ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திரு அழகரந்தாதி –21-40-

இருக்கு அந்தரத்து அனைவோர்களும் ஓதி இடபகிரி
நெருக்கம் தரத்தனை ஏத்த நின்றானை நிறத்த துப்பின்
உருக் கந்தர் அத்தனைத் துன்பு ஒழித்தானை உலகம் உண்ட
திருக் கந்தரத்தானை அல்லாது எண்ணேன் ஒரு தெய்வத்தையே –21—

(இ – ள்.) அந்தரத்து அனைவோர்களும் – மேலுலகத்திலுள்ள எல்லாத் தேவர்களும்,
இருக்கு ஓதி – வேதவாக்கியங்களைச் சொல்லி,
இட பகிரி நெருக்கம் தர தனை ஏத்த – திருமாலிருஞ்சோலைமலையிலே நெருக்கமுண்டாகுமாறு (வந்துதிரண்டு) தன்னைத் துதிக்க,
நின்றானை – (அத்துதிகளை ஏற்றுக்கொண்டு அங்கு) நின்றவனும், –
நிறத்த துப்பின் உரு – நிறம்விளங்கப்பெற்ற (சிறந்த) பவழம்போன்ற வடிவுநிறத்தையுடைய,
கந்தர் – முருகக்கடவுளுக்கு,
அத்தனை – தந்தையாகிய சிவபிரானை,
துன்பு ஒழித்தானை – இரத்தற்றுன்பமொழியும்படி செய்தருளியவனும், –
உலகம் உண்ட திருகந்தரத்தனை அல்லாது – உலகங்களை அமுதுசெய்த அழகிய கண்டத்தை யுடையவனுமான ஸ்ரீமந்நாராயணனை யல்லாமல்,
ஒரு தெய்வத்தை எண்ணேன் – வேறொருதெய்வத்தைக் கருதேன், (யான்); (எ – று.)

இவர் “மறந்தும்புறந்தொழாமாந்தர்” ஆதலால், பரதேவதையான திருமாலையன்றி, பிரளயகாலத்திலே பிறவுயிர்களோடொப்ப
அவனது திருவயிற்றினுட் புக்குப் பின்பு வெளிப்படுபவர்களும், தமக்கு ஆபத்துநேர்ந்த காலத்தில் அவனையே
சரணமடைந்துதேறி மற்றைச்சமயங்களிற் செருக்கித்திரிபவர்களுமான அபரதேவர்களைச் சிறிதும்பொருள்
செய்யாமையில் தமக்கு உள்ள உறுதியான துணிவை இங்ஙனம் வெளியிட்டார்;
“அரங்கா உன்னையன்றித் தெய்வம், ஆக மதிக்கு ளெண்ணே னடியேன் பிறராரையுமே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
(“நளிர்மதிச்சடையனும் நான்முகக்கடவுளும், தளிரொளியிமையவர்தலைவனும் முதலா,
யாவகையுலகமும் யாவரு மகப்பட, நிலநீர்தீகால்சுடரிருவிசும்பும், மலர்சுடர்பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒருபொருள் புறப்பாடின்றி முழுவதும், அகப்படக்கரந் தோ ராலிலைச்சேர்ந்த எம், பெருமாமாயனை யல்லது,
ஒரு மாதெய்வ மற்றுடையமோயாமே” என்ற ஆழ்வாரருளிச்செயல் இங்கு அறியத்தக்கது.)

நான்குவேதங்களுள் ருக்வேதம் முதலதாகையால், தலைமை பற்றி, அது எடுத்துக்கூறப்பட்டது;
இது, மற்றைவேதங்களுக்கும் உபலக்ஷணம். அந்தரம் – வானம்; வடசொல்; அங்குஉள்ள சுவர்க்கலோகத்துக்கு இடவாகுபெயர்.
துப்பின் நிறத்தஉரு எனமொழிமாற்றியுரைத்தலும் அமையும். கந்தரம் – தலையைத்தரிப்பது என்று காரணப்பொருள்பெறும்; கம் – தலை.

————

தெய்வம் பல அவர் நூலும் பல அவை தேர் பொழுதில்
பொய் வம்பு அல என்று தோன்றும் புல்லோர்கட்கு போத நல்லோர்
உய்வம் பலனும் அவனே என்று ஓதி உணர்வர் நெஞ்சே
கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலைக் கொண்டலையே –22-

(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
தெய்வம் பல – (உலகத்தில்) தெய்வங்கள் பல இருக்கின்றன;
அவர் நூலும் பல – அத்தேவர்களைப்பற்றிய ஆகமங்களும் (மதவேறுபாட்டினாற்) பல இருக்கின்றன;
அவை – அந்நூல்கள்,
தேர் பொழுதில் – ஆராயுமிடத்து,
பொய் வம்பு அல என்று புல்லோர்கட்கு தோன்றும் – பொய்ம்மையுடையனவும் பயனற்றவையும் அல்லவென்று அற்பர்களுக்குத்தோன்றும்;
போதம் நல்லோர் – ஞானத்தையுடைய நல்லவர்களோ, –
‘உய்வம் – (இவ்வழியல்லாவழிகளில் இறங்காது நல்வழிச்சென்று) உய்யக்கடவோம்;
பலனும் அவனே – (பரகதிக்கு உபாயமாகின்றமாத் திரமேயன்றி அவ்விடத்து அனுபவிக்கப்படும்) பயனாகின்றவனும் அழகப்பிரானே’,
என்று – என்று எண்ணி,
கொய்வம்பு அலர் சொரியும் சோலை மா மலை – கொண்டலையே ஓதி உணர்வர் – விரும்பிப்பறிக்கத்தக்க வாசனையுள்ள மலர்கள்
சிந்தப்பெற்ற திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற நீர்கொண்ட மேகம்போன்றவனான
அழகனையே துதித்துத் தியானிப்பார்கள்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – பிரிநிலையோடு உயர்வுசிறப்பு.

புல்லோர், தமது ஆராய்ச்சிக்குறைவினால், பற்பலதேவதாந்தரங்களையும் அவரைப்பற்றிய பொய்ந்நூல்களையும்
உண்மையென்று நம்பிப் பாராட்டிப் பழுதே பலபகலும் போக்குவர்; மெய்யுணர்வுள்ள நல்லோர்களோ,
அங்ஙனமன்றிக் காண்பவர் கண்குளிர்ந்து விடாய்தீருமாறு குளிர்ந்திருண்ட தோற்றமுடையவனாய்ப் பக்ஷபாதமின்றிக்
கைம்மாறுகருதாது உலகத்துக்குக் கருணைமழைசொரிந்துகொண்டு காளமேகம்போலத் திருமாலிருஞ்சோலைமலையில்
எழுந்தருளியிருக்கிற திருமாலையே உபாயமும் உபேயமுமாக உணர்ந்து துதித்து உயர்கதிபெறுவர் என்று,
விபரீதஞானமுடைய, ஸாமாந்யஜனங்களுக்கும் தத்துவஞானமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் உள்ள ஞானதாரதம்மியத்தையும்,
அதனால் அவர்கள் அடையும் பயன்வேறுபாட்டையும் தம்நெஞ்சத்துக்கு எடுத்துக்காட்டியவாறாம்.
நெஞ்சே! நீ புல்லோர்வழியிற்புகுதாது நல்லோர்நெறியில் நிற்பாய் என்று குறிப்பித்தபடி.

தேவர்களை இருதிணையாலுங்கூறுதல் இலக்கணமாதலால், “தெய்வம் பல அவர்நூலும் பல” என்றது அமையும்.
உம்மை – இறந்ததுதழுவிய எச்சப்பொருளது. செய்யுளாதலின், “அவன்” என்ற சுட்டுப்பெயர் முன்வந்தது எ – பிரிநிலை.
கொண்டல் – நீர்கொண்ட மேகத்துக்குத் தொழிலாகுபெயர். கொள் தல் எனப் பிரியும்:
அது, இங்குப் பெருமானுக்கு நிறமும் பயனும் பற்றிவந்த உவமையாகுபெயராய் நின்றது.
(‘சோலைமாமலைக்கொண்டலை’ என்பதை “ஸ்ரீவேங்கடாத்ரிசிகராலயகாளமேகம்” என்றாற்போலக் கொள்க;
“புயன்மழைவண்ணர் புரிந்துறைகோயில், மயன்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை” என்றார் ஆழ்வாரும்.)

————

கொண்டு அலையா நிற்கும் ஐம் புலக் கோள் மகரங்களின் ஈர்ப்பு
உண்டு அலை ஆர் பிறவிக் கடல் மூழ்குவர் உத்தமனை
தண்டலை ஆர் திரு மாலிருஞ்சோலைத் தனிச் சுடரை
புண் தலையால் வணங்கார் அணங்கு ஆர் வினை போக என்றே –23-

(இ – ள்.) (உலகத்துப்பேதைகளாயுள்ளவர்கள்), –
கொண்டு அலையாநிற்கும் ஐம் புலம் கோள் மகரங்களின் – (மனத்தைத் தம்வசமாகக்) கொண்டு வருத்திநிற்கிற
ஐம்புலன்களாகிய வலிய சுறாமீன்களினால்,
ஈர்ப்புஉண்டு – இழுக்கப்பட்டு,
அலை ஆர் பிறவி கடல் மூழ்குவர் – (பலவகைச்) சஞ்சலங்கள் பொருந்திய பிறப்புத் துன்பமாகிய அலைகள் பொருந்திய கடலிலே மூழ்குவார்கள்;
உத்தமனை – புருஷோத்தமனும்,
தண்டலை ஆர் திருமாலிருஞ்சோலை தனி சுடரை – குளிர்ச்சியான இடத்தையுடைய சோலைகள் நிறைந்த
திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற ஒப்பற்ற தேஜோரூபியுயான எம்பெருமானை, –
அணங்கு ஆர் வினை போக என்று – ‘துன்பம் நிறைந்த (தம்) கருமங்கள் ஒழிவனவாக’ என்று,
புண் தலையால் வணங்கார் – தசைபொருந்திய தங்கள்தலையைக்கொண்டு நமஸ்கரிக்கமாட்டார்கள்.

இந்த அஜ்ஞாநிகளுடைய தீவினை இருந்தபடி என்னே! என்று இரங் கியவாறாம். இனி, திருமாலிருஞ்சோலைச்சுடரை
வினைபோக வென்று தலையால் வணங்காதவர்கள், ஐம்புலமகரங்களினால் ஈர்ப்புண்டு பிறவிக்கடலில் மூழ்குவர் என்று
எழுவாய்பயனிலையமைய உரைப்பினும் அமையும்; இவ்வுரைக்கு, வணங்கார் என்பது – வினையாலணையும்பெயர்.

அலையாநிற்கும் என்பதை, அலையா நிற்கும் என்று பிரித்து, வருத்தி நிற்கு மென்று பொருள்காண்க.
ஐம்புலம் – சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தமென்னும் பஞ்சவிஷயங்கள்; இவை, முறையே தமிழில் ஓசைஊறு ஒளி சுவை நாற்றம் எனப்படும்;
இவை, முறையே செவி மெய் கண் வாய் மூக்கு என்ற பஞ்சஇந்திரியங்களுக்கு உரியவை.
மகரம் – முதலையுமாம். கோள்மகரம் – “முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா” என்றபடி எவ்வகை வலியுடையவற்றையும்
இழுத்துக்கொண்டு சென்று மீளவும் எளிதில் விடுதலில்லாத பெருவலிமையுடைய மகரம்.
“அலைஆர்” என்ற அடைமொழியை, கடலாகிய உபமானத்துக்கும் பிறவியாகிய உபமேயத்துக்கும் உரியதாக்கொண்டு,
அவ்விரண்டனோடுங் கூட்டி, அதற்கு இருவகையாகப் பொருள்கொள்ளப்பட்டது; சிலேடை.
இனி, அலை ஆர் கடல் என்பதற்கு – அலைகள் ஒலிக்கப்பெற்ற கடலென்று உரைத்தலும் அமையும்;
ஆர்த்தல் – ஒலித்தல். உத்தமன் – மேலானவன். தனிச் சுடர் – முச்சுடர்களினும் மேம்பட்ட ஒளியுருவம். போக – வியங்கோள்முற்று.

————-

என்று உதரம் கலந்தேன் அற்றை நான்று தொட்டு இற்றை வரை
நின்று தரங்கிக் கின்றேற்கு அருள்வாய் நெடும் கான் கடந்து
சென்று தரங்கக் கடல் தூரத்து இலங்கையில் தீயவரைக்
கொன்று தரம் குவித்தாய் சோலை மா மலைக் கோவலனே –24–

(இ – ள்.) நெடுங் கான் கடந்து சென்று – நெடியகாட்டை (தண்டகார ணியத்தை) நடந்துகடந்து அப்பாற்சென்று,
தரங்கம் கடல் தூர்த்து – அலை களையுடைய கடலை (மலைகளைக்கொண்டு) நிரப்பி அணைகட்டி,
இலங்கை யில் தீயவரை கொன்று தரம் குவித்தாய் – இலங்காபுரியிலுள்ள கொடியவர் களான அரக்கர்களைக் கொன்று (அவர்களுடலை) மலையாகக் குவித்தவனே!
சோலை மா மலை கோவலனே – திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற ஆயனே! –
என்று உதரம் கலந்தேன் – எப்பொழுது (தாயின்) வயிற்றில் வந்துபுகுந்தேனோ,
அற்றை நான்று தொட்டு – அன்றைத்தினந் தொடங்கி,
இற்றை வரை – இன்றைநாளளவும்,
நின்று தரங்கிக்கின்றேற்கு – இடைவிடாது அலைகின்றவனாகிய எனக்கு,
அருள்வாய் – (இனியாயினும் அங்ஙனம் அலையாதபடி) கருணைசெய்வாய்; (எ – று.)

நான்று – ஞான்று என்பதன் முதற்போலி. கான் – காநந மென்ற வட சொல்லின் விகாரம். தரம் – குவியல், தொகுதி யென்றபடி.
கோவலன் – பசுக்களைக்காக்க வல்லவன்; கோ – பசு; வடசொல்; வலன் = வல்லன்: தமிழ்ச்சொல்.
கோபாலன் என்ற வடசொல், கோலனென்று விகாரப்பட்ட தெனக் கொண்டாலும், பசுக்களைக்காப்பவ னென்றே பொருளாம்.
கிருஷ் ணாவதாரத்தில் நந்தகோபகுமாரனாய் இடைச்சாதியில் வளர்ந்தமை பற்றி, ‘கோவலனே!’ என்றார்;
இப்பெயர், பெருமானுடைய சௌலப்பியத்தைக் காட்டும். இனி, கோ வலன் – உயிர்களைக் காக்கவல்லவனுமாம்.

————-

கோவலன் பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலை மலைக்
காவலன் பாற் பாடல் கண் துயில் மால் அலங்காரன் என்றே
பாவல் அன்பால் பணிவார் அணி வானவர் ஆகி மறை
நாவலன் பார்ப்பதி நாதன் நண்ணாப் பதம் நண்ணுவரே –25-

(இ – ள்.) ‘கோவலன் – ஆயனாய்வளர்ந்தவன்:
பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலைமலை காவலன் – குஞ்சுகளுடனே மயில்கள் சூழப்பெற்ற குளிர்ந்த திருமாலிருஞ்சோலைமலைக்குத் தலைவன்:
பால் கடல் கண்துயில் மால் அலங்காரன் – திருப்பாற்கடலிலே யோகநித்திரை கொண்டருள்கிற பெருமைபொருந்திய அழகன்,’
என்றே – என்று (இங்ஙனம் எம்பெருமானுடைய குணவிபவங்களைச்) சொல்லிக்கொண்டே,
பாவல் அன்பால் பணிவார் – பரவுதலையுடைய (மிக்க) பக்தியினால் (அப்பெருமானை) வணங்குபவர்கள், –
அணி வானவர் ஆகி – (மறுமையிலே) அழகிய முக்தர்களாகி,
மறை நாவலன் பார்ப்பதி நாதன் நண்ணா பதம் நண்ணுவர் – வேதம் வல்ல நாவையுடையவனான பிரமனும்
பார்வதீநாயகனான சிவபிரானும் அடைய மாட்டாத பரமபதத்தை அடைவார்கள்; (எ – று.)

கோவலன் = கோபாலன். காவலன் – லோகஸம்ரக்ஷகன். மறைநாவலன் – வேதங்களை ஓதியுணரும் நாவன்மையுடையவன்.
நாவலன் – நா வலன். மறைநாவலன் – வேதங்களை நாவில்வல்லவன். பாவல் என்ற தொழிற்பெயரில்,
பாவு – பகுதி. பார்ப்பு என்ற இளமைப்பெயர், பறவைக்கு உரியது;
“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை” என்பது, தொல்காப்பியம்.
பார்ப்பு என்பதற்கு – (தாய்ப்பறவையினால் அன்போடு) பார்த்துக்குறிக்கொண்டு பாதுகாக்கப்படுவ தென்று காரணப்பொருள் காணலாம்.
வானவர் – எல்லாவுல கங்களுக்கும் மேலுலகமாகிய முத்தியையடைந்தவர். சிலசாதியார்க்கும் பெண்பாலார்க்கும்
ஓதிவிக்கவும் ஓதவும் கேட்கவும் ஆகாதென்று மறு க்கப்படுதலாலும், எளிதிலுணரலாகாதபடி மறைந்த ஆழ்பொருளையுடைமை யாலும்,
மறையென்று வேதத்திற்குக் காரணக்குறி. பார்வதீநாதன் என்ற வடமொழித்தொடர், விகாரப்பட்டது.
பர்வதராசனான இமவானுக்கு மகளானதனால், அம்பிகைக்குப் பார்வதி யென்று பெயர்.
‘நண்ணாப்பதம் நண்ணுவர்’ என்றவிடத்துத் தொடைமுரண் தோன்றுதல் காண்க.

————-

நண் இன நாக முடி மேல் நடித்து என்னை நாசம் அறப்
பண்ணின நாகமும் பாரும் அளந்தன பண்டு தம்பி
மண்ணினன் ஆக வனம் போயின வளர் சோலை
மலைக் கண் இனன் ஆகம் கரியான் சிவந்த கழல் இணையே –26-

(இ – ள்.) வளர் சோலைமலைக்கண் இனன் – ஓங்கிவளர்ந்த திருமா லிருஞ்சோலைமலையி லுதித்த சூரியன்போல விளங்குகின்றவனும்,
ஆகம்கரி யான் – திருமேனிகறுத்துள்ளவனுமான அழகப்பிரானுடைய,
சிவந்த கழல் இணை – செந்நிறமாயுள்ள உபயபாதங்கள், –
நாகம் நண் இனன் முடிமேல் நடித்து – (காளியனென்னும்) பாம்பினது நெருங்கித் தொகுதியாயுள்ள தலைகளின்மேல் நடநஞ்செய்து, –
என்னை நாசம் அற பண்ணின -(அந்தத் துஷ்டநிக்கிரகசீலத்தி லீடுபடுதலால்) என்னை அழியாது உய்யும்படி செய்தருளின;
நாகமும் பாரும் அளந்தன – மேலுலகத்தையும் பூமியையும் அளந்தருளின;
பண்டு – முன்பு (ஸ்ரீராமாவதாரத்தில்),
தம்பி மண்ணினன் ஆக வனம் போயின – அடுத்ததம்பியான பரதாழ்வான் நிலவுலகத்தரசாட்சிக்கு உரியவனாகுமாறு தாம் வனவாசஞ்சென்றன; (எ – று.)

பாதவகுப்பு என்னும் பிரபந்தத்துறை கூறியவாறாம்: இந்நூலின் 94 – ஆஞ் செய்யுளும் இது.
பாதவகுப்பு – பிரபந்தத்தலைவனது திருவடிகளின் சிறப்புக்களை யெடுத்துக்கூறுவது;
(இங்ஙனமே புயவகுப்பும் உண்டு: அது, பிரபந்த நாயகனதுதோள்களின் சிறப்பைக் கூறுவது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா, ரிறைவனடி சேராதார்” என்றபடி சரணமடைகிற உயிர்கட்கெல்லாம் உஜ்ஜீவநகரமாயிருப்பது
திருமாலின் திருவடி யாதலால், அதன் ஏற்றத்தை எடுத்துக்கூறின ரென்க.

நாகமும்பாரும்அளந்தது, திரிவிக்கிரமாவதாரத்தில்; இவ்வரலாற்றால், கொடியவரை யடக்குதற்கு வேண்டிய தந்திரம் வல்லவ னென்றவாறு.

சீதாகல்யாணத்தின்பிறகு தசரதசக்கரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ்செய்ய யத்தனிக்கையில்,
மந்தரைசூழ்ச்சியால் மனங்கலங்கப் பெற்ற கைகேயி தன்கொழுநரான தசரதரை நோக்கி முன்பு தனக்குக் கொடுத்திருந்த
இரண்டுவரங்களுக்குப் பயனாகத் தன்மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌசல்யைமகனான இராமனைப் பதினான்குவருஷம்
வனஞ்செலுத்தவும் வேண்டுமென்று சொல்லி வற்புறுத்த, அதுகேட்டுவருந்திய தசரதர், சத்தியவாதியாதலால்,
முன்பு அவட்குவரங்கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும், இராமன்பக்கல் தமக்குஉள்ள மிக்கஅன்பி னால்
அவ்வரத்தை நிறைவேற்றுமாறு அவனை வனத்துக்குச் செல்லசொல்லவும் மாட்டாமலும், கலங்கி வாய்திறவாதிருக்கிற சமயத்தில்,
கைகேயி இராமனை வரவழைத்து “பிள்ளாய்! உங்கள்தந்தை பரதனுக்கு நாடுகொடுத்துப் பதினான்குவருடம் உன்னைக்
காடேறப் போகச்சொல்லுகிறார்’ என்றுசொல்ல, அச்சொல்லைத் தலைமேற்கொண்டு அந்த மாற்றாந்தாயின்வார்த்தையையும்
அவட்குத் தனதுதந்தை கொடுத்திருந்த வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ருபித்ருவாக்யபரிபாலநஞ் செய்தலினிமித்தம்
இராமபிரான் அரசாட்சியைப் பரதனுக்குஉரியதாம்படி கைவிட்டு இலக்குமணனோடும் சீதையோடும் அயோத்தியைநீங்கி
நடந்து வனவாசஞ்சென்றன னென்ற வரலாறுபற்றி, “பண்டு தம்பிமண்ணினனாக வனம்போயின” என்றார்.

இராமபிரானும் கண்ணபிரானும் திருமாலின் திருவவதாரமூர்த்திக ளாதலால், அவர்கள்செய்கை, திருமாலின்
செய்கையாக ஒற்றுமைநயம்பற்றிக் கூறப்பட்டது; இதனை, முன்னும் பின்னும் இதுபோல வருமிடங்கட் கெல்லாங் கொள்க.

இனன் – இனமென்பதன் இறுதிப்போலி. இது, முடிக்கு அடைமொழி;
* நாகம் என்ற வடசொல் – நகத்தில் (அதாவது – மரத்தில் அல்லது மலையில்) வாழ்வது என்றும், கால்களினாற் செல்லாதது என்றும்
காரணப்பொருள் பெறும். நாஸம், ** நாகம், வநம், இநன் – வடசொற்கள். நாகமும் என்றவிடத்து,
நகரவேறுபாடு, திரிபுநயத்தின் பொருட்டுக் கொண்டது. முதலடியில் னாகம் என்றவிடத்து னகரத்தையும் இங்ஙனங் கொண்டு,
நண்ணினஎன்று எடுத்து, நாகமுடிமேல் நடித்துப் பொருந்தின என்று தனிவாக்கியமாக்கி யுரைப்பாரு முளர்.
முதலடியிலாவது இரண்டாமடியிலாவது நல் நாகம் என்றுஎடுத்தலு மொன்று.
நாகம் – சுவர்க்கத்தைக் குறிக்கையில் – கம் – சுகம்: அஃது அல்லாதது, அகம்: அது துக்கம்; அதுஇல்லாதஇடம் –
நாகம் எனக் காரணப்பொருள் காண்க. அடியார்களுடைய அஜ்ஞாநமாகிய இருள் அகலவும், அவர்களுடைய உள்ளக்கமலங்கள் மலரவும்,
சூரியன்போன்று காட்சிதருதலால், “சோலைமலைக்கண் இனன்” என்றார்;
இதனை, திருவரங்கத்தந்தாதியில் “ஆய்க்குலத்திநர்” என்றாற்போலக் கொள்க.
“இருள்விரி நீலக்கருஞாயிறு சுடர்கால்வதுபோ, லிருள்விரிசோதிப்பெருமான்”
ஆதலால், “இனன் ஆகங்கரியான்” எனப்பட்டான். திருவடி சிவந்திருத்தல், உத்தமவிலக்கணம்.
“ஆகங்கரியான் சிவந்தகழலிணை” என்றவிடத்து, தொடைமுரண் காண்க.

———-

தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல் –

கழலப் புகுந்த வளை அறியார் என் கருத்து அறியார்
அழலப் புகன்று ஒறுப்பார் அன்னைமார் அறுகாற் சுரும்பு
சுழலப் புனைந்த துழாய் மார்பர் மாலிருஞ்சோலை என்னார்
தழல் அப்புவர் என் தனங்களிலே சந்தனங்கள் என்றே –27-

(இ – ள்.) அன்னைமார் – (என்) தாய்மார்கள், –
கழல – புகுந்த வளை அறியார் – (என் கைகளினின்று) கழன்றுவிழத்தொடங்கிய வளையல்களின்தன்மையை உணரார்;
என் கருத்து அறியார் – என் மனத்திற்கொண்ட காதலை உள்ளபடி உணரார்;
அழல புகன்று ஒறுப்பார் – (என்மனங்) கொதிக்க (க் கடுஞ்சொற்களை)க்கூறி வருத்துவார்கள்;
அறு கால் சுரும்பு சுழழ புனைந்த துழாய் மார்பர் மாலிருஞ்சோலை என்னார் – ஆறுகால்களுள்ள வண்டுகள் சுழன்று
மொய்க்கும்படிதரித்த திருத்துழாய்மாலையையுடைய திருமார்பினரான அழகரது திருமாலிருஞ்சோலைமலை யென்று ஒருதரமேனுஞ்சொல்லார்;
சந்தனங்கள் என்று என் தனங்களிலே தழல் அப்புவர் – சந்தனக் குழம்புவகைகளென்று சொல்லி என்தனங்களின்மேல் நெருப்பை வாரிப் பூசிநிரப்புவார்கள்; (எ – று.)

களவொழுக்கத்தால் தலைவனைக்கூடிப் பிரிந்த தலைவி அப்பிரிவுத் துயரை யாற்றமாட்டாமல் விரகதாபத்தால் மிகவருந்த,
அத்தலைமகளைக்கண்ட செவிலித்தாய்மார் அத்தாபத்துக்குக் காரணம் இன்னதென்றுஆய்ந்துஉண ராதவர்களாய்
அப்பொழுதுநிகழ்கின்ற வேனிற்காலத்தினா லாகியதென்று கருதி அதனைத் தணித்தற்பொருட்டுச் சந்தனக்குழம்பை
அம்மகளுடம்பின் மேல் மிகுதியாக அப்பிச் சைத்யோபசாரஞ்செய்ய, காலதாபமன்றாதலால் அதனைத்தணிக்க மாட்டாத
அச்சந்தனக் குழம்பு,கலவிக்காலத்திலே இன்பஞ் செய்யும் பொருள்களு ளொன்றாதலாற் பிரிவுக்காலத்திலே
காலதாபத்தை மிகுவிப்பதாகி மிக்கவெப்பஞ் செய்ய, அதனால் மிகவருந்திய அந்தத் தலைமகள்,
தோழியின்முன்னிலையில் அத்தாயின்செயலைக்குறித்து வெறுத்துக்கூறியது, இது.

எனது, உடம்பு சடக்கென்று மிகமெலிந்திருப்பதை உற்றுநோக்கி அக்காரியத்தைக்கொண்டு அதன்காரணமாகிய
என்கருத்தின்காதலை அநுமா னித்துஉணரமாட்டிற்றில ரென்பாள், “கழலப்புகுந்தவளையறியார் என்கருத்தறியார்” என்றாள்.
தாபசாந்திசெய்யத்தக்கவையான சைத்தியோபசாரங்களைத் தாய்மார் ஏமாறாமல் இடைவிடாது இவட்குச் செய்துவருகையிலும்
இவள் சிறிதும் தாபந்தணிந்திடாது மேன்மேல்தவிக்க, இப்படியும் ஒர் ஆற்றாமை உண்டோ வென்று
அவர்கள் வெறுத்துஉரைத்தலே யன்றி, இத்தலைமகள் ஒருதலைமகனோடு தொடர்புடையளென்று ஊரார்சொல்லும்
பழிமொழியைக்கேட்டுத் தாய்மார் வெகுண்டு ‘இங்ஙனம் நமதுகுடிக்குப் பழிவிளையுமாறு ஒரு நிகழ்ச்சி யுண்டோ?’ என்று
சொல்லுகின்ற வெஞ்சொற்களும் பற்றி, ‘அழலப்புகன்று ஒறுப்பார் அன்னைமார்’ என்றாள்.
அன்றியும், தாய்மார் அப்புகிற தண்ணியசந்தனம் இவட்கு வெவ்வியதழலாகத் தோன்றினாற் போல,
அவன்தானே வருதலைநோக்கி ஆறியிருப்பதொழிய இங்ஙனம் பதறுவது குடிப்பிறப்புக்கு அடாது என்று அவர்கள்
சொல்லுகிற இதவசனங்களே இவட்கு வெஞ்சொற்களாகத் தோன்றின வென்றுங் கொள்ளலாம்.
இவள் தான்காதலித்த தலைவனது ஊரையும் பேரையும் அலங்காரத்தையும் குணங்களையும் சொல்லக் கேட்கப்பெறின்
ஒருவாறு ஆறியிருக்குந் தரமுடைய ளாதலால், அவற்றிலொன்றையேனும் அத்தாய்மார் சொல்லாமையைக்குறித்து
“சுரும்புசுழலப்புனைந்ததுழாய்மார்பர்மாலிருஞ்சோலை யென்னார்” என்று இரங்கினாள்.
“அறுகாற்சுரும்பு சுழலப் புனைந்த துழாய்” என்று தலைவரது திருத்துழாயின் திவ்வியபரிமளத்தில் ஈடுபட்டவாறு.
தழலப்புவர் என்தனங்களிலே சந்தனங்களென்றே –
“ஆயிரஞ்சால், அத்தனை வேது அனை யப்புவள் சாந்தென் றனலரைத்தே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
புகன்று, புகல் – பகுதி. அன்னைமார், மார் – பலர்பாற்பெயர்விகுதி. வண்டு, ஷட்பதமாதலின், “அறுகாற்சுரும்பு” எனப்பட்டது.

அழகப்பிரான் ஒருகால் ஐயங்காரதுஞானக்கண்ணுக்கு இலக்கான பொழுதே இவர் அவனைக்கிட்டி முத்தியின்பமனுபவிக்கும்படி
ஆசைகொள்ள, இவரை அப்பெருமான் அப்பொழுதேசேர்த்துக்கொள்ளாது மறைய, அதனாலுண்டான துயரத்தால்
ஐயங்கார் தபிக்கிற காலத்தில், அவர்பக்கல் பரிவுடையஞானிகள் அவர்க்குச்செய்கின்ற ஆறுதல்கள் அவர்
வருத்தத்தைத் தணிவிக்கமாட்டாது மிகுவிக்கிறநிலையிலே, ஐயங்கார் அவர்கள்திறத்தைத் தமது
நண்பரை நோக்கி உரைத்தவாறாகு மிது வென்று உள்ளுறைபொருள் காண்க.

கழலப்புகுந்தவளையறியார் – எனதுபாரதந்திரியம் நிலைகுலைதலை இவர்கள் உணர்கின்றாரில்லை.
என்கருத்து அறியார் – என்மனம் எம்பெருமானது நிரந்தராநுபவத்தில் ஊன்றியிருத்தலை யுணரார்.
எம்பெருமான் தானேவந்து ஆட்கொள்வதைஎதிர்நோக்கி அக்காலம்வருமளவும் ஆறியிருப்பதை விட்டு
இங்ஙனம் பேற்றுக்கு மிகவிரைந்து துடிப்பது பிரபந்தகுல மரியாதைக்குப் பொருந்தாது என்று இவர் பதற்றத்தை அடக்குமாறு
இவர் பக்கல்பரிவுடையார்சொல்லும் இதவசனங்கள் இவர்க்கு ஆறுதலுண்டாக் காமற் கடுஞ்சொற்களாகத் தோன்றுதலால்,
“அழலப்புகன்றொறுப்பார் அன்னைமார்” என்றார்.
எம்பெருமானுடைய குணவிபவங்களையும் திவ்விய தேசநாமத்தையும் பிறர்சொல்லக் கேட்கப்பெறுதலே
இவர்க்குச் சிறிது ஆறுதலாயிருக்கு மென்பது, அடுத்தவாக்கியத்தாற் போதரும்.
இவர்கள் எனதுதுடிப்பையடக்குதற்காக எடுத்துக்காட்டுகிற உலகவியல்புகள் எனது பக்திரூபஞானத்துக்கு இந்நிலையில் ஏலா என்பது,
இறுதிவாக்கியத்தின் உட்கோள். “அறுகாற் சுரும்பு சுழலப் புனைந்த துழாய்மார்பர்” –
ஷட்பத நிஷ்டரான ஸாரக்ராஹிகள் விரும்பிநாடும் இனிமையைத் தமது திருமேனியி லுடையவ ரென்க. விரிப்பிற் பெருகும்.

———–

தனத்துக்கு அராவிய வேல் விழிக்கு ஏக்கற்று தையலரால்
தினம் துக்கர் ஆகித் திரிவார் பலர் சிலர் செங்கமல
வானத்துக் கராசலம் காத்தாற்கு சோலை மலையில் நின்ற
கனத்துக்கு அராவணை யாற்கு எம்பிராற்கு உள்ளம் காதலரே –28-

(இ – ள்.) தனத்துக்கு – (மகளிரது) கொங்கையழகுக்கும்,
அராவிய வேல் விழிக்கு – (அரத்தினால்) அராவிக்கூர்செய்யப்பட்ட வேலாயுதம் போன்ற கண்களினழகுக்கும்,
ஏக்கற்று – ஏங்கி,
தையலரால் தினம் துக்கர் ஆகி – அம் மாதர்களின் தொடர்பினால் எந்நாளும் துன்பமுடையவர்களாய்,
திரிவார் – வீணேஅலையவர்களோ,
பலர் – (உலகத்திற்) பலராவர்;
சிலர் – (உலகத்திற்)சிலர்தாமே, –
செம் கமலம் வனத்து சராசலம் காத்தாற்கு – செந்தாமரை மலர்கள் மலர்ந்த (தடாகத்தின்) நீரினிடத்துக் கஜேந்திராழ்வானைப் பாது காத்தருளியவனும்,
சோலை மலையில் நின்ற கனத்துக்கு – திருமாலிருஞ் சோலைமலையிலே நின்றதிருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற காளமேகம் போன்றவனும்,
அரா அணையாற்கு – ஆதிசேஷனைச் சயனமாகவுடையவனு மாகிய,
எம்பிராற்கு – எம்பெருமான்விஷயத்தில்,
உள்ளம் காதலர் – மனத்தில் விருப்பமுடையவராவர்; (எ – று.)

உலகத்திற் பேதையர்பலரும் அறிவுடையார்சிலருமே யாதலால், அவர்கள் முறையே விஷயாந்தரத்திலும்
பகவத்விஷயத்திலும் ஆசைகொண்டு ஒழுகுந் திறத்தின் வேறுபாட்டை எடுத்துக்காட்டியவாறாம்.
அராவியவேல் விழி – “வாளரந்துடைத்த வவே லிரண்டுடன் மலைந்தவேபோ, லாள்வழக் கொழிய
நீண்ட வணிமலர்த்தடங்கண்” என்றார் சிந்தாமணியாரும்.
மகளிர்கண்ணுக்கு வேலுவமை – கூரியவடிவிலும், எத்துணை வலிமையுடைய ஆடவரது நெஞ்சையும் பிளந்து
அவரை வருத்துந் திறத்திலும் என்க.
வெல்வது வேல், விழிப்பது விழி எனக் காரணக்குறி. மகளிரிடத்துக்கொ ண்ட அவாவினால் இம்மையில் அவர்கட்கு
ஆட்பட்டுப் பலவாறுவருந்துதலே யன்றி மறுமையிலும் நற்கதிபுகுதாது வருந்துதலால், ‘தையலரால் தினத்துக்கராகி’ என்றார்.
திரிவார் – மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து அலைபவ ரென்றவாறுமாம்.
வடமொழித்திரிபாகிய வன மென்பது – காட்டையேயன்றி நீரையும் உணர்த்தும்.
இனி, இங்கு, காடுஎன்றே கொண்டு, செந்தாமரைத் தொகுதியினிடத்து என்றலு மொன்று.
அடர்ந்த தாமரைத்தொகுதியை ‘தாமரைக்காடு’ என்றல், மரபு. ‘எம்’ என்ற தன்மைப்பன்மை, எல்லாவுயிர்களையும் உளப்படுத்தியது.

————

காதலைப் பத்தினி மேல் வைத்த நீசக் கரு நிருதன்
மாதலைப் பத்தியை மண்ணில் இட்டாய் நின்னை வாழ்த்தும் தொண்டர்க்கு
ஈதலைப் பத்தியைச் செய்வோர்கள் வாழும் இட வெற்பா
தீது அலைப்பத் தியங்கித்திரி வேற்கு அருள் செய்தருளே –29-

(இ – ள்.) காதலை – ஆசையை,
பத்தினிமேல் வைத்த – அறக்கற்புடைய நின்மனைவியான சீதாபிராட்டியினிடத்து வைத்த,
நீசன் கரு நிருதன் – கீழ்மகனான (இராவணனென்னுங்) கரிய அரக்கனுடைய,
மா தலை பத்தியை – பெரிய தலைவரிசையை,
மண்ணில் இட்டாய் – (துணித்துத்) தரையில் தள்ளியவனே!
நின்னை வாழ்த்தி – (பேரன்பினால்) உன்னைவாழ்த்தி,
தொண்டர்க்கு ஈதலை பத்தியை செய்வோர்கள் – நினதுஅடியவர்களுக்கு (வேண்டுவன) கொடுத்தலையும் (அவர்கள்பக்கல்) பக்தியையுஞ் செய்பவர்கள்,
வாழும் – இனிதுவசிக்குமிடமான,
இடப வெற்பா – ருஷபகிரியில் எழுந்தருளியிருப்பவனே! –
தீது அலைப்ப தியங்கி திரிவேற்கு – தீவினை வருத்த (அதற்கு மாறொன்றுஞ்செய்யமாட்டாது) கலங்கியலைபவனான எனக்கு,
அருள் செய்தருள் – (அக்கொடியகருமம் ஒழிந்து உய்யுமாறு) கருணைசெய்தருள்வாய்.

ராக்ஷஸராஜனும் பத்துத்தலையுடையவனுமான இராவணன், தன்தங்கையான சூர்ப்பணகையினால் தூண்டப்பட்டு,
இராமபத்தினியாகிய சீதையினிடத்துக்காதல்கொண்டு கோதாவரிநதிதீரத்திற் பஞ்சவடியாச்சிரமத்திலே
மாயமான் வடிவுபூண்ட மாரீசனைக்கொண்டு, இராமலக்ஷ்மணர்களைப் பிரித்து, சீதை தனித்து நின்றசமயம்பார்த்து
அவளை வலியஎடுத்துத் தேரின் மேல்வைத்துச் சென்று இலங்கையில் அசோகவனத்திலே அரக்கியர் சூழச் சிறைவைத்து,
அவளைத் தன்வசப்படுத்துதற்பொருட்டுப் பலவாறு நலிய, பின்பு சீதையைக்காணாத ஸ்ரீராமன், கடல்கடந்துசென்று
இலங்கைபுக்கு மீண்ட அநுமானாற் செய்தியறிந்த பின்னர், வாநரசேனையுடனே சென்று சேதுபந்தநஞ் செய்து
கடல்கடந்து இலங்கைசார்ந்து பெரும்போர் புரிந்து இராவணனது தலைகளைத் துணித்துத்தள்ளி
அவனைக்கொன்று சீதையை மீட்டுக்கொண்டு மீண்டன னென்பது பிரசித்தம்.

நிருதன் – நைருதனென்ற வடசொல்லின் சிதைவு; அது, நிருருதியென்னுந் திக்பாலகனது மரபினனென்று
காரணப்பொருள்பட்டு அரக்கனைக் குறிக்கும்.

நின்னைவாழ்த்தித் தொண்டர்க்கு ஈதலைப் பத்தியைச் செய்வோர்கள் – பகவானுக்கும் பாகவதர்க்கும் அடிமைப்
பட்டொழுகுபவ ரென்றபடி. எம் பெருமானை வாழ்த்துதல் மிக்க அன்பின் செயலாதலை,
பெரியாழ்வார் திருப்பல்லாண்டுபாடியது கொண்டும் உணர்க.
எம்பெருமானுடைய சௌந்தரியத்திலும் திருக்கலியாணகுணங்களிலும் கண்ணையுங் கருத்தையுஞ் செலுத்தி
அவற்றிலீடுபட்டு ஆழ்ந்தவர், பக்திபரவசராய் அதனால் தம்நிலையையும் எம்பெருமான் நிலையையும் மறந்து,
‘காலாதீதமான வைகுண்டத்திலே யிருக்கிற இந்த அரும்பொருள், காலம் நடையாடப் பெற்ற இவ்வுலகத்திலே வந்து
கண்ணுக்குஇலக்காகுதலால், திருஷ்டிதோஷங்காரணமாக இதற்குஎன்ன தீங்கு வருகின்றதோ?’ என்று
தமக்கு உள்ள ஆதராதிசயத்தால் அநாவசியமாக அதிகபயசங்கைகொண்டு,
‘இத்திருமேனிக்கு எவ்வாற்றாலும் ஒரு குறையும் வாராதிருக்கவேணும்’ என்று வாழ்த்துவரென்க.
எம்பெருமானைக்கண்டவளவிலே தமக்குவேண்டுவனவற்றை வேண்டிப்பெறநினையாமல் அவனதுவாழ்வையே
தமக்குப் பரமபுருஷார்த்தமாக நினைத்தலின் அருமையை உணர்க.
“எல்லாவிடத்திலுமெங்கும்பரந்து பல்லாண்டொலி, செல்லாநிற்குஞ்சீர்த்தென் திருமாலிருஞ்சோலையே”,
“புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி யுன்பொன்னடிவாழ்கவென்று,
இனக்குறவர்புதியதுண்ணு மெழின் மாலிருஞ்சோலை யெந்தாய்” என்ற ஆழ்வாரருளிச்செயல்களையுங் காண்க.
“திவ்யதேசங்களுக்கு அழகாகிறது, அநந்யப்ரயோஜநராய் அத்தலைக்கு மங்களாசாஸநம் பண்ணுமவர்கள் வர்த்திக்கை”
ஆதலால், “அங்ஙனம் வாழ்த்துபவர் வாழும் இடபவெற்பு” என்று சிறப்பித்துக் கூறினார்.

———–

அருள் தருமம் கை விடாது ஏத்தும் அன்பருக்கு அன்பர் எல்லில்
இருள் தரும் அம்கை எறி ஆழியார் இசைக் கின்னரரும்
கெருடரும் மங்கையரும் வாழ் இடப கிரியில் கல்லா
முருடரும் அங்கு அயல் எய்தில் அன்றே அவர் முத்தர் அன்றே –30-

(இ – ள்.) அருள் – கருணையையும்,
தருமம் – அறத்தையும்,
கைவிடாது – விட்டிடாமல்,
ஏத்தும் – (தம்மைத்)துதிக்கின்ற,
அன்பருக்கு – அடியார்களிடத்தில்,
அன்பர் – அன்பையுடையவரும்;
எல்லில் இருள் தரும் – பகற்பொழுதிலே (சூரியனை மறைத்து) இருளை யுண்டாக்கிய,
அம் கை எறி ஆழியார் – அழகிய தம்திருக்கையா லெறிந்த சக்கராயுதத்தையுடையவரு மான எம்பெருமானது,
இசை கின்னரரும் கெருடரும் மங்கையரும் வாழ்இடபகிரியின் அங்கு அயல் – இசைபாடுதலில்வல்ல கிந்நரர்களும் கருடர்களும்
(அத்தேவசாதியாருடைய) மாதர்களும் வாழுமிடமான திருமாலிருஞ்சோலைமலையின் சமீபத்திலே,
கல்லா முருடரும் எய்தில் – கல்வியறிவில்லாத மூடர்கள் வந்தாலும்,
அன்றே அவர் முத்தர் அன்றே – அப்பொழுதே அவர்கள் முக்தர்களாவரன்றோ? (எ – று.) –
ஈற்றிலுள்ள ‘அன்றே’ என்பது – தேற்றம். அன்று ஏ என்ற இரண்டுஎதிர்மறைகள் சேர்ந்து
உடன்பாட்டுப்பொருளை யுணர்த்தித் தேற்றக்கருத்தை விளக்குமென்க.

இடபகிரிக்குஅருகிலே சென்றாலும் கல்லாதமூடருமுட்பட அப்பொழுதே முக்தாத்மாக்களாவர் என்பதாம்.
திருமாலிருஞ்சோலைமலையையே யன்றிஅதனருகிடத்தையடைந்தாலும்பேறுவாய்க்குமென்பதை
“மாலிருஞ் சோலை, யயன்மலையடைவததுகருமமே”,
“மாலிருஞ்சோலைப், புறமலைசாரப்போவது கிறியே” என்று ஆழ்வாரருளிச்செய்திருத்தல்கொண்டும் அறிக.
திவ்வியதேசத்தை அடுத்தமாத்திரத்திலே எல்லாவினைகளும் தீரப்பெறுதலால், அவர்கள் பின்பு முத்திபெறுதல் தவறாது என்ற துணிவினால்,
‘அன்றே அவர் முத்தரன்றே’ என்றார். உடனே அவர்கள் ஜீவந்முத்தராகிப் பின்பு அப்பிறப்பின்முடிவிலே
பரமுக்தியை அடைவ ரெனினும் அமையும். இதனை “பசையற்றா, என்றே யப்போதே வீடு அதுவே வீடு வீடாமே” என்றாற்போலக் கொள்க.
கிந்நரர் முதலியோர் இசைபாடுதல் முதலிய திருவடித்தொண்டு செய்து எம்பெருமானது திருவுள்ளத்தை உகப்பித்துத்
தாம்பேறுபெறுதற்குத் திருமாலிருஞ்சோலைமலையில் வந்துவாழ்வரென்க;
அன்றியும், அவர்கள்வாழுமிடமான சுவர்க்கலோகத்தினும் இந்த இடம் இனியதாதலாலும், அதனை விட்டு இங்கு வந்து வாழ்வர்.

“அறனும் அருளுடையான் கண்ணதேயாகும்”,
“அருளிலார்க்கு அவ்வுலகமில்லை” என்ப வாதலால், ‘அருள் தருமங் கைவிடா தேத்து மன்பருக்கன்பர்’ என்றார்.
அன்பருக்கு அன்பர் – தம்மைக்குறித்து அன்புசெய்வார்பக்கல் தாம் அன்புசெய்பவர்;
முந்தின அன்பு – பக்தி, பிந்தின அன்பு – கருணை. ஆழியா ரிடபகிரி யென இயையும். இசை – சங்கீதம்.
கிந்நரர், கருடர் – பதினெண்தேவகணங்களிற் சேர்ந்தவர்.
கிந்நரர் – கிந்நரமென்னும் வாத்தியத்தைக் கையிற்கொண்டு இசைபாடித்திரிபவர்.
‘கருடர்’ என்ற சொல், மோனைநயத்தின்பொருட்டு ‘கெருடர்’ எனத் திரிந்துநின்றது;
“கீதங்கள்பாடினர் கின்னரர் கெருடர்கள்” என்ற ஆன்றோரருளிச் செயலிற் போல, மங்கையரென்பது – இங்கே பருவப்
பெயராகாமல் மகளிரென்ற மாத்திரமாய் நின்றது;
அப்பருவத்துக்கு வயதெல்லை – பன்னிரண்டு முதற் பதின்மூன்றளவும், முருடு – விறகு; அதுபோன்றவர், முருடர்

உணர்விலாரென்க. உம் – இழிவுசிறப்பு. ஞானமில்லாதவர்களும் அந்தஇடத்தைச் சார்ந்தவளவில் உயர்கதி
பெறுவ ரெனவே, ஞானிகள் அங்ஙனமாவரென்பது சொல்லவேண்டாதாயிற்று.
கல்லா முருடரும் – கல்லாத வேடர்களும் எனினுமாம். அங்கு – அசை, அயல் என்பது, ஐயல் என முதற்போலி பெற்றது, திரிபுநயத்துக்காக.

————–

முத்தர் அன்றே நின் கழல் ஒரு கால் கை முகிழ்க்கப் பெற்றோர்
பித்தர் அன்றே நினக்கே பித்தர் ஆகில் பிரமன் கம் கை
வைத்து அரன் தேய்துயர் தீர்த்தாய் நின் சோலை மலை மருவும்
பத்தர் அன்றே பரிவால் என்னை ஆளும் பரமர்களே –31–

(இ – ள்.) பிரமன் கம் – பிரமனது தலையை,
கை வைத்து – கையில் வைத்துக்கொண்டு,
அரன்தேய் – சிவபிரான் வருந்திய,
துயர் – துன்பத்தை,
தீர்த்தாய் – ஒழித்தருளியவனே! –
நின் கழல் ஒரு கால் கைமுகிழ்க்கப் பெற்றோர் – உன் திருவடிகளை ஒருதரம் கைகூப்பித்தொழப்பெற்றவர்கள்,
அன்றே முத்தர் – அப்பொழுதே முத்திபெற்றவராவர்;
நினக்கே பித்தர் ஆகில் – உன் விஷயமாகவே பக்திப்பித்து ஏறியவர்களாயின்,
பித்தர் அன்றே – (அவர்கள்) பித்துடையாரென்று இகழத்தக்கவராகார்;
நின் சோலைமலை மருவும் பத்தர் அன்றே – உனது திருமாலிருஞ்சோலைமலையை அடைந்திருக்கிற அடியார்களன்றோ,
பரிவால் என்னை ஆளும் பரமர்கள் – அன்பினால் என்னை ஆட்கொள்ளும் மேலோராவர்; (எ – று.)

“அன்றே” என்ற சொல் – முதலடியில் அப்பொழுதே யென்ற பொருளிலும், இரண்டாமடியில் அல்லரே யென்ற பொருளிலும்,
ஈற்றடியில் அன்றோ எனத் தேற்றப்பொருளிலும் வந்த வேறுபாட்டை உணர்க.
“அன்றேமுத்தர்” என்பதற்கு – கீழ்ச்செய்யுளிற்கூறிய உரையைக் கொள்க. கை முகிழ்த்தல் – அஞ்சலிசெய்தல்;
“தனி ஐந் நொ து முன் மெலிமிகலுமாம்” என்ற பொதுவிதிப்படி தனிஐகாரத்தின்முன் மெலிமிகவில்லை,
இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிச் சிறப்புவிதியால், கீழ் மூன்றாஞ்செய்யுளில்
“அனகனுக்குப் பித்தரானவர் பித்தரன்றே” என்ற இடத்துக் கூறிய உரை, இச்செய்யுளின் இரண்டாம்வாக்கியத்துக்கும் ஏற்கும்,
பகவத்கைங்கரியம் பண்ணுகிறவர்கள் எனக்குத் தலைவர்களென்று தமதுபாகவத
சேஷத்வத்தை இறுதி வாக்கியத்தில் வெளியிட்டார்;
“பயிலுஞ்சுடரொளிமூர்த்தியைப்பங்கயக்கண்ணனைப்,
பயில வினிய நம்பாற்கடற்சேர்ந்தபரமனைப்,
பயிலுந்திருவுடையார் யவரேலு மவர்கண்டீர்,
பயிலும் பிறப்பிடைதோறெம்மையாளும் பரமரே” என்றார் நம்மாழ்வாரும்:
‘பகவத்சேஷத்வத்தின் எல்லையாகிறது, பாகவதசேஷத்வத்தளவும் வருகையிறே.’

————-

பரந்தாமரை திரு மாலிருஞ்சோலைப் பரமரை கால்
கரம் தாமரை அன்னகார் நிறத்தாரை கடல் கடக்கும்
சரம் தாம் மரை திரி கான் போய் இலங்கைத் தலைவன் பத்துச்
சிரம் தாம் அரைக் கணத்து எய்தாரை எய்தற்குத் தேர் மனமே –32-

(இ – ள்.) மனமே -!- பரந்தாமரை – பரமபதத்தையுடையவரும், –
திருமாலிருஞ்சோலை பரமரை – திருமாலிருஞ்சோலைமலையி லெழுந்தருளி யிருக்கிற தலைவரும், –
கால் கரம் தாமரை அன்ன – திருவடிகளும் திருக் கைகளும் தாமரைமலர்களை யொத்திருக்கப்பெற்ற,
கார் நிறத்தாரை – காளமேகம்போன்ற திருமேனிநிறத்தை யுடையவரும், –
தாம் மரை திரிகான் போய் – தாவுகின்ற மான்கள் சஞ்சரிக்கப்பெற்ற வனத்திலே வாசமாகச்சென்று, (பின்பு),
கடல் கடக்கும் சரம் – சமுத்திரராசனை வென்ற (ஆற்றலையுடைய) அம்பினால்,
இலங்கை தலைவன் பத்து சிரம் தாம் அரை கணத்து எய்தாரை – இலங்கையரசனான இராவணனுடைய பத்துத்
தலைகளையும் தாம் அரைக்கணப்பொழுதிலே துணித்துத்தள்ளியவருமாகிய எம் பெருமானை,
எய்தற்கு – சரணமடைவதற்கு,
தேர் – துணிவுகொள்வாய்.-என்று நெஞ்சைநோக்கி இதமுரைத்தவாறு.

பரந்தாமர் என்ற வடமொழிப்பெயர் – (எல்லாப்பதவிகட்கும்) மேலான இடத்தையுடையவரென்றும்,
(எல்லாவொளிகளினுஞ் சிறந்த ஒளியையுடை யவ ரென்றும் பொருள்படும்; பரம் – மேலானது. தாமம் – இடமும், ஒளியும். பரமர் – சிறந்தவர்.
திருவடி திருக்கைகளுக்குத் தாமரைமலர் – செம்மை மென்மை யழகுகளில் உவமம்.
கால் கரம் தாமரையன்ன கார்நிறத்தார் – “கருமுகில் தாமரைக்காடு பூத்து” என்றார் கம்பரும்.
சரம் எய்தாரை என இயையும். தா மரை என்று பிரித்து, வினைத்தொகையென்னவும் அமையும்;
மரை – மானின்சாதிகளி லொன்று. கான் போய் – தண்டகாரணியத்தைக் கடந்து சென்று. ‘அரைக்கணத்து’ என்றது, மிக்கவிரைவைக் காட்டும்.
தேர் – வினைப்பகுதியே ஓசைவேறுபாட்டினால் ஏவலொருமையாக நின்றது; தேர்தல் – தெளிதல், நிச்சயித்தல்.
எம்பெருமானைச் சரணமடைதற்கு வழிதேடுவா யென்று உரைப்பர் ஒருசாரார்.

“எய்தாரை யெய்தற்கு” என்றவிடத்து, முரண்தொடை தோன்றும். இனி, கடம் குஞ்சரம் என்று எடுத்து,
மதத்தையுடைய யானைகளும் தாவுகின்றமான்களுந் திரிகிற வனத்தைக் கடந்துசென்று கடலையும்
இலங்கைத் தலைவன் பத்துச்சிரங்களையும் தாம் எய்தவரை என்று பொருள்கொள்ளவும் இடமுண்டு.
கானும் கடலும் (கடந்து) போய் எனவும் அமையும்.

————-

தேராய் இரவு பகல் இரை தேடுவை தீமை நன்மை
பாராய் இரங்குவ பாவையரால் பண்டு மாவலியால்
சோராய் இரந்தவனை திருமால் இருஞ்சோலை நின்ற
பேர் ஆயிரம் உடையானை நெஞ்சே -என்று பேணுவையே –33-

(இ – ள்.) நெஞ்சே – மனமே! – (நீ),
தேராய் – ஆராய்ந்துதெளியா யாகி,
இரவு பகல் இரை தேடுவை – இராத்திரியும் பகலும் உணவைநாடித் திரிகின்றாய்;
தீமை நன்மை பாராய் – தீவினைகள் (இன்னவையென்றும்) நல்வினைகள் (இன்னவையென்றும்) நோக்குகின்றாயில்லை;
பாவையரால் இரங்குபவை – மாதர்கள்காரணமாக உருகுவாய்;
(இங்ஙனம் செய்வன தவிர்வன பகுத்துஉணராது நிலையில்லாத பொருளின்பங்களையே காதலித்துத் திரிகிற நீ),
பண்டு – முன்னொருகாலத்திலே,
மாவலிபால் – மகாபலிசக்கரவர்த்தியி னிடத்தில்,
சோர் ஆய் இரந்தவனை – கபடமாய் யாசித்தவனும்,
திருமாலி ருஞ்சோலை நின்ற பேர் ஆயிரம் உடையானை – திருமாலிருஞ்சோலைமலையில் நின்றதிருக்கோலமாய்
எழுந்தருளியிருக்கின்ற ஆயிரந்திருநாமங்களை யுடையவனுமான எம்பெருமானை,
என்று பேணுவை – எக்காலத்தில் விரும்பித் தியானிப்பாயோ! (எ – று.) – ஈற்று ஏகாரம் – இரக்கம்.

இங்ஙனம் தம்மனத்தை நோக்கி இரங்கிக் கூறுகின்றவகையால், உலகத்தார்க்கு அறிவுறுத்தியவாறாம்.

தேராய் – முன்னிலை யொருமை யெதிர்மறை முற்றெச்சம். இரைஎன்ற சிறப்புப்பெயரைக் கீழ்இரண்டாங்கவியிற்போலப்
பொதுப்பொருளதாகக் கொண்டு, ஐம்பொறிகளாலும் நுகரப்படும்பொருள்களையெல்லாம் அல்லும் பகலும் அநவரதமும்
நாடித்திரிவா யென்று கருத்துக்கொள்ளலாம். பாவையர் – சித்திரப்பிரதிமைபோல் அழகிய மகளிர்;
கண்மணிப் பாவைபோல் அருமையாகப் பாராட்டப்படுகிற மாதர்கள்.
“பாவையர்பால்” என்ற பாடத்துக்கு – பாவையர் பக்கல் என்பது பொருள். பண்டு இரந்தவனை என்று இயையும்.
மாவலி – மஹாபலீ என்ற வடசொல் விகாரப்பட்ட து. பால் ஏழுனுருபு. சோரம் என்ற வடசொல் சோர்என விகாரப்பட்ட தென்றாவது,
சோர்என்ற வினைப்பகுதிதானே சோர்வு என்ற தொழிற்பெயரின் பொருள் குறித்தது (முதனிலைத்தொழிற்பெயர்) என்றாவது கொள்க.
சோராய் இரந்தவன் – மிகக்குறிய வாமநவடிவங்கொண்டுசென்று வறுமைத்தளர்ச்சியை ஏறிட்டுக்கொண்டுகாட்டித்
தன்காலடியால் மூவடிமண்வேண்டி அது கொடுக்கப்பெறும்போது அவனது உடல்பொருளாவிகளை யெல்லாம்
தனவசப்படுத்திக்கொண்டவன். பேராயிரம் – ஸஹஸ்ரநாமம்.

———–

தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறுதல்

பேணிக் கவித்த வரைக் குடையாய் பெரியோர் பதின்மர்
ஆணிக் கவித்த தமிழ் மாலை கொண்டாய் அழகா கரிய
மாணிக்க வித்தக மா மலையே வண் துளவுக்கு அல்லரல்
பாணிக்கு அவித்து அடங்காது வெங்காமப் படர் கனலே –34–

(இ – ள்.) பேணி கவித்த – (ஆக்களிடத்தும் ஆயரிடத்தும்) அன்பு கொண்டு எடுத்துப்பிடித்த,
வரை குடையாய் – கோவர்த்தனமலையாகிய குடையையுடையவனே!
பெரியோர் பதின்மர் – (அறிவொழுக்கங்களிற்) பெரியவர்களான பத்துஆழ்வார்களுடைய,
ஆணி கவி தமிழ் மாலை – சிறந்த தமிழ்ப்பாமாலைகளாகிய திவ்வியப்பிரபந்தங்களை,
கொண்டாய் – ஏற்றுக் கொண்டவனே!
அழகா – அழகனே!
வித்தகம் – ஞானத்தையுடைய,
கரிய மாணிக்கம் மா மலையே – கருநிறமானதொரு மாணிக்க மயமாகிய பெரிய மலைபோன்றவனே! –
வெம் காமம் படர் கனல் – (எனது) வெவ்வியகாதலாகிய மேன்மேற்பரவுகின்ற நெருப்பானது,
வள்துளவுக்கு அல்லால் – வளப்பமுள்ள (நினது) திருத்துழாய் மாலைக்குத் தணியுமே யன்றி,
பாணிக்கு அவித்து அடங்காது – நீரினால் தணிக்கப்பட்டு அடங்கிவிட மாட்டாது.

நினதுதிருத்துழாய்மாலையைத் தந்தருள்வையாயின், எனது மையல் நோய் தணியு மென்பதாம்.
தலைவனது ஒருவழித்தணத்தலிலே பிரி வையாற்றாதுவருந்துகிற தலைவி தனதுநினைப்புமிகுதியால்
தலைவனை எதி ரில்நிற்கின்றவாறுபோலப் பாவித்து அங்ஙனம் உருவெளித்தோற்றத்திலே வெளிப்பட்ட
அத்தலைவனை முன்னிலைப்படுத்திக் கூறியது, இது. ஒருவழித் தணந்துவந்த தலைவன் சிறைப்புறமாக,
அதனையுணர்ந்த தோழி அவனை முன்னிலையாக்கித் தலைவியின்நிலைமையைக் கூறியதென்று இதற்குத்துறை கொள்ளுதலு மொன்று,
பிரிந்துவருந்துங்காலத்திலே, தலைவனதுசம்பந்த முடைய மாலையைப் பெற்றால் அதுகொண்டு ஒருவாறு விரகதாபம் தணியக் கூடுமே யன்றி,
இது வெயிற்காலத்தினாலாகியதாபமன் றாதலால், சீதளோ பசாரமாக மேலேபெய்யும் பனிநீரினால் தணியமாட்டா தென்றாள்.
“ஊரு ளெழுந்தவுருகெழுசெந்தீக்கு, நீருட்குளித்தும் உயலாகும் –
நீருட், குளிப்பினுங் காமஞ்சுடுமே குன்றேறி, யொளிப்பினுங் காமஞ் சுடும்” என்ற நாலடி யாரையுங் காண்க.
தீயினும் வெவ்வியது இவ்விரகதாப மென்பது, ‘வெங்காமப்படர்கனல்’ என்ற விதப்பினால் வெளியாம்.

திரிலோகாதிபதியென்று பேர்படைத்தவனான தேவேந்திரன் தானே அவ்வுலகத்தில் ஒருசார் நிரபராதியாயுள்ள
சிலஉயிர்களுக்கு நலிவுசெய்யப் புக்கவிடத்து எம்பெருமான் தான் அருள்கொண்டு
பாதுகாத்தன னென்பதை விளக்குதற்கு, ‘பேணிக் கவித்த” எனப்பட்டது.
“நாம் கோவர்த்தனமலையை ஆராதித்தோம்: அதனால்நேர்ந்த தீங்கைப் போக்கிக் கண்ணன் காத்தருளினான” என
இடையர்கள் நினைக்கவொண்ணாதென்றுநோக்கி அவர்கள் ஆராதித்த மலையைக்கொண்டே காத்தருளின னென்க.

“பெரியோர் பதின்மர்” என்றது, பத்து ஆழ்வார்களை; அவராவார் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,
திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என இவர்.
(நம்மாழ்வாருடைய சிஷ்யரான மதுரகவிகளையும், பெரியாழ்வாருடைய திருமகளாரான ஆண்டாளையுங் கூட்டி
“ஆழ்வார்கள் பன்னிருவர்” என்பதும் உண்டு.)
இவர்கள் அருளிச்செய்த இருபத்துநான்கு திவ்வியப்பிரபந்தங்களும்சேர்ந்து நாலாயிரப்பிரபந்தமென்று வழங்கும்.
உயர்தரப்பொன்னை ‘ஆணிப்பொன்’ என்றும், சிறந்தமுத்தை ‘ஆணிமுத்து’ என்றும் வழங்கும் மரபைத் தழுவித்
திவ்வியகவியென்ற பொருளில் “ஆணிக்கவி” எனப்பட்டது.
கவித்தமிழ்மாலை, மிக்க பக்தியுடன் எம்பெருமானுக்குச் சாத்தும் பூமாலைபோன்ற பாமாலையென்க.
“அடிசூட்டலரகுமந்தாமம்”,
“செய்யசுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை,”
“கற்றினம்மேய்த்த கழலிணைக்கீ, ழுற்ற திருமாலை’ பாடுஞ்சீர்” எனப் பெரியாரும் பணித்தார்.
இங்கே “வித்தகம்” என்றது, எம்பெருமானுக்கு உரிய முற்றுணர்வை: அது, ஸர்வஜ்ஞதை யெனப்படும்.
எதற்குஞ்சலியாமையும், அளத்தற்கரியபெருமையும், கம்பீரமான தோற்றமும், பலவளங்களை யுடைமையும்
முதலிய சிறப்புக்கள்பற்றி, எம்பெருமானைக் குன்றாக உருவகஞ்செய்தார்.

நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானைத் தரிசித்த ஐயங்கார், அவன்பக்கல் தமக்குஉண்டான வியாமோகத்தை
அப்பெருமானைக்குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
“வண்துளவு” என்றது – எம்பெருமானுடைய நிரதிசய போக்கியதையையும்,
“பாணி” என்றது – அன்பர்கள் செய்யுந்தேற்றரவுகளையுநு் குறிக்கும்.
“பேணிக் கவித்த வரைக்குடையாய்” என்று விளித்தது. எம்பெருமான் தன்னைச்சார்ந்த உயிர்களைப் பரிவோடு
பாதுகாக்குந் திறத்தி லீடுபாட்டினால். பெரியோர் பதின் மராணிக் கவித்தமிழ்மாலை கொண்டாய் – மயர்வறமதிநலம்பெற்ற
ஆன்றோர்பலரால் துதிக்கப்பட்டவனே யென்றபடி.
கரியமாணிக்க வித்தகமாமலையே – கண்டவர் கண்குளிரும்படி கருமாணிக்கம்போன்று
காண்பவரிளைப்பைத்தீர்க் கும்படியான வடிவை யுடையவனே யென்றவாறு.

————

பிரிவாற்றாத தலைவி சந்திரனை நோக்கி இரங்கிக் கூறுதல் –

படர் ஆகுவால் குவிய குழல் ஊதிய பாலர் ஐயம்
அடர் ஆகு வாகனன் தாதைக்கு இட்டார் அலங்காரர் துழாய் க்கு
இடர் ஆகு வார் பலர் காண் தமியேனை எரிப் பது என் நீ
விடராகு வாய்க் கொண்டு உடல் சுட்டுக் கான்றிட்ட வெண் திங்களே –35–

(இ – ள்.) விடம் ராகு வாய் கொண்டு – விஷத்தையுடைய ராகுவென் னும்பாம்பினால் வாயிற்பெய்துகொள்ளப்பட்டு,
உடல் சுட்டு கான்றிட்ட – அதனுடம்பைச் சுடுதலால் (பொறுக்கமாட்டாமல்) உமிழ்ந்துவிடப்பெற்ற,
வெள் திங்களே – வெண்மையான சந்திரனே! –
படர் ஆ – (மேய்தற்குப் பல இடங்களிற்) பரவிச்சென்றுள்ள பசுக்கள்,
குவால் குவிய – தொகுதியாக (ஓரிடத்தில்) வந்துசேரும்படி,
குழல் ஊதிய – (இன்னிசையமைய) வேய்ங் குழலையூதிய,
பாலர் – ஆய்ப்பிள்ளையாய் வளர்ந்தவரும்,-
ஐயம்அடர்-பிச்சை யேற்றலால் வருந்திய ஆகுவாகனன் தாதைக்கு – பெருச்சாளியை வாகன மாகவுடையவனான விநாயகனது தந்தையாகிய சிவபிரானுக்கு,
(ஐயம்) இட்டார் – பிச்சையிட்டவரு மாகிய,
அலங்காரர் – அழகரது,
துழாய்க்கு – திருத்துழாய்மாலையைப் பெறுதற்கு (ஆசைகொண்டு),
இடர் ஆகுவார் – துன்பமடைபவர்,
பலர் காண் – (உலகத்திற்) பலர் உளரன்றோ?
தமியேனை நீஎரிப்பது என் -என்னையொருத்தியைமாத்திரம் நீஎரிப்பது ஏனோ? (எ – று.)

தலைவனது ஒருவழித்தணத்தலில் அப்பிரிவையாற்றாது வருந்துகின்ற தலைவிக்கு இரவிலே விரகவேதனை வளர,
அப்பொழுது விளங்குகிற சந்திரனும் பிரிந்தார்க்குத்துயர்க்கேதுவான பொருள்களுளொன்றாதலால்
இவளை இன்னும் அதிகமாக வேதனைப்படுத்த, அத்தாபத்தையாற்றாத அத்தலைவி,
சந்திரனை முன்னிலைப்படுத்தி இரங்கிக்கூறியது, இது; சந்திரோபாலம் பநம் (சந்திரனை நிந்தித்தல்) எனப்படும்.
ஒருவழித்தணந்துவந்த தலைவன்சிறைப்புறத்தானாக, அதனையுணர்ந்த தலைவி அவன் கேட்டு வெளிப்படை யாக
மணம்புரிந்துகொள்ளமுயலுமாறு அவன்செவிப்படச் சந்திரனைநோக்கி இங்ஙனங்கூறுகின்றன ளென விவரங்காணலாம்.
தலைவன் அழகுசெல் வம் கல்வி குடிப்பிறப்பு முதலிய மேன்மைகளிற் சிறந்தவ னாதலால் அவன் பக்கல் தன்னைப்
போலவே ஈடுபட்டுக் காதல்கைம்மிக்கவர் பலர்உளராதல் கூடுமென்னுங் கருத்தினால்,
“அலங்காரர்துழாய்க்குஇடராகுவார்பலர்காண” என்றும்,
உலகத்தில் துன்பமுறுவார் தம்மைப்போலத்துன்புறுபவர் வேறெ வருமில ரென்று எண்ணுதல் இயல்பாதலால்
“தமியேனை யெரிப்பதென்நீ” என்றும் கூறினாள்.
இதனால், நீ பக்ஷபாதமுடையா யென்று பழித்தவாறாம். இராகுவின்வாய்ப்பட்டுவெளிப்போந்த சந்திரனை, விஷத்தையுடைய
கொடிய அக்கரும்பாம்பு சந்திரமண்டலத்தைக் கண்டு தனக்குஏற்றஇரையெ னக்கருதி அதனைவிழுங்கத்தொடங்கி
வாய்க்கொண்டவிடத்து அச்சந்திர னதுதாபத்தைப் பொறுக்கமாட்டாமல் உமிழ்ந்துவிட்டதெனக் கற்பித்து,
“விடராகுவாய்க் கொண்டுடல்சுட்டுக்கான்றிட்டவெண்டிங்களே” என்று விளித்தாள்.
எவரையுங்கொல்லத்தக்க நஞ்சுடைநாகத்தையும் எரிக்கவல்ல கொடுமையுடையாய் நீ யென்று நிந்தித்தவாறு.
நைடதத்துச் சந்திரோபா லம்பனப்படலத்தில் “துணைவர்ப்பிரிந்து துயில்துறந்த, மையன்மடவா ருயிர் கவர்வான்
கூற்றம்போல வரு மதியே, ஐயமிலை யுன்னுடற்களங்க மழலுங்கொடியவிடமன்றே,
வெய்யபகுவாய்க்கரும்பாந்தள் விழுங்கி யாற் றாதுமிழ்ந்ததுவே” என்றது, ஒப்புநோக்கத்தக்கது.
“வெண்டிங்கள்” என்றது, அவனது சிறந்தஅறிவின்மையையுங் காட்டும்; “வெண்மையாவது – அறிவு முதிராமை.”

ஒவ்வொருசமயத்திற் சந்திரனைமறைக்கிற பூமியின்சாயையும், சூரியனை மறைக்கிற சந்திரனது சாயையையும்,
இராகு கேதுவென்னுங் கரும்பாம்பு செம்பாம்புகளாகக் கூறுதல், கவிசமயம்;
அன்றியும், பாற்கடல்கடை கையிலுண்டான அமிருதகலசத்தை எடுத்துக்கொண்ட திருமால் மிகஅழ கியமோகினியென்னும்
பெண்வடிவத்தால் அசுரர்களை மயக்கித் தேவர்கட்கே அமிருதத்தைப் பங்கிட்டுக்கொடுத்துவருகையில்,
இராகுவென்னும் ஓர் அசுரன் தான்இருத்தற்குஉரிய அசுரர்கூட்டத்தை விட்டுத் தந்திரமாகத் தேவ கோஷ்டியினிடையிலே புகுந்து
கையேற்று அமிருதத்தை வாங்கியுண்ண, அதனைச் சூரியசந்திரர் குறிப்பித்தமாத்திரத்தில்,
எம்பெருமான் அவனை அகப்பையால்அடித்துத் தலைவேறு உடல் வேறாக்க, அமிருதமுண்டதனால் உயிர்நீங்காத
அந்தத்தலையும் உடலும் விஷ்ணுவின் அநுக்கிரகத்தால் இராகு கேதுக்களென இரண்டுகிரகங்களாகிச்
சூரியன்முதலிய ஏழுகிரகங்களோடு சேர்ந்து, தம்மேற் கோள்சொன்ன சூரியசந்திரர்க்குப் பகையாய்ச் சிற்சில காலத்தில்
அவர்களைப் பிடித்துக்கொள்கின்றன; அவையே கிரகண மெனப் படுகின்றன வென்பது வரலாறு.

திங்களுக்கு வெண்மை – இயற்கை யடைமொழி; இனம் விலக்கவந்த தன்று. “ஐயம்” என்றது – “அடர்” என்பதனோடும்,
“இட்டார” என்பதனோடும் இயையும். அடர்தல் – நெருக்குண்ணுதல், சங்கடப்படுதல். இது, தாதைக்கு அடைமொழி.
இனி, அடர் – (பகையைப்) பொருது அழிக்கவல்ல என்று கொண்டு,
அதனை, ஆகுவுக்கேனும் ஆகுவாகனனுக்கேனும் அவன் தாதைக்கேனும் அடைமொழியாக்கலும் ஒன்று.

பேறுகிடைத்தசமயத்திலே மகிழ்ச்சிசெய்யக்கடவதான ஞானவிளக்க மானது, உரியகாலத்திற் பேறுகிடையாமையாலே நலிவுசெய்ய,
ஐயங்கார் அதனை முன்னிலைப்படுத்திப் பழித்துரைத்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
“திங்கள்” என்றது – ஸ்வாபதேசத்தில், விவேகத்தையாம்.
“மாயா காரியமான தாமசகுணமானது தன்னைக் கவிந்துகொள்ளமுயலவும் அதற்கு அகப்ப டாது
அதனைஒழித்துவிளங்குகின்ற சுத்தஞானமே!” என்றுவிளித்து,
“வாத்ஸல்யத்தையும் பரத்வத்தையும் சௌந்தரியத்தையும் உடைய எம்பெருமானது இனிமையில் ஈடுபட்டு
அதனைப்பெறாது வருந்துவார் உலகத்திற் பல ருளராகவும் என்னைமாத்திரம் நீ வருத்துவது என்னோ?” என்று இரங்கிக் கூறின ரென்க.
“அலாபதசையில் விவேகமும் ஸாயகமாம்–.

————-

(நிலவினால் வருந்துந் தலைவியின் தளர்ச்சியைக் கண்ட பாங்கி இரங்கல்.)

திங்கள் அப்பா நின்ற செந்தீக் கொழுந்தின் செழும் சங்கு போ
லும் களப்பாவை உருகுவது ஓர் கிலர் உம்பர் எல்லாம்
எங்கள் அப்பா எமைக்காவாய் என உலகு ஈர் அடியால்
அங்கு அளப்பான் வளர்ந்தார் சோலை மா மலை ஆதிபரே –36–

(இ – ள்.) உம்பர் எல்லாம் – தேவர்களனைவரும்,
எங்கள்அப்பா எமை காவாய் என – “எங்கள் இறைவனே! (மாவலியினாலாகிய துயரினின்று நீக்கி)
எங்களைப் பாதுகாத்தருள்வாய்” என்று பிரார்த்திக்க, (அவ்வேண்டு கோட்கு இரங்கி),
உலகு ஈர் அடியால் அளப்பான் – உலகங்களை இரண்டு அடிவைப்புக்களால் அளவிடுமாறு,
அங்கு வளர்ந்தார் – அப்பொழுது (திரி விக்கிரமமூர்த்தியாய்) வளர்ந்தருளியவராகிய,
சோலைமாமலை ஆதிபர் – திரு மாலிருஞ்சோலைமலைக்குத் தலைவரான அழகர், –
செழுஞ் சங்கு போலும் களம் பாவை – செழுமையான சங்குபோலுங் கழுத்தையுடைய அழகிய இத்தலைவி,
திங்கள் அப்பாநின்ற செம் தீக்கொழுந்தின் உருகுவது – சந்திரன் பூசியிடுகின்ற அக்கினிச்சுவாலையினால்
(நிலாவினால்) கரைந்து வருந்துவதை,
ஓர்கிலர் – அறிகின்றாரில்லை; (எ – று.)

அறிவாராயின் உடனே மீண்டுவந்து இவளை வெளிப்படையாக மணம் புரிந்தருள்வ ரென்பது, தாற்பரியம்.
சந்திரமண்டலத்தினின்று வெளிப்பட்டு மேலேபடுகின்ற நிலாவானது, பிரிந்தநிலையிலுள்ள இவளுக்கு மிக்க தாபத்தை விளைத்தலால்,
“திங்களப்பாநின்ற தீக்கொழுந்து” எனப்பட்டது. தீக்குச் செம்மை – இயற்கையடைமொழி.
கழுத்துக்குச் சங்குஉவமை – வடிவிலும் நெய்ப்பிலு மென்க. செழுஞ்சங்கு – வலம்புரிச்சங்கு.
இங்ஙனம்இதனை ஓராதிருத்தல், உலகங்களை ஆட்கொண்டு சிறியதைப்பெரியதுநலியாதபடி சமயமறிந்து ஆவனசெய்து
பாதுகாக்கிற அவரது சால்பின் தகுதிக்குச் சிறிதும்ஏலாது என்பது தொனிக்க,
“உலகீரடியாலளப்பான்வளர்ந்தார்” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
நிலவுலகத்தையளந்ததில் நிலவுலகமும் அதன்கீழுள்ளஏழுலகங்களும், வானத்தையளந்ததில் நிலவுலகத்துக்கு மேலுள்ள
ஆறுஉலகங்களும் அடங்கியதனால், “உலகீரடியாலளப்பான் வளர்ந்தார்” என்றார்.
மக்களைத் தந்தையர்போலத் தேவர்களைத் தேவாதிதேவன் அன்புகொண்டு ஆவனசெய்து பரிபாலித்தலால், அவர்கள் “அப்பா” என்று விளித்தனர்.

களம் – வடசொல். பாவை – அதுபோன்ற பெண்ணுக்கு உவமையாகு பெயர். “எல்லாம்” என்பது – இருதிணைக்கும் பொது;
இங்கு உயர்திணை க்கு வந்தது. அங்கு – அவ்விடத்து எனினுமாம்; அசையுமாம்.

உரியகாலத்திற் பேறுகிடையாமையாலே ஞானவிளக்கமும் துயர்க்கு ஏதுவாக, ஐயங்கார் அடைந்த தளர்ச்சியைக் கண்ட
அன்பர்கள் நொந்து உரைத்த வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள். ஸர்வஜ்ஞரும் ஸர்வசக் தரும் ஸர்வரக்ஷகருமான
எம்பெருமான் விவேகவிளக்கத்தால் இவர் படுந் துயரத்தை அறியாதிருக்கின்றனரே! என்று இரங்கிக்கூறியவாறு.
செழுஞ் சங்குபோலுங்களப்பாவை – ஸ்ரீபாஞ்சஜந்யமென்னுந் திவ்வியசங்கம்போல எம்பெருமான் திருவுள்ளத்துக்குப்
பாங்காய்க் கம்பீரமான இனியதொனியை வெளியிடுங் கண்டத்தையுடையவ ரிவரென்க;
அச்சங்கினொலி பெருமானது வெற்றிக்கு அறிகுறியாய்ப் பகைவர்க்கு அச்சத்தை விளைத்து அவர்களை அழியச்செய்தல்போல,
ஐயங்காரது திருமிடற்றினின்று வருகின்ற கம்பீரமான ஒலிவடிவாகிய வாக்கியங்களும் அப்பெருமானது பரத்வத்தை
விளக்குவனவாய்ப் பரசமயவாதிகட்கு அச்சத்தைவிளைத்து அவர்களைத் தோற்பிக்கு மென்க.
இங்ஙனந் தோழிபேச்சாலே தமதுநிலைமையை வெளியிட்டனர் ஐயங்கார் என்று உணர்க.

————

ஆதி அராவில் துயில் அலங்காரர் அழகர் அன்பு ஆம்
வேதியர் ஆவுதி வீற்று இருப்பார் அண்டம் மீது இருக்கும்
சோதியர் ஆவின் பின் போந்தாரை அன்றித் தொழேன் உடலைக்
காதி அராவினும் பொன் மா மகுடம் கவிக்கினுமே –37-

(இ – ள்.) ஆதி அராவில் துயில் – ஆதிசேஷன்மேற் பள்ளிகொண்டு யோகநித்திரை செய்கின்ற,
அலங்காரர் அழகர் – அலங்காரரென்றும் அழகரென்றுந் திருநாமமுடையவரும்,
அன்பு ஆம் வேதியர் ஆவுதி வீற்றிருப்பார் – (தம்மிடத்து) அன்புகொண்ட அந்தணர்களுடைய
(மந்திரபூர்வமாக வைதிகாக்கினியில் ஓமஞ்செய்யப்படுகிற நெய்ம் முதலிய) ஆகுதிகளில் வீற்றிருப்பவரும்,
அண்டம் மீது இருக்கும் சோதியர் – அண்டகோளத்துக்குப் புறம்பேமேலுள்ளதான பரமபதத்தில் எழுந்தருளியிருக்கிற ஒளிவடிவமான வரும்,
ஆவின் பின் போந்தாரை அன்றி – பசுக்களை மேய்த்தற்கு அவற்றின்பின்னே சென்றவருமாகிய எம்பெருமானை யல்லாமல் (மற்றொரு வரை), –
உடலை காதி அராவினும் பொன் மா மகுடன் கவிக்கினும் தொழேன் – என்உடம்பைக் கூறுசெய்து அராவிவருத்தினாலும்
பொன்மயமான பெரியகீரிடத்தை (எனக்கு)ச் சூட்டினாலும் வணங்கமாட்டேன்; (எ – று.)

தேவதாந்தரங்களை வணங்காவிடின் என் உடலைத் துணித்து அராவி மிகவருத்துவதாயினும்,
வணங்கின் எனக்குப் பொன்முடிசூட்டி மிக்க சிறப்புச்செய்வதாயினும், யான் அழகரையன்றிப் பிறரைதொழமாட்டேன் என்று,
தமது அநந்யசரணத்வத்தை வெளியிட்டார்; “மறந்தும் புறந்தொழா மாந்தர்” ஆதலால்.
ஆதி அரா – பழமையான பாம்பு. யஜ்ஞாங்கன், யஜ்ஞவாஹநன் யஐ்ஞஸாதநன் என்ற திருநாமங்கள் பெறுமாறு
எம்பெருமான் யாகத்தைத் தமக்குஇடமாகக்கொண்டு அதற்குச்சாதநமாகிய பொருள்களின் வடிவாயு மிருந்து பயனையும் அளித்தலால்,
“வேதயராவுதி வீற்றிருப்பார்” என்றார்; இதனை, “அதவமாய்நறுநெயுண் டுலகி லன்பர்கருதிற், றுதவு சேவடி” என்றாற்போலக் கொள்க.

வேதியர் – வேதம்வல்லவர்; வேதங்களை ஓதுதலோது ஓதுவித்தற்கும் உரிமை அந்தணர்க்கே யுள்ளதனால்,
அவர்கள் வேதியரெனப் பெயர் பெறுவர். வீறு – வேறொன்றற்கில்லாத சிறப்பு; அவ்வகை மிக்க சிறப்பு அமைய இருத்தல், வீற்றிருத்தல்.

————

கவித்தானை மன்னற்கு நட்பு ஆய முடி கவித்தானை அன்று
புவித்தானை வற்றப் பொழி சரத்தானை பொருது இலங்கை
அவித்தானை மாலிருஞ்சோலை நின்றானை அழகனை முன்
தவித்து ஆனை வா என வந்தானை பற்றினென் தஞ்சம் என்றே –38–

(இ – ள்.) கவி தானை மன்னற்கு – வாநரசேனைகளையுடைய வாநரராச னான சுக்கிரீவனுக்கு,
நட்பு ஆய் – நண்பனாகி,
முடி கவித்தானை – (அவனுக்கு) மகுடாபிஷேகஞ்செய்வித்தவனும், –
அன்று – அந்நாளில் (ஸ்ரீராமாவதாரத்தில்),
புவி தானை வற்ற – பூமிதேவிக்கு ஆடையாகிய கடல் தபிக்கும்படி,
பொழி – பிரயோகிக்கத்தொடங்கிய,
சரத்தானை – ஆக்நேயாஸ்த்ரத் தையுடையவனும், –
பொருது இலங்கை அவித்தானை – போர்செய்து இலங்காபுரியை அழித்திட்டவனும், –
மாலிருஞ்சோலை நின்றானை – திருமாலிரு ஞ்சோலைமலையில் நின்றதிருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்றவனும், –
முன் – முன்னொருகாலத்தில்,
ஆனை – கஜேந்திராழ்வான்,
தவித்து – (முதலைவாய்ப்பட்டு) வருந்தி,
வா என – (எனது துயர்தீர்த்தற்பொருட்டு இங்கு) வந்தருள்’ என்று அழைக்க,
வந்தானை – (அதனெதிரில்) வந்தருளியவனு மான, அழகனை -,-
தஞ்சம் என்று பற்றினென் – சரணமென்று அடைந்தேன்; (எ – று.)

கவி – கபி யென்ற வடசொல்லின் விகாரம். அனைத் துலகுக்கும் அரசனும் சக்கரவர்த்தித் திருமகனுமான
இராமபிரானுக்குச் சுக்கிரீவன் தனது எழுபதுவெள்ளம்வாநரசேனைகளைக்கொண்டு உதவிசெய்ததனால்,
சுக் கிரீவனுக்கு ‘மஹாராஜர்’ என்று வைஷ்ணவபரிபாஷையில் ஒருபெயர் வழங்கும்.
‘கவித்தானைமன்னற்கு நட்பாய் முடிகவித்தானை’ என்ற தொடரிலுள்ள சொல்நயங் காண்க; மடக்கு:
“சேர்ந்துகவிக்கும் முடிகவித்தாய்” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.
பூமியைச் சூழ்ந்துள்ள கடலை ‘பூமியாகியபெண் உடுக்கும் ஆடை’ என்றல், கவிமரபு;
“பொங்குபுணரிக்கடல் சூழாடை நிலமாமகள்” என்றார் திருமங்கையாழ்வாரும். தஞ்சம் – ரக்ஷகம்.

————

தஞ்சம் தனம் என்று தேடி புல்லோர் தையலார் கடைக்கண்
வஞ்சம் தனம் கொள்ள வாளா இழப்பர் மதி உடையோர்
செஞ்சந் தனப் பொழில் மாலிருஞ்சொலைத் திரு நெடுமால்
நெஞ்சம் தனக்கு உவப்பாக நல்கா நிற்பார் நேர் படினே –39-

(இ – ள்.) புல்லோர் – அற்பர்கள், –
தனம் தஞ்சம் என்று தேடி – செல்வமே ரக்ஷக மென்று கருதி முயன்று அதனைச் சம்பாதித்து,
தையலார் கடைக்கண் வஞ்சம் தனம் கொள்ள – மாதர்களுடைய கடைக்கண்களின் வஞ்சனையும் (அவரது) கொங்கைகளின் பொலிவும் கவர்ந்துகொள்ள,
வாளா இழப்பர் – வீணாக (அப்பொருளை) இழந்துவிடுவார்கள்;
மதி – உடையோர் – நல்லறிவுடையவர்களோ, –
நேர்படின் – (தமக்குப் பொருள்) கிடைத்தால், (அதனை),
செம் சந்தனம் பொழில் மாலிருஞ்சோலை திரு நெடு மால் நெஞ்சந்தனக்கு உவப்பு ஆக நல்காநிற்பர் – சிவந்த சந்தனமரங்களின் சோலையையுடைய திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற மகாவிஷ்ணுவின் திருவுள்ளத்துக்கு உகப்பு உண்டாம்படி உபயோகிப்பார்கள்; (எ – று.)

சிற்றறிவுடைய புல்லோர், செல்வப்பொருளையே பொருளென்று கொண்டு ஈட்டி அதனைச் சிற்றின்பவிஷயங்களிற்
செலவுசெய்து வறியராய் நிற்பர்; பேரறிவுடைய நல்லோரோ, எவ்வாற்றாலேனும் தமக்குப் பொருள் கிடைத்தால்
அதனை எம்பெருமான் திருவுள்ளத்துக்குப் பாங்காகுமாறு பகவத் பாகவத ஆசாரிய கைங்கரிய
விஷயங்களில் விநியோகித்துக் கிருதார்த்த ராவ ரென்பதாம்.

தனம் என்ற சொல் – முதலடியில் தநம் என்ற வடசொல்லின் விகாரமும், இரண்டாமடியில் ஸ்தநம் என்ற வடசொல்லின் விகாரமுமாம்.
‘தையலார் கடைக்கண் வஞ்சம்’ என்றது, ஆடவரை வசீகரிக்குமாறு அவர்களை மகளிர் தங்கள்கடைக்கண்களால்
ஒதுக்கிப் பார்க்கும் பார்வையை. கண்ணின் கடை என்பது கடைக்கண் என முன்பின்னாகத்தொக்க ஆறாம்வேற்று மைத்தொகை:
இலக்கணப்போலி. வாளா – பயனின்மைகுறிக்கும் இடைச்சொல்; “சும்மா” என்பதும் இது. நல்கா நிற்பர் – நல்கி நிற்ப ரென்க.

————–

நேர் ஆய ஏதனை நெஞ்சு இடந்தாய் நெடுஞ்சோலை மலைக்
கார் ஆய வேதனை முன் படைத்தாய் நின் கழற்குத் தொண்டு என்று
ஆராயவே தனைப் புண் பிறப்பு ஓயும் அவா வழியின்
பேர் ஆய வேதனை இல் உழைப் போரும் பிழைப்பர்களே –40-

(இ – ள்.) நேர் ஆய – (தனக்கு) எதிராய் நின்ற,
ஏதனை – குற்றத்தை யுடையவனான இரணியனை,
நெஞ்சு இடந்தாய் – மார்பைப் பிளந்தவனே!
நெடுஞ் சோலை மலை கார் ஆய – நெடிய திருமாலிருஞ் சோலைமலையில் எழுந்தருளியிருக்கிறவனும் கரியதிருநிறமுடைய இடைப்பிள்ளையாய் வளர்ந்தவனுமானவனே!
வேதனை முன் படைத்தாய் – (படைத்தற்கடவுளான)பிரமனை முன்பு சிருஷ்டித்தவனே! –
நின் கழற்கு தொண்டு என்று ஆராயவே – உனதுதிருவடிகட்குத் தாம் அடிமையென்று (பரமாத்மஜீவாத்ம ஸ்வரூபங்களை ஒருவர்) ஆராய்ந்துணரவே,
தனை புல் பிறப்பு ஓயும் – இழிவான ஜந்மவகைகள் எத்தனையுண்டோ அத்தனையும் (அவரைத் தொடரமாட்டா மல்) ஓய்ந்துவிடும்;
அவா வழியின் – ஆசைவழியால்,
பேர் ஆயம் வேதனை – பெரிய தொகுதியான துன்பங்களைத் தருகின்ற,
இல் – சம்சாரபந்தத்தில்,
உழைப்போரும் – அகப்பட்டுவருந்துபவர்களும்,
பிழைப்பர்கள் – (நின்கழற் குத் தொண்டென்று தம்மைஆராய்ந்தமாத்திரத்திலே அச்சம்சார துக்கங் களினின்று தப்பி) உய்வார்கள்; (எ – று.)

‘நெஞ்சிடத்தல்’ என்ற குறிப்பினால், ‘ஏதன்’ என்றது, இரணியனை உணர்த்திற்று;
அவன், சர்வலோகநாயகனான ஸ்ரீமந்நாராயணனுக்கு எதிர் த்தட்டாய்த் தானே முழுமுதற்கடவு ளென்று சொல்லி
யாவரும் தன்னை வணங்கும்படி நிர்ப்பந்தித்துவந்தன னாதலால், ‘நேராய ஏதன்’ எனப்பட்டான்.
ஏதன் – அபராதி: ஏதம் – குற்றம். நெஞ்சு – தானியாகுபெயராய், அதற்கு இடமான மார்பையுங் குறிக்கும்.
இடத்தல் – கீளுதல். ஆ – பசுக்கள்; அவற்றையுடையவ னாதலால், இடையனுக்கு ஆய னென்று பெயர் .
வேதன் – வேதஸ் என்ற வடசொல்லின் விகாரம்; அது, சிருஷ்டிகர்த்தா வென்று பொருள்படும்.
இனி, வேதம் வல்லவன் வேதனெனக் காரணக் குறியுமாம். முன் – ஆதிகாலத்தில். தனை – அளவு.
கர்மவசத்தாலாகும் பல வகைப் பிறப்புக்களும் எம்பெருமான் திருவடிக்குத் தொண்டுபூண்டவரைச் சாரக்கடவனவல்ல வென்க.
ஓய்தல் – ஒழிதல். “தனை” என்பதைத் தன்னை யென்பதன் தொகுத்தலாகவும், உருபுமயக்கமாகவுங் கொண்டு,
தனது புன் பிறப்பு ஓயுமென உரைத்தலு மொன்று. ஆயம் – திரள்.
இல் – வீடு; அதில் இருந்து நடத்தும் சம்சாரத்துக்கு இங்கு இடவாகுபெயராம்.
இனி, இல் என்பதை ஏழனுருபாக்கொண்டு, வேதனையிலுழைப்போர் என்பது வேதனையில்லுழைப்போர் என
விரித்தல்விகாரம்பெற்ற தென்றாக்கி உரைப்பினும் இழுக்காது. உம் – இழிவுசிறப்பு.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading