தனியன் -பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்தது –
முள்ளிச் செழு மலரோர் தாரான் முளை மதியம்
கொள்ளிக் கென்னுள்ளம் கொதியாமே –வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல் –
மருவாளன்-கையில் பொருந்திய வாளை உடையராய்
திருவாளன் -பகவத் கைங்கர்ய செல்வம் உடையராய்
முளை மதி அம் கொள்ளிக்கு -உதிக்கிற சந்திரன் ஆகிற அழகிய நெருப்புக்கு
————————————————————————–
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –
சப்தாதி விஷயங்களின் சந்நிதியிலே
மனஸ்ஸூ பரிதபியாமல் –
பகவத் ப்ராவண்யத்துக்கு அனுகுணமாக
திருமடல் -என்கிற திவ்ய பிரபந்தத்தை உபகரித்து அருளுவதே
என்று ஆழ்வார் திருவடிகளில் ப்ரேமம் உடையாருடைய ஈடுபாடாய் இருக்கிறது-
அன்றிக்கே –
ஸ்வ விச்லேஷத்தில் சாம்சாரிக விஷயங்களிலே மனஸ் ஸூ பரிதபியாதபடி
ஸ்வ பிரசாதத்தை பிரசாதியாமல் தாம் மடல் எடுக்க உபக்ரமித்த
பாசுரமான மடலையே தந்து விட்டார் -என்று ஆகவுமாம் –
முள்ளிச் செழு மலரோர் தாரான் –
தமக்கு அசாதாராணமாய்-
அத்விதீயமாய் -இருக்கிற முள்ளிப் பூவைத் தாராக வுடையவர் -என்னுதல்-
வகுளத்தாரான்-என்னுமா போலே –
அன்றிக்கே
மலரோ -என்ற பாடமான போது –
நம் அபேஷிதமான முள்ளிச் செழு மலர் மாலையையோ தருகிறிலர்-என்றாகவுமாம் –
மலர்-என்றது மாலைக்கு உப லஷணம்-
எதுக்கு தார் -தர வேணும் என்னில் –
முளை மதியம் கொள்ளிக்கு என்னுள்ளம் கொதியாமே –
முளைத்து எழுந்துள்ள திங்கள் விரஹிகளாய் இருப்பார்க்கு தாப ஹேது இறே-
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் -என்றார் இறே இவரும்-
நாட்டாருக்கும் அப்படியே -சந்த்ரஸ் சண்டே கராயதே என்று சந்திர மண்டலம் சண்ட மண்டலமாய் இருக்கை-
-தான்யே வாரமணீ யாநி–முளை மதி அங்கொள்ளி -என்னுதல்
முளைமதியமாகிற கொள்ளி -என்னுதல் –
அங்கொள்ளி –அழகிய கொள்ளி -என்னுதல் –
இது பஞ்ச விஷயத்துக்கு உப லஷணம் –
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவிருமாலோ -என்றும்
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ –
மேவு தண் மதியம் வெம்மதியாலோ
மென் மலர்ப்பள்ளி வெம்பள்ளி யாலோ -என்றும் இறே
விச்லேஷத்தில் விஷயங்களின் பாதகத்வாகாரங்கள் இருப்பது –
அது தான் விஷய அநுகுணமாய் இறே இருப்பது –
ஆகையால் குளிர்ந்த சந்தரன் கொள்ளி போலே கண்டு என் ஹ்ருதயம் பரிதபியாதே –
ஆழ்வார் பண்ணின உபகாரமே
வள்ளல் திருவாளன் சீர்க்கலியன் –
வள்ளல் -பரமோதாரர் –
திருவாளன் -பகவத் ப்ரத்யா சத்தி யாகிற ஐஸ்வர்யத்தை வுடையவர் –
வள்ளல் திருவாளன் –
இவர் ஔதார்யம் பண்ணுகைக்கு உடலான ஐஸ்வர்யம் –
சீர்க்கலியன் –
பகவத் பக்த்யாதி குணங்களை வுடையவர் –
கார்க்கலியை வெட்டி
கலிகன்றி -யாகையாலே அஜ்ஞ்ஞான வஹமான கலியைக் கடிந்து –
கலி தோஷம் இறே காம பரவசர் ஆகிறது –
அப்படி அப்ராப்த விஷயத்தில் காமம் வாராதபடி –
மருவாளன் தந்த மடல் –
திருக்கையில் மருவி இருக்கிற வாளை வுடையவர்
பகவத் காமத்துக்கு அனுகுணமான திரு மடல் என்கிற திவ்ய பிரபந்தத்தை உபகரித்து அருளினார் –
மருவாளன் –
பகவத் அனுபவத்தில் உண்டான போக்யதை வடிவில் தொடை கொள்ளலாம் படியானவர்
இவள் -அம் துழாய் மாலை கமழ்தல் –
மரு-பரிமளம்
மருவு -மருவுதலாய்-எம்பெருமானை கிட்டுக்கையே ஸ்வபாவமாக உடையவர் -என்றுமாம் –
அன்றிக்கே –
சேதனரைக் கிட்டி ஆளுகிறவர் -என்றுமாம் –
ஆகையால் சேதனரைத் தம் படியாக்க வேண்டி மடலை உபகரித்து அருளினார்
மாலையைத் தாராதே
மடலைத் தந்து விட்டார் -என்றாகவுமாம் –
————————————————————————–
பிரவேசம் –
கீழ் அனுபவித்தது ஜ்ஞான அனுபவம் ஆகையாலே
பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து -அது கிடையாமையாலே
திருக் குடந்தையிலே சரணம் புக்கார் -திரு வெழு கூற்று இருக்கையிலே –
இப்படி சரணம் புக்க அளவிலும் நினைவு பூரியாமையாலே
இதுக்கு ஹேது என் என்னில் –
எம்பெருமான் தான் அஜ்ஞ்க்ன அசக்தன் அப்ராப்தனாய்த் தாழ்க்கிறது அன்று –
இத்தலையில் கர்த்தவ்ய சேஷம் உண்டாய்த் தாழ்க்கிறது அன்று –
இனி விளம்ப ஹேது இரண்டு தலைக்கும் இன்றிக்கே இருக்கச் செய்தே
இனித் தாழ்க்கிறது கூடல் செய்ய நினையாமையாலே —
ஆனபின்பு -இத்தலையை அழித்தாகிலும் முகம் காட்டுவித்துக் கொள்ளுவோம் -என்கிற
த்வரையின் மிகுதியை
கிருஷ்ண அவதாரத்தில் குடக் கூத்திலே அகப்பட்டு அவனைக் கிடையாமையாலே மடல் எடுக்கத் துணிந்தாள் ஒரு
பிராட்டி யுடைய பாசுரத்தாலே ஸ்வ தசையை ஆவிஷ்கரிக்கிறார் –
மடலாவது –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம் -என்கிறபடியே
இருவரும் ஒத்த பருவத்தராய்
பும்ஸ்தவத்துக்கு ஏகாந்தமான அறிவு நிறைவு ஓர்ப்பு கடைப்பிடி என்கிற குணங்களாலே அவனும் பூர்ணனாய்
ஸ்த்ரீத்வத்துக்கு ஏகாந்தமான நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்கிற குணங்களால் இவளும் பூரணையாய் –
இப்படி இருவரும் குறைவற்றவர்களாய் இருக்க –
தோழிமாறும் தானுமாக உத்யானத்திலே பூக் கொய்ய வென்று புறப்பட
அவனும் வேட்டைக்கு என்று புறப்பட்டுச் சோலையிலே புகுர –
தைவ யோகத்தாலே கூடினதாகையாலே
உயிர் தோழியும் கூட அந்ய பரையானவளவிலே
யாத்ருச்சிகமாக இருவருக்கும் திருஷ்டி பந்தம் பிறந்து அதுவே அடியாக சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாக
உன்மச்த கரசமமாக கலந்த கலவியாகையாலே
நற்கேட்டிலே இரண்டு தலைக்கும் அழிவு வரும் -என்று
இத்தை முடிய நடத்தக் கடவதாகக்ப் பார்த்த
தைவம் தானே பிரிக்க –
இவருடைய பந்துக்களும்
புனை யிழை களணிவுமாடையுடையும்
புதுக் கணிப்பும் நினையும் நீர்மையதன்று -என்னும்படி இருவர் வடிவிலேயும் வேறுபாடு கண்டு இருவரையும் காவல் செய்ய
அதுவே அடியாக இவர்கள் ஆற்றாமை சதா சாகமாகப் பணைக்க
எதிர்த் தலையைக் கிடையாமையாலே மற்றைத் தலை செய்யும் சாஹச ப்ரவ்ருத்தி யாயிற்று மடலாவது –
இவர்கள் மடல் எடுக்கிறதுக்கு பிரயோஜனம் என் என்னில்
இவ் வுபக்ரமத்தைக் கண்டு இவருடைய பந்துக்களும் கூட்டுதல் –
அன்றியே ராஜாக்கள் கூட்டுதல்
அன்றியே இருவர் பந்துக்களும் இருவரையும் கை விட
அலக்குப் போர் போலே -ஒருவர்க்கு ஒருவர் தஞ்சமாய்க் கூடிப் போதல் –
அலக்கு போர் -வீரர்கள் தங்கள் ஆயுதங்களை ஆதாரமாக்கி நிறுத்தி வைக்கும் ஆயுத குவியல் –
அன்றிக்கே -மடல் எடுத்து எதிர் தலையை பெறாமையாலே இத்தலை முடிந்தது -என்னும்
ஏற்றத்தைப் பெற்றுப் போதல்
இவை பிரயோஜனமாக –
வள வேழ் உலகில் தங்கள் அயோக்யதையை அனுசந்தித்து அகலும் ஸ்வ பாவரான இவர்கள்
இஸ் சாஹச பிரவ்ருத்தியில் இறங்குவான் -என் என்னில்
மடல் எடுத்து அத்தலையை அழிக்கப் புகுகிறார்கள் அல்லர்களே
ஊர்வன் மடல் -என்று -சாபமாநய சௌமித்ரே -என்று வில்லைக் காட்டி வேலையை அச்சம் உறுத்தினால் போலே
அச்சம் உறுத்தி முகம் காட்டுவித்துக் கொள்ளுகிற வர்கள் ஆகையாலே
தங்கள் துணிவைச் சொல்லவே அவன் வரும் என்று சொல்லுகிறார்கள்
அத்தனை அல்லது மடல் எடுக்கிறார்கள் அன்று இறே-
அயோக்யர் என்று அகன்றதும் -விலஷண வஸ்து என்று அனுசந்தித்தவாறே –
குணாதிக்யமும் வைலஷண்யமும் அனுசந்தித்த படியால் இறே இவர்கள்
ஆற்ற மாட்டாதே வழி யல்லா வழி போயாகிலும் பெற வேணும் என்று மேல் விழுகிறது–
இவர்களுக்கும் ஒரு ஸ்வ பாவம் உண்டு –
தங்களை அனுசந்தித்த போது அயோக்யர் என்று அகலுவர்கள் –
அவனை அனுசந்தித்த போது தங்களையும் பாராதே மேல் விழுவார்கள் –
அத்தலையை அனுசந்திக்கச் செய்தே இத்தலை தோன்றாது இறே -அத்தாலே மேல் விழுகிறார்கள் –
ஆனால் அவர்கள் பிராட்டிமார் பேச்சைப் பேசுவான் என் என்னில்
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தாலும்
அநந்யார்ஹ சேஷத்வாதிகளாலும்
அந்வயத்தில் தரிக்கையாலும்
வ்யதிரேகத்தில் தரியாமையாலும்
ஜ்ஞானம் விசதமானால் இவ்வாத்ம வஸ்துவும் பிராட்டிமாரோடே ஒக்குமாகையாலும்
இவர்களும் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் ஆகையாலே
பிராட்டி பேச்சாலே பேசுகிறார்கள்-
கடலன்ன காமத்தராகிலும் மாதர் மடலூரார் மற்றை யார் மேல் -என்று ஸ்திரீகள்
புருஷர்கள் மேல் மடலூரக் கடவதல்ல என்று லஷணம் காட்டிக் கிடக்கச் செய்தே
இப் பிராட்டி மடலூருவான் என் என்னில்
ஆசை ஒருதலைக்கேயாய்-ஒரு தலை லஷணப் படியே ஆசையை மர்யாதையிலே நடத்தலாமாகில் அது செய்யலாவது –
ஆசை மிக்கார் மடலூரும் அத்தனை -என்னும் ஆர்ய மர்யாதையாலே மடலூர உபக்ரமிக்கிறார்கள்
பின்னைத் தமிழர் செய்ததுக்கு ஹ்ருதயம் என் என்னில்
ராஜாஜ்ஞ்ஞையிலே ஆசையை வரம்பு கட்டப் பார்த்ததுக்கு ஹ்ருதயம் ஏது என்று அறிந்தது இல்லை-
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் -அறிவுடையாராகில் அனுஷ்டிக்கக் கடவதல்ல -என்று
அவர்கள் நிஷேதித்த காமத்தை அனுஷ்டிக்கிறார்களோ என்னில்
அப்படி நிஷேதித்த காமம் அல்ல –
நிதித்யாசி தவ்ய-என்று வேதாந்த்திலே விதிக்கிற பகவத் பக்தியை -காமம் -என்கிறது –
ஆகையாலே விஹிதமான வ்ருத்தி-பக்தியைக் காமம் -என்கிறது –
மடல் எடுக்கையாவது -தன்னுடைய ஸ்த்ரீத்வத்துக்கும் அவனுடைய புருஷோத்தமத்வத்துக்கும் சேருவது ஓன்று அன்று –
அவன் தானே வரக் காண்கை காண் ஸ்த்ரீத்வம் ஆவது -என்று விலக்குகிறவர்களைக் குறித்து –
மநோஹாரி சேஷ்டிதங்களிலே அகப்பட்டு அபஹ்ருத சிந்தை யானேன் –
அவன் தானே வருகிறான் -அவனுக்கு நிறக்கேடு விளைக்க ஒண்ணாது -என்கிற இதுவும் செய்தற்றது –
இனி மடல் எடுத்து அவனைப் பெற்று அல்லது தரியேன் -என்கிற தன் துணிவை –
விலக்குகிற பந்துக்களுக்கு சொல்லுகிறாள் –
மடல் எடுக்கப் புக்கவள் விளம்பிக்கறதுக்கு ஹேது என் என்னில் –
ஹேதுக்களாலே பந்துக்களை இசைவிக்கைக்காகவும்
குணாதிக வஸ்துவைக் கடுக அழிக்கல் ஆகாது என்றும்
வருகைக்கு அவகாச பிரதானம் பண்ணுகைக்காவும்
விளம்பிக்கிறாள் —
————————————————————————–
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை
சீரார் சுடர்ச் சுட்டிச் செங்கலுழிப் பேராற்று -பேரார மார்வில்
பெரு மா மழைக் கூந்தல் -நீரார வேலி நிலமங்கை என்னும்
இப் பாரோர் சொல்லப் பட்ட மூன்றன்றே
அம் மூன்றும் ஆராயில் தானே -அறம் பொருள் இன்பம் என்று
ஆரார் இவற்றினிடை அதனை எய்துவார் –
சீரார் இரு கலையும் எய்துவர் –
ஆரானும்உண்டு என்பார் எனபது தான் அதுவும் ஒராமை யன்றே –
அது ஒராமை ஆம் ஆறு உரைக்கேன் -கேள் ஆமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழித் தேரார் –
நிறை கதிரோன் -மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஆராவமுதம் அங்கு எய்தி -அதில் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே –
அது நிற்க –
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –
ஏரார் இள முலையீர் –
என் தனக்கு உற்றது காண் –
காரார் குழல் எடுத்துக் கட்டி -கதிர் முலையை -வாரார வீக்கி -மணி மேகலை திருத்தி –
ஆராயில் வேற்கண் –
அஞ்சனத்தின் நீர் அணிந்து –
சீரார் செழும் பந்து -கொண்டு அடியா நின்றேன் நான் –
————————————————————————–
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை –
தாய்மார் தோழிமார் எல்லாரும் இத் துணிவு ஆகாது காண் என்று விலக்கா நிற்கச் செய்தே –
விலக்காதாள் ஒருத்தியைப் பெறுவதே -என்று கொண்டாடுவாரைப் போலே
புருஷார்த்தங்கள் சொல்ல வேண்டுகையாலே –
அவர் பரிக்ரஹித்த சேதனரைச் சொல்ல வேண்டி –
அவர்கள் வர்த்திக்கிற பூமியைச் சொல்லப் புக்கு –
அவ்வழி யாலே அதுக்கு அபிமானிநியான
ஸ்ரீ பூமிப் பிராட்டியை வர்ணிக்கிறாள் –
காரார் வரைக் கொங்கை –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு முலையாக மலைகளைச் சொன்னபடி –
காரார் வரை-என்கையாலே -செறிந்து மேகம் படிந்த மலை -என்று மலைக்கு உயரம் சொல்லிற்று –
மேகம் படிந்த மலை என்கையாலே முலைக் கண் கறுத்து இருந்தால் போலே இருக்கும் என்கை –
மலைகளை முலையாக்கிச் சொல்லிற்றாகில் -எம்மலைகளைச் சொல்லிற்று என்னில்
திருமலைகள் இரண்டையும் முலையாகச் சொல்லிற்று என்னும் இடம் சொல்லிற்று
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் – என்னும் இவையே முலையா -என்று பெரிய திரு மடலிலே சொல்லிற்று-
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு முலை சொல்லுகிறதாகில் உயர்ந்த மேரு ப்ரப்ருதிகளைச் சொல்லாதே
இவற்றைச் சொல்லுவான் என் என்னில்
முலையாவது காந்தன் படுகாடு கிடக்கும் இடம் இறே –
அப்படியே எப்போதும் ஒக்க பகவத் சந்நிதி உள்ள தேசம் ஆகையாலே திரு மலைகளைச் சொல்லிற்று –
வரைக் கொங்கை
முலைக்கு காடிந்யம் ஸ்வ பாவமாய் இருக்கும் இறே –அதுவும் சொல்கிறது –
கண்ணார் கடலுடைக்கை –
கண்ணார் கடல் என்கையாலே -தர்சநீயமான கடல் -என்னுதல் –
இடமுடைத்தான கடல் -என்னுதல் –
இடமுடைத்தாகை யாவது என் என்னில் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்குள் கொடுக்கும் கொய்சகமும் வைத்து உடுக்கலாம் படி பரப்பை வுடைத்தாய் இருக்கை –
கடலுடுக்கை –
திரு மேனியின் சௌகுமார்யத்துக்கு ஈடாக
உறுத்தாமே குளிர்ந்து இருக்கும் -என்கை –
சீரார் சுடர்ச் சுட்டிச் செங்கலுழிப் பேராற்று -பேரார மார்வில்
சீரார் சுடர் சுட்டி –
அழகிய சுடரை உடைய ஆதித்யன் இவளுக்கு திலகம் என்கை –
அணி மிகு தாமரைக் கை ஆபரணமாகக் கடவ
தலைக்குத் தான் ஆபரணமாகப் பெருகையாலே வந்த சீர்மையாகவுமாம் –
செங்கலுழிப் பேராற்று -பேரார மார்வில்
சஹ்யத்திலே வர்ஷிக்கச் சிவந்த கலக்கத்தை உடைத்தாகையாலும்
மலையில் உண்டான பொன் முதலான ரத்னங்களை உடைத்தாகையாலும்
பூமி எங்கும் பரவிக் கொண்டு வருகையாலும்
விளங்கி -கலங்கில் கிடக்கிற ஆறாகிற
ஹாரம் கிடக்கிற மார்பை வுடையவள்
பெரு மா மழைக் கூந்தல் -நீரார வேலி நிலமங்கை என்னும்
பெரு -பெருத்து – –
கறுத்த–மழை மேகங்கள்
நீர் கொண்டு எழுந்த காளமேகத் திரளே-இவளுக்கு மயிர் முடி –
அதாகிறது –
இந்திர தனுஸ்ஸூம் -மின்னும் கலம்பகன் சூடினால் போலே இருக்கையாலே
மேகத்தை மயிர் முடி என்கிறது –
காந்தனுக்கு தர்சநீயமாய் இருக்கையும்
ஒருகால் குலைத்து நுழுந்த விடாய் ஆறும்படியாய் இருக்கையும்-
நீரார வேலி –
ஆவரண ஜலமே இவளுக்குக் காப்பு -என்னுதல் –
மரியாதை என்னுதல்
குளிர்த்தியை வுடைத்தான சந்தனத்தோ பாதியாய்
நாமத்தை உடைய கற்பே இவள் உயரத்துக்கு எல்லை என்கை –
நில மங்கை என்னும் இப்பார் –
பூமியைப் சொல்லப் புக்கு அதுக்கு பிரகாரியான ஸ்ரீ பூமிப் பிராட்டி யளவும் சொன்ன படி
இப் பாரோர் சொல்லப் பட்ட மூன்றன்றே
சிறியார் பெரியார் என்னாதே
விலஷணர் அவிலஷணர் -என்னாதே
பூமியில் உண்டான சேதனர் பரிக்ரஹித்த புருஷார்த்தம் மூன்று அன்றோ -என்கை –
அன்றே-என்றபடியாலே
மோஷம் என்று ஒரு புருஷார்த்தம் உண்டு அன்று என்னும் இடம் சொல்லுகிறது –
அம் மூன்றும் ஆராயில் தானே –
இவற்றை ஆராயப் புகில் –
தம்முடைய திரு உள்ளத்தில் கிடக்கிற காமமே புருஷார்த்தம் -என்றாதல்
அறம் பொருள் இன்பம் என்று –
கீழே புருஷார்த்தத்தை மூன்று என்று சொல்லச் செய்தே
இங்கு எடுத்ததுக்கு பிரயோஜனம் என் என்னில்
மோஷம் இதின் உள்ளே ஓன்று என்று சொல்லுவார் உண்டாகிலும் என்று
அவர்களுக்கு இடமறச் சொல்லுகிறாள் –
ஆரார் இவற்றினிடை அதனை எய்துவார் –
நடுவனது எய்த இரு தலையும் எய்தும் -என்று தமிழர் சொல்லுகிறபடியே சொல்லுகிறார் அன்று-
இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு-
அதனை எய்துவார் என்று -தமக்கு உத்தேச்யமான காமத்தை எய்துவார் -என்றபடி –
ஆரார் இவற்றின் இடை எய்துவார் -என்கையாலே
பயிலும் திருவுடையார் யவரேலும் -என்னுமா போலே
இப் புருஷார்த்தத்தை லபிப்பார்
ஜன்ம வ்ருத்தங்களால் குறைவுடையவரே யாகிலும்
அவர்களும் சிலவரே -என்கிறார்-
சீரார் இரு கலையும் எய்துவர் –
இத்தை லபிக்கும் சம்பத்தை வுடையவர்கள் இதுக்கு கலா மாத்ரமான
தர்ம அர்த்தங்கள் இரண்டையும் லபித்தாராகக் கடவர்
சாத்தியத்தை லபித்தவர்கள் -சாதனத்தையும் அனுஷ்டித்தாராக கடவது இறே
இவற்றுக்கு சீர்மை யாவது -இதுக்கு சாதனம் ஆகையாலே
ஒரூருக்கு போகவென்று ஒருவன் மனோரதித்தால்
அவ் ஊரிலே அவனைக் கண்டால் நடுவு பட்ட வழியும் வந்தானாகக் கடவது இறே
ஆரானும்
அறிவில் குறைந்த யாரோ சிலர்
உண்டு என்பார் எனபது தான் அதுவும் ஒராமை யன்றே –
சிக்கென மற்று -உண்டு என்பார்
நிலையான மோஷம் என்று மற்று ஒரு புருஷார்த்தம் இருப்பதாகச் சொல்லுவார்கள் –
அல்ப அஸ்தரம் என்று இப் புருஷார்த்தங்களை தூஷித்து
ஆனந்தா வஹமாய் -அந்தமில் பேரின்பமாய்
நிலை நின்ற புருஷார்த்தம் உண்டு என்பார்கள் –
இப்படி காண ஒண்ணாதே
அவர்கள் வசஸ் சமுத்ரத்திலே கேட்டுப் போம் இத்தனை என்கை –
ஆரானும்-என்கையாலே -அவ்யப தேச்யருமாய் அவ்யுத்பன்னருமாய் சிலர் -என்கை
எனபது தான் அதுவும்
அவர்கள் அப்படி சொல்லுகிறதும்
உலகத்தார் சொல்லும் சொல் –
உலகத்தவர்களாலே சொல்லப்படுகிற சொல்லையும் செயலையும்
லோக பரிக்ரஹத்தை அவர்கள் ஆராயாமல் சொல்லுகிறார்களாம் அத்தனை
அது ஓன்று அல்ல -என்கை
அவர்கள் அறியாமல் சொன்னாராம்படி என் என்னில்
ஒராமை அன்றே
ஆராயாமல் சொல்லுவது ஓன்று அன்றோ –
அது ஒராமை ஆம் ஆறு உரைக்கேன் –
அச் சொல் ஆராய்ச்சி அற்றது என்னும் இடத்தை -உங்கட்குத் தெரியச் சொல்லுகிறேன்
அவர்கள் அறியாமல் சொன்னார்கள் என்னும் இடம் என் உக்தி மாத்ரத்தாலே
அவர்கள் பிரமாண பிரமேயம் இரண்டையும் அழிக்கிறேன் –
நீங்கள் செய்ய வேண்டியது செவி தாழ்த்துத் தரும் இத்தனை –
கேள் ஆமே
அதனை நீங்கள் காது கொடுத்துக் கேட்கக் கூடுமே -கேளுங்கோள்
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி –
மேக மண்டலத்தில் செல்லுவதும் ஏழு குதிரைகள் பூட்டப் பெற்றதும்
ஒற்றைச் சக்கரத்தை வுடையதுமான –
அது தான் உங்களுக்கு ஏற்க உண்டே என்று தோற்றிற்றோ
மேக பதத்திலே குதிரை சஞ்சரிக்கை யாவது என்
புரவி -இரண்டு அல்ல நாலு அல்ல ஆறு அல்ல -எட்டு அல்ல ஏழு குதிரை பூண்கை யாவது என் –
தனி ஆழித் தேரார் –
பிள்ளாய் -இரண்டாதல் நாலாதல் அன்றிக்கே
தனிச் சக்கரமாம் –
பிள்ளாய் -ஆகாசத்திலே ஒருவன் தேர் நடக்கை யாவதென் –
நிறை கதிரோன் –
ஒரு விளக்கின் சந்நிதியில் விழிக்க மாட்டாத அதி சூத்திரன்
உஷ்ண கிரணங்களால் பூர்ணனாய் இருக்கிற ஆதித்யனைச் சென்று கிட்டுகை
யாவதென் –
மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஒருவனை இங்கே உபாசித்து
அவனுடைய ராஜகுலத்தாலே -ஆதித்ய மண்டலத்தின் நடுவே போகிறானாம் இறே
அங்கே ஏறப் போனால் அவ்வழிப் போக்குத் தான் இங்குப் போலே
இரண்டருகும் பணை யாக நடவே போகிறானோ தான் -என்கை –
ஆராவமுதம் அங்கு எய்தி –
திரு நறையூர் இங்கே
திருவாய்ப்பாடி இங்கே இருக்க
ஆராவமுதம் அங்கே யாவது என் -என்கை –
அங்கு எய்தி –
பனைமடலும் திரு நறையூரும் இங்கேயே இருக்கச் செய்தே
அங்கு ஏத்திக் கொண்டு ஏத்திப் பெறுவது -என்கை –
அதில் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே –
போனால் பின்னை புனராவ்ருத்தி இல்லையாம் –
தன்னிச்சை யின்றிக்கே இருக்கச் செய்தே
தன் கர்மத்தால் நரகத்தை அனுபவித்தவனும் மீளா நின்றான்
இச்சையால் சுக அனுபவம் பண்ணப் புக்கவன் மீளானாம்-
ஓன்று உண்டே
இப்படிப் பட்டதொரு புருஷார்த்தம் உண்டு என்று தோற்றி
இரா நின்றதோ உங்களுக்கு -என்கை –
அது நிற்க –
அதுதான் உண்டாக -இல்லையாக -பிணக்கு என் -என்கை –
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –
ஸ்தல சஞ்சாரியை விட்டு சாகா சஞ்சாரியைப் பற்றுவதே –
ஸூ சங்கதமுமாய் உபயோக யோக்யமுமாய் இருக்கிற வஸ்து கைப்பட இருக்க
இத்தை உபேஷித்து
கைப்படாதே இருப்பதுமாய் -கைப்படுவது ஓன்று என்று தெரியாது இருப்பதுமாய் –
கைப்பட்டாலும் உபயோக யோக்யமும் இன்றிக்கே இருக்கிற வஸ்துவுக்கு வில் எடுத்துத் திரிவதே –
இது ஒரு சேதன க்ருத்யமோ -என்கிறார் –
ஏரார் இள முலையீர் –
நீங்கள் வடிவு படைத்தது -வடிவு அழகாலே பிரயோஜனம் இங்கே
கொள்ளுகைக்கு அன்றோ -என்று கருத்து –
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் –என்னக் கடவது இறே –
இஸ் சரீரத்தைக் கொண்டு அவதாரங்களிலும்
உகந்து அருளின நிலங்களிலும் அடிமை செய்யாதே
தேசாந்தரே-
காலாந்தரே – –
தேகாந்தரே –
பெரும் பேறு ஆகிறது என் என்புது என்கை –
என் தனக்கு உற்றது காண் –
இது எல்லாம் கிடக்க –
நான் மாறுபாடு உருவப் பட்டதொன்று கேளுங்கோள் என்கிறார் –
காரர் குழல் -இத்யாதி
என் உத்தியோகம் எதிர்த் தலையைக் கையும் மடலுமாகக் காணப் போரும் கிடீர்
காரார் குழல் எடுத்துக் கட்டி –
நீல மணி போலே நெய்த்து இருண்டு ஸ்ரமஹரமான குழலை எடுத்துக் கட்டி –
மயிர்ச் செறிவாலும் பருவத்தாலும் ரூபத்தாலும் எடுத்துக் கட்ட அரிதாய் இருந்தபடி
எடுத்துக் கட்டி –
அலையப் புறப்பட்டேன் ஆகில்
அவனை விலங்கிடலாம்-என்கை –
கதிர் முலையை –
யௌவனப் புகரால் மிக்க முலையை –
வாரார வீக்கி –
வார் சபலமாம் படி வீக்கி -என்னுதல்
வாராலே ஆரக் கட்டி -என்னுதல்
கொல்லும் யானைக்கு முகபடாம் இட்டால் போலே –
இக்கச்சுக் கிடந்தது இல்லையாகில் அவனைப் பிச்சேற்றலாம் கிடீர் -என்கிறாள் –
மணி மேகலை திருத்தி –
மணிமயமான மேகல ஆபரணத்தை அமைத்து
அதாவது
பிராட்டி யமுனையில் தெப்பம் ஏற ஒருப்பட்டால் போலே
அவனுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணின படி –
ஆராயில் வேற்கண் –
அழகும் கூர்மையும் ஆர்ந்த கண் –
அஞ்சனத்தின் நீர் அணிந்து –
அழகுக்கு இடுகிறது அன்று இ றே –
மங்களார்த்த மாக அஞ்சனம் இட்டு –
அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து –
கடைந்த பாத்திரத்திலே நெய் இட்டால் போலே –
காரார் குழல் எடுத்து –
குழல் எடுத்துக் கட்டிற்று இலேனாகில்
எதிர்தலையைக் கையும் மடலுமாகக் காணலாம் கிடீர் -என்கை
கதிர் முலையை வாரார வீக்கி
கொல்லும் யானைக்கு முகபடாமிட்டால் போலே
முலையின் அழகைக் கச்சாலே மறைத்திலேன் ஆகில்
நான் பட்டது அவன் படும் கிடீர் -என்கை –
மணி மேகலை திருத்தி –
பரியட்டத்தைப் பேணாதே புறப்பட்டேனாகில்
என் அவஸ்தை அவனுக்குப் பிறக்கும் கிடீர் -என்கை –
ஆராயில் வேர் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து –
பெரு வெள்ளத்திலே வாய்த்தலை படல் இட்டால் போலே
கண்ணின் அழகை அஞ்சனத்தினாலே மறைத்திலேன் ஆகில்
கண்ணுக்கு இலக்கை அவனுக்குத் தப்ப ஒண்ணாது கிடீர் -என்றதாயிற்று –
சீரார் செழும் பந்து –
ஆரேனுக்கு சம்பத்து உண்டாவதும் இவளுடைய ஸ்பர்சம் கொண்டு இறே
பந்தார் விரலி-என்று இவள் கைவிடாது இருக்கும் பந்து இறே –
சம்பத்துக்கு குறை இல்லை இறே
செழும் பந்து –
அழகிய பந்து –
கொண்டு அடியா நின்றேன் நான் –
அன்யார்த்தம் கிடீர்
என்னுடைய வியாபாரம் என்கை-
————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply