ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 1-

ஜனமேஜயன் குடும்பம்! | பவிஷ்ய பர்வம் பகுதி – 01-ஜனமேஜயனின் வம்சம் கூறப்படல்…

ஜனமேஜயன் -மனைவி -வபுஷ்டமா -மகள் காசிமன்னனை மணந்தார்
ஜனமேஜயன் -மனைவி -வபுஷ்டமா-இரண்டு மகன்கள் -சந்த்ரபீடனும் சூர்ய பீடனும்
சந்த்ரபீடனுக்கு 100 மகன்கள் -அவர்களில் ஒருவன் சத்யகர்ணன் -அவனுக்கு ஸ்வேதகர்ணன் -அவன் மாலினியை மணந்து அஜபார்ஷன் பிறந்தான்

ஜனமேஜயன், சந்திரபீடன், சத்யகர்ணன், ஸ்வேதகர்ணன், அஜபார்ஷன் என ஐந்து தலைமுறைகளுக்குப் பிறகு சொல்லப்படுவது பவிஷ்ய பர்வம் 

இப்போதோ இன்னும் மூன்று தலைமுறைகளை அதிகமாகச் சொல்கிறார். எனவே மஹாபாரதம் சொல்லப்பட்டதற்கும், இந்த பவிஷ்ய பர்வம் சொல்லப்பட்டதற்கும் இடையில் நிச்சயம் மூன்று தலைமுறை இடைவெளி இருக்க வேண்டும்

சௌனகர் {சௌதியிடம்}, “ஓ! லோமஹர்ஷணர் மகனேஜனமேஜயனின் மகன்கள் யாவர்? பாண்டவர்களின் வம்சம் யாரால் நிறுவப்பட்டது?(1) இந்த வரலாற்றைக் கேட்கும் ஆவலால் நான் பீடிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, நீ சொன்னவற்றில் உள்ள ஒவ்வொரு தகவலையும் நான் கற்க விரும்புகிறேன்” என்று கேட்டார்.(2)

சௌதி, “பரிக்ஷித்தின் மகனான ஜனமேஜயன், தன் மனைவியான காசியையிடம் {காசியின் இளவரசியான வபுஷ்டமாவிடம்}, மோக்ஷ ஞானம் அறிந்த மன்னர்களான சந்திரபீடன், சூரியபீடன் என்ற இரு மகன்களைப் பெற்றான்[1].(3) நுண்ணறிவுமிக்க வில்லாளிகளாகத் திகழ்ந்த சந்திரபீடனின் நூறு மகன்களும், க்ஷத்திரியர்களுக்குத் தகுந்த பணிகளைச் செய்ததன் மூலம் ஜனமேஜயர்கள் என்ற பட்டப்பெயர்களுடன் பூமியில் புகழை அடைந்தனர்.(4)அவர்களில் மூத்தவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனும், ஏராளமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தவனுமான சத்யகர்ணன்[2], வாரண நகரத்தின் {ஹஸ்தினாபுரத்தின்} அரியணையில் நிறுவப்பட்டான்.(5) சத்யகர்ணனின் மகனும், அறம்சார்ந்தவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ஸ்வேதகர்ணன், பிள்ளையற்றவனாக இருந்ததால், தன் மனைவியுடன் காடு புகுந்தான்.(6) அழகிய புருவங்களைக் கொண்டவளும், {ஸுசாருவின் மகளும்}, எழில்மிகு யதுகுல இளவரசியுமான மாலினி, கானுலாவியான ஸ்வேதகர்ணனின் மூலம் கருவுற்றாள்.(7) அவள் கருவுற்றதும், குடிமுதல்வனான ஸ்வேதகர்ணன், நன்மையைத் தேடி தன் முப்பாட்டன்களைப் போலக் கான்புகுந்தான்.(8)கருவுற்றிருந்த மாலினி, தன் கணவன் காட்டுக்குள் ஓய்ந்து செல்வதைக் கண்டு, அவனைப் பின்தொடர்ந்து சென்று, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட ஒரு மகனை வழியில் ஈன்றெடுத்தாள்.(9) பழங்காலத்தில் தன் கணவர்களைப் பின்தொடர்ந்து சென்ற திரௌபதியைப் போலவே[3], (சூதாட்டத்தில் தோற்று நாட்டை இழந்து பாண்டவர்கள் கான்புகுந்தபோது, திரௌபதி தன் மகன்களைத் தன் அண்ணன் திருஷ்டத்யும்னனுடன் அனுப்பிவிட்டு, கணவர்களுடன் கான்புகுந்தாள்.)கற்புடையவளும், உன்னதமானவளுமான மாலினியும், புதிதாகப் பிறந்த குழந்தையை விட்டுவிட்டு தன் துணைவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.(10) அன்னையிடம் இருந்து பிரிந்த பச்சிளங்குழந்தை, மலைக்குகையில் அழுது கொண்டிருந்தபோது, அந்தப் பேரிளவரசனிடம் இரக்கங்கொண்ட சில நாரைகள் அங்கே வந்தன[4].(11)சிரவிஷ்டரின் மகன்களான ரிஷிகள் பிப்பலாதரும், கௌசிகரும், அழுது கொண்டிருக்கும் இளவரசனைக் கண்டு, இரக்கம் கொண்டு அவனை எடுத்தனர். பாறையில் தேய்ந்து, குருதியில் நனைந்திருந்த அவனது விலாப்புறங்களை அவர்கள் நீரால் கழுவினர்.(12) அந்த இளவரசனின் விலாப்புறங்கள், ஆட்டுக்கு இருப்பதைப் போன்ற அடர்நீல வண்ணத்தில் வலுவான கட்டமைப்புடன் பருத்திருந்தன. எனவே அவன் அஜபார்ஷன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.(13) இருபிறப்பாளர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும் {பிப்பலாதரும், கௌசிகரும்}, அவனுக்கு அஜபார்ஷன் என்ற பெயரைச் சூட்டி, வேமகர் என்ற பெயரைக் கொண்ட ஒரு ரிஷியின் வீட்டில் அவனை வளர்த்து வந்தனர்.(14) வேமகரின் மனைவியானவள், அஜபார்ஷனைத் தன் மகனாக வளர்த்ததால், அவன் வேமகரின் மகனானான், அவ்விரு பிராமணர்களும் {பிப்பலாதரும், கௌசிகரும்} அவனது குடும்ப உறுப்பினர்களானார்கள். அஜபார்ஷனும், பிப்பலாதர், கௌசிகர் ஆகியோரின் மகன்களும், பேரர்களும் ஒன்றாகவே வாழ்ந்தனர். பூரு குலத்தில் பிறந்த இந்த அஜபார்ஷனே பாண்டவ வம்சத்தைத் தழைக்கச் செய்தான்[5].(16)

நுண்ணறிவுமிக்கவனும், நகுஷனின் மகனுமான யயாதி, நீண்ட காலத்திற்கு முன்பு முதுமைப் பரிமாற்றம் செய்து கொண்டபோது, இந்த ஸ்லோகத்தை மகிழ்ச்சியுடன் பாடினான்.(17) {யயாதி}, “பூமியில், சூரிய, சந்திரர்களும், கோள்களும் இல்லாமல் போகலாம், ஒருபோதும் அது {பூமி} பூருக்கள் {பூரு குலத்தவர் / பௌரவர்கள்} அற்றதாகாது” {என்று பாடினான் யயாதி” என்றார் சௌதி}.(18)

ஜனமேஜயன் வேள்வியில் வியாசர்! | பவிஷ்ய பர்வம்-(வியாஸம் ப்ரதி ராஜஸூயவிஷயே ஜநமேஜயப்ரஷ்நம்)-நாக வேள்வி நிறைவடைந்ததும், ராஜசூய வேள்வி செய்ய விரும்பி அதற்கான பொருட்களைத் திரட்டிய ஜனமேஜயன்; வியாசர் அங்கே வந்தது; ஜனமேஜயனின் ஐயங்களைத் தீர்த்தது…

சௌனகர் {சௌதியிடம்}, “வியாசரின் சீடரால் {வைசம்பாயனரால்} மீளுரைக்கப்பட்டதைப் போலவே அனைத்துப் பர்வங்களுடன் ஹரிவம்சத்தை மொத்தமாக எனக்கு உரைத்திருக்கிறாய்.(1) அமுதத்தைப் போன்றதும், பாவங்கள் அனைத்தையும் அழிக்கவல்லதுமான முடிவற்ற ஹரிவம்ச வரலாறு நம்மை நிறைவடையச் செய்யட்டும்.(2) ஓ! பொறுமையுடன் கூடியவனே, இந்த வரலாறு காதுகளுக்கு இனிமையாக இருப்பதால் எங்கள் இதயங்களுக்கு {மனங்களுக்குப்} பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ஓ! சௌதி, சர்ப்ப யக்ஞம் {நாக வேள்வி} நிறைவடைந்ததும் அற்புதமிக்க இந்த வரலாற்றை {ஹரிவம்சத்தைக்} கேட்ட பிறகு, மன்னன் ஜனமேஜயன் என்ன செய்தான்?” என்று கேட்டார்.(3)

சௌதி, “சர்ப்பயக்ஞத்தின் முடிவில் அற்புதமிக்க இந்த வரலாற்றைக் கேட்ட பிறகு மன்னன் ஜனமேஜயன் செய்தவை அனைத்தையும் நான் உமக்கு விளக்கிச் சொல்கிறேன்.(4) இந்த வேள்வி நிறைவடைந்ததும், பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயன் {பாரீக்ஷிதன்} குதிரை வேள்விக்கான {அஷ்வமேத யக்ஞத்துக்கான} பொருட்களைத் திரட்டினான்.(5) பிறகு, ரித்விக்குகள், புரோஹிதர்கள், ஆசான்கள் ஆகியோரை அழைத்த அவன், “நான் குதிரை வேள்வியைச் செய்ய விரும்புகிறேன். இந்தக் குதிரைகளை நீங்கள் அர்ப்பணிப்பீராக” என்றான்.(6)

அற ஆன்மாவும், அனைத்தையும் அறிந்தவர்களில் முதன்மையானவருமான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தளர்வில்லா ஆற்றலைக் கொண்டவனும், பரீக்ஷத்தின் மகனுமான ஜனமேஜயனின் நோக்கத்தை அறிந்து கொண்டு, அவன் செயலைக் (வேள்வியைக்) காண்பதற்காகத் திடீரென அங்கே வந்தார்.(7) மஹாரிஷியான வேதவியாசர் அங்கே வந்ததைக் கண்ட மன்னன் ஜனமேஜயன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படி அர்க்கியத்தையும், இருக்கையையும், கால்களைக் கழுவிக் கொள்வதற்கான நீரையும் அவருக்குக் கொடுத்தான்.(8) ஓ! சௌனகரே, அவர்கள் இருவரும் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, சபை உறுப்பினர்கள் அனைவரும் வேதக் கருப்பொருகள் பலவற்றைக் குறித்து உரையாடத் தொடங்கினர்.(9)

பாண்டவர்களின் பாட்டனாரும், தன்னுடைய பெரும்பாட்டனாருமான பெரும் முனி வேத வியாசரிடம் மேற்கொண்ட உரையாடல்களின் நிறைவில், மன்னன் ஜனமேஜயன், (10) “ஸ்ருதிகளில் காணப்படும் பல பொருள்கள் நிறைந்திருக்கும் மஹாபாரதக் கதை காதுகளுக்கு இனிமையாக இருந்தது. {தொடர்ந்து பல நாட்கள் கேட்கப்பட்டாலும்} அஃது ஒரு கணத்தில் நிறைவடைந்ததைப் போல இருந்தது.(11) {விஷ்ணுவின்} மகிமைகளைப் பரப்புவதும், பாற்கடலே சங்குக்குள் நிறைந்ததைப் போன்ற புகழைக் கொடுப்பதுமான அவ்வரலாறு உம்மால் அழகாகப் பதியப்பட்டுள்ளது.(12) அமுதத்திலும், சொர்க்கத்தின் அருளிலும் நிறைவடையாத மனிதனைப் போலவே நானும் மஹாபாரதக் கதைகளைக் கேட்டும் நிறைவடைந்தேனில்லை. {நான் இன்னும் கேட்க விரும்புகிறேன்}.(13) ஓ! பிராமணரே, நீர் அனைத்தையும் அறிந்தவர். எனவே, குருக்களின் அழிவுக்கு ராஜசூயந்தான் காரணமா? அவ்வாறு இல்லையா? என்பதை உம்மிடம் வேண்டிக் கேட்கிறேன்.(14)

பெரும்புரட்சி {குருக்ஷேத்ரப் பெரும்போர்} நடந்த காலத்தில் வெல்லப்பட முடியாதவர்களான மன்னர்கள் பலர் மரணமடைந்ததால், ராஜசூய யக்ஞம் போருக்காகவே விதிக்கப்பட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.(15) சோமனால் {சந்திரனால்} இந்த ராஜசூயம் மேற்கொள்ளப்பட்ட போது, அதைத் தொடர்ந்து {பிருஹஸ்பதியின் மனைவியான} தாரையை மையமாகக் கொண்ட {தாரகாமாயப்} பெரும்போர் நடைபெற்றது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(16) அதன் பிறகு வருணன் இந்தப் பெரும் வேள்வியை மேற்கொண்ட போது, தேவாசுரப் போர் அதைப் பின்தொடர்ந்து வந்தது.(17) அரசமுனியான ஹரிஷ்சந்திரன் இந்த வேள்வியை மேற்கொண்ட போது, க்ஷத்திரியர்கள் பலர் கொல்லப்பட்ட அடீபகப் போர்[1] அதைப் பின்தொடர்ந்து வந்தது.(18) அனைத்திலும் இறுதியாக, வழிபடத்தகுந்தவர்களான பாண்டவர்கள், கடினமான இந்த வேள்வியை மேற்கொண்ட போது, பெரும்பாரத {மஹாபாரதப்} போர் அதைப் பின்தொடர்ந்து வந்தது.(19)ஓ! ஐயா, பெரியவரே, உலக அழிவுக்கு வேராக இருந்த அந்த ராஜசூய யக்ஞத்தை நீங்கள் அனைவரும் ஏன் நிறுத்தவில்லை?(20) இந்த வேள்வியை அதற்குரிய அனைத்துக் கிளைகளுடன் {அங்கங்களுடன்} மேற்கொள்வது மிகக் கடினமானது. வேள்வியின் கிளைகளில் ஒன்று புறக்கணிக்கப்பட்டாலும் அது மக்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.(21) நீர் எங்கள் மூதாதையரின் பாட்டனாகவும், முதல் தலைவனாகவும், கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்தவராகவும் இருந்தீர்.(22) நுண்ணறிவுமிக்க அந்த மன்னர்களின் வழிகாட்டியாக நீர் வாழ்ந்து வந்த போது, கவனிக்க ஆளில்லாதவர்களைப் போல அவர்கள் ஏன் அறவழிகளில் இருந்து நழுவி இந்தப் பாவத்தை இழைத்தனர்?” என்று கேட்டான் {ஜனமேஜயன்}”.(23)

வியாசர், “ஓ! மன்னா, உண்மையில் அந்த மன்னர்கள் விதியால் தூண்டப்பட்டவர்களாகவே நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் முரணாகச் செயல்பட்டனர். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து என்னிடம் ஏதும் கேட்கவில்லை. நானும் கேட்கப்படாத எதையும் அவர்களுக்குச் சொல்லவில்லை.(24) அதையுந்தவிர, விதியின் பணியை எதிரக்கவல்லவர் எவரும் இல்லை என்பதால், நானும் எதிர்கால விளைவுக்கு எதிர்வினையாற்ற வல்லனல்லன்.(25) எதிர்காலத்தைக் குறித்து நீ கேட்பனவற்றை நான் விளக்கிச் சொல்கிறேன். ஆனால் விதி வலிமைமிக்கதாகும். என் சொற்களைக் கேட்ட பிறகும் கூட உன்னால் அவற்றைச் செயல்படுத்த இயலாது.(26) விதிக்கப்பட்ட விதியை வெல்வது சாத்தியமில்லை என்பதால் அச்சத்தாலோ, ஆசையாலோ உன்னால் மனிதனின் வழிகளில் நிற்க இயலாது {காலத்தால் வகுக்கப்பட்ட பாதையை எந்த வழிமுறைகளினாலும் மீற முடியாது}.(27)

வேள்விகளில் முதன்மையான அஸ்வமேதத்தை {அஸ்வமேத யக்ஞத்தை / குதிரை வேள்வியை} க்ஷத்திரியர்கள் செய்ய வேண்டுமென ஸ்ருதியில் விதிக்கப்பட்டிருக்கிறது.(28) அந்த வேள்வியுடைய மகிமையின் காரணமாக வாசவன் {இந்திரன்} உன்னுடைய அஸ்வமேதத்தைக் களங்கப்படுத்துவான். ஓ! மன்னா, உன்னுடைய ஆண்மையின் காரணமாகவோ, விதியின் விருப்பத்தாலோ நீ வாசவனை எதிர்க்கவல்லவனாக இருந்தாலும் கூட அத்தகைய ஒரு வேள்வியை நீ செய்யாதே.(29) எனினும், விதியானது வல்லமையின் தொகுப்பாக இருப்பதால் நீயோ, சக்ரனோ, தலைமை தாங்கும் புரோகிதர்களோ அதன் மூலம் பாவம் இழைத்தவராக மாட்டீர்.(30) விதி வகுத்த விதியால் பிரம்மன் இந்திர வேள்வியை நிறுத்துவான். காலப்போக்கிலும், விதியின் விருப்பத்திற்கு இணங்கவும், யுக முடிவில் படைப்பு யாவும் முடிவை எட்டும்[2].(31) பிராமணர்கள் வேள்விகளின் பயன்களை விற்பனை செய்வார்கள். எனவே, அசைவன, அசையாதன உள்ளிட்ட இந்த அண்டம் விதியின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை அறிவாயாக” என்றார் {வியாசர்}.(32)ஜனமேஜயன், “ஓ! மதிப்பிற்குரிய ஐயா, குதிரை வேள்வி நிற்பதற்கு எது காரணமாக அமையும்? அது குறித்து நான் கேட்டதும் அதைத் தவிர்த்து விலகுவேன்” என்றான்.(33)

வியாசர், “ஓ! மன்னா, பிராமணர்களின் சாபமே அதற்குக் காரணமாக அமையும். நீ அதை {சாபத்தை} நிறுத்த முயன்றால் உனக்கு நன்மையே நேரும்.(34) ஓ! பகைவரைக் கொல்பவனே, இனி இந்த உலகம் உள்ளவரை, குதிரை வேள்விக்கான பொருட்களைத் திரட்ட க்ஷத்திரியர்களால் இயலாது. {நீ செய்வதைப் போன்ற குதிரை வேள்வியை உலகம் உள்ளளவும் வேறு யாராலும் செய்ய இயலாது}” என்றார்.(35)

ஜனமேஜயன், “ஒரு பிராமணருடைய கடுஞ்சாபத்தின் சக்தியால் அஸ்வமேதம் நிறுத்தப்படும் என்றாலும் அதன் கருவியாக நான் இருப்பேன். உண்மையில், நான் அச்சத்தாலும், நாணத்தாலும் நிறைகிறேன்.(36) நற்செயல்கள் பலவற்றைச் செய்த என்னைப் போன்ற ஒரு மனிதன், கயிற்றில் கட்டப்பட்ட ஒரு பறவை வானத்தில் பறந்து செல்வதைப் போல இத்தகைய சபிக்கப்பட்ட பணியில் ஈடுபட்டு வாழ்வது எங்ஙனம்?(37) இத்தகைய பணியில் நான் ஈடுபட்டால், தலைமுறை தலைமுறையாகப் பயிலப்படும் சடங்கு என்னால் கெட்டுப் போகும். (மன்னர்களால்) மீண்டும் குதிரை வேள்வி பயிலப்படும் என்று எனக்கு ஆறுதல் சொல்வீராக” என்று கேட்டான்.(38)

வியாசர், “சிறப்பில் {வேள்வியில்} இருந்து உண்டாகும் சிறப்பானது, நிச்சயம் மற்றொரு சிறப்பில் மட்டுமே இருப்பதைப் போல, அஸ்வமேதம் நிறுத்தப்பட்டாலும், தேவர்களிடமும், பிராமணர்களிடமும் அது நிலைத்திருக்கும்.(39) படைவீரனின் வாழ்வை மேற்கொள்ளும் கசியபரின் வழித்தோன்றல்கள் சிலர், கலியுகத்தில் மீண்டும் குதிரை வேள்வியை மீட்டெடுப்பார்கள்[3].(40) ஓ! மன்னா, அண்ட அழிவுக்காலமானது, வெண்கோள் உள்ளிட்ட பல தீய சகுனங்களைக் கொண்டு வருவதைப் போலவே அதே குலத்தில் பிறந்த ஒரு பிராமணன், கலியுகத்தில் ராஜசூய வேள்வியையும் மீட்டெடுப்பான்.(41) இந்த வேள்வி, அதைச் செய்யும் மனிதர்களுக்கு உரிய பயன்களை வழங்கும். அவர்களும், இந்த யுக முடிவின் தொடக்கத்தில் ரிஷிகள் சூழத் திரிவார்கள்.(42) அந்தக் காலத்தில் இருந்து மனிதர்களின் புலன்கள், மாசற்ற நற்செயல்களின் பயன்களைக் கைவிடாது, இம்மையில் அவற்றுடன் பற்றற்றிருக்கும்.(43) அப்போது, நுட்பமானதும், உயர்ந்ததுமான ஓர் அறம், நான்கு வகைகளுக்கான கடமைகளில் {நான்கு ஆசிரமங்களில்} இருந்து நழுவி, ஈகையை மட்டுமே தன் வேராகக் கொண்டு, காலத்தின் விளைவாகப் புகழ்பெறும்.(44) ஓ! ஜனமேஜயா, இந்த யுகத்தின் முடிவில் மனிதர்கள் சிறதளவே தவம் பயின்றாலும், அவர்கள் ஆன்ம சக்திகளை அடைவார்கள். இவ்வாறு அருளப்பட்டவர்களே பக்திச் சடங்குகளைச் செய்வார்கள்” என்றார் {வியாசர்}[4].(45)

கலியுகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 03-(வியாஸோக்தம் கலியுகபவிஷ்யம்)-கலியுகத்தை வர்ணித்த வியாசர்…

ஜனமேஜயன் {வியாசரிடம்}, “ஓ! அறமறிந்தவனே, உயிரினங்களுக்குக் கேட்டையும், அறத்திற்கு அழிவையும் ஏற்படுத்தும் கலியுகம் தொடங்கப் போகிறது. எனவே, அதன் தன்மைகளைக் குறித்து விளக்குவாயாக” என்றார்.(3)

சௌதி, “தெய்வீகரான வியாசர், இவ்வாறு கேட்கப்பட்டதும், கலியுகத்தில் மனிதர்களின் நிலை குறித்துத் துல்லியமாகச் சிந்தித்து, எதிர்கால யுகத்தை விளக்கத் தொடங்கினார்.(4)

வியாசர், “கலி தொடங்கியதும், குடிமக்களைப் பாதுகாக்க இயலாத மன்னர்கள், காலமேதும் பார்க்காமல் அவர்களிடம் இருந்து கப்பங்களைப் பெற்றுக் கொண்டு தங்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்வர்.(5) இந்த யுகத்தின் முடிவில் மன்னர்கள் க்ஷத்திரியர்களாகச் செயல்படமாட்டார்கள் {க்ஷத்திரியர்கள் மன்னர்களாக மாட்டார்கள்}, பிராமணர்கள் சூத்திரர்களைப் போன்ற வாழ்வை மேற்கொள்வார்கள் {பிராமணர்கள் சூத்திரர்களிடம் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவார்கள்}, சூத்திரர்கள் பிராமணர்களைப் போல நடந்து கொள்வார்கள் {சூத்திரர்கள், பிராமணர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவார்கள்}.(6)

ஓ! ஜனமேஜயா, இந்த யுகத்தின் முடிவில் ஸ்ருதிகளையும், வேதங்களையும் நன்கறிந்த பிராமணர்கள், {க்ஷத்திரியர்களுக்கான} கணைகளை எடுத்துக் கொண்டு, வேள்விகளில் இருந்து ஹவிஸை விலக்குவார்கள் {ஹோமம் செய்ய மாட்டார்கள்}, மக்கள் அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து உண்பார்கள்[1].(7) இறுதி யுகமான கலி தோன்றும்போது மனிதர்கள் சிற்பிகளாகவும், பொய்யர்களாகவும், இறைச்சியையும், மதுவையும் விரும்புகிறவர்களாகவும், நண்பர்களின் மனைவியரை அறிபவர்களாகவும் இருப்பார்கள்[2].(8) கலியுகத்தில் கள்வர்கள் மன்னரைப் போலவும், மன்னர்கள் கள்வரைப் போலவும் செயல்படுவார்கள், பணியாட்கள் உரிமையில்லாத வருவாயை அனுபவிப்பார்கள்.(9)இறுதி யுகத்தில் செல்வமே உயர்வாகப் பேசப்படும், நல்லோரின் குணம் இகழப்படும், {குணத்தில்} வீழ்ச்சியடைந்தவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.(10) பாவ புண்ணியம் கருதாத கைம்பெண்களும், தவசிகளும், பதினைந்து வயதே உடைய மனிதர்களும் {பதினாறு வயதைக் கடக்காதவர்களும்} வரைமுறையற்ற கலவியின் மூலம் பிள்ளைகளைப் பெறுவார்கள்.(11) அந்த இறுதி யுகத்தில் ஊரார் உணவை விற்பனை செய்வர், பிராமணர்கள் வேதங்களை விற்பனை செய்வர், பெண்கள் தங்கள் மேனிகளை விற்பனை செய்வர்.(12) இந்த யுகத்தில் அனைவரும் வேதங்களைப் படிப்பார்கள், வாஜஸநேயி வேள்விகளைச் செய்வார்கள், சூத்திரர்கள் அனைவரையும் “ஓ! {ஏய்}” என்றழைப்பார்கள்.(13) {யுகம் தாழும்போது பிராமணர்கள், தவப்பயன்களையும், வேள்விப் பயன்களையும் விற்பனை செய்வார்கள், பருவகாலங்கள் முரண்படும்}.(14) புத்தனின் {நல்லோனின்} போதனைகளைப் பின்பற்றும் சூத்திரர்கள் இறைச்சி உண்பதை விலக்குவார்கள். வெண்பற்களையும், கூரிய கவனத்தையும் கொண்ட அவர்கள், தங்கள் தலைகளை மழித்துக் கொண்டு, பட்டாடைகளை உடுத்திக் கொண்டு {சாக்கிய} அறம் பயில்வார்கள்[3].(15)தந்தங்களையும், பற்களையும் கொண்ட விலங்குகள் ஏர்களிலும், வண்டிகளிலும் பூட்டப்படும், மனிதர்கள் குளங்களில் உள்ள நீரைக் கொண்டு உழுவார்கள், மேகங்கள் ஒழுங்கற்ற முறையில் நீரைப் பொழியும்.(16+18) மிலேச்சர்கள் குரு பாஞ்சால மாகாணத்தில் வாழ்வார்கள், அந்த {குரு பாஞ்சால} நாட்டைச் சேர்ந்த மக்கள் முன்னவர்களின் {மிலேச்சர்களின்} மாகாணத்தில் வாழ்வார்கள். யுகத்தின் முடிவில் மனிதர்கள் வீழ்ச்சியடைவார்கள்[4].(17[16-18]) பிராமணர்கள், தவப்பயன்களையும், வேள்விப் பயன்களையும் விற்பார்கள். கள்வர்கள் ஒருவருக்கொருவர் செல்வத்தைக் களவு செய்வார்கள், இழிந்த மனிதர்கள் சொற்ப செல்வத்தை அடைந்து வளமாகத் திகழ்வார்கள்.(19) இந்த இறுதி யுகத்தில் மனிதர்கள் அறச்சடங்குகளைப் புறக்கணிப்பார்கள், நிலப்பகுதிகள் பாலைவனங்கள் நிறைந்ததாக இருக்கும், நகரங்களில் பல சாலைகளின் மூலம் போக்குவரத்து நடைபெறும்.(20) கலியுகத்தில் அனைவரும் வணிகராவர், மகன்கள் தங்கள் மூதாதையரின் {தந்தைமாரின்} கொடைகளை உடனே பிரித்துக் கொள்வார்கள். பேராசையாலும், பொய்மையினாலும் தூண்டப்படும் மக்கள் ஒருவரோடொருவர் போரிட்டுச் செல்வங்களைக் கொள்ளையடிப்பர்.(21) பெண்கள், அழகும், நளினமும், ஆபரணங்களும் இல்லாதவர்களாக மயிரால் மட்டுமே தங்களை அலங்கரித்துக் கொள்வர்.(22)யுகத்தின் முடிவு நெருங்கும்போது, எந்த வித இன்பத்துக்கும் இடமில்லாத இல்லறவாசிக்கு, அவனுடைய மனைவியே இறுதி கதியாக இருப்பாள்[5].(23) தீயவர்களும், ஆரியரல்லாதவரும் {உன்னதரல்லாதவரும்} பெருகும்போது, பொருத்தமில்லாத வகையில் பெண்களின் எண்ணிக்கைப் பெருகி, ஆண்களின் எண்ணிக்கைக் குறையும் போது, அதுவே யுக முடிவுக்கான அறிகுறி என்பதை அறிவாயாக.(24) அப்போது அனைவரும் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள், எவரும் பிச்சை அளிக்க மாட்டார்கள். மக்கள் எந்த வேறுபாடும் இன்றிப் பிற வர்ணத்தாரிடம் இருந்து கொடைகளை ஏற்பார்கள்.(25) மன்னர்கள், கள்வர்கள், நெருப்பு ஆகியவற்றால் பீடிக்கப்படும் மக்கள் அழிவை அடைவார்கள். இந்த இறுதியுகத்தில் மக்கள் பயிர்களைப் பெற மாட்டார்கள் {விதைத்த விதை பயன்தராது}. இளைஞர்கள் முதுமையை அடைவார்கள். மக்கள் தங்கள் தீய நோக்கத்தின் காரணமாக மகிழ்ச்சியை அடையமாட்டார்கள் {அவர்கள் இன்புறுவது பகல்கனவே}.(26) மழைக்காலத்தில் காற்றானது மேலும், கீழுமாக வீசி புழுதியை {அல்லது கற்களைப்} பொழியும், மக்களிடம் மறுமை குறித்த ஐயங்கள் இருக்கும்.(27) அனைவரும் இயல்பாகவே தீயவர்களாகவும், கடவுளைப் பழிப்பவர்களாகவும், அகங்காரம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பேராசை கொண்ட பிராமணர்கள் ஒருவரையொருவர் பழித்துக் கொள்வார்கள்.(28) க்ஷத்திரியர்கள், வைசியர்களின் வழிகளைப் பின்பற்றி வேளாண்மையிலும், வணிகத்திலும் ஈடுபடுவார்கள். பிராமணர்கள் அறத்தின் கண்ணியத்தைக் கெடுப்பார்கள்.(29)யுக முடிவில் மனிதர்கள் தங்கள் நோன்புகளையும், {உடன்பாடுகளையும்}, உறுதிமொழியையும் பின்பற்றமாட்டார்கள். அவர்கள், தங்கள் மதிப்பைக் கைவிட்டுக் கடன்களை அடைக்காமல் இருப்பார்கள்.(30) மனிதனின் இன்பம் பயனற்றதாகவும், அவனது கோபம் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆடுகளும், பாலுக்காகவே மதிக்கப்படும்.(31) யுக முடிவில், சாத்திர ஞானமற்ற மனிதர்கள் இயல்பாக இவ்வாறே நடந்து கொள்வார்கள். கல்வியில் செருக்குடைய மனிதர்கள், அற விதிகளை அலட்சியம் செய்வதோடல்லாமல் {தங்களுக்கு ஏற்ற வகையில்} சாத்திரங்களுக்கு விளக்கமுமளிப்பார்கள்.(32) இறுதி யுகத்தின் போது, பெரியோரின் போதனைகள் இல்லாமலேயே அனைத்துக் கிளைகளிலும் தாங்கள் ஞானத்தை அடைந்ததாக அனைவரும்  கருதுவார்கள்.(33)  கவியல்லாதவன் {ஞானியல்லாதவன்} எவனும் இருக்க மாட்டான் {விதிவிலக்கின்றி அனைவரும் தங்களை ஞானியாகவே கருதுவார்கள்}. பிராமணர்கள், தங்கள் அறக்கடமைகளில் இருந்து விலகி கணிகர்களாவார்கள் {சோதிடர்களாவார்கள்}, மன்னர்கள் கள்வர்களாவார்கள்[6].(34)யுக முடிவில், கள்ள உறவில் பிறந்த பெண்களுடன் வசிப்பவர்கள் {குண்டர்கள்}, வஞ்சகர்கள், குடிகாரர்கள் {சுராபானம் அருந்துவோர்} ஆகியோர் பிரம்மவாதிகளாகி குதிரை வேள்விகளைச் செய்வார்கள்.(35) பிராமணர்கள், செல்வமீட்டும் விருப்பத்தில் தகுதியில்லாதவர்களுக்குப் புரோஹிதம் செய்து, விலக்கப்பட்ட உணவை உண்பார்கள்.(36) அனைவரும் “போ {ஏய்}” என்பார்கள் {மதிப்பின்றியே பேசுவார்கள்}, எவரும் வேதங்களைக் கற்க மாட்டார்கள். பெண்கள் ஒரேயொரு சங்கு வளையலை அணிவார்கள், நெல்லின் வடிவிலான ஆபரணத்தையே பயன்படுத்துவார்கள்.(37) யுக முடிவு நெருங்கும் வேளையில், விண்மீன்கள் உரிய கோள்களுடன் சேராது, திக்குகள் முரண்படும், மாலை வேளையின் தோற்றம் எப்போதும் எரிவதைப் போலவே தெரியும்.(38)

மகன், தன் தந்தையைப் பணிகளில் ஈடுபடுத்துவான், மருமகள் மாமியாருக்கு ஆணையிடுவாள். மனிதர்கள், விலங்குகளுடனும், பல்வேறு சாதிப் பெண்களுடனும் கூடி வாழ்வார்கள் {உறவு கொள்வார்கள்}.(39) சீடர்கள், சொற்கணைகளால் ஆசான்களைக் காயப்படுத்துவார்கள், மேலும் வெறிபிடித்த மனிதர்கள் பல காரியங்கள் குறித்துப் பேசுவார்கள்.(40) அக்னிஹோத்ரிகள், முதல் நான்கு ஆகுதிகளைத் தேவர்களுக்குப் படைக்காமல், தங்கள் உணவை உண்பார்கள். மனிதர்கள், தங்கள் விருந்தினர்களுக்கு உணவை அளிக்காமல் தாங்களே உண்பார்கள்.(41) பெண்கள், உறங்கிக் கொண்டிருக்கும் தங்கள் கணவர்களை வஞ்சித்துப் பிறரிடம் செல்வார்கள், ஆண்களும், உறங்கிக் கொண்டிருக்கும் தங்கள் மனைவிகளை விட்டு விட்டு பிற பெண்களிடம் செல்வார்கள்.(42) யுகம் முடியும்போது, பிணிகள், மன வேதனை, பொறாமை ஆகியவை மனிதர்களைப் பீடிக்கும், அவர்கள் தங்கள் செயல்களுக்குத் தீர்வு காண மாட்டார்கள்” என்றார் {வியாசர்}.(43)

கலியுக விளக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 04-(கலியுகவர்ணநம்)-கலியுகத்தை வர்ணித்த வியாசர்…

ஜனமேஜயன் {வியாசரிடம்}, “மொத்த உலகும் இவ்வாறு மாசடையும்போது, மனிதர்கள் எவரால் பாதுகாக்கப்படுவார்கள்? அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? அவர்கள் எதை உண்பார்கள்? அவர்கள் எவ்வாறு இன்புற்றிருப்பார்கள்?(1) அவர்களின் செயல்பாடுகளும், முயற்சிகளும் எவ்வாறு இருக்கும்? அவர்கள் எவ்வளவு காலம் வாழ்வார்கள்? அவர்கள் {மனிதர்கள்} எந்த எல்லையை எட்டியதும் சத்திய யுகத்தை அடைவார்கள்?” என்று கேட்டான்.(2)

வியாசர், “அறம் ஆட்டம்கண்டு, நல்லொழுக்கம் அரிதாகும்போது, அருஞ்செயல்களைச் சாதிக்காத மனிதர்கள் குறுகிய காலமே வாழ்வார்கள்.(3) வாழ்நாள் குறைந்ததும், அவர்களின் வலிமையும் குறையும், அஃது அவர்களின் நிறத்தில் பிறழ்வுகளுக்கு வழிவகுத்து பிணிகளை உண்டாக்கும்.(4) இது மனவருத்தத்தை உண்டாக்கி கடவுளின் நினைவை ஏற்படுத்தும் {உலகம் சார்ந்த நோக்கங்களில் ஏற்படும் அக்கறையின்மையால் அவர்கள் தங்கள் ஆன்மாவை உணரும் நிலையை அடைவார்கள்}. அது மீண்டும் அறத்தை விளைவிக்கும். இந்த எல்லையுடன் அவர்கள் சத்திய யுகத்தை அடைவார்கள்.(5)

சிலர், சொற்களில் மட்டுமே அறத்தைப் பின்பற்றி அக்கறையற்றவர்களாக இருப்பார்கள், மனசாட்சியுடன் கூடிய சிலர் ஆர்வத்துடன் காரணங்களை ஆய்ந்து அறிவார்கள்.(6) ஐயங்களில் இருந்து விடுபட்ட மனங்களைக் கொண்டவர்களும், கல்வியில் செருக்குடையவர்களுமான சில மனிதர்கள், ஊகங்களுக்கும் {அனுமானங்களுக்கும்}, சான்றுகளுக்கும் {ஆதாரங்களுக்கும்} இடையிலான ஒற்றுமையைக் காண்பார்கள்.(7) வேறு சிலர் வேதங்களை ஏற்க மாட்டார்கள். {இந்த யுகத்தில் பெண்கள் பலர், தங்கள் பிறப்புறுப்புகளால் செய்வதைத் தங்கள் வாயால் செய்வார்கள்}.(8) அறியாமை கொண்ட தீய மனிதர்கள், கல்வியில் செருக்குண்டு நாத்திகர்களாவார்கள். {மனிதர்கள் குழப்பம் நிறைந்தவர்கள் ஆவார்கள், மந்த புத்தி கொண்டோர் தங்களை ஞானிகளாகக் கருதுவார்கள்}[1].(9) அவர்கள் செருக்கடைந்தவர்களாகச் சாத்திர ஞானத்தில் இருந்து விலகுவார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் பொருள்களில் மதிப்பு கொண்டவர்களாகவும், விவாதங்களை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள்.(10) யுக சுழற்சி ஆட்டங்காணும்போது, சில மனிதர்கள் (விஷ்ணுவின்) இறுதி வகைமையைப் பின்பற்றுவார்கள். கொடைகளுடனும், வாய்மையுடனும் அவர்கள் கருணைச் செயல்கள் பலவற்றைச் செய்வார்கள்[2].(11)அந்தக் காலத்தில் மக்கள் அனைத்து வகைப் பொருட்களையும் உண்பார்கள், கட்டுப்பாடு இல்லாத புலன்களுடன் கூடியவர்களாகவும், சாதனைகளற்றவர்களாகவும், வெட்கம் கெட்டவர்களாகவும் இருப்பார்கள். பாவத்தின் மொத்த அடையாளமாக இதை அறிவாயாக.(12) பிராமணர்களுடைய வாழ்வுத் தேவையின் நித்திய வழிமுறையான இரத்தலை க்ஷத்திரியர்களும், பிற வகையினரும் {வர்ணத்தாரும்} தங்கள் வாழ்வாதாரமாகக் கொள்ளும்போது, பாவம் பீடித்ததன் {யுகம் வீழ்ந்ததன்} அடையாளமாக அதை அறிவாயாக.(13) ஞானத்திற்கும், கல்விக்கும் அழிவைக் கொண்டு வரும் இந்த யுகம், பாவத்தால் நிறைந்ததாக இருக்கும், பிரம்மச்சரிய {பற்றற்ற} வாழ்க்கையைப் பின்பற்றும் மக்கள், குறுகிய காலத்திற்குள் ஆன்மிக முழுமையை அடைவார்கள்.(14)

இறுதி யுகத்தில் பெரும்போர்களும், பெருங்குழப்பங்களும், பெரும் மழைகளும், பேரச்சங்களும் விளையும்; பாவம் நிறைந்த தன்மையின் {யுக வீழ்ச்சியின்} அடையாளங்களாக இவற்றை அறிவாயாக.(15) யுக முடிவில், ராட்சசர்கள், கடுஞ்சொற்களைப் பேசுவதையே நோக்கமாகக் கொண்ட பிராமணர்களாகவும், மன்னர்களாகவும் இருந்து பூமியை அனுபவிப்பார்கள்[3].(16) வேத கல்வி கற்றல், வேள்விகள் வேட்டல், அறநெறிகளைப் பின்பற்றல் ஆகியவற்றில் இருந்து விலகும் மனிதர்கள், செருக்குடையவர்களாகவும், அவதூறு பேசுபவர்களாகவும், அனைத்தையும் உண்பவர்களாகவும், பயனற்ற சடங்குகளைச் செய்பவர்களாகவும்,(17) மூடர்களாகவும், தன்னலம் கொண்டவர்களாகவும், பேராசை கொண்டவர்களாகவும், தகாத உடைகளை உடுத்துபவர்களாகவும், இழிந்தவர்களாகவும், நிலைத்து நீடிக்கும் அறத்தில் {சனாதன தர்மத்தில்} இருந்து வழுவியவர்களாகவும்,(18) பிறரின் செல்வங்களைக் கொள்ளை அடிப்பவர்களாகவும், பிறன் மனைவியரைக் கெடுப்பவராகவும், காமாந்தகராகவும், தீயவர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருப்பார்கள்.(19) மக்கள் ஒரே {தீய} குணத்துடன் கூடியவர்களாக எங்கும் புகழ்பெறும்போது, {ஆன்மா இல்லை என்று சொல்பவர்களான} பல்வேறு வடிவங்களிலான தவசிகளும் தோன்றுவார்கள்.(20) பிரதான புருஷனை {பரமாத்மாவைச்} சார்ந்தவர்களும், கிருத யுகத்தில் பிறந்தவர்களுமான அனைவரும் சொற்களின் மூலம் {கதைகளின் மூலம் (சொற்பொழிவுகளில்) இந்த யுகத்தில்} மக்களால் வழிபடப்படுவார்கள்[4].(21)மனிதர்கள் தானியங்களையும், உடைகளையும், உணவுப் பொருட்களையும், ஏன் பசுஞ்சாணத்தையும் கூடக் கொள்ளையடிப்பார்கள்.(22) கள்வர்கள், பிற கள்வர்களின் உடைமைகளைக் கொள்ளையடிப்பார்கள், கொலைகாரர்கள், பிற கொலைகாரர்களைக் கொல்வார்கள். கள்வர்கள், பிற கள்வர்களைக் கொல்லும்போது மக்களுக்கு நன்மை விளையும்.(23) உலகம் நலிவடைந்து, ஒடுக்கப்பட்டு, மாலை ஜபங்களில் இருந்து விலகும்போது, அனைத்து வகை மனிதர்களும் ஒரே வகை வாழ்வை வாழும்போது, அவர்கள் வரிகளின் சுமையால் ஒடுக்கப்பட்டுக் காடுகளுக்குள் ஓய்ந்து செல்வார்கள்.(24) மகன்கள் தந்தையை அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுத்துவார்கள், மருமகள் மாமியாரை பணி செய்ய வைப்பாள்[5]. வேள்விகள் வேட்கப்படாமல் நிறுத்தப்படும்போது, சீடர்கள் சொற்கணைகளால் ஆசான்களைத் துன்புறுத்துவார்கள்[6].(25) ராட்சசர்களாலும், பெரும்பசியுடைய விலங்குகள், பூச்சிகள், எலிகள், பாம்புகள் ஆகியவற்றாலும் மனிதர்களுக்குத் தீங்கு விளையும்.(26) ஓ! மன்னா, யுக முடிவின் நெருக்கத்தில், மக்களின் அமைதி, செழிப்பு, உடல்நலம், நண்பர்கள், இலக்கியம் ஆகியவை நலிவடையும்.(27)யுகத்தின் துன்பங்களால் பீடிக்கப்பட்ட மன்னர்கள், தாங்களே தலைவர்களாகவும், கள்வர்களாகவும் இருந்து கொண்டு, பல்வேறு நாடுகளில் வலம் வருவார்கள்.(28) அவர்கள் தங்கள் நண்பர்களுடன் தங்கள் நாடுகளில் பயணித்து, பயனற்றவற்றை விளைவித்து, குறித்த காலத்திற்காகக் காத்திருப்பார்கள்[7].(29) அச்சத்தாலும், பசியாலும் பீடிக்கப்படும் மக்கள், தங்கள் மகன்களைத் தங்கள் தோள்களில் சுமந்தவாறே கௌசிகி ஆற்றைக் கடந்து,(30) அங்கம், வங்கம், கலிங்கம், காஷ்மீரம், மேகலம், ருஷிகாந்தகிரி ஆகிய மாகாணங்களில் உறைவிடம் நாடுவார்கள்.(31) மக்கள், இமயத்தின் சாரல்களிலோ, உப்பு நீராலான பெருங்கடலின் கரைகளிலோ, காடுகளிலோ மிலேச்சர்களுடன் சேர்ந்து வாழ்வார்கள்.(32) அப்போது பூமியானது வெறுமையாகவோ, மனிதர்களால் நிறைந்தோ இருக்காது. காவலர்கள் ஆயுதந்தரித்தவர்களாக இருப்பினும் தங்கள் கடமைகளைச் செய்ய மாட்டார்கள்.(33) மனிதர்கள், மான்களையும், மீன், பறவைகள், இரைதேடும் விலங்குகள், பாம்புகள், பூச்சிகள், காய்கறிகள், கனிகள், கிழங்குகள் ஆகியவற்றையும் உண்டு வாழ்வார்கள்.(34)மனிதர்கள், முனிவர்களைப் போல மரவுரிகளையும், இலைதழைகளையும், மான்தோல்களையும் திரட்டி உடுத்திக் கொள்வார்கள்.(35) மலைக்குகைகளில் வசிக்கும் மனிதர்கள், கிராமங்களிலோ காடுகளிலோ வளரும் நெல்லை அறிந்து கொள்ளவும், உண்ணவும் ஏங்குவார்கள். அவர்கள் செம்மறி ஆடுகளையும், வெள்ளாடுகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும் வளர்ப்பார்கள்.(36) அவர்கள், நீருக்காக ஆற்றங்கரைகளில் வாழ்ந்து கொண்டு, நீரோட்டத்தைத் தடுப்பார்கள். அவர்கள் சமைத்த உணவை விலைக்கு வாங்கவும், விற்பனையும் செய்வார்கள்.(37) மகன்கள், தங்களுக்குரிய பங்குகளை அடைய மூலதனத்தின் மீது {மூலதனத்தையும், வட்டியையும் மறைத்துப்} போரிடுவார்கள். மக்கள், வயதின் ஆதிக்கத்தினால் குழந்தைகளைப் பெறுவார்கள், குழந்தைகளைப் பெறாமலும் இருப்பார்கள், அவர்கள் தங்கள் குடும்பங்களின் நற்குறிகளை {குல அடையாளங்களை} இழந்திருப்பார்கள்.(38) அந்த யுகத்தின் மக்கள், இழிந்தவர்களால் போதிக்கப்படும் இழிந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுவார்கள் {தர்மங்களில் இழிவான தர்மத்தைப் பின்பற்றுவார்க்ள}.(39) மனிதனின் வாழ்நாள் முப்பது ஆண்டுகளாக இருக்கும். {வலிமை இழந்த மக்கள் மெலிந்தவர்களாகவும், ஆசைகள் மற்றும் உணர்வுகளின் காரணமாகப் பலவீனர்களாகவும் இருப்பார்கள்}.(40) அவர்கள் பிணிகளால் பீடிக்கப்பட்டுப் பலவீனமடைந்து, தங்கள் செல்வத்தை இழப்பார்கள்; அவர்களின் உடலுறுப்புகள் பிணிகளால் பீடிக்கப்படும், அவர்களின் வாழ்நாள் குறைவதன் விளைவாக அவர்கள் துயரால் பீடிக்கப்படுவார்கள்.(41) {உடல்நலக்கேட்டின் விளைவால்} அவர்கள் நேரங்காலம் பார்க்காமல் நல்லோரைச் சந்தித்து, தொண்டாற்றுவதில் ஈடுபடுவார்கள், தங்கள் ஒழுக்கம் அடையும் நலிவினால் அவர்கள் சத்திய யுகத்தை அடைவார்கள் {வாய்மையைப் போற்றுவார்கள்}.(42) விருப்பத்திற்குரிய பொருட்களை அடையாததால் அவர்கள் அறச் சடங்குகளைச் செய்வார்கள்; தங்கள் மக்களின் அழிவில் உண்டாகும் பலவீனத்தின் காரணமாக அடக்குமுறைகள் செய்வதில் இருந்து அவர்கள் ஒடுங்குவார்கள்.(43)

இவ்வாறே அவர்கள், தங்கள் வாழ்வைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கொடைகள் அளித்து, வாய்மை நோற்று, {தொண்டு, ஈகை, வாய்மை, ஆன்மப் பாதுகாப்பு என்ற} நான்கு வகைக் கடமைகளை நிறைவேற்றி நன்மையை அடைவார்கள்(44). புலன்களுடனும், புலன்களுக்குரிய பொருட்களுடனும் உழலும் மக்களில் சிலர், உண்மை ஞானத்தை அடைந்து, “அறமோ, மரணமோ இனிய பயன்களைக் கொண்டவையே” என்று சொல்வார்கள்[8].(45) படிப்படியாக வீழ்ச்சி நடந்ததைப் போலவே வளர்ச்சியும் படிப்படியாக நிகழும். அதன்பிறகு அறம் முழுமையாகப் பின்பற்றப்படும்போது, கிருத யுகம் தொடங்கும்.(46) மாதத்தின் வளர்பிறையில் வளர்ந்து, தேய்பிறையில் தேயும் சந்திரனைப் போலவே நல்லொழுக்கமும் கிருத யுகத்தில் பெருகி, கலியுகத்தில் வீழ்ச்சியடையும். எனினும் காலம் ஒன்றுதான்; இந்த வளர்ச்சி, வீழ்ச்சிகளின் படி அது சத்யம், திரேதம், துவாபரம், கலி என்ற நான்கு நிலைகளைக் கொண்டிருக்கிறது.(47) தேய்பிறையில் இருளில் மூழ்கி, வளர்பிறையில் முழுமையடையும் நிலவைப் போலவே அறமும் சத்யத்தில் பெருகி, கலியுகத்தில் வீழ்ச்சியடையும்.(48)புழுதியால் மறைக்கப்பட்ட மூதாதையர் காலத்துத் தங்கக்கட்டியைப் பொன்னாகக் கருதாமல் தன்னைத் தானே வறியவனாக நினைக்கும் மனிதன், தூய்மையடைந்த தங்கத்தைக் கண்டதும் தன்னைச் செல்வந்தனாகக் கருதுவதைப் போலவே தமோ குணம் நிறைந்த மாயையால் மறைக்கப்பட்ட பரமாத்மாவை ஏதோவொன்றாக அழைக்கும் மனிதர்கள், மாயையில் இருந்து விலகும்போது அதைத் தூய அறிவு என்று அழைப்பார்கள். இவ்வாறே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, கல்விமான்களும் அதன் பொருளை விளக்கியிருக்கிறார்கள்[9].(49) சொர்க்கம் முதலியவற்றை நோக்கமாகக் கொண்ட தவங்களின் மூலம் நித்திய பயன்கள் அடையப்படுகின்றன; இந்தப் பயன்கள் குணங்களை விளைவிக்கின்றன, இவ்வாறே செயல்கள் நிறைவேறுகின்றன. உண்மையான இந்தச் செயல்பாடுகளின் மூலம் உடல் கூட விடுதலை அடைவதில்லை.(50) செயல்களின் பயன்கள், பல்வேறு யுகங்களில் நாடு {இடம்}, நேரம் {காலம்}, தகுந்தவர் ஆகியவற்றைப் பின்தொடர்கின்றன; இவ்வாறே அவற்றில் வேறுபாடுகள் தென்படுகின்றன. ரிஷிகள் அவ்வாறே சொல்லியிருக்கின்றனர்.(51) பல்வேறு யுகங்களில், உலகம்சார்ந்த ஆதாயம், இன்பத்திற்குரிய பொருட்கள், தேவ வழிபாடு, வாழ்நாள் காலம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டாகின்றன.(52) விதியின் இயல்பில் யுகச் சுழற்சி நடைபெறுகிறது என்பதால் ஒரு கணமும் செயல்படாமல் இருக்க முடியாத உலகில் இவ்வாறான எழுச்சியும், சிதைவும் ஏற்படுகின்றன” என்றார் {வியாசர்}”.(53)

ஜனமேஜயன் செய்த குதிரைவேள்வி | பவிஷ்ய பர்வம் பகுதி – 05-(ஜனமேஜயாஷ்வமேத꞉ இந்த்ரஸ்ய காபட்யம் ச)-ஜனமேஜயன் செய்த அஸ்வமேத யக்ஞம்; இந்திரன் அந்த வேள்வியைக் களங்கப்படுத்தியது; ஜனமேஜயன் அடைந்த கோபம்; விஸ்வாவசு ஜனமேஜயனிடம் சொன்ன சமாதானம்…

சௌதி {சௌனகரிடம்}, “அந்த முதன்மையான ரிஷி {வியாசர்}, மன்னன் ஜனமேஜயனை இவ்வாறு தேற்றியபோது, கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் குறித்த அவரது சொற்களை அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் கேட்டனர்.(1) நிலவின் அமுதக் கதிர்களுக்கு ஒப்பான அந்தப் பெரும் ரிஷியினுடைய சொற்களின் சாறு {சாற்றைப் பருகியது} அவர்களது காதுகளை நிறைவடையச் செய்தது.(2) பல்வேறு வீரர்கள் கொல்லப்பட்டதைச் சொல்வதும், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை {என்ற புருஷார்த்தங்களைத்} தருவதுமான பாரதப் போரின் அழகிய வரலாற்றைக் கேட்டு அந்தக் கூட்டத்தில்(3) இருந்த சிலர் கண்ணீர் சிந்தினர், வேறு சிலர் தியானத்தில் ஈடுபட்டனர். உள்ளங்கையில் எழுதி வைக்கப்பட்டதைப் போல அந்த வரலாற்றுத் தொடர் அந்த முனிவரால் விளக்கப்பட்டது.(4)

தெய்வீக ரிஷியான வியாசர் அங்கே இருந்த சபை உறுப்பினர்கள் அனைவரையும் வலம் வந்து அவர்களது அனுமதியைப் பெற்றுக்கொண்டு, “நான் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.(5) அதன்பிறகு முன்னணி தவசிகளும், ரிஷிகளில் முதன்மையானவரும், பேசுபவர்களில் சிறந்தவருமான வியாசரைப் பின்தொடர்ந்து சென்றனர்.(6) தெய்வீகரான வியாசரும், ரிஷிகளும் புறப்பட்ட பிறகு, புரோஹிதர்களும், மன்னர்களும் தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பிச் சென்றனர்.(7)

மன்னன் ஜனமேஜயன், பயங்கரம் நிறைந்த பன்னகர்களைப் பழிவாங்கிய பிறகு, நஞ்சைக் கைவிடும் பாம்பைப் போலக் கோபத்தைக் கைவிட்டான்.(8) பெரும் முனிவரான ஆஸ்தீகர், எரியும் தலையைக் கொண்ட தக்ஷகனை ஹோம நெருப்பில் இருந்து காத்து, தன்னுடைய ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(9) மன்னன் ஜனமேஜயனும், தன் மக்களால் சூழப்பட்டவனாக ஹஸ்தினாபுர நகரத்திற்குச் சென்று மனநிறைவுடன் கூடிய தன் குடிமக்களை மகிழ்ச்சியுடன் ஆளத் தொடங்கினான்.(10) சில நாட்கள் கழிந்ததும், ஜனமேஜயன், ஏராளமான கொடைகளுடன் கூடிய குதிரைவேள்வியை முறையாகச் செய்தான்.(11)

வழிபடத்தகுந்த பெண்மணியான காசியை வபுஷ்டமா, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி தற்கட்டுப்பாட்டுடன் கூடியவளாக ஜனமேஜயன் வேள்வியில் கொல்லப்பட்ட குதிரையிடம் சென்று, அதன் அருகே அமர்ந்தாள்.(12) வாசவன் {இந்திரன்}, முற்றிலும் அழகான அந்தப் பெண்ணின் மீது கொண்ட விருப்பத்தில், கொல்லப்பட்ட அந்தக் குதிரையின் உடலில் நுழைந்து அவளை அறிந்தான்.(13) ஜனமேஜயன் அந்த மாற்றத்தைக் கண்டு, வேள்வியைச் செய்யும் புரோஹிதரிடம், “இந்தக் குதிரைக் கொல்லப்பட வில்லை; உடனே இதைக் கொல்வீராக” என்றான்.(14) விவேகியான அந்தப் புரோஹிதர், இந்திரனின் அம்முயற்சியை அறிந்து கொண்டு, அரச முனியான ஜனமேஜயனிடம் அதைத் தெரிவித்தார், மன்னன் புரந்தரனை {இந்திரனைச்} சபித்தான்[1].(15)ஓ! சௌனகரே, அப்போது அந்த ஜனமேஜயன் {தன் புரோஹிதரிடம்}, “செய்த தவங்கள், குடிமக்களின் பாதுகாப்பு, வேள்வி ஆகியவற்றின் மூலம் நான் பயனேதும் ஈட்டியிருந்தால், அதைக் கொண்டு மெய்யுறுதியுடன் உமக்கொன்றைச் சொல்கிறேன்; கேட்பீராக;(16) தீய மனம் கொண்டவனும், குதிரை வேள்விகளில் மனக்கட்டுப்பாடு ஏதும் கொள்ளாதவனுமான இந்திரனை இன்று முதல் க்ஷத்திரியர்கள் எவரும் வழிபடமாட்டார்கள்” என்றான்.(17)

பிறகும் பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் ஜனமேஜயன், {தன் வேள்வியில்} தலைமை வகிக்கும் புரோஹிதர்களிடம், “நான் செய்த இந்த வேள்வி இந்திரன் மூலம் பாழடைந்ததால், உங்களிடம் பிராமண சக்தி கிஞ்சிற்றும் இல்லை என்பதை உண்மையில் நான் அறிந்தேன்.(18) எனவே, நீங்கள் என் ஆட்சிப்பகுதிக்குள் வாழக்கூடாது. உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீங்கள் வேறெங்காவது செல்வீராக” என்றான். இவ்வாறு சொல்லப்பட்டதும் ஜனமேஜயனிடம் கோபமடைந்த பிராமணர்களும் அங்கிருந்து சென்றனர்.(19)

பெரும் பக்திமானான மன்னன் ஜனமேஜயன், பெருங்கோபத்தால் தூண்டப்பட்டவனாகத் தன் அரண்மனைக்குள் சென்று, தன் ராணிகளிடம் ஆணையிடும் வகையில்,(20) “புழுதி படிந்த தன் காலை என் தலையில் வைத்தவளும், கற்பற்றவளுமான வபுஷ்டமாவை என் வீட்டில் இருந்து விரட்டுவீராக.(21) அவள் என் புகழையும், மகிமையையும் அழித்து என் மதிப்பைக் கெடுத்திருக்கிறாள். கைவிடப்பட்ட மலர்மாலையைப் போலவே கற்பற்ற மனைவியான அவளை நான் காணவும் விரும்பவில்லை.(22) இவ்வுலகில் பிறரை விரும்பும் மனைவியுடன் வாழ்பவனால் இனிய உணவை உண்ணவும், தனிமையான இடத்தில் மகிழ்ச்சியாக உறங்கவும் முடியாது. {நாயால் நக்கப்பட்டு} களங்கமடைந்த {வேள்வி} ஹவிஸைப்போல அவனால் அவளிடம் இன்புற முடியாது” என்றான்.(23) சினத்துடன் கூடிய பரீக்ஷித்தின் மகன் இதைச் சொல்லிவிட்டு உரக்க அழுதான். அப்போது கந்தர்வ மன்னனான விஸ்வாவசு அவனிடம் பேசினான்[2].(24)விஸ்வாவசு, “ஓ! மன்னா, நீ முன்னூறு வேள்விகளைச் செய்திருக்கிறாய்; இனியும் உன்னை வாசவன் {இந்திரன்} மன்னிக்க மாட்டான். உன்னால் முறையாக மணக்கப்பட்ட வபுஷ்டமையின் குற்றம் இதிலேதும் இல்லை.(25) அவள் {வபுஷ்டமை} முன்னர் அப்சரஸ் ரம்பையாக இருந்தாள், இப்போது காசியின் மகளாகப் பிறந்திருக்கிறாள். அழகிய காரிகையருள் சிறந்தவளான இவளை மதிப்புமிக்க ரத்தினமாகக் கருதி இவளுடன் இன்புற்றிருப்பாயாக[3].(26) இவளை ஒருபோதும் கைவிடாதே. ஓ! குருக்களில் முதன்மையானவனே, நீ செல்வத்தில் சச்சியின் தலைவனை {இந்திரனைப்} போன்றவன். நீ வேள்விகளைச் செய்ய ஆயத்தமாக இருப்புதைக் கண்ட தேவர்களின் மன்னன், அதில் குற்றங்களை நாடி இங்கே தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறான். ஓ! மன்னா, வேள்விப் பயன்களை அடைவதில் நீ அவனைக் கடந்து விடுவாய் என்று கருதியே அந்தத் தேவர்களின் மன்னன் {இந்திரன்} இந்த யக்ஞத்திற்குத் தடங்கல்களை ஏற்படுத்தினான்.(28)தடங்கலை ஏற்படுத்த விரும்பிய வாசவன் {இந்திரன்}, குதிரை கொல்லப்பட்டதைக் கண்டு, அதில் குற்றம் கண்டுபிடித்து, இந்த மாயையை இங்கே ஏற்படுத்தியிருக்கிறான்[4].(29) இந்திரன் வபுஷ்டமையை ரம்பை என்று கருதியே அறிந்தான். அதன் விளைவால் உண்டான கோபத்தில் தூண்டப்பட்ட நீயும், முன்னூறு வேள்விகளைச் செய்து கொடுத்த உன் புரோஹிதர்களைச் சபித்து, இந்திரனுக்கு மட்டுமே சொந்தமான பயன்களை இழந்தாய். அந்த ஆசான்கள் உன்னால் விரட்டப்பட்டிருக்கின்றனர்.(30,31) வாசவன் எப்போதும் உன்னைக் கண்டும், பிராமணர்களைக் கண்டும் அஞ்சி நின்றவன். அவன் தன் மாயா சக்தியால் இந்தச் செயலை நிறைவேற்றியதன் மூலம் அந்த இரண்டு அச்சங்களில் இருந்தும் விடுபட்டிருக்கிறான்.(32) வெற்றிகளையே அடைய விரும்பும் பெருஞ்சக்திவாய்ந்த புரந்தரனால், சாதாரண மனிதர்களாலும் செய்ய முடியாத காரியமான தன் மகன்கள், பேரப்பிள்ளைகளின் மனைவிகளை எவ்வாறு கெடுக்க முடியும்?[5](33)இந்திரனிடம் புத்தி, அறம், புலனடக்கம், ஆன்ம ஆற்றல், மகிமை ஆகியவை போதுமான அளவுக்கு இருப்பதைப் போலவே முன்னூறு வேள்விகளைச் செய்த உன்னிடமும் அவை இருக்கின்றன.(34) எனவே, இந்திரனையும், ஆசான்களையும், வபுஷ்டமாவையும் பழிக்காதே, உன்னையும் பழித்துக் கொள்ளாதே. விதியை வெல்வது மிகக் கடினமானது.(35) தேவர்களின் மன்னன், தன்னுடைய ஆன்ம சக்திகளின் மூலம் குதிரைக்குள் புகுந்து உன்னுடைய கோபத்தைத் தூண்டச் செய்தான்; ஆனால் நீ கோபத்தால் தூண்டப்படாதே. மகிழ்ச்சியை விரும்புவோர் எப்போதும் விதியின் வழிகளையே பின்பற்ற வேண்டும்.(36) எதிர் திசையில் இருக்கும் நீரோட்டத்தைக் கடப்பதைப் போலவே கெட்ட விதியைக் கடப்பதும் மிகக் கடினமானதாகும். எனவே முனைப்பில் இருந்து விலகுவாயாக; கவலையைக் களைந்து ரத்தினம் போன்றவளும், பாவமற்றவளுமான உன் மனைவியின் துணையில் இன்புற்றிருப்பாயாக.(37)

ஓ! மன்னா, அப்பாவிகளான சாதாரணப் பெண்கள் ஆண்களிடம் இருந்து பிரிந்தால் அவர்கள் பின்னவர்களை {அந்தப் பெண்கள் ஆண்களைச்} சபிப்பார்கள் {பாவமற்ற பெண்கள் அலட்சியப்படுத்தப்பட்டால், அதிலும் குறிப்பாகக் குற்றமற்ற தெய்வீகப் பெண்கள் அவமதிக்கப்பட்டால், நீயும் பிற பெண்களால் அலட்சியப்படுத்தப்படுவாய்}.(38) சூரியனின் கதிர்களும், நெருப்பின் தழல்களும், வேள்விப் பீடமும், ஆகுதிகளும், மாற்றானை விரும்பாத மனைவியும் பிறரால் தீண்டப்பட்டாலும் ஒருபோதும் களங்கமடைவதில்லை[6].(39) நற்பண்புகளைக் கொண்ட மனைவியர், செழிப்பின் தேவியை {ஸ்ரீதேவியைப்} போல எப்போதும் மதிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுக் கல்விமான்களால் துதிக்கப்படவும் வேண்டும்” என்றான் {விஷ்வாவசு}”.(40)

ரிஷிமொழி கேட்பதன் பலன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 06-(ஏதத்க்ரந்தஷ்ரவணபலம்)-மகிழ்ச்சியாக நாட்டை ஆண்ட ஜனமேஜயன்; ஹரிவம்சம் படிப்பது, கேட்பது, உரைப்பது ஆகியவற்றின் பலன்களைச் சொன்ன சௌதி…

சௌதி {சௌனகரிடம்}, “விஸ்வாவசுவால் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டவனும், பயனற்ற கவலையால் நிறைந்த மனத்தைக் கொண்டவனுமான ஜனமேஜயன் வபுஷ்டமையிடம் தணிவடைந்து, பாவத்தை விலக்குவதற்காக ஓர் அறச்சடங்கைச் செய்தான்.(1) பக்திமானான ஜனமேஜயன், தன் மன உளைச்சலை விரட்டி, புகழை அடைய விரும்பி, வபுஷ்டமையை மகிழ்வித்துத் தன் நாட்டை ஆண்டான்.(2) அவன், பிராமணர்களை வழிபடுவது, வேள்விகளைச் செய்வது, கொடைகளை அளிப்பது ஆகியவற்றைத் தவிர்க்காமல், வபுஷ்டமாவை வசைபாடாமல் தன் நாட்டைக் கவனித்துக் கொண்டான்.(3) மன்னன் ஜனமேஜயன், பெருந்தவங்களைச் செய்த ரிஷிகள், “விதியின் இயக்கத்தை வெல்ல இயலாது” என்று சொன்னதை உறுதியான இதயத்துடன் தொடர்ந்து தியானித்துத் தன் கோபத்தைக் கைவிட்டான்.(4)

மஹாரிஷியின் {வியாசரின்} இந்தப் பெருஞ்சொற்களைப் படிப்பவன், மனிதர்களால் புகழத்தக்கவனாகி போதுமான அளவுக்கு நீண்ட காலம் வாழ்ந்து, (பிறருக்கு) அடைதற்கரிதான பயன்களை அடைகிறான்.(5) பாவத்தை அழிக்கும் இந்தச் சொற்களைப் படிக்கும் மனிதன், பாவங்களில் இருந்து விடுபட்டு, நூறு வேள்விகளைச் செய்த பலனையும், விருப்பத்திற்குரியவை பலவற்றையும் அடைந்து, நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.(6) 

மலர்களில் இருந்து உண்டாகும் கனிகளை விளைவித்து, அந்தக் கனிகளில் இருந்தே மீண்டும் உதிக்கும் மரத்தைப் போலவே அந்த மஹாரிஷியிடம் இருந்து வெளிப்பட்ட சொற்கள் அவனை {மகாரிஷியின் சொற்களைப் படிப்பவனை} செழிப்படையச் செய்யும்.(7) மகனற்ற மனிதன், வலிமைமிக்க மகன்களையும், உலகில் நிலையிழந்த மனிதன், மீண்டும் தன் நிலையையும் இந்தச் சொற்களின் மூலம் அடைகிறான். பிணிகளில் இருந்தும், தளைகளில் இருந்தும் அவன் விடுபடுகிறான். அவன், சாதனைகளையும், பல மங்கலப்பணிகளையும் செய்வான்.(8)

ரிஷியின் இந்த மங்கலச் சொற்களைக் கேட்பதன் மூலம், கன்னிகையர் தங்கள் இதயம் விரும்பும் கணவர்களை அடைந்து, வலிமைமிக்கவர்களும், சாதனைகளைச் செய்யக்கூடியவர்களும், பகைவரைக் கலங்கடிக்கக் கூடியவர்களுமான மகன்களைப் பெறுவார்கள்.(9) இந்தச் சொற்களைக் கேட்கும் க்ஷத்திரியர்கள் உலகையும், தங்கள் பகைவரையும் வென்று, ஏராளமான செல்வத்தை அடைவார்கள்; வைசியர்கள் போதுமான உடைமைகளை அடைவார்கள்; சூத்திரர்கள் சிறந்த நிலையை அடைவார்கள்.(10)

உமக்குச் சொல்லப்படும் இந்த அத்தியாயத்தைப் பிராமணர்களின் வட்டத்தில் நீர் நினைவுகூர்ந்தால், பொறுமையையும், அமைதியையும் நாடி உலகில் மகிழ்ச்சியாகத் திரிவீர்.(11) இவ்வாறே நான், அற்புதச் செயல்களைச் செய்யும் பெரும் முனிவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் ஒழுக்கத்தையும் மீண்டும் சொன்னேன். இன்னும் நீர் கேட்கவிரும்புவதென்ன என்பதை எனக்குச் சொல்வீராக. அதை நான் உமக்கு விளக்கிச் சொல்கிறேன்” என்றார் {சௌதி}[1].(12,13)

கடவுளின் இயற்பண்புகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 07-(புஷ்கரப்ராதுர்பாவ:)கடவுளின் குணங்கள் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; வைசம்பாயனரின் விடை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}[1], “ஓ! யோகத்தை அறிந்தவர்களின் தலைவரே, தேவர்களும், ரிஷிகளும் அண்டத்தில் எவ்வாறு பிறந்தனர் என்பதையும், பெருங்கடலின் நீரில் கிடந்து உறங்கும் தாமரை உந்தியோனின் {பத்மநாபனின்} சக்தியையும் எனக்கு விரிவாக விளக்கிச் சொல்வீராக. அவனது மகிமைகளைக் கேட்டு நான் இன்னும் தணிவடையவில்லை.(1,2) புருஷோத்தமன் எவ்வளவு காலம் அங்கே கிடந்தான்? காலத்தின் பிறப்புக்குக் காரணனான அவன் அந்த நேரத்தில் ஏன் உறங்கிக் கொண்டிருந்தான்?(3) தேவர்களின் தெய்வீக மன்னனான அவன் எவ்வளவு காலத்திற்குப் பிறகு விழித்தான்? விழித்தெழுந்ததும் அவன் ஏன் இந்த அண்டத்தைப் படைத்தான்?{4} ஓ! பெரும் முனிவரே, முன்பிருந்த குடிமுதல்வர்கள் யாவர்? அந்த நித்திய புருஷன் ஏன் உலகங்களைப் படைத்தான்?{5}ஓ! முனிவரே, முன்பு அசைவனவும், அசையாதனவும், தேவர்கள், அசுரர்கள், பாம்புகள், ராட்சசர்கள், காற்று, நெருப்பு, வானம், பூமி ஆகியவையும் அழிந்த போது, பெருஞ்சக்திவாய்ந்தவனும், தேவர்களின் ஆசானும், பெரும்பூதங்களின் மன்னனுமான அந்தத் தலைவன், பூதங்கள் அனைத்தும் எதனுள் மூழ்கியிருந்ததோ அந்தப் பரந்து விரிந்த ஒரே பெருங்கடலில் எவ்வாறு உறங்கிக் கிடந்தான்?{6-8}(4-8) ஓ! பிராமணரே, நான் உமது புகலிடத்தை நாடியிருக்கிறேன் என்பதால் நாராயணனின் மகிமைகளை நிச்சயம் நீர் எனக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.(9) ஓ! மதிப்புமிக்க ஐயா, பக்திமான்களால் புகழத்தக்க அந்தப் பெருந்தேவனின் கடந்த கால, எதிர்கால அவதாரங்களை எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(10)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! குரு குலத்தின் பாவமற்ற வழித்தோன்றலே, நாராயணனின் மகிமைபொருந்திய செயல்பாடுகளைக் கேட்கும் ஆவல் கொண்ட நீ உண்மையில் உன் குலத்துக்குத் தகுந்தவனே.(11) ஓ! மன்னா, தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தி குறித்து ஸ்ருதிகளில் பதியப்பட்டவாறே முதல்வர்களும், புராதனர்களுமான தேவர்களிடம் கேட்ட பிராமணர்களிடம் இருந்து நாங்கள் அறிந்தவற்றை உள்ளபடியே கேட்பாயாக.(12) ஓ! பாரதா, பராசரரின் மகனும், எழில்மிகு ஆசானும், பிருஹஸ்பதியைப் போன்று சக்திவாய்ந்தவருமான துவைபாயனர் {வியாசர்}, மனத்தைக் குவித்து {தியானித்து} தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தியைக் கண்டு அதை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.{13} நான் ஏற்கனவே கேட்டதை உள்ளபடியே உனக்கு விளக்கிச் சொல்கிறேன். நான் ரிஷியாக இருந்தாலும் என்னால் அதை முழுமையாக அறிய இயலவில்லை.{14}(13,14) ஓ! மன்னா, அண்டத்தைப் படைத்த படைப்பாளனாலும் முழுமையாக அறிய முடியாத பெரும்புருஷன் நாராயணனை வேறு எவரால் அறிந்து கொள்ள முடியும்?(15)

ஓ! பாவமற்றவனே, அனைத்துடனும் அடையாளங் காணப்படுபவனும், கோட்பாடுகளின் பிறப்பிடமுமான அண்டத்தின் படைப்பாளனாலும், பெரும் ரிஷிகளாலும், தேவர்களாலும் பெரும்புதிராகக் கருதப்படுவதை உண்மையில் நான் கேட்டிருக்கிறேன்.{16} ஆன்ம ஞானத்தை அறிந்தவர்கள் அவனையே தியானிக்கிறார்கள். அவனே கர்மத்தின் திறன்மிகுந்த காரணனாகவும், தேவர்களில் தலைமைத் தேவனாகவும், எவராலும் காணப்படாதவனாகவும் இருக்கிறான்.{17} அவன் தொடக்கமும், முடிவும் அற்றவனாவான். மஹாரிஷிகள் அறிய முனையும் நித்திய உண்மை அவனே ஆவான். தேவர்களின் ஞானமாக இருப்பவனும், வேதங்களை நன்கறிந்தோரால் தூய அறிவாக அறியப்படுபவனும் அவனே.{18} புலன் நுகர் பொருட்களைப் படைப்பவனும், ஹிரண்யகர்ப்பனாக இருந்து பூதங்களையும் படைப்பவனும் அவனே. புத்தியும், மனமும், க்ஷேத்ரக்ஞனும், மகிமையின் கோட்பாடும், புருஷனும், பரமாத்மாவும் அவனே.{19} அனைத்துக்கும் சாட்சியான காலமாகவும், எதனிலும் சார்பற்றவனாகவும் இருப்பவன் அவனே.{20} ஐந்து முக்கிய மூச்சுகளாகவும் {பிரதான வாயுக்களாகவும்}, அவற்றின் செயல்பாட்டுக்குக் காரணனாகவும், உண்மையானவனாகவும், சிதைவற்றவனாகவும் இருப்பவன் அவனே.{21} நம் செயல்பாடுகளுக்குக் காரணனாகவும், நாம் செய்ய வேண்டியதையும், செய்யக்கூடாததையும் வகுப்பவனாகவும் இருப்பவன் அவனே.{22} அவனை நாம் அனைத்து வழிமுறைகளினாலும் நாடவும், {அவனைக் குறித்துப்} பேசவும், {அவனைக் குறித்துக்} கேட்கவும் வேண்டும்.{23} சொர்க்கமாகவும், முக்தியாகவும், பல்வேறு மாற்றங்களாகவும், புதிர் நிறைந்த உலகமாகவும், நமது ஆசானாகவும் இருப்பவன் அவனே. நாராயணனைக் குறித்தே நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன்.{24} ஓ! மன்னா, வாய்மை, பொய்ம்மை, செயல், விளைவு, கடந்தகாலம், எதிர்காலம், அசைவன, அசையாதன, நித்தியமானவை என மூவுலகங்களிலும் இருக்கும் அனைத்தும் தாமரை உந்தி படைத்த தலைவனான அந்தப் பெரும்புருஷனிடமிருந்தே வெளிப்பட்டன” என்றார் {வைசம்பாயனர்}[2].{25}(16-25)

யுகங்களின் கால அளவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 08-க்ருதாதியுகபரிமாணம்)-யுகங்களின் கால அளவைச் சொன்ன வைசம்பாயனர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! ஜனமேஜயா, சத்திய யுகம் நாலாயிரம் {4000} ஆண்டுகள் கால அளவைக் கொண்டது என்று கல்விமான்கள் விளக்கியிருக்கின்றனர்[1]. தொடக்கத்திலும், முடிவிலும் நேரும் ஒவ்வொரு யுகசந்திப்பு காலமும் நானூறு ஆண்டுகள் என ஒதுக்கப்பட்டிருக்கின்றன.(1) அந்தக் காலத்தில் அறம் நான்கு கால்களையும், பாவம் ஒரு காலையும் கொண்டிருந்தன. மனிதர்கள், தங்கள் கடமைகளை நோற்றவாறே வேள்விகளைச் செய்து வந்தார்கள். அந்த யுகத்தில் பிராமணர்கள் தங்கள் கடமைகளைச் செய்தார்கள், மன்னர்கள் தங்கள் கடமைகளைப் பின்பற்றினார்கள், வைசியர்கள் வேளாண் பணியில் ஈடுபட்டனர். சூத்திரர்கள் (பிறருக்குத்) தொண்டு புரிந்தார்கள்.(2,3) நல்லியல்பின் குணமான {சத்வ குணமான} வாய்மையும், அறமும் தழைத்திருந்தன. மக்கள் நல்லோரைப் பின்பற்றும் வகையில் பிறரின் போதனைகளைப் பெற்றனர்.(4) ஓ! பாரதா, அறம்சார்ந்த மனம் கொண்டவர்களாக இருந்தாலும், இழிந்த பிறப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும் கிருத யுகத்தில் மனிதர்களின் ஒழுக்கம் இவ்வாறே இருந்தது.(5)திரேதா யுகத்தின் கால அளவு மூவாயிரம் {3000} ஆண்டுகளும், அதன் தொடக்க, முடிவு காலங்கள் {சந்திக்காலங்கள்} முன்னூறு வருடங்களும் ஆகும்.(6) அந்தக் காலத்தில் அறம் மூன்று கால்களையும், பாவம் மூன்று கால்களையும் கொண்டிருந்தன. வாய்மையும், நல்லியல்பின் குணமும் {சத்வ குணமும்} கிருத யுகத்தைப் போலவே தொடர்ந்திருந்தன. மனித குலம், அறச்செயல்களின் பலன்களை விரும்பி கெட்டுப் போனது. அதன்தொடர்ச்சியாக நால்வகையினரின் {நான்கு வர்ணத்தாரின்} அறச்சடங்குகள் சீர்குலைந்து அவர்கள் பலவீனமடைந்தார்கள். இவ்வாறே, ஓ! மன்னா, தேவர்களால் விதிக்கப்பட்டபடி திரேதா யுகத்தின் பணி உனக்கு விளக்கப்பட்டது. இனி துவாபரத்தின் பணியைக் கேட்பாயாக.(7-9)

ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, துவாபரத்தின் கால அளவு இரண்டாயிரம் ஆண்டுகள் நீண்டதாகும், அதன் சந்திக் காலங்கள் இரண்டில் ஒவ்வொன்றும் இருநூறு ஆண்டுகளைக் கொண்டனவாகும்.(10) அந்தக் காலத்தில் பிராமண ஞானிகள் தன்னலங் கொண்டவர்களாகவும், ரஜஸ் குணத்தால் (தன்னை மையப்படுத்தும் போக்கால்) பீடிக்கப்பட்டவர்களாகவும், வஞ்சகர்களாகவும், இழிந்த மனம் படைத்தவர்களாகவும், இயல்பில் பிறழ்வு கொண்டவர்களாகவும் பிறந்தார்கள். அறம் இரண்டு கால்களையும், பாவம் மூன்று கால்களையும் கொண்டிருந்ததால் நித்திய அறத்தின் பாலங்கள் படிப்படியாக வக்கிரமடைந்தன.(11,12) உண்மையான பிராமணத்தன்மை மறைந்தது, கடவுள் மீதான நம்பிக்கை தகர்ந்தது, விரதம், நோன்புகள், அறச்சடங்குகள் ஆகியன கைவிடப்பட்டன.(13)

கலியுகத்தின் கால அளவு ஆயிரமாண்டுகளாகவும், சந்திக்காலங்கள் இரண்டில் ஒவ்வொன்றும் நூறு வருடங்களைக் கொண்டனவாகவும் இருக்கும்.(14) இந்தக்காலத்தில் அறம் ஒற்றைக் காலையும், பாவம் நான்கு கால்களையும் கொண்டிருக்கும். மனிதர்கள் காமம் {ஆசை} நிறைந்தவர்களாகவும், தமஸ் குணத்தால் (ஒழுங்கற்ற போக்கால்) பீடிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். எவரும் நோன்பு பயிலமாட்டார்கள், எவரும் பக்திமானாக {நல்லோனாக} நடந்து கொள்ள மாட்டார்கள், எவரும் உண்மை பேச மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகவோ, பிரம்மவாதியாகவோ இருப்பான். ஒவ்வொருவனும் தான் என்ற அகந்தை கொண்டவனாகவும், பற்றுணர்வு {பாசம்} அற்றவனாகவும் இருப்பான். விப்ரர்கள் சூத்திரர்களைப் போல நடந்து கொள்வார்கள், சூத்திரர்கள் பிராமணர்களின் குண இயல்புகளைக் கொண்டிருப்பார்கள்.(15-17) கலியுகத்தில் மக்கள் ஆசிரமங்களின் வரம்புகளை மீறி, கண்டபடி கலவி புரிவதன் மூலம் சந்ததிகளைப் பெருக்குவார்கள், அறியக்கூடாத பெண்களை அறிவார்கள்.(18)

இவ்வாறே, ஓ! ஜனமேஜயா, பனிரெண்டாயிரம் {12000} வருடங்கள் ஒரு யுகமாகவும் {யுகசுழற்சியாகவும்}, எழுபத்தோரு யுகங்கள் {யுகசுழற்சிகள்} ஒரு மன்வந்தரமாகவும் அமைகின்றன.(19) ஒரு யுகசுழற்சி நிறைவடையும் நேரத்தில் எவரும் மூன்று வேதங்களில் ஐயங்கொள்ள மாட்டார்கள். பனிரெண்டாயிரம் தேவ வருடங்கள் ஒரு யுகமாக அமைவதாகக் கல்விமான்கள் கருதுகிறார்கள். அத்தகைய ஆயிரம் யுகங்கள் பிரம்மனின் ஒரு நாளாக அமைகின்றன.(20)

ஓ! பாரதா, இந்த நாள் கடந்ததும், பெரும்பூதங்களின் தலைவனான தாமரை உந்தி படைத்த {பத்மநாபப்} பெருந்தேவனானவன், பிராமணர்கள், தைத்தியர்கள், தானவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், அப்சர்கள், தேவரிஷிகள் {தெய்வீக முனிவர்கள்}, பிரம்மரிஷிகள் {பிராமண முனிவர்கள்}, ராஜரிஷிகள் {அரசமுனிகள்}, ஆகியோரின் உடல்களும், பாம்புகள், மலைகள், ஆறுகள், விலங்குகள், பறவைகள், மான்கள் ஆகியவற்றின் உடல்களும், பிற உயிரினங்களின் உடல்களும் சிதைவடைவதை சாட்சியாகக் காண்பான். அப்போது உலகை அழிக்கும் தன் புத்தியைப் பயன்படுத்தி அண்டத்திற்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் பயங்கரம் நிறைந்த செயல்களைச் செய்வான்.(21-25) அவன், சூரியனின் வடிவில் உயிரினங்கள் அனைத்தின் பார்வையைப் பறிப்பான், காற்றின் வடிவில் அவற்றின் உயிர் மூச்சுகளைப் பறிப்பான், நெருப்பின் வடிவில் அவன் உலகங்கள் அனைத்தையும் எரிப்பான், மேகத்தின் வடிவில் அவன் சாதகமற்ற பெருமழையை மீண்டும் மீண்டும் பொழிவான்” என்றார் {வைசம்பாயனர்}.(26)

ஒற்றைப் பெருங்கடலாக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 09-(ஏகார்ணவவிதி꞉)-ஒற்றைப் பெருங்கடலில் நாராயணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஏழு வடிவங்களைக் கொண்டவனும், யோகியுமான நாராயணன், நெருப்பின் வடிவை ஏற்று எரியும் தழல்களைக் கொண்டு பெருங்கடல்களை வற்ற செய்வான்.{1} ஆறுகள், பெருங்கடல்களின் வடிவில் உள்ள ஆசைகள் அனைத்தையும், மலைகளின் வடிவில் இருக்கும் அவற்றின் சக்திகளையும் தன் சக்தியால் அழிப்பான்.{2} திரளாகவும் {ஸ்தூலமாகவும்}, நுட்பமாகவும் {சூக்ஷுமமாகவும்} உள்ள இரண்டையும் அவன் அழிப்பான். அந்த இரண்டின் வேராக இருக்கும் பிரம்மத்தில் அனைத்தையும் நிலைநிறுத்தி மீண்டும் அண்டத்தைப் படைப்பதற்காகக் குணங்கள் அனைத்தையும் வற்ற செய்வான்.{3} விளைவுகளை உண்டாக்கும் காரணியான பிரம்மத்தில் இருக்கும் சிறப்பை அவன் உயிரினங்களுக்குக் கொடுப்பான். அந்த நேரத்தில் அவன் இவை அனைத்தையும் அழிப்பான்.{4} ஹரியானவன், காற்றைப் போலச் சக்தி நிறைந்தவனாக இருப்பினும், மொத்த அண்டத்தையும் வென்று, ஐந்து உயிர் மூச்சுகளையும், ஐம்புலன்களையும் மேல்நோக்கி இழுப்பான்.{5}

அதன்பிறகு, தேவர்களின் ஐம்புலன்களும், பிற உயிரினங்களின் ஐம்புலன்களும், அவற்றின் பொருள்களான {புலன்நுகர் பொருட்களான} மணம் {வாசனை}, உடல் முதலியவையும் (தங்கள் இருப்புக்காக) பூமியை அடையும்.{6}(1-6) சுவையின் புலனான நாக்கும், அதன் பொருளான சாறும் நீருக்குச் செல்லும். பார்வையின் புலனான கண்ணும், அதன் பொருளான நிறமும், ஒளியுடல்களிடம் {ஜோதிகளிடம்} செல்லும்.{7} தீண்டலின் புலனான தோலும், அதன் பொருளான தீண்டலும், உயிர் மூச்சும், அதன் பணியும், இயக்கமும் காற்றிடம் செல்லும். மேலும் இவை அனைத்தும் சரடைப் போல இருக்கும் ரிஷிகேசனிடம் நிலைத்திருக்கும்.{8}(7,8) அனைத்தையும் அறிந்தவனான தலைவன், அண்டச் சரடில் உள்ள நுட்பமான திறன்கள் {ஆற்றல்கள்}, புலன்கள், அதன் பொருள்கள் ஆகியவை சீரான நிலையில் தேவர்களிடம் நிறைந்திருக்கும் வகையில் அவை யாவற்றையும் காற்றின் மூலம் ஈர்ப்பான்.{9} அப்போது, நிறம், தீண்டல் முதலியவற்றின் தொடர்பால் உண்டாவதும், அண்டத்தின் காரணமாக இருப்பதுமான பயங்கரம் நிறைந்த சம்வர்த்தக நெருப்பானது, நூறு தழல்களுடன் கூடியதாக மொத்த உலகையும் எரிக்கும்.{10} அந்த நெருப்பானது, மலைகள், மரங்கள், சோலைகள், கொடிகள், கொப்புகள், தெய்வீகத் தேர்கள் {விமானங்கள்}, நகரங்கள், ஆசிரமங்கள் {முனிவர்களின் குடில்கள்}, தெய்வீகக் கட்டடங்கள், பிற வசிப்பிடங்கள் ஆகியவற்றைச் சாம்பலாக்கிய பிறகு, உலகின் ஆசானான ஹரி, செயலெனும் நீரால் அதை {அந்த சம்வர்த்தக நெருப்பை} அணைப்பான்.{11,12}

பிறகு, ஆயிரங்கண்களைக் கொண்டவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான கிருஷ்ணன், பெரும் மேகத்தின் வடிவை ஏற்றுத் தூய நீரால் பூமியை நிறைவடையச் செய்வான்.{13} உயர்ந்ததும், மங்கலமானதும், புனிதமானதும், இனிமையானதும், அமுதத்தைப் போன்றதுமான நீரால் பூமியானது பெரிதும் அமைதியடைந்திருக்கும் போது,{14} மலைகளும், மரங்களும் நீருக்கடியில் கிடக்கும்போது, மேகங்கள் நீருண்டவையாக இருக்கும்போது,{15} பூமியானது ஒரே பரப்பிலான நீராக {ஒற்றைப் பெருங்கடலாக} மாறி உயிரினங்களேதும் அற்றதாகியிருக்கும்போது,{16} சூரியனும், ஆகாயமும், உயிரினங்களும் இல்லாத நுட்பமான இடத்தில் கிடக்கும் ரிஷிகேசனில் பெரும்பூதங்கள் அனைத்தும் மூழ்கியிருக்கும்.{17}(9-17) இவ்வாறு அளவற்ற புத்தியைக் கொண்ட அந்த நித்திய புருஷன், மொத்த படைப்பையும் வற்ற செய்து, எரித்துக் கலங்கடித்துப் பருகிய பிறகு, தன் புராதன வடிவில் மட்டுமே நீடித்திருப்பான். அனைத்தையும் மறைக்கும் பெருங்கடலில் அந்தப் பெரும் யோகியானவன், யோகத் துயிலில் கிடக்கும்போது, நித்தியமாக நிலைத்திருக்கும் பூதங்கள் அனைத்தும் அந்தத் தூய பிரம்மத்துடன் ஐக்கியமாகிக் கிடக்கும்.{18} வெளிப்படாத புருஷனானவன், அந்த ஒற்றைப் பெருங்கடலில் {ஏகார்ணவத்தில்} ஆயிரம் அயுதா ஆண்டுகள் {அயுதாநாம் ஸஹஸ்ராணி} கிடக்கும்போது, அவனை எவராலும் வெளிப்படையாக உணர முடியாது” என்றார் {வைசம்பாயனர்}{19}.(18,19)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “நீர் விளக்கிய ஒற்றைப் பெருங்கடல் யாது? இந்தப் புருஷன் எவன்? யோகம் யாது? ஒரு யோகியானவன் எவன்?” என்று கேட்டான்.(20)

வைசம்பாயனர், “தலைவன் அனைத்தையும் ஒற்றைப் பெருங்கடலாக {ஏகார்ணவமாக} {எவ்வளவு காலத்தில்} மாற்றுவான் என்பதை எவ்வளவு காலம் காத்திருந்தாலும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்த நேரத்தில் தலைவனே அனைத்தையும் அளப்பான், அனைத்தையும் காண்பான், அனைத்தையும் அறிவான்; வேறு எதுவும் {எவருக்கும்} புலப்படாது.{21} தலைவனானவன் {இறைவனானவன்}, வானம், பூமி, காற்று, பூதங்கள் ஆகியவற்றைத் தன் புத்தியால் ஊடுருவியும், தேவர்களின் தலைவனும், மனோ ஆற்றல்களுடன் கூடியவனுமான பிரம்மனைத் தன்னில் மூழ்கச் செய்தும், தன் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்திக் கொண்டும் தண்ணீரில் உறங்கிக் கொண்டிருப்பான்” என்றார் {வைசம்பாயனர்}.{22}(21,22)

நான் நாராயணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 10-(ஏகார்ணவே பகவந்மார்கண்டேயஸம்வாத꞉)-நாராயணனின் வயிற்றுக்குள் இருந்து வெளிப்பட்ட மார்க்கண்டேயர்; ஒற்றைப் பெருங்கடலையும், சிறுவனையும் கண்டு கலங்கியது; மார்க்கண்டேயருக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இவ்வாறு அனைத்தும் ஒற்றைப் பெருங்கடலாக மாற்றப்பட்டதும், பெருஞ்சிறப்புவாய்ந்த தலைவன் ஹரி, பொருள் காரணமாக அமைந்திருந்த அண்டத்திற்கு அழிவை ஏற்படுத்தித் தூய புத்தியாக நிலைத்திருக்கிறான்.{1,2} ரஜஸ் குணத்திற்கு அப்பாற்பட்டவனும், நித்தியனெனக் கல்விமான்களால் சொல்லப்படும் பெரியவனுமான நாராயணன், தன் நனவால் மறைக்கப்பட்டவனாக, ரஜஸ் குணம், பூதங்கள் ஆகியவற்றின் பயனாக இருக்கும் கடக்கப்பட முடியாத பெருங்கடலுக்குள் மூன்று யுகங்கள் உறங்கிக் கிடக்கிறான்.{3,4} தலை, பாதங்கள் முதலியவற்றைக் கொண்ட புருஷனை யோகத்தாலும், வேள்விகளாலும் அடையலாம், ஆனால் மஹாபுருஷன் அவனிடம் இருந்து வேறுபட்டவனாவான். இந்தத் தூய புத்தி அனைத்திலும் கிடக்கிறது.{5}

தலைவன் தன் வாயில் {முகத்தில்} இருந்து பிரம்மனையும், சாமம் ஓதுபவர்களையும், தன் கரங்களில் இருந்து ஹோதாக்களையும், ஆத்வர்யு புரோஹிதர்களையும், படைத்தான்.{6} அதன்பிறகு, மித்ரனையும், வருணனையும், வேதம் ஓதுபவர்களையும், ஸம்பிரஸ்தாரரையும், பிரதிஷ்டாதாரரையும் படைத்தான்.{7} அவன் தன் வயிற்றில் இருந்து பிரதிஹர்தாரரையும், போதாரரையும் படைத்தான். அவன் தன் தொடைகள் இரண்டில் இருந்து அத்யபகரையும், நேஷ்டாரரையும் படைத்தான்.{8} தன் கைகளில் இருந்து அக்நீதரரையும், ஸுப்ரஹ்மண்யரையும், தன் தோள்களில் இருந்து கிராவாரரையும், உந்நேதாரரையும் படைத்தான்.{9} இவ்வாறே தலைவன் திறன்மிக்க இந்தப் பதினாறு வேள்விப் புரோகிதர்களையும் படைத்தான். தலைவன் வேதங்களில் பரமாத்மாவாக அறியப்படுகிறான்.{10} வேள்விகளின் மூலம் ஒருவன் அவனை அடையலாம். வேதங்கள், உபநிஷத்கள், வேள்விகள் ஆகியவையே அவனை அடைவதற்கான வழிமுறைகளாகச் சொல்லப்படுகின்றன.{11} தலைவன் தூய புத்தியின் வடிவில் நிலைத்திருக்கும்போது ஓர் அற்புத நிகழ்வு நடைபெறுகிறது. அதை மார்க்கண்டேயர் கண்டதாக நாம் கேள்விப்படுகிறோம்[1].{12}(1-12)மஹாமுனி மார்க்கண்டேயர், தலைவன் கொடுத்த வரத்தின் மூலமும், தம் சக்தியின் மூலமும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். அவர் களைப்படைந்தபோது {அண்டம் அழிந்தபோது}, அவனது வயிற்றுப் பொந்துக்குள் வாழ்ந்திருந்தார்.{13} அங்கே அவர் பெயர்களை உரைத்து {நாம ஜபம் செய்து}, ஹோமத்தையும், கடுந்தவங்களையும் செய்தார். அதன்பிறகு புனிதப் பயணமாகப் புறப்பட்டு உலகின் புனிதத்தலங்கள், ஆசிரமங்கள், பல்வேறு நாடுகள், நகரங்கள் என அனைத்துக்கும் சென்றார்.{14} இவ்வாறு பயணித்த அவர் படிப்படியாகத் தலைவனின் வாயை விட்டு வெளியே வந்தார்; ஆனால் தேவனின் மாயசக்தியில் மூழ்கிய அவரால் தாம் வெளியே வந்துவிட்டோம் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.{15,16}(13-16)

இவ்வாறு அவனது வாயில் இருந்து வெளியே வந்த மார்க்கண்டேயர், அறியாமை இருளில் அனைத்தும் மறைக்கப்பட்டதும், தூய புத்தியாக இருக்கும் பிரம்மத்தை ஒற்றைப் பெருங்கடலாகக் கண்டார்.{17} அதைக் கண்ட அவர் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டவராகத் தமது உயிர் குறித்துக் கவலை கொண்டார்.{18} ஆனால் அவர், தூய புத்தியைக் கண்டு நிறைவடைந்து, பேராச்சரியத்தில் நிறைந்தார். குறிப்பாகவோ, மொத்தமாகவோ அனைத்தையும் பகுத்துப் பார்க்க இயலாமல் அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்,{19} “இஃது என் எண்ணமா? மயக்கமா? கனவா? இவையனைத்தும் எனக்கு வேறு ஒளியில் தெரிகின்றனவே, ஒன்றும் உண்மையாகத் தெரியவில்லையே.{20} உண்மையானது, பற்றுகளும், அறியாமையின் துன்பமும் அற்றது. அஃது ஒருபோதும் இத்தகைய மனோ விருப்பத்தில் தோன்றாது. சந்திரனும், சூரியனும், காற்றும், மலைகளும், பூமியும் இல்லாத இந்த இடம் யாது?” என்று நினைத்தார்.{21}

அவர் இவ்வாறு நினைத்தபோது, நீருண்ட மேகம் போல இருந்த அந்தப் பெருங்கடலில், மலை போன்ற புருஷன் உறங்கிக் கிடப்பதைக் கண்டார். அந்தப் புருஷன் தன் சூரியப் பிரகாசத்தால் உலகங்களைப் பீடித்துக் கொண்டிருந்தான்.{22} அவன் தன்னைத் தாங்கிக் கொள்ளும் ஈர்ப்பு விசைக்காக விழித்திருந்து ஒரு பாம்பைப் போல மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.{23}(17-23)

அந்தப் பெரும் முனிவர் மார்க்கண்டேயர், “இவன் யாராக இருக்கக்கூடும்?” என்று ஆவல் கொண்டவராகத் தலைவனை அணுகி படிப்படியாக அவனது வயிற்றுப் பொந்துக்குள் நுழைந்தார்.{24} அங்கே நுழைந்ததும், தாம் கண்டது கனவே என்ற உறுதியான நம்பிக்கையுடன் முன்பு போலவே அங்கே திரியத் தொடங்கினார்.{25} முன்பு மார்க்கண்டேயர் புனிதத் தலங்கள் அனைத்துக்கும் சென்று பூமியின் பரப்பில் திரிந்து வந்ததைப் போலவே இப்போதும் அங்கெல்லாம் சென்றார்.{26} அவர், தேவனின் வயிற்றுப் பொந்துக்குள் ஏராளமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்தோர் நூற்றுக்கணக்கானோரையும், பிராமணர்களையும், நான்கு ஆசிரமக் கடமைகளை நோற்பவர்களும், நல்ல வழிகளைப் பின்பற்றுபவர்களும், நல்லொழுக்கம் கொண்டவர்களுமான பிற வர்ணத்தாரையும் தமது யோக சக்தியின் மூலம் கண்டார்.{27,28} நுண்ணறிவுமிக்க மார்க்கண்டேயரால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்கள் அங்கே பயணித்தாலும் அந்தப் பொந்தின் எல்லையை அடைய முடியவில்லை.{29}(24-29)

பிறகு ஒரு காலத்தில் மீண்டும் மார்க்கண்டேயர் (தலைவனின்) வாயில் இருந்து வெளியே வந்து, ஒரு சிறுவன் ஆலமரத்தின் கிளையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.{30} ஒற்றைப் பெருங்கடலால் சூழப்பட்டிருந்த அந்தக் காட்டின் உட்பகுதி பனியால் மறைக்கப்பட்டிருந்ததால் எதுவும் புலப்படவில்லை; பூமி நால்வகை உயிரினங்கள் அற்றதாக இருந்தது, அனைத்தையும் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது.{31,32} இதைக் கண்ட மார்க்கண்டேயர் ஆவலில் நிறைந்தாலும், ஆயிரஞ்சூரியர்களின் பிரகாசத்தைக் கொண்ட அந்தச் சிறுவனின் அருகே செல்ல இயலவில்லை. தலைவனின் மாயைக்கு அஞ்சிய அவர் தனிமையில் நீரில் நின்றவாறே,{33} “இதை நான் ஏற்கனவே கண்டேனில்லையா?” என்று நினைத்தார். பிறகு அவர், அமைதியானதும், எல்லையற்றதுமான அந்தப் பெருங்கடலுக்குள் இறங்கி, அச்சத்துடன் களைப்படைந்தும் அங்கே ஓய்வெடுக்கத் தொடங்கினார்[2].{34}(30-34)அப்போது அன்னத்தின் வடிவை ஏற்றிருந்த தலைவன் புருஷோத்தமன், தன் யோகசக்தியின் மூலம் சிறுவனாகி, மேக முழக்கம் போன்ற குரலில் பேசத் தொடங்கினான்.(35) தலைவன், “ஓ! மகனே, ஓ! வீரர்களிலும், தவசிகளிலும் முதன்மையானவனே, ஓ! மார்க்கண்டேயா, நீ சிறுவனாக இருக்கிறாய். நீ உழைப்பால் பெரிதும் களைப்படைந்திருக்கிறாய். என் அருகில் வா, அச்சம் வேண்டாம்” என்றான்.(36)

மார்க்கண்டேயர், “பல்லாயிரம் ஆண்டுகள் கொண்ட என் வயதையும், தவத்தையும் அழித்து, பெயர் சொல்லியும் அழைத்து என்னை இவ்வாறு பீடிப்பவன் {துன்புறுத்துபவன்} எவன்?{37} அண்டத்தின் தலைவனான பிரம்மன் நீண்ட வாழ்நாளைக் கொண்டவனாக என்னை நியமித்திருக்கும்போது, தேவர்களில் எவரும் என்னை இவ்வாறு அழைப்பது தகாது.{38} என் தவச் சக்தியால் என்னுடைய தலை அழியா தன்மையை அடைந்துள்ளது. உயிரை விட விரும்பும் எந்த மனிதன் என் பெயரைச் சொல்லி அழைத்து மரணத்தைக் காணும் விருப்பத்தை உணர்ந்தான்?” என்று கேட்டார்”.{39}(37-39)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பெரும் முனிவர் மார்க்கண்டேயர் கோபத்தில் இவ்வாறு தம்மை வெளிப்படுத்திக் கொண்டபோது, தலைவன் சினத்தில் நிறைந்திருந்த அவரிடம் மீண்டும் பேசினான்.(40)

தலைவன், “ஓ! மகனே, நான் உன் தந்தையும், ஆசானும், புராதன புருஷனும், உனக்கு நீண்ட வாழ்நாளை அருளியவனுமான ரிஷிகேசன் ஆவேன். நீ ஏன் என்னை அணுகாதிருக்கிறாய்?(41) முன்பு உன் தந்தை ஹிரண்யகர்ப்பன், கடுந்தவங்களைச் செய்து ஒரு மகனைப் பெறுவதற்காக என்னைத் துதித்தான்.{42} எல்லையற்ற வாழ்நாளையும், நெருப்பைப் போன்ற பிரகாசத்தையும், பயங்கரத் தலையையும் கொண்ட மஹாரிஷியாக உன்னைப் படைத்து என் விருப்பத்துடன் நான் உன்னை அவனுக்கு அளித்தேன்.{43} நான் யோகத்தில் ஈடுபட்டு, எங்கும் பரந்த பெருங்கடலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது என் உற்றார் உறவினனைத் தவிர வேறு எவனாலும் என்னைக் காண இயலாது” என்றான்”.{44}(42-44)

வைசம்பாயனர், “தமது பெயரையும், குலத்தையும் கேட்டவரும், நீண்ட ஆயுளைக் கொண்டவரும், உலகால் துதிக்கப்படுபவரும், பெரும் தவசியுமான மார்க்கண்டேயர், மகிழ்ச்சிமிக்க இதயத்துடனும், ஆச்சரியத்தால் விரிந்த விழிகளுடனும், தலைக்கு மேல் தமது கரங்களைக் குவித்துக் குனிந்த தலையுடன் தலைவனை வணங்கினார்.(45,46)

மார்க்கண்டேயர், “ஓ! பாவமற்றவனே, சிறுவனின் வடிவை ஏற்று ஒற்றைப் பெருங்கடலில் கிடக்கும் உன் மாயா சக்தியை உண்மையில் நான் அறிய விரும்புகிறேன்.{47} ஓ! தலைவா, இஃது என்ன வடிவம்? நீ இவ்வுலகில் என்ன பெயரால் அழைக்கப்படுகிறாய்? இங்கே ஒரு பூதமும் இல்லையே. நீயே பெரும்பூதம் என நினைக்கிறேன்” என்றார்.{48}(47,48)

தலைவன், “நானே நாராயணன், பிரம்மமும், உயிரினங்கள் அனைத்தின் பிறப்புக் காரணனனும் நானே. பூதங்கள் அனைத்தையும் படைப்பவன் நானே, அவற்றை அழிப்பவனும் நானே.{49} இந்திரனும், பருவகாலங்களுக்கு மத்தியில் வருடம், யுகங்களின் யுகம், யுகங்களின் சுழற்சி ஆகியவையும் நானே.{50} உயிரினங்கள் மற்றும் தேவர்களின் மொத்தக் கூட்டமும் நானே. பாம்புகளில் சேஷன் நானே, பறவைகளில் கருடன் நானே,{51} ஆயிரம் தலைகளையும், ஆயிரம் கால்களையும் கொண்டவன் நான், நானே ஆதித்யன், நானே வேள்வி புருஷன், நானே வேள்வி, நானே ஆகுதிகளைச் சுமக்கும் அக்னி, என்னை நித்தியனாக அறிவாயாக.{52} உலகில் கடுந்தவங்களைப் பயின்று தங்கள் ஆன்மாக்களைத் தூய்மையடைச் செய்தவர்களும், பல பிறவிகளாக இதைப் பயின்று என் அறிவுப் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்களுமான இருபிறப்பாளர்களில் நான் பிராமண யதியாக இருக்கிறேன்.{53} தூய ஞானமும், அண்டத்தின் ஆன்மாவும், யோகிகளில் முதன்மையானவனும் நானே. பூதங்கள் அனைத்தையும் அழிப்பவனும், அண்டத்தின் கதியும் நானே.{54} கர்மம் நானே, சக்தி நானே, உயிரினங்களிடம் அறத்தை எடுத்து வைப்பவன் நானே. எனக்கென்று கர்மமேதும் இல்லை.{55} உயிரினங்களின் நித்திய ஆன்மா நானே. பிரகிருதி நானே, புருஷன் நானே, அழிவற்ற நித்தியமான பரமன் நானே.{56} அனைத்து வகைகளையும் பின்பற்றுவோரின் கடமையாகவும், தவமாகவும் இருப்பவன் நானே. பாற்கடலின் தலைமை தேவனான ஹயசிரன் நானே.{57}

வாய்மை நானே, உண்மை நானே, பெரியவன் நானே, பிரஜாபதி நானே. வேள்விகளால் துதிக்கப்படத்தகுந்த பெரும் நிலையாகவும், சாங்கியமாகவும், யோகமாகவும், கல்வியின் தலைவனாகவும் அறியப்படுபவன் நானே.{58} ஒளி, காற்று, பூமி, வானம், நீர், பெருங்கடல், விண்மீன்கள், பத்துத்திக்குகளும் நானே. வருடம், சோமன், இந்திரன், சூரியன்,{59} பாற்கடல், பிற பெருங்கடல்கள், காட்டுத்தீ, சம்வர்த்தக நெருப்பும் நானே. நீராலான ஹவியைப் பருகுபவன் நானே. புராதனனும், பெரியவனும், எதிர்காலமுமான நான், அனைத்தின் பிறப்பிடமாக அறியப்படுகிறேன். இவ்வுலகில் உன்னால் காணப்படும், கேட்கப்படும் யாவும் நானே.{60-62} ஓ! மார்க்கண்டேயா, இந்த அண்டத்தை இதற்கு முன்பே நான் படைத்திருக்கிறேன். இதோ பார், இன்று நான் அதைப் படைக்கப் போகிறேன், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு யுக சுழற்சியிலும் நான் இதைச் செய்வேன்.{63} இவை யாவற்றையும் புரிந்து கொண்டு, அறத்தையும், என் ஆன்ம சக்திகளையும் அடையும் ஆவலில் என் வயிற்றுப் பொந்துக்குள் மகிழ்ச்சியாகத் திரிவாயாக.{64} பிரம்மனுடன், முனிவர்களும், தேவர்களும் என்னுடலில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, என்னை வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும், யோகமாகவும், வெற்றிகொள்ளப்படாதவனாகவும் அறிவாயாக.{65} மூவுலகங்களின் பெரும்புதிரான ஓம் எனும் மந்திரமும், வாழ்வின் மூன்று நோக்கங்களை அளிக்கும் என அறியப்படும் புனித காயத்ரி மந்திரமும் நானே” என்றான் {நாராயணன்}”.{66}(49-66)

வைசம்பாயனர், “அண்ட வடிவை ஏற்ற தலைவன் மார்க்கண்டேய ரிஷியைத் தன் வாய் வழியாக வயிற்றுக்குள் நுழையச் செய்ததைப் பெரும் முனிவர் வியாசர் வேதங்களிலும், புராணங்களிலும் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.{67} முனிவர்களில் முதன்மையான மார்க்கண்டேயர், வெளிப்படாத பரமாத்மாவைத் தனிப்பட்ட முறையில் கண்டு, பராமனந்தத்தில் திளைக்கவும், வயிற்றின் பொந்துக்குள் நுழைந்து அங்கே மகிழ்ச்சியுடன் ஓய்ந்திருந்தார்.{68} நித்திய தலைவனான பரமாத்மா, பல்வேறு வடிவங்களை ஏற்று, சூரியனும், சந்திரனும் அற்ற பெருங்கடலில் திரிந்து படிப்படியாக உலகை உண்டாக்கி, அழிவுக்கான நேரம் வரும்போது அதை அழிக்கிறான்” என்றார் {வைசம்பாயனர்}.{69}(67-69)

பொற்றாமரை மலர்ச்சி | பவிஷ்ய பர்வம் பகுதி – 11-(மஹாபத்மோத்பத்தி꞉)-வசிஷ்டரின் பிறப்பு; ஆகாயம், ஒலி, காற்று ஆகியன படைக்கப்பட்டது; பொற்றாமரை படைப்பு….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தலைவன் {நாராயணன்}, பிராமண முனிவரான ஆபவ வசிஷ்டராகப் பிறப்பெடுத்து, தன் உடலெனும் கொள்கலத்தை மறைத்துத் தவம் பயிலத் தொடங்கினான்.(1) அதன் பிறகு, அண்டத்தின் ஆன்மாவும், அளவற்ற சக்திகளைக் கொண்டவருமான பெரும் வசிஷ்டர், ஐம்பூதங்களையும், பிற உயிரினங்களையும் படைக்க நினைத்தார்.{2}(ஆபம் என்பது நீர்நிலைகளைக் குறிக்கும். அவற்றுக்குத் தலைவன் வருணன் என்று அழைக்கப்படுகிறான். அதன் காரணமாவே அவனுடைய மகனாகிய வசிஷ்டருக்கு ஆபவர் என்ற பெயர் ஏற்பட்டது.)அண்டமானது, வானம் இல்லாமல் நுட்பமாகி நீரில் மூழ்கியிருந்தபோது, வசிஷ்டர், தவப் பயிற்சிகளால் அறிவுப்புலன்களைப் பெருகச் செய்து அந்த நீரிலேயே பலகாலத்தைச் செலவழித்தார்.{3} நீரில் வாழ்ந்து வந்த அவர், பெருங்கடலைக் கலங்கடித்து இரண்டாம் அலையுடன் நுட்பமான ஆகாயமாக எழுந்தார்.{4} பிறகு அவர் காற்றால் உண்டாக்கப்பட்ட ஒலியாக அந்த ஆகாயத்தில் தோன்றினார். அந்தப் பெரும் வசிஷ்டர் காற்றைப் போலவே தாமும் வளரத் தொடங்கினார்.{5} பெருகி வந்ததும், பலமிக்கதுமான காற்றால் பெருங்கடல் கலங்கடிக்கப்பட்டபோது அலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.{6} பெருங்கடலின் நீர் கலங்கடிக்கப்பட்ட போது, பெருஞ்சக்திவாய்ந்த தலைவன், இருள்வழிகளில் நெருப்பைப் போலத் தோன்றினான்.{7}

அந்த நெருப்பானது, பெருங்கடலின் நீரை வற்றச் செய்தது; அதனிலிருந்து வானம் போன்ற துளையொன்று எழுந்தது.{8} அவனது சக்தியில் இருந்து அமுதம் போன்ற தூய நீர் உண்டானது. அதனில் இருந்து ஆகாயமும், அதனில் இருந்து காற்றும், அதனில் இருந்து ஆர்ப்பரிக்கும் அலைகளும் பூமியில் உண்டாகின. பெரும்பூதங்களின் பிறப்பிடமான தலைவன் அதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தான்.{9,10} பல வடிவங்களைக் கொண்ட தலைவன், பூதங்களைக் கண்டு, அண்டத்தின் படைப்பிற்கு அவற்றின் தேவையை அறிந்து, பிரம்மனுக்கான பொருள்களைக் குறித்து நினைக்கத் தொடங்கினான். இவ்வாறே ஒரு யுகத்தின் முடிவிலும், பல யுகங்களின் முடிவுகளிலும் பிரம்மன் தன் பிறப்பை அடைந்தான்.{11,12}

பிரம்மன், ஞானம் கொண்டவன், அவன் யோகிகளில் முதன்மையானவன், அவன் அண்டத்தின் ஆன்மாவைக் காண்பவன், உலகின் இருபிறப்பாளர்களில் அவன் புலனடக்கம் கொண்ட பிராமணன் ஆவான்.{13} யோகத்தை அறிந்த தலைவன் பிரம்மன், வேதங்களையும், அண்டத்தின் நோக்கங்களையும் படைப்பதில் துல்லிய ஆன்ம சக்திகளைக் கொண்டதும், அனைவராலும் வழிபடப்படுவதுமான பிரம்மத்தை ஈடுபடுத்துகிறான்.{14}

அப்போது நித்தியனான ஹரி, உயிரினங்களைப் படைப்பதற்காகப் பெருங்கடலில் கிடந்து, பல்வேறு வழிமுறைகளில் விளையாடி பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.{15} அதன் பிறகு அவன், சூரியப் பிரகாசத்துடன் கூடியதும், ஆயிரம் இதழ்களைக் கொண்டதுமான ஒரு தங்கத் தாமரையைத் தன் உந்தியில் இருந்து படைத்தான்.{16} பெரியவனான அந்த அச்யுதனின் மேனியில் இருந்து உண்டான அந்தத் தாமரையானது, நறுமணத்துடனும், எரியும் தழல்களைப் போன்ற பிரகாசத்துடனும், கூதிர் காலச் சூரியனைப் போலத் தெளிந்த ஒளியுடனும் ஒளிர்ந்து கொண்டிருந்தது” என்றார் {வைசாம்பாயனர்}.(2-17)

புஷ்கரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 12-(ஸர்வபூதோத்பத்தி꞉)-தாமரையில் பிரம்மனை நிறுவிய நாராயணன்; தாமரையில் வளரும் உறுதியான வேர்களாக மலைகள்….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அப்போது, நித்தியனான ஹரி, பெரும்பிரகாசம் கொண்டதும், பூமியின் குணங்களையும், அடையாளங்களையும் கொண்டதும், பல யோஜனைகள் நீளம் பரந்ததுமான அந்தத் தங்கத் தாமரையில் பிரம்மனை வைத்தான்.{1} யோகிகளில் முதன்மையானவனும், உயிரினங்கள் அனைத்தின் மனமாக இருப்பவனும், அவற்றின் படைப்பாளனுமான அவன், அனைத்தையும் நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான்.{2} புராணங்களை நன்கறிந்த பெரும் முனிவர்கள், நாராயணனின் மேனியில் தோன்றி, பூமியை ஆதரிப்பது இந்தத் தாமரை என்று விளக்குகின்றனர்.{3}(1-3)

அந்தத் தாமரையின் இருப்பிடமாகப் பூமாதேவி இருக்கிறாள், அதனுள் வளரும் உறுதியான வேர்களாக தெய்வீக மலைகள் இருக்கின்றன.{4} இமயம், மேரு, நீலம், நிஷதம், கைலாசம், கிரௌஞ்சம், கந்தமாதனம்,{5} புனிதமான திரிஷிரம், அழகிய மந்தரம், உதயம், கந்தரம், விந்தியம், அஸ்தம் ஆகிய இந்த மலைகள் விருப்பத்திற்குரிய பொருட்களை அளிப்பனவாகவும், தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோரின் ஆசிரமங்களை உள்ளடக்கியவையாகவும் இருக்கின்றன.{6,7} இந்த மலைகளை இடையிடையே கொண்ட நாடானது ஜம்பூத்வீபம் என்றழைக்கப்படுகிறது. வேள்விகளைச் செய்வோர் இங்கே வேள்விகளைச் செய்கின்றனர்.{8} வேள்விகளில் இருந்து வெளியே வருபவையும், அமுத நீரைக் கொண்டவையுமான ஓடைகள், நூற்றுக்கணக்கான புனிதத் தலங்களைக் கொண்ட சரிதாதேவி {ஆறு} ஆகின்றன.{9} அந்தத் தாமரையைச் சுற்றிலும் எண்ணற்ற இழைகளாக அமைந்திருப்பன தாதுக்களின் மலைகள் எனப் பூமியில் அறியப்படுகின்றன{10}.(4-10)

ஓ! மன்னா, அந்தத் தாமரையின் மேல் இதழ்கள், மிலேச்சர்களுக்குச் சொந்தமான மலைப் பாதைகளையும், கடக்கப்பட முடியாத பாதைகளையும் கொண்டவையாக இருக்கின்றன.{11} கீழ் இதழ்கள், பெரும் தைத்தியர்கள், உரகர்கள் ஆகியோருக்குச் சொந்தமான பாதாள லோகத்தைக் கொண்டவையாக இருக்கின்றன.{12} அதற்கும் கீழுள்ள பகுதி உகதம் அல்லது பெருந்துன்பங்களின் சுரங்கம் என்றழைக்கப்படுகிறது. கொடுங்குற்றங்களைச் செய்தவர்கள் அங்கே மூழ்குகிறார்கள்.{13}(11-13) இந்தத் தாமரையின் நுனியில் அமைந்துள்ள பரந்த நீர்ப் பரப்பானது அனைத்துப் பக்கங்களிலும் (நிலத்தைக் கொண்ட) பொருங்கடலாகும்.(14)

இந்தப் பெருந்தாமரையானது, நாராயணனின் இதயத்தைப் போன்றே உண்டாக்கப்பட்டதால் அது புஷ்கரம் என்றழைக்கப்படுகிறது.{15} இதன் காரணமாகவே, இந்தத் தாமரையின் தோற்றத்தை நன்கறிந்த பழங்காலப் புராதன முனிவர்கள் பெரும் வேள்விகளைச் செய்யும்போது, வேள்விக்களத்தில் தாமரையின் வடிவிலான பீடத்தை அமைக்கின்றனர்.{16}

இவ்வகையிலேயே தலைவன், மலைகளையும், ஆறுகளையும், தேவர்களையும், அண்டத்தின் பொருள்களையும் படைப்பவனான பிரம்மனைத் தாமரையில் படைத்தான்.{17} அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், சுயம்புவுமான அந்தப் பெருந்தேவன், பிரம்மனைப் படைத்த போது, பெருங்கடலெனும் படுக்கையில் கிடந்து அண்டமெனும் நித்திய தாமரையைப் படைத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.{18}(15-18)

மதுகைடபர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 13-(மதுகைடபவரப்ரதாநம்)-மது கைடபர்களின் தோற்றமும், அழிவும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஆயிரம் யுகங்களின் சுழற்சிக்குப் பிறகு சத்ய யுகத்தின் தொடக்கத்தில் தாமஸ குணம் (ஒழுங்கற்ற போக்கு) நிலவியது. இந்த நேரத்தில் படைப்புக்குத் தடையாக இருக்கும் பேரசுரன் மது தன் பிறப்பை அடைந்தான்.{1} சில காலம் கழித்து, ரஜஸ குணத்தின் மூலம் மதுவுக்கு உதவி செய்வதற்காகக் கைடபன் என்ற இரண்டாம் அசுரன் படைக்கப்பட்டான்.{2} மது, கைடபன் என்ற பெயர்களைக் கொண்டவர்களும், பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்களும், முறையே ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களைக் கொண்டவர்களுமான அந்தப் பேரசுரர்கள் இருவரும் ஒற்றைப் பெருங்கடலின் நீரைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.{3} அவர்கள் கருநீலத்திலும், சிவப்பு நிறத்திலும் ஆடைகள் உடுத்தியிருந்தனர், எரியும் வெண்பற்களைக் கொண்டிருந்தனர், செருக்கில் மிதந்திருந்த அவர்கள் ஒளிரும் கேயூரங்களையும், கங்கணங்களையும் அணிந்திருந்தனர்.{4} 

அவர்கள் பயங்கரமான தாமிரக் கண்களையும், பரந்த மார்பையும், நீண்ட கைகளையும், பெரிய தலைகளையும் கொண்டிருந்தனர். கவசங்களால் மறைக்கப்பட்டிருந்த அந்த அசுரர்கள் இருவரும், அசையாத மலைகள் இரண்டைப் போலத் தெரிந்தனர்.{5} அவர்களுடைய நிறம் நீல மேகங்களைப் போல இருந்தது, அவர்களின் முகங்கள் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்தன, அவர்களுடைய கரங்களின் ஒளியானது மின்னலுடன் கூடிய தாமிர மேகங்களைப் போலத் தெரிந்தது.{6} அவர்கள் தங்கள் மயிர் மற்றும் பாதங்களின் அசைவாலேயே பெருங்கடலைப் பெருகச் செய்பவர்களைப் போலவும், பகைவரைக் கொல்பவனும், அங்கே கிடப்பவனுமான ஹரியை நடுங்கச் செய்பவர்கள் போலவும் பயங்கரமாகத் தெரிந்தனர்.{7}

அண்டத்தின் வாயாக இருந்த அந்தத் தாமரையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, யோகிகளில் முதன்மையானவனும், ஒளிரும் உடலுடன் கூடியவனுமான நித்திய பிரம்மனைக் கண்டனர்.{8} அந்தத் தாமரையில், நாராயணனின் ஆணையின் பேரில் உயிரினங்களையும், தேவர்களையும், அண்டத்தையும், மனத்தில் பிறக்கும் முனிவர்களின் மகன்களையும் பிரம்மன் படைப்பதைக் கண்டனர்.{9} அசுரர்களில் சிறந்தவர்களும், கோபத்தால் எரிந்த குருதி சிவப்புடைய கண்களுடன் கூடியவர்களுமான மதுவும், கைடபனும் பிரம்மனுடன் போரிட விரும்பி, அவனிடம்,{10} “கருப்பு மகுடம் அணிந்தவனும், நான்கு முகங்களைக் கொண்டவனுமான நீ யார்? இந்தத் தாமரையில் கவலையில்லாமல் வாழ்ந்து மூடத்தனத்தால் எங்களை நீ அவமதித்து வருகிறாய். வா, எங்களுடன் போரிடுவாயாக. நாங்கள் பெரும் வீரர்களாக இருக்கிறோம். உன்னால் போரில் எங்கள் முன்பு நிற்க இயலாது.{11} நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உன்னை இங்கே அனுப்பிவைத்தவன் எவன்? உன்னைப் படைத்தவனும், பாதுகாப்பவனும் எவன்? எந்தப் பெயரால் மனிதர்கள் உன்னை அழைக்கின்றனர்?” என்று கேட்டனர்.{12}(1-12)

பிரம்மன், “இவ்வுலகில் அறியப்படாதவனிடம் இருந்து நான் உதித்து, யோகம் பயின்று வருகிறேன். இதை நீங்கள் அறியமாட்டீரா?” என்று கேட்டான்.(13)

மதுவும், கைடபனும், “ஓ! பெரும் முனிவனே, இவ்வுலகில் எங்களைவிடப் பெரியவன் வேறு எவனும் இல்லை. நாங்கள் இந்த அண்டத்தை ரஜஸ், மற்றும் தமஸ் குணங்களால் மறைத்திருக்கிறோம். நாங்களும் அவ்விரு குணங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறோம்,{14} தவசிகளின் முன்பு துன்பத்தில் தவிப்பவர்களைப் போலவும், பக்திமான்களின் முன்பு வஞ்சகம் நிறைந்தவர்களாகவும் தோன்றுவோம். உயிரினங்களால் அடைய முடியாத எல்லையில் இருப்பவர்களாக எங்களை அறிவாயாக.{15} நாங்கள் உலகைக் கலங்கடிப்பதற்காக ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறோம். செல்வம், விருப்பத்திற்குரிய பொருட்கள், வேள்விகள், அனைத்து வகையான கொடைகள் ஆகியன எங்கள் கட்டுப்பட்டில் இருக்கின்றன.{16} மகிழ்ச்சி, இன்பம், செழிப்பு, முன்னேற்றம், அறம் ஆகியவற்றுக்காக மக்கள் விரும்பும் எதையும் எங்களிடம் இருந்து அவர்கள் பெறலாம்” என்றனர்{17}.(14-17)

பிரம்மன், “என் மனத்தைக் குவித்து யோகிகளில் முதன்மையானவனை உண்மையில் அறிந்து, ஏற்கனவே அறிந்து வைத்திருந்த சத்வ குணத்தில் நான் வாழ்கிறேன்.{18} யோகிகளில் நித்திய சத்வ குணமாக இருப்பவனும், ரஜஸ், தமஸ் குணங்களைப் படைத்தவனும், உயிரினங்கள் பிறப்பதற்குக் காரணனும், சத்வ குணம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தும் எவனிடம் இருந்து உண்டாகுமோ அந்தத் தலைவனிடம் நீங்கள் போரில் ஈடுபட்டால் அவன் உங்களை வீழ்த்துவான்” என்றான்”{19,20}.(18-20)

வைசம்பாயனர், “அதன்பிறகு, பல யோஜனைகள் நீண்ட படுக்கையில் கிடந்த தாமரை உந்தி படைத்த ரிஷிகேசனை வணங்கி மதுவும், கைடபனும்,(21) “ஓ! புருஷோத்தமா, நீயே இந்த அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணன் என்பதை நாங்கள் அறிய வந்தோம்; உன்னை வணங்குவதற்குரிய எங்கள் ஒழுக்கமாக இதை அறிவாயாக.(22) ஓ! தலைவா, துல்லிய பார்வையைக் கொண்ட கல்விமான்கள் உன்னை அறிந்து வைத்துள்ள படியே நித்தியமான உண்மையான ஈஷ்வரனாக உன்னைக் காண நாங்களும் விரும்புகிறோம்.{23} ஓ! பகைவரைக் கொல்பவனே, நாங்கள் உன்னிடம் இருந்து வரம்பெற விரும்புகிறோம். ஓ! தலைவா, உன்னைக் காண்பதே நிச்சய வெற்றியைத் தரும். உன்னை நாங்கள் வணங்குகிறோம்” என்றனர்.{24}(23,24)

தலைவன், “ஓ! அசுரர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் விரும்பும் வரத்தை விரைந்து கேட்பீராக. உங்களுங்கு ஒதுக்கப்பட்ட காலத்தை விட அதிகக் காலம் வாழ விரும்புகிறீர்களா? ஓ! பெருஞ்சக்திவாய்ந்தவர்களான மது கைடபர்களே நீங்கள் முயன்றதை அடைந்துவிட்டீர்கள்.{25} உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுகிறவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். எனவே, என்னால் மட்டுமே நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்ற வரத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.{26}(25,26)

மதுவும், கைடபனும், “ஓ! தேவர்களின் மன்னா, எவனும் மரணிக்காத இடத்தில் நாங்கள் கொல்லப்பட வேண்டும். (அதன் பிறகு) நாங்கள் உன் மகன்களாக வேண்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரம்” என்று கேட்டனர்.(27)

தலைவன், “எதிர்கால யுகத்தில் நீங்கள் என் மகன்களாகப் பிறப்பீர்கள். நான் உங்களிடம் வாய்மையைப் பேசுகிறேன், இதில் நீங்கள் ஐயங்கொள்ள வேண்டியதில்லை” என்றான்”[1].(28)வைசம்பாயனர், “அண்டத்தைத் தாங்கும் நித்திய தலைவன், ரஜஸ், தமஸ் குணங்களால் உலகைப் பாதுகாக்கவல்லவர்களான மது, கைடபன் என்ற அந்த அசுரர்களில் முதன்மையானோர் இருவருக்கும் இந்த வரத்தை அளித்துவிட்டு, தன் தொடைகளில் வைத்து அவர்களைக் கொன்றான்” என்றார்.(29)

பிரம்மனின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 14-(பிரஹ்மணோ மாநஸபுத்ராணாமுத்பத்தி)-பிரம்மனின் மானஸபுத்ரர்கள்; படைப்பு குறித்த விரிவான வர்ணனை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “நீண்ட கைகளைக் கொண்டவனும், பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனுமான பிரம்மன், அந்தத் தாமரையில் அமர்ந்து, தன் கைகளை உயர்த்தியபடி கடுந்தவத்தைச் செய்தான்.{1} தன் சொந்த பிரகாசத்தில் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த யோகியான பிரம்மன், ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியனைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.{2}

நித்தியனும், அழிவற்றவனுமான தலைவன் நாராயணன், பெருஞ்சக்திவாய்ந்த, சிறப்புமிக்க யோக ஆசானாகவும், பிரம்மவாதிகளில் முதன்மையானவரும், சாங்கிய தத்துவத்தை எடுத்துரைப்பவருமான கபிலராகவும் தன் உடலை இரண்டாகப் பகுத்துக் கொண்டு பிரம்மனை அணுகிறான்.{3} அளவற்ற ஆற்றலைக் கொண்டவரும், பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவரும், பிரம்மவாதிகளில் முதன்மையானவரும், க்ஷத்திரியர்களைப் போன்ற பணிகளில் ஈடுபடுபவரும், பெருஞ்சக்திவாய்ந்த யோகாசாரியரும், சாங்கியத்தை எடுத்துரைப்பவருமான கபிலரும் பிரம்மனின் அருகில் வந்து,{4,5} “ஓ! பிரம்மா, உயிரினங்கள் அனைத்தையும் ஆள்பவனாகவும், அண்டத்தின் ஆன்மாவாகவும் இருக்கும் நீ உயிரினங்களின் பெருக்கத்தில் உறுதியுள்ளவனாகவும், அண்டத்தை ஆதரிப்பவனாகவும், உலகத்தின் ஆசானாகவும், (எனவே) அனைவராலும் வழிபடத்தகுந்தவனாகவும் இருக்கிறாய்” என்றனர்.{6,7}(1-7)

அவர்களின் சொற்களைக் கேட்டு, பிரம்மஞானம் தொடர்பாக ஸ்ருதிகளில் கேட்டதைப் போன்ற மூன்று ஸ்லோகங்களைச் சொல்லி பிரம்மன் மூன்று உலகங்களையும் படைத்தான்.{8} தலைவன் பிரம்மன், மூவுலகங்களில் பூலோகத்தில் வசித்துக் கொண்டு, மனத்தில் பிறந்த நித்திய மகனைப் படைத்தான்.{9} மனத்தில் பிறந்த மகன், தான் பிறந்த உடனேயே பிரம்மனின் முன்பு நின்று, அவனிடம், “ஓ! தலைவா, நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? எனக்கு ஆணையிடுவாயாக” என்றான்.{10}

பிரம்மன், “ஓ! பெரும் மனம் கொண்டவனே, இந்தப் பிராமணர் கபிலரும், வரமளிக்கும் நாராயணனும் உன்னிடம் சொல்வதைச் செய்வாயாக” என்றான்”.{11}(8-11)

வைசம்பாயனர், “பிரம்மன் இதைச் சொன்னதும், மனத்தில் பிறந்த மகன் அவனிடம், “என் தந்தையை விடப் பெரியவன் வேறு எவன்?” என்று கேட்டான். அவன் மீண்டும் ஐயத்தால் பீடிக்கப்பட்டவனாகக் கைகளைக் கூப்பிக் கொண்டு,{12) “நான்உனக்குத் தொண்டு செய்யத் தயாராக இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும். நான் செய்ய வேண்டியதைச் செய்வேன்” என்றான்.{13}

யோகம் மற்றும் சாங்கியத்தின் பேராசிரியர்கள், “சிதைவில்லாத பிரம்மத்தின் பதினெட்டு வடிவங்களையும், நித்தியமான பெரும்பிரம்மத்தையும் நினைவுகூர்வாயாக” என்றனர். மனத்தில் பிறந்த மகன் இச்சொற்களைக் கேட்டுவிட்டு, வடக்கே சென்று ஞானத்தின் மூலம் பிரம்ம அறிவை அடைந்தான்.{14}(12-14)

அதன்பிறகு, உயர்ந்த மனம் கொண்ட தலைவன் பிரம்மன் இரண்டாவதாகப் புவர்லோகத்தைப் படைத்துவிட்டு, மீண்டும் தன் மனத்தில் பிறந்த மகனைப் படைத்தான்.{15} மனத்தில் பிறந்த மகன், பிரம்மனின் ஆணையின்படி, பெரும்பாட்டன்கள், யோகசாங்கிய ஆசான்கள் ஆகியோரின் முன்பு தோன்றி, “நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுவீராக” என்றான்.{16} அதன்பிறகு அவன் அந்த இரண்டு ஆசான்களிடம் போகவதி பகுதிக்குச் சென்று, அவர்களின் அருகில் காத்திருந்து பெரும்லோகத்தை அடைந்தான்.{17}(15-17)

தலைவன் பிரம்மன், மனத்தில் பிறந்த அந்த மகன் புறப்பட்டுச் சென்ற பிறகு, மூன்றாவதாக முக்தியை அடையவல்ல பூர்புவலோகத்தைப் படைத்து, மூன்றாவதாக மனத்தில் பிறந்த மகனைப் படைத்தான்.{18} அதன்பிறகு பிரம்மனால் ஆணையிடப்பட்ட மனத்தில் பிறந்த மகன் அவர்களின் முன்பு தோன்றி அவர்களின் அறத்தையும், இயக்கங்களையும் அறிந்து கொண்டான். இந்த மூவரும் உயரான்ம சம்புவின் மகன்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.{19}(18,19) தலைவன் நாராயணனும், தவசிகளின் தலைவரான கபிலரும் தங்களுடன் அந்த மூன்று மகன்களையும் தங்கள் உலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.(20)

அவர்கள் சென்ற பிறகு எப்போதும் நோன்புகளை நோற்கும் பிரம்மன் மீண்டும் கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.{21} தொடர்ந்து விடாமல் தனியாகத் தவம் செய்து கொண்டிருந்த தலைவன் பிரம்மன், தன்னுடைய பாதி உடலில் இருந்து அழகிய மனைவியைப் படைத்தான்.{22} பிரம்மன், உலகைப் படைக்கவல்லவளும், ஆன்ம சக்தி, பிரகாசம், தற்கட்டுப்பாடு ஆகியவற்றில் தனக்கு இணையானவளுமான அந்த மனைவியுடன் கலவி புரிந்து, தமஸ் குணத்தின் மூலம் ஊடுருவி, குடிமுதல்வர்கள், கடல்கள், ஆறுகள், வேதங்களின் தாயான புனித காயத்ரி மந்திரம், நான்கு வேதங்கள் ஆகியவற்றையும் படைத்தான்.{23,24} உலகின் படைப்பாளனான பெரும்பாட்டன் தன் பணியின் கருவிகளாக அண்டத்தின் தலைவர்களான மகன்களைப் படைத்தான். அந்தப் படைப்பில் இருந்து உலகங்கள் அனைத்தும் வெளிப்பட்டன.{26}(21-26)

அவன், ஆசிரமங்கள் அனைத்தையும் ஆதரிப்போரும், வரங்களை அளிப்போரும், பெருந்தவசிகளுமான விஷ்வேசன், தர்மன் ஆகிய இரு மகன்களை முதலில் படைத்தான், பிறகு,{27} தக்ஷன், மரீசி, அத்ரி, புலஸ்த்யர், புலஹர், கிரது, வஸிஷ்டர், கௌதமர், பிருகு, அங்கிரஸ் ஆகிய முனிவர்களையும், பிறரையும் படைத்தான்.{28} பிரம்மனால் படைக்கப்பட்ட மேற்கண்ட ரிஷிகளின் வழித்தோன்றல்களே அதர்வ வேதத்தின் பெரும் ரிஷிகளாக அறியப்பட்டனர்.{29} அதிதி, திதி, தநு, காலா, அதாயு, ஸிம்ஹிகை, முநி, பிரபோதை, ஸுரஸை, குரோதை, விநதை, கத்ரு ஆகிய பனிரெண்டு மகள்களையும், இருபத்தேழு நட்சத்திரங்களையும் தக்ஷன் பெற்றான்.{30,31} மரீசியின் மகனான கசியபர், தவத்தின் மூலம் சர்வ வல்லமை படைத்தவரானார். தக்ஷன் தன்னுடைய பனிரெண்டு கன்னிகையரை கசியபருக்குக் கொடுக்கச் சம்மதித்தான்.{32} ஓ! ஜனமேஜயா, பெரும் ரிஷியான தக்ஷன், ரோஹிணியையும், அறம் அளிக்கும் நட்சத்திரங்களையும் வசுக்களில் சோமனுக்கு அளித்தான்.{33}(27-33)

ஓ! பரதனின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, அறம்சார்ந்தவனான பிரம்மன், தேவர்களில் முதன்மையான தர்மனுக்குத் தான் ஏற்கனவே படைத்து வைத்திருந்த லக்ஷ்மி, கீர்த்தி, ஸாத்யை, எப்போதும் நலம் புரியும் விஷ்வை, மருத்வதி ஆகிய மிகச்சிறந்த ஐந்து கன்னிகையரைக் கொடுத்தான்.{34,35} முடிவில், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவளும், பிரம்மனின் பாதி உடலில் இருந்து படைக்கப்பட்டவளுமான பிரம்மனின் மனைவி, சுரபி என்ற பசுவின் வடிவை ஏற்று அவன் முன்னிலையில் தோன்றினாள்.{36} ஓ! பாரதா, படைப்பின் காரணத்தை அறிந்தவனும், உலகால் துதிக்கப்படுபவனுமான பிரம்மன், பசுக்களைப் படைப்பதற்காக அவளை அறிந்தான்.{37} இதன் மூலம் அவன், மாலைநேர மேகம் போன்ற சிவந்த வண்ணம் கொண்டவர்களும், தங்கள் பயங்கரப் பிரகாசத்தால் அனைத்தையும் எரிக்கவல்லவர்களும், பக்திமான்களும், பேருடல் படைத்தவர்களுமான ஏழு மகன்களைப் பெற்றான்.{38} அவர்கள் பிறந்த உடனேயே அழுது கொண்டே பெரும்பாட்டனிடம் ஓடியதால் அவர்கள் ருத்ரர்கள் என்ற பெயரைப் பெற்றார்கள்.{39} நிர்ருதி, ஸர்பன், அஜன், ஏகபாத், மிருகவ்யாதன், பிநாகி, தஹநன், ஈஷ்வரன்,{40} அஹிர்புத்ந்யன், வெல்லப்பட முடியாத கபாலி, பெருஞ்சக்திவாய்ந்த ஸேநாநி ஆகியோர் பதினோரு ருத்திரர்களாக அறியப்படுகிறார்கள்.{41}(34-41)

சுரபியானவள், காளைகளையும், வேளாண்மையில் வளராத மரங்கள், அவரைகள், மண், ஆடுகள், மிகச் சிறந்த அமுதம், மருத்துவம் சார்ந்த மூலிகைகள் ஆகியவற்றைப் பெற்றாள்.{42} தர்மன், சுரபியிடம் லக்ஷ்மி, காமா ஆகியோரையும், ஸாத்யாவிடம் ஸாத்யாவையும் பெற்றான்.{43} பிரபவன், சிவனன், ஈசானன், சுரபி, ஆரண்யன் (காடு), மருத்தன், விஷ்வாவசு, மஹிஷன், தநூஜன், விஜ்ஞாதன், மநஸன்,{44,45} மத்ஸரன், விபூதி ஆகியோரும் சுரபியின் மகன்களாக அறியப்படுகின்றனர். சாத்யர்களின் உலகில் வழிபடப்படும் சாத்யனும் அதைத் தொடர்ந்து வாசவனும் மலைகளையும், பாம்புகளையும், காளைகளையும் பெற்றனர்.{46,47} தர்மன் சுசாமையிடம் முறையாக, மருதேவன், துருவன், விஷ்வாவசு, தலைவன் சோமன், பர்வதன், யோகேந்திரன், வாயு, நிகிருதி ஆகியோரைப் பெற்றான்.{48} தர்மன் விஷ்வையிடம் விஷ்வதேவர்களைப் பெற்றான் என்று கேள்விப்படுகிறோம். பெருங்கரங்களைக் கொண்ட ஸுதர்மன், பெருஞ்சக்திவாய்ந்த ஷங்கபன், உக்தன், வபுஷ்மான், விஷ்வாவசு, சுபர்வன், பெருஞ்சிறப்புமிக்க விஷ்ணு, ஸ்கும்பு, சூரியனைப் போன்ற பெரும்பிரகாசம் கொண்ட ரிஷியின் மகனான ருரு ஆகியோர் சாக்ஷுஷ மனுவின் சந்ததிகளாகின்றனர்.{49-52} விஷ்வை விஷ்வதேவர்களைப் பெற்றாள். தர்மன் மருதவதியிடம் அக்னி, சாக்ஷன், ஹரி, ஜோதி, சாவித்ரி, மித்ரன், அமிருதன், பெருங்கரங்களைக் கொண்ட சங்ஷேபன், விரஜன், சுக்ரன், விஷ்வாவசு, விபாவசு, அஷ்மந்தன், சித்ரரஷ்மி, நிஜுதி, ஜயோனா அத்புதி, சாரித்ரன், பாஹுபன்னகன், பிறரின் பேராற்றலை வளர்க்கும் பிரஹத்பூதன் ஆகிய மருத்துகளைப் பெற்றான்.{53-56}(42-56)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கசியபர் அதிதியிடம், இந்திரன், விஷ்ணு, பகன், துவஷ்டா, வருணன், அங்ஷன், அரமன், ரவி, பிஷன், மிதரன், வரங்கொடுக்கும் மனு, இந்திரன் என்ற மிக முக்கியமான பனிரெண்டு ஆதித்யர்களைப் பெற்றார்.{57,58} ஆதித்யன் சரஸ்வதியிடம் ரூபன், பலன் என்ற மிக அழகிய மகன்கள் இருவரைப் பெற்றான். திதி தைத்தியர்களையும், தனு தானவர்களையும் பெற்றனர்.{59} தானவர்கள், சுரவையிடம் ஊர்வனவற்றையும், காலையிடம் காலகேய அசுரர்களையும், ராட்சசர்களையும் பெற்றனர்.{60} ஓ! பரதனின் வழித்தோன்றலே, அனயுஷா நோய்கள் அனைத்தையும், பேரிடர்களையும் பெற்றாள். கோள்களின் அன்னையான சிம்ஹிகை, கந்தர்வர்களைப் பெற்றாள், பிராதை அப்சரஸ்களையும், குரோதை கணங்கள், பிசாசங்கள், யக்ஷர்கள், குஹ்யர்களையும், சுரபி, நான்கு கால்களைக் கொண்ட விலங்குகள் அனைத்தையும் பெற்றனர். விந்தை அருணனையும், கருடனையும் பெற்றாள், கத்ரு பாம்புகள் அனைத்தையும் பெற்றாள்.{61-64}

ஓ! மன்னா, உயரான்ம பிரம்மன் தாமரையில் தோன்றியபோது விஷ்வதேவர்கள் இவ்வோறே தங்களைப் பெருக்கிக் கொண்டனர்.{65} தாமரையின் தோற்றம் குறித்த இந்தப் பழங்கதையைத் துவைபாயனரிடம் {வியாசரிடம்} இருந்து நாம் கேட்டோம். அந்தப் பெரும் ரிஷி தொடக்கம் முதல் முடிவு வரை அதை விவரித்தபோது பெரிதும் உயர்வாக மதித்துப் பேசினார்.{66} முதல் தாமரையின் தோற்றம் குறித்த இந்தக் கதையை எப்போதும் கவனத்துடன் படிக்கும் பெரும் மனிதன், இவ்வுலகில் துன்பம் அற்றவனாக, இம்மையில் பல்வேறு இன்பங்களை அனுபவித்து, மறுமையில் நித்திய அருளைப் பெறுவான்” என்றார் {வைசம்பாயனர்}”.(57-67)

ஜனமேஜயன் கேள்வி | பவிஷ்ய பர்வம் பகுதி – 15-(ஜநமேஜயப்ரஷ்ந꞉)-பிரம்ம ஞானம் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே, பெருமைமிக்கதும், சிறப்புமிக்கதுமான எங்கள் குல {வம்ச} விளக்கத்தை நான் கேட்டேன்.{1}

பல அறங்களையும், பல்வேறு சந்தங்களையும், தொடர்மொழிகளையும், குறுகியதாக இருந்தாலும் இனிய சொற்களையும் கொண்டிருந்தன, வாழ்வின் மூன்று நோக்கங்களைத் தரவல்லவையாகவும் அவை இருந்தன.{2,3}(1-3)

என் முன்னோர்கள், மன்னன் துரியோதனனுடன் உண்டான சச்சரவின் காரணமாகத் தங்கள் போட்டியாளர்களை வெல்வதற்காகவும், தங்கள் குல வழித்தோன்றல்களைக் கொல்வதற்காகவும், பிராமணர்களின் சக்தியையும், போர்வீரர்களின் ஆற்றலையும் அழிக்கத் தகுந்தவற்றைப் பயன்படுத்தவில்லை என நீர் விளக்கிச் சொன்னீர்.{4,5}

அந்தப் பயங்கரப் போரில் கொல்லப்பட்ட மன்னர்களின் வழித்தோன்றல்கள் தங்கள் தங்களுக்குரிய நாடுகளை அடைந்தனர் என்றும், தெய்வீகத் தலைவனின் உத்தரவைப் பின்பற்றுவதற்காகக் குருக்களின் மன்னன் உறுதியாக நிறுவப்பட்டான் என்றும் நீர் விளக்கிச் சொன்னீர்.{6}

ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, மூன்று வர்ணங்களின் கடமைகளையும், தெய்வக லோகத்தை ஒருவன் அடையக்கூடிய வழிமுறைகளையும் நீர் முறையாக விளக்கிச் சொன்னீர்; உயிரினங்களின் மீது கொண்ட கருணையால் நான்கு வர்ணங்களின் கடமைகளையும் நீர் பல வழிகளில் விளக்கிச் சொன்னீர்.{7,8}

கர்மத்தின் வீழ்ச்சியில் தெய்வீகம் ஆதிக்கம் செலுத்தும்போது சிலர் பிறப்பின் மூலம் இழிந்த நிலையை அடைகிறார்கள், சிலர் உயர்கிறார்கள் என்பதையும் விளக்கிச் சொன்னீர்.{9}

பணிவுடன் இருப்பதன் பயன்களைப் பல பகுதிகளாகப் பகுத்தும் சொன்னீர். கொடைகளின் பயன்கள், கர்மத்தின் பயன்கள் ஆகியவை தொடர்பாக நீர் சொன்ன சொற்கள் உண்மையில் இனிமையானவை.{10}

ஓ! மதிப்பிற்குரிய ஐயா, ஒரு தேவ நாளுக்குள் கூட {ஒரு வருடத்திற்குள் கூட} பாரதமென்னும் இந்தப் பெரும் வரலாற்றை என்னால் படிக்க முடியவில்லை.{11} ஆனால் ஐயா, பிரம்மத்துடன் ஐக்கியமாவதற்கான ஞானம் குறித்து உம்மிடம் சுருக்கமாகக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்” என்று கேட்டான்.{12}(4-12)

பரப்ரம்மம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 16-ஸாங்க்யயோகவிசார꞉)-பிரம்ம ஞானம் குறித்து விளக்கிச் சொன்ன வைசம்பாயனர்.

வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, “ஓ! மன்னா, உன்னுடைய ஐம்புலன்களையும் {பஞ்சேந்திரியங்களையும்} கட்டுப்படுத்தி, தூய மனத்துடனும், முழு மனத்தின் கவனத்துடனும் நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.{1} எவனைக் கர்மத்தின் மூலம் அடைய முடியாதோ, எவன் பிரம்ம ஞானத்தை அறிந்தவர்கள் முன் தோன்றுவானோ, எவன் செயல்களில் பற்றில்லாதவனோ, எவன் பிரம்மத்துடன் தொடர்புடையவனோ,{2} எவன் அண்டத்தின் வெளிப்படாத காரணனாக {அவ்யக்த காரணனாக} இருக்கிறானோ, எவன் நித்தியனோ, எவன் வடிவத்துடனும், வடிவம் இல்லாமலும் இருக்கிறானோ அவனை நிஷ்கள {பகுபடாத, தூய்மையான} புருஷன் என்று அறிவாயாக. ஆத்மாவில் இருந்து பெறப்படும் அகங்காரம் {தன்முனைப்பு}, இந்தப் புருஷனிலிருந்தே வருகிறது.{3}(1-3) அவன் தெய்வீக வடிவைக் கொண்டிருக்கிறான், அவன் புலன்நுகர் பொருட்களின் தலைவனாக இருக்கிறான், அவன் எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாகவும், நித்தியனாகவும், யுகங்களின் பிறப்பிடமாகவும்,{4} காலத்தின் மூன்று வடிவங்களாகவும், பிறப்பில்லாதவனாகவும், எங்கும் நீக்கமற சமமாக நிறைந்தவனாகவும் இருக்கிறான். நாராயணனைக் குறித்த அறிவைக் கொண்டவர்கள், வெளிப்படாதவனில் இருந்து தனித்தவனாக இவனை அறிகிறார்கள்.{5}

அவன் அனைத்தையும் புரிந்து கொள்கிறான், எங்கும் செல்பவனாக இருக்கிறான், எங்கும் தன் தலையைக் கொண்டிருக்கிறான், அனைத்தையும் காண்கிறான், அனைத்தையும் நோக்கித் தன் முகத்தைக் கொண்டிருக்கிறான்.{6} அனைத்தையும் கேட்கிறான், வெளியெங்கும் விரிந்திருக்கிறான். அவன் காரண, காரியங்களுக்குக் காரணனாகவும், வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும் இருக்கிறான், அவனுடைய நகர்வை எவராலும் காண முடிவதில்லை.{7}(4-7)

அவன் எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாகவும், வடிவமற்றவனாகவும் இருந்தாலும், வடிவத்தை ஏற்றுக் கொண்டு, தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, மரத்தில் நெருப்பைப் போல எங்கும் திரிந்து கொண்டிருக்கிறான்.{8} அவனே பரமேஷ்டி, அவனே பிரஜாபதி, அவனே உலகங்களின் தலைவனாகவும் இருக்கிறான். அவனுடைய இந்தப் பெயர் உண்மையில் பாடப்படுகிறது.{9} வெளிப்படாதவனான அவன், பிரம்மயோகத்தின் மூலம் வெளிப்படுகிறான். அஹங்காரமானது, நாராயணனில் இருந்து உண்டாகும் அறியாமையால் பெறப்படுகிறது.{10}(8-10)

சுயத்தின் நனவுடன் கூடிய இந்தப் புருஷன் பிரம்மமாக நிலைத்திருக்கிறான். அசைவன, அசையாதனவற்றை உள்ளடங்கிய உலகத்தின் தலைவனான அவன் பிரம்மன் என்று அழைக்கப்படுகிறான்.{11} எவன் இந்த அண்டத்தைப் படைத்தானோ, எவன் அனைத்துக்குப் பிறப்பிடமாக இருக்கிறானோ அந்தத் தலைவன், “நான் அனைத்தையும் படைப்பேன்” என்றான்.{12} பிரம்மன் இதைச் சொன்னபோது, இயற்கையில் இருந்து அங்காரத்தின் நனவு உண்டானது, இவ்வாறே மொத்த உலகமும் இருப்புக்குக் கொண்டு வரப்பட்டது.{13} ஆனால், உண்மையான, எல்லாம்வல்ல, குணங்களற்ற பிரம்மமானது, பிரம்மமாகவே நீடித்தது.{14} வெளிப்படாத பிரம்மத்தின் இயல்புத் தன்மைகளான நுட்பமான ஐந்து பூதங்களில் இருந்து வேதங்களும், அவற்றின் பல்வேறு கிளைகளும் வெளிப்பட்டன.{15}(11-15) அனைத்தையும் வெளிப்படுத்தும் பிரம்மத்தால் ஆணையிடப்படும் பிரம்மன், இயற்கையில் இருந்து ஒரு வடிவை ஏற்றுக் கொண்டு நீரைப் படைத்தான்.{16} அதன் பிறகு, ஈஷ்வரனின் ஆணையைப் பின்பற்றும் படைப்பாளர்களின் மத்தியில் ஏழாவது பிரம்மன், முன்பைப் போலவே காற்றைப் படைத்து, அதைத் தாங்கி தாத்ரி என்ற பெயரை ஏற்றான்.{17} முன்பு இந்த அண்டம் காற்றில் இருந்து உண்டாக்கப்பட்டு, நீரின் அடியில் மூழ்கியிருந்த போது, தார்ஜச தேவர்கள் அதை உயர்த்தியதால் மொத்த அண்டமும் வெளிப்பட்டது.{18} ஈஷ்வரன் தன் படைப்பை நிலைக்கச் செய்யப் பூமியை உண்டாக்க விரும்பியபோது, அவன் நீரின் ஒரு பகுதியை திடமான பொருளக மாற்றினான், எஞ்சியவை நீர்மமாகவே இருந்தன; அப்போது மக்கள் பூமியைக் கண்டார்கள்.{19}(16-19)

நீரானது ஒரு திடப் பொருளாக மாற்றப்பட்டதால் பூபுருஷன் எழுந்து பயங்கர ஒலியால் திசைகள் அனைத்தையும் நிறைத்து, “நான் நீருக்கு மேல் வாழ விரும்புகிறேன். நீரானது திடமாக மாற்றப்பட்டதால் நான் பீடிக்கப்பட்டுக் களைத்திருக்கிறேன். எனவே என்னை உயர்த்துவீராக” என்றான்.{20,21} அதன்பிறகு பூமியான பிருத்வி, உயிரினங்கள் அனைத்தையும் ஆதரித்து எங்கும் பரந்து விரிந்தவளாகச் சிறிது இடம்பெற விரும்பி, ஒரு வடிவை ஏற்று, “என்னை உயர்த்துவீராக” என்றாள்.{22} அந்த இனிய சொற்களைக் கேட்ட ஹரி, ஒரு பன்றியின் வடிவை ஏற்று, பெருங்கடலுக்குள் குதித்தான். அவன், நீரில் இருந்து பூமியை உயர்த்தும் மிகக் கடினமான பணியைச் செய்துவிட்டு, எவரும் தன்னைக் காணமுடியாத படி (மனக்குவிப்புடன்) சமாதியில் ஈடுபட்டான்.{23} பன்றியின் வடிவை ஏற்றுப் பூமியை உயர்த்தியவனே பிரகாசமான பிரம்மம் ஆவான். சிலர் அவனை ஆகாயமாக அறிகிறார்கள். அனைத்தையும் படைத்த பிரம்மன், அவனில் இருந்தே உண்டானான்.{24} அனைத்துக்கும் பிறப்பிடமான அந்த ஈஷ்வரன், ஞானத்தின் நுட்பமான மன யோகத்தின் மூலம் பாம்பு, ஆமை ஆகியவற்றின் வடிவில் இன்னும் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான்.{25} பூமியின் உட்புறத்தையும், நீரின் உட்புறத்தையும் பிளந்து, சிரித்துக் கொண்டே சூரியனைப் படைத்து அவனை உயரத்தில் நிறுத்தினான்.{26} சூரிய லோகத்தில் இருந்து முழு வெப்பமும் வெளிப்பட்டது, சந்திர லோகத்தில் இருந்து முழு நீரும் வெளிப்பட்டது.{27} நித்திய ஞானத்தில் இருந்து சந்திரன் வெளிப்பட்டதாலும், அவன் பரமஞானம் கொண்டவன் என்பதாலும் அவன் சோமன் என்று அழைக்கப்பட்டான்.{28}(20-28)

சந்திரலோகத்தின் எல்லையில் இருந்து காற்றை (உயிர் மூச்சு) வெளிப்பட்டது. அவன் அனைத்து தோற்றப்பாடுகளின் காரணங்களையும் விளக்கி வேதங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.(29) அவனது யோகத்தின் மூலமும், பிரம்மத்தில் இருந்து உண்டாகும் அவனது இயல்பின் காரணமாகவும் அவன் தெய்வீகனும், நித்தியனுமான ஒரு புருஷனைப் படைத்தான்.(30) அவனுடைய நீர்ம நிலை நீரானது, திட நிலை பூமியானது; அவனது துளைகள் வானமானது, ஒளியுள்ள பகுதி கண்ணானது.(31) பிரம்மத்தில் இருந்து புருஷனாக வெளிப்படுவதும், பிரகாசத்தால் பெறப்பட்டதுமான மஹத் கோட்பாடு, ஐம்பூதங்களுடன் சேரும்போது உடலை காற்றின் மூலம் கலங்கடிக்கிறது.(32) ஜீவன் அல்லது மனித ஆத்மாவானது, புத்தியில் ஞானம் போல வெளிப்படையாக நிலைத்திருக்கிறது, ஈஷ்வரன் மட்டுமே அதை அறிவான்.(33) உடலில் நித்தியமாக நிலைத்திருக்கும் சுயம் அல்லது நெருப்பானது, ஐம்பூதங்களுடன் சேர்ந்த சூரியனாகிறது (அதாவது பரமாத்மா ஆகிறது).(34)

முற்பிறவி செயல்பாடுகளின் காரணமாக மனித ஆன்மாவானது, (ஆன்மவியலில்) முன்னேற்றத்தையோ, இழிநிலையையோ அடைந்து இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிக்கிறது.(35) புலன்களால் கலக்கமடைந்து, பிரம்மத்தை (அதன் உண்மை வடிவத்தைக்) குறித்த அறியாமையுடன் கூடிய ஒருவன், தன் கர்மத்தின் (செயல்களின்) காரணமாகப் பிறப்பையோ, இறப்பையோ அடைகிறான்.(36) ஒரு மனிதன் பரப்பிரம்மமாகாத வரையில் அவன் இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறவிகளை அடைகிறான்.(37) யோகத்தின் பயனால் தன் புலன்களைக் கட்டுபடுத்திப் பிரம்மத்துடன் ஐக்கியமாகும்போதே அவன் உண்மையான மகிழ்ச்சியை {பேரின்பத்தை} அடைகிறான்.(38) இருப்பினும் அவன் (மாற்றங்களால் அமைந்த) இந்த உலகில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு பிரம்மமாகிறான்; அவன் கோபத்தால் அழிவையோ, புலன் நுகர் பொருட்களில் பற்றையோ அடைவதில்லை.(39)

உயர்ந்த ஆன்ம சக்திகளைக் கொண்டவனும், அனைத்தையும் அறிந்தவனுமான இவன் பூதங்களின் சாரங்களுக்குள் நுழைகிறான். அப்போது அவன் பிறப்பையும், இறப்பையும் அறிகிறான்.{40} பிரம்மத்தின் உண்மை வடிவை அறிந்த மனிதன், கடந்த கால, எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் முக்திக்கான வழிமுறைகளின் ஞானத்தை அடைந்து, மிகச் சிறந்த கதியை எட்டுகிறான்.{41}(40,41) அவன் தன் மனத்தால் அறிவுசார் புலன்கள் அனைத்தையும், பெருங்கடலைக் கலங்கடிக்கும் காற்றைப் போல மனத்தைக் கலங்கடிக்கும் ஆசைகள் அனைத்தையும் வெல்வான்.(42) மனிதனின் ஆன்மாவானது, ஞானக் கண்ணின் (ஆன்ம அறிவின்) மூலம் ஆசைகள் அனைத்தையும் வென்று, மனத்தை மாசுப்படுத்தும் உடலின் தளைகள் அனைத்தில் இருந்து விடுபடும்.(43) நுட்பமான உடலைக் கொண்ட யோகி, ஆன்ம அறிவியலின் மூலம் மறுமையைப் படைக்கவோ, அழிக்கவோ செய்கிறான்; இந்த உலகத்தையே கூட அவனால் படைக்க இயலும்.(44) பரமாத்மாவில் நிலைத்த மனத்தைக் கொண்டவனால், முற்பிறவி செயல்களின் காரணமாக இழிந்த நிலையில் பிறந்தவர்களை விடுவிக்க முடியும்.(45) செயல்பாடுகள் முக்தி {விடுதலை}, மற்றும் இன்பம் ஆகிய இரண்டிற்கும் வழிவகுக்கும். ஆனால், பிரம்மத்தில் தன்னை மூழ்கச் செய்தவனுக்கு உலகம்சார்ந்த இன்பங்களுக்கு வழிவகுக்கும் செயல்கள் ஏதும் இல்லை” என்றார் {வைசம்பாயனர்}.(46)

ஆறுகளின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 17-(கர்மபலபரிச்சேதாய யோகவர்ணனம்)-ஆறுகள் படைக்கப்பட்டது குறித்தும், ஆசிரமங்களைக் குறித்தும் ஜனமேஜயனுக்கு விளக்கிச் சொன்ன வைசம்பாயனர்…

வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, “பெருகும் சூரியனால் பூமியின் பரப்பில் உண்டாக்கப்பட்ட துளையில் மைநாக மலை நிலைநிறுத்தப்பட்டது.(1) ஆசையானது பெருங்கடலை நிறைத்ததால் அது பர்வதம் என்றும், நிலை நிறுத்தப்பட்டதால் அஃது அசலம் என்றும் அழைக்கப்பட்டது; எனினும் இயல்பாகவே அது மேரு என்றே அழைக்கப்பட்டது.(2)

பரந்திருக்கும் சுமேரு மலையின் உச்சியில், பிரகாசத்தால் பெறப்பட்டவனும், தலை, கால் முதலியவற்றுடன் வெளிப்பட்டவனும், பெருஞ்செழிப்பைக் கொண்டவனுமான புருஷன் வாழ்கிறான். அவன் இயற்கையின் மூலம் பரமாத்மாவால் படைக்கப்பட்டான்.(3) தலையில் கிடக்கும் பிரம்ம சக்தியானது, அந்தப் புருஷனின் எரியும் ஒளி வடிவை ஏற்றது.(4) அவனுடைய வாயில் இருந்து நான்கு வாய்களுடன் கூடியதும், பிரம்ம அறிவைக் கொண்டோரில் முதன்மையானவர்களும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவர்களுமான நால்வருடன் கூடியதுமான பிரம்மம் அவனுடைய பிரகாசத்தில் எரிவது போலவும், வெளிப்பட்டது. அவனில் இருந்தே பெரும்பூதங்கள் மீண்டும் இருப்புக்குள் வந்தன.(5,6) அவ்விடத்தில் (மேருவில்) நிலைத்திருந்த பிரம்மத்தால் நீரில் இருந்து பூமி உயர்த்தப்பட்டதால் அவன் புலப்படாதவனாக இருப்பினும் மனிதர்களின் பார்வைக்குள் வந்தான்.(7)

மேருவின் உச்சியாக இருக்கும் பிரம்மலோகமானது, சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையில் அமைந்திருக்கிறது. அது நூறு, அல்லது ஆயிரம் யோஜனைகள் உயரம் கொண்டதாகவும், அதைவிட நான்கு மடங்கு அகலம் கொண்டதாகவும் இருக்கிறது.{8} மேருவின் அளவு கற்பனையானதே என்பதாலும், ஒரு பாலைவனத்தின் பரப்பையோ, ஏரியின் ஆழத்தையோ அளப்பது போல அதை அளந்துவிட முடியாது என்பதாலும், தெய்வீக ஞானத்தைக் கொண்ட எந்த மனிதனாலும் பல்லாயிரம் வருடங்கள் ஆனாலும் அதன் உயரத்தை அளக்க முடியாது.{9} அதன் உயரத்தையும், பரப்பையும் போலவே அதன் சுற்றளவும் எல்லையற்றதே. ஓ! மன்னா, நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட சுமேருவின் பரப்பளவு நூறு யோஜனைகளாகும்.{10}(8-10)

ஆன்ம சாதனை செய்தவர்களும், பிரம்ம ஞானத்தை அறிந்தவர்களுமான சில துறவிகள் இந்த மலையின் இன்னும் பல சிறப்புகளைச் சொல்கிறார்கள்.(11) மருத்துகள், தேவர்கள், ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், விஷ்வதேவர்கள் ஆகியோருடன் அவன் லோகபாலர்களைப் பாதுகாக்கிறான்.(12) விஷ்ணுவின் ஆற்றல் எங்கும் சமமாகப் பரவி இருக்கிறது. ஓ! மன்னா, அவன் {புருஷன்}, பிரம்மத்தில் இருந்து பெற்ற தன்னுடைய பிரம்ம உடலில் தெய்வீக விஷ்ணுவுடன் சேர்ந்து, சூரியன் (நெருப்பு), வருணன் (நீர்) ஆகியோரிடம் இருந்து வெளிப்படும் பூமியைப் பாதுகாக்கிறான். (13,14)

வாய்மை நிறைந்த பிராமணர்கள், தாங்கள் செய்யும் பல்வேறு நோன்புகளினாலும், வேத கல்வியில் அவர்கள் அடைந்த தேர்ச்சியாலும் பிரம்மத்தைப் பாடியிருக்கிறார்கள்.(15) மூவுலகங்களும் பிரம்மனில் நிலைத்திருக்கின்றன, பிரம்மம் வெளிப்பட்ட நிலையிலோ, வெளிப்படாத நிலையிலோ அனைத்திலும் படர்ந்தூடுருவி இருக்கிறது.(16) வேதங்களில் தேர்ச்சியடைந்த பிராமணர்கள், வேதங்களால் அனுமதிக்கப்பட்டவையும், ஈஷ்வரனால் சுவாசிக்கப்பட்டவையும், மனத்தைத் தூய்மை செய்து, செயல்களைச் சொல்லாத சொற்களிலும் வஞ்சனையற்ற பிராமணர்களால் பயிலப்படுபவையும், தினம் தோறும் செய்ய வேண்டியவையுமான கட்டாயச் சடங்குகளை நமது நன்மைக்கானவை என்று கருதுகிறார்கள். இந்தச் சடங்குகள் நல்ல செயல்களின் பலனை விளைவித்தாலும் அவை பிரம்மத்தின் ஒரு சிறு பகுதியாகவே அமைகின்றன. இவ்வாறே ஸ்ருதிகள் சொல்கின்றன.{17,18} 

வாய்மை நிறைந்த பிராமணர்கள், அனைவரின் ஆன்மாவான பிரம்மத்தின் மிக நுட்பமான பகுதியே இந்த அண்டம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். பிராமணர்கள், தாங்கள் அறிவுசார்ந்த தங்கள் பிரிவுகளின் பன்முகத்தன்மையால் வேள்விகளில் பிரம்மன், இந்திரன், மித்திரன், வருணன் முதலிய பெயர்களால் ஒரே பிரம்மத்தையே வழிபடுகிறார்கள். ஒரே பெரும் பிரம்மத்துக்கே விப்ரர்கள் பல்வேறு வழிகளில் பெயர் கொடுத்திருகிகறார்கள்.{19} அண்டத்தின் வடிவம் திரளானது, மனத்தின் வடிவோ நுட்பமானது. தலைவன், இவ்விரண்டு வடிவங்களும் புத்திக்கு மட்டுமே சொந்தமானவை என்பதை நினைவில் கொண்டு முதலில் ஆண், பெண் ஐக்கியத்தைப் படைத்தான்{20}.(17-20)

தெய்வீகத் தலைவன் பிரம்மன், பல்வேறு இன்பங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தேவியுடனும், தன் தொண்டர்களுடனும் அவற்றை இன்புறுகிறான்.(21) எளிய நாட்டங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் எப்போதும் முக்திக்கு வழிவகுக்கும் வழியிலேயே செல்லும் பிரம்மவாதிகளில் பிரம்மனே முதன்மையானவன்.(22) (உமை ஆன்ம அறிவியலாகவும், பரமேஷ்வரன் அதைப் புரிந்து கொள்ளும் நித்திய ஞானமாகவும் இருக்கின்றனர்) அவனது உடலே நீரோடையாகச் சொர்க்கத்தில் இருந்து பாய்கிறது. சோமன் {சந்திரன்} இவ்வோடையிலேயே பிறந்தான்; இதன் மூலமே மஹேஷ்வரன் கணங்களின் தலைவனாக ஆனான்.(23)

இயல்பாகவே மஹேஷ்வரனை, கணங்களின் மன்னனாக நிறுவியபோது பேரொலியை வெளியிட்டதால் ஆறு என்பது {நாதம் என்ற சொல்லில் இருந்து} நதி என்றழைக்கப்பட்டது.(24) அவள் {ஆறு} பிரம்மலோகத்தில் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொண்டு, தன் வழியில் நின்ற மலைகளைக் கடந்து, பூமியை நோக்கி ஏழு வழிகளில் இறங்கி வந்தாள்; இதன் காரணமாகவே அவள் கங்கை என்று அழைக்கப்பட்டாள்.(25) ஓ! மன்னா, பெருங்கடலில் கலக்கும் முன் கோதாவரியின் வடிவில் தன்னை ஏழாகப் பிரித்துக் கொண்டு, ஜானவியின் வடிவில் மேலும் ஆயிரம் பகுதிகளாகத் தன்னைப் பிரித்துக் கொண்டு பல்வேறு புனிதத்தலங்களுக்குப் பாய்ந்து சென்றாள்.(26)

முதலில் திரள் பூதங்கள் பெரும்பூதங்களில் இருந்து உண்டான பிறகே புத்தியின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.(27) அவனது தாமரை வாய்கள் நான்கில் இருந்து உண்டான வேதம், அதுமுதலே மனித குலத்திற்கு ஆன்ம போதனைகளின் ஊற்றாகத் திகழ்கிறது.(28) புனித வேள்வியானது அவனது ஞானத்தில் இருந்தும், புத்தியில் இருந்தும் வெளிப்பட்டது; நான்கு புரோகிதர்கள் அதன் நான்கு கால்களாகினர்; பெரும்பாட்டன் பிரம்மன் அதற்குத் தலைவனானான் {வேள்வியின் தலைவனானான்}.(29)

உலகத்தைத் தாங்கும் தர்மத்தின் நான்கு கால்களில் (நான்கு ஆசிரமங்களில்) முதலில் வருவது மாணவ நிலை என்றழைக்கப்படும் பிரம்மசர்யம், மிகப்புனித நிலையான இல்லறவாசி நிலை {கிருஹஸ்தம்} இரண்டாவதாகும்.(30) காட்டில் உள்ள அறத்துறவியின் நிலை {வானப்ரஸ்தம்}, பெரும்பிரம்மத்துடன் ஐக்கியமாகும் {சந்நியாச} நிலை ஆகியன மூன்றாவது, நான்காவது நிலைகளாகும். அறவாழ்வின் இந்நான்கு நிலைகளும் சொர்க்கத்தை அடைவதற்கு வழிவகுப்பவையாகக் கருதப்படுகின்றன.(31) யோகப்பயிற்சியின் மூலமும், வேதாந்தத்தை உண்மையாகப் புரிந்து கொள்வதன் மூலமும் மனிதனின் மனத்திறன்கள் வளர்ச்சியடைகின்றன. நித்திய வேதங்கள் பிரம்மசர்யம் பயில்வதற்காக நிலைத்திருக்கின்றன.(32) பித்ருக்கள் இல்லறவாசிகளின் ஒழுங்கை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றுவதன் மூலம் நிறைவடைகிறார்கள், சுமேரு மலையின் உச்சியில் இருக்கும் ரிஷிகள் யோகத்தின் மூலம் நிறைவடைகிறார்கள்” என்றார் {வைசம்பாயனர்}[1].(33)

மனத்தில் நிலைத்த சிந்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 18-(மநோதாரணவிசாரம்)-அப்சரஸ்கள், கந்தர்வர்கள் ஆகியோரும், சரஸ்வதி தேவியும் மற்றும் பல உயிரினங்களும் படைக்கப்பட்டது; மெய் அறிவியல்களான பிரம்ம யோகம், சாங்கிய யோகம்…

வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, “பெரும்பாட்டன் {பிரம்மன்}, தூய புத்தியின் வடிவை ஏற்றுத் தன் மனத்திறன்களின் மூலம் மொத்த படைப்பையும் கருதிப்பார்த்து, புறப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தன் உள் ஆன்மாவை விலக்கி பிரம்மத்தை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுகிறான். மனக்குவிப்பில் ஈடுபட்டும், பிரம்மத்துடன் ஐக்கியமடைந்தும் அவன் தன் மனத்தால் சந்ததியைப் படைத்தான்.{1,2} எல்லாம் வல்லவனான பிரம்மன் தன் கண்களின் மூலம் அழகிய அப்சரஸ்களையும், தன் மூக்கின் நுனியில் இருந்து தும்புருவையும், பலவண்ண ஆடைகளை உடுத்தியவர்களும், வேதங்களை ஓதுவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும், இசைக்கருவிகளை இசைப்பதிலும் திறன் படைத்தவர்களும், நூற்றுக்கணக்கானவர்களும், ஆயிரக்கணக்கானவர்களுமான கந்தர்வர்கள் பிறரையும் படைத்தான்.{3,4}

எல்லாம் வல்லவனும், சுயம்புவுமான அந்தத் தேவன் {பிரம்மன்}, தன் யோகத்தின் மூலம் தன் எழிலின் அவதாரமாக விளங்குபவளும், மாசற்றவளுமான வேதவாணி {சரஸ்வதி} தேவியைத் தன் மனத்தில் படைத்தான்.{5} அவள் அழகிய கண்களையும், கேசத்தையும், புருவங்களையும், அழகிய முகத்தையும் கொண்டவளாக இருந்தாள். இனிய சொற்களையுடையவளான அந்தத் தேவி, நூறு இதழ்களைக் கொண்ட அழகிய தாமரையில் அமர்ந்தாள்.{6} ஓ! மன்னா, பூதங்களின் ஆன்மாவாகத் திகழும் பிரம்மன், அழகிய அப்சரஸ்களைத் தன் கண்களில் இருந்தும், இசைக்கருவிகளை இசைப்பதில் திறன்மிக்கவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களுமான கந்தர்வர்களைத் தன் மூக்கில் இருந்தும் படைத்துவிட்டு, பாடும் கலையை முன்வைத்து, பிற பிராமணர்களுக்கான சாமத்தை {சாம வேதத்தைப்} படைத்தான்.{7-9}(1-9)

அவனுடைய இரு கால்களில் இருந்து அசைவனவும், அசையாதனவும், மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், உரகர்கள், யானைகள், சிங்கங்கள், புலிகள் ஆகியவையும், நூற்றுக்கணக்கான பிற விலங்குகளும், புற்களும், நான்கு கால் விலங்குகளும் படைக்கப்பட்டன.{10,11} பணிகளுடன் {படைப்பு வேலைகளுடன்} சேர்த்துத் தங்கள் கைகளால் உணவை உட்கொள்பவர்களைத் தன் கைகளில் இருந்து அவன் படைத்தான். அனைத்து உயிரினங்களின் மகிழ்ச்சியை நாடிய அந்தப் படைப்பாளன், உயிர் காற்றுகளின் மூலம் சுவாசத்தின் பல்வேறு இயக்கங்களைப் படைத்தான். பிறகு அவன், ஐம்புலன்களையும் தடுத்துப் பேரின்பம் நிறைந்த பரமாத்மாவில் தன் மனத்தை நிலைநிறுத்தி அங்கேயே இருந்தான்.{12,13} அவன் தன் இதயத்தில் இருந்து பசுக்களையும், தன் கைகளில் இருந்து பறவைகளையும் படைத்தான்; அதன் பிறகு அவன் பல்வேறு வடிவங்களைக் கொண்ட நீர்வாழ் உயிரினங்களைப் படைத்தான்.{14}.(10-14)

யோகத் தலைவனும், தெய்வீகனுமான அந்தப் பெரும்பாட்டன், ஒளியில் எரிபவரும், ஆறு புலன்களை ஒடுக்குவதால் உண்டாகும் உண்மை ஞானத்துடன் கூடியவரும், தெய்வீக முனிவருமான அங்கீரஸைத் தன்னிரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியில் இருந்து தன் யோக சக்தியின் மூலம் படைத்தான். மேலும் அவன், உயர்ந்த பக்திமானும், தெய்வீக முனிவருமான பிருகுவைத் தன் நெற்றியில் இருந்து படைத்தான்.{15,16} பெரும் யோகியான பிரம்மன், சச்சரவுகள் செய்பவரான நாரதரையும், சனத்குமாரரையும் தன் தலையில் இருந்து படைத்தான்.{17}(15-17)

பெரும்பாட்டன், இருபிறப்பாளர்களின் நித்திய மன்னனும், இரவுலாவியுமான சோமனைத் தன் வாரிசாக {யுவராஜனாக} நியமித்தபோது, பெரும்பூதங்களால் பெறப்பட்ட சக்தியுடன் கூடிய சந்திரனும்,{18} விண்மீன்களும், பல்வேறு உயிரினங்களால் {கிரகங்கள் பலவற்றுடனும்} வானத்தை நிறைத்து அங்கே உலவத் தொடங்கின.{19} பிரம்மன், யோகத்தின் மூலமும், மனப்பண்பின் மூலமும் ஆன்ம சக்திகளை அடைந்து, தன் உடலில் இருந்து அசையும் உயிரினங்களையும், அசையாத உயிரினங்களையும் படைத்தான்.{20} பிரம்மன், சூரியன் முதலிய பல்வேறு உலகங்களைப் படைத்து, இரவு பகலை உண்டாக்க பலரையும் நியமித்தான்.{21}

முன்பு சொன்னவை பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும். எனவே, பிரம்ம யோகமும், சாங்கிய யோகமும், அறிவியலறிஞர்களின் மெய் அறிவியலாக இருக்கின்றன. இது சார்வாகர்களாலும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. {22} இஃது ஒருமைப்படுத்தலுக்கும், பலவகைப்படுத்தலுக்கும் வழிவகுக்கிறது. இது பிறப்பையும், மரணத்தையும் உண்டாக்குகிறது. இதுவே பகுத்துணரும் ஞானமாக அறியப்பட வேண்டும்” என்றார் {வைசம்பாயனர்}.{23}(18-23)

க்ஷத்ர யுக விளக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 19-(கர்மமார்ககதநம்)-பிரம்ம யுகம்; க்ஷத்ரயுகம்; வர்ண வேறுபாடு; தக்ஷனின் படைப்புத் தொழில்…

ஜனமேயஜன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே, பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுப்பதால் பிரம்மம் என்றழைக்கப்படும் முதல் யுகத்தைக் குறித்து நான் கேட்டிருக்கிறேன். ஓ! தலைவரே, இப்போது உகந்தவை அறிந்த ரிஷிகளால் பாடப்பட்டதும், சுருக்கமாகவும், விரிவாகவும் அமைந்த விதிமுறைகளைக் கொண்டதும், வேள்விகளால் அழகூட்டப்பட்டதுமான க்ஷத்ர யுகத்தைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1,2)

வைசம்பாயனர், “பல்வேறு ஈகைகளாலும், வேள்விகளாலும் போற்றப்பட்டதும், பல்வேறு உயிரினங்களால் அழகூட்டப்பட்டதுமான க்ஷத்ர யுகத்தின் பெருமையை நான் பாடப்போகிறேன்.(3)

நான்கு கரங்களைக் கொண்ட விஷ்ணுவாகத் தன்னை அறியும் தலைவன், இந்தக் கல்பத்தில் வேறுபாடுகளைக் கண்டு, பிரம்மனால் பெறப்பட்ட தக்ஷனாக அவதரித்துப் பல சந்ததிகளை உண்டாக்கினான். அவன், புலன்களிலும், உடலிலும் உள்ள பற்றைக் களைந்ததன் விளைவால், அகத்தில் உள்ள சுயத்தின் {ஆன்மாவின்} ஞானத்தைக் கொண்டிருந்ததாலும் பிராமணர்களுக்கு மத்தியில் புகழ்பெற்றவனாக இருந்தான். கட்டை விரலளவே இருந்த இந்தப் பிராமணர்கள் அனைவரும், முக்திக்கு வழிவகுக்கும் ஒழுங்குமுறைகளையும், அறச் சடங்குகள் பிறவற்றையும் பின்பற்றியதால் சூரிய லோகத்தைக் கடந்து செல்ல வல்லவர்களாகவும், பிற லோகங்கள் அனைத்திலும் திரிய வல்லவர்களாகவும் இருந்தனர். அவர்கள் எப்போதும் வேள்விகள் செய்வதிலும், புலன்களையும், மனப்புலன்களையும் அடக்குவதிலும் மும்முரமாக இருந்தனர். ஈஷ்வர இன்பத்தை ஈட்டுவதற்காக அவர்கள் தங்களை வேதச் சடங்குகளில் ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்கள் மூன்று வேதங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். பிரம்மசரிய வாழ்வைப் பின்பற்றிய அவர்கள் பிரம்மஞானத்தில் ஐயம்தெளிந்தவர்களாக இருந்தனர். நல்லொழுக்கத்தையும், நிறைந்த புத்தியையும் கொண்டவர்களான இந்தப் பிராமணர்கள், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மரணமடைந்தனர்.(4-8)

பிராமணர்களிடம் சத்வ குணமும், க்ஷத்திரியர்களிடம் ரஜஸ் குணமும், வைசியர்களிடம் ரஜஸ்-தமஸ் குணங்களும், சூத்திரர்களிடம் தமஸ் குணமும் நிறைந்திருக்கின்றன.(9) பிராமணர்களின் வண்ணம் வெள்ளையும், க்ஷத்திரியர்களின் வண்ணம் சிவப்பும், வைசியர்களின் வண்ணம் மஞ்சளும், சூத்திரர்களின் வண்ணம் புகை போன்ற கரு நிறமும் ஆகும். சிந்தனை நிறைந்த விஷ்ணுவால் இவ்வாறே அவர்கள் பகுக்கப்பட்டார்கள்.(10) ஓ! மன்னா, இவ்வாறே இவ்வுலகில் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று குணங்களின் அடிப்படையிலும், வண்ணங்களின் அடிப்படையிலும் பகுக்கப்பட்டனர்.(11) பணிகளின் வழிமுறைகளைக் கொண்டு மதிப்பிடப்பட்டாலும், உயர்ந்தவையும், அற்புதமானவையும், வெவ்வேறு வகையிலானவையுமான கடமைகளை நோற்கும் ஒரே அளவைக் கொண்ட மனிதர்கள் அவற்றின் பலன்களைப் பெறுவதற்காக நான்கு வர்ணங்களாகப் பகுக்கப்பட்டனர்.(12) முதல் மூன்று வர்ணத்தினர், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்யும் உரிமை பெற்றவர்கள். எனவே, ஓ! மன்னா, விஷ்ணுவிடம் நீ கொண்ட நம்பிக்கையின் காரணமாக நீ வேதங்களைப் படிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறாய். இதன் காரணமாகவே பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்ற மூன்று வர்ணத்தாரின் பிறப்பும் தலைவனின் {விஷ்ணுவின்} அருளால் நிகழ்கிறது.{13}

விஷ்ணுவின் உண்மை வடிவைக் குறித்த அறிவொளியைக் கொடுக்கும் பணிகளால் சூழப்பட்ட தலைவன் தக்ஷ பிராசேதஸ், தன் யோக சக்தியின் மூலமும், ஞானத்தின் மூலமும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.{14} அதன்பிறகு, கலைகளின் மேன்மைக்காகவும், மூன்று வர்ணங்களுக்கும் தொண்டு செய்வதற்காகவும் சூத்திரர்கள் படைக்கப்பட்டனர்.{15} தொடக்கச் சடங்கைச் செய்வதற்கோ {தீக்ஷை பெறுவதற்கோ}, வேதங்களைப் படிப்பதற்கோ அவர்கள் உரிமை பெற்றவர்கள் அல்லர்.{16} கோல்களின் {அரணிக் கட்டைகளின்} உராய்வினால் நெருப்பு உண்டாவதற்கு முன்பு புகை எழுந்தாலும், அது நடைமுறைக்குப் பயன்படாததைப் போலவே, இவ்வுலகில் பிறவியை எடுத்துத் தங்களைப் பெருக்கிக் கொள்ளும் சூத்திரர்கள், தொடக்கச் சடங்கைப் {தீக்ஷை} பெறாதவர்களாக இருப்பதால் பல்வேறு வேத சடங்குகளையும் செய்ய இயலாதவர்கள் ஆகிறார்கள்.{17}(13-17)

பிறகு தக்ஷன், வேதங்களை ஆதரிப்போரும், வலுவானவர்களும், பேராற்றலும், சக்தியும், பிரகாசமும் கொண்டவர்களான தன் மகன்கள் பிறரைப் பெற்றான்.{18}

தக்ஷன் அவர்களிடம், “ஓ! சக்திமிக்க மகன்களே, உங்கள் வாய்களில் இருந்து உங்கள் அன்னையான பூமாதேவியின் பலத்தை அறிய விரும்புகிறேன். நான் சக்திமிக்கவனாக இருக்கிறேன் என்பதால் என்னால் பூமியின் எல்லையைக் காண முடியவில்லை; நீங்களும் என்னைப் போலவே இருக்க வேண்டும்.{19} உண்மையை உறுதி செய்து கொண்ட பிறகு நான் ஆற்றலையும், பலத்தையும் உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுப்பேன். மண்ணின் பரப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் என் உயிரினங்கள் தங்களைப் பெருக்கிக் கொள்வார்கள்” என்றான்.{20}

தலைவனுடைய பெரும் படைப்பாற்றலின் சாரத்தைக் கொண்ட பூமாதேவி, தன்னைக் காண விரும்பிய தக்ஷனின் மகன்களிடம் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.{21} கிருத யுகத்தில், சத்வ குணத்தைக் கொண்ட பிரஜாபதியின் மகன்களுடைய தூய ஆன்மாக்கள், புருஷனால் தூண்டப்படாமல் உயிரினங்கள் அனைத்தின் அன்னையான இயற்கையெனும் பிரக்ருதியைக் கண்டு தூய்மையடையும்போது, வியர்வையின் மூலமும், முட்டைகளின் மூலமும் உண்டாகும் அனைத்தையும் படைத்து, இயற்கையாகவே உயிரினங்களைக் குறைத்தும், பெருக்கியும் படைப்பின் பயன்களைப் பெறுகின்றன” என்றார் {வைசம்பாயனர்}.{22,23}(18-23)

யோகத்தின் பயன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 20-(ப்ரவ்ருத்திதர்மபலம்)-தக்ஷன் மகள்களைப் பெற்றது; அவர்களை தர்மன், கசியபர், சோமன் ஆகியோருக்குக் கொடுத்தது; யோகத்தின் பயன்கள்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, கல்வியின் அனைத்து வகைகளிலும் பொருளாக இருக்கும் என நான் நினைக்கும் நித்திய பிரம்மனைக் கொண்ட திரேதா யுகத்தைக் குறித்து நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “புருஷர்களில் முதன்மையான தக்ஷன், ஊக்கமிழந்தவனாக மேரு மலையின் உச்சியில் தன் யோக சக்தியின் மூலம் ஒரு பெண் வடிவை ஏற்றான்.{2} நன்கு அமைந்த தொடைகள், முலைகள், தாமரை போன்ற முகம், கருவிழிகள் ஆகியவற்றுடன் அவன் பேரழகு படைத்த ஒரு காரிகையானான்.{3} தக்ஷ பிராசேதஸ், தன் பாதி உடலால் அந்தக் காரிகையிடம் பத்மங்கள் என்ற பெயரில் கன்னிகையரைப் பெற்றான்.{4} அதன் பிறகு தக்ஷன், தன் ஆண் வடிவின் மூலம் பெண் வடிவைக் கைவிட்டு மிக அழகிய மனித வடிவை ஏற்றான்.{5} ஸ்மிருதிகளால் அங்கீங்கரிக்கப்பட்ட பிரம்மத் திருமணச் சடங்குகளின்படி, அவன் அந்தக் கன்னிகையரை {திருமணம் செய்து} கொடுத்தான்.{6} அவன் அவர்களில் பத்து கன்னிகைகளைத் தர்மனுக்கும், பதிமூவரை கசியபருக்கும், இருபத்தெழுவரை சோமனுக்கும் கொடுத்தான்[1].{7}ஓ! மன்னா, தக்ஷன் தன் மகள்களுக்குத் திருமணம் செய்து கொடுத்த பிறகு, பிரம்மன் வாழ்ந்து வந்த பிரயாகை என்ற புனிதத்தலத்திற்குச் சென்றான்.{8} அங்கே அவன் தன் மனம் சார்ந்த, புத்தி சார்ந்த புலன்களைக் குவித்து, தவம் பயின்று மான் உடன் சேர்ந்து உலகம் முழுவதும் பயணித்தான். அவன், புற்கள், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றை உண்டு தொடர்ந்து கடுந்தவங்களைச் செய்து வந்தான்.{9} தீங்கிழைக்காத அவனது குணத்தைக் கண்டு அந்த மான் பெரிதும் மகிழ்ந்தது; தொடக்கச் சடங்கு {தீக்ஷை} பெற்றவர்களும், அறப்பணிகளைச் செய்பவர்களும், தவம், துறவு, நோன்பு ஆகியவற்றின் மூலம் பாவம் அழிந்தவர்களுமான பிராமணர்கள் அவனது தவங்களின் பயன்களைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர்.{10}(2-10)

யோகத்துக்கும், புத்திசார்ந்த புலங்களுக்கும் இடையில் மோதல் நடக்கும் நேரத்தில் உடல்சார்ந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், தன் மனத்தைக் கட்டுப்படுத்தியவனும், காலத்தை அறிந்தவனுமான ஒரு மனிதன், தான் அனைத்தையும் அறிந்தவனாக இருப்பதன் காரணமாக யஜ்ஞம் {வேள்வி} மூலம் அடையப்பட்ட கர்மத்தையும், ஆன்ம பலத்தையும் காண்கிறான்.{11} {இவ்வாறான} துறவிகள், மான்களுடனும், தங்கள் மனைவியருடனும் கூடியவர்களாகக் காய்கறி உணவை உண்டு, கவலை அற்றவர்களாக முதுமையை அடைகிறார்கள்.{12} வேதங்களைக் கற்றறிந்த பிராமணர்கள், மனித உடலிலேயே பெரும் பிரம்மத்தைக் கண்டு, அதை {அந்த உடலை} பிரம்மத்தின் நிலம் அல்லது பிரம்மக்ஷேத்திரம் என்று அழைக்கிறார்கள்.{13}(11-13)

பணிகளில் இருந்து மனம் விலகியவர்களும், கோபத்தையும், ஆசையையும் அடக்கியவர்களும், நித்திய வழியில் செல்ல விரும்பி பூமியில் திரிபவர்களுமான யதிகள் இதையே சொல்கிறார்கள்.{14} {மனிதர்கள்} சமாதி, அல்லது மனக்குவிப்பு அடையும் நேரத்தில் மொத்த படைப்பும் பிரம்மத்தில் மூழ்குகிறது. மேலும் அவர்கள் முற்பிறவியில் செய்த செயல்களின் காரணமாக மீண்டும் அவை உலகில் தோன்றுகின்றன. {மனிதர்கள்} சமாதி அடையும் நேரத்தில் உயிரினங்கள் அனைத்தும் பிரம்மத்தில் கலந்தாலும், அவர்களின் முற்பிறவி செய்ல்பாடுகளின் காரணமாக அவை மீண்டும் பூமியில் தோன்றுகின்றன.{15} சமாதி அடையும் நேரத்தில் உயிரினங்கள் அனைத்தும் வெளிப்படாமல் இருந்தாலும், இயற்கை போக்கின் மூலம் அவை மீண்டும் வெளிப்படுகின்றன. எனவே இயற்கையை வெல்வது மிகக் கடினமானதாகும். காலத்தினுடைய பண்புகளின் காரணமாக உயிரினங்கள் வெளிப்பட்டும், வெளிப்படாமலும் இருக்கின்றன.{16}(14-16) அசைவனவோ, அசையாதனவோ, திரளானவையோ {ஸ்தூலமானவையோ}, நுட்பமானவையோ {ஸூக்ஷ்மமானவையோ} எனப் படைப்பின் ஒவ்வொரு பொருளும் காலத்தின் ஆதிக்கத்தில் யோகத்தை அடையலாம். உயிரற்ற பொருள்களுக்கே இந்த யோகம் சாத்தியமாக இருக்கும்போது ஒவ்வொரு மனிதனும் கடவுளுடன் ஐக்கியமாகும் ஞானத்தை அடைய முயல வேண்டும்.{17}

நித்தியரான கசியபர், காலப்போக்கில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் தக்ஷனின் மகள்களிடம் பெற்றார். ஓ! மன்னா, ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், விச்வதேவர்கள், மருத்துகள், பல தலைகளைக் கொண்ட பாம்புகள், சாத்யர்கள், பன்னகர்கள்,{19} கந்தர்வர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், கழுகுகள், சிறகுகளுடன் கூடிய கருடன், கின்னரனான ஸுவாஸன்,{20} பசுக்கள், நான்கு கால் உயிரினங்கள், மனிதர்கள், அசைவன, அசையாதன உள்ளிட்ட மொத்த பூமி, மலைகள்,{21} யானைகள், சிங்கங்கள், புலிகள், குதிரைகள், தந்தம் படைத்த விலங்குகள், பன்றிகள், ஓநாய்கள், மான்கள்,{22} நான்கு வெண்தந்தங்களைக் கொண்ட யானைகள், விரும்பிய வடிவை ஏற்கவல்ல உயிரினங்கள் ஆகியவையும் படைக்கப்பட்டன.{23}

நித்திய அறத்தின் நிலமான {சனாதன தர்ம க்ஷேத்திரமான} பாரதவர்ஷத்தில், முந்தைய கல்பத்தில் இருந்ததைப் போலவே முனிவர்கள், அதே வடிவம், அழகு, குணம், சக்தி ஆகியவற்றுடன் பிறந்தனர்.{24} வேதங்களில் தேர்ந்தவர்களும், ஆத்ம அறிவை அடைந்தவர்களுமான பக்திமான்கள், தன் மனத் திறன்களின் மூலம் புற உலகம், அக உலகம் ஆகிய இரண்டையும் படைத்தனர். சொர்க்க லோகத்தில் தேவர்கள் அனைவரும் குடியேறினர்.{25}(17-25)

இல்லறவாசிகளை {கிருஹஸ்தர்களைத்} தவிர, தவங்கள் நோற்பதன் மூலம் ஆன்ம சக்தியை அடைபவர்களும், பிரம்மசரிய வாழ்வைப் பின்பற்றுவதன் மூலம் அதை அடைபவர்கள், ஆசான்களின் மூலம் அதை அடைபவர்களும், சித்தியின் மூலம் யோகத்தை அடைபவர்களும் துன்பம் மிகுந்த செயல்களைச் செய்வது கட்டாயமல்ல.{27,28} மனங்களைக் கட்டுப்படுத்தி, பொறுமையுடனும், மன்னிக்கும் தன்மையுடனும், உறுதியுடனும் உள்ளவர்கள், தங்கள் மனைவியருடன் அறச்சடங்குகளைப் பயின்று தேவலோகத்தில் திரிவார்கள்” என்றார் {வைசம்பாயனர்}.{28}(26-28)

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading