ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
அஞ்சிறைய மட நாராய்-வண்டானம் -நாரை வகை ஓன்று-தலைவி தூது துறை-தொழுது காயிகம்
இரந்தேன் -வாஸா மானஸா -உப லக்ஷணம் கொள்ள வேண்டும்-நெஞ்சுக்குத் தூது -அவன் இடம் ஒன்றி உள்ளதே இது –கண்ணன் வைகுந்தனோடு -ஸுலப்யம் காட்டி அங்கே கூட்டிப் போனானே
நெஞ்சினார் -ஷேப யுக்தி -அவன் கொண்டாடியதாகவுமாம்-அவர் இடம் நீர் செல்லீரோ -இதுவோ தகவு
கூட்டி வந்தால் மறந்து முடியலாம் அன்றோ -இசைமின்கள் பாட்டுப்பாடுமா போல் சொல்லுங்கோள்-
சிலரை தூது போக விட்டால் ,அவர்கள் வரும் அளவு செல்ல ,ஆறி இருந்து , சூது சதுரங்கம் பொருது போது-போக்கும் விஷயம் அல்லாமை யாலே கண்ணால் கண்டவர் எல்லாரையும் தூது போக விடுகிறாள்–யாம் கபிநாம் சகஸ்ராணி ஸுப ஹூன்ய யுதானிச திஷு சர்வாஸூ மார்கந்தே சேய மாயாதி தாமயா–சுந்தர காண்டம் -30-3- என்று முதலிகள் எல்லாரும் கூட புஜித்தாலும் புஜித்து முடிய ஒண்ணாத ப்ரீதியாலே தனியே அகப் பட்டேன் என்று-முதலிகள் எல்லோரும் கூட மது வனத்தில் புகுந்த பொழுது-ததி முக பிரப்ருதிகள் நலிய –அஹம் ஆவார் யிஷ்யாமி யுஷ்மா கம்பரி பந்தின -சுந்தர காண்டம் 62-2—என்று உங்களுக்கு விரோதி ஆனவர்களை நான் போக்குகிறேன் நீங்கள் அமுது செய்யுங்கோள் என்ன —இப்படி மது வனம் அழிந்த படி யை மகா ராஜர் கேட்டு– இது வெறுமனே ஆக மாட்டாது –பிராட்டியை கண்டார்கள் –-த்ருஷ்டா தேவி -சுந்தர காண்டம் 63-17–என்று நிச்சயித்து ,
அப்போது அவ் அருகுக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே வாலானது வளர்ந்து ருஷ்ய முக பர்வதத்திலே சென்று அமைந்தது- அறைந்தது —அம் மது வனம் இன்றாகில் ராஜ புத்ரர்கள் முதுகோடே போம் -என்று பட்டர் அருளி செய்வார்-
இப்படி கடக அபேக்ஷை பண்ணினவர்களுடைய கார்ய அபி முக்யத்தைத் கண்டு சொல்லி விடுகிற வார்த்தையை -அன்னம் தொடக்கமான வற்றை நாயகன் பின் சென்று தன்னை அகன்ற நெஞ்சை நோக்கித் தூது விடுகிற நாயகி வார்த்தையாலே அருளிச் செய்கிறார்
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
சிலரைப் போக விட்டோமாகில் அவர்கள் க்ரமத்தாலே கார்யம் தலைக் கட்டிக் கொண்டு வருகிறார்கள் என்று க்ரம பிராப்தி பார்த்து அவ்வளவும் சூது சதுரங்களாலே போது போக்கி ஆறி இருக்கலாம் விஷயம் அன்று ஆகையாலே யாம் கபீ நாம் ஸஹஸ்ராணி ஸூப ஹுந்ய யுதாநி ச திஷு ஸர்வாஸூ மார்க்கந்தே –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-அவதாரிகை
ஷணமும் அவன் பிரிவைப் பொறாதவள் ஆகையாலே கண்ணால் கண்டாரை எல்லாம் தூது விடவும்
இரக்கவும் செய்து தம் தூதாக முன்பு போன நெஞ்சுக்கு என் தசையை ஸ்மரிப்பித்து இவனோடு அவன் ஸ்தானத்தில் நின்ற உமக்கு இன்னம் அத்ருப்தியோ என்று அப்பெருமையுள்ள என் நெஞ்சுக்கு அவர் முன்னே சொல்லி உம்முடைய அருளும் இத்தோடு ரமிப்பதாயிற்றோ என்று அவர் இசையும் படி
விண்ணப்பம் செய்யுங்கோள் என்கிறாள் –
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-பிரிந்த தலைவி அன்னங்களையும் குருகுகளையும் தூது விடுதல் –
அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்-–4–அவதார சௌலப்யத்தை யுபதேசித்து அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறர்க்கு உபதேசித்த இடத்தில் அதில் அவர்கள் விமுகராய் இருக்கையாலே அவர்களை விட்டு
குண சாம்யத்தாலே கிருஷ்ணாவதாரத்தோடு போலியான த்ரிவிக்ரம அவதாரத்தை அனுசந்தித்து
தச் சரணங்களை திரிவித கரணங்களாலும் அனுபவிக்க பாரித்த இடத்தில் அது முற்காலத்திலே யாய் தாம் பிற்பாடர் ஆகையாலே பாரித்த படியே அனுபவிக்க பெறாமல் கலங்கின தசையில் மதியினால் குறள் மாணாய உலகு இரந்த கள்வரான அத்தலைக்கு அறிவிக்க வேணும் என்று கடகரை அர்த்தித்துச் சொல்லும் க்ரமத்தை கலந்து பிரிவாற்றாளாய் தலை மகள் -என் அபராதத்தைப் பார்த்து பிரிந்து போனவருக்கு-கிங்கோப மூலம் மனுஜேந்திர புத்திர -என்னும்படி-தம் அபராத சஹத்வத்தையும் ஒரு கால் பார்க்க கடவது அன்றோ என்று சொல்லுங்கோள் என்று-தன் உத்யானத்தில் வர்த்திக்ற பஷிகளை
தன் பிராண ரஷணத்துக்கு உறுப்பாக தூது விடுகிற பேச்சாலே சொல்லச் சொல்லுகிற –அஞ்சிறைய மட நாரையில் -அர்த்தத்தை அஞ்சிறைய புட்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —ஆழ்வார் இங்கே இவ்விடத்திலே கூப்பீடு கேட்கும் இடமான கடலிலே அடலாழி அம்மானான நாயகனைத் தேடி –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யான் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்று மலங்கியதும் பக்தி அதிசயம் – மதி எல்லாம் உள் கலங்கின பக்தி பிரபாவம் –
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –அன்னமாய் செல்வீரும் வண்டானமாய் செல்வீரும் –தொழுது இரந்தேன்–ஐந்த்ர வ்யாகரண பண்டித -சிறிய திருவடி –ஸ்வத சர்வஞ்ஞன் –ஸ்ரீ கிருஷ்ண பகவான்-தூது போக கடவத்தை உங்களை இரவா நின்றேன்-என் தசை– உத்தியோகமும் மிகை என்று இருக்கும் அளவுக்கு அவ் அருகும் சொன்ன படி–
கிடாம்பி ஆச்சானோடு நம்பி திரு வழுதி நாடு தாசரும் மற்றும் நம் முதலிகளும் இருந்து
அந்யத் பூர்ணாத் ஸ்லோஹம்–அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநேஜனாத் அந்யத் குசல சம்ப்ரசனா அந்ந சேச்சதி ஜனார்த்தன– – கேளா நிற்க -அந்யத் என்கிறது ஒரு கால் அமையும் என்கிறதோ என்ன-அரை கால் அமையும்-என்று கிடாம்பி ஆச்சான் நியமித்தான்-(தொழுது இரந்தால் இரண்டும் வேண்டாமே )கிருத அபராதச்ய ஹிதே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேனா அஞ்சலிம் பத்வா லஷ்மணஸ்ய ப்ரசா தானாத் –கிஷ்கிந்தா காண்டம் -32-17- தீரக் கழிய அபராதம் பண்ணின வுமக்கு இளைய பெருமாள் பிரசாதிக்கும் போது ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்று திருவடி மகாராஜற்கு சொன்னால் போல —அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க-இரப்பவும் செய்தேன்–தொழுகையும் இரக்கையும் தன்னதே ஆய் இருந்த படி –உவாச ச மஹா ப்ராஜ்ஜா -யுத்த காண்டம் -17-11-விபீஷணன் சரண் அடைந்து இரக்கம் படும் படி பல சொல் சொன்னது போல்–வந்ததே போதும்-அஞ்சலியும் செய்தான்–உவாச ச மேலும் பேசவும் செய்தான்–
மறவேல்மினோ-
மறவாமல் கொள்ளுங்கோள் என்கிறாள்–அங்கே புக்கவாறே-அஹம் அன்னம் -என்று-மறவாதே கொள்ளுங்கோள் —அவன் வருகையால் உண்டான த்வரையாலே மறவாதே என்றால் , மறவாது-ஒழிவார்களோ என்னில்–தொழுது இரந்தேன் -என்று உருக்கி விடுகிறாள்–பிரியேன் பிரியில் தரியேன்-என்றவர் போய் மறந்தார்-ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-பேதை-பிரிவிலும் கலவியிலும் ,ஒரு வகையோ என்று இருக்கும் பருவம்—நின்னை–உன்னை பிரிகைக்கு சேதனன் அன்றோ நான்
பிரியேன் என்ற போதே –பிரிந்தானாகவேயாய் இருக்கிறது காணும் இவளுக்கு என் வென்னில்
பிரிவை பிரசங்கித போதே பிரிந்தானாம் அத்தனை இறே–அவனைத் தொடர்ந்து போன நெஞ்சம் மறந்தது முன்னம் போவோர்க்கு எல்லாம் மறப்பேயோ உள்ளது என்று இருக்கிறாள் —அவர் அங்குத்தைக்கு பரிவராய் அலைந்த பரிவட்டமும் தானுமாய் திரிகிறார் இறே—
நிசாம் அதிஷ்டத் பரிதோச்ய கேவலாம் –என்று பெருமாள்-ஸ்ரீ குகப் பெருமாள் பரிசரத்தே கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் ஜங்கமான மதிள் போல் கையும் வில்லுமாய் இளைய பெருமாள் திரிகிற படியை கண்டு-ஸ்ரீ குகப் பெருமாள் —இயந்தாத ஸூகாசய்ய தவதர்தம் உகல்பிதா -என்று
உமக்கு தகுதி ஆகும் படி பெருமாள் திரு அடிகளிலே தளிராலே படுக்கை படுத்து கண் வளரீர் என்ன —கதந் தாசரதவ் பூமவ் சயானே–என்று அறுபதினாயிரம் சம்வச்த்ரம் மலடு நின்று பெற்ற பிள்ளை சுகுமாரமான வடிவைக் கொண்டு , தரைக் கிடை கிடக்க கண் உறங்குமோ ?சயானே சஹா சீதாயா –
இவர் வசிஷ்டர் சிஷ்யர் ஆகையாலே இக் கிடை கிடக்கவும் பொறுக்கும்- படி நடந்து புறப்பட்டு அறியாத செல்வ பெண் பிள்ளை தரை கிடப்பதே-சக்யா நித்ரா மயா லப்தும் —என் கண் தன்னில்-நித்தரை குடி புகுதரு தில்லை காணும் –யத்ர லஷ்மணா -என்ற ஒரு தம்பி அன்றோ தொடர்ந்து போந்தானும்–இளைய பெருமாளையும் கூட அசிர்ந்து இவர் இட்ட அடியிலே இட்டு ஸ்ரீ குகப் பெருமாள் திரியா நிற்க-
அதந்திரிபிர் ஞாதி பிரார்த கார்முகை -என்று இவர் தம்மையும் கூட அசிர்ந்து கொண்டு இங்கு உள்ளார் அடைய காத்த படி(ஒரு நாள் முகத்திலே விழித்தாரை வடிவு அழகு படுத்தும் பாடு-இப்படி இருக்க ஆழ்வார் திரு உள்ளம் அங்கு ஈடுபட்டு இருக்கச் சொல்ல வேணுமோ )
நெஞ்சு கண்ணன் மாயையை அனுசந்தித்த அளவிலே பரம பதம் ஏறப் போயிற்று
என் நெஞ்சினார்–பண்டு போல் அன்றியிலே அவனாலே கொண்டாட பட்ட அளவிலே சொல்கிறாள்
அவர் தான் இத் தலையை அழிக்க நினைத்தார் ஆகையாலே-பிரதான பரிக்ரமான நெஞ்சை படை அறுத்து-கொள்கைக்கு கொண்டாடா நிற்கும் இறே–கண்டால்–-காண்கை தான் அரிதாய் இருக்கும்
அவரைக் காணலாம்–-சதா பஸ்யந்தி -அவனைக் காண இயலும் — இவரைக் காண அரிது இதே-நாவிலும் பல்லிலும் நீர் அன்றியே இருந்தது —என் செய்கிறார் என்று தாமாக வினவும் அவர் அன்றிறே-என்னைச் சொல்லி-இன்னாளை அறிகை இல்லையோ என்று சொல்லி —அப்ரமேயம் ஹிததேஜ யஸ்ய யா ஜநகாத்மஜா —-ஆரண்ய காண்டம் –37-18-ஆற்றல் மிக்க யார் உடைய தர்ம பத்நியோ-என்னும் படி உள்ள சீதை பிராட்டி இப்படி உரைக்கிறாள் – என்னும் அவள் கிடீர் இப்படி சொல்கிறார்–அவர் இடை –
அன்று பாடு ஓடி கிடந்த கிடை அறிந்தீரே-நீர் –இப் போது கொண்டு வருகிறேன் என்று கண்ணும் கண்ண நீருமாக போகும் படி அறிவீரோ-இன்னும் செல்லீரோ –தூது போந்த உமக்கு தூது வந்த பின்பும் போகீரோ —ந காலஸ் தத்ரவை பிரபு-என்று இருந்தீரோ-அவ் இடம் கால க்ருத பரிணாமம் உள்ள தேசம் என்று அறிந்து இலீரோ —பகலும் இரவுமாய் இருக்கும் காணும் அங்கு-அது தன்னிலும் ஒரு பகல் ஆயிரம் ஊழி யாய் அன்றோ செல்லுகிறது-இது தகவோ--பிரணயித்வம் இல்லை ஆகிலும் ஆன்ரு சம்சயம் வேணுமே–-ஆன்ரு சம்சயம் பரோ தர்ம சுத்வத்த ஏவம் ஆஸ்ரித –சுந்தர காண்டம் –38-41-
மற்றவர் துன்பம் அலட்ஷியம் செய்யாமல் இருப்பதே தர்மம்-தத்துவம் ஸ்வரூபம் புருஷகாரத்வம்
தகவு ஸ்வ பாவம் கிருபை தத்வம் அற்ற தாகவும் அன்று போல் –இசைமின்களே மனிச் சடித்து சொல்லாதே போராதே சொல்லி யவன் ஸ்வரூபத்தை அழித்தே போரும் காண் என்கிறாள்-அழிக்கை ஆவது-ஓராண் பிள்ளையாய் சொல்லுகிறது இல்லை —ஓர் பெண்டாட்டியை சொல்லுகிறது அல்ல
உன்னை எத்தை சொல்லுவது என்கை இறே-மனசுக்கு ஆன போது —அவனுக்கு ஆன போது சொல்லுகை தான் மிகை-
என் நெஞ்சினார் ஸ்ரீ வைகுண்ட நாதனையோ பிரசாதத்தையோ பெற சென்றார் –
அங்கே சென்று சீரிய சிங்காசனத்தில் அமர்ந்து அங்குள்ளார் பராக் ஸ்வாமி பராக் அருளப்பாடு நம்மாழ்வார் நெஞ்சினார் என்று திரி பரிவட்டம் சாத்தப் பெற்று மேநாணிப்புடன் எம்பெருமான் அந்தரங்க சன்னிதானத்தில் வீற்று இருப்பர் –-அந்தரங்கம் என்று உம்மை தூது அனுப்பினதுக்கு இதுவோ தக்கது –தொழுது இரந்தேன்–காயிக வாசிக — மாநஸமும் உப லக்ஷணம் –மறவேல்மினோ-
இவள் பிரக்ருதியை அறியும் நாயகன் மறந்தான் –அவன் கைப்பின்னே போன நெஞ்சும் மறந்து –
இனி யார் தான் மறவாதார் -என்பது நம்பிள்ளை ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்–உங்களுக்கு மறப்பு இயற்க்கை இல்லா விடிலும் அங்கு சென்றதும் மறக்கப் பண்ணுபவன் அன்றோ அவன்–கண்ணன் வைகுந்தனோடு-என் நெஞ்சினாரை கண்டால் —ஸுலப்யத்தை முன்னம் காட்டி என் மனசைக் கவர்ந்து கொண்டு-பரத்வத்தால் என்னை இன்று அளவும் வந்து கலவாது நிற்பவன் இடம் என் மனம் வீணே சென்று சேர்ந்து அலைகிறதே – அவனைக் கண்டாலும் காணலாம் –அந்தரங்க பரிவாரங்களில் ஒன்றாக கலந்த நெஞ்சைக் காண்பது அரிதே-வைகுந்தனோடு-என் நெஞ்சினாரை கண்டால் என்கிறார்-என்னைச் சொல்லி —நெஞ்சுக்கு உடையவள் நான்-என் உடைமை அது –எனக்கு இன்றியமையாதது –யான் தனித்து உள்ளேன்–இவற்றை எல்லாம் மறந்து இருக்குமே –
புருஷோத்தமன் சிறந்த நாயகன் உடன் கூடிய மேன்மை பற்றி -நெஞ்சினார் –அவர் இடை நீர்-இன்னும் செல்லீரோ-நெஞ்சினாரே நீர் வரும் பொழுதே ஆற்றாமை மிக்கு -அவருக்கு அந்தகாரணமான நீர்
அவர் ஆற்றாமை அறிந்து வைத்தும் நாயகன் பொருட்டே அன்றி உம் பொருட்டும் தூது விடும் படி இன்னமும் போகாது இருக்கலாமோ –செல்வீர்கள்- மறவேல்மினோ,-இசைமின்களே-பன்மையில் –
இன்னது முன் போகும் தெரியாதே-ஆற்றாமை மிக்கு அவனை மறந்து இருப்பதே நன்று என்று வெறுத்து நெஞ்சை கூப்பிடுகிறாள்—அன்னம் வந்து என்று ஆச்சார்யர் களைச் சொன்னவாறு
செல்வீர் என்று ஆச்சார்யர்கள் திவ்ய தேச யாத்திரைக்கு பிரயாணப் பட்டமை காட்டிற்று—எம்பெருமானை இடைவிடாது நினைத்து இருக்கையிலும் அவனைச் சேர்ந்து அனுபவித்து ஆனந்திக்கப் பெறாமையால் உண்டான ஆற்றாமைத் துயரினும் அவனை மறந்து இருப்பதே நன்று என்று அன்பு மிகுதியால் வெறுப்புக் கொண்டு நெஞ்சை மீட்கப் பார்க்கிறார்
அன்னம் செல்வீரும்-பிரதானமாய்ப் போகிற அன்னங்களும்–வண்டானம் செல்வீரும் -அவை போன வழியிலே கூடப் போகிற வண்டான குருகுகளும்–அன்னம்-வண்டானம் என்கிற ஒருமை சொல்லீர் என்கிற பன்மையாலே-ஜாதி பரம் –தொழுது இரந்தேன்-பத்தாஞ்சலி புடம் -யுத்த -18-27-என்கிறபடி
ஷிப்ர ப்ரஸாதமான அஞ்சலி பந்தத்தையும் பண்ண யாசந்தம் -யுத்த -18-27- என்கிறபடியே வாசகமான பிரார்த்தனையும் பண்ணினேன்–யத்தி மனஸா த்யாய -என்கிற நியாயத்தாலே வாசிக காயிகங்களுக்கு மானஸம் அர்த்தாத் ஸித்தமாய்க் கொண்டு பூர்வ பாவியாம் இறே-ஆக
கரண த்ரய யுக்தமான பூர்ண பிரபதனத்தைப் பண்ணினேன் என்றபடி–முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,-உங்களில் குண பிரதான பாவம் இல்லை-முற்பட்டாரில் கார்யம் மறவாது ஒழிவதே வேண்டுவது-ஏது என்ன-கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்-தன் நீர்மையைக் காட்டி என் நெஞ்சை அபஹரித்த சேணுயர் வானத்து இருக்கிற -திருவாய் -5-3-9- ஸ்ரீ வைகுண்ட நாதனோடே எனக்குக் கரணமாகையாலே பரதந்த்ரமாய்ப் போன நெஞ்சைக் கண்டால்-நெஞ்சினாரை
அத் தலையில் ஆஸக்தியால் யுண்டான ராஜ குலத்தாலே உபசரித்துச் சொல்கிறாள்-ஸதா தர்சன விஷயமானவரைக் காணலாம்-ஆஸ்ரித பலத்தால் யுண்டான செருக்காலே அந்தரங்க பரிகரமாக நெஞ்சைக் காண்கையும் அரிது என்றபடி-என்னைச் சொல்லி-என்னோடு யுண்டான சம்பந்தத்தையும்
பூர்த்தியையும் தனிமையும் தோன்றச் சொல்லி–அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ-நீர் போருகிற போதை யாபத்திலே விஞ்சி இருக்கிறவர் பக்கலிலே அவருக்குக் கரண பூதரான எங்களையும் அகப்பட வரவிடும்படி இன்னமும் போகாது ஒழிவதே–அவர் என்று-உத்க்ருஷ்ட நாயக சம்பந்தம் அடியாக கடகர் தங்கள் சொல்லும் பாசுரத்தாலே சொல்லுகிறாள் தன்னோபாதி நெஞ்சை உபசரிக்கும்படி சொல்லுகிறாள்–இதுவோ தகவு-ஸ்வ ஸ்வாமி சம்பந்த ஸ்வ பாவம் இருக்கும்படி இதுவோ-என்று இசைமின்களே –இப்படிப் பலருமாகச் சொல்லுங்கோள்-சிஷ்டர் பலரும் கர்ஹித்துச் சொல்லுகை மீளுகைக்கு உறுப்பாம் இறே –
இத்தால்-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும்-கடகத்வத்தில் உன்முகராய்த் தோன்றினவர்களைக் குறித்து நடையாலும் பேச்சாலும் புத்தி யோகத்தால் ஸ்ரேஷ்டராய்க் கொண்டு ப்ராப்ய தேச அபி முகரான நீரும் பிரதான புருஷ அநு ஸாதகராய் தத் ஸமான தேச உன்முகரானவருமான உங்களைக் குறித்து என்றபடி –தொழுது இரந்தேன்-என்கையாலே -த்வர அதிசயத்தாலே கடக விஷயத்தில் அநு விருத்தியும் ஓர் அளவில் நில்லாது என்றபடி-முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,–என்றுஆர்த்தியினுடைய அதிசயத்தாலே முற்பட அறிவிக்கையை வேண்டுவது பிரதான நியமமும் இல்லை -என்றபடி–கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ-சீலத்தாலே அபஹ்ருதமாய்
திவ்ய போகத்திலே மூண்ட நெஞ்சைக் கண்டால் என் அவஸ்தையை அறிவித்து–இதுவோ தகவு என்று இசைமின்களே –-இப்படி அசஹாயாரானவர் பக்கல் இன்னம் போகாது ஒழிவதே-இதுவோ ஸ்வாமி கார்யம் செய்து தலைக் கட்டின படி என்று சொல்லுங்கோள் என்கையாலே நெஞ்சை மீட்டு வரக் காட்ட வேணும் என்கையில் தாத்பர்யம்–அதாவது அநு ஸ்மரணம் நடக்கச் செய்தே அனுபவம் பெறாமையால் யுண்டான ஆர்த்தியைக் காட்டில் விஸ்மரணமே அமையும் என்கிற வெறுப்பு இருந்தபடி–கடகரானவர்கள் நெஞ்சை மீட்க்குமோ பாதி மீண்டும் வரக் காட்டவும் வல்லவர்கள் என்று இருக்கிறார் –சாம்சாரிக விஷயத்தில் இருந்து மீளச் செல்ல வல்ல ஆச்சார்யர்களால்ஏது செய்ய முடியாது என்றவாறு-
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி வியாக்யானம்-அன்னம் செல்வீரும்-அன்னமாய்ப் போமவர்களும்–வண்டானம் செல்வீரும்-குருகாய் போமவர்களும்–தொழுது இரந்தேன்-கேளுங்கோள் என் யாசனத்தை
காணுங்கோள் நான் உங்களைத் தொழுது இரந்தத்தை என்று–முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
முன்னாகச் சென்றவர்கள் என்னை மறவாதே கொள்ளுங்கோள் முன்னாகத் தூது விட்ட என் நெஞ்சு என்னை மறந்ததே நீங்களும் அப்படி செய்யாதே கொள்ளுங்கோள்–கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்–தன் ஸுலப்யத்தால் என் நெஞ்சை அபஹரித்து-சேணுயர் வானத்து இருந்த ஸ்ரீ வைகுண்ட நாதனோடு ரமண சீலமானவராய் எனக்கும் காரண பூதரானவராய் அவருக்குப் பூசும் சாந்தானவரைக் கண்டால்-அவரை நீங்கள் வேறுபாட்டுக் காண்பதே துர்லபம்-காணப் பெற்றால்–என்னை சொல்லி-எனது இவ்வாற்றாமையை அவருக்கு அறிவித்து–அவர் இடை-என்னோடு கலந்து என்னைப் பிரிந்த என் நாதரான என் நெஞ்சினாரோடே ரமிக்கும் புருஷ ரிஷபரிடை—நீர் இன்னும் செல்லீரோ–இன்னம் அவகாஹியா நின்றீரோ–இதுவோ தகவு என்று-அவனுடைய அருளும் இவ்வளவேயோ-என் நெஞ்சினாருக்கு உள்ள தாகவும் இவ்வளவேயோ என்னா நின்றாள்-என்று இசைமின்களே –என்றுமாகச் சொல்லி என் நெஞ்சுக்கும் அவருக்கும் நாம் அயுக்தம் செய்தோம் என்று இசையப் பண்ணுங்கோள் –
தாத்பர்யம்
ஹம்ஸங்கள் போய் தன் தசையை அறிவியாமையாலே-தனது கண்ணில் தோற்றிய வேறே சில அம்சங்களையும் குருகுகளையும் மீண்டும் தூது விட தொழுது இரந்து பிரார்திக்கிறாள்
ஸுலப்யம் காட்டி என்னைக் கொண்ட அவனுக்கு-மனது அந்தரங்க கைங்கர்யம் செய்து என்னை மறந்து சென்றது-தான் தனியாகத் தவிக்கிறேன்-நீங்கள் அங்கு சென்று அந்த நெஞ்சு என்னும் பெரியவரைத் தேடிக் கண்டு எனது அவஸ்தையைத் தெரிவியுங்கோள்
பெண் பிறந்தார் வருத்தம் அறிந்த உமக்கு இதுவும் சொல்ல வேணுமோ-அறியாத அவனுக்கு சொல்ல வேண்டுமோ -உங்களைத் தொழுது யாசிக்கிறேன்
நீங்கள் எனது மனசு போல் அவனிடமே ஈடுபட்டு என்னை மறவாதே கொள்ளுங்கோள்
நீங்கள் எனது அபேக்ஷிதம் அங்குச் சென்று மனசுக்குச் சொல்ல வேணும் –
நீர் இருக்க மட மங்கை மீர் கிளிகள் தாம் இருக்க மதுகரம் எலாம் நிறைந்து இருக்க மடவன்னமும் உன்ன நிரையாய் இருக்க யுரையாமல் யான்
ஆர் இருக்கிலும் என் நெஞ்சம் அல்லதொரு வஞ்சமற்ற துணை இல்லை என்று ஆதரத்தினோடு தூது விட்ட பிழை யார் இடத்து உரை செய்து ஆறுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேட அரிய திரு வரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை யுறை மார்பில் பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –
1-4-அஞ்சிறைய மட நாராய்-பிரவேசம் –
கீழ் மூன்று திருவாய்மொழிகளால், பரத்வத்தையும் -பஜனீயத்வத்தையும் -ஸுலப்யத்தையும் -அனுபவித்து மகிழ்ந்தவராய்த் தாமான தன்மையில் நின்று பேசினார்;
இத் திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது.
கீழே ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே,’ என்பதற்கு
‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பாரிக்கிறார்,’ என்று நஞ்சீயர் அருளிச் செய்த பொருள் அதற்கு அடுத்த இத் திருவாய்மொழிக்கு மிகப் பொருந்தும்.
‘அனுபவிக்கிறார்’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த பொருள்,
இவ் வாழ்வாருக்கு ‘முனியே நான்முகனே’ என்னும் திருவாய்மொழி முடிய உள்ளது
மானச அநுபவமாகையாலே அதற்குப் பொருந்துவதாம்.
‘ஆயின், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாகச் சொல்லுவதற்குக் காரணம் யாது?’ எனின்,
கீழே திரு உலகு அளந்தவனுடைய திருவடிகளை அனுபவிப்பதாக ஒருப் பட்டுக் கட்டிக் கொண்டார்; அது ஒரு கால விசேடத்திலேயாய், தாம் பிற்பாடராய்த் தோற்றுகையாலே, துணுக்கு என்று தாமான தன்மை அழிந்து ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியினால் சொல்லும் பாசுரம் போய், ஆற்றாமையால் சொல்லும் பாசுரமாய் விட்டது.
ஞானத்தை மட்டும் உடையவராய் இருப்பின் கலங்கார்; ‘மயர்வற மதிநலம் அருளப்’ பெற்றவர் ஆகையாலே கலங்குகிறார்.-மற்றும், அவன் தானே கொடுத்த அறிவும்-விஸ்லேஷத்தில் – பிரிவில் அகிஞ்சித்கரமாம்படி அன்றோ அவனுடைய வைலக்ஷண்யம் இருப்பது? தத் தஸ்ய சத்ருசம் பவேத் ( ‘அவர் வந்து என்னை மீட்டுச் செல்வராகில், செல்லும் அச் செயல் அவ் விராமனுக்குத் தக்கதாம்,’ ) என்று கூறிய பிராட்டியே பிரிவுத் துன்பத்தைப் பொறுக்கிலளாகித் -வேண்யுத்க்ரத நாதிகளிலே- தன் சடையினைக் கொண்டு தூக்கிட்டு இறப்பதற்கு நினைந்தமையும் ஈண்டு நினைத்தல் தகும்.
ஆயின், பிராட்டியின் நிலை உண்டாகிறபடி எங்ஙனே?’ என்னில்,
அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அன்வயத்தில் -கூடி இருக்கும் போது தரிக்கை,-விஸ்லேஷத்தில் -பிரிந்திருக்கும் போது தரியாதொழிகை, -ததேக போகராகையாலும் -அவனுக்கே இன்பத்தை அளிக்கை,-அவன் நிர்வாஹகனாக- காப்பாற்றுகின்றவனாகத் தாம் நிர்வாஹ்யமாகையாலும்- காப்பாற்றப்படும் பொருளாக இருக்கை ஆகிய இவ்வாறு குணங்களும் ஆழ்வார்க்கும் உள ஆதலின், பிராட்டியின் நிலை உண்டாகத் தட்டு இல்லை.
வையங்கொண்ட தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று,
இங்குப் பிராட்டியாகவே பேசப்படுகிறது; முற்றுவமை இருக்கிறபடி.இரண்டு தலையையும் அழித்தாகிலும் கிட்ட வேண்டும்,’ என்னும் ஆற்றாமை பிறந்து, தன் அருகிலுள்ள தோழிகள் ‘எம்மின் முன் அவனுக்கு மாய்வர்’ என்கிறபடியே தளர்ந்தவர்கள் ஆதலின், கால்நடை தருவார் இல்லாமையாலே, அப் பக்கத்தில் வசிக்கின்ற விலங்குகள் சிலவற்றைப் பார்த்து,
‘இவை வார்த்தை சொல்ல மாட்டா,’ என்னுமது அறியாதே, ‘இவற்றுக்குப் பக்ஷபாதம் உண்டாய் இருந்தது ஆகையாலே, இவை கடுகப்போய் நங்காரியம் செய்யவல்லன்,’ என்று பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதமே பற்றாசாக, இராவண மாயையால் வரும் ஐயமும் இல்லாமையாலே கண்ணாலே கண்டவற்றை எல்லாம் தூது விடுகிறாள்.
இவ்விடத்தில் ‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர சாதி வீறு பெற்றாற்போலே காணும், ஆழ்வார்கள் திருவவதரித்துத் திரியக்குச் சாதி வீறு பெற்றபடி’ என்று பட்டர் ரஸோக்தியாக அருளிச்செய்வர்.
அபராத ஸஹத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தூது விடுகிறாள்.-என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றதை பற்ற அபராத சஹத்வம் –
அநாதி காலம் இவ்வாழ்வாரைத் தன்னோடே சேர விடுகைக்குக் காலம் பார்த்து இருந்த-அவசர பிரதீஷனாய்ப் போந்தவன் – இவர் பக்கல் அப்ரதிஷேதம் -வெறுப்பின்மை உண்டான சமயம் பார்த்து, இவருக்கு மயர்வற மதிநலம் அருளல் ஈண்டுப் புணர்ச்சி-யாதிருச்சிக்க சம்ச்லேஷம் – எனப்படும். அவன் கொடுத்த அந்த ஞானம் பேற்றோடே தலைக் கட்டப் பெறாமை-விஸ்லேஷம் – பிரிவு எனப்படும்.
நாலாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸூலபனாய் ஸூந்தரனான சேஷியை கரண த்ரயத்தாலும் அனுபவிக்க இழிந்தவர் – அவன் சடக்கென முகம் காட்டாமையாலே அவசன்னராய் -1-போக விளம்ப ஹேது பூர்வார்ஜித்த அபராதங்களைப் பொறுத்து
ரஷிக்கைக்கு உறுப்பான பரிகார உச்சராயத்தையும் -2-அமலங்களாக விழிக்கும் புண்டரீகாக்ஷத்வத்தையும் -3-அநந்யார்ஹம் ஆக்கும் அபதான வைபவத்தையும்
4-அதுக்கு அவ்யஹித சாதனமான அழகையும் -5-ச ஸ்னேஹமான சர்வ லோக ரக்ஷணத்தையும் –6-ரக்ஷண தவரைக்கு ஈடான பரிகரவத்தையும் –7-ஆஸ்ரித தோஷத்தை அத கரிக்கும் அநவதிக கிருபையையும் 8-தோஷமே போக்யமான நிரதிசய வாத்சல்யத்தையும் 9-அதுக்கு அடியான நிருபாதிக பந்தத்தையும் -10-அதூர வர்த்தித்தவத்தையும் உடையனாகையாலே நம் தசையை அறியாமல் விளம்பித்தான் அத்தனை என்று அறுதியிட்டு கடக முகத்தால் ஸ்வார்த்தி அறிவிக்கப் பார்த்து
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியினுடைய தூத ப்ரேஷணம் ஆகிற அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-
அருளி –இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி. அருள் பண்ணுகைக்கு அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி? இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம். ‘என்னை?’ எனின், உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.
வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு – அவர்கள் -பரம சாம்யா பன்னராய் -எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும் அறிகுறியாகப்-வ்யாவர்த்தக விசேஷணமாய் – பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான். விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.
அன்றி, தன்னை விட்டு-நிர்த்தயமாக – அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே,
அக்ரூர க்ரூர ஹ்ருதய ‘தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று.
புள் உயர்த்தான்-புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்;-அன்றி, புள்ளைக் கொடியிலே உயர்த்தியவன் என்னுதல்.
‘என் விடுதூதாய்ச் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில்’ என்பதற்கு, நீங்கள் ஏதேனும் அவனுக்குத் தூது போகின்றீர்களோ?
சிறை கட்டுதல், சிங்க விளக்கெரித்தல் செய்யில் செய்வது என்?’ என்று கூசுகைக்கு;
எனக்காகத் தூது போனாரை பரிஷ் வங்கோ ஹனுமதா (‘அனுமானுக்கு என்னாற்செய்யப்படும் இவ்வாலிங்கனமானது’) என்னுமாறு போன்று, மார்பிலே அணைக்கும் காணுங்கோள். நான் அணைய ஆசைப்படுகிற மார்பு அன்றோ உங்களுக்குப் பரிசிலாகக் கிடைக்கப் போகின்றது?’
இவ்விடத்தில் நாரை தொடக்கமானவற்றைத் தூதாகச் சொல்லிற்று -கடகருடைய கார்ய தேசிகத்வ ஸூ சக அர்த்தமாக – சிறையை கொண்டாடிற்று -ஞான ப்ரேம ரூப பஷத்வ அன்வயத்தாலே – பேடையும் சேவலுமான சேர்த்தி கடகருடைய பரஸ்பர சேஷ சேஷி பாவ ஸூசகம் –
——————
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-
சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் கீழ் ;
அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு:
அந்யா துபக்ராந்த மன்யதா பதிதம் (‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ )என்கிறபடியே வந்து விழுந்தது.
‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும் நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமை யின்றி ஒழியுமே,
இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் குணாதிக விஷயத்துக்கு நமஸ்காரமாமித்தனை அன்றோ?
பெருமானார்க்கு-பிரிகிற போது கண்ணாலே நோக்கி இவளைத் தனக்கே உரிமை யாக்கிப் போன-அநந்யார்ஹையாக்கி-படி.
ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாது காண்-தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக் கொண்டு போகில் அத்தனை ஒழிய,
ஒன்று இரண்டு முழுக்கால் போகாது காண் நான் பண்ணின பாபம்,’ என்று
ஸ்ரீ திருக்கோட்டியூரிலே ஸ்ரீ தெற்காழ்வான் ஸ்ரீ கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையிற் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது
திருவடிக் கீழ் குற்றேவல் –திருவடிகளிலே கிட்டி அந்தரங்கத் தொண்டுகளைச் செய்வதற்கு,
‘தலைவி பிரிந்து வருந்துகிறவள் ஆதலின், ‘அவனைச் சேர்வதற்கு’ என்னாது
‘திருவடிக் கீழ்க் குற்றேவல்’ என்கிறது என்னை?’ எனின்,
அந்தணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமாறு போன்று, இவர் பிராட்டியானாலும் மார்பால் அணைக்க நினையார்;-திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை.
எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று ஸ்ரீ பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர்.
இழந்த கால விஷய சோகமும் -த்வரையும்-ததேக ரஷ்யத்வ அத்யாவசாயமும் -ஆகிஞ்சன்ய அநந்ய கத்வங்களும் ஸூசிதம்-இவ்விடத்தில் கடகருடைய யுக்தி மாதுர்யமும் சமவாயமும் ஸூசிதம் –
——————-
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-
அனுபவித்தே அற வேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு,
‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள்.
குறள்-கோடியைக் காணி யாக்கினாற் போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படிசிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.
மாணாய்-உண்டு’ என்று இட்ட போதொடு‘இல்லை’ என்று தள்ளிக் கதவு அடைத்த போதோடு வேற்றுமை அற முக மலர்ந்து போம்படி இரப்பிலே தழும்பு ஏறின வடிவை யுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள்.
உலகு இரந்த கள்வர் என்பதற்குத்-தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் ‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த வஞ்சகர் என்று பொருள் அருளிச் செய்வர் ஸ்ரீ திருமாலை யாண்டான்.
ஸ்ரீ எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச் செய்வர்.
அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி,
ஆயின், இவள் அச் செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின்,
‘பெருநிலம் கடந்த நல் அடிப் போது’ என்று அன்றோ இவள் ஆசைப் பட்டாள்?
மேலும்,‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ என்றும்,
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று, ஒன்று ஒரு கால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது?
ஸ்ரீ திருமங்கையாழ்வாரும், ‘முன்னங் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார்.
ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச் செயலுக்கேயாம்.
வல்வினையே மாளாதோ–இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தி யாவள்.-மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–மதி கலங்கி,-அறிவு அழிந்தாள் என்மின்.-மதி எல்லாம் உள் கலங்கி-
தாம் தந்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கின-அறிவித்த பின்பு வாராது ஒழியின், அவனது அன்றோ பழிச்சொல்!’அருளாழி அம்மான் ஆகையாலே வருவர் என்றபடி.-இனி, உங்களுக்கு ஸ்வரூபம், அவனுக்குக் குணம், எனக்குச் சத்தை, உங்களுக்கு யுக்தி – ஒரு வார்த்தை என்பாள், ‘என்னீரே’ என்கிறாள்-
இத்தால் கடகருடைய ஆசார வைலக்ஷண்யமும் ஸ்ரைஷ்ட்யமும் தோற்றுகிறது –
———-
என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-
ஸ்ரீ பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன,‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார்.
கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன, ‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’ ‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற தமிழ்ப் பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச் செய்தார்.
இது தன் நிலை தானும் தனக்கும் பேச்சுக்கு நிலம் அல்லாமல் இருத்தலின், ‘இது’ என்கிறாள்.நன்னீலம் மகன்றில்காள் இத்யாதி – அவர் நீலமுகில் வண்ணராய் இருந்தார்; நீங்களும் நீல மகன்றில்களாய் இருந்தீர்கள்; செயலும் அவரைப் போன்று இருப்பீர்களோ?’ என்றபடி-நல்குதிரோ நல்கீரோ- செய்வீர்களோ, மாட்டீர்களோ? முதல் வார்த்தையிலேயே பதின்கால் சொல் மறுத்தாரைச் சொல்லுமாறு போன்று, ஆற்றாமையின் கனத்தாலே ‘நல்குதிரோ நல்கீரோ!’ என்கிறாள்.
இதில் கடகருடைய ரூப வைலக்ஷண்யம் சொல்லிற்று ஆயிற்று –
—————
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-
தம்முடைய நாராயணன் என்னும் பெயர் ஒறுவாய்ப் –விகலமாய்ப்–போகாமல் நோக்கிக் கொள்ளச் சொல்,’ என்கிறாள்.-என் சத்தையில் அபேக்ஷை இல்லையே யாகிலும் தன் சத்தையில் அபேக்ஷை இல்லையோ -என்று தாத்பர்யம் –மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டு அருளாய்- ‘இதுவும் ஒரு நீர் நிலம் இருக்கிறபடி பாராய்’ என்பாள்,‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள்.
‘ஆயின், குருகு இரை தேடுவதனை விட்டு இதனைப் பார்க்குமோ!’ எனின்,
இங்கும் சேலும் கயலும் உண்டாகையாலே பார்க்கும்.
இனி, தன்னைக் கண்ண நீரைக் கொண்டே நிரூபிக்க வேண்டி யிருத்தலின் ‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள் -மறுக்கும் வார்த்தையும் அமையும்; அவர் பக்கல் உள்ளது ஒன்றே வேண்டுவது என்னும்நினைவினள் ஆதலின், ‘ஓர் வாசகம்’ என்கிறாள்.
‘தாரான் தரும் என்ற இடத்தில் ஒன்றதனை, ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்’ என்றார் பரகால நாயகியார்.
‘செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று, மெய்ம்மை சொல்லி முகம்
நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே!’ என்றார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியார்.
‘கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய்
பாவியேன் காண வந்தே’ என்றார் இவ்வாழ்வார் நாயகியும்.
அருளாயே சொல்ல வேணும் என்னும் ஸ்தானத்திலே அருள வேணும் என்கிறது
எதிர்தலை திர்யக் ஆக்கவுமாம் -தான் ஜனக குலத்தில் பிரக்க்கவுமாம் –
இவ் விஷயத்தில் உபகாரகரை இங்கன் அல்லது சொல்ல விரகில்லை –
நம்பி யேறு திருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய,
பட்டர் துணுக்கு என்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் பரிமாறும் படிக்குத்
திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்று அருளிச் செய்தார் என்ற ஐதிஹ்யம் இங்கு ஓர்தல் தகும்.
இத்தால் -சிறு மா மனுஷர் என்கிறபடியே கடக விக்ரஹம் ஸூக்ரஹம் -என்று தோற்றுகிறது –
————
அருளாத நீர் அருளி அவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருளாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே –1-4-6-
தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒருவழி உண்டு.
தாம் அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே? அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது; நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்;
இப்படி அவிருத்தமாக- மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு, அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள்.
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேஷம் என்று அறிகிலோம்; அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்.நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப் புள்-அருட்கடலான பறவை.-‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே -உடல் ஆகையால் -‘அருளாழிப்புள்’ என்கிறாள்.கடவீர் – அனுகூலர் -‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும்-ஸூக ஸ்பர்சத்தாலும் -தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப் போகாதே பிசுகிச் சுழியா நிற்கும் ஆதலின்,அசேதனமான – அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள், ‘கடவீர்’ என்கிறாள். ‘
யாமும் என் பிழைத்தோம் – ‘நாங்கள் என்ன தப்புச் செய்தோம்?-தாம் பிரிந்து துவளவிட்டு வைத்தது போன்று, நாங்களும் கிரமத்திலே பெறுகிறோம் என்று ஆறியிருந்தோமோ?
திர்யக்கின் -விலங்கின் காலில் விழுவாரும், தூது விடுவாரும் தாமாக இருக்க, –
அத்தலை இத்தலையாகியும் வாராது இருக்கிற தம்மதோ, எங்களதோ குற்றம்?’ என்பாள்,
‘யாமும் என் பிழைத்தோம்?’என்கிறாள்.
இத்தால் கடகருடைய சார க்ராஹித்வமும் ரூப சோபையையும் தோற்றிற்று-
—————–
என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-
அருளாத திருமாலார்க்கு-இதற்கு- ந கச்சின் ந அபராத்யதி -‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க,-எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர். ‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகையால் அன்றோ
என்று இன்னாதாகிறாள்,’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்.
‘ஆயின், பிராட்டியின் மேல் வெறுப்பாக, ஸ்ரீ பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின், உறவு உள்ள இடத்திலே யன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –-தேவரீர் திருவருளுக்குத் தண்ணீர் துரும்பாக-ப்ரதக்ஷிண – வலம் வருதல்,-நமஸ்காராதிகள் -வணங்குதல்-முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்யும் படி –என்பு இழைக்கும் இளங்கிளியே –முஃதயத்தாலும் -இளமையாலும், ஸ்நிக்தமான பிணிதியாலும் – அன்புடன் கூடிய சொற்களாலும், வடிவில் பசுமையாலும், வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டு பண்ணுவதனால், எலும்பைச் சிதைக்கின்ற கிளியே!
இனி, ‘என்பு இழைக்கும்’ என்று பிரிக்காமல், என் பிழைக்கும் என்று கொண்டு,
‘என் நிலையை அறிவித்தால் என்ன தவறு உண்டாம்?’யான் வளர்த்த நீயலையே-கலந்தார் செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ-நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ
இதில் -கடகருடைய அவயவ சோபாதிகளும் கிஞ்சித்க்கார பிரதி சம்பந்தித்வாதிகளால் வந்த பவ்யத்தையும் தோற்றுகிறது –
——————
நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-
பூவையைப் பார்த்து, ‘நீ அலையே’ என்கிறாள்.-இதனால், ‘பகவல் லாபம் சேர்ப்பாராலே’ என்று இருக்கிறாள் என்பது போதரும்.நோய் எனது-‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள்.
இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்.
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்;-தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.
சிறு பூவாய் -என்று கடகருடைய பருவச் சிறுமையும் உத்தேச்யம் என்று தோற்றுகிறது –
—–
நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே–1-4-9-
நம்மை நலிகைக்காக ஸ்ரீ சர்வேஸ்வரன் இவ் வாடையை வரவிட்டானாக வேண்டும்’ என்று பார்த்து,-வேற்காரர் கொடு போம் நலியப் புக்கவாறே ‘நிதி உண்டு’ என்பாரைப் போன்று,
‘நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால்,
‘அத் தலையால் வரும் நன்மையும் வேண்டா’ என்று இருந்தானாகில்,
அவசியம் வந்து என்னை முடிக்கவேண்டும்,’ என்று அவ்வாடையை இரக்கிறாள்.
நாடாத மலர் நாடி –‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’ என்பாரும் உளர்
ஸ்ரீ நஞ்சீயர், ‘எண் திசையும் உள்ள பூக் கொண்டு’ என்கிறபடியே,
‘தேட அரிய மலர்கள் எல்லாம் தேடி’ என்று அருளிச் செய்வர்.
அடியார்கட்குக் கிஞ்சித்கரித்துச் ஸ்வரூப சித்தியாயினாற்போன்று, இறைவனுக்கும் கிஞ்சித்கரிப்பித்துக் கொண்டு அன்றோ ஸ்வரூப சித்தி?அத் தலையால் வருங் கைங்கரியமும் நமக்கு வேண்டா,’ என்று இருந்தானாகில், ‘
இத்தால் கடககார அவஸ்தா விசேஷத்தாலே பாதகராகிலும் அதில் தாத்பர்யம் இல்லை -கார்யகரராகில் உத்தேச்யர் என்று கருத்து –
————–
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் ஓன்றாம் அளவே –-1-4-10-
விடலாழி மட நெஞ்சே-அல்லாதவற்றை எல்லாம் விட்டு முடிவில் நெஞ்சினைத் தூது விடுகிறாள்,’ என்பாரும் உளர். அப்போது ‘விடல்’ என்பவற்கு, ‘அவனை விடாதே கொள்’ என்பது பொருளாம்.
அன்றிக்கே-முந்தின பாசுரத்தின் சேஷம் என்பதாகக் கொண்டு ‘வைக்கவே வகுக்கின்று’ என்று கைங்கர்யம் ப்ரஸ்துதமானவாறே –தொண்டினைப் பற்றிய வார்த்தை வந்தவாறே’
‘தாய் முலையை நினைந்த கன்று போன்று திருவுள்ளம் பதறிச் சரீரத்தை விட்டுப் போகப் புக்கது; நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ என்னை விடாதே கொள்’ என்கிறாள் என்னுதல்;
அடல் ஆழி அம்மானை- ஸ்ருஜ்ய பதார்த்தங்களுக்கு -படைத்த உயிர்களுக்கு விரோதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்காக ஆசிலே வைத்த கையுந்தானுமாக ஆயிற்றுக் கண் வளர்ந்தருளுவது.ஆழி மடம் நெஞ்சே- ஞானத்தினை யுடையையாய் எனக்கு உரிமைபட்டிருக்கிற மனமே! -அளவுடையையாய் பவ்யமான நெஞ்சே
அன்றி, இதற்கு, ‘சுழன்று வருகிற பேதை நெஞ்சே’ என்று பொருள் கூறலும் ஒன்று.-வினையோம் ஒன்றாம் அளவும் விடல்- படைப்பிற்குப் பயன் அங்கே அவரைக் கிட்டி அடிமை செய்கையாய் இருக்க, பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நாம் அவரோடே சேருமளவும் நீ அவரை விடாதே ஒழிய வேண்டும்.
இத்தால் கடகராவார் அந்தரங்க பூதர் என்று கருத்து –
—————-
அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-
கண்ணனை – இவ் வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந் தீர வந்து முகங்காட்டுகையாலே- ஆஸ்ரித ஸூலபனானவன் – அடியார்க்கு எளியவன் ஆனான்.
இனி, பத்துடை அடியவர்க்கு’ என்கிற திருவாய்மொழியில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கப் பாரித்து, அது கிடைக்காமையாலே தூது விட்டவர் ஆகையாலே, இங்கு முகங்காட்டினான் ஸ்ரீ கிருஷ்ணன் என்னவும் ஆம்.-இத்தால், அவனுடைய மேன்மையோடு சௌலப்யமும் நிலை நின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பு ஆயிற்று என்றபடி.
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –