும், (அடியவராவர்); (எ – று.) –
கண்டாய் – முன்னிலையசை; தேற்றமுமாம்.

நம்மைப்போல ஸாமாந்யரான மநுஷ்யர்கள்தாம் அப்பிரானுக்கு அடியவரென்று நினைக்கிறாயோ? அவ்வாறல்ல,
உலகத்தார்க்கு யோகஞ்செய்யும் முறையை யுணர்த்தியவனாய், “ஸங்கராத்ஜ்ஞாநமந்விச்சேத்” என்றவாறு
ஞானத்தைத் தரக்கூடியவனாய்ப் பாகவதாக்ரேஸரனான சிவபெருமானும்,
எப்போதும் வேதங்களை யோதி அவற்றின்பொருளையுணர்பவனான பிரமதேவனும்,
தேவர்கட்கெல்லாந்தலைவனான மஹேந்திரனுமே அத்திருமாலுக்கு அடியவராவர்;
இப்படி எல்லார்க்கும் அவனே தலைவ னாதலால், வேறுதெய்வங்களினிடத்திற் சிறிதும்பற்றுவையாது
அவனையே நம்பியிருப்பின், நமக்குத் தவறாமல் நற்கதி கிடைக்கு மென்று நெஞ்சிற்கு அறிவுறுத்தியவாறு.

சதுமுகத்தோன் = சதுர்முகத்தோன். கரி – கரத்தையுடையது என்பதனால், யானைக்குக் காரணக்குறி;
இனி, இச்சொல்லுக்கு – கருமைநிற முடைய தாதலால் கரியெனத் தமிழ்வகையாற் காரணங் கூறலாகாது;
வடசொல்லாதலின், “காவலன்’ என்பது ‘காவலோன்’ எனத் திரிந்தது. மேய – மேவிய என்பதன் விகாரம்.

‘திருவரிமேயவிண்ணகரம்’ என்பது – அரிபொருந்திய விண்ணகரம் போன்றது எனப் பொருள்படும்.
(“அரி’ என்ற சொல் – அழகு திருமால் குரங்கு சிங்கம் தவளை மூங்கில் முதலிய பலபொரு ளுள்ளது.)

———

33-திருத் தேவனார் தொகை –

ஆர்க்கும் வலம் புரியால் அண்டமும் எண் திசையும்
கார்க்கடலும் வெற்பும் கலங்கினவால் சீர்க்கும்
திருத் தேவனார் தொகை மால் செவ்வாய் வைத்து ஊதத்
தருத் தேவனார் தொகையும் சாய்ந்து –33-

(இ – ள்.) சீர்க்கும் – சிறப்புப்பெற்ற,
திருத்தேவனார்தொகை மால் – திருத்தேவனார்தொகை யென்னுந் திவ்வியதலத்திலெழுந்தருளியிருக்கின்ற திருமால்,
(பாரிஜாதவிருக்ஷத்தைத் தேவலோகத்தினின்று பேர்த்துக்கொணரும்போது),
செம் வாய் வைத்து ஊத – (பாஞ்சஜந்யத்தைத்) தமது சிவந்தவாயிலே வைத்து ஊதுகையில்,
ஆர்க்கும் வலம்புரியால் – பேராரவாரஞ் செய்கின்ற அந்த வலம்புரிச்சங்கத்தினால்,
தரு தேவனார் தொகையும் – கற்பகதருவின்நிழலில் வசிக்கின்ற தேவர்களின் கூட்டமும்,
சாய்ந்து – மூர்ச்சித்துவிழ, —
அண்டமும் – அண்டங்களும்,
எண் திசையும் – எட்டுத் திக்குக்களும்,
கார் கடலும் – கரிய சமுத்திரமும்,
வெற்பும் – அஷ்டகுல பருவதங்களும்,
கலங்கின – கலங்கிப் போயின; (எ – று.) – ஆல் – ஈற்றசை; வியப்புக்குறிப்புமாம்.

எம்பெருமானது பஞ்சாயுதங்களு ளொன்றான சங்கத்தினது சிறப்பை இதனாற் கூறினார்.
“அருட்கொண்டலன்னவரங்கர் சங்கோசையி லண்ட மெல்லாம்,
வெருட்கொண்டிடர்பட மோகித்து வீழ்ந்தனர் வேகமுடன்,
தருக்கொண்டுபோகப்பொறாதே தொடருஞ் சதமகனுஞ்,
செருக்கொண்ட முப்பத்துமுக்கோடிதேவருஞ் சேனையுமே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்,
சாய்ந்து = சாய; எச்சத்திரிபு. சாய்ந்து கலங்கின என்று ஒருமுடிபாகவே உரைப்பாரு முளர்.
அண்டம் – உலகவுருண்டை, அண்டம், எண்டிசை, கடல், வெற்பு என்பன – அங்குள்ள ஜீவராசிகளையும் குறித்தலால், ஆகு பெயர்கள்.
தேவர்கள் கற்பகதருவின் நிழலில் வசித்தலை, “இன்றளிர்க்கற்பக நறுந்தேனிடைதுளிக்குநிழலிருக்கை” என்ற கம்பராமாயணத்தாலும் அறியலாம்.

“தேவர்கள் சபைகூடின இடமாதலால், இத்திருப்பதிக்கு ‘திருத்தேவனார்தொகை’ என்று பெயராயிற்றென்னலாம்.

———–

34-திரு வண் புருடோத்தமம் –

சாய்ந்த திரு அரங்கம் தண் வேங்கடம் குடந்தை
ஏய்ந்த திரு மால் இருஞ்சோலை பூந்துவரை
வண் புருடோத்தமம் ஆம் வானவர்க்கும் வானவன் ஆம்
ஒண் புருடோத்தமன் தன் ஊர் –34-

(இ – ள்.) வானவர்க்கும் வானவன் ஆம் – தேவர்கட்கெல்லாந் தேவனாகிய,
ஒள் புருடோத்தமன்தன் – அழகிய புருஷோத்தம னென்னுந் திருமாலினது,
ஊர் – திருப்பதிகளாவன, –
சாய்ந்த திருவரங்கம் – (எம்பெருமான்) பள்ளிகொண்டிருக்கின்ற ஸ்ரீரங்கமும்,
தண் வேங்கடம் – குளிர்ந்த திருவேங்கடமலையும்,
குடந்தை – திருக்குடந்தையும்,
ஏய்ந்த திருமாலிருஞ்சோலை – (எம்பெருமானது திருவுள்ளத்துக்குப் பாங்காகப்) பொருந்திய திருமாலிருஞ்சோலைமலையும்,
பூ துவரை – அழகிய துவாரகையும்,
வள் புருடோத்தமம் – திருவண்புருடோத்தமம்,
ஆம் – ஆகும்; (எ – று.)

புருஷோத்தமனென்ற வடசொல் – பத்தர்களும் முக்தர்களும் நித்யர்களுமாகிய புருஷர்கள்
யாவரினுஞ் சிறந்தவ னென்று பொருள்படும். புருஷோத்தம னெழுந்தருளியிருக்கின்ற வளப்பமுள்ள திருப்பதி யாதலால்,
‘ இதற்கு ‘திருவண்புருடோத்தமம்’ என்று பெயர்.

—————-

35-திருச் செம்பொன் கோயில் –தலைவி ஆற்றாமை மிகுதியால் மடலூரத் துணிதல் –

ஊர்வேன் மடலை ஒழிவேன் மடம் நாணம்
சேர்வேன் கரிய திருமாலை பார் அறிய
அம்பொன் செய் கோயில் அரங்கன் அணி நாங்கூர்ச்
செம்பொன் செய் கோயிலினில் சென்று –35-

(இ – ள்.) பார் அறிய – உலகத்தவரெல்லாம் உணரும்படி (வெளிப்படையாக),
மடம் நாணம் ஒழிவேன் – மடப்பத்தையும் நாணத்தையும் துறந்தவளாகி,
மடலை ஊர்வேன் – மடலூர்ந்துசெல்வேன்; (அதனாலேனும்), –
அம்பொன் செய் கோயில் அரங்கன் – அழகிய பொன்னினாற் செய்யப்பட்ட கோயிலையுடைய திருவரங்க நாதனது,
அணி – அழகிய,
நாங்கூர் – திருநாங்கூரைச் சேர்ந்த,
செம்பொன்செய்கோயிலினில் – திருச்செம்பொன் செய்கோயிலென்னுந் தலத்தில்,
சென்று – போய்,
கரிய திருமாலை – (அங்கு எழுந்தருளியுள்ள) கருநிறமுடைய எம்பெருமானை,
சேர்வேன் – அடைவேன், (யான்); (எ – று.)

திருச்செம்பொன்செய்கோயிலென்னுந் தலத்தி லெழுந்தருளியுள்ள எம்பெருமானது திவ்விய சௌந்தரியத்தி லீடுபட்டு
அவனது உத்தமபுருஷத்தன்மையைக் கருதியதனாலே அப்பொழுதே அவனைக் கிட்டவேண்டும் படியான ஆசையுண்டாய்,
அங்ஙனம் அவனைக்கிட்டப்பெறாமையாலே ஐயங்கார் ஆற்றாமை மீதூர்ந்து தளர்ந்தார்;
அத்தளர்ச்சியாலே தாமானதன்மை குலைந்து, ஆண்பெண்ணாம்படியான நிலைமை தோன்றி ஒருபிராட்டி நிலையை யடைந்தார்.
ஆண்பெண்ணாதல் கூடுமோ வெனின், –
“கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்,”
“வாராக வாமனனே அரங்கா வட்டநேமிவலவா ராகவா உன்வடிவுகண்டால் மன்மதனும் மடவாராக ஆதரஞ்செய்வன்” என்ப வாதலாலே, இது கூடும்;
தண்டகா ரணியவாசிகளான முனிவர்கள் இராமபிரானது சௌந்தரியாதிசயத்தி லீடு பட்டுத் தாம்
பெண்தன்மையைப் பெறவிரும்பி மற்றொருபிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணனைக் கூடின ரென்ற ஐதிகியமு முணர்க.
(“பெண்டிரும் ஆண்மைவெஃகிப் பேதுறுமுலையினாள்,”
“வாண்மதர்மழைக்கணோக்கி *** ஆண்விருப்புற்றுநின்றார் அவ்வளைத்தோளினாரே” எனப் பெண் ஆணாக விரும்பு மிடமு முண்டு.)
அங்ஙனம் ஆண்பெண்ணாகிலும் சாதாரணப்பெண்மையையேயன்றி எம்பெருமானுக்கு உரியவளாகும்
ஒருபிராட்டியின் நிலைமையை யடையுமாறு எங்ஙன மெனில், –
பரமாத்மாவினது தலைமையும், ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும்,
புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலகமுழுதும் பெண்தன்மையதாதலும்,
ஜீவாத்மாவினது ஸ்வாதந்தி ரியமின்மையும், பாரதந்திரியமும், நாம் எம்பெருமானது சேர்க்கையால் இன்பத்தையும்
பிரிவினால் துன்பத்தையு மடைதலும், அவனையே தாம், கரணங்களெல்லாவற்றாலும் அனுபவித்து ஆனந்தித்தலும்
முதலிய காரணங்களால் தம்மைப் பிராட்டிமாரோ டொக்கச் சொல்லத் தட்டில்லையென்க.

ஓர்உத்தமபுருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்திற்குச் சென்றவனாய்
ஓர் உத்தமகன்னிகையும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே,
ஒவ்வொரு நிமித்தத்தால் தோழியர்பிரிய அக்கன்னிகை அங்குத் தனித்துநின்ற சமயத்திலே ஒவ்வொரு நிமித்தத்தால்
பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவனாய் அப்புருஷன் அங்குவந்து சேர,
இருவரும் தெய்வவசத்தால் தற்செயலாய் ஏகாந்தமான ஓரிடத்திலே சந்தித்து ஒருவர்பக்கல்ஒருவர் காதல்கொண்டு
கொடுப்பாரும் அடுப்பாரு மின்றித் தமதுவிருப்பத்தின்படி களவுப்புணர்ச்சிபுணர்ந்து பிரிந்தபின்பு
ஆற்றாமைவிஞ்சி அதனால் நாணம் முதலியன அழிந்து இவர்களுள் ஒருவர் மற்றொருவரது
வடிவத்தையும் ஊரையும் பேரையும் தமதுஊரையும் பேரையும் ஒருபடத்திலெழுதி
அச்சித்திரபடத்தைக் கையிற்கொண்டு பனைமடலினால் ஒருகுதிரையுருச்செய்வித்து அதன் மீது தாம் ஏறி
அதனைப் பிறராலிழுப்பித்து வீதிவழியே பலருங்கூடும் பொதுவிடங்களிலெல்லாஞ் செல்லுபவராவர்;

இது, மடலூர்த லெனவும், மடன்மாவேறுத லெனவும் படும். இதற்குப் பயன் –
இவரது இக்கடுந்தொழிலைக் கண்டு அதனால் இவரதுபெருவேட்கையை யுணர்ந்து உறவினராயினும்
அரசனாயினும் வெளிப்படையாக மணஞ்செய்துவைக்கப்பெறுதலாம்.
இம்மடற்றிறம் ஆடவர்க்கே பெரும்பாலும் உரியது. அளவுக்குவிஞ்சின ஆசையின்மிகுதியால் மகளிர்க்குஞ் சிறுபான்மை வரும்.
அன்றியும், மடலூர்தல் ஆடவர்க்கே யுரியதென்றும், மடலூர்வே னென்று சொல்லுதல் இருபாலார்க்கும் உரிய தென்றும் உணர்க.
இங்குக்கூறிய இது, தலைவியின் மடற்றிறம். பிரிவாற்றாது வருந்துந் தலைமகள் காதல்மிகுதியால்
நாணந் துறந்து மடலூரத் துணிந்தமையைக் கூறுதல், இச்செய்யுளிற் குறிக்கப்பட்ட விஷயம்.

தோத்திரப்பிரபந்தங்களில் அகப்பொருட்கிளவித்துறைகளை இடையிடையே கூறுதல் கவிசமயமாதலை, இலக்கியங்கள்கொண்டு உணர்க.
சிருங்காரரசப்பிரதானமான அகப்பொருட்கிளவித்துறைகளை ஞானநூலாகிய தோத்திரப் பிரபந்தங்களிற் கூறுதற்குக் காரணம்,
கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்தின்பிப்பார்போலச் சிற்றின்பங்கூறும் வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுத லென்பர்.
இங்ஙனம் வெளிப்படைப்பொருளால் அந்யாபதேசமாகக் கூறுகின்ற சிற்றின்பத்துறைச்செய்யுள்கட்கெல்லாம்
ஸ்வாபதேசமாகப் பேரின்பத்தின்பாற் படுத்தும் உள்ளுறைபொருள் உண்டென்பதையும் உணர்க.
அன்றியும், இங்குக் கூறியது, உலகவாழ்க்கைச் சிற்றின்ப மன்று.
“நான்கினுங் கண்ணனுக்கேயாமது காமம்” என்றபடி எம்பெருமானைச் சேரவேண்டுமென்று அவன்
பக்கலிலே யுண்டாகின்ற அபேக்ஷையையே கூறியது.
“கோவிந்தா, எற்றைக்கு மேழேழ்பிறவிக்கு முன்றன்னோ, டுற்றோமேயாவோம்
உனக்கேநகாமாட்செய்வோம், மற்றைநங்காமங்கள் மாற்று” என்றபடி லோகநாயகனுடைய சேர்க்கையை
அபேக்ஷிக்கின்ற பேரின்பக்காதலானது வேதாந்தநிர்ணயத்தின்படி அன்புசெலுத்தவேண்டிய இடத்தில் அன்புசெலுத்திய தாதலால்,
சிற்றின்பக்காதல்போலன்றி, ஸகலபாபநிவ்ருத்திக்கும் வீடுபேற்றுக்குமே காரணமாம்.
கண்ணபிரான்பக்கல் கொண்ட காமத்தால் கோபஸ்திரீகள் முத்தி பெற்றன ரென்று புராணங் கூறுதலுங் காண்க.

ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே அவனதுநிரந்தராநுபவத்தில்
அபேக்ஷையுடைய இவர் ஸ்வதந்திரனான அவன் மீண்டும் தானாகவந்து தம்மைச்சேர்த்துக்
கொண்டருளுங் காலத்தின் வரவை யெதிர்நோக்கிப் பொறுத்துப் பரதந்திரராய் ஆறியிருப்பது தகுதியாக,
தமதுஅவாவின்மிகுதியால் அத்தன்மை குலைந்து எவ்வாற்றாலாயினும் தாம்முயன்று அவனதுசாந்நித்தியத்தைப்
பெறுதற்கு விரைதலையெடுத்துஉரைத்தல், இச்செய்யுளுக்கு உள்ளுறைபொருளாம்.

மடலூர் தலுக்கு ஸ்வாபதேசம் – பாரதந்திரியத்தை விட்டு ஸ்வாதந்திரியத்தை மேற்கொண்டு ஸாதநாநுஷ்டாநஞ்செய்தல்.
இவரதுபாரதந்திரியநிலை குலையாதபடி எம்பெருமான் ஸாந்நித்தியத்தைத் தந்தருளுமாறு செய்தல்,
இதன் பயனாம். பிறவும் ஆய்ந்துஉணர்க.

மடல் என்ற சொல் – இலக்கணையால், அதனாலியன்ற குதிரையைக் குறித்தது.
மடம், நாணம் என்பன – மகடூஉக்குணங்கள் நான்கைச் சேர்ந்தவை; மற்றவை – அச்சமும் பயிர்ப்புமாம்;
இவற்றுள், மடமாவது – அறிந்தும் அறியாதுபோலிருத்தல்; கொளுத்தக்கொண்டு கொண்டதுவிடாமை யென்றுங் கூறுவர்.
நாணமாவது – செய்யத்தகாதவற்றின்கண் உள்ளமொடுங்குதல்.
அச்சமாவது – பலஆடவர்களினிடையிற் செல்லக்கூசுதல்.
பயிர்ப்பாவது – கணவனல்லாத மற்றைப்புருஷரது ஆடை முதலியன தம்மேற் பட்டால் அருவருப்புக்கொள்ளுதல்.

———–

36–திருத் தெற்றி யம்பலம்

சென்றது காலம் திரை நரை மூப்பு ஆன இனி
என்று கொல் சாவு அறியேன் என் நெஞ்சே கன்றால்
உருத்து ஏற்றி அம்பலத்தை ஓர் விளவின் வீழத்தான்
திருத் தெற்றி யம்பலத்தைச் சேர் –36-

(இ – ள்.) என் நெஞ்சே – எனது மனமே! –
(நமக்கோ), – காலம் சென்றது – வாழ்நாள் பெரும்பாலுங் கழிந்திட்டது;
திரை – தோற்சுருக்கமும்,
நரை – மயிர்வெளுத்தலும்,
மூப்பு – கிழத்தனமும்,
ஆன – தோன்றியுள்ளன;
இனி – இனிமேல்,
சாவு – மரணம்,
என்றுகொல் – என்றைக்கோ?
அறியோம் – அறிந்திலோம்; (ஆதலால், நமது ஆயுள் முடிவதற்குள்),
ஓர் விளவின் அம் பலத்தை – ஒருவிளாமரத்திலுள்ள (அசுராவேசங்கொண்ட) அழகிய பழத்தை (க்கண்டு),
உருத்து – கோபித்து,
கன்றால் – (அசுராவேசங்கொண்ட) இளங்கன்றைக்கொண்டு,
எற்றி – வீசியெறிந்து,
வீழ்த்தான் – விழச்செய்தவனான திருமாலினது,
திருத்தெற்றியம்பலத்தை – திருத்தெற்றியம்பலமென்னுந் திவ்வியதலத்தை,
சேர் – இடைவிடாது தியானிப்பாயாக; (எ – று.)

இதனால், பழுதே பலபகலும் போயினமைக்கு இரங்கி, ஒவ்வொருகரணமும் ஒடுங்கிக்கொண்டே வருகின்ற
முதுமைப்பருவத்திலும் தமது நெஞ்சமானது மரணம் பின்றையே நின்றதென்ற சிந்தனை சிறிதுமின்றி
உலகப் பற்றுக்கொண்டு உழல்வது கண்டு ஆற்றாது, அந்நெஞ்சை நோக்கி இனியாவது எம்பெருமானது
திவ்வியதலத்தைச் சேர்ந்து உய்வுபெறுவா யென்று உணர்த்துகின்றன ரென்க.
இதுவரை வீணே கழிந்த நாள்களைக்குறித்துக் கழிவிரக்கங் கொள்ளுகிறவளவோடு நில்லாமல்,
இனி உயிர் வாழும் நாள்களுள் “நின்றபிராணன் கழலுமுன்னே நெஞ்சமே நினையாய்” என்றபடி
இறப்பதற்குமுன்னே எம்பெருமா னெழுந்தருளியுள்ள தலத்தைத் தியானித்தாலும் அதுபயன்படுமென்பது, கருத்து.
பின்னிரண்டடிகளில், நெஞ்சே! விரோதிநிரஸநசீலனான எம்பெருமானது திவ்வியதலத்தை நீ சேர்வாயாயின், அவனும் வேண்டா,
அப்பிரானது திவ்யதலமே பகவத்தியானத்திற்கு இடையூறு உண்டாக்குகின்ற உனதுவிரோதிகளைப் போக்கு மென்ற கருத்துத் தொனிக்கும்.
இடைச்சிறுவனாகிய ஸ்ரீகிருஷ்ணனுக்கு விருப்பத்தையுண்டாக்குமாறு ஓரசுரன் ஆவேசித்ததனால்
இயற்கைக் கனிகளினும் இனியதோற்றத்துடன் அவ்விளவின்கனி இருந்த தென்பார்,
அதற்கு “அம்’ என்ற அடைமொழி கொடுத்துக் கூறினர்.
கன்றினிடத்து ஆவேசித்த அசுரன் வத்ஸாசுர னென்றும், விளங்கனியினிடத்து ஆவேசித்த அசுரன் கபித்தாசுரனென்றும் பெயர்பெறுவர்.

————-

37–திரு மணிக்கூடம் –

சேராது முன் செய்த தீ வினை பின் செய்ததுவும்
வாராது இனி நீ மட நெஞ்சே நேராக்
குருமணிக் கூடத்து ஆனைக் கொம்பு பறித்தானை
திரு மணிக் கூடத்தானைச் செப்பு –37-

(இ – ள்.) மடம் நெஞ்சே – அறியாமையையுடைய எனது மனமே! –
நேரா – எதிர்த்து,
குரு மணி கூடத்து – சிறந்த இரத்தினங்க ளிழைத்துச் செய்யப்பெற்ற கூடத்தி லிருந்த,
ஆனை – (குவலயாபீடமென்னும்) பட்டத்துயானையினது,
கொம்பு – தந்தங்களை,
பறித்தானை – வேரோடுபிடுங்கி (அதனால் அதனை அடித்து) அழித்தவனும்,
திருமணிக்கூடத்தானை – திருமணிக்கூடமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியிருப்பவனுமாகிய திருமாலை,
நீ செப்பு – நீ இடைவிடாது துதிசெய்ய உதவுவாய்;(அவ்வாறுசெய்வாயாயின்), –
முன்செய்த தீ வினை – நீ முற்பிறப்பிற்செய்து சேர்த்துவைத்துள்ள (ஸஞ்சிதம் அநப்யுபகதப்ராப்தம் என்ற இரண்டுவகைப்) பாவமும்,
சேராது – (தன்பயனை ஊட்டுமாறு உன்னை) அணுகாது;
பின்செய்வதுவும் – இனி (அபுத்திபூர்வகமாகச்) செய்கின்ற (ஆகாம்யமெனப்படும்) பாவமும்,
இனி வாராது – இனிமேல் (உன்னை) அணுகாது; (எ – று.)

பிறப்பு அநாதியாய் வருதலின் தமது உயிரால் அளவின்றி யீட்டப் பட்ட வினைகளின் பயன்களுள் இதுவரை
அனுபவித்தவைபோக இனி அனுபவிக்கக் கடவனவாய் நின்ற கருமங்களெல்லாம் எம்பெருமான் திருநாமத்தைச்
சொன்னமாத்திரத்தில் உடனே அவனருளால் இருந்தது தெரியாதபடி அழிந்திட,
அபுத்திபூர்வகமாக இனி நேரிடுங் கருமங்களும் காட்டுத்தீமுன்னர்ப் பஞ்சுத்துய்போல அழிந்தொழியு மென்பதாம்,
புண்யமும் பொன்விலங்குபோன்று மோட்சத்திற்குத்தடையாய்ப் பிறப்பிற்கு ஏதுவாதல்பற்றி அதனையுஞ்சேர்த்து ‘தீவினை’ என்றே கூறினார்.
“போயபிழையும் புகுதருவா னின்றனவுந் தீயினிற்றூசாகுஞ் செப்பு” என்ற ஆண்டாள் அருளிச்செயலும்,
“செப்பு – வாங்மந:காயங்களால் அநுபவிக்கவேணுமென்றது மிகை; விரோதி போகைக்கு உக்திக்குமேல் வேண்டா வென்கை;
அவன், இவன் அநுகூலித்தவாறே பூர்வாகத்தை (ஞானம்பிறப்பதற்குமுன்செய்த பாபத்தை) விஸ்மரிக்கும் (மறப்பான்);
உத்தராகத்துக்கு அவிஜ்ஞாதா (அறியாதவன்) ஆம்; இனி யார் அநுபவிப்பார்?
அவன்பொறுத்தே னென்னத் தீருமத்தனையிறே இது” என்ற வ்யாக்யாநவாக்யங்களும் இங்குக் காணத்தக்கன.

பாலுங் கண்டசர்க்கரையும் கலந்து குடிக்கப் பித்தம் தன்னடையே போமாறுபோல, எம்பெருமானது திருநாமத்தை
ஒருகால் உச்சரித்தமாத்திரத்தில் தீவினைகளெல்லாமொழிந்து நற்கதிபெறுதல் எளிதாயிருக்க,
சுகரமான இந்த உபாயத்தை மேற்கொள்ளாது அலைகின்ற தம்மனத்தை
ஐயங்கார் ‘மடநெஞ்சே’ என்று விளித்தல் ஏற்கும். ‘குருமணி’ என்பதை ஆனைக் கொம்புக்கு அடைமொழி யாக்கி,
சிறந்தமுத்துக்கள் தோன்றுதற்கு இடமான யானைத்தந்தம் என உரைப்பினுமாம்;
யானைக்கொம்பு முத்துப்பிறத்தற்கு உரிய இருபது இடங்களு ளொன்றாதலும், முத்து நவமணிகளுளொன்றாதலும் அறிக.

————–

38–திருக் காவளம்படி-

செப்பென் மனிதருக்கு என் செஞ்சொல் தமிழ் மாலை
கைப்பேன் பிற தெய்வம் காண்பாரை எப்போதும்
காவளம் பாடித் திருமால் கால் தாமரை தொழுது
நா வளம் பாடித் திரிவேன் நான் –38-

(இ – ள்.) நான் -, எ போதும் – எக்காலத்திலும்,
என் நெஞ் சொல் தமிழ் மாலை – இன்சொற்கள் நிறைந்த எனது தமிழ்ப்பாமாலையை,
மனிதருக்கு – மனிதரைப்பற்றி,
செப்பேன் – (ஒருபோதும்) பாடமாட்டேன்;
பிற தெய்வம் காண்பாரை – தேவதாந்தரங்களைத் தரிசிக்கின்ற அவைஷ்ணவரை,
கைப்பேன் – வெறுப்பேன்;
காவளம்பாடி திருமால் – திருக்காவளம்பாடி யென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியுள்ள திருமாலினது,
கால் தாமரை – திருவடித்தாமரைகளை,
தொழுது – வணங்கி,
நா – (எனது) நாவினால்,
வளம் பாடி – வளமாகக் கவிபாடிக்கொண்டு,
திரிவேன் – யாதொரு கவலையுமின்றி இனிதுகாலங்கழிப்பேன்; (எ – று.)

பந்தத்திற்கு ஏதுவான நரஸ்துதி செய்வதைவிட்டு, தேவதாந்தரபஜநஞ் செய்வாரையும் வெறுத்து,
மோட்சத்திற்கே ஏதுவான திருமாலினது திருவடித்தாமரைகளைக் கவிபாடித் துதித்துப் பொழுதுபோக்குவே னென்று
மறந்தும் புறந்தொழாத வீரவைஷ்ணவராகிய தமது அநுஷ்டாநத்தை வெளியிட்டன ரென்க.
தேவாதிதேவனான திருமாலைத் துதித்தற்கு உதவியாதல்பற்றி, தமதுபாடல்களை “செஞ்சொல்தமிழ்மாலை’ என்றனர்.
“கைப்பேன் பிறதெய்வங்காண்பாரை’ என்பதனால், இவர் பிறதெய்வங்களைக் காணுதலுஞ்செய்யாமை சொல்லாமலே அமையும்;
இன்னும் இதனால், “ஞானத்தினொளியுருவை நினைவா ரென்நாயகரே”,
“கொண்டாடும் நெஞ்சுடையாரவரெங்கள்குலதெய்வமே” என்றபடி
திருமாலைத் துதிக்கும் மெய்யடியார்களிடத்தில் பிரேமையுள்ளவ ரிவரென்பதும் பெறப்படும்.

———-

39-திரு வெள்ளக் குளம் –

நான் அடிமை செய்ய விடாய் நான் ஆனேன் எம்பெருமான்
தான் அடிமை கொள்ள விடாய் தான் ஆனான் ஆனதற்பின்
வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம்
உள்ளம் குளம் தேனை ஒத்து –39-

(இ – ள்.) நான் -, அடிமை செய்ய – (எம்பெருமானுக்குத்) திருத்தொண்டுசெய்யவேண்டு மென்று,
நான் விடாய் ஆனேன் – நான் பேராவல் கொண்டவனானேன்;
எம்பெருமான் -, தான் – தானும், அடிமை கொள்ள – (என்னை) அடிமையாகக் கொள்ளவேண்டு மென்று,
தான் விடாய் ஆனான் – தான் பேராவல்கொண்டவனானான்;
ஆனதன் பின் – இங்ஙனம் இருவரும் விடாய்கொண்டபின்பு,
வெள்ளக்குளத்தே – திருவெள்ளக்குள மென்னுந் திருப்பதியில்,
இருவரும் – யாங்களிருவரும்,
உள்ளம் குளம் தேனை ஒத்து – மனத்தில் சர்க்கரைப்பாகையும் தேனையும் போன்று, (ஒன்றுசேர்ந்து),
விடாய் தணிந்தோம் – எங்கள் வேட்கை தணியப்பெற்றோம்; (எ – று.)

எம்பெருமானது ஜாயமாநகடாக்ஷத்தால் அப்பிரானுக்குத் திருத்தொண்டுசெய்தாலன்றித் தரித்திருக்க
வொண்ணாத நிலைமை எனக்கு உண்டாக, உடையவன் பயிர்த்தலையிலே குடிசைகட்டிக்கொண்டு நிற்பதுபோல
எம்பெருமானும் திவ்வியதேசங்கள்தோறும் எழுந்தருளியிருந்து எப்போது சேதநலாபம் தனக்கு நேருமோ வென்று
பேராவல்கொண்டு எதிர்பார்த்து நிற்க, நான் அங்குச் சென்று அப்பிரானைத் தரிசித்து அடிமைசெய்யவே
அப்பிரானும் உவந்து என்னை ஆட்கொள்ள, அதனால் இருவரும் விடாய் தீரப்பெற்றோ மென்பதாம்.
திருவெள்ளக்குளம் என்ற அந்தத்திவ்வியதலத்தின் திருநாமத்திற்கு ஏற்ப, ‘விடாய்தணிந்தோம்’ என்று சமத்காரந்தோன்றக் கூறினரென்க.

எம்பெருமான் வ்யூஹம் விபவம் முதலிய நிலைகளை மேற்கொண்டும் அவை பயனிலவாதல்பற்றி,
அர்ச்சாவதாரத்தை மேற்கொண்டு உலகத்து உயிர்களை அடிமைகொள்கின்றன னென்பது, நூல்துணிபு.
“பூர்த்தியுள்ளதும் அர்ச்சாவதாரத்திலே; ஆழ்வார்கள் பலவிடங்களிலும் ப்ரபத்திபண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே.
பூர்ண மென்கையாலே, எல்லாக்குணங்களும் புஷ்கலங்கள். ப்ரபத்திக்கு அபேஷிதங்களான ஸௌலப்யாதிகள்
இருட்டறையில் விளக்குப்போலே ப்ரகாஸிப்பது இங்கே. பூர்த்தியையும் ஸ்வாதந்த்ரியத்தையுங் குலைத்துக்கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களைத் தான் ஆதரித்துநிற்கிற இடம்.
பூகதஜலம்போலே அந்தர்யாமித்வம்; ஆவரண ஜலம்போலே பரத்வம். பாற்கடல்போலே வ்யூஹம்.
பெருக்காறுபோலே விபவங்கள். அதிலே தேங்கின மடுக்கள்போலே அர்ச்சாவதாரம்.
இதுதான் ஸாஸ்த்ரங்களால் திருத்தவொண்ணாதே விஷயாந்தரங்களிலேமண்டி விமுகராய்ப்போருஞ் சேதநர்க்கு
வைமுக்யத்தை மாற்றி ருசியை விளைக்கக்கடவதாய், ருசிபிறந்தால் உபாயமாய் உபாய பரிக்ரஹம்
பண்ணினால் போக்யமுமாய் இருக்கும்” என்பது, ஸ்ரீவசநபூஷணம்.

ஐயங்கார், தமக்கு அடிமைசெய்யும் விருப்பம் மிக்கிருப்பதையும், அப்பிரானுக்குத் தம்மை அடிமை
கொள்ளும் விருப்பம் தம்மினும் மிக்கிருப்பதையும் விளக்குவதற்கு, “நான்’, “தான்’ என்ற சொற்களை இருமுறை கூறினர்;
இனி, இவ்விரண்டு சொல்லையும் அசைநிலை யென்பாரு முளர்.
ஜீவாத்ம ஸ்வரூபமும் பரமாத்மஸ்வரூபமும் தனித்தனி இனிதாயிருத்தல்பற்றி, அவ்விரண்டற்கும் நேர்ந்த சேர்க்கைக்கு –
சர்க்கரைக்குந் தேனுக்கும் நேர்ந்த சேர்க்கையை உவமைகூறினார்.
உபமானப்பொருள்கள் அசேதந மாதலால், அவை தமது இனிமையை யுணரமாட்டா;
உபமேயத்திலோ, ஒன்று சேதநமும் மற்றொன்று பரமசேதநமு மாதலால், அவை அவ்வினிமையை நன்கு உணருமென வேறுபாடு காண்க.
ஆகவே, இங்கு, உபமானத்தினும் உபமேயம் மிக்கதாதலால், எதிர்நிலையணி தொனிக்கும்.
இருவரும் = இருவோமும்; தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.

———

40-திருப் பார்த்தன் பள்ளி –

ஒத்து அமரர் ஏத்தும் ஒளி விசும்பும் பாற் கடலும்
இத்தலத்தில் காண்பு அரிய என் நெஞ்சே சித்து உணர்ந்த
தீர்த்தன் பள்ளிக்கு இருந்து செப்ப வெளி நின்றானைப்
பார்த்தன் பள்ளிக்குள் பணி –40-

(இ – ள்.) என் நெஞ்சே -!
ஒத்து – ஒன்றுகூடி,
அமரர் – நித்தியசூரிகளும், தேவர்களும்,
ஏத்தும் – துதிக்கின்ற,
ஒளி விசும்பும் – பேரொளிவடிவமான பரமபதமும்,
பால்கடலும் – திருப்பாற்கடலும்,
இ தலத்தில் – இந்தப்பூமியில்,
காண்பு அரிய – காணுதற்கு அரியனவாம்; (ஆதலால், அவைகளை விட்டு),
சித்து உணர்ந்த – ஜீவாத்மாவின் உண்மைநிலையை யுணர்ந்த,
தீர்த்தன் – பரிசுத்தனான பிரகலாதாழ்வான்,
பள்ளிக்கு இருந்து – பள்ளிக் கூடத்திலிருந்து (பள்ளிக்கூடத்திற்படிக்கின்ற சிறுவனாயிருந்தும்),
செப்ப – (தனதுதந்தை வினவியதற்கு “எங்குமுளன்’ என்று) மறுமொழிகூற,
வெளிநின்றானை – (அதுகேட்டு வெகுண்டு இரணியன் தூணைத் தட்ட அதனினின்று நரசிங்கமாகி) வெளித்தோன்றிய திருமாலை,
பார்த்தன்பள்ளிக்குள் – திருப்பார்த்தன்பள்ளியென்னுந் திவ்வியதலத்திற் சென்று,
பணி – வணங்கு வாயாக; (எ – று.)

பரத்வநிலையாகிய பரமபதத்தையும் வ்யூஹநிலையாகிய திருப்பாற்கடலையுங் கூறியது.
மற்றை விபவநிலை அந்தர்யாமித்வநிலை என்ற இரண்டற்கும் உபலக்ஷணம்.
பரத்வமும் வ்யூஹமும் தேசத்தினால் மிகவும் சேய்மையன வாதலால் அவைகள் காணமுடியாதனவாம்;
விபவநிலையோ தேசத்தினாற் சேய்மைய தன்றாயினும் அக்காலத்தார்க்கன்றிப் பிற்பாடரான நம்மாற் காரணவிரகில்லை;
அந்தர்யாமித்வமோ தேசம் காலம் என்ற இரண்டினாலும் சேய்மையதன்றாயினும் ஞானதிருஷ்டியினா லன்றி வேறுவகையாற் காண இயலாது;
ஆகையால், அஜ்ஞரான நமக்கு அதுவும் பயனற்றதேயாம்;
ஆகவே, ஒருவகையாலும் அருமைப்பாடின்றி ஆங்காங்குக் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கின்ற அர்ச்சையே
நமக்கெல்லாம் எளிதில் அடைந்து ஈடேறுதற்கு உரிய தாகையால், அவற்றுளொன்றான
திருப்பார்த்தன்பள்ளியை யடைந்து உய்வுபெறுவா யென்று தம்மனத்தை நோக்கிக் கூறின ரென்க.

“த்ருஷார்த்தனுக்கு (நீர் வேட்கையுடையவனுக்கு) தேஸாந்தரத்திற் போகவேண்டாதபடி நிற்கிற இடந்தன்னிலே
உண்டாயிருக்கச்செய்தேயும் கொட்டும் குந்தாலியுங் கொண்டு கல்லினாலல்லது குடிக்கக் கிடையாத
பூகதஜலம்போலே யாயிற்று, கண்டு பற்றவேணு மென்று ஆசைப்பட்ட வனுக்கு ஹ்ருதயத்திலேயிருக்கச் செய்தேயும் “கட்கிலீ” என்கிறபடியே
கண்ணுக்கு விஷயமன்றிக்கே அஷ்டாங்கயோகரூபயத்நத்தாலே காணவேண்டும்படியான அந்தர்யாமித்வம்.
அவனுக்கு (தாகித்தவனுக்கு) அண்டத்துக்குப்புறம்பே பெருகிக்கிடக்கிற ஆவரணஜலம்போலே யாயிற்று,
இவனுக்கும் (பற்றவேணுமென்று ஆசைப்பட்டவனுக்கும்) “அப்பால் முதலாய்நின்ற அளப்பரிய ஆரமுது” என்கிற படியே
லீலாவிபூதிக்கு அப்பாற்பட்டிருக்கிற பரத்வம். அப்படி அதிவிப்ரக்ருஷ்டம் (தூரத்திலுள்ளது) அன்றியே
அண்டாந்தர்ப்பூதமாயிருக்கச்செய்தேயும் அவனுக்கு துஷ்ப்ராபம் (அடைவதற்கு அரியது) ஆன பாற்கடலே போலே யாயிற்று,
இவனுக்கும் “பாலாழிநீகிடக்கும் பண்பை யாங்கேட்டேயும்” என்கிறபடியே கேட்டிருக்குமித்தனையல்லது சென்று
காண அரிதாம்படியிருக்கிற வ்யூஹம். ப்ரத்யாஸந்நம் (கிட்டியது) ஆயும் தாத்காலிகர்க்கு உபஜீவ்யமாய்ப்
பாஸ்சாத்யன் (பிற்காலத்தவன்) ஆனவனுக்குத் துர்ல்லபமான பெருக்காறுபோலே யாயிற்று,
“மண்மீதுழல்வாய்” என்கிறபடியே பூமியிலே அவதரித்து ஸஞ்சரித்தும் தக்காலவர்த்திகளுக்கு ஆஸ்ரயணீயமாய்ப்
பிற்காலத்திலுளனான இவனுக்குக் கிட்டாதபடியான விபவம். முன்பு சொன்னவைபோலன்றிக்கே
அவனுக்கு விடாய்கெடப் பருகலாம்படி பெருக்காற்றிலே தேங்கின மடுக்கள்போலே யாயிற்று,
இவனுக்கும் தேசகாலகரண விப்ரக்ருஷ்டமன்றிக்கே கோயில்களிலும் க்ருஹங்களிலும் எங்கு மொக்க எல்லார்க்கும் கண்ணுக்கு இலக்காம்படிநிற்கிற பின்னானார்வணங்குஞ்சோதியான அர்ச்சாவதாரம்” என்ற ஆன்றோர் வ்யாக்யாநவாக்யங்கள் இங்குக் கருதத்தக்கன.

சித்து – உணர்வுடையது; ஆத்மா; சித்தைஉணர்தலாவது – “ஆத்மஸ்வரூபந்தான் – “சென்றுசென்றுபரம்பரமாய்” என்கிறபடியே
தேஹ இந்த்ரியமந: ப்ராண புத்தி விலக்ஷணமாய், அஜடமாய், ஆநந்தரூபமாய், நித்யமாய், அணுவாய், அவ்யக்தமாய்,
அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர்விகாரமாய், ஜ்ஞாநாஸ்ரயமாய், ஈஸ்வரனுக்கு நியாம்யமாய், தார்யமாய், ஸேஷமாயிருக்கும்” என்று அறிகை.
இவ்வாறு இதனையறியவே, மற்றையிரண்டு தத்வங்களாகிய அசித் ஈஸ்வர தத்வங்களும் அறியப்பட்டனவாம்.
‘பள்ளிக்கிருந்து’ என்றதனால், பிரகலாதாழ்வானுடைய இளமைப்பருவத்தை விளக்கியபடியாம்.

சோழநாட்டுத்திருப்பதிகள் முற்றும்.

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திரு அழகரந்தாதி –81-100-

February 23, 2022

பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை குறித்துத் தோழி இரங்குதல் –

சீர் அரி தாழ் பொழில் மாலிருஞ்சோலை யில் செல்வர் செங்கட்
போர் அரி தாள் புனை தார் அரிது ஆகில் தண் பூந்துளவின்
தார் அரி தாவும் தழை அரிது ஆகில் தழை தொடுத்த
நார் அரிது ஆகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்று நுதற்கே –81–

(இ – ள்.) சீர் அரி – சிறந்த ஹரியென்னும் ஒருதிருநாமமுடையவரும்,
செம் கண் போர் அரி – (கோபத்தாற்) சிவந்த கண்களையுடைய போர்த் தொழில்வல்ல நரசிங்கமூர்த்தியானவரு மாகிய,
தாழ் பொழில் மாலிருஞ் சோலையில் செல்வர் – (கிளைகள் தழைத்துத்) தாழ்ந்துள்ள சோலைகளை யுடைய
திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற எல்லாச்செல்வங்கட்குந் தலைவரான அழகப்பிரானது,
தாள் – திருவடிகளில்,
புனை – தரித்த,
தார் – மாலை,
அரிது ஆகில் – (கிடைப்பது) அரியதானால், –
தண் பூ துளவின் தார் – குளிர்ச்சியான மலர்களையுடைய அத்திருத்துழாய்மாலையில் இடையிடையே தொடுக்கப்பட்டுள்ள,
அரி தாவும் தழை – (நறுமணத்தால்) வண்டுகள் மேல்விழுந்துமொய்க்கப்பெற்ற தழையும்,
அரிது ஆகில் – (கிடைப்பது) அரியதானால்,
தழை தொடுத்த நார் அரிது ஆகில் – அத்தழை தொடுக்கப்பெற்றுள்ள நாரும் (கிடைப்பது) அரியதானால், –
எங்கள் நல்நுதற்கு பிழைப்பு அரிது ஆம் – அழகியநெற்றியையுடையளான எங்கள் மங்கைக்கு உயிர்வாழ்க்கை அரியதாம்; (எ – று.)

“வானோர்தலைமகனாஞ்,சீராயினதெய்வநன்னோயிது தெய்வத்தண்ணந் துழாய்த்,
தாராயினுந் தழையாயினுந் தண்கொம்பதாயினுங் கீழ், வேராயினும் நின்றமண்ணாயினுங் கொண்டுவீசுமினே” என்றபடி,
தலைவி தலைவனைப்பிரிந்து விரகதாபத்தால் மரணவேதனைப்படுகின்றநிலையிலே அவனது மாலைகிடைக்கப்பெற்றால்
அதுகொண்டு ஒருவாறு ஆறி உயிர்வைத்திருக்கக் கூடும்; அம்மாலைமுழுதுங் கிடையாவிடின்,
அதில்தொடுக்கப்பட்ட தழையாயினும் கிடைத்தால் அதுகொண்டு தணிந்து பிழைத்திருக்கலாம்;
அத்தழையும் கிடையாவிடின், அதுதொடுத்த நாராயினும் கிடைத்தால் அதுகொண்டாயினும் ஆறி உயிர்த்திருத்தல் கூடும்;
அதுவும் கிடையாவிடின், இவள் பிழைத்திருக்கமாட்டாள்; அவ்வேதனைமிகுதியால் இறந்துபடுவள் என்பதாம்.
தலைவனோடு சம்பந்தம்பெற்ற பொருள் யாதாயினும்இந்நோய்க்குப் பரிகாரமா மென்பது, இதனாற் போந்த பொருள்.

சீர்அரி – ஸ்ரீஹரி: திருமால். தன்னைச்சரணமடைந்தவர்களுடைய துன்பங்களையெல்லாந் தீர்ப்பவனாதலால்,
ஹரியென்று திருநாமம்; ஹரித்தல் – அழித்தல்.
ஹரிஎன்ற சொல் – சிங்கத்தைக்குறிக்கும்போது யானை முதலிய பெருவிலங்குகளையும் அழிக்கவல்லது என்றும்,
வண்டைக்குறிக்கும்போது மலர்களினின்று தேனைக் கவர்வது என்றும் காரணப்பொருள்பெறும்.
மற்றும் அரியென்ற சொல்லுக்குப் பலபொருளுள்ளதனால்,
‘சீரரிதாழ்பொழில்’என்பதற்கு – சிறந்த சூரியன் (அல்லது சந்திரன்) தாழ்ந்து செல்லும்படியான (மிகவுயர்ந்த) சோலை யென்றும்,
சிறந்த இந்திரனும் விரும்பும்படியான சோலையென்றும், அழகிய கிளிகள் தங்கப்பெற்ற சோலை யென்றும் பொருளுரைக்கவும் படும்.
தாழ்தல் – கவிந்திருத்தல், கீழ்ப்படுதல், விரும்புதல், தங்குதல்.
செல்வர் – இம்மைமறுமைவீடுகளில் உயிர்கள்நுகருஞ் செல்வங்கட்கெல்லாம் உடையவர்.
நன்னுதல் – பண்புத்தொகையன்மொழி. “எங்கள்” என்றது, மற்றைப்பாங்கியரையுங் கூட்டி;
படர்க்கையை உளப்படுத்திய தன்மைப்பன்மை.
இனி, இதனை, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடுநிற்றலாகக் கொள்ளினும் இழுக்காது.

ஐயங்கார் எம்பெருமானைப் பிரிந்து வருந்துகின்ற நிலைமையைக் கண்ட அன்பர்கள், எம்பெருமானது சம்பந்தம்
பெற்ற பொருள் யாதாயினுமொன்றை அவனது பிரஸாதமாகப் பெற்றாலன்றி இனி இவர்
தரித்திரா ரென்று சொல்லும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.
“எந்தைபிரான் தனக்கு, அடியாரடியார்தம்மடியாரடியார்தமக், கடியாரடியார் தம்மடியாரடியோங்களே” என்றபடி
எம்பெருமானது சம்பந்தத்தை நேரிலேனும் பரம்பரையாக வேனும் பெற்ற பாகவதரது சம்பந்தம்
இவ்வாற்றாமைக்குப் பரிகாரமாமென்று ஸ்வாபதேசங்கொள்ளவும் அமையும்.

————

நன்னுதலைப் பணி பூண் மார்பில் வைத்து விண் நாட்டு இருப்பார்
மின்னுதலைப் பணி மேல் துயில்வார் விடைவெற்பில் நிற்பார்
மன்னுதலைப் பணி அன்பரை வைக்கும் மலர் அடிக் கீழ்த்
துன்னுதலைப் பணி செய்வது எஞ்ஞான்று என் துயர் தொலைந்தே –82–

(இ – ள்.) பணி பூண் மார்பில் – ஆபரணங்களைத் தரிக்கின்ற திருமார்பிலே,
நல்நுதலை வைத்து – அழகிய நெற்றியையுடையவளான திருமகளை வைத்துக்கொண்டு,
விண் நாடு இருப்பார் – பரமபதத்தில் வீற்றிருக்கின்றவரும், –
மின்னு தலை – (மாணிக்கத்தால்) விளங்குகின்ற தலைகளையுடைய,
பணிமேல் – (ஆதிசேஷனென்னும்) பாம்பின்மீது,
துயில்வார் – யோகநித்திரைசெய்கின்றவரும், –
விடை வெற்பில் நிற்பார் – திருமாலிருஞ்சோலை மலையில் நின்றதிருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்றவருமான அழகரது, –
பணி அன்பரை மன்னு தலை வைக்கும் மலர் அடிக்கீழ் – (தம்மை) வணங்குகின்ற அடியார்களை (எந்நாளும் அழிவின்றி)
நிலைபெற்றஇடமாகிய பரமபதத்திலே வைத்தருள்கிற தாமரைமலர்போன்ற திருவடிகளின்கீழ், –
என் துயர் தொலைந்து துன்னு தலை பணி செய்வது – (யான்) எனது துன்பங்கள்நீங்கிப் பொருந்திய தலைமையான திருத்தொண்டுகளைச் செய்வது,
எஞ் ஞான்று – எந்நாளோ? (எ – று.)

அழகப்பிரானுக்குக் கைங்கரியஞ்செய்து பேறுபெறுதலில் உள்ள அவாவினால் இங்ஙனங் கூறினார்.

நிற்பார்அடிக்கீழ் எனவும், அடிக்கீழ்ப்பணிசெய்வதுஎனவும்இயையும். துயர் – கவலை.
துயர்தொலைந்து பணிசெய்வது – பணிசெய்து துயர்தொலைவது என விகுதிபிரித்துக்கூட்டினுமாம்;
துயர் – பிறவித்துன்பம். நின்றான் இருந்தான் கிடந்தான் என்ற மூன்றுபடிகளும் எம்பெருமானுக்கு இருத்தலை, முதலிரண்டடியிற் காட்டினார்.
செய்யுளாதலின், இருப்பார் துயில்வார் நிற்பார் என முறைபிறழக்கூறப்பட்டது;
பரத்வம் வ்யூஹம் அர்ச்சை என்ற நிலைகளின் முறைமைபற்றிக் கூறியதாகவுங் கொள்ளலாம்.
பணி பூண் மார்பு – கௌஸ்துபமென்னுந் திவ்வியரத்தினமாகிய ஆபரணத்தைத் தரித்த மார்புஎன்று உரைப்பாருமுளர்.
“உறுகால்கிளர்பூதமெலாமுகினும், மறுகாநெறி” என்றபடி பரமபதம் அழிவின்றி என்றும்ஒரு படிப்பட இருப்பதாதலால்,
‘மன்னு தலை’ எனப்பட்டது. தலை – இடம்; தலம் என்ற வடசொல் தலைஎன விகாரப்பட்ட தென்னலாம்:
வதம் – வதை என்பது போல. இனி, பணி என்பதைப் பண்ணியென்பதன் தொகுத்தலாகவும்,
மன்னுதலை, என்பதைத் தொழிற்பெயரின்மேல் வந்த இரண்டாம்வேற்றுமை விரியாகவுங் கொண்டு,
அன்பர்களை நிலைபெறுதலைப்பண்ணி வைக்கும் என்று உரைப்பர் ஒருசாரார். பணிமேல் துயிலுதல், திருப்பாற்கடலில்.

———

தொலைந்து ஆனை ஓதும் தொலையானை அன்னை சொல்லால் மகுடம்
கலைந்தானை ஞானக் கலையானை ஆய்ச்சி கலைத் தொட்டிலோடு
அலைந்தானை பாலின் அலையானை வாணன் கை அற்று விழ
மலைந்தானை சோலை மலையானை வாழ்த்து என் மட நெஞ்சமே –83—

(இ – ள்.) என் மடம் நெஞ்சமே – அறியாமையையுடைய எனது மனமே! –
ஆனை தொலைந்து ஓதும் – கஜேந்திராழ்வான் வலிமைகுன்றி அழைக்கப்பெற்ற,
தொலையானை (தொல்லையானை) – பழமையானவனும், –
அன்னை சொல்லால் மகுடம் கலைந்தானை – சிறியதாயான கைகேயியின் வார்த்தையாற் பட்டாபிஷேகோத்ஸவங் கலைந்துவிடப் பெற்றவனும், –
ஞானம் கலையானை – நல்லுணர்வைத்தருகின்ற சாஸ்திரங்களாற் கொண்டாடப்படுகிறவனும், –
ஆய்ச்சி கலை தொட்டிலோடு அலைந்தானை – இடைச்சியாகிய யசோதையினால் அமைக்கப்பட்ட துணித்தொட்டிலோடு அசைந்தவனும், –
பாலின் அலையானை – திருப்பாற்கடலைத் தான்வாழுமிடமாக வுடையவனும், –
வாணன் கை அற்று விழ மலைந்தானை – பாணாசுரனுடைய கைகள் துணிபட்டுவிழும்படி போர்செய்தவனும் ஆகிய,
சோலைமலையானை – திருமாலிருஞ்சோலை அழகப்பிரானை,
வாழ்த்து – வாழ்த்துவாய்; (எ – று.)

தொலையான் – தொன்றுதொட்டுள்ளவன்; ஆதிமூலம் தொல்லையென்னும் ‘ஐ’ விகுதிபெற்ற பண்புப்பெயரின்மேல்
வந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும்பெயராகிய தொல்லையானென்பது, தொலையா னெனத் தொகுத்தல்விகாரப்பட்டது.
இனி, தொலையானை என்பதற்கு – நெடுந்தூரமாகிய பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனை யென்று உரைப்பர் ஒரு சாரார்;
தொலை – தூரம். கூனியாகிய மந்தரை கலகஞ்செய்து கலைத்தற்கு முன்னம் கைகேயிக்கு இராமபிரானிடம்
இயல்பாகவுள்ள புத்திரவாத்ஸல்யத்தையும், இராமபிரானுக்கு அவளிடம் எப்பொழுதும் உள்ள மாத்ருவிசுவாசத்தையுங் கருதி,
சிற்றன்னை யென்னாது, “அன்னை” என்றார்;
இராமபிரானுக்குக் கௌஸல்யையோடு கைகேயியோடு பேதமில்லாதபடியும், கைகேயிக்குப் பரதனோடு இராமனோடு
பேதமில்லாதபடியும் இருந்ததென்பதை இராமாயணத்து அயோத்தியாகாண்டத்தில் விளங்கக்காணலாம்.
ஞானக் கலையானை என்பதற்கு – ஞானநூலாகிய ஸ்ரீகீதையை வெளியிட்டவனை யென்று உரைப்பாரு முளர்.
ஆய்ச்சி – ஆய னென்பதன் பெண்பால்.

இச்செய்யுளின் அடிகளில், தொலைந்தானை தொலையானை, கலைந்தானை கலையானை, அலைந்தானை அலையானை,
மலைந்தானை மலையானை என்பவை உடன்பாடும் எதிர்மறையுமாய் ஒன்றுக்குஒன்று மாறுபடுவதாக மேல்நோக்கில்தோன்றி,
பொருளையுணருமிடத்து வேறுவகைப்பொருள்பட்டு மாறுபாடின்றிமுடிதலால், முரண்விளைந்தழிவணி;
வடநூலார் விரோதாபாஸாலங்கார மென்பர். இது, சொல்லால்வந்த முரண்தொடை;
“சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே என்றது காண்க.
திருவேங்கடத்தந்தாதியின் 83 – ஆஞ்செய்யுளும் இத்தன்மையதாம்; அது வருமாறு;-
“பேரானைக்கோட்டினைப்பேர்த்தானை வேங்கடம்பேணுந்துழாய்த்,
தாரானைப்போதனைத்தந்தானை யெந்தையைச் சாடிறப்பாய்ந்,
தூரானைமேய்த்துப்புள்ளூர்ந் தானைப் பஞ்சவர்க்குய்த்துநின்ற,
தேரானை நான்மறைதேர்ந்தானை தேருநுந்தீதறுமே,”
“மாத்துளவத், தாரானை வேட்கையெலாந்தந்தானைத் மும்மதமும்,
வாரானையன்றழைக்க வந்தானைக் –
காரான, மெய்யானை யன்பருக்கு மெய்த்தானைக் கண்கைகால்,
செய்யானை வேலையணை செய்தானை – வையமெலாம்,
பெற்றானைக் காணப்பெறாதானைக் கன்மழைக்குக்,
கற்றானைக் காத்ததொரு கல்லானை – யற்றார்க்கு,
வாய்ந்தானைச் செம்பவளவாயானை – மாமுடியப்,
பாய்ந்தானை யாடரவப் பாயானை” என்ற திருநறையூர்நம்பிமேகவிடுதூதினடிகளையுங் காண்க.

————–

தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல்

நெஞ்சில் அம்பு ஆற்ற முடியாது வேள் எய்து நீள் இரவும்
துஞ்சிலம் பால் துளியும் நஞ்சம் ஆம் சொரி கல் மழையை
அஞ்சிலம் பால் தடுத்தார் அலங்காரர் அடி விளக்கும்
நெஞ்சிலம் பாற்று அருகே கிடத்தீர் உயிர் தேற்றுதற்கே –84–

(இ – ள்.) நெஞ்சில் – (எமது) நெஞ்சிலே,
அம்பு – பாணங்களை,
ஆற்றமுடியாது – பொறுக்கமுடியாதபடி,
வேள் எய்து – மன்மதன் பிரயோகித்தலால்,
நீள் இரவும் – நெடிய இராக்காலமுழுவதிலும்,
துஞ்சிலம் – உறக்கங்கொள்ளுகின்றோமில்லை;
பால் துளியும் நஞ்சம் ஆம் – பாலின் துளியும் (எமக்கு) விஷம்போன்றதாம் (மிகக்கைக்கும் என்றபடி);
(ஆதலால்), – சொரிகல் மழையை – பொழிந்த சிலாவருஷத்தை,
சிலம்பால் தடுத்தார் – அழகிய (கோவர்த்தன) மலையைக் கொண்டு தடுத்திட்டவராகிய,
அலங்காரர் – அழகரது,
அடி – திருவடிகளை,
விளக்கும் – (பிரமன் தன்கைக்கமண்டல தீர்த்தங்கொண்டு) கழுவியதனால் வருகிற,
செம் சிலம்பு ஆறு – சிறந்தசிலம்பாற்றினது,
அருகே – சமீபத்திலே,
உயிர் தேற்றுதற்கு கிடத்தீர் – (எம்மை) உயிர்பிழைக்கச்செய்தற்காகக் கொண்டுபோய்ப்படுக்கவையுங்கள்; (எ – று.)

தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைமகள், அப்பிரிவுத் துயரை ஆற்றியடக்கும் வல்லமையிலளாகி,
தனது நிலைமையை அன்புடைத் தோழியர்க்கு வெளிப்படையாகவுரைத்து
“இனி நான் பிழைத்திருக்கவேண்டில், என்னை நீங்கள் அத்தலைவன்முன்னிலையிற் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள்”
என்று வேண்டுகின்றா ளென்க. தலைவன் தானாகவருமளவும் பார்த்து ஆறியிருக்கின்ற இயல்பை இழந்து,
அவனுள்ள இடத்தேசென்று அவன் முகத்தைக்கண்டு பிழைக்கலாமென்றும் அவன்கண்ணெதிரிற்சென்று நின்றால்
அவன் கண்ணோட்டத்தைப் பெறலா மென்றுங் கருதி விரைவில் அங்குச்செல்ல விரும்பிய தலைவி,
தனக்குக்கால்நடைதாராதபடி வலியழிவுமிக்கதனால் தான் அங்குச்சென்று சேரமாட்டாது,
தன்கண்வட்டத்திலே நின்று தன்நிலையைப்பார்த்துக் கால்நடைதளராத தோழியரை நோக்கித்
தன்னை அங்குக்கொண்டுபோய் விடுமாறு வேண்டுகின்றன ளென்க.
(“இங்குத்தை வாழ்வையொழியவேபோய் யமுனைக்கரைக் கென்னையுய்த்திடுமின்,”
“நீர்க்கரைநின்றகடம்பையேறிக் காளியனுச்சியில் நட்டம்பாய்ந்து,
போர்க்களமாக நிருத்தஞ்செய்த பொய்கைக்கரைக்கென்னை யுய்த்திடுமின்”,
“மதுரைப்புறத் தென்னை யுய்த்திடுமின்”,
“ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டி லாய்ப்பாடிக்கே யென்னையுய்த்திடுமின்” என்பவை முதலாகிய அருளிச்செயல்களைக் காண்க.)

எம்பெருமானை இடையீடின்றிச் சேரப்பெறாத நிலையிலே காலவிளம்பம் பொறுக்கமாட்டாமையாற் காலம்
நீட்டித்ததாகத் தோன்றி வருந்துகிற ஐயங்கார், தமது அன்பர்களை நோக்கி
“இனி யான் எம்பெருமானது நிரந்தராநுபவம் பெற்று உய்யுமாறு என்னை நீங்கள் அவனுகந்தருளின
இடத்திற் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள்” என்று வேண்டுதல், இதற்கு உள்ளுறை பொருள்.
“நீளிரவு” என்றது – ஸ்வாபதேசத்தில், பொறுக்கவொண்ணாத காலவிளம்பத்றையாம்.
அவ்விளம்பகாலத்தில் மிகக்கவலைகொண் டுள்ளோமென்பது, “நீளிரவுந் துஞ்சிலம்” என்றதன் உட்கிடை.
அப்பிரிவுக்காலத்தில் லௌகிகபதார்த்தங்கள் வருத்தந்தருவனவாதலை,
“நெஞ்சிலம்பு ஆற்றமுடியாதுவேளெய்து”,
“பாற்றுளியும் நஞ்சமாம்” என்றவற்றாற் குறிப்பித்தவாறாம்.
திருமாலினது திருவடியின் சம்பந்தமுள்ள திவ்வியதீர்த்தத்தின் சமீபத்தில் வசித்தலும்
உயிர் ஈடேறுதற்கு ஏதுவா மென்பது, பின்னிரண்டடிகளால் நன்கு விளங்கும்.

முடியாது – எதிர்மறைவினையெச்சம். முடியாது என்பதை முற்றாகக் கொண்டு, நெஞ்சில் தைக்கிற
அம்பு பொறுக்கமுடியாது எனத் தனிவாக்கிய மாக்கி, வேள் எய்தும் என எடுத்து மன்மதன் வருகின்ற
என்று பொருள் கொண்டு இரவுக்கு அடைமொழியாக்கி யுரைப்பாரு முளர்.
“ஊழிபலவோ ரிரவாயிற்றோ வென்னும்,”
“ஊழியிற்பெரிதால் நாழிகையென்னும் ஒண்சுடர்துயின்றதாலென்னும்”,
“இது ஓர்கங்கு லாயிரமூழிகளே” என்றபடி,
கூடியநிலையில் ஒருகணமாகக்கழிகிற இரவு பிரிந்த நிலையில் அநேகயுககாலமாக நீட்டித்துத்
தோன்றுகின்றமைபற்றி, “நீளிரவு” எனப்பட்டது.
துஞ்சிலம் – இங்கே, தனித்தன்மைப்பன்மை. பாற்றுளியுந்நஞ்சமாம் –
“உண்டமருந்துகைக்கும்” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும். உம்மை – உயர்வு சிறப்பு;
இங்கு, நகரவொற்று – விரித்தல்விகாரம். “பால்துளியும் நஞ்சமாம்” என்றது, மன்மத பாணத்தின் செயல்களி லொன்றான
துய்ப்பனதெவிட்டல் என்னுஞ் சோகவகை கூறியதாம்.
“பால்துளி” எனக் கூறியதனால், அப்பாலும் நன்றாக உள்ளிறங்காமல் “பஞ்சொழுக்கிய பால்” என்றபடி
பிறர் துளிதுளியாகப் பாலைத் தன்வாயில் துளிக்கும்படியான நிலைமையை அடைந்தன ளென்பது தோன்றும்.
செம்மை – செவ்வை; சிலம்பாற்றுக்குச் செம்மையாவது – தன்னில் ஒரு கால் நீராடியவர்க்கும் அருவினை
யனைத்தையுந் தொலைத்து உயர்பதமளித்தல். கிடத்தீர் – பிறவினை ஏவற்பன்மைமுற்று.

———–

தேற்றுவித்தால் புனல் தேற்று நர் போல் திரு எட்டு எழுத்தால்
மாற்று வித்தான் என் மயக்கம் எல்லாம் மண்ணும் விண்ணும் உய்யப்
போற்று வித்தாரப் புயல் அலங்காரன் பொன் மேருவைப் போல்
தோற்று விதார் அணியும் சுந்தரத் திருத் தோள் அண்ணலே –85-

(இ – ள்.) மண்ணும் – நிலவுலகத்தாரும்,
விண்ணும் – வானுலகத்தாரும்,
உய்ய – (தாம்தாம்) உய்வுபெறுதற்காக,
போற்று – வணங்கப்பெற்ற,
வித்தாரம் புயல் – பெரிய மேகம்போன்றவனும், –
பொன் மேருவை போல் தோற்று – பொன்மயமான மேருமலைபோல விளங்குகின்ற,
விதார் அணியும் சுந்தரம் திரு தோள் – வண்டுகள் மொய்க்கும் மாலையைத் தரித்த அழகிய தோள்களையுடைய,
அண்ணல் – பெரியோனுமாகிய,
அலங்காரன் – அழகப்பிரான், –
தேற்று வித்தால் புனல் தேற்றுநர் போல் – தேற்றாங்கொட்டையைக்கொண்டு நீரை (க்கலக்கம்மாற்றி)த் தெளியச்செய்பவர்போல,
திருஎட்டு எழுத்தால் என்மயக்கம் எல்லாம் மாற்றுவித்தான் – அஷ்டாக்ஷரமகாமந்திரத்தைக்கொண்டு என்
மதிமயக்கத்தையெல்லாம் மாற்றி மனந் தெளியச்செய்தருளினான்; (எ – று.)

ஞானம் அநுட்டாநம் இவை நன்றாகவேயுடையனான நல்லாசிரியன் நேர்ந்து திருமந்திரோபதேசஞ்செய்து
மனத்தைத் தெளிவித்தல் எம்பெருமான துதிருவருளின்வாய்ப்பினாலன்றி அமையாதாதலின்
அதனை அப்பெருமான்மேல் ஏற்றியும்,
“எயிற்றிடைமண்கொண்டை வெந்தை யிராப்பகலோ துவிந்தென்னைப், பயிற்றிப் பணிசெய்யக்கொண்டான்,”
“ஏதங்களாயின வெல்லா மிறங்கலிடுவித் தென்னுள்ளே,
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து,
போதிற்கமலவன்னெஞ்சம் புகுந்து மென்சென்னித்திடரிற்,
பாதவிலச்சினைவைத்தார்” என்றபடி. எம்பெருமானே ஆசாரியனாய் நிற்றல்பற்றியும்,
“அறவோர்க்கு அடிகளே தெய்வம்” என்றபடி குருவைத் தெய்வமாகப் பாவிக்கவேண்டுதலாலும்,
மண்கலந்தநீரைத் தேற்றாங்கொட்டையைக் கொண்டு தெளிவித்தல்போல மயங்கியமனத்தைப்
பெரிய திருமந்திரத்தைக்கொண்டு தெளிவித்தவ னென்றார்;
“சாலுறையும், மண்மயக்கந் தேற்றுவித்தான் மாற்றுதல்போ லாரியனா, லுண்மயக்கந் தேற்றுவித்தான்” என்றார் திருவேங்கடமாலையிலும்,
உயிர்கட்கு ஆவனசெய்தல், இறைவன் செயலென்க. தேற்றாமரத்தின்விதையைத் தேய்த்து அத்தேய்வையைக்
குழம்பியநீரிற்கரைத்தால் அந்நீர் கலக்கந்தெளிதல் இயல்பு.
குழம்பிய நீர் – மனக்கலக்கத்துக்கும், தேற்றாம்வித்து – திருமந்திரத்துக்கும் உவமை. மயக்கம் – விபரீதஞானம்.

மண், விண் – இடவாகு பெயர்கள். விஸ்தாரம் – வடசொல். புயல் – உவமையாகு பெயர்.
சுந்தரத்திருத்தோளுக்குப் பொன்மேரு – பருத்தோங்கியவடிவிலும் வலிமையிலும் ஒளியிலும் உவமம்.
பறவைப்பொதுப் பெயராகிய “வி” என்ற வடசொல், இங்குச் சிறப்பாய் வண்டை உணர்த்திற்று;
இனி, வி என்பதை “வீ” என்பதன் குறுக்கலெனக் கொண்டு, வித் தார் – மலர்களாலாகிய மாலையென்றலு மொன்று.
அண்ணல் – பெருமையிற் சிறந்தவன்; ஆண்பாற்சிறப்புப்பெயர். போற்று – அன்போடு பாதுகாக்கிற எனினுமாம்.

————-

அண்ணலை வான் மதி தோய் சோலை மா மலை அச்சுதனை
தண் அலை வானவனை தெய்வ நாதனை தாள் அடைவான்
எண்ணலை வான் பகை ஆம் ஐவரோடு இசைந்து இன்னம் உடல்
புண் அலை வான் எண்ணினாய் மனமே உன் புலமை நன்றே –86–

(இ – ள்.) மனமே -! – அண்ணலை – பெருமையிற்சிறந்தவனும்,
தண் அலை வானவனை – குளிர்ச்சியான திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டருளுகின்ற கடவுளும்,
தெய்வம் நாதனை – தேவர்கட்கெல்லாந் தலைவனுமாகிய,
வால் மதி தோய் சோலை மா மலை அச்சுதனை – சுத்தமான சந்திரன் படியப் பெற்ற திருமாலிருஞ்சோலைமலையில்
அருளியிருக்கின்ற அச்சுதனென்னும் ஒருதிருநாமமுடையவனான எம்பிரானை,
தாள் அடைவான் – திருவடிகளில் ஆசிரயிக்கும்படி,
எண்ணாமல் – நீ நினைக்கின்றாயில்லை;
வான்பகை ஆம் ஐவரோடு இசைந்து – பெரும்பகைவராகிய பஞ்சேந்திரியங்களோடு கூடி,
இன்னம் உடல் புண் அலைவான் – இன்னமும் உடம்பாகிய புண்ணினால் வருந்துமாறு,
எண்ணினாய் – நினைத்தாய்;
உன் புலமை நன்று – உனது அறிவுத்தேர்ச்சி நன்றாயிருந்தது! (எ – று.) – ஈற்றுஏகாரம் – இகழ்ச்சிப்பொருளைக் காட்டும்.

“உன்புலமை நன்று” என்றது – “கல்லைக்கடிக்க நன்றாய்ச்சமைத்தாய்” என்றாற்போல, இகழ்ச்சிக் குறிப்பாகிய
எதிர்மறையிலக்கணையால், நினது விவேகம் சிறிதும் நன்றாயில்லை யென்று இகழ்ந்தவாறாம்.
செய்வனதவிர்வன உணராது உட்பகையான ஐம்பொறிகட்கு இணங்கி ஐம்புலநுகர்ச்சியில் அவாக்கொண்டு
அப்புலன்களில் ஆழ்ந்து இதுவரை மாறிமாறிப்பலபிறப்பும் பிறந்து அலைந்ததுபோதாமல்
இன்னும் பிறப்பெடுத்தலையுமாறு தீவினைதேடுவதாகி, எம்பெருமானைச் சரணமடைந்து
பிறவிநோய்தீரக்கருதாமையால், மனம் இங்ஙனம் இகழப்பட்டது.

வால் – வெண்மை. மதிதோய் என்ற அடைமொழி, உயர்வுநவிற்சி வகையால், அம்மலையின் மிக்கஉயர்வைக் காட்டும்.
அச்யுதன் என்ற வடமொழித் திருநாமம் – அழிவில்லாதவ னென்றும், (தன்னைச்சரணமடைந்தவர்களை) நழுவ
விடாதவ னென்றுங் காரணப்பொருள்படும்.
உடம்பு தசை நிறைந்ததும், அசுத்தமாய் அருவருக்கத்தக்கதும், துன்பத்துக்கு இடமு மாதலால், “உடற்புண்” எனப்பட்டது. வால் – ஒளியுமாம்.

————-

புலமையிலே நிமிர்ந்து அற்பரைப் போற்றி பொது மகளை
குல மையிலே குயிலே கொடியே என்றும் கூர் விழி ஆம்
பல ஐயிலே என்றும் பாடாமல் பாடுமின் பாவலர்காள்
நல் அமையில் ஏய் முத்தம் ஆர் சோலை மா மலை நம்பனையே –87–

(இ – ள்.) பாவலர்காள் – கவிபாடவல்ல புலவர்களே! –
(நீங்கள்), புல மையிலே நிமிர்ந்து – கல்வித்தேர்ச்சியிலே சிறந்து,
அற்பரை போற்றி – இழிவான மனிதர்களைத் துதித்து,
பொதுமகளை – வேசையை ,
குலம் மையிலே குயிலே கொடியே என்றும் – சிறந்த மயிலே குயிலே பூங்கொடியே என்றும்,
கூர் விழி பலம் ஐயிலே ஆம் என்றும் – (அவளது) கூரியகண்கள் வலியவேலாயுதம்போலும் என்றும்,
பாடாமல் – கவிபாடாமல், –
நல் அமையில் ஏய் முத்தம் ஆர் – சிறந்த மூங்கில்களிற் பொருந்திய முத்துக்கள் நிறைந்த,
சோலை மாமலை – திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற,
நம்பனை – சிறந்தகடவுளான அழகனை,
பாடுமின் – கவிபாடித் துதியுங்கள். (எ – று.)

இழிவான பொருளின்பங்களிற் பற்றுவைத்து அதனால் அற்பமனிதர்களைத் துதித்தும், விலைமகளிரைப்
புகழ்ந்தும் கவிபாடித் திரியாது, இம்மை மறுமைவீடுகளில் மேன்மைபெறுமாறு என் அழகனைக் கவிபாடித்
துதித்து உய்யுங்கள் என்று, நரஸ்துதிசெய்யும் பாவலர்க்கு நல்லறிவுகூறினார்.

புலமை – பலவேறுவகைப்பட்ட நூலுணர்ச்சிகளை ஒருங்கே கொண்ட பேரறிவுடைமை; பாண்டித்தியம். நிமிர்தல் – உயர்தல்,
பலரினும் மேம் படுதல். பொதுமகள் – பொருள்கொடுப்பவர்க்கெல்லாம் பொதுவாகின்ற பெண்.
மயில் – சாயலிலும், குயில் – இன்குரலிலும், பூங்கொடி – மெல்லிதாய் ஒல்கியொசியும் அழகியவடிவிலும் மகளிர்க்கு உவமைகூறப்படும்.
அவர்கண்கட்கு வேல் – கூரியவடிவிலும், ஆடவரைத்தாக்கி வருத்துதலிலும் உவம மென்க.
இரண்டாமடியில் – மயில் = மையில், மூன்றாமடியில் – அயில் = ஐயில் என்பவை – திரிபுநயம் நோக்கிய முதற்போலிகள்.
முத்துப்பிறக்கு மிடங்களுள் மூங்கிலும் ஒன்றாதலால், “நல்அமையில் ஏய் முத்தம்” எனப்பட்டது;
(அவ்விடங்கள் இன்னவை யென்பதை, “தந்தி வராகமருப்பு இப்பி பூகம் தழைகதலி,
நந்து சலஞ்சலம் மீன்தலை கொக்கு நளினம் மின்னார்,
கந்தரம் சாலி கழை கன்னல் ஆவின்பல் கட்செவி கார்,
இந்து உடும்பு கரா முத்தமீனு மிருபதுமே” என்பதனால் அறிக.)
“நலமையிலேய் முத்தமார் சோலைமாமலை நம்பன்” என்றது, வேய்தந்த முத்தராகிய சிவ பிரான்வந்து வணங்குந்
திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமா னென்ற குறிப்பை உட்கொண்ட தென்பர்,
இந்நூலைச் சம்பிரதாயமாக உணர்ந்தோர்.
நல்லமை யென்பது நலமையெனத் தொக்கது, திரிபுநயத்துக்காக. முத்தம் – முக்தா என்ற வடசொல் விகாரப்பட்டது.
நம்பன் – (யாவரும்) நம்பிச் சரணமடையத் தக்கவன்; நமது தலைவனென்றும் பொருள்கொள்ளலாம்.

————-

நம்பி நின்றேன் நின் சரணார விந்தத்தை நல் நெஞ்சு என்னும்
செம்பின் இன்றே பொறித்தேன் உனக்கு ஆள் என்று தெய்வக் குழாம்
பம்பி நின் தேசு எறிக்கும் பதம் காணப் பதறுகின்றேன்
கொம்பின் இன்தேன் சொரியும் சோலை மா மலைக் கொற்றவனே –88–

(இ – ள்.) கொம்பின் – பூங்கொடிகளினின்று,
இன் தேன் சொரியும் – இனிமையான தேன் பெருகப்பெற்ற,
சோலை மா மலை – திருமாலி ருஞ்சோலைமலையி லெழுந்தருளியிருக்கின்ற,
கொற்றவனே – (யாவர்க்குந்) தலைவனே! –
உன் சரண அரவிந்தத்தை – நினது திருவடித்தாமரையையே,
நம்பி நின்றேன் – (கதியாக) நம்பிநின்றேன்;
உனக்கு ஆள் என்று “உனக்கு (நான்) அடிமை” என்று,
நல் நெஞ்சு என்னும் செம்பின் இன்றே பொறித்தேன் – (எனது) அநுகூலமான மனமாகிய செப்பேட்டில் இன்றைக்கே எழுதிவைத்துக்கொண்டேன்;
தெய்வம் குழாம் பம்பி – நித்தியசூரிகளுடைய கூட்டம் நெருங்கப்பெற்று,
நின் தேசு எறிக்கும் – நினதுஒளி விளங்கப்பெற்ற,
பதம் – பரமபதத்தை,
காண – அடைவதற்கு,
பதறுகின்றேன் – விரைகின்றேன்; (எ – று.)

சரணாரவிந்தம் – தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; பின்முன்னா கத்தொக்க உவமத்தொகை.
தான்நல்வழிப்படுதற்கு இணங்கிவந்தமைபற்றி, “நல்நெஞ்சு” என்று கொண்டாடப்பட்டது.
‘நெஞ்சென்னுஞ் செம்பினின் றேபொறித்தேன்’ என்றது, உருவகம்; மாறாதபடி என்மனத்தில் நன்றாகப் பதிய
வைத்துக்கொண்டேன் என்றவாறு: செம்பிற்பொறித்தல், தாமிரசாஸநம்.
திருவாய்மொழியில் “அயர்வறுமமரர்களதிபதி” என்ற இடத்தில் ‘அமரர்’ என்றது போல,
இங்கு ‘தெய்வக்குழாம்’ என்றது – பரமபதத்தில்வாழ்கின்ற நித்தியமுக்தர்களைக் குறித்தது.
‘நின்’ என்றது, ‘பதம்’ என்பதனோடும் இயைத்தற்கு உரியது. தேசு – தேஜஸ் என்ற வடசொல்லின் சிதைவு.
கொம்பின், இன் – ஐந்தனுருபு: நீக்கம். மரக்கொம்புகளிற் பூத்த மலர்களினின்று பெருகுந் தேன் அக்கொம்புகளின்
வழியாய்ச் சொரிதல்பற்றி, ‘கொம்பின் இன்தேன்சொரியும்’ எனப்பட்டது;
மரக்கொம்புகளிற் கட்டிய தேன் கூடுகளினின்று இனியதேன் சொரியு மெனவும் அமையும்.

இரண்டாமடியிலும், நான்காமடியிலும், னகரம் நகரமாகக் கொள்ளப் பட்டது, திரிபிலக்கணத்தின்பொருட்டு.

————-

கொற்ற இராவணன் பொன் முடி வீழ கொடும் கண் துஞ்சல்
உற்ற இராவணன் மாள எய்தான் ஒண் பரதனுக்குச்
சொல் தவிரா அவுணன் மாலிருஞ்சோலை தொழுது வினை
முற்ற இராவணம் நல் தமிழ் மாலை மொழிந்தனனே –89–

(இ – ள்.) கொற்றம் – வெற்றியையுடைய,
இராவணன் – (ராக்ஷசராசனான) இராவணனது,
பொன் முடி – ஸ்வர்ணமயமான கிரீடங்கள் (அல்லதுஅழகிய தலைகள்),
வீழ – கீழேவிழும்படியும்,
கொடுங் கண் துஞ்சல் உற்ற – பயங்கரமான கண்களை மூடித்தூங்குதல் மிக்க,
இரா வணன் – இருள்போன்ற (கரு) நிறத்தை யுடையவனான கும்பகர்ணன்,
மாள – இறக்கும்படியும்,
எய்தோன் – அம்பெய்தவனும், –
ஒள் பரதனுக்கு – (நற்குணங்களால்) விளங்குகின்ற பரதாழ்வானுக்கு,
சொல் தவிரா – (முன்பு வாக்குதத்தஞ்செய்த) சொல்தவறாதபடி மீண்டுவந்தருளிய,
அணன் – தமையனுமான அழகப்பிரா னுடைய,
மாலிருஞ்சோலை – திருமாலிருஞ் சோலைமலையை,
தொழுது – (யான்) வணங்கி,
வினை முற்ற இராவணன் – (என்) கருமம்முழுவதும் இராத விதமாக,
நல் தமிழ் மாலை மொழிந்தனன் – சிறந்த தமிழ்ப்பாமாலையை (அந்தஎம்பெருமான்மீது) சொன்னேன்; (எ – று.)

இராவணன் திக்விஜயயாத்திரைசெய்து ஆங்காங்கு அனைவரோடும் பொருது தேவர்முதலிய பலரையும்
வென்றுவந்தவ னாதலால், “கொற்ற விராவணன்” எனப்பட்டான்.
ராவணன் என்ற வடமொழிப்பெயர் – கூச்சலிடுபவ னென்றும், கூச்சலிடச் செய்பவ னென்றும் பொருள்படும்;
சிவபிரானது கைலாசகிரியைப் பெயர்க்கத்தொடங்கி அதன்கீழ்த் தன்கைகள் அகப் பட்டு நசுங்குண்டபோது பேரிரைச்சலிட்டதனாலும்,
தனது கொடியசெய் கைகளால் உலகத்தைக் கதறச்செய்ததனாலும், இவனுக்கு இப்பெயர்; இது, சிவபிரான் இட்டது.
இனி, விசிரவமுனிவனது புதல்வ னென்று பொருள் படுந் தத்திதாந்தநாமமெனக் கொள்ளுதலு மொன்று.
இவன், பிரமபுத்திர ரான புலஸ்தியமகாமுனிவரது குமாரராகிய விசிரவமுனிவர்க்குக் கேகசி யென்னும்
ராக்ஷஸஸ்திரீயினிடத்திற் பிறந்தவன்.
“பொன்முடி” என்பது – பொன்னினாலாகிய கிரீடத்தைத் தரித்த தலை யென்றும் பொருள்படும்;
மூன்றாம்வேற்றுமை யுருபும்பயனுமுடன்தொக்கதொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
வீழ, மாள என்ற செயவெனச்சங்களில் எண்ணும்மை தொக்கது, வினைச்செவ்வெண்.

கும்பகர்ணன் – இராவணனது தம்பி; இவன் இளமையில் மிக்க தவஞ்செய்கையில், இவனுக்கு வேண்டிய
வரங்கொடுத்தற்குப் பிரமதேவன் பிரதியக்ஷமாக, அக்கடவுளினிடத்து “யான் என்றும் அழியாது நித்தியனா யிருக்க வேண்டும்” என்று
வரங்கேட்கத் தொடங்கிய இவன், தேவர்கள் விருப்பத்தின்படி தன்நாவில்வந்துநின்று ஸரஸ்வதீதேவியின் சூழ்ச்சியால்
‘யான் என்றும் நித்திரையுள்ளவனாயிருக்கவேண்டும்’ என்று வரம்வேண்ட,
“அங்ஙனமே ஆகுக” என்று அக்கடவுள் அநுக்கிரகித்ததனால், எப்பொழுதும் பெருந்தூக்கமுடையவனாய்விட்டன னாதலால்,
‘கண் துஞ்சலுற்ற இராவணன்’ என்றார். இரா வணன் – இராவண்ணன்: தொகுத்தல்.
இராத்திரி யைக்குறிக்கிற இராவென்பது – இங்குக் காலவாகுபெயராய், அப்பொழுது நிறைந்துகாணப்படுகிற இருளைக் குறித்தது.
கும்பகர்ணன் பயங்கரமான கண்களையும் கருநிறத்தையு முடையவனாதலால், ‘கொடுங்க ணிரா வணன்’ எனப்பட்டான்.
இவன் வழக்கப்படி பெருந்துயில்கொண்டிருக்கிறபோது, இராவணன் பற்பலஏவலாளரைக்கொண்டு வெகுசிரமப்பட்டு
இவனை வலியஎழுப்பிப் போர்க்குச் செலுத்த, அங்ஙனஞ்சென்று பலவாநரங்களைச் சின்ன பின்னஞ்செய்து
எதிர்த்துப் பொருகையில், ஸ்ரீராமபிரானாற் கொல்லப் பட்டான்.

பரதன் என்ற பெயர் – இராச்சியபாரத்தை நிர்வகிக்கவல்லவ னென்று உறுப்புப்பொருள்படும்;
இராமன் வநவாசஞ்செல்ல, தசரதன் சுவர்க்கம் புக, அரசனில்லாததாகும்இராச்சியத்தை இவன் பாதுகாக்கும்படி
நேரிடுவதை முன்னமே ஞானக்கண்ணினாலறிந்து வசிஷ்டமுனிவர் இவனுக்கு இத்திருநாமமிட்டன ரென்று அறிக.
நற்குணநற்செய்கைகளில் இவன் மிகச்சிறந்தவ னாதலால், “ஒண்பரதன்” என்றார்;
அத்தன்மையை, “ஆயிர மிராமர் நின் கேளாவரோ அறியி லம்மா” என்று குகன் பரதனைக்கொண் டாடியதுகொண்டு உணரலாம்.
கைகேயியின்சொற்படி இராமபிரான் வனவாசஞ்சென்று சித்திரகூடபருவதத்தில் வசிக்கையில் அயோத்தியிலே
தசரதசக்கரவர்த்தி இறந்தனனாக, அதற்குமுன்பு தன்மாமனுடனே கேகய தேசஞ்சென்றிருந்த பரதன் தானும் சத்துருக்கினனுமாக
அயோத்திக்கு வந்து அங்கு நிகழ்ந்ததை யறிந்து இராமன்வனம்புக்கமைக்கு மிகவருந்தித் தந்தைக்குஉரிய
அந்திமகிரியைகளைச் செய்துமுடித்து இராமனை யழைத்து வந்து முடிசூடுவிக்கக்கருதித் தான் அரசியலைத் துறந்து
மரவுரிபுனைந்து தாய்மார் முதலியவரோடு சேனைசூழ வனம்புகுந்து சித்திரகூடத்தில் ஸ்ரீராம னைக் கண்டு
திருவடிதொழுது செய்தியைக் கூற, இராமமூர்த்தி தந்தை திருநாடலங்கரித்ததை அறிந்து சோகித்துச் செய்ய
வேண்டியகிரியைகளைச் செய்துமுடித்தபின்னர், அயோத்திக்கு வந்து முடிசூடிக் கொள்ளவேண்டுமென்று
தன்னைமிகப்பிரார்த்தித்த பரதனுக்குப் பதினான்குவருடங் கழித்தவுடன் வருவதாகக் கூறி அதுவரை அரசாளுமாறு
நியமித்துப் பாதுகையை அளித்தனுப்ப, பரதாழ்வான் பதினான்குவருடங் கழிந்தவுடன் இராமன் வாராவிடின்
அக்கினிப்பிரவேசஞ்செய்து உயிர்நீப்பே னென்று பிரதிஜ்ஞை செய்து மீண்டு சென்று இராசாங்க காரியங்களைப் பார்த்துவர,
பிறகு இராவணசங்காரஞ் செய்தவுடனே இராமபிரான் முன்பு பரதனுக்குத் தான்வாக்கு அளித்ததைத் திருவுள்ளத்திற் கொண்டு
அதுதவறாதபடி வருவதற்காகப் புஷ்பகவிமானத்திலேறி வெகுவிரைவில் திருவயோத்திசேர்ந்து அங்குத் தீக்குதிக்கச்
சித்தனாய்த் தன்வரவை எதிர்பார்த்திருந்த பரதனால் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு அழைக்கப்பட்டன னாதலால்,
“பரதனுக்குச் சொல்தவிரா அணன்” என்றார். அணன் – அண்ணன்: தொகுத்தல்; அணல் என எடுத்து,
அண்ணலென்பதன் தொகுத்தலெனக் கொண்டு,பெரியோனென்று உரைத்தலும் அமையும்.

வினை முற்ற இராவணம் – கருமங்களெல்லாம் அழியும்படி. வணம் – வண்ணம்: தொகுத்தல்.
இராவணன், இராவணம் என்பன இப்பொருள் களில்வருதலை
“இராவண னிராவண னிராவண மறுத்தோர்” என அழகர் கலம்பகத்துங் காண்க.
பகவத்விஷயமாகத் தாம் விண்ணப்பஞ்செய்த, பிரபந்த மாதலால், அவ்விஷயவைலக்ஷண்யம் தோன்ற,
“நல்தமிழ்மாலைமொழிந் தனன்” என்று கொண்டாடிக்கூறினார்; ஆதலால், இது தற்புகழ்ச்சிக்குற்றத்தின்பாற்படாது.
“வினைமுற்ற இராவணம் நல்தமிழ்மாலை மொழிந்தனன்” என்றதனால், இந்நூலிற்குப் பயனுங் கூறியவாறாம்.
மொழிந்தனன் என்பதில், ‘அன்’ விகுதி – தன்மையொருமைக்கு வந்தது.

நான்காமடியில் நகரம் னகரமாக் கொள்ளப்பட்டது, திரிபுநயத்திற்காக.

———

மொழித்தத்தை கொஞ்சும் மலை அலங்காரன் முன் நூற்றுவரை
அழித்து அத்தை மைந்தர்க்கு அரசு அளித்தான் அடி நாள் தொடர்ந்து என்
உழித்தத்தைச் செய்து அன்றிப் போகா வினையை ஒரு நொடியில்
கழித்தத்தை என் சொல்லுகேன் தனக்கு ஆட்பட்ட காலத்திலே -90-

(இ – ள்.) மொழி – சொல்லழகிற்சிறந்த,
தத்தை – கிளிகள்,
கொஞ்சும் – கொஞ்சிப்பேசுதற்குஇடமான,
மலை – திருமாலிருஞ்சோலைமலையில் எழுந் தருளியிருக்கின்ற,
அலங்காரன் – அழகனும், –
முன் – முன்பு (கிருஷ்ணவ தாரத்தில்),
நூற்றுவரை அழித்து – துரியோதனாதியர்நூறுபேரையும் (வீமசேனனைக்கொண்டு) நாசஞ்செய்து,
அத்தை மைந்தர்க்கு அரசு அளித்தோன் – (தனது) அத்தையான குந்தியின் குமாரர்களாகிய பாண்டவர்கட்கு அரசாட்சியைக் கொடுத்தருளியவனுமாகிய எம்பெருமான், –
அடி நாள் தொடர்ந்து என்உழி தத்தை செய்து அன்றி போகா வினையை – ஆதிகாலந்தொடங்கி என்னிடத்தில் துன்பத்தைச் செய்தல்லது ஒழியாத என்கருமங்களை,
தனக்கு ஆள்பட்ட காலத்திலே ஒரு நொடியில் கழித்தத்தை – அவனுக்கு (நான்) அடிமைப்பட்டபொழுதே ஒரு மாத்திரைப் பொழுதில் ஒழித்தருளிய திறத்தை,
என் சொல்லுகேன் – என்னவென்று சொல்வேன்! (எ – று.)

பிறப்பு அநாதியாய்வருதலின் தமது உயிரால் அளவின்றிஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இதுவரை
அனுபவித்தவை போக இனி அனுபவிக் கக்கடவனவாய் நின்ற கருமங்களெல்லாம் தாம் எம்பெருமானுக்கு
அடிமைப் பட்டமாத்திரத்தில் உடனே அவனருளால் காட்டுத்தீமுன்னர்ப் பஞ்சுத்துய்போல இருந்தது
தெரியாதபடி அழிந்த திறத்தைக் கொண்டாடிக் கூறினார்.

கொஞ்சுதல் – மழலைச்சொற்பட இனிமையாகப் பேசுதல். தத்தை – கிளிகள், மொழி – சொற்களை,
கொஞ்சும் – கொஞ்சிப்பேசுகிற என்று பதவுரை கூறினும் அமையும்.
நூற்றுவர் – தொகைக்குறிப்பு. குந்தி, கண்ணனதுதந்தையான வசுதேவனது உடன்பிறந்தவ ளாதலால், அத்தையெனப் பட்டனள்.
பாண்டவர்கட்குத் துரியோதனாதியர் வஞ்சனையால் நேர்ந்த பற்பல துன்பங்கட்கெல்லாம் கண்ணபிரான் ஏற்ற மாறு
செய்து பாண்டவர்க்குப் பலவாறு உதவிபுரிந்து, அவர்கள் துரியோதனாதியரைத் தொலைத்தற்கும் அரசு
பெற்றுவாழ்வதற்கும் அவனே மூலகாரணமானதனால், “முன் நூற்றுவரையழித்து அத்தமைந்தர்க்கு அரசளித்தோன்” என்றார்;
(“சென்றவனத்து அத்தைமைந்தரை வாழ்வித்துத் தீயமன்னர், பொன்ற அனத்தந்தைச்செய்த பிரான்” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.)
என்னுழி, உழி – ஏழனுருபு. தத்து – ஆபத்து. அடிநாள் தொடர்ந்து – அநாதிகாலமாய் என்உயிரைத் தொடர்ந்து.
தத்தைச்செய்தன்றிப்போகா வினை – துன்பங்களைச்செய்துவிட்டே கழியக்கடவனவான கருமங்கள்.
நொடி – கைந்நொடிப்பொழுது; மனிதர் இயல்பிலே ஒருகால் கைந்நொடித்தற்குக் கொள்ளும்பொழுது.
கழித்தத்தை – கழித்தது என்ற இறந்தகாலத் தொழிற்பெயரின் இரண்டாம் வேற்றுமைவிரியாகிய கழித்ததை யென்பது
விரித்தல் விகாரம்பெற்றது. சொல்லுகேன் – நகரவொற்று இடைநிலை, எதிர்காலங்காட்டிற்று.

————

கால் அம் அலைக்கும் புவனங்களைக் கரந்தாய் உதிரம்
கால மலைக் குமைத்தாய் அழகா கமலத்துப் பஞ்சு ஆர்
கால் அமலைக்கும் புவிக்கும் அன்பா உயிர் காயம் விடும்
காலம் மலைக்கும் கடும் கூற்றைக் காய்ந்து என்னைக் காத்தருளே –91–

(இ – ள்.) கால் – ஊழிக்காற்றின்உதவியால்,
அம் அலைக்கும் – கடல் நீர் அலைவீசிப் பொங்கி மேல்வரப்பெற்ற,
புவனங்களை – உலகங்களை,
கரந்தாய் – திருவயிற்றில் ஒளித்துவைத்துப் பாதுகாத்தருளியவனே!
உதிரம் கால – இரத்தத்தைக் கக்கும்படி,
மலை குமைத்தாய் – மல்லர்களை நசுக்கி யழித்தவனே! –
அழகா -! கமலத்து – செந்தாமரைமலரில் வீற்றிருக்கின்ற,
பஞ்சு ஆர் கால் அமலைக்கும் – செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பெற்ற திருவடிகளையுடைய குற்றமற்றவளான திருமகளுக்கும்,
புவிக்கும் – பூமிதேவிக்கும்,
அன்பா – அன்புள்ள கணவனே! –
உயிர் காயம் விடும் காலம் – (எனது) உயிர் (எனது) உடம்பை விட்டு நீங்குங்காலத்தில்,
மலைக்கும் கடுங் கூற்றை காய்ந்து என்னை காத்தருள் – எதிர்த்துப்பொருதுநலியவருங் கொடிய யமனைச் சினந்து
விலக்கி என்உயிரை (நற்கதியிற்சேர்த்து)ப் பாதுகாத்தருள்வாய்; (எ – று.)

“நன்றுங்கொடியநமன்தமர்கள்நலிந்துவலிந்தென்னைப்பற்றும்போது,
அன்றங்கு நீ யென்னைக்காக்கவேண்டும்” என்றார் பெரியாழ்வாரும்.

பிரளயகாலத்திற் பெருங்காற்றுவீசக் கடல்பொங்கி உலகங்களை மேற்கொண்டு அழித்தல் இயல்பு.
அந்த ஆபத்துக்காலத்தில் உலகங்களை அவற்றிலுள்ள சராசரங்களுட்பட வயிற்றில்வைத்துப் பாதுகாத்தவனே யென்பார்,
‘கால் அம் அலைக்கும் புவனங்களைக் கரந்தாய்’ என்றார்.
(“பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம் நெடுங்கடலேயானகாலம்,
இனிக்களைகணிவர்க் கில்லையென் றுலகமேழினையு மூழில்வாங்கி,
முனித்தலைவன் முழங்கொளி சேர்திருவயிற்றில் வைத் தும்மை யுய்யக்கொண்ட,
கனிக்களவத்திருவுருவத் தொருவன்” என்றார் திருமங்கையாழ்வாரும்.)
வேறுபுகலிடமில்லாத படி உலகமுழுவதுக்கும் நேர்ந்த கொடிய அத்துன்பக்காலத்தில் அவ்வுலகங்களை
அந்தப் பிரளயப்பெருவெள்ளத்துக்கு உள்ளாய் அழிந்திடாதபடி பாதுகாத்ததுபோல, நின்னை யன்றி வேறு
கதியற்றவனான என்னை அந்திமகரலத்திலே கொடியயமனுக்கு இலக்காகாதபடி ஆட்கொண்டருள்வை யென்பார், இதுகூறி விளித்தார்,
மலைக்குங்கடுங்கூற்றைக் காயவல்ல திறம் நினக்கு உளதென்பது, “உதிரங்காலமல்லைக்குமைத்தாய்” என்று விளித்ததன் குறிப்பு.
ஜீவகோடிகளிற் சிலர் நின்னை என்றும்விட்டுப்பிரியாது உடனுறையும்படி நீ அருள்செய்ததுபோல,
அடியேனிடத்தும் அருள்செய்யவேண்டாவோ? என்பது, “கமலத்து அமலைக்கும் புவிக்கும் அன்பா” என்று அழைத்ததன் தாற்பரியம்.
உதிரம் – ருதிர மென்ற வடசொல்லின் விகாரம். காலுதல் – கக்குதல். மலை – மல்லை என்பதன் விகாரம்.
கமலத்து அமலை என இயையும். அமலா என்ற வடசொல், ஆவீறு ஐயாயிற்று.

இச்செய்யுளில் அடிதோறும் முதலெழுத்துக்கள் சில ஒன்றிநின்று வெவ்வேறுபொருள் தருதல்,
இடையிட்டுவந்த முதல்முற்றுமடக்கு எனப்படும் யமகமாம்;
மேல் 9 4 – ஆஞ் செய்யுளிலும் இது காண்க.
இந்நூலில் இவ்விரண்டு யமகச்செய்யுள்தவிர மற்றையெல்லாம் திரிபுஉடைய செய்யுள்.

————-

அருளக் கொடி இடைப் பூ மாதும் நீயும் வந்து ஆளினும் ஆம்
இருள் அக்கொடிய நமன்வரும் காலத்து இகழினும் ஆம்
கருளக் கொடி அழகா அலங்கார வன் கஞ்சன் நெஞ்சத்து
உருள் அக்கு ஓடிய உதைத்தாய் எனது உயிர் உன் உயிரே –92-

(இ – ள்.) கருளன் கொடி – கருடனதுவடிவ மெழுதிய துவசத்தையுடைய,
அழகா – அழகனே!
அலங்கார – அலங்காரனே!
வல்கஞ்சன் நெஞ்சத்து – கொடிய கம்சனது நெஞ்சிலுள்ள,
உருள் அக்கு – திரண்ட எலும்பு,
ஒடிய – முறியும்படி,
உதைத்தாய் – உதைத்தவனே! –
எனது உயிர் உன் உயிரே – என்னுடைய உயிர் உனக்கு அடிமைப்பட்ட உயிரேயாம்;
(இனி), இருள் அ கொடிய நமன் வரும் காலத்து – இருள்நிறமுள்ள (மிகக்கரிய) அந்தக் கொடுமையுடைய யமன் வரும் அந்திமகாலத்திலே,
கொடி இடை பூ மாதும் நீயும் – பூங்கொடிபோலும் மெல்லிய இடையையுடைய தாமரைமலரில்வாழும் பெரியபிராட்டியும் நீயுமாக,
அருள வந்து ஆளினும் ஆம் – நற்கதியருளுமாறு எழுந்தருளி (அவ்வுயிரை) ஆட்கொண்டாலும் சரி,
இகழினும் ஆம் – (அன்றி யமன்கொண்டுபோம்படி) உபேக்ஷை செய்துவிட்டாலும் சரி; (எ – று.)

என்உயிரை உனக்கு அடிமையாக்கிவிட்டேன்; அங்ஙனம் உன்வசப்பட்ட உயிரை அணைக்கவும் அடிக்கவும்
உனக்கு ஸ்வாதந்திரியமுண்டு; நீ எதுசெய்வதானாலும் அதுகுறித்து எனக்கு ஒன்றும்பாரமில்லை யாதலால்,
நான் இனிக் கவலைகொள்ளவேண்டுவதில்லை, என் கடமையை யான்செய்தாய் விட்டது என்பதுகருத்து.
“நானந்தவைகுந்தநாடெய்திவாழிலென்ஞாலத்தன்றி,
ஈனந்தவாதநிரயத்துவீழிலென் யானடைந்தேன்,
கோனந்தன்மைந்தனை நான்முகன்தந்தையைக் கோயிலச்சு,
தானந்தனையெனக்காராவமுதையரங் கனையே” என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.

புதல்வர்செய்த பிழைகளைப் பிழைகளென்றுகொள்ளாமல் தான்பொறுப்பதேயன்றி அவற்றிற்காகத்தந்தை
சீற்றங்கொள்ளுமிடத்தும் பொறுத்தருளுமாறு சொல்லிச் செய்விக்கிற தாய்போல,
அடியார்கள் செய்தகுற்றங்களைக் குற்றமென்றுகொள்ளாது தான்பொறுத்தருளுதலேயன்றி
அவற்றிற்காக எம்பெருமான் சீற்றங்கொள்ளுமிடத்தும் பொறுத்தருளுமாறு சொல்லிப் புருஷகாரமாகிற
பெரிய பிராட்டியார் உடனுறைதல் இன்றியமையாதென்றுகொண்டு, ‘பூமாதும் நீயும் அருளவந்து ஆளின்’ என்றார்.

‘கருளக்கொடியழகா’ என்றது, “கருளக்கொடியுடைப்புண்ணியன்” என்றபடி
துன்புற்றவரைப் பாதுகாத்தற்குக் கொடிகட்டியுள்ளவனே! என்றவாறு.

‘அந்நமன்’ என்றது, உலகறிசுட்டு. கருளன் – கருடனென்ற வடசொல்லின் விகாரம். கருளன் + கொடி = கருளக்கொடி:
“சிலவிகாரமாம் உயர்திணை.” (கருடன் பறவைக்கரசாயினும், நித்தியசூரிகளில் ஒருவனாய்ப் பரமசேதநனாதலால்,
அவனை உயர்திணையென்னத் தட்டில்லை.)

————

பிரிவாற்றாத தலைவி தனது நிலைமையைக் கூறுதல்

உயிர்க்கும் படிக்கும் உன் ஆயிரம் பேர் என்று ஒறுத்து அன்னைமார்
செயிர்க்கும் படிக்கு நின்றேன் என் செய்கேன் செழும் தேவர்களும்
அயிர்க்கும் படிக்குறள் ஆம் அழகா அலங்காரா நெய்க்கும்
தயிர்க்கும் படிக்கும் செவ்வாய் மலர்ந்தாய் நின்னைத் தாள் பணிந்தே –93–

(இ – ள்.) செழுந் தேவர்களும் அயிர்க்கும்படி – ஞானவள முடைய தேவர்களும் (இதுஎன்! என்று) சங்கிக்கும்படி,
குறள் ஆம் – குறுகிய வடிவமாகிய (வாமநாவதாரஞ்செய்த),
அழகா – அழகனே!
அலங்கார – அலங்காரனே!
நெய்க்கும் தயிர்க்கும் படிக்கும் செம்வாய் மலர்ந்தாய் – (கிருஷ்ணாவதாரத்திலே) வெண்ணெயையும் தயிரையும் அமுது
செய்தற்காகவும் (பிரளயகாலத்திலே) உலகத்தை உட்கொள்ளுதற்காகவும் சிவந்த திருவாய் மலரைத் திறந்தருளியவனே! –
நின்னை தாள்பணிந்து – (நான்) உன்னைத் திருவடிவணங்கி (நான் உன்னைக் காதலித்ததனாலே என்றபடி), –
உயிர்க்கும் உன் ஆயிரம் பேர் படிக்கும் என்று அன்னைமார் ஒறுத்து செயிர்க்கும் படிக்கு நின்றேன் – (என்னைக்குறித்து) இவள்
பெருமூச்செறிகின்றாள் நினது ஆயிரம்பெயர்களையும் (எப்பொழுதும்) சொல்லிக்கொண்டிருக்கிறாள் என்ற காரணத்தால்
என்தாய்மார் வெறுப்புக்கொண்டு கோபிக்கும் நிலையிலே நின்றிட்டேன்;
என் செய்கேன் – யாது செய்யக்கடவேன்! (எ – று.)

தலைவன் ஒருவழித்தணந்துநின்ற சமயத்திலே பிரிவாற்றாது பலவாறு வருந்துந் தலைவியின் நிலைமையை
நோக்கிய செவிலியர் வெகுண்டு அவளைப் பலபடிசொல்ல, அவ்வெஞ்சொற்களைக் கேட்டு மிகத் துன்புறுகின்ற அத்தலைவி,
தனது நினைப்புமிகுதியால் தலைவனை எதிரில்நிற்கின்றவாறுபோலப் பாவித்து அங்ஙனம் உருவெளித்தோற்றத்திலே
வெளிப்பட்ட அத்தலைவனை முன்னிலைப்படுத்திக் கூறியது, இது.
உயிர்த்தல் – “வெய்துயிர்த்திரங்கல்” என்னும் மன்மதாவத்தை;
(“வெவ்வுயிர்த்துயிர்த்துருகும்,” “ஆவியனல வெவ்வுயிர்க்கும்” என்பன – திருவாய்மொழியில் தாயார்வார்த்தை.)
உன் ஆயிரம்பேர்படிக்கும் – “மொழிபலபிதற்றல்” என்னும் மன்மதாவத்தையின் பாற்படும்.
(“முகில்வண்ணன்பேர் கிளரிக்கிளரிப்பிதற்றும்” என்பது, திருவிருத்தத்தில் தாயார்வார்த்தை.)

இரண்டாமடியில், படிக்கு என்பது – படியில் என்ற பொருளில் வந்ததனால், உருபுமயக்கம்.
மனிதரினும் தேவர் அறிவிற்சிறத்தலால், ‘செழுந்தேவர்’ என்றார்.
அவர்களும் வாமநமூர்த்தியின் சொரூபத்தை உள்ளபடி உணரமாட்டாமற்போயின ரென, அதன் விசித்திரங் கூறியவாறு.
உம்மை – உயர்வுசிறப்பு. படி – பூமி; இங்குச் சிறப்புப்பெயர் பொதுப்பொருளதாய், உலகங்களென்றமாத்திரமாய் நின்றது.
“உயிர்க்கும் படிக்கும் உன் ஆயிரம் பேர்” என்றது – தன்னைப் படர்க்கையாக் கூறியது.

தியானநிலையில் நின்ற ஐயங்காரது அகக்கண்ணுக்கு எம்பெருமான் புலனாகி மறைந்தவளவிலே அப்பெருமானது
ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து அது உடனே கிடையாமையால் ஆற்றாமைமிக்குப் பெருமூச்சுவிட்டுக்கொண்டும்
எம்பெருமான் திருநாமங்களை வாய்மாறாமல் எடுத்துக்கூறிக்கொண்டும் வருந்துகின்ற அவரது துயரத்தை நோக்கிப் பரிவர்கள்
‘பொறுமைபூணாது இங்ஙனமும் ஓர் ஆற்றாமையுண்டோ?’ என்று குறைகூற,
அதுகேட்டு மிகத்துயருற்ற ஐயங்கார், அங்ஙனம் தமக்குஉண்டான தடுமாற்றத்தை அப்பெருமானைக்
குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள். விவரம் நோக்கிக்கொள்க.

————-

பணிபதி வாட நின்று ஆடின நூற்றுவர் பால் சென்றன
பணிபதி னாலு புவனமும் தாயின பாப் பதின்மர்
பணிபதி எங்கும் உவந்தன பங்கயப் பாவையுடன்
பணிபதி மார்பன் அலங்காரன் பொன் திருப் பாதங்களே –94-

(இ – ள்.) பங்கயம் பாவையுடன் – செந்தாமரைமலரில் வீற்றிருக்கின்ற சித்திரப்பாவைபோ லழகியவளான திருமகளுடனே,
பணி – (கௌஸ்துபமென்னும்) ஆபரணமும்,
பதி – நீங்காதுபொருந்தப்பெற்ற,
மார்பன் – திருமார்பையுடையவனான,
அலங்காரன் – அழகப்பிரானுடைய,
பொன் திரு பாதங்கள் – பொன்மயமான ஆபரணங்களை யணிந்த திருவடிகள், –
பணி பதி வாட நின்று ஆடின – ஸர்ப்பசிரேஷ்டனான காளியன் வலிமை தளரும்படி (அவன்முடிகளின்மேல்) நின்று நர்த்தநஞ்செய்தன;
நூற்றுவர் பால் சென்றன – துரியோதனாதியரிடத்துச் சென்றன;
பணி பதினாலு புவனமும் தாயின – (இயல்பிலே தமக்குக்) கீழ்ப்படிந்தனவான பதினான்கு உலகங்களையும் தாவியளந்தன;
பதின்மர் பா பணி – பத்து ஆழ்வார்களாலும் பாசுரம்பாடித் துதிக்கப்பெற்ற,
பதி எங்கும் – (திவ்விய) தேசங்களிலெல்லாம், உவந்தன – விரும்பிஎழுந்தருளியிருந்தன; (எ – று.)

இது, இந்நூலின் 26 – ஆஞ் செய்யுள்போன்ற பாதவகுப்பு.
எம்பெருமான் திருவடிகளினிடத்துத் தமக்குஉள்ள ஆராதஅன்பினால் மீண்டும் இது கூறினார்.
திருவேங்கடத்தந்தாதியிலும் பாதவகுப்புச் செய்யுள்கள் இரண்டு வந்துள்ளன.
பணிபதி – வடமொழித்தொடர்; நாகராஜன், நூற்றுவர்பாற் சென்றது, கண்ணன் பாண்டவதூதனாய்
உபப் பிலாவியத்தினின்று அஸ்திநாபுரிக்கு எழுந்தருளியபொழு தென்க.
பதினாலு புவனம் – பூலோகம் புவர்லோகம் ஸுவர்லோகம் மஹர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்தியலோகம் என்ற மேலேழுலகங்களும்,
அதலம் விதலம் ஸுதலம் தராதலம் ரஸாதலம் மகாதலம் பாதாளம் என்ற கீழேழுலகங்களுமாம்.
பூலோகத்தை யளந்ததில் அதன் கீழுலகங்களேழும், மேலுலகத்தையளந்ததில் புவர்லோகம் முதலிய ஆறும் அடங்குதலால்,
‘பதினாலுபுவனமுந்தாயின’ என்றார்; உம்மை – முற்றுப்பொருளது:
(“புடவிகடத்தலையீரேழளந்தன” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.)
உலகங்களெல்லாம் இயல்பிலே தமது திருவடிகட்குக் கீழ்ப்பட்டன வென்பது காட்டி எல்லாவுயிர்களையும் ஆட்கொண்டருளுதற்கு,
உலகமளக்கிறதென்கிற வியாஜத்தால் எல்லாவுயிர்களின் முடியிலும் தன்திருவடிகளை வைத்தனன் என்ற கருத்துத் தொனிக்குமாறு,
“பணிபதினாலுபுவனமுந் தாயின” என்றார். தாயின – தாவு என்ற பகுதி, தொகுத்தல் விகாரப்பட்டுத் தாஎன நின்றது.
‘பதின்மர்பாப்பணி பதி’ என்றது, நூற்றெட்டுத் திருப்பதிகளை, உவத்தலாகிய எம்பெருமானது செயலை
அவனது திருவடிகளின்மேல் ஏற்றிக்கூறியது, உபசாரவழக்கு;
(திருவேங்கடத்தந்தாதியில் “அடவிகடத்தலை வேட்டன” என்றதனோடு இதனை ஒப்பிடுக.) பொன் – ஆகுபெயர்.

இது, யமகச்செய்யுள்.

———–

பாதகர் அத்தனை பேரும் கனகனும் பல் நகத்தா
லே தகரத் தனையேற்கு அருள் ஆளியை எட்டு எழுத்துள்
ஒது அகரத்தனை சுந்தரத் தோள் உடையானை நவ
நீத கரத்தனை சேர்ந்தார்க்குத் தேவரும் நேர் அல்லரோ –95-

(இ – ள்.) பாதகர் அத்தனை பேரும் – தீவினையுடையரான அசுரர்களவ்வளவு பேரும்,
கனகனும் – இரணியனும்,
பல் நகத்தாலே தகர – கைந்நகங்கள்பலவற்றாற் பிளந்தழிய,
தனையற்கு அருள் – (அவ்விரணியனது) குமாரனான பிரகலாதாழ்வானுக்குக் கருணைசெய்த,
ஆளியை – (நர)சிங்க மூர்த்தியும், –
எட்டு எழுத்துள் ஓது அகரத்தனை – அஷ்டாக்ஷரமந்திரத்தில் (முதலிலே) சொல்லப்படுகிற அகரமென்னும் உயிரெழுத்தின் பொருளாயுள்ளவனும்,
சுந்தரம் தோள் உடையானை – அழகிய திருத்தோள்களை யுடையவனும்,
நவநீத கரத்தனை – (கிருஷ்ணாவதாரத்திலே) வெண்ணெயை யேந்திய கையையுடையவனுமாகிய அழகப்பிரானை,
சேர்ந்தார்க்கு – சரணமடைந்தவர்கட்கு,
தேவரும் நேர் அல்லர் – (புண்ணியப்பயனையே அனுபவிப்பவரான) தேவர்களும் சமானராகார்; (எ – று.)
என்று பாகவதமகிமை கூறியவாறாம்.

புண்ணியப் பயனுள்ளவளவும் சிற்றின்பம் நுகர்ந்து அஃது ஒழிந்தவளவிலே மீண்டும் இவ்வுலகிற் பிறந்து
வருந்தக்கடவரான தேவர்கள், எம்பிரானருளால் இருவினையும் அற்று இனிப்பிறப்பின்றி நித்தியமான
முத்தி பெறக்கடவராகி ஜீவந்முக்தி நிலையில் நின்று பிரமாநந்தமனுபவிக்கின்ற பாகவதர்க்குச் சிறிதும் நிகராகா ரென்க.

“பாதக ரத்தனைபேரும்” என்றது, இரணியனது பரிவாரங்களான மிகப்பல அசுரர்களை.
இரணியனுக்குப்பரிந்து நரசிங்கமூர்த்தியை எதிர்த்ததனால், இவர்களும் அப்பெருமானாற் கொல்லப்பட்டனர்;
இதனை, “அறியி னரங்கர் முன்னாளரியாகிய வப்பொழுது,
கொறியி னவுணர்தம் வெள்ளங்கள் கோடியுங் கொன்றதிலோ,
தறியின்வயிற்றிற் றகுவனெஞ்சுஞ் சரபத்துடலும்,
நெறியின் வகிர்ந்தபினன்றோ தணிந்தது நீள்சினமே” என்ற திருவரங்கத்து மாலையினாலும் உணர்க.
இவர்களும் இரணியனோ டொப்ப எம்பெருமான்பக்கல் பகைமையுடைமையால், “பாதகர்” எனப்பட்டனர்.
இப்படி தன்பக்கல் துவேஷங்கொண்ட அசுரர்களையெல்லாம் அப்பெருமான் அழிக்கின்றபோதே, தனக்கு அடிமை
பூண்ட பிரகலாதன் பக்கல் அநுக்கிரகமுடையனா யிருந்தன னாதலால்,
‘பாதகரத்தனைபேருங் கனகனும் பல்நகத்தாலே தகரத் தனையற்கரு ளாளி’ என்றார்;
அத்தன்மையை, “தாழ்குமரன்மேற் கனகவஞ்சகன்மே லோர்முகத்தே,
சூழ்கருணையும் முனிவுந் தோன்றியவால்” என்று நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியில் நன்கு விளக்குவர்.
இரணியன்முதலிய அசுரர்கள் பலரைக்கொன்ற நரசிங்கமூர்த்தியின் உக்கிரத்தைக்கண்டு அஞ்சித் திருமகளும் அருகிற்
செல்லமாட்டாளாக, பிரமன்முதலிய தேவர்கள்பலரும் பலவாறு துதிக்கவும் அச்சீற்றம் அடங்காதிருந்த அந்நிலையிலே,
பிரகலாதன்செய்த துதிமொழிக்குச் சிங்கப்பிரான் திருவுள்ளமுகந்து அவன்முதுகைத்தடவி
“நீ விரும்பிய வரத்தைக் கொடுப்பேன்; வேண்டுக” என்று சொன்னதற்கு, அந்தப் பரமபாகவதன்
‘நின்னை வழிபடும் அன்பேயன்றி யான் வேண்டுவதொரு வரமும் உண்டோ!’ என்றுசொல்லித் தொழுது
பலவாறுதுதித்து ‘இங்ஙனம் உற்ற சீற்றந்தணிந்து திருவுள்ள முவந்தருளவேணும்’ என்று பிரார்த்தித்தவளவிலே,
அப்பெருமான் சினந்தணிந்தன னென்ற விவரத்தைப் புராணங்களிற் காணலாம்.
தகர என்ற செயவெனெச்சம் – உடனிகழ்ச்சிப் பொருளதாய், நிகழ்காலங் காட்டும்.

இரணியனென்ற பெயர் பொன்னிறமானவனென்று பொருள்படுதலால், அதன் பரியாயநாமமாக, “கனகன்” என்றார்.
இரணியம், கநகம் என்பன – பொன்னின் பெயர்கள். திருவேங்கடத்தந்தாதியில், “செம்பொற்றானவன்” என்றதும் இத்தன்மையதே.
“பல் நகத்தாலே” என்பதற்கு – பற்களினாலும் நகங்களினாலும் என்று உரைப்பாரு முளர்.
தநயன் என்ற வடசொல்லின் விகாரமாகிய தனயன் என்றது, திரிபுநயத்துக்காக, தனையன் என இடைப்போலிபெற்றது. ஆளி – சிங்கம்.

‘எட்டெழுத்துள் ஓது அகரம்’ என்றது, அப் பெரியதிருமந்திரத்தின் முதலிலுள்ள பிரணவத்திலடங்கிய அகாரத்தை.
“அகாரார்த்தோவிஷ்ணு:” என்றபடி அதன்பொருள் திருமாலாதலால், ‘அகரத்தன்’ என்றார்.
‘அகரம் எல்லாச் சொற்களுக்கும் மூலமாதலாலும், பிரஹ்மம் எல்லாப்பொருள்களுக்கும் மூலமாதலாலும்,
‘அ’ என்று பரப்பிரஹ்மத்துக்குப் பெயர்’ என வாமநபுராணம் கூறும்.
அகரம், எல்லா வெழுத்துக்களிலுங் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்கும்;
கடவுள் எல்லாச் சராசரப் பொருள்களிலுங் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்பன்:
அகரம், எல்லா வெழுத்துக்கும் முதல்; பகவான், எல்லாவுலகிற்கும் முதல்: அகரம்,
அவிகாரமான நாதம்; பகவான், விகாரமில்லாத இயற்கைப்பொருள்: இவ்வாறு பல கண்டுகொள்க.
ஸ்ரீ கீதையிலே கண்ணன் ‘எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே’ என்று அருளிச்செய்ததும் உணர்க.
அகரம் என்பதில், கரம் – சாரியை.

நவநீதகரம் – வடமொழித்தொடர். நவநீதமென்ற சொல் – புதியதயிரிலிருந்து எடுக்கப்பட்டதென்று காரணப்பொருள்பெறும்.
தேவரும், உம் – உயர்வுசிறப்பு. இதனால், பிறர் நேரல்லரென்பது தானே போதரும்.

————-

அல்லல் அங்கு ஆரையும் சேர்விக்கும் ஐம்புல ஆசை என்றும்
பல் அலங்கா நைந்து கோல் ஊன்றியும் பற்று அறாது கண்டாய்
மல்லல் அம் காரிகையார் மருள் தீர்ந்து வணங்கு நெஞ்சே
தொல் அலங்காரனைத் தென் திருமால் இருஞ்சோலையிலே -96-

(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
ஆரையும் அல்லல் சேர்விக்கும் – எவரையுந் துன்பமடைவிக்கின்ற,
ஐம் புலம் ஆசை – ஐந்துபுலன்களிற் செல்லுகின்ற ஆசையானது,
என்றும் – எந்நாளும்,
பல் அலங்கா நைந்து கோல் ஊன்றியும் – பற்கள் அசையப் பெற்று உடல்தளர்ந்து (நடக்க வலியில்லாமற்) கோலை யூன்றும்படியானாலும்,
பற்று அறாது – தொடர்ச்சி நீங்காது; (ஆதலால்),
மல்லல் அம் காரிகையார் மருள் தீர்ந்து – அழகுவளமுள்ள மாதர்கள் பக்க லுண்டாகிற மோகம் நீங்கி,
தொல் அலங்காரனை தென்திருமாலிருஞ் சோலையிலே வணங்கு – அநாதியான அழகனை அழகிய
திருமாலிருஞ் சோலைமலையிலே வணங்குவாய்; (எ – று.) –
கண்டாய் – தேற்றம்.
அங்கு – அசை;
அவ்விடத்தி லெனக்கொண்டு, மறுமையி லென்றலு மொன்று.

ஐம்பொறிகளின் வழியாக ஐம்புலன்களை யனுபவிப்பதி லுண்டாகின்ற ஆசையானது,
மிக்க கிழத்தனத்திலுமுட்பட எப்பொழுதும் நீங்காது; ஆதலால், அதற்கு முடிவில்லை: ஆகவே,
அதில் விருப்பம் வைத்துப் பெண்ணாசை கொண்டு மயங்குதலின்றித் திருமாலிருஞ்சோலையழகனை
வணங்கி உய்யும் வழியை நாடுவாய் என்று, தம்நெஞ்சத்துக்கு நல்லறிவுணர்த்தியவாறாம்.

“கருது நெஞ்சே” என்னாது “வணங்குநெஞ்சே” என மெய்யின்வினையை மனத்தின்மேலேற்றிக் கூறியது,
புறக்கரணமாகிய அம்மெய்யின் வணக்கத்துக்கு அந்தக்கரணமாகிய மனத்தின் உடன்பாடு இன்றியமையாதாதலால்.
இதனை, முதற்செய்யுளில் “உரைநெஞ்சமே” என்றதனோடு ஒப்பிடுக.
இத்தன்மைபற்றியே, பந்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் மனமே காரண மென்ப.
இது, ஒருவகை உபசாரவழக்கு. அன்றி, தியானமென்னும் மனவணக்கத்தைக் குறித்ததுமாம்.

ஆரையும் – யாரையும் என்பதன் மரூஉ; எவ்வளவுநெஞ்சுறுதியுள்ளவர் களையும் என்றபடி.
அலங்கா – உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்; அலங்குதல் – அசைதல்.
“பல்லலங்கா நைந்து கோலூன்றி” என்றவிடத்து, சினைவினை முதல்வினை கொண்டது;
அலங்குதல் – பல்லின் வினையாதலும், நைந்து கோலூன்றுதல் – அப்பல்லுடையானது வினையாதலுங் காண்க.
பல்லலங்கா நைந்து கோலூன்றியும் – முற்றமூத்தும் என்றபடி; உம் – இழிவு சிறப்பு. மல்லல் – வளப்பமுணர்த்தும் உரிச்சொல்.
காரிகை – அழகு; அதனையுடையவர், காரிகையார். மருள் – காமமயக்கம்.

————

பிரிவாற்றாத தலைவி நிலையைக் குறித்துப் பாங்கி இரத்தல் –

சோலை இல்லாமையில் சேர் திருமால் இருஞ்சோலை நின்றான்
வேலையில் ஆமையின் வேடம் கொண்டான் புயம் மேவப் பெறாச்
சேல் ஐ யில் ஆம்மை இலங்கு கண்ணாள் அவன் தெய்வத் துழாய்
மாலை இல்லாமையில் மாலை உற்றாள் அந்தி மாலையிலே –97-

(இ – ள்.) சோலை இல் ஆ – சோலைகளை(த் தமக்கு) இருப்பிடமாக (க்கொண்டு),
மையில் சேர் – மயில்கள் தங்கிவசிக்கப்பெற்ற,
திருமாலிருஞ்சோலை – திருமாலிருஞ்சோலைமலையில்,
நின்றான் – நின்றதிருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்றவனும், –
வேலையில் ஆமையில் வேடம் கொண்டான் – (திருப்பாற்) கடலிலே ஆமைபோல வடிவங்கொண்டு அவதரித்தவனுமான அழகப்பிரானுடைய,
புயம் – தோள்களை,
மேவ பெறா – தழுவப் பெறாத,
சேல் ஐயில் ஆம் மை இலங்கு கண்ணாள் – சேல்மீனும் வேலாயுதமும் போன்ற மையிடப்பெற்று விளங்குங் கண்களை யுடையவளான இம்மங்கை,
அவன் தெய்வம் துழாய் மாலை இலாமையில் – அத்தலைமகனது தெய்வத்தன்மைபொருந்திய திருத்துழாய்மாலை கிடைக்கப்பெறாமையால்,
அந்தி மாலையிலே – அந்திமாலைப்பொழுதிலே,
மாலை உற்றாள் – மயக்கத்தை யடைந்தாள்; (எ – று.)

இல் – இடம். ஆ – ஆக என்பதன் விகாரம். மையில் = மயில்: முதற் போலி.
அங்குள்ள சோலைகள், மயில்கள் விரும்பித் தமக்குஉரிய வாசஸ்தாந மாகக்கொண்டு நித்தியவாசஞ்
செய்யும்படியான வளமுடையன வென்க. மேவப்பெறாக் கண்ணாள் என இயையும்.
சேல் – மீனின் சாதிபேதங்களிலொன்று; இது, மகளிர்கண்ணுக்குப் பிறழ்ச்சியிலும் வடிவிலும் உவமம்.
ஐயல் = அயில்: முதற்போலி. ஆம் – உவமவுருபு. இலாமையில், இல் – ஐந்தனுருபு, ஏது,
மால் – மயக்கம். அதனையுறுதல், மோகமென்னும் மன்மதாவத்தை. அந்திமாலை – ஒருபொருட்பன்மொழி;
அந்தியென்ற பொதுப்பெயர் மாலை யென்ற சிறப்புப்பெயரோடு கூடி ஒருபொருளையுணர்த்திய தென்னலாம்:
இதனை, இருபெயரொட்டென்றலு முண்டு. “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலைமலரு மிந்நோய்” என்றபடி,
கலவிக்குரியகால மான இரவின் தொடக்கத்திலே, தம்தம் துணையைக் கருதி வந்துசேரும் விலங்குகளையும்
மக்களையுங் கண்டு தலைவி விரகவேதனைமிகுதலால், “அந்திமாலையிலே மாலையுற்றாள்” என்றார்.
நான்காமடியில், வெவ்வேறு பொருள் பட “மாலை” என்ற சொல் பலமுறை வந்தது, சொற்பின்வருநிலையணி.

ஞானக்கண்ணுக்கு இலக்காகி மறைந்த எம்பெருமானது பிரிவினால் வருந்துகின்ற ஐயங்காரது வியாமோகத்தைக்
கண்ணுற்ற அன்பர்கள் இரங்கிக் கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.
முதலிரண்டடி – அடியார்கட்கு அருளுதற்கென்று வளப்பமுள்ள திவ்வியதேசத்தில் வந்து நித்தியவாசஞ்செய்பவனும்
சமயமறிந்து உதவுபவனு மான எம்பெருமானுடைய திருத்தோளழகி லீடுபட்டு அவனது நிரந்தராநுபவத்தைப் பெறாத என்றவாறு.
அயில் ஆம் கண்ணாள் – எப்பொருளிலும் நுட்பமாகநுழைந்து செல்லுங் கூரிய ஞானவைலக்ஷண்யத்தை யுடைய ஐயங்கா ரென்றபடி.
சேல்ஆம்கண்ணாள் – எம்பெருமானைப்பிரிந்த கலக்கத்தால் இப்பொழுது இவர்அறிவை ஓரிடத்திலேஒடுக்கி
நிறுத்துந் தியானநிலைகுலைந்து பலபொருள்களிற்செலுத்தும் அறிவுடையராயின ரென்க.
மைஇலங்குகண்ணாள் – அஞ்சனவண்ணனாகிய பெருமானை இலக்காக்கொள்ளும் உணர்வுடையவ ரென்றவாறு.
அவன்தெய்வத்துழாய்மாலையிலாமையில் – அப்பெருமானது திவ்வியமான இனிமை அனுபவிக்கக் கிடையாமையால்,
மாலை உற்றாள் – வியாமோகத்தையடைந்தனர், அந்திமாலையிலே – பேராநந்தமனுபவிக்கக் கடவதான காலத்திலே யென்க.
சோலை இல்ஆ மயில்சேர் திருமாலிருஞ் சோலை – அழகாகவிரிந்துகாட்டுந் தோகைக்கண்கள்பலவற்றை யுடையன வாய்க்
கார்வரவுகண்டுகளித்துக்கூத்தாடும் மயில்கள் போல,
பொலிவுறப் பலபடியாகவிசாலிக்கிற ஞானக்கண்களையுடையராய்க் காளமேகவண்ணனான எம்பெருமானது
தரிசனத்தாற் களித்துக் கூத்தாடும் பாகவதர்கள் தங்கட்கு உரிய வாசஸ்தாநமாகக் கொண்டு
நித்தியவாசஞ்செய்யப்பெற்ற திவ்வியதேச மென்னலாம்.
சேலாங் கண் – எம்பெருமானது மத்ஸ்யாவதாரத்திலே ஈடுபட்டுத் தந்மயமான ஞான மென்றலுமாம்

————–

பிரிவாற்றாத தலைவி நிலையைக் குறித்துப் பாங்கி இரத்தல் –

மாலைக்கு அரும்பு சிறு கால் துகைக்க வருந்தும் எங்கள்
ஆலைக் கரும்பு தன் ஆசை எல்லாம் சொல்லில் ஆயிரம் தோட்டு
ஓலைக்கு அரும்பு ண் தொடமுடம் ஆம் மதி ஊர் குடுமிச்
சோலைக் கரும் புயலே அருள்வாய் உன் துளவினையே –98-

(இ – ள்.) தொட முடம் ஆ (க) – (அடியில்) உராய்தலாலே அடிதேய்ந் திடுமாறு,
மதிஊர் – சந்திரமண்டலம் தவழ்ந்துசெல்லப்பெற்ற,
குடுமி – சிகரத்தையுடைய,
சோலை – திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற,
கரும் புயலே – காளமேகம்போன்றவனே! –
மாலைக்கு – மாலைப் பொழுதிலே,
அரும்பு சிறு கால் துகைக்க – மந்தமாகவீசுகின்ற இளந்தென்றற்காற்று வருத்துதலால்,
வருந்தும் – வருந்துகிற,
எங்கள் ஆலை கரும்பு தன் – ஆலையிலகப்பட்டகரும்புபோன்றவளான எங்கள் தலைவியினது,
ஆசை எல்லாம் -ஆசைமுழுவதையும்,
சொல்லில் – சொல்லிவருவதானால்,
ஆயிரம் தோடு ஓலைக்கு அரும் புண் – (அதனைஎழுதுமிடத்து) ஆயிரம்பனையோலைக்கு (எழுதுதலால்) அரியபுண்ணாகும்;
(இங்ஙனமிருத்தலால்), உன் துளவினை அருளாய் – நினது திருத்துழாய்மாலையை (இவட்கு)த் தந்தருள்வாய்.

ஒருவழித்தணந்த தலைவன் வந்து சிறைப்புறமாக, அதனையுணர்ந்த தோழி சென்று அவனைச்சந்தித்து,
தலைவியின் வேட்கைநோய்மிகுதியைக் கூறியது, இது. “நீங்கியணைந்தவர்க்குப் பாங்கி பகர்ந்தது;
இது, “வருத்த மிகுதிகூறல்” எனப்படும். இதன்பயன், விரைவில் இவளை வரைந்துகொள்க வென வற்புறுத்துதல்.

தலைவரைப்பிரியாத தலைவியர்க்குத் தம்வரவினால் மகிழ்ச்சியை விளைவிப்பனவான மாலைப்பொழுதும் மந்தமாருதமும்,
பிரிந்ததலைவியர்க்குக் காமோத்தீபகமாய் விரகவேதனையைவளர்த்து வருத்துதலால்,
‘மாலைக்கு அரும்பு சிறுகால் துகைக்க வருந்தும்’ எனப்பட்டது.
இரசமுள்ள கரும்பு போல இனிமைமிக்கவளான இவள், அது ஆலையிலகப்பட்டு நொருங்கிச் சிதையுமாறுபோல
இங்ஙனம் இவ்விரண்டுக்கும் இலக்காகி வருந்துகின்றன ளென்பாள், ‘துகைக்க வருந்தும் ஆலைக்கரும்பு’ என்றாள்.
ஒருபால் காதல்நோயினாலும் மற்றொருபால் காமோத்தீபகப்பொருள்களினாலும் நெருக்கி வருத்தப் பெறுமவ ளென்றவாறுமாம்.
‘மாலைக்கு அரும்பு சிறுகால் துகைக்க’ என்ற சொற்போக்கு, துணையிழந்து தனிப்பட்டுநின்ற சமயம் பார்த்து
இருட்பொழுதிலே இழிவான கால்கொண்டு உதைக்க என் ற ஒருபொருளைத் தொனிப்பிக்கும்.
இவளது ஆசைநிலைகளை யெல்லாஞ் சொல்வதா னால், ‘துகைக்க வருந்தும்’ எனப்பட்டது.
இரசமுள்ள கரும்பு போல இனிமைிக்கவளான இவள், அது ஆலையிலகப்பட்டு நொருங்கிச் சிதையுமாறுபோல
இங்ஙனம் இவ்விரண்டுக்கும் இலக்காகி வருந்துகின்றன னென்பாள், அவற்றை ஒருவர் எழுதிவருமிடத்து
ஆயிரம் ஓலைக்கு எழுதக்காணு மென்பது, ‘ஆசையெல்லாஞ்சொல்லி லாயிரந்தோட்டோலைக்கரும்புண்’ என்றதன் கருத்து;
இதனை “பன்னியுரைக்குங்காற் பாரதமாம்” என்றாற்போலக்கொள்க.
கூரியஎழுத்தாணிகொண்டு ஓலையிற்பதியும்படியெழுதுதலால், அதற்குப் பொறுத்தற்கு அரிய புண்ணாகு மென்று கற்பித்து,
‘ஓலைக்கு அரும்புண்’ எனப்பட்டது;
எழுதியஓலையை “செல்லரித்தஓலை” என்று திருவரங்கக்கலம்பகத்திற் சொல்லியதனோடு இதனை ஒப்பிடுக.

“தொடமுடமாமதியூர்குடுமி” என்றது – அதிசயோக்தி வகையால், அம் மலையின் மிக்க உயர்வை எடுத்துக்காட்டும்.
வானத்திலே சந்திரன் செல்லும் வீதியளவும் அம்மலைச்சிகரம் உயர்ந்திருத்தலால், சந்திரன் அச் சிகரத்தில் அடி
யுராய்ந்து சென்றுசென்று அவ்வடிப்புறம் தேய்வதாயிற் றென்க. ‘முடமா’ என்பதில், ஆ என்பது – ஆக என்பதன் விகாரம்.
நாமைகதேசே நாமக்ரஹணத்தால், சோலைமலை, “சோலை” எனப்பட்டது. புயல் – உவமவாகுபெயர். மாலைக்கு – உருபுமயக்கம்.
அன்றி, நினது திருத்துழாய்மாலைக் காக எனினுமாம்; அப்பொருளில், ‘வருந்தும்’ என்பதனோடு இயையும். தோட்டோலை – ஒருபொருட்பன்மொழி.

எம்பெருமானைப்பிரிந்து வருந்தும் ஐயங்காரது நிலைமையை அன்பர்கள் அப்பெருமான் சந்நிதியில் விண்ணப்பஞ்செய்தல்,
இதற்கு உள்ளுறை பொருள். மாலைக்கு அரும்பு சிறுகால் துகைக்க வருந்தும் – உரியகாலத்திலே பேறுகிடையாமையால்,
உலகத்துப்பொருள்கள்மேலிடுதல்பற்றி வருந்துகின்றனர் இவரென்க.
ஆலைக்கரும்பு – இக்கு அரையந்திரத்துட்பட்ட தென்ன இருவினையுட்புக்கு அரைமாநொடியுந்தரியாதுழல்
புன்பிறப்பைக் குறித்து வருந்துபவர் இவர் என்க.
உன் துளவினை அருளாய் – நினது இனிமையை இவர்க்கு அருள்செய்வாய் என்றவாறு. பிறவும காண்டுகொள்க.
இம்மலையின் உயர்வை மதியாது வருபவர் துன்புறுவரென்பது, ‘தொடமுடமா மதியூர்குடுமி’ என்ற அடைமொழியாற் போதரும்.

‘ஓலைக்கரும்புண் தொட முடமாம்’ என்பதற்கு வேறு உரை கூறுவரே னும், பொருந்துவதை ஆய்ந்துகொள்க; பிறஇடங்களிலும் இவ்வாறே.

————-

துளவ இலை ஆர் பொன் அடி முடி சூட்டி தொண்டு ஆக்கி என்னை
வளவிலையாக் கொண்ட நீ கை விடேல் மங்கல குணங்கள்
அளவு இல் ஐயா அலங்கார சமயிகள் ஆய்ந்த வண்ணம்
உள இலை ஆய் உரு ஆய் அருவு ஆய ஒரு முதலே –99-

(இ – ள்.) மங்கலகுணங்கள் அளவு இல் ஐயா – திருக்கலியாண குணங்கள் அளவின்றி மிகப்பெற்ற ஸ்வாமீ!
அலங்கார – அழகனே!
சமயிகள் ஆய்ந்த வண்ணம் – பற்பலசமயத்தார் (தம்தமதுநூல்களைக்கொண்டும் புத்தி சக்திகளைக்கொண்டும்
( ஆராய்ந்தவாறு, உள இலை ஆய் உரு ஆய் அரு ஆய் – (அவர்களால்) உள்ளனவென்று கூறப்படும் பொருள்களும் இல்லை
யெனப் படும் பொருள்களும் உருவப்பொருளும் அருவப்பொருளும் ஆகின்ற,
ஒரு முதலே – ஒப்பற்ற முதற்பொருளே! –
துளவு இலை ஆர் பொன் அடி முடி சூட்டி – துளஸீதளங்கள் பொருந்திய (நினது) திருவடிகளை (என்) சிரமேல் வைத்து,
என்னை -, தொண்டு ஆக்கி – அடிமையாக்கி,
வளம் விலை ஆ கொண்ட – நல்ல விக்கிரயப் பொருளாகக் கொண்ட,
நீ -, கைவிடேல் – கை விடாதே; (எ – று.)

என்முடியில் அடிவைத்து என்னை அடிமையாகக்கொண்டு விலைக்குவாங்கிய பொருளைப்போல அங்கீகரித்தருளிய, நீ,
அங்ஙனம் அடிமையான என்னைக் கைவிடாது காத்தருளக்கடவை யென்பதாம்.

துளவுஇலை – அடியார்கள் எம்பெருமான் திருவடிகளில் அருச்சித்தவை நின்திருவடி என்முடிக்கு
அலங்காரமென்பது பட, “பொன்னடிமுடி சூட்டி” என்றார்.
இம்முடியில் அடிசூட்டுதல், இதற்குக் கிரீடாபிஷேகஞ் செய்தாற்போல மேன்மையை விளைக்கு மென்க.
“கோலமா மென்சென் னிக்கு உன் கமலமன்ன குரைகழலே,”
“மாலடிமுடிமேற் கோலமாங் குலசேகரன்” எனப் பெரியாரும் பணித்தார்.
மற்றும், “முடிசூட்டி” என்றதன் ஆற்றலால், திருவடி மல ரென்றவாறுமாம்.
வளவிலையாக் கொண்ட – ஒன்றுக்கு இரண்டாக மிக்கவிலைகொடுத்துப் பிரியத்துடன்வாங்கிய பொருளாக
ஏற்றுக்கொண்ட என்றபடி.
மங்கலகுணங்கள் – யாவர்க்கும் சுபகரமான ஸௌந்தர்யம் ஸௌசீல்யம் ஸௌலப்யம் வாத்ஸல்யம் ஸ்வாமித்வம் முதலியன.
எம்பெருமான் அநந்த கல்யாணகுண பரிபூர்ண னாதலால், மங்கல குணங்கட்கு ஓரளவில்லாத ஐயனே யென்றார்.

“வணங்குந்துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பாற்,
பிணங்குஞ்சமயம் பலபலவாக்கியவையவைதோறு,
அணங்கும்பலபலவாக்கி நின்மூர்த்திபரப்பி வைத்தாய்” என்றபடி, ரஜோகுண தமோகுணங்களால் மிக்கவர்க்கு ஏற்ப,
ஒன்றோடொன்றுமாறுபடுகிற பலபலமதக்கோட்பாடுகளையும், பலபலதெய் வங்களையும், பலபல உபாசனைவகைகளையும்
எம்பெருமான் அமைத்துவைத் தன னாதலால், அவரவர்கூறும் வண்ணம் உள்ளபொருளும் இல்லாதபொருளும்
உருவப்பொருளும் அருவப்பொருளும் ஆகுவன் அவனென்க.
‘பிரமாணமுமில்லை பிரமேயமுமில்லை, ஸர்வமும் சூந்யம்; ஆகையாலே, வேதமும் ஈஸ்வரனும் ஜகத்தும் இல்லை’ என்று
ஸர்வசூந்யவாதிகள் சொன்னால், அவரால் இல்லையெனப்படுகிற அபாவபதார்த்தமும் பகவானதுசொரூபமேயாம் என்பது சித்தாந்தம்.
உரு – ஸ்தூலரூபவஸ்து. அரு – நாமரூபங்களில் லாத சூக்ஷ்மரூபவஸ்து,
“உளனெனி லுள னவனுருவ மிவ்வுருவுக, ளுளனலனெனி லவனருவ மிவ்வருவுக,
ளுளனென விலனென விவைகுண முடைமையி, லுள னிருதகைமையொ டொழிவிலன் பரந்தே” என்ற
திருவாய் மொழிப்பாசுரத்தின் சம்பிரதாயார்த்தம் இங்குக் கொள்ளத்தக்கது.

———-

ஒரு பால் அமரர் ஒரு பால் முனிவர் உடன் இருந்து என்
இரு பார்வையும் உவப்பது என்றோ இடபக் கிரிக்கும்
பொரு பாற் கடற்கும் அயோத்திக்கும் பொன் துவரா பதிக்கும்
நிருபா வைகுந்தமும் நீ வீற்று இருக்கின்ற நீர்மையுமே -100-

(இ – ள்.) இடபக்கிரிக்கும் – திருமாலிருஞ்சோலைமலைக்கும்,
பொருபால் கடற்கும் – (அலைகள்) மோதப்பெற்ற திருப்பாற்கடலுக்கும்,
அயோத்திக்கும் – திருவயோத்திக்கும்,
பொன் துவராபதிக்கும் – அழகிய திருத் துவாரகைக்கும்,
நிருபா – தலைவனே! –
வைகுந்தமும் – ஸ்ரீவைகுண்டத்தையும்,
நீ வீற்றிருக்கின்ற நீர்மையும் – (அதில்) நீ எழுந்தருளியிருக்கின்ற அழகையும்,
ஒரு பால் அமரர் ஒரு பால் முனிவருடன் இருந்து என் இரு பார்வையும் கொண்டு உவப்பது – ஒருபக்கத்தில் நித்யசூரிகளுடனும்
மற்றொரு பக்கத்தில் முக்தர்களுடனும் (யான்) கூடியிருந்து எனது இரண்டுகண்களை யுங்கொண்டு (சேவித்துப்) பரமாநந்தமடைவது,
என்றோ – எந்நாளோ!

இங்ஙனம் தமது ஆதரத்தைக் கூறியதனால், விரைவில் எனக்குப் பரமபதம் அளித்தருளவேணுமென்று பிரார்த்தித்தவாறாம்.
இருவினைப் பாசபந்தத்தினுட்பட்டு இப்பொழுது பத்தாத்மாவாயிருக்கிற யான் அந்தப் பந்தம் ஒழிந்து வீடுபெற்று முக்தனாகி
அங்கு நித்யமுக்தர்களின் கோஷ்டிநடுவே யிருந்து ஸ்ரீவைகுண்டநாதனைத் தரிசித்துக் கிருதார்த்தனாவது எப்பொழுதோ? என்றார்.
இது இப்பிரபந்தத்தின் ஈற்றுச்செய்யு ளாதலால், இதில், தமது முக்கியமான பிரார்த்தனையை வெளியிட்டு,
அவ்வளவோடு இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.

மரணமில்லாதவ ரென்று பொருள்படும் “அமரர்” என்ற வடசொல், இங்கு, நித்யசூரிகளைக் குறித்தது;
திருவாய்மொழியில் “அயர்வறு மமரர்கள்” என்றவிடத்துப் போல:
அவராவார் – பிறப்பு இறப்பு இல்லாமல் எம்பெருமான்போலவே என்றும் ஒருநிலையாகப் பரமபதத்தில் வாழ்கிற
அநந்தகருட விஷ்வக்ஸேநர் முதலியோர்; இவர்கள் முற்காலத்தும் நிரந்தரமான பகவ தநுபவத்தை யுடையவர்கள்.
மநநசீலர் (அதாவது கடவுளை எப்பொழுதுந் தியானிப்பவர்) என்று பொருள்படுகிற “முனிவர்” என்ற சொல், இங்கு முக்தர்களைக் குறித்தது;
அவராவார் – இவ்வுலகங்களிற் கருமவசத்தராயிருந்து பின்பு கடவுளருளாற் பிறப்பையொழித்து முத்திபெற்றவர்.
இவ்விருதிறத்து அடியவருமே பரமபதத்திலுள்ளார்.

எம்பெருமானது ஐவகைநிலைகளுள், அர்ச்சை, வியூகம், விபவம் என்ற வற்றை உட்கொண்டு
‘இடபக்கிரிக்கும் பாற்கடற்கும் அயோத்திக்கும் துவ ராபதிக்கும் நிருபா’ என்று விளித்தார்.
இவற்றில், அர்ச்சை – விக்கிரகரூபங்களில் ஆவிர்ப்பவித்தல்;
அங்ஙனம் எழுந்தருளியிருக்குந் திவ்வியதேசங்கள் பலவற்றுள்ளும் இங்குத் தலைமைபற்றி, இடபகிரி எடுத்துக் கூறப்பட்டது.
வ்யூஹமாவது – வாசுதேவ சங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்கு ரூபத்துடன் திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் நிலை.
விபவமாவது – மத்ஸ்யாவதாரம் முதலிய அவதாரங்கள்; அவை பலவற்றுள்ளும், தலைமை பற்றி, இராமகிருஷ்ணாவதாரங்கள் இங்குக் கூறப்பட்டன;
“மாநீரயோத்தி வணபூந்துவரை” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
அயோத்தி – அயோத்யா என்ற வடசொல்லின் விகாரம்; அது, (பகைவராற்) போர்செய்து வெல்லமுடியாததென்று காரணப்பொருள்பெறும்.
துவராபதி – த்வாரவதீ என்ற வடசொல்லின் விகாரம்.

———-

தற் சிறப்புப் பாசுரம் –

அலங்கார ருக்குப் பரமச் சுவாமிக்கு அழகருக்குக்
கலங்காப் பெரு நகரம் காட்டு வார்க்குக் கருத்தன்பினால்
நலங்காத சொல் தொடை யந்தாதியைப் பற்ப நாபப் பட்டன்
விலங்காத கீர்த்தி மணவாள தாசன் விளம்பினனே –

(இ – ள்.) அலங்காரருக்கு பரமச்சுவாமிக்கு அழகருக்கு – அலங்கார ரென்றும் பரமஸ்வாமியென்றும் அழகரென்றும் திருநாமங்களை யுடையவ ரும்,
கலங்கா பெரு நகரம் காட்டுவார்க்கு – அழிவில்லாத பெருமையுடைய ஸ்ரீவைகுண்ட நகரத்தை(த் தமது
அடியவர்கட்கு வாழுமிடமாக)க் காண் பித்தருள்பவருமாகிய எம்பெருமான் விஷயமாக, –
கருத்து அன்பினால் – மனத்திற்கொண்ட மெய்யன்பினால், –
நலங்காத சொல் தொடை அந்தாதியை – (காலபேதத்தால்) வாடுதலில்லாத சொன்மாலையாகிய இந்த அந்தா திப்பிரபந்தத்தை,
பற்பநாபப்பட்டன் விலங்காத கீர்த்தி மணவாளதாசன் – ஸ்ரீமந்நாராயணனது திருவவதாரமான பெரியபட்டரை (ஆசிரயித்து அவரைவிட்டு)
நீங்காதிருத்தலாகிய புகழையுடைய அழகியமணவாளதாசன்,
விளம்பினன் – விண்ணப்பஞ்செய்தான்; (எ – று.)

பரமச்சுவாமியென்பது அழகர்க்கு ஒருதிருநாமமாதலை, “நேமியம்பரம சாமிவாழி,” “பிரமர்போற்றிய பரமசாமி” என்ற
அழகர்கலம்பகத்தாலும் அறிக. பரமஸ்வாமீ என்ற வடமொழிப்பெயர், சிறந்த தலைவனென்று பொருள்படும்:
தலைவராவார்யாவர்க்கும் மேம்பட்ட தலைவனென்க.
‘கலங்காப் பெருநகரங்காட்டுவான்’ என்ற தொடர், மூன்றாந்திருவந்தாதியில் வந்துள்ளது;
ஒருகலக்கமுமில்லாதிருக்கிற பெரிய இராசதானியான பரமபதத்தை
“வானவர் நாட்டையும் நீகண்டுகொள்ளென்று வீடுந்தரும் நின்றுநின்றே” என்றபடி அடியார்க்குத் தந்தருள்பவரென்க.
கருத்தன்பினால் விளம்பினன் என இயையும். சொல்தொடை – சொற்கள்கொண்டு தொடுத்த பாமாலை.
சிறிதுபொழுது கழிந்தவளவிலே வாடுமியல்பினதான பூமாலையினும் பாமாலைக்கு உள்ள சிறப்புத் தோன்ற,
அதற்கு ‘நலங்காத’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
மற்றும் இந்த அடைமொழியினால், இப்பிரபந்தம், அழகரருளால், சொல்வழு பொருள்வழு இல்லாது
“சொன்னோக்கும் பொருணோக்குந் தொடைநோக்கு நடைநோக்குந் துறையினோக்கோடு, எந்நோக்குங் காண இலக்கிய” மாய்
அமைந்ததென்று கொண்டாடிக் கூறியதுமாம்.

பத்மநாபன் என்ற வடமொழி, பற்பநாபனெனச் சிதைந்தது; தாமரை மலரை நாபியிலுடையவ னென்பது, இதன் பொருள்.
இது, திருமாலின் திருநாமங்களில் ஒன்று. ஸ்ரீரங்கநாதனே திருவருளினாற் கூரத்தாழ்வான் குமாரராய்த் திருவவதரித்தமைபற்றி,
அப்புதல்வர்க்கு ஸ்ரீரங்கராஜபட்டரென்றும், திருவரங்கப்பெருமாள்பட்டரென்றும் திருநாமங்கள் வழங்கும்;
அப்பெயரின் பரியாயநாமமாக ‘பற்பநாபப்பட்டன்’ என்றார். “நிழலின் நீங்கான்” என்றபடி ஆசாரியனைவிட்டுப்பிரியாது
உடனிருந்து வழிபடுதல் சீடனுக்கு இன்றியமையாத தாதலால், அங்ஙனம் தாம் பட்டரை விட்டு நீங்காதவ ரென்பார்,
பற்பநாபப்பட்டன் விலங்காத கீர்த்தி மணவாள தாசன்’ என்றார்;
“ஆசார்யன்செய்த வபகாரமானவது, தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் –
தேசாந், தரத்தி லிருக்க மனந்தான் பொருந்த மாட்டாது, இருத்தலினி யேதறியோம் யாம்,”
“தன்னாரியனுக்குத் தானடிமை செய்வத வன், இந்நாடுள்தன்னி லிருக்கும்நாதன் –
அந்நே, ரறிந்து மதிலா சையின்றி யாசாரியனைப், பிரிந்திருப்பாரார் மனமே பேசு” என்றார் பெரியாரும்.
பட்டர் – எம்பாருடைய சிஷ்யர்: பண்டிதர்க்கு வழங்குகின்ற பட்டரென்ற பெயர், இவர்க்குச் சிறப்பாக வழங்கும்;
இவர், ஸ்ரீபாஷ்யகாரரால் நாமகரணஞ்செய்தருளப்பெற்றவர்.

இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப் பிறன்போலும் பாயிரங் கூறியது. (பிரயோகவிவேகநூலார்
“இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது,” “வடநூலார் தாமே பதிகமும் உரையுஞ் செய்வார்”,
“இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதிணென் கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப் பின்னாகப்
பதிகங்கூறுவதுங் காண்க” என்றவை கருதத்தக்கன), இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.அழகரந்தாதி முற்றிற்று.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திரு அழகரந்தாதி –61-80-

February 22, 2022

பாவிக்கு அமல விரிஞ்சற்கு இறையவர் பத்தர் தங்கள்
ஆவிக் கமலத்து வீற்று இருப்பார் அளிப்பாடல் கொண்ட
வாவிக் கமல மண நாறும் சோலை மலையைக் கண்ணால்
சேவிக்க மலம் அறும் மனமே எழு செல்லுதற்கே –61-

(இ – ள்.) மனமே -!-
பாவிக்கு – தீவினையுடையனான எனக்கும்,
அமல விரிஞ்சற்கு – பரிசுத்தனான பிரமனுக்கும்,
இறையவர் – தலைவரும்,
பக்தர்தங்கள் ஆவி கமலத்து வீற்றிருப்பார் – பக்தியுள்ள அடியார்களது இதயகமலத்திலே எழுந்தருளியிருப்பவருமான எம்பெருமானது,
அளி பாடல் கொண்ட வாவி கமலம் மணம் நாறும் சோலைமலைனய – (தாமரை முதலிய நீர்ப்பூக்களில் மொய்த்தற்கு வருகின்ற)
வண்டுகளின் இசைப்பாட்டைக் கொண்ட தடாகங்களின் நீர் (அம்மலர்களின்) நறுமணம்வீசப்பெற்ற திருமாலிருஞ்சோலைமலையை,
கண்ணால் சேவிக்க -கண்களால் தரிசித்த மாத்திரத்திலே,
மலம் அறும் – (நமது) தீவினைகள் தீரும்; (ஆதலால்),
செல்லுதற்கு எழு – (அங்குப்) போதற்குச் சித்தமாவாய்; (எ – று.)என்று, தம்நெஞ்சைநோக்கி இதமுணர்த்தியவாறாம் .

யாநைச்நுஸந்தாநத்தால் தன்னினுங் கீழ்ப்பட்டா ரில்லை யென்று கொண்டு அங்ஙனம் மிகத்தாழ்ந்தவனான எனக்கும்,
எல்லாத்தேவர்களையும் படைத்த கடவுளாதலால் மிக்கமேன்மையுடையனாகிற பிரமனுக்கும்
ஒரு நிகராக இயல்பிலே தலைவராய் நிற்பவர் ஸ்ரீமந்நாராயணமூர்த்தி யென்பார், “பாவிக்கு அமல விரிஞ்சற்கு இறைவர்” என்றார் .
பாவிக்கு என்றது, தன்னையே படர்க்கையாகக் கூறியது: தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.
(இனி, (தந்தையானபிரமனதுதலையைக் கிள்ளிப் பிரமஹத்திதோ ஷம்பெற்றதனாற்) பாதகமுடையனான சிவனுக்கும்,
(அங்ஙனம்நிரபராதி யான தனது தலையை அவன்கிள்ளியதற்குத் தானும் எதிரொன்று செய்து தீவினைக்கு உள்ளாகாது
அப்பிழையைப் பொறுத்துப்) பரிசுத்தனாய்விளங்கிய பிரமனுக்கும் தலைவ ரென்று உரைத்தலு முண்டு;
திரிமூர்த்திகளுள் மற்றையிருவர்க்குந் தலைவ னென்க.
“பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும், நாயக னவனே
கபாலநன்மோக்கத்துக் கண்டுகொண்டுமின்” என்ற திருவாய்மொழியும்,
அதன் வியாக்கியானத்தில் ‘நீங்கள் ஈஸ்வரர்களாக ஸங்கித்தவர்க ளிருவரும் நின்ற நிலை கண்டதே!
ஒருவன் தலைகெட்டு நின்றான், ஒருவன் ஓடுகொண்டு ப்ராயஸ்சித்தியாய் நின்றான்.
ஓட்டை யோடத்தோடு ஒழுகலோடமாய், உங்கள் குறைதீரப் பற்றுகிற நீங்கள்உங்களிலும் பெருங்குறைவாளரையோ பற்றுவது!
“பாதகியாய்ப் பிக்ஷை புக்குத் திரிந்தான்” என்று நீங்களே சொல்லிவைத்து, அவனுக்கே பரத்வத் தைச் சொல்லவோ!
ஒருவனுடைய ஈஸ்வரத்வம் தலையோடே போயிற்று;
மற்றவனுடைய ஈஸ்வரத்வம் அவன் கையோடே காட்டிக் கொடுக்கிறார்’ என்றதும் இங்கு அறியத்தக்கவை.
“பிரமன் சிவனிந்திரன் வானவர் நாயக ராய, எங்களடிகள்” என்றார் திருமங்கையாழ்வாரும்.)

“மலர்மிசை யேகினான்” என்றபடி அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தில் எம்பெருமான் அவர் நினைந்த
வடிவோடு விரைந்துசென்று சேர்தலால், ‘பத்தர் தங்களாவிக்கமலத்து வீற்றிருப்பார்’ என்றார்; ஆவி – உயிர்;
இங்கு, இலக்கணையாய் மனத்தைக்குறித்தது.
கமலம் என்ற வடசொல் – தாமரையையேயன்றி நீரையும் உணர்த்துதலை “ஸலிலம் கமலம் ஜலம்’ என்ற வடமொழி நிகண்டினாலும் அறிக;
“வநசமும் புனலும் கமலமெனப்படும்” என்பது, பிங்கலந்தை.
மூன்றாமடியில் “கமலம்” என்பதற்கும் தாமரையென்று பொருளுரைத்தல், திரிபிலக்கணத்துக்கு மாறாம்;
இரண்டாமடியில் அச்சொல் அப்பொருளில் வந்ததனால். பாடல் – பாட்டுக்கு ஆகுபெயர்.
இறையவர் – இறைமையென்னும் பண்பினடியாப்பிறந்த பலர்பாற்பெயர். பத்தர்தங்கள் என்றவிடத்து, தம் – சாரியை.
வண்டுகளின் இசைப்பாட்டைக் கொண்ட வாவி யென்றும், வாவிநீர் மணநாறு மென்றுஞ் சொன்னதனால்,
அவ்வாவிகளிலுள்ள நீர்ப்பூக்களின் நறுமணமிகுதி கூறியவாறாம்.

—————

செல்லுக் குவளை குழல் நாட்டம் என்று தெரிவையர் பால்
பல் உக்கு வளை முதுகு ஆம் தனையும் புன் பாட்டு உரைப்பீர்
அல்லுக்கு வளை உழும் பாண்டி நாட்டை அடைந்து நுங்கள்
சொல்லு கு அளை உண்டார்க்கு அலங்காரர்க்கு சூட்டுமினே–62-

(இ – ள்.) “குழல் நாட்டம் – (மகளிரது) கூந்தலும் கண்களும்,
செல்லு குவளை – (முறையே) மேகத்தையும் நீலோற்பலமலரையும் போலும்”, என்று -,
தெரிவையர்பால் – அம்மாதர்களிடத்து,
பல் உக்கு வளை முதுகு ஆம் தனையும் புல் பாட்டு உரைப்பீர் – பற்கள்விழுந்து கூன்வளைந்த முதுகை
யுடையராமளவும் இழிவானபாடல்களைப் பாடிப்புகழ்ந்து ஏங்கிநிற்பவர்களே! – (இனியாயினும் நீங்கள்),
அல்லுக்கு வளை உழும் பாண்டிநாட்டை அடைந்து – இராப்பொழுதிலே சங்குகள் (நிலத்தில்) உழுது செல்லப்பெற்ற பாண்டியநாட்டைச் சேர்ந்து,
நுங்கள் சொல்லு – உங்கள்சொன்மாலைகளை,
கு அளை உண்டார்க்கு அலங்காரர்க்கு சூட்டுமின் – பூமியையும் வெண்ணெயையும் அமுதுசெய்தவராகிய அழகர்க்குச் சமர்ப்பியுங்கள். (எ – று.)
என்று, பெண்ணாசைகொண்டு அவர்களுடம்பினழகில் ஈடுபட்டு அவர்களைக் குறித்துப் பலவாறு
வர்ணித்துக் கவிபாடித்திரியுஞ் சிற்றறிவாளராகிய புலவர்க்கு அறிவுறுத்தியவாறாம்.

செல்லுப்போலுங் குழல், குவளைபோலும் நாட்டம் என முறையே சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
“பல் லுக்கு வளை மூதுகாந்தனையும்” என்றது, நீங்கள் மிக்கமுதுமை யடையுமளவும் என்றவாறாம்;
லௌகிகசுகாநுபவத்துக்கு உரிய யௌவநபருவம் கழிந்து நெடு நாளான பின்பும் ஸ்திரீசாபல்யத்தை விட்டிலீரென்க.
இதற்கு – அம்மாதர்கள் மிக்கமுதுமையடையுமளவும் என்றும் பொருள்கொள்ளலாம்;
அவர்கள் இளமைகழிந்து முற்றமூத்தபின்னரும் நீங்கள் அவர்களைப் பாராட்டுதலை விட்டிலீர்: இது என்ன பேதைமை! என்றவாறு.
புன்பாட்டு – சிற்றின்பப் பாடல்; இயல்பிற் சிறப்பில்லாதவற்றைக் குறித்து வீணே சிறப்பித்துச் சொல்லும் பயனில்பாடல்.
சங்குகள் நீர்வளம்மிக்கஇடத்தே வாழ்தல்இயல் பாதலால், அவைஉழும்பாண்டிநாடு என அந்நாட்டின் நீர்வளச்சிறப்பை யுணர்த்தியவாறாம்.
உழும் – சேற்றுநிலத்திலே உழுவதுபோலக் கீற்றையுண் டாக்கிக்கொண்டு செல்லுமென்க;
“மானத்துவண்டலுழ” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
பகலிலே உழவர்கள் உழ இரவிலே சங்குகள் உழுமென ஒருகருத்து அமைய, “அல்லுக்கு வளையுழும்” எனப்பட்டது.
அச்சங்குகள் பகலிலே உழவரதுஉழுபடைக்கு அஞ்சி ஒளித்திருக்கு மென்றும்,
அவ்வுழுபடைச்செலவில்லாத இராக்காலத்திலே அவை வெளிப்பட்டு உழுமென்றுங் காண்க.
எம்பெருமான் பூமியைஉண்ணுதலாவது – பிரளயகாலத்தில்அதனை வாயினுட்கொண்டு வயிற்றினுள்வைத்துக் காத்தல்.
வெண்ணெயை உண்ணுதல், கிருஷ்ணாவதாரத்திலே திருவாய்ப்பாடியில்வளர்ந்த குழந்தைப்பருவத்திலென்க.
அமுதுசெய்யுமிடத்து நிலவுலகத்தோடு வெண்ணெயோடு வாசியில்லை ஸர்வசக்தனான எம்பெருமானுக்கு என்பார்,
“கு அளை உண்டார்க்கு என்றார்; வெண்ணெயைப்போலவே நிலவுலகத்தையும் மிக எளிதில் உண்ப னென்க.
“சிறிதமுது, செய்ய அளைக்கும் புவிக்கு மங்காந்த செவ்வாய் முகுந்தன்” என்று திருவரங்கத்தந்தாதியிலும்,
“தாரணியும், பின்பங்களையு மிழுது முண்டான்” என்று திருவேங்கடத்தந்தாதியிலும் கூறியமை காண்க.
“சூட்டுமின்” என்ற வினையின் ஆற்றலால், சொல் – மாலை யெனப்பட்டது.

(வானத்திற்) செல்லுந்தன்மையது என்பதுபற்றி, செல் என்று மே கத்துக்குக் காரணக்குறியாம்.
செல்லு, அல்லுக்கு, சொல்லு என்ற இடங்களில், உ – சாரியை. நாட்டம் . நாடுதற்கருவி.
தெரிவையர் என்பது, இங்குப் பருவப்பெயராகாமல் மகளிரென்ற மாத்திரமாய் நின்றது:
அப்பருவத்துக்கு வயதெல்லை – இருபத்தாறுமுதல் முப்பத்தொன்றளவு மென்பர்.
உக்கு என்பதை உகஎனச் செயவெனச்சத்திரிபாகக் கொள்ளுதல், இங்கு இலக்கணத்திற்கு ஏற்கும்;
பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடிதலால் அல்லுக்கு என்பது – இரவில்எனப் பொருள்பட்டதனால் உருபுமயக்கம்.
பாண்டிநாடு – பாண்டியநாடு என்பதன் மரூஉ.

————-

மேகவிடு தூது

சூட்டு ஓதிமம் சென்று சொல்லாது என் காதலை தும்பி இசைப்
பாட்டு ஓதி மங்கையரும் பணியார் பண்டு கல் மழைக்காகக்
கோட்டு ஓதி மம் எடுத்தார் சோலை மா மலைக்
கோவலனார் மாட்டு ஓதி மஞ்சினங்காள் உரைப்பீர் மறு வாசகமே –63–

(இ – ள்.) மஞ்சு இனங்காள் – மேகக்கூட்டங்களே! –
சூடு ஓதிமம் – உச்சிக்கொண்டையையுடைய அன்னப்பறவையானது,
சென்று என்காதலை சொல்லாது – (என்தலைவரிடத்துப்) போய் என் ஆசைநோயை (அவர்க்கு) எடுத்துச்சொல்லமாட்டாது;
தும்பி இசை பாட்டு ஓதி மங்கையரும் பணியார் – (சூடியமலர்களில் மொய்க்கின்ற) வண்டுகளின்
இசைப் பாட்டையுடைய கூந்தலையுடையமாதர்களும் (என்காதலை என்தலைவர்க்குச்) சொல்ல மாட்டார்;
பண்டு – முன்பு (ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில்),
கல்மழைக்கு ஆ – கல்மழையைத் தடுத்தற்காக,
கோடு ஓதிமம் எடுத்தார் – (உயர்ந்த) சிகரத்தை யுடைய (கோவர்த்தநமென்னும்) மலையை எடுத்துக் குடையாகப்பிடித்தவரும்,
சோலை மா மலை கோவலனார்மாட்டு – திருமாலிருஞ்சோலைமலையி லெழுந்தருளியிருக்கிற ஆயனாருமாகிய அத்தலைவரிடத்து,
ஓதி – (நீங்களாயினும் என்காதலைச்) சொல்லி,
மறு வாசகம் உரைப்பீர் – (அவர்சொல்லும்) மறுமொழியை (வந்து எனக்கு)ச் சொல்லுங்கள்; (எ – று.)

கார்காலத்தில் மீண்டுவருவதாகக் காலங்குறித்துச்சென்ற தலைவனைப் பிரிந்த தலைவி, அப்பிரிவுத்துயரை
யாற்றமாட்டாது பலவாறுவருந்தும் போது, இன்னதுசெய்வதென்று அறியாது திகைத்து “வானமேநோக்கும் மையாக்கும்” என்றபடி
அண்ணாந்து வானத்தை நோக்குமளவிலே, அங்குச் செல்லுகின்ற மேகங்கள் கட்புலனாக,
அவற்றைப் பார்க்குமிடத்து அவை நிறம்முதலியவற்றால் எம்பெருமானுக்குப் போலியாய் விளங்கக் கண்டு
இவை நமக்கும் தமது தலைவர்க்கும் இனியனவாமென்றுகொண்டு அவற்றை நோக்கி
‘எனது நிலைமைகளை எனதுதலைவரான திருமாலிருஞ்சோலையழ கர்பக்கல்சொல்லி அதற்கு அவர் அருளிச்செய்கிற
மறுமொழிகளைக் கேட்டு மீண்டுவந்து எனக்குச் சொல்லுமாறு நீங்கள் தூதாகவேண்டும்’ என வேண்டுகிறாள்.
“கொண்டல்கா ளும்மைக்குறித்தே தொழுகின்றேன்,
அண்டர் காணா வரங்கத்தம்மானைக் – கண்டும்
மனத்துளவத்தைப்படு மென் மைய லெல்லாஞ் சொல்லிப்,
புனத்துளவத்தைக் கொணரீர் போய்” என்றார் திருவரங்கக்கலம்பகத்திலும்.

(“விதியினாற்பெடைமணக்கும்மென்னடையவன்னங்காள்,”
” இடரில் போகம்மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள்,”
“அலர்மேலசையுமன்னங் காள்,”
“தடம்புனல்வாயிரைதேர்ந்து, மிகவின்பம்படமேவும்மென்னடைய வன்னங்காள்” என்றபடி)
அன்னப்பறவை, சிரமம்பொறாததும், மந்தகதி யுடையதும், இனிய இடத்தில்வீற்றிருந்து கிடைத்தஇரையை உண்டு
பிரிவுத் துயரறியாது தானும் தன்துணையும் கூடிவாழ்ந்து களித்திருப்பதும், தன்னலம் பேணுவது மாதலால்,
அது அந்தப்போகத்தைவிட்டு எனக்காக அவ்வளவுதூரம் வருந்திச்சென்று விரைவில் என்நிலைமையைத் தலைவர்க்குச் சொல்லி
நேரில் மீண்டுவந்து அவர்சொல்லை எனக்குச் சொல்ல மாட்டா தென்பாள், “சூட்டோதிமம் சென்று சொல்லாது என்காதலை” என்றாள்;
(“வாயான் மலர்கோதி வாவிதொறு மேயுமோ,
மேயாம லப்பால் விரையுமோ – மாயன்,
திருமோகூர்வா யின்றுசோருமோ நாளை,
வருமோ கூர்வாயன்னம் வாழ்ந்து” என்று நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில்) ஐயமுற்றுக் கூறியதும் இதுபற்றியே.
“இன்னன்னதூ தெம்மை யாளற்றப்பட்டிரந் தாளிவளென்று,
அன்னன்னசொல்லாப் பெடையொடும் போய்வரும் நீலமுண்ட,
மின்னன்னமேனிப்பெருமானுலகிற் பெண்தூதுசெல்லா,
அன்னன்னநீர்மைகொலோ குடிச்சீர்மையி லன்னங்களே” என்று ஆழ்வார் தாம் அன்னங்களைத் தூதுசென்றுதவுமாறு வேண்டவும்
அதுசெய்யாதஅப்பறவை களைக்குறித்து வெறுத்து உரைத்ததுங் காண்க.
(“நயந்தவின்பச், சேவல் தழீஇச்சென்று தான் துஞ்சும் யான் துயிலாச் செயிர்,
எங்காவல் தழீஇய வர்க்கு ஓதாது அளிய களியன்னமே” என்றார் திருக்கோவையாரிலும்.)

சுகதுக்கங்களிலெல்லாம் எமக்குத்துணையாயிருந்து உதவுகின்ற பாங்கியரைத் தூதனுப்பலாமென்று பார்த்தாலோ,
அவர்கள் எம்மோடொத்த பருவமுடைய இளமகளிராதலால், அத்தலைவனழகிலீடுபட்டு ஆழ்ந்திடுவரே யன்றி
என்காதலை அவனிடம்சொல்லி மறுமொழிகொண்டு மீண்டுவரக் கடவரல்ல ரென்பாள், “என்காதலை மங்கையரும் பணியார்” என்றாள்.
இயற்கையழகுடனே மலர்சூடுதலாலாகுஞ் செயற்கைநலனுஞ் செய்துகொண் டிருப்பவரென்னும் பொருளில்,
‘தும்பியிசைப்பாட்டோதி மங்கையர்’ எனப் பட்டனர்.
உத்தமஅங்கமான தலையி லுள்ள கூந்தலினழகை எடுத்துக்கூறியது, மற்றையழகுக்கும் உபலக்ஷணம்.
மங்கையர்க்கு “ஓதி” என்ற அடைமொழி கொடுத்ததற்கு ஏற்ப, ஓதிமத்துக்கு “சூடு” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

எம்மை முன்புஒருகால் தடுத்திட்டவ ரென்று மேகங்கள் அருகிற்செல் லுதற்கு அஞ்சிடாமைப்பொருட்டு,
‘அவர் முன்பு இடைச்சாதியில் வளர்ந்தது பற்றி அச்சாதிதருமத்துக்குஏற்பப் பசுக்களைக் காக்கப்புக்கவிடத்தும்,
அவற்றிற்கு இடையூறுசெய்யத்தொடங்கிய உங்கட்கு எதிராக இடையூறொ ன்றுஞ் செய்யாது,
தம்மையும் தம்மைச்சார்ந்த உயிர்களையும் பாதுகாத்தவளவோடு நின்றருளின ராதலால்,
அதுகுறித்து நீங்கள் அஞ்சவேண்டுவதில்லை’ யென்பாள், ‘பண்டுகன்மழைக்காக்கோட்டோதிமமெடுத்தார் கோவலனார் மாட்டு என்றாள்.
அவர் இருக்கிற இடம் நீங்கள்உஙகள் காறியத்திற்காகவே இனிது சென்றுசேரத்தக்க இட மென்பாள், சோலைமாமலையைக் கூறினாள்;

“வருமழைதவழும்மாலிருஞ்சோலைத்திருமலை” என்றிறே ஆழ்வாரருளிச்செயல்.
கருக்கொண்ட மேகங்கள் சென்று உயர்ந்த மலைச்சிகரத்தில் தங்கி இளைப்பாறிக் கருமுதிர்ந்து மழைபொழிதல், இயல்பு.
உங்கள் காரியத்திற்காக இனத்தோடு உல்லாசமாகப்போய்வரும்போது என்காரியத்தையும் செய்து உதவுங்கள்,
எனக்கென்று தனியே சிரமப்பட்டுச் செல்லவேண்டுவதுமில்லை யென்றாளாம்.
அவரையழைத்துக்கொண்டுவருதல், அல்லது அவர்சாத்திய மாலையைவாங்கிவருதல்செய்ய இயலாதேனும்,
அவர்சொல்லும் உத்தரங்களை எனக்குவந்துசொல்லுதலாவது செய்தால், அவ்வளவுகொண்டே யான்
ஆறியிருப்பே னென்பாள், “ஓதி உரைப்பீர் மறுவாசகம்” என்றாள்.
“என் திருமார்வற் கென்னை யின்னவாறிவள்காண்மினென்று,
மந்திரத்தொன்றுணர்த்தி யுரையீர் மறுமாற்றங்களே” என்றார் ஆழ்வாரும்.

“என்காதலை” என்பதை மத்திமதீபமாக முன்நின்ற “சொல்லாது” என்றதனோடும், பின்நிற்கும் ‘பணியார்’ என்பதனோடுங் கூட்டுக.
இசைப்பாட்டு – சங்கீதம்; என்றது, இங்கு, ரீங்காரத்தை, ஓதி – பெண்களின் தலைமயிர்;
(ஓதிஐம்பால் கூந்தல் கோதை முதலிய சில – மகளிர்தலைமயிர்க்கும், குஞ்சி குடுமி சிகை பங்கி முதலிய சில –
ஆடவர்தலைமயிர்க்கும் உரியனவாக வழங்கும்; பிறபலவற்றை இருபாலார்தலைமயிர்க்கும் பொதுப்படவழங்குவர்.)
உம்மை – இறந்ததுதழுவியஎச்சம். மாட்டு – ஏழனுருபு. வாசகம் – வடசொல்.

ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே, அவனது நிரந்தராநுபவத்தைப் பெற
விரும்பிய ஐயங்கார், தமது நிலைமையை அப்பெருமான்சந்நிதியில் விண்ணப்பஞ்செய்து அவனருளிச் செய்யும்
மறுமொழிகளைத் தம்மிடம் வந்து உரைக்கும்படி குணஞ்செயல்களில் அவனோடொத்தவரான
பாகவதர்களைப் பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறை பொருள்.
உரியகாலத்தில் எம்பெருமான துகுணக்கடலிலே படிந்து அதில் நீர்மையை உட்கொண்டு ஸாரூப்யத்தால்
அவன்திருமேனியையொக்கும்வடிவு பெற்று உயிர்களைஉய்வித்தற்காகப் பலவிடங்களிற் சஞ்சாரம் பண்ணி
ஆங்காங்குக் கைம்மாறுகருதாதே கருணைமழைபொழிந்து நன்மை விளைத்துப் பிறரை வாழ்வித்தலே பேறாக ஒழுகி
உலகமும் உறுதிப் பொருள்களும் நடத்தற்கு ஏதுவாய் இன்றியமையாமைபெற்று விஷ்ணுபதத்தைச் சார்ந்து
தெற்குத் திருமலையாகிய திருமாலிருஞ் சோலைமலையிற் சென்று சேர்தற்குப் பிரயாணப்பட்ட பாகவதர்களை,
உரியகாலத்திற் கடலிலே படிந்து அதன் நீரை உட்கொண்டு மின்னலோடு கூடிய நீலநிறத்தால்
திருமகளை மார்பிற்கொண்ட திருமாலின் திருமேனியை ஒத்து உயிர்களை உய்விக்குமாறு பலவிடங்களில் திரிந்து
கைம்மாறுகருதாது மழைபொழிந்து பயன்விளைத்து உலகத்தைவாழ்வித்தலே பேறாக ஒழுகி வான்சிறப்பிற்கூறியபடி
உலகமும் உறுதிப்பொருள்களும் நடத்தற்கு ஏதுவாய் இன்றியமையாத தாகி, விஷ்ணுபத மெனப்படுகின்ற
வானத்தைச் சார்ந்து திருமாலிருஞ்சோலைமலையைக் குறித்துச் செல்லும் மேகங்களென்னத் தகும்.

இங்ஙனம் தமது ஆற்றாமையை ஒருவர்முகமாக அவனுக்கு அறிவிக்க நினைத்து முன்பு சிலரை ஆசாரியராகவரிக்க,
அவர்கள் ஸாராஸாரவிவேகமும் பெரும்பான்மை சுத்தகுணமும் நன்னடையும் மற்றையோரினும்மேம்பாடும்
விலக்ஷணமானதன்மையும் உடையராயிருந்தும், ஸ்வகாரியபரராய்த் தம்காரியஞ்செய்யாதுவிட்டமை கூறுவார்,
“சூட்டோதிமம் சென்றுசொல்லாது” என்றார்
என்னினும் மேம்பட்டவர் என்னை ஈடேற்றக்கடவரேயன்றி என்னோடொத்த அன்பர்கள் என்னையீடேற்றுதற்கு
வல்லராகா ரென்பது, “மங்கையரும் பணியார்” என்றதன் போக்கு.
‘பண்டுகன்மழைக்காக் கோட்டோதிமமெடுத்தார் சோலைமாமலைக் கோவலனார்’ – ஒருமலையைக் கையிலெடுத்தும்
மற்றொருமலையிலே தாம்நின்றும் அடுத்தஉயிர்களைப் பாதுகாப்பவர்; அரியன செய்து அடிமைகளைக் காத்து அடியவர்க்கெளியராய் நிற்பவர்.
இந்திரன் கல்மழைபொழிவித்ததனால் அதனைக் கல்மலைகொண்டு தடுத்திட்டனர்,
அவன் நீர்மழைபொழிவித்திருந்தால் அதனை நீர்கொண்டே தடுத்திருப்பர், செயற்கரியன செய்யுந்
திறமுடைய எம்பெருமான் என்ற தாற்பரியம்’ கல் மழைக்காஓதிமமெடுத்தார்’ என்ற சொற்போக்கில் தோன்றுமென்பர் ஆன்றோர்.
கல்மழை – ஆலாங்கட்டிமழை. பிறவுங் கண்டுகொள்க.

—————-

வாசம் பரந்த துழாயும் என் பாடலும் மாலை ஒளி
வீசு அம்பரம் பசும் பொன்னும் என் வேட்கையும் வீற்று இருக்கும்
தேசம் பரம பதமும் என் சிந்தையும் தீ வளி ஆ
காசம் பரவை கண் கண்டு உண்ட மால் அலங்காரனுக்கே –64–

(இ – ள்.) தீ – நெருப்பும்,
வளி – காற்றும்,
ஆகாசம் – வானமும்,
பரவை – கடலும் (நீரும்),
மண் – நிலமும் (ஆகிய ஐம்பெரும்பூதங்களை),
கண்டு, (ஆதியிற்) படைத்து,
உண்ட – (பிரளயகாலத்திலே) விழுங்கியருள்கிற,
மால் – அலங்காரனுக்கு – பெருமையையுடைய அழகப்பிரானுக்கு, –
வாசம் பரந்த துழாயும் என் பாடலும் – நறுமணம் பரவுகின்ற திருத்துழாயும் யான்பாடுஞ் செய்யுளும்,
மாலை – (சாத்தும்) மாலையாம்;
பசும் பொன்னும் என் வேட்கையும் – மாற்றுயர்ந்த பொன்மயமான பீதாம்பரமும் யான்செய்கின்ற பக்தியும்,
ஒளி வீசு அம்பரம் – காந்தியைவீசுகிற (உடுக்கும்) ஆடையாம்;
பரமபதமும் என் சிந்தையும் – ஸ்ரீவைகுண்டமும் அடியேனுடைய மனமும்,
வீற்றிருக்கும் தேசம் – மிக்கசிறப்பாக எழுந்தருளியிருக்கும் இடமாம்; (எ – று.)

எனது மனம் மொழி முதலியவற்றையெல்லாம் ஸர்வநியாமகனும் ஸர்வரக்ஷகனுமான எம்பெருமான் விஷயத்திலே
யான் உபயோகிக்க, அந்த அன்புக்குஏற்றபடி, அப்பெருமானும் என்பக்கல் அன்புசெய்து அவற்றைத் தனக்கு
இனியனவும் உரியனவுமாம்படி அங்கீகரித்தன னென்று அத்திறத்தைச் சொல்லி மகிழ்கிறார்.
எனது சொற்கொண்டு யான் தொடுத்துச் சமர்ப்பித்த பாமாலையை அவன் தனக்கு இனிய திவ்வியமான
நறுந்துழாய்மாலை போலவும், யான் அவன்பக்கல்வைத்த காதலை அவன் தனக்கே உரியதாய்ச் சிறக்கிற
திவ்வியபீதாம்பரம்போலவும், யான் அவனுக்கு இடமாக ஆக்கிய என்மனத்தை அவன் தான் நித்தியமாக
வசிக்குங் கலங்காப்பெருநகரமாகிய பரமபதம் போலவும் போக்கியமாகக்கொண்டருளின னென்பதாம்.
(“புனையுங் கண்ணி யெனதுடைய, வாசகஞ்செய்மாலையே ……………………..
ஈசன்ஞால முண்டுமிழ்ந்த வெந்தை யேகமூர்த்திக்கே,”
“கண்ணியெனதுயிர்காதல்கனகச் சோதிமுடி முதலா, எண்ணில்பல்கலன்களுமேலுமாடையு மஃதே,”
“நெஞ்சமே நீள்நகராக விருந்தவென் தஞ்சனே” என்ற ஆழ்வாரருளிச்செயல்களைத் தழுவியது,
இது, இது, புகழொப்புமைக்கூட்டவணியின் பாற்படும்.

————–

அலங்காரன் சுந்தரத் தோளன் அழகன் அணி முடியில்
இலங்கு ஆரன் ஏறு திரு உடையான் எட்டெழுத்தும் கற்றார்
கலந்கார் அனங்கன் கணையால் செல்வமும் காதலியார்
மலங்கார் அருந்துயர் மேவினும் ஆகுவர் வானவரே –65-

(இ – ள்.) அலங்காரன் சுந்தரத்தோளன் அழகன் – அலங்காரனென்றும் சுந்தரத்தோளனென்றும் அழகனென்றுந் திருநாமங்களை யுடையவனும்,
அணி முடியில் இலங்கு ஆரன் – அழகிய முடியிலே (தரிக்கப்பட்டு) விளங்குகின்ற பூமாலையை யுடையவனும்,
ஏறு திரு உடையான் – (திருமார்பில்) ஏறிவீற்றிருக்கின்ற திருமகளையுடையவனுமான எம்பெருமானுடைய,
எட்டு எழுத்தும் – எட்டு எழுத்துக்களையும் (நாராயணநாமத்தையுட்கொண்ட திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தை),
கற்றார் – (நல்லாசிரியனிடத்திலிருந்து) உபதேசகமாகப் பெற்று ஓதியுணர்ந்தவர்கள், –
அனங்கன் கணையால் கலங்கார் – (காதற்கடவுளான) மன்மதனுடைய அம்புகளினால் மனங்கலங்கார்;
எ செல்வமும் காதலியார் – எவ்வகைப்பொருட்செல்வத்தையும் விரும்பார்;
அருந் துயர் மேவினும் மலங்கார் – பொறுத்தற்கரிய துன்பங்கள் நேர்ந்தாலும் வருந்தமாட்டார்;
வானவர்ஆகுவர் – பரமபதத்தையடைபவராவர்.

இது, பெரிய திருமந்திரத்தின்மகிமை கூறியது. அதனைப் பொருளுடன் உணர்ந்தவர்கள், அதற்கு உரிய பகவத் விஷயத்தில்
மனஞ்செலுத்துவார் களேயன்றி, அதற்குமாறான அர்த்தகாமங்களில் மனங்கலங்கார்,
எவ்வகைத் துயர்வரினும் அஞ்சி நிலைகுலையார், “நஞ்சுதான்கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும்நாமம்” என்பவாதலால்
எல்லாவினைகளுந் தீர்ந்து முத்திபெறுவர் என்பதாம்.
இதற்கு உதாரணம் – பிரகலாதன் முதலிய பரமபாகவதர் பலர். வானவர் ஆகுவர் – முக்தராவர்.

ஏறுதிருவுடையான் – “அகலகில்லே னிறையு மென்றலர்மேன்மங் கை யுறைமார்பன்;”
இனி, இதற்கு – ‘நாட்செல்ல நாட்செல்ல ஏறிவருகிற சம்பத்தையுடையவன்’ என்றும் உரைப்பர்.
இத்தொடர், நாச்சியார்திருமொழியில் வந்துள்ளது. அநங்கன் – அங்கமில்லாதவன்;
சிவபிரானால் எரிக்கப்பட்டு உடம்பை யிழந்தவன். தாமரைமலர் அசோகமலர் மாமலர் முல்லைமலர் நீலோற்பலமலர் என்ற ஐந்தும்,
மன்மதனுக்கு அம்பெனப்படும். எவரிடத்தும் நிலைத்திராது நீங்கிச்செல்வதுபற்றி, “செல்வம்” என்று பெயர்.

————–

வால் நவதார் அணி சுந்தரத் தோளன் முன் மாவலியை
தானவ தாரணி தா என்ற மாயன் தரா தலத்து
மீன் அவதாரம் முதலானவை வினை இன்றி இச்சை
ஆன அது ஆர் அறிவார் அவரே முத்த ராமவரே –66-

(இ – ள்.) வால் – ஒளியுள்ளதும் (அல்லது சுத்தமானதும்),
நவம் – புதியதுமாகிய (அதாவது – அன்றுபூத்த மலர்கொண்டு தொடுக்கப்பட்டது மாகிய),
தார் – மாலையை,
அணி – தரித்த,
சுந்தரம் தோளன் – அழகிய திருத்தோள்களையுடையவனும்,
முன் – முன்பு,
மாவலியை – மகாபலிசக்கரவர்த்தியை,
தானவ தாரணி தா என்ற – ‘அசுரனே! நிலத்தைக்கொடு’ என்று இரந்த,
மாயன் – ஆச்சரியகரமான குணஞ்செயல்களை யுடையவனுமாகிய ஸ்ரீமந்நாராயணன்,
தராதலத்து – நிலவுலகத்திலே எடுத்த,
மீன் அவதாரம் முதலானவை – மத்ஸ்யாவதாரம் முதலியவைகள்,
வினை இன்றிஇச்சை ஆன – கர்மவசத்தினாலல்லாமல் (அவனது) சங்கல்பமாத்திரத்தாலேயே ஆகிய,
அது – அம்மெய்ம்மையை,
ஆர் அறிவார் அவரே – யாவர் அறிவரோ அவர்தாம்,
முத்தர் ஆம் அவர் – முத்திபெறுபவராவர்; (எ – று.)

ஜீவாத்மாக்கள் தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவர ரூபங்களாய்ப் பிறப்பது போலக் கருமவசத்தினா லன்றிப்
பரமாத்மா உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்கள் செய்வது துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின் பொருட்டும்
தருமத்தை நிலைநிறுத்துதற்பொருட்டும் அப்பெருமான் கொண்ட இச்சையினாலேயே யாகு மென்ற இவ்வுண்மையை உணர்தல்,
அவதாரரஹஸ்ய ஜ்ஞாநமெனப்படும்.
இந்தஞானத்தையுடையராய்ப் பகவதவதாரங்களை அவனது சங்கல்பத்தினாலாயவையென்று கொண்டவர்,
அப்பெருமானது அருள் ஆற்றல் அடியவர்க்கெளிமை முதலிய திருக்கல்யாண குணங்களில் ஈடுபட்டுத் துதித்து முத்தியைடைவர்;
அங்ஙனமன்றி, அவ்வவதாரங்களைக் கருமவசத்தாலாயவையென்று கொண்டு இகழ்பவர்நரகமடைவர்என்பது, கருத்து.
“கோதண்டத்தானத்தன் வாள்கதைநேமியன் கோலவட,
வேதண்டத்தா னத்தனின்னிசையான் மண்ணும்விண்ணுமுய்ய,
மூதண்டத்தானத்தவதரித்தானெனின் முத்திவினைத்,
தீதண்டத்தானத்தனுவெடுத்தானெனிற் றீநகரகே” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.

முதலடியில், வான்என்று எடுத்து, மேன்மையான என்றலுமொன்று,
நவ தார் – நிலைமொழி வடமொழியாதலின், வருமொழிமுதல்வலி பொதுவிதிப்படி மிகாது இயல்பாய் நின்றது.
தாநவன் என்றவடசொல் – (காசியபமுனிவனது மனைவியருள்) தநுவென்பவளது சந்ததியா னென்று காரணப்பொருள்பெறும்;
தத்திதாந்தநாமம். இது, இங்கு, அசுரனென்றமாத்திரமாய் நின்றது; மாவலி, திதிமரபினன்.

————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவியைக் குறித்துச் செவிலி இரங்கல்

ஆமவரைப் பணித்து ஆள்வார் அழகர் அயன் உமையாள்
வாம அரைப் பணியான் பணி பாதத்தை வாழ்த்தும் கொங்கை
ஏம வரைப் பணி பூணாள் சந்து ஏந்து இழையாள் உரைத்தால்
வேம் அவரைப் பணியாதே எனும் எங்கள் மெல்லியலே –67-

(இ – ள்.) எங்கள் மெல் இயல் – மென்மையான தன்மையையுடையவ ளாகிய எங்கள் பெண்ணானவள், –
ஆமவரை பணித்து ஆள்வார் – (தம்பக்கல்) அநுகூலராய் வருபவர்களான அன்பர்களை அடிமைகொண்டு ஆள்பவராகிய,
அழகர் – அழகருடைய,
அயன் உமையாள் வாமம் அரை பணியான் பணி பாதத்தை – பிரமனும் பார்வதியைக் கொண்ட இடப்பாகத்தையும்
இடையிற் பாம்புக்கச்சையையு முடையவனான சிவனும் வணங்கப்பெற்ற திருவடிகளை,
வாழ்த்தும் – வாழ்த்துவாள்;
கொங்கை ஏமம் வரை – பொன்மலைபோன்ற தனங்களின் மீது,
பணி பூணாள் – ஆபரணங்களை அணியாள்;
ஏந்து இழையாள் சந்து உரைத்தால் – தரித்த ஆபரணங்களை யுடையளான பாங்கி சமாதானவார்த்தை சொன்னால்,
வேம் – உள்ளமும் உடலும் தவிப்பாள்;
அவரை பணியாதே எனும் – “(சிறிதேனும் அன்பும் அருளு மின்றி என்னைவிட்டுப் பிரிந்துசென்ற)
அத்தலைவரது பிரஸ்தாபத்தைச் சொல்லாதே” என்று சொல்வாள்; (எ – று.)

தலைமகனோடுகூடிப் பிரிந்த தலைமகள் பிரிவாற்றாமையாற் படுகிற பலவகைத்துன்பங்களையுங் கண்டு ஆற்றமாட்டாளான செவிலித்தாய், தன் ஆற்றாமை மிகுதியால் இரங்கிக்கூறியது, இது.

அழகர்பாதத்தை என இயையும். தலைவனைப்பிரிந்திருக்குங் காலத்திலே அணிகலம்அணியவிரும்பாமையும்,
தேசாந்தரஞ்சென்ற தலைவனது க்ஷேமத்தைக்குறித்தே எப்பொழுதுஞ் சிந்தித்தலும், கற்புநலமுடையமகளிரது இயல்பு.
“தலைவனைப்பிரிந்த தலைவியர்பலரும் அப்பிரிவை ஆற்றியிருப்பர்;
அது நீ செய்யாதது என்னே?” என்றும்,
“பிரியேன் பிரியில்தரியேன்” என்றிருக்குமவர் நின்னைப்பிரிந்து நீட்டித்தல் செய்யார்;
அவர்சொன்ன சொற்களையும் அவரதுநற்றிறங்களையும் நீ அறிந்துள்ளா யாதலால், அவர் கடிதின் வருமளவும் பொறுத்திருக்கக்கடவை” என்றும்,
மற்றும் பலவாறாகவும் தோழிதேற்றரவுசொல்லச்சொல்ல, இவள்சிறிதும்ஆறுதல் கொள்ளாது தவித்து,
“எம்மை நெஞ்சால்விரும்பாது சொல்மாத்திரத்தால் விரும்பியவரும் அதனால் எம்மைப் பிரிந்து சென்று முன் குறித்தபடி
விரைவில் மீண்டுவராதவருமான அவ்வன்கணாளரது பிரஸ்தாபமொன்றையும் என்செவிப்படச் சொல்லவேண்டா” என வெறுத்துப் பேசுதலால்,
“சந்துஏந்திழையாள்உரைத்தால் வேம் அவரைப்பணியாதே யெனும” என்றாள்.
மெல்லியல் – இவ்வளவு துயரத்தைப் பொறுக்கமாட்டாத மென்மைத்தன்மை யுடையவளென்றபடி.

பணித்தல் – ஏவல்கொள்ளுதல். அயன் – அஜனென்ற வடசொல்லின் விகாரம்;
திருமாலிடத்தினின்று தோன்றியவ னென்பது, அதன்பொருள்; அ – விஷ்ணு. உமை – ஆவீறு ஐயான வடசொல்.
“ஏமவரை” என்றது, மேருமலையை. சந்து – ஸந்தி என்ற வடசொல்லின் விகாரம். மெல்லியல் பண்புத்தொகையன்மொழி.

எம்பெருமானது பூர்ணாநுபவத்தைப் பெறாதபோது பலவாறுவருந்துகிற ஐயங்காரது நிலைமைகளை அவர்பக்கல்
பரிவுடையார் அறிந்து இரங்கிக் கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.
பரிபூர்ணபக்தியுடையராயிருந்தும், உரியகாலத்திலே அவன் தானாகவந்து அருள்புரிவ னென்று ஆறிப் பரதந்திரமாயிருத்தல்
முதலிய ஆத்மாலங்காரமானகுணங்களை வியாமோகத்தால் மேற்கொள்ளாரென்பது,
“கொங்கையேமவரைப்பணிபூணாள்” என்பதன் உட்கோள்.
அங்ஙனம் ஆற்றாமைகொண்ட காலத்தில், அன்பர்கள் தேறுதலாக எம்பெருமானது குணாதிசயங்களைக் கூறினால்,
அவற்றை மனங்கொள்ளாது தவிப்பர்; தவித்து, “அவன் பிரஸ்தாப மொன்றுஞ் சொல்ல வேண்டா” என்பர் என்பது –
“சந்து ஏந்திழையாள் உரைத்தால் வேம் அவரைப் பணியாதே எனும்” என்பதன் போக்கு.
ஏந்திழையாள் – ஆத்மாலங்கார குணங்களையுடைய அன்பர். மெல்லியல் – மிருதுஸ்வபாவமுடையவரான ஐயங்கா ரென்றபடி.
இங்ஙனம் தாய்பேச்சாலே தமதுநிலைமையைக் கூறினார் ஐயங்கா ரென்க.

———–

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்கல் –

மெல்லியலைப் பரி அங்கனையாரும் வெறுத்து வசை
சொல்லி அலைப்பர் இயங்க ஒட்டார் சுடர் மா மலையைப்
புல்லி அலைப் பரியங்கத்தில் ஏறும் புயல் பதின்மர்
நல் இயலைப் பரி அம் கழல் தாமம் நயந்த பின்னே –68–

(இ – ள்.) சுடர் மா மலையை புல்லி – விளங்குகின்ற பெரிய திருமாலிருஞ்சோலையை அடைந்து அதில்எழுந்தருளியிருப்பவனும்,
அலைபரியங்கத்தில் ஏறும் புயல் – (திருப்பாற்) கடலிலே (ஆதிசேஷனாகிய) கட்டிலில் ஏறிப் பள்ளிகொண்டருளும் மேகம்போன்றவனுமான அழகப்பிரானது,
பதின்மர் நல்இயலை பரி அம் கழல் – பத்து ஆழ்வார்களுடைய சிறந்த தமிழ்ப்பிரபந்தங்களை ஏற்றுக்கொண்ட அழகிய திருவடிகளிற் சாத்திய,
தாமம் – மாலையை,
நயந்த பின் – (இம்மடமகள்) விரும்பிய பின்பு, –
மெல் இயலை – மென்மைத்தன்மையுடையளான இவளை, –
பரி அங்கனையாரும் – அன்புகொண்டுநடத்திவந்த மாதர்களும் (செவிலித்தாயரும் என்றபடி), வெறுத்து -,
வசை சொல்லி – பழமொழி கூறி,
அலைப்பர் – வருத்துவார்கள்;
இயங்க ஒட்டார் – (இவள்விருப்பத்தின்படி இவளைச்) செல்லவிடமாட்டார்கள்; (எ – று.)

இங்ஙனம், தலைவனைக் களவொழுக்கத்திற்கூடிப்பிரிந்து வருந்துகின்ற தலைவியைக் குறித்துச் செவிலியர்
முனிந்துசொல்லுஞ் சொற்களைப்பற்றியும் அவர்கள்செய்யும் பாதுகாவலைப்பற்றியும் தோழி இரங்கிக்கூறினாள்.

முதலடியில், பரிதல் – அன்புசெய்தல். “மெல்லியலை” என்பது – பரி, வெறுத்து, சொல்லி, அலைப்பர்,
இயங்கவொட்டார் என்பவற்றோடெல்லாம் சேரும். “பரிஅங்கனையார்” எனவே, செவிலித்தாய ரென்றாயிற்று.
அன்பிலரான அயலார் அலர்தூற்றிவருத்துதலே யன்றி, இவள்பக்கல் பரிவுடையரான செவிலியரும் வெறுத்து
வசைசொல்லி யலைப்பரென்னுங் கருத்தைத் தருதலால், உம்மை – உயர்வுசிறப்போடு இறந்ததுதழுவிய எச்சப்பொருளது.
இயங்கவொட்டார் – குடிக்குப்பழிநிகழ்தற்கு அஞ்சி , இவளைப் புறம்போகவொட்டாது பாதுகாவலில் வைத்திருப்ப ரென்றபடி.
புல்லி – ஆண்பாற்பெயர்;சங்கேந்தி, பிறைசூடி என்பன போல. புயல் என்பது – சொல்லால் அஃறிணையாயினும்,
உவமையாகுபெயராய்ப் பொருளால் உயர்திணையாதலால், ‘புல்லி’ என்ற உயர்திணைப்பெயர்.
அதனை விசேடித்தது. இனி, பிரகாசமுள்ள தொரு பெரிய மலையைப் போன்று திருவநந்தாழ்வானாகிய சயநத்தில் ஏறிப்
பள்ளிகொண்டுள்ள மேகம்போன்றவ ரென்றேனும், பிறவாறாகவேனும் பொருள்கூறுதல் பொருந்தாது; ஏனெனின்; –
இவ்வகைப்பிரபந்தத்திற் செய்யுள்தோறும் பிரபந்தத்தலைவன் பெயரையேனும் அவனது ஊர்ப்பெயரையேனும் கூறும் மரபு.
இச்செய்யுளில் தவறியதாய்விடும். புயல்கழல் என இயையும், பதின்மர் – தொகைக்குறிப்பு.
நான்காமடியில், பரித்தல் – மேற்கொள்ளுதல். சுடர்மாமலை – சூரியசந்திரர்கள் பிரதக்ஷிணஞ்செய்யப்பெற்ற
திருமாலிருஞ்சோலைமலை யெனினுமாம்;
“திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலையதே” என்றார் பெரியாழ்வாரும்.
நம்மாழ்வார் “புயன்மழைவண்ணர்புரிந்துறை கோயில், மயல்மிகு பொழில் சூழ்மாலிருஞ்சோலை” என்றதுகொண்டு,
திருமாலிருஞ்சோலை யெம்பெருமானை ‘புயல்’ என்றார்;
வடிவழகிலும் வரையாது அருளும் வள்ளன்மையிலும் காளமேகம்போன்ற பெருமான் என்க.

எம்பெருமானது பிரிவையாற்றாது வருந்துகின்ற ஐயங்காரது நிலைமைகளைக் கண்ட அன்பர்கள்
இரங்கிக்கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறை பொருள்.
‘பரிஅங்கனையார்’ என்றது, இவர்பக்கல்பரிவுடையரான அறிவாளர்களை.
இயங்கவொட்டார் – இவரை விரும்பியபடி செல்லவிடார். புயல்கழல்தாமம்நயந்தபின் – புயன்மழைவண்ணரான அழகரது
திருவடிகளின் இனிமையை இவர்விரும்பியபின்பு என்றபடி. மற்றவை, கீழ் 27 – ஆங்கவிக்குக் கூறியவாற்றால் விளங்கும்.

————

பின் இறப்பும் பிறப்பும் நரை மூப்பும் பிணியும் மனை
முன் இறப்பும் பிரித்தான் இருந்தானவர் மூது இலங்கை
மன் இறப்புங்கக் கணை தொட்ட சோலை மலை அழகன்
பொன் நிறப் புண்டரிகத் திருத் தாள் அன்றி போற்றிலமே –69-

(இ – ள்.) பிறப்பும் – ஜநநத்தையும்,
பின் இறப்பும் – அதன்பின் நேரக்கடவதான மரணத்தையும்,
நரை மூப்பும் – மயிர்நரைக்கப்பெறுகிற முதுமையையும்,
பிணியும் – வியாதிகளையும்,
மனை முன் இறப்பும் – (இவற்றிற் கெல்லாங்காரணமாய்) வீட்டின் மேலிறப்புப்போல (உயிரை)க் கவிந்துகொள்வதான கருமத்தையும்,
பிரித்தான் – இயல்பில் நீக்கியுள்ளவனும்,
இருந்தானவர் – பெரிய அசுரர்களும்,
மூது இலங்கை மன் . பழமையான இலங்காபுரியின் அரசனாகிய இராவணனும்,
இற – அழியும்படி,
புங்கம் கணை தொட்ட – சிறந்த அம்புகளைத் தொடுத்தவனுமான,
சோலை மலை அழகன் -திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கிற அழகப்பிரானது,
பொன் நிறம் புண்டரிகம் திரு தாள் அன்றி -பொன்னிறமுள்ளசெந்தாமரைமலர்போன்ற திருவடிகளையல்லாமல்,
போற்றிலம் – (வேறொன்றை) வணங்கோம், (யாம்). (எ – று.)

கருமங்களும் கருமவசத்தாலாகும் பிணிமூப்புக்களும் பிறப்பிறப்புக்களும் இல்லாதவன் எம்பெருமா னென்பது,
முதல்விசேஷணத்தினால் தேர்ந்தபொருள். இறப்பு, பிறப்பு, மூப்பு – ‘பு’ விகுதிபெற்ற தொழிற்பெயர்கள்.
‘மனைமுன்இறப்பு’ என்றது, வீட்டின்மேலுள்ள இறப்புப்போல ஓருயிரைக் கவிந்து புண்ணியம் பாவம் என்னும்
இருபகுப்புடையதான கருமத்தைக் குறித்தது; உவமையாகுபெயர்;
பாரதவெண்பாவில் “வாய்த்த, பிறப்பைக் கழித்தேன் பெரும்பதம்பெற்றே னென், றிறப்பைப்பிரித்தா னெழுந்து”,
“தன்னுடைய கூரை பிரித்தான்” என்றவை, இங்கு ஒப்புநோக்கத்தக்கவை.
இனி, “மனைமுன் இறப்பும்” என்பதற்கு – குடும்பத்திற்சென்று தடுமாறுதலையும் என்று உரைப்பாரு முளர்;
இப்பொருளில், மனை – ஆகுபெயர்; முன் – ஏழனுருபு. இறப்பு – செல்லுதல்.
“பிறப்புந்நரை” என்றவிடத்து, நகரவொற்று – விரித்தல்விகாரம்.

காசியபமுனிவர்மனைவியருள் தநுவென்பவளது சந்ததியாரான அசுரர்களைக் குறித்தற்கு உரிய தாநவரென்ற சொல்,
இங்கு அரக்கரைக்குறித்தது,கொடுமையிலொற்றுமையால்; “காசையாடைமூடி யோடிக் காதல்செய்தானவனூர்”,
“தையலாள்மேற் காதல்செய்த தானவன் வாளரக்கன்” என்ற அருளிச்செயல்களிலும் இங்ஙனங் காண்க.
இனி, அசுரரென்றே கொள்ளினும் பொருந்தலாம்; இராமபிரான் ஆக்கிநேயாஸ்திரம் பிரயோகித்துக் கடலை வற்றுவிக்கத்
தொடங்கியபோது, தாபமடைந்து அஞ்சிக் கதறியோடிவந்து சரண்புகுந்து ஒடுங்கிநின்று தன்பிழையைப் பொறுத்தருளுமாறு
பிரார்த்தித்த வருணனுக்கு அப்பெருமான் அபயமளித்து அவனை நோக்கி
“எனது அம்பு வீண்போகாதாதலால், அதற்கு இலக்குஎன்?” என்ன,
நீர்க்கடவுள், “மருகாந்தாரமென்ற தீவில் நூறுகோடிக்கும் மேலாக வாழ்கிற அசுரர்கள் மிகக்கொடியராய் உலகத்தை
வருத்துதலால், அவர்கள்மேல் இந்தஅனலம்பை விடுத்தருள்க” என்றுசொல்ல,
இராமமூர்த்தி அங்ஙனமே அதனைவிடுத்து அவ்வசுரர்களனைவரையும் எரித்தொழித்தன னென்ற வரலாறு காண்க;
“கடல்தானவர்தேசங்கத்த மரம்பட வெய்த சார்ங்கத்தனு வரங்கன்” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.

இலங்கை, ஆதியில் தேவசிற்பியான விசுவகர்மாவினால் இந்திரனுக்காக நிருமிக்கப்பட்டு, பின்பு மாலியவான்
முதலிய பூர்விகராக்ஷசர்க்கும், அதன் பிறகு குபேரனுக்கும், அப்பால் இராவணனுக்கும்
இராசதானியாயினமை தோன்ற, ‘மூதிலங்கை’ எனப்பட்டது. மன் – பெருமை; அதனையுடையனான மன்னனுக்குப் பண்பாகுபெயர்.
புங்கம் – உயர்வு; அம்புக்குதையுமாம். புண்டரீகம் – இது வெண்டாமரைக்குப் பெயரென்று வடமொழி நிகண்டுகளிற் கூறப்பட்டிருப்பினும்,
இங்கு, தகுதிபற்றி, செந்தாமரையைக் குறித்தது; “புண்டரீகாக்ஷன்” என்ற இடத்துப் போல
போற்றிலம் – பரதேவதைக்கு ஆட்பட்ட யாம் அப்பரமன் திருவடிகளையன்றிப் பிறிதொன்றை
வணங்கோம் எனக் களிப்புத்தோன்ற உயர்வுத்தன்மைப்பன்மையாற் கூறினர்.

————-

பிரிவாற்றாத தலைவி செவிலியரைக் குறித்து இரங்குதல்-

போற்றி இராம என்னார் சோலை மா மலை போத விடார்
மாற்றி இராவைப் பகல் ஆக்கிலார் வண் துழாய் குழல் மேல்
ஏற்றி இராசதமாக வையார் என் இடரை எல்லாம்
ஆற்றியிரார் அன்னைமார் என்னை வாய் அம்பு அளக்கின்றதே –70 —

(இ – ள்.) அன்னைமார் – (எனது) தாய்மார், –
(யான்கொண்ட நோய்க்குப் பரிகாரமாக), இராம போற்றி என்னார் – “இராமபிரானே! வாழ்வாயாக” என்று,
(அத்தலைவன்பெயரைச்) சொல்லி வாழ்த்தமாட்டார்கள்;
சோலை மாமலை போத விடார் – (என்னை அவனது) திருமாலிருஞ்சோலைமலையிற் சென்றுசேர விடார்கள்;
இராவை மாற்றி பகல் ஆக்கிலார் – இராப்பொழுதை மாற்றிப் பகற்பொழுதாக்கமாட்டார்கள்;
வள் துழாய் குழல் மேல் ஏற்றி இராசதம் ஆக வையார் – (அத்தலைவனுடைய) செழிப்பான திருத்துழாய் மாலையை (க் கொணர்ந்து என்)
கூந்தலின்மேற் சூட்டி மேன்மையாக வைக்கமாட்டார்கள்;
என் இடரை எல்லாம் ஆற்றியிரார் – யான்படுந் துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள்;
என்னை வாய் வம்பு அளக்கின்றதே – என்னைக் குறித்து வாயினால் வம்பளக்கின்றதே, (இவர்கள் தொழிலாயிருக்கின்றது)! (எ – று.)

களவொழுக்கத்தால் தலைவனைக் கூடிப்பிரிந்து வருந்துந் தலைவி, தனது தளர்ச்சியை ஊரலர் முதலியவற்றாலறிந்த
செவிலித்தாயர் அதற்குத்தக்க பரிகாரமொன்றுஞ்செய்யாது முனிந்துகூறும் வார்த்தைகள் தன்வருத்தத்தை
மிகுவித்தல்பற்றி, இரங்கிக்கூறியது, இது. ஈற்றில் ஏற்ற வினைமுற்று வருவித்து முடிக்கப்பட்டது.
இனி, “என்னை” என்பதை வினாவடியாகப்பிறந்த “எவன்” என்னுங் குறிப்புமுற்றின் விகாரமெனக் கொண்டு,
(இவர்கள் என்னைக்குறித்து எப்பொழுதும்) வாயினால் வம்பளக்கின்றது என்னே? என்று உரைத்தலு மொன்று,
இவர்கள் எனது நோய்க்குஏற்ற பரிகாரமொன்றுஞ் செய்யாராயினும், சும்மாஇருத்தலாவது செய்யலாமே;
அதுவுமின்றி எனக்கு மேன்மேல் வருத்தம்மிகுமாறு என்னைக்குறித்துப் பலவாறு வம்பளப்பது தகுதியோ? என்பதாம்.
வம்புஅளத்தல் – வீணே நிந்தித்துப் பேசுதல்; நிட்டூரவார்த்தைகளைக் கூறுதல். இங்கு “வாய்” என வேண்டாது கூறியது,
இவர்கள்வாய் இத்தீயசொற்களைப் பயின்றுள்ளதெனத் தான்வேண்டியதன் இழிபு முடித்தற்கு;
திருக்குறளில் “இறந்தார் வா யின்னாச் சொல்” என்றவிடத்துப்போல.

(“மதுவார் துழாய்முடிமாயப்பிரான்கழல்வாழ்த்தினால், அதுவே யிவளுற்ற நோய்க்கு மருமருந்தாகுமே,”
“உலகேழுமுண்டான், சொன்மொழி மாலையந்தண்ணந்துழாய்கொண்டு சூட்டுமினே,”
“ஆணையால்நீரென்னைக் காக்கவேண்டிலாய்ப்பாடிக்கே யென்னையுய்த்திடுமின்” என்றபடி),
பிரிந்த நிலையிலே தலைவிசெவிப்படத் தலைவன்பெயரைச் சொல்லி வாழ்த்துதலும்,அவன் சாத்திய மாலையைக் கொண்டு
வந்து தலைவியின் முடியிற் சூட்டுதலும் தலைவியை அவன்வாழுமிடத்தே கொண்டுபோய்ச் சேர்த்தலும்,
அவள்கொண்ட காதல்நோய்க்குப் பரிகாரமாகும்;
அவற்றி லொன்றையும் இச்செவிலித்தாயர் செய்திலரென்று அவர்களை வெறுத்துரைத்தாள்.
இந்நோய் தீர்த்தற்குத் தலைவனது திருநாமத்தைச் சொல்லி வாழ்த்துதல் தக்கமந்திரமும், அவனது பிரசாதமான
திருத்துழாய் பசுமருந்துமா மென்க.
‘வண்துழாய்குழல்மேலேற்றி’ என்றதனால், அந்தச்சஞ்சீவிமூலிகைதான் உட்கொ ள்ளவேண்டியஅவசியமுமின்றித்
தலைமேற்கொண்டுநன்குமதித்தவளவிலே உயிர்காக்கவல்லதென்று தோன்றும்.
“கெண்டை யொண்கணுந்துயிலுமென்னிறம்,
பண்டுபண்டுபோலொக்கும் மிக்கசீர்த்,
தொண்டரிட்டபூந்துளவின் வாசமே,
வண்டுகொண்டுவந்தூதுமாகிலே” என்றபடி அத்திருத்துழாயின் காற்று இவள்மேலேபட்டாலும் இவள்நோய்க்குப் பரிகாரமா மென்க.

நோயாளிகட்கு உட்செலுத்துவதொரு மருந்தும் மேலிற்பூசுவதொருமருந்தும் உபயோகித்தல்போல, தலைவன்
திருநாமத்தை இவள்செவிவழியாக உள்ளே புகும்படி உச்சரித்துப் புறம்பே அவன்சாத்தின திருத் துழாய்மாலையைக்
கொண்டுவந்து இவட்குச்சூட்டுதல் இந்நோய்தணித்தற்கு ஏற்ற பரிகாரமென்க.
தலைவன் தானாகவருமளவும் பார்த்து ஆறியிருக்கின்ற இயல்பை இழந்து, அவனிருக்கிறவிடத்தே தான்சென்று
அவன் முகத்தைக்கண்டு பிழைக்கலா மென்றும், தான் அவன்கண்ணெதிரிற்சென்றுநின்றால்
அவன் கண்ணோட்டத்தைப் பெறலா மென்றுங் கருதி விரைவில் அங்குச்செல்ல விரும்பிய தலைவி,
தனக்குக் கால்நடை தராதபடி வலியழிவு மிக்கதனால், தானாக அங்குச்சென்று சேரமாட்டாது,
தன்னை அங்குக்கொண்டுபோய்விடுதற்குப் பிறருதவியை வேண்டுகின்றாளாகி, அவர்கள் அதற்குஇணங்கி
உதவினார்களில்லையே யென்று வெறுத்தாள். இவ்வளவுஞ்செய்யாதவர், கலவிக்கு உரியகாலமாதலால் மிகவும்
வருத்தத்தைத்தருகிற இராப்பொழுதைப் பகற்பொழுதாக மாற்றுதலேனுஞ் செய்தால், அப்பொழுது யான்
ஆறியிருக்க வில்லை யென்று என்மேற் பழிகூறலாம்; அதுவுஞ்செய்திலரே யென்பாள், “மாற்றி யிராவைப் பகலாக்கிலார்” என்றாள்.
“என் இடரையெல்லாம் ஆற்றியிரார்” என்றது, எனது துன்பங்களையெல்லாந் தணித்தில ரென்றும் பொருள்படும்.

போற்றி – இகரவீற்றுவியங்கோள்; வாழியவென்பது வாழியென விகாரப்படுதல்போல, போற்றியவென்னும் யகரவீற்றுவியங்கோள் போற்றியென விகாரப்பட்ட தெனினும் பொருந்தும். ராமன் என்ற திருநாமம் – (தனது நற்குணநற்செய்கைகளாலும் திருமேனியழகினாலும் தன்பக்கல் அனைவரும்) மனங்களித்திருக்கப் பெற்றவன் என்று பொருள்படும். இராசதம் – ராஜத்வம் என்பதன் விகாரம்; அரசனதுதன்மை யென்பது, அதன்பொருள்; இலக்கணையாய், மேன்மையை உணர்த்திற்று. நான்காமடியில், மாற்றியிரார் என்று பதம்பிரித்தல், திரிபிலக்கணத்துக்கு மாறாம்; இரண்டாமடியில் “மாற்றி” என்று எடுத்ததனால்.

தமதுஞானக்கண்ணுக்குப்புலனான எம்பெருமான் மறைந்தவளவிலே, அவனது நிரந்தராநுபவத்தைப் பெறும் விருப்பத்தால்
வருந்துகின்ற ஐயங்கார், தம்பக்கல்பரிவுடையரான அறிவுடையார் அச்சமயத்தில் தமதுதுயர்க்கு ஏற்ற
பரிகாரமொன்றுஞ்செய்யாது “இப்படி இவர் அவனாகஅருளுங் காலத்தை எதிர்பார்த்து ஆறியிராது விரைவுகொள்வது
இவரதுசொரூபத்துக்குத் தகாது” என்று சொல்வாராக. அதுகுறித்து இரங்கிக்கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.
இவர்காதிற்படுமாறு பகவந்நாமோச்சாரணஞ் செய்தலும், அவனுக்குப் பல்லாண்டு பாடுதலும்,
அவனுகந்தருளின திருப்பதியில் இவரைக்கொண்டுபோய்ச்சேர்த்தலும், அவனது பிரசாதமான திருத்துழாயைக் கொணர்ந்து
இவர்முடிமீது வைத்தலும், இவரது ஆற்றாமையை ஒருவாறுதீர்க்கக்கடவனவாக,
அவற்றில் ஒன்றையேனும் அவர்கள் செய்திலரென்க.
வண்துழாய் குழல்மேல்ஏற்றி இராசதமாகவைத்தல் – பகவத்பிரசாதத்தைச் சிரஸாவகித்தல் அம்முடிக்கு அலங்காரமென்க.
இராவைமாற்றிப்பகலாக்கிலார் – இங்ஙனம் ஏதேனும் பரிகாரஞ்செய்து, பிரிவுத் துயர் பொறுக்க
வொண்ணாதகாலத்தை அதனைப்பொறுத்திருக்கு ங்காலமாக மாற்றினார்களில்லையே! என்று இரங்கியவாறு;
மோகாந்தகாரத்தால் மறையும் விவேகத்தை அங்ஙனம் மறைந்திடாதபடி செய்தில ரென்றவாறுமாம்.

————-

அளப்பதும் அங்கையில் நீர் ஏற்பதும் தந்து அளிப்பதும் பின்
பிளப்பதும் அங்கு ஐ யில் வெண் கோட்டில் கொள்வதும் பேர் உணவாக்
கிளைப்பதும் மங்கை எனத் தோள் புணர்வதும் கேட்கில் வையம்
வளப்பதுமம் கையம் சேர் சோலை மா மலை மாதவரே –71-

(இ – ள்.) வளம் பதுமம் – செழிப்பான தாமரை மலர்கள்,
கையம் சேர் – தடாகங்களிற் பொருந்திய,
சோலை மா மலை – திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற,
மா தவர் – திருமகள்கொழுநரான திருமால், –
அளப்பதும் (காலினால்) அளந்துகொள்வதும்,
அம்கையில் நீர் ஏற்பதும் – அழகிய கையில் தாரைவார்க்கும்நீரோடு தானமாக ஏற்றுக்கொள்வதும்,
தந்து அளிப்பதும் – (ஆதியிற்) படைத்து(ப் பின்பு) காப்பதும்,
பின் பிளப்பதும் – இறுதியில் அழிப்பதும்,
ஐயில் வெள் கோட்டில் கொள்வதும் – கூரிய வெண்ணிறமான கோரதந்தத்தாற் குத்தியெடுப்பதும்,
பேர் உணவு ஆ கிளப்பதும் – (தமக்கு ஏற்ற) சிறந்த உணவாகச் சொல்வதும்,
மங்கை என தோள் புணர்வதும் – மனையாளாகக்கொண்டு தோள்களைத் தழுவுவதும், –
கேட்கில் – (ஆகிய இவையெல்லாம் எதனையென்று) கேட்குமிடத்து,
வையம் – பூமியையாம்; (எ – று.) – இரண்டாமடியில், ‘அங்கு’ – அசை.

(“அடந்தைநடந்தைவனஞ்சூழரங்கத்தரவணைமேற்,
கிடந்தனர் துங்கக் கிரிமிசைநின்றனர் கேழலொன்றாய்,
இடந்தனர் மீளவிழுங்கினர் கான்றன ரீரடியாற்,
கடந்தனர் கைவழிமண்ணான திந்தமண்காரணர்க்கே” என்று திருவரங்கத்துமாலையிலும்,
“வாயுண் டுமிழ்ந் தளந்து, காத் தாண்ட மண்டலத்தார்” என்று திருவேங்கடமாலையிலும் கூறியமை காண்க;
“மண்ணை யுண் டுமிழ்ந்து பின்னிரந்துகொண்டளந்து”,
“பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்ட பேராளன்” என்றார் ஆழ்வார்களும்.)
அங்கையில் நீரேற்றது, வாமநாவதாரத்தில்; அளந்தது, திரிவிக்கிரமாவதாரத்தில்; தந்தது, ஆதிசிருஷ்டியில்;
அளிக்கின்றது, எப்பொழுதும்; அழிப்பது, கற்பாந்தகாலத்தில்; கூரியகோட்டினாற் குத்தியெடுத்தது, வராகாவதாரத்தில்;
உணவென்று உகந்து கொள்வது, பிரளயகாலத்தில்; மங்கையெனத் தோள்புணர்வது, எக்காலத்தும் எனக் காண்க. மங்கை = ஸ்ரீபூமிப்பிராட்டி.

அயில் = ஐயில், கயம் = கையம்; திரிபுநோக்கிய முதற்போலிகள். ‘அளப்பது’ முதலியவற்றைச் செயப்பாட்டு
வினைப் பொருளில் வந்த செய்வினையாக்கொண்டு, அவற்றிற்கெல்லாம் வையத்தைப் பெயர்ப்பயனிலை யாக்கி யுரைப்பினும் அமையும்.
“மாதவரே” என்பதை விளியாகக்கொண்டு, ‘நீவிர்’ என வருவித்து, ‘அளப்பது’ முதலியவற்றோடு சேர்த்து உரைக்கவும் இடமுண்டு,
மாதவன் – மா – இலக்குமி, தவன் – கணவன்.

————

மாதவரால் உம்பரால் அறியார் மதுரைப் பிறந்த
யாதவர் ஆலிலை மேல் துயின்றார் இருந்தாழ் சுனையில்
போதவரால் உகள் மாலிருஞ்சோலை யில் போம் பிறவித்
தீது அவரால் அன்றி எத்தேவராலும் தெறல் அரிதே –72-

(இ – ள்.) மாதவரால் உம்பரால் அறியார் – பெருந்தவமுடைய முனிவர்களாலும் தேவர்களாலும் (உள்ளபடி) அறியவொண்ணாதவரும்,
மதுரை பிறந்த யாதவர் – வடமதுரையில் திருவவதரித்த யதுகுலத்தோன்றலும்,
ஆல் இலைமேல் துயின்றார் – (பிரளயப்பெருங்கடலில்) ஆலிலையின்மீது கண்வளர்ந்தருளியவருமாகிய எம்பெருமானுடைய,
இருந் தாழ் சுனையில் போத வரால் உகள் மாலிருஞ்சோலையில் – பெரிய ஆழ்ந்த சுனைகளிலே மிகுதியாக வரால்மீன்கள் துள்ளப்பெற்ற திருமாலிருஞ்சோலைமலையில்,
போம் – (நீங்கள்) சென்றுசேருங்கள்;
பிறவி தீது அவரால் அன்றி எ தேவராலும் தெறல் அரிதே – பிறப்புத்துன்பம் அப்பெருமானாலன்றி வேறு எந்தக்கடவுளராலும் நீக்குதற்கு அருமையானதாம்; (எ – று.) –
ஈற்றுஏகாரம் – தேற்றம்.என்று உலகத்தார்க்கு உணர்த்தியவாறாம்.

“எருத்துக்கொடியுடையானும் பிரமனுமிந்திரனும் மற்றும்,
ஒருத்தரும் இப்பிறவியென்னும்நோய்க்குமருந்தறிவாருலில்லை,
மருத்துவனாய்நின்றமா மணிவண்ணா மறுபிறவிதவிரத்,
திருத்தி யுன்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய்” என்ற அருளிச்செயல் இங்கு அறியற்பாலது.

மதுவென்னும் அசுரனால் முதலில் அமைக்கப்பட்ட நகரமாதலாலும், பின்பு மதுவென்னுஞ் சந்திரகுலத்து அரசனாற்
சீர்திருத்தியாளப்பட்ட தனாலும், கண்ணுக்கு இனியதாயிருத்தலாலும், மதுராஎன்று பெயர்;
அவ்வடசொல் மதுரையென ஆவீறு ஐயாயிற்று. இங்குக்குறித்தது, வடமதுரை; யமுநாநதிதீரத்திலுள்ளது.
யாதவர் – கண்ணபிரான்; யதுவென்னும் அரசனது மரபிற் பிறந்தவர் என வடமொழித்தத்திதாந்தநாமம்;
(யதுவென்பவன், சந்திரவம் சத்திற் பிரசித்திபெற்ற ஓரரசன்; யயாதியின் குமாரன்.)
சுனை – மலையிலுள்ள நீர்நிலை. ‘இருந்தாழ்சுனையிற் போத வராலுகள்’ என்ற அடைமொழி, அம்மலையின் நீர்வளமிகுதியைக்காட்டும்.

—————

அரிய வரம் தந்து அயன் முதலோர்க்கு அருள் செய்து அவரைப்
பெரியவர் அந்தம் இல் வாழ்வினர் ஆக்கி தம் பேர் அருளால்
கரியவர் அந்தணர் கை தொழும் மால் அலங்காரர் வையத்து
உரியவர் அந்தரங்கத் துயர் தீர்க்க உலாவுவரே –73–

(இ – ள்.) கரியவர் – கரிய திருநிறமுடையவரும்,
அந்தணர் கை தொழும் மால் அலங்காரர் – வேதியர்கள் கைகூப்பிவணங்கப்பெற்ற பெருமையுடைய அழகரு மாகிய எம்பெருமான், –
அயன் முதலோர்க்கு – பிரமன் முதலிய தலைமைத்தேவர்கட்கு,
அரிய வரம் தந்து அருள்செய்து – (பெறுதற்கு) அரிய வரங்களைத் தந்து கருணைபுரிந்து,
அவரை – அவர்களை,
பெரியவர் அந்தம் இல் வாழ்வினர் ஆக்கி – பெருமையையுடையவர்களாகவும் (கல்பாதகாலமளவும்) முடிவில்லாத வாழ்வை யுடையவர்களாகவுஞ் செய்து, –
தம் பேர் அருளால் – தமது பெருங்கருணையினால்,
வையத்து – நிலவுலகத்திலே,
உரியவர் அந்தரங்கம் துயர்தீர்க்க உலாவுவர் – (தமக்கு) உரியவர்களான அடியார்களுடைய மனத்துன்பங்களை நீக்குதற்பொருட்டு உலாவுவர்; (எ – று.)

விபவம் அர்ச்சை அந்தர்யாமித்வம் இவைகளையுடையராய் எங்கும் வியாபித்திருப்ப ரென்றபடி
“வாழ்வு” என்றது – ஆயுளையும், செல்வத்தையும் உணர்த்தும்.
அந்தண ரென்ற பெயர் – அம் தண் அர் என்று பிரிந்து அழகிய தண்மையை (குளிர்ச்சியான அருளை)யுடையவரென்றும்,
அந்த அணவு அர் என்றுபிரிந்து வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பவ ரென்றும் காரணப்பொருள்படும்;
இது – பிறசாதியார்க்கு வழங்காமல், சிறப்பினால், பிராமணர்க்கே பெயராக வழங்கும்.
அந்தணர்கை தொழும் அலங்காரர் – பிராமணதெய்வ மென்றபடி. அந்தரங்கம் – வடசொல்.

———–

உலகு உதிக்கும்படி சிந்தித்துத் தந்து இவ் உலகில் உறும்
நலகுதிக்கும் படி நின்ற பிரான் இடம் நானிலமும்
இலகுதிக்கும் விசும்பும் தொழ ஓங்கி இறால் வருடை
பலகுதிக் குந்தொரும் தேன் பாயும் சோலைப் பருப்பதமே –74-

(இ – ள்.) உலகு உதிக்கும்படி சிந்தித்து – உலகங்கள் உண்டாகுமாறு நினைத்து,
தந்து – (அந்தச் சங்கல்பமாத்திரத்தால் அவற்றைப்) படைத்து,
இ உலகில் உறும் நல குதிக்கும்படி – இந்தஉலகத்திலே மிக்கநன்மைகள் மேன்மேற்பொங்கும்படி,
நின்ற – (திருவருள்கொண்டு) நின்ற,
பிரான் – உபகாரகனாகிய எம்பெருமான்,
இடம் – (திருவுள்ளமுகந்து எழுந்தருளியிருக்கிற) இடம் (எதுவென்றால்), –
நானிலமும் இலகு திக்கும் விசும்பும் தொழ ஓங்கி – நிலவுலகத்திலுள்ளாரும் விளங்குகின்ற எட்டுத்திசைகளிலு முள்ளாரும் மேலுலகத்திலுள்ளாரும் வணங்கும்படி உயர்ந்து,
வருடை, பல குதிக்கும்தொறும் இறால்தேன்பாயும் – மலையாடுகள் பல எழும்பிப் பாயுந்தோறும் தேன்கூடுகளினின்று தேன்பெருகிப் பாயப்பெற்ற,
சோலைபருப்பதம் – திருமாலிருஞ்சோலைமலையாம்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – அசை;
பிரிநிலையாக் கொள்ளின், இத்திருப்பதி எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றை யெல்லாத்திவ்வியதேசங்களிலும்
மிகப் பாங்கான வாஸஸ்தாந மென்னுங் கருத்து அமையும்.

இச்செய்யுள், ஊர் அல்லது பதி எனப்படுகிற பிரபந்தத்துறை யமையக் கூறியது;
‘இன்னசிறப்புடையது பிரபந்தத்தலைவனது வாழிடம்’ என்ற வாய்பாடு பொருந்தக் கூறுதல், இதன் இலக்கணமாம்.

அழகப்பிரான் ஸர்வேச்வரனான திருமா லாதலாலும், காத்தற்றொழிலை முக்கியமாக்கொண்டவ னாதலாலும்,
மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அவன்எழுந்தருளியிருக்கிற அவ்விடத்தைத் தொழுவ ரென்க.
வருடை பலகுதிக்குந்தொறும் இறால்தேன்பாயு மென, குறிஞ்சிநிலமாகியஅம்மலையின் வளங் கூறியவாறாம்.
அம்மலையிலுள்ள ஆட்டின் கொழுமையும், தேனின் மிகுதியும் விளங்கும்.
“தேவருடை யைந்தருவின் செந்தேனிறால் கிழிய, மீவருடைபாய்கின்றவேங்கடமே” என்ற
திருவேங்கடமாலை யிலும் இறால் வருடை என்பன இப்பொருளினவாதல் காண்க.

நல – நல்ல; தொகுத்தல். குதித்தல் – மேன்மேல்வளர்ந்து பெருகுதல். நானிலம் – நால்வகைநிலங்களையுடையது என,
பூமிக்குப் பண்புத்தொகையன் மொழியாகிய காரணக்குறி; நால்வகை நிலங்கள் – முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்பன;
காடும் காடுசார்ந்தஇடமும் – முல்லை, மலையும் மலை சார்ந்த இடமும் – குறிஞ்சி, நாடும் நாடுசார்ந்த இடமும் –
மருதம், கடலும் கடல்சார்ந்தஇடமும் – நெய்தல்;
நீரும் நிழலு மில்லாததான பாலை நிலம், பிராணி சஞ்சாரத்துக்கு உரியதன் றாதலால், விலக்கப்பட்டது.
அன்றியும், பாலைக்குத் தனியே நிலமில்லை யென்றும், மற்றைநான்குநிலங்களும் தம் இயல்புதிரிந்தவிடத்தே
பாலையாமென்றுங் கொள்கையுண்டு.
இங்கு, நானில மென்றது – நானிலத்தார்க்கு இடவாகு பெயர். திக்கு, விசும்பு என்பனவும் இவ்வாறே.
“ஓங்கி” என்றது, பருப்பதத்தின் வினை, பருப்பதம் – பர்வதமென்ற வடசொல்லின் சிதைவு. திக் – வடசொல்.

————-

பருப்பதம் தாம் மன்னி நிற்பது பாற் கடல் பள்ளி கொள்வது
இருப்பது அம் தாமம் பண்டு இப்போது எலாம் இள ஞாயிறு அன்ன
உருப்பதம் தாமதர்க்கு ஈயாமல் அன்பர்க்கு உதவு அழகர்
திருப்பதம் தாமரை போல்வார் உகப்பது என் சிந்தனையே –75-

(இ – ள்.) இள ஞாயிறு அன்ன – இளஞ்சூரியனைப்போன்று விளங்குகின்ற,
உரு – திருவுருவத்தையுடைய,
பதம் – பரமபதத்தை,
தாமதர்க்கு ஈயாமல் – தாமச குணமுள்ளவர்கட்குக் கொடாமல்,
அன்பர்க்கு உதவு – (தம்பக்கல்) பக்தியுள்ள அடியார்கட்குக் கொடுத்தருள்கிற,
திரு பதம் தாமரை போல்வார் அழகர் – திருவடிகள் தாமரைமலர்களை யொத்திருக்கப்பெற்ற வரான அழகப்பெருமான்,
பண்டு – முன்பு,
தாம் மன்னி நிற்பது – தாம் நின்றதிருக்கோலமாக நித்தியவாசஞ்செய்கின்ற இடம்,
பருப்பதம் – திருமாலிருஞ்சோலைமலையாம்;
பள்ளிகொள்வது – சயநத்திருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்ற இடம்,
பால்கடல் – திருப்பாற்கடலாம்;
இருப்பது – வீற்றிருக்கின்ற இடம்,
அம் தாமம் – அழகிய ஸ்தாநமான பரமபதமாம்;
இப்போது – இப்பொழுதோ,
எலாம் உகப்பது – (நிற்கிறஇடமும் படுக்கிறஇடமும் இருக்கிற இடமும் ஆகிய) அனைத்துமாக (அப்பெருமான்) விரும்புவது,
என் சிந்தனையே – எனது மனமேயாம்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – பிரிநிலையோடு தேற்றம்.

நின்ற திருக்கோலமாகவும் கிடந்ததிருக்கோலமாகவும் வீற்றிருந்ததிருக் கோலமாகவும் எம்பெருமானை அடியேன்
அன்போடு தியானித்தல்பற்றி அப்பெருமான் நான்நினைத்தபடியெல்லாம் எனது மனத்தில் திருவுள்ள முகந்துவந்து
எழுந்தருளியிருக்கின்றன னென்பது தோன்ற, இங்ஙனங்கூறினார்.
“நிற்பதும்மொர்வெற்பகத் திருப்பும்விண் கிடப்பதும்,
நற்பெருந்திரைக்கடலுள் நானிலாத முன்னெலாம்,
அற்புதன் னனந்தசயன னாதிபூதன் மாதவன்,
நிற்பதும் மிருப்பதுங் கிடப்பதும் மென்னெஞ்சுளே,”
“கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும்,
புல்லென் றொழிந்தனகொலேபாவம் – வெல்ல,
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்துநீங்கான்,
அடியேன துள்ளத்தகம்” என்ற ஆழ்வார்களருளிச்செயல்களை அடியொற்றியது, இது.
‘அத்திருப்பதிகளைக் காற்கடைக்கொண்டு, அவ்விடங்களில் நின்றும் இருந்தும் கிடந்தும் செய்தருளின நன்மையெல்லாம்
என்நெஞ்சிலே ஆய்த்து, நிஹீநாக்ரேஸரனான என்னை விஷயீகரித்தவாறே, திருமலையில் நிலையும் மாறி
என்நெஞ்சிலே நின்றருளினான்; தன்திருவடிகளின் போக்யதையை எனக்கு அறிவித்தபின்பு,
பரமபதத்திலிருப்பைமாறி என்நெஞ்சிலே போகஸ்தாநமாயிருந்தான்; …. திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளின படியைக்
காட்டி என்னுடைய ஸாம்ஸாரிகமான தாபத்தைத் தீர்த்தபின்பு, திருப்பாற்கடலிற்கிடையை மாறி என்நெஞ்சிலே
கண்வளர்ந்தருளித் தன் விடாய்தீர்ந்தான்; இப்படிஎன்பக்கல்பண்ணினவியாமோகம் என்னால்
மறக்கலாயிருக்கிறதில்லை யென்கிறார்’ என்ற வியாக்கியான வாக்கியங்கள் இந்த இடத்துக்கும் பொருந்தும்.
“கடமாமலையின் மருப்பொசித்தாய்க்குக் கவிநடத்தத்,
தடமாமலைவற்றவாளிதொட்டாய்க் கென்தனிநெஞ்சமே,
வடமாமலையும் திருப்பாற்கடலும் வைகுந்தமும்போல்,
இடமாம் அலைவற்றுநின்றுங் கிடந்து மிருப்பதற்கே” என்ற திருவேங்கடத்தந்தாதிச் செய்யுளும் இக்கருத்தை யுட்கொண்டதே.

பருப்பத மென்ற பொதுப்பெயர், இங்கு அதிகாரத்தால், தெற்குத்திருமலையாகிய அழகர் திருமலையை உணர்த்திற்று.
மன்னிநிற்பது பருப்பதம், பள்ளிகொள்வது பாற்கடல். இருப்பது அந்தாமம் என்ற வாக்கியங்களில், நிலம், கருத்தாவாகக் கூறப்பட்டது.
உகப்பது என்சிந்தனை என்பதில், செயப்படுபொருள் கர்த்தாவாகக் கூறப்பட்டது.
மன்னி – நிலைபெற்று. அந்தாம மென்பது – பரமபதமென்ற பொருளதாதலை,
“அந்தாமத் தன்பு செய்து” எனத் திருவாய்மொழியிலுங் காண்க.
ஞாயிறு = நாயிறு; முதற்போலி, பரமபதம் இயல்பிலே திவ்விய தேஜோமயமாய் விளங்குதலால்,
இளஞாயிறன்ன வுருப்பதம்” எனப்பட்டது. இளஞாயிறு – உதயகாலத்துச் சூரியன்.
“இளஞாயிறன்னஉரு” என்பதை அழகர்க்கு அடைமொழி யாக்கினும் அமையும்.
“பதம் தாமதர்க்குஈயாமல் அன்பர்க்கு உதவு” என்ற போக்கினால், அன்பர்கள் தமோ குணமின்றிச் சத்துவகுணமுடையவ ரென்றும்,
தமோகுணமுடையவர் அன்பராகாரென்றும் விளங்கும். நிற்பது, இருப்பது, பள்ளிகொள்வது என்ற செயல்கள், முறைபிறழக்கூறப்பட்டன;
செய்யுளாதலின். அர்ச்சாவதாரம் வியூகம் பரத்வம் என்ற நிலைகளின் அண்மை சேய்மைக்கு ஏற்ப
இம்முறை கொள்ளப்பட்ட தெனினுமாம்; மேற்காட்டிய “கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும்” என்ற
ஆழ்வாரருளிச்செயலிலும் இம்முறைகாண்க. மேல் 82 – ஆஞ்செய்யுளில் இம்முறைமையை எதிராகக்கூறுமாறும் நோக்குக.

———–

சிந்திக் கல் ஆரம் கொழிக்கும் திருச் சிலம்பாற்று அழகும்
பந்திக் கலாப மயில் ஆடும் சாரலும் பங்கயனோடு
அந்திக் கலாப மதியாற்கு அரியார் உறை ஆன் பொறுப்பும்
வந்திக் கலாம் எனில் சந்திக்கலாம் உயர் வைகுந்தமே –76–

(இ – ள்.) ஆரம் – முத்துக்களையும்,
கல் – (மற்றும்பலவகை) இரத்தினங்களையும்,
சிந்தி கொழிக்கும் – (அலைகளிலே) வீசி ஒதுக்குகின்ற,
திருசிலம்பு ஆறு – சிறந்த நூபுரகங்காநதியினது,
அழகும் – அழகையும், –
பந்திகலாபம் மயில் ஆடும் – வரிசையான தோகையையுடைய மயில்கள் (களித்துத் தோகைவிரித்துக்) கூத்தாடப்பெற்ற,
சாரலும் – (திருமாலிருஞ்சோலை மலையின்) சாரலையும், –
பங்கயனோடு – தாமரைமலரில் தோன்றியவனான பிரமனுக்கும்,
அந்தி கலா மதியாற்கு – அந்திமாலைப்பொழுதிலே விளங்குகிற கலையையுடைய பிறைச் சந்திரனைத் தரித்தவனான சிவபிரானுக்கும்,
அரியார் – (உள்ளபடி உணர்தற்கு) அரியவரான அழகப்பிரான்,
உறை – நித்தியவாசஞ்செய்தருளப்பெற்ற,
ஆன் பொருப்பும் – விருஷபகிரியாகிய அத்திருமாலிருஞ்சோலைமலையையும்,
வந்திக்கல் ஆம் எனின் – வணங்குதல் கூடுமாயின்,
உயர் வைகுந்தம் சந்திக்கல் ஆம் – (எல்லாப்பதவிகளினும்) உயர்ந்ததான பரமபதத்தை அடையலாம்; (எ – று.)

இவற்றை வணங்கியவர், தவறாது திருவைகுந்தம்பெறுவர் என்பதாம். பங்கயனோடு அந்திக்கலாமதியாற்கு அரியார் –
“ஒற்றைவிடையனும் நான்முகனும் உன்னையறியாப் பெருமையோனே” என்றார் பெரியாழ்வாரும்;
‘விஷ்ணுவினுடைய பரமான ஸ்வரூபத்தைத் தானும் ருத்ரனும் மற்றுமுண்டான தேவர்களும் ருஷிகளும்
அறியார்க ளென்னுமிடம் ப்ரஹ்மா தானே சொன்னானிறே,’ முன்னும் “மாதவரா லும்பரா லறியார்” என்றார்.

கலாரம் என்பதைக் கல்ஹாரம் என்னும் வடமொழி சிதைந்ததாகக் கொண்டு, அதற்கு – செங்கழுநீர்மலர்க ளென்று உரைப்பாரு முளர்.
ஆழ்வார் “மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை” என்றா ராதலின்,
அதன்சாரல் ‘பந்திக்கலாபமயி லாடுஞ் சாரல்’ எனப்பட்டது.
பங்க்தி, மயூரம், ஸந்த்யா, வைகுண்டம் என்ற வடசொற்கள் – பந்தி, மயில், அந்தி, வைகுந்தம் என விகாரப்பட்டன.
கலா, கலாபம் – தற்சமவடசொல். காலைச்சந்திக்கும் மாலைச்சந்திக்கும் பொதுவான அந்தியென்பது,
இங்குச் சிறப்பாய் மாலைப்பொழுதை யுணர்த்திற்று.
கலா – சந்திரன்பங்கு; சந்திரன், பதினாறுகலைகளை யுடையவன். வைகுண்டம் என்ற பெயர் – அழிவில்லாத தென்று பொருள் படும்;
குண்டம் – அழிவு; அதுஇல்லாதது, விகுண்டம்; அதுவே வைகுண்டம்; சிறிதுமாறித் தன்பொருளையே யுணர்த்திய தத்திதாந்தநாமம்.
இனி, விகுண்டன் – அழிவில்லாதவனாகிய ஸ்ரீமந்நாராயணன்; அப்பெருமானது இடம், வைகுண்டம் என்று பொருள்கூறுதலு முண்டு.

“வந்திக்கலாமெனிற் சந்திக்கலாம்” என்றவிடத்து, பிராச மென்னுஞ் சொல்லணி காண்க.

———–

வைதாரையும் முன் மலைந்தாரையும் மலர்த்தாளில் வைத்தாய்
மொய்தாரை அத்தனைத் தீங்கு இழைத்தேனையும் மூது உலகில்
பெய்தாரை வானின் புரப்பான் இடபப் பெரும் கிரியாய்
கொய்தாரை வேய்ந்த திருவடிக் கீழ்த் தொண்டு கொண்டருளே –77–

(இ – ள்.) முது உலகில் – பழமையான உலகத்திலே,
பெய் – (வரையாது) பொழிகின்ற,
தாரை – மழைப்பெருக்கையுடைய,
வானின் – மேகம்போல,
புரப்பான் – (வரையாது அனைவரையும்) பாதுகாத்தற்கு.
இடபம் பெருங்கிரியாய் – பெரிய விருஷபகிரியில் எழுந்தருளியிருக்கின்றவனே! –
(நீ), முன் – முன்பு,
வைதாரையும் – (உன்னை) நிந்தித்தவரையும்,
மலைந்தாரையும் – (உன்னை எதிர்த்துப்) போர்செய்தவரையும்,
மலர் தாளில் வைத்தாய் – தாமரைமலர்போன்ற (நினது) திருவடியிற் சேர்த்தருளினாய்;
(அத்தன்மையனான நீ), மொய் தாரை அத்தனை தீங்கு இழைத்தேனையும் – (வானத்தில்) நெருங்கிய நக்ஷத்திரங்க
ளவ்வளவு (பெருந்தொகையுள்ள) தீவினைகளைச் செய்துள்ளேனான என்னையும்,
கொய்தாரை வேய்ந்த திருஅடிக்கீழ் தொண்டு கொண்டு அருள் – பறிக்கப்பட்ட மலர்களாலாகிய மாலையைத்
தரித்த (நின்) திருவடியின்கீழ் அடிமைகொண்டருள்வாய்; (எ – று.)

வைதார் – சிசுபாலன் முதலானார்; மலைந்தார் – தந்தவக்கிரன் முதலியோர்.
எம்பெருமான் தன்னைவிரும்பி இடைவிடாது மனத்திற்கொண்டு பக்தியோடு வாழ்த்தியவர்க்கும் வழிபட்டவர்க்கும்
பரமபதமளித்தல்போலவே, தன்னை வெறுத்து இடைவிடாது மனத்திற்கொண்டு வைதவர்க்கும் எதிர்த்தவர்க்கும்
பரமபதமளித்தருள்கின்றன னென்பதையும், அபாரகருணாநிதியான அப்பெருமான் உயிர்கட்கு நற்கதியளித்தற்குத்
தன்சம்பந்தமான ஏதேனுமொன்றை வியாஜமாகக்கொண்டு அருள்செய்கின்றன னென்பதையும்,
எவ்விதத்திலும் சேதநரை உஜ்ஜீவிப்பிப்பது எம்பெருமானது இயல்பு என்பதையும்,
ஏதேனும் ஒருவியாஜத்தை அபேக்ஷிக்கும் எம்பெருமான் த்வேஷாதிகளினாலாவதுசெய்யும் நாம சங்கீர்த்தநாதிகளையுந்
திருவுள்ளம்பற்றியருளும்படியான மகோதார னென்பதையும் உணர்க;
“மருவுகாமத்தாற் பயத்தினால் வஞ்சநெஞ்சகத்தாற்,
பொருவெறுப்பினால் விருப்பினாற் புனிதனைநினையின்,
உரைசெய்முத்தியினுயர் குவர்காமமுற்றுணர்ந்தே,
அரிய முத்திசென்றடைந்தனர் கோவியரன்றே,”
“கஞ்சன்வெம்பயத்தால் திகழ்கண்ணனைநினைவுற்று,
எஞ்சலற்றவீடெய்தினன் இனிதுவந்தடைந்தார்,
நெஞ்சுவப்புறுகேண்மையால் நினைந்துநின்போல்வார்,
செஞ்சிலைச்சிசுபாலனே முதலவெந்தீயோர்,”
“வெறுப்பினால் நினைந்தடைந்தனர் வீட்டினைவிரும்புந்,
திறத்தினால் நினைந்தடைந்தனர் திருமறைதெளிந்தோர்,
குறிப்புமுத்தொழில் குணங்களா னடாத்து மோர் கொண்டற்கு,
அறத்தின்காதலவெறுப்பெவன் விருப்பெவ னம்மா” என்ற ஸ்ரீபாகவதச்செய்யுள்கள் இங்குநோக்கத்தக்கவை.

‘எம்பெருமானது திருவடியே வீடு’ என்னுங் கொள்கை இங்கு விளங்குகின்றது.
வைதாரையும், மலைந்தாரையும் என்ற உம்மைகள் – எண்ணுப்பொருளோடு இழிவுசிறப்புப்பொருளு முடையன.
தீங்கிழைத்தேனையும் என்ற உம்மை – இறந்ததுதழுவியஎச்சத்தோடு இழிவுசிறப்பு.
இரண்டாமடியில் தாரா என்ற வடசொல்லும், மூன்றாமடியில் தாரா என்ற வடசொல்லும் விகாரப்பட்டன.
புரப்பான் – “பான்” விகுதியே எதிர்காலங்காட்டும் வினையெச்சம்.
வரையாது மழைபொழிந்து உலகத்தைக்காக்கும் மேகம்போல வரையாது கருணைமழைபொழிந்து உயிர்களைப்
பாதுகாத்தற் கென்று திருமாலிருஞ்சோலைமலைமீது நிற்கின்றவனே யென்று அழைத்தவிளி,
இத்தன்மையனான நீ முன்பு வைதவரையும் மலைந்தவரையும் மலர்த்தாளில் வைத்ததுபோல,
இப்பொழுது அளவிறந்ததீவினைசெய்த என்னையும் திருவடிக்கீழ்த் தொண்டுகொண்டருளுதற்கு உரியாய்
என்ற கருத்துக்கு உபகாரப்படுதலால், கருத்துடையடைகொளியணி.

இனி, “பெய்தாரை” என்பதை ஒருசொல்லாக்கொண்டு, பழமையான உலகத்திலே (நின்னாற்) படைத்திடப்பட்டவர்களை
(நினது உலகமான) பரமபதத்தில் (வைத்துப்) பாதுகாத்தற்பொருட்டுத் திருமாலிருஞ்சோலை மலையில்
எழுந்தருளியிருக்கின்றவனே யென்று உரைத்தலு மொன்று. நான் காமடியில், தார் – மலர், மாலை.

————-

கொண்ட மருந்தும் கடைவாய் வழி உக கோழை வந்து
கண்டம் அருந்துயர் ஆம் போது உன் பாதம் கருதறியேன்
வண்டு அமரும் துளவோனே தென் சோலை மலைக்கு அரசே
அண்டம் அருந்தும் பிரானே இன்றே உன் அடைக்கலமே –78-

(இ – ள்.) வண்டு அமரும் துளவோனே – வண்டுகள் விரும்பிமொய்க்குந் திருத்துழாய்மாலையை யுடையவனே!
தென் சோலை மலைக்கு அரசே – அழகிய திருமாலிருஞ்சோலைமலைக்குத் தலைவனே!
அண்டம் அருந்தும் பிரானே – அண்ட கோளங்களை உண்ணும் எம்பெருமானே! –
கொண்ட மருந்தும் கடைவாய் வழி உக – அரிதில் வாயினுட்செலுத்தப்பட்ட பாலும் (உள்ளே யிறங்கமாட்டாமற்) கடைவாயின்வழியாக வெளியேவழிய,
கோழை கண்டம் வந்து – கபம் நெஞ்சிலடைத்துக்கொண்டு,
அருந் துயர் ஆம் போது – (பொறுத்தற்கு) அரிய மரணவேதனை யுண்டாகுஞ் சமயத்தில்,
உன் பாதம் கருது அறியேன் – (உள்ளங்கலங்குதலால்) உன்திருவடிகளை நினைக்கவல்லேனல்லேன்;
(ஆதலால்), இன்றே உன் அடைக்கலம் – இப்பொழுதே உன்னை நான் சரணமடைந்தேன்; (எ – று.)

உள்ளமும் உடலும் சிறிதும் ஸ்வாதீநமில்லையாம்படி நேர்கிற பொறுக்க வொண்ணாத்துயர்தரும் அந்திமதசையில்
உன்திருவடிகளை நினைத்தல் அரிதாதலால், அப்பொழுது நீ எழுந்தருளி எனக்கு மறுபிறப்பில்லாதபடி
முத்திதந்து ஆட்கொள்ளுதற்பொருட்டு இப்பொழுதே யான் உன்னைச் சரணமடைந்தேன் என்பதாம்.
“எய்ப்பென்னைவந்துநலியும்போ தங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப்பள்ளியானே” என்றார் பெரியாழ்வாரும்.
“பாலுண்கடைவாய்படுமுன்னே” என்றாற்போல, “கொண்டமருந்துங் கடைவாய் வழியுக” என்றார்;
“பஞ்சொழுக்கியபால்வார்ந்துஉக” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்;
“வாயிலட்டியகஞ்சியும் மீண்டே, கடைவழிவாரக் கண்டமடைப்பக் கண்ணுறக்கமதாவதன்முன்னம்” என்றார் பெரியாழ்வாரும்.
மருந்து – அமிருதம்; இங்கே, பாலென்றமாத்திரமாய் நின்றது. மற்றை உணவுகளேயன்றிப் பாலும் உட்செல்லாதாம்படி
என்ற பொருளைத் தருதலால், மருந்தும் என்ற உம்மை – இறந்தது தழுவியஎச்சம்;
இனி, மருந்தும் என்பதற்கு – ஒளஷதமும் என்று உரைத்தலும் அமையும்.

கடைவாய் = வாயின்கடை; முன்பின்னாகத்தொக்க ஆறாம்வேற்றுமைத் தொகை; இலக்கணப்போலி.
கண்டம் – வடசொல். கருது – முதனிலைத் தொழிற்பெயர்; நான்காம் வேற்றுமைத் தொகை.
“தேவர்கள் மாலையில் வண்டுமொய்யாது” என்பது பொதுவிதியாயினும், இறைவனது குளிர்ந்த திருவருளினால்
வண்டு மொய்க்கு மென்க; அன்றியும், மநுஷ்யர்க்கு அதீனமான அர்ச்சாவதாரத்தில் வண்டுமொய்த்தல் இயல்பே.
உன்அடைக்கலம் – நான் உனக்கு அடைக்கலப்பொருளாகிறேன்; அடைக்கலம் – பாதுகாக்கத்தக்க பொருள்; சரணமடைந்தவ னென்றபடி.

———–

அடைக்கலம் தானை இரந்தாள் புகல அவள் பொருட்டால்
படைக்கலம் தானைத் தருமன் கெடாமல் வெம் பாரதப் போர்
இடைக்கலந்தானை அலங்காரனை சரண் என்று அடைந்தேன்
முடைக்கலம் தான் நையும் அப்போது அயர்ப்பினும் முத்தி உண்டே –79-

(இ – ள்.) தானை இரந்தாள் – (கண்ணபிரானைக்குறித்து) ஆடையை இரந்து பெற்றவளாகிய திரௌபதி,
அடைக்கலம் புகல – சரணமென்று சொல்ல,
அவள்பொருட்டால் – அவள்நிமித்தமாக,
படைக்கலம் தானை தருமன் கெடாமல் – ஆயுதங்களையும் சேனைகளையுமுடைய தருமபுத்திரன் அழியாதபடி,
வெம்பாரதம் போரிடைகலந்தானை – கொடிய பாரதயுத்தத்திலே (பாண்டவசகாயனாய் அருச்சுனன் தேரிற்) சேர்ந்தவனாகிய,
அலங்காரனை – அழகனை,
சரண் என்று அடைந்தேன் – அடைக்கலமென்று அடைந்துவிட்டேன்; (ஆதலால், இனி),
முடை கலம் தான் நையும் அப்போது அயர்ப்பினும் – தீநாற்றமுடைய தசைநிரம்பியதொரு பாத்திரம் போன்ற
இவ்வுடம்பு தளர்ந்தழியும் அப்பொழுது (அந்திமகாலத்தில்) (அப்பெருமானை நினையாது) மறந்தாலும்,
முத்தி உண்டு – (எனக்கு) மோக்ஷம் கிடைக்கும்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

எம்பெருமானைச் சரணமடைந்தவர் அந்திமகாலத்தில் அவனை நினையாவிடினும் பரமபதம்பெறுவ ரென்பது, தாற்பரியம்.
ஸ்ரீபாஷ்யகாரர்க்காகத் திருக்கச்சிநம்பி வினாவியபோது பேரருளாளப்பெருமாள்
“பரதத்வம் நாமே, பேதமே தரிசனம், உபாயமும் பிரபத்தியே, அந்திமஸ்மிருதியும் வேண்டா,
ஸாராவஸாநத்திலே மோக்ஷம், பெரியநம்பிதிருவடிகளிலே ஆசிரயிப்பது” என்ற ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தமை அறியத்தக்கது.

பஞ்சபாண்டவரில் தருமபுத்திரன் சகுனியுடன் சூதாடி இராச்சியம் முதலிய செல்வங்களையெல்லாம் இழந்த
பின்னர்த் துரியோதனன் சொன்னபடி துச்சாதனன் திரௌபதியைச் சபையிற்கொணர்ந்து துகிலுரியத் தொடங்கியபோது,
அவள் கைகளால் தன் ஆடையை இறுகப்பற்றிக்கொண்டே கண்ணபிரானைக் கூவியழைக்க,
அப்பெருமான் அருள்செய்யாது தாழ்த்து நின்று, பின்பு துச்சாதனன் வலிய இழுக்கையில் ஆடையினின்று கைந்நெகிழ,
அவள் இருகைகளையுந் தலைமேல்வைத்துக் கூப்பிவணங்கித் துதித்தவுடனே,
ஸ்ரீகிருஷ்ணன் அவளுடைய ஆடை மேன்மேல்வளருமாறு அருள்செய்து மானங்காத்தன னாதலால், திரௌபதி, “தானையிரந்தாள்” எனப்பட்டாள்.

வனவாசஅஞ்ஞாதவாசங்களின்பின் துரியோதனனிடத்தினின்று சமாதானத்திலே கிடைத்தவளவு இராச்சியத்தைப்
பெற்றுவாழ்வதென்று தருமபுத்திரன் முதலான பாண்டவர்கள் ஆலோசித்து ஸ்ரீகிருஷ்ணபகவானைத் துரியோதனனிடம்
தூதனுப்பத்தொடங்கியபோது, திரௌபதி கண்ணபிரானை வணங்கி அவனுக்குத் தன்தலைவிரிகோலத்தைக்காட்டி
“பாண்டவர்க்குத் துரியோதனாதியரோடு போர்நிகழுமாறும் மூலப்படி நகலச்சு சரியில்லை ……..துரியோதனாதியர் இறக்க
நான்முன்பு செய்த சபதத்தின்…….. நடந்துகொள்ளுமாறும் திருவருள் புரியவேண்டும் என்று தஞ்சமடைய,
கண்ணபிரான் “தொல்லாண்…….. மீண்டதற்பின், நல்லாய் உன்பைங்கூந்தல் நானே……. முடி அவளுக்கு
வாக்குதத்தஞ்செய்து, பின்பு அங்ஙனமே நிகழ்ந்த……. டவசகாயனாகி அருச்சுனன் தேர்த்தட்டிற் பாகனாய் நின்று
பல ……… செய்து துரியோதனாதியரைத் தொலைத்துப் பாண்டவரைப் பாதுகாத்துத் திரௌபதியின்
பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவைத்தன னென்ற வரலாறு, இங்குக் குறிக்கப்பட்டது.

அடைக்கலம்புகல – “எனக்கு நீயே கதி, நான் உன்னாற் பாதுகாக்கத் தக்கவள்’ என்று சொல்ல,
“அவள்பொருட்டு” என்றவிடத்து, பொருட்டு – நான்காம்வேற்றுமைச்சொல்லுருபு; ஆல் – அசை.
படைக்கலம் – போர்க்கு உரிய கருவி; ஆயுதமாகிய போர்க்கருவி. தருமத்தினின்று தவறியவர்க்குத் தக்க
தண்டனைசெய்து தருமத்தைக்காத்தலால், யமனுக்கு வடமொழியில் தர்மனென்று பெயர்;
தந்தையே மைந்த னாகிறான்’ என்னும் நூல் வழக்குப்பற்றி, தருமபுத்திரன் தரும னெனப்படுவன்.
ஒருபெயரின் ஒரு பகுப்பைக்கொண்டு அப்பெயர்முழுவதையுங் குறிப்பதொரு வழக்கினால் (நாமைகதேசேநாமக்ரஹணத்தால்),
தருமபுத்திரனைத் தருமனென்று குறித்ததாகவுங் கொள்ளலாம்.
இவன், பாண்டுமகாராசனது மனைவியரிருவரிற் குந்திதேவியினிடம் யமனுக்குப் பிறந்தவன்.
பஞ்சபாண்டவருள் மூத்தவனான தருமனைக் கூறியது, மற்றையோர்க்கும் உபலக்ஷணம்.
பாரதம் – வடசொல்; பரதவம்சத்தாருள் நிகழ்வதென்று பொருள்படும்; தத்திதாந்தநாமம்.
நான்காமடியில், கலம் – கொள்கலம்; “ஊறி யுவர்த்தக்க வொன்பதுவாய்ப்புலனுங், கோதிக் குழம்பலைக்குங் கும்பம்” என்றாற்போல, “முடைக்கலம்” என்றார்; “குற்றக்கொள்கலம், …………………… மக்கள்யாக்கை” என்றார் பிறரும். தான் – அசை.

———–

உண்டு இறக்கும் புவனங்களை மீள உமிழ்ந்திலை யேல்
பண்டு இறக்கும் பதுமத்தோன் புரந்தரன் பைந்தழல் போல்
கண் திறக்கும் சங்கரன் முதலோர்களைக் கண்டவர் ஆர்
திண் திறக் குஞ்சரம் சேர் சோலை மா மலைச் சீதரனே –80–

(இ – ள்.) திண் திறம் – மிக்கவலிமையையுடைய,
குஞ்சரம் – யானைகள்,
சேர் – பொருந்திய சோலை மா மலை – திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற,
சீதரனே – திருமாலே! –
(நீ), உண்டு இறக்கும் – (பிரளயகாலத்திலே) வாயினுட்கொண்டு வயிற்றினுட்செலுத்திய,
புவனங்களை – உலகங்களை,
மீள உமிழ்ந்திலைஏல் – (அப்பிரளயம்நீங்குமளவிலே) வெளிப்படுமாறு உமிழாதிருந்தனையானால், –
பண்டு இறக்கும் – முன்பு அழிந்துபோன,
பதுமத்தோன் – பிரமனும்,
புரந்தரன் – இந்திரனும்,
பைந் தழல் போல் கண் திறக்கும் சங்கரன் – பசுமையான (புதிதாக மூண்டெரிகின்ற) நெருப்புப்போல
நெற்றிக் கண்ணைத் திறக்கின்ற சிவபிரானும்,
முதலோர்களை – முதலானவர்களை,
கண்டவர் ஆர் – (மீளவும்) பார்த்தவர் ஆர்? (எவரும்பாரார் என்றபடி.)

நீ அமுதுசெய்த உலகங்களை மீளஉமிழ்ந்ததனாலே அவ்வுலகங்களுடனே பிரமன்முதலிய தலைமைத்
தேவர்கள் தோன்றினர் என்பதாம்.
“உலகந்தர வுந்திபூத்திலையேல் சுடரோரிரண்டும்,
இலகந்தரமும் புவியுமெங்கே அயனீச னெங்கே,
பலகந்தரமு முணவுமெங்கே பல்லுயிர்களெங்கே,
திலகந்தரணிக்கென நின்ற வேங்கடச்சீதரனே” என்ற திருவேங்கடத்தந்தாதிச்செய்யுளோடு இச்செய்யுளை ஒப்பிடுக.
இது, ஸ்ரீமந்நாராயணனது பரத்வத்தைக் காட்டக் கூறியது.
(“பரந்ததெய்வமும் பல்லுலகும் படைத்தன்றுடனே விழுங்கிச்,
கரந்துமிழ்ந்து கடந்திடந்தது கண்டுந் தெளியகில்லீர்”,
“எல்லாருமறியாரோ எம்பெருமானுண்டுமிழ்ந்த வெச்சில்தேவ,
ரல்லாதார் தாமுளரே அவனருளே யுலகாவ தறியீர்களே,”
“நெற்றிமேற்கண்ணனும் நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,
ஒற்றைக்கை வெண்பகட்டிலொருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,
வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் தான்விழுங்கி யுய்யக்கொண்ட,
கொற்றப்போராழியான் குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியவாறே” என்றார் ஆழ்வார்களும்.)

முதலடியில், “இறக்கும்” என்றது – “இறங்கும்” என்பதன் பிறவினை; இறங்கச்செய்யு மென்பது பொருள்.
சங்கரன் – (தன்னைச்சார்ந்தவர்க்கு) இன்பத்தைச் செய்பவன்; சம் – சுகம்.
திண்திறம் – ஒருபொருட்பன்மொழி.
சீதரன் – ஸ்ரீதரனென்ற வடசொல்லின் விகாரம்; திருமகளை (மார்பில்) தரிப்பவ னென்பது பொருள்.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திரு அழகரந்தாதி –41-60-

February 22, 2022

தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல் –

பிழைத்தலை யான் எண்ணிப் பேசுகின்றேன் இப்பிணி மற்று ஒன்றால்
மழைத்தலை வார் குழலீர் தணியாது வருணனை முன்
அழைத்து அலை அங்கு அடைத்தார் அலங்காரர் அலங்கல் நல்கீர்
முழைத்தலை நின்று மலயா நிலம் வந்து மோதும் முன்னே –41–

(இ – ள்.) தலை – சிரசிலே,
மழை – மேகம்போன்ற,
வார் குழலீர் – நீண்ட கூந்தலை யுடையவர்களே! –
யான் பிழைத்தலை எண்ணி பேசுகின் றேன் – நான் பிழைக்கும்வழியை ஆராய்ந்து சொல்லுகின்றேன்: –
இ பிணி மற்று ஒன்றால் தணியாது – (எனக்கு நேர்ந்திருக்கின்ற) இந்தக்காதல்நோய் வேறொருபரிகாரத்தால் அடங்காது;
மலய அநிலம் முழைத்தலைநின்று வந்து மோதுமுன்னே – மலயமாருதமாகிய தென்றற்காற்று அம்மலைய பருவதத்தினது
குகையிடத்தினின்று வந்து தாக்குதற்கு முன்னமே, –
வருணனைமுன் அழைத்து அலை அங்கு அடைத்தார் அலங்காரர் அலங்கல் நல்கீர் – (சமுத்திரராசனான) வருணனை எதிரில்
வரவழைத்துக் கடலை அப்பொழுது அணைகட்டியடைத்தவரான அழகருடைய மாலையைக் கொணர்ந்து கொடுங்கள்; (எ – று.)

தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைமகள், அப்பிரிவுத் துயரை யாற்றி யடக்கும் வல்லமை யிலளாகி,
தனது நிலைமையை அன்பு டைத்தோழியர்க்கு வெளிப்படையாக வுரைத்தது இது.
தன்விருப்பத்தை நிறைவேற்றுதற்பொருட்டுத் தோழியரைக் கொண்டாடியழைப்பவளாய்
‘மழைத்தலைவார்குழலீர்’ என்று புனைந்துரைத்து விளித்தாள்.
புண்ணிற் புளிப்பெய்தாற்போல இந்நிலையில் தென்றற்காற்றுவந்து என்மேல் வீசுமா யின் யான் இறந்துபடுவேன்:
அது வீசுதற்கு முன்னமே என்தலைவனணி ந்த மாலையை எனக்குக் கொணர்ந்து கொடுத்தால்மாத்திரமே யான்
அதுகொண்டு சிறிது ஆறியிருப்பேன் என்றாள்.
அவனது பிரசாதமான திருத்துழாய் இந்நோய்த்தணித்தற்கு ஏற்ற பசுமருந்தாகிய சஞ்சீவிமூலிகை யென்ற வாறு.
முன்புஒருதலைவியினிடத்துஆராத அன்பினால் அவள்பிரிவையாற்றாது அவளைக்கூடுதற்பொருட்டுத் தன்னினுந்தாழ்ந்தவனான
ஒருவனைத் தலையால் வணங்கிக் கடலையடைத்தலாகிய செயற்கருஞ்செயலைச் செய்து அவளைச் சேர்ந்தவராகிய தலைவர்
இங்ஙனம் என்னைப் பிரிந்து உபேக்ஷித்து நிற்கின்றனரென்று இரங்குவாள்; ‘வருணனைமுன்அழைத்துஅலைஅங்கு அடைத்தார்’ என்றாள்.
‘அலங்காரர்’ என்றது, அவரது திவ்வியசௌந்தரியத்திலே தான் கொண்ட ஈடுபாட்டினால். ‘முழைத்தலைநின்று வந்து மோதுமுன்’ என்றதனால்,
தென்றற்காற்றை ஒருபுலியாகக் குறித்தவாறாம்.
‘முழைத்தலை நின்று மலயாநிலம் வந்துமுன்னே’ –
“மலயக், குன்றிற் குலமா முழையிற் குடிவாழ், தென்றற்புலியே யிரைதேடுதியோ” என்பது, கம்பராமாயணம்.

பிழைத்தற்குக்காரணமான உபாயத்தை ‘பிழைத்தல்’ என்றது, ஆகுபெயர். மகளிர்கூந்தலுக்கு மேகம் உவமை,
கருமை குளிர்ச்சிகளில். அலை – கடலுக்கு ஆகுபெயர். “அங்கு” என்று சுட்டினது, கதையை உட்கொண்டு; இராமாவதாரத்தில் என்றபடி.
அலங்கல் – தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் – கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும்.
மலயாநிலம் – தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர். ‘மழைத் தலை வார் குழல்’ என்பதற்கு – மேகத்தின் தன்மையைத்
தன்னிடத்தே கொண்ட நீண்ட கூந்தல் என்று பதவுரை கொள்ளலுமாம்.

எம்பெருமானை இடையீடின்றிச்சேரப்பெறாதுவருந்துகின்ற ஐயங்கார் தமதுநிலைமையை அன்பர்க்கு உரைத்தல்,
இதற்கு உள்ளுறைபொருள். யான் பிழைத்தலை எண்ணிப் பேசுகின்றேன் – நான் உய்யும் ஆற்றைச் சிந்தித்து ஆய்ந்து
உணர்ந்து கூறுகின்றேன். மழைத்தலைவார்குழலீர் – எம்பெருமானைத் தலையால்வணங்கி உத்தமஅங்கமாகிய
தலை படைத்தபயன் பெற்று அதுகொண்டு சிறப்பித்துக் கூறத்தக்கவர்களே யென்றபடி.
ஒருசமயத்தில் இன்பஞ்செய்வதும் மற்றொருசமயத்தில் துன்பஞ்செய்வதுமான லௌகிக
பதார்த்தங்கள் மறைவின்றி வெளிப்பட்டு என்னை வருத்துதற்கு முன்னமே பகவத்பிரசாதமாகிய திருத்துழாயை
எனக்குக் கொணர்ந்து கொடுத்தால் யான் ஆற்றாமைதீர்ந்து ஆனந்தமடைவேன் என்பது, பிந்தினவாக்கியத்தின் உட்கோள்.
“வருணனை முன் அழைத்து அலையங்கடைத்தார்” என்றதனால், ஜீவகோடிகளில்உத்தமையான பிராட்டியைப்போலவே
எம்மையும் தம்பக்கல் சேர்த்துக்கொள்ளக்கடவர் அவரென்று குறிப்பித்தவாறு.

இனி, இச்செய்யுளுக்கு – தோழியானவள் செவிலித்தாயர்க்குத் தலைவியின் நிலைமையைக் கூறி அறத்தொடு
நின்றதாகவுந் துறைகூறலாம்;
அப்பொழுது, முதல்வாக்கியத்துக்கு – இவள்பிழைக்கும்வழியை ஆராய்ந்து யான் சொல்லுகின்றேன் என்று பொருள் காண்க.
அங்ஙனங்கொள்ளுமிடத்து – எம்பெருமானது சேர்க்கையைப் பெறாமல் வருந்துகிற ஐயங்காரது துயரத்தைத் தீர்க்கும்
வகையை அவரது அன்பர்கள் அவர்பக்கல் பரிவுடையரான ஞானிகளைக்குறித்துக் கூறுதல், உள்ளுறைபொருளாம்.
‘பிழைத்தலையான் எண்ணிப்பேசுகின்றேன்’ என்றதனால், இவரது ஆற்றாமையைத் தீர்த்தற்கு ஆப்தரது உபதேசம்
மூலமா மென்பது தோன்றும். அலங்கல்நல்கீர் – “மாலையந்தண்ணந்துழாய்கொண்டுசூட்டுமினே” என்றார் ஆழ்வாரும்.

—————

மோது ஆக வந்தனை மூட்டு இலங்கேசன் முடிந்து விண்ணின்
மீது ஆக வந்தனை வில் எடுத்தே விடை வெற்பில் நின்ற
நாதா கவந்தனைச் செற்றாய் உனை அன்றி நான் மறந்தும்
தீ ஆக வந்தனை செய்யேன் புறம் சில தேவரையே –42–

(இ – ள்.) விடைவெற்பில் நின்ற நாதா – விருஷபகிரியாகிய திருமாலிருஞ்சோலைமலையில் நின்றதிருக்கோலமா யெழுந்தருளியிருக்கிற தலைவனே!
கவந்தனை செற்றாய் – கவந்தனென்ற இராக்கதனைக் கொன்றிட்டவனே! –
மோது – (ஒருவரோடுஒருவர்) தாக்கிச்செய்வதான,
ஆகவந்தனை – போரை,
மூட்டு – வலியஉண்டாக்கிநடத்திய,
இலங்கா ஈசன் – இலங்கா புரிக்குத் தலைவனான இராவணன்,
முடிந்து – இறந்து,
விண்ணின்மீது ஆக – மேலுலகத்திற் சேரும்படி,
வில் எடுத்து வந்தனை – கோதண்டத்தைக் கையிலெடுத்துவந்தாய்;
உனை அன்றி – (இங்ஙனம் பெரும் பிழை செய்து பகை யாய்எதிர்த்தவனும் நற்கதிசேருமாறு கருணைபுரிந்த) உன்னையே (வணங்குவேனே) யன்றி,
புறம் சில தேவரை – வேறுசில தேவர்களை, நான் -,
மறந்தும் தீது ஆக வந்தனை செய்யேன் – மறந்தாயினும் தீமைநிகழுமாறு வணங்கமாட்டேன்; (எ – று.)

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” ஆதலால், தேவதாந்தரங்களிடத்தில் தமக்குஉள்ள உபேக்ஷையையும்,
பரதேவதையினிடத்தில் தமக்குஉள்ள அபேக்ஷையையும் இங்ஙனம் கூறி வெளியிட்டார்.
கணவனையே தெய்வமாகக் கொண்டொழுகுங் கற்புடைமகளிர்க்குப்பிறிதோராடவரது தொடர்பில்லா மலிருத்தல்
இன்றியமையாதவாறுபோல, எம்பெருமானைச்சரணமடைந்து உய்யும் பிரபந்நர்க்குத் தேவதாந்ரபஜநம் பண்ணாமை
அவசிய மென்பர் ஆன்றோர். ‘மறந்தும்’ என்பது, வந்தனைசெய்தலோடு இயையும்.
“வீழ்வார்க்குவீழ்வார்துணை” என்றாற்போல, பிணிபசிமூப்புப்பிறப்பிறப்புத்துன்பங் களினின்று தாம் உய்யமாட்டாத
பிறசிலதேவர்களை வந்தனைசெய்தால், அதனால் ஆகக்கடவது வினைத்தொடர்பேயன்றி வீடுபேறன் றாதலால், ‘தீது ஆக’ எனப்பட்டது;
ஜீவாத்மாவினது ஸ்வரூபம் நிலைகுலைய என்றவாறுமாம். புறம் – விலக்காகிய என்றபடி.
தம்மைச்சரணமடைந்தவர்களைச் சமயத்திலே கைவிடுபவர்களான வென்பது தொனி.

பகைமைக்காரணம் யாதொன்றுமில்லாதிருக்கவும், ஸ்ரீராமபத்நியான சீதையைக் காதலால் வலியக் கவர்ந்துசென்று
சிறைவைத்துவருத்திப் பின்னர் ஒருமுறைக்குஇருமுறை அப்பெருமான் தூதனுப்பவும் சமாதானத்தில்
அப்பிராட்டியைக் கொணர்ந்துவிட்டிடாமற் பெரும்போர் விளைதற்குக் காரணமாய் நின்றன னாதலால்,
இராவணனுக்கு “மோதுஆகவந்தனைமூட்டு” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
நீராணாக நாற்புறமுங்கடல்சூழ்ந்த தீவிலே வசித்தலால் எவரும் வந்து நம்மைநலிவுசெய்ய
இயலா தென்னுஞ் செருக்குடையா னென்பது தோன்ற, “இலங்கேசன்” என்றார்.
அப்படிப்பட்டவனும் இறந்து பரலோகமடையும்படி வில்லெடுத்துவந்தா யென்றதில்,
ஸ்ரீராமபிரானது திவ்வியசக்தி தோன்றும். இனி, மூட்டி லங்கேசன் என்று பிரித்தும் பொருள்கொள்ளலாம்.

———–

தேவரை யாதல் மனிதரை யாதல் செழும் கவிதை
நாவரை யாமல் நவிலுகிற்பீர் நம்மை ஆளும் செம் பொன்
மேவு அரை யானை இருஞ்சோலை வேங்கடம் மெய்யம் என்னும்
மா வரையானை ஒருவனையே சொல்லி வாழுமினே –43-

(இ – ள்.) தேவரை ஆதல் – (பிற) தேவர்களைக்குறித்தாவது,
மனிதரை ஆதல் – மநுஷ்யர்களைக்குறித்தாவது,
நா வரையாமல் – நாவினால் (இன்னாரை இன்னவாறு துதிக்கலாம் இன்னாரை இன்னவாறு துதிக்கலாகாது என்னும்) வரையறை கொள்ளாமல்,
செழுங்கவிதை நவிலுகிற்பீர் – செழுமையான பாடல்களைப் பாடித் துதிப்பவர்களே! –
நம்மை ஆளும் – நம்மை யனைவரையும் (இயல்பிலே) அடிமையாகக்கொண்டுள்ள,
செம் பொன் மேவு அரையானை – மாற்றுயர்ந்த பொன்மயமான ஆடையாகிய பீதாம்பரம் பொருந்திய திருவரையையுடையவனும்,
இருஞ் சோலை வேங்கடம் மெய்யம் என்னும் மா வரையானை – திருமாலிருஞ்சோலை திருவேங்கடம் திருமெய்யம்
என்னும் பெரியமலைகளை (த் தான்எழுந்தருளியிருக்குமிடமாக)க் கொண்டவனு மாகிய,
ஒருவனையே – ஸ்ரீமந்நாராயணனொருவனையே,
சொல்லி – கவிபாடித்துதித்து,
வாழுமின் – பேரின்பவாழ்க்கை பெற்று உய்யுங்கள்.

பகவத்குணாநுபவத்தி லாசையுடைய ஐயங்கார், தேவதாந்தரங்களைக் குறித்தும் மனிதர்களைக்குறித்தும் பற்பலவாறு
கண்டபடி புகழ்ந்து கவிபாடித் தம்தம்புலமையையும் வாக்கையும் வீண்படுத்தித்திரிகிற சிலபுலவர்களைப் பார்த்து
‘இதனால் என்ன பய னுண்டாகும்? வேண்டியபயன்களை, வேண்டியவாறே பெறும்படி என்னோடொப்ப
எம்பெருமானைக் கவிபாடித் துதியுங்கள்’ என்று இதோபதேசஞ்செய்கின்றார்.
“கவிபாடலாகாது” என்றநிஷேதசாஸ்திரத்துக்கு இலக்கு – அஸத்விஷயத்திலாதலும்,
‘கவிபாடுதல்புகழ்முதலிய பலவற்றைப் பயக்கும்’ என்ற விதிசாஸ்திரத்துக்கு இலக்கு –
ஸத்விஷயத்திலாதலு மாகிய வேறுபாடு காணத்தக்கது.

முதலடியில் இரண்டிடத்து வந்த “ஆதல்” என்ற சொல், விகற்பப்பொருளது. மனிதர் – மநுஜ ரென்ற வடசொல்லின் விகாரம்;
(காசியபமுனிவனது மனைவியருள்) மநுவென்பவளிடத்துத் தோன்றியவரென்பது, அதன் பொருள்.
கவிதா – வடசொல்; கவிபாடுந் திறமென்பது, இதன்பொருள்: இலக்கணையாய், பாடலின்மேல் நின்றது.
செழுங் கவிதை – சொற்பொருட்கருத்துக்களிலும், தொடை நடை அணி துறை வகைகளிலும் சிறந்த பாடல்க ளென்க.
“நம்மை” என்றது, முன்னிலையாரையும் படர்க்கையாரையும் உளப்படுத்திய தன்மைப்பன்மை.
பொன் – பொன்னாடைக்குக் கருவியாகுபெயர். அரை – நடுவுறுப்புக்கு எண்ணலளவாகுபெயர்.
வரை என்ற கணுவின்பெயர் – அதனையுடைய மூங்கிலுக்குச் சினையாகுபெயரும்,
அது பின்பு அம்மூங்கில் விளையும் மலைக்குத் தானியாகுபெயரு மாதலால், இருமடியாகுபெயராம்.
ஒருவனையே, ஏ – பிரிநிலை. திருமெய்யம் – பாண்டிநாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்று; ஸத்யகிரி யென்னும் மறுபெயருடையது.

————-

வாழும்மின் பங்கயச் சுந்தர வல்லி மணாளன் வெற்பைச்
சூழுமின் பந்தித்த தொல் வினை தீர்ந்து உய்ய தொங்கல் சுற்றும்
தாழும் இன்பஞ்சணை மேல் மடவார் தடமா முலைக்கே
வீழும் இன்பம் கருதி துன்ப யோனியில் வீழ்பவரே –44–

(இ – ள்.) சுற்றும் தொங்கல் தாழும் – சுற்றிலும் பூமாலைகள் தொங்க விடப்பெற்ற,
இன் பஞ்சு அணைமேல் – இனிமையான பஞ்சுமெத்தையின்மீது,
மடவார் தட மா முலைக்கே வீழும் – இளமகளிரது பெரிய அழகிய தனங்களிலே விரும்பிச்சேர்ந்து பெறுகிற,
இன்பம் – சிற்றின்பத்தை,
கருதி – பொருள்செய்து,
துன்பம் யோனியில் வீழ்பவரே – துன்பத்தைத்தருகின்ற பிறப்புக்களாகிய படுகுழியில் விழுந்து அழிபவர்களே! –
பந்தித்த தொல்வினை தீர்ந்து உய்ய – (உங்களுயிரைக்) கட்டுப்படுத்துகின்ற பழமையான கருமங்கள் நீங்கி (நீங்கள்) ஈடேறும்படி, –
வாழும் மின் பங்கயம் சுந்தரவல்லி மணாளன் வெற்பை சூழுமின் – (சிறிதுபொழுதேனும் நிலைநில்லாது தோன்றியவுடன் அழியும் மின்ன லன்றி)
என்றும் அழியாது நிலைபெற்றிருப்பதொரு மின்னல் (உளதாயின் அது) போன்றவளும் செந்தாமரைமலரில் வாழ்பவளும்
சுந்தரவல்லியென்னுந் திருநாமமுடையவளு மான பெரியபிராட்டியின் கணவனாகிய அழகப்பிரானது
திருமாலிருஞ்சோலைமலையைப் பிரதக்ஷிணஞ் செய்யுங்கள்; (எ – று.)

மாதரார்கயற்கணென்னும் வலையுட்பட்டழுந்திச் சிற்றின்பப்படுகுழியில்வீழ்ந்து மாறிமாறிப்பலபிறப்பும்பிறந்து
இறந்துதிரிகின்ற பேதையரைக் குறித்து, “நீங்கள் கருமமனைத்தும்ஒழிந்து பரகதிபெறுமாறு அழகரது
திருமாலிருஞ்சோலைமலையை வலஞ்செய்யுங்கள்” என்று நல்லறிவு கூறுகின்றார்;
“வலஞ்செய்துவைகல்வலங்கழியாதே,
வலஞ்செய்யுமாயமாயவன் கோயில்,
வலஞ்செய்யும்வானோர்மாலிருஞ்சோலை,
வலஞ்செய்துநாளும்மருவுதல் வழக்கே” என்றார் ஆழ்வாரும்.

“வாழும் மின்” என்றது, இல்பொருளுவமை. ஸுந்தரவல்லீ என்ற வடமொழித்தொடர்,
அழகியபூங்கொடி போன்றவ ளென்று பொருள்பட்டு உவமையாகுபெயராம்.
சுந்தரவல்லிநாச்சியாரென்பது, திருமாலிருஞ்சோலை நாச்சியாரின் திருநாமம்.
மணாளன் – மணவாள னென்பதன் மரூஉ, மடவார் – மடமையுடையவர்.
வீழ்தல் – விரும்புதலாதலை, “தாம்வீழ்வார்மென்றோட்டுயில்” எனத் திருக்குறளிலுங் காண்க.

—————-

வீழ மராமரம் எய்தார் மதி தவழ் வெற்பை நெஞ்சே
தாழ் அமர் ஆடச் சமன் குறு கான் இச் சரீரம் என்னும்
பாழ் அமராமல் பரகதி எற்றுவர் பார்க்கில் விண்ணோர்
வாழ் அமரா வதியும் நரகாம் அந்த மா நகர்க்கே –45-

(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
மராமரம் வீழ எய்தார் – மராமரங்கள் விழும்படி அம்பெய்தவரான எம்பெருமானுடைய,
மதி தவழ் வெற்பை – (உயர்ச்சியினாற்) சந்திரன் தவழப்பெற்ற திருமாலிருஞ்சோலைமலையை,
தாழ் – வணங்குவாய்; (அதனால் யாது பயனெனின்,) –
அமர் ஆட, சமன் குறுகான் – (வினையனைத்தும்ஒழிதலால் அந்திமகாலத்திலே) போர்செய்து வென்று உயிரைக்கவர்ந்து செல்லுதற்காக யமன் அருகில்வருதலுஞ்செய்யான்;
(அன்றியும்), இ சரீரம் என்னும் பாழ் அமராமல் – இந்தஉடம்பாகிய பாழிலே பொருந்தாதபடி (மீண்டும்பிறப்பு இல்லையாம்படி),
பர கதி ஏற்றுவர் – (அவ்வுயிரை எம்பெருமான்) பரமபதத்திற் சேர்த்தருள்வர்;
பார்க்கில் – ஆலோசித்துப்பார்க்குமிடத்து, –
விண்ணோர் வாழ் அமராவதியும் – தேவர்கள் வாழ்கின்ற அமராவதிநகரமும்,
அந்த மா நகர்க்கு நரகு ஆம் -அந்தஸ்ரீ வைகுண்ட திவ்வியநகரத்துக்குமுன்னே நரகமெனத்தக்கதாம்; (எ – று.)

மனமே! அழகரது திருமாலிருஞ்சோலைமலையை வணங்கு; அங்ஙனம் வணங்கினால், நம்மை யமன் அணுகான்;
எல்லாவுலகங்கட்கும் மேலதான பரமபதஞ் சேரலாம்;அப்பரமபதமோ, புண்ணியப்பயனாலடையுஞ் சுவர்க்கலோகத்தினும்
மிகப்பலமடங்கு மேலானது என்பதாம். தீவினைப்பயனால் நேர்வதும் மிகப்பலதுன்பங்களையே நுகருமிடமுமான நரகத்துக்கும்,
நல்வினைப்பயனால்நேர்வதும் மிகப்பலஇன்பங்களையேநு கருமிடமுமானசுவர்க்கத்துக்கும் எத்துணைவேறுபாடு உண்டோ,
அத்துணைவேறுபாடு உண்டு, சிற்றின்பங்களையே நுகருமிடமாய் மீளுமுலகாகிய அச்சுவர்க்கத்துக்கும்
எம்பெருமானருளால் நேர்வதும் பேரின்பத்தையே நுகருமிடமும் மீளாவுலகமுமான பரமபதத்துக்கும் என்பார்,
“பார்க்கில் விண்ணோர் வா ழமராவதியும் நரகாம் அந்தமாநகர்க்கு” என்றார்;
இனி, “அந்தமாநகர்க்கு” என்பதற்கு – அத்திருமாலிருஞ்சோலைத் திவ்வியதேசத்துக்கு என்று உரைத்தலும் ஒன்று, –
அப்பொழுது, தேவாதிதேவன்வாழுமிடமான அத்திருப்பதி தேவநகரத்தினும் மிகமேம்பட்ட தென்பது போதரும்.

மதிதவழ்வெற்பு – அதிசயோக்திவகையால் அம்மலையின் மிக்க உயர்வைக் கூறியது; தொடர்புயர்வுநவிற்சியணி:
“மதிதவழ்குடுமிமாலிருஞ்சோலைப்,
பதியதுவேத்தியெழுவதுபயனே” என்றார் நம்மாழ்வாரும்.
“பரிபூர்ண சந்த்ரமண்டலத்தாலே அலங்க்ருதமான சிகரங்களை யுடைத்தான திருமாலிருஞ்சோலை” என்றும்,
“சந்த்ரனானவன் தவழும்படி ஓங்கின சிகரசிகைகளையுடைத்தான திருமலை” என்றும்,
“சூற்பெண்டுகள் சுரமேறுமாபோலே சந்த்ரன் தவழ்ந்தேறாநின்றுள்ள சிகரத்தையுடைய திருமலை” என்றும் அங்கு உரைத்தனர் ஆன்றோர்.

“மாலடிமைகொண்டவனந்தரத்தும்பேர் நினைக்கவுங் கூற்றஞ்சுமே”,
“அகந்தரங்கமுற்றாரடியார்க்கு நமனஞ்சுமே” ஆதலால், ‘அமராடச்சமன் குறுகான்’ என்றார்.
“நான் மற்றவர்களுக்குப் பிரபுவல்லது, வைஷ்ணவர்களுக்குப் பிரபுவல்லேன்; எம்பெருமான் எவனுடைய இருதய
கமலத்தில் வாசஞ்செய்துகொண்டிருப்பனோ, அந்தமகாபுருஷனுடைய கடாக்ஷம் பிரஸரிக்கு மிடங்களிலெல்லாம்
நீ செல்லத்தக்கவனல்லை, நானும் செல்லத்தக்கவனல்லேன்; பதறிச்சென்றால், அப்பெருமானுடைய திருவாழியின்
தேஜோவிசேஷத்தினாலே பதராக்கப்படுவோம்; அந்தமகாபுருஷன் ஸ்ரீவைகுண்டதிவ்வியலோகத்துக்குஎழுந்தருளத்தக்கவன்” என்ற
வாக்கியங்களை, ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் யமகிங்கரசம்வாதரூபமான வைஷ்ணவப்பிரபாவத்திற் காணலாம்.

அமர் – ஸமர மென்ற வடசொல்லின் விகாரம்; சமர், சமம் என்பனவும் இது,
ஸமன் என்ற வடசொல் சமன் என விகாரப்பட்ட தென்று கொண்டால். (எல்லாவுயிர்களிடத்தும்) பக்ஷபாதமின்றி
நடுவுநிலைமைதவறாது ஒப்ப நடப்பவன் என்று பொருள்படும்; ஸமவர்த்தீ, நடுவன் என்பனவும் அவன்பெயர்களாம்.
இனி, ஸமநன் என்ற வடசொல் சமனென விகாரப்பட்டதென்று கொண்டால், (பாவிகளைத்) தண்டிப்பவ னென்பது அதன் பொருளாம்.
ஸரீரம் என்ற வடசொல், சிதிலமாவது என்று காரணப்பொருள்படுவது; ஆகவே, ‘சரீரமென்னும்பாழ்’ என்றது, பொருந்தும்.
பரகதி – எல்லாக்கதிகளினும் மேலான கதி; வடமொழித்தொடர்.
அமராவதீ என்ற வடசொல்லுக்கு – தேவர்களையுடையது என்பது பொருள்; இது, சுவர்க்கலோகத்து இராசதானி,
‘அமராவதியுந்நரகாம்’ என்றவிடத்து, நகரவொற்று – விரித்தல்விகாரம். நரகம், நகரம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.

———–

நகரமும் நாடும் புரந்தவர் நண்ணலரால் வானமும்
சிகரமும் நாடும் சிறுமை கண்டோம் மஞ்ஞை தேன் இசைகள்
பகர முன் ஆடும் பனிச்சோலை வெற்பில் நிற்பார்க்கு கஞ்சன்
தகர முன் நாள் துகைத்தார்க்கு அறிந்தீர்கள் சரண் புகுமே –46–

(இ – ள்.) நகரமும் நாடும் புரந்தவர் – பட்டணங்களையும் தேசங்களையும் ஆண்ட அரசர்கள்,
நண்ணலரால் வனமும் சிகரமும் நாடும் – பகைவர்களால் (அடித்துத்துரத்தப்பட்டுக்) காட்டையும் மலையுச்சியையும் தேடிச்செல்லும்படியான,
சிறுமை – எளிமையை,
கண்டோம் – (உலகத்திற்) பார்த்துள்ளோம்: (இங்ஙனம் செல்வம் நிலையில்லாமையால் அதிலாசையைவிட்டு), –
அறிந்தீர்கள் – (அறியவேண்டுபவற்றை) அறிந்தவர்களே! –
தேன் இசைகள் பகர – வண்டுகள் கீதங்கள்பாட,
மஞ்ஞை முன் ஆடும் – மயில்கள் எதிரிலே கூத்தாடப் பெற்ற,
பனி சோலை வெற்பில் – குளிர்ந்த திருமாலிருஞ்சோலைமலையிலே,
நிற்பார்க்கு – நின்றதிருக்கோலமாய்எழுந்தருளியிருப்பவரும்,
கஞ்சன் தகர முன் நாள் துகைத்தார்க்கு – கம்சன்அழியும்படி முற்காலத்திலே (கிருஷ்ணாவதாரத்தில்) மிதித்தவரு மான எம்பெருமானுக்கு,
சரண் புகும் – அடைக்கலம்புகுங்கள்; (எ – று.)

பகவத் பக்தியிலாழ்ந்த ஐயங்கார், பொருளாசைகொண்டு திரிகின்ற உலகத்தாரைக்குறித்து, அப்பொருளின் நிலையாமையை
எடுத்துக்காட்டி, ‘நீங்கள் எம்பெருமான் திருவடிகளைச் சரணமடைந்து உய்யுங்கள்’ என்று உபதேசிக்கின்றார்.
“உய்ம்மின்திறைகொணர்ந்தென்றுலகாண்டவ ரிம்மை யே,
தம்மின்சுவைமடவாரைப் பிறர்கொள்ளத் தாம் விட்டு,
வெம்மினொளி வெயிற்கானகம்போய்க் குமைதின்பர்கள்,
செம்மின்முடித்திருமாலைவிரைந் தடிசேர்மினோ” என்றார் ஆழ்வாரும்,
நண்ணலரால் – பகைவர்செய்யும் உபத்திரவத்தா லென்றபடி.

புரந்தவர் என்பதில், உயர்வுசிறப்பும்மை விகாரத்தால் தொக்க தென்னலாம்.
‘கண்டீர்’ என்ற முன்னிலைப்பன்மைமுற்றுப் போலவே, ‘கண்டோம்’ என்ற தன்மைப்பன்மைமுற்றும், தேற்றப்பொருள்காட்டும்.
“வண் டினமுரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை” என்றபடி வண்டுகள் தேனை மிகுதியாக உண்டு களித்து இன்னிசைபாட,
அதற்கு ஏற்றபடி, மயில்கள் சோலையினிருட்சியாற் கார்காலமென்றெண்ணிக் களித்துக் கூத்தாடுமென,
அம்மலைச்சோலைகளின் வளங் கூறியவாறாம். மஞ்ஞை – பெயர்த்திரிசொல்.
மூன்றாமடியில், முன் – இடமுன்; நான்காமடியில், முன் – காலமுன்.
அறிந்தீர்கள் – அண்மைவிளியாதலின், இயல்பு. அறிவுடையராகிய நீங்கள் என முன்னிலைப்பன்மை வினையாலணையும்
பெயராகவுங் கொள்ளலாம். துகைத்தார்க்குச் சரண்புகுதல் – துகைத்தவரை ரக்ஷகமாகப் பற்றுதல். துகைத்தார்க்கு – உருபுமயக்கம்.

முதலிரண்டடிகளில் நகரம் னகரமாகக்கொள்ளப்பட்டது, திரிபுநயத் திற்காக.
இரண்டாமடியில், சிகரம் முன் என்று எடுத்து, மலைச்சிகரம் முதலியவற்றையும் என்றலும் ஒன்று.

————–

சரணியன் ஆகத் தனை நினைந்தாரைத் தன் போலே வைக்கும்
அரணியன் நாகத்து அணையான் அரங்கன் அழகன் எம் கோன்
இரணியன் ஆகம் இடந்தான் கதை அன்றி ஈனர் தங்கள்
முரண் இயல் நாகத்தும் புன்குரல் ஓரி முதுக் குரலே –47-

(இ – ள்.) தனை – தன்னை,
சரணியன் ஆக – சரணமடையத்தக்கவனாக,
நினைந்தாரை – எண்ணிச்சரணமடைந்தவர்களை,
தன்போல வைக்கும் -தன்னைப்போலவே வைத்தருள்கின்ற,
அரணியன் – பாதுகாப்பாகவுள்ளவனும், –
நாகத்து அணையான் – ஆதிசேஷனைச் சயனமாக வுடையவனும், –
அரங்கன் -ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியிருப்பவனும், –
எம் கோன் – எமது தலைவனும், –
இரணியன் ஆகம் இடந்தான் – இரணியாசுரனுடைய மார்பைப்பிளந்தவனுமான
அழகன், அழகப்பிரானுடைய,
கதை அன்றி – திவ்வியசரித்திரம் (பரகதியிற்செலுத்தும்பெருமையுடையதாய் அனைவரும் விரும் பிக்கேட்கத்தக்கதாகுமே) அல்லாமல், –
ஈனர்தங்கள் முரண் இயல் நா கத்தும் புல் குரல் – இழிவான பிறசமயத்தார் தங்களுடைய மாறுபாடுபொ ருந்திய நாவினாற் பிதற்றுகின்ற இழிவான சொற்கள்,
ஓரி முது குரலே – கிழநரி ஊளையிடுகிற பெருங்குரல்போலச் செவிக்குஇன்னாததாய் வெறுக்கத்தக்கதாம்; (எ – று.)

“கேட்பார்கள் கேசவன்கீர்த்தியல்லால் மற்றுங்கேட்பரோ,”
“நாகத் துப்பாய்ந்தான்கதையின்றி வெவ்வினைகள், துன்னப் பல்
நாகத்துப்பொய்ந் நூல் புகா என்துளைச்செவிக்கே” என்பன காண்க.

சரணியனாக – ரக்ஷகனாக என்றபடி. சரணியனாகத் தனைநினைந்தா ரைத் தன்போலவைக்கும்
அரணியன் – தன்னை நன்குமதித்துத் தியானித்தவர்களை ஸாரூப்யநிலையால் தன்னைப்போலவே
சங்கசக்கராதிகளைத் தாங்கி ஸாலோக்யத்தாற் பரமபதத்திலே இருந்து பேராநந்தமனுபவித்துக் கொண்டு
வினைத்தொடர்பும் அதனாலாகும் பிறப்பிறப்புப்பிணிபசிமூப்புத் துன்பங்களு மின்றி வாழும்படி செய்து பாதுகாத்தருள்பவன்;
“சரணமாகுந் தன தாளடைந்தார்க்கெல்லாம், மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான்,”
“மணியாழிவண்ண னுகந்தாரைத் தன்வடிவாக்கு மென்றே, துணியாழிய மறை சொல்லும்” என்பன காண்க.
எம்பெருமான் தனதுஅன்பர்க்கு முத்தியில் தந்தருள்கின்ற நிலைமைகள் – ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் என நான்காம்;
ஸாலோக்யம் – அப்பெருமானுடைய ஸ்ரீவைகுண்டலோகத்தில் வாழ்தல்; ஸாமீப்யம் – அவனருகில் வாழ்தல்;
ஸாரூப்யம் – அவனுக்குச்சமமான ரூபத்தைப் பெறுதல்; ஸாயுஜ்யம் – அப்பரமாத்மாவோடு ஒன்றிவாழ்தல்.
அரணியன் – அரண்போல அடுத்தவர்களைக் காக்குந் தன்மையுள்ளவன்;
இப்பெயரில், அரண் – பகுதி;கோட்டை மதிள்காவல் என்பன, அதன்பொருள்; இ – சாரியை, அன் – விகுதி.

ஸ்ரீமந்நாராயணனது பரத்வத்தையே கூறுகிற வேதசாஸ்திரங்களின் சித்தாந்தத்துக்கு மாறாகத்
தேவதாந்தரங்கட்குத் தலைமைகூறுதலால், ‘முர ணியல்நா’ எனப்பட்டது. கத்துதல் – கதறுதல்;
இவ்வினைச்சொல்லாற் கூறினதும், இழிவைக் காட்டும். அச்சொற்கள் கடலோசைபோலப்
பொருளில்லாதன வென்பது பட, ‘புன்குரல்’ என்றார். முதுக் குரல் – பண்புத் தொகை.
இனி, இரண்டாம்அடியில், அரண் இயல் நாகம் என்று பிரித்து,
(“சென்றாற் குடையாம்” என்றபடி பலவாறு பணிவிடைசெய்தலால் எம் பெருமானது, திருமேனிக்குப்) பாதுகாவலாகும்
இயல்புடைய ஆதிசேஷன் என்றுஉரைத்து, நான்காம்அடியில், முரணிய நா என்றுஎடுத்து, மாறுபாடு கொண்ட நாக்கு என்றலு மொன்று

————–

முது விருந்தா வனத்து ஆநிரை மேய்த்தவர் முன் விதுரன்
புது விருந்து ஆனவர் மால் அலங்காரர் பொலாங் கழல் ஆம்
மது இருந்தாமரைக்கு ஆளாய் இரார்க்கு மது நுட்ப நூல்
எது இருந்தாலும் அதனால் விடா இங்கு இரு வினையே –48–

(இ – ள்.) முது விருந்தாவனத்து – பழமையான பிருந்தாவனத்திலே,
ஆன் நிரை மேய்த்தவர் – பசுக்கூட்டங்களை மேய்த்தவரும்,
முன் – முன்பு,
விதுரன் புது விருந்து ஆனவர் – விதுரனுக்கு அதிசயிக்கத்தக்க விருந்தின ரானவரு மாகிய,
மால் அலங்காரர் – பெருமையுடைய அழகரது,
பொலம் கழல் ஆம் – அழகிய திருவடிக ளாகிய,
மது இருந் தாமரைக்கு – தேன் கொண்ட பெரிய தாமரைமலர்களுக்கு,
ஆள் ஆய் இரார்க்கு – அடிமைப் பட்டிராதவர்களுக்கு, –
மதி நுட்பம் நூல் எது இருந்தாலும் – நுண்ணறி வையுண்டாக்குகின்ற சாஸ்திரங்களில் எது பயின்றுதேறப்பட்டிருந்தாலும்,
அதனால் – அச்சாஸ்திரத்தேர்ச்சிமாத்திரத்தால்,
இங்கு – இவ்வுலகத்தில்,
இரு வினை – இருவகை வினைகளும்,
விடா – நீங்கமாட்டா; (எ – று.)

“கற்றதனா லாய பய னென்கொல் வாலறிவன், நற்றாள்தொழாஅ ரெனின்”,
“கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத்தக” என்றபடி கற்றற்குஉரிய உறுதிநூல்களைக் கற்றவர்கள்,
அக்கல்வியறிவின் பயனாக அந் நூல்களிற்கூறியபடி எம்பெருமான்திருவடிக்கு அடிமைப்பட்டால்,
கருமம் ஒழிய வீடுபெறுவரேயன்றி அநுட்டானமில்லாத வெறுங்கல்வியறிவுமாத்தி ரத்தால் வினையொழியப்பெறா ரென்பதாம்.

புது விருந்து – வருதற்கரிய விருந்து என்றபடி. பொன் + கழல் = பொலங்கழல்;
இப்புணர்ச்சி “பொன்னென்கிளவி யீறுகெட முறையின், முன்னர்த் தோன்றும் லகார மகாரம்,
செய்யுண் மருங்கிற் றொடரிய லான” என்ற தொல்காப்பியவிதியால் அமைந்தது:
பிற்காலத்தார் நிகண்டுகளில் “பொலம்” என ஒருசொல் கொண்டுள்ளதனால், பொலம் கழல் என்று பிரித்து
மகரவீற்றுப்புணர்ச்சியின்பாற் படுத்துதலு முண்டு. அன்றலர்ந்த வாடாத தாமரை யென்பார் “மதுவிருந்தாமரை” என்றார்;
அதுவே, எம்பெருமான் திருவடிக்கு நிகராவது. “கழலாம் மதுவிருந்தாமரைக்கு” என்று உருவக மாகக் கூறினாரேனும்,
தாமரைமலர்போன்ற திருவடிகளுக்கு என்பது கருத்து. எம்பெருமுானது திருவடிகளினின்று வெளிவீசுகிற கிரணங்களை
அத்திருவடித்தாமரைகளினின்று பெருகுந் தேன்பெருக்காக வேதம் ஓதும்; திருவடியின் இனிமையை மதுவென்றலும் உண்டு.

நுட்பமதி என்பது மதிநுட்பம் என முன்பின்னாகத்தொக்க தெனக் கொண்டு, “பின்மொழிநிலையல்” என்பர்.
“மதிநுட்பநூலோடுடையார்க்கு” என்றபடி இயற்கையாகிய நுண்ணறிவும் செயற்கையாகிய நூலறிவும் என்னும்
இவற்றில் எதுஇருந்தாலும் என உரைப்பினும் அமையும்.
பஞ்சுகொண்டு இழைத்து நூற்கப்படும் நூல்போலச் சொற்கொண்டுதொடுத்து அமைக்கப் படுதலாலும்,
மரம்முதலியவற்றின் கோணலைத் தீர்த்துச் செப்பஞ்செய்யும் எற்றுநூல்போல மனத்தின்கோணலைத் தீர்த்துச் செவ்வைசெய்தலா
லும், நூல்என்பது – சாஸ்திரத்துக்கு உவமையாகுபெயராகிய காரணக் குறியாம். இங்கு – இப்பிறப்பி லென்றபடி.

————-

தலைவி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

வினை யாட்டியேன் கொண்ட வெங்காம நோய் வெறியாட்டினும் இச்
சினை ஆட்டினும் தணியாது அன்னைமீர் செய்ய பூங்கமல
மனையாட்டி நாயகன் மாலிருஞ்சோலை மலைச் சிலம்பாற்று
எனை ஆட்டி வாரும் சொன்னேன் எந்த நோயும் எனக்கு இல்லையே –49-

(இ – ள்.) அன்னைமீர் – தாய்மார்களே! –
வினையாட்டியேன் கொண்ட வெம் காமம் நோய் – தீவினையால்ஆட்டப்படுபவளாகிய யான் அடைந்தி ருக்கின்ற கொடிய இந்தக்காதல்நோயானது,
வெறி ஆட்டினும் – (முருகக் கடவுளின் விஷயமாக) ஆவேசமாடுவித்தலாலும்,
இ சினை ஆட்டினும் – உறுப்புக்களிற்குறைவில்லாத இந்த ஆட்டைப் பலிகொடுத்தலினாலும்,
தணியாது – அடங்கமாட்டாது; (பின்னைஇதற்கு என்ன பரிகாரமோ? எனின், – )
செய்ய பூ கமலம் மனை ஆட்டி நாயகன் – அழகிய செந்தாமரை மலரைத் தான்வாழுமிடமாகக்கொண்டு
ஆள்பவளான திருமகளின் கணவனாகிய திரு மாலினுடைய,
மாலிருஞ்சோலைமலை – திருமாலிருஞ்சோலைமலையிலுள்ள,
சிலம்பு ஆறு – நூபுரகங்கையென்னுந் திவ்வியநதியிலே,
எனை ஆட்டி வாரும் – என்னை ஸ்நாநஞ்செய்வித்து வாருங்கள்; (அங்ஙனம் அதில் நீராடுவித்தால்),
எந்த நோயும் எனக்கு இல்லை – எனக்குச் சிறிதுநோயும் இராது;
சொன்னேன் – (எனது நோயின் நிலையையும் அதற்குஏற்ற பரிகாரத்தை யுஞ்) சொல்லிவிட்டேன்; (எ – று.)

இச்செய்யுளுக்குத் துறைவிவரணமும், உள்ளுறைபொருளும், கீழ் 8 – ஆஞ் செய்யுளி னுரையிற் கூறியதுகொண்டு உணரலாம்.

வினையாட்டியேன் – தீவினையால் வருத்தியலைக்கப்படுபவளான யான்; இங்ஙனந் தலைவனைப்பிரிந்து
வருந்துதற்குக் காரணமான கொடிய கருமத் தையுடையே னென்று தன்னைத் தானே வெறுத்துக் கொண்டாள்.
ஆட்டி என்ற பெயரில், ஆடுஎன்பதன் பிறவினையான ஆட்டு – பகுதி; இ – செயப்படு பொருளுணர்த்தும் பெயர்விகுதி.
இப்படர்க்கைப்பெயர், ‘ஏன்’ என்ற விகுதியோடு சேர்ந்து, தன்மையொருமைக் குறிப்பு வினையாலணையும் பெயராய் நின்றது.
இது இவ்வகை ஆட்டினால் தணியாது சிலம்பாற்றிலாட்டினா லேயே தணியும் என ஒருவகைச்சமத்காரம் அமைய
‘வெறியாட்டினு மிச் சினையாட்டினுந் தணியாது சிலம்பாற்றெனையாட்டிவாரும்’ என்ற சொல் நயம் உணரற்பாலது; சொற்பின்வருநிலை.
வெறியாட்டினும், சினையாட்டி னும் என்றவற்றில், இன் – ஐந்தனுருபு, ஏது. வெறியாட்டு என்பதில்,
ஆட்டு என்பது – ஆடு என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
உறுப்புக்குறையில் லாத ஆடுபலிக்குச்சிறத்தலால், ‘சினையாடு’ எனப்பட்டது;
இனி, இதற்கு – கருப்பங்கொண்ட ஆடு என்று உரைப்பாரு முளர்.
“திசைக்கின்றதே யிவள் நோய் இதுமிக்கபெருந்தெய்வம், இசைப்பின்றி நீரணங்காடு மிளந்தெய்வமன்றிது,”
“இவளைப்பெறும்பரிசு இவ்வணங்காடுதலன்று அந்தோ” என்ற அருளிச்செயல்களை அடியொற்றி, ‘வெறியாட்டின் தணியாது’ எனப்பட்டது.
இச்சினையாட்டின் தணியாது – அசேதநமான ஒருபிராணி தான் இறந்து சேதநமான ஒருபிராணியை உயிர்காக்குமோ? என்றபடி;
“மசகந்தர மென்னலாய் நிலையாவுடல் வாழுயிரை, அசகந்தரவல்லதோ” என்றார் திரு வேங்கடத்தந்தாதியிலும்.

செய்யபூங்கமலமனையாட்டிநாயகன் – ஸ்ரீய:பதி. தலைவனை இப்பெய ராற்குறித்ததனால், “அகலகில்லேன் இறையும்” என்று
அத்திருமகள் அத்தலைவனை என்றும்விட்டுநீங்காது உடனுறைதலைக்குறித்து,
அங்ஙனந் தனக்குப் பிரியாத இன்பம் நேர்ந்திலதே யென்ற அழுக்காறு கொண்டனள் இத்தலைவி யென்பது தோன்றும்.
மூன்றாமடியிலுள்ள ‘ஆட்டி’ என்பதில், ஆள் – பகுதி, இ – பெண்பால்விகுதி, ட் – எழுத்துப்பேறு. (இதன் ஆண்பால் – ஆளன்.)
திருமால் உலகமளந்த காலத்தில் மேலே சத்தியலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன்கைக்
கமண்டல தீர்த்தத் தாற் கழுவிவிளக்க, அக்காற்சிலம்பினின்று தோன்றியதனால், சிலம்பாறு என்று பெயர்:
நூபுரகங்கை யென்ற வடமொழிப்பெயரும், இதுபற்றியதே; நூபுரம், சிலம்பு – ஒருவகைக்காலணி.
“எந்தநோயும் எனக்கு இல்லை” என்றது, அழகர் விஷயமான காதல்நோயே யன்றி நீங்கள் நினைக்கிறபடி
வேறு எவ்வகையான நோயும் எனக்கு இல்லை யென்றவாறுமாம்.
“சொன்னேன்” என்பது, தேற்ற முணர்த்தும். தலைவனைப்பிரிந்திருக்கிற நிலையிலே, அவனோடு நேரிலாவது இடையிட்டாவது
சம்பந்தமுடைய பொருள் ஏதேனும் கிடைத்தால், அது அப்பிரிவுநோயைத் தணிவிப்பது இயல்பாதலால்,
எனது இவ்விரகதாபம் தணிவதற்கு எம்பெருமானது திருவடித்தீர்த்தத்தில் நீராட்டுதலே ஏற்றதா மென்றாள்.

பகவத்விஷயமூலமான எனது இவ்வாற்றாமைக்கு அதன்சம்பந்தமான பரிகாரஞ் செய்தலே தகுதி யென்று
ஐயங்கார் தம்பக்கல் பரிவுடையார்க் குக் கூறுதல் இதற்குஉள்ளுறைபொருளாதலால்,
எம்பெருமானது ஸ்ரீபாத தீர்த்தமாய் எப்பொழுதும் திவ்வியதேசத்தின் சம்பந்தமுடையதாய்க் கங்கையினும்
புனிதமான புண்ணியதீர்த்தத்திலே தம்மை நீராடப்பண்ணுங்க ளென்றாராம்.
எம்பெருமானது சம்பந்தத்தை நேரிலேனும் பரம்பரையாக வேனும் பெற்ற பாகவதரது சம்பந்தம் இவ்வாற்றாமைக்குப்
பரிகாரமா மென்பதும் இதற்கு ஸ்வாபதேசமாகலாம்.
தேவதாந்தர சம்பந்தத்தையும், அதனால்நிகழும் தாமசகாரியங்களையும் ஸ்ரீவைஷ்ணவர் சிறிதும்பொறா ரென்பது,
முதல்வாக்கியத்தாற் போதரும்.

————-

வண்டு விடு தூது

எனக்கு ஆவி அங்கும் உடல் இங்கும் ஆகி இருப்பதை சந்
தனக்கா இயங்கும் தமர வண்டீர் சொல்லும் தத்துவ நூல்
கனக்காவியம் கவி வல்லோர் புகழ் அலங்கார னுக்கு
வனக்காவி அம் கண்ணி மா மலராள் மணவாளனுக்கே –50–

(இ – ள்.) சந்தனம் கா இயங்கும் – சந்தனமரச்சோலைகளிலே (நறு மணம்நுகர்தற்காகச்) சஞ்சரிக்குந் தன்மையுள்ள,
தமரம் வண்டீர் – ஓசையை யுடைய வண்டுகளே! –
தத்துவம் நூல் – தத்துவசாஸ்திரங்களிலும்,
கனம் காவியம் – பெரிய காவியங்களிலும்,
கவி – கவிபாடுதலிலும்,
வல்லோர் – வல்ல வர்களான ஆன்றோர்களால்,
புகழ் – துதிக்கப்பெற்ற,
அலங்காரனுக்கு – அழகனும், –
வனம் காவி அம் கண்ணி – நீரிலுள்ள நீலோற்பலமலர்போ ன்ற அழகிய கண்களையுடையவளான,
மா மலராள் – சிறந்த தாமரை மலரில் வீற்றிருக்கின்றவளாகிய திருமகளினது,
மணவாளனுக்கு – கணவனுமாகிய தலைவனுக்கு, –
எனக்கு ஆவி அங்கும் உடல் இங்கும் ஆகி இருப்பதை சொல்லும் – எனக்கு உயிர் அத்தலைவனிடத்தும்
உடம்பு மாத்திரம் இங்குமாயிருக்கிற செய்தியைச் சொல்லுங்கள்; (எ – று.)

தலைவனைப்பிரிந்த தலைவி, இங்ஙனஞ்சொல்லி, தலைவனிடத்து வண்டுகளைத் தூதுசெல்லுமாறு வேண்டுகிறாள்.
எனதுபிராணநாதனான தலைவன் என்னைவிட்டுப்பிரிந்து சென்றபொழுதே எனது உள்ளத்தின் உணர்வுமுழுவதும்
அத்தலைவன் பின்னேயே சென்றுவிட உயிர்நீங்கிய உடல்போலப் பொலிவிழந்து யான்மாத்திரம்
இங்கு உள்ளே னென்பாள், ‘எனக்கு ஆவி அங்கும் உடலிங்குமாகி இருப்பது’ என்றாள்.
இதனால் இவள் விரகவேதனையால் அயர்ப்பும் மயக்கமுமாக இடையிடையே மூர்ச்சையடைதல் புலனாம்.
தலைவனுள்ளஇடம், நீங்கள் சந்தனமரங்களின் நறுமணத்துக்காக உத்ஸாகத்தோடு ஆரவாரஞ்செய்துகொண்டு
செல்லுஞ் சோலைகளையுடைய தாதலால், அங்குச்செல்லுதல் உங்கட்கும் இனிதாம் என்பது பட,
‘சந்தனக்கா வியங்குந் தமரவண்டீர்’ என்று விளித்தாள்.
“அறுகால் வரிவண்டுக ளாயிர நாமஞ்சொல்லிச்,
சிறுகாலைப்பாடுந்தென்திருமாலிருஞ்சோலையே” என்ற அருளிச்செயல் இங்கு அறியத்தக்கது.
தமரம் என்றது, வண்டுகள் செய்யும் ரீங்காரத்தொனியை.
மூன்றாமடி – தலைமகனுடைய புகழ்ச்சிறப்பையும், நான்காமடி – காதற்குக்கட்டுப்பட்டவ னவ னென்பதையுங் காட்டும்.
பெரியாழ்வார் ஆண்டாள் திருமங்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் என்கிற ஆழ்வார்கள்
தமதுதிவ்வியப்பிரபந்தங்களால் துதித்துள்ளதும், ஸ்ரீபாஷ்யகாரருடைய அந்தரங்கசிஷ்யர்களில் முதல்வரான கூரத்தாழ்வான்
ஸுந்தரபாஹுஸ்தவமென்ற வடமொழிப்பிரபந்தம் பாடித் துதித்துள்ளதும் முதலியனபற்றி,
‘தத்துவநூல் கனக்காவியங் கவிவல்லோர் புகழலங்காரன்’ எனப்பட்டான்.
புலவர்பாடும்புகழுடையோரது சிறப்பு மற்றையனைவர்சிறப்பினும் மேம்படுதலால், அத்தன்மைத்தான புகழையுடைய
அலங்கார னென்று தன்தலைவன் பெருமையைக் கொண்டாடினாள்.

‘வண்டீர் சொல்லும்’ என, பேசாதது பேசுவதுபோலவும், கேளாதது கேட்பதுபோலவும் சொல்லப்பட்டது; வழுவமைதி:
“ஞாயிறு திங்க ளறிவே நாணே, கடலே கானல் விலங்கே மரனே, புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே,
அவையல பிறவும் நுவலிய நெறியாற், சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ்,
சொல்லியாங் கமையு மென்மனார் புலவர்” என்ற தொல்காப்பியச்சூத்திரம் காணத்தக்கது:
வண்டுக்குச் செவியுணர்வில்லையென்பது, “தும்பி வண்டாதி கண்ணறிவி னாலறிவுயிர்” என்பதனாற் புலனாம்.
(இனி, இதற்குச் செவியுணர்வும் உண்டென்று சாதிப்பர் நச்சினார்க்கினியர்.)
பிரிந்தநிலையிலே தலைவி மதிமயக்கமுடையளாதலால், இங்ஙனம் புலன்குறைந்தவற்றையும் விளித்துப் பேசுவன். செய்யுளாதலின்,
‘அங்கு’ எனச் சுட்டுப்பெயர் முன்வந்தது. கா – பாதுகாக்கப்படுவது என்று காரணப்பொருள்படும்.
வண்டீர் – வண்டார் என்பதன் ஈற்றயல்திரிந்த விளி: அது, உயர்த்திச்சொல்லுதலால் அஃறிணை உயர்திணையான திணைவழுவமைதி.
‘ஆர்’ என்ற பலர்பால்விகுதி உயர்வுப்பொருளில் ‘வண்டு’ என்ற பால்பகா அஃறிணைப்பெயரோடு சேர்ந்துவந்த தென்க;
தன்வேண்டு கோளை நிறைவேற்றுதற்பொருட்டு வண்டுகளைக் கொண்டாடி யழைப்பவ ளாய், இங்ஙனம் மரியாதைகாட்டி விளித்தாள்.

தத்துவநூல் – ஜீவாத்மா பரமாத்மா வினை வினைப்பயன் உலகம் முதலிய பொருள்களின் உண்மை
நிலையை யுணர்த்தும் நூல். கவியினாற்செய்யப்பட்டது. காவ்யம் எனத் தத்திதாந்தநாமம்;
அதன் இலக்கணத்தை, அணி நூல்களிற் காண்க. அன்றலர்ந்த வாடாத மல ரென்பது தோன்ற, ‘வனக் காவி’ எனப்பட்டது.
திருமகளின்கண்களுக்கு நீலோற்பலமல ருவமை, கருமை மென்மை யழகுகளி லென்க.
“பூவிற்குத் தாமரையே” என்றபடி தாமரை சிறத்தலால், ‘மாமலர்’ எனப்பட்டது.

ஐயங்கார் தமது ஆற்றாமையை ஆசாரியமூலமாக எம்பெருமானுக்குத் தெரிவித்துத் தமதுதுயரந்தணியக்கருதி
அவர்களைத் தமக்குப் புருஷகார மாகும்படி வேண்டுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
ஸ்வாபதேசத்தில் ‘தூது என்பது, (வட 10) கடகமான ஆசார்யவிஷயத்தை’ என்றனர் ஆன்றோர்.
பிரிந்த தலைவிதலைவரைச் சேர்த்தற்குத் தூதர்போல பிரிந்துநின்ற ஜீவாத்ம பரமாத்மாக்களைச் சேர்த்தற்கு ஆசாரியர் உரியவராதல் காண்க.
பலவகை மலர்களிலுஞ் சென்று அவற்றின்சாரமான தேனை அம்மலர்கள்கெடாதபடி கவர்ந்து உண்ணுந்தன்மையனவான
வண்டுகளை, பலவகைநூல்களிலும் பிரவேசித்து அவற்றின்சாரமான தத்துவப்பொருளை அந்நூல்கள்நலிவுபடாத படி கிரகித்து
அனுபவிக்குந்தன்மையரான ஆசாரியராகச் சொல்லத்தகும்.
வண்டுகளுக்கு இரண்டுஇறகுகள்போல, ஆசாரியர்க்கு ஞானமும் அநுட்டா னமும் உயர்கதிச்செலவுக்கு உறுதுணை யென்க.
அன்றியும், நறுமணத்தை யும் மதுவையும்நாடி அவையுள்ள இடங்களிலெல்லாம்திரிதல் வண்டுகளுக்கு இயல்பாதல்போல,
ஸர்வகந்தனென்றும் உள்ளக்கமலத்திலூறுகிறதேனென்றும் சொல்லப்படுகிற எம்பெருமானை நாடி
அவனெழுந்தருளியிருக்கின்ற திவ்வியதேசங்களிலெல்லாம் யாத்திரைசெய்தல் ஆசாரியராகக்கடவரான பாகவதர்க்கு இயல்பாம்;
இங்கு “சந்தனக்காஇயங்கும்” என்ற அடைமொழி இக்கருததை உட்கொண்டது,
“தமரவண்டீர்” என்றது, தான்வருத்துக்கூறு வானாகிய உத்தமதூதனுக்கு இன்றியமையாப்பண்பாகின்ற ஆராய்ந்தசொல்
வண்மையையுடைய ஆசாரியர்களே யென்று விளித்தபடி. பிறவும் நோக்கிக் கொள்க.

———-

மணவாளர் ஆவி நிகர் திரு மாதுக்கு மால் அழகர்
பணவாள் அராவில் கண் பள்ளி கொள்வார் திருப்பாதம் எண்ணக்
குணவாளர் ஆவீர் இன்றே உயிர்காள் உம்மைக் கூற்றுவனார்
நிணவாள் அராவி அறுக்கும் அப்போது நினைப்பு அரிதே –51–

(இ – ள்.) உயிர்காள் – பிராணிகளே! –
ஆவி நிகர் திருமாதுக்கு மணவாளர் – (தமக்கு) உயிர்போன்ற (பிராணநாயகியான) திருமகளுக்குக் கணவரும்,
மால் அழகர் – பெருமையையுடைய அழகரும்,
பணம் வாள் அராவில் கண்பள்ளிகொள்வார் – படத்தையும் ஒளியையு முடைய திருவனந்தாழ்வான்மேலே
படுத்துக்கொண்டு யோகநித்திரை செய்தருள்பவருமான எம் பெருமானுடைய,
திருப்பாதம் – திருவடிகளை,
எண்ண – தியானிக்குமாறு,
இன்றே – இப்பொழுதே,
குணவாளர் ஆவிர் – நற்குணமுடையவராவீர்கள்; (ஏனென்றால்,-)
உம்மை – உங்களை,
கூற்றுவனார் – யமன்,
நிணம் வாள் அராவி அறுக்கும் – (நீங்கள்செய்துள்ள கொடுவினைக்கு ஏற்ப() நிணந்தோய்ந்த
வாளாயுதத்தைக் கூர்செய்து அதுகொண்டு அறுக்கும்படியான,
அப்போது – அந்தஅந்திமகாலத்தில்,
நினைப்பு அரிது – (எம்பெருமான் திருவடிகளை) நினைப்பது இயலாதாகும்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

பிராணிகாள்! யமன் வந்து நலிய வருந்தும் மரணகாலத்திலே எம் பெருமான்திருவடியை நினைத்தல் அசாத்திய மாதலால்,
இப்பொழுதே அதனை நினைப்பீர்களானால், உங்கட்கு யமனாலாகுங் கொடுமை இல்லையாக நற்கதிபெற்று உய்யலாம் என்பது கருத்து.
“வடவேங்கடநாதனைத் தேசத்துள்ளீர், நெஞ்சக்கரவடநீக்கி யின்றேதொழும் நீண்மறலி,
துஞ்சக்கரவடம் வீசுமக்காலந் தொழற்கரிதே” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.
“எய்ப் பென்னைவந்து நலியும்போதங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன்” என்ற ஆழ்வாரருளிச்செயலைப் பின்பற்றியது, பிந்தினவாக்கியம்.

இன்றியமையாமையும், மிக்கஅன்புக்கு இடமாதலும் பற்றி, “ஆவிநிகர் திருமாது” எனப்பட்டாள்.
“அராவின்கண்” என்ற பாடத்துக்கு, கண் – ஏழனுருபு. எண்ண – எண்ணுதலினால் எனினுமாம்;
முந்தியபொருளில், காரியப்பொருட்செயவெனெச்சம். எதிர்காலம்;
இப்பொருளில், காரணப் பொருட்செயவெனெச்சம்: இறந்தகாலம்.
கூற்றுவனார் என்றவிடத்து, ‘ஆர்’ என்ற பலர்பால்விகுதி – கொடுமை தோன்ற இழித்தற்பொருளில் வந்தது நிணவாள் –
(முன்பு அறுக்கப்பட்ட பிராணிகளின்) உடற்கொழுப்புத் தோய்ந்த வாள்.

———–

நினைப்பு அரியாய் எளியாய் உம்பர் யார்க்கும் நின் அன்பருக்கும்
வினைப்பரி ஆனவன் வாய் பிளந்தாய் வியன் சோலை மலை
தனிப் பிரியாய நின்ற தாள் அழகா முன் சனனத் துள்ளும்
உனைப் பரியாமல் அன்றோ பரித்தேன் இவ் உடலத்தையே –52–

(இ – ள்.) உம்பர் யார்க்கும் – தேவரெல்லார்க்கும்,
நின் அன்பருக்கும் – உன்பக்கல் பக்தியையுடைய அடியார்கட்கும்,
நினைப்பு அரியாய்எளியாய் – (முறையே) சிந்தித்தற்குஅரியவனும் எளியவனுமாயிருப்பவனே!
வினை பரிஆனவன் வாய் பிளந்தாய் – தீச்செயல்களையுடைய குதிரைவடிவாய் வந்த அசுரனது வாயைக் கிழித்தவனே!
வியல் சோலைமலை தனை பரியா நின்ற தாள் அழகா – பெரிய திருமாலிருஞ்சோலைமலையானது
தன்னைவகிக்கப்பெற்ற திருவடியையுடைய அழகனே! –
முன் சனனத்துள்ளும் உனை பரியாமல் அன்றோ இ உடலத்தை பரித்தேன் – முற்பிறப்பிலும் உன்னை விரும்பிப்
பக்திசெய்யாமற்போனதனாலன்றோ இப்பிறப்புஎடுத்தேன்; (எ – று.)

முற்பிறப்பில் உன்னிடம் பக்திசெய்திருந்தால், எல்லாக்கருமங்களும் ஒழியப் பிறப்பற்று மீளாவுலகமாகிய
முத்தியை அடைந்திருப்பே னாதலால், இப்பிறப்பு எனக்கு நேர்ந்திராது என்பதாம்.
இங்ஙனம், சென்றபிறப்பிற் பக்திசெய்யாது போனதற்குக் கழிவிரக்கங்கொள்வார்போன்று,
இப்பிறப்பிலும் இதுவரை பழுதேபலபகலும்போக்கினமைக்கு அஞ்சி இனியாயினும்
மீளப்பிறத்தலில்லையாம்படி பக்திசெய்யக்கடவே னென்றவாறாம்.

முதலடி – உம்பர்க்குநினைப்பரியாய், அன்பர்க்குஎளியாய் என முறையே சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்;
க்ரமாலங்கார மென்பர் வடநூலார்.
“பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கு அரிய, வித்தகன்” என்ப வாதலால், இங்ஙனம் விளிக்கப்பட்டான்.
உம்பர்யார்க்கும் – (நின்பக்கல் மெய்யன்பில்லாத) தேவர்கட்கெல்லாம் என்றபடி. ‘நினைத்தற்கும் அரியாய்’ எனவே,
காணுதல் கிட்டுதல் துதித்தல் முதலியவற்றிற்கு அரியா யென்பது சொல்லவேண்டாதாயிற்று;
நினைப்பு என்பதில் இழிவுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. நினைப்புஅரியாய் – நான்காம் வேற்றுமைத் தொகை.
‘உம்பர்யார்க்கும் அரியாய்’ என்றவிடத்து, ‘நினைப்பு’ என ஒருசெயலை எடுத்துக்கூறி,
‘நின்னன்பருக்குஎளியாய்’ என்றவிடத்து ஒருசெயலையுங் குறிப்பிடாது பொதுப்பட ‘எளியாய்’ என்றதனால்,
பக்தியுள்ள அடியார்கட்குக் காணுதற்கும் கிட்டுதற்கும் துதித்தல்முதலிய வற்றிற்கும் எளியனாய்
அவர்கள் தீவினையைப் போக்குதலும், அவர்கட்கு நல்வினையை அருளுதலும், அவர்கள் தன்னை வேண்டியபடி
ஏவல்கொள்ளுமாறு அவர்கட்குத் தன்னையேகொடுத்தலும் செய்வனென்க.
‘உம்பர்யார்க்கும் நினைப்பரியாய்’ என்றது – பரத்வத்தையும், “நின் அன்பருக்கு எளியாய்” என்றது – ஸௌலப்யத்தையும் காட்டும்.

வியல் – விசாலமுணர்த்தும் உரிச்சொல்; “வியலென் கிளவி அகலப் பொருட்டே” என்பது தொல்காப்பியம்.
தாள் – சாதியொருமை; ஆதலால், ‘தனை’ என்ற ஒருமை அமையும்.
இனி, சோலைமலைமேல் நின்று அதனைக்காக்கின்ற திருவடிகளையுடைய அழகனே என்றலு மொன்று: இப்பொருளில், தன் – சாரியை.

———-

உடலம் புயங்கத்து உரி போல் விடும் அன்று உவணப் புள்ளின்
அடம் அம் புயமிசை நீ வர வேண்டும் ஐ ஆனற்கும்
மடல் அம்புயற்கும் வரம் தரும் சோலை மலைக்கு அரசே
கடல் அம்பு உயர் வரையால் அடைந்தாய் என்னைக் காப்பதற்கே –53–

(இ – ள்.) ஐ ஆனனற்கும் – ஐந்துமுகங்களையுடையவனான சிவபிரா னுக்கும்,
மடல் அம்புயற்கும் – இதழ்கள்நிறைந்த தாமரைமலரில் தோன்றி யவனான பிரமனுக்கும்,
வரம் தரும் – வேண்டியவரங்களைக் கொடுத்தருள்கின்ற,
சோலை மலைக்கு அரசே – திருமாலிருஞ்சோலைமலைக்குத் தலைவனே!
கடல் அம்பு உயர் வரையால் அடைத்தாய் – சமுத்திரஜலத்தை உயர்ந்தமலைகளைக்கொண்டு அணைகட்டி யடைத்தவனே! –
புயங்கத்து உரி போல் உடலம் விடும் அன்று – பாம்பு தன்தோலைவிட்டுநீங்குதல்போல (உயிர்) உடம்பைவிட்டுநீங்கும் அந்நாளில்,
என்னை காப்பதற்கு – என்னைப் பாதுகாத்தற்காக,
உவணம் புள்ளின் அடல் அம் புயம்மிசை நீ வர வேண்டும் – கருடப் பறவையின் வலிய அழகிய தோள்களின்மேல் (ஏறி)நீ எழுந்தருளவேண்டும்.

இப்பிறப்பின்முடிவிலே, மறுபிறப்பில்லாதபடி என்னைக்காக்குமாறு நீ பெரியதிருவடியின்மே லெழுந்தருளிக் காட்சி தரவேண்டும் என்பதாம்; “சாமிடத்தென்னைக்குறிக்கொள்கண்டாய் சங்கொடுசக்கர மேந்தினானே” என்றார் பெரியாழ்வாரும்.
என்னை – என்உயிரை யென்றபடி.

புஜங்கம் என்ற வடசொல் – மார்பினால் ஊர்வதென்றும், வளைந்துசெ ல்வ தென்றும் காரணப்பொருள்படும்.
உவணம்- ஸுபர்ண மென்ற வட சொல்லின் விகாரம்; அழகியஇறகுகளையுடைய தென்பது அதன்பொருள்:
பர்ணம் – இறகு. வரந்தரும் அரசு என இயையும்; வரந்தரும்மலை எனினும் இழுக்காது.
விளியிரண்டனுள் – முந்தியது – பரத்வத்தையும், பிந்தியது – திவ்வியசக்தியையுங் காட்டும். அம்பு – வடசொல்.

———–

காப்பவன் அந்த மலரோனையும் கறைக் கண்டனையும்
பூப்ப அனந்தரம் போக்க வைப்பான் புனல் பார் விசும்பு
தீ பவனம் தரும் தெய்வ சிகா மணி சேவடியை
நாப் பவம் நந்தப் புகழ் வார்க்கு ஒப்பு இல்லை நவ கண்டத்தே –54-

(இ – ள்.) காப்பவன் – (எல்லாவுலகங்களையுங்) காத்தற்றொழில்செய் பவனும்,
அந்த மலரோனையும் கறைக்கண்டனையும் – அந்தப் பிரமனையும் சிவனையும்,
பூப்ப அனந்தரம் போக்க வைப்பான் – (முறையே முதலிற்) படைத்தற்றொழில்செய்யுமாறும் பின்பு
(இறுதியில்) அழித்தற்றொழில்செய்யு மாறும் நியமித்துவைப்பவனும்,
புனல் பார் விசும்பு தீ பவனம் தரும் – நீர் நிலம் வானம் நெருப்பு காற்று என்னும் பஞ்சபூதங்களையும் (ஆதியிற்) படைத்தருளிய,
தெய்வ சிகாமணி – தேவர்கட்குச்சிரோரத்தினம் போன்றவனுமான அழகப்பிரானுடைய,
சே அடியை – சிவந்த திருவடிகளை,
பவம் நந்த – (தங்கட்குப்) பிறப்பு இனிஇல்லையாம்படி,
நா புகழ்வார்க்கு – நாவினால் துதிக்கின்ற பாகவதர்களுக்கு,
நவ கண்டத்து ஒப்பு இல்லை – ஒன்பது கண்டங்களிலும் நிகராவார் எவரு மில்லை; (எ – று.)

இது, பாகவதமகிமை கூறியது.

படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களுள், படைத்தலைப் பிரமனைக் கொண்டும்,
அழித்தலைச் சிவனைக்கொண்டும் நடத்தி, காத்தலைத் தானே மேற்கொண்டு நடத்துபவ னென்பது,
முதலிரண்டுவிசேஷணங்களின் கருத்து;
“ஆக்குந்தொழிற்கு விரிஞ்சியைவைத்து அழிக்குந்தொ ழிற்குச் சிவனைவைத்துக்,
காக்குந்தொழில் தான்கைக்கொள் அருட்கட வுள்”,
“ஆக்குமாறயனாம் முதலாக்கியவுலகங், காக்குமாறு செங்கண்ணிறை கருணையங்கடலாம்,
வீக்குமாறரனாம் அவைவீந்தநாள் மீளப், பூக்குமாமுத லெவன் அவன்பொன்னடிபோற்றி” என்றார் பிறரும்.
பூப்ப மலரோனையும், போக்கக் கறைக்கண்டனையும் வைப்பான் என முறையே சென்று இயைதலால்,
முறைநிரனிறைப்பொருள்கோள்.
மலரோன் – திருமாலின் திருநாபித்தாமரைமலரில் தோன்றியவன்.
“அந்தமலரோன்” என்றது, பிரசித்தி பற்றி; உலகறிசுட்டு.
அந்தம் மலரோன் என்று எடுத்து, அழகிய தாமரை மலரில் தோன்றியவ னெனினும் அமையும்.
கறைக்கண்டன் – பாற்கடலில் தோன்றிய விஷத்தை யுண்டதனாற் கறுத்த கழுத்தை யுடையவன்.
இனி, “அந்தமலரோனையும் கறைக்கண்டனையும்” என்பதை மத்திமதீபமாக “காப்பவன்” என்றதனோடும் இயைத்து,
அவர்களையுமுட்படப் பாதுகாப்பவ னெனினும் அமையும்.

ஐம்பெரும்பூதங்கள் முறைபிறழக் கூறப்பட்டன, செய்யுளாதலின்.
தெய்வசிகாமணி – தேவர்கள்முடிமேற்கொள்ளும்இரத்தினம் போன்றவன்; அவர்களாற் சிரமேற்கொண்டு கொண்டாடப்படுபவன்:
தேவாதிதேவன் இது, திருமாலிருஞ்சோலைமலையெம்பெருமான் திருநாமங்களி லொன்று.
புகழ்வார்க்கு என்றவிடத்து, ‘நா’ என வேண்டாதுகூறியதனால், நாப்படை த்தபயன்பெறுமாறு புகழ்வார்க்கு என விசேஷார்த்தங்கொள்க;
“பஞ்சவர்க்குத் தூது, நடந்தானை யேத்தாத நா வென்னநாவே,
நாராயணாவென்னா நா வென்னநாவே” என்றார் பிறரும்.
நந்துதல் – அழிதல். நவகண்டம் – கீழ் விதேகம், மேல்விதேகம், வடவிதேகம் , தென்விதேகம், வடவிரேபதம்,
தென்னிரேபதம், வடபரதம், தென்பரதம், மத்திமம் என்பன.
இதற்குப் பிறவாறு கூறுதலு முண்டு. நவகண்டத்தும் என இணைத்தென்றறிபொருளில் வரும் முற்றும்மை விகாரத்தால் தொக்கது.

நான்காமடியில், பவனந்த என்றவிடத்தில், நகரம் னகரமாகக்கொள் ளப்பட்டது, திரிபுநயத்திற்காக.

————-

கண்டா கனன் கண்ணன் அல்லால் கதி இன்மை கண்டு அடைந்தது
உண்டாக நம்ப ஒட்டாது உங்கள் ஊழ் வினை உண்மை அறிந்து
அண்டா கன வண்ணனே அருளாய் என்று அழகனுக்கே
தொண்டு ஆக நல் நெஞ்சினால் உரைப்பீர் பிறர் தொண்டர்களே –55-

(இ – ள்.) பிறர் தொண்டர்களே – வேறுதெய்வங்கட்கு அடிமையா யிருப்பவர்களே! –
கண்டாகனன் – கண்டாகர்ணனென்பவன்,
கண்ணன் அல்லால் கதி இன்மை – ஸ்ரீகிருஷ்ண பகவானேயல்லாமல் (முத்தியளிக்கத்தக்க) புகலிடம் வேறுஇல்லாமையை,
கண்டு – அறிந்து,
அடைந்தது – (அப்பெருமானையே) சரணமடைந்த செய்தி,
உண்டு ஆக – உளதாயிருக்க வும்,
உங்கள் ஊழ்வினை நம்ப ஒட்டாது – உங்கள்விதியானது (அதனை) நம்பும்படி செய்யாது; (இனிமையாயினும் நீங்கள்),
உண்மை அறிந்து – யதார்த்தத்தைத் தெரிந்துகொண்டு,
அண்டா கனம் வண்ணனே அருளாய் என்று “இடைப்பிள்ளையாய் வளர்ந்தவனே! மேகம்போலுந் திருநிறமுடையவனே! கருணைபுரிவாய்” என்று,
அழகனுக்கே தொண்டு ஆக நல் நெஞ்சினால் உரைப்பீர் – அழகனுக்கே அடிமையாகுமாறு நல்லமனத்துடன் சொல்லுங்கள்; (எ – று.)

“எந்தை வானவர்க்கும், வணங்கரியா னன்றிக் காப்பாரில்லாமை விண்மண்ணறியும்,
வணங் கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண் டனே” என்றபடி ஸ்ரீமந்நாராயணனே பரம்பொரு ளென்று
சாதித்தற்குச் சாக்ஷியாகிற திவ்வியசரித்திரங்களுள், முதலிற் சிவபக்தியோடு விஷ்ணு த்வேஷமும் மேலிட்டிருந்த
கண்டாகர்ணன் பின்பு சிவனால்முத்திபெறமாட்டாது கண்ணபிரானாற் பெற்றன னென்ற வரலாறு சிறத்தலால்,
அதனை இங்கு எடுத்துக்காட்டினர்.
“கனவண்ணாவென்றோதொலிவந்தடையா, ஈனக்கண்டாகனற்கீந்தான்பரகதி யென்னப்பனே” என்றார் திருவேங்கடத்தந் தாதியிலும்.

க்ருஷ்ணன் என்ற திருநாமம் – கருநிறமுடையவ னென்றும், (கண்டவர் மனத்தைக்) கவர்பவனென்றும்,
(எல்லாவற்றையுஞ்) செய்பவ னென்றும், மற்றுஞ் சிலவகையாகவும் பொருள்படும்.
ஊழ்வினை – ஜந்மாந்தரகர்மம்; இங்கு இது, பாவத்தின்மேல் நின்றது.
இரண்டாமடியிலும், நான்காமடியிலும் நகரம் னகரமாகக் கொள்ளப்பட்டது, திரிபுநயத்தின்பொருட்டு.
இரண்டாமடியில், ஆகல்என்று பதம்பிரித்துத் தொழிற்பெயராக வுரைத்தலும் அமையும்.

————

தொண்டு படார் திருமால் இருஞ்சோலையில் சோதிக்கு அன்பு
கொண்டு படா மலர் இட்டு இறைஞ்சார் மடக்கோதையரைக்
கண்டு படா முலை தோய் அனுராகம் கருதி இரா
உண்டு படா நிற்கும் போதும் நைவார் எங்கன் உய்வதுவே –56–

(இ – ள்.) (சிற்றறிவாளர்கள்,) திருமாலிருஞ் சோலையில் சோதிக்கு – திருமாலிருஞ்சோலைமலையி லெழுந்தருளியிருக்கிற பரஞ்சோதி சொரூபியா கிய அழகப்பிரானுக்கு,
அன்புகொண்டு தொண்டுபடார் – பக்திகொண்டு அடிமைப்படார்;
படா மலர் இட்டு இறைஞ்சார் – வாடாத மலர்களை (அப் பெருமான் திருவடிகளில்) இட்டு அருச்சித்து வணங்கார்;
மடம் கோதையரை கண்டு – இளமைப்பருவமுடைய மாதர்களைப் பார்த்து,
படாம் முலைதோய் அனுராகம் கருதி – கச்சணிந்த அவர்கள் கொங்கைகளில் அணைகிற இன்பத்தில் ஆசையை மனத்திற்கொண்டு,
இரா உண்டு படாநிற்கும்போது நைவார் – இராப்பொழுதில் உணவுண்டு படுத்துக்கொள்ளும்போது வருந்துவார்கள்;
(இப்படிப்பட்டவர்கள்), உய்வது – நற்கதிபெறுவது,
எங்ஙன் – எவ்வாறோ? (எ – று.) – ஈற்றுஏகாரம் – இரக்கம்.

பேரின்பத்தைத்தரவல்ல பெருமான்பக்கல் அன்புகொண்டு அவனுக்கு ஆட்பட்டு அருச்சியாது
சிற்றின்பவாசையால் தவிப்பவர்கள் உய்யுமாறு இல்லை யென்பதாம்.
இது, சிலவகை லௌகிகர்களுடைய இயல்பை நோக்கி இரங்கிக் கூறியவாறாம்;
லோககாயதிகனென்னுஞ் சார்வாகனது கொள்கையை வெறுத்துக்கூறியது இது வென்னலாம்.

படாமலர் . செவ்விமாறாத பூ – கோதையர் – பூமாலைபோன்ற மெல்லியலார்;
(செயற்கை யழகின் பொருட்டுப்) பூமாலையைத் தரித்தவர்கள்; (இயற்கையிற்) கூந்தலகுடையவர்கள்,
படாம் – படம் என்ற வடசொல்லின் விகாரம்; (கடம் = கடாம் என்பது போல.) ஆடையைக்குறிக்கிற இச்சொல்,
இங்குக் கஞ்சகத்தைக் குறித்தது: பொதுப்பெயர், சிறப்புப்பொருளுணர்த்திற்று.
அநுராகம் – வடசொல். எங்ஙன் – எங்ஙன மென்பதன் விகாரம்.

“பெண்டிராற்சுகங்களுய்ப்பான் யெழுந்தோரிடும்பைபூண்டு,
உண்டிராக் கிடக்கும்போது உடலுக்கே கரையேது,
தண்டுழாய்மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடித்,
தொண்டுபூண்ட முதமுண்ணாத்தொழும்பர் சோறுகக்குமாறே” என்ற திருமாலையை அடியொற்றியது, இச்செய்யுள்.

———–

உய்வம் தொழும்பு செய்து என்று இருப்போமை உய்யாமல் ஐவர்
பெய்வம் தொழு வினைக்கே என்பரால் பெருந்தேன் சிகரம்
தைவந்து ஒழுகும் மலை அலங்கார சதுமுகத்துத்
தெய்வம் தொழும் தெய்வமே என் கொலோ உன் திரு உளமே –57–

(இ – ள்.) பெருந் தேன் – மிகுதியான தேன்,
சிகரம் தைவந்து ஒழுகும் – சிகரத்தைத் தடவிக்கொண்டு பெருகப்பெற்ற,
மலை – திருமாலிருஞ் சோலைமலையி லெழுந்தருளியிருக்கிற,
அலங்கார – அழகனே!
சது முகத்து தெய்வம் தொழும் தெய்வமே – நான்குமுகங்களையுடைய கடவுளாகிய பிரமதேவனும் வணங்கப்பெற்ற முதற்கடவுளே! –
தொழும்பு செய்து உய்வம் என்று இருப்போமை “(உனக்கு)அடிமைசெய்துஉஜ்ஜீவிப்போம் ” என்று எண்ணியிருக்கின்ற எங்களை,
ஐவர்-ஐம்பொறிகளாகிய பகைவர்கள்,
உய்யாமல்தொழுவினைக்கே பெய்வம் என்பர்- (அங்ஙனம்) உஜ்ஜீவிக்கவொட்டாதபடி கொடிய பாவங்களிலே
(உங்களை) அகப்படுத்துவோம்” என்று கறுவிச் சொல்லுகின்றார்கள்;
உன் திருஉளம்என்கொலோ (இவ்விஷயத்தில்) நின்திருவுள்ளக்கருத்து யாதாயிருக்கின்றதோ? (எ – று.) – ஆல் – ஈற்றசை.

“வாழ்விப்பானெண்ணமோ வல்வினையி லின்னமென்னை, ஆழ்விப்பா னெண்ணமோ அஃதறியேன் –
தாழ்விலாப், பாடலழகார் புதுவைப்பட்டர் பிரான் கொண்டாடுங், கூடலழகா நின்குறிப்பு” என்றபடியாம்.
எதுவும் அவனையன்றி அசையாதாதலால், “உன்திருவுளம் என்கொலோ” என்றார்.

ஐம்பொறிகளை “ஐவர்” என உயர்திணையாகக் கூறியது, இழிப்புப்பற்றிய திணைவழுவமைதி.
தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர் “தாம் வந்தார் தொண்டனார்” என்பது
உயர்சொல் குறிப்புநிலையின் இழிபு விளக்கிற்று’ என்றது, இங்கு உணரத்தக்கது. ஐவர் – தொகைக்குறிப்பு.
ஐம்பொறிகளின் வழியாக ஐம்புலன்களையும் வேண்டியபடியெல்லாம் அனுபவிக்க விரும்பும் ஆசை
எங்களைத் தீவழிச்செலுத்த முயல்கின்றது என்றவாறாம்.

தொழுவினை – தொழுமரம்போல அகப்படுத்தி வருத்துங்கருமம்; குட்டநோய் போலக் கொடிய கரும மெனினுமாம்.
தொகுதியாகிய கரும மென்னவும் படும்; ஏ – பிரிநிலையோடு இழிவுசிறப்பு.
தைவந்து, தைவா – பகுதி; தைவரல் – தடவுதல் கோட்டுப்பூ முதலிய மலர்களினின்றும் தேன் கூடுகளினின்றும்
பெருகுகின்ற மிக்கதேன் சிகரத்தின் மீதெல்லாம் வழிந்தோடப்பெற்ற மலையென்க.
எல்லாப்பொருள்களையும் படைக்கிற கடவுளும் வணங்கும்படி யான தெய்வ மெனவே,
அவனது படைப்புக்கு உட்பட்ட பிறரெல்லாரும் வணங்கத்தக்க தெய்வமென்பது சொல்லவேண்டாதாயிற்று.
என் என்ற முற்றே வினாப்பொருளைக் காட்டியதனால், கொல் ஓ – அசைகள்; கொல் – ஐயமுமாம்.

————

திருவிளையாடு திண் தோள் செங்கண் மால் பல தேவருடன்
மருவு இளையான் திருமால் இருஞ்சோலை மலை என ஓர்
உரு விளையாமல் பிறப்பார் பலர் புகழ் ஓதி சிலர்
கரு இளையா நிற்க வித்தாவர் முத்தியில் காமம் அற்றே –58-

(இ – ள்.) “திரு விளையாடு திண் தோள் – வீரலக்ஷ்மி வீற்றிருந்து குலாவுதற்கிடமான வலியதோள்களையுடைய,
செம் கண் மால் – சிவந்த திருக் கண்களையுடைய திருமாலும்,
பலதேவருடன் மருவு இளையான் – (தனக்குத்தமையனான) பலராமருடனே மனங்கலந்து பொருந்திய தம்பியுமாகிய எம்பெருமானது,
திருமாலிருஞ்சோலைமலை-‘, என – என்று,
ஓர் உரு விளையாமல் – ஒருதரமேனும் சொல்லாமல்,
பிறப்பார் – (கருமம் ஒழியப்பெறாது மாறிமாறிப் பலபிறப்பும்) பிறந்து வருந்துபவர்,
பலர் – (உலகத்திற்) பலராவர்;
சிலர் – சிலபேரோ,
காமம் அற்று – சிற்றின்பவாசையொழிந்து,
புகழ்ஓதி – (அத்திருமலையின்) மகிமையை எடுத்துச்சொல்லி, (அதனால்),
கரு இளையாநிற்க – பிறப்புக்கள் (இனித் தம்மைச் சேரமாட்டாவாய்) வலிகுன்றி நிற்க,
முத்தியில் வித்துஆவர் – வீட்டுலகத்தில் முளைக்கும் விதையாவார்கள்.

முத்திபெறத்தக்கவராவ ரென்பதாம். “முத்தியில்வித்தாவர்” என்பதை,
“உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்புக் கோர் வித்து” என்றாற்போலக் கொள்க:
அத்திருக்குறளினுரையிற் பரிமேலழகர் “அந்நிலத்திற்சென்று முளைத்தலின், “வித்து” என்றார்;
ஈண்டுப்பிறந்திறந்து வரும் மகனல்லன் என்பதாம்” எனஉரைத்தது, இவ்விடத்திற்கும் ஏற்கும்.

திருவிளையாடுதிண்டோள் – வெற்றித்திரு நீங்காதுஉறையுந்தோள்என, புயவலிமை கூறியவாறாம்.
இனி, பெரியபிராட்டியார் தழுவிவிளையாடப் பெற்ற திண்ணியதோள்க ளெனினுமாம்.
திருவிளையாடுதிண்டோள் – திருமகள் விளையாடும்மலைகள்போலுள்ளன தோள்க ளென்ற குறிப்பு;
“திருவிளையாடுதிண்டோள் திருமாலிருஞ்சோலைநம்பி” என்றார் ஆண்டாளும்:
“பெரிய பிராட்டியார்க்கு லீலார்த்தமாகச் சேண்குன்று சமைத்தாற்போலே யாய்த்துத் திருத்தோள்களிருப்பது” என்று அங்கு உரைத்தனர் ஆன்றோர்.
கண்களிற் சிலசிவந்தரேகைகளிருத்தல் உத்தமவிலக்கண மாதலால், “செங்கண் மால” என்றார்.
செங்கண் – செந்தாமரைமலர்போன்ற கண் என்ற குறிப்பு; செங்கண்மால் – புண்டரீகாக்ஷன்.
பலராமன் – கண்ணனுக்குத் தமையன், திருமாலின் எட்டாம் அவதாரம்:
வசுதேவனுடைய பத்தினிகளுள் தேவகியின் ஏழாவது கருப்பத்திலே முதலில் ஆறுமாசந்தங்கிப் பின்பு ரோகிணியின்
கருப்பத்திற் சென்றுசேர்ந்து ஆறுமாசம் இருந்து பிறந்தவன். இவனிடத்து ஆதிசேஷாம்சமும் உண்டு.
“பலதேவனென்னுந், தன் நம்பியோடப் பின்கூடச்செல்வான்”,
“பட்டிமேய்ந்தோர்காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய், இட்டீறிட்டு விளையாடி யிங்கேபோதக் கண்டீரே” என்றபடி
முறைதவறாமல் தமையனான பலராமனுக்குக் கீழ்ப்படிந்து அவனைத்தழுவி நடப்பவன் கண்ண னென்பார்,
“பலதேவருடன் மருவிளையான்” என்றார். பலதேவர் என்ற வடமொழிப்பெயர்,
பலத்தினால் விளங்குபவரென்று பொருள்படும். நம்பிமூத்தபிரா னென்பது, இவர்க்குச் சம்பிரதாய நாமம்.

விளைத்தல் – நிகழ்த்துதல். உருவிளைத்தல் – உருச்சொல்லுதல்.
“திரு மாலிருஞ்சோலையென வோருரு விளையாமற் பிறப்பார்” எனவே, அங்ஙனம் ஒருமுறை கூறினாலும்
முத்திசித்திக்கு மென்பது போதரும். கரு – கர்ப்ப மென்ற வடசொல்லின் சிதைவு; பிறப்புக்கு இலக்கணை.
காமமற்றுப் புகழோதி – காமியபலன்களை விரும்புதலின்றி (நிஷ்காம்யமாக) எம்பெருமானுடைய கீர்த்தியை
எடுத்துச் சொல்லி யெனினுமாம். இனி, ‘சிலர், முத்தியிற் காமமற்று – வீடுபெறும்விருப்பமின்றி,
திருமாலிருஞ்சோலைமலையென்று ஒருதரமேனுஞ் சொல்லாமல், உலகத்தில் தம்மைப்போலப் பிறந்திறந்து
வருந்துபவராகிய பலருடைய புகழை எடுத்தோதி, கரு (பிறப்பு) மேன்மேல் விளைதற்கு வித்தாவர்’ என உரைப்பினும் அமையும்.

———–

காமத் தனை பொய் அழுக்காறு கோபம் களவு கொலை
ஆம் அத்தனையும் உடையேனை ஆறும் கொல் ஆன் பொருப்பு ஆம்
தாமத்து அனைவரும் போற்ற நின்றான் பண்டு தாமரையோன்
பூமத்தனைச் செய்த நோய் துடைத்தான் அடிப் போதுகளே –59-

(இ – ள்.) ஆன் பொருப்பு ஆம் தாமத்து – இடபகிரியாகிய இடத்திலே,
அனைவரும் போற்ற நின்றான் – எல்லாரும் (தன்னை) வணங்கும்படி நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருப்பவனும், –
தாமரையோன் – தாமரைமலரில் தோன்றியவனான பிரமன்,
பண்டு – முன்பு (தன்தலையைக்கிள் ளியகாலத்தில்),
பூ மத்தனை செய்து – ஊமத்தம்பூவைச் சூடுபவனான சிவபிரானுக்கு உண்டாக்கிய (பிரமகத்தி தோஷத்தாற் கையிற்கபாலமொட்டிக் கொண்டதனா லாகிய),
நோய் – (பிச்சையெடுத்தல்) துன்பத்தை,
துடைத்தான் – தீர்த்தருளியவனு மாகிய எம்பெருமானுடைய,
அடி போதுகள் – திருவடித்தாமரைமலர்களானவை, –
காமத்தனை – சிற்றின்பவாசையையுடை யவனும்,
பொய் அழுக்காறு கோபம் களவு கொலை ஆம் அத்தனையும் உடையேனை – பொய்யும் பொறாமையும் கோபமும்
திருட்டுத்தனமும் கொல்லுதற்றொழிலு மாகிய அவ்வளவு தீங்குகளை யுடையவனுமான என்னை,
ஆளும் கொல் – பாதுகாத்தருளுமோ? (எ – று.)

இங்ஙனங் கூறியது, நைச்யாநுஸந்தாநம்; அதாவது – தம்மைத் தாழ்த்திக் கூறுவது:
“அரும்பாதகன் பொய்யன் காமுகன் கள்வன் அருள்சிறிதும்,
அரும்பாதகன்னெஞ்சன் ஆறாச்சினத்தன் அவாவினின்றுந்,
திரும்பாதகன் மத்த னானேற்குச் சேடச்சிலம்பமர்ந்த,
திரும்பாதகஞ்சந் தரி லதுகா ணுன்றிருவருளே” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.
“பண்டேயுன் தொண்டாம் பழவுயிரை யென்னதென்று, கொண்டேனைக் கள்வனென்று” என்றபடி
எம்பெருமானுக்குஉரியதான உயிரை அங்ஙனம் பகவததீநமெ ன்றுகருதாது ஸ்வதந்திரமென்று எண்ணுதலும்,
அவ்வாறு மாறாக எண்ணி அதனைக்கெடுத்தலும், “களவு கொலை” எனப்பட்டன.

அழுக்காறு – பிறராக்கம்பொறாமை: அழுக்கறு என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர்: அழுக்கறு – ஒருசொல்.
இனி, அழுக்கு அறு என்னும்இரண்டு சொற்கள் சேர்ந்து ஒருசொல்தன்மைப்பட்டு, எதிர்மறையிலக்கணையால்,
குற்றத்தைநீக்கு என்னும் பொருளைத் தராமல் குற்றத்தையுடையவனாகு எனப் பொருள்பட்டுப்
பொறாமையைக் குறித்த தென்றுங் கொள்ளலாம். கொல் – வினா. மத்தம் – ஊமத்தையென்னும் பொருளதாதலை,
“கரந்தை மத்தமொ டெருக்கலர் கூவிளை கடுக்கை, நிரந்த பொற்சடை நின்மலக்கொழுந்து” எனக் கம்பராமாயணத்திலுங் காண்க.
ஊமத்தைக்கு ‘பூமத்தம்’ என்று ஒருபெயர் வழங்குதலும் உண்டு.

———-

போது அகத்தானும் வெண் போதகத்தானும் புராந்தகனும்
தீது அகத்து ஆனது தீர் தரும் காலை திரு அரை சேர்
பீதகத்தாய் அழகா அருளாய் என்பர் பின்னை என்ன
பாதகத்தால் மறந்தோ தனி நாயகம் பாவிப்பரே –60-

(இ – ள்.) போது அகத்தானும் – தாமரைமலரைத் (தான்பிறந்த) இடமாக வுடையவனான பிரமனும்,
வெள் போதகத்தானும் – (ஐராவதமென்னும்) வெள்ளையானையையுடையவனான இந்திரனும்,
புர அந்தகனும் – திரிபுரத் துக்கு அழிவுசெய்தவனான சிவனும், –
அகத்து ஆனது தீது தீர்தரும் காலை – (அசுரர் அரக்கர் முதலிய கொடியவர்கள் செய்யும் உபத்திரவங்களால்)
தம் மனத்திலுண்டான துன்பம் நீங்கவேண்டியசமயத்தில்,
திரு அரை சேர் பீதகத்தாய் அழகா அருளாய் என்பர் – ‘திருவரையிற்பொருந்திய பீதாம்ப ரத்தையுடையவனே!
அழகனே! (எம்பக்கல்) கருணைசெய்வாய்’ என்று துதித்துப் பிரார்த்திப்பார்கள்;
பின்னை – (அப்பரமனருளால் தமது துயர்தீர்ந்த) பின்பு, –
என்ன பாதகத்தாலோ – என்ன தீவினையினாலோ,
மறந்து – (அப் பெருமான் தங்கட்குச்செய்த உபகாரத்தையும் தங்கள் நிலைமையையும்) மறந்துபோய்,
தனி நாயகம் பாவிப்பர் – ஒப்பற்ற தலைமையைத் தமக்குஏறிட்டுக் கொண்டு அதற்குஏற்ப ஒழுகுவார்கள்! (எ – று.)

தமக்கு ஆபத்துவந்தபோது அதனைத்தீர்த்துக்கொள்ளத் திறமில்லா மல் எம்பெருமான் திருவடிகளில் விழுந்து சரண்புகுந்து,
அவனாற்காரியங்கொண்டபின்பு “யானே முழுமுதற்கடவுள்” என்று செருக்கிப்பேசித் திரிந்து
தீவினைக்கு உள்ளாவது என்ன பேதைமை! என்று, பிரமன் முதலிய தலைமைத் தேவர்களின் இயற்கையைக்குறித்து இரங்குகின்றார்.

போதகம் – பத்துப்பிராயத்து யானைக்கன்று; இங்கு யானையென்ற மாத்திரமாய் நின்றது.
பீதகம் – பொன்னிறம், பொன். அகத்து ஆனது தீது – தம்மிடத்து உண்டாகிய தீமை யெனினுமாம்.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திரு அழகரந்தாதி –21-40-

February 22, 2022

இருக்கு அந்தரத்து அனைவோர்களும் ஓதி இடபகிரி
நெருக்கம் தரத்தனை ஏத்த நின்றானை நிறத்த துப்பின்
உருக் கந்தர் அத்தனைத் துன்பு ஒழித்தானை உலகம் உண்ட
திருக் கந்தரத்தானை அல்லாது எண்ணேன் ஒரு தெய்வத்தையே –21—

(இ – ள்.) அந்தரத்து அனைவோர்களும் – மேலுலகத்திலுள்ள எல்லாத் தேவர்களும்,
இருக்கு ஓதி – வேதவாக்கியங்களைச் சொல்லி,
இட பகிரி நெருக்கம் தர தனை ஏத்த – திருமாலிருஞ்சோலைமலையிலே நெருக்கமுண்டாகுமாறு (வந்துதிரண்டு) தன்னைத் துதிக்க,
நின்றானை – (அத்துதிகளை ஏற்றுக்கொண்டு அங்கு) நின்றவனும், –
நிறத்த துப்பின் உரு – நிறம்விளங்கப்பெற்ற (சிறந்த) பவழம்போன்ற வடிவுநிறத்தையுடைய,
கந்தர் – முருகக்கடவுளுக்கு,
அத்தனை – தந்தையாகிய சிவபிரானை,
துன்பு ஒழித்தானை – இரத்தற்றுன்பமொழியும்படி செய்தருளியவனும், –
உலகம் உண்ட திருகந்தரத்தனை அல்லாது – உலகங்களை அமுதுசெய்த அழகிய கண்டத்தை யுடையவனுமான ஸ்ரீமந்நாராயணனை யல்லாமல்,
ஒரு தெய்வத்தை எண்ணேன் – வேறொருதெய்வத்தைக் கருதேன், (யான்); (எ – று.)

இவர் “மறந்தும்புறந்தொழாமாந்தர்” ஆதலால், பரதேவதையான திருமாலையன்றி, பிரளயகாலத்திலே பிறவுயிர்களோடொப்ப
அவனது திருவயிற்றினுட் புக்குப் பின்பு வெளிப்படுபவர்களும், தமக்கு ஆபத்துநேர்ந்த காலத்தில் அவனையே
சரணமடைந்துதேறி மற்றைச்சமயங்களிற் செருக்கித்திரிபவர்களுமான அபரதேவர்களைச் சிறிதும்பொருள்
செய்யாமையில் தமக்கு உள்ள உறுதியான துணிவை இங்ஙனம் வெளியிட்டார்;
“அரங்கா உன்னையன்றித் தெய்வம், ஆக மதிக்கு ளெண்ணே னடியேன் பிறராரையுமே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
(“நளிர்மதிச்சடையனும் நான்முகக்கடவுளும், தளிரொளியிமையவர்தலைவனும் முதலா,
யாவகையுலகமும் யாவரு மகப்பட, நிலநீர்தீகால்சுடரிருவிசும்பும், மலர்சுடர்பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒருபொருள் புறப்பாடின்றி முழுவதும், அகப்படக்கரந் தோ ராலிலைச்சேர்ந்த எம், பெருமாமாயனை யல்லது,
ஒரு மாதெய்வ மற்றுடையமோயாமே” என்ற ஆழ்வாரருளிச்செயல் இங்கு அறியத்தக்கது.)

நான்குவேதங்களுள் ருக்வேதம் முதலதாகையால், தலைமை பற்றி, அது எடுத்துக்கூறப்பட்டது;
இது, மற்றைவேதங்களுக்கும் உபலக்ஷணம். அந்தரம் – வானம்; வடசொல்; அங்குஉள்ள சுவர்க்கலோகத்துக்கு இடவாகுபெயர்.
துப்பின் நிறத்தஉரு எனமொழிமாற்றியுரைத்தலும் அமையும். கந்தரம் – தலையைத்தரிப்பது என்று காரணப்பொருள்பெறும்; கம் – தலை.

————

தெய்வம் பல அவர் நூலும் பல அவை தேர் பொழுதில்
பொய் வம்பு அல என்று தோன்றும் புல்லோர்கட்கு போத நல்லோர்
உய்வம் பலனும் அவனே என்று ஓதி உணர்வர் நெஞ்சே
கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலைக் கொண்டலையே –22-

(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
தெய்வம் பல – (உலகத்தில்) தெய்வங்கள் பல இருக்கின்றன;
அவர் நூலும் பல – அத்தேவர்களைப்பற்றிய ஆகமங்களும் (மதவேறுபாட்டினாற்) பல இருக்கின்றன;
அவை – அந்நூல்கள்,
தேர் பொழுதில் – ஆராயுமிடத்து,
பொய் வம்பு அல என்று புல்லோர்கட்கு தோன்றும் – பொய்ம்மையுடையனவும் பயனற்றவையும் அல்லவென்று அற்பர்களுக்குத்தோன்றும்;
போதம் நல்லோர் – ஞானத்தையுடைய நல்லவர்களோ, –
‘உய்வம் – (இவ்வழியல்லாவழிகளில் இறங்காது நல்வழிச்சென்று) உய்யக்கடவோம்;
பலனும் அவனே – (பரகதிக்கு உபாயமாகின்றமாத் திரமேயன்றி அவ்விடத்து அனுபவிக்கப்படும்) பயனாகின்றவனும் அழகப்பிரானே’,
என்று – என்று எண்ணி,
கொய்வம்பு அலர் சொரியும் சோலை மா மலை – கொண்டலையே ஓதி உணர்வர் – விரும்பிப்பறிக்கத்தக்க வாசனையுள்ள மலர்கள்
சிந்தப்பெற்ற திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற நீர்கொண்ட மேகம்போன்றவனான
அழகனையே துதித்துத் தியானிப்பார்கள்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – பிரிநிலையோடு உயர்வுசிறப்பு.

புல்லோர், தமது ஆராய்ச்சிக்குறைவினால், பற்பலதேவதாந்தரங்களையும் அவரைப்பற்றிய பொய்ந்நூல்களையும்
உண்மையென்று நம்பிப் பாராட்டிப் பழுதே பலபகலும் போக்குவர்; மெய்யுணர்வுள்ள நல்லோர்களோ,
அங்ஙனமன்றிக் காண்பவர் கண்குளிர்ந்து விடாய்தீருமாறு குளிர்ந்திருண்ட தோற்றமுடையவனாய்ப் பக்ஷபாதமின்றிக்
கைம்மாறுகருதாது உலகத்துக்குக் கருணைமழைசொரிந்துகொண்டு காளமேகம்போலத் திருமாலிருஞ்சோலைமலையில்
எழுந்தருளியிருக்கிற திருமாலையே உபாயமும் உபேயமுமாக உணர்ந்து துதித்து உயர்கதிபெறுவர் என்று,
விபரீதஞானமுடைய, ஸாமாந்யஜனங்களுக்கும் தத்துவஞானமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் உள்ள ஞானதாரதம்மியத்தையும்,
அதனால் அவர்கள் அடையும் பயன்வேறுபாட்டையும் தம்நெஞ்சத்துக்கு எடுத்துக்காட்டியவாறாம்.
நெஞ்சே! நீ புல்லோர்வழியிற்புகுதாது நல்லோர்நெறியில் நிற்பாய் என்று குறிப்பித்தபடி.

தேவர்களை இருதிணையாலுங்கூறுதல் இலக்கணமாதலால், “தெய்வம் பல அவர்நூலும் பல” என்றது அமையும்.
உம்மை – இறந்ததுதழுவிய எச்சப்பொருளது. செய்யுளாதலின், “அவன்” என்ற சுட்டுப்பெயர் முன்வந்தது எ – பிரிநிலை.
கொண்டல் – நீர்கொண்ட மேகத்துக்குத் தொழிலாகுபெயர். கொள் தல் எனப் பிரியும்:
அது, இங்குப் பெருமானுக்கு நிறமும் பயனும் பற்றிவந்த உவமையாகுபெயராய் நின்றது.
(‘சோலைமாமலைக்கொண்டலை’ என்பதை “ஸ்ரீவேங்கடாத்ரிசிகராலயகாளமேகம்” என்றாற்போலக் கொள்க;
“புயன்மழைவண்ணர் புரிந்துறைகோயில், மயன்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை” என்றார் ஆழ்வாரும்.)

————

கொண்டு அலையா நிற்கும் ஐம் புலக் கோள் மகரங்களின் ஈர்ப்பு
உண்டு அலை ஆர் பிறவிக் கடல் மூழ்குவர் உத்தமனை
தண்டலை ஆர் திரு மாலிருஞ்சோலைத் தனிச் சுடரை
புண் தலையால் வணங்கார் அணங்கு ஆர் வினை போக என்றே –23-

(இ – ள்.) (உலகத்துப்பேதைகளாயுள்ளவர்கள்), –
கொண்டு அலையாநிற்கும் ஐம் புலம் கோள் மகரங்களின் – (மனத்தைத் தம்வசமாகக்) கொண்டு வருத்திநிற்கிற
ஐம்புலன்களாகிய வலிய சுறாமீன்களினால்,
ஈர்ப்புஉண்டு – இழுக்கப்பட்டு,
அலை ஆர் பிறவி கடல் மூழ்குவர் – (பலவகைச்) சஞ்சலங்கள் பொருந்திய பிறப்புத் துன்பமாகிய அலைகள் பொருந்திய கடலிலே மூழ்குவார்கள்;
உத்தமனை – புருஷோத்தமனும்,
தண்டலை ஆர் திருமாலிருஞ்சோலை தனி சுடரை – குளிர்ச்சியான இடத்தையுடைய சோலைகள் நிறைந்த
திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற ஒப்பற்ற தேஜோரூபியுயான எம்பெருமானை, –
அணங்கு ஆர் வினை போக என்று – ‘துன்பம் நிறைந்த (தம்) கருமங்கள் ஒழிவனவாக’ என்று,
புண் தலையால் வணங்கார் – தசைபொருந்திய தங்கள்தலையைக்கொண்டு நமஸ்கரிக்கமாட்டார்கள்.

இந்த அஜ்ஞாநிகளுடைய தீவினை இருந்தபடி என்னே! என்று இரங் கியவாறாம். இனி, திருமாலிருஞ்சோலைச்சுடரை
வினைபோக வென்று தலையால் வணங்காதவர்கள், ஐம்புலமகரங்களினால் ஈர்ப்புண்டு பிறவிக்கடலில் மூழ்குவர் என்று
எழுவாய்பயனிலையமைய உரைப்பினும் அமையும்; இவ்வுரைக்கு, வணங்கார் என்பது – வினையாலணையும்பெயர்.

அலையாநிற்கும் என்பதை, அலையா நிற்கும் என்று பிரித்து, வருத்தி நிற்கு மென்று பொருள்காண்க.
ஐம்புலம் – சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தமென்னும் பஞ்சவிஷயங்கள்; இவை, முறையே தமிழில் ஓசைஊறு ஒளி சுவை நாற்றம் எனப்படும்;
இவை, முறையே செவி மெய் கண் வாய் மூக்கு என்ற பஞ்சஇந்திரியங்களுக்கு உரியவை.
மகரம் – முதலையுமாம். கோள்மகரம் – “முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா” என்றபடி எவ்வகை வலியுடையவற்றையும்
இழுத்துக்கொண்டு சென்று மீளவும் எளிதில் விடுதலில்லாத பெருவலிமையுடைய மகரம்.
“அலைஆர்” என்ற அடைமொழியை, கடலாகிய உபமானத்துக்கும் பிறவியாகிய உபமேயத்துக்கும் உரியதாக்கொண்டு,
அவ்விரண்டனோடுங் கூட்டி, அதற்கு இருவகையாகப் பொருள்கொள்ளப்பட்டது; சிலேடை.
இனி, அலை ஆர் கடல் என்பதற்கு – அலைகள் ஒலிக்கப்பெற்ற கடலென்று உரைத்தலும் அமையும்;
ஆர்த்தல் – ஒலித்தல். உத்தமன் – மேலானவன். தனிச் சுடர் – முச்சுடர்களினும் மேம்பட்ட ஒளியுருவம். போக – வியங்கோள்முற்று.

————-

என்று உதரம் கலந்தேன் அற்றை நான்று தொட்டு இற்றை வரை
நின்று தரங்கிக் கின்றேற்கு அருள்வாய் நெடும் கான் கடந்து
சென்று தரங்கக் கடல் தூரத்து இலங்கையில் தீயவரைக்
கொன்று தரம் குவித்தாய் சோலை மா மலைக் கோவலனே –24–

(இ – ள்.) நெடுங் கான் கடந்து சென்று – நெடியகாட்டை (தண்டகார ணியத்தை) நடந்துகடந்து அப்பாற்சென்று,
தரங்கம் கடல் தூர்த்து – அலை களையுடைய கடலை (மலைகளைக்கொண்டு) நிரப்பி அணைகட்டி,
இலங்கை யில் தீயவரை கொன்று தரம் குவித்தாய் – இலங்காபுரியிலுள்ள கொடியவர் களான அரக்கர்களைக் கொன்று (அவர்களுடலை) மலையாகக் குவித்தவனே!
சோலை மா மலை கோவலனே – திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற ஆயனே! –
என்று உதரம் கலந்தேன் – எப்பொழுது (தாயின்) வயிற்றில் வந்துபுகுந்தேனோ,
அற்றை நான்று தொட்டு – அன்றைத்தினந் தொடங்கி,
இற்றை வரை – இன்றைநாளளவும்,
நின்று தரங்கிக்கின்றேற்கு – இடைவிடாது அலைகின்றவனாகிய எனக்கு,
அருள்வாய் – (இனியாயினும் அங்ஙனம் அலையாதபடி) கருணைசெய்வாய்; (எ – று.)

நான்று – ஞான்று என்பதன் முதற்போலி. கான் – காநந மென்ற வட சொல்லின் விகாரம். தரம் – குவியல், தொகுதி யென்றபடி.
கோவலன் – பசுக்களைக்காக்க வல்லவன்; கோ – பசு; வடசொல்; வலன் = வல்லன்: தமிழ்ச்சொல்.
கோபாலன் என்ற வடசொல், கோலனென்று விகாரப்பட்ட தெனக் கொண்டாலும், பசுக்களைக்காப்பவ னென்றே பொருளாம்.
கிருஷ் ணாவதாரத்தில் நந்தகோபகுமாரனாய் இடைச்சாதியில் வளர்ந்தமை பற்றி, ‘கோவலனே!’ என்றார்;
இப்பெயர், பெருமானுடைய சௌலப்பியத்தைக் காட்டும். இனி, கோ வலன் – உயிர்களைக் காக்கவல்லவனுமாம்.

————-

கோவலன் பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலை மலைக்
காவலன் பாற் பாடல் கண் துயில் மால் அலங்காரன் என்றே
பாவல் அன்பால் பணிவார் அணி வானவர் ஆகி மறை
நாவலன் பார்ப்பதி நாதன் நண்ணாப் பதம் நண்ணுவரே –25-

(இ – ள்.) ‘கோவலன் – ஆயனாய்வளர்ந்தவன்:
பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலைமலை காவலன் – குஞ்சுகளுடனே மயில்கள் சூழப்பெற்ற குளிர்ந்த திருமாலிருஞ்சோலைமலைக்குத் தலைவன்:
பால் கடல் கண்துயில் மால் அலங்காரன் – திருப்பாற்கடலிலே யோகநித்திரை கொண்டருள்கிற பெருமைபொருந்திய அழகன்,’
என்றே – என்று (இங்ஙனம் எம்பெருமானுடைய குணவிபவங்களைச்) சொல்லிக்கொண்டே,
பாவல் அன்பால் பணிவார் – பரவுதலையுடைய (மிக்க) பக்தியினால் (அப்பெருமானை) வணங்குபவர்கள், –
அணி வானவர் ஆகி – (மறுமையிலே) அழகிய முக்தர்களாகி,
மறை நாவலன் பார்ப்பதி நாதன் நண்ணா பதம் நண்ணுவர் – வேதம் வல்ல நாவையுடையவனான பிரமனும்
பார்வதீநாயகனான சிவபிரானும் அடைய மாட்டாத பரமபதத்தை அடைவார்கள்; (எ – று.)

கோவலன் = கோபாலன். காவலன் – லோகஸம்ரக்ஷகன். மறைநாவலன் – வேதங்களை ஓதியுணரும் நாவன்மையுடையவன்.
நாவலன் – நா வலன். மறைநாவலன் – வேதங்களை நாவில்வல்லவன். பாவல் என்ற தொழிற்பெயரில்,
பாவு – பகுதி. பார்ப்பு என்ற இளமைப்பெயர், பறவைக்கு உரியது;
“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை” என்பது, தொல்காப்பியம்.
பார்ப்பு என்பதற்கு – (தாய்ப்பறவையினால் அன்போடு) பார்த்துக்குறிக்கொண்டு பாதுகாக்கப்படுவ தென்று காரணப்பொருள் காணலாம்.
வானவர் – எல்லாவுல கங்களுக்கும் மேலுலகமாகிய முத்தியையடைந்தவர். சிலசாதியார்க்கும் பெண்பாலார்க்கும்
ஓதிவிக்கவும் ஓதவும் கேட்கவும் ஆகாதென்று மறு க்கப்படுதலாலும், எளிதிலுணரலாகாதபடி மறைந்த ஆழ்பொருளையுடைமை யாலும்,
மறையென்று வேதத்திற்குக் காரணக்குறி. பார்வதீநாதன் என்ற வடமொழித்தொடர், விகாரப்பட்டது.
பர்வதராசனான இமவானுக்கு மகளானதனால், அம்பிகைக்குப் பார்வதி யென்று பெயர்.
‘நண்ணாப்பதம் நண்ணுவர்’ என்றவிடத்துத் தொடைமுரண் தோன்றுதல் காண்க.

————-

நண் இன நாக முடி மேல் நடித்து என்னை நாசம் அறப்
பண்ணின நாகமும் பாரும் அளந்தன பண்டு தம்பி
மண்ணினன் ஆக வனம் போயின வளர் சோலை
மலைக் கண் இனன் ஆகம் கரியான் சிவந்த கழல் இணையே –26-

(இ – ள்.) வளர் சோலைமலைக்கண் இனன் – ஓங்கிவளர்ந்த திருமா லிருஞ்சோலைமலையி லுதித்த சூரியன்போல விளங்குகின்றவனும்,
ஆகம்கரி யான் – திருமேனிகறுத்துள்ளவனுமான அழகப்பிரானுடைய,
சிவந்த கழல் இணை – செந்நிறமாயுள்ள உபயபாதங்கள், –
நாகம் நண் இனன் முடிமேல் நடித்து – (காளியனென்னும்) பாம்பினது நெருங்கித் தொகுதியாயுள்ள தலைகளின்மேல் நடநஞ்செய்து, –
என்னை நாசம் அற பண்ணின -(அந்தத் துஷ்டநிக்கிரகசீலத்தி லீடுபடுதலால்) என்னை அழியாது உய்யும்படி செய்தருளின;
நாகமும் பாரும் அளந்தன – மேலுலகத்தையும் பூமியையும் அளந்தருளின;
பண்டு – முன்பு (ஸ்ரீராமாவதாரத்தில்),
தம்பி மண்ணினன் ஆக வனம் போயின – அடுத்ததம்பியான பரதாழ்வான் நிலவுலகத்தரசாட்சிக்கு உரியவனாகுமாறு தாம் வனவாசஞ்சென்றன; (எ – று.)

பாதவகுப்பு என்னும் பிரபந்தத்துறை கூறியவாறாம்: இந்நூலின் 94 – ஆஞ் செய்யுளும் இது.
பாதவகுப்பு – பிரபந்தத்தலைவனது திருவடிகளின் சிறப்புக்களை யெடுத்துக்கூறுவது;
(இங்ஙனமே புயவகுப்பும் உண்டு: அது, பிரபந்த நாயகனதுதோள்களின் சிறப்பைக் கூறுவது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா, ரிறைவனடி சேராதார்” என்றபடி சரணமடைகிற உயிர்கட்கெல்லாம் உஜ்ஜீவநகரமாயிருப்பது
திருமாலின் திருவடி யாதலால், அதன் ஏற்றத்தை எடுத்துக்கூறின ரென்க.

நாகமும்பாரும்அளந்தது, திரிவிக்கிரமாவதாரத்தில்; இவ்வரலாற்றால், கொடியவரை யடக்குதற்கு வேண்டிய தந்திரம் வல்லவ னென்றவாறு.

சீதாகல்யாணத்தின்பிறகு தசரதசக்கரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ்செய்ய யத்தனிக்கையில்,
மந்தரைசூழ்ச்சியால் மனங்கலங்கப் பெற்ற கைகேயி தன்கொழுநரான தசரதரை நோக்கி முன்பு தனக்குக் கொடுத்திருந்த
இரண்டுவரங்களுக்குப் பயனாகத் தன்மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌசல்யைமகனான இராமனைப் பதினான்குவருஷம்
வனஞ்செலுத்தவும் வேண்டுமென்று சொல்லி வற்புறுத்த, அதுகேட்டுவருந்திய தசரதர், சத்தியவாதியாதலால்,
முன்பு அவட்குவரங்கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும், இராமன்பக்கல் தமக்குஉள்ள மிக்கஅன்பி னால்
அவ்வரத்தை நிறைவேற்றுமாறு அவனை வனத்துக்குச் செல்லசொல்லவும் மாட்டாமலும், கலங்கி வாய்திறவாதிருக்கிற சமயத்தில்,
கைகேயி இராமனை வரவழைத்து “பிள்ளாய்! உங்கள்தந்தை பரதனுக்கு நாடுகொடுத்துப் பதினான்குவருடம் உன்னைக்
காடேறப் போகச்சொல்லுகிறார்’ என்றுசொல்ல, அச்சொல்லைத் தலைமேற்கொண்டு அந்த மாற்றாந்தாயின்வார்த்தையையும்
அவட்குத் தனதுதந்தை கொடுத்திருந்த வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ருபித்ருவாக்யபரிபாலநஞ் செய்தலினிமித்தம்
இராமபிரான் அரசாட்சியைப் பரதனுக்குஉரியதாம்படி கைவிட்டு இலக்குமணனோடும் சீதையோடும் அயோத்தியைநீங்கி
நடந்து வனவாசஞ்சென்றன னென்ற வரலாறுபற்றி, “பண்டு தம்பிமண்ணினனாக வனம்போயின” என்றார்.

இராமபிரானும் கண்ணபிரானும் திருமாலின் திருவவதாரமூர்த்திக ளாதலால், அவர்கள்செய்கை, திருமாலின்
செய்கையாக ஒற்றுமைநயம்பற்றிக் கூறப்பட்டது; இதனை, முன்னும் பின்னும் இதுபோல வருமிடங்கட் கெல்லாங் கொள்க.

இனன் – இனமென்பதன் இறுதிப்போலி. இது, முடிக்கு அடைமொழி;
* நாகம் என்ற வடசொல் – நகத்தில் (அதாவது – மரத்தில் அல்லது மலையில்) வாழ்வது என்றும், கால்களினாற் செல்லாதது என்றும்
காரணப்பொருள் பெறும். நாஸம், ** நாகம், வநம், இநன் – வடசொற்கள். நாகமும் என்றவிடத்து,
நகரவேறுபாடு, திரிபுநயத்தின் பொருட்டுக் கொண்டது. முதலடியில் னாகம் என்றவிடத்து னகரத்தையும் இங்ஙனங் கொண்டு,
நண்ணினஎன்று எடுத்து, நாகமுடிமேல் நடித்துப் பொருந்தின என்று தனிவாக்கியமாக்கி யுரைப்பாரு முளர்.
முதலடியிலாவது இரண்டாமடியிலாவது நல் நாகம் என்றுஎடுத்தலு மொன்று.
நாகம் – சுவர்க்கத்தைக் குறிக்கையில் – கம் – சுகம்: அஃது அல்லாதது, அகம்: அது துக்கம்; அதுஇல்லாதஇடம் –
நாகம் எனக் காரணப்பொருள் காண்க. அடியார்களுடைய அஜ்ஞாநமாகிய இருள் அகலவும், அவர்களுடைய உள்ளக்கமலங்கள் மலரவும்,
சூரியன்போன்று காட்சிதருதலால், “சோலைமலைக்கண் இனன்” என்றார்;
இதனை, திருவரங்கத்தந்தாதியில் “ஆய்க்குலத்திநர்” என்றாற்போலக் கொள்க.
“இருள்விரி நீலக்கருஞாயிறு சுடர்கால்வதுபோ, லிருள்விரிசோதிப்பெருமான்”
ஆதலால், “இனன் ஆகங்கரியான்” எனப்பட்டான். திருவடி சிவந்திருத்தல், உத்தமவிலக்கணம்.
“ஆகங்கரியான் சிவந்தகழலிணை” என்றவிடத்து, தொடைமுரண் காண்க.

———-

தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல் –

கழலப் புகுந்த வளை அறியார் என் கருத்து அறியார்
அழலப் புகன்று ஒறுப்பார் அன்னைமார் அறுகாற் சுரும்பு
சுழலப் புனைந்த துழாய் மார்பர் மாலிருஞ்சோலை என்னார்
தழல் அப்புவர் என் தனங்களிலே சந்தனங்கள் என்றே –27-

(இ – ள்.) அன்னைமார் – (என்) தாய்மார்கள், –
கழல – புகுந்த வளை அறியார் – (என் கைகளினின்று) கழன்றுவிழத்தொடங்கிய வளையல்களின்தன்மையை உணரார்;
என் கருத்து அறியார் – என் மனத்திற்கொண்ட காதலை உள்ளபடி உணரார்;
அழல புகன்று ஒறுப்பார் – (என்மனங்) கொதிக்க (க் கடுஞ்சொற்களை)க்கூறி வருத்துவார்கள்;
அறு கால் சுரும்பு சுழழ புனைந்த துழாய் மார்பர் மாலிருஞ்சோலை என்னார் – ஆறுகால்களுள்ள வண்டுகள் சுழன்று
மொய்க்கும்படிதரித்த திருத்துழாய்மாலையையுடைய திருமார்பினரான அழகரது திருமாலிருஞ்சோலைமலை யென்று ஒருதரமேனுஞ்சொல்லார்;
சந்தனங்கள் என்று என் தனங்களிலே தழல் அப்புவர் – சந்தனக் குழம்புவகைகளென்று சொல்லி என்தனங்களின்மேல் நெருப்பை வாரிப் பூசிநிரப்புவார்கள்; (எ – று.)

களவொழுக்கத்தால் தலைவனைக்கூடிப் பிரிந்த தலைவி அப்பிரிவுத் துயரை யாற்றமாட்டாமல் விரகதாபத்தால் மிகவருந்த,
அத்தலைமகளைக்கண்ட செவிலித்தாய்மார் அத்தாபத்துக்குக் காரணம் இன்னதென்றுஆய்ந்துஉண ராதவர்களாய்
அப்பொழுதுநிகழ்கின்ற வேனிற்காலத்தினா லாகியதென்று கருதி அதனைத் தணித்தற்பொருட்டுச் சந்தனக்குழம்பை
அம்மகளுடம்பின் மேல் மிகுதியாக அப்பிச் சைத்யோபசாரஞ்செய்ய, காலதாபமன்றாதலால் அதனைத்தணிக்க மாட்டாத
அச்சந்தனக் குழம்பு,கலவிக்காலத்திலே இன்பஞ் செய்யும் பொருள்களு ளொன்றாதலாற் பிரிவுக்காலத்திலே
காலதாபத்தை மிகுவிப்பதாகி மிக்கவெப்பஞ் செய்ய, அதனால் மிகவருந்திய அந்தத் தலைமகள்,
தோழியின்முன்னிலையில் அத்தாயின்செயலைக்குறித்து வெறுத்துக்கூறியது, இது.

எனது, உடம்பு சடக்கென்று மிகமெலிந்திருப்பதை உற்றுநோக்கி அக்காரியத்தைக்கொண்டு அதன்காரணமாகிய
என்கருத்தின்காதலை அநுமா னித்துஉணரமாட்டிற்றில ரென்பாள், “கழலப்புகுந்தவளையறியார் என்கருத்தறியார்” என்றாள்.
தாபசாந்திசெய்யத்தக்கவையான சைத்தியோபசாரங்களைத் தாய்மார் ஏமாறாமல் இடைவிடாது இவட்குச் செய்துவருகையிலும்
இவள் சிறிதும் தாபந்தணிந்திடாது மேன்மேல்தவிக்க, இப்படியும் ஒர் ஆற்றாமை உண்டோ வென்று
அவர்கள் வெறுத்துஉரைத்தலே யன்றி, இத்தலைமகள் ஒருதலைமகனோடு தொடர்புடையளென்று ஊரார்சொல்லும்
பழிமொழியைக்கேட்டுத் தாய்மார் வெகுண்டு ‘இங்ஙனம் நமதுகுடிக்குப் பழிவிளையுமாறு ஒரு நிகழ்ச்சி யுண்டோ?’ என்று
சொல்லுகின்ற வெஞ்சொற்களும் பற்றி, ‘அழலப்புகன்று ஒறுப்பார் அன்னைமார்’ என்றாள்.
அன்றியும், தாய்மார் அப்புகிற தண்ணியசந்தனம் இவட்கு வெவ்வியதழலாகத் தோன்றினாற் போல,
அவன்தானே வருதலைநோக்கி ஆறியிருப்பதொழிய இங்ஙனம் பதறுவது குடிப்பிறப்புக்கு அடாது என்று அவர்கள்
சொல்லுகிற இதவசனங்களே இவட்கு வெஞ்சொற்களாகத் தோன்றின வென்றுங் கொள்ளலாம்.
இவள் தான்காதலித்த தலைவனது ஊரையும் பேரையும் அலங்காரத்தையும் குணங்களையும் சொல்லக் கேட்கப்பெறின்
ஒருவாறு ஆறியிருக்குந் தரமுடைய ளாதலால், அவற்றிலொன்றையேனும் அத்தாய்மார் சொல்லாமையைக்குறித்து
“சுரும்புசுழலப்புனைந்ததுழாய்மார்பர்மாலிருஞ்சோலை யென்னார்” என்று இரங்கினாள்.
“அறுகாற்சுரும்பு சுழலப் புனைந்த துழாய்” என்று தலைவரது திருத்துழாயின் திவ்வியபரிமளத்தில் ஈடுபட்டவாறு.
தழலப்புவர் என்தனங்களிலே சந்தனங்களென்றே –
“ஆயிரஞ்சால், அத்தனை வேது அனை யப்புவள் சாந்தென் றனலரைத்தே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
புகன்று, புகல் – பகுதி. அன்னைமார், மார் – பலர்பாற்பெயர்விகுதி. வண்டு, ஷட்பதமாதலின், “அறுகாற்சுரும்பு” எனப்பட்டது.

அழகப்பிரான் ஒருகால் ஐயங்காரதுஞானக்கண்ணுக்கு இலக்கான பொழுதே இவர் அவனைக்கிட்டி முத்தியின்பமனுபவிக்கும்படி
ஆசைகொள்ள, இவரை அப்பெருமான் அப்பொழுதேசேர்த்துக்கொள்ளாது மறைய, அதனாலுண்டான துயரத்தால்
ஐயங்கார் தபிக்கிற காலத்தில், அவர்பக்கல் பரிவுடையஞானிகள் அவர்க்குச்செய்கின்ற ஆறுதல்கள் அவர்
வருத்தத்தைத் தணிவிக்கமாட்டாது மிகுவிக்கிறநிலையிலே, ஐயங்கார் அவர்கள்திறத்தைத் தமது
நண்பரை நோக்கி உரைத்தவாறாகு மிது வென்று உள்ளுறைபொருள் காண்க.

கழலப்புகுந்தவளையறியார் – எனதுபாரதந்திரியம் நிலைகுலைதலை இவர்கள் உணர்கின்றாரில்லை.
என்கருத்து அறியார் – என்மனம் எம்பெருமானது நிரந்தராநுபவத்தில் ஊன்றியிருத்தலை யுணரார்.
எம்பெருமான் தானேவந்து ஆட்கொள்வதைஎதிர்நோக்கி அக்காலம்வருமளவும் ஆறியிருப்பதை விட்டு
இங்ஙனம் பேற்றுக்கு மிகவிரைந்து துடிப்பது பிரபந்தகுல மரியாதைக்குப் பொருந்தாது என்று இவர் பதற்றத்தை அடக்குமாறு
இவர் பக்கல்பரிவுடையார்சொல்லும் இதவசனங்கள் இவர்க்கு ஆறுதலுண்டாக் காமற் கடுஞ்சொற்களாகத் தோன்றுதலால்,
“அழலப்புகன்றொறுப்பார் அன்னைமார்” என்றார்.
எம்பெருமானுடைய குணவிபவங்களையும் திவ்விய தேசநாமத்தையும் பிறர்சொல்லக் கேட்கப்பெறுதலே
இவர்க்குச் சிறிது ஆறுதலாயிருக்கு மென்பது, அடுத்தவாக்கியத்தாற் போதரும்.
இவர்கள் எனதுதுடிப்பையடக்குதற்காக எடுத்துக்காட்டுகிற உலகவியல்புகள் எனது பக்திரூபஞானத்துக்கு இந்நிலையில் ஏலா என்பது,
இறுதிவாக்கியத்தின் உட்கோள். “அறுகாற் சுரும்பு சுழலப் புனைந்த துழாய்மார்பர்” –
ஷட்பத நிஷ்டரான ஸாரக்ராஹிகள் விரும்பிநாடும் இனிமையைத் தமது திருமேனியி லுடையவ ரென்க. விரிப்பிற் பெருகும்.

———–

தனத்துக்கு அராவிய வேல் விழிக்கு ஏக்கற்று தையலரால்
தினம் துக்கர் ஆகித் திரிவார் பலர் சிலர் செங்கமல
வானத்துக் கராசலம் காத்தாற்கு சோலை மலையில் நின்ற
கனத்துக்கு அராவணை யாற்கு எம்பிராற்கு உள்ளம் காதலரே –28-

(இ – ள்.) தனத்துக்கு – (மகளிரது) கொங்கையழகுக்கும்,
அராவிய வேல் விழிக்கு – (அரத்தினால்) அராவிக்கூர்செய்யப்பட்ட வேலாயுதம் போன்ற கண்களினழகுக்கும்,
ஏக்கற்று – ஏங்கி,
தையலரால் தினம் துக்கர் ஆகி – அம் மாதர்களின் தொடர்பினால் எந்நாளும் துன்பமுடையவர்களாய்,
திரிவார் – வீணேஅலையவர்களோ,
பலர் – (உலகத்திற்) பலராவர்;
சிலர் – (உலகத்திற்)சிலர்தாமே, –
செம் கமலம் வனத்து சராசலம் காத்தாற்கு – செந்தாமரை மலர்கள் மலர்ந்த (தடாகத்தின்) நீரினிடத்துக் கஜேந்திராழ்வானைப் பாது காத்தருளியவனும்,
சோலை மலையில் நின்ற கனத்துக்கு – திருமாலிருஞ் சோலைமலையிலே நின்றதிருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற காளமேகம் போன்றவனும்,
அரா அணையாற்கு – ஆதிசேஷனைச் சயனமாகவுடையவனு மாகிய,
எம்பிராற்கு – எம்பெருமான்விஷயத்தில்,
உள்ளம் காதலர் – மனத்தில் விருப்பமுடையவராவர்; (எ – று.)

உலகத்திற் பேதையர்பலரும் அறிவுடையார்சிலருமே யாதலால், அவர்கள் முறையே விஷயாந்தரத்திலும்
பகவத்விஷயத்திலும் ஆசைகொண்டு ஒழுகுந் திறத்தின் வேறுபாட்டை எடுத்துக்காட்டியவாறாம்.
அராவியவேல் விழி – “வாளரந்துடைத்த வவே லிரண்டுடன் மலைந்தவேபோ, லாள்வழக் கொழிய
நீண்ட வணிமலர்த்தடங்கண்” என்றார் சிந்தாமணியாரும்.
மகளிர்கண்ணுக்கு வேலுவமை – கூரியவடிவிலும், எத்துணை வலிமையுடைய ஆடவரது நெஞ்சையும் பிளந்து
அவரை வருத்துந் திறத்திலும் என்க.
வெல்வது வேல், விழிப்பது விழி எனக் காரணக்குறி. மகளிரிடத்துக்கொ ண்ட அவாவினால் இம்மையில் அவர்கட்கு
ஆட்பட்டுப் பலவாறுவருந்துதலே யன்றி மறுமையிலும் நற்கதிபுகுதாது வருந்துதலால், ‘தையலரால் தினத்துக்கராகி’ என்றார்.
திரிவார் – மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து அலைபவ ரென்றவாறுமாம்.
வடமொழித்திரிபாகிய வன மென்பது – காட்டையேயன்றி நீரையும் உணர்த்தும்.
இனி, இங்கு, காடுஎன்றே கொண்டு, செந்தாமரைத் தொகுதியினிடத்து என்றலு மொன்று.
அடர்ந்த தாமரைத்தொகுதியை ‘தாமரைக்காடு’ என்றல், மரபு. ‘எம்’ என்ற தன்மைப்பன்மை, எல்லாவுயிர்களையும் உளப்படுத்தியது.

————

காதலைப் பத்தினி மேல் வைத்த நீசக் கரு நிருதன்
மாதலைப் பத்தியை மண்ணில் இட்டாய் நின்னை வாழ்த்தும் தொண்டர்க்கு
ஈதலைப் பத்தியைச் செய்வோர்கள் வாழும் இட வெற்பா
தீது அலைப்பத் தியங்கித்திரி வேற்கு அருள் செய்தருளே –29-

(இ – ள்.) காதலை – ஆசையை,
பத்தினிமேல் வைத்த – அறக்கற்புடைய நின்மனைவியான சீதாபிராட்டியினிடத்து வைத்த,
நீசன் கரு நிருதன் – கீழ்மகனான (இராவணனென்னுங்) கரிய அரக்கனுடைய,
மா தலை பத்தியை – பெரிய தலைவரிசையை,
மண்ணில் இட்டாய் – (துணித்துத்) தரையில் தள்ளியவனே!
நின்னை வாழ்த்தி – (பேரன்பினால்) உன்னைவாழ்த்தி,
தொண்டர்க்கு ஈதலை பத்தியை செய்வோர்கள் – நினதுஅடியவர்களுக்கு (வேண்டுவன) கொடுத்தலையும் (அவர்கள்பக்கல்) பக்தியையுஞ் செய்பவர்கள்,
வாழும் – இனிதுவசிக்குமிடமான,
இடப வெற்பா – ருஷபகிரியில் எழுந்தருளியிருப்பவனே! –
தீது அலைப்ப தியங்கி திரிவேற்கு – தீவினை வருத்த (அதற்கு மாறொன்றுஞ்செய்யமாட்டாது) கலங்கியலைபவனான எனக்கு,
அருள் செய்தருள் – (அக்கொடியகருமம் ஒழிந்து உய்யுமாறு) கருணைசெய்தருள்வாய்.

ராக்ஷஸராஜனும் பத்துத்தலையுடையவனுமான இராவணன், தன்தங்கையான சூர்ப்பணகையினால் தூண்டப்பட்டு,
இராமபத்தினியாகிய சீதையினிடத்துக்காதல்கொண்டு கோதாவரிநதிதீரத்திற் பஞ்சவடியாச்சிரமத்திலே
மாயமான் வடிவுபூண்ட மாரீசனைக்கொண்டு, இராமலக்ஷ்மணர்களைப் பிரித்து, சீதை தனித்து நின்றசமயம்பார்த்து
அவளை வலியஎடுத்துத் தேரின் மேல்வைத்துச் சென்று இலங்கையில் அசோகவனத்திலே அரக்கியர் சூழச் சிறைவைத்து,
அவளைத் தன்வசப்படுத்துதற்பொருட்டுப் பலவாறு நலிய, பின்பு சீதையைக்காணாத ஸ்ரீராமன், கடல்கடந்துசென்று
இலங்கைபுக்கு மீண்ட அநுமானாற் செய்தியறிந்த பின்னர், வாநரசேனையுடனே சென்று சேதுபந்தநஞ் செய்து
கடல்கடந்து இலங்கைசார்ந்து பெரும்போர் புரிந்து இராவணனது தலைகளைத் துணித்துத்தள்ளி
அவனைக்கொன்று சீதையை மீட்டுக்கொண்டு மீண்டன னென்பது பிரசித்தம்.

நிருதன் – நைருதனென்ற வடசொல்லின் சிதைவு; அது, நிருருதியென்னுந் திக்பாலகனது மரபினனென்று
காரணப்பொருள்பட்டு அரக்கனைக் குறிக்கும்.

நின்னைவாழ்த்தித் தொண்டர்க்கு ஈதலைப் பத்தியைச் செய்வோர்கள் – பகவானுக்கும் பாகவதர்க்கும் அடிமைப்
பட்டொழுகுபவ ரென்றபடி. எம் பெருமானை வாழ்த்துதல் மிக்க அன்பின் செயலாதலை,
பெரியாழ்வார் திருப்பல்லாண்டுபாடியது கொண்டும் உணர்க.
எம்பெருமானுடைய சௌந்தரியத்திலும் திருக்கலியாணகுணங்களிலும் கண்ணையுங் கருத்தையுஞ் செலுத்தி
அவற்றிலீடுபட்டு ஆழ்ந்தவர், பக்திபரவசராய் அதனால் தம்நிலையையும் எம்பெருமான் நிலையையும் மறந்து,
‘காலாதீதமான வைகுண்டத்திலே யிருக்கிற இந்த அரும்பொருள், காலம் நடையாடப் பெற்ற இவ்வுலகத்திலே வந்து
கண்ணுக்குஇலக்காகுதலால், திருஷ்டிதோஷங்காரணமாக இதற்குஎன்ன தீங்கு வருகின்றதோ?’ என்று
தமக்கு உள்ள ஆதராதிசயத்தால் அநாவசியமாக அதிகபயசங்கைகொண்டு,
‘இத்திருமேனிக்கு எவ்வாற்றாலும் ஒரு குறையும் வாராதிருக்கவேணும்’ என்று வாழ்த்துவரென்க.
எம்பெருமானைக்கண்டவளவிலே தமக்குவேண்டுவனவற்றை வேண்டிப்பெறநினையாமல் அவனதுவாழ்வையே
தமக்குப் பரமபுருஷார்த்தமாக நினைத்தலின் அருமையை உணர்க.
“எல்லாவிடத்திலுமெங்கும்பரந்து பல்லாண்டொலி, செல்லாநிற்குஞ்சீர்த்தென் திருமாலிருஞ்சோலையே”,
“புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி யுன்பொன்னடிவாழ்கவென்று,
இனக்குறவர்புதியதுண்ணு மெழின் மாலிருஞ்சோலை யெந்தாய்” என்ற ஆழ்வாரருளிச்செயல்களையுங் காண்க.
“திவ்யதேசங்களுக்கு அழகாகிறது, அநந்யப்ரயோஜநராய் அத்தலைக்கு மங்களாசாஸநம் பண்ணுமவர்கள் வர்த்திக்கை”
ஆதலால், “அங்ஙனம் வாழ்த்துபவர் வாழும் இடபவெற்பு” என்று சிறப்பித்துக் கூறினார்.

———–

அருள் தருமம் கை விடாது ஏத்தும் அன்பருக்கு அன்பர் எல்லில்
இருள் தரும் அம்கை எறி ஆழியார் இசைக் கின்னரரும்
கெருடரும் மங்கையரும் வாழ் இடப கிரியில் கல்லா
முருடரும் அங்கு அயல் எய்தில் அன்றே அவர் முத்தர் அன்றே –30-

(இ – ள்.) அருள் – கருணையையும்,
தருமம் – அறத்தையும்,
கைவிடாது – விட்டிடாமல்,
ஏத்தும் – (தம்மைத்)துதிக்கின்ற,
அன்பருக்கு – அடியார்களிடத்தில்,
அன்பர் – அன்பையுடையவரும்;
எல்லில் இருள் தரும் – பகற்பொழுதிலே (சூரியனை மறைத்து) இருளை யுண்டாக்கிய,
அம் கை எறி ஆழியார் – அழகிய தம்திருக்கையா லெறிந்த சக்கராயுதத்தையுடையவரு மான எம்பெருமானது,
இசை கின்னரரும் கெருடரும் மங்கையரும் வாழ்இடபகிரியின் அங்கு அயல் – இசைபாடுதலில்வல்ல கிந்நரர்களும் கருடர்களும்
(அத்தேவசாதியாருடைய) மாதர்களும் வாழுமிடமான திருமாலிருஞ்சோலைமலையின் சமீபத்திலே,
கல்லா முருடரும் எய்தில் – கல்வியறிவில்லாத மூடர்கள் வந்தாலும்,
அன்றே அவர் முத்தர் அன்றே – அப்பொழுதே அவர்கள் முக்தர்களாவரன்றோ? (எ – று.) –
ஈற்றிலுள்ள ‘அன்றே’ என்பது – தேற்றம். அன்று ஏ என்ற இரண்டுஎதிர்மறைகள் சேர்ந்து
உடன்பாட்டுப்பொருளை யுணர்த்தித் தேற்றக்கருத்தை விளக்குமென்க.

இடபகிரிக்குஅருகிலே சென்றாலும் கல்லாதமூடருமுட்பட அப்பொழுதே முக்தாத்மாக்களாவர் என்பதாம்.
திருமாலிருஞ்சோலைமலையையே யன்றிஅதனருகிடத்தையடைந்தாலும்பேறுவாய்க்குமென்பதை
“மாலிருஞ் சோலை, யயன்மலையடைவததுகருமமே”,
“மாலிருஞ்சோலைப், புறமலைசாரப்போவது கிறியே” என்று ஆழ்வாரருளிச்செய்திருத்தல்கொண்டும் அறிக.
திவ்வியதேசத்தை அடுத்தமாத்திரத்திலே எல்லாவினைகளும் தீரப்பெறுதலால், அவர்கள் பின்பு முத்திபெறுதல் தவறாது என்ற துணிவினால்,
‘அன்றே அவர் முத்தரன்றே’ என்றார். உடனே அவர்கள் ஜீவந்முத்தராகிப் பின்பு அப்பிறப்பின்முடிவிலே
பரமுக்தியை அடைவ ரெனினும் அமையும். இதனை “பசையற்றா, என்றே யப்போதே வீடு அதுவே வீடு வீடாமே” என்றாற்போலக் கொள்க.
கிந்நரர் முதலியோர் இசைபாடுதல் முதலிய திருவடித்தொண்டு செய்து எம்பெருமானது திருவுள்ளத்தை உகப்பித்துத்
தாம்பேறுபெறுதற்குத் திருமாலிருஞ்சோலைமலையில் வந்துவாழ்வரென்க;
அன்றியும், அவர்கள்வாழுமிடமான சுவர்க்கலோகத்தினும் இந்த இடம் இனியதாதலாலும், அதனை விட்டு இங்கு வந்து வாழ்வர்.

“அறனும் அருளுடையான் கண்ணதேயாகும்”,
“அருளிலார்க்கு அவ்வுலகமில்லை” என்ப வாதலால், ‘அருள் தருமங் கைவிடா தேத்து மன்பருக்கன்பர்’ என்றார்.
அன்பருக்கு அன்பர் – தம்மைக்குறித்து அன்புசெய்வார்பக்கல் தாம் அன்புசெய்பவர்;
முந்தின அன்பு – பக்தி, பிந்தின அன்பு – கருணை. ஆழியா ரிடபகிரி யென இயையும். இசை – சங்கீதம்.
கிந்நரர், கருடர் – பதினெண்தேவகணங்களிற் சேர்ந்தவர்.
கிந்நரர் – கிந்நரமென்னும் வாத்தியத்தைக் கையிற்கொண்டு இசைபாடித்திரிபவர்.
‘கருடர்’ என்ற சொல், மோனைநயத்தின்பொருட்டு ‘கெருடர்’ எனத் திரிந்துநின்றது;
“கீதங்கள்பாடினர் கின்னரர் கெருடர்கள்” என்ற ஆன்றோரருளிச் செயலிற் போல, மங்கையரென்பது – இங்கே பருவப்
பெயராகாமல் மகளிரென்ற மாத்திரமாய் நின்றது;
அப்பருவத்துக்கு வயதெல்லை – பன்னிரண்டு முதற் பதின்மூன்றளவும், முருடு – விறகு; அதுபோன்றவர், முருடர்

உணர்விலாரென்க. உம் – இழிவுசிறப்பு. ஞானமில்லாதவர்களும் அந்தஇடத்தைச் சார்ந்தவளவில் உயர்கதி
பெறுவ ரெனவே, ஞானிகள் அங்ஙனமாவரென்பது சொல்லவேண்டாதாயிற்று.
கல்லா முருடரும் – கல்லாத வேடர்களும் எனினுமாம். அங்கு – அசை, அயல் என்பது, ஐயல் என முதற்போலி பெற்றது, திரிபுநயத்துக்காக.

————–

முத்தர் அன்றே நின் கழல் ஒரு கால் கை முகிழ்க்கப் பெற்றோர்
பித்தர் அன்றே நினக்கே பித்தர் ஆகில் பிரமன் கம் கை
வைத்து அரன் தேய்துயர் தீர்த்தாய் நின் சோலை மலை மருவும்
பத்தர் அன்றே பரிவால் என்னை ஆளும் பரமர்களே –31–

(இ – ள்.) பிரமன் கம் – பிரமனது தலையை,
கை வைத்து – கையில் வைத்துக்கொண்டு,
அரன்தேய் – சிவபிரான் வருந்திய,
துயர் – துன்பத்தை,
தீர்த்தாய் – ஒழித்தருளியவனே! –
நின் கழல் ஒரு கால் கைமுகிழ்க்கப் பெற்றோர் – உன் திருவடிகளை ஒருதரம் கைகூப்பித்தொழப்பெற்றவர்கள்,
அன்றே முத்தர் – அப்பொழுதே முத்திபெற்றவராவர்;
நினக்கே பித்தர் ஆகில் – உன் விஷயமாகவே பக்திப்பித்து ஏறியவர்களாயின்,
பித்தர் அன்றே – (அவர்கள்) பித்துடையாரென்று இகழத்தக்கவராகார்;
நின் சோலைமலை மருவும் பத்தர் அன்றே – உனது திருமாலிருஞ்சோலைமலையை அடைந்திருக்கிற அடியார்களன்றோ,
பரிவால் என்னை ஆளும் பரமர்கள் – அன்பினால் என்னை ஆட்கொள்ளும் மேலோராவர்; (எ – று.)

“அன்றே” என்ற சொல் – முதலடியில் அப்பொழுதே யென்ற பொருளிலும், இரண்டாமடியில் அல்லரே யென்ற பொருளிலும்,
ஈற்றடியில் அன்றோ எனத் தேற்றப்பொருளிலும் வந்த வேறுபாட்டை உணர்க.
“அன்றேமுத்தர்” என்பதற்கு – கீழ்ச்செய்யுளிற்கூறிய உரையைக் கொள்க. கை முகிழ்த்தல் – அஞ்சலிசெய்தல்;
“தனி ஐந் நொ து முன் மெலிமிகலுமாம்” என்ற பொதுவிதிப்படி தனிஐகாரத்தின்முன் மெலிமிகவில்லை,
இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிச் சிறப்புவிதியால், கீழ் மூன்றாஞ்செய்யுளில்
“அனகனுக்குப் பித்தரானவர் பித்தரன்றே” என்ற இடத்துக் கூறிய உரை, இச்செய்யுளின் இரண்டாம்வாக்கியத்துக்கும் ஏற்கும்,
பகவத்கைங்கரியம் பண்ணுகிறவர்கள் எனக்குத் தலைவர்களென்று தமதுபாகவத
சேஷத்வத்தை இறுதி வாக்கியத்தில் வெளியிட்டார்;
“பயிலுஞ்சுடரொளிமூர்த்தியைப்பங்கயக்கண்ணனைப்,
பயில வினிய நம்பாற்கடற்சேர்ந்தபரமனைப்,
பயிலுந்திருவுடையார் யவரேலு மவர்கண்டீர்,
பயிலும் பிறப்பிடைதோறெம்மையாளும் பரமரே” என்றார் நம்மாழ்வாரும்:
‘பகவத்சேஷத்வத்தின் எல்லையாகிறது, பாகவதசேஷத்வத்தளவும் வருகையிறே.’

————-

பரந்தாமரை திரு மாலிருஞ்சோலைப் பரமரை கால்
கரம் தாமரை அன்னகார் நிறத்தாரை கடல் கடக்கும்
சரம் தாம் மரை திரி கான் போய் இலங்கைத் தலைவன் பத்துச்
சிரம் தாம் அரைக் கணத்து எய்தாரை எய்தற்குத் தேர் மனமே –32-

(இ – ள்.) மனமே -!- பரந்தாமரை – பரமபதத்தையுடையவரும், –
திருமாலிருஞ்சோலை பரமரை – திருமாலிருஞ்சோலைமலையி லெழுந்தருளி யிருக்கிற தலைவரும், –
கால் கரம் தாமரை அன்ன – திருவடிகளும் திருக் கைகளும் தாமரைமலர்களை யொத்திருக்கப்பெற்ற,
கார் நிறத்தாரை – காளமேகம்போன்ற திருமேனிநிறத்தை யுடையவரும், –
தாம் மரை திரிகான் போய் – தாவுகின்ற மான்கள் சஞ்சரிக்கப்பெற்ற வனத்திலே வாசமாகச்சென்று, (பின்பு),
கடல் கடக்கும் சரம் – சமுத்திரராசனை வென்ற (ஆற்றலையுடைய) அம்பினால்,
இலங்கை தலைவன் பத்து சிரம் தாம் அரை கணத்து எய்தாரை – இலங்கையரசனான இராவணனுடைய பத்துத்
தலைகளையும் தாம் அரைக்கணப்பொழுதிலே துணித்துத்தள்ளியவருமாகிய எம் பெருமானை,
எய்தற்கு – சரணமடைவதற்கு,
தேர் – துணிவுகொள்வாய்.-என்று நெஞ்சைநோக்கி இதமுரைத்தவாறு.

பரந்தாமர் என்ற வடமொழிப்பெயர் – (எல்லாப்பதவிகட்கும்) மேலான இடத்தையுடையவரென்றும்,
(எல்லாவொளிகளினுஞ் சிறந்த ஒளியையுடை யவ ரென்றும் பொருள்படும்; பரம் – மேலானது. தாமம் – இடமும், ஒளியும். பரமர் – சிறந்தவர்.
திருவடி திருக்கைகளுக்குத் தாமரைமலர் – செம்மை மென்மை யழகுகளில் உவமம்.
கால் கரம் தாமரையன்ன கார்நிறத்தார் – “கருமுகில் தாமரைக்காடு பூத்து” என்றார் கம்பரும்.
சரம் எய்தாரை என இயையும். தா மரை என்று பிரித்து, வினைத்தொகையென்னவும் அமையும்;
மரை – மானின்சாதிகளி லொன்று. கான் போய் – தண்டகாரணியத்தைக் கடந்து சென்று. ‘அரைக்கணத்து’ என்றது, மிக்கவிரைவைக் காட்டும்.
தேர் – வினைப்பகுதியே ஓசைவேறுபாட்டினால் ஏவலொருமையாக நின்றது; தேர்தல் – தெளிதல், நிச்சயித்தல்.
எம்பெருமானைச் சரணமடைதற்கு வழிதேடுவா யென்று உரைப்பர் ஒருசாரார்.

“எய்தாரை யெய்தற்கு” என்றவிடத்து, முரண்தொடை தோன்றும். இனி, கடம் குஞ்சரம் என்று எடுத்து,
மதத்தையுடைய யானைகளும் தாவுகின்றமான்களுந் திரிகிற வனத்தைக் கடந்துசென்று கடலையும்
இலங்கைத் தலைவன் பத்துச்சிரங்களையும் தாம் எய்தவரை என்று பொருள்கொள்ளவும் இடமுண்டு.
கானும் கடலும் (கடந்து) போய் எனவும் அமையும்.

————-

தேராய் இரவு பகல் இரை தேடுவை தீமை நன்மை
பாராய் இரங்குவ பாவையரால் பண்டு மாவலியால்
சோராய் இரந்தவனை திருமால் இருஞ்சோலை நின்ற
பேர் ஆயிரம் உடையானை நெஞ்சே -என்று பேணுவையே –33-

(இ – ள்.) நெஞ்சே – மனமே! – (நீ),
தேராய் – ஆராய்ந்துதெளியா யாகி,
இரவு பகல் இரை தேடுவை – இராத்திரியும் பகலும் உணவைநாடித் திரிகின்றாய்;
தீமை நன்மை பாராய் – தீவினைகள் (இன்னவையென்றும்) நல்வினைகள் (இன்னவையென்றும்) நோக்குகின்றாயில்லை;
பாவையரால் இரங்குபவை – மாதர்கள்காரணமாக உருகுவாய்;
(இங்ஙனம் செய்வன தவிர்வன பகுத்துஉணராது நிலையில்லாத பொருளின்பங்களையே காதலித்துத் திரிகிற நீ),
பண்டு – முன்னொருகாலத்திலே,
மாவலிபால் – மகாபலிசக்கரவர்த்தியி னிடத்தில்,
சோர் ஆய் இரந்தவனை – கபடமாய் யாசித்தவனும்,
திருமாலி ருஞ்சோலை நின்ற பேர் ஆயிரம் உடையானை – திருமாலிருஞ்சோலைமலையில் நின்றதிருக்கோலமாய்
எழுந்தருளியிருக்கின்ற ஆயிரந்திருநாமங்களை யுடையவனுமான எம்பெருமானை,
என்று பேணுவை – எக்காலத்தில் விரும்பித் தியானிப்பாயோ! (எ – று.) – ஈற்று ஏகாரம் – இரக்கம்.

இங்ஙனம் தம்மனத்தை நோக்கி இரங்கிக் கூறுகின்றவகையால், உலகத்தார்க்கு அறிவுறுத்தியவாறாம்.

தேராய் – முன்னிலை யொருமை யெதிர்மறை முற்றெச்சம். இரைஎன்ற சிறப்புப்பெயரைக் கீழ்இரண்டாங்கவியிற்போலப்
பொதுப்பொருளதாகக் கொண்டு, ஐம்பொறிகளாலும் நுகரப்படும்பொருள்களையெல்லாம் அல்லும் பகலும் அநவரதமும்
நாடித்திரிவா யென்று கருத்துக்கொள்ளலாம். பாவையர் – சித்திரப்பிரதிமைபோல் அழகிய மகளிர்;
கண்மணிப் பாவைபோல் அருமையாகப் பாராட்டப்படுகிற மாதர்கள்.
“பாவையர்பால்” என்ற பாடத்துக்கு – பாவையர் பக்கல் என்பது பொருள். பண்டு இரந்தவனை என்று இயையும்.
மாவலி – மஹாபலீ என்ற வடசொல் விகாரப்பட்ட து. பால் ஏழுனுருபு. சோரம் என்ற வடசொல் சோர்என விகாரப்பட்ட தென்றாவது,
சோர்என்ற வினைப்பகுதிதானே சோர்வு என்ற தொழிற்பெயரின் பொருள் குறித்தது (முதனிலைத்தொழிற்பெயர்) என்றாவது கொள்க.
சோராய் இரந்தவன் – மிகக்குறிய வாமநவடிவங்கொண்டுசென்று வறுமைத்தளர்ச்சியை ஏறிட்டுக்கொண்டுகாட்டித்
தன்காலடியால் மூவடிமண்வேண்டி அது கொடுக்கப்பெறும்போது அவனது உடல்பொருளாவிகளை யெல்லாம்
தனவசப்படுத்திக்கொண்டவன். பேராயிரம் – ஸஹஸ்ரநாமம்.

———–

தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறுதல்

பேணிக் கவித்த வரைக் குடையாய் பெரியோர் பதின்மர்
ஆணிக் கவித்த தமிழ் மாலை கொண்டாய் அழகா கரிய
மாணிக்க வித்தக மா மலையே வண் துளவுக்கு அல்லரல்
பாணிக்கு அவித்து அடங்காது வெங்காமப் படர் கனலே –34–

(இ – ள்.) பேணி கவித்த – (ஆக்களிடத்தும் ஆயரிடத்தும்) அன்பு கொண்டு எடுத்துப்பிடித்த,
வரை குடையாய் – கோவர்த்தனமலையாகிய குடையையுடையவனே!
பெரியோர் பதின்மர் – (அறிவொழுக்கங்களிற்) பெரியவர்களான பத்துஆழ்வார்களுடைய,
ஆணி கவி தமிழ் மாலை – சிறந்த தமிழ்ப்பாமாலைகளாகிய திவ்வியப்பிரபந்தங்களை,
கொண்டாய் – ஏற்றுக் கொண்டவனே!
அழகா – அழகனே!
வித்தகம் – ஞானத்தையுடைய,
கரிய மாணிக்கம் மா மலையே – கருநிறமானதொரு மாணிக்க மயமாகிய பெரிய மலைபோன்றவனே! –
வெம் காமம் படர் கனல் – (எனது) வெவ்வியகாதலாகிய மேன்மேற்பரவுகின்ற நெருப்பானது,
வள்துளவுக்கு அல்லால் – வளப்பமுள்ள (நினது) திருத்துழாய் மாலைக்குத் தணியுமே யன்றி,
பாணிக்கு அவித்து அடங்காது – நீரினால் தணிக்கப்பட்டு அடங்கிவிட மாட்டாது.

நினதுதிருத்துழாய்மாலையைத் தந்தருள்வையாயின், எனது மையல் நோய் தணியு மென்பதாம்.
தலைவனது ஒருவழித்தணத்தலிலே பிரி வையாற்றாதுவருந்துகிற தலைவி தனதுநினைப்புமிகுதியால்
தலைவனை எதி ரில்நிற்கின்றவாறுபோலப் பாவித்து அங்ஙனம் உருவெளித்தோற்றத்திலே வெளிப்பட்ட
அத்தலைவனை முன்னிலைப்படுத்திக் கூறியது, இது. ஒருவழித் தணந்துவந்த தலைவன் சிறைப்புறமாக,
அதனையுணர்ந்த தோழி அவனை முன்னிலையாக்கித் தலைவியின்நிலைமையைக் கூறியதென்று இதற்குத்துறை கொள்ளுதலு மொன்று,
பிரிந்துவருந்துங்காலத்திலே, தலைவனதுசம்பந்த முடைய மாலையைப் பெற்றால் அதுகொண்டு ஒருவாறு விரகதாபம் தணியக் கூடுமே யன்றி,
இது வெயிற்காலத்தினாலாகியதாபமன் றாதலால், சீதளோ பசாரமாக மேலேபெய்யும் பனிநீரினால் தணியமாட்டா தென்றாள்.
“ஊரு ளெழுந்தவுருகெழுசெந்தீக்கு, நீருட்குளித்தும் உயலாகும் –
நீருட், குளிப்பினுங் காமஞ்சுடுமே குன்றேறி, யொளிப்பினுங் காமஞ் சுடும்” என்ற நாலடி யாரையுங் காண்க.
தீயினும் வெவ்வியது இவ்விரகதாப மென்பது, ‘வெங்காமப்படர்கனல்’ என்ற விதப்பினால் வெளியாம்.

திரிலோகாதிபதியென்று பேர்படைத்தவனான தேவேந்திரன் தானே அவ்வுலகத்தில் ஒருசார் நிரபராதியாயுள்ள
சிலஉயிர்களுக்கு நலிவுசெய்யப் புக்கவிடத்து எம்பெருமான் தான் அருள்கொண்டு
பாதுகாத்தன னென்பதை விளக்குதற்கு, ‘பேணிக் கவித்த” எனப்பட்டது.
“நாம் கோவர்த்தனமலையை ஆராதித்தோம்: அதனால்நேர்ந்த தீங்கைப் போக்கிக் கண்ணன் காத்தருளினான” என
இடையர்கள் நினைக்கவொண்ணாதென்றுநோக்கி அவர்கள் ஆராதித்த மலையைக்கொண்டே காத்தருளின னென்க.

“பெரியோர் பதின்மர்” என்றது, பத்து ஆழ்வார்களை; அவராவார் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,
திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என இவர்.
(நம்மாழ்வாருடைய சிஷ்யரான மதுரகவிகளையும், பெரியாழ்வாருடைய திருமகளாரான ஆண்டாளையுங் கூட்டி
“ஆழ்வார்கள் பன்னிருவர்” என்பதும் உண்டு.)
இவர்கள் அருளிச்செய்த இருபத்துநான்கு திவ்வியப்பிரபந்தங்களும்சேர்ந்து நாலாயிரப்பிரபந்தமென்று வழங்கும்.
உயர்தரப்பொன்னை ‘ஆணிப்பொன்’ என்றும், சிறந்தமுத்தை ‘ஆணிமுத்து’ என்றும் வழங்கும் மரபைத் தழுவித்
திவ்வியகவியென்ற பொருளில் “ஆணிக்கவி” எனப்பட்டது.
கவித்தமிழ்மாலை, மிக்க பக்தியுடன் எம்பெருமானுக்குச் சாத்தும் பூமாலைபோன்ற பாமாலையென்க.
“அடிசூட்டலரகுமந்தாமம்”,
“செய்யசுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை,”
“கற்றினம்மேய்த்த கழலிணைக்கீ, ழுற்ற திருமாலை’ பாடுஞ்சீர்” எனப் பெரியாரும் பணித்தார்.
இங்கே “வித்தகம்” என்றது, எம்பெருமானுக்கு உரிய முற்றுணர்வை: அது, ஸர்வஜ்ஞதை யெனப்படும்.
எதற்குஞ்சலியாமையும், அளத்தற்கரியபெருமையும், கம்பீரமான தோற்றமும், பலவளங்களை யுடைமையும்
முதலிய சிறப்புக்கள்பற்றி, எம்பெருமானைக் குன்றாக உருவகஞ்செய்தார்.

நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானைத் தரிசித்த ஐயங்கார், அவன்பக்கல் தமக்குஉண்டான வியாமோகத்தை
அப்பெருமானைக்குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
“வண்துளவு” என்றது – எம்பெருமானுடைய நிரதிசய போக்கியதையையும்,
“பாணி” என்றது – அன்பர்கள் செய்யுந்தேற்றரவுகளையுநு் குறிக்கும்.
“பேணிக் கவித்த வரைக்குடையாய்” என்று விளித்தது. எம்பெருமான் தன்னைச்சார்ந்த உயிர்களைப் பரிவோடு
பாதுகாக்குந் திறத்தி லீடுபாட்டினால். பெரியோர் பதின் மராணிக் கவித்தமிழ்மாலை கொண்டாய் – மயர்வறமதிநலம்பெற்ற
ஆன்றோர்பலரால் துதிக்கப்பட்டவனே யென்றபடி.
கரியமாணிக்க வித்தகமாமலையே – கண்டவர் கண்குளிரும்படி கருமாணிக்கம்போன்று
காண்பவரிளைப்பைத்தீர்க் கும்படியான வடிவை யுடையவனே யென்றவாறு.

————

பிரிவாற்றாத தலைவி சந்திரனை நோக்கி இரங்கிக் கூறுதல் –

படர் ஆகுவால் குவிய குழல் ஊதிய பாலர் ஐயம்
அடர் ஆகு வாகனன் தாதைக்கு இட்டார் அலங்காரர் துழாய் க்கு
இடர் ஆகு வார் பலர் காண் தமியேனை எரிப் பது என் நீ
விடராகு வாய்க் கொண்டு உடல் சுட்டுக் கான்றிட்ட வெண் திங்களே –35–

(இ – ள்.) விடம் ராகு வாய் கொண்டு – விஷத்தையுடைய ராகுவென் னும்பாம்பினால் வாயிற்பெய்துகொள்ளப்பட்டு,
உடல் சுட்டு கான்றிட்ட – அதனுடம்பைச் சுடுதலால் (பொறுக்கமாட்டாமல்) உமிழ்ந்துவிடப்பெற்ற,
வெள் திங்களே – வெண்மையான சந்திரனே! –
படர் ஆ – (மேய்தற்குப் பல இடங்களிற்) பரவிச்சென்றுள்ள பசுக்கள்,
குவால் குவிய – தொகுதியாக (ஓரிடத்தில்) வந்துசேரும்படி,
குழல் ஊதிய – (இன்னிசையமைய) வேய்ங் குழலையூதிய,
பாலர் – ஆய்ப்பிள்ளையாய் வளர்ந்தவரும்,-
ஐயம்அடர்-பிச்சை யேற்றலால் வருந்திய ஆகுவாகனன் தாதைக்கு – பெருச்சாளியை வாகன மாகவுடையவனான விநாயகனது தந்தையாகிய சிவபிரானுக்கு,
(ஐயம்) இட்டார் – பிச்சையிட்டவரு மாகிய,
அலங்காரர் – அழகரது,
துழாய்க்கு – திருத்துழாய்மாலையைப் பெறுதற்கு (ஆசைகொண்டு),
இடர் ஆகுவார் – துன்பமடைபவர்,
பலர் காண் – (உலகத்திற்) பலர் உளரன்றோ?
தமியேனை நீஎரிப்பது என் -என்னையொருத்தியைமாத்திரம் நீஎரிப்பது ஏனோ? (எ – று.)

தலைவனது ஒருவழித்தணத்தலில் அப்பிரிவையாற்றாது வருந்துகின்ற தலைவிக்கு இரவிலே விரகவேதனை வளர,
அப்பொழுது விளங்குகிற சந்திரனும் பிரிந்தார்க்குத்துயர்க்கேதுவான பொருள்களுளொன்றாதலால்
இவளை இன்னும் அதிகமாக வேதனைப்படுத்த, அத்தாபத்தையாற்றாத அத்தலைவி,
சந்திரனை முன்னிலைப்படுத்தி இரங்கிக்கூறியது, இது; சந்திரோபாலம் பநம் (சந்திரனை நிந்தித்தல்) எனப்படும்.
ஒருவழித்தணந்துவந்த தலைவன்சிறைப்புறத்தானாக, அதனையுணர்ந்த தலைவி அவன் கேட்டு வெளிப்படை யாக
மணம்புரிந்துகொள்ளமுயலுமாறு அவன்செவிப்படச் சந்திரனைநோக்கி இங்ஙனங்கூறுகின்றன ளென விவரங்காணலாம்.
தலைவன் அழகுசெல் வம் கல்வி குடிப்பிறப்பு முதலிய மேன்மைகளிற் சிறந்தவ னாதலால் அவன் பக்கல் தன்னைப்
போலவே ஈடுபட்டுக் காதல்கைம்மிக்கவர் பலர்உளராதல் கூடுமென்னுங் கருத்தினால்,
“அலங்காரர்துழாய்க்குஇடராகுவார்பலர்காண” என்றும்,
உலகத்தில் துன்பமுறுவார் தம்மைப்போலத்துன்புறுபவர் வேறெ வருமில ரென்று எண்ணுதல் இயல்பாதலால்
“தமியேனை யெரிப்பதென்நீ” என்றும் கூறினாள்.
இதனால், நீ பக்ஷபாதமுடையா யென்று பழித்தவாறாம். இராகுவின்வாய்ப்பட்டுவெளிப்போந்த சந்திரனை, விஷத்தையுடைய
கொடிய அக்கரும்பாம்பு சந்திரமண்டலத்தைக் கண்டு தனக்குஏற்றஇரையெ னக்கருதி அதனைவிழுங்கத்தொடங்கி
வாய்க்கொண்டவிடத்து அச்சந்திர னதுதாபத்தைப் பொறுக்கமாட்டாமல் உமிழ்ந்துவிட்டதெனக் கற்பித்து,
“விடராகுவாய்க் கொண்டுடல்சுட்டுக்கான்றிட்டவெண்டிங்களே” என்று விளித்தாள்.
எவரையுங்கொல்லத்தக்க நஞ்சுடைநாகத்தையும் எரிக்கவல்ல கொடுமையுடையாய் நீ யென்று நிந்தித்தவாறு.
நைடதத்துச் சந்திரோபா லம்பனப்படலத்தில் “துணைவர்ப்பிரிந்து துயில்துறந்த, மையன்மடவா ருயிர் கவர்வான்
கூற்றம்போல வரு மதியே, ஐயமிலை யுன்னுடற்களங்க மழலுங்கொடியவிடமன்றே,
வெய்யபகுவாய்க்கரும்பாந்தள் விழுங்கி யாற் றாதுமிழ்ந்ததுவே” என்றது, ஒப்புநோக்கத்தக்கது.
“வெண்டிங்கள்” என்றது, அவனது சிறந்தஅறிவின்மையையுங் காட்டும்; “வெண்மையாவது – அறிவு முதிராமை.”

ஒவ்வொருசமயத்திற் சந்திரனைமறைக்கிற பூமியின்சாயையும், சூரியனை மறைக்கிற சந்திரனது சாயையையும்,
இராகு கேதுவென்னுங் கரும்பாம்பு செம்பாம்புகளாகக் கூறுதல், கவிசமயம்;
அன்றியும், பாற்கடல்கடை கையிலுண்டான அமிருதகலசத்தை எடுத்துக்கொண்ட திருமால் மிகஅழ கியமோகினியென்னும்
பெண்வடிவத்தால் அசுரர்களை மயக்கித் தேவர்கட்கே அமிருதத்தைப் பங்கிட்டுக்கொடுத்துவருகையில்,
இராகுவென்னும் ஓர் அசுரன் தான்இருத்தற்குஉரிய அசுரர்கூட்டத்தை விட்டுத் தந்திரமாகத் தேவ கோஷ்டியினிடையிலே புகுந்து
கையேற்று அமிருதத்தை வாங்கியுண்ண, அதனைச் சூரியசந்திரர் குறிப்பித்தமாத்திரத்தில்,
எம்பெருமான் அவனை அகப்பையால்அடித்துத் தலைவேறு உடல் வேறாக்க, அமிருதமுண்டதனால் உயிர்நீங்காத
அந்தத்தலையும் உடலும் விஷ்ணுவின் அநுக்கிரகத்தால் இராகு கேதுக்களென இரண்டுகிரகங்களாகிச்
சூரியன்முதலிய ஏழுகிரகங்களோடு சேர்ந்து, தம்மேற் கோள்சொன்ன சூரியசந்திரர்க்குப் பகையாய்ச் சிற்சில காலத்தில்
அவர்களைப் பிடித்துக்கொள்கின்றன; அவையே கிரகண மெனப் படுகின்றன வென்பது வரலாறு.

திங்களுக்கு வெண்மை – இயற்கை யடைமொழி; இனம் விலக்கவந்த தன்று. “ஐயம்” என்றது – “அடர்” என்பதனோடும்,
“இட்டார” என்பதனோடும் இயையும். அடர்தல் – நெருக்குண்ணுதல், சங்கடப்படுதல். இது, தாதைக்கு அடைமொழி.
இனி, அடர் – (பகையைப்) பொருது அழிக்கவல்ல என்று கொண்டு,
அதனை, ஆகுவுக்கேனும் ஆகுவாகனனுக்கேனும் அவன் தாதைக்கேனும் அடைமொழியாக்கலும் ஒன்று.

பேறுகிடைத்தசமயத்திலே மகிழ்ச்சிசெய்யக்கடவதான ஞானவிளக்க மானது, உரியகாலத்திற் பேறுகிடையாமையாலே நலிவுசெய்ய,
ஐயங்கார் அதனை முன்னிலைப்படுத்திப் பழித்துரைத்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
“திங்கள்” என்றது – ஸ்வாபதேசத்தில், விவேகத்தையாம்.
“மாயா காரியமான தாமசகுணமானது தன்னைக் கவிந்துகொள்ளமுயலவும் அதற்கு அகப்ப டாது
அதனைஒழித்துவிளங்குகின்ற சுத்தஞானமே!” என்றுவிளித்து,
“வாத்ஸல்யத்தையும் பரத்வத்தையும் சௌந்தரியத்தையும் உடைய எம்பெருமானது இனிமையில் ஈடுபட்டு
அதனைப்பெறாது வருந்துவார் உலகத்திற் பல ருளராகவும் என்னைமாத்திரம் நீ வருத்துவது என்னோ?” என்று இரங்கிக் கூறின ரென்க.
“அலாபதசையில் விவேகமும் ஸாயகமாம்–.

————-

(நிலவினால் வருந்துந் தலைவியின் தளர்ச்சியைக் கண்ட பாங்கி இரங்கல்.)

திங்கள் அப்பா நின்ற செந்தீக் கொழுந்தின் செழும் சங்கு போ
லும் களப்பாவை உருகுவது ஓர் கிலர் உம்பர் எல்லாம்
எங்கள் அப்பா எமைக்காவாய் என உலகு ஈர் அடியால்
அங்கு அளப்பான் வளர்ந்தார் சோலை மா மலை ஆதிபரே –36–

(இ – ள்.) உம்பர் எல்லாம் – தேவர்களனைவரும்,
எங்கள்அப்பா எமை காவாய் என – “எங்கள் இறைவனே! (மாவலியினாலாகிய துயரினின்று நீக்கி)
எங்களைப் பாதுகாத்தருள்வாய்” என்று பிரார்த்திக்க, (அவ்வேண்டு கோட்கு இரங்கி),
உலகு ஈர் அடியால் அளப்பான் – உலகங்களை இரண்டு அடிவைப்புக்களால் அளவிடுமாறு,
அங்கு வளர்ந்தார் – அப்பொழுது (திரி விக்கிரமமூர்த்தியாய்) வளர்ந்தருளியவராகிய,
சோலைமாமலை ஆதிபர் – திரு மாலிருஞ்சோலைமலைக்குத் தலைவரான அழகர், –
செழுஞ் சங்கு போலும் களம் பாவை – செழுமையான சங்குபோலுங் கழுத்தையுடைய அழகிய இத்தலைவி,
திங்கள் அப்பாநின்ற செம் தீக்கொழுந்தின் உருகுவது – சந்திரன் பூசியிடுகின்ற அக்கினிச்சுவாலையினால்
(நிலாவினால்) கரைந்து வருந்துவதை,
ஓர்கிலர் – அறிகின்றாரில்லை; (எ – று.)

அறிவாராயின் உடனே மீண்டுவந்து இவளை வெளிப்படையாக மணம் புரிந்தருள்வ ரென்பது, தாற்பரியம்.
சந்திரமண்டலத்தினின்று வெளிப்பட்டு மேலேபடுகின்ற நிலாவானது, பிரிந்தநிலையிலுள்ள இவளுக்கு மிக்க தாபத்தை விளைத்தலால்,
“திங்களப்பாநின்ற தீக்கொழுந்து” எனப்பட்டது. தீக்குச் செம்மை – இயற்கையடைமொழி.
கழுத்துக்குச் சங்குஉவமை – வடிவிலும் நெய்ப்பிலு மென்க. செழுஞ்சங்கு – வலம்புரிச்சங்கு.
இங்ஙனம்இதனை ஓராதிருத்தல், உலகங்களை ஆட்கொண்டு சிறியதைப்பெரியதுநலியாதபடி சமயமறிந்து ஆவனசெய்து
பாதுகாக்கிற அவரது சால்பின் தகுதிக்குச் சிறிதும்ஏலாது என்பது தொனிக்க,
“உலகீரடியாலளப்பான்வளர்ந்தார்” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
நிலவுலகத்தையளந்ததில் நிலவுலகமும் அதன்கீழுள்ளஏழுலகங்களும், வானத்தையளந்ததில் நிலவுலகத்துக்கு மேலுள்ள
ஆறுஉலகங்களும் அடங்கியதனால், “உலகீரடியாலளப்பான் வளர்ந்தார்” என்றார்.
மக்களைத் தந்தையர்போலத் தேவர்களைத் தேவாதிதேவன் அன்புகொண்டு ஆவனசெய்து பரிபாலித்தலால், அவர்கள் “அப்பா” என்று விளித்தனர்.

களம் – வடசொல். பாவை – அதுபோன்ற பெண்ணுக்கு உவமையாகு பெயர். “எல்லாம்” என்பது – இருதிணைக்கும் பொது;
இங்கு உயர்திணை க்கு வந்தது. அங்கு – அவ்விடத்து எனினுமாம்; அசையுமாம்.

உரியகாலத்திற் பேறுகிடையாமையாலே ஞானவிளக்கமும் துயர்க்கு ஏதுவாக, ஐயங்கார் அடைந்த தளர்ச்சியைக் கண்ட
அன்பர்கள் நொந்து உரைத்த வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள். ஸர்வஜ்ஞரும் ஸர்வசக் தரும் ஸர்வரக்ஷகருமான
எம்பெருமான் விவேகவிளக்கத்தால் இவர் படுந் துயரத்தை அறியாதிருக்கின்றனரே! என்று இரங்கிக்கூறியவாறு.
செழுஞ் சங்குபோலுங்களப்பாவை – ஸ்ரீபாஞ்சஜந்யமென்னுந் திவ்வியசங்கம்போல எம்பெருமான் திருவுள்ளத்துக்குப்
பாங்காய்க் கம்பீரமான இனியதொனியை வெளியிடுங் கண்டத்தையுடையவ ரிவரென்க;
அச்சங்கினொலி பெருமானது வெற்றிக்கு அறிகுறியாய்ப் பகைவர்க்கு அச்சத்தை விளைத்து அவர்களை அழியச்செய்தல்போல,
ஐயங்காரது திருமிடற்றினின்று வருகின்ற கம்பீரமான ஒலிவடிவாகிய வாக்கியங்களும் அப்பெருமானது பரத்வத்தை
விளக்குவனவாய்ப் பரசமயவாதிகட்கு அச்சத்தைவிளைத்து அவர்களைத் தோற்பிக்கு மென்க.
இங்ஙனந் தோழிபேச்சாலே தமதுநிலைமையை வெளியிட்டனர் ஐயங்கார் என்று உணர்க.

————

ஆதி அராவில் துயில் அலங்காரர் அழகர் அன்பு ஆம்
வேதியர் ஆவுதி வீற்று இருப்பார் அண்டம் மீது இருக்கும்
சோதியர் ஆவின் பின் போந்தாரை அன்றித் தொழேன் உடலைக்
காதி அராவினும் பொன் மா மகுடம் கவிக்கினுமே –37-

(இ – ள்.) ஆதி அராவில் துயில் – ஆதிசேஷன்மேற் பள்ளிகொண்டு யோகநித்திரை செய்கின்ற,
அலங்காரர் அழகர் – அலங்காரரென்றும் அழகரென்றுந் திருநாமமுடையவரும்,
அன்பு ஆம் வேதியர் ஆவுதி வீற்றிருப்பார் – (தம்மிடத்து) அன்புகொண்ட அந்தணர்களுடைய
(மந்திரபூர்வமாக வைதிகாக்கினியில் ஓமஞ்செய்யப்படுகிற நெய்ம் முதலிய) ஆகுதிகளில் வீற்றிருப்பவரும்,
அண்டம் மீது இருக்கும் சோதியர் – அண்டகோளத்துக்குப் புறம்பேமேலுள்ளதான பரமபதத்தில் எழுந்தருளியிருக்கிற ஒளிவடிவமான வரும்,
ஆவின் பின் போந்தாரை அன்றி – பசுக்களை மேய்த்தற்கு அவற்றின்பின்னே சென்றவருமாகிய எம்பெருமானை யல்லாமல் (மற்றொரு வரை), –
உடலை காதி அராவினும் பொன் மா மகுடன் கவிக்கினும் தொழேன் – என்உடம்பைக் கூறுசெய்து அராவிவருத்தினாலும்
பொன்மயமான பெரியகீரிடத்தை (எனக்கு)ச் சூட்டினாலும் வணங்கமாட்டேன்; (எ – று.)

தேவதாந்தரங்களை வணங்காவிடின் என் உடலைத் துணித்து அராவி மிகவருத்துவதாயினும்,
வணங்கின் எனக்குப் பொன்முடிசூட்டி மிக்க சிறப்புச்செய்வதாயினும், யான் அழகரையன்றிப் பிறரைதொழமாட்டேன் என்று,
தமது அநந்யசரணத்வத்தை வெளியிட்டார்; “மறந்தும் புறந்தொழா மாந்தர்” ஆதலால்.
ஆதி அரா – பழமையான பாம்பு. யஜ்ஞாங்கன், யஜ்ஞவாஹநன் யஐ்ஞஸாதநன் என்ற திருநாமங்கள் பெறுமாறு
எம்பெருமான் யாகத்தைத் தமக்குஇடமாகக்கொண்டு அதற்குச்சாதநமாகிய பொருள்களின் வடிவாயு மிருந்து பயனையும் அளித்தலால்,
“வேதயராவுதி வீற்றிருப்பார்” என்றார்; இதனை, “அதவமாய்நறுநெயுண் டுலகி லன்பர்கருதிற், றுதவு சேவடி” என்றாற்போலக் கொள்க.

வேதியர் – வேதம்வல்லவர்; வேதங்களை ஓதுதலோது ஓதுவித்தற்கும் உரிமை அந்தணர்க்கே யுள்ளதனால்,
அவர்கள் வேதியரெனப் பெயர் பெறுவர். வீறு – வேறொன்றற்கில்லாத சிறப்பு; அவ்வகை மிக்க சிறப்பு அமைய இருத்தல், வீற்றிருத்தல்.

————

கவித்தானை மன்னற்கு நட்பு ஆய முடி கவித்தானை அன்று
புவித்தானை வற்றப் பொழி சரத்தானை பொருது இலங்கை
அவித்தானை மாலிருஞ்சோலை நின்றானை அழகனை முன்
தவித்து ஆனை வா என வந்தானை பற்றினென் தஞ்சம் என்றே –38–

(இ – ள்.) கவி தானை மன்னற்கு – வாநரசேனைகளையுடைய வாநரராச னான சுக்கிரீவனுக்கு,
நட்பு ஆய் – நண்பனாகி,
முடி கவித்தானை – (அவனுக்கு) மகுடாபிஷேகஞ்செய்வித்தவனும், –
அன்று – அந்நாளில் (ஸ்ரீராமாவதாரத்தில்),
புவி தானை வற்ற – பூமிதேவிக்கு ஆடையாகிய கடல் தபிக்கும்படி,
பொழி – பிரயோகிக்கத்தொடங்கிய,
சரத்தானை – ஆக்நேயாஸ்த்ரத் தையுடையவனும், –
பொருது இலங்கை அவித்தானை – போர்செய்து இலங்காபுரியை அழித்திட்டவனும், –
மாலிருஞ்சோலை நின்றானை – திருமாலிரு ஞ்சோலைமலையில் நின்றதிருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்றவனும், –
முன் – முன்னொருகாலத்தில்,
ஆனை – கஜேந்திராழ்வான்,
தவித்து – (முதலைவாய்ப்பட்டு) வருந்தி,
வா என – (எனது துயர்தீர்த்தற்பொருட்டு இங்கு) வந்தருள்’ என்று அழைக்க,
வந்தானை – (அதனெதிரில்) வந்தருளியவனு மான, அழகனை -,-
தஞ்சம் என்று பற்றினென் – சரணமென்று அடைந்தேன்; (எ – று.)

கவி – கபி யென்ற வடசொல்லின் விகாரம். அனைத் துலகுக்கும் அரசனும் சக்கரவர்த்தித் திருமகனுமான
இராமபிரானுக்குச் சுக்கிரீவன் தனது எழுபதுவெள்ளம்வாநரசேனைகளைக்கொண்டு உதவிசெய்ததனால்,
சுக் கிரீவனுக்கு ‘மஹாராஜர்’ என்று வைஷ்ணவபரிபாஷையில் ஒருபெயர் வழங்கும்.
‘கவித்தானைமன்னற்கு நட்பாய் முடிகவித்தானை’ என்ற தொடரிலுள்ள சொல்நயங் காண்க; மடக்கு:
“சேர்ந்துகவிக்கும் முடிகவித்தாய்” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.
பூமியைச் சூழ்ந்துள்ள கடலை ‘பூமியாகியபெண் உடுக்கும் ஆடை’ என்றல், கவிமரபு;
“பொங்குபுணரிக்கடல் சூழாடை நிலமாமகள்” என்றார் திருமங்கையாழ்வாரும். தஞ்சம் – ரக்ஷகம்.

————

தஞ்சம் தனம் என்று தேடி புல்லோர் தையலார் கடைக்கண்
வஞ்சம் தனம் கொள்ள வாளா இழப்பர் மதி உடையோர்
செஞ்சந் தனப் பொழில் மாலிருஞ்சொலைத் திரு நெடுமால்
நெஞ்சம் தனக்கு உவப்பாக நல்கா நிற்பார் நேர் படினே –39-

(இ – ள்.) புல்லோர் – அற்பர்கள், –
தனம் தஞ்சம் என்று தேடி – செல்வமே ரக்ஷக மென்று கருதி முயன்று அதனைச் சம்பாதித்து,
தையலார் கடைக்கண் வஞ்சம் தனம் கொள்ள – மாதர்களுடைய கடைக்கண்களின் வஞ்சனையும் (அவரது) கொங்கைகளின் பொலிவும் கவர்ந்துகொள்ள,
வாளா இழப்பர் – வீணாக (அப்பொருளை) இழந்துவிடுவார்கள்;
மதி – உடையோர் – நல்லறிவுடையவர்களோ, –
நேர்படின் – (தமக்குப் பொருள்) கிடைத்தால், (அதனை),
செம் சந்தனம் பொழில் மாலிருஞ்சோலை திரு நெடு மால் நெஞ்சந்தனக்கு உவப்பு ஆக நல்காநிற்பர் – சிவந்த சந்தனமரங்களின் சோலையையுடைய திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற மகாவிஷ்ணுவின் திருவுள்ளத்துக்கு உகப்பு உண்டாம்படி உபயோகிப்பார்கள்; (எ – று.)

சிற்றறிவுடைய புல்லோர், செல்வப்பொருளையே பொருளென்று கொண்டு ஈட்டி அதனைச் சிற்றின்பவிஷயங்களிற்
செலவுசெய்து வறியராய் நிற்பர்; பேரறிவுடைய நல்லோரோ, எவ்வாற்றாலேனும் தமக்குப் பொருள் கிடைத்தால்
அதனை எம்பெருமான் திருவுள்ளத்துக்குப் பாங்காகுமாறு பகவத் பாகவத ஆசாரிய கைங்கரிய
விஷயங்களில் விநியோகித்துக் கிருதார்த்த ராவ ரென்பதாம்.

தனம் என்ற சொல் – முதலடியில் தநம் என்ற வடசொல்லின் விகாரமும், இரண்டாமடியில் ஸ்தநம் என்ற வடசொல்லின் விகாரமுமாம்.
‘தையலார் கடைக்கண் வஞ்சம்’ என்றது, ஆடவரை வசீகரிக்குமாறு அவர்களை மகளிர் தங்கள்கடைக்கண்களால்
ஒதுக்கிப் பார்க்கும் பார்வையை. கண்ணின் கடை என்பது கடைக்கண் என முன்பின்னாகத்தொக்க ஆறாம்வேற்று மைத்தொகை:
இலக்கணப்போலி. வாளா – பயனின்மைகுறிக்கும் இடைச்சொல்; “சும்மா” என்பதும் இது. நல்கா நிற்பர் – நல்கி நிற்ப ரென்க.

————–

நேர் ஆய ஏதனை நெஞ்சு இடந்தாய் நெடுஞ்சோலை மலைக்
கார் ஆய வேதனை முன் படைத்தாய் நின் கழற்குத் தொண்டு என்று
ஆராயவே தனைப் புண் பிறப்பு ஓயும் அவா வழியின்
பேர் ஆய வேதனை இல் உழைப் போரும் பிழைப்பர்களே –40-

(இ – ள்.) நேர் ஆய – (தனக்கு) எதிராய் நின்ற,
ஏதனை – குற்றத்தை யுடையவனான இரணியனை,
நெஞ்சு இடந்தாய் – மார்பைப் பிளந்தவனே!
நெடுஞ் சோலை மலை கார் ஆய – நெடிய திருமாலிருஞ் சோலைமலையில் எழுந்தருளியிருக்கிறவனும் கரியதிருநிறமுடைய இடைப்பிள்ளையாய் வளர்ந்தவனுமானவனே!
வேதனை முன் படைத்தாய் – (படைத்தற்கடவுளான)பிரமனை முன்பு சிருஷ்டித்தவனே! –
நின் கழற்கு தொண்டு என்று ஆராயவே – உனதுதிருவடிகட்குத் தாம் அடிமையென்று (பரமாத்மஜீவாத்ம ஸ்வரூபங்களை ஒருவர்) ஆராய்ந்துணரவே,
தனை புல் பிறப்பு ஓயும் – இழிவான ஜந்மவகைகள் எத்தனையுண்டோ அத்தனையும் (அவரைத் தொடரமாட்டா மல்) ஓய்ந்துவிடும்;
அவா வழியின் – ஆசைவழியால்,
பேர் ஆயம் வேதனை – பெரிய தொகுதியான துன்பங்களைத் தருகின்ற,
இல் – சம்சாரபந்தத்தில்,
உழைப்போரும் – அகப்பட்டுவருந்துபவர்களும்,
பிழைப்பர்கள் – (நின்கழற் குத் தொண்டென்று தம்மைஆராய்ந்தமாத்திரத்திலே அச்சம்சார துக்கங் களினின்று தப்பி) உய்வார்கள்; (எ – று.)

‘நெஞ்சிடத்தல்’ என்ற குறிப்பினால், ‘ஏதன்’ என்றது, இரணியனை உணர்த்திற்று;
அவன், சர்வலோகநாயகனான ஸ்ரீமந்நாராயணனுக்கு எதிர் த்தட்டாய்த் தானே முழுமுதற்கடவு ளென்று சொல்லி
யாவரும் தன்னை வணங்கும்படி நிர்ப்பந்தித்துவந்தன னாதலால், ‘நேராய ஏதன்’ எனப்பட்டான்.
ஏதன் – அபராதி: ஏதம் – குற்றம். நெஞ்சு – தானியாகுபெயராய், அதற்கு இடமான மார்பையுங் குறிக்கும்.
இடத்தல் – கீளுதல். ஆ – பசுக்கள்; அவற்றையுடையவ னாதலால், இடையனுக்கு ஆய னென்று பெயர் .
வேதன் – வேதஸ் என்ற வடசொல்லின் விகாரம்; அது, சிருஷ்டிகர்த்தா வென்று பொருள்படும்.
இனி, வேதம் வல்லவன் வேதனெனக் காரணக் குறியுமாம். முன் – ஆதிகாலத்தில். தனை – அளவு.
கர்மவசத்தாலாகும் பல வகைப் பிறப்புக்களும் எம்பெருமான் திருவடிக்குத் தொண்டுபூண்டவரைச் சாரக்கடவனவல்ல வென்க.
ஓய்தல் – ஒழிதல். “தனை” என்பதைத் தன்னை யென்பதன் தொகுத்தலாகவும், உருபுமயக்கமாகவுங் கொண்டு,
தனது புன் பிறப்பு ஓயுமென உரைத்தலு மொன்று. ஆயம் – திரள்.
இல் – வீடு; அதில் இருந்து நடத்தும் சம்சாரத்துக்கு இங்கு இடவாகுபெயராம்.
இனி, இல் என்பதை ஏழனுருபாக்கொண்டு, வேதனையிலுழைப்போர் என்பது வேதனையில்லுழைப்போர் என
விரித்தல்விகாரம்பெற்ற தென்றாக்கி உரைப்பினும் இழுக்காது. உம் – இழிவுசிறப்பு.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திரு அழகரந்தாதி –1-20-

February 22, 2022

அழகரது அந்தாதி என விரியும்; அழகர் விஷயமாக அந்தாதித்தொடையாற் பாடப்பட்டதொரு பிரபந்த மென்பது பொருள்.
இத்தொடர்மொழியில் தொக்குநின்ற ஆறாம்வேற்றுமையுருபின் பொருளாகிய சம்பந்தம், விஷயமாகவுடைமை;
விஷ்ணுபுராணம், விநாயகரகவல் என்பவற்றிற்போல. அழகரைப்பற்றிய அந்தாதியென விரித்தால்,
இரண்டாம்வேற்றுமையுருபும் பொருளுமுடன் தொக்கதொகையாம்.

“அழகர்” என்பது – திருமாலின் திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் பாண்டியநாட்டுத்திருப்பதி பதினெட்டில் ஒன்றும்,
வநகிரி யென்று வட மொழியிற்கூறப்படுவதும்,
‘கோயில் திருமலை பெருமாள்கோயில் அழகர்திருமலை’ என்று சிறப்பாக எடுத்துக்கூறப்படுகிற நான்கு தலங்களுள் ஒன்றும்,
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும், பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர்” என்றபடி
ஆன்றோர் கொண்டாடப்பெற்ற மகிமையுடையதுமான திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானது திருநாமம்;
ஸர்வாங்கஸுந்தரரென்னும்படி நிரம்பிய அழகையுடையவராதல்பற்றி வந்தது இப்பெயர்.
அலங்காரர், சுந்தரபாகு என்றும் அப்பெருமானுக்குத் திருப்பெயர்கள் வழங்கும்.

அந்தாதி – அந்தத்தை ஆதியாக வுடையது: அன்மொழித்தொகை; வடமொழித்தொடர், தீர்க்கசந்தி:
அந்த ஆதி எனப் பிரிக்க. அந்தாதியாவது – முன்நின்றசெய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும்
அடுத்துவருஞ்செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது;
இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச்செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்த லெனப்படும்.
இது, தொண்ணூற்றாறுவகைப்பிரபந்தங்களுள் ஒன்றாம். பதிற்றந்தாதி நூற்றந்தாதி என்ற வகைகளில் இந்நூல் நூற்றந்தாதியாம்.
அதாவது – நூறுவெண் பாவினாலேனும் நூறுகட்டளைக்கலித்துறையினாலேனும் அந்தாதித்தொடை யாற் கூறுவது.
இந்நூல், அந்தாதித்தொடையா லமைந்த நூறு கட்டளைக் கலித்துறைகளை யுடையது.
சொற்றொடர்நிலைச்செய்யுள், பொருட்டொடர் நிலைச்செய்யுள் என்ற வகையில் இது சொற்றொடர்நிலை;
“செய்யுளந்தாதி சொற்றொடர்நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும்.

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் “விருந்தேதானும், புதுவதுகிளந்த யாப்பின்மேற்றே” என்பதனால்,
“விருந்துதானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் தொடுக்கப்படுந் தொடர்நிலைமேலது” என்று கூறினமையின்,
இந்நூல், அங்ஙனங்கூறிய விருந்தாம் என்று உணர்க அச்சூத்திரவுரையில் அந்தாதியும் கலம்பகமும் முதலாயின
உதாரணங்காட்டப்பட்டுள்ளவாறுங் காண்க. இனி, இதனைச்சிறுகா ப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார்.
இப்பிரபந்தம், தோத்திரரூபமானது.

இந்நூலிலுள்ள கலித்துறைகள் யாவும் பெரும்பாலும் திரிபு என்னுஞ் சொல்லணியையும்,
சிறுபான்மை யமகம் என்னுஞ் சொல்லணியையும் உடையன.
திரிபாவது – ஒவ்வோரடியிலும் முதலெழுத்துமாத்திரம் வேறு பட்டிருக்க. இரண்டுமுதலிய பல எழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறு படுவது;
இதனையும் யமகவகையில் அடக்குவர் ஒருசாரார்.
யமகமாவது – பலஅடிகளிலாயினும் ஓரடியிற்பலஇடங்களிலாயினும் வந்த எழுத்துத் தொடர்களே மீண்டுவந்து பொருள்வேறுபடுவது;
இது, தமிழில் ‘மடக்கு’ எனப்படும். இந்நூற்செய்யுள்களிற் சிறுபான்மை காணப்படுகிற யமகங்கள், பலஅடிகளில் வந்தவை.

———-

திருச் சிறப்பு பாசுரம் -தனியன் –

திரு கவி மங்கை மணவாள வள்ளல் செந்தேன் றுளித்து
முருகவிழ் தென் திருமாலிருஞ்சோலை மலை முகுந்தற்கு
இருகவின் தாள்களில் சூடும் அந்தாதியின் ஈரைம்பதில்
ஒரு கவி கற்கினும் ஞானமும் வீடும் உதவிடுமே

(இதன்பொருள்.) திரு கவி – சிறந்த கவியாகிய,
மங்கை மணவாள வள்ளல்-திருமங்கைநாட்டில்திருவவதரித்த அழகியமணவாள தாசரென்னும் வண்மைக்குணமுடையவர்,
செம் தேன் துளித்து முருகு அவிழ் தென் திரு மாலிருஞ்சோலை மலை முகந்தற்கு – செந்நிறமானதேன்சிந்தி வாசனைவீசப் பெற்ற
அழகிய திருமாலிருஞ்சோலைமலையில் திருக்கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கிற திருமாலுக்கு,
கவின் இரு தாள்களில் சூடும் – அழகிய இரண்டுதிருவடிகளிலே சாத்திய,
அந்தாதியின் – இந்த அழகரந்தாதி யென்னும் பிரபந்தமாகிய பாமாலையி லுள்ள,
ஈரைம்பதில் – நூறுசெய்யுள்களுள்,
ஒரு கவி – ஒருசெய்யுளை,
கற்கினும் – கற்றாலும், (அக்கற்றவர்க்கு அக்கல்வியானது),
ஞானமும் வீடும் உதவிடும் – நல்லுணர்வையும் பரமபதத்தையும் தவறாதுகொடுக்கும்; (என்றவாறு.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

அழகியமணவாளதாசர் இயற்றிய திருமாலிருஞ்சோலைமலை யழகரந்தாதிப்பாசுரங்களுள் ஒன்றை யோதியுணர்ந்தவரும்
ஞானமுடையராய் ஸ்ரீவைகுண்டஞ்சேர்வர் என இந் நூற்பயன் கூறுமுகத்தால்,
இந்நூலின் சிறப்பையும் இந்நூலாசிரியரது தெய்வப்புலமையையும் தெரிவித்தவாறாம்.
சிறப்புப் பாயிரவிலக்கணங்களுள் ஆக்கியோன்பெயரும், நூற்பெயரும், நுதலியபொருளும், பயனும் இச்செய்யுளில் விளங்குதல் காண்க.

திரு கவி – திவ்வியகவி யென்றபடி, திரு – மேன்மை. கவி ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் என்னும் நாற்கவிகளைப் பாடுபவன்.
பொதுவிதிப்படி திருக்கவியென வலிமிகற்பாலது எதுகைநயம்நோக்கி “திருகவி” என இயல்பாய்நின்றது;
இது, தொகுத்தலென்னுஞ் செய்யுள்விகாரத்தின்பாற் படும்.
திருகவி, மங்கை மணவாளவள்ளல் என்பன – ஒருபொருளின்மேல்வந்த பலபெயர்கள்.
மங்கைநாடு, சோழமண்டலத்தின் உட்பகுதிகளுள் ஒன்று; மண்ணியாற் றங்கரையில் திருவாலி திருநகரியோடே சேர்ந்து
அதில் ஏகதேசமென்ன லாம்படியிருக்கும் திருக்குறையலூர் முதலிய ஊர்களைத் தன்னிடத்தேகொ ண்டது:
திருமங்கையாழ்வாரும் இதில் திருவவதரித்தவரே, ஒருபெயரின்ஒரு பகுதியைக் கொண்டு அப்பெயர் முழுவதையுங் குறிப்பதொரு
மரபுபற்றி அழகியமணவாளதாசரை ‘மணவாளன்’ என்றார்; (இதனை, வடநூலார், நாமை கதேசேநாமக்ரஹணம் என்பர்.)
வள்ளல் – வரையாது கொடுப்பவன்; உதாரி: வண்மையென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்; அல் – பெயர் விகுதி.
மணவாளவள்ளல் – மணவாளனாகிய வள்ளல்எனஇருபெயரொட்டு. வேண்டுவார் வேண்டியபடியெல்லாம் பலவகைக்
கவிகளைத் தட்டுத்தடையின்றிப் பாடித்தருமியல்பின ராதலாலும், எல்லாச்செல்வத்தினுஞ் சிறந்த முத்திச் செல்வத்தைத்
தரவல்ல திவ்வியப்பிரபந்தங்களைப் பாடி எல்லாவுயிர்களும் எளிதில் உய்யுமாறு வழங்கியருளியவ ராதலாலும், ‘வள்ளல்’ எனப்பட்டனர்.
திரு கவி மங்கை என்பதற்கு – செல்வத்தால் மூடப்பெற்ற (அதாவது – செல்வம்நிறைந்த) மங்கை யென்ற ஊரில்
அவதரித்த என்று உரைப்பாரு முளர்; இப்பொருளில், கவிமங்கையென்பது – வினைத்தொகை: செய்வினை, செயப்பாட்டுவினைப்பொருளது.
இனி, திருகு அவிஎன்றுபிரித்து, மாறுபாடு (வஞ்சனை) இல்லாத என்று உரைத்து, மணவாள வள்ளலுக்கு அடைமொழி யாக்குவர் ஒருசாரார்.
“திரு கவிமங்கை மணவாள வள்ளல்” என்ற தொடர் சிறந்த கவநசக்தியாகிய பெண்ணுக்குக் கணவனாகிய
உதாரி யென்ற ஒரு பொருள் தொனிக்குமாறு நிற்றலுங் காண்க;
கவித்திறத்தைத் தன்வசத்திற் கொண்டு நடத்துபவ னென்றவாறு.
மணவாளன் – மணம் + ஆளன்: கலியாணஞ்செய்துகொண்ட புருஷன். வள்ளல் சூடும் என இயையும.

“ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே” என்றபடி மிகப் பெரிய பல சோலைகளை யுடைய மலை யாதலால்,
“மாலிருஞ்சோலைமலை” என்று திருநாமம்;
மால் – பெருமை, இருமை – பெருமை; இவ்விரண்டும் தொடர்ந்து ஒருபொருட்பன்மொழியாய் நின்றன.
மால் – உயர்ச்சி; இருமை – பரப்பு என்று கொண்டு, உயர்ந்து, பரந்த சோலைகளை யுடைய மலையென்றலும் உண்டு.
திரு – மேன்மைகுறிக்கும் அடைமொழி. பரதகண்டத்தில் தென்னாடாகிய பாண்டியநாட்டி லுள்ள மலையாதல்பற்றி,
“தென்திரு மாலிருஞ்சோலைமலை” எனப்பட்டதாகவும் கொள்ளலாம்.
வடக்குத் திருமலையாகிய திருவேங்கடத்தோ டொத்த தெற்குத்திருமலை யாதலாலும், “தென்” என்ற அடைமொழி
திருமாலிருஞ்சோலைமலைக்கு ஏற்கும்; அதனை “வடதிருவேங்கடம்” என்பது காண்க.
(தென் என்று – அழகாதல்; தெற்குத்திக்கிலேயான வென்னுதல், மால் என்றும் இருமை என்றும் இரங்கும் பெருமைக்கு வாசகமாய்,
சோலையினுடைய ஓக்கத்தையும் பரப்பையும் சொல்லுகிறது. இப்படியிருக்கிற சோலைகளை யுடைத்தாகையாலே,
மாலிருஞ்சோலை யென்று அத்தேசத்துக்கு நிரூபகம்; “வநகிரியிறே” என்ற ஸ்ரீமணவாளமாமுனிகள் வியாக்கியாந வாக்கியம் உணரத்தக்கது.)
‘செந்தேன்துளி த்துமுருகவிழ்’ என்ற அடைமொழி, அம்மலைச்சோலைகளிலுள்ள மலர்களின் செழுமையையும் சிறப்பையும் விளக்கும்.
முகுந்தன் என்ற வடமொழி – முத்தியின்பத்தையும், இவ்வுலகவின்பத்தையும் தருபவன் என்று பொருள்பெறும்;
மு – முக்தி, கு – பூமி. முகுந்தற்கு என்பதை உருபுமயக்கமாகக்கொண்டு முகுந்தனது என்றலு மொன்று.

இருதாள் – உபய பாதம். இரு கவின் தாள் – இயற்கையழகு, அணிகல மணிவதனாலாகுஞ் செயற்கையழகு என்னும்
இருவகையழகையு முடைய திருவடி யெனினும் அமையும்.
சூடும் என்ற வினைச்சொல்லின் ஆற்றலால், அந்தாதி பாமாலை யெனக் கொள்க. ஈரைம்பது – பண்புத்தொகை;
இது – ஆகுபெயராய், அத்துணைச்செய்யுளின்மேல்நின்றது. பாடுவோனை யுணர்த்தும்
‘கவி’ என்ற வடசொல் – ஈற்றடியில், கருத்தாவாகுபெயராய், அவனாற் பாடப்பட்ட பாடலின்மேல் நின்றது.
ஒருகவிகற்கினும், உம் – இழிவுசிறப்பு: ஒன்று என்னும் எண்ணின் சிறுமை பற்றியது.
ஞானமென்றது – கல்வியறிவோடு, வீடுபயக்குமுணர்வாகிய தத்துவஞானத்தையுங் குறித்தது;
“ஞானமும் புகழு முண்டாம், வீடியல்வழியதாக்கும்” என்றவிடத்துப் போல. “கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்,
மற்றீண்டு வாராநெறி” என்றபடி கல்விக்குப் பயன் ஞானமும் அதன் பயன் வீடு மாதலால், அக் காரணகாரியமுறைமை தோன்ற,
“கற்கின் ஞானமும் வீடும் உதவிடும்” என்றார். ஜ்ஞாநம் – வடசொல். ஜ்ஞாநமாவது, முத்தியுணர்வு; மற்றையறிவு, விஜ்ஞாந மெனப்படும்:
இவ்வேறுபாடு, வடநூலிற் கண்டது. வீடு – இருவினைப்பாசபந்தத்தை விட்டு அடையும் இடம்;
“முக்தி” என்ற வடசொல்லின் பொருள்கொண்ட பெயர். உதவிடும், “இடு” என்ற துணைவினை – துணிவு உணர்த்தும்.

இக்கவி அபியுக்தரி லொருவர் செய்த தென்பர். இது, வைஷ்ணவ சம்பிரதாயத்தில் தனியன் எனப்படும்.
(நூலினுள் அடங்காது தனியே பாயிர மாய்நிற்றல்பற்றியது, அப்பெயர்; “அன்” விகுதி – உயர்வுப்பொருளது.)

————

காப்பு

காப்பு – காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்:
ஆகவே, கவி தமக்குநேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தைமுடிக்கவல்ல தலைமைப்பொருளின்
விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து. இக்காப்புச்செய்யுள், ஆழ்வார்கள் பன்னிருவருட் பிரதானரான நம்மாழ்வாரைப் பற்றியது.
ஸ்ரீவைஷ்ணவ சமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக்காப்புச்செய்யுள், விஷ்ணு பக்தர்களிற்சிறந்த ஆழ்வாரைக் குறித்த தாதலால்,
வழிபடுகடவுள்வணக்க மாம். தம்தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலே யன்றி அக்கடவு ளின் அடியார்களை
வணங்குதலும் வழிபடுகடவுள்வணக்கத்தின்பாற் படுமென அறிக.
ஆழ்வார் திருமாலின் அவதார மாதலாலும், அவரை வணங்குதல் வழிபடுகடவுள்வணக்கமேயாம்.
அவ்வாழ்வாரால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின் சொற்பொருட்கருத்துக்களமைய அம்முதனூலுக்கு
வழிநூல்போலச் செய்யப்படுவது இப்பிரபந்த மென்பதுபற்றி, இந்நூலின் இக்காப்புச்செய்யுளை
ஏற்புடைக்கடவுள்வணக்க மென்று அரிதிற் கொள்ளவும் அமையும்.

அங்கத் தமிழ் மறை ஆயிரம் பாடி அளித்து உலகோர்
தங்கட்கு வீடருளும் புருடோத்தமன் தண் வகுளத்
தொங்கற் பராங்குசன் தாளிணை மாலிருஞ்சோலை மலைச்
சங்கத் தமிழ் அழகர் அந்தாதி நடாத்தலைக் கொள்வனே –

(இ – ள்.) அங்கம் – (ஆறு) அங்கங்களையுடைய,
தமிழ் மறை -தமிழ் வேதமாகிய,
ஆயிரம் – ஆயிரம் பாசுரங்களை,
பாடி -, அளித்து – (மதுரகவிகள் நாதமுனிகள் முதலிய நல்லோர்களுக்கு உபதேசமுகமாகக்) கொடுத்து,
உலகோர்தங்கட்கு வீடு அருளும் – உலகத்தார்க்கு முத்தியைத் தந்தருள்கிற,
புருடோத்தமன் – புருஷ சிரேஷ்டரும்,
தண் வகுளம் தொங்கல் – குளிர்ச்சியான மகிழம்பூமாலையைத் தரித்த,
பராங்குசன் – பராங்குசனென்னுந்திரு நாமமுடையவருமான நம்மாழ்வாருடைய,
தாள்இணை – உபயபாதத்தை, –
மாலிருஞ்சோலைமலை சங்கத்து அழகர் அந்தாதி நடாத்த தலைக்கொள்வன் – திருமாலிருஞ்சோலைமலையில்
எழுந்தருளியிருப்பவரும் தமிழ்ச்சங்கத்துக்குத் தலைவருமாகிய அழகரது விஷயமாக யான்பாடும்
அந்தாதிப்பிரபந்தத்தை இடையூறின்றி நடத்துதற்பொருட்டுத் தலைமேற்கொண்டு வணங்குவேன்; (எ – று.) – ஏகாரம் – ஈற்றசை.

“மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன், ஆறங்கங் கூற வவதரித்த” என்றபடி
ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்ற நான்குவேதங்களுக்கும் சிக்ஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம்
என்ற ஆறுசாஸ்திரங்களும் அங்கமாதல்போல, சதுர்வேதசாரமாக நம்மாழ்வார்அருளிச்செய்த
திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரியதருவந்தாதி என்றநான்குதிவ்வியப்பிரபந்தங்களுக்கும்
திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய பெரியதிருமொழி திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் திருவெழுகூற்றிருக்கை
சிறிய திருமடல் பெரிய திருமடல் என்ற ஆறுபிரபந்தங்களும் அங்கமாகுதலால், ‘அங்த்தமிழ்மறை’ எனப்பட்டது;
“குருகூர ரங்கமறைத்தமிழ்மாலை” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.
(நம்மாழ்வார்பிரபந்தங்கள் வேதமாதலையும், திருமங்கையாழ்வார் பிரபந்தங்கள் அவற்றிற்கு அங்கமாதலையும்
ஆசார்யஹ்ருதயம் முதலிய நூல்களிலும், அவற்றின் வியாக்கியாநங்களிலும் பரக்கக்காணலாம்.)
வேதங்களின் அர்த்த நிர்ணயத்துக்குச் சாஸ்திரங்கள் உபகாரகங்க ளாகையால், அங்க மெனப் படும்;
அத்தன்மையை இங்குங் கொள்க. “தமிழ்மறை யாயிரம்” என்றது, திருவாய்மொழியை. நான்குவேதங்களுள்ளும்
ஸாமவேதம் சிறந்ததாதல் போல, சதுர்வேதசாரமான நம்மாழ்வார் பிரபந்தங்கள் நான்கனுள்ளும் ஸாமவேதஸாரமான
திருவாய்மொழி பிரதாநமாதலால், அது இங்கு எடுத்துக்கூறப்பட்டது. தலைமைபற்றி இதனை எடுத்துக்கூறியது, பிறவற்றிற்கும் உபலக்ஷணம்.
திருவாய்மொழி ஆயிரத்து நூற்றிரண்டு செய்யுள்களாயினும், சொச்சத்தொகையைக்குறியாது பெருந்தொகையை மாத்திரமே குறித்து, “ஆயிரம்” என்றார்;
எம்பெருமானுடைய ஆயிரத்தெட்டுத் திருநாமங்களை “ஸஹஸ்ரநாமம்” என்றல்போல.
நூறுபதிகத்திலுமுள்ள நூறுதிருநாமப்பாட் டுக்களையும் ஒதுக்குமிடத்து ஆயிரத்திரண்டேயாகுமன்றோ.
(“ஆராதகாதற் குரு கூர்ச்சடகோபன், ஓராயிரஞ்சொன்னவவற்றுளிவைபத்தும்,
சோரார் விடார்கண்டீர் வைகுந்தந்திண்ணெனவே”,
“குரு கூர்ச்சடகோபன், கூறின வந்தாதியோராயிரத்துளிப்பத்துங், கூறுதல்வல்லாருளரேற் கூடுவர் வைகுந்தமே”,
“பண்டலையிற்சொன்ன தமிழாயிரத்திப்பத்தும்வல்லார், விண்டலையில் வீற்றிருந்தாள்வரெம்மாவீடே”,
“குருகூர்ச்சடகோபன்சொல், கெடலி லாயிரத்துள்ளிவைபத்தும், கெடலில்வீடுசெய்யுங் கிளர்வார்க்கே” என்றபடி)
திருவாய்மொழியோதினவர்கள் முத்திபெறுதலால், ‘ஆயிரம்பாடியளித்துலகோர்தங்கட்கு வீடருளும் புருடோத்தமன்’ என்றார்.
(“மாறன்மலரடியே, வீசுபுகழெம்மாவீடு”,
“அருள்கொண்டாடு மடியவரின்புற, அருளினா னவ்வருமறையின்பொருள்,
அருள்கொண்டாயிரமின் தமிழ்பாடினான், அருள் கண்டீரிவ்வுலகினின்மிக்கதே” என்பவையும் இங்கு உணரத்தக்கன.)

புருஷோத்தமன் என்ற வடமொழிப்பெயர், புருஷ உத்தமன் என்று பிரியும்; குணசந்தி:
‘அ ஆ முன் உ ஊ வரின் இரண்டுங்கெட ஓர் ஓகாரம் தோன்றும்.” புருடோத்தமன் – புருடரிற்சிறந்தவன்; உத்தமபுருஷன்.
பிரபந்நஜநகூடஸ்தராதலால், ஆழ்வார், புருடோத்தம னெனப்பட்டனர். ஆழ்வார் நாராயணாம்ச மாதலால், அவரை,
அத்திருமாலின் திருநாமமாகிய ‘புருடோத்தமன்’ என்ற பெயராற் குறித்தன ரென்றுங் கொள்ளலாம்;
“வேதந் தமிழ்செய்த மெய்ப்பொருளே” என்றார் பிறரும். தம்பக்கல் திருவுள்ள முவந்து திருக்குருகூர்ப் பொலிந்து நின்ற பிரான்
பிரசாதித்த மகிழமலர்மாலையைத் தரித்ததனால், ஆழ்வார்க்கு ‘வகுளாபரணர்’ என்று ஒரு திருநாமம் வழங்கும்.
மிகக்களித்துக் கொழுத்துக் செருக்கித் திரிந்து எதிர்த்து வாதப்போர்க்குவரும் பிறமதத்தவராகிய மதயானைகளைத்
தமது பிரபந்தங்களிற்கூறிய தத்துவார்த்தங்களைக்கொண்டு செருக்கடக்கிக் கீழ்ப் படுத்தித் தம்வசத்தில் வைத்து
நடத்துந் திறமுடையராய் அவற்றிற்கு மாவெட்டியென்னுங் கருவி போலுதலால், நம்மாழ்வார்க்குப் பராங்குச னென்று ஒருதிருநாம மாயிற்றென்க;
பர அங்குச என்று பிரிக்க: தீர்க்க சந்திபெற்ற வடமொழித்தொடர். ‘அஆமுன் அஆவரின் இரண்டுங்கெட ஓர் ஆகாரம் தோன்றும்.
‘ பரர் – அயலார், அங்குசம் – மாவெட்டி, தோட்டி. சங்கம் – புலவர் கூட்டம்.
தமிழ்ச் சங்கத்துக்குத் திருமாலிருஞ் சோலை மலை யழகர் தலைவராதலை, “தண்டமிழ்ச்சங்கத்தனியிறையவனே,”
“சுத்தத்தமிழ்ப் புலவர், சங்கத்திருப்பிரியான்” என்ற அழகர்கலம்பகத்தாலும் அறிக.

அங்கம், வகுளம், ஸங்கம் – வடசொற்கள். வகுளமென்ற மகிழமரத் தின்பெயர், இங்கு அதன் மலர்க்குச் சினையாகுபெயராம்.
தொங்கல் – தொங்குவதென்னும்பொருளதாய், மாலைக்குக் காரணக்குறியாம்; இதில், அல் –

கருத்தாப்பொருள்விகுதி: இனி, தொங்கல் என்பதைத் தொழிலாகு பெயரெனினும் இழுக்காது. தாளிணை தலைக்கொள்வன் என இயையும்.
சங்கத்து அழகர் என்பதற்கு – இடத்திருக்கையிலே ஸ்ரீபாஞ்சஜந்யமென்னுஞ் சங்கத்தை யேந்திய அழக ரெனினும் அமையும்;
“அதிர்குரற் சங்கத்தழகர்” என்ற திருவாய்மொழியையும், ஸ்ரீபாஞ்சஜந்யத்தைத் திருக்கையிலேயுடையராய்
அச்சேர்த்தியழகாலே அதுதன்னையே தமக்குத்திருநாமமாகவுடையவர்’என்ற அதன் வியக்கியாநத்தையும்,
“சங்கத்தமிழகரென்றே திருநாமம்” என்ற அதன் அரும்பதவுரையையுங் காண்க:
இப்பொருளில், சங்கம் – ஸங்கமென்ற வடசொல்லின் திரிபு. நடாந்த – நடந்த என்பதன் விகாரம்.
தலைக்கொள்வன் என்பதில், ‘அன்’ விகுதி – தன்மையொருமைக்கு வந்தது. தலை – தலைமையான உறுப்பு; உத்தமஅங்கம்.

கைங்கரியசித்திக்குத திருமாலிருஞ்சோலைமலையை ஆசிரயிக்கவேணுமென்று தமது நெஞ்சத்துக்கும் உலகத்தார்க்கும்
உபதேசமாக “கிளரொளியிளமை” என்ற தொடக்கத்துத் திருவாய்மொழிப்பதிகம் அருளிச்செய்த நம்மாழ்வாருடைய
திருவடிகள் அவ்வழகர்விஷயமாக அந்தாதிபாடுதற்குக் காப்பாகக் கொள்ள உரியனவாதல் காண்க.
ஆயிரத்தந்தாதி பாடியவரது திருவருள் நூற்றந்தாதியை நடத்தத் தட்டில்லையன்றோ.

இங்ஙனம் வணங்கியதனால், தொடங்கிய தொழில் இனிதுமுடியுமென்பது கருத்து.

————

நீர் ஆழி வண்ணனை பாலாழி நாதனை நின்மலனை
சீர் ஆழி அம்கைத் திருமகள் கேள்வனை தெய்வப் புள் ஊர்
கூர் ஆழி மாயனை மால் அலங்காரனை கொற்ற வெய்யோன்
ஓர் ஆழித் தேர் மறைத்தானை எஞ்ஞான்றும் உரை நெஞ்சமே –1–

(இ – ள்.) நெஞ்சமே – (எனது) மனமே! –
நீர் ஆழி வண்ணனை – நீர் மயமான கடல்போலும் (கரிய) திருநிறமுடையவனும்,
பால் ஆழி நாதனை – திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டிருக்கிற தலைவனும்,
நின்மலனை – குற்றமற்றவனும்,
சீர் ஆழி அம் கை திருமகள் கேள்வனை – சிறந்த மோதிரங்களை (த்திருவிரல்களில்) அணிந்த அழகிய
கைகளையுடைய இலக்குமியின் கணவனும்,
தெய்வம் புள் ஊர் கூர் ஆழி மாயனை – தெய்வத் தன்மையையுடைய சிறந்தபறவையாகிய கருடனை வாகனமாகக்
கொண்டு ஏறிநடத்துகிறவனும் கூரிய (சுதர்சநமென்னுஞ்) சக்கராயுதத்தை (வலக்கையில்) ஏந்தியவனும் விசித்திரசக்தியை யுடையவனும்,
கொற்றம் வெய்யோன் ஓர் ஆழி தேர் மறைத்தானை – வெற்றியையுடைய சூரியனது ஒற்றைச்
சக்கரத்தையுடைய தேரை (மகாபாரதயுத்தத்தில்) மறைத்திட்டவனுமான,
மால் அலங்காரனை – பெருமை பொருந்திய அழகனை,
எஞ்ஞான்றும் உரை – எப்பொழுதும் துதி செய்வாய்; (எ – று.)

“சதிரிளமடவார்தாழ்ச்சியைமதியாது, அதிர்குரற்சங்கத்தழகர்தங்கோ யில்,
மதிதவழ்குடுமிமாலிருஞ்சோலைப், பதியதுவேத்தி யெழுவதுபயனே” என்று நம்மாழ்வார் தம் திருவுள்ளத்தைக் குறித்து உரைத்ததுபோல,
இது, இந்நூலாசிரியர் தமதுநெஞ்சைநோக்கி அறிவுணர்த்தியதாம்.
அழகரைத் துதிப்பதே ஆத்மாவுக்குப் பரமபிரயோஜந மென்றவாறு, நினைத்தல் பேசுதல் தொழில்செய்தல் என்பன
முறையே மனம் மொழி மெய் என்னும் திரிகரணத்தின் செயலாதலால்,
அவற்றில் வாக்கின் செயலான உரைத்தலை மனத்தின்மேலேற்றி “உரை நெஞ்சமே” என்றது,
ஓருறுப்பின் வினையை மற்றோருறுப்பின் மேலேற்றிக்கூறும் ஒருவகை உபசார வழக்காம்;
வாயினால் துதித்தற்கும் மனத்தின் நினைப்பு இன்றியமையாது வேண்டுதலால், அத்தலைமைபற்றி, இங்ஙனம் புறக் கரணத்தின்
செயல் அகக்கரணத்தின் மேலேற்றப்பட்ட தென்க. இது பிரபந்தத்தின் தொடக்கமாதலால், நூல்முழுவதையும் பாடித்
தலைக்கட்டுதற்குத் தம்மனத்தைப்பலவழிகளிற் செல்லாமல் ஒருவழிப்படுமாறு உடன்படுத்தவேண்டியவராய்
“மாலலங்காரனை எஞ்ஞான்றும் உரை நெஞ்சமே” என்று இங்ஙனம் அதற்கு உபதேசித்தன ரென்க.
‘நீராழிவண்ணனை’ முதலிய விசேஷணங்களால், அப்பெருமானுடைய பலவகை மகிமைகளையும் இனிமையையும்
அந்த நெஞ்சத்துக்கு எடுத்துக்காட்டியபடியாம்.

“நீராழிவண்ணனை” என்பது முதலியன, ஒருபொருளின்மேல்வந்த பலபெயர்கள். விசேஷணம் விசேஷ்யம் என்ற இரண்டிலும்
வேற்றுமையுருவை விரித்துரைப்பது, ஒருவகைப்பாஷைநடை; இதனை, அடுத்த செய்யுள்களிலும் காண்க.
“மாலலங்காரனை” என்பது, விசேஷ்யம். மற்றவை – விசேஷணம். மாலலங்காரன் என்பது – அழகரதுபரியாயநாமங்களில் ஒன்று.

ஆழி என்ற சொல் – முதலடியில் கடலென்ற பொருளிலும், இரண்டாமடியில் மோதிரமென்ற பொருளிலும்,
மூன்றாமடியில் சக்கராயுத மென்ற பொருளிலும், நான்காமடியில் தேருருளையென்ற பொருளிலும் வந்தது.
“சாகரம் தேர்க்கால் சக்கரம் வட்டம், மோதிர மென்ன மொழிந்தவை யைந்தும், நேமியு மாழியுமென நிகழ்த்தினரே” என்ற
பிங்கலந்தை இங்கு நோக்கத்தக்கது. கடலைக்குறிக்கும்போது ஆழ்ந்துள்ளது ஆழி என்றும் (இ – கருத்தாப்பொருள்விகுதி),
சக்ராயுதத்தைக் குறிக்கும் போது பகைவரை அழிப்பது ஆழி என்றும் (கருத்தாப்பொருள்விகுதி புணர்ந்து கெட்டுப் பகுதிமுதல்நீண்டபெயர்),
மற்றவற்றைக்குறிக்கும்போது வட்டவடிவுடையது என்றும் காரணப்பொருள் காண்க.
பரம் வியூகம் விபவம் அந்தரியாமி அர்ச்சை என்னும் எம்பெருமானுடைய ஐந்துநிலைகளுள்
திருப்பாற்கடலிலெழுந்தருளியிருக்கிற பெருமான் வியூகமூர்த்தியாவன்.

நீரம் வர்ணம் ஸ்ரீ: என்ற வடசொற்கள், நீர் வண்ணம் சீர் என விகாரப்பட்டன வென்பர்;
இவற்றைத் தனியே தமிழ்மொழியென்பாரு முளர். நாதன், நிர்மலன், தைவம், அலங்காரன் – வடசொற்கள்;
நிர்மலன் என்ற திருநாமம், எம்பெருமான் இயல்பிலே யாதொருகுற்றமும் தன்னிடத்தில் இல்லாதவனென்னும் பொருளோடு,
தனக்குச் சரீரமாக அமைகின்ற சராசரங்களின் வினைத்தொடர்பு ஒன்றும் தன்னிடம் பொருந்தப்பெறாதவனென்ற கருத்தையுங் கொண்டது.
திருமகள் – செல்வத்துக்குஉரிய தலைவி; பெரியபிராட்டியா ரென்பது, இவளுக்குச் சம்பிரதாயத்திருநாமம்,
கேள்வன் – கேண்மையென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்; வ் – பெயரிடை நிலை;
உறவும் நண்பும் அன்பு முடையவ னென்பது, இதன் பொருள். கருடன் எல்லாப்பறவைகட்கும் அரசனாவதோடு வேத
ஸ்வரூபியும் பரமபதத்து நித்யசூரிகளில் ஒருவரு மாதலால், ‘தெய்வப்புள் என்று சிறப்பித்துக்கூறினார்.
பெரியதிருவடி என்பது, இவரது சம்பிரதாயநாமம். ‘தெய்வப்புள்ஊர் கூராழி மாயன்’ என்ற சொற்சேர்த்தி
“ஆனையின்துயரந்தீரப் புள்ளூர்ந்துசென்றுநின் றாழிதொட்டானை” என்றபடி அதிவிரைவாகக் கருடன் மீது வந்து
சக்கராயுதத்தையேவி முதலையைத் துணித்துக் கஜேந்திராழ்வானைப் பாதுகாத்த வரலாற்றை ஞாபிக்கும்.
இது, ஆபத்காலத்தில் அடியார்களைத் துயர்தீர்த்துப்பாதுகாத்தற்கு உரிய சிறந்த உபகரணங்களையும் திறமையையும்
உடையவனென்பதைக் காட்டும். கொற்றம் – (பகைவரைக்) கொன்று அடைவது என வெற்றிக்குக் காரணக்குறி.
சூரியனுக்கு வெற்றி – எங்கும் இருளை இருந்ததுதெரியாதபடி ஒழித்தல். வெய்யோன் – வெம்மையையுடையவன்;
உஷ்ணகிரணன். சூரியனதுதேர் ஸம்வத்ஸரரூபமான ஒற்றைச்சக்கரத்தையுடைய தென்று புராணம் கூறும்.

எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக்கூறவேண்டுவது மரபாதலால், “நீர்” என்று தொடங்கினார்;
“சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள்,
கார் மலை சொல் எழுத்துக் கங்கை நீர் கடல் பூத் தேர் பொன், ஏருறு மிவை மூவாறும் இதன்பரியாயப்பேரும்,
ஆருமங்கலச்சொல் செய்யு ளாய்ந்து முன்வைக்க நன்றாம்”என்பதுகாண்க.

——————

உரை மாற்றம் உண்டு என் பொறி ஐந்தும் உன்னிடத்து அன்றி உண்ணும்
இரை மாற்றம் வேண்டும் இதுவே என் விண்ணப்பம் என் அப்பனே
உரை மாற்று அளவு அற்ற பொன் உடுத்தாய் வில் எடுத்து இலங்கை
வரை மாற்றலரைச் செற்றாய் அழகா கரு மாணிக்கமே –2-

(இ – ள்.) என் அப்பனே – எனது ஸ்வாமீ!
உரை மாற்று அளவு அற்ற பொன் உடுத்தாய் – உரைகல்லிலே உரைத்து நோக்கி யுணரத் தக்க மாற்றின் அளவு கடந்த
(மிகச்சிறந்த) பொன்மயமான ஆடையை (பீதாம்பரத்தை) உடுத்துக்கொண்டுள்ளவனே!
வில் எடுத்து இலங்கை வரை மாற்றலரை செற்றாய் – கோதண்டத்தைக் கையிலேந்தி (அதுகொண்டு அம்புதொடுத்துப் பொருது)
இலங்காபுரியிலுள்ள மலைபோலும் வலிய பகைவர்களான இராவணாதி ராக்ஷசர்களை அழித்திட்டவனே!
அழகா – அழகனே!
கரு மாணிக்கமே – கருநிறமுடையதொரு மாணிக்கம் இருந்தால் அதுபோன்ற நிறத்தையும் ஒளியையுமுடையவனே! –
உரை மாற்றம் உண்டு – (அடியேன் உன்பக்கல்) சொல்லுஞ்சொல் (ஒன்று) உளது; (அது யாதெனில், -)
என்பொறி ஐந்தும் உன்னிடத்து அன்றி உண்ணும் இரை மாற்ற வேண்டும்–எனது ஐம்பொறிகளும் உன்னிடத்தே யன்றிப்
பிறவிடங்களில் அனுபவிக்கிற (விஷயங்களாகிற) ஆஹாரத்தை நீக்கியருளவேண்டும்;
இதுவே என் விண்ணப்பம் – அடியேன் செய்யும் விஜ்ஞாபநம் இதுதான்; (எ – று.)

நம்மாழ்வார் தமது பிரதம பிரபந்தமான திருவிருத்தத்தின் தொடக்கத்தில்
“பொய்ந்நின்றஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும்,
இந்நின்றநீர்மையினியாமுறாமையுயிரளிப்பான்,
எந்நின்றயோனியுமாய்ப்பிறந் தாயிமையோர் தலைவா,
மெய்ந்நின்றுகேட்டருளாய் அடியேன்செய்யும் விண்ணப்பமே” என்றாற்போலவும்,
திருவரங்கத்தமுதனார் தாம் இயற்றுகின்ற இராமாநுசநூற்றந்தாதியின் பாயிரமாக
“சொல்லின் தொகை கொண்டுனதடிப்போதுக்குத்தொண்டுசெய்யும்,
நல்லன்ப ரேத்து முன்நாமமெல்லாம் என்றன்னாவினுள்ளே,
அல்லும்பகலுமமரும்படிநல்கு அறுசமயம்,
வெல்லும் பரமவிராமாநுசவிதென்விண்ணப்பமே” என்றாற்போலவும் இந்நூலாசிரியர் பிரபந்தத்தொடக்கத்தில்
தமதுஉள்ளக்கொள்கையை இங்ஙனம் எம்பெருமானை விளித்து அவன்சந்நிதியில் விஞ்ஞாபித்தனர்.
“வா யவனைஅல்லது வாழ்த்தாதுகை யுலகந்,
தாயவனையல்லது தாந்தொழா – பேய்முலைநஞ்சு,
ஊணாகவுண்டானுருவொடுபேரல்லால்,
காணா கண் கேளா செவி,”
“கேசவனையே செவிகள்கேட்க திருவரங்கத்,
தீசனையே சென்னியிறைஞ்சிடுக – நேசமுடன்,
கண்ணனையே காண்க விருகண் ணிணர்கொள்காயாம்பூ,
வண்ணனையேவாழ்த்துகவென்வாய்” என்றபடி மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்ச இந்திரியங்களுள் கண்
எம்பெருமானையே தரிசிப்பதும், செவி அப்பெருமானது வைபவங்களையே கேட்பதும், வாய் அவனையே துதிப்பதும்,
மூக்கு அவன்சாத்திய திருத்துழாயின் திவ்வியபரிமளத்தையே மோப்பதும், கைகால் தலை முதலிய உறுப்புக்களையுடைய
மெய் அவனைத்தொழுதல் வலஞ்செய்தல் வணங்குதல் முதலியன செய்வதுமாக இங்ஙனம் எல்லாப் பொறிகளும்
பகவத் விஷயத்தையே தாம்தாம் நுகரும்பொருளாகக் கொண்டு ஈடேறவேண்டு மாதலால்,
“கண்டுகேட்டுண்டுயிர்த்துற்றறியுமைம் புலனும், ஒண்டொடிகண்ணே யுள” என்றவாறு சிற்றின்பவிருப்பத்தால்
விஷயாந்தரங்களிற்சென்று அழியாதபடி அருள்புரியவேண்டுமென்று பிரார்த்தித்தவாறாம்.
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாங், கண்ணனெம்பெருமா னென்றென்றே,”
“வாஸுதேவஸ் ஸர்வம்” என்றபடி தாரக போஷக போக்யாதிகளெல்லாம் நீயேயாம்படி அருள்புரியவேண்டுமென்க.

உரைமாற்றம் – எதிர்காலவினைத்தொகை. இரை – உணவு; இங்கு, நுகரப்படும்பொரு ளென்றமாத்திரமாய் நின்றது;
சிறப்புப்பெயர், பொதுப்பொருளின் மேலது; வாய்க்குஉரிய விஷயம் ஐம்பொறிகளுக்குமுரிய விஷயங்களை உணர்த்துதல் காண்க.
விண்ணப்பம் – விஜ்ஞாபந மென்ற வடசொல்லின் சிதைவு. மாற்று – பொன்னின் தரம்.
பொன் – இங்கு, கருவி யாகுபெயராய், பொற்பட்டாடையைக் குறித்தது. இலங்கை – லங்கா என்ற வடசொல்லின் விகாரம்;
கடல்சூழ்ந்த தீவு; இது, தென்கடலினிடையேயுள்ளது. இலங்கைவரை மாற்றலரைச் செற்றது, ஸ்ரீராமாவதாரத்தில்,

வரைமாற்றலர் – உவமைத்தொகை. “இலங்கை வரை மாற்றலர்” என்பதற்கு – திரிகூட பருவதத்தின்மேலுள்ள இலங்கையில்
வசிக்கிற பகைவர்க ளென்று உரைப்பாரு முளர். இனி, (தான் திருவவதரித்தஇடமான திருவயோத்தி முதல் தென்கடலிடைத்தீவான)
இலங்காபுரியளவும் பகைவர்களை அழித்தவனே யென்று உரைப்பினும் அமையும்; என்றது,
இளமையில் தாடகையையும் சுபாகு முதலியோரையும், பின்பு தண்டகாரணியத்தில் விராதன் கரதூஷணாதியர் கவந்தன்
என்னும் அரக்கர்களையும் அழித்ததையும் உட்கொண்டதாம். மாற்றலர் – மனத்தைமாற்றுதலையுடையவரெனப் பகைவர்க்குக் காரணக்குறி.
மாணிக்கம் – மாணிக்யம் என்ற வடசொல்லின் விகாரம். மாணிக்கம் இயல்பிற்செந்நிறமுடையதாதலால், “கருமாணிக்கம்” என்றது,
இல்பொருளுவமையாகக் கற்பித்துக்கூறிய தென்க.

————

மாணிக்க நகம் புரை மேனி மாலுக்கு வார் சடையோன்
பாணிக் கனகம் பலி ஒழித்தானுக்கு பச்சைத் துழாய்
ஆணிக் கனக முடி அலங்காரனுக்கு அண்டம் எல்லாம்
பேணிக்கு அனகனுக்கு பித்தர் ஆனவர் பித்தர் அன்றே –3-

(இ – ள்.) மாணிக்க நகம் – மாணிக்கமயமானதொரு மலையை,
புரை ஒத்த, மேனி – திருமேனியையுடைய,
மாலுக்கு – திருமாலும், –
வார் சடையோன் – நீண்ட (கபர்த்தமென்னுஞ்) சடையை யுடையவனான சிவபிரானது,
பாணி – கையிலே ஒட்டிக்கொண்ட,
கனகம் – பெரிய (அல்லது பாரமான) (பிரம) கபாலத்தைக்கொண்டு இரக்கிற,
பலி – பிச்சையை,
ஒழித்தானுக்கு – நீக்கியருளியவனும், –
அண்டம் எல்லாம் பேணிக்கு – அண்டகோளங்களெல்லாவற்றையும் விரும்பிப்பாதுகாப்பவனும், –
அனகனுக்கு – தோஷமில்லாதவனுமாகிய, –
பச்சை துழாய் – பசுமையான திருத்துழாய் மாலையைத் தரித்த,
ஆணி கனகம் முடி அலங்காரனுக்கு – ஆணிப் பொன்னாலாகிய கிரீடத்தை யுடைய அழகப்பிரான் விஷயமாக,
பித்தர் ஆனவர் – பக்திப் பித்துக்கொண்டவர்,
பித்தர் அன்றே – (மற்றை விஷயங்களிற்) காதற்பித்துக் கொண்டவர் போல இகழத் தக்கவ ரல்லர்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

“மொய்த்துக்கண்பனிசோரமெய்கள்சிலிர்ப்பவேங்கியிளைத்துநின்,
றெய்த்துக்கும்பிடுநட்ட மிட்டெழுந்தாடிப்பாடியிறைஞ்சியென்,
னத்தனச்சன ரங்கனுக்கடியார்களாகியவருக்கே, பித்தராமவர்
பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும்பித்தரே” என்ற பெருமாள் திருமொழிப் பாசுரத்தை அடியொற்றியது இச்செய்யுள்.
நிலை யற்றதும் இகழத் தக்கதுமான சிற்றின்பத்தி லாசை மிகுதியால் பெண் மண் பொன் முதலிய விஷயாந்தரங்களிற்
பித்தேறித் திரிபவராய்ப் பகவத்பக்திசெய்யாதவரனைவரும் பித்தரேயன்றி, உரிய விஷயமான எம்பெருமான்
திறத்தில் பத்திகாரியமான பித்தேறித் திரியும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பித்தரல்லர் என்பது இதன்கருத்து.
இந்தப் பக்திப்பித்து, நற்கதிக்குக்காரணமான ஞானகாரியம்; மற்றைய காதற்பித்துக்களோ, தீக்கதிகளிற் புகுத்தும்
அஜ்ஞாந காரியம் என்ற வேறுபாட்டை உணர்க; என்றது, தாம் இப்பத்திப்பித்துக்கொள்ளவிரும்பிக் கூறியவாறாம்.

அந்தாதித் தொடையாக அமைந்த இந்நூலிலே முந்தின செய்யுளின் இறுதிச் சொல்லான மாணிக்கத்துக்கு அடைமொழியாய்
நின்ற கருமையை இச்செய்யுளின் முதற்சொல்லான மாணிக்கத்துக்கும் அடைமொழியாக வருவித்து இயைத்து,
கரியதொருமாணிக்கமயமான மலைபோல நிறங்கொண்டு விளங்குந் திருமேனியையுடைய திருமா லென்க;
“கருமாணிக்கக்குன்றத்துத்தாமரைபோல், திருமார்வுகால்கண்கைசெவ்வாயுந்தியானே,”
“கருமாணிக்கமலைமேல் மணித்தடந்தாமரைக்காடுகள்போல்,
திருமார்வு வாய் கண் கை யுந்தி காலுடை யாடைகள் செய்யபிரான்” என்றார் திருவாய்மொழியிலும்.
இனி, நிறத்துக்கன்றி ஒளிக்கும் பெறலருமைக்கும் மாணிக்க மலையை உவமை கூறியதாகக் கொண்டு உரைத்தலும் அமையும்;
“திகழும் மணிக்குன்றமே யொத்து நின்றான்” என்பது திருவாய்மொழி.
மால் – பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திருமகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இவற்றை யுடையவன்.

சிவபெருமான் இரத்தலைத் திருமால் ஒழித்த வரலாற்றுமுகத்தால், எம்பெருமானுடைய பரத்வத்தை வெளியிட்டவாறு.

நகம் என்ற வடமொழி, நடவாதது என்று உறுப்புப்பொருள்பெறும்; அசலம் என்றபடி. புரை – உவமவுருபு,
ஆணிப்பொன் – மாற்றறிதற்குக்கொள்ளும் உயர்தரப்பொன்; இதற்குமேலே மாற்றில்லை யென்னும்படியான சிறந்தபொன் என்றும் உரைப்பர்.
மயிர்முடியப்படுவதென்னுங் காரணத்தால் தலையையுணர்த்துகிற முடியென்ற பெயர்,
இங்கு இடவாகுபெயராய், அதிலணியுங் கிரீடத்தைக் குறித்தது. அண்டம் – உலகவுருண்டை.
காத்தற்றொழிற்கடவுளாதலால், “அண்டமெல்லாம்பேணி” என்றார். பேணி என்ற பெயரில், இ – கருத்தாப்பொருள்விகுதி.
பேணுதல் – மிக்கஅன்போடுகுறிக்கொண்டுபாதுகாத்தல். இனி, அண்டங்களையெல்லாம் விரும்பியமுது செய்தவ னென்றலுமொன்று;
பிரளயகாலத்திலே வயிற்றில் வைத்துக் காத்தவ னென்க. அநகன் – ந + அக; வடமொழிப்புணர்ச்சி; ந – எதிர்மறை குறிக்கும்;
அகம் – குற்றம். வேறு இல்லை உண்டு என்பனபோல, அன்று என்பதும் இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொதுவாக
வழங்குதலை, இலக்கியங்களிற் காணலாம்; இது, புதியனபுகுதல்;
ஆகவே, “பித்தரானவர் பித்தரன்று” என்ற முடிபு வழுவும் வழுவமைதியு மாகாது வழாநிலையின்பாற்படு மென்க.

பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் வரிவடிவில் மிக்கவேறுபாடு இருப்பினும், ஒலிவடிவில் மிக்கவேறுபாடு
இல்லாமைபற்றி, திரிபு யமகம் சிலேடை, இவற்றில் நகர னகரங்களை அபேதமாக்கொண்டு அமைத்தல் மரபாதலால்,
‘மாணிக்கநகம்’ என்னவேண்டியவிடத்து ‘மாணிக்கனகம்’ எனப்பட்டது.
(இங்ஙனம் திரிபுநயத்தின்பொருட்டு வரிவடிவின்வேறுபாடு கருதாது ஒலிவடிவொற்றுமையால் ஒன்றுக்கு ஒன்றாகக்
கொள்ளப்பட்ட எழுத்துக்கள்;இப்பதிப்பிலே தடித்தஎழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன.)
மேல் 24, 46,54, 55, 88, 89 – ஆஞ் செய்யுள்களிலும் இது காண்க.

இனி, இச்செய்யுளில், “மாணிக்கநகம்”, “பாணிக்கநகம்பலி”, “ஆணிக்கநகமுடி,” “பேணிக்கநகனுக்கு” என நான்கு
அடிகளிலும் பொதுநகரமான பாடங் கொள்ளுதல் பொருந்துமாறுங் காண்க.

————-

பித்து அரும்பா நின்ற நெஞ்சனை வஞ்சனை பேர் உலகோர்
கைத்து அரும்பாவி எனும் கடையேனை கடைக் கணியாய்
முத்தரும் பாரும் தொழும் அழகா வண்டு மூசும் துழாய்ப்
புத்தரும்பு ஆர் முடியாய் அடியாரைப் புரப்பவனே –4-

(இ – ள்.) முத்தரும் – முத்திபெற்றவர்களும்,
பாரும் – இவ்வுலகத்தவர்களும்,
தொழும் – வணங்கப்பெற்ற,
அழகா – அழகனே! –
வண்டு மூசும் வண்டுகள் மொய்க்கப்பெற்ற,
துழாய் – திருத்துழாயின்,
புது அரும்பு – புதிய (அன்று அரும்பிய) அரும்புகள்,
ஆர் – பொருந்திய,
முடியாய் – திருமுடியையுடையவனே!
அடியாரை புரப்பவனே – அடிமைப்பட்டவர்களைப் பாதுகாத்தருள்பவனே! –
பித்து அரும்பா நின்ற நெஞ்சனை – (விஷயாந்தரங்களிலே) ஆசைப்பித்து உண்டாகின்ற மனத்தை யுடையேனும்,
வஞ்சனை – வஞ்சக முடையேனும்,
பேர் உலகோர் கைத்து அரும் பாவி எனும் கடை யேனை – பெரிய உலகத்திலுள்ளார் (பலரும்) வெறுத்து ‘கொடியபாவி
(இவன்)’ என்று இகழ்தற்கு உரிய கடைப்பட்டவனுமாகிய என்னை,
கடைக்கணியாய் – கடாக்ஷித்தருள்வாய்; (எ – று.)

நற்குண நற்செய்கைகள் சிறிதுமின்றித் தீக்குணந் தீச்செயல்களிலே ஊன்றிநின்ற எளியேனுக்கு நீ
கடாக்ஷித்தருளினாலன்றி உய்யும்வகையில்லை யென்பதாம்.

வஞ்சன் – “பண்டே யுன்தொண்டாம் பழவுயிரை யென்னதென்று, கொண்டேனைக் கள்வனென்று” என்றபடி
ஆத்மாபஹாரஞ்செய்த யான் என்றவாறு; இயல்பிலே எம்பெருமானுக்கு அதீநனான தன்னை அங்ஙனம்
அடிமையென்று கருதாது ஸ்வதந்திரனென்று எண்ணி அதற்கு ஏற்ப ஒழுகுகின்றேன் என்க.
அரும் பாவி – போக்கவொண்ணாத தீவினைகளை யுடையவன்;
“அரும்பாதகன் பொய்யன் காமுகன் கள்வன்” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும். கடையேன் – அதமனான யான்;
தன்மை யொருமைக் குறிப்பு வினையாலணையும் பெயர். கடைக்கணித்தல் – கடைக்கண்ணால் நோக்குதல்;
பெயரின்மேல்வந்த வினை; ஆய் – ஏவலொருமைவிகுதி.
‘கடையேனைக் கடைக்கணியாய்’ என்றவிடத்துச் சொல் நயம் கருதத்தக்கது. மீளாவுலகமாகிய முத்தியை யடைந்து
அங்கு நிரதிசய வாநநதத்தை யனுபவிப்பவர்களும் அதனைவிட்டுத் தன்னையவாவித் தொழும்படியான அழகன் என,
அப்பெருமானுடைய திவ்விய சௌந்தரியாதிசயத்தை எடுத்துக் காட்டியவாறாம்.

———–

புரந்தரன் ஆம் எனப் பூபதி ஆகி புகர் முகமாத்
துரந்து அரசு ஆளில் என் நல் குரவு ஆகில் என் தொல் புவிக்கு
வரம் தர மாலிருஞ்சோலை நின்றார்க்கு என் மனத்துனுள்ளே
நிரந்தரமாய் அலங்காரர்க்கு இங்கு ஆட்பட்டு நின்ற பின்னே –5–

(இ – ள்.) தொல் புவிக்கு வரம் தர மாலிருஞ்சோலை நின்றார்க்கு – பழமையான நிலவுலகத்திலே யுள்ளவர்களுக்கு
வேண்டும் வரங்களைக் கொடுத்தருளுதற்பொருட்டுத் திருமாலிருஞ் சோலைமலையில் எழுந்தருளி நின்றவராகிய,
அலங்காரர்க்கு – அழகருக்கு,
இங்கு – இவ்விடத்தில் (இம்மையில்),
நிரந்தரம் ஆய் – இடைவிடாமல் (எப்பொழுதும்),
என் மனத்தினுள்ளே ஆள் பட்டு நின்ற பின் – என்மனப்பூர்வமாக (யான்) அடிமைப்பட்டு நின்ற பின்பு, –
புரந்தரன் ஆம் என பூபதி ஆகி புகர் முகம் மா துரந்து அரசு ஆளில் என் ‘(இவன்) இந்திரனேயாவன்’ என்று (அனைவருஞ்)
சொல்லும் படி அரசனாகிச் செம்புள்ளிகளுள்ள முகத்தையுடைய பட்டத்துயானையை ஏறிநடத்தி அரசாண்டா லென்ன?
நல்குரவு ஆகில் என் – வறுமைப்பட்டாலென்ன? (எ – று.)

“இன்பந்தரு பெருவீடு வந்தெய்திலென் எண்ணிறந்த,
துன்பந்தரு நிரயம் பல சூழிலென் தொல்லுலகில்,
மன்பல்லுயிர்கட்கிறையவன் மாயனெனமொழிந்த,
அன்பனனகனிராமாநுசனென்னையாண்டனனே” என்ற பாசுரத்தை ஒருசார் அடியொற்றியது இச்செய்யுள்.
அழகர்க்கு யான் அடிமைப்பட்டபின்பு எனக்குச் செல்வமும் வறுமையும் இவ்வுலக வின்பமும் துன்பமும் சமமேயாம்;
இவையெவற்றையும் ஒருபொருளாகக் கருதேன் என்று தமது உள்ளக்கிடையின் துணிவை வெளியிட்டவாறாம்.

புரந்தரன் என்ற வடமொழிப்பெயர், (பகைவர்களுடைய) நகரங்களை அல்லது உடல்களை அழிப்பவனென்று
காரணப்பொருள்பெறும்; புரம் – ஊரும், உடலும். பூபதி – பூமிக்குத் தலைவன்; நிலவுலகத்தையாள்பவன்; வடசொல்.
யானைக்கு முகத்திற் செம்புள்ளிக ளிருத்தல், உத்தமவிலக்கணம்;
“தீயுமிழ்சிறுகணுஞ் செம்புகரு முடைத்தாய்” என்றார் பிறரும். ‘மா’ என்ற விலங்கின் பொதுப்பெயர்.
‘புகர்முகம்’ என்ற அடைமொழியினால், யானையை யுணர்த்திற்று. நல்குரவு – நுகரப்படும்பொருளொன்று மில்லாமை;
நல்கூர் என்ற பகுதியின் தொழிற்பெயர். புவிஎன்ற சொல், வடமொழியில் பூ என்ற பெயரின் ஏழாம்வேற்றுமைவிரி யாயினும்,
தமிழில் வரும்போது பெயர்மாத்திரமாய் வேற்றுமையுருபுகளை யேற்றற்கு இடமாம்.

———-

நின்ற பிராணன் கழலும் முன்னே நெஞ்சமே நினையாய்
சென்ற பிராயம் வம்பே சென்றதால் திரு மங்கை கொங்கை
துன்று அபி ராமனை சுந்தரத் தோளனை தோளின் மல்லைக்
கொன்ற பிரானை அடைந்து அடியாரொடும் கூடுகைக்கே –6-

(இ – ள்.) நெஞ்சமே – மனமே! –
சென்ற பிராயம் வம்பே சென்றது – (இதுவரை) கழிந்த ஆயுள் (முழுவதும்) வீணேபோய்விட்டது; (இனியாயினும்),
நின்ற பிராணன் கழலும் முன்னே – (உடலில்) நின்ற உயிர் (அவ்வுடலைவிட்டு) நீங்குதற்கு முன்னே, –
திருமங்கை கொங்கை துன்று அபிராமனை – திருமகளுடைய தனங்களை நெருங்கித் தழுவுகிற அழகனும்,
சுந்தரம் தோளனை – அழகிய திருத்தோள்களை யுடையவனும்,
தோளின் மல்லை கொன்ற பிரானை – புஜபலத்தால் மல்லர்களைக் கொன்ற உபகாரகனுமான எம் பெருமானை,
அடைந்து – சரணமடைந்து,
அடியாரொடும் கூடுகைக்கு – (அவனுடைய) அடியவர்களோடுஞ் சேர்வதற்கு,
நினையாய் – கருதுவாய்.(எ – று.)

ஆல் – ஈற்றசை; செய்யுளினிறுதியில் நிற்பதுமாத்திரமே யன்றி, செய்யுளடியினிறுதியிலும், வினைமுற்றினிறுதியிலும்
நிற்கும் இடைச்சொல்லும் பொருள்தராதாயின் ஈற்றசையெனவே படும். இனி, ஆல் – ஆதலால் என்பதன் விகாரமுமாம்.,
சுந்தரத் தோளன் = ஸுந்தரபாஹு. திரு மங்கை – இலக்குமி; திருவாகிய மங்கை என இருபெயரொட்டு;
என்றும் மாறாத இளமைப்பருவமுடைமையால், “மங்கைழுஎனப்பட்டாள்.

இதுவரை வீணேகழிந்த நாள்களைக்குறித்துக் கழிவிரக்கங்கொள்ளு கிறவளவோடு நில்லாமல்,
இனி வாழும் நாளுள் ஒருபொழுதேனும் எம்பெருமானைத் தியானித்தாலும் அது பயன்படும் என்பது தாற்பரியம்.

————-

கூடுகைக்கும் சரமத்து அடியேற்குக் கொடிய வஞ்சச்
சாடு உகைக்கும் சரணம் தர வேண்டும் தடத்து அழுந்தி
வாடுகைக் குஞ்சரம் காத்தீர் விண் வாழ்க்கைக்கும் வாள் அரக்கர்
வீடுகைக்கும் சரம் கோத்தீர் விடை வெற்பின் வித்தகரே –7-

(இ – ள்.) தடத்து – தடாகத்திலே,
அழுந்தி – (முதலையின்வாய்ப்பட்டு) மூழ்கி,
வாடு – வாட்டமடைந்த,
கை – துதிக்கையையுடைய,
குஞ்சரம் – யானையை,
காத்தீர் (அங்குச்சென்று) பாதுகாத்தருளியவரே!
விண் வாழ்கைக்கும் – வானுலகத்தவர் (தேவர்கள்) வாழும்படியாகவும்,
வாள் அரக்கர் வீடுகைக்கும் – கொடிய இராக்கதர்கள் அழியும்படியாகவும்,
சரம் கோத்தீர் – (ஸ்ரீ ராமாவதாரத்திலே) அம்புகளை (விற்கொண்டு) தொடுத்திட்டவரே!
விடை வெற்பின் வித்தகரே – வ்ருஷபகிரியாகிய திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற ஞானஸ்வரூபியே! –
கூடு கைக்கும் சரமத்து – உடம்பை (உயிர்) வெறுத்துநீங்கும்படியான அந்திமகாலத்திலே,
அடியேற்கு – (நுமக்கு) அடிமைப்பட்டவனான எனக்கு,
கொடிய வஞ்சம் சாடுகைக்கு – கொடுமையான வஞ்சனைக் கருத்துக்களை (என் மனத்தில் எழ வொட்டாதபடி) அடித்துத்தள்ளுதற்காக,
உம் சரணம் தர வேண்டும் – உமது திருவடிகளைத் தந்தருளவேண்டும்; (எ – று.)

உடம்பைவிட்டு உயிர்நீங்கிப்போங்காலத்துக் கர்மவசத்தால் எந்த நினைப்பு உண்டாகிறதோ அந்தப்பிறவி அவ்வுயிர்க்கு
அடுத்தபடியாக நேர்கின்றது என்பது நூல்துணிபாதலால், அங்ஙனம் அக்காலத்து அடியேனுக்குத் தீயசிந்தனையெழாதபடி
உன்திருவடிகளை என்மனத்திற் பதியவைத்தருளவேண்டு மென்பதாம்.
இனி, “காடிய வஞ்சஞ் சாடுகைக்கு” என்பதற்கு – (யமதூதர்களுடைய) கொடிய வஞ்சனைச் செயல்களை
அடித்துத்தள்ளுதற்கு என்று உரைப்பினும் அமையும். சரமத்துத் தரவேண்டும் என இயையும்.

உயிராகிய பறவை வந்துபுகுந்து சிலகாலம் தங்கிப் பின்பு நீங்கிச்செல் லுங் கூடுபோலுதலால்,
உடம்பு, “கூடு” எனப்பட்டது; உவமையாகுபெயர்;

“கூடுவிட்டு இங்கு ஆவிதான்போயினபின்பு” என்றார் பிறரும். சரமம் – முடிவு.
ஆதிமூலமேயென்று கூவியழைத்து ஓலமிடுதற்கு உபயோகமாகத் துதிக்கைமாத்திரமே வெளிபட்டுநிற்க மற்றை
உடம்புமுழுவதும் முதலையின் வாய்ப்பட்ட தென்னுங்கருத்து அமைய ‘தடத்து அழுந்திவாடுகைக்குஞ் சரம்’ என்றனரென்க;
“கைம்மானமதயானையிடர்தீர்த்தகருமுகிலை,”
“கரா மலையத் தளர் கைக்கரி யெய்த்தே, அராவணையிற்றுயில்வோ யென” என்றவற்றோடு இதனை ஒப்பிடுக.
விண் – விண்ணவர்க்கு இடவாகுபெயர். ஒரு காலத்திலே தேவர்களெல்லாரும் இராவணன் முதலிய ராக்ஷசர்களின்
உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணுவைச் சரணமடைந்து வேண்ட, அப்பிரான் தசரத சக்கரவர்த்தி குமாரனாக
ஸ்ரீராமனாய்த் திருவவ தரித்து அரக்கர்களனைவரையும் அழித்து நல்லோரைக் காத்தருளின னென்க.
வாள் அரக்கர் – வாள்போன்ற அரக்க ரென உவமைத்தொகை; கொடுமையால் எப்பொழுதும் பிறர்க்குத் தீங்கு செய்தற்
பொருட்டு வாளாயுதத்தை யேந்திநிற்கின்ற அரக்க ரெனினும் அமையும்.

திருமாலிருஞ்சோலைமலைக்கு ‘ருஷபகிரி’ யென்று பெயர்வந்ததன்காரணம்:-
தருமதேவதை பிரளயகாலத்திலும் தான்அழியாதிருக்கும் உபாயங் கருதித் திருமாலைக்குறித்துத்தவம்புரிந்து வரம்பெற்று
மலைவடிவமாகி அந்த அழகப்பிரானைத் தன்மீதுகொண்டு நிலைபெற்றது எனவும்,
தருமதேவதைக்கு விருஷபவடிவம் உள்ளதனாலும் தருமத்துக்கு விருஷமென்று ஒரு பெயர் உள்ளதனாலும்
அம்மலை விருஷபகிரியென்றும் விருஷகிரியென்றும் வழங்கப்பட்ட தெனவும் நூல்கள் கூறும்;
“தரும மோருருத்தாங்கி மால் பத்தியின்றலைப்பட், டொருமையோங்கிய மாலிருஞ்சோலை
சூழ்நாட்டின், பெருமை யாவரே பேசுவார்” என்ற கூடற்புராணமுங் காண்க. இதுநிற்க:

அனந்தகுண பாண்டியனைக் கொல்லுதற்பொருட்டுச் சமணர்கள்செய்த அபிசாரவோமத்தினின்று தோன்றிய பசுவடிவமான
அசுரன் அச்சமணர்கள் விருப்பத்தின்படி பாண்டியராஜனைக் கொல்லுதற்காக மதுரையை அணுகியபொழுது,
அவ்வரசனும் அந்நகரத்தாரும் சோமசுந்தரக்கடவுளை வணங்கி முறையிட, அச்சிவபெருமான் தமது சந்நிதானத்திலுள்ள
ருஷப வடிவமான நந்தியைநோக்கி ‘சமணர்களேவியபசுவை நீபோய் வென்றுவரக் கடவாய்’ என்று கட்டளையிட்டவளவில்,
அவ்விடபம் ஆரவாரித்துக் கொண்டு விரைந்துசென்று அப்பசுவைக்கிட்டித் தனது பேரழகைக் காட்ட,
அந்த மாயப்பசு அவ்விடபத்தின்மீது இச்சைகொண்டு ஆசைநோய் மிக்கு வலியொடுங்கி, இறந்து விழுந்து மலைவடிவமாயிற்று:
அதுவே பசுமலை; பின்பு அந்த இடபமும் உலகத்தாரறியுஞ்சான்றாகத் தனது தூலசரீரத்தை இடப மலையாக
அங்கே நிறுத்திவிட்டுச் சென்றது என்றலும் உண்டு;
“உலகறிகரி யாத் தன்பேருருவினை யிடபக்குன்றாக் குலவுற நிறுவி” என்ற பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணமும்,
“வினையறவந்திறைஞ்சு மெழின்மழ விடையை நோக்கி,
மனமகிழ்ந்தணிகளோடு மதிதவழுயர்பினோடு,
மினிமை யிற்கிடத்திநாமமிடபவெற்பென்னப் போந்த,
தனுவொடுங்கிடந்த தோங்கத் தண்டலைமலையதாகி,”
“ஆங்கதுகண்டோரெல்லா மதிசயித் தருளைவாழ்த்தித், தாங்கருமுவகைகூர்ந்தார்” என்ற வேம்பத்தூரார் திருவிளையா டற்புராணமுங் காண்க.

சிலப்பதிகாரத்திலே இத்திருமலையும் இதிலெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானும் பாராட்டிக்கூறப்பட்டிருத்தலை
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின், பெருமால் கெடுக்கும் பிலமுண்டாங்கு,
விண்ணோ ரேத்தும் வியத்தகு மரபிற், புண்ணிய சரவணம் பவகாரணியோ, டிட்ட சித்தி யெனும்பெயர் போகி,
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை, முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப், புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்,
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர், பவகா ரணிபடிந் தாடுவி ராயின், பவகாரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்,
இட்ட சித்தி யெய்துவி ராயின், இட்ட சித்தி யெய்துவீர் நீரே, ஆங்கும் பிலம்புக வேண்டுதி ராயின்,
ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது, சிந்தையி லவன்றன் சேவடி வைத்து, வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால்,
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்றகன் றலைப், பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற், கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத்,
தொடிவளைத் தோளி யொருத்தி தோன்றி, இம்மைக் கின்பமு மறுமைக் கின்பமும், இம்மையு மறுமையு மிரண்டு மின்றியோர்,
செம்மையி னிற்பதுஞ் செப்புமி னீயிரிவ், வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை யென்பேன்,
உரைத்தாற் சூரியே னுரைத்தீ ராயின், திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும், கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப்,
புதவம் பலவுள போகிடை கழியன, ஒட்டுப் புதவமொன் றுண்டத னும்பர், வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி,
இறுதியி லின்ப மெனக்கீங் குரைத்தாற், பெறுதிர் போலுநீர் பேணிய பொருளெனும், உரையீ ராயினு முறுகண் செய்யேன்,
நெடுவழிப் புறத்து நீக்குவ னும்மெனும், உரைத்தா ருளரெனி னுரைத்த மூன்றின், கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்,
அருமறை மருங்கி னைந்தினு மெட்டினும், வருமுறை யெழுத்தின் மந்திர மிரண்டும்,
ஒருமுறை யாக வுளங்கொண் டோதி, வேண்டிய தொன்றின் விரும்பினிராடிற், காண்டகு மரபின வல்ல மற்றவை,
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன், பொற்றா மரைத்தா ளுள்ளம் பொருந்துமின்,
உள்ளம் பொருந் துவி ராயின் மற்றவன், புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்,
தோன்றிய பின்னவன் றுணைமலர்த் தாளினை, ஏன்று துயர் கெடுக்கு மின்ப மெய்தி,
மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின், காண்டகு பிலத்தின் காட்சி யீது” எனக் காண்க.

இனி, “கொடியவஞ்சச்சாடுகைக்குஞ்சரணம்” என்ற பாடமும் நேரிது. அது, கொடிய வஞ்சம் சாடு உகைக்கும் சரணம் என்று
பதம்பிரிந்து, கொடிய வஞ்சனையையுடைய சகடாசுரனை உதைத்து அப்பால்தள்ளிய திருவடிகளை அந்திம
காலத்தில் அடியேனுக்குத் தந்தருளவேணு மென்று இனிது பொருள்படும்.
ஸகடம் என்ற வடசொல் சாடுஎன்று விகாரப்படுதலை
“சாடு சாடுபாதனே” எனத் திருச்சந்தவிருத்தத்திலுங் காண்க;
“சாடுதைத்து” என்றார், திருவேங்கடத்தந்தாதியிலும். உகைத்தல் – செலுத்தல்.

—————

பாங்கி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல் –

வித்தகர் உம்பர் அரசு ஆனவனும் விதியும் கங்கை
மத்தகரும் பரவும் அலங்காரர் மழை கொண்ட கார்
ஒத்த கரும் பரஞ்சோதியர் நாமம் உரைத்து அன்னைமீர்
இத்தகரும் பர தெய்வமும் கூத்தும் விட்டு ஏத்துமினே –8-

(இ – ள்.) அன்னைமீர் – தாய்மார்களே! – (நீங்கள்), –
இ தகரும் – இந்த ஆட்டுக்கடாப்பலியையும்,
பர தெய்வமும் – வேறுதெய்வத்தைவழிபடுதலையும்,
கூத்தும் – வெறியாட்டு ஆடுவித்தலையும்,
விட்டு – ஒழித்து, –
வித்தகர் – ஞானஸ்வரூபியும்,
உம்பர்க்கு அரசு ஆனவனும் விதியும் கங்கை மத்தகரும் பரவும் அலங்காரர் – தேவராஜனான இந்திரனும் பிரமனும்
கங்கையைத் தரித்த சிரசையுடையவரான சிவபெருமானும் துதித்துவணங்கிவழிபடப்பெற்ற அழகரும்,
மழை கொண்ட கார் ஒத்த கரும் பரஞ் சோதியர் – நீர்கொண்ட காளமேகம்போன்ற கருமையான சிறந்த ஒளியை
யுடையவருமாகிய எம்பெருமானுடைய,
நாமம் – திருநாமங்களை,
உரைத்து – சொல்லி, ஏத்துமின் – (அப்பெருமானைத்) துதியுங்கள்; (எ – று.)

கீழ் ஏழுபாசுரங்களில் அழகருடைய பலவகை மகிமைகளைக் கூறி அப்பெருமானது திவ்விய சௌந்தரியத்தில் ஈடுபட்டு
அவரது உத்தம புருஷத் தன்மையைக் கருதியதனாலே, அப்பொழுதே அவரைக்கிட்டவேண்டும் படியான ஆசை யுண்டாய்,
அங்ஙனம் அவரைக் கிட்டப் பெறாமையாலே, ஐயங்கார் ஆற்றாமைமீதூர்ந்து தளர்ந்தார்;
அத்தளர்ச்சியாலே தாமான தன்மை குலைந்து, ஆண்பெண்ணாம்படியானநிலைமை தோன்றி, ஒருபிராட்டி நிலையை அடைந்தார்.
ஆண் பெண்ணாதல் கூடுமோ வெனில், –
“கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்,”
“வாராக வாமனனே அரங்கா வட்டநேமிவலவா ராகவா உன்வடிவுகண்டால் மன்மதனும் மடவாராக ஆதரஞ்செய்வன்” என்ப வாதலாலே, இதுகூடும்:
தண்டகார ணியவாசிகளான முனிவர்கள் இராமபிரானதுசௌந்தரியாதிசயத்தில் ஈடுபட்டுத் தாம் பெண்
தன்மையைப் பெறவிரும்பி மற்றொருபிறப்பில் ஆயர்மங்கையராய்க் கண்ணனைக் கூடின ரென்ற ஐதிகியமும் உணர்க.
(“பெண்டிரும் ஆண்மைவெஃகிப் பேதுறு முலையினாள்,”
“வாண்மதர்மழைக்கணோக்கி ……. ஆண்விருப்புற்று நின்றார் அவ்வளைத் தோளினாரே” எனப் பெண் ஆணாகும் இடமும் உண்டு.)
அங்ஙனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப் பெண்மையையேன்றி எம்பெருமானுக்கு உரியவளாகும்
ஒரு பிராட்டியின் நிலைமையை அடையுமாறு எங்ஙனமெனில், –
பரமாத்மாவினது தலைமையும், ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா பரமாத்மாவுக்கே உரியதா யிருக்கையும்,
புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்குமுன் உலகமுழுதும் பெண்தன்மையதாதலும்,
ஜீவாத்மாவினது ஸ்வாதந்திரிய மின்மையும், பாரதந்திரியமும், தாம் எம்பெருமானது சேர்க்கையால் இன்பத்தையும்
பிரிவினால் துன்பத்தையும் அடைதலும், அவனையே தாம் கரணங்களெல்லா வற்றாலும் அனுபவித்து
ஆனந்தித்தலும் முதலிய காரணங்களால், தம்மைப் பிராட்டிமாரோ டொக்கச் சொல்லத் தட்டில்லை.
தோழி நிலைமையும் தாயார்நிலைமையும் முதலியன ஆகின்றபடி எங்ஙனேயென் னில், –
தாம்விரும்பியபொருளின் வரம்பின்மையால் அங்ஙனமாகுமென்க.

தோத்திரப்பிரபந்தங்களில் அகப்பொருட்கிளவித்துறைகளை இடை யிடையேகூறுதல் கவிசமயமாதலை,
இலக்கியங்கள்கொண்டு உணர்க. சிருங் காரரசப்பிரதானமான அகப்பொருட் கிளவித்துறைகளை ஞானநூலாகிய
தோத்திரப்பிரபந்தங்களிற்கூறுதற்குக் காரணம், கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்தின்பிப்பார் போல,
சிற்றின்பங்கூறும்வகையாற் பேரின்பத் தைக்காட்டி நாட்டுதல் என்பர்.
இங்ஙனம் வெளிப்படைப்பொருளால் அந்யாபதேசமாகக்கூறுகிற சிற்றின்பத்துறைச்செய்யுள்கட்கெல்லாம்
ஸ்வாப தேசமாகப் பேரின்பத்தின்பாற்படுத்தும் உள்ளுறைபொருள் உண்டென்பதையும் உணர்க.
அன்றியும், இங்குக் கூறியது, உலகவாழ்க்கைச் சிற்றின்பமன்று: “நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம்” என்றபடி
எம்பெருமானைச் சேரவேண்டுமென்று அவன்பக்கலிலேயுண்டாகின்ற அபேக்ஷையையே கூறியது.
“கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்தன்னோடு, உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்,
மற்றைநங்கா மங்கள் மாற்று” என்றபடி லோகநாயகனுடைய சேர்க்கையை அபேக்ஷிக்கின்ற பேரின்பக்காதலானது –
வேதாந்தநிர்ணயத்தின்படி அன்புசெலுத்த வேண்டிய இடத்தில் அன்புசெலுத்திய தாதலால்,
சிற்றின்பக்காதல்போலன்றி, சகலபாப நிவ்ருத்திக்கும் வீடுபேற்றுக்குமே காரணமாம்.
கண்ணபிரான் பக்கல் கொண்ட காமத்தால் கோபஸ்திரீகள் முத்திபெற்றன ரென்று புராணங்கூறுதலுங் காண்க.

ஓர் உத்தம புருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்துக்குச் சென்றவனாய்,
ஓர் உத்தம கன்னிகையும் தோழியருடன் பூக்கொய்துவிளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே,
ஒவ்வொரு நிமித்தத்தால் தோழியர் பிரிய அக்கன்னிகை அங்குத் தனித்துநின்ற சமயத்திலே,
ஒவ்வொருநிமித்தத்தால் பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவனாய் அப்புருஷன் அங்கு வந்துசேர,
இருவரும் ஊழ்வினைவசத்தால் இங்ஙனம் தற்செயலாய் ஓரிடத்திலே சந்தித்து ஒருவரை யொருவர் கண்டு
காதல் கொண்டு காந்தருவவிவாகக் கிரமத்தாற் கூடி உடனே பிரிய, பின்பு மற்றுஞ் சில களவுப்புணர்ச்சிக்கு
உரிய வகைகளால் அத்தலைமகளது கூட்டுறவைப் பெற்ற தலைமகன், பின்பு அவளை வெளிப்படையாக
மணஞ்செய்து கொள்ளுதற்பொருட்டுப் பொருள்தேடிவருதற்காக அவளைப் பிரிந்துசெல்ல,
அந்நிலையிற் பிரிவாற்றாது மிகவருந்திய தலைமகளைச் செவிலித்தாய்மார் எதிர்ப்பட்டு அவளது
வடிவுவேறுபாட்டை நோக்கி ‘இவள் இங்ஙனம் மெலிதற்குக் காரணம் என்னோ?’ என்று
கவலையுற்றுக் கட்டுவிச்சியைக் குறிகேட்க, அவளும் தன்மரபின்படி ஆராய்ந்து
‘இவளுக்கு முருகக்கடவுள் ஆவே சித்ததொழியப் பிறிதொன்றுமில்லை’ என்றுகூற,
அதுகேட்ட செவிலித்தாயர், உடனே, தலைமகள்பக்கல் தமக்குஉள்ள அன்பின்மிகுதியால்,
ஏதேனும் ஒருதெய்வத்தை வழிபட்டாகிலும் இவளை உயிர்த்திருக்கப்பெறில் அதுவே நமக்கு ஆத்மலாப மென்றெண்ணி,
வழியல்லாவழியிலே யிழிந்து, அதற்குப் பரிஹாரமாக வேலனெனப்படுகிற வெறியாட்டாளனை யழைப்பித்து
அவனைக் கொண்டு ஆடுபலியிடுதல், கள்ளிறைத்தல், இறைச்சிதூவுதல், கருஞ்சோறு செஞ்சோறு வைத்தல்,
ஆவேசம் ஆடுவித்தல் முதலிய காரியங்களை இடைவிடாது ஒன்றன்மே லொன்றாகச் செய்யத்தொடங்க,
நோயொன்றும் மருந்தொன்று மாதலால், தான்காதலித்த புருஷோத்தமனான தலைமகனது தகுதிக்கு ஏலாத
அச் செயல்களை நோக்கித் தலைமகள் மேன்மேல் மிக வருந்த, அவளது துன்பத்தின் மெய்க்காரணத்தை யறிந்த
தோழி அச்சமயத்திற் செவிலியரைநோக்கிச் சிலகூறி வெறிவிலக்கித் தலைவியினது துன்பத்தின்
உண்மைக் காரணத்தை யுணர்த்துகின்ற துறை, இது.

ஆடுபலிகொடுத்தலானது இவளுடம்பினின்று உயிர்நீங்காதபடி செய்து மரணவேதனைப்படுகிற இவளைப் பிழைப்பிக்க
மாட்டாது என்ற பொருளை உட்கொண்டு, “இத்தகர் விட்டு” என்றாள். தான் கரையேறாதவன் பிறரைக் கரையேற்ற
மாட்டாமைபோல, தான் கழுத்தறுப்புண்டு இறக்கிற ஆடு இவளுயிரைப் பிழைப்பிக்கமாட்டா தென்க:
“வீழ்வார்க்கு வீழ்வார் துணை” என்றபடி, இறக்கிற ஓர்உயிரோ மற்றோர் இறக்கிற உயிரைக் காத்தற்குத் துணையாகும்! என்றவாறு.
க்ஷுத்ரதேவதையின் ஆவேசத்தால் வரும் நோய்க்குப்பரிஹாறமாகிய இவ்விழிபொருள் பரம்பொருளிலீடு பாட்டினால் வந்த
நோய்க்குப் பரிஹாரமாகாதென்க.

அன்னைமீர் – உண்மைக்காரணமுரைக் கப்படுதற்கு உரிமையையும், இவளியல்பிற்கு ஏற்றபடி நன்மைசெய்யும்
அன்பையும் உடையவர்களே யென்றபடி. இத்தலைமகள்காதலித்த தேவாதி தேவனான பரதேவதைக்கும் இவர்கள்
இப்பொழுது விரும்பிவழிபடுந் தேவதாந்தரத்துக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு தோன்ற,
‘வித்தகர் உம்பர்க்கரசானவனும் விதியும் கங்கைமத்தகரும் பரவும் அலங்காரர்’ என்றாள்.
இவர்கள் வழிபடுங்கடவுளாகிய முருகன் அழகரைப்பரவுங் கங்கைமத்தகனது இளைய குமார னென்பது கருதத்தக்கது.
‘மழைகொண்டகாரொத்த கரும் பரஞ்சோதியர்’ என்றது, தலைவனது திருமேனியழகில் ஈடுபாடு.
அத் தன்மையானவரது திருநாமத்தைச் சொல்லி அவரைத்துதியு மென்றது, அதுவே இவள் நோயைப்
பரிஹரித்தற்குத் தக்க தென்றபடியாம்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் வெறிவிலக்குத்திருப்பதிகத்தில்
“மருந்தாகுமென்றங்கோர் மாயவலவைசொற்கொண்டு நீர்,
கருஞ்சோறும் மற்றைச்செஞ்சோறும் களனிழைத் தென்பயன்,
ஒருங்காகவேயுலகேழும்விழுங்கியுமிழ்ந்திட்ட,
பெருந்தேவன்பேர் சொல்லகிற்கில் இவளைப்பெறுதிரே” என்று அருளிச் செய்தமை அறிக.
இந்நோய்தீர்த்தற்குத் தலைவனது திருநாமம் தக்கமந்திரமென்க: அம்மந்திரமாகிய மருந்தை இவள் செவியின்
வழியாகச் செலுத்துங்க ளென்றாள்.
திருமாலாகிய தலைமகனால் நேர்ந்த நோய்க்கு அவனது நாமசங்கீர்த்தனமொழிய வேறுபரிஹார மில்லை யென்பதாம்.

தமதுஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்தவளவிலே அவனதுபிரிவைப் பொறாமல் வருந்துகிற
ஐயங்காரது துயரத்தைக் கண்ட ஞானிகள், அவர்பக்கல்வைத்த பரிவா லுண்டான கலக்கத்தால் எம்பெருமான்
உபாயாந்தரங்களால் அடையத்தக்கவனல்ல னென்பதை மறந்து, தேவதாந்தரபஜநத்தாலாவது இவரது
ஆற்றாமையைத் தணிப்பிக்கலாமோ வென்று தொடங்கியநிலையில் ஐயங்காரதுதன்மையை
அறிந்த அன்பர்கள் விலக்கிக்கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.
ஞானிகள் தாம் அங்ஙனம் வழியல்லாவழியிலே இழிவார்களோ வென்னில், –
ஐயங்கார்பக்கல் தாம்கொண்ட பரிவின் மிகுதி தம்மைக் கலங்கப்பண்ணுகையால், அமார்க்கங்களாலேயாகிலும்
பரிஹரிக்கப்போமோ வென்று முயன்றன ரென்க;
(இதனை, “அயோத்தியாபுரியிலுள்ள சனங்களெல்லாரும் இராமனுடைய க்ஷேமத்தின் பொருட்டு
எல்லாத் தேவர்களையும் வணங்கினர்” என்றதனோடு ஒப்பிடுக.)
“அன்னைமீர்” என்று விளித்ததனால், முதியரான நீர் இளையரான எமது வார்த்தையை உபேக்ஷிக்கலாகாதென்று குறிப்பித்தபடி.
‘வித்தகர்….. நாமமுரைத்து ஏத்துமின்’ – தேவாதி தேவனது நாமோச்சாரணமும் அவனைத் துதித்தலுமே
துயரனைத்தையுந் தீர்க்கு மென்றதாம். பிறவுங் கண்டுகொள்க.

பரஞ் சோதியர் – முச்சுடர்களின் ஒளியினும் மேம்பட்ட ஒளியை யுடையவர்.
தகர் என்ற ஆண்மைப்பெயர் ஆட்டுக்கு உரியதாதலை
“மோத்தையுந் தகரு முதளு மப்பரும், யாத்தவென்ப யாட்டின் கண்ணே” என்ற தொல்காப்பியத்தால் உணர்க.

மேல் 49 – ஆஞ்செய்யுளைப்போல இச்செய்யுளையுந் தலைவிவார்த்தையாகக் கொள்ளுதலு மொன்று.

————-

ஏத்துமின் பத்தியினால் எட்டு எழுத்தும் இணை யடிக்கே
சாத்துமின் பத்திரத் தண் அம் துழாய் மதி தாங்கி கஞ்சம்
பூத்து மின்பத்தி செயும் பச்சை மா முகில் போல் அழகர்
காத்தும் இன்பத்தில் இருத்தியும் வைப்பர் கருணை செய்தே –9-

(இ – ள்.) இன் பத்தியினால் – இனிமையான பக்தியோடு,
எட்டு எழுத்தும் – எட்டுஎழுத்துக்களையும் (நாராயண நாமத்தை உட்கொண்ட திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தை),
ஏத்தும் – உச்சரியுங்கள்;
தண் அம் துழாய் பத்திரம் – குளிர்ந்த அழகிய துளஸிதளங்களை,
இணை அடிக்கே சாத்துமின் – (அப்பெருமானுடைய) உபயதிருவடிகளிலே சமர்ப்பியுங்கள்; (இங்ஙனஞ் செய்வீரானால்) –
மதி தாங்கி – சந்திர மண்டலத்தை மேலே சுமந்து,
கஞ்சம் பூத்து – தாமரைமலர்கள் (தன்னிடத்தே) பூக்கப்பெற்று,
மின் பத்தி செய்யும் – மின்னல்கள் ஒழுங்காகத் தோன்றப்பெற்ற,
பச்சை மா முகில் போல் – பசுமையான பெரியதொருமேகம் (உண்டானால் அது) போன்ற (திருமேனியையுடைய),
அழகர் – கருணைசெய்து – கிருபைபண்ணி,
காத்தும் – (உங்களைப்)பாதுகாத்தும்,
இன்பத்தில் இருத்தியும் – பேரின்பத்திலே நிலைநிறுத்தியும், வைப்பர் – (பரமபதத்தில்) வைத்தருள்வர்; (எ – று.)
என்று உலகத்தார்க்கு உபேசித்ததாம்.

மதி – திருமுகமண்டலத்துக்கும், தாமரைமலர்கள் – கண் கை கால் வாய் உந்தி என்ற அவயவங்களுக்கும்,
மின்னற்பத்தி – அணிந்துள்ள திருவாபரணங்களின் ஒளிக்கும்,
பச்சைமா முகில் – தன்னைக்கண்டவர் கண்ணும் நெஞ்சும் குளிரும்படி சகல தாபங் களையும் கண்டவுடனே
ஆற்றுகின்ற கரியதிருமேனிக்கும் உவமை யெனக் காண்க.
‘மதிதாங்கிக் கஞ்சம்பூத்து மின்பத்திசெய்யும் பச்சைமாமுகில் போல்’ என்றது, இல்பொருளுவமை.
பத்திரம் – (தன்னையிட்டு அருச்சிப்ப வர்க்கு) மங்களத்தைத்தருகின்ற, துழாய்எனினும் அமையும்;
பத்ரம் – சுபம். “இன்பத்தியினால்” என்பதை “சாத்துமின்” என்பதனோடுங் கூட்டுக.

அடிக்கு – உருபுமயக்கம் மதி – (பலராலும்) நன்கு மதிக்கப்படுவது எனப் பொருள்படுங் காரணக்குறி.
கஞ்சம் – நீரில்தோன்றுவது என்று காரணப்பொருள்படும்; (கம் – நீர்:) இது, தாமரைக்குக் காரணவிடுகுறி;
மலர்க்கு முதலாகுபெயர். மின்னுவது மின்என ஏதுப்பெயர் பசுமை கருமை நீலம் என்ற நிறங்களுக்கு உள்ள
சிறுவேறுபாட்டைக் கருதாது அபேதமாகக் கூறுதல் கவிசமயமாதலால், காளமேகம் ‘பச்சைமுகில்’ எனப்பட்டது.

———–

செய்தவர் ஆக வருந்தியும் தீர்த்தத் துறை படிந்தும்
கைதவர் ஆகமம் கற்றும் என் ஆம் கடற்பார் மருப்பில்
பெய்த வராகவனை மால் அலங்காரனை பேர் இலங்கை
எய்தவ ராகவ என்று ஏத்த நீங்கும் இரு வினையே –10-

(இ – ள்.) செய்தவர் ஆக வருந்தியும் – செய்கின்ற தவத்தையுடையவ ராக (உடலும் உள்ளமும்) வருந்தியும்,
தீர்த்தம் துறை படிந்தும் – புண்ய தீர்த்தங்களின் ஸ்நாநகட்டங்களிலே நீராடியும்,
கை தவர் ஆகமம் கற்றும் – வஞ்சகர்களான பிறமதத்தவர்களுடைய ஆகமநூல்களை ஓதியுணர்ந்தும்,
என் ஆம் – யாது பயனுண்டாம்?
கடல் பார் மருப்பில் பெய்த வராகனை – கடல்சூழ்ந்தபூமியைக் கோட்டிலேந்திய வராகாவதாரஞ்செய்தவனான,
மால் அலங்காரனை – பெருமையுள்ள அழகனை,
“பேர் இலங்கை எய்தவ – பெரிய இலங்காபுரியை அம்பெய்து அழித்தவனே!
ராகவ – ரகுகுலத்தில் அவதரித்தவனே!” என்று ஏத்த – என்று துதிக்க அதனால்,
இரு வினை நீங்கும் – (நல்வினை தீவினை என்னும்) இருவகைவினைகளும் ஒழியும்; (எ – று.)

அலங்காரனை ஏத்த என்று இயையும். “என்னாம்” என்றது, யாதொரு நற்பயனையுந் தராது என்றபடி;
வினை இன்மைகுறித்தது. செய்தவர் – தவஞ்செய்கின்றவர்; இனி, செம்மையென்னும் பண்புப்பெயர் ஈறுபோய் முன் னின்ற
மகரமெய் யகரமாத்திரிந்த தெனக்கொண்டு, செவ்விய தவத்தை யுடையவ ரெனினுமாம்.
பருமையுடையது பார் என்றாவது, பார்க்கப்படுவது பார் என்றாவது காரணப்பொருள் காண்க.
இலங்கையென்பது – இடவாகு பெயராய், இலங்கையில் வாழ்ந்த இராக்கதர்களையுங் குறிக்கும்.
எய்தல் என்ற காரணச்சொல், இங்கு, அதன்காரியமாகிய அழித்தலின்மேல் நின்றது; உபசாரவழக்கு.
எய்தவ – எய்தவன் என்பதன் ஈறுகெட்டவிளி. ராகவ – முதலில் இகரம்பெறாது வடசொல்லாயே நின்றது.
ராகவன் – தத்திதாந்தநாமம்; சூரியகுலத்து ரகுவென்பதன் ஈகைமுதலியவற்றில் மிகப்பிரசித்தி பெற்றவ னாதலால்,
அவன் சம்பந்தமாக ஸ்ரீராமபிரானுக்கு ராகவன் என்று திருநாமம் வழங்கும்.

——-

தலைவியின் ஆற்றாமையை தோழி தலைவனுக்கு கூறல் –

வினைக்கும் மருந்து அரிக்கும் பிணி மூப்புக்கும் வீகின்ற வே
தனைக்கும் மருந்து அன்ன தாள் அழகா செய்ய தாமரை அங்
கனைக்கும் அருந்து அமுதே அருளாய் நின்னைக் காதலித்து
நினைக்கும் அருந்ததி தன் உயிர் வாழ்க்கை நிலை பெறவே –11-

(இ – ள்.) வினைக்கும் – (தன்னைச் சரணமடைந்தவர்களுடைய) இரு வினைகளாகிய நோய்களை ஒழிப்பதற்கும்,
மருந்து அரிக்கும் பிணி மூப்புக் கும் – (மருந்துகளுக்குத் தாம் வசப்பட்டு அழியாமல்) எவ்வகை மருந்தையும்
(தமதுஆற்றலாற்) பயன்படாது அழியும்படிசெய்கிற (மிகக்கொடிய) வியாதிகள் கிழத்தனம் என்னும் இவற்றை ஒழிப்பதற்கும்,
வீகின்ற வேதனைக்கும் – மரணவேதனையைப் போக்குதற்கும்,
மருந்து அன்ன – (பிணி பசி மூப்பு மரணத்துன்பங்களை நீக்கவல்ல) தேவாமிருதத்தைப்போன்ற,
தாள் – திருவடிகளையுடைய,
அழகா – அழகனே!
செய்ய தாமரை அங்கனைக்கும் அருந்து அமுதே – செந்தாமரைமலரில் வீற்றிருக்கின்ற அழகிய பெண்ணான
திருமகளுக்கும் நுகர்தற்கு உரிய அமிருதமாயுள்ளவனே! –
நின்னை காதலித்து – உன்னை விரும்பி,
நினைக்கும் – (எப்பொழுதும் உன்னையே) நினைத்துள்ள,
அருந்ததிதன் – அருந்ததி போன்றவளான இம்மங்கையினுடைய,
உயிர் வாழ்க்கை – உயிர்வாழ்வு,
நிலை பெற – நிலைபெறும்படி,
அருளாய் – கருணைசெய்வாய்; (எ – று.)

களவொழுக்கவகைகளால் தலைமகளைக் கூடிநின்ற தலைமகன் அதனால் ஊரெங்கும் பழிபரவுதலை யறிந்து
அப்பழிதூற்றலடங்குமாறு அவளைச் சில நாள் பிரிந்திருத்த லுண்டு; அது, “ஒருவழித்தணத்தல்” எனப்படும்.
அங்ஙனம் அவன்பிரிந்து நின்றநிலையில் தலைமகள் பிரிவுத்துயரையாற்றாது மிக வருந்தாநிற்க,
மீண்டுவந்த தலைமகளை நோக்கித் தோழி அத்தலைமகளது வருத்தமிகுதியைக்கூறியது இது.
இங்ஙனங் கூறுதலின் பயன், இவளை நீ வெளிப்படையாக மணஞ்செய்துகொள்ளவேண்டுமென்று உணர்த்துதல்.
வேறுபரிகாரங்களாற் போக்கவொண்ணாத துன்பங்களுக்கெல்லாம் அமிருத சஞ்சீவிபோன்றுள்ள நீ,
இவள் இங்ஙனம் வருந்தக் காணலாமோ? என்பாள், ‘வினைக்கும் ….. மருந்தன்ன தாளழகா’ என்று விளித்தாள்.
‘செய்ய தாமரையங்கனைக்கும் அருந்துஅமுதே’ என்றது, நீ திருமகளிடத்துத் தலையளிசெய்து அவளை
எப்பொழுதும் அகலாது மார்பில் வைத்துக்கொ ண்டுவாழ்தல் போலவே, இவளிடத்தும் தலையளிசெய்து
இவளையும் என்றும் விட்டுப்பிரியாது உடன்கொண்டு வாழவேண்டு மென்று குறிப்பித்தவாறு.
நின்னையன்றி வேறொன்றை யறியாத கற்புநலமுடையவ ளிவ ளென்பாள்,
‘நின்னைக்காதலித்துநினைக்கு மருந்ததி என்றாள். இவளுக்கு நீ அருள்புரி யாயாயின்,
இவள் நினதுபிரிவுத்துயரை ஆற்றாது இறந்துபடுவ ளென்பது,
“அருந்ததிதன்னுயிர்வாழ்க்கை நிலைபெற அருளாய்” என்றதனாற் புலனாம்.

பிணி – (உடலையும் உள்ளத்தையும்) பிணிப்பது என நோய்க்குக் காரணக்குறி; பிணித்தல் – கட்டுதல்: அஸ்வாதீநப்படுத்துதல்,
பீடித்தல். வீகி ன்ற வேதனை – இறக்கின்றகாலத்திலுண்டாகுந் துன்பம். எம்பெருமான் திருவடிகளை வழிபடுவார்க்குப்
பிறவித்துயரில்லையாமாறு எல்லாக்கருமங்களும் ஒழிதலால் நோய்த்துன்பமும் முதுமைத் துன்பமும் மரணவேதனையும் இலவாதல்பற்றி,
‘வினைக்கும் பிணிமூப்புக்கும் வீகின்ற வேதனைக்கும் மருந்தன்ன தாள்’ எனப்பட்டது.
அங்கநா என்ற சொல் – அழகிய அங்கங்களையுடையவளென்று பொருள்பெறும்.
செய்யதாமரையங்கனைக்கும், உம்மை – எச்சம். அமுதுபோன்றவனை “அமுது” என்றது, உபசாரவழக்கு.
அருந்ததி – வசிஷ்டமகாமுனிவரது மனைவி; இங்கு, அவள்போன்ற கற்புடைய மங்கைக்கு உவமையாகுபெயர்.
அருந்ததி, பதிவிரதாதருமத்திற் சிறத்தலால், கற்புடைமாதர்க்கு உவமை கூறப்படுவள்.
ஏனையோரினும் இவட்குச் சிறப்பு, மற்றைய இடங்களில்மாத்திரமே யன்றி நக்ஷத்திரநிலையிலும் கணவனைவிட்டுப் பிரியாது உடனுறைதல்.

அழகப்பிரான் சிற்சிலசமயங்களிற் ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்காகின்றபொழுதே அவனைக்கிட்டி
முக்தியின்பமனுபவிக்கும்படியான ஆசைகொண்ட அவரை அப்பெருமான் அப்பொழுதே தன்பக்கல் சேர்த்துக் கொள்ளாது மறைய,
அதனாலுண்டான துயரத்தால் ஐயங்கார் அவனையே இடைவிடாது சிந்தித்துக்கொண்டு மிகவருந்த,
அதுகண்ட அன்பர்கள் அவருடைய அத்தன்மையை எம்பெருமான்பக்கல் விண்ணப்பஞ் செய்து
‘இனி இவர்வருந்தாதபடி இவர்க்கு நிரந்தராநுபவந்தந்தருளவேண்டும்’ என்று பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறை பொருள்.
“மறந்தும் புறந்தொ ழாமாந்தர்”,
“சிந்தைமற்றொன்றின்திறத்ததல்லாத்தன்மை தேவபிரானறியும்” என்றபடி முழுமுதற்கடவுளான திருமாலை யன்றிப்
பிறப்பிறப்புத் துன்பமுடைய பிறிதொருதெய்வத்தைச் சிறிதும்பொருள்செய்யாத நிறையுடையவர்
ஐயங்காரென்பது “நின்னைக்காதலித்துநினைக்குமருந்ததி” என்ற தனால் வெளியாம்.
‘உயிர்வாழ்க்கை நிலைபெற அருளாய்’ என்றது, இவரது வாழ்வு நினதுதிருவருளின்வழிப்பட்டுள்ளது என்றவாறு.
விளியிரண்டனுள், முந்தியதன் குறிப்பு – இவரது வினைகளையும் வினைப்பயன்களையும் போக்கியருளவேண்டு மென்பது;
இரண்டாவதனால், பெரியபிராட்டியாரைப்போலவேஇவரையும்என்றும்உன்னை விட்டுப் பிரியாதபடி சேர்த்துக்கொள்ளவேண்டு மென்று குறிப்பித்தவாறு.

————–

நிலையாமை ஆன உடலும் உயிரும் நினைவும் தம்மில்
கலையா மையானம் கலக்கு முன்னே கங்கை வைத்த சடைத்
தலை ஆம் ஐ ஆனனன் தாமரையான் தொழும் தாள் அழகன்
அலை ஆமை ஆனவன் மாலிருஞ்சோலை அடை நெஞ்சமே –12-

(இ – ள்.) நெஞ்சமே – மனமே! –
நிலையாமை ஆன உடலும் – நிலைத்திராமலழியுந்தன்மையுள்ள உடம்பும்,
உயிரும், – நினைவும் – சிந்தனையும்,
தம்மில் கலையா – தம்நிலையினின்று கலையப்பெற்று (இறந்து),
மையானம் கலக்குமுன்னே – சுடுகாட்டை அடைவதற்கு முன்னே, –
கங்கை வைத்த சடை தலை ஆம் ஐ ஆனனன் தாமரையான் தொழும் தாள் – கங்காநதியைத்தரித்த சடைமுடியோடு
கூடிய தலையையுடைய ஐம்முகனாகிய சிவபிரானும் தாமரைமலரில் தோன்றியவனான பிரமனும் வணங்கப்பெற்ற திருவடிகளையுடைய,
அழகன் – அழகனும்,
அலை ஆமை ஆனவன் – திருப்பாற் கடலிலே கூர்மாவதாரமெடுத்தவனுமாகிய எம்பெருமானுடைய,
மாலிருஞ்சோலை – திருமாலிருஞ்சோலைமலையை,
அடை – சேர்வாய் (விரும்பி உட்கொண்டு தியானிப்பாய் என்றபடி); (எ – று.)

இதுவும், இந்நூலின் முதற்செய்யுள்போல நெஞ்சைநோக்கி யுரைத்ததாம்.
“பயனல்லசெய்து பயனில்லை நெஞ்சே, புயன்மழைவண்ணர் புரிந்துறைகோயில்,
மயன்மிகுபொழில்சூழ்மாலிருஞ்சோலை, அயன்மலையடைவததுகருமமே” என்றார் நம்மாழ்வாரும்
கலக்குமுன்னே அடைஎன இயையும்.

கலையா – செய்யாஎன்னும்வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம்; இதில், ‘ஆ’ என்ற விகுதியே காலங்காட்டும்.
தம்மில் கலையா என்பதற்கு – தமக்குள் (ஒன்றையொன்று) பிரியப்பெற்று என்றலு மொன்று.
ஸ்மஸாநம் என்ற வடசொல், மயானம் என்றுவிகாரப்படும்;அது, திரிபுநயம் நோக்கி மையானமென முதற்போலிபெற்றது;
“அஐ முதலிடை யொக்கும் சஞயமுன்” என்றார் நன்னூலார். சதாசிவமூர்த்தியாகிய சிவபிரானுக்கு,
சத்தியோஜாதம் வாமதேவம் அகோரம் தத்புருஷம் ஈசாநம் என ஐந்துமுகங்க ளுண்டென் றறிக.
ஆநநம் – வடசொல். தாமரையான் திருமாலின் நாபித்தாமரைமலரில் தோன்றியவன்.
அலைஎன்பது சினையாகுபெயராய், அலைகளையுடைய கடலை யுணர்த்திற்று;
இப்பொதுப்பெயர் இங்கே சிறப்பாய்ப் பாற்கடலைக் குறித்தது. இங்கு, அடைதல் – இடைவிடாது நினைத்தல்;
“மலர்மிசையேகினான் மாணடிசேர்ந்தார்” என்றவிடத்து “சேர்தல்” என்பது போல.

சூரியகுலத்துப் பகீரதசக்ரவர்த்தி, கபிலமுனிவனது கண்ணின் கோபத்தீக்கு இலக்காகி உடலெரிந்து சாம்பலாய்
நற்கதியிழந்த தனது மூதாதையரான சகரபுத்திரர் அறுபதினாயிரவரை நற்கதி பெறுவித்தற்பொருட்டு,
நெடுங்காலந் தவஞ்செய்து, கங்காநதியை மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக்கொணர்கையில்
அதனது வெகுவிசையாகப்பெருகிவரும் வெள்ளப்பெருக்கைத் தாங்கும்வல்லமை பூமிக்கு இல்லாமை
பற்றிச் சிவபிரானைப் பிரார்த்திக்க, அப்பகீரதனது வேண்டுகோளின்படி பரமசிவன் அந்நதியைத் தனது
முடியிலேற்றுச் சிறிதுசிறிதாகப் பூமியில் விட்டனனென்பது, கங்கை தரித்த வரலாறு.

————-

நெஞ்சம் உருக்கும் உயிர் உருக்கும் தொல்லை நீள் வினையின்
வஞ்சம் முருக்கும் பவம் முருக்கும் வள் துழாய் அழகர்
கஞ்ச முருக்கு மலர் வாய்த் திரு நண்பர் கஞ்சனுக்கு
நஞ்சம் உருக்குவளை ஆழி அன்னவர் நாமங்களே –13-

(இ – ள்.) கஞ்சம் – தாமரைமலரில் வீற்றிருக்கின்ற,
முருக்கு மலர்வாய் திரு – பலாசம்பூப்போன்ற (சிவந்த) வாயையுடைய திருமகளுக்கு,
நண்பர் – மனமொத்த அன்புடைய கொழுநராய் அப்பெரியபிராட்டியாரை என்றும்விட்டு அகலாதவரும்,
கஞ்சனுக்கு நஞ்சம் – கம்சனுக்கு விஷமானவரும்,
உரு குவளை ஆழி அன்னவர் – திருமேனி நிறத்தால் நீலோற்பலமலரையும் கடலையும் போன்றவருமான,
வள் துழாய் அழகர் – செழிப்பான திருத்துழாய்மாலையைத் தரித்த அழகருடைய,
நாமங்கள் – திருநாமங்கள், –
நெஞ்சம் உருக்கும் – (பக்தியோடு தம்மைஉச்சரிக்கும் அன்பர்களுடைய) மனத்தை(ப் பக்திமிகுதியால்) உருகச்செய்யும்;
உயிர் உருக்கும் – (ஆநந்தாதி சயத்தால் அவர்களுடைய) உயிரை நெகிழப்பண்ணும்;
தொல்லை நீள் வினையின் வஞ்சம் முருக்கும் – (அவர்களுடைய) தொன்றுதொட்டுவருகிற நீண்ட கருமங்களின் வஞ்சனையை அழிக்கும்;
பவம் முருக்கும் – (அவர்களுடைய) பிறப்பை ஒழிக்கும்; (எ – று.)

இது, திருநாமமகிமை கூறியது;
“குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்படுதுயராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினுமாயின செய்யும்,
நலந்தருஞ்சொல்லைநான்கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்” என்றார் திருமங்கையாழ்வாரும்.

தொல்லை நீள் வினை – பிறப்பு அநாதியாய்வருதலின் உயிராற்செய்து சேர்க்கப்பட்டுக் காரண காரியத் தொடர்ச்சியாய்
அளவின்றிவருகின்ற கருமங்கள். அவ்வினைகள் தாம் பலிக்குங்காலம்வருமளவும் புலனாகாது உயிரைப்பற்றி
மறைந்துநின்று அச்சமயம்வந்தவிடத்துச் சடக்கெனப்பயன்தந்து வெளிப்படுதலால், “வினையின்வஞ்சம்” எனப்பட்டது.
முருக்கும் – முருங்கு மென்பதன் பிறவினை; மெலிவலியானது, பிறவினைக்குறி: முருங்குதல் – அழிதல்.
பிறப்பு களுக்குக்காரணங்களாகிற கருமங்களுட்படப்பிறப்புக்களையொழிக்கு மெனவே,
இனிக் கருமவசத்தாற் பிறவாதபடி மீளா வுலகமாகிய முத்தியைத் தரு மென்றவாறாம்.
பவம் – வடசொல். கஞ்சத் திரு என இயையும். முருக்குமலர் வாய் – நிறம்பற்றிய உவமை.

கம்சனைத் தவறாது எளிதில் அழித்தவரென்ற பொருளில், ‘கஞ்சனுக்கு நஞ்சம்’ என்றார்.
நஞ்சம் போன்றவரை ‘நஞ்சம்’ என்றது, உபசாரவழக்கு. உருக்குவளையாழியன்னவர் –
“குன்றாடுகொழுமுகில் போற் குவளைகள் போற் குரைகடல்போல்,
நின்றாடுகணமயில்போல் நிறமுடைய நெடுமால்” என்றார் பெரியாழ்வாரும்.
திருமேனிநிறத்தின் நெய்ப்புக்குக் குவளைப்பூ வின்நிறத்தையும், அதன் இருட்சிக்குக் கடலின்நிறத்தையும் நிகரென்பர்.
குவளை – குவலய மென்ற வடசொல்லின் சிதைவு. குவளை என்று பதம் பிரித்து, கு – பூமியை, வளை – சூழ்ந்துள்ள,
ஆழி – கடலை, அன்னவரென்று நலிந்துபொருள்கொள்வாரு முளர்.

இனி, ‘நஞ்சமுருக்கும்வளையாழியன்னவர்’ என்ற பாடத்துக்கு – கஞ்சனுக்குவிஷமாய்த்தோன்றியவரும் (உலகத்தை)
வளைந்துள்ள கடலைப்போன்றவருமான எம்பெருமான் என்று பொருள்காண்க;
உருக்கும் – தோன்றும்; உருத்தல் – தோன்றுதல். வளை ஆழி அன்னவர் – சங்கினையுடைய கடல் போன்றவருமாம்.

————–

நாமங்கள் ஆவி நழுவும் தனையும் நவின்று அவரைத்
தாமங்களாவி- தாம் அங்கு அளாவி -மனத்துள் வைப்பார் தண்டலை யின் அகில்
தூமங்கள் ஆவி மணம் நாறும் மாலிருஞ்சோலை அன்பர்
சேமம் களாவின் கனி அனை யார் பதம் சேருவரே –14-

(இ – ள்.) நாமங்கள் – (அழகருடைய) திருநாமங்களை,
ஆவி நழுவும் தனையும் நவின்று – உயிர் (உடலைவிட்டு) நீங்குமளவும் (தாம்இறக்குமளவும்) உச்சாரணஞ்செய்து,
அவரை – அப்பெருமானை, தாம் -,
அங்கு – அவ்விடத்திலே (திருமாலிருஞ்சோலைமலையிலே),
அளாவி – அடைந்து பற்றி,
மனத்துள் வைப்பார் – தம்மனத்திற்கொண்டு தியானிப்பவர்கள், –
தண்டலையின் – சோலைகளிலே,
ஆவி – குளங்கள்,
அகில் தூமங்கள் மணம் நாறும் – (தம்மிடத்துநீராடுகிற மாதர்கள் கூந்தல் முதலியவற்றிற்கு ஊட்டிய) அகிற் புகைகளின்நறுமணம்வீசப்பெற்ற,
மாலிருஞ்சோலை – திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருக்கிற,
அன்பர் – (எல்லாவுயிர்களிடத்தும்) அன்புடையவரும்,
சேமம் – (அவ்வுயிர்கட்கெல்லாம்) பாதுகாப்பாயுள்ளவரும்,
களாவின் கனி அனையார் – (திருமேனியின்கருநிறத்தாற்) களாப்பழத்தை யொத்தவருமாகிய அப்பெருமானுடைய,
பதம் – திருவடிகளை,
சேருவர் – சேர்வார்கள்; (எ – று.)

திருமாலிருஞ்சோலைமலை யெம்பெருமானை மனத்திற்கொண்டு தியானித்து வாக்கினால் அவனது நாமோச்சாரணஞ்செய்து
மெய்யினால் அவனை வணங்கித் தொண்டுபூண்டொழுகுபவராகி இங்ஙனம் திரிகரணங்களாலும் வழிபடும் அடியார்கள்,
அப்பெருமானுடைய திருவருளால் அவனடியிற்சேர்வரென்பதாம். “திருவடியே வீடாயிருக்கும்” என்னுங் கொள்கைபற்றி,
“பதஞ் சேருவர்” என்றார். இனி, பதம் – ஸ்தாநமாகிய பரமபதத்தை, சேர்வர் எனினுமாம்.
அவரை, அங்கு எனச் சுட்டுப்பெயர்கள் – அன்பர், திருமாலி ருஞ்சோலை என்ற இயற்பெயர்களின் முன் வந்தன;
செய்யுளாதலின்: “செய்யுட்கு ஏற்புழி” என்பது, நன்னூல்.

தாம், அங்கு என்றவற்றை அசையாகவுங் கொள்ளலாம். தண்டலை – தண் தலை என்று பதம்பிரிந்து,
குளிர்ச்சியான இடத்தை யுடையது என்று காரணப்பொருள்பெறும்; பண்புத்தொகையன்மொழி.
அகில்தூமம், வாவியில் நீராடும் மகளிரது கூந்தல்முதலியவற்றில் முன்புஊட்டப்பெற்றது.
அவர்கள் நீராடும்போது அந்நறும்புகை சம்பந்தப்பட்டதனால், வாவியின்நீர் அந்தமணம்நாறும் என அகிற் புகையின் பரிமளமிகுதி கூறியவாறு.
இனி, “ஹவிஸ்” என்ற வடசொல்லின் விகாரமான ‘அவி’ என்பது திரிபுநோக்கி “ஆவி” என நீட்டல்விகாரம் பெற்றதென்று கொண்டு,
சோலைகளிலே அகிற் புகைகளும் (வைதிகர்கள் யாகஞ்செய்கின்ற ஓமாக்கினியினின்று எழுகிற தூமங்களின்)
ஹவிர்வாசனையும் நாறுகிற மாலிருஞ்சோலை யென்றலு மொன்று;
ஆவிமணம் – மந்திரபூர்வமாக வைதிகாக்கினியில்ஓமஞ்செய்கிற நெய் முதலிய தேவருணவின் பரிமளம்:
‘ஆவிமணநாறு மாலிருஞ்சோலை’ என்பதை,
“மாடுயர்ந்தோமப்புகைகமழுந் தண் திருவல்லவாழ்” என்ற திருவாய் மொழியோடு ஒப்பிடுக.
இனி, தூமம் கள் ஆவி என்று பதம்பிரித்து, சோலைகளிலே அகிற்புகையும் தேனும் ஹவிஸ்ஸும் மணம்வீசு மென்னலுமாம்.
மகாப்பிரளயமாகிய ஆபத்காலத்திலே எல்லாவுயிர்க்கும் தாம் ஓர்அரணாக அவையனைத்தையும் வயிற்றில் வைத்துப் பாதுகாத்தமைபற்றி,
எம்பெருமான் ‘சேமம்’ எனப்பட்டனர்; இனி, சேமம் – இன்பமயமானவ ரெனினு மாம்.
களாவின்கனி – பெருமானுக்குத் திருமேனிநிறத்தில் உவமம்; “களங்கனிவண்ணா கண்ணனே” என்றார் திருமங்கையாழ்வாரும்.

————

சேரா தகாத நரகு ஏழ் தலை முறை சேர்ந்தவர்க்கும்
வாராது அகாதம் வசை பிணி பாவம் மறி கடல் முன்
தூராத காதங்கள் தூர்த்தானை மாலிருஞ்சோலையில் போய்
ஆராத காதலுடன் பணி வீர் என் அழகனையே –15-

(இ – ள்.) ஆராத காதலுடன் – அடங்காத (போதுமென்று திருப்தி கொள்ளாத) அன்புடனே, –
மாலிருஞ்சோலையில் போய் – திருமாலிருஞ் சோலைமலைக்குச் சென்று, –
முன் – முன்பு (ஸ்ரீராமாவதாரத்திலே),
மறிகடல் – அலைகள் மடங்கியடிக்கப்பெற்ற கடலிலே,
தூராத காதங்கள் தூர்த்தானை – (எவராலும் எந்நாளிலும்) தூர்க்கப்படாத அநேககாததூரமளவும்
(குரங்குகளைக் கொண்டு மலைகளைக்கொணர்ந்து பெய்து) நிரப்பி அணை கட்டியவனான,
என் அழகனை – எனது தலைவனாகிய அழகப்பெருமானை,
பணிவீர் – வணங்குங்கள்; (அங்ஙனம் வணங்கினால்), –
ஏழ் தலைமுறை சேர்ந்தவர்க்கும் – (முன்னாவது பின்னாவது) ஏழுதலைமுறை (உங்களைச்) சேர்ந்தவர்களுக்கும்,
தகாத நரகு சேரா – தகுதியற்ற (கொடிய) நரகங்கள் தொடரமாட்டா;
அகாதம் வசை பிணி பாவம் வாராது – ஆழமான (கடப்பதற்கு அரிய) பழிப்பும் நோயும் தீவினையும் நேரிடாது; (எ – று.)

ஒன்பதாஞ்செய்யுள்போல இதுவும் உலகத்தார்க்கு உபதேசித்தது. ஒருசந்ததியிலே ஒருவர் எம்பெருமானைச் சரண்புகுந்தால்,
அவர்க்கேயன்றி அவரது முன்பின்பரம்பரையோர்க்கும் அதன்நற்பயன் விளையு மென்பது கருத்து:
(திருப்பல்லாண்டில் “ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள்” என்ற விடத்து ‘ஒருஸந்தாநத்திலே ஒருவன் அநந்யப்ரயோஜநனானால்,
அவனைப் பற்ற, பகவத்ப்ரபாவம் ஸம்பந்திஸம்பந்திகளளவுஞ் செல்லக் கீழும் மேலும் வெள்ளமிடும்’ என்கிற வியாக்யாந வாக்கியம் உணரத்தக்கது.)
ஏழ்தலைமுறை சேர்ந்தவர்க்கும் சேராஎனவே, இவர்க்குசேரா வென்பது சொல்லவேண்டாதாயிற்று; உம்மை – இறந்ததுதழுவியஎச்சம்.
இனி, பரம்பரையாகத் தீவினையையே செய்யும் இயல்பினராய்க் கொடியநரகங்களை ஏழுதலைமுறை சேர்ந்தவர்களும்
திருமாலிருஞ்சோலையிற்போய் அழகனைப்பணிவாராயின், பின்பு அவர்க்கு அந்நரகங்கள் அமையா என்று உரைத்தலு மொன்று;
இப்பொருளில், உம்மை – இழிவுசிறப்பு.

நரகு – நரக மென்ற வடசொல்லின் விகாரம்; இந்தப் பால்பகா அஃறிணைப்பெயர்,
இங்குப் பன்மையாய்ப் பலவகைநரகங்களை யுணர்த்துதலால், “சேரா” என்ற பலவின்பால்முற்றைக்கொண்டது.
“நரகுசேரா” என்றாரேனும், அவர்கள் நரகஞ்சேரார் என்பதே கருத்து. அகாதம், பாபம் – வடசொற்கள்.
வசை பிணி பாவம் வாராது – பன்மையொருமைமயக்கம்; (தனித்தனி)வாராது என்க. அகாதம் – வஞ்சகமுமாம்.
‘தகாதவசை’ என்ற பாடத்துக்கு – முதலடியில் அகாதம் நரகு சேராது என்று பிரித்து, ஆழமாகிய நரகக்குழி
வாய்த்திடாது என்று உரைத்து, இரண்டாமடியில் தகுதியற்ற வசைபிணிபாவங்கள் வாரா என்க.

மறிகடல் – வினைத்தொகை. முன் – காலமுன். இனி, ஏழனுருபெனக்கொண்டு, கடல்முன் – கடலிலே எனினுமாம்;
“கற்றார்முற் றோன்றா கழிவிரக்கம்” என்றவிடத்துப் போல. காதம் – ஏழரைநாழிகைவழித்தூரம்.
இராம சேதுவின் அகலநீளங்களின் மிகுதி விளங்க, “தூராதகாதங்கள் தூர்த்தான்” என்றார்.
“எய்தயோசனையீண்டொரு நூறிவை, யையிரண்டினகலமமைந்திடச், செய்ததாலணை” என்ற கம்பராமாயணத்தால்,
அதன் அளவை உணர்க. ‘ஆராதகாதலுடன்’ என்றதை, மத்திமதீபமாக, முன்நின்ற ‘போய்’ என்றதனோடும்,
பின்நிற்கும் “பணிவீர்” என்பதனோடுங் கூட்டுக.

—————-

பாங்கி விடு தூது —

அழக்கன்றிய கருங்கண் ணிக்குக்கண்ணி அளித்திலரேல்
வழக்கு அன்றி முன் கொண்ட வால் வளை கேளும் மறுத்தது உண்டேல்
குழக்கன்றின் பின் குழல் ஊது அலங்காரர்க்கு கோதை நல்லீர்
சழக்கு அன்றில் வாய் பிளந்தால் உய்யலாம் என்று சாற்றுமினே –16-

(இ – ள்.) கோதை நல்லீர் – பூமாலைபோலும் மெல்லியலாரான மாதர்களே! –
அழகன்றிய கருங் கண்ணிக்கு – (கண்ணீர்விட்டு) அழுதலினாற் கன்றிப்போன கருமையான கண்களை யுடைய இம்மகளுக்காக,
கண்ணி அளித்திலர்ஏல் – (தலைவர்) தமது மாலையைக் கொடாராயின்,
வழக்கு அன்றிமுன் கொண்ட வால்வளை கேளும் – நியாயமாகவன்றி முன்பு (இவளிடமிருந்து) வலியக் கவர்ந்து கொண்ட ஒள்ளிய வளையல்களை (த் தரும்படி) கேளுங்கள்; மறுத்தது உண்டுஏல் – (அவற்றையுந்தாராது அவர்) தடைசொல் வதுண்டானால், –
குழ கன்றின் பின் குழல் ஊது அலங்காரர்க்கு – இளமையான கன்றுகளின்பின்னே புள்ளாங்குழலை ஊதிச் சென்ற அழகப்பிரானாகிய அத்தலைவர்க்கு, –
சழக்கு அன்றில் வாய் பிளந்தால் உய்யல் ஆம் என்று சாற்றுமின் – குற்றத்தையுடைய அன்றிற் பறவையின்
வாயைக் கிழித்து விட்டால்தான் இவள்பிழைத்தல்கூடும் என்று சொல்லுங்கள். (எ – று.)

தலைவனைப்பிரிந்த தலைவி அப்பிரிவுத்துயரைப் பொறுக்கமாட்டாமல் நள்ளிரவிலுமுட்படத் துயில்கொள்ளாது
அன்றிலின் குரல் கேட்கும்போதெல்லாம் மரணவேதனையுற்றுக் கைவளைகள் கழன்றுகீழ்விழும்படி உடல்மெலிந்து
கண்கலங்கி அழுதபடியே யிருக்க, அந்நிலைமையைக் கண்டுவருந்திய செவிலித்தாய், அத்தலைவியின்தோழியரை நோக்கி,
இங்ஙனஞ்சொல்லி, அவர்களைத் தலைவனிடத்துத் தூதுசெல்லுமாறு வேண்டுகிறா ளென்க.
“இயம்புகின்ற காலத்து எகினம் மயில் கிள்ளை,
பயம்பெறுமேகம் பூவை பாங்கி – நயந்தகுயில்,
பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துரைமே, தூதுரைத்து வாங்குந் தொடை” என்ற இரத்தினச்சுருக்கத்தால்,
தூதனுப்பப்படுதற்குஉரிய பொருள்களை உணர்க.

பிரிந்ததலைவன் வருமளவும் ஆறியிருக்கவொண்ணாதே அவன்வரவுக்குப் பிறர் விரைந்து ஆள்விடும்படி யாயிற்று, ஆற்றாமைமிகுதி.
தலைமகனைப் பிரிந்துவருந்துகின்ற நிலையில் அவன் தரித்த மாலையையாயினும் பெற்றால்,
அதுகொண்டு தலைமகள் ஒருவாறு தணிந்திருத்தல்கூடு மாதலால், அது, முதலில் வேண்டப்பட்டது.
தலைவனது பிரிவு தலைவிக்கு மெலிவைவிளைத்து அவள்கையினின்று வளைகள்கழன்றுவிழும்படி செய்ததை
அத்தலைவன்மேலேற்றி, “முன்கொண்டவால்வளை” என்றாள்.
(“கைப்பொருள்கள்முன்னமேகைக் கொண்டார் காவிரிநீர், செய்ப்புரளவோடுந் திருவரங்கச்செல்வனார்,”
“எம்மானார் என்னுடைய, கழல்வளையைத் தாமும் கழல்வளையேயாக்கினரே” என்பன, நாச்சியார்திருமொழி).
“அதனைத் தரும்படி கேளும்” என்றது, பிரிந்த காலத்திலே கைவளைகழலுமாறு இவட்குநேர்ந்த உடல்மெலிவு
இனித்தணிந்து அவ்வளைகழலாதவண்ணம் மகிழ்ச்சியால் உடல்பூரிக்கும்படி மீண்டுவந்து இவளோடு கலந்திடுமாறு
அத்தலைவனை வற்புறுத்துங்க ளென்றபடி. தம்மையேகதியாகக்கொண்ட ஒருபெண்ணினது கைப்பொருளைக்
கவர்ந்துகொள்ளுதல் நீதியன் றாதலால், “வழக்கன்றி முன்கொண்ட வால்வளை” எனப்பட்டது.

அன்றிலென்பது, ஒருபறவை. அது, எப்பொழுதும் ஆணும்பெண்ணும் இணைபிரியாது நிற்கும்.
கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப்பொறாமல் ஒன்றை யொன்று
இரண்டுமூன்றுதரம் கத்திக்கூவி அதன்பின்பும் தன் துணையைக்கூடாவிடின் உடனே இறந்துபடும்.
இதனை வடநூலார் க்ரௌஞ்சம் என்பர்.
ஆணும்பெண்ணுமான அந்த அன்றிற்பறவை இணைபிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு
உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னில் நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல்
மெலிந்து பெருந்தொனியாகக்கத்துகின்ற மிகஇரங்கத்தக்க சிறுகுரல் காமோத்தீபகமாய்ப் பிரிவாற்றாமைதை்
துயரை வளர்த்துப் பிரிந்தகாமுகரை மிகவருத்தும்;
ஆதலால், அந்தஅன்றில் கத்தாதபடி அதன்வாயைப் பிளந்துவிட்டா லன்றி இவள்உய்யாள் என்று சொல்லுங்க ளென்றாள்.
(“புள்ளின்பகுவாயது போலகனி, வின்னாங்குயில்வெவ்வியவாய்கிழயாய்” என்ற பாகவதத்தோடு இதனை ஒப்பிடக.)
துணைவனின்றித் தனிமையாயிருக்கிற சமயத்திலே மெல்லியலாளான தலைவியைச் சிறிதுங்கண்ணோட்டமின்றித்
தன் குரலால் வருத்தும் பிழைபாடுடையது அன்றி லென்ொள், “சழக்கன்றில்” என்றாள்.
தம்மைச் சார்ந்த அநபராதியான எளியார் மிகவருந்தும்படி அவரை வாயினால் வருத்துங் குற்றவாளிகட்குத்
தலைவர்செய்யத்தக்க தண்டனை அவ்வாயைப் பிளத்த லென்க.

கன்றின்பின் குழலூதியது, கிருஷ்ணன் இடையர்தலைவனான நந்தகோபன்மகனாகத் திருவாய்ப்பாடியில் வளர்ந்த இளமையி லென்க.
அப்பொழுது, பிராயம்முதிர்ந்த இடையர்கள் பசுக்களைமேய்க்க, சிறுபிள்ளையான கண்ணன் இடைச்சாதிப்
பிள்ளைகளுடனே சேர்ந்து கன்றுகளை மேய்த்தனன், பலஇடங்களிற் பரவிமேய்கின்ற ஆண்கன்றுகளை ஒருங்குசேர்த்தற் பொருட்டும்,
அவற்றை மகிழ்வித்தற்பொருட்டும், கண்ணன் மிகஇனிதாக வேய்ங்குழலூதியமை, பிரசித்தம்.
எளியகன்றுகளினிடத்துமுட்பட வாத்ஸல்யமுடையராய் அவற்றைவிடாது தொடர்ந்து களிப்பிக்கும் இயல்புடையவர்க்கு,
தம்மையே அடுத்த ஒருபெண்ணை இங்ஙனம் உபேக்ஷித்தல் தகுதியோ? என்பதுபட, “குழக்கன்றின்பின் குழலூதலங்காரர்க்கு” எனப்பட்டது.

வால் வளை – வெண்மையான சங்கவளையல்களுமாம். குழ – இளமையுணர்த்தும் உரிச்சொல்;
“மழவும் குழவும் இளமைப்பொருள” என்பது தொல்காப்பியம். கன்று – இளமைப்பெயர்;
இது, பசுமுதலியவற்றிற்கு உரியது. நல்லாளென்று இலக்குமிக்கு ஒருபெய ராதலால்,
அதன்பன்மை யாகிய நல்லாரென்பது, பெரும்பாலும் மாதரை யுணர்த்தும்;
நற்குண நற்செய்கைகளையும் அழகையு முடையா ரென்க. சழக்கு – பேதையுமாம்.

ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே, அவனது நிரந்தரநுபவத்தைப் பெற
விரும்பிய அவர் அப்பிரிவாற்றாமையாலும் தம்மை வருத்தக்கடவனவான லௌகிக பதார்த்தங்களைக் குறித்தும் மிகவருந்த,
அந்நிலைமையை நோக்கிய அவரிடத்துப் பரிவுடையரான ஞானிகள், அவரது சுகதுக்கங்களைத் தமதுசுகதுக்கங்களாகக் கொள்ளும்
மனமொத்த அன்பர்களை நோக்கி “இவரது இந்நிலைமையை நீங்கள் எம்பெருமான் பக்கல் விண்ணப்பஞ்செய்து
இவர்க்கு அவனது ஸதாஸாந்நித்யம் கிடைக்குமாறு செய்யலாகாதோ?” என்று தூண்டுதல், இதற்குஉள்ளுறைபொருள்.

ஸ்வாபதேசத்தில், ,கண்ணழகென்பது, ஜ்ஞாநவைலக்ஷண்யத்தை, என்றனர் ஆன்றோர். கரிய திருமேனியையுடைய
கண்ணபிரான்பக்கல் ஈடுபட்டுத் தந்மயமாகியஞானம் இப்பிரிவுத்துயரால்நிலைகுலையப்பெற்றன ரிவரென்பார்,
‘அழக்கன்றியகருங்கண்ணி’ என்றார். கண்ணியளித்திலரேல் – தமது நிரதிசயஆநந்தத்தைத் தந்தருளாராயின் என்றபடி.
(‘வளை என்பது, அநந்யார்ஹதாசிஹ்நத்தை’ என்பர் ஸ்வாபதேசத்தில்.)
‘வழக்கன்றி முன்கொண்ட வால்வளை கேளும்’ என்றது, ஸ்வாதந்திரிய மின்றி எம்பெருமானுக்கே
பரதந்திரராயிருக்கும் இவரது நிலைமை பிரிவாற்றாத்துயரால் நிலைகுலைகின்றது. அது அங்ஙனமாகாதபடி எம்பெருமானைக்
கொண்டு செய்விக்கவேண்டுமென்றவாறு. வால்வளை = சுத்தமான பாரதந்திரியம்.
(‘வாடை அன்றில் தென்றல் முதலான பாதகங்க (ஸாயக) ளென்பது, ஸ்மாரகத்வேந அஸஹ்யங்களான
லௌகிக பதார்த்தங்களை’ என்பது, ஸ்வாபதேசவுரை,)
தம்மைப்போலப் பிரிந்துவருந்துவாரது அரற்றொலியைக் கேட்குமிடத்து உய்யக்கடவரல்ல ரிவரென்பது, ஈற்றடியில் வெளியாம்.
விவரம், வல்லார்வாய்க் கேட்டுஉணர்க.

“கண்ணிக்குக் கண்ணி யளித்திலரேல்” என்றவிடத்துச் சொன்னயம் கருதத்தக்கது;சொற்பின்வருநிலையணி.

————–

தலை மகனது மடலூர்தல் துணிவைத் தோழி செவிலுக்கு உணர்த்தல் –

சாற்றுக் கரும்பனை கூற்று என்னும் ஆசை தமிழ் மலையைக்
காற்றுக்கு அரும்ப நையும் கண் படாள் அலங்காரற்கு அண்டர்
ஏற்றுக்கு அரும்பு அனையக் கொங்கையாள் கொண்ட இன்னலுக்கு
மாற்றுக் கரும்பனை அல்லாது வேறு மருந்து இல்லையே –17-

(இ – ள்.) (இம்மங்கை), – சாறு கரும்பனை – இரசமுள்ள கரும்பை வில்லாகவுடையவனான மன்மதனை,
கூற்று என்னும் – யமனென்றுசொல்வாள்;
ஆசை தமிழ் மலயம் காற்றுக்கு – (எல்லாராலும்) விரும்பப்படுவதும் தமிழ்வளர்ந்தஇடமான பொதிய
மலையினின்று தோன்றுவதுமான தென்றற்காற்றுக்கு,
அரும்பல்நையும் – அதுசிறியதாகவீசும்போதெல்லாம் வருந்துவாள்;
கண்படாள் – (நள்ளிரவிலுமுட்படத்) துயில்கொள்ளாள்; (ஆகவே), –
அண்டர்ஏற்றுக்கு – தேவர்களிற் சிங்கம்போன்றவனாகிய,
அலங்காரற்கு – அழகப்பிரான்விஷயமாக,
அரும்பு அனைய கொங்கையாள் கொண்ட – கோங்கரும்பை (அல்லது தாமரையரும்பை) (வடிவில்) ஒத்த
தனங்களையுடையவளான இவள் கொண்ட, இன்னலுக்கு – துன்பத்துக்கு,
மாற்று – பரிகாரம்,
கரும் பனை அல்லாது – கரிய பனைமடலை யூர்தலே யல்லாமல்,
வேறு மருந்து இல்லையே – (இக்காதல்நோயைத் தீர்ப்பதற்கு) வேறுஎப்பரிகாரமும் இல்லைபோலும்; (எ – று.) –
ஈற்றுஏகாரம் – இரக்கம்; இல்லையோ? என வினாவுமாம்.

தலைமகனும் தலைமகளும் தெய்வவசத்தால் ஏகாந்தமான ஓரிடத்திலே சந்தித்து ஒருவர்பக்கல் ஒருவர் காதல்கொண்டு
கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தமதுவிருப்பத்தின்படி களவுப்புணர்ச்சிபுணர்ந்து பிரிந்தபின்பு அவ்வாற்றாமைவிஞ்சி
அதனால் நாணம் முதலியன அழிந்து இவர்களுள் ஒருவர் மற்றொருவரது வடிவத்தையும் ஊரையும் பேரையும்
தமதுஊரையும் பேரையும் ஒருபடத்திலெழுதி அச்சித்திரபடத்தைக்கையிற்கொண்டு பனைமடலினால் ஒரு
குதிரையுருச்செய்வித்து அதன்மீது தாம் ஏறி அதனைப் பிறரால் இழுப்பித்து வீதிவழியே பலரும் கூடும்
பொதுவிடங்களி ளெல்லாஞ் செல்லுபவராவர்; இது, மடலூர்த லெனவும், மடன்மாவேறுத லெனவும்படும்.
இதற்குப் பயன் – இவரது இக்கடுந்தொழிலைக்கண்டு அதனால் இவரது பெருவேட்கையை யுணர்ந்து
உறவினராயினும் அரசனாயினும் வெளிப்படையாக மணஞ்செய்துவைக்கப்பெறுதலாம்.
இம்மடற்றிறம், ஆடவர்க்கே பெரும்பாலும் உரியது. அளவுக்குவிஞ்சின ஆசையின்மிகுதியால், மகளிர்க்கும் சிறுபான்மை வரும்.
அன்றியும், மடலூர்தல் ஆடவர்க்கேஉரிய தென்றும், மடலூர்வேனென்று சொல்லுதல் இருபாலார்க்கு முரிய தென்றும் உணர்க.
இங்குக்கூறிய இது, தலைவியின் மடற்றிறம். பிரிவாற்றாதுவருந்துந் தலைமகள் காதல்மிகுதியால் நாணந்துறந்து
மடலேறத்துணிவதைக் கண்ட தோழி, இவளை இங்ஙனம் வரம்புகடக்க விடலாகா தென்று சிந்தித்து அவளது
அந்நிலைமையைக் செவிலித்தாய்க்குக் கூறுதல், இச்செய்யுளிற்குறிக்கப்பட்ட விஷயம். இதன்பயன்,
அச்செவிலித்தாய் இவளுடையகாதலை உரியபடிநற்றாய்க்கு உணர்த்த, அவள்தந்தைக்குக்கூறிமணஞ்செய்விப்பளென்பது.

இனி, இப்பாட்டுக்கு – தோழி தலைவிக்கு இனி மடலே பொரு ளென மதித்ததாகவுந் துறைகொள்ளலாம்.

சாற்றுக்கரும்பனைக் கூற்றென்னும் – தனக்குநேர்ந்த காதல் மரணவேதனையை விளைத்தலால், இவள்,
காதற்கடவுளான காமனை யமனென்று அஞ்சி வெறுப்ப ளென்க. தென்திசையிலிருந்து வருங் காற்றாகிய தென்றலை,
பரதகண்டத்திலே தென்னாடாகிய பாண்டியநாட்டிலே யுள்ள மலயபருவதமெனப்படுகின்ற பொதியமலையிலிருந்து
தோன்றிவருவதாகக் கூறுதல், கவிசமயம்; ‘மலயமாருதம்’ என அதற்கு ஒருபெயர் வழங்குதலுங் காண்க.
வடதிசையிலிருந்து தென்திசைக்கு வந்த அகத்தியமகாமுனிவர் பொதியமலையிலே வீற்றிருந்து பேரகத்தியம்
சிற்றகத்தியம்என்ற தமிழிலக்கணநூல்களை இயற்றித் தமதுமாணாக்கர்கட்குப் போதித்துத் தமிழ்ப்பாஷையைச் சீர்திருத்தி வளர்த்ததனால்,
அம்மலை, தமிழ்வளர்ந்த இடமெனப்படும். பிறர்க்கு இன்பத்தைத்தருவதான இளந்தென்றல் இனிதுவீசும்பொழுதெல்லாம்
இவள் வருந்துகின்றா ளென்பாள், “ஆசைத்தமிழ்மலயக்காற்றுக்கு அரும்பல் நையும்” என்றாள்.
கூடினார்க்குஇன்பந்தரும் பொருள்களெல்லாம், பிரிந்தார்க்குத் துன்பம்விளைக்கு மென்க.
அண்டரேறு – விலங்குகளுக்குள் அரசாகிய சிங்கம்போலத் தேவர்களில் தலைமைபெற்ற ஆதிதேவனென்க;
சிங்கம் காளை யானை முதலிய சிலசொற்கள், ஆடவரிற் சிறப்பை யுணர்த்துவனவாக வழங்கும்.
“அலங்காரற்கு”, “அண்டரேற்றுக்கு” என்பன – தலைவனது அழகின்மிகுதியையும், தலைமையையும் உணர்த்தும்.
பனைமடற்குதிரையேறுதலை “பனை” என்றது, மும்மடியாகுபெயர்.

அரும்பல் என்ற தொழிற்பெயர் – ஆகுபெயராய், அரும்பும்பொழுதை யுணர்த்திற்று. அரும்ப நையும் என்று எடுத்து,
அரும்புந்தோறும் வருந்து வா ளெனினும் அமையும்; இவ்வுரைக்கு, திரிபுக்காக நகரம் னகரமாக் கொள்ளப்பட்டதென வேண்டும்.
இனி, காற்று உக்கு அரும்பல் என்று பதம்பிரித்து, தென்றல் வெளிப்பட்டுத் தோன்றுதலுக்கு என்று உரைப்பாரு முளர்.
கண்படுதல் – கண்மூடியுறங்குதல். அண்டம் – வானம், மேலுலகம்; அதிலுள்ளவர்,
அண்டர். ஏறு – சிங்கத்தின் ஆண்மைப்பெயர். ஏறு போன்றவனை “ஏறு” என்றது, உபசாரவழக்கு.
“அரும்பனையக்கொங்கை” என்றவிடத்து, ககரவொற்று – விரித்தலென்னுஞ் செய்யுள்விகாரத்தால் வந்தது;
அது இல்லாவிடின், கட்டளைக்கலித்துறைக்கு உரிய வெண்டளை சிதைதல் காண்க; அன்றி, பெயரெச்சத்தின்முன் வலிமிக நியாயமில்லை.

“ஆசைத்தமிழ்மலயக்காற்று” என்றது, மலயமலையில்வளர்ந்த தமிழ்ப் பாஷைபோலவே அதிலுண்டான தென்றற்காற்றும்
மிகஇனியதாய்ப் பலரும் விரும்பத்தக்க தென்ற குறிப்பு; (எனவே, இங்கு இந்நூலாசிரியரது பாஷாபிமானம் விளங்கும்.)

ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே, அவனது நிரந்தராநுபவத்தில் அபேக்ஷையுடைய இவர்,
ஸ்வதந்திரனான அவன் மீண்டும் தானாகவந்து தம்மைச்சேர்த்துக்கொண்டருளுங் காலத்தின் வரவை எதிர்நோக்கிப் பொறுத்து
மார்ஜாரகிசோரநியாயத்தால் பரதந்திரராய் ஆறியிருப்பது தகுதியாக, தமது அவாவின்மிகுதியால் அத்தன்மைகுலைந்து,
எவ்வாற்றாலாயினும் தாம் முயன்று அவனது ஸாந்நித்யத்தைப் பெறுதற்கு விரைய, அத்தன்மையைக் கண்ட அன்பர்கள்,
அவர்பக்கல் பரிவுடையரான பெரியோர்க்கு அந்நிலைமையை எடுத்துஉரைத்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
மன்மதன் தென்றல் முதலிய லௌகிகபதார்த்தங்களைக்குறித்து இவர் அஞ்சுதலும், வெறுத்தலும், முன்னிரண்டுவாக்கியங்களிற் புலனாம்.
கண்படாள் – கருமமேகண்ணான இவர் அதில் எப்பொழுதும் கண்விழிப்பு (ஜாக்கிரதை) உடையராயேயிருப்ப ரென்றபடி.
அரும்பனைய கொங்கையாள் – மேன்மேல்வளரக்கடவதான பக்தியையுடைய இவ ரென்க.
அந்யாபதேசத்தில் ‘கொங்கை’ என்றது, ஸ்வாபதேசத்தில் பக்தியாம். மகளிருறுப்பாய்ச்சிறக்கிற இது,
அடியார்க்கு இலக்கணமாய்ச்சிறக்கிற அதனைக் குறிப்பிக்கும். தலைவனைச்சேர்ந்து அநுபவித்தற்கு உபகரணமாதல், இரண்டுக்கும் உண்டு.
மடலூர்தலுக்கு ஸ்வாபதேசம் – பாரதந்திரியத்தைவிட்டு ஸ்வாதந்திரியத்தை மேற்கொண்டு ஸாதநாநுஷ்டாநஞ்செய்தல்.
இவரது பாரததந்திரிய நிலைகுலையாதபடி எம்பெருமான் ஸாந்நித்யந்தந்தருளுமாறு செய்விக்கவேண்டுமென்று உணர்த்துதல்,
இங்ஙனம் உரைத்தலின் பயனாம். பிறவும் ஆய்ந்து உணர்க.

இனி, இரண்டாமடியில், அரும்பு அனையும் என்று பதம்பிரித்து, அதற்கு – (எள்ளளவு கடுகளவு தினையளவு என்றாற்போல)
அரும்பினவ்வளவும் என்று பொருள்கொண்டு, இனிய தென்றலினாற் சிறிதளவும் துயில்கொள்ளாள் என்று உரைப்பாரு முளர்;
அது, திரிபுநயத்துக்குப் பொருந்தாது மூன்றாமடியிலும் அரும்பு என்பது அப்பொருளதேயாதல் காண்க.
திரிபுயமகங்களுள் ஓரடியிற்கூறியவாறு மற்றோரடியிலும் பொருள்கூறுதல் இலக்கணமன்றென்றும்,
அங்ஙனங் கூறினால் கவிசமத்காரங் கெடுமென்றும் உணர்க.

—————–

மருந்து உவந்தார் தொழும் மாலிருஞ்சோலை மலை அழகர்
அருந்துவம் தாரணி என்று அயின்றார் அடல் ஆயிர வாய்
பொருந்து வந்து ஆர் பணிப் பாயார் விதுரன் புது மனையில்
விருந்து உவந்தார் அடியார்க்கு இல்லை நோயும் வெறுமையுமே –18-

(இ – ள்.) தாரணி – பூமியை,
அருந்துவம் என்று – உண்போமென்று திருவுள்ளங்கொண்டு,
அயின்றார் – உண்டருளியவரும், –
அடல் – வலிமை யையுடையதும்,
ஆயிரம் வாய் பொருந்து – ஆயிரம்வாய்கள் பொருந்தியதும்,
வந்து ஆர் – காற்றை உணவாகக்கொள்வதுமான,
பணி – (ஆதிசேஷனென்னும்) பாம்பாகிய,
பாயார் – சயனத்தையுடையவரும், –
விதுரன் புது மனையில் – விதுரனது புதிய மாளிகையில்,
விருந்து வந்தார் – விருந்தினராக வந்தருளியவருமாகிய,
மருந்து உவந்தார் தொழும் மாலிருஞ்சோலை மலை அழகர் – அமிருதத்தை விரும்பியுண்டவரான தேவர்கள் வணங்கப்
பெற்ற திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற அழகருடைய,
அடியார்க்கு – தொண்டர்களுக்கு,
நோயும் வெறுமையும் இல்லை – பிணியும் தரித்திரமும் (ஒருநாளும்) உளவாகா; (எ – று.)
என்று, எம்பெருமான் திருவடிக்கு ஆட்படுதலின் பயன் கூறியவாறு.
அவனடியார் அவனருளால் எல்லாச்செல்வமும் நிறைந்து அரோக த்ருடகாத்திரராய் வாழ்வ ரென்க.

மருந்து – சாவாமருந்து, உவத்தல் – விரும்புதல்; இங்கு, அதன் காரியமாகிய உண்ணுதலின்மேல் நின்றது; உபசாரவழக்கு.
மருந்துவந்தார்தொழும் மாலிருஞ்சோலை –
“அமரரொடு கோனுஞ் சென்று, திரிசுடர் சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே” என்றார் பெரியாழ்வாரும்.
தாரணி – தரணீயென்ற வடசொல்லின்விகாரம். பூமியின் பெயராகிய இது – இங்கே, எல்லாவுலகங்களுக்கும் உபலக்ஷணம்.
பிரமன் முதலிய சகலதேவர்களு முட்பட யாவும் அழிந்துபோகின்ற கல்பாந்தகாலத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களை
யெல்லாம் தன்வயிற்றில் வைத்துக்கொண்டு சிறுகுழந்தை வடிவமாய்ப் பிரளயப்பெருங்கடலிலே
ஆதிசேஷனது அம்சமானதோ ராலிலையின் மீது பள்ளிகொண்டு அறிதுயில் செய்தருள்கின்றன னென்பது, நூற்கொள்கை.
இது, எம்பெருமான் செயற்கரியன செய்யும் விசித்திர சக்தியைக் காட்டும்.

வந்து என்ற பெயர்ச்சொல் காற்றுஎன்னும் பொருளதாதலை,
“விண்டு நீளை வந்து உலவை, கொண்டல் கோடை யென்றிவை காற்றே” என்ற பிங்கலந்தையாலும் உணர்க.
பாம்பு வாதாசந மாதலால், “வந்துஆர் பணி” எனப்பட்டது. எம்பெருமானுக்குத் திருவனந்தாழ்வான் காற்றடைத்த மெத்தை
போன்று இனிது பள்ளிகொள்ளுதற்குப் பாங்காயிருப்பன். ஆர் பணி -வினைத்தொகை.
பணம் – படம்; அதனையுடையது பணி எனக் காரணக்குறி; இவ்வடசொல், பணி யென ஈயீறு இகரமாயிற்று.

விதுரன் – திருதராட்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பிமுறையாகிறவன்; ஆதலால், பாண்டவர்க்கும் துரியோதனாதியர்க்கும் சிற்றப்பன்;
பரமபாகவதர்களில் ஒருவன்; கண்ணன் பாண்டவர்க்காகத் துரியோதனாதியரிடம் தூதுபேசுதற்பொருட்டு அத்தினாபுரிக்கு
எழுந்தருளியபோது, அங்கு வேறுயாருடைய வீட்டிற்குஞ் செல்லாமல் ஞானபக்திகளிற்சிறந்த விதுரனுடைய திருமாளிகையினுட்
புக்குத்தங்கி அங்கு அவனால் மிக்க அன்புடன் அமைக்கப்பட்ட விருந்துணவை அமுதுசெய்தருளின னென்பது பிரசித்தம்.
இது, எம்பெருமான் அடியவர்க்கெளியவ னென்பதைக் காட்டும். அவ்விதுரன் மாளிகை இங்ஙனம் கண்ணன் திருவருளுக்கு
இலக்காகி அவன் பொன்னடிசார்த்தப்பெற்ற பாக்கிய முடைமையால், “புதுமனை” என்று கொண்டாடிக்கூறப்பட்டது.
கண்ணன் முன்பு ஒருநாளும் அங்குச்செல்லாது அன்றைக்கேசென்றன னென்பதுபற்றி,
கண்ணனுக்குப் புதியதானமனை யெனினுமாம்.
விருந்து – புதுமை; புதியனான விருந்தினனை உணர்த்துகையில், பண்பாகுபெயர். வெறுமை = வறுமை; பொருளின்மை.

———–

தலை மகன் இளமைக்குச் செவிலி இரங்குதல்

வெறுத்தவரை கஞ்சனை செற்றுளார் விடை வெற்பர் வெங்கண்
கறுத்த வரைக்கு அஞ்சல் என்று வந்தார் கனகாம் பரத்தைப்
பொறுத்த அரைக்கு அஞ்சன மேனிக்கு ஆவி புலர்ந்து உருகிச்
சிறுத்த வரைக் கஞ்சம் கூப்பும் என் பேதைக்கு என் செப்புவதே –19-

(இ – ள்.) கஞ்சனை – கம்சனையும்,
வெறுத்தவரை – (மற்றும் தம்மைப்) பகைத்தவர்களான பல கொடியவர்களையும்,
செற்று உளார் – கொன்றிட்டவரும்,
வெம் கண் கறுத்த வரைக்கு அஞ்சல் என்று வந்தார் – கொடியகண்களையுடைய கரியமலை போன்ற
யானைக்கு “அஞ்சாதே” என்றுசொல்லி அபயமளித்து எதிரிலே வந்தருளியவரும்,
விடைவெற்பர் – விருஷபகிரியில் எழுந்தருளியவருமாகிய அழகருடைய,
கனக அம்பரத்தை பொறுத்த அரைக்கு – பொன்மயமான பீதாம்பரத்தைத் தரித்த திருவரையினழகைக்குறித்தும்,
அஞ்சனம் மேனிக்கு – மைபோலுங் கரிய திருமேனிநிறத்தைக்குறித்தும்,
ஆவி புலர்ந்து உருகி – (ஈடுபட்டு) உயிர்வருந்திக் கரைந்து,
வரை சிறுத்த கஞ்சம் கூப்பும் – (உத்தமவிலக்கணமாகிய) ரேகைகளையுடைய சிறிய தாமரைமலர்போன்ற கைகளைக் குவித்துத்தொழுகின்ற,
என் பேதைக்கு – எனது மிக்க இளமைப்பருவமுடையளான பெண்ணின் நிலைமையைக்குறித்து,
என் செப்புவது – (யான்) யாதுசொல்வது? (ஒன்றுஞ்சொல்லத் தரமில்லையென்றபடி); (எ – று.)

தலைமகனைக் களவொழுக்கத்திற் கூடிய தலைமகள் அவன் பிரிந்தநிலையில் ஆற்றாது வருந்தி மேனிமெலிந்து
உள்ளமும் உயிரும் உருகப்பெற்றவளாய் “சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும் திருவரங்கத்துள்ளாயென்னும்,
வந்திக்கும் ஆங்கே மழைக்கண்நீர்மல்க வந்திடா யென்றென்றேமயங்கும்” என்றபடியெல்லாம் ஆக,
அவ்வேறுபாடுமாத்திரத்தைக் கண்ட செவிலித்தாய் “இதற்குக்காரணம் என்னோ?” என்றுகவன்று அவளது உயிர்ப்பாங்கியை வினாவ,
அவள் உண்மையான காரணத்தைக் கூறியிட, அதுகேட்ட செவிலி, ‘பேதைப்பருவத்தளான இவளுக்கு
இப்பேரறிவு வந்தவாறு என்னாயிருந்தது?’ என்று இரங்கிக்கூறிய துறை, இது. இவள் யௌவநபருவத்தை யடைந்திருந்தும்,
இவள் தாய்மார்க்கு இவள்பக்கல் அன்புமிகுதியால் இவளது மிக்க இளமையே தோற்றுவதென்க. மகளிர்க்குஉரிய பருவம்
ஏழனுள் முதலதாகிய பேதைப்பருவத்திலேயே இவளுக்கு இத்தன்மையதான வியாமோகம் உண்டானால்,
யாம் சொல்லத்தகுவது யாது? என்பதாம். பேதைப்பருவத்துக்கு வயதெல்லை – ஐந்துமுதல் ஏழளவும் என்பர்.
“பிஞ்சாப் பழுத்தானை யாண்டாளை” என்றாற்போல, வேட்கைபிறவாப்பருவமே தொடங்கி இவள்வேட்கைவிஞ்சின ளென்க.

“உள்ளுளாவியுலர்ந்துலர்ந்து” என்றபடி உலர்ந்துஉருகும் இயல்பினதல்லாத உயிரும் உலர்ந்துஉருகியது என்றதனால்,
உருகுமியல்பினதான உள்ளமும் வாடுமியல்பினதான உடலும் நெகிழ்ந்துதளர்ந்தமை சொல்ல வேண்டாதாயிற்று.
சிறுத்த கஞ்சம் என இயையும்.
“கடியார்பொழிலரங்கத்தம்மா னரைச், சிவந்த ஆடையின்மேற் சென்றதா மெனசிந்தனையே,”
“அந்திபோல்நிறத்தாடையும் அதன்மேலயனைப்படைத்ததோரெழில், உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே” என்றபடி
திருவரையும் பொற்பட்டாடையுஞ் சேர்ந்த சேர்த்தியழகில் ஈடுபட்டமை கூறுவாள் ‘கனகாம்பரத்தைப் பொறுத்த வரைக்கு’ என்றும்,
அச்சிவந்தஆடையும் கரியதிருமேனியும் ஒன்றுக்குஒன்று நிறவிளக்கந்தரும்படியுள்ள தன்மையில் ஈடுபட்டமை கூறுவாள்
அதனையடுத்து ‘அஞ்சனமேனிக்கு’ என்றும் கூறினாள்.

“வெறுத்தவர்” என்றது, சிசுபாலன் தந்தவக்ரன் முதலியோரை. வெங்கண் – காண்பவர்க்கு அச்சந்தருகிற “தீயுமிழ்சிறுகண்”;
இது, உத்தமகஜத்துக்கு இயற்கை. ‘வெங்கண்வரை’ எனவே, யானையாயிற்று;
‘கைம்மலை’ என்றாற்போல; ‘வரைக்கஞ்சம்’ என்றதும் இத்திறத்ததே. கருமை யென்ற பண்பினடி,
கறு என்று விகாரப்பட்டு வினைத்தன்மை யடையும். கஜேந்திராழ் வானைக்காத்தருளிய வரலாற்றை யெடுத்துக்கூறியது,
உயர்திணையோடு அஃறிணையோடு பேதமற அடிமைப்பட்ட உயிர்களை அன்போடு துயர்தீர்த்துப் பாதுகாத்தருள்கின்ற
தலைவனது கருணைமிகுதி காட்டுதற்கு. கஞ்சம் – இங்கேகைக்குஉவமையாகுபெயர். இரண்டாமடியில், ‘வரை’ என்றதும் இது.

ஐயங்கார் அழகப்பிரானது இயற்கையழகிலும் செயற்கையழகிலும் துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலநசீலங்களிலும்
உயர்ந்தஇடத்திலே வாழுந்திறத்திலும் ஈடுபட்டு அவனது ஸாந்நித்யத்தைப் பெறுதற்கு விரைந்து ஆற்றாமையால்
தளர்ச்சியடைந்து “அழுவன் தொழுவ னாடிக்காண்பன் பாடியலற்றுவன்” என்றபடி ஆக,
அந்நிலைமையை அவரது அன்பர்கள் சொல்ல, உணர்ந்த ஞானிகள், ‘எம்பெருமானைச்சேர்தற்குச் சாதநமான பக்தி
முதலியன பூர்ணமன்றியேயிருக்க, இவர்க்கு உண்டாகிய விரைவுஎன்னோ? என்று சொல்லும்வார்த்தை,
இதற்கு உள்ளுறைபொருள். இங்ஙனம் உரைத்தல்,

இவர்பக்கல் தமக்குஉள்ள பரிவினா லுண்டான கலக்கத்தா லென்க. மிக்க இளமைதொடங்கியே இளையபெருமாள்
இராமபிரானிடத்துப் பேரன்புகொண்டு அடிமைபூண்டொழுகி அப்பெருமாளைப்பிரியமாட்டாது நின்றாற்போல,
“அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்புசெய்வித்து, அறியாமாமாயத்து அடியேனை வைத்தாயால்” என்றபடி
ஐயங்கார் எம்பெருமானை முதலிற்கண்ட காலந்தொடங்கியே அவனைப்பிரியில் தரியாதவாறு பிறந்த பரமபக்தியுடையராயின ரென்க.
ஒருவிலங்கினாலே மற்றொருவிலங்கிற்கு நேர்ந்த துன்பத்தைத் தான்இருந்த இடத்திலிருந்தே தீர்ப்பது ஸர்வசக்தனான
எம்பெருமானுக்கு மிகஎளிதாயினும் அப்பெருமான் அங்ஙனஞ்செய்யாமல் தனதுபேரருளினால் அரைகுலையத் தலைகுலைய
மடுக்கரைக்கேவந்து உதவின மகாகுணத்தில் ஈடுபட்டு, “கறுத்தவரைக்கு அஞ்சலென்றுவந்தார்” என்றார்.

—————

செப்போ தனம் செழுந்துப் போ செவ்வாய் என்று சேயிழை யார்க்கு
ஒப்பு ஓத நெஞ்சு உருகித் திரிவீர் கனல் ஊதை மண் விண்
அப்பு ஓதனம் என்று அமுது செய்தார் அலங்காரர் பொற்றாள்
எப்போது அனந்தல் தவிர்ந்து ஏத்த நீங்கள் இருக்கின்றதே –20-

(இ – ள்.) “தனம் செப்போ – கொங்கைகள் (பொற்) கலசங்களோ?
செம்வாய் செழுந் துப்போ – சிவந்தவாயானது செழுமையான பவழமோ?” என்று -,
சேயிழையார்க்கு ஒப்பு ஓதல் – செம்பொன்னாபரணமணிந்தவர் களான மாதர்களின் உறுப்புக்களுக்கு (
வடிவும் நிறமும் முதலியனபற்றி) உவமையெடுத்துச் சொல்வதில்,
நஞ்சு உருகி – (மனம்) நெகிழ்ந்து கரைந்து,
திரிவீர் – வீணே திரிகின்றவர்களே! – நீங்கள் – , –
கனல் – அக்கினியும்,
ஊதை – காற்றும்,
மண் – நிலமும்,
விண் – ஆகாயமும்,
அப்பு – நீரும் (ஆகிய பஞ்சபூதங்களை),
ஓதனம் என்று அமுதுசெய்தார் – உணவாக உட்கொண்டவராகிய,
அலங்காரர் – அழகருடைய, பொன் தாள் – அழகிய திருவடிகளை,
அனந்தல் தவிர்ந்து ஏத்த இருக்கின்றது – தாமசகுணம் ஒழிந்து துதிக்கவிருப்பது,
எப்போது – எக்காலத்தோ! (எ – று.)

என்று உலகத்தாரை நோக்கி இரங்கிக்கூறியவாறு, தாமதகுணத்தவ ராய்ச் சிற்றின்பவாசைகொண்டு
மகளிர்பக்கல் ஈடுபட்டு அவரது அவயவங்களுக்கு ஒப்புமைதேடி யெடுத்துச்சொல்லிக் கொண்டாடித்திரிகிற நீங்கள்,
அத்தன்மையொழிந்து சத்துவகுணந்தலையெடுக்கப்பெற்றவர்களாகி, பிரளயாபத்திலேபஞ்சபூதங்களையும்
வயிற்றில்வைத்துக்குறிக்கொண்டு பாதுகாத்தருள்கிற அழகப்பிரானுடைய பொன்னடிகளைத் துதித்து உய்யுங் காலம் எந்நாளோ! என்றார்.

இழை – இரத்தினமிழைத்துச் செய்யப்படுவது. செம்பொன்னணிகல மென்ற பொருளில் “சேயிழை” என்றது, உபசார வழக்கு.
நஞ்சு – நைந்து என்பதன் முழுப்போலி. ஓத நஞ்சு என்று பிரித்து உரைப்பதானால்,
“நஞ்சு” என்பதன் நகரம் திரிபுக்காக னகரமாக் கொள்ளப்பட்ட தெனவேண்டும்.
“நெஞ்சுருகி” என்று பாடங்கொள்ளுதல், திரிபுநயத்துக்குமாறாம். உற்பத்திமுறைமைபற்றி விண் ஊதை கனல் அப்பு மண் என்றாவது,
லயக்கிரமம் பற்றி மண் அப்பு கனல் ஊதை விண் என்றாவது கூறுவது மரபாயினும், இங்குச் செய்யுள் நோக்கிப் பிறழவைத்தார்.
பொற்றாள் – பொன்னணி யணிந்த பாதமுமாம்; பொன் – அதனாலாகிய அணியை யுணர்த்தும்போது, கருவியாகுபெயர்.
அனந்தல் – தூக்கம், சோம்பல்; இங்குக் காரியப்பெயர், காரணத்தின் மேலதாய்த் தமோகுணத்தைக் குறித்தது.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –81-100-

February 21, 2022

வந்தித்து இருக்கு மறை போற்றும் வேங்கட வாண மலர்
உந்தித் திருக் குங்குமம் அணி மார்ப உள் வஞ்சனையும்
புந்தித் திருக்கும் வெகுளியும் காமமும் பொய்யும் விட்டுச்
சிந்தித் திருக்குமது எக்காலம் யான் உன் திருவடியே –81-

(இ – ள்.) இருக்கு மறை – ருக்முதலிய வேதங்கள்,
வந்தித்து போற்று – வணங்கித் துதிக்கப்பெற்ற,
வேங்கட வாண – திருவேங்கடமலையில் வாழ்பவனே!
மலர் உந்தி திரு குங்குமம் அணி மார்ப – திருநாபித்தாமரைமலரையும் திருமகளோடு குங்குமச்சாந்தை யணிந்த திருமார்பையு முடையவனே! –
யான் -, உள் வஞ்சனையும் – மனத்திலடங்கிய வஞ்சனைகளையும்,
புந்தி திருக்கும் – அறிவின் மாறுபாட்டையும்,
வெகுளியும் – கோபத்தையும்,
காமமும் – சிற்றின்பவிருப்பத்தையும்.
பொய்யும் – பொய்யையும்,
விட்டு – ஒழித்து.
உன் திரு அடி சிந்தித்திருக்குமது – உனது திருவடிகளைத் தியானித்திருப்பது,
எ காலம் – எப்பொழுதோ? (எ – று.)

————-

திருவடி வைக்கப் புடவி பற்றாது அண்டம் சென்னி முட்டும்
கருவடிவைக் கலந்து ஆற்றா எண் திக்கும் கடல் மண் கொள்வான்
பொரு வடிவைக் கனல் ஆழிப் பிரான் புனல் ஆழி கட்டப்
பெரு வடிவைக் கண்ட அப்பன் எவ்வாறு அடி பேர்ப்பதுவே –82-

(இ – ள்.) பொரு – போர்செய்கின்ற,
வடி – (பலவகைப்படைக்கலங்களில்) தேர்ந்தெடுத்த,
வை – கூர்மையான,
கனல் ஆழி – அக்கினியைச்சொரிகிற சக்கராயுதத்தையுடைய,
பிரான் – தலைவனும்,
ஆழி கட்ட – சமுத்திரத்தை அணைகட்டிக் கடப்பதற்காக,
புனல் பெரு வடிவை கண்ட – (அக்கடலின்) நீர்மிக்கவற்றுதலை அடையும்படி செய்த,
அப்பன் – ஸ்வாமியுமான திருவேங்கடமுடையான், (திரிவிக்கிரமாவதாரங்கொண்ட காலத்து),
திருஅடி வைக்க புடவி பற்றாது – (அப்பெருமான் தனது) ஒரு திருவடியை வைப்பதற்கே பூமிமுழுவதும் இடம்போதா தாயிற்று;
சென்னி அண்டம் முட்டும் – (அப்பெருமானது) திருமுடியோ அண்டகோளத்தின் மேன் முகட்டைத் தாக்கியது;
எண் திக்கும் கரு வடிவை கலந்து ஆற்றா – எட்டுத்திக்குக்களும் (அவனது) கருநிறமான திருமேனி பொருந்துதற்கு இடம்போதாவாயின;
(இங்ஙனம் பெருவடிவனான அத்திருமால்), கடல் மண் கொள்வான் – கடல்சூழ்ந்த நிலவுலகத்தில் (மூன்றடியிடம்) அளந்துகொள்வதற்காக,
அடி பேர்ப்பது – திருவடிகளை எடுத்துவைப்பது, எ ஆறு – எப்படியோ?

அளத்தலாவது ஒருவன் நின்றவிடமொழிய மற்றோரிடத்தில் மாறிக் காலிடுத லாதலால், அங்ஙனம் அடிமாறியிட
வொண்ணாதபடி நிலவுலகமுழுவதும் ஓரடிக்குள்ளே யடங்குமாறு பெருவடிவுடையவன் மூன்றடி நிலத்தை அளந்து
கொள்ளுதற்கு இடம் ஏது? எனத் திரிவிக்கிரமாவதாரஞ்செய்த திருமாலினது வடிவத்தின் பெருமையை வியந்து கூறியவாறாம்;
பெருமையணி. திருமால் வஞ்சனையால் மாவலியை மூன்றடிநிலம்வேண்டி அதுகொடுக்க அவன் இசைந்தவுடன்
உலகங்களை அளந்துகொண்டன னென்று ஒரு சாரார் கூறும் ஆக்ஷேபத்துக்கு ஒருசமாதானம் இதில் தோன்றும்;
சரீரம் இயல்பிலே வளருந்தன்மையதாதலால், முந்தியவடிவையேகொண்டு அளந்தில னென்று குறைகூறுதல் அடா தென்க.
கலந்து = கலக்க; எச்சத்திரிபு. கொள்வான் – எச்சம். ஈற்றடியில், வடிவு – வடிதல்; தொழிற்பெயர்.

————-

பேர் ஆனைக் கோட்டினைப் பேர்த்தானை வேங்கடம் பேணும் துழாய்த்
தாரானை போதானைத் தந்தானை எந்தையை சாடு இறப் பாய்ந்து
ஊர் ஆனை மேய்த்து புள் ஊர்ந்தானை பஞ்சவர்க்கு உய்த்து நின்ற
தேரானை நான் மறை தேர்ந்தானை தேரும் நும் தீது அறுமே –83-

(இ – ள்.) பேர் – பெரிய, ஆனை – (குவலயாபீடமென்னும்) யானையினது,
கோட்டினை – தந்தங்களை,
பேர்த்தானை – பெயர்த்துஎடுத்தவனும், –
வேங்கடம் பேணும் – திருவேங்கடமலையை விரும்பித் தங்குமிடமாகக் கொண்ட,
துழாய் தாரானை – திருத்துழாய்மாலையையுடையவனும், –
போதனை தந்தானை – பிரமனைப் படைத்தவனும், –
எந்தையை – எமது தலைவனும், –
சாடு இற பாய்ந்து – சகடாசுரன் முறியும்படி தாவியுதைத்து,
ஊர் ஆனை மேய்த்து – ஊரிலுள்ள பசுக்களை மேய்த்து,
புள் ஊர்ந்தானை – கருடப்பறவையை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்தியவனும், –
பஞ்சவர்க்கு – பஞ்சபாண்டவரில் ஒருவனான அருச்சுனனுக்கு,
உய்த்து நின்ற – செலுத்திநின்ற,
தேரானை – தேரையுடையவனும், –
நால் மறை தேர்ந்தானை – நான்கு வேதங்களாலும் ஆராயப்பட்டவனுமான திருமாலை,
தேரும் – (முழுமுதற்கடவுளாக) அறிந்து தியானித்துத் துதியுங்கள்; (அங்ஙனஞ் செய்தால்),
நும் தீது அறும் – உங்கள் துன்பங்களெல்லாம் நீங்கும்; (எ – று.)

ஊர் – இங்குத் திருவாய்ப்பாடி. பஞ்சவர்க்கு உய்த்துநின்ற தேரான் – அருச்சுனனுக்குச் சாரதியாய்நின்று தேரோட்டியவன்.
பஞ்சவர் – ஐவர்; இது, ஐந்து என்னும் பொருள்தரும் பஞ்ச என்ற வடமொழியெண்ணுப்பெயரடியாப் பிறந்த பெயர்;
இங்கே, பாண்டவர்க்கு, தொகைக்குறிப்பு. இப்பொதுப் பெயர், சிறப்புப்பொருளின் மேலதாய்,
இங்கு அருச்சுனனைக் குறித்தது. ‘தேறும்’ என்பதும் பாடம்.

இச்செய்யுளின் அடிகளில், பேரானை, பேர்த்தானை, தாரானை, தந்தானை, ஊரானை, ஊர்ந்தானை,
தேரானை தேர்ந்தானை என்பவை எதிர்மறையும் உடன்பாடுமாய் ஒன்றுக்கொன்று மாறுபடுவதாக மேல்நோக்கில்தோன்றி,
பொருளையுணருமிடத்து வேறுவகையாப்பொருள்பட்டு மாறுபாடின்றிமுடிதலால், முரண்விளைந்தழிவணி;
வடநூலார் விரோதாபாஸாலங்காரமென்பர். இது, சொல்லால்வந்த முரண்தொடை;
“சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றது காண்க.
அழகரந்தாதியின் 83 – ஆஞ்செய்யுளும் இத்தன்மையதாம்; அது வருமாறு :-
“தொலைந்தானை யோதுந் தொலையானை யன்னை சொல்லான் மகுடங்,
கலைந்தானை ஞானக் கலையானை யாய்ச்சி கலைத்தொட்டிலோ,
டலைந்தானைப் பாலினலையானை வாணன்கையற்றுவிழ,
மலைந்தானைச் சோலைமலையானை வாழ்த்தென் மட நெஞ்சமே.”
“மாத்துளவத், தாரானை வேட்கை யெலாந் தந்தானை மும்மதமும், வாரானை யன்றழைக்க வந்தானைக் –
காரான, மெய்யானை யன்பருக்கு மெய்த்தானைக் கண்கைகால், செய்யானை வேலையணைசெய்தானை –
வையமெலாம், பெற்றானைக்காணப்பெறாதானைக் கன்மழைக்குக், கற்றானைக்காத்ததொரு கல்லானை –
யற்றார்க்கு, வாய்ந்தானைச் செம்பவளவாயானை மாமுடியப், பாய்ந்தானை யாடரவப்பாயானை” என்ற
திருநறையூர் நம்பிமேகவிடு தூதினடிகளையுங் காண்க.

————–

அறுகு ஊடு கங்கை தரித்தான் அயன் அழைத்தாலும் இச்சை
அறு கூடு மால் அடியார் அடிக்கே அப்பன் வேங்கடவன்
மறுகு ஊடு மாதர் ஏறி பூண் எறிக்கும் மதில் அரங்கன்
மறு கூடு நம்மை மருவாமல் வாழ்விப்பன் மா மனமே –84-

(இ – ள்.) மா மனமே – சிறந்த (எனது) மனமே! –
அறுகு ஊடு கங்கை தரித்தான் – (முடியிற்சூடிய) அறுகம்புற்களினிடையே கங்காநதியைத் தரித்தவனான சிவனும்,
அயன் – பிரமனும்,
அழைத்தாலும் – (வலியவந்து உன்னைத் தம்மிடத்துக்கு) அழைத்தாலும்,
இச்சை அறு – (அவர்கள்பக்கல்) விருப்பங்கொள்ளாதொழிவாய்:
மால் அடியார் அடிக்கே கூடு – திருமாலினது அடியார்களின்திருவடிகளிலேயே சேர்வாய்: (அங்ஙனஞ் சேர்ந்தால்), –
ஊடு மாதர் எறி பூண் மறுகு எறிக்கும் மதில் அரங்கன் – (தம்கணவரோடு) பிணங்கிய மகளிர் கழற்றியெறிந்த
ஆபரணங்கள் (எடுப்பவரில்லாமல்) வீதிகளிலே (கிடந்து) ஒளிவீசப்பெற்றதும் மதிள்கள் சூழ்ந்ததுமான ஸ்ரீரங்கத்தை யுடையவ னாகிய,
அப்பன் வேங்கடவன் – ஸ்வாமியான திருவேங்கட முடையான்,
மறு கூடு மருவாமல் நம்மை வாழ்விப்பன் – (இவ்வுடம்புநீங்கிய பின்) மற்றோருடம்பிற்சேராதபடி நம்மை வாழச்செய்வன்
(மீண்டும் பிறப்பில்லாதபடி நமக்கு முத்திதந்து அதில் நம்மை அழிவின்றிப் பேரின்பநுகர்ந்து வாழ்ந்திருக்கச்செய்வன்); (எ – று.)

சிவபிரான் பிரியங்கொண்டு சூடுபவற்றில் அறுகம்புல்லும் ஒன்றாதலால், “அறுகூடு தரித்தான்” என்றார்;
சிவபூசைக்கு உரிய பத்திரபுஷ்பாதிகளில் அறுகம்புல்லும் ஒன்றாதல் காண்க.
இச்சா என்ற வடசொல், இச்சையென விகாரப்பட்டது. அடிக்கு – உருபுமயக்கம்.
ஊடலாவது – இன்பநிலையில் அவ்வின்பத்தை மிகுவிக்குமாறு ஆடவர்மீது மகளிர் கோபித்தல்; இது, பிரணயகலக மெனப்படும்.
செல்வம் நிரம்பிய மகளிர் அங்ஙனம் கோபங் கொள்ளுகின்றபொழுது தாம் அணிந்துள்ள ஆபரணங்களைக் கழற்றித்
தெருவில் எறிதலையும், அனைவரும் செல்வவான்களாதலால் அங்ஙனம் பிறர்கழித் தெறிந்தவற்றை எவரும்
விரும்பியெடுத்துக் கொள்ளாராக அவை அங்கங்கேயே கிடந்து விளங்குதலையும்,
“கொல்லுலைவேற்கணல்லார் கொழுநரோடூடி நீத்த,
வில்லுமிழ்கலன்கள்யாவும் மிளிர்சுடரெறிக்குமாற்றால்,
எல்லியும் பகலுந் தோன்றா திமையவருலகமேய்க்கும்,
மல்லன் மாவிந்தமென்னும் வளநகர்” என்ற நைடதத்துங் காண்க.
ஊடுமாதர் – வினைத்தொகை. பூணப்படுவது பூண் எனக்காரணக்குறி.
“செம்பொன் மதிலேழுடுத்த திருவரங்கப் பெருங்கோயில்” என்றபடி ஏழுமதில்கள் சூழப்பெற்ற தாதலால்,
அச்சிறப்புத் தோன்ற, “மதிலரங்கம்” என்றார்.
பறவைதங்குதற்கு இடமாகிற கூடு போல உயிர்தங்குமிட மாதலால், உடல், ‘கூடு’ எனப்பட்டது; உவமையாகு பெயர்;
“கூடுவிட்டிங், காவிதான்போயினபின்பு” என்ற ஒளவையார்பாடலையுங் காண்க.
பந்தமோக்ஷங்களுக்கு மனம் காரணமாதலால், ‘மாமனம்’ எனப்பட்டது;
இனி, மனத்தைத் தம்வசப்படுத்துதற் பொருட்டு அதனை ‘மாமனமே’ எனக் கொண்டாடி விளித்தன ரெனினுமாம். மூன்றாமடி – வீறுகோளணி.

தேவதாந்தரபஜநம் பந்தத்துக்கே காரணமாதலால், அவ்வழியிற்செல்வதைவிட்டு மோக்ஷத்தை யடையுமாறு
பாகவதபஜநஞ் செய்வா யென்று தம்மனத்துக்கு அறிவுறுத்தினார்.

இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும், பின்னிரண்டடிகளிலும் தனித்தனி யமகம் காண்க; மேல் 98 – ஆஞ் செய்யுளும் இது.

—–

மாமன் அங்காந்த வல் வாய்ப் புள்ளை ஏவமடித்து பித்தன்
நா மனம் காந்த அன்று ஓட எய்தான் நறும் பூங்கொடிக்குத்
தாமன் அம் காந்தன் திருவேங்கடத்து எந்தை தாள்களில் என்
தீ மனம் காந்தம் கவர் ஊசி போல் என்று சேர்வதுவே –85-

(இ – ள்.) மாமன் – மாமனான கம்சன்,
அங்காந்த வல் வாய் புள்ளை ஏவ – திறந்த வலியவாயையுடைய பறவையை (பகாசுரனை) அனுப்ப,
மடித்து -(அதனைக்) கொன்று,
பித்தன் நா மன் அம் காந்த அன்று ஓட எய்தோன் – சிவன் (தனது) நாவிற்பொருந்திய நீர் வற்றுமாறு அக்காலத்தில்
(பாணாசுரயுத்தத்தில்) ஓடும்படி அம்பெய்தவனும்,
நறும் பூ கொடிக்கு தாமன் அம் காந்தன் – பரிமளமுள்ள தாமரைமலரில் வாழ்கின்ற கொடிபோன்ற பெண்ணுக்கு
(திருமகளுக்கு) இருப்பிடமானவனும் அழகிய கணவனுமான,
திருவேங்கடத்து எந்தை – திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானுடைய,
தாள்களில் – திருவடிகளில்,
என் தீ மனம் – எனது கொடியமனமானது,
காந்தம் கவர் ஊசிபோல் சேர்வது – காந்தத்தினாற் கவரப்பட்ட ஊசிபோலச் சேர்ந்துபற்றுவது,
என்று – எப்பொழுதோ? (எ – று.)

மாமன் – இங்கே, தாயுடன்பிறந்தவன். மன் அம் – வினைத்தொகை. நாமன்அம் காந்த – நாஉலர.
கொடி – உவமையாகுபெயர். பூங்கொடி – மலர்க்கொடிபோன்றவ ளெனினுமாம்.
திருமகளைத் திருமார்பில் வைத்துள்ளதனால், “நறும்பூங்கொடிக்குத்தாமன்” எனப்பட்டான்.
ஊசி – ஸூசீ என்ற வடசொல்லின் விகாரம். எந்தைதாள்களில் என்தீமனம் காந்தங்கவரூசி போற்சேர்வது –
“இரும்பைக் காந்த மிழுக்கின்ற வாறெனைத், திரும்பிப் பார்க்கவொட்டாமல்” திருவடிக், கரும்பைத்தந்து” என்பர் பிறரும்.
காந்தம். இரும்பைக் கவர்ந்து இழுத்தல், வெளிப்படை.

—————

சேரும் மறுக்கமும் நோயும் மரணமும் தீ வினையின்
வேரும் அறுக்க விரும்பி நிற்பீர் வட வேங்கடத்தே
வாரும் மறுக்க அறியான் எவரையும் வாழ அருள்
கூரும் மறுக் கமலை அணி மார்பன் கைக் கோதண்டனே –86–

(இ – ள்.) சேரும் – (கருமகதியால் வந்து) அடைகின்ற,
மறுக்கமும் – மனக்குழப்பங்களையும்,
நோயும் – வியாதிகளையும்,
மரணமும் – மரணத்தையும்,
தீவினையின் வேரும் – கொடியகருமத்தின்மூலத்தையும்,
அறுக்க – ஒழிப்பதற்கு,
விரும்பி நிற்பீர் – விருப்பங்கொண்டு நிற்பவர்களே! (நீங்கள்),
வடவேங்கடத்தே வாரும் – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையினிடத்தே வாருங்கள்: (அங்கு எழுந்தருளியிருக்கிற),
மறு கமலை அணி மார்பன் – (ஸ்ரீவத்ஸமென்னும்) மறுவையும் இலக்குமியையுங் கொண்ட (வலத்திரு) மார்பை யுடையவனும்,
கை கோதண்டன் – கையில் வில்லை யுடையவனுமான திருமால்,
எவரையும் மறுக்க அறியான் – (தன்னைச் சரணமடைந்தவர்) எத்தன்மையராயினும் அவரை விலக்க அறியான்:
(எவரையும்) வாழ அருள்கூரும் – தனது அடியவரனைவரையும் இனிதுவாழுமாறு கருணைபுரிவன்: (எ – று.)

அடியார்களின் பிழைகளைப் பாராட்டாது பொறுத்து ஆட்கொண்டருளுதற்குப் புருஷகாரமாகிற திருமகள்
எப்பொழுதும் விட்டுப்பிரியாமல் உடனிருக்கப்பெற்றவ னாதலால் அனைவரையும் மறாது அருள்செய்வ னென்பது தோன்ற,
‘மறுக்கவறியான் எவரையும் வாழ அருள்கூரும் கமலையணி மார்பன்’ என்றார்.
இடையிலுள்ள ‘எவரையும்’ என்றதை மத்திமதீபமாகக் கொண்டு, முன்நின்ற ‘மறுக்கவறியான்’ என்றதனோடும்,
பின்நிற்கும் ‘வாழவருள்கூரும்’ என்பதனோடுங் கூட்டுக. மறுக்கம் – தொழிற்பெயர்.

————

கோதண்டத்தான் நந்தன் வாள் கதை நேமியன் கோல வட
வேதண்டத்தான் அத்தன் இன் இசையான் மண்ணும் விண்ணும் உய்ய
மூதண்டத் தானத்து அவதரித்தான் எனில் முத்தி வினைத்
தீது அண்டத்தான் அத்தனு எடுத்தான் எனில் தீ நரகே –87-

(இ – ள்.) கோதண்டத்தான் – வில்லையுடையவனும்,
நத்தன் – சங்கத்தையுடையவனும்,
வாள்கதைநேமியன் – வாளையும் கதையையும் சக்கரத்தையுமுடையவனும்,
கோலம் வட வேதண்டத்தான் – அழகிய வடமலையான திருவேங்கடத்தை இடமாகவுடையவனும்,
அத்தன் – (எல்லாவுயிர்கட்குந்) தலைவனும்,
இன் இசையான் – இனிமையான வேய்ங்குழலினிசையையுடையவனுமான திருமால்,
மண்ணும் விண்ணும் உய்ய – நிலவுலகத்திலுள்ள மனிதர்முதலியோரும் மேலுலகத்திலுள்ள தேவர்முதலியோரும் துன்பந்தவிர்ந்து வாழ்தற்காக,
மூது அண்டம் தானத்து – பழமையான அண்டத்துக்கு உட்பட்ட இடங்களில்,
அவதரித்தான் – திருவவதாரஞ்செய்தான்,
எனில் – என்று (மெய்ம்மையுணர்ந்து) கூறினால்,
முத்தி – பரமபதங் கிடைக்கும்; (அத்திருமால்),
வினை தீது அண்ட – ஊழ்வினையின்தீமை வந்து தொடர,
தான் அ தனு எடுத்தான் – தான் அந்தந்தத்தேகத்தை யெடுத்துப் பிறந்தான்,
எனில் – என்று (உண்மையுணராது) கூறினால்
தீ நரகே – கொடியநரகமே நேரும்: (எ – று.)

ஜீவாத்மாக்கள் தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவர ரூபங்களாய்ப் பிறப்பது போலக் கருமவசத்தினா லன்றி,
பரமாத்மா உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்கள்செய்வது துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின்பொருட்டும்
தருமத்தை நிலைநிறுத்துதற்பொருட்டும் அப்பெருமான்கொண்ட இச்சையினாலேயே யாகு மென்ற இவ்வுண்மையை உணர்தல்,
அவதாரரஹஸ்யஜ்ஞாந மெனப்படும். இந்தஞானத்தையுடையராய்ப் பகவதவதாரங்களை அவனது சங்கல்பத்தினாலாயவை
யென்றுகொண்டு அப்பெருமானது அருள் ஆற்றல் அடியவர்க்கெளிமை முதலிய திருக்கல்யாணகுணங்களில் ஈடுபட்டுத்
துதிப்பவர் முத்தியையடைவர்:
அங்ஙனமன்றி, அவ்வவதாரங்களைக் கருமவசத்தாலாயவையென்றுகொண்டு இகழ்பவர் நரகமடைவர் என்பது, கருத்து.
“தராதலத்து, மீனவதாரமுதலானவை வினையின்றி யிச்சை, யானவதாரறிவா ரவரே முத்தராமவரே” என்பர் அழகரந்தாதியிலும்.

திருமால் பஞ்சாயுதங்களை யுடைமையை ‘கோதண்டத்தான் நத்தன்வாள் கதை நேமியன்’ என்று குறித்தார்.
வேதண்டம் – மலை. இன்இசையான் – கேட்டற்கு இனிய புகழையுடையவ னெனினுமாம். மண், விண் – இடவாகுபெயர்.

————

நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு நாரியர் மேல்
விரகம் அடங்க மெய்ஞ்ஞானம் வெளி செய வீடு பெற
உரகம் மடங்க நடித்த பொற்றாள் இன்று என் உச்சி வைப்பாய்
வரகமடம் கயல் ஆனாய் வடமலை மாதவனே –88–

(இ – ள்.) வரம் கமடம் கயல் ஆனாய் – சிறந்த ஆமையும் மீனுமாய்த் திருவவதரித்தவனே!
வடமலை மாதவனே – திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற திருமாலே! –
நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு – (இதுவரையிலும் பலபிறப்புக்கள்பிறந்து பலதீவினைகளைச்செய்து) நரகங்களனைத்திலும் போய் வருந்திய பாவியான எனக்கு, நாரியர்மேல் விரகம் அடங்க – மகளிர்விஷயமாக உண்டாகின்ற ஆசைநோய் தணியவும்,
மெய் ஞானம் வெளி செய – தத்துவஞானம் தோன்றவும்,
வீடு பெற – பரமபதம் கிடைக்கவும்,
உரகம் மடங்க நடித்த பொன் தாள் இன்று என் உச்சி வைப்பாய் – (காளியனென்னும்) பாம்பு தலைமடங்கும்படி
(அதன்முடியின்மேலேறி) நடனஞ்செய்த (நினது) அழகியதிருவடிகளை இப்பொழுதே எனது சிரசின்மேல் வைத்தருள்வாய்: (எ – று.)

அடங்கலும் என்றது, எஞ்சாமை குறித்தது, எய்த்தல் – இளைத்தல், மெலிதல். பாவிக்கு – தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.
பாபீ, நாரீ, விரஹம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. பாவி – தீவினைசெய்தவன்.
மெய்ஞ்ஞானம் – பிறப்புவீடுகளையும் அவற்றின்காரணங்களையும் பரமாத்மஜீவாத்மஸ்வரூபங்களையும்
விபரீதஐயங்களாலன்றி உண்மையால் உணர்தல்.
உரகம் என்ற வடசொல் – மார்பினால் (ஊர்ந்து) செல்வதென்று பொருள்படும்.
பொன் தாள் – பொன்னினாலாகிய கழலென்னும் அணியை அணிந்த திருவடி யெனினுமாம்:
இப்பொருளில், பொன் – கருவியாகுபெயர். வர கமடம் – வடமொழித்தொடர்.

கண்ணன் காளியனுடைய முடியின்மே லேறி, ஐந்துதலைகளையுடைய அந்நாகம் எந்தெந்தப் படத்தைத் தூக்குகின்றதோ
அந்தந்தப்படத்தைத் துவைத்து அழுத்திநின்று அப்பாம்பின்வலிமையை அடக்கி அதனை மூர்ச்சையடையச்செய்கையில்,
பலவகைநடனத்திறங்களைச் செய்துகாட் டியமை தோன்ற, ‘உரகமடங்க நடித்த பொற்றாள்’ என்றார்.
அத்தன்மையை, ‘ஸ்வாமி, நர்த்தநமுறையில் வட்டமாய்ச்சுற்றுவது முதலான பிராந்தி கதிகளினாலும்,
ஒரு பக்கத்திலிருந்து மற்றொருபக்கத்துக்குப் போவது முதலிய ரேசககதிகளினாலும்,
பாதத்தை முன் நீட்டிவைப்பதாகிய தண்ட பாதகதியினாலும், அந்தச்சர்ப்பராசன் நசுங்கி மிகுந்த உதிரத்தையுங் கக்கினான்’ என்ற
விஷ்ணுபுராணவாக்கியத்தால் நன்கு அறிக.
“கானகமாமடுவிற் காளியனுச்சியிலே, தூயநடம்பயிலுஞ் சுந்தர,”
“காளியன்பொய்கை கலங்கப்பாய்ந்திட்டவன், நீண்டமுடியைந்திலு நின்று நடஞ்செய்து” என்ற
பெரியாழ்வாரருளிச்செயல்களையுங் காண்க.

முன்னொருகாலத்திற் பிரமதேவன் கண்துயில்கையில், சோமகனென்னும்அசுரன் வேதங்களையெல்லாங் கவர்ந்துகொண்டு
கடலினுள் மறைந்து செல்ல, பிரமன்முதலிய தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் ஒரு பெருமீனாகத்திருவவதரித்துக்
கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று, அவன்கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து கொடுத்தன னென்றும்;
திருப்பாற்கடல் கடைந்தபொழுது மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி திருமால் மகா கூர்ம ரூபத்தைத்
தரித்து அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தா னென்றும் கூறப்படுகின்ற வரலாறுகள்பற்றி,
‘வரகமடங் கயலானாய்’ என்றார். வர என்று தனியே எடுத்து, சிறந்தவனே யென்று கொள்ளினுமாம்; வரன் என்பதன் விளி.

————

மாதிரம் காதல் மனை வாழ்க்கை என்று எண்ணி வான் பொருட்டு
மாதிரம் காதம் பல உழல்வீர் இன்னும் மைந்தன் என்று ஓர்
மாது இரங்காத படி வணங்கீர் அரிமா வொடு கைம்
மா திரங்காது அமர் செய்கின்ற சேட மலையினையே –89-

(இ – ள்.) காதல் மனை வாழ்க்கை – விருப்பத்துக்குஇடமான மனையாளோடுகூடி இல்லத்துவாழ்தலை,
மா திரம் என்று எண்ணி – மிக்கநிலையுள்ளதென்று நினைத்து, (அந்தஇல்லறவாழ்வுக்கு உபயோகமாக,)
வான் பொருட்கு – மிக்க செல்வத்தை ஈட்டுதற்பொருட்டு,
மாதிரம் – திக்குக்கள்தோறும்,
பல காதம் வளைவீர் – அநேககாததூரம் சுற்றியலைபவர்களே! –
இன்னும் மைந்தன் என்று ஓர் மாது இரங்காதபடி – இன்னமும் (உங்களைப்) புத்திரனென்று ஒருபெண் அன்புசெய்யாதபடி
(இனியாயினும் பிறப்பற்று முத்திபெறுமாறு),
அரிமாவொடு கைம்மா திரங்காது அமர் செய்கின்ற சேடமலையனை வணங்கீர் – சிங்கங்களோடு யானைகள் பின்வாங்காமற்
போர் செய்யப்பெற்ற சேஷகிரியெனப்படுகிற திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானை வணங்குங்கள்; (எ – று.)

மீண்டும் பிறப்பில்லாதபடி யென்ற பொருளை ‘இன்னும்மைந்தனென்று ஓர்மாது இரங்காதபடி’ என்று
வேறுவகையாற் கூறினது, பிறிதினவிற்சியணி.
‘அரிமாவொடு கைம்மா திரங்காது அமர்செய்கின்ற’ என்றது, மலைவளங் கூறியவாறாம்.
கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனும் நரசிங்காவதாரஞ்செய்தவனுமான திருவேங்கட முடையானைச் சார்ந்து
அவனதருள் பெற்ற யானைக ளாதலால், சிங்கத்துக்கு அஞ்சுகின் றனவில்லை யென்க.

மஹாஸ்திரம், சேஷன் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. வான் – உரிச்சொல். வணங்கீர் – ஏவற்பன்மை.

————–

மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று மா மறை நூல்
கலையினர் அக்கருடன் இந்திராதியர் காட்ட செய்யும்
கொலையினர் அக்கருடன் ஏறும் வேங்கடக் குன்றர் என்றால்
உலையின் அரக்கு அருள் தந்திலர் ஏனும் என் உள் அவர்க்கே –90-

(இ – ள்.) மா மறை நூல் கலையினர் அக்கர் உடன் – சிறந்தவேதசாஸ்திரங்களாகிய கல்வியில் தேர்ந்த பிரமதேவரும்
எலும்புமாலையைத்தரித்தவரான சிவபிரானு மாகிய இருமூர்த்திகளுடன்,
இந்திர ஆதியர் – இந்திரன் முதலிய தேவர்கள்,
மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று காட்ட – “மலைகள்போல இராக்கதர்கள் உக்கிரங்கொண்டு ஓங்கினார்கள்” என்று சொல்லி முறையிட,
செய்யும் கொலையினர் – செய்த (அவ்விராக்கத) வதத்தையுடையவரான,
அ கருடன் ஏறும் வேங்கடம் குன்றர் – அந்தக்கருடனாகிய வாகனத்தின்மேல் ஏறியருள்கிற திருவேங்கடமலையை யுடையவர்,
என்றால் – என்றுசொன்னால்,
அருள் தந்திலர் ஏனும் என் உள் அவர்க்கு உலையின் அரக்கு – (அவர் என்பக்கல்) கருணைபுரியாராயினும்
அவர் விஷயத்தில் என்மனம் உலைக்களத்திலிட்ட அரக்காம் (நெகிழ்ந்துஉருகும்).

பகவத்விஷயத்தில் தமக்குஉள்ள பக்திமிகுதியா லாகும் நெஞ்சுருக்கத்தை இதில் வெளியிட்டார்.
எம்பெருமான் அருள்புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவன்திறத்தில் அன்புசெலுத்துதல் முமுக்ஷுக்களுக்கு
(முத்தி பெறவிரும்புவார்க்கு)க் கடமையாதல் காண்க.
இச்செய்யுளை, விரகவேதனையுற்ற தலைவியின் கூற்றாகவுங் கொள்ளலாம்.
அரக்கரெழுந்தாரென்று பிரமருத்திரருடன் இந்திராதியர் காட்ட –
“விதியொடு முனிவரும் விண்ணுளோர்களும், மதிவளர்சடைமுடிமழுவலாளனும்,
அதிசயமுட னுவந்தய லிருந்துழிக், தொள்வேலரக்கர்தங் கொடுமை கூறினார்” என்ற கம்பராமாயணங் களுக்கு –
தன்மையிற் இராவணன் முதலியோர். பிரமன் திருமாலினிடம் வேதசா என்ற வடசொற்கள் பிறர்க்கு வெளியிட்டதனால்,
அவனை, ‘மாமறைநூற்கலையினர்’ என்றார். அக்கர் – ருத்திராக்ஷமாலையையுடையவ ரெனினுமாம்.
கலையினர், அக்கர் – உயர்வுப்பன்மை. இனி, மா மறை நூல் கலையினர் அக்கருடன் என்பதற்கு –
சிறந்த வேதசாஸ்திரங்களில் வல்லவர்களான முனிவர்களும், யக்ஷர்களுமாகிய இவர்களோடு என்று உரைத்தலுமொன்று;
அவ்வுரைக்கு, யக்ஷ ரென்ற வடசொல் அக்கரெனச் சிதைந்த தென்க;
யசோதை = அசோதைஎன்பதுபோல. யக்ஷர் – பதினெட்டுத்தேவ கணங்களுள் ஒருசாரார். யக்ஷராஜனான குபேரனுக்கு
இராவணன் பகைவனானதனால், அரக்கரெழுச்சியை முறையிடுதற்கு இயக்கரும் உரியவராவர்.

“அக் கருடன்” எனச் சுட்டினது, பிரசித்தி பற்றி: அழகிய கருட னெனினுமாம். கருடன் – பக்ஷிராஜன்;
இவனுக்கு, வைஷ்ணவசம்பிரதாயத்தில் ‘பெரிய திருவடி’ என்று பெயர் வழங்கும்.

————-

தோழி தலைமகனை ஏதம் கூறி இரவு வரல் விலக்கல் –

உள்ளம் அஞ்சாய்வலியாய் வலியார்க்கும் உபாயம் வல்லாய்
கள்ளம் அஞ்சு ஆயுதம் கை வரும் ஆயினும் கங்கு லினில்
வெள்ள மஞ்சு ஆர் பொழில் வேங்கடக் குன்றினில் வீழ் அருவிப்
பள்ளம் அம்சாரல் வழி வரில் வாடும் இப்பாவையுமே –91–

(இ – ள்.) (நீ), உள்ளம் அஞ்சாய் – (எதற்கும்) மனம் அஞ்சுகின்றாயில்லை;
வலியாய் – வலிமையையுடையாய்;
வலியார்க்கும் உபாயம் வல்லாய் – வல்லமையுடையவர்க்கும் உபாயங்கற்பிக்கும்படி உபாயம்வல்லை;
கள்ளம் – களவும்,
அஞ்சு ஆயுதம் – பஞ்சாயுதங்களும்,
கைவரும் – (உனக்குப்) பழக்கமாயுள்ளன;
ஆயினும் -, கங்குலினில் – இரவிலே,
வெள்ளம் மஞ்சு ஆர் பொழில் வேங்கடம் குன்றினில் – வெள்ளமாகப் பொழிகின்ற மேகங்கள் தங்குகிற சோலைகளையுடைய திருவேங்கடமலையில்,
வீழ் அருவி பள்ளம் – விழுகிற அருவிப்பெருக்கையுடைய பள்ளங்களோடு கூடிய,
அம்சாரல் வழி – அழகிய மலைப்பக்கத்து வழியாக,
வரில் – (நீ) வந்தால்,
இ பாவையும் வாடும் – (நினதுவரவை மகிழ்ச்சியோடு எதிர்ப்பார்ப்பவளான) இப் பெண்ணும் வருந்துவள்; (எ – று.)

இயற்கைப்புணர்ச்சிபெற்ற தலைமகன் பின்பு தலைமகளினது தோழியி னுதவியைக்கொண்டு தலைமகளைப்
பகலிலும் இரவிலும் களவுநெறியில் ஏகாந்தத்திலே சந்தித்தல் இயல்பு; அது, பகற்குறி இரவுக்குறி எனப்படும்.
தலைமகனது வேண்டுகோளின்படி ஒருநாள் இரவிற் குறிப்பிட்டதொரு சோலையினிடத்தே
அத்தலைமகனையுந் தலைமகளையுஞ் சந்திக்கச்செய்த தோழி, பின்பும் அக்களவொழுக்கத்தையே வேண்டிய தலைமகனுக்கு,
அவன் வரும்நெறியின் அருமையையும், அது கருதித் தாங்கள் அஞ்சுதலையுங்குறித்து
“நீ எந்த இடத்திலும் எந்தப்பொழுதிலும் அஞ்சாது வரக்கூடிய தேகபலம் மநோபலம் தந்திரம் வஞ்சனை படைக்கலத்
தேர்ச்சி இவற்றையுடையாயாயினும், நின்வரவு எங்கட்குத் துன்பமாகத் தோன்றுதலால்,
இனி இவ்விருளிடை நீ இங்ஙனம் வரற்பாலையல்லை’ என்று கூறி விலக்குதல், இச்செய்யுளிற் குறித்த அகப்பொருள் துறையாம்;
இது, ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவியின்பாற்படும்; (ஆறு – வழி, கிளவி – பேச்சு:)
தலைவன் வரும் வழி மிகவும் இன்னாது, நீருடையது, கல்லுடையது, முள்ளுடையது, ஏற்றிழிவுடையது,
கள்ளர் புலி கரடி யானை பாம்பு முதலிய கொடிய பிராணிகளை யுடையது என்று கவலுங் கவற்சியாற் சொல்லுவ தென்க.
இதில், மெய்ப்பாடு – அச்சம். இதன் பயன் – வெளிப்படையாகவந்து மணஞ்செய்துகொள்ளுதலை வற்புறுத்துதல்.
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற ஐவகைநிலங்களுள் மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியா மென்பதும்,
“புணர்தல் நறுங்குறிஞ்சி” என்றபடி புணர்ச்சி குறிஞ்சித்திணைக்குஉரிய பொரு ளென்பதும்,
“குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்” என்ற படி பெரும்பொழுதினுட் சரத்காலமும் சிறுபொழுதினுள்
நள்ளிரவும் குறிஞ்சிக்கு உரிய கால மென்பதும் அறியத்தக்கன.
“துறைமதியாம லிக்கான்யாறுநீந்திச் சுரங்கடத்தல்,
நிறைமதியாளர்க் கொழுக்கமன்றால் நெடு மாலரங்கத்,
திறைமதியாவருமாராவமிர்தன்ன விந்தநுதற்,
குறைமதியாள் பொருட்டாற் கங்குல்வார லெங்கொற்றவனே” என்ற திருவரங்கக்கலம் பகச்செய்யுளையுங் காண்க.

சாரல் – மலையைச் சார்ந்தது; மலைப்பக்கம்: தொழிலாகு பெயர் ‘இப்பாவை’ என்றது, தலைமகளை;
உம்மையால், தோழி தான்வாடுதலையும் உணர்த்தினாளாம்.

அஞ்சாமை, வலிமை, தந்திரம், மாயை, ஐம்படை இவற்றையுடைமையால் எவ்வகைச்செயலையுஞ் செய்ய
வல்லவனான சர்வேசுவரன், இருள்போலப் பொருள்களை உள்ளபடி எளிதிற் காணவொண்ணாது மறைப்பதான
மாயையின் பிரசாரத்தையுடைய இந்த இருள்தருமாஞாலத்திலே ஐயங்கார் வாழும்பொழுது
அவரது நெஞ்சென்னும் உட்கண்ணுக்கு ஒரோசமயத்து இலக்காகி மறைய, நிரந்தராநுபவத்திலே பிரியமுடையரான ஐயங்கார்,
அவ்வளவிலே திருப்திப்படாததோடு, பொங்கும்பரிவுடைய பெரியாழ்வார்போல, எம்பெருமானுடைய ஸர்வசக்தித்வம் முதலிய
திவ்வியகுணங்களைக் கருதுதற்குமுன்னே எதிர்ப்பட்ட சௌந்தர்ய சௌகுமார்யங்களில் ஈடுபட்டு,
‘காலாதீதமான வைகுண்டத்திலேயிருக்கின்ற இவ்வரும்பொருள் காலம் நடையாடப்பெற்ற இவ்வுலகத்தில்வந்து
புலனாதலால் இதற்கு என்ன தீங்குவருமோ?’ என்று அதிகமானபயசங்கை கொண்டவராக,
அந்த அதிசங்கையை ஐயங்காரது அன்பர்கள் எம்பெருமான் பக்கல்விண்ணப்பஞ்செய்து, இனி இவர்க்கு
இவ்வகைக்கலக்கமுண்டாகாதபடி இவரைக் காலாதீதமான வைகுண்டத்திற் சேர்த்துக்கொள்ளவேண்டு மென்று
விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள். விவரம் கேட்டுணர்க.
இரணியன் இராவணன் முதலியோர் எவ்வளவோ சாமர்த்தியமாக வேண்டிப்பெற்ற வரங்களெல்லாம் ஒவ்வொருவகையால்
ஒதுங்கும்படி சூழ்ச்சி செய்து அவர்களையழித்தமையும். துரியோதனன் முதலியோர் செய்த அளவிறந்தசூழ்ச்சிகட் கெல்லாம்
மேம்பட்ட சூழ்ச்சிசெய்து அவர்களைத்தொலைத்தமையும் பற்றி, ‘வலியார்க்கு முபாயம் வல்லாய்’ என்றார்.

————–

பாவை இரங்கும் அசோதைக்கு முத்து பதுமச் செல்விக்கு
ஏவை இரண்டு அன்ன கண்மணி நீலம் இடு சரணப்
பூவை இரந்தவர்க்கு இன்ப வளம் புல் அசுரர்க்கு என்றும்
மா வையிரம் திரு வேங்கடத்து ஓங்கும் மரகதமே –92–

(இ – ள்.) திருவேங்கடத்து ஓங்கும் மரகதம் – திருவேங்கடமலையின் மீது உயர்ந்துதோன்றுகின்ற மரகதரத்தினம்போல
விளங்குந் திருமேனி நிறத்தையும் ஒளியையுமுடைய பரம்பொருளானது, –
பாவை இரங்கும் அசோதைக்கு – சித்திரப்பிரதிமைகளும் (இவ்வகையழகு எமக்கு இல்லையே யென்று) இரங்கும்படியான (கட்டழகுடைய) யசோதைக்கு,
முத்து – (அருமையால்) முத்துப்போலும்;
பதுமம் செல்விக்கு – தாமரைமலரில் வீற்றிருக்கின்ற செல்வத்தலைவியான திருமகளுக்கு,
இரண்டு ஏவை அன்ன கண்மணி நீலம் – (அருமையால்) இரண்டு அம்புகளைப்போன்ற கண்களிலுள்ள கருவிழிபோலும்;
இரு சரணம் பூவை இரந்தவர்க்கு – உபயதிருவடித்தா மரைமலர்களைப் பிரார்த்தித்தவர்கட்கு,
இன்ப வளம் – பேரின்பப் பெருக்காம்;
புல் அசுரர்க்கு – இழிகுணமுடைய அசுரர்கட்கு,
என்றும் – எப்பொழுதும்,
மா வையிரம் – பெரும்பகையாம்; (எ – று.)

திருவேங்கடத்துஓங்கும் மரகதரத்தினமொன்றே யசோதைத்தாய்க்கு முத்தாகவும், பெரியபிராட்டிக்கு நீலமணியாகவும்,
அடியார்க்குப் பவளமாகவும், அசுரர்க்கு வைரமாகவும் ஆகின்றது எனச் சொற்போக்கில்
ஒருவகை வியப்புத் தோன்றக் கூறியது, பலபடப்புனைவணி. இதில் பஞ்சரத்தினங்களின்பெயர் அமைந்திருப்பது காண்க.
யசோதை – கண்ணனை வளர்த்த தாய்; நந்தகோபன் மனைவி.
அருமைக்குழந்தையாகிய கண்ணன் அவளால் “முத்து” என்று பாராட்டப்படுதல்பற்றி, “யசோதைக்கு முத்து” என்றார்.
அம்பைக்குறிக்கும் ஓரெழுத்தொருமொழியாகிய “ஏ” என்ற பெயர்ச்சொல், “ஐ” என்று இரண்டனுருபை யேற்கும்போது
“ஏமுனிவ்விருமையும்” என்றபடி வகரவுடம்படுமெய்பெற்று ‘ஏவை’ எனநின்றது.
மணிநீலம் = நீலமணி: கருமணி, கருவிழி. இதுவும், அருமைபாராட்டப்படுதற்கு உவமம்.
‘இன்ப வளம்’ எனவே, பேரின்ப மென்றாம்; வளம் – சிறப்பு. அஸுரர் என்ற வடசொல் – தேவர்கட்கு எதிரானவரென்றும் (சுரர் – தேவர்),
பாற்கடலினின்று உண்டான சுரையைப் பானஞ்செய்யாதவரென்றும் (சுரை – மது),
பகைவருயிரைக் கவர்பவரென்றும் (அஸு – உயிர்) காரணப்பொருள்படும்.
மா வைரம் – தவறாது அழிப்பவ னென்றபடி. வைரம்என்பது வையிரம் எனப்போலிவிகாரம்பெற்றது, திரிபுநயத்தின்பொருட்டு.
மரகதம் – பச்சையிரத்தினம்; நிறமும் ஒளியும்பற்றி, ‘மரகதம்’ என்றார்: மரகதம்போன்ற எம்பெருமானை மரகத மென்றது, உவமையாகுபெயர்.

————–

மரகதத்தைக் கடைந்து ஒப்பித்தது ஒத்தன வாழ்த்தினர் தம்
நரகதத்தைத் தள்ளி வைகுந்தம் நல்கின நப்பின்னை ஆம்
விரகதத்தைக்கு விடை ஏழ் தழுவின வேங்கடவன்
குரகதத்தைப் பிளந்தான் தோள்கள் ஆகிய குன்றங்களே –93-

(இ – ள்.) குரகதத்தை பிளந்தான் – குதிரைவடிவாய்வந்த (கேசியென்னும்) அசுரனை வாய்பிளந்தழித்தவனான,
வேங்கடவன் – திருவேங்கடமுடையானுடைய,
தோள்கள் ஆகிய – புயங்களாகிய,
குன்றங்கள் – மலைகள் (மலைகள் போன்ற தோள்களானவை), –
மரகதத்தை கடைந்து ஒப்பித்தது ஒத்தன – மரகதமென்னும் பச்சையிரத்தினத்தைக் கடைந்து ஒப்பனைசெய்தாற் போன்றன;
வாழ்த்தினர்தம் – (தம்மை) வாழ்த்திய மெய்யடியார்களுடைய,
நரக தத்தை – நரகத்துன்பங்களை,
தள்ளி – ஒழித்து,
வைகுந்தம் நல்கின – (அவர்கட்குப்) பரமபதத்தைக் கொடுத்தன;
நப்பின்னை ஆம் – நப்பின்னைப்பிராட்டியாகிய,
விரக தத்தைக்கு – ஆசைநோயால் தவிக்கப்பட்டவளான பெண்ணை மணஞ்செய்தற்பொருட்டு,
விடை ஏழ் தழுவின – ஏழுஎருதுகளைத் தழுவி வலியடக்கின; (எ – று.)

இது, புயவகுப்பு.

நிறமும், ஒளியும், திரண்டுருண்டு நெய்ப்புடைமையும்பற்றி, ‘மரகதத் தைக்கடைந் தொப்பித்த தொத்தன’ என்றார்.
பின்னையென்பது – அவள் பெயர்; ந – சிறப்புப்பொருளுணர்த்துவதோர் இடைச்சொல் (உபசர்க்கம்):
நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல; நம்பின்னையென்பதன் விகாரமுமாம்.
நற்பின்னை யென்பாரு முளர்.
விரஹதப்தா, வ்ருஷம் என்ற வடசொற்கள் – விரகதத்தை, விடை என்று விகாரப்பட்டன. விரகம் – காதல் நோயையுடைய,
தத்தைக்கு – கிளிபோன்ற (இன்மொழிபேசுகின்ற) பெண்ணுக்கு என்று உரைப்பாரு முளர்.
கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ்செய்து கொள்ளுதற்காக, அவள்தந்தை கந்யாசுல்கமாகக்குறித்தபடி
யாவர்க்கும் அடங்காத அசுராவேசம் பெற்ற ஏழெருதுகளையும் ஏழு திருவுருக்கொண்டுசென்று வலியடக்கித் தழுவினதற்கு
முன்னமே கண்ணபிரான்பக்கல் காதல்கொண்டிருந்தமை தோன்ற, ‘நப்பின்னையாம் விரக தத்தைக்கு விடையேழ்தழுவின’ என்றார்.

குர கதம் என்ற வடசொல், (ஒற்றைக்) குளம்புகளாற் செல்வதென்று பொருள்படும்.
பருத்தவடிவமும் வலிமையும் படைக்கலங்களால் அழித்தற்கருமையும்பற்றி, தோள்கள் குன்றங்க ளெனப்பட்டன.
குன்றங்கள் என்ற உபமானப்பொருள், ஒத்தலும் வைகுந்தநல்குதலும் விடையேழ் தழுவுதலுமாகிய செய்கையிற்
பயன்படும்பொருட்டு உபமேயமாகிய தோள்களினுருவத்தைக் கொள்ளத் திரிதலால், ‘தோள்களாகிய குன்றங்கள்’ என்றது. திரிபணி;
உருவக மன்று. குன்றங்கள் என்ற ஈற்றில் நின்ற சொல், முன்னுள்ள ஒத்தன நல்கின தழுவின என்ற முற்றுக்களோடு முடிந்தது, கடைநிலைத்தீவகம்.

————-

குன்றுகள் அத்தனையும் கடல் தூராக் குவித்து இலங்கை
சென்று களத்து அனைவோரையும் மாய்த்து திருச் சரத்தால்
அன்று களத்தனை அட்டானை அப்பனை ஆய் மகள் தோள்
துன்று களத்தனை ஏத்த வல்லார்க்கு இல்லை துன்பங்களே –94-

(இ – ள்.) குன்றுகள் அத்தனையும் – மலைகளையெல்லாம்
கடல் தூர குவித்து – கடல்தூர்ந்திடும்படி (வாநரங்களைக்கொண்டுகொணர்ந்து) ஒருங்கு சேர்த்து (அணைகட்டி),
இலங்கை சென்று – (அதன்வழியாகப்) போய் இலங்காபுரியைச் சார்ந்து,
களத்து அனைவோரையும் மாய்த்து – போர்க்களத்தில் அரக்கர்களெல்லாரையுங் கொன்று,
திரு சரத்தால் – சிறந்த அம்பினால் (பிரமாஸ்திரத்தால்),
அன்று – அந்நாளில்,
களத்தனை (கள்ளத்தனை) – வஞ்சகனான இராவணனை,
அட்டானை – கொன்றவனும்,
ஆய் மகள் தோள்துன்று களத்தனை – இடைச்சாதிமகளான நப்பின்னையினது கைகளால் தழுவப்பட்ட கழுத்தையுடையவனுமான,
அப்பனை – திருவேங்கடமுடையானை,
ஏத்த வல்லார்க்கு – துதிக்கவல்லவர்கட்கு,
துன்பங்கள் இல்லை – எவ்வகைத்துன்பமும் உளவாகா; (எ – று.)

அனைவர் அனைவோர் எனச் சிறுபான்மை ஈற்றயல்அகரம் ஓகாரமாயிற்று. இராவணன் சீதையை வஞ்சனையாற்
கவர்ந்துசென்றதனால், ‘கள்ளத்தன்’ எனப்பட்டான். களத்தன் – தொகுத்தல்விகாரம். ஆய் – சாதிப்பெயர்.
தோள் – இங்கே, கை; சீவகசிந்தாமணியில், “தோளுற்றொர் தெய்வந்துணையாய்” என்றவிடத்திற் போல.
நான்காமடியில், களம் – வடசொல்.

————-

துன்பம் களையும் சனனம் களையும் தொலைவு அறு பேர்
இன்பம் களையும் கதி களையும் தரும் எங்கள் அப்பன்
தன்பங்கு அளையும் படி மூவரை வைத்து தாரணியும்
பின்பு அங்கு அளையும் இழுதும் உண்டானுடைப் பேர் பலவே –95–

(இ – ள்.) மூவரை – (பிரமன் சிவன் இலக்குமி என்ற) மூன்றுபேரை,
தன் பங்கு அளையும்படி – தனது திருமேனியின் பாகங்களிலே பொருந்தும்படி, வைத்து-,
தாரணியும் – (கற்பாந்தகாலத்திலே) பூமியையும்,
பின்பு – பிறகு (கிருஷ்ணாவதாரத்திலே),
அங்கு – அவ்விடத்தில் (திருவாய்ப்பாடியில்),
அளையும் இழுதும் – தயிரையும் நெய்யையும்,
உண்டான் – அமுதுசெய்தவனான,
எங்கள் அப்பனுடை – எமது திருவேங்கட முடையானுடைய,
பேர் பல – பல திருநாமங்கள், –
துன்பம் களையும் – (தம்மைச் சொன்னவர்களுடைய) கிலேசங்களையொழிக்கும்;
சனனம் களையும் – பிறப்பை வேரோடு அழிக்கும்;
தொலைவு அறு பேர் இன்பங்களையும் கதிகளையும் தரும் – முடிவில்லாத பேரின்பங்களையும் சிறந்தபதவிகளையும் தரும்; (எ – று.)

இது, திருநாம மகிமை.
“குலந்தருஞ் செல்வந்தந்திடு அடியார்படுதுய ராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெரு நிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாவென்னுநாமம்” என்ற பெரியதிருமொழியையுங் காண்க.
ஸ்ரீமந்நாராயணன் தனதுதிருமேனியில் திருநாபியிலே பிரமனையும், வலப்பக்கத்திலே சிவனையும்,
திருமார்பிலே திருமகளையும் வைத்திருத்தலை, ‘தன்பங்களையும்படி மூவரை வைத்து’ எனக்குறித்தார்;
“பிறைதங்குசடையானை வலத்தேவைத்துப் பிரமனைத்தன் னுந்தியிலே தோற்றுவித்துக்,
கறைதங்குவேற்றடங்கண்திருவை மார்பிற் கலந்தவன்”,
“ஏறனைப் பூவனைப் பூமகள்தன்னை, வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து”,
“திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ், ஒருவிடமும் எந்தைபெருமாற்கு அரன்”,
“ஏறாளு மிறையோனுந் திசைமுகனுந் திருமகளுங், கூறாளுந் தனியுடம்பன்”,
“சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாசகம்”,
“மலர்மகள் நின் ஆகத்தாள் – செய்ய, மறையான் நின்உந்தியான் மாமதிள்மூன்றெய்த, இறையான் நின்ஆகத்திறை” என்ற
ஆழ்வார்களருளிச்செயல் பல காண்க.
மூவர் – தொகைக்குறிப்பு. தொலைவறு பேரின்பம் – “அந்தமில் பேரின்பம்.” ‘உண்டானடிப்பேர்பல’ என்ற பாடத்துக்கு,
எம்பெருமானுடைய திருவடிகளின் திருநாமங்கள் பல வென்க; அடி – தொன்றுதொட்டுவருகிற எனினுமாம்.

—————

தலைவனைப் பிரிந்த தலைவி கடலை நோக்கி இரங்கிக் கூறல் –

பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவ அப்பன்
நலகு அளைக்கு முன் உண்டான் நின் மாட்டும் நணுகிலனோ
உலகு வளைக்கும் கடலே நின் கண் முத்து உகுத்து இரங்கி
இலகு வளைக் குலம் சிந்தி துஞ்சாய் இன்று இரா முற்றுமே –96-

(இ – ள்.) உலகு வளைக்கும் கடலே – உலகத்தைச்சூழ்ந்திருக்கிற கடலே! –
நின் கண் முத்து உகுத்து – உனதுகண்களினின்று முத்துப்போன்ற நீர்த்துளிகளைச்சொரிந்து (உன்னிடத்தினின்று முத்துக்களைச் சிந்தி).
இரங்கி – புலம்பி (ஒலித்து),
இலகு வளை குலம் சிந்தி – விளங்குகின்ற கைவளைகளின் வரிசையைக் கீழேசிந்தி (விளங்குகிற சங்குகளின் கூட்டத்தை வெளியேசிதறி),
இன்று இரா முற்றும் – இன்றை யிராப்பொழுது முழுவதும்,
துஞ்சாய் – தூங்குகின்றாயில்லை (அமைதிகொண்டிருக்கின்றாயில்லை); (ஆதலால்),
பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவம் அப்பன் – பலநீலோற்பலமலர்களின் இடையிடையே சிலசெந்தாமரைமலர்கள்
(பூத்தன) போன்ற திருமேனியையுடைய ஸ்வாமியான,
அளைக்கு முன் நல கு உண்டான் -(கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெயையுண்பதற்குமுன்னே (கற்பாந்தகாலத்திலே)
நல்லபூமியை விழுங்கியவனுமான தலைவன்,
நின்மாட்டும் நணுகிலனோ – (என்னிடத்திற்போலவே) உன்னிடத்திலும் வந்துசேர்ந்திலனோ?

இதற்குத் துறைவிவரம், கீழ் 19 – ஆஞ்செய்யுட்குக் கூறியதுகொண்டு உணர்க. அது, தோழிகூற்று; இது, தலைவிகூற்று.
இது, கடலைநோக்கித் தன்னோடொப்பத் துன்பமுறுவதாகக்கருதிக் கூறியது.
இங்ஙனம் தலைவி சொல்லுதலின் பயன் – தலைமகன் கேட்பின், விரைவில் வெளிப்படையாக மணம்புரிந்து கொள்வன்;
தோழி கேட்பின், தலைவனுக்குச் சொல்லி விரைவில் மணம்புரிந்துகொள்ளச்செய்வள்; யாரும் கேளாராயின், தலைவிதானே சொல்லி ஆறினளாம்.
‘நின்மாட்டும்நணுகிலனோ’ என்பதற்கு – (இத்தலைவியிடத்திற் போலவே) உன்னிடத்திலும் வந்து சேர்ந்திலனோ? என்று பொருள்
கொண்டு, இதனையும் தோழிகூற்றென்றலுமாம். இதுவும், செம்மொழிச்சிலேடையுவமையணி கொண்டது.
‘நின்கண் முத்துகுத்து’ என்றது முதலிய தொடர்கள் இருபொருள்பட்டமை காண்க.
தலைவி வளையல்களைச் சிந்துதல், பிரிவாற்றாமைத்துயரால் உடல் மிகமெலிந்தது பற்றி.

பல குவளைமலர்கள் – எம்பெருமானது நீலநிறமுள்ள திருமேனிக்கும்,
அவற்றிடையே சிலசெந்தாமரைமலர்கள் – வாய் கண் கை உந்தி பதம் ஆகிய திருவவயவங்கட்கும் உவமை.
குவலயம் என்ற வடசொல், குவளை என விகாரப்பட்டது. கஞ்ஜம் – வடசொல்: நீரில் தோன்றுவதென்று பொருள்படும்:
கம் – நீர். நல – நல்ல என்பதன் தொகுத்தல். கு – வடசொல். நின்மாட்டும், உம் – இறந்தது தழுவிய எச்சம்.
முத்து – நீர்த்துளியைக் குறிக்கும்போது, உவமையாகுபெயர்.

எம்பெருமானது பிரிவை யாற்றாமல் வருந்துகின்ற ஐயங்கார் தமக்கு உள்ள கலக்கத்தால் தம் கண்ணெதிர்ப்படுகிற
பொருள்களையெல்லாம் தம்மைப்போலவே எம்பெருமானது பிரிவினால் வருந்துகின்றனவாகக்கொண்டு,
கடலைநோக்கி ‘நீயும் நான்பட்டது படுகின்றனையோ?’ என்று வினவுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
தம்மைப்போலவே பிறரையும் பாவித்தல், பெரியோரியல்பு. இவர்க்கு, வளைக்குலம் சிந்துதல் – அடிமைக்கு அறிகுறியான
ஆத்மகுணங்கள் குலையப்பெறுதல்; பாரதந்திரியம்நீங்கி ஸ்வாதந்திரியம் மிகுதல். மற்றவை, முன்கூறியவாற்றால் விளங்கும்.

“காமுற்ற கையறவோ டெல்லே யிராப்பகல்,
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்,
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்றதுற்றாயோ வாழிகனைகடலே” என்ற திருவாய்மொழிப்பாசுரத்தைப் பின்பற்றியது, இது.
“வாயினிரங்கினை யாரமெறிந்தனை வால்வளை சிந்தினை தண்,
பாயலையுந்தினை மாலை யடைந்தனை பாரிலுறங்கிலையால்,
கோயிலரங்கனை மாகனகந்திகழ் கோகனகம்பொலியும்,
ஆயிழைநண்பனை நீயும்விரும்பினையாகு நெடுங்கடலே” என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.
இவை, பிரிவுக்காலத்திற் கடலைநோக்கிப் பெண்பால் இரங்கியன.
(இங்ஙனமே ஆண்பால் இரங்குதலை,
“போவாய் வருவாய் புரண்டுவிழுந் திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் –
தீவாய், அரவகற்றுமென்போல வார்கலியே மாதை,
யிரவகற்றி வந்தாய்கொ லின்று” என நளவெண்பாவிற் காண்க.)

———–

நீட்டித்து வந்த தலைவனொடு தலைவி ஊடிப் பேசுதல் –

முற்றிலை பந்தை கழங்கை கொண்டு ஓடினை முன்னும் பின்னும்
அற்றிலை தீமை அவை பொறுத்தோம் தொல்லை ஆலின் இளங்
கற்றிலை மேல் துயில் வேங்கடவா இன்று உன் கால் மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே –97-

(இ – ள்.) தொல்லை – முற்காலத்தில் (பிரளயகாலத்தில்),
ஆலின் இளங்கன்று இலைமேல் – இளமையான ஆலங்கன்றினது இளந்தளிரின்மேல்,
துயில் – பள்ளிகொண்டு யோகநித்திரை செய்த,
வேங்கடவா – திருவேங்கடமுடையானே! –
முன்னும் – முன்னமும், (நீ எம்முடைய),
முற்றிலை – சிறுமுறத்தையும்,
பந்தை – பந்தையும்,
கழங்கை – (ஆடுதற்குஉரிய) கழற்காய்களையும்,
கொண்டு ஓடினை – எடுத்துக்கொண்டு ஓடினாய்;
பின்னும் தீமை அற்றிலை – பின்பும் (எம்பக்கல்) தீங்குசெய்தலை ஒழிந்தாயில்லை;
அவை பொறுத்தோம் – அப்பொல்லாங்குகளையெல்லாம் யாம் பொறுத்திட்டோம்;
இன்று – இப்பொழுது,
உன் கால் மலரால் – உனது திருவடித்தாமரையினால்,
சிற்றிலை தீர்த்ததற்கு – (யாம் மணல்கொண்டு விளையாட்டாக அமைத்த) சிறுவீட்டைச் சிதைத்ததற்கு ஈடாக,
பெரு வீட்டினை செய்தருள் – பெரியதொரு வீட்டை (எமக்கு)க் கட்டிக்கொடுப்பாய்; (எ – று.)

இன்றியமையாததொரு காரியத்தினிமித்தம் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் மீண்டுவருவதாகக் குறித்த பருவத்தில்
வாரானாய்க் காரிய வசத்தாற் சிறிதுநீட்டிக்க, அதற்குள்ளே தலைவி ‘தலைவன்வாராதது, என்னை உபேக்ஷித்து
என்னினும் அழகுசிறந்த வேறுபலமகளிர்பக்கல் உறவுகொண்டதனாலாம்’ என்று எண்ணிப் பிணங்கி
‘இனி அவன் வந்தாலும் நாம் முகங் கொடுப்பதில்லை’ என்று நிச்சயித்துத் தனது தோழியரையும்
தான்வளர்த்த கிளி பூவை முதலிய பேசும்பறவைகளையும் தன்வழிபடுத்திவைத்துக்கொண்டு ஓரிடத்திலே அவர்களோடு
விளையாடுகிற வியாஜத்தாற் பராமுகமாயிருக்க, பின்பு மிக்க அன்போடு வெகுவிரைவாக மீண்டுவந்த தலைவன்,
பிரணயகோபத்தால் அணுகவொண்ணாதபடி யிருக்கின்ற இவளிருப்பைக் கண்டு வருந்திச் சிந்தித்து அருகிற்சென்று
தோழியர்மூலமாக இவளுடைய ஊடலைத் தீர்க்கக் கருதி நோக்கியவிடத்து,

அவர்களும் தலைவியின்கோட் பாட்டின்படி தங்களில் ஒருமித்து அவனை அநாதரித்து முகம்மாறி மிக்க கோபங்காட்ட,
அவ்வாயிலைப் பெறானாய்க் கிளி பூவை முதலியவற்றைக் கொண்டு ஊடல் தணிக்கப்பார்த்து அவையும் தலைவியின்
சங்கேதப்படி தன்னை உபேக்ஷித்ததனால் அவ்வாயிலையும்பெறாது மிகவருத்தமுற்று, அசேதநமாகையால்
தன்னை உபேக்ஷித்துப்போகமாட்டாமல் அங்குக்கிடந்த இவளுடைய விளையாட்டுக்கருவிகளான
முற்றிலையும் பந்தையும் கழங்கையும் எடுத்து அவற்றைத் தன்உடம்பின்மேற்படவைத்துத் தழுவியும் அன்போடு நோக்கியும்
கண்களில் ஒற்றியும் தலைமேல் வைத்துக்கொண்டு தான் ஒருவாறு ஆறித் தனதுகாதலையும் தலைவிக்குப் புலப்படுத்த,

அச்செயல்களை யெல்லாம் அவள் வேறுசில மகளிரைப் பிரிந்த ஆற்றாமையால் இவன்செய் கின்றன வெனக்கொண்டு
சீற்றங்காட்டி உறவறப்பேச, முதலில் தலைவி நோக்கையும்பெறாதிருந்த அத்தலைவன்,
முகம்பார்த்து அவ்வளவு வார்த்தை பேசப்பெற்றதையே தாரகமாகக்கொண்டு, அவ்வார்த்தைகட்கு ஏற்றவிடை கள்
சொல்லுகிறவியாஜத்தாற் பேச்சுவளர்த்திக்கொண்டே மேன்மேல்நெருங்கிக் கிளிபூவைகளோடுகொஞ்சிப்பேசுதல்,
அருகிற்கிடந்த அவளது விளையாட்டு மரப்பாவையை யெடுத்தல், அவள்கையிலுள்ள பாவையைத் தொட்டுப் பறித்தல்,
அங்குநில்லாமல் தோழியருடன் அப்பாற்செல்லப்புக்க அவளைக் கைகளால் வழிமறித்துத்தடுத்தல் முதலியன செய்து
அவளை ஊடல்தணிக்க முயன்றவிடத்தும்

அவள் சினந்தணியாள்போன்று தனது உள்ளக்காதலைப் புலனாகாதபடி மறைத்துக்கொண்டு அவனைப் புறக்கணித்துத்
தோழியரோடு மணலிற் சிற்றிலிழைத்து விளையாடாநிற்க, இவளது கடைக்கண் பார்வையை ஏதேனும்
ஒருவிதத்தாற்பெற்றுத் தான் உய்யலாமென்று பார்த்து அவன் இவளமைத்தசிற்றிலைத் தன்கால்களாற்சிதைக்க,

அப்பொழுது அவனுடைய முகத்தைப் பார்த்து அவனது கண்ணழகு முதலியவற்றால் நெஞ்சுருகி நிலைகலங்கியவளவிலும்
அவள் முந்தின புலவியின் தொடர்ச்சியாற் சிறிது ஊடல்காட்டிப் பேசியது, இது. திருவாய்மொழியில் ஊடற் பாசுரமான
“மின்னிடை மடவார்கள்” என்ற திருப்பதிகம் முழுவதும் இச்செய்யுட்கு மூலமாம்.

“பின்னும் அற்றிலை தீமை” என்றது – கிளிபூவைகளோடு கொஞ்சிப் பேசுதல், மரப்பாவையையெடுத்தல்,
கையிற்பாவைபறித்தல், வழிமறித்தல் முதலியவற்றைக் குறித்தது. “பொறுத்தோம்” என்றதை,
உயர்வுபற்றிவந்த தனித்தன்மைப்பன்மை யென்றாவது, தோழியரையுங் கூட்டிச்சொன்ன உளப்பாட்டுத் தன்மைப்பன்மை யென்றாவது கொள்க.
“ஆலினிலைமேல் துயில் வேங்கடவா” என்றது, பிரமன் முதலிய சகலதேவர்களு முட்பட யாவும் அழிந்துபோகின்ற
கல்பாந்தகாலத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களை யெல்லாம் தன்வயிற்றில்வைத்து அடக்கிக்கொண்டு
சிறுகுழந்தை வடிவமாய்ப் பிரளயப்பெருங்கடலிலே ஆதிசேஷனது அம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிகொண்டு
அறிதுயில்செய்தருள்கின்றன னென்ற வரலாறு பற்றி. இங்கு இதுகூறி விளித்தது,
நினது செயற்கரியனசெய்யுந்திறம் விசித்திர மென்றவாறாம். “பெருவீட்டினைச் செய்தருள்” என்றது,
இனி என்னைப் பிரியாது என்னுடன் என்றுங் கூடியிருந்து சிறந்த இல்வாழ்க்கையின்பத்தைத் தந்தருள்வாயென்று
வேண்டுகிற குறிப்பாதலால், இது, ஊடல்தணிகிறநிலைமையில் நிகழ்ந்த பேச்சென்க.

அற்றிலை – முன்னிலை யொருமை யெதிர்மறை யிறந்தகாலமுற்று; அறு – பகுதி. தொல்லை –
தொன்மை; ‘ஐ’ விகுதிபெற்ற பண்புப்பெயர்; இது, பண்பாகுபெயராய், பழையநாளைக் குறித்தது.
கன்று + இலை = கற்றிலை; மென்றொடர், வேற்றுமையில் வன்றொடராயிற்று. ‘நன்று’ என்றது,
இங்கு, மரத்தின் இளமைப்பெயர்; இளமரம். பிரளயப்பெருங்கடலிற் புதிதாகத்தோன்றியதோ ராலமரத்தின்
இளமையானஇலை யென்பார், “ஆலினிளங்கற்றிலை” என்றார். சிறுமை + இல் = சிற்றில்;
பண்புப்பெயர் ஈறுபோய்த் தன்னொற்றுஇரட்டிற்று: இல் – வீடு.

தியானநிலையிலே ஐயங்காரது அகக்கண்ணுக்குப்புலனாகிமறைந்த எம்பெருமான் மீளவும்வந்து தோன்றானாக,
இவர் தம்மினும்விலக்ஷணரான வேறு பல அடியார்கள்பக்கல் அன்பினால் தம்மை உபேக்ஷித்தனனென்று கொண்டு கலங்கி,
அக்கலக்கமிகுதியால் ‘இனி அவன்தானேவந்தாலும், மீளவும்பிரிந்து வருத்துவனாதலால்,
யாம் கண்ணெடுத்துப்பார்ப்பதில்லை’ என்று பிரணயரோஷங் கொண்டிருக்கிறநிலையில்,

அடியவரைக்கைவிடாத இயல்புடையனான அப்பெருமான் மீளவும்வந்து அவர்க்குவந்தேறியாயுள்ள பராமுகத்தன்மையைப் போக்கி
அவரை அபிமுகராக்கிக்கொள்ளப் பலவகையால் முயன்றபோது, அவர் தமதுமுந்தினமநஸ்தாபந் தோன்ற
அப்பெருமானைநோக்கிப் பேசும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.

“முற்றில்” என்றது, கொள்வன தவிர்வன ஆய்ந்துணரவல்ல விவேகத்தை. “பந்து” என்றது, சரீரத்தை;
ஸத்வகுணம் ரஜோகுணம் தமோகுணம் என்கிற மூன்று குணங்களோடு விசித்திரமான கர்மமாகிய கயிறு
கொண்டு கட்டி எம்பெருமான் அந்த ராத்மாவாயிருந்து செலுத்த விழுந்தும் எழுந்தும் சுழன்றும் உழன்றும் சமய
பேதத்தால் விரும்பவும் வெறுக்கவும் படுவதான உடம்பு, செந்நூல் வெண்ணூல் கருநூல்கொண்டு புனையப்பட்டு
உரியவர் விளையாட்டாகச்செலுத்த விழுந்துஎழுந்து சுழன்றுஉழன்று கூடியநிலையில் விரும்பவும் கூடாத நிலையில்
வெறுக்கவும் படுவதான பந்தென்னத் தகும். “கழங்கு” என்றது,

ஐம்பொறிகளை: ஐம்புலநுகர்தற்கருவியான பஞ்சேந்திரியங்கள், சிறுகி அஞ்சாயிருக்கிற விளையாட்டுக்கருவியான கழங்குக ளெனப்பட்டன.
இவற்றை முன்பு அவன் கொண்டு ஓடியதாவது – இவருடைய விவேகம் முதலியவற்றை முன்னமே அவன் இவர்வசமின்றித்
தன்வசப்படுத்திக் கொண்டமை. மற்றும் இவருடைய ஐம்புலன் முதலியவற்றையும் அவன் வலியத் தன்வசப்படுத்திக்
கொண்டதை “பின்னும்அற்றிலை தீமை” என்று குறித்தார்.

இடையிலே அவன் உபேக்ஷித்துவிட்டதாக இவர் கருதிக் கொண்ட வெறுப்பினால், அந்நன்மையையே “தீமை” என்றார்.
‘அவைபொறுத்தோம்’ என்றது, நீசெய்கின்ற செயல்கட்கெல்லாம் இலக்காம்படி யாம் பரதந்திரமாயிருந்தோ மென்றபடி;
பன்மை, தனித்தன்மைப்பன்மை யென்றாவது, அன்பர்களைக் கூட்டிச்சொன்ன தென்றாவது கொள்ளத்தக்கது.
‘தொல்லையாலி னிளங்கற்றிலைமேல்துயில் வேங்கடவா’ என்றது, லோகரக்ஷணத்தில் ஜாக்கி ரதையுள்ளவனே யென்றபடி.
‘இல்’ ஆவது, போகாநுபவத்திற்கு உரிய இடம். ‘சிற்றில்’ என்றது, சிற்றின்பநுகர்ச்சிக்கு உரிய பிரபஞ்சவாழ்க்கையை.
உனது திருவடிஸ்பரிசத்தால் எனது இவ்வுடல்வாழ்விலாசையை யொழித்த தற்கு ஈடாக மீண்டும் இவ்வகை
நிலையிலாவாழ்க்கையைத் தராமல் பெருவீடான பரமபதத்தைத்தந் தருள்க வென்பது,

இறுதிவாக்கியத்தின் கருத்து. இடையீடுள்ள நினது அநுபவமாயின் எமக்கு வேண்டா:
நிரந்தராநுபவம் தந்தருள்வதானால் தந்தருள் என்ற போக்கு அமைய “பெருவீட்டினைச்செய்தருள்” என்றதனால்,
இது மநஸ்தாபந்தீர்கிறநிலையில் நிகழ்ந்த பேச்சென்க. இங்குக் குறிப்பாகக்காட்டிய ஸ்வாபதேசார்த்தங்களின் விவரணம்,
ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயம்வல்லார்வாய்க் கேட்டு உணரத்தக்கது.

————-

அரும்பாதகன் பொய்யன் காமுகன் கள்வன் அருள் சிறிதும்
அரும்பாத கல் நெஞ்சன் ஆறாச் சினத்தான் அவாவில் நின்றும்
திரும்பாத கன்மத்தன் ஆனேற்கு சேடச் சிலம்பு அமர்ந்து அ
திரும் பாத கஞ்சம் தரில் அது காண் உன் திருவருளே –98–

(இ – ள்.) அரும் பாதகன் – (போக்குதற்கு) அரிய பாவங்களையுடையவனும்,
பொய்யன் – பொய்பேசுபவனும்,
காமுகன் – சிற்றின்பவிருப்பமுடையவனும்,
கள்வன் – களவுசெய்பவனும்,
அருள் சிறிதும் அரும்பாத கல் நெஞ்சன் – கருணையென்பதுசிறிதேனுந்தோன்றப்பெறாத கல்லைப்போன்ற கடின சித்தமுடையவனும்,
ஆறா சினத்தன் – தணியாக்கோபமுள்ளவனும்,
அவாவினின்றும் திரும்பாத கன்மத்தன் – ஆசையினின்று மீளாத கருமத்தை யுடையவனும்,
ஆனேற்கு – ஆகிய எனக்கு,
சேடன் சிலம்பு அமர்ந்து அதிரும் பாத கஞ்சம் தரில் – திருவேங்கடமலையி லெழுந்தருளிப் பாததண்டைகள்) ஒலிக்கப்பெற்ற
(நினது) திருவடித்தாமரைமலர்களைக் கொடுத்தால்,
அதுகாண் உன் திரு அருள் – அதுவன்றோ உனது மேலானகருணையாம்; (எ – று.) – காண் – தேற்றம்.

தீக்குணந் தீச்செயல்கட்கெல்லாங் கொள்கலமான என்னை உன் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்ளுதலே நினது
திருவருட்குச் சிறப்பு என்பதாம். “அரும்பாதகன்” என்றது முதலாகத் தமதுதாழ்வை எடுத்துரைத்தார்.
எம்பெருமானுக்கு இயல்பில் அடிமையாகவுள்ள தமதுஆத்மாவை அங்ஙனம் எண்ணாது ஸ்வதந்திரமென்று எண்ணுதல்
அவனுக்கு உரியபொரு ளைக் களவுசெய்த தாகுதலால், அங்ஙனம் அகங்காரமுடையே னென்பார், தம்மை “கள்வன்” என்றார்;
“பண்டேயுன்தொண்டாம் பழவுயிரை யென்ன தென்று, கொண்டேனைக் கள்வனென்று” என்னும்
நூற்றெட்டுத்திருப் பதியந்தாதியையும் காண்க.
“அவாவென்ப வெல்லாவுயிர்க்குமெஞ்ஞான்றுந், தவா அப்பிறப்பீனும்வித்து” என்றபடி அவா கர்மத்துக்கு மூலகாரணமாதலால்,
‘அவாவினின்றுந் திரும்பாத கன்மம்’ எனப்பட்டது.
சிலம்பு – மலை. அணியப்பட்ட ஆபரணத்தின் அதிர்ச்சியை அணியும்உறுப்பான திருவடியின் மே லேற்றிச் சொன்னது,
இடத்துநிகழ்பொருளின்தொழிலை இடத்தின் மேற் சார்த்திக்கூறிய உபசாரவழக்கு.

காமுகன் – காமமுடையவன். சேஷன் என்ற பெயர் – (பிரளயகாலத்திலும் அழியாது) சேஷித்திருப்பவனென்று காரணப்பொருள்படும்;
சேஷித்தல் – மிச்சப்படுதல். ஈற்றடியில், ‘திருப்பாதகஞ்சம்’ என்பது மெலித்தல் விகாரம் பெற்றுவந்த தெனக்கொண்டு,
சேஷகிரியில் நின்ற திருவடித்தாம ரைமலர்கள் என்று உரைகொள்ளுதலும் உண்டு.

————

திருமந்திரம் இல்லை சங்கு ஆழி இல்லை திரு மண் இல்லை
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் செம்பொன் தானவனை
மருமம் திரங்கப் பிளந்தான் வடமலை வாரம் செல்லீர்
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –99–

(இ – ள்.) (பேதைச்சனங்களே! உங்கள்பக்கல்),
திரு மந்திரம் இல்லை – பெரியதிருமந்திரமெனப்படுகிற திருவஷ்டாக்ஷரமகாமந்திரம் இல்லை;
சங்கு ஆழி இல்லை – சங்கசக்கரமுத்திரை இல்லை;
திருமண் இல்லை – திரு மண்காப்பும் இல்லை;
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் – (எம்பெருமானைச்சரணமடைதலாகியசரணாகதி) தருமத்தை நிலையாகச்சிறிதும் செய்து பயின்றீரில்லை;
செம் பொன் தானவனை – சிவந்த பொன்னின்நிறமுள்ள இரணியாசுரனை,
மருமம் திரங்க – மார்பு வருந்த,
பிளந்தான் – (நரசிங்க மூர்த்தியாய்ப்) பிளந்திட்டவனான எம்பெருமானுடைய,
வட மலை வாரம் – திருவேங்கடமலையின் அடிவாரத்திலேனும்,
செல்லீர் – சென்றீரில்லை; (இத்தன்மையரானநீங்கள்),
கருமம் திரண்டதை எத்தால் களைய கருதுதிர் – (உங்கள்) ஊழ்வினை தொகுதிப்பட்டுள்ளதை எவ்வாற்றால் நீக்க நினைக்கிறீர்கள்?

இங்ஙனம் இரங்கிக் கூறியதனால், இனியேனும் நீங்கள் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாய் உஜ்ஜீவநோபாயமாகிற
திருமந்த்ரோபதேசத்தையும், தப்தசங்க சக்ரமுத்திரை தரிக்கப்பெறுதலாகிய திருவிலச்சினையையும்,
கேசவாதி துவாதசநாமங்களை முறையேசொல்லிஉடம்பிற்பன்னிரண்டிடத்தில் திருமணிடுதலாகிய ஊர்த்வபுண்டரத்தையும்
நல்ல ஆசிரியரது அருளாற் பெற்று, பிரபத்திமார்க்கத்தி லிழிந்து, துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலந சீலனான
எம்பெருமானுடைய திவ்வியதேசத்தைச் சார்ந்து, ஊழ்வினையொழித்து வாழ்வீர்க ளென்று அவைஷ்ணவர்கட்குக் குறிப்பித்தபடியாம்.

சங்காழி, திருமண், திருமந்திரம் என்பது முறையாயினும், தலைமைபற்றித் திருமந்திரத்தை முதலில் வைத்து,
மந்திரோபதேசத்திற்கு அங்கமாகின்ற தாபத்தையும் புண்டரத்தையும் அதன்பின் நிறுத்தினார்.
பஞ்சஸம்ஸ்காரங்களில் தாபம் புண்டரம் மந்திரம் என்ற மூன்றைக் கூறினது, நாமம் யாகம் என்ற மற்றையிரண்டற்கும் உபலக்ஷணம்;
(நாமம் – அடிமைப்பெயரிடப்பெறுதல். யாகம் – திருவாராதநக்கிகரமம் அருளப்பெறுதல்.)

“எல்லாத்தருமங்களையும் பற்றறவிட்டு என்னையொருவனைச் சரணமாக அடை, நான் உன்னை எல்லாத்
தீவினைகளினின்றும் விடுவிப்பேன், வருந்தாதே” என்றது ஸ்ரீகீதையிற் கண்ணன் அருளிய முடிவுரையாதல்கொண்டு,
தருமம்என்பதற்கு – சரணாகதியென்று உரைக்கப்பட்டது.
செம்பொற்றானவன் – செம்பொன்னின் பெயரையுடைய அசுர னெனினுமாம்; பொன் என்ற தென்மொழியும்,
ஹிரண்யம்என்ற வடமொழியும் பரியாயநாமமாதல் காண்க. பிறப்பு அநாதி யாய்வருதலின் உயிரால் அளவின்றியீட்டப்பட்ட
வினைகளின் பயன்கள் மலைபோலப் பெருந்தொகுதியாகக் குவிந்துள்ளதனால், “கருமந் திரண்டது’ என்றார்.
எது என்ற வினாப்பெயர் “ஆல்” என்ற மூன்றனுருபை யேற்கும்போது இடையிலே தகரவொற்றுவிரிந்து, எத்தால் என நின்றது.
கருதுதிர் என்ற முன்னிலைமுற்று, நிகழ்காலத்தில் வந்தது.

————

கருமலையும் மருந்தும் கண்ணும் ஆவியும் காப்பும் அவன்
தரும் அலை உந்திய பேரின்ப வெள்ளமும் தாய் தந்தையும்
வருமலையும் திருப்பாலாழியும் திரு வைகுந்தமும்
திரு மலையும் உடையான் எனக்கு ஈந்த திருவடியே –100-

(இ – ள்.) வரு மலையும் – பொருந்திய திருக்கடல்மல்லை யென்கிற ஸ்தலத்தையும்,
திரு பால் ஆழியும் – திருப்பாற்கடலையும்,
திரு வைகுந்தமும் – பரமபதத்தையும்,
திருமலையும் – திருவேங்கடமலையையும்,
உடையான் – (தனக்குத் தங்குமிடமாக) உடையவனான எம்பெருமான்,
எனக்கு ஈந்த – அடியேனுக்கு அருளிய,
திரு அடி – சீர்பாதங்கள், – (அடியேனுக்கு), –
கரு மலையும் மருந்தும் – பிறவிநோயையொழிக்கிற மருந்தும், கண்ணும் -,
ஆவியும் – உயிரும்,
காப்பும் – பாதுகாவலும்,
அவன் தரும் அலை உந்திய பேர் இன்ப வெள்ளமும் – அவன் (பரமபதத்தில்) தந்தருளும் அலைகளை யெறிகிற பேராநந்தப்பெருக்கும்,
தாய் தந்தையும் – தாய்தந்தையருமாம்; (எ – று.)

கரு மலையும் மருந்து – “மருந்தாங் கருவல்லிக்கு” என்பர் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும்.
திருவடியை ‘மருந்து’ என்றதற்கு ஏற்ப, பிறவியை “நோய்” என்னாததனால், ஏகதேசவுருவகவணி.
இன்றியமையாதனவாய் அருமைபாராட்டப்படுதல்பற்றி ‘கண்’ என்றும், அங்ஙனம் தாரகமாதல் பற்றி ‘உயிர்’ என்றுங் கூறப்பட்டன.
காப்பு – ரக்ஷகம். வெள்ளமென்றதற்கு ஏற்ப ‘அலையுந்திய’ என்ற அடைமொழி கொடுத்தது,
பேரின்பத்தின்மிகுதியை யுணர்த்தும்; இது, சஞ்சலத்தையொழித்த என்றும் பொருள்படும்.
அன்புடன் ஆவனசெய்தலில், தாயும் தந்தையுமா மென்க. இச்செய்யுள் – பலபடப்புனைவணி.
மூன்றாமடியில், மல்லை யென்பது ‘மலை’ எனத் தொகுத்தல்விகாரப்பட்டது.
திருக்கடன்மல்லை – தொண்டைநாட்டுத்திருப்பதிகளி லொன்று. வரும் அலையும் என்று எடுத்து,
இரண்டுபெயரெச்சங்களையும் திருப்பாற்கடலுக்கு அடைமொழியாக்குதலு மொன்று. வரும் அலை – பிரளயப்பெருங்கடல் எனினுமாம்.

———-

தற்சிறப்புப் பாசுரம் –

மட்டளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்குத்
தொட்டளை யுண்ட பிரானுக்கு அன்பாம் பட்டர் தூய பொற்றாள்
உள் தளை யுண்ட மணவாள தாசன் உகந்து உரைத்த
கட்டளை சேர் திரு அந்தாதி நூறு கலித் துறையே –

(இ – ள்.) பட்டர் – பட்டரென்ற ஆசாரியருடைய,
தூ பொன் தானுள் பரிசுத்தமான அழகிய திருவடிகளிலே, தளை யுண்ட – பக்தியினாலாயே சம்பந்தம்பெற்ற,
மணவாளதாசன் – அழகியமணவாளதாசன்,
உகந்து உரைத்த – விரும்பிப் பாடிய,
திரு அந்தாதி – சிறந்த அந்தாதிப்பிரபந்தவடிவமான,
நூறு கட்டளை சேர் கலித்துறை – நூறு கட்டளைக்கலித்துறைச் செய்யுள்களும், –
அளை தொட்டு உண்ட பிரானுக்கு – வெண்ணெயைக் கையினா லெடுத்து அமுதுசெய்த பிரபுவான,
மட்டு அளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்கு – வாசனை நிறைந்த சோலைகள் சூழ்ந்த வடக்கின் கணுள்ள
திருவேங்கடமலையில் வாழ்கிற எம்பெருமானுக்கு,
அன்பு ஆம் . பிரியமாம்; (எ – று.)

பட்டர் தூயபொற்றாளுள்தளையுண்ட – பட்டரது அந்தரங்கசிஷ்யரான என்றபடி. பட்டர் – கூரத்தாழ்வானுடைய குமாரர்,
எம்பாருடைய சிஷ்யர்: பண்டிதர்க்கு வழங்குகிற பட்ட ரென்ற பெயர், இவர்க்குச் சிறப்பாக வழங்கும்;
இவர், ஸ்ரீபாஷ்யகாரரால் நாமகரணஞ்செய்தருளப்பெற்றவர்.
கட்டளைசேர்கலித்துறை – கலிப்பாவின் இனம் மூன்றனுள் ஒன்றான கலித்துறையினும் வேறுபட்டுவருவது;
அதன் இலக்கணம் – “முதற்சீர்நான்கும் வெண்டளைபிழையாக், கடையொருசீரும் விளங்காயாகி, நேர்பதினாறே நிரைபதினேழென்,
றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” எனக் காண்க.
மட்டு – தேனுமாம். தாள் உள் தளையுண்ட – தாளினிடத்து மனப் பிணிப்புப் பொருந்திய எனினுமாம்.

இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப் பிறன்போலும் பாயிரங் கூறியது.
(பிரயோகவிவேகநூலார் ‘இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது,’ வடநூலார் தாமே பதி+மும் உரையுஞ் செய்வார்’,
‘இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப்
பின்னாகப் பதிகங்கூறுவதுங் காண்க’ என்றவை கருதத்தக்கன.) இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.

திருவேங்கடத்தந்தாதி முற்றிற்று.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்