உலகத்தில் ஸ்வர்க்கத்தை முக்கியமான பேறாகக் கொண்டு ஜ்யோதிஷ்டோம யாகஞ் செய்பவற்கு,
ஆயுஸ்ஸு, ஸந்தாநம் என்று சில அவாந்தர பலங்களும் உடன் கூடும்;
இவ் வாயர் மங்கைகள் எம்பெருமானையே எல்லா வகைப் பயனாகவும் உள்ளத்துக் கொண்டுள்ளவர்களாதலால்
அவ்வெம்பெருமானொழிய வேறொரு பயனையும் விரும்ப மாட்டார்கள்;
ஆயினும் இவர்கள் விரும்ப வேண்டுவதொன்றுண்டு;
அதாவது தாங்கள் நோன்பு நோற்குமாறு
அநுமதி அளித்தவர்கட்குச் சில ஸம்ருத்திகளை ஆசாஸிக்கை.
அஃது இப்பாட்டிற்செல்லும்.
யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்குமென்னா நின்றால்
இத்தனை மஹாநுபாவைகளிருக்கும் நாடு ஸம்ருத்தமாகச் சொல்ல வேண்டாவே–
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
பதவுரை
ஓங்கி–(மஹாபலி வார்த்த நீர் கையில் விழுந்தவாறே) ஆகாசத்தளவும் வளர்ந்து
உலகு-(மூன்று) லோகங்களையும்
அளந்த-(திருவடிகளாலே தாவி) அளந்து கொண்ட
உத்தமன்–புருஷோத்தமனுடைய
பேர்–திருநாமங்களை
நாங்கள்–(பிரயோஜநாந்தரத்தை விரும்பாத) நாங்கள்
பாடி–(ப்ரீதிக்குப் போக்கு வீடாகப்) பாடி
நம் பாவைக்கு சாற்றி–நம் நோன்புக்கென்று சங்கற்பித்துக் கொண்டு
நீர் ஆடினால்–நீராடினால்
நாடு எல்லாம்–தேசமெங்கும்
தீங்கு இன்றி–(அதிவிருஷ்டி, அநாவ்ருஷ்டி ஆகிற) தீங்கு ஒன்றுமுமில்லாமல்
திங்கள் மும்மாரி பெய்து–மாதந்தோறும் மூன்று தரம் மழை பெய்ய (அதனால்)
ஓங்கு பெரு செந் நெல் ஊடு–ஆகாசத்தளவும் வளர்ந்து பெருத்துள்ள செந்நெற் பயிர்களின் நடுவே
கயல் உகள–மீன்கள் துள்ள
பூ–அழகிய
குவளை போதில்-நெய்தல் மலரில்
பொறிவண்டு–மிக்க புகரையுடைய வண்டுகளானவை
கண் படுப்ப–உறங்க,
புக்கு–(மாட்டுத்தொழுவிற); புகுந்து
தேங்காதே இருந்து–சலியாமல் பொருந்தி யிருந்து
சீர்த்த முலை பற்றி வாங்க-(பசுக்களின்) பருத்த முலைகளை (இரு கையாலும்) பிடித்து வலிக்க.
வள்ளல்–(எல்லார்க்கும் கட்டி அடிக்கலாம்படி விதேயமா யிருக்கை யாகிற) உதார ஸ்வபாவமுடைய
பெரும் பசுக்கள்–பெரிய பசுக்களானவை
நீங்காத செல்வம் நிறைந்து–நீங்காத ஸம்பத்து நிறையும்படி
குடம் நிறைக்கும்–(பால் வெள்ளத்தாலே) குடங்களை நிறைக்கும்.
ஏல் ஓர; எம் பாவாய் !
முதற் பாட்டில் “நாராயணனே” என்பதனால் எம்பெருமானுடைய உபய விபூதி நாதத்வஞ் சொல்லப்பட்டது;
இரண்டாம் பாட்டில், “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்” என்பதனால் அவதாரார்த்தமாகத்
திருப்பாற்கடலில் வந்து சாய்ந்தபடி சொல்லப்பட்டது.
இப்பாட்டில் “ஓங்கி யுலகளந்த உத்தமன்” என்பதனால் அவதரித்தருளினபடி சொல்லப்பட்டது.
உலகங்களைக் காப்பதற்காகத் திருப்பாற்கடலிற் சாய்ந்த போது ஆர்த்த ரக்ஷணம் பண்ணப் பெறாமையாலே
எம்பெருமான் பனிப்பட்டுச் சாய்ந்த மூங்கில் போலக் குன்றி,
அம் மூங்கில் இரவியின் கதிர் படக் கிளம்புமாறு போல
இவனும் மாவலி வார்த்த நீர் கையிற் பட்டவாறே கிளம்பின படியைக் கூறுவது “ஓங்கியுலகலந்த” என்பது.
மஹாபலி யென்னும் அஸுர ராஜன் தன் வல்லமையால் இந்திரன் முதலிய யாரையும் வென்று
மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாண்டு செருக்குக் கொண்டிருந்த பொழுது,
அரசிழந்த தேவர்கள் திருமாலைச் சரணமடைந்து வேண்ட,
அப்பெருமான் குள்ள வடிவான வாமநாவதாரங்கொண்டு
அம்மாவலியினிடஞ் சென்று தன் காலடியால் மூவடி மண் வேண்டி அது கொடுத்தற்கு அவன் இசைந்தவுடனே
திரி விக்கிரமனாய் ஆகாசத்தை அளாவி வளர்ந்து
ஓரடியாற் பூலோகத்தையும்,
மற்றோரடியால் மேலுலகத்தையும்
அளந்து மூன்றாமடிக்காக அவன் முடியிற் காலை வைத்து அவனைப் பாதாளத்திலழுத்தி யடக்கின வரலாற்றை உணர்க.
“இவன் இன்று செல்வனாயினன்” என்றால், நேற்று வரை தரித்ரனாயிருந்தமை தன்னடையே விளங்குவது போல்,
இங்கு “ஓங்கி உலகளந்த” என்றமயால், கீழ் வாமநனாயிருந்தமை தன்னடையே போதருமென்க.
இங்கு, உத்தமன் என்றதற்குக் கருத்து யாதெனில்,
அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்று உலகில் பிராணிகள் நால் வகைப்பட்டிருப்பார்கள்;
பிறரை நலிந்து தன் வயிறு வளர்ப்பவன் அதமாதவன்;
பிறரும் வாழ்ந்தால் வாழட்டு மென்றிருப்பவன் அதமன்;
பிறரும் வாழ வேணும், நாமும் வாழவேணுமென்றிருப்பவன் மத்யமன்;
தான் கெட்டும் பிறரை வாழ்விக்குமவன் உத்தமன்.
(தானுங்கெட்டுப் பிறரையுங் கெடுப்பவனுடைய வகுப்பு அறிவரிது)
எம்பெருமான் தன் வடிவைக் குறுகச் செய்வதும்,
பிறர்பாற் சென்று இரப்பதுமாகிய கேடுகளைத் தானடைந்தும்
இந்திரன் முதலிய தேவர்களை வாழ்வித்தமை பற்றி, இங்கு உத்தமனாகக் கூறப்பட்டனனென்க.
இப்போது உலகளந்த அபதாநத்தைக் கூறுவதற்குக் காரணம் யாதெனில்;
‘என் முடி மேல் அடி வைக்க வேணும்’ என்று ஒருவரும் வேண்டாதிருக்கச் செய்தேயும்
விலக்காமையையே பற்றாசாகக் கொண்டு அனைவர் முடியிலும் அடியிட்டருளின எம்பெருமான்
இன்று இரந்து வேண்டும் நமது காரியத்தைத் தலைக் கட்டாதொழியான் என்னுங் கருத்துத் தோன்ற வென்க.
உலகளந்தருளினவன்று சிலர் கழஞ்சு மண் பெற்றறுக் களித்தொழிந்தனர்;
சிலர் கழஞ்சு மண் இழந்து வருந்தி யொழிந்தனர்;
இவ்வளவே யொழிய, அவ்வபதாநத்திற்குப் பல்லாண்டு பாடினார் யாருமிலராதலால்
அக்குறை தீர இன்று இவர்கள் பாவேணுமென்று பாரிக்கின்றனர் “உத்தமன் பேர்பாடி” என்று.
தங்களுக்கு ப்ரயோஜநாந்தாத்தில் ப்ராவண்யமில்லாமையை நாங்கள் என்பதானாலும்,
தமது நோன்பு மற்றையோர் நோன்பிற் காட்டிலும் விலக்ஷணமென்பதை “நம் பாவைக்கு” என்பதனாலும் விளக்குகின்றனர்.
“பாவைக்குச்சாற்றி” என்றது – “பாவைக்கென்று சாற்றி” என்றபடி.
“நமது நோன்பை வியாஜமாகக் கொண்டு” எனப் பொருள் கூறலுமாம்.
“தீங்கின்றி” என்று தொடங்கி மேல் ஆறு அடிகளினாலும் இம்மார்கழி நீராட்டத்தினால்
நாட்டுக்கு விளையும் வளம் கூறப்படுகின்றது.
ஓன்பது நாள் வெயிலும் ஒருநாள் மழையுமாக மாதந்தோறும் மும்மாரிபெய்தல் நாட்டுக்கு நன்மையென்க.
தீங்கு இன்றி நோய், பஞ்சம், கள்ளர் முதலிய தீங்கொன்றுமின்றி என்றுமாம்.
இங்ஙன் திங்கள் மும்மாரி பெய்தால் வயல்கள் செழிப்புறுமாறு கூறுகின்றது நான்காமடி.
செந்நெற்கு இட்ட ஓங்கு என்னுமடைமொழி – உயர்த்தியையும்,
பெரு என்னுமடைமொழி சுற்றிலே பணைக்கையையுங் கூறும்.
“செய் கொள் செந்நெலுயர்” என்றது காண்க.
நெல்லு வைரத் தூண் போல் நிற்கையால் கயல்கள் நேரே ஸஞ்சரிக்கப் பெறாது
ஒருக்கடுத்து உலாவும்படியைக் கூறுவது, “ஊடுகயலுகள” என்பது.
உகளுதலாவது – நீரிலும் நிழலிலுங்கிடந்து வளர்ந்த செலுக்காலே களித்து மேல் நோக்கிப் பாய்தல்.
“சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை யொண் செருந்தி செண்பகங்கள் மண நாறும்
வண்பொழிலுனூடே, வலங்கொண்டு கயலோடி விளையாடும்” என்றார் திருமங்கை யாழ்வார்.
காலங்களில் மாறாது மழை பெய்வதனால் செழிப்புற்று வளர்ந்த செந்நெற்பயிர்களினூடே,
உகளுங்கயல்களினுடல் உறாயப் பெற்று ஊசல் போலசையா நின்றுள்ள மலர்ந்த குவளை மலர்களில்
வண்டுகள் தேனை அருந்திப் பேடைகளுடன் விளையாடிக் கண்ணுறங்குமாற்றைக் கூறுவது ஐந்தாமடி.
பசுக்கள் மிக்க பால் தருதற்கு ஏதுவான புல்லுணவின் வளத்திற்கு மழையே ஏதுவாதலால்,
மேற்குறித்தவாறு மழை பெய்யவே பசுக்கள் அளவற்ற பால் வெள்ளத்தினாற் பாற் குடங்களை மிகுதியாக
நிறைக்கும் படியைக் கூறுவன மற்ற மூன்றடிகள்.
பசுக்கள் பால் சுரக்கத் தொடங்கினால் பெரு வெள்ளமாய்ப் பெருகுமென்றஞ்சி மாட்டுத்தொழுவிற்
கறக்கப் புகுவகற்குப் பெரும்பாலும் பலர் தேங்குவர் என்பதை
உள்ளுறையாய்க் காட்டும், “தேங்காதே புக்கிருந்து” என்ற சொற்போக்கு. தேங்குதல் – அஞ்சுதல்.
(பற்றி வாங்க) – முலையை ஒருகால் தொட்டு விட்டால் மாறாது பால் பெருகிக் குடங்குடமாக
நிறையும் என்பது ஒரு கருத்து.
பற்றிப் பற்றி வலிக்கக் குடங்களை நிறைக்குமென்றலு மொன்று.
இதற்கு உள்ளுறை பொருள் வருமாறு:-
பகவந் நாம ஸங்கீர்த்தநம் பண்ணிப் பகவதநுபவம் பண்ணினால் இவ்வுலகமெங்கும்
தேஹாத்மாபிமாநம் முதலிய தோஷங்களொன்று மின்றியே யொழியும்.
ஸத்வோத்தரமான காலத்தில்,
அநந்யார்ஹசேஷத்வம்,
அநந்யசரணத்வம்,
அநந்யபோக்யத்வமாகிற
ஆகார த்ரய ஜ்ஞானமுண்டாம்; (இது மூன்றாமடிக்கு)
பிரகிருதி மண்டலத்திலும் ஆத்ம வர்க்கங்கள் களித்துத் துள்ளும்; (இது நான்காமடிக்கு)
ஞானிகளுடைய போதிற்கமலவன்னெஞ்சினுள் தெய்வ வண்டெனப்படும்;
எம்பெருமான் வந்து புகுந்து சுகமாகக் கண் வளர்ந் தருள்வன்; (இஃது ஐந்தாமடிக்கு)
(தீரச் சரண முபகத:) என்றபடி –
சிஷ்யன் பிற்காலியாதே குருகுலத்திற் புக்கு நிலைத்திருந்து தனக்குத் தாரகங்களான ஆசிரியன்
பொற்பதங்களைப் பற்றிப் பிரார்த்திக்க,
உபதேச பாத்ர பூதரான சிஷ்யரைப் பரிபூரண ஞானிகளாக்குமவர்களாய்,
சிஷ்ய ஸுலபராய், இடைவிடாத பகவத் குணாநுபவத்தினால் பரிபுஷ்டரான ஆசார்யர்களுடைய
அவிச்சிந்நமான ஸம்பத்து மல்கும்படியைக் கூறுவன மற்ற மூன்றடிகள்.
பெய்து, நிறைந்து என்பன – பெய்ய, நிறைய என்னும் பொருள்பட நின்றமையால், எச்சநஷத்திரிபு.
“சொல் திரியினும் பொருள் திரியா வினைக்குறை” என்பது நன்னூல்.
ஏழாமடியில் “நிறைக்கும்” என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல் பசுக்களுக்கு அடைமொழியாக்கி,
‘நிறைக்க வல்ல பசுக்கள்’ எனப் பொருள் கொண்டு,
எட்டாமடியில் “நிறைந்து” என்னும் வினை யெச்சத்தை வினைமுற்றாகக் கொண்டு ‘நிறையும்’ எனப்பொருளுரைத்தலுமாம்.
———————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply