நாட்டில் உள்ளார் ஷூத்ர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர பலத்தைப் பெற்றுப் போமது ஒழிய
சர்வாதிகனான உன்னை(சர்வேஸ்வரன் ஸர்வ நியந்தா -சர்வாதிகன் -பரமன் மேம்பட்டவன் )அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் -என்கிறார் –
(ஆரோக்யம் இச்சேத் பாஸ்கரன் -ஸ்ரீ இச்சேத் செல்வம் அக்னி – சங்கரம் இச்சேத் ஞானம் –மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தனன் –சகல பல பிரதன் விஷ்ணு-குலம் தரும் -செல்வம் தரும் நீள் விசும்பு அருளும் -)
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-
பதவுரை
(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)
அமரக் கடை நின்று–தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று-அமரர்களும் தேவரீர் கடையிலே நின்று பிரயோஜநாந்தரங்களைப் பெற்றுப் போகிறார்களே
நாளும் கழல் தொழுது–நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
(பரமாநந்தம் பெற மாட்டாமல்)-தேவதாந்தரங்கள் உனது திருவடிகளைப் பற்றி -அதன் பிரபாவம் முழுவதும் அறியாமலேயே -ப்ரயோஜனாந்தரங்களைப் பெற்றுப் போவார்கள் என்றுமாம் -கடலுக்குள் உள்ள திமிங்கலம் போல் அவர்கள் ஆளவந்தார்
இடைநின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (-ஸ்வர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேஸ்வரனே!,-இரண்டாலும் திருமேனி -ஸ்வரூபம் இரண்டையும் சொன்னபடி
நின் அடியை–உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர்–அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)
அவ்வோ தேவதைகளின் வாசல் கடைப் பற்றி நின்று நம்மில் காட்டில் நாலு நாள் ஏற இருந்து சாகக் கடவ ப்ரஹ்மாதி தேவர்களுடைய கால்களை -(ந காலம் தத்ரைவ பிரபு அங்கு -அத்தை ஒப்பிட்டால் இது பரணில் இருப்பது போல் நாலு நாள்கள் தானே )
துராராதரானவர்கள் (அரியன் அலன் ஆராதனைக்கு -இவன் ஸூ ஆராதனன் ) இரங்கிக் கார்யம் செய்யும் அளவும் நெடும் காலம் ஆஸ்ரயித்து
அங்கே வந்து உன்னை அனுபவித்தல்- இங்கே இருந்து உன்னை ஆஸ்ரயித்தல்-
செய்கைக்கு யோக்யதை இல்லாத படி நடுவே மிடறு பிடியாய் நின்ற(அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் )
ஸ்வர்க்காதி ஸூகத்தைப் பெற்று அனுபவிக்கப் பெறுவர் –
சுற்றும் சூழ்ந்து கிடக்கிற ஜல ஸம்ருத்தியை யுடைய கடல் போலே ஸ்ரமஹரமான
வடிவை யடைய அபரிச்சேத்ய வைபவன் ஆனவனே –
(நெடுமாலுக்கு இங்கு மூன்றாவது அர்த்தம் -அளவிட்டு அறிய முடியாதவன் -த்ரிவித பர்ச்சேத ரஹிதன் –
கீழே சர்வாதிகன் என்றும் ஸர்வேஸ்வரன் என்றும் பார்த்தோம்)
இப்படி சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை ஸ்தோத்ராதிகளைப் பண்ணி –
ஆஸ்ரயிக்க வல்லவர் ஆர் தான் –
அன்றிக்கே
தேவதாந்த்ரங்கள் உன் வாசலிலே நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பிரயோஜனமாகக் கொள்ளாதே பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போவார் என்றுமாம் –
(ந ப்ரஹ்மா ந ஈஸாநா -ஸ்ருதி அர்த்தம் அறியாமல் என்றுமே சாகாது இருப்பவர்கள் என்று தப்பாக நினைக்கிறார்கள் –
பையனை அறுத்துத் தா போல் ஆராதனைக்கு அரியவர்கள் அன்றோ இவர்கள் –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –ஸ்ரீ கீதை -9-26- என்னுமவனைப் போல் அல்லரே
இடை நின்ற இன்பம் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் திரிசங்கு சுவர்க்கம் போல் கால் கட்டாகவே இருக்குமே
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -முதல் திருவந்தாதி -56
ப்ரஹ்மாவால் இழந்தே போவது
உன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கவும் வழி இல்லாமல்
கழுத்துக்கு கட்டியாயே இருக்குமே
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப-7-19-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமே கண்ணன் என்னும் மஹாத்மா கிடைத்தற்கு அரியவர் அன்றோ
கற்பக வ்ருக்ஷத்திடம் கௌபீந பிக்ஷை கேட்டுப் பெறுவாரைப் போலே அன்றோ இவர்கள்
நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்றும் காணலுமாம் கொலோ என்றே வைகல் காலையும் மாலையும் -திரு விருத்தம் -92-)
——————————————————————————
ஆனால் அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ -அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் –
அவர்கள் தாங்களும் தம் தாம் அபிமதம் பெறுகைக்கு அவனை ஆஸ்ரயியா நின்ற பின்பு நமக்கும்
அவனை ஆஸ்ரயிக்கை யன்றோ அடுத்து -என்கிறார் –
அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-
பதவுரை
எண்ணில்–(எம்பெருமானை ஆஸ்ரயித்து ஸ்வரூப ஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை–இன்னார் தாம் ஆஸ்ரயிப்பவர்கள், இன்னார் ஆஸ்ரயிக்காதவர்களென்ற ஒருவாசி யில்லை;
அரவு அணையான் பாதம்–சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி–தொழுது
ஏத்தாதார்–ஸ்துதியாதவர்கள்
எவர்–யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன்–பரவின அழகிய ஆயிரங் கிரணங்களை யுடையவனான ஸூரியனும்
ஒள் மலரோன்–அழகிய (திரு நாபிக் கமல) மலரை இருப்பிடமாக வுடைய பிரமனும்
கண் நுதலோன்–நெற்றிக் கண்ணனான ருத்ரனும்
(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆஸ்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
நாளும்–நாள் தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே–அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற இடத்தைத் தேடி ஆஸ்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?
ஆஸ்ரயணீயரான-அந்த தேவர்கள் -அவர்களை ஆஸ்ரயிக்கிற இந்த மநுஷ்யர்கள் என்ன ஒரு வாசி இல்லை –
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வாதிகனுடைய திருவடிகளைத் தலையாலே வணங்கி வாயாலே ஏத்தி
எவர் தான் ஆஸ்ரயியாதவர்கள் -ஆராய்ந்து பார்க்குமளவில் பரம்பின அழகிய கிரணங்களை யுடையனான ஆதித்யனும்
அழகிய திரு நாபீ கமலத்தை இருப்பிடமாக யுடைய ப்ரஹ்மாவும் -லலாட நேத்ரனான ருத்ரனும் ஆகிற நாட்டுக்கு
ஆஸ்ரயணீயராக பிரசித்தரான இவர்கள் அன்றோ நாள் தோறும் அவன் புக்க இடம் புக்கு பின்பற்றி
ஆஸ்ரயிக்கையே ஸ்வபாவமாக உடையராய் இருக்கிறார்கள் –
(கீழ்ப்பாட்டில் -நெடுமாலே நின்னடியை யார் ஓத வல்லாரவர் -என்று சொல்லி வைத்து
இதில் -அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்-எவர் வணங்கி ஏத்தாதார்-என்று அருளி இருப்பது முரண் அல்லவோ
எனில் முரண் ஆகாது
சென்ற பாசுரத்தில் பரம புருஷனுடைய திருவடிகளை ப்ராப்யமாக அறிந்து அவனை ஸ்துதிப்பவர்கள் அருமைப்பட்டு இருப்பர் என்று அருளினார்
இப்பாசுரத்தில் இதர பலன்களுக்காக ப்ரஹ்மாதி தேவர்களும் மனிதர்களும் வாசி இல்லாமல் அனைவருமே அவனை ஸ்துதிப்பவர்கள்
ஆகையால் ஒரு முரணும் இல்லை -)
(நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் படைத்தான் -ஸர்வ காரணத்வம் சொல்லி
ஸர்வரும் உன்னை ஆஸ்ரயிக்கிறார்கள் -என்றாலும்
எழுவார் விடைகொள்வாருமே மிக்கு
வைகல் தொழுது உன் இடமே இருப்பார் சிலரே என்கிறார்
பவான் நாராயண ஸ்ரீ ராமாயணம்
உவராய் வந்து நிற்பார்கள்
அந்திக்காப்பு இடுகிறோம் -)
———————————————————————————————-
இப்படி பெரியார் ஆஸ்ரயிக்கிற அளவு அன்றிக்கே ஜென்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றவர்களுக்கும்
கூச்சம் அற சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கலாம் என்கிறார் –
(தேவர்கள் அன்றோ பற்றினார் என்று நாம் விலக
ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பற்றி அருள
நாங்கள் விலங்கு இல்லையே என்று யாதானும் பற்றி விலக அன்றோ பார்க்கிறோம்)
தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—–13-
பதவுரை
தொடர் எடுத்த மால் யானை–காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது(ஸ்துதிக்கையே ஸ்வரூபமான துதிக்கை அன்றோ )
சூழ் கயம் புக்கு–(கரை காண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு–மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு-தொழும் காதல் களிறு அன்றோ
அன்று இடர் அடுக்க–அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி–(செவ்வி யழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம்–(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ-நாராயணா மணி வண்ணா என் ஆர் இடரை நீக்காய்
தான்–அந்த கஜேந்திரம்
பண்டு–முற்காலத்தில்
வானவர் கோன்பாழி–தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று–அடைந்தது.(ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பிரசித்தம் அன்றோ )
இட்ட விலங்கை ஒடித்துக் கையிலே கொண்டு ஸ்வைரமாகத் திரிகிற மத்த கஜமானது தன்னால் கரை காண ஒண்ணாத
பரப்பை யுடைத்தான பொய்கையில் அத்யபி நிவிஷ்டமாய் சென்று புக்கு -விகசிதமாய் ஓங்கி இருந்துள்ள அழகிய
தாமரைப் பூவை சாதரமாகப் பிடித்துக் கொண்டு -அத்தசையிலே முதலையின் வாயிலே அகப்பட்டது-
தன்னாலும் பிறராலும் பரிஹரிக்க ஒண்ணாத படியான துக்கம் பிரஸ்த்துதமாகப் பதறி -பூ செவ்வி அழிவதற்கு முன்னே
திருவடிகளிலே பணிமாறப் பெறுகிறிலோம் என்று பயப்பட்டு –
முதலையைத் துணிக்கைக்குப் பரிகரமான திருவாழியை
யுடையனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து அன்றோ –
முன்பு ஒரு நாளிலே (க்ருத யுக சரித்திரம் அன்றோ )அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனுடைய பரமபதம் ஆகிற ஸ்தானம் தன்னை பிராபித்தது –
ஆன பின்பு அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
இன்னார் ஆவார் இன்னார் ஆகார் என்னும் நியதி இல்லை என்று கருத்து –
(கஜ ஆகர்ஷ தீரே –க்ராஹ ஆகர்ஷதே ஜலே -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-46-
நாஹம் கலே பரஸ் யாஸ்யா த்ராணார்த்தம் மது ஸூதந
கரஸ்த கமலாந்யேவ பாதயோ ரர்ப்பிதம் தவ –
அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை–ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -32-)
—————————————————————————————-
இப்படி அவன் சர்வ ஸமாஸ்ரயணீயன் ஆன பின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே –
எம்பெருமானை ஆஸ்ரயித்து நாட்டையும் உங்கள் சஞ்சாரத்தால் பரிசுத்தமாம் படி பண்ணுங்கோள் -என்கிறார் –
பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-
பதவுரை
பேதைகாள்–அவிவேகிகளே!,
பண்டியை–வயிற்றை-அநாதி காலம் இருக்கும் சம்சாரம் ஆக்கி வளர்த்து என்றுமாம் -ஆக்கியவர்-ஸ்ருஷ்டித்த கரம் நான்கு உடையவன் -என்றுமாம்
பெரு பதி ஆக்கி–பெரிய ஊர் போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து(பண்டி -பண்டு -யை பண்டு இப் பெரும் பதி ஆக்கி –பண்டியை )
பழி பாவம் கொண்டு–தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு-செய்யாத குற்றத்தை ஏறிட்டு சொல்வது பழி -பண்ணுவதை நிரூபித்து சொல்வது பாவம் என்றுமாம் –
இங்கு–இவ்வுலகில்
வாழ்வாரை–வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே–புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்–(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப் போடும்படி-வியாபித்து
விம்மி வளர்ந்த நான்கு திருத்தோள்களையுடையனான பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–இடைவிடாது சொல்லிக் கொண்டு-ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி -ஆண்டாள் சுலபமாக அருளிச் செய்தாள் அன்றோ -ஸ்வயம் பிரயோஜனமாக என்பதால் ஓதி -சொல்லி பாடி என்று இல்லாமல்
திரிந்து–திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின்–(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.
வயிற்றைப் பெரிய ஊர் போலே கண்ட அன்னலும் துன்னலுமாக இட்டு வளர்த்து -அதுக்கு உறுப்பாகத் தான்
அறியாதே பிறர் அறிந்து ஏறிடும்படி -அபுத்தி பூர்வகமாக செய்யப்படும் பழியையும் -புத்தி பூர்வகமாகத் தான்
அனுஷ்ட்டித்துப் போரும் நிஷித்தா சரணம் ஆகிற பாபத்தையும் உத்தரோத்தரம் வளர்த்துக் கொண்டு
இஹ லோகத்தில் பர லோக ஸூகம் கனாக் கண்டு- அறியாதவர்கள் ஆகையால் -இத்தை பெரிய வாழ்வாக
நினைத்துக் களித்துத் திரியும் ஹேயரான சம்சாரிகளை -(பேதைகாள் )உனக்கு ஒரு பழி யுண்டோ -பாவம் யுண்டோ -என்று புகழாதே-கண்டது அல்லது அறியாத அறிவு கேடர்காள் —
திரு வுலகு அளந்து அருளின போது எட்டு திக்குகளையும் பேர்த்துப் பொகடும்படி
விம்ம வளர்ந்த நாலு திருத் தோள்களை யுடையனான சர்வேஸ்வரனுடைய குணாதிகளுக்கு வாசகமான திரு நாமங்களை
இடை விடாமல் சொல்லிக் கொண்டு –
தீதில் நன்னெறி காட்டி (குலசேகராழ்வார் )எங்கும் சஞ்சரித்து -உங்கள் ஸஞ்சாரத்தாலே
நாட்டை இருந்ததே குடியாகப் பரி சுத்தராம் படி பண்ணுங்கோள் –
பண்டிப் பெரும் பதி-என்று முன்பு
இந்த சம்சாரத்தை வர்த்திப்பித்து என்னுதல் –
பழையதான சம்சாரத்தைச் சேர்த்து -என்னவுமாம் –
(தீர்த்தம் கரோதீதி தீர்த்த கர -பிறரைப் பரிசுத்தப் படுத்துபவர்
அதி பாதக யுக்தோபி த்யாயன் நிமிஷம் அச்யுதம்
பூயஸ் தபஸ்வீ பவதி பங்க்தி பாவந பாவந
மஹா பாவங்களை செய்தவனாயினும் -அச்யுதனை ஒரு க்ஷணம் நினைத்தாலே மஹா தபஸ்ஸைச் செய்தவனாயும்
தன் ஸம்பந்தத்தாலேயே ஒரு பங்க்தி-வரிசை முழுவதையும் பாவனம் செய்யும் பங்க்தி பாவனர்களையும் பரிசுத்தப் படுபவனாயும் ஆகிறான்
ஞானதோ அஞ்ஞானதோ வா அபி வாஸூ தேவஸ்ய கீர்த்த நாத்
தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா
தெரிந்து தெரியாமலோ வாஸூ தேவனை சங்கீர்த்தனம் செய்வதன் மூலம் மனிதனுடைய பாபம் எல்லாம்
தண்ணீரில் உள்ள உப்பு போலவே கரைந்து விடும்
யன் நாம கீர்த்தனம் பக்த்யா விலாயநம நுத்தமம்
மைத்ரேய அசேஷ பாபா நாம் தாதூ நாமிவ பாவக
மைத்ரேயரே -என்னுடைய நாமத்தை அன்புடன் கீர்த்தனம் செய்வது தாதுக்களை அழிக்கும் நெருப்பு போலவே
எல்லா பாபங்களையும் அழித்து ஒழிப்பதாய் இருக்குமது அன்றோ
ஸமா யாலம் ஜலம் வஹ்நேஸ் தமஸோ பாஸ்கர உதயா
சாந்தி கலேர கௌ கஸ்ய நாம சங்கீர்த்தனம் ஹரே
நெருப்பை அணைக்க நீரும் -இருட்டை நீக்க ஸூர்ய உதயமும் போதும் அன்றோ
அதே போலவே கலியின் பாபக் கூட்டங்களை அழிக்க ஹரியின் திரு நாம சங்கீர்த்தனத்தாலேயே இயலும் –
என்று சாஸ்த்ரங்கள் கோஷிக்குமே
ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –பெருமாள் திருமொழி -2-6-)
(மழை மேகம் போல் முதல் ஆழ்வார்கள் மூவரும் எங்கும் சென்று உலகத்தை திருத்தி அருளினார்கள் அன்றோ கொண்டல் அனைய வண்மையாலேயே -)
————————————————————————————–
இவர்கள் இப்படி தங்கள் உடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய –
இவர்களுக்காக கிருஷ்ணனாவது -ராமன் ஆவதாக கொண்டு
அதி ஸூ குமாரமான திரு மேனியோடு அவன் பட்ட மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் –
(த்ரிவிக்ரமன் ராமன் கிருஷ்ண -மூன்று அவதாரங்களும் திருப்பாவையில் போல் முன் பாசுரத்திலும் -இப் பாசுரத்திலும் மூன்றும் உண்டே-அருகில் உள்ள அவதாரமான கிருஷ்ணாவதாரம் சொல்லி ராமாவதாரம் –
தேஹ போஷணம் பண்ணும் சம்சாரிகளுக்காகவாச இப்படி அவதாரம் செய்வது -என்கிறார்-இப்படி இரண்டு சங்கதி )
திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—-15-
பதவுரை
வெம் சமத்து–கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர் கடவி–(பார்த்த ஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும்–அலைந்ததும்,
அன்று–இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய்–மாரிசனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும்–பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண்–தரையிலே
பள்ளி கொள்ள–படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும்–ஆசை கொண்டதும்
(ஆகிய இச் செயல்கள் யாவும்)
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே–ஏற்றவையோ?
கண் பள்ளி கொள்ள —தரையிலே பள்ளி கொண்ட தலை சயனப்பெருமாளை அனுசந்தித்து என்றும்
பெருமாள் தரையிலே பள்ளி கொண்டதுவும் என்றதுவாம்
கொடிதான யுத்தத்திலே எதிரிகள் விடுகிற அம்புகள் தன் மேலே படும்படி உடம்புக்கு ஈடு கொடாமல் -சாரதியாய்க் கொண்டு
அர்ஜுனன் சொன்ன இடத்திலே தேரை நடத்திக் கொண்டு திருமேனி அலசும்படி இதஸ் தத்ஸ சஞ்சரித்ததுவும்(சித்திரத்தேர் வலவா -மாயப்போர் தேர்ப்பாகனாய் )
வன வாஸோ மஹோதய -என்று
சொல்லும்படி உகப்புடன் காட்டிலே சஞ்சரித்துத் திரிகிற அன்று மாயா மிருகத்தின் பின்னே போய்
நித்யம் ப்ராணசமையான பிராட்டியைப் பிரிந்து அலைச்சல் பட்டதும் –
அதி கடினமான பூமியிடத்திலே பள்ளி கொண்டு அருள
ஆதரித்ததுவுமான இவ்வோ செயல்கள் எல்லாம்
மென்மை குளிர்த்தி நாற்றங்களை பிரக்ருதியாக யுடைய திரு வனந்த ஆழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டு
அருளக் கடவ அதி ஸூகுமாரனான தனக்குச் சால அழகியதாய் இருந்தன என்று வயிறு பிடிக்கிறார் –
கண் பள்ளி கொள்ள -என்றது(கண் வளர்ந்த என்ற அர்த்தத்தில் இல்லையாய் )
கண் -என்று இடமாய் –
தரைக் கிடை கிடக்க என்றபடி –
(தேர் கடாவி –
ஆத்மாநம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மனஸ் ப்ரக்ரஹ மேவ ச
இந்திரியாணி ஹயாநா ஹுர் விஷயாம்ஸ் தே ஷு கோசரான் –கடவல்லி -1-3-34-
அனைவரையும் நடத்தி செல்பவன் அன்றோ இங்கு ஒரு ரதிக்கு அடங்கி சாரதி யாகிறேனே
ராமாவதாரத்தில்
மா ச லஷ்மண ஸந்தாபம் கார்ஷீர் லஷ்ம்யா விபர்யயே
ராஜ்ஜியம் வா வன வாஸோ வா வன வாஸோ மஹோதய –ஆரண்ய 2-29-
வனவாசமமே அரசாள்வதை விட சிறந்ததாகும் என்றானே
மேலும் பிராட்டியைப் பிரிந்து
ராஜ்யாத் ப்ரம்சோ வன வாஸ ஸீதா நஷ்டா ஹதோ த்விஜ
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்த ஹேதபி பாவகம் -ஆரண்ய -67-24-
இப்படி வந்த துன்பங்கள் எல்லாம் நெருப்பையும் எரிக்கும்படி அன்றோ)
———————————————————————————
இப்படி நம்மைப் பெறுகைக்கு எம்பெருமான் தானே கை தொடனாய் உதித்து கிருஷி பண்ணா நிற்க –
சேதனனான வாசிக்கு அவனைப் பெற வேணும் என்னும் ருசி மாத்திரம் ஒழிய நாம் பேற்றுக்கு
யத்னம் பண்ண வேணும் என்பது ஓன்று உண்டோ -என்கிறார் –
(பர கத ஸ்வீ காரம் அருளிச் செய்ய வந்த பாசுரம்)
தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-
பதவுரை
தனக்கு–சேதநனாகிய தனக்கு
அடிமை–சேஷத்வமென்பது
பட்டது–பொருந்தி அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும்–தான்தெரிந்து கொள்ள அசக்தனாயிருந்தாலும்–யானே என்னை அறியகில்லாத -அடிமைப்பட்டது -சேஷத்வம் -ஆத்மாவை சேஷத்வமே என்று ஆதரிக்கும்
பூவுக்கு மணம் -ரத்னத்துக்கு ஒளி போல்-
(எம்பெருமான் தானாகவே)
மனத்து–மனத்திலே
அடைய–வந்து சேர்ந்த வளவில்-சொத்தை தேடி ஸ்வாமி வந்த அளவிலே
மாலை–அப்பெருமானை-மால் -ஆஸ்ரித வ்யாமோஹம் -பித்தன்–மால் பெரியவன் கருமை -அழகன் -பாலைக் குடிக்க காலைப்பிடிக்க வேண்டுமோ –
வைப்பது–இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;-இத்தால் ஸ்வீ காரத்தில் உபாய பாவத்தைத் தவிர்க்கிறது -அதிகாரி விசேஷணம் இது –
(இவனுக்கு -யானே என்னை அறிய கில்லாமல் இருந்தாலும் -இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே
தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்–ந்யாஸ இதி ப்ரஹ்ம -சரணாகதி பிரபத்தி செயல் அல்ல -அவனே -ஈஸ்வரனே உபாயம் என்னும் திட அத்யவசாயம் போஜனத்துக்கு ஸூத்து போல் பசி போல்-வைப்பது ஆம் -இதுவே பொருத்தம் -பல அனுபவ யோக்யதா ஆபத்வம்-பசி போல் விலக்காமை -வைப்பதாம் -என்கிறது )
வனம் திடரை–காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்–(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி)
ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று-பின்னும்
மாரி–மழையை
பெய்கிற்பார்–பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார்–யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத் ஸங்கல்பத்தாலன்றோ?.)
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச சதா ஸ்மர-என்று
எம்பெருமானுக்கு சேஷித்வம் கூறப் பட்டால் போலே
தனக்கு சேஷத்வம் கூறப் பட்டது என்னும் இடத்தை
பிராமண பிரசித்தி யாலும் –
ஆச்சார்ய சேவையாலும்
தான் உள்ளபடி அறிய மாட்டாதவனாய் இருந்தானேயாகிலும் –
நம் உடைமையை நாமே பெற வேணும் -என்று மேல் விழுகிற வியாமுக்தனானவனை –
திரு வாணை இட்டுப் புகாத படி தடுக்கை யன்றிக்கே மனசிலே வந்து
சேரத் தக்கதாகத் தான் பொருந்தி இடம் கொடுத்து வைத்துக் கொள்ளுவது –
இத் தலையிலே இவ்வளவு ருசி மாத்திரம் உண்டானால்
விரோதியைப் போக்கித் தன்னைத் தருகை அவனுடைய பரம் இறே —
அது எங்கனே என்னில் –
காடு எழுந்து கிடக்கிற அதி கடினமான திடரை-
வருகிற வர்ஷ ஜலம் புறம்பு போகாதே தடை யற வந்து புகுரும்படி
ஏரியாம் பிரகாரம் யத்தனித்து வெட்டுவிக்கும் இத்தனை ஒழியப் பின்னை வர்ஷத்தைப் பெய்விப்பார் ஆர்
அதுக்கு கடவனான பர்ஜன்யன் அன்றோ –
ஏரி வர்ஷத்தை உண்டாக்கிக் கொள்ளும் அன்று அன்றோ
பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளல் ஆவது
ஆன பின்பு இத் தலையில் விலக்காமையே பற்றாசாகத் தானே
விரோதியைப் போக்கி
ப்ராப்தியைப் பண்ணித் தரும் என்றபடி –
(ஸ்வீ காரம் -ஏற்றல் -அவன் இடம் இருப்பது பர கத ஸ்வீ காரம் -நம்மிடம் இருப்பது ஸ்வ கத ஸ்வீ காரம்-குரங்கு குரங்குக்குட்டி பூனை பூனைக்குட்டி –
புல் மண்டி இருக்கும் காட்டுப் போல் மனஸ்ஸூ -காம க்ரோதாதிகளால் மண்டி இருப்பதை மாற்றுவதும் அவன் கிருபையால் தானே முடியும் )
அங்கன் அன்றிக்கே —
மனத்தடையே வைப்பதால் மாலை –
அவன் சேஷி தான் சேஷம் என்னும் இடத்தை சேதனன் தான் அறிய மாட்டானே யாகிலும் –
யத்ய தாசரதி ஸ்ரேஷ்டம்-என்கிறபடியே
தனக்கு ருசி இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
செய்வார் செய் முறை பாடு காண்டாகிலும் சர்வேஸ்வரனை ஹிருதயத்திலே வைத்துக் கொள்வது –
இவ்வளவு கொண்டே
அவன் தானே விரோதியையும் போக்கி ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கும் –
அதுக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறது –
வனத்திடரை -இத்யாதி –
காட்டுத் திடரை ஏரியாம் படி கல்லுகை ஒழிய
மற்றும் மழை பெய்விப்பார் ஆர் -என்று யோஜிக்கவுமாம் –
அங்கனும் அன்றிக்கே –
மாலை மனத்திடை வைப்பதாம்-சர்வேஸ்வரனை ஹிருதயத்திலே கொண்டு வந்து
சர்வ சக்தி வையானோ என்று ஷேபம் -( வெறுப்பில்-உன்னால் செய்யப்போமோ மனத்தடைய வந்தவனே வைப்பான் அன்றோ )
(அதுக்கு த்ருஷ்டாந்தத்தில் விளக்கி -அனைத்துக்கும் அந்தராத்மாவான அவனே வெட்டுவித்தகு -மழை பெய்வித்து -செய்து அருள்குபவன் அன்றோ)
வனத்திடரை இத்யாதி –
மனுஷ்யரை ப்ரேரித்து கல்லுவிப்பானும் -இந்திரனை இடுவித்து மழை பெய்விப்பானும்
அவன் தானே யன்றோ என்கிறார் –
அப்படியே மனத்திடரில்-
அவித்யா கர்மா வாசா நாதிகளைப் போக்கி ருசி உண்டாக்குவானும் –
தன் கல்யாண குணங்களை வர்ஷிப்பானும்
அவனே யன்றோ என்னவுமாம் —
முற்பட்ட யோஜனை திருமலை நம்பியது –
இரண்டாம் யோஜனை ஆழ்வானது-
(ருசியை விளைவிப்பானும் அவனே -கூரத்தாழ்வான் நிர்வாஹம் -அஹம் ஹி ஸர்வ யஞ்ஞானாம்–போக்தா ச பிரபு -செய்யும் கிரிசைகளும் – செய்வார்களைச் செய்வானும் யானே என்னும் -இத்யாதி)
(ருசி ஜனக விபவ லாவண்யம் வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் –திருக்குறுங்குடியில்
ருசி விவசர்க்கு -உதார குணம் -பாதத்தையே சரண் ஆக்கி அருளுபவர் -பிராப்தி வானமா மலை
நடுவில் கடல் ஞாலம் -)
(அவனைப் பெற ருசி ஒன்றே போதும் -முயல வேண்டா -பரகத ஸ்வீ காரத்தின் சிறப்பைத் தெளிவிக்கும் பாசுரம் இது –
ஸ்வத்வ மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -உடைமையாய் இருக்கை ஜீவாத்மாவின் இடமும் உடையவனாய் இருக்கை பரமாத்மாவிடமும் உள்ளன –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்பாவஞ்ச ஸதா ஸ்மர –ஆத்மாவின் தாசத்தன்மையும் ஹரியின் ஸ்வாமித் தன்மையும் இயற்க்கை என்பதை எப்போதும் அறிவாயாக
அவனே நெஞ்சமே நீள் நகராகக் கொண்டு வாழ அபிநிவேசத்துடன் வந்து அடையும் போது
திருவாணை இட்டுத் தடுக்காமல் பொருந்து இருக்கும் படி இடம் கொடுக்க வேண்டுமே –
யத்ய தாசாரதி ஸ்ரேஷ்ட தத் ததே வேத ரோஜந -3-21–அறிவாளர்கள் அனுஷ்டிப்பதை அறிவில் குறைந்தவனும் பின்பற்றி அனுஷ்டிக்கிறான்
இவனுடைய விலக்காமையையும் ருசியையும் கொண்டு விரோதியைப் போக்கித் தன்னையே தந்து அருளுபவர் அவன்
ருசி மாத்திரம் -திருமலை நம்பி நிர்வாஹம்
ருசியையும் உண்டாக்கிக் தன்னைத் தந்து அருளுபவன் -ஆழ்வான் நிர்வாஹம்–என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -எல்லாமே அவனாலே –
மனத்தடைய –மேல் விழும் முயற்சி மாலது அவனது-பக்தி உழவன் அன்றோ
வைப்பதாம் –இதுவே நமது கர்தவ்யம்
அருள் மழையைப் பொழிய வரும் போது -அஞ்ஞானம் கர்மா வாசனை போன்ற புதர்களை அழித்து
ருசியாகிய விதையை விதைத்து
அத்தை பேர் அமர் காதல் பின் நின்ற காதல் -கடல் புரைய -அதனிலும் பெரிய அவாவாக்க தனது கல்யாண குணங்களாகிற மழையைப் பொழிந்து
வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த பத்தி யுழவன் பழம் புனத்து -நான்முகன் -23-
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்துவம் ந து குணவ் -ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-உபாயத்வமும் உபேயாத்வமும் உனக்கு ஸ்வரூப நிரூபனம்
மற்றவை போல் நிரூபித்த ஸ்வரூப குணங்கள் அல்ல -ஞான பலாதி ஆறு குணங்களும் ஸ்வரூப நிரூபக குணங்கள்
பெரிய பெருமாளை நிரூபிக்கவே உபாயத்வமும் உபேயத்வமும் – என்கிறார் பட்டர் -)
———————————————————————————
இப்படி இருக்கிற அவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –
மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு—–17-
பதவுரை
வானவர் கோன்–தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன்–(எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை–பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆஸ்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை–எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான்–ஓரு கலா மாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின் சென்று–அநுவர்த்தித்து
இரந்து-(பல்லைக் காட்டி) யாசித்து
குறை–தனது குறையை
தான் முடித்து கொண்டான்–தான் நிறைவேற்றிக் கொண்டான்;
(ஆனபின்பு)
இயல் ஆவார்–ஆஸ்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர்-அந்த ஸர்வேஸ்வரனைத் தவிர வேறு யாவர்?
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு எல்லாம் நிர்வாஹகனான இந்திரனும் –
ஸ்லாக்யமான திரு நாபீ கமலத்தை வாசஸ் ஸ்தானமாக யுடைய ப்ரஹ்மாவும் –
நேர் கொடு நேரே சென்று கிட்ட மாட்டாமல் பாடே பக்கே நின்று திருவடிகளிலே பின்னாபிமானராய் (பக்ந அபிமானராய் )விழுந்து
ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பான ஸுந்த்ர்யாதி சீலாதி குண சேஷ்டிதங்கள் ஆகிற பிரகாரங்களை யுடையனாய் –
சர்வாதிகனானவனை
(விரோதி நிரசன சாமர்த்தியம் குணம் -கேசி அழித்தவன்-சேஷ்டிதம்
சர்வ ஆதாரன் குணம் – -கோவர்த்தந தாரி -சேஷ்டிதம் போல்)
கலா மாத்ர மான சந்திரனை தரித்து இருக்கிற சிவந்த ஜடையை யுடையனான ருத்ரன்
தன் ஹிருதயத்திலே அனுசந்தித்திக் கொண்டு இருந்த துர்மானத்தை விட்டு பின்பற்றி அனுவர்த்தித்து –
அநந்தரம் பல் காட்டி அர்த்தித்துத் தன்னுடைய குறையை தான் தலைக் கட்டிக் கொண்டான்
ஆன பின்பு அவனை ஒழிய வேறு ஆர் தான் சத்ருச ஸமாஸ்ரயணீயனாய் இருப்பர் –
(அபிதஸ் பாவ கோபமம் -அயோத்யா -99-26- சுற்றிலும் தீயைப் போல அணுக ஒண்ணாதவன்
கடிக்கமலத்துள் இருந்தும் காண் கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திரு -56-
பின் சென்று -நேராக விழிக்க ஒண்ணாமையால் என்றும்
நெஞ்சிலே உள்ள துற அகங்காரத்தை விட்டுப் பின் பற்றி அனுவர்த்தித்து -என்றுமாம்
ப்ரஹ்மாதி தேவர்களும் இவனை ஆஸ்ரயித்து குறைகள் தீரப் பெற்றார்கள் -எனவே
இவனைப் போல் ஆஸ்ரயிக்கத் தக்கவர் வேறே யார் என்று கீழோடே அந்வயம்)
வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஸ்தோத்ர ரத்னம் -13
ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?
————————————————————————————————————–
இப்படி ஸமாஸ்ரயணீயனாய் சர்வாதிகனாய் இருந்து வைத்து –
தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை நோக்கும் (ரக்ஷிக்கும்)ஸ்வபாவன் என்கிறார் –
கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு——-18-
பதவுரை
குறள்உரு ஆய்–வாமந ரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம்–பூமி முதலிய லோகங்களை
கொண்டது–ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய்–மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து–மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது–தனது நகங்களை யழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள்–ஒரு காலத்திலே
தான் கடந்த–தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே–எல்லா வுலகங்களையும்
உண்டதுவும்–(பிரளயங் கொள்ளாதபடி) திரு வயிற்றிலே வைத்துக் கொண்டதும்
(ஆகிய இச் செயல்கள்)
வான் கடந்தான்–ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிட வொண்ணாத படியுள்ள பெருமையை யுடையவனும்-வான் -பரமாகாசம் -லக்ஷனையால் -நித்ய ஸூரிகள் மநோ ரதங்களைக் கடந்தவன் என்றுமாம்
தாமரை கண்–செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால்–எம்பெருமான்
செய்த–செய்தருளின
வழக்கு–நியாயமான செயல்களாம்-பிராப்தம் -சர்வாதிகன் -சர்வேஸ்வரன் -அன்றோ எனவே வகுத்ததே
ஆகாசத்தை அளவிடிலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையவனாய் -இவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இடத்தை
கோள் சொல்லித் தருகிற தாமரை போன்ற கண் அழகை யுடையனான சர்வேஸ்வரன் –
(கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 12 –
ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?)
நம்முடைமையை நாமே நம்மை
அழிய மாறி ரஷிக்கை நமக்கு ஸ்வரூப பிராப்தம் அன்றோ -என்று நியாயமாகச் செய்த செயல்கள் இருந்த படி –
ஸ்ரீ வாமனனாய் தன்னை அழிய மாறி அர்த்தித்து பூமி முதலான லோகத்தை வாங்கிக் கொண்டதும் –
மிடுக்கை யுடைத்தான நரசிம்ஹ ரூபியாய்க் கொண்டு அழகிய மிடுக்கை யுடையனான ஹிரண்யனுடைய
மார்விலே -திரு உகிரை நாட்டிப் பிளந்து பொகட்டதுவும்
ஒரு நாளிலே தான் அளந்து கொண்ட சப்த லோகங்களையும் தர தம விபாகம் பாராதே திரு வயிற்றிலே எடுத்து வைத்து
நோக்கியும் செய்த செயல்கள் இவைகள் கிடீர்
வழக்கு -நியாயம் -பிராப்தம் -என்றபடி –
பிறருக்கு ஒரு கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே
தனக்கு அடைத்த கார்யம் செய்தானாய் இருக்கை –
உடையவன் உடமையை ரஷிக்கை பிராப்தம் இறே –
(சேஷ பூதனுக்கு கைங்கர்யம் வகுத்தது போல் சேஷிக்கு ரக்ஷணமே பிராப்தம் அன்றோ
அவனுக்கு பரீஷை களே -திரௌபதி கஜேந்திரன் விபீஷணன் -பிரகலாதன் விருத்தாந்தம்)
(தாமரைக் கண் மால் –
ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
ஸர்வ ஸ்வாமித்வத்தையும் கோட் சொல்லும் திருக்கண்கள்
வான் கடந்தான் –
அங்குள்ள நித்ய ஸூ ரிகளாலும் அளவிட முடியாதபடி இருப்பவன்
ஒரு நாள் வான் கடந்தான்
உலகு அளந்த வ்ருத்தாந்தம் என்றும் கொள்ளலாம்
அடியார்களுக்காகச் செய்தவையானாலும் தனது காரியமாகவே உகந்து செய்து அருளினான்
அபி ஷிச்ய ச லங்கா யாம் ராக்ஷ ஸே ந்தரம் வீபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா ராம விஜ்வர பிரமுமோத ஹ
உடைமையை ரக்ஷிப்பது உடையவனுக்கே அன்றோ ப்ராப்தம்)
———————————————————————————-
நம்மை அழிய மாறியும் நம் உடமையை நோக்குகை நமக்கு பிராப்தம் என்று அவன் நினைத்து இருக்க
இவர் அவனுடைய ஸுகுமார்யத்தை அனுசந்தித்து இது அப்ராப்தம் என்று வயிறு எரிகிறார்-(உனது திருமேனி உன்னதே அல்லவே -பக்தா நாம் ப்ரகாஸதே அன்றோ )
(கொண்ட பெண்டிர் மக்களே -உத்தேச்யம் என்று முடித்து -அடுத்த பாசுரம் கொண்ட பெண்டிர் த்யாஜ்யம் என்று மாற்றி அருளிச் செய்தது போல்
வழக்கு பிராப்தம் என்று முடித்து அடுத்த பாசுரத்தில் தகுந்தது அல்லவே என்கிறார்)
வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி—-19-
பதவுரை
திருமாலே! ; நீ;
(கிருஷ்ண சிசுவாயிருந்த போது-இந் நம்பி பிறந்த ஏழு திங்களில் )
வலி சகடம்-வலிதான சகடத்தை
செற்றாய்–உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய்–இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா–இது நமக்குத் தகுந்ததேயென்று நினைக்கலாகாது;
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்)
குழ கன்று–(அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த–தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை–இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க–பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய்–தவறு செய்தாய்
பெரிய பிராட்டியார் -என் புகுகிறதோ -என்று வயிறு எரிந்து-
மங்களாந் யபி தத்யுஷீ –என்று (சீதாப்பிராட்டி திக் பாலர்கள் ரக்ஷிக்க -மங்களா ஸாஸனம் )மங்களா சாசனம் பண்ணி
நோக்க வேண்டும் படி நிரதிசய ஸூ குமாரமானவனே –
இப்படி இருக்கிற நீ சிறு பிள்ளையாய்க் கொண்டு அதி ஸூகுமாரமான திருவடிகளாலே அதி பிரபலமான சகடத்தை
உதைத்து முறித்து விழ விட்டாய் –
பிரானே இது பிராப்தம் அன்று கிடாய்
ரக்ஷகனான நமக்கு விரோதிகளை போக்கி நோக்குகை பிராப்தம் அன்றோ என்று
இந்த ஸாஹஸ பிரவ்ருத்தி யிலே அனுதாபம் கூட அற்று இருக்கிற நீ புத்தி பண்ண வேண்டா –
அதுக்கு மேலே
அஸூரனான குழக் கன்றைக் கொண்டு அஸூர வடிவாயத் தீதான
விளாவின் காய்க்கு எறிந்த இந்த தீம்பான செயலானது பூமியிலே பிரகாசிக்கும் படியாக தப்பாகச் செய்தாய் –
அவன் புகழ் என்று இருக்க இவர் பழி என்று வயிறு பிடிக்கிறார் –
விபூதியில் ஏக தேசத்தை நோக்கப் புக்கு
உபய விபூதியையும் அழிக்கப் பார்த்தாய் -என்று இன்னாதாகிறார் –
(பிறந்த எழு திங்களில் –சேடன் -திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் -மலை போல் ஓடும் சகடத்தை -பெரிய திருமொழி -10-7-9-இங்கும் திருமாலே –
தலை நீர்ப்பாட்டிலே இருந்து சர்வேஸ்வரனுடைய பெருமை எல்லாம் அறியும் பிராட்டியே அஸ்தானே பய சங்கையாலே வயிறு பிடித்தாள்
முலை வரவு தாழ்த்து உதைத்தாய் போலும் -பொன்றச் சகடம் உத்தரித்தாய் புகழ் போற்றி என்ற அநந்தரம்
அதிலும் சாஹசம் மிக்க -கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
பழி -அவன் புகழ் என்று எண்ணி இருப்பதை பய சங்கையால் பழி என்கிறார் –
மார்பில் கிடக்கிறவர்கள் -மண்ணில் இருப்பவர்கள் வாசி இல்லாமல் இருவரும் தவிக்கும் படி செய்த செயல்கள் அன்றோ -திருப்பாவை வியாக்யானத்தில்
கிருஷ்ணாவதாரத்தில் மாதா பிதாக்கள் சாது இடையர்களாய்
ஊர் இடைச்சேரியாய்
கம்ஸாதிகள் எதிரிகளாய்
ஸ்ரீ பிருந்தா வனத்தில் முளைத்து எழும் பூண்டுகள் எல்லாம் அஸூரர்களாய்
தமையன் ஒரு கணம் தப்பில் தான் பாம்பின் வாயில் விழும் தீம்பனாய்
பூதநாதிகளால் பிறந்த அபாயங்களை ஓர் எல்லை இல்லாமையால் மங்களா சாசனம் ஒழியக்
காவல் இல்லாமையாலே ஆழ்வார்கள் கண்ணனுக்கு மங்களா ஸாஸனம் செய்வதிலேயே மண்டி இருப்பர்கள் என்பர் பட்டர் )
————————————————————————————————-
பகவத் ஸமாஸ்ரயணத்தில் முதல் அடி இட்டாரோடு –
முடியாத தலைக் கட்ட பெற்றாரோடு வாசி அற
க்ருதக்ருத்யர் -என்கிறார் –
(ஸ்ரீ பாஷ்யம் -கற்று -மாட்டிற்றிலன் ஆகில் -கீழே கீழே போனால் போல் -எல்லா படிகளில் உள்ளாருக்கும் ஒரே பூர்ண பலன்)
பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்———–20-
பதவுரை
பழி–அபகீர்த்தியையும்
பாவம்–பாவங்களையும்
கை அகற்றி–நீக்கி
பல்காலும்–எப்போதும்
நின்னை–உன்னை
வழி வாழ்வார்–வழிப்பட்டு -ஸாஸ்த்ர வழியில் பூர்ணமாக -ஆஸ்ரயிக்குமவர்களும்
நாரணன் தன்–நாராயணனான வுன்னுடைய
நாமங்கள்–திருநாமங்களை
நன்கு உணர்ந்து–நன்றாக அறிந்து
வழு இன்றி–இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம்–அழகாகத் துதிப்பதற்கேற்ற உபகரணங்களை யுடையவர்களும்-அத்வேஷம் ஆபி முக்கியம் பாகவத சமாஹம் போன்ற காரணங்கள்
(ஆகிய இவ்விருகை யதிகாரிகளும்)
வாழ்வராம்–மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
(மாதோ- அசை).ஆச்சர்யம் என்றுமாம்
தங்கள் அறியாது இருக்கப் பிறர் அறிந்து ஏறிடும் அபகீர்த்தியையும்
அறிந்து அனுஷ்ட்டிக்கப் பட்ட பர ஹிம்சாதி ரூபமான பாபத்தையும் கை கழிய விட்டு
சர்வ காலமும் யுன்னை ஸாஸ்திரங்களில் சொல்லுகிற கட்டளையிலே வழி பட்டு நின்று
போக ரூபமாக ஆஸ்ரயிக்குமவர்களும் -(சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் )
நாராயண சப்த வாசகன் ஆகையால் சர்வ ரக்ஷகனாய் இருக்கிற உன்னுடைய திரு நாமங்களை
விச்சேதம் இல்லாத படி ப்ரேம யுக்தராய்க் கொண்டு அழகிதாக அறிந்து ப்ரேம பரவசராய்க் கொண்டு
அழகிதாக ஏத்துகைக்கு ஹேதுக்களான ப்ரேமம் –
தத் ஹேதுவான உத் (மிகுதியான)பஜனம் –
தந்நிதானமான ருசி –
தந்நிதானமான ஸூ ஹ்ருதம்
அதுக்கு அடியான உன் கடாக்ஷம் -என்றால் போலே சொல்லுகிற
இவற்றைத் தாங்கள் பெற்று உடையராய் இருக்குமவர்களான
இவ் விரண்டு அதிகாரிகளும் ஸூகோத்தரராய் வாழப் பெறுவார்கள்
மாதோ என்கிற இது
ஓர் அவ்யயமாய் –
இது ஓர் ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும் பொருள் பெற்றுக் கிடக்கிறது –
(ராஜ வித்யா –ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2-பக்தி யோகம் அனுஷ்ட்டிக்கவே இனியதாய் இருக்கும்
வாழ்வராம் -நல்ல பாதத்தால் மனை வாழ்வார் கொண்டபெண்டிர் மக்களே -திருவாய் -8-10-11-
இங்கும் வாழ்ச்சி பெற்று பின்பு பேர் இன்பமும் பெறப் பெறுவர்
ந ஸூ கால் லப்யதே ஸூகம் -இன்பத்துக்குப் பின் எப்போதுமே இன்பமே உண்டாகும் என்பது இல்லை என்னும் லௌகிக விஷயம் போல் அல்லவே பகவத் விஷயம்
மாதோ -ஆச்சார்யம் -ஸர்வ காலமும் ஆஸ்ரயிப்பார் பெரும் பேற்றை உன்னை ஆஸ்ரயிக்கத் தொடங்கி இருப்பாராம் பெறும்படி இருப்பதே –
பரிபூர்ணமாக ஆஸ்ரயித்தவர்களைப் போலே இவர்களும் பேறு பெறுவது நிச்சயமே
நேஹாபி க்ரம நாஸோஸ்தி –ஸ்ரீ கீதை -2-40-இட்ட படை கற் படை என்று கண்ணன் தானே அருளிச் செய்தான் அன்றோ –
காரணங்கள் என்று காரண பரம்பரைகளைச் சொன்னவாறு –
தாரணங்கள் பாட பேதம் -த்ருதி என்னும் மன உறுதியை யுடையவர் அவனை அடைவது நிச்சயம் என்றவாறு –
நாயமாத்மா பல ஹீநேந லப்யா -மநோ பலம் அற்றவனால் இவன் அடையப்பட மாட்டான் என்பதையே
தாரணங்கள் தாமுடையார் தாம் வாழ்வாராம் -என்று அந்வய முகத்தால் அருளிச் செய்கிறார் -)
——————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply