Archive for March, 2021

ஸ்ரீ திருப்பாவை–கீழ்வானம் வெள்ளென்று- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

எல்லோரும் திரண்டு வந்து அழைக்க வேண்டும்படி கண்ண பிரானுக்கு மிகவும் அந்தரங்க
வல்லபை யாயிருப்பா ளொருத்தியை உணர்த்தும் பாசுரம் இது.
இங்ஙனே இத்தனை ஆய்ப் பெண்டிரும் இவள் மாளிகை வாசலில் வந்து துவள்தவதற்கு அடி –
இவள் கண்ணபிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாயிருக்குமஃதேயாமென்பது
கோதுகலமுடை பாவாய் என்ற விளியாற்போதருமென்க.
கோதுகலம் – கௌதூஹலம் என்ற வடசொல் விகாரம்; ஆசை என்பது அதன் பொருள்;
கண்ணபிரானுடைய ஆசையைத் தன்னிடத்துப் பெற்றுள்ள என்றபடி.

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பதவுரை

கோதுகலம் உடைய பாவாய்–கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத் தக்க பதுமை போன்றவளே!
கீழ் வானம்–கீழ் திசைப் பக்கத்து ஆகாசமானது
வெள்ளென்று–வெளுத்தது ;
(அன்றியும்)
எருமை-எருமைகளானவை
மேய்வான்–(பனிப் புல்) மேய்கைக்காக
சிறுவீடு–சிறு தோட்டங்களில்
பரந்தன–சென்று புக்கன
போவான் போகின்றார்-(திருவேங்கட யாத்திரை போலே) போகையையே பிரயோஜனமாகக் கொண்டு போகின்ற
மிக்குள்ள பிள்ளைகளும்–மற்றமுள்ள எல்லாப் பெண் பிள்ளைகளையும்
போகாமல் காத்து–போக ஒட்டாமல் தடுத்து
உன்னை கூவுவான்–உன்னை அழைத்தர் பொருட்டு
வந்து நின்றோம்–(உன் மாளிகை வாசலில் வந்திரா நின்றோம்)
எழுந்திராய்–(எங்களுடன் கூடுவதற்காக) எழுந்திரு;
பாடி-(கண்ண பிரானுடைய குணங்களைப்); பாடி
பறை கொண்டு–(அவனிடத்துப்) பறையைப் பெற்று,
மா வாய் பிளந்தானை–குதிரை யுருவமெடுத்து வந்த கேசி யென்னுமசுரனுடய வாயைக் கீண்டெறிந்தவனும்
மல்லரை மாட்டிய–மல்லர்களை மாளச் செய்தவனுமான
தேவாதி தேவனை–அத் தேவ தேவனை
நாம் சென்று சேவித்தால்–நாம் அணுகி அடி பணிந்தால் (அவன்,)
ஆராய்ந்து–(நமது குறைகளை) ஆராய்ந்து
ஆ ஆ என்று அருளும்–ஐயோ! என்று இரங்கி யருள்வன்;
ஏல் ஓர் எம் பாவாய் !

பாவாய்! கீழ்வானம் வெள்ளென்றதே; இனியாகிலும் எழுந்திராய் என்றழைக்க;
இதனைக் கேட்ட அவள், அதற்குள் இராக் காலம் கழிகையாவதென்? கீழ் வானம் வெளுக்கையாவதென்?
இஃது உங்களுடைய விபரீத ஞானம்;

அஞ்சுடாவெய்யோனணி நெடுந்தேர் தோன்றாதால் என்று
திங்கள் திருமுகத்துச் சேயிழை யாரான நீங்கள்
நெடும் போதாகக் கீழ்த் திசையை நோக்கிக் கொண்டிருக்கையாலே
உங்களுடைய முக நிலா கீழ்த்திசையிற் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து பிரதிபிம்பித்துத் தோன்றுகையாலே
கிழக்கு வெறுத்தது போலத் தோற்றுகிறது;
இஃது உங்களுடைய அந்யதாஜ்ஞானம்;
வேறு அடையாளமுண்டாகிற் சொல்லுங்கள் என்ன;
எருமைகள் பனிப் புல் மேய்கைக்காகச் சென்று பரந்தமை ஏற்ற அடையாளமன்றோ? என்கிறார்கள்.

சிலர், எருமை சிறை வீடு எனப் பாடங்கொண்டு, எருமைகள் சிறையினின்றும் (தொழுவத்தினின்றும்)
விடுக்கப்பட்டு என்றுரைத்தனர் அது பொருத்தமற்றதென மறுக்க.
சிறுவீடு மேய்கையாவது ஊர்ப் பசுக்களுடனே சென்று வெளி வயல்களில் மேய்வதற்கு முன்னே
அவரவர்கள் சொந்தமாக அமைத்த நல்ல பசும்புல் நிறைந்த சிறு தோட்டங்களில் மேய்கை.
நன்றாகப் பால் தருவதற்காக இப்படி சிறு வீடு மேய விடுதல் ஆயர் வழக்கம்.

இங்ஙனே ஒரு அடையாளங் கூறக்கேட்ட அவள், உங்களது முகவொளியினால் சிதறிப்போகிற இருள்களின் திரள்
எருமைகளாக உங்கட்குத் தோற்றுகின்றனவேயன்றி, அவை மெய்யே எருமைகளல்ல;
இஃது உங்களுடைய விபரிதஞானம் என்ன;

அதுகேட்ட இவர்கள், எங்கள் ஞானம் விரிதமாகில் ஆகிறது;
பொழுது விடிய வில்லையென்கைக்கு அடையாள முண்டாகில் நீ சொல்லாய் பார்ப்போம் என்ன;
அதற்கு அவள், இத் திருவாய்ப்பாடியில் அஞ்சு லக்ஷங் குடிப்பெண்களுண்டு:
இப்போது இங்கு வந்துள்ள பெண்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டிரார்; மற்றவர்களும் உணர்ந்து வர வேண்டாவோ?
அவர்கள் உணர்ந்து எழுந்து வாராமை விடியாமைக்கு அடையாளமாகக் குறையில்லை என்ன;

அதுகேட்ட இவர்கள், இவ்வளவேயோ நீ உணர்ந்தது; உன்னை யொழிந்த பெண்டிரனைவரும் உணர்ந்தெழுந்து
புறப்பட்டுப் பாவைக் களத்தை நோக்கிச் செல்ல, உன்னைத் தவிர்த்துச் செல்லுதல் உரியதன்றென்று
அவர்களைப் போக வொட்டாமல் தடுத்து, உன்னை அழைப்பதற்காக உன் மாளிகை வாசற்கடையிலே
வந்து படுகாடு கிடவா நின்றோங்காண் என்கிறார்கள்.

உத்தேச்யமானதொரு ஸ்தலத்தைச் சென்று சேர்வதிற் காட்டிலும் அத்தலத்தை நோக்கிச் செல்லுகை தானே
அர்ச்சிராதி கதி போல் போகரூபமாயிசுக்குமென்பது தோற்றும்,
போவான் போகின்றாரை என்பதனாலென்ப.
போவான் — போவதற்கு; வான் விகுதி பெற்ற தெரிநிலை வினையெச்சம்.
(வான் என்பதில் ஆன் – வினையெச்சவிகுதி; வ் – எதிர்கால இடைநிலை என்பது ஒரு சாரார் கொள்கை.)
போவதற்குப் போகின்றார் என்றால், போகையே பிரயோஜநமெனப் புலப்படுமன்றே.
போகின்றாரை என்றவிடத்துவள்ள இரண்டனுருபு மிக்குள்ள பிள்ளைகளும் என்றவிடத்துப் பிரித்துக் கூட்டியுரைக்கப்பட்டது.

இங்ஙனே இத்தனை ஆய்ப்பெண்டிரும் இவள் மாளிகை வாசலில் வந்து துவள்தவதற்கு அடி –
இவள் கண்ண பிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாயிருக்குமஃதேயாமென்பது
கோதுகலமுடை பாவாய் என்ற விளியாற்போதருமென்க.
கோதுகலம் – கௌதூஹலம் என்ற வடசொல் விகாரம்; ஆசை என்பது அதன் பொருள்;
கண்ணபிரானுடைய ஆசையைத் தன்னிடத்துப் பெற்றுள்ள என்றபடி.

ஸர்வ சேஷியான எம்பெருமான் சேஷ பூதர் இருக்குமிடத்தே வந்து அருள் புரியக் கடமையுடையனாயிருந்து வைத்து,
அவன் அங்ஙன் செய்யாதொழியில்
நாம் நம் ஸ்வரூபத்தைக் குலைத்துக் கொண்டாகிலும் அவனிருக்கு மிடத்தேறச் சென்று சேவித்தால்,
அவன் ஆ! நாம் காரீயத்தை நாம் செய்யத்தவறினோமே; அன்ன நடைய வணங்குகளை ஆயாஸப்படுத்தினோமே!
என்றுதான் கழிவிரக்கமுற்று நம் காரீயத்தைச் செய்து தலைக் கட்டுவன்;
எல்லாருமாகத் திரண்டு போகாமல் எழுந்து வா என்றழைக்கின்றனர், பின்னடிகளால்.

(ஸ்வாபதேசம்) குலசேகரர்க்கு அடுத்த முந்தினவரான நம்மாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
கோதுகலமுடைய பாவாய்! என்ற விளி நம்மாழ்வாரை வற்புறுத்தும்.
கோதுகுலமுடைய என்று வழங்கிவரும் பாடம் பரம க்ருபையுடன் மறக்கத் தக்கது.
அப்பாடம் நெடுநாளாகவே நாடெங்கும் பரவியதனாலாய அநர்த்தம் பெரிதுமுண்டு.
ஸ்ரீ பரகாலஸ்வாமி வியாக்கியானம் செய்தருளுமிடத்து குலம் குலமாக வுனக்குப் பரிசர்யை பண்ணும்படி என்றுரைத்திட்டார்.
அது, கோதுகலமுடைய என்கிற (தவறுதலான) பாடத்தில் அபிநிவேசத்தினால் போலும்.
வஸ்துதஸ்து, வடமொழியில் கௌதூஹலம் என்ற சொல் தமிழில் கோதுகலமெனத் திரீந்தது.
இதில் குகரம் நுழைய ப்ரஸக்தியில்லை.
கோதுகலம் உடைக்குட்டனேயோ என்றார் பெரியாழ்வாரும்.)

கோதுகலமாவது ஆசை; ஆசையை யுடைய என்றது.-எம்பெருமானிடத்தில் ஆசையை யுடைய,
அல்லது எம்பெருமானுடைய ஆசையைத் தன்னிடத்திலே கொண்டுள்ள என்று இரு வகையாகவும் பொருள்படும்.

பட்டர் நம்மாழ்வாரைப் பற்றிப் பேசும்போது ரீஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம் என்று
க்ருஷ்ண குதூஹலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்றார்.
க்ருஷ்ண த்ருஷ்ணா என்றதும் க்ருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை, க்ருஷ்ணனுடைய த்ருஷ்ணை என இருவகையாகவும் விரியும்.
இதனால் தேறின பொருளை
கைம்மா துன்பொழித்தாயென்று கைதலை பூசலிட்டே, மெய்மால யொழிந்தேன் எம்பிரானுமென்மேலானே
என்ற பாசுரத்தினால் நம்மாழ்வார்; தாமே வெளியிட்டருளினர்.
ப்ரியோ ஹி ஜ்ஞாநிதோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய: என்றபடி.
நானும் எம்பெருமானிடத்துக் குதூகலங் கொண்டேன்,
அவனும் என்னிடத்துக் குதூஹலங் கொண்டான் என்றருளிச் செய்தவர் நம்மாழ்வார்.

பாவாய்! என்ற விளியும் இவர்க்குப் பொருந்தும்.
திருவாய் மொழியில் சூழ்வினை யாட்டியேன் பாவையே என்றும்
என்பாவை போயினித் தண்பழனத் திருக்கோளுர்க்கே என்றும்
பலவிடங்களில் தம்மைப் பாவையாகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.

எழுந்திராய் என்ற சொல்லாற்றல் நன்கு நோக்கத்தக்கது;
உட்கார்ந்திருப்பவரையன்றோ எழுந்திரா யென்பது.
மற்றையாழ்வார்களெல்லாரும் அர்ச்சையில் நின்ற திருக் கோலமாகவேயுள்ளார்;
நம்மாழ்வாரொருவரே வீற்றிருந்த திருக்கோலம்.
புத்மாஸநோபவிஷ்டம் என்கிற பூர்வாசார்ய ச்லோக ரத்னமும் இங்கு அநுஸந்தேயம்.

(கீழ்வானம் வெள்ளென்று.) உதய காலத்தில் கிழக்கு வெளுக்கும்.
இங்கும் வகுளுபூஷண பாஸ்கரோதய மாதலாலும்,
அதுதானும் கலி யுகத்தின் உதயகாலத்திலாதலாலும் கிழக்கு வெறுத்ததாகச் சொல்லிற்று.

கீழ் வானமென்றபோதே மேல் வானம் நினைவுக்கு வரும்.
நித்தியவிபூதி மேல் வானமாகும். லீலாவிபூதியானது நம்மாழ்வாருடைய திருவாய்மொழி யவதாரத்தாலே
வையம் மன்னிவீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே இத்யாதிப்படியே தானே பரமபதமாயிற்று.
ஆகவே கீழ்வானமான இவ்விபூதி வெள்ளென்றது.

(எருமை சிறுவீடு மேய்வான்) வீடு என்று மோக்ஷம்; சிறு வீடு என்று கைவல்ய மோக்ஷம்.
இந்த ஸங்கேதமிட்டருளினவர் நம்மாழ்வார்;
திருவாய்மொழியில் (4-1-10) குறுக மிகவுணர்வத்தொடு நோக்கி என்ற பாசுரத்தின் பொருள் கொண்டு இஃது அறியத்தக்கது.

எருமையென்பது தாமஸ ப்ரக்ருதிகளை.
நம்மாழ்வார் திருவவதாரம் செய்தருள்வதற்கு முன்னே பலரும் தாமஸ ப்ரக்ருதிகளாய் நல்வீடு செல்லாது
சிறுவீடு முதலியவற்றிற் சென்று பாழாயினர் என்பது இங்கு ஸுசிதம்.

(மிக்குள்ள பிள்ளைகளுமித்யாதி.) மற்றைப் பிள்ளைகளையும் போகவொட்டாமல் தடுத்து
இப்பிள்ளை வாசலில் வந்துதுவள்வதனால் இவருக்குண்டான விலக்ஷணமான ஏற்றம் தோற்றுவது போல,
மற்றை யாழ்வார்களிற் காட்டில் நம்மாழ்வார்க்குண்டான ப்ரபந்நஜந கூடல்தத்வமாகிற ஏற்றம் தோற்றுவிக்கப் பட்டது.

போவான் போகின்றாரை என்ற பிரயோகம் வெகு ஆச்சரியமானது.
போவதற்காகப் போகிறவர்கள் என்று சொல்லுவதுண்டோ? இல்லை. அப்படியிருக்க ஏன் சொல்லிற்று?
போவதுதானே ஸ்வயம் ப்ரயோஜனமென்று காட்டுவதற்காகவே சொல்லிற்று.
இத்தகைய பிரயோகம் முதன் முதலாக நம்மாழ்வார் திருவாக்கில் தான் வந்தது;
திருவிருத்தத்தில் போவான் வழிக்கொண்ட மேகங்களே! என்றார்.

(உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்.) கூவிக்கொள்ளும் காலமின்னங் குறுகாதோ
என்னைக் கூவியருளாய் கண்ணனே கூவிக்கொள்ளாய் வந்தந்தோ என்று
பலகாலும் விரும்பினபடியே கூவுவான் வந்து நின்றோமென்கிறாள்,

(மாவாய் பிளந்த தேவாதி தேவனை) இப்போது ஆண்டாள் நோற்பதுபோல
நம்மாழ்வாரும் ஒரு திருவாய் மொழியில் நோன்பு நோற்றார்;
வீற்றிருந்தேழுலகும் என்ற திருவாய் மொழியில் ஏற்ற நோற்றேற்கு என்று முதலிலும்
வண்டமிழ் நூற்க நோற்றேன் என்று முடிவிலும் வருவது காண்க.
அங்ஙனம் நோற்ற திருவாய்மொழியில் தேவாதி தேவனை அநுபவிக்கின்ற ஆழ்வார்
மாவாய் பிளந்தானென்ற விசேஷணத்தையே முதற்பாட்டில் இட்டருளினர்;
வெம்மா பிறந்தான் தன்னை என்றது காண்க.

ப்ரதமப்ரபந்தத்தில் இமையோர் தலைவா! என்றும்;
சரம ப்ரபந்தத்தில் அயர்வறுமமரர்களதிபதி என்றும்
தேவாதி தேவனையே முந்துற முன்னம் சேவித்தாராழ்வார்.

(சென்று நாம் சேவித்தால்) வான நாயகனே! அடியேன் தொழ வந்தருளே என்று
தேவாதி தேவனை நீர் உம்மிடம் வருமாறு அழைத்தீர்;
அங்ஙனமல்லாமல் அவனிடம் நாம் சென்று சேவிக்கலாம் வாரும் என்றழைக்கிறாள் போலும்.

(ஆவா வென்று) ஆவாவென விரங்கார் அந்தோவலிதே கொல், மாவாய் பிளந்தார் மனம் என்றும்;,
அடியேற்கு ஆவா வென்னாயே என்றும்
நீர் விரும்பினபடியே மாவாய்பிளந்த பெருமான் உமக்கு ஆவாவென்பன் என்று காட்டுகிறபடி

(ஆராய்ந்து) ஆரென்னை யாராய்வார் என்ற உம்முடைய குறையும் தீரும் என்று காட்டியபடி.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–கீசுகீசு என்று எங்கும்- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

சிலரை உணர்த்திக் கூட்டிக் கொண்டு கண்ணபிரான் பக்கற் போமவர்களன்றே இவர்கள்;
நம்மைப் போலவே அனைவரும் நன்மை பெற வேணுமென்னுங் கருத்துடையோரன்றோ.
பகவத் ஸம்பந்தம் மெய்யே உண்டாகில் தன் வயிற்றிற் பிறந்த ப்ரஜையினுடைய ஸம்ருத்திக்கு உகக்குமாறு போலவே
அனைவருடைய ஸம்ருத்திக்கும் உகக்க வேணுமன்றே?

ஆட்கொண்ட வில்லி ஜீயர் எழுந்தருளா நிற்கச் செய்தே நஞ்சீயர் தெண்டனிட்டு நிற்க,
“பகவத் விஷயத்தில் ருசி நமக்கு மெய்யே பிறந்ததில்லை காணும்’ என்று ஆட் கொண்ட வில்லி ஜீயர் அருளிச் செய்ய,
நஞ்சீயர், “உம்மைப்போல் ஆசார்யவான்கள் ஆரேனுமுளரோ? நீர் இங்ஙனே அருளிச்செய்வானென்?” என்று கேட்க;

“பாகவதர்களின் ஸம்ருத்தியைக் கண்டு மிக உகக்கை யன்றோ பகவத் விஷயத்தில் ருசி மெய்யே பிறக்கையாவது;
அஃது இல்லாமையைப் பற்றச் சொன்னேன் காணும்” என்று ஆட்கொண்ட வில்லி ஜீயர் அருளிச் செய்தார்
என்ற ஐதிஹ்யம் இங்கு நினைக்கத் தக்கது–

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

பதவுரை

பேய் பெண்ணே–மதி கெட்ட பெண்ணே!
எங்கும்–எல்லா விடங்களிலும்
ஆனைச் சாத்தன்–பரத்வாஜ பக்ஷிகளானவை
கலந்து–(ஒன்றோடொன்று) ஸம்ஸ்லேக்ஷித்து
கீசுகீசு என்று–கீச்சு கீச்சு என்று
பேசின–பேசிய
பேச்சு அரவம்–பேச்சினுடைய ஆரவாரத்தை
கேட்டிலையோ–(இன்னும் நீ) கேட்கவில்லையோ?
வாசம்–பரிமள வஸ்துக்களினால்
நறு–மணம் கமழா நின்றுள்ள
குழல்–கூந்தலை யுடைய
ஆய்ச்சியர்–இடைப் பெண்கள்
காசும்–(கழுத்தில் அணிந்துள்ள) அச்சுத் தாலியும்
பிறப்பும்–ஆமைத் தாலியும்
கலகலப்பு–கலகலவென்று சப்திக்கும் படியாக
கைபேர்த்து–கைகளை அசைத்து
மத்தினால்–மத்தாலே
ஓசை படுத்த–ஓசை படுத்தின
தயிர் அரவம்–தயிரின் ஒலியையும்
கேட்டிலையோ–கேட்க வில்லையோ?
நாயகப் பெண் பிள்ளாய்–பெண்களுக்கெல்லாம் தலைமையாயிருப்பவளே
நாராயணன் மூர்த்தி கேசவனை–ஸ்ரீமந் நாராயண அவதாரமான கண்ண பிரானை
பாடவும்–(நாங்கள்) பாடா நிற்கச் செய்தேயும்
நீ–நீ
கேட்டே–(அப் பாட்டைக்) கேட்டு வைத்தும்
கிடத்தியோ–(இங்ஙனே) உறங்குவாயோ?
தேசம் உடையாய்–மிக்க தேஜஸ்ஸை யுடையவளே!
திற–(நீயே எழுந்து வந்து கதவைத்) திற
ஏல் ஓர் எம் பாவாய்!

இங்ஙனே எல்லார்க்குமொக்க இந் நன்மை உண்டாக வேணுமென்ற பாரிப்புடன் எல்லாரையுந் திரட்டிக் கொண்டு
மற்றொருத்தியின் மாளிகை வாசலிற் சென்ற ஆயர் மாதர், ‘பெண்ணே! போது விடிந்தது காண், எழுந்திராய்’ என்ன;
‘விடிந்தமைக்கு அடையாளமென்?’ என்று அவள் கேட்க;
‘ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் முதலியன அடையாளமல்லவோ?’ என்கிறார்கள்.

கீசுகீசு – ஒலிக் குறிப்பு; அநக்ஷரரஸமாயிருக்கிறபடி
‘ஆனைச் சாத்தம்’ எனினும் ‘ஆனைச் சாத்தன்’ எனினும் ஒக்கும்;
பரத்வாஜ பக்ஷி-வலியனெனப்படுமென்ப “செம்போத்து” என்பாருமுளர்.
உணர்த்த வந்த ஆய்ச்சிகள் ஆனைச் சாத்தத்தினுடைய தொனி விடிவுக்கு அடையாளமன்றோ?’ என்ன;
‘ஒரு ஆனைச் சாத்தமுணர்ந்த விது விடிவுக்கு அடையாளமாகப் போருமோ?’ என்று அவள் கேட்க;

இவர்கள் “எங்கும்” என்ன;

‘எங்கும் நீங்களில்லையோ அவற்றை உணர்த்துகைக்கு’ என்று அவள் சொல்ல;

‘அவை நாங்களுணர்த்த உணர்ந்தனவல்ல; கலந்து பேசின பேச்சுக் காண்’ என்று இவர்கள் சொல்ல;

‘இரவெல்லா முறங்கிப் பொழுது விடியும் போதோ கலப்பது?’ என்று அவள் கேட்க;

‘மரக்கலம் (கப்பல்) ஏறிப் போமவன் மீண்டு வருமளவும் ஜீவநமேற்றிக்கொண்டு போவது போல,
இவையும் பிரிவு காலமாகிய விடியற் காலத்திலே கலந்து பகல் முப்பது நாழிகைக்கும் விளைநீர் அடைத்துக் கொண்டு
‘அந்தோ! பிரிவு வருகின்றதே!’ என்னுந் தளர்த்தி தோற்றப் பேசுகிற பேச்சு
விடிவுக்கு அடையாளமாக வற்றன்றோ என்கிறார்கள்.

இங்ஙன் கூறக் கேட்ட அவள்,
மாளிகைகளில் துதி பாடகர்கள் வம்சாவளி சொல்லக்கேட்டு உணரக் கடவார்
பறவைகளின் பேச்சுக் கேட்டு உணர வேண்டும்படியாவதே! அஹஹ! இஃதென்ன விபரீத காலம்!’ என்று வெறுத்துக் கிடக்க,

பேய்ப் பெண்ணே! என்று நிந்திக்கின்றனர்.
பாகவத ஸம்ஸ்லேஷத்திற்கு வரைந்து ஓடி வாராமே ஆறியிருக்கையின் மிக்க பேய்த்தனமில்லையே.

இங்ஙன் கூறக்கேட்ட அவள், ‘நள்ளிருட்கண் வந்து பொழுது விடிந்ததெனப் பிதற்றுகின்ற நீங்களன்றோ பேய்ப் பெண்கள், என்ன;

இவர்கள், ‘பொழுது விடிந்ததில்லை’ என்கிற நீ தான் பேய்ப்பெண் என்ன;

அவள், ‘விடிந்தமைக்குக் கூறிய இவ்வடையாளம் போதாது; வேறடையாளமுண்டாகிற் சொல்லுங்கள்’ என்ன;

இவ்வூரில் ஆய்ச்சிகள் அனைவரும் உணர்தெழுந்து தயிர் கடைகிற ஓசைகூடச் செவிப்பட்டதில்லையோ?
அஃது அடையாளமாகவற்றேயன்றோ? என்கிறார்கள்.

காசு பிறப்பு – மாதர் அணியும் ஆபரண விசேஷம்.
கல கலப்ப – ஒலிக் குறிப்பு.
கடைய வேண்டிய தயிர் அளவற்றுள்ளமையாலும்,
கடைகின்ற தங்களுடைய ஸௌகுமார்யத்தாலும்,
கிருஷ்ணன் அருகில் வந்திருந்து கொண்டு ‘தயிரை மோராக்க வொட்டேன்’ என்று கடை கயிற்றைப் பற்றி வலிக்கையாலும்
கடைகையிலுள்ள அருமையைக் கூறுவது, கை பேர்த்து என்பது.

கை பேர்த்து – தயிர் கடைகையில் கையை வியாபரிக்கச் செய்து என்றபடி.
கடைகிற போதைச் சிரமத்தாலே மயிர்முடி கட்டு நெகிழ்ந்து முடைநாற்றத்தை மறைக்கும்படி
மணங்கமழா நின்றுள்ளமைபற்றி ‘வாசநறுங் குழலாய்ச்சியர்’ எனப்பட்டது.

“உத் காயதீநாம அரவிந்த லோசநம் வரஜாங்கநாநாம் திவமஸ்ப்ருசத் த்வநி:-
தத்நச்ச நிர்மந்தந சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேந திசாம மங்களம்.”
கண்ணபிரானுடைய கண்ணழகுக்குத் தோற்றுப் பாடுகிற ஆயர் மாதருடைய பாட்டினொலி
தயிர் கடைகிற ஓசையோடே கலசிப் பரமபதத்தே செந்றொலித்ததெனப்; புராண நூல் கூறுமாறறிக.

ஆய்ச்சிகள் தயிர் கடையும்போதும் கண்ணபிரானைப் பாடுவார்களோ வென்னில்;
“விக்ரேதுகாமா கில கோப கந்யா முராரி பாதார்ப்பித சித்த வ்ருத்தி:-
தத்யாதிகம் மோஹவசாதவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி.”
ஓராய்ப்பெண், கண்ணபிரான் முரனை முடித்த வீரத்தில் தோற்று அவன் பக்கல் கருத்தை ஊன்ற வைத்து
வேறு சிந்தையின்றியிருக்க, வீட்டிலுள்ள பெரியோர் ‘இவளை இதினின்றும் மீட்கும் விரகு ஏதோ’ என்று பார்த்து,
பாலையும் தயிரையும் நெய்யையும் தந்து ‘இவற்றை விற்றுவா’ என்றனுப்ப,
அவளும் அங்ஙனமே விற்கச் செல்ல, நினைவு கண்ணபிரான் பக்கலிலாகையாலே,
‘கோவிந்தன் வாங்க வில்லையோ கோவிந்தன், கிருஷ்ணன் வாங்க வில்லையோ க்ருஷ்ணன்,
மாதவன் வாங்கவில்லையோ மாதவன்’ என்று க்ருஷ்ண நாமங்களைக் கூறிக் கொண்டு திரிந்தாள் என்னா நின்றால்,
தயிர் கடையும் போது கண்ணபிரானைப் பாடுவார்களென்னத் தட்டுண்டோ? நிற்க.

இவ்வடையாளம் சொல்லக்கேட்ட அவள், ‘பெண்காள்! இப்போது இப்பாடி பண்டு போலோ இருப்பது?
க்ருஷ்ணன் பிறந்த பின்னர் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்களாகையாலே
அறுபது நாழிகையும் கறப்பது கடைவதாய்ச் செல்லுமத்தனையேயன்றோ? இது விடிவுக்கு அடையாளமாகவற்றோ!
என்று அவர்கட்கு மறுமாற்றத்திற்கு இடமில்லாதபடி கூற,
வேறு விடை சொல்ல வல்லமையின்மையாலே நாயகப் பெண்பிள்ளாய்! என்கிறார்கள்.
இங்ஙனே நாங்கள் சொல்லுமடையாளங்கட்கெல்லாம் அந்யதாஸித்தி சொல்லுகிறதற்கு அடி
உன் வீறுடைமையன்றோ என்றவாறு.

இப் பாட்டில், ஒருகால் ‘பேய்ப்பெண்ணெ!’ என்பது,
மற்றொருகால், ‘நாயகப்பெண்பிள்ளாய்!’ என்பதாய்ச் சொல்லுகிறபடியைக் காண்மின்;

“ஒரு மிதுநமாய்ப் பரிமாற நின்றால் தாழச் சொன்ன
போதும் உயரச் சொன்ன போதுமாயிறே யிருப்பது” என்பர், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்;”

‘பேய்ப்பெண்ணே’ என்றத்தோடு ‘நாயகப்பெண்பிள்ளாய்’ என்றத்தோடு வாசி இல்லையிறே
அகவாயில் பாவம் ஒன்றாகையாலே” என்பர், பெரியவாச்சான் பிள்ளை.

நாயகப் பெண்பிள்ளாய்! — இத்திரளுக்கெல்லாம் நீ தலைவியானபடி இதுவோ?
எல்லோரையும் திரட்டிக் கொண்டு போய் உத்தேச்யத்தைப் பெறுகை யன்றோ தலைவியின் காரியம் என ஏசியவாறு.

இங்ஙன் ஏசக் கேட்ட அவள், ‘என்னை நீங்கள் தலைவி என்னலாமோ, உங்களுக்கு நான் அடிமைப்பட்டவளல்லேனோ?
இதோ வந்து கதவைத் திறக்கிறேன்; எம்பெருமானுடைய சில அபதாநங்களைப் பாடிக்கொண்டிருங்கள் என்ன;
இவர்கள் கேசி வத வ்ருத்தாந்தத்தைப் பாடத் தொடங்கினார்கள்.

கேசியின் வாயைக் கீண்டெறிந்த வரலாறு:–
கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கேசி என்பவன் குதிரையின் உருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி
கனைத்துத் துரத்திக் கொண்டு கண்ணபிரான் மேற் பாய்ந்து வர,
அப் பெருமான் திருக் கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப் பற்களை உதிர்த்து
உதடைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

நாராயணன் மூர்த்தி கேசவனை –
நாராயணமூர்த்தியாகிய கேசவனை;
அன்றி,
மூர்த்தி என்று ஸ்வாமிக்கும் பெயராகையாலே,
நாராயணாவதாரமாய் ஸர்வ ஸ்வாமியான கேசவனை என்றும் உரைக்கலாம்.
கேசவன் என்பதற்கு,
கேசியைக் கொன்றவன், சிறந்த மயிர் முடியையுடையவன், அயனரர்கட்குத் தலைவன் என மூவகைப் பொருள்களுண்டு.

இவர்கள் கேசவனைப் பாடச் செய்தேயும் அவள் பேசாதே கிடக்க,
நீ கேட்டே கிடத்தியோ என்கிறார்கள்.
நாங்கள் பாடின பாட்டு உன் உறக்கத்திற்குத் துடை குத்தினவாறாயிற்றுப் போலுமென்ற கருத்துக் காண்க.
உள்ளே அவள் எம்பெருமானுடைய வெற்றியை அநு ஸந்தித்துக் கொண்டு பேசாதே கிடந்தமையால்,
இவர்கள் சாலக வாசலாலே நோக்கிக் கண்டனர்;
எம்பெருமானுடைய விஜயா நுஸந்தாநத்தினால் அவள் வடிவிற்றோன்றியுள்ள புகரைக் கண்டு
“தேசமுடையாய்!” என விளித்துக் கதவை திறவென்கிறார்கள்.

கிடத்தி – முன்னிலை யொருமை வினைமுற்று.
தேசம் — தேஜஸ் என்னும் வடசொல் விகாரம்.

(ஸ்வாபதேசம்)–
இது; பெரியாழ்வார்க்கு அடுத்த முந்தினவரான குலசேகராழ்வாரை யுணர்த்தும் பாசுரம்,
‘பேய்ப்பெண்ணே!, நாயகப் பெண்பிள்ளாய்?, தேசமுடையாய்!, என்ற மூன்று விளிகளும்
குலசேகராழ்வாரை வற்புறுத்துவன.
பெருமாள் திருமொழியில் மெய்யில் வாழ்க்கையை என்றவொரு பதிகத்தினால்
தம்மைப் பெரும் பேயராகச் சொல்லிக் கொண்டவர் இவ்வாழ்வார்.

ஏர் மலர்ப்பூங்குழல், ஆலை நீள் கரும்பு, மன்னு புகழ்க் கௌசலை தன் என்ற பதிகங்களில்
பல பெண்களின் தன்மையை யடைந்து பேசினாருமிவர்.

“கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று அரசரான தன்மை தோற்றப் பேசினராதலால்
நாயகப் பெண் பிள்ளாய் என்றது.
அன்றியும்,
ஒரு ஹாரத்தில் நட்ட நடுவிலுள்ள மணியை ‘நாயகக்கல்’ என்பதுண்டு.
குரு பரம்பரையில் எம்பெருமானாரை நடுநாயகமென்று யதிராஜ ஸப்ததியில் தேசிகன் கூறினர்;
யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: மஹதீ குரபங்க்தி ஹாசயஷ்டி:” என்கிறார்
அது போலவே ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாக வுள்ளவர்.
பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என முன்னே ஐவர்;
பட்டநாதன் கோதை தொண்டரடிப்பொடிகள் பாண்பெருமாள் கலியன் எனப்பின்னே ஐவர்;
நடுவே குலசேகரர்.
ஆகவே இதுபற்றயும் நாயகப்பெண் பிள்ளாய் என்ற பிறி நன்கு பொருந்தும்.

(தேசமுடையாய்!)
பகவத் கீதையில் (18-43) (சௌர்யம் தேஜோத்ருதிர் தாக்ஷ்யம் — க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்.)
என்று தேஜஸ்ஸு க்ஷத்திரிய தர்மமாகச் சொல்லப்பட்டிருப்பதற்கிணங்க இந்த விளி
இவ்வாழ்பாருடைய க்ஷத்திரியத்வத்தைத் தெரிவிக்கும்.
அன்றியும்,
“தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜன்மமும் இழுக்கென்பார்க்குப்
பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸுக்தியின்படியும்,
அதற்கு மூலமான “மண்ணாட்டிலாராகியெவ்விழிவிற்றானாலும்;, ஆழியங்கைப் பேராயற்கு
ஆளாம் பிறப்பு – உண்ணாட்டுத் தேசன்றே” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தின்படியும்
பகவத் சேஷத்வத்திற்கு அநுகூலமான பிறப்பே தேஜஸ்ஸென்று நிர்ணயிக்கப்படுகிறது;
அப்படிப்பட்ட பிறப்பை ஊனேறு செல்வத்து என்ற பதிகத்தில் பாசுரந்தோறும் ஓரோ விதமாக விரும்பினவர்
இவ்வாழ்வாரேயாதலால் தேசமுடையார் இவரேயாகத்தகும்.

இப்பாட்டில் “ஆனைச்சாத்தன்” என்ற பதப்பிரயோகம் கவனிக்கத் தக்கது.
இச்சொல் மலையாள பாஷையிலிருந்து திசைச் சொல்லாகத் தமிழில் வழங்குவதென்பர்.
(ஆன சாதம்) என்று மலை நாடர் வலியனென்னும் பறவையை வழங்குவராம்.
இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதாரித்தவராதலால் அத்திசைச்சொல் இங்குட் பரவசமாகவே அமைந்தது போலும்.

காசும் பிறப்பும் என்று ஆபரண விசேஷங்களைப் பற்றின ப்ரஸ்தாவமிருப்பது இவ்வாழ்வாருடைய சரிதையில்
ஆபரண ப்ரஸ்தாவமுள்ளவாற்றை ஒருவாறு நினைப்பூட்டும்.
“ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங்கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற தனியனும் ஸ்மரிப்பது.

“வாசநறுங் குழ லாய்ச்சியர் மத்தின லோசைபடுத்த தயிரரவம்” என்றது பெருமாள் திருமொழியில்
“கெண்டை யொண்கணை மடவாளொருத்தி கீழையகத்துத் தயிர் கடையக்கண்டு…..
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ….. தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்” என்ற பாசுரத்துச் சொற் சுவைகளை நன்கு நினைப்பூட்டும்.

(நாராணயன் மூர்த்தி கேசவனைப் பாடவும்) திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை
வதஞ்செய்ததனால் கேசவனென்றது.
இவ்வாழ்வார் தமது திருமொழியில் முதன் முதலாக இந்த வரலாற்றையே பேசியநுபவித்தார்
மாவினை வாய் பிளந் துகந்தமாலை என்று.
ஸ்வ ப்ரபந்தத்தை “நலந்திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே” என்று நாராயணனைப் பாடித் தலைக் காட்டினார்.

(கேட்டே கிடத்தியோ) இவ்வாழ்வார் நாடோறும் அந்தணர்களைக் கொண்டு ஸ்ரீராமாயண பாராயணஞ் செய்வித்துத்
தாம் கேட்டவர்.
கேட்டு, இருந்தவிடத்திலிராமல் படையெடுத்துஞ்சென்றவர்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–புள்ளும் சிலம்பின காண்- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

இப் பாட்டு முதல், மேல் “எல்லே யிளங்கிளியே” என்ற பாட்டளவாகப் பத்துப் பாசுரங்களாலே
அநுபோக்தாக்களைக் குறித்துத் திருப்பள்ளியெழுச்சி பாடப் படுகின்றது.

கிருஷ்ணாநுபவத்திற்குப் பிரதான உபகரணமான காதலும்,
ஏகாந்தமான காலமும்,
கோவலக் கிழவர்களின் இசைவும்
பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களுக்கும் ஒருங்கே வாய்த்திருக்கையாலே
அவரவர் தனித்தனியே அநுபவிக்க அமைந்திருக்க,
ஒருவரை ஒருவர் சென்றெழுப்புவானென் எனில்;

பெருக்காற்றில் இழிவார் துணையின்றி இழிய மாட்டாதவாறு போல’
“காலாழும் நெஞ்சழியுங் கண் சுழலும்” என்றும்,
“செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட் செய்மின்” என்று மருளிச் செய்தபடி –
இழிந்தாரைக் குமிழ் நீரூட்டவல்ல ஆழியானென்னுமாழமோழையில் இழியுமிவர்கள்
துணையின்றி இழிய அஞ்சித் துணை கூட்டிக் கொள்வதற்காக ஒருவரை ஒருவர் உணர்த்துகின்றனரென்க.

அன்றியும்,
“ஏக: ஸ்வாது ந புஞ்ஜீத”
“இன் கனி தினயருந்தான்” என்றபடி சுவைமிக்க பொருள் தனியே புஜிக்கத் தக்கதல்லாமையால்
தோழிமார்களுடன் கூடிப் புசிக்கப் பாரிக்கின்றன ரென்றுங்கொள்க.

“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி
பகவத் ஸமாச்ரயணம் பாகவத புரஸ்கார பூர்வகமாகச் செய்யப்பட வேண்டுதலால்,
அதனை அனுட்டித்துக் காட்டுகின்றனரென்பது, ஆழ்கருத்து.

இனி. அனைவர்க்கும் கிருஷ்ணாநுபவத்தில் அவா ஒத்திருக்குமாகில்
சிலர் எழுப்பச் சிலர் உறங்குகை அவாவிற்குக் குறையன்றோ எனின்; அன்று;

கண்ண பிரானது திவ்ய சேஷ்டிதங்களும் கல்யாண குணங்களும்
சிலரை நஞ்சுண்டாரைப் போலே மயங்கப்பண்ணும்;

சிலரை இருந்தவிடத்தில் இருக்கவொட்டாதே துடிக்கப் பண்ணும்;

ஆகையால் அவாவிற்குக் குறையாமாறு ஒன்றுமின்றென்க.

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

புள்ளும்-பறவைகளும்
சிலம்பின காண்–(இரை தேடுகைக்காக எழுந்து) ஆரவாரங்கள் செய்யா நின்றன காண்;
புள் அரையன்-பறவைத் தலைவனான பெரிய திருவடிக்கு
கோ–ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய
இல்லில்–ஸந்நிதியிலே
வெள்ளை–வெண்மை நிறமுடையதும்
விளி-(அனைவரையும்) அழையா நிற்பதுமான
சங்கின்–சங்கினுடைய
பேர் அரவம்–பேரொலியையும்
கேட்டிலையோ–செவிப்படுத்துகின்றலையோ?
பிள்ளாய்–(பகவத் விஷய ரஸ மறியப் பெறாத) பெண்ணெ!
எழுந்திராய்–(சடக்கென) எழுந்திரு;
பேய் முலை நஞ்சு–பூனையின் முலையில் (தடவிக் கிடந்த) விஷத்தை
உண்டு-(அவளது ஆவியுடன் அமுது செய்து
கள்ளம் சகடம்–வஞ்சனை பொருந்திய (அஸுரா விஷ்டமான) சகடமானது
கலக்கு அழிய–கட்டுக் குலையும்படி
கால்–திருவடியை
ஒச்சி–ஓங்கச் செய்தவனும்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவில்–திருவனந்தாழ்வான் மீது
துயில் அமர்ந்த–திருக்கண் வளர்ந்தருளின
வித்தினை-ஐகத் காரண பூதனுமான எம்பெருமானை
முனிவர்களும்–மநந சீலரான ரிஷிகளும்
யோகிகளும்–யோகப் பயிற்சியில் ஊன்றினவர்களும்
உள்ளத்து கொண்டு–(தமது) ஹ்ருதயத்தில் அமர்த்திக் கொண்டு
மெள்ள எழுந்து-(ஹ்ருதயஸ்தனான அவ்வெம்பெருமான் அசையாதபடி) ஸாவதாநமாக எழுந்து
அரி என்ற–‘ஹரிர் ஹரிர் என்ற
பேர் அரவம்-பேரொலியானது
உள்ளம் புகுந்து-(எமது) நெஞ்சிற் புகுந்து
குளிர்ந்து–குளிர்ந்தது;
ஏல் ஓர் எம் பாவாய்
(இனியாகிலும் எழுந்திரு என்று ஒருத்தியை உணர்த்துகின்ற படி)

இனி இப் பாட்டின் கருத்து:-
முந்துற உணர்ந்த பெண் பிள்ளைகள், பொழுது வடிந்தமையையு மறியாமற் கிடந்துறங்குகின்றாளொருத்தியின்
மாளிகை வாசலிற் சென்று சேர்ந்து
பிள்ளாய்! விடிந்த பின்பும் இங்ஙனே கிடந்துறங்கலாகுமோ?’ என்று வெறுக்க,

அதனைக் கேட்ட அவள் ‘பொழுது விடிந்தாலன்றோ எழுந்திருக்க வேண்டுவது;
பொழுது விடிந்தமைக்கு அடையாளமேது? என்று கேட்க;
‘நாங்கள் இங்ஙனே உணர்ந்து வந்தது அடையாளமாகவற்றன்றொ?’ என்று இவர்கள் கூற,
அதற்கு அவள் ‘உறங்கினார் உணரிலன்றோ விடிந்ததாவது;
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்றபடி
உங்களுக்கு உறக்கந்தானில்லையே; ஆன பின்பு உங்களுணர்த்தி விடிவுக்கு அடையாளமாக மாட்டாது;

வேறடையான முண்டாகிற் சொல்லுங்கள்’ என்ன;
“புள்ளுஞ் சிலம்பினகாண்” என்று முந்துற ஓரடையாளங் கூறுகின்றனர்.

பறவைகள், மார்கழி நீராடவேணு மென்னும் விரைவுமின்றி,
வைகி எழுந்திருக்கில் குற்றமுண்டென்னுமறிவுமின்றி யிருக்க உணர்ந்தது –
காலமுணர்த்த உணர்ந்தபடியாதலால் இது போது விடிவுக்கு ஏற்ற அடையாளமாமென்பது இவர்களின் கருத்து.

இவ்வடையாளங் கூறக்கேட்ட அவள்,
‘உங்களுணர்த்தி விடிவுக்கு அடையாளமாக மாட்டாதவாறு போலவே
உங்களூரிலுள்ள பறவைகளின் உணர்த்தியும் விடிவுக்கு அடையாளமாக மாட்டாது;
“ஊரும் நாடு முலகமுந்தன்னைப் போலவனுடைய, பேருந்தார்களுமே பிதற்ற” என்றாற்போல
நீங்கள் நுமதருகிலுள்ள அனைத்தையும் தமமோடொத்தன வாக்குமவரர்களன்றோ’ என்று கூற,
அதனைவிட்டு வேறடையாளங் கூறுகின்றனர் –

திருப்பள்ளியெழுச்சிக்கு ஊதின சங்கின் ஒலியும் செவியிற்பட்டதில்லையோ? என்கிறார்கள்.

கண்ண பிரானுடைய குணங்களில் ஈடுபட்டிருப்பார் உறையுமிடமான திருவாய்ப்பாடியிலும் கோயிலுண்டோ என்னில்;
“ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந்கதா:” என்று திருவயோதியில் சக்ரவர்த்தித் திருமகனாருடைய
குணங்களிலே தோற்றுச் செல்லா நிற்கச் செய்தே,
“ஸஹ பத்ந்யா விசாலாக்ஷயா நாராயணமுபாகமத்” என்று பெருமாள் பிராட்டியுடன் கூடிப்
பெரிய பெருமாளை உபாஸித்ததாகச் சொல்லிற்றிறே;
அங்குப் போலே இங்கும் ஒரு திருக்கோயில் உண்டென்னலாம்.

புள் அரையன் –
புள் என்றே பெரிய திருவடியைச் சொல்லிற்றாய்,
அரையன் என்று அவற்குத் தலைவனான எம்பெருமானைச் சொல்லிற்றாகவுமாம்.

இப்படி பெரிய திருவடியை யிட்டு எம்பெருமானை நிரூபிக்கிறவிது – “ராமம் லக்ஷமண பூர்வஜம்” என்று
இளைய பெருமாளையிட்டுப் பெருமாளை நிரூபித்தாற்போலுமென்ப.
எம்பெருமானை அடியார் பக்கலிற் கொண்டு வந்து கூட்டுமவன் கருடனாகையாலே அவனிடத்துள்ள உகப்புத் தோற்ற
அவனையிட்டு நிரூபிக்கிறபடி;
“புள்ளின் பின் போன தனி நெஞ்சமே” என்றிருக்குமவர்களன்றோ.

இனி இவ்வடையாளத்துக்கும் மறுப்புக் கூறுகின்றாள் உள்ளுறங்குமவள்;-
“வெள்ளை விளி சங்கின் பேரரவம்” என்றீர்கள்;
சங்குக்கு வெண்மை நிறம் இயற்கை யாகையால், வெள்ளை என்ற அடைமொழி வியர்த்தம்;
விளி சங்கு என்கிறீர்கள்; சாமர் தோறும் அழைக்கக் கடவதான சங்கு என்றதாகிறது;
ஆகையாலே இது பொழுது விடிவை உணர்த்தவல்ல சங்கன்று;
பேரரவம் என்கிறீர்கள்; பெருத்த ஒலியாகில் உங்களுக்குப் போலே எனக்கும் செவிப்பட வேணும்;
செவிப்படாமையாலே அப்ரஸித்தம்;
ஆன பின்பு நீங்கள் சொல்லுமதெல்லாம் போது விடிவுக்கு அடையாளமாக மாட்டாது என்றனள்.

இனி இதற்கு ஸமாதாநம் –
கேட்டிலையோ என்பது.
இப்படிப்பட்ட பேரொலியும் செவிப்படாதபடி நீ உள்ளே செய்யுஞ்செய்கை என்னே என்கை.

பிள்ளாய் – பேதைமை யுடையவளே! என்றபடி;
இது ஸாபிப்ராய ஸம்போதநம். பாகவத ஸம்ஸ்லேஷத்தளவு முண்டானாலல்லது பகவத் விஷய
ப்ராவண்த்திற்குப் பரிபூர்த்தியில்லை; நீ அங்ஙனன்றியே கிருஷ்ண ஸம்ஸ்லேஷத் தளவிலேயே நின்று
பாகவத ஸம்ஸ்லேஷத்தில் விருப்பமற்றிருப்பது பேதைமையின் பணியன்றோ என்றவாறு.

இங்ஙன் சொல்லக் கேட்ட அவள், “நானோ கிருஷ்ண ஸம்ஸ்லேஷத்தளவில் நிற்கிறேன்?
உங்களது இனிய பேச்சுக்களைக் கேட்டு உளங்கனிந்திருக்கிற என்னைப் பிள்ளை யென்கிற நீங்களன்றோ பிள்ளைகள்” என்ன;
இவர்கள், ‘வெறுமனே பேச்சுக் கேட்டுக் கிடக்க வொண்ணுமோ?
“அடியார்கள் தம், ஈட்டங் கண்டிடக் கூடுமேல் அது காணுங் கண் பயனாவதே”
“அடியார்கள் குழாங்களை உடன்கூடுவ தென்றுகொலோ”
“பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்றிப்புடைகளிலே யன்றோ
பெரியார் பணித்த பாசுரமிருப்பது;
அப்படியே உன் வடிவை நாங்கள் கண்டு எங்கள் வடிவை நீ கண்டு அநுபவிக்க விரும்பாதே
எங்கள் வார்த்தைகளுக்குக் கண்ணழிவுஞ் சொல்லுகிற நீ யன்றோ பிள்ளை’ என்ன;
அது கேட்ட அவள், “நீங்கள் சொன்னபடியே நான் பிள்ளையாகிநேன்;
கர்ணாமிருதமான சில பேச்சுக்களைச் சொல்லுங்கள்” என்னச் சொல்லுகிறார்கள்,
பேய்முலை நஞ்சுண்டு என்று தொடங்கி.

பேய்முலை நஞ்சுண்ட வரலாறு :-
கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாதலால் அக் கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன்,
தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்து வளர்தலை அறிந்து, அக்குழந்தையை நாடி யுணர்ந்து
கொல்லும் பொருட்டுப் பல அசுரர்களை ஏவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி
நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக் கொண்டிருந்த
கண்ணனாகிய குழந்தையை எடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல,
பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே
அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் போpரைச்சலிட்டுக் கதற உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி
விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

கள்ளச்சகடங் கலக்கழியக் காலோச்சின வரலாறு:-
நந்தகோபர் திருமாளிகையில் ஒரு வண்டியின் கீழ்ப்புரத்திலே தொட்டிலிற் பள்ளி கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன்,
ஒரு கால் அச்சகடத்திற் கஞ்சனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத் தன்மேலே விழுந்து
தன்னைக் கொல்ல முயன்றமை அறிந்து பாலுக்காக அழுகிற பாவனையிலே தன் சிறிய திருவடிகளை
மேலே தூக்கி உதைத்தருள, அவ்வுதைபட்ட மாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரனுட்பட அழிந்ததென்பதாம்.

இவ்விரண்டு அபதாநங்களையும் இங்கெடுத்துக் கூறியது –
உள்ளுறங்குமிவள் அஞ்சிக் கடுக எழுந்தோடி வருதற்கென்க.
ஸர்வேஸ்வரனாலே தத்தம் இடர்களைக் களைந்து கொள்ளக் கருதுவார் அல்லாதார்;
பெரியாழ்வாரோட்டைச் சம்பந்தமுடையார் அங்ஙனன்றி “எம்பெருமானுக்கு என்ன அவத்யம் விளைகின்றதோ” என்று
வயிறு பிடிக்குமவர்களாகையாலே,
பூதனையினுடையவும் சகடத்தினுடையவும் பிரஸ்தாவத்தை தொடங்கினால்
“கண்ண பிரானுக்கு இங்ஙனே சில தீமைகள் வினைந்தனவே!” என்று நெஞ்சு வெதுப்புண்டு
துணுக்கென் றெழுந்திருக்கக் கூடுமென்பது வாசலிற் கூவுமாய்ச்சிகளின் கருத்து.
இங்குக் குலசேகராழ்வார் சரித்திரம் நினைக்கத்தக்கது.

திருப்பாற்கடலிற்கிடை அவதாரங்கட்கு அடிக்கிழங்காதல்பற்றி
“வெள்ளைத் தரவில் துயிலமர்ந்த வித்தினை” எனப்பட்டது.
உழவர் விரையை நீரீலே சேர்ப்பது போல் உலக்ஙகட்கெல்லாம் விதை போன்ற தான் நிரீலே சேர்ந்தானென்பது ரஸோக்தி.

முனிவர்கள் – மநந சீலர்கள்;
அவராவார் – ஒரு ப்ரவ்ருத்திக்குங் கடவராகமாட்டாதே குணா நுபவ மாத்திரத்தில் ஒருப்பட்டவர்கள்.

யோகிகள் – கைங்கர்ய நிஷ்ட்டர்கள்.
ஸ்ரீ பரதாழ்வானையும் இளைய பெருமாளையும் அடைவே ஒப்புக்கொள்க.

மெள்ள எழுந்து –
வயிறு வாய்க்கப் பெற்ற மாதர் (கர்ப்பிணி ஸ்திரீகள்) வயிற்றினுள் உறையும் பிள்ளைக்கு
நோவு வராதபடி மெள்ள எழுந்திருப்பது போலவும்,
மகனை நலியுமாறு இரணியனால் எவப்பட்ட கிங்கரர்களினால் ப்ரஹலாதாழ்வான் மலைமுடிகளினின்று
தள்ளுண்ணம் போது “ஹ்ருதயேநோத்வஹந் ஹரிம்” என்றபடி – ‘பார்த்தருள் பார்த்தருள்” என்று
ஹ்ருதய குஹரவாஸியான ஸர்வேச்வரனைப் பிடித்துக்கொண்டாற் போலவும்
எம்பெருமானை உள்ளத்துக் கொண்ட இம்முனிவர்களும் யோகிகளும்
அவ் வெம்பெருமான் தறும்பாதபடி எழுந்திருப்பார்க ளென்றுணர்க.

உஷ: காலத்தில் உணரும் போது ‘ஹரிர் ஹரி:’ ‘ஹரிர் ஹரி:’ என்ற அநுஸந்தானத்துடன்
உணர வேண்டுமென்பது விதியாதலால், அதன்படி அவர்கள் அத்தனை பேருந்திரண்டு அநுஸந்தித்த
ஹரி நாமத்தின் பேரொலி இப்பாடியெங்கும் பரவிச்செல்ல, அதுகேட்டு நாங்கள் உணர்ந்து வந்தோம்;
இது பொழுது விடிவுக்கு ஏற்ற அடையாளம்; இதற்குக் கண்ணழிவு சொல்ல உன்னாலாகாது;
ஆனபின்பு கடுக எழுந்து எங்களுடன் கூடப்பெறாய் என்று கூவியவாறு.

“புள்ளரையன் கோயில்” என்ற பாடமும் கொள்ளற்பாலதே.
“பேரரவம்” என்றவிடத்து, அரவம் – ரவ: என்ற வடசொல் விகாரம்.
வெள்ளம் – திருப்பாற் கடற்கு ஆகுபெயர்.
வித்தினை – வித்து இன் ஐ – , இன் சாரீயை; வித்தை யென்றபடி.
குளிர்ந்து-‘குளிர்ந்து’ என்னும் வினைமுற்றின் தொகுத்தல்.

(ஸ்வாபதேசம்)
இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம்.
பிள்ளாய்! என்பது இதில் விளி. அறிவில்லாதவனைப் பிள்ளை யென்பது.
எம்பெருமானுடைய ஸர்வ ரக்ஷகத்வம் முதலிய திருக் குணங்களை மறந்தே இவ்வாழ்வார்;
மங்களாசாஸனத்தில் ஒருப்பட்டாராதலால் பள்ளை யென்னத் தகுதியுடையாராயினர்.
“ஜ்ஞாந விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை யெல்லாம் அடிக் கழஞ்சு பெறும்” என்ற
ஸ்ரீவசனபூஷண திவ்ய பூஷ ஸூக்தியும் மங்களாசாஸநத்திற்கு அஜ்ஞானத்தையே மூலமாகக் காட்டிற்று.

இவ்வாழ்வார் பெரும்பாலும் நந்தனவனத்திலேயே போது போக்குவராதலால் அவ்விடத்து அடையாளமாகிய
‘புட்களின் சிலம்புதல்’ முன்னே கூறப்பட்டது.

புள்ளரையன் என்று பெரிய திருவடியின் ப்ரஸ்தாவம் செய்திருப்பதில் இப்பெரியாழ்வார்
பெரிய திருவடியின் அம்சமாகத் திருவவதரித்தவர் என்று குருபரம்பரா ப்ரபாவாதிகளிற் கூறியுள்ள
விஷயம் முத்ராலங்காராPதியில் ஸூசிதமாகிறது,

‘வெள்ளை விளிசங்கு’ என்கிற சொல்தொடர் முதன் முதலாகப் பெரியாழ்வாருடைய திருவாக்கில் தோன்றியது.
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – (பெரியாழ்வார் திருமொழி 4-1-7 காண்க.)
அதனை இங்கு அநுவதித்துக் காட்டுவது ஒருவகையான லிங்கம்.

(பேய்முலை நஞ்சுண்டு) பெரியாழ்வார் திருமொழியில் (சீதக் கடலில்) கண்ணபிரானுடைய சரித்திரங்களில்
பேய்முலை நஞ்சுண்ட கதை முதன் முதலாக அநுஸந்திக்கப்பட்டது.
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-என்றது காண்க.

மறுபடியும் அந்தச் சரித்திரத்தை அநுஸந்திக்கையில் சகடாஸுரபங்கத்தையும் கூட்டி யநுஸந்தித்தார்.
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடிப் போய்
வாள் கொள் வளை எயிறு ஆர் உயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11—என்ற பாசுரங் காண்க.
அதற்குப் பொருந்த இங்கு
“பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடங் கலக்கழியக் காலோச்சி” என்றது.

“வெள்ளத்தரவில்” என்று தொடங்கிப் பெரியாழ்வார்க்குள்ள ‘விஷ்ணுசித்தர்’ என்னுற்திருநாமமும்
அதற்கு விவரணமான “அரவத்தமளியினோடும்”
“பனிக்கடலில் பள்ளிகோளை” என்ற பாசுரங்களின் தாற்ரியமும் நன்கு ஸூசிதம்.

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5 2-10 –

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5 4-9 –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–மாயனை மன்னு வடமதுரை- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

நோன்பு நோற்கும் பெண்களில் ஒருத்தி,
‘நாம் நோன்பு நோற்று எம்பெருமானை அநுபவிக்க இலையகலப் பாரியா நின்றோம்; இஃது அழகியவாறே;
‘ச்ரேயாம்ஸி பஹு விக்நாநி பவந்தி மஹதாமபி” என்று மேலையார் செய்யும் நற்சிரிசைகட்கும்
பல இடையூறுகள் மிடைதரமென்று நூல்கள் கூறும்;

இராமபிரானை முடிசூட்டுதற்காகச் சம்பராந்தகனான தசரத சக்கரவர்த்தி பாரித்தான்;
பிரமவிருடியான வசிட்டன் முஹூர்த்தமிட்டான்; ஸாக்ஷாத் தரும்மெனப்பட்ட இராமன் முடிசூட நின்றான்;
பிராட்டியோடே கூடிப் பெரிய பெருமாளைத் தொழுதிறைஞ்சினான்;
நாடடங்கலும் இவ்வபிஷேக மங்களத்தைப் பிரார்த்தித்து மங்களாசாஸநம் செய்யா நின்றது;
இங்ஙனம் அமைந்திடவும் அந்த மங்கள காரியத்திற்குமன்றோ இடையூறு மிடைதந்தது;

நாம் நெடுநாளாகப் பண்ணியுள்ள பாவங்கள் பல கிடக்க இன்று செய்யக் கருதிய நற்கிரிசை நன்னர் நிறைவேறுமோ?’ என்று கேட்க;

நாம் பகவந்நாம ஸங்கீர்த்தநம் பண்ணவே பாவங்களனைத்தும் தீயிலிட்ட பஞ்சு போல உருமாய்ந்தொழியுமாதலால்
அத்திரு நாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணக் கடவையென்று
அவளை நோக்கி மற்றொருத்தி உரைக்கும் பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

பதவுரை

மாயனை–மாயச் செயல்களை யுடையவனும்
மன்னு வடமதுரை மைந்தனை-(பகவத் ஸம்பந்தம்) நித்யமாகப் பெற்றுள்ள வட மதுரைக்குத் தலைவனும்,
தூய பெரு நீர்–பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தை யுடைய
யமுனை துறைவனை–யமுனை யாற்றங்கரையை நிரூபகமாக வுடையயவனும்,
ஆயர் குலத்தினில் தோன்றும்–இடைக் குலத்தில் விளங்கா நின்றுள்ள
அணி விளக்கை–மங்கள தீபம் போன்றவனும்
தாயை குடல் விளக்கஞ்செய்த–தாயாகிய தேவகி பிராட்டியின் வயிற்றை விளங்கச் செய்தவனுமான
தாமோதரனை–கண்ண பிரானை,
நாம்–(அடிச்சியோமாகிய) நாம்
தூயோம் ஆய் வந்து–பரி சுத்தி யுள்ளவர்களாய்க் கிட்டி
தூ மலர்கள் தூய்–நல்ல மலர்களைத் தூவி
தொழுது–வணங்கி
வாயினால் பாடி–வாயாரப் பாடி
மனத்தினால் சிந்திக்க–நெஞ்சார தியானம் பண்ண (அதன் பிறகு)
போய பிழையும்–(சேஷ சேஷிபாவ ஜ்ஞான முண்டாவதற்கு) முன்பு கழிந்த பாவங்களும்,
புகு தருவான் நின்றனவும்–பின்பு (தன்னை அறியாமல்) வரக் கூடிய பாவங்களும்
தீயினில் தூசு ஆகும்–நெருப்பிலிட்ட பஞ்சு போலே உருமாய்ந்து போம்; (ஆன பின்பு)
செப்பு–அவ் வெம்பெருமான் திரு நாமங்களைச் சொல்;
ஏல் ஓர் எம் பாவாய்!

ஸர்வேஸ்வரன் பரமபத நிலயனாயிருந்து வைத்துத் திருவாய்ப்பாடியிற் கண்ண பிரானாய் அவதரித்துக்
கோவலர்க்கும் கோக்களுக்குந் தான் எளியனாய்,
வெண்ணெய் களவு காண்பது, மாதரைக் களவு காண்பதாய்ச் செய்த ஆச்சரியச் செயல்களின்
அளவின்மையை நினைத்து “மாயனை” என்றது.
“சூட்டுநன் மாலைகள்” என்ற பாசுரமுங் காண்க.

திருவடமதுரையில் ஸித்தாஸ்ரமத்தில் ஸ்ரீவாமநனாய்த் தவம் புரிந்திருந்தமையாலும்
ஸ்ரீசத்ருக்நாழ்வான் படை யெடுத்துப் பகை யறுத்துத் தனக்குப் படை வீடாகப் பெற்று நெடுநாள் அரசாண்டமையாலும்,
கிருஷ்ணனாய் வந்து பிறந்தமையாலும்
இவ்வகைகளாலே மதுரைக்குப் பகவத் ஸம்பந்தம் நித்தியமாயிருக்குந் தன்மை பற்றி
மன்னு என்று வடமதுரைக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.

மைந்தன் – மிடுக்கை யுடையவன்; மைந்து – மிடுக்கு,
“தந்தைகாலிற் பெருவிலங்கு தாளவிழ நள்ளிட்கண், வந்தவெந்தை” என்றபடி
கண்ணபிரான் தான் பிறக்கும் போதே
வஸுதேவ தேவகிகளின் காலில் விலங்கு இற்று முறியுமாறு பிறந்த மிடுக்கைக் கூறியவாறு;
பருவம் நிரம்புவதற்கு முன்னே கஞ்சன் குஞ்சி பிடித்துதைத்த மிடுக்கைக் கூறியவாறுமாம்.

கண்ணன் திருமதுரையிற் பிறந்தவாறே வஸுதேவன் கம்ஸனிடத்துள்ள அச்சத்தினால்
அப் பிள்ளையைத் திருவாய்ப்பாடியில் ஒளிந்து வளர்க்கக் கருதி எழுந்தருள்வித்துக் கொண்டு செல்ல,
வழியிடையிற் பெரு வள்ளமாய்ப் பெருகிக் கொண்டிருந்த யமுனையாறு தன்னை முழந்தாளளவாக வற்றுவித்து
வழி தந்தமையால், அவ்வாற்றிற்கு இதனை ஒப்புயர்வற்ற தூய்மையாகக் கருதித் தூய பெருநீர் என விசேஷிக்கப்பட்டது.

இங்கு, “யமுநாஞ்சாதி கம்பீராம் நாநாவர்த்த ஜஷாகுலாம் –
வஸுதேவோ வஹந் க்ருஷ்ணம் ஜாநுமாத்ரோத கோயயௌ.” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம் நோக்கத் தக்கது.

பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தாலே, அஞ்சியிருந்த கோதாவரி போலன்றியே
கம்ஸன் மாளிகை நிழற்கீழே வற்றிக் கொடுத்ததே தூய்மையாம்.

பெருநீர் – அஞ்சுலக்ஷங்குடியிற் பெண்களும் கண்ணனுங்கூடி ஜலக்ரீடை பண்ணுவதற்கும்,
பெண்கள் விரஹ தாபந்தீரக் குளிக்கைக்கும் பரியாப்தமான நீரை யுடைய வென்றபடி.
பெருமை பொருந்திய நீரையுடைய வென்றுமாம்.

கவிபாடுவார்க்கு ஊர், பேர், ஆறு முதலியவை வேண்டுமாகையால்,
“வடமதுரை மைந்தனை” என்று ஊரும்,
“தாமோதரனை” என்று பேரும்,
“யமுனைத்துறைவனை” என்று ஆறுங் கூறப்பட்டன.

“முத்துப்படுந்துறை, நவமணி படுந்துறை” என்னுமாபோலே,
கண்ணபிரானுக்கு எமுனையாறு பெண்கள் படுந்துறையாகையால் “யமுனைத்துறைவனை” எனப்பட்டது.

“ஆயர் குலத்தினிற் பிறந்த” என்னாது, “தோன்றும்” என்றது,
“தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,” என்ற புராண நடையை அடியொற்றி யென்க:

கீழ்த் திசையில் உதிக்கின்ற ஆதித்தியனுக்கு அத் திசையிற் பற்றுண்டாவதென்ற கருத்துத் தோன்றக் கூறினான் முனிவனென்பர்.
ஆகில், “கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்”
“மன்னு நாரணன் நம்பி பிறந்தமை”
“பிறந்தவாறும்” என்றிப்புடைகளிலே கூறப்பட்டுள்ளவற்றுக்குப் பொருந்த மெங்ஙனே யெனில்;

ஸம்ஸாரிகள் பத்து மாதம் கர்ப்ப வாஸம் பண்ணினால்,
“பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால்” என்றபடி
தான் பன்னிரண்டு மாதம் கர்ப்ப வாஸம் பண்ணுகையாலும்,
பெற்ற தாய்க்கு முலை சுரக்கையாலும்,
முலை பெறாவிடில் இவன் தான் நோவுபடுகையாலும்,
தன்னைக் கட்டவு மடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் அங்ஙன் கூறப்படுகின்றதெனக் கொள்க.

இனி, வடமதுரையிற் பிறந்த கண்ணபிரானை ஆயர் குலத்தினிற் பிறந்தனனாகக் கூறுவானென்னெனில்;
முலைப்பால் குடித்து அழுதவிடமே பிறந்த இடமாதல் பற்றி யென்க.
அன்றி, மதுரையில் மறைந்திருந்து ஆய்க் குலத்தில் வெளிப்பட்டமை பற்றியுமாம்.

உடலை நீக்கித் தலையையும், தலையை நீக்கி உடலையுங் கழுவுமவர்களான இடைச்சிகள்
“தூயோமாய்” என்கிறார்களே, இவர்கட்குத் தூய்மையாவதென்? எனில்;

எம்பெருமானிடத்தில் ஸம்பந்தவுணர்ச்சிக்கு மேற்பட வேறொரு சுத்தியும் ஆத்மாவுக்கு இலதாதலால்
அத் தூய்மை கூறப்படுகின்றது.

“மமசாப்யந்தராத்மாயம் சுத்தம் வேத்தி விபீஷணம்.” என்று –
ஸுக்ரீவ மஹாராஜர; இராமபிரானிடத்து விபீஷணழ்வானைச் சுத்தனென்றது, மேற்கூறிய தூய்மையைக் கருதியன்றோ.

தூமலர்கள் – மலர்க்குத் தூய்மையாவது –
ஒரு பிரயோஜநத்தை விரும்பி இடப்படாதொழிகை.
தூய் என்ற சொற்போக்கால், எம்பெருமானது திருவடிகளில் மலர்களை மிக்க ஆதரத்துடன்
ஸமர்ப்பிக்க வேணுமென்றொரு நியதியில்லை;
அடைவு கெடத்தூவிலும்மையு மென்பது போதரும்.

தொழுது, பாடி, சிந்திக்க என்று
மனமொழி மெய்களாகிற முக்கரணங்களினுடையவும் வியாபாரங்கள் கூறப்பட்டன.

இனி, தொழுகை, பாடுகை, சிந்தனையாகிய இக்காரியங்களினாற் பெறும் பேறு கூறுவன்,
கடையிரண்டடிகள்.

எம்பெருமானை யடிபணிவதற்கு முன்பு செய்யப்பட்ட பிழைகள் – போய பிழை; (பூர்வாகம்) எனப்படும்.
அடி பணிந்த பின்னர் பிரகிருதி வாஸனையினால் அபுத்தி பூர்வமாகச் செய்யும் பிழைகள் –
புகுதருவான் நின்றான்; உத்தராக மெனப்படும்.
இவை யிரண்டும் தீயிலிட்ட தூசு போல உருமாய்ந்தொழியுமென்று பலன் கூறிற்றாயிற்று.

‘நாம் நெடு நாளாகப் பண்ணியுள்ள பாவங்கள் பல கிடக்க, இன்று செய்யக் கருதிய நற்கிரிசை
நன்னர் நிறைவேறுமோ?’ என்று வினவியவளை நோக்கியது,
செப்பு என்ற முன்னிலை வினைமுற்று!
இங்ஙன் ஒருத்தியை முன்னிலைப்படுத்திக் கூறியவிது அனைவரையும் நோக்கிக் கூறியவாறே யாமெனக் கொள்க;
உபலக்ஷணமென்க.

செப்ப என்று பிரிக்கவுமாம்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–ஆழி மழைக்கண்ணா- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

ஆயர் சிறுமியர் தாம் மார்கழி நீராடினால் நாட்டுக்கு விளையும் நன்மைகளை இங்ஙனே மநோ ரதித்துக் கொண்டிருக்க,

பர்ஜந்யனும், ‘எம்பெருமானடிபணியுமவர்கட்குச் சிறிது கிஞ்சித்கரித்து நாமும் நமது ஸ்வரூபத்தை
நிறம் பெறுவித்துக் கொள்ள வேணும்” எனக் கருதி,
‘நான் உங்கள் திறத்துச் செய்ய வேண்டுமடிமைத் திறத்தை ஆய்ந்துரைக்க வேணும்’ என்று
இவர்களின் நியமநத்தைப் பிரார்த்தித்து நிற்க,

ஆய்ச்சிகள், “பர்ஜந்யனே ! ‘பெண்கள் நோற்றபடி யென் ! மழை பெய்தபடி யென்!’ என்று
அனைவரும் தலை துலுக்கிக் கொண்டாடும்படி வர்ஷிக்க வேணும்” என்று
அவன் செய்ய வேண்டு மடிமையைக் கையோலை செய்து கொடுக்கின்றனர்; இப்பாட்டால்.
(பர்ஜந்யன் – மழைக்கு நிர்வாஹகன்; மேகமென்றவாறு.)

ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

ஆழி மழை கண்ணா–மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான பர்ஜந்யனே !
நீ–நீ
கை-(உன்னுடைய) கொடையில்
ஒன்றும்-ஒன்றையும்
கரவேல்–ஒளியா தொழியவேணும்; (நீ செய்ய வேண்டிய பணி என்ன வென்றால்)
ஆழியுள் புக்கு–கடலினுட் புகுந்து
முகந்து கொடு–(அங்குள்ள நீரை) மொண்டு கொடு
ஆர்த்து–கர்ஜனை பண்ணி (பேரொலி செய்து)
ஏறி–(ஆகாயத்தே) ஏறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து–காலம் முதலிய ஸகல பதார்தத்ங்களுக்குங் காரண பூதனான
எம் பெருமானுடைய திருமேனி போல் (உனது) உடம்பிற் கருமை பெற்று
பாழி அம் தோள் உடை பற்பநாபன் கையில்–பெருமையும் அழகும் கொருந்திய தோள்களை யுடையவனும்,
நாபிக் கமல முடையனுமான எம் பெருமானுடைய கையில் (வலப் பக்கத்திலுள்ள)
ஆழி போல் மின்னி–திருவாழி யாழ்வானைப் போல் ஒளி மல்கி,
வலம்புரி போல் நின்று அதிர்ந்து–(இடப் பக்கத்திலுள்ள) பாஞ்ச ஜந்யாழ்வானைப் போல் நிலை நின்று முழங்கி,
சார்ங்கம் உதைத்த–ஸ்ரீ சார்ங்கத்தாலே தவளப்பட்ட
சரம் மழை போல்–பாண வர்ஷம் போல்,
வாழ (உலகத்தாரனைவரும்) வாழும்படியாகவும்
நாங்களும்–(கண்ண பிரானோட்டைக் கலவிக்கு நோன்பு நோற்கிற) நாங்களும்
மகிழ்ந்து–ஸந்தோஷித்து
மார்கழி நீராட–மார்கழி நீராட்டம் செய்யும் படியாகவும்
உலகினில்–இல் வுலகத்தில்
தாழாதே–தாமதம் செய்யாமல் (சடக்கென)
பெய்திடாய்–மழை பொழியக் கடவை.
ஏல் ஓர் எம் பாவாய் !.

வாராய் பர்ஜந்யனே ! உனது ஔதார்யத்தை நீ எள்ளளவும் ஒளிக்கலாகாது;
கடலினுட் புகுந்து அங்குள்ள நீரை முற்றும் முகந்து கொண்டு பெரு முழக்கஞ்செய்து வானத்தின் மீதேறி
எம்பெருமானது திருமேனி போலக் கருமை பூண்டு,
அவனது வலங்கை யாழிபோல் மின்னி இடங்கைச் சங்கம்போல் அதிர்ந்து,
ஸ்ரீ சார்ங்கம் சரமழை பொழியுமாறு போல நாடெங்கும் நீரைச் சொரிந்து
எமது மார்கழி நீராட்டத்தை மகிழ்ச்சியுடனே தலைக் கட்டவேணும் என்பது –
இவர்கள் கட்டளை யிடும் பரிசு.

ஸந்நிதிகளில் கைங்கர்ய பரர்களை அருளிப் பாடிடும் போது,
“குடை தூக்குவான்!, சாமரை வீசுவான்!, திருச்சின்ன மூதுவான் !” என்றிங்ஙனே அவரவர்கள் அதிகரித்த
காரியத்தை யிட்டு அருளிப் பாடிடுவது ஸம்ப்ரதாய மாதலால்
இவர்களும் அந் நடையை அடி யொற்றி “ஆழி மழைக் கண்ணா!” என்று
அவன் அதிகரித்த காரியத்தையிட்டு அழைக்கின்றனரென்க.

எம்பெருமான் படைப்புத் துடைப்புத் தொழில்களை அயனரர் தலையிலிட்டுத் தான் காத்தற்றொழிலைக் கைப்பற்றினாற்போல,
‘பிடி, அடி’ என்னுங் காரியத்தை நமன் முதலியோர் தலையிலிட்டு,
உனது நீர்மைக்குப் பொருந்த எல்லாரையுங் குளிர நோக்குங் காரியத்தில்
நியமிக்கப்பட்டவனன்றொ நீ எனப் புகழ்கின்றவாறு காண்க.

ஒன்றும் நீ கை கரவேல் :-
உன் கொடையில் ஒன்றும் வஞ்சியாதொழிய வேணும் என்றபடி.
புண்ணியம் பண்ணினாரிருந்தவிடத்து வர்ஷித்தல், பாவம் பண்ணினாரிருந்தவிடத்து வர்ஷியாதொழிதல்
என்றொரு விஷம நியதி கொள்ளற்பாலதன் றென்கை.
கை கரக்கை – கொடை மாறுகை.

மேகத்தின் முழக்கம் மகிழ்ச்சிக்கு உறுப்பாதலால் ஆர்த்து என்று அம் முழக்கத்தை வேண்டுகின்றனர்.
கடல் கடந்து இலங்கைக்குச் சென்ற அனுமன் செய்தியை உணராத குரக்கினங்கள்
கடற்கு இக் கரையில் வருந்தி ஏங்கிக் கிடந்த போழ்து, அனுமன் பிராட்டியைக் கண்ட களிப்பின் மிகுதியால்
ஆரவாரித்துக் கொண்டு வந்து இவ் வாநர வீரர்களை மகிழ்வித்தவாறு போல
நீயும் ஆரவாரத்தினால் எம்மை மகிழ்விக்க வேணுமென வேண்டியவாறு.

ஏறி என்றதனால்,
முகந் தோற்றாமே நின்று காரியஞ்செய்யும் எம்பெருமானைப் போலன்றி,
“விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல்” என்றபடி ஆகாசாவகாசமெல்லாம் வெளி யடையும்படி
உன் வடிவைப் பரப்பிக் காட்டிக் காரியஞ் செய்ய வேணுமென்ற விருப்பம் தோன்றும்.

ஊழி முதல்வன் –
ஊழி என்று காலத்துக்குப் பெயர்;
இங்குக் காலத்தைக் கூறியது மற்றுமுள்ள எல்லாப் பதார்த்தங்களையுங் கூறியவாறாம்;
இஃது உபலக்ஷணமெனப்படும்.
“உருவம் போல் மெய் கறுத்து” என்ற சொல் நயத்தால்,
அவ் வெம்பெருமானது திருமேனியின் நிறத்தை மாத்திரம் நீ ஒருபுடை ஏறிட்டுக் கொள்ளலாம் அத்தனை யொழிய,
அவன்றன் அக வாயில் தண்ணளி எவ் வகையானும்
உன்னால் ஏறிடுவித்துக் கொள்ள அரிது என்னுங்கருத்துத் தோன்றுமென்ப.

இங்கு, “நாச்சியார் விழி விழிக்க வொண்ணாது என்றாற்போலே” என்ற
ஆறாயிரப்படி அருளிச் செயல் நோக்கத் தக்கது;
அவ் வாக்கியத்தின் பொருள் வருமாறு:-
திருவரங்கம் பெரிய கோயிலில் சிறிய திருவத்யயநோத்ஸவத்திற் கடைநாளிரவு ஸ்ரீரங்கநாதன்,
நாச்சியார் திருக் கோலம் பூண்டு, ஸேவை ஸாதித்தருள, ஸ்ரீபட்டர் ஸேவித்துப் பெருமானை நோக்கி
‘நாச்சியாருடைய வேஷத்தை ஏறிட்டுக் கொண்டதத்தனை யொழிய அவள் போல் விழி விழிக்க உன்னாலாகாதே’
என்றுரைத்தருளினாரென்ற ஐதிஹ்யத்தை உளப்படுத்தியவாறு.

கண்ண பிரானது திருமேனி நிறத்தைக் காண விருப்பமுடைய இவர்கள்
அதன் போலியை யாகிலுங்கண்டு களிப்போமென்னுமாசையால்
“ஊழி முதல்வனுருவம் போல் மெய் கறுத்து” என்கிறார்கனென்னுங் கருத்துமுணரற்பாலது.

பாழி அம் தோள் –
வலிமையும் அழகும் பொருந்திய தோள்;
எனவே, ரக்ஷகத்வ போக்யத்வங்களிரண்டும் தோளுக்குள்ளன வென்றதாயிற்று.

பற்பநாபன் கையிலாழி போல் மின்னி –
“பற்பநாபன் போல் மின்னி” என்னாதொழிந்ததென் எனில்;
அரசனை நோக்கி ‘உனக்கு மகன் பிறந்தான்’ என்றால் அவன் தனது காம்பீர்யந் தோற்றம் பேசாதிருப்பினும்
உரிய அடியார் பக்கலில் உகப்பும் அதனாலாய கார்யங்களுங் காணப்படுதல் போல,
வெற்றி பெற்ற எம்பெருமான் தான் ஸாதாரணமாயிருப்பினும் திருவாழி யாழ்வான்
மிக மின்னித் தோற்றுவனாதலால் “ஆழி போல் மின்னி” என்றனரென்க.

“சார்ங்கமுதைத்த சர மழைபோல்” என்றவுடனே,
அச் சார்ங்கத்துச் சர மழை ராவணாதியரை முடித்தாற் போல்
இதுவும் முடித்து விடிற் செய்வதென் என்றஞ்சி வாழ உலகினிற் பெய்திடாய்” என்றனர்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–ஓங்கி உலகளந்த- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

உலகத்தில் ஸ்வர்க்கத்தை முக்கியமான பேறாகக் கொண்டு ஜ்யோதிஷ்டோம யாகஞ் செய்பவற்கு,
ஆயுஸ்ஸு, ஸந்தாநம் என்று சில அவாந்தர பலங்களும் உடன் கூடும்;
இவ் வாயர் மங்கைகள் எம்பெருமானையே எல்லா வகைப் பயனாகவும் உள்ளத்துக் கொண்டுள்ளவர்களாதலால்
அவ்வெம்பெருமானொழிய வேறொரு பயனையும் விரும்ப மாட்டார்கள்;

ஆயினும் இவர்கள் விரும்ப வேண்டுவதொன்றுண்டு;
அதாவது தாங்கள் நோன்பு நோற்குமாறு
அநுமதி அளித்தவர்கட்குச் சில ஸம்ருத்திகளை ஆசாஸிக்கை.
அஃது இப்பாட்டிற்செல்லும்.

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்குமென்னா நின்றால்
இத்தனை மஹாநுபாவைகளிருக்கும் நாடு ஸம்ருத்தமாகச் சொல்ல வேண்டாவே–

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

ஓங்கி–(மஹாபலி வார்த்த நீர் கையில் விழுந்தவாறே) ஆகாசத்தளவும் வளர்ந்து
உலகு-(மூன்று) லோகங்களையும்
அளந்த-(திருவடிகளாலே தாவி) அளந்து கொண்ட
உத்தமன்–புருஷோத்தமனுடைய
பேர்–திருநாமங்களை
நாங்கள்–(பிரயோஜநாந்தரத்தை விரும்பாத) நாங்கள்
பாடி–(ப்ரீதிக்குப் போக்கு வீடாகப்) பாடி
நம் பாவைக்கு சாற்றி–நம் நோன்புக்கென்று சங்கற்பித்துக் கொண்டு
நீர் ஆடினால்–நீராடினால்
நாடு எல்லாம்–தேசமெங்கும்
தீங்கு இன்றி–(அதிவிருஷ்டி, அநாவ்ருஷ்டி ஆகிற) தீங்கு ஒன்றுமுமில்லாமல்
திங்கள் மும்மாரி பெய்து–மாதந்தோறும் மூன்று தரம் மழை பெய்ய (அதனால்)
ஓங்கு பெரு செந் நெல் ஊடு–ஆகாசத்தளவும் வளர்ந்து பெருத்துள்ள செந்நெற் பயிர்களின் நடுவே
கயல் உகள–மீன்கள் துள்ள
பூ–அழகிய
குவளை போதில்-நெய்தல் மலரில்
பொறிவண்டு–மிக்க புகரையுடைய வண்டுகளானவை
கண் படுப்ப–உறங்க,
புக்கு–(மாட்டுத்தொழுவிற); புகுந்து
தேங்காதே இருந்து–சலியாமல் பொருந்தி யிருந்து
சீர்த்த முலை பற்றி வாங்க-(பசுக்களின்) பருத்த முலைகளை (இரு கையாலும்) பிடித்து வலிக்க.
வள்ளல்–(எல்லார்க்கும் கட்டி அடிக்கலாம்படி விதேயமா யிருக்கை யாகிற) உதார ஸ்வபாவமுடைய
பெரும் பசுக்கள்–பெரிய பசுக்களானவை
நீங்காத செல்வம் நிறைந்து–நீங்காத ஸம்பத்து நிறையும்படி
குடம் நிறைக்கும்–(பால் வெள்ளத்தாலே) குடங்களை நிறைக்கும்.
ஏல் ஓர; எம் பாவாய் !

முதற் பாட்டில் “நாராயணனே” என்பதனால் எம்பெருமானுடைய உபய விபூதி நாதத்வஞ் சொல்லப்பட்டது;
இரண்டாம் பாட்டில், “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்” என்பதனால் அவதாரார்த்தமாகத்
திருப்பாற்கடலில் வந்து சாய்ந்தபடி சொல்லப்பட்டது.
இப்பாட்டில் “ஓங்கி யுலகளந்த உத்தமன்” என்பதனால் அவதரித்தருளினபடி சொல்லப்பட்டது.

உலகங்களைக் காப்பதற்காகத் திருப்பாற்கடலிற் சாய்ந்த போது ஆர்த்த ரக்ஷணம் பண்ணப் பெறாமையாலே
எம்பெருமான் பனிப்பட்டுச் சாய்ந்த மூங்கில் போலக் குன்றி,
அம் மூங்கில் இரவியின் கதிர் படக் கிளம்புமாறு போல
இவனும் மாவலி வார்த்த நீர் கையிற் பட்டவாறே கிளம்பின படியைக் கூறுவது “ஓங்கியுலகலந்த” என்பது.

மஹாபலி யென்னும் அஸுர ராஜன் தன் வல்லமையால் இந்திரன் முதலிய யாரையும் வென்று
மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாண்டு செருக்குக் கொண்டிருந்த பொழுது,
அரசிழந்த தேவர்கள் திருமாலைச் சரணமடைந்து வேண்ட,

அப்பெருமான் குள்ள வடிவான வாமநாவதாரங்கொண்டு
அம்மாவலியினிடஞ் சென்று தன் காலடியால் மூவடி மண் வேண்டி அது கொடுத்தற்கு அவன் இசைந்தவுடனே
திரி விக்கிரமனாய் ஆகாசத்தை அளாவி வளர்ந்து
ஓரடியாற் பூலோகத்தையும்,
மற்றோரடியால் மேலுலகத்தையும்
அளந்து மூன்றாமடிக்காக அவன் முடியிற் காலை வைத்து அவனைப் பாதாளத்திலழுத்தி யடக்கின வரலாற்றை உணர்க.

“இவன் இன்று செல்வனாயினன்” என்றால், நேற்று வரை தரித்ரனாயிருந்தமை தன்னடையே விளங்குவது போல்,
இங்கு “ஓங்கி உலகளந்த” என்றமயால், கீழ் வாமநனாயிருந்தமை தன்னடையே போதருமென்க.

இங்கு, உத்தமன் என்றதற்குக் கருத்து யாதெனில்,
அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்று உலகில் பிராணிகள் நால் வகைப்பட்டிருப்பார்கள்;
பிறரை நலிந்து தன் வயிறு வளர்ப்பவன் அதமாதவன்;
பிறரும் வாழ்ந்தால் வாழட்டு மென்றிருப்பவன் அதமன்;
பிறரும் வாழ வேணும், நாமும் வாழவேணுமென்றிருப்பவன் மத்யமன்;
தான் கெட்டும் பிறரை வாழ்விக்குமவன் உத்தமன்.
(தானுங்கெட்டுப் பிறரையுங் கெடுப்பவனுடைய வகுப்பு அறிவரிது)

எம்பெருமான் தன் வடிவைக் குறுகச் செய்வதும்,
பிறர்பாற் சென்று இரப்பதுமாகிய கேடுகளைத் தானடைந்தும்
இந்திரன் முதலிய தேவர்களை வாழ்வித்தமை பற்றி, இங்கு உத்தமனாகக் கூறப்பட்டனனென்க.

இப்போது உலகளந்த அபதாநத்தைக் கூறுவதற்குக் காரணம் யாதெனில்;
‘என் முடி மேல் அடி வைக்க வேணும்’ என்று ஒருவரும் வேண்டாதிருக்கச் செய்தேயும்
விலக்காமையையே பற்றாசாகக் கொண்டு அனைவர் முடியிலும் அடியிட்டருளின எம்பெருமான்
இன்று இரந்து வேண்டும் நமது காரியத்தைத் தலைக் கட்டாதொழியான் என்னுங் கருத்துத் தோன்ற வென்க.

உலகளந்தருளினவன்று சிலர் கழஞ்சு மண் பெற்றறுக் களித்தொழிந்தனர்;
சிலர் கழஞ்சு மண் இழந்து வருந்தி யொழிந்தனர்;
இவ்வளவே யொழிய, அவ்வபதாநத்திற்குப் பல்லாண்டு பாடினார் யாருமிலராதலால்
அக்குறை தீர இன்று இவர்கள் பாவேணுமென்று பாரிக்கின்றனர் “உத்தமன் பேர்பாடி” என்று.

தங்களுக்கு ப்ரயோஜநாந்தாத்தில் ப்ராவண்யமில்லாமையை நாங்கள் என்பதானாலும்,
தமது நோன்பு மற்றையோர் நோன்பிற் காட்டிலும் விலக்ஷணமென்பதை “நம் பாவைக்கு” என்பதனாலும் விளக்குகின்றனர்.

“பாவைக்குச்சாற்றி” என்றது – “பாவைக்கென்று சாற்றி” என்றபடி.
“நமது நோன்பை வியாஜமாகக் கொண்டு” எனப் பொருள் கூறலுமாம்.

“தீங்கின்றி” என்று தொடங்கி மேல் ஆறு அடிகளினாலும் இம்மார்கழி நீராட்டத்தினால்
நாட்டுக்கு விளையும் வளம் கூறப்படுகின்றது.
ஓன்பது நாள் வெயிலும் ஒருநாள் மழையுமாக மாதந்தோறும் மும்மாரிபெய்தல் நாட்டுக்கு நன்மையென்க.
தீங்கு இன்றி நோய், பஞ்சம், கள்ளர் முதலிய தீங்கொன்றுமின்றி என்றுமாம்.

இங்ஙன் திங்கள் மும்மாரி பெய்தால் வயல்கள் செழிப்புறுமாறு கூறுகின்றது நான்காமடி.
செந்நெற்கு இட்ட ஓங்கு என்னுமடைமொழி – உயர்த்தியையும்,
பெரு என்னுமடைமொழி சுற்றிலே பணைக்கையையுங் கூறும்.
“செய் கொள் செந்நெலுயர்” என்றது காண்க.

நெல்லு வைரத் தூண் போல் நிற்கையால் கயல்கள் நேரே ஸஞ்சரிக்கப் பெறாது
ஒருக்கடுத்து உலாவும்படியைக் கூறுவது, “ஊடுகயலுகள” என்பது.
உகளுதலாவது – நீரிலும் நிழலிலுங்கிடந்து வளர்ந்த செலுக்காலே களித்து மேல் நோக்கிப் பாய்தல்.
“சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை யொண் செருந்தி செண்பகங்கள் மண நாறும்
வண்பொழிலுனூடே, வலங்கொண்டு கயலோடி விளையாடும்” என்றார் திருமங்கை யாழ்வார்.

காலங்களில் மாறாது மழை பெய்வதனால் செழிப்புற்று வளர்ந்த செந்நெற்பயிர்களினூடே,
உகளுங்கயல்களினுடல் உறாயப் பெற்று ஊசல் போலசையா நின்றுள்ள மலர்ந்த குவளை மலர்களில்
வண்டுகள் தேனை அருந்திப் பேடைகளுடன் விளையாடிக் கண்ணுறங்குமாற்றைக் கூறுவது ஐந்தாமடி.

பசுக்கள் மிக்க பால் தருதற்கு ஏதுவான புல்லுணவின் வளத்திற்கு மழையே ஏதுவாதலால்,
மேற்குறித்தவாறு மழை பெய்யவே பசுக்கள் அளவற்ற பால் வெள்ளத்தினாற் பாற் குடங்களை மிகுதியாக
நிறைக்கும் படியைக் கூறுவன மற்ற மூன்றடிகள்.

பசுக்கள் பால் சுரக்கத் தொடங்கினால் பெரு வெள்ளமாய்ப் பெருகுமென்றஞ்சி மாட்டுத்தொழுவிற்
கறக்கப் புகுவகற்குப் பெரும்பாலும் பலர் தேங்குவர் என்பதை
உள்ளுறையாய்க் காட்டும், “தேங்காதே புக்கிருந்து” என்ற சொற்போக்கு. தேங்குதல் – அஞ்சுதல்.

(பற்றி வாங்க) – முலையை ஒருகால் தொட்டு விட்டால் மாறாது பால் பெருகிக் குடங்குடமாக
நிறையும் என்பது ஒரு கருத்து.
பற்றிப் பற்றி வலிக்கக் குடங்களை நிறைக்குமென்றலு மொன்று.

இதற்கு உள்ளுறை பொருள் வருமாறு:-
பகவந் நாம ஸங்கீர்த்தநம் பண்ணிப் பகவதநுபவம் பண்ணினால் இவ்வுலகமெங்கும்
தேஹாத்மாபிமாநம் முதலிய தோஷங்களொன்று மின்றியே யொழியும்.

ஸத்வோத்தரமான காலத்தில்,
அநந்யார்ஹசேஷத்வம்,
அநந்யசரணத்வம்,
அநந்யபோக்யத்வமாகிற
ஆகார த்ரய ஜ்ஞானமுண்டாம்; (இது மூன்றாமடிக்கு)

பிரகிருதி மண்டலத்திலும் ஆத்ம வர்க்கங்கள் களித்துத் துள்ளும்; (இது நான்காமடிக்கு)
ஞானிகளுடைய போதிற்கமலவன்னெஞ்சினுள் தெய்வ வண்டெனப்படும்;

எம்பெருமான் வந்து புகுந்து சுகமாகக் கண் வளர்ந் தருள்வன்; (இஃது ஐந்தாமடிக்கு)
(தீரச் சரண முபகத:) என்றபடி –

சிஷ்யன் பிற்காலியாதே குருகுலத்திற் புக்கு நிலைத்திருந்து தனக்குத் தாரகங்களான ஆசிரியன்
பொற்பதங்களைப் பற்றிப் பிரார்த்திக்க,
உபதேச பாத்ர பூதரான சிஷ்யரைப் பரிபூரண ஞானிகளாக்குமவர்களாய்,
சிஷ்ய ஸுலபராய், இடைவிடாத பகவத் குணாநுபவத்தினால் பரிபுஷ்டரான ஆசார்யர்களுடைய
அவிச்சிந்நமான ஸம்பத்து மல்கும்படியைக் கூறுவன மற்ற மூன்றடிகள்.

பெய்து, நிறைந்து என்பன – பெய்ய, நிறைய என்னும் பொருள்பட நின்றமையால், எச்சநஷத்திரிபு.
“சொல் திரியினும் பொருள் திரியா வினைக்குறை” என்பது நன்னூல்.

ஏழாமடியில் “நிறைக்கும்” என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல் பசுக்களுக்கு அடைமொழியாக்கி,
‘நிறைக்க வல்ல பசுக்கள்’ எனப் பொருள் கொண்டு,
எட்டாமடியில் “நிறைந்து” என்னும் வினை யெச்சத்தை வினைமுற்றாகக் கொண்டு ‘நிறையும்’ எனப்பொருளுரைத்தலுமாம்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–வையத்து வாழ்வீர்காள்- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

ஒரு விசேஷ காரியத்தில் ஒருப் பட்டவர்கள் அக் காரியம் தலைக் கட்டுமளவும் சிலவற்றைப் பரிஹரிக்க
வேண்டுமென்றும் சிலவற்றைப் பற்ற வேண்டுமென்றும் அந்த வீடு பற்றுக்களை முதலில்
ஸங்கல்பித்துக் கொள்ள வேண்டுமென்றும் சாஸ்திரங்களிற் கூறியுள்ளதனால்,
அதற்கேற்ப, நோன்பு ஆகிற விசேஷ காரியத்தில் ஒருப்பட்ட இவ்வாயர் மங்கைகள்
தாங்கள் விடுமவற்றையும் பற்றுமவற்றையும் ஸங்கல்பிக்கிறார்கள், இப்பாட்டில்–

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

வையத்து–இப் பூமண்டலத்தில்
வாழ்வீர்காள்–வாழ்ந்திரா நின்றுள்ளவர்களே!
நாமும்–(எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவஸாய முடைய) நாமும்
உய்யும் ஆறு எண்ணி–உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து,
பால் கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி–திருப்பாற்கடலில் அவதாநத்துடன் கண் வளர்ந்தருளா நின்ற
பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாஸணம் பண்ணி
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி–(ஆசார்யாதிகளுக்கு இடு கையாகிற) ஐயத்தையும்,
(ஆர்த்தர்கட்கு இடுகையாகிற) பிக்ஷையையும் சக்தியுள்ளவளவும் இட்டு
உகந்து–மகிழ்ந்து
ஈம் பாவைக்கு செய்யும்–நமது நோன்புக்கு (அங்கமாகச்) செய்ய வேண்டிய
கிரிசைகள்–க்ரியைகளை
கேளீர்–காது கொடுத்துக் கேளுங்கள்
நாம்–நோன்பு நோற்கத் தொடங்கின நாம்
நெய் உண்ணோம்–நெய் உண்ணக் கடவோமல்லோம்;
பால் உண்ணோம்–பாலை உண்ணக் கடவோமல்லோம்;
நாட்காலே நீர் ஆடி–விடியற் காலத்திலேயே ஸ்நாநஞ்செய்து விட்டு
மை இட்டு எழுதோம்–(கண்ணில்) மையிட்டு அலங்காரம் பண்ணக் கடவோமல்லோம்;
மலர் இட்டு முடியோம்–(குழலிற்) பூ வைத்து முடிக்கக் கடவோமல்லோம்;
செய்யாதன–(மேலைத் தலைவர்கள்) செய்யாதவற்றை
செய்யோம்–செய்யக் கடவோமல்லோம்;
தீ குறளை–கொடிய கோட் சொற்களை
சென்று ஓதோம்–(எம்பெருமானிடத்துச்) சென்று கூறக் கடவோமல்லோம்;
ஏல் ஓர் எம்பாவாய்

பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடுகை,
நாட்காலே நீராடுகை,
ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கைகாட்டுகை
ஆகிற இம்மூன்றும் செய்யப்படுமவை.

நெய்யுண்ணாமை,
பாலுண்ணாமை,
மையிட்டெழுதாமை,
மலரிட்டு முடியாமை,
செய்யாதன செய்யாமை,
தீக்குறளை சென்றோதாமை என்பன விடப்படுமவை.

“உண்ணோம், செய்யோம், ஓதோம்” என்ற தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் ஸங்கல்பத்தைக் காட்டுமவை.

“செய்யுங் கிரிசைகள் கேளீரோ” என்றாற்போலவே
“விடுங்கிரிசைகள் கேளீரோ” என்றுஞ் சொல்ல வேண்டாவோ வென்னில்; வேண்டா;
விடுகையென்பதும் செய்யுங் கிரிசையினுள் அடங்கக்கூடுமாதலின் எனவே, “செய்யுங் கிரிசைகள்” என்ற
ஒரு சொற்போக்கிற்றானே வீடு பற்றுக்களிரண்டும் வெளியாயின வென்க.

வாழ்ச்சிக்கு நிலமல்லதா இருள் தருமா ஞாலத்தில் வாழ்வதென்பது
நெருப்புச் சட்டியில் தாமரை பூப்பதை யொக்குமாதலால், இங்ஙன் வாழப்பிறந்தவர்களின் பெருமை என்னே!
என வியந்து ‘வையத்து வாழ்வீர்காள்’ என விளிக்கின்றனர்.

நீர்மை மேன்மை முதலிய குணங்களனைத்தும் விளங்குமாறு கண்ணபிரான் அவதரித்த
ஆய்ப்பாடியிற் பிறவியின் மிக்க வாழ்ச்சி யில்லையே.
கண்ணபிரானுடைய விருப்பத்திற்கு இலக்காக மாட்டாதே முரட்டாண்களாய்ப் பிறத்தல்,
பருவங்கழித்த பெண்களாயிருத்தல் செய்யாதே
ஒத்த பருவத்திற் பெண்களாயிருக்குமவர்களின் வாழ்ச்சி பேச்சுக்கு நிலமல்லவென்க.

நாமும் என்றவிடத்து உம்மைக்குக் கருத்தென் எனில்;
ஸ்வாமிக்குப் பரதந்த்ரமான ஸ்வம் பேற்றுக்காகத்தானே ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுகைக்கு உரிமை யற்றதாயிருக்க,
ருசி இருந்தவிடத்தில் இருக்க வொட்டாமையாலே பதறிச் செல்லுகின்றமையைக் காட்டும்.

“ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”
“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு” என்றிருக்கையாகிற
அநந்யோபாயத்வத்தைக் குலைக்க வல்ல செயல்களில் நோன்பும் ஒன்றாதலால்
அது ஆத்மாவுக்கு அப்ராப்த கரும மெனப்படுகிறது.

ஆகில் அப்ராப்த காரியத்தில் இவர்கள் கை வைப்பது ஸ்வரூப விருத்தமே யன்றோ வென்னில்; அன்று;
“அப்ராப்த விஷயங்களிலே ஸக்தனானவன் அது லபிக்க வேணுமென்றிரா நின்றால்
ப்ராப்த விஷய ப்ரவணனக்குச் சொல்ல வேண்டாவிறே;
அநுஷ்டாநமும் அநநுஷ்டாநமம் உபாய கோடியில் அந்வயியாது.
அநந்யோ பாயத்வமும், அநந்யோபேயத்வமும் அநந்யதைவத்வமும் குலையும் படியான ப்ரவ்ருத்தி காணா நின்றோமிறே.

ஜ்ஞாந விபாக கார்யமான அஜ்ஞாநத்தாலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்சு பெறும்.
உபாய பலமாய் உபேயாந்தர்ப்பூதமாயிருக்குமது உபாயப்ரதி பந்தகமாகாது” இத்யாதி ஸ்ரீவசநபூஷண ஸூக்திகளையும்
அவ்விடத்து வியாக்கியான வாக்கியங்களையுங் கண்டு தெளிக.

இந்திரஜித்து முதலியவர்கள் எம்பெருமானையும் அவனடியாரையும் அழிக்கைக்குச் செய்த யாகம் போலன்றியே,
பிரயோஜநாந்தரங்களை விரும்பிச் செய்யும் விரதங்கள் போலுமன்றியே
க்ருஷ்ணனும் க்ருஷ்ண விபூதியும் ஸத்தை பெறுதற்குச் செய்யும் நோன்பு இது என்ற வாசியைக் காட்டுகிறது,
“நம் பாவைக்கு” என்ற சொற்போக்கு.

செய்யுங் கிரிசைகள் என்றது –
சேதநராகையாலே பேறு கைபுகுமளவும் கால க்ஷேபத்துக் குறுப்பாகச் செய்யும் செயல்கள் என்றபடி.
“பெருந்தெருவே ஊராரி கழிலும் ஊராதொழியேன் நான் வாரார்பூம் பெண்ணைமடல்” என்று
மடலெடுப்பதாகக் காட்டி விட்டவளவே போலன்றி
அநுஷ்டான பர்யந்தமாகச் செய்கிற நோன்பு இது என்பதைக் காட்டும், செய்யும் என்ற சொற்போக்கு.

‘பெண்களையும் கிருஷ்ணனையும் நெடுநாள் கடுமையாகப் பிரித்து வைத்த இவ் வாய்ப்பாடியில்
இங்ஙனே ஒரு சேர்த்தி யுண்டானவாறு என்கொல்!’ என்றும்,
‘இவ் விருள் தரு மா ஞாலத்தில் பகவத் விஷயத்தை அநுபவித்தற்கு இத்தனை பேர் திரள்வது என்ன விசித்திரம்!’ என்றும்
வியந்து மரம் மலை முதலியன போல ஸ்தப்தராய மயங்கிக் கிடக்குமவர்களைத் துடை தட்டியெழுப்புவாரைப் போல்
“கேளீர்” என்று துடை தட்டி உணர்த்துகிறார்கள்.
அந்ய பரத்வத்தைத் தவிர்க்கைக்காக வன்றோ சொல் நடுவில் கேளீர் என்ன வேண்டுவது.

‘பசுக்களுக்கு மேய்ச்சல் வாய்த்தால் அப்போது கிடைப்பனவற்றை யெல்லாம் விரைந்து உட்கொண்டு
பின்னர் ஸாவகாசமாக அசை யிடுவது போல,
பகைவர் பரம்பின் இப் பாடியில் க்ருஷ்ண ஸம்ச்லேஷத்திற்கு வழி பிறந்த இந் நாளிற்
செய்ய வேண்டியவற்றைச் சடக்கெனச் செய்துவிட்டுப் பின்பு ஸாவகாசமாக இருந்து நெஞ்சார மகிழ வேண்டும்;

அன்றி இப்போது மேற்காரியத்திற் பதற்றமற்று ‘இங்ஙனே வாய்த்தவாறு என்னே!’ என்றாற் போலச்
சில பேசிக் கொண்டு மகிழ்ந்து மயங்கி ஸ்தப்தைகளாய் நின்றால் க்ருஷ்ணாநுபவத்துக் கென்று வாய்த்த
அற்ப காலமும் பழுதே கழியும்;
இந்நாலு நாளுங் கடந்தால் க்ருஷ்ண னெங்கே, நாம் எங்கே’ என்றிருக்கும் அவர்களாதலால்
“செய்யுங் கிரிசைகள் கேளீரோ” எனப் பதற்றந்தோற்றக் கூறுகின்றனர்.
அவர்கள் கேட்கைக்கு உடன் பட்டவாறே சொல்லைத் தொடங்குகின்றனர் ‘பாற் கடலுள்’ என்பது முதலாக.

இடர்ப் பட்டாரை இன்பக் கடலில் ஆழ்த்துவதை இயற்கைத் தொழிலாக வுடைய எம்பெருமான்,
தாமரை மலர் வேண்டி வானத்தே நிற்பவன்போற் சேணுயர் வானமாகிற வைகுந்த நாட்டிலிருந்தாற் காரியமாகாதெனக் கருதி,
ஆர்த்தர்களின் கூச்சல் செவிப்படுமாறு இவ் வண்டத்திற்குட்பட்ட திருப்பாற்கடற் கெழுந்தருளி அங்கு
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானாயிருப்பன் என்னும் வரலாறு அறிக.

அங்குப் பிராட்டிமார் போகத்தில் திருவுள்ளமூன்றாது ஆர்த்த ரக்ஷணத்தில் அவஹிதனாயிருக்குமாற்றைக் கூறும்,
பைய என்றுங் குறிப்பு வினையெச்சம்

ஒரு மாணிக்கத்தைத் தகட்டிலழுத்தினால் அது மிக்க புகர் பெற்றுத் தோற்றுமாறுபோல,
எம்பெருமான் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மேற் சாய்ந்த பிறகு திருமேனியிற் புகர் நிறம் பெற்றுப்
பரம புருஷனெனத் தெற்றென விளங்குமாறிருக்குந் தன்மையை உளப்படுத்திப் பரமன் என்றனர்.

அன்றி,
ஆர்த்த ரக்ஷணத்தில் ஆவல்கொண்டு வானடையும் விட்டு வருகையாகிற குண விசேஷத்தால்
வந்த மேன்மையை உளப்படுத்திக் கூறுகின்றனரெனினு மொக்கும்.

எம்பெருமானுடைய மேன்மையை நினைத்தவாறே
தங்களுடைய தாழ்மையும் தன்னடையே நினைவுக்கு வருமாதலால்,
பின்பு அவனை ஏத்துகையே பணியாதல் பற்றி
அடிபாடி என்றனர்.

எல்லா வகைகளாலும் விஞ்சின மேன்மையை யுடைய கண்ணபிரானடியைப் பாடி என்ன வேண்டியிருக்க,
அங்ஙன் சொல்லாது, திருப்பாற்கடல் நிலைமையைப் பாடுவதாகச் சொல்லுகிறவிதற்குக் கருத்து யாதெனில்;
“கிருஷ்ணணையும் நம்மையும் நோக்கிப் பண்டே அதி சங்கை கொண்டிருக்கிற இடையர்,
நமக்குத் தெய்வம் தந்த இச் சேர்த்தியைச் சீறி அழிக்கிற் செய்வதென்?” என்னுமச்சத்தினால்
கண்ணனடி பாடுவதாகக் கூறுகின்றிலரெனக்கொள்க.

ஏஷ நாராணய : ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந :-நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்”
என்னும் பிரமாணத்தை அவ்விடையர் அறியாரென நினைத்தனர் போலும்.

“உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணன்” என்றபடி
ஸகல போக்யமயனான எம்பெருமான்றனடி பாடுதலையே உண்கையாக நினைக்கும் உறுதி இவர்கட்கு உளதாதலால்,
வேறு உணவில் விருப்பமொழியுமாறு பற்றி, நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்கிறார்கள்.
உண்டார்க்கு உண்ண வேண்டாவே.

‘நெய் குடியோம், பால் குடியோம்’ என்ன வேண்டி யிருக்க,
‘நெய் உண்ணோம், பால் உண்ணோம்’ என்றது சாதிப் பேச்சு ஆனது பற்றியே
‘நெய்யுண்டான், பாலுண்டான்’ என்று கண்ண பிரானுக்குப் பேர் வழங்குவதும்.
அன்றியே, திருவாய்ப்பாடியிற் கண்ண பிரான் பிறந்த பின்னர் நெய் பால் முதலியவற்றை ஒருவரும்
கண்டறியாதராய்ப் பேர் மாத்திரத்தைக் காதிற்கேட்டுள்ளவர்களாய்,
அவை உண்ணத் தகுந்தவையோ, குடிக்கத் தகுந்தவையோ வென்பதையும் ஆராய்ந்தறிந்திலராதலால்,
‘அவை உட்கொள்ளப் படுமவை’ என்னுமளவையே கொண்டு “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” என்கிறார்களென்று
ரஸோக்தியாகவுமருளிச் செய்வர்.

“அடிபாடி நெய்யுண்ணோம்” என்ற சொற் போக்கால்
அடிபாடுவதற்கு முன்னே நெய்யும் பாலும் தாரகமாயிருந்தன வாயினும்
அடிபாடப் பெற்ற பின்னர் “எல்லாங் கண்ணன்” என்றிருக்கும் நிலைமை வாய்த்தமை தோற்றுமென்பர்.

நோன்பு நோற்கைக்கு அங்கமாகவும் விரஹதாப மாறுகைக்காகவும் குளிக்கும் படியைச் சொல்லுகிறது,
நாட்காலே நீராடி என்று.
சக்ரவர்த்தித் திருமகன் நாடு துறந்து காடு சென்ற பின் பரதாழ்வான்
“இராமபிரனைக் காட்டுக்கு ஓட்டிய பாவி காண் இவன்” என்னும் உலக நிந்தைக்கு அஞ்சி
ஒருவர் கண்ணுக்கு மிலக்காகாதபடி பொழுது விடியுமுன்னமே சரயுவிற்சென்று நீராடி வந்தாற்போல்,
இவர்களும் ஸ்வப்ர வ்ருத்தி பரத்வ ப்ரகாசந ப்ரயுக்தமான லோக கர்ஹைக்கு அஞ்சி ஒருவராலுங் காண வொண்ணாதபடி
பின் மாலையிற்றானே போய் நிராட நினைக்கிறார்கள், நாட்காலே என்று.

இந்திரியங்களுள் பிரதானமான கண்களுக்கு,
“காணாதார்கண்ணென்றுங் கண்ணல்ல கண்டாமே” என்றபடி எம்பெருமானை அநுபவிக்கை யொழிய
வேறு பேறு இலதாதலால் அப்பேறு வாய்க்குமுன் அக்கண்களை அலங்கரிக்கக் கடவோ மல்லோம்;

“நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
“தாள் கண்டு கொண்டேன் தலைமேற் புனைந்தேனே” என்றபடி எம்பெருமான் தன் இணையடிகளைப் புனைதலே
தலைக்குப் பேறாதலால் அப்பேறு பெறுதற்கு முன் தலையை அலங்கரிக்கக் கடவேலமல்லோ மென்கிறார்கள், ஐந்தாமடியால்.

ஒரு காரியம் பிரமாணங்களில் அநுஷ்டேயமாகச் சொல்லப்பட்டிருப்பினும் சிஷ்டாநுஷ்டாநமின்றி யொழியில்
அது விடத்தக்கதெயாமென்னும் சம்ப்ர தாயார்த் தத்தை, வெளியிடும், செய்யாதன செய்யோம் என்பது.
தசரத சக்ரவர்த்தியின் கட்டளையாலும் பெருமாள் நியமனத்தாலும் பரதாழ்வான் அரசாளுகைக்கு உரியனாயிருந்தும்
அங்ஙன் ஆளாதொழிந்தது முத்தாரிருக்க இளையார் முடிசூடுகை பூர்வாநஷ்டாநத்திற்குச் சேராதென்னும் நினைவாலன்றோ.

ஆபஸ்தம்பராலும் தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் வேதாச்சழூ என்று சிஷ்டாநுஷ்டாநமே முதற் பிரமாணமாகக்
கூறப்பட்டமை அறியத்தக்கது.

இனி, இவர்கள் நோன்பு நோற்கையாகிறவிது சிஷ்டாநுஷ்டாந ஸித்தமோ? ஏனில்; ஆம்;
பூர்வமீமாம்ஸையில் ஹோளாதி கரணங்யாபத்தை ஆராய்ந்துணர்க.

(ஹோளையாவது வஸந்தோத்ஸவம்; இதனை ஹோளாஹமெனவுங் கூறுவர். இது பங்குனி மாதத்துப்
பௌர்ணமாஸிக்கடுத்த ப்ரதிபத்தில் ஒருவர் மேல் ஒருவர் மஞ்சனீர் தெளித்துச் செய்யப்படும் உத்ஸவம் இது
திஸ்டா சாரஸித்த மென்னுமிடம் அவ்வதிகரணத்தில் நிஷ்கர்ஷிக்கப்பட்டது.
அதுபோலவே இந்நோன்பும் சிஷ்டாசாரஸித்தமெனக்கொள்க;
“மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்” என்று மேலுங் கூறுவர்.)

தோழிமார் ஒருவர்க்கொருவர் உரையாடும் போது “பேய்ப் பெண்ணே” என்றும்,
“நாயகப் பெண்பிள்ளாய்” என்றும் பலவகையாக விளிப்பர்களாதலால், ‘
அவளைக் கௌரவப்படுத்தினாள், என்னை லாகவப்படுத்தினாள்” எனச் சீறி எம்பெருமான் பக்கலிற் சென்று
ஒருவர் மேலொருவர் குற்றங்குறை கூறுதல் கூடாதென்று தம்மிலே தாம் ஸங்கேதித்துக் கொள்ளுகின்றனர்,
தீக்குறளை சென்றோதோம் என்று.

ஒரு விரதத்தில் அதிகரித்தவர் தீய சொற்களைச் சொல்வதைத் தவிர வேண்டுமென்று விதியாதலால்,
அவ்விதிக்கிணங்கச் சங்கற்பித்துக் கொள்கின்றன ரென்க.
‘பேய்ப்பெண்ணே!’ என்று வையவுங்கடவோம்;
‘நாயகப் பெண்பிள்ளாய்!’ என்று காலிலே விழவுங்கடவோம்; அவன் செவிப்படுத்தோம்;
பத்து மாஸம் சுற்றுமிருந்து ராக்ஷஸிகள் பண்ணின தர்ஜங்பர்த்ஸநாதிகளை ஏகாந்தத்திலும்
பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்யாத பிராட்டியைப் போலே” என்ற ஆறாயிரப்படி அருளிச்செயல் இங்கு அறியத்தக்கது.

யோக்ய புருஷர் விஷயத்திலும் ஆசார்ய விஷயத்திலும் உரிய காலங்களில் பஹுமாநத்துடன்
வெகுவாக ஸமர்ப்பிக்குமது ஐயம்;
“தேஹி” என்று அர்த்தியா நின்ற பிக்ஷுக்கள் விஷயத்தில் ஆதரத்துடன் பரிமிதமாக ஸமர்ப்பிக்குமது பிச்சை.
இவ்விரண்டையும் இயன்ற வளவு செய்யக் கடவோ மென்கிறார்கள், ஏழாமடியில்;.

ஆந்தனையும் என்றது ஆமளவுமென்றபடி; சக்தியுள்ளவளவும் என்க.
‘இந்நோன்பு ஆந்தனையும்’ என்று உரைப்பாருமுளர்.
“அவர்கள் கொள்ளவல்லராந்தனையும்” என்று முரைப்பர்.
கைகாட்டி என்ற சொல் நயத்தால் எவ்வளவு கொடுத்தாலும் ‘நாம் என்ன கொடுத்து விட்டோம்’ என்ற
நெஞ்சிலோட வேணுமென்பது போதருமென்ப.

உள்ளுறைபொருள் :-
எம்பெருமானையே ஸர்வ போக்யமுமாகக் கொள்ள வேண்டுமென்கிறது, நெய்யுண்ணோமித்யாதியால்.
வர்ணாசரமங்கட்கு உரிய, நித்ய கருமங்கள் குறையற அநுஷ்டிக்கக்கடவன வென்கிறது, “நாட்காலே நீராடி” என்பதனால்.
மை கண்ணுக்கு ப்ரகாசகமாகையாலே ஆத்ம யாதாத்மிய ப்ரகாசகமான ஜ்யாந யோகத்தில் அந்வயிக்கலாகாதென்றும்,
மலரிட்டு முடிகை ஸ்வ போக ருபமாகையாலே பக்தி யோகத்தைச் சொல்லிற்றாய்,
அதில் அந்வயிக்கலாகாதென்றுங் கூறுகின்றது ஐந்தாமடி.

“நாம் முடியோம்” என்கையாலே பகவத் ப்ராப்தி ஸாதனங்களான ஞான யோக பக்தி யோகங்களில்
நாமாக அந்வயியாதொழிகையே வேண்டுவது; அவன்றானே இவ்வாதம் வஸ்துவை அநுபவிக்கும்போது
ஞானபக்திகள் இரண்டையுந் தந்து
‘இவற்றை நீ தவிராதொழிய வேணும்’ என்றால் செய்யலாவதில்லை என்னுமிடம் தோற்றும்.

இனி “மையிட்டெழுதோ” மென்பதனால் ஐச்வரியத்தில் ஆசை கொள்ளக்கடவோ மல்லோமென்றும்,
“மலரிட்டு முடியோ” மென்பதனால் ஆத்மாநுபவமாகிற கைவல்யத்தில் ஊன்றக்கடவோமல்லோ மென்றுஞ்
சொல்லுகிறதெனவுங் கூறக்குறையில்லை.

எம்பெருமான் வாத்ஸல்யாதிகுண யுக்தனாகிலும்
“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர்பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி
பாகவதரை முன்னிட்டல்லது ஆச்ரயிக்கலாகாது என்பதைக் காட்டும், “செய்யாதன செய்வோம்” என்பது.
பிறர்க்கு அநர்த்தத்தை விளைக்கவல்ல பொய் சொல்லலாகாது என்கிறது, “தீக்குறளை சென்றோதோம்” என்று.

ஐயமாவது – பகவத் வைபவம்;
பிச்சையாவது – பாகவத வைபவம்;
இவை இரண்டையும் தானறிந்தவளவும் பிறர்க்கு உபதேசிக்க வேண்டுமென்கிறது.

புகவத் ஸந்நிதியில் பாகவத வைபவத்தையும்,
பாகவத ஸந்நிதியில் பகவத் வைபவத்தையும் யதா சக்தி கூற வேண்டுமென்க.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை–மார்கழித் திங்கள்- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

ஸ்ரீ திருப்பாவை தனியன்கள்

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது

நீளா துங்க3 ஸ்தந கி3ரி தடீ1 ஸுப்தம் உத்3போ3த்யத்4ய க்ருஷ்ணம்
பாரார்த்ய2ம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ் ஸித்3த4ம் அத்4யாபயந்தீ |
ஸ்வோச்சிஶ்ட்டாயாம் ஸ்ரஜி நிக3ளிதம் யா ப3லாத் க்ருத்ய பு4ங்க்தே
கோ3தா3 தஸ்யை நம இத3ம் இத3ம் பூ3ய ஏவாஸ்து பூ4ய: ||

ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை

அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! * தொல்பாவை
பாடி அருள வல்ல பல்வளையாய்! * – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் *
நாம் கடவா வண்ணமே நல்கு

———-

ஆயர் சிறுமிகள் “நாம் நோன்பு நோற்பதற்கீடாக நமக்கு இங்ஙனே விலக்ஷணமானதொரு காலம் நேர்பட்டபடி என் !”
என்று காலத்தைக் கொண்டாடி மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை விளிக்குமாறு கூறுவது, இப்பாட்டு.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

சீர் மல்கும்–செல்வம் நிறைந்துள்ள
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியில்
செல்வம் சிறுமீர்காள்–கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையுமுடைய பெண்காள் !
நேர் இழையீர்–விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே !
மார்கழி திங்கள்–(மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும்
மதி நிறைந்த நல் நாள்–பூர்ண சந்திரோதயத்தை யுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்ல நாளும் (நமக்கு வாய்த்திரா நின்றன.)
கூர் வேல்–கூர்மை பொருந்திய வேலாயுதத்தை யுடையவனும்
கொடு தொழிலன்–(கண்ண பிரானுக்குத் தீங்கு செய்யவரும் க்ஷுத்ர ஜந்துக்கள் பக்கலிலுஞ் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரியுமவனுமான
நந்தகோபன்–நந்தகோபனுக்கு
குமரன்–பிள்ளையாய்ப் பிறந்தவனும்,
ஏர் ஆர்ந்த கண்ணி–அழகு நிறைந்த கண்களை யுடையளான
அசோதை-யசோதைப் பிராட்டிக்கு
இள சிங்கம்–சிங்கக் குட்டி போலிருப்பவனும்,
கார் மேனி–காளமேகத்தோடொத்த திருமேனியையும்
செம் கண்–செந்தாமரைப் பூப்போன்ற திருக் கண்களையும்
கதிர் மதியம் போல் முகத்தான்–ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திரு முகத்தையுமுடையனுமான
நாராயணணே–ஸ்ரீமந் நாராயணன் தானே
நமக்கே-(‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே
பறை–பறையை
தருவான்–கொடுக்குமவனாயிற் நின்றான்,
ஆல்–ஆதலால்,
பாரோர்-இவ் வுலகத்தவர்கள்
புகழ-கொண்டாடும்படி
படிந்து–(இந் நோன்பிலே)ஊன்றி
நீர் ஆட போதுவீர்–நீராட வர விருப்பமுடையீர்களே !
போதுமின்–வாருங்கள்
ஏல் ஓர் எம்பாவாய் !.-

நெடுநாள் சிறையிற் கிடந்தவன், அதினின்றும்; விடுபட்டுச் சுற்றத்தாருடனே கூடப் பெற்ற நாளில்
“கீழ்க் கழிந்த நாள்களைப் போலனறியே இற்றை நாளின் வைலக்ஷண்யமிருந்தவாறு எனக்கொல்!” என்று
அந் நாளை முந்துறக் கொண்டடுவது போல்,
நெடு நாளாக நிலவறைகளில் அடைபட்டுக் கண்ண பிரானோட்டைக் கருவியை இழந்து கிடந்த
இவ்வாயர் சிறுமியரும் தாங்கள் க்ருஷ்ணனோடு ஸம்ச்லேஷிக்குமாறு வாய்த்த நாளென்று
அந் நாளை முதலடியிற் கொண்டாடுகின்றனர்.

பகவத் கீதையிற் கண்ணபிரான் “மாஸங்களனைத்தினுள்ளும் மார்கழி மாதமாகிறேன் நான்” என்று
இம்மாதத்திற்குள்ள வீறுபாடு தோற்ற அருளிச் செய்தமையால் அம்மாதம் வாய்க்கப் பெற்றவர்கள்
அதனைக் கொண்டாடாதிருக்க வல்லரல்லரே.
இராம பிரானை முடிசூட்டப் பாரித்து முயன்ற போழ்து வஸந்தருதுவில் முதன்மையான மாதம் தன்னடையே நேர்பட,
அதனை அங்குக் கொண்டாடினாற் போல், இவர்களும் நோன்பு நோற்க முயலத் தன்னடையே வாய்த்த
மார்கழி மாதத்தை நினைந்து நெஞ்சு கனிகின்றனர்.
இடைத் தலைவர்கள் குளிர்க்கு அஞ்சிப் புறப்படமாட்டாத மாதமுமாதலால் கொண்டாட்டத்திற்குக் குறையில்லையே.

நற்காரியங்கள் செய்ய விரும்பினார்க்குச் சாஸ்திரங்களில் விதிக்கபட்ட சுக்ல பக்ஷமும் இவர்கட்கு நினைவின்றி வாய்த்தபடியால்,
அதனையுங் கொண்டாடுகின்றனர் மதி நிறைந்த நன்னாள் என்று.
ஒருவரை ஒருவர் முகங்கண்டு அநுபவித்தற்கும், எல்லாருங் கூடிச் சென்று கண்ணபிரானை உணர்த்துவதற்கும்
பாங்காக நிலா நேர்பட்டமையால் மகிழ்ச்சி மிக்கது.
இவர்கள் கண்ணபிரானோடு ஸம்ச்லேஷிப்பதற்கு ஊரார் விரோதிகளயிருக்குங் காலத்தில்
“நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்” என்று நள்ளிருளை வேண்டுவர்கள்;
இப்போது அங்ஙனன்றி க்ருஷ்ண ஸம்ச்லேஷத்திற்கு ஊராரே இசைந்து நின்றமையால்
இருளை வெறுத்து நிலவைக் கொண்டாடுகின்றனரென்க.
கீழ்க்கழிந்த நாட்களெல்லாம் தீயவையென்று தோன்றும், இப்போது நன்னாள் என்றமையால்.

நெடு நாளாகக் கண்ணபிரானைப் பிரிந்திருந்தமையாற் பிறந்த தாபமடங்கலுந்தீருமாறு நீராட விருப்பமுடையீர்!
வாருங்கள் என்று அழைப்பது, இரண்டாமடி.
இங்கு, நீராட எனக் கூறியது, “கண்ணபிரானோடு கலவிசெய்ய” எனக் கூறியவாறு;
தமிழர், கலவியைச் “சுனையாடல்” “புனலாடல்” என்னுமாற்றற் கூறுவர்.

“பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக்கேளாள் பேர்பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்,
பொற்றாமறைக் காயம் நீராடப் போனாள் பொருவற்றா ளென்மகள் உம் பொன்னு மஃதே” என்ற
திருமங்கையாழ்வார் பாசுரமும் காண்க.

ஒருவர்க்கொருவர் தோழிகளாயிராநின்ற இவர்கள் “குளிக்க வாருங்கள்” என்று அழைக்கலாமியிருக்க,
“நீராடப் போதுவீர்” என்று கௌரவந்தோற்றக் கூவினமையால்,
பகவத் ஸம்பந்த முள்ளவர்கள் எவராயிருப்பினும் கௌரவிக்கப்பட வேண்டியவரேயென்று கூறப்பட்டதாயிற்று.
“கள்ளவழ்; சோலைக் கணபுரம் கைதொழும், பிள்ளையைப் பிள்ளை யென்றெண்ணப் பெறுவரே” என்றார் திருமங்கை யாழ்வாரும்.

அற்பபலமாகிய சுவர்க்காநுபவத்திற்கு உறுப்பாகக் கூச்மாண்டகண ஹோமம் முதலிய அரிய கருமங்கள் செய்ய வேண்டும்;
மீட்சியின்றி வைகுந்தமாநகர் புகுவதற்கீடான பகவத் ஸங்கத்திற்கு அபேக்ஷை மாத்திரமே போதும்;
வேறு ஒருவகை யதிகாரமும் வேண்டா என்பது, “போதுவீர் ! போதுமினோ” என்ற சொற்போக்காற் போதரும்,
பெறுகிற பேற்றிற்கு ஸத்ருசமான ஸாதநமில்லாமையால் ‘இச்சை மாத்திரமே போரும்’ என்கிறதென்க.
எலுமிச்சம் பழங்கொண்டு மன்னனைக் கண்டு ராஜ்யம் பெற்றார்க்கு அந்தப் பழம் ஸாதநகோடியிற் புகமாட்டாதவாறு போல,
இவ்விச்சையும் ஸாதநமாக வகையில்லை என்பதுமிங்கு உணரத்தக்கது.
போதுவீர் போதுமினோ – ‘வருகிறவர்களெல்லாரும் வரலாம்’ என்பது போல.

‘கண்ணபிரான் நம்மை எப்போது அணைத்துக்கொள்ள வருவனோ’ என்று ஆய்ச்சிகளனைவரும்
என்றுமொக்க ஆபரணம் பூண்டிருத்தலால், “நேரிழையீர்” என விளிக்கப்பட்டனர்.
‘எம்பெருமானோடு ஸம்ச்லேக்ஷிக்க வாருங்கள்’ என்று இவர்கள் விளித்தவுடனே உவப்பினால்
அவர்களது மேனி ஆபரணம் பூண்டாற் போலாயிற்றென்பது உள்ளுறை.

ஏற்கனவே பால் நெய் முதலியவற்றாற் சீர்மை பொருந்திய திருவாய்ப்பாடியில்
திருநாட்டுத் தலைவனான கண்ணபிரான் வந்து பிறந்தமையால், “சீர்மல்குமாய்ப் பாடி” எனப்பட்டது.
பரத்துவம் மாத்திரம் பொலிய நிற்கும் பரமபதம் போலன்றி, ஸௌசீல்ய ஸௌலப்யாதி ஸகல குணங்களும்
சால விளங்குமிடமிது வாதலால் சீர் மல்கச் சொல்ல வேண்டாவே.

எம்பெருமானிடத்து அன்புடைமைக்கு மேற்பட்ட செல்வம் ஆத்துமாவுக்கு இலதாதலாலும்,
தண்டகாரணிய வாசிகளான முனிவர் இராமபிரானது ஸௌந்தர்யாதி சயத்தில் ஈடுபட்டு அன்பு மிகுதியாற்
பெண்மை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணணைக் கூடினரென்பவாதலாலும்
“செல்வச் சிறுமீர்காள்” என விளிக்கப்பட்டதென்க.

எறும்பு முதலிய சிற்றுயிர்களின் சாவுக்கு அஞ்சிப் பசும்புல்லிற் காலை ஊன்ற வைத்து நடந்தறியாத நந்தகோபன்
கண்ணனை மகனாகப் பெற்றபின்பு அவனிடத்துப் பரிவு மிகுதியால் தொட்டிற்கீழ் ஓர் சிற்றெறும்பு ஊர்ந்தாலும்
அதனைக் கொல்வதென்று எப்போதுங் கூரிய வேலுங்கையுமாயிருந்தமை பற்றிக்
“கூர்வேற் கொடுந்தொழில” னாகக் கூறப்பட்டனன்.

உலகிற் சிறுவர்கள் தந்தையர் பால் அஞ்சி நிற்பதும், தாய் மார்பால் அடங்காதொழிவதுமாயிருத்தல் போலக்
கண்ணபிரானும் நந்தகோபனுக்குக் கோற்கீழ் கன்றாகவும், யசோதைப் பிராட்டிக்குச் சிங்கக் குருகாகவும்
இருந்தமை பற்றி “நந்தகோபன் குமரன்,” “அசோதை யிளஞ்சிங்கம்” எனப்பட்டது.
செருக்கிலும் மேனாணிப்பிலும் கண்ணனுக்குச் சிங்கம் உவமையா மென்க,

“அழுகையுமஞ்சி நோக்குமந் நோக்குமணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையுமிவை கண்டவசோதை தொல்லையின்பத்திறுதி கண்டாளே” என்றபடி –
கண்ணனது திவ்விய சேஷ்டிதங்களைக் கண்ட களிப்பின் மிகுதியால் யசோதைக்குக் கண்கள் அலர்ந்து
அழகு மிக்குத் தோற்றுமாறு பற்றி “ஏரார்ந்த கண்ணி” என அவட்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.

கண்ணபிரானது திருமேனியைக் காண்டலுமே கார் முகிலைக் கண்டாற்போல்
ஸகல தாபங்களும் தீர்வது பற்றிக் “கார்மேனி” எனப்பட்டது.
“ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச், சேற்றாலெறிந்து வளைதுகிற் கைக்கொண்டு,
காற்றிற் கடியனாயோடிய கம்புக்கு, மாற்ற முந்தாரானாலின்று முற்றும்; வளைத்திரம் பேசானாலின்று முற்றும்” என்றபடி –
இவன் பொறுக்கொணாத் தீம்புகளைப் போரச் செய்யினும்,
வடிவழகை நினைக்குங்கால் விடமாட்டாது மேல்விழுந்து முகத்தான்” என அழகிலீடுபட்டுக் கூறுகின்றனர்.
திருமுகமண்டலத்தின் ஒளிக்குக் கதிரவனும், குளிர்ச்சிக்குத் திங்களும் உவமையென்க.
இப்படிப்பட்ட அழகு பொருந்தியவன் அயற்புருடனாயிருக்கை யன்றியே
நமக்கு வகுத்த நாயகனுமாயிரா நின்ற னென்கிறார்கள் – நாராயணனே என்பதனால்.

நாராயணனே என்றவிடத்து ஏகாரதம் பிரிநிலைப் பொருளதாய், (பிரிநிலை – அவதாரணம்.)
நாராயணன் அடியார்க்குக் காரியஞ் செய்யுமிடத்துச் சாதனங்களை யெதிர்பாராது செய்து
தலைக்கட்டுபவன் என்பதை உணர்த்தும்.

நமக்கே என்ற விடத்து ஏகாரமும் அப்பொருட்டாய் நாராயணன் ஸர்வ ஸாதாரண ஸ்வாமியாயினும்,
ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் என்னு மதிகாரங்களமைந்த நமக்கன்றி
மற்றை யோர்க்குக் காரியம் செய்யான் எனபதைத் தெரிவிக்கும்.

பறை என்பது நோன்புக்கு அங்கமானதொரு வாத்ய விசேஷம்.
இவ்வாய்ச்சிகள், மேல், “மாலே மணிவண்ணா” என்ற பாட்டில் அபேக்ஷித்தபடி கண்ணபிரான் பறை தரப்புக,
அதுகண்ட இவர்கள் “சிற்றஞ்சிறுகாலே” என்கிற பாசுரத்தில்,
“இவற்றைப் பறைகொள்வானன்று காண் கோவிந்தா; எற்றைக்கு மேகீழழ்பிறவிக்கு
முன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட் செய்வோம், மற்றை நங்காமங்கள் மாற்று” எனக் கூறினமையால்,
பறை, பறை என்று சொல்லிக்கொண்டு போவது நாட்டார்க்கு ஒரு வியாஜமாத்திரமேயாய்,
அதன் உள்ளுறை கைங்கரிய விருப்பம் என்பது விளங்கும்.

அக் கைங்கரியத்தைத்; தாமாகவே செய்ய இவர்கட்குப் பிராப்தி உளதாயினும்
“ஏவமற்றமாராட் செய்வார்” என்றபடி எதிர்த் தலையின் நியமனங்கொண்டு செய்வதே
ஸ்வரூபத்துக்குச் சேருமென்னும் ரஹஸ்யார்த்தம்,
“பறை தருவான்” என்பதனாற் போதரும்.
ஸ்வயம் துருசிரே தேசே க்ரிய தாமிதி மாம் வத என்ற இளையபெருமாள் பிரார்த்தித்தவாற்றை நோக்குக.

கண்ணபிரானையும் ஆயர்மங்கைகளையும் நெடுநாள் பிரித்திரந்த ஆய்த்தலைவர் இன்று கூட்டியது –
நோன்பு நோற்று மழை பெய்விக்க வாதலால்,
இவர்களது நோன்பினால் மழை பெய்யா தொழியில் அவர்கள் இகழக்கூடும்;
மழை பெய்யில் “ஆ! பெண்கள் நோற்றபடி என்கொல்; மழைபெய்தபடி என்கொல்!” என்று புகழக் கூடும்;
அப்புகழ் உண்டாக வேணுமென்னும் விருப்பத்தைக் காட்டுகின்றனர், பாரோர் புகழ என்பதனால்.
புகழ என்றது – மகிழ என்றபடியுமாம்.

பகவத் கைங்கரியத்தில் ருசியுடைய பாகவதர்கள், பகவத் குணாநுஸந்தாநத்தினால்
“காலாலழும் நெஞ்சழியுங் கண் சுழலும்” என்றபடி எழுந்திருக்க வல்லமையற்று ஸ்தப்தராய்க் கிடக்கும்
பாகவதர்களைக் கைங்கரியத்திற்கு அழைத்தல் இதற்கு உள்ளுறை பொருள்.

“மார்கழித் திங்கள்” என்று – ஸத்துவ குணம் நிறம்பெறும் படியான கால விசேஷத்தைக் கூறியவாறு.
“மதி நிறைந்த நன்னாள்” என்று – ஆசிரினுடைய அருளடியாக ஸ்வருப வுணர்ச்சி பெற்று
எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு இலக்காகப் பெற்ற நாளைக் கூறியவாறு.
“அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” என்றபடி –
பிறந்தநாள் இதுவாதலால் அதனைக் கொண்டாடுகிறபடி.

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரிஷ்மே சீதமிவ ஹரதம் என்று பகவத் ஸமாச்ரயணத்தைப்
புனலாடலோடொக்கக் கூறினமையால் “நீராடப் போதுவீர்” என்று –
‘பகவத் ஸமாச்ரயணம் பண்ண வாருங்கள்’ என்கிறது.

“போதுவீர் போதுமினோ” என்கையால் –
பவித்ர பாணியாய் நீராடுதல், மூக்கைப்பிடித்தல்,
ஸங்கல்பம் செய்து கொள்ளல் முதலிய அங்க காலபங்கள் இதற்கு வேண்டாவென்கிறது.
ஞான பக்தி வைராக்யம் முதலிய குணங்களே ஆத்துமாவுக்கு அலங்காரமாதலால்,
அக்குணமுடைமை கூறுகிறது “நேரிழையீர்” என்று.

எம்பெருமானது எளிமை முதலிய குணங்கள் பரமபதத்தளவுஞ் சென்று அலையெறியும்படி
பொங்கா நிற்கப் பெற்ற திருப்பதிகளில் பகவதநுபவத்திற்குப் பாங்கான அபிநிவேசமுடைய
அநந்யார்ஹ சேஷ பூதர்களை விளிப்பது, மூன்றாமடி.
அந்யசேஷத்வமும் ஸ்வஸ்வாதந்திரியமும் இல்லாதாரைக் குறிப்பது, சிறுமீர்காள் என்பது.

மங்களாசாஸந பரரான ஆசாரியர்கட்கு விதேயனாயிருப்பவன் எம்பெருமான்
என்பதைக் கூறுவது, நான்காமடி.

பூர்ணமான ஞானத்தை விளக்கக் கடவதும், “குலந்தருஞ் செல்வந்தந்திடும்” என்றபடி கலாதிசயங்களையும்
தரக் கடவதுமான பெரிய திருமந்திரத்தில் தனது வீறுபாடு தோற்ற விளங்குபவன்
எம்பெருமான் என்பதைக் கூறுவது, ஐந்தாமடி.

கண் – ஞானம். திருமந்திரம் தாயாகச் சொல்லப்படுவதனால்,
இங்கு “அசோதை” என்று திருமந்திரத்தைக் குறித்தவாறாம்.
மந்திரம் எம்பெருமானைத் தன் கருவிலே வைத்துக் கொண்டு எல்லாருமறியலாம்படி பிரகாசிப்பிக்குந்
தன்மையுடைமை பற்றித் தாயாகக் கூறப்படுதல் பொருந்துமென்க.
ஆச்ரயணீயனுடைய போக்யத்வஞ் சொல்லுகிறது,

ஆறாம் அடியார்க்கு அணுகத்தக்கவனாயும், அல்லாதார்க்குக்கிட்ட வொண்ணாதவனாயுமிருப்பன்
எம்பெருமான் என்பதை விளக்கும்,
“கதிர்மதியம் போல் முகத்தான்” என்பது. அவ்வெம்பெருமான் இடத்தன்றி மற்றையோரிடத்து
யாம் பேறுபெறக் கடமைப்பட்டிலோம் என்பதைக் காட்டுவது, ஏழாமடி.

புகவதாச்ரயணத்தினால் நமக்கு அளவற்ற புகழ் உண்டாகுமென்கிறது, “பாரோர் புகழ” என்பது.
இனி, இந்நடையில் அவரவர்கள் மதிவைசித்திரிக்கேற்ப ஸ்வாபதேசார்த்தங்களை உயத்துணர்க.

(ஏலோரெம்பாவாய்.)
இத்தொடர்மொழிக்குத் தனித்தனியே பொருள் ஆராயப் புகுதல் வேண்டா;
வென்றவர் முன்னே தோற்றார் “தடம் பொங்கத்தம் பொங்கோ” என்பது முதலியவை போல்,
நோன்பு நோற்கப் புக்கவர் “ஏலோர் எம்பாவாய்” என்ற மகுடத்தினாற் பாசுரங் கூறுவது மரபு எனக்கொள்க.

மார்கழி – மார்க்கசீர்ஷமென்னும் வடசொற் சிதைவு.
திங்கள் – சந்திரன்; அமாவாசைக்கு அமாவாசை ஒரு மாதமெனக் கொண்டு சந்திர சம்பந்தத்தாற்
காலத்தை வரையறுக்கும் சாந்திரமாந ரீதிபற்றி, திங்கள் என்று மாதத்திற்குப் பெயர் வழங்கலாயிற்று; இலக்கணை.
முதலடி யிறுதியில் ஆல் – ‘ஆதலால்;’ என்பதை சிதைவு; அசையுமாம்.
போநுவீர், போதுமின் – “போதருவீர், போதருமின்” என்பவற்றின் மரூஉ என்னலாம்.
சீர் – ஸ்ரீ . மல்குதல் – விஞ்சியிருத்தல்.
சிறுமீர்காள் – சிறுமாயர்காள்’ என்பதன் விளி.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-