Archive for the ‘திரு மாலை’ Category

ஸ்ரீ திரு மாலை-29 -ஊரிலேன் காணி இல்லை -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

தமக்கு ஒருவிதத்தாலும் ‘பேறு தப்பா’ தென்று நிச்சயித்து
விசாரமற்றிருப்பதற்கு
இடமில்லாமையை விரிய உரைக்கும் பாசுரம் இது.

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –

பதவுரை

பாரில்–இந்தப் பூமியிலே
ஊர் இலேன்–தேவரீர் உகந்திருக்கும் திருப்பதிகளிலே பிறக்கப் பெற்றிலேன்;
காணி இல்லை–(திருப்பல்லாண்டு பாடுகை முதலானவற்றுக்காக விடப்பட்ட) காணியாட்சியும் எனக்கில்லை;
உறவு இல்லை–பந்துக்களுமில்லை;
மற்று ஒருவர் இல்லை–தோழன்மார் முதலானவர்களும் ஒருவருமில்லை.
நின் பாதம் மூலம்–தேவரீருடைய திருவடிகளையும்
பற்றிலேன்–(தஞ்சமாகப்) பற்றாதவனா யிராநின்றேன்;
பரமமூர்த்தி–மிகச் சிறந்தவனே!
கார் ஒளி வண்ணனே–மேகத்தின் காந்திபோன்ற மேனி நிறமுடையவனே!
கண்ணனே–ஸ்ரீ க்ருஷ்ணனே!
கதறுகின்றேன்–(வேறு புகலற்று உன்னையே) கூப்பிடா நின்றேன்;
அம்மா–ஸ்வாமிந்!
அரங்கமா நகருளானே!-;
களை கண் ஆர் உளர்–(உன்னை யொழிய வேறு ரக்ஷகர் யார் இருக்கிறார்!

விளக்க உரை

ஊரிலேன் –
வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில்
முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம்.
அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே!

காணி யில்லை.–
திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதரபோஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால்
அங்குப் போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்யதேவஸேவை கிடைக்கக்கூடும்
அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.

இவையொன்றுமில்லையாகிலும்
திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில்
பந்து க்ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப்போகவும்
அதடியாக பகவத்ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு;
அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.

ஆனபின்பு ஒரு வழியிலும் உன்னைப்பெற உபாயமில்லாமையாலே “ நின்பாத மூலம் பற்றிலேன்” என்கிறார்.

இப்படி ஒரு கைம்முதலுமில்லாதவனென்ற காரணத்தினால் என்னை நீ விடலாகாது;
கெட்டுப்போன உடைமையைப் பெறுவதற்கு உடையவன் முயற்சி செய்யுமாபோலே
கெட்டுப் போன அடியேனைப் பெறுவதற்கு நீர் முயலவேண்டும்படியான இங்கொழிக்க வொழியாத உறவு
இருப்பதை நோக்கவேணுமென்கிறார்,
பரமமூர்த்தி என்று தொடங்கி.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-28-உம்பரால் அறியலாகா –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

உம்பரால் அறியலாகா யொளி உளார் ஆனைக்காகிச்
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்
நம்பர மாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே

பதவுரை

உம்பரால் அறியல் ஆகா ஒளி உளார்–தேவர்களாலும் (இவ்வகை யென்று பரிச்சேதித்து) அறிய முடியாத
தேஜோ மயமான பரமபதத்தை விபூதியாகவுடைய எம்பெருமான்
ஆனைக்காகி–கஜேந்திராழ்வானுக்காக
செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி–சிவந்த மாம்ஸத்தை புஜித்து வாழ்கிற முதலையின் மேலே சீற்றங்கொண்டு
வந்தார் –(மடுவின் கரையிலே) எழுந்தருளினார்.
(இப்படி ஆஸ்ரித பக்ஷபாதியாய் ரக்ஷிக்குமவனிருக்க;)
நம்பரம் ஆயது உண்டே–(நம்முடைய ரக்ஷணத்தில்) நமக்கொரு பழுவுண்டோ?
நாய்களோம் சிறுமை ஓரா –நாய்போல் நிஷ்ருஷ்டரான நம்முடைய தண்மையை ஆராயாதவரான
எம்பிராற்கு–எம்பெருமானுக்கு
ஆள் செய்யாதே–அடிமை செய்யப் பெறாமல் (இருக்கிற நான்)
என் செய்வான் தோன்றினேன்–எதுக்காக பிறந்தேன்!

விளக்க உரை

மடுவின் கரையிலே முதலையின் வாயில் அகப்பட்டு வருந்தின கஜேந்த்ராழ்வான்
“நாராயணா! ஓ! மணிவண்ணா நாகணையாய்!” என்று அழைத்தவாறே
அரை குலையத் தலை குலைய மடுவின் கரையிலே ஓடி வந்தவனன்றோ எம்பெருமான்;
இப்படி ஆஸ்ரித ஸுலபனாய் ஆஸ்ரித பக்ஷபாதியான எம்பெருமானிருக்க அவனைக் கடகாகப் பற்றாமல்
நம்மை நாமே ரக்ஷித்துக் கொள்ளப் பார்ப்பதும் ஒரு காரியமாகுமோ?
ஆனால் பரமோத்க்ருஷ்டனான அவன் பரம நிக்ருஷ்டரான நம்மை ஒரு பொருளாக நினைப்பனோ என்று சிறிது சங்கிக்கலாம்;
இதுவும் அவனுடைய ஸ்வரூபத்தை அறியாதாருடைய சங்கையாகும்;
‘இவன் நீசன், இவன் உத்கிருஷ்டன்’ என்று ஏற்றத் தாழ்வுகளைப் பார்ப்பவனல்லன் எம்பெருமான்.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே சிறிதும் அடிமை செய்யப்பெறாத பாவியேன் ஏதுக்காக
ஒரு மனிதனாகப் பிறந்தேனென்று தலையிலடித்துக் கொள்ளுகிறபடி
பரமபதத்தை ஒளி என்ற சொல்லாற் கூறியது வடமொழி வேதப்ரக்ரியையை அடியொற்றியாம்.

“செம்புலாலுண்டு வாழும்” என்று
முதலைக்கு இட்ட அடைமொழியின் கருத்து என்னென்னில்;
“திர்யக்ஷு நைவஹி விபக்ஷதயோபசார:” (அதிமாநுஷஸ்தவம்) என்றபடி
எதிரியாக நினைக்கவும் தகாத ஒரு ஹீநஜந்துவை எதிரியாக்கி அதன்மேல் கோபங்கொண்டது
ஆஸ்ரித பக்ஷபாதத்தலான்றோ என்னுங் கருத்து வெளிவரும்.

நம்பரம் –
பழுவு என்னும் பொருளதான பர: என்ற வடசொல் பரமெனத் திரிந்தது.
“ந்யஸ்ய த்வத் பாதபத்மே வரத நிஜபரம் நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மீ” என்று அநுஸந்திப்பது
அறிவுடையார் செயலாதலால் நமக்குப் பரமான தொன்றுமில்லையென்க.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-27- குரங்குகள் மலையை நோக்க—ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

மநுஷ்யனாய்ப் பிறந்தவன் செய்யக்கூடிய கிஞ்சித்காரங்களில் மாத்திரமே யன்று
எனக்கு அந்வயமில்லையென்பது;
ஸாமந்யமான திர்யக்குகள் செய்யக்கூடிய கிஞ்சித்காரமம் பாவியேன்
செய்யப் பெற்றிலேன் என்று வருந்துகின்றார்.

குரங்குகள் மலையை  நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –

பதவுரை

குரங்குகள்–வாநர வீரர்கள் (கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் நிறம் பெறுவதற்கு)
மலையை நூக்க –மலைகளைத் தள்ளிக் கொண்டு வர
குளித்து புரண்டிட்டு ஓடி–நீரிலே முழுகி (கரையிலுள்ள உலர்ந்த மணலிலே) புரண்டு ஓடி
தரங்கம் நீர் அடைக்கல் உற்ற–அலைக் கிளர்ச்சியை யுடைய கடலைத் தூர்க்கையிலே ஒருப்பட்ட
சலம் இலா–கபடமற்ற
அணிலும் போலேன்–அணில்களையும் ஒத்திருக்கின்றேனில்லை;
மரங்கள் போல் வலிய நெஞ்சம்–மரங்களைப் போலே கடிநமான நெஞ்சை யுடையனாய்
வஞ்சனேன்–வஞ்சநையையே தொழிலாக யுடையனாய்
அளியத்தேன்–அருமந்த மநுஷ்யனான நான்
அரங்கனார்க்கு–அழகிய மணவாளனுக்கு
நெஞ்சு தன்னால் –பாவநா வ்ருத்தியாலுங்கூட
ஆள் செய்யாதே–அடிமை செய்யாமல்
அயர்க்கின்றேன்–அநர்த்தப்படா நின்றேன்.

விளக்க உரை

ஸ்ரீராமாவதாரத்தில் பெருமாள் இலங்கைநகர் எழுந்தருள்வதற்காகக் கடலில் அணை கட்ட நேர்ந்தபோது
வாநர வீரர்கள் மலைகளைக் கொணர்ந்து எறிந்து கடலைத் தூர்ப்பதைக் கண்ட அணிற்பிள்ளைகள்
‘இவ் வாநரங்கள் தமது சக்திக்கு இயன்ற காரியத்தைச் செய்து பெருமாள் விஷயத்திலே கிஞ்சித்கரித்தால்
நாமும் நமது சக்திக்கு ஏற்றவாறு இப்பெரிய காரியத்திலே சிறது கிஞ்சித்கரிப்போம்’. என்றெண்ணி,
எல்லா அணிற்பிள்ளைகளும் கடலிலே முழுகுவது,
உடனே அந்த ஈரவுடம்போடே கரைமேல் மணலில் புரண்டு உடலில் ஒட்டிக்கொண்ட மணல்களைக் கடலிலே கொண்டு உதறுவதாய்
இப்படிப்பட்ட ஒரு காரியத்திலே ஸேதுபந்தன கைங்கரியத்திற்கு உதவிபுரிந்ததாக ஒரு இதிஹாஸம் உண்டு;
அதனை அருளிச்செய்கிறார் முன் இரண்டடிகளில்.

வாநரங்கள் போலவும்
அணிற்பிள்ளைகள் போலவும்
சரீர ச்ரமப்பட்டு ஒருகைங்கரியமும் செய்யமுடியாமற் போயினும்,
நெஞ்சாலேயாவது எம்பெருமானை நினைத்து அவ்வழியாலே பகவத் கைங்கர்யபரர்களில் ஒருவனாக நிற்கலாமே;
அதுவுமில்லாமல் என் அருமருந்தன்ன மானிடப் பிறவியைப் பாழே போக்கினேனே! என்று கதறுகின்றார் பின்னடிகளில்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-26-போது எல்லாம் போது கொண்டு —ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

“கடல்வண்ணா! கடல்வண்ணா!!” என்று கதறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்,
‘த்ரைவர்ணிகாதிகாரமான உபாயங்களில் உமக்கு அந்வயமில்லையென்றீர்; இருக்கட்டும்;
ஸர்வாதிகாரமான அர்ச்சகம், ஸ்தோத்ரம் முதலியவற்றில் எதாவது அந்வயமுண்டோ? என்று கேட்க,
ஐயோ! ஒன்றிலும் அந்வயமில்லையே! என்று கையை விரிக்கிறார்.

போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே

பதவுரை

போது எல்லாம்–எல்லாக் காலங்களிலும்
போது கொண்டு –பூக்களைக் கொண்டு
உன் பொன் அடி புனைய மாட்டேன் –உன்னுடைய அழகிய திருவடிகளிலே ஸமர்ப்பிக்க மாட்டுவேனல்லேன்;
தீது இலா மொழிகள் கொண்டு–குற்றமற்ற சொற்களினால்
உன் திருக் குணம் செப்ப மாட்டேன் –உன்னுடைய நற்குணங்களைக் கீர்த்தநம் செய்ய மாட்டுவேனல்லேன்;
காதலால் அன்பு –உண்மையான பக்தியால் உண்டாகிற அபிநிவேசத்தை
நெஞ்சம் –நெஞ்சிலே
கலந்திலேன்–வைத்துக் கொண்டிருக்கின்றேனில்லை;
அது தன்னாலே–ஆதலால்
அரங்கர்க்கு–அழகிய மணவாளனாகிய தேவரீர்க்கு
ஏதிலேன்–ஒரு காரணத்தாலும் ஸ்பர்சிக்கப் பெற்றவனல்லேன்;
(இப்படிப்பட்ட நான்)
என் செய்வான் தோன்றினேனே–எதற்காகப் பிறந்தேனோ (அறியேன்)
எல்லே -ஐயோ!

விளக்க உரை

“கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும்ஆம்பலும் முன் சண்டக்கால்,
புள்ளாயோரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று உள்ளாதா ருள்ளத்தை உள்ளமாக்கொள்ளோமே” என்றபடி
கண்ணிற்கண்ட பூக்களைக் கொணர்த்து பெருமாள் திருவடிகளிலே ஸமர்பிக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க,
அது செய்யமாட்டுகிறிலேன்;

இவ்வளவு கஷ்டமும் வேணடா; வாயில்வந்த நாலு சொற்களைச் சொல்லி ஸ்தோத்ரமானது செய்யலாமே;
அதுவும் செய்யப் பெற்றிலேன்;

அவ்வளவு சிரமமும் வேண்டா; நெஞ்சிலேயாவது சிறிது ஸ்நேஹம் வஹிக்கலாமே;
அதுவும் பெற்றிலேன்;

இப்படி ஒருவிதத்தாலும் எப்பெருமான் விஷயத்திலே தான் கிஞ்சித்கரிக்கப் பெறாதவனான பின்பு
அட்டின் கழுத்தில் முலைக்கும் எனக்கும் ஒரு வாசியில்லை;
என்னுடைய பிறவி வீண்! வீண்!! வீண்!!! என்கிறார்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-25- -குளித்து மூன்று அனலை ஓம்பும் —ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம் என்று சாஸ்த்தரங்களில் உபாயமாகக் கூறப்பட்டவற்றை
அநுஷ்டிப்பதற்கு ஏற்ற ப்ராஹ்மண்யமிருந்தும்
ஐயோ!; எனக்கு ஒன்றிலும் யோக்யதை இல்லையே என்று தமது வறுமையைக் கூறுகின்றார்.

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –

பதவுரை

அரங்கமாநகருளானே
குளித்து –ஸ்நாநம் பண்ணி
மூன்று அனலை –மூன்று அக்நிகளை
ஓம்பும் –வளர்ப்பதற்குரிய யோக்ய தையைத் தருவதும்
குறி கொள் –கஷ்டப்பட்டுக் காப்பாற்றத் தக்கதுமான
அந்தணமை தன்னை –ப்ராஹ்மண்யத்தை
ஒளித்திட்டேன்–பாழாக்கிவிட்டேன்;
என் கண் இல்லை–(ஆத்ம விஷய ஜ்ஞானம்) என் பக்கல் இல்லை;
என் கண் பத்தலும் அல்லேது–உன் விஷயமான பக்தியும் உடையவனல்லேன் நான்;
(இப்படியிருக்க)
கடல் வண்ணா
நம்பீ–;
என் கொண்டு களிப்பது–(நான்) எத்தைக் கொண்டு ஆநந்த்தமடைவேன்
கதறுகின்றேன்–(துக்கத்துக்குப் போக்குவீடாக) வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன் (ஆதலால்)
எனக்கு–என் விஷயத்தில்
அளித்து அருள்செய்–மிகவும் கிருபை செய்தருள வேணும்.

விளக்க உரை

அக்நி ஹோத்ரம் முதலிய தீத்தொழில்களைக் செய்வதற்கு யோக்யதையைக் கொடுப்பது
ப்ராஹ்மண்யம் என்பது முதலடைமொழியால் விளங்கும்,

குறிகொள் என்பதனால் –
இந்த ப்ராஹ்மண்யம் மிக வருந்திக் காப்பாற்ற வேண்டிய தென்பது போதரும்.
ப்ராஹ்மண யோநியிற் பிறந்தவன் எவ்வளவு அக்ருத்யங்கள் செய்தாலும் ப்ராஹ்மணனாகவே இருக்கிறான்
என்பது கிடையாதாகையாலும்,
சாஸ்த்தரங்களிலே பாபங்களைக் கூறும் போது ஜாதிப்ரம்சாபாதக பாபங்கள்
(அதாவது ஜாதியில் நின்றும் நழுவச் செய்ய வல்ல பாவங்கள்) என்று சில பாதகங்கள் கூறப்பட்டிருத்தலாலும்
அப்படிப்பட்ட பாவங்களுக்கு ஆளாகாதபடி ஒழுங்காக இருந்தாலன்றி
ப்ராஹ்மண்யம் நிலைத்து நிற்கமாட்டாதாகையால், குறிகொள் எனப்பட்டதென்க.

மூன்றனல் –
திரேதாக்னி
அதாவது கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி,

ஒம்புதல் – ஆராதித்தல்.

“அந்தணமைதன்னை ஒளித்திட்டேன்”-
நான் ஒருவன் வரம்பு கடந்து காபேயமாகத் திரிந்தவளவால்
ப்ராஹ்மண்யமென்பதே ஒன்று உலகில் கிடையாதெனறு சொல்லும்படியாய் விட்டதென்கை.

ஆக, ‘ஒளித்திட்டேன்’ என்னுமளவால்
கர்மயோகத்தில் தமக்குச் சிறிதும் அந்வயமில்லாமையை அருளிச்செய்து
“என்கணில்லை” என்பதால்
ஜ்ஞாந யோகமில்லாமையைக் கூறி
“நின்கணும் பத்தனல்லேன்” என்பதால்
பக்தியோகமு மில்லாமையைக் கூறுகின்றார்.

இப்படி உன்னைப் பெறும் வழிகளிலே ஒன்றிலும் எனக்கு அந்வயமில்லாமையாலே
நான் எதைப் பற்றாசாகக் கொண்டு களித்திருப்பேன்;
ஏதாவது ஸ்வல்பம் கைம்முதலாவது என்னிடத்தில் இருக்குமாகில்
‘பேற்றில் நமக்கு அதிகாரமுண்டு’ என்று நினைத்து ஆறியிருக்கலாம்.
அங்ஙன் ஆறியிருக்க விரகில்லாமையால் ஐயோ! ஐயோ!! என்று கதறா நின்றேனென்கிறார் மூன்றாமடியால்.

உம்மை நான் ரக்ஷிப்பதற்கு உறுப்பாக உம்மிடத்தில் ஒருகைம்முதலுமில்லை என்பது
திண்ணமான பின்பு கதறிப் பயனென்?
என்னை என் செய்யச்சொல்லுகிறீர்?’ என்று எம் பெருமான் திருவுள்ளமாக;

ஒரு கைம்முதலுள்ளவர்களைத்தான் ரக்ஷிப்பதென்று உனக்கு நியதியுண்டாகில்
கோயிலிலே வந்து சாய்ந்தருள்வானேன்?
உன்னுடைய ஒப்புயர்வற்ற கருணைக்கு என்னைத் தவிர வேறு விஷயமுண்டோ வென்னும்
கருத்தை நான்காமடியில் வெளியிடுகிறார்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-24–வெள்ள நீர் பரந்து பாயும் —ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள்;
கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே

பதவுரை

வெள்ளம் நீர்–பெருக்கை யுடைய காவேரி யானது
பரந்து பாயும்–எங்கும் பரவிப் பாய்தற்கு இடமானதும்
விரி பொழில்-விசாலாமான சோலைகளை யுடையதுமான
அரங்கம் தன்னுள்–கோயிலிலே,
கள்வனார்–அடியவர்களைக் கொள்ளை கொள்ளுமவனான அழகிய மணவாளன
கிடந்து ஆறும்–பள்ளிக் கொள்ளும்படியையும்
கமலம் நல் முகமும்–தாமரை மலர் போல் அழகிய திருமுகத்தையும்
கண்டும் –ஸேவிக்கப் பெற்ற பின்பும்
உள்ளமே–ஓ நெஞ்சே!
வலியை போலும் –நீ கல்லாகிராநின்றாய் போலும்!
ஒருவன் என்று-அவன் ஒப்பற்றவனென்று
உணரமாட்டாய்–அறிய மாட்டாய் (இவ் விஷயத்தில்)
கள்ளம் காதலே செய்து–கபடமான பக்தியையே செய்து கொண்டு
உன் கள்ளத்தே–உனது கபடச் செய்கையிலேயே
கழிக்கின்றாயே–காலத்தை கழிக்கிறாயே!

விளக்க உரை

எம்பெருமான் பரமபதத்தில் நித்யஸூரிகளோடு பரிமாறுவதை விட்டுவிட்டு
இங்கே வந்து கண்வளர்ந்தருளுவது-
உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவராகிய ஸம்ஸாரிகளை வசப்படுத்திக் கொள்வதற்காக
வலை வீககிறபடியாதலால் கள்வனார் எனப்பட்டது.

வேசியைக் கண்டு பேசவிரும்பியும்,
சோறுவாங்கி உண்ணக்கருதியும்,
திருவிழாக்களிலே திரண்டவர்கள் ஏமாந்திருக்கையில் கொள்ளை கொள்ளக்கருதியும்
இவ்வாறு பலவகை எண்ணங்களோடே கோவிலுக்குள்ளே புகுந்தவர்களை,
வடிவழகு முதலியவற்றைக்காட்டி
நாளடைவில், தனக்கு அற்றுத்தீர்ந்த அடியவராம்படி,
ஆக்கிக்கொள்ளுகிற எம்பொருமானைக் கள்ளனென்னத் தடையுண்டோ?

“செஞ்சொற் கவிகாள்! உயிர் காத்து ஆட்செய்மின் திருமாலிருஞ்சோலை, வஞ்சக்கள்வன் மாமாயன்”
என்றாரே நம்மாழ்வாரும்.

தன் உடைமையப் பெறுதற்கு இங்ஙனே வந்துகிடக்கிற கிடையையும்,
தாய்க்கொலை செய்பவனும் மயங்கி நிற்கும்படியான அழகுவாய்ந்த திருமுக மண்டலத்தையும்
ஸேவிக்கப் பெற்றபின்பு நெஞ்சே!
சிறிதுகூட விகாரப்படாமல் கல்போலத் திண்ணிதாயிருக்கின்றாயே! என்கிறார்.

“கீழ்ப்பிறந்த விகாரமெல்லாம் விஷய வைலக்ஷண்யத்தைப் பற்ற
அஸத் ஸமமாயிருக்கிற தாய்த்து இவர்க்கு” என்பர் பெரியவாச்சான்பிள்ளை.

‘இப்போது எனக்கு வந்த வன்மை என்ன?’ என்று நெஞ்சானது கேட்க;
ஒருவனென் றுணரமாட்டாய் என்கிறார்:
உண்டு உறங்கும் ஸாமந்யரைப் போலே இவனையும் நினைத்திருக்கிறாயே யொழிய
‘இஃது ஒரு விலக்ஷண வஸ்து’ என்று விவேகிக்கமாட்டுகிறிலையே!
அப்படி விவேகித்திருப்பாயாகில் அவ்விஷயத்திற்குத் தகுதியாக விடாய்பிறந்திருக்கவேணுமே;
அது பிறநவாமையாலே உன்னைக் கல் என்னத் தட்டென்? என்கிறார்.

கள்ளமே காதல்செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே- நெஞ்சே!
ப்ராக்ருத விஷயங்களை விரும்பிப்போக வாஸநை இவ்விஷயத்திலும் தொடர்ந்து மாத்திரமே யொழிய,
இதன் வைலக்ஷண்யத்துக்குத் தகுதியாக நீ காதல் கொண்டாயில்லை;
கபடமான காதல் கிடாய் உன்னது. என்கை.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-23-கங்கையில் புனிதமாய காவிரி–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம்

April 1, 2022

உபய காவேரி மத்தியிலே ஸ்ரீரங்கத்தில் அழகிய மணவாளனது சயந திருக்கோலத்தை
ஸேவிக்கப் பெற்ற பின்பு, யான் அந்தக் கிடையழகிலே மனம் ஈடுபட்டுப்
புறம்பே செல்ல மாட்டாது தவித்து வருந்துதலை யொழிய
அதனை மறந்து தரித்திருக்க உபாயமுண்டோ என்று -தாம்
எம்பெருமானது கிடையழகில் ஈடுபட்டமையை இதனால் கூறுகின்றனரென்க.

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே

பதவுரை

ஏழையேன்–(எம்பெருமானைக் கிட்டினால் அநுபவிக்க மாட்டாமலும், பிரிந்தால் தரிக்க மாட்டாமலும்)
பேதைமைக் குணத்தையுடைய நான்
கங்கையின் புனிதம் ஆய காவிரி நடுவு பாட்டு–கங்காநதியிற் காட்டிலும் பரிசுத்தி யுடையதாகிய காவேரிநதியினது நடுவிடத்திலே
பொங்கு நீர்–பெரிய கிளர்த்தியோடு வருகின்ற (அந்நதியின்) நீர்ப் பெருக்கு
பரந்து பாயும்–எங்கும் பரவிப் பாய்தற்கிட மானதும்
பூ பொழில்–அழகிய சோலைகளை யுடையதுமாகிய
அரங்கம் தன்னுள்–கோயிலிலே
எங்கள் மால்–(அடியவரான) எங்களிடத்தில் பேரன்பு உடையவனும்
இறைவன்–ஸர்வ ஸ்வாமியும்
ஈசன்–ஸர்வ நியாமகனுமாகிய ஸ்ரீ ரங்கநாதன்
கிடந்தது ஒர் கிடக்கை–சயனித்திருப்பதாகிய ஒப்பற்ற பள்ளி கொண்ட திருக்கோலத்தை
கண்டும் –ஸேவிக்கப் பெற்ற பின்பும்
மறந்து–(அந்த கிடையழகை) மறந்து போய்
எங்ஙனம் வாழ்கேன்–எவ்வாறு தரித்திருப்பேன் யான்?
ஏழையனே–ஒன்றுஞ் செய்யமாட்டாது திகைத்தவனாகவே நிற்பேன்.

விளக்க உரை

கங்காநதியானது
விஷ்ணு பாதத்தில் நின்றும் தோன்றியதலால் பரிசுத்தமானது; என்றாலும்,
சிவனுடைய சடை முடியில் தங்கியதனால் ‘ரெளத்ரம்’ (ருத்ர ஸம்பந்தமுள்ளது- சடைச்சாறு) என்று
சொல்லுகிற ஒரு குறைவை அடைந்திட்டது;
இந்தக் காவேரியோ
அங்ஙனம் குறைபாடு ஒன்றுமில்லாததோடு அந்தக் கங்கையைத் தனது திருவடியில் நின்றும்
உண்டாக்கின பெருமான் தான் மிக்க அன்பு பூண்டு தன் நடுவிற் பள்ளிக் கொள்ளும் பாக்யமும் பெற்றது பற்றி,
அந்த கங்கையை பார்க்கிலும் இது ஏற்றம் பெற்றதாகுமென்பர் .

*பேநைர் ஹஸந்தீவ த்த்கங்காம் விஷ்ணுபதித்துவ மாத்ரமுகராம் ஹேமாபகா ஹந்த்வகம் என்று
பட்டரும் அருளிச் செய்தது காண்க.

(பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழிலரங்கம்)
கோயிலைக் கிட்டுகின்றோமென்கிற குதூஹத்தினால் பெரிய கிளர்த்தி கொண்டு தனது பெரு மகிழ்ச்சி
யெல்லாம் தோற்றுமாறு எங்கும் காவேரிநதி பாய்வதனால்
எப்போதும் மலர்கள் மாறாத சோலைகள் சூழ்ந்த பெரிய பெருமாளது ஸெளகுமார்யத்துக்கு
அநுகூலமான நீர்வளத்தையும்
எப்போதும் இளவேனிற் பருவம்போலத் தோன்றுகிற பூஞ்சோலைகளையுமுடைய ஸ்ரீரங்கம்:

இதனால் அத்தேசத்தினது
தூய்மையும் .
இனிமையும் வெளியாமென்க.

இறைவன் என்பது –
அவன் ஸகல பதார்த்தங்களுக்கும் தலைவன் என்பதையும்;
ஈசன் என்பது –
தனது தலைமைக்குத் தகும்படி ஆளவல்ல திறமையுடையவ னென்பதையும் தெரிவிக்கு மென்ப.

கண்டும் மறந்து எங்ஙனம் வாழ்கேன்-
இவ் விஷயத்தைக் கண்டு அநுபவிப்பதற்கு முன்பாகில் மறந்தாலும் மறக்கலாம்;
கண்டு அநுபவித்த பின்பு மறக்கும் வழி தெரியவில்லையே!
மறக்க மருந்துண்டாகில் கொடுங்கள் என்கிறார்.

கவேரனுடைய மகள் என்னும் பொருளதான காவேரீ என்ற வடசொல் காவிரி எனத் திரிந்தது.
நடுவு பாட்டு –ஏழனுருபு: இடத்திலே.
எங்கள்- தம்மை போன்ற அடி யாரையும் உளப்படுத்திய தன்மைப் பன்மை.
மால் –அன்பு;அதனையுடையவனுக்கு ஆகுபெயர்.
ஏழையேன் – “நுண்ணுணர்வின்மை வறுமை” என்றபடி ‘அறிவில்லாதவன்’ என்றவாறு.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-22–பேசிற்றே பேசல் அல்லால்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

நினைக்க முடியாதாகில் வாய்விட்டுப் பேசினாலோவென்ன
“மந: பூர்வோ வாகுத்தர:” என்றன்றோ சொல்லியிருப்பது;
மநஸ்ஸாலே பரிச்சேதிக்க வொண்ணாத விஷயத்தை பாசுரமிட்டு முடிக்கப் போமோ என்கிறார்.

பேசிற்றே பேச லல்லால் பெருமை யொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்

பதவுரை

பேதை நெஞ்சே-விவேகமற்ற மனமே
பேசிற்றே–(வேதங்களும் வைதிக புருஷர்களும்) பேசின பேச்சுக்களையே
பேசல் அல்லால்–(நாமும்) பேசுவதே யல்லாமல்
பெருமை–(எம்பெருமானது) மேன்மையிலே
மாசு அற்றார் மனத்து உளானை–குற்றமற்ற பெரியோர்களின் நெஞ்சில் நித்யவாஸம் செய்யுமவனே
நாம் வணங்கி இருப்பது அல்லால்–நாம் வணங்கிக் கொண்டு காலங்கழிக்கலா மத்தனை யொழிய
ஒன்று–ஏக தேசமும்
உணரல் ஆகாது–அறிய முடியாது;
ஆசு அற்றார் தங்கட்கு அல்லால்–உபாயாந்தரப்பற்றாகிற குற்ற மற்றவர்களுக்கு தவிர (மற்றையோர்க்கு)
அறியல் ஆவானும் அல்லன்–அறிய முடியாதவனா யுமிரா நின்றான் (அவன்;)
பேச தான் ஆவது உண்டோ–(அவன் பெருமைக் கீடாகப்) பாசுரமிட்டுப் பேசும் படியா யிராநின்றதோ? நீ சொல்லாய்

விளக்க உரை

பேசமுடியாதென்றால் பேசுவதைவிட்டு விலகி வாய்மூட வேண்டாவோ?
பின்னையும் பேசிக்கொண்டே இருக்கிறதென்? என்ன;
ஊமையாகப் பிறவாமல் நாலாறு வார்த்தைகள் சொல்லும்படியாகப் பிறந்தோமாதலால்,
வேதங்களும் வைதிகோத்தமர்களும் சொல்லிப் போன பேச்சுக்களில்
ஏதோ சிலவற்றைச் சொல்லிகொண்டிருக்கிறோமே யொழிய,
எம்பெருமானுடைய பெருமைகளை யெல்லாம் அறிந்து பேசுகிறபடியன்று என்கிறார் முதலடியில்:

“நிற முயர் கோலமும் பேருமுருவு மிவையிவை யென்று,
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலு மங்கங்கெல்லாம்,
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்,
பெற முயன்றா ரில்லையால் எம்பிரான் பெருமையையே” என்ற திருவிருத்தத்தை ஒரு புடை ஒத்திருக்கும் இது.

அன்றியே;
”யதோ வாசோ நிவர்த்தந்தே” என்று
வேதம் பேசினபடியே நாமும் “எம்பெருமானுடைய பெருமையைப் பேசமுடியாது” என்று
பேசுமத்தனை யல்லது பெருமை அறிய முடியாது என்றும் பொருள்படும்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-21-பணிவினால் மனமது ஒன்றி-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 31, 2022

“கரும்பினைக் கண்டுகொண்டு” என்றும்,
“அரவணைத் துயிலுமா கண்டு” என்றும்
அழகிய மணவாளனை நீர் கண்ணால் கண்டாமையாலன்றோ “என்செய்கேன்! என் செய்கேன்!!” என்று தவிக்கிறீர்;
அப்பெருமான் பள்ளி கொண்டருளும்படியைக் கண்ணால் காண வேண்டா;
ஒரு மூலையிலே உட்கார்ந்து நெஞ்சினால் தியாநஞ் செய்துகொண்டிரும் என்று சிலர் சொல்ல
அதற்கு உத்தரமாக தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார் –
அப்பெருமான் பள்ளி கொண்டருளுமாற்றை நெஞ்சினால் தான் நினைத்துத் தரிக்க முடியுமோ? என்கிறார்.

பணிவினால் மனம தொன்றிப் பவள வாயரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியனார் செம் பொனாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே

பதவுரை

பவளம் வாய்–பவளம் போன்ற அதரத்தை யுடைய
அரங்கனார்க்கு–அழகிய மணவாளன் விஷயத்திலே
பணிவினால்–கைங்கர்ய ருசியால்
மனம் அது ஒன்றி–கருத்தைப் பொருந்த வைத்து
துணிவினால்–துணிவுடன்
வாழ மாட்டா–வாழ மாட்டாத
தொல்லை நெஞ்சே–கிழத்தனமுள்ள மநஸ்ஸே!
அணியின் ஆர்.–அழகினாலே பூர்ணமாய்
செம் பொன் ஆய அருவரை அணைய–செவ்விய பொன்னாலே செய்யப்பட்ட சிறந்த மேரு பர்வதத்தை யொத்த
கோயில் –கோயிலிலே
மணி அனார்–நீலமணி போன்ற எம்பெருமான்
கிடந்த ஆற்றை–கண் வளர்ந்தருளுகிற படியை
மனத்தினால்–நெஞ்சினால்
நினைத்தல் ஆமே –(அளவிட்டு அறியக் கூடுமோ?
நீ சொல்லாய்–நீயே சொல்லிக் காண்.

விளக்க உரை

நெஞ்சால் நினைக்க முடியா தென்பதை உபபாதிப்பன-முன் இரண்டடிகள்.
நெஞ்சே! நீ வெகுகாலத்தைப் பாழே கழித்தவனல்லையோ?
நீ அநுகூலப்பட்டிருந்தா யாகில் முன்னமே உஜ்ஜீவித்திருக்கலாமன்றோ
அதற்காக நீ செய்திருக்கவேண்டிய காரியமும் அதிகமொன்றுமில்லை;
உன்னுடைய சிந்தனையை எம்பெருமான் விஷயத்திலே செலுத்தி அவனை பணிவாக நிலைநிறுத்தி,
‘இனி நாம் பணியவேண்டிய வ்யக்தி வேறில்லை’ என்று திண்ணி தாக அத்யவஸாயங் கொண்டிருந்தால்
இவ்வளவே போதும் உஜ்ஜீவநத்திற்கு;

வெகுகாலமாக இப்படிப்பட்ட பணிவும் அத்யவஸாயமும் இல்லாமல் நெடுநாளாகப் பாழாய்போனவனன்றோ நீ;
இப்படி சிறிது காலம் ஒரு விஷயத்திலே நிலைநிற்கமாட்டாத நீ
எம்பெருமான் அரவணைமேல் சாய்ந்தருளும்படியை நினைப்பதென்றால்
இது கூடுமான காரியமா என்பதை நீயே ஆராய்ந்து பார் என்கிறார் என்னவுமாம்.

(பணிவினால் மனமது ஒன்றி)
இங்கு மனம் என்று மநோ வ்ருத்தியாகிய சிந்தனையைச் சொல்லுகிறது.
ஒன்றி-
பிறவினைப் பொருளில் வந்த தன்வினை;
ஒன்றுவித்தது என்றபடி.

சிந்தனையைப் பணிவினால் ஒன்றுவித்தலாவது
எம்பெருமானைப் பணிவதாக முயற்சி செய்தல்,
“இதர விஷயங்களிலேயே போகிற நெஞ்சை அவற்றில் நின்றும் மீட்டு
ப்ராப்த விஷயத்திலே ப்ரவணமாக்குவோ மென்னும் உத்யோக மாத்ரமே யாய்த்து
இவ்விஷயத்திற்கு வேண்டுவது” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்.

துணிவினால் –
த்ருடாத்யவஸாயத்தினால் என்றபடி.

வாழமாட்டா என்று-
இத்தனை காலமாக வாழா தொழிந்தமையைக் கூறியவாறு

(தொல்லை நெஞ்சே)
இழவிலே உள்ள தொன்மையை (அநாதித்வத்தை) நெஞ்சினிலே ஏறிட்டுக் கூறுகிறபடி;
அநாதிகாலம் வாழ்ச்சியை இழந்தொழிந்த நெஞ்சே! என்றவாறு.

(அணியினார் இத்யாதி)
மஹாமேருவைப் புடைப்படத் துளைத்து அது விம்மும்படி அதிலே ஒரு நீல ரத்நத்தை அழுத்தினாற்
போலாய்த்துக் கோயிலாழ்வார்க்குள்ளே பெரியபெருமாள் கண் வளர்ந்தருளுகிறபடி.

மணி அனார்-
‘அன்னார்’ என்பது
அனார் எனத் தொக்கிக் கிடக்கிறது.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-20-பாயு நீர் அரங்கம் தன்னுள்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்அருளிய -வியாக்யானம் –

March 31, 2022

பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே.

பதவுரை

பாயும் நீர்–பாயாநின்றுள்ள காவிரி சூழ்ந்த
அரங்கம் தன்னுள்–கோயிலிலே
பாம்பு அணை–சேஷ சயநத்திலே
பள்ளி கொண்ட–கண் வளர்ந்தருளா நின்ற
மரகதம் உருவும்–மரகத மணி போன்ற திருமேனி நிறமும்
தோளும் –திருத் தோள்களும்
தூய தாமரை கண்களும்–பரிசுத்தமான தாமரை மலர்போன்ற திருக்கண்களும்
துவர் இதழ்–சிவந்த அதரமும்
பவளம் வாயும்–பவளம் போன்ற வாயும்
மாயனார்–ஆச்சரிய சக்தி வாய்ந்த எம் பெருமானது
திரு நல் மார்வும்–பிராட்டி வாழ்கின்ற விலக்ஷணமான மார்பும்.
ஆய சீர் முடியும் –வேலைப்பாடுள்ள அழகிய திருமுடியும்
தேசும்–(இவற்றாலுண்டான) தேஜஸ்ஸும்.
அடியரோர்க்கு–ஸ்வரூப ஜ்ஞான முடைய தாஸர்களுக்கு
அகலலாமோ–இழக்கத் தகுமோ?

விளக்க உரை

கீழ் “பனியரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே” என்றும்,
“உடலெனக் குருகுமாலோ என் செய்கேனுலகத்தீரே” என்றும்
கதறின ஆழ்வாரை நோக்கிச் சில ஸம்ஸாரிகள் “ஓய்! பகவத் விஷயத்திலே அகப்பட்டு ஏன் இங்ஙன கதறுகிறீர்?
அதில் ஊற்றத்தை விட்டு எங்களோடே கூடினீராகில் என் செய்கேன்! என் செய்வேன்!! என்று வாய்
வெருவ வேண்டாதபடி தரித்து ஸுகமே வாழலாமே! உம்முடைய ஸ்வயம் க்குருதாநத்தம் மிகவ மழகிறது! என்றாற்போலே சில சொல்ல;

அது கேட்ட ஆழ்வார், ‘ பாவிகாள்! கண் வளர்ந் தருளுகிற அழகைக் கண்டு வைத்து
இவ்வழகெல்லாம் நமக்காகவாயிற்று? என்று களிக்கும் படியான ஸ்வரூப ஜ்ஞாநமுடைய:எங்களுக்கு,
“அஹம்-மம” என்றிருக்கிற உங்களைப்போல் அகலமடியுமோ? என்கிறார்.

எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுப் புறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே
பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான் மீது
“தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி
சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக் காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலகமடியுமோ? என்க.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.