இப்படி (பூமியை இடந்து )ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி (ஆதி -தூபம் தீபம் இத்யாதி )உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் –
(அர்ச்சனைக்குப் பலம் தர்சனம் என்று -பலத்தாலேயே பலத்தைப் பெற்று மகிழலாம் –நன்றி செலுத்தவே பூக்களைக் கொண்டு அர்ச்சித்து –ஸ்வயம் பிரயோஜனம் -ஸ்ரம ஸாத்யம் அல்லவே
பெரிய உபகாரகங்கள் செய்தார்
அதுக்கு பிரானே என்று கொண்டாடி
பூக்களைக் கொண்டு அர்ச்சித்து திருவடி வணங்கி
திவ்ய மங்கள விகிரஹம் உகப்புடன் சேவிக்கப் பெறலாம் -இப்படி நான்கும் இதில் –
தன்னையே வணங்கும் படி செய்து அருளியதும் மஹா உபகாரம் தானே
சென்னாள் –அந்நாள் உன பாதம் பிடிக்கும் நாளே )
பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–
பதவுரை
பிரான் என்றும்–‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும்–‘இன்றே நல் விடிவு’ என்றும் (கொண்டாடிக் கொண்டு)-புலர்தல் -விடிவு –
நாளும்–நாள் தோறும்
நல்குரா–நல்ல மணம் மிக்க
செழு–அழகிய
போது கொண்டு–புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம்–அழகிய வராஹ வுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர்–வணங்குபவர்களே
மணி உருவம்–(அப் பெருமானுடைய) திவ்ய மங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர்–ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.
பெரும் புலரி என்றும்-இன்றே நல் விடிவு என்றும்
நல் செழு குரா போது கொண்டு -மணம் மிக்க அழகிய –குரா மரப் புஷ்பங்களைக் கொண்டு –
இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியானவனே -என்றும் -(பிரான் -உபகாரகன் கீழே -இங்கு சேஷி -சேஷபூதனுக்கு நல்லது செய்ய வேண்டுமே )
இதர விஷய அனுபவத்துக்கு உறுப்பாய்க் கொண்டு பாழே கழிகிற நாளிலே-
ஸூ ப்ரபாதா ச மே நிசா -என்கிறபடியே
பகவத் அனுபவத்துக்கு யோக்யமாய்க் கொண்டு -அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற
பெரிய தொரு நல் விடிவு உண்டாவதே -என்றும் ஆதரித்துக் கொண்டு –
குராவினுடைய அழகியதாய் விலக்ஷணமான செவ்வியை யுடைத்தான பூவை சம்பாதித்திக் கொண்டு
வராஹ சஜாதீயமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற திவ்ய விக்ரஹத்தை யுடையவன் திருவடிகளை
பக்ந அபி மானராய் ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நீல ரத்னம் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை உகந்து கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –
(ஸூ ப்ரபாதா ச மே நிஸா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3-எனக்கு இன்று இரவு நன்றாக விடிந்தது
காட்டில் உள்ள குரா மலரைக் கொண்டே அர்ச்சிக்கலாம் படி ஸ்ரீ வராஹ உருவைக் கொண்டான்
ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2- சாதன தசையோடே ஸாத்ய தசையோடே வாசி யற இனிதாய் இருக்குமே -பலத்துக்கு பலமாகுமே -)
—————————————————————————————————–
இப்படி உபதேசித்த அநந்தரம் -தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக
அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
(முடியானே கரணங்கள் போல் – ஒவ்வொன்றும் மற்றவற்றை ஆசைப்பட்டன- 1-சிந்தை -2-மற்றும் -வாக்கு -ஆகம் -சரீரம்-மூன்றுக்கும் தனித்தனியாக மகிழ்ந்தது ஸப்த பிரயோகம் -சிந்தை மகிழ்ந்தது வாக்கு மகிழ்ந்தது -உடல் காயம் மகிழ்வது எப்படி என்னில் -ஆத்மா தானே மகிழும் -பகவத் விஷயத்தில் எல்லாம் பொருந்தும்
ஞான பிரசரம் மனம்-வாக்கு பாட பாட ஞானம் அது வழியாகப் போகுமே -உடல் மயிர் கூச்செரித்து -நடுங்கி கை கால் தள்ளாடி -கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலுமே )
மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து—-32–
பதவுரை
திருமாலே!–லக்ஷ்மீபதியே!
சிந்தை–என் நெஞ்சமானது
மகிழ்ந்தது–(உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;
மற்றும்–நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்
உன் பாதமே போற்றி–உன் திருவடிகளையே துதித்து
மகிழ்ந்தது–ஆநந்திக்கப் பெற்றது;
ஆகம்–என்னுடைய தேஹமானது
அழல்–எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற
ஆழி–திருவாழியையும்
சங்கம்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
அவை–மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்
பாடி ஆடும்–கொண்டாடிப் பாடி ஆடுகையாகிற
தொழில்–வியாபாரத்திலே
சூழ்ந்து–பொருந்தி
துணிந்து–இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு
மகிழ்ந்தது–களிக்கப் பெற்றது.
இச் சேர்த்தி அழகாலே அனுசந்தித்தவர்களை மகிழப் பண்ணும் ஸ்ரீ யபதியானவனே —
ப்ரீதி தத்வம் புதியது உண்டு அறியாத
என் மனஸ்ஸானது உன்னை அனுசந்தித்து ப்ரீதி யுக்தமாய்த்து –
மன பூர்வோ வாக் உத்தர -என்னும் படி அநந்தரம்
எண்ணப்படும் என் வாக் இந்த்ரியமானது ஸ்ரீ யபதியான
உன்னுடைய திருவடிகளை ஏத்தி மகிழப் பெற்றது-
என் ஹிருதயமானது (காயமானது )பிரதிபக்ஷத்தின் மேலே –
அழலை உமிழா நின்றுள்ள திரு வாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆகிற
இவற்றைப் பாடி ஆடுகை ஆகிற தொழிலிலே வியாப்தமாய்க் கொண்டு
அத்யவசித்து உகக்கப் பெற்றது –
(அந்வயம் மாற்றி இங்கு வியாக்யானம் -பாடி துணிந்தது-அங்கு பெரியவாச்சான் பிள்ளை -துணிந்து மகிழ்ந்தது இவர் -)
(முடியானே -3-8- திருவாய் மொழியிலே ஆழ்வாரின் கரணங்கள் பட்ட பாட்டைப் படுகின்றன இதில் இவ்வாழ்வாரின் கரணங்கள்
மநோ பூர்வக வாக் உத்தர -உன் பாதமே போற்றி -சிந்தைக்கும் சேரும் -ஞான ப்ரஸுர த்வாரமாய் இருக்கையாலே
மகிழ்ச்சியின் காரணமான மயிர்க் கூச்சு எறிவதால் உடலுக்கும் அது பொருந்தும் –
ஆகம் பாடி யாடும் -சரீரம் ஆடுவதும் பாடுவதும் தொழிலாகக் கொண்டு உள்ளது)
——————————————————————————————-
கீழே அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று –
இதில் அவனை அனுபவிக்கையாலே
மநோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
(இதிலும் முக்கரணங்கள் -மகிழ்ந்தது கீழ் -துணிந்தது இங்கு
வறட்டு ஞானத்தால் அத்யாவசியம் -ரிஷிகள்
ஞானம் முதிர்ந்து பக்தியாய் இனிமையால் துணிந்தது -அனுபவத்தாலேயே -மகிழ்ச்சியாலேயே வந்த துணிவு ஆழ்வார்கள் பரம் -_
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை——-33–
பதவுரை
சிந்தை–என் மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால்–பலமுறை
உள்ளத்து–நினைப்பதில்
துணிந்தது–த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;
அங்கமும் (பல்கால்)–எனது உடலும் எப்போதும்
பணிந்தது–வணங்குவதாயிரா நின்றது;
வாயும்–என் வாக்கும்
வேய் பிறங்குசாரல்–மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையையுடைய
விரல் வேங்கடவனை–திருமலையிலெழுந்தருளியிருக்கிற மிடுக்குடைய பெருமானது
திறங்களே-தன்மைகளையே
(பல்கால்)-எப்போதும்–
சொல்லும் வகை–சொல்லுகிற விதத்திலே
(துணிந்தது)–துணிவு கொண்டதாயிற்று.
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனானவனுடைய ஒப்பனை அழகுக்கு வாசகமான திரு நாமங்களை ஹிருதயத்திலே
மநோ ரதமானது உத்தர உத்தரம் அனுசந்திக்க வேணும் என்று அத்யவசித்தது –
இனி சரீரமானது சர்வ காலமும் வணங்குவது
மூங்கில்கள் மிக்கு இருந்துள்ள பர்யந்தத்தை யுடைய திருமலையிலே வர்த்திக்கிற அழகாலே
நம்மை எழுதிக் கொள்ளும் மிடுக்கை யுடைய திருவேங்கடமுடையானை
என்னுடைய வாக் இந்த்ரியமானது -அவனுடைய ஸ்வரூப ரூப குணாதிகளான
ஸ்வ பாவங்களைச் சொல்லும் பிரகாரத்தில் அத்யவசித்து –
(உள்ளத்து என்றது உள்ளுகை என்றும் மனத்திலுள்ள மநோ ரதம் என்றுமாம்
வேங்கடவனையே -ஏவ காரம் அத்யவசாயத்தைக் காட்டும்
வாக்கானது அவனுடைய ஸத்யத்வ ஞானத்வாதி ஸ்வரூப நிரூபிக்க குணங்களையும் –
ஸுசீல்ய வாத்சல்யாதி நிரூபித்த ஸ்வரூப விசேஷணமான குணங்களையும் சொல்லும் வகைகளிலே உறுதி பூண்டது –
துணிந்தது என்னும் சொல் சிந்தைக்கும் வாக்குக்கும் கூட்டிக் கொள்ள வேண்டும் -)
———————————————————————————————–
ஏவம் விதமான இப் பெரிய பேறு தான் தேவருடைய கடாக்ஷத்தாலே பெற்றேன் என்கிறார் –
(ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் தானே என் பாக்யம் -தானும் அறியாதே சாஸ்திரமும் சம்மதியாதே – அவன் நினைவாலே –
ஸூஹ்ருத தேவர் நம் பெருமாளே தானே -அவரையே என் பாக்யம்
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -மாற்ற முடியாத ஓன்று தானே இது த-அதுவே அவனது நிர்ஹேதுக கடாஷம் -கிருபா விசேஷம் –
அவனது கிருஷி பலனாகவே இவை பெறப்பெற்றேன்-அன்பே தகளி -தொடங்கி இதில் மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் -ஆதாரம் பெறுக வைத்த அழகன் அன்றோ )
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—–34–
பதவுரை
முன்னே–முற் காலத்திலே
வகையால்–உபாயத்தினால்
அவனி–பூமியை
இரத்து–(மாவலி பக்கல்) யாசித்து
அளந்தாய்–அளந்து கொண்ட வுன்னுடைய
பாதம் புகையால்–திருவடிகளை தூபங்கொண்டும்
நறுமலரால்–நல்ல பரிமளமுள்ள புஷ்பங்களைக் கொண்டும்
மிக வாய்ந்த அன்பு ஆக்கி–மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே
ஏத்தி–துதித்து
இனி–மேலுள்ள காலமெல்லாம்
என் பாக்கியத்தால்–நீ என்மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே
உனக்கு அடிமைப்பட்டேன்–உனக்குத் தொண்டனாய் விட்டேன்.
வடிவு அழகு -முக்த ஜல்பிதம் -மநோ ஹரமான திவ்ய சேஷ்டிதம் -தொடக்கமான பிரகாரங்களாலே –
ஆஸ்ரிதனான இந்திரன் திருவடிகளிலே வந்து விழுந்த முற்காலத்திலே
பூமியை மஹா பலி பக்கலிலே ஸ்ரீ யபதியான பெருமையை அழிய மாறிச் சென்று
அர்த்தித்து அளந்து கொண்டாயான-உன்னுடைய திருவடிகளை
(வகையால்–உபாயத்தினால்-நாமும் பூமியை அவனதாக்கிக் கொள்வோம்-ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே அவனி இரந்து அளந்த உன் திருவடிகளை -என்பர் பெரியவாச்சான் பிள்ளை)
தூபத்தால் செவ்விய பூ முதலான உபகரணங்களைக் கொண்டு முடிக்கவும் செறிந்த ப்ரேமத்தை யுடையனாய் –
ஸுந்தர்ய சீலாதிகளுக்குத் தோற்று ஸ்துதித்து -வகுத்த சேஷியான தேவர்க்கு
இனி மேல் உள்ள காலம் -தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால்
அடிமை செய்யுமவனாய் விட்டேன்
என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல் —
முன்னே -சந்நிதியில் என்னுதல்-(முப்பத்து மூவர் –முன் சென்று -பயப்படும் முன் -இடம் முன் இரண்டும் உண்டே அதே போல் இங்கும் )
(முன்னே -முற் காலத்திலேயே என்றும்
உனது ஸந்நிதியில் என்றும்
புகை நறு மலர்களைச் சொன்னது மற்ற ஆராதன உப கரணங்களுக்கும் உப லக்ஷணம்
என் பாக்யத்தால் என்றது -உனது நிர்ஹேதுக கிருபை என் பாக்கள் வெள்ளம் இட்ட தாகிற அத்ருஷ்டத்தால் என்றும்
என்னுடைய அப்ரதிஷேதத்தால் என்றும்
இப் புண்ணியத்துக்கும் மூல காரணம் நீ அவதாராதி முகத்தாலே பட்ட பாடுகளே என்பதையே -வகையால் அவனி இரந்து அளந்தாய் -என்னும் விளியாலே காட்டி அருளுகிறார் -)
———————————————————————————————–
இப்படி அல்ப அனுகூல்யம் பற்றாசாகத் தானே மேல் விழுந்து -சர்வ ரக்ஷைகளையும் பண்ணும்
உன்னை விட்டுச் சேதனர் சப்தாதி விஷயங்களில் மண்டி அநர்த்தப் படுவதே -என்று வெறுக்கிறார் –
இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–35–
பதவுரை
எந்தாய்–என் ஸ்வாமி யானவனே!
(பாமரர்கள்)
காமம்–ஹேயமான சப்தாதி விஷயங்களை
இனிது என்பர்–போக்யமாகக் கொள்வர்;
(விரக்தர்களுங்கூட)
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர்–அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;
காமம் நீர்–(கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
இனிது என்று வேளாது–போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்
நின் பெருமை சிறிது வேட்பர் ஏல்–உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)
சேமம் நீர் ஆகும்–(எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையை யுடையதாகும்
எல்லாம் கண்ணன் -என்கிறபடியே
தாரக போஷக போக்யங்கள் எல்லாம் நீயே யாம்படி -என்னைப் புகுர நிறுத்தின
என் ஸ்வாமி யானவனே –
அல்பமாய் அஸ்திரமாய் அபோக்யமான சப்தாதி விஷயங்களை போக்யங்களாக பிரமித்து
இவை இனிதாய் இருக்கிறது என்று விஷய அனுபவத்துக்கு ஸ்ரமம் செய்து இருக்கும் நாட்டார் சொல்லா நின்றார்கள்
விரக்தரோடு அவிரக்தரோடு வாசி அற சர்வரும் விரும்பும் படி இருக்கையாலே –
அந்த விஷயங்களில் காட்டிலும் மிகவும் இனிது என்று தண்ணீரைச் சொல்லா நின்றார்கள் –
பரீக்ஷகர் (விவேகிகர் )ஹேயமாகவே அறுதியிட்டு இருக்கிற விஷயங்களையும் (விஷயாந்தரங்களையும் )தண்ணீரையும்
அதஸ்மின் தத் புத்தியால் போக்யம் என்று புத்தி பண்ணி –
அவற்றை மேல் விழுந்து ஆசைப்படாதே
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் – -நிரதிசய போக்ய பூதனான உன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தை
ஏக தேசம் ஆசைப்படுமவர்களாமாகில் –
அது சர்வ தசையிலும் ரக்ஷகமான ஸ்வ பாவத்தை உடைத்தாகா நிற்கும் –
(ஆப ஏவ ஹி ஸூ மனச -ஸாஸ்த்ரமும் தண்ணீரில் அனைவரும் அபேக்ஷை யுடையவர்களாயே இருப்பார்கள் –
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ச மஹாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-19-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -தாரக போஷக போக்யங்கள் -எல்லாமே கண்ணனே
ததேவ ப்ரீதயே பூத்வா புனர் துக்காய ஜாயதே
ததேவ கோபாய யதஸ் ப்ரஸாதய ச ஜாயதே
தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-47-
ஒரே விஷயமே இன்பமாயும் பின்பு துன்பமாயும் இருக்குமே -எனவே இயற்கையில் துன்பமயமாயும் இன்பமயமாயும் இருப்பது ஒன்றும் இல்லை
ஆத்ம நஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் பவது -ப்ருஹதாரண்யம் -6-5-6-பகவத் சங்கல்பத்தால் ஏற்படும் இனிமையும் அல்பமாயும் அஸ்திரமாயுமே இருக்கும்
சிறிது வேட்பரேல் -இவற்றில் வைக்கும் ஆசையில் சிறிது உன் பக்கல் வைத்தாலே உஜ்ஜீவனம் ஆகுமே
யா ப்ரீதிர் அவிவேகா நாம் விஷ யேஷ்வநபாயி நீ
த்வாம் அநு ஸ்மரதஸ் சா மே ஹ்ருதயான் மாப சர்ப்பது –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-19-ஸ்ரீ ப்ரஹ்லாதனின் பிரார்த்தனை
த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷
சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம்-முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன் காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது
க்ரோதாத்பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷
கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –
பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –
நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –
அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்
சப்தாதி விஷய ப்ராவண்யமே அழிவையே உண்டாக்கும்-படிக்கட்டு காட்டி அருளுகிறார் இந்த இரண்டு ஸ்லோகங்களால்
மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -யுத்த -18-3-
எல்லா ஆசையும் உண்டானாலும் சப்தாதி விஷயங்கள் இவன் விரும்பும் அளவு கிடைக்க மாட்டா
அல்ப ஆசை யுண்டானாலும் பரமபுருஷன் இவனுக்கு கையாளாக நிற்பானே –
இந்த அரிய கருத்தை உள்ளடக்கிய பாசுரம் இது -)
———————————————————————————————————–
நாட்டார் செய்தபடி செய்கிறார்கள் -நெஞ்சே –
நீ முந்துற முன்னம் -அவனுடைய வியாபாரங்களை-(சேஷ்டிதங்களை )
அனுசந்தித்திக் கொண்டு ஸூகமே இருக்கப் பார்–என்கிறார் –
சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–
பதவுரை
சிறியார்–(இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை–(நானே ஈஸ்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும்–(தமக்குப் பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும்–த்யாஜ்ய உபாதேய விவேக ஞானம் இல்லாத -அவிவேகிகளும்
(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத்திருந்தார்களாகிலும்)
தாம் அறியார் ஆவர்–(நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;
என் நெஞ்சே–என் மனமே!.
அறியாமை–பிறர் அறியாதபடி
மண் கொண்டு–(மாவலியிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்
மண் உண்டு–இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும்
மண் உமிழ்ந்த–(பிறகு) அந்தப் பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற
மாயன் என்று–ஆச்சர்ய கரனான எம் பெருமான் என்று
எண் கொண்டு–இடைவிடாது கருதி
இரு–(அவனைப் பற்றின நமக்கு ஒரு குறை இல்லை யென்று) நிர்ப் பரனாக இருப்பாயாக.
ஸ்வத உத்கர்ஷ கந்தம் இன்றிக்கே -அதி ஷூத்ரராய் இருக்கிற சம்சாரிகளுடைய –
ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் துர்மானத்தாலே வந்த பெருமையானது –
ஸ்வத ப்ராப்தமான பழைய ஷூத்ரதையில் சென்று பர்யவசித்து விடும்
(மாறு உளதோ இம் மண்ணின் மிசையே -சாத்விக அஹங்காரம் ஆழ்வாரது
இவனுக்கோ துரபிமானம்)
ஸ்வத க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ண ஷமர் இன்றிக்கே இருக்கிற அறிவு கேடரானவர்களும்
தங்கள் நினைவாலே சர்வஞ்ஞராக அபிமானித்து இருந்தார்களாகிலும் –
பழைய அறிவு கேட்டை உடையாராயே விடுவர்கள்
நான் அவன் படிகளை சொன்னால் -அறிகைக்குப் பாங்கான என் மனஸ்ஸே –
நீ அறிவு கேடரான நாட்டார் படியைக் கை விட்டு
ஸ்ரீ யபதி இப்படி இரப்பாளனாய் வந்தான் என்று ஒருவரும் அறியாத படி பூமியை இரந்து அளந்து கொண்டு
பிரளயத்தில் அழியாதபடி அந்த பூமியைத் திரு வயிற்றிலே வைத்து நோக்கி
அநந்தரம் உள்ளுக் கிடந்து தளராதபடி அந்த பூமியை வெளி நாடு காணப் புறப்பட விட்டனாய் –
இவ்வளவு அன்றிக்கே
ஆஸ்ரிதர் விஷயத்தில் பண்ணும் ரக்ஷணத்துக்கு எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய பூதனுமாய் இருப்பான்
ஒருவன் என்று அநவரதம் அனுசந்தித்திக் கொண்டு –
அவனைப் பற்றின நமக்கு இனி ஒரு குறை யுண்டோ -என்று நிர்ப் பயமாய் இரு-
(ஈஸ்வரோஹம் அஹம் போகீ சித்தோஹம் பலவான் ஸூகீ
ஆட்யோ அபி ஜநவாநஸ்மி கோ அந்யோ அஸ்தி சத்ருஸோ மயா -ஸ்ரீ கீதை -16-14-15-என்கிறபடி அபிமானித்து இருப்பது –
ப்ரஹ்மாணம் ஸிதி கண்டஞ்ச யாஸ் சான்யா தேவதா ஸ்ம்ருதா
ப்ரதி புத்தாந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்-சாந்தி பர்வம் -350-86-
திருவுக்கும் திருவாய் இருப்பவன் மாணியாய் இரந்த பேராளன் பேர் ஓதும் பெரியோர் -பெரிய திருமொழி -7-4-4-
மாஸூச என்று தனது நெஞ்சுக்கு பயம் அற்று வாழ வழி காட்டுகிறார் -)
(மண் அளந்து மண் உண்ட உமிழ்ந்த -மூன்றிலும் எல்லாத் தேவதைகளும் உண்டே –
இதனாலேயே -தேவதாந்த்ர சம்பந்தத்துக்கு வழியே இல்லையே என்கிறார்)
———————————————————————————————-
இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜென்மங்கள் எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார் –
(சர்வேஸ்வரன் -ஸர்வ சமாஸ்ரயணீயன் -என்று அறிந்தும் இழந்து போகிறார்களே)
இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37-
பதவுரை
இரு–அளவில் பெரிய
தண்–குளிர்ந்த
கமலத்து–திரு நாபிக் கமலத்தின்
இரு மலரின் உள்ளே–இரு -பெருமையில் பெரிய -பெருமை பொருந்திய பூவில்
திருந்து–ஸமர்த்தனான
திசைமுகனை–நான்முகக் கடவுளை
தந்தாய்–படைத்தருளின பெருமானே!
பொருந்திய–ஸர்வ லோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தி யிருக்கிற-பிரமனும் பொருந்திய பாதங்கள் -பெருமை -நாம் விலக ஆரானும் பற்றிய நீங்கி விரதம் கொள்வோமே என்று எல்லாரும் பொருந்தும்படி எளியவன் என்கிறார்
நின்–உன்னுடைய
பாதங்கள்–திருவடிகளை
ஏத்தி–வாயாரத் துதித்து
பணியா ஏல்–வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்
எமக்கு–எங்கட்டு-எங்களுக்கு என்று -சம்சாரிகளுடைய இழவு தங்களாதகாகக் கொள்ளும் ஆழ்வார் -பர துக்க துக்கித்தவம் கொண்டவர்கள் அன்றோ
பல் பிறப்பும் எல்லாம்–பல வகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
ஏதங்கள்–பயனற்றவையே யாம்
பரந்து குளிர்ந்த -திரு நாபீ கமலத்தினுடைய விஸ்தீர்ணமான பூவினுள்ளே -மறுத்துக் கேள்வி கொள்ளாதே சொன்ன கட்டளையிலே
ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்கு சமர்த்தனான சதுர்முகனை ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் எனக்கேயாம் படி உபகரித்து அருளினவனே –
அசேஷ லோக சரண்யனாகக் கொண்டு எல்லோரோடும் பொருந்தி இருக்கிற உன்னுடைய திருவடிகளை வாயார ஏத்தித்
தலையார வணங்கி ஆஸ்ரயியைக்கு உறுப்பு அல்லவாமாகில் –
எங்களுக்கு கர்ம அனுகுணமாக மேலே மேலே
உண்டாயச் செல்லுகிற ஜென்மங்கள் அடங்கலும் வியர்த்தங்கள் –
ஜன்மத்துக்கு பிரயோஜனம் உன்னை ஆஸ்ரயிக்கை இறே-
அதுக்கு உறுப்பு அல்லாத போது அவை அடங்க நிஷ் பிரயோஜனம் என்கை –
(புஷ்கர பர்ணே ஸம்பவத் -நாபியில் நான்முகனைப் படைத்தான்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ்வேதர -6-18-
பர துக்க துக்கித்தவமே கருணையில் மேல் எல்லை
நீ சம்சாரிகளை பெற முயலும் அவற்றை அறிந்தும் சம்சாரிகள் உன்னை இழந்து உழல்வதே என்று வருந்துகிறார் -)
(ஆஸ்ரயித்தால் கிருபைக்கு விஷயம் ஆவோம்
ஆஸ்ரயிக்கா விடில் கர்மத்துக்கே விஷயம் ஆவோமே)
———————————————————————————————
அநர்த்த கரமான அர்த்தத்தை புருஷார்த்தம் என்று இராதே -ஸ்ரீ யபதியை நினைப்பது –
ஏத்துவதாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கையே -சர்வர்க்கும் கர்தவ்யம் என்கிறார் –
(செல்வத்தின் மேல் உள்ள ப்ராவண்யம் செல்வ நாராயணன் -திரு நாராயணன் -மேல் வைத்து உஜ்ஜீவிக்கலாமே)
எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38–
பதவுரை
இரு நிதியம்–(இப்பொருளை எப்போது நாம் கொள்ளை யடிக்கப் போகிறோம்’ என்று
அயலார் எதிர்பார்த்திருப்பதற்குக் காரணமான) பெருஞ்செல்வத்தை
எமக்கு என்று–தங்களுடையதாக நினைத்து
ஏமாந்து இராதே–மனச் செருக்குக் கொண்டிராமல்
தமக்கு என்றும் சார்வம் அறிந்து–தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தை யறிந்து
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து–‘நமக்கு எக் காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று
துணிந்திருக்கும் நெஞ்சை யுடையராய்
மற்று–அதற்குப் பின்பு
அவன் பேர்–அத்திருமாலினது திருநாமங்களை
ஓதுவதே–ஸங்கீர்த்தநம் பண்ணுவதே
நாவினால் ஒத்து–நாவுக்கு ஓதுவதற்கு உரிய விஷயம்.
பிறர் -இடம் பார்த்து அறிந்து விநியோகம் கொள்ள வேணும் என்று கருதும் படி –
தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருக்கிற மஹா தனத்தை-
துர் வாசனையாலே நமக்கு வேணும் என்று அபிமானித்துக் கொண்டு –
ந பிபேதி -என்னும் விஷயத்தைப் பற்றினால் போலே –
அறிவு கெட்டு நிர்ப் பரனாய் இராதே –
தம் தாமுக்கு அறிந்த போதோடு அறியாத போதோடு வாசி யற சர்வ காலத்திலும்
நித்தியமான அபாஸ்ரயம் -ஓன்று -என்று –
சாஸ்திர அப்யாசாதி களாலே அறிந்து –
இனி நமக்கு கால தத்வம் உள்ளதனையும் ஸ்ரீ யபதியானவனே
ஆஸ்ரயணீயனும் பிராப்யனும் என்று துணிந்து இருக்கும் மனசை யுடையராய் –
அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியினுடைய
அச் சேர்த்திக்கு வாசகமான திரு நாமங்களைச் சொல்லுகையே
வாக் இந்த்ரியத்தால் உச்சரிக்கப்படும் –
(புருஷார்த்தமாக அவளும் ப்ராப்யமாக அவனும் ப்ராபகமாக மிதுனமும்)
(கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு -திருவாய் -4-9-4-
ந பிபேதி குதஸ் சந -தைத்ரியம் -பரம புருஷனைப் பற்றி இருப்பவன் எத்தைக் கண்டும் பயப்பட மாட்டான்
சேதனர் அனைவர்க்கும் அறிந்த நிலையோடு அறியாத நிலையோடு வாசி இல்லாமல் நிரந்தரமான பற்றுக்கொம்பு தானே அவன்
எல்லாக் காலத்திலும் அவனே தாரக போஷக போக்யம் -உபாயம் உபேயம் என்ற துணிந்த மனத்துடன்
மாதவன் ஸ்ரீ தரன் போன்ற இம் மிதுனத்தின் பெயரைச் சொல்வதே நாவுக்கு ஓதத் தக்கது -)
—————————————————————————————————
நாவினால் ஓதுகை யாவது தான் ஏது என்ன -சகல வேத சங்க்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு
வேதாந்தத்தில் சொல்லுகிற மர்யாதையாலே பக்தி மார்க்கத்தில் நின்று ஆஸ்ரயிங்கோள் என்றும்
அது மாட்டாதார் -(ஸ்வரூப ஞானம் -அசத்தி அப்ராப்தம் -பக்தி பாரவசயத்தால் -மூன்றாலும் மாட்டாதார் )த்வயத்தில் கட்டளையில் -ஸ்ரீ யபதியானவன் திரு நாமத்தைச் சொல்லி ஆஸ்ரயிங்கோள் -என்றும்
இரண்டு வகையாக ஆஸ்ரயணத்தை-
அதிகார அநு குணம் விதிக்கிறார் –
(உயிரான பாசுரம் -மேம் பொருள் பாசுரம் போல்)
(சாதன பக்தி -திருமந்திரம் கொண்டு -அதுவே வேதம்
அது மாட்டீராகில் த்வயம் படி சரணாகதி பண்ணுங்கோள் என்கிறார்
ஓம் இத் ஆத்மாநாம் உன்ஞீதே –
வியாபக மந்த்ரங்கள் மற்றவற்றில் ஏற்றம் -அவற்றுள் நாராயணா -அபூர்த்தி இல்லா குறை -அஸிஷ்ட பரிக்ரஹம் -உபாயாந்தர பரர்களும் திருமந்திரம் கொண்டு ஸ்துதிப்பார்கள் அன்றோ
இந்த அர்த்தம் கொண்டு அப்பிள்ளை உரை)
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–
பதவுரை
ஏழைகாள்–‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,
ஓத்து அதனை–வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல்–ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று–அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல்–அது செய்ய சக்தி யற்றவர்களாகில்
மாதவன் பேர்–திருமாலின் திருநாமங்களை
சொல்லுவதே–உச்சரிப்பதே
ஓத்தின் சுருக்கு–ஸகல வேதங்களின் ஸாரமாகும்;
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே–வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்தும் திறம்–(அவனைத்) துதிக்கும் வகையை
அறிமின்–தெரிந்து கொள்ளுங்கள்.
வகுத்த விஷயத்தை இழந்து -இதர விஷயத்தில் பிரவணராய் திரிகிற சபலர்காள் –
சங்க வேத அத்யயனம் பண்ணி
அதில் சொல்லுகிற -அர்த்தங்களையும் அறிந்து
அறிந்த படியே சாஷாத் கார ரூபமான பகவத் பக்தியைப் பேற்றுக்கு
உபாயமாக அனுஷ்ட்டிக்க வல்லி கோளாகில்-
சர்வ வித ரக்ஷகனாய் -சர்வ பிரகாரியான புருஷோத்தமனுடைய
சர்வ ரக்ஷகத்வ வாதியான சகலார்த்தங்களுக்கும் வாசகமான திரு மந்த்ரம் ஆகிற திரு நாமத்தைச் சொல்லி(அவ ரக்ஷண -நாரங்களுக்கு அயனம்-ஆதி என்பதால் ஸ்வாமி சேஷி காரணம் ஆதாரம் இத்யாதி )
ஸ்தோத்ரம் பண்ணும் பிரகாரமான இத்தனையே வேதத்தில் சொல்லுகிற அர்த்தங்கள் எல்லாவற்றிலும்
தாத்பர்யமாக நிர்ணயித்துத் தலைக் கட்டின அம்சம் –
இப்படி நன்றாக அத்தை அறிய மாட்டிற்றிலி கோளாகில்
ஸ்ரீ யபதியினுடைய திரு நாமத்தை சொல்லுகையே –
அந்த வேதப் பரப்பு எல்லா வற்றிலும் கூட சங்ஷேபித்துத் தலைக் கட்டும் –
இவ் வர்த்தம் பகவத் பிரசாதத்தாலே தெளியக் கண்ட நான் சொன்ன வார்த்தை யாகையாலே
இத்தைத் தப்பாது என்று விஸ்வஸித்து அறியுங்கோள் –
இத்தைச் சுருக்கு என்கையாலே
கீழ்ச் சொன்னது வேதத்தில் பரக்கச் சொன்ன பொருள் -என்று தோற்றுகிறது –
(அவரவர் விதி வழி அடைய நின்றனர் -அந்தர்யாமியாக இவன் உண்டே -நின்று பலன் கொடுக்க- நியமிக்கிறவன் புருஷோத்தமன் தானே)
(மாநஸமே சரணாகதி -சொல்லுவதே -வாய் வார்த்தையாக -புத்தியில் படாமல் சொன்னாலும் -அதுவும் உனது ப்ரஸாதத்தாலே)
(வேத அக்ஷராணி யா வந்தி படிதாநி த்விஜாதிபி
தா வந்தி ஹரி நாமாநி கீர்த்திதாநி ந ஸம்சய
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
திருமாலின் பெயரைச் சொல்வதே வேத சாரம் திருமந்த்ரத்தைச் சொல்லியும்
‘த்வயத்தைச் சொல்லியும் ஆஸ்ரியிப்பார்
வல்லீரேல் -அர்த்த ஞானமும் அனுஷ்டானமும் துர்லபம்
கர்ம ஞான பக்திகளிலே இழிந்தவருக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும் –
திருமந்திரம் பக்திக்கு அங்கம்
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -அஞ்ஞரும் ஞானாதிகரும் பக்தி பரவசரும் –
அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் அஸ்மதாதிகள்
ஞானாதிக்யத்தாலே ப்ரபன்னர் பூர்வாச்சார்யர்கள்
பக்தி பாரவஸ்யத்தாலே ப்ரபன்னர் ஆழ்வார்கள்
தஸ்மாத் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு – )
———————————————————————————————————
இப்படியான பின்பு -ஸமஸ்த வேதங்களுக்கும் தாத்பர்ய பூதனான ஸ்ரீ யபதியைச்
சரம தசா பன்னராவதற்கு முன்னே கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –
சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–
பதவுரை
ஐயார்–கோழையானது
சுருக்காக வாங்கி–சரீரத்தைச் சுருங்க வலித்து
சுலாவி நின்று–உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று
நெருக்கா முன்–(உயிர் போகும் போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,
திரு பொலிந்த ஆகத்தான் பாதம்–பிராட்டியாலே விளங்குகின்ற திரு மார்பை யுடைய பெருமானுடைய திருவடிகளை
நீர் நினைமின்–நீங்கள் சிந்தியுங்கோள்:
அறிந்தும்–பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்
அறியாத–அறியாதவர்களாகவே உங்களைச் செய்ய வல்ல
போகத்தால்–சப்தாதி விஷயங்களால்
பொருள் இல்லை–ஒரு ப்ரயோஜனமுமில்லை.
(ஞானத்தை அனுஷ்டான பர்யந்தமாக ஆக்க போகம் தடுக்கும் -ஆகவே பாதம் அறிந்தும் -போகாததால் அறியாத என்கிறார்
நினைமின் -போகாததால் லாபம் இல்லை என்று நினைமின்
சரீரம் ஸ்பஷ்டமாக இருக்கும் போதே நினைமின்)
சரீரம் எங்கும் ஓக்கப் பூர்வத்தில் வியாபித்து நின்ற ஸ்லேஷமாவானது -சரீர விஸ்லேஷ தசையில் கண்ட ஸ்தானத்தில் வந்து
செறியத் தக்கதாகச் சுருங்க வழித்து இழுத்துக் கொண்டு -வாக் வியவஹார யோக்யதை இல்லாத படி மிடற்றை அடைத்து
மிறுக்குப் படுவதுக்கு முன்னே(உடம்பு சுருங்கி கீழே பார்த்தோம் –இங்கே ஸ்லேஷ சுருக்கம் )
பெரிய பிராட்டியாராலே சம்ருத்தமாய் விளங்கா நின்றுள்ள திருமேனியை யுடையனான
சர்வேஸ்வரன் திருவடிகளை நீங்கள் அனுசந்தித்துக் கொண்டு நில்லும் கிடிகோள்
பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதார் கணக்காம் படி பண்ணக் கடவ
சப்தாதி போகங்களால் வரக் கடவ பிரயோஜனம் இல்லை –
சுலாவி நின்று ஐயார்–சுருக்காக வாங்கி–நெருக்கா முன் — –
திருப் பொலிந்த-ஆகத்தான் பாதம் நீர் நினைமின் கண்டீர் –
என்று அந்வயம் –
(ப்ராண ப்ரயாண ஸமயே கப வாத பித்தைர் கண்டா வரோதந விதவ் ஸ்மரணம் குதஸ்தே -முகுந்தமாலை
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே
உத்தம ராஜ கன்யயாஸமே யிவான் அதீவ ராம ஸூ ஷுபே விபு ஸ்ரியா விஷ்ணு ரிவாம ரேஸ்வர-பால -77-99-
வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார்–திருவாய் -10-6-9-
விஷய போகத்தைக் கை விட்டுத் திருப்பொலிந்த ஆகத்தான் பாதத்தை சரண் அடையுங்கோள் என்கிறார் -)
——————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.