(இறைமுறையான்.) ஆழ்வார் இவ்விருள் தருமாஞாலத்தின் தன்மைகளைச் சிந்திக்கிறபோது ஒன்றுந்தோன்றாமல்
ஆகாசத்தை நோக்கிக் கிடப்பண்டு;
“நலத்தால்மிக்கார் குடத்தைக் கிடந்தாய்! உன்னைக் காப்பான் நானலாப்பாய் ஆகாயத்தை நோக்கியழுவன் தோழுவனே” என்ற
திருவாய்மொழியில் அருளிச்செய்தபடியே ஆகாசத்தை நோக்க நேருவதுமுண்டு;
ஏதோவொரு காரணத்தினால் ஆகாசத்தை நோக்கினார் ஆழ்வார்; ஆகாசமடங்கலும் நக்ஷத்ரமயமாகக் காணப்பட்டது;
உலகத்தில் எந்த வஸ்துவைக் கண்டாலும் பகவத் ஸம்பந்தத்தை முன்னிட்டே அந்த வஸ்துக்கள் ஆழ்வாருடைய திருவுள்ளத்திற்கு
விஷயமாகுமேயன்றி ஸாமாந்யமான லௌகிக வஸ்துவாக விஷயமாகா தாகையாலே இந்த நக்ஷத்ரங்களிலும் பகவத் ஸம்பந்தத்தை
முன்னிட்ட உத்ப்ரேக்ஷை திருவுள்ளத்திற்படவே அந்த அத்ப்ரேக்ஷையை இந்தப் பாசுரத்தினால் வெளியிடுகிறார்.
நஷத்ரங்கள் விஷ்ணு பதம் என்னும் ஆகாசத்தில் நிரம்பி-உலகு அளந்த திருவடிகளிலே தாது நிறைந்த புஷ்பங்களை-
தூவினது போலே-ஆழ்வார் திரு உலகு அளந்த விருந்தாந்ததிலே ஊறி இருந்த படி –
இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61
பதவுரை
தாழ் விசும்பின் மீது–வெளியான ஆகாசத்திலே
இலசி கிடக்கும் மீன்–விளங்காநின்ற நக்ஷத்திரங்களானவை
இறை முறையான்-ஸ்வாமியான முறைமையை யுடைய எம்பெருமான்
மண் அளந்த அந்நாள்–உலகளந்த அக்காலத்திலே
வான் நாடர்–வானுலகத்திலுள்ளாரெல்லாரும்
கூடி–கும்பல் கூடி
சே அடி மேல்–(அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல்
மறை முறையால்–வேதங்களிற் சொல்லிய விதிப்படி
தாது இலகு பூ–தாதுக்களாலே விளங்கா நின்றுள்ள புஷ்பங்களை
முறை முறையின்–முறை முறையாக
தெளித்தால் ஒவ்வாதே–தெளிந்தாற் போன்றுள்ளன வன்றோ?
இறை முறையான்
ஸ்வாமியான முறைமையை-உடைய எம்பெருமான்
சேவடி மேல் –
செவ்விய திருவடிகளின் மேலே
மண்ணளந்த வந்நாள்
உலகு அளந்த அக்காலத்திலே
மறை முறையால் வானாடர் கூடி –
வேதங்களில் சொல்லிய-விதிப்படி-வானுலகத்தில் உள்ள எல்லாரும் கும்பலாகக் கூடி
-முறை முறையின்
முறை முறையாக
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே –
தாதுக்களால் விளங்கா நின்றுள்ள-புஷ்பங்களை தெளித்தால் போல்-உள்ளது அன்றோ
தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன்
வெளியான ஆகாசத்திலே-விளங்கா நின்ற நஷத்ரங்கள் ஆனவை –
எம்பெருமான் முன்பு உலகளந்தருளின காலத்திலே மேலுலகத்திலுள்ளறாரெல்லாருங்கூடி அப்பெருமானது திருவடியின் மேல்
புஷ்பங்களைத் தூவினார்களன்றோ; அந்தப்பூகஙகள் போன்றுள்ளன இந்த நக்ஷத்திரங்கள் என்று உத்பரேக்ஷித்தபடி.
நக்ஷத்திரங்கள் சிறமுல்லைப்பூக்கள் போலேயிருத்தலாலும், விஷ்ணு பதமென்னப்படுகிற ஆகாசத்திலே நிரம்பியிருக்கையாலும்,
ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே எப்போதும் உலகளந்தவரலாற ஊன்றிக்கிடக்கையாலும் இங்ஙனே உத்ப்ரேக்ஷிக்கலாயிற்று.
இப்பாட்டின் வியாக்கியானத்திலே –
“லோக யாத்ரையை அநுஸந்திக்கப்புக்காலும் அவனைமுன்னாகவல்லது காணமாட்டாமை சொல்லுகிறது.” என்றும்;
“சிறியாச்சான் ‘சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதாப்போலே ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீளமாட்டார்கள்’
என்று பிள்ளைக்குப் பணித்தான்” என்றும் உள்ள ஸ்ரீஸூக்திகள் அநுஸந்திக்கத்தக்கன.
——————————————————————–
(மீனென்னுங்கம்பின்.) கீழ்ப்பாட்டில் “இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்தவந்தந்நாள்” என்று
உலகளந்த வரலாற்றைச் சிறிது பிரஸங்கிக்கவே, பின்னையும் அதனை ஒருவாறு வருணித்ததுப் பாசுரங்பேச விருப்பமுண்டாகி
ரூபகாலங்கார (உருவகவணி) ரீதியிலே அருளிச்செய்கிறார்.
ஆகாசம் குடையாக அருளிச் செய்ய பொருத்தமான வற்றை அருளிச் செய்கிறார் –
மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-
பதவுரை
மீன் என்னும் நம்பின்–நக்ஷத்திங்களாகிற நம்புகளையுடையதும்
வெறி என்னும் வெள்ளி வேய்–சந்தினாகிற வெள்ளிக்குழையையுடையதும்
வான் என்னம்–ஆகாசமென்கிற பெயருடையதும்
கேடு இலா–ஒருநாளும் அழிவில்லாததுமான
வான் குடைக்கு–பெரிய குடைக்கு
ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து–ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து
மண் அளந்தான் தான்–உலகளந்தவனான பெருமாள்
பின்–மேலுள்ள காலமெல்லாம்
நங்கள் பிணிக்கு–நம்முடைய (ஸம்ஸாரமாகிற) வியாதிக்கு
பெரு மருந்து ஆம்–சிறந்த ஔஷதமாவன்
மீன் என்னும் கம்பில்
நவ ரத்னங்கள் ஆகிற கம்புகளை உடைத்தும்-ஆகாசம் நஷத்ரங்கள் நிறைந்து
முத்துக்கள் அழுத்தின கம்பு போலே நஷத்ர சமூஹம் தோன்றுமே
குடையில் மேல் துணியைத் தாங்கும் கம்பிகள் –
வெறி என்னும் வெள்ளி வேய்
சந்தரன் ஆகிற வெள்ளிக்-குழையை யுடைத்தும்-வெறி என்று வட்ட வடிவத்துக்கு பெயர்
இலக்கணையால் சந்த்ரனைக் குறிக்கிறது
வான் என்னும்-
ஆகாசம் என்னும் பெயரை உடைத்தும்
கேடிலா வான்குடைக்கு
ஒரு நாளும் அழிவில்லாத-பெரிய குடைக்கு
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து
ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போலே வளர்ந்து
மண்ணளந்தான் –
உலகு அளந்தவனான பெருமான்
நாங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
மேல் உள்ள காலம் எல்லாம்-நம்முடைய சம்சாரம் ஆக்கி வியாதிக்கு-சிறந்த ஔ ஷதம் ஆவான் –
ஆகவே, ஆகாசமாகிற குடைக்குத் தனது திருவடியாகிற காம்பைக் கோப்பதென்பகிற வியாஜத்தினால்
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித்-தாரகையின் புறம் தடவி
அப்பால் மிக்கு மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை யானவன்-சம்சாரம் ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாவான் என்றபடி-
எம்பெருமான் பண்டு உலகளப்பதற்காக ஒரு திருவடியை ஆகாசததேறத் தூக்கினது எங்ஙனே சொல்லலாம்படியிருக்கின்ற தென்றால்
ஆகாசமாகிற ஒரு பெரிய குடைக்கு நீலரத்நமயமான காம்பு கோப்பது போல் போசலாயிருந்ததென்கிறார்.
ஆகாசத்ததைக் குடையாக்க கூறுதற்கு உள்ள பொருத்தங்களை முதலடியிற் கூறுகின்றார்.
மீனென்னும் கம்பின் = உலகத்தில் சிறந்த குடையானது முத்துக்களழுத்தின பல கம்புகளையுடைத்தாயிருக்கும்;
ஆகாசமும் பல பல நக்ஷத்திரங்கள் விளங்கப்பெற்றிருக்கையாலே, தனித்தனி நக்ஷத்ரங்கள் முத்துக்கள் போலவும்.
நக்ஷத்ரஸமுக்ஷங்கள் முத்துக்கள் அழுத்தின கம்புகள் போலவும் காணப்படாநின்றன.
(முத்துக்களுக்கு வாசகமான பதம் மூலத்தில் இல்லை யெனினும், மீன் என்று நக்ஷத்திரங்களைச் சொன்னதற்கிணங்க
உபமேய கோடியில் முத்துக்கள் விவக்ஷிதமென்க.) கம்பாவது – குடையின் மேல் துணியைத் தாங்குவதற்காகப் போடும் கம்பிகள்.
வெறியென்னும் வெள்ளிவேய் = வெறி என்று வட்ட வடிவத்திற்குப் பெயர்; அஃது இங்க இலக்கணையால் சந்திரனைக் குறிக்கின்றது.
குடைக்காம்பின் நுனியில் வெள்ளிக்குழை போடுவதுண்டே; ஆகாசமாகிற இக்கடைக்குச் சந்திரன் வெள்ளிக்குழை போன்றுளனாம்.
ஆக இவ்வகைகளாலே குடையென்று சொல்லத்தக்கதும், சில நாளிருந்து அழிந்துபோகும் குடை போலன்றியே சாச்வதமாயிருக்கக்கூடிய
குடையென்று சொல்லத்தக்கதுமான ஆகாசத்திலே நீலமணி மேனியனான எம்பெருமானுடைய திருவடி நீண்டு சொருகப்பெற்றநது
மணிக்காம்பு கோத்தது போலலாகுமிறே.
—————————————————————
(பின்துரக்கும்காற்றிழந்த) முன்னோர்கள் இப்பாட்டை இரண்டு மூன்றுவகையாக அந்வயிக்கப் பார்த்தார்கள்;
தசரத சக்ரவர்த்திக்குத் திருமகனாகத்திருவவதரித்துக் தங்கையை மூக்கும் தமையனைத் ததலையும்தடிந்து
அவதார காரியங்களைச் செவ்வனே தலைக்கட்டிக் கொண்டு மறுபடியும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்தானென்கிற
விஷயத்திற்கு ஓர் உபமானம் கூறுகின்றார் இப்பாட்டில்.
இதில் பின்னடிகளை உபமேயவாக்கியமாகவும் முன்னடிகளை உபமாக வாக்கியமாகவும் வைத்து வியாக்கியானித்தல் ஒருவகை; –
(அதாவது=) “அன்று திருச்செய்யநேமியான் தீயரக்கிமூக்கம் பரச்செவியுமீர்ந்தபரன்” என்றவளவும் உபமேயலாக்கியம்;
“பின்தூரக்குங் காற்றிழந்த ‘சூழ்கொண்டல் பேர்ந்தும் போய் வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்து”என்றவளவும் உபமானவாக்கியம்.
இதன் கருத்து யாதெனில்;- ஆழியங்கையனான பெருமான் சூர்ப்பணகாபங்கம் முதலான காரியங்களைச் செய்துமுடித்து
மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்ததானது எப்படியிருக்கின்றதென்றால்;
கடலில் மேகமானது காற்றுத்தள்ளத்தள்ள மேலே நடந்துகொண்டே சென்று, அந்தக் காற்று எங்கே ஓய்ந்துவிடுகிறதோ
அங்கிருந்து (மேகம்) மேலே செல்லமுடியாமல் அந்தக்கடலிலேயே வந்து விழுந்திடுமே; அதுபோலேயிராநின்றது என்றபடி.
இக்கருத்து செவ்வனே கிடைக்கும்படியான சொல்தொடைகள் மூலத்தில் உளவோ என்று ஆராயவேண்டும்.
பாட்டின் முடிவிலுள்ள பான் என்பதை உபமேயமாகக் கொண்டால் இரண்டாமடியிலுள்ள வாய்மைத்து என்ற குறிப்புவினைமுற்றை
‘வாய்மையன்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘வாய்மைத்து’ என்றிருப்பது பரன் என்ற உயர்திணைக்குச் சேராதிறே.
ஆகையாலே இப்படி யோஜித்து வியாக்கியானிப்பதில் குறையுண்டென்று மற்றொருவகையான யோஜித்து வியாக்கியானிக்கப் பார்த்தார்கள்;
(அதாவது-) பாட்டின் முடிவிலுள்ள பரன் என்றபதத்தோடு ‘படி’ என்கிற ஒரு பதத்தை வருவித்துக் கூட்டிக்கொண்டு
“பரன்படியானது- வாய்மைத்து’ என்று அந்வயித்தால் திணை மாறாட்டம் செய்ய அவசியமில்லையே என்று பார்த்தார்கள்.
ஆனாலும் இந்த யோஜநையில் – மூலத்திலில்லாத “படி” என்கிறவொரு சொல்லை வருவித்துக் கூட்டிக்கொள்ளுதலாகிற
அத்யாஹாரமென்பதம் ஒரு குறைதானே என்று குறையுற்றிருந்தனர்;
இவ்விரண்டு குறைகட்கும் இடமில்லாதபடி நஞ்ஜீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பம் செய்த போஜநை தான் இங்க நாம் பதவுரையில் காட்டினது.
கீழ்ச்சொன்ன இரண்டு யோஜனைகளில் எம்பெருமானை உபமேயமாகவும் காளமேகத்தை அபமாநமாகவும் நிறுத்தி உரைக்க வேண்டியதாயிற்று.
இப்போது அங்ஙனம் வேண்டா. மூலத்தில் ஸ்வரஸமாக ஏற்படுகிறபடியே, “பின்துரக்கும் காற்றிழந்த சூல் கொண்டல்” என்பதே உபமேயம்.
இப்போது பாசுரத்தின் கருத்தை நெஞ்சிலே விளக்கக் கொள்ளுங்கள்:-
கொண்டல் உபமேயம்-பிரகிருதி மண்டலத்தில் இருப்பதால் இங்கே கண் வைத்தாலும் பகவத் விஷய சம்பந்தம் இட்டே பார்க்கிறார்-
அவதார தூண்டுதல் -வேண்டித் தேவர்கள் இரக்க வந்து பிறந்ததும்-துஷ்ட நிக்ரஹம் இஷ்ட பரிபாலனம் தர்ம சம்ஸ்தாபனம்-
பிரார்த்தனை ஈடேறா நிற்க-தள்ளிக் கொண்டு வந்த காற்றை இழந்த காளமேகம் போலே-சூல் கொண்ட மேகம் -பூர்ண கர்ப்பமுடைய மேகம்-
இப்படி மேகத்தை உபமேயமாக நிறுத்தியே வியாக்யானம் செய்து அருளினார்
பின் துரக்கும் காற்று இலோந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-
பதவுரை
பின் துரத்தும் காற்று இழந்த சூல்கொண்டல்–பின்பற்றித்தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காளமேகமானது
(எப்படி யிருக்கின்றதென்றால்)
திரு செய்ய நேமியான்–அழகிய சிவந்த சக்கரத்தையுடையவனும்,
தீ அரக்கி–கொடிய ராக்ஷஸியான சூர்ப்பணகையினது
மூக்கும்–மூக்கையும்
பரு செலியும்–பருத்தகாதுகளையும்
அன்று–ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த–அறுத்தொழித்தவனுமான
பரன்–ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய்–(அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து–பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது.
பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல்
பின்பு பற்றித் தள்ளுகிற காற்றை இழந்து-கடலிலே போய் சேர்ந்த காளமேகமானது
எப்படி இருக்கிறது என்றால்
பேர்ந்தும் போய்
திருவவதார கார்யத்தை முடித்த பின்பு-மறுபடியும் சென்று
வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே
பெரிய திருப்பாற் கடலிலே-வந்து சேர்ந்த படியை-ஒத்து இருக்கின்றது
அன்று
ஸ்ரீ ராமாவதாரத்திலே
திருச் செய்ய நேமியான்
அழகிய சக்கரத்தை உடையவனும்
தீ அரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்ந்த பரன்
கொடிய ராஷசியினுடைய -சூர்பணகையின் மூக்கையும்-பருத்த செவிகளையும்
பரிச் செவி-என்றும் பாடபேதம் குதிரை காத்து போன்ற காதுகள் உடையவள் –
அறுத்து ஒழித்தவனுமான-ஸ்ரீ ராம பிரான்-
ஆழ்வார் எம்பெருமானை அநுபவிக்குந்திறத்தில் நித்ய ஸூரிகளுக்கு மேற்ப்பட்டவராயிருந்தாலும் இவர் தாம் எழுந்தருளியிருப்பது
பிரகிருதி மண்டலத்திலேயாகையாலே பிராகிருத பதார்த்தங்களிலும் கண்வைக்க நேருவதுண்டு;
அவற்றில் கண் வைத்தாலும் பகவத்விஷயத்தை முன்னிட்டுப் பேசும்படியாயிருக்குமேயொழிய, பகவத்விஷய ஸம்பந்தமின்றியே
பிராகிருத பதார்த்தத்தன்மையாக மாத்திரம் பார்ப்பதும் பேசுவதும் இவ்வாழ்வார்க்கு அஸம்பாவிதம் என்பது கீழ் அறுபத்தோராம்பாட்டிலும் நன்கு விளங்கியதே.
அதுபோலவே இப்பாட்டிலும் பிராகிருதபதார்த்தங்களில் ஆழ்வார் தமது திருக்கண் ஒட நேர்ந்தபோது,
ஒரு மேகமானது கடலில் சென்றிறங்கிக் கழுத்தே கட்டனையாக நீரை முகந்து கொண்டு மேலே கிளம்பி, காற்றுத் தள்ளத்தள்ள
ஆகாசத்திலே வந்து கொண்டிருக்கும்போது அந்தக் காற்று ஓய்ந்துவிட்டது; காற்றின் உதவியில்லாமல் மேகம் மேலே
நடைபயிலகில்லாமல் மீண்டும் அக்கடலிலேயே போய்ச்சென்றது; இதனைக் கண்ணுற்ற ஆழ்வார்க்கு நல்ல பொருத்தமான
உபமானம் நினைவுக்க வந்தது. பண்டொருகால், இராமபிரானாகிற காளமேகம் கருணாரஸமாகிற நீரைப் பரிபூர்ணமாக
முகந்து கொண்டு திருப்பாற்கடலினின்றும் புயப்பட்டு, தேவதைகளின் பிரார்த்தனையாகிற காற்று தூண்டத் தூண்ட
நிலவுலகத்தே நடந்து வந்து துஷ்டநிக்ரஹம், சிஷ்ட பரிபாலநம், தர்ம ஸம்ஸ்தாபநம் முதலிவற்றைச் செய்துமுடித்து,
அவ்வளவிலே தேவதைகளின் பிரார்த்தனை ஈடேறிற்றாக, (தூண்டும்காற்று ஓய்ந்தமையாலே) மறுபடியும்
திருப்பாற்கடலிலலே போய்ச் சேர்ந்தான் என்கிற செய்தி பொருத்தமான த்ருஷ்டாந்தமாக நினைவுக்கு வரவே அதனைப் பேசி அநுபவித்தாராயிற்று.
“பின்துரக்குங்காற்றிழந்த சூலு“கொண்டல்” என்ற உபமேயவாக்கியத்தில், மேகம் உபமேயமாக நின்றாலும்,
“பின்துரக்குங் காற்றிழந்த” என்ற விசேஷணத்தின் ஸாமர்த்தியத்தினால், மீண்டும் அம்மேகம் கடலில் போய்ச் சேர்ந்ததுவே
உபமேயமாக அநுஸந்திக்கத் தகும். பின்னாலே தள்ளிக்கொண்டு வந்த காற்றை மேகம் இழந்ததென்றால் –
மேகம் கடலில் போய்ச் சேர்ந்துவிட்டது என்ற தாமத்தனையிறே. (காற்றாடியின் கதியைநினைக்க) சூல் கொண்டல்- பூர்ணகர்ப்பமுடைய மேகம் என்கை.
“தீயரக்கிமூக்கும்பருச்செவியுமீர்ந்த” என்று சூர்ப்பணகாபங்கம் மாத்திரமே சொல்லப் பட்டிருந்தாலும் ராவணவதம் வரையிலுள்ள
ஸகலராக்ஷஸநிரஸநமும் இதில் அடங்கும். ஸகல ராக்ஷஸர்களையும் நிரஸிக்க நேர்ந்ததற்கு சூர்ப்பணகையின் பங்கமே
முதற்கிழங்காதலால் அதனைச் சொல்லவே மேலுள்ளதெல்லாம் சொல்லிற்றாகுமென்று ஆழ்வார் சுருங்கச்சொன்னபடி.
அரக்கி- ‘ராக்ஷஸீ’ என்ற வடசொற்சிதைவு. “பரிச்செவியும்” என்ற பாடமாகில், பரி என்று குதிரைக்குப் பெயராகையாலே,
குதிரையின் காதுபோன்ற காதை’ என்று பொருளாகும்.
நம்பிள்ளை காட்டியருளின இந்த யோஜநையில் மூலம் ஒழுங்காக அந்வயிக்கப்பெறுவது தவிர, மேகத்தை உபமேயமாக நிறுத்தி
யுரைத்தலாகிற ஸவாரஸ்யாதிசயம் போற்றத்தக்கது. ஆழ்வார்க்கு லோக யாத்திரையும் பகவதநுபவத்திலே அந்வயிக்கிறதென்கைக்குப் பாங்கு.
———————————————————————-
(பரனாமவனாதல்.) கீழ்ப்பாட்டில் ஸ்ரீராமாவதார விஷயம் ப்ரஸ்துதமாகவே, எம்பெருமான் நம்மைத் திருத்திப்பணி
கொள்ளவேண்டி ராமக்ருஷ்ணாதிரூபத்தாலே மநுஷ்யஸஜாதீயனாய்ப்பிறந்து “உங்களைப்போலே நானும் ஒரு மநுஷ்யனே”
என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், மராமரமேழெய்தது, புள்ளி ஸ்வாய் கீண்டது முதலிய அருமையான
திவ்ய சேஷ்டிதங்களையும் இடையிடையே காட்டிக் கொண்டிருந்தானாதலால் அவற்றை நோக்கி
‘இவன் நம்மைப்போன்ற ஸமாந்ய மநுஷ்யனல்லன்; இவன் பராத்பரனான பரமபுருஷனேயாவன்’ என்று கொண்டு
அவன் பக்கல் பக்திபண்ண வேண்டியிருந்தும், அவஜாநந்தி மாம் மூடா: மாநுஷ்யம் தநுமாச்ரிதம்”
(நான் மநுஷ்யயோநியிற் பிறந்தேனென்று என்னை மூடர்கள் அவமதிக்கின்றார்கள்) என்று கீதையில் அப்பெருமான் தானே
சொல்லி வருந்தும்படியாக அநியாயமாய் அவமதித்துப் பாவிகளாய்க் கெட்டுப் போனார்களே ஸம்ஸாரிகள்;
அப்படி அவமதியாமல் அவனே பரமபுருஷனென்று பாவித்திருப்பர்களாகில் அவர்களைத் தேவர்களெல்லாரும்
கையெடுத்துக் கும்பிட்டிருப்பர்களன்றோ?- என்று அநுதபிக்கிறார்.
பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனாய் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழவே கலந்து–64-
பதவுரை
அன்று–முற்காலத்தில்
மரம் ஏழ் எய்தானை–(ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன,
புள்ளின் வாய் சீண்டானை–பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன இவர்களை நோக்கி
அவன் பரன் ஆம் ஆதல்–‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;) ஸாக்ஷாத் பரமபுருஷரேயாவர்’ என்கிற விஷயத்தை
உõனால்-தங்களுடைய மனத்தினாலே
பாவிப்பர் ஆகில்–அநுஸந்திப்பர்களேயானால்
(அப்படிப்பட்ட விவேகிகளை)
அமரர் கை-தேவர்களின் கைகளானவை
கலந்து–ஒன்றுசேர்ந்து
ஒரு மூன்று போதும்–எப்போதும்
தொழாவே–ஸேவிக்க மாட்டாவோ.
பரனாம் அவனாதல்
அவன் பரனாம் ஆதல்-அந்த ஸ்ரீ ராமபிரானும் ஸ்ரீ கண்ண பிரானும்-நம்மைப் போன்ற மனுஷ்யர் அல்லர் –
சாஷாத் பரம புருஷரே ஆவார் என்கிற விஷயத்தை-அனுசந்திப்பவர்களை-தேவர்கள் கை எடுத்து தொழுவார்கள்
அன்றிக்கே
தேவர்களே தங்கள் அஹங்காரம் ஒழித்து-கை தொழுவார்கள் என்றுமாம்
பாவிப்பராகில்
அனுசந்திப்பர்களே ஆனால்
உரனாய் ஒரு மூன்று போதும்
தங்களுடைய மனத்தினாலே எப்போதும்
உரஸ் -மார்வுக்கு வாசகம் -நெஞ்சையும் சொல்லும்
உரம் -வலி என்றுமாம் -அத்யாவசாயம் உறுதியாக கொண்டால்
மரம் ஏழு அன்று எய்தானைப்
சுக்ரீவன் உடைய நம்பிக்கைக்காக-சப்த சால வருஷங்களை எய்த ஸ்ரீ ராமபிரான் என்ன
புள்ளின் வாய் கீண்டானையே
பகாசுரன் வாயைக் கிழித்து எறிந்த-ஸ்ரீ கண்ணபிரான் என்ன-இவர்களையே
அமரர் கை தான் தொழவே கலந்து-
தேவர்கள் கைகள் ஓன்று சேர்ந்து-சேவிக்க மாட்டாவோ-
உரனால் = ‘உரஸ்’ என்னும் வடசொல் மார்வுக்கு வாசகமாய் நெஞ்சையும் சொல்லக்கடவது; அச்சொல் உரம் எனத் திரிந்து;
மகானகரப் போலியுண்டாகையாலே உரன் என்று கிடக்கிறதிங்கு எதுகையின்பம் நோக்கி,
இங்ஙனன்றிக்கே உரம் என்று தனியே ஒரு தமிழ்ச் சொல்லுமுண்டு; அதற்கு வலி என்று பொருள்;
இங்கு அத்யவஸாயத்தைச் சொன்னபடி ‘அவன் பரமபுருஷனேயென்று உறுதியாகப் பாவித்திருப்பர்களாகில்’ என்றபடி.
மரமேழன்றெய்தானை என்பதனால் ஸ்ரீராம வதாரத்தையும், புள்ளின்வாய்கீண்டயானை என்பதனால் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தையும் குறித்தது-
மற்றும் இப்படிப்பட்ட பல விபாவாவதாரங்களையுங்காட்டினபடி
“அமரர்கைதான் தொழாவே கலந்து” என்பதற்கு இங்கு நாம் உரைத்த பொருளாவது- ‘மநுஷ்யாவதாரம் பண்ணின எம்பெருமான்
திறத்திலும் பரத்வபுத்தியை யார் வஹிக்கின்றார்களோ அவர்களை அமரர்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள்’ என்று உரைத்தோம்.
மூலத்தின் நிலைமைக்கு நன்கு சேரும்படி வேறொருவகையாகவும் உரைக்கலாம்;-
அமரர் என்றது அஹங்காரிகளான தேவதைகளைச் சொன்னபடியாய்; ஸம்ஸாரிகள் விபவாவதாரங்களிலெம்பெருமான்களை
அலக்ஷியம் செய்யாமல் பரத்வத்தையே பாவித்துப் பணிந்திருப்பர்களாகில் அஹங்காரிகளான தேவர்களும் தங்களுடைய
அஹங்காரத்தை யொழித்துவிட்டுக் கூடவே தொழுது உஜ்ஜீவித்திருப்பர்களன்றோ? என்றுரைக்கவுமாம்.
மரமேழன்றெய்த வரலாறு:- ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ் செய்யப்பெற்ற பின்பும் மனம் தெளியாமல் வாலியின்
பேராற்றலைப்பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும், துந்துபியின் உடலெலும்பை
ஒரு போஜனை தூரம் தூக்கி யெறிந்ததையும் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றலமைந்தவனைவெல்வது ஸாத்யமாகுமோ?
என்று சொல்ல அது கேட்ட லக்ஷ்மணன் ‘உனக்கு விச்வாஸம் இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது?’ என்ற, ஸுக்ரீவன்
‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புபோலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும்போது ஸந்தேஹமுண்டாகின்றது;
எழுமரா மரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கடை தூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்பிக்கையுண்டாகும்’
என்று சொல்ல; ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்காமறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான்
துந்துபியின் உடலெலும்புக்குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து போஜனை தூரத்துக்கு அப்பால் எறிய,
அதனைக் கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலரா திருக்கையில். வாலி இதனைத் தூக்கியெறிந்தான்;
இப்போது உலர்நதுபோன இதனைத் தூக்கி யெறிதல் ஒரு சிறப்பன்று’ என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை
ஏழு மராமரங்களின்மேல் ஏவ,அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலங்கங்களையும் துளைத்துச் சென்று மீண்டும்
அம்புறாத் தூணியை அடைந்தது- (மராமரம்- ஆச்சாமரம்.)
புள்ஸின்வாய் கீண்ட வரலாறு:- ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாயொளித்து வளர்கின்ற கண்ணபிரான் மீது
கறுக்கொண்ட கம்ஸனால் கண்ணனை நலியுமாறு நியமிக்கப்பட்ட ஓரஸுரன் கொக்கின் உருவங்கொண்டு சென்று
யமுனைக்கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போலே எரிக்கவே,
அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்தநினைக்கையில்,
கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றிக் கிழித்திட்டனன் என்பதாம்.
——————————————————————
(கலந்துநலியும்.) இது முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு நன்மை உபதேசித்தருளுகிறார்.
நெஞ்சே; நம்முடன் கூடவேயிருந்து நம்மைத் துன்பப்படுத்துகின்றனவாய், அநுபவித்தே ஒழிக்க வேண்டுமமையான
பாவங்களை முகஞ்சிதறப்புடைத்து, பின் பொருகாலும் நம்மருகே நாடவொட்டாமல் துரத்த வேண்டுமானால்
எம்பெருமான் விஷயத்திலே நல்ல பாசுரங்களை இடைவிடாது பேசிக்கொண்டேயிரு என்கிறார் இப்பாட்டில்.
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல்மாலை எப்பொழுதும் சூட்டு–65-
பதவுரை
நெஞ்சே-வாராய்மனமே!
கலந்து-நம்மோடு கூடவேயிருந்து
நலியும்–ஹிம்ஸிக்கின்ற
கடு துயரை–கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான்–முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலங்கல் போல்–மலை போன்றவனும்
தொல் மாலை–அநாதி காலமாக நம்மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை–சிறந்த திருக்குழல் கற்றையை யுடையவனும்
நாரணனை–ஸ்ரீமன் நாராயணனும்
மாதவனை–திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே
சொல் மாலை–பாசுரங்களாகிற மாலைகளை
எப்பொழுதும்–ஸர்வகாலமும்
குட்டு–ஸமர்ப்பி.
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
வாராய் மனமே -நம்முடன் கூடவே இருந்து-ஹிம்சிக்கின்ற கடுமையான துக்கங்களை
துயர் – துக்கங்களும் காரணமான பாபங்களும் -சொல்லும்-
மலங்க அடித்தல் அசம்பாவிதம் ஆயினும் தோஷத்தைக் காட்ட-அருளிச் செய்கிறார்
மலங்க வடித்து மடிப்பான்
முகம் சிதறப் புடைத்து துரத்த வேண்டில்
விலங்கல் போல்
மலை போன்றவனும்-பாஹ்ய குத்ருஷ்டிகளால் அசைக்க முடியாத ஸ்திரபிரதிஷ்டையாய் இருப்பவன் –
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா வென்று கூவும் -திருவாய் மொழி –
தொல்மாலைக்
அநாதி காலமாக நம் மேல் வ்யாமோஹம் உடையவனும்-
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய-
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரு விக்ரமனையே –திருவாய்மொழி
கேசவனை
சிறந்த குழல் கற்றையை உடையவனும்-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன்
குதிரை வடிவம் கொண்ட அசுரனைக் கொன்றவன்
நாரணனை
ஸ்ரீ மன் நாராயணனும்
மாதவனை
திருமகள் கேள்வனுமான-பெருமான் விஷயத்திலே
சொல்மாலை எப்பொழுதும் சூட்டு
பாசுரங்கள் ஆகிற மாலைகளை-சர்வ காலமும் சமர்ப்பிப்பாய்
அடியவர்கள் வாய்ச் சொல்லை பூ போலே தனது தலையிலே சூட்டிக் கொள்பவன்
தலை துலுக்கிக் கொண்டு கொண்டாடுவான் –
சூட்டு –சூட்டினேன் சொல்மாலை –பொய்கையாழ்வார்-
உலகில் மாதர்களுக்கு மலர்களால் அழகு உண்டாவது போலே-பராத்பரனுக்கு அருளிச் செயல்களால் அழகு உண்டாகுமே
துயர் என்று துக்கங்களையும் துக்கங்களுக்குக் காரணமான பாவங்களையுஞ் சொல்லும்.
அசேதநங்களான பாவங்களை மலங்கவடித்தால் அஸம்பாவிதமாயினும், அவற்றினிடத்துத் தமக்குள்ள
ரோஷத்தைக் காட்டினாராமித்தனை. மடிப்பான்- ஆன்விகுதிபெற்ற வினையெச்சம்.
விலங்கல்போல்தொன்மாலை = ‘விலங்கல்’ என்று மலைக்குப்பெயர்; மலையானது ஒருவராலும் அசைக்க முடியாமல்
ஸ்திரப்ரதிஷ்டையாக இருப்பதுபோல, எம்பெருமான் குத்ருஷ்டிகள் முதலான மாதாந்தரஸ்தர்களுடைய
எப்படிப்பட்ட குத்ஸிதவாதங்களாலும் சலிப்பிக்க முடியாமல் வேதவேதாந்தங்களில் ஸ்திரப்ரதிஷ்டையையுடையனாயிருத்தல் பற்றி
மலையை உவமையாகச் சொல்வார்கள். மற்றும் பல காரணங்களுமுண்டு.
“நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே’ வாவென்றுகூவும்” என்ற திருவாய்மொழியும் இங்கு அநுஸந்திக்கத்தகும்.
மால் என்பதற்கு ‘மோஹமுடையவன்’ என்று பொருள்; ‘தொல் மால்’ என்றது – நெடுநாள் முதற்கொண்டே நம்மேல் மோஹமுடையவன் என்றபடி:
“எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கேயருள்கள் செய்ய, விதிசூழ்ந்ததால் எனக்கேலெம்மான் திரிவிக்கிரமனையே.” என்று
திருவாய் மொழியிலருளிச் செய்வது காண்க.
கேசவன் என்பதற்கு- சிறந்த மயிர்முடியையுடையவன் என்றும், பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன் என்றும்,
கேசி யென்னும் பெயரையுடையவனாய்க் குதிரை வடிவங்கொண்டு நலியவந்த அசுரனைக் கொன்றவனென்றும்
மூன்றுவகையாகப் பொருள் கூறுவதுண்டு.
சொல்மாலை சூட்டு = அடியார்களின் வாயில் நின்றும் வருகிற பாசுரம் எம்பெருமானுக்குப் பூமாலைபோன்று பரமபோக்யமாயிருத்தலால் ‘
சொல்மாலை’ என்பது வழக்கம். பூமாலையைத் தலைமேலணிந்து மகிழ்வது போல, இப்படிப்பட்ட அருளிச்செயல்களையும்
எம்பெருமான் தலைதுலுக்கிக்கொண்டாடுவன் என்பது தோன்ற ‘சூட்டு’ எனப்பட்டது.
“சூட்டினேன் சொல்மாலை’ என்றார் பொய்கையாழ்வாரும் உலகில் மாதர்கட்குப் பூமாலையினால் அழகு உண்டாவது போலே
எம்பெருமானுக்கு அருளிச் செயல்களினால் அழகு உண்டாகுமென்க.
————————————————————————–
(சூட்டாய நேமியான்.) நெஞ்சே! நீ ஸாமாந்யமாக மற்றையோருடைய நெஞ்சாக இராமல் என்னுடைய நெஞ்சாக அமைந்தபடியாலும்,
நான் ஒரு வழிபோனால் நீ ஒருவழி போகையன்றியே சாலவும் எனக்கு நீ உடன்பட்டிருக்கையாலும்
உனக்கு ஒருவிசேஷார்த்தம் சொல்லுகிறேன் கேள்;
உலகத்திலே உணர வேண்டும் பொருள்கள் பலவுள்ளனவென்று பலர் நினைத்திருப்பர்களாயினும்,
நினைத்திருப்பதாவது உணரவேண்டும் பொருள் ஒன்றே; அஃதாவது பகவத்விஷயம்.
“ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” என்று பொய்கையாழ்வாரும் அருளிச் செய்தாராகையால்
பகவத்விஷயமொன்றே நமக்கு உணரத்தக்கது; அதனையே நீ உணர்; இதனை நான் மற்றையோர்க்குச் சொன்னால் ஏசுவார்கள்;
ஆகையாலே ஒருவருக்கும் இதை நான் சொல்வதில்லை, உனக்கே சொன்னேன்- என்கிறார்.
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-
பதவுரை
நெஞ்சை–ஓ மனமே!
சூடு ஆய நேமியான்–(ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியையுடையவனும்
மாட்டே–அவன் பக்கத்திலிருந்து கொண்டே
துயர் இழைத்த–துன்பப்படுத்தின
மாயவனை–ஆச்சர்யனும்
ஈட்ட–திரண்ட
வெறிகொண்ட–பரிமளம் மிக்க
தண் துழாய்–குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த
தொல் அரக்கன் இன்உயிரை–வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை.
வேதியனை–வைதிகனுமான எம்பெருமானை
அறிகண்டாய்–அநுஸந்தித்திரு;
அது சொன்னேன்–ஒருவர்க்கும் சொல்லவொண்ணாத அப்படிப்பட்ட இவ்விஷயத்தை உனக்குச் சொன்னேன்.
சூட்டாய நேமியான்
சூடு ஆய நேமியான்-திவ்யாயுதமாயும்-திவ்யாபரணமாயும் அலங்காரமாக இருக்கிற
திரு ஆழியை உடையவனும்-வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
தொல்லரக்கன் இன்னுயிரை
வெகு காலமாக தீமைகளே செய்த-இராவணன் உடைய இனிய உயிரை-
மாட்டே துயர் இழைத்த
அவன் பக்கல் இருந்து கொண்டே துன்பப்படுத்தின-
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே ராஷேச்வர -வால்மீகி-ஸ்ரீ ராம பாணங்களை நினைந்தே ராவணன் உரு அழிந்தான் –
மாயவனை –
ஆச்சார பூதனும்
ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை
திரண்ட -ஈண்ட எனபது எதுகைக்காக ஈட்ட -வல் ஒற்று
இது பரிமளத்துக்கும்-துழாய்க்கும் விசேஷணம்-பரிமளம் மிக்க-குளிர்ந்த-
திருத் துழாய் மாலை அணிந்த-வைதிகனுமான எம்பெருமானை
நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது
நெஞ்சே – அறி கண்டாய் -அது சொன்னேன் -ஒ மனமே -அனுசந்தித்து இரு
ஒருவருக்கும் சொல்ல ஒண்ணாத இந்த விஷயத்தை உனக்குச் சொன்னேன்
என்னுடைய நெஞ்சு என்பதாலும்-உடன்பட்ட நெஞ்சு என்பதாலும்-இது ஒன்றே உணர வேண்டிய பொருள்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –பொய்கையார்
சொன்னேன் இது என்னாமல் அது -என்றது அர்த்த கௌரவம் தோற்ற அருளிச் செய்கிறார்-
மூன்றடிகளால் பகவத்விஷயத்தை வருணிக்கிறார். சூட்டாய நேமியான் -சூடா” என்றகிற வடசொல் ‘சூடு’ என விகாரப்பட்டு,
அலங்காரமென்று பொருள் பெற்றுக்கிடக்கிறது. எம்பெருமானைக் கொண்டு அஸுரராக்ஷஸ ஸம்ஹாரம் முதலிய காரியங்களைக்
கொள்ள நினைப்பவர்கள் திருவாழியாழ்வானை ஆயுதமாகக் கருதுவார்கள்
அங்ஙனன்றிக்கே அநந்யப்ரயோஜநராய் “வடிவார்சோதி வலத்துறையுஞ்சுடாழியும் பல்லாண்டு” என்று திருப்பல்லாண்டு பாடுமவர்கள்
எம்பெருமானுடைய திவ்யாயுதங்களெல்லாவற்றையுமே திருவாபரணகோடியிலே அநுஸந்திப்பர்களாதலால்
அது தோன்ற இங்கு சூட்டாயநேமியான் என்றார். நேமி- திருவாழியாழ்வான்.
தொல்லாக்கனின்னுயிரை மாட்டே துயரிழைத்த மாயவன்- எம்பெருமான் அடியவர்களுக்கு அநாதிகாலமாகவே
நன்மைகளைச்செய்து வருவது போல, இராவணன் பாகவதர்களுக்கு அநாதிகாலமாகத் தீமைகளியற்றிவருதலால் தொல்லரக்கன் எனப்பட்டான்.
அவனுடைய இன்னுயிர்க்குத் துயருண்டாகின மாயவன் இராம பிரான். மாட்டே என்றது ஸமீபத்திலே யிருந்துகெண்டு என்றபடி.
“மாடு பொன் பக்கம் செல்வம்” என்பது நிகண்டு. =ஸ்மாக் ராகவ பாணாநாம் விவ்யதே ராக்ஷஸேச்வர:” என்று-
இராவணன் இராமபிரானுடைய அம்புகளை நினைந்து நினைந்து உருவழிந்தானென்று ஸ்ரீவால் மீகிபகவான் பேசினபடியை இங்கு நினைப்பது.
“ஈட்ட வெறிகொண்ட” என்றவிடத்து, ‘ஈண்ட’ என்றிருக்கவேண்டுவது எதுகையின்பம் நோக்கி ‘ஈட்ட என்று வல்லொற்றாய்க் கிடக்கிறதென்ப.
திரண்ட என்றபடி. இது வெறி (பரிமளத்து)க்கு விசேஷணமாகவுமாம்; துழாய்க்கு விசேஷணமாகவுமாம்
வேதியன் = ‘வைதிக:’ என்ற வடசொல்லிகாரம். “சொன்னேனிது” என்ன வேண்டியிருக்க, “சொன்னேன் அது” என்றது அர்த்த கௌரவர் தோற்றவாம்.
————————————————————————–
(அதுவோநன்றென்று) உபய விபூதியையும் எளிதில் தந்தருளவல்ல எம்பெருமான் திருவடிகளையே வாழ்த்து நெஞ்சமே! என்கிறார்.
தேவதாங்தரங்கள் தம் தம் அடியவர்களுக்குச் சில அபேக்ஷிதங்களைத் தாக்கடவனவாகிலும் பரமபதத்தைத் தருவது
எந்த தேவதைக்கும் முடியாதகாரியம்; எம் பெருமானுக்கோ அது பரமஸுலபமானது;
ஆகையாலே, நெஞ்சமே! நீ பரமபதந் தவிர மற்றதெல்லாம் தீது என்று விட்டிட்டு,விலக்ஷணமான அப்பரமபதமொன்றையே விரும்புவாயாகிலும்,
அது எம்பெருமானுடைய திருவருளால் எளிதில் கிடைக்கக்கூடியதே; அதனைத் தருவதில் அவனுக்கு அருமையேயில்லை அவனுக்கு
இது ஒரு சரக்கேயன்று காண்;
அங்ஙனல்லாமல் பாவோ நாந்யத்ரா கச்சதி” என்று திருவடிசொன்னாற்போலலே அந்தப் பரமபதத்தையும் உபேக்ஷித்துவிட்டு
இந்த மண்ணுலகத்திலேயே நிலைபெற்று நின்று அநுபவிக்க வேணுமென்று விரும்பினாயாகிலும்
இதுவும் அவனால் எளிதில் தரக்கூடியதே; ஆகையால் ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தமும்
எம்பெருமானால் நாம் எளிதில் பெக்கூடியதே; ஆன பின்பு இப்படி ஸர்வேசக்தனான
எம்பெருமானுடைய திருவடிகளையே வாழ்த்தப்பாராய்- என்றாராயிற்று.
(பரமபதாநுபவத்திலும் இஹலோக போகத்திலும் விருப்பம் வைத்திடாமல்
கண்ணன் கழிலிணை வாழ்த்துவதொன்றிலேயே நோக்காக இருக்கக்கடவை என்பது உள்ளுறை.)
அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-
பதவுரை
மடநெஞ்சே–அறிவுகெட்ட மனமே!
அதுவோ நன்று என்று–(இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு
அங்கு அவர் உலகு வேண்டில்–அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில்
மண் நின்று ஆள்வேன் எனினும்–இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும்
கூடும்–அதையும் அவன் எளிதில் அருளக்கூடும்;
அது ஓர் பொருள் இல்லை அன்றே–அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அது ஒழிந்து–அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன்–ஆகவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வாழ்த்துவதே–மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல்–அப்பஸிக்கக்கடவாய்.
அதுவோ நன்று என்று
இவ்வுலகம் இருப்பை விட-அந்த பரமபத அனுபவம் சிறந்தது என்று கொண்டு
அங்கு அமருலகோ வேண்டில்
அந்த பரம பதத்தை-விரும்புகிற பஷத்தில்-ஒ காரம் – பரமபத வைலஷண்யம் காட்டும்
ஸ்வர்க்க லோகம் விரும்புகிற பஷத்திலும் என்றும் கொள்ளலாம்
அதுவோர் பொருள் இல்லை அன்றே
அதனைக் கொடுப்பது-எம்பெருமானுக்கு ஒரு அசாத்தியமான-கார்யம் அல்லவே -ஒரு சரக்கே அன்று –
அதுவோ பொருள் பாட பேதம்
அது ஒழிந்து
அந்த பரமபத அனுபவத்தை உபேஷித்து விட்டு
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும்
இந்த மண்ணின் மேல் நின்று-ஐஸ்வர்யத்தை ஆள வேணும் என்று விரும்பினாய் ஆகிலும்-
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர் -மண்ணிலே இருந்து பகவத் விஷயத்தை அனுபவிக்க என்றுமாம்
கூடும்
அதையும் அவன் எளிதிலே அருளக் கூடும்
மட நெஞ்சே
கண்ணன் தாள் –
ஆக-இப்படி உபய விபூதியையும் அளிக்க வல்ல-எம்பெருமானுடைய திருவடிகளை
ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தத்தையும் அளிக்க வல்லவன்
வாழ்த்துவதே கல்
மங்களா சாசனம் பண்ணுவதையே-அப்யசிக்கக் கடவாய்-உபய விபூதியையும் அபேஷியாமல்
கண்ணன் கழல் இணை வாழ்த்துவதே -இது ஒன்றிலேயே –
நோக்காக இருக்கக் கடவை-
“அதுவோநன்று” என்றவிடத்து ஓகாரம் பரமபதத்தின் ஸவலக்ஷண்யத்தைக் காட்டும்.
“அமரருலகு” என்பது ‘அமருலகு’ எனக் குறைந்து கிடக்கிறது.
“அதுவோ பொருளில்லை” ‘அதுவோர் பொருளில்லை” என்பன பாடபேதங்கள்.
மண் நின்று ஆள்வேனெனிலும் = இதற்கு இரண்டுவகையாகப் பொருள்கொள்ளலாம்;
இந்த மண்ணுலகத்திலேயே யிருந்து கொண்டு பகவத்விஷயத்தையநுபவிக்க விரும்பினாலும் என்பது ஒருபொருள்.
“ஒரு நாயகாமய் ஒடவுலகுடனாண்டவர்” (திருவாய்மொழி 4-1-1-) என்கிறபடியே இவ்வுலகத்தில் ஐச்வரியத்தை
யநுபவிக்கவிரும்பினாலும் என்பது மற்றொரு பொருள். விரும்பும் பலன் எதுவாயினும் பகவானுடைய திருவடிகளை வாழ்த்துவதே
யாத்திரையாயிருக்க வேணுமென்று விளக்கியவாறு.
முதலடியில் “அமருலகோ வேண்டில்” என்றதக்கும் ‘ஸ்வர்க்கலோக புருஷார்த்தத்தை விரும்பினாலும் என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.
திவிவா புவிவா மாமஸ்து வாஸோ நரகேவா நரகாந்தக! ப்ரகாமம்- அவதீரித சாரதாரவிந்தௌ சரணௌ தே மரணேபி சிந்தயாநி” என்ற
முகுந்தமாலையை ஒரு புடையொக்குமிப்பாசுரம்.
கல்- முன்னிலை எவலொருமை வினைமுற்று.
——————————————————————–
(கல்லுங்கனைகடலும்.) கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார்.
அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை
இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார்.
எம்பெருமான் திவ்யமங்கள விக்ரஹத்தோடே தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரப்திஷ்டையாக இருக்கும்படியைப் பேசுகிறாரிதில்.
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–68-
பதவுரை
வெல்ல நெடியான்–மிகவுயர்ந்தவனும்
நிறம் கரியான்–நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்
உள் புகுந்து–உள்ளே பிரவேசித்து
அடியேனது உள்ளத் தகம் நீங்கான்–அடியேனது உள்ளத்தைவிட்டு நீங்குகின்றனில்லை;
(ஆகையாலே)
கல்லும்–திருவேங்கடமலையும்
கனை கடலும்–கோஷிக்கின்ற திருப்பாற்கடலும்
வைகுந்தம்–வைகுண்டமென்கிற
வான் நாடும்–வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல்–அல்பமாய் விட்டன போலும்;
ஏ பாவம்–ஐயோ பாவம்!
கல்லும்
திருவேங்கட மலையும்
கனைகடலும்
கோஷிக்கின்ற திருப்பாற் கடலும்-எம்பெருமான் உறைவதால் வந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக கோஷிக்குமே
வைகுந்த வானாடும்
ஸ்ரீ வைகுண்டம் என்கிற-வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல்
அல்பமாய் விட்டன போலும்-போக்கு வரத்து அற்ற படியால் புல் மூடிப் போயின இவ்விடங்கள்
ஏ பாவம்
ஐயோ பாவம்-இரக்கம் தோற்ற அருளிச் செய்கிறார் –
வெல்ல நெடியான்
மிக உயர்ந்தவனும்-நாம் எவ்வளவு முயன்றாலும் எட்டாமல் இருப்பவன் –
நிறம் கரியான்
நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்-வந்து புகுந்ததாக தோற்றம் மட்டும் இல்லை
மெய்யே வந்து புகுந்தான்
உள் புகுந்து
உள்ளே பிரவேசித்து
நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
அடியேனுடைய உள்ளத்தை விட்டு நீங்குகிறான் இல்லை –
அகலகில்லேன் இறையும் என்று உருச் சொல்லிக் கொண்டே-ஸ்தாவர பிரதிஷ்டையாக உள்ளான்-
அங்குத்தை வாஸம் உபாயம்-மெய்யடியார் ஹிருதய கமலமே பரம உத்தேச்யம் அவனுக்கு-
கல்லும் கனை கடலும் வைகுந்த வானோடும் புல்லென்று ஒழிந்தன கொல்
என்கிற ஈரச் சொல் பாவியேனுடைய நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்பட பெறுவதே
ஆழ்வார்கள் அனுபவம் எங்கே நம்முடைய அனுபவம் எங்கே-ஏதோ பாக்ய விசேஷத்தால் நாமும் சொல்லப் பெற்றோமே-
இரவில் பள்ளி கொள்ளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுசந்திக்க வேண்டிய பாசுரம்
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு -தடவரைவாய் மிளிந்து மின்னும் –
இரண்டு பாசுரங்களும் இதில் இரண்டாம் அடிக்கு எதிர் நில்லா-என்பர் அழகிய மணவாள சீயர்-
வெல்ல நெடியான் = ‘வெல்ல’ என்றது (மிகவும்) என்றபடி. நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாதிருப்பவன் என்கை.
அவன் தானே தன்னருளாலே எளியனாகில் தடை செய்வாரில்லாமையாலே நிர்ஹேதுக க்ருபையாலே வந்து புகுந்தானென்கிறது.
(வெல்ல- வெல்வதற்கு, நெடியான்- முடியாதவன்; ஒருவராலும் ஜயிக்க முடியாதவன் என்று பொருள் கூறுதல் சிறவாது.)
வந்து புகுந்ததாகத் தோன்றிவிடுதல் மாத்திரமல்ல; மெய்யே வந்து புகுந்தானென்கைக்காக நிறங்கரியான் என்று
திருமேனியையுங்கண்டறிந்து பேசுகிறார் போலும்.
பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பிலே வந்து சேர்ந்து “அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று
தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து
“அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே,
எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனைவிட்டு நீங்கேன்”
என்று உருகிச் சொல்லிக் கொண்டு கிடக்கிறானென்பது தோன்ற, “உள்புகுந்து நீங்கான்” என்று அருளிச்செய்யுமழகு காண்மின்.
எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் திருமலை பெருமான்கோயில் முதலான
உகந்தருளினவிடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகின்றானெற்றும்,
ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும்,
இது ஸித்தித்துவிட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் ஆதரம் மட்டமாய் விடுமென்றும்
ஸ்ரீவசநபூஷணத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச்செய்ததெல்லாம்
இப்பாசுரத்தின் முன்னடிகளை மூலமாகக் கொண்டேயென்றுணர்க.
“கல்லும் கனைகடலும் வைகுந்தவனாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்!” என்ற இப்பாசுரத்தின் உருக்கத்தை என்சொல்வோம்?
இப்படிப்பட்ட ஈரச்சொற்கள் பாவியோமான நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்படப் பெறுவதே!
ஆழ்வாருடைய அநுபவம் எங்கே? நாம் எங்கே? அவ்களுடைய அருளிச் செயலுக்கும் நமது நாவுக்கும் எவ்வளவோ தூரமுண்டு.
ஆயினும், ஏதோ பாக்யவிசேஷத்தாலே நமது வாயிலும் இத்தகைய பாசரங்கள் பொருள் தெரிந்தோ தெரியாமலோ
சற்றுப்போது நுழைந்து புறப்படும்படியாக வாய்ப்பது இவ்விருள் தருமாஞாலத்திடைய பெற்றதொரு கனத்த பேறாம்.
ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளிக்கொள்ளும்போது இப்பாசுரத்தைப்
பலகால் அநுஸந்திக்க வேணுமென்பது பெரியோர்களின் உபதேசம்.
கல்லும் = கல் என்று ஸாமாந்யமாக மலையைச் சொல்லிற்றாய், அது இங்கே சிறப்பாய்த் திருவேங்கடமலையைச் சொல்லிற்றாகிறது.
கனைகடல் = எம்பெருமான் எப்போதும் தன்னிடத்து உறைகின்றானென்ற மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்கின்ற கடல் என்கை.
“புல்லென்றொழிந்தனகொல் = புல்லென்று – அற்பத்தனமடைந்து.
எனது நெஞ்சின் முன்னே அவையெல்லாம் அற்பமாய்விட்டன போலும் என்றவாறு.
அவ்விடங்களில் போக்குவரத்து அடியோடு அற்றுப்போனபடியாலே அவை புல்மூடிப்போயினவோ என்கிறார்- என்றரைப்பார் சிலர்.
ஏபாவம்! = சிறந்த ஸ்தலங்களென்று கொண்டாடப்படுகிற அவ்விடங்களுக்கு இப்படிப்பட்ட அவஸ்தையா வந்துவிட்டது!
ஐயோ பாவம்!! என்று இரங்கந் தோற்றப் பேசுகிறபடி.
பெரியாழ்வார் திருமொழியின் முடிவிலுள்ள “பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு” “தடவரைவாய் மிளிர்ந்து மின்னும்”
என்ற இரண்டு பாசுரங்களும் இப்பாசுரத்தின் இரண்டாமடிக்கு எதிர்நில்லா என்று அழகிய மணவாளச்சீய ரருளிச் செய்யும்படி.
——————————————————————-
(அகஞ்சிவந்த கண்ணினராய்) இப்படி என்னுள்ளே மிகவும் அபிநிவேசத்தைப் பண்ணிக் கலந்து வாழ்கின்ற
திருமாலின் திருக்குணங்களை அநுஸந்திக்கப் பெறுகையாகிற ஏற்றமுடைய என்னை ஒருவராலும்
திரஸ்கரிக்க முடியாதென்று மகிழ்ச்சியின் கனத்தாலே மார்பு தட்டிப் பேசுகிறார் போலேயிருக்கிறது இப்பாசுரம்.
எம்பெருமான் ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருப்பதால்-உண்டான ஹர்ஷத்தால் மார்பு தட்டி பேசி அருளுகிறார் இதில்–
அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-
பதவுரை
வல்வினையர் ஆவார்–கடுமையான பாவங்களானவை
(தங்களுடைய குடியிருப்பை யிழந்தமையாலே)
அகம் சிவந்த கண்ணினர் ஆய்–(கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையுடையனவாய்
முக்கி–வருந்தி
முகம் சிதைவராம் அன்றே–முகம் வாடியிருக்கின்றனவல்லவோ?
மிகும்–எல்லாரிலும் மேற்பட்டவனான
திருமால்–திருமாலினுடைய
சீர் கடலை–கல்யாண குணங்களாகிற கடலை
உள் பொதிந்த–உள்ளே அடக்கிக் கொண்ட
சிந்தனையேன் தன்னை–சிந்தனையை யுடையேனான என்னை
செவ்வே–செவ்வையாக
அடர்ந்து–நெருக்கி
ஆர்க்கு அடல் ஆம்–யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.)
அகம் சிவந்த கண்ணினராய்
கோபத்தினால் உள்ளே சிவந்த-கண்களை யுடையனவாய்-முன்பு போலே தனிக் கொல் செலுத்த முடியாமையினாலே
வல்வினையாராவார்
கடுமையான பாபங்களானவை-உயர் திணை யாகவும் கண்ணும் மூக்கும் உள்ளன போலும் பேசி-அவற்றின் கொடுமையை விளக்குகிறார்
முகம் சிதைவராம் அன்றே
முகம் வாடி இருக்கின்றன அல்லவோ
முக்கி
வருந்தி-வாய் விட்டு சொல்ல முடியாமல்-வெறுமனே இருக்க முடியாமல் முக்கி
மிகும் திரு மால்
எல்லாரிலும் மேம்பட்ட வனான-திருமாலினுடைய-மிகச் சிறியவனான உள்ள என்னுள்ளும் வந்து இருக்கச் செய்தேயும்-
விசாலமான இடங்கள் போலே உடல் பூரிக்கின்ற திருமால்-என்னவுமாம் –
சீர்க்கடலை யுள் பொதிந்த
கல்யாண குணங்கள் ஆகிற-கடலை உள்ளே அடக்க் கொண்ட-அவனது கல்யாண குணங்களை இடைவிடாமல் அனுசந்தித்து
சிந்தனையேன் தன்னை
சிந்தனையை உடையேனான என்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து
செவ்வையாக நெருக்கி-யாரால் உபத்ரவிக்க முடியும்-ஒருவராலும் என்னை திரஸ்கரிக்க முடியாது-
இதற்கு முன்பு என்னை மிகவும் வருத்தின கொடிய கருமங்கள் இப்போது முன்பு போலே தனிக்கோல் செலுத்தி
நலிய முடியாமையா லுண்டான சீற்றத்தாலே கண்கள் குதறிப்போய்,
“இதற்கு முன்பு செருக்கராய்த் திரிந்தநாமோ இப்போது இப்படி பரிபவப்படநின்றோம்” என்று வாய்விட்டுக் கதறவும்
கதறாதிருக்கவும் மாட்டாமல் ஊமைகள் உளறுமாபோல உளறிக் கொண்டு முகபங்கமடைகிறபடியைக் காணுங்கொள் என்கிறார் முன்னடிகளில்,
அசேதநங்களான கருமங்களை “வல்வினையராவார்” என உயர்திணைபோலக் கூறுவதும்,
அவற்றுக்குக் கண்ணும் முகமும் உள்ளனபோலக் கூறுவதும், ஆழ்வாருடைய தற்போதைய மகிழ்ச்சியினாலாய கற்பனைகளென்க.
முக்குதல்- வாய்விட்டுச் சொல்லமாட்டாமையும் வெறுமனிருக்கமாட்டாமையும்.
இனிமேல் எப்படிப்பட்ட கருமங்களும் தம்மை அடர்க்கமாட்டாவென்பதையும் அதன் காரணத்தையும் பின்னடிகளிற் பேசுகிறார்.
மிகும் திருமால் = மிகச் சிறிய என்னுள்ளே வந்திருக்கச் செய்தேயும் விசாலமான விடங்களிற்போல உடல் பூரிக்கின்ற திருமால் என்னவுமாம்.
சீர்க்கடலை உள்போதித்தலாவது- அப்பெருமானது அளவற்ற திருக்குணங்களை இடைவிடாது அநுஸந்தித்தல்.
பகவத்குணாநுபவம் பண்ணப்பெற்ற யான் இனி யார்க்கும் சளைக்கமாட்டேன்;
ஒன்றையும் பொருட்படுத்தாமல் எனது காரியமே கண்ணாயிருப்பேன் என்றாராயிற்று.
————————————————————–
(அடர்பொன்முடியானை.) வல்வினைகள் இனிமேல் என்னை அடர்க்கதில்லா என்றார் கீழ்ப்பாட்டில்.
இனி அந்த வல்வினைகள் என்னை என்ன செய்தாலும் எனக்கு வருவதொரு கெடுதியில்லையென்கிறாரிதில்.
எம்பெருமானே ஸகலவித பந்துவுமாவன் என்று உறுதியான அத்யவஸாயம் கொண்டேனான பின்பு
இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸந்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை யென்கிறார்.
இப்படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான
தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லையே;
பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்;
சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள்.
ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணினானென்பதுண்டோ? பலபல பட்டுப் பீதாம்பரங்களையும் அணிகலன்களையும்
தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக் கொள்ளவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் லக்ஷியம் பண்ணினானோ?
பகவத் குணங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதற்குப் புறம்பான லாப நஷ்டங்களொன்றும் கணிசிக்கப்பட மாட்டாவாகையாலே ஆழ்வாரும்
“யாதாகில் யாதேயினி” என்று மிடுக்குத் தோற்றமொழிகின்றார்.
சர்வவித பந்துவாக அவனை ப்ரஹ்லாதன் கொண்டது போலே அடியேனும் கொண்டேனே
இனி என் குறை எனக்கு -இல்லை எனக்கு நிகர் -என்கிறார்–
அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர்ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதேயினி–70-
பதவுரை
அடர்பொன் முடியானை–அடர்ந்த பொன்மயமான திருவபிஷேகத்தையுடையவனும்
ஆயிரம் பேரானை–ஸஹஸ்ரநாமங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும்
சுடர்கொள் சுடர் ஆழியானை–(சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களையெல்லாம் வென்று விளங்குகின்ற திருவாழியையுடையவனுமான எம்பெருமானை.
இடர் கடியும் மாதா பிது ஆக–துக்கங்களைப் போக்கவல்லதாயும் தந்தையுமாக
எனது உள்ளே வைத்தேன்–என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்;
இனி–இனிமேல்
யாது ஆகில் யாதே–(எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன?
அடர் பொன் முடியானை
அடர்ந்த பொன்மயமான திரு அபிஷேகத்தை உடையவனும்-
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திரு ஆழிகளும் கிண்கிணியும்
அரையில் தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்-
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்-என்றபடி அனைத்து திவ்ய பூஷணங்களுக்கும் உப லஷணம்
பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே -என்றபடி
அவனுடைய விலஷணமான-திவ்ய ஆயுதங்கள்-திவ்ய ஆபரணங்கள்-திரு நாமங்கள்
இவற்றை சிந்திக்கப் புக்கால்-இதர விஷயங்களைப் பற்றின லாப நஷ்டங்கள் நெஞ்சிலே ஒரு பொருட்டாக படுமோ –
ஆயிரம் பேரானை
சஹச்ர நாமங்களால் பிரதி பாதிக்கப் படுபவனும்
சுடர் கொள் சுடர்ஆழியானை
சந்திர சூர்ய சுடர்களை வென்று-விளங்குகின்ற திரு ஆழியை உடையவனுமான
எம்பெருமானை
திரு ஆழி முன்னால் எல்லா தேஜஸ் பதார்த்தங்களும் இருள் போலே கிடக்குமே
பாநோ பா நோ த்வதீயா ஸ்புரதி-ஸூ தர்சன சதகம் -16- ஸ்லோஹம்
இடர் கடியும் மாதா பிதுவாக எனதுள்ளே வைத்தேன்
துக்கங்களைப் போக்க வல்ல-தாயும் தந்தையுமாக-என்னுடைய ஹிருதயத்திலே நிறுத்தினேன்-
மாதா பிதா-வாக என்று திருத்த வேண்டாம்
பித்ரு -என்பதை பிது என்கிறார்
யாதாகில் யாதேயினி
இனி மேல் எனக்கு-என்ன நேர்ந்தால் என்ன –
அடர்பொன் முடியானை = இங்குத் திருவபிஷேகத்தை மாத்திரம் சொல்லி யிருப்பது
“செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர் திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும்,
தாளநன்மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும், மங்கல வைம்படையுந் தோள்வளையும்
குழையும் மக்கரமும் வாளிகளும் சுட்டியும்” (பெரியாழ்வார் திருமொழி 1-5-10) என்கிற மற்றுமுள்ள திவ்ய பூஷணங்கள்
பலவற்றுக்கும் உபலக்ஷணமென்க. “பலபலவேயாபரணம் பேரும் பலபலவே” என்றபடி எம்பெருமானுடைய விலக்ஷணமான
திருவாபரணங்களையும் திருநாமங்களையும் திவ்யாயுதங்களையும் சிந்திக்கப் புகுந்தால்
இதர விஷயங்களைப் பற்றின லாப நஷ்டங்கள் ஒரு பொருளாக நெஞ்சிற்படுமோ என்பது உள்ளுறை.
சுடர்கொள் சுடராழி = உலகில் சந்திரன் ஸூர்யன் நக்ஷத்திரங்கள் அக்நி முதலிய சுடர்ப் பொருள்கள் எத்தனையுண்டோ
அவையெல்லாவற்றினுடையவும் தேஜஸ்ஸைக் கவர்கின்ற ஆழி;
திருவாழியின் முன்னே அவையெல்லாம் இருள் மூடினாற்போலே கிடக்குமென்றபடி.
பாநோ! பா நோ த்வதீய ஸ்புருதி” என்ற (13) ஸுநர்சநசதக ச்லோகத்தில் இது விரித்துரைக்கப்பட்டது.
மாதாபிதுவாக = “மாதா பிதாவாக” என்றிருக்க வேணுமென்று சிலர் பாடத்தைத் திருத்துவார்கள்;
அதுவேண்டா; வடமொழியில் பிதா என்னும் பதத்தின் பகுதியான பித்ரு என்பதை இங்கே பிது எனப் பிரயோகித்துள்ளார்.
—————————————————————-
(இனி நின்று நின்பெருமை) எம்பெருமானையே எல்லவுறவுமாகப் பற்றினேனென்றார் கீழ்ப்பாட்டில்.
இங்ஙனே பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என்னையே மாதா பிதுவாகக் கொண்டதாகக் சொன்னீரே,
என்னுடைய படிகளெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமோ? அறிவீராகில் சிறிது சொல்லிக்காணும்’ என்ற;
பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னாநிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.
ஆழ்வீர் எல்லா உறவாகவும் பற்றினீரே-என்னை பற்றி சொல்லிக் காணும் என்ன
என்னால் உனது பெருமைக்கு ஈடாக சொல்ல முடியுமோ-என்கிறார்-
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-
பதவுரை
தனி நின்ற–தானொருவனுமே காரணமாய் நின்றவனும்
சார்வு இலா–வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான
மூர்த்தி–எம்பெருமானே!
அகத்து பனி நீர் உலவு செம்சடையான்–உள்ளே குளிர்ந்த கங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன்.
ஆகத்தான்–உன் திருமேனியை ஆச்ரயித்து வாழ்பவன்;
நான்கு முகத்தான்–நான்முகக் கடவுள்
நின் உந்தி முதல்–உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்;
இனி–இப்படியான பின்பு
நின் பெருமை–உனது மேன்மையை
யான் நின்று உரைப்பது என்னே-தான் முயன்று சொல்வது எங்ஙனே?
(என்னால் சொல்லப்போகாதென்கை)
இனி நின்று நின் பெருமை
இப்படியான பின்பு-உனது மேன்மையை
யான் உரைப்பது என்னே
நான் முயன்று சொல்வது எங்கனே -என்னால் சொல்லப் போகாது -என்கை –
தனி நின்ற
தான் ஒருவனே காரணமாய் நின்றவனும்
சார்விலா
வேறு ஒருவரை தனக்கு-ஆதாரமாக உடைத்தாகாதவனுமான-ஏகோஹைவ நாராயணா ஆஸீத் –
தனியனாக இருந்தானே-வேறு ஒருவரையும் சாராமல் –
மூர்த்தி –
எம்பெருமான்
பனி நீர் அகத்துலவு செஞ்சடையான்
அகத்து பனி நீர் உல வு செஞ்சடையான் -உள்ளே குளிர்ந்த கங்கை நீர் தங்குகின்ற
சிவந்த ஜடையை உடையனான சிவன்
ஆகத்தான்-
உனது திரு மேனியை ஆச்ரயித்து வாழ்பவன்-ஒரு சமய விசேஷத்தில் இடம் கொடுத்ததைக் கொண்டு-
ஆழ்வார்கள் இதை அடிக்கடி அருளிச் செய்வார்கள்
நான்கு முகத்தான் நின்னுந்தி முதல்
நான் முகக் கடவுள்-உனது திரு நாபி கமலத்தை-மூல காரணமாக உடையவன்
நின் உந்தியை முதல் காரணமாக -அன்மொழித் தொகை-பஹூ வ்ரீஹ சமாசம்
அடங்கியது-உந்தியிலே பிறந்து உலகுக்கு எல்லாம் முதல் காரணம் என்றுமாம்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும்-கூறாளும் தனிவுடம்பன் –திருவாய்மொழி -என்றும்
அக்கும் புலியனகளும் உடையாரவர் ஒரு பக்கம் நிற்க நின்ற பண்பர் -பெரிய திருமொழி –என்றும்
தனி நின்ற சார்விலாமூர்த்தி = காரியப் பொருள்கள் யாவும் அழிந்த காலத்து
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்” (நாராயண னொருவனே இருந்தான்.) என்று உபநிஷத்தில் சொன்னபடியே
தனியனாக இருந்தவனே என்கிறது= தனிநின்ற என்பதனால் அக்காலத்தில் கீழ்ப்பட்ட தெய்வங்களெல்லாம்
மேற்பட்ட தெய்வங்களைச் சரணம்புக, எல்லாருமாக ஸ்ரீமந் நாராயணமூர்த்தியைச் சரணம் புகுந்து ஸத்தைபெற்றார்களென்று
சொல்லிற்றே யொழிய, நாராயணன் மற்றொருவனைப்பற்றி ஸத்தை பெற்றதாகச் சொல்லாமையாலே சார்விலா மூர்த்தி என்றார்;
நான் மற்றொரு தெய்வத்தைச் சாராதமூர்த்தி என்கை. மூர்த்தி-= அண்மைவிளி; ஸ்வாமியே! என்று விளித்தவாறு.
(பனிநீர் இத்யாதி.) கங்கையைச் சடையிலே கொண்ட சிவன் உன்னுடைய திருமேனியில் ஏகதேசத்தை இருப்பிடமாகக் கொண்டு ஸத்தை பெற்றான்;
நான்முகனோ உனது நாபிக் கமலத்தில் நின்றும் பிறந்து ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாவானான்;
இப்படியிருக்க உனது பெருமையை புல்லியனான நான் பேசுவதென்று ஒன்றுண்டோ?- என்றாயிற்று.
ஆகத்தான் = ஆகமாவது சரீரம் ஒரு ஸமய விசேஷத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு எம்பெருமான் தனது திருமேனியின்
ஒருபுறத்திலே இடம் கொடுத்து உதவினன் என்கிற இதைப் பெரிய குணமாகக் கொண்டு ஆழ்வார்கள் இதனை அடிக்கடி அருளிச்செய்வார்கள்;
“ஏறாளுமிறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந் தனியுடம்பன்” என்பர் திருவாய்மொழியிலும்;
“அக்கும் புலியினதளுமுடையாரவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்றார் பெரிய திருமொழியிலே திருமங்கையாழ்வார்.
நின்னுந்திமுதல் = அன்மொழித்தொகை; (பஹுரீஹிஸமாஸமடங்கியது) நின் உந்தியை முதற்காரணமாக வுடையவன் என்று பொருள்படுதலால்.
நின் உந்தியிலே பிறந்து உலகுக்கெல்லாம் முதற்காரணமாயிருப்பவன் என்றுரைத்தலுமாம்.
————————————————————————–
(முதலாந்திருவுருவம்.) கீழ்ப்பாட்டில் பிரமனுடையவும் சிவனுடையவும் பேச்சு வந்தமையாலே பரத்வ விஷயமாகப்
பிறர் சொல்லுகிற வாதங்கள் நினைவுக்கு வந்து, அவற்றைத் தள்ளி ஸித்தாந்தம் அருளிச் செய்கிறாரிதில்.
முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-
பதவுரை
முதல்வா–ஸகலகாரண பூதனான பெருமானே!
மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர்–பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்;
மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர்–‘மேற்சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள்.
நிகர் இலகு கார் உருவா–மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்காநின்ற திருமேனியை யுடையவனே!
புகர் இலகு தாமரையின் பூ–தேஜஸ்ஸுமிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது
நின் அகத்தது அன்றே–உன்னிடத்திலுள்ளதன்றோ? (திருநாபிக்கமலமே உனது பரத்வத்தை வெளியிடவல்லது என்றவாறு.)
முதலாம் திருவுருவம் மூன்று என்பர்
ப்ரஹ்ம விஷ்ணு சிவன் என்று-மூன்று திவ்ய மூர்த்திகள்-தலைவராவர் என்பர் சிலர்
அரி அயன் அரன் மூவரும் சமம் என்பர் பிறர்
ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
மூன்றுக்கும் ஒன்றே முதலாகும் என்பர்-மேல் சொன்ன மூவருக்கும்-வேறு ஒரு மூர்த்தி தலையாக
இருக்கும் என்பர் சிலர்-துரீய ப்ரஹ்ம வாதிகள்
முதல்வா
சர்வ காரண பூதனான பெருமானே-ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம் தோன்ற முதல்வா என்று விளிக்கிறார்
நிகரிலகு காருருவா
மேகம் என்று சொல்லலாம் படி -அதனோடு ஒத்து விளங்கா நின்ற-திருமேனியை உடையவனே -சேவிக்கும் பொழுதே சகல தாபங்களும் ஆறும்படி
ஓருருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ ஓன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவம் கண்ட போதே ஓன்று ஆம் சோதி முகில் உருவம் எம்மடிகள் உருவம் தானே -திரு நெடும் தாண்டகம்
நின்னகத்தன்றே புகரிலகு தாமரையின் பூ
தேஜஸ் மிக்கு நின்ற தாமரைப் பூவானது-உன்னிடத்தில் உள்ளது அன்றோ-
திரு நாபி கமலமே உன்னுடைய பரத்வத்தை வெளியிட வல்லது -என்றபடி
சிவன் பிரமன் இடமும் அந்த பிரமன் உன்னிடமும் இருந்து தோன்றி -நீ அன்றோ பராத்பரன் –
பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம்
த்ரயோ தேவாஸ் துல்யா த்ரியதயமித மத்வைதம் அதிகம் த்ரிகா தஸ்மாத் தத்வம் பரமிதி
விதர்க்கான் விகடயன் -விபோர் நாபீ பத்மா விதி சிவ நிதானம் பகவத்
தத் அந்யத் ப்ருபங்கீ பாவ திதி சித்தாந்தயாதி ந-என்று அருளிச் செய்கிறார்
த்ரயோ தேவாஸ் துல்யா
அரி அயன் அரன் மூன்று தெய்வங்களுக்கும் சாம்யம் சொல்வார்கள் -த்ரி மூர்த்தி சாம்ய வாதம்-
வஸ்துக்களின் பேதம் ஒத்துக் கொண்டு அவற்றுக்கு ஏற்ற தாழ்வு இல்லாததை சொல்வது சாம்ய வாதம்
த்ரியதயமிதம் அத்வைதம்-இம் மூன்று தெய்வங்களும்வேறு வேறு அல்ல
ஒன்றே என்பர் சிலர் –ஐக்ய வாதம்
வஸ்துக்களின் பேதத்தையே ஒத்துக் கொள்ளாமை-அதிகம் த்ரிகாதஸ்மாத் தத்வம் பரம் -இம்மூவரில் மேம்பா துரீய ப்ரஹ்மமே பரதத்வம் என்பர்
இதி விதர்க்கான் விகடயன் -விபோர் நாபீ பத்மா இத்யாதி
நாபி பத்மம் முதல் கிழங்காய் இருந்து கொண்டு-சித்தாந்தம் நமக்கு அறிவிக்கின்றது-
(முதலாந்திருவுருவம் மூன்றென்பர்.) ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்கிற மூன்று மூர்த்திகளும் துல்யமாகவே
உலகுக்குத் தலைவர்கள் என்று கொள்ளுகிற சிலருடைய கொள்கையை இதனால் அநுவதித்தபடி,
அரி அயன் அரன் என்கிற மும்மூர்த்திகளும் பரஸ்பரம் ஏற்றத்தாழ்வின்றியே ஸமாநராயிருப்பரென்று சிலர் சொல்லுவார்கள்-
என்றவிதனால் அது ஸ்வஸித்தாந்தமல்ல, பரபக்ஷம் என்பது விளங்கும்.
(ஒன்றே முதலாகும் மூன்றுக்குமென்பர்.) உத்தீர்ணவாதிகனென்று சிலருண்டு; அவர்களுடைய கொள்கை இது;
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்களிற்காட்டில் வேறுபட்ட நான்காவது தத்துவம் ஒன்றுண்டு;
அதுவே இம்மூன்று தத்துவங்கட்கும் நிர்வாஹகமாகனது என்பராமவர்கள்; அவர்கள் துரீய ப்ரஹ்மவாதிகளெனப்படுவார்கள்.
அவர்களுடைய பக்ஷமும் ஸ்வஸித்தாந்தமல்லவென்று இதனால் காட்டப்பட்டது.
ஸ்ரீமந்நாராயணனொருவனே பரதத்துவமென்பது தோன்ற முதல்வா! என விளிக்கின்றார் காண்மின்.
ஸேவிக்கும்போதே ஸகலதாபங்களும் ஆறும்படியான திருமேனிகொண்ட தெய்வமே பரதத்துவம் என்பது விளங்க நிகரிலகுகாருருவா! என்றும் விளிக்கின்றார்.
“ஒருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்று மாகடலுருவம் ஒத்துநின்ற, மூவுருவுங் கண்டபோது ஒன்று ஆங்சோதி முகிலுருவமெம்மடிகளுருவந்தானே” என்று திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்தில் பரதத்துவநிர்ணயம் பண்ணும் பாசுரத்தில் அருளிச் செய்தமை காண்க.
ஸ்ரீமந்நாராயணனே பரத்துவமென்பது நன்கு பொருந்துமாறு விஷயம் காட்டுகிறார்
நின்னகத்ததன்றே புகலிலகு தாமரையின்பூ என்பதனால் சிவன் பிரமனிடத்துத் தோன்றியவனென்றும்;
அந்தப் பிரமன் உனது திருநாபிக் கமலத்தில் தோன்றியவனென்றும் காஸ்த்ரங்களிற் சொல்லியிருக்கும்போது
அந்தத் தாமரையைத் திருநாபியிலேயுடைய நீயேயன்றோ பரதத்துவமாக இருக்கத் தகதியுண்டென்ற காட்டியவாறு.
இந்தப் பாசுரத்தையே பட்டர் ஸ்ரீரங்ராஜஸ்தவ – பூர்வசதகத்தில் பெரியவொரு ச்லோகமாகப் பன்னியுரைத்தார்” அதாவது
த்ரயோ தேவாஸ்துல்யா:, த்ரிதயமிதமத்வைதம், அதிகம் த்ரிகா தஸ்மாத்தத்வம் பாரமிதி விதர்க்காந் விகடயந்-
விபோர் நாபீபத்மோ விதிசிவநிதாநம் பகவத: ததந்யத் ப்ரூபங்கீபரவதிதி ஸித்தாந்தயதி ந: ” என்பதாம்.
இந்த ச்லோகத்தின் பொருளையும் சிறிது விவரிப்போம்;
(த்ரயோ தேவாஸ் துல்யா.) அரி அயன் அரனென்றம் மூன்று தெய்வங்களும் ஸாம்யஞ்சொல்லுவர் சிலர்.
(த்ரிதயமிதம் அத்வைதம்.) இம்மூன்று தெய்வங்களும் வெவ்வேறல்ல; ஒன்றேயென்பர் சிலர். கீழே சொன்னது த்ரிமூர்த்திஸாம்யவாதம்;
இது ஐக்யவாதம். வஸ்துக்களின் பேதத்தை ஒப்புக்கொண்டு அவற்றுக்கு ஏற்றத் தாழ்வுகளில்லாமை சொல்லுவது ஸாம்யவாதமெனப்படும்.
வஸ்துக்களுக்கு பேதத்தையே ஒப்புக்கொள்ளாமை ஐக்யவாதமெனப்படும். இந்த ஐகய்வாதம் இப்பாட்டில் அநுவதிக்கப்படவில்லையாகிலும்
அதனை நிரஸிப்பதும் ஆழ்வார்க்குத் திருவுள்ளமே யென்றணர்ந்த பட்டர் அதனையும் எடுத்துக் கூறினாரென்க.
(அதிகம் த்ரிகாதஸ்மாத் தத்வம் பரம்.) இம்மூன்று தெய்வங்களிற் காட்டிலும் மேற்பட்டதான துரீயப்ரஹ்மமே
பரதத்துவமென்று உத்தீர்யவாதம் பண்ணுவர் சிலர்..
(இதி விதர்க்காந் விகடயந் விபோ: நாபீபத்ம: இத்யாதி.) இப்படிப்பட்ட சங்கைகளை யெல்லாம் அடியறுக்கின்ற
திருநாபிக்கமலமானது ப்ரஹ்மருத்ரர்களுக்கும் முதற்கிழங்காயிருந்துகொண்டு
‘உலகமெல்லாம் எம்பெருமானுடைய புருவநெறிப்புக்குப் பரவசப்பட்டது’ என்கிற ஸித்தாந்தத்தை நமக்கு நன்கு தெரிவிக்கின்றது- என்றாராயிற்று.
ஆகையாலே இப்பாசுரத்தின் மொழிபெயர்ப்பாயிருக்கும் இந்த ச்லோகமென்ற அநுஸந்திக்கக்கடவது.
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்