தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே-ஆரண்ய -30-39-
தம் த்ருஷ்ட்வா -அவ்விராமனைப் பார்த்து
ஸத்ரு ஹந்தாரம் -எதிரிகளை அழித்தவரும்
மஹர்ஷீணாம் ஸூகாவஹம் -மகார்ஷிகளுக்கு ஸூ கம் அளிப்பவருமான
பபூவ -சத்தை பெற்றாள்
ஹ்ருஷ்ட்வா -ப்ரீதி அடைந்தாள்
வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே-ஸீதா பிராட்டி கணவனான அவரை நன்கு தழுவினாள்-
அவதாரிகை –
சதுர்தச சஹஸ்ராணி ரஷசாம் பீமா கர்மாணாம் ஹதான் ஏகேன மாநுஷேண பதாதி நா-ஆரண்ய -26-35-இதி பிரக்ரியையாலே
ராஷச வேட்டை யாடின பெருமாளுடைய யுத்தாயாச பரிஸ் விந்னமான திரு மேனியில்
ராஷச சர வ்ராத வ்ரணாரோபண திவ்ய ஔஷதமான காடா லிங்கனத்தைப் பண்ணி
பிராட்டி சத்தை பெற்றாள் -என்கிறது –
1-தம்-
ஸ்தரியம் புருஷ விக்ரஹம் -அயோத்யா -30-3- என்று விண்ணப்பம் செய்ய வேண்டும்படி
ராஷச பூயிஷ்ட மான தேசத்தில் உன்னைக் கொண்டு போக அஞ்சுவேன் -என்றவரை –
2-தம் –
ஸ்தரியம் புருஷ விக்ரஹம் -அயோத்யா -30-3- என்று பிராட்டி வாயாலே அநநுமதமாக ஆண்ட அன்று துடங்கி திரு உள்ளத்திலே கருவி இருந்தது –
பதினாலாயிரம் ராஷசரையும் முடியும் உடலுமாகத் தறித்து
உதிர வெள்ளத்திலே மிதக்க விட்டுப்
பிராட்டியைக் கையைப் பிடித்துக் கொண்டு காட்டினவரை
3-தம் –
ஆதித்ய இவ தேஜஸ –சுந்தர -34-28-இத்யாதிப்படியே
வீரப்பாட்டுக்கு சிறு விரல் முடக்கும் படி அவதீர்ணரானவரை
4-தம் –
படுக்கைத் தலையிலே விடு பூ விழுந்து திரு மேனி சிவக்கும் சௌகுமார்ய அதிசயத்தை யுடையவரை
5-தம்-
உகப்பாலே அடுத்துப் பார்க்கில் நாயனமான தேஜஸ் ஸூ க்கும் அசதானமான திரு மேனியை யுடையவரை –
6- தம் –
ரிஷிகளுக்குபண்ணின பிரதிஜ்ஞ்ஞையை கடலோசை யாகாத படி தலைக் கட்டுகையாலே
பூர்ண மநோ ரதரானவரை
7- தம் –
ரத்ன கசிதமான பொன்னரி மா மலை போலே சத்ரு சர வ்ராத வ்ரஹாங்கிதமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவராய் உள்ளவரை –
1-த்ருஷ்ட்வா –
கருமுகை மாலையைப் பன்னீரிலே தோய்த்து எடுப்பாரைப் போலே
யுத்தாயாச பரிஸ் விந்னமான திரு மேனியைத் தன பார்வை யான பன்னீராலே வழிய வார்த்து –
2- த்ருஷ்ட்வா –
ஆதாபிபூதருடைய சீத தடாகப் பிரவேசம் போலே
ராஷசாச நிகராபி பூதமான திருமேனியைத் தன் பார்வை யாகிற
பூர்ண தடாகத்திலே தோய்த்து எடுத்து –
ஸத்ரு ஹந்தாரம் –
ப்ரதிபஷ நிரசனத்தாலே வந்த புகருடைமை
சமோஹம் சர்வ பூதேஷு -ஸ்ரீ கீதை -9-29-என்கிற பெருமாளுக்கு சத்ருக்கள் உண்டோ என்னில்
ஜ்ஞாநீ த்வாத்மைவ -ஸ்ரீ கீதை -7-18-
த்விஷ தன்னம் ந போக்தவ்யம் த்விஷ நதம்நைவ போஜயேத் பாண்டவான்
த்விஷசே ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவா -பாரத -உத் 74-27-இத்யாதிகளாலே
ஆ ஸ்ரீ த விரோதிகள் தனக்கு விரோதிகளாம் அத்தனை இ றே-
1-மஹர்ஷீணாம் ஸூகாவஹம்-
யுத்த ப்ராரம்பம் துடங்கி கிம் பவிஷ்யதி -என்று வயிறு பிடித்து
துக்கிதராய் இருந்த மஹா ரிஷிகளுடைய பயம் தீர
சத்ருக்கள் அடங்கக் கொன்று
அவர்களுக்கு ஸூ காவஹராய் இருப்பவரை –
2-மஹர்ஷீணாம் ஸூகாவஹம்–
தம்முடைய போஷ்ய குடும்பத்துக்கு ஸூ கத்தைப் பண்ணி
தம்முடைய -பிராட்டியையும் சேர்த்து –
சத்திக்கு ஆபாதகரனவரை-
பபூவ –
மாலையும் மனமும் போலே அத்யந்தம் ஸூ குமாரரான விக்ரஹத்தையும்
ஸ்வபாவத்தையும் யுடைய பெருமாள் –
கடிந காத்ர ஸ்வ பாவரான முரட்டு ராஷசரோடேயுத்தம் ப்ராரம்பித்த போது துடங்கி –
பிரேம அதிசயத்தாலே மாண்டு கிடந்த பிராட்டி
திரு மேனியிலே தீங்கு இன்றியிலே நின்ற பெருமாளைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது-
-ஹ்ருஷ்ட்வா-
தர்மி யுண்டானால் தர்மம் பிறக்கக் கடவது இ றே
ராம சௌந்த்ர்யத்தைமுழுக்கக் கண்டு திரு உள்ளம் ஈடுபட்ட படி –
1-வைதேஹீ –
ஐயர் வயற்றிலே பிறந்திலேன் ஆகில் எனக்கு இப் பேறு இல்லையே
2-வைதேஹீ –
இக்குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப்பிடியாரே –
3-வைதேஹீ –
இந்நிலத்தில் பிறந்திலேன் ஆகில் இவ்வில்லோட்டை சௌ ப்ராத்ரம் கிடையாதே –
அவில்லோட்டை சௌ பிரார்த்ரம் இல்லையாகில் வீர்ய ஸூ ல்கையாக -இவ்விவாஹம் -இவ்வாகாரம் -கூடாதே
4-வைதேஹீ –
தநுர் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்த ஐயர்
இந்த ஆகாரம் கண்டால் என்ன படுவரோ –
5- வைதேஹீ –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்றபடியே
சர்வ லோக ஆகர்ஷகமான இந்நிலையை ஐயரை ஒழிய நான் காண்பதோ என்று பித்ரு ஸ்ம்ருதி பண்ணுகிறாள்-
பர்த்தாரம் –
பாணிக்ரஹண வேளை துடங்கி பதித்வ பிரதிபத்தி பண்ணிப் போந்தாள்-
இப்போது இ றே தாத்வர்த்தம் ஜீவித்தது-
பரிஷஸ்வஜே-
சஸ் வஜே -ஆலிங்கனம் பண்ணினாள்-
1-பரிஷஸ்வஜே–பரி பூரணமாகத் தழுவினாள்
2-பரிஷஸ்வஜே–பர்யாப்தமாகத் தழுவினாள்
தழும்பு மாறும் அளவும் தழுவினாள்
சரவ் ரணங்களாலே வந்த தழும்பு எல்லாம் மாறும் அளவும் திரு முலைத் தடத்தாலே வேது கொண்டாள் –
தான் கை கண்ட மருந்து இ றே
சர வ்ரணங்களுக்கு ஆலிங்கனமாம் இடத்தில் ஐந்தோடு ஐநூறோடு வாசி இல்லையே –
அந்தரங்கர் உள்ளுற எய்த புண்ணுக்கு மருந்தான இது .
தோல் புரை எய்த புண்ணுக்கு மருந்தாகச் சொல்ல வேணுமோ -என்று இருந்தாள்-
ஒரு கொடியாகில் கொள் கொம்பைத் தழுவி அல்லது நில்லாதிறே-
பர்த்தாரம் பரிஷஸ்வஜே –
நித்ய சம்யோக ஸ்திதி ரூபமான பர்த்ருத்வாகாரம் ஒரு கொள் கொம்புக்கு உண்டானால் –
கோல் தேடி யோடும் கொழுந்து -இரண்டாம் திரு -27-
ததாதாரமாய்க் கொண்டு கொள் கொம்பை மூட்டப் படர்ந்து அத்தைச் சிறப்பித்துக் கொண்டல்லது
ஸ்வரூபம் இல்லையே பார்யாத்வா காரமான கொடிக்கு-
பர்த்தாரமவ லம்ப்யைவ பார்யாயா ஸ்திதி ரிஷ்யதே
அவலமப்யதருமம் வல்லி ஸ்தீயதே ந வினா த்ருமம்-என்னுமா போலே –
தம் -என்கிற பதம் பெருமாளுடைய சர்வாகாரங்களையும் காட்டுகிறது
த்ருஷ்ட்வா -என்கிற பதத்தால் பெருமாளுடைய சர்வாகாரங்களையும் நோக்கிக் காணக் கண்ணுடையாள் பிராட்டி -என்கிறது –
சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூ கவாஹம் -என்கிற பதங்களாலே
தன்னோடு குடல் துவக்கு யுண்டான சேதனர்க்கு அநிஷ்ட நிவ்ருத்தியையும்
இஷ்ட பிராப்தியையும் பண்ணின போது அல்லது இவரைக் -இவனைக் -இவளைக் -காண கண்ணில்லை -என்கிறது
பபூவ -அத்தலைக்கு அதிசய அவஹையாய் சத்தை பெற்ற படி
ஹ்ருஷ்டா -ஸதிதர்மிணி தரமாச் சிந்தயந்தே -தர்மியான தான் சத்தை பெற்ற பின்பு தர்மமான உகப்பு தானாகவே யுண்டாயிற்று
பர்த்தாரம் -தன் கார்யம் சுமந்து நடத்தினார் என்கிறாள்
தன் கார்யம் சுமந்து நடத்துகை யாவது
பிதுர் தச குணம் மாதா -என்கையாலே -தன் புத்திர ரஷணம் பண்ணுகை இ றே
பரிஷஸ்வஜே -ஆ ஸ்ரீ த ரஷணத்தால் வந்த களிப்புக்கு போக்கு வீடு
ஆலிங்கனம் போலே இருந்தது
அவருக்கும் பிரயோஜனம் அது போலே காணும் –
—————————————————————
தம் த்3ருஷ்ட்வா ஶத்ரு ஹந்தாரம் மஹர்ஷீநாம் ஸுகா2வஹம் |
ப3பூ4வா ஹ்ருஷ்டா வைதே3ஹீ ப4ர்த்தாரம் பரிஷஸ்வஜே ||
பொழிப்புரை:
எதிரிகளை அழித்தவரும் மஹரிஷிகளுக்கு ஸுகம் அளிப்பவரும் அவ்விராமபிரானைப் பார்த்து,
ஸீதாப்பிராட்டி ஸத்தைப் பெற்றாள். ப்ரீதியடைந்தாள்; கணவனான அவரை ஆரத்தழுவினாள்.
பதினான்காயிரம் அஸுரர்களைக் கொன்ற வீரனான இராமபிரான்
[சதுர்த3ஶஸஹஶ்ராணி ரக்ஷஸாம் பீ4மகர்மணாம் ஹதாக்யேகேந ராமேண மாநுஷேண பதா3தி3நா; ஆர.கா. 26-35] என்கிறபடியே
ராக்ஷஸ வேட்டையாடி நின்ற ராமபிரானுடைய, யுத்தத்தால் வேர்த்திருந்து களைப்படைந்திருக்கும் திருமேனியில்
ராக்ஷஸர்களின் அம்புக் கூட்டத்தால் ஏற்பட்ட புண்களுக்கு அரு மருந்தாயிருக்கும் தன்கா3டா4லிங்கனத்தைச்
(இறுக அணைத்தலான செயலை) செய்து பிராட்டி ஸத்தை பெற்றாள் என்கிறது இந்த ஶ்லோகம்.
‘ஆணுருக்கொண்ட பெண்ணாகிற உம்மை மாப்பிள்ளையாகப் பெற்ற தந்தையார் என்ன நினைப்பார்?’
[ஸ்த்ரியம் புருஷவிக்3ரஹம்; ஆர.கா. 30-3] என்று பிராட்டி விண்ணப்பம் செய்யவேண்டும்படி
‘அரக்கர்கள் நிறைந்த தேஶத்தில் உன்னை அழைத்துப் போக அஞ்சுகிறேன்’ என்றவரை,
‘ஆணுருக் கொண்ட பெண்’ என்று உள்ளத்தில் நினையாவிடிலும், வாயாலே சொன்ன அன்று முதல்
தன் நெஞ்சிலே வைத்திருந்து பதினாலாயிரம் ராக்ஷஸர்களையும் தலைவேறு உடல்வேறாகச் செய்து,
பிராட்டியைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, ‘ஆணுருக்கொண்ட பெண்ணின் செயலைக் கண்டாயோ?’
என சொல்லாமல் சொல்லிக் காட்டினான் இராமபிரான்.
ஸூர்யனைப்போலே தேஜஸ்ஸையுடைய இராமபிரான் [ஆதி3த்ய இவ தேஜஸ்வீ; ஸு.கா.34-28] என்ற ஶ்லோகத்தில் சொன்னபடியே
வீரர்களில் முதலில் எண்ணத்தகுந்தவராக அவதரித்தவன் இராமபிரான்.
பள்ளியறையின் மேற்கட்டியிலிருக்கும் பூவிதழ்கள் பட்டுக் கன்றிச்சிவக்கும் மென்மை உடையவன்;
கண்களால் உற்றுப்பார்க்கின் அதனால் கன்றும் திருமேனி உடையவன்;
‘உற்றார் உறவினரோடு இராவணனை அழித்து உங்களைக் காக்கிறேன்’ என்று வசனபத்3த4னாக இருந்து
இன்று பதினாலாயிரம் ராக்ஷஸர்களை வத4ம்செய்து எதிரிகளின் அம்புக்கூட்டங்களால் உண்டான புண்களைத்
தாங்கிய திருமேனியை உடையவாராய் இருந்தவரை தன் பார்வை (த்ருஷ்ட்வா) என்னும் பன்னீரால் நீராட்டினாள் ஸீதை.
(ஶத்ருஹந்தாரம்)
‘நான் எல்லா ஜீவராஶிகளிடத்திலும் ஒருபடியாய் இருப்பவன்’ [ஸமோஹம் ஸர்வ பூ4தேஷு; ப4க3.கீ3தை: 9-29]
என்றிருப்பார்க்கு எதிரிகள் உண்டோ? என்னில்,
தன்னுடைய அடியார்களுக்கு விரோதிகள் ஆஶ்ரித விரோதிகள்,
தனக்கும் விரோதிகள் என்றிருப்பவன் எம்பெருமான் அல்லனோ?
(மஹர்ஷீணாம் ஸுகா2வஹம்)
மஹரிஷிகளுக்கு ஸுகம் அளிப்பவரை;
சண்டை ஆரம்பித்தது முதல், ‘என்ன நிகழுமோ?’ என்று வயிறு கலங்கியிருக்கும் மஹரிஷிகளுடைய பயம்
தீரும்படி எல்லா எதிரிகளையும் அழைத்து அவர்களுக்கு ஸுகம் அளிப்பவரை;
‘உம் தேஶத்திலே உம்மை அண்டி வஸிக்கும் நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கப்படவேண்டியவர்கள்’
[தே வயம் ப4வதா ரக்ஷ்யா ப4வத்3 விஷய வாஸிந: ஆர.கா. 1-26] என்கிறபடியே
தம்மால் போஷிக்கப்படவேண்டியவர்களான மஹரிஷிகளுக்கு ஸுகமளித்துத் தம்முடைய ஸ்வரூபத்தை உண்டாக்கிக் கொண்டவரை
(ப3பூ4வ)
பூ4 ஸத்தாயாம் என்கிற தா4துவின் படி ஸீதை ஸத்தை பெற்றாள் என்று நிர்வாஹம்.
ஸௌகுமார்யாதி ஸ்வபா4வங்களையுடைய இராமபிரான் முரட்டு மேனியும் தன்மையுமுடைய அரக்கர்களோடு
யுத்தம் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே அன்பின் மிகுதியாலே ஸத்தை அழிந்துகிடந்த பிராட்டி
திருமேனியிலே ஒருதீங்குமின்றியிருந்த பிரானைக் கண்டு ஸத்தை பெற்றாள் என்கிறது.
(ஹ்ருஷ்டா)
உகந்தாள்: தர்மிக்கு ஸத்தை உண்டானால், தர்மம் தானாகவே ஸத்தை பெறும் என்னுமாப் போலே,
இராமனுடைய பூர்ணமான வடிவழகைப் பார்த்து ஸத்தை பெற்ற பின்பு, தர்மமான உகப்பு தானாகவே உண்டாயிற்று.
(வைதேஹீ)
பிராட்டியானவள் இந்த ஸமயத்தில் தன் நற்குடிப்பிறப்பை அநுஸந்திப்பதால், வால்மீகி பகவான் ‘வைதேஹீ’ என்று அறுதியிடுகிறார்.
விதேஹ ராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்திருக்கவில்லை என்றால், இப்பேறு எனக்கு இல்லாமலன்றோ போயிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறாள்.
விதேஹராஜனுக்குப் பிறந்திருக்கவில்லை என்றால், இக்ஷ்வாகு வம்ஶத்தில் தொன்றிய இராமனைக் கைப்பற்றியிருக்க முடியாது.
வேறு ஒரு நாட்டில் அரசிளங்குமரியாகப் பிறந்திருந்தாலும், ஶிவ தநுஸ்ஸுடன் ஸம்பந்தமிருந்திருக்காது;
வில்லை முறித்த வீர்யத்திற்குப் பரிசாக ஏற்பட்ட ராம விவாஹமும் நடந்திருக்காதன்றோ?
வில்லை ஒடித்ததற்கு விதேஹ வம்ஶத்தையே அடிமையாக எழுதிக் கொடுத்தும், என்னையும் கொடுத்த தந்தை
இப்படி பதினாலாயிரம் அரக்கரை ஒருவராய்க்கொன்று நிற்கும் இந்த நிலையைக்கண்டால் என்ன பாடுபடுவர்?
‘ஆண்களையும் வஶீகரிக்கும் அழகும், வண்மையும் பொருந்தியவன் இராமன்’ [பும்ஸாம் சித்தாபஹாரிணம்; அயோ.கா. 3-29] என்கிறபடியே
ஆண், பெண் வாசியில்லாமல் எல்லோரையும் ஈடுபடுத்தும் இவருடைய இந்நிலமையை நான் மட்டும் எவ்வாறு அநுபவிப்பது,
என் தந்தையும் காணவேண்டாவோ? என்று தந்தையையும் நினைவு கொள்கிறாள் இங்கே.
(ப4ர்த்தாரம்)
இராமபிரானைக் கைப்பிடித்ததிலிருந்தே, இவன் என் கணவன் என்று நினைத்திருந்தவள் பிராட்டி.
ஆயினும், இப்போது, ‘ப்4ரூ ப4ரணே’ என்ற தா4துவின் படி, ப4ர்த்தா-ப4ரிப்பவன் -ரக்ஷிப்பவன் என்பது பொருளுடைத்தாயிற்று.
(பரிஷஸ்வஜே)
நன்றாக ஆலிங்கனம் செய்தாள். ‘பர்யாப்தம் யதா2 ப4வதி ததா2 ஸஸ்வஜே’ போதுமென்று சொல்லும்படி தழுவினாள்.
அம்புபட்ட புண்ணுக்கு ஆலிங்கனமே கைகண்ட மருந்து என்று பிராட்டியே பல ஸமயங்களில் அநுபவித்தறிந்த விஷயமாயிற்றே. ‘
கோல்தேடி ஓடும் கொழுந்து’ [இர.திரு.27] என்கிறபடியே ஒரு கொடியாய் இருப்பது ஒருகொள்கொம்பைத் தழுவினாலல்லது நிலைநிற்காதே.
கணவனைப்பற்றி நிற்கும் தன்மையே மனைவிக்கு ஸ்வரூபம் எனப்படுகிறது.
தம்–
(அவரை) என்னும் சொல் இராமபிரானுடைய சௌர்யம், வீர்யம் முதலிய எல்லாத் தன்மைகளையும் காட்டுகிறது.
த்ருஷ்ட்வா–(
பார்த்து) என்கிற பதத்தாலே, ‘ராமபிரானுடைய எல்லாத் தன்மைகளையும் நன்றாகக் காணலாம்படியான
கண்களை யுடையவள் பிராட்டியே’ என்று உணர்த்தப் படுகிறது.
ஶத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்–
(ஶத்ருக்களை அழித்தவரை, மஹர்ஷிகளுக்கு ஸுகம் அளித்தவரை) என்கிற பதங்களாலே
‘தங்கள் பிள்ளைகளான சேதநருடைய துன்பங்களைத் துடைப்பதும், இன்பத்தைப் பெருக்குவதும்
செய்யாத போது, பிராட்டி இராமபிரானைக் காண விரும்ப மாட்டாள்’ என்று சொல்லப்படுகிறது.
பபூவ–
(ஸத்தை பெற்றாள்) தன் பார்வையாகிற பன்னீரால் குளிப்பாட்டுவதன் மூலம், இராமபிரானுக்குச்
சிறப்பை விளைவிக்கையாலே, தன் ஶேஷத்வஸ்வரூபம் பெற்றாள் என்கிறது.
ஹ்ருஷ்டா–
(உகந்தாள்) ‘த4ர்மி ஸித்3தி4த்தபிறகே த4ர்மங்கள் ஆராயப்படுகின்றன’ என்கிற ந்யாயத்தாலே,
த4ர்மியான தான் ஸத்தைப் பெற்ற பின்பு த4ர்மமான உகப்பு தானாகவே உண்டாயிற்று.
வைதேஹீ–
தந்தை விஷயமாக நெஞ்சாலே நன்றி செலுத்துகிறாள்.
ப4ர்த்தாரம்–
(ப4ர்த்தாவை) குடும்பத்தைக் காப்பவன்;
பிள்ளையை ரக்ஷிப்பதைத் தன்னுடைய பொறுப்பாகக் கருதுபவள் தாய் அல்லவா?
எனவே தன்னுடைய கடமையைத் தன்மேல் ஏற்றிக்கொண்டு நடத்திக் கொடுத்ததால், அதாவது
மஹர்ஷிகளை ரக்ஷணம் பண்ணியபோது, ‘என் காரியத்தை தனது பொறுப்பாகச் சுமந்து நடத்தினார்’ என்று அநுஸந்திக்கிறாள்.
பரிஷஸ்வஜே–
(நன்றாகத் தழுவினாள்) பிராட்டி பிரானைத் தழுவியதைப் பார்த்தால், உடம்பு நோவநின்று எதிரிகளை அழித்ததற்கு,
இவ்வாலிங்கனத்தையே இராமபிரானும் ப்ரயோஜனமாகக் கருதுகிறார் போலும்.
————–———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply