பிராணாயாமத்தின் செயல்முறை | பவிஷ்ய பர்வம் பகுதி – 21-(ப்ராணாயாமவர்ணநம்)-பிராணாயாமம் குறித்த விளக்கம்; புற வேள்வியும், அக வேள்வியும்; வேதாந்தக் கருத்தைச் சொன்ன ஆசான்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “புலன்களையும், கோபத்தையும் கட்டுப்படுத்திய மனிதர்கள், சடாமுடியும், மான்தோலும் தரித்து, மூக்குக்கும்[1] புருவங்களுக்கும் இடையில் உள்ள சந்தியில் தங்கள் மனத்தைக் குவிப்பார்கள்.(1) நெற்றியில் உள்ள இந்த இடமே எலும்புகளின் சாரமாகத் திகழ்கிறது; உடல் அழிந்த பிறகும் இஃது அழிவதில்லை. இஃது உயிர் மூச்சான பிராணனால் சூழப்பட்டிருக்கிறது. உயிர் மூச்சானது, காற்று, இருமல், சளி {வாதம், பித்தம், கபம்} ஆகியவற்றை உண்டாக்கியபடி குழாய்களின் வழியே இங்கே செல்கிறது. இந்த இடமே, பிரம்மத்தை உணர்ந்து, துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட வழிவகுக்கிறது.{2} இங்கே மூன்று குழாய்களும், ஐந்து உயிர்மூச்சுகளும் ஐக்கியமாகின்றன. எனவே, யோகிகள் இங்கே தங்கள் மனத்தை நிலைக்கச் செய்து, பெரும்பிரம்மத்தின் இருப்பை உணர முயற்சிக்கின்றனர்.{3} மந்திரங்களின் வித்தாக இருக்கும் ஓம் எனும் மந்திரத்தை உரைத்து வேள்விகளைச் செய்பவர்களும், முழுமையான பேரின்பத்தில் தங்கள் ஆன்மாவை மூழ்கச் செய்பவர்களுமான பிராமணர்கள், உயிர் மூச்சின் ஒற்றை நெருப்பை மட்டுமே வைத்துக் கொண்டு அதை ஐந்தாகப் பிரிக்கிறார்கள்.{4} வேதங்களை நன்கறிந்த முனிவர்கள் இந்த நெருப்பை (பூரகம், கும்பகம், ரேசகம் என்ற) மூன்று தடங்களில் {வழிகளில்} திருப்பி விடுகின்றனர். இவ்வாறு அவர்கள் இதை மூன்றாகப் பிரித்து, பூரகம் முதலிய பிற நடைமுறைகளைப் பயின்று உண்மையான ஆத்ம ஞானத்தை அடைகிறார்கள்{5}.(2-5)ஒரு பெரும் நெருப்பானது, ஆகுதிகள் மூலம் தன்னைப் பரவச் செய்கிறது. ஸ்வதாவின் வடிவில் அது மந்திரங்களுக்கான வெற்றிகரமான பயன்களை உண்டாக்குகிறது[2].(6) எப்போதும் வெல்பவனும், உயிரினங்களைக் கௌரவிப்பவனும், தெய்வீகனுமான தக்ஷன், அனைத்தின் பெரும்பாட்டனும், பிராமணர்களைப் படைத்தவனுமான பிரம்மனுக்குப் பிறக்கிறான்[3].(7) அவன் தண்டீ[4], சர்மீ[5], ஷரீ[6], கட்கீ[7], ஷிகீ[8], மேலும் அவன் தாமரையைப் போன்ற முகம் படைத்தவன். அவன் இயல்பாகவே கவலையற்றவனாகவும், கோபத்தையும், ஆசையையும் கட்டுப்படுத்தியவனாகவும் இருந்தான்.(8) வேதத்துடன் ஐக்கியமடைந்த பிரம்மம், புஷ்கரம் என்று போற்றப்படுகிறது, இந்திரனால் பாடப்பட்ட சாம வேத ஸ்லோகங்கள், பிரம்மவாதிகளால் உரைக்கப்படுகின்றன[9].(9)(உயிர் மூச்சை அடக்கும் பிராணாயாமத்தைப் பயில்பவன், உயிர் மூச்சை இழுத்து விடுவதற்கு ஏற்ற படி, பிரம்மரந்தரமெனும் நெற்றிக்குக் காற்றை இழுக்க வேண்டும்; அதன்பிறகு, அங்கிருந்து அதை இழுத்து புருவங்களின் மத்தியில் நிறுத்த வேண்டும்; அதன் பிறகு அவன் கண்களின் மூலம் அதை இழுத்து மூக்கின் நுனி மீது நிறுத்த வேண்டும். அங்கிருந்து அதை நாக்கின் வேர்ப்பகுதிக்கு இழுக்க வேண்டும். அங்கிருந்து அதை இதயத்திற்கு மாற்ற வேண்டும், அங்கிருந்து பிறப்புறுப்புக்கும், அங்கிருந்து உடலுக்கும், அங்கிருந்து குதத்திற்கும், அங்கிருந்து தொடைகளின் வேர் பகுதிக்கும், அங்கிருந்து தொடைகளின் நடுப்பகுதிக்கும், அங்கிருந்து மூட்டுகளுக்கும், அங்கிருந்து கைகளின் வேர் பகுதிகளுக்கும், அங்கிருந்து ஜங்கத்திற்கும் (தொடைகளின் பாதி), அங்கிருந்து கணுக்கால்களுக்கும், அங்கிருந்து அங்குஸ்தத்திற்கும் {விரல்களுக்கும்}, அங்கிருந்து பாதத்திற்கும் அந்தக் காற்றை மாற்ற வேண்டும். இவ்வாறு பிராண நெருப்பை {உயிர் காற்றை} ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இழுக்கும் அவன், பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஆன்மா தூய்மையடைந்து, நிலவும், விண்மீன்களும் நிலைத்திருக்கும் வரை வாழ்வான். ஒருவன் தன் உடலுக்குள் உயிர் மூச்சை நிறுத்துவது ஸ்வதாவாகும். இந்த உடல்சார்ந்த யோகச் செயல்முறையின் மூலம் ஒருவன் தன் உயிர் மூச்சை முழுமையாக அடக்கலாம். இவ்வாறு பிராணாயாமம் பயிலும் ஒருவன், வாயு, இருமல், சளி {வாத, பித்த, கபக்} கோளாறுகள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம்”)தெளிந்த நெய், பால், வாற்கோதுமை முதலியவை புற வேள்விகளில் அர்ப்பணிக்கப்படுகின்றன, ஆனால் ஆன்ம வேள்வியில் மனத்தில் உண்டாகும் அனைத்தும் மனக்குவிப்பின் மூலம் பரமாத்மா எனும் பீடத்தில் வேட்கப்படுகின்றன.(10) (தன்னலமெனும்) விறகைக் கடைந்து, (தெய்வம் மறையும்) நெருப்பால் எரிக்கப்பட்டு, (உடல் இன்பமெனும்) வன்னி மரத்தில் இருந்து திரட்டப்பட்டவனும், பிரம்மத்தை அறிந்தவனுமான ஒருவன், அங்கே பரமாத்மாவை அழைத்து வருவான்.(11) தாழ்ந்த வேள்வியில் {புற வேள்வியில்} முக்கியத்துவமற்ற பொருள்கள் நெருப்புக்குள் வீசப்படுகின்றன அதனால் உண்டாகும் மாறுபாடுகளின் படி சொர்க்கமோ, இழிந்த இடமோ மனிதர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன; ஆனால் மனோ வேள்வியில் அதுபோல் கிடையாது[10].(12) தாழ்ந்த யஜ்ஞத்தில் பலன்கள் நெருப்புக்கு உடைமையாக்கப்படுகின்றன, ஆனால் ஆத்ம யஜ்ஞத்தில் பிரம்மவாதிகள்[11], {அந்தப் பலன்களை} ஆன்ம பயிற்சிகளுக்கு உடைமையாக்குகின்றனர். பிரம்ம செல்வத்தைச் செலவழித்துச் செய்யப்பட்ட பிரம்ம யஜ்ஞத்தின் போது பிருஹஸ்பதி, ஆறு மாதங்களில் நான்கு வேதங்களையும் அடைந்தான்[12].(14) அவன், தன் குருகுலத்தின் சீடர்களுக்கு, உயர்ந்த, அழகிய எழுத்துகளுடன் கூடிய சரஸ்வதியின் வடிவமான இந்த வேதத்தைப் போதித்து, அதை இசையாக அமைத்தான்.(15) பிராமண என்ற சொல்லின் மூலம் விளக்கப்படும் வேள்வி, பிரம்மனால் குறிப்பிடப்பட்டதுபோல, இரண்டாவது பிரம்ம லோகத்தைப் போலத் தெரியும்[13].(16) வேதமெனும் சொல்லால் பிரம்மனின் வாயில் இருந்து வெளிப்பட்டதும், சான்று குறித்து எந்த ஐயமும் இல்லாததுமான இந்த வேள்வி {பிரம்மயஜ்ஞம்}, அவனால் செய்யப்படுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு பொருள்களின் மூலம் பேசுவது போலச் செழிப்படைகிறது.(17)(சாதாரண) வேள்விகள், விறகு {ஸமித்து}, சந்திரச்செடிகள் {சோமகலஷை}, வேள்விக் கரண்டிகள், பாத்திரங்கள், இரவலர்கள், செல்வம் வேண்டும் மனிதர்கள், வாற்கோதுமை முதலிய பிற பொருள்கள், பாத்திரங்கள் நிறைந்த நீர் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன.(18) அந்த வேள்விகள், செல்வங்களையும், பொன்னையும் பெரும்பிரம்மத்திற்கு அர்ப்பணித்து, (பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும்) பசுக்கள், கன்றுகள் ஆகியவற்றுடன் நடத்தப்படுகின்றன.(19) வேதங்களை ஓதுவதுடன் சாம வேத ஸ்லோகங்களை உரைத்து, பிரம்ம ஞானத்தால் நிறைந்த கர்மம் எனும் அங்கத்துடன் தொடர்வது, வழிபாடு எனும் அறிவியலுடன் ஐக்கியமடைகிறது.(20) விறகுகளால் அமைக்கப்பட்ட யஜ்ஞ வடிவில் இருப்பவனும், மருத்துகளுடன் சேர்த்து மனத்தில் நினைக்கப் படுபவனுமான பிரம்மன், பிரம்மத்தில் இருந்து தனியாக உதித்த பொருள்களை நெருப்பில் ஆகுதிகளாகச் செலுத்தி ஆத்மாவிலேயே இயல்பாக நிலைத்திருக்கிறான்.(21)
உயிரினங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மன், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்படி பிரம்மத்தை மதிக்கும் வகையிலும், தூய புத்தியின் வடிவில் இருக்கும் பிரம்மத்தைத் தீண்டும் வகையிலும் வேள்விகளை வேட்பதில்லை.(22) எல்லாம் வல்லவனான பிரம்மன், வன்னி மரத்தில் உண்டாகும் விறகை நெருப்பில் கடைந்து அக்னிஷ்டோம வேள்வி செய்து தேவர்களை அமைதிப்படுத்தி நிறைவடையச் செய்கிறான்.(22) வேள்வி வேட்கும் நேரத்தில் அந்தக் கூட்டம் சபை உறுப்பினர்களால் அலங்கரிக்கப்படுகிறது, சமஸ, அத்யர்யு புரோகிதர்கள் அதைச் செய்யும்போது இனிய ஸ்லோகங்களை உரைக்கிறார்கள்.(23) ஓ! மன்னா, சூரியனையும், சந்திரனையும் போன்ற பிரகாசமிக்கவர்களும், வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் தேர்ச்சியடைந்தவர்களுமான தவசிகளால் அந்தப் பெரும் வேள்வி அலங்கரிக்கப்படுகிறது.(25)
வேதங்களை உரக்க உரைப்பதால் அந்த வேள்வி இரண்டாவது பிரம்மலோகம் போலத் தோன்றியது. தேவர்கள் பூமிக்கு இறங்கி வந்தனர். தேவர்களைப் போன்றவர்களும், பணிவுடன் கூடியவர்களும், பிரம்மஞானத்துடன் வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிந்தவர்களுமான பிராமணத் தவசிகளால் அந்தப் பெரும் வேள்வி சொர்க்கத்திலும், பூமியிலும் மதிக்கப்பட்டது.(26,27) பிராமணர்களால் செய்யப்பட்ட அந்தப் பெரும் வேள்வி, வேள்விக் களத்தில் மூட்டப்பட்ட மூன்று நெருப்புகளைப் போல எரிந்து, பிரம்ம லோகத்தைப் போல ஒளிர்ந்தது.{28} அந்தப் பெரும் வேள்வியில் பிரம்மவாதிகள், இந்திரனால் பாடப்பட்ட சாமவேத ஸ்லோகங்களையும், சாத்திரங்களால் அனுமதிக்கப்பட்ட யஜுர் வேத ஸ்லோகங்களையும் உரைத்தனர்.{29} வாய்மை நிறைந்தவர்களும், தற்கட்டுப்பாட்டை உடையவர்களும், பிரமத்துக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களுமான தவ முனிவர்களை மனத்தில் நினைத்தவுடனேயே அவர்கள் அங்கே வந்தனர்.{30}(28-30) பிரம்மனால் பெறப்பட்டவனும், பெரும் இறையியல் அறிஞர்களில் வழிபடத்தகுந்தவனுமான பிருஹஸ்பதி, பல்வேறு வடிவங்களை ஏற்று, அந்த வேள்வியில் ஹோதாவாகவும், பிரம்மனாகவும் செயல்பட்டான்.(31)
அந்த வேள்வி நிறைவடைந்ததும், அந்த வேள்வியைச் செய்தவன் {பிருஹஸ்பதி} அந்தச் செயலுக்கான பலன்களை விஷ்ணுவுக்கு அர்ப்பணித்து, ஆன்ம ஆற்றலின் மூலம் இறுதிக் கருவை அடைந்த அதிதியின் மூலம் பிறந்தான்.(32) பிறப்பும், அறியாமையும், அதன் செயல்பாடும் அற்றவனும், பிரம்ம ஞானத்தை அறிந்தவனுமான அவன் {பிருஹஸ்பதி}, இன்பதுன்பங்களில் இருந்து விலகி இருப்பதும், இந்திரனும், இன்னும் பிற தேவர்களும் வெளிப்பட்டதும், சிதைவில்லா ஆன்ம பயிற்சிகளின் மூலம் அடையக்கூடியதுமான விஷ்ணுவின் பாதத்தை அடைந்தான். புலன்களில் இருந்தும், பற்றுக்குக் காரணமாக அமையும் புலன்நுகர் பொருட்களில் இருந்தும் விடுபட்ட முனிவர்களும் அவனைப் போலவே {விஷ்ணுவின் பாதத்தை} அடைவார்கள்.(33,34)
முற்பிறவி செயல்பாடுகளின் காரணமான ஆசைகளால், பல்வேறு புலன்நுகர் பொருட்களும் உண்டாகி மனத்தை முழுமையாக வெல்கின்றன. எனவே ஒருவன் மிகக் கவனமாக இந்த ஆசைகளை அடக்க வேண்டும்.(35) முனிவர்கள், பல்வேறு புலன்நுகர் பொருள்களை அனுபவித்தாலும், அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் அடங்குவதில்லை. தற்கட்டுப்பாடே உயர்ந்த பண்பாகக் கல்விமான்களால் கருதப்படுகிறது.(36) ஓம் எனும் சொல்லால் பெற்ற போதனையின் மூலம் ஆன்ம ஞானத்தை அடைந்த பிரம்மவாதிகளின் மனம் கல்வியால் பீடிக்கப்படுவதில்லை.(37) வேதங்களை எப்போதும் உரைக்கும் பிராமணர்கள், பக்திமான்களும், தேவர்களும் வாழும் உலகத்தையே சிறந்த லோகம் எனக் கருதுகிறார்கள்.(38) ஓ! பாரதா, ஓ! மன்னா, தேவர்கள் அழிவைச் சந்திக்காமல் வேள்வி காணிக்கைகளால் ஊட்டம் பெற்று விளங்குவதும், வேள்வி செய்பவன், கவலையற்றவனாகத் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து தன் கர்மத்தின் மூலம் அடையக்கூடியதுமான உலகமே சிறந்தலோகமாகும்.(39) (சாதி {வர்ணம்}, தகுநிலை ஆகியவற்றில்} வேற்றுமை பார்க்கும் மனிதர்கள், பாறை போன்ற இந்த உடலை, முக்தி அடையும் நோக்கத்திற்காகப் பயன்படுத்த முடியாது[14].(40,41) ஓ! மன்னா, கர்மம் செய்வதில் மும்முரமாக இருக்கும் பிராமணர்கள், தங்கள் செயல்களின் பயன்களை அனுபவித்த பிறகு, சொர்க்கத்தில் இருந்து விரட்டப்பட்டு, நிறம் மங்கிய முகங்களுடனும், மாயையால் பீடிக்கப்பட்ட மனங்களுடனும் பூமியில் வாழ்வார்கள்.(42)இனிய பேச்சைக் கொண்டவரும், பாவங்களைப் போக்குபவர்களில் முதன்மையானவரும், அமைதியான வடிவம் கொண்டவருமான ஆசான், பின் வரும் வேதாந்த போதனைகளை இருபிறப்பாளர்களிடம் சொன்னார்.{43} “இந்த உடலையும், புலன்களையும் சுயமாக கருதுவதால் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பகைமை கொள்கிறீர்கள். ஆயிரம் தேவ வருடங்கள் ஆனாலும், உடல்மீது கொண்ட பற்றெனும் இந்தப் பாறையை உடைக்க முக்தியைத் தவிர வேறெதனாலும் முடியாது.{44} மனத்தைக் குவிப்பதன் மூலம், நீங்கள் அனைவரும் ஒரே ஆத்மாவே {சுயமே} என்பதை உணரும்போதும், மனவெறுப்பேதுமின்றி அனைத்து உயிரினங்களுடனும் நீங்கள் நட்பை உண்டாக்கிக் கொள்ளும்போதும், இவ்வுடலே சுயமெனும் உங்கள் தவறான கருத்து அழிவடையும்.{45}(43-45) கோபம், பொறாமையெனும் இரண்டு உணர்வுகளும் வெற்றியடையும் இயல்பின் ஆற்றலைப் பெருகச் செய்யும்; கோபமும், பொறாமையுமற்ற ஆற்றல் பிரம்மத்திடம் அர்ப்பணிப்பைப் பெருகச் செய்யும்.(46) தூய புத்தியைப் பயன்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் இன்பங்களைவிட்டு விலகும்போதும், பளிங்கு மலை போல இவ்வுடலைப் பெரிதாக்கும் நெருப்பு, நீர், உணவு ஆகியவையும், அவற்றின் செயல்பாடுகளும், சொற்கள், உயிர் காற்று, மனம் ஆகியவையும் அழிவடையும் போதும், மனைவியின் துணைகளும், பிற துணைகளும், மனத்திறன்கள், சாத்திரங்கள், உணர்வுகள் ஆகியவையும் தகரும்போதும், உடல் சார்ந்த பற்றெனும் இந்த மலையைப் பிளக்குமாறு நான் உங்களுக்கு ஆணையிடுவேன். அப்போதுதான் உங்களாலும் அதை {உடல் சார்ந்த பற்றெனும் அந்த மலையைப்} பிளக்க முடியும்” என்று சொன்னார் அந்த ஆசான்” என்றார் {வைசம்பாயனர்}.(47-49)
பிராமணர்களின் கடமைகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 22-(வர்ணாஷ்ரமதர்மபரிபாலநம்)-ஆசிரமங்கள்; பிராமணர்களின் கடமைகள்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இல்லறவாசிகளும், தவத்தில் அர்ப்பணிப்பு உள்ளவர்களுமான அந்த பிராமணர்களால், மலையின் வடிவிலிருந்த தங்கள் ஆசானின் போதனைகளைக் கேட்டாலும் தங்கள் உடல் சார்ந்த பற்றுகளைக் கைவிட முடியவில்லை.(1) எனவே, ஆகுதிகளுடன் கூடிய நெருப்பு வழிபாடு தினமும் பெருகியது, விஷ்ணுவை வழிபடுவதும், ஆசான்களை வழிபடுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறே, ஓ! மன்னா, பிராமணர்களின் ஆன்மாக்களைத் தூய்மை அடையச் செய்வதற்காக அந்தப் பிரம்மவாதிகளால் கர்ம காண்டம் இவ்வுலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.({2}(1-2)
இந்தப் பூமியில் புண்ணிய மலையின்[1] அருகில், குருக்ஷேத்திரம் என்ற பெயரைக் கொண்டதும், முட்களற்றதும், நெருப்பு மூட்டுவதற்கான மரங்களும், கொப்புகளும் நிறைந்ததுமான ஒரு புனித மாகாணம் இருக்கிறது.{3} இல்லறவாசிகளாக {கிருஹஸ்தர்களாக} இருந்த பிராமணர்கள், தூய இதயத்துடன் கடவுளின் பணிகளைச் செய்தபடியே அங்கே வாழ்ந்து துறவையும், தவங்களையும் பயின்று வந்தனர். யதிகளும் கூட பக்தியை அடையும் பேரார்வத்துடன் அங்கே வாழ்கிறார்கள்.{4} வானப்பிரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றுபவர்களும், அக்னி ஹோத்ரம் செய்பவர்களும், தங்கள் கோபத்தையும், ஆசைகளையும் கட்டுப்படுத்தியவர்களும், மான்தோலும், மரவுரியும் தரித்தவர்களும், வேண்டிப் பெறாத {பிச்சை எடுக்காத} உணவை உண்டு வாழ்பவர்களுமான பிராமணர்களும் அங்கே வாழ விரும்பினர். ஓ! மன்னா, முன்னறிவால் படிப்படியாக அதை அடையும் பிராமணர்கள், பெருங்கவனத்துடன் இவ்வகை வாழ்வு முறையைப் பின்பற்றுகின்றனர்.{5,6}பழங்காலத்தைச் சேர்ந்த பிரம்மவாதி முனிவர்களால் கடைப்பிடிக்கப்பட்ட இந்தப் புனித தொடக்கத்தை அறிந்தவர்கள் நித்திய பண்பை {அறத்தை} அடைகிறார்கள்.{7} ஒருவன், வேதங்களில் முற்றாகத் தேர்ச்சி அடையாமல் ஒருவன், இல்லற வாழ்வுமுறையை {கிருஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றக்கூடாது, மிகக் கடினமான பிரம்மசரிய வாழ்வையும் வாழக்கூடாது, அவன் துறவியின் வாழ்வையும் வாழக்கூடாது, இல்லறவாசியின் கடமைகளையும் கைவிடக்கூடாது. வேதங்களில் தேர்ச்சியடையாமல் துயரங்கள் ஒருபோதும் முடியாது. சாம, யஜுர் வேதங்களை உரைப்பவர்கள் ரிக் வேதத்தை அடைகிறார்கள்.{8,9} இல்லறவாசிகளைப் போல வாழ விரும்பும் பிராமண தவசிகள் {சந்நியாசிகள்}, தங்கள் ஆசான்களிடம் இருந்து வேதாந்த வழிமுறைகளைப் பெற்றுக் கொண்டு அதன் பலன்களை அறுவடை செய்யலாம்.{10}
பக்திமானாக இருக்கும் ஒரு மன்னன், வேதங்களைக் கேட்காதவனையும், வேத சடங்குகளைச் செய்யாதவனையும் ஒரு சூத்திரனாகச் செயல்படும்படி வற்புறுத்த வேண்டும்.{11} மறுபுறம், பிராமணர்களில் வேதங்களை மதிக்காதவர்கள் எவரும் இருப்பதில்லை என்பதாலும், ஒரு மாணவனாகவோ {பிரம்மசாரியாகவோ}, இல்லறவாசியாகவோ {கிருஹஸ்தனாகவோ} இருக்கும் ஒவ்வொரு பிராமணனும் தன் கடமைகளின் விளக்கத்தைக் கேட்கும்போது தன் மனத்தைக் கட்டுப்படுத்தி வேதங்களைப் படித்து, போதனைகளைப் பெறுகிறான் என்பதாலும், எந்த மன்னனும் ஒரு பிராமணனை அவமதிக்கக்கூடாது.{12-14} எனவே, சாத்திரங்களின் அறிவை அடைந்தவனும், அனைத்தையும் கடந்த ஆழ்நிலை அறிவை ஈட்டியவனுமான ஒரு பிராமணன், இவ்வாறே வேதங்களைப் படித்துத் தன் புலன்களை அடக்க வேண்டும்” என்றார் {வைசம்பாயனர்}.{15}(3-15)
தேவாசுரப் போரின் தொடக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 23-(ஈஷபக்திமாஹாத்ம்யம்)-கசியபரையும், அவரது மகன்களையும் வேள்வி செய்யத் தூண்டிய பிரம்மன்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் தொடங்கிய போர்; விஷ்ணு கொடுக்கும் சத்வ குணம்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “வேதங்களை நன்கு அறிந்தவர்களும், சடங்குகளை {செயல்களைத்} தவிர்த்ததால் பாவங்கள் அண்டாதவர்களும், நாரதரின் தலைமையிலானவர்களுமான ரிஷிகளும், கந்தர்வர்களும், அந்தப் பிராமணர்களின் முன்னிலையில் சூரியனையும், சந்திரனையும் நிறுத்தி அவர்களை வழிபட்டனர். மேலும் அவர்கள் தந்தையைத் துதிக்கும் ஒரு மகனைப் போல எப்போதும் பெரும்பாட்டனை {பிரம்மன்} வழிபட்டனர்.
ஐம்புலன்களையும் அடக்கிய அந்தப் பிராமணர்களின் இனிய சொற்களால் துதிக்கப்பட்டவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் எப்போதும் நன்மையைச் செய்பவனும், அவை நன்றாக இருக்க வேண்டுமென எப்போதும் விரும்புகிறவனுமான தலைவன் பிரம்மன், “(நீங்கள் அந்த வேள்விகளை மேற்கொண்டது) நற்பேற்றினாலேயே” என்றான்.(1-4)
அப்போது எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன் {பிரம்மன்}, கசியபரிடம், “நீயும், உன் மகன்களும் பூமியில் வேள்விகளைச் செய்வீர்களாக. யக்ஷர்கள், மற்றும் அசுரர்கள் அனைவரும் ஏராளமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்வார்கள்” என்றான்.{5,6}
பலத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருந்த தைத்தியர்களும், தேவர்களும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, “நாங்களே முதலில் வேள்விகளைச் செய்வோம், நாங்களே வழிபடுவோம்” என்று சொல்லி, ஒருவரோடு ஒருவர் போரிட இருந்தனர்.{7,8}
தவங்களாலும், துறவுகளாலும் பாவம் கழுவப்பட்டவர்களான ரிஷிகளும், வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் நன்கறிந்த பிராமணர்களும் அவர்கள் அனைவரையும் தடுத்தனர். அவ்வாறு தடுக்கப்பட்டாலும், கோகுலத்தில் உள்ள காளைகளைப் போல அவர்கள் ஒருவரோடு ஒருவர் போரிடத் தொடங்கினர்.{9,10}
அவர்கள் வேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டு பேராவலுடன் போரிடத் தொடங்கினர். போர் தொடங்கியபோது அவர்கள் தங்கள் உயிர் மூச்சை வெல்லும் விருப்பங்கொண்டு உயிரினங்கள் அனைத்தின் முன்னிலையில் மாண்டனர்.{11} அதன் பிறகு, அந்த அசுரர்களும், சுரர்களும் {தேவர்களும்} தங்கள் புத்தியினாலும், உண்மை ஞானத்தில் விளைந்த பற்றின்மையாலும் புற புலன்களைக் கட்டுப்படுத்தி, சிறகுகளுடன் கூடிய பறவைகளைப் போலத் தங்கள் மனங்களைக் கட்டுப் படுத்தினர்.{12}
அப்போது, மனித கனத்தின் அழுத்தத்தால் மூழ்கும் படகைப் போலவே வேள்விக் களங்களும் உலகம் சார்ந்த நோக்கங்கள் எனும் தழல்களால் கலங்கடிக்கப்பட்டன. முழங்கும் காளைகளைப் போல யோகத்தோற்ற அமைவுகள் உடைக்கப்பட்டு, உயிர் மூச்சுகளால் குழாய்கள் கலங்கடிக்கப்பட்டன.{13,14}
அதன் பிறகு, அறிவுசார் புலங்கள் கலங்கிய {புத்தி கலங்கிய} மதுவும், சத்வ குணத்தை ஒத்தவனான விஷ்ணுவும் ஒரு யுக சுழற்சியைக் கிட்டத்தட்ட புரட்டியதும், அனைத்து, உயிரினங்களுக்கும் அச்சத்தை உண்டாக்கியதுமான ஒரு பயங்கரப் போரில் ஈடுபட்டனர்.{15} அப்போது, தீப்பற்றி எரியும் காட்டைத் தணிக்கும் மேகத்தைப் போல விஷ்ணு மனோசக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்தினான். அந்தத் தலைவனின் {விஷ்ணுவின்} பெயரைச் சொல்பவன், தன் மனத்தைக் கட்டுப்படுத்திய பிறகு சத்வ குணத்துடன் தோன்றுகிறான்” என்றார் {வைசம்பாயனர்}[1].{16}(15-16)
மது அசுரன் – விஷ்ணு போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 24-(மோஹவிவேகயோர்யுத்தம்)-இந்திரனைக் கட்டிப்போட்டு விஷ்ணுவை எதிர்த்துச் சென்ற அசுரன் மது; இசையில் மயங்கிய மது; விஷ்ணுவுக்கும் மதுவுக்கும் இடையில் நடைபெற்ற போர்; மது விஷ்ணு எனும் உருவகம்; விஷ்ணுவின் பெருமை; விஷ்ணு துதி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பயங்கர சக்தியும் பேராற்றலும் மிக்கத் தைத்தியன் மது, கூரிய வடங்களைக் கொண்டு அந்த மலையில் மகேந்திரனைக் கட்டிப்போட்டான்.[1](1) இந்திரனின் கௌரவத்தை அடைய விரும்பிய மது, பிரஹ்லாதனுடைய சொற்களின்படியும், உண்மையான புத்தியின் வீழ்ச்சியாலும் திடீரென அவனை {இந்திரனை} வெல்லப்பட முடியாத இரும்பு வடங்களால் கட்டிப்போட்டான்; அதன் பிறகு தன் படைக்குத் தலைமையேற்று வெளியே வந்த அவன் {மது}, காலனால் தூண்டப்பட்டவனாகப் பேராற்றல் வாய்ந்த விஷ்ணுவைப் போருக்கு அழைத்தான்.(2-4)கசியபரின் மகன்கள், தங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு மதுவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். அவர்கள் பெரும் தண்டங்களை எடுத்துக் கொண்டு போரிடுவதற்காக விரைந்து சென்றனர். பாடும் கலையிலும், ஆடற்கலையிலும் தேர்ந்திருந்த கந்தர்வர்களும், கின்னரர்களும், அனைத்துப் பக்கங்களிலும் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தனர். தந்தி இசைக்கருவிகளின் இனிய இசையால் அவர்கள் போரிட்டுக் கொண்டிருந்த மதுவை {மது அசுரனை} நிறைவடைச் செய்து அவனது கவனத்தைச் சிதறடித்தனர். தானவர்களும், தேவர்களும் ஒருவரையொருவர் கண்ட போது, மது பாடுவதில் தன் மனத்தை நிலைநிறுத்திக் கதறிக் கொண்டிருந்தான். மரத்திற்குள் கமுக்கமாக வாழும் நெருப்பைப் போல விஷ்ணுவும் தன் யோகக் கண்களால் மதுவின் மனத்தைப் புலன் நுகர் பொருட்களில் ஈர்த்து மந்தர மலையில் மறைந்தான். {தீ போல} எரியும் புத்தியைக் கொண்ட ரிஷிகள் சற்றே மனம் வருத்தமுற்றுப் பெரும்பாட்டனைத் தங்கள் முன்னிலையில் கொண்டு ஒரு கணத்தில் மறைந்தனர்.(5-11)
கோபத்தால் தூண்டப்பட்டவனும், {இசை எனும்} போதையால் கண்கள் சுழல்பவனுமான மது, தன் கைகளால் விஷ்ணுவின் நெற்றியைத் தாக்கினாலும் அவன் ஒரேயொரு அடியைக் கூட விட்டு நகரவில்லை.(12) விஷ்ணுவும் தன் விரலின் நுனியால் தைத்தியன் மதுவின் மார்பில் தாக்கியபோது அவன் குருதியைக் கக்கி பூமியில் விழுந்தான். நினைத்தற்கரிய ஆற்றலைக் கொண்டவனும், போரில் திறன்மிக்கவனுமான விஷ்ணு, மற்போருக்கான நேரத்துக்காகக் காத்திருந்தாலும், அந்தத் தைத்தியன் வீழ்ந்தபோதும் அவனைத் தாக்கவில்லை. தரையைத் தன் முழங்காலால் தீண்டித் தன்னைத் தாங்கிக் கொண்ட தைத்தியன் மது இந்திரனின் கொடிக்கம்பத்தைப் போல எழுந்து நின்றான். கோபத்தில் நிறைந்த மனத்தைக் கொண்டவனான அவன், தன் கண்களால் திக்குகள் அனைத்தையும் எரித்தான். அதன் பிறகு அவர்கள், கடுஞ்சொற்களைச் சொல்லி முழங்கி, ஒருவரையொருவர் கொல்லவிரும்பி மற்போரில் ஈடுபட்டனர்.(13-16) அவ்விருவரும் கைகளின் பலத்தையும், போரில் திறத்தையும் கொண்டவர்களாகவும், பெரும் தவசிகளாகவும், வாய்மை நிறைந்தவர்களாகவும் இருந்தனர். அந்தப் பெரும் வீரர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பாறைகளைச் சிறகுகளாகக் கொண்ட இரு மலைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதைப் போல அது தெரிந்தது. போர்வெறிக் கொண்ட அவ்விருவரும் நிலத்தில் ஒருவரோடொருவர் போரிட்டனர். இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு போரிடுவதைப் போலவே அவர்கள் தங்கள் நகங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கினர்.(17-19)
கோடை காலம் நிறைவடைந்து, மழைக்காலத் தொடக்கத்தில் வேறு கனிமப் பொருட்களுடன் கலந்த தங்கம் மலைகளில் இருந்து வெளியேறுவதைப் போலவே குருதியும் காயங்களில் இருந்து ஏராளமாக வெளியேறிற்று. வெளியேறும் குருதியுடன் கூடிய அவர்கள் தங்கள் கால்களால் பூமியின் பரப்பைக் கிழிக்கத் தொடங்கினர். ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், ஊனுண்ண விரும்பும் பறவைகள் தங்கள் சிறகுகளால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலப் போரிட்டனர். விஷ்ணுவின் மகிமைகள் எனும் வாய்மையையும், ஆன்ம சக்திகள் அனைத்தையும் சித்தர்கள் பாடிக் கொண்டிருப்பதை உயிரினங்கள் கேட்டன[2].நெருப்பு, நீர், நிலம் {பூமி} என்ற பூதங்களால் இந்த உடல் அமைந்திருக்கிறது. அதன் பிறகு நனவுநிலையானது அந்த உடலில் நிறுவப்படுகிறது. நனவுநிலையில் உடலும், புலன்களும் கலந்த பெரும்பிரம்மமே ஜீவன் என்று அழைக்கப்படுகிறது. நுட்பமான அந்தக் காரணம் {ஜீவன்} அழியும்போது, அடிப்படை பூதங்கள் அனைத்தும் அதில் இருக்கத்தான் செய்கின்றன, அதே நுண்சாரப் பொருட்களே பலவடிவங்களில் மீண்டும் தோன்றுகின்றன. நுண்ணாத்மாவானது உடலின் தொடர்பில் இருந்து பிரிந்தாலும், நனவுநிலையாக மூவுலகங்களில் பொருட்கள் அனைத்திலும் படர்ந்தூடுருவி அவற்றை அனுபவிக்கிறது. தீயோரை ஒடுக்குவதற்காகவும், நல்லோரைப் பாதுகாப்பதற்காகவும் யோகமாகவும், தியு லோகத்தின் பாதுகாவலனாகவும் இருக்கும் ஈஷ்வரனானவன், மனிதன், சேஷன், ஆமை என்றும், இன்னும் பல வடிவங்களையும் ஏற்று, பூமியைத் தாங்கும் அனந்தனையும், நான்கு வேதங்களாக இருக்கும் தன்னையும் ஒருசேர ஆதரிக்கிறான். வேதங்களாகப் பிராமணர்களில் இருப்பதைப் போலவே க்ஷத்திரியர்களில் போர்க்கலையாகவும், வைசியர்களில் வணிகமாகவும், சூத்திரர்களில் தொண்டாகவும் தலைவன் நீடித்திருக்கிறான்.(20-29)
பசுக்களில் வாழும் தலைவன் உங்களுக்கு மத்தியில் பாலைப் பகிர்ந்தளித்து உங்களை நீடித்திருக்கச் செய்கிறான். வேள்விப் பொருட்களில் நிலைத்திருக்கும் அவன் கனிகளால் உங்களையும், ஹவியின் புகையால் பித்ருக்களையும், ஹிவர்பாகத்தால் தேவர்களையும் பாதுகாக்கிறான்.(30) தலைவன், பித்ருக்களுடன் கூடியவனாக நான்கு பூதங்களையும், ஏழு வகை உணவுகளையும் கொண்டு மூவுலகங்களையும் பாதுகாக்கிறான்.(31) வெளிப்பட்டும், வெளிப்படாமலும் இருக்கும் சூரியனும் சந்திரனும், தங்கள் சக்தியின் மூலம் அந்த ஏழுவகை உணவுகளின் வடிவமாகின்றன.(32) மனம், சொற்கள், உயிர்மூச்சுகள் ஆகிய மூன்றும் தொடர்ந்து சூரியனைப் பெருகச் செய்கின்றன; எஞ்சிய நான்கும் சந்திரனைப் பெருகச் செய்கின்றன.(33) மூவகையினராக இருக்கும் பித்ருக்கள் தங்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் உணவுப் பிண்டங்களைக் கெடுக்கின்றனர், எஞ்சிய நால்வகையினர் அவற்றை ஏற்கின்றனர்.(34)
பொன்னானது காதுகுண்டலமாவதைப் போல நீ ஐம்புலன்களில் மறைந்திருக்கிறாய்; நீ அகந்தையிலும் பிற கோட்பாடுகளிலும் வாழ்கிறாய்; நித்தியமானதும், அழிவற்றதுமான பிரம்மத்தில் இருந்து நீ வெளிப்பட்டாய்.(35) நெருப்பும், காற்றும் உன்னிலிருந்தே சக்தியைப் பெறுகின்றன; ஏனெனில், ஆதித்யன் என்றழைக்கப்படும் உன்னிலிருந்த தங்கள் சக்திகளை அவை பெறுகின்றன.(36) யுக முடிவின்போது நீ உன் கதிர்களால் அண்டத்தை விழுங்கிவிடுபவனைப் போல அதை எரிக்கிறாய்; அதன் மூலமே நீ உயர்ந்த ஆன்ம சக்தியை அடைகிறாய்.(37) அமாவாசையிலும் (நிலவு முற்றாகப் புலப்படாதபோதும்), பௌர்ணமியிலும் {நிலவு முழுமையாகப் புலப்படும்போதும்}, சூரியன், சந்திரன், வசுக்கள் ஆகியோரின் மூலம் உதித்த ரிஷிக்களுடன் கமுக்கமாக நீ திரிகிறாய்.(38) ஊட்டத்தைக் கொடுக்கும் வேள்விகளைச் செய்யும் நீ, அறத்திற்குக் கேட்டை விளைவிக்காமல் சொர்க்கத்தைக் கொடுக்கிறாய். அமாவாசை, பௌர்ணமிகளில் நீ மரங்களிலும், மூலிகைகளிலும், செடிகொடிகளிலும், பூமியிலும் சந்திரனைப் போலத் தோன்றுகிறாய். மீண்டும் பிறவியை அடைவதற்காக நீ ஒவ்வொரு பக்ஷத்திலும் பிறப்பை எடுக்கிறாய்.(39,40) ஓ! பூதங்களின் தலைவா, நீயாகவே இருப்பவையும், சென்றவையும், மீண்டும் வருபவையுமான உயிரினங்களின் ஊட்டத்திற்காகவே பூமியில் எவையும் நீடித்திருக்கின்றன.(41) பூமியில் நிலவும் தினசரி கடமைகள் அனைத்தும் நீயே. நீயே யஜ்ஞம், நீயே கர்மன், நீயே மந்திரம், நீயே சொற்கள், நீயே ஆத்மா.(42) சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் சூரியன், தெளிந்த சந்திரன் என்ற இரு வழிகள் இருக்கின்றன. சந்திரன் பித்ரு லோகத்திற்குச் செல்லும் வழியாகவும், சூரியன் தேவலோகத்திற்குச் செல்லும் வழியாகவும் இருக்கின்றன.(43)
உயிரினங்களின் வடிவிலும், அழியும் விதிமுறைகளால் வழிநடத்தப்பட்டும் நீ இந்த அண்டத்தில் இருக்கிறாய்; உன் வடிவில் புலன்களை அழித்து எவருக்கும் புலப்படாதவனாக நீ வாழ்ந்து வருகிறாய். தனியாகப் பிறந்தவன் நீயே; புராதனனும், அண்டப் புருஷனும் நீயே; சிதைவற்றவனும், ஒப்பற்றவனும் நீயே; தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாக இருந்தாலும் நீ விளையாடிக் கொண்டிருக்கிறாய். சக்தியில் நெருப்பைப் போன்றவன் நீயே; காற்றின் வடிவில் திரிபவன் நீயே. நுட்பமான ஐம்பூதங்களால் எப்போதும் சூழப்பட்டவன் நீயே. மனம் மற்றும் புறப் புலன்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஜீவனாக இருப்பவன் நீயே; முக்திக்கான பணியில் தூய புத்தியாக இருப்பவன் நீயே; தினசரி அழிவுக்கான பணியின் ருத்ரனின் வடிவில் இருப்பவன் நீயே. விஷ்ணுவாக இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் நீயே. பல்வேறு வகையினரும், வர்ணத்தினரும் நீயே; கண்கள் மற்றும் புலன்களின் நனவுநிலை நீயே. தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், பாவமற்றவர்களும், தங்கள் செயல்களின் மூலம் பெரும்பிரம்மத்தை அடைந்தவர்களும், நண்பரையும், பகைவரையும் ஒன்றாகக் கருதுபவர்களுமான முனிவர்கள் எப்போதும் உனக்குத் தொண்டு புரிகின்றனர்.(44-48)
பல்வேறு சித்தர்களாலும், முனிவர்களாலும் இவ்வாறு துதிக்கப்பட்ட பெரும் விஷ்ணு, ஹயசிர வடிவை நினைத்தான். வேத வடிவையும், தேவ உடலையும் அந்தத் தலைவன் ஏற்றபோது, சிவன் அவனது தலையிலும், பிரம்மன் அவனது இதயத்திலும் இருந்தனர். சூரியக் கதிர்கள் அவனது குண்டலங்களில் இருந்தன, சந்திரனும், சூரியனும் அவனது இரு விழிகளாகினர். வசுக்கள் அவனது ஜங்கங்கள் {தொடைகள்} இரண்டில் இருந்தனர், சித்தர்களும், தேவர்களும் அவனது மூட்டுகளில் இருந்தனர். வேதங்கள் அவனது சொற்களாகவும், மருத்துகளும், வருணனும் அவனது கால் மூட்டுகளாகவும் இருந்தனர். தேவர்களுக்கும் பேரற்புதமாகத் திகழும் இந்தப் பெரும் வடிவை ஏற்ற தலைவன் ஹரி, கோபத்தில் கண்கள் சிவந்தவனாக, மயக்கத்தின் {மோகத்தின்} அடையாளமாகத் திகழும் அந்த அசுரனைத் தாக்கத் தொடங்கினான். வெள்ளாடை உடுத்திய இளங்காரிகையைப் போன்ற பூமியானவள், மதுவின் கொழுப்பு மற்றும் இறைச்சியால் நிறைந்திருந்தாள்.(49-54) எனவே, ஓ! மன்னா, பூமியானவள் மேதினி என்றழைக்கப்பட்டாள், {இது போன்ற} ஆயிரக்கணக்கான அசுரர்களுக்காகவே அவள் தரணி என்ற பட்டப்பெயரையும் பெற்றாள்” என்றார் {வைசம்பாயனர்}.(55)
மதுவைக் கொன்ற விஷ்ணு | பவிஷ்ய பர்வம் பகுதி – 25-(ஆத்மோபாஸநாதிகதநம்)-மலைகளைக் குறித்த வர்ணனை; ஆறுகளின் உற்பத்தி; மழைக்காலமும் வசந்த காலமும்; யோகம்; விஷ்ணு; மாயை; ஆத்மா…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “புஷ்கரையில் மது வீழ்ந்ததைக் கண்ட அனைத்து உயிரினங்களும் அனைத்துப்புறங்களிலும் பாடியும், ஆடியும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தன.(1) மலைகளில் முதன்மையான சுபார்ஷ்வம் பல்வேறு தாதுப்பொருட்களால் மறைக்கப்பட்ட தன் தங்கச் சிகரங்களுடன் வானத்தைப் பிளப்பதைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(2) தாதுக்களால் எங்கும் மறைக்கப்பட்டிருந்த மலைகள் மின்னலுடன் கூடிய மேகங்களைப் போன்ற உயர்ந்த சிகரங்களுடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(3) அவற்றின் சிகரங்கள் மண்ணாலும், காற்றில் எழுந்த சாம்பலாலும் மறைக்கப்பட்டருந்ததால் பெரும் மேகங்கள் பலவற்றைப் போல அவை தெரிந்தன.{4} மேகங்களால் மறைக்கப்பட்ட சிகரங்களைக் கொண்டவையும், ஏராளமான தங்கத்தை விளைவிக்கும் தங்கள் சிறகுகளால் {தங்கள் மேலிருந்த} மரங்களைச் சிதறடித்தவையுமான மலைகள் ஆகாயத்தில் நிலைத்திருப்பவை போலத் தெரிந்தன.{5,6} பொன் தாதுக்களால் மறைக்கப்பட்ட சிகரங்களைக் கொண்டவையும், சிறகுகள் படைத்தவையுமான மலைகள், காற்றால் மேலெழுந்து சென்று பறவைகள் அனைத்தையும் அச்சுறுத்தின. பளிங்கு {ஸ்படிகம்}, மரகதம் {சூரியகாந்தம்}, நீலமணி {சந்திரகாந்தம்} ஆகியவற்றால் அந்தப் பொன் மலைகள் மறைக்கப்பட்டிருந்தன.{7}
பெரும் மலையான இமயம், வெண்தாதுக்களால் மறைக்கப்பட்டிருந்தது. அதன் {இமய மலையின்} பொன் சிகரங்களும், சிறகுகளும் சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்பட்ட போது, பல்வேறு வகைகளிலான ரத்தினங்களை அவை வெளிப்படுத்தின.{8,9} பளிங்கால் {ஸ்படிகத்தால்} நிறைந்ததும், வஜ்ரத்தால் கட்டப்பட்ட நுழைவாயில்கள் இரண்டைக் கொண்டதும், பெரும் மலையுமான மந்தரம், தேவலோகத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.{10} பல்வேறு தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டதும், நுழைவாயில்களைப் போன்ற உயர்ந்த பல சிகரங்களைக் கொண்டதும், இசைக்கருவிகளை இசைக்கும் கந்தர்வர்கள், பாடும் கின்னரர்கள், பல்வேறு முகபாவங்களையும், உடலசைவுகளையும் செய்யும் தெய்வீக காரிகைகள் ஆகியோரால் மறைக்கப்பட்ட மரங்களுடன் கூடியதுமான கைலாச மலையோ விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.{11,12}
மதுவின் {மது அசுரனின்} பாடல், நடிப்பு, நடனம், விளையாட்டு ஆகியவற்றால் அந்தக் கைலாச மலை காமனைப் போல ஆசையைத் தூண்டிக் கொண்டிருந்தது.(13) சூரியக் கதிர்களால் பீடிக்கப்பட்ட மேகங்களைப் போன்ற சிகரங்களுடன் கூடிய நீல மலையான விந்தியத்தைப் போன்றவனும், பூமியின் வடிவத்தைக் கொண்டவனுமான விஷ்ணு, மேரு மலையில் நிலைத்திருந்து, மேகங்களின் மூலம் பூமியில் மழையைப் பொழிந்தான்.(14,15) எழுந்து வரும் மேகங்களுடன் கூடிய மலைகள் தூய நீரையும், பல்வேறு பாறைகளையும், தாது பொருட்களையும் வெளியிட்டன; ஊற்றுகளின் மூலம் அவை பளிங்கு போன்று தெளிந்த நீரை வெளியிட்டன. மழைக்காலம் முடிவடைந்ததும், மின்னலுடன் கூடிய மேகங்களைப் போன்று மரங்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. யானைகள் பல்வேறு பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மலர்ந்து தொங்கும் கொடிகள், பறவைகள் நிறைந்த மரங்களால் ஆதரிக்கப்பட்டு, காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. வசந்த காலத்தில், கரையை மோதும் அலைகளைப் போல வலுவான காற்றால் அசைக்கப்படும் கொடிகள், நீர்த்துளிகளைப் போல மலர்களைப் பொழிந்தன. பூமியானது, கனிகளால் மறைக்கப்பட்ட பெரும் மரங்கள் பலவற்றால் மறைக்கப்பட்டிருக்கிறது. தேனையும், பறவைகளையும் விரும்பும் மரங்கள், காமன் வருவதை முன்னறிவிப்பவைப் போலப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.
மதுவை அழித்தவனும், தெய்வீகனுமான விஷ்ணு, ஓடைகளுடன் கூடிய ஆற்றைப் படைத்தான். ஓடையானவள், பல ஊற்றுகளையும், ஏராளமான நீரையும், அழகிய இடங்களையும் கொண்டிருந்தாள். அவளது கரையில் அமைந்திருக்கும் புனிதத்தலங்கள் {புஷ்கரங்கள்} அழகுடனும், வனப்புடனும் திகழ்ந்தன. தெளிந்த நீர் நிறைந்தவளாகவும், மலர்களின் நறுமணத்தையும் சுமப்பவளாகவும் அவள் இருந்தாள்.(16-23) “உன்னைத் தவிர வேறேதும் இல்லை” என்ற வேதச் சொற்களால் ஞானமடைந்த அவள் யோகியரின் இதயத்திற்குள் நுழைகிறாள். வேதச் சொற்களால் ஞானமடைந்தும், யோகத்தில் கபில வடிவை (அதாவது மூன்று குணங்களும் சமமாக இருக்கும் நிலையை) ஏற்றும் பாலைத் தருகிறாள் (ஆன்ம அறிவியலை வெளிப்படுத்துகிறாள்).(24,25)
புத்தி சார்ந்த புலங்கள் அனைத்தும் அழிவடையும்போது, தூய நனவு நிலை மட்டுமே எஞ்சுகிறது; அண்டந்தழுவிய மூன்று போக்குகள் (குணங்கள்) நுட்பமானதை {ஆத்மாவை} அறிந்து கொள்வதற்காக மட்டுமே உடலை ஏற்கின்றன. அதன்பிறகு, {ஒரு முகமான} குவிந்த மனத்துடன் கூடிய யோகி, மிக உயர்ந்ததும், அற்புதமானதும், நித்தியமானதும், தூய்மையானதுமான ஆத்மாவைத் துதிக்கிறான். தூய ஞானத்தின் வடிவிலான பிரம்மம், பாலைவனத்து நீரைப் போல நனவில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கடந்து படைப்பு முழுவதிலும் படர்ந்தூடுவுகிறது. நன்கு அமைக்கப்பட்ட அழகிய மாயை அந்தத் தெய்வீக ஆத்மாவை {பிரம்மத்தை} மறைக்கிறது. அவித்யை எனும் அத்திரை விலகும்போதுதான் ஒருவனால் ஆத்மாவைக் காண முடியும். அகங்காரம் கொண்ட நனவுநிலையானது ஒரு மலையைப் போல வெல்லப்பட முடியாததாகும். அஃது அண்டந்தழுவிய மூன்று போக்குகளை, அல்லது குணங்களைச் சார்ந்தே இருக்கிறது. நித்தியமாக அது நிலைத்திருக்கிறது, சித்தர்களாலும் கூட அது தொண்டாற்றப்படுகிறது {சித்தர்களும் குணங்களின் வசப்பட்டவர்களாக இருக்கிறார்கள்}” என்றார் {வைசம்பாயனர்}[1].(26-29)
பிருதுவின் பதவியேற்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 26-(பிருதுராஜ்யாபிஷேககதநாதி)-பிருது அரியணையில் நிறுவப்பட்டது; பெருங்கடலைக் கடையும் திட்டம் உருவானது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “உலகம் முழுவதிலும் அகங்காரமும், அறியாமையும் இவ்வாறு நீடித்திருந்தபோது மக்கள் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர், “ரிஷிகளுடன் கூடிய பிரஜாபதி, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வேனனின் மகனான பிருதுவை அரியணையில் நிறுவினான்.(2) திரேதா யுகம் தொடங்கிய போது, மக்கள் தங்களுக்குள், “இதுவரை பிறந்தவர்களில் இவனே நமது மிகச் சிறந்த மன்னனாவான்.(3) தலைவன் தன்னிடம் ஒப்படைத்த கடமைகளில் நிறைவடைந்தவனாக நமக்கு வாழ்வாதாரங்களை வழங்கி, பிராமணர்களையும், அனைத்து உயிரினங்களையும் இவன் பாதுகாப்பான்” என்றனர்.(4)
அதே வேளையில், பல்வேறு அறவிதிமுறைகளில் சோர்ந்து போன தேவர்கள், கந்தமாதன மலையின் மேட்டுச் சமவெளியில் ஓய்ந்திருந்தனர்.(5) வசந்த காலம் வந்ததும் தேவர்களும், தானவர்களும் அனைத்துப் புறங்களிலும் நறுமணத்தை நுகர்ந்து பெரிதும் நிறைவடைந்தனர்.{6} அவர்கள், “காற்றில் பரவும் மலர்களின் நறுமணம் இனிமைமிக்கதாக இருப்பதால் பூமிசார்ந்த ஒவ்வொரு பொருளின் மணமும் சிறப்பாகவே இருக்கும்” என்று நினைத்தனர்.{7} அந்த நறுமணத்தை நுகர்ந்ததும் தைத்தியர்கள் தொடக்கத்தில் சற்றே ஆச்சரியமடைந்தனர். அதன் பிறகு பெரும் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் மிகச் சிறந்த இன்ப நிலையை அடைந்தனர்.{8}(6-8)
அதன் மணத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அனைவரும் ஒருசேர, “ஒவ்வொரு மலரின் சக்தியும் இவ்வாறே இருக்கிறது; இதன் கனி {பயன்} என்னவென்பதை நாம் அறியோம்.(9) ஊகத்தின் மூலமே பல்வேறு செயல்முறைகளும் கண்டறியப்பட வேண்டும். இந்தப் புத்தியின் சக்தியால் மனிதர்கள் மங்கலச் செயல்களையும், மங்கலமற்ற செயல்களையும் {நன்மை தீமைகளைச்} செய்கிறார்கள்.(10) விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லதும், சக்திமிக்கதுமான மந்தர மலையைக் கொண்டு, நீரில் மூலிகைகளை இட்டு நாம் அரைப்போம்[1].(11) பெருஞ்சக்தியுடன் நாம் பெருங்கடலைக் கடைந்து, அமுதத்தைப் பருகி, அவித்யை அல்லது அறியாமையை அழிப்பதற்காக ஒருசேர நம்மை ஆயத்தம் செய்து கொள்வோம்.(12) நாம் வழிபடும் பெருஞ்சக்தியான விஷ்ணு, (யோகத்தில்) நமது வழிகாட்டியாக இருப்பான். ரிபுக்களுடன் (ஆசைகளுடன்) நாம் வாழ்ந்து வந்தாலும், அவற்றை வென்று தியுலோகத்தையும், பூர்லோகத்தையும் அனுபவிப்போம்.(13) வேர்கள், இலைகள், கிளைகள், மலர்கள், கனிகள்[2] ஆகியவற்றுடன் நாம் பூமிக்கு அமுதத்தைக் கொண்டு செல்வோம்” என்றனர்.(14)மந்தர மலையைப் பெயர்ப்பதைக் குறித்து இவ்வாறு பேசிய தைத்தியர்கள், கந்தமாதன மலையில் விளைந்த மூலிகைகள் அனைத்தையும் பிரித்தெடுத்தனர். பிறகு, மந்தர மலையைப் பெயர்த்தெடுக்க ஓடி பூமியை நடுங்கச் செய்தனர். தனுவின் குலத்தில் பிறந்த தானவர்களால் மந்தர மலையைப் பெயர்க்க முடியவில்லை. அவர்கள் தங்கள் முழங்கால்கள் நொறுங்கி மலையின் வெற்றிடங்களில் விழுந்தனர்.(15-17)
அதன்பிறகு அவர்கள், தவங்களின் மூலம் தங்கள் பாவங்களைச் சிதறடித்து, உரிய புத்தியின் மூலம் தங்கள் சுயத்தைக் கட்டுப்படுத்தி, ஈஷ்வரனிடம் தலைவணங்கி அவனது புகலிடத்தை நாடினர்.(18) எல்லாம் வல்லவனும், தற்கட்டுப்பாடுடையவனும், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக எங்கும் செல்லவல்லவனுமான பிரம்மன், அவர்களின் மனத்தில் உள்ள ஆசையை அறிந்து, புலப்படாத குரலில் {அசரீரியாக},(19,20) “ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், மருத்துகள், தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்கள், கின்னரர்கள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து மந்தர மலையைப் பெயர்த்தெடுத்து, இமயத்தின் சாரமாக இருக்கும் மூலிகைகளை அடையட்டும்” என்றான்.(21-23)
கரவலிமையுடன் கூடியவர்களான தைத்தியர்கள், அனைவரின் முன்னிலையில் சொல்லப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்கள், தானவர்களென அனைவராலும் நிறுவப்பட்ட புஷ்கரம் இருக்கும் உப்புநீர் பெருங்கடலின் அருகில் மனத்தாலும், சொற்களாலும் தங்களைப் பலராகப் பெருக்கிக் கொண்டனர். (24,25) அவர்கள், மந்தர மலையை மத்தாக்கி, வாசுகியை வடமாக்கி மூலிகைகளுடன் கூடிய உப்புநீர் பெருங்கடலை ஆயிரக்கணக்கான வருடங்கள் கடைந்தனர். நீர் மற்றும் மூலிகைகளின் கலவையுடன் அமுதமானது பாலின் வடிவில் உண்டானது.(26,27)
அதன் பிறகு, தன்வந்தரி, ஸ்ரீதேவி, தெளிந்த சந்திரன் ஆகியோர் எழுந்தனர், மது, கௌஸ்துப மணி, உச்சைஷ்ரவமெனும் அழகிய குதிரை ஆகியவையும், பாலும் எழுந்தன. பேராசையாலும், கோபத்தாலும் பீடிக்கப்பட்ட அசுரர்கள் அமுதத்தைக் கொள்ளையடித்தனர்.{28,29} அதை எடுப்பதற்காகத் தேவர்கள் ராஹுவிடம், “தைத்தியர்களிலும், தானவர்களிலும் எவரும் அமுதத்தைப் பருகவில்லை” என்று சொன்னார்கள்.{30} அதன்பிறகு ஹரி தன்னுடைய சக்கரத்தால் ராகுவின் தலையை அறுத்தான். பித்ருக்களாலும், முனிவர்களாலும் கூட நிரந்தரமாக அனுபவிக்க முடியாத அமுதம் போன்ற ஞானத்தை இந்திரனின் கைகளில் இருந்து பூமி பறித்துக் கொண்டது.{31} வேத சொற்றொடர்களால் தூண்டப்பட்டும், சீடத்துவத்தை {இந்திரனை குருவாக} ஏற்றுக் கொண்டும் ஞானமெனும் அமுதத்தைப் பூமி அபகரித்துக் கொண்டது” என்றார் {வைசம்பாயனர்}{32}.(28-32).
பலியின் அழிவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 27-(ஹிரண்யகஷிபோ ராஜஸூயவர்ணநம்)-பலியின் வரம்; விஷ்ணு பெற்ற பிச்சை; இந்திரனின் அரசுரிமை…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “தைத்தியர்கள் விஷ்ணுவின் சக்தியால் கொல்லப்பட்டனர்; ஆனால் அவர்கள் பெருஞ்சக்தியுடன் வளர்ந்தபோது என்ன செய்ய விரும்பினார்கள்?” என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர், “பெருஞ்சக்திவாய்ந்த தானவர்கள், தங்கள் ஆற்றலின் விளைவால் அரசை {உலகை ஆளும் அரசுரிமையை} வேண்டினர், வாய்மை நிறைந்த சூரர்கள் {தேவர்கள்} கடுந்தவங்களைச் செய்ய விரும்பினார்கள்.(2)
ஜனமேஜயன், “ஹிரண்யகசிபு குலத்தில் பிறந்த பலி, பழங்காலத்தில் தலைமைத்துவ சக்திகளை அடைந்து, கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட நிலத்தில் நீண்ட நாள் நீடித்த வேள்வியை ஏன் செய்தான்?” என்று கேட்டான்.(3)
வைசம்பாயனர், “ஓ! பாரதக் குலத்தில் பிறந்த பெரும் மன்னா {ஜனமேஜயா}, பெருஞ்சக்திமிக்கவனும், தானவர்களில் முதன்மையானவனுமான பலி, கங்கைக்கும், யமுனைக்கும் இடையில் அமைந்த நிலத்தில் ஏராளமான பொன்னுடன் ராஜசூய வேள்வியைச் செய்தான். அஃது அவனுக்குப் பெருந்தவமாக இருந்து. அந்தப் பேரசுரன் யஜ்ஞம் {வேள்வி} செய்ய முனைந்தபோது, துறவையும் நோன்புகளையும் நோற்றுவந்தவர்களும், வேதங்களை நன்கறிந்தவர்களுமான பிராமணர்கள் பலரும், திறன்மிகு யதிகளும், வாலகில்ய முனிவர்களும், அறச்சடங்குகள் பலவற்றைத் தினமும் செய்து வந்த இருபிறப்பாளர்கள் பலரும் ஒரு சேர அங்கே வந்து சேர்ந்தனர். அந்த வேள்வியில் ஆடம்பரக் கொடைகள் வழங்கப்பட்டன. பிராமணர்களுக்கு மத்தியில் நெருப்பைப் போன்றவரான ஆசான் சுக்ரர் {சுக்ராச்சாரியர்}, பலியின் சார்பாகப் புரோஹிதராகச் செயல்படத் தமது மகனுடன் அங்கே வந்து சேர்ந்தார்.
தைத்தியர்களில் ஹிரண்யகசிபுவைப் போன்ற பலி, சரஸ்வதியிடம், “எனக்கு வரமளிப்பதாக நீயே சொல்லியிருக்கிறாய். அதை இப்போது தருவாயாக” என்றான்.(4-10)
குள்ளனின் வடிவில் இருந்த விஷ்ணு, தன்னுடைய மூன்று அடிகளை வைக்கும் நிலத்தை ஹிரண்யகசிபுவின் வழித்தோன்றலிடம் {பலியிடம்} இருந்து பிச்சையாகப் பெற்றான்.(11) அதன்பிறகு நித்தியனான விஷ்ணு, தனது காலடிகள் மூன்றால் மூவுலகங்களையும் அளந்து ஒரு தெய்வீக வடிவை ஏற்றான். தங்கள் அரசை இழந்த தைத்தியர்கள், தங்கள் படைவீரர்கள், பராசங்கள், வாள்கள், தோமரங்கள், தண்டங்கள், கொடிகள், கொடிக்கம்பங்கள், தேர்கள், கவசங்கள், உறைகள், கோடரிகள் ஆகியவற்றுடனும், பிற ஆயுதங்களுடனும் பாதாள லோகத்தில் நுழைந்தனர்.
மறுபுறம், மகிழ்ச்சியால் நிறைந்திருந்த தேவர்கள், விஷ்ணுவுடன் சேர்ந்து உடனே எழுந்து, மூவுலகங்களிலும் தங்கள் அரசுரிமையை நிலைநாட்ட இந்திரனைத் தங்கள் மன்னனாக நிறுவினர். பலி, அமுதம் கொடுத்து அவர்களை {தேவர்களை} நிறைவடையச் செய்தான். பிரம்மன் அந்த அமுதத்தை மஹேந்திரனிடம் கொடுத்தான். இந்தச் செயலால் பலி தன் பாவங்களை அழித்து இறவாதவனாக {தேவனாக} ஆனான்.(12-16)
தேவர்கள் அனைவரிலும் முதல்வன் {இந்திரன்}, பிரம்மனின் கைகளில் இருந்து எழுந்த சங்கை முழக்கினான். அந்த முழக்கம் பகைவருக்கு மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அந்தச் சங்கின் முழக்கத்தைக் கேட்டு மூவுலகத்தினரும் கட்டுப்பட்டு, இந்திரனைத் தங்கள் மன்னனாக அடைந்து பேரமைதியை அனுபவித்தனர். மூவுலகங்களும், நெருப்பாலும், ஒளியாலும் அமைந்த ஆயுதங்கள் தரித்து மந்தர மலைக்கு முன்பாக நின்றன” என்றார் {வைசம்பாயனர்}.(17-19).
தக்ஷ வேள்வியின் அழிவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 28-(தக்ஷயஜ்ஞவிநாஷம்)-குதிரைவேள்வி செய்த தக்ஷன்; ருத்திரனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் நடந்த போர்; அவிர்ப்பாகம் பெற்ற ருத்திரன்; பௌஷ்கரப் புராணம்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பாரதா, அதன் பிறகு அவர்கள் அனைவரும் அமைதியுடன் வாழ்ந்தனர், செழிப்பான அரசும் நிலைநாட்டப்பட்டது. அந்நேரத்தில் ஆன்ம அறிவியலின் அறிவைப் பொறுத்தவரையில் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாததால் அவர்கள் ஒன்றாகவே ஆத்ம ஞானத்தை விளைவித்தனர். மறுபுறத்தில் பலர் அழுதனர்; மனிதர்களால் அளிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளைத் தேவர்கள் ஏற்றனர்.(1,2)
தெய்வீக பிருஹஸ்பதி, தக்ஷ பிராசேதஸிடம் குதிரை வேள்வி செய்யுமாறு அறிவுறுத்திவிட்டு, ரிஷிகள் சூழ அங்கே வந்தார்.{3} தக்ஷன் அனைவருக்கும் தாய்வழி தாத்தன் ஆவான். எனவே, ஆன்ம அறிவற்ற தக்ஷனின் யஜ்ஞத்தில் ருத்திரன் நந்தியுடன் சேர்ந்து தன்னாலான தடைகளை ஏற்படுத்தினான்.{4} ருத்திரன் தானே விரும்பி தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டான். {இதன் மூலம்} பெரும் தர்மாத்மாவான நந்தி புருஷனாகப் பிறந்தான்.{5} வேதங்களில் சிறப்பாகப் பாடப்பட்டுள்ள நித்திய பிரம்மத்தை ருத்திரன் தன் யோக சக்தியின் மூலம் வெளிப்படுத்தினான்.{6}(4-6)
ஸ்வரூபன், அரூபன் {சாப்யரூபன்}, விரூபாக்ஷன், கடோதரன், ஊர்த்வநேர்தன், மஹாகாயன், விகடன், வாமனன்,{7} ஷிகி, ஜடி, திரிலோசனன் {திரையக்ஷன்}, சங்குகர்ணன், சீரதாரி, சர்மி முதலிய பல்வேறு கணங்களும், பாசக்கயிறுகளைத் தரித்தவர்களும், தண்டபாணிகளும் {முத்கரபாணிகளும்},{8} மணிகளைத் தரித்தவர்களும் {ஸகண்டாதாரிகளும், முஞ்ஜமேகலதாரிகளும்}, குண்டலங்களையும், கடகங்களையும் அணிந்தவர்களும் {கடககுண்டலதாரிகளும்},{9} டிண்டிகள், பேரிகைகள், புல்லாங்குழல்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றைச் சுமந்தவர்களும் சூழ தக்ஷனின் வேள்வியைத் தடுக்க ருத்திரன் விரைந்து சென்றான்.{10}
பூதகணங்கள் தங்கள் கைகளில் சங்கையும், முரஜத்தையும் {முரசையும்}, தாலபலத்தையும் கொண்டிருந்தனர். திரிசூலத்தையும், கடும் ஆயுதங்கள் பிறவற்றையும் தரித்தவனும், வேள்வி செய்பவர்களால் வழிபடப்படுபவனுமான ருத்திரன், அந்த வேள்வியில் எரியும் தழலைப் போல ஒளிர்ந்தான். அழிவை ஏற்படுத்த எரியும் நெருப்பானது {காலாக்னியானது}, அண்டத்தையே விழுங்கிவிடப் போவதாகத் தெரிந்தது.{11,12} யுகமுடிவில் காலாக்னியானது மொத்த அண்டத்தையும் உடனே எரித்துவிடுவதைப் போல, நந்தியும், பிநாகபாணியும் {சிவனும்} அந்தச் சிறந்த வேள்வியை அழிக்க இருந்தனர்.{13} இரவுலாவிகள் {கணங்கள்}, மரவுரி தரித்த முனிவர்களை அச்சுறுத்தும் வகையில் வேள்வியூபங்களைப் பிடுங்க விரைந்து சென்றன.{14} தாமிரக் கண்களைக் கொண்ட பிரமதர்கள், தங்கள் நாவுகளால் வேள்விக் காணிக்கைகளை {ஹவிஸுகளைப்} பருகினர்.{15} யானைகளின் துதிக்கைகளைப் போன்ற நீண்ட நாவுகளைக் கொண்ட பிறர், விலங்குகளை விழுங்கத் தொடங்கினர். சிலர் யூபங்களைப் பிடுங்கி விலங்குகளைத் தாக்கினர்.{16} சிலர் நெருப்புக்குள் நீரை வீசிச் சிரித்தனர்; ஜவா மலர்களைப் போல ஒளிரும் சிவந்த கண்களுடன் கூடிய சிலர் சோமச் சாற்றை அபகரித்துச் சென்றனர். சிலர், தாமரைத் தண்டுகளுக்கு ஒப்பான தங்கள் கைகளால் தர்ப்பை புற்களை வெட்டினர்.{17} சிலர், வேள்விஸ்தம்பங்களை நொறுக்கினர், வேறு சிலர் கலசங்களை வீசி எறிந்தனர். வேள்விக்களத்தை அழகூட்ட நிறுவப்பட்ட பொன்மரங்களை {காஞ்சநாந்விருக்ஷங்களைச்} சிலர் வீழ்த்தினர்.{18} சிலர், கணைகளைக் கொண்டு பொன் பாத்திரங்களை நொறுக்கினர். சிலர் பாத்திரங்களை அழித்தனர், வேறு சிலர் அரணியைப் பிடுங்கினர்.{19} சிலர் வேள்விப் பீடங்களை நொறுக்கினர், சிலர் அரிசிப் பிண்டங்களை உண்டனர், சிலர் தங்கள் நகங்களால் பல்வேறு பொருட்களை அழித்தனர்.{20} இவ்வாறு பகலும், இரவும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அந்தப் பெரும் வேள்வியானது,பெருங்கடலைப் போல முழங்கத் தொடங்கியது.{21}
மறுபுறம் பெருஞ்சக்திவாய்ந்த மஹாதேவன், சுயம்புவான பிரம்மனால் முன்பு தனக்கு வழங்கப்பட்டதும், கீசக மூங்கிலாலானதுமான வில்லை எடுத்துக் கொண்டு, அதில் கணைகளைப் பொருத்தினான்.{22} பிறகு அவன், தனது முழங்கால்களால் வில்லை வளைத்து அந்தப் பெரும் யஜ்ஞத்தைத் தாக்கினான்.{23} கணைகளால் காயமடைந்த அந்தப் பெரும் வேள்வி வானத்தில் தாவிக் குதித்தது; பிறகு ஒரு மானின் வடிவை ஏற்று உரக்க கதறியபடியே பிரம்மனை அடைந்தது.{24} கணைகளால் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்ட வேள்வியானவன், பூமியில் எங்கும் உறைவிடத்தையோ, அமைதியையோ அடையாதவனாகப் பிரம்மனின் புகலிடத்தை நாடினான்.{25}(7-25)
பிரம்மன், மானின் வடிவில் இருந்த வேள்வியிடம், இனிமையான, மங்கலமான, அடக்கமான, சக்திமிக்க, அழுத்தமான சொற்களில், “ஓ! பெரும் மானே, இவ்வாறே நீ வானத்தில் நிலைத்திருப்பாயாக.{26} பல்வேறு வண்ணங்களையும், வளைந்த முடிச்சுகளையும் கொண்ட கணையால் நீ வீழ்த்தப்பட்டாய். எனவே நீ சோமனுடன் சேர்ந்து கிரகங்களுக்குத் தலைமையாக இருக்கும் நித்தியனான ருத்ரனுடன் வாழ்வாயாக. வானத்தில் இயக்கத்தை அடைந்து நட்சத்திரங்களுடன் சேர்வாயாக.{27,28} ஒளியமைப்புகளில் {ஜோதிகளில்} நீ துருவனாக இருப்பாயாக. உன் காயத்தில் இருந்து வெளியேறுவதும், நீ ஓடிக் கொண்டிருப்பதன் விளைவால் வானத்தில் வழிந்து கொண்டிருப்பதுமான இந்தத் தெய்வீகக் குருதி பல்வேறு வண்ணங்களை ஏற்றுக் கேது லோகமாகக் கொண்டாடப்படட்டும். மழைக்காலத்தில் உயிரினங்களுக்கு அது மழைக்கான அடையாள வடிவமாகட்டும்.{29,30} உயிரினங்கள் அதைக் கண்டு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ அடையட்டும். புலன்களில் அஃது ஓய்ந்திருப்பதன் காரணமாக வானத்தில் இந்திர வில் {வானவில்} என்ற பெயரில் அழைக்கப்படும்” என்றான் {பிரம்மன்}.{31}
ஓ! மன்னா, மேலும் அவன் {பிரம்மன், மானின் வடிவில் இருந்த வேள்வியிடம்}, “மனிதர்களின் கண்கள் அதை ஆச்சரியத்துடன் பார்க்கும். அஃது அற்புதமானதாக, பல வண்ணங்களைக் கொண்டதாக இருக்கும். மேலும் அது மனத்தால் சரியாக வகுக்கப்பட்டதாக இருக்கும்.{32} பிரம்மத்தை உணரும் இதய வானில் அது பெயரால் மட்டுமே அறியப்படும். அஃது இரவில் புலப்படாது. இந்த அற்புத நிகழ்வு பகலின் முதல் பகுதியிலேயே குறிப்பாகக் காணப்படும்.{33} அது பூமியில் இருந்து மேலே எழுந்து வானில் மறையும். அந்த நேரத்தில் வில் தரித்த ருத்திரனிடம் கொண்ட அச்சத்தில் நூற்றுக்கணக்கான தக்ஷ பிரசேதஸ்கள் ஒரே நேரத்தில் தப்பி ஓடுவார்கள்” என்றான் {பிரம்மன்}.{34}
யுகமுடிவில் தோன்றும் பிரம்மதண்டம் போல எரியும் பினாகையுடன் கூடிய நந்தி மற்ற ருத்திரர்களுடன் சேர்ந்து நின்றான்.{35} பெருந்தோள்களைக் கொண்ட விஷ்ணு, ஒரு கையில் பெரும் வில்லுடனும், மறு கையில் சக்கரத்துடனும் அங்கே நின்றான்.{36} ருத்திரனுடன் போரிட விரும்பும் அனைவருக்கும் முன்பு, மற்றொரு கையில் சங்கு மற்றும் கதாயுதத்துடனும், நான்காவது கையில் வாளுடனும் விஷ்ணு நின்று கொண்டிருந்தான்.{37}(26-37) அதன் பிறகு விஷ்ணு, தன் சாரங்க வில்லையும், உலகில் ஒப்பற்ற சங்கையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, தன் படைவீரர்களுடன் சேர்ந்து போரக்களத்தின் முகப்பில் நின்றான்.{38} அவன், தன் கையுறைகளையும், கவசங்களையும் அணிந்து கொண்டு சந்திரனுடன் கூடிய பெருங்கடலைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.{39}
பிரகாசமிக்க ஆதித்யர்களும், வசுக்களும் தங்கள் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றுடன் நாராயணனைச் சுற்றி நின்றனர்.{40} மருத்துகளும், விஷ்வர்களும் ருத்திரனின் பக்கம் நின்றனர். கந்தர்வர்கள், கின்னரர்கள், நாகர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும்,{41} தண்டக்கோலைப் புறந்தள்ளிய முனிவர்களும் இரு தரப்புக்கும் நன்மையை விரும்பினர். உலகங்கள் அனைத்தின் நன்மையை விரும்பிய அவர்கள், அண்ட அமைதிக்காகத் தலைவனின் பெயரைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தனர்.{42}
போர்க்களத்தின் முன்னணியில் நின்ற ருத்திரன், கூரிய கணைகளைக் கொண்டு விஷ்ணுவின் மார்பையும், மூட்டுகளையும் தாக்கினான்.{43} அனைவரின் ஆன்மாவாகவும், பிறப்பிடமாகவும் இருக்கும் விஷ்ணு இதனால் கலக்கமேதும் அடையவில்லை. அவன் ஆறு புலன்களையும் கொண்டிருந்தாலும் அவனது மனம் கோபத்தால் பீடிக்கப்படவில்லை.{44} அப்போது விஷ்ணு, கணைகளைப் பொருத்தி தன் வில்லை வளைத்தான். பிரம்மாயுதத்தைப் போன்ற அந்தக் கணையைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் ருத்திரனின் மார்பில் ஏவினான். வஜ்ரத்தால் மந்தர மலை அசைந்தாலும் அந்தக் கணையால் காயமடைந்த மஹாதேவன் நடுங்கினானில்லை.{45,46} நித்தியனான விஷ்ணு திடீரெனக் குதித்தெழுந்து ருத்திரனின் தொண்டையைப் பற்றினான், அதன் விளைவாகவே அந்தத் தேவன் நீலத்தொண்டை கொண்டவன் {நீலகண்டன்} என்ற பட்டப்பெயரைப் பெற்றான்.{47}(38-47)
விஷ்ணு, “பிறப்பும், இறப்பும் அற்றவன் நீ. என்னைப் பொறுத்துக் கொள்வாயாக. அனைத்து உயிரினங்களுக்கும், சாத்திரங்களுக்கும் ஆசான் நீ. உன்னை நான் அறிவேன்” என்றான்.(48)
ஓ! பரதனின் வழித்தோன்றலே, செயல்கள் அனைத்தின் காரணனாகவும், எல்லையற்ற தன்மையால் பூதங்கள் அனைத்திலும் மிகச்சிறந்தவனாகவும் அந்தத் தலைவனே இருக்கிறான்.{49} அவனே அண்டத்தின் பொருள் காரணனாகவும், அதை விளைவிக்கும் காரணனாகவும் இருக்கிறான், அவன் மிக மங்கலமான பணிகளைச் செய்தவன் ஆவான்.{50} அப்போது வானத்தில் இருந்து, சித்தர்களின் வாயில் வெளிவந்த “ஓ! நித்திய தேவா, உன்னை வணங்குகிறோம்” என்ற மிக அற்புதமான சொற்களை நாங்கள் கேட்டோம்.{51}(49-51)
அதன் பிறகு, கிட்டத்தட்ட அருகில் இருந்த ருத்திரனால் பெறப்பட்டவனும், சக்திவாய்ந்தவனுமான நந்தி, தன் பினாகையை உயர்த்திக் கோபத்துடன் விஷ்ணுவின் தலையில் தாக்கினான்.{52} எல்லாம்வல்லவனான தலைவன் ஹரி, தேவர்களில் முதன்மையான நந்தியைக் கண்டு தன் புன்னகையால் அவனைக் கலங்கடித்தான்.{53} சக்தியில் எரிந்து கொண்டிருப்பவனும், வாழ்வின் உயர்ந்த பொருளைக் கொடுப்பவனும், பொறுமையுடன் கூடியவனுமான விஷ்ணு, ஒரு மலையைப் போல உறுதியாக நின்றான்.{54}
வெல்லப்பட முடியாதவனும், ஒப்பற்றவனும், செயலற்ற ஆன்மாவைக் கொண்டவனும், நித்தியனுமான அந்த ஹரி, காலாக்னியைப் போன்ற சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும், அமைதிப்படுத்தப்பட்டதால் வேள்விக்காணிக்கைகளில் ஒரு பகுதியை நுண்ணறிவுமிக்க ருத்திரனுக்குப் பங்கிட்டு அளித்தான். தேவர்களில் முதன்மையான விஷ்ணு எப்போதும் வெற்றியாளனாகவும், ஆசைகள் அற்றவனாகவும் இருக்கிறான்,{55,56} அவனால் வேள்வி மீண்டும் நிலைநாட்டப்பட்டது. ஓ! மன்னா, விஷ்ணுவுக்கும், ருத்திரனுக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கரப்போரில் கணங்கள் முறையே தாங்கள் சார்ந்த தரப்புகளை விட்டு விலகவில்லை.{57} தக்ஷனின் வேள்வி அழிக்கப்பட்ட நேரத்தில் ஒரு நியாயமான போர் நடந்தது. அந்த நேரத்திலேயே வேள்விகளை அழித்தல் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.{58} ஓ! மன்னா, ஆன்ம ஞானமற்றவனாக இருந்த தக்ஷப்ரஜாபதி, தான் செய்த வேள்வியின் பலனாகப் பரமாத்ம ஞானத்தை அடைந்தான்[1].{59}பெரும் விஷ்ணுவின் இந்தத் தாமரை அவதாரமானது, துவைபாயன ரிஷியால் {வியாசரால்} பௌஷ்கரப் புராணத்தில் பதியப்பட்டும், மஹாரிஷிகளால் மேலும் முறையாக மேம்படுத்தப்பட்டும் இருக்கிறது. இந்தப் புராணத்தைக் கவனத்துடன் கேட்பவன், இம்மையில் {இவ்வுலகில்} தான் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் அடைகிறான்; மேலும் மறுமையில் துன்பமற்றவனாக மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். தூய்மையடைந்தவனாகவும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாகவும் இருக்கும் அந்தப் பேரறிவாளன், பிராமணர்கள் அனைவரையும் இந்தத் தெய்வீகக் கருப்பொருளைக் கேட்கச் செய்து, ஆன்மக் கருத்துகள் அனைத்தையும் கற்றுணர்ந்து, தேவலோகத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறான்” என்றார் {வைசம்பாயனர்}.{60-63}(52-63).
மஹாவராஹசரிதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 29-(வராஹப்ராதுர்பாவவர்ணநம்)-வராக அவதார விளக்கம்; யுக முடிவில் அண்ட அழிவு; விஷ்ணுவின் யோகத்துயில்; நாராயண மந்திரம்; விஷ்ணுவின் மகிமை…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்},[1] “பக்திமான்களான தவசிகள் புராணங்களை உரைக்கும்போது, ஒப்பற்ற சக்திவாய்ந்த விஷ்ணுவின் பன்றி அவதாரம் குறித்து நாங்கள் கேட்டிருந்தாலும்,(1) {அவனது வரலாற்றையும்}, அவனது பணிகளையும், சாதனைகளையும், நோக்கத்தையும் குறித்து ஏதும் அறிந்தோமில்லை.(2) அந்தத் தலைவன் வேள்வியின் வடிவமா? யோகத்தின் வடிவமா? அவனது உடல் பூதங்களாலானதா? மாயையால் ஆனதா? அதன் {அந்த அவதாரத்தின்} தலைமை தேவன் ஹரியா? ஹரனா? அவனது ஆற்றலும், ஒழுக்கமும் எப்படிப்பட்டது? பழங்காலத்தில் அவன் என்ன செய்தான்?(3) ஸ்ருதிகளில் பதியப்பட்டிருக்கும் இந்தப் பன்றி அவதாரத்தைக் குறித்துப் பெரியவர்களும், இருபிறப்பாளர்களுமான இவர்களின் முன்னிலையில் விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)வைசம்பாயனர், “ஓ! மன்னா, அறநூல்களில் கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} விரிவாக விளக்கப்பட்டிருக்கும் பேரற்புதச் செயல்களைச் செய்த கிருஷ்ணனின் பன்றி அவதாரத்தைக் குறித்து {மஹாவராஹசரிதத்தை} நான் சொல்லப் போகிறேன்.(5) ஓ! ஜனமேஜயா, நாராயணன் எவ்வாறு பன்றியின் வடிவை ஏற்றான் என்பதையும், பகைவரைக் கொல்பவனான அந்த ஹரி, ஸ்ருதியின் புனித மந்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட பன்றியின் வடிவை ஏற்று, பெருங்கடலின் அடியில் மூழ்கியிருந்த பூமியைத் தன் தந்தங்களால் எவ்வாறு உயர்த்தினான் என்பதையும் தூய்மையடைந்தவனாகவும், தற்கட்டுப்பாட்டுடனும் கேட்பாயாக.(6,7) புனிதமிக்க இந்தப் புராணம் வேதங்களைப் போன்றதும், ஸ்ருதிகளால் அலங்கரிக்கப்பட்டதுமாகும். எனவே இதை ஒரு நாத்திகனுக்கு உரைக்கக்கூடாது.(8) இந்த முழுப் புராணத்தின் பொருளையும், இதில் விளக்கப்பட்டுள்ள சாங்கிய, யோக அமைப்புகளையும் அறிந்த மனிதன் ஆன்ம அறிவை அடைந்தவனாவான்.(9)
ஆயிரம் யுகங்கள் கடந்து, பிரம்மனின் ஒரு நாள் முடிவடைந்தபிறகு, அனைத்து வகைத் தீய சகுனங்களும் தோன்றி, பூதங்கள் அனைத்தும், ஹரியையும், ஹரனையும் போன்ற புலப்படாத விருஷாகபியாகி, நெருப்பு, காற்று, சூரியனைப் போல ஹிரண்யரேதஸின் வடிவை ஏற்கும்போது, தன் தழல்களால் உலகை எரிப்பதைப் போல, விஷ்வேதேவர்கள், சாத்யர்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், அசுவினிகள் இருவர், குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} அனைவர், ரிஷிகள் எழுவர், வசுக்கள், அப்சரஸ்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், தைத்தியர்கள், பிசாசங்கள், நாகர்கள், பலவகைப் பூதங்கள், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், மிலேச்சர்கள் ஆகியோரையும், நான்கு கால் உயிரினங்களையும், பூமியில் வாழும் தாழ்ந்த விலங்குகள் பிறவற்றையும் {அந்த விருஷாகபி} வாடச் செய்கிறான்[2].(10-15)பிரம்மனுடைய நாளின் இறுதிப் பகுதியில் ஈஷ்வரனின் விருப்பப்படி, இதிஹாசங்கள், உபநிஷத்கள், வேதங்கள், பிற அறிவியல்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களும், நற்பணிகளில் ஈடுபடுபவர்களுமான முப்பத்துமூன்று தேவர்களும் {முப்பத்து முக்கோடி தேவர்களும்}, அவனது பிரகாசத்தால் முகங்கள் நிறம் மங்கியவர்களாக அங்கங்கள் எரிந்து, அண்டத்தின் பிறப்பிடமான பிரம்மனைத் தங்கள் முன் வைத்துக் கொண்டு, அன்னத்தின் வடிவில் இருந்த பெரும் யோகியான நாராயணனின் முன் தோன்றி அந்த ஹரிக்குள் நுழைந்தனர். இவ்வுலகில் தினமும் தோன்றி மறையும் சூரியனைப் போலத் தேவர்களும் நாராயணனில் தோன்றி மறைகின்றனர். அதை நான் விளக்கப் போகிறேன்.(16-20)
ஒரு கல்பத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் நிறைவடையும் நேரம் நிஷேஷம் என்று அழைக்கப்படுகிறது. அஃது அழிவுக்கான கருவியாக அமைவதால் அப்போது உலகம் இருப்பதில்லை, எனவே, உயிரினங்களின் பணிகள் அனைத்தும் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன.(21) தேவர்கள், அசுரர்கள், பன்னகர்கள் உள்ளிட்ட உலகங்கள் அனைத்தையும் அழித்த பிறகு உலகத்தின் ஆசானான தலைவன் மட்டுமே தன் சுயத்தில் வாழ்கிறான்.(22) ஒவ்வொரு கல்பத்தின் முடிவிற்குப் பிறகும் தலைவன் உயிரினங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் படைக்கிறான்.(23) தலைவன் வெளிப்படாதவனாகவும், நித்தியனாகவும் இருக்கிறான். மொத்த அண்டமும் அவனில் இருக்கிறது. சூரிய சந்திரக் கதிர்களும், புகையும், நெருப்பும், வேள்விகளும், அறச்சடங்குகளும் இல்லாத போது,(24) பறவைகள் அசைவற்று, விலங்கேதும் நகராத போது, மொத்த உலகும் இருளில் மூழ்கி அனைத்துப் புலப்படாத நிலையை அடையும்போது,(25) செயல்கள் அனைத்தும் இல்லாது போகும்போது, இடியும், நிலநடுக்கமும், பிற தீய சகுனங்களும் மறையும்போது, பகைவர்கள் அழிவடையும்போது,(26) நாராயணனாக இருக்கும் அண்டமானவன், பேராத்மாவான ரிஷிகேசனின் சமநிலையை அடைந்து உறங்க முயற்சிக்கிறான்.(27)
ஆயிரம் தழல்களைப் போன்ற சடாமுடி தரித்தவனும், மஞ்சள் பீதாம்பரம் உடுத்தியவனும், மேகத்துக்கு ஒப்பான வண்ணத்தையும், சிவந்த கண்களையும்,(28) செஞ்சந்தனம் பூசிய மார்பையும் கொண்டவனும், ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியால் அலங்கரிக்கப்பட்டவனுமான கிருஷ்ணன் {விஷ்ணு}, மின்னலுடன் கூடிய ஒரு மேகத்தைப் போல அங்கே தோன்றுகிறான்.(29) ஆயிரந்தாமரைகளைக் கொண்ட மாலை அவனது கழுத்தை அலங்கரிக்கிறது, அவனது மனைவியான லக்ஷ்மி மட்டுமே அவனுடன் {அவனில் பாதி உடலாக} இருக்கிறாள்.(30) அதன்பிறகு ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவனும், அறமேயானவனும், அனைவரின் பெரும்பாட்டனுமான விஷ்ணு, விவரிக்க முடியாத யோகத்துயிலுக்குள் நுழைகிறான்.(31)
தேவர்கள் அனைவரையும் ஆள்பவனான அவன், ஆயிரம் ஆண்டுகள் முடிந்த பிறகு தலைவன் புருஷோத்தமனாக விழித்தெழுகிறான்.(32) அப்போது தலைவன் அண்டத்தைப் படைக்க மீண்டும் நினைக்கிறான். அவன் தன்னுடைய பரமசக்தியைக் கொண்டு பித்ருக்களையும், தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் படைக்கிறான்.(33) அதன் பிறகு தேவர்களின் பணிகளை அவன் நினைக்கிறான். வாக்கின் தேவனான அவன் அதன் பிறகு உலகங்கள் அனைத்தையும் படைக்கிறான்.(34) அந்தத் தலைவனே படைப்பவனாகவும், பாதுகாப்பவனாகவும், அழிப்பவனாகவும் இருக்கிறான்; அவனே விதியை விதிப்பவனாக இருக்கிறான். தற்கட்டுப்பாடாகவும், விதியாகவும் அவனே இருக்கிறான்.(35)
தேவர்களனைவரும் நாராயணனே, செயல்களனைத்தும் நாராயணனே, மதிப்புகளனைத்தும் நாராயணனே, யஜ்ஞமும், ஸ்ருதியும் நாராயணனே.(36) முக்தியாயிருப்பவன் நாராயணனே, அனைவரின் கதியும் நாராயணனே, அறமும், பலமும் நாராயணனே.(37) ஞானமும், தவங்களும் நாராயணனே, வாய்மையெதுவும் நாராயணனே. நாராயணனுக்கும் மேலான தேவன் வேறெவனும் இல்லை; இருக்கவும் முடியாது[3].(38)(இதன் ஸம்ஸ்கிருத மூலம்,
“நாராயணபரா தே³வா நாராயணபரா꞉ க்ரியா꞉ |
நாராயணபரோ யஜ்ஞோ நாராயணபரா ஷ்²ருதி꞉ ||36
நாராயணபரோ மோக்ஷோ நாராயணபரா க³தி꞉ |
நாராயணபரோ த⁴ர்மோ நாராயணபரம் க்ரது꞉ ||37
நாராயணபரம் ஜ்ஞாநம் நாராயணபரம் தப꞉ |
நாராயணபரம் ஸத்யம் நாராயணபரம் பத³ம் |
நாராயணபரோ தே³வோ ந பூ⁴தோ ந ப⁴விஷ்யதி ||38″)
சுயம்புவாக எழுந்த தேவனும், அண்டத்தின் தலைவனும் அவனே; உற்றறியும் ஞானத்திற்குள்ளும், காற்று என்று கருதப்படுவதற்குள்ளும் பிரம்மனாக இருப்பவன் இருக்கிறான். யஜ்ஞம் அவனே.(39) வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும் அறியப்படுபவன் அவனே. எல்லாம் வல்லவனும், அனைத்தையும் படைத்தவனும் அவனே.(40) புலன்களால் முடியாததை வெளிப்படுத்துபவன் அவனே. அவனால் வெளிப்படுத்த முடியாததைப் புலன்களால் உணர முடியாது. தேவர்களாலும், குடிமுதல்வர்களாலும், சப்தரிஷிகளாலும் கூட அறிந்து கொள்ள இயலாத எல்லையைக் கொண்டவன் அவனே.(41)
எல்லையற்றவன் என ஸ்ருதியால் சொல்லப்படுபவன் அவனே. தேவர்களாலும் காண முடியாத உயர்ந்த வடிவைக் கொண்டவன் அவனே.(42) அவதாரத்தின்போது அவன் ஏற்கும் வடிவையே அவர்கள் துதிக்கிறார்கள். அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வடிவில் மட்டுமே தேவர்கள் அவனைப் பார்க்கிறார்கள். அவன் காட்டாத வடிவை எவராலும் தேடிக் காண முடியாது.(43) பூதங்களின் தலைவனும், உயிர் காற்றின் {பிராணவாயுவின்} அசைவும், செரிமானமெனும் நெருப்பும் அவனே. சக்தியையும், தவத்தையும், அமுதத்தையும் பகிர்ந்தளிப்பவன் அவனே.(44) நான்கு ஆசிரமங்களின் சதுர்ஹோத்ரப் பலன்களை அனுபவிப்பவன் அவனே. நான்கு யுகங்களையும், நான்கு பெருங்கடல்களையும் விதிப்பவன் அவனே.(45) பெரும் யோகி அவனே. அண்டத்தை அழித்து, ஆயிரம் வருடங்கள் தன் கருவறையில் கொண்டு, முட்டையைப் பொறிக்கச் செய்பவன் அவனே.(46) எல்லாம் வல்ல இந்தப் பிரஜாபதியே தேவர்கள், அசுரர்கள், பிராமணர்கள், நாகர்கள், அப்சரஸ்கள், மூலிகைகள், அண்டத்தைத் தாங்கும் லோகபாலர்கள், யக்ஷர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள் ஆகியோரைப் படைக்கிறான்” என்றார் {வைசம்பாயனர்}.(47).
பூமி உயர்த்தப்பட்டது | பவிஷ்ய பர்வம் பகுதி – 30-(வராஹக்ருதோ தரோத்தாரம்)-மலைகளின் கனம் பொறாமல் நீருக்குள் மறைந்த பூமி; பூமியை மீட்க வராக அவதாரம் எடுத்த விஷ்ணு; பூமியை அவளது நிலையில் மீண்டும் நிறுவியது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பிரம்மனின் வடிவில் இருந்து உண்டான இந்த அண்டம் முன்னர் ஒரு பொன் முட்டையின் வடிவில் இருந்ததாக வேத ஸ்ருதி சொல்கிறது.(1) அதன்பிறகு, {ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகு} எல்லாம்வல்ல தலைவன் உலகைப் படைப்பதற்காக, அந்த முட்டையின் மேல்பகுதியை வெட்டினான்.(2) அனைத்துப் பிரிவுகளின் அறிவையும் அறிந்த தலைவன் மீண்டும் அதை எட்டு பகுதிகளாக[1] வகுந்தான்.(3) முட்டையின் பரப்பில் இருந்த ஆகாயத் துளையானது, அறம் சார்ந்த நல்லோருக்கான மிகச்சிறந்த பிரம்ம லோகமாகவும், கீழ்ப்பகுதியின் துளையானது ரஸாதலமாக மாற்றப்பட்டது.(4) தலைவன், அண்டத்திற்கான பொருள் காரணமான அந்த முட்டையை எட்டு வகைத் துளைகளுடன் படைத்தான்;(5) அதன் பிறகு அவன் துளைகளின் வடிவில் இருந்த புலன்களைத் திரள் பூதங்களாகவும், நுட்பமான பூதங்களாகவும் வகுத்தான்.(6) பல்வேறு வண்ணங்களில் இருந்த அந்த முட்டையின் பல்வேறு பொதிகள் பலவண்ண மேகங்களாக மாற்றப்பட்டன. அந்த முட்டையில் இருந்த நீர்மம் {திரவப் பொருள்} பூமியில் தங்கமானது {ஜாதரூபமானது}.(7)ஓ! மன்னா {ஜனமேஜயா}, அண்ட அழிவின்போது உலகம் பெருங்கடல்களால் மறைக்கப்பட்டிருந்ததால் மொத்த அண்டமும் அந்த முட்டையில் ஓடும் சாற்றால் மறைக்கப்பட்டிருந்தது.(8,9) முன்பு தலைவன் தேவலோகத்தைக் கட்டமைத்தபோது, படைக்கப்பட்ட முட்டையில் இருந்து வெளிவந்த நீரானது பொன்மலைகளானது.(10) திக்குகள் அனைத்தும்; வானம், நாகலோகம், பிற இடுக்குள் அனைத்தும் அந்த நீரால் மறைக்கப்பட்டது. அந்த நீர் விழுந்த இடமெங்கும் மலைகள் படைக்கப்பட்டன.(11) மலைகளால் அடர்த்தியாக நிறுவப்பட்டிருந்ததால் பூமியானது கடப்பதற்கரிதானதாக இருந்தது.(12) பல யோஜனைகளுக்கு நீண்டு கிடந்த அந்த மலைகளின் கனத்தால் பூமி நசுங்கியது.(13) நாராயணனேயான அந்தத் தெய்வீக நீரானது பூமியில் பாய்ந்து, தங்கமயமான ஆற்றலானது.(14) அந்த ஆற்றலால் தாக்கப்பட்டு, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பூமாதேவி பாதாள லோகத்திற்குள் புகுந்தாள்[2].(15) பூமி பாதாளலோகத்திற்குள் புதைந்ததைக் கண்ட மதுசூதனன், அனைத்தின் நன்மைக்காக அவளை உயர்த்துவதில் தன் கவனத்தை அர்ப்பணித்தான்.(16)மங்கலத்தலைவன் {பகவான்}, “என் பலத்தின் கனத்தால் தாக்கப்பட்டவளும், பரிதாபத்திற்குரியவளுமான பூமாதேவியானவள், ஆதரவற்றவளாகத் தூக்கி வீசப்படும் ஒரு பசுவைப் போல ரஸாதலத்திற்குச் செல்கிறாள்” என்றான்.(17)
பூமி, “மூன்று காலடிகளையும், ஒப்பற்ற பலத்தையும் கொண்டவரும் {திரிவிக்ரமனும்}, நான்கு கரங்களைக் கொண்ட பெருஞ்சிங்கமனிதரானவரும் {நரசிங்கமானவரும்}[3], மார்பில் ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியைக் தரித்தவரும், சாரங்கவில், சக்கரம், வாள், கதாயுதம் ஆகியவற்றை ஏந்தியவருனுமான புருஷோத்தமனை வணங்குகிறேன்.(18) ஆத்மாவைத் தாங்குபவர் நீரே, அண்டத்தையும், பூதங்களையும் நிலைநிறுத்தி உலகைப் பாதுகாப்பவர் நீரே.(19) ஆற்றலையும், பலத்தையும் கொண்டு அனைத்தையும் ஆள்பவர் நீரே, அதன்பிறகே நான் அவற்றைத் தாங்குகிறேன்.(20) {இந்த உலகத்தை நீர் தாங்குவதாலேயே அதை என்னால் தாங்க முடிகிறது. நீர் தாங்காத எதையும் நான் தாங்கவில்லை}[4]. உம்மால் ஆதரிக்கப்படாத பூதமேதும் இல்லை.(21) ஓ! நாராயணரே, ஒவ்வொரு யுகத்திலும் உலக நன்மைக்காக, சுமையில் இருந்து என்னை விடுவிப்பவர் நீரே.(22) உமது ஆற்றலால் தாக்கப்பட்டு நான் ரஸாதலத்திற்குள் புகுந்துவிட்டேன். நான் இப்போது உமது புகலிடத்தை நாடுகிறேன் {உம்மை நான் சரணடைந்தேன்}. என்னைக் காப்பீராக.(23) தானவர்களாலும், தீய ஆன்மா படைத்த ராட்சசர்களாலும் நான் ஒடுக்கப்படும்போதெல்லாம் நித்தியரும், ஸநாதருமான உமது புகலிடத்தையே நாடுகிறேன் {உம்மையே நான் சரணடைகிறேன்}.(24) என் மனம் அச்சத்தால் பீடிக்கப்படும்போதெல்லாம், அகன்ற தோள்களைப் படைத்தவரும், காளையைப் போன்றவருமான உம்மிடமே நூறுமுறை மனத்தால் வேண்டி உமது புகலிடத்தை நாடுகிறேன்” என்றாள்.(25)மங்கலத் தலைவன் {பகவான்}, “ஓ! பூமாதேவி, அஞ்சாதே. தற்கட்டுப்பாட்டுடன் அமைதியை அனுபவிப்பாயாக. உனக்குரிய இடத்திற்கு நீ விரும்பியவாறே உன்னைக் கொண்டு வருவேன்” என்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(26)
வைசம்பாயனர் {மீண்டும் ஜனமேஜயனிடம்}, “அதன்பிறகு அந்தப் பெருந்தலைவன் தன்னுடைய தெய்வீக வடிவங்களை மனத்தில் நினைத்து, “எவ்வடிவை ஏற்று நான் பூமியை உயர்த்த வேண்டும்? {நீரில் மூழ்கியிருக்கும் பூமியை எதைக் கொண்டு நான் உயர்த்த வேண்டும்?}” என்று எண்ணினான்.(27) நீரின் அடியில் மூழ்கியிருக்கும் பூமியை உயர்த்துவது எவ்வாறு என்பதை உறுதி செய்து கொண்ட தலைவன், நீரில் விளையாடும் தன்னுடைய பன்றி வடிவை நினைத்தான்.(28) நிலத்தை நிலைநிறுத்துபவனான ஹரி, பூமியை உயர்த்துவதில் இவ்வாறே தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.(29)
வாங்மயமான {ஆயிரம் பேரொலிகளுடன் கூடிய} அந்தப் பிரம்ம வடிவம் {வராக ரூபம்} எவரும் அடைய முடியாத பத்து யோஜனைகள் அகலமும், நூறு யோஜனைகள் உயரமும் கொண்டிருந்தது.(30) அது {வராக வடிவம்} நிறத்தால் கருநீல மேகம் போல இருந்தது. அதன் குரல் மேக முழக்கத்தைப் போல இருந்தது. அஃது ஒரு பெருமலையைப் போன்ற உடல் பலத்துடனும், எரிந்து கொண்டிருக்கும் வெள்ளி தந்தங்களுடனும் இருந்தது.(31) அந்தத் தந்தங்கள் மின்னலைப் போன்றும், சூரியக் கதிர்களைப் போன்றும் ஒளிமிக்கவையாக இருந்தன. அவனது {அந்த வராகனுடைய} தோள்கள் பருத்தும், அகன்றும் இருந்தன. அவனது நடை செருக்குமிக்க வேங்கையைப் போல இருந்தது.(32) காளையின் அடையாளங்களுடன் கூடிய தோள்பட்டைகள் {காளையின் திமில்களைப் போல} நிமிர்ந்திருந்தன. ஹரி, இவ்வாறு ஒரு பெரும்பன்றியின் வடிவத்தை ஏற்று,(33) பூமியை உயர்த்துவதற்காக ரஸாதலத்திற்குள் நுழைந்தான்.
வேதங்கள் அந்தப் பன்றியின் கால்களாக இருந்தன, வேள்வியூபங்கள் அதன் பற்களாகின, வேள்வியே அதன் கைகளாகின, சித்தி {ஆன்மா} அவனது முகமானது,(34) நெருப்பு அதன் நாவானது, தர்ப்பைப் புல் அதன் மயிரானது, {ஓங்காரமான} பிரம்மமே அதன் தலையானது. பகலையும், இரவையும், கணங்களையும் பகிர்ந்தளிக்கும் அந்தப் பெரும் யோகி, வேதங்களாகவும், அவற்றின் அங்கங்களாகவும் ஸ்ருதிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(35)
{வேள்விகளின்போது ஆகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் நெய் அவனது மூக்கானது. வேள்வி ஆகுதிகளையூற்றும் கரண்டிகள் அவனது நகங்களாகின. சாம வேதம் அவனது குரலானது. அவன் தர்மத்தாலும், வாய்மையாலும் நிறைந்திருந்தான். அந்த மங்கலத் தலைவன் சக்தியாலும், வீரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(36) அவனது மூக்கு பெரும் வேள்வி பீடமாக இருந்தது. விலங்கைப் போன்ற கால்மூட்டுகளை அவன் கொண்டிருந்தான். வேள்வி அவனது வடிவமானது. உத்காதம் அவனது எல்லையானது. வேள்விச் செயல் அவனது சின்னமானது. வித்துகளும், மருந்துகளும் அவனிடம் இருந்து அடையப்படும் பேரருள்களாக இருந்தன.(37) வாயு அவனது ஆன்மாவாகவும், மந்திரங்கள் அவனது தீண்டலாகவும் இருந்தன. சோமச்சாற்றைக் குருதியாகக் கொண்ட வீரனாக அவன் இருந்தான். அவனது மணம் ஆகுதிகளுக்கு ஒப்பாக இருந்தது. தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அளிக்கப்படும் ஆகுதிகள் அவன் செயல்படும் வேகமாக இருந்தன.(38) வேள்வியைச் செய்பவனின் உறவினர்களும் நண்பர்களும் கூடும் பிராங்வம்சம் என்ற அறையாக அவனது உடல் இருந்தது. அவன் ஒளிமிக்கவனாகத் திகழ்ந்தான். பல்வேறு அர்ப்பணிப்புகளால் அவன் வழிபடப்பட்டான். புரோஹிதருக்குக் கொடுக்கப்படும் காணிக்கையாக அவனது இதயம் இருந்தது. அவன் யோகம் பயிலும் பெரும் யோகியாக இருந்தான். வேள்விப் பொருட்கள் நிறைந்தவனாக அவன் பெரியவனாக இருந்தான்.(39) வேதங்களில் உள்ள துணைச் செயல்கள் அவனது உதடுகளை அலங்கரித்தன. அவனது உந்தி பிரவர்ஷிய செயல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மந்திர வகைகள் அவனது பாதைகளாக அமைந்தன. ரகசிய உபநிஷத்துகள் அவனது இருக்கையாகின.(40) அவன் நீரின் நிழலான தன் மனைவி சாயா தேவியுடன் இருந்தான். ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மலைச் சிகரத்தைப் போல அவன் உயரமாக இருந்தான்}[5]. உலகின் ஆசானான அவன், இவ்வாறு ஒரு வேள்விப்பன்றியின் வடிவை ஏற்று ரஸாதலத்திற்குள் நுழைந்தான்.(41)நீர்த்தாரையால் மறைக்கப்பட்டிருந்த பூமியை அவன் {ரஸாதலத்தில் கண்டான்}.(42) அந்தத் தலைவன் உலகின் நன்மைக்காக ரஸாதலத்திற்குள் நுழைந்து, அங்கே மூழ்கியிருந்த பூமியைத் தன் தந்தங்களால் உயர்த்தினான்.(43) அதன்பிறகு அந்தத் தலைவன் {வராகன்}, பூமாதேவியை அவளுக்குரிய இடத்தில் மீண்டும் நிறுவிவிட்டு லோகபாலர்களையும் நிலைநிறுத்தி அவளை விடுவித்தான். தலைவன் விஷ்ணுவால் தாங்கப்பட்டதன் விளைவால் பூமாதேவி அமைதியை அடைந்து அவனை வணங்கினாள்.(44) இவ்வாறு அந்தத் தலைவன் வேள்விப்பன்றியின் வடிவை ஏற்று, அனைவரின் நன்மைக்காகப் பூமாதேவியை உயர்த்தினான்.(45) சூரர்களில் {தேவர்களில்} முதன்மையானவனான அவன், பூமியை ரஸாதலத்தில் இருந்து உயர்த்திவிட்டு, உலகத்தின் பல்வேறு பிரிவுகளை வகுப்பதில் தன் கவனத்தை அர்ப்பணிப்பதில் தன் கண்களைக் கொண்டான்.(46,47) பெருஞ்சிறப்புவாய்ந்தவனும், ஒப்பற்ற ஆற்றல் படைத்தவனுமான அச்யுதன், ஒரு பெரும்பன்றியின் {வராக} வடிவை ஏற்று, உலக நன்மைக்காக ஒற்றைத் தந்தத்தால் பூமியை உயர்த்தினான்” என்றார் {வைசம்பாயனர்}.(48)
மலைகள், ஆறுகளின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 31-(மஹீவர்ணநம்)-பூமியில் மலைகளையும், ஆறுகளையும் படைத்த வராகன்; அதன் பிறகு தேவர்களையும் அசுரர்களையும் படைக்க நினைத்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பூமியானவள், ஒரு படகைப் போல அந்தப் பரந்த நீரில் மிதந்து கொண்டிருந்தாள். அவளுடைய உடல் கனத்தின் விளைவால் அவள் மூழ்காதிருந்தாள்.(1) அப்போது தலைவன் பூமியில் பிரிவுகளை ஏற்படுத்த நினைத்தான். பிறகு அவன் மலைகளின் உயரத்தையும், ஆறுகளின் போக்குகளையும், அவற்றின் குறைந்த அளவுகளையும் {அவை எவ்வாறு அமைய வேண்டும் என்று} நினைத்தான்.(2,3) அவன், தாமரையின் நான்கு இதழ்களைப் போலப் பூமியை நான்கு கண்டங்களாகப் பிரித்துப் பெருங்கடல்களையும் பிரித்துப் பொன்மலையான மேருவையும் {பூமியின் நடுவில்} படைத்தான்.(4)
அதன்பிறகு அவன் கிழக்குப் பக்கம் சென்ற, நூறு யோஜனைகள் அகலமும், ஆயிரம் யோஜனைகள் உயரமும் கொண்ட உதய மலையைப் படைத்தான். தன் சக்தியின் பயன்களுடனும், உதிக்கும் சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும் அவன் தங்கச் சிகரங்களைப் படைத்து, அதன் உடலையும், அடித்தளத்தையும் படைத்தான்.(5,6) தாமரைக் கண்ணன், தினமும் மலர்களாலும், கனிகளாலும் மறைக்கப்பட்டதும், பருத்த தண்டுகளுடன் கூடியவையுமான பொன்மரங்களை அங்கே படைத்தான்.(7) அடுத்ததாக அந்தப் பெருந்தெய்வமான விஷ்ணு, நூறு யோஜனைகள் பரப்பும், இருநூறு யோஜனைகள் உயரமும் கொண்ட சௌமனஸ {இனிய உணர்வைக் கொடுக்கும்} மலையைப் படைத்தான்.(8) அங்கே அவன் ஆயிரக்கணக்கான ரத்தினங்களையும், மாலை வேளை மேகங்களைப் போல ஒளிரும் பீடங்களையும் படைத்தான்.(9)
அதன்பிறகு அவன், நூற்றுக்கணக்கான ரத்தினங்களின் வசிப்பிடமும், ஆயிரஞ்சிகரங்களைக் கொண்டதுமான {சஹஸ்ரசிருங்க} மலையைப் படைத்தான். அடர்த்தியாக மரங்களால் மறைக்கப்பட்டிருந்த அஃது அறுபது யோஜனைகள் உயரம் கொண்டதாக இருந்தது.(10) அங்கே தேவதச்சன், உயிரினங்கள் அனைத்தாலும் துதிக்கப்படும் {ஆன்மாவுக்கான} மிகச் சிறந்த இருக்கையை நிறுவினான்.(11) அதன்பிறகு அவன் காடால் மறைக்கப்பட்ட சைசிர {பெருங்குளிர்ச்சியுடன் கூடிய} மலையைப் படைத்தான். கடக்கப்பட முடியாத அதன் குகைகள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.(12) அதனில் இருந்து அவன், பனியைப் பிறப்பிடமாகக் கொண்டதும், பறவைகள் நிறைந்ததும், கரைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான வசுதாரை[1] என்று கொண்டாடப்படும் ஆற்றைப் படைத்தான்.(13) புனித வேள்விகளால் நிறைந்த அந்த ஆறு, கிழக்குத் திசை முழுவதையும் முத்துகளாலும், சங்குகளாலும் நிறைத்தது.(14) அதன் கரைகள், தினமும் அமுதநிகர் கனிகளையும், மலர்களையும் கொடுப்பவையும், ஏராளமான நிழலை அளிப்பவையுமான மரங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(15)கிழக்கில் பிரிவுகளை உண்டாக்கிய தலைவன், பாதித் தங்கம், பாதி வெள்ளியாலான அழகிய மலையைத் தெற்கில் படைத்தான்.(16) ஒரு பக்கம் சூரியப் பிரகாசத்துடனும், மறு பக்கம் சந்திரப் பிரகாசத்துடனும் கூடிய அந்தச் சிறந்த மலை அங்கே பேரழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(17) அந்த மலையானது, ஒரே நேரத்தில் சூரிய சந்திரக் கதிர்களுடன் கூடி இருப்பதாகத் தெரிந்தது. அதன்பிறகு அவன் அந்தத் திசையில் பானுமந்தம், வபுஷ்டமம் எனும் பெரும் மலைகளைப் படைத்தான்.(18) அந்த மலைகள் விரும்பிய பலன்களை அனைவருக்கும் வழங்கும் தெய்வீக மரங்களால் நிறைந்திருந்தன. அதன் பிறகு அவன் யானையின் வடிவில் குஞ்சர மலையைப் படைத்தான்.(19) அனைத்துப் புறங்களிலும் பொன்னறைகளைக் கொண்டிருந்த அது பல யோஜனைகள் தொலைவுக்குப் பரந்திருந்தது. அதன் பிறகு அவன் கரடியின் வடிவில் ரிஷப மலையைப் படைத்தான். அது பொன்மயமான சந்தன மரங்களால் மறைக்கப்பட்டு மலர்களுடன் புன்னகைப்பதைப் போலத் தெரிந்தது.
அதன் பிறகு அவன் மலைகளின் தலைவனும், நூறு யோஜனைகள் உயரம் கொண்டதுமான மஹேந்திர மலையைப் படைத்தான். அதில் பொன்மயமான சிகரங்களும், பூத்துக் குலுங்கும் பெரும் மரங்களும் இருந்தன. தலைவன் அந்த மலையைப் பல்வேறு ரத்தினங்களும் நிறைந்திருப்பதாகவும், சூரியனையும், சந்திரனையும் போன்று பிரகாசிப்பதாகவும் படைத்தான். அதன் பிறகு அவன், பூத்துக்குலுங்கும் மரங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்ட மலய மலையைப் படைத்தான்.(23) அதன் பிறகு அவன் பாறைகளின் வலையால் மறைக்கப்பட்ட மைநாக மலையைப் படைத்தான். அவன் அந்தப் பெரும் மலையைத் தென் திசையில் நிறுவினான்.(24) அதன்பிறகு அவன் ஆயிரஞ்சிகரங்களுடன் கூடியதும், பல்வேறு மரஞ்செடிகொடிகளால் மறைக்கப்பட்டதுமான விந்திய மலையைப் படைத்தான்.(25) அதன்பிறகு அவன், பால் போன்று இனிய நீர் நிறைந்ததும், சுழல்களையும், அகன்ற கரைகளையும் கொண்டதுமான பயோதாரை என்று கொண்டாடப்படும் ஆற்றைப் படைத்தான்.(26) அந்த ஆறு தென் திசைக்கு அழகூட்டியது. நாற்றுக்கணக்கான கிளையாறுகளைக் கொண்டதும், புனிதத் தலங்கள் பலவற்றைக் கொண்டதுமான அந்தப் புனித ஆற்றைத் தென் திசையில் நிறுவிவிட்டு தலைவன் மேற்குத் திசைக்குச் சென்றான்.(27)
அங்கே {மேற்கில்} அவன் நூறு யோஜனைகள் உயரம் கொண்டதும், பொன்நிறைந்த அற்புதச் சிகரங்களைக் கொண்டதுமான ஒரு பெருமலையைப் படைத்தான்.(28) பலவண்ணங்களைக் கொண்ட பாறைகள், பொன்மயமான பாறைகள், குகைகள், சால மரங்கள், தால மரங்கள், சூரியனைப் போன்ற ஒளிரும் பிற வகை மரங்கள், தங்கத்தாலான அழகிய பீடங்கள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(29) தலைவன், மேற்குப் பிரிவில் {பொன் போல் ஒளிர்பவையும், மங்கலக் காட்சிகளைத் தருபவையுமான} அறுபதாயிரம் மலைகளைப் படைத்தான்.(30) {அவன் அங்கே மேரு மலைக்கு ஒப்பானதும், ஆயிரம் நீரோடைகளைக் கொண்டதும், மங்கலமான புனிதத் தலங்களைக் கொண்டதுமான ஒரு மலையை நிறுவினான்.(31) அந்த மலை அறுபது யோஜனைகள் அகலமும், உயரமும் கொண்டதாக இருந்தது} அவன் தன்னுடைய பன்றி வடிவைச் சொல்வது போல வராகம் என்ற பெயரில் அந்த வைடூர்ய மலையை அங்கே படைத்தான்.(32) அங்கே பொன்மயமான, வெள்ளிமயமான பாறைகள் இருந்தன. அங்கே அவன் தன் சக்கரத்திற்கு ஒப்பான ஆயிரஞ்சிகரங்களைக் கொண்ட சக்ரவந்த மலையை நிலைநிறுத்தினான்.(33,34) மேலும் அவன், சங்குக்கு ஒப்பான கருநீல மரங்களால் மறைக்கப்பட்ட வெள்ளிமயமான சங்க மலையையும் அங்கே படைத்தான்.(35) அந்த மலையின் உச்சியில் தங்கத்தாலும், ரத்தினங்களாலும் உண்டாக்கப்பட்ட பாரிஜாதமெனும் பெரும் மரத்தை நிறுத்தினான்.(36) பிறகு தலைவன் வராகன், ஏராளமான நீரைக் கொண்டதும், புனிதமானதும், கொண்டாடப்படுவதுமான கிருததாரம் என்ற ஆற்றைப் படைத்தான்.(37)
இவ்வாறு மேற்கில் பல பிரிவுகளை உண்டாக்கிய அவன், வடக்கில் தங்கமயமான அழகிய மலைகள் பலவற்றை நிறுவினான். பிறகு அவன் சூரியப்பிரகாசம் கொண்டதும், வானமளவு பெரியதும், பொன்மயமானதுமான சௌம்ய மலையை அங்கே படைத்தான்.(38,39) அந்த இடம் சூரியனில்லாதிருக்கும் போதுகூடத் தன்னொளியால் ஒளியூட்டப்பட்டது.(40) சூரியனின் வெப்பத்தால் ஒளியூட்டப்படும் சந்திரலோகத்தைப் போலவே, அந்த மலையின் பிரகாசத்தால் சூரியன் ஒளிர்வதைப் போலத் தெரிந்தது.(41) நுட்பமான அறிகுறிகளாலேயே சூரியன் வெப்பத்தைக் கொடுப்பது தெரிந்தது. அதன் ஆயிரம் சிகரங்களும் பல்வேறு புனிதத்தலங்களால் நிறைந்திருந்தன. அவன் பிறகு பல்வேறு ரத்தினங்களால் நிறைந்த அஸ்த மலையைப் படைத்தான்.(42)
பிறகு அவன் அழகும், எழிலும் மிக்க மந்தர மலையையும், மலர்களால் மறைக்கப்பட்ட கந்தமாதன மலையையும் படைத்தான்.(43) கந்தமாதன மலையின் உச்சியில் அவன் பொன்மயமானதும், அற்புதம் நிறைந்ததுமான ஜம்பு ஆற்றைப் படைத்தான்.(44) அதன் பிறகு அவன், கிரிம்சஷிகரம், புஷ்கரம், ஷுப்ரம், பாண்டுரம், மேக வண்ணம் கொண்டதும், மலைகளில் முதன்மையானதுமான கைலாசம்,(45) மலைகளின் தலைவனும், தெய்வீகத் தாதுக்களைக் கொண்டதுமான இமயம் ஆகிய மலைகளைப் படைத்தான்.(46) பன்றியின் வடிவை ஏற்றத் தலைவன், ஆயிரம் வாய்களைக் கொண்டதும், அறங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதும், தெய்வீகமானதுமான மதுதாரை ஆற்றை வடக்குத் திசையில் படைத்தான்.(47) அந்த மலைகள் அனைத்தும் சிறகுகள் படைத்தவையாகவும், விரும்பிய தோற்றங்களை ஏற்க வல்லவையாகவும் திகழ்ந்தன.(48)
அவை அனைத்தையும் பல வண்ணங்களைக் கொண்டவையாக அமைத்த தலைவன் பரமேஷ்டி, இவ்வாறு பூமியில் பல பிரிவுகளை ஏற்படுத்தி, அடுத்ததாகத் தேவர்களையும் அசுரர்களையும் படைக்க நினைத்தான்.(49) உலகத்தை அழிப்பவனும், குருதி சிவப்புக் கண்களைக் கொண்டவனுமான அந்தத் தெய்வீகன், மனித குலத்தின் நன்மைக்காக அனைத்துப் பக்கங்களிலும் அழகிய மலைகள் பலவற்றையும், நீர் நிறைந்த புனித ஆறுகள் பலவற்றையும் படைத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(50)
வேதங்கள் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 32-(ஹிரண்யகர்பாத்யுத்பத்திகதநம்)-ஹிரண்யகர்பனின் பிறப்பு; காயத்ரி, சாவித்ரி, வேதங்கள் படைக்கப்பட்டது; பிரம்மனின் சந்ததி; தக்ஷன், கசியபர், மனு, தர்மன், சந்திரன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இவ்வாறு அண்டத்தைப் படைக்க விரும்பிய தலைவன் சிந்திக்கத் தொடங்கினான். இவ்வாறு அவன் தியானித்துக் கொண்டிருந்த போது அவனுடைய வாயில் இருந்து ஒரு புருஷன் வெளியே வந்தான்.(1)
தலைவனுக்கு முன் வந்த அந்தப் புருஷன், “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அண்டத்தை ஆளும் தலைவன், புன்னகைத்தவாறே,(2) “உன்னை {ஆன்மாவை} இரண்டாகப் பிரித்துக் கொள்வாயாக” என்றான். இதைச் சொல்லிவிட்டு அந்தத் தலைவன் மறைந்தான். ஓ! பாரதா, அந்தத் தலைவன் உடலால் மறைந்தபோது,(3) விளக்கு அணைந்ததைப் போல அவனது இயக்கத்திற்கான எந்தத் தடமும் காணப்படவில்லை. வேதங்களைப் பாடிய ஹிரண்யகர்பன் {அந்தப் புருஷன்}, அவனால் சொல்லப்பட்ட சொற்களை அப்போது தியானிக்கத் தொடங்கினான்.(4) {அந்தப் புருஷன் வேத மந்திரங்களின் புனித உரைகளில் பொன்மயமான கருவறையில் கருத்தரிக்கப்பட்டவன் {ஹிரண்யகர்பன்} என்று புகழப்படுபவன் ஆவான்}.முன்னர் அண்டத்தின் தலைவன் மட்டுமே ஒரே குடிமுதல்வனாக {பிரஜாபதியாக} இருந்ததால் அவன் மட்டுமே வேள்விக் காணிக்கைகளுக்கு உரிமை கொண்டவனாக இருந்தான்.(5)
குடிமுதல்வன், “அந்தப் பெரியவன் {பரமாத்மா}, என்னை {என் ஆன்மாவை} இரண்டாகப் பிரியும்படி கேட்டுக் கொண்டான் என்றாலும், என்னை இரண்டாகப் பிரித்துக் கொள்வதில் எனக்குப் பெரும் ஐயம் ஏழுகிறது.(6) குடிமுதல்வன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது “ஓம்” என்ற சொல் ஓதப்பட்டது; அதன் ஒலியால் பூமியும், வானமும், சொர்க்கமும் நிறைந்திருந்தன.(7) அந்தப் பிரஜாபதியின் மனம் ஓம் என்பதைப் பயின்று கொண்டிருந்தபோது, அந்தத் தேவதேவனின் இதயத்தில் இருந்து மீண்டும் வஷட்காரம் எழுந்தது.(8) அதன் பிறகு, பூமி, வானம், சொர்க்கம் ஆகியவற்றின் ஆன்மாவாக அமைந்த பூர், புவ, ஸுவ என்ற {ஏழு உலகங்களின் பெயர்களைச் சார்ந்த} முதல் மூன்று பெரும் மந்திரங்கள் எழுந்தன.(9) அதன் பிறகு சந்தங்களின் பிறப்பிடமானதும், இருபத்து நான்கு சொற்களால் அமைந்ததுமான புனித காயத்திரி உண்டாக்கப்பட்டது. அந்தத் தெய்வீக மந்திரத்தை முழுமையாக நினைவு கூர்ந்து சாவித்ரியைப் படைத்தான்.(10) அதன்பிறகு, அந்தத் தலைவன், ரிக், சாம, அதர்வண, யஜுர் என்ற நான்கு வேதங்களையும், அறச்சடங்குகளையும் படைத்தான்.(11)
அதன்பிறகு அவனது மனத்திலிருந்து ஸநர், ஸநகர், ஸநாதனர், வரதர், ஸநந்தனர் ஆகியோர் வெளிப்பட்டனர்.(12) பிறகு எல்லாம் அறிந்த ஸநத்குமாரரும் வெளிப்பட்டார். ருத்திரனுடன் சேர்த்து இந்த ஆறு ரிஷிகளும் பிரம்மனின் மனத்தில் பிறந்த மகன்களாவர்.(13) யோக தந்திரத்தில் இந்த ஆறு ரிஷிகளையும், பிரம்மனையும், கபிலரையும் உயர்ந்தவர்களாக யதிகளும், பிராமணர்களும் சொல்கின்றனர்.(14) சுயம்புவான அந்தத் தேவன் {பிரம்மன் / ஹிரண்யகர்ப்பன்} அதன்பிறகு தன் மனத்தில் இருந்து பிறந்த மரீசி, அத்ரி, புலஸ்த்யர், புலஹர், கிரது, பிருகு, அங்கிரஸ், {பிரஜாபதியான} மனு ஆகிய எட்டு மகன்களையும்,(15) அனைத்து உயிரினங்களின் பித்ருக்கள், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோரையும், {மஹாரிஷிகள் பிறரையும்} படைத்தான்.(16) ஆயிரம் யுகங்கள் முடிந்து, நிஷேஷ கல்பத்தின் முடிவில் இவர்கள் அனைவரும், இவர்களின் சந்ததிகளும் உலகில் இருந்து மறைகின்றனர்.(17) சந்ததிகளை உண்டாக்கவல்ல இந்தத் தெய்வீக யோகிகள் ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், மீண்டும் தங்கள் பிறவியை அடைகிறார்கள்.(18) ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு குறிப்பிட்ட பணிக்காகத் தேவர்கள் தங்கள் பெயர்களையும், பிறவிகளையும் மாற்றிக் கொள்கிறார்கள்.(19) பிரஜாபதியின் வலது கை கட்டைவிரலில் இருந்து தெய்வீகனான தக்ஷன் பிறந்தான். அவனது மனைவி பிரம்மனின் இடது கை கட்டைவிரலில் இருந்து பிறந்தாள்[1].(20) தக்ஷன், உலகத்தின் அன்னையராக கொண்டாடப்படும் மகள்களை அவனது மனைவியிடம் பெற்றான். ஓ! மன்னா, அவர்களின் சந்ததியால் மொத்த உலகமும் நிறைந்தது.(21)மனத்தில் சந்ததியைப் பெருக்க நினைத்த தக்ஷன், தன் மகள்களான அதிதி, திதி, காலை, அநாயு, ஸிம்ஹிகை, முனி, பிராதை, குரோதை, ஸுரபி, வினதை, ஸுரஸை, தனு, கத்ரு ஆகியோரை {13 மகள்களை}கசியபருக்கு {திருமணம் செய்து} கொடுத்தான்.(22,23) மேலும் தக்ஷன், தன் மகள்களான அருந்ததி, வஸு, யாமீ, லம்பை, பானு, மருத்வதி, ஸங்கல்பை, ஸாத்யை, விஷ்வை ஆகிய பத்து {10} கன்னிகையரை பிரம்மனின் மகனான மனுவுக்கு {திருமணம் செய்து கொடுத்தான்.(24) பிறகு அவன், குற்றங்குறையற்ற அங்கங்களையும், தாமரை போன்ற கண்களையும், முழு நிலவைப் போன்ற முகங்களையும் கொண்ட தன் மகள்களான கீர்த்தி {புகழ்}, லக்ஷ்மி {செல்வம்}, திருதி, புஷ்டி, புத்தி, மேதை, கிரியை, மதி, லஜ்ஜை {நாணம்} ஆகிய பத்து {10} கன்னிகையரை தர்மனுக்கு {திருமணம் செய்து} கொடுத்தான்.(25,26) அதன் பிறகு அத்ரியின் மகனான ஆத்ரேயன் {சசி / சந்திரன்} நீர் நிறைந்தவனாக {நீரின் ஆன்மாவாகப்} பிறந்தான். கோள்களின் தலைவனும், இருளை விலக்குபவனுமான அவன் ஆயிரங்கதிர்களைக் கொண்டவனாக இருந்தான்.(27,28) தக்ஷப்ரசேதஸ் தன் மகள்களான ரோகிணி முதலிய இருபத்தேழு {27} கன்னிகையரை அவனுக்கு {சந்திரனுக்குக்} கொடுத்தான்.(29)
கசியபர், மனு, தர்மன், சசி {சந்திரன்} ஆகியோரின் சந்ததியை உரைக்கிறேன் கேட்பாயாக.
கசியபர் அதிதியிடம் அர்யமான், வருணன், மித்ரன், பூஷன், தாதா, புரந்தரன்,(30) துவஷ்டா, பகன், அம்ஷன், சவிதன், பர்ஜன்யன் என்ற தேவர்களைப் பெற்றார்.
கசியபர் திதியிடம் இரண்டு மகன்களைப் பெற்றார் என நாம் கேள்விப்படுகிறோம். அவர்கள் ஹிரண்யகசிபுவும், சக்திமிக்க ஹரிண்யாக்ஷனும் ஆவர். அவர்கள் இருவரும் தவத்தில் கசியபரைப் போலவே ஒப்பற்ற ஆற்றலுடன் திகழ்ந்தனர்.(31,32) ஹிரண்யகசிபு, பெருஞ்சக்திவாய்ந்த ஐந்து மகன்களைப் பெற்றான். அவர்கள் பிரஹலாதன், அனுவலம், ஸம்லாதன், அனுராதன் ஆகியோராவர்(33). {அவர்களில் பிரஹலாதன் மூத்த மகன், அநுராதன் ஐந்தாவது மகன்}.(34)பிரஹலாதனுக்கு, விரோசனன், ஜம்பன், குஜம்பன் {ஸுஜம்பன்} என்ற பெயரில் பெருஞ்சக்திவாய்ந்த மூன்று மகன்கள் இருந்தனர்.(35) விரோசனனுக்குப் பலி என்றொரு மகன் இருந்தான், பலிக்கு பாணன் என்ற ஒரு மகன் இருந்தான். பாணனின் மகன், பகை நகரங்களை வெல்பவனான இந்திரதமனனாவான்.(36)
உலகில் பெரும் அசுரர்களாகக் கொண்டாடப்பட்ட எண்ணற்ற அசுரர்களைத் தனு பெற்றாள். அவர்களில் முதலில் பிறந்த விப்ரசித்தி மன்னனானான்.(37)
குரோதை, குரோதவசர்கள் என்றழைக்கப்பட்ட பல மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் பெற்றிருந்தாள். அவர்கள் அனைவரும் பெரும் பயங்கரர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும் இருந்தனர்.(38)
சிம்ஹிகை, சூரியனையும், சந்திரனையும் பீடித்த ராகுவைப் பெற்றாள். அவன் சந்திரனை விழுங்கி, சூரியனை அழிக்கிறான்.(39)
காலையின் பிள்ளைகள் காலனைப் போன்றவர்களாகவும், பெரும் பயங்கரர்களாகவும், கருநீல மேகங்களைப் போலப் பிரகாசமிக்கவர்களாகவும், சூரியனைப் போன்று ஒளிரும் கண்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(40)
கத்ருவுக்கு இருந்த மகன்கள் பலரில் ஆயிரம் தலைகளைக் கொண்ட சேஷன், வாசுகி, தக்ஷகன் ஆகியோர் ஏற்றமடைந்தனர்.(41) அவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், உயிரினங்களுக்கு நன்மை செய்பவர்களாகவும், வரங்களை அளிப்பவர்களாகவும், விரும்பிய வடிவங்களை ஏற்பவர்களாகவும் இருந்தனர்.(42)
வினதையின் மகன்கள் தார்க்ஷ்யன், அரிஷ்டநேமி, பெருஞ்சக்திவாய்ந்த கருடன், அருணன், அருணி ஆகியோராவர்.
{பெரும்பேறு பெற்றவளான} பிராதை, தெய்வீக முனிவர்களாலும் வழிபடப்பட்டவர்களும், {மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவர்களுமான} எட்டு அழகிய அப்சரஸ்களைப் பெற்றாள். அவர்கள் அநவத்யை, அநூகை, அநூநை, அருணை, பிரியை, அநூகை, ஸுபகை, பாசி ஆகியோராவர்.(43,44) அலம்புஷை, மிஷ்ரகேஷி, புண்டரீகை, திலோத்தமை, ஸுரூபை, லக்ஷ்மணை, க்ஷேமை, ரம்பை, மநோரமை,(45) அஸிதை, ஸுபாஹை, ஸுவிருத்தை, ஸுமுகீ, ஸுப்ரியை, ஸுகந்தை, ஸுரஸை, பிரமாதினி,(46) காஷ்யை, ஷாரத்வதி ஆகியோர் மௌநேய அப்சரஸ்கள் என்று கொண்டாடப்படுபவர்கள். விஷ்வாவஸு, பரண்யன் ஆகியோர் கந்தர்வர்களாக அறியப்பட்டனர்;(47) மேனகை, ஸஹஜன்யை, பர்ணிகை, புஞ்ஜிகஸ்தலை, கிருதஸ்தலை, கிருதாசி, விஷ்வாசி, ஊர்வசி,(48) அநும்லோசை, பிரம்லோசை, ஆகிய பத்து பேரும் மநோவதியும் கொண்டாடப்பட்ட அப்சரஸ்களாக இருந்தனர்.(49)
பிராமணர்கள், பசுக்கள், ருத்திரர்கள் ஆகியோராலும், மொத்த உலகத்தாலும் விரும்பப்பட்ட அமுதம் பிரஜாபதியின் தீர்மானத்தினால் உண்டானது. அவர்கள் அனைவரும் சுரபியின் சந்ததியினர் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.(50)
இதுவரை நான் கசியபரின் சந்ததியைச் சொன்னேன், இனி நான் மனுவின் சந்ததியைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(51) ஓ! பாவமற்றவனே நான் அவற்றைச் சுருக்கமாகச் சொல்லப் போகிறேன். விஷ்வை விஷ்வதேவர்களையும் {தேவர்கள் அனைவரையும்}, சாத்யை சாத்யர்களையும் பெற்றனர்.(52) மருத்வதி மருத்துகளைப் பெற்றாள், வஸுவுக்கு வஸுக்கள் பிறந்தனர். பானுவின் மகன்கள் பானுக்களாகவும், முஹூர்த்தையின் மகன்கள் முஹூர்த்தஜர்களாகவும் இருந்தனர்.(53) லம்பை கோஷனைப் பெற்றாள். ஜாமி, நாகவீதியையும், அருந்ததி உலகப் பொருட்கள் அனைத்தையும் பெற்றனர்.(54) ஸங்கல்பை ஸங்கல்பனைப் பெற்றாள், லக்ஷ்மி தர்மனின் மகனும், உலகத்துக்கு மிகவும் பிடித்தமானவனுமான காமனைப் பெற்றாள்.(55) காமன் தன் மனைவியான ரதியிடம், யஷன், ஹர்ஷன் என்ற இரு மகன்களைப் பெற்றான். சோமன் தன் மனைவியான ரோஹிணியிடம் பெருந்தலைவன் வர்சஸைப் பெற்றான்.(56) அவனே {வர்சஸே} சந்திரன் எழுந்தவுடனே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறான். {ஊர்வசி காதலில் விழுந்த புரூரவஸ் தலைவன் வர்சஸுக்குப் பிறந்தவனாவான்.(57) இவ்வாறே ஆயிரக்கணக்கான மனைவிமாரும், மகன்களும் பிறந்தனர். இதுவே உலகத்தின் {முன்னேற்றத்திற்கும், நிர்வாகத்திற்கும்} வேராகத் திகழ்கிறது.(58) தலைவன் பிரஜாபதி உயிரினங்களின் தகுதிகளுக்குத் தக்கபடி அவற்றின் மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தான்.(59) அதன் பிறகு தலைவன் பத்துத் திக்குகளையும், பூமி, ரிஷிகள், பெருங்கடல்கள், பறவைகள், மரங்கள், மூலிகைகள், நாகங்கள், ஆறுகள், தேவர்கள், அசுரர்கள், வானுலாவிகள், வேள்விகள், மலைகளை ஆகியவற்றையும் படைத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(60)
அதிகாரப் பகிர்வு | பவிஷ்ய பர்வம் பகுதி – 33-(லோகாநாமாதிபத்யவ்யவஸ்தாபநம்)-அண்டத்தின் அரசுரிமையில் அமர்த்தப்பட்ட இந்திரன்; பல தேவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பாரதா, தலைவன் {பிரம்மன்}, சூரியனைப் போன்று பிரகாசம் கொண்ட சக்ரனை {இந்திரனை} மூவுலகங்களுக்கும், தேவர்களுக்கும் மன்னனாக நியமித்தான்.(1) வஜ்ரதாரியும், கவசம் தரித்தவனுமான ஜிஷ்ணுவை அதிதி பெற்றெடுத்தாள். நுண்ணறிவுமிக்கவனும், ஸ்மிருதிகளின் புரவலனுமான அவன் அத்வர்யுக்களால் துதிக்கப்படுகிறான்.(2) தலைவன் சக்ரன், அதிதிக்குப் பிறந்ததும் குசப்புல்லால் மறைக்கப்பட்டான் என்பதால் அந்தத் தேவர்களின் மன்னன் கௌசிகன் என்ற பெயரையும் பெற்றான்.(3) பிரம்மன், ஆயிரங்கண் புரந்தரனை மேலான தலைவனாக நியமித்துவிட்டுப் பிற அரசுகளைப் படிப்படியாகப் பகிர்ந்தளித்தான்.(4)
அவன் {பிரம்மன்} சோமனை {சந்திரனை}, யஜ்ஞங்கள், தவம், நட்சத்திரங்கள், கோள்கள், இருபிறப்பாளர்கள், மூலிகைகள் ஆகியவற்றுக்கு மன்னனாக நிறுவினான்.(5) அவன் தக்ஷனைக் குடிமுதல்வர்களின் {பிரஜாபதிகளின்} மன்னனாகவும், வருணனை நீர்நிலைகளின் தலைவனாகவும், அனைத்தையும் அழிப்பவனான வைஷ்வாநரனை பித்ருக்களின் மன்னனாகவும்,(6) வாயுவை மணம், உடலற்ற உயிரினங்கள், ஒலி, ஆகாயம் ஆகியவற்றுக்குத் தலைவனாகவும் நியமித்தான்.(7)
பூதங்கள், பிசாசங்கள், மிருத்யு, பசுக்கள், பேரிடர்கள் {உத்பாதங்கள்}, தீய சகுனங்கள் {கிரஹரோகணங்கள்}, நோய்கள் {வியாதி}, ஏராளமான மழை,(8) பிற இடர்கள், தீய ஆவிகள் ஆகியவற்றின் அரசுரிமையை மஹாதேவனிடம் கொடுத்தான். யக்ஷர்கள், ராட்சசர்கள், குஹ்யர்கள், செல்வகள்,(9) ரத்தினங்கள், செல்வம் ஆகியவற்றின் மன்னனாக அவன் வைஷ்ரவணனை {குபேரனை} நியமித்தான். பற்களைக் கொண்ட விலங்குகள் அனைத்திற்கும் அவன் சேஷனை மன்னனாக நியமித்தான், வாசுகியை நாகர்களுக்கும்,(10) தக்ஷகனை பாம்புகளுக்கும் மன்னர்களாக நியமித்தான். அவன், ஆதித்யர்களில் இளையவனான பர்ஜன்யனை பெருங்கடல்கள், ஆறுகள், மேகங்கள், மழை ஆகியவற்றுக்குத் தலைவனாக நிறுவினான்[1].(11) அவன் சித்திரரதனை கந்தர்வர்களுக்கும், காமனை அப்சரஸ்களுக்கும் மன்னனாக நியமித்தான்.(12) மஹாதேவனின் வாகனமான காளையை {நந்தி தேவனை} அவன் நான்கு கால் விலங்குகள் அனைத்தின் மன்னனாக நியமித்தான்.(13)பெரும் பிரகாசத்தைக் கொண்ட ஹிரண்யாக்ஷன் தைத்தியர்களின் மன்னனாகவும், ஹிரண்யகசிபு இளவரசனாகவும் {யுவராஜனாகவும்} நியமிக்கப்பட்டனர்[2].(14) பெருஞ்சக்திவாய்ந்தவனும், முதலில் பிறந்தவனுமான விப்ரசித்தி தானவர்களுக்கும், அசுரர்களுக்கும் மன்னனாக நியமிக்கப்பட்டான்.[3] மஹாகாலன், பூதகணங்களுக்கும், காலகேயர்களுக்கும் தலைவனாக நியமிக்கப்பட்டான். விருத்திரன், துவஷ்டாவின் மனைவியான அனாயுஷையின் மகன்களுக்கு மன்னனாக்கப்பட்டான்.(15) மேலும் அவன், சிம்ஹிகையின் மகனும், பேரசுரனுமான ராஹுவை, தீய சகுனங்களுக்கும், நிமித்தங்களுக்கும் மன்னனாக்கினான்.(16)ஓ! பாரதா, பிறகு அவன் பருவகாலங்கள் {ருது}, மாதங்கள், யுகங்கள், பக்ஷங்கள், பகல்கள், இரவுகள், திதிகள், பர்வங்கள்,(17) கலைகள், காஷ்டைகள், முஹூர்த்தங்கள், இரண்டு அயணங்கள், யோக சாத்திரம், கணிதம் ஆகியவற்றுக்கு ஸம்வத்ஸரனை (வருடத்தை) மன்னனாக நியமித்தான்.(18) பெருஞ்சக்திவாய்ந்தவனும், அழகிய சிறகுகளைப் படைத்தவனுமான {சுபர்ணனுமான} கருடன், பறவைகள் அனைத்திற்கும், நெடுந்தொலைவுகளைப் பார்ப்பவர்களுக்கும், பாம்புகள் அனைத்திற்கும் {போகிகளுக்கும்} மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.(19) கருடனின் அண்ணனும், பூஜைகளில் பயன்படுத்தப்படும் செம்மலர்களைப் போன்று ஒளிபொருந்தியவனுமான அருணன், யோகங்கள் அனைத்திற்கும், சாத்யர்களுக்கும் மன்னனாக்கப்பட்டான்.(20)
உயிரினங்களின் தலைவரான கசியபரின் மகனும், பெரும் விரதனை {கிழக்கின் திக்பாலனான} வாசவன் {இந்திரன்} கிழக்குத் திசையின் மன்னனாக நியமித்தான்.(21) நீதி வழங்குபவனும், தலைவன் ஆதித்யனின் மகனும், பெருஞ்சிறப்புவாய்ந்தவனுமான யமன், மஹேந்திரனால் {இந்திரனால்} தெற்கின் மன்னனாக நியமிக்கப்பட்டான்.(22) கசியபருக்குப் பிறந்த மகனும், நீருக்கடியில் இருப்பவனும், அம்புராஜன் என்ற பெயரில் கொண்டாடப்படுபன் {வருணன்}, மேற்கின் மன்னனானான்.(23) புலஸ்தியரின் மகனும், மஹேந்திரனையே போன்றவனுமான குபேரன், வடக்கின் மன்னனாக நியமிக்கப்பட்டான்[4].(24)அண்டத்தைப் படைத்த சுயம்புவானவன், இவ்வாறு அதன் அரசைப் பிரித்து, அவர்களுக்குப் பல்வேறு தெய்வீக உலகங்களையும் ஒதுக்கினான்.(25). சிலரின் உலகங்கள் சூரியனைப் போன்று பிரகாசமிக்கதாகவும், சிலருடையது நெருப்பைப் போன்றதாகவும், சிலருடையது மின்னலைப் போன்றதாகவும், சிலருடையது சந்திரனைப் போன்றதாகவும் இருந்தது.(26) பல்வேறு வண்ணங்களில் இருந்த அந்த உலகங்கள் அனைத்தும், விரும்பியபடி உலவவல்லவையாகவும், பல நூறு யோஜனைகள் பரப்பைக் கொண்டவையாகவும், நல்லோரால் எளிதில் அடையத்தக்கவையாகவும், பாவிகளால் அடையப்படுவதற்கு அரிதானவையாகவும் இருந்தன.(27) பார்ப்பதற்கு அழகாகவும், நட்சத்திரங்களைப் போன்ற ஒளியுடனும் இருந்த உலகங்கள் நல்லோருக்கானவையாக இருந்தன.(28) மிகச் சிறந்த கொடைகளுடன் வேள்விகளைச் செய்பவர்கள், தங்கள் மனைவிமாருக்கு உண்மையாக இருப்பவர்கள், பொறுமைசாலிகள், எளியவர்கள், வாய்மை நிறைந்தவர்கள்,(29) வறியோரிடம் அன்பு காட்டும் பிராமணர்கள், பேராசையில் இருந்தும், ரஜஸ் குணத்தில் இருந்தும் விடுபட்டவர்கள் ஆகியோரும், தவசிகளும், முனிவர்களும் அந்த உலகங்களுக்குச் செல்வார்கள்.(30)
உலகின் பெரும்பாட்டனான பிரஜாபதி {பிரம்மன்} இவ்வாறு தன் மகன்களை ஈடுபடுத்திவிட்டு புஷ்கரை என்றழைக்கப்படும் பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(31) சுயம்புவால் பாதுகாப்புப் பணிகள் ஒப்படைக்கப்பட்ட தேவர்கள், மஹேந்திரனால் நன்றாகக் கவனிக்கப்பட்டுத் தங்கள் தங்களுக்குரிய உலகங்களில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(32) தேவர்கள் அனைவரும், பாதுகாப்புப் பணியில் முறையாக ஈடுபடுத்தப்பட்டும், சக்ரனால் தலைமை தாங்கப்பட்டும், வேள்விக் காணிக்கைகளில் தங்கள் பங்கையும், சொர்க்கத்தையும், புகழையும், இன்பத்தையும் அனுபவித்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(33)
தேவர்களுடன் போரிட அசுரர்களை ஏவிய மலைகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 34-தேவாஸுரயுத்தோத்யோக꞉ தத்யுத்தவர்ணநம் ச)-தேவர்களிடம் அசுரர்கள் கோபம் கொள்ளத் தூண்டிய மலைகள்; ஹிரண்யாக்ஷனின் தலைமையிலான அசுரர்கள் தேவர்களை முறியடித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பூமியை ஆதரிக்கும் {சிறகு படைத்த} மலைகள் ஒரு காலத்தில் தலைவனின் மாயைக்கு வசப்பட்டு அதை {பூமியைக்} கைவிட்டன.(1) அதன்பிறகு கிழக்குத் திசைக்கு வந்து, தடாகத்தில் மூழ்கும் யானைகளைப் போல ஹிரண்யாக்ஷனால் ஆளப்படும் அசுரர்களின் வசிப்பிடத்தில் விழுந்தன.(2)
அதன் பிறகு அவை, தேவலோகத்தின் அரசுரிமை குறித்து அசுரர்களிடம் கேட்கும் வகையில், “உங்களுக்குப் பின் பிறந்தவர்களாக இருப்பினும், தேவர்கள் அரசுரிமையை அடைந்திருக்கின்றனர்; முதலில் பிறந்தவர்களாக இருப்பினும், நீங்கள் மன்னர்களாகவில்லை” என்றன. அசுரர்கள் மிகச்சிறந்த ஆயத்தங்களைச் செய்தனர்.(3)
அவர்கள் பூமியை அடைவதில் தங்கள் மனத்தை நிலைநிறுத்தி, தங்கள் ஒப்பற்ற தீய புத்தியைப் பயன்படுத்தினர். பயங்கர ஆற்றல் படைத்த அசுரர்கள்,(4) சக்கரம், வஜ்ரம், வாள், புசுண்டி, வில், கயிறு, பராசம், சக்தி, முசலம், கதாயுதம், தண்டம் போன்ற பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர்.(5) கவசம்பூண்ட சிலர் மதங்கொண்ட யானைகளைச் செலுத்தினர். பெருந்தேர்வீரர்கள் சிலர், குதிரைகளால் இழுக்கப்படும் தேர்களைச் செலுத்தினர். சிலர் குதிரைகளைச் செலுத்தினர்,(6) வேறு சிலர், தங்கள் கரங்களின் பலத்தைச் சார்ந்து ஒட்டகங்களை {காண்டமிருகங்களையும்} செலுத்தினர், சிலர் எறுமைகளையும், சிலர் கழுதைகளையும் செலுத்தினர், வேறு சிலர் காலாட்களாகச் சென்றனர்.(7) போரில் விருப்பம் கொண்ட படைவீரர்கள், ஹிரண்யாக்ஷனைச் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியாகப் புறப்பட்டுச் சென்றனர்.(8)
போருக்காகத் தைத்தியர்களால் செய்யப்படும் ஆயத்தங்களைக் கேள்விப்பட்ட புரந்தரனின் தலைமையிலான தேவர்களும் மிகச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.(9) அவர்கள் {தேவர்கள்}, தங்கள் நால்வகைப் படையால் சூழப்பட்டவர்களாகக் கவசங்களும், விரலுறைகளும் தரித்துக் கொண்டு, அம்பறாதூணிகளையும், விற்களையும் எடுத்துக் கொண்டனர்.(10) படைக்கு மத்தியில் கடுமையான ஆயுதங்களைத் தரித்து நின்ற தேவர்கள், ஐராவதத்தில் அமர்ந்திருந்த புரந்தரனைப் பின்தொடர்ந்த சென்றனர்.(11)
அப்போது ஹிரண்யாக்ஷன், பேரிகைகளின் முழக்கம், எக்காள ஒலி ஆகியவற்றால் தூண்டப்பட்டுத் தேவர்களின் மன்னனுடன் {இந்திரனுடன்} போரிட்டான்.(12) அவன் கோடரிகள் {பரசுகள்}, {நிஸ்திரிம்சங்கள்}, கதாயுதங்கள், தோமரங்கள், ஷக்திகள், முஸலங்கள், பட்டிசங்கள் ஆகியவற்றால் வாசவனை மறைத்தான்.(13) {அசுரர்கள் பிறர், பெருஞ்சக்திவாய்ந்தவையும், பயங்கர வடிவங்களையும், வேகத்தையும் கொண்டவையுமான கணைகளின் மழையைப் பொழிந்தனர்}.(14) எஞ்சிய தைத்தியர்கள் கூரிய கோடரிகள், இரும்பு வாள்கள், கதாயுதங்கள், க்ஷேபணிகள், முத்கரங்கள் ஆகியவற்றையும்,(15) பெரும் கற்கள், மலைகளைப் போன்று பெரிய கற்பாறைகள், சதாக்னிகள் ஆகியவற்றையும்,(16) {இயந்திரங்களில் இருந்து ஏவப்படும்} பிற ஆயுதங்களையும் கொண்டு வாசவனையும், பிற தேவர்களையும் தாக்கினர்.(17)
புகைபோன்ற தலைமயிரையும், மஞ்சள் தாடியையும் கொண்டவனும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவனும், மாலை நேர மேகங்களைப் போன்ற கரிய நிறம் கொண்டவனும், மிகச் சிறந்த மகுடத்தையும்,(18) கருநீல ஆடைகளையும், மஞ்சள் ஆடைகளையும் தரித்தவனும், {தந்தங்களைப் போன்ற கூரிய பற்களைக் கொண்டவனும்}, கால்மூட்டுகள் வரை கைகள் நீண்டவனும், வைடூரியங்களாலான ஆபரணங்களை அணிந்தவனுமான ஹிரண்யாக்ஷன்,(19,20) அண்ட அழிவின் போது தோன்றும் பயங்கரமிக்கக் காலனைப் போல அசுரர்களின் படைக்கு முன்பு நின்று கொண்டிருப்பதைக் கண்ட வாசவனும், தேவர்கள் அனைவரும் கவலையுற்றனர்.(21)
விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, போர்க்களத்தில் தங்களுக்கு முன்னால் நிற்கும் புரந்தரனுடன் இருந்த தேவர்கள், அசைந்து வரும் மகேந்திர மலையைப் போல முன்னேறும் ஹிரண்யாக்ஷனைக் கண்டதும் கவலையால் நிறைந்தனர்.(22) {தேவர்கள் போர்க்களத்தில் ஆயிரங்கண்களைக் கொண்ட இந்திரனைத் தங்கள் முன் கொண்டிருந்தனர்}. பொற்கவசங்களின் ஒளியால் ஒளியூட்டப்பட்ட அந்தத் தைத்திய படை,(23) விண்மீன்கள் பொருந்திய கூதிர்கால வானத்தைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் ஒருவரையொருவர் வீழ்த்தினர்;(24) சிலர் துவந்தத்தில் இருந்து விலகி, தங்கள் கரங்கள் நொறுங்கி நின்றனர். சிலரின் அங்கங்கள் கதாயுதங்களால் சிதைந்திருந்தன, சிலர் கணைகளின் காயத்தை மார்பில் தாங்கியிருந்தனர்.(25) சிலர் வீழ்ந்தனர், சிலர் சுழற்றி வீசப்பட்டனர். சிலர் தேர்களை நொறுக்கினர், சிலர் அவற்றால் {தேர்களால்} நசுக்கப்பட்டனர்.(26) போரின் நெருக்கடியில் அசையமுடியாமல் சில தேர்கள் நின்றன. கெடுநாளைப் போன்றதும், தானவர்களைப் போன்ற பெரும் மேகங்களாலும், தெய்வீக ஆயுதங்களின் வடிவில் இருந்த மின்னல்களாலும் மறைக்கப்பட்டதுமான அந்தப் போர், இரு படைகளாலும் ஏவப்பட்ட கணைகளின் மழையில் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(27)
பெருஞ்சக்திவாய்ந்த திதியின் மகனும், பேரொளி படைத்தவனுமான ஹரிண்யாக்ஷன் கோபத்தால் தூண்டப்பட்டு, பர்வத்தின் போது {அமாவாசையில் / பௌர்ணமியில்} பெருகும் பெருங்கடலைப் போலத் தன்னைப் பெருக்கிக் கொண்டான்.(28) கோபத்தால் தூண்டப்பட்ட ஹிரண்யாக்ஷனின் வாயில் இருந்து எரியும் கங்குகள் வெளிப்பட்டன. புகையிலும், நெருப்பிலும் நிறைந்த காற்றுத் தேவர்களை எரித்தது.(29) ஓர் உயரமான மலை எழுந்து நிற்பதைப் போல மொத்த வானமும் ஆயுதங்களாலும், விற்களாலும், பரிகங்களாலும் மறைக்கப்பட்டது.(30) ஹிரண்யாக்ஷனின் பல்வேறு ஆயுதங்களால் போரில் தாக்கப்பட்டவர்களும், சிறகு படைத்த கணைகளால் மார்பிலும், தலைகளிலும் காயமடைந்தவர்களுமான தேவர்களால் போர்க்களத்தில் அசையவும் முடியவில்லை(31). போரில் ஹிரண்யாக்ஷனால் முறியடிக்கப்பட்ட தேவர்கள் மிகக் கவனமாக இருந்தாலும் தங்கள் நனவை இழந்தனர். இவ்வாறே தேவர்கள் அனைவரும் ஹிரண்யாக்ஷனால் அச்சுறுத்தப்பட்டனர்.(32) ஆயிரங்கண்களைக் கொண்டவனும், யானையில் அமர்ந்திருந்தவனுமான சக்ரன் {இந்திரன்}, ஹிரண்யாக்ஷனின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு, அச்சத்தால் போர்க்களத்தில் திரியமுடியாதவனாக இருந்தான். தேவர்கள் அனைவரையும் வென்று, அவர்களின் மன்னனை வீழ்த்திய அந்தத் தானவன், அண்டம் தன் வசப்பட்டதாக நினைத்தான்.(33,34) {மழை நிறைந்த மேகத்தைப் பழிப்பது போல் ஒலி {குரல்} கொண்டவனும், மதங்கொண்ட யானையைப் போன்ற உடல் கொண்டவனும், அகன்ற மார்பைக் கொண்டவனுமான அசுரேந்திரன் (ஹிரண்யாக்ஷன்} தன் வில்லை அசைத்துக் கொண்டிருப்பதைத் தேவர்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்}[1]” என்றார் {வைசம்பாயனர்}.(35)
ஹிரண்யாக்ஷவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 35-(ஹிரண்யாக்ஷவத)-ஹரிண்யாக்ஷனுக்கும், வராகனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; ஹிரண்ய வதம்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தேவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு, அவர்களுடைய மன்னன் {இந்திரன்} அசைவற்றிருந்தபோது, சக்கரபாணி (விஷ்ணு), கதாயுதம் தரித்த ஹிரண்யாக்ஷனை அழிப்பதில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(1) அசுரர்களைக் கொல்பவனான அந்தத் தலைவன் {விஷ்ணு}, ஏற்கனவே சொல்லப்பட்ட பெரும்பன்றியின் வடிவை ஏற்று {வராகனாக} அங்கே வந்தான்.(2) அவன், நிலவு போல ஒளிர்ந்து கொண்டிருந்த தன் சங்கையும், சக்கர மலைக்கு ஒப்பானதும், ஆயிரங்கத்திகளுடன் கூடியதுமான தன் சக்கராயுதத்தையும் எடுத்துக் கொண்டான்.(3)
சிதைவற்ற அந்தத் தலைவனுக்குரிய மஹாதேவன், மஹாபுத்தி, மஹாயோகி, மஹேஷ்வரன் என்பவை போன்ற ரகசிய பெயர்களை அமரர்கள் எப்போதும் ஓதுவார்கள்.(4) அவன், ஆத்ம ஞானத்தை அறிந்தவர்களில் முதன்மையானவன். அவன், பக்திமான்களால் எப்போதும் தொண்டாற்றப்படுபவன். அண்டத்தைப் படைத்தவனான அந்தப் புராதன புருஷன், மூவுலகங்களிலும் கொண்டாடப்படுகிறான்.(5) அவன் தேவர்களில் வைகுண்டனாகவும், போகிகளில் {பாம்புகளில்} அனந்தனாகவும், யோகிகளில் விஷ்ணுவாகவும், வேள்விச் சடங்குகளில் தலைமைத் தேவனாகவும் இருக்கிறான்.(6) {பூமியில் செய்யப்படும் வேள்விகளில் பெரும் முனிவர்களால் கொடுக்கப்படும்} மூன்று வகை வேள்விக் காணிக்கைகளை அவனுடைய அருளால் தேவர்கள் உண்கிறார்கள்.(7)
{அவனே தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கதியாக இருக்கிறான். அவனே சூரர்களுக்கு {தேவர்களுக்கு} பரகதியாக இருக்கிறான். அவனே புனிதங்களில் மிகப் புனிதனாக இருக்கிறான். சுயம்புவான அவன், தாழ்ச்சி ஏதும் இல்லாத தலைவனாவான்.(8) ஒவ்வொரு யுகத்திலும் அசுரர்கள் பலம்பெறுவதைக் கண்டு, அவர்களைச் சக்கரத்திற்குள் நுழையச் செய்து, அவர்களுக்குத் துன்ப நிலையைக் கொடுக்கிறான்.(9) அப்போது அவன், சங்குகளில் சிறந்த தன் புராதன சங்கை எடுத்துத் தன் வாயால் முழக்கி, பெருஞ்சக்தி வாய்ந்த அந்த அசுரனின் {ஹிரண்யாக்ஷனின்} உயிரை நடுங்கச் செய்தான்.(10)}[1]அசுரர்களுக்கு அச்சத்தை ஊட்டும் அந்தப் பயங்கரச் சங்க முழக்கத்தைக் கேட்டுத் தானவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் {பத்து திக்குகளிலும்} தப்பி ஓடினர்.(11) அப்போது, செந்நிறக் கண்களைக் கொண்ட அந்தப் பேரசுரன் ஹிரண்யாக்ஷன், கோபத்துடன், “இவன் யார்?” எனக் கேட்டு, பன்றியின் வடிவில் இருந்தவனும், தேவர்களின் துயரங்களை விலக்குபவனும், சக்கராயுத்துடன் அவன் முன்பு நின்றவனுமான நாராயணன் மீது தன் பார்வையைச் செலுத்தினான்.(12)
{புருஷர்களில் சிறந்தவனும், தேவர்களின் துயரத்தை அழிப்பவனுமான தலைவன் தன் முன்னே சங்கு சக்கர பாணியாக வராக வடிவில் நிற்பதை அவ்வசுரன் {ஹிரண்யாக்ஷன்} கண்டான்.(13) அசுரர்களைக் கொல்பவனான அவன் {வராகன்}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் மின்னுவதும், மழை தருவதுமான கரு நீல மேகம் போலச் சங்கு, சக்கரத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(14)}[2]அதன் பிறகு ஹிரண்யாக்ஷனும், பிற அசுரர்களும் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு நாராயணனுடன் போரிட்டனர்.(15) அந்த ஹரி, பெருஞ்சக்திவாய்ந்த தைத்தியர்களால் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்டாலும், ஒரு மலையைப் போலப் போர்க்களத்தில் இருந்து அசையாமல் நின்றான்.(16) அதன் பிறகு பெருஞ்சக்திவாய்ந்த ஹிரண்யாக்ஷன், பன்றி வடிவில் இருந்த வராஹனின் {நாராயணனின்} மார்பில் எரியும் சக்தி ஆயுதத்தை ஏவினான்.(17)
{அந்தச் சக்தி ஆயுதத்தின் ஒளியைக் கண்ட பிரம்மன்} ஆச்சரியத்தால் நிறைந்தான். பெருஞ்சக்திவாய்ந்த அந்தப் பன்றியானவன் {வராகன்}, தன் மீது விழப்போகும் அந்தச் சக்தி ஆயுத்தத்தைக் கண்டு,(18) பெருமுழக்கம் {ஹுங்காரம்} செய்து, அதைத் தரையில் வீழ்த்தினான். {இவ்வாறு அந்தச் சக்தியாயுதம் நொறுக்கப்பட்டதும், பிரம்மன், “நன்று” என்று சொன்னான்}.(19) அதன்பிறகு அந்தத் தலைவன், அசுரனால் தாக்கப்பட்ட போது, சூரியனைப் போன்ற தன் சக்கராயுதத்தைச் சுழற்றி,(20) அந்தத் தானவ மன்னன் மீது ஏவி, {சிறந்த காரணத்திற்காக அவனது தலையை} வீழ்த்தினான். வஜ்ரத்தால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் சிகரத்தைப் போல அந்தத் தைத்திய மன்னனின் தலை, சக்கரத்தால் வீழ்த்தப்பட்டுத் தரையில் விழுந்தது.(21) அவன் மரணமடைந்ததும் தைத்தியர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தவர்களாக அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(22) {சக்கரபாணியும், உலகங்களெங்கும் எதிர்ப்பில்லாதவனும், எதிர்ப்பற்ற, பயங்கரமான சக்கரத்தைத் தரித்தவனுமான அவன் {விஷ்ணு}, யுக முடிவில் தண்டத்துடன் கூடிய காலனைப் போல அந்தப் போர்க்களத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்}[3]” என்றார் {வைசம்பாயனர்}.(23)
வராஹபுராணம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 36-(இந்த்ரதீநாம் மோசநம் தேஷாமாதிபத்யலாபஷ்ச)-தேவர்கள் தங்கள் நிலைகளை அடைந்தது; ஹரியின் ஆணை; வராஹ புராண மகிமை…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “{புருஷோத்தமனான} ஹரி, இவ்வாறு அசுரர்கள் அனைவரையும் போரில் முறியடித்து, புரந்தரனையும், தேவர்கள் அனைவரையும் விடுவித்தான்.(1) தேவர்கள் அனைவரும் தங்கள் இயல்பான மனநிலையை மீண்டும் அடைந்து, புரந்தரனை முன்னிட்டுக் கொண்டு நாராயணனை அணுகினர்.(2)
தேவர்கள், “ஓ! தலைவா, {ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, விருப்பத்தையும், உன் கரங்களின் பலத்தையும் கொண்ட} உன் தயவால் நாங்கள் காலனின் வாயில் இருந்து விடுபட்டோம்.(3) அதிதியின் மகன்களான நாங்கள் உனக்காக என்ன செய்ய வேண்டும்? நாங்கள் உன் பாதங்களுக்குத் தொண்டாற்ற விரும்புகிறோம்” என்றனர்.(4)
தாமரைக் கண்களைக் கொண்டவனும், தேவர்களின் பகைவரைக் கொன்றவனுமான அந்தத் தலைவன் {ஹரி}, அவர்களின் இந்தச் சொற்களைக் கேட்டு பெரும் நிறைவடைந்து,(5) “நீங்கள் யாவரும் என்னால் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறங்கள் பலவற்றைப் பாதுகாப்பீராக.(6) வேள்விக் காணிக்கைகளில் உங்களுக்கு உரிமையுள்ளதால் என்னால் முன்பு நிறுவப்பட்டிருந்த விதிகளைக் கடைப்பிடிப்பீராக” என்றான் {பகவான்}.(7)
துந்துபி போன்ற குரலைக் கொண்ட அந்தத் தலைவன், தேவர்களிடம் இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் சகர்னிடம் {இந்திரனிடம்}, “நல்லோரிடமும், தீயோரிடமும் பாகுபாடற்ற முறையில் நீ நடந்து கொள்ள வேண்டும். {நல்லோருக்குத் தகுந்த சரியான வழியில் நீ உன் கடமையைச் செய்ய வேண்டும்}.(8) ஓ! தேவர்களின் மன்னா, விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வழங்கும் உன் உலகுக்குள் தவசிகள் நுழைய நீ எப்போதும் அனுமதிக்க வேண்டும்.(9) {வேள்விகள் செய்யும் எந்தப் பிராமணனும், க்ஷத்திரியனும், வைசியனும், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் சொர்க்கத்தைப் போன்ற அற்புதம் நிறைந்த உலகங்களை அடையட்டும்}. தேவர்களை வேள்விகளால் அமைதியடையச் செய்பவர்கள், அதற்குரிய பலன்களை அடையட்டும்.(10) நல்லோரும், அறவோரும் செழித்திருக்கட்டும், பாவிகள் அழிவடையட்டும். பல்வேறு நிலைகளில் {பல்வேறு ஆசிரமங்களைக் கடைப்பிடித்துத்} தொண்டாற்றும் அறம்சார்ந்த மக்கள் சொர்க்கத்தை வெல்லட்டும்.(11) வாய்மை நிறைந்தவர்களும், எளிமையானவர்களும், வீரர்களும், பொறாமையற்றவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்தின் பலன்களை அனுபவிக்கட்டும்.(12) அவதூறு செய்பவர்களும், காமாந்தகர்களும், பேராசைக்காரர்களும், தீயோரும், {பிராமணர்களுக்குத் தீங்கிழைப்போரும்}, நாத்திகர்களும் நரகம் செல்லட்டும்.(13) ஓ! தேவர்களின் மன்னா, நான் சொன்னவற்றை நீ பின்பற்றினால், நான் இருக்கும் வரை உன்னுடைய பகைவர்களால் உனக்குத் தீங்கிழைக்க முடியாது” என்றான்.(14)
சங்கு, சக்கர, கதாதாரியான அவன் இதைச் சொல்லிவிட்டு மறைந்தான். தேவர்கள் அனைவரும் பேராச்சரியத்தில் நிறைந்தனர்.(15) அவர்கள், வராஹனின் அற்புதமிக்கச் செயல்களைக் கண்டு, அந்த வராஹனை வணங்கிவிட்டுத் தேவலோகம் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(16){வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு தேவர்கள் தங்கள் தங்கள் உலகங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றி வாசவனை உலகங்கள் அனைத்தின் தலைவனாக நிறுவினர்.(17) தானவர்களிடம் இருந்து விடுபட்ட பூமாதேவி மீண்டும் தன் இயல்பான நிலையை அடைந்தாள். பூமியின் உறுதியற்ற தன்மைக்குப் பொறுப்பானவை மலைகளே என்பதை அறிந்த புரந்தரன், அந்த மலைகளை அதனதனுக்குரிய இடங்களில் நிறுவி, நூறு கூர்முனைகளைக் கொண்ட தன்னுடைய வஜ்ராயுதத்தால் அவற்றின் சிறகுகளை அறுத்தான்.(18,19) புத்தியுள்ள சக்ரன், (மேனையின் மூலம் இமயத்துக்குப் பிறந்த மகனான) மைநாகத்தைத் தவிர மற்ற மலைகள் அனைத்தின் சிறகுகளையும் அறுத்தான். தேவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டால் மைநாகமலைக்கு மட்டுமே சிறகுகள் எஞ்சியிருந்தன.(20)
இது புராதன வரலாறுகளில் {புராணங்களில்} விப்ரேந்திரனால் புகழப்படும் பரமாத்மாவான நாராயணனின் வராஹ அவதார விளக்கமாகும்.(21) இதையும், தொடக்கத்தில் இருந்து கேட்கப்பட்டுவருவதும், கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} சொல்லப்பட்டதுமான புனித ஞானத்தையும், தூய்மையற்றவர்கள், நன்றியற்றவர்கள், கொடூரர்கள் ஆகியோரிடம் சொல்லக்கூடாது.(22) ஓ! மன்னா, இழிந்தவர்கள், தாழ்ந்தவர்கள், ஆசானை வெறுப்பவர்கள், சீடர்களாக இல்லாதவர்கள், நன்றி மறந்தவர்கள் ஆகியோரிடமும் இதைச் சொல்லக்கூடாது.(23) நீண்ட வாழ்நாள், புகழ், நிலம் ஆகியவற்றை விரும்புகிறவர்களும், வெற்றியை விரும்புகிறவர்களும் தேவர்களின் வெற்றியைச் சொல்லும் இதை {வராஹ புராணத்தைக்} கேட்க வேண்டும்.(24)
புராதன வரலாற்றையும், வேதங்களையும் குறித்த இந்தக் கதை {கேட்போருக்கு} மங்கலமும், செழிப்பும் உண்டாவதை உறுதி செய்யும். உயிரினங்கள் அனைத்திற்கும் புனிதமான இந்தக் கதை வெற்றியையும் உறுதி செய்யும்.(25) ஓ! குரு குலத்தவனே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவ்வாறே நான் பரமாத்மாவின் வராஹ அவதாரத்தைக் கோட்பாட்டளவிலும் தொடர்ச்சியாகவும் உனக்குச் சொன்னேன்.(26) தேவர்களுக்காகவும், பித்ருக்களுக்காகவும் புனித வேள்விகளைச் செய்பவர்கள், ஆத்மாவின் ஆத்மாவும், நித்யனுமான விஷ்ணுவுக்காகவே அந்தந்த வேள்விகளைச் செய்கிறார்கள்.(27) ஓ! மன்னா, உலகின் புகலிடமும், தேவர்களின் புகலிடமும், சுயம்புவான பிரம்மனின் புகலிடமும், பிரம்மமேயான வேதங்களின் புகலிடமும், நாராயணனின் நல்லாத்மாவுமான வராஹ அவதாரத்தை வணங்குவோம்” என்றார் வைசம்பாயனர்}[2].(28)
நரசிம்ம அவதாரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 37-(ந்ருஸிம்ஹாவதாரம்)-அரிய வரங்களைப் பெற்ற ஹிரண்யகசிபு; நரசிங்க அவதாரம்; ஹிரண்யகசிபுவின் அரண்மனை வர்ணனை…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, நான் இதுவரை விஷ்ணுவின் வராக அவதாரத்தைக் குறித்து உனக்கு விளக்கிச் சொன்னேன். இனி அந்தத் தலைவன் {விஷ்ணு}, ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரசிங்க அவதாரத்தைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(1) முன்னர், கிருத யுகத்தில் தைத்திய குலத்தை நிறுவிய மன்னன் ஹிரண்யகசிபு பெருந்தவங்களைச் செய்து வந்தான்.(2) அவன் அசையாமல் இருக்கும் பொருளென ஐயாயிரத்து ஐநூறு {5500} ஆண்டுகள்[1] மௌன விரதம் நோற்று, நீருக்கடியில் வாழ்ந்து வந்தான்.(3) அவனுடைய தற்கட்டுப்பாடு, புலனடக்கம், ஓழுங்குமுறைகள் ஆகியவற்றில் பிரம்மன் பெரும் நிறைவடைந்தான்.(4)தலைவன் பிரம்மன், அன்னங்களால் இழுக்கப்படும் தன்னுடைய வெண் சூரியத் தேரில் அங்கே வந்தான்.(5) {ஆதித்யர்கள், வசுக்கள், சாத்யர்கள், மருத்துகள், தேவகணங்கள், ருத்திரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னர்கள் ஆகியோருடனும்,(6) திசைகள், துணைத்திசைகள், ஆறுகள், பெருங்கடல்கள், நட்சத்திரங்கள், கணங்கள், வானுலாவிகள், பெருங்கோள்கள்,(7) தேவர்கள், பிரம்மரிஷிகள், சித்தர்கள், சப்தரிஷிகள், புனிதப்பணிகளைச் செய்யும் ராஜரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோருடன் பிரம்மன் அங்கே வந்தான்.(8) அசைவனவற்றுக்கும், அசையாதனவற்றுக்கும் ஆசானும், மங்கலத் தலைவனுமான பிரம்மன், தேவகணங்களும், பிரம்மத்தை அறிந்தோரில் சிறந்தோரும் சூழ பின்வரும் சொற்களை அந்தத் தைத்தியனிடம் சொன்னான்.(9)}[2] அவன் அந்தத் தைத்திய மன்னனிடம் {ஹிரண்யகசிபுவிடம்}, “ஓ! உறுதியான நோன்புகள் நோற்றவனே, நீ என்னிடம் பற்றும், ஆர்வமும் கொண்டவனாக இருக்கிறாய். உன்னுடைய தவம், துறவு ஆகியவற்றில் நான் நிறைவடைந்திருக்கிறேன். உனக்கு நன்மை விளையட்டும். நீ விரும்பும் வரத்தை வேண்டுவாயாக” என்று கேட்டான்.(10)
அப்போது தானவத் தலைவன் ஹிரண்யகசிபு, மகிழ்ச்சியான இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும்,(11) “ஓ! தலைவா, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், பிசாசங்கள் ஆகியோரில் எவரும் என்னைக் கொல்லாதிருக்கட்டும்.(12) ரிஷிகள் கோபமடைந்து என்னைச் சபிக்காதிருக்கட்டும். {இதுவே என் தவத்திற்குத் தகுந்த வரமென நான் வேண்டுகிறேன்}.(13) ஆயுதம், மலை, மரம் ஆகியவை எவற்றினாலோ, உலர்ந்த, அல்லது ஈரமான பொருட்களாலோ எனக்கு அழிவு நேராதிருக்கட்டும்.(14) என் மரணம் சொர்க்கத்திலோ, பாதாளத்திலோ, வானத்திலோ, பகலிலோ, இரவிலோ நேராதிருக்கட்டும்.(15) தொண்டர்கள், பணியாட்கள், உற்றார் உறவினருடன் கூடிய என்னை உள்ளங்கையின் ஒரே அடியால் எவன் கொல்லவல்லவனோ அவனே எனக்கு மிருத்யுவாகட்டும்.(16) சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, நீர், வானம், நட்சத்திரங்கள், பத்துத் திக்குகள் ஆகியவற்றின் பணிகளை நானே மேற்கொள்வேனாக. நானே காமனும், குரோதனும், வருணனும், வாசவனும் {இந்திரனும்}, யமனும்,(17) குபேரனும், கிம்புருஷர்களின் மன்னனும் ஆவேனாக. போரில் என் முன்னால் பேராயுதங்கள் உடல்வடிவம் கொண்டு தோன்றட்டும்” என்றான் {ஹிரண்யகசிபு}.(18)
பிரம்மன், “ஓ! மகனே, அற்புதம் நிறைந்த இந்தத் தெய்வீக வரங்களை நான் உனக்குத் தருகிறேன். இந்த வரங்கள் மனிதர்கள் அடைவதற்கு அரிதானவை. நீ விரும்பும்பொருட்கள் அனைத்தையும் என் தயவால் நீ நிச்சயம் அடைவாய்” என்றான்”.(19)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பிரம்மன் இதைச் சொல்லிவிட்டு ஆகாய வழியில் {பிரம்ம ரிஷிகணங்கள் இருந்த} வைராஜ உலகத்திற்குச் சென்றான்.(20) இதன் பிறகு இந்த வரம் அருளப்பட்டதைக் கேள்விப்பட்ட தேவர்களும், நாகர்களும், கந்தர்வர்களும் {முனிவர்களுடன் கூடியவர்களாக} பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று,(21) “ஓ! தலைவா, இந்த வரத்தால் அந்த அசுரன் எங்களை ஒடுக்கப் போகிறான். அவனது அழிவுக்கு நீர் வழிவகுப்பீராக” என்று கேட்டனர்.(22)
{அனைத்து உயிரினங்களைப் படைத்தவனும், வேள்வி ஹவ்யகவ்யங்களையும், பித்ருக்களுக்கான ஹவ்யகவ்யகளையும் படைத்தவனும், வெளிப்படாதவனும், நித்தியனும்,(23) உயிரினங்களின் தலைவனுமான பிரம்மன்}, உலக உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை விளைவிப்பவையான அவர்களின் சொற்களைக் கேட்டு, {அந்த தேவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் இனிய சொற்களில்},(24) “ஓ! தேவர்களே, அவன் தன்னுடைய தவங்களின் பலன்களை அடைய வேண்டும். அவற்றை அவன் அனுபவித்த பிறகு, தலைவன் விஷ்ணு அவனைக் கொல்வான்” என்றான்.(25) தாமரையில் உதித்த அந்தத் தேவன் {பிரம்மன்} சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த தேவர்கள், தங்கள் தங்கள் உலகங்களுக்குத் திரும்பிச் சென்றனர்”.(26)
வைசம்பாயனர், “தைத்தியத் தலைவன் ஹிரண்யகசிபு தான் அடைந்த வரத்தால் உண்டான சக்தியில் செருக்கடைந்து உயிரினங்களை ஒடுக்கத் தொடங்கினான்.(27) பெருஞ்சக்திவாய்ந்தவனான அந்தத் தைத்தியன் ஆசிரமங்களில் வாழும் முனிவர்களுக்கும், வாய்மைநிறைந்தவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான பிராமணர்களுக்கும் தீங்கிழைத்தான்.(28) அவன், மூவுலகங்களிலும் இருந்த தேவர்கள் அனைவரையும் வென்று, அவர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சொர்க்கத்தில் வாழ்ந்திருந்தான்.(29) விதியால் தூண்டப்பட்டவனும், வரம் கொடுத்த செருக்கில் மிதந்தவனுமான அவன், வேள்விகளில் உள்ள உரிமையைத் தேவர்களிடம் இருந்து பறித்துத் தைத்தியர்களுக்குக் கொடுத்தான். {வேள்விகள் தைத்தியர்களின் பெயர்களிலேயே செய்யப்பட்டன}.(30) அப்போது ஆதித்யர்கள், சாத்யர்கள், விஷ்வர்கள், வசுக்கள், ருத்திரர்கள், {தேவகணங்கள், யக்ஷர்கள்} தேவரிஷிகள்,(31) பிராமணர்கள் ஆகியோர் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவனும், நித்தியனும், உலகால் துதிக்கப்படுபவனுமான விஷ்ணுவை அடைந்து அவனது புகலிடத்தை நாடினார்கள் {அவனைச் சரணடைந்தார்கள்}.(32)
தேவர்கள் {விஷ்ணுவிடம்}, “ஓ! நாராயணா, {ஐசுவரியங்களைக் கொண்ட தேவா}, தேவர்கள் உன் புகலிடத்தை நாடுகிறார்கள். தைத்தியத் தலைவன் ஹிரண்யகசிபுவைக் கொன்று நீ எங்களைப் பாதுகாப்பாயாக.(33) பாதுகாவலன் நீயே, பேராசான் நீயே, மஹாதேவன் நீயே. {பிரம்மனைப் போன்ற தேவர்களில் நீ எங்கள் பரமத்தலைவனாக இருக்கிறாய்.(34) ஓ! தாமரை இதழ்களைப் போன்று அகன்றிருக்கும் அழகிய விழிகளைக் கொண்டவனே, ஓ! பகைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் தலைவா,} பகைவரை அழித்து நண்பர்களை நிறைவடையச் செய்வாயாக. திதியின் சந்ததியைக் கொன்று எங்களுக்கு உதவுவாயாக.” என்று கேட்டனர்.(35,36)
விஷ்ணு, “தேவர்களே, உங்கள் அச்சத்தைக் கைவிடுங்கள் {பயம் வேண்டாம்}. உங்கள் பாதுகாப்புக்கு நான் உறுதி கூறுகிறேன் {அபயம் தந்தோம்}. நீங்கள் முன்பு போலவே தேவலோகத்தை விரைவில் அடைவீர்கள்.(37) வரத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருப்பவனும், தேவர்களாலும் கொல்லப்பட முடியாதவனுமான அந்தத் தானவ மன்னனையும், அவனது மக்களையும் நான் விரைவில் கொல்வேன்” என்றான்”.(38)
வைசம்பாயனர், “எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன், இதைச் சொல்லி தேவர்களை அனுப்பிவிட்டு, ஹிரண்யகசிபுவின் அழிவைச் சிந்தித்தான்.(39) {தலைவன் விஷ்ணு தாமதமேதும் செய்யாமல் இமய மலையின் சாரலுக்குச் சென்று, “எந்த வடிவை ஏற்று அந்த மஹாசுரனை (ஹிரண்யகசிபுவை) கொல்வது?(40) தேவர்களின் பகைவனைக் கொல்வதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று சிந்தித்தான். அதன் பிறகு விஷ்ணு, முன்னர் ஒருபோதும் தோன்றாத ஒரு வடிவை ஏற்றான்.(41) தைத்தியர்களைக் கொல்வதற்கு ஒருபோதும் காணாத நரசிம்ம வடிவை அவன் ஏற்றான். பெருஞ்சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட அவன், தன் துணைக்கு ஓங்காரத்தை எடுத்துக் கொண்டான்.(42) தாழ்வில்லாதவனும், பரமதேவனுமான தலைவன் விஷ்ணு, ஓங்காரத்தின் துணையுடன் ஹிரண்யகசிபுவின் அரண்மனைக்குச் சென்றான்.(43) அவன் காந்தியுடன் கூடிய சூரியனைப் போலவும், மற்றொரு சந்திரனைப் போலவும் தெரிந்தான். தலைவனின் பாதியுடல் மனிதனாகவும், மறுபாதி சிங்கத்தின் உடலாகவும் இருந்தது.(44) நரசிங்கத்தின் உடல்வடிவை ஏற்றுக் கொண்ட அவன், தன் கைகளை ஒன்றோடொன்று உரசினான். பாதி சிங்க உடலையும், பாதி மனித உடலையும் ஏற்றுச் சென்ற அவன், மனத்தின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவடையச் செய்வதும், பெரியதும், தெய்வீகமானதும், அழகானதும், மனத்தைக் கொள்ளையிடுவதுமான ஹிரண்யகசிபுவின் சபையைக் கண்டான்}.(45) நூறு யோஜனைகள் நீளமும், அதில் பாதி அளவு {ஐம்பது யோஜனைகள்} அகலமும் கொண்ட அந்தச் சபை பேரழகுடன் திகழ்ந்தது. {வானத்தில் ஐந்து யோஜனை நீளவல்லதாகவும் அஃது இருந்தது}.(46) அங்கே முதுமையோ, கவலையோ, களைப்போ இல்லாதிருந்தது. {அது நடுங்காமல் இருந்தது. அந்த இடம் நற்பேறு பெற்றதாகவும் மங்கலமானதாகவும் இருந்தது. அந்தச் சபா மண்டபம், காந்தியால் சுடர்விடுவதைப் போலத் தெரிந்த அழகிய மங்கல இருக்கைகளைக் கொண்டதாக இருந்தது.(47) விஷ்வகர்மனால் விதிக்கப்பட்ட அந்தச் சபாமண்டபம், உள்ளே நீர்த்தடாகங்களைக் கொண்டிருந்தது. மேலும் அது தெய்வீக ரத்தினங்களாலும் நிறைந்திருந்தது}.[3] அது பல்வேறு மலர்களாலும், சிறந்த இருக்கைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. {மலர்களையும், கனிகளையும் கொண்ட மரங்கள் அந்தச் சபாமண்டபத்தில் இருந்தன}” என்றார் வைசம்பாயனர்.(48)
அந்தச் சபாமண்டபத்தில் நீலம், வெள்ளை, கருப்பு, சிவப்பு நிறங்களில் விரிப்புகளும், மரம் போன்ற தோரணங்களும், நூற்றுக்கணக்கான மலர் தோரணங்களும் இருந்தன.(49) நீருண்ட வெண்மேகம், நீரில் அசைந்து மிதப்பதைப் போன்று அந்தச் சபாமண்டபம் காணப்பட்டது. அந்த அழகிய சபாமண்டபம், ஒளியுடன் மின்னும் தோற்றத்தில் அருளப்பட்ட இருக்கைகளுடன் இருந்தது. அந்தச் சபை காந்தியால் பளபளத்தது.(50) தெய்வீக மணங்கமழும் அந்தச் சபை காண்போர் கண்களைக் கொள்ளைக் கொண்டது. அந்தச் சபாமண்டபத்தை அடைந்தவர்களை இன்பதுன்பங்களும், குளிர்வெப்பமும், பசி, தாகம், களைப்பு ஆகியனவும் பீடிக்கவில்லை.(51) (சபா மண்டபத்தின் சுவர்களில்) பேரொளியுடன் திகழும் அழகிய சித்திரங்கள் பல தீட்டப்பட்டிருந்தன. அந்தச் சபாமண்டபத்தின் தூண்கள் நிரந்தரமாகக் குறைவேதும் ஏற்படாத தெய்வீக ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(52) சந்திரன், சூரியன், அக்னியின் ஒளியைத் தன்னொளியால் விஞ்சிய அந்தச் சபாமண்டபம், சூரியனைப் பழிப்பது போலச் சொர்க்கத்தின் பின்புறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(53) அந்தச் சபா மண்டபம், தெய்வீக விருப்பங்களையும், மனித விருப்பங்கள் அனைத்தையும் நிறைவடையச் செய்வதாக இருந்தது.(54) அந்தச் சபாமண்டபத்தில், மெல்லும் வகையிலும், மெல்லாமல் உண்ணும் வகையிலும் எல்லையற்ற வகைகளில் சுவைமிக்க உணவுகள் இருந்தன. எப்போதும் தெய்வீக மணங்கமழும் மலர்கள் மலர்வதும், கனிகள் கனிவதுமான மரங்கள் அங்கிருந்தன.(55) அங்கே கோடை காலத்தில் குளிர்ந்த நீரும், குளிர் காலத்தில் வெண்ணீரும் இருந்தன. மொட்டுகள், இளந்தளிர்கள், மலர்கள் ஆகியவற்றால் நிறைந்த பெருங்கிளைகளுடன் கூடிய மரங்கள் அங்கிருந்தன.(56)
அங்கே அந்தச் சபாமண்டபத்தில் ஏராளமான செடிகொடிகளால் மறைக்கப்பட்ட தடாகங்களையும், மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகிய ஆறுகளையும் அந்தத் தலைவன் {நரசிங்கம்} கண்டான்.(57) அந்த மிருகேந்திரன் {நரசிம்மம்}, நறுமணமிக்க மலர்களையும், சுவைமிக்கக் கனிகளையும் கொண்ட பல வகை மரங்களை அந்தச் சபாமண்டபத்தில் கண்டான்.(58) அந்தத் தலைவன், நீராடுவதற்கேற்ற நூற்றுக்கணக்கான புனிதத்தலங்களையும், குளிர்ந்த நீரைக் கொண்ட தடாகங்களையும் அங்கே கண்டான்.(59) அந்தத் தடாகங்களிலும், நீராடும் இடங்களிலும் வெண்தாமரைகளும், செந்தாமரைகளும், நீலோத்பல மலர்களும், அல்லி மலர்களும், நூறு இதழ்களைக் கொண்ட தாமரைகளும் இருந்தன.(60) அதில் தார்தராஷ்டிரப் பறவைகளும் (வாத்துகளும்), தேவர்களுக்குப் பிடித்தமான ராஜஹம்சங்களும் (பூநாரைகள்), காதம்பங்களும் (சாம்பல் நிற சிறகுகள் கொண்ட வாத்துகளும்), சக்கரவாகங்களும் (செங்கிளுவைகளும்), ஸாரஸங்களும் (நாரைகளும்), குரர (அன்றில்) பறவைகளும் இருந்தன.(61) எட்டு இதழ்களைக் கொண்ட வெண்தாமரை மலர்களைக் கொண்ட அந்தத் தடாகங்களில் பளிங்கு போன்ற தெளிந்த நீர் நிறைந்திருந்தது. அன்னங்கள் பாடும் ஒலிகளாலும், ஸாரிகப் பறவைகள் கூவும் ஒலிகளாலும் அந்தச் சூழல் நிறைந்திருந்தது.(62)
அங்கே இருந்த மரங்களின் நுனிகளில், நறுமணமிக்க மங்கல மலர்களைக் கொண்ட கொடிகள் நிறைந்திருப்பதைத் தலைவன் கண்டான்.(63) கேதகம் (தாழை), அசோகம், ஸரலம் (தேவதாரு), புந்நாகம், திலகம் (தழுதாரை), அர்ஜுனம் (மருதம்), சூதம் (மா), நீபம் (கடம்பு), நாகபுஷ்பம் (சண்பகம்), கதம்பம், பகுலம் (வகுளம்), தவம் (தாதிரி),(64) பிரியங்கு, பாடலி (பாதிரி), சால்மல்யம், ஹரித்ரகம் (சந்தனம்), சாலம் (குங்கிலியம்), தாலம் (பனை), பிரியாலம், சம்பகம் போன்ற மரங்கள் அங்கே மனத்துக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருந்தன.(65) இன்னும் பல மரங்கள் அந்தச் சபாமண்டபத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன. காட்டுத் தீயைப் போன்ற பிரகாசத்துடன் அந்த மரங்களின் வரிசைகள் பளபளத்தன.(66)
அஞ்சனத்தைப் போன்ற கரிய பருத்த தண்டுகள், நல்ல கிளைகள் ஆகியவற்றைக் கொண்ட நெடிய மரங்களும், அசோகம், வஞ்ஜுலகம் (இம்பூறல்) ஆகிய மரங்களும் அங்கே பளபளத்தன.(67) வரணம் (கூவிரம்), வத்ஸநாபம் (கருநாபி), பநஸம் (பலா), சந்தனம், நீலம் (கடம்பு), ஸுமநஸம், பீதம் (குசும்பா), ஆம்லம் (நெல்லி), அஷ்வதம் (பூவரசு), திந்துகம் (தும்பிலி),(68) பிராசீநாமலகம் {லூபிகம்), லோத்ரம், மல்லிகம் (கொகுடி), பத்ரம் (வச்சிரம்), தாரவம், ஆம்ராதகம் (புளிமா), ஜம்பூ (நாவல்), லகுசம் (புளிசக்கை), சைலவாலுகம் (சுக்கம்),(69) ஸர்ஜார்ஜுனம் {வெண்மருது), கந்துரவம், பதங்கம், குடஜம் (குண்டுமுல்லை), சிவந்த குரபகம் (செம்முள்ளி), நீபம் (கடம்பம்), ஆகரு,(70) கதம்பம், தாடிமம் (மாதுளை), பீஜபூரகம் (நார்த்தங்காய்), காலீயகம் {கஸ்தூரி மஞ்சள்), துகூலம், ஹிங்கவம், தைலபர்ணிகம் (சந்தனம்),(71) கர்ஜூரம் (ஈச்சை), நாலிகேரம் (தென்னை), பூகம் (பாக்கு), ஹரீதகி (நெல்லி), மதூகம் (இலுப்பை), ஸப்தபர்ணம் (ஏழிலைப்பாலை), வில்வம், பாராவதம் (தும்பிலி),(72) பநசம் {சீமைப்பலா), தமாலம் (பச்சிலை) ஆகிய மரங்கள் அங்கே இருந்தன. அந்த இடம் அடர்த்தியான இலைகளுடன், மலர்களுடனும், கனிகளுடனும் இருந்த பல வகைக் கொடிகளால் மறைக்கப்பட்டிருந்தது.(73) இவையும் தவிரப் பலவகை மலர்களையும், கனிகளையும் கொண்ட பல்வேறு வகைக் காட்டு மரங்கள் அந்தச் சபாமண்டபத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(74) சகோர பறவைகள் (கௌதாரிகள்), சதபத்ரங்கள், கோகிங்கள் (குயில்கள்), சாரிகப் பறவைகள் (மைனாக்கள்) ஆகியன, மலர்களும், கனிகளும் நிறைந்த அந்தப் பெரும் மரங்களில் அமர்ந்திருந்தன.(75) சிவப்பு, மஞ்சள், செம்பழுப்பு நிறங்களில் உள்ள பறவைகள் அந்த மரங்களின் நுனிகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தன” என்றார் {வைசம்பாயனர்}.(76)
ஹிரண்யகசிபுவின் சபா மண்டபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 37அ-(ஹிரண்யகஷிபுஸபாவர்ணநம்)-ஹரிண்யகசிபுவின் சபா மண்டப வர்ணனை; அங்கிருந்த அப்சரஸ்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்தச் சபாமண்டபத்தில் தைத்தியேந்திரனான தலைவன் ஹிரண்யகசிபு, நூறு முழம் சுற்றளவைக் கொண்ட ஒரு தெய்வீக அரியணையில் அமர்ந்திருந்தான்.(1) ஓ! மன்னா, சுடர்மிக்கக் காதுகுண்டலங்களை அணிந்த தலைவன் ஹிரண்யகசிபு, சூரியனைப் போன்று பிரகாசிக்கும் தெய்வீகமான அழகிய கூரையைக் கொண்ட அந்தச் சபாமண்டபத்தில் தலைமை தாங்கி நீண்ட காலம் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.(2) அந்தத் தைத்திய மன்னனைச் சுற்றிலும், புழுதியற்றதும், தெய்வீக நறுமணம் கமழ்வதுமான சுகமான தென்றல் மென்மையாக வீசிக் கொண்டிருந்தது.(3)
அங்கே அப்சரஸ்கள் சூழ தேவர்களும், கந்தர்வர்களும் தெய்வீகத் தாளத்தின் துணையுடன் தெய்வீகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.(4) விஷ்வாசி, பிரம்லோசை என்று புகழப்படும் ஸஹஜன்யை, திவ்யை, ஸௌரபேயை, ஸமீசி, புஞ்ஜிகஷ்தலை,(5) மிஷ்ரகேசி, ரம்யை, சித்திரசேனை, ஷுசிஸ்மிதை, சாருநேத்ரை, கிருதாசி, மேனகை, ஊர்வசி ஆகியோரும்,(6) பாடுவதிலும் ஆடுவதிலும் புகழ்பெற்ற இன்னும் நூற்றுக்கணக்கான அப்சரஸ்களும் மன்னன் ஹிரண்யகசிபுவுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(7) அற்புத ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டவனும், சுடர்மிக்கக் காதுகுண்டலங்களுடன் கூடியவனுமான ஹிரண்யகசிபு, ஆயிரக்கணக்கான பெண்களால் சூழப்பட்டிருந்தான்.(8)
பெருஞ்சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட தலைவன் ஹிரண்யகசிபு, அந்தச் சபாமண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, ஏற்கனவே வரங்களைப் பெற்ற திதியின் மகன்கள் அனைவரும் அங்கே அமர்ந்திருந்தனர்.(9) விரோசனன் மகனான பலி, பூமியை வென்ற நரகன், பிரஹ்லாதன், விப்ரசித்தி, மஹாசுரனான கவிஷ்டன்,(10) அஹந்தன், குரோதஹந்தன், ஸுமநன், ஸுமதி, கரன், கடோதரன், மஹாபார்ஷ்வன், கிரதநன், பிடரன்,(11) விஷ்வரூபன், ரூபன், விரூபன், மஹாத்யுதி, தசக்ரீவன் {ராவணன்}, வாலி, மேகவாஸன், மஹாரவன்,(12) கடாபன், விகடாபன், ஸம்ஹ்ராதன், இந்திரதாபநன் முதலிய தைத்திய, தானவர்கள் அனைவரும் சுடர்மிக்கக் காது குண்டலங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(13) அவர்கள் அனைவரும் மாலைகள் அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாகவும், தபங்கள் செய்த நல்ல வரலாற்றைக் கொண்டவர்களாகவும், வரங்களைப்பெற்றவர்களாகவும், வீரர்களாகவும், மரணமற்றவர்களாகவும் இருந்தனர்.(14)
தெய்வீக ஆடைகளையுடுத்தியிருந்த இந்தத் தைத்தியர்களும், இன்னும் பிற தானவர்கள் பலரும் தலைவனான ஹிரண்யகசிபுவுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(15) மாலைகளையும், ஆபரணங்களையும் அணிந்திருந்த அவர்கள், காணிக்கைகளால் சுடர்விடும் ஆகாய விமானங்கள் பலவற்றில் அந்தச் சபாமண்டபத்திற்கு வந்திருந்தனர்.(16) அவர்கள் விசித்திர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர், அழகிய ஆடைகளை உடுத்தியிருந்தனர், விசித்திர ஆயுதங்களையும், கேடயங்களையும் கொண்டிருந்தனர், விசித்திரமான கொடிக்கம்பங்களையும் வாகனங்களையும் கொண்டிருந்தனர்.(17) அவர்கள் தங்கள் தோள்களில் வானவில்களைப் போலிருந்த மிகச் சிறந்த தோள்வளைகளைப் பூண்டிருந்தனர். திதியின் மகன்களான அந்தத் தைத்தியர்கள் எப்போதும் தைத்திய மன்னனுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(18) அந்தத் தெய்வீக சபாமண்டபத்தில் மலைகளுக்கு ஒப்பாகத் திகழ்ந்த அவர்கள் அனைவரும் சூரியனைப் போன்று பளபளக்கும் பொன்மகுடங்களை அணிந்திருந்தனர்.(19)
அந்த மிருகாதிபன் {நரசிங்கன்}, பொன்னாலும் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அழகிய மேடையைக் கொண்டதும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளைக் கொண்டதும், யானைகளின் தந்தங்களாலான சாளரங்களைக் கொண்டதுமான அந்தச் சபாமண்டபத்தைக் கண்டான்.(20) அந்த மிருகாதிபன் {நரசிங்கன்}, பொன்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், சூரியனைப் போலப் பளபளக்கும் அசுரகணங்களால் தொண்டாற்றப்பட்டவனும், திதியின் மகனுமான அந்த ஹிரண்யகசிபுவைக் கண்டான்” என்றார் {வைசம்பாயனர்}[1].(21)
பிரஹலாதன் மொழிந்தது | பவிஷ்ய பர்வம் பகுதி – 38-(ந்ருஸிம்ஹம் த்ருஷ்ட்வா தாநவாநாம் விஸ்மய꞉ ப்ரஹ்லாதவாக்யம் ச)-நரசிங்கத்தின் தோற்றம்; நரசிம்மனை அடையாளம் கண்ட பிரஹலாதன், ஹிரண்யகசிபுவிடம் பேசியது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஹிரண்யகசிபுவும், தானவர்கள் அனைவரும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனை {நரசிம்மனைக்} காலச் சக்கரம் போலவும், சாம்பலால் மறைக்கப்பட்ட நெருப்பைப் போலவும் கண்ட போது,(1) சடாமுடியுடனும், சந்திரனைப் போன்ற பிரகாசத்துடனும் கூடிய அந்தச் சிங்க மனிதனின் {நரசிம்மத்தின்} வடிவ அழகு, பரந்திருக்கும் அந்தப் பெரிய சபா மண்டபத்தில் எங்கும் நிறைந்திருந்தது.(2)
சங்கையும், குந்தமலரையும், சந்திரனையும் போன்றிருந்த அந்த வடிவத்தைக் கண்ட தானவர்கள், “என்ன அற்புதமான வடிவம் இஃது” என்று ஆச்சரியமடைந்தனர்.(3) அந்த வடிவத்தின் பிரகாசத்தால் சுடப்பட்ட அந்தப் பேரான்மாக்கள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, காலதர்மத்தின்படி நரசிங்கத்தின் கண்களால் தூண்டப்பட்ட(4) ஹிரண்யகசிபுவின் வீர மகன் பிரஹலாதன், சிங்கத்தின் வடிவில் அங்கே வந்திருப்பது தலைவனே {விஷ்ணுவே} எனத் தன் தெய்வீகப் பார்வையில் கண்டான்.(5) {இதற்கு முன்பு ஏற்கப்படாத தங்க மலையைப் போன்ற உடலைத் தலைவன் ஏற்றிருப்பதைக் கண்ட தானவர்களும், ஹிரண்யகசிபுவும் ஆச்சரியம் அடைந்தனர்.(6)}
அப்போது, பிரஹ்லாதன், “ஓ! பெருந்தோள்களைக் கொண்ட மஹாராஜா, தைத்தியர்களில் மூத்தவரே, {ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே}, நாம் ஒருபோதும் சிங்கமனிதனின் {நரசிங்க} வடிவைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை.(7) இந்தத் தெய்வீக வடிவம் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! பயங்கரம் நிறைந்த இந்த வடிவம் தைத்தியர்களின் அழிவுக்காகவே தோன்றியிருப்பதாக என் மனம் சொல்கிறது(8). தேவர்கள், பெருங்கடல்கள், ஆறுகள், இமயம், {பாரியாத்ரம் மற்றும்} பிற மலை எல்லைகள்,(9) நட்சத்திரங்களுடன் கூடிய சந்திரன், ஆதித்யர்கள், அஷ்வினிகள், வருணன், {தனதம் (செல்வம்), வருணன்}, யமன், சசிபதியான சக்ரன் {இந்திரன்},(10) மருத்துகள், {தேவர்கள்}, ரிஷிகள், நாகர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பயங்கரர்களான ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும்(11) இவனுடைய {இந்த நரசிம்மனின்} உடலில் இருக்கின்றனர். பிரம்மனும், தலைவன் சிவனும் இவனது நெற்றியில் தோன்றுகின்றனர். படைப்புகளில் அசைவனவும், அசையாதனவும்,(12) நம்மோடு சேர்ந்த தைத்தியர்கள் அனைவரும், {நூற்றுக்கணக்கான ஆகாய விமானங்களுடன் கூடிய} இந்தச் சபாமண்டபமும்,(13) மூன்று உலகங்களும் பளிங்கில் பிரதிபலிக்கும் சந்திரனைப் போல இவனில் தெரிகின்றன.(14) {பிரஜாபதியான மஹாத்மா மனு, கிரஹங்கள், யோகங்கள், பூமி, வானம், உத்பாதங்கள், திருதி (நிறைவு), ஸ்மிருதி, ரஜஸ், சத்வ குணங்கள், தவம், தற்கட்டுப்பாடு,(15) உயரான்ம சனத்குமாரர், விஷ்வதேவர்கள், அப்சரஸ்கள், குரோதம், காமம், ஆணவம், மோஹம், பித்ருக்கள் ஆகியோர் அனைவரும் இந்த நரசிங்கத்தில் காணப்படுகின்றனர்.(16)” என்றான் {பிரஹலாதன்}.
தைத்திய மன்னனின் மகனும், நுண்ணறிவுமிக்கவனுமான பிரஹ்லாதன், இவ்வாறு சொல்லிவிட்டு சற்றே தலைகவிழ்ந்தவாறு, கிழக்குத் திக்கை நோக்கி தியானம் செய்யத் தொடங்கினான்” என்றார் {வைசம்பாயனர்}. (17)}[1]
தைத்திய நரசிம்மப் போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 38அ-(ந்ருஸிம்ஹஸ்யோபரி தைத்யாநாம் ஷஸ்த்ராஸ்த்ரபாத꞉)-ஹிரண்யகசிபு பயன்படுத்தி ஆயுதங்கள்; தானவ தைத்திய படைக்கும் நரசிங்கனுக்கும் இடையில் நடைபெற்ற போர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தானவர்களின் தலைவனான ஹிரண்யகசிபு, பிரஹ்லாதன் சொன்ன சொற்களைக் கேட்டு தானவகணங்களிடம்,(1) “இதுவரை காணப்படாத உடலைக் கொண்ட இந்த மிருகேந்திரனை {நரசிம்மனைப்} பிடிப்பீராக. உங்களுக்கு ஐயமேதும் ஏற்பட்டால் வனத்தில் திரிபவனான இவனைக் கொல்வீராக” என்றான்.(2)
இந்தச் சொற்களைக் கேட்ட தானவர்கள் அனைவரும் அந்த மிருகேந்திரனைச் சூழ்ந்து கொண்டு அவனை நடுக்கமடையச் செய்வதற்கு முயன்றனர்.(3) பெருஞ்சக்திவாய்ந்த அந்தச் சிங்கமானவன், காலனைப் போன்று வாயைத் திறந்து சிங்கமுழக்கம் செய்து அந்த அழகிய சபாமண்டபத்தைச் சிதறடித்தான்.(4)
சபாமண்டபம் நொறுக்கப்பட்டதைக் கண்ட ஹிரண்யகசிபு, கோபத்தால் எரியும் கண்களுடன் தானே அந்தச் சிங்கத்தை நோக்கி கணைகளை ஏவினான்.(5) ஆயுதங்கள் அனைத்திலும் சிறந்த தண்டமாஸ்த்திரம், பேரச்சத்தை விளைவிக்கும் மிகப் பயங்கரமான காலச்சக்கரம், விஷ்ணு சக்கரம்,(6) தர்மச்சக்கரம், வெல்லப்பட முடியாதது என்ற பெயரைக் கொண்ட மஹாசக்கரம், சக்கரமைந்தரம் {இந்திரச்சக்கரம்}, மிகப் பயங்கரமான ரிஷிசக்கரம்,(7) மூவுலகங்களின் பேரொலியைக் கொண்ட பிதாமஹனின் {பெரும்பாட்டனின்} சக்கரம், விசித்திர மின்னல், உலர்ந்த மின்னல், ஈர மின்னல்,(8) பயங்கரமான சூலம், கங்காலம் என்றழைக்கப்படும் முசலம், பிரம்மசிரம், பிரம்மாஸ்திரம்,(9) ஐஷிகமாஸ்த்திரம் {நாணல் ஆயுதம்}, ஐந்திராஸ்த்திரம் {இந்திரனின் ஆயுதம்}, ஆக்நேயம் {அக்னியின் ஆயுதம்}, சிசிரம் {குளிரச் செய்யும் ஆயுதம்}, வாயவ்யம் {காற்றாயுதம்}, மதனம், காபாலம் {மண்டையோட்டு ஆயுதம்}, கிங்கரம்,(10) சாபிரதிமம், ஒடுக்கப்பட முடியாத சக்தியாஸ்த்திரம், கிரௌஞ்சமாஸ்த்திரம், ஹயஷீரம் {குதிரைத்தலை ஆயுதம்}, சௌம்யாஸ்த்திரம்,(11) கட்டற்ற பைசாசமாஸ்த்திரம், சார்ப்பியமாஸ்த்திரம் {பாம்பு ஆயுதம்}, மோஹனாஸ்த்திரம் {மயக்கமடையச் செய்யும் ஆயுதம்}, ஸோஷணம் {மெலிவடையச் செய்யும் ஆயுதம்}, ஸம்தமனம் {வெப்பமடையச் செய்யும் ஆயுதம்}, விலாபனம் {அழச்செய்யும் ஆயுதம்},(12) ஜிரும்பணம் {கொட்டாவிடச் செய்யும் ஆயுதம்}, பிராபணம், மிகப் பயங்கரமான துவாஷ்ட்ரம், ஸுதாருணம், காலமுத்கரம், பெருஞ்சக்திவாய்ந்த ஆயுதமான க்ஷோபணம்,(13) சம்வர்த்தனம், மோஹனம் {மயக்கமடையச் செய்யும் ஆயுதம்}, மாயாதரம், காந்தர்வமாஸ்த்திரம், வாள்களின் ரத்தினமான நந்தகம்,(14) பிரஸ்வாபனம், பிரமதனம், ஆயுதங்களில் சிறந்த வாருணம், தடையில்லாமல் எங்கும் செல்லவல்ல பாசுபதம்(15) ஆகிய ஆயுதங்கள் அனைத்தையும் யஞ்ஜத்தில் ஊற்றப்படும் ஆகுதிகளைப் போல அந்த நரசிம்மனின் மீது ஹிரண்யகசிபு ஏவினான்.(16)
கோடை காலத்தில் எரியும் கதிர்களால் இமய மலையை மறைக்கும் விவஸ்வானை {சூரியனைப்} போல அந்த அசுரமன்னன் {ஹிரண்யகசிபு}, சுடர்மிக்க ஆயுதங்களால் அந்தச் சிங்கத்தை மறைத்தான்.(17) கோபம் எனும் காற்றால் வீசப்படும் பெருங்கடலாக இருந்த அந்தத் தைத்தியப்படை, பெருங்கடலில் மூழ்கும் மைநாக மலையைப் போல அந்தச் சிங்கத்தை மூழ்கடித்தது.(18) பிராசைகள் {கத்திகள்}, பாசங்கள் {கயிறுகள்}, சூலங்கள், கதாயுதங்கள், முசலங்கள், வஜ்ரங்கள், மின்னல், பாறைகள், பெரும் மரங்கள்,(19) முத்கரங்கள், கூடபாசங்கள், சூலங்கள், ஊகலங்கள் {மர தண்டங்கள்}, மலைகள், சதாக்னிகள், முட்களுடன் கூடிய தண்டங்கள், ஸுதாருணங்கள் {பயங்கரத் தண்டங்கள்}(20) ஆகியன அந்த ஹரியைக் கொல்வதற்காகச் சூழ்ந்திருந்த அனைவராலும் அவன் மீது வீசப்பட்டன. அந்த மஹாத்மாவுக்கு அவற்றினால் சிறு தீங்கும் நேரவில்லை.(21)
மஹேந்திரனின் வஜ்ராயுதத்துக்கு இணையான வேகம் கொண்ட தானவர்கள் பலர், தங்கள் கைகளில் பாசக்கயிறுகளுடனும், தயாராக இருந்த ஆயுதங்களுடனும், மூன்று தலை கொண்ட பன்னக மன்னர்களை {பாம்புகளைப்} போல அந்த நரசிங்கனைச் சூழ்ந்து நின்றனர்.(22) பொன்மாலைகளால் அங்கங்கள் அலங்கரிக்கப்பட்டவர்களும், கரங்களிலும், உடல்களிலும் பல்வேறு வகைக் கங்கணங்களை அணிந்திருந்தவர்களுமான அவர்கள், அகன்று விரிந்த சிறகுகளுடன்கூடிய அன்னப்பறவைகளின் வரிசையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(23) வாயு தேவனின் காந்தியைக் கொண்ட தானவர்கள் சிலர், கைகளில் கேயூரங்கள் அணிந்தவர்களாக ஒளிமிக்கச் சூரியனுக்கு இணையாக ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(24)
தானவர்களால் ஏவப்பட்ட பேராயுதங்களால் சூழப்பட்டிருந்தவன் {நரசிம்மன்}, ஒருகணம் ஒளிரும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டும், மறுகணம் மழை மேகங்களைப் போல இருளடர்ந்தும் இருந்தான்.(25) தைத்திய கணங்களின் படையானது பயங்கர ஆயுதங்களைப் பொழிந்த போது, ஒளிமிக்கவனான அந்தத் தலைவன் {நரசிம்மன்}, இமய மலையைப் போல அசையாமல் இருந்தான்.(26) சுடர்மிக்க நெருப்பைப் போன்ற ஒளியுடைய திதியின் மகன்களில் நரசிம்ம வடிவில் இருந்த தலைவனால் எரிக்கப்பட்டவர்கள், பெருங்காற்றால் பொங்கி அடங்கும் பெருங்கடலின் பேரலைகளைப் போல பேரச்சத்தால் உடல் நடுங்கி நின்றனர்.(27) கோபத்தால் அங்கங்கள் எரிந்த மஹாசுரர்கள், நூற்றுக்கணக்கான விற்களைப் பயன்படுத்திக் காலாக்னியைப் போல ஒளிரும் கணைச் சரங்களைப் பெரும் வேகத்துடன் ஏவினர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(28)
மாயை விலக்கிய நரசிம்மன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 38ஆ-ந்ருஸிம்ஹக்ருதோ தைத்யமாயாநிராஸ꞉)-போர் வர்ணனை; அசுரர்கள் செய்த மாயைகள்; அவற்றை விலக்கிய நரசிங்கன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “கழுதை போன்றவர்களும், கழுதை முகம் படைத்தவர்களும், மகரங்களையும், நஞ்சுமிக்கப் பாம்புகளையும் போன்றவர்களும், குரங்குகளையும், பன்றிகளையும் போன்ற முகம் கொண்டவர்களும்,(1) இளஞ்சூரியன், தூமகேது, சந்திரன், பிறைச் சந்திரன், சுடர்மிக்க நெருப்பு,(2) அன்னங்கள், சேவல்கள் போன்ற முகத்தைக் கொண்டவர்களும், பிணியால் பீடிக்கப்பட்ட முகங்களையும், அச்சந்தரும் முகங்களையும், ஐந்து முகங்களைக் கொண்டவர்களும், பாம்புகள், காகங்கள், கழுகுகள் போன்ற முகங்களைக் கொண்டவர்களும்,(3) மின்னல் போன்ற நாவுகளைக் கொண்டவர்களும், மூன்று தலைகளைக் கொண்டவர்களும், எரிகொள்ளிகளைப் போன்றும், பெரும் முதலை, நீர்யானை போன்ற முகங்களைக் கொண்டவர்களும், தங்கள் பலத்தில் செருக்கு கொண்டவர்களுமான தானவர்கள்,(4) போரில் கைலாச மலையைப் போல நெடிதுயர்ந்து நின்ற மிருகேந்திரனின் {நரசிம்மனின்} உடலில் கணைகளைப் பொழிந்தனர். எவராலும் கொல்லப்பட முடியாதவனான மிருகேந்திரனுக்கு அந்தக் கணைகள் துன்பத்தைத் தரவில்லை.(5)
இவ்வாறு பாம்புகளைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த கோபக்கார தானவர்கள், மீண்டும் அந்த மிருகேந்திரனின் உடலில் பயங்கரக் கணைகளைப் பொழிந்தனர்.(6) மிருகேந்திரன் மீது அந்தத் தானவர்கள் ஏவிய பயங்கரக் கணைகள் யாவும், மலைகளில் மறைந்து போகும் விட்டில் பூச்சிகளைப் போல வானத்தில் கரைந்தன.(7) கோபமடைந்த தைத்தியர்கள், எங்கும் சுடர்விட்ட தெய்வீக சக்கரங்களை அந்த மிருகேந்திரன் மீது ஏவினர்.(8) சூரியன், சந்திரன், யுக முடிவில் வானில் பளபளக்கும் கோள்கள் ஆகியவற்றைப் போன்ற சுடர்மிக்க அந்தச் சக்கரங்களால் வானம் முற்றாக மறைக்கப்பட்டது.(9) அந்தச் சக்கரங்கள், பயங்கர மேகங்களின் குடலுக்குள் நுழையும் சூரியன், சந்திரன், மற்றும் கோள்களைப் போல அந்த மிருகேந்திரனின் வாய்க்குள் நுழைந்து தங்கள் ஒளியை இழந்தன.(10) பேரான்மாவான மிருகேந்திரன், நெருப்பின் தழல்களைப் போலச் சுடர்விடும் அந்தச் சக்கரங்கள் அனைத்தையும் விழுங்கினான்.(11)
தைத்தியன் ஹிரண்யகசிபு, ஹுதாசனனின் {அக்னியின்} ஒளியைப் போலப் பயங்கரமாகச் சுடர்விடுவதும், வேகமாகச் செல்லவல்லதுமான சக்தி ஆயுதம் ஒன்றை மீண்டும் ஏவினான்.(12) சக்தி ஆயுதங்களில் சிறந்த அந்த ஆயுதம் தன்னை நோக்கி வருவதைக் கண்ட தலைவன் மிருகேந்தரன், பயங்கரமான ஹுங்காரம் செய்தபடியே அதை நொறுக்கினான்.(13) மிருகேந்திரனால் நொறுக்கப்பட்ட அந்தச் சக்தி ஆயுதம், தீப்பொறிகளுடன் வானில் இருந்து விழும் பெரும் எரிகொள்ளியைப் போல ஒளிர்ந்து கொண்டே பூமியில் விழுந்தது.(14) அவன் மீது ஏவப்பட்ட கணைச் சரங்கள், நீலோத்பல மலர்களால் ஆன மாலையைப் போலத் தொலைவில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(15) அவன் {நரசிங்கன்}, தான் விரும்பியபடியே முழக்கம் செய்து கொண்டும், தன் வீரத்தை வெளிப்படுத்திக் கொண்டும், துரும்புகளைப் பறக்கவிடும் கொடுங்காற்றைப் போல எளிதாக அந்த அசுரர்களின் படையை விரட்டினான்.(16)
அப்போது தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு}, மலைகளைப் போன்று பெரியவையும், மலைச் சிகரங்களைப் போல ஒளிமிக்கவையுமான பாறைகளை வானத்தில் இருந்து மழையாகப் பொழிந்தான்.(17) அந்தப் பாறைகள் அந்தச் சிங்கத்தின் பேருடலில் விழுந்ததும், பத்துத் திக்குகளிலும் சிதறிப் போகும் விட்டில் பூச்சிகளைப் போலச் சிதறின.(18) ஓ! பகைவரை ஒடுக்குபவனே, திதியின் மகன்கள், நீருண்ட மேகங்கள் மழையைப் பொழிந்து மலையை மறைப்பதைப் போலப் பாறைகளால் அந்தச் சிங்கத்தை மறைத்தனர்.(19) பெருங்கடலால் மலையை அசைக்க முடியாததைப் போலவும், பெரும் வேகம் கொண்டவனானாலும் வலிமைமிக்கவர்களில் சிறந்தவனை அசைக்க முடியாததைப் போலவும் உறுதியாக நின்று கொண்டிருந்த அந்தத் தலைவனை அவற்றால் அசைக்க முடியவில்லை.(20)
பாறை மழை அழிக்கப்பட்டபோது, எங்கும் பரவக்கூடியதுமான நீர் மழையானது அங்கே கணைகளைப் போல அடர்த்தியாகப் பொழிந்தது.(21) பெரும் வேகம் கொண்டவையும், நீராலானவையுமான ஆயிரக்கணக்கான கணைகள் திசைகளிலும், துணைத்திசைகளிலும் பரவி வானத்தை மறைத்தன.(22) நீர்மழையாலும், வேகமாக வீசும் காற்றாலும், பெரும் மழையாலும் எவரும் எதையும் அறிய முடியாத நிலை தோன்றியது.(23) வானம், பூமி எங்கிலும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருந்த மழைத்துளிகளால் பூமியில் விழுந்த பிறகும் அவனைத் தீண்ட முடியவில்லை.(24) மழை வெளியே பொழிந்து கொண்டிருந்தது. நீருண்ட மேகங்களால், மிருகேந்திரனின் வடிவில் நின்று கொண்டிருந்த தலைவன் மீது அந்த மாயப் போரில் மழையைப் பொழிய முடியவில்லை.(25)
ஆரவாரமாகப் பொழிந்த பாறை மழை அழிக்கப்பட்டு, நீர் மழையும் வற்றிய பிறகு, நெருப்பைப் போன்றும், காற்றைப் போன்றும் எங்கும் தோன்றும் மாயையைத் தானவர்கள் உண்டாக்கினர்.(26) எரியும் தழல் பொதிகள் சுடர்விட்டுக் கொண்டே வானில் இருந்து பெரும் வேகத்துடன் எங்கும் விழுந்தன.(27) உயரான்மாவும், பேரொளி படைத்தவனுமான தைத்தேந்திரனால் {ஹிரண்யகசிபுவால்} இவ்வாறு உண்டாக்கப்பட்ட அந்நெருப்பால் அளவற்ற பேரொளியைக் கொண்டவனை எரிக்க இயலவில்லை.(28) அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான இந்திரன், நீருண்ட மேகங்களைக் கொண்டு நீராலான பெருமழையைப் பொழியச் செய்து அந்த நெருப்பை அணைத்தான்.(29)
இவ்வாறு மாயை அழிக்கப்பட்டபோது, அந்தத் தானவன் {ஹிரண்யகசிபு}, போர்க்களமெங்கும் பயங்கரமான காரிருளை உண்டாக்கினான்.(30) உலகம் இருளால் சூழப்பட்டு, தைத்தியர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்தபோது, நரசிங்கன் தன்னொளியால் சூரியனைப் போல ஒளிர்ந்தான்.(31) திரிகூட மலையில் மூவழிகளில் பாயும் கங்கையைப் போலப் போர்க்களத்தில் நிற்கும் தலைவனின் நெற்றி சுருங்கி மூன்று கோடுகளை வெளிப்படுத்துவதைத் தானவர்கள் கண்டனர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(32)
ஹிரண்யகசிபுவின் வல்லமை | பவிஷ்ய பர்வம் பகுதி – 38இ-(ஹிரண்யகஷிபோ꞉ பராக்ரம꞉)ஹிரண்யகசிபுவின் ஆற்றல் விளக்கம்; அவனால் நடுக்கமடைந்த ஆறுகள், மலைகள், தேசங்கள் ஆகியவற்றின் பெயர்கள்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மாயைகள் அனைத்தும் அழிக்கப்பட்ட பிறகு, திதியின் மகன்கள் அனைவரும் நொந்து போனவர்களாக ஹிரண்யகசிபுவின் புகலிடத்தை நாடினார்கள்.(1) அப்போது ஹிரண்யகசிபு, எரியும் கோபத்துடனும், மகிமையில் சுழன்று கொண்டும் மேதினியை {பூமியை} நடுங்கச் செய்தான்.(2)
நீர் நிறைந்த பெருங்கடல்கள் அனைத்தும் இதனால் கலக்கமடைந்தன. காடுகளுடனும், காட்டு மரங்களுடன் கூடிய மலைக்ள அனைத்தும் நடுங்கின.(3) அந்தத் தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு} கோபமடைந்த போது, உலகம் இருண்டது. எங்கும் இருள் நிறைந்ததால் எதையும் உணரமுடியாத நிலை உண்டானது.(4) ஆவஹம், பிரவஹம், அசையும் விவஹம், பராவஹம், ஸம்வஹம், பெருஞ்சக்திவாய்ந்த உத்வஹம்,(5) மங்கலமான பரிவஹம் என்ற ஏழு காற்றுகளும் {வாயுக்களும்} வானில் அசைந்து கலக்கமடைந்து அச்சக்குறியீடுகளை வெளியிடத் தொடங்கின.(6) உலகங்கள் அனைத்தின் வீழ்ச்சியில் வெளிப்படும் கோள்கள் மகிழ்ச்சியுடன் வானில் சுகமாக நகர்வது தென்பட்டது.(7) (தேவையான சேர்க்கையில்லாத) யோகமற்ற நட்சத்திரங்களுடன் சந்திரன் கூடினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, கோள்களுடனும், நட்சத்திரங்கள் அனைத்துடனும் வானம் சுடர்விடத் தொடங்கியது.(8)
நாளின் தலைவனான சூரியன் வானில் ஒளியிழந்திருந்தான். தலையற்ற கரிய பேருடல் ஒன்று வானில் தென்பட்டது.(9) சூரியன் அச்சந்தரும் வகையில் கரிய புகையை வெளியிட்டான். வானில் உள்ள தலைவன் சூரியன் வெப்பமடையத் தொடங்கி, ஒவ்வொரு கணமும் (உலகைச்) சுட்டெரிக்கத் தொடங்கினான்.(10) பிறகு, புகையால் நிறைந்த பயங்கரமான சூரியர்கள் எழுவர் வானில் எழுந்தனர். வானில் சந்திரனுடைய தலைக்கு மேல் கோள்கள் தங்கின.(11) சுக்கிரன் (வெள்ளி), பிருஹஸ்பதி (வியாழன்) ஆகியோர் {ஆகிய கோள்கள்) இடப்பக்கமும், வலப்பக்கமும் தங்கினர். செஞ்சூரியனுக்கு இணையான ஒளி பொருந்திய சனி, லோஹிதாங்கன் (செவ்வுடல் படைத்த செவ்வாய்) ஆகியோர் பின் தொடர்ந்தனர்.(12) யுகத்தை மாற்றுபவையான பயங்கரக்கோள்கள், வானில் ஒன்றாகச் சேர்ந்து நகர்ந்து (மேரு மலையின்) தங்கச் சிகரங்களெனும் கோட்டைகளுக்குள் நுழைந்தன.(13) ஏழு கோள்களால் சூழப்பட்ட சந்திரன், அசைவன, அசையாதனவற்றை அழிக்க (அழிவுக்கு வழிவகுக்க) ரோஹிணியை மதிக்காமல் வேறு நட்சத்திரங்களுடன் சேர்ந்தான்.(14) ராஹுவால் பீடிக்கப்பட்ட சந்திரன் எரிகொள்ளிகளால் வதைக்கப்பட்டான். சந்திரனுக்குள் நுழையும் சுடர்மிக்க எரிகொள்ளிகளின் காட்சி பயங்கரத்தை ஏற்படுத்தியது.(15) தேவர்களின் தலைவன் (இந்திரன்) வானில் இருந்து குருதி மழையைப் பொழிந்தான். வானில் எரிகொள்ளிகள் மின்னலைப் போல மினுமினுத்தன.(16)
மரங்கள் அனைத்தும் பருவமில்லாத காலத்தில் மலரத் தொடங்கி, கனிகளை விளைவித்தன. தைத்தியர்களின் அழிவை வெளிப்படுத்தும் வகையில் செடிகொடிகள் கனிநிறைந்திருந்தன.(17) கனிகள், கனிகளில் விளைந்தன, மலர்கள் மலர்களில் மலர்ந்தன. தேவர்கள் அனைவரின் சிலைகளும் தங்கள் கண் இமைகளைத் திறந்து, மூடி, சிரித்து, உரத்த குரலுடன் கதறி, யுக வீழ்ச்சியைக் குறிக்கும் வகையில் புகைந்து, ஒளிவீசின.(18,19) கிராமங்கள் காடுகளுடன் கலந்தன. அந்த மிருகேந்திரன் {நரசிம்மன்} அணுகியபோது விலங்குகளும், பறவைகளும் பேரச்சம் தரும் ஒலிகளை வெளியிட்டன.(20) ஆறுகள் எதிர் திசைகளில் பாய்ந்தன, உலகத்தில் வீழ்ச்சியை உண்டாக்கும் சூரியன் மதியத்தை அடைந்தபோது, நீராதாரங்கள் புழுதியடைந்தன.(21) செம்புழுதியால் கலந்த திசைகள் ஒளிவீசவில்லை. வழிபாட்டுக்குரிய மூலிகைகள், அனைத்து வகை வழிபாடுகளையும் இழந்தன.(22) காற்றானது, அடித்து, பிளந்து, தள்ளி வேகமாக வீசியது. அப்போது உயிரினங்கள் அனைத்தும் நிழலற்றவையாகின.(23)
உலகில் வீழ்ச்சியை விளைவிக்கும் சூரியன் மதியத்தை அடைந்தபோது, தைத்தியன் ஹரிண்யகசிபுவுடைய வசிப்பிடத்தின் உச்சியில்(24) இருந்த ஆயுதக்கிடங்கிலும், கருவூலத்திலும் தேனீக்கள் தங்கள் கூட்டை அமைத்தன. அதேபோல், ஆயுதக்கிடங்கில் புகையும் தென்பட்டது.(25) பெரும் எரிகொள்ளிகள் விழுவதைக் கண்ட ஹிரண்யகசிபு, தன்னுடைய தலைமை புரோஹிதரான சுக்ரரிடம் பின் வரும் சொற்களைச் சொன்னான்.(26)
ஹிரண்யகசிபு, “ஓ! தலைவரே, இந்தப் பெருங்கொள்ளிகள் விழுவதற்கான பொருளென்ன? இதன் பொருளைக் கேட்க நான் பேராவல் கொண்டுள்ளேன்” என்றான்.(27)
சுக்கிரர், “ஓ! மன்னா, ஓ! மஹாசுரா, இந்தப் பெரும் எரிகொள்ளிகள் பேரச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீழ்வதன் பொருளைச் சொல்கிறேன், என் சொற்களைக் கவனமாகக் கேட்பாயாக. (28) ஓ! மன்னா, எந்த மன்னனின் தேசத்தில் இவை (எரிகொள்ளிகளின் வீழ்ச்சி) காணப்படுமோ, அந்தத் தேசம் காணாமல் போகும், அதன் மன்னன் கொல்லப்படுவான்.(29) அனைத்தும் அழியும்போது உன் புத்தியால் அதை உறுதிசெய்வாயாக. உடனே பேரச்சம் விளையும். இதில் ஐயமேதும் இல்லை” என்றார்.(30)
சுக்கிரர் இவ்வாறே ஹிரண்யகசிபுவிடன் சொன்னார். தைத்தியேந்திரனுக்குத் தன் நல்வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு சுக்கிரர் தன் இல்லம் திரும்பினார். சுக்கிரர் சென்ற பிறகு, அந்தத் தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு} சிறிது நேரம் தியானித்தான்.(31) பெருந்துயர ஆன்மாவைக் கொண்ட அவன், தலைவன் பிரம்மனின் சொற்களை நினைவுகூர்ந்தபடியே சிறிது நேரம் அமர்ந்தான். “அசுரர்களின் அழிவுக்காகவும், தேவர்களின் வெற்றிக்காகவும் பலவகைப்பட்ட பயங்கர எரிகொள்ளிகள், அச்சந்தரும் வகையில் வீழ்வது காணப்படும்.(32) தைத்தியேந்திரர்களின் அழிவுக்காகக் காலத்தால் அமைக்கப்படும் இன்னும் பயங்கர எரிகொள்ளிகளின் வீழ்ச்சிகளும் காணப்படும்” {என்று ஹிரண்யகசிபுவிடம் முன்னர்ச் சொல்லியிருந்தான் பிரம்மன்}.(33)
அப்போது ஹிரண்யகசிபு விரைவாக ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, பெரும் வேகத்துடன் விரைந்து தரணியை {பூமியை} நடுங்கச் செய்தான்.(34) தைத்தியன் ஹிரண்யகசிபு, தன் தமையன் (ஹிரண்யாக்ஷன்) கோபத்தில் உதடுகளைக் கடித்தபடி வராஹனைக் குலுக்கியதைப் போலப் பூமியை நடுங்கச் செய்தான்.(35) பேரான்மாவான அந்தத் தைத்தியேந்திரன் (ஹிரண்யகசிபு) பூமியை நடுங்கச் செய்தபோது, அச்சத்தால் பீதியடைந்த பெரும்பாம்புகள் மலைகளை விட்டுத் தப்பி ஓடின.(36) நான்கு தலை, ஐந்து தலை, ஏழு தலை கொண்ட பெரும்பாம்புகள் தங்கள் வாய்களில் நஞ்சுமிக்கத் தழல்களை வெளியிட்டு நெருப்பைக் கக்கின.(37) வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், ஏலாபத்திரன், காளியன், வீரியவானான மஹாபத்மன் ஆகியோரும், ஆயிரந்தலைகளையும், பொன்தாலத்தைக் கொடியாகக் கொண்டவனும், பாம்புகளின் தலைவனும், பெரும்நாகனும், எல்லையற்றவனும், உலகைப் பாதுகாப்பவனும், நடுக்கமடையாதவனுமான சேஷனும் கூட (ஹிரண்யகசிபுவால்) நடுக்கத்தை அடைந்தனர்.(38,39) பூமியைச் சுமக்கும் மலைகளும், நீரைத் தாங்கும் பிரகாசமிக்க மலைகளும் கூடக் கோபமடைந்த அந்தத் தைத்தியனால் நடுக்கமடைந்தன.(40)
பாதாளத்தில் பாய்வதும், பாம்புகளின் ஒளியை சுமப்பதும், நடுங்கச் செய்ய அரிதானதுமான மங்கல நீர்நிலையும் திடீரெனக் கோபமடைந்தது. பாகீரதி {கங்கை} ஆறும், சரயுவும், கௌசிகியும்,(41,42) யமுனை, காவேரி, கிருஷ்ணை, வேணை, ஸுவேணை, நற்பேறுபெற்ற ஆறான கோதாவரி,(43) சர்மண்வதி ஆகியனவும், மேகல மலையில் தோன்றும் ஆறும், ரத்தினம் போன்று தூய்மையான நீரைக் கொண்டதும், ஆறுகளின் தலைவனுமான சிந்து,(44) நல்ல பிறப்பிடத்துடன் கூடிய நீரைக் கொண்ட நர்மதை, வேத்ரவதி, பசுக்கொட்டில்கள் பலவற்றால் நிறைந்த கரைகளைக் கொண்ட கோமதி, முழுமையாகப் பாயும் சரஸ்வதி,(45) மஹீ, காலநதி, புனித நீரைக் கொண்ட தமசை, சிதை, செக்ஷுமதி, தேவிகை, மஹாநதி ஆகிய ஆறுகளும்,(46) ரத்தினங்களால் நிறைந்ததும், அனைத்து வகை ரத்தினங்களும் பளபளப்பதுமான ஜம்பூத்வீபம் {நாவலந்தீவு}, பொன்னால் அலங்கரிக்கப்பட்ட சுவர்ணகூடக மலை ஆகியன அனைத்தும் அந்தத் தைத்தியனால் நடுக்கமடைந்தன.(47)
மலைகளாலும், காடுகளாலும் அலங்கரிக்கப்பட்ட லோஹித்யமெனும் பேராறு, கௌசிகாரண்யம் என்ற நகரம், வெள்ளி நிறைந்த திரவிடம் என்ற இடம்,(48) பெரும் நிலமான மாகதம், அங்கம், வங்கம், சுஹ்மம், மல்லம், விதேஹம், மாளவம், காசி, கோசலம்,(49) பொன்னிறம் கொண்ட வைனதேயனின் புவனமும் {கருடனின் நிலமும்} ஹிரண்யகசிபுவால் நடுக்கமடைந்தன. சிகரத்தின் வடிவில் விஷ்வகர்மனால் அமைக்கப்பட்ட கைலாச மலை,(50) குருதியின் நிறத்திலான நீரைக் கொண்டதும், பெரும் வேகத்தில் அசைவதும், லௌஹித்யம் என்ற பெயரைக் கொண்டதுமான பெருங்கடலும், வெண்மேகம் போன்ற வண்ணத்தில் நீரைக் கொண்ட பாற்கடலும்,(51) பாம்புகளாலும், பறவைகளாலும் தொண்டாற்றப்படும் மங்கலமான பொன் பீடங்களையும், நூறு யோஜனை உயரத்தையும் கொண்ட உதய மலை,(52) முழுமையாகப் பொன்னாலானவையும், சூரியனைப் போலப் பிரகாசிப்பவையும், மலரும் சாலம், பனை, தமாலம், கர்ணிகாரம் போன்ற மரங்களைக் கொண்டவையுமான மலைகள்,(53) அனைத்து வகைத் தாதுக்களையும் கொண்ட அயோமுகம் என்ற பெரிய மலை, வெண்மலர்கள் மலர்ந்த தமால மரக்காடுகளின் மணம் நிறைந்ததும், மங்கலமானதுமான மலய மலை ஆகியவையும்,(54) ஸுராஷ்ட்ரம், ஸுபாஹ்லீகம், ஷூரம், ஆபீரம், போஜம், பாண்டியம், வங்கம், கலிங்கம், தாமரலிப்தகம், ஆந்திரம், புண்டரம், வாமுசூடம், கேரளம் ஆகியனவும், தேவகணங்களும், அப்சரஸ்களும் நடுக்கமடைந்தனர்.(56)
நீண்ட காலத்திற்கு முன்பு படைக்கப்பட்டதும், எவராலும் அடைய முடியாததும், மனத்தைக் கொள்ளை கொள்வதும் சித்தர்கள், சாரணர்களாலும், அப்சரஸ்களாலும் தொண்டாற்றப்படுவதும், விசித்திர பாம்புகள், பறவைகள், மலர்ந்த செடிகொடிகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்டதும், பொன்னாலான சிகரங்களைக் கொண்டதுமான அகஸ்திய புவனமும் {அகஸ்தியரின் நிலமும்} அவ்வாறே நடுங்கியது.(57,58) செல்வம் நிறைந்ததும், காண்பதற்கு இனியதும், சந்திரனையும், சூரியனையும் துணையாகக் கொண்டு கடலைப் பிளந்து எழுந்ததும், பெருஞ்சிகரங்களால் ஒளிர்ந்ததும், வானத்தைத் தீண்டுவதும், சூரிய, சந்திர கதிர்களால் ஒளிரும் சிகரங்களைக் கொண்டதும், பெருங்கடலின் நீரால் சூழப்பட்டதுமான புஷ்படக மலையும் அவ்வாறே நடுங்கியது.(59,60) வானில் இருந்து இடிகளை வாங்கிக் கொள்வதும், மலைகளில் சிறந்ததும், நூறு யோஜனை உயரம் கொண்டதும், மங்கலமானதுமான வித்யுத்வான் மலையும் அவ்வாறே நடுங்கியது.(61)
மங்கலமான ரிஷபர்கள் வாழும் ரிஷப மலையும், அகஸ்திய முனிவரின் வசிப்பிடம் இருக்கும் குஞ்சர மலையும்,(62) வெல்லப்படமுடியாத விஷாகரத்யம் என்ற பெயரைக் கொண்ட நகரமும், நாகர்களின் வசிப்பிடமான போகவதி நகரமும் அந்தத் தைத்தியேந்திரனால் (ஹிரண்யகசிபுவால்) நடுக்கமடைந்தன.(63) மஹாமேக மலை, பாரியாத்ர மலை, சக்ரவான் மலை, வராஹ மலை,(64) மங்கலமானதும், தீய ஆன்மாவான தானவன் நரகன் வாழும் பொன்னகரமான பிராக்ஜோதிஷபுரம்,(65) மேகங்கள் முழங்கும் சிறந்த மலையும், அறுபதாயிரம் மலைகளைக் கொண்டதுமான மேரு மலை,(66) பாலசூரியனைப் போல ஒளிர்வதும், மங்கலமானதும், புனிதமானதும், சொர்க்கத்திற்கே உயர்ந்து செல்வதும், மலைகளின் மன்னனுமான பெரிய மஹேந்திர மலை,(67) ஹேமசிருங்கமெனும் பெரும் மலை, மேகசக மலை, அசைக்க அரிதான கைலாச மலை ஆகியனவும் அந்தத் தானவேந்திரனால் (ஹிரண்யகசிபுவால்) நடுக்கமடைந்தன.(68)
யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் வாழும் குகைகளைக் கொண்டவையும், மங்கலமானவையும் எப்போதும் மலரும் மரங்களைக் கொண்டவையுமான மலைகள்,(69) பொன்தாமரைகளால் மறைக்கப்பட்ட வைகானச தடாகம், அன்னங்களால் தொண்டாற்றப்படும் மானஸத் தடாகம் ஆகியவையும் அந்த அசுரனால் நடுக்கமடைந்தன.(70) விஷ்ருங்க மலை, ஆறுகளில் சிறந்த குமாரி ஆறு, பனியைப் போன்று வெண்மையான மந்தர மலை,(71) உஷீரபீஜ மலை, மலைகளின் மன்னனான ருத்ரோபாஷ்ட மலை, பிரஜாபதியின் வசிப்பிடமான புஷ்கர மலை,(72) தேவாவிருத மலை, வாலுக மலை, கிரௌஞ்ச மலை, சப்தரிஷி மலை, தூமவர்ண மலை,(73) ஆகிய மலைகள், தேசங்கள், ஜனபதங்கள் {சமூகங்கள்}, ஆறுகள், பெருங்கடல்கள் என அனைத்தும் அந்தத் தானவேந்திரனால் {ஹிரண்யகசிபுவால்} நடுக்கமடைந்தன.(74) பூமியின் மகனான கபிலரும், வியாகிராக்ஷனும் நடுக்கமடைந்தனர். வானுலாவிகளும், பாதாள உலகில் வசிக்கும் இரவுலாவிகளும்,(75) மேகநாதன், அங்குஷாயுதன், பீமவேகன் உள்ளிட்ட பயங்கரப் பூதகணங்களும் அவ்வாறே {அந்த தைத்தியன் ஹிரண்யகசிபுவால்} நடுக்கமடைந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(76)
ஹிரண்யகசிபு வதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 39-(ஹிரண்யகஷிபோர்வதோ ப்ரஹ்மக்ருதா ந்ருஸிம்ஹஸ்துதிஷ்ச )-ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மன்; பிரம்மன் சொன்ன நரசிம்ம துதி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஆதித்யர்கள், சாத்யர்கள், விஷ்வர்கள், மருத்துகள், ருத்திரர்கள், தேவர்கள், மஹாத்மாக்கள், பெருஞ்சக்திவாய்ந்த வசுக்கள்,(1) தேவர்கள் ஆகியோர் அனைவரும் உலகின் வீழ்ச்சியால் அச்சமடைந்து, ஒடுக்கப்பட்டவர்களாகச் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த மிருகேந்திரனிடம் சென்று,(2) “ஓ! தேவா, உலகை அழிப்பவனும், ஒழுக்கங்கொண்டவனும், தீமைகளைச் செய்பவனுமான இந்தத் திதியின் மகனையும் {ஹிரண்யகசிபு}, அசுரர்கள் அனைவரையும் கொல்வாயாக.(3) ஓ! தைத்தியர்களை அழிப்பவனே, இந்தத் தைத்தியர்கள் அனைவரையும் கொல்பவன் நீயே. வேறு யாரும் இல்லை. உலகின் நலத்திற்காகவும், நன்மைக்காகவும் இவர்களை அழிப்பாயாக.(4) உலகங்கள் அனைத்தின் ஆசான் நீயே. பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, இந்திரனும் நீயே. உண்மையில், கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உன்னையன்றி வேறு புகலிடம் ஏதும் கிடையாது” என்றனர்.(5)
தொடக்கத்தில் தேவர்களில் பிறந்த அந்தத் தலைவன், இந்தச் சொற்களைக் கேட்டுப் பேரொலியுடன் முழங்கினான்.(6) பேரான்மாவான அந்த மிருகேந்திரன், சிங்க முழக்கம் செய்து தைத்தியேந்திரர்களின் இதயங்களையும், மனங்களையும் உற்சாகமிழக்கச் செய்தான்.(7) குரோதவாச, காலகேய, வேக, வைகதேய, துணிவுமிக்கச் சைம்ஹிகேய கணங்களும்,(8) ஸம்ஹ்ராதீய, மஹாநாத, மஹாவேக, கபில, மஹீபுத்ர, வியாக்ராக்ஷ, க்ஷிதிகம்பன கணங்களும்,(9) வானுலாவிகளும், இரவுலாவிகளும், பாதாளவாசிகளும், மேகநாதன், அங்குஷாயுதன்,(10) ஊர்தவேகன், பீமவேகன், பீமகர்ம, அர்கலோசனட், வஜ்ரீ, ஷூலி, கராலன், ஹிரண்யகசிபு உள்ளிட்ட அசுரர்களும் {நரசிம்மனுடன்} போரிட்டுக் கொண்டிருந்தனர்(11)
அடர்மேக வடிவம் கொண்டவனும், மேக வேகம் கொண்டவனும், மேகமாக முழங்குபவனும், மேகமாக ஒளிர்பவனும்,(12) தேவர்களின் பகைவனும், திதிக்குப் பிறந்தவனும், செருக்குமிக்கவனுமான ஹரிண்ய கசிபு, நரசிம்மனை நோக்கி விரைந்தோடி தன் கூட்டத்தாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மஹாத்மாவான அந்த மிருகேந்திரனை அடைந்தான்.(13) அப்போது அந்த மிருகேந்திரன் {நரசிம்மன்}, முன்னே சாடி குதித்து, ஓங்காரத்தின் துணையுடன் தன் பெரும் நகங்களால் ஹிரண்யகசிபுவின் உடலைத் துண்டுகளாகக் கிழித்து அந்தப் போரில் அவனைக் கொன்றான்.(14) அந்தத் திதியின் மகன் {ஹிரண்யகசிபு) அழிந்ததும், பூமி {நிலம்}, உலகம், சந்திரன், வானம், சூரியன், திசைகள், ஆறுகள், மலைகள், பெருங்கடல்கள் ஆகியன அனைத்தும் ஒளியூட்டப்பட்டன.(15) அப்போது, தேவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்ட ரிஷிகளும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் பல பாடல்களால் அந்த நித்திய தலைவனைத் துதித்து அவனை மகிழ்ச்சியடையச் செய்தனர்.(16)
தேவர்கள், “ஓ! தலைவா, கடந்த காலம், நிகழ் காலம் ஆகியவற்றின் காரணக் காரியங்களை அறிந்த ஞானிகளால், நீ ஏற்றிருக்கும் இந்த நரசிங்க வடிவம் வழிபடப்படும். உலகங்கள் அனைத்திலும் இந்த மிருகேந்திரனை அனைத்து உயிரினங்களும் துதிக்கும்.(17) முனிவர்கள் எப்போதும் உன்னை மிருகேந்திரனான நரசிம்மனாகப் பாடுவார்கள். ஓ! தலைவா, உன் விருப்பத்தால் நாங்கள் எங்கள் இடங்களை மீளப்பெற்றோம்” என்றனர்.(18)
தேவகணங்களால் இவ்வாறு துதிக்கப்பட்ட நரசிம்மன் பெரும் நிறைவடைந்தான். அப்போது பிரம்மனும் நிறைவடைந்து, விஷ்ணு ஸ்தோத்திரத்தைச் சொன்னான்.(19) பிரம்மன், “ஓ! தலைவா, வீழ்ச்சியற்றவன் நீயே, வெளிப்படாதவன் நீயே, கற்பனைக்கெட்டாதவன் நீயே, புதிரானவனும், சிறந்தவனும் நீயே, உயர்ந்தவனும், மாற்றமில்லாதவனும் நீயே, படைப்பாளனற்ற நித்திய படைப்பாளியும் நீயே. சிதைவற்றவன் நீயே.(20) நித்தியனும், நிலைத்தவனுமான புருஷன் நீயே. கோட்பாடுகளின் பொருளில் நிறுவப்படும் சாங்கிய யோகத்தில் நிலைக்கும் புத்தியைக் குறித்து அறிந்த ஞானாத்மா நீயே.(21) வெளிப்பட்டவனும், வெளிப்படாதவனும் நீயே. மொத்த அண்டமூம் நீயே. ஓ! தலைவா, நாங்களும் நீயே. ஆன்மா நீயே, தலைவன் நீயே.(22) நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்டவன் நீயே, உலகங்கள் அனைத்தின் ஆசானும் தலைவனும் நீயே. ஆயிரக்கணக்கான நான்கு யுகங்களில் உலகங்கள் அனைத்தையும் அழிப்பவனை அழிப்பவன் நீயே.(23) நான்கு வேதங்களும், நான்கு ஹோத்ரங்களும், நான்கு ஆன்மாக்களும் நீயே, நித்தியன் நீயே. அனைத்து உயிரினங்களின் புகலிடம் நீயே. எல்லையற்ற பலமும், வலிமையும் கொண்டவன் நீயே. கபிலர் முதலிய யதிகளின் பரமகதி நீயே.(24) தொடக்கமும், நடுநிலையும், முடிவும் அற்றவன் நீயே. அண்டத்தின் ஆன்மா நீயே. புருஷர்களில் சிறந்தவன் {புருஷோத்தமன்} நீயே. படைப்பவன் நீயே, அழிப்பவன் நீயே. மக்களின் நலத்தில் கவனம் கொண்ட ஒரே ஒருவன் நீயே.(25) பிரம்மனும், ருத்திரனும், பெரும் இந்திரனும், வருணனும், யமனும் நீயே. செயலைச் செய்பவன் நீயே, செய்த செயலில் இருந்து விடுவிப்பவனும் நீயே. வீழ்ச்சியில்லாத உலகத்தலைவன் நீயே.(26)
பரம சித்தியும் {திறனில் உயர்ந்தவனும்}, பரம தேவனும் {தேவர்களில் மேலானவனும்}, பரமமந்திரமும் {மந்திரங்களில் மேன்மையானவனும்}, பரம மனதும் {மனத்தில் மேன்மையானவனும்}, பரம தர்மமும், பரம புகழும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(27) பரம சத்தியமும், பரம ஹவிஸும், பரம பவித்ரமும், பரம மார்க்கமும், பரம ஹோத்ரமும், பரம யஞ்ஜமும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(28) பரம உடலும், பரம வசிப்பிடமும், பரம யோகமும், பரம வாக்கும், பரம ரகசியமும், பரம கதியும், பரம பிரபுவும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(29) முதன்மையானவர்களில் மிக உயர்ந்தவனும், தேவர்களில் மிக உயர்ந்தவனும், தலைவர்களில் மிக உயர்ந்தவனும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(30) முக்கியமானவற்றில் மிக உயர்ந்தவனும், கோட்பாடுகளில் மிக உயர்ந்தவனும், படைப்பாளர்களில் மிக முதன்மையானவனும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(31) ரகசியங்களில் மிக உயர்ந்தவனும், உயர்ந்தவற்றில் மிக உயர்ந்தவனும், உயர்ந்த தவமும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(32) புகலிடங்கள் அனைத்திலும் மிக உயர்ந்தவன் நீயே, வடிப்பிடங்களில் மிக உயர்ந்தவன் நீயே, தலைமைத்துவங்களில் மிக உயர்ந்தவன் நீயே, புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே” என்று துதித்தான் {பிரமம்ன்}.(33)
உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனால் இவ்வாறே பகவான் துதிக்கப்பட்டான். தலைவனான நாராயணனைத் துதித்துவிட்டு தலைவன் பிரம்மன் பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(34) இசைக்கருவிகள் இசைக்கப்பட, அப்சரஸ்கள் நடனமாட, பாற்கடலின் வடகரைக்கு ஈஷ்வரன் {நரசிங்கனான விஷ்ணு} சென்றான்.(35) கருடனைத் தன் கொடியில் கொண்ட தலைவன், நரசிங்க வடிவை விட்டு அகன்று, (உரிய இடத்தில்) உடலை நிறுவி தன் அசல் வடிவை ஏற்றுச் சென்றான்.(36) இயற்கையின் தலைவனும், வெளிப்படாதவனுமான அந்தத் தலைவன், காந்தியால் ஒளிர்வதும், எட்டுச் சக்கரங்களைக் கொண்டதுமான வாகனத்தில் தன் இடத்திற்குச் சென்றான்.(37) இவ்வாறே நீண்ட காலத்திற்கு முன்பு நரசிம்ம உடலைக் கொண்டவனும், பேரான்மாவுமான தலைவனால் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டான்” என்றார் {வைசம்பாயனர்}[1].(38)
பலியின் பட்டாபிஷேகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 40-(வாமநப்ராதுர்பாவே பலேரபிஷேக꞉)-வாமன அவதாரம்; தைத்தியர்களின் மன்னனாக நிறுவப்பட்ட பலி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இவ்வாறே நான் உனக்கு நரசிம்ம அவதாரத்தை விளக்கிச் சொன்னேன். இனி வாமன அவதாரத்தைச் சொல்லப் போகிறேன்.(1) முற்காலத்தில் பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு குள்ள வடிவை ஏற்று, பெருஞ்சக்திவாய்ந்த பலியின் வேள்வியில் மூன்று காலடிகளால் மூவுலகங்களின் அரசை அடைந்தான்.(2) அவன் {பெருங்கடலால் சூழப்பட்டதும், யானைகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான} பூமியை விடுவித்து, அதைத் தேவர்களின் மன்னனுக்கு அளித்தான்[1]” என்றார் {வைசம்பாயனர்}.(3){ஜனமேஜயன், “ஓ! பிராமணரே, இங்கே எனக்கோர் ஐயம் இருக்கிறது. தலைவன் நாராயணன் எவ்வாறு குள்ள வடிவை ஏற்றான் என்பதை அறிய நான் பேராவல் கொண்டுள்ளேன்.(4) தலைவன் நாராயணன், புராணங்களில் புராதன ஆன்மா எனவும், தாமரை உந்தி படைத்தவன், பெருஞ்சக்திவாய்ந்த தோள்களைக் கொண்டவன், உலகின் உண்மையான இயல்பானவன், அசைக்க முடியாத நித்தியன்,(5) ஆதியும் அந்தமும் இல்லாதவன், மூவுலகங்களின் பிறப்பிடமானவன், தலைவர்களின் தலைவன், தேவர்களின் தலைவன், கரிய மேனி கொண்டவன், உலகத்தால் வணங்கப்படுபவன்,(6) வேள்விகளின் ஹவ்யகவ்யங்கள் அனைத்தையும் சுமந்து செல்பவன், மங்கலமானவன், வேள்விகளின் ஹவ்யகவ்யங்கள் அனைத்தையும் அனுபவிப்பவன், வீழ்ச்சியற்றவன் எனவும் சொல்லப்படுகிறான். அந்தத் தலைவன், தேவர்களின் அன்னையான அதிதியின் கருவறைக்குள் எவ்வாறு நுழைந்தான்? வாசவனையே {இந்திரனையே} படைத்தவன் எவ்வாறு வாசவனின் தம்பியானான்?(7) தலைவர்களுக்கெல்லாம் தலைவனானவன், பிறவியை அடைந்த பிறகு, எவ்வாறு விஷ்ணுவின் நிலையை அடைந்தான்? ஓ! விப்ரரே, அந்தப் பேராத்மாவின் அவதாரத்தைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(8)
வைசம்பாயனர், “ஓ! மன்னா, மஹாரிஷிகளால் வழிபடப்படும் இந்தத் தெய்வீகக் கதையைக் கேட்பாயாக. பிரம்மனால் சொல்லப்பட்டதும், பிராமணர்களால் ஓதப்படுவதுமான இதைப் புலவர்களும் புராணங்களில் பாடியிருக்கின்றனர்.(9)}
மரீசியின் மகனும், தேவர்களின் தலைவரும், உயிரினங்களின் தலைவருமான {பிரஜாபதியுமான} கசியபர், திதி, அதிதி என்ற இருவரையும் மனைவிகளாகக் கொண்டிருந்தார்.(10) உயரான்மாவான அந்தக் கசியபர், அதிதியிடம் தாதா, ஆர்யமான், மித்ரன், வருணன், அம்சன், பகன்,(11) இந்திரன், விவஷ்வான், பூஷன், பர்ஜன்யன், துவஷ்தன், விஷ்ணு ஆகிய பனிரெண்டு {12} வகைத் தேவர்களைப் பெற்றார்.(12)
அவர் {கசியபர்}, திதியிடம் பெருஞ்சக்திவாய்ந்த ஹிரண்யகசிபுவைப் பெற்றார். பெருஞ்சிறப்புமிக்கத் தைத்தியேந்திரனான ஹிரண்யாக்ஷன் அவனது தமையனாவான்.(13) ஹிரண்யகசிபுவுக்கு, பெருஞ்சக்திவாய்ந்தவர்களான பிரஹ்லாதன், ஹிராதன், சங்கிரதன், ஜம்பன், அநுஹ்ராதன் என்ற ஐந்து மகன்கள் இருந்தனர்.(14) பிரஹ்லாதனின் மகன் விரோசனனும், விரோசனனின் மகன் பலியும் ஆவர். அவர்களின் மகன்களும், பேரர்கள் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவர்களாக, வீழ்ச்சியற்றவர்களாகவும் இருந்தனர்.(15) {பெரும் மனம் கொண்டவர்களும், மகிமைமிக்கவர்களுமான தைத்தியேந்திரர்களும், தேவர்களின் பகைவர்களும், ஒவ்வொரு நிலத்திலும் ஆயிரக்கணக்கில் கூட்டங்கூட்டமாக இருந்தனர்.(16)}
நரசிங்கத்தால் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டதைக் கண்ட அந்தத் தைத்தியர்கள், தேவர்களை அழிப்பதற்காகப் பலியைத் தங்கள் இந்திரனாக்கினர் {தலைவனாக்கினர்}.(17) அவன் {பலி} தர்மத்தில் எப்போதும் நிலைப்பவனாகவும், எப்போதும் வாய்மை பேசுபவனாகவும், புலன்களை வென்றவனாகவும், வீரனாகவும், ஞானங்கள் அனைத்திலும் நிபுணனாகவும்,(18) எதிர்காலத்தையும், பின்விளைவுகளையும் நன்கு புரிந்து கொண்டவனாகவும், வீழ்ச்சியற்ற கோட்பாடுகளை உணர்ந்தவனாகவும், மகிமைமிக்கவனாகவும், ஹிரண்யகசிபுவைப் போலவே தேவர்களின் பகைவனாகவும் இருந்தான்.(19) விரோசனனின் மகனான அந்தப் பலியை, தைத்தியர்கள் தங்கள் மன்னனாக நிறுவிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அவனைத் தைத்தியாதிபதியாக நியமித்து வழிபட்டனர்.(20) {ஹிரண்யகசிபுவின் இடத்தில் தைத்தியர்கள் பெருஞ்சக்தி வாய்ந்தவர்களில் சிறந்தவனான பலியைத் தங்கள் மன்னனாக நிறுவிக்கொண்டனர். பிரம்மனும் இதில் மகிழ்ச்சியடைந்தான்.(21) புனித நீர்நிலைகள் அனைத்தில் இருந்தும் கொண்டு வந்த நீரால் நிரப்பப்பட்ட பொற்குடங்களைக் கொண்டு விரோசனன் மகனான பலியை அந்த அசுர கணங்கள் தங்கள் மன்னனாக அபிஷேகம் செய்தனர்.{22} அந்தத் தானவர்கள், ஜெயம் என்று சொன்னபடியே ஒப்பற்ற வீரத்தைக் கொண்ட பலியை (மன்னனாக்கி) சிம்மாசனத்தில் அமரச்செய்தனர்.(23) தானவர்கள் அனைவரும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களில் சிறந்தவனான பலியைத் தங்கள் இந்திரனாக்கி, தங்கள் தலையால் தரையைத் தீண்டி அவனை வணங்கினர்.(24)}[2]அந்தத் தைத்திர்கள், “ஓ! தைத்திய மன்னா {பலியே}, அசைவன, அசையாதன, மூவுலகங்கள் உள்ளிட்ட மொத்த அண்டமும் ஹிரண்யகசிபுவுடைய அதிகாரத்தின் கீழ் இருந்ததை நீ நன்கறிவாய்.(25) ஓ! தேவர்களைக் கொல்பவனே, தேவர்கள் உன்னுடைய பெரும்பாட்டனைக் கொன்றுவிட்டு, மூவுலகங்களையும் களவு செய்து, இந்திரனைத் தங்கள் மன்னனாக நியமித்துக் கொண்டனர்.(26) எனவே, ஓ! தலைவா, நீ எங்கள் உதவியுடன் உன்னுடைய மூதாதையரின் அரசை மீட்பாயாக. உனக்கு நன்மை நேரட்டும், நீ உன் மூதாதையரின் அரசை மீளப் பெறுவாயாக.(27) ஆயிரக்கணக்கான அசுரர்கள் சூழ தேவலோகம் சென்று தேவர்களை வெல்வாயாக. உன் ஆற்றலும், பலமும் எல்லையற்றவை, உன் சிறப்புத் திறமைகளால் நீ உன் பாட்டனையும் விஞ்சியவனாக இருக்கிறாய்” என்றனர் {என்றார் வைசம்பாயனர்}[3].(28)
————————————-—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply