ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது–த்வம்ப்ரமேயஶ்ச து3ராஸத3ஶ்ச–கிஷ்கிந்தா காண்டம் ஸர்க்கம்-24; ஶ்லோகம்-31-

த்வம்ப்ரமேயஶ்ச து3ராஸத3ஶ்ச ஜிதே3ந்த்ரியஶ் சோத்தமதா4ர்மிகஶ்ச|

அக்ஷய்யகீர்த்திஶ்ச விசக்ஷணஶ்ச க்ஷிதிக்ஷமாவாந் க்ஷதஜோபமாக்ஷ ||

பொழிப்புரை:
ரத்தம்போல் சிவந்த கண்களையுடய ஶ்ரீராமபிரானே!
நீர் அளவிடவொண்ணாதவராயும், கிட்டவொண்ணாதவராயும், ஜயிக்கப்பட்ட இந்திரியங்களை உடையவராயும்,
சிறந்த தர்மத்தை உடையவராயும், அழிவற்ற புகழை உடையவராயும், அதிஸம்ர்த்தராகவும்,
பூமியைப்போன்ற  பொறுமை மிக்கவராயும் இருக்கிறீர்.

வாலி வதம் ஆனபின், வாலியின் மனைவியான தாரை இராமபிரானைக் கண்டு இவ்வாறு கூறும் செய்தியாக அமைந்துள்ள ஶ்லோகம் இது.
கணவனைக் கொன்றவன் என்ற கோபத்துடன் வந்தவள், ‘நீ’ [த்வம்] என்று ஒருமையுள் விளிக்கத் தொடங்கி,
மேலே பேசும்பொழுது, ராமபிரானின்  ஸாந்நித்ய விஶேஷத்தால், ராமனது கல்யாண குணங்களைப் போற்றிப் பரவத் தொடங்குகிறாள்.

அறிதற்கரியவன் [அப்ரமேய:]
1. உம்முடைய பெருமையையும் அறியாமல், என்னுடைய சிறுமையையும் அறியாமல் இந்திரியங்களாலே
உம்மை அநுபவித்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். அப்படி அநுபவிக்கமுடியாததாக இருந்தது.
2. இதை நான் மட்டுமன்று, வேதங்களும் சொல்கின்றன. ‘நான் அறிவேன்’ [வேதா3ஹம்; பு.ஸூ] என்று தொடங்கிய வேதமும்,
படிப்படியாக ‘பெரியவனை’ [மஹாந்தம்; பு.ஸூ]  என்றும்,
‘அவனை இவ்வளவென்று அறிபவன் யார்?’ [க இத்தா2 வேத3?] என்றும் அறியமாட்டாமல்
மீளும்படியன்றோ உமது மேன்மை இருக்கிறது.
3. ப்ரமைக்கு விஷயமானவன் ப்ரமேயன்.
ப்ரமையாவது-உண்மையான அநுபவம். ப்ரத்யக்ஷம், அநுமானம், ஆகமம் என்ற மூன்று வகைப்பட்ட பிரமாணங்களால் பிறப்பது அறிவு.
இவை மூன்றுக்கும் அப்பாற்பட்ட விஷயமாக நீர் இருக்கிறீர், எனவே அப்ரமேயன்.
எங்ஙனேயென்னில்,
கண்ணுக்குப் புலப்படாதவன், கட்கிலீ [திருவாய் 7-2-3] என்றும்,
உவமை சொல்லி அநுமானிக்கலாமென்னில், ஒத்தார் மிக்காரிலையாய மாமாயா [திருவாய் 2-3-2] என்றும்,
ஸாமாந்யமாகவோ, விஶேஷமாகவோ உவமை சொல்லமுடியாது
மேம்பட்டிருப்பவனாகையாலும், ‘எந்தப் பரம்பொருளிடமிருந்து, மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அறியமுடியாமல் திரும்புகின்றனவோ’
[யதோ வாசா நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ; தை.ஆ.9], ‘பரம்பொருள் இப்படிபட்டது மாத்திரமன்று;
இதைப்போல் வேறில்லை’ [நேதி, நேதி; ப்ருஹ.1-3-6], ‘ஞானிகள் மனத்தோடுகூடிய மற்ற இந்திரியங்களால் இவனை அறியமாட்டாராகையால்,
இவனைப் பற்றி நினைக்கும்போது மௌனத்தையே அடைகிறார்கள்’
[யதோ ந வேத3 மநஸா ஸஹைநமநுப்ரவிஶந்தி ததை2வ மௌநம்] என்று வேத3ங்களும் அளவிட்டறிய மாட்டாமையாலே,
ஆகமத்தாலும் அறிய முடியாதவராயிருக்கிறீர்.
4. உனக்கே நீ அறியவெண்ணாதவன். ‘அப்பரமன் தன்னைத் தானே அறிவனோ மாட்டானோ அறியோம்’
[ஸோ அங்க3 வேதி3 யதி3 வா ந வேத3; தைத். ஸம் 2-8-9] என்றும்,
‘தனக்கும் தன் தன்மை அறிவரியானை’ [திருவாய் 8-4-6] என்றும் இயற்கையையாகவே எல்லாம் அறிந்த நீர்
உம்மாலே அளவிட்டு அறியப்படுவீரோ?
5. காலத்தாலளவு, தேஶத்தாலளவு, வஸ்துவாலளவு என்னும் மூவகை அளவுகளும் இன்மையாலே அளவிடவெண்ணாதவன்.
நித்யனாகையினால் காலத்தால் அளவில்லை;
ஸர்வவ்யாபியாகையாலே தேஶத்தால் அளவில்லை;
எல்லாப் பொருளோடும் ஒரே வேற்றுமையில் சொல்லத்தக்க ப்ரகாரி இல்லாமையாலே வஸ்துவால் அளவும் இல்லை.
ஆக இப்படி மூவகை அளவுகளாலும், பத்தர், முக்தர், நித்யர் என்கிற மூவகைச் சேதனருக்கும்
மனம், வாக்கு, காயம் என்னும் மூவகைக் கரணங்களாலும், முக்காலங்களிலும் அளவிடவொண்ணாதவன்.
6. ‘எய்தா நின்கழல்’ [திருவாய் 2-9-2] என்கிறபடியே, என் முன் நிற்பினும் அடையற்கரியவர் நீர்.
‘கண்ணால் காண்பரியன்; ஸுத்தமான மனத்தாலே காணத்தக்கவன்’ [ந சக்ஷுஷா க்3ருஹ்யதே மநஸா து விஸுத்3தே4ந; வ்யாஸ ஸ்ம்ருதி]
என்ற ப்ரமாணமும் நிரங்குஶ ஸ்வதந்த்ரரான உம் விஷயத்தில் பொய்யாயிற்று.
7. கையும் வில்லுமாய் காட்சியளிக்கையால் எளிமை தோற்ற நின்றாலும்,
[அவஷ்டப்4ய ச திஷ்ட2ந்தம் த3த3ர்ஶ த4நுர்ஜிதம்; கிஷ்.கா. 19-25] மூலப்ரகிருதிக்கும் மேம்பட்டவராய்,
எல்லாவற்றுக்கும் ஆதாரராய், சங்கு சக்கர கதைகளை தரிப்பவராய் இருக்கும் விஷ்ணுவே நீர்
[தமஸ: பரமோ தா4தா சங்க2 சக்ரக3தா3த4ர: யுத்.கா.114-115].
8. நீர் அறிதற்கரியவர். பரத்வத்தைத்தான் அறியமுடியாதென்று நினைத்திருந்தோம்;
மனிதனாக அவதரித்து நிற்கும் உம்முடைய ஸௌலப்யமும் அறியவொண்ணாததாயிற்று.
9. ஸேனை முதலான அரசர்க்குரிய பரிகரங்கள் இல்லாமையால் தனிமைப்பட்டவர் போலிருக்கும் நீர்
‘தேஜோ விஶேஷத்தாலே ஸேனைகளால்  சூழப்பட்டவர்கள்போல் இருந்தனர் அவ்விருவரும்’
[அநுபா4வ விஶேஷாத் து ஸேநாபரிவ்ருதாவிவ; ரகுவம்ஶம் 1-37] என்கிறபடியே
அளவற்ற படைபலத்தை உடையவரைப்போலே அறியமுடியாதவராயிருந்தீர்.
10. தந்தையின் கட்டளையால் காட்டில் வாழ வந்தீர். ஆயினும் கர தூஷணாதிகள், கபந்தன் வாலி
இத்யாதிகளைக் கொன்று குவித்தீர். உம்முடைய நோக்கம் அறிதற்கரியது.

கிட்ட வொண்ணாதவன் (துராஸத:)
தர்மாநுஷ்டானங்களைச் செய்பவருக்கே பரம புருஷன் ஆராதிக்கத் தகுந்தவன் என்றிருக்கு, வழிதடுமாறி வந்தோர்க்கு என் செய்ய?
ஜ்ஞாந ஶக்த்யாதி குணங்கள் நிறைந்தவனே! அடியவரைக் கைவிடாதவனே!
விவேகமில்லாமையாகிற மேகங்களாலே இருளடைந்த திசைகளை உடையதும், பலவிதமாக இடைவிடாமல் துன்பங்களைப் பொழிகின்றதுமான
ஸம்ஸாரமாகிய மழைக் கால இருளிலே நல் வழியிலிருந்து தவறின அடியேனை நோக்கியருள்வாயாக
[அவிவேக . . . பத: ஸ்கலிதம் மாமவலோகயாச்யுத; ஸ்தோ.ரத். 49] என்றும்,
‘பாவியேன் பல காலும் வழி திகைத்து அலமருகின்றேன்’ [திருவாய் 3-2-9].
இங்கு, துராஸத என்னும் பதத்தில், ஆஸத என்றால்-‘நெருங்குதல்’ ;
தா4து பாட2த்தில் (ஷத்3 –ஆஸத்3) என்பதற்கு, பொடியாக்குதல், தொலைவு தூரம் தள்ளிவிடுதல்,
முடித்துவிடுதல் ஆகிய மூன்று பொருட்கள் உள்ளன.
தன் கணவனைக் கொன்றவனை எதிர்த்து வந்தவளான தாரை, இராமபிரானை முதலாவதாக ‘பொடித்துவிடலாம்’
என்று எண்ணினால், இவனோ மிகவும் ஸூக்ஷ்மமாயிருப்பதனால் [முண்டக உப. 1-1-6; ஸஸூக்ஷ்மம்]
ஸ்தூல வஸ்துக்களை பொடி யாக்குவது போல் இவனைப் பொடி யாக்க முடியாது;
இரண்டாவதாக, இவனைத் தொலை தூரம் தள்ளி விடலாம் என்றாலோ, இவனோ ஸர்வவியாபியாக இருப்பதால்
[முண்டக உப.1-1-6; விபு4ம்] உடல் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் என்பதால் இவனைத் தூரத்தில் தள்ளவும் முடியாது;
மூன்றாவதாக, ஒரு வழியாக முடித்து விடலாமென்றாலோ, என்றுமிருப்பவனை, எக் காலத்திலும் அழியாமல் இருப்பவனை [முண்டக உப.1-1-6; நித்யம்]
ஒரு காலத்திலும் அழிக்க முடியாது என்று அறிந்தாள் தாரை.

புலன்களை வென்றவர் [ஜிதேந்த்ரிய:]
இப்படி மேலே சொல்லப்பட்ட அறிய முடியாமை, அடைய முடியாமை என்னும் பெருமைகளாலே கர்வம் கொண்டவராய்
பரதாரமாகிய என்னையும், என் கணவரைக் கொன்று ராஜ்ஜியத்தையும் பிடுங்கி ஆளவந்தீர் என்று அபவாதம் சொல்லவரினும்,
ராஜ்ஜியத்தை ஸுக்ரீவனுக்குக் கொடுத்து, புலன்களை வென்றவராகவ அல்லவோ இருக்கிறீர்!
‘ராமன் பிறர் மனைவியரைக் கண்ணால் கூடக் காண்பதில்லை’ [அயோ.கா. 72-49; ந ராம: பரதாராம்ச்ச சக்ஷுர்ப்4யாமபி பஶ்யதி] என்கிறபடியே
இத்தனை நேரம் நான் நிற்கும் போதும் என்னை முகம் நிமிர்த்திப் பாராமல் நிற்பதே! என்ன வைராக்யமுடையவரோ இவர்? என்கிறாள்.
‘மனனுணர் வளவிலன் பொறி யுணர் வவையிலன்’ [திருவாய் 1-1-2] என்று சொல்லுகிறபடியே
உலகத்தாருடைய உள்ளிந்திரியமான மனத்துக்கும், வெளியிந்திரியங்களான மெய்,வாய், கண், மூக்கு, செவி
இவை அனைத்துக்கும் அடையமுடியாதபடி அவற்றை வென்றிருப்பவன்.
ராஜ்ஜியத்தையும், மனைவியையும் இழந்திருக்கும் நீர் பிறருடைய ராஜ்ஜியத்திலும், மனைவியிடமும்
ஆசை கொண்டு வந்தீர் என்று நினைத்தோம், நீங்களோ புலன்களை வென்று அவற்றில் ஆசையின்று இருக்கிறீர்.

உயர்ந்த தர்மமிக்கவன் [உத்தம தா4ர்மிக:]
இப்படி வைராக்யத்தோடு இருக்கிறவர் நம்மை துன்புறுத்துவானேன்?
பிறரைக் காரணமில்லாமல் இம்ஸிக்கும் அதார்மிகரோ? என்னில்,
வாலியைக் கொன்றது பிறருக்கு செய்யும் உபகாரமல்லவோ இருக்கிறது!
தன் நன்மையைக் கருதி தர்மம் செய்பவன் அத4மன்.
தனக்கும் பிறர்க்கும் நன்மை தேடுபவன் மத்4யமன்.
பிறர் நலனில் மட்டும் கருத்துடன் செயல் படுபவன் உத்தம தா4ர்மிகன்.
ஸாமாந்ய த4ர்மத்தில் ஊன்றி நிற்பவர் தா4ர்மிகர்.
விஶேஷ த4ர்மத்தில் ஊன்றியிருப்பவர் சிறந்த தா4ர்மிகராகிறார்.
‘இரக்கமே மேலான த4ர்மம்’ [ஆந்ருஶம்ஸயம் பரோ த4ர்ம: ஸு.கா. 38-14] என்று துன்புற்றவரைக் கண்டால்
’ ஐயோ’ என்று நினைத்திருக்கும் இரக்கம் ஸாமாந்ய த4ர்மமாகும்.
தன்னை யடைந்தவர்களுக்கு ஓர் ஆபத்து உண்டானால், அவர்கள் விஷயத்தில் ஆபத்தை விளைவித்தவரிடம்
ஸாமாந்ய த4ர்மமான இரக்கத்தை விட்டு, அவர் மார்பிலே அம்பை எய்தி ஆபத்தை நீக்கிக் கொடுக்கை விஶேஷ த4ர்மமாகும்.
மேலும் தம்பியின் தாரத்தை அடைந்தவனுக்கே வதமே தண்டனை [தஸ்ய த3ண்டோ3 வத4: ஸ்ம்ருத: கிஷ். கா 18-23 ]
என்று தண்டனை அளித்துப் பரிஶுத்தப் படுத்துவதால் விஶேஷ தர்மமாகிறது.

அழியாப் புகழாளர் (அக்ஷய்ய கீர்த்தி:)
சிறப்புக்கு ஸாதநமான த4ர்மம் மாத்திரம் இவரிடம் உள்ளது, த4ர்மப2லமான புகழ் இல்லயோ? என்று ஐயப்பட்டிருந்தேன்,
[தஸ்ய நாம மஹத்3யஶ:] என்ற உபநிஷத வாக்கியத்தாலும்,
‘நிகரில் புகழாய்’ [திருவாய் 6-10-10 ] என்றும் சொல்கிறபடியும்
‘மன்னுபெரும்புகழ்’ [நாச். திரு 5-1] உடையவராய் இருக்கிறீர்.
மறைந்து நின்று கொன்றீர், தோ3ஷமற்ற மிருகத்தைக் கொன்றீர், பலனற்ற கொலையைச் செய்தீர் என்று
பழிகளைச் சொல்லி உங்கள் புகழுக்கு அபவாதம் செய்யலாமென்றாலோ
‘அரசர்களுக்கு மிருக வேட்டையும் மறைந்து நின்று கொல்வதும் நியாயம்’ என்றும்,
‘நல்ல நெஞ்சை யுடைய தம்பியாய் ஶரணமடைந்தவனான ஸுக்கிரீவனுக்குத் தீங்கிழைக்கையாலே பாவியைக் கொன்றேன்’ என்றும்
‘குடிகளின் நன்மைக்காக து3ஷ்ட மிருகத்தைக் கொன்று பலனுள்ள வதத்தைச் செய்தேன்’ என்றும் எதிரி
பதிலுரைக்க முடியாத வண்ணம், பழிசேராத வகையில் காரியம் செய்தீர் ஆகையால், அழியாப் புகழாளர் ஆவீர்.

இப்படி மாறாத புகழ் பெறக் காரணம் என்ன? என்று ஆராய்ந்து பார்த்தால்,
புகழைக் கொடுக்கும் காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பிருந்தே ஆராய்ந்து செய்யும் ஆராய்ச்சியாளராக
அதிஸமர்த்தராக  (விசக்ஷணச்ச) இருந்தீர்.
எந்தப் பரமபுருஷன் எல்லாப் பொருள்களின் ஸ்வரூபஸ்வபாவங்களை அறிவனோ [யஸ் ஸர்வஞ: ஸர்வவித்; முண்.உப 1-1-10],
பரமபுருஷனுக்கு இயற்கையான அறிவு, பலம், செயல் ஆகியவை இருப்பதாகக் கேட்கப்படுகிறது [ஸ்வபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச;  ஶ்வே.உப.6] என்கிறபடியே
எல்லாமறிந்த உமக்கு பழிசேராத வகையில் எல்லா கேள்விகளுக்கும் நியாயமான பதில்கள் சொல்வது பெரிய அதிஶயமே கிடையாது.
வாலி-ஸுக்ரீவ யுத்தத்தின் போது, அடையாளம் காண்பதற்கு ஸுக்ரீவன் கழுத்தில் மாலையணிவித்து
இவ்விருவரினிடையே வேறுபாடு தெரியும் வண்ணம் செய்தமை நீர் அதி ஸமர்த்தர் என்பதற்கு நல்ல உதாரணம்.

இப்படி அதி ஸமர்த்தரானால், ‘ஶத்ரு குலத்தைச் சிறிதளவும் விட்டு வைக்கக் கூடாது’ [ஶத்ரோ: ஶேஷம் ந ஶேஷயேத்; ]என்றும்,
‘புத்திர, பௌத்திர, மந்திரி, தாயாதிகளோடு ராவணனைக் கொல்வேன்’ [ஸபுத்ர பௌத்ரம் ஸமாத்யம் ஸமித்ரம்ஜ்ஞாதி ஸபா4ந்தவம் ஹத்வா; பால.கா.15-27]
என்ற வசனங்களின்படி வாலியைக்கொன்று, அங்கதனையும் அழிப்பீரோ என்று பயந்தோம்.
நீங்களோ பொறுமையில் பூமியையும் விஞ்சும் வகையாகவல்லவோ புவிப் பொறை யாளராக (க்ஷிதிக்ஷமாவாந் ) இருக்கிறீர்!

‘என்னிடத்தில் இப்படிப்  பொறுமை காட்டுவதற்கு காரணம் என்ன?’ என்று ஆலோசித்தேன்.
‘உயிக்கெல்லாம் தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணன்’ [பெரிய திரு. 7-2-9] என்று
எல்லோரையும் காக்க வந்த ஐஶ்வர்யத்தைக் காட்டும் இந்தக் கண்களின் பெருமை இருந்தபடி என்ன ஆச்சர்யம்!
வாலியைக் கொன்ற போது கோபத்தால் கண்ணில் ரத்தம் ஏறிய சிவப்பு (க்ஷதஜோபமக்ஷ) [ராம: ரக்தாந்த லோசன: யுத்.கா. 21-13]
இன்னும் மறையாமலிருக்க, என்பால் பொறுமையைக் காட்டியது என்ன வியப்பு!
ஓரம்பால் வாலியைக் கொன்றீர் என்கிற விஷயமறிந்து இங்கு வந்து பார்த்தால்,
ஓரம்பால் அன்று, சிவந்த இந்த கண்களே வாலியைக் கொன்றன என்னுமாபோலே இருக்கிறதே!
அந்த பரம புருஷனுக்கு ஸூரியனால் மலர்ந்த வெண்டாமரைக் கண்கள் [யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ; சாந்.உப. 1-7]
என்று மிகமலர்ந்த  உம்முடைய கண்களுக்கு சிவப்பு இயற்கையானது; கோபத்தால் வந்தேறியிருப்பதன்று.
இந்தக் கண்கள் ஸீதாப்பிராட்டியாரின் பிரிவுத்துன்பத்தால் விளைந்த துன்பக்கண்ணீரால் சிவந்தனவோ?
வாலியிடம் கொண்ட கோபத்தால் சிவந்தனவோ? ஸுக்ரீவனிடம் அன்பாலே சிவந்தனவோ? என்று அறிய முடிய வில்லை.

விஷ்ணு புராணத்திலே ‘ஞானம், ஶக்தி, பலம், ஐஶ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்கிற ஆறு குணங்களும் பகவான்
என்னும் ஶப்தத்தால் சொல்லப்படுகின்றன’ [ஞானஶக்தி ப3லைஶ்வர்ய வீர்யதேஜாம்ஸ்யஶேஷத:  வி.புரா.6-5-79]
இவற்றை முறையே அயோத்யா காண்டத்தில், ‘பிறரை ஹிம்ஸிக்காமை, இரக்கம், ஆர்த்தநாதம் கேட்கை,
ஸௌஶீல்யம், வெளியிந்திரியங்களை அடக்குகை, மனதையடக்குகை’ என்று காட்டி,-இவை  இராமபிரானை அலங்கரிக்கின்றன
[ஆந்ருஶம்ஸ்யம்நுக்ரோஶ: த்4ருதம் ஶீலம் த3ம: ஶம:। ராம: ஶோப4யந்த்யேதே ஷட்3கு3ணா புருஷோத்தமம்।। அயோ.கா. 33-12] என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதேபோல, இங்கே சாந்தோக்யத்தில் சொல்லப்பட்ட எட்டு குணங்களின் ‘பாபமற்றவன், கிழத்தனமற்றவன்,
சாவற்றவன், துன்பமற்றவன், பசியற்றவன், தாகமற்றவன், வீணாகாத விருப்பங்களை உடையவன், வீணாகாத ஸங்கல்பங்களை உடையவன்’
[அபஹதபாப்மா, விஜரோ, விம்ருத்யு:, விஶோக:, விஜிக4த்ஸ:, அபிபாஸ:, ஸத்யகாம:, ஸத்யஸங்கல்ப: சாந்தோ. 8-7-1]
என்பனவற்றின் ஒரு சேர பூர்த்திக்கு அப்ரமேயம் முதலான எண் குணங்களைச் சொல்லுகிறார்.

—————-———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading