ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி
செம்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்பச்
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளால் வந்து அச்சோ அச்சோ ஆரத் தழுவு வாய் வந்து அச்சோ அச்சோ -1 8-2 –
செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –
அண்டத்த அமரர் பெருமான் அழகமர் வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –
கார் வண்ணன் வண்டார் குழல் வார வாராய் என்ற ஆய்ச்சி சொல்-2-5-10-
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்-2-9-11-
வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு விண் தாய் மரத்தானால் இன்று முற்றும்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – 2-10 2-
———————
பூங்குவளைப் போதில் பொறி வந்து கண் படுப்ப -ஸ்ரீ திருப்பாவை -3-
பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய்-ஸ்ரீ நாச்சியார் திரு மொழி- —5-3-
————
மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே–ஸ்ரீ பெருமாள் திருமொழி – 2-8-
வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற
பெரும் திரு மார்வை உடையராய் –
மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே-
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-
இயலைக் கற்று சிஷா பலத்தாலே இசை வரும் தனைய வார்த்தை சொல்லும் போதும் பண்ணாய் இருக்கை
தாங்கள் பாடுகிற பாட்டுக்கு இசைந்து வண்டினங்களானவை பண் பாடுகிற ஸ்ரீ திரு மலையிலே-
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவத்தேன் ஆவேனே –4-6-
தென் தென் என்று ஆளத்தி வைத்து வண்டினங்கள் பண் பாடுகிற ஸ்ரீ திருமலையிலே
அப்படிப்பட்ட பொற்குவடம் என்னும் அத்தனை -வேறு உபமானம் இல்லை –
ஸ்ரீ திருவேங்கடமுடையானுக்கு அவ்வருகு இருக்கில் இறே -ஆகையால்
அரும் தவத்தேன்-என்னக் குறை இல்லை இறே –
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம் தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2-
உன் குழலை விச்வசித்த வண்டுகள் என் பட்டனவோ –
உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –
வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–
வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே
ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –
———————–
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–22-
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50-
வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த-71-
————
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–ஸ்ரீ திரு மாலை-14-
கிண்ணகத்தில் இழிவார் திரளாக இழியுமா போலே
மது வெள்ளத்தால் வண்டுகள் திரள் திரளாக வாய்த்து இழிவது –
கழுத்தே கட்டளையாக மது பானத்தைப் பண்ணி புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலும்
தான் வாய் விட மாட்டாமையாலும் ஆளத்தி வையா நிற்கும் ஆயத்து –
முக்தர் திரள் திரளாக பகவத் அனுபவம் பண்ணி போக்குவீடாக சாமகானம் பண்ணிக் களிக்குமா போலே
இவ் ஊரில் திர்யக்குகளும் கழித்து வர்த்திக்கும் -என்கை –
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே–32-
திருச் சோலையிலே மதுவைப் பானம் பண்ண இழிந்த வண்டுகள் ஆனவை
அபிநிவேசத்தாலே பரிச்சேதித்து இலிய அறியாதே இழிந்து கழுத்தே கட்டளையாகப் பருகி
புக்க மது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே ஆர்த்துக் கொள்ளா நிற்கும் –
முக்தர் பகவத் அனுபவ ஜனித்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக சாம கானம் பண்ணுமா போலே
ஒரு தேச விசேஷத்திலே –பகவத் அனுபவத்தாலே முக்தருக்கு பிறக்கும் விகாசம் திர்யக்குகளுக்கும்
பிறக்கும் படி யாய்த்து கோயிலின் போக்யதை இருப்பது
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நர்த்யந்தி கேசித் -என்று
மது வனத்தை அழித்த முதலிகள் ஹர்ஷத்துக்கு போக்குவீடு விட்டு
பாடுவார் ஆடுவார் ஒருவரை ஒருவர் சுமப்பார் ஒருவரை ஒருவர் பொகடுவார் ஆனார்கள் இறே-
இவர் தம்முடைய சத்தை உண்டாகைக்கு கூப்பிடுகிறார் –
இவை பிரீதிக்கு போக்கு வீடாக கூப்பிடுகின்றன –
மது பானம் பண்ண இழிந்த வண்டுகள் மதுவின் மிகுதியாலே
பிரளயத்தில் அகப்பட்ட மார்கண்டேயனைப் போலேயும்
கிண்ணகத்தில் அகப்பட்ட திருச்சோலை போலேயும் அலையா நிற்கும் யாய்த்து –
—————
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-ஸ்ரீ அமலனாதி பிரான்–6-
அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –-திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து
கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –
—————-
ஸ்ரீ பெரிய திருமொழி-
மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலி கன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை-1-1-10-
வேழம் பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3-
வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9-
அறிவில்லாத வண்டுகள் -அப்புஷ்ப விகாச சோபையைப் பார்த்து நெருப்பாகவே நினைத்து பயப்படும்
நித்யமாக அச்சமும் அச்சம் கழிதலும் மாறி மாறிச் செல்லும்
அவன் சர்வ ரஷகன் என்று தெரிந்தும் பல்லாண்டு -போற்றி -என்று மங்களா சாசனம் செய்யும்
பெரியாழ்வார் போல்வார் வண்டுகள்
பயமும் பய நிவ்ருத்தியும் மாறி மாறி செல்லும் பிரபன்னர்கள் வாழும் இடம் –
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை-1-2-10-
மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2-
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -என்னும்படியான எம்பெருமானை பரிபூர்ணமாக அனுபவித்து ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
ஏதத் சாம காயன் நாஸ்தே -ஹாவுஹாவு ஹாவு -சாமகானம் பண்ணிக் களிக்கும் முமுஷூக்கள் வாழப் பெற்ற வதரி-
நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3-
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே—1-3-5-
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை-1-3-10-
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-
வண்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய தண்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-9-
தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே–2-2-5-
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்-2-2-10-
வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-
தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே-3-6-1-
பிணியவிழும் நறு நீல மலர் கிழியப் பெடையொடும் அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே-3-6-2-
தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன் போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்-3-6-6-
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ!–3-6-7-
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ?–3-7-4-
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-
நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ் மங்கையர் தம் தலைவன்-3-9-10-
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-
குல மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-
வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-4-
வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே -4-8-3-
வரி வண்டு மிண்டித் தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-2-
எழிலார் மஞ்ஞை நடமாடப் பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-6-
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-
நறும் தண் தீம் தேனுண்ட வண்டு குறிஞ்சி பாடும் கூடலூரே—5-2-2-
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3-
வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-
வண்டறை பொழில் திருப்பேர் வரி வரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ் சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-
வண்டுகள் மதுபான மத்தமாய்க் கொண்டு த்வனியா நின்றுள்ள பொழிலை உடைத்தான திருப் பேரிலே வரிகளை உடையனான
திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனை கவி பாடிற்று –
இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்-
மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-2-
ஸ்யாமமான நிறத்தையும் வரியையும் உடைத்தாய் இருக்கிற வண்டுகள் தன் பந்து வர்க்கத்தோடே கூட மது பானத்தைப் பண்ண
கழுத்தே கட்டளையாக மது பானம் பண்ணின படியாலே கால் வாங்கிப் போக மாட்டாமை அவ்விடத்திலே இருந்து பூக்களைக் கோதி
அதின் மேலே இருந்து நைவளம் என்கிற பண்ணைப் பாடா நின்றுள்ள பொழிலை உடைத்தான தேசம் –
வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்–6-1-1-
செவ்விப் பூ மாலையை கையிலே கொண்டு முன்பு நாம் பண்ணி வைத்த பாபங்களை அடையப் போக்க வேணும்
என்று திருவடிகளின் மேலே
பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-
மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1-
இன வண்டாலும் உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-
மென்மலர் மேல் கழியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே-6-7-4-
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை-7-1-10-
வண்டு கிண்டும் நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-8-
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6-
மென் தளிர் போல் அடியினானைப் பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னை-7-4-8-
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-
சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-
கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-7-
கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —9-3-4-
நம்முடைய தலைவன் என்று சொல்லலாம் படி சம்ஸ்லேஷித்து பிரிந்தான்
மது பானம் பண்ணுகிற வண்டே சாஷியாக வந்தான்
நான் உபவாசத்தால் மெலிந்து கிடக்க அந்த வண்டு மது உண்டு களித்து-
அவன் இடமே மண்டி உள்ளதே -என்ன பாக்கியம்
ஒரு நாளும் தாமும் நோவு படாதே -பிறர் நோவும் அறியாதே உண்டு களித்து திரியும் வண்டுகள்
நமக்கு சாஷி சொல்ல மாட்டாவே
தகுந்த சாஷி இல்லாமல் கலந்த பாவியேன் -கொடியேற்கு -என்கிறார்-
இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக் குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —–9-6-9-
———————-
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-
ஸ்ரமஹரமாய் -வருத்தத்தை நீக்கக் கூடியதாய் அழகியதாய் இருக்கிற வண்டே.
இனி, இதற்கு ‘வடிவு சிறுத்திருக்கவும் காமபீர்யம் பெருத்திருக்கிற வண்டே’ என்றும்,
‘சுழலப் பறக்கிற வண்டே’ என்றும் பொருள் கூறலுமாம்.
இதனால், கடகருடைய -இறைவனோடு சேர்க்கின்ற ஆசாரியனுடைய ஆத்தும குணத்தைப் போன்றே,
ரூப உருவத்தின் குணமும்-உத்தேச்யம் – உட்கோள் என்கை,
குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்-1-7-11-
தேனைக் குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று உள்ளே உள்ளே
இடங்கொண்டு குடித்தலை அன்றி,மது வற்றிக் கைவாங்க ஒண்ணாதபடி இருக்கிற திருத்துழாய் மாலையாலே
அலங்கரிக்கப் பட்ட திருமுடியை யுடையவனை.
அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று,
பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்.
கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்-2-8-11-
வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது –
வண்டார் தண் ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரி கின்றனவே–5-2-2-
வண்டுகள் மாறாதபடியான செவ்வித் துழாய் மாலையை யுடையனாய்,
ஸ்ரீயபதி- திருமகள் கேள்வன் ஆகையால் வந்த ஏற்றத்தையுடையனாய் இருக்கிறவனுடைய-
ஸ்ரீய:பதித்வத்திலும் ஒப்பனையிலும் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திரு வல்ல வாழ்-5-9-6-
இவற்றின் குரல் த்வனியில் -ஓசையில் வெள்ளோசையாய்க் கழியுண்பது இல்லை,
பரப்பு அடங்கலும் பாட்டாக இருக்கும். என்றது,
இயல் கற்று இசையோடு கூட்டிற்று அன்று அவற்றுக்கு, பேச்சே தொடங்கி இசை என்றபடி.
தேன் போலே இனிய பாட்டு’ என்னுமது போய், வடிவே தேனாய்
அதற்கு மேலே பாட்டும் ஆனால் மிகவும் இனியதாயிருக்குமன்றோ.
அன்றிக்கே, பாண் குரல் – இசை ரூபமான மிடற்றோசை என்னுதல்.
குழல் என யாழும் என்னக் குளிர் சோலையுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்ல வாழ்-5-9-9-
குழல் என்னவுமாய் யாழ் என்னவுமாய் இருக்கை.
நாட்டில் இனியவற்றை எல்லாம் சேரக் கேட்டால் போலே இருக்கை.
“விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:”- பால. 1-18-
வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்” என்னுமாறு -.
ஒன்றற்குப் பல பொருள்களை உவமை -போலே
ஸ்ரமஹரமான சோலையிலே குளிருக்குப் பரிஹாரமாகத் தேனைக் குடித்து. அருந்தி – குடித்து.
முக்தமாய் -இளமையோடு கூடியதாய்க் தர்ச நீயமான -காண்பதற்கு இனியதாயிருக்கின்ற வண்டுகள்,
பிரீதிக்குப் போக்கு விட்டுப் பாடா நின்றுள்ள திருவல்லவாழ்.
செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப்
புழுகு நெய்யை ஏறிட்டுக்கொண்டு திரியுமாறு போலே,
இவையும் இயலை விட்டு இசையையே பாடுகின்றன வாதலின் ‘இசை பாடும்’ என்கிறது.
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-
சில வண்டுகளைக் குறித்து, அவர் இத் தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர்,
அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்வர்.
இத் தலை இல்லையாகில் அத்தலை உண்டாகக் கூடாது;
பெண் பிறந்தார் காரியம் எல்லாம் செய்தோம்’ என்று கிருதக்கிருத்யரா யிருக்குமவர்க்கு,
ரக்ஷ்ய வர்க்கத்திலே நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்” என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்.
இவற்றை வேறுகொண்டு இரக்க வேண்டுவான் என்? என்னில்,
அவற்றினும் இவை பதஸ்தம் -பல கால்களை யுடையன ஆகையாலே.
இன்னம் ஒன்று, சபைக்கு அஞ்ச வேண்டாதே வளையத்தே இருந்து வார்த்தை சொல்லவும் வல்லனவே யன்றோ
அன்றிக்கே. “தேன் உண்ணும் வண்டே போல் பங்கிகள்”-பெரியாழ்வார் திருமொழி,-1. 8 : 2. ‘- என்றும்
அவனுக்குத் தலையான திருஷ்டாந்தமாகவும் சொல்லுவது இவற்றை அன்றோ.
செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –தலையான திருஷ்டாந்தம்-
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே–6-8-3-
பேரளவுடையார் படும் ஈடுபாட்டினைக் கண்டு, தன் குழலின் வீறு தான் அறிந்திருக்குமே.
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ
என்பான் என்? காரியம் செய்து சமைந்தால் கைக் கூலி கொடுப்பாரைப் போலே? என்னில்,
இவற்றுக்கு இவள் குழலிலே விஷயம் உண்டாக வேணுமே.
இப்போது மது மாறிச் சருகாய் அன்றோ கிடக்கிறது;
இவை மீண்டால் அன்றோ இத் தலையில் செவ்வி பிறப்பது.
அவனுக்குத் தூது போய் வந்தாரிற் காட்டிலும் இவளுக்குத் தூது போனார்க்கு உண்டான தன்னேற்றம் இருக்கிறபடி.
அங்கு மஹா ராஜருடைய மது வனம் அன்றோ அழிந்தது;
இங்கு அவன் காவற் காட்டினை உங்களுக்குத் தருகிறேன் என்கிறாள்.
அளகாடவி அன்றோ.-தலையான பரிசில் அன்றோ இது தான்.
என்றும் இவள் குழலில் மது பானம் செய்வன வண்டுகளே அல்லவோ.
தூவி அம் புள்ளுடைத் தெய்வ வண்டாதல்-திருவாய்.-9. 9 : 4.–
இவை யாதல். அவனேயோ சாம்யா பத்தி – ஒத்த தரத்தைத் தர வல்லான்,
நானும் உங்களுக்கு அவனோடு ஒத்த தன்மையைத் தருகிறேன் என்கிறாள். என்றது,
ஸோஸ்நுதே – அந்த முக்தன் பரமாத்வோடு அநுபவிக்கிறான்” என்கிறபடியே,
உங்களையும் அவனையும் ஒரு கலத்திலே ஊட்டுகிறேன் என்கிறாள் என்றபடி. தலையான ஊண் அன்றோ.
உங்கள் வரவாலே தளிர்த்திருக்கிற என்னுடைய குழலில் ஒளியை யுடைத்தாய்
ஸ்லாக்யமான மலரில் மதுவைப் பானம் செய்யீரோ?
ஊதிரோ-மதுவின் நிறைவாலே, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனித்து இழிய மாட்டாமல்
நின்று பறக்கிற படியைத் தெரிவிப்பாள் ‘ஊதிரோ’ என்கிறாள்.
உங்கள் காரியமும் பர ரக்ஷணமுமானால் -பிறரைப் பாதுகாப்பதுமானால் ஆறி இருக்கிறது என்? என்கை,
கூடிய வண்டினங்காள் –மஹா ராஜரைப் போலே படை திரட்ட வேண்டா அன்றோ உங்களுக்கு
என்னுடைய ரக்ஷணத்திலே ஒருப்பட்டு முன்பே திரண்டிருக்கப் பெற்றது அன்றோ.
இளைய பெருமாள் கிஷ்கிந்தா நகரத்தின் கோட்டை த்வாரத்திலே -வாசலிலே சென்று
குண கீர்த்தனம் செய்த பின்பன்றோ படை திரட்டிற்று.
பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9-
மதுபான மத்தமாய் -தேனைக் குடித்து மயங்கிப் பாடுகின்ற சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து
உங்கள் த்வனி -இசை எனக்கு துஸ்ஸஹமாய் -பொறுக்க ஒண்ணாததாய் இருந்தது
நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் –என்கிறாள்-
தூதுரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-
இனிய பேச்சை உடைய வண்டுகாள் –
அவன் அநாதரிக்கிலும் -விரும்பானாகிலும் உங்கள் பேச்சு இனிமையாலே
வர வேண்டும்படி அன்றோ பேச்சு இருப்பது –
பூக்களிலே இரைத்துக் கொண்டு-மது பானம் -தேனைக் குடிக்கும் பொழில்
அன்றிக்கே
மலர்கிற காலத்தில் சென்று தேனைக் குடிக்கும் சோலை என்னுதல்
உங்களுக்கு மீட்சியில் ஆகவும் வேண்டா
ததிமுகன் முதலானோர் காவலும் இல்லை
முன்பு தேனைக் குடிக்கிறவர் களோடு தேனைக் குடிக்க அமையும் –
நீங்கள் சொல்லும் அத்தனையே வேண்டுவது
உங்கள் வார்த்தை கேட்டிருக்கவும் கேட்டுக் கொண்டாடுகைக்கும் புருஷகாரம் உண்டு -என்கை-
எனக்கு ஓன்று பணியீர்காள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டினங்காள் தும்பிகாள்
கனக் கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே–9-7-8-
சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்கு உள்ளவனுக்கு என்ன தீங்கு வருமோ -என்று
அஞ்ச வேண்டாதபடி ஸூ ரஷிதமான தேசத்திலே – காவல் உள்ள இடத்தில் அவன் இருக்கப் பெற்றோம்
இனி எனது ஆர்த்தியை -துன்பத்தை அறிவியுங்கோள் -என்கிறாள்
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-
பெரிய திருவடியை உடைய தெய்வம் ஆகிற வண்டாலே ஆத்த -எடுக்கப் பட்ட சாரத்தை உடையதான
என்னுடைய பெண்மை யாகிற பூ -பெண்மையாம் பூ -பாட பேதமும் உண்டே –
ஏவம் -இந்த விதமாய் நலிய -நலிவு படா நின்றது –
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே-9-10-3-
வண்டுகள் மதுபான மத்தமாய் -தேனை உண்டு அதனால் மயக்கம் கொண்டு
பாடா நின்றுள்ள சோலை சூழ்ந்த தேசம்
ஏதத் சாமகாயான் ஆஸ்தே-தைத்ரியம் -10–அந்த சாம வேதத்தைப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் -என்றபடியே
வண்டு பாடும் சோலை -என்கிறார் –
இதனால் நிரதிசய போக்யமான -எல்லை இல்லாத இனிமை உடைய தேசம் -என்பதனை தெரிவித்த படி –
——————–
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும்
தண்டுழாய்க் கண்ணனையே காண்க நங்கண் —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி——8–
பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-வெளி நாடு காண உமிழ்ந்து –
நிரதிசய போக்ய பூதனான ஸூலபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண்
காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–
காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள் ஷாம காலத்தில்
பசல்கள் சோறுசோறு -என்னுமா போலே –
வண்டுகள் மீட்கில் இறே என் இந்த்ரியங்களை மீட்கலாவது –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு இனி நாமும் அவனுடைய
ஸ்லாக்யமான திருவடிகளை வாயாரப் பாடி கையாலே தொழுவோம் –
பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-
———————————
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –ஸ்ரீ –திரு விருத்தம் -30-
ஜந் த்ரவ்யா கரண பண்டித -சிறிய திரு வடி -ஸ்வத சர்வஞ்ஞன் –ஸ்ரீ கிருஷ்ண பகவான்-
தூது போக கடவத்தை உங்களை இரவா நின்றேன்-
என் தசை–உத்தியோகமும் மிகை என்று இருக்கும் அளவுக்கு அவ் அருகும் சொன்ன படி
அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க இரப்பவும் செய்தேன்-
பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –
வண்டுந்துழாய் -ஒப்பனையால் வந்த அழகை சொல்லுகிறது –
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-
இத்தால் பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து
திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அக்குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி
நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ -என்று தம்மை அனுபவிக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை -அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –
அம்பஸ்யபாரே-புவனஸ்ய மத்யே -நாகச்யப்ருஷ்டே -என்னக் கடவது இறே –
அம்பஸ்ய -வியூகம்
புவனஸ்ய -விபவம் அர்ச்சை
நாகசா -பரம்
இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –
——————-
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை-152-
வண்டு தும்பிகள் என்கிறது யாரை என்று அருளிச் செய்கிறார் மேல்–
என் பெறுதி என்ன பிரமியாது உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்துத் தே தென வென்று ஆளம் வைத்துச் சிறு கால் எல்லியம் போது
குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ளப் பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும்
தகைவறப் புக்கு வண்டு ஒத்து இருண்ட குழலிலே சங்கை அற மருவி அருளாத யாம் என்று ஓடி வந்து
வாசமே ஊதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்
சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும்-
அதாவது
1-என் பெறுதி என்ன பிரமியாது
கோல் தும்பீ ஏரார் மலர் எல்லாமூதி நீ என் பெறுதி–பெரிய திருமொழி -8-4-5 – என்று
நிவர்திப்பிக்க வேண்டும் படி- அப்ராக்ருத விஷயங்களை போக்கியம் என்று பிரமியாதே-
(இது ஒன்றே வண்டுகளும் தும்பிகளுக்கும் இவருக்கும் உண்டான வாசி -மேல் எல்லாம் ஒற்றுமைகள் –
( ஒன்பதோடு ஓன்று -முதல் மட்டும் -பிரமிக்காமல் -வண்டு பிரமரதம் என்பர் – -எதிர்மறை -மற்றவை எல்லாம் சாம்யம் ))
2-உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் –
களங்கனி வண்ணா கண்ணனே என் தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் உள்ளத்துளூறிய தேனை -பெரிய திருமொழி-4-3-9-என்று
தன்னுடைய சௌந்தர்ய சீலாதிகளை நினைத்து ஹிருதயம் பக்குவமாய் இருக்கும்
சேஷ பூதருடைய ஹிருதயத்தில் ஊறிய தேனை -என்கிற பகவத் விஷயம் ஆகிற மதுவை விரும்பி –
த்வாம் ருதஸ்யந்தினி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி –
ஸ்திதேரேவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நேஷூரகம் ஹி வீஷதே – ஸ்தோத்ர ரத்னம் -27-என்கிறபடி-
மற்று ஒன்றை புரிந்து பாராதே இத்தை புஜிக்கையே வ்ரதமாக உடையவராய் —
3-தூ மது வாய்கள் கொண்டு —
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு-திருவாய்-6-8-3- -என்று
பகவத் போக்யதா அனுபவத்தாலே பரிசுத்தமான இனியதான வாயைக் கொண்டு ..
4-குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்து –
என் குழல் மேல் ஒளி மா மலரூதீரோ -திருவாய் -6-8-3–என்கிறபடியே
நாள் கமழ் மகிழ் மாலை மார்பர் –4-10-11–ஆகையாலே வகுள தாரரான ஆழ்வார் உடைய
வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும் வியலிடத்தே–திருவிருத்தம் –55 -என்று
பரத்வாதிகள் போக்யதையும் பரிச்சின்னம் என்னும் படியான திருக் குழலிலே வைத்த –
ஒளி மா மலரான-வகுளத்தின் சாரத்தை கிரஹித்து அவ்வழியாலே
இத் தலையில் போக்யத்தை அனுபவித்து –
5-தே தெனவென்று ஆளம் வைத்து –
வரி வண்டு தே தென வென்று இசை பாடும் –பெரிய திருமொழி -4-1-1-
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–பெரியாழ்வார் -4-8-6–என்கிற படியே
இப்படி பகவத் பாகவத போக்யதைகளை அனுபவித்து -செருக்குக்குப் போக்கு வீடாக ஆளத்தி வைத்து-
(இத்தால் யாழில் இசை வேதத்து இயல்களை வாயாரப் பாடிக் கொண்டு இருக்கும்படியைச் சொன்னவாறு )
6-சிறு கால் எல்லியம் போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ள பாடித் —
(இத்தால் -எம்மானைச் சொல்லிப் பாடி -பண்கள் தலைக் கொள்ளப் பாடி –
வேத முதல்வனைப் பாடி -கொண்டு இருத்தலைச் சொன்னவாறு )
அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலை பாடும்
தென் திருமாலிருஞ்சோலையே –பெரியாழ்வார் -4-2-8–என்றும் –
எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி — பெரியாழ்வார்-4-8-8–என்றும்
(மல்லிகை வெண் சங்கூதும் பெரியாழ்வார்-4-8-8–மல்லிகை பூ மலர -காற்று வீச சங்கு போல இசை வருமே )
வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் -பெரிய திருமொழி -2-1-2-என்றும் –
வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் -பெருமாள் -8-4-என்றும் –
கந்தார மன் தேனிசை பாட-பெரிய திருமொழி -3-8-1 -என்றும் –
என்கிறபடியே காலோசிதமான பண்களை –
பண்கள் தலைக் கொள்ளப் பாடி-திருவாய் -3-5 2–என்கிற படி தலைமை பெறும் படி பாடி —
7-துன்னிட்டு நெருக்க நீக்கு என்று கடந்து புகும் தகைவற புக்கு –
(இத்தால் வண்டுகள் மிக நெருக்கமான இடங்களிலும் தடை இன்றி செல்லும் -தன் இனமான பொருள்களோடு நட்பு கொள்ளும் –
இறைவன் சந்நிதியில் அச்சம் சிறிதும் இன்றி நிற்கும் –
அவ்வாறே இவர்களும் நேச நிலைக்கதம் நீக்கு என்று சொல்லி -பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு-
அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து -அஞ்ச வேண்டிய அபராதம் சிறிதும் இல்லாமையால் சங்கை இல்லாமல்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி நிற்பார்கள் -என்கிறது )
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டு புகலரிய –பெருமாள் -4-3-என்றும் –
சுந்தரர் நெருக்க –திருப்பள்ளி எழுச்சி –7-என்றும் –
சொல்லுகிறபடியே திரு வாசலிலே சேவாபரர்கள் நிறைந்து -தலை நுழைக்க ஒண்ணாத படி நெருக்க –
நேச நிலை கதவம் நீக்கு–திருப்பாவை –16 -என்று
திரு வாசல் காப்பானை திருக் கதவு திறக்க வேணும் என்று அபேஷித்து ,
பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -பெரிய திருமடல் –73-என்கிறபடி-
திருஷ்ட்டி சித்த அபஹாரம் பண்ணும் திரு வாசல் அழகிலே துவக்கு ஒண்ணாதே –
அத்தை கடந்து புக வேண்டுகையாகிற தகைவு அற –
பாடுவாரான அந்தரங்கதை யாலும் ஏகாக்ர சித்ததையாலும் போய்ப் புக்கு
8-வண்டு ஒத்த இருண்ட குழலில் சங்கை அற மருவி –
வண்டு ஒத்த இருண்ட குழல்-பெரியாழ்வார் -2-5-7-என்கிறபடியே -ஸ்வசமான விஷயம் உள்ள இடத்தில் சேர்ந்து –
நீ மருவி அஞ்சாதே நின்று–திரு நெடும் தாண்டகம் -26- என்கிறபடி நிச்சங்கமாக அவனுக்கு சமீப வர்திகளாய்–
9-அருளாத யாம் என்று ஓடி வந்து வாசமே ஊதி- –
அருளாத நீ அருளி–திருவாய் -1-4-6 -என்றும் ,
யாமிதுவோ தக்கவாறு–திருவாய் –6-8-4-என்றும் ,
இத்தலையில் ஆர்த்தியை அவனுக்கு அறிவித்து –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-திருவாய் -6-8-3 -என்று
அவனோடு கூட வர இராதே முந்துறவே ஓடி வர வேண்டும் என்று அபேஷித்து விட்ட படியே –
இத்தலையில் ஆர்த்திக்கு ஈடாக அவன் வரவை அறிவிக்க விரைந்து வந்து —
தங்கள் வரவாலே -இத்தலையில் வந்த செவ்வியை அனுபவித்து –
மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவ வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –பெரிய திருமொழி -11-1-9-
என்கிற படியே-அத் தலையில் தாங்கள் அனுபவித்த போக்யதையை –தங்கள்
வாக்காலே -வரவாலே இத் தலைக்கு பிரகாசிப்பியா நின்று கொண்டு ஆஸ்வசிப்பித்து-
10-வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்-இத்யாதி –
கொங்குண் வண்டே கரியாக வந்தான் -பெரிய திருமொழி -9-3-4-என்கிறபடி
சாகாக்ர சார க்ராஹியாய்-ஷட்பத நிஷ்டராய்–பஷ த்வய யோகத்தாலே –
அப்ரதிஹத கதியானவரை முன்னிட்டு அங்கீகரிக்குமவனாய் —
தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-என்று
வேதாந்த்ய வேத்யன் என்று தோற்றும் படி –
கருட வாஹனாய் – சார க்ராஹியாய் இருக்கிற சர்வேஸ்வரனுடன் சேர்விக்கும் —
சேமமுடை நாரதன் -பெரியாழ்வார் -4-9-5-என்று
ப்ரஹ்ம பாவனை ஏக நிஷ்டதையாய் ஆகிற ரஷையை உடையவனாய் –
பகவத் குண அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே நிருத்த கீத பரனாய் இருக்கும் ஸ்ரீ நாரத ப்ரஹ்ம ரிஷி —
(மஹதி நாரதருடைய வீணைக்கு பெயர்-கர்ம -உபய -பாவனை இல்லாமல் ப்ரஹ்ம பாவனையில் மட்டும் இருக்கும் க்ஷேமம் )
லோக சாரங்க மகா முநிகளால் வஹிக்க படுகையாலே முனிவாஹனர் என்று நிரூபிதரான திருப் பாண் ஆழ்வார் ,
திரு வாய் மொழி இசையே தங்களுக்கு போக்யமாய் இருக்கிற தம்பிரான்மார் போல்வாரை –
( அரையர் ஸ்வாமிகளை -பாவின் இன்னிசை பாடித்திரிவனே என்று உள்ள வர்கள் என்றவாறு )
இக் குண சாம்யத்தாலே – வண்டு என்றும் தும்பி என்றும் சொல்லும் என்கை–
தும்பி ஆவது ப்ருங்க ஜாதியிலே – ஓர் அவாந்தர பேதம் —
ஆகையால் இறே -வண்டினங்காள் தும்பிகாள் -என்று ஏக ஸ்தலத்திலே இரண்டையும்
பிரிய அருளிச் செய்தது-
———————————————————-———————————————————-———————————————————-———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-