பலியின் செழிப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 41-(பலிர்விஜயே ஷ்ரிய꞉ ஸ்வயமாகமநகதநம்)-பலியை வந்தடைந்த செழிப்பின் தேவியான ஸ்ரீதேவி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “{அதிதியின் மகன்களான} தேவர்கள் {திதியின் மகன்களான} தைத்தியர்களால் வீழ்த்தப்பட்டனர், அதன்படி தைத்தியர்களே உலகங்களை ஆக்கிரமித்தனர். மயன், சம்பரன் ஆகியோர் பெருஞ்சக்திவாய்ந்த பலியின் வெற்றியை அறிவித்தனர்.{1} அந்த நேரத்தில் திசைகள் தெளிவடைந்தன, பக்திச் செயல்பாடுகள் செழித்தன, அநீதி ஒடுக்கப்பட்டது, சூரியன் தன் பாதையில் முறையாகப் பயணித்தான்.{2}
பிரஹ்லாதன், சம்பரன், மயன், அனுஹ்லாதன் ஆகியோர் கவனமாகத் திசைகள் அனைத்தையும் பாதுகாத்தனர்.{3} மக்கள் நல்வழிகளில் சென்றனர், அதனால் பாவம் மறைந்து அறம் பெருகியது. சித்தர்கள் தவம் பயின்றனர்.{4,5} தர்மம் நான்கு கால்களுடன் செழித்தது, அதர்மம் (பாவம்) ஒற்றைக்காலுடன் நின்றது.(6) மன்னர்கள் தங்கள் குடிமக்களை முறையாகப் பாதுகாத்தனர், அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்றினர்.{7} பலி, அசுரர்கள் அனைவராலும் ஒருமனதாகத் தேவர்களின் அரசில் நிறுவப்பட்டான்.{8|
அவர்கள் {அசுரர்கள்} மகிழ்ச்சி கூச்சலிடத் தொடங்கிய போது வரமளிப்பவளான செழிப்பின் தேவி {ஸ்ரீதேவி}, தன் கையில் தாமரை மலருடன் பலியின் முன்பு தோன்றி,{9} “ஓ! பெருஞ்சக்திவாய்ந்தவர்களில் முதன்மையானவனே, ஓ! பேரொளி படைத்த தைத்திய மன்னன் பலியே, தேவர்களை வீழ்த்தியதால் நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்.{10} உனக்கு நன்மை நேரட்டும்.{10} போரில் உன் ஆற்றலை வெளிப்படுத்தித் தேவர்களின் மன்னனை நீ வீழ்த்தினாய். அற்புதம் நிறைந்த உன் சக்தியைக் கண்டே நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.{11} ஓ! தானவர்களில் முதன்மையானவனே, ஹிரண்யகசிபுவின் குலத்தில் பிறந்த நீ அசுரர்களின் மன்னனாக நியமிக்கப்பட்டிருக்கிறாய். எனவே, இத்தகைய அருஞ்செயலை நீ செய்ததில் வியப்பேதுமில்லை.{12} மூவுலகங்கள் அனைத்தையும் அனுபவித்த அந்தத் தைத்திய மன்னனையும் {ஹிரண்யகசிபுவையும்} நீ விஞ்சிவிட்டாய். மேலும் நீ எப்போதும் அறம்சார்ந்தவனாகவும், பக்திமானாகவும் இருக்கிறாய்.{13} எனவே, ஓ! அளவற்ற ஆற்றல் படைத்தவனே, நீயே மூவுலகங்களையும் ஆள்வாயாக” என்றாள் {ஸ்ரீதேவி}.
வரமளிப்பவளும், அழகிய தேவியுமான லக்ஷ்மி இவ்வாறு அந்தத் தைத்திய மன்னனிடம் சொல்லிவிட்டுக் காட்சியில் இருந்து மறைந்தாள்[1]“என்றார் {வைசம்பாயனர்}.(14-18)
கசியபரிடமும், பிரம்மனிடமும் சென்ற தேவர்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 42-(தேவகணை꞉ ஸஹ கஷ்யபாதித்யோர்-ப்ரஹ்மஸதநகமநகதநம்)அதிதியிடம் சென்ற இந்திரன்; தேவர்களை பிரம்மலோகம் அழைத்துச் சென்ற கசியபர்; பிரம்ம சபை வர்ணனை…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! இருபிறப்பாளர்களிலும், முனிவர்களிலும் முதன்மையானவரே, தைத்தியர்களால் {திதியின் மகன்களால்}வெல்லப்பட்ட தேவர்கள் {அதிதியின் மகன்கள்}அதன்பிறகு என்ன செய்தனர்? அவர்கள் தேவலோகத்தை எவ்வாறு மீட்டனர்?” என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர், “தேவர்களின் மன்னன், அழகிய தெய்வீகக் குரலொன்றை {அசரீரியைக்} கேட்டு, கிழக்கில் அமைந்திருக்கும் மிகச் சிறந்த இடமான அதிதியின் வசிப்பிடத்திற்கு தேவர்களுடன் சென்றான்.(2) புரந்தரன் அங்கே சென்றதும், தான் கேட்ட தெய்வீகச் செய்தியின் ஒவ்வொரு சொல்லையும் அதிதியிடம் சொன்னான்.(3)
அதிதி, “ஓ! குழந்தாய், உன்னாலும், அமரர்கள் அனைவராலும் விரோசனன் மகனான பலியைக் கொல்ல முடியாது. ஆயிரம் தலைகளைக் கொண்ட புருஷனைத் தவிர, வேறு எவனாலும் அவனைக் கொல்ல முடியாது.{4,5} எனினும், உன் தந்தையும், வாய்மை நிறைந்தவருமான கசியபரிடம் தைத்தியனான மஹாபலியின் அழிவைக் குறித்து நான் கேட்கப் போகிறேன்” என்றாள்.{6}(4-6)
அதன்பிறகு சூரர்கள், அதிதியுடன் சேர்ந்து கசியபரிடம் சென்றனர்.{7} அங்கே, தேவர்களின் முதல் ஆசானான அந்தப் பெருந்தவசி, தண்ணீரினால் வெப்பந்தணிந்த ஒளியுடன் கூடிய சூரியனைப் போல அழகாகவும், எரியும் தழலைப் போலப் பிரகாசத்துடனும் இருப்பதைக் கண்டனர்.{8} அவர், தம்முடைய தண்டத்தை வைத்துவிட்டு, மேனியில் மான் தோலுடுத்தி தவம் பயின்று கொண்டிருந்தார்.{9} அவருடைய உடல் மரவுரியாலும், மான்தோலாலும் மறைக்கப்பட்டிருந்தது. மந்திரங்கள் ஓதி தூண்டப்படும்போது அவதரிக்கும் நெருப்பைப் போல அவர் பிரம்ம சக்தியுடன் எரிந்து கொண்டிருந்தார்.{10}
சூரர்கள், அசுரர்கள் ஆகியோரின் தந்தையான தலைவர் மாரீசர் {மரீசியின் மகனான கசியபர்}, பிரம்மவாதிகளில் முதன்மையானவராகவும், சூரியனைப் போன்ற ஒளி கொண்டவராகவும் இருந்தார்.{11} அவர் அனைவரையும் படைத்தவராகவும், குடிமுதல்வர்களில் மிகச் சிறந்த தலைவராகவும் இருந்தார். அவர் தமது பேரனின் மேனியில் மூன்றாவது குடிமுதல்வராகப் பிறந்திருந்தார்.{12}
பிரம்மனின் மனத்தில் பிறந்த மகன்கள் அவரிடம் பேசுவதைப் போலவே அந்த முன்னணி வீர தேவர்களும், அதிதியும் அந்தக் கசியபரை கை கூப்பி வணங்கி,{13} அசரீரியின் மூலம் சொல்லப்பட்ட தெய்வீக செய்தியையும், தைத்தியர்களில் முதன்மையான பலி அமரர்களால் வெல்லப்பட முடியாதவனாக இருப்பதையும் அவரிடம் சொன்னார்கள்.{14}
கசியபர், தம் மகன்களின் சொற்களைக் கேட்டுப் பிரம்மலோகத்திற்குச் செல்ல விரும்பி அவர்களிடம் {தேவர்களிடம்},{15} “ஓ! பாவமற்றவர்களே, வேதம் ஓதும் ஒலியால் நிறைந்திருக்கும் பிரம்மனின் வசிப்பிடத்திற்கு நாம் செல்வோம். நீங்கள் கேள்விப்பட்டதை அங்கே பிரம்மனிடம் உண்மையாகச் சொல்லுங்கள்” என்றார்”.{16}(7-16)
வைசம்பாயனர், “அதன் பிறகு தேவர்களும், அதிதியும் கசியபரைப் பின்தொடர்ந்து தேவரிஷிகளால் நிறைந்திருந்த பிரம்மனின் அரண்மனைக்குச் சென்றனர்.{17} தேவர்கள் அனைவரும் விலைமதிப்பற்ற, மிக அழகிய விமானங்களில் சென்று ஒரு கணத்தில் பிரம்மலோகத்தை அடைந்தனர்.{18} ஆன்மத்திரளாக இருக்கும் நித்தியனான பிரம்மனைக் காணும் விருப்பத்தில் அவர்கள் அங்கே இருந்த பெரிய சபா மண்டபத்திற்குச் சென்றனர்.{19} இனிய சாம மந்திரங்கள் பாடப்படும் அந்த மண்டபத்தைக் கண்டதும் அவர்கள் பெரும் நிறைவையடைந்தனர்.{20} வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் நன்கறிந்தவர்களும், அறச்சடங்குகளைச் செய்பவர்களுமான மஹாரிஷிகள் ஓதும் ரிக் மந்திரங்களை அவர்கள் கேட்டனர். ஓதப்படும் வேத மந்திரங்களின் ஒலி அந்தச் சபையில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.{21} அங்கே வந்து வேதம் ஓதுவதைக் கேட்ட சூரர்கள், தங்களை மேனி தூய்மையடைந்தவர்களாகக் கருதினர். மனப்புலன்கள் குவிந்து, அமைதியை அடைந்து பிரம்மத்தை மனத்தில் நிலைக்கச் செய்த அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தவர்களாக ஒருவரையொருவர் கண்டனர்[1].(17-27)கசியபரை முன்னிட்டுச் சென்ற சூரர்கள், எல்லாம்வல்ல உலக ஆசானை மீண்டும் தங்கள் மனத்தில் வணங்கினர்.{28} பல்வேறு சாத்திரங்களையும் நன்கறிந்த தேவர்களால் இனிமையான, கம்பீரமான வேத ஒலி மீண்டும் கேட்கப்பட்டது.{29} எப்போதும் நோன்புகளையும், ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுபவர்களும், ஹோம் செய்வதையும், வேதமோதுவதையும் விரும்புகிறவர்களுமான முன்னணி பிராமணர்களை அங்கே அந்தக் கசியபரின் மகன்கள் கண்டனர்.{30,31} உலகின் பெரும்பாட்டனும், சூரசுரர்களின் {சூர, அசுரர்களின்} ஆசானுமான பிரம்மன், அந்தச் சபையில் அமர்ந்து கொண்டு, தெய்வீக மாயையின் மூலம் படைப்புத் தொழிலை மேற்கொண்டிருந்தான்.{32}
அங்கே தக்ஷனும், குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} பிறரும், பிரசேதஸ், இருபிறப்பாளர்களில் முதன்மையான புலஹர், மரீசி, பிருகு, அத்ரி, வசிஷ்டர், கௌதமர், நாரதர் ஆகியோர் அவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.{33,34} கல்வி, மனம், வானம், நெருப்பு, நீர், பூமி, ஒலி, தீண்டல், வடிவம், சுவை, மணம் உள்ளிட்ட இந்தப் புலன் நுகர் பொருட்களும், மஹத் கோட்பாடும்,{35} நான்கு வேதங்கள், அறச்சடங்குகள், வேள்விகள், தீர்மானம் {சங்கல்பம்}, உயிர்மூச்சு {பிராணம்} ஆகியவையும்,{36} இன்னும் வேறு பொருள் அனைத்தும் சுயம்புவான அந்தத் தேவன் முன்பு இருந்தன. பொருள் {அர்த்தம்}, அறம் {தர்மம்}, விருப்பத்திற்குரிய பொருள், பொறாமை, இன்பம் {காமம்} ஆகியன அவன் முன்பு இருந்தன.{37} சுக்ரன் {வெள்ளி(Venus)}, பிருஹஸ்பதி {குரு/வியாழன்(Jupiter)}, சம்வர்த்தர், புதன், சனி, ராஹு முதலிய கோள்கள் அனைத்தும்,{38} மருத்துகள், விஷ்வகர்மன், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் ஆகியோர் பிரம்மனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.{39} புனித மந்திரமான ஸாவித்ரி, துர்கா, தரணி, வாணி, வாக்கின் ஏழு வடிவங்கள், ஸ்ருதி, காதாங்கள், விதிகள் {சட்டங்கள், நியமங்கள்}, உரைகள்,{40} க்ஷணம், லவம், முஹூர்த்தம், பகல், இரவு, மாதம், ஆறு பருவ காலங்கள், வருடங்கள், நான்கு யுகங்கள், மாலைப் பொழுது,{41} காலச்சக்கரம் ஆகியோரும் இன்னும் பலரும் சுயம்புவான அந்தத் தேவன் {பிரம்மன்} முன்பு இருந்தனர்.{43}
கசியபர், பக்திமான்களான தேவர்களுடன், விருப்பங்கள் அனைத்தையும் அளிக்கவல்ல அந்தத் தெய்வீக சபைக்குள் நுழைந்தார்.{43} பெரும்படைப்பாளியும், நித்தியனுமான பிரம்மன், தன்னெழிலில் எரிந்து கொண்டிருப்பதையும், களைப்பில் இருந்து விடுபட்டவனாகப் பிரம்மரிஷிகளால் தொண்டாற்றப்படுவதையும் கண்டு தேவர்கள் அவனை வணங்கினர்.{44,45} அவர்கள், தங்கள் தலையால் அந்தப் பரமேஷ்டியின் பாதங்களைத் தீண்டி பாவங்கள் விடுபட்டு, அமைதியடைந்த ஆன்மாக்களாகினர்.{46} பெரும்பிரகாசமிக்கப் பிரம்மன், அங்கு வந்திருக்கும் தேவர்களுடன் கசியபரும் இருப்பதைக் கண்டு பேசத் தொடங்கினான்”.{47}(28-47)
பிரம்ம வாக்கியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 43-(கஷ்யபாதீந்ப்ரதி ப்ரஹ்மவாக்யம் க்ஷிரோதஸ்யோத்தரே தீரே கஷ்யபாதேர்கமநம் தபஷ்சர்யா ச)பதிவின் சுருக்கம்: பிரம்மனின் சொற்கள்; கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; பாற்கடலின் வடகரையில் தவமிருந்த தேவர்கள்…
பிரம்மன் {தேவர்களிடம்}, “பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களே, உங்கள் வரவின் நோக்கத்தை நான் அறிந்தேன். ஓ! முன்னணி சூரர்களே, உங்கள் நோக்கம் நிறைவேறும்.{1} தானவர்களில் {அதிதியின் மகன்களின் வழிதோன்றலில்} முதன்மையான பலியை வெல்லப்போகும் அண்டத்தின் தலைவன், மூவுலகங்களையும் வெல்பவன் மட்டுமல்லாமல், தேவர்களாலும் வழிபடத்தகுந்தவனாக இருக்கிறான்.{2,3}
அண்டத்தின் நித்திய பிறப்பிடமான அவனே உலகங்களின் விதி சமைப்பவன் ஆவான். மக்கள் அவனை எல்லாம்வல்லவன் என்றும், ஹேமகர்பன் என்றும் அழைக்கிறார்கள்.{4} அசுரத்தலைவன் பலியையும், உலகையும் அழிக்கும் பெருந்தலைவனே, அனைத்திற்கும் பிறப்பிடமும், நம்மில் மூத்தவனும் ஆவான்.{5} அண்டத்தின் ஆன்மாவாக இருக்கும் அந்த யோகி, சிந்தனைக்கு அப்பாற்பட்டவன் ஆவான்.{6} தேவர்களும் அந்தப் பரமனை அறியமாட்டார்கள்; ஆனால் தேவர்களையும், நம்மையும், மொத்த அண்டத்தையும் அந்தப் புருஷோத்தமன் அறிவான்.{7} அவன் அருளால் நாம் நலமாக இருக்கிறோம். மக்கள் இவ்வுலகில் அவனுடன் ஐக்கியத்தை நிறுவி கடுந்தவம் செய்கிறார்கள்.{8}
ஓ! தேவர்களே, வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சிறந்த பகுதியான பாற்கடலின் வடகரையில் அமுதம் இருப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். அங்கே சென்று தற்கட்டுப்பாட்டுடன் கடந்தவம் பயில்வீராக.{9} அங்கே மிகப் புனிதமானவையும், மழைக்காலத்தில் நீருண்ட மேகங்களின் முழக்கம் போலக் கம்பீரமானவையும், பிரம்மம் தொடர்பானவையுமான தூய சொற்களைக் கேட்பீர்கள்.{10} பாவங்களை அழிக்கவல்ல அந்தத் தெய்வீக வாக்கு, தூய ஆன்மா படைத்த தேவதேவனின் வாக்காகும்.{11} உங்கள் நோன்பு நிறைவடையும்வரை அந்தப் பேரண்ட வாக்கை நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.{12} ஓ! தேவர்களே, என்னிடம் வந்திருக்கும் உங்களுக்கு வரங்களைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என்ன வரம் வேண்டும் கேளுங்கள்” என்றான்.{பிரம்மன்}.{13-15}
கசியபரும், அதிதியும் யோகத்துடன் அடையாளங்காணப்படுபவனை {யோகாத்மனான பிரம்மனை} வணங்கி, அவனது பாதங்களைத் தீண்டி, “தலைவன் எங்கள் மகனாகப் பிறக்கட்டும்” என்ற வரத்தைக் கேட்டனர்.
அவர்கள் பெரும் மதிப்புடன் இவ்வாறு சொன்ன போது, பிரம்மன், “அவ்வாறே ஆகட்டும். அவன் தங்கள் தம்பியாகட்டும் என்று தேவர்கள் அவனிடம் வேண்டட்டும், அவனும் ஏற்பான்” என்றான்.{16-18}
இந்த வரத்தை அவனிடம் அடைந்து தங்கள் காரியத்தில் வெற்றியை அடைந்த தேவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.{19} சூரர்கள், கசியபர், அதிதி ஆகியோர் “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி பிரம்மனின் பாதங்களைத் தீண்டி வடதிசைக்குச் சென்றனர்.{20} தெய்வீக பிரம்மனால் ஆணையிடப்பட்டவாறே அவர்கள் பாற்கடலின் வடகரையைக் குறுகிய காலத்திற்குள் அடைந்தனர்.{21} அந்த முன்னணி தேவர்கள், பல பெருங்கடல்களையும், மலைகள், ஆறுகளையும் கடந்து சென்று சூரியனும், உயிரினங்களும் அற்றதும் இருளால் மறைக்கப்பட்டதுமான அந்தப் பயங்கரப் பகுதியைக் கண்டனர்.{22}
சூரர்களும், கசியபரும் அமுதம் இருந்த இடத்தை அடைந்து, ஆயிரங்கண்களைக் கொண்டவனும், நுண்ணறிவுமிக்க யோகியும், தலைமை சக்திகள் அனைத்தையும் கொண்டவனுமான நாராயணனை நிறைவடையச் செய்யும் நோக்கில் பல வருடங்கள் கடுந்தவங்களைச் செய்தனர்.{23,24} சூரர்கள், பிரம்மசரிய நோன்பையும், மௌன விரதத்தையும் நோற்று, தங்கள் புலன்களையும், அசைவுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கே கடுந்தவம் இருந்தனர்.{25} தெய்வீகரான கசியபர், தலைவன் நாராயணனை நிறைவடையச் செய்வதற்காக வேத மந்திரத் துதிகள் பலவற்றை ஓதத் தொடங்கினார்” என்றார் {வைசம்பாயனர்}.{26}(1-26))
விஷ்ணுவின் உறுதிமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 44-(கஷ்யபாதிந்ப்ரதி மஹாவிஷ்நோர்வரப்ரதாநகதாவதார꞉)பதிவின் சுருக்கம்: கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; விஷ்ணு கொடுத்த உறுதிமொழி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இருபிறப்பாளர்களில் முதன்மையான கசியபரால் ஓதப்படும் மிகச் சிறந்த துதிகளைக் கேட்ட தலைவன் நாராயணன்[1], மேகங்களுடைய முழக்கங்களின் மூலம் கம்பீரமான இனிய குரலில் அந்தப் பெருந் தேவர்களிடம் பேசினான்.{1,2} சொற்கள் வானத்தில் இருந்து கேட்டாலும், எவராலும் தலைவனைக் காணமுடியவில்லை. அந்த ஈஷ்வரன் பெரும் மகிழ்ச்சியுடன் பேசினான்.{3}(1-3)
நமோ(அ)ஸ்து தேவதேவேஷ ஏகஷ்ருங்க வராஹ வ்ருஷார்சிஷ
வ்ருஷஸிந்தோ வ்ருஷாகபே ஸுரவ்ருஷப ஸுரநிர்மித
அநிர்மித பத்ரகபில த்ருவ தர்ம தர்மராஜ வைகுண்ட
த்ரேதாவர்த அநாதிமத்யநிதந தநஞ்ஜய ஷுசிஷ்ரவ꞉
அக்நிஜ வ்ருஷ்ணிஜ அஜ அஜயாம்ருதேஷய ஸநாதந விதாதஸ்த்ரிகாம
த்ரிதாம த்ரிககுத் ககுத்மின் துந்துபே மஹாநாப லோகநாப
பத்மநாப விரிஞ்சே வரிஷ்ட பஹுரூப விரூப விஷ்வரூபாக்ஷயாக்ஷர
ஸத்யாக்ஷர ஹம்ஸாக்ஷர ஹவ்யபுக் கண்டபரஷோ ஷுக்ர
முஞ்ஜகேஷ ஹம்ஸ மஹதக்ஷர ஹ்ருஷீகேஷ ஸூக்ஷ்ம
பரஸூக்ஷ்ம துராஷாட் விஷ்வமூர்தே ஸுராக்ரஜ நீல நிஸ்தமோ
விரஜஸ்தமோரஜ꞉ஸத்த்வதாம ஸர்வலோகப்ரதிஷ்ட
ஷிபிவிஷ்ட ஸுதபஸ்தபோக்ர அக்ர அக்ரஜா தர்மநாப கபஸ்திநாப
தர்மநேம ஸத்யதாம ஸத்யாக்ஷர கபஸ்திநேமே விபாப்மன்
சந்த்ரரத த்வமேவ ஸமுத்ரவாஸா꞉ அஜைகபாத் ஸஹஸ்ரஷீர்ஷ
ஸஹஸ்த்ரஸம்மித மஹாஷீர்ஷ ஸஹஸ்ரத்ருக் ஸஹஸ்ரபாத்
அதோமுக மஹாமுக மஹாபுருஷ புருஷோத்தம ஸஹஸ்ரபாஹோ
ஸஹஸ்ரமூர்தே ஸஹஸ்ராஸ்ய ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபுஜ
ஸஹஸ்ரபுவ ஸஹஸ்ரஷஸ்த்வாமாஹுர்வேதா꞉ || 3-68-1
விஷ்வேதேவ விஷ்வஸம்பவ ஸர்வேஷாமேவ தேவாநாம் ஸௌபக
ஆதௌ கதி꞉ விஷ்வம் த்வமாப்யாயந꞉ விஷ்வம் த்வாமாஹு꞉ புஷ்பஹாஸ
பரமவரதஸ்த்வமேவ வௌஷட் ஓங்கார வஷட்காரம் த்வமேகமாஹுரக்ர்யம்
மகபாகப்ராஷிநம் || 3-68-2
ஷததார ஸஹஸ்ரதார பூர்த புவர்த ஸ்வர்த பூர்புவ꞉ஸ்வர்த
த்வமேவ பூதம் புவநம் த்வம் ஸ்வதா த்வமேவ ப்ரஹ்மேஷய
ப்ரஹ்மமய ப்ரஹ்மாதிஸ்த்வமேவ || 3-68-3
த்யௌரஸி ப்ருதிவ்யஸி பூஷாஸி மாதரிஷ்வாஸி தர்மோ(அ)ஸி மகவாஸி
ஹோதா போதா நேதா ஹந்தா மந்தா ஹோம்யஹோதா பராத்பரஸ்த்வம் ஹோம்யஹோதா
த்வமேவ ||3-68- 4
ஆபோ(அ)ஸி விஷ்வவாக் தாத்ரா பரமேண தாம்நா த்வமேவ திக்ப்ய꞉ ஸ்ருக்
ஸ்ருக்பாண்ட த்வம் கண இஷ்டோ(அ)ஸி இஜ்யோ(அ)ஸி ஈட்யோ(அ)ஸி த்வஷ்டா
த்வமஸி ஸமித்தஸ்த்வமேவ கதிர்கதிமதாமஸி மோக்ஷோ(அ)ஸி
யோகோ(அ)ஸி குஹ்யோ(அ)ஸி ஸித்தோ(அ)ஸி தந்யோ(அ)ஸி தாதாஸி பரமோ(அ)ஸி
யஜ்ஞோ(அ)ஸி ஸோமோ(அ)ஸி யூபோ(அ)ஸி தக்ஷிணாஸி தீக்ஷாஸி விஷ்வமஸி ||3-68-5
ஸ்தவிஷ்ட ஸ்தவிர விஷ்வ துராஷாட் ஹிரண்யகர்ப ஹிரண்யநாப
ஹிரண்யநாராயண நாராயணாந்தர ந்ருணாமயந ஆதித்யவர்ண
ஆதித்யதேஜ꞉ மஹாபுருஷ ஸுரோத்தம ஆதிதேவ பத்மநாப
பத்மேஷய பத்மாக்ஷ பத்மகர்ப ஹிரண்யாக்ரகேஷ
ஷுக்லவிஷ்வதேவ விஷ்வதே முக விஷ்வாக்ஷ விஷ்வஸம்பவ
விஷ்வபுக்த்வமேவ || 3-68-6
பூரிவிக்ரம சக்ரக்ரம த்ரிபுவந ஸுவிக்ரம ஸ்வவிக்ரம
ஸ்வர்விக்ரம பப்ரு꞉ ஸுவிபு꞉ ப்ரபாகர꞉ ஷம்பு꞉ ஸ்வயம்பூஷ்ச
பூதாதி꞉ பூதாத்மன் மஹாபூத விஷ்வபுக்த்வமேவ விஷ்வகோப்தாஸி
விஷ்வம்பர பவித்ரமஸி ஹவிர்விஷாரத ஹவி꞉கர்மா அம்ருதேந்தந
ஸுராஸுரகுரோ மஹாதிதேவ ந்ருதேவ ஊர்த்வகர்மன் பூதாத்மன்
அம்ருதேஷ திவ꞉ஸ்ப்ருக் விஷ்வஸ்ய பதே க்ருதாச்யஸி
அநந்தகர்மன் த்ருஹ்யநவம்ஷ ஸ்வவம்ஷ விஷ்வபாஸ்த்வம் த்வமேவ
விஷ்வம் பிபர்ஷி வரார்திநோ நஸ்த்ராயஸ்வேதி || 3-68-7
விஷ்ணு, “ஓ! முன்னணி தேவர்களே, நான் உங்களிடம் நிறைவடைந்தேன். உங்களுக்கு நலம் விளையட்டும். வரங்களை வேண்டுவீராக. அவற்றை நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்றான்.(4)
அப்போது கசியபர், “ஓ! அமரர்களே, தலைவன் நம்மிடம் நிறைவடைந்திருப்பதால் நாம் அருளப்பட்டவர்களாக இருக்கிறோம். எங்கள் பரம புகலிடம் நீயே,{5} ஓ! தலைவா, நீ எங்களிடம் நிறைவடைந்து வரங்கொடுக்க விரும்புகிறாயெனில், எனக்கும் அதிதிக்கும் மகனாக உன் உற்றார் உறவினரின் இன்பத்தை எப்போதும் அதிகரித்து வாசவனின் {இந்திரனின்} தம்பியாகப் பிறப்பாயாக” என்றார்”.{6}
வைசம்பாயனர், “தேவர்களின் அன்னையான அதிதியும் வரம் வேண்ட விரும்பி அந்தத் தலைவனிடம்,{7} “நான் உன்னிடம் வரம் வேண்டுகிறேன். தேவர்கள் அனைவரின் நலத்துக்காக நீ என் மகனாகப் பிறப்பாயாக” என்றாள்.{8}(5-8)
தேவர்கள், “ஓ! தலைவா, நீ எங்கள் தம்பியும், தலைவனும், மன்னனும், பாதுகாப்பாளனும் ஆவாயாக. நீ அதிதியின் மகனாகப் பிறந்தால், வாசவனும், தேவர்கள் பிறரும் தேவனின் பெயரைக் கேட்கவல்லவராவோம். எனவே நீ கசியபரின் மகனாகப் பிறப்பாயாக” என்றனர்”.(9)
வைசம்பாயனர், “அப்போது விஷ்ணு தேவர்களிடமும், கசியபரிடமும், “ஓ! தேவர்களே, உங்கள் எதிரிகளால் என் முன்னால் ஒரு கணமும் நிற்க இயலாது.{10} அசுரர்களையும், தேவர்களின் பகைவரான பிறரையும் கொன்று, நான் தேவர்களை மீண்டும் வேள்விக் காணிக்கைகளை ஏற்கச் செய்வேன்.{11} என்னுடைய படைப்பு சக்தியால் நான் தேவர்களை ஹவ்யத்தையும், பித்ருக்களைக் கவ்யத்தையும் உண்ணச் செய்வேன். எனவே, ஓ! தேவர்களே, நீங்கள் வந்த வழியே செல்வீராக.{12,13} தேவர்களின் அன்னையான அதிதியின் விருப்பத்தையும், பெரும் கசியபரின் விருப்பத்தையும் நான் நிறைவடையச் செய்வேன். நீங்கள் அவரவருக்குரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வீராக. உங்களுக்கு நன்மை நேரட்டும், விரும்பிய நோக்கங்களை நீங்கள் அடைவீராக” என்றான்”.(10-14)
வைசம்பாயனர், “பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணுவால் இவ்வாறு சொல்லப்பட்டதும் தேவர்கள் மகிழ்ச்சியாக அந்தத் தலைவனை வழிபட்டனர்.(15) விஷ்வதேவர்கள், கசியபர், அதிதி, சாத்யர்கள், மருத்துகள், பெருஞ்சக்திவாய்ந்த இந்திரன் ஆகியோர் அந்தத் தேவனை வணங்கிவிட்டு,{16} கிழக்குத் திக்கில் உள்ள கசியபரின் பெருங்குடிலுக்குச் சென்றனர்.
பிரம்மரிஷிகளால் நிறைந்த அந்தக் குடிலை {கசியபாஷ்ரிமத்தை} அடைந்ததும் அவர்கள் வேத கல்வியில் ஈடுபட்டு அதிதியின் கருத்தரிப்புக்காகக் காத்திருந்தனர்.{17} தேவர்களின் அன்னையான அதிதி, பெருஞ்சக்தி வாய்ந்த அண்ட ஆன்மாவான அந்தப் பரமனை ஆயிரம் தேவ வருடங்கள் தன் கருவறையில் கொண்டிருந்தாள்.{18} ஆயிரமாவது வருடம் நிறைவடைந்ததும் தேவர்களைப் பாதுகாப்பவனும், அசுரர்களை அழிப்பவனுமான மகனை அவள் பெற்றெடுத்தாள்.{19} அந்தத் தலைவன் கருவறையில் வாழ்ந்தபோது மூவுலகங்களின் சக்தியை ஈர்த்துத் தேவர்களைக் காத்தான். தேவர்களின் தலைவனும், மூவுலகங்களின் இன்பமும்,{20} தைத்தியர்களின் அச்சமும், தேவர்களின் மகிழ்ச்சிய அதிகரிப்பவனுமான அந்தத் தலைவன் பிறந்தபோது தேவர்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து விடுபட்டனர்” என்றார் {வைசம்பாயனர்}.(15-21)
வாமன அவதாரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 45-(வாமநப்ராதுர்பாவ꞉)-வாமனனாகப் பிறந்த விஷ்ணு; இந்திரனின் வேண்டுதல்; பலியின் வேள்விக்கு வாமனானை அழைத்துச் சென்ற பிருஹஸ்பதி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்தத் தேவன் பிறந்த போது ஏழு குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகளும்}, மரீசியும் பிறரும், சப்தரிஷிகளும் அவனை வணங்கினர்.{1} பரத்வாஜர், கசியபர், கௌதமர், விஷ்வாமித்ரர், ஜமதக்னி, வசிஷ்டர், முழுமையாக மேகத்தால் மறைக்கப்படும்போது தோன்றும் சூரியன், தலைவர் அத்ரி ஆகியோர் அங்கே வந்தனர்.{2} மரீசி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, குடிமுதல்வன் தக்ஷன் ஆகியோர் அவனை வணங்கினர்.{3} ஔர்வர், வசிஷ்டரின் மகனான ஸ்தம்பர், காசியபர், கபீவான், அகபீவான், தத்தோநி, சியவனர்,{4} வாசிஷ்டர்கள் என்ற பெயரைக் கொண்ட வசிஷ்டரின் பிற மகன்களான எழுவர், ஹிரண்யகர்பனின் மகனும், பெருஞ்சக்திவாய்ந்தவருமான ஔர்வஜாதர்,{5} கார்க்கியர், பிருது, அகிரயர், ஜன்யர், வாமனர், தேவபாஹு, யதுதரர், சோமஜர், பர்ஜன்யர்,{6} ஹிரண்யரோமர், வேதசிரஸ், சத்யநேத்ரர் {சப்தநேத்ரர்}, நிம்பர், அதிநிம்பர், சியவனர், சுதாமர், விரஜர்,{7} அதிநாமர், ஸஹிஷ்ணு ஆகியோர் அவனை வணங்கினர்.
பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரும் மேனியைக் கொண்ட அப்சரஸ்கள்,{8} நாராயணனின் முன்பு நடனம் புரிந்தனர். கந்தர்வர்கள் வானில் எக்காளமிசைத்தனர்.{9}(1-9) தும்புரு, பிற கந்தர்வர்களுடன் சேர்ந்து பாடத் தொடங்கினான். மஹாஸ்ருதி, சித்திரசிரன், ஊர்ணாயு, அநகன்,{10} கோமாயு, சூர்யவர்சாஸ், சோமவர்சாஸ், யுகபன், திருணபன், கார்ஷ்ணி, நந்தி, சித்திரரதன்,{11} {திரிசிரஸ், திரயோதஸ்}, சாலிஷிரன், பர்ஜன்யன், கலி,{12} நரேந்திரன், ஹாஹா, ஹுஹூ, பெரும்பிரகாசம் கொண்ட கந்தர்வனான ஹம்சன் ஆகியோர் கேசவனின் முன்பு பாடத் தொடங்கினர்.{13}
நீண்ட விழிகளைக் கொண்டவர்களும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவர்களும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அழகிய அப்சரஸ்கள் அங்கே நடனமாடத் தொடங்கினர்.{14,15} சுமத்யை, சாருமத்யை, பிரியமுக்கியை, அழகிய அநூகை, ஜாமீ, மிஷ்ரகேசி, அலம்புசை,{16} மரீசி, சூசிகை, வித்யுத்பர்ணை, திலோத்தமை, அத்ரிகை, லக்ஷ்மனை, ரம்பை, {மநோரமை},{17} அழகிய அசிதை, சுபாஹு, சுபாகை, ஊர்வசி, சித்திரலேகை, சுக்ரீவை, சுலோசனை,{18} புண்டரிகாஸுகந்தை,{19} சுரதை, பிரமாதினி, நந்தை, சாரஸ்வதி,{19} மேனகை, ஸஹஜன்யை, பர்ணிகை, புஞ்ஜிகஸ்தலை ஆகியோரும் இன்னும் ஆயிரக்கணக்கான பிற அப்சரஸ்களும் அங்கே நடனம் புரிந்தனர்.{20}
காசியேபர்களும், சூரியப்பிரகாசம் கொண்டவர்களுமான தாதன், ஆர்யமான், மித்ரன், வருணன், அம்சன், பாகன், இந்திரன், விவஸ்வான், பூஷன், துவஷ்டா, சவிதன், விஷ்ணு ஆகிய பனிரெண்டு ஆதித்யர்களும் அந்த உயரான்ம தேவர்களின் தலைவனை வணங்கினர்.{21,22} ஓ! மன்னா {ஜனமேஜயா}, மிருகவியாதன், சர்ப்பன், பெருஞ்சக்திவாய்ந்த நிர்ருதி, அஜைகபாத், அஹிர்புத்நியன், பினாகி, அபராஜிதன், தஹனன், ஈஷ்வரன், கபாலி, ஸ்தாணு, பர்கன் ஆகிய ருத்திரர்கள் அங்கே இருந்தனர். அசுவினி இரட்டையரும், அஷ்டவசுக்களும், பெருஞ்சக்திவாய்ந்த மருத்துகளும்,{23-25} விஷ்வேதேவர்களும், சாத்தியர்களும் என அனைவரும் கரங்களைக் கூப்பியபடி அவன் முன்பு நின்றனர்.
சேஷனின் தம்பியான பெரும் வாசுகி,{26} {தக்ஷகன்}, அபுகுஞ்ஜன், திருதராஷ்டிரன், வலாஹன் ஆகியோரும், இன்னும் பெருஞ்சக்திவாய்ந்த, கோபக்கார, பிரகாசமிக்க நாகர்கள் அனைவரும் அவன் முன்பு கைகளைக் கூப்பியபடி நின்றனர். தார்க்ஷன், அரிஷ்டநேமி, பெருஞ்சக்திவாய்ந்த கருடன்,{27,28} அருணன், அருணி ஆகியோர் அனைவரும் கைகளைக் கூப்பியபடி அவன் முன்பு நின்றனர். உலகத்தின் படைப்பாளன் {பிரம்மன்}, பெரும் குடிமுதல்வர்கள் அனைவருடன் அங்கே வந்து பேசினான்.{29}(10-29)
பிரம்மன், “உலகங்கள் அனைத்தும் எவனிடம் இருந்து வெளிப்பட்டனவோ அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த நித்திய தலைவனான விஷ்ணு இவன்” என்றான்.{30} தலைவன் பிரம்மன் இதைச் சொல்லி, தேவரிஷிகளுடன் சேர்ந்து அந்தத் தேவர்களின் மன்னனை வணங்கிவிட்டு, தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான்.{31}
தலைவன் {விஷ்ணு}, கசியபரின் மகனாகப் பிறந்த போது, பயங்கரநாளின் மேகங்களைப் போலக் குருதிச் சிவப்பான கண்களுடன் குள்ள {வாமன} வடிவில் இருந்தான்.{32} அவனுடைய மார்பில் ஸ்ரீவத்சமெனும் மாயக்குறி இருந்தது. அப்சரஸ்கள் விழிகள் விரிய அவனைக் கண்டனர்.{33} ஒரே நேரத்தில் வானில் எழுந்த ஆயிரஞ்சூரியர்களைப் போல அவன் பிரகாசித்தான்.{34} அந்த அழகிய தலைவன், பூர், புவ லோகங்களையும், பிற லோகங்களையும் ஆதரிப்பவனாக இருந்தான். அவன் உயர்ந்த தோள்களையும், தூய தலைமுடியையும் கொண்டிருந்தான்.{35} அவன் நல்லோரின் புகலிடமாகவும் {கதியாகவும்}, கொடூரர்களுக்கு உறைவிடமேதும் அளிக்காதவனாகவும் இருந்தான். பெரும் யோகிகள் அவனையே மிகச் சிறந்த யோகமாகக் கருதுகின்றனர்.{36} அவன் எட்டு வகைத் தலைமைத்துவ சக்திகளை {அஷ்டகுணங்களைக்} கொண்டிருந்தான். மக்கள் அவனைத் தேவர்களில் முதன்மையானவன் என்று அழைப்பார்கள்.{37} அந்த நித்திய புருஷனின் மூலம் முக்தியை அடைய ஏங்கும் விப்ரர்களும், உலகத்துக்கு அஞ்சுபவர்களும், பிறப்பு இறப்பில் இருந்து விடுபடுகிறார்கள்.{38} அனைத்து ஆசிரமங்களும் {வாழ்வுமுறைகளும்} அவனையே தபம் எனக் கொள்கின்றன. கடுந்தவம் பயின்றும், உணவைக் குறைத்தும் மக்கள் அவனுக்குத் தொண்டாற்றுகின்றனர்.{39}
ஆயிரந்தலைகளையும், சிவந்த கண்களையும் கொண்ட அனந்தனைப் போலச் சேஷனும், நாகலோகத்தைச் சேர்ந்த பிற நாகர்களும் அவனை வழிபடுகின்றனர்.{40} தேவலோகத்தை அடைய விரும்பும் விப்ரர்கள் அவனை யஞ்ஜமாக வழிபடுகின்றனர். எங்கும் இருந்தாலும் அவன் ஒருவனாகவே இருக்கிறான். மிகச் சிறந்த கவியான அவனை வேள்வி காணிக்கைகளை விதிப்பவனாக வேதங்கள் பாடுகின்றன. அறமே அவனது ஒளியாகத் திகழ்கிறது.{41} சூரியனும் சந்திரனும் அவனது கண்களாகவும், ஆகாயம் அவனது உடலாகவும் இருக்கின்றன.
எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன் தேவர்களில் மிகச் சிறந்த சொற்களில்,{42}(30-42) “அறிந்தும் என் யோக சக்தியின் மூலம் நான் இந்தச் சிறுவனின் நிலையை அடைந்திருக்கிறேன். தேவர்களே, நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நான் வரமென்ன கொடுக்க வேண்டும்? நீங்கள் வேண்டுவதைச் சுகமாகக் கேட்பீராக” என்றான்.{43}
இந்திரனும், பிற தேவர்களும், அந்த உயரான்ம குள்ளனின் {சிறுவனின் / வாமனனின்} சொற்களைக் கேட்டு, அந்தக் கசியபரின் மகனிடம் கூப்பிய கைகளுடன்,{43} “அனைத்தையும் அறிந்தவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான தைத்திய மன்னன் பலி, பிரம்மனால் அவனுக்கு அளிக்கப்பட்ட வரத்தினாலும், செய்த தவத்தின் பலனாலும் விளைந்த ஆற்றல், தற்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் மொத்த அண்டத்தையும் அடைந்திருக்கிறான். அவனை எங்கள் எவராலும் கொல்ல முடியாது. நீ மட்டுமே அவனை வெல்லவல்லவனாக இருக்கிறாய். வேறு எவராலும் அவனை வீழ்த்த முடியாது.{44-47} எனவே, ஓ! தலைவா, தேவர்களின் அச்சங்களை விலக்குபவனும், பக்தர்கள் விரும்புகிறவனும், வரங்களை அளிப்பவனுமான உன்னிடம் நாங்கள் அனைவரும் புகலிடம் நாடுகிறோம்.{48} ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, தேவர்களின் பெரும் மன்னா, ரிஷிகளின் நன்மைக்காகவும், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காகவும், கசியபர், அதிதி ஆகியோரின் நிறைவுக்காகவும்,{49} பித்ருகள் கவ்யத்தையும், தேவர்கள் ஹவ்யத்தையும் முறையாக உண்ணட்டும்.{50} தேவர்களின் பெரும் மன்னனான மஹேந்திரனிடம் மீட்டளிக்க மூவுலகங்களையும் மீண்டும் அடைவாயாக.{51} அந்தத் தானவன் ஒரு குதிரை வேள்வியைச் செய்து வருகிறான். எனவே, நீ உலகங்களை மீண்டும் அடையும் வழிமுறைகளைக் குறித்துச் சிந்திப்பாயாக” என்றனர்”.{52}(43-52)
வைசம்பாயனர், “தேவர்கள் இவ்வாறு சொன்னதும் குள்ள வடிவில் இருந்த விஷ்ணு, தேவர்களை மகிழ்ச்சியில் நிறைக்கும் வகையில் அவர்களிடம் பேசினான்.(53)
விஷ்ணு, “பேரொளி படைத்த ரிஷியும், அங்கிரசின் மகனும், வேதங்களை நன்கறிந்தவருமான பிருஹஸ்பதி, என்னை அவனது {மஹாபலியின்} வேள்விக்கு அழைத்துச் செல்லட்டும். நான் அவனுடைய வேள்விக்களத்திற்குச் சென்று மூவுலகங்களையும் மீட்பதற்குரிய வழிமுறையைச் சிந்திக்கிறேன்” என்றான்.(54,55)
அதன்பிறகு, பெரும்பிரகாசம் கொண்டவரும், நுண்ணறிவுமிக்கவருமான பிருஹஸ்பதி, எல்லாம்வல்லவனான அந்தக் குள்ளனை {வாமனனை}, பேரறிவுசார்ந்த சக்திகளைக் கொண்ட தைத்திய மன்னன் பலியின் வேள்விக் களத்திற்கு அழைத்துச் சென்றார்.{56} சிறுவனின் வடிவை ஏற்ற அந்தக் குள்ளன் {வாமனன்}, புகைபோன்ற கண்களைக் கொண்டிருந்தான், பளபளக்கும் பூணூலையும், மான்தோலையும் அவன் அணிந்திருந்தான். அவன் {வாமனன்}, ஒரு கையில் குடையையும், மறு கையில் தண்டத்தையும் கொண்டிருந்தான்.{57} சிறுவனாக இருந்தாலும் அவன் முதிய மனிதனைப் போலத் தோற்றமளித்தான்.{58} பிரம்மனாலும், பிற தேவர்களாலும் தியானிக்கப்படுபவனும், குடிமுதல்வர்களின் {பிரஜாபதிகளின்} தலைவனும், சூரர்களில் முதன்மையானவனுமான அவன், தைத்திய மன்னன் விரோசனனுடைய மகனான பலியின் வேள்விக் களத்திற்கு இவ்வாறே சென்றான்.{59,60}(56-60) ஆயுதமும், கவசமும் தரித்த தைத்தியர்களால் உரிய முறையில் வாயில் காக்கப்பட்டாலும் அவன் திடீரென அங்கே நுழைந்தான்.(61) பெருஞ்சக்திவாய்ந்தவனான அந்தக் குள்ளன் {வாமனன்}, மந்திரங்கள் ஓதுவதை நன்கறிந்த புரோஹிதர்களால் முற்றும் சூழப்பட்ட தைத்திய தானவன் மன்னன் பலியின் முன்பு தோன்றினான்.(62) அந்தத் தலைவன், பிரம்மரிஷிகளால் நிறைந்த வேள்விக்களத்தை அடைந்து, யஞ்ஜத்தோடு அடையாளங்காணப்படுபவனாகத் தன்னை விளக்கிக் கொண்டான்.{63} யஞ்ஜமே ஆனவனும், வேள்விச் சடங்குகளின் தலைவனுமான அந்த நித்திய புருஷன், வேள்வியைக் குறித்து விரிவாக விளக்கிவிட்டு, பல்வேறு மேற்கோள்களையும் சொல்லி சுக்ரரையும் {சுக்ராச்சாரியாரையும்}, பிற புரோகிதர்களையும் வென்றான்.{64} அவர்கள் எவராலும் எந்தப் பதிலையும் முன்வைக்க முடியவில்லை. எல்லாம் வல்ல தலைவன், வேதங்களில் விதிக்கப்பட்ட காரணங்களையும், வாதங்களையும் அற்புதம் நிறைந்த வாக்கால் எடுத்து வைத்து, தன்னையே அந்த வேள்வியாகப் பலியிடம் விளக்கிச் சொன்னான்.{65,66}
விரோசனின் மகனான பலி, குள்ளவடிவில் இருந்தவனும், பெரும்பிரகாசம் கொண்டவனுமான அந்தச் சிறுவனின் வாதத்தைக் கேட்டு பெரியோரான ரிஷிகளும், உபாத்யாயர்கள் {ஆசான்களும்} அமைதியடைந்ததைக் கண்டு அதை அற்புதமென நினைத்தான்.{67,68} ஆச்சரியத்தால் நிறைந்த அவன், தலைவணங்கி கைகள் கூப்பியவனாக, “எங்கிருந்து வருகிறீர்? நீர் யார்? நீர் யாருடைய மகன்? இங்கே உமக்கு என்ன தேவை? இத்தகைய நுண்ணறிவுமிக்க, அழகான, நல்ல தோற்றமுடைய, ஆன்மப் பண்பாட்டைக் கொண்ட,{69,70} வேதங்களை நன்கறிந்த அழகிய பிராமணச் சிறுவனை இதற்கு முன்பு ஒருபோதும் நான் கண்டதில்லை. தேவர்கள், ரிஷிகள், நாகர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், ராட்சசர்கள்,{71} பித்ருக்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோரில் எவரும் இத்தகைய மகனைக் கொண்டிருக்கவில்லை. நீர் யாராக இருந்தாலும் உம்மை நான் வணங்குகிறேன். நான் உமக்குச் செய்ய வேண்டியதென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான் {பலி}.(63-72)
பலியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், உகந்த வழிமுறைகளை அறந்தவனும், எவராலும் உணரமுடியாத இயல்பைக் கொண்டவனுமான அந்தக் குள்ளன், சற்றே புன்னகைத்துப் பேசத் தொடங்கினான்.(73)
பலியின் உறுதிமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 46-(வாமநஸ்ய பலியஜ்ஞே கமநம் த்ரிபாதபூமிலாப꞉ த்ரிவிக்ரமமூர்திதாரணம் ச)மூன்றடி நிலம் கேட்ட வாமனன்; பலியைத் தடுத்த சுக்ரரும், பிரகலாதனும்; கொடையளித்த பலி; வாமனனின் திரிவிக்கிரம விஷ்வரூபம்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அப்போது விஷ்ணு {குள்ள வடிவில் இருந்த வாமனன்}, “அசுரர்களின் மன்னனால் {மஹாபலியால்} மேற்கொள்ளப்படும் இந்த வேள்வி அற்புதம் நிறைந்ததாக இருக்கிறது. நன்கு தயாரிக்கப்பட்ட பல்வேறு வகை உணவுப்பொருட்கள் இங்கிருக்கின்றன. ஓ! பெருஞ்சக்திவாய்ந்த தானவ மன்னா, பெரும்படைப்பாளனான பிரம்மன், தேவர்களின் மன்னனான சக்ரன், யமன், வருணன் ஆகியோர் செய்த வேள்விகளை எல்லாம் உன் வேள்வி விஞ்சிவிட்டது.(1-2) பாவங்களை அழிக்க உன்னால் மேற்கொள்ளப்படுவதும், சொர்க்கத்தை அடைய வழிவகுப்பதும், வேள்விகள் அனைத்திலும் சிறந்ததுமான இந்தக் குதிரைவேள்வி, பிரம்மவாதிகளால் அங்கீகரிக்கப்படுபவையும், விருப்பத்திற்கு உரியவையுமான அனைத்துப் பொருள்களாலும் நிறைந்திருக்கிறது.{3,4}
வேள்விகளில் சிறந்தது அஷ்வமேதமே என ஸ்ருதி சொல்கிறது. பொற்கொம்புகளுடனும், இரும்புவளையங்களுடனும் கூடியதும், மனம் போன்ற வேகமான நடையைக் கொண்டதுமான பன்றியின் வடிவில் இருப்பதும், ஏராளமான தங்கத்தைக் கொண்டதுமான இந்தப் பெரும் வேள்வி அண்டத்தின் பிறப்பிடமாகவும், புனிதம் நிறைந்ததாகவும் இருக்கிறது.{5} இந்த வேள்வியைச் செய்து வேள்வி குதிரையைச் செலுத்தும் மனிதனின் பாவங்கள் அழிகின்றன. வேதங்களை நன்கறிந்த விப்ரர்கள், இந்த வேள்விக் குதிரையை நெருப்பென அழைக்கிறார்கள்.{6} ஆசிரமங்கள் அனைத்திலும் இல்லற ஆசிரரமே {கிருஹாஸ்ரமமே} சிறந்ததாக இருப்பதைப் போலவும், மனிதர்களில் சிறந்தவர்களாகப் பிராமணர்கள் இருப்பதைப் போலவும், அசுரர்களில் முதன்மையானவனாக நீ இப்போது இருப்பதைப் போலவும் வேள்விகளில் சிறந்த இந்தக் குதிரை வேள்வியும் இருக்கிறது” என்றான் {வாமனன்}”.{7}
வைசம்பாயனர், “தைத்திய மன்னன் பலி, குள்ளனின் {வாமனனின்} சொற்களைக் கேட்டுப் பெரும் நிறைவடைந்தான்.{8}(3-8) அப்போது பலி, “ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, நீர் யார்? உமக்கு என்ன வேண்டும்? நான் உமக்கு என்ன கொடுக்க வேண்டும்? உமக்கு நன்மை நேரட்டும். நீ விரும்பிய பொருளை வேண்டினால் அதை நீர் அடைவீர்” என்றான்.(9)
குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவா, அரசையோ, வாகனங்களையும், ரத்தினங்களையோ, பெண்களையோ நான் வேண்டவில்லை. நீ நிறைவடைந்தால், உன் மனம் அறத்தில் நிலைத்திருந்தால், என் ஆசானின் வேள்வி இல்லத்தைக் கட்டுவதற்காக மூன்று காலடிகளில் மறையும் {அளக்கப்படக்கூடிய} நிலத்தை நான் உன்னிடம் வேண்டுகிறேன். நான் வேண்டும் உயர்ந்த பொருளை எனக்கு அளிப்பாயாக” என்று கேட்டான்.(10,11)
பலி, “ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, மூன்று காலடிகளில் மறையும் {அளக்கப்படும்} நிலத்தால் நிறைவேறும் உமது நோக்கமென்ன? நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அடிகளைக் கொண்ட நிலத்தை வேண்டுவீராக” என்று சொன்னான்.(12)
சுக்கிரர் {மஹாபலியிடம்}, “ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! பேரசுரா, இவனுக்குக் கொடையேதும் உறுதியளிக்காதே; இவனை நீ அறியமாட்டாய். இவனே பெருந்தலைவன் ஹரியாவான்.{13} இவன் தன் மாயையின் மூலம் குள்ள வடிவை ஏற்று, உன்னைக் கொண்டு தேவர்களின் மன்னனுக்கு நன்மை விளைவிக்கவே இங்கு வந்திருக்கிறான். எல்லாம் வல்ல தலைவனால் பல்வேறு வடிவங்களை ஏற்க முடியும்” என்றார்.{14}(13,14)
சுக்கிரரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் தியானித்த பலி, பிறகு தன் மனத்தில் ஒரு தீர்மானத்தை அடைந்து, “இவரைவிடத் தகுதியானவரை என்னால் வேறெங்கு பெற முடியும்” என்று சொல்லி பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தான். பிறகு பொன்னாலான புல்லை எடுத்து அசைவற்றவனாக அங்கே நின்றான்.{15}
பிறகு பலி, “ஓ! தாமரைக் கண்களைக் கொண்ட விப்ரர்களில் முதன்மையானவரே, அமர்வீராக. இதோ கிழக்கு நோக்கி நான் நிற்கிறேன். “கொடுப்பாயாக” என்று சொல்லி என் கொடையை ஏற்பீராக.{16} எந்த நிலங்களை நீர் எடுத்துக் கொள்ளப் போகிறீர். உமது மூன்று காலடியின் பரப்பு எவ்வளவு? அதை நான் கொடுப்பேன். நீரை எடுப்பீராக. உமது ஆசானின் சொற்கள் பொய்க்காதிருக்கட்டும்” என்றான்.{17}(15-17)
சுக்கிரர், “ஓ! தைத்திய மன்னா, இவனுக்குக் கொடையேதும் அளிக்காதே. நிச்சயம் இவன் விஷ்ணுவே என்பதை நான் அறிவேன். அற்புதமான பக்தி இங்கே பொருந்தி அமைவதேன்?” என்றார்.{18}
பலி, “நான் வஞ்சிக்கப்படவில்லை. தலைவன் விஷ்ணுவே என் வேள்விக்கு வந்திருக்கிறான். இந்தத் தேவதேவன் என்னிடம் கேட்பவை எதையும் நான் கொடுப்பேன்.{19} நான் கொடையளிக்க விஷ்ணுவை விடத் தகுந்தவன் வேறு எவன்?” என்று சொன்னான். பலி இதைச் சொல்லிவிட்டு உடனேயே நீரை எடுத்துக் கொண்டான்.{20}(18-20)
குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவர்களில் பாவமற்ற மன்னா, என் மூன்று காலடிகளில் மறையும் நிலம் எனக்குப் போதுமானதாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னது உண்மைதான். அஃது ஒருபோதும் வேறுவகையாகாது” என்றான்”.(21)
வைசம்பாயனர், “பகைவரைக் கொல்பவனும், விரோசனின் மகனும், தைத்தியர்களின் மன்னனுமான பலி, பெரும்பிரகாசமிக்கக் குள்ளனின் சொற்களைக் கேட்டு அவனது மேனியில் ஒரு மான்தோலைப் போர்த்தினான்.{22} பிறகு “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி நீர் நிறைந்த குடுவையொன்றைத் தீண்டினான்.{23} குள்ளனும் {வாமனனும்}, அசுர மன்னனின் அழிவை விரும்பி, அழிவைத் தரும் தன் கைகளை நீட்டினான்.{24} தானவர்களின் மன்னன் கிழக்கு நோக்கி நின்று, அவனிடம் நீரைக் கொடுக்க எத்தனித்தபோது பிரஹ்லாதன் அவனைத் தடுத்தான்.{25}
பெரும் ஞானியான பிரஹ்லாதன், அசுரர்களின் செழிப்பைக் கொள்ளையடிக்க விரும்பும் பெரும் ஹரியின் எதிர்பாராத வடிவைக்கண்டு,{26} “இந்தக் குள்ள பிராமணனுக்கு கொடையேதுமளிக்காதே.{27} இவனே முன்பு உன் பெரும்பாட்டனை {ஹரிண்யகசிபுவைக்} கொன்றவன். பெரும் ஞானியான இந்த விஷ்ணு உன்னைப் பழிதீர்க்கவே வந்திருக்கிறான்” என்றான்.{28}(22-28)
பலி, “இந்தத் தேவனுக்குக் கொடைகளை அளிக்கவல்லவனாக நான் இருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.{29} அண்டத்தின் தலைவனும், பிரம்மனுக்கும் மேலானவனும், இத்தகைய ஆதரவைக் காட்டுபவனுமான இவனை என் கொடைகளின் இலக்காகவே நான் அடைந்திருக்கிறேன். ஓ! அசுரர்களில் முதன்மையானவரே, வேள்விக்கான தீக்ஷை பெற்றவன் நிச்சயம் கொடைகளை அளிக்க வேண்டும்” என்றான்.{30}
அசுரர்களின் மத்தியில் இவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விரோசனன் மகன் பலி, தலைவன் நாராயணனுக்கு மூன்றடி நிலத்தைக் கொடையாக அளித்தான்.{31}
பிரஹ்லாதன், “ஓ! தானவர்களின் மன்னா, இந்த விப்ரனுக்கு கொடையேதுமளிப்பதாக உறுதியளிக்காதே. இவனை விப்ர இளைஞனாக நான் கருதவில்லை. ஒரு பிராமணன் இவ்வாறு இருக்க மாட்டான்.{32} இவனது வடிவைக் கண்டு நரசிங்கமே மீண்டும் திரும்பிவிட்டதாக உண்மையாகவே நான் நம்புகிறேன்” என்றான்.{33}
பலி, எல்லையற்ற ஆற்றல் கொண்ட பிரஹ்லாதனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அவனை நிந்திக்கும் வகையில்,{34}(29-34) “பிச்சை வேண்டுபவரின் கெடுபேறானது {துரதிர்ஷ்டமானது}, அவனை ஏமாற்றத்துடன் அனுப்பும் அரசனை வந்தடையும்.{35} ஒரு பிராமணனுக்கு உறுதிமொழியளித்த மனிதன், அதை நிறைவேற்றவில்லை என்றால், பாவியான அவன் தன் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் நரகத்தை அடைவான்.{36} வறுமையில் வாட அஞ்சியே நான் இந்த நிலத்தை இவருக்குக் கொடையளிக்கிறேன்; இவரை விட வேறு யார் தகுந்த பிராமணர்? இவரைவிட மேலான எவரும் இல்லாதபோதே நான் இந்த நிலத்தை இவருக்குக் கொடுக்கிறேன்.{37} குள்ள வடிவில் என்னிடம் பிச்சை வேண்டும் இருபிறப்பாளரைக் கண்டு நான் பெரிதும் நிறைவடைகிறேன். எனவே நான் இவருக்குக் கொடையளிக்கப் போகிறேன். என்னைத் தடுக்காதீர்” என்றான்.{38}
மீண்டும் பலி அந்தக் குள்ள பிராமணனிடம், “ஓ! அற்ப புத்தி கொண்டவரே, மூன்று காலடிகளில் மறையும் நிலத்தைக் கொண்டு நீர் என்ன செய்வீர்? பெருங்கடல்களால் சூழப்பட்ட மொத்த உலகையும் நான் உமக்கு அளிப்பேன்” என்றான்.{39,40}
குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவர்களின் முதன்மையானவனே, நான் மொத்த பூமியை வேண்டவில்லை. மூன்று காலடிகளில் மறையும் நிலத்தில் நான் நிறைவடைகிறேன். இதுவே நான் விரும்புவதும், வேண்டுவதுமாகும்” என்றான்”.{41}(35-41)
வைசம்பாயனர், “தானவ மன்னன் பலி, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, அளவற்ற ஆற்றல் படைத்த தலைவன் நாராயணனின் மூன்று காலடிகளில் மறையும் நிலத்தைத் தீண்டச் செய்தான்.{42} அவனுடைய கை நீரில் நுழைந்தபோது, குள்ளனான அந்தத் தலைவன், தான் அவமதிக்கப்பட்டதாகக் கருதி தன் அண்ட வடிவை வெளிப்படுத்தினான்.{43}
பூமி அவன் பாதங்களானது, வானம் அவனது தலையானது, சூரியனும், சந்திரனும் அவனது கண்களாகினர், பிசாசங்கள் அவனுடைய பாதங்களின் விரல்களாகின, குஹ்யர்கள் அவனது கைகளின் விரல்களாகினர்.{44} விஷ்வேதேவர்கள் அவனுடைய தொடைகளில் இருந்தனர், சாத்யர்கள் அவனுடைய கால்மூட்டுகளில் இருந்தனர், யக்ஷர்களும் அப்சரஸ்களும் அவனது நகங்களில் இருந்து வெளிப்பட்டனர்.{45} மின்னல் அவனது பார்வையானது, சூரியனின் கதிர்கள் அவனது தலைமுடியானது, நட்சத்திரங்கள் அவனது மேனியில் உள்ள முடிகளின் துளைகளாகின {ரோம்பாணிகளாகின}, மஹாரிஷிகள் அந்த முடிகளாகினர் {ரோமங்களாகினர்}.{46} அசுவினி ரெட்டையர்கள் அவனது கால்கள் இரண்டாக இருந்தனர், பெருஞ்சக்திவாய்ந்த வாயு அவனது மூக்கானான். திசைகள் அவனது கைகளாகின, துணைத்திசைகள் அவனது காதுகளாகின.{47} சந்திரன் அவனது மகிழ்ச்சியானான் {பிரசாதமானான்}, அறம் அவனது மனமானது {மனோதர்மம்}, வாய்மை அவனது வாக்கானது, ஸரஸ்வதி தேவி அவனது நாவானாள்,{48} பெருந்தேவி அதிதி அவனது கழுத்தானாள், பிரகாசமிக்கச் சூரியன் அவனது தொண்டையானான், சொர்க்கவாசல் அவனது உந்தியானது, மித்ரர்களும், துவஷ்டாவும் அவனது புருவங்கள் இரண்டாகினர்,{49} நெருப்பு {வைஷ்வாநரன்} அவனது முகமானான், பிரஜாபதி அவனது விரைகளானான் {விருஷணங்களானான்}, பிரம்மன் அவனது இதயமானான், கசியபர் அவனது ஆண்குறியானார்.{50} வாசவன் அவனது பின்பகுதியானான் {பிருஷ்டமானான்}, மருத்துகள் அவனது கைமூட்டுகளாகினர். வேதங்கள் அவனது இருப்பாகவும், ஒளி அவனது பிரகாசமாகவும்,{51} ருத்திரன் {மஹாதேவன்} அவனது மார்பாகவும், பெருங்கடல் அவனது பொறுமையாகவும் ஆனார்கள், பெருஞ்சக்திவாய்ந்த கந்தர்வர்களும், நாகர்களும் அவனது வயிறாகினர்,{52} லக்ஷ்மி அவனது புத்தியானாள் {மேதைமையானாள்}, திருதி அவனது காந்தியானாள், கல்வி {வித்யை} அவனது இடையானது, ஆன்மாவின் இருக்கை அவனது நெற்றியானது.{53} ஒளிக்கோள்கள் அனைத்தும் {ஸர்வஜ்யோதிகள்} அவனது தபமாக அமைந்தன, தேவர்களின் மன்னனான சக்ரன் {தேவவ்ராட்} அவனது சக்தியானான், தேவர்கள், வேள்விகளின் இஷ்டி சடங்குகள், இருபிறப்பாளர்களின் பணிகள், விலங்குகள் ஆகியன அவனது மார்பாகவும், இருபுறங்களாகவும் ஆகின.{54,55} பேரசுரர்கள், விஷ்ணுவின் அந்த அண்ட வடிவைக் கண்டு பெருங்கோபத்தால் தூண்டப்பட்டனர். அவர்கள் நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அவனை அணுகினர்” என்றார் {வைசம்பாயனர்}.{56}(42-56)
வாமனஸ்தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 47-(விஷ்ணோராதேஷாத் பலே꞉ பாதாலப்ரவேஷ꞉ தத்க்ருதவிஷ்ணுஸ்தவ꞉ பலிம் ப்ரதி கருடஸ்ய உக்திப்ரத்யுக்தீ வாமநஸ்தவபலகதநம் ச)-போரில் தைத்தியர்களை அடக்கி பலியைப் பாதாளத்தில் கட்டிப்போட்ட விஷ்ணு; நாரதர் பலிக்குக் கற்பித்த விஷ்ணு துதியான வாமனஸ்தவம்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தானவர்களின் பெயர்கள், வடிவங்கள், சாதனைகள், முக்கிய ஆயுதங்கள் ஆகியவற்றை இனி கேட்பாயாக.{1} விப்ரசித்தி, சிபி, சங்கு, அயசங்கு, அயசிரன், அஷ்வசிரன், பெருஞ்சக்திவாய்ந்த ஹயக்ரீவன்,{2} {வேகவான்}, கேதுமான், உக்ரன், யுயோக்ரன், வியக்ரன், பேரசுரனான புஷ்கரன், புஷ்கலன், ஸ்வஷா, அஷ்வபதி,{3} பிரஹ்லாதன் {பிரஹ்ராதன்}, அஷ்வசிரன், கும்பன், ஸம்ஹ்ராதன், ககநப்ரியன், அனுஹ்ராதன், ஹரிஹரன், வராஹன், ஸம்ஹரன், அருஜன்,{4} விருஷபர்வன், விரூபாக்ஷன், முனீந்திரன், சந்திரலோசனன், நிஷ்பிரபன், சுப்ரபன், நிருத்ரன்,{5} ஏகவக்தரன், மஹாவக்தரன், திவிவக்தரன், சேரஸன் {காலஸம்நிபன்}, சரபன், {சலபன்}, குந்தன் {குணபன்}, குபதன் {குலபன்}, குவதன்,{6} மஹாகர்பன், சங்குகர்ணன், மஹாத்வனி, தீர்கஜிஹ்வன், அர்க்கவதனன், மிருதுசாபன் {மிருதுபாஹு}, மிருதுபிரியன்,{7} வாயு, கரிஷ்டன், நமுசி, சம்பரன், விக்ஷரன், சந்திரஹந்தன், குரோதஹந்தன், குரோதவர்தனன்,{8} காலகன், கலகாக்ஷன், விருத்ரன், குரோதவிமோக்ஷணன், கவிஷ்டன், ஹவிஷ்டன், பிரலம்பன், நரகன், பிருது,{9} சந்திரதாபனன், வாதாபி, கேதுமான், அஸிலோமன், விதோமன் {புலோமன்}, பாஸ்கலன், பிரமதன், மதன்,{10} சிருகாலவவனன், {கராலன்}, கேசி, ஏகாக்ஷன், பாகு, துஹுண்டன், ஸ்ருமலன், ஸ்ருபன் ஆகிய இவர்களும்,{11} பிற தைத்தியர்கள் பலரும் பாதங்களை வைக்க எத்தனித்த பெரும் விஷ்ணுவின் முன் தோன்றினார்கள்.{12}(1-12)
அவர்களில் சிலர் பாசக்கயிறுகளைக் கொண்டிருந்தனர், சிலர் தங்கள் வாயை அகல விரித்துக் கொண்டிருந்தனர், சிலர் கழுதையின் குரலைக் கொண்டிருந்தனர், சிலர் சதாக்னிகளைக் கொண்டிருந்தனர், சிலர் தங்கள் கைகளில் சக்கரங்களைக் கொண்டிருந்தனர், சிலர் வஜ்ரங்களையும்,{13} சிலர் தண்டங்களையும், சிலர் உலக்கைகளையும், சிலர் வாள்களையும், சிலர் பட்டிசங்களையும், சிலர் பரஷ்வதங்களையும், சிலர் பராசங்களையும், சிலர் கதாயுதங்களையும், சிலர் பரிகங்களையும்,{14} சிலர் பெருங்கற்களையும், சிலர் தங்கள் கைகளில் புஷலங்களையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் மரங்களைக் கொண்டிருந்தனர், சிலர் விற்களையும்,{15} சிலர் கதாயுதங்களையும், சிலர் புஷுண்டிகளையும், சிலர் தங்கள் கைகளில் குத்துவாள்களையும் கொண்டிருந்தனர்.{16} பயங்கரம் நிறைந்தவர்களும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களுமான தானவர்கள் பல்வேறு வகைகளில் உடைகள் பூண்டு, பல்வேறு ஆயுதங்களையும் தரித்திருந்தனர்.{13-17}
சிலர் ஆமைகளைப் போன்ற வாயைக் கொண்டிருந்தனர். சிலர் நீர்க்கோழிகளைப் போன்றும், சிலர் அன்னங்களைப் போன்றும், சிலர் கழுதைகளைப் போன்றும், சிலர் ஒட்டகங்களைப் போன்றும், சிலர் பன்றிகளைப் போன்றும்,{18} சில பயங்கரத் தானவர்கள் மகரங்களைப் போன்றும் வாய்களைப் படைத்திருந்தனர். முயல்கள், பூனைகள், கிளிகள், பசுக்கள், மான்கள், கருடன், வாள்கள், மயில்கள் போன்ற முகங்களைச் சிலர் கொண்டிருந்தனர்.{19,20} சிலர் குதிரைப் போன்ற வாயைக் கொண்டிருந்தனர், சிலர் யானை போன்ற வாயையும், சிலர் பல்வேறு ஆயுதங்களைப் போன்ற முகங்களையும் கொண்டிருந்தனர்.{21} அவர்கள் யானைத் தோலையும், மான் தோலையும் உடுத்தியிருந்தனர். அவர்களின் மேனிகள் மரவுரியால் மறைக்கப்பட்டிருந்தன. அவர்களில் சிலர் தங்களைப் பொன்னால் அலங்கரித்திருந்தனர். அந்த அசுரர்கள் மகுடங்களையும், குண்டலங்களையும் அணிந்திருந்தனர். அவர்கள் பல்வேறு உடைகளைத் தரித்துக் கொண்டு, பல்வேறு மாலைகளாலும், குழம்புகளாலும் தங்களை அலங்கரித்திருந்தனர்.{22-26} தானவர்கள் அசுரர்களும், எரியும் தங்கள் ஆயுதங்களை ஏந்தியபடியே, பாதத்தை வைக்க எத்தனித்த ரிஷிகேசனை எதிர்த்தனர்.{27}
மூவுலகங்களையும் வெல்ல இருந்த அந்த நேரத்தில் தலைவனின் பிரகாசம் சூரியனைப் போன்றிருந்தது. எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன், திதியின் மகன்கள் அனைவரையும் தன் உள்ளங்கையால் நொறுக்கிவிட்டு, தன்னுடைய மூன்று காலடிகளால் மூவுலகங்களையும் அடைந்தான். அவன் பெரும் வடிவை எடுத்ததும் முதலில் பூமியை அடைந்தான்;{28} அவன் பூமியை அடைந்ததும் சூரியனும், சந்திரனும் அவனுடைய இதயத்தில் இருந்தனர், அவன் வானத்தை அடைந்தபோது அவர்கள் அவனது இடையில் இருந்தனர், அவன் சொர்க்கத்தை அடைந்தபோது அவர்கள் அவனது கால்மூட்டுகளில் இருந்தனர்.{29}(13-29) ஒப்பற்ற ஆற்றல்படைத்தவனான விஷ்ணுவின் வடிவை இவ்வாறே இருபிறப்பாளர்கள் விளக்குகின்றனர்.{30} அண்டத்தால் துதிக்கப்படும் ஹரி, மூவுலகங்களையும் வென்று, முன்னணி அசுரர்களைக் கொன்றுவிட்டு, பூமியை தேவர்களின் மன்னனான இந்திரனுக்கு அளித்தான். பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு, பூமிக்கடியில் சுதலம் என்றழைக்கப்படும் பகுதியை பலிக்கு ஒதுக்கினான்.{31} அசுரர்களின் முதன்மையான பலி, அந்தப் பகுதியைத் தன் வசிப்பிடமாக அடைந்து நிறைவடைந்தான். அதுமுதல் அசுரர்களின் மன்னனான அவன் ரஸாதலத்தில் வாழ்ந்து வருகிறான்{32}. பெரும்பிரகாசமிக்கப் பலி, அங்கே வாழ்ந்து கொண்டே பெருந்தியானத்தில் ஈடுபட்டான். நுண்ணறிவுமிக்கப் பலி, அண்டத்தால் துதிக்கப்படும் நாராயணனிடம்,{33} “ஓ! தலைவா, நான் இனி என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பாக எனக்கு ஆணையிடுவாயாக” என்றான். அப்போது தேவர்களின் தலைவனான விஷ்ணு, தைத்திய மன்னன் பலியிடம் பேசினான்.{34}(30-34)
விஷ்ணு, “ஓ! பேரசுரா, நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்; நான் உனக்கு ஒரு வரமளிக்கத் தயாராக இருக்கிறேன்; அதை வேண்டுவாயாக. உனக்கு நன்மை நேரட்டும். விரும்பிய பொருட்களை வேண்டுவாயாக.{35} தேவர்களின் மன்னனான சக்ரனின் {இந்திரனின்} சொற்களுக்கு ஒருபோதும் எந்தச் சூழ்நிலையிலும் கீழ்ப்படியாதிராதே. இஃது உனக்கான என் ஆணையாகும்.{36} நீ கீழ்ப்படியவில்லை எனில், உன் நலத்திற்குக் கேடு நேரும். ஓ! தைத்தியா, நீ அளித்த நீரை நான் என் உள்ளங்கைக் குழியில் ஏற்றதால், எங்கும் தேவர்களிடம் இருந்து உனக்கு அச்சம் நேராது.{37,38} பாதாள லோகத்தில் சுதலம் என்றழைக்கப்படும் பகுதியில் நீயும், உன் தொண்டர்களும், தைத்தியர்கள் அனைவரும் என் தயவில் வாழ்வீராக.{39} என் ஆணையை {சாஸனத்தை} நினைவுகூர்ந்து ஒப்பற்ற ஆற்றல் படைத்த சக்ரனின் சொற்களை ஒருபோதும் அவமதிக்காதே.{40} ஓ! பேரசுரா, தேவர்கள் அனைவரும் உன்னால் வழிபடத்தகுந்தவர்களாவர். நீ விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவாய்; இம்மையிலும், மறுமையிலும் ஆடைகள் பலவற்றையும் அடைவாய். என் தயவால் எப்போதும் நீ தைத்தியர்களின் தலைவனாக அவர்களை ஆள்வாய். நீ பல்வேறு பொருள்களை அனுபவித்துக் கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வாய்.{41,42} என்னுடைய ஆணையை நீ மீறினால் பெருஞ்சக்திவாய்ந்த நாகர்கள் தங்கள் தலைகளால் {நாகப் பாசத்தால்} உன்னைக் கட்டுவர்.{43} நீ எப்போதும் மஹேந்திரனையும், பிற தேவர்களையும் வணங்க வேண்டும். தேவர்களின் மன்னனான இந்திரன் என் அண்ணன் ஆவான்; எனவே நீ அவனது ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றான்{44}.(35-44)
பலி, “ஓ! பெருந்தேவா, ஓ! சங்கு சக்கர, கதாதாரியே, ஓ! தேவர்களின் தேவா, ஓ! தேவாசுரர்களின் ஆசானே, ஓ! தேவர்களின் மன்னா, ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நான் பாதாள லோகத்தில் வாழும்போது என் நிலை என்னவாக இருக்கும்? நான் எவ்வாறு அங்கே வாழ்வேன்? என் புகழ் எவ்வாறு சிதையாமல் இருக்கும்?” என்று கேட்டான்.(45-46)
தலைவன் {பகவான்}, “ஓ! தானவர்களில் முதன்மையானவனே, ஸ்ரோத்ரியம் இல்லாத சிராத்தம், நோன்புகள் இல்லாத கல்வி, கொடைகள் இல்லாத வேள்வி, ரித்விக்குகள் இல்லாத ஹோமம், மதிப்பில்லாத கொடைகள், தூய்மையற்ற ஹவிஸ் என்ற இந்த ஆறு பாகங்களும் உனக்குச் சொந்தமாகும்.{47} என் பக்தர்களிடம் தீய மனம் கொண்டவர்களின் {பக்தத்வேஷிகளின்} அறம் {புண்ணியம்}, கிரய விக்கிரையத்தில் {கொள்முதல் செய்து விற்பனை செய்வதில்} ஈடுபடுபவர்களின் அறம் {புண்ணியம்}, அக்னிஹோத்ரங்களின் அறம், மதிப்பில்லாமல் ஈகை புரிவோரின் அறம், புரோஹிதராகச் செயல்படுகிறவர்களின் அறம் ஆகியவை, ஓ! தைத்தியர்களின் மன்னா, என் தயவால் உன் பங்காகும்” என்றான்”.{48}(47,48)
வைசம்பாயனர், “அசுரர்களில் முதன்மையான பலி, உயரான விஷ்ணுவின் சொற்களைக் கேட்டு, “அவ்வாறே ஆகட்டும்” என்றான்.{49} அவன், அந்தத் தேவனின் ஆணையை மேற்கொண்டு பாதாள லோகத்தில் நுழைந்தான்.{50}
அதே நேரத்தில் தேவர்களால் துதிக்கப்படும் தெய்வீகனான விஷ்ணு, {அந்த தெய்வீக அரசில்} பிரிவினைகளை {பாகங்களை} உண்டாக்கினான்.{51} அவன், கிழக்குப் பகுதியை ஒப்பற்ற ஆற்றல் படைத்த தேவர்களின் மன்னனுக்கும் {இந்திரனுக்கும்}, தெற்குப் பகுதியைப் பித்ருக்களின் மன்னனான பெரும் யமனுக்கும்,{52} மேற்குப் பகுதியை உயரான்ம வருணனுக்கும், வடக்குப் பகுதியை யக்ஷர்களின் மன்னனான குபேரனுக்கும் கொடுத்தான்;{53} பூமிக்கு அடியில் இருந்த பகுதியை நாகர்களின் மன்னுக்கும், மேலே இருந்த பகுதியை சோமனுக்கும் அளித்தான்.{54} பெருஞ்சக்திவாய்ந்தவனும், தேவர்களின் தலைவனும், மஹாரிஷிகளால் துதிக்கப்படுபவனுமான விஷ்ணு இவ்வாறு மூவுலகங்களையும் பிரித்துக் கொடுத்துவிட்டு தெய்வீக லோகத்திற்குச் சென்றான்.{55} அடக்கப்பட முடியாதவனான அந்தக் குள்ளன் {வாமனன்} புறப்பட்டுச் சென்ற பிறகு, தேவர்கள் அனைவரும், தங்கள் முன் நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனைக்} கொண்டு மகிழ்ச்சியில் நிறைந்தனர்”.{56}(49-56)
வைசம்பாயனர், “கிருஷ்ணன், விரோசனன் மகனான பலியை ஏழு தலைகளைக் கொண்ட கம்பனன், அஷ்வதரன் முதலிய பாம்புகளால் கட்டிவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.{57} தெய்வீக முனிவரான நாரதர், மேற்கண்ட விளைவால் துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவனிடம் தாமாகவே வந்தார்.{58}(57-58) அவன் இவ்வாறு பீடிக்கப்பட்டதைக் கண்டு கருணையில் நிறைந்த அவர் {நாரதர்}, அந்தத் தானவ மன்னனிடம், {மோக்ஷ உபாயங்களைச் சொல்லும் பொருட்டு},{59} “உன்னை விடுவிக்கும் வழிமுறைகளை நான் கண்டடைகிறேன். ஓ! தைத்தியர்களின் மன்னா, தொடக்கமும் முடிவுமற்றவனும், நித்தியனும் சிதைவற்றவனும், தேவர்களின் தேவனுமான வாசுதேவனைத்{60} தூய இதயத்துடன் தியானிப்பாயாக; உன் மனத்தை அவனிடம் அர்ப்பணித்தால் நீ உடனே முக்தியை அடைவாய்” என்றார்.{61}(59-61)
அதன்பிறகு, அந்த விரோசனன் மகன் {பலி}, கைகளைக் கூப்பி நாரதரிடமிருந்து முக்தியை அடைவதற்கான வழிமுறைகளைக் கற்றறிந்தான்.(62) அந்தப் பேரசுரன் பலி, நாரதரால் பாடப்பட்ட தெய்வீகப் பாடலைக் கற்றறிந்து, பூமியை உயர்த்திய பெருந்தேவனின் பெயர்களை ஓதத் தொடங்கினான்.(63) {அவன்} “ஓம், நித்தியனும், எல்லையற்றவனுமான பெருந்தலைவனை வணங்குகிறேன். நீரில் கிடக்கும் பத்மநாபனான தெய்வீக விஷ்ணுவை வணங்குகிறேன்.{64} எழு வடிவங்களைக் கொண்ட சக்திகளுடன் கூடிய உடலை ஏற்று மூவுலகங்களிலும் படர்ந்தூடுருவி இருப்பவன் நீயே. ஓ! தலைவா, காலனின் காலன் நீயே. என்னை நீ விடுவிப்பாயாக {எனக்கு மோக்ஷம் அருள்வாயாக}.{65} வானம் சூரியனும், சந்திரனும் அற்றிருக்கும்போதும், வேள்விகளும், தபங்களும் வீழ்ச்சியடையும் போதும், அண்டத்தை மீண்டும் படைக்க நினைப்பவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ விடுவிப்பாயாக.{66} இருபிறப்பாளரில் முதன்மையான மார்க்கண்டேயர், உன்னில் பிரம்மன், ருத்திரன், இந்திரன், வாயு, அக்னி ஆகியோரையும், ஆறுகள், பாம்புகள், மலைகள் ஆகியனவற்றையும் கண்டார். என்னை நீ விடுவிப்பாயாக {எனக்கு மோக்ஷம் அருள்வாயாக}.{67} முந்தைய கல்பத்தில், உன் வயிற்றுக்குள் நுழைந்த மார்க்கண்டேய முனி, அசைவன, அசையாதன உள்ளிட்ட மொத்த அண்டத்தையும் அங்கே கண்டார். உன் சக்தியால் நீ என்னைக் காப்பாயாக.{68} உன் அறிவால் ஆதரிக்கப்படும் யோக சக்தியை அடைந்து தனியனாக மூவுலகங்களையும் படைத்து மீண்டும் யோகத்தில் ஈடுபடுபவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{69} நீரில் கிடந்த யோகத்துயிலை அனுபவித்து, மீண்டும் படைப்பைச் சிந்திப்பவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{70} வேள்விப் பன்றியின் வடிவை ஏற்று முன்னர்ப் பூமியை உயர்த்தியவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{71} தந்தங்களால் பூமியை உயர்த்திப் பித்ருக்களுக்கான மூன்று பிண்டங்களை விதித்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{72} தேவர்கள் ஹிரண்யாக்ஷனுக்குப் பயந்து தப்பித்து ஓடினாலும் அவர்களைக் காத்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{73} பெரும் வாயைக் கொண்ட ஒரு வடிவை ஏற்று, போரில் சக்கரத்தால் ஹிரண்யாக்ஷனின் தலையைக் கொய்ந்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{74} முன்னர் உன்னுடைய முழக்கத்தால் தைத்தியன் ஹிரண்யகசிபு தலையும், எலும்புகளும் நொறுங்கிக் கொல்லப்பட்டான். உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{75} முற்காலத்தில் பிரம்மனின் கண் எதிரிலேயே அவ்விரு தைத்தியர்களால் வேதங்கள் கொள்ளை போன போதும் அவற்றை மீட்டவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{76} ஹயசிரனின் வடிவை ஏற்று மது கைடபர் என்ற இரு தானவர்களையும் கொன்று பிரம்மனிடம் வேதங்களைத் திருப்பிக் கொடுத்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{77} தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், உரகர்கள் ஆகியோரால் உன் எல்லையைக் காண இயலாது. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{78} வேதங்களை விளக்கிச் சொல்லும் அபாந்தரதமன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{79} ஓ! தலைவா, அக்னிஹோத்ரமும், பிற வேதச் சடங்குகளும், பித்ருக்களை மதித்துச் செய்யப்படும் வேள்விகளும், ஹவிஸ்களும் ஆகிய அனைத்தும் உன் புதிர்களே {ரஹஸ்யங்களே}. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{80} தீர்க்கதமஸ் ரிஷி, தம்முடைய குருவின் சாபத்தால் குருடாகப் பிறந்தாலும், உன் தயவால் தமது பார்வையை மீண்டும் பெற்றார். உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{81} ராகுவால் பீடிக்கப்படும் யானையான பரிதாபத்திற்குரிய உன் பக்தனை விடுவிப்பாயாக.(82} சிதைவற்றவன் நீயே, நித்தியன் நீயே, பிரம்மத்துக்கும், பக்தர்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவன் நீயே. தீய வழிகளில் செல்வோரைத் தண்டிப்பவன் நீயே. என்னை நீ காப்பாயாக.{83} சங்கு, சக்கரம், கதாயுதம், அம்பறாதூணி, சாரங்க வில், கருடன் ஆகியோரை நான் வணங்குகிறேன். அவர்கள் என் தளைகளில் இருந்து என்னை விடுவிக்கட்டும்” என்று வேண்டினான்[1].{84}
அப்போது, சங்கு, சக்கரம், கதாயுதம், {பத்மம்}அம்பறாதூணி, சாரங்கும், கருடன் ஆகியோர் தலைவனைத் தணிவடையச் செய்து, பலியை அவனது தளைகளில் இருந்து விடுவிக்கும்படி அவனை வேண்டினர்.{85}(64-85)
அப்போது தணிவடைந்த தலைவன், பாம்புகளை அழிப்பவனும், பறவைகளின் மன்னனுமான கருடனிடம், “பலியைத் தளைகளில் இருந்து விடுவிப்பாயாக” என்றான்.{86} ஒப்பற்ற ஆற்றல் படைத்த கருடன் தன் சிறகுகளை அடித்துப் பாம்புகளால் கட்டப்பட்டிருந்த பலி இருக்கும் பாதாள லோகத்திற்குச் சென்றான்.{87} கருடனின் வரவை அறிந்த பாம்புகள், பேரசுரன் பலியை விடுவித்து, வினதையின் மகன் {கருடன்} மீது கொண்ட அச்சத்தால் போகவதி நகரத்திற்குத் தப்பிச் சென்றனர்.{88} பாம்புகளை உண்பவனான கருடன், செழிப்பை இழந்த பலியிடம் சென்று, தலை குப்புற தியானித்துக் கொண்டிருந்தவனைக் கிருஷ்ணனின் தயவால் நாகபாசங்களில் இருந்து விடுவித்தான்.{89}
கருடன், “ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! தானவர்களின் மன்னா, நீ தளைகளில் இருந்து விடுபட்டு, உன் பிள்ளைகளுடனும், நண்பர்களுடனும் பாதாள லோகத்தில் வாழ வேண்டும் என்பது உனக்கு அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு இட்டிருக்கும் ஆணையாகும்.{90} ஓ! தானவா, இவ்விடத்தில் இருந்து ஓர் அங்குலமும் நகர்ந்துவிடாதே. இந்த ஒப்பந்தத்தை நீ முறித்தால் உன் தலை நூறு துண்டுகளாகச் சிதறும்” என்றான்.{91}
பறவைகளின் மன்னனுடைய {கருடனின்} சொற்களைக் கேட்ட அந்தத் தானவன் {பலி}, “நான் அந்தப் பரமனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவேன்.{92} ஓ! பறவைகளின் மன்னா, நான் இங்கே மகிழ்ச்சியாக வாழும் வகையில் தலைவன் எனக்கான வாழ்வாதாரங்களை {ஜீவ்யோபாயங்களை} ஏற்பாடு செய்யட்டும்” என்றான்.{93}
பலியின் சொற்களைக் கேட்ட கருடன், “தலைவன் ஏற்கனவே உன் பராமரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டான்.{94} புரோஹிதர்கள் {ரித்விக்குகள்} இல்லாமல் செய்யப்படும் வேள்விகளின் காணிக்கைகளிலும், தவ வழிமுறைகளை அறியாத நபர்களின் விதிமுறைகளிலும் உனக்கு உரிமை உண்டு.{95} தேவர்கள் அத்தகைய காணிக்கைகளை ஏற்பதில்லை. அத்தகைய வேள்விக் காணிக்கைகளால் ஊட்டம் பெற்று நீ இங்கே மகிழ்ச்சியாக வாழ்வாயாக” என்றான்”{96}.(92-96)
வைசம்பாயனர், “கசியபரின் மகனும், மூவுலகங்களையும் ஆதரிப்பவனுமான விஷ்ணு, பெருந்தோள்களைக் கொண்ட தானவர்களின் மன்னனுக்கு இந்தச் செய்தியை அனுப்பினான்.{97} பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் இந்தப் பாடலை மதிப்புடன் ஓதும் மனிதன், அனுபவிக்கும் கொடுமைகள் அழிந்து போகும்.{98} பசுவைக் கொன்றவன், அதன் விளைவால் உண்டாகும் பாவத்தில் இருந்து விடுபடுவான், ஒரு பிராமணனைக் கொன்றவனும் கூடத் தன் பாவங்களில் இருந்து விடுபடுவான். மகனற்ற மனிதன் மகனைப் பெறுவான். {இதை ஓதும்} கன்னிகை, தன் இதயம் விரும்பும் கணவனை அடைவாள்.{99}(97-99) பெண்ணானவள், கருவை ஈனும் வலியில் இருந்து விரைவில் விடுபட்டு ஒரு மகனைப் பெறுவாள். சாங்கிய யோகியான கபிலரும், முக்தியை விரும்பிய பிற ரிஷிகளும், இந்தப் பாடலை ஓதி பாவங்களில் இருந்து விடுபட்டு, மோக்ஷத்தின் இருப்பிடமான ஸ்வேதத்வீபத்திற்குச் சென்றனர். இந்தப் பாடல் {ஸ்தவம்} தெய்வீகப் பொருட்கள் அனைத்தையும் அருளும்.{100,101} உண்மையில், காலையில் விடியலில் எழுந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, கட்டுப்பாடு கொண்ட மனத்துடன் இதைப் படிக்கும் ஒரு மனிதன், தான் விரும்பும் அனைத்துப் பொருள்களையும் அடைகிறான்.{102} தலைவனின் குள்ள அவதாரமானது {வாமன அவதாரமானது}, வேதங்களை நன்கறிந்த விப்ரர்களால் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களை விளக்குவது என நினைவுகூரப்படுகிறது.{103} குள்ள அவதாரமெனும் இந்தத் தெய்வீகக் கருப்பொருளின் ஒவ்வொரு பர்வத்தையும் சொல்லும்போது மதிப்புடன் கேட்பவன், தன் பகைவர் அனைவரையும் வென்று, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணுவைப் போலவே பெருஞ்சக்திவாய்ந்த மன்னனாவான். அவன், மாசற்ற புகழையும், ஏராளமான செல்வங்களையும், இன்பத்திற்குரிய பொருட்களையும் அடைவான்.{104,105} குள்ளன் பிடித்தமானவனாக இருப்பதைப் போலவே அவனும் அனைவரின் அன்புக்குரியவனாவான். அவனுடைய மகன்களும், பேரப்பிள்ளைகளும் பெருகுவார்கள், அவன் நோய்களில் இருந்து விடுபட்டு, அனைத்து சாதனைகளையும் செய்வான்.{106} இதைப் படிப்பவனிடம் தலைவன் ஜனார்த்தனன் நிறைவடைகிறான்; இதனால் அவன் விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் அடைகிறான். இவ்வாறே கிருஷ்ணத்வைபாயனர் {வியாசர்} சொல்லியிருக்கிறார்” என்றார் {வைசம்பாயனர்}[2].{107}(98-107)
புத்திர பிரார்த்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 48-(கிருஷ்ணம் ப்ரதி ருக்மிண்யா꞉ புத்ரப்ரார்தநாகதநம்)-கிருஷ்ணனிடம் பிள்ளை வரம் வேண்டிய ருக்மிணி; கைலாச மலையில் மஹாதேவனைச் சந்திக்கத் தீர்மானித்த கிருஷ்ணன்; பதரிகாசிரமத்தின் மகிமை…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஒரு காலத்தில் விஷ்ணுவும், தேவதேவனுமான பகவான் ஜனார்த்தனன், சங்கரனைச் சந்திக்கக் கைலாச மலைச் சிகரத்திற்குச் சென்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.(1) தத்துவங்களில் சிறந்தவர்களும், தவச் சக்தி கொண்டவர்களுமான நாரதர் உள்ளிட்ட பெரும் தவசிகள் பலரும், செந்நீல வண்ணனான மஹாதேவனை தரிசிக்கச் சென்றனர்.(2) விப்ரரே, அங்கே நீண்ட காலத்திற்கு முன்பு கேசவன் உத்தம தவம் செய்து தேவதேவனான சங்கரனை அர்ச்சித்து வழிபட்டான் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.(3) அங்கே ஆதி தேவர்களான அவ்விருவரும் {ஹரியும், சிவனும்} ஒருவரையொருவர் தரிசித்தனர். இந்திரனின் தலைமையிலான தேவர்களும் அங்கே சென்று சங்கரனையும், ஹரியையும் வழிபட்டனர்.(4)
மஹாதேவர்களான அவ்விருவரும் தனித்தனி வடிவங்களில் தோன்றினாலும் ஒருவரே என்றும், அவர்கள் ஒருவராயிருந்தாலும் பல்வேறு காலங்களுக்குரிய செயல்களைச் செய்வதற்கு வெவ்வேறு வடிவங்களை ஏற்றனர் என்றும், அண்டத்தைப் படைக்கும், காக்கும், அழிக்கும் காரணர்கள் இவ்விருவரே என்றும் சொல்லப்படுகிறது.(5) அவர்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து ஜகத்தை ஆளுகின்றனர் {என்றும் சொல்லப்படுகிறது}. கைலாச மலையில் அவ்விருவரும் சந்தித்தது எவ்வாறு என்ற கதையை எனக்கு உரைப்பீராக.(6) உயர்ந்த மஹாரிஷிகள் புருஷோத்தமர்களான அவ்விருவரையும் ஒன்றாகக் கண்டபோது என்ன செய்தனர்? இவை அனைத்தையும் எனக்கு விரிவாக உரைப்பீராக.(7) எங்கும் நிறைந்திருப்பவனும் {விஷ்ணுவும்}, எப்போதும் வெல்லும் உயர்ந்தவனும் {ஜிஷ்ணுவும்}, புராதனனுமான கிருஷ்ணன், பாம்புகளை ஆபரணங்களாக அலங்கரித்த சங்கரனை எவ்வாறு கைலாச மலையில் கண்டான் என்பதை எனக்கு விரிவாக உரைப்பீராக” என்று கேட்டான்.(8)
வைசம்பாயனர் சொன்னார், “மனிதர்களில் உத்தமனே, கிருஷ்ணன் எவ்வாறு கைலாச மலைக்குச் சென்றான்? அங்கே ரிஷபவாகனனும், தேவேசனுமான சங்கரனை எவ்வாறு கண்டான்? எவ்வாறு தவம் செய்தான்? அவ்வளவு முனிவர்களும் எவ்வாறு அங்கே சென்றனர்? என அனைத்தையும் சொல்கிறேன். கவனமாகக் கேட்பாயாக.(9,10) பகவானான துவைபாயனரிடம் {வியாசரிடம்} கேட்டது போலவே, கருட வாகனனான கேசவனை நமஸ்கரித்து, என் புத்திக்கு எட்டியதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(11) ஓ! மன்னா, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. பக்திமானும், கல்விமானுமான ஒருவன், தொண்டு செய்யும் குணம் இல்லாதவர்களிடமும், கொடூரர்களிடமும், தவத்தை ஏற்காதவர்களிடமும், வேத கல்வியில் விருப்பம் இல்லாதவர்களிடமும் இதைச் சொல்லக்கூடாது. இவ்வுரையைக் கேட்பதன் மூலம் ஒருவன் சொர்க்கவாசத்தையும், செல்வத்தையும், தூய்மையான புத்தியையும் அடைவான்.(12,13)
இவ்விருவருக்கும் {விஷ்ணுவுக்கும், சிவனுக்கும்} இடையில் வேற்றுமையில்லை என்பது பக்திமான்கன் அனைவரின் தியான பொருளும், வேதத் தீர்மானமும் ஆகும். இந்த உண்மை உபநிஷதங்கள் பலவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களை நன்கறிந்தவர்களும், தபோபலம் கொண்டவர்களும், நாரத முனிவரைப் போன்றவர்களுமான மஹாரிஷிகள் பலரும் விஷ்ணுவுடன் கூடிய சிவனின் அடையாளத்தை தியானிக்கிறார்கள்.(14,15) மங்கல ஆளுமைகளான விஷ்ணுவும், சிவனும் கைலாச மலையில் சந்தித்துக் கொண்ட அந்தக் கொண்டாடத்தக்க நிகழ்வு மிகப் புனிதமானதாகும். ஓ! மன்னா, நரகனைப் போன்ற பேரசுரர்கள் பலர் கொல்லப்பட்டு, மிகச்சிலரே எஞ்சியிருந்தபோது, விருஷ்ணி வழித்தோன்றல்களுடனும், தன் அன்புக்குரிய மனைவியான ருக்மிணி தேவியுடனும் சேர்ந்து ஜகன்னாதன் {கிருஷ்ணன்} பூமியை ஆண்டு வந்தான்.(16-18)
அப்போது ஓரிரவில் அந்த ஜகத்பதி {கிருஷ்ணன்}, தன் ராணியுடன் {ருக்மிணியுடன்} இன்புற்று மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருந்தான்.(19) பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ருக்மிணி தேவி தன் கணவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, தேவேசரே, உம்மிடம் இருந்து ஒரு புத்திரனை அடைய நான் விரும்புகிறேன்.(20) பிரபுவே, அவன் உம்மைப் போலவே அழகிய வடிவம் கொண்டவனாகவும், பெருஞ்சக்திவாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும். தவச் சக்தியால் பேராற்றல் வாய்ந்தவனாக இருக்க வேண்டும், விருஷ்ணி வம்சத்தின் தலைவனாக அவன் அறியப்பட வேண்டும்.(21) சாத்திரங்கள் அனைத்தையும் கற்றவனாகவும், தன்னை உணர்ந்த ஞானிகளில் முதன்மையானவனாகவும் இருக்க வேண்டும். இக்குணங்களைக் கொண்ட ஒரு புத்திரனை எனக்கு அருள்வீராக.(22) நீரே கொடுப்பவர், படைப்பவர், அனுபவிப்பவர், நீரே ஜகத்பதி. எங்களுக்கு அனைத்தையும் தர வல்லவர் நீரே.(23) ஓ! கேசவரே, தேவேசரே, உமக்குத் தொண்டு புரிகையில் தங்கள் புத்தியை உம்மிலே நிலைக்கச் செய்யும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் என்று நீர் நன்கறியப்பட்டிருக்கிறீர்.(24) ஓ! ஜனார்த்தனரே, ஜகத்பதியே, என்னை உமது பக்தையாக நீர் கருதினால், என்னிடம் நீர் கருணை கொண்டிருந்தால் பெருஞ்சக்திவாய்ந்த மகனை எனக்குக் கொடுப்பீராக” என்றாள் {ருக்மிணி}”.(25)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ருக்மியின் பகைவனும், யது குலத்தின் மகிமையும், தேவேசனும், யதுக்களின் தலைவனுமான கிருஷ்ணன், தன் மஹிஷியான ருக்மிணி இந்தக் கோரிக்கையை வைத்தபோது, “பாமிநியே {என் அன்புக்குரிய அழகிய பெண்ணே}, உன் கனவு புத்திரனை நான் உனக்குத் தருவேன்.(26,27) தேவி, நீ என் நித்திய பக்தையாக இருக்கிறாய். நம் பகைவரை அழிக்கும் புத்திரனை நான் உனக்குத் தருவேன்.(28)
ஓர் இல்லறத்தான் புத்திரனைக் கொண்டு தன் பகைவரை வெல்லலாம். நரகத்தின் மறுபெயர் புத் ஆகும். துக்கம் மற்றொரு வகை நரகமாகும்.(29) ஒரு புத்திரன் தன் பெற்றோரை புத் எனும் நரகில் இருந்து காக்கிறான். இம்மையிலும், மறுமையிலும் புத்திரனே ஆதாயம் என்பதால் அனைவரும் அவனை விரும்புகின்றனர். என் அன்புக்குரியவளே, புத்திரனைக் கொண்டவனுக்கு அனந்தலோகத்தின் கதவுகள் திறந்திருக்கும்.(30) கணவன் தன் மனைவியின் கருவறைக்குள் புகுந்து தானே புத்திரனாகிறான். அந்நேரத்தில் மனைவி அவனது மாதாவாகிறாள். பத்து மாதங்கள் கழிந்ததும், அவனே புதிய உடலுடன் கருவறையில் இருந்து வெளியே வருகிறான்.(31)
புத்திரவந்தனை {புத்திரனுடன் கூடிய ஒருவனைக்} கண்டு இந்திரனே அச்சமடைகிறான். அவன் {இந்திரன்}, “என் செழிப்பெதனை இவன் பகிரப் போகிறான்?” என்று நினைக்கிறான். புத்திரனற்றவன் மரணத்திற்குப் பிறகு நல்ல உலகங்களை அடைவதில்லை. இருப்பினும் குபுத்திரனை {இழிந்த மகனைப்} பெறுவதை விடப் புத்திரனற்றவனாக இருப்பதே சிறந்தது.(32) இழிந்த மகனைப் பெற்றவன் நரகத்திற்குச் செல்வான், நல்ல மகனைப் பெற்றவன் சுவர்க்கத்திற்குச் செல்வான். எனவே ஒருவன், பணிவுள்ளவனும், கல்விமானும், கடமையுணர்வு கொண்டவனும், கருணையுள்ளவனுமான ஒரு மகனையே எப்போதும் விரும்ப வேண்டும்.(33)
ஒருவன் நல்ல ஞானம் அடையும்போது பணிவையும் அடைகிறான். மகனைப் பெற விரும்பும் ஞானிகள், கல்விமானும், பக்திமானுமான ஒரு மகனையே வேண்டுவார்கள்.(34) எனவே, நான் கல்விமானும், அறமனம் கொண்டவனுமான ஒரு மகனை உனக்குத் தருவேன். அத்தகைய நல்ல மகனை அடைவதற்கு நான் இப்போதே கைலாச மலைக்குச் செல்லப் போகிறேன்.(35) அங்கே நான் அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவனும், நீலலோஹிதனும் {செந்நீல வண்ணனுமான} மஹாதேவனை வழிபட்டு, உனக்காக ஒரு மகனை அவனிடம் பெற்று வருவேன்.(36) நீக்கமற எங்கும் நிறைந்தவனும், அழிவற்றவனும், பிறப்பற்றவனுமான அந்த விரூபாக்ஷனை {சிவனை}, பிரம்மசரியத்துடன் கூடிய என் தவத்தால் நிறைவடையச் செய்து அவனது அருளைப் பெறுவேன்.(37) சங்கரனின் தரிசனத்தைப் பெற இன்றே நான் புறப்படுகிறேன். என் தவத்தில் நிறைவடைந்ததும் நிச்சயம் அவன் எனக்கு ஒரு மகனை அருள்வான்.(38)நான் அங்கே சென்றதும் மஹாதேவனையும், உமாதேவியையும் வணங்கி அவர்களை நிறைவடையச் செய்வேன். {கைலாசம் செல்லும்} வழியில், முனிவர்களால் தொண்டாற்றப்படுவதும், வேள்வி நெருப்பின் புகையாலான மேகங்களை எப்போதும் கொண்டதும், புண்ணியமானதுமான பதரிக்கு {பத்ரிநாத்} முதலில் செல்வேன். அந்தப் புண்ணியத்தலம், கங்கையின் நீரால் எப்போதும் நனைக்கப்படுகிறது, எண்ணற்ற பறவைகளும், சிங்கங்கள், புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளும் அங்கே திரிகின்றன.(39,40) அங்கே பதரிப்பழங்கள் {இலந்தைக் கனிகள்} நிறைந்திருக்கின்றன. கிளைவிட்டு கிளை தாவும் குரங்குகளும் எப்போதும் அங்கே காணப்படுகின்றன. வாழை தோப்புகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மரங்கள் பலவும், பழத்தோட்டங்கள் பலவும் அங்கே இருக்கின்றன.(41) வேத கல்வியில் மூழ்கியிருப்பவர்களும், வேதங்களின் தீர்மானத்தை அறிந்தவர்களும், வாதங்களில் வேதச் சான்றுகளைக் குறிப்பிடுபவர்களுமான பெரும் முனிவர்கள் வசிக்கும் இடமாக அது திகழ்கிறது.(42) முற்றான தன்னுணர்வைப் பெற்றவர்களும், “இதுவே தத்துவம், இதுவே உண்மை” என்பதை உறுதியாக நம்புகிறவர்களுமான பல ஆன்மாக்களால் அந்தப் புனிதத்தலம் {பதரிகாசிரமம்} நம்பிக்கையுடன் துதிக்கப்படுகிறது.(43) இதிஹாசங்களையும், புராணங்களையும் நன்கறிந்தவர்களும், இறந்த பின்னர் சுவர்க்கத்தை அடைய விரும்புகிறவர்களுமான மஹாரிஷிகள் அந்தப் புனிதத்தலத்தில் தொண்டாற்றுகின்றனர்.(44) பதரிகாபுரி என்று கொண்டாடப்படும் அந்தப் புனிதத்தலத்திற்கு நான் செல்வேன்” என்று சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டான் ஜனார்த்தனன்” {என்றார் வைசம்பாயனர்}.(45)
நகரப் பாதுகாப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 49-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய கைலாஸகமநவிசாரம்)-கைலாசம் செல்ல முடிவெடுத்து சில ஏற்பாடுகளைச் செய்த கிருஷ்ணன்; யாதவர்களுக்கு கிருஷ்ணன் சொன்ன அறிவுரைகள்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இரவு கடந்து கிழக்கு அடிவானில் சூரியன் எழுந்தபோது, ஜனார்த்தனன் நெருப்புவேள்வியின் மூலம் தன் காலைச்சடங்குகளைச் செய்து தக்ஷிணைகளைக் கொடுத்தான்.(1) பிராமணர்களுக்குச் செல்வத்தையும், பசுக்களையும் கொடையளித்தான். ஜகத்பதியான கிருஷ்ணன், விப்ரர்களில் தகுதியுடைய துவிஜர்களை நமஸ்கரித்து ஆஸ்தான மண்டபத்திற்குள் பிரவேசித்தான்.(2) அங்கே அவன் ஆசனத்தில் அமர்ந்து விருஷ்ணி குல வீரர்கள் அனைவரையும் அழைத்தான். பலபத்ரன் {பலராமன்}, சிநி புத்திரன் {சாத்யகி}, ஹார்திக்யன் {கிருதவர்மன்}, சுகன், சாரணன்,(3) உக்கிரசேனன், மஹாபுத்திமானும், நீதிகளை அறிந்தவருமான உத்தவர் ஆகியோரையும் அழைத்தான். அவரது வழிநடத்தலின் பேரில் யதுகுலத்தவர் சுகமாக வாழ்ந்து வந்தனர்.(4) உத்தவர் தர்மவானாகவும், யது, விருஷ்ணிகளின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். தேவர்கள் நெறிமுறைகளுடன் கூடியவர்களாக இருந்தாலும் அந்த மஹாத்மாவின் {உத்தவரின்} உத்திகளில் அச்சம் கொண்டவர்களாக இருந்தனர்.(5)
யாதவர்கள் அனைவரும் கூடிய பிறகு, குறிப்பாக எவருடைய ஞானத்தால் கிருஷ்ணன் உலகத்தை ஆண்டானோ அந்த உத்தவரும் வந்த பிறகு கிருஷ்ணன் அவர்களிடம், “ஓ! யாதவர்களே, என் உயிர் உத்தவரே, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பீராக.(6,7) உக்கிரசேனரே, என் குழந்தைப் பருவத்தில் இருந்து துஷ்டர்களைக் கொல்வதைக் கடந்த காலத்தில் இருந்து நீர் கண்டு வருகிறீர். அஃது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.(8) யாதவர்களே, நான் பாலனாக இருந்தபோது பூதனையையும், கேசியையும் கொன்றேன், பசுக்களைப் பாதுகாப்பதற்காகக் கோவர்த்தன கிரியைத் தூக்கினேன்.(9) தேவர்கள் அனைவரின் முன்னிலையில் சக்ரன் எனக்கு அபிஷேகம் செய்து வைத்தான். கம்சனும், இரு மல்லர்களும், சாணூரனும், முஷ்டிகனும் என்னால் கொல்லப்பட்டனர்.(10)
உக்ரசேனர் அபிஷேகம் செய்விக்கப்பட்டார், நான் துவாரகையை நிறுவினேன். அந்தக்காலத்திலும் அசுர மன்னர்கள் பலர் என்னால் கொல்லப்பட்டனர்.(11) யாதவர்களே, உக்ரசேனரே, வீரனான ஜராசந்தனைக் கொல்வதற்கான உத்திகளைப் பீமருக்கு {பீமசேனருக்கு} ஏற்படுத்தி, அந்தக் கொடூரன் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தேன்.(12) கோமந்த மலையில் இருந்து திரும்பும்போது சிருகாலனும், தானவனான நரகனும் என்னால் கொல்லப்பட்டனர்.(13)
க்ஷத்திரியர்களில் முதன்மையானவர்களே இவ்வாறு பூமியின் சுமையை நான் அகற்றினேன். இருப்பினும், நரகாசுரனின் நண்பனான பௌண்டரகன் இன்னும் எஞ்சியிருக்கிறான்.(14) பெருஞ்சக்தி வாய்ந்த போர்வீரர்களின் தலைவனாக இருக்கும் அவன் என்னைப் பகைத்துக் கொண்டிருக்கிறான். துரோணரின் சீடனான அந்தப் பௌண்டரகன், பெருஞ்சக்திவாய்ந்தவனாகவும், பிரம்மாஸ்திரத்தை ஏவவல்லவனாகவும்,(15) போர்க்கலையில் திறன்மிக்கவனாகவும், சாத்திரங்களை அறிந்தவனாகவும், நீதிமானாகவும், ஜமதக்னேயரை {பரசுராமரைப்} போலவே போரில் விருப்பம் கொண்ட மன்னனாகவும் இருக்கிறான்.(16) அவனே என் பெரும் எதிரியாக இருக்கிறான். அவன் எப்போதும் என்னிடம் குறை {நான் செய்யும் தவறைக்} காண காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குச் சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் துவாரகையைத் தாக்குவான். அதன் மூலம் பேரிடர் நேரிடும். புண்டரத்தை ஆட்சி செய்யும் பௌண்டரகனை அரைகுறையாக முயற்சி செய்யும் எவனாலும் வீழ்த்த முடியாது.(17,18)
துவாரகையைப் பாதுகாப்பீர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 50நான் உயிரினங்களின் தலைவனான சங்கரனைக் காண கைலாசம் செல்லும்போது, யாதவர்களை வீழ்த்திவிடும் நம்பிக்கையில் அவன் துவாரகையைத் தாக்க எத்தனித்தால் விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.(19,20) நான் செல்லும் நோக்கம் நிறைவேறி திரும்பும் வரையில், நகரைக் காக்கும் காரியத்தில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.(21) இங்கே வந்து யாதவர்கள் அனைவரையும் வீழ்த்த அந்த ராஜேந்திரனால் இயலும் என நான் நினைக்கிறேன். எனவே, நீங்கள் கட்கம், பாசம், பரசு ஆகியவற்றுடன் எப்போதும் காவல் காப்பீராக.(22) பகைவன் நம் நகருக்குள் நுழைவதற்கு ஏதுவாக உள்ள வழிகளில் தடைகளை ஏற்படுத்திக் கவனமாகக் காவல் காப்பீராக. எப்போதும் மஹாதுவாரத்தை {பிரதான வாயிலை} அடைத்தே வைத்திருப்பீராக.(23) நகருக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் ஒரேயொரு சாலையை மட்டும் திறந்து வைத்திருப்பீராக. நகரை விட்டு வெளியேற விரும்பும் எவரும் முதலில் மன்னரிடம் அனுமதியைப் பெற வேண்டும்.(24) மன்னரின் அனுமதியின்றி எவரும் நகருக்குள் அனுமதிக்கப்படக்கூடாது. இக்காரியத்தில் காவலர்கள் மிகக் கவனமாகவும், கண்டிப்புடனும் இருக்க வேண்டும். நான் திரும்பும் வரை இந்த ஏற்பாடு அமலில் இருக்கட்டும்.(25) நகருக்கு வெளியே வேட்டையாடச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். உண்மையில் சின்னச் சின்னக் காரியங்களுக்காக எவரும் நகரை விட்டு வெளியேறக்கூடாது. வந்து போகும் ஒவ்வொருவரின் அடையாளங்களும் கவனமாக உறுதி செய்யப்பட வேண்டும்.(26) நான் திரும்பும் வரை இந்தக் கட்டுப்பாடுகளை நீங்கள் அமல்படுத்த வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}. இவ்வாறு யாதவர்களை அறிவுறித்திய கிருஷ்ணன், சாத்யகியிடம் திரும்பி அவனிடம் பேசினான்.(27)
துவாரகையைப் பாதுகாப்பீர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 50-(துவாரவதீரக்ஷணே யாதவான் ப்ரதி ஸ்ரீக்ருஷ்ணஸ்ய வசநம்)சாத்யகி, உத்தவர், பலராமன் ஆகியோரிடம் துவாரகாபுரியின் பாதுகாப்பை ஒப்படைத்த கிருஷ்ணன்…
ஸ்ரீ பகவான் {கிருஷ்ணன்} சொன்னான்: “ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, என் அன்புக்குரிய சாத்யகி, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. கவசத்துடனும், கதாயுதம், வில் மற்றும் கணைகளுடனும் நகரைப் பாதுகாப்பதை உன் தனிப்பொறுப்பாகக் கொள்வாயாக.(1) ஓ! யது வம்சத்தின் பலம்வாய்ந்த வீரா, இஃது எண்ணற்ற க்ஷத்திரியர்களின் வசிப்பிடமாகும். நீ அவர்களின் தலைவன் என்பதால் இரவில் உறக்கத்தையும் கைவிட்டு இந்நகரைப் பாதுகாக்க வேண்டியது உன் கடமையாகும்.(2) இப்போதைக்கு சாத்திரங்களைக் கற்பதிலும், அவற்றின் பொருளை விளக்குவதிலும் இருந்து விலகுவாயாக. சாத்திரங்களின் அடிப்படையில் உன் நண்பர்களுடன் வாதம் செய்வதை இப்போதைக்குக் கைவிடுவாயாக.(3) நீ பலமிக்கவன், திறன்மிக்கப் போர்வீரன், ஞானமுடையவன், தனுர்வேத விற்பன்னன். இந்நகரத்தின் புகழ் கெடாமல் இருக்க உன்னால் ஆனதில் சிறந்ததைச் செய்வாயாக” {என்றான் கிருஷ்ணன்}.(4)
சாத்யகி சொன்னான்: “ஓ! ஜகந்நாதா, ஓ! அன்புக்குரிய ஜனார்த்தனா, என்னால் இயன்றதில் சிறந்ததைச் செய்து நீ சொன்னவற்றைப் பின்பற்றுவேன். உன் ஆணைகளை எப்போதும் என் சிரம் மேற்கொள்வேன் என நான் உறுதியளிக்கிறேன்.(5) ஓ! மாதவா, ஒரு பணியாளனைப் போல நான் பலராமரின் ஆணைகளையும் பின்பற்றுவேன். நீ திரும்பி வரும்வரை நான் இந்நகரைப் பாதுகாப்பேன்.(6) ஓ! கோவிந்தா, ஓ! மாதவா, உன் கருணை எனக்கிருந்தால் பகைவரை அழிக்கும் காரியத்தில் என்னால் இயலாதது ஏதுமில்லை.(7) சக்ரன், யமன், குபேரன், பாசக்கயிற்றைக் கொண்ட வருணன் ஆகியோரே போரிட வந்தாலும் உன் அருளால் அவர்களை என்னால் வீழ்த்த முடியும் எனும்போது, பௌண்டரகனைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(8) ஓ! தலைவா, ஹரியே, நான் விழிப்புடன் இருப்பேன் என்பதில் உறுதிகொண்டு நீ விரும்பிய இடத்திற்குச் சென்று வருவாயாக” {என்றான் சாத்யகி}.
பிறகு, தாமரைக் கண்ணனான கிருஷ்ணன், உத்தவரிடம்,(9) “உத்தவரே, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு என் ஆணைகளைப் பின்பற்றுவீராக. உமது புத்தி சொல்லும் வழிகளைப் பின்பற்றித் துவாராவதியைக் காப்பீராக.(10) ஓ! மென்மையானவரே, நீரே சிறந்த வழிகளை அறிவீர் என்பதால் விழிப்புடன் இருந்து நமக்கு உதவி செய்வீராக. இது தொடர்பாக மேலும் உமக்குச் சொல்ல நான் நாணுகிறேன்.(11) கற்றறிந்த அறிஞர்களில் நீர் முதன்மையானவர். உம்மைப்போன்ற அறிவாளிகளின் முன்பு தன் கருத்துகளைச் சொல்ல மேதாவி எவனும் துணியமாட்டான்.(12) எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பனவற்றை நன்கறிந்தவர் நீர். எனவே, ஓ! விருஷ்ணி குலத்தைப் பாதுகாப்பவரே, இதற்கு மேலும் உம்மிடம் நான் எதையும் சொல்ல முயலேன்” என்றான் {கிருஷ்ணன்}.(13)
உத்தவர், “கோவிந்தா, பிரபுவே, ஏன் என்னை இவ்வாறு புகழ்கிறாய்? நீ என்னை அதீதமாகப் புகழ்ந்தாலும், இஃது உன் அன்பின் வெளிப்பாடு, பாசத்தின் வெளிப்பாடு என்பதை நான் அறிவேன்.(14) கேசவா, ஜகந்நாதா, நான் இப்போது எவ்வாறு இருக்கிறேனோ, இந்நிலை உன்னருளால் ஏற்பட்டது. உன் கருணையை அடைந்தவனிடம் எதுதான் குறைவாக இருக்கும்?(15) ஜகம் அனைத்தையும் படைத்தவன் நீயே. அவற்றை அழிப்பவனும் நீயே. காரணம், காரியம் ஆகியவையும், பேசுபவன், கேட்பவன் ஆகியோரும், சான்றும் நீயே.(16) பரப்ரம்மத்தை அறிந்த முனிவர்கள், தியானப் பொருளாகவும், தியானமாகவும், தியானிப்பவனாகவும் உன்னையே ஏற்கின்றனர். தேவர்களைப் பகைப்பவரை தண்டிப்பவன் நீயே, பக்திமான்களைக் காப்பவன் நீயே.(17) எங்கள் தலைவனும், பாதுகாவலனும் நீயே. நாங்கள் இன்னும் உயிருடன் இருப்பது உன்னாலே. நம் பகைவர்கள் வீழ்த்தப்பட்டதும் உன்னாலே. நான் உன்னிடம் சொல்லும் ராஜதந்திரங்கள் எவையும் உன்னால் ஈர்க்கப்பட்டு என்னால் சொல்லப்பட்டவை என்பதே என் புரிதலாகும்.(18) வேதங்களின் வடிவமானவன் என்பதால் எங்களை மங்கலப் பாதையில் வழிநடத்தக் கூடியவன் நீயே. எங்கள் செயல்கள் அனைத்தின் இலக்கும் உன் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்பது என் உறுதியான நம்பிக்கை.(19) உன் கோட்பாடுகளில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பது நீதிமான்கள் அனைவரின் கருத்தாகும். ஓ! ஜனார்த்தனா, நான்கு வகை அரசியல் நீதிகள் சாம, தான,(20) பேத, தண்டம் ஆகியவை. ஒருவன் சிரமத்தில் இருந்தாலோ, பிறரை அமைதியடையச் செய்ய விரும்பினாலோ அவன் இந்த நான்கு கோட்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும். பகைவன் தன்னைவிட பலவீனமாக இருக்கும்போது தண்டக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். பகைவன் தனக்கு இணையானவனாக இருக்கும்போது சாமக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும்.(21) ஒரு பகைவன் தன்னை விட பலமிக்கவனாக இருந்தால் தானக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த மூன்று கோட்பாடுகளையும் பயன்படுத்த இயலாத போது, ஒருவன் பேதக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். அரசியல் நீதியைக் கற்றவர்களின் கருத்து இதுவே ஆகும்.(22) எவனும், அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கொள்கையைத் தானே தீர்மானிக்க வேண்டும். வேறென்ன சொல்வது? இத்தகைய ஞானங்கள் அனைத்தின் கொள்ளிடம் நீயே” என்றார் {உத்தவர்}”.(23)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, இதைச்சொல்லிவிட்டு உத்தவர் அமைதியடைந்தார். பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்},(24) இதே போலவே பெரும் வலிமைமிக்க காமபாலனிடமும் {பலராமனிடமும்}, மனிதர்களின் ஆட்சியாளரான மன்னர் உக்கிரசேனரிடமும், ஹார்திக்கியனிடமும் {கிருதவர்மனிடமும்} பேசினான்.(24,25) பிறகு அவன் காமபாலனிடம் {பலராமனிடம்}, “அன்புக்குரிய அண்ணா, காலத்தைக் கடத்தாமல், நகரைப் பாதுகாப்பதே உமது முக்கியக் காரியமாக இருக்க வேண்டும்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நகரைப் பாதுகாக்க நீர் விரும்பினால் இவ்வுலகில் நமக்கு எவரால் இடர் விளைவிக்க முடியும்?(27) எப்போதும் கதாதாரியாக இருப்பீராக. விளையாட்டுக்கும், கேளிக்கைகளுக்கும் இது நேரமல்ல.(27) பிரபுவே, நாம் கேலிப்பொருளாகாதிருக்க எப்போதும் துவாரகையின் நலத்தைக் கவனத்தில் கொள்வீராக. உமது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு நகரைப் பாதுகாக்க வேண்டியவற்றைச் செய்வீராக.(28) இக்காரியத்தில் அனைவரையும் நீர் ஊக்கப்படுத்த வேண்டும். எவரும் உற்சாகமிழக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்வீராக” என்றான் {கிருஷ்ணன்}. இதற்கு ராமனும் {பலராமனும்}, “அவ்வாறே ஆகட்டும்” என்றான்.(29) அந்த ஆணைகளைத் தங்கள் சிரமேற்கொண்டு விருஷ்ணி குலத்தோர் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்ற போது, ஜகந்நாதன் கைலாச மலைக்குப் புறப்பட ஆயத்தமானான்”.(30)
பதரிகாஷ்ரமம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 51-(ஸ்ரீக்ருஷ்ஸ்ய பதரிகாஷ்ரமகமநம்)-கருடன் மீதேறி பறந்து சென்ற கிருஷ்ணன் பதரிகாசிரமத்தை அடைந்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஜகத்பதியான விஷ்ணு {கிருஷ்ணன்}, பறவைகளின் மன்னனும், தார்க்ஷியனுமான கருடனைத் துரிதமாக வரும்படி மனப்பூர்வமாக அழைத்தான்.(1) ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, வேதங்களே வடிவாகக் கருதப்படுபவனும், யோகப் புதிர்களில் தேர்ச்சி பெற்றவனும், சாத்திரங்களை உண்மையாக அறிந்தவனுமான தார்க்ஷியன் பகவான் {கிருஷ்ணன்} முன்பு உடனே வந்தான்.(2) யஜ்ஞத்தை உடலாகவும், புராணங்களை ஆத்மாவாகவும், சாம வேதத்தைத் தன் குதிங்காலாகவும், ரிக் வேதத்தைக் கண்களாகவும் கொண்ட அவனது நிறம் பிங்கள வண்ணமாகவும், அவனது வடிவம் புதிரானதாகவும் இருந்தது.(3) அவனது அலகு தாமிரம் போல் சிவப்பாக இருந்தது. அவன் அமுதத்தை அபகரித்துப் போரில் சக்ரனை {இந்திரனை} வென்றவனாவான். அவனது தலை பெரிதாக இருந்தது. பாம்புகள் அவனுக்குப் பகையாக இருந்தன. அவனது தாமரைக் கண்கள் விஷ்ணுவுக்கு ஒப்பானவையாக இருந்தன.(4) தேவதேவனும், தானவிகளின் {தானவப் பெண்களின்} கர்ப்பங்களை அழிப்பவனுமான தலைவனைச் சுமக்கும் வாகனனாக அவன் இருந்தான். அவன் அசுரர்களை வெல்பவனாகவும், தன் சிறகின் அசைவுகளாலேயே ராக்ஷசர்களை வெல்பவனாகவும் இருந்தான்.(5)
ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட அந்தக் கருடன், கேசவன் முன்பு வந்து வணங்கினான். பிறகு அவன், “ஓ! விஷ்ணுவே, ஜகத்பதியே நான் உன்னை வணங்குகிறேன்.(6) ஓ! ஹரியே, தேவதேவா, உன் தாமரைப் பாதங்களுக்கு என் வணக்கம்” என்றான்.
கிருஷ்ணன் கருடன் மீது தன் கைகளை வைத்து, “ஓ! பறவைகளில் சிறந்தவனே,(7) சர்வமங்களனான சங்கரனைக் காண கைலாச மலைக்குச் செல்ல நான் விரும்புகிறேன்” என்றான்.(8)
அந்தத் தார்க்ஷியனும், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி தன் சம்மதத்தைத் தெரிவித்தான். ஜனார்த்தனன் அவனது முதுகில் அமரும்போது, அங்கே கூடியிருந்த யாதவர்களிடம், “நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருப்பீராக” என்றான்.(9)
ஜகன்னாதனான ஹரி வடகிழக்குத் திசையை நோக்கிச் சென்றான். பேராற்றல் படைத்த தார்க்ஷியன் மூவுலகங்களையும் நடுங்கச் செய்தான்.(10) அந்தப் பறவையானவன், ஜனார்த்தனனைத் தன் முதுகில் ஏற்றிச் சென்ற போது, தன் பாத அசைவுகளால் பெருங்கடலைக் கலங்கடித்தான், தன் சிறகசைவுகளால் உண்டான காற்றினால் மலைகளை நடுங்கச் செய்தான்.(11)
அவர்கள் ஆகாசத்தில் சென்றபோது, கந்தர்வர்களும், தேவர்களும் ஈஷ்வரனான அந்தப் புண்டரிகாக்ஷனை {கிருஷ்ணனை} வணங்கினார்கள்.(12) அவர்கள், “ஓ! ஜகன்னாதா, ஓ! உயர்ந்த தேவா, உனக்கு மகிமை உண்டாகட்டும். ஓ! விஷ்ணுவே, ஓ! ஜகத்பதியே, உனக்கு மகிமை உண்டாகட்டும். ஓ! வெல்லப்பட முடியாத தேவா, ஓ! உயிரினங்கள் அனைத்தின் நன்மையை விரும்புபவனே, நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(13) தைத்திய தானவர்களைக் கொன்ற உன் நரசிம்ம அவதாரத்தை நாங்கள் வணங்குகிறோம். ஓ! வெல்லப்பட முடியாத ஹரியே, மகிமைகள் அனைத்தும் உனதாகட்டும். யோகிகளின் தியான பொருளும், அவர்களுடைய வாழ்வின் இறுதி இலக்கும் நீயே.(14) ஓ! நாராயணா, ஓ! கிருஷ்ணா, ஓ! ஹரியே, ஓ! ஆதி கர்த்தாவே, ஓ! புராணாத்மனே, ஓ! பிரம்மனின் நித்திய தலைவனே நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(15) ஓ! அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே {சகலேஷ்வரா}, நாங்கள் உன்னை வணங்குகிறோம். நிர்க்குணனாக இருந்தாலும் {சற்குணனாக இருந்தாலும்} குணங்களைக் கடந்த எல்லையற்ற நிலையில் இருப்பவன் நீயே. பக்தர்களின் அன்புக்குரியவன் நீயே, அர்ப்பணிப்புடன் கூடிய தொண்டின் நோக்கமாக இருப்பவன் நீயே, ஓ! தானவநாசனா, நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(16) ஓ! அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே, புலப்படாத வடிவம் கொண்டவன் நீயே. எங்கள் பணிவான வணக்கத்தை ஏற்றுக் கொள்வாயாக” {என்று வேண்டினர்}.(17) இவ்வாறே தேவர்களும், கந்தர்வர்களும், ரிஷிகளும், சித்தர்களும், சாரணர்களும் அந்த ஜகன்னாதனிடம் வேண்டினார்கள்.(18)
கிருஷ்ணன் அவர்களின் வேண்டுதல்களைக் கேட்டபடியே பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு அண்டத்தின் நன்மைக்காக விஷ்ணு கடுந்தவம் புரிந்த இடத்திற்கு தேவர்களுடனும், ரிஷிகளுடனும் சென்று சேர்ந்தான்.(19,20) அந்தத் தவத்தின் பலத்தால் விஷ்ணு தன்னை நரன் என்றும், நாராயணன் என்றும் இரு வடிவங்களாகப் பிரித்துக் கொண்டான்.(21) ஆறுகளிற்சிறந்த புனித கங்கை அந்தப் புண்ணியத்தலத்தில் வேகமாகப் பாய்ந்து செல்கிறாள்.
பிரம்மராக்ஷசனான விருத்தாசுரனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட இந்திரன் அங்கே பத்தாயிரம் வருடங்கள் தவம் செய்தான். அங்கே ஜனார்த்தனனை தியானிப்பதன் மூலமே சித்தர்கள் பலர் முக்தியை அடைகின்றனர்.(22,23) போர்க்களத்தில் அனைவரையும் கதறச்செய்த ராவணனைக் கொன்ற பிறகு சாத்திர போதனைகளைப் பின்பற்றுவதற்கு உதாரணமாக ராமன் அங்கே கடுந்தவம் செய்தான்.(24) ஜகன்னாதனான கேசவன் அந்தப் புண்ணியத்தலத்தில் நித்திய வாசம் செய்து கொண்டிருப்பதால், தேவர்களும், தெய்வீக முனிவர்களும் எளிதில் அங்கே முக்தியை அடைகிறார்கள்.(25) பெரும் முனிகணங்கள் எப்போதும் அங்கே வேள்விகளைச் செய்து வருகிறார்கள். அந்தப்புண்ணியத் தலத்தை நினைப்பதன் மூலமே மனிதர்கள் இம்மைக்குப் பின் மறுமையில் சுவர்க்கத்தை அடையலாம்.(26) ஓ மனிதர்களின் ஆட்சியாளா, சித்தர்கள் அதைச் சுவர்க்கத்தின் வாயிலாகக் கருதுவதால் எப்போதும் அங்கேயே வசித்து வருகின்றனர்.(27) பக்தர்கள் மட்டுமே வசிக்கும் அந்தப் புண்ணியத் தலத்தில் வசித்தால் ஓர் எதிரியும் நண்பனாகிவிடுவான். அங்கே விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் ஒருவன் எளிதில் தேவ நிலையை அடையலாம்.(28)முற்றிலும் பகையற்ற சித்தர்களால் புகழப்படும் புண்ணியத்தலமான அந்தப் பதரிகாசிரமத்திற்குத் தேவர்களுடனும், முனிவர்களுடனும் மாலைப் பொழுதில் கிருஷ்ணன் சென்று சேர்ந்தான். மஹாபுண்ணியம் வாய்ந்த ரிஷிகள் பலர் அங்கே வசித்துக் கொண்டிருப்பதை அவன் கண்டான்.(29,30) தேவர்களுடன் கூடிய கிருஷ்ணன் அந்தப் பதரி தீர்த்தத்திற்கு வந்தபோது, மேற்கு அடிவானில் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். கூடுகளுக்குத் திரும்பும் பறவைகளின் ஒலி அங்கே சூழ்ந்திருந்தது. பசுக்களில் பால் கறக்கப்பட்டன. பல முனிவர்கள் வேள்வி நெருப்பில் நெய்யைக் காணிக்கையளிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், எண்ணற்ற சித்தர்கள் பரம்பொருளைத் தியானிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் புனிதத்தலத்தில் வசிப்பவர்களால் விருந்தினர்கள் தொண்டாற்றப்பட்டனர். கண்கள் திரும்பிய இடமெல்லாம் கிட்டிய காட்சி மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. தாமரைக்கண்ணனான கிருஷ்ணன், நெய் விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அந்த ஆசிரமத்தின் மத்தியில் வந்திறங்கி கருடன் மீதிருந்து இறங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(31-36)
வரவேற்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 52-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய பதரிகாஷ்ரமே ஆதித்யஸ்வீகாரம்)-கிருஷ்ணனை வரவேற்ற பதரிகாசிரமவாசிகள்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அக்னிஹோத்ரம் செய்து கொண்டிருந்த முனிகணங்கள் {முனிவர்க்கூட்டம்}, தேவதேவன் {கிருஷ்ணன்} வந்ததைக் கண்டு அவனை வரவேற்க விரைந்து சென்றனர்.(1) இந்த முனிவர்கள் அங்கே {பதரிகாஷ்ரமத்தில்} நீண்ட காலம் வேள்விகளைச் செய்து தியானம் பயின்று வந்தவர்களாவர். அவர்களில் சிலர் சடை தரித்திருந்தனர், வேறு சிலர் முழுமையாக மழித்த தலையுடன் இருந்தனர், வேறு சிலர் நரம்புகள் புடைத்துத் தெரியுமளவுக்கு மெலிந்திருந்தனர்.(2)
சிலர், உடலைப் பராமரிக்கும் நாட்டத்தைக் கைவிட்டவர்களாகவும், சிலர் வேதாளங்களைப் போலவும் தெரிந்தனர். சிலர் கற்களால் நசுக்கப்பட்ட தானியங்களை உண்டனர், வேறு சிலர் இலைகளை மட்டுமே உண்டு தங்கள் உயிரைத் தாங்கி வந்தனர்.(3) அவர்கள் வேதங்களை முழுமையாக அறிந்தவர்களாகவும், கடும் விரதங்களை மேற்கொண்டு தவமியற்றுபவர்களாகவும் இருந்தனர். விஷ்ணுவின் பக்தர்களான அவர்கள் அனைவரும் எப்போதும் அவனையே நினைத்து வழிபட்டு வந்தனர்.(4)
அந்த முனிவர்களில் பலர் இருப்பில் இருந்து முக்தியடையும் நிலையில் இருந்தனர். பலர் காலம் கடப்பதை அறியாத நிலையில் தியானத்தில் மூழ்கியிருந்தனர். மேலும் பலர் தங்கள் இதயங்களில் விஷ்ணுவை நேரடியாகக் காணும் அளவுக்குத் தவமுழுமையை அடைந்திருந்தனர்.(5) அந்த முனிவர்களில் சிலர் வருடம் ஒருமுறை உண்டனர். வேறு சிலர் நீருக்குள் வசித்திருந்து நீரை மட்டுமே பருகி உயிரைத் தாங்கி வந்தனர். இன்னும் சிலர் ஷ்ருதிஸ்ம்ருதிகளில் பரிந்துரைக்கப்படும் நற்காரியங்களைச் செய்து இந்திரனின் இதயத்தில் அச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தனர்.(6)
ஓ! மன்னா, வசிஷ்டர், வாமதேவர், ரைப்பியர், தூம்ரர், ஜாபாலி, காசியபர், கண்வர், பரத்வாஜர், கௌதமர்,(7) அத்ரி, அஷ்வசிரஸ், பத்ரர், சங்கரர், சங்கநிதி, குணி, பாராசர்யர், பவித்ராக்ஷர், யாஜ்ஞவல்கியர்,(8) கக்ஷீவான், அங்கிராஸ் முனி, தீப்ததபாஸ், அஸிதர், தேவலர், மஹாதபஸ்வியான வால்மீகி ஆகியோர்(9) தங்கள் கைகளைக் கூப்பியபடியே தங்கள் குடில்களில் இருந்து வெளிப்பட்டு ஈஷ்வரனை {கிருஷ்ணனை} தரிசிக்கும் ஆவலுடன் வெளியே வந்தனர்.(10) அவர்கள், பக்திமான்களிடம் கருணை கொண்டவனும், பாவங்களை அழிக்கும் ஹரியும், நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணுவும், ஜனார்த்தனனுமான கிருஷ்ணனைப் பணிந்து வணங்கினர்.(11) அவர்கள், “கிருஷ்ணா, தேவதேவா, கேசவா, பிரணவாத்மாவே, ஜகந்நாதா, ஹரியே, நாங்கள் தலை வணங்கி உன்னை வழிபடுகிறோம்.(12) கிருஷ்ணா, விஷ்ணுவே, ரிஷிகேசா, கேசவா, ஓயாமல் நாங்கள் உம்மை வழிபடுகிறோம்” என்றனர்.
அந்தப் பிராமணர்கள், ஜகத்பதியான கிருஷ்ணனை இவ்வாறு வணங்கிவிட்டு,(13) “ஜகத்பதியே, இதோ அர்க்கியம், இதோ பாத்யம், இதோ சுகமாக அமரும் ஆசனம். தேவா, உன் தரிசனத்தால் நாங்கள் நித்திய அருளை அடைந்தோம். எங்களிடம் நிறைவடைவாயாக.(14) உன்னை மகிழ்விக்க நாங்கள் செய்ய வேண்டியதென்ன? பிரபுவே, நாங்கள் தொண்டு செய்வதெவ்வாறு? ஹரியே, உன் பாத கமலங்களுக்குத் தீங்கேதும் செய்தோமா?” என்று கைகளைக் கூப்பிக் கொண்டு பணிவுடன் கேட்டனர்.(15)
கிருஷ்ணனும், தேவர்களும் அந்த முனிவர்கள் செய்த பூஜையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். பிறகு கிருஷ்ணன், “உன்னத முனிவர்களே, நீங்கள் உத்தம பூஜையைச் செய்தீர்கள். உங்கள் தவங்களின் விளைவால் நீங்கள் அனைவரும் உயர்வடைவீராக” என்றான்.(16)
புராணாத்மாவான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, இவ்வாறு சொல்லிவிட்டுத் தன் வாகனமானக் கருடனுடன் சேர்ந்து ஓரிரவு மகிழ்ச்சியான மனத்துடன் தங்கினான்.(17) அவ்வாறு தங்கியிருந்தபோது அவன் அங்கே இருந்த முனிவர்களின் வேள்விகள், தவங்கள் ஆகியவற்றையும், அவர்கள் தங்கள் சீடர்களைப் பராமரிப்பது குறித்தும் விசாரித்தான்.(18)
கிருஷ்ணனின் விசாரணைகளுக்கு மறுமொழியாக அவர்கள், “ஜகந்நாதா, உன் கருணையால் அனைத்துச் செயல்களையும் நாங்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம்” என்றனர்.(19)
பிறகு, பதரிகாசிரமத்தைச் சேர்ந்த முனிவர்கள் அனைவரும் கனிகள், கிழங்குகள், தானியங்கள் ஆகியவற்றைக் கிருஷ்ணனுக்கும், தேவர்களுக்கும் கொடுத்தனர். கிருஷ்ணன் அவர்களின் காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு அவர்களின் தொண்டில் பெரும் மகிழ்ச்சியடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(20)
சமாதிநிலை | பவிஷ்ய பர்வம் பகுதி – 53-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய ஸமாதி கோலாஹலம்)-தியானத்தில் ஆழ்ந்த கிருஷ்ணனின் சமாதி நிலை; பயங்கரமான பேரொலிகளைக் கேட்ட கிருஷ்ணன்; தியானம் கலைந்தது; கிருஷ்ணன் அடைந்த ஆச்சரியம்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “எவனுடைய நோக்கங்களை அறிந்து கொள்வது கடினமோ அந்தப் பிரபுவும், பகவானும், விஷ்ணுவுமான யாதவேஷ்வரன் {யாதவர்களின் ஈஷ்வரன்/ கிருஷ்ணன்}, ஏற்கனவே தான் தவம் செய்து வந்ததும், கங்கையின் வடதீரத்தில் அமைந்திருப்பதுமான இடத்திற்குச் சென்றான். அந்த ஹரி அங்கே இருக்கும் புனிதமான தபோவனத்திற்குள் பிரவேசித்தான்.(1,2) மனோஹரமானதும், மிக அழகானதுமான அவ்விடத்தை அவன் சுற்றிப் பார்த்தான். பிறகு புண்ணியவரதனான அந்தப் பிரபு அந்த ஆசிரமத்திற்குள் அமர்ந்தான்.(3) தாமரைக் கண்ணனான அவன் மெய்மறந்த நிலையில் {சமாதியில்} தன் மனத்தை நிலைக்கச் செய்தான். தேவேஷ்வரனான {தேவர்களின் ஈஷ்வரனான} அந்த ஜகந்நாதன் விவரிக்கமுடியாத பொருளைக் குறித்துத் தியானிக்கத் தொடங்கினான்.(4)
தேவகுருவான அவன், காற்றற்ற இடத்தில் உள்ள விளக்கைப் போல, அலைபாயாத மனத்துடன் தியானத்தில், தன்னிலை இழந்த நிலையில் {சமாதியில்} ஈர்க்கப்பட்டிருந்தபோது, திடீரெனத் திசைகள் அனைத்திலும் மஹாகோரமான ஒலிகள் கேட்டன.(5) “உண்பீர், உண்வீராக. சாரங்கனின் அருளால் மான்கள் அனைத்தையும் கொண்டு வருவீராக.(6) இதோ விஷ்ணு, இதோ கிருஷ்ணன், இதோ ஹரி இங்கே அமர்ந்திருக்கிறான். அச்யுதனே, மாதவனே, கேசவனே, தேவேசா, நாங்கள் உன்னை வணங்குகிறோம்” என்ற ஒலி கேட்டது.(7)
இவ்வாறே அவ்விரவில் பெருங்குழப்பமும், கலவரமும் நேர்ந்தது. மான்களின் மிகப் பெரிய பகைவரான சிங்கங்கள் திடீரென உரக்க முழங்கத் தொடங்கின.(8) ஓ! மன்னா, பிறகு சிங்கங்கள் மான்களை விரட்டும் ஒலிகளும், நாய்கள் குரைக்கும் ஒலிகளும், அச்சமடைந்த மான்கள், கரடிகளின் ஒலிகளும், உறுமும் புலிகள், பிளிறும் யானைகள் ஆகியவற்றின் ஒலிகளும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டன. இந்த மொத்த ஒலிகளின் கலவையானது, பெருங்காற்றால் கலங்கிப் பெருகும் சமுத்திரத்தின் பயங்கர ஒலியைப் போன்றிருந்தது.(9,10)
இரவில் நேர்ந்த அந்த ஆரவார ஒலி, மூவுலகில் உள்ள அணைவரையும் உண்மையில் அச்சுறுத்தியது. அந்தக் கலவரத்தின் மூலம் ஹரி தேவனின் சமாதி கலைந்தது. புறநினைவு மீண்ட ஜகத்பதி {எழுந்து நின்று}, “செவிடாகச் செய்யும் இவ்வொலியென்ன?(11,12) என்னைத் துதித்துக் கொண்டே இத்தகைய ஒலியை உண்டாக்குவது யார்? ஐயோ, நாய்கள், மான்கள், இரைதேடும் விலங்குகளிடம் இருந்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடும் பிற விலங்குகள் ஆகியவற்றின் ஒலிகளும் கேட்கின்றனவே. இது மிக ஆச்சரியமானது. இருப்பினும் இவ்வொலிகள் அனைத்தும் சேர்ந்து என்னைத் துதித்து வேண்டுகின்றனவே” என்று நினைத்தான்.(13,14) இவ்வாறு சிந்தித்த ஹரி, கலவரத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கத் திக்குகள் அனைத்திலும் தன் பார்வையைச் செலுத்தினான். பிறகு, கீழே அமர்ந்து அமைதியடைந்தான்.(15)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, கேசவன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கித் திடீரென மான்கூட்டம் ஒன்று ஓடிவந்தது. நாய்கள் அவற்றை விரட்டி வந்தன.(16) ஓ! மன்னா, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பந்தங்கள் மூட்டப்பட்டதால் இரவின் இருள் விலங்கி அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.(17) அப்போது அங்கே பூதகணங்கள் தென்பட்டன. கோணல் வாய்களுடன் கூடியவையும், பயங்கரத் தோற்றம் கொண்டவையுமான பிசாசுகள், பச்சை இறைச்சியை உண்டபடியும், குருதியைப் பருகியபடியும் அச்சுறுத்தும் வகையில் மஹாகோரமாக முழங்கின.(18,19) ஓ! மன்னா, எண்ணற்ற மான்கள் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தன, அல்லது படுகாயமடைந்து தரையில் கிடந்தன. மேலும் எண்ணற்ற மான்களும், யானைகளும் கணைகளால் துளைக்கப்பட்டு அங்கேயும், இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தன.(20)
ஓ! பாரதா, ஆயிரக்கணக்கான மான்கள் அந்தத் தேவேசன் அமர்ந்திருந்த இடத்திற்கு ஓடிவந்து அவனைச் சூழ்ந்து கொண்டன என்று நான் என் குருவிடம் இருந்து கேள்விப்பட்டேன். பிறகு சிதைந்த அங்கங்களைக் கொண்ட பிசாசுகள் பலவும் கேசவன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தன. புத்திரர்களுடன் கூடிய அவை அனைத்தும், காண்பவனுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. ஓ! ராஜேந்திரா, பிறகு நாய்க்கூட்டமும் அங்கே வந்தது. அப்போது கேசவன், தன்னைச் சூழ்ந்திருக்கும் இந்த உயிரினங்கள் அனைத்தையும் கண்டு பேராச்சரியம் அடைந்தான்.(21-24)
அவன், “என்ன நடக்கிறது? இவ்வுயிரினங்கள் அனைத்தும் ஏன் இங்கே வந்திருக்கின்றன? பக்தியுடன் என்னைத் துதித்தவர்கள் யார்? நான் யாரிடம் நிறைவடைவது?(25) என் அருளால் இன்று முக்தியடையப் போவது யார்?” இவ்வாறு நினைத்தபடியே பகவான் அங்கே அமர்ந்திருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(26)
பிசாசுகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 54-(பிஷாசாகமநம்)-பிசாசுகளின் கூட்டம்; இரண்டு பிசாசுகளுக்கிடையிலான பேச்சு…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அப்போது அச்சந்தரக் கூடியவையும், மஹாகோரமானவையுமான பிசாசுகள் இரண்டு, தங்கள் கூட்டங்களுடன் அங்கே தோன்றின. அவை அனைத்தும் நெடியவையாகவும், கோணலான வாய்களையும், அகன்ற தாடைகளையும், நீண்ட நாவுகளையும் கொண்டவையாக இருந்தன.(1) நீண்ட தலைமுடியையும், அச்சந்தரும் கண்களையும் கொண்ட அவை இறைச்சியை உண்டபடியும், குருதியைப் பருகியபடியும் பயங்கரமாகச் சிரித்தன.(2) அவற்றின் உடல்கள் முழுவதும் உயிரினங்களின் குடல்களால் மறைக்கப்பட்டிருந்தன. அவை பேருடல் படைத்தவையாக இருந்தாலும் அவற்றின் வயிறுகள் மெலிந்திருந்தன. அவை, மண்டையோடுகள் தொங்கும் திரிசூலங்களைத் தரித்திருந்தன.(3)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவற்றில் இரு பிசாசுகள் பல சடலங்களை இழுத்துக் கொண்டிருந்தன. அவை தங்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலுக்குத் தகுந்த மிக இழிந்த சொற்களைப் பேசிக் கொண்டும், உரக்க சிரித்துக் கொண்டும் இருந்தன.(4) அவை நடந்து சென்ற போது பெரும் மரங்களை உலுக்கி தங்கள் தொடைகளாலும், கால்களாலும் அவற்றை இழுத்தன.(5) அவை தங்கள் பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டிருந்தன. அவற்றின் உடல் முழுவதும் எலும்புகளாலும், மஜ்ஜைகளாலும், குருதியாலும் மறைக்கப்பட்டிருந்தது.(6) அவை, “கிருஷ்ணா, கிருஷ்ணா, மாதவா” என்றும், அந்தத் பிரபுவின் பல்வேறு புனிதப் பெயர்களையும் சொல்லிக் கொண்டிருந்தன. அவை, “தலைவன் விஷ்ணுவின் தரிசனம் எப்போது நமக்குக் கிடைக்கும்? இப்போது அவன் எங்கிருக்கிறான்? பிரபுவான ஹரி எங்கே வசிக்கிறான்? அவனது தரிசனத்தை நாம் பெறுவது எவ்வாறு? இந்த ஆசிரமத்தில் எங்கோ இருக்கிறான் என்று கேள்விப்பட்டோமே.(7,8)
இந்திரனின் தம்பியும், மலரும் தாமரை மலர்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், தலைவன் ஹரியை நாம் எங்கே சந்திப்பது? பக்தர்களால் புண்டரீகாக்ஷன் என்றும், அகங்காரமற்றவர்களால் பிரம்மம் என்றும் அழைக்கப்படுபவனுமான விஷ்ணுவைக் காணும் ஆவல் தணியவில்லையே.(9) அண்டத்தின் தலைவனும் {ஜகந்நாதனும்}, அண்ட அழிவின் போது அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவனும், பிறப்பற்றவனுமான தலைவன் ஹரியை நாம் எவ்வாறு காண்போம்?(10) உயிரினங்கள் அனைத்திற்கும் உறைவிடமாக இருப்பவனும், அண்டத்தில் வெளிப்படும்போது பேராற்றலை வெளிப்படுத்துபவனுமான அந்தத் தலைவனைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது.(11)
வாழ்வின் மிக அருவருப்பான நிலை என்று உயிரினங்கள் அனைத்தாலும் வெறுக்கப்படும் இந்தப் பிசாசு நிலையை அடைவதற்குக் கடந்த காலத்தில் {முற்பிறவியில்} நாம் என்ன செய்தோம் என்பதை அறிவோமில்லை. நாம் மனித ஊனுண்டு, களங்கமடைந்து அனைவரின் மனங்களிலும் அச்சத்தை உண்டாக்கி வருகிறோம்.(12,13) ஐயோ, நம் முற்பிறவிகளில் பாவச் செயல்கள் பலவற்றை நாம் இழைத்திருக்கிறோம். நம்முடைய இந்த இழிநிலை அதன் விளைவே. இந்த இழிவாழ்விலும் ஏதோ ஒரு மகிழ்ச்சியை நாம் அடைகிறோம்.(14) முற்பிறவி தீச்செயல்களின் விளைவுகள் தீரும்வரை, அனைவராலும் வெறுக்கப்படுவதும், பிறருக்குத் தொல்லை தருவதுமான இந்தப் பிசாசு வடிவம் நீங்காது.(15) முற்பிறவிகள் பலவற்றிலும் செய்த கணக்கற்ற பாவங்களை நாம் சேர்த்திருக்க வேண்டும். இன்றுவரை பாவ விளைவுகள் தீராததன் காரணம் இதுவே.(16)
பல்வேறு உயிரினங்களைக் கொன்று, இந்த நாய்க்கூட்டத்துடனும், நமது படைவீரர்களுடனும் பூமியில் திரிந்து கொண்டிருக்கிறோம். இவ்வுலகத்தில் ஒவ்வொருவரும், எது செய்யப்படவேண்டும், எது தவிர்க்கப்பட வேண்டும் என்பது புரியாத பால பருவத்தில் அறியாமையில் மறைந்திருக்கின்றனர்.(17) அவர்கள் சற்றே வளர்ந்ததும் {யௌவனத்தில் / இளமையில்} அவர்களது புத்தி, புலனின்பத்தின்பால் கொண்ட ஈர்ப்பில் களங்கமடைகிறது. அந்நேரத்தில் அவர்கள், புலன்களை நிறைவடையச் செய்யப் பயன்படும் செல்வத்தை மேலும் மேலும் திரட்டுவதிலேயே எப்போதும் ஈடுபடுகின்றனர்.(18) புலன் நிறைவிலேயே முழுமையாக ஈடுபடும் அவர்கள், உயர்ந்த நன்மைக்காகச் செய்ய வேண்டியதைப் புரிந்து கொள்ள ஒருபோதும் முயல்வதில்லை. புலனின்பத்தில் முழுமையாக ஈர்க்கப்பட்ட மனத்தைக் கொண்டவனால், எது உயர்ந்த நன்மை என்பதையும், எது {நன்மை} இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியாது.(19)
அவர்கள் முதிரும்போது தங்களைப் பெருந்துன்பத்துக்குள்ளாக்கும் பல்வேறு பிணிகளின் கொள்ளிடங்களாகத் திகழ்கின்றனர். இருப்பினும் கட்டுப்பாடற்ற தங்கள் புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்களால், தங்களுக்கான உயர்ந்த நன்மையை அடைய எது செய்யப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இறந்த பிறகு அவர்கள் மலமும், ஜலமும் சூழ்ந்த ஓர் அன்னையின் கருவறைக்குள் மீண்டும் புகுந்து, தொடர்ச்சியாகப் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். அதன்பிறகு அவர்கள் அந்தப் பயங்கரக் கருவறையைவிட்டு வெளியேறி மீண்டும் பிறப்பு, இறப்பு என்ற சுழற்சிக்குள் நுழைகின்றனர்.(20-22)
அவர்கள் வாழ்ந்து வரும்போதும் பிறரைத் துன்புறுத்துவதன் மூலம் மேலும் மேலும் பாவங்களைத் திரட்டுகின்றனர். இவ்வாறே அவர்கள் மூவகைத் துன்பங்களைக் கொண்ட இவ்வுலகில் அறியாமையின் காரணமாகப் பாவச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.(23)
இருப்புக்கான {வாழ்க்கைக்கான} இந்த விளக்கம் பண்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட அனைவருக்கும் பொருந்தும். ஆயுதத்தின் மூலமோ, பிற கருவிகளின் மூலமோ இந்த இருப்பை விலக்குவது சாத்தியமில்லை. உடலை சுயமெனக் கருதுவோர் ஒருபோதும் இந்த இருப்புக்கு முடிவைக் கொண்டு வருவதில்லை.(24,25)
அத்தகைய மனிதர்கள், “நான் என் பகைவனைக் கொன்று, அவனுடைய செல்வங்கள் அனைத்தையும் அபகரிப்பேன். அவனுடைய செல்வத்தைக் கொள்ளையிட்டு அதை என் புலன் நிறைவுக்காகப் பயன்படுத்துவேன். அவன் பலவீனன், நானோ பலமிக்கவன். எனவே நான் பலவந்தமாக அவனது செல்வங்கள் அனைத்தையும் அபகரிப்பேன்” என்று நினைக்கிறார்கள். இத்தகைய எண்ணங்களில் ஈடுபடும் மூடர்களே எப்போதும் பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கிறார்கள்.(26,27)
சங்கு, சக்கர, கதாதரனும், ஆதிதேவனும், புராணாத்மாவும், பிரம்மவாதிகள் அனைவரின் ஆத்மாவாகத் திகழ்பவனுமான ஹரியால் மட்டுமே, துன்பங்கள் அனைத்துக்கும் வேர்க்காரணமான இருப்பு எனும் வியாதிக்கான தீர்வை வழங்க முடியும்.(28) இதையறிந்தே நாம் ஹரியின் தரிசனத்தை வேண்டுகிறோம்” என்றன. அவ்விரு பிசாசுகளும் இவ்வாறு பேசிக்கொண்டே ஹரியின் {கிருஷ்ணனின்} முன்பு தோன்றின” {என்றார் வைசம்பாயனர்}.(29)
கண்டாகர்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 55-(கண்டாகர்ணக்ருதா விஷ்ணுஸ்தவப்ரார்தநா தஸ்ய ஸமாதிலாபம்)-பிசாசுகளிடம் பேசிய கிருஷ்ணன்; தன் வரலாற்றைச் சொன்ன பிசாசு; பிசாசான கண்டாகர்ணனின் விஷ்ணுஸ்தவப்ரார்த்தனை…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, இறைச்சி உண்பவர்களும், மஹாகோரமானவர்களும், கைகளில் தீப்பந்தங்களுடன் தன் முன் வந்தவர்களுமான அந்தப் பிசாசுகளைக் கண்டான்.(1) ஆசனத்தில் சுகமாக அமர்ந்திருந்த தேவகியின் மகனை {கிருஷ்ணனை} அந்தப் பிசாசுகள் இருவரும் கண்டனர். அவர்கள் கேசவனிடம் மெல்லச் சென்று பின்வருமாறு பேசினர்:(2,3) “சாதாரண மனிதனைப் போல் தோற்றமளிக்கும் நீ யார்? உன்னுடைய தந்தை யார்? நீ எங்கிருந்து வருகிறாய்? கோர மிருகங்கள் உலவும் இந்த வனத்திற்கு ஏன் வந்தாய்?(4) மனிதர்களற்றதும், சிறுத்தைகள் நிறைந்ததுமான இந்தக் காடு, பிசாசுகள், புலிகள் மற்றும் சீற்றமிக்கப் பிற விலங்குகளின் விளையாட்டுக் களமாகும்.(5) நீ இளைஞனாகத் தெரிகிறாய். உன் அங்கங்கள் யாவும் மிக அழகாக இருக்கின்றன. உண்மையில் நீ இரண்டாம் விஷ்ணுவைப் போலத் தோற்றமளிக்கிறாய். உன் நீண்டவிழிகள் தாமரை மலரைப் போல அழகாக இருக்கின்றன. உன் மேனி நிறம் கருப்பாக இருப்பதால் நீலோத்பல மலரைப் போலவும், ஸ்ரீபதியை {லட்சுமியின் கணவனைப்} போலவும் தெரிகிறாய்.(6) விஷ்ணுவே எங்கள் மீது கருணையுடன் இந்த வடிவில் வந்திருப்பதைப் போலத் தெரிகிறது. இந்த அடர்வனத்தில் தனியாக அமர்ந்து தியானம் பயின்று கொண்டிருக்கும் நீ தேவனா? யக்ஷனா, கந்தர்வனா? கின்னரனா? இந்திரனா? குபேரனா? யமனா? வருணனா?(7,8) ஓ! மதிப்புக்குரியவனே, மனிதனைப் போன்று தோற்றமளிப்பவனே, நாங்கள் உன்னை அறிய விரும்புவதால் எங்களிடம் உண்மையைச் சொல்வாயாக” {என்று கேட்டனர்}.
விஷ்ணு {கிருஷ்ணன்}, அந்தப் பிசாசுகளுக்கு மறுமொழி கூறும் வகையில்: “நான் யதுகுலத்தில் பிறந்த க்ஷத்திரியன். இவ்வுலகின் மக்கள் என்னை இவ்வாறே அறிகின்றனர்.(9,10) எனினும், உண்மையில் மூவுலகங்களையும் காப்பவன் நான். துஷ்டர்கள் அனைவரையும் வதம் செய்வதே என் பணி. இப்போது உமையின் கணவனான மஹாதேவனைக் காணக் கைலாச மலைக்குச் செல்ல விரும்புகிறேன்.(11) இதுவே என் விருத்தாந்தம். இனி நீங்கள் யார் என்பதை எனக்குச் சொல்லுங்கள். பிராமணர்களுக்கான இந்த ஆசிரமத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.(12) இது பதரிகாசிரமம் என்று அறியப்படும் மிகப் புனிதமான தலமாகும். இங்கே பிராமணர்கள் பலர் வசிக்கின்றனர். தீயவர்களுக்கு இங்கே அனுமதியில்லை. இங்கே சித்தர்கள் எப்போதும் வசித்துத் தவம் பயின்று வருகின்றனர். இன்று காண்பது போல இங்கே நாய்க்கூட்டங்களையோ, ஊனுண்ணும் பிசாசுகளையோ நான் என்றும் கண்டதில்லை.(13,14)
இங்கே வேட்டை அனுமதிக்கப்படவில்லை என்பதால் மான்களைக் கொல்லக்கூடாது. முரட்டுக் குணம் கொண்ட நன்றிகெட்டவர்களும், நாத்திகர்களும் இந்தப் புனிதத்தலத்திற்குள் நுழைவதை நினைக்கவும் கூடாது.(15) இந்தப் புனிதத்தலத்தைக் காப்பவன் நான். இதில் ஐயமேதும் இல்லை. என் ஆணையை மீறத் துணிபவர்களை நான் தண்டிப்பேன்.(16) நீங்கள் யார்? எங்கே வாழ்கிறீர்கள்? இவர்கள் யாருடைய படைவீரர்கள்? இந்த நாய்க்கூட்டம் யாருடையது?(17) இங்கே தவம் செய்து வரும் பல முனிவர்களுக்கு இடைஞ்சல் விளைவிப்பீர்கள் என்பதால் உங்களை இந்த வனத்திற்குள் இதற்கு மேலும் அனுமதிக்க முடியாது.(18) என் வாக்கியத்தை மதித்து என் கேள்விகளுக்குப் பதிலளிப்பீராக; மாறாக நடந்தால் என்னுடைய பேராற்றலால் உங்களை நான் தடுப்பேன்” என்றான் {கிருஷ்ணன்}”.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வாறு கேட்கப்பட்ட பிசாசுகள் தங்கள் கதையைச் சொல்லத் தொடங்கின.(19) மஹாகோரமான இரண்டு பிசாசுகளில் ஒருவன் வலிமைமிக்கவனாகவும், ஒப்பற்ற கர வலிமை கொண்டவனாகவும் இருந்தான். அவனே தன் மனத்தில் இருந்ததை வெளிப்படுத்தத் தொடங்கினான்.(20)
அந்தப் பிசாசானவன், “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. ஜகந்நாதனும், பிறப்பற்றவனும், உயர்ந்தவனும், பாவமற்றவனும், தூயவனும், பாவங்களை அழிப்பவனும், ஆதிதேவனும், உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனும், நித்தியனும், அறிவாலும், அருளாலும் நிறைந்தவனும் ஜகத்பதியுமான விஷ்ணுவை நான் வணங்குகிறேன். எங்களைக் குறித்து நீ அறிய விரும்பினால் என் கதையைக் கேட்பாயாக.(21,22)
நான் கண்டாகர்ணன் என்ற பெயருடைய பிசாசு ஆவேன். என்னைப் பார்ப்பதே மங்கலமற்ற நிலையைக் கொடுக்கும். நான் சிதைந்த முகத்துடன் கூடியவனாகவும், மாமிசம் உண்பவனாகவும் இருக்கிறேன். எனவே இரண்டாம் மிருத்யுவைப் போலக் காணப் பயங்கரனாக இருக்கிறேன்.(23) நான் ருத்ரனின் அன்புக்குரிய நண்பரான தனஸ்யரின் {குபேரனின்} தொண்டனாவேன்[1]. அந்தகனைப் போலத் தெரியும் இவன் என் தம்பியாவான்.(24) நாங்கள் விஷ்ணுவை வழிபடும் நோக்கத்துடன் வேட்டையாடியபடியே இங்கே வந்தோம். இந்தப் படை என்னுடையதே, இந்த நாய்களும் என்னுடையவையே.(25) மஹாசைலமும், பல பூதங்களால் தொண்டாற்றப்படுவதுமான கைலாச மலையில் இருந்து நான் இங்கே வந்தேன். நான் பிசாசு உடலுக்குள் இருக்கும் பெரும்பாவி ஆவேன்.(26)முற்காலத்தில் விஷ்ணுவை அவதூறு செய்யும் வழக்கத்தை நான் கொண்டிருந்தேன். உண்மையில் விஷ்ணுவின் புனிதப்பெயர் காதுகளில் நுழைந்துவிடாதபடிக்கு பெரிய மணிகளை {கண்டங்களை} என் காதுகளில் {கர்ணங்களில்} அணிந்திருந்தேன். இதில் நான் எவ்வளவு தீவிரமாக இருந்தேன் என்பதை இதன்மூலம் நீ அறிந்து கொள்ளலாம்.(27)
ஒரு நாள் நான் கைலாச மலைக்குச் சென்று ரிஷபத்வஜனான சிவனை வழிபட்டேன். அப்போதிலிருந்து அந்த மஹாதேவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.(28) என்னுடைய வழிபாட்டில் நிறைவடைந்த ஹரன் {சிவன்} என்னிடம், “நீ ஒரு வரத்தை என்னிடம் கேட்பாயாக” என்றான். நான் அவனிடம் முக்தியை வேண்டினேன்.(29)
என் வேண்டுகோளைக் கேட்ட அந்தத் திரிலோசனன் {முக்கண்ணன் சிவன்}, “உயிரினங்கள் அனைத்திற்கும் முக்தியை அளிக்கவல்லவன் விஷ்ணுவே என்பதில் ஐயமில்லை.(30) எனவே நீ பதரிகாசிரமத்திற்குச் செல்வாயாக. நரநாராயண ரிஷிகளின் ஆசிரமத்தில் கோவிந்தன் என்று அறியப்படும் அந்த ஜனார்த்தனனை நீ வழிபட்டால், நிச்சயம் அவன் உனக்கு முக்தியை அளிப்பான்” என்றான்.(31)
சூலதாரியான அந்தத் தேவதேவன் {சிவன்} இவ்வாறு சொன்னதும், கருடத்வஜனான கோவிந்தனின் பரம மகிமையை நான் அறிந்து கொண்டேன்.(32) அவனிடம் முக்தியை வேண்டும் விருப்பத்திலேயே நான் இங்கே வந்திருக்கிறேன். உனக்கு விருப்பமிருந்தால் என் கதையைத் தொடர்கிறேன் கேட்பாயாக.(33)
யது விருஷ்ணி குலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் மேற்குக் கடற்கரையில் துவாராவதி என்ற புகழ்பெற்ற நகரம் இருக்கிறது. அந்த நகரம் அனைத்துப் பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. தற்போது ஹரி அங்கேயே வசித்து வருகிறான்.(34) ஓ! தலைவா, உலகின் நன்மைக்காகத் துவாரகையில் வசித்து வருபவனும், ஹரியும், விஷ்ணுவுமான அந்தப் புருஷோத்தமனைச் சந்திக்கவே எங்கள் தொண்டர்களுடன் நாங்கள் வந்திருக்கிறோம். உயிரினங்கள் அனைத்தின் தலைவனான {சர்வேஸ்வரனான} விஷ்ணுவை இன்று முகத்திற்கு நேராகச் சந்திப்போம் என நாங்கள் நம்புகிறோம்.(35,36) அனைத்தும் வெளிப்பட்டதன் உண்மைக் காரணன் அந்த ஹரியே. அண்டத்தைப் படைத்தவனும், காப்பவனும், அழிப்பவனுமான அவனே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறான். ஜகத்பதியான அவனே உண்மையில் உயர்ந்த தேவனாவான்.(37)
மொத்த அண்டத்தின் உரிமையாளனும், ஆதி தேவனும், புராதனனும், தூய நல்லியல்பின் வடிவமும், வரங்களை அருள்பவனும், வழிபடத்தகுந்தவனுமான அந்த ஹரியை தரிசிக்கும் நம்பிக்கையுடனே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.(38) எவனுடைய அருளால் பல்வேறு உயிரினங்களும், கந்தர்வர்களும், பாம்புகளும் வசித்திருக்கும் இவ்வுலகம் இருப்புக்குள் வந்ததோ அந்த ஜனார்த்தனனைக் காணவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். படைப்பின் உண்மைக் காரணனாக இருப்பினும் அவன் காரணமேதும் இல்லாதவனாகவும், பிறப்பற்றவனாகவும் இருக்கிறான்.(39)
ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்திலும் இந்த அண்டம், முந்தைய கல்பத்தின் முடிவில் கலந்த புருஷோத்தமனின் குடலுக்குள் இருந்து வெளிப்படுகிறது. அண்டம் வெளிப்பட்டதும், நாம் இப்போது காண விரும்பும் பிரபுவால் காக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறது.(40) அவனே அண்டம் வெளிப்பட உண்மைக் காரணனும், அண்டத்தைக் காத்து அழிப்பவனும், நித்தியமானவனும், அழிவற்ற ஆதி தேவனும், அண்டத்தின் தலைவனும் ஆவான்.(41)
சுயம்புவான பிரம்மனைப் படைத்தவன் தலைவன் ஹரியே, விஷ்ணு வடிவாக இருக்கும் அண்டத்தைப் பாதுகாப்பவனும் அவனே. யோக ஆசானும், தன் பக்தர்களுக்குத் தூய புத்தியை அருள்பவனுமான அந்த ஹரியை நாங்கள் சந்திப்போம் என நம்புகிறோம். எங்கள் மனங்கள் இப்போது அவனிடமே நிலைத்திருக்கின்றன.(42) அழிவேற்படும் காலத்தில் மூவுலகங்களின் உறைவிடமாகத் திகழும் ஹரி மொத்த அண்ட வெளிப்பாட்டையும் தன் உடலுக்குள் இழுத்துக் கொள்கிறான். பிறகு அவன் ஒரு குழந்தையைப் போலக் கைகளையும், கால்களையும் அசைத்துக் கொண்டு ஆலிலையில் வெளிப்படுகிறான்.(43)
புராதன முனிவரான மார்க்கண்டேயர் அந்தத் தலைவனின் வயிற்றுக்குள் நுழைந்து அவனுடைய அருளால் மொத்த படைப்பையும் அங்கே கண்டார். அவர் மொத்த அண்டத்தையும் வெளியே கண்டதுபோலவே, அந்தத் தலைவனின் வயிற்றுக்குள்ளும் கண்டார்.(44) பழங்காலத்தில் அந்தப் பரமாத்மா மொத்த அண்டத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு, அந்த அழிவில் உண்டான நீரில் கிடந்திருந்தான். அந்நேரத்தில் ஸ்ரீதேவி கையில் சாமரத்துடன் அவனுக்குத் தொண்டாற்றினாள்.(45)
படைப்பின் தொடக்கத்தில் தலைவனின் நாபியில் இருந்து ஒரு பொற்தாமரை மலர் உதித்தது. அழகிய இதழ்களைக் கொண்ட அந்த அண்டத் தாமரையே அண்டத்தின் ஆன்ம குருவான பிரம்மனின் பிறப்பிடமாகத் திகழ்ந்தது.(46) பழங்காலத்தில் பன்றியின் வடிவை ஏற்ற அந்தப் பரமனைக் காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம். பெரும் முனிவர்களால் துதிக்கப்பட்ட அவன், புயல் மேகங்களைப் போலக் கர்ஜித்துக் கொண்டு நீருக்குள் இருந்த பூமியைத் தன் தந்தங்களால் காத்தான். பிரபுவும், புராதனனும், புருஷோத்தமனுமான அந்த ஹரியே சாட்சியாகவும், வேள்வியின் வடிவமாகவும், படைப்பைக் காக்கும் வேள்வியின் தலைவனாகவும் இருக்கிறான்.(47,48)
சில பக்தர்கள், இந்திரனின் தலைமையிலான தேவர்களின் பல்வேறு வடிவங்களிலும் விஷ்ணுவைக் கண்டு அந்தப் புறவடிவத்தையே வழிபடுகின்றனர். வேதாந்தத்தால் உறுதிசெய்யப்படும் அத்வைதப் பொருளாலான உடலைக் கொண்ட அந்தத் தேவனைக் காணவே நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.(49) பல்வேறு வகைகளில் விளக்கப்படுபவனும், ஸ்ருதிகள், ஸ்மிருதிகள், தர்க்கம் தொடர்புடைய கல்விமான்கள் பலரால் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாகச் சொல்லப்படுபவனும், புராணங்களை அறிந்தவர்களால் அகத்தில் வசிக்கும் பரமாத்மாவாக அறியப்படுபவனுமான அந்தத் தலைவனைக் காண நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.(50) வழிபாட்டின் முக்கியப் பொருளாகவும், வரங்களை அளிப்பவர்களில் சிறந்தவனாகவும், அதிகம் நாடப்படுபவனாகவும், பிறப்பற்றவனாகவும், நீக்கமற நிறைந்திருப்பவனாகவும், முற்றான உண்மையாகவுமான அந்த ஜனார்த்தனனை புராதன முனிவர்கள் துதிக்கின்றனர்.(51)
சரத்தில் கோர்க்கப்படும் முத்துகளைப் போலவே அண்டங்கள் அனைத்தும் அவனையே சார்ந்திருக்கின்றன. அந்த விஷ்ணுவைக் காண நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். வேறென்ன சொல்ல?(52) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இப்போது நாங்கள் செல்கிறோம், நீயும் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(53) இப்போது நடு இரவாகிவிட்டது. நான் என் அறச்சடங்குகளைச் செய்யும் நேரமாகிவிட்டது. இன்னும் சொல்வதற்கு வேறேதும் இல்லை” {என்றான் கண்டகர்ணன்}.
சிதைந்த முகத்தைக் கொண்டவனும், அச்சுறுத்தும் தோற்றம் கொண்டவனுமான அந்தப் பிசாசானவன் இவ்வாறு சொல்லிவிட்டு அவனது {கிருஷ்ணனின்} முன்னிலையிலேயே குருதி பருகி, இறைச்சியுமுண்டான்.(54,55) பிறகு அவன், தன் கைகளைக் கழுவிக் கொண்டு, குடல்களால் அமைந்த பெருங்கயிற்றை அருகில் வைத்துக் கொண்டு தான் செய்யும் சாதனைக்குத் தேவையான பொருட்களை எடுத்தான். அவன் குசப்புல்லாலான பாயைத் தரையில் வைத்து, நீர் தெளித்து அதைத் தூய்மை செய்தான். பிறகு அவன் நாய்கள் அனைத்தையும் விரட்டிவிட்டு அமைதியாக அமர்ந்து சமாதியில் தன் மனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். பக்தர்களிடம் எப்போதும் அன்புடன் இருக்கும் கேசவனை அவன் முதலில் வணங்கினான். பிறகு பல்வேறு மந்திரங்களை உள்ளடக்கிய பின் வரும் {விஷ்ணுஸ்தவப்ரார்த்தனை என்ற} துதியைக் குவிந்த மனத்துடன் ஓதினான்.(56-58)
சக்கரபாணியான வாசுதேவா, நான் உன்னைப் பணிந்து வணங்குகிறேன். ஓ! கதாதரா, உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிக்கும் உன்னை நான் வணங்குகிறேன்.(59) ஓம். பேராற்றல்வாய்ந்தவனும், நீக்கமற நிறைந்தவனும், நித்தியமானவனும், ஞானமும் அருளும் நிறைந்தவனுமான நாராயணா நான் உன்னை வணங்குகிறேன். ஓ! கேசவா, என் மனம் உன் மகிமையால் தூய்மையடையட்டும்.(60) ஓ! புலன்களின் தலைவா, நாராயணா, இந்தத் துன்ப நிலையில் இருந்து என்னைக் காப்பாயாக. உன் அருளால் நான் தேவர்களின் தொண்டனாவேனாக.(61) {புலன்நுகர்} பொருள் பற்றில் மீண்டும் நான் சிக்காமல் இருக்க உன் சக்கரத்தால் என்னுடல் துண்டு துண்டாக வெட்டப்படப் பிரார்த்திக்கிறேன்.(62) பொருளற்றவனுக்குக் கற்பக மரம் {கல்பவிருக்ஷம்} நீயே. ஓ! தேவர்களின் தலைவா, தயாளன் நீயே. நான் எங்குப் பிறந்தாலும் என் இதயத்தில் நீ இருக்கப் பிரார்த்திக்கிறேன். ஓ! உயர்ந்த தேவா, நான் உன்னை வணங்குகிறேன். நான் எப்போதும் உன்னைத் துதித்திருப்பேனாக. நான் இறக்கும்போது என் மனம் {புலன்நுகர்} பொருள் பற்றில் மயங்காதிருக்கட்டும். ஓ தேவா, ஒவ்வொரு கணத்திலும் என் மனம் உன்னிலேயே நிலைத்திருக்கட்டும். என் இதயத்தை இவ்வாறே எப்போதும் தூண்டுவாயாக. “இவன் கொடூரன், இவன் பிசாசு, எனவே என் கருணைக்குத் தகாதவன்” என்று ஒருபோதும் நினையாதே. “வீழ்ந்த ஆத்மாவான இவன் என் சேவகன்” என்றே என்னைக் கருதுவாயாக. ஓ! பிரபுவே, பகவானே, நான் உன்னை வணங்குகிறேன். நான் பிறருக்குத் துன்பம் இழைக்காத வகையிலும், என் புலன்கள் வெறும் பொருளில் திருப்தியடையும் இழிநிலையில் ஒருபோதும் வீழாத வகையிலும் என்னிடம் கருணை கொள்வாயாக.(63-68) கேசவா, மரணக் காலத்தில் உன் கருணையால் என் மனம் உன்னில் நிலைத்திருக்கட்டும். பூமி என் மூக்கை ஏற்கட்டும், நீர் என் நாவை ஏற்கட்டும், சூரியன் என் கண்களை ஏற்கட்டும், காற்று என் தோலை ஏற்கட்டும், வானம் என் காதுகளை ஏற்கட்டும், சந்திரன் என் உயிர்க் காற்றையும் {மூச்சையும்}, மனத்தையும் ஏற்கட்டும்.(69,70) ஓ! ஹரியே, தண்ணீர் எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும், பூமி எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும், சூரியன் எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும். விஷ்ணுவே, நீ சூரியனைப் போல வலிமைமிக்கவன். நான் உன்னை வணங்குகிறேன்.(71) ஓ! ஜனார்த்தனா, காற்றும், ஆகாயமும் என்னைத் துன்பத்தில் இருந்து காக்கட்டும். நானாக இருக்கும் என் மனம், {புலன்நுகர்} பொருள் இன்ப நினைவுகளில் திரும்பாமல் பரமாத்மாவில் நிலைத்திருக்கட்டும்.(72) புலன்நுகர் பொருட்களின் இன்ப நினைவுகளில் மனம் சிக்கினால் அஃது ஒருவனின் புண்ணியங்களை மட்டும் அழிக்காமல், பிறருக்கு துன்பத்தையும் விளைவிக்கும்.(73) ஓ! ஜனார்த்தனா, எப்போதும் என் மனத்தைப் பாதுகாப்பாயாக. எப்போதும் என் மனம் களங்கமடையாமல் தூய்மையாக இருக்கட்டும்.(74)
தூய்மையற்ற மனம் ஒருவனை நரகத்திற்கு இட்டுச் செல்லும். மனம் தூய்மையாக இருக்கும்போது, புறப்புலன்கள் தாமாகத் தூய்மையடைகின்றன, மனம் களங்கமடையும்போதோ, புலன்களும் தூய்மையற்ற பணிகளில் ஈடுபடுகின்றன. ஓ! கேசவா, மனக்களங்கத்தைத் தூய்மைப்படுத்தாமல், புறவுடலை மட்டும் கழுவுவதால் எவனும் அடையப்போவதென்ன? தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ளும் அவனது முயற்சி அற்பமானதே.(75,77) எனவே, ஓ! ஜனார்த்தனா, என் மனத்தைப் பாதுகாப்பாயாக. புலன்கள் வலிமைமிக்கவை என்பதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் எனக்கு உதவி செய்வாயாக.(78) ஓ! ஜகந்நாதா, பிறரை விமர்சிக்க என் சொற்களை அனுமதியாதே. பிறரின் செல்வத்திலும், மனைவிகளிடமும் பற்றுக் கொள்ள என் மனத்தை அனுமதியாதே. ஓ! கேசவா, அனைத்து உயிரினங்களிடமும் என் மனத்தில் கருணை உண்டாக அருள் செய்வாயாக.(79) உன்னிடம் ஓயாத பற்றையும், உயிரினங்கள் அனைத்திடமும் கருணையையும் வளர்ப்பேனாக. இதற்கு மேலும் சொல்லி என்ன பயன்? என் வேண்டுதலைக் கேட்பாயாக.(80) ஓ! தேவேசா, ஜனார்த்தனா, இன்பத்திலும், துன்பத்திலும், கோபத்திலும், உண்ணும்போதும், நடக்கும்போதும், விழித்திருக்கும்போதும், கனவிலும் என் மனம் எப்போதும் உன்னில் இன்புற்றிருக்கட்டும். நான் உன்னை வணங்குகிறேன்” {என்றான் கண்டாகர்ணன்}[2].முன்னர்த் தாழ்ந்த குலத்தில் பிறந்த அந்தப் பயங்கரப் பிசாசானவன் இவ்வாறு சொன்னபடியே சமாதியில் ஆழ்ந்தான். உண்மையில் அவன் தேவனின் பரம பக்தனாகி அவனைச் சரணமடைந்தான். மாமிசமுண்ணும் அந்தப் பிசாசானவன், குடல்களாலான கயிறுகளில் தன் உடலைக் கட்டி, மனத்தைக் கவனமாகக் கட்டுப்படுத்தி அமர்ந்தவாறே, பீதாம்பரம் உடுத்துபவனும், அண்ட வெளிப்பாட்டின் பிறப்பிடமும் {ஜகத்யோனியும்} மங்கலனுமான விஷ்ணுவைத் தியானிக்கத் தொடங்கினான்.(81-84)
ஆதிபுருஷனும், தன்னைப் போல் வேறொருவன் இல்லாதவனும், தூய்மையின் கொள்ளிடமும், அறிவை விளைவிக்கும் பொருளும், அனைத்து உயிரினங்களின் குருவுமான முகுந்தனிடம் {கிருஷ்ணனிடம்} அவன் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(85) அவன் தன் மூக்கின் நுனியில் தன் கண்களை நிலைநிறுத்தி, ஓம் எனும் புனித அக்ஷரத்தை ஓதி, காற்றில்லாத இடத்தில் உள்ள விளக்கைப் போல மனத்தில் உறுதியடைந்தான்.(86) ஓம் எனும் பிரணவ வசனத்தையே பிரம்மமாகக் கருதி முழுமையாக விஷ்ணுவில் மனத்தைக் குவித்தான். தியானம் பயின்றதன் மூலம் அவன் தன் அலைபாயாத மனத்தைத் தாமரை போன்ற தன் இதயத்தில் நிலைநிறுத்தினான். பெரும் யோகியும், மாமிசம் உண்பவனுமான அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்}, தாமரை போன்ற தன் இதயத்தில் அண்டத்தின் தலைவனை நிலைநிறுத்தியபிறகு அமைதியாக அமர்ந்து விஷ்ணுவைத் தியானிக்கத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(87-89)
விஷ்ணு தரிசனம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 56-(கண்டாகர்ணஸ்ய விஷ்ணுஸாக்ஷாத்காரலாபம்)-கண்டாகர்ணனுக்குத் தரிசனம் தந்த விஷ்ணு; கண்டாகர்ணனின் சிந்தனை…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, தன்னையே ஆன்மாவாகவும், உயிராகவும் தூய புத்தியில் கருதி, தன்னையே தியானித்துக் கொண்டிருந்த அந்தப் பிசாசைக் கண்டான்.(1) ஹரியின் புனிதப் பெயர்களின் முன் பிரணவத்தை {ஓம் எனும் மந்திரத்தை} இட்டு ஒவ்வொரு பெயராக அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் தன் விருப்பம் நிறைவேற தன் இதயத்தில் பிரார்த்தித்தான். இறுதியில் கண்டாகர்ணன் தன் தியானத்தில் ஹரியைக் கண்டான்.(2)
ஜகந்நாதன் {கிருஷ்ணன்}, “இந்தப் பிசாசானவன் எவ்வாறு இவ்வளவு நல்லவானக இருக்கிறான்” என்று சிந்தித்தான். நீண்ட காலம் இவ்வாறு சிந்தித்துப் பின்வரும் தீர்மானத்தை அடைந்தான்.(3) ‘தனதஸ்யனுடைய {குபேரனுடைய} உபதேசத்தின் பேரில் இவன் என் பெயர்களை, “வாசுதேவா, கிருஷ்ணா, மாதவா,(4) ஜனார்த்தனா, ஹரியே, விஷ்ணுவே, பூதபாவனபாவனா, நராகாரா, ஜகந்நாதா, நாராயாணா, பராயணா” என்ற என்னுடைய பெயர்கள் பலவற்றைச் சொல்லி வருகிறான்.(5) மேலும் இவன் நித்தம் இரவும் பகலும் என் பெயர்களைச் சொல்லிவருகிறான். உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும், நிற்கும்போதும், உண்ணும்போதும், பருகும்போதும், நடக்கும்போதும், பேசும்போதும் இவன் இந்தப் பெயர்களையே தொடர்ந்து சொல்லிவருகிறான்.(6) மாமிசம் உண்ணும்போதும், குருதி பருகும்போதும் இவன் என் பெயர்களையே சொல்கிறான். எண்ணற்ற உயிரினங்களைக் கொல்லும்போதும், இடையறாமல் மான்களைக் கொல்லும்போதும்,(7) கொலை செய்வது, உண்பது, உறங்குவது என எந்தக் காரியத்தைச் செய்யும்போதும் இவன் என்னையே கர்த்தனாக ஏற்கிறான்.(8) இதன்காரணமாக இவனது பாவச்செயல்கள் செல்லாதவை ஆகின்றன” என்று சிந்தித்தான் அந்த ஜகந்நாதன்.
ஓ! மன்னா, இந்தத் தீர்மானத்தை அடைந்த அந்த ஜகத்பதி, தன் பக்தனான அந்தப் பிசாசிடம் மகிழ்ந்து, அவனுடைய தூய்மையான இதயத்திற்குள் வெளிப்பட்டான்.(9,10) இவ்வாறே அந்தக் கோர பிசாசானவன், பாவங்கள் அனைத்தையும் அழிப்பவனான கேசவனை, பீதாம்பரம் உடுத்தியவனாகத் தன் இதயத்திற்குள் கண்டான். அந்த ஹரியின் நிறம் கருப்பாக இருந்தது, அவனது கண்கள் மலரும் தாமரை மலர்களைப் போல இருந்தன.(11) அந்த விஷ்ணுவின் கரங்கள் சங்கு, சக்கர, கதாயுதம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காட்டு மலர் மாலை அவனது கழுத்தைச் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில் கிரீடத்துடனும், மார்பில் கௌஸ்துப மணியுடனும், ஸ்ரீவத்சக் குறிகளுடனும் அவன் இருந்தான்.(12)
அவனுடைய நிறம் நீல மேகம் போலக் கருப்பாக மயக்கும் வகையில் இருந்தது. அவன் பிரபஞ்சத்தில் உள்ள அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவனாகக் கருடனின் முதுகில் அமர்ந்திருந்தான். அவன் நான்கு கைகளைக் கொண்டிருந்தான். அவனது ஒலி மங்கலமானதாக இருந்தது. நீக்கமற நிறைந்த அந்த மங்கலத் தலைவன் அசைவின்றி இருந்தான்.(13) அவன் ஆதியும், அந்தமும் அற்றவனாக இருந்தான். அவன் நிதானனாகவும், நித்தியனாகவும் இருந்தான். முற்றான சத்தியனாகவும், எப்போதும் தூயனாகவும், தூய புத்தியால் புரிந்து கொள்ளப்படக் கூடியவனாகவும், மலத்திலிருந்து {களங்கங்களிலிருந்து} எப்போதும் விடுபட்டவனாகவும் இருந்தான்.(14) இவ்வாறே அவன் {கண்டாகர்ணன்}, தன் இதயத்திற்குள் வெளிப்பட்ட விஷ்ணுவைத் தரிசித்தான். மூடிய கண்களுடன் அமர்ந்திருந்த அவன், தன்னை நற்பேறு பெற்றவனாகக் கருதினான்.(15)
{கண்டாகர்ணன்}, “அந்த ஹரிவிஷ்ணு தன் தரிசனத்தை எனக்கு அருளினான். இவ்வாறே அவனைக் காணமுடியும். நிச்சயம் அவன் என்னிடம் நிறைவடைந்திருக்கிறான்.(16) என் வாழ்வின் இலக்குச் சித்தியடைந்தது {நான் ஜீவமுக்தனானேன் / வாழும்போதே முக்தியடைந்தவன் ஆனேன்}. இதைவிட எனக்கு முக்கியமானது வேறென்ன இருக்க முடியும்? என் அறியாமை அகன்றது. என் இந்திரியங்களும் எனக்கு வசப்பட்டன.(17) நான் என் மனத்தை வென்றதாலேயே ஹரி என்னை நினைத்திருக்கிறான். மூவகை ஆசைகளும் விலகியதால் நான் முழுமையாக நிறைவடைந்திருக்கிறேன்.(18) எனக்குப் பிசாசுகளுடனான உறவு இப்போது முடிந்தது. என் தம்பியும் ஹரி பக்தன் என்பதால், அவனும் உரிய காலத்தில் ஸாயுஜ்ய முக்தியை அடைவான் {இறையுடன் இரண்டறக்கலப்பான்}” {என்று நினைத்தான்}.
இவ்வாறு சிந்தித்த அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்} தன் உடலில் இருந்து குடல்கயிறுகளை அறுத்துப் பேரின்பக்கடலில் மூழ்குவதற்காகத் தன் உயிர் காற்றை {பிராணனை} விடுவித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(19-21)
விஷ்ணுஸ்தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 57-(கண்டாகர்ணக்ருதோ விஷ்ணுஸ்தவம்)தன் முன் அமர்ந்திருக்கும் ஜகத்பதியான விஷ்ணுவைக் கண்டு துதித்து விஷ்ணுஸ்தவத் துதியைச் சொன்ன கண்டாகர்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்} தியானத்தில் கண்ட ஜகத்குருவே, இப்போது தன்னெதிரில் ஜனார்த்தனனாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.(1) அப்போது அந்தப் பிசாசானவன், “இதோ விஷ்ணு. இதே வடிவத்தையே இவன் என் தியானத்தில் வெளிப்படுத்தினான்” என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கூத்தாடினான்.(2)
பிறகு அவன் {கண்டாகர்ணன்}, “சக்கரம், சரங்கள், சாரங்க தனு {வில்}, கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவனும், அழகிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்திருப்பவனும், ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனும், மூவுலகங்களின் புகலிடமும், அண்டத்தைப் படைத்தவனுமான ஹரி இவனே.(3) எப்போதும் வெல்பவனும் {ஜிஷ்ணுவும்}, அண்டத்தின் தலைவனும் {ஜகந்நாதனும்}, புராணனும், அண்டத்தின் ஆன்மாவும், வெளிப்பட்டிருக்கும் இந்த அண்டத்தின் படைப்பாளனுமான விஷ்ணு இவனே.(4) இதோ ஹரிதேவனின் மார்பில் கௌஸ்துப ரத்தினம் மிளிர்கிறது. முழு நிலவால் ஒளியூட்டப்படும் ராத்திரியைப் போலவே இந்த அண்டமும் இவனால் ஒளியூட்டப்படுகிறது.(5)
{கார்போடகக் கடலில்} ஜலத்தின் அடியிலிருந்து பிருத்வியைத் தன் தந்தங்களில் உயர்த்தி உரிய இடத்தில் நிலைநிறுத்திய வராஹன் இவனே. சாக்ஷாத் ஹரி இவனே.(6) வலிமைமிக்கவனும், தானவர்களின் மன்னனுமான பலியை பலவந்தமாகக் கட்டிப்போட்டு, இந்திரனிடம் மூவுலகங்களையும் திருப்பி அளித்த வாமனன் இவனே. அந்நேரத்தில் பெரும் முனிவர்களால் துதிக்கப்பட்டவன் இந்த ஹரியே.(7) கோரப்பற்களையுடைய நரசிம்மனாக அவதரித்து தானவர்களைக் கொன்று ஓலத்திலிருந்து அண்டத்தை விடுவித்தவன் இந்த ஜனார்த்தனனே.(8) ஆதிகாலத்தில் மந்தர மலையை ஒரு கையில் பிடித்து, பெருங்கடலின் கரையில் தானவர்கள் அனைவரையும் வீழ்த்திய அந்த மஹாவிஷ்ணுவே இப்போது என் முன் இருக்கிறான்.(9) அண்டம் அழிந்ததும் லக்ஷ்மி தேவியுடன் அநந்த சேஷ படுக்கையில் கிடந்து, மது, கைடபன் என்ற வலிமைமிக்க தானவர்கள் இருவரைக் கொன்றவன் இந்த ஹரியே.(10)
அனைத்தின் பிறப்பிடம், ஜகத்பதி, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவன், பிறப்பற்றவன், அனைவரின் ஐயன், அணுவைவிடச் சிறியவன், பெரிதிலும் பெரியவன் என்றெல்லாம் தேவர்களால் துதிக்கப்படுபவன் இந்த விஷ்ணுவே.(11) அழிவிற்குப் பின் மொத்த படைப்பும் எவனில் கரையுமோ, படைப்பின் தொடக்கத்தில் எவனிடமிருந்து அது {மொத்த படைப்பும்} வெளிப்படுமோ அந்த விஷ்ணுவே இப்போது என் முன் இருக்கிறான்.(12) எவனுடைய விருப்பத்தினால் மூவுலகங்களும் தங்கள் கடமைகளில் ஈடுபடுமோ அந்த மங்கலவிஷ்ணுவும் யாதவேஷ்வரனும், புருஷோத்தமனுமான இந்த ஜனார்த்தனனும் ஒருவனே.(13)
மிருகவியாதன் என்ற பெயரில் ருத்ரனின் சீடனாகி, ஆயிரங்கரங்களைக் கொண்ட கார்த்தவீரியார்ஜுனனைப் பெரும்போரில் கொன்று, அவனது யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றையும், படைவீரர்களையும் தம் கோடரியால் அழித்து, குருக்ஷேத்திரம் சென்று தம் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்து, இருபத்தோரு முறை உலகை க்ஷத்திரியர்களற்றதாக்கிய அந்தப் பிருகுவம்சத்து ஜமதக்னேயரே {ஜமதக்னியின் மகனான பரசுராமரே} இப்போது என் முன் இருக்கிறார்.(14-16) ரகு குலத்தில், ராமன் என்ற பெயரில் பிறந்து, ஸ்ரீதேவியான சீதையை மணந்து, எப்போதும் தம்பி லக்ஷ்மணனின் துணையுடன் கூடியவனாக, கடலில் பாலம் அமைத்து, தன் கணைகளால் ராக்ஷசாதிபதியை {ராவணனைக்} கொன்று, அந்த ராஜ்ஜியத்தை விபீஷணனுக்கு அளித்து, பத்து அஷ்வமேத யாகங்களைச் செய்த ஜனார்த்தனனே இப்போது என் முன் இருக்கிறான்.(17,18)
வசுதேவன் குலத்தில் பிறந்து, வாசுதேவன் என்று அறியப்பட்டு, கோகுலத்தில் குழந்தைப் பருவத்தைக் கழித்து, எப்போதும் அண்ணன் பலராமனின் துணையுடன் இருந்தவனும் இந்த ஹரியே.(19) குழந்தையாகப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கையில் கொல்ல வந்த பூதனையின் நஞ்சு பூசிய முலைப்பால் பருகி அவளது உயிரையும் உறிஞ்சியெடுத்து அமைதியாகப் படுக்கையில் கிடந்தவன் இவனே.(20) சற்றே வளர்ந்ததும், வெண்ணெய்யையும், தயிரையும் எடுத்து மறைந்திருந்து உண்டவன் இவனே. கோபமடைந்த அன்னை யசோதை இவனது இடையில் கயிற்றைக் கட்டினாள்.(21) அன்னையால் உரலில் இறுக்கமாகக் கட்டப்பட்டு, அந்த உரலையும் இழுத்துச் சென்று அர்ஜுன மரங்கள் இரண்டை வேரோடு பிடுங்கிய அந்த தாமோதரன் இவனே. கோகுலத்தில் குழந்தையாக இருந்து, சில வேளைகளில் அசுரர்களைக் கொன்று, சில வேளைகளில் கோபியரின் முலைப்பால் பருகியவன் இந்த ஹரியே.(22) கோபர்களுடன் பிருந்தாவனத்தில் வசித்துவந்த போது சூரியனைப் போன்ற பிரகாசமான குதிரை வடிவத்தில் இருந்த கேசியைக் கொன்றவன் இந்த விஷ்ணுவே.(23) கோபாலர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் நாகமுடியில் நாட்டியமாடி, யமுனை மடுவில் நாக மன்னனை {காளியனை} தண்டித்த அந்த ஜனார்த்தனனே இப்போது என் முன் இருக்கிறான்.(24)
தாலவனக்காட்டில் கோபாலர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பனை மரத்தின் உச்சியில் இருந்து தானவனை {தேணுகனை} வீசி எறிந்த தலைவனே இப்போது என் முன் இருக்கிறான்.(25) விரஜம் முழுவதையும் மறைத்து இடையறாமல் மேகக்கூட்டங்கள் மழையைப் பொழிந்து கொண்டிருந்தபோது, ஒப்பற்ற பலத்தை வெளிப்படுத்தி ஒரு கையால் கோவர்த்தன மலையை உயர்த்தி, சக்ரனின் பலத்தைப் பரிகசித்து, கோபர்கள், கோபிகைகள் ஆகியோருக்கும், கோகுலத்தின் பசுக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தவன் இந்த ஹரியே.(26) அக ஆற்றலால் மனித வடிவை ஏற்று, கோபிகைகளின் ஸ்தனங்களுக்கு மத்தியில் கிடந்து, விருப்பத்துடன் அவர்களின் இதழ்களைப் பருகிய அந்தக் காமேஷ்வரனே இப்போது என் முன் இருக்கிறான்.(27) பிருந்தவனத்தின் தனிமையான இடத்தில் இரவில் தாமரை போன்ற முகங்களைக் கொண்ட கோபிகைகளின் இதழமுதமருந்தி, அவர்களின் மார்பில் தன் தலைசாய்த்தவன் இந்தக் கேசவனே.(28)
நாகலோகவாசிகளால் வழிபடப்பட்ட கம்சனின் ஆணையின் பேரில் {பிருந்தாவனம்} சென்று மதுராவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அக்ரூரருக்கு யமுனையின் நீரில் வைகுண்டத்தைக் காட்டிய கிருஷ்ணன் இவனே.(29) மதுராவின் தெருக்களில் பலராமனுடன் நடந்து கொண்டிருந்தபோது, ஆணவம் மிகுந்த வண்ணான் ஒருவனைக் கொன்று அவனிடம் இருந்து உடைகளைப் பறித்து உடுத்திச் சென்றவன் இந்த ஹரியே.(30) மதுராவில் திரிந்தபோது மலர்வியாபாரியால் கொடுக்கப்பட்ட மலர்மாலைகளை அணிந்து கொண்டு, அவன் விரும்பிய வரத்தை அளித்து, குப்ஜை {கூனி} கொடுத்த சந்தனக் குழம்பைப் பெற்றுக் கொண்டு அவளை அழகிய பெண்ணாக்கிய தலைவன் இவனே.(31) கம்சனின் தெய்வீக வில்லை எடுத்து, அதை இரண்டாக முறித்து, பிரளயகால மேகங்களைப் போல முழங்கி நின்றவன் இவனே.(32)
மற்போர் அரங்கின் நுழைவாயிலில் குவலயபீடம் என்ற பெரும் யானையைக் கொன்று, அதன் தந்தங்களைப் பிடுங்கி மற்போர் அரங்கில் தரித்துக் கம்சனை அச்சுறுத்திய கேசவன் இவனே.(33) வலிமைமிக்க மாமல்லன் சாணூரனை கம்சன் முன்னிலையில் கொன்று, யாதவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த ஹரியே இங்கே இருக்கிறான்.(34) தந்தையிடமும், யாதவர்களிடமும் பகைமை பூண்டிருந்த கம்சனைக் கொன்று, மதுராவின் மன்னராக உக்ரசேனரை நிறுவி, காசியப குலத்தைச் சேர்ந்த சாந்தீபனி முனிவரிடம் குருகுல கல்வி பயிலச் சென்ற ஹரி இவனே.(35) கல்வி நிறைவடைந்ததும், இறந்து போன தன் குருபுத்திரனை மீட்டளித்து, யாதவர்களின் தலைநகரான மதுராவுக்குத் தன் தமையனுடன் திரும்பி வந்த தலைவன் இவனே.(36) நிசும்பனையும், நரகனையும் கொன்று, பூமியின் சுமையைக் குறைத்து, வழியில் பிராமணர்கள், முனிவர்கள், ராஜரிஷிகள் ஆகியோரைக் காத்தவனும், நுண்ணறிவுமிக்க ஜகத்பதியுமான அந்த ஜனார்த்தனன் இவனே.(37)
இதோ என் கண்களுக்கு முன் இருப்பவன் அந்த விஷ்ணுவே. நான் ஸாயுஜ்ய முக்தியை அடைந்திருப்பதால் நிச்சயம் இவனது தரிசனமே என் வாழ்வை மகிமையடையச் செய்திருக்கிறது.(38) சாக்ஷாத் ஹரியை நேரடியாகக் கண்ட எவனும் நிச்சயம் முக்தியடைவான். இப்போது என் முன் இருப்பவன் சாக்ஷாத் அந்த ஹரியே.(39) முற்பிறவிகளில் நான் பெரும்புண்ணியங்களைச் சேர்த்திருப்பதாலேயே இப்போது இவனது தரிசனத்தை அடைகிறேன்.(40) எனக்கிருந்த பொருள் பற்று அழிவடைந்ததால், நானே மிகப் புண்ணிய ஆத்மாவாவேன். நான் இவனுக்கு என்ன கொடுப்பது? இவனிடம் என்ன சொல்வது? ஓ! விஷ்ணுவே, நான் எவ்வாறு உனக்குத் தொண்டாற்ற வேண்டும்? உன்னை நிறைவடையச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக” என்றான் {கண்டாகர்ணன்}”.(41)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வாறு பேசிய அந்தப் பிசாசானவன் உரக்க கதறி அழுதான். பிறகு அவன் சிரித்தபடியே கட்டுப்பாடில்லாமல் மகிழ்ச்சிக் கூத்தாடினான்.(42) கிருஷ்ணனின் முன்னிலையில் அவன், “ஓ! யாதவேஷ்வரா, ஓ! கிருஷ்ணா, ஓ! கேசவா, ஓ! ஹரியே, என் வழிபாடுகளையும் வணக்கத்தையும் ஏற்பாயாக” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஆடத் தொடங்கினான்”.(43)
முக்தியடைந்த பிசாசு | பவிஷ்ய பர்வம் பகுதி – 58-(கண்டாகர்ணஸ்ய முக்தி)-பிராமண மாமிசத்தை கிருஷ்ணனுக்குப் படைத்த கண்டாகர்ணன்; கிருஷ்ணன் மறுத்தது; கண்டாகர்ணன் முக்தியடைந்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அனைத்தையும் கைவிட்டு பொருத்தமில்லாமல் சிறிது நேரம் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்த அந்தப் பிசாசானவன், அங்கிருந்து சென்று ஒரு பிராமணனின் சடலத்தை அவ்விடத்திற்குக் கொண்டு வந்தான்.(1) அவன் அந்தச் சடலத்தை இரண்டாக வகுந்து, அதில் ஒன்றை சுத்தம் செய்தான். பிறகு அந்த மாமிசத்தை ஓர் அழகிய தட்டில் வைத்து, ஜனார்த்தனன் முன்பு வைத்து, தன் வணக்கத்தைச் செலுத்திப் பணிவுடன் கைக்கூப்பிப் பின்வருவனவற்றைப் பேசினான்:(2,3) “ஓ! ஜகந்நாதா இந்த உணவு உனக்கே என்பதால் இதை ஏற்பாயாக. ஓ! ஜகந்நாதா, ஹரியே, பக்தனால் உனக்கு அளிக்கப்படும் எதையும் நீ ஏற்க வேண்டும்.(4) ஓ! விஷ்ணுவே, நான் உன்னைச் சரணடைந்தேன். நீ வேறு வகையில் நினைக்காதே. பணியாளால் பக்தியுடன் கொடுக்கப்படும் உணவைத் தலைவன் ஏற்க வேண்டும்.(5) பண்பட்ட பிராமணன் ஒருவனின் இந்த உடல் மிகச் சமீபத்தில் கொல்லப்பட்டது என்பதால் உண்பதற்குத் தகுந்தது. சாத்திரங்களின்படி எங்களைப் போன்ற பிசாசுகளுக்கு இது தகுந்த உணவாகும்.(6) எனவே, ஓ! பகவானே, இதில் நீ குறை காணவில்லையெனில் இந்தக் காணிக்கையை ஏற்பாயாக” {என்றான் கண்டாகர்ணன்}.
பிசாசானவன் இதைச் சொல்லிவிட்டு அந்தத் தலைவனுக்கு மனித மாமிசத்தை அளிக்க முயற்சித்தபடியே மீண்டும் உரக்கச் சிரித்தான். கிருஷ்ணன் அந்தப் பிசாசிடம் நிறைவடைந்தவனாகத் தன் மனத்திற்குள் அவனைப் புகழும் வகையில், “ஐயோ, இந்தப் பிசாசானவன் என்னிடம் பேரன்பும், பெரும் பக்தியும் கொண்டிருக்கிறான்” என்று நினைத்தவாறே பின்வருவனவற்றைப் பேசினான்:(7-9) “பச்சை மாமிசம் உண்ணும் பிசாசே, எந்தச் சூழ்நிலையிலும் இத்தகைய இறைச்சியைப் படைப்பது தகாது. இந்தப் பிராமண மாமிசம் உன்னளவில் மிகச் சிறந்ததே என்றாலும் என்னைப் போன்றவர்களால் தீண்டத்தகாதது.(10) அறக் கோட்பாடுகளைப் பின்பற்றுவோருக்கு ஒரு பிராமணன் எப்போதும் வழிபடத் தகுந்தவனாவான். அனைத்து வகைப் பாவச் செயல்களையும் செய்யும் பிசாசுகள் மட்டுமே ஒரு பிராமணனைக் கொல்வார்கள்.(11) எவனும் ஒருபோதும் விப்ரர்களைக் கொல்லக்கூடாது. ஏனெனில் இந்தச் செயல் அவனை நரகத்திற்கே வழிநடத்தும். எனவே, அனைத்து வகைகளிலும் இந்தச் சடலம் என்னால் தீண்டத்தகாதது. இதற்கு முரணான வேறு எதையும் நினைக்க வேண்டியதில்லை.(12) ஓ! மாமிசம் உண்ணும் பிசாசே, களங்கமுள்ள மனத்தைத் தூய்மைப்படுத்தும் உன் பக்தியில் நான் நிறைவடைந்தேன். நீ மங்கலமாக இருப்பாயாக. நீ உன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முயல்கிறாய் என்ற காரணத்தினாலேயே நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்.(13) எப்போதும் நீ என் பெயர்களைச் சொல்லி உன் இதயம் தூய்மை அடைந்திருக்கும் காரணத்தாலேயே நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்” {என்றான் கிருஷ்ணன்}.(14)
இதைச் சொல்லிவிட்டு அந்த விஷ்ணு தன் கைகளை அந்தப் பிசாசின் மீது வைத்து பாவச் செயல்கள் அனைத்தில் இருந்தும் அவனை விடுவித்தான்.(15) கிருஷ்ணன் அவனைத் தொட்ட உடனேயே அவன் காமனைப் போன்ற அழகை அடைந்தான். அவன், சுருள் முடியும், நீண்ட கைகளும், அழகிய கண்களும் கொண்டவனானான்.(16) அவனுடைய விரல்களும், அதிலுள்ள நகங்களும் மிக அழகியவையாக இருந்தன. அவன் தாமரை போன்ற கண்களையும், தாமரையைப் போன்ற மேனி நிறத்தையும் கொண்டிருந்தான், மேலும் தாமரை இதழ்களுக்கு ஒப்பான ஆபரணங்களை அணிந்திருந்தான்.(17) அவன் கேயூரமும் கைவளைகளும் அணிந்திருந்தான். மேலும் மஞ்சள் பட்டாடைகளை உடுத்தியிருந்தான். அவன் இரண்டாம் இந்திரனைப் போலப் பிரகாசமிக்கவனாகவும், புத்திசாலியாகவும் தெரிந்தான்.(18) அவன் ஒரு கந்தர்வனைப் போலத் திறன்மிக்கப் பாடகனானான். மேலும் ஒரு யோகியைப் போல அவன் மாயாசக்திகள் அனைத்தையும் பெற்றிருந்தான். விஷ்ணுவின் தாமரைக் கைகளால் தீண்டப்பட்ட அந்தப் பிசாசாவன் மிக அழகிய தன்மைகளை அடைந்தான். மேனி ஒளியில் அவன் மஹாமுனிவர்களையும் விஞ்சியிருந்தான்.(19,20)
ஓ! மனிதர்களின் ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பிசாசானவன் செய்த கடுந்தவத்தின் விளைவாகவே அவனுக்கு இந்தத் தெய்வீக வடிவம் என்ற வெகுமதி கிடைத்தது.(21) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஜகந்நாதனைச் சரணமடைந்தவன் எவ்வாறு துன்பங்களை அனுபவிப்பான்? அத்தகைய மனிதன் மங்கல அனுபவங்களை மட்டுமே பெறுவான். விஷ்ணுவைத் தொடர்ந்து தியானித்து, அவனது மகிமைகளைத் துதிக்கும் ஒருவனால் அடையப்பட முடியாதது தான் ஏது?
பிறகு அந்தப் பகவான், இரண்டாம் இந்திரனைப் போலத் தன் எதிரே நின்று கொண்டிருக்கும் கண்டாகர்ணனிடம் பேசினான்: “தேவ மன்னனின் {இந்திரனின்} ஆட்சியுள்ளவரை அவனுடைய உலகத்தில் உன் வாசம் உறுதியானதாகும். இனி மகிழ்ச்சியாகச் சென்று அங்கே வசிப்பாயாக.(22-24) இந்திரனின் ஆட்சிக்காலம் முடியும்போது நீ சாயுஜ்ய முக்தியை[1] அடைவாய். இந்திரன் ஆளும்வரை உன் தம்பியும் தேவலோகங்களில் இன்புற்று வாழ்வான்.(25) நீ மங்கலமாக இருப்பாயாக. உன் இதயம் விரும்பும் வரத்தை நீ என்னிடம் கேட்பாயாக. எதையும் கொடுப்பேன், அனைத்தையும் கொடுப்பேன். இதில் ஐயமில்லை” {என்றான் கிருஷ்ணன்}.(26)கண்டாகர்ணன், “ஜனார்த்தனா, கட்டுப்பாடுள்ள மனம் கொண்ட ஒருவன் நமது சந்திப்பையும், உரையாடலையும் நினைவு கூர்ந்தால் உன்னிடம் தளராத பக்தியை அடையட்டும்.(27) ஓ! ஹரியே, அவன் மனத்தூய்மையை அடைந்து களங்கங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு, அவனது இதயத்தில் உள்ள மாசுகள் அனைத்தும் விலகட்டும். இதுவே நான் விரும்பும் வரமாகும்” {என்றான் கண்டாகர்ணன்}.(28)
இதைக் கேட்ட தேவேசன், “அவ்வாறே ஆகட்டும். இப்போதே தேவலோகம் சென்று இந்திரனால் மதிக்கப்படும் விருந்தினன் ஆவாயாக. அவன் உனக்காகக் காத்திருக்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(29)
கிருஷ்ணன் இதைச் சொல்லிவிட்டு, இறந்து கிடந்த அந்தப் பிராமணனுக்கு உயிரளித்தான். உயிர்மீண்டதைக் கண்ட அந்தப் பிராமணன் அந்தத் தலைவனை நல்ல முறையில் துதித்துவிட்டு அவனிடம் விடைபெற்றுச் சென்றான். பிறகு அந்தத் தலைவன், முனிவர்கள் வேள்விகளைச் செய்து கொண்டிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.(30,31)
முற்பிறவியில் சுவர்க்கவாசியாக இருந்த கண்டாகர்ணன், கிருஷ்ணனின் ஆணையின் பேரில் தேவலோகம் சென்றான். ஓ! மன்னா, உன் மனத்தையும் புலன்களையும் தூய்மைப்படுத்த விரும்பினால் இந்த உரைகளைத் தொடர்ந்து கேட்பாயாக. இந்தப் பிசாசின் கதையைச் சொல்வதால் உன் மனம் நிச்சயம் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையும்” என்றார் {வைசம்பாயனர்}.(32)
கிருஷ்ணனின் தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 59-(கிருஷ்ணதபோவர்ணநம்)-சிவனை நிறைவடையச் செய்யப் பன்னிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்த கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அதன்பிறகு பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, மஹாத்மாவான அந்தப் பிசாசின் {கண்டாகர்ணனின்} கதையை முனிவர்களிடம் விரிவாகச் சொன்னான்.(1) இந்நிகழ்வைக் கேட்ட முனிவர்கள் அனைவரும் பேராச்சரியம் அடைந்தனர். அவர்கள், “ஓ! தலைவா, காரணமற்ற உன் கருணையாலேயே அந்தப் பிசாசானவன் முக்தியை அடைந்தான்” என்றனர்.(2)
அன்பு கொண்ட பக்தர்களிடம் பெரும் பற்றுக் கொண்ட அந்த விஷ்ணுவை முனிவர்கள் அனைவரும் மதிப்புடன் வழிபட்டனர். அவனும் அந்த முனிவர்களிடம் நிறைவடைந்தான். அடுத்த நாள் அதிகாலையில் சூரியன் அடிவானில் உதித்த போது, அவன் முனிவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கருடன் மீதேறி கைலாச மலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(3,4)
அண்ட காரியங்கள் அனைத்தையும் நிர்வகிப்பவர்களும், கடும் நோன்புகளை நோற்பவர்களுமான சித்தர்கள் எங்கிருப்பார்களோ, வைஷ்ரவணன் {குபேரன்}, சங்கரனை எங்கே வழிபட்டுக் கொண்டிருப்பானோ,{5} அன்னங்கள் மகிழ்ச்சியுடன் வசிப்பதும், மானஸம் என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான பெருந்தடாகம் எங்கிருக்கிறதோ, சிவனின் தொண்டனான பிருங்கீரிடி மனிதர்களின் தலைவனாவதற்காகத் தன் தலைவனை எங்கே வழிபட்டானோ,{6} சிங்கங்கள், பன்றிகள், யானைகள், புலிகள், மான்கள் ஆகியனவும் பகையின்றி ஒற்றுமையுடன் எங்கே வாழுமோ, கங்கையினால் தலைமை தாங்கப்படும் ஆறுகள் எங்கே பாயுமோ,{7,8} அண்டத்தின் தலைவனான சம்பு {சிவன்} பிரம்மனின் தலையை எங்கே கொய்தானோ, உயிரினங்களைத் தண்டிக்கும் தண்டங்கள் எங்கே உண்டாகுமோ,{9} நீலலோஹிதனான {செந்நீல வண்ணனான} சங்கரன் உமையுடன் எங்கே வசிக்கிறானோ, பழங்காலத்தில் முனிவர்களின் வேண்டுகோளின் பேரில் மலைகளின் அரசனான ஹிமவான் தன் மகளை மஹாதேவனுக்கு எங்கே மணமுடித்துக் கொடுத்தானோ,{10} ஹரியானவன் தாமரை மலர்களால் சிவனை வழிபட்டு சுதர்சனச் சக்கரத்தை எங்கே அடைந்தானோ,{11} மதுவை {தேனைப்} பருகிக் கொண்டே சித்தர்களும், கின்னரர்களும் தங்கள் மனைவியருடன் இன்புற்றிருக்கும் மலைக்குகைகள் எங்கிருக்கிறதோ,{11,12} வலிமைமிக்கப் பௌலஸ்தியன் {ராவணன்} தன் வலிமைமிக்கக் கைகளால் எதை உயர்த்தினானோ, அவன் உலக வெற்றிப்பேற்றில் எங்கே நிறைவடைந்தானோ அந்தக் கைலாச மலைக்குக் கிருஷ்ணன் சென்றான். யது குலத்தின் பெருமைமிகு தேவகிநந்தனன் அங்கே மானஸ ஸரோவரின் வடகரையை அடைந்தான்.{13,14}(5-14)
மங்கலமிக்கவனான தலைவன் ஹரி, தவம் செய்யும் நோக்கத்தில் அங்கே வந்திருந்தான். அந்த ஜகந்நாதன் {கிருஷ்ணன்}, அந்தப் புனிதத் தலத்தில் உறுதியான தீர்மானத்துடன் தவம் செய்ய அமரும் முன், சடாமுடி தரித்து, எளிய உடைகளை உடுத்திக் கொண்டான்.{15} தலைவன் ஹரி, பன்னிரெண்டு ஆண்டுகள் கடுந்தவம் செய்யத் தீர்மானித்து வேத வடிவேயான கருடனின் முதுகில் இருந்து இறங்கினான்.{16} ஜகத்பதியான ஹரி, இலைதழைகளை மட்டுமே உண்பவனாகப் பங்குனி மாதத்தில் தவம் செய்யத் தொடங்கி,{17} அதைத் தொடர்ந்து மந்திரங்களை ஓதி, வேதங்களையும் படித்தான்.
ஓ! மன்னா, அண்டத்தின் தலைவன் மனித வடிவை ஏற்ற பிறகும் அவன் தவம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.{18} உண்மையில் பரமாத்மாவின் நோக்கங்களைச் சின்னஞ்சிறு உயிரினங்களால் புரிந்துகொள்ள முடியாது.
கைலாச மலையில் கிருஷ்ணன் தொடர்ந்து தவம் செய்து வந்தபோது, கசியபரின் மகனான கருடன் அவனுக்குத் தேவையான விறகுகளைக் காடுகளில் இருந்து திரட்டி வந்தான்.{19,20}(15-20) {சுதர்சனச்} சக்கரமானவன், ஹரிக்காக மலர்களைத் திரட்டி வந்தான். {பாஞ்சஜன்ய} சங்கானவன் அனைத்துத் திசைகளில் இருந்தும் அவனுக்குப் பாதுகாப்பளித்தான். கட்கமானவன் {நந்தக வாளானவன்} அந்தத் தலைவனுக்குக் குசப்புற்களைக் கொண்டு வந்தான். கௌமோதகி {கதாயுதமானவன்} பல்வேறு வகைகளில் அவனுக்குத் தொண்டாற்றினான்.(21,22) தானவர்களின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்துபவனும், கொண்டாடப்படுபவனும், விற்களில் சிறந்தவனுமான சாரங்க வில்லானவன், பணியாளனாக எப்போதும் தலைவனின் முன்பு நின்றிருந்தான்.(23)
பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, தன் வேள்விகளைச் செய்வதற்காக ஏராளமான விறகுகளை எரித்தான். அவன் ஏராளமான நெய்யையும் பிற உட்பொருள்களையும் {வேள்வித்தீயில்} ஊற்றினான்.{24} உண்மையில் அவன் சிறிய, பெரிய யஜ்ஞங்கள் பலவற்றைச் செய்து முடித்தான். தொடக்கத்தில் தவம் செய்து வந்தபோது கவனமாகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மாதம் ஒரு முறை மட்டுமே உண்டான்.{25} அதன் பிறகு அந்தக் கேசவன், இரு மாதங்களுக்கு ஒருமுறை உண்டான். இறுதியாக அவன் வருடத்திற்கு ஒரு முறை உண்ணும் நிலையை அடைந்தான்{26}.(24-26)
ஜகத்பதியான அந்த ஜனார்த்தனன், இவ்வாறே பதினோரு வருடங்களும், பதினோரு மாதங்களும் தவம் செய்து வந்தான். {பன்னிரெண்டு வருடங்களுக்கு} இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவன், வேள்வி நெருப்பை மூட்டிவிட்டு சிவனைத் தியானித்தபடியே ஆரண்யக மந்திரங்களையும், {ஓம் என்ற} உத்தம பிரணவத்தையும் சொல்லத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(27,28)
சிவனின் வருகை | பவிஷ்ய பர்வம் பகுதி – 60-(ஸ்ரீகிருஷ்ணஸமீபே இந்த்ராதிதேவ ஆநாமாகமநம்)-சிவனை நிறைவடையச் செய்ய பன்னிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்த கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இந்திரன், தன் வாகனமான உத்தம கஜத்தில் {ஐராவதத்தில்} ஏறி சர்வேஷ்வரனான விஷ்ணு தவத்தில் இருப்பதைக் காண அங்கே வந்தான்.(1) அடுத்ததாக யம பகவானும், எருமை வாகனத்தைச் செலுத்திக் கொண்டு, தன் தொண்டர்களுடன் அங்கே வந்தான்.(2) ஹம்சவாகனத்தில் அமர்ந்தவனும், தலைக்கு மேல் வெண்குடை ஏந்தியவனும், தொண்டர்களால் வெண்சாமரம் வீசப்படுபவனுமான வருணனும் அங்கே வந்தான்.(3) கைலாச சிகரத்தில் கேசவன் எவ்வாறு தவம் செய்கிறான் என்பதைக் காண அவனும், ஆதித்யனும் அங்கே வந்தனர்.{4} ஓ! மன்னா {ஜனமேஜயா}, ருத்திரர்கள், வசுகள், சித்தர்கள், பெரும் முனிவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள்,{5} ஆடல் பாடல்களில் திறன் பெற்ற அப்சரஸ்சகள் பலரும், தேவகணங்களும் கேசவனைக் காண கைலாச மலைக்கு வந்தனர்.{6}
பர்வதர், நாரதர் ஆகியோரின் தலைமையிலான பெரும் முனிவர்களும், சர்வ தேவகணங்களும் ஆச்சரியமடைந்தவர்களாக,{7} “இது பேராச்சரியம் வாய்ந்தது. இத்தகைய நிகழ்வேதும் கடந்த காலத்தில் நடந்ததுமில்லை, வருங்காலத்தில் நடக்கப் போவதுமில்லை. அண்டத்தின் ஆன்ம ஆசானும், யோகிகளின் தவப்பொருளுமான கிருஷ்ணன் தவத்தில் ஈடுபட்டு வருகிறான்” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்தத் தலைவன் தவம் செய்யும் நோக்கத்தைக் குறித்துத் தேவர்களும், முனிவர்களும் இவ்வாறே தங்களுக்குள் பேசிக்கொண்டனர்{8}.(4-8)
உலகத்திற்கு நன்மையைச் செய்யும் பிரபுவான அந்த ஹரியின் தவக் காலம் நிறைவடைந்ததும், சகலேஷ்வரனான சிவன், தன் மனைவியுடனும் {பார்வதியுடனும்}, தன் தொண்டர்களுடனும் அந்த ஜகத்பதியின் செயல்களைக் காண அங்கே வந்தான்.(9) நண்பனான குபேரனும், குஹ்யர்களும் அவனுடன் {சிவனுடன்} வந்தனர். ஜடாதாரியான அவன் {சிவன்}, எண்ணற்ற பூதங்களாலும், பிசாசுகளாலும் சூழப்பட்டிருந்தான். அவன் ஒரு வில்லையும், கணைகளையும், திரிசூலத்தையும் ஏந்தியிருந்தான். மேலும் அவன் தன் சிரத்தின் அழகை அதிகரிக்கும் பிறை நிலவையும் தரித்திருந்தான்.(10) அவன் ஒரு கரத்தில் கமண்டலத்தையும், குச புற்களையும், மறு கரத்தில் எரி கொள்ளியையும், மூன்றாம் கரத்தில் திந்திமத்தையும் {உடுக்கையையும்}, நான்காம் கரத்தில் திரிசூலத்தையும் ஏந்தியிருந்தான். ருத்ராக்ஷ மாலை அவன் கழுத்தைச் சூழ்ந்திருந்தது. செந்நீல நிறத்தவனும், ஜடாதாரியும், சந்திரசேகரனுமான அந்தச் சிவன், வெண் காளை வாகனனாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தான்(11,12)
உமையின் ஸ்தனங்களில் பார்வையைக் கொண்டிருந்த அவனை அவள் அணைத்து முத்தமிட்டாள். அவனது நெற்றி பிறைமதியால் அலங்கரிக்கப்பட்டு, கங்கையின் நீரால் கழுவப்பட்டது. அந்தத் தலைவனின் பார்வை எப்போதும் தன் மனைவின் மேலே விழுந்திருந்தது.(13) அவனது முகம் சாம்பலால் {பஸ்மத்தால்} பூசப்பட்டிருந்தது. அவனது சடாமுடியானது பெரும்பாம்புகளால் கட்டப்பட்டிருந்தது. அவன் மனிதத்தலை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தான். இவ்வாறே சிவன், ஹரியான கேசவனைக் காண வந்திருந்தான்.(14)
அண்ட வெளிப்பாடுகளும், அவற்றின் உள்ளடக்கமான பூதங்களும் வெளிப்புற ஆற்றலை ஆள்வதால் அவை சிவனின் வடிவங்கள் என்று சொல்லப்படுகின்றன. சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த அறிஞர்களால் அவன் மிகப்பெரியவன் என்றும், இருபத்துநான்கு தத்துவங்களை வெளிப்படுத்தும் ஆற்றலான பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறான். கணாதன் என்றும், மஹாதேவன் என்றும் அழைக்கப்படும் சிவபெருமான் தேவர்களை விரட்டி தக்ஷனை அழித்தவனாவான். தன்னை உணர்ந்த ஆத்மாக்களின் குறிக்கோளாகவும், அனைத்து உயிரினங்களுக்கு நன்மை செய்பவனாகவும் அவனே இருக்கிறான். கடுங்கண்களைக் கொண்ட அந்த மஹாதேவன் நித்தியமானவன்; பழைமையானவன், எல்லையற்றவன், தன்னிறைவடைந்தவன், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன், பேரமைதியில் இருப்பவன். சில சமயங்களில் ஆயிரங்கண்ணனாகவும், சில சமயங்களில் நான்கு கரத்தோனாகவும் அவன் வெளிப்படுகிறான். அவனே மிருத்யுவின் உருவமாகவும், ருத்திரன், ரோதனன் என்றழைக்கப்படும் அண்டத்தின் தலைவனாகவும் திகழ்கிறான்.(15-20)
பூமி, நீர், நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன் ஆகியவற்றை இயக்குபவர்களான எண்மரும் {அஷ்டதிக்பாலர்களும்} மஹாதேவனின் வெளிப்பாடுகளாகவே கருதப்படுகின்றனர்.(21) மஹாயோகத்தின் மஹாதேவனும், செந்நீல வண்ணனும், மஹாதேவன் என்றும், கிரீசன் என்றும் அழைக்கப்படுபவனும், இயற்கையை ஆள்பவனும், உமையின் வடிவமாகத் திகழ்பவனும், கையில் சூலந்தரித்தவனுமான அந்தச் சிவன், ஜகத்பதியான கிருஷ்ணனைத் தரிசிக்கத் தன் பூதகணங்களுடன் சேர்ந்து அங்கே வந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(22)
————————————-—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply