த்ருணமந்தரத க்ருத்வா பிரத்யுவாச ஸூ சிஸ்மிதா
நிவர்த்தய மநோ மத்த ஸ்வ ஜநே ப்ரீயதாம் ம்ந -சுந்தர -21-3-
த்ருணம் -புல்லை
அந்தரத -தனக்கும் ராவணனுக்கும் இடையிலே
க்ருத்வா -இருக்கும்படி செய்து
பிரத்யுவாச -பிராட்டி பதில் சொன்னாள்
ஸூ சிஸ்மிதா-பரி சுத்தமான புன்சிரிப்பை யுடையவளாய்
நிவர்த்தய-திருப்பிக் கொள்
மநோ -மனத்தை
மத்த -என்னிடத்தில் இருந்து
ஸ்வ ஜநே-உன் மனைவியர் இடத்தில்
ப்ரீயதாம் ம்ந-ப்ரீதி பண்ணட்டும்
த்ருணம் மந்தரத க்ருத்வா பிரத்யுவாச ஸூ சிஸ்மிதா
நிவர்த்தய மநோ மத்த ஸ்வ ஜநே ப்ரீயதாம் ம்ந
அவதாரிகை –
ஸ்ரஸ்தா மால்யாம் பரதரோ வைதேஹீ மநு சிந்தயன் ப்ருசம் நியுக்தஸ் தச்யாஞ்ச மத நேந மதோத் கட -சுந்தர -18-4-என்று
உறங்கி உணர்ந்து எழுந்து இருந்த ராவணன் மதன பரவசனாய்
தீபிகா காஞ்ச நீ காச்சித் -சுந்தர -18-10-11-12-13-14-என்று
கனக தீபிகா களா சீ வாலவ்யஜன தாள வ்ருந்த ப்ருங்கார சாமார ரமணீ யத்வஜ சத்ராதி பரி பர்ஹங்களைக் கொண்டு அங்க நா சதம் சேவிக்க
ராவணஸ் யோத்தமா ஸ் த்ரிய-சுந்தர -18-15-என்று பிரதான மகிஷிகளிலே சிலர் பின் செல்ல நிதர அசேஷ மந்த கதியாய்க் கொண்டு அசோகா வநிகையில் செல்ல
க்ருபாளுவான பெருமாளுக்கு -ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா -சுந்தர -38-35-என்று கருத்து அறிந்த மகிஷி யாகையாலும்
தவம் மாதா சர்வ லோகா நாம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
அகில ஜகன் மாதரம் -சரணாகதி கத்யம் -என்றும்
உபாய பூதஸ்ய வல்லபா ப்ராப்தி யோகி நீ -பாஞ்சராத்ரம் -என்றும்
லஷ்மீ புருஷ காரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி -பாஞ்சராத்ரம் -என்றும்
விசேஷித்து புருஷகாரம் ஆகிற சம்பந்தத்தாலும்
தன பரி பவங்கள் கிடக்க இவ்வநர்த்தத்தைக் கண்டு பிராட்டியும் இவன் சொன்னவற்றுக்கு பிரதி வசனமும்
ஹிதமும்
சொல்லுகிறார் இஸ் சர்க்கத்தாலே-
காமயே த்வாம் விசாலாஷி -சுந்தர -20-3- என்றும்
யத் யத் பச்யாமி தி காதரம் சீதாம் ஸூ சத்ருசா நநே
தஸ்மின் தஸ்மின் ப்ருது ஸ்ரோணி சஷூர் மம நிபத்யதே -சுந்தர -20-15-என்றும்
ஸ்வ சாபலம் சொன்னவற்றுக்கு
நிவர்த்தய மநோ மத்த -21-3- என்றும்
சாது தர்ம மவே ஷஸ்வ ஸாது ஸாது வ்ரதம சர – சுந்தர -21-7- என்றும்
பொல்லாங்குகளைத் தவிர்த்து நன்மைகளை ஆசரி என்று உத்தரம் சொல்லியும்
புங்க்க்ஷ்வ போகான் யதா ஸூ கம் -சுந்தர -20-35- என்றும்
ஏக வேணி தாரா சய்யா த்யானம் மலி நம்பரம் அஸ்தா நேப்யுபவாசச்ச நைதான் யௌபயிகா நி தே-சுந்தர -20-8- என்றும் சொன்னதற்கு
அகார்யம் ந மயா கார்யமேக பத்ன்யா விகர்ஹிதம்
குலம் சம்ப்ராப்தயா புண்யம் குலே மஹதி ஜாதயா-சுந்தர -21-4-என்றும்
நாஹம் ஔபயிகீ பார்யா பரபார்யா சதீ தவ -சுந்தர -21-6 என்றும் உத்தரம் சொல்லியும்
அசக்ருத் சம்யுகே பக்நா நா மயா விமருதி தத வஜா
அசக்தா ப்ரத்ய நீ கேஷூ ஸ்தாதும் மம ஸூ ரா ஸூ ரா -சுந்தர -20-20- என்று
தன் ஆண் பிள்ளைத் தனம் சொன்னதற்கு
ஜனஸ் தானே ஹதஸ் தானே நிஹதே ரஷ சாம்பலே
அசக்தேன த்வயா ரஷ கருதமேதத சாதுவை
ஆஸ்ரமம து தயோ ஸூ ந்யம் பிரவிச்ச நரசிம்ஹயோ
கோசரம கதயோர் ப்ராதரோ ரபா நீதா த்வயாதமா
நஹி கந்த முபாக்ராய ராம லஷ்மண யோஸ் த்வயா
சகயம் வந்தர்சனே ஸ்தாதும் ஸூ நா சார்தூல யோரிவ -சுந்தர -21-29/30/31-என்றும்
பெருமாள் கண் வட்டத்திலே நிற்கும் நீ தப்புவையோ
புலி முன்னே நிற்கும் நாய் போலே
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று கொன்று சூறை யாடின -கூறை யாடின -தனி வீரத்துக்கு
பிரதிக்ரியையாக மாரீசனைக் கொண்டு நீ பண்ணின க்ருத்ரிமத்திலே கண்டிலோம்
அவ வாண் பிள்ளைகள் நாற்றம் கேட்டு நின்றால் பின்பன்றோ உன்னுடைய வெற்றியும் ஆண் பிள்ளைத் தனமும் காணலாம் -என்று
பெருமாளுடைய பிள்ளைத் தனமும் பேசி உத்தரம் சொல்லியும்
லோகேப்யோ யா நி ரத் நானி சம்ப்ரமத்யா ஹ்ருதா நி மே
தானி தே பீரு சர்வாணி ராஜ்யம் சைததத ஹஞ்ச தே -சுந்தர -20-18-என்றும்
யானி வைஸ்ரவணே ஸூ ப்ரூ ரத் நானி ச தாநானி ச -சுந்தர -20-33-என்றும்
ராஜ்ய ரத்ன தான தான்ய பத்த நாதிகளைத் தருகிறேன் -என்று ப்ரலோபித்தற்கு
சக்பா லோபயிதும் நா ஹமைச் வர்யேண தநேந வா
அனந்யா ராக வேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15–என்றும்
யம் த்வம் தேவி நிரீஷசே ச ச்லாக்ய ச குணீ தன்ய ச குலீன ச புத்திமான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-131- என்றும்
மஹா தனத்தைப் பிரியாதே இருக்கிற என்னையா நாலு காசிட்டு வசீ கரிக்கத்தேடுதி -என்று உத்தரம் சொல்லியும்
பஹூ மன்ய ஸ்வ மாம் -சுந்தர -20-3- என்றும்
மாஞ்ச புங்ஷ்வ யதா ஸூ கம் -சுந்தர -20-33- என்றும் என்னையும் ஆதரித்துக் கொண்டு அணைய வேணும் காண் என்றதற்கு
உபதாய புஜம் தஸ்ய லோகா நா தஸ்ய சதக்ருதம் கதம் நாமோ பதாஸ்யாமி புஜமன் யஸ்ய கஸ்ய சித் -சுந்தர -21-16- என்று
அணிமிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய்-திருவாய் -10-3-5- என்று
எல்லாரும் தலையாலே சுமக்கும் படியான உலகுடைய பெருமாள் தோளிலே தலைவைத்த நான்
வேறு ஒரு ஷூ த்ரனைத் தீண்டுவதோ -என்று உத்தரம் சொல்லியும்
பஹூ மன்யஸ்வ மாம் -சுந்தர -20-3-என்றும்
நஹி வைதே ஹி ராமச் த்வாம் த்ரஷ்டும் வாப்யுபலப்ச்யதே -சுந்தர -20-27- என்றும்
ந சாபி மம ஹஸ்தாத் த்வாம் ப்ராப்து மர்ஹதி ராகவ -சுந்தர -20-28- என்றும்
என் கையிலே அகப்பட்ட உன்னைப் பெருமாள் காணவும் கிட்டவும் வல்லரோ-என்பதற்கு
அப நேஷ்யதி மாம் பார்த்தா தவத்த சீக்ரமரிந்தம-
அ ஸூ ரேப்ய ஸ்ரீ யம் தீப்தாம் விஷ்ணுஸ் தரிபிரிவ க்ரமை-சுந்தர -21-28-என்று
அ ஸூரா பஹ்ருத ஸ்ரீ யை மீட்டால் போலே உன்னெதிரே என்னையும் மீட்கப் புகுகிற படி பார் -என்று உத்தரம் சொல்லியும்
ருத்தும் மமா நு பசய த்வம் ஸ்ரீ யம் பதரே யசச்ச மே -சுந்தர -20-25- என்று
என் ஐஸ்வர்ய சம்பத் கீர்த்திகளைப் பாராய் -என்றதற்கு
சம்ருத்தா நி வினச்யந்தி ராஷ்ட்ராணி ந கராணி ச
ததேயம் த்வாம் சமா சாத்ய லங்கா ரத்னௌ க சங்குலா அபராதாத் தவை கஸ்ய நசிராத வின சிஷ்யதி -சுந்தர -21-12-என்று
நசியாத இவை யடைய நசிக்கப் புகுகிறபடி பார் -என்று உத்தரம் சொல்லியும்
நிஷிப்த விஜயோ ராமோ கத ஸ்ரீர் வன கோசர வ்ரதீ ஸ்தண்டி லசாயீ ச சங்கே ஜீவதி வா ந வா -சுந்தர -20-26-என்று
ப்ரஷ்டைச்வர்யராய் சத்தை தன்னிலே யகப்பட சந்தேஹிக்கும் படி இருக்கிறார் -என்று சொன்னதற்கு
ஷிப்ரம் தவ ச நாதோ மே ராம சௌமித்ரிணா சஹ
தோய மல்பமிவாதித்ய ப்ராணா நா தாஸ்யதே சரை -சுந்தர -21-33- என்று
அவர் தம்பியும் தாமுமாக உன் தலையை அறுத்து ஸூகமாய் இருக்கப் புகுகிறபடி பாரீர் -என்று உத்தரம் சொல்லியும்
ந ராமஸ் தபஸா தேவி ந பலேன ந விக்ரமை
ந தா நே ந மயா துல்யஸ் தேஜஸா யசசாபி வா -சுந்தர -20-34- என்று
புஜ பல விக்ரமதந தேஜ கீர்த்திகளாலே நமக்கு ஒரு தரம் போராது என்று சொன்னதற்கு
வர்ஜயேத் வஜ்ர முத்ஸ்ருஷ்டம் வர்ஜயே தந்த கச் சிரம்
த்வத் விதம் ந து சங்க்ருத்தோ லோகா நா தஸ் ச ராகவ
ராமஸ்ய தனுஷ சப்தம் ச்ரோஷ்யசி த்வம் மஹாஸ்வ நம
இஷவோ நிபதி ஷயந்தி ராம லஷ்மண லஷணா -சுந்தர -21-23/24/26-என்று
பெருமாள் ஆண்மைக்கு நீ தோற்றினால் உன்னை உயிர் உடன் விடுவாரோ
அவர் தாம் வேணுமோ
அவருடைய வில்லில் சிறு நாண் ஒலி யைக் கேட்டுப் பொறுத்தால் அன்றோ
திரு நாமம் சாத்தின அம்புகள் அன்றோ காட்டு காட்டு என்று சொல்லுகின்றன -என்று உத்தரம் சொல்லியும்
இப்படி இவனை மீட்கலாமோ என்று பார்க்கிறாள் இஸ் சர்க்கத்தாலே –
முதல் ஸ்லோகத்திலே
தஸ்ய தத வசனம் ச்ருத்வா ஸீதா ரௌத்ரச்ய ரஷச ஆர்த்தா தீநஸ் வரா தீ நம பிரத்யுவாச ச நைர் வாச -சுந்தர -21-1- என்று
கொடியானான பையல் வார்த்தையைக் கேட்டுத் தான் சில வார்த்தை சொன்னாள்-என்கிறது
இரண்டாம் ஸ்லோகத்திலே –
துக்கார்த்தா ருததீ ஸீதா வேபமா நா தபஸ்விநீ சிந்த யந்தி வராரோஹா பதிமேவ பதிவ்ரதா -சுந்தர -21-2- என்று
பதிரேகா கதிஸ் சதா -என்றும்
கதி என்றும் தானாவான் -நாச் திரு -8-9-என்றும்
எல்லா அவஸ்தையிலும் ரஷகர் பெருமாள் ஆகையாலே நீ இப்படி படாத படி ரஷித்துக் கொள்ளீ-என்றாள்-
இந்த ஸ்லோகத்திலே
அவர் தூரஸ்தர் வந்து ரஷிக்கும் தனையும் இவனுக்கு ஹிதம் சொல்லி மீட்கலாமோ என்னும் நினைவாலே
கிடந்த துரும்பை முன்னே பொகட்டு என் பக்கல் நின்றும் உன் நெஞ்சை மீட்டு
வகுத்த உன் பெண்களோடு பொருந்தி வர்த்திக்கப் பார் -என்கிறாள்-
வியாக்யானம் –
1-த்ருணமந்தரத க்ருத்வா பிரத்யுவாச
வார்த்தை சொல்லுகிற இடத்தில் துரும்பை முன்னே பொகட்டுச் சொன்னாள் –
வார்த்தை சொல்லுவார்க்கு எல்லாம் அங்கன் அன்றே துரும்பு போடுகை-
இதுக்கு வாசனை என் என்னில்
ஆசனம் அன்னம் உதகம் தேயம் -ஆபஸ்தம்ப -2-4-1-என்று ராஜாக்களுக்கு ஆசனம் இடுகை விஹிதம் ஆகையாலும்
உபசரித்தாள் தான் பிரசன்னனாய் மீளுமோ என்கிற சங்கை யாலும்
அபாவே பூமிருதகம் தருணா நி -ஆபஸ்தம்ப -2-4-14-என்கிற மர்யாதையாலே ஆசனம் இட்டாள் ஆகவுமாம்
2-த்ருணமந்தரத க்ருத்வா –
ருஜூ ப்ரணாம க்ரியயைவ தன்வீ ப்ரத்யாதி தேச -ரகுவம்சம் -6-25-என்று
நெஞ்சில் இருக்கிறதற்கு அந்ய வதுபசரித்தால் -இவள் விரக்தை என்று நிராசனாமோஎன்கிற நினைவாலே ஆகிலுமாம் –
அன்றியிலே –
3-த்ருணமந்தரத க்ருத்வா –
சமீபமுபா சங்க்ராந்தம்-சுந்தர -18-25-ஏற்று அணுக விடாதே ராவணன் ஆசன்னனாகப் புகுந்த படியாலே வ்யவதானம் வேண்டி தா அபி ஜாயதே -என்கிற ந்யாயத்தாலே துரும்பை நடுவே பொகட்டாள் ஆகவுமாம் –
அன்றியிலே –
4-த்ருணமந்தரத க்ருத்வா –
ந பரமுக நிரீஷணம் நாபி சம பாஷணம்-என்று
ஸ்திரீகளுக்குப் பர புருஷ நிரீ ஷணம் பண்ணுதல் -வார்த்தை சொல்லுதல் செய்யலாகாது
ஆகையாலே தருணத்தை முன்னே பொகட்டு அத்தை வ்யாஜீ கரித்து அவன் உபஸ்ரோதா வாகைக்கு ஆகிலுமாம்
அன்றியிலே –
5-த்ருணமந்தரத க்ருத்வா —
பத்ய முக்தம் விசஷணை ராஷசா நாம பாவாய த்வம் வா ந பிரதிபத்யசே -சுந்தர -21-10- என்று
பண்டும் ஹித பரரான அகம்பன மாரீச மால்யவத் பிரமுகர் சொன்ன வார்த்தையும் கேட்டிலை
இப்போது இத் துரும்பு பிரதிபத்தி பண்ணில் இ றே நீ பிரதிபத்தி பண்ணுவது என்று
நிதர்சன ம் சாராணாம் லகுர் பஹூ தருணம் நர -மாகம் -2-50-என்று
த்ருஷ்டாந்தீ கரித்துப் பொகட்டாள் ஆகவுமாம் –
6-த்ருணமந்தரத க்ருத்வா –
அருமந்த அர்த்தத்துக்கு பிரதிபத்தாவாக வேணும் என்று
ச குலீன ச புத்தி மான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-131- என்று
தான் பார்த்தவை புத்தி யுக்தங்கள் ஆகையாலே ப்ரதிகூலியாத தருணத்தை சேதனம் ஆக்குவோம் என்னும் நினைவாலே யாகவுமாம்
7- த்ருணமந்தரத க்ருத்வா –
தருணத்தை சேதனம் ஆக்கி ஸ்வ சக்தியை இட்டு இந்த வைபாவத்தாலே பீதனாய் மீளுமோ என்கிற நினைவாலே ஆகவுமாம் –
8- த்ருணமந்தரத க்ருத்வா –
அஜ்ஞனாய் இருக்கிற உன்னை
த்ருணமிவ லகு மே நே -என்று இத் த்ருணத்தோ பாதியாக நினைத்து இருப்பது என்று பொகட்டாள் ஆகவுமாம் –
9- த்ருணமந்தரத க்ருத்வா –
ஹ்ருதயே க்ருத்வா -அந்தர சப்தம் -நெஞ்சைக் குறிக்கும் -என்று கொண்டு
பிரதிகூலா சரணம் பண்ணாத இவ்வளவாலே தருணத்தை குவாளாக நெஞ்சில் கொண்டு
ந த்வா த்ருணத்வம் மன்யே -ந த்வா த்ருணாய மன்யே மஹா பாஷ்யம் -2-13-17-என்னுமா போலே
உன்னை இத் துரும்போ பாதியாகவும் நினைத்து இரேன் காண் -என்றாகவுமாம்
10- த்ருணமந்தரத க்ருத்வா –
அஜ்ஞனாய் இருக்கிற நீ
ஜ்ஞா நே ண ஹீந ப ஸூபி சமா ந-நரசிம்ஹ -16-13-என்று
இப்புல்லைத் தின்கிற பசு அன்றோ என்று பொகட்டாள் ஆகவுமாம்
11-த்ருணமந்தரத க்ருத்வா —
த்வம் நீஸ் சசவத் ஸ்மிருத -சுந்தர -22-16- என்றும்
யதந்தரம் சிம்ஹாஸ் ருகாலயோர் வ நே -ஆரண்யம் -47-45-என்றும்
திர்யக் ஜாதீயனான உனக்கு போக்யம் புல்லன்றோ-
நாஹ மௌபயிகீ பார்யா பரபார்யா சதீ தவ -என்கிற நான் ஆமோ என்று பொகட்டாள் ஆகவுமாம் –
12- த்ருணமந்தரத க்ருத்வா —
விசித்ராணி ச மால்யாநி சாந்த நான்ய கரூணி ச
விவிதானி ச வாஸாம்சி திவ்ய அந்ய ஆபரணாநிச -சுந்தர -20-33- என்றும்
யாநி வைஸ்ரவணே ஸூ ப்ரூ ரத்நானி ச தநா நி ச -சுந்தர -20-33- என்றும் -என்றும்
நீ அடுக்கின வற்றை இத் த்ருணத்தோ பாதியாகக் காண் நினைத்து இருப்பது என்று பொகட்டாள் ஆகவுமாம் –
13-த்ருணமந்தரத க்ருத்வா —
தாரயத் யாத்மா நோ தேஹம் தத் சமாகம காங்ஷிணீ -சுந்தர -16-24-என்று
அவர் வருவாரோ என்கிற நசையாலே இருந்தேன் அத்தனை
உத்பத்ய வேண் யுத்க்ரத நே ந ஸீ கிராமஹம் கமிஷ்யாமி யமச்ய மூலம் -சுந்தர -28-17- என்றும்
தருணம் ஸூ ரஷ்ய ஜீவிதம் -என்றும்
த்ருணத்தோபாதி உயிரில் சரக்கில்லை காண் முடியப் காண் புகுகிறேன் என்று பொகட்டாள் ஆகவுமாம்-
14-த்ருணமந்தரத க்ருத்வா —
லங்கா ரத்னௌ கே சங்குலா அபராதாத் தவை கஸ்ய நசிராத் வின சிஷ்யதி -சுந்தர -21-22-என்று
உன் குற்றத்தாலே இலங்கை நசிக்கப் புகுகிறது
அப்போதைக்கு இத்துராலைத் திரட்டி ஒரு குடிலைப் பண்ணிக் கொள்ள வல்லீ-என்று பொகட்டாள் ஆகவுமாம் –
15-த்ருணமந்தரத க்ருத்வா —
தருண உலப ந்யாயத்தாலே சாமான்ய விசேஷ ரூபமான கார்யங்களை உபதேசிக்கிறேன் காண் -என்றுமாம் -உலபம் -கொடி
16-த்ருணமந்தரத க்ருத்வா —
நீ உபதேசிப்பது அவர் என் குற்றங்களைப் பொறுக்கில் அன்றோ -என்று நினைக்கிறானாக கருதி
கடலிலே இத்துரும்பைப் பொகட்டால் இது நடுக் கிடவாதாப் போலே
அவர் திரு உள்ளத்திலே கிடவாது காண் –
ந ச்மரத்யப காராணாம் சதமப்யாத்மவத்தயா – அயோத்யா -1-4- என்று பிழை அறியாத பெருமாள் காண் -என்கிற நினைவாலே யாகிலுமாம்
17-த்ருணமந்தரத க்ருத்வா —
நடுக் கிடந்த துரும்பை எடுத்துப் பொகட்டு இப்படியே
ஈர்ஷ்யா ரோ ஷௌபஹிஷ்க்ருத்ய -அயோத்யா -27-7-என்று நெஞ்சில் ரோஷாதிகளைப் பொகட்டு அவரைப் பற்று என்றாள் ஆகவுமாம்
18-த்ருணமந்தரத க்ருத்வா —
மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா வதஞ்சா நிச்சதா கோரம் -சுந்தர -21-19-என்று
உன் குடியிருப்பும் உன் உயிரும் வேண்டி இருப்பதாகில் இப்புல்லைக் கவ்வி
அவ வாண் பிள்ளை காலிலே விழாய் என்று பொகட்டாள் ஆகவுமாம்
19-த்ருணமந்தரத க்ருத்வா —
துரும்பை தூணாக்கி அத தூணிலே ராகவ சிம்ஹத்தை புறப்பட விட்டுப் பொல்லாங்கு நினைத்த
நெஞ்சைப் பிளப்பிக்கும் நினைவாலே ஆகிலுமாம்
20-த்ருணமந்தரத க்ருத்வா —
தருண லோஷ்டாதிகளை முன்னே முடி எறிந்து பிரதிஜ்ஞை பண்ணக் கடவது இ றே
அந்த மர்யாதயாலே துரும்பை முன்னே எறிந்து
ஷிப்ரம் தவ ச நா தோ மேராம சௌமித்ரிணா சஹ
தோய மல்பமிவாதி தய ப்ராணா நாதாஸ் யதே ஸ்ரை-சுந்தர -21-83-என்று
உன் உயிரைத் தீண்டார் -கோலிட்டுக் குத்தி எடுத்துப் போகப் புகுகிற படியைப் பார் என்று பிரதிஜ்ஞை பண்ணுகிறாள் ஆகவுமாம்
21-த்ருணமந்தரத க்ருத்வா —
கிள்ளி-என்று கொண்டு-ந சாபி மம ஹஸ்தாத் த்வாம் ப்ராப்தும் அர்ஹதி ராகவ -சுந்தர -20-28- என்ற உன் முன்னே
அப நேஷ்யதி மாம் பார்த்தா தவத்த சீக்ரமரிந்தம-சுந்தர -21-28-என்று உன்னைத் தலை அறுத்துக் கொண்டு போகப் புகுகிறபடி பாராய் என்றாகவுமாம்
22-த்ருணமந்தரத க்ருத்வா —
விப்ர பீடாகரம் சேத்தியா மங்கம் ப்ராஹ்மணஸ்யது-என்று சாஸ்திரம் சொல்லுகையாலே
ப்ருங்கார தாரா ரோத்து ச்ச சூ க்ரச்யாஷி ச தஷிணம் பவித்ரஸ்ய சிரோக்ரேண ஷோபயாமாச வாமன -என்றும்
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய -பெரியாழ்வார் -1-8-7-என்றும்
துரும்பாலே சுக்கிரன் கண்ணைக் கலக்கினால் போலே
தஸ்மின் தஸ்மின் ப்ருச்ரோனி சஷூர் மம நிபதயதே -சுந்தர -20-15-என்று
பரதார தர்சனம் பண்ணின உன் கண்ணைத் துரும்பை இட்டுக் கலக்குகிறேன் -என்றாகவுமாம்
23-த்ருணமந்தரத க்ருத்வா —
ச தர்ப்பம் சம்ச்தராத் க்ருஹ்ய -சுந்தர -38-30-என்றும்
ஹி நச்து ஸ்ம ச தஷிணம் -சுந்தர -38-37- என்று
தர்ப்பத்தை இட்டுக் கண்ணறையனான காகத்தைக் கண்ணரை யாக்கினால் போலே
இத் துரும்பை இட்டு உன் கண்ணைக் கலக்குவிக்கிறேன் -என்று பொகட்டாள் ஆகவுமாம் –
24-த்ருணமந்தரத க்ருத்வா —
நர நாராயணர்களில் நாராயணன் இஷீகத்தைக் கொண்டு டம்போத் பாவனை கொன்றால் போலே இத்துரும்பை இட்டு உன்னைக் கொல்லுகிறேன்-என்று பொகட்டாள் ஆகவுமாம் –
25-த்ருணமந்தரத க்ருத்வா —
சீதாயாஸ் தேஜஸா தகதாம் -சுந்தர -51-36-என்றும்
ந த்வா குர்மி த சக்ரீவ பாச்ம பச்மார்ஹா தேஜஸா -சுந்தர -22-20- என்றும்
என் பாதி வ்ரத்ய தேஜஸ் ஸிலே இத்தூரலை இட்டு மூட்டி உன்னைச் சுடுகிறேன் என்று பொகட்டாள் ஆகவுமாம் –
26-த்ருணமந்தரத க்ருத்வா —
க்ருதி சேத நே -என்கிற தாதுவிலேயாய் கிடந்த துரும்பை நடுவே கிள்ளிப் பொகட்டு
இப்படியே அங்குள் யக்ரேண தான்ஹன்யாம் -யுத்தம் -18-24- என்றும்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை-13- என்றும் சொல்லுகிறபடியே
உன் தலையைக் கிள்ளிப் போக்குவிக்கிறேன் -என்று பொகட்டாள் ஆகவுமாம் –
ஆக இப்படி துரும்பைப் பொகட்டு மேல் செய்தது என் என்னில்
1-பிரத்யுவாச –
பிரதி வசனம் பண்ணினாள்
2- பிரத்யுவாச
கேட்ட வார்த்தைக்கு உத்தரம் சொன்னாள்
அவன் சொன்ன வற்றுக்கு இசைந்து ஓம் என்றாலும் உத்தரமாம் இ றே
அப்படியோ என்னில்
3- பிரத்யுவாச –
பிரத்யாக்யானம் பண்ணினாள் -மறு வார்த்தை
அதாவது -நாஹம் ஔபயிகீ பார்யா-சுந்தர -21-6-என்றும்
ந மாம ப்ரார்த்தயிதும் யுக்தம் ஸூ சித்திமிவ பாபக்ருத் அகார்யம் ந மயா கார்யம் -சுந்தர -21-4-என்றும் பிரதி ஷேதித்துச் சொன்னாள்
4- பிரத்யுவாச –
நிஷேதித்த அளவன்றிக்கே பிரதி கூலமாகவே சொன்னாள் -அதாவது
ப்ராணா நாதாஸ் யதே சரி -சுந்தர -21-33- என்றும்
ராஷ சேந்திர மகா சர்ப்பான் ச ராம கருடோ மகான் உத்தரிஷ்யதி வேகேன-சுந்தர -21-27- என்றும்
அவனுக்கு பருஷமாகவே சொன்னாள் -பொறுக்க ஒண்ணாத படி வார்த்தை சொன்னாள் –
உவாச –வசபரிபாஷணே- பரக்கச் சொன்னாள் -ஒரு வார்த்தை சொன்னாள் ஆகை அன்றிக்கே
பரித-
பரக்க விட்டு வார்த்தை சொன்னாள் -அதாவது –
சாது தர்ம மவே ஷஸ்வ சாது சாது வ்ரதம் சர -சுந்தர -21-7- என்றும்
யதா தவ ததான் யேஷாம்தாரா ரஷ்யா நிசாசர-சுந்தர -21-14- என்றும் பொறுமை சொல்லியும்
ஏவம் த்வாம் பாப கர்மாணம் வஷ்யந்தி நிக்ருதா ஜனா
திஷ்ட்யைதத் வ்யசனம் ப்ராப்தோ ரௌத்ர இத்யேவ ஹர்ஷிதா -சுந்தர -21-14-என்று
ஹ்ருதய பேதம் பிறக்கும் படி சொல்லியும்
மாஞ்சாச்மை பூத்வா நிர்யாதயிதுமர்ஹசி -சுந்தர -21-22- என்றும்
விதித சஹ தர்மஜ்ஞ சரணாகத வத்சலா தேன மைத்ரீ பவது -சுந்தர -21-20- என்று
ஜ்ஞான தானம் பண்ணியும்
அந்யதா த்வம் ஹி குர்வாணோ வதம் ப்ராப்ச்யசி -சுந்தர -21-33 என்றும்
ப்ராணா நாதச்யதே சரை- -சுந்தர -21-33 என்றும் தண்டம் சொள்ளையும்
இப்புடைகளிலே
சாம
பேத
தான
தண்ட
ரூபமான சதுர் உபாயங்களையும் சொன்னாளே-
இப்படிக்கன்றி சொல்லுகிற போது முக விகாசம் இருந்த படி என் என்னில்
1-ஸூ சிஸ் மிதா –
எதிரி கனவியனாகில்-தர்மம் வீர்யம் பலம் இவற்றால் கணத்தவனாக -இருந்தால் அன்றோ இ றே
சம்ரம்பம் பண்ண வேண்டுவது – கோபம் போன்றகுணன்களைக் காட்ட வேண்டியது
அநீதி யாலே தன்னடியே நசிக்கப் புகுகிற இவன் இ றே இப்படிச் சொல்லுகிறான் -என்று சிரித்தாள்
2- ஸூ சிஸ் மிதா —
ஹ சந்நிவ ந்ருபோ ஹந்தி -என்று ராஜாக்கள் குற்றவாளரை வெட்டி வைக்கச் சொல்லும் போதும் சிரித்து இ றே சொல்லுவது –
இவள் தானும் -அபிஜ்ஞா ராஜ தர்மாணாம்-அயோத்யா -26-4- என்று ராஜ மரியாதை அறியுமவளாய் ராஜ புத்ரியுமாய் ராஜ மஹிஷியுமாய் இ றே இருப்பது
அவன் தருகிறேன் என்ற தான தான்ய ரத் நாதிகளைக் கேட்டு ஸ்திரீ சாபல்யத்தாலே உகந்து சிரித்தாளோ என்னில்
3- ஸூ சிஸ் மிதா –
அர்த்த சாப்ள நிபந்தனம் அல்ல வைராக்ய நிபந்தனம் என்கிற பாவ சுத்தி சிரிப்பின் படியிலே காணலாய் இருந்தது
4-ஸூ சிஸ் மிதா —
ஆஸ்ரமம் து தயோ ஸூ ந்யம் பிரவிச்ய நரசிம்ஹயோ கோசரம் கதயோர் ப்ராத்ரோர்ப நீதா த்வயாதம -சுந்தர -21-30- என்று
அவ் வாண் பிள்ளை முன்னேறித் தோற்பித்து என்னைச் சிறை கோலமாட்டாத அபாலன் தான் கிடீர் –
ந ராமஸ் தபஸா தேவி ந ப லேந ந விக்ரமை
ந த நேந மயா துல்ய -சுந்தர -21-33-என்று
பெருமாளைத் தரம் அல்லர் என்கிறான் என்று சிரித்தாள்
5-ஸூ சிஸ் மிதா –
வதம் ப்ராப்ச்யசி -சுந்தர -21-23- என்று கழுகும் பருந்தும் கவ்வக் கிடக்கிறவன் தான் கிடீர்
சங்கே ஜீவதி வா ந வா -சுந்தர -20-26- என்று பெருமாள் திரு மேனிக்குத் தீங்கு சொல்லுகிறான் -என்று சிரித்தாள் –
6-ஸூ சிஸ் மிதா –
விபீஷண விதேயம் ஹி இலங்கைச் வர்யமிதம் க்ருதம் – யுத்த -116-13- என்றும்
ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயா ம்பி ஷேசித -யுத்த -28-27-என்று
விபீஷணனுக்குப் பெருமாள் கொடுத்த ஐஸ்வர்யத்தை இ றே
ருத்திம் மமா நு பஸ்ய த்வம் ஸ்ரீ யம் பத்ரே -சுந்தர -20-25- என்று தன்னதாக பிரமித்துப் பிதற்றுகிறான் என்று சிரித்தாள் ஆகவுமாம்
7-ஸூ சிஸ் மிதா –
உபதாய புஜம் தஸ்ய லோக நாதச்ய சதக்ருதம் கதம் நாமோ பதாஸ் யாமி -சுந்தர -21-16- என்று இருக்கிற என்னை இ றே இப்பையல்
மாஞ்ச புங்ஷவ -சுந்தர -20-33- என்று பிதற்றுதல் -என்று சிரித்தாள் ஆகவுமாம்
8-ஸூ சிஸ் மிதா –
குசலீ யதி காகுத்ச்த கிந்நு சாகர மேகலாம் மஹீம் தஹதி -சுந்தர -36-13-என்று பெருமாள் குறி யசங்கா தே இருக்க நானோ இவ்விருப்பு இருப்பேன் என்று
தத சா ஹ்ரீமதீ -சுந்தர -36-6-போலே வ்ரீளா ஸ்மிதம் பண்ணினாள் ஆகவுமாம் –
அன்றியிலே
9-ஸூ சிஸ் மிதா –
ததோ மலிந சம்வீதாம் -சுந்தர -15-18-என்றும்
மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து -நாச் திரு -1-8-என்றும்
விரஹ விஷண்ணை யாய் இலையமுது செய்யாமை யாலே ஸ்மிதம் பண்ணின போது
வெளுத்த திரு முத்து ஒளியை உடையளாய் இருந்தாள் என்றுமாம்
10-ஸூ சிஸ் மிதா –
என்று பிராட்டியை அபஹரித்தான் என்று கேட்ட போது
க்ருதம் கார்யமிதி ஸ்ரீ மான் வ்யாஜஹார பிதா மஹா -ஆரண்ய -52-13-என்று
இனி ராவணன் பட்டான் என்று ப்ரஹ்மா பிரியப் பட்டால் போலே இவளும் இவன் அபராதம் பண்ணின போதே பட்டான் என்று
ப்ரீதி ஸ்மிதம் பண்ணினாள் ஆகவுமாம் –
இப்படி ஸ்மிதம் பண்ணிச் சொன்ன பாசுரம் ஏன் என்னில்
நிவர்த்த யேத்யாதி-
அக்ருத்யங்களை தவிர்த்து
க்ருத்யங்களை அனுஷ்டி -என்கிறாள் –
1-நிவர்த்தய மந-
மநோ வியாபாரம் ஆத்மா தீனம் அன்றோ -ஆனபின்பு நெஞ்சை மீள் -என்கிறாள்
2- மநோ நிவர்த்தய –
நல்ல குதிரை யாட்கள் குதிரையைக் கசை தாங்குமா போலே
மந ப்ரவாஹத்தை மீட்கப் பார் –
3- மநோ நிவர்த்தய –
மநோ ஹி ஹேது சர்வேஷாம் இந்த்ரியாணாம் ப்ரவர்த்தநே என்கிறபடியே –
கொத்து முதலியான மனஸை மீட்கவே பாஹ்ய இந்த்ரியங்களும் மீளும் காண்
4-நிவர்த்தய ம ந –
உன் நெஞ்சை மீட்டு பிராணன்களை மீட்டுக் கொள்ளாய்-
4- நிவர்த்தய ம் ந –
ஆத்மைவ ஹ்யாத்மாநோ பந்து ராத்மைவ ரிபுராத் மந -ஸ்ரீ கீதை -6-5-என்று நித்ய சத்ருவை ஜெயிக்கப் பாராய்
5-மநோ நிவர்த்தய –
நாட்டில் வேகவத் பதார்த்தங்களுக்கு மநோ ஜவம் என்று திருஷ்டாந்தம் சொல்லலாம் படி
கடுவிசையாய் ஆயிற்று இருப்பது -கை கழிந்தால் மீட்க ஒண்ணாது
கரணாதிபனான நீ மீட்கப் பார்
மம த்வச்சா நிவ்ருத் தஸ்ய ந ப்ராவர்த் தந்த வர்த்தம நி -அயோத்யா -59-1- என்று
அஸ்வ ஹ்ருதயம் அறியும் ஸூ மந்தரன் தப்பச் சொன்னான் இறே-
கிடக்கிற ராஜ கார்ய மேடு பள்ளமும் மந பிரவ்ருத்தியைத் தவிரப் போமோ -என்ன –
1-மத்தோ நிவர்த்தய –
புறம்புள்ளவற்றை தவிரச் சொன்னேனோ -என் பக்கலில் நின்றும் மீள்
2-மத்தோ நிவர்த்தய –
பஞ்சாஸ் யாமிவ பன்னகீம் -சுந்தர -51-23-என்று விஷவத் பதார்த்தங்கள் போலே உனக்கு விநாச ஹேதுவான என் பக்கல் நின்றும் மீள்
3- மத்தோ நிவர்த்தய –
நயந்தி நிக்ருதி ப்ரஜ்ஞம் பரதாரா பராபவம் -சுந்தர -21-9- என்று
எப்படியும் பரிபவ சீலைகளாய் யாயிற்று பரதாரம் இருப்பது
ஆனபின்பு என் பக்கல் நின்றும் மடை மாறாய்-
உன்பக்கல் நின்றும் மாறினால் மனஸ் ஸூ நிர் விஷயமாய் இருக்குமோ என்னில்
1-ஸ்வ ஜநே ப்ரீயதாம் –
வகுத்த விஷயத்திலே உகக்கும் படி பாராய்
2-ஸ்வ ஜநே ப்ரீயதாம் –
ஸ்வேஷூ தாரேஷூ ரதிம் நோபலபாம் யஹம் -சுந்தர -20-30- என்கிற நினைவை மாறி
ஸ்வேஷூ தாரேஷூ ரம்யதாம் -சுந்தர -21-8- என்கிறபடியே
அக்னி சாஷிகமாகக் கைப்பிடித்த தர்ம தாரங்களை ரமிக்கப் பார்
3-ஸ்வே ஷூ தாரேஷூ-
விஜாதீயரான மனிதரை விட்டு
சஜாதீயர்களான ராஷச ஸ்திரீகளோடே புஜிக்கப் பார் –
ப்ரீயதாம் -என்று ராக ப்ராப்தமாக வருமத்தை பலத்திலே ச்நேஹிப்பிக்கலாமோ என்னில்
ப்ரீயதாம் என்று பிரசாதிக்கிறாள்
மந ப்ரீயதாம் –
நீ பிரியப் பட்டாய் ஆகில் மனஸ் ஸூ தான் பிரியப் படுவதாக –
ஸ்வ ஜநே -என்று விஷய சப்தமி -ஏழாம் வேற்றுமை -யாகை அன்றிக்கே
அதி கரண சப்தமி யாக்கி ஸ்வ ஜனத்தில் வர்த்திக்கிற மனஸ் ஸூ பிரியப் படுவதாக என்று பொருளாம் –
அதாவது -தாஸ்த்வாம் பரிசரிஷ் யந்தி -சுந்தர -20-32- என்றும்
யாவத்யோ மம சர்வாசாம் ஐஸ்வர்யம் குரு ஜானகி -சுந்தர் -20-31-என்றும்
என்னை அவர்கள் சேவிக்கும் படி சொன்ன படியாலே அவர்கள் வெறுத்தாயிற்று இருப்பது
அது தவிர்ந்து உன்னளவிலே அவர்கள் நெஞ்சு குளிரும்படி பண்ணு என்றுமாம் –
4-ஸ்வ ஜநே மந ப்ரீயதாம் –
ஸ்வ ஜனத்தில் மனஸ் ஸூ பிரியப் படுவதாக
ஸ்வ ஜனத்தினுடைய மனஸ் ஸூ என்றபடியே
பரி பூதா விஷண்ணா சேத பார்யா பர்த்தா விநச்யதி -என்று
நீ பண்ணின பாராமையாலும் உபேஷையாலும் அவர்கள் வெறுத்தால் உனக்கு அநர்த்தம் வரும்
அது வாராதபடி அவர்கள் நெஞ்சு குளிரும்படி நிவர்த்தய -என்றாகிலுமாம்-
மத்தோ மநோ நிவர்த்தய
த்யேயோ நாராயணஸ் சதா -பாரதம் -ஆநு -என்றும்
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண -நாரசிம்ஹ புராணம் என்றும்
ச்ம்ருதோ யச்சதி சோபநம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-78-என்றும்
ராமேதி ராமேதி சதைவ புத்த்யாவி சிந்தய -சுந்தர -33-11- என்றும்
ஜகாம மநஸா ராமம் -சுந்தர -15-54- என்றும்
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -பெரியாழ்வார் -5-4-8-என்றும்
அடிகள் தம் அடியே நினையும் அடியவர் -பெரிய திரு -2-6-10-என்றும்
உஜ்ஜீவனமான விஷயத்தை அநவரத பாவனை பண்ண ப்ராப்தம் அத்தனை போக்கி
அநர்த்த ஹேதுவாக என்னை நினையாதே காண்
நிவர்த்தய
ப்ரவ்ருத்தி தர்மம் ஒருகாலும் ஆகாது
நிவ்ருத்தி தர்மமே உத்தாரகம் காண் –
மநோ நிவர்த்தய –
நிவ்ருத்திக்கு விஷயம் நிஷித்தம்
பிரவ்ருத்திக்கு விஷயம் சம்சாரம்
ஆனபின்பு நிஷித்தங்களை விட்டு விஹிதங்களிலே ப்ரவர்த்திக்கப் பார் –
ஆக
இந்த ஸ்லோகத்தாலே
ஸ்வ அநர்த்தம் கிடக்க -பர அநர்த்தம் பொறுக்க மாட்டாத பிராட்டியுடைய
நீர்மையும்
கிருபையும்
சொல்லுகிறது –
——————————————
த்ருணமந்தரத:க்ருத்வா ப்ரத்யுவாச ஶுசிஸ்மிதா |
நிவர்த்தய மநோ மத்த: ஸ்வஜநே ப்ரீயதாம் மந:||
பொழிப்புரை:
தனக்கும் ராவணனுக்கும் இடையில் புல்லை இட்டு, பரிஶுத்தமான புன்சிரிப்புடையவளாய் பிராட்டி பதில் சொன்னாள்,
‘என்னிடத்திலிருந்து மனத்தைத் திருப்பிக்கொள். உன் மனைவியரிடத்தில் உன் மனம் ப்ரீதி கொள்ளட்டும்’
காமம் தலைக்கேறி பிராட்டியிடம் தகாத வார்த்தைகளைச் சொன்ன ராவணனிடம், மேற்சொன்ன அறிவுரையைப் பிராட்டி சொல்வதாக அமைந்துள்ளது இந்த ஶ்லோகம்.
பதில் வார்த்தை சொல்லுவதற்கு முன் தனக்கும் ராவணனுக்கும் நடுவே ஒரு புல்லைப் போட்டுவிட்டுச் சொன்னாள்
(த்ருண மந்தரத: க்ருத்வா). இதற்குக் காரணமென்? பெரியவாச்சான் பிள்ளை இதற்கு 28 வகையான காரணங்கள் எடுத்துரைக்கிறார்.
1-ஆபஸ்தம்ப ஸூத்திரத்தின்படி ‘அரசர்களுக்கு ஆஸனமும், அன்னமும், நீரும் அளிக்க வேண்டும்’ [ஆ.ஸூ.2-4-1].
இவை இல்லாத பக்ஷத்தில் பூமியையோ, நீரையோ, புல்லையோ கொடுக்கலாம்’ [ஆ.ஸூ.2-4-14] என்றபடி, புல்லை ஆஸனமாக இட்டாள்.
2-அவன் நெஞ்சிலிருக்கிற ஆசைக்கு ஒவ்வாதபடி, பரபுருஷனை உபசரிப்பதுபோல புல்லையிட்டால்,
‘இவள் நம்மிடம் ஆசையில்லாதவள்’ என்று அவனும் விலகிப்போவான் என்ற நம்பிக்கையுடன் புல்லை ஆஸனமாக இட்டாள்.
3-ராவணனை அணுக விடாமல் தடுப்பதற்காக புல்லை இட்டாள். புல்லினாலோ, நீரினாலோ கோஷ்டி வேறுபாடு உண்டாகிறது
[ஸ்தம்பே3ந ஸலிலேந வா பங்க்திபே4தோ3பி4ऽஜாயதே] என்கிற நியாயத்தின்படி செய்தாள் என்றும் கொள்ளலாம்.
4-‘பெண்களுக்குப் பரபுருஷனை உற்றுப் பார்ப்பது, பேசுவது செய்யத் தகாதவை’ என்ற காரணத்தாலே, புல்லை
முன்னே போட்டு அதை ஒருவியாஜமாக வைத்துப் புல்லோடு பேசுவதுபோல், பேசத் தொடங்கினாள்.
5-நல் வார்த்தைகளை அஸுரர்கள் கேட்பதில்லை. அகம்பனன், மாரீசன், மால்யவான் போன்றோர் சொன்ன அறிவுரைகளையும் நீங்கள் கேட்கவில்லை.
இப்போது இந்தத் துரும்பு கேட்டாலன்றோ நீ கேட்கப்போகிறாய் என்று ராவணனைப் புல்லுக்கு உபமானமாகக் கொண்டு பேசினாள்.
6-நான் சொல்லப் போகும் அரு மருந்தான என் வார்த்தைகளைக் கேட்பதற்கு, தன்னால் கடாக்ஷிக்கப்பட்ட அசேதநப் பொருளாயினும், புத்தியுடையவை ஆகுமாலே,
[ஸ குலின: ஸ பு3த்3தி4மான்; விஷ்ணு புரா. 1-9-131] ராவணனைப்போலன்றிக்கே ஒரு தீங்கும் செய்யாத புல்லொன்றினை இட்டாள்.
7–புல்லைத் தன் ஶக்தியினாலே அறிவுடையதாக்கி, இந்த ஶக்தி பெருமையைக் கண்டு ராவணன் பயந்து மீள்வனோ
என்று என்கிற நினைவாலே புல்லை இட்டதாகவும் கொள்ளலாம்.
8-அறிவற்றவனாக இருக்கிற உன்னை இந்தப் புல்லைப் போலே [த்ருணமிவ லகு4 மேநே] தாழ்ந்த பொருளாக நினைத்திருந்தாள் என்று சொல்லுமாப்போலே புல்லை இட்டாள் என்றும் கூறலாம்.
9-‘அந்தர’ என்னும் ஶப்3த3ம் நெஞ்சைக் குறிக்குமாதலால், ‘அந்தர க்ருத்வா’ என்பதற்கு, ‘நெஞ்சில் கொண்டு’
தீங்கு செய்யாத காரணத்தினால் இந்தப்புல் மேன்மை பெற்றது என்று நெஞ்சிலே நினைத்து,
தீயவனான உன்னை புல்லாகக் கூட மதிக்க வில்லை என்னும்படி புல்லை இட்டாள் என்றும் சொல்லலாம்.
10-‘அறிவற்றவன் மிருகத்திற்கு ஒப்பானவன்’ [ஜ்ஞாநேந ஹீந: பஶுபி4: ஸமாந: நரஸிம்ஹ 16-13 ] என்றபடி,
நீ இந்தப் புல்லைத் தின்பாயாக’ என்று சுட்டிக் காட்டுவதுபோல், புல்லை இட்டாள்.
11-‘நீசனே, நீ முயலைப் போன்றவன்’ [த்வம் நீச ஶஶவத்ஸ்ம்ருத: ஸு.கா. 22-16] என்றும்,
‘காட்டிலுள்ள சிங்கத்துக்கும் நரிக்கும் உள்ள வேறுபாடு இராமபிரானுக்கும் உனக்கும் உண்டு’
[யத3ந்தரம் ஸிம்ஹஸ்ருகா3லயோர் வநே; ஆர.கா.47-45] என்றும்
மிருக ஜாதியைச் சேர்ந்த நீ இந்தப் புல்லை உணவாகக் கொண்டு இன்புறலாம். ‘பிறன் மனைவியாயிருக்கும் நான் உனக்கேற்றவள் அல்லள்’
[நாஹமௌபயிகீ பா4ர்யா பரபா4ர்யா ஸதீ தவ; ஸு.கா 2-16 ] என்று புல்லை இட்டாள்.
12-‘விசித்திரமான மாலைகள், சந்தனக் கட்டைகள், அகிற்கட்டைகள், விதவிதமான வஸ்திரங்கள்,
தேவலோகத்தைச் சேர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை அடைவாயாக’
[விசித்ராணி ச மால்யானி சந்தனாந்யக3ரூணி ச விவிதா4நி ச வாஸாம்ஸி தி3வ்யாந்யாப4ரணானி ச; ஸு.கா 20-33 ] என்றும், ‘
அழகிய புருவமுடையவளே! குபேரனிடமுள்ள ரத்தினங்களையும், தனங்களையும் நீ அடைவாயாக’
[யாநி வைஶ்ரவணே ஸுப்4ரூ ரத்நாநி த4நாநி ச; ஸு.கா. 20-33 ] என்றும்,
நீ வாயாலே அடுக்கினவைகளை இந்தப் புல்லுக்கு ஸமமாகவன்றோ நினைக்கிறது என்று புல்லை இட்டாள்.
13-‘இராம பிரானை விரும்பித் தன் தேஹத்தைத் த4ரிக்கிறாள்’
[தா4ரயத்யாத்மனோ தே3ஹம் தத் ஸமாக3ம காங்க்ஷிணீ; ஸு.கா.16-24 ] என்று இராமபிரான் வருவாரோ என்ற எதிர்பார்ப்பில் உயிர் த4ரித்திருந்தேன்.
‘மயிர் முடியைக் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு விரைவில் யமனுலகு செல்லப்போகிறேன்’
[உத்3ப3த்4ய வேண்யுத்3க்3ரத2நேந ஶீக்4ரமஹம் க3மிஷ்யாமி யமஸ்ய மூலம்; ஸு.கா. 28-17] என்றும்,
ஶூரனுக்கு உயிரும் புல்லுக்கு ஸமமாகும் [த்ருணம் ஶூரஸ்ய ஜீவிதம்] என்றபடி புல்லை இட்டாள்.
14-‘ரத்னங்களின் கூட்டங்கள் நிறைந்த இந்த இலங்கை, உன் ஒருவனுடைய தவறாலே விரைவில் அழியப் போகிறது’
[லங்கா ரத்னௌக4ஸங்குலா அபராதா4த் தவைகஸ்ய நசிராத்3 விநஶிஷ்யதி; ஸு.கா. 21-12 ] என்று
உன் குற்றத்தாலே இலங்கை அழியப்போகிறது. இந்தப் புல்லைக் கொண்டு ஒரு குடிசையைக்கட்டிகொள் என்று
பரிஹாஸ பு4த்3தி4யினால் சொல்வதுபோல் புல்லை இட்டாள்.
15-ஒரு த்ருணமாகத் தோன்றும் இந்தச் சிறு தாவரம், கப்பும் கிளையுமுள்ள ‘உலபம்’ என்கிற கொடியாகப் படரும் நியாயத்தாலே,
[த்ருணோலப] த்ருணத்திற்கு இடமான இந்த ஶ்லோகத்தாலே ‘உன் மனதை உன் மனைவிமாரிடம் திருப்பு’ என்று
சுருக்கமாகச் சொல்லி, உலபத்திற்கு ஒப்பாக மேல்வரும் ஶ்லோகங்களில் உனக்கு மேன்மேலும்
உபதேஶிக்கப்போகிறேன் என்று பொருள் படுமாறு புல்லை இட்டாள்.
16-‘ராமனோடு நட்பு கொள்ள வேண்டும் என்று நீ எனக்கு உபதேஶிக்கிறாயே, ஒருவேளை இராமன் என்னை ஏற்றுக் கொள்வானோ?’
என்கிற ஸந்தேஹம் ராவணன் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் என்று எண்ணி,
‘கடலிலே இந்தத் துரும்பைப் போட்டால், எவ்வாறு அது கரையிலே ஒதுக்கப்படுமோ,
அவ்வாறு குணக் கடலான இராமனிடத்தில் உன் குற்றம் இருந்த இடம் தெரியாமல் ஒதுங்கிவிடும் என்று சொல்லும்படி புல்லை இட்டாள்.
17-அந்தரத: க்ருத்வா என்பதை ‘நடுவுலிருந்து எடுத்து வெளியே போட்டு’ என்று பொருள் கொண்டால்,
எனக்கும் உனக்கும் நடுவே கிடந்த துரும்பை எடுத்துப் போட்டது போல், பொறாமையையும், கோபத்தையும் வெளித்தள்ளி
[ஈர்ஷ்யா ரோஷௌ ப3ஹிஷ்க்ருத்ய; அயோ.கா. 27-7]
தாய் தந்தையர் போலுள்ள எங்களிடம் சேரவொட்டாமல் செய்கின்ற காமம், வெகுளி இவற்றைத் தள்ளி
இராமபிரானின் திருவடியை அடைவாயாக என்று சொல்லும் வண்ணம் புல்லை இட்டாள்.
18-‘குடி யிருப்பை விரும்பினாயாகில், கோரமான முடிவை விரும்பாதிருந்தாயாகில், நீ இராம பிரானை நண்பனாகக் கொள்வது தக்கது’
[மித்ரமௌபயிகம் கர்தும் ராம: ஸ்தா2நம் பரீப்ஸதா। வத4ஞ்சா நிச்ச2தா கோ4ரம்; ஸு.கா. 21-19 ] என்று சொல்லி,
இந்தப் புல்லைக் கவ்வி, அதாவது கீழே விழுந்து இராமபிரானின் திருவடிகளில் ஶரணாகதி செய்து,
வாழ்ந்து போ என்று சொல்லும்படி புல்லை இட்டாள்.
19-துரும்பிலும் இருப்பானாய், தூணிலும் இருப்பானான ஒருவன் ஆகையினாலே, துரும்பைத் தூணாக்கி,
அதனின்று ராகவஸிம்ஹத்தை வரச்செய்து, அன்று இரணியன் மார்வத்தைக் கீண்ட ஆளரியாய் தீங்கு நினைத்த
நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று சொல்வதுபோலே புல்லை இட்டாள்.
20-புல், மண்ணாங்கட்டி முதலியவற்றை முன்னே எறிந்து ப்ரதிஜ்ஞை செய்வது உலக வழக்கம்.
அது போலவே, துரும்பை எறிந்து, ‘நீரை வற்றச் செய்யும் ஸூரியனைப் போலே, லக்ஷ்மணனுடன் கூடிய இராமன்
உன் உயிரை வற்றச் செய்வான்'[க்ஷிப்ரம் தவ ஸ நாதோ2 மே ராம: ஸௌமித்ரிணா ஸஹ।
தோயமல்பமிவாதி4த்ய: ப்ராணாநாதா3ஸ்யே ஶரை: ஸு.கா. 21-83] என்று சொல்லுமாப்போலே புல்லை இட்டாள்.
21-க்ருதி சே2த2நே என்ற தா4துவின்படி, ‘க்ருத்வா’ என்பதற்கு ‘கிள்ளி’ என்று பொருள் கொண்டு,
எப்படி இந்தப் புல்லை கிள்ளினேனோ அதேபோல், உன் தலையையும் கிள்ளி, எதிரிகளை அடக்கும் என் கணவர்
[அபநேஷ்யதி மாம் ப4ர்த்தா த்வத்த: ஶீக்4ரமரிந்த3ம: ஸு.கா. 21-28]
உன்னிடமிருந்து விரைவிலேயே மீட்டுச் செல்வார் என்கிறபடி, புல்லை இட்டாள்.
22-உயர்ந்தவனைத் துன்புறுத்தும் தாழ்ந்தவனுடைய அங்கம் அழிக்கத்தக்கது என்று ஶாஸ்திரம் சொல்லுகையாலே,
வாமனாவதாரத்தில் ஶுக்ரனின் கண்ணைப் புல்லால் கீண்டியது போல்,
[சுக்கிரன் கண்ணால் துரும்பால் கிளறிய; பெரியாழ்வார் திரு.1-8-7], ஸீதையைப் பார்த்து,
‘உன் திருமேனியில் எந்தெந்த அவயங்களைக் காண்கிறேனோ அங்கெல்லாம் என் கண் ஈடுபடுகின்றது’
[யத்3யத் பஶ்யாமி தே கா3த்ரம் ஶீதாம்ஶுஸத்3ருஶாநநே। தஸ்மிந் தஸ்மிந் ப்ருது2ஶ்ரோணி சக்ஷுர் மம நிப3த்4யதே।। ஸு.கா. 20-15]
என்று சொன்ன உன் கண்ணை இந்தத் துரும்பால் கலக்குகிறேன் என்னும் கருத்தாலே புல்லை இட்டாள்.
23-காகாஸுரன் என்னைத் துன்புறுத்தியபோது, இராமபிரான் ஒரு புல்லை எடுத்து ப்ரும்மாஸ்திரத்தை உச்சரித்தார்
[ஸ த3ர்ப4ம் ஸம்ஸ்தராத்3க்3ருஹ்ய ப்3ராஹ்மேணாஸ்த்ரேண யோஜயத்; ஸு.கா. 38-30].
அந்தத் துரும்பு அக்காக்கையின் வலது கண்ணை வாங்கியது [ஹினஸ்தி ஸ்ம ஸ த3க்ஷிணம்; ஸு.கா. 38-37].
அதுபோலே, இத்துரும்பை இட்டு உன் கண்ணை இராமபிரான் கலக்கும்படி செய்கிறேன் என்று புல்லை இட்டாள்.
24-நர நாராயண அவதாரத்தின் போது, நாராயணன் டம்போத்பவன் என்ற அஸுரனை ஒரு துரும்பால் கொன்றான்.
இந்தவிருத்தாந்தத்தைச் சுட்டிக்காட்டி, புல்லை இட்டாள்.
25-என் கற்பு என்கிற நெருப்பிலே இந்தத் துரும்பைப் போட்டு மூட்டி எழுகின்ற கனலிலே உன்னைச் சுட்டெரிக்கிறேன்
என்று சொல்லுமாபோலே, புல்லை இட்டாள். ‘ஸீதையின் பாதிவ்ரத தேஜஸ்ஸாலே எரிந்துபோன இந்த இலங்கையைப் பார்’
[ஸீதாயாஸ் தேஜஸாம் த3க்3தா4ம்; ஸு.கா. 51-36 ] என்று பின் வரப் போகிற நிகழ்வுகளை முன்னமேயே உணர்த்தும் வகையாக அமைந்த விளக்கம் இது.
26-மேலும், ‘சாம்பலாக்கத் தக்க பத்துத்தலையனே! இராமபிரானின் ஆஜ்ஞை இல்லாததால்,
என் பாதிவ்ரதாக்நியால், உன்னைச் சுட்டெரிக்கமால் இருக்கிறேன்’
[ந த்வா குர்மி த3ஶக்3ரீவ ப4ஸ்ம ப4ஸ்மார்ஹ தேஜஸா; ஸு.கா.22-20] என்று சொல்லி, நான் நினைத்தால்,
இப்பொழுதே உன்னை எரித்துவிடுவேன் என்று புல்லை இட்டாள்.
27-‘க்ருதி சே2த3நே’ என்கிற தா4துவிலுருந்து ‘க்ருத்வா’ என்ற பத3ம் வந்ததாகக் கொண்டால், புல்லை நடுவே கிள்ளி என்று பொருளாகிறது.
இந்தத் துரும்பை எப்படி விரல்நுனியால் கிள்ளிப் போடுகிறேனோ
[அங்கு3ள்யக்3ரேண தாந் ஹந்யாம்; யுத்.கா.18-24]அவ்விதமே, உன் தலையையும் கிள்ளி எறிவேன்
[பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்து; திருப்பாவை 13] .
பதிலுரைத்தாள் (ப்ரத்யுவாச) என்று சொல்வதில்,
ப்ரதி என்னும் பதத்திற்கு, பதில் (உத்தரம்) சொல்லுதல், மறுவார்த்தை சொன்னாள் (மறுத்துரைத்தாள்) என்றும்,
ப்ரதி என்பதை ப்ரதிகூலம் என்று கொண்டு, பதிலுரைத்தாள் என்றும் சொல்லலாம்.
வச-பரிபா4ஷணே என்ற தா4துவின்படி, உவாச என்பதை பரக்க பரிபா4ஷணம் செய்தாள் என்று பொருள் கொள்ளலாம்.
ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தை மட்டும் சொல்லாமல், விஸ்தாரமாக ஸாம, தா4ந, பே3த4, த3ண்ட என்கிற
நால்வகை உபாயங்களையும் முயன்று அறிவுரை சொன்னாள்.
‘நல்லோர்களின் தருமத்தைக் கவனிப்பாயாக. நல்விரதங்களை நன்றாக அநுஷ்டிப்பாயாக.
அரக்கனே, உன் மனைவியைப் போலவே மற்றவரின் மனைவியரும் ரக்ஷிக்கத்தக்கவரன்றோ?’
[யதா2 தவ ததா2ந்யேஷாம் தா3ரா ரக்ஷ்யா நிஶாசர; ஸு.கா.21-7] என்று ‘ஸாமம்’ என்னும் உபாயத்தைப் பற்றி நின்றும்,
‘உன்னால் வஞ்சிக்கப்பட்ட ஜனங்கள் தெய்வச் செயலாலே இக் கொடியவன் இந்தத் துன்பத்தை அடைந்தான் என்று ஆனந்தம் அடைந்து,
உன்னைப் பாவி என்று சொல்லப்போகிறார்கள்’
[ஏவம் த்வாம் பாபகர்மாணம் வக்ஷ்யந்தி நிக்ருதா ஜநா: । தி3ஷ்ட்யைதத் வ்யஸநம் ப்ராப்தோ ரௌத்3ர இத்யேவ ஹர்ஷிதா:।। ஸு.கா 21-14]
என மனமாறுபாடு பிறக்கும்படி பே4த வார்த்தைகளைச் சொல்லியும்,
‘இந்திரியங்களை அடக்கியவனாய், என்னை இராமபிரானிடம் சேர்க்கக் கடவாய்; அந்த இராமபிரான் தருமமறிந்தவர்;
ஶரணாகதரிடம் வாத்ஸல்யமுடையவர்; அவரோடு நட்பு உண்டாகட்டும்’
[மாஞ்சாஸ்மை ப்ரயதோ பூ4த்வா நிர்யாதயிநுமர்ஹஸி; ஸு.கா. 21-22, விதி3த: த4ர்மஜ்ஞ: ஶரணாக3த வத்ஸல: தேந மைத்ரீ ப4வது; ஸு.கா.21-20]
என்று ஞானதா4நம் செய்தும், ‘வேறுவிதமாகச் செய்தால் மரணமடைவாய்’ [
அந்யதா2 த்வம் ஹி குர்வாணோ வத4ம் ப்ராப்ஸ்யஸி; ஸு.கா. 21-23] என்றும்,
‘உன் உயிரை அம்புகளால் எடுக்கப்போகிறார்’ [ப்ராணாநாதா3ஸ்யதே ஶரை: ஸு.கா. 21-33] என்றும்
தண்டம் சொல்லியும், இம்மாதிரி ஸாம, தா4ந, பே4த த3ண்டமெனும்
நாலு உபாயங்களையும் பின் பற்றி வார்த்தை சொன்னாள்
.
இத்தோடல்லாமல், இதைச் சொல்லுகிறபோது இருந்த முகமலர்ச்சி என்னே! பரிஶுத்தப் புன்னகை உடையாள் (ஶுசிஸ்மிதா).
1) எதிரி தருமம், வீரியம், பலம் இவற்றுள் கனத்தவனாக இருந்தாலன்றோ கோபத்தைக் காட்டுவது? தன் அநியாயத்தாலே தானே அழியப்போகிற க்ஷுத்3ரன் என்று நினைத்து சிரித்தாள்.
2) அரசர்களும் சிரித்துக்கொண்டே தண்டனை வழங்குவதுபோல், ராஜ த4ர்மம் அறிந்தவளாகையால் [அபி4ஜ்ஞா ராஜத4ர்மாணாம்; ] ஜநகராஜ புத்ரியும், ராஜமஹிஷியுமாயிருப்பவள் ஆதலால், சிரித்துக்கொண்டே சொன்னாள்.
3) ராவணன் தருகிறேன் என்ற த4நம், தா4ந்யம், ரத்தினம் முதலியவற்றை எண்ணி அவற்றிலுள்ள பிரியத்தால், ஆசையுடன் சிரித்தாளோவென்னில், இந்தப் புன்னகை பொருளாசையால் ஏற்பட்டதன்று. வைராக்கியத்தால் ஏற்பட்ட பரிசுத்தப் புன்னகை.
4) ‘தவத்தாலும், பலத்தாலும், வீரத்தாலும், த4நத்தாலும் இராமன் என்னையொத்தவன் அல்லன்’ [ந ராமஸ்தபஸா தே3வி ந ப3லேன ந விக்ரமை: । ந த4நேன மயா துல்ய: ஸு.கா. 21-30] என்று சொல்லுகின்ற நீயோ அவர்கள் இருவரும் இல்லாத நேரத்திலன்றோ என்னைக் கவர்ந்தது? இந்தச் செயல் நீ எவ்வளவு பலமற்றவன் என்பதைக் காட்டவில்லையோ என்றவாறு புன்னகை புரிந்தாள்.
5) இன்னும் சில நாட்களில் காக்கையும், கழுகும் கவ்வும்படி கிடக்கப்போகும் நீ இன்று, ‘ராமன் உயிரோடு இருக்கிறானோ இல்லையோ’ [ஶங்கே ஜீவதி வா ந வா; ஸு.கா. 20-26] என்று கேட்பது மிகவும் சிரிப்பிற்கிடமாய் இருக்கிறது என்று தோற்றச் சிரித்தாள்.
6) இந்த இலங்கையையும், அரசுப்பதவியையும் விபீஷணருக்குத் தந்து முடிசூட்டினான் இராமன். இதனை அறியாமல், இந்தச் செல்வங்கள் அனைத்தும் உன்னுடையதென்று [ருத்3தி4ம் மமாநுபஶ்ய த்வம் ஶ்ரியம் ப4த்3ரே; ஸு.கா.20-25 ] என்கிற ப்4ரமையில் இருக்கிறாய் போலும் என்று தோற்றச் சிரித்தாள்.
7) ஸர்வலோக நாயகனான அவருடைய தோள்களில் சாய்ந்திருக்கும் என்னைப் பார்த்து, ‘என்னையும் அநுபவித்துக்கொள்’ [மாம் ச பு4ங்க்ஷ்வ; ஸு.கா 20-33] என்று நீ பிதற்றுவது சிரிப்பிற்கிடமாயிருக்கிறது.
8) காகுத்தன் க்ஷேமமாக இருந்தாராகில், இந்த உலகத்திக் கோபத்தால் ஏன் இன்னும் எரிக்காமலும், என்னை மீட்காமலும் இருக்கிறார் என்று வருந்தியிருந்த ஸீதையிடம், அநுமன் இராமபிரானின் க்ஷேமத்தைத் தெரிவித்ததும் மகிழ்ச்சியால் சிரித்தாள்.
இப்படிப் புன்சிரிப்பு சிரித்துச் சொன்ன வார்த்தை என்ன? செய்யத்தகாததைக் கைவிட்டு, செய்யவேண்டியதைச் செய் என்பதாம்.
‘உன் மனத்தை என்னிடமிருந்து திருப்பு. உன் மனைவியரிடம் உன் நெஞ்சு ப்ரீதி அடையட்டும்.’
நெஞ்சை அங்கும் இங்கும் அலைக்கழிக்கவிடாமல் மீட்பாயாக [மநோ நிவர்த்தய]. மனமாகிய குதிரையை அடக்கம் என்கிற கடிவாளமிட்டு மீட்பாயாக.
‘அநுகூலமான நெஞ்சே ஆத்மாவுக்கு உறவினன். ப்ரதிகூலமான நெஞ்சு ஆத்மாவுக்கு எதிரி’ என்கிற
[ஆத்மைவ ஹ்யாத்மநோ ப3ந்து4ராத்மைவ ரிபுராத்மந: கீதை 6-3] கீதா வாக்கியத்தின்படி, என்றும் சத்துருவாய் இருக்கும் உன் நெஞ்சை ஜயிக்கப்பார்.
ஐந்துதலை நாகம் [பஞ்சாஸ்யாமிவ பந்நகீ3ம்; ஸு.கா.51-23] போன்று உன் அழிவுக்குக் காரணமான என்னிடமிருந்து உன் நெஞ்சைத் திருப்பு.
‘அறிவுகெட்டவனை அயலார் மனைவியர் அவமானம் செய்துவிடுகின்றனர்’ [நயந்தி நிக்ருதிப்ரஜ்ஞம் பரதா3ரா: பராப4வம்; ஸு.கா. 21-9]
என்கிறபடி என்னிடம் பாயும் உன் மநப்ரவாஹத்தை மடையடைத்துவிடு.
(ப்ரீயதாம்) ப்ரீதியடையட்டும் என்கிற சொல்
உன் மனைவியருடன் (ஸ்வஜநே) என்ற பத3த்துடன் இணைந்தும்,
அல்லது மனம் (மந: ) என்ற பத3த்துடன் இணைந்தும்
இரண்டு விதமாகப் பொருள் கொள்ள ஹேதுவாக இருக்கிறது.
‘உன்னைப் பார்த்தபின்பு, என் மனைவியரிடம் ப்ரீதி கொள்ளவில்லை’
[ஸ்வேஷு தா3ரேஷு ரதிம் நோபலபா4ம்யஹம்; ஸு.கா. 20-30] என்கிற நிலையை மாற்றிக்கொண்டு,
‘உன் மனைவியரிடமே இன்புறுவாயாக’ [ஸ்வேஷு தா3ரேஷு ரம்யதாம்; ஸு.கா. 21-8] என்று ஒரு பொருளைக் கொள்ளலாம்.
‘நான் ப்ரீதியடைந்தாலும் என் நெஞ்சம் ப்ரீதியடைகிறதில்லை’ என்றால்,
நீ ப்ரீதி அடைந்தால் உன் நெஞ்சமும் ப்ரீதியடையட்டும் என்று அநுக்ரஹிக்கிறாள்.
ஆக, இந்த ஶ்லோகத்தால், தனக்குத் துன்பமிருக்கும்போதும் பிறர்துன்பம் பொறுக்கமாட்டாத பிரட்டியுடைய ஸௌலப்யமும் கருணையையும் சொல்லுகிறது.
———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்