Archive for February, 2022

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –61-80-

February 19, 2022

கையுறை -முத்தம் –
61- விலையானது இலை என்று நீ தந்த முத்தம் வேய் தந்த முத்து ஆகில் வெற்பா வியப்பு ஆல்
இலை ஆர் புனல் பள்ளி நாராயணன் பால் எந்தாய் அரங்கா இரங்காய் எனப் போய்
தலையால் இரக்கும் பணிப்பாய் சுமக்கும் தன் தாதை அவர் தாமரைத் தாள் விளக்கும்
அலை ஆறு சூடும் புராணங்கள் பாடும் ஆடும் பொடிப் பூசி ஆனந்த மாயே –61-

(இ – ள்.) வெற்பா – மலைநாடனே! –
விலையானது இலை என்று – இதற்கு விலையில்லையென்றுசொல்லி,
நீ தந்த முத்தம் – நீ கொடுத்த முத்தானது,
வேய் தந்த முத்து ஆகில் – மூங்கில்பெற்ற முத்தானால், (அது),
வியப்பு – அதிசயிக்கும்படி,
ஆல்இலை – வடபத்திரத்தில்,
ஆர் புனல் – நிறைந்த பிரளயநீரில்,
பள்ளி – பள்ளிகொண்டருளுதலையுடைய,
நாராயணன்பால் – ஸ்ரீமந்நாராயணனிடத்தில்,
போய் -, ‘எந்தாய் – எனது தலைவனே! அரங்கா -!
இரங்காய் – இரங்கியருளவேண்டும்,’ என – என்று பிரார்த்தித்து,
தலையால் – பிரம கபாலத்தைக்கொண்டு,
இரக்கும் – பிச்சையெடுக்கும்;
பணிபாய் சுமக்கும் – (அந்நாராயணனது) பாயாகிய பாம்பைச் சுமந்துகொண்டிருக்கும்;
தன் தாதை – தன்னுடைய தகப்பனாகிய பிரமன்,
அவர் தாமரை தாள் விளக்கும் – அந்தநாராயணனது திருவடித்தாமரைகளைத் திருமஞ்சனஞ்செய்ததனாலுண்டான ஸ்ரீபாததீர்த்தமாகிய,
அலை ஆறு – அலைகின்ற நதியை (கங்கையை),
சூடும் – தலைமேல் தரிக்கும்;
புராணங்கள் – புராணங்களை,
பாடும் -; ஆனந்தமாய் – (இங்ஙனம் இரந்து சுமந்து சூடிப்பாடுதலாலுண்டான) பேரானந்தத்தால்,
பொடி பூசி – விபூதியை அணிந்து கொண்டு,
ஆடும் – நர்த்தனஞ்செய்யும்; (எ – று.)

இது, முத்தைக் கையுறையாகக் கொண்டுசென்ற தலைமகனைத் தோழி தன்சாதுரியத்தால் அதன் சிறப்பின்மை கூறி மறுத்தது.

இத்தன்மையொன்றும் இல்லாமையால், அம்முத்தமன்று என்றவாறு. இதன் கருத்து –
வேய்தந்தமுத்த மென்றது உருத்திரனையாதலால், அவன் விஷ்ணுவினிடத்தே செய்ததனை விநோதமாக விவரித்தா ரென்பர்.

வேதங்கள் பிரளயகாலத்தில் தமக்கு ஆபத்து ஒன்றும் இல்லாதிருக்க வேண்டுமென்று பிரார்த்தித்தபடி,
சிவபிரானது கருணையினால் அவை மூங்கிலாக வந்து பிறக்க, அவற்றில் தான் முத்தாகத் தோன்றினனாதலால்,
சிவபிரானை இங்கு “வேய்தந்தமுத்து” என்றார்.
(மூங்கில் முத்துப்பிறக்குமிடங்கள் இருபதில் ஒன்று;
“தந்தி வராகமருப் பிப்பி பூகந் தழைகதலி, நந்துசலஞ்சல மீன்றலை கொக்கு நளின மின்னார்,
கந்தரஞ் சாலி கழை கன்ன லாவின்பல் கட்செவி கா ரந்து வுடும்பு, கரா முத்தமீனு மிருபதுமே” என்றதுகாண்க.)

ஸர்வேஸ்வரன் எல்லாவுலகங்களையுந் தன்ஒருவயிற்றி லடக்கிக்கொண்டு சிறியவடிவத்தோடு சிறியதோராலிலையிற்
பள்ளிகொண்டருளுதலால் “வியப்பாலிலையார் புனற்பள்ளிநாராயணன்” என்றும்,
உருத்திரன் நாகாபரணனாதலால் “பணிப்பாய் சுமக்கும்” என்றும்,
அவன் விஷ்ணுவிஷயமாகப் பல புராணங்களைப்பாடியிருத்தலால் “புராணங்கள்பாடும்” என்றுங் கூறினார்.
முன்னும் “சாத்திய மாலையுந் தாள்விளக்கும், வானந்தருங் கங்கைநன்னீருஞ் சென்னியில் வைக்கப்பெற்ற,
வானந்தந்தா னல்லவோ முக்கணான் மன்றுளாடுவதே” என்றார்.

இது, நான்கும் எட்டும் மாச்சீர்களும், மற்றவை காய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.

—————

தவம்
62- ஆனந்தமாய் அரங்கற்கே உயிர்கள் அடிமை என்னும்
ஞானம் தனால் ஐம்பொறி வாயில் சாத்தி நல் தாளைப் பற்றி
ஈனம் தரும் பற்றும் அற்று என்றும் யான் எனது என்னும் அபி
மானம் தவிர்ந்து இருப்பார்க்கு இது போல் இல்லை மாதவமே –62-

(இ – ள்.) அரங்கற்கே – திருவரங்கநாதனுக்கே,
உயிர்கள் – எல்லா ஆத்துமாக்களும்,
அடிமை என்னும் – அடிமையென்று அறிகின்ற,
ஞானந்தனால் – தத்துவஞானமாகிய கதவினாலே,
ஐம் பொறி வாசல் – (மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும்) பஞ்சேந்திரியங்களாகிய வாயில்களை,
சாத்தி – அடைத்து (ஐம்புலன்வழியே செல்லவொட்டாமல் மனத்தை அடக்கிவைத்து),
நல் தாளை – (அவனது) நல்ல திருவடிகளை,
பற்றி – சரணமாக அடைந்து,
ஈனம் தரும் – இழிவைத்தருகின்ற,
பற்றும் – ஆசைகளும்,
அற்று – நீங்கப்பெற்று,
யான் எனது என்னும் அபிமானம் – அகங்கார மமகாரங்கள்,
தவிர்ந்து -நீங்கப்பெற்று,
என்றும் – எந்நாளும்,
ஆனந்தம் ஆய் – பேராநந்தமடைந்து,
இருப்பார்க்கு – இருப்பவர்களுக்கு,
இதுபோல் – இங்ஙனமிருத்தல்போன்ற,
மா தவம் – பெரிய தவம்,
இல்லை – வேறுஇல்லை; (எ – று.)

தவத்தை விலக்கிப் பகவத் தியானத்தை வற்புறுத்துதல், தவம் என்னும் உறுப்பின் இலக்கணம்.

“ஆத்மா எம்பெருமானுக்கே யடிமை” என்ற ஸ்வஸ்வரூபத்தை யுணர்ந்து, ஐம்புலன்களிற் செல்லாமல் எம்பெருமானிடத்து
மனம்வைத்து அகப்பற்றுப் புறப்பற்றுக்களை யொழிதலே மிகச்சிறந்த தவ மென்பதாம்.
“நெறி வாசல்தானேயாய் நின்றானை யைந்து,
பொறிவாசல் போர்க்கதவஞ் சார்த்தி – யறிவான்” என்றார் பூதத்தாரும்.
பொறிவாசல் சாத்தியென்றதற்கேற்ப, ஞானமாகிய கதவு எனப்பட்டது.
“யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்” என்ற திருக்குறள் இங்குக் கருதத்தக்கது.
பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், நற்றா ளென்றார். அபிமானம் – செருக்கு.

இது, நேர் முதலாகிய கட்டளைக்கலித்துறை.

————–

தவம் –
63-மாதவங்கள் என்று ஒத்து அவங்களின் மருவு சீவன் என்றொருவன் நீ பெரும்
பூதம் அல்லை இந்த்ரியம் அல்லை ஐம் புலனும் அல்லை நல புந்தி அல்லை காண்
சீதரன் பரந்தாமன் வாமனன் திரு அரங்கனுக்கு அடிமை நீ உனக்கு
ஏதும் இல்லை என்று அறி அறிந்த பின் ஈதின் மாதவம் இல்லை எங்குமே –63-

(இ – ள்.) மா தவங்கள் என்று – பெரிய தவங்க ளென்று,
ஓது – சொல்லப்படுகின்ற,
அவங்களில் – வீண்தொழில்களில்,
மருவு – பொருந்துகின்ற,
சீவன் என்ற – ஆத்துமாவென்கின்ற,
ஒருவ – ஒருத்தனே! – நீ -,
பெரும் பூதம் அல்லை – பெரிய பஞ்சபூதங்களு மல்லாய்;
இந்திரியம் அல்லை – பஞ்சேந்திரியங்களு மல்லாய்;
ஐம்புலனும் அல்லை – பஞ்சதந்மாத்திரைகளு மல்லாய்;
நல் புந்தி அல்லை காண் – நல்ல அறிவு மல்லாய்காண்; (பின்னை என்னையென்றால்), – நீ -,
சீதரன் – திருமகளைத் (திருமார்பில்) தரிப்பவனும்,
பரம் தாமன் – பரமபதத்தை யுடையவனும்,
வாமனன் – (மாவலியின் செருக்கை அடக்குவதற்கு) வாமநாவதாரஞ் செய்தவனுமாகிய, திருவரங்கனுக்கு -,
அடிமை – அடியவன்;
உனக்கு -, ஏதும் – யாதொரு சுவதந்திரமும், இல்லை -, என்று அறி -;
அறிந்த பின் – (அங்ஙனம்) அறிந்தால், ஈதின் – இதுபோன்ற,
மா தவம் -, எங்கும் இல்லை -; (எ – று,)

இதனால், தம்மனத்துக்குத் தாமே உபதேசிக்கும் முகத்தால், ஜீவாத்ம ஸ்வரூபம் இத்தன்மையதென்று விளக்குகின்றன ரென்க.
எளிதிற் பயன் கொடாது துன்பந் தருவனவாதலால், ‘தவங்களென்றோம தவங்கள்’ என்றார்.
என்றொருவ – தொகுத்தல்.ஐந்தைப் பூத இந்திரியங்களோடுங் கூட்டுக. அறிந்தபின் – பின்னீற் றெதிர்கால வினையெச்சம்.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.

———-

தலைவி இரங்கல்
64-எம் காந்தாள்-அங்கை நல்லீர் என் செய்கேன் இரண்டு ஏந்திழையீர்
தம் காந்தன் என்று அறிந்தாலும் நில்லாது தரைக்கும் நெய்க்கும்
அங்காந்த செம்பவளத்து எம்பிரான் அரங்கன் புயங்கள்
செங்காத்த மால் வரையோ இரும்போ என் தன சிந்தனையே -64–

(இ – ள்.) எம் – எமது (தோழியராகிய),
காந்தள் அம் கை நல்லீர் – காந்தள்மலர்போலும் அழகியகைகளையுடைய நல்லமகளிர்களே! –
இரண்டு ஏந்திழையார்தம் காந்தன் என்று – தரித்த ஆபரணங்களையுடைய (திருமகள் நிலமகளென்னும்) இரண்டு பிராட்டிமார்களிடத்து ஆசைகொண்ட கணவனென்று, அறிந்தாலும் -,
(என் மனம்), நில்லாது – (விரும்பிப் பின் செல்லாமல்) தரித்து நிற்காது;
என் செய்கேன் – (யான்) என்ன செய்வேன்?
தரைக்கும் – உலகங்களை உண்ணுதற்கும்,
நெய்க்கும் – நெய்யைப் பருகுதற்கும்,
அங்காந்த – திறந்த,
செம் பவளத்து – சிவந்த பவழம்போன்ற திருவாயையுடைய,
எம் பிரான் – எமது பெருமானாகிய,
அரங்கன் – ரங்கநாதனது,
புயங்கள் – திருத்தோள்கள்,
செங் காந்தம் மால் வரையோ – அழகிய காந்தத்தாலாகிய பெரிய மலைகளோ?
என்தன் சிந்தனை – எனது மனம், இரும்போ -? (எ – று.)

இது, தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைமகள், அப்பிரிவுத்துயரை யாற்றி யடக்கும் வல்லமையிலளாகி,
தனது நிலைமையை அன்புடைத்தோழியர்க்கு வெளிப்படையாக உரைத்தது.
தன் விருப்பத்தை நிறைவேற்றுதற்பொருட்டுத் தோழியரைக் கொண்டாடி யழைப்பவளாய்,
‘எங்காந்தளங்கைநல்லீர்’ என்று புனைந்துரைத்து விளித்தாள்.
‘செம்பவளத்தெம்பிரான்’ என்றது அவரது திவ்விய சௌந்தரியத்திலே தான்கொண்ட ஈடுபாட்டினால்.

தரைக்கு அங்காந்தது – பிரளயகாலத்தில் உலகங்களை வயிற்றில் வைத்துக் காக்கும்பொருட்டு,
நெய்க்கு அங்காந்தது – கிருஷ்ணாவதாரத்தில், இருவர் மனைவியருளரென்று அறிந்தும் அப்பிரானது தோள்கள்
இரும்பைக் காந்தம் இழுக்கின்றவாறுபோலத் தன்மனத்தைத் திரும்ப வொண்ணாமற் கவர்ந்ததனால்,
இவ்வாறு கூறினாள்; ஐயத் தற்குறிப்பேற்றவுவமை.

இக் கட்டளைக்கலித்துறை, நேரசை முதலாக வந்தது.

————–

களி
65-சிந்தையில் குடி கொண்டிருந்தது திருக்கு அறுத்து அடிமைக் கொளும்
திரு வரங்கர் பொருப்பு உயர்ந்த திருப்புயம் புகழ் களியரோம்
புந்தி மிக்கது வந்து புக்கது போத மாதர்கள் எழுவர் தம் பூசையேமாக
பூசை என்றது புதுமை அன்று இது புத்தர்காள்
அந்தரத்து இமையோர் அருந்தும் மருந்தும் வெள்ளையது அன்றியே
அரிய சாதி கொளாத மானிடர் அகலிடத்தினில் இல்லையே
மந்திரத்தில் நிலாத தேவதை வானகத்தினில் இல்லையே வடிவு
இல்லாதவை அண்ட கோளம் வளைந்த வைப்பு அதில் இல்லையே –65

இ – ள்.) புத்தர்காள் – புத்தர்களே! – (நாங்கள்),
சிந்தையில் – (அன்பால் நினைவாரது) உள்ளத்தில்,
குடிகொண்டு இருந்து – (சென்று நீங்காது) தங்கியிருந்து,
திருக்கு அறுத்து – (அவர்களது) குற்றங்களைப் போக்கி,
அடிமை கொளும் – ஆட்கொள்ளுகின்ற,
திரு அரங்கர் – ஸ்ரீரங்கநாதரது,
பொருப்பு – மலைபோல,
உயர்ந்த -, திரு புயம் – திருத்தோள்களை,
புகழ் – துதிக்கின்ற,
களியரேம் – கட்குடியராவோம்;
புந்தி மிக்கது – மனம் மிகமகிழ்தற்குக் காரணமாகிய களிப்பு,
போத – மிகுதியாய்,
வந்து புக்கது – வந்து நேர்ந்தது;
மாதர்கள் எழுவர்தம் – ஸப்தமாதாக்களுடைய,
பூசையே – பூஜை தானே,
மக பூசை என்றது இது – யாகத்திற் செய்யப்படும் பூஜையென்ற இத்தன்மை,
புதுமை அன்று – புதியதொன்றன்று;
அந்தரத்து – சுவர்க்கலோகத்திலுள்ள,
இமையோர் – தேவர்கள்,
அருந்தும் – பருகுகின்ற,
மருந்தும் – அமிருதமும்,
வெள்ளை – வெள்ளைதான்;
அது அன்றியே – அதுவுமல்லாமல்,
அரிய – அருமையான,
சாதி – சாதிகளை,
கொளாத – உடைத்தாகாத,
மானிடர் – மனிதர்கள்,
அகல் இடத்தினில் – பரந்த பூமியில், (எங்கும்), இல்லையே -;
மந்திரத்தின் இலாத – மந்திரத்துக்கு வசப்படாத,
தேவதை – தெய்வம்,
வானகத்தினில் – தேவலோகத்திலும், இல்லையே -;
வடிவு இலாதவை – உருவமில்லாத பொருள்கள்,
அண்டகோளம் வளைந்த – அண்டகோளத்துக்கு உட்பட்ட,
வைப்பதில் – இடத்தில், இல்லையே -. (எ – று.)

கட்குடியர் அக்கள்ளைச் சிறப்பித்துக்கூறுவதாகச் செய்யுள்செய்வது, களி யென்னும் உறுப்புக்கு இலக்கணமாம்.

புத்தசமயத்தார் கட்குடியைவிலக்குதலை முக்கிய தருமமாகக் கொண்டவராதலால், அவர்களை விளித்துக் கூறுகின்றார்.
இனி, முதலடிக்கு – திருவரங்கநாதனது மலைபோன்ற திருத்தோள்களைப் பாடித் துதித்துப் பக்தி மிகுதியாற்
கூத்தாடுகின்ற களிப்புடையராவோ மென்றுமாம். கட்குடியர் துர்க்கபூசைசெய்தல் இயல்பாதலின்,
அதனைப் பெருமைப்படுத்திக்கூறினர்.

கட்குடித்தலையுங் குடியென்பராதலின் ‘சிந்தையிற் குடிகொண்டிருந்து’ என்றும், களியரென்பதற்குக் கட்குடியரென்றும்
பொருளாதலால் ‘களியரேம்’ என்றும்,
அமிருதமுங் கள்ளும் வெண்ணிற வொற்றுமை யுடைமையால் ‘இமையோ ரருந்து மருந்தும் வெள்ளை’ என்றும்,
சாதி மந்திரம் வடிவு என்பன கள்ளுக்கும் பெயராதலால் அதை உட்கொள்ளாத மனிதர்கள் பூமியிலில்லை யென்றும்,
அதுகொள்ளாத தேவர்கள் வானுலகத்திலில்லை யென்றும், அதுபெறாத பொருள்கள் அண்டமுழுவதிலுமில்லை யென்றுங்
களியென்னுமுறுப்பிற்குப்பொருந்தச் சிலேடையாக் கூறினரெனக்காண்க.
பொருப்புயர்ந்த – மலையினும் உயர்ந்த வென்றுமாம்.
மாதர்களெழுவர் – அபிராமி, மாயேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி.
மக பூசை – மஹாபூஜையென்பதன் திரிபாகக் கொண்டு, சிறந்த பூசை யென்றுமாம். மானிடரென்பது – மாநுஷ சப்த பவம்.

இது, முதல் மூன்று ஐந்தாஞ் சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும்,
அஃது இரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்குசீராசிரியவிருத்தம்.

————-

66-இல்லறம் எனத் துறவறம் எனச் சொல் அறம் பிற துணை அன்று என
பவக் கடலுள் துவக்கு அறுப்பான் காவிரி இடைப் பூவிரி பொழில்
சில மந்திகள் சினை தாவ பல தெங்கின் பழக் குலை உதிர
அடர் கமுகின் மிடறு ஓடி தர தேமாங்கனி சிதறு புவிழ முடப் பலவின் குடக்கனி உக
அரம்பைக் கனி வரம்பில் புக வயல் மருங்கின் மலர்ப் பொய்கையுள் துயில் வலம் புரி துண்ணனவு உற
தா அள் தாமரைத் தவிசு உறை தரு சூ உதடு ஓதி மம் பே எட்டுடன் எழ
மயிர்சேவல் மனம் களிப்ப குயில் பேடைக் குலம் ஒளிப்ப மழை முகில் என முழவு அதிர் தரு
திரு அரங்கப் பெரு நகருள் அரவணை மிசை அறி துயில் அமர்ந்து அருள் புரி
திரு நாரணனைச் சேர்ந்தனம் சரணா விந்தம் தஞ்சம் என்று இரந்தே–66-

(இ – ள்.) இல்லறம் என – இல்லறமென்றும்,
துறவறம் என – துறவறமென்றும்,
சொல் அறம் – (இருவகையாகச்) சொல்லப்படுகின்ற அறமும்,
பிற – மற்றைப் பொருளின்பங்களும்,
துணை அன்று என – துணையல்ல வென்று எண்ணி,
பவம் கடலுள் – பிறவிக்கடலினுள்ளே,
துவக்கு – கட்டுப்பட்டிருத்தலை,
அறுப்பான் – நீக்கும்பொருட்டு, –
காவிரியிடை – உபயகாவேரி மத்தியில்,
பூவிரி பொழில் – மலர்களலர்கின்ற சோலைகளில்,
சில மந்திகள் – சில பெண்குரங்குகள்,
சினை – மரக்கிளைகளில்,
தாவ – தாவிப்பாய, – (அதனால்),
பல தெங்கின் – பல தென்னமரங்களில்,
பழம் குலை – முதிர்ந்த காய்களின் குலைகள்,
உதிர – உதிரவும், –
அடர் கமுகின் – நெருங்கின பாக்குமரங்களினது,
மிடறு – கண்டம்,
ஒடிதர – ஒடியவும், –
தே மா கனி – தேன் மாம்பழங்கள்
சிதறுபுவிழ – சிதறிவி ழவும், –
முடம்பலவின் – வளைந்த பலாமரத்தினது,
குடம் கனி – குடம்போன்ற பழங்கள்,
உக – சிந்தவும், –
அரம்பை கனி – வாழைப்பழங்கள்,
வரம்பில் புக – வயல்வரப்புக்களில் விழவும், –
வயல் மருங்கின் – கழனிகளி னருகிலுள்ள,
மலர் பொய்கையுள் – பூக்கள் நிறைந்த தடாகத்தில்,
துயில் – தூங்குகின்ற,
வலம்புரி – வலம்புரிச் சங்கங்கள்,
துண்ணனவு உற – திடுக்கிட்டலறவும், –
தாள் தாமரை தவிசு – நாளத்தையுடைய தாமரை மலராகிய இருப்பிடத்தில்,
உறைதரு – தங்குகின்ற,
சூட்டு ஓதிமம் – உச்சியையுடைய அன்னப்பறவைகள்,
பேட்டுடன் – (தம் தமது) பேடைகளுடன்,
எழ – எழுந்திருப்பவும், –
மயில் சேவல் – பெண் மயில்களும் ஆண்மயில்களும்,
மனம் களிப்ப – மனமகிழ்ந்து கூத்தாடவும், –
குயில் பேடை குலம் – ஆண்குயில்கள் பெண்குயில்களின் கூட்டம்,
ஒளிப்ப – மனம்வருந்தி மறையவும், –
மழை முகில் என – மழைபெய்கின்ற மேகம்போல,
முழவு – வாத்தியங்கள்,
அதிர்தரு – ஒலிக்கின்ற, –
திரு அரங்கம் பெரு நகருள் – திருவரங்கமென்கிற பெரிய திருநகரத்தில்,
அரவணை மிசை – சேஷசயனத்தின்மேல்,
அறி துயில் அமர்ந்து அருள்புரி – யோகநித்திரை செய்தருளுகின்ற,
திருநாரணனை – ஸ்ரீமந்நாராயணனை,
சரண அரவிந்தம் – (அவனது) திருவடித்தாமரைகளே,
தஞ்சம் என்று – அடைக்கல மென்று, சொல்லி,
இரந்து – பிரார்த்தித்து,
சேர்ந்தனம் – அடைந்தோம், (யான்); (எ – று.)

காவிரியிடைத் திருவரங்கப்பெருநகருள் அரவணைமிசை அறிதுயிலமர்ந்தருள்புரி திருநாரணனைப் பவக்கடலுள்
துவக் கறுப்பான் சேர்ந்தன மென்க. இல்லறமாவது – இல்வாழ்க்கைநிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று,
அதற்குத் துணையாகிய கற்புடைமனைவியோடுஞ் செய்யப்படுவதாகிய அறம். துறவறமாவது –
மேற்கூறிய இல்லறத்தின் வழுவாதொழுகி அறிவுடையராய்ப் பிறப்பினையஞ்சி வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாகிய அறம்.
அறம் பொருளின்பமென உடனெண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்து இல்லறந் துறவற மென்னும்
இருவகை நிலையாற் கூறப்பட்டதனால், ஏனைப் பொருளும் இன்பமும் ‘பிற’ என்னப் பட்டன.
பவம் – வடசொல். இங்குக் கூறிய வருணனை,
“காய்மாண்ட தெங்கின்பழம்வீழக் கமுகினெற்றிப், பூமாண்டதீந்தேன்றொடைகீறி வருக்கைபோழ்ந்து,
தேமாங்கனிசிதறி வாழைப்பழங்கள்சிந்து, மேமாங்கத நாடு” என்னுஞ் சிந்தாமணிச்செய்யுள் போன்றது.

மந்தி, பேடு, பேடை – பெண்பெயர்கள். “குரங்கு முசுவு மூகமு மந்தி,” (“புள்ளு முரிய வப்பெயர்க் கென்ப,”)
“பேடையும் பெடையு நாடினொன்றும்” என்பன காண்க. கமுகு – க்ரமுகமென்னும் வடசொல்லின் சிதைவு.
சிதறுபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சேவல் – ஆண்பெயர்.
“சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணு, மாயிருந் தூவி மயிலலங் கடையே” என்றார் தொல்காப்பியனா ராதலின்,
சேவலென்னும் பெயர் மயிலுக்கு வருதல், புதியனபுகுதல். மழைக்காலத்தில் மயிலினம் மகிழ்தலும், குயிலினம் வருந்துதலும் இயல்பு.
மயிலுங் குயிலும் முழவொலியை மழையொலியென மயங்கினவென்க; மயக்கவணி. “தஞ்சமென் றறிந்து” என்றும் பாடம்.

இது, இருசீரடி பத்தொன்பது கொண்டு தனிச்சொற்பெற்று அகவற் சுரிதகத்தான் முடிந்த குறளடி வஞ்சிப்பா:
அருள்புரி யென்பது, தனிச்சொல்; ஈற்றிரண்டடியும், நேரிசையாசிரியச்சுரிதகம்.

————–

67- இரவியை இரவின் மதியினை மதியுள் இறையினை இறையும் எண்ணரிய
கரவனை கரவு இல் முனிவனை முனிவர் கருத்தனை கருத்தனைத் துடைத்து ஆள்
பரமனை பரம பதத்தனை பதத்துள் பாரனை பார நத்து ஊதும்
அரவணை அரவின் அரங்கனை அரங்கத்து அடிகளை அடிகள் சேவியுமே –67–

(இ – ள்.) இரவியை – சூரியனானவனை,
இரவின் மதியினை இராத்திரியில் விளங்குகின்ற சந்திரனானவனை,
மதியுள் இறையினை – அறிவிலுறைகின்ற தலைவனை,
இறையும் எண்ணரிய கரவனை – சிறிதும் நினைத்தற்குமரிய மாயையையுடையவனை,
கரவுஇல் முனிவனை – கபடமில்லாத முனிவனா யிருப்பவனை,
முனிவர் கருத்தனை – முனிவர்களது உள்ளத்தி லுறைபவனை,
கருத்தனை துடைத்து ஆள் பரமனை – (தன்னையடைந்தவர்களது) பிறப்பைப் போக்கியருளுகின்ற உயர்ந்தவனை,
பரமபதத்தனை – பரமபதத்தையுடையவனை,
பதத்துள் பாரனை – திருவடியினின்றும் பூமியை யுண்டாக்கினவனை,
பாரம் நத்து ஊதும் அரவனை – பெரியபாஞ்சசன்னியத்தை ஊதுகின்ற ஓசையை யுடையவனை,
அரவின் அரங்கனை – பாம்பை இடமாக வுடையவனை,
அரங்கத்து அடிகளை – திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற ஸ்வாமியை,
அடிகள் சேவியும் – திருவடிதொழுங்கள்; (எ – று.)

இச்செய்யுளில் ஒருசொல்லைப்பற்றி முன்வந்த ஒருசொல்லை விட்டிட்டு இவ்வாறு ஒருதொடர்புபடுத்திக்கூறியது –
ஒருவகை ஏகாவளியலங்காரம். முனிவன் என்றது – உலகங்களின் படைப்பளிப்பழிப்புக்களை மநநம் பண்ணுபவன்;
“முனியே நான் முகனே” என்றார் ஆழ்வாரும்.
இனி, கரவின் முனிவனை யென்பதற்கு – முதலையினிடத்துக் கோபத்தையுடையவனை யென்றும்,
முனிவர் கருத்தனை யென்பதற்கு – முனிவர்கள் தலைவனை யென்றும் உரைக்கலாம்.
எம்பெருமானது திருவடியினின்று பூமி உதித்த தென்று வேத மோதுதலால், “பதத்துட் பாரனை” என்றார்;
திரிவிக்கிரமாவதார கதையை யுட்கொண்டு, ஒருதிருவடியுளடக்கிய பூமியையுடையவ னென்றுமாம்.
“பாரதத்தூதவரவனை” என்னும் பாடத்துக்கு – பரதகுலத்தில் தோன்றிய பாண்டவர்க்குத் தூதனாய்த் துரியோதனனிடத்து
வந்தவனை யென்று உரைக்க. “பாரனைத்தோது மரவனை” என்றும் பாடம்.
அரவம் – ரவம். அடிகள் சேவியும் – பெரியோர்களே! சேவியு மெனவுமாம்.
இப்பொருளில், அடிகளென்பது – அடியென்னும் பகுதியிற் பிறந்து உயர்வுப்பொருளுணர்த்தி நின்ற படர்க்கைச்சொல்.

இதற்கு யாப்பிலக்கணம், 36-ஆங் கவியிற் கூறியது கொள்க.

—————

தலைவி இரங்கல்
68-சேவிக்க வாழ்விக்கும் எம் கோன் அரங்கன் திருக் கோயில் சூழ்
காவில் கலந்து ஆசை தந்து ஏகினார் நெஞ்சு கல் நெஞ்சமோ
வாவிப் புறத்து அன்னமே இன்னம் ஏதோ வரக் கண்டிலேன்
பாவிக்கு அநேகம் தனிக்காலம் இந்தப் பனிக்காலமே –68-

(இ – ள்.) வாவிப்புறத்து அன்னமே – தடாகங்களினிடத்தே சஞ்சரிக்கின்ற அன்னப்பறவையே! –
சேவிக்க – (தன்னைக்கண்டு) வணங்க, (அவர்களை),
வாழ்விக்கும் – (இம்மை மறுமை வீடுகளிற் சிறந்து) வாழச்செய்கின்ற,
எம் கோன் – எமதுதலைவனாகிய, அரங்கன் – ரங்கநாதனது,
திரு கோயில் – அழகிய கோயிலை, சூழ் – சூழ்ந்த,
காவில் – சோலையில், கலந்து – கூடியிருந்து,
ஆசை தந்து – ஆசைகாட்டி,
ஏகினார் – சென்றவரது,
நெஞ்சு – மனம், கல் நெஞ்சமோ – கல்லினாலாகிய நெஞ்சோ?
இன்னம் – இன்னமும் (பனிக்காலம் வந்த பின்னும்), ஏதோ – என்ன காரணத்தாலோ,
வர கண்டிலேன் – மீண்டுவரக் கண்டேனில்லை;
பாவிக்கு – தீவினையேனாகிய எனக்கு,
இந்த பனி காலம் -, அனேகம் தனி காலம் – தனியேயிருக்கின்ற நெடுங்கால மாகவாயிற்று; (எ – று.)

இது, தலைமகன் புணர்ந்து தணந்துவர நீட்டித்த நிலைமைக்கண் தலைமகள் நெய்தனிலத்து அன்னத்தோடு கூறி இரங்கியது.

கணவனைப் பிரிதற்கேற்ற தீவினையுடைமையால், தலைவி தன்னை “பாவியேன்” என்று பழித்துக் கூறுகின்றாள்.
கணவனைப் பிரிந்த நிலையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பலயுகங்கள் போலு மாதலால்,
‘அனேகந் தனிக்கால மிந்தப்பனிக்காலம்’ என்றாள்;
“பலபல வூழிகளாயிடு மன்றியோர் நாழிகையைப் பலபல கூறிட்ட கூறாயிடும்…..,…. அம்மவாழி யிப்பாயிருளே” என்றார் நம்மாழ்வாரும்.

இது, முதல் நான்குசீருங் காய்ச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று மாங்கனிச்சீருமாகிய கலிநிலைத்துறை.

————–

குறம்
69-காலம் உணர்ந்த குறத்தி நான் கருதியது ஓன்று அது சொல்லுகேன்
பாலகன் உச்சியில் எண்ணெய் வார் பழகியது ஓர் கலை கொண்டு வா
கோல மலர்க் குழல் மங்கை நின் கொங்கை முகக் குறி நன்று காண்
ஞாலம் உவந்திட நாளையே நண்ணுவை நம் பெருமாளையே –69-

(இ – ள்.) நான் -, காலம் – முக்காலத்து விருத்தாந்தங்களையும்,
உணர்ந்த – அறிந்து சொல்லவல்ல,
குறத்தி – குறவர்மகள்;
ஒன்று கருதினை – (நீ மனத்தில்) யாதொன்று நினைத்தாயோ,
அது – அதனை, சொல்லுவேன் -:
பாலகன் – (என்) சிறுகுழந்தையது,
உச்சியில் – தலையில்,
எண்ணெய் வார் – எண்ணெய் வாரு;
பழகியது ஓர் கலை – பழையதொரு சீலையை,
கொண்டுவா – கொண்டுவந்து கொடு;
கோலம் மலர் கையின் – அழகிய மலர்போலுங் கைகளையுடைய,
மங்கை – பெண்ணே! நின் – உன்னுடைய,
கொங்கை முகம் குறி – முலைக்கண்களின் குறியானது, நன்று – நன்றாயிருக்கிறது; (ஆகையால்),
ஞாலம் உவந்திட – உலகமுழுவதும் மகிழும்படி,
நாளையே – நாளைக்கே,
நம்பெருமாளை -, நண்ணுவை – சேர்வாய்; (எ – று.)

தலைமகனைக் கண்டு காமுற்று மயங்கிநிற்கும் நிலைமைக்கண் தன்னிடம் வந்த குறிகண்டறிந்து கூறவல்ல
குறத்தியாகிய கட்டுவிச்சியைத் தலைவி குறி வினவக் குறத்தி குறிதேர்ந்து நல்வரவு கூறுவதாகச் செய்யுள்செய்வது,
குறம் என்னும் உறுப்பின் இலக்கணமாம்.
தலைமகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து ஆற்றாது மெலிந்து வருந்திய தலைமகளைக் கண்ட செவிலித்தாய்,
இவள்நோய்க்குக் காரணம் இன்னதென்று அறியாமல் நிமித்தங்கண்டுகூறவல்லகட்டுவிச்சியை அழைத்து வினாவ,
அவள் குறியிலக்கணப்படி சிறுமுறத்திலே சிலநெற்குறிகண்டு அதனால் உண்மையுணர்ந்து கூறுகின்றாள்.
காலமுணர்ந்த குறத்தி நான் – முக்கால வரலாறுகளையும் முன்னறிந்துகூறவல்ல குறத்தி யானென்று தனது சிறப்பை வெளியிட்டனள்.

“எந்தவிதங்களு மறி குறமகணா னிங்கெதிர்வந் தினியென திதமொழிகே,
ளந்தமுறந்தனி னவமணி கொடுவா வன்பிலணிந்திட வழகியகலைதா,
கந்தமிகுந்த தனந்தனிற் குறியே கண்டன னின்றலர் கமழ்குழன்மடவாய்,
வந்தெவருந்தொழ வடமலைதனில்வாழ் வண்டுளவன் தின மருவுவ னுனையே” என்ற திருவேங்கடக் கலம்பகச் செய்யுள் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

காலம் – ஆகுபெயர். பாலகன் – கப்பிரத்தியயம், இரங்கற்பாடுணர்த்திற்று.
இனி, மூன்றாமடிக்கு, நினது கைகளிலும் கொங்கைகளிலும் முகத்திலு முள்ள குறி நன்றென்றும்,
கைக்குறியினும் கொங்கைமுகத்தின்குறி நன்றென்றும் பொருள்கொள்ளலாம். “மலர்க்குழல்” என்றும் பாடம்.
ஞாலமுவத்தல் – ஒத்த தலைமகனுக்குந் தலைமகளுக்குங் கூட்டம் நேர்தலால். தான் குறிசொல்வதற்கு வெகுமதியாகத்
தன்பாலகனுச்சியில் எண்ணெய் வார்க்குமாறும் பழைய வஸ்திரமொன்றைத் தனக்குக் கொடுக்குமாறும் குறத்தி கேட்கின்றன ளென்க.

இது, எல்லாச்சீரும் விளச்சீராகிய அறுசீராசிரிய விருத்தம்.

———

மேக விடு தூது
70–பெருமாலை யார்க்கு உரைப்பேன் உமக்கே விண்டு பேசின் அல்லால்
கரு மாலையாய் எழும் கார்க் குலங்காள் தொண்டர் காற்பொடி தன்
திருமாலை கொண்ட திருமால் அரங்கம் தெய்வத் துழாய்
மரு மாலை வாங்கி வம்மின் அந்தி மாலை வரும் முன்னமே –70-

(இ – ள்.) கரு மாலையாய் எழும் கார் குலங்காள் – கரிய தொரு வரிசையாய் ஆகாயத்தே எழுகின்ற மேகங்களது கூட்டங்களே! –
பெருமாலை – (எனது) பெரிய மயக்கத்தை, உமக்கே – உங்களுக்கே,
விண்டு பேசின் அல்லால் – விவரித்துச்சொன்னாலல்லாமல், யார்க்கு – வேறே யாவர்க்கு,
உரைப்பேன் – எடுத்துச்சொல்லுவேன்? (நீங்கள் போய்),
தொண்டர் கால் பொடிதன் – தொண்டரடிப்பொடியாழ்வார ரருளிச்செய்த,
திருமாலை – திருமாலை யென்னுந் திவ்வியப்பிரபந்தமாகிய மாலையை, கொண்ட – கொண்டருளிய,
திரு மால் அரங்கர்தம் – திருமாலாகிய ரங்கநாதரது,
தெய்வம் துழாய் மரு மாலை – திவ்வியமான நறுமணம்பொருந்திய திருத்துழாய்மாலையை,
அந்திமாலை வருமுன்னம் -அந்திப்பொழுது வருதற்குமுன்னே,
வாங்கி வம்மின் – வாங்கிக்கொண்டு வாருங்கள்; (எ – று.)

தலைவனைப் பிரிந்து தனித்து வருந்துந் தலைவி, இங்ஙனஞ் சொல்லித் தலைவனிடத்து மேகங்களைத் தூதுசெல்லுமாறு வேண்டுகின்றாள்.

புண்ணிற்புளிப்பெய்தாற்போல இந்நிலையில் அந்திமாலை வருமாயின் யான் இறந்துபடுவேன்: அது வருவதற்குமுன்னமே
எனது தலைவன் அணிந்த மாலையை எனக்குக்கொணர்ந்துகொடுத்தால்மாத்திரமே யான் அதுகொண்டு சிறிது ஆறியிருப்பே னென்றாள்;
தொண்டரடிப்பொடி யாழ்வார் “இந்திரலோகமாளு மச்சுவை பெறினும் வேண்டேன்” என்று
“பரமபதம் கிடைப்பதானாலும் அதிலும் எனக்கு நசையில்லை; பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்க ணச்சுதா!
அமரரேறே ஆயர்தம் கொழுந்தே! என்னும் இச்சுவையே யான் வேண்டுவது” என்று அறுதியிட்டுத் திருவரங்கநாதனையன்றி
வேறு எத்தேவரையும் கடைக் கணியாது அப்பிரான் திறத்தில் திருமாலை யென்னுந் திவ்வியப்பிர பந்தத்தை
யருளிச்செய்தன ராதல்பற்றி, ‘தொண்டர்காற்பொடிதன் றிருமாலைகொண்ட திருமாலரங்கர்’ என்றார்.
தொண்டர் காற் பொடி – பக்தாங்க்ரிரேணு. திருமாலை கொண்ட திருமால் என்னு மிடத்தில், சொன்னயம் பாராட்டற்பாலது.
“பாவோநாந்யத்ரகச்சதி (எனது சிந்தை ஸ்ரீராமனைத்தவிர வேறொருதெய்வத்தினிடத்திற் செல்லாது” என்ற சிறிய திருவடியும்,
“அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே” என்ற தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
“என்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாவே” என்ற திருப்பாணாழ்வாரும் தம்மில் ஒப்பரென்ற காரணம்பற்றி,
ஸ்ரீரங்கந்திருக்கோயிலில் இம்மூவர்க்கும் ஒருங்கே சந்நிதி யமைக்கப்பட்டுள்ள தென்பர்.
தொண்டர்காற்பொடிதன் திருமாலை – செய்யுட்கிழமைப் பொருளில் வந்த ஆறாம்வேற்றுமைத்தொகை.
வம்மின் – வா என்னும் முதனிலையடியாப் பிறந்த ஏவற்பன்மைமுற்று. அந்தி – ஸந்த்யா என்னும் வடமொழியின் சிதைவு.

இது, நிரையசை முதலாகிய கட்டளைக்கலித்துறை.

——————

71-முன்னம் பிறந்த பிறப்போ முடிவு இல்லை
இன்னம் பிறப்பிக்க எண்ணாதே தென் அரங்கம்
மேவிக் கிடந்தானே வீற்று இருக்கும் நின் பதத்து என்
ஆவிக்கு இடம் தான் அருள் –71-

(இ – ள்.) தென் அரங்கம் மேவி கிடந்தானே – அழகிய திருவரங்கத்தில் திருவுள்ள முவந்து திருப்பள்ளிகொண்டருளுபவனே! –
(யான்), முன் (ஆகையால்), பிறப்போ – முன்னே பிறந்த பிறவிகளுக்கோ வென்றால்,
முடிவு நாளை இவர்களை வென்று ஒரளவில்லை; (ஆகையால்), இன்னம் – இனிமேலும்,
பிறப்பிக்க – பிறவியெடுக்கும்படி, எண்ணாதே – திருவுள்ளத்திற் கொள்ளாமல்,
வீற்றிருக்கும் – ஒப்பில்லாத சிறப்போ டிருக்கின்ற, நின் பதத்து – உனது பரமபதத்தில்,
என் ஆவிக்கு – எனது உயிர்க்கு, இடம் – இடத்தை, அருள் – தந்தருள்வாய்; (எ – று.)

பலபிறப்பெடுத்து உழன்று வருந்திய என்னை இனிமேற் பிறப்பற்று முத்திபெறுமாறு அருள்செய்யவேண்டு மென்று வேண்டுகின்றவாறு.

“வீற்றிருக்க” என்றும் பாடம். பதத்து – திருவடிநிழலி லென்றுமாம்: திருவடியே வீடாயிருக்கு மாதலால், “நின்பதத்து” என்றது ஏற்கும்.

இது, மலரென்னும் வாய்பாடுபட முடிந்த நேரிசைவெண்பா.

———–

தலைவி இரங்கல் –மடக்கு –
72- அரும்புன்னாகத் தடங்காவே அவா என் ஆகத்து அடங்காவே
அம்போருகக் கண் பொரும் தேனே அழு நீர் உகக்கண் பொருந்தேனே
பரம்பும் கடல் ஊர் நாவாயே பாவிக்கு அடல் ஊர் நாவாயே
பார் மீது உயர மறி அலையே படும் என் துயரம் அறியலையே
கருங்கண் கயலே மாசுறவே கரைவேற்கு அயலே மாசு உறவே
கண்டல் போது உகு வாலுகமே கங்குல் போது குவால் உகமே
குரும்பை தழைக்கும் கரும் பனையே குயில் வந்து அழைக்கும் கரும் பனையே
குருகீர் நந்து அமர் அம் கரையே கொணரீர் நம் தம் அரங்கரையே –72 –

(இ – ள்.) அரும் புன்னாகம் தடம் காவே – அரிய பெரிய புன்னைமரச் சோலையே!
அவா – ஆசை, என் ஆகத்து அடங்காவே – எனது மனத்தில் அடங்குகிறதில்லை;
அம்போருகம் கண் பொரும் தேனே – தாமரைமலரினிடத்துப் பொருந்திய வண்டே!
அழு நீர் உக – அழுகின்ற கண்ணீ ரறாதொழுக, கண் பொருந்தேனே – கண்ணுறங்குகிறேனில்லை;
பரம்பும் கடம் ஊர் நாவாயே – பரவிய கடலி லோடுகின்ற மரக்கலமே!
பாவிக்கு – பாவியேனுக்கு, ஊர் நா வாயே – (அலர்தூற்றுகின்ற) ஊராரது நாவும் வாயும்,
அடல் – பகைமையாகும்; பார்மீது உயர மறி அலையே – கரையின்மேல் உயர்ந்து மடங்கி விழுகின்ற அலையே!
படும் என் துயரம் அறியலையே – யான்படுகின்ற துன்பத்தைக் கண்டறிகின்றாயல்லையே;
கருங் கண் கயலே – கண்களையுடைய கயல்மீனே! மா சுறவே – பெரிய சுறாமீனே!
கரைவேற்கு – இங்ஙனம் வருந்துகின்ற எனக்கு, மாசு உறவே – குற்றமுள்ள உறவினரும்,
அயலே – அயலாரேயாவர்; வண்டல் போது உகு வாலுகமே – தாழைமலர்கள்சிந்துகின்ற வெண்மணற்குன்றே!
கங்குல் போது குவால் உகமே – இராப்பொழுது திரண்ட அநேகம்யுகங்களேயாகும்;
குரும்பை தழைக்கும் கரும் பனையே – குரும்பைகள் தழைக்கின்ற கரிய பனைமரமே!
குயில் – குயிலானது, வந்து -, கரும்பனை – கருப்புவில்லையுடைய மன்மதனை,
அழைக்கும் – அழையா நின்றது; குருகீர் – நாரைகளே!
நந்து அமர் அம் கரையே – சங்குகள்பொருந்திய அழகிய கரையே!
நந்தம் அரங்கரை – நமது அரங்கநாதரை, கொணரீர் -கொண்டுவாருங்கள்; (எ – று.)

இது, பிரிந்துறைகின்ற நெய்தனிலத்துத்தலைமகள் ஆங்குள்ளபொருள் களை நோக்கித் தான்படும் வருத்தங் கூறி இரங்கியது.

ஈண்டுக் கேளாமரபின கேட்பனபோலக் கூறப்பட்டன; மரபுவழு வமைதி. அம்போருஹம் – நீரில்முளைப்பது. கண் – ஏழனுருபு. ஊர், உறவு –
ஆகுபெயர்கள். உறவினரெல்லாம் தான்படும் வருத்தத்திற்கு இரங்காது ஊரவர்போலத் தூற்றுதலால்,
‘கரைவேற்கயலே மாசுறவே’ என்றாள்.
விரகிகளுக்கு இரவு நீட்டித்ததுபோலத் தோன்றி வருத்துதலால், ‘கங்குற்போது குவாலுகமே’ எனப்பட்டது.
குரும்பை – இளங்காய். குயிலொலி காமோத்தீபகமா யிருத்தலால், ‘குயில்வந்தழைக்குங் கரும்பனை’ யென்றாள்.

இதற்குச் செய்யு ளிலக்கணம், 33 – ஆங் கவியிற் கூறியது.

————-

73-கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே –
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –73-

(இ – ள்.) கரை பொருது ஒழுகும் – இருகரைகளையும் மோதிப் பெருகுகின்ற,
காவிரி யாறு – காவேரிநதி (ஒன்றுஉண்டு);
யாற்றிடை கிடப்பது – அவ்வாற்றினிடையே பொருந்தியிருப்பதாகிய,
ஓர் ஐந் தலை அரவு – ஐந்து தலைகளையுடையதொரு நாகம் (உண்டு);
அரவம் சுமப்பது – அத் திருவனந்தாழ்வான் தாங்குவதாகிய,
ஓர் அஞ்சன மலை – மைம்மலையொன்று (நம் பெருமாள்), (உண்டு) ;
அம்மலை பூத்தது – அந்தநீலமலையினிடத்தே மலர்ந்ததாகிய,
ஓர் அரவிந்த வனம் – ஒரு தாமரைமலர்க்காடு (திருவவயங்கள்), (உண்டு);
அரவிந்தமலர்தொறும் – அத்தாமரைமலர்கள்தோறும்,
அதிசயம் உள – ஒவ்வொரு வியப்பு உண்டு; (அஃதென்னவெனில்), –
ஒரு தாமரை – ஒரு தாமரைமலர் (இடத்திருவடி)
கடல் விளிம்பு உடுத்த – கடலாற் சுற்றிலுஞ் சூழப்பட்ட,
கண் அகல் ஞாலம் முழுது – இடமகன்ற பூமிமுழுவதையும்,
உடன் – ஒருசேர, அளந்தது -;
ஓர் பங்கேருகம் – ஒருதாமரைமலர் (வலத்திருவடி),
வகிர் இளம் பிறையான் – துண்டமாகிய இளம்பிறைச் சந்திரனை முடியிலுடைய உருத்திரனது,
வார் சடை – நீண்ட சடையில்,
தேங்க – நிறைந்து தங்கும்படி,
பகிரதி -கங்கைநதியை,
கான்றது – வெளியுமிழ்ந்தது;
ஓர் கோகனகம் – ஒருதாமரைமலர் (திருநாபி),
யாவையும் – எல்லா அஃறிணைப் பொருள்களையும்,
யாரையும் – எல்லா உயர்திணைப்பொருள்களையும்,
படைக்க – படைக்கும்படி,
நான்முகம் கோவை – பிரமதேவனை,
ஈன்றது – உண்டாக்கிற்று;
ஓர் பதுமமலர் – ஒரு தாமரைப்பூ (திருமார்பு),
திருமகட்கு – பெரியபிராட்டிக்கு,
இனிய – வசித்தற்கினியதான,
திரு மனைஆகி – அழகிய இடமாய்,
பரு மணி இமைப்பது – பருத்த கௌஸ்துபரத்தினம் விளங்கப்பெற்றது;
ஓர் முளரி மா மலர் – ஒரு அழகிய தாமரைமலர் (வலத்திருக்கை),
சங்கரன் – சிவபிரான்,
சடை தலை தாழ்த்து – சடையினையுடைய தலையினால் வணங்கி,
இரப்ப -யாசிக்க,
முடை தலை தவிர்த்தது – (அவன்கையிலொட்டிய) முடைநாற்றத்தையுடைய பிரமகபாலத்தை ஒழித்தது;
வனசமும் ஒன்று – ஒரு தாமரைமலர் (இடத் திருக்கை),
ஆங்கு – அவ்விடத்தில் (இலங்கையில்),
மண்டோதரி – மந்தோதரியென்பவள்,
அணிந்த – (கழுத்தில்) தரித்திருந்த,
மங்கல நாண் – மாங்கல்யசூத்திரத்தை,
வாங்க – இழக்கும் படி,
வில் வாங்கியது – கோதண்டத்தை வளைத்தது;
ஓர் புண்டரீகம் – ஒரு தாமரைமலர் (திருமுகமண்டலம்),
விரிந்த புகழ் – பரவிய கீர்த்தியையுடைய,
இலங்கை வேந்தற்கு – இலங்கைக்கரசனாகிய விபீஷணாழ்வானுக்காக,
தென்திசை புரிந்து – தெற்குத்திக்கை நோக்கி,
அருள் மலர்ந்தது – எப்பொழுதும் அருளோடு மலர்ந்திருந்தது;
ஓர் அம்போருகம் – ஒரு தாமரைமலர் (திருப்பவளம்),
மண் திணி ஞாலமும் – மண்ணுலகமாகிய பூமியும், வானமும் தேவலோகமும்,
உட்பட – அடங்கும்படி,
அண்டம் – அண்ட முழுவதையும்,
உண்டு – (பிரளயகாலத்தில்) உட்கொண்டு, (மீண்டும்),
உமிழ்ந்தது – (பிரளயம்நீங்கியவுடன்) வெளியேஉமிழ்ந்தது;
கடை சிவந்து – நுனி சிவந்தனவாகி,
அகன்று – விசாலமாய்,
கரு மணி விளங்கி – இடையே கரிய கண்மணி விளங்கப்பெற்று,
இடை சில அரி பரந்து – இடையிலே சில ரேகைகள் பரவப்பெற்று,
இனியஆய் – இனியனவாகியும்,
நெடியஆய் – நீண்டனவாகியும்,
இன்பம் தழீஇய – இன்பம்நிறைந்த,
இரு பெருங் கமலம் – இரண்டு பெரிய தாமரைமலர்கள் (திருக்கண்கள்),
துன்பம் தழீஇய – துன்பம் நிறைந்த,
தொண்டனேனையும் – அடியவனாகிய என்னையும்,
உவப்புடன் – மகிழ்ச்சியுடனே,
ஒருகால் நோக்கி – ஒருதரங் கடாக்ஷித்து,
பவம் கடல் – கடக்கும் பரிசு – (கடத்தற்கரிய) பிறவியாகியகடலைக் கடக்கும்படி, பண்ணின -; (எ – று.)

ஸ்ரீகாவேரிநதியினிடையி லுள்ள தீவாகிய ஸ்ரீரங்கமென்னுந் திவ்விய க்ஷேத்திரத்தில் எம்பெருமான் ஆதிசேஷ
பர்யங்கத்தின்மேற்பள்ளிகொண்டு அடியேனைக்கடாட்சித்து உய்யுமாறு செய்தன னென்பதாம்.
“அமலங்களாக விழிக்குமைம்புலனு மவன்மூர்த்தி” என்றவாறு எம்பெருமானது திருவருள் நோக்கமே உய்தற்கு ஏதுவாத லறிக.
(“ஜாயமாநம்ஹிபுருஷம் யம்பஸ்யேந் மதுஸூதந:-ஸாத்விகஸ்ஸதுவிஜ்ஞேயஸ்ஸவைமோக்ஷார்த்தஸாதக:” என்றதும் இங்குக் கருதத்தக்கது.)

“மாமுதலடிப்போ தொன்று கவிழ்த்தலர்த்தி, மண்முழுது மகப்படுத்து, ஒண்சுடரடிப்போதொன்று விண்செலீஇ,
நான் முகப்புத்தேள் நாடுவியந்துவப்ப, வானவர் முறை முறை வழிபட நெறீஇத்,
தாமரைக்காடு மலர்க்கண்ணொடு கனிவாயுடைய,…. முடிதோளாயிரந் தழைத்த,
நெடியோய்க்கல்ல தடியதோ வுலகே” என்ற பாசுரம் இங்கு ஒருசார் ஒப்புநோக்கத்தக்கது.

“சரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப், பெரியவாய கண்க ளென்னைப் பேதைமைசெய்தனவே” என்றார் திருப்பாணாழ்வாரும்.

இதனுள் பத்துத்தாமரையும் ஒன்பது அதிசயமுங் காண்க.

முதலைந்தடிகளில் ஒருசொல்லைப் பற்றி ஒன்றை விடுதலாகிய ஏகாவளியலங்காரம் காண்க.
அரவிந்தம், தாமரை, பங்கேருகம், கோகநகம், பதுமமலர், முளரி, வனசம், புண்டரீகம், அம்போருகம், கமலம்
என்ற தாமரையின் பரியாயமொழிகளாகப் பத்துப்பதங்கள் வந்திருப்பது – பொருட்பின்வருநிலையணி.

பகிரதி – பாகீரதியென்பதன் விகாரம். பகீரதனென்னுஞ் சூரியகுலத் தரசனால் தேவலோகத்தினின்றும்
பூமிக்குக் கொணரப்பட்ட தென்பது பொருள். பங்கேருஹம்.- சேற்றில் முளைப்பது; பங்கம் – சேறு.
கோகனகம் – கோகநத மென்பதன் விகாரம்; சக்கரவாகப்பறவைகள் கூடிக் குலாவுவதற்கு இடமாயிருப்பதென்றும்,
கோக மென்னும் நதியில் மிகுதியாய்த் தோன்றுவதென்றும் பொருள்.
ஆங்கு – அப்பொழுது (ஸ்ரீராமாவதாரத்தில்) என்றுமாம். மண்டோதரி – மந்தோதரி; இராவணன்மனைவி: சிறியவயிறு டையாளென்பது பொருள்.
இவள், பஞ்சகன்னிகைகளில் ஒருத்தி; (மற்றையோர் – அஹல்யா, திரௌபதி, சீதை, தாரை.)
மங்கலநாண்வாங்குதல் – அமங்கலியாதல். வநஜம் – நீரில் முளைப்பது.

இது, ஈற்றயலடி முச்சீரடியும், மற்றை யடிகளெல்லாம் நாற்சீரடிகளுமாக வந்த நேரிசையாசிரியப்பா.

————

தலைவனைப் பிரிந்த தலைவி கார் காலம் கண்டு வண்டுகளை நோக்கி இரங்கிக் கூறுதல்
74-பண் கொண்ட வேய் ஊது செவ்வாய் அரங்கேசர் பைம்பொன்னி நாட்டு
எண் கொண்ட பேராசை தந்தார் மறைந்தார் கொல்-இசை வண்டுகாள்
விண் கொண்ட மலை மீது விண் மாரி பொழிகின்ற விசை போலே என்
கண் கொண்ட மலை மீது கண் மாரி பொழிகின்ற கார் காலமே –74-

(இ – ள்.) இசை வண்டுகாள் – இசைபாடுகின்ற வண்டுகளே! –
பண் கொண்ட – இசைகளைக் கொண்ட,
வேய் – வேய்ங்குழலை ஊது – (கிருஷ்ணாவதாரத்தில்) ஊதிய,
செம் வாய் – சிவந்த வாயினையுடைய,
அரங்கேசர் – ரங்க நாதரது,
பைம் பொன்னி நாடு – குளிர்ந்த காவிரிசூழ்ந்த நாட்டில்
எண் கொண்ட பேராசை – எண்ணமுழுவதுங் கொண்ட மிக்க ஆசையை,
தந்தார் – தந்து சென்றவர், –
விண் கொண்ட – ஆகாயத்தை அளாவிய,
மலைமீது – மலையின்மேல்,
விண் மாரி பொழிகின்ற – வானம் மழையைப் பெய்கின்ற,
விசை போல – வேகம்போல,
என் – எனது,
கண் கொண்ட – கண்பொருந்திய,
மலைமீது – மலைகளின் (முலைகளின்) மேலே,
கண் மாரி பொழிகின்ற – கண்ணீர்மழையைச் சொரிகின்ற,
கார் காலம் – மழைக்காலத்தை,
மறந்தார் கொல் – மறந்தாரோ? (எ – று.) – மறவாராயின், முன்னமே வந்திருப்ப ரென்றபடி.

இது, புணர்ந்து பருவங்குறித்துப் பிரிந்து சென்ற தலைமகன், தான் குறித்த கார்காலம் வந்தவிடத்தும் வாராமலிருக்க,
அதனால் வருத்தங் கொண்ட தலைவி, வண்டுகளை முன்னிலைப்படுத்தி இரங்கிக் கூறியது.
இசைவண்டுகாள் என்பதற்கு – புகழையுடைய வண்டுகளே யென்று பொருள்கொண்டு, நீங்கள் இதுவரையில்
என்போல்வார்பலர்க்குத் தூது சென்று நன்மைசெய்து புகழ்படைத்ததுபோல இப்பொழுதும் எனது நிலைமையை
எனது தலைவர்க்கு உரைத்து எனக்கு இன்பமுண்டாக்கி இன்னமும் புகழ்படைப்பீரா மென்று கூறுதலு மொன்று.

தன்பாற்சிறிதும் இரக்கமின்றிப் பிரிந்துசென்ற தலைவரது பெயரைவெ ளிப்படையாகச் சொல்லவும் விருப்பங்கொள்ளாமல்
“ஆசைதந்தார்” எனச் சுட்டிக்கூறினள். கார்காலத்தில் வானம் மலைமீது மழையைப்பொழிவது போலவே,
எனது தலைவன் தான் குறித்துச்சென்ற பருவம் வந்தும் வாராதது கண்டு எனது கண்களும் இக்காலத்து
முலைமலைமேல் மழைபொழி கின்றனவென்பது, பின்னிரண்டடிகளிற் போந்த பொருள்.
“முலைமலை மேனின்றும் ஆறுகளாய், மழைக்கண்ணநீர் திருமால் கொடியா னென்று வார்கின்றதே” என்றார், நம்மாழ்வாரும்.

இதற்கு யாப்பிலக்கணம், 68 – ஆங் கவியிற் கூறியதே.

——————

கைக்கிளை
75-காரகமோ நம் வட திருவேங்கடக் காரர் வரையோ
நீரகமோ நெடு வானகமோ துயில் நீடு பணிப்
பேர் அகமோ தென் திரு அரங்கப் பெரும் கோயில் என்னும்
ஊரகமோ இடம் தண் காவில் நின்ற ஒருவருக்கே –75-

(இ – ள்.) தண் காலில் நின்ற – குளிர்ச்சிபொருந்திய சோலையில் நின்ற,
ஒருவருக்கு – (யான்கண்ட தலைமகளுக்கு),
இடம் – வசித்தற்கிடமாவது, –
காரகமோ – மேகமண்டலமோ? நம் – நமது,
வட திருவேங்கடம் – வடக்கின்கண் உள்ள திருவேங்கடமென்னும்,
கார் வரையோ – பெரிய மலையோ?
நீரகமோ – நீரினிடமோ?
நெடு வானகமோ – பெரிய தேவலோகமோ?
துயில் நீடு பணி பேர் அகமோ – தூக்கம்மிக்க பாம்புகளின் பெரியஇடமாகிய நாகலோகமோ?
தென் திருவரங்கம் பெருங் கோயில் என்னும் ஊரகமோ – அழகிய திருவரங்கம் பெரியகோயிலென்கிற ஊரினிடமோ? (எ – று.)

இது, தலைமகளைக் கண்ணுற்ற தலைமகன், இங்ஙனந் தோன்றாநின்ற இவள் தெய்வமோ? அன்றி மக்களுள்ளாளோ?
வென்று ஐயுற்றது. “போதோ விசும்போ புனலோ பணிகளதுபதியோ, யாதோ வறிகுவ தேது மரிதி யமன் விடுத்த,
தூதோ வனங்கன் றுணையோ விணையிலி தொல்லைத் தில்லை, மாதோ மடமயிலோவெனநின்றவர்வாழ்பதியே” என்றார் கோவையாரிலும்.
“ஊரும் பேருங் கெடுதியும் பிறவும், நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித், தோழியைக் குறையுறும் பகுதியும்” என்றபடி
தலைவியும் தோழியும் ஒருங்கிருந்த சமயம் நோக்கித் தலைவன் அங்குச்சென்று தன்கருத்தைக்குறிப்பிப்பதற்கு
ஒருவியாஜமாக ஊர்வினாவியது இது. “பதியொடு பிறவினாய் மொழி பல மொழிந்து, மதியுடம்படுக்க மன்னன் வலிந்தது” என்பதுங் காண்க.

மின்னற்கொடி போன்றமையாற் காரகமோ வென்றும், வரையரமக ளிர் போன்றமையால் வடதிருவேங்கடக்கார்வரையோ வென்றும்,
நீரர மகளிர் போன்றமையால் நீரகமோவென்றும், வானரமகளிர் போன்றமையால் வானகமோ வென்றும்,
நாககன்னியர் போன்றமையால் துயில்நீடு பணிப்பேரகமோ வென்றும், மானுடமாதர்போன்றமையால்
தென்றிருவரங்கப் பெருங்கோயிலென்னு மூரகமோ வென்றும் விகற்பித்துக் கூறினான்.
காரகம், நீரகம், பேரகம், ஊரகம் என்பன தொண்டைநாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டிற் சேர்ந்துள்ள திருப்பதிகட்குத்
திருநாமங்களாதலால், தண்காவினின்ற ஒருவர்க்கு அத்திருப்பதிகளுள் ஏதேனுமொன்றுதானோ இடம்? என்ற
மற்றொரு பொருளும் இங்குக் கொள்ளத்தக்கது. இப்பொருளில் ஊரக (ஆதிசேஷன்) சம்பந்தமுள்ளது ஊரகம் ஆதலால்,
திருவரங்கந் திருப்பதிக்கும் ஊரகத்திற்கும் அபேதமாக “திருவரங்கப்பெருங்கோயிலென்னு மூரகமோ” என்றா ரென்க.

இனி, தலைமகள் கூற்றாய், காரகம் முதலிய திருப்பதிகளாகவுமாம்.

இது, நேரசை யாதியதாகிய கட்டளைக்கலித்துறை.

————–

76- ஒரு நயம் பேசுவன்
திரு அரங்கேசர் தாள்
மருவுமின் நாசம் ஆம்
கருமவன் பாசமே –

(இ – ள்.) (உலகத்தீரே)! ஒருநயம் பேசுவன் – ஒரு நல்வார்த்தை சொல்வேன்: (கேளுங்கள்; அது எதுவென்றால்), –
திருவரங்கேசர் தாள் மருவுமின் – ஸ்ரீரங்கநாதரது திருவடிகளைச் சேருங்கள் (என்பதே);
(அதனாலு ண்டாகும் பயனென்னை யெனின்), –
கருமம் வல் பாசம் நாசமாம் – வினைகளாகிய வலிய பந்தங்கள் அழிந்து போய்விடும் (மோக்ஷமுண்டாகும்); (எ – று.)

ஸ்ரீரங்கநாதனது திருவடிகளைப் பற்றுங்கோள்; உமது இருவினையும் நீங்கி நீவிர் நற்கதிபெறுவீரென்று
உலகத்தோர்க்கு உபதேசித்தவாறு. இங்கு இருவினைபோதற்கு எம்பெருமானது திருவடியைப்பற்றுகை சாதனமாமெனின், ஆகாது;
பிரபந்நாதிகாரிக்கு இஃது அதிகாரி விசேஷணமாம். எம்பெருமானது நிர்ஹேதுக கடாக்ஷமல்லது மற்றொன்றை உபாயமாகக்கொள்வது –
அரசன்பக்கல் ராஜ்யத்தைப் பெறுதற்கு எலிமிச்சம்பழமீதலை உபாயமாகக்கொள்ளுதல்போலு மென்க. விரிக்கிற் பெருகும்.
நல்வினையும் பிறப்பிற்கு ஏதுவாதலால், “கருமவன்பாசம்” எனப் பொதுப்படக்கூறினர். வினையைப் பாசமாக உருவகப்படுத்தியது,
தம் இஷ்டப்படி எவ்வழியும் செல்லவொட்டாது பிணிப்புண்ணப்பண்ணுதலால்.

இது, – இருசீரும் விளச்சீராகிய குறளடிநான்குகொண்ட வஞ்சித்துறை.

————-

தலைவி இரங்கல்
77- பாசம் ஆம் அடியார் பால் நேசம் ஆம் அடிகளும்
பைம்பொன் ஆர் ஆடையும் செம்பொன் மா மேனியும்
ஆசை ஆம் மலர் உளாள் வாசம் ஆர் அகலமும்
அஞ்சல் என்று அருள் செயும் கஞ்சமும் கருணையன்
தேசு உலா வதனமும் மாசு இலா முறுவலும்
சீரிதாய் எழுது கத்தூரி நாமமும் எனக்கு
ஈசனார் திரு அரங்கேசனார் திகிரியும்
இலகு வெண் சங்குமே உலகம் எங்கும் எங்குமே –77-

(இ – ள்.) உலகம் எங்கு எங்கும் – எல்லாவுலகங்களிலும் எல்லாவிடமும், –
எனக்கு ஈசனார் – எனக்குத் தலைவராகிய, திரு அரங்கேசனார் – ஸ்ரீரங்கநாதரது,
பாசம் ஆம் அடியர்பால் – (தம்பக்கல்) அன்புள்ள அடியார்களிடத்தில்,
நேசம் ஆம் – கருணையுள்ள,
அடிகளும் – திருவடிகளும்,
பைம்பொன் ஆர் ஆடையும் – பசும்பொன் மயமான பீதாம்பரமும்,
செம் பொன் மா மேனியும் – செவ்விதாய் அழகிய பெரிய (கரிய) திருமேனியும்,
ஆசை ஆம் மலர் உளாள் – (மிக்க) காதலை யுடைய தாமரைப்பூவி லுறைகின்ற திருமகளுக்கு,
வாசம் ஆர் – தங்குமிடமாகப் பொருந்திய,
அகலமும் – திருமார்பும்,
அஞ்சல் என்று அருள் செயும் – (தன்னையடைந்தாரை) அஞ்சற்க வென்றுசொல்லிப் பாதுகாக்கின்ற,
கஞ்சமும் – தாமரைமலர்போன்ற அபய ஹஸ்தமும்,
கருணையின் தேசு உலா – அருளினது ஒளி விளங்குகின்ற,
வதனமும் – திருமுகமண்டலமும்,
மாசு இலா முறுவலும் – மறுவில்லாத புன் சிரிப்பும்,
சீரிது ஆய் எழுது கத்தூரி நாமமும் – சிறப்பினையுடைத்தாம்படி கஸ்தூரியால் எழுதப்பட்ட திருநாமமும் (திலகமும்),
திகிரியும் – சக்கரமும்,
இலகு வெள் சங்குமே – விளங்குகின்ற வெண்மையாகிய சங்கமுமேயாகும்; (எ – று.)

தலைவனைக்கூடிப்பிரிந்த தலைமகள் எப்போதும் தலைவனைக்குறித்தே சிந்தித்துக்கொண்டிருத்தல்பற்றிச் சிந்தனையின்
மிகுதியால் அத்தலைவனது உருவம் எங்குந்தோன்ற, உண்மையில் தலைமகனே யென்று எண்ணி முயங்கப் புக,
அஃது மெய்ப்புலனாகாது நிற்கவே, ஆற்றாளாகிய தலைவி இரங்கிக் கூறியது, இது.

திருவடிகள் தம்மையடைந்தார்க்கு முத்தியளித்தல் பற்றி, “பாசமாமடியர்பானேசமாமடிகளும்” என்றார்.
திருவடிகள் முதலியன மனத்தைக் கவர்தல்பற்றிப் பாராட்டிக்கூறப்பட்டன.
“நாயன்தே! ஆஸநபத்மத்திலே அழுத்தியிட்ட திருவடித்தாமரைகளும் அஞ்சலென்றகையும் கவித்தமுடியும்
முறுவல்பூரித்த சிவந்ததிருமுகமண்ட லமும் திருநுதலில் கஸ்தூரித் திருநாமமும் பரமபதத்திலே கண்டிலேனாகில்
ஒரு மூலையடியிலே முறித்துக்கொண்டு குதித்து மீண்டுவருவேன்” என்பது, இந்நூலாசிரியரின் ஆசார்யரான ஸ்ரீபட்டர்வார்த்தை.
அடிகள் முதலியன பலவிடங்களிலிருப்பதாகக் கூறியது – சிறப்பணியின்பாற்படும்.

“மார்பகலம்” என்னும் பாடத்துக்கு, அகலமாகிய மார்பென்க.

இது, எல்லாச்சீரும் விளச்சீராகிய எண்சீராசிரியவிருத்தம்.

————–

தலைவன் இடம் அணித்து என்றல்
78–எங்கணும் நிறைந்து உறையும் எம்பிரான்
கொங்கு அணுகி வண்டு முரல் கோயில் சூழ்
உங்கள் வரை எங்கள் வரை ஒன்றியே
மங்கை உன்ன கொங்கைகளை மானுமே –78–

(இ – ள்.) எங்கணும் – எல்லாவிடத்திலும்,
நிறைந்து உறையும் – அந்தரியாமியாய்த் தங்கி வசிக்கின்ற,
எம்பிரான் – நம்பெருமாளது,
வண்டு – வண்டுகள்,
கொங்கு அணுகி – தேனுக்காக நெருங்கி,
முரல் – ஆரவாரிக்கின்ற,
கோயில் – திருவரங்கத்தை,
சூழ் – சூழ்ந்த,
உங்கள் வரை – உங்களது – மலையும்,
எங்கள் வரை – எங்களது மலையும்,
ஒன்றி – நெருங்கி,
மங்கை – பெண்ணே!
உன் கொங்கைகளை – உனது தனங்களை,
மானும் – ஒத்திருக்கும்; (எ – று.)

இது, பிரியக் கருதிய தலைமகன், தலைமகள் அதற்கு உடம்படுவது காரணமாக, அவளைத் தன் ஊரினணிமை கூறி வற்புறுத்தியது.

எம்பிரானது கோயிலென இயையும். மங்கை – அண்மைவிளி. வரை ஒன்றிக் கொங்கைகளை மானு மென்றது,
கொங்கைகள் ஒன்றுக்கொன்று மிகநெருங்கியிருக்குமாறு போல, உனது இடமும் எமது இடமும், மிகவும் அணித்தென்றபடி.
இதனால் கொங்கைகளது மிக்க வன்மையும், பருமையுந் தொனிக்கின்றது. மகளிர்க்குத் தனங்கள்நெருங்கியிருத்தல், உத்தம விலக்கணம்.
எம்பெருமான் எல்லாப்பொருள்களிலும் அந்தர்யாமியாக வாழ்வனென்று சொல்லுமிடத்து அவ்வப்பொருள்களிலுள்ள
குற்ற நற்றங்களும் அவ்வெம்பெருமானைப்பற்றாவோ? என்னின், பற்றாது;
ஓருடம்பினிடத்தே வாழும் ஆத்மாவுக்கு அவ்வுடம்பைப் பற்றிவரும் இளமை முதுமை முதலியன பற்றாதவாறுபோல வென்க.

இது, முதலிரண்டுங் கூவிளங்காய்ச்சீர்களும், ஈற்றது கூவிளச்சீருமாகிய சிந்தடி நான்கு கொண்ட வஞ்சிவிருத்தம்.

————-

நாரையை நோக்கித் தலைவி இரங்கிக் கூறல்
79-மான் ஆர் கேசன் மேலார் மால் ஆய் வாழ் கோயில்
தேன் ஆர் காவில் பூ ஆராயும் தேனே போல்
நானா போகத்து இன்பம் கண்டார் நான் வாடப்
போனார் வாராது ஏதோ ஓதாய் போதாவே –79-

(இ – ள்.) போதாவே – பெருநாரையே! –
மான் ஆர் கேசன் – கங்கைமகள் பொருந்திய சடைமுடியினையுடைய உருத்திரன் முதலிய,
மேலார் – தேவர்கள், மால் ஆய் – பேரன்புகொண்டு,
வாழ் – வந்து தங்குகின்ற,
கோயில் – திருவரங்கத்தில்,
தேன் ஆர் காவில் – தேன் நிறைந்த சோலையில்,
பூ ஆராயும் – மலர்கள் தோறும் ஆராய்ந்து இனிதாய்த் தேனுண்கின்ற,
தேனே போல் – வண்டுகளைப்போல, –
நானா போகத்து இன்பம் – பலவகைப்பட்ட போகசுகங்களை,
கண்டார் – அனுபவித்தவரும்,
நான் வாட போனார் – நான் வாட்டமடையும்படி பிரிந்துபோனவருமாகிய தலைவர்,
வாராது – மீண்டும் வாராமை,
ஏதோ – யாது காரணத்தாலோ? ஓதாய் – சொல்லு; (எ – று,)

தலைமகளைப் புணர்ந்து பிரிந்து சென்ற தலைமகன் வெகுகாலமாகியும் மீண்டுவராமை கண்டு, தலைவி,
நாரையை நோக்கி யிரங்கிக் கூறியது, இது.
“பூவாராயுந் தேனேபோல் நானாபோகத் தின்பங்கண்டார்…. போனார் வாராதேதோ” என்றதனால்,
அத்தலைவர் உத்தமஜா திஸ்திரீகளாகிய பத்மினிகளிருக்குமிடமெல்லாஞ் சென்று அன்னாருடைய இன்பத்திற் பழகியவராதலின்
இப்போது எந்த மங்கையின் இன்பத்தில் மூழ்கியிருக்கின்றாரோ? என்றும், பலமகளிரது இன்பந்துய்த்தவ ராதலின்
என்னொருத்தியின்பத்திற் கருத்தைச் செலுத்தாது என்னை வருந்தும்படி விட்டுப் பிரிந்துசென்றாரென்றும் இரங்கிக் கூறியவாறு.

கேசம் – மயிர்: அதனையுடையவன் கேசன். மேலா ரென்பதற்கு – மேலுலகத்தவ ரென்றும்,
மேன்மையையுடையவ ரென்றுங் கொள்க. போதா பெருநாரை.

இது, முதல் நான்குந் தேமாச்சீர்களும், ஈற்றது தேமாங்காய்ச்சீருமாகிய கலிநிலைத்துறை.

————-

மதங்கு -மடக்கு –
80-போத எனக்கு எளிது ஆனார் போதவனுக்கு அரிது ஆனார்
நாதர் அரங்கர் திருத் தாள் நாடி அரங்கில் நடக்கின்
ஓதும் மதங்கி நடித்தால் உள்ளம் அது அங்கி அரக்கு ஆம்
வேதம் அறைந்திட வல்லீர் விரைய மறைந்து விடீரே –80-

(இ – ள்.) வேதம் அறைந்திட வல்லீர் – வேதமோத வல்லவர்காள்!-
போத எனக்கு எளிது ஆனார் – அடியனாகிய எனக்கு மிகவும்எளிமையான வரும்,
போதவனுக்கு அரிதுஆனார் – தாமரைமலரில் தோன்றிய பிரமனுக்கு அருமையானவருமாகிய,
நாதர் அரங்கர் – ரங்கநாதரது,
திரு தாள் – திருவடிகளை,
நாடி – சேவிக்க விரும்பி,
அரங்கில் – அங்குள்ள சபையில்,
நடக்கின் (நீங்கள்) செல்லுமிடத்து, (அங்கு),
ஓதும் மதங்கி -சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற மதங்கியானவள்,
நடித்தால் – நடனஞ்செய்தால்,
உள்ளமது – (அதனைக்காண்பவரது) மனமானது,
அங்கி அரக்கு ஆம் – நெருப்பிலிட்ட அரக்குப்போலக் கரைந்து உருகிப்போம்; (ஆகையால்),
விரைய மறைந்து விடீர் – விரைவாக மறைந்துசெல்லுங்கள்; (எ – று.)

மதங்குஎன்றும், மதங்கமென்றும், மதங்கியாரென்றும் வழங்குவர். இரண்டு கைகளிலும் வாளையெடுத்துச் சுழற்றிக்கொண்டு
தானும் சுழன்று ஆடுவாளோ ரிளமாதின் அழகுமிகுதியை ஒருவன் பாராட்டிக்கூறுவதாகச் செய்யுள்செய்வது, இதன் இலக்கணம்.
அங்ஙனம் ஆடுபவள், மதங்கி யெனப்படுவள். மதங்கி – ஆடல் பாடல் வல்ல பதினாறுவயதுப்பெண்.

“போதவெனக்கெளிதானார் போதவனுக்கரிதானார்” –
“பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய வித்தகன்” என்றார் ஆழ்வாரும்.
அரங்கு – நடன மண்டபம். அங்கியரக்கு – நெகிழ்ந்து கரைந்து உருகுதலில் உவமம். அங்கி = அக்நி; வடசொற்சிதைவு.
“வினையைமறந்துவிடீர்” என்னும் பாடத்துக்கு – நீங்கள் செய்யும் வைதிக கருமங்களை மறந்துவிடுங்க ளென்க.

இது, எல்லாச்சீரும் மாச்சீர்களாகிய அறுசீரடியாசிரியவிருத்தம்.

——————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –41-60-

February 19, 2022

இறுதி மடக்கு
41-திருவரங்கம் திருக் கோயில் சேர்ந்து உமது திருக்கு ஒயில்
தருவர் என்றும் வைகும் தம் தயங்கு ஒளி சேர் வைகுந்தம்
ஒரு மருங்கில் நந்து உடையார் ஒழிந்தோர் சனனம் துடையார்
மருவ மறந்திருப்பீரே வணங்க மறந்து இருப்பீரே –41-

(இ – ள்.) வணங்க – (எம்பெருமானை) வணங்குதற்கு,
மறந்திருப்பீரே – மறந்திருப்பவர்களே! – (நீங்கள்), –
திரு அரங்கம் திரு கோயில் – திருவரங்கம் பெரியகோயிலை,
சேர்ந்து – அடைந்து,
உமது – உங்களது,
திருக்கு – மாறுபாடு,
ஓயில் – ஒழிந்தால், –
ஒரு மருங்கில் நந்து உடையார் – ஒரு (இடது) பக்கத்திற் சங்கத்தையுடைய அவ்வரங்கநாதர்,
என்றும் – எந்நாளும்,
வைகும் – (தாம்) வீற்றிருக்கின்ற,
தம் – தமது,
தயங்கு ஒளி சேர் – விளங்குகின்ற ஒளி பொருந்திய,
வைகுந்தம் – பரமபதத்தை,
தருவர் – கொடுத்தருளுவர்;
ஒழிந்தொர் – அவரொழிந்த மற்றைத்தேவர்கள்,
சனனம் துடையார் – பிறப்பைப் போக்கமாட்டார்கள்; (ஆகையால்),
மருவ – (அந்த எம்பெருமானையே) சென்று – சேரும்படி,
மறம் – (உங்கள்) மாறுபாட்டை, திருப்பீர் – மாற்றுங்கள்; (எ – று.)

திருவரங்கம் பெரியகோயிலை யடைந்து உங்கள் மாறுபாட்டை யொழிப்பீராயின் எம்பெருமான்
உங்கள் பிறவிப்பிணியை யறுத்து முத்தியளிப்பனென்பதாம்.

திருக்கு – அகங்கார மமகாரங்கள். ஒழிந்தொர் – ஒழிந்தோ ரென்பதன் குறுக்கல்.
ஒழிந்தோர் சனனந் துடையார் – திருமாலை யொழிந்த மற்றைத் தேவர்கள் தம்மைச் சரணமடைந்தவரது
பிறப்பை யறுக்கும் ஆற்றலில்லாதவ ரென்க;
இனி, இதற்கு – அவ்வெம்பெருமான் திருவரங்கத்தை யடைந்தவரல்லாதவரது பிறவியைத் துடையா ரென்றுமாம்.

இது, அடிதோறுந் தனித்தனியே வந்த இறுதி முற்று மடக்கு.

இது, விளங்காய்ச்சீரும் மாங்காய்ச்சீரும் விரவிவந்த கொச்சகக்கலிப்பா.

—————

சித்து
42-திருப் பொற் பாவைக்குக் கஞ்சம் பொன் ஆக்கிய சித்தரேம் சுத்தக் காயா மலர் என
உருப் பொற்பு ஆன திரு அரங்கேசனார் ஊரகத்து நின்றார் சென்று இறைஞ்சினோம்
இருப்புப் பாடகம் காட்டினர் யாம் அவர்க்கு இரும்பை ஆடகம் ஆக்கினெம் ஈயத்தை
நருக்கி வெள்ளிய து ஆக உருக்குவோம் நமது வித்தைக்கு அமுதே அருமையே –42-

(இ – ள்.) திரு – அழகிய, பொன்பாவைக்கு – பொற்பதுமை செய்தற்கு (அழகிய திருமகளுக்கு),
கஞ்சம் பொன் ஆக்கிய – வெண்கலத்தைப் பொன்னாகச் செய்து கொடுத்த (பொற்றாமரைமலரைச் செய்துகொடுத்த),
சித்தரேம் – சித்தர்கள் (யாங்கள்);
சுத்த காயா மலர் என – தூயதாகிய காயாம்பூப்போல,
உரும் பொற்பு ஆன – வடிவழகு பொலிவுபெற்ற,
திருஅரங்கேசனார் -,
ஊரகத்து நின்றார் – ஊரினிடத்தில் நின்றார் (திருவூரகமென்னுந் திருப்பதியில் நின்றதிருக்கோலமா யெழுந்தருளியிருந்தார்);
சென்று இறைஞ்சினோம் – (அங்குச்) சென்று (அவரை) வணங்கினோம்; (அப்பொழுது அவர்),
இருப்பு பாடகம் காட்டினர் – இரும்பினாலாகியதொரு பாடகமென்னுங் காலணியைக் காண்பித்தார்
(பாடகமென்னுந்திருப்பதியைத் தாம்வீற்றிருக்குமிடமாகத் தெரிவித்தார்);
யாம் -, அவர்க்கு -, இரும்பை ஆடகம் ஆக்கினெம் – இரும்பைப் பொன்னாகச்செய்து தந்தோம்
[பெரிய (காளியனென்னும்பாம்பின்) படத்தை நடிக்குமிடமாகச் செய்தோம்];
ஈயத்தை நருக்கி -, வெள்ளியது ஆக – வெள்ளியாக (வெண்மையையுடையதாக), உருக்குவேம் -;
(இதுவெல்லாம் அருமையன்று) ; நமது வித்தைக்கு -,
அமுதே – உணவு (முத்தியுலகம்),
அருமையே – கிடைத்தற்கரிய தாமே? (அரியதன்று என்பதாம்); (எ – று.)

இரசவாதிகள் தமது திறமையை ஒருதலைவனுக்கு எடுத்துக்கூறுவதாகச் செய்யுள்செய்தல்,
சித்து என்னும் உறுப்பின் இலக்கணமாம்; இரசவாதமாவது – ஒருலோஹத்தை மற்றொருலோஹமாக மாற்றுதல்.

சித்தரென்பவர் – இரும்புமுதலிய தாழ்வான லோஹங்களைப் பொன் முதலிய உயர்ந்த லோஹங்களாகச் செய்யும் வல்லமையுள்ளவர்.
எம்பெரு மானைச்சரணமடைந்தோர் தாம் அப்பிரானையடைதற்குமுன்பிருந்த தாழ்வான நிலையினின்று மாறி
உயர்ச்சிபெறுவரென்பது, இங்குக் கருதத்தக்கது. இச்செய்யுள் – சிலேடையாக மற்றோர்பொருள் தருகின்ற நயம் பாராட்டத் தக்கது.
அடுத்த செய்யுளிலும் இங்ஙனமே காண்க.

கஞ்சம் – வெண்கலத்தைக் குறிக்கும்போது காம்ஸ்யமென்னும் வட மொழியின் சிதைவு.
சித்தர் – சித்திபெற்றவர். ஊரகம் – உலகளந்தபெருமாள் கோவில்.
பாடகம் – பாண்டவதூதர் சந்நிதி. பாடகம் – காலணியைக் குறிக்கும்போது பாதகடகமென்னும் வடசொல்லின் மரூஉ.
ஆடகம் – பொன்னைக் குறிக்கும்போது ஹாடகமென்னும் வடமொழியின் விகாரம்; நால்வகைப் பொன்களில் ஒன்று.
உள்ளுறை பொருளில் ஆடு அகமென வினைத் தொகை. வித்தை – வித்யை.

இது, முப்பத்தேழாங் கவி போன்ற கட்டளைக்கலிப்பா.

—————

(42)
(இதுவும் அது.)

43-அரும்பித் தளை அவிழ் நாள் மாலை மார்பன் அரங்கன் எங்கள்
பெரும் பித்து அளையும் பிறப்பு அறுத்து ஆண்ட பிரான் சித்தரேம்
தரும்பித்தளையும் தாராவும் பொன் ஆக்கித் தருவெம் அப்பா
திரும்பித்து அளையினும் நெய் பால் அமுதினும் சிந்தனையே –43-

(இ – ள்.) அரும்பி – (முன்னர்) அரும்பாகி,
தளை அவிழ் – (பின்பு) முறுக்குவிரிந்து மலர்ந்த,
நாள் மாலை – அன்றலர்ந்த பூமாலையையணிந்த,
மார்பன் – திருமார்பையுடையவனும்,
எங்கள் – எங்களது,
பெரும் பித்து அளையும் பிறப்பு – பெருமயக்கம் பொருந்திய பிறவியை,
அறுத்து – போக்கி,
ஆண்ட – அடிமைகொண்ட,
பிரான் – தலைவனுமாகிய அரங்கநாதனது,
சித்தரேம் – சித்தர்கள் (யாங்கள்);
தரும் – தரப்பட்ட,
பித்தளையும் – பித்தளையையும்,
[தரும் பித்தளையும் – (திருமாலுக்குப்) பித்துத்தருகின்ற திருமகளையும்,]
தராவும் – தராவையும் (பூமிதேவியையும்),
பொன் ஆக்கி தருவெம் – பொன்னாகச்செய்துகொடுப்போம்;
அப்பா -! (அங்ஙனமாகவும் எங்களுக்கு),
சிந்தனை – மனம்,
அளையினும் – வெண்ணையிலும்,
நெய் – நெய்யிலும்,
பால் அமுதினும் – பால்தயிர்களிலும், திரும்பித்து -; (எ – று.)

இச்செய்யுளில், சிலேடை யென்னும் பொருளணியோடு, திரிபு என்னுஞ் சொல்லணியும் அமைந்திருத்தல் காண்க.
தரா – ஒருவகை லோஹம். பொன்னென்பது – வெண்பொன் கரும்பொன் முதலாக எல்லா வுலோகங்களுக்கும் பொதுப்பெயராகவும் வருதலால்,
பித்தளையையுந் தராவையும் பொன்னாக்குவே மென்றார்.
தரும்பித்தள் – பித்துத்தருமவள்; “பித்தர் பனிமலர் மேற்பாவைக்கு” என்றார் திருமங்கையாழ்வாரும்.
திருமகனைப் பொன்னாக்குதல் – பொன்னென்னும் பெயருடையவ ளாக்கல்;
நிலமகளைப் பொன்னாக்குதல் – பொன்னை யுடையவளாக (வசுமதியாக)ச் செய்தல்.
தரா – ஆகாரவீற்றுவடமொழி ஈறுதிரியாது நின்றது. அப்பா – இங்கே சித்தர்கள் வழங்குவதோர் சொல்விழுக்காடு;
“தெரிசித்து நேசமுடன் பூசித்துந் திரிகின்ற சித்த ரப்பா” என்றார் இரட்டையரும்.
திரும்பிற் றென்பது, எதுகைநோக்கி மரூஉவாய் நின்றது. இச்செய்யுளில் எங்கட்கு வெண்ணெய் முதலிய சிறு பொருள்களைக்
கொடுப்பீராயின் மிகப்பெரிய தொழில்களைச் செய்து தருவோ மென்று தோன்றுதல் காண்க.

இது, நிரையசை முதலதான கட்டளைக்கலித்துறை.

————

44-சிந்திக்கத் தித்திக்கும் செவ்வாய் துவர்த் துப்பு ஆம்
புந்திக்குளே இன்புளி மேவும் நம் தம்
கரு அரங்கம் தைத்து அழலும் காவிரியின் ஊடே
திருவரங்கத்தே வளரும் தேன் –44-

(இ – ள்.) காவிரியின் ஊடு – திருக்காவேரியின் நடுவில்,
திருவரங்கத்து -, வளரும் – திருக்கண்வளர்ந்தருளுகின்ற,
தேன் – (இன்பஞ்செய்தலால்) தேன்போன்ற கடவுள், –
சிந்திக்க – மனத்தினால் நினைத்துத் தியாநஞ் செய்யும் பொழுது,
தித்திக்கும் – இனித்திருக்கும்;
செவ் வாய் துவர் துப்புஆம் – மிகச் சிவந்த பவழம் போன்ற வாயோடு கூடியிருக்கும்;
புந்திக்குளே – அறிவினுள்ளே,
இன்பு உளி – நினைக்க நினைக்க இன்பந்தந்து,
மேவும் – பொருந்தும்;
நந்தம் – நமது,
கரு அரங்கம் – கர்ப்பமாகிய சிறு வீட்டை,
கைத்து அழலும் – கோபித்து ஒழிக்கும்; (எ – று.)

திருவரங்கத்தே வளரும் தேன் – ஸ்ரீரங்கத்தில் ஆதிசேஷசயனத்தில் யோகநித்திரை செய்தருளுகின்ற திருவரங்கநாத னென்க.
உலகத்திலுள்ள தேன் இன்சுவை யொன்றையே உடையது;
திருவரங்கத்தே வளருந் தேன் தித்திப்பு முதலிய அறுவகைச் சுவையையு முடைய தென வியந்தவாறு,
எம்பெருமான் பேரின்ப மயமானவ னாதலின், அவனைத் தேன் என உருவகஞ் செய்தனர்.

உளி – உள்ளி, இதனுள் தித்திப்பு, துவர்ப்பு, உப்பு, புளிப்பு, கைப்பு, கார்ப்பு என்னும் அறுசுவையுஞ் சொல்லால்
அடுக்கி வந்தது காண்க; இது, அரதனமாலையணி; இதனை வடநூலார் ரத்நாவளி யென்பர்.
பின்னிரண்டடி – திரிபு என்னுஞ் சொல்லணியாம்.
இது, நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

இது, நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

—————–

45- தேன் நந்து சோலை அரங்கேசர் சேவடி மேல் விசயன்
தான் அந்த நாளையில் சாத்திய மாலையும் தான் விலக்கும்
வானம் தரு கங்கை நல் நீரும் சென்னியில் வைக்கப் பெற்ற
ஆனந்தம் தான் அல்லலோ முக்கணான் மன்றுள் ஆடுவதே –45–

(இ – ள்.) தேன் நந்து சோலை – தேன் மிக்குப்பெருகுகின்ற பூஞ்சோலைகளையுடைய,
அரங்கேசர் – ரங்கநாதரது,
சேவடிமேல் – சிவந்த திருவடிகளின்மேல்,
விசயன் – அருச்சுனன்,
அந்த நாளையில் – பதினான்காநாட்பாரதப்போரில்,
சாத்திய – அருச்சனைசெய்த,
மாலையும் – பூமாலையையும்,
தாள் விளக்கும் – (உலகமளந்தகாலத்துப் பிரமன் தனது கைக் கமண்டல தீர்த்தத்தால்) ஸ்ரீபாதத்தை விளக்கிச்சேர்த்த,
வானம் தரும் கங்கை நல்நீரும் – ஆகாசகங்கையின் புண்ணிய தீர்த்தத்தையும்,
சென்னியில் வைக்கப்பெற்ற – (தனது) முடியில் தரிக்கப்பெற்ற,
ஆனந்தம் தான் அல்லவோ – பெருமகிழ்ச்சியன்றோ?
முக்கணான் – திரிநேத்திரனாகிய பரமசிவன்,
மன்றுள் – சபையில்,
ஆடுவது – நடநஞ்செய்வது; (எ – று.)

சிவபெருமான் ஆனந்ததாண்டவஞ் செய்வதற்குக் கவி இவ்வாறு ஒரு காரணங் கற்பித்துக் கூறினார்; ஏதுத் தற்குறிப்பேற்றவணி;
இதனால், சிவபெருமான் பரமபாகவதர்களுள் ஒருவனென்பதும்,
பகவத் பிரசாதம் அவனடியார்க்கு மகிழ்ச்சியை விளைக்குமென்பதும் போதரும்.

இங்கு எம்பெருமானது திருவடியின் சம்பந்தமான பத்திரபுஷ்பங்களும் தீர்த்தமும் சிவனைப் பரிசுத்தனாக்கிக்
களிப்புடன் தாண்டவமாடச் செய்தன வென்க.

விசயன் – மிக்கஜயமுடையவன். பாரதயுத்தத்திற் பதினான்கா நாளில் அருச்சுனன் ஒரு அஸ்திரத்தைப் பெறவேண்டிச்
சிவனை அருச்சிக்க விரும்ப, கண்ணன் அவனிளைப்பை ஆற்றுகைக்காக ‘மலர்களை நமது காலிலே இடு’ என்று அருளிச்செய்ய,
அவனும் கண்ணனது திருவடிகளிலே இட்டு அருச்சிக்க, அன்றிரவிற் பரமசிவன் அம்மாலையைத் தலையில் தரித்துக்கொண்டு
வந்து தோன்றி அஸ்திரத்தைக் கொடுத்துப்போயின னென்க.
பிரமன் திரிவிக்கிரமாவதார காலத்தில் தனது உலகத்துச் சென்ற ஸ்ரீ பாதத்தில் தீர்த்தஞ் சேர்த்த நீர்
சிலநாள் தேவலோகத்துத் தங்கியிருந்து பின்னர்ப் பகீரதன் கொணர்ந்தபொழுது உருத்திரமூர்த்தியாற்சிரசில் வகிக்கப்பட்டதனால்,
“தாள்விளக்கும் வானந்தருங் கங்கை நன்னீர்” எனப்பட்டது.

“தீர்த்த னுலகளந்த சேவடிமேற் பூந்தாமஞ்,
சேர்த்தி யவையே சிவன்முடிமேற் றான்கண்டு,
பார்த்தன் றெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை,
பேர்த்து மொருவராற் பேசக் கிடந்ததே,”

“குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து,
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் –
கறை கொண்ட, கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினா,
னண்டத்தான் சேவடியை யாங்கு” என்றார் பெரியார்களும்.

இது நிரையசை முதலதான கட்டளைக்கலித்துறை.

————–

தலைமகனது உரு வெளிப்பாடு கண்ட தளை மகன் இரங்குதல்
46-ஆடும் பட நா கணை மேல் அணையும் அமலன் கமலத்தவனும் சிவனும்
நாடும் திருமால் துயில் கோயிலின் வாய் நறைவார் பொழிலூடு உறைவார் அளகக்
காடும் குழையைச் சாடும் குவளைக் கண்ணும் குதலைப் பண்ணும் கரியின்
கோடும் தரளத் தோடும் புருவக் கோதண்டமுமே மூதண்டமுமே –46-

(இ – ள்.) ஆடும் – எடுத்தாடுகின்ற,
படம் – படங்களையுடைய,
நாகணை மேல் – சேஷசயனத்தின்மேல்,
அணையும் – பள்ளிகொண்டருளுகின்ற,
அமலன் – குற்றமற்றவனாகிய, –
கமலத்தவனும் – பிரமனும், சிவனும் -,
நாடும் – (எந்நாளும்) ஆராய்ந்து வணங்குகின்ற,
திருமால் – எம்பெருமான்,
துயில் – திருக்கண்வளர்கின்ற,
கோயிலின்வாய் – திருவரங்கம் பெரியகோயிலில்,
நறைவார் பொழிலூடு – தேனொழுகுகின்ற சோலையினிடத்தில்,
உறைவார் – தங்குகின்ற மாதரது,
அளகம் காடும் – கூந்தற்கற்றையும்,
குழையை சாடும் – காதை மோதுகின்ற,
குவளை கண்ணும் – கருங்குவளைமலர்போன்ற கண்களும்,
குதலை பண்ணும் – இசைப்பாட்டுப்போலினிய மழலைச்சொல்லும்,
கரியின் கோடும் – யானைத்தந்தம்போன்ற தனங்களும்,
தரளம் தோடும் – முத்தினாலாகிய தோடென்னுங் காதணியும்,
புருவம் கோதண்டமுமே – வில்லுப்போன்ற (வளைந்த) புருவங்களுமாகிய இவையே,
மூதண்டமும் – பழமையான அண்டகோளமுழுவதும் (காணப்படுகின்றன); (எ – று.)

இது, தான் முன்னர்ப் பொழிலிடத்துக் கண்டு காதலித்த தலைமகளது மேனியின் எழிலை உருவெளித்தோற்றத்திலே
கண்ட தலைமகன் இரங்கிக் கூறியது. ஒரு பொருளினிடத்து ஆசையினால் இடைவிடாது கருத்தைச் செலுத்த,
அந்தப் பாவனையின் ஊற்றத்தால் அப்பொருள் கண்ணுக்கு எதிரில் தோன்றியதுபோலக் காணப்படுதல் இயல்பு.
தலைவனது கண்பார்வை செல்லுமிடமெங்கும் தன்னால் விரும்பப்பட்ட தலைமகளது அவயவங்களே தோன்றுகின்றன வென்க.

நாகணை – நாகவணை யென்பதன் தொகுத்தல் விகாரம். அமலனாகிய திருமா லென்க.
அளகம் – கடைகுழன்ற கூந்தல்; மிகுதிபற்றி, காடென்றார். குழை – காதிற்கு ஆகுபெயர்.
குழையைச் சாடும் குவளைக்கண் – காதளவும் நீண்ட கண் என்றபடி,
குதலை – நிரம்பா மென்சொல். தரளத்தோடு மென்பதற்கு – முத்துப்போன்ற பற்களுடனே யென்றுமாம்.

இது, ஐந்தாங்கவி போன்ற எண்சீராசிரியவிருத்தம்.

————-

கைக்கிளை
47-அண்டம் முழுது உண்டவர் உமிழ்ந்தவர் இடந்தவர் அளந்தவர் வளர்ந்து அருளுமா
சண்ட பண ஐந்தலை அனந்த சயனம் திகழ் தரும் திரு அரங்கர் வரை மேல்
கண்டது ஒரு கொம்பு அதில் இரண்டு மகரங்கள் ஒரு கஞ்சம் இரு வெஞ்சிலை மணம்
கொண்டது ஒரு கொண்டல் இரு கெண்டை ஒரு தொண்டை இரு கும்பம் ஒரு செம்பணிலமே–47-

(இ – ள்.) அண்டம் முழுது – எல்லா வண்டங்களையும்,
உண்டவர் – (பிரளயகாலத்தில்) திருவயிற்றிற் கொண்டவரும்,
உமிழ்ந்தவர் – (பிரளயம் நீங்கியபின்பு மீண்டும்) வெளிப்படுத்தியவரும்,
இடந்தவர் – (வராகாவதாரத்திற்) கோட்டாற் குத்தியெடுத்தவரும்,
அளந்தவர் – (திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்தருளியவருமாகிய,
மா – பெரிய,
சண்டம் – கொடிய,
பணம் – படங்களையுடைய,
ஐந் தலை – ஐந்துமுடிகளையுடைய,
அனந்த சயனம் – திருவனந்தாழ்வானாகிய திருப்பள்ளி மெத்தையில்,
வளர்ந்தருளும் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற,
திகழ்தரும் – விளங்குகின்ற,
திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதரது,
வரைமேல் – மலையின்மேல்,
கண்டது – காணப்பட்டதாகிய,
ஒரு கொம்பு – இளவஞ்சிக்கொம்பொன்று (உண்டு); அதில் -,
இரண்டு மகரங்கள் – இரண்டுமுதலைகளும்,
ஒரு கஞ்சம் – ஒருதாமரைமலரும்,
இருவெம்சிலை – இரண்டு வளைந்த விற்களும்,
மணம் கொண்டது – வாசனைகொண்டதாகிய,
ஒரு கொண்டல் – ஒரு நீர்கொண்ட மேகமும்,
இரு கெண்டை – இரண்டு கெண்டைமீன்களும்,
ஒரு தொண்டை – ஒரு கொவ்வைக்கனியும்,
இரு கும்பம் – இரண்டு குடங்களும்,
ஒரு செம் பணிலம் – அழகியதொரு சங்கமும், (உண்டு); (எ – று.)

இது, தலைவன் தலைவியைக்கண்டு அவளது எழிலை வியந்துரைத்தது.

அளந்தவராகிய அரங்கரென்க. மலையினிடத்தே காணப்பட்டாளொரு ஒல்கியொசிகின்ற தலைவியது
மேனியிடத்தே இரண்டு மகரகுண்டலங்களும், ஒப்பற்ற முகமும், இரண்டுபுருவங்களும்,
பூவின்மணங்கொண்டதொரு கூந்தலும், இரண்டுகண்களும், ஒப்பற்ற அதரமும், இரண்டு தனங்களும்,
ஒப்பற்ற கழுத்தும் உள்ளனவென்பதை மறைத்து உவமைப்பொருளாக ஆரோபித்துக் கூறினமையின், இது உருவகவுயர்வுநவிற்சியணி.

ஒருகொம்பு – தலைமகளின் உருவத்துக்கும், இரண்டு மகரங்கள் – இரண்டு குண்டங்களுக்கும், கஞ்சம் – முகத்துக்கும்,
இருவெஞ்சிலை – இரண்டு புருவங்களுக்கும்,
மணங்கொண்டதொரு கொண்டல் – இயற்கை நறுமணம் செயற்கை நறுமணங்களையுடைய கூந்தலுக்கும்,
இருகெண்டை – இரண்டு கண்களுக்கும், தொண்டை – அதரத்திற்கும், இருகும்பம் – இரண்டு தனங்களுக்கும்,
செம்பணிலம் – சிவந்தகழுத்துக்கும் உவமையாதல் காண்க.
இதில் திருவரங்கராகிய மரகதக்குன்றின்பக்கல் இத்தகைய அவயவச்சிறப்புக்களையுடைய திருமகளாகிய
ஒருபூங்கொம்பு காணப்பட்ட தென்னும் பொருளும் உள்ளுறையாய்த் தோன்றுமாறு அறிக.
புணர்ச்சி குறிஞ்சி நிலத்துக்கண்ணதாகலின், “அரங்கர்வரைமேற் கண்ட தொரு கொம்பு” என்றார்.

இது, ஆறாங்கவி போன்ற எழுசீராசிரியச்சந்தவிருத்தம்.

——————-

தலைவி இரங்கல்
48-செம்பொன் அரங்கத் தரங்க நீர்ச் சீதள சந்திர வாவி சூழ்
கம்புளுடன் பயில் நாரைகாள் காதலை என் சொலி ஆறுவேன்
வெம்பனி வந்தது வந்த பின் வேனிலும் வந்தது வேனில் போய்
பைம்புயல் வந்தது சென்ற நம் பாதகர் வந்திலர் காணுமே –48–

(இ – ள்.) செம் பொன் – சிவந்த பொன்மயமாகிய,
அரங்கம் – திருவரங்கத்திலுள்ள,
தரங்கம் நீர் – அலைகளோடு கூடிய நீரையுடைய,
சீதள சந்திர வாவி – குளிர்ந்த சந்திரபுஷ்கரிணியில்,
சூழ் – திரண்டுள்ள,
கம்புகளுடன் – நீர்ப்பறவைகளுடன்,
பயில் – பழகுகின்ற,
நாரைகாள் – நாரைகளே!
காதலை – (என்) காமநோயை,
என் சொலி – என்னவென்று சொல்லி,
ஆறுவேன் – தணிவேன்?
வெம் பனி – கொடிய பனிக்காலம்,
வந்தது – வந்தபின் – (அது) கழிந்தபின்பு,
வேனிலும் – வெயிற்காலமும்,வந்தது –
வேனில் போய் – வெயிற்காலங் கழிந்தபின்,
பைம் புயல் – பசிய கார்காலம், வந்தது-; (அங்ஙனம் வந்தபின்பும்),
சென்ற – விட்டுப்பிரிந்துபோன,
நம் – நமது,
பாதகர் -,
வந்திலர் – வந்தாரில்லை; (எ – று.)

இது, பனிக்காலத்தில் வருவதாகக் காலங்குறித்துச்சென்ற தலைமகன் கார்காலத்தளவும் வாராமையாற்
பிரிவாற்றாத நெய்தனிலத்துத் தலைமகள் வருந்தி அந்நிலத்துப் பறவைகளை நோக்கி இரங்கிக் கூறியது.
இப்படிப் பட்ட கார்காலத்தில் யான் எங்ஙனம் தலைவனைப் பிரிந்து உயிர் வாழ்வது? எனத் தலைவி இரங்கியவாறு.

கரையிற் சந்திரன் நின்று தவஞ்செய்து தன்குறைதீர்ந்ததனால், சந்திர புஷ்கரிணி யெனப் பெயர்.
வாவி – வாபீ என்னும் வடமொழியின் சிதைவு. பனி, வேனில், புயல் என்பன – அவ்வக்காலத்துக்கு ஆகுபெயர்.
மார்கழியுந் தையுமாகிய முன்பனிக்காலமும் மாசியும் பங்குனியுமாகிய பின்பனிக்காலமும் அடங்க ‘பனி’ என்றும்,
சித்திரையும் வைகாசியுமாகிய இளவேனிற் காலமும் ஆனியும் ஆடியுமாகிய முதுவேனிற்காலமும்
அடங்க “வேனில்” என்றும் பொதுவாகக்கூறினார். பாதகர் – தீவினையுடையவர்;
இரக்கஞ்சிறிது மின்றிப் பிரிந்துபோனதேயுமன்றிக் குறியிட்டகாலத்தே மீண்டும்வாராமை பற்றி, பாதகரென்றார்;
இனி, வருத்தமுறுத்துபவரென்றும் பொருள்கொள்ளலாம். காணும் – முன்னிலைப்பன்மையசைச்சொல்.

இது, எல்லாச்சீருங் கூவிளச்சீர்களாகிய அறுசீராசிரியவிருத்தம்.

————-

சம்பிரதம் –
49-காணாத புதுமை பல காட்டுவன் கட் செவிகள் எட்டையும் எடுத்து ஆட்டுவன்
கடல் பருகுவன் பெரிய ககன வரையைச் சிறிய சுடுகினில் அடைத்து வைப்பன்
வீண் ஆரவாரம் மூதண்டம் உறவிளைவிப்பன் இரவு பகல் மாறாடுவன்
விண்ணையும் மறைப்பன் எழு மண்ணையும் எடுப்பன் இவை விளையாடும் வித்தை அன்றால்
நீள் ராகணைப் பள்ளியில் திரு அரங்கத்து நெடிது ஊழி துயிலும் பிரான்
நெற்றிக் கண் ஆனவனை நான் முகனை வாசவனை நிமிரும் இரு சுடரை முதலாச்
சேண் நாடார் யாவரையும் அடிமை கொண்டு அவரவர் சிரத்தில் பொறித்து விட்ட
திருச் சக்கரப் பொறி இலாத ஒரு கடவுளைத் தேடி இனி முன் விடுவனே –49-

(இ – ள்.) காணாத – (இதுவரையிலுங்) கண்டிராத,
புதுமை பல – பல அற்புதச்செய்கைகளை,
காட்டுவன் – காண்பிப்பேன்;
கட்செவிகள் எட்டையும் – அஷ்டநாகங்களையும்,
எடுத்து ஆட்டுவன் – படமெடுத்து ஆடச்செய் வேன்;
கடல் – ஏழுகடல்களையும்,
பருகுவன் – குடிப்பேன்;
பெரிய -, கனக வரையை – பொன்மயமான மேருமலையை, சிறிய -,
கடுகினில் – கடுகினுள்ளே,
அடைத்து வைப்பன் – அடங்கும்படி சேர்த்துவைப்பேன்;
வீண் ஆரவாரம் – வீணான பேரொலியை,
முது அண்டம் உற – பழைய அண்டங்களிலெல்லாம் பொருந்தும்படி,
விளைவிப்பன் – உண்டாக்குவேன்;
இரவு பகல் மாறாடுவன் – இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாறச்செய்வேன்;
விண்ணையும் – ஆகாயமுழுவதையும்,
மறைப்பன் – மறைப்பேன்;
எழு மண்ணையும் – ஏழு உலகங்களையும்,
எடுப்பன் – எடுப்பேன்;
இவை – இவைகளெல்லாம்,
விளையாடும் வித்தை அன்று – விளையாட்டாகச்செய்யுஞ் சிறந்ததொரு ஜாலவித்தையல்ல; இனி -, திருவரங்கத்து -,
நீள் நாகணை பள்ளியில் – நீண்ட ஆதிசேஷனாகிய திருப்பள்ளிமெத்தையின்மேல்,
நெடிது ஊழி – நெடியபலஊழிகாலமாய்,
துயிலும் – திருக்கண்வளர்கின்ற,
பிரான் – எம்பெருமான்,
நெறிக்கண்ஆனவனை – நெற்றியில் நெருப்புக்கண்ணையுடைய சிவனையும்,
நான்முகனை – பிரமனையும்,
வாசவனை – இந்திரனையும்,
நிமிரும் – விளங்குகின்ற,
இரு சுடரை – சந்திர சூரியர்களையும்,
முதலா – முதலான,
சேணாடர் யாவரையும் – தேவர்களனைவரையும்,
அடிமை கொண்டு – (தமக்கு) அடிமையாகக் கொண்டு,
அவர் அவர் சிரத்தில் – அவ்வத்தேவர்களது தலைகளில்,
பொறித்துவிட்ட – அடையாளஞ்செய்துவைத்த,
திரு சக்கரம் பொறி – அழகிய சக்கரமுத்திரை,
இலாத – உடைத்தாகாத,
ஒரு கடவுளை – ஒருதெய்வத்தை,
தேடி – தேடிக்கொண்டுவந்து,
முன் விடுவன் – முன்னேவிடுவேவன். (எ – று.)

இந்திரஜாலம் முதலிய மாயவித்தை வல்லவர் தமது சிறப்பைத் தாமே எடுத்துக் கூறுவதாகச் செய்யுள் செய்வது,
சம்பிரதம் என்னும் உறுப்பாம்.

என்றது, எம்பெருமானது சக்கரப்பொறியில்லாத ஒரு தேவதாந்தரம் எவ்வுலகிலு மில்லையாதலால்,
அப்படிப்பட்ட தேவரைத் தேடிக்கொணர்தல் அருமை யென்பது தோன்ற, இனித் தேடிமுன்விடுவேனென
அருமை அறிவித்ததெனக் கொள்க. இனி, அங்ஙனம் திருமாலினது சக்கரப் பொறி யில்லாத தெய்வத்தை
முன்னே துறந்துவிடுவே னென்னும் பொருளும் இங்குத் தோன்றும்.

கட்செவி – கண்களையே காதுகளாகவும் உடையது; “சக்ஷுஸ்ர வா:” என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு.
அஷ்டமகா நாகங்க ளாவன – வாசுகி, அநந்தன், தக்ஷகன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன்;
இவை, முறையே கிழக்குமுதலிய எட்டுத் திக்குக்களிலும் நின்று ஆதிசேஷனுக்குத் துணையாய்ப் பூமியைத் தாங்குவன.
எடுத்து – தூக்கியென்றுமாம். ஆரவாரம் – ஆரவாராவமென்ற வடமொழியின் சிதைவு. ஊழி – யுகம்.
சேணாடர் – உயர்ந்த சுவர்க்கலோகத்தி லுள்ளவர். திருச்சக்கரப்பொறி – ஸ்ரீசக்கராங்கம். சம்பிரதம் – ஜாலவித்தை.

இது, பெரும்பாலும் முதலைந்துசீர்களுங் காய்ச்சீர்களும், மற்றை யிரண்டும் மாச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும்,
அஃதுஇரட்டிகொண்டது ஓரடியாகவும் நின்ற பதினான்குசீராசிரியவிருத்தம்.

——–

இடம் அணித்து என்றல்
50-முன்னம் ஏழ் புரவி ஆர் இரவி காய் வெயிலினால்
முத்து அரும்பிய கலா முழு மதித் திரு முகத்து
அன்னமே இன்னம் ஓர் காவதம் போது மேல்
அகலும் இப்பாபாலை அப்பால் அரைக் காவதம்
என்னை ஆளுடையவன் துயில் அரா அமளியும்
இலகு பொற் கோயிலும் இந்துவின் பொய்கையும்
புன்னை வாய் நீழலும் புரிசையும் மது கரம்
பூ விரிந்து உறையும் அக்காவிரித் துறையுமே –50-

(இ – ள்.) முன்னம் – எதிரில்,
ஏழ் புரவி ஆர் இரவி – ஏழுகுதிரைகள் பூண்ட (தேரினையுடைய) சூரியன்,
காய் – எறிக்கின்ற,
வெயிலினால் -, முத்து அரும்பிய – முத்துப்போலும் வேர்வை பொடித்த,
கலா முழு மதி – கலைகள் நிறைந்த பூர்ணசந்திரன்போன்ற,
திரு முகத்து – அழகிய முகத்தையுடைய,
அன்னமே – (நடையால்) அன்னம்போன்றவளே! –
இன்னம் ஓர்காவதம் – இன்னமொரு காததூரவழி,
போதும் ஏல் – போவோமாயின்,
இ பாலை அகலும் – இந்தப்பாலைநிலம் நீங்கும்;
அப்பால் – அதுநீங்கினபின்பு,
என்னை ஆளுடையவன் – என்னை அடிமையாகக் கொண்ட எம்பெருமான்,
துயில் – அறிதுயிலமர்கின்ற,
அரா அமளியும் – சர்ப்பசயனமும்,
இலகு பொன் கோயிலும் – விளங்குகின்ற பொன்மயமான திருக்கோயிலும்,
இந்துவின் பொய்கையும் – சந்திரபுஷ்கரிணியும்,
புன்னை வாய் நீழலும் – புன்னைமரத்தினது வாய்ப்பாகிய நிழலும்,
புரிசையும் – மதில்களும்,
மதுகரம் – வண்டுகள்,
பூ விரித்து உறையும் – மலர்களை விரித்துப் படிந்து தேனுண்ணுகின்ற,
அ காவிரி துறையும் – அந்தக் காவேரிதீரமும்,
அரைகாவதம் – அரைக்காததூரமே; (எ – று.)

எனவே, அவ்வளவும் நீ தளராமல் வரவேண்டு மென்றபடி. இது, தலைமகளை உடன்கொண்டுபோகின்ற தலைமகன்,
அவள் இடைவழியிற் பாலைநிலத்திற் செல்லும்போது வெயிலால் மிகவும் வருந்தி இளைப்புற்றது நோக்கி,
அவளுக்கு வழிநடையிளைப்புத் தோன்றாதிருத்தற்பொருட்டு அவளைத் தான்போகுமிடத்தின் அணிமை கூறி ஆற்றியது.
“கொடுங்கடஞ்சூழ் ந்த குழைமுகமாதர்க்குத், தடங்கிடங்கு சூழ் தன்னகர் காட்டியது” என்ற கொளுவையுங் காண்க.

தலைமகனும் தலைமகளும் தாம் விட்டுப்பிரியாது ஒருவர்க்கொருவர் தனிநிழலாயிருக்கையாலே இவர்களுக்குக்
கொடிய இந்தப்பாலைநிலத்தின் கொடுமையா லுண்டாகும் இளைப்பு இல்லையே யாகிலும் பொழுது போக்குக்காகத்
தலைவன் தலைவியை நோக்கி இங்ஙனங் கூறின தென்றலு முண்டு. நீர்வளமுள்ள மருதநிலத்து வாழும்
அன்னப்பறவை போன்ற இத்தலைவிக்கு இந்தக் கொடியபாலை வருத்தத்தை விளைக்குமென்பது தோன்ற,
“இரவிகாய் வெயிலினான் முத்தரும்பிய கலாமுழுமதித் திருமுக த்தன்னம்” என்றான்;
அப்பால் அரைக்காவதம் சென்றவாறே அங்கு அன்னத்துக்கு உவப்பாகிய சந்திரபுஷ்கரிணி காவிரியாற்றுத்துறை
முதலியன உளவாகக் கூறியதுங் காண்க. இவ்வாறு கூறியதனால், பாலைநிலத்தால் வந்த வெம்மையையும் போக்கி
நமக்கு ரக்ஷகமு மான தேசங்காண் அது;
இந்தப் பாலைநிலமேயன்றி இன்னமும் சிலபாலைவனமும் கடக்கலா மென்பது தொனிக்குமாறு காண்க.

காவிரித்துறையும் புரிசையும் கோயிலும் புன்னைநீழலும் இந்துவின் பொய்கையும் அராவமளியுந் தோன்றுமென்று முறைப்படுத்தி யுரைக்க;
பாடக்ரமத்தினும் அர்த்தக்ரமம் வலியுடைத்தென்பது நியாயமாதலால். புன்னைமரம் சந்திரபுஷ்கரிணியின் கரையிலுள்ளது;
இந்தவிருக்ஷத்தைப்பற்றி ஸ்ரீபட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் மிகவும் பாராட்டி அருளிச்செய்திருத்தல் காண்க.
சூரியனது தேர்க்குதிரைகள் ஏழென்னுந்தொகையின வென்பாரும், ஏழெனப் பெயர்பெற்ற குதிரையொன்றே யென்பாரும்,
எழு குதிரைகளுண்டு அவற்றுள் ஏழெனப்பெயர்பெற்ற தொன் றென்பாரும் உளர். முன்னங்காய் வெயில் – எதிர்வெயில்.

இது, எல்லாச்சீரும் விளச்சீர்களாகிய எண்சீராசிரியவிருத்தம்.

————-

தோழி தலைவனது இரவுக் குறி விலக்கல்
51-துறை மதியாமல் இக்கான்யாறு நீந்தி சுரம் கடத்தல்
நிறை மதி யாளர்க்கு ஒழுக்கம் அன்றால் நெடுமால் அரங்கத்து
இறை மதியா வரும் ஆரா அமிர்து அன்ன இந்த நுதல்
குறை மதியாள் பொருட்டால் கங்குல் வாரல் எம் கொற்றவனே –51-

(இ – ள்.) எம் கொற்றவனே – எமது தலைவனே! –
துறை மதியாமல் – செல்லும் வழியை நன்றாக ஆராயாமல்,
இ கான் யாறு நீந்தி – இக்காட்டாற்றை நீந்திக் கடந்து,
சுரம் கடத்தல் – கொடிய காடுகளைத் தாண்டிவருதல்,
நிறை மதியாளர்க்கு – நிறைந்த அறிவினை யாளுந்தன்மையுடையார்க்கு,
ஒழுக்கம் அன்று – நல்லொழுக்கமன்று;
ஆல் – ஆகையால், –
அரங்கத்து இறை – அரங்கநாதராகிய,
நெடு மால் – நீண்ட திருமால்,
மதியா – (திருப்பாற்கடலைத் தேவர்களோடுங்) கடையாமலே,
வரும் – தோன்றின,
ஆரா அமிர்து அன்ன – தெவிட்டாத அமிருதத்தை யொத்த,
இந்து நுதல் குறை மதியாள்பொருட்டால் – பிறைச்சந்திரன்போன்ற நெற்றியையுடைய இவள் நிமித்தமாக,
கங்குல் – இராத்திரியில்,
வாரல் – வருதலை (இனி) ஒழிவாயாக. (எ – று.)

இயற்கைப்புணர்ச்சிபெற்ற தலைமகன் பின்பு தலைமகளது தோழியினுதவியைக்கொண்டு தலைமகளைப் பகலிலும் இரவிலும்
களவுநெறியில் ஏகாந்தத்திலே சந்தித்தல் இயல்பு; அது, பகற்குறி இரவுக்குறி எனப்படும்.
தலைமகனது வேண்டுகோளின்படி ஒருநாள் இரவிற் குறிப்பிட்டதொரு சோலையினிடத்தே அத்தலைமகனையும் தலைமகளையும்
சந்திக்கச்செய்த தோழி, பின்பும் அக்களவொழுக்கத்தையே வேண்டிய தலைமகனுக்கு, அவன் வரும் நெறியின் அருமையையும்,
அதுகருதித் தாங்கள் அஞ்சுதலையுங் குறித்து “நீ எந்தஇடத்திலும் எந்தப்பொழுதிலும் அஞ்சாது வரக்கூடிய
தேகபலம் மனோபலம் தந்திரம் முதலியவற்றை யுடையாயாயினும், நினது வரவு எங்கட்குத் துன்பமாகத் தோன்று மாதலால்,
இனி இவ்விருளிடை இங்ஙனம் வரற்பாலையல்லை” என்று விலக்குதல், இச்செய்யுளிற் குறித்த அகப்பொருள்துறை.
இது, “ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி” எனப்படும். (ஆறு – வழி, கிளவி. பேச்சு.)
தலைவன் வரும் வழி மிகவும்இன்னாது, நீருடையது, கல்லுடையது, முள்ளுடையது, ஏற்றிழிவுடையது,
கள்ளர் புலி கரடி யானை பாம்பு முதலிய கொடிய பிராணிகளை யுடையது என்று கவலுங் கவற்சியாற் சொல்லுவதென்க.
இதில், மெய்ப்பாடு – அச்சம். இதன்பயன் – வெளிப்படையாக வந்து மணஞ்செய்துகொள்ளுதலை வற்புறுத்துதல்.
ஐவகை நிலங்களுள் மலையும் மலைசார்ந்தஇடமும் குறிஞ்சியாமென்பதும், “புணர்தல் நறுங்குறிஞ்சி” என்றபடி
புணர்ச்சி குறிஞ்சித்திணைக்குரிய பொருளென்பதும், “குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்” என்றபடி
பெரும் பொழுதினுட் சரத்காலமும் சிறுபொழுதினுள் நள்ளிரவும் குறிஞ்சிக்கு உரிய காலமென்பதும் அறியத்தக்கன.
“உள்ளமஞ்சாய் வலியாய் வலியார்க்குமு பாயம்வல்லாய்,
கள்ள மஞ்சாயுதங் கைவருமாயினுங் கங்குலினில்,
வள்ள மஞ்சார்பொழில் வேங்கடக்குன்றினில் வீழருவிப்,
பள்ளமஞ்சாரல் வழிவரில் வாடு மிப்பாவையுமே” என்ற திருவேங்கடத்தந்தாதியையும் காண்க.

துறை மதித்தல் – இது செல்லுந் துறை, இது செல்ல வொண்ணாத் துறையென ஆராய்தல்.
திருப்பாற்கடல் கடைந்த காலத்து அதினின்று தோன்றிய தேவாமிருதத்தினும் மேலானவ ளென்பார், “மதியாவருமாரா வமிர்து” என்றனர்.
வாரல் – வா என்னும் பகுதியிற் பிறந்த எதிர்மறைவிய ங்கோள். திரிபணி.

இது, நிரையசை முதலதான கட்டளைக்கலித்துறை.

————

மறம்
52- கொற்றவன் தன் திரு முகத்தைக் கொணர்ந்த தூதா
குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்
அற்றவர் சேர் திரு அரங்கப் பெருமாள் தோழன்
அவதரித்த திருக் குலம் என்று அறியாய் போலும்
மற்றது தான் திரு முகமே ஆனால் அந்த
வாய் செவி கண் மூக்கு எங்கே மன்னர் மன்னன்
பெற்ற இள அரசு ஆனால் ஆலின் கொம்பைப்
பிறந்த குலத்தினுக்கு ஏற்கப் பேசுவாயே –52-

(இ – ள்.) கொற்றவன்தன் – வெற்றியையுடைய வேந்தனது,
திருமுகத்தை -, கொணர்ந்த – கொண்டுவந்த,
தூதா – தூதனே! –
குறை உடலுக்கோ – (முகமில்லாத) முண்டத்துக்கோ,
மறவர் கொம்பை – வேடர்களாகிய எங்களது பூங்கொம்பை,
கேட்டாய் – (மணஞ்செய்து தரும்படி) கேட்டாய்; (எங்கள் குலம்),
அற்றவர் சேர் – இருவகைப்பற்றுமற்று முற்றத்துறந்த முனிவர்களெல்லாம் அடைக்கலமடைகின்ற,
திருவரங்கப்பெருமாள் – திருவரங்கத்திலெழுந்தருளியிருக்கின்ற நம்பெருமாளது,
தோழன் – நண்பனாகிய குகப்பெருமாள்,
அவதரித்த – திருவவதாரஞ் செய்த,
திரு குலம் என்று – மேன்மையான குலமென்று,
அறியாய்போலும் – (நீ) அறிந்திலைபோலும்;
அது – நீ கொணர்ந்தது, திருமுகமே ஆனால் -,
அந்த – அதன் உறுப்பாகிய, வாய் செவி கண் மூக்கு எங்கே -?
மன்னர் மன்னன் பெற்ற – அரசர்க் கரசனாகிய சக்கரவர்த்தி பெற்ற,
இள அரசு ஆனால் – இளைய அரசானால், பிறந்த குலத்துக்கு ஏற்க.-
அதுதான் பிறந்தகுலத்திற்குப் பொருந்த, ஆலின் கொம்பை – ஆலமரத்தின் கொம்பை,
பேசுவாய் – மணம்பேசுவாயாக; (எ – று.)

தமதுமகளை மணம்பேசும்படி அரசரால் அனுப்பப்பட்ட தூதனைநோக்கி மறவர்கள் மணம் மறுத்து அவ்வரசரை இகழ்ந்து
பேசினதாகச் செய்யுள் செய்வது, மறம்என்னும் உறுப்புக்கு இலக்கணமாம்.
இதனை மகட்பாற்காஞ்சி யென்னும் துறையின் இனமாகக் கூறுவர்.
மகட்பாற்காஞ்சியென்பது – புறப்பொருள்திணை பன்னிரண்டனுள் காஞ்சித்திணைக்கு உரிய பலதுறைகளில் ஒன்று.
அதாவது – நின்மகளை எனக்குத்தருக வென்று சொல்லும் அரசனோடு மாறுபடுவது;
“ஏந்திழையாட்டருகென்னும், வேந்தனோடு வேறு நின்றன்று –
அளியகழல்வேந்தரம்மாவரிவை, யெளியளென்றெள்ளியுரைப் பிற் –
குளியாவோ, பண்போற்கிளவியிப்பல்வளையாள் வாண்முகத்த, கண்போற் பகழி கடிது” என்ற புறப்பொருள்வெண்பாவைக் காண்க.

“மணித்தாரரசன்றன்னோலையைத் தூதுவன் வாய்வழியே,
திணித்தாசழியச்சிதைமின் றலையை யெந்தீவினையைத்,
துணித்தான் குருகைப்பிரான் றமிழாற் சுருதிப் பொருளைப்,
பணித்தான் பணியன்றெனிற் கொள்ளுங்கொள்ளு மெம்பா வையையே” என்னுஞ் சடகோபரந்தாதிச் செய்யுள் கருதத்தக்கது.

திருவரங்கநாதனுக்கே உரிமை பூண்பவளான தமது மகளை மணம்பேசும் படி ஓர்அரசனால் ஓலைகொடுத்து அனுப்பப்பட்ட
தூதன் அவ்வரசன் கட்டளைப்படி தம்பக்கல்வந்து ஓலைகொடுத்துச் சிலவார்த்தை கூறி மணம் பேசுவானாக,
அம்மகட்கு உரியார் மிகக்கோபங்கொண்டு அந்தமணப்பேச்சை மறுத்து அவ்வரசனைக் குறித்துப் பரிகசித்துக் கூறினரென்க.
திருவரங்கநாதனுக்கே அடிமைபூண்ட எமதுஉயிர் பிறிதொரு கடவுளர்க்கேனும் மானிடர்க்கேனும் உரிமைபூணாது என்று,
அங்ஙனம் பிறர்க்கு ஆட்படுத்த முயல்வாரைநோக்கி ஐயங்கார் கடிந்து கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.

ஓலையைத் திருமுகமென்பது, குழூஉக்குறி. மறவர் கொம்பென்றது, தம்மைப் பிறர்போற்கூறிய படர்க்கை; இடவழுவமைதி.
கொம்பு – பூங்கொம்பு போன்ற பெண்ணுக்கு உவமயாகுபெயர்.
அற்றவர்சே ரென்பதற்கு – வேறுபுகலிடமில்லாதவர்களாய் யாவருமடைகின்ற வென்றும் பொருள்கொள்ளலாம்.
குகன் தோழனானது, ஸ்ரீராமாவதாரத்தில். போலும் – ஒப்பில்போலி. மற்று – வினைமாற்று.
அரசென்னும் பண்புப்பெயர், அரசனுக்கு ஆகுபெயர். திருமுகமென்பதில் அழகியமுகமென்றும்,
கொம்பென்பதில் மரத்தின்கொம்பென்றும், அரசென்பதில் அரசமரமென்றும் பொருள்கொள்ளக்கிடத்தலால், இங்ஙனங் கூறினார்.

இது, பதினைந்தாங் கவிபோன்ற எண்சீராசிரியவிருத்தம்.

——————

இதுவும் அது –
53- பேச வந்த தூத செல் அரித்து ஓலை செல்லுமோ
பெரு வரங்கன் அருள் அரங்கர் பின்னை கேள்வர் தாளிலே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து முன்னமே
பட்ட மன்னர் பட்டது எங்கள் பதி புகுந்து பாரடா
வாசலுக்கு இடும் படல் கவித்து வந்த கவிகைமா
மகுட கோடி தினை அளக்க வைத்த காலும் நாழியும்
வீச சாமரம் குடில் தொடுத்த கற்றை சுற்றிலும்
வேலி இட்டது அவர்கள் இட்ட வில்லும் வாளும் வேலுமே –53-

(இ – ள்.) பேச – (எங்கள்பெண்ணை மணம்) பேசுவதற்கு, வந்த – தூத – தூதனே! –
செல் அரித்த – செல்லினால் அரிக்கப்பட்ட, ஓலை -, செல்லுமோ -?
பெரு வரங்கள் – பெரிய வரங்களை, அருள் – (தம் அடியார்கட்கு) அருளுகின்ற,
அரங்கர் – திருவரங்கநாதரும்,
பின்னை கேள்வர் – நப்பின்னையின் கணவரு மாகிய நம்பெருமாளது,
தாளிலே – திருவடிகளிலே, பாசம் வைத்த – அன்பு வைத்த,
மறவர் பெண்ணை – வேடர்களாகிய எங்களது மகளை, நேசம் வைத்து – விரும்பி,
முன்னமே – முன்னாட்களிலே,
பட்டம் மன்னர் – பட்டந்தரித்த அரசர்கள்,
பட்டது – பட்ட பாடுகளை,
எங்கள் பதி புகுந்து – எங்களூரினுள் வந்து, பார்அடா -;
வாசலுக்கு இடும் படல் – (எங்கள் வீட்டு) வாசலில் வைத்து மூடும் படல்,
கவித்து வந்த – (அவர்கள்) பிடித்துவந்த, கவிகை – குடைகளாம்;
தினை – தினையரிசிகளை, அளக்க – அளக்கும்படியாக, வைத்த -,
காலும் – மரக்கால்களும்,
நாழியும் – படியும் முதலிய அளவுகருவிகள்,
மா மகுடம் கோடி – (அவர்கள்தரித்துவந்த) பெரிய கிரீடங்களின் கூட்டமாம்;
குடில் தொடுத்த – (எங்கள்) குடிசைக்குமேல் மூடுகின்ற, கற்றை -,
வீசு சாமரம் – (அவர்களுக்கு) வீசி வந்த சாமரங்களாம்;
சுற்றிலும் – (எங்கள்வீட்டின்) நாற்புறத்திலும், வேலி இட்டது – வேலியாகப் போகட்டது,
அவர்கள் இட்ட – அவர்கள் (தோல்வியடைந்து) போகட்டுப்போன, வில்லும் வாளும் வேலுமே – (ஆகும்); (எ – று.)

இவ்வாறு கூறியது, உன்னை யேவிய அரசனுக்கும் இக்கதியே நேருமென்று குறித்தற்கு.
“எல்லாம் வெகுண்டார்முன் தோன்றாக்கெடும்” ஆதலால், மிக்க கோபாவேசத்தால் இங்ஙனம் கொடுமைகூறின ரென்க.

செல் – கறையான். மறவர் தாம் எழுத்தறியாதவ ராதலால், எழுத்தெழுதிய ஓலையை “செல்லரித்தவோலை” என்றார்.
செல்லுதல் – பயன்படவழங்குதல். “நேசம்வைத்து” என்பது, ஒருசொல்நீர்மைத்தாய் “பெண்ணை” என்பதற்குப் பயனிலையாய் நின்றது.
வாசல் – வாயிலென்பதன் மரூஉ. படல் – கட்டி கவிகை – கவிந்திருப்பது. கற்றை – விழல்தொகுதி போல்வன.

இது, ஏழாஞ்சீரும் ஈற்றுச்சீரும் விளச்சீர்களும், மற்றையவெல்லாம் மாச்சீர்களுமாகிய பதினான்குசீராசிரியவிருத்தம்.

—————

54–வேலை உலகில் பிறக்கும் வேலை ஒழித்தோம் இல்லை
மாலை அரங்கேசனை நாம் மாலையிலும் காலையிலும்
உன்னி நைந்தோம் இல்லை உடல் எடுத்த அன்று முதல்
என் நினைந்தோம் நெஞ்சே இருந்து –54–

(இ – ள்.) நெஞ்சே – ! – நாம் -, வேலை உலகில் – கடல்சூழ்ந்த இந்த நிலவுலகத்தில்,
பிறக்கும் வேலை – பிறக்குந் தொழிலை, ஒழிந்தோம் இல்லை. நீங்கிற்றிலோம்;
மாலை அரங்கேசனை – ரங்கநாதனாகிய திருமாலை,
மாலையினும் காலையினும் – காலையும் மாலையும்,
உன்னி -தியானித்து,
நைந்தோம் இல்லை – மனம்நெகிழ்கிற்றிலோம்;
உடல் எடுத்த அன்றுமுதல் – இவ்வுடம்பெடுத்த அந்நாள்முதல்,
இருந்து என் நினைந்தோம் – வேறு என்ன பெரிய காரியத்தை எண்ணியிருந்தோம்? (எ – று.)

நமது பிறப்புத்தொழிலை நீக்குதற்குக் கடவராகிய திருவரங்கநாதரது மகிமையை உணர்ந்து அவரையே
காலை மாலைகளில் தியானிப்பது நமதுகட மையாயிருக்க, அதுசெய்யாது இதுவரை பழுதே பலபகலும்
போயினவென்று அஞ்சி அதுகுறித்து அநுதாபங்கொண்டு கழிவிரக்கத்தாற்கூறியது இது.

வேலையுலகிற் பிறக்கும் வேலை யொழியாமைக்குக் காரணத்தை, காலை மாலைகளில், ஸ்ரீரங்கநாதனைத் தியானியாமல்
வீண்பொழுது போக்கினமை யெனப் பின்மூன்றடிகளில் விளக்கினார்; தொடர்நிலைச்செய்யுட்குறியணியின் பாற்படும்.
மடக்கு என்னுஞ் சொல்லணியும் இதிற் காணத்தக்கது. இனி, நா எனப் பிரித்து – நாவினால், உன்னி – துதித்து என்றுமாம்.

பிறப்பென்னும்வாய்பாட்டான் முடிந்த இருவிகற்பநேரிசைவெண்பா

———–

இயலிடம் கூறுதல்
55-இரும்புவனம் விரும்புவனம் அணி அரங்கர் பணி அரங்கர் இமய நண்ப
வரும் கொடியின் மருங்கு ஓடியின் மனம் குழைக்கும் கனங்குழைக்கும் அனங்கன் சாபக்
கரும்பு உருவம் பொரும் புருவம் முத்தம் நகை ஒத்தன கை காந்தள் பூந்தேன்
மருங்கு உழலும் கருங்குழலும் முருகு வளை இருகு வளை மழைக்கண் தாமே –55-

(இ – ள்.) இரும் புவனம் – பெரிய உலகங்கள் முழுவதையும்,
விரும்பு (உணவாக) விரும்பி அமுதுசெய்த,
வனம் அணி – வனமாலையை அணிந்த,
அரங்கர் – அரங்கநாதரும்,
பணி அரங்கர் – ஆதிசேஷனைப் பள்ளிகொள்ளுமிடமாக வுடையவரு மாகிய நம்பெருமாளது,
இமயம் – இமயமலைபோன்ற மலையினிடத்துள்ள, நண்ப – தோழனே! –
கனங் குழைக்கு – (யான் கண்ட) கனமாகிய காதணியையுடைய பெண்ணுக்கு,
வரும் கொடியின் – வளர்கின்ற பூங்கொடிபோன்ற,
மருங்கு – இடையானது,
ஒடியின் – (தான்) ஒல்கினால்,
மனம் – (ஆடவர்களது) நெஞ்சத்தை,
குழைக்கும் – தளரச்செய்யும்;
புருவம் – புருவங்கள்,
அனங்கன் – மன்மதனது,
சாபம் – வில்லாகிய,
கரும்பு – கரும்பினது,
உருவம் – வடிவத்தோடு,
பொரும் – போர்செய்யும்(ஒத்திருக்கு மென்றபடி);
நகை – பற்கள்,
முத்தம் ஒத்தன – முத்துக்களைப் போன்றனவாகும்;
கை – கைகள்,
காந்தள் – காந்தள்மலர்போலும்;
கருங்குழல் – கரிய கூந்தல்,
பூ தேன்மருங்கு உழலும் – மலர்களில் மொய்க்கின்ற வண்டுகள் பக்கங்களிற் சுழலப்பெறும்;
மழை கண் – குளிர்ச்சியை யுடைய கண்கள்,
முருகு வளை இரு குவளை – வாசனை மிக்குப்பொருந்திய இரண்டு நீலோற்பலமலரை ஒப்பன; (எ – று.)

கலந்துபிரிந்த தலைமகன் பின்பு தனதுதோழனைத் துணையாகக் கொண்டு மீண்டும் அத்தலைமகளைச் சந்தித்தல் முறைமை;
அது, “பாங்கற்கூட்டம்” எனப்படும். அதற்கு உரிய துறைகள் பலவற்றில் “இயலிடங்கூறல்” என்னுந் துறை, இச்செய்யுளிற் கூறியது.
அஃதாவது – முதலிற் கலந்து பிரிந்த தலைமகன், பின்பு தன்னையடுத்துத் தன்மெலிவைக் கண்டு
‘நீ இவ்வாறாதற்குக் காரணம் என்னோ?’ என்று வினாவிய பாங்கனுக்கு,
“யான் ஒருத்தி வலையில் அகப்பட்டேன்’ என்று உற்றதுகூற, அதுகேட்ட பாங்கன் “நினது ஒழுக்கம் தக்கதன்று” என்று
சிலகூறியபின்பும் தலைமகன் தெளிவுபெறாது வருந்தவே, பாங்கன் இரக்கங்கொண்டு
“நின்னாற்காணப்பட்ட வடிவம் எத்தன்மைத்து?” என்று வினாவ, அதுகேட்ட தலைமகன் மகிழ்ச்சிகொண்டு
“என்னாற்காணப்பட்ட வடிவுக்கு இய லிவை” என்று கூறுதல்.

இனி, இரும்புவனம்விரும்புவனமணியரங்க ரென்பதற்கு – பெரிய உலகத்தவர் யாவராலும் விரும்பப்படுகின்ற
வனப்பையுடைய நீலமணிபோலும் நிறத்தினையுடைய அரங்கரென்றும்,
பணியரங்க ரென்பதற்கு – காளியனென்னும் பாம்பைக் கூத்தாடுமிடமாகக் கொண்டவ ரென்றுமாம்.
இமயம் – பனிமலை. கனங்குழைக்கும், கருங்குழலும், உம்மை – இசைநிறை.

இது, நான்காங் கவி போன்ற அறுசீராசிரியவிருத்தம்.

————

இதுவும் அது –
56-மழை பிறை சிலை வேல் வள்ளை எள் இலவின் மலர் முல்லை மதி வளை கழை யாழ்
வாரிசம் கெளிறு தத்தை வாய் கலசம் மணி வட பத்திரம் எறும்பு ஊர்
அழகு நீர்த் தரங்கம் துடி சுழி அரவம் அரம்பை ஞெண்டு இளவரால் ஆமை
அணிதராசு இணை கந்துகம் துகிர் தரளம் அம்புயம் அரங்க நாடு அனையார்
குழல் நுதல் புருவம் விலோசனம் காது நாசி வாய் நகை முகம் கண்டம்
குலவு தோள் முன்கை அங்கை மெல் விரல்கள் கூர் உகிர் கொங்கை கண் வயிறு
விழை தரும் உரோமம் வரை இடை உந்தி விரும்பும் அல்குல் தொடை முழந்தாள்
மிளிர் கணைக் கால்கள் புறவடி பிரடு மென்குதிவிரல் நகம் தாளே–56–

(இ – ள்.) அரங்க நாடு அனையார் – திருவரங்கமாகிய திருநாட்டை யொக்கின்ற (யான் கண்ட) மாதரது,
குழல் – கூந்தலும்,
நுதல் – நெற்றியும்,
புருவம் – புருவங்களும்,
விலோசனம் – கண்களும்,
காது – காதுகளும்,
நாசி – மூக்கும்,
வாய் – வாயும்,
நகை – பற்களும்,
முகம் – முகமும்,
கண்டம் – கழுத்தும்,
குலவு தோள் – விளங்குகின்ற தோள்களும்,
முன் கை – முன்னங்கைகளும்,
அங்கை – அகங்கைகளும்,
மெல் விரல்கள் – மெல்லிய விரல்களும்,
கூர் உகிர் – கூரிய நகங்களும்,
கொங்கை – தனங்களும்,
கண் – முலைக்கண்களும்,
வயிறு – வயிறும்,
விழைதரும் – விரும்பப்படுகின்ற,
உரோமம் – மயிரொழுக்கும்,
வரை – வயிற்றின் மடிப்புக்களும்,
இடை – இடுப்பும்,
உந்தி – நாபியும்,
விரும்பும் – விரும்பப்படுகின்ற,
அல்குல் – அல்குலும்,
தொடை – தொடைகளும்,
முழந்தாள் – முழங்கால்களும்,
மிளிர் – ஒளி செய்கின்ற,
கணைக்கால்கள் – கணைக்கால்களும்,
புறம் அடி – புறங்கால்களும்,
பரடு – காற்பரடுகளும்,
மெல் குதி – மெல்லிய குதிகால்களும்,
விரல் – விரல்களும்,
நகம் – நகங்களும்,
தாள் – பாதங்களும், (ஆகிய இவ்வவயவங்கள் முறையே), –
மழை – மேகமும்,
பிறை – பிறைச்சந்திரனும்,
சிலை – விற்களும்,
வேல் – வேல்களும்,
வள்ளை – வள்ளையிலைகளும்,
எள் (மலர்) – எள்ளுப்பூக்களும்,
இலவின் மலர் – இலவம்பூக்களும்,
முல்லை (மலர்) – முல்லைப் பூக்களும்,
மதி – பூர்ணசந்திரனும்,
வளை – சங்கமும்,
கழை – மூங்கில்களும்,
யாழ் – வீணையும்,
வாரிசம் – தாமரைமலர்களும்,
கெளிறு – கெளிறென்னும் மீன்களும்,
தத்தை வாய் – கிளியின் வாய்களும்,
கலசம் – குடங்களும்,
மணி – நீலமணியும்,
வட பத்திரம் – ஆலிலையும்,
எறும்பு ஊர் அழகு – எறும்பு ஊருகின்ற ஒழுங்கும்,
நீர் தரங்கம் – நீரின் அலைகளும்,
துடி – உடுக்கையும்,
சுழி – நீர்ச்சுழியும்,
அரவம் – பாம்பின் படமும்,
அரம்பை – வாழைமரங்களும்,
ஞெண்டு – நண்டுகளும்,
இள வரால் – இளைய வரால் மீன்களும்,
ஆமை – ஆமைகளும்,
அணி தராசு இணை – அழகிய இரண்டு தராசுதட்டுகளும்,
கந்துகம் – பந்துகளும்,
துகிர் – பவழங்களும்,
தரளம் – முத்துக்களும்,
அம்புயம் – தாமரைமலர்களும், (ஆகிய இவற்றை ஒக்கும்). (எ – று.)

எனவே, கருங்குழல் காளமேகத்தையும், நெற்றி பாதி மதியையும், புருவம் வில்லையும், கண் வேலையும்,
காது வள்ளையிலையையும், மூக்கு எள்ளுப்பூவையும், அதரம் இலவம்பூவையும், தந்தம் முல்லை மலரையும்,
முகம் பூர்ணசந்திரனையும், கண்டம் சங்கையும், தோள் இளமூங்கிலையும், முன்னங்கை வீணையையும்,
உள்ளங்கை தாமரை மலரையும், கைவிரல் கெளிற்று மீனையும், கைந்நகம் கிளிமூக்கையும், கொங்கை கும்பத்தையும்,
கொங்கைக்கண் நீலமணியையும், வயிறு ஆலிலையையும், அதனிடத்து உள்ள மயிரொழுக்கு எறும்பொழுக்கையும்,
வயிற்றுமடிப்பு அலையையும், இடை உடுக்கையையும், கொப்பூழ் நீர்ச்சுழியையும், அல்குல் பாம்பின் படத்தையும்,
தொடை வாழையையும், முழங்கால் நண்டையும், கணைக்கால் வரால்மீனையும், புறங்கால் ஆமையையும்,
காற்பரடு தராசுதட்டையும், குதிகால் பந்தையும், கால்விரல் – பவழத்தையும், கால்நகம் முத்தையும்,
பாதங்கள் தாமரைமலரையும் போலுமெனப் பெயர்ப்பயனிலையும் எழுவாயுமாக வந்த முறைநிரனிறைப்பொருள்கோள்.

இதனுள் கேசாதிபாதபரியந்தம் முப்பத்திரண்டு அவயவங்களும் அவற்றின் உபமானங்களோடு காண்க.
மழை – காளமேகம். பிறை – குறைந்தமதி. வள்ளை – அதன் இலைக்கு ஆகுபெயர். மலரை முன்னும் பின்னுங் கூட்டுக.
மதி – நிறைந்த சந்திரன், வாரிஜம், அம்புஜம் – நீரில் தோன்றுவது. கெளிறு,வரால் – மீனின்வகைகள்.
அரவம் – ஆகுபெயர். ஞெண்டு – போலி.
அரங்க நாடனையா ரென்றது – நிரதிசய இன்பத்தைத் தருபவ ரென்றற்கு. முன்கை – இலக்கணப்போலி.

இது, இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும்,
அஃது இரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்குசீராசிரியவிருத்தம்.

————

கைக்கிளை
57-தாள் இரண்டும் பார் ஒன்றும் தார்வாடும் வேர்வு ஆடும்
வாள் இரண்டும் காது இரண்டில் வந்து இமைக்கும் கோள் இரண்டும்
ஐவகைப் பூதம் அமைத்தருள் அரங்கர் மை வளர் சோலை மலையில்
தெய்வம் அல்லள் இத்திரு உருவினளே –57-

(இ – ள்.) தாள் இரண்டும் – இரண்டு கால்களும்,
பார் ஒன்றும் – பூமியிற் பொருந்தும்;
தார் – பூமாலை, வாடும் -;
வேர்வு ஆடும் – வியர்வை அரும்பும்;
வாள் இரண்டும் – வாள்போலும் இரண்டுகண்களும்,
காது இரண்டில் வந்து – இரண்டு காதுகளிலுஞ் சென்று மீண்டுவந்து, இமைக்கும் -; (ஆகையால்),
கோள் இரண்டும் – இராகு கேதுக்களென்னுங் கிரகங்களையும்,
ஐவகை பூதம் (உம்) – நிலம் நீர் தீ காற்று விசும்பென்னும் பஞ்சபூதங்களையும்,
அமைத்து அருள் – படைத்துக் காக்கின்ற,
அரங்கர் – அரங்கநாதரது,
மை வளர் – மேகங்கள் தவழ்கின்ற,
சோலைமலையில் – சோலைகளையுடைய மலையினிடத்தே யுள்ளவளாகிய,
இ திருஉருவினள் – அழகிய வடிவத்தையுடைய இம்மகள்,
தெய்வம் அல்லள் – தெய்வமகளல்லள் (மானுடமகளே); (எ – று.)

இது, பொழில்விளையாட்டு விருப்பால் ஆயம் நீங்க அதன்கண் தமியளாய்நின்ற தலைமகளை வேட்டைவிருப்பால்
இளையார் நீங்கத் தமியனாய் வந்த தலைமகன் தனியிடத்திற் கண்டவுடனே இம்மகள் தெய்வமகளோ மானுடமாதரோ வென்று
ஐயுற்று நின்று பிறகு இவ்வகைக்குறிகண்டு தெய்வமல்லள், மக்களுள்ளாளெனத் தெளிந்தது.
எனவே, தெய்வமல்லளாதற்குக் காரணம் – இனையன குறியே, வேற்றுமையில்லையென்பது கருத்து;
“பாயும் விடையரன் தில்லையன்னாள் படைக்கண் ணிமைக்குந்,
தோயு நிலத்தடி தூமலர் வாடுந் துயரமெய்தி,
யாயுமனனே யணங்கல்லளம்மா முலைசுமந்து,
தேயு மருங்குற் பெரும்பணைத்தோ ளிச் சிறுநுதலே” என்றார் திருக்கோவையாரிலும்,
இது, தெளித லென்னுந் துறையாம்.
இது, தலைவன்தலைவியர்களுள் ஒருவருள்ளக்கருத்தை ஒருவர் அறியாத ஒருதலைக்காம மாதலால், கைக்கிளையாயிற்று.

வாள் – உவமவாகுபெயர், காதளவும் நீண்ட கண்களாதலால், “வாளிரண்டுங் காதிரண்டில் வந்திமைக்கும்” என்றார்.
கால் நிலந்தோய்தலும், மாலை வாடுதலும், வேர்வை யுண்டாதலும், கண்ணிமைத்தலும் தேவர்களுக்கு இல்லையென அறிக;
“கண்ணிமைத்தலா லடிகள் காசினியிற் றோய்தலால்,
வண்ண மலர்மாலை வாடுதலா – லெண்ணி,
நறுந்தாமரைவிரும்பு நன்னுதலேயன்னா,
ளறிந்தா ணளன்றன்னை யாங்கு” என்றார் புகழேந்தியும்,
கோள் – க்ரஹமென்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு. இராகு கேதுக்களைக் கூறியது, மற்றைக்கிரகங்களுக்கும் உபலக்ஷணம்.
முற்றும்மையைப் பூதமென்பதனோடுங் கூட்டுக. திருவென்பது – கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கம்;
என்றது – அழகு. இனி, திருவுருவினள் – திருமகள்போலும் வடிவத்தவ ளென்றுமாம்.

இது, முதல் மூன்று அடிகளும் வெண்பாவடிகளாய், மற்றைய இரண்டும் ஆசிரியவடிகளாய், அவற்றுள்ளும்
ஈற்றயலடி முச்சீரதாய் வந்து துணிதலை நுதலிய ஒருதலைக்காம முணர்த்தியதனால், கைக்கிளைமருட்பா.

————-

ஊசல்
58-உரு மாறிப் பல பிறப்பும் செத்தும் ஊசலாடுவது அடியேன் ஒளியும் வண்ணம்
கரு மாயத்து என் நெஞ்சைப் பலகை ஆக்கி கருணை எனும் பாசத்தைக் கயிறாப் பூட்டி
மரு மாலைத் துழவு அசைய ஆடீர் ஊசல் மணி மகரக் குழி அசைய ஆடீர் ஊசல்
திருமாது புவி மாதோடு ஆடீர் ஊசல் திரு அரங்க ராசரே ஆடீர் ஊசல் –58-

(இ – ள்.) உரு மாறி – உருவம் மாறிமாறி,
பல பிறப்பும் – பலவகைப் பட்ட பிறவிகளிலும்,
பிறந்தும் -, செத்தும் -,
ஊசல் ஆடுவது – ஊஞ்சல் போல அலைவதனை, அடியேன் -,
ஒழியும் வண்ணம் – நீங்கும்படி,
கரு மா யத்து – மிக்க வஞ்சனையையுடைய,
என் நெஞ்சை – எனது மனத்தை,
பலகை ஆக்கி – ஊசற்பலகையாக்கொண்டு,
கருணை எனும் – (நினது) அருளென்கிற,
பாசத்தை -, கயிறு ஆ பூட்டி – ஊஞ்சற் கயிறாக மாட்டி,
மரு மாலை துளவு அசைய – வாசனையையுடைய திருத்துழாய்மாலை அசையும்படி,
ஊசல் ஆடிர் – ஊசலாடுவீராக;
மணி மகரம் குழை – இரத்தினத்தாலாகிய மகரகுண்டலங்கள், அசைய -, ஊசல் ஆடிர் -;
திருமாது புவிமாதோடு – பெரியபிராட்டியாரோடும் பூமிப்பிராட்டியாரோடும், ஊசல் ஆடிர் -;
திருவரங்கராசரே -! ஊசல் ஆடிர் -; (எ – று.)

யான் பிறப்பு நீங்கிப் பரமபதமடையும்படி தேவரீர் அருள்கூர்ந்து எனது மனத்தில் எஞ்ஞான்றும் இடைவிடாது
தங்கியிருக்கவேண்டு மென்பதாம். அன்பால் நினைவாரது உள்ளக்கமலம் எம்பெருமானுக்குத் தங்குமிடமாதலால்
“நெஞ்சைப்பலகையாக்கி” என்றும், கடவுளது திருவருள் அவ்வுள்ளத்தைக் கட்டித் தம்வயப்படுத்துதலால்
“கருணையெனும் பாசத்தைக் கயிறாப்பூட்டி” என்றுங் கூறினார்.
“பொருளலா விடயத்தைப் பொருளென்றெண்ணிப் போவதுமீள்வதுமா யெப்பொழுது மாடு,
மருளுலா மனவூசல் சுத்தஞ் செய்து மாறாது வளர்பத்தி வடத்தைப்பூட்டி,
யிருளைநேர் குழனி லப்பெண் ணலர்மேன் மங்கை யிருவரொடு மேயதன்மேலேறிவீறு,
மருளினான் மெள்ளவசைந்தாடி ரூச லாதிவடமலைமாய ராடி ரூசல்” என்றார் திருவேங்கடக் கலம்பகத்தும்.
இச்செய்யுளில் எம்பெருமான் ஊசலாடத் தாம் ஊசலாடுவது நீங்குமெனக் கூறிய நயம் கருதத்தக்கது.
ஊசலாடுதல்தொழில் எம்பெருமானைச்சேர அத்தொழில் சேதனனாகிய தம்மை விட்டுநீங்குதலைக் கூறியது –
முறையிற்படர்ச்சியணியின் பாற்படும்; இது, வடமொழியில் பர்யாயாலங்காரம் எனப்படும். இதற்கு உருவகவணி அங்கமாக நின்றது.

இஃது, ஊசல்; அஃதாவது – ஆசிரிய விருத்தத்தானாதல், கலித்தாழிசையானாதல் “ஆடிரூசல், ஆடாமோவூசல்” என முடிவுகூறக் கூறுவது.

இது, பதினைந்தாங் கவிபோன்ற ஆசிரியவிருத்தம்

————

59- ஊசல் வடம் போல் ஊர் சகாடம் போல் ஒழியாமே
நாச உடம்போடு ஆவி சுழன்றே நலிவேனோ
வாசவனும் போது ஆசனனும் கூர் மழு வோனும்
நேசமுடன் சூழ் கோயில் அரங்கா நெடியோனே –59-

(இ – ள்.) வாசவனும் – இந்திரனும்,
போது ஆசனனும் – தாமரை மலரைத் தங்குமிடமாகவுடைய பிரமனும்,
கூர் மழுவோனும் – கூர்மையாகிய மழுவாயுதத்தையுடைய உருத்திரனும்,
நேசமுடன் – பக்தியுடனே,
சூழ் – சூழ்ந்துவழிபடுகின்ற,
கோயில் அரங்கம் – திருவரங்கம் பெரிய கோயிலிலெழுந்தருளியிருக்கின்ற,
நெடியோனே -, (அடியேன்),
ஊசல் வடம் போல் – ஊஞ்சற்கயிறுபோலவும்,
ஊர் சகடம்போல் – செல்லுகின்ற வண்டியின் உருளைபோலவும்,
ஒழியாமே – ஓய்வில்லாதபடி,
நாசம் உடம்போடு – அழியுந்தன்மையையுடைய உடம்புடனே,
ஆவி சுழன்றே – உயிர்அலையப் பெற்றே,
நலிவேனோ – வருந்தக்கடவேனோ? (எ – று.)

ஓடி யோடி வருவதும் போவதுமா யிருத்தலால் ஊசல் வடத்தையும், மாறி மாறி உருண்டுகொண்டே யிருத்தலால்
ஊர்சகடத்தையும் உவமைகூறினார். சகடம் – உருளைக்கு ஆகுபெயர். நெடியோன் – பெரிய பெருமாள்.

இது, பதினெட்டாங் கவிபோன்ற கலிநிலைத்துறை.

————-

கையுறை -தழை
60-நேசத்து அழைக்கும் மத யானை முன்பு நின்றோன் அரங்கம்
பேசத் தழைக்கும் என் அன்பு அனையாய் பெரும் கற்பகத்தின்
வாசத் தழைக்கும் நறுந்தழை காண் இது மந்தத் தென்றல்
வீசத் தழைக்கும் தழை போல் கெடாது விலை இல்லையே –60-

(இ – ள்.) நேசத்து – அன்பினாலே,
அழைக்கும் – (ஆதிமூலமே யென்று) அழைத்த,
மதயானை முன்பு – மதத்தையுடைய கஜேந்திராழ்வான்முன்னே,
நின்றோன் – வந்துநின்று காத்தருளின எம்பெருமானது,
அரங்கம் – ஸ்ரீரங்கத்தை,
பேசு – சொல்லுந்தோறும்சொல்லுந்தோறும்,
தழைக்கும் – மகிழ்கின்ற,
என் – எனது,
அன்பு – அன்பை,
அனையாய் – ஒத்திருப்பவளே! –
இது – இத்தழை,
பெருங் கற்பகத்தின் – பெரிய கல்பக விருக்ஷத்தினது,
வாசம் தழைக்கும் – வாசனையையுடைய தழையினும்,
நறுந் தழை காண் – நறுநாற்றம் மிக்க தழையேகாண்; (இது),
மந்தம் தென்றல் – இளந் தென்றற்காற்று,
வீச – வீசுதலால்,
தழைக்கும் – தழைக்கின்ற,
தழைபோல் – (மற்றை மரங்களின்) தழையைப்போல,
கெடாது – (பின்பு) வாடிப்போகாது; (அதுவேயுமன்றி),
விலை இல்லை – (இத்தழைக்கு) விலையும் இவ்வளவென்று ஓர் அறுதி இல்லை;
(ஆதலால், இதனை நீ ஏற்றுக்கொள்வாயாக); (எ – று.)

இத்துறை, தலைமகளைக் குறை நயப்பித்துச் சேட்படைகூறத் துணியாநின்ற தோழியிடைத் தலைமகன்
தழைகொண்டு சென்று (இத்தழையை வாங்கிக்கொண்டு என்குறைமுடித்தருளுவீராம்’ என்று
வேண்டிக் கையுறையாகக் கொடுக்க, அதனை அரிதின் ஏற்றுக்கொண்ட தோழி, தலைமகளிடஞ் சென்று,
அவள்குறிப்பறிந்து, “இத்தழை நமக்கு எளியதொன்றன்று;இதனை ஏற்றுக்கொள்வாயாக” எனத் தலைமகளைத் தழையேற்பித்தது.

இது, நேரசை முதலாக நின்ற கட்டளைக்கலித்துறை.

——————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –21-40-

February 19, 2022

தலைவனைப் பிரிந்த தலைவி கடலை நோக்கி இரங்கிக் கூறுதல்

21- வாயின் இரங்கினை ஆரம் எறிந்தனை வால் வளை சிந்தினை தண்
பாயலை உந்தினை மாலை அடைந்தனை பாரில் உறங்கி லையால்
கோயில் அரங்கனை மாகனகம் திகழ் கோகனகம் பொலியும்
ஆயிழை நண்பனை நீயும் விரும்பினை ஆகும் நெடும் கடலே –21-

(இ – ள்.) நெடுங் கடலே – பெரிய சமுத்திரமே! – (நீ என் போலவே),
வாயின் இரங்கினை – வாயினால் இரங்குகின்றாய்;
ஆரம் எறிந்தனை – ஹாரத்தை எறிகின்றாய்;
வால் வளை சிந்தினை – வெள்ளிய வளைகளைச் சிந்துகின்றாய்;
தண் பாயலை உந்தினை -; மாலை அடைந்தனை -;
பாரில் – பூமியில்,
உறங்கிலை – உறங்குகின்றாயில்லை;
ஆல் – ஆகையால், நீயும் -,
மா – பெருமை பொருந்திய,
கனகம் – பொன் மயமாகி,
திகழ் – விளங்குகின்ற,
கோகனகம் – செந்தாமரை மலரில்,
பொலியும் – வீற்றிருக்கின்ற,
ஆயிழை – ஆராய்ந்தெடுத்தணிந்த ஆபரணங்களை யுடைய திருமகளது,
நண்பனை – கணவனாகிய,
கோயில் அரங்கனை -,
விரும்பினை ஆகும் – விரும்பினாயாக வேண்டும்; (எ – று.)

“போக்கெல்லாம்பாலை புணர்தல்நறுங்குறிஞ்சி, ஆக்கஞ்சேரூடலணி மருதம் –
நோக்குங்கால், இல்லிருக்கைமுல்லை இரங்கல்நறுநெய்தல், சொல்லிருக்குமைம்பாற்றொகை” என்றபடி
இரங்கல் நெய்தல்நிலத்துக்குஉரிய தாதலாலும், அந்நெய்தல் நிலந்தான் கடலும் கடல் சார்ந்த இடமுமாதலாலும்,
அந்நிலத்திலே தலைமகனைப்பிரிந்து வருந்துகின்ற தலைமகள் தலைமகனைப்பிரிந்த தன்னிடத்துக் காணப்பட்ட
வாயினிரங்குதல் வால்வளைசிந்துதல் முதலிய செயல்கள் கடலினிடத்தும் காணப்பட்டதனால்,
அருகிலுள்ள கடலை முன்னிலைப்படுத்தி இரங்கிக்கூறுகின்றன ளென்க.

இத்துறை, “தன்னுட்கையாறெய்திடுகிளவி” எனப்படும்;
அதாவது – தமக்குநேர்ந்த துன்பத்தைத் தம்ஆற்றாமையாற் பிறிதொன்றன்மே லிட்டுச் சொல்லுஞ் சொல்.
இங்ஙனஞ்சொல்லுதலின் பயன் – களவுப்புணர்ச்சியொழுக்கத்திலே நின்று சிறைப்புறத்தானாகிய தலைமகன்
கேட்பின் விரைவில் வெளிப்படையாக வந்து இத்தலைமகளை மணம்புரிந்துகொள்வன்;
தோழிகேட்பின் தலைவனுக்குச்சொல்லி விரைவில் மணம்புரிந்துகொள்ளச் செய்வள்;
யாரும் கேளாராயின் தலைவி தானேசொல்லி ஆற்றினளாம்.

கடலுக்கு – வாயினிரங்குதல் – பேரொலிசெய்தலும், ஆரமெறிதல் – இரத்தினாகரமாதலால் முத்துக்களை வீசுதலும்,
வால்வளை சிந்துதல் – வெள்ளிய சங்குகளைச் சிந்துதலும்,
தண்பாயலையுந்துதல் – குளிந்து பாய்கின்ற அலைகளைத் தள்ளுதலும்,
மாலையடைதல் – பெருமைபெறுத லுங் கருநிறமுடைமையும் ஒழுங்காயிருத்தலும்,
உறக்கமின்மை – அல்லும் பகலும் அந்வரதமும் ஓயாது அலைத்துக் கொண்டிருத்தலும் என்றும்;
தலை மகளுக்கு – வாயி னிரங்குதல் – வாயினா லிரங்கிப் புலம்புவதும்,
ஆரமெறி தல் – முத்துமுதலியவற்றாலாகிய மாலைகளைக் கழற்றி யெறிவதும்,
வால்வளை சிந்துதல் – கையிலணிந்த வெள்ளிய சங்குவளையல்களை உடம்புமெலிதலாற் சிந்திவிடுதலும்,
தண்பாயலை யுந்துதல் – மெத்தென்ற பாயைத் தள்ளி விடுதலும், மாலையடைதல் – வேட்கைமிகுதியால் மயக்கமடைதலும்,
உறக்கமின்மை – வேதனைமிகுதியால் இரவுமுழுவதும் நித்திரைபெறாமையும் என்றும் பொருள்கொள்க.
சிலேடையை அங்கமாகக்கொண்டுவந்த தற்குறிப்பேற்றவணி.

“காமுற்றகையறவோடெல்லே யிராப்பகல், நீமுற்றக்கண்டுயிலாய் நெஞ்சுருகியேங்குதியால்,
தீமுற்றத்தென்னிலங்கை யூட்டினான் றாள்நயந்த, யாமுற்றதுற்றாயோவாழிகனைகடலே” என்றார் நம்மாழ்வாரும்.

இது, பிரிவுக்காலத்திற் கடலைநோக்கிப் பெண்பால் இரங்கியது; இங்ஙனமே ஆண்பால் இரங்குதலை,
(“போவாய் வருவாய் புரண்டுவிழுந்திரங்கி, நாவாய்குழற நடுங்குறுவாய் –
தீவாய், அரவகற்றுமென்போலவார்கலியே நீயும், இரவகற்றிவந்தாய்கொலின்று” என்ற புகழேந்திப் புலவர்வாக்கிற் காண்க.)

கோகனகம் – கோகநத மென்பதன் திரிபு; இதற்கு – சக்கரவாகப் பறவைகள் தன்னிடத்து ஒலிக்கப்பெறுவ தென்றும்,
கோகமென்னும் நதி யினிடத்தே முதலில் தோன்றிய தென்றும் பொருள்.
ஆயிழை – வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
இழை – நவரத்தினங்களும் இழைத்துச் செய்யப்படுவது. நீயுமென்ற எச்சவும்மையால், என்போல வென்பது பெறப்பட்டது.
விரும்பினையாகு மென்றது – விரும்பினை போலு மென்றபடி.

இது, முதலைந்துங் கூவிளச்சீர்களும், ஈற்றுச்சீர் கூவிளங்காய்ச்சீரு மாகிய அறுசீராசிரியவிருத்தம்.

————

பிரிவாற்றாது வருந்திய தலைமகள் இரங்கல்

22-கடல் வழி விட நிசிசரர் பொடி பட இரு கண் சீறி
வடகயிலையின் எழு விடை தழுவியதும் மறந்தாரோ
அடல் அரவு அமளியில் அறி துயில் அமரும் அரங்கேசர்
இடர் கெட வருகிலார் முருகு அலர் துளவும் இரங்காரே –22-

(இ – ள்.) அடல் அர அமளியில் – வலிமைபொருந்திய சேஷசயனத் தில்,
அறி துயில் அமரும் – யோகநித்திரைகொண்டருளுகின்ற,
அரங்கேசர் -,
இடர் கெட (எனது) விரகவேதனை தீரும்படி,
வருகிலர் – வந்தணைந் தாரில்லை; (அங்ஙனம் அடையாமையேயன்றி),
முருகு அலர் துளவும் – வாசனைவீசுகின்ற திருத்துழாய்மாலையையும்,
இரங்கார் – இரங்கித்தந்தாரு மில்லை; (ஆகையால், முன்பு ஸ்ரீராமாவதாரத்திற் சீதைக்காக,)
கடல் -, வழி விட – (அஞ்சி) வழியை விடவும்,
நிசிசரர் – (இராவணன் முதலிய) அரக்கர்கள்,
பொடிபட – பொடியாகவும்,
இரு கண் சீறி – (தனது) இரண்டு கண்களுஞ் (சிவக்கும்படி) சீற்றங்கொண்டு, –
(ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் நப்பின்னைக்காக),
வட கயிலையின் – வடக்கின்கணுள்ள கைலாசமலை போன்ற,
எழு விடை – ஏழுவிருஷபங்களையும்,
தழுவியது – தழுவி நெரித்ததை,
மறந்தாரோ – மறந்துவிட்டாரோ? (எ – று.)

இயற்கைப்புணர்ச்சி முதலிய வகைகளால் தலைவியைக் களவிற்கூடி நின்ற தலைவன் அங்குப்பழியெழுந்ததென்று
தோழியால் விலக்கப்பட்டபின்னர் அப்பழியடங்கச் சிலநாள் ஒருவழிப்பிரிந்துறைத லுண்டு;
அது, ஒருவழித்தணத்த லெனப்படும். அன்றி, களவுப்புணர்ச்சி பெற்ற தலைமகன் தோழியால் வரைவுமுடுக்கப்பட்டுத்
தலைமகளை வரைந்துகொள்ளுதற்கு வேண்டியபொருள் தேடுதற்பொருட்டும் பிரிவன்; அது, வரைபொருட் பிரித லெனப்படும்.
அங்ஙனம் தலைமகன் பிரிந்த சமயங்களில், அப்பிரிவை யாற்றாத தலைவி, நெஞ்சொடுகூறலாகத் தன்னிலேதான் இரங்குதலும்,
மனமொத்த தன்உயிர்த்தோழியோடு இரங்குதலுஞ் செய்வள். இங்ஙனம் இச்செய்யுட்குத் துறைப்போக்கு உணர்க.
தலைவனைப்பிரிந்து தவிக்கின்ற நிலையிலே தலைவனது தாரும் பெறாது வருந்தி இரங்கி இங்ஙனங் கூறின ளென்க.
இதன் மெய்ப்பாடு – அழுகை; பயன் – ஆற்றாமை நீங்குதல். பிரிந்த நிலையிலே தலைவனது மாலை கிடைக்கப் பெற்றால்
அது கொண்டேனும் ஒருவாறு ஆறியிருக்குங் கருத்தினளாதலின், அதனைக் கொடுத்தனுப்பாமை பற்றியுங் குறைகூறினள்.
தலைவனோடு சம்பந்தம்பெற்ற பொருள் யாதாயினும் இதற்குப் பரிகாரமாமென்பது, இதனாற்போந்த பொருள்.
அவனது பிரசாதமான திருத்துழாய் தான்கொண்ட நோய் தணித்தற்கு ஏற்ற பசுமருந்தாகிய சஞ்சீவி மூலிகை என்றவாறு.

எனது தலைவர் என்னை மறவாராயின், சநகர்மகளுக்கும் ஆயர்மக ளுக்கும் இரங்கியதுபோலவே
என்பக்கலிலும் இரங்கியருளுவ ரென்க. முன்பு சீதாபிராட்டியினிடத்து ஆராதஅன்பினால் அவள்பிரிவை ஆற்றமாட்டாது
அவளைக்கூடுதற்பொருட்டுத் தன்னிலுந் தாழ்ந்தவனாகிய ஒருவனைத் தலையால் வணங்கிக் கடலையடைத்தலாகிய
செயற்கருஞ் செயலைச் செய்தவரும், நப்பின்னைப்பிராட்டியை மணஞ்செய்துகொள்ளும் விருப்பினால்
ஓர்இடையனது அடங்காத ஏழுஎருதுகளை வலியடக்கித் தழுவினவருமாகிய தலைவர் என்திறத்து இவ்வாறு
உபேட்சித்திருப்பது அவரதுநடுவு நிலைக்குப் பெரியதோரிழுக்கா மென்பது, குறிப்பு.

“கடல்வழிவிட” என்றது – கடலில் மலைகளைக்கொண்டு சேதுபந்தஞ்செய்த அருமையையும்,
அதற்குக் கடல் இடங்கொடுக்கும்படி அதனைச்சினந்த பெருமையையுங் குறித்தற்கு. இருகண்சீறி – இருகாற்சீற்றங்கொண்டு எனவுமாம்.
“அடலரவமளியி லறிதுயிலமரு மரங்கேசர்” என்றது –
“பாம்பணையார்க்குந் தம்பாம்புபோல், நாவுமி ரண்டுளவாய்த்து நாணிலியேனுக்கே” என்றதன் கருத்தை உட்கொண்டது.
முருகலர்தல் – தேனொழுகுதலுமாம். துளவு – அதனாலாகிய மாலைக்குக் கருவியாகுபெயர்.
கயிலை, விடை – வடமொழிச்சிதைவுகள். கயிலை – வெண்மை பெருமை வலிமைகளால் விடைக்கு உவமை. ஓகாரம் – இரக்கம்.

இது, முதல்நான்குங் கருவிளச்சீர்களும், ஈற்றது தேமாங்காய்ச்சீரு மாகிய கலிநிலைவண்ணத்துறை.
“தனதன தனதன தனதன தனதன தந்தான” என்பது, இதன் வாய்பாடு.

————–

23-இரங்கத் தனித் தனியே எய்துகின்ற துன்பத்
தரங்கத்தை ஏதால் தடுப்பீர் -அரங்கர்க்குக்
கஞ்சம் திருப்பாதம் கார் மேனி என்று அவர் பால்
நெஞ்சம் திருப்பாத நீர் –23-

(இ – ள்.) அரங்கர்க்கு -, திரு பாதம் – திருவடிகள்,
கஞ்சம் – தாமரை மலர்போலும்;
மேனி – திருமேனி,
கார் – காளமேகம்போலும், என்று -,
அவர்பால் – அவ்வெம்பெருமான்பக்கல்,
நெஞ்சம் – மனத்தை,
திருப்பாத – (தீநெறிக்கட் செல்லவொண்ணாது) திருப்பிச் செலுத்தாத,
நீர் – நீங்கள், (இந்த ஸம்ஸாரஸாகரத்தில்),
இரங்க – தளர்ந்து வருந்தும்படி,
தனி தனியே எய்துகின்ற – ஒன்றன்மேலொன்றாக ஓயாமல் ஓடிவந்தடைகின்ற,
துன்பம் தரங்கத்தை – துன்பங்களாகிய அலைகளை,
ஏதால் – வேறு எதனை (ப்புணையாக)க் கொண்டு,
தடுப்பீர் – தடைசெய்து (கடந்து) உய்வீர்; (எ – று.)

உங்கட்கு உய்ய வேறொரு விரகில்லையே யென்று இரங்கியவாறு, கண்டவர் மனத்தைக் கவரும் பேரழகும்
நம்பிச் சரணமடைந்தார்க்குப் பெரும்பயனளித்தலு முடைய எம்பெருமானைக் கதியென்று பற்றாதார்க்கு இடையறாது
வந்து வருந்துகின்ற கடல்போன்ற சமுசாரசிலேசங்கள் ஒழிய மாட்டா என்பதாம்.
எம்பெருமான் திருவடிகளே பிறவிப்பெருங்கடலுக்குப் புணையாகுமென்பது கருத்து.

காரண காரியத் தொடர்ச்சியாய் ஒழிவின்றி வருதலால், துன்பத்தரங்க மென்றார். கஞ்சம் – நீரில் முளைப்பது.
கஞ்சம், கார் என்பன – பெயர்ப்பயனிலைகள், பால் – ஏழனுருபு.
திருப்பாதவென்பது, திருப்புதலின் அருமை குறித்து நின்றது. உலகியல்பை நினையாது இறைவனடியையே
நினைப்பார்க்குப் பிறவியறுதலும், இவ்வாறன்றி மாறநினைப்பார்க்கு அஃது அறாமையுமாகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன.
“பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா, ரிறைவ னடிசேரா தார்” என்றார் திருவள்ளுவரும்.

இது, இரண்டாங்கவிபோன்ற இருவிகற்பநேரிசைவெண்பா.

————-

தான் தூது விட்ட நெஞ்சு திரும்பி வாராமைக்குத் தலைமகள் இரங்குதல்

24-நீர் இருக்க –மட மங்கைமீர் -கிளிகள் தாம் இருக்க -மதுகரம் எலாம் நிறைந்து இருக்க –
மட அன்னம் முன்னம் நிரையாய் இருக்க -உரையாமல் யான் ஆர் இருக்கினும்
என்நெஞ்சம் அல்லது ஒரு வஞ்சம் அற்ற துணை இல்லை என்று ஆதரத்தினொடு
தூது விட்ட பிழை ஆரிடத்து உரை செய்து ஆற்றுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு அரங்கரை வணங்கியே திருத் துழாய்
தாரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை உறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி
இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –24–

(இ – ள்.) மட மங்கைமீர் – பேதைமைக்குணத்தையுடைய தோழிகளே! –
முன்னம் – எதிரில்,
நீர் இருக்க – நீங்களெல்லாரும் இருக்கவும்,
கிளிகள் இருக்க – கிளிகளெல்லாம் இருக்கவும்,
மதுகரம் எலாம் நிறைந்து இருக்க – வண்டுகளெல்லாம் நிறைந்திருக்கவும்,
மட அன்னம் – அழகிய அன்னங்களெல்லாம்,
நிரை ஆய் இருக்க – திரளாக இருக்கவும்,
உரையாமல் – (இவர்களொருவரையும் நம்பித் தூதாகச்) சொல்லியனுப்பாமல், யான் -,
ஆர் இருக்கிலும் – வேறே யார் இருந்தாலும்,
என் நெஞ்சம் அல்லது -எனது மனத்தையன்றிக்கே,
ஒரு வஞ்சம் அற்ற துணை – வஞ்சனையில்லாத தொரு (வேறு) துணை,
இல்லை என்று – இல்லையென்றெண்ணி,
ஆதரத்தினொடு – அன்போடு,
தூது விட்ட (அம்மனத்தைத் திருவரங்கநாதர்பக்கல்) தூதாக அனுப்பியதனா லுண்டான,
பிழை – தவற்றை,
யாரிடத்து -, உரை செய்து – சொல்லி,
ஆறுவேன் – மனந்தணிவேன்; (அம்மனம் என்செய்த தென்னில்), –
சீர் இருக்கும் – சிறப்புப்பொருந்திய,
மறை முடிவு – வேதாந்தங்களும்,
தேடுஅரிய – தேடிக்கண்டறிய வொண்ணாத,
திருவரங்கரை -, வணங்கி – (கண்டு) வணங்கி, (என் குறையைச் சொல்லி),
விரும்பி – (அவர்) திருவுள்ளமுவந்து,
திருத்துழாய் தரில் – திருத்துழாய்மாலையைத் தந்தருளினால்,
கொடு – (அதனை) வாங்கிக்கொண்டு,
திரும்பி வருதல் இன்றியே – திரும்பிவருத லில்லாமலே,
வார் இருக்கும் – கச்சுப்பொருந்திய,
முலை – தனங்களையுடைய,
மலர் மடந்தை – தாமரைமலரில்வாழும் பெரியபிராட்டியார்,
உறை – வீற்றிருக்கின்ற,
மார்பிலே – திருமார்பிலும்,
பெரிய தோளிலே – பெரிய திருத்தோள்களிலும்,
மயங்கி – (வேட்கை மிகுதியால்) மயக்கங் கொண்டு,
இன்புற – இன்பமுண்டாக,
முயங்கி – தழுவிக் கொண்டு,
என்னையும் மறந்து -, தன்னையும் மறந்தது – (தூதாகப்போன) தன்னையும் மறந்துவிட்டது; (எ -று.)

இது, நெஞ்சத்தைத் தூதுவிடுத்த தலைமகள், அது மீண்டுவாராததாகத் தோழிமாரை நோக்கி இரங்கிக் கூறியது.

சுக துக்கங்களில் எனக்குத் துணையாயிருந்து உதவுகின்ற பாங்கியர்க ளாகிய உங்களைத் தூதனுப்பலாமென்று
பார்த்தாலோ நீங்கள் என்னோ டொத்த பருவமுடைய இளமகளிராதலால்,
அத்தலைவரழகில் ஈடுபட்டு ஆழ்ந்திடுவீரேயன்றி என்காதலை அவரிடம் சொல்லி மறுமொழிகொண்டு மீண்டுவருவீரல்லீர்.
கிளியைத் தூதனுப்பலாமென்றாலோ அதனை மன்மதனது குதிரையாகக் கூறுவராதலின், அதுவும் எனக்கு இணங்கிவாராது;
மேலும், அது சொல்லியதேசொல்லும் இயல்புடைய தன்றோ? வண்டோ வெனின் மன்மதனது வில்லின் நாணாதலால்,
அதுவும் என்திறத்து அன் புடையதாகாது. அன்னப்பறவை சிரமம்பொறாததும் மந்தகதியுடையதும்
இனியவிடத்து வீற்றிருந்து கிடைத்தஇரையை யுண்டு பிரிவுத்துயரறியாது தானுந் தன்துணையும் கூடி
வாழ்ந்து களித்திருப்பதும் தன்நலம்பேணுவதும் நட்புப்பிரிக்குங் குணமுடையதுமாதலால்,
அது அந்தப்போகத்தை விட்டு எனக்காக அவ்வளவுதூரம் வருந்திச் சென்று விரைவில் என்நிலைமையைத்
தலைவர்க்குச் சொல்லி நேரில்மீண்டுவந்து அவர்சொல்லை எனக்குச் சொல்லமாட்டாது.
ஆதலின், அப்பொருள்களுள் எதனிடத்தும் நம்பிக்கை கொள்ளாமல் “நெஞ்சையொளித்தொரு வஞ்சக மில்லை” என்றபடி
எனதுநெஞ்சினிடத்து நம்பிக்கைகொண்டு அதனைத் தலைவர்பால் தூதனுப்பி அது மீண்டுவராமையால்,
இதனை யாரிடத்துக் கூறியாறுவே னென்று இரங்கின ளென்க.

“குருத்தத்தை மாரன்குரகதமாமென்றே, வருத்தத்தை யங்குரைக்கமாட்டேன் –
கருத்துற்ற, மாதண்டலைவாய் மதுகரத்துக்கும் மவன்றன், கோதண்டநாணென்று கூறேன்நான் –
பொற்கால், வெறிப்பதும வீட்டன்னம் வெண்பாலுநீரும், பிறிப்பதுபோல் நட்புப்பிறிக்குங் -:
குறிப்பறிந்து, காதலா லுள்ளக்கவலை யதுகேட்க, வோதலாகாதென்று உரை யாடே – னாதலா, லுள்ளே
புழுங்குவ தன்றி யொருவருக்கும் விள்ளேன்” என்னுந் திருநறையூர் நம்பி மேகவிடுதூதும் ஒப்பு நோக்கத்தக்கது.

மடமை – அறிந்தும் அறியாதுபோலிருக்குந் தன்மை; இது – நாணம், அச்சம், பயிர்ப்பு முதலிய பெண்குணங்கள்
பலவற்றிற்கும் உபலக்ஷணம். இனி, இளமையும், அழகுமாம். “எலாம்” என்பதைப் பிறவிடத்துங் கூட்டுக.
மறைமுடிவு – உபநிஷத்துக்கள். விரும்பியே கொடு – மகிழ்ந்து பெற்றுக் கொண்டென்றுமாம்.
கொடு – கொண்டு என்பதன் விகாரம். தன்னையும் மறந்தது – பரவசமாயிற் றென்றபடி.
எனக்கு நேரும் இன்பதுன்பங்களை என்னோடு ஒக்கஉண்டு என்னுள்ளே உறைந்து என்னினும் வேறாகாததான
என்நெஞ்சமே எனக்குத் துணையாகப்பெறாத யான் வேறு யாரை வெறுப்பே னென்பது குறிப்பு.

இது, முதல் மூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் கூவிளங்காய்ச்சீர்களும்,
ஏழாஞ்சீர் விளச்சீருமாய் வந்தது அரையடியாகவும், அஃதுஇரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்கு சீராசிரியவிருத்தம்.

——————–

வண்டு விடு தூது
25- மறக்குமோ காவில் மது அருந்தி அப்பால்
பறக்குமோ சந்நிதி முன்பு ஆமோ சிறக்கத்
தரு வரங்கள் கேட்குமோ தாழ்க்குமோ நெஞ்சே
திருவரங்கர் பால் போனதேன் –25-

(இ – ள்.) நெஞ்சே -! திருவரங்கர்பால் – ஸ்ரீரங்கநாதரிடத்து,
போன – தூதுசென்ற,
தேன் – வண்டு, –
காவில் – (இடையிலுள்ள) சோலைகளில் (தங்கி),
மது அருந்தி – (அங்குள்ள) தேனைப் பருகி,
மறக்குமோ – (என்னை) மறந்து விடுமோ? (அன்றிக்கே),
அப்பால் பறக்குமோ – (அச்சோலைகளுக்கு) அப்புறத்தே பறந்து செல்லுமோ?
சன்னிதி முன்பு ஆமோ – (அங்ஙனஞ்சென்று) கோயிலின்முன்னே சேருமோ? (சேர்ந்து),
சிறக்க – (எனக்குச்) சிறப்புண்டாக,
தரு – (அவர்) அருளுகின்ற,
வரங்கள் – வரங்களை, கேட்குமோ -? (அன்றிக்கே),
தாழ்க்குமோ – தாமதித்து நிற்குமோ? (அறியேன்!) (எ – று.)

இது, தலைமகன்பக்கல் வண்டைத் தூதுவிடுத்த தலைமகள், அது திரும்பி வாராமையால் அதன் நிலைமையை
ஐயுற்றுத் தன்நெஞ்சோடு கூறியது.
“வாயான் மலர்கோதி வாவிதொறு மேயுமோ, மேயாம லப்பால் விரையுமோ –
மாயன், திருமோகூர் வாயின்று சேருமோ நாளை, வருமோ கூர்வா யன்னம் வாழ்ந்து” என்பதோடு ஒப்பிடுக.
மதுவருந்துதல் உடனே மறந்து விடுதற்கு ஏதுவாதலால், அதனை முற்கூறினார்.
ஓகாரங்கள் – ஐயப்பொருளன. வரம் – வேண்டுவன கோடல். தேன் – வண்டின் சாதிபேதங்களில் ஒன்று;
இது, நல்லமணத்தே செல்லும்.

இது, முன்பு கூறியதுபோன்ற நேரிசைவெண்பா.

—————

அம்மானை
26-தேன் அமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
ஆனவர் தான் ஆண் பெண் அலி அலர் காண் அம்மானை
ஆனவர் தாம் ஆண் பெண் அலி அலரோ ஆமாகில்
சானகியைக் கொள்வாரோ தாரமாய் அம்மானை
தாரமாய்க் கொண்டதும் ஓர் சாபத்தால் அம்மானை –26-

(இ – ள்.) தேன் அமரும் சோலை – வண்டுகள் விரும்பி நெருங்குகின்ற சோலைகளையுடைய,
திருவரங்கர் -, எ பொருளும் ஆனவர்தாம் – எல்லாப்பொருள்களுமானவரே; (ஆயினும்),
ஆண் பெண் அலிஅலர் காண் – ஆணும் பெண்ணும் அலியும் அல்லாதவரே; அம்மானை -;
ஆனவர்தாம் – (அங்ஙனம்) எல்லாப்பொருள்களுமாகிய அவர்,
ஆண் பெண் அலி அலரே ஆம் – ஆகில் – ஆணும் பெண்ணும் அலியு மல்லாதவரே யாவ ரானால்,
சானகியை – சீதையை,
தாரம் ஆ கொள்வரோ – மனைவியாகக் கொள்வாரோ? அம்மானை -;
தாரம் ஆ கொண்டதும் – (அங்ஙனம்) மனைவியாகக் கொண்டதும்,
ஓர் சாபத்தால் – ஒரு சாபத்தினால்; அம்மானை -; (எ – று.)

மூன்றுமங்கையர் அம்மானையாடும்போது பிரபந்தத்தலைவனது தன்மையை வார்த்தையாடுவது,
அம்மானையென்னும் உறுப்பின் இலக்கணம்.

தேன் – இங்கே வண்டின் பொதுப்பெயர். இனி, தேனமர்தல் – மதுப் பெருகுதலுமாம். தாம், காண் – தேற்றம்.
முதலடி – “ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” என்றபடி எம்பெருமான் ஸர்வவ்யாபி யென்பதை விளக்கும்.
ஆண் பெண்ணலியலரென்றதுக்குக் கருத்து –
எம்பெருமானோடு ஒவ்வாமைக்குப் பெண் அலிகளோடு ஆண்களோடு வாசியில்லை யென்பது; புருஷோத்தம னென்றபடி:
உலகத்திற்காணப்படுகின்ற ஆணும் பெண்ணுமலியு மல்லாத ஒருபொருள் சூனியமன்றோவென்னில்:
ஆண்பெண்ணலியல தென்னாமல் “அலர்” என அன்மையைத் துணிந்தபொருளின்மேலேற்றிச் சிறப்புப்பற்றி
வந்த உயர்திணைப்பன்மையீற்றாற் கூறியதுதானே உலகத்திற்காணப்படுகின்ற ஆணின்தன்மையரு மல்லர்,
பெண்ணின் தன்மையருமல்லர், அலியின் தன்மையரு மல்லர்; ஸ்த்ரீ புந்நபும்ஸகாதிஸர்வவஸ்து
விலக்ஷணர் புருஷோத்தமரென்று நன்கு காட்டாநின்ற தென்க.
“ஆணல்லன் பெண்ணல்ல னல்லாவலியு மல்லன்” என்ற ஆழ்வார்பாசுரசம்பந்தமாகப் பட்டர் திருவாய் மலர்ந்தருளிய
உபந்யாசம் இங்குக்கருதத்தக்கது.
“சாபமே சபித்தல் வில்லாம்” என்பது நிகண்டாதலின், சாபமென்பதற்கு – சபிப்பென்றும் வில் லென்றும் பொருள்கொண்டு,
பிருகுமுனிவரதுசாபத்தாலென்றும், சிவபிரானது வில்லை முறித்ததனா லென்றுங் கருத்துக்கொள்க.

இச்செய்யுளில் “ஆண்பெண்ணலியலர்” முதலாக எடுத்துக்கூறிய சொற்றொடர்களின் சாதுரியத்தையும்
ஆழ்ந்தபொருள் நுணுக்கத்தையும் சிலேடைப்பொருளின் நயத்தையுங் கருதாது
ஆசிரியர்மீது அழுக்காற்றினாற் குற்றங்கூறுவது சிறிது பொருத்தமில்லாதொழியு மென்க.

இது, நான்கு அடிகளால் தனித்து வந்து ஈற்றடி எண்சீராய் மிக்கு ஏனையடிகள் அளவடிகளாய் நின்ற கலித்தாழிசை.

————-

பிரிவாற்றாத தலைவியின் நிலை கண்டு நல் தாய் இரங்கல்

27- மானை எய்தவர் இன்னம் என் மட மானை எய்திலர் நேமியால்
மாலை தந்தவர் பைந்துழாய் மது மாலை தந்திலர்-இந்திரன்
சோனை மாரி விலக்கி விட்டவர் சொரி கண் மாரி விலக்கிலார்
சுரர் தமக்கு அமுதம் கொடுத்தவர் சோதி வாய் அமுதம் கொடார்
தானை ஐவர் கொடிக்கு அளித்தவர் தானை கொண்டது அளிக்கிலார்
சங்கற்கு இரவைத் தடுத்தவர் தையலுக்கு இரவைத் தடார்
ஆனை முன் வரும் அன்புளார் முலை ஆனை முன் வரும் அன்பிலார்
அணி அரங்கர் நடத்தும் நீதி அநீதியாக இருந்ததே –27-

(இ – ள்.) (முன்பு சீதைக்காக), மானை – (மாயையால் வந்த மாரீசனா கிய) மானை,
எய்தவர் – (அம்பினால்) எய்தவர்,
இன்னம் – இன்னமும்,
என்மட மானை – எனது இளைய மான்போன்ற பார்வையையுடைய மகளை,
எய்திலர் – அடைந்தாரில்லை; (முன்பு பாரதயுத்தத்தில்),
நேமியால் – சக்கரத்தால், (சூரியனை மறைத்து),
மாலை தந்தவர் – அந்திப்பொழுதைச் செய்தவர், (என் மகளுக்கு),
பைந் துழாய் மது மாலை – தேனினையுடைய பசியதிருத்துழாய்மாலையை,
தந்திலர் – தந்தாரில்லை; (முன்பு கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்து),
இந்திரன் சோனை மாரி – இந்திரனால் விடாது பெய்விக்கப்பட்ட பெருமழையை,
விலக்கிவிட்டவர் – தடுத்தருளியவர்,
சொரி கண் மாரி – (என்மகள்) கண்களினின்றும் பெய்கின்ற கண்ணீர் மழையை,
விலக்கிலார் – தடுத்தாரில்லை; (முன்பு பாற்கடல்கடைந்து),
சுரர்களுக்கு – தேவர்களுக்கு,
அமுதம் – அமிருதத்தை, கொடுத்தவர் -, (என்மகளுக்கு),
சோதிவாய் அமுதம் – ஒளிபொருந்திய (தமது) திருவாய்மலரிடத்துளதாகிய அதராமிருதத்தை,
கொடார் – கொடுத்தாரில்லை;
ஐவர் கொடிக்கு – (துரியோதனன் தம்பியால் துகிலுரியப்பட்ட) பாண்டவர் மனைவியாகிய திரௌபதிக்கு,
தானை அளித்தவர் – துகிலை (மேன்மேல் மாளாது வளரும்படி) அருளியவர், (என்மகளுக்கு),
தானை கொண்டது – தாங்கொண்ட துகிலை,
அளிக்கிலார் – கொடுத்தருளினாரில்லை;
சங்கரற்கு – உருத்திரனுக்கு,
இரவை – பிச்சை யெடுத்தலை,
தடுத்தவர் – போக்கியருளியவர்,
தையலுக்கு – (என்) மகளுக்கு,
இரவை – (நெடிதூழிகாலமாய்த் தோன்றிவளர்கின்ற) இராப்பொழுதை,
தடார் – (அங்ஙனம் வளரவொட்டாது) தடுத்தாரில்லை;
ஆனை முன் வரும் – கஜேந்திராழ்வானுக்கு எதிரில் வந்து பாதுகாத்தருளிய,
அன்பு உளார் – அன்புடையவர்,
முலை யானை முன் வரும் – (என்மகளது) தனங்களாகிய யானைகளுக்குமுன்னே வந்து தோன்றுகின்ற,
அன்பு இலார் – அன்பில்லாதவராயிருந்தார்; (ஆகையால்),
அணி அரங்கர் – அழகிய ரங்கநாதர்,
நடத்தும் நீதி – நடத்துகின்ற முறைமையெல்லாம்,
அநீதி ஆக – முறைமையல்லாததாக, இருந்தது -; (எ – று.)

இது, தலைமகனோடு புணர்ந்து பிரிந்த தலைமகள் பிரிவாற்றாமையாற் படுகிற பலவகைத் துன்பங்களையுங் கண்டு
ஆற்றாளான நற்றாய் தன்ஆற்றாமை மிகுதியால் இரங்கிக் கூறியது.
விரகவேதனையால் துகில்நெகிழ்ந்துபோகின்றமை பற்றி, தானைகொண்ட தென்றார்.
ததயல் – அழகு; அஃதுடையாளுக்கு ஆகுபெயர். கொங்கை களுக்கு யானையின்கோடுகளையும் மஸ்தகங்களையும்
உவமையாகக்கூறுவது மரபாதலால், முலையானை யென்றார்.
இனி, “தானைகொண்ட தளிக்கிலார்” என்பதில் தானையென்பதனைத் தான் ஐ எனப்பிரித்துத் தான்
விரகவேத னையையுண்டாக்கிக் கவர்ந்துகொண்ட அழகை மீட்டும் வந்து புணர்ந்து அளிக்கில ரென்றும்,
‘ஆனைமுன்வரு மன்புளார்’ என்னுமிடத்தில் மன்புள்ளார் எனப் பிரித்துக் கஜேந்திராழ்வான் முன்னே
விரைந்து வருகின்ற பெரிய கருடனை யுடையவ ரென்றும், ‘முலையானைமுன்’ என்பதை முலையால் நைமுன் எனப்
பிரித்துத் தனங்களால் வருந்துமுன்னே யென்றும் பொருள் கொள்ளலாம்.

இச்செய்யுளில் எய்தவர் எய்திலார் முதலாகக் கூறப்பட்டவை எதிர் மறையும் உடன்பாடுமாய்ச் சிலசொற்றொடர்கள்
சொல்லாலும் சிலசொற்றொடர்கள் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்படத் தொடுக்கப்பட்டதனால்,
முரண்தொடை; “சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றது காண்க.
அழகரந்தாதி – 83, திருவேங்கடத்தந்தாதி – 83 – ஆஞ் செய்யுள்களும் நோக்கத்தக்கன.

“மாத்துளவத், தாரானை வேட்கையெல்லாந் தந்தானை மும்மதமும், வாரானை யன்றழைக்க வந்தானைக் – காரான,
மெய்யானை யன்பருக்கு மெய்த்தானைக் கண்கைகால், செய்யானை வேலையணைசெய்தானை –
வையமெலாம், பெற்றானைக் காணப் பெறாதானைக் கன்மழைக்குக், கற்றானைக் காத்ததொரு கல்லானை – யற்றார்க்கு,
வாய்ந்தானைச் செம்பவள வாயானை மாமுடியப், பாய்ந்தானை யாடரவப் பாயானை” என்னும்
திருநறையூர்நம்பி மேகவிடுதூதும் ஒருசார் ஒப்புநோக்கத்தக்கது.
அடிதோறும் வந்தசொற்களே மீண்டும் வந்ததனால், மடக்கு.

இது, முதல் மூன்று ஐந்தாஞ் சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு ஏழாஞ் சீர்கள் கூவிளச்சீர்களுமாய்
வந்தது அரையடியாகவும், அஃது இரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்குசீராசிரியவிருத்தம்.

———————-

இருளினும் வெளியினும் மருளினும் தெருளினும்
இன்பமே அடையினும் துன்பமே மிடையினும்
ஒருவர் முன் புகழினும் இருவர் பின்பு இகழினும்
ஊன் இறந்து அழியினும் யான் மறந்து ஒழிவனோ
சுருதி நின்று ஒலிடும் கரதலம் நாலொடும்
துவளும் நூல் மார்பமும் பவள வாய் மூரலும்
திரு அரங்கேசர் சுருள் கரும் கேசமும்
செய்ய நீள் முடியும் அத்துய்ய சேவடியுமே –28-

(இ – ள்.) இருளினும் – இருட்பொழுதிலும்,
வெளியினும் – பகற்பொ “திலும்,
மருளினும் – (மாயைவசத்தால்) மயங்குங்காலத்தும்,
தெருளினும் – (அங்ஙனம் மயங்காது) தெளிந்திருக்குங்காலத்தும்,
இன்பமே அடையினும் – இன்பந்தானே வந்து சேர்ந்தாலும்,
துன்பமே மிடையினும் – துன்பந்தானே மிக்கு நெருங்கி வந்தாலும்,
ஒருவர் முன் புகழினும் – ஒருத்தர் முன்னே வந்துநின்று புகழ்ந்தாலும்,
இருவர் பின்பு இகழினும் – பலர் பின்னே நின்று இகழ்ந்தாலும்,
ஊன் இறந்து அழியினும் – உடம்பு அழிந்து ஒழிந்தாலும், – யான் -, –
திருவரங்கேசர்தம் – ஸ்ரீரங்கநாதரது,
சுருதிநின்று ஓலிடும் – நான்கு வேதங்களும் புகழ்ந்துநின்று முறையிடுகின்ற,
கரதலம் நாலொடும் – நான்கு திருக்கைகளையும்,
துவளும் நூல் மார்பமும் – முப்புரி நூலசைந்து விளங்குகின்ற திருமார்பையும்,
பவளம் வாய் மூரலும் – பவழம் போலச் சிவந்த திருவாய்மலரினது புன்சிரிப்பையும்,
சுருள் கருங்கேசமும் – சுருண்ட கரிய மயிர் முடியையும்,
செய்ய நீள் முடியும் – செவ்விதாகிய (அழகிய) நீண்ட திருமுடியையும்,
துய்ய சேவடியும் – தூய்மையான சிவந்த திருவடிகளையும்,
மறந்து ஒழிவனோ – மறந்து போவேனோ? (மறவேன்).

ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வ அவஸ்தைகளிலும் எம்பெருமானது திருவுருவத்தை மறவே னென்பதாம்.
“என்வாய்முதலப்பனை யென்றுமறப்பனோ”, “மறப்பனோ வினியா னென்மணியையே” என்று நம்மாழ்வார் பாசுரம்.
“ஒருவர்முன்புகழினும் இருவர்பின்பு இகழினும்” என்றதனால், ஒருவர் ஒருத்தனை முன்னேநின்று புகழ்ந்தால்,
பலர் அவனை இகழ்வரென்ற உலகவியற்கையை வெளியிட்டார்.
இருவரென்பது, ஒன்றின்மேற்பட்டவ ரென்னும் பொருள்பட நின்றது. பின்பு இகழ்தல் – புறங்கூறுதல்.
சேவடியை இறுதியில் வைத்துக்கூறியது, எம்பெருமானது எந்தத் திருவவயவத்தை மறப்பினும்
பிறவிப்பெருங்கடலுக்குப் புணையாகிய திருவடிகளை மறவேனென்னுந் துணிவு குறித்தற்கு.
இத்திருவடிக்குத் தூய்மையாவது – தன்னையடைந்தவரைப் பிறவிக்கடலுள் அழுந்தாதபடி குறிக்கொண்டு
பாதுகாத்துப் பரிசுத்தமாகிய முத்தியென்னும் அக்கரையிற் கொண்டுசேர்க்குந்திறம்.

இது, எல்லாச்சீரும் விளச்சீராகிய எண்சீராசிரியவிருத்தம்.

———-

29-சேவடியால் மூவடி மண் தென் அரங்கத்து அம்மான் நீ
மாவலி பால் வாங்கிய நாள் மண் உலகோ -மூ வுலகும்
வீசும் காலோ வலிய வெவ்வினையேன் நெஞ்சமோ
பேசுங்கால் ஏதோ பெரிது –29-

(இ – ள்.) தென்அரங்கத்து அம்மான் – அழகிய ரங்கநாதனே! – நீ -,
சேவடியால் – சிவந்த திருவடிகளால்,
மூ அடி மண் – மூன்றடி நிலத்தை,
மாவலிபால் – மகாபலிசக்கரவர்த்திபக்கல்,
வாங்கிய நாள் – வேண்டியிரந்து உலகனைத்தும் ஈரடியா லொடுக்கி யளந்த பொழுது, –
மண் உலகோ – நிலவுலகமோ, (அந்நிலவுலகத்தைத் தன்னுள் அடிக்கியளந்த),
மூவுலகும் வீசும் காலோ – மூன்றுலோகத்திலும் பரவிய திருவடியோ,
வலிய வெம் வினையேன் நெஞ்சமோ – (அத்திருவடிகளைத் தன்னுளடக்கிய) வன்மையாகிய கொடியவினைகளையுடைய எனது மனமோ,
பேசும்கால் – சொல்லுமிடத்து, ஏதோ – எதுவோ, பெரிது – பெரியது? (எ – று.)

எம்பெருமானது திருவடிகள் உலகங்களையெல்லாம் தனது ஈரடிக்குள் அடக்கியமையால் மிகப்பெரியன:
அவற்றை எனதுநெஞ்சு தன்னுள் அடக்கிக்கொண்டிருத்தலால், என்நெஞ்சே அத்திருவடிகளினும் பெரிய தென்பதாம்;
யான் பக்திவசப்படுதலாலாகும் மெய்ப்பாடுகளிற் குறைவுற்ற கொடுவினையேனாயினும் எம்பெருமானது திருவடிகளை
எப்பொழுதும் மனத்திற்கொண்டு தியானிக்கின்றே னென்பது, கருத்து.
இங்கு, ஆதேயமாகிய (நெஞ்சமென்னும் ஆதாரத்தி லிருப்பதாகிய) திருவடிகளினும் அதற்கு ஆதாரமாகிய
நெஞ்சத்திற்குப் பெருமை கூறியதனால், இது – மிகுதியணியின்பாற்படும்;
இதனை வடநூலார் அதிகாலங்கார மென்பர்.

“புவியுமிரு விசும்பும் நின்னகத்த நீ என்,
செவியின்வழி புகுந்து என்னுள்ளாய் – அவிவின்றி,
யான்பெரியன் நீபெரியை யென்பதனை யார்அறிவார்,
ஊன்பெருகுநேமியாய்! உள்ளு” என்ற அருளிச்செயல், இங்கு நோக்கத்தக்கது.

இது, பிறப்பென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

————–

நாரை விடு தூது
30-பெறு வரம் கேசவன் அல்லாது அருள் செயும் பேர் இலை வேறு
ஒருவர் அங்கே சற்றும் ஓதார் என் காதலை ஓடி எங்கும்
கரு அரங்கே சலிக்கத் திரிவோர்க்குக் கருணை செய்யும்
திரு அரங்கேசற்கு நீ சொலல் வேண்டும் செழுங்குருகே –30-

(இ – ள்.) செழுங் குருகே – செழுமையான நாரையே! –
பெரு வரம் – பெரியவரங்களை,
அருள்செயும் பேர் – கொடுத்தருளுகின்றவர்,
கேசவன்அல்லாது – கேசவனேயல்லாமல்,
(வேறு) இலை – வேறொருவரும் இல்லை;
அங்கே – அவ்வெம்பெருமானிடத்தே,
ஓடி – விரைந்துசென்று,
என்காதலை – எனது விருப்பத்தை,
வேறு ஒருவர் -, சற்றும் ஓதார் – சிறிதுஞ் சொல்லார்; (ஆகையால்), –
எங்கும் – எவ்விடத்தும் (எல்லாப் பிறப்புக்களிலும்).
கரு அரங்கே – கருப்பத்தினிடத்தே,
சலிக்க – துன்பமுண்டாக,
திரிவோர்க்கு – மாறி மாறிப் பிறந்திறந்து அலைபவர்களுக்கு,
கருணை செய்யும் – அருள் செய்கின்ற, திருவரங்கேசற்கு -, நீ -,
(விரைந்து சென்று என்காதலை), சொல்ல வேண்டும் -; (எ – று.)

இது, தலைவனைப் பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாது வருந்தும்போது அங்ஙனம் இரங்குமிடம் நெய்தல்நில மாதலால்,
அந்நிலத்தில் குருகென்னும் பறவைகள் கழிக்கரையில் இரைதேடுவதற்கு வர, அவற்றை நோக்கி
“எனது நிலைமைகளை எனதுதலைவனான திருவரங்கநாதன்பக்கல் சென்று சொல்வார் ஒருவரும் இலர்;
நீ சென்று சொல்லவேண்டும்ழுஎன்று வேண்டிய துறை.

வேண்டியதை யளிப்பவனும் ஸ்ரீரங்கநாதனே; அவ்வெம்பெருமானிடத்து என் அன்பை அறிவிக்கத்தக்கவனும் நீயே யென்பதாம்.
மூன்றாமடி – எம்பெருமான் நிர்ஹேதுகமாக உயிர்களின் மீது பாராட்டும் கருணையின் ஏற்றத்தை விளக்கும்.
முதலெழுத்துத்தவிர இரண்டுமுதலிய சிலஎழுத்துக்கள் ஒன்றிநிற்கப் பொருள்வேறுபட்டு வந்ததனால்,
திரிபு என்னுஞ் சொல்லணியாம். வேறு – மத்திமதீபம். கரு – கர்ப்பமென்பதன் விகாரம். அரங்கு – சிறுவீடு.

இது, நிரையசைமுதலாக வந்த கட்டளைக்கலித்துறை

————-

31-குருகு உறங்கு கானலே கரு நிறம் கொள் பானலே
கொடி இருண்ட ஞாழலே நெடிய கண்டல் நீழலே
பொரு தரங்க வேலையே நிருதர் அங்க மாலையே
போது அயின்ற கம்புளே ஏதை என்று இயம்புகேன்
திரு அரங்கர் இணை இலா ஒரு புயங்க அணையிலே
திகழ் வலக்கை கீழதா முகில் மலர்க்கண் வளர்வதோர்
கருணை நம்பு வதனமும் அருணவிம்ப அதரமும்
காவி கொண்ட மேனியும் ஆவி கொண்டு போனவே –31–

இ – ள்.) குருகு உறங்கு கானலே – நாரைகள் தங்குவதற்கிடமாகிய கடற்கரைச்சோலையே!
கரு நிறம் கொள் பானலே – கரியநிறத்தைக் கொண்ட கருங்குவளையே!
கொடி இருண்ட ஞாழலே – (தன்னைக் கொள்கொம்பாகப் பற்றிச் சுற்றியிருக்கின்ற) கொடிகளால் இருண்டிருக்கின்ற குங்கும மரமே!
நெடிய கண்டல் நீழலே – நீண்ட தாழையின் நிழலே!
பொரு தரங்கம் வேலையே – மோதுகின்ற அலைகளையுடைய கடலே!
நிருதர் அங்கம் மாலையே – அரக்கரது உருவம்போன்ற கருநிறத்தையுடைய அந்திப்பொழுதே!
போது அயின்ற கம்புளே – மலர்களை (உணவாகக்கொண்டு) உண்கின்ற நீர்வாழ்பறவையே! –
எதை இன்று இயம்புகேன் – இப்பொழுது (யான்) என்னவென்று (எடுத்துச்) சொல்லப்போகிறேன்!
திருஅரங்கர் – ஸ்ரீரங்கநாதர்,
இணைஇலா – ஒப்பில்லாத,
ஒரு புயங்கம்அணையிலே – ஒரு சேஷ சயனத்திலே,
திகழ் வலக்கை – விளங்குகின்ற வலத் திருக்கையை,
கீழதா – (தலையின்) கீழிடத்ததாகக்கொண்டு,
முகிழ் மலர்கண் வளர்வது – அரும்பி மலர்ந்த தாமரைபோன்ற திருக்கண்கள் அறிதுயில் செய்யப்பெற்ற,
ஓர் – ஒப்பில்லாத,
கருணை நம்பு வதனமும் – அருளால் விரும்பப்படுகின்ற திருமுகமண்டலமும்,
அருண விம்ப அதரமும் – சிவந்த கொவ்வைப்பழம் போன்ற திருவதரமும்,
காவி கொண்ட மேனியும் – கருங்குவளை மலர் போன்ற திருமேனியும்,
ஆவி – (எனது) உயிரை,
கொண்டு போன – கொள்ளைகொண்டு போயின; (எ – று.)

இரங்குதல் நெய்தற்றிணைக்குரியதாதலால், இக்கவி, அங்ஙனம்நெய்தலில் தலைவனைப் பிரிந்து தனியேயிருந்து
வருந்துகிற தலைமகள் ஆண்டுள்ள பொருள்களை நோக்கி இரங்கிக் கூறியது இது.

‘குருகுறங்குகானல், பொருதரங்கவேலை” என்பதனால் நிலமுதற்பொருளும்,
“நிருதரங்கமாலை” என்றதனால் காலமுதற்பொருளும்,
“பானலேஞாழலே’ என்பன முதலியவற்றால் கருப்பொருளும்,
‘ஏதையின்று இயம்புகேன் ….. ஆவிகொண்டுபோனவே’ என்பதனால் உரிப்பொருளும் கூறப்பட்டமை காண்க.

குருகு – மற்றை நீர்வாழ்பறவைகளுக்கும் உபலக்ஷணம் கம் – நீர்; கம்புள் – சம்பங்கோழி.
இயற்கையாய் உயிர்கண்மே லுளதாகின்ற நிர்ஹேதுக கிருபை திருமுகத்தே நன்றாக விளங்குவதென்பார்,
“கருணை நம்பு வதனம்” என்றார்.
விம்பம் – பிம்பம். அதரம் – கீழுதடு. கொண்ட – உவமவுருபு;
“யாழ்கொண்ட விமிழிசை” என்பதிற் போல. “ஞாயிறு திங்க ளறிவே நாணே, கடலே கானல் விலங்கே மரனே,
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே, யவையல பிறவு நுவலிய நெறியாற், சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ்,
சொல்லியாங் கமையு மென்மனார் புலவர்” என்னுஞ் சூத்திரத்தால் அஃறிணைப்பொருள்கள் கேட்பன போலச் சொல்லப்பட்டன.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் விளங்காய்ச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள்
விளச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்; பன்னிருசீரெனினும் அமையும

———–

எம்பெருமானது அளவிடற்கு அரிய பெருமை –

32-போனகம் பதினாலு புவனம் திருப்பள்ளி பொறி அரவணைப் பாற் கடல்
-பூ மடந்தையும் நிலா மடந்தையும் தேவியர் -புராதன மறைக்கும் எட்டா
வானகம் பேரின்ப முடன் வீற்று இருக்கும் இடம் வாகனம் வயின தேயன் –
மலர் வந்த நான்முகன் திரு மைந்தன் அவன் மைந்தன் மதி சூடி வாக வன் முதல்
தேன் நறும் தொடை மௌலி முப்பத்து முக்கோடி தேவர் உனது ஏவல் செய்வோர்
திங்களும் பரிதியும் சங்கமும் திகிரியும் திரிவனவும் நிற்பனவும் ஆம்
ஏனைமன் உயிர் முழுதும் விளையாட நீ வகுத்திட்ட பல மாயை அதனால்
எழில் அரங்கம் துயிலும் எம்பிரான் நின் பெருமை யாவரே வாழ்த்து வாரே –32-

(இ – ள்.) எழில் அரங்கம் – திருவரங்கத்தே,
துயிலும் – பள்ளிகொள்கின்ற,
எம் பிரான் – எமது தலைவனே! – (உனக்கு),
போனகம் – உணவு,
பதினாலு புவனம் – பதினான்கு உலகங்கள்;
திரு பள்ளி – அழகிய சயனம்,
பொறி அர அணை பால் கடல் – புள்ளிகளையுடைய ஆதிசேஷனாகிய சயனத்தையுடைய திருப்பாற்கடல்;
தேவியர் – மனைவியர்,
பூமடந்தையும் நிலமடந்தையும் -; பேரின்பமுடன் -,
வீற்றிருக்கும் – எழுந்தருளியிருக்கின்ற,
இடம் -, புராதனம் மறைக்கும் – பழமையாகிய (அநாதியாகிய) வேதங்களுக்கும்,
எட்டா – அறியவொண்ணாத,
வானகம் – பரமபதம்;
வாகனம் -, வயினதேயன் – கருடன்;
திரு மைந்தன் – அழகிய குமாரன்,
மலர்வந்த நான்முகன் – நாபீகமலத்தில் தோன்றிய பிரமதேவன்;
அவன் மைந்தன் – அப்பிரமதேவனது மகன் (பேரன்),
மதி சூடி – பிறையை முடியிற்சூடிய உருத்திரன்;
உனது – ஏவல்செய்வோர் – உனது குற்றேவல்களைச் செய்பவர்கள்,
வாசவன் முதல் – இந்திரன் முதலிய,
தேன் நகும் தொடை மௌலி – தேனோடு மலர்கின்ற பூமாலையைச் சூடிய முடியையுடைய,
முப்பத்து முக்கோடி தேவர் – முப்பத்துமூன்றுகோடி தேவர்கள்;
சங்கமும் திகிரியும் – சங்கசக்கரங்கள்,
திங்களும் பரிதியும் – சந்திர சூரியர்கள்;நீ -,
விளையாட – விளையாட்டாக,
வகுத்திட்ட – ஏற்படுத்திய, பல மாயை – பலவாகிய மாயைப்பொருள்கள்,
திரிவனவும் – சஞ்சரிப்பனவும்,
நிற்பனவும் – (சஞ்சரியாமல்) நிலையாக நிற்பவைகளும்,
ஆம் – ஆகிய,
ஏனை மன் உயிர் முழுதும் – மற்றை நிலைபொருந்திய உயிர்களெல்லாம்;
அதனால் – ஆகையால், –
நின் பெருமை – உனது பெருமையை,
யாவரே – எவர்தாம்,
வாழ்த்துவார் – வாழ்த்த வல்லவர்? (எவர்க்கும் வாழ்த்தலரி தென்றபடி); (எ – று.)

“காந்தஸ்தே புருஷோத்தம: பணிபதிஸ் ஸய்யாஸநம் வாஹநம், வேதாத்மா விஹகேஸ்வரோ
யவநிகா மாயா ஜகந்மோஹிநீ – ப்ரஹ்மேஸாதி ஸுரவ்ரஜஸ்ஸ தயிதஸ்த்வத்தாஸதாஸீஜந:
ஸ்ரீரித்யேவச நாம தே பகவதி! ப்ரூம: கதம் த்வாம் வயம்” என்னும் ஆளவந்தார் ஸ்ரீஸூக்தியின் கருத்தைக்கொண்டு,
ரங்கநாதன் விஷயமாக இப்பாடல் இருக்கின்றதென அறிக.

இதில், ஒருவாறு எம்பெருமானது ஸ்வரூபரூபகுண விபூதிகள் சொல்லப்பட்டிருத்தல் காண்க.
“போதின்மங்கை பூதலக்கிழத்தி தேவியன்றியும், போதுதங்கு நான்முகன் மகன்
அவன்மகன்சொலில், மாதுதங்கு கூறன்” என்பது, திருமழிசையாழ்வார்பாசுரம்.
வயினதேயன் – விநதையின் மகன். திரிவன, நிற்பன என்பவை – முறையே சரமென்றும், அசரமென்றும்; ஜங்கமமென்றும், ஸ்தாவரமென்றும்; இயங்குதிணைப்பொருளென்றும், நிலைத்திணைப்பொருளென்றுங் கூறப்படும்.
“பொங்கர வென்பது மெல்லணை யூர்தி வெம்புள்ளரசு,
பங்கய மின்னொடு பார்மகள் தேவி படைப்பவன் சேய்,
கிங்கரர் விண்ணவர் சாதகநாடிறை கேழலொன்றா,
யங்கணெடும்புவி யெல்லா மிடந்த வரங்கருக்கே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்.
முப்பத்து முக்கோடிதேவர் – ஆதித்தியர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், வசுக்கள் எண்மரும்,
மருத்துவர் இருவருமாகிய முப்பத்து மூவரையுந் தலைவராகவுடைய தேவர்கள்;
“எண்மர் பதினொருவ ரீரறுவ ரோரிருவர், வண்ண மலரேந்தி வைகலு – மெண்ணி,
நறுமாலையாற்பரவி யோவாதெப்போதுந், திருமாலைக் கைதொழுவர் சென்று” என்றார் பொய்கையாழ்வாரும்.

எம்பெருமான் எல்லாவற்றிலும் நிரம்பி யாதொரு குறைவுமின்றி யிருப்பவனாதலால், அவன் உலகங்களைப் படைத்தல்
யாதுபயனைக்கருதியோ? என்று ஐயப்பாடுதோன்ற வினாவினார்க்கு,
ஸௌர்யவீர்யபராக்கிரமங்களால் நிரம்பி இந்நானில முழுவதையும் தனிச்செங்கோல் செலுத்தும் மண்டலாதிபதி
கேவலம் வினோதத்தின் பொருட்டுப் பந்து முதலியவற்றைச் செய்துகொள்ளுதல்போலவே எம்பெருமானும்
கேவலம் விளையாட்டின்பொருட்டே உலகங்களைப் படைப்ப னென்று
வேதாந்தங்களில் அறுதியிடப்பட்டிருத்தல் காண்க எனச் சமாதானங் கூறியவாறு.

இது, பெரும்பாலும் முதல் ஐந்தாஞ் சீர்கள் விளச்சீர்களும், இரண்டு மூன்று நான்காஞ் சீர்கள் காய்ச்சீர்களும்,
ஆறு ஏழாஞ் சீர்கள் மாச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும், அஃது இரட்டி கொண்டது ஓரடியாகவும் உள்ள
பதினான்குசீராசிரியவிருத்தம்.

————–

தலைவனது உறுப்பு எழுத அரிது எனத் தலைவி -பிரிவாற்றாது வருந்தி இரங்குதல்-

33- வாழும் மௌலித் துழாய் மணமும்-மகரக் குழை தோய் விழி அருளும்
-மலர்ந்த பவளத் திரு நகையும் -மார்பில் அணிந்த மணிச் சுடரும்
தாலும் முளரித் திரு நாபித் தடத்துள் அடங்கும் அனைத்து உயிரும்
-சரண கமலத்து உமை கேள்வன் சடையில் புனலும் காணேனால் –
ஆழம் உடைய கரும் கடலின் அகடு கிழியச் சுழித்து ஓடி
அழைக்கும் குட காவிரி நாப்பண் ஐவாய் அரவில் துயில் அமுதை
ஏழு பிறப்பில் அடியவரை எழுதாய் பெரிய பெருமானை
எழுத அரிய பெருமான் என்று எண்ணாது எழுதி இருந்தேனே –33-

(இ – ள்.) வாழும் – (திவ்வியமங்களஸ்வரூபமாக) வாழ்கின்ற,
மவுலி – திருமுடியிற் சூடிய,
துழாய் – திருத்துழாயில்,
மணமும் – நறுநாற்றத்தையும்,
மகரம் குழை தோய் – (காதிலணிந்த) மகரகுண்டலங்களை அளாவுகின்ற,
விழி – திருக்கண்களில்,
அருளும் – திருவருளையும்,
மலர்ந்த பவளம் திரு நகையும் – பவழம்போலச் சிவந்த திருவாய்மலரில் அழகிய புன்சிரிப்பையும்,
மார்பில் அணிந்த மணி சுடரும் – திருமார்பிற் சாத்திய கௌஸ்துப மணியில் ஒளியையும்,
தாழும் முளரி திரு நாபி தடத்துள் – ஆழ்ந்த அழகிய நாபீகமலத்தினிடத்தில்,
அடங்கும் – அடங்கியிருக்கின்ற,
அனைத்து உயிரும் – எல்லாவுயிர்களையும்,
சரண கமலத்து – திருவடித்தாமரைமலர்களில்,
உமை கேள்வன் சடையில் புனலும் – பார்வதியின் கணவனாகிய பரமசிவனது (கபர்த்தமென்னுஞ்) சடையில் தங்குகின்ற கங்கைநீரையும்,
காணேன் – காண்கிறேனில்லை;
ஆல் – ஆகையால்,
ஆழம்உடைய -, கருங்கடலின் – கரிய கடலினது,
அகடு – நடுவிடம்,
கிழிய – பிளவுறும்படி,
சுழித்து – சுழித்துக் கொண்டு,
ஓடி – விசையாக ஓடி,
அலைக்கும் – அலைக்கின்ற,
குட(க்கு) காவிரி – மேற்றிசையினின்றும் வருகின்ற காவேரிநதியினது,
நாப்பண் – நடுவில்,
ஐ வாய் அரவில் – ஐந்தலை நாகத்தில்,
துயில் – கண்வளர்கின்ற,
அமுதை – அமிருதம்போலினியவனும், –
அடியவரை – தன்னடியார்களை,
ஏழுபிறப்பில் – எழுவகைப்பிறவித்தொகையுள்,
எழுதா – எழுதாத (சேர்க்காத),
பெரிய பெருமானை – பெரியபெருமாளுமாகிய அரங்கநாதனை,
எழுத அரிய பெருமான் என்று – எழுதுதற்கரிய (கட்டழகுடைய) எம்பெருமானென்று,
எண்ணாது – நினையாமல்,
எழுதி – (எண்பேதைமைத்தன்மையாற் சித்திரத்தில்) தீட்டி,
இருந்தேன் – வாளா போயினேன்; (எ – று.)

இது, எம்பெருமானைப் பிரிந்து வருந்தி அப்பெருமானது திருவுருவத்தைச் சித்திரத்தில் எழுதியேனுந் தனது துயரத்தை
ஒருவாறு தணியக்கருதி அவ்வாறு எழுதியதனுள் அவ்வுருவம் முழுவதும் அமையாமையாற் கருதிய
பயன் கைகூடப்பெறாத தலைமகளது கூற்று; எழுதரிதென்னுந் துறை.

எம்பெருமானது திருவுருவத்தை எழுதத் தொடங்கி, திருத்துழாய்மாலையோடுகூடிய திருமுடி திருக்கண்கள் திருப்பவளம்
திருமார்பத்திற் கௌஸ்துபரத்நம் நாபீபத்மம் சரணகமலம் முதலிய வடிவங்களை எழுதுகையில்,
துளசிமாலையின் நறுமணத்தையும், திருக்கண்களின் திருவருளையும், திருப்பவளத்தின் மந்தஹாஸத்தையும்,
கௌஸ்துபரத்நத்தின் ஒளியையும், நாபீகமலத்தில் உயிர்கள்யாவும் அடங்கியிருப்பதையும்,
திருவடிகளில் கங்கையடங்கியிருப்பதையும் எழுதுவது அரிதாதல் காண்க.
சித்திரத்தில் உருவம் மாத்திரம் எழுதப்படுமே யன்றி, அதன் குணஞ் செயல் முதலியன எழுதப்படாவாம்.

மகரக்குழை – முதலையின் வடிவமாகச் செய்த குண்டலம். காதளவும் நீண்ட கண்ணென்பார், “குழைதோய்விழி” என்றார்.
பவளம் – உவமவாகு பெயர். தன் அடியவரது பிறப்பை ஒழித்தலால், “பிறப்பி லடியவரை யெழுதாப்பெரிய பெருமான்” எனப்பட்டான்.
மனத்திற்குத்திருப்தியுண்டாகு மளவும் அவித்தவித்து எழுதுதற்குரிய சித்திரத்திலும் எழுதவொண்ணாத
பெருமானென அழகின்பெருமை கூறியவாறு.

இது, மூன்று ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும்,
அஃது இரட்டி கொண்டது ஓரடியாகவும் வந்த பன்னிருசீராசிரியவிருத்தம்.

————-

தலைவி மாலையை வேண்டி இரங்குதல்

34- இருங்குங்குமத் தோள் அரங்கேசர் முன் நாள்
இலங்கா புரம் காவலன் காலினால் வீழ்
கருங்குன்று போல் மண் முகம் குந்தி வீழக்
கண்டார் எனக்கு இன்று தண் தார் அளித்தால்
மருங்கு எங்கும் வம்பு ஓதுவார் வாய் அடங்கும்
வாடைக்கும் நில மங்கை ஆடைக்கும் நோகேன்
நெருங்கும் தனம் சந்தனம் பூசல் ஆகும்
நீளாது இரா மையல் மீளாது இராதே –34-

(இ – ள்.) முன்நாள் – முற்காலத்தில் (இராமாவதாரத்தில்),
இலங்கா புரம் காவலன் – இலங்கை நகருக்கரசனாகிய இராவணன்,
காலினால் வீழ் கருங் குன்றுபோல் – பெருங்காற்றினால் விழுகின்ற கரியபெரிய மலைபோல,
மண்முகம் குத்தி வீழ – மண்ணை முகத்தாற்குத்தி (தலைகவிழ்ந்து) விழும்படி,
கண்டார் – செய்தவராகிய,
இரு குங்குமம் தோள் – குங்குமமணிந்த பெரியதோள்களையுடைய, அரங்கேசர் -,
இன்று – இன்றைக்கு, எனக்கு -,
தண் தார் – குளிர்ந்த திருத்துழாய் மாலையை,
அளித்தால் – அருள்செய்வாராயின், –
மருங்கு எங்கும் – சுற்றுப்பக்கங்களெல்லாம் (இருந்து),
வம்பு ஓதுவார் – வம்பளக்கின்ற மகளிரது, வாய் -, அடங்கும் -;
வாடைக்கும் – வாடைக் காற்றுக்கும்,
நில மங்கை ஆடைக்கும் – நிலமகளது ஆடையாகிய கடலுக்கும்,
நோகேன் – வருந்தேன்;
நெருங்கும்தனம் – நெருங்கியகொங்கைகளில்,
சந்தனம் பூசல் ஆகும் -;
இரா – இராப்பொழுது,
நீளாது – நீடியாது;
மையல் – காதல்நோயும்,
மீளாது இராது – நீங்காமலிராது (நீங்கும்).(எ – று.)

தலைவனைப் பிரிந்து தவிக்கின்ற நிலையிலே வாடை கடல் முதலியவற்றிற்கு ஆற்றாத தலைவி தாரும் பெறாது
வருந்தி இங்ஙனங் கூறின ளென்க. இதன் மெய்ப்பாடு – அழுகை; பயன் – ஆற்றாமை நீங்குதல்.
தலைவனைப் பிரிந்து வருந்தும் நிலையில் தலைவி அத்தலைவன் சாத்திய மாலை கிடைக்கப்பெற்றால்
அதனை அவனாகவே பாவித்து உடம்பில் ஒற்றிக்கொண்டு அவனைத் தழுவியணைத்தவள் போன்று மகிழ்வுறக்கருதின ளாதலால்,
“எம்பெருமான் தனது மாலையைத் தந்தானாயின், அப்போது தமக்குத்தோன்றியபடியெல்லாம் வம்பளக்கின்ற மகளிர்வாயும் அடங்கும்;
காமோத்தீபகப் பொருள்களாகிய வாடை முதலியனவும் என்னை வருத்தமாட்டா; யான் இனிதிருப்பேன்” என்றன வென்பதாம்.
தனது தளர்ச்சியை ஊரலர் முதலியவற்றால் அறிந்த செவிலித்தாயர் முதலியோர் அதற்குத் தக்க பரிகாரமொன்றுஞ் செய்யாது
முனிந்துகூறும் வார்த்தைகள் தன்வருத்தத்தை மிகுவித்தல் பற்றி,
“மருங்கெங்கும் வம்போதுவார் வாயடங்கும்” என்றாள்.
வம்பு ஓதுதுல் – வீணே நிந்தித்துப் பேசுதல்; நிட்டூரவார்த்தைகளைக் கூறுதல்.
துணைவரோடு கூடியுள்ளார்க்கு இன்பஞ்செய்யும் தென்றலும் கடலும் அவரைப் பிரிந்தார்க்குத் துன்பஞ்செய்யு மென்றல் வெளிப்படை.
“ஊழிபலவோரிரவாயிற்றோ வென்னும்”,
“ஊழியிற் பெரிதால் நாழிகையென்னும்,”
“இது ஓர்கங்கு லாயிரமூழிகளே” என்றபடி கூடியநிலையில் ஒருகணமாகக் கழிகிற இரவு பிரிந்த நிலையில்
அநேகயுககாலமாக நீட்டித்துத் தோன்றுகின்றமை பற்றி, ‘நீளாதிரா’ என்றாள்;
“நீடிரவொன்று அஞ்சுகம் தத்தை விளைக்கும்” என்ற திருவேங்கடத்தந்தாதியும் காண்க.

காலினால் வீழ் கருங்குன்று – இல்பொருளுவமை;
இனி, ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் பகைமை நேர்ந்தபொழுது வாயுவினாற் கொணர்ந்து தள்ளப்பட்ட
மேரு சிகரமென உள்பொருளுவமையுமாம். வாடை – வடக்கினின்று வருங் காற்று; வடக்கிற்செல்லுங் காற்றெனத் தென்றலுமாம்.
பூமியைச் சூழ்ந்த கடலை அதற்கு ஆடையென்பது மரபு; இதனை “அப்திமேகலா” என்னும் பூமியின் வடமொழிப் பெயரானு முணர்க.
மீளாதிராது – இரண்டு எதிர்மறை உடன்பாடு உணர்த்திற்று.

இது, எல்லாச்சீரும் புளிமாச்சீராகிய எண்சீராசிரியவிருத்தம்.

————-

நெஞ்சிற்கு அறிவுறுத்தல் –

35-தேடுகின்றனை ஐம்பொறிகளுக்கு இரை தேடியும் கிடையாமல்
வாடுகின்றன வீடு சென்று என்று இனி மருவுவை மட நெஞ்சே
ஆடு கின்றிலை அழுகிலை தொழு கிலை அரங்கனைக் கரம் கூப்பி
பாடு கின்றிலை நினைகிலை பதின்மர்தம் பாடலின் படியாயே–35-

(இ – ள்.) மட(மை) நெஞ்சே – அறியாமையையுடைய மனமே! அரங்கனை -,
கரம் கூப்பி – கைகூப்பி,
தொழுகிலை – வணங்குகின்றாயில்லை; (அங்ஙனம் வணங்கிப் பேராநந்தத்தால்),
ஆடுகின்றிலை – நர்த்தனஞ்செய்கின்றாயில்லை;
அழுகிலை – (கண்ணீர்விட்டு) அழுகிறாயில்லை;
பதின்மர்தம் பாடலின் படியாய் – ஆழ்வார்கள் பதின்மரது பாசுரத்தின்படியே,
பாடுகின்றிலை – பாடித்துதிக்கின்றாயில்லை;
நினைகிலை – தியானஞ்செய்கின்றாயுமில்லை; (இவையேயுமன்றி), –
ஐம்பொறிகளுக்கு – பஞ்சேந்திரியங்களுக்கும்
இரை – உணவை,
தேடுகின்றனை – தேடுகின்றாய்;
தேடியும் – (அவ்வாறு) தேடியும்,
கிடையாமல் – (இரை) அகப்படாமையால்,
வாடுகின்றனை – வருந்துகின்றாய்; (ஆகையால் நீ), இனி -,
என்று – என்றைக்கு,
வீடு சென்று மருவுவை – பரமபதம்போய்ச் சேர்வாய்? (எ – று.)

எம்பெருமானைத் தியானித்து ஆநந்தக்கூத்தாடுதல் முதலிய நற்றொழில்கள் ஒன்றும் செய்யாமல் ஐம்பொறிகளின்
வசப்பட்டு வாடும் தமது மனத்திற்கு இனியேனும் விஷயாந்தரங்களிற் செல்லுதலைவிட்டு
அரங்கனைத்தொழுதல் முதலியன செய்து வீடுபெறுவாயென அறிவுறுத்தியபடி.

“ஆடிப்பாடியரங்கவோவென்றழைக்குந்தொண்டர்” என்றபடி ஆடிப்பாடித் தொழுதல் தொண்டர்களின் செயலாத லறிக.
அரங்கநாதனுக்கு “பதின்மர்பாடும் பெருமாள்” என ஒருவிருது இருத்தல் கருதத்தக்கது.
இரை – சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமாகிய புலன்கள். நினைதல் ஒழிந்த ஆடுதல் முதலிய தொழில்கள்
மெய்மொழிகளதாயினும், இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் மனமாதலால், அதன் தொழிலாகக் கூறினார்.

இது, முதற்சீர் தேமாச்சீரும், ஈற்றுச்சீர் புளிமாங்காய்ச்சீரும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரிய விருத்தம்.

——–

உலகிற்கு அறிவுறுத்தல்

36-ஆயினை மனையை சேயினை பிதாவை
அனத்தினை தனத்தினை விரும்பும்
பேயினை மறந்து நோயினை மூப்பை
பிறப்பினை இறப்பினை துடைப்பீர்
ஆயனை முளரி வாயனை என்கண்
அமலனை கமலனைப் பயந்த
தாயனை நெடிய மாயனை வடபால்
தரங்கனை அரங்கனை தொழுமே –36-

(இ – ள்.) ஆயினை – தாயையும்,
மனையை – மனைவியையும்,
சேயினை – மக்களையும்,
பிதாவை – தந்தையையும்,
அனத்தினை – சோற்றையும்,
தனத்தினை – பொருளையும்,
விரும்பும் – விரும்புகின்ற,
பேயினை – அறியாமைக்குணத்தை,
மறந்து – விட்டொழிந்து,
நோயினை – வியாதியையும்,
மூப்பை – கிழத்தனத்தையும்,
பிறப்பினை – ஜநநத்தையும்,
இறப்பினை – மரணத்தையும்,
துடைப்பீர் – ஒழிக்க விரும்புபவர்களே! –
ஆயனை – திருவாய்ப்பாடியில் வளர்ந்தவனும்,
முளரிவாயனை – செந்தாமரைமலர்போன்ற திருவாயையுடையவனும்,
அமலனை – குற்றமற்றவனும்,
கமலனை பயந்த – நாபீகமலத்துப் பிரமதேவனைப் பெற்ற,
தாயனை – தாயானவனும்,
நெடிய – மிகுந்த,
மாயனை – மாயையையுடையவனும்,
வடம் பால் தரங்கனை – ஆலிலையிலும் பாற்கடலிலும் பள்ளிகொள்பவனுமாகிய,
எங்கள் அரங்கனை -, தொழும் – வணங்குங்கள். (எ – று.)

மனைவி மக்களை நினைந்து பிறப்புக்களில் உழல்வதை விட்டு நற்கதிபெற விரும்பினால் ஸ்ரீரங்கநாதனை
வணங்குவதொன்றுமே செய்யவேண்டும் என்று உலகத்தோர்க்கு நல்லறிவு கூறியவாறு.
பேய் – பேய்க்குணம்; ஆகுபெயர். தரங்கம் – ஆகுபெயர். தொழும் – உம்மீற்று. முன்னிலையேவற்பன்மைமுற்று;
உம்மீறு முன்னிலைக்கு வருதல், புதியனபுகுதல். இனி, நீவிர் தொழும்; தொழுவீரேல் துடைப்பீ ரெனவுங் கூட்டி முடிக்கலாம்.

இது, இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தம்.

————–

இறுதி மடக்கு

37-தொழப் பெறாதது அந்த ஆரணத்து அந்தமே
தொட்டு இறுத்ததும் வாரணத் தந்தமே
வழுத்து தாள் முன்பு வனம் கடந்ததே
மலர்ந்த உந்தி முன் புவனங்கள் தந்ததே
ஒழித்ததும் குழைச் சங்கரன் சாபமே
ஒசித்ததும் குழைச் சங்கு அரன் சாபமே
அழித்ததும் பொரு தானவர் அங்கமே
அரிதன் ஊர் இனிது ஆன அரங்கமே –37-

(இ – ள்.) தொழ பெறாது – (எம்பெருமானை வணங்கி அவன் பெருமையை இவ்வளவிற்றென்று முற்றும்) அறியமாட்டாதது,
அந்த ஆரணத்து அந்தமே – அப்படிப்பட்ட வேதாந்தமே;
தொட்டு இறுத்ததும் – கையால் தொட்டு முறிக்கப்பட்டதுவும்,
வாரணம் தந்தமே – குவலயாபீடமென்னும் யானையின் கோடுதானே;
வழுத்து தாள் – (யாவராலும்) புகழப்படுகின்ற திருவடி,
முன்பு – முன்காலத்தில் (ராமாவதாரத்தில்),
வனம் – காட்டை,
கடந்தது – நடந்துகடந்தது;
மலர்ந்த உந்தி – மலர்ந்த நாபீகமலம்,
புவனங்கள் – எல்லாவுலகங்களையும்,
தந்தது – படைத்தது;
ஒழித்ததும் – போக்கியருளப்பட்டதும்,
குழை சங்கு அரன் சாபமே – சங்கினாலாகிய குண்டலத்தையுடைய சிவனது சாபமே;
ஒசித்ததும் – முறித்ததும்,
குழை சங்கரன் சாபமே – வளையுந்தன்மையையுடைய சிவனது வில்லே;
அழித்ததும் – அழிக்கப்பட்டதும்,
பொரு தானவர் அங்கமே – போர்செய்கிற அசுரரது உடம்பே;
அரிதன் ஊர் – அப்பெருமானது திருப்பதி, இனிது ஆன அரங்கமே -;(எ – று.)

‘ஒசித்ததுங் குழைச்சங்கரன் சாபமே’ என்னுமிடத்து, குழைச்சு அங்கு அரன் எனப்பிரித்து, குழைச்சு என்பதைக்
குழைத்து என்பதன் போலியாக்கொண்டு, அங்கு – மிதிலாநகரத்தில், குழைச்சு – வளைத்து, ஒசித்ததும் – முறித்ததும்,
சிவனது வில்லே யென்றும் பொருள் கொள்ளலாம். சாபம் – பிரமகபாலங் கையைவிட்டு நீங்காமை.
“சாபமேசபித்தல் வில்லாம்” என்ற நிகண்டின்படி இங்கு இருபொருள் கொள்ளப்பட்டது.
அரி – ஹரி; அடியார்களின் அருந்துயரைப் போக்குபவர்;
அன்றிக்கே, தேவர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர் அரக்கர் முதலியோரை அழிப்பவர்.

இஃது, அடிதோறுந் தனித்தனியே வந்த இறுதிமுற்றுமடக்கு.

இது, முதற்கண் மாச்சீர்பெற்று நாற்சீரான்வந்தது அரையடியாகவும் அஃது இரட்டி கொண்டது ஓரடியாகவும்,
அவ்வடி நான்குகொண்டு, அரையடிக்கு நிரையசைமுதலாயின் ஒற்றொழித்துப் பன்னிரண்டு எழுத்தும்
நேரசைமுதலாயிற் பதினொன்றும் பெற்று வந்த கட்டளைக்கலிப்பா.

——————–

உயிர் வருக்க மோனை

38-அரங்க மாளிகைக் கரும் கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்தளூர் உறை எந்தை பெம்மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத்துள் உறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத்து அடிகளை
எவ்வுள் மாயனை தெய்வ நாயகனை
ஏர் மலி சிகரத்து நீர் மலை ஆதியை
ஐ வாய் அரவில் அறி துயில் அமலனை
ஒரு கால் மொழியினும் ஒழி குவை நெஞ்சே
ஓத நீர் ஞாலத்து உழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே –38-

(இ – ள்.) நெஞ்சே -! – அரங்க மாளிகை – திருவரங்கம் பெரியகோயிலிலெழுந்தருளியிருக்கின்ற,
கருங் கடல் வண்ணனை – கரிய கடல்போலுந் திருநிறமுடையவனை,
ஆலி மா முகிலை – திருவாலியில் எழுந்தருளியிருக்கிற கரிய மேகம் போன்றவனை,
வாலி காலனை – வாலிக்கு யமனாயிருந்தவனை,
இந்தளூர் உறை – திருவிந்தளூரி லெழுந்தருளியிருக்கின்ற,
எந்தை பெம்மானை – எந் தந்தையாகிய பெருமானை,
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை – சிவன் பிரமன் இந்திரன் இவர்களுக்கு இறைவனானவனை,
உள்ளுவார் உள்ளத்துள் உறை சோதியை – அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தின்கண்
(அவர்நினைந்த வடிவோடு விரைந்து சென்று) தங்குகின்ற ஒளியுருவமானவனை,
ஊரகம் நின்று அருள் நீரகத்து அடிகளை – திருவூரகத்திலும் திருநீரகத்திலும் எழுந்தருளியிருக்கின்ற மாயவனை,
எவ்வுள்மாயனை – திருவெவ்வுளூரி லெழுந்தருளியிருகின்ற சுவாமியை,
தெய்வம் நாயகனை – தேவர்தலைவனை,
ஏர் மலி சிகரத்து நீர்மலை ஆதியை – அழகுமிக்க சிகரத்தையுடைய திருநீர்மலையிலெழுந்தருளியிருக்கின்ற முதல்வனை,
ஐ வாய் அரவில் அறி துயில் அமலனை – ஐந்தலை நாகத்தில் யோகநித்திரை செய்தருளுகின்ற குற்றமற்றவனை,
ஒரு கால் மொழியினும் – நீ ஒருதரம் (திருநாமத்தைச்) சொல்லித் துதித்தாலும்,
ஓதம் நீர் ஞாலத்து – குளிர்ச்சியையுடைய கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தில்,
உழலும் – அலைந்து வருந்துகின்ற,
ஒளவியம் பிறப்பில் – பொறாமையையுடைய பிறவிக்கடலில்,
அழுந்தி – முழுகி,
வாடுவது – வாட்டமடைவதை,
ஒழிகுவை – நீங்குவாய்.

இதனால், எம்பெருமானது திருநாம ஸங்கீர்த்தனத்தின் மகிமையை வெளியிட்டவாறு.
ஆலி, இந்தளூ ரென்பவை – சோழநாட்டுத் திருப்பதிகள். ஊரகம் முதலியன – தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.
ஊரகமும், நீரகமும் – கச்சியுட் சேர்ந்தவை.
“அழன்று, பொரு வாலி காலன் பரகாலன் போற்றுந், திருவாலிமாயன்” என்றார் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும்.
ஒளவியமென்பது – அவா வெகுளி இன்னாச்சொல் முதலிய தீக்குணங்களுக்கும் உபலக்ஷணம்.

இது, உயிர்வருக்கமோனை.

இது, ஈற்றயலடி முச்சீரடியும், மற்றையடிகளெல்லாம் நாற்சீரடிகளுமாய் வந்ததனால், நேரிசையாசிரியப்பா.

———

செவிலி இரங்குதல்

39-வாடி ஓட வனசம் அன்ன இரு கண் வெள்ளம் அருவி போல்
மருவி ஓட மதனன் வாளி உருவி ஓட வாடை ஊடு
ஆடி ஓட அன்றில் ஓசை செவியில் ஓட வண் துழாய்
ஆசை யோடும் எங்கள் பேதை ஆவி ஓடல் நீதியோ
மோடி ஓட அங்கி வெப்பு மங்கி ஓட ஐங்கரன்
முடுகி ஓட முருகன் ஓட முக்கண் ஈசர் மக்களைத்
தேடி ஓட வாணன் ஆயிரம் புயங்கள் குருதி நீர்
சிந்தி ஓட நேமி தொட்ட திரு அரங்க ராசரே –39-

இ – ள்.) மோடி ஓட – துர்க்கை ஓடவும்,
அங்கி – அக்கினியும்,
வெப்பு – ஜ்வரமும்,
மங்கி ஓட – வலியழிந்து ஓடவும்,
ஐங் கரன் – ஐந்து கைகளையுடைய விநாயகன்,
முடுகி ஓட – விரைந்து ஓடவும்,
முருகன் – அவன் தம்பியாகிய சுப்பிரமணியன்,
ஓட – ஓடவும்,
முக்கன் ஈசன் – மூன்று கண்களையுடைய சிவன்,
மக்களை – தன்பிள்ளைகளை,
தேடி – தேடிக்கொண்டு,
ஓட – ஓடவும்,
வாணன் – பாணாசுரனது
ஆயிரம் புயங்கள் – ஆயிரங் கைகளும்,
குருதி நீர் சிந்தி ஓட – ரத்த வெள்ளத்திற் சிதறியோடவும்,
நேமி தொட்ட – சக்கரத்தைப் பிரயோகித்த,
திருவரங்கராசரே – ஸ்ரீரங்கநாதரே! –
வனசம் அன்ன – தாமரைமலர்போன்ற,
இரு கண் – இரண்டு கண்களும்,
வாடி ஓட – வாடிப்போகவும்,
வெள்ளம் – (அக்கண்களினின்று பெருகுகின்ற) கண்ணீர்ப் பெருக்கு,
அருவிபோல் – மலையருவிபோல,
மருவி ஓட – வழிந்தோடவும்,
மதனன் வாளி – மன்மதனது புஷ்பபாணங்கள்,
உருவி ஓட – உள்ளே தைத்து ஊடுருவிச் செல்லவும்,
வாடை – வாடைக்காற்று,
ஊடு ஆடி ஓட – இடையே நுழைந்து செல்லவும்,
அன்றில் ஓசை – அன்றிற்பறவை கூவுகின்ற ஒலி,
செவியில் ஓட – காதுகளினுட்புகவும்,
வள் துழாய் ஆசையோடும் – வளப்பம்பொருந்திய திருத்துழாய்மாலையினிடத்துள்ள ஆசையுடனே,
எங்கள் பேதை – எங்கள் பெண்ணாகிய இவள்,
ஆவி ஓடல் – உயிர் நீங்கப் பெறுதல்,
நீதியோ – (உமக்கு) நியாயமாகுமோ? (ஆகாதென்றபடி); (எ – று.)

இது, பிரிவாற்றாதுவருந்துந் தலைவியின் நிலையைக் கண்ட செவிலி தலைவனைநோக்கி இரங்கிக் கூறியது;
தோழி இரங்கியதென்பாரு முளர்.

உஷையைப் பிரத்யும்நனுக்கு மணஞ்செய்விக்கக் கருதிச் செயற்கரிய பெருங்காரியத்தைச் செய்த நீர்,
எங்கள் பெண்ணை மணந்துகொள்ளுதற்கு வேண்டிய செயலைத் தேடாது உபேட்சித்தல் சிறிதுந்தக்கதன் றென்பதாம்;
திருவரங்கராசருக்குக் கொடுத்துள்ள அடைமொழி இவ்வாறு ஒருகருத்தை உட்கொண்டிருத்தலால், கருத்துடையடைமொழியணியாம்.
“ஓட” என்ற சொல் ஒருபொருளில் பலமுறை வந்தது – சொற்பொருட்பின்வருநிலையணியாம்:
இவ்வாறு இரண்டணிகள் எள்ளும் அரிசியும் போலச்சேர்ந்துவந்தது, சேர்வையணி யெனப்படும்.

“மோடியோடிலச்சையாய சாபமெய்தி முக்கணான், கூடுசேனை மக்களோடு கொண்டு
மண்டி வெஞ்சமத், தோட வாண னாயிரங் கரங்கழித்த வாதிமால்,”
“வண்டுலாவுகோதைமாதர் காரணத்தினால் வெகுண், டிண்ட வாண னீரைஞ்ஞூறு தோள்களைத் துணித்தநாள்,
முண்டநீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிடக், கண்டு நாணி வாணனுக் கிரங்கினா னெம் மாயனே,”
“கார்த்திகையானுங் கரிமுகத்தானுங் கனலு முக்கண், மூர்த்தியு மோடியும் வெப்பு முதுகிட்டு மூவுலகும்,
பூத்தவனே யென்று போற்றிட வாணன் பிழைபொறுத்த, தீர்த்தன்” என்றார் பெரியார்களும்.

இது, முதலாறுசீரும் மாச்சீர்களும், ஏழாஞ்சீரொன்று விளச்சீருமாய் வந்தது அரையடியாகவும்,
அது இரட்டிகொண்டது ஓரடியாகவும் உள்ள பதினான்குசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

————-

ஊர்
40-சருகு அருந்தி ஐம்பொறி வருந்து அருந்தவர்கள் அண்டர் குஞ்சர முகன் குகன்
பருதி சந்திரன் சிவன் அயன் புரந்தரன் நிரந்தரம் பரவும் எந்தை ஊர்
குருகை தஞ்சை தென் கரை புரம் குறுங்குடி குடந்தை வண் துவரை இந்தளூர்
திருவைகுந்தம் அஞ்சன சிலம்பு அயிந்திர புரம் செழும் திரு அரங்கமே –40-

(இ – ள்.) சருகு அருந்தி – உலர்ந்த இலைகளைப் புசித்து,
ஐம்பொறி வருந்து – பஞ்சேந்திரியங்களும் வருந்துகின்ற,
அருந் தவர்கள் – (பிறராற்) செய்தற்கரிய தவத்தையுடைய முனிவர்களும்,
அண்டர் – தேவர்களும்,
குஞ்சரமுகன் – யானைமுகத்தையுடைய விநாயகனும்,
குகன் – முருகனும்,
பரிதி – சூரியனும்,
சந்திரன் – சந்திரனும்,
சிவன் – சிவனும்,
அயன் – பிரமனும்,
புரந்தரன் – இந்திரனும்,
நிரந்தரம் – இடைவிடாமல் (எக்காலத்தும்),
பரவும் – புகழ்ந்து வணங்குகின்ற,
எந்தை – எம்பெருமானது,
ஊர் – திருப்பதி, –
குருகை – திருக்குருகூரும்,
தஞ்சை – திருத்தஞ்சைநகரும்,
தென் கணபுரம் – அழகிய திருக்கண்ணபுரமும்,
குறுங்குடி – திருக்குறுங்குடியும்,
குடந்தை – திருக்குடந்தையும்,
வள் துவரை – வளப்பம் பொருந்திய திருத்துவாரகையும்,
இந்தளூர் – திருவிந்தளூரும்,
திரு வைகுந்தம் – ஸ்ரீவைகுண்டமும்,
அஞ்சன சிலம்பு – திருவேங்கடமலையும்,
அயிந்திரபுரம் – திருவயிந்திரபுரமும்,
செழு – செழுமையான,
திரு அரங்கமே – ஸ்ரீரங்கமுமேயாம்; (எ – று.) – என்றது, மற்றைத் திருப்பதிகளுக்கும் உபலக்ஷணம்.

தஞ்சை – தஞ்சாவூ ரென்பதன் மரூஉ. துவரை – த்வாரகா வென்னும் வடமொழியின் சிதைவு.
திருவைகுந்தம் – பாண்டியநாட்டகத்துத் திருக்குருகையைச் சார்ந்த நவதிருப்பதிகளுள் ஒன்று; அன்றிக்கே, பரமபதமுமாம்.
அஞ்சனசிலம்பு – திருமாலிருஞ்சோலைமலையுமாம். அயிந்திரபுரம் – அஹீந்த்ரபுரம்.

இது, பிரபந்தங்களுக்கு உரிய ஊர் என்னுந் துறையின் பாற்படும்.

இது, ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் புளிமாச்சீர்களும், மற்றை நான்கும் கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரியச் சந்தவிருத்தம்.
“தனன தந்தன தனன தந்தன தனன தந்தன தனன தந்தனா” எனச் சந்தக்குழிப்புக் காண்க.

——————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –1-20-

February 18, 2022

சிறப்புப் பாசுரம் –
ஆழ்வார் முன் பின்னவருக்கு மா மறை தந்தார் தமிழில்
வாழ்வார் மணவாளர் மாண்பவருள் –தாழ்வாரும்
எம் போலியர்க்கும் இரங்கி அரங்கக் கலம்ப
கம் போத நல்கவைத்தார் காண் –

(இதன் பொருள்.)
முன் – முற்காலத்தில்,
ஆழ்வார் – நம்மாழ்வார், –
பின்னவர்க்கு – பிற்காலத்திலுள்ளார்க்கு,
(போதம் நல்க) – நல்லறிவைக் கொடுக்குமாறு,
(இரங்கி) – திருவுளமிரங்கி,
மா மறை – சிறந்த (வடமொழி) வேதத்தை,
தமிழால் – தமிழ்ப்பாஷையினால்,
தந்தார் – திருவாய்மலர்ந் தருளினார்;
(பின்) – பிற்காலத்தில்,
மாண்பவருள் – மாட்சிமையையுடைய வர்களுள்,
வாழ்வார் – வாழ்பவராகிய,
மணவாளர் – அழகிய மணவாள தாசர்,
தாழ்வு ஆரும் – கீழ்மைபொருந்திய,
எம்போலியர்க்கும் – எம்மைப் போன்றவர்களுக்கும்,
போதம் நல்க -, இரங்கி -,
அரங்கக்கலம்பகம் – திருவரங்கக்கலம்பக மென்னுந் திவ்வியப் பிரபந்தத்தை, (தமிழால்) -,
வைத்தார் – பாடி வைத்தார்; (என்றவாறு.)

ஆழ்வார் – பகவானுடைய மங்களகுணங்களாகிய அமுதவெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவர்;
இது, இங்கே, அல்லாத ஆழ்வார்களிற்காட்டிலுஞ் சிறந்து அவர்களுக்கு அவயவியாகிய நம்மாழ்வாரை உணர்த்திற்று.
“பின்னவர்” என்றது – ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீஆள வந்தார், ஸ்ரீபாஷ்யகாரர் தொடக்கமான ஆசாரியர்களை –
(ஓதலாகாதென்று சிலர்க்கு) மறுக்கப்படுதல்பற்றி, மறை யென்று பெயர்; மறு – பகுதி, ஐ – செயப்படுபொருள் விகுதி.
இனி – இச்சொல்லுக்கு – (எளிதிலுணரலாகாத படி) மறைந்துள்ள பொருள்களையுடைய தென்று காரணப்பொருள் கூறவுமாம்.
யாகம் முதலிய கிரியைகளைக் குறிக்கிற கர்மகாண்டத்தையும் பகவானைக் குறிக்கிற பிரமகாண்டத்தையும் தன்னுள்
அடக்கிக்கொண்டிருத்தல் பற்றி, இதற்கு “மா” என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது.
நான்கு வேதங்களையும் முறையே திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரியதிருவந்தாதி என்னும்
நான்கு திவ்வியப்பிரபந்தங்களாக ஸ்திரீசூத்திரருமுட்பட அனைவர்க்கும் அதிகரிக்கலாம்படி தமிழால் அருளிச்செய்கையால்,
“மறைதந்தார் தமிழால்” என்றார்.

முற்காலத்தில் ஆழ்வார் தாழ்வுயாதுமில்குரவராகிய ஸ்ரீமந்நாதமுனி கள் தொடக்கமானார்க்கு ஏற்ப வடமொழி மறைப்பொருளையே தமிழால்

தந்தார்; அதுபோல, பிற்காலத்தில் அழகியமணவாளதாசரோ தாழ்வாரும் எம்போலியர்க்கு ஏற்பத் தமிழ்மறைகளின் சாரமாக
விசித்திரமான கவ னங்களைக்கொண்ட திருவரங்கக்கலம்பகத்தைச் செய்தருளினா ரென்பதாம். இது, எடுத்துக்காட்டுவமையணி;
இதனை வடநூலார் திருஷ்டாந்தாலங்கார மென்பர். தாழ்வாவது – பகவத்கதை சிறிதுமில்லாத நூல்களாற் பொழுது போக்குகை.
ஸ்ரீமந்நாதமுனிகள் முதலானார் தாழ்வியாதுமில் குரவ ராதலால், தம்மை ‘தாழ்வாரு மெம்போலியர்’ என்றார்.
போதம் நல்குதல் – கல்வியாலாகிய அறிவோடு உண்மையறிவையும் உதவுதல். ‘முன்’ என வந்ததனால், “பின்” என வருவிக்கப்பட்டது.
உபமேயவாக்கியத்திலுள்ள ‘போதநல்க’ ‘இரங்கி’ என்பவை – உபமான வாக்கியத்திலும், ‘தமிழால்’ என்பது, – உபமேய வாக்கியத்திலுங் கூட்டப்பட்டன.

அழகிய மணவாள ரென்னும் நம்பெருமாள் பெயரைக் கவிக்கு இட்டு வழங்கியது, ஆகுபெயர்.
“எம்” என்பது – தனித்தன்மைப்பன்மை. “போலி யர்க்கும்” என்ற உம்மை – இழிவுசிறப்பு; அது, சின்னாட் பல்பிணிச் சிற்றறி வுடைய சிறியேமென்ற இழிவுப்பொருளுணர்த்திற்று. “போதம்” – வட சொல். காண் – முன்னிலையசை; தேற்றப்பொருளதாகவுமாம்.

இது, இருவிகற்பத்தால் வந்து நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த நேரிசைவெண்பா.

“மணவாளர்” எனவே ஆக்கியோன்பெயரும், “ஆழ்வார் முன் பின்ன வர்க்கு மாமறை தந்தார்” என்னும் உபமானத்தால்
அத்திவ்வியப்பிரபந்தங்களின் சாரமிதுவென வழியும், “தமிழால்” எனவே அத்தமிழினது எல்லையாகிய கீழ்கடல்
தென்குமரி மேல்கடல் வடவேங்கடமாகிய எல்லையும், “அரங்கக்கலம்பகம்” எனவே நூற்பெயரும், நுதலியபொருளும்,
“எம்போலியர்” எனவே கேட்போரும், “போதநல்க” எனவே பயனும், “இரங்கி” எனவே காரணமும் பெறப்பட்டன;
மற்றையவற்றுட் குறிப்பிக்கப்படுவன உய்த்துணர்ந்து கொள்க.

இக்கவி, அபியுக்தரில் ஒருவர் செய்தது; இது, ஸ்ரீவைஷ்ணவசம்பிராத யத்தில் தனியனெனப்படும்: (நூலினுட் சேராது)
தனியே பாயிரமாக நிற்றல்பற்றியது, அப்பெயர். உயர்திணையாண்பால்விகுதி சிறுபான்மை அஃறிணைக்கும் வருதலை,
கடுவன் கோட்டான் தோளுக்கினியான் என்ற விடங்களிற் காண்க; நாலடியார் சிவஞானசித்தியார் என்ற இடங்களில்
“ஆர்” விகுதிபோல இங்கு “அன்” விகுதி உயர்வு குறிப்பதென்றலுமாம். மேலிற்கவியும் இவ்வாறே.

———————-

சொல் நோக்கும் பொருள் நோக்கும் தொடை நோக்கும் நடை நோக்கும் துறையின் நோக்கோடு
என்நோக்கும் காண இலக்கியம் ஆவது அன்றி
நல் நோக்கும் புத்தியும் பத்தியும் பெறுவர் முக்தி உண்டாம் நான் என் சொல்கேன்
பல் நோக்கு மணவாளர் பகர் அரங்கக் கலம்பகத்தைப் பாரீர் பாரீர் –2-

(இ – ள்.) (இந்நூலானது), –
சொல் நோக்கும் – சொல்லழகும்,
பொருள் நோக்கும் – பொருளழகும்,
தொடை நோக்கும் – தொடையழகும்
நடை நோக்கும் – நடையழகும்,
துறையின் நோக்கோடு – துறையினழகும் (ஆகிய இவைமுதலிய),
எ நோக்கும் – எல்லாவழகையும்,
காண – காணுமாறு,
இலக்கியம் ஆவது அன்றி – இலக்கியமாயிருத்தல்மாத்திரை யேயன்றி, –
இதில் – இந்நூலில்,
ஈடுபட்டோர் – அன்புடன் மிகப்பயின்றவர்,
நல் நோக்கும் – நல்ல ஒழுக்கத்தையும்,
(நல்) புத்தியும் – நல்ல அறிவையும்,
(நல்) பத்தியும் – நல்ல பக்தியையும்,
பெறுவர் – அடைவர்; (அவர்களுக்கு),
முத்தி – பரம பதம்,
உண்டாம் – உண்டாகும்; (ஆகையால் ). –
பல் நோக்கு மணவாளர் – பலவகை ஞானத்தையுடைய அழகியமணவாளதாசர்,
பகர் – திருவாய்மலர்ந்தருளிய,
அரங்கக் கலம்பகத்தை – திருவரங்கக்கலம்பகத்தின் சிறப்பை,
நான் என் சொல்கேன் – யான் என்னவென்று எடுத்துச் சொல்லுவேன்!
பாரீர் பாரீர் – ஆராய்ந்து நோக்குங்கள் நோக்குங்கள்; (எ – று.)

சொன்னோக்கு – மடக்கு முதலிய சொல்லணிகளால் வரும் அழகு.
பொருணோக்கு – உவமை முதலிய பொருளணிகளால் வரும் அழகு,
தொடை நோக்கு – மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்கிற ஐந்திலும் அடிமோனை முதலாக
ஓரொன்றிலே எவ்வெட்டுத்தொடையாக நாற்பதும், அந்தாதித்தொடை இரட்டைத்தொடை செந்தொடை என்கிற மூன்றும்
ஆக நாற்பத்துமூன்று தொடைகளால் வரும்அழகு.
நடைநோக்கு – வைதருப்பம், கௌடம் முதலாகக் கூறப்படுகின்ற நடைகளால் வரும் அழகு.
துறை நோக்கு – காட்சி, ஐயம், தெளிதல் முதலிய கிளவித்துறைகளால் வரும் அழகு.
“எந்நோக்கும்” என்றதனால் விளங்கவைத்தல் நவின்றோர்க்கினிமை நன்மொழி புணர்த்தல் ஓசையழகு
ஆழ்ந்தபொருளுடைமை முதலானவையுங் கொள்க.
“நல்நோக்கு” என்பதில் உள்ள நன்மையை “புத்தி”, “பத்தி” என்பவற்றோடுங் கூட்டுக.

“உரைத்த தமிழ்வரைந்த ஏட்டைப், பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும் பரிமளிக்கும்
பரிந்த ஏட்டைத், தொட்டாலும் கைம்மணக்கும் சொன்னாலும் வாய்மணக்கும்
துய்ய சேற்றில், நட்டாலும் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே பாட்டினது நளினந் தானே” என்று சிறப்பித்துக் கூறுமாறு
இந்நூலின்நடை மிகப்பிரசித்தி பெற்றது என்பதாம்.

“பக்தி”, “முத்தி” என்பவை – முறையே “பக்தி”, “முக்தி” என்பவற்றின் விகாரங்கள். முத்தி – வீடு:
சரீர இந்திரியங்களிலிருந்து ஜீவாத்மா விடுபடுவ தென்று பொருள்.
“என்சொல்கேன்” என்றது, இவ்வளவென்று ஓரளவின்மையாலே சொல்லத்தெரிந்திலே னென்றபடி.
“சொல்கேன்”, ககரவொற்று – எதிர்கால இடைநிலை. இலக்கியம் லக்ஷ்ய மென்பதன் திரிபு.
“பாரீர் பாரீர்” – உவகையில் வந்த இருமுறையடுக்கு; இனி, பாரீர் – உலகத்தவரே! பாரீர் –
(இவ்வாறு பலவகையழகும் நிரம்பியிருத்தலால் கவனித்துப்) பாருங்கள் எனினுமாம்.

இது – முதல் நான்குங் காய்ச்சீர்களும், மற்றை யிரண்டும் மாச்சீர்களு மாகிய அறுசீராசிரியவிருத்தம்.

———-

திரு என்பதற்கு – மேன்மையான என்று பொருள்கொண்டால் திருவரங்கம் என்ற தொடர் – பண்புத்தொகையும்,
மேன்மையையுடைய என்று பொருள்கொண்டால் இரண்டாம்வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையுமாம்.
அரங்கக்கலம்பக மென்ற தொடர் – அரங்கத்தினது சம்பந்தமான கலம்பக மென்று விரித்து
அரங்கத்தின் விஷயமான பிரபந்தமென்று பொருள்கொண்டு ஆறாம் வேற்றுமைத்தொகையாகவும்,
அரங்கத்தைப்பற்றிய கலம்பகமென்றுவிரித்துப் பொருள் கொண்டு இரண்டாம்வேற்றுமையுருபும்
பொருளுந்தொக்கதொகையாகவும் உரைக்கத்தக்கது;
அரங்கத்தின்மேற் பாடிய கலம்பக மென்று விரித்துப் பொருள்கொண்டு ஏழனுருபும்பயனுந்தொக்கதொகை யென்பாரும் உளர்.
திருவரங்கம் என்ற தொடரில், வகரவொற்று – உடம்படுமெய்.

கலம்பகமாவது – ஒருபோகும் வெண்பாவும் கட்டளைக்கலித்துறையும் முதற்கவியுறுப்பாக முதலிற்கூறி,
புயவகுப்பு மதங்கு அம்மானை காலம் சம்பிரதம் கார் தவம் குறம் மறம் பாண் களி சித்து இரங்கல் கைக்கிளை
தூது வண்டு தழை ஊசல் என்னும் பதினெட்டு உறுப்புக்களும் இயையுமாறு,
மருட்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா ஆசிரியவிருத்தம் கலிவிருத்தம் கலித்தாழிசை கலிநிலைத்துறை
வஞ்சிவிருத்தம் வஞ்சித்துறை ஆசிரியத் துறை வெண்டுறை முதலியவற்றால்,
இடையிடையே வெண்பாவும் கலித் துறையும் விரவிவர, மடக்குடைச்செய்யுளும் வண்ணம் சந்தம் முதலியனவும் பொருந்த,
அந்தாதித்தொடையால் முற்றுற, இறுதியும் முதலும் மண்டலி த்துப்பாடுங்கால்
தேவர்க்கு நூறும் அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும் அரசர்க்குத் தொண்ணூறும் அமைச்சர்க்கு எழுபதும்
வணிகர்க்கு ஐம்பதும் வேளாளர்க்கு முப்பதுமாகப் பாடுவதொரு பிரபந்தம்;
இக்கலம்பகவிலக்க ணத்தைப் பன்னிருபாட்டியல், வச்சணந்திமாலை, இலக்கணவிளக்கம் முத லியவற்றிற் காண்க.

“களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த, அலங்கலந் தொடையல் கொண் டடியிணை பணிவா னமரர்கள்
புகுந்தன ராதலி லம்மா” என்னும் பெரியார் பாசுரத்தில் பலவகை மலர்களைக்கொண்டு தொடுக்கப்பட்டுள்ள மாலை,
“கலம்பகம்புனைந்ததொடையல்” எனக் கூறப்பட்டுள்ளதனால், அப் பூமாலைபோலப் பலவகைப்பாக்களைக்கொண்டு
அமைக்கப்பட்ட பாமாலை யைக் கலம்பக மெனப் பெரியோர் பெயரிட்டுவழங்கின ரென்பர்;
இதற்கு இவ்வாறு பொருள்கொள்ளும்போது, இது – கதம்ப மென்னும் வடமொழியின் திரிபுபோலும்:

இனி, கலப்பு அகம் எனப் பிரித்து, மெலித்தல்விகாரம் பெற்றதாக்கி, பலவுறுப்புக்களுங்கலத்தலைத் தன்னிடத்தேயுடைய
தென அன்மொழித்தொகைக் காரணக்குறியாகவும்கொள்ளலாம்;
இனி, ஒருசாரார் பன்னிரண்டுமரக்காலென்னும் பொருளுள்ள “கலம்” என்னுஞ் சொல்லும் கடவுளது
ஆறுகுணங்களைக் குறிக்கும் “பகம்” என்னுஞ் சொல்லும் குறிப்பாய்ப் பன்னிரண்டு ஆறு என்னுந் தொகையை
மாத்திரம் உணர்த்தி உம்மைத்தொகையாகப் புணர்ந்து பதினெட்டு உறுப்புக்களையுடைய பிரபந்தத் துக்கு ஏதுப்பெயராயிற் றென்றும் உரைப்பர்.

(அந்தாதி – அந்தத்தை ஆதியாகவுடையது; அந்தாதியாவது – முன் நின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும்
அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது;
இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச்செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்த லெனப்படும்.
சொற்றொடர்நிலைச் செய்யுள் பொருட்டொடர்நிலைச்செய்யுள் என்ற வகையில்
இது, சொற் றொடர்நிலை; “செய்யுளந்தாதி சொற்றொடர்நிலையே” என்றார் தண்டிய லங்காரத்தும்.)

“முதனூல் கருத்தன் அளவு மிகுதி, பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும்,
இடுகுறியானும் நூற்குஎய்தும் பெயரே” என்று கூறப்படுகின்ற நூற்பெயர்வகைகளுள்
நுதலியபொருளினாலும் தன்மையி னாலும் பெயர்பெற்றது இந்நூலென அறிக;
(நுதலியபொருள் – நூலிற் கூறப்பட்ட விஷயம். தன்மை – நூலின் இயல்பு.)

இங்கு “அரங்கம்” என்பது – அத்திருப்பதியில்எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக் குறித்தது; இலக்கணை.
இனி, “திருவாளன்திருப்பதிமேல், திருவரங்கத்தமிழ்மாலை விட்டு சித்தன்விரித்தன” என்று
பெரியாழ்வார் திருமொழியிற் கூறியபடி திருவரங்கத்தின் விஷயமான தமிழ்த்தொடையாதல்பற்றி “திருவரங்கக்கலம்பகம்” எனவும் தகும்;
(மேற்காட்டிய அருளிச்செயலின் வியாக்கியானத்தில் “தேஸ்யரான பெருமாளைச் சொன்னதெல்லாம் உபஸர்ஜநகோடியிலேயாய்,
அத்தேசமேயாய்த்து இத்திருமொழிக்கு விஷயம்” என்றது காண்க.)
எனவே, திருவரங்கத்தைப்பற்றிப் பாடியதொரு பிரபந்தமென்பது பொருளும்,
திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக்குறித்துப் பாடியதொரு நூலென்பது கருத்து மாகலாம்.
“கோயிற்கலம்பகம்” என்பதற்கும் இங்ஙனமே கொள்க.

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் “விருந்தே தானும், புது வது கிளந்த யாப்பின் மேற்றே” என்பதனால்,
“விருந்துதானும், பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம்வேண்டியவாற்றால் தொடுக்கப்படுந் தொடர் நிலைமேலது” என்று
கூறினமையின். இந்தக்கலம்பகம், அங்ஙனங்கூறிய விருந்தா மென்று உணர்க.
அச்சூத்திரவுரையில் அந்தாதியும் கலம்பகமும் முதலாயின உதாரணங்காட்டப்பட்டுள்ளவாறுங் காண்க.
இனி, இதனைச் சிறுகாப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார். இப்பிரபந்தம், தோத்திர ரூபமானது.

நூலின் புறமாக முதலிற்கூறிய சிறப்புப்பாயிரச்செய்யு ளிரண்டும், காப்புச்செய்யுள் நான்கும்,
நூலின்இறுதியிற்கூறும் தற்சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றும் நீங்கலாக நூறுசெய்யு ளுடையது, இந்நூல்.

தலத்தின் பெயர் – ரங்கம், ஸ்ரீரங்கம், திருவரங்கம், பெரியகோயில் கோயில் என்பன.
பூலோகவைகுண்டம், போகமண்டபம், ஸ்வயம்வ்யக்த க்ஷேத்ரம் என்பவை, விசேஷநாமங்களாம்.
இது, ஸ்வயம்வயக்தக்ஷேத்ரம் எட்டில் ஒன்று.

இத்திருப்பதியின் எம்பெருமானது திருநாமம் – ஸ்ரீரங்கநாதன், பெரியபெருமாள், நம்பெருமாள், அழகியமணவாளன்.
கோலம் – பள்ளிகொண்ட திருக்கோலம்; சேஷசயனம்.
சந்நிதி – தெற்குநோக்கியது.
நாச்சியார் – ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கநாச்சியார்.
விமானம் – பிரணவாகாரவிமானம், வேதசிருங்கம்.
நதி – உபயகாவேரி (தென்திருக்காவேரியும், வடதிருக்காவேரியும் [கொள்ளடம்.])
தீர்த்தம் – சந்திரபுஷ்கரிணி முதலிய நவதீர்த்தங்கள்.
தலவிருக்ஷம் – புன்னைமரம்.
பிரதியக்ஷம் – தர்மவர்மா, ரவிதர்மன், சந்திரன், காவேரி முதலான வர்களுக்குப் பிரதியக்ஷம்.
பாடல் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழி சையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார்,
பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என்கிற ஆழ்வார்கள் பதின்மர்,
ஆண்டாள் இவர்கள் மங்களாசாஸநம்.

பஞ்சகாவியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் இந்தத்திவ்விய தேசமும் இதிலெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானும்
“நீலமேக நெடும்பொற் குன்றத்துப், பால்விரிந் தகலாது படிந்தது போல,
ஆயிரம் விரித்தெழு தலையுடை யருந்திறற், பாயற் பள்ளிப் பலர் தொழுதேத்த,
விரிதிரைக்காவிரி வியன்பெருந் துருத்தி, திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்……….
என் கண் காட்டென் றென்னுளங் கவற்ற, வந்தேன்” என்று பாராட்டிக்கூறப் பட்டிருத்தலுங் காண்க.

—————————————–
காப்பு செய்யுள்கள்

ஆழ்வார்கள் பன்னிருவரின் வணக்கம்

வேதம் தொகுத்துத் தமிழ்ப் பாடல் செய்த விமலன் பொய்கை
பூதன் மயிலையர் கோன் புகழ்ச் சேரன் புத்தூரன் தொண்டர்
பாதம் தரும் துகள் மா மழிசைக்கு மன் பாணன் மங்கை
நாதன் மதுரகவி கோதை பாதங்கள் நண்ணுதுமே–

(இ – ள்.) வேதம் – வேதங்களின் பொருளை,
தொகுத்து – சுருக்கமாக அடக்கி,
தமிழ் பாடல் செய்த – தமிழ்ப்பாசுரங்களாக அருளிச்செய்த,
விமலன் – நம்மாழ்வாரும்,
பொய்கை – பொய்கையாழ்வாரும், –
பூதன் – பூதத்தாழ்வாரும், –
மயிலையர் கோன் – பேயாழ்வாரும், –
மாமழிசைக்குமன் – பெருமைபொருந்திய திருமழிசையாழ்வாரும், –
புகழ் சேரன் – புகழினை யுடைய குலசேகராழ்வாரும், –
புத்தூரன் – பெரியாழ்வாரும், –
தொண்டர் பாதம் தரும் துகள் – தொண்டரடிப் பொடியாழ்வாரும், –
பாணன் – திருப்பாணாழ்வாரும், –
மங்கைநாதன் – திருமங்கையாழ்வாரும், –
மதுரகவி – மதுர கவியாழ்வாரும், –
கோதை – ஆண்டாளும் என்னும் ஆழ்வார்கள் பன்னிருவர்களது,
பாதங்கள் – திருவடிகளை,
நண்ணுதுல் – சேருவோம்; (எ – று.)

ஆசீர்வாதம் (வாழ்த்து), நமஸ்காரம் (வணக்கம்), வஸ்துநிர்த்தேசம் (தலைமைப்பொருளுரைத்தல்) என்ற
மூவகைமங்களங்களுள் இது, வணக் கத்தின்பாற்படும். எப்பொழுதும் எம்பெருமானது குணங்களில் ஈடுபட்டுப் பாடல்பாடித்துதிக்கும்
ஆழ்வார்கள் அப்பெருமானது தோத்திரமாகத் தாம் செய்யும் கலம்பகத்திற்கு நேரும் இடையூறுகளை நீக்கிப்
பாதுகாப்ப ரென்று கொண்டு அவர்களை இங்கு வணங்குகின்றார்.
ஸ்ரீவைஷ்ணவசமயத் தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக்காப்புச்செய்யுள், அந்த ஸ்ரீ மகாவிஷ்ணுவினது
தொண்டர்களாகிய ஆழ்வார்களைக் குறித்த தாதலால், வழிபடு கடவுள் வணக்கம், ஏற்புடைக் கடவுள் வணக்கம்
என்ற வகை யிரண்டில் வழிபடுகடவுள்வணக்கமாம். அடுத்த மூன்று செய்யுள்களும் இவ்வாறே.
தம்தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலேயன்றி அக்கடவுளி னடியார்களை வணங்குதலும் வழிபடுகடவுள்வணக்கத்தின் பாற்படு மென்க.

எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது பெரு மரபாதலின், காப்புச்செய்யுளின் முதலில்
“வேதம்” என்று தொடங்கினார். மேல் நூல்தொடக்கத்தில் “சீர்” என்னுஞ் சொல்லை வைத்தவாறுங் காண்க.
பாடலென்னுந் தொழிற்பெயர் – அதனைப்பொருந்திய கவிக்காதலால், தொழிலாகுபெயர்.

விமலனென்பதற்கு – குற்றமற்றவனென்று பொருள்; இது, பிறந்தபொழுது பரிசித்தமாத்திரத்தில் அஞ்ஞானமயமாக்குகிற
ஸடமென்னும் வாயுவைத் தம்மீது படவொட்டாமற் கோபித்துப் போக்கி யருளியவ ரென்னும் பொருளதாகிய
ஸடகோபனென்னுந் திருநாமத்தின் பொருளை உட்கொண்டது.
நம்மாழ்வாரை முதலிற் கூறியது, அவயவியாய்த் திருத்துழாய் அங்குரிக்கும்போதே பரிமளத்தோடு தோற்றுதல்போல
ஞானத்துடனேயே திருவவதரித்து மற்றையாழ்வார்களினும் மேம்படுதலா லென்க. செய்யுளாதலின் முறைபிறழ வைத்தாரேனும்,
பாடக்ரமாபேக்ஷ யா அர்த்தக்ரமஸ்ய பலீயஸ்தவம் (சொல்நிற்கும் முறையைவிடப் பொருள் நிற்கும்நிலையே வலியுடைத்து)
என்ற முறைமைபற்றி, மயிலையர்கோன் என்ற சொற்குப்பின் “மாமழிசைக்குமன்” என்பதனைக் கூட்டுக.

பொய்கை – குளம்; பொய்கையில் திருவவதரித்தவரைப் பொய்கையென்றது, இடவாகுபெயர்: இனி, உவமவாகுபெயராய்,
ஊர்நடுவேயுள்ள ஊருணிபோல எல்லார்க்கும் எளிதிற் பயன்கொடுப்பவ ரென்றுமாம்.
பூதன் – “கடல்வண்ணன் பூதம்,” “மறுத்திருமார்பனவன்றன்பூதம்” என்றவாறு எம்பெருமானை யறிதலாலே தமது உளனாகையை யுடையவர்.
மயிலையர்கோன் – திருமயிலையிலுள்ளார்க்குத் தலைவர், கோன், னகரமெய் – சாரியை.
புகழாவது – இம்மைப்பயனாகி இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்குங் கீர்த்தி.
சேரன் – சேரகுலத்தில் திருவவதரித்தவர். புத்தூரன் – வில்லிபுத்தூரில் திருவவதரித்தவர்.
தொண்டர்பாதந்தருந்துகள் – ஸ்ரீபாததூளியாயிருப்பவர்; உள்ளும் புறமும் ஒத்துத் தொண்டுசெய்யும் மெய்யடியாரான
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவடித்தூளிபோல அவர்கட்குக் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகுபவராதலால், இவர்க்கு இத்திருநாமம்.
மாமழிசைக்குமன் – மஹீஸாரக்ஷேத்ரமென்கிற பெருமையையுடைய திருமழிசைக்குத் தலைவர்;
“இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன்” என்றார். அமுதனாரும்.
பாணன் – வீணாபாணியாய்ப் பெரியபெருமாள் திருவடிக்கீழே நிரந்தரசேவைபண்ணிக்கொண்டு பாட்டுப்பாடிப் புகழ்பவர்;
பாண் – இசைப்பாட்டு; அதனையுடையவன், பாணன்: “பாட்டினாற்கண்டுவாழும் பாணர்” என்பர்.
மங்கைநாதன் – திருமங்கையென்னுந் திருப்பதிக்குத் தலைவர். மதுரகவி – இனிமையான பாடலைப் பாடுபவர்.
கோதை – மாலை; எம்பெருமானுக்கு மாலைபோல நிரதிசயபோக்கியையாயிருப்பவள்;
அன்றிக்கே, பாமாலையையும் பூமாலையையுஞ் சூடிக்கொடுத்தவள்.

நண்ணுதல் – இடைவிடாது நினைத்தல்; “மலர்மிசை யேகினான்மாணடி சேர்ந்தார்” என்பதில்
“சேர்தல்ழுபோல. நண்ணுதும் – தன்மைப்பன்மைமுற்று; ஈண்டு ஒருவரைக்கூறும் பன்மை; தும்மீறு எதிர்காலமுணர்த்திற்று.
யாமென்னும் பயனிலைகுறைந்துநின்றது; இனி, யாமென்பது தோன்றா எழுவாயெனக் கொண்டு நண்ணுதுமென்னும்
வினைப்பயனிலை கொண்டதெனினும் அமையும். இது கடவுள்வணக்க மாதலால் “நான்முகற்றொழுது நன்கியம்புவன்”,
“பந்த மடி தொடை பாவினங் கூறுவன்” என்றாற்போல ஒருமையாற்கூறித்தாழ்த்தாமற் பன்மையாற்கூறித்
தன்னை உயர்த்தியபின் இதில் வணக்க மென்னெனின்;- அங்ஙனம் உயர்த்திக் கூறுதல் பிறவிடங்களில் உண்டெனினும் இவ்விடத்தில் உயர்த்தியதன்று; தன்மைப்பன்மையென்பது தன்னொடு சார்ந்தாரையுங் கூட்டியல்லது தனித்து இயலாமையால் தானொருவன்
கடவுளை அறிந்து அன்புகூர்ந்து வணங்கி அப்பயனைத் தான் அடைதலினுஞ் சிருட்டி தொடங்கித் தன் கோத்திரத்தாரையுந்
தன்னோடு கூட்டி வணங்கி அவர்க்கும் அப்பயனை அடைவித்தலே சிறந்ததெனக் கருதிச் சான்றோரெல்லாம்
தொன்றுதொட்டு இவ்வாறு கூறிவருவதோர் மரபாமென்க; என்னெனின்; –
“ஏகதந்த னிணையடி பணிவாம்”, “ஏத்தியேத்தித் தொழுவோம் யாமே”, “சரண வாரிசமலர் தலைக்கொள் வாமரோ” என
இவ்வாறுகூறியவை அளவிலவென்க. நூல்செய்தவர்க்கு மாத்திரையேயன்றி, இந்நூலைப் படிக்கத்தொடங்குவோர் முதலியோர்க்கும்
யாதோரிடையூறுமின்றி இந்நூல் முற்றப்போதற்கு அவர்களையும் உளப்படுத்திய தன்மைப்பன்மையெனினு மமையும்.
யாமென்னுந் தோன்றா எழுவாயை முதலிற்கூட்டி நண்ணுது மென முடிப்பினும், இச்செய்யுளில் நின்றாங்கே
யாமென்பதனை இறுதியிலே கூட்டி முடிப்பினும் நேராகச் சென்று பொருள் முடிதலால், யாற்றுநீர்ப்பொருள்கோள் . ஏகாரம் – ஈற்றசை.

இங்ஙனம் வணங்கியதனால், எடுத்த கருமம் இனிது முடியுமென்று கருத்து.

இது, நேரசை முதலாய் ஒற்றொழித்துப் பதினாறெழுத்துப் பெற்று வந்த கட்டளைக்கலித்துறை.

———————

நம்மாழ்வார் துதி

மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –

(இ – ள்.) மறை – வேதமாகிய,
பால்கடலை – திருப்பாற்கடலை,
திருநாவின் – (தமது) சிறந்த நாக்காகிய,
மந்தரத்தால் – மந்தரபருவதத்தால்,
கடைந்து -,
துறை பால் படுத்தி – துறைகளின் வகைகளோடு பொருந்தச்செய்து,
தமிழ் ஆயிரத்து – ஆயிரந் தமிழ்ப்பாசுரங்களாகிய,
இன் சுவை அமிர்தம் – இனிய சுவையினையுடைய அமிருதத்தை,
கறை பாம்பு அணை பள்ளியான் – நஞ்சினையுடைய திருவநந்தாழ்வானாகிய திருவணையிற் பள்ளி கொள்ளுதலையுடைய திருமாலினது,
அன்பர் – தொண்டர்களது,
ஈட்டம் – கூட்டம்,
களித்து – மனமகிழ்ந்து,
அருந்த உண்ணும்படி,
நிறைப்பான் – நிறைந்தருளிய நம்மாழ்வாரது,
கழல் அன்றி – திருவடிகளேயல்லாமல்,
சன்மம் விடாய்க்கு – பிறவித்துன்பமாகிய தாபத்திற்கு,
நிழல் – வேறுநிழலாவது,
இல்லை -; (எ – று.)

அளத்தற்கரிய பரப்புடைமைபற்றியும், இன்சுவையுடைமைபற்றியும், எம்பெருமானுக்கு உறைவிடமாதல்பற்றியும்,
மறையைப் பாற்கடலாக உருவகப்படுத்தினார். திரு – வேறொன்றற்கில்லாத மேன்மை;
“திருநாவீறுடைய பிரான்” என்னுந் திருநாமத்தின்பொருளை நோக்குக. தமிழ் – தமிழ்ப்பாடலுக்கு ஆகுபெயர்.
தமிழாயிரம் – திருவாய்மொழி. கறை – புள்ளி யென்றுமாம். அணை – சயநம். பள்ளி யோகநித்திரை.
அன்பரீட்டங்களித்தருந்துதல் – “தொண்டர்க்கமுதுண்ணச்சொன்மாலைகள் சொன்னேன்” என்றதனானுமுணர்க.
ஈட்டம் – தொழிற்பெயர்; ஈண்டு – முதனிலை. களிப்பு – பெறலரிய இப்பேறு பெற்றோமே யென்பதனா லுண்டாவது
சன்மம் – ஜந்மம். பிறவித்துன்பங்களெல்லாந் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு இல்லையாதலின்,
ஸம்ஸாரதாபத்தை நீக்குதற்கு நிழலாமென்பார், “சன்மவிடாய்க்கு நிழலில்லை” என்றார்.

இது, உருவகவணி; இதில், விண்ணுலகத்திலுள்ள தேவர்க்குத் திருப்பாற்கடலமிருதம்போல மண்ணுலகத்திலுள்ள
மானிடர்க்கு இத்திருவாய் மொழியமிருதம் அமையுமென்னும் உவமையணி தொனிக்கின்றது.
இங்கு “இன்சுவையமிர்தம்” என்று சிறப்பித்துக் கூறியிருத்தலால், மரணத்தைமாத்திரம் தவிர்க்கும் அந்தத்தேவாமிருதத்தினும்,
பலவகைப்பிறப் பிறப்புக்களைத் தவிர்த்து முத்தியளிக்கும் ஆற்றலையுடைய இந்தத் திருவாய்மொழி யமிருதம்
சிறந்ததென்பது தெற்றென விளங்கும்.
“அம்பிலே சிலையை நாட்டி யமரர்க்கன் றமுத மீந்த,
தம்பிரா னென்னந் தானுந் தமிழிலே தாலை நாட்டிக்,
கம்பநா டுடைய வள்ளல் கவிச்சக்ர வர்த்தி பார்மே,
னம்புபா மாலை யாலே நரருக்கின் றமுத மீந்தான்” என்பதனோடு இக்கவியை ஒப்பிட்டு உணர்க.

“திருநாவென் மந்தரத்தால்” என்றும் பாடமுண்டு.

இது, நிரையசைமுதலாய்ப் பதினேழெழுத்துப்பெற்று வந்த கட்டளைக் கலித்துறை; மேவிற்கவியும் இது

————-

எம்பெருமானார் துதி

பிடிக்கும் பர சமயக் குல வேழம் பிளிற வெகுண்டு
இடிக்கும் குரல் சிங்க ஏறு அனையான் எழு பாரும் உய்யப் படிக்கும்
புகழ் எம் இராமானுச முனி பல் குணமும்
வடிக்கும் கருத்தினார்க்கே திரு மா மணி மண்டபமே –

(இ – ள்.) பிடிக்கும் – (தந்தமது சமயமே சிறந்ததாக) மேற்கொள்ளுகின்ற,
பர சமயம் – வேறுமதத்தினராகிய,
குலம்வேழம் – சிறந்தயானைகள்,
பிளிற – அலறும்படி,
வெகுண்டு – கோபித்து,
இடிக்கும் – கர்ச்சிக்கின்ற,
குரல் – ஒலியையுடைய,
சிங்கம் ஏறு – ஆண்சிங்கத்தை,
அனையான் – போன்றவராகிய,
எழு பாரும் – ஏழுலகத்தவரும்,
உய்ய – நற்கதியடையும்படி,
படிக்கும் – பாராயணஞ்செய்கின்ற,
புகழ் – கீர்த்தியையுடைய,
எம் இரா மாநுசமுனி – எம்பெருமானாரது,
பல் குணமும் – பலகுணங்களையும்,
வடிக்கும் – (சாரமாகத் தெளிந்தெடுத்துத்) தியானிக்கின்ற,
கருத்தினர்க்கே – மனத்தையுடையவர்களுக்கே,
திரு மா மணி மண்டபம் – (பரமபதத்திலுள்ள) முக்திமண்டபம், (பெறலாம்); (எ – று.) – பயனிலை வருவிக்கப் பட்டது.

மற்றையோர்கீர்த்திபோலாகாமல், எம்பெருமானாரதுகீர்த்தி ஏழுலக த்தவரும் படித்து ஈடேறும்படியான
பெருமை வாய்ந்த தென்பதை விளக்க, “எழுபாருமுய்ய” என்ற அடைமொழி கொடுத்துக்கூறினர்;
“அனைத்துலகும் வாழப் பிறந்தவன்” என்னக்கடவதிறே, பிரமோபாசநத்தை விதிக்கிற வேதாந்தசாஸ்திரங்களில்
ஐயமுழுதும்அகலும்படி இவர் ஸ்ரீபாஷ்ய முகமாகச் சகலஅர்த்தங்களையும் பிரசாதித்து மண்ணுலகத்தாரை வாழ்வித்தமையும்,
இவர் சாரதாபீடத்துக்கு எழுந்தருளியபோது தேவர்கட்கெல்லாந் தலைவனான பிரமதேவனது மகிஷியாகிய சரசுவதியானவள்
இவர்பக்கல் தனதுஐயங்களையெல்லாம் தீர்த்துக்கொண்டதன்றி இவர்செய்தருளின ஸ்ரீபாஷ்யத்தைச் சிரசினால்வகித்தமையும் எங்கும் பிரசித்தம்;
இவ்வரலாறுகளால், மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் இந்த எம்பெருமானாரால் ஈடேறியமை அறிக.
இனி, எழுபார் என்பதற்கு – ஏழுத்வீபங்களிலுள்ளவர்க ளென்றுங் கூறலாம்.

எம்பெருமானார் திருவடிகளே சரண மென்று இருப்பவர்க்குத்தான் மோக்ஷலோகம் ஸித்திக்கு மென்பதாம்.
இவ்வாறு கூறியதற்குக் காரணம் – அஜ்ஞாநிகளாய் நித்யஸம்ஸாரிகளாய்ப் போருகிற நமக்குக் கர்மம் ஜ்ஞாநம் பக்தி ப்ரபத்தி
என்ற சதுர்வித உபாயங்களில் எதனிலும் அந்வயித்தற்கு ஏற்ற யோக்கியதை யில்லாமையாலும்,
எம்பெருமானார்திறத்து “உமக்கும் உம்முடையார்க்கும் உபயவிபூத்யைஸ்வர்யமுந் தந்தோம்” என்று எம்பெருமான் அநுக்கிரகித்திருத்தலாலும்,
அவ்வெம்பெருமானார் ஸம்பந்தத்தைக் கொண்டே நற்கதி பெறவேண்டியிருத்தலாலுமா மென்க.

“எம்பெருமானார் திருவடிகளைத் தொழவே, திவ்யதேசங்களெல்லாம் திருவடி தொழுதானாகக்கடவன்;
உடையவரை ஆராதித்து அமுதுசெய்யப் பண்ணவே, எல்லாத்திவ்ய தேசங்களி லெம்பெருமான்களையும் ஆராதித்து
அமுதுசெய்யப் பண்ணினானாகக்கடவன்;
“கர்மமும் உபாயமன்று, ஜ்ஞாநமும் உபாயமன்று, பக்தியும் உபாயமன்று, ப்ரபத்தியும் உபாயமன்று,
எம்பெருமானார் திருவடிகளே உபாயோபேயம்” என்கையாலே, எம்பெருமானாரைப் பற்றுகையே ப்ரபத்தி,
ராமாநுஜ னென்கிற சதுரக்ஷரியே திருமந்திரம்; அவர்திருவடிகளிலே பண்ணுங் கைங்கரியமே பரமபுருஷார்த்தம்;
இதுவே நிச்சிதார்த்தமான ஸித்தாந்தம்” என்ற வாக்கியங்கள் இங்கு நினைக்கத்தக்கன.

இராமாநுசனென்னுஞ்சொல்லுக்கு – இராமன் தம்பியென்று பொருள்; ஆதிசேஷனது அம்சமாகிய லக்ஷ்மணனது அம்சமாதலால்,
உடையவருக்கு இப்பெயர். ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத ஸ்தாபநாசாரியரான ஸ்ரீபாஷ்யகாரர்க்கு,
ஸர்வலக்ஷண ஸம்பந்நராயிருத்தல் பற்றி, லக்ஷ்மணரது திருநாமமான “இராமாநுசன்” என்னும் திருநாமம்
பஞ்சஸம்ஸ்காரம் செய்யும்போது பெரிய நம்பியால் இடப்பட்டது ; பிறகு இவர் ஸந்யாஸம் பெற்றபோது திருக்கச்சியத்திகிரிப்
பேரருளாளப்பெருமாள் “ராமாநுஜமுநி” என்று இவர்க்குத் திருநாமம் சாற்றியருளினர்.
குலவேழம் – உயர்ந்த குலத்தில் தோன்றிய யானை; இனி, வேழக்குலமென மாற்றி, யானைக்கூட்ட மென்றுமாம்.
சிங்கம் – ஸிம்ஹம்; யானை முதலிய பெரிய விலங்குகளையும் ஹிம்ஸிப்பதென்று பொருள்.
திருமாமணி மண்டபம் – அழகிய பெரிய இரத்தினமயமான மண்டபம்;
இது, அந்தமில் பேரின்பத்தையுடைய நித்திய விபூதியாகிய பரமபதத்தி லுள்ளது.

“தற்கச்சமணருஞ் சாக்கியப் பேய்களுந் தாழ்சடையோன், சொற் கற்ற சோம்பருஞ் சூனியவாதரு நான்மறையும்,
நிற்கக் குறும்புநெய்நீசரு மாண்டனர் நீணிலத்தே, பொற்கற்பகம் எம் மிராமாநுசமுனி போந்தபின்னே”,

“சாருவாகமத நீறுசெய்து சமணர் செடிக்கனல் கொளுத்தியே சாக்கியக்கடலை வற்றுவித்து மிகுசாங்கியக்கிரிமுறித்திட,
மாறுசெய்திடு கணாதவாதியர்கள் வாய்தகர்த்தற மிகுத்துவேல் வந்தபாசுபதர் சிந்தியோடும் வகை வாதுசெய்த வெதிராசனார்,
கூறுமா குருமதத்தொ டோங்கிய குமாரி லன் மதமவற்றின்மேல் கொடியதர்க்கசரம் விட்டபின் குறுகிமாய வாதி யரை வென்றிட,
மீறிவாதில் வரு பாற்கரன் மதவிலக்கடிக் கொடியெறிந்து போய் மிக்கயாதவமதத்தை மாய்த்தபெருவீரர்நாளுமிகவாழியே” என்னும்
பெரியார் பாசுரங்கள் முன்னிரண்டடிக்கு மேறே்காளாகத்தக்கன.

————–

பட்டர் துதி
வான் இட்ட கீர்த்தி வளர் கூரத் தாழ்வான் மகிழ வந்த
தேன் இட்ட தார் நம் பெருமாள் குமாரர் சிவனை அயன்
தான் இட்ட சாபம் துடைத்து ஆள் அரங்கர் சங்கு ஆழி புயம்
நான் இட்டான் என்று அருள் பட்டர் பொற்றாள் கதி நந்தமக்கே

(இ – ள்.) வான் இட்ட – தேவலோகத்திலும் பரவிய,
கீர்த்தி – புகழா னது,
வளர் – (மேன்மேல் மிக்கு) வளரப்பெற்ற,
கூரத்தாழ்வான் – கூரத் தாழ்வானென்னும் ஆசாரியர்,
மகிழ – திருவுள்ளமுவக்கும்படி,
வந்த – (அவரது திருக்குமாரராய்த்) திருவவதரித்த,
தேன் இட்ட தார் – தேன் துளிக்கின்ற மாலையையுடைய,
நம்பெருமான் – திருவரங்கநாதரது,
குமாரர் – திருக்குமாரரும், –
சிவனை – சிவனுக்கு,
அயன் – பிரமன்,
இட்ட – கொ டுத்த,
சாபம் – சாபத்தை,
துடைத்து – போக்கி,
ஆள் – காத்தருளிய,
அரங்கர் – ரங்கநாதரது (சின்னமாகிய),
சங்கு ஆழி – சங்க சக்கரங்களை,
புயம் – (என்னுடைய) தோள்களில்,
நான் இட்டன் என்று – அடியேனையும் ஒரு அன்பனாகக்கொண்டு,
அருள் – (திருவிலச்சினையிட்டு) அருளியவருமான,
பட்டர் – ஸ்ரீபராசரபட்டரது,
பொன் தாள் – அழகிய திருவடிகள்,
நந்தமக்கு – நமக்கு,
கதி – அடைக்கலமாகும்; (எ – று.)

சங்கசக்கரங்களாகிய திருவிலச்சினையை அடியேனுக்குப் பிரசாதித்த ஸ்ரீபராசரபட்டரது திருவடித்தாமரைகளே
அடியேனுக்குத் தஞ்ச மென்பதாம். இங்குத் திருவிலச்சினையாகிய தாபத்தைக் கூறியது –
புண்ட்ரம் நாமம் மந்த்ரம் திருவாராதநம் என்னும் மற்றை ஸம்ஸ்காரங்கட்கும் உபலக்ஷணம்.
“ஞானமனுட்டானமிவை நன்றாகவேயுடைய னான குருவை யடைந்தக் கால் – மானிலத்தீர்,
தேனார்கமலத் திருமாமகள் கொழுநன், தானேவைகுந் தந்தரும்” என்ப வாதலால், இவ்வாறுகூறினரென்க.
கீர்த்தி வானுலகத்திற் பரவியமை கூறவே, இவ்வுலகத்துப் பரவியமை தானே பெறப்படும்.

கூரத்தாழ்வான் – கூரமென்னும் ஊரில் திருவவதரித்தவர். வந்த பட்டர், குமாரராகிய பட்டர், அருள் பட்டர் என இயையும்.
தேனிட்ட தார் -வண்டுகள் இடைவிடாது மொய்க்கின்ற மாலை யென்றுமாம். நம்பெருமாள் என்றது, சிறப்புச்சொல்;
“நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை, யென்ப ரவரவர்த மேற்றத்தால்” என்றார் பெரியாரும்.
நம்பெருமானது திருவருளாற் கூரத்தாழ்வான் திருக்குமாரராய்த் திருவவதரித்ததுபற்றியும்,
ஸ்ரீரங்கநாதன் இளங்குழந்தைப்பருவத்திலேயே பட்டரைத் தமதுபுத்திரனாக அங்கீகரித்துத் தம்முடையசன்னிதியிலே
திருமணத்தூணினருகே தொட்டிலிடுவித்து ஸ்ரீரங்கநாச்சியாரும் தாமுமாகச் சீராட்டிவளர்க்க வள ர்ந்தவராதல் பற்றியும்,
பட்டர்க்கு “நம்பெருமாள்குமாரர்” என்று திருநாமம்.
பண்டிதரைக்குறிக்கின்ற “பட்டர்” என்ற பொதுப்பெயர், சிறப்பாக இவர்க்கு இட்டுவழங்கப்பெற்றது; வடசொல்.
“பொருளல்லாத வென்னைப் பொருளாக்கியடிமைகொண்டாய்” என்றாற்போல, “நானிட்டனென்றருள் பட்டர்” என்றார்.
இனி, நானிட்டனென்பதற்கு – நான் உனக்கு இஷ்ட னென்று சொல்லி யென்றும், நான் இட்டேனென் றென்றுங் கொள்ளலாம்.
கதி – புகலிடம். சாபம் – வெகுண்டு கூறிய மொழி;
இங்கே பிரமகபாலம் கையிலொட்டிக்கொண்டு பலவிடங்களிலும் பலியேற்றுத்திரிய நேர்ந்தமை.
சங்கு – வடசொல்விகாரம். ஆழி – வட்டம்; சக்கரத்துக்கு வடிவுப் பண்பாகுபெயர்:
அன்றிக்கே, அசுரர் முதலிய பகைவரை அழித்தலை யுடையது. புயம் – புஜம்.

இது, நேரசைமுதலதாகிய கட்டளைக்கலித்துறை.

————

நூல் –
சீர் பூத்த செழும் கமலத் திருத் தவிசில் வீற்று இருக்கும்
நீர் பூத்த திரு மகளும் நில மகளும் அடி வருட
சிறைப்பறவை புறம் காப்ப சேனையர் கோன் பணி கேட்ப
நறைப் பாடலைத் துழாய் மார்பில் நாயிறு போல் மணி விளங்க
அரிய தானவர்க் கடிந்த ஐம்படையும் புடை தயங்க
கரிய மால் வரை முளரிக்காடு என்று கிடந்தாங்கு
பாயிர நான் மறை பரவ பாற் கடலில் பருமணிச் சூட்டு
ஆயிர வாய்ப் பாம்பு அணை மேல் அறி துயிலின் இனிது அமர்ந்தோய் –

(இ – ள்.) சீர் பூத்த – சிறப்பு மிக்க,
செழு – செழுமையான,
கமலம் – செந்தாமரை மலராகிய,
திரு தவிசின் – சிறந்த ஆசனத்தில்,
வீற்றிருக்கும் – எழுந்தருளி யிருப்பவளும்,
நீர் பூத்த – திருப்பாற்கடலில் திருவவதரித்தவளுமான,
திரு மகளும் – பெரியபிராட்டியாரும்,
(நீர் பூத்த-) கடலாற்சூழப்பட்ட,
நிலம் மகளும் – பூமிப்பிராட்டியாரும்,
அடி வருட – (தமது திருக்கைகளால் நினது) திருவடிகளைத் தடவவும், –
சிறை பறவை – சிறகுகளையுடைய பெரியதிருவடி (கருடன்),
புறம் காப்ப – (நினது) பக்கத்தே பாதுகாத்திருக்கவும், –
சேனையர் கோன் – சேனைமுதலியார்,
பணிகேட்ப – ஏவல் கேட்கவும்,
நறை – வாசனையை யுடைய,
துழாய் படலை – திருத்துழாய்மாலையையுடைய,
மார்பின் – திருமார்பிலே,
மணி – (கௌஸ்துப) ரத்தினம்,
நாயிறு போல் – சூரியன்போல,
விளங்க – பிரகாசிக்கவும், –
அரிய – வெல்லுதற்கரிய,
தானவர் – அசுரர்களை,
கடிந்த – அழித்தருளிய,
ஐம் படையும் – பஞ்சாயுதங்களும்,
புடை தயங்க – இருபக்கங்களிலும் நின்று விளங்கவும், –
பாயிரம் நால் மறை – முகவுரை யையுடைய நான்குவேதங்களும்,
பரவ – புகழவும், –
பால் கடலுள் – திருப்பாற்கடலின்நடுவிலே,
பரு மணி – பருத்த மாணிக்கத்தையுடைய,
சூட்டு – உச்சியையுடைய,
ஆயிரம் வாய் – ஆயிரந் தலைகளையுடைய,
பாம்பு அணை மேல் – ஆதிசேஷசயநத்தில்,
கரிய மால் வரை – கரிய பெரிய ஒரு மலை,
முளரி காடு ஈன்று – தாமரைக்காடு பூக்கப்பெற்று,
கிடந்தாங்கு – படுத்திருந்தாற் போல,
அறி துயிலின் – யோகநித்திரையில்,
இனிது அமர்ந்தோய் – இனிதாகப் பொருந்தி யிருக்கின்றவனே! – (எ – று.)

வீற்றிருத்தல் – வேறொன்றற்கில்லாத சிறப்போடு இருத்தல்.
“நீர்பூத்த” என்பது இரட்டுறமொழிதலாக, திருமகளோடும் நிலமகளோடுஞ் சேர்க்கப்பட்டது.
நீர் – கடலுக்கு ஆகுபெயர் (இலக்கணை.) இங்கே சந்தர்ப்பம் நோக்கி நீரென்பதற்குப் பாற்கடலெனப் பொருள் கொள்ளப்பட்டது.
பொதுப்பெயர் சிறப்புப்பொருளின் மேலது; “தாழி தரையாகத் தண்டயிர் நீராகத் தடவரையே மத்தாக” என்பதிற்போல;
இனி, திருமகளுக்கு அடைமொழியாம்போது பெண்களுக்குஉரிய குணங்கள் நிறைந்த வென்றும்,
நிலமகளுக்கு அடைமொழியாம்போது நீரினின்றுந்தோன்றிய வென்றுங் கொள்ளினும் அமையும்.
திருமகள் – திருவாகிய மகள், ஸ்ரீதேவி. நில மகள் – நிலமாகிய மகள், பூதேவி.
சேனையர்கோன் – பரமபதத்திலுள்ள நித்தியமுக்தர்களுக்குத் தலைவர். நறை – தேனுமாம்.
படலை – மார்பின் மாலை. ஐம்படை – சக்கரம், சங்கு, கதை, வில் – வாள்;
இவற்றிற்கு முறையே சுதரிசநம், பாஞ்சசந்நியம், கௌமோதகி, சார்ங்கம், நந்தகம் என்று பெயர்.
தாமரைத்தொகுதியைத் தாமரைக்கா டென்றார்.
பெருங்கருமலை – எம்பெருமானது திருமேனிக்கும், தாமரைக்காடு – வாய் கண் கை கால் முதலிய அவயவங்களுக்கும் உவமை;
இதனை மேல் எழுபத்துமூன்றாம் பாட்டில் விவரமாகக் காண்க. கிடந்து – எச்சத்திரிபு. ஆங்கு – உவமவுருபு.
பாயிரம் – ப்ரணவம். அறிதுயில் – அறியாநின்று செய்யுந் துயில்.
“கோலார்ந்த நெடுஞ்சார்ங் கங் கூனற்சங்கங் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற லொள்வாள்,
காலார்ந்த கதிக்கருடனென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ் சூழ் காப்ப” என்ற
பெரியார் பாசுரம் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

————————

மண்ணகம் துயர் நீங்க வானகம் தொழுது ஏத்த
கண் அகன் சோணாட்டுக் காவிரி வாய்ப் புளினத்து
பம்புகதிர் விசும்பு இரவி பசும் புரவி வழி விலங்கு
செம்பொன் மதில் ஏழ் உடுத்த திரு அரங்கப் பெரும் கோயில்
ஆணிப் பொன் தகடு உறிஞ்சும் அணிக்கதவ நீர் வாயில்
மாணிக்க வெயில் பரப்பும் வயிர மணி விமானத்துள்
மின் இலங்கு தொடி வலய வியன் வலக்கை கீழ் கொடுத்து
தென் இலங்கைத் திசை நோக்கி திரு நயனம் துயில்வோய் கேள் –2-

(இ – ள்.) மண்ணகம் – மண்ணுல கத்திலுள்ளாரும்,
வானகம் – விண்ணுலகத்திலுள்ளாரும்,
துயர் நீங்க – (தத்தம் இம்மை மறுமைத்) துன்பங்கள் நீங்குமாறு,
தொழுது ஏத்த – வணங்கித் துதிசெய்யாநிற்க,
கண் அகல் சோணாடு – இடமகன்ற சோழ நாட்டில்,
காவிரிவாய் – திருக்காவேரிநதியின்நடுவிலே,
புளினத்து – மணற் றிட்டையிலே, –
பம்பு கதிர் – நெருங்கிய கிரணங்களையுடைய,
விசும்பு -ஆகாயத்தே செல்லுகின்ற,
இரவி – சூரியனது,
பசும் புரவி – பச்சை நிறத்தையுடைய குதிரை,
வழிவிலங்கு – (தான்செல்லும்) வழியினின்று விலகிப்போவதற்குக் காரணமாகிய (அச்சூரியமண்டலத்தினும் உயர்ந்துநின்ற),
செம்பொன் – சிவந்தபொன்மயமான,
மதில் ஏழ் – ஏழுதிருமதில்களை,
உடுத்த – சுற்றிலும் உடைய,
திருவரங்கப்பெருங்கோயில் – திருவரங்கம்பெரியகோயிலில், –
ஆணி பொன் தகடு உரிஞ்சும் – சிறந்த பொன்தகடு பதித்த,
அணி கதவம் – அழகிய கதவுகளையுடைய,
நீர் வாயில் – நீண்ட திருவாயிலையுடைய, மாணிக்கம்
வெயில் பரப்பும் – மாணிக்கங்களி னொளியை வீசுகின்ற,
வயிரம் மணி – வயிரக்கற்க ளிழைத்த,
விமானத்துள் – பிரணவாகார விமானத்தினுள்ளே, –
மின் இலங்கு – ஒளி விளங்குகின்ற,
தொடி வலயம் – தொடியென்னும் வளையையுடைய,
வியல் – பெரிய,
வலக்கை – வலத் திருக்கையை,
கீழ்கொடுத்து – (உனது திருமுடியின்) கீழே வைத்துக் கொண்டு,
தென் இலங்கை திசை நோக்கி – தெற்குத் திக்கிலுள்ள இலங்காபுரியை நோக்கி,
திரு நயனம் துயில்வோய் – திருக்கண் வளர்ந்தருளுகின்றவனே! –
கேள் – (அடியேன் செய்யும் விண்ணப்பத்தைக்) கேட்டருள்வாயாக; (எ – று.)

வானகம்- தேவர்கள்; நித்தியசூரிகளுமாம். அகல் சோணாடு – அகன் சோணாடு; புணர்ச்சியில் விகாரம்.
சோணாடு – மரூஉமொழி. மதிலுக்கும் இரவிக்குஞ் சம்பந்தமில்லாமலிருக்கச் சம்பந்தத்தைக் கற்பித்தலால், தொடர்புயர்வு நவிற்சியணி;
இதனை வடநூலார் ஸம்பந்தாதிசயோக்தி யென்பர்: இதனால், மதிலினது மிக்க உயர்வு தொனிக்கின்றது.
திருவரங் கத்திற்குப் பெரியகோயிலென்றும், அங்கு எழுந்தருளியிருக்கின்ற எம்பெரு மானுக்குப் பெரியபெருமாளென்றுந் திருநாமம்.
கோயில் – கோவில், தேவா லயம்; வகரம் யகரமானது, இலக்கணப்போலி.
ஆணிப் பொன் – மாற்றுயர் ந்த பொன். வைரம் – வஜ்ரம்.
‘வியன்வலக்கை’ – உத்தமபுருஷலக்ஷணமாய் முழந்தாளளவும் நீண்ட கையென்க.
தாய் குழந்தைக்கு முலைகொடுத்து அதன் முகமலர்ச்சி காண்கைக்குப் பாங்காகச் சாயுமாறுபோல,
ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு இராச்சியத்தைக் கொடுத்து அவரது பொலிவைப் பார்த்துக்கொண்டே கண்வளர்ந்தருளுகின்றபடியால்,
“தென்னிலங்கைத் திசை நோக்கித் திருநயனந் துயில்வோய்” என்றார்;
“மன்னுடைய விபீடணற் காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த, வென்னுடைய திருவரங்கர்க்கு,”
“வன்பெரு வானக முய்ய வமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகின் மனிசருய்யத்,
துன்பமிகு துயரகல வயர்வொன் றில்லாச் சுகம் வளர வக மகிழுந் தொண்டர் வாழ,
வன்பொடு தென்றிசை நோக்கிப் பள்ளி கொள்ளு மணியரங்கன்,”
“குடதிசை முடியைவைத்துக் குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்புகாட்டித் தென்திசை யிலங்கை நோக்கி” என்றார்களிறே ஆழ்வார்களும்.

இவையிரண்டும் – எட்டடித் தரவுகள்.

———-

1-தேவராய் தேவர்க்கும் தெரியாத ஒளி உருவாய்
மூவராய் மூவர்க்குள் முதல்வனாய் நின்றோய் நீ –

(இ – ள்.) நீ -, தேவர் ஆய் – (இந்திரன் முதலிய) தேவர்களது சொரூபியாய்,
தேவர்க்கும் – அந்தத்தேவர்களுக்கும்,
தெரியாத – அறியக்கூடாத,
ஒளி உரு ஆய் – தேஜோரூபியாய்,
மூவர்ஆய் – (அயன் அரி அரன் என்னுந்) திரிமூர்த்திகளாய்,
மூவர்க்குள் – அந்த மும்மூர்த்திகளுள்ளும்,
முதல்வன்ஆய் – தலைவனாய்,
நின்றோய் – நின்ற தன்மையையுடையை; (எ – று.)

எம்பெருமான் தானே இந்திரன் முதலிய தேவர்களாகவும், திரிமூர்த்திகளாவும்,
அவர்கள் யாவர்க்குந் தலைவனாகவும் நின்று சிறப்புறுவன் என்பதாம்–மூவர் – தொகைக்குறிப்பு.

முதலாவார் மூவரே யம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன்
முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்

ஒளியுரு – உலகத்தில் ஒளிவடிவமாயுள்ளவையும் அதனால் “ஜ்யோதி” என்று சொல்லப்படுபவையுமான
ஆத்துமாக்களெல்லாவற்றுக்குந் தலைவனாகிய பரமாத்துமா என்றபடி; இவனை “பரஞ்சோதி” என்று வேதம் கூறும்

ஆதிப் பிரமனும் நீ யாதிப் பரமனும் நீ யோதியுறு பொருளுக்கு அப்பால் உண்டாயினும் நீ –
சோதிச் சுடர்ப் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற வேத முறை செய்தால் வெள்காரோ வேறுள்ளார்-கம்பர்

—————–

2-போற்றுவார் போற்றுவது உன் புகழ்ப் பொருளே ஆதலினால்
வேற்று வாசகம் அடியேன் விளம்புமாறு அறியேனால்-

போற்றுவார் – துதிப்பவர்கள்,
போற்றுவது – துதிப்பது,
உன் – உனது,
புகழ் பொருளே – புகழாகிய பொருளையே;
ஆதலினால் -,
அடியேன் -,
வேறு வாசகம் – (அப்புகழையேயன்றி) வேறுவார்த்தையை,
விளம்பும் ஆறு – சொல்லுந்தன் மையை,
அறியேன் – அறியாதவனா யிருக்கின்றேன்; (எ – று.)

இதுவரையில் மற்றையோர் யாவரும் உன்னைக்குறித்துப் புகழ்ந்து கூறும் பழையதொரு மரபின்படி கூறத் தெரியுமே
யன்றிப் புதுமையாக நினது திருவுள்ளத்தில் ஒருவியப்புத் தோன்றுமாறு புகழ்ந்துகூறத் தெரிந்திலே னென்பதாம்.

வானத்தினின்றும் பெய்கின்ற மழைநீர் முழுவதும் முடிவிற் கடலையே அடைவதுபோல, எந்தத்தேவரைக்
குறித்துச் செய்யப்படுந் தோத்திரமும் ஸர்வேஸ்வரனாகிய ஸ்ரீமந்நாராயணனையே சேர்வதென்பதுபற்றி
போற்றுவார் போற்றுவ துன் புகழ்ப்பொருளே” என்றார்.
வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை அறுவகைப் பொருளென்றாற்போல,
ஈண்டுப் புகழ் பொருளெனப்பட்டது;
இறைமைக் குணங்க ளிலராயினாரை உடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் ஒருபொருளல்ல வாகலின்,
அவைமுற்றவுமுடைய எம்பெருமானது புகழே பொருளெனப்பட்ட தென்றுங் கொள்க

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் மொழி

இது. அடியேன் – அடிமையென்னும் அடியிற் பிறந்து தாழ்வுப் பொருள் தந்து நின்ற தன்மை யொருமைச் சொல். ஆல் – ஈற்றசை.

———————————

3-பணித் தடங்காது இமையவர்க்கும் பங்கயத்தோன் முதலோர்க்கும்
பணித்து அடங்காப் புகழ் அடியேன் பணித்து அடங்கற் பாலதோ

பணி தடம் காது-பாம்பைக் குழையாக அணிந்த பெரிய காதுகளை உடைய -நாகாபரணன்
பங்கயத்தோன் -பிரமன் -திரு உந்தித் தாமரையில் தோன்றினவன்-என்றவாறு
பணித்து அடங்கா -சொல்லி முடியாத பணி – பாம்பைக் குழையாக அணிந்த,
தட காது – பெரிய காதுகளையுடைய,
இமையவற்கும் – பரம சிவனுக்கும்,
பங்கயத்தோன் முதலோர்க்கும் – பிரமன்முதலிய தேவர்களு க்கும்,
பணித்து அடங்கா – சொல்லி முடியாத,
புகழ் – (உனது) திருப்புகழ்,
அடியேன் -,
பணித்து – சொல்லி,
அடங்கல் பாலதோ – முடியத் தக்க தன்மை யையுடையதோ? (அன்றென்றபடி); (எ – று.) – ஓகாரம் – எதிர்மறை.

திரிமூர்த்திகளுள் மற்றையிருமூர்த்திகளும் புகழ்ந்துகூறிமுடியாத பெ ருஞ்சிறப்புடைய உனது புகழ்
எளியனான என்னால் எடுத்துச்சொல்லுந் தரமுடையதன்று என்பதாம்.

ஆராதனம் செய்து கண்டனின் கீர்த்தி யறைவன் றிரு ஆராதனம் செய்வன் வேதா என்றால்
அடியேன் புகழ்கைக்கு யார் -திருவரங்கத்து அந்தாதி

நாகாபரண னாதலால், “பணி த்தடங்காதிமையவன்” என்றார். காது – மற்றை அவயவங்களுக்கும் உபலக்ஷணம்.
இமையவற்கும், முதலோர்க்கும் என்பவற்றிலுள்ள உம்மைகள் – எண்ணுப்பொருளோடு, உயர்வு சிறப்பும் உணர்த்தி நின்றன.
பங்கயத்தோன் – திருமாலினது திருவுந்தித்தாமரைமலரில் தோன்றியவன்.
“பணித் தடங்காது” என்ற சொற்றொடரில் யமகம் என்னுஞ் சொல்லணி காண்க.

————————————

4- யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ என்றால் அஃது உனக்கு வியப்பு ஆமோ —

யாம் – நாமே,
கடவுள் -பரதெய்வம்,
என்று – என்றெண்ணி,
இருக்கும் – இறுமாந்திருக்கின்ற,
எ உலகில் – எல்லாவுலகத்திலுமுள்ள,
கடவுளர்க்கும் – தெய்வங்களுக்கெல்லாம்,
ஆம் – தலைமையாகிய,
கடவுள் -,
நீ என்றால் – நீயென்றுசொல்லிப் புகழ்ந்தால்,
அஃது – அது, உனக்கு -,
வியப்பு ஆமோ – ஒரு அதிசயமாகுமோ? (ஆகாது என்றபடி); (எ – று.)

உண்மையில் எல்லாத்தேவர்கட்கும் இறைவன் ஸ்ரீரங்கநாதனே யாத லால் அவ்வெம்பெருமானை எல்லாத்தேவர்கட்கும்
தலைவனென்று கூறின் அஃது இயற்கையைக் கூறுவதாவதல்லது அதனில் வியக்கத்தக்க பொருளின்மையை யறிக.
யாம் கடவுள் என்று இருக்கும் கடவுளர் – “நாயகராத்திரி யுஞ் சிலதேவர்” என்பர் திருவேங்கடத்தந்தாதியிலும்.
இனி, பலசமயத்தோரும் தம்தம் தெய்வமே நன்றென்று கொண்டு தந்தம் இஷ்ட தெய்வங்களுக்குச் செய்யும்
வழிபாடுகளையெல்லாம் நீயே பெற்றுக்கொண்டு அவரவர்க்குத் தக்கபடி பயன்களை யளிக்கின்றா யாதலால்,
அவ்வத்தேவர்களால் யாது பயன்? என்றும் இதற்குக் கருத்துக் கூறுவர்.
யாம் – உயர்வுப்பன்மை. கடவுள் – எல்லாவற்றையுங் கடந்து நிற்பவன்; தொழிலாகுபெயர்.
“எவ்வுலகு”, எகரவினா – எஞ்சாமைப் பொருளது.
“உனக்கு வியப்பாமோ” என்றது, உன்பெருமையைக் குறிக்கத்தக்கதொரு அதிசயமாகா தென்றபடி.

——————————-

5-அனைத்துலகும் அனைத்துயிரும் அமைத்து அளித்து துடைப்பது நீ
நினைத்த விளையாட்டு என்றால் நின் பெருமைக்கு அளவு ஆமோ

5.அனைத்து உலகும் – எல்லாவுலகங்களையும்,
அனைத்துஉயிரும் – (அவற்றிலுள்ள சராசரங்களாகிய) எல்லாவுயிர்களையும்,
அமைத்து – படைத்து,
அளித்து – காத்து,
துடைப்பது – அழிப்பது, நீ -,
நினைத்த – எண்ணியமாத்திரத்திற் செய்கிற,
விளையாட்டு – திருவிளையாடலாகும், என்றால் -, (அது),
நின்பெருமைக்கு – நினது மகிமைக்கு, அளவு ஆமோ – ஒரு வரையறையாகுமோ? (எ – று.)

உலகம் ஆவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையார் -கம்பர்
அயனாயிருந்து படைத்து, தானான தன்மையிலே நின்று காத்து, அரனாயிருந்து அழிப்பன் திருமாலென்க.
ஸர்வ ஸக்தியான ஸர்வேஸ்வரனுடைய பெருமைக்குப் படைத்தல் முதலியன ஒரு பெருந்தொழிலல்ல வென்பதாம்.

——————————————-

6-கருதரிய உயிர்க்கு உயிராய்க் கலந்து -கரந்து- எங்கும் உறையும்
ஒரு தனி நாயகம் என்றால் உன் புகழ்க்கு வரம்பு ஆமோ

(இ – ள்.) (நீ), கருதரிய – நினைத்தற்கும் அருமையான,
உயிர்க்கு – எல்லாச் சீவாத்துமாக்களுக்கும்,
உயிர் ஆய் – அந்தராத்துமாவாய்,
கரந்து – மறைந்து,
எங்கும் – எல்லாவிடத்திலும் (உள்ளும் புறமும்),
பரந்து – பரவி,
உறையும் – தங்குகின்ற,
ஒரு தனி நாயகம் -ஒப்பில்லாததொரு தலைமைப்பொருளாவாய்,
என்றால் -, (அது),
உன் புகழ்க்கு – உனது பெருங்கீர்த்திக்கு,
வரம்பு ஆமோ – ஓர் எல்லையாகுமோ? (எ – று.)

எம்பெருமானுடைய திருப்புகழ்கள் அனந்த மாதலால், ஒன்றைக் கூறுவதால் அவைமுற்றும் கூறப்பட்டனவாகாவென்க.
ஆத்மாக்களை அநந்தமென்று கூறுவதல்லது இத்துணையன வென்று அளவிட்டுக்கூறுதல்
எவர்க்கும் இயலாதாகையால், “கரிதரிய வுயிர்” என்றார்.
உடலுக்குள் உயிர் அதற்குத் தாரகமாய் நியாமகமாய்ச் சேஷியாய்த் தங்கியிருத்தல் போலப் பரமாத்துமா
அச்சரீராத்துமாக்களுள் அந்தர்யாமியாய் அவற்றிற்குத் தான்
தாரகனாய் நியாமகனாய் சேஷியாய் விடாது வீற்றிருத்தலால், “உயிர்க்குயிராய்” என்றார்;

ஆத்மாக்களும் அநந்தம் -என்பதால் கருதரிய உயிர்
கலந்து கரந்து -உள்ளும் புறமும் வியாபித்து
எள்ளும் எண்ணெயும் போல் நீங்காது உலகத்து உயிராகி நியாமகனாய் -திருவரங்கத்து மாலை

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய்
யவை யவை தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன்

பரந்த அண்டம் இது என நில விசும்பு எழி வறக் கறந்த சில் இடம் தொறும் இடம்
திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -நம்மாழ்வார் –

ஒரு தனி நாயகம் – பிரமன்முதல் எறும்பு ஈறான எல்லாவுயிர்க்கும் ஈடுமெடுப்புமில்லாத தலைமைத்தேவன் எம்பெருமான் என்றபடி.

இவை யாறும் – ஈரடித் தாழிசைகள்.

——————————————————-

1-உரு என அரு என உளன் என இலன் என
அரு மறை இறுதியும் அறிவு அரு நிலைமையை –

(நீ), உரு என – உருவமுடை யவனென்றும்,
அரு என – உருவமில்லாதவ னென்றும்,
உளன் என-உள்ளவனென்றும்,
இலன் என- இல்லாதவனென்றும்.(ஒருதலையாகத் துணிந்து),
அரு மறை இறுதியும் – அறிதற்கரிய வேதாந்தங்களும்,
அறிவரு – அறிதற்கரிய,
நிலைமையை – தன்மையையுடையனா யிருக்கிறாய்; (எ – று.)

உனது மகிமைகளைக் கூறுகின்ற பிரமகாண்டமாகிய வேதாந்தங்களும் உனது மகிமைகளை உள்ளபடி
முற்றுங் கூறுங் தரத்தனவல்ல என்பதாம். உரு, அரு என்பன – ரூபம், அரூபம் என்னும் வடமொழிகளின் சிதைவுகள்.

இலனது வுடையனது என நினைவு அரியவன் நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
உளன் எனில் உளன் இவ்வுருவம் அவ்வுருவுகள் இலன் எனில் இலன் அவ்வருவும் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையின் உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே-

————————————————–

2-இவர் இவர் இறையவர் என மன உறுதியொடு
அவர் அவர் தோழா அரு சமயமும் அருளினை —

(இ – ள்.) இவர் இவர் – இந்த இந்தத் தேவர்கள்,
இறையவர் – (எங்களுக்குத்) தலைவர்கள்,
என – என்று எண்ணி,
மனம் உறுதியொடு – மனத்துணிவுடனே,
அவர் அவர் – அந்தந்த மதத்தி லுள்ளவர்கள்,
தொழ – வணங்கும்படி,
அறு சமயமும் – ஆறுவகைப்பட்ட மதங்களையும்,
அருளினை – கொடுத்தருளினாய்; (எ – று.)

வணங்கும் துறைகள் பல பலவாக்கி மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பலவாக்கி யாவை யாவை தோறும்
அணங்கும் பல பலவாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்

அறு சமயம் -வைஷ்ணவம் -சைவம் -சாக்தம் -சௌரம்-காணபதம் -கௌமாரம் –
கபில மதம் -கணாத மதம் -பதஞ்சலி மதம் -அஷ பாத மதம் -வியாச மதம் -ஜைமினி மதம்
பௌத்தம்-ஜைனம் -பைரவம் -காளாமுகம் -லோகாயதம் -சூனிய வாதம்
என்பனவென்றேனுங் கொள்க-

——————–

3-கடு வளி கனல் புனல் ககனமொடு அகலிடம்
உடுபதி கதிரவன் உருவமும் அருளினை –

கடு வளி – கடிய காற்றும், -கடுமை-விரைவு
கனல் – நெருப்பும்,
புனல் – நீரும்,
ககனமொடு – ஆகாயமும்,
அகல்இடம் – பரந்த பூமியும்,
உடுபதி – நக்ஷத்திரங்களுக்குத் தலைவனாகிய சந்திரனும்,
கதிரவன் – சூரியனும்,
உருவமும் – இயமானனும், (ஆகிய இவற்றை,)
அருளினை – வகுத்தருளினாய்; (எ – று.)

பாஞ்ச பூதிகமான அண்டங்களைப் படைத்து அவற்றுக்கு ஒளியைத் தரும் சந்திர சூரியர்களை உண்டாக்கி வைத்தாய் என்றுமாம்

அஷ்ட மூர்த்திகள் இவை
நில நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன் புலனாய ஐந்தினோடு எண் வகையாய் புணர்ந்து நின்றான் -திருவாசகம்

கடுவளி, கடுமை – விரைவு; கடியென்னும் உரிச்சொல்லின் திரிபென்றுங் கொள்ளலாம்.
நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழவைத்தார்.
“ககனமொடு” என்பதில் உள்ள ‘ஒடு’ வென்னும் எண்ணிடைச்சொல், நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்திற்று.
கதிரவன் – கிரகணங்களையுடையவன். இனி, உருவம் என்பதற்கு – இவர்களது உருவத்தை யெனப் பொருள்கூறி,
பாஞ்சபூதிகமான அண்டங்களைப் படைத்து, அவற்றிற்கு ஒளியைத் தருதற்காகச் சூரிய சந்திரர்களையும்
உண்டாக்கி வைத்தாய் நீ யென்றுங்கருத்துக் கூறுவர்.

—————————————————-

4-கடி மலர் அடி இணை கருதினர் பெறுகென
அடி நடு முடிவு அற அருள்பர கதியினை –

(இ – ள்.) “கடி மலர் – வாசனையை யுடைய தாமரை மலர் போன்ற,
அடி இணை – உபய திருவடிகளை,
கருதினர் – தியானஞ்செய்தவர்கள்,
பெறுக – பெறுவார்களாக,”
என – என்று,
அடி நடு முடிவு அற – முதலிடைகடையில்லாமல் – (எப்பொழுதும்),
உத்தமர் மத்யமர் அதமர் என்றுமாம் -பிறப்பு வளர்ப்பு இறப்பு இல்லாமல் என்றுமாம்
அருள் – (அவர்களுக்கு) அருளுகின்ற,
பரகதியினை – பரமபதத்தையுடையவனாயிருக்கிறாய்; (எ – று.)

இவை நான்கும் – ஈரடி அராகங்கள்.

——————————————————————-

1- ஒரு நாலு முகத்தவனோடு உலகு ஈன்றாய் என்பர் அது உன்
திரு நாபி மலர்ந்தது அல்லால் திரு வுளத்தில் உணராயால் –

(இ – ள்.) ஒரு நாலு முகத்தவனோடு – ஒப்பற்ற பிரமனுடனே,
உலகு – எல்லாவுலகங்களையும்,
ஈன்றாய் – படைத் தாய்,
என்பர் – என்று (யாவருஞ்) சொல்லுவர்; அது -,
உன் திரு நாபி – உனது அழகிய உந்தித்தாமரை,
மலர்ந்தது அல்லால் – விரிந்ததல்லாமல்,
திரு உளத்தில் – நெஞ்சில்,
உணராய் – நினைத்தாயு மில்லை; (எ – று.)

அநாயாசேன சிருஷ்டி செய்து அருளினாய் என்கிறார்
பந்திக் கமலத் தடம் சூழ் அரங்கர் படைப்பு அழிப்பு சிந்தித்திடுவதும் இல்லை கண்டீர்
அத்திசை முகனோடு உந்திக் கமலம் விரிந்தால் விரியு முகக்கடையின்
முந்திக் குவியிலுடனே குவியும் இம்மூதண்டமே–திரு வரங்கத்து மாலை –

————————-

2-மேரு கிரி உடல் அவுணன் மிடல் கெடுத்தாய் என்பர் அது உன்
கூர் உகிரே அறிந்தது அல்லால் கோவே நீ அறியாயால் –

மேருகிரி – மகாமேருமலை போன்ற,
உடல் – உடம்பினையுடைய,
அவுணன் – இரணியாசுரனது,
மிடல் – வலிமையை,
மிடல் -தேக பலம் -வர பலம் முதலியன
கெடுத்தாய் – அழித்தாய், என்பர் -; அது -,
உன் கூர் உகிரே உனது கூரிய நகமே,
அறிந்தது அல்லால் -,
கோவே – இறைவனே!
நீ அறியாய் -; (எ – று.)

உனது கைந்நகத்துக்கே இவ்வளவு பேராற்ற லுள்ள போது உனது முழுவலிமை எத்திறத்ததோ வென்று வியந்தவாறு.
இவ்வரலாற்றால், சிவபிரான் முதலிய பிறதேவர்களாற் கிடைத்துள்ள பூரணவலிமைகள் உனக்கு முன்னே
பஞ்சுக் கனல் போலப் பறந்தொழியு மென்று நீயே பரதேவதை யென்பதை விளக்கினர்.
மேருகிரி – நிறத்திற்கும், வலிமைக்கும், பெருமைக்கும் உவமை.

————————————-

3-பன்றியாய் படி எடுத்த பாழியாய் என்பர் அது
வென்றி ஆர் உனது எயிற்றில் மென் துகள் போன்று இருந்ததால்

(இ – ள்.) பன்றியாய் – வராகாவதாரமாய்,
படி – பூமியை,
எடுத்த -,
பாழியாய் – வலிமையையுடையாய், என்பர் –
அது – அப்பூமி,
வென்றி ஆர் – வெற்றி பொருந்திய,
உனது -,
எயிற்றில் – கோட்டில்,
மெல் துகள் போன்று – சிறிய தூளியை ஒத்து, இருந்தது – (எ – று.)

பூமிக்கு நேர்ந்த பிரளயாபத்தைப் போக்கியருளுதற்காக எடுத்த சிறந்த திருவவதாரமாதலால், “படியெடுத்த பாழியாய்” என்றனர்.
குழந்தை கிணற்றில் விழுந்தால் உடனே அதிற்குதித்துக் குழந்தையையெடுக்குந்தாய் போலப்
பூமி கடலினுட்புக்கவளவிலே நீருக்குஞ் சேற்றுக்கும் பின்வாங்காத வராகரூபமாய்க் கடலினுட்புக்குப் பூமியை
எடுத்தற்காகக் கொண்ட அத்திருமேனியின் பெருமையை விளக்குவார், பூமியை ஒருதுகளாகக் கூறினர்.
வென்றி – இரணியாக்ஷ வதம். துகள் = தூளி; வடசொற்சிதைவு.

ஆருக்கி வரை யளவிடலான் தென்னரங்கர் இந்தப்
பாருக்கு அரந்தை தவிர்பதற்காக பழிப்பில் பெரும்
சீருற்ற செங்கண் கரும் பன்றியாகி திருக் குளம்பின்
மேரு கண கணமா தலை நாளில் வினோதிப்பரே—திருவரங்கத்து மாலை –

————————————————————————-

4-அண்டம் எலாம் உண்மை என்பர் அறியாதார் ஆங்கு அவை நீ
உண்டருளும் காலத்து ஒரு துற்றுக்கு ஆற்றாவால் –

அறியாதார் – (உன் திற மையை நன்றாக) அறியாதவர்கள்,
அண்டம் எலாம் – எல்லா அண்டங் களையும்,
உண்டை – புசித்தாய்;
என்பர் – என்று (ஒருபெருமையாகச்) சொல்லுவர்;
அவை – அவ்வண்டங்கள்,
நீ உண்டருளும் காலத்தில் -,
ஒரு துற்றுக்கு ஆற்றா – ஒரு கவளத்திற்கும் போதாவாம்; (எ – று.)

உலகங்களெல்லாம் ஒருகவளத்துக்கும் போதாதபடி மிகப்பேருருவ முடைய விராட் சொரூபியாகிய உன்னைப்பற்றி
உலகங்களை உண்டாய் என்று இதனை அரிய தொழில் செய்ததுபோல எடுத்துக்கூறுதல் உனது பெருமைக்குத் தகுமோ? என்பதாம்.
உண்டை- அன்சாரியைப் பெறாது முன்னிலை யொருமை யிறந்தகால வினைமுற்று.
ஆங்கு – அசை. துற்று ஒருபிடியளவு கொண்ட உணவு. “துத்துக்கு” என்றும் பாடம்.

இவை நான்கும் – பெயர்த்தும் ஈரடித் தாழிசைகள்.

———————————————————

1-நஞ்சமும் அமுதமும் நரகும் வீடுமாய்
வஞ்சமும் ஞானமும் மறப்பும் ஆயினை-

(இ – ள்.) நஞ்சமும் – (உயிரை முடித்தே விடுவதான) விடமும்,
அமுதமும் – (போன உயிரை மீட்கவல்லதான) அமிருதமும், –
நரகும் – (துக்க ஏதுவான) நரகமும்,
வீடும் – (பேரின்பத்துக்கு ஏதுவான) மோக்ஷமும், ஆய் -,
வஞ்சமும் – (பிறரை வஞ்சிக்கும்) வஞ்சனையும்,
ஞானமும் – (பொருள்களின் தன்மையை உள்ளபடி அறியவல்ல) அறிவும்,
மறப்பும் – (அவ்விஷயத்தில்) மறதியும்,
ஆயினை – ஆனவனாயிருக்கின்றாய்; (எ – று.)

அநிஷ்டமான விஷம் முதலானவற்றோடு இஷ்டமான அமுதம் முத லானவற்றோடு வாசியில்லாமல்
அந்தந்த உருவங்களாலே எம்பெருமான் யா வர்க்கும் உத்தேச்யமாயிருப்ப னென்பது கருத்து.
இவ்வாறு ஒன்றிற்கொன்று எதிரான பொருள்களாகப் பரிணமிக்கும் எம்பெருமானை -விருத்த விபூதியன் அன்றோ
விடமும் அமுதமுமாய் -நரகும் ச்வர்க்கமுமாய் -ஞானமும் மூடமுமாய் -நம்மாழ்வார் –

———————————————-

2- இருவினைப் பகுதியும் இன்ப துன்பமும்
கருணையும் வெகுளியும் கருத்தும் ஆயினை

(இ – ள்.) இரு வினை பகுதியும் – (சுகசாதனமான) நல்வினை (துக்கசாதனமான) தீவினையின் பிரிவுகளும், –
இன்ப துன்பமும் – (அவற்றாலுண்டாகுஞ்) சுகதுக்கங்களும், –
கருணையும் – (தேற்றமடியாக வரும்) அருளும்,
வெகுளியும் – (கலக்கமடியாக வரும்) கோ பமும்,
கருத்தும் – எண்ணமும்,
ஆயினை -; (எ – று.)

புண்ணியம் பாவம் என்று இவையாய்–
கண்ட வின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் தண்டமும் தண்மையும் -நம்மாழ்வார் –

இவை யிரண்டும் – நாற்சீர் ஈரடி அம்போதரங்கங்கள்.

——————————————————–

1-அலை கடல் வயிறு கலக்கினை
(இ – ள்.) அலை கடல் – அலைகின்ற கடலினது,
வயிறு – நடுவிடத்தை,
கலக்கினை – கலங்கச்செய்தாய்; (எ – று.)

கூர்மாவதாரத்தில் ஷீராப்தி மதன காலத்திலும் -ஸ்ரீ ராமாவதாரத்தில் வருணனை வழி வேண்டிய பொழுதும்

2-அவுணரை மதுகை யடக்கினை
(இ – ள்.) அவுணரை – அசுரர்களை,
மதுகை அடக்கினை – வலிமை கெடச் செய்தாய்; (எ – று.)

இது, துஷ்டநிக்கிரகஞ்செய்யுமாறு எம்பெருமான் எடுத்த பலஅவதார ங்களிலும் நிகழ்ந்ததென்க.
இனி, இரண்டு செயப்படுபொருள் வந்த வினையாக் கொண்டு அவுணரை வலியை யடக்கினாயென்றும்,
உருபு மயக்கமாய் அவுணரது வலியை யடக்கினா யென்றுங் கொள்ளலாம்.

—-

3-மலை கட களிறு வதைத்தனை
மலை – எதிர்த்துப் போர்செய்யவந்த,
கட களிறு – (குவலயாபீட மென்னும்) மதயானையை,
வதைத்தனை – கொன்றாய்; (எ – று.)

———

4-மலை தலை கவிழ எடுத்தனை

இ – ள்.) மலை – கோவர்த்தனகிரியை,
தலை கவிழ – தலைகீழாம் படி,
எடுத்தனை – (குடையாக) எடுத்துப் பிடித்தாய்; (எ – று.)

மலையெடுத்தது – கிருஷ்ணாவதாரத்தில் திருவாய்ப்பாடியில் ஆயர்க ளெல்லாருங் கூடி மழையின் பொருட்டாக
இந்திரனை ஆராதித்தற்கென்று சமைத்த சோற்றை அவனுக்கிடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்கு
இடச்சொல்லித் தானே ஒருதேவதாரூபமாய் அமுது செய்தருள, அவ்விந் திரன் பசிக்கோபத்தாலே
புஷ்கலாவர்த்தகம் முதலிய மேகங்களை ஏவித் தான்விரும்பி மேய்த்துக்கொண்டுபோகின்ற
கன்றுகளுக்கும் பசுக்களுக்குந் தனக்கு அபிமதரான ஆயர்க்கும் ஆய்ச்சிமார்க்குந் தீங்குதரும்படி கன்மழையை
ஏழுநாள் விடாது பெய்வித்தபொழுதென அறிக.

பசுக்கள் எட்டிமேய்ந்துநிற்கலாம்படி தலைகீழாக எடுத்துப்பிடிக்கப்பட்ட தாதலால், “மலை தலை கவிழ எடுத்தனை” என்றார்.

மதுசூதனன் எடுத்து மறித்த மலை –
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்துக் கவித்தமலை –

இவை நான்கும் – முச்சீரோரடி அப்போதரங்கங்கள்.

————————————–

1-மண்ணை விண்டனை
2-வெண்ணெய் உண்டனை
3-மருது இடந்தனை
இது, நாரதமுனிவரது சாபத்தால் மருதமரங்களாகப்பிறந்திருந்த குபேர புத்திரர்களது
சாபவிமோசனத்தின் பொருட்டுக் கிருஷ்ணாவதாரத்தில் நிகழ்ந்ததென்க.
4-எருது அடர்ந்தனை
5-உள் நிறைந்தனை-அந்தர்யாமித்வ வைபவம்
6-எண் இறந்தனை-எண்ணத்தையும் கடந்து –மனத்தை கூறினது மொழி மெய்களுக்கும் உப லஷணம்
7-ஒருமை ஆயினை-அத்விதீயன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்
8-பெருமை மேயினை-

இவை எட்டும் – இருசீ ரோரடி அம்போதரங்கங்கள்.

—————————————————

என வாங்கு- – அசைநிலை. இது, தனிச்சொல்.

1-மலர்தலை உலகத்து புலமை சான்ற
பதின்மரும் பணித்த பாடல் ஒதையொடு
முதுமறை கறங்க முரசம் ஆர்ப்பு
வலம்புரி பிளிரும் பொலம் புரி கோயில்
ஆழி அம் செல்வ ஆதி அம் பரம
வாழி வாழி மாயோய் வாழி
நெடியோய் வாழி நின் மாட்டு ஒன்றே
அடியேன் வேண்டுவது அது நீ மறுக்கேல்
பூவரும் அயன் முதல் யாவரும் போற்ற
மூவுலகு அளந்த நின் சேவடி வாழ்த்தித்
தொழுத கைத் தொண்டர் தம் தொண்டருள் சேர்க்காது
எழுவகைத் தோற்றத்து இன்னாப் பிறப்பில்
என்பு ஒழி யாக்கையுள் சேர்ப்பினும் அவர் பால்
அன்பு ஒழியாமை அருண் மதி எனக்கே –1-

(இ – ள்.) மலர் தலை – பரந்த இடத்தையுடைய,
உலகத்து – நிலவுலகத்திலே,
புலமைசான்ற – அறிவு மிகுந்த,
பதின்மரும் – ஆழ்வார்கள் பத்துப்பேரும்,
பணித்த – திருவாய்மலர்ந்தருளிய,
பாடல் – பாசுரங்களாகிய தமிழ்வேதங்களினது,
ஓதையொடு – கோஷத்துடனே,
முதுமறை – பழைய வடமொழி வேதங்களும்,
கறங்க – உத்கோஷிக்கவும், –
முரசம் – பேரிகைகள்,
ஆர்ப்ப – ஆரவாரஞ் செய்யவும், –
வலம் புரி பிளிறும் – வலம்புரிச்சங்குகள் ஒலிக்கின்ற,
பொலம் புரி – பொன்னாலாகிய,
கோயில் – திருவரங்கம் பெரியகோயிலிலே எழுந்தருளி யிருக்கின்ற,
ஆழி அம் செல்வ – திருவாழியுந் திருக்கையுஞ் சேர்ந்த சேர்த்தியா லுண்டான அழகைச் செல்வமாகவுடையவனே! –
ஆதி அம் பரம – ஆதிமூலமாகிய பரம் பொருளானவனே! –
வாழி வாழி – வாழ்வாயாக வாழ்வாயாக;
மாயோய் – மாயவனே!
வாழி-;
நெடியோய் – நீண்டு வளர்ந்தவனே! வாழி-;
நின் மாட்டு – உன்னிடத்தில்,
அடியேன் -,
வேண்டுவது – வேண்டிக் கேட்பது,
ஒன்றே – ஒருவரமேயாகும்;
அஃது – அதனை, நீ -,
மறுக்கேல் – மறுக்காதே; (அது யாதெனில்), –
பூ வரும் அயன் முதல் – (நினதுநாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமன் முதலாக,
யாவரும் – எல்லாத் தேவர்களும்,
அறியா – அறிய முடியாத,
மூ உலகுஅளந்த – மூன்றுலோகங்களையும் அளத்தல்செய்த,
நின் சேவடி – உனது சிவந்த திருவடிகளை,
வாழ்த்தி -,
தொழு தகை – வணங்குகின்ற தன்மையையுடைய,
தொண்டர்தம் – அடியார்களது,
தொண்டருள் – அடியார்களுள்,
சேர்க்காது – (அடியேனையும் ஒருவனாகச்) சேர்த்திடாமல்,
எழு வகை தோற்றத்து – எழுவகைப்பட்ட தோன்றற்பாட்டையுடைய,
இன்னா பிறப்பின் – துன்பந் தருவதாகிய பிறவிகளுள்,
என்பு ஒழி யாக்கையுள் – எலும்பில்லாத புழுவுடம்பிலே,
சேர்ப்பினும் – சேர்ந்து பிறக்கச் செய்தாலும்,
அவர்பால் – அவ்வடியாரடியார்பக்கல்,
அன்பு – பக்தி,
ஒழியாமை – நீங்காதபடி, எனக்கு -,
அருள் – கருணை செய்வாயாக, (என்பதேயாம்); (எ – று.)

பதின்மர் – கீழ் முதற்காப்புச்செய்யுளிற் கூறிய பன்னிருவருள் மதுர கவியுங் கோதையுந் தவிர்ந்த மற்றையவர்.
வேதங்கள் கடவுளைப்போல நித்தியமாதலால், “முதுமறை” எனப்பட்டன. வலம்புரி – வலமாக உட்சுழிந்த சங்கு.
அடுக்கு – உவகை பற்றியது. மாயோன் – மாயையையுடையவன்;
மாயையாவது – கூடாததையுங் கூட்டுவிக்குந் திறம்: அகடிதகடநா சாமர்த்தியம்; பிரபஞ்சகாரணமான பிரகிருதியுமாம்:
ஆச்சரியகரமான குணங்களையுஞ் செயல்களையு முடையவ னென்றுமாம்; கருநிற முடையோ னென்றுங் கொள்ளலாம்.
மாட்டு, பால் – ஏழனுருபுகள். அறியாச் சேவடியென இயையும், தொழுத கை என்றும் பிரிக்கலாம்.
எழுவகைத் தோற்றத்துள்ளும் இன்னாத பிறப்பாகிய என்பொழியாக்கை யென்றுமாம்.
தேவர் மனிதர் புள் விலங்கு ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என்பன எழுவகைத்தோற்றங்கள்.
யாக்கை – எழுவகைத் தாதுக்களால் யாக்கப்படுவது; யாத்தல் – கட்டுதல். சேர்ப்பினும் என்ற உம்மை,
நீ சிறிதும் அருளின்றி அவ்வாறு சேர்க்கமாட்டாயென்னுந் துணிவு தோன்ற நின்றது. மதி – முன்னிலையசைச்சொல்;
“உரைமதி வாழியோ வலவ” என்பதிற்போல. இனி, அன்பொழியாதபடி மதியை (அறிவை) அரு ளென்றுமாம்.

அடியவர் மீது அன்பு ஒழியாதபடி மதியை அருள்வாய் என்றபடி

இது, பதினான்கடி நிலைமண்டில ஆசிரியச் சுரிதகம்.

இப்பாட்டு, தரவும், தாழிசையும், அராகமும், பெயர்த்துந்தாழிசையும், அம்போதரங்கங்களும், தனிச்சொல்லும்,
சுரிதகமும் பெற்றுவந்த மயங்கிசைக் சொச்சகக் கலிப்பா.

————————————————–

2-எனக்கே திருவரங்கனே பிரான் எம்மான்
தனக்கே அடிமை தமியேன் புனக்கேழ்
மருத்துளவோன் மேலன்றி மற்றொருவர் மேல் என்
கருத்துளவோ ஆராயுங்கால் –2-

(இ – ள்.) ஆராயுங்கால் – ஆராய்ந்துபார்க்குமளவில், – எனக்கு -,
திரு அரங்கனே – ஸ்ரீரங்கநாதனே,
பிரான் – தலைவன்;
எம்மான் தனக்கே – அவ்வெம்பெருமானுக்கே,
தமியேன் – தனியனாகிய யான்,
அடிமை – அடியவன்; (ஆகையால்),
என் கருத்து – எனது எண்ணம்,
புனம் – வனத்திலுள்ள,
கேழ் – ஒளியையும்,
மரு – வாசனையையுமுடைய,
துளவோன்மேல் அன்றி – திருத்துழாய் மாலையையுடைய அவ்வெம்பெருமான் மேலல்லாமல்
மற்றுஒருவர்மேல் – வேறொரு தேவர்மேல்,
உளவோ – உள்ளனவாமோ? (ஆகா வென்றபடி); (எ – று.)

எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள ஸ்வஸ்வாமிபாவ (எம்பெருமான் தலைவன்;
நாம் அவனது உடைமை என்ற) சம்பந்தத்தைத் தாம் நன்கு உணர்ந்ததனால் இனித் தேவதாந்தரங்கட்குத் தொண்டு
பூண்டொழுகேனென்று தாம் அந்யசேஷத்தினின்று தவிர்ந்தமையை இதனாற் கவி வெளியிடுகின்றனரென்க.

“கருத்து உளவோ” என்ற குறிப்பால், எனதுவாய் அவனையன்றிப் பிறரை வாழ்த்தாது என்றும்,
எனதுஉடல் அவனையன்றிப் பிறர்க்குப் பணி விடைசெய்யாது என்றுங் கூறியபடியாம்.
ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் உணர்ந்து தேவதாந்திர பஜனம் தவிர்ந்தேன் என்கிறார்

பிரான் – ப்ரபு; மான் – மஹான் ஏகாரங்கள் – தேற்றப்பொருளன.

இது, நாளென்னும்வாய்பாட்டான் முடிந்த இருவிகற்பநேரிசைவெண்பா.

——————————————————————-

3-கால் ஆயிரம் முடி ஆயிரம் ஆயிரம் கை பரப்பி
மேல் ஆயிரம் தலை நாகம் கவிப்ப விண் பூத்த கஞ்சம்
போல் ஆயிரம் கண் வளரும் பிரான் பொன்னரங்கன் என்றே
மாலாய் இரங்க வல்லார்க்கு எய்தலாம் திரு வைகுந்தமே –3-

(இ – ள்.) கால் ஆயிரம் – ஆயிரந் திருவடிகளையும்,
முடி ஆயிரம் – ஆயிரந் திருமுடிகளையும்,
ஆயிரம் கை – ஆயிரந் திருக்கைகளையும்,
பரப்பி – பரப்பிக்கொண்டு,
ஆயிரம் தலை நாகம் – ஆயிரந் தலைகளையுடைய திருவநந்தாழ்வான்,
மேல் கவிப்ப – மேலே கவிந்திருப்ப,
விண் பூத்த கஞ்சம்போல் – (கரிய) ஆகாயத்தே மலர்ந்த (செந்) தாமரை மலர்போல,
ஆயிரம் கண் வளரும் – ஆயிரந்திருக்கண்கள் அறிதுயில் செய்யப்பெற்ற,
பிரான் – எம்பெருமான்,
பொன் அரங்கன் – அழகிய அரங்கநாதன்,
என்று – என்று எண்ணி,
மால் ஆய் – அன்புடையர்களாய்,
இரங்க வல்லார்க்கு – நெஞ்சுருகவல்லவர்கட்கு,
திருவைகுந்தம் – வைகுண்டத்தை,
எய்தலாம் – (எளிதில்) அடையலாம்.

அபரிமித அத்புத மகா ஞானம் மகா சக்தி யுடையவன் -திவ்யாத்மா ஸ்வரூபம் சொல்லியபடி

திருவரங்கநாதனை அன்போடு தியானித்து உருகுபவர்க்கு முத்தி சித்திக்கு மென்பதாம்.
இங்கே ஆயிரமென்பது, அளவில்லாததென்னும் பொருளது; அங்ஙனங்கொள்ளாவிடின் காலாயிரம் முடியாயிரம் முதலியன சேராவாம்.
ஆகவே, அளவற்ற பாதம் முதலான சகல அங்கங்களையுமுடையவன் எம்பெருமான் என்பதாம்:
இதனால், அபரிமிதமாய் அற்புதமாயிருக்கிற மகா ஞானமும் மகாசக்தியுமுள்ளவன் எம்பெருமான் என்பது தேர்ந்தபொருள்;
இவ்வெம்பெருமான் சகலஇந்திரியங்களாலேயாதல், ஓரிந்திரியத்தாலேயாதல்,
ஒருவிஷயத்திற்குரிய இந்திரியத்தை மற்றொன்றற்கு மாற்றியாதல், திருமேனியாலேயாதல்,
திவ்வியாத்துமசுவரூபத்தாலேயாதல் எல்லாவற் றையும் எப்போதும் எல்லாவிதத்திலும் மேலாக
அறிகின்றவனுஞ் செய்கி ன்றவனுமா யிருக்கின்றா னென்பது, முக்கியமான கருத்து:

இங்ஙனமன்றி முள்ளம்பன்றி தேகமுழுவதிலும் முட்களாலே செறிந்திருப்பதுபோல அநேகந் திருவடிகள் திருமுடிகள் திருக்கைகள்
திருக்கண்கள் முதலான அவயவங்களாற் செறிந்து கோரரூபமுள்ளவனாயிருக்கின்றான் பகவானென்பது கருத்தன்று;
அளவில்லாத கண் முதலியவைகளையுடையவன் எப்படி அளவில்லாத காட்சி முதலானவற்றை யுடையவனாயிருப்பனோ
அப்படியே பகவானும் என்று எடுத்துக்காட்டியவாறாம்:
இங்குச் சிலர், உலகமெல்லாம் பகவானுடைய சொரூபமாதலாலே உலகத்திலுள்ளோருடைய சிரம் கண் முதலானவையெல்லாம்
அவனுடையவையா மெனக் கருத்துக் கூறுவர்; அது பலவிதத்திலும் பொருந்தாதென அறிக. இது, திவ்வியாத்துமசுவரூபங் கூறியபடி.

நாக மென்னுஞ் சொல்லுக்கு – நகத்தி லுள்ளதென்று பொருள்; நகம் – மலை, அல்லது சந்தன மரம்:
இச்சொல்லுக்கு நடவாததென்று பொருள். விண் – ஆகுபெயராய் மேகமென்றுமாம். கஞ்சம் – நீரில் முளைப்பது.
விண்பூத்த கஞ்சம் – இல்பொருளுவமை. “அரங்கம்” என்றும் பாடம். இரங்க வல்லாரென்பது, அங்ஙனம் இரங்குதலின் அருமை விளக்கிநின்றது.

இது, நேரசை முதலாகிய கட்டளைக்கலித்துறை.

————————————————————

4- வை கலந்த மூவிலை மேல் ஈசற்கும் வாசவற்கும் வாசப் பூ மேல்
மெய் கலந்த நால் வேத விரிஞ்சனுக்கும் மேலா வீற்று இருப்பர் மாதோ
பை கலந்த பாம்பணை மேல் திருவரங்கப் பெரு நகருள் பள்ளி கொள்ளும்
கை கலந்த நேமியான் திரு நாமத்து ஒரு நாமம் கற்றார் தாமே –4-

திரு அரங்கப் பெரு நகருள் – திருவரங்கம் பெரியகோயிலில்,
பை கலந்த – படம் பொருந்திய,
பாம்பு அணைமேல்- சேஷசயனத்தின் மீது,
பள்ளி கொள்ளும் – பள்ளிகொண்டருளுகின்ற,
கை கலந்த நேமியான் – கையிற் பொருந்திய திருவாழியையுடைய எம்பெருமானது,
திரு நாமத்து – (ஆயிரந்) திருநாமங்களுள்,
ஒரு நாமம் – ஒரு திருநாமத்தை,
கற்றார் – உச்சரித்தவர்கள், –
வை கலந்த – கூர்மை பொருந்திய,
மூ இலை – மூன்று இலைவடிவமான தலையையுடைய,
வேல் – சூலாயுதத்தையுடைய,
ஈசற்கும் – பரமசிவனுக்கும்,
வாசவற்கும் – தேவேந்திரனுக்கும்,
வாசம் – பூமேல் – வாசனையையுடைய தாமரைமலரில் தோன்றிய,
மெய் கலந்த – உண்மை பொருந்திய,
நால் வேதம் – நான்கு வேதங்களையுமுடைய,
விரிஞ்சனுக்கும் – பிரமதேவனுக்கும்,
மேல்ஆ – மேன்மையாக,
வீற்றிருப்பர் – (பரமபதத்தில்) மகிழ்ந்திருப்பார்கள்; (எ – று.)

எம்பெருமானது திருநாமத்தின் மகிமை கூறியவாறு. எம்பெருமானது திருநாமத்தைக் கற்றார்க்கு நித்தியவிபூதியாகிய
பரமபதங் கிடைத்தல் திண்ணமாதலால், லீலாவிபூதிக்கு ளடங்கிய ஈசன் முதலானார்க்கும் உயர்ந்த பதவியில் வீற்றிருப்பர் அன்னாரென்க.
பள்ளிகொள்ளுதல் – யோக நித்திரை செய்தல். மூவிலைவேல் – முத்தலைச்சூலம்.
கைகலந்த நேமியான் – “கைகலந்தவாழியான்” என்பர் நம்மாழ்வார்.
கைகலந்தநேமி – “திருக்கையிலே வேர்விழுந்த திருவாழி”
மெய்கலந்த நால் வேதம் – யாவர்க்கும் சிறந்த பிரமாணமான நூல் என்றபடி.

இது, முதல் நான்குங் காய்ச்சீரும், மற்றவை மாச்சீருமாகிய அறுசீராசிரியவிருத்தம்.

—————————————————————

5- கற்றார் எனினும் பதினாலு உலகும் கண்டார் எனினும் தண்டாமிகு பற்று
அற்றார் எனினும் திருமால் அடியார் அல்லாதவர் வீடில்லாதவரே
பொற்றாமரையாள் கணவன் துயிலும் பொற் கோயிலையே புகழ்வார் பணிவார்
மாற்றார் எனினும் பெற்றார் அவரே வானோர் திரு மா மணி மண்டபமே –5-

(இ – ள்.) கற்றார் எனினும் – (கற்றற்கு உரிய நூல்களையெல்லாங்) கற்றவர்களேயாயினும்,
பதினாலு உலகும் – பதினான்கு லோகங்களையும்,
கண்டார் எனினும் – கண்டவர்களேயாயினும்,
தண்டா – நீங்குதலரிய,
மிகு பற்று – மிகுந்த (இருவகைப்) பற்றுக்களும்,
அற்றார் எனினும் – நீங்கியவர்களே யாயினும்,
திரு மால் அடியார் அல்லாதவர் – எம்பெருமானது அடியவர்க ளல்லாதவர்கள்,
வீடு இல்லாதவரே – மோக்ஷமில்லாதவர்களே யாவர்;
பொன் தாமரையாள் கணவன் – பொற்றாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகளது கணவனாகிய அவ்வெம்பெருமான்,
துயிலும் – பள்ளிகொண்டருளுகின்ற,
பொன் கோயிலையே – அழகிய திருவரங்கத்தையே,
புகழ்வார் பணிவார் – துதித்து வணங்குபவர்கள்,
மற்றார் எனினும் – மற்றவர்களே யாயினும் (கீழ்க்கூறிய கற்றல் காணுதல் அறுதல்முதலிய குணங்கள் இல்லாதவ ரேயாயினும்) அவரே -,
வானோர் – நித்தியசூரிக ளுறையுமிடமான,
திருமா மணி மண்டபம் – முத்திமண்டபத்தை,
பெற்றார் – அடைந்தவராவர். (எ – று.)

மிதுனமே பிராப்யம் –

நூல்களைக்கற்றல் முதலிய சிறப்புக்களையுடையராயினும் திருமாலுக்கு அடிமைப்படாதார் முத்தியடையார்;
அவையில்லாதவராயினும் திருவரங்கம் பெரியகோயிலைப் புகழ்தல் பணிதல் செய்தவரே முத்தியடைவ ரென்பதாம்.
திருமால் – திருமகளையுடைய மால்: ஸ்ரீய:பதி; மால் – விஷ்ணு;
அன்றிக்கே, திருமகளிடத்தே மால் (வேட்கை) கொண்டவன்.
“திருமால்” என்றது, புருஷகார பூதையாகிய பெரியபிராட்டியோடு கூடிய சேர்த்தியே உத்தேச்ய மென்றவாறு;
“இஷ்டா நிஷ்டப்ராப்தி பரிஹாரங்கள் இரண்டும் பண்ணுவான் ஈஸ்வரனே யாயிருக்க,
பெரியபிராட்டியாராலே இவனுக்குப் பேறாகையாகிறது – இவனுடைய அபராதத்தைப் பாராதே ரக்ஷிக்கும்படி
இவள் புருஷகாரமானாலொழிய ஈஸ்வரன் இவன்காரியஞ் செய்யான் என்றபடி”,
“இவள் ஸந்நிதியாலே காகம் தலைபெற்றது, அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான்” என்னும்
ஆன்றோர் வாக்கியங்கள் நோக்கத்தக்கன.

இருவகைப்பற்று – தானல்லாத உடம்பை யானென்றுந் தன்னோடியை பில்லாத பொருளை எனதென்றுங் கருதுகின்ற
அகங்கார மமகாரங்கள். அவை அறுதல் – ஆசிரியர்பாற் பெற்ற உறுதிமொழிகளானும், யோகப்பயி ற்சியானும்.
பதினாலுலகம் – கீழேழு மேலேழு ஆக உலகம் பதினான்கு.
பதினான்கு உலகங்களையுங் காணுதல் – தாம் இருந்த விடத்தி லிருந்தே யோகப் பயிற்சியினாலுண்டான அறிவு விசேடத்தால் அறிதல்;
அன்றி, அணிமா முதலிய சித்திமகிமையால் தாம் நினைத்தவிடங்களிற் சென்று அறிதல் என்க.
திருமாமணி மண்டபம் – “நாநாரத்நங்களாலே சமைந்த ஸ்தலங்களை யுடைத்தாய், அநேகமாயிரம் ரத்நஸ்தம்பங்களாலே அலங்க்ருதமாய்,
உபயவிபூதியி லுள்ளாரும் ஒருமூலையிலே அடங்கும்படி இடமுடைத்தாய்” ஸ்ரீவைகுண்ட நாட்டிலேயுள்ளது
மற்று ஆர் என்றும் பிரிக்கலாம். பெற்றார் – காலவழுவமைதி;
தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாய்ச் சொல்லப்பட்டது; நிச்சயமாகப் பெறுவரென்க.

இது, எல்லாச் சீர்களும் மாச்சீர்களாகிய எண்சீராசிரிய விருத்தம்.

———————————-

6-மண் தலமும் விண் தலமும் நின் வட குன்றமும் வளைந்த மலையும் கடலும் மூ
தண்டமும் அகண்டமும் அயின்றவர் துயின்றருள் அரும்பதி விரும்பி வினவின்
கொண்டல் குமுறும் குடகு இழிந்து மதகு உந்தி அகில் கொண்டு நுரை மண்டி வருநீர்
தெண் திரை தொறும் தரளமும் கனகமும் சிதறு தென் திரு அரங்க நகரே –6-

(இ – ள்.) மண் தலமும் – மண்ணுலகத்தையும்,
விண் தலமும் – விண் ணுலகத்தையும்,
நின்ற – (மண்ணுலகத்தினிடையே) நின்ற,
வடகுன்றமும் – மகாமேருமலையையும்,
வளைந்த மலையும் – (அதனைச்) சூழ்ந்துநின்ற மற்றை மலைகளையும்,
கடலும் – கடல்களையும்,
முது அண்டமும் – (இவையெல்லா வற்றையுந் தன்னுள் அடக்கிய) பழைய அண்டங்களையும்,
அகண்டமும் (அவற்றிலுள்ள சரசசரங்கள் எல்லாவற்றையும்,
அயின்றவர் – (பிரளயகாலத்தில்) அமுது செய்தருளிய எம்பெருமான்,
துயின்றருள் – பள்ளிகொண்டருளுகின்ற,
அரு பதி – அடைதற்கரிய திவ்வியதேசம் (எதுவென்றுஅறிய),
விரும்பி – வினவின் – கேட்டால், –
கொண்டல் குமுறும் – மேகங்கள் படிந்து முழங்கப் பெற்ற,
குடகு – குடகுமலையினின்று,
இழிந்து – பெருகி,
மதகு – நீர் மதகுகளை
உந்தி – தள்ளிக்கொண்டு,
அகில் கொண்டு – அகிற்கட்டைகளை வாரிக் கொண்டு
நுரை மண்டி – நுரைமிகுந்து,
வரும் – வருகின்ற,
நீர் – காவேரிநீரானது,
தென்திரை தொறும் – தெளிந்த அலைகள்தோறும்,
தரளமும் – முத்துக்களையும்
கனகமும் – பொன்னையும்,
சிதறு – சிந்துகின்ற,
தென் திருஅரங்கம் நகரே – அழகிய ஸ்ரீரங்கமென்னும் நகரமே யாகும்; (எ – று.)

வளைந்த மலை – பூமியைக் கோட்டைபோலச் சூழ்ந்துநின்ற சக்கரவாள கிரி யென்றும்,
கடல் – பெரும்புறக்கடலென்றுங் கொள்ளலாம்.
கொண்டல் – நீர்கொண்ட காளமேகம். குடகு – ஸஹ்யகிரி.
அகில் – மற்றைமலைப் பொருள்களுக்கும் உபலக்ஷணம். இதில் ப்ராஸ மென்னுஞ் சொல்லணி காண்க.

இது, முதலைந்துங் கூவிளங்காய்ச்சீர்களும்,
ஆறாவது தேமாச்சீரும் ஏழாவது புளிமாச்சீருமாகிய எழுசீராசிரியச்சந்தவிருத்தம்.
தந்ததன ததன தந்ததன தந்ததன தந்ததன தந்த தனன எனச் சந்தக்குழிப்பு காண்க.

——————————————————-

புயவகுப்பு-

(முதலடி)

7-நகு கதிர் வழங்கு தகடு படு செம்பொன் நவ மணி குயின்ற தொடி அணி அணிந்து
ககனவில் இடு நீல வெற்பு ஒத்து இருந்தன -நறிய புது மன்றல் திசை முழுதும் மண்ட
நறவு குதி கொண்ட துளவு அணி அலங்கல் மதுகரம் ஒரு கோடி சுற்றப் புனைந்தன
நளின மட மங்கை குவலைய மடந்தை சனகனது அணங்கு பொதுவர்மகள் என்றிவ்
வனிதையர் தனபாரம் மொத்தக் குழைந்தன நதிபதி சுழன்று கதறி நுரை சிந்த
அரவு அகடு உறிஞ்சி அலற அலமந்து வடவரை உடல் தேய நட்டுக் கடைந்தன –

(இ – ள்.) நகு கதிர் வழங்கு – விளங்குகின்ற ஒளியை வீசுகின்ற,
செம் பொன் படு தகடு – செம்பொன்மயமான தகட்டினாற் (செய்யப்பட்டு),
நவமணி குயின்ற – நவரத்தினங்களும் இழைத்துள்ள,
தொடி அணி – தொடியென்னும் ஆபரணத்தை,
அணிந்து – தரித்து,
ககனம் வில் இடும் – ஆகாயத்தே தோன்றுகின்ற இந்திரவில் இடப்பட்ட,
நீல வெற்பு – கரியமலைகளை, ஒத்து இருந்தன-;
நறிய புது மன்றல் – நல்ல புதிய வாசனையானது,
திரை முழுதும் – திக்குக்களிலெல்லாம்,
அண்ட – சேர்ந்து பரவும்படி,
நறவு குதி கொண்ட – தேன்பெருகுதலைத் தன்னிடத்தே கொண்ட,
துளவு – திருத் துழாயினாலாகிய,
அணி அலங்கல் – அழகிய மாலையை,
ஒரு கோடி மதுகரம் கற்ற – ஒருகோடி (மிகப்பல) வண்டுகள் சூழ்ந்து மொய்க்கும்படி,
புனைந்தன – சூடின;
நளினம் மட மங்கை – தாமரைமலரில் வீற்றிருக்கின்ற அழகிய பெரிய பிராட்டியும்,
குவலயம் மடந்தை – பூமிப்பிராட்டியும்,
சனகனது அணங்கு – ஜாநகிப்பிராட்டியும்,
பொதுவர்மகள் – நப்பின்னைப்பிராட்டியும்,
என்ற – என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற,
இ வனிதையர் – இந்தத்தேவியரது,
தனபாரம் – பருத்த கொங்கைகள்,
மொத்த – (தம்மேல்) நெருக்குதலால்,
குழைந்தன – நெகிழ்ந்தன;
நதி பதி – திருப்பாற்கடலானது,
சுழன்று – சுழற்சியடைந்து,
கதறி – பேரொலிசெய்து,
நுரை சிந்த – நுரைகளைச் சிந்தவும், –
அரவு – வாசுகியானது,
அகடு உரிஞ்சி – உடல் தேய்ந்து,
அலற – கசறவும், –
வட வரை – மந்தரமலை,
அல மந்து – வருந்தி,
உடல் தேய – உடம்பு தேய்வடையவும்,
நட்டு – (அம்மலையை மத்தாக) நாட்டி, கடைந்தன-;

—–

இரண்டாம் அடி

இகலி இரு குன்றில் இரு சுடர் எழுந்து பொருவது எனவிம்ப மதி முகம் இலங்க
இரு குழை இருபாடு அலைப்பச் சிறந்தன இணை அற நிமிர்ந்து வலியொடு திரண்டு
புகழொடு பரந்த புழுகொடும் அளைந்து கலவையின் அணி சேறு துற்றுக் கமழ்ந்தன
யெதிர் ஒருவர் இன்றி அகில உலகும் தன் அடி தொழ இருந்த இரணியன் மடங்க
முரணிய வரை மார்பம் ஒற்றிப் பிளந்தன எறிகடல் கலங்கி முறையிட வெகுண்டு
நிசிசரர் இலங்கை அரசொடு மலங்க ஒரு சிலை இரு கால் வளைத்துச் சிவந்தன –

இரு சுடர் – சந்திர சூரியர்கள்,
இகலி – தம்முள்ளே மாறுபட்டு,
இரு குன்றில் – இரண்டு மலைகளில்,
எழுந்து – தோன்றி,
பொருவது என – போர்செய்வது போல,
விம்பம் மதி முகம் இலங்கும் – சந்திர பிம்பம் போன்ற முகத்தின் இருபக்கங்களிலும் விளங்குகின்ற,
இரு குழை – இரண்டு குண்டலங்களும்,
இரு பாடு அலைப்ப – இரண்டுபக்கங்களில் அசையும்படி, சிறந்தன -;
இணை அற – (தனக்குத் தானேயன்றி வேறு) ஒப்பில்லாமல்,
நிமிர்ந்து – உயர்ந்து,
வலியொடு – வலிமையுடனே,
திரண்டு – திரட்சிபெற்று,
புகழொடு – கீர்த்தியுடனே,
பரந்து – பரவி,
புழுகொடும் – புழுகுடனே,
அளைந்து – கலந்து,
கலவையின் அணி சேறு துற்று – அழகிய கலவைச்சந்தனச் சேறு மிகுதியாகப் பூசப்பெற்று,
கமழ்ந்தன – நறுமணம் வீசின;
எதிர் ஒருவர் இன்றி – (தனக்கு) ஒருவரும் எதிரில்லாமல்,
அகில உலகும் – எல்லா வுலகங்களும்,
தன் அடி தொழ – தனது பாதங்களையே வணங்கும்படி,
இருந்த – இறுமாந்திருந்த,
இரணியன் – இரணியாசுரன்,
மடங்க – அழியும்படி,
முரணிய வரை மார்பம் – (அவனது) வலிய மலைபோலும் மார்பை,
ஒற்றி பிளந்தன – (நகங்களினால்) இடந்து கீண்டன;
எறி கடல் – அலையெறிகின்ற கடல், கலங்கி -,
முறை யிட – முறையிடவும், –
நிசிசரர் – இராக்கதர்கள்,
இலங்கை அரசொடு – இலங்கைக்குத்தலைவனாகிய இராவணனுடனே,
மலங்க – கலங்கவும்,
வெகுண்டு – கோபித்து,
ஒரு சிலை – ஒப்பற்ற கோதண்டத்தை,
இரு கால் – இரண்டு தரம்,
வளைத்து -, சிவந்தன -;

——–

மூன்றாம் அடி

மிகு களவின் நின்ற விளைவு கனி சிந்தி மடிய விடுகன்று குணில் என எறிந்து
பறைவையின் அகல்வாய் கிழித்துப் பகிர்ந்தன வெறிபடு குருந்தை முறிபட அடர்ந்து
குட நடம் மகிழ்ந்து குரவைகள் பிணைந்து பொரு தொழில் எருது ஏழு செற்றுத் தணிந்தன
வெடிபட முழங்கி எழு முகிலும் அண்ட ரொடு நிரை தியங்க எறி திவலை கண்டு
தடவரை குடையா எடுத்துச் சுமந்தன விழி வடவை பொங்க எதிர் பொர நடந்த
களிறு உளம் வெகுண்டு பிளிறிட முனிந்து புகர் முக இரு கோடு பற்றிப் பிடுங்கின –

மிகு களவின் – மிக்கவஞ்சனையுடனே,
நின்ற – (தன்னைக்) கொல்லும்படி நின்ற,
விளவு – விளாமரமானது,
கனி சிந்தி – (தனது) பழங்களைச் சிதறி,
மடிய – மடிந்துவிழும்படி,
விடு கன்று – (கம்சனால்) ஏவப்பட்ட மாயக் கன்றை,
குணில் என – குறுந்தடியாகக் கொண்டு,
எறிந்து – (அதன்மேல்) வீசி,
பறவையின் – பகாசுரனது,
அகல் வாய் – அகன்ற வாயை,
கிழித்து பகிர்ந்தன – (இரண்டு படும்படி) கிழித்துப் பிளந்தன;
வெறி படு குருந்தை – வாசனைவீசுகின்ற (மலர்களையுடைய) குருந்தமரத்தை,
முறி பட – முறிந்துவிழும்படி,
அடர்ந்து – அழித்து,
குடநடம் மகிழ்ந்து – மனமகிழ்ந்து குடக் கூத்தாடி, –
குரவைகள் பிணைந்து – குரவைக் கூத்தாடி, –
பொரு தொழில் – போர்செய்கின்ற தொழிலையுடைய,
எருது ஏழு – ஏழெருதுகளை,
செற்று – தழுவி யழித்து,
தணிந்தன – சினந் தணிந்தன;
எழு முகிலும் – ஏழுமேகங்களும்,
வெடிபட – பேரொலியுண்டாக,
முழங்கி – இடித்து,
நிரை அண்டரொடு தியங்க – பசுக்களும் (அவற்றைக் காக்கின்ற) இடையர்களுந் திகைக்கும்படி,
எறி – வீசிப்பெய்த,
திவலை – நீர்த்துளிகளை, கண்டு -,
தடவரை – பெரிய கோவர்த்தனகிரியை,
குடை ஆ – கொற்றக் குடையாக, எடுத்து -,
சுமந்தன – தரித்தன;
விழி – கண்களில்,
வடவை பொங்க – படபாமுகாக்கினிபோலுந் தீப்பொறி பறக்கும்படி,
எதிர் – எதிரில்,
பொர நடந்த – (தன்னோடு) பொருதற்கு வந்த,
களிறு – (குவலயாபீட மென்னும் கம்சனது) பட்டத்துயானை,
உளம் வெகுண்டு – மனங் கோபித்து,
பிளிறிட – பேரொலி செய்ய,
முனிந்து – கோபித்து,
புகர் முகம் இரு கோடு – செம்புள்ளிகளையுடைய (அதனது) முகத்தின் கண்ணேயுள்ள இரண்டுதந்தங்களையும்,
பற்றி பிடுங்கின – பிடித்துப் பறித்தன;

—-

நான்காம் அடி

அகலிடமும் உம்பர் உலகமும் நடுங்கி அபயம் அடியெங்கள் அபயம் என வந்து
விழு தொறும் இடையூறு அகற்றிப் புரந்தன அருகுற விளங்கும் எறிதிகிரி சங்கம்
வெயில் ஒரு மருங்கும் நிலவு ஒரு மருங்கும் எதிர் எதிர் கதிர் வீச விட்டுப் பொலிந்தன
அரு மறை துணிந்த பொருள் முடிவை இன் சொல் அமுது ஒழுகு கின்ற தமிழினில் விளம்பி
அருளிய சடகோபர் சொல் பெற்று உயர்ந்தன அரவணை விரும்பி அறி துயில் அமர்ந்த
அணி திரு அரங்கர் மணி திகழ் முகுந்தர் அழகிய மணவாளர் கொற்றப் புயங்களே —7-

அகல் இடமும் – அகன்ற நிலவுலகத்தவரும்,
உம்பர் உலகமும் – தேவலோகத்தவரும்,
நடுங்கி – பயந்து,
“அடியெங்கள் – அடியவராகிய யாங்கள்,
அபயம் அபயம் – அடைக்கலம் அடைக்கலம்”,
என – என்று சொல்லி,
வந்து விழுதொறும் – வந்து விழுந்து வணங்கும்பொழுதெல்லாம்,
இடையூறு அகற்றி – (அவர்களது) துன்பத்தைப் போக்கி,
புரந்தன – (அவர்களைப்) பாதுகாத்தன;
அருகு உற விளங்கும் – (இரண்டு) பக்கங்களிலும் மிக்கு விளங்குகின்ற,
எறி திகிரி சங்கம் – (பகைவர்மீது) வீசியெறியப்படுகின்ற சக்கரமுஞ் சங்கமும்,
வெயில் ஒரு மருங்கும் – வெயில் ஒரு பக்கத்திலும்,
நிலவு ஒரு மருங்கும் – நிலவு ஒருபக்கத்திலுமாக,
எதிர் எதிர் – எதிருக்கெதிரே,
கதிர் வீச – ஒளியை வீசும்படி,
விட்டு பொலிந்தன – ஒளிவிட்டு விளங்கின;
அரு மறை – அறிதற்கரிய வடமொழி வேதங்களில்,
துணிந்த – நிச்சயித்துச் சொல்லப்பட்ட,
பொருள் முடிவை – தத்துவார்த்தங்களின் சித்தாந்தத்தை,
இன் சொல் – இனிய சொற்களையுடைய,
அமுது ஒழுகுகின்ற – அமிருதம்போன்ற இனிமை மிக்க,
தமிழினில் – செந்தமிழ்ப்பாஷையில் விளம்பி அருளிய – திருவாய்மலர்ந்தருளிய,
சடகோபர் – நம்மாழ்வாரது,
சொல் – பாசுரங்களை,
பெற்று -, உயர்ந்தன -; (எவையென்றால்), –
அர அணை – ஆதிசேஷசயனத்தில், விரும்பி -,
அறிதுயில் அமர்ந்த – யோகநித்திரை செய்தருளுகின்ற,
அணி திரு அரங்கர் – அழகிய ஸ்ரீரங்கநாதரும்,
மணி திகழ் முகுந்தர் – நீலமணிபோலவிளங்குகின்ற முகுந்தனென்னுந் திருநாமமுடையவருமாகிய,
அழகியமணவாளர் – அழகிய மணவாளரது,
கொற்றம் புயங்கள் – வெற்றியையுடைய திருத்தோள்களாம். (எ – று.)

பிரபந்தத்தலைவனது தோள்களைப் பலபடியாக வருணித்துக் கூறுதல், புயவகுப்பாம்.

தொடி – தோள்வளை.
பலநிறமுடைய இந்திர தனுசு – பன்னிறமணிகள் பதித்த தொடியணிக்கும்,
நீலவெற்பு – கரியபெரியதிருத்தோள்களுக்கும் உவமை.
நீல வெற்பு – இந்திரநீலரத்தினமயமான மலை யென்றுமாம்.
அலங்கல் – தொங்குவது; தொங்கியசையும் மார்பின்மாலைக்குத் தொழிலாகு பெயர்.
மதுகரம் – தேனைச்சேர்ப்பது.
குவலயம் – பூமண்டலம்.
சனகனது அணங்கு – ஜநகராஜன் வளர்த்த மகள்.
பொதுவர் மகள் – ஆயர் மகள். பொதுவர் – குறிஞ்சிநிலத்துக்கும் மருதநிலத்துக்கும் நடுவிடமான முல்லைநிலத்தில் உள்ளவர்;
“இடையர்” என்னும் பெயர்க்குங் காரணம் இதுவே.
நதிபதி – நதிகளுக்குத் தலைவன். அகடு – நடுவுடல்.
மந்தரம் எங் குள்ளதென்றால், வடக்கிலுள்ளதென வேண்டுதலின், அதனை “வடவரை” என்றார்.

இரண்டுகாதுகளிலும் அணிந்துள்ள குண்டலங்கட்கு – இரண்டுமலைக ளின்மீது ஏககாலத்தில் எழுந்து போர்செய்யும்
சூரியசந்திரரை உவமை கூறியது. இல்பொருளுவமை.
புழுகு – கஸ்தூரி; புனுகுமாம். கலவை – பலவகை வாசனைப்பண்டங்களுங் கலந்த சந்தனம்.
எதிர் – ஒப்பும், பகை மையும். இரணியன் – ஹிரண்யன்; பொன்னிறமானவன்,
இராமபிரான் வாநரசேனையோடு செல்லுகையில் கடலிற் செல்லும்படி வருணன் வழி விடாமையால் கடலை
ஆக்நேயாஸ்திரத்தினால் வற்றச்செய்து விடுவதாகச் சினந்து வில்வளைத்தமையும்,
பிறகு இலங்கையிற் சென்று இராவணனை வம்சநாசமாம்படி கொல்வதற்காக வில்வளைத்தமையும் பற்றி,
“எறிகடல் கலங்கி முறையிட நிசிசரர் இலங்கையரசொடுமலங்க ஒருசிலை இருகால் வளைத்துச் சிவந்தன” என்றார்.
இனி, ஒருசிலை இருகால் வளைத்து – ஒப்பற்ற தமது கோதண்டத்தை இரண்டு கோடியையும்
ஒன்றுசேரும்படி நன்றாக வளைத்து எனினுமாம்.
நிசிசரர் – இரவிற் சஞ்சரிப்பவ ரென இராக்கதர்க்குக் காரணக்குறி.
இலங்கையரசு – லங்காராஜன். சிலை – கோ தண்டம். “ஏற்றிப்பிளந்தன” என்றும் பாடம்.

குடநடம் – குடமெடுத்தாடுங் கூத்து; இது, பிராமணர் ஐசுவரியம் விஞ்சினால் யாகாதிகள் பண்ணுமாறுபோல
இடையர்க்கு ஐசுவரியம் மிகுந்தால் செருக்குக்குப் போக்குவிட்டாடுவதொரு கூத்து;
அதாவது – தலையிலே அடுக்குக்குடங்களிருக்க, இரண்டு தோள்களிலும் குடங்களிருக்க,
இரண்டு கைகளிலும் குடங்களை யேந்தி ஆகாயத்தில் ஏறிடுவதும் ஏற்பதுமாய் ஆடுவதொரு கூத்தாகும்.
குரவை – கைகோத்தாடுவது; “குரவைக் கூத்தே கை கோத்தாடல்” என்பது, திவாகரம்;
இதற்கு வடமொழியில் “ராஸம்” என்று பெயர்: பல நாட்டியப்பெண்கள் வட்டமாக நின்று சித்திரமான தாளலயங்களுடன்
மெதுவாகவும் உன்னதமாகவுங் கூத்தாடுதல்,
இதன் இலக்கணம். “குரவை யென்பது – காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும்
எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது;
“குரவையென்பது கூறுங்காலைச், செய்தோர் செய்த காமமும் விறலு, மெய்தக்கூறு மியல்பிற் றென்ப” எனவும்,
“குரவையென்ப தெழுவர்மங்கையர், செந்நிலைமண்டலக் கடகக்கைகோத்து,
அந்நிலைகொட்ப நின்றாடலாகும்” எனவும் சொன்னாராதலின்” என்பது – சிலப்பதிக்காரத்து அடியார்க்கு நல்லாருரை.
எழுமுகில் – சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம் என்பன,
வடவை யென்பது – கடலிடத்துள்ள படபையென்னும் பெண்குதிரையின் முகத்தில் தோன்றி மழை
முதலியவற்றால் மிக்குவரும் நீரை வற்றச்செய்வதொரு தீ. களிறு – ஆண்யானை; “வேழக் குரித்தே விதந்து களிறென்றல். ”

அபயம் – அஞ்சவேண்டாவென்று சொல்லிக் காக்கத்தக்க பொருள்; அச்சத்தால் இருமுறை அடுக்கிற்று,
நடுங்குதற்குக் காரணம் – அரக்கர் அசுரர் முதலிய பகைவர்கள் செய்யுந் துன்பங்களும், பிறவித்துன்பங்களும்,
திகிரி சங்க மென்றதற் கேற்ப, வெயிலையும் நிலவையும் முறையே கூறியது, முறைநிரனிறையணி.
திகிரி வெயிலையும் சங்கம் நிலவையும் எதிரெதிராக வீசுமென்க.
மணிதிகழ் – கௌஸ்துபமணி விளங்குகின்ற வென்றுமாம்.
முகுந்தர் – (தமது அடியார்க்கு) முத்தியின்பத்தையும், இவ்வுலக வின்பத்தையுங் கொடுப்பவர்.

இது, ஒன்று மூன்று ஐந்து ஏழு ஒன்பது பன்னிரண்டாஞ் சீர்கள் கருவிளச்சீர்களும்,
இரண்டு நான்கு ஆறு எட்டாஞ் சீர்கள் புளிமாச்சீர்களும், பத்தாஞ்சீர் புளிமாங்காய்ச்சீரும், பதினோராஞ்சீர் தேமாச்சீருமாக வந்தது

காலடியாகவும், அஃது நான்குபெற்றது ஓர் அடியாகவும் வந்த கழிநெடிலடி
நான்கு கொண்ட நாற்பத்தெண்சீராசிரியவண்ணவிருத்தம்.

“தனதன தனந்த தனதன தனந்த தனதன தனந்த தனதன தனந்த தனதன தனதான தத்தத் தனந்த” என்பது சந்தக்குழிப்பாம்.

குற்றெழுத்து மிக்குப்பயிலுதலால், இது – குறுஞ்சீர்வண்ணமாம்; “குறுஞ்சீர்வண்ணம் குற்றெழுத்துப்பயிலும்” என்றது காண்க.

—————————————————-

8-புயம் நான்கு உடையானை பொன் அரங்கத் தானை
அயன் ஆம் திரு உந்தி யானை வியன் ஆம்
பரகதிக்குக் காதலாய்ப் பாடினேன் கண்டீர்
நரகதிக்குக் காணாமல் நான் -8-

(இ – ள்.) புயம் நான்கு உடையானை – நான்கு திருக்கைகளை யுடையவனும்,
அயன் ஆம் திரு உந்தியானை – பிரமதேவன்தோன்றிய அழகிய நாபியையுடையவனுமாகிய,
பொன் அரங்கத்தானை – அழகிய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனை-,
வியன் ஆம் – பெருமை பொருந்திய,
பர கதிக்கு – பரமபதத்தை அடைவதற்கு,
காதல் ஆய் – விருப்பங்கொண்டு,
நரக திக்கு காணாமல் – நரகத்தின் திசையையுங் காணவொண்ணாதபடி, நான்-,
பாடினேன் – பாடல்பாடித் துதித்தேன்; (எ – று.)

யான் பாடல் பாடித் துதித்ததனால், நரகத்தையடையாமல் பரமபதஞ் சேர்வே னென்பது திண்ண மென்றவாறு.
அயன் – அஜன்; திருமாலி னிடத்தினின்று தோன்றியவன்; (அ – திருமால்.)
பரகதி – மற்றெல்லாப் பதவிகளினும் உயர்ந்த பதவி. கண்டீர் – அசை; தேற்றப்பொருளதாகவுமாம்.
திக்கு – பக்கம். பின்னிரண்டடிகளில் முதலெழுத்து மாத்திரம் வேறுபட்டு இரண்டு மூன்று முதலிய
சில எழுத்துக்கள் ஒன்றுபட்டு நிற்கப் பொருள் வேறுபட்டு வந்தது, திரிபு என்னுஞ் சொல்லணியாம்.

இது, முற்கூறியது போன்ற இருவிகற்பநேரிசைவெண்பா.

—————————-

9-நான் அந்த வைகுந்த நாடு எய்தி வாழில் என் ஞாலத்து இன்றி
ஈனம் தவாத நிரயத்து வீழில் என் யான் அடைந்தேன்
கோன் நந்தன் மைந்தனை நான்முகன் தந்தையை கோயில் அச்சு
தானந்தனை எனக்கு ஆரா அமுதை அரங்கனையே –9-

(இ – ள்.) கோன் நந்தம் மைந்தனை – (இடையர்) தலைவராகிய நந்தகோபரது திருமகனும்,
நான்முகன் தந்தையை – பிரமதேவனது தாதையும்,
கோயில் – திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற,
அச்சுத அனந்தனை – அச்யுதன் அநந்தன் என்னுந் திருநாமங்களை யுடையவனும்,
எனக்கு -,
ஆரா அமுதை – தெவிட்டாத அமிருதம் போன்றவனுமாகிய,
அரங்கனை -,
யான் அடைந்தேன் – யான் வேறு புகலிடமின்றித் தஞ்சமாக அடைந்தேன்;
(இனி), நான் -, அந்த வைகுந்தநாடு – அந்த ஸ்ரீவைகுண்ட லோகத்தை,
எய்தி – அடைந்து,
வாழில் – வாழ்ந்துபேரின்பமடைந்தால்,
என் – என்ன?
ஞாலத்து அன்றி – இவ்வுலகத்திலே யல்லாமல்,
ஈனம் தவாத – இழிவு நீங்காத (மிக்க இழிவுடைய),
நிரயத்து – நரகலோகத்தில்,
வீழில் – விழுந்து பெருந்துன்பமடைந்தால்,
என் – என்ன? (எ – று.)

தேவாதிதேவனான சருவேசுவரனைச் சரணமடைந்தேன்; இனி எனக்குப் பேராநந்தமுடைய முத்திப்பேறு கிடைத்தா லென்ன?
எல்லையில்லாத பெருந்துன்பமுடைய தீக்கதிகள்பலவும் வந்து தப்பவொண்ணாதபடி வளைத்துக்கொண்டா லென்ன?
இவற்றை ஒன்றாக நினைப்பேனோ வென்று தமது மனவுறுதியை எடுத்துக்கூறியவாறு.

அந்த – சுட்டு, உலகறிபொருளின் மேலது. ஈனந் தவாத நிரய மெனவே, பலவகை யிழிவும் நிறைந்த நரக மென்றபடி.
அச்சுதன் – வடசொற்றிரிபு, அச்யுதனென்பதற்கு – அழிவில்லாதவனென்றும் தன்னைச் சரணமாகப் பற்றினவரை
நழுவ விடாமற் காப்பவனென்றும் அநந்தனென்பதற்கு – திருக்கல்யாணகுணங்களுக்கு ஓர்எல்லையில்லாதவ னென்றும்,
அழிவில்லா தவனென்றும் பொருள். அச்சுதாநந்தன் – வடமொழிப்புணர்ச்சி, தீர்க்கசந்தி.
ஆராமை – மிக நுகர்ந்தவளவிலும் வெறுப்புத்தாராது இன்னும் வேண்டும் படியாயிருத்தல்.

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த துன்பம் தரு நிரயம் பல சூழில் என்
தொல் உலகின் மன் பல் உயிர்கட்கு இறைவன் மாயன் என மொழிந்த வன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே –

——————————–

10-அரவில் நடித்தானும் உரவில் ஓடித்தானும் அடவி கடந்தானும் புடவி இடந்தானும்
குரவை பிணைந்தானும் பரவை அணைத்தானும் கோசலை பெற்றானும் வீசு அலை உற்றானும்
முரனை அறுத்தானும் கரனை ஒறுத்தானும் முத்தி அளித்தானும் அத்தி விளித்தானும்
பரம பதத்தானும் சரம விதத்தானும் பாயல் வடத்தானும் கோயில் இடத்தானே –10-

அரவில் நடித்தானும் -காளியன் மேல் நர்த்தனம் செய்தவனும்
உரவில் ஓடித்தானும் -வலிமை பொருந்திய சிவனது வில்லை ஓடித்தவனும்
அடவி கடந்தானும் -காட்டை நடந்து கடந்தவனும்
புடவி இடந்தானும் -பூமியை கோட்டால் குத்தி எடுத்தவனும்
குரவை பிணைந்தானும்
பரவை அணைத்தானும் -கடலை அணை கட்டியவனும்
கோசலை பெற்றானும்
வீசு அலை உற்றானும் -வீசுகின்ற திருப் பாற் கடலின் அலை யில் பொருந்தினவனும்
முரனை அறுத்தானும்
கரனை ஒறுத்தானும்
முத்தி அளித்தானும்
அத்தி விளித்தானும் -கஜேந்திர ஆழ்வானால்-ஆதி மூலமே என்று கூவி அழைக்கப் பட்டவனும்
ஹஸ்தம் -துதிக்கை உடைய -அத்தி -வேழம் -என்றபடி
பரம பதத்தானும்
சரம விதத்தானும் -சரம உபாயத்தை -பிரபத்தியை தன்னை அடையும் வழியாக உடையவனும் –
பாயல் வடத்தானும்-ஆலிலை யைச் சயனமாகக் கொண்டவனும்
கோயில் இடத்தானே –திருவரங்கத்தை வாசஸ் ஸ்தானமாகக் கொண்டவன் –

அரவினடித்ததும், குரவைபிணைத்ததும், முரனையறுத்ததும் – கிருஷ்ணாவதாரத்தி லெனவும்;
உரவிலொடித்ததும், அடவிகடந்ததும், பரவையணைத்ததும், கோசலைபெற்றதும், கரனையொறுத்ததும் – ராமாவதாரத்திலெனவும்;
புடவியிடந்தது – வராகாவதாரத்தி லெனவும்; வீசலையுற்றது – வியூகநிலையிலெனவும்;
அத்தி விளித்தது – கஜேந்திரமோக்ஷத்திலெனவும்; பரமபதத்தானென்றது – பரத்துவநிலையி லெனவும்;
பாயல்வடத்தா னென்றது – பிரளய காலத்திலெனவும்; கோயிலிடத்தானென்றது – அர்ச்சாவதாரத்திலெனவும்;
முத்தியளித்தலும், சரமவிதத்தானாதலும் – எல்லாநிலையி லெனவும் அறிக.

பரவை – பரந்திருப்பது; ஐ – வினைமுதற்பொருள்விகுதி.
கோசலை – வடசொற்றிரிபு; (உத்தர) கோசலதேசத்தரசன்மகளென்று பொருள்.
அன்பால் நினைவார்க்கு விரைந்து முத்தி யருளுதலால், அளித்தானென இறந்தகா லத்தாற் கூறினார்.
அத்தி – ஹஸ்தி; ஹஸ்தத்தையுடையது: ஹஸ்தம் – கை, துதிக்கை. வடமென்னும் மரத்தின்பெயர்,
அதன் இலைக்கு முதலாகுபெயர். இச்செய்யுளில் மடக்கு என்னுஞ் சொல்லணி காண்க.

இது, ஒன்று மூன்று ஐந்து ஏழு – மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டு – புளிமாங்காய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.

——————————-

11- தானே தனக்கு ஒத்த தாள் தாமரைக்குச் சரண் புகுந்து ஆள்
ஆனேன் இனி உன் அருள் அறியேன் எனது ஆருயிரே
தேனே என் தீ வினைக்கு ஓர் மருந்தே பெரும் தேவர்க்கு எல்லாம்
கோனே அரங்கத்து அரவணை மேல் பள்ளி கொண்டவனே –11-

(இ – ள்.) எனது -, அரு உயிரே – அரிய உயிருக்கொப்பானவனே!
தேனே – தேனுக்கொப்பானவனே!
என் தீவினைக்கு – எனதுபாவத்தைப் போக்குவதற்கு,
ஓர் மருந்தே – ஒரு மருந்துபோல்பவனே!
பெருந் தேவர்க்கு எல்லாம் – பெரியதேவர்களுக்கெல்லாம்,
கோனே – தலைவனே!
அரங்கத்து அரவணைமேல் பள்ளிகொண்டவனே-! (யான்), –
தானே தனக்கு ஒத்த -(வேறுஉவமையில்லாமையால்) தனக்குத் தானே நிகராகிய,
தாள் தாமரைக்கு – (உனது) திருவடித் தாமரைகளுக்கு,
சரண் புகுந்து – அடைக்கல மடைந்து,
ஆள் ஆனேன் – அடிமையாயினேன்;
இனி – இனிமேல்,
உன் அருள் – உனது திருவருள் இருந்து நடத்தும்படியை,
அறியேன் – (இன்ன தென்று) அறிகின்றிலேன்; (எ – று.)

உயிர்க்கும் உயிராயிருத்தலால் “ஆருயிரே” என்றும், அழியாவின்பந் தருதலால் “தேனே” என்றும்,
தீவினையை வேரோடறுத்தலால் “தீவினைக் கோர்மருந்தே” என்றும்,
தேவாதிதேவனாதலால் “பெருந்தேவர்க்கெல்லாங்கோனே” என்றுங் கூறினார்.
“பெருந்தேவர்” என்றது, பிரமருத்திரேந் திராதியரை.

என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி உன் திருக் குறிப்பே -பெரியாழ்வார் –

———————————

மேக விடு தூது

12-கொண்டல் காள் உம்மைக் குறித்தே தொழுகின்றேன்
அண்டர் காணா அரங்கத் தம்மானைக் கண்டு
மனத்துள் அவத்தைப் படும் என்மையல் எல்லாம் சொல்லி
புனத் துளவத்தைக் கொணரீர் போய் –12-

இ – ள்.) கொண்டல்காள் – (நீர் கொண்ட) காளமேகங்களே! –
உம்மைக் குறித்தே -, தொழுகின்றேன் – வணங்குகின்றேன்;
அண்டர் காணா – தேவர்களுங் காணுதற்கரிய,
அரங்கத்து – திருவரங்கத்தில்,
போய் -, அம்மானை – எம்பெருமானை,
கண்டு -,
மனத்துள் – மனத்தில்,
அவத்தைப்படும் – துன்பப்படுகின்ற,
என் – எனது,
மையல் எல்லாம் – வேட்கை மயக்கத்தை யெல்லாம்,
சொல்லி -,
புனம் துளவத்தை – வனத்தில் வளர்கின்ற திருத் துழாய்மாலையை,
கொணரீர் – வாங்கிக்கொண்டு வாருங்கள்; (எ – று.)

ஓர் உத்தம புருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்துக்குச் சென்றவனாய்,
ஓர்உத்தம கன்னிகையும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே,
ஒவ் வொருநிமித்தத்தால் தோழியர் பிரிய அக்கன்னிகை அங்குத் தனித்துநின்ற சமயத்திலே,
ஒவ்வொருநிமித்தத்தாற் பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவ னாய் அப்புருஷன் அங்குவந்துசேர,
இருவரும்ஊழ்வினை வசத்தால் இங்ங னம் தற்செயலாய் ஓரிடத்திலே சந்தித்து ஒருவரையொருவர் கண்டு
காதல் கொண்டு காந்தருலவிவாகக்கிரமத்தினாற் கூடி உடனே பிரிய,
பின்பு மற்றுஞ் சில களவுப்புணர்ச்சிக்கு உரிய வகைகளால் அத்தலைமகளது கூட்டுறவைப் பெற்ற தலைமகன்,
பின்பு அவளை வெளிப்படையாகத் தான் மணஞ் செய்துகொள்ளுதலின் நிமித்தம் பொருள்தேடி வருதற் பொருட்டுக்
கார்கால த்தில்மீண்டுவருவதாகக் காலங்குறித்துச்செல்ல, அத்தலைவனைப் பிரிந்த தலைவி,
அப்பிரிவுத்துயரை யாற்றமாட்டாது பலவாறு வருந்தும்போது, இன்னது செய்வதென்று அறியாது திகைத்து
“வானமேநோக்கும் மை யாக்கும்” என்றபடி அண்ணாந்து வானத்தைநோக்குமளவிலே,

அங்குச் செல்லுகின்ற மேகங்கள் கட்புலனாக, அவற்றைப் பார்க்குமிடத்து அவை நிறம் முதலியவற்றால்
எம்பெருமானுக்குப் போலியாய் விளங்கக் கண்டு இவை நமக்கும் நமதுதலைவர்க்கும் இனியனவாமென்று கொண்டு
அவற்றை நோக்கி “எனது நிலைமைகளை எனது தலைவரான திருவரங்கநாதன்பக்கல் சொல்லி
அதற்கு அவர் அருளிச்செய்கின்ற திருத்துழாய்மாலையை வாங்கி மீண்டுவந்து எனக்குத் தருமாறு நீங்கள் தூதாகவேண்டும்” என வேண்டுகின்றாள்.

“சூட்டோதிமஞ் சென்று சொல்லாதென்காதலைத் தும்பியிசைப்பாட்டோதி மங்கையரும் பணியார்
பண்டுகன்மழைக்காக, கோட்டோதிம மெடுத்தார் சோலைமாமலைக்கோவலனார்,
மாட்டோதிமஞ்சினங்காளுரைப் பீர்மறுவாசகமே” என்பர் அழகரந்தாதியிலும்.

“இயம்புகின்ற காலத்து எகினம் கிள்ளை, பயம்பெறு மேகம் பூவை பாங்கி – நயந்தகுயில்,
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே, தூதுரைத்து வாங்குந் தொடை” என்ற இரத்தினச் சுருக்கத்தால்,
தூதுக்கு உரியவை இன்னவையெனக் காண்க.

பிரிந்த தலைவன் வந்திடுவனென்று ஆறியிருக்கவொண்ணாதே அவன் வரவுக்கு விரைந்து ஆள்விடும்படியாயிற்று ஆற்றாமைமிகுதி.
நீங்கள் அவ்வாறு தூதுசென்று தலைவரது திருத்துழாய்மாலையை வாங்கிவருமளவும் ஆறியிருப்பே னென்பது குறிப்பு.
தன்னாலியன்றவளவும் வெளிப்புலப்படாது அடக்கினமை தோன்ற, “மனத்துளவத்தைப்படு மென்மையல்” என்றாள்.

தோத்திரப்பிரபந்தங்களில் அகப்பொருட்கிளவித்துறைகளை இடை யிடையே கூறுதல் கவிசமயமாதலை இலக்கியங்கள் கொண்டு உணர்க.
சிருங்காரரசப்பிரதானமான அகப்பொருட்கிளவித்துறைகளை ஞானநூலாகிய தோத்திரப்பிரபந்தங்களிற் கூறுதற்குக் காரணம்,
கடுத்தின்னாதானைக் கட்டிபூசிக் கடுத்தின்பிப்பார்போலச் சிற்றின்பங்கூறும் வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர்.
இங்ஙனம் வெளிப்படைப் பொருளால் அந்யாபதேசமாகக் கூறுகின்ற சிற்றின்பத்துறைச் செய்யுள்கட்கெல்லாம்
ஸ்வாபதேசமாகப் பேரின்பத்தின்பாற்படுத்தும் உள்ளுறைபொருள் உண்டென்பதையும் உணர்க.
அன்றியும் இங்குக்கூறியது, உலகவாழ்க்கைச் சிற்றின்பமன்று; எம்பெருமானைச் சேரவேண்டுமென்று
அவன்பக்கலிலே யுண்டாகின்ற அபேக்ஷையையே கூறியது. லோகநாயகனுடைய சேர்க்கையை அபேக்ஷிக்கின்ற பேரின்பக்காதலானது,
வேதாந்த நிர்ணயத்தின்படி அன்புசெலுத்தவேண்டிய விடத்தில் அன்புசெலுத்தியதாதலால், சிற்றின்பக்காதல் போலன்றி,
சகலபாப நிவ்ருத்திக்கும் வீடுபேற்றுக்குமே காரணமாம்.
கண்ணபிரான்பக்கல் கொண்ட காமத்தால் கோபஸ்திரீகள் முத்திபெற்றனரென்று புராணங்கூறுதலுங் காண்க.

ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே அவனது நிரந்தராநுபவத்தைப் பெற விரும்பிய ஐயங்கார்,
தமது நிலைமையை அப்பெருமான் சன்னிதியில் விண்ணப்பஞ்செய்து அவளளிக்குந் திருத்துழாய்மாலையைத் தம்மிடம்கொண்டுவந்து
கொடுக்கும்படி குணஞ் செயல்களில் அவனோடொத்தவரான பாகவதர்களைப் பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்,

உரியகாலத்தில் எம்பெருமானது குணக்கடலிலே படிந்து அதில் நீர்மையை உட்கொண்டு ஸாரூப்யத்தால்
அவன்திரு மேனியையொக்கும் வடிவுபெற்று உயிர்களை உய்வித்தற்காகப் பலவிடங்களிற் சஞ்சாரம்பண்ணி
ஆங்காங்குக் கைம்மாறுகருதாதே கருணைமழை பொழிந்து நன்மைவிளைத்துப் பிறரைவாழ்வித்தலே பேறாக ஒழுகி
உலகமும் உறுதிப்பொருள்களும் நடத்தற்கு ஏதுவாய் இன்றியமையாமைபெற்று விஷ்ணுபதத்தைச்சார்ந்து
தென்திருவரங்கத்திற் சென்றுசேர்தற்குப் பிரயாணப்பட்ட பாகவதர்களை, உரியகாலத்திற் கடலிலே படிந்து
அதன்நீரை உட்கொண்டு மின்னலோடு கூடிய நீலநிறத்தால் திருமகளை மார்பிற்கொண்ட திருமாலின் திருமேனியை ஒத்து
உயிர்களை உய்விக்குமாறு பலவிடங்களில் திரிந்து கைம்மாறு கருதாது மழைபொழிந்து பயன்விளைத்து உலகத்தை
வாழ்வித்தலே பேறாக ஒழுகி வான்சிறப்பிற்கூறியபடி உலகமும் உறுதிப் பொருள்களும் நடத்தற்கு ஏதுவாய் இன்றியமையாததாகி,
விஷ்ணுபத மெனப்படுகிற வானத்தைச் சார்ந்து திருவரங்கத்தைக்குறித்துச் செல்லும் மேகங்க ளெனத்தகும்.

இவ்வாறே மற்றை அகப்பொருட்கிளவித்துறைச் செய்யுள்கட்கும் ஏற்றபடி உள்ளுறை பொருள்களை உய்த்துணர்ந்துகொள்க. விரிப்பிற் பெருகும்.

அம்மான் – தலைவன். அவத்தை – அவஸ்தா, துளவம் – துளஸீ; வட சொற் சிதைவுகள். பின்னிரண்டடி – திரிபணியாம்.

இது, முன்னர்க் கூறியது போன்ற நேரிசைவெண்பா.

பிறரை வாழ்வித்தலே தமது பேறாக கருதும் பாகவதர்களை பிரார்த்தித்து –
மேகம் -போன்றவர்கள் -இவர்கள் -குறித்து அருளுகிறார் உள்ளுறை பொருள்

————————————————————————————–

13-போய் அவனியில் சில புறச் சமயம் நாடும்
பேய் அறிவை விட்டு எழு பிறப்பையும் அறுப்பீர்
ஆயனை அனந்தனை அனந்த சயனத்து எம்
மாயனை அரங்கனை வணங்கி மருவீரே –13-

ஆயனை – திருவாய்ப்பாடியில் இடையர்மனையில் வளர்ந்தவனும்,
அனந்தனை – அநந்தனென்னுந் திருநாமமுடையவனும்,
அனந்த சயனத்து – திருவனந்தாழ்வானாகிய திருவணையிற் பள்ளிகொண்டருளுகின்ற,
எம் மாயனை – எமது மாயவனுமாகிய அரங்கனை ஸ்ரீரங்கநாதனை,
வணங்கி மருவீர் – சேர்ந்து வணங்குங்கள்; (அங்ஙனம் வணங்குவீராயின்), –
அவனியில் – உலகத்தில்,
போய் -,
சில புறச்சமயம் – வேறு சிலமதங்களை,
நாடும் – தேடித்திரிகின்ற,
பேய் அறிவை – பேய்த்தன்மையான (கெட்ட) அறிவை, விட்டு -,
எழு பிறப்பையும் – எழுவகைப்பிறவிகளையும்,
அறுப்பீர் – போக்குவீர்; (எ – று.)

இது, திருவரங்கநாதனைத் திருவடிதொழுத மாத்திரத்தில் தற்சமயம் இன்னதென்று உண்மையறியாது தடுமாறுகின்ற
திரிபுணர்ச்சி யொழிந்து வினைப்பயன் தொடரும் எழுவகைப்பிறப்புக்களும் அற்று
முத்தி பெறுவீ ரென்று உலகத்தார்க்கு நல்லறிவு கூறியது.

புறச்சமயம் – தேவதாந்தரங்களை உண்மைத்தெய்வமாகநம்பின வேதத்துக்குப் புறம்பாகிய சமயங்கள்.
எழுபிறப்பாவன – “மக்கள் விலங்கு பறவை யூர்வன, நீருட் டிரிவன பருப்பதம் பாதவ, மெனவிவை யெழுபிறப் பாகுமென்ப.”
ஆயன் – இடைச்சாதியில் வளர்ந்தவன். அநந்தன் – தேசம்காலம் பொருள் என்னும் மூவகையிலும் எல்லையில்லாதவன்;
அதாவது – எல்லாத் தேசங்களிலும் எல்லாக்காலங்களிலும் எல்லாப்பொருள்களிலும் இருப்பவனென்பது கருத்து.
மாயன் – மாயையையுடையவன்; மாயையாவது – கூடாததையுங் கூட்டுவிக்குந் திறம்.
தற்சமயமாகிய ஸ்ரீவைஷ்ணவசமயமன்றி மற்றைச்சமயங்களைப் பற்றிச் செல்லும் அறிவு உண்மையுணர்தற்கு
இடமற்றதாதலின், அதனை, “பேயறிவு” என்றார்.

இது, முதல்மூன்றுங் கூவிளங்காய்ச்சீர்களும், ஈற்றது தேமாச்சீருமாகிய கலிவிருத்தம்.

————————————————————-

14-மருவு தந்தையும் குருவும் எந்தையும் மருள் கெடுப்பதும் அருள் கொடுப்பதும்
உருகு நெஞ்சமும் பெருகு தஞ்சமும் உரிய ஞானமும் பெரிய வானமும்
திரு அரங்கனார் இருவர் அங்கனார் செங்கண் மாயனார் எங்கள் ஆயனார்
அருள் முகுந்தனார் திருவை குந்தனர் அமல நாதனார் கமலா பாதமே –14-

(இ – ள்.) மருவு – விரும்பிவளர்க்கின்ற,
தந்தையும் -,
குருவும் -ஆசிரியனும்,
எந்தையும் – எமதுதெய்வமும்,
மருள் கெடுப்பதும் – அஞ்ஞானத்தைக் கெடுக்குந்தன்மையுடையதும்,
அருள் கொடுப்பதும் – கருணையை அளிக்குந்தன்மையுடையதும்,
உருகு நெஞ்சமும் – (அன்பினாற்) கரைந்து உருகுகின்ற மனமும்,
பெருகு தஞ்சமும் – சிறந்ததாகிய பற்றுக்கோடும்,
உரிய ஞானமும் – (பேரின்பமடைதற்கு) உரிய தத்துவஞானமும்,
பெரிய வானமும் – சிறந்த பரமபதமும், (எல்லாம்), –
இருவர் அங்கனார் – பிரமருத்திரர்களைத் தமது அங்கத்தி லுடையவரும்,
செங் கண் மாயனார் – சிவந்த திருக்கண்களையுடைய மாயவரும்,
எங்கள் ஆயனார் – எங்களது ஆயனாரும்,
அருள் முகுந்தனார் – அருளையுடைய முகுந்தனென்னுந் திருநாமமுடையவரும்,
திரு வைகுந்தனார் – ஸ்ரீவைகுண்டநாதரும்,
அமலம் நாதனார் – குற்ற மற்ற தலைவருமாகிய,
திரு அரங்கனார் – ஸ்ரீரங்கநாதரது,
கமலம் பாதமே – தாமரைமலர்போலுந் திருவடிகளே; (எ – று.)

எம்பெருமானது திருவடிகளே தமக்கு எல்லாவகைச் சுற்றமுமா மென்று தமதுகருத்தை வெளியிட்டனர்;
“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய்தந்தையு மவரேயினியாவாரே” என்றார் நம்மாழ்வாரும்,
மருவுதந்தை – கர்மங்கட்குத் தக்கபடி எடுக்கும் பிறவிகள் தோறும் உடம்பெடுத்தற்குக் காரணமான பிதா.
எந்தை – பரமபிதா. குரு – அஞ்ஞானவிருளைப் போக்குபவன்; ‘கு’ – இருள்.
தஞ்சம் – கதியற்றவராற் சரணமாக அடையப்படுபொருள். ஆர்விகுதி, சிறப்புப்பொருளது.
கேசவ னென்னுந் திருநாமத்தின் பொருள்பற்றி, ‘இருவரங்கனார்’ என்றார்:
“பிறைதங்குசடையானை வலத்தே வைத்துப் பிரமனைத் தன்னுந்தியிலே தோற்றுவித்து” என்றது காண்க.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள் கூவிளச்சீர்களுமான எண்சீராசிரியவிருத்தம்.

————————————————————–

15-பாதியாய் அழுகிய கால் கையரேனும் பழி தொழிலும் இழி குலம் படைத்தாரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பர் ஆகில் அவர் அன்றோ யாம் வணங்கும் அடிகள் ஆவார்
சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோரேனும் சதுர் மறையால் வேள்வியால் தக்கோரேனும்
போதில் நான் முகன் பணியப் பள்ளி கொள்வான் பொன் அரங்கம் போற்றாதார் புலையர் தாமே –15-

(இ – ள்.) பாதியாய் – பாதியளவினதாய்க் குறைந்து,
அழுகிய – அழுகிப்போன,
கால் கையர் ஏனும் – கால்களையுங் கைகளையும் உடையவரே யாயினும்,
பழி தொழிலும் – பழிக்கப்படுகின்ற செய்கைகளையும்,
இழி குலமும் – இழிந்த குலத்தையும்,
படைத்தார் ஏனும் – உடையவர்களேயாயினும், –
ஆதியாய் – (எல்லாப்பொருளுக்கும்) முதன்மையானவனே!
அரவணையாய் – சேஷசயனமுடையவனே!
என்பர் ஆகில் – என்று (ஒருகால்சொல்லித்) துதிப்பராயின்,
அவர் அன்றோ -. அவர்களன்றே,
யாம் வணங்கும் – யாமெல்லாம் வணங்குந்தன்மையையுடைய,
அடிகள் ஆவார் – பெரியோராவர்;
சாதியால் – குலத்தாலும்,
ஒழுக்கத்தால் – (அக்குலத்துக்கு உரிய) நல்லொழுக்கங்களாலும்,
மிக்கோர் ஏனும் – உயர்ந்தவரேயாயினும்,
சதுர் மறையால் – நான்குவேதங்களாலும்,
வேள்வியால் – யாகங்களாலும்,
தக்கோர் ஏனும் – சிறந்தவரேயாயினும்,
போதில் நான்முகன் – தாமரை மலரில் தோன்றிய பிரமன்,
பணிய – வணங்கும்படி,
பள்ளிக்கொள்வான் – கண்வளர்ந்தருளுபவனது,
பொன் அரங்கம் – திருவரங்கத்தை,
போற்றாதார் – வணங்கித் துதியாதவர்கள்,
புலையர்தாமே – (கர்ம) சண்டாளரேயாவர்; (எ – று.)

எம்பெருமான்பக்கல் தொண்டுபூண்டொழுகுவதே மேன்மைக்குக் காரணம்; உயர்குலப்பிறப்பன்று:
அவ்வாறு தொண்டு பூண்டொழுகாமல் நிற்பதே தாழ்ச்சிக்குக் காரணம்; இழிகுலப்பிறப்பன்று.
ஆகையால், ஜந்மவ்ருத்தாதிகளைச் (பிறவியையும் ஒழுக்கத்தையும்) சிறிதும் பாராட்ட வேண்டா என்பதாம்.

“பழுதிலாலொழுகலாற்றுப் பலசதுப்பேதிமார்கள், இழிகுலத்தவர்களேலு மெம்மடியார்களாகில்,
தொழுமி னீர் கொடுமின் கொண்மி னென்று நின்னோடு மொக்க, வழிபடவருளினாய்போல் மதிள்திரு வரங்கத்தானே,”

“அமரவோரங்கமாறும் வேதமோர்நான்கு மோதித், தமர் களிற்றலைவராய சாதியந்தணர்களேனும்,
நுமர்களைப்பழிப்பராகில் நொடி ப்பதோரளவி லாங்கே, யவர்கள்தாம் புலையர்போலு மரங்கமாநகருளானே”
என்பவை தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரம்.

“இதுதனக்கு (பாகவதாபசாரத்துக்கு) அதிகாரிநியம மில்லை; “தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேனும்” என்கையாலே.
இவ்விடத்திலே வைநதேய வ்ருத்தாந்தத்தையும் பிள்ளைப்பிள்ளையாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது.
ஜ்ஞாநாநுஷ்டாநங்களை யொழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள்பக்கல் ஸம்பந்தமே யமைகிறாப்போலே
அவையுண் டானாலும் இழவுக்கு அவர்கள்பக்கல் அபசாரமே போரும்; இதில் ஜந்ம வ்ருத்தாதி நியம மில்லை.
இந்த அர்த்தம் கைஸிக வ்ருத்தாந்தத்திலும் உபரிசரவஸு வ்ருத்தாந்தத்திலும் பரக்கக்காணலாம்.
பிராஹ்மண்யம் விலைச்செல்லுகிறது – வேதாத்யயநமுகத்தாலே பகவல்லாபஹேது வென்று;
அதுதானே இழவுக்கு உறுப்பாகில் த்யாஜ்யமாமிறே.
ஜந்மவ்ருத்தங் களினுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும் பேற்றுக்கும் இழவுக்கும் அப்ரயோஜகம்;
ப்ரயோஜகம் பகவத்ஸம்பந்தமும், தஸம்பந்தமும்” என்ற ஸ்ரீவசநபூஷணவாக்யங்கள் இங்கு அறியத்தக்கன.

அடிகளென்பது, அடியென்னும் அடியாப்பிறந்து உயர்வுப்பொருளுணர்த்தி நின்றதோர் சொல்.
ஆதியிற் பிரமனது திருவாராதனையிலிருந்ததனால், “நான்முகன்பணியப் பள்ளி கொள்வான்” என்றார்;
“அரங்கமென்பர் நான்முகத்தயன் பணிந்த கோயிலே” என்பர் திருமழிசைப்பிரானும்.

இது, முதல் இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மூன்று நான்கு ஏ” எட்டாஞ்சீர்கள் மாச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.

——————————————————–

16-புலையாம் பிறவி பிறந்து என் செய்தோம் பொன்னி பொன் கொழிக்கும்
அலையார் திரு அரங்கத்து எம்பிரான் நமது அன்னை யொடும்
தொலையாத கானம் கடந்த அந்நாள் தடம் தோறும் புல்லாய்
சிலையாய் கிடந்திலமே நெஞ்சமே கழல் தீண்டுகைக்கே –16-

நெஞ்சமே – மனமே! –
புலை ஆம் – இழிகுணமுடையதா கிய,
பிறவி – இப்பிறப்பில்,
பிறந்து – தோன்றி,
என் செய்தோம் – யாது பய னடைந்தோம்?
பொன்னி – காவேரிநதி,
பொன் கொழிக்கும் – பொன்னை அலைத்துத் தள்ளுகின்ற,
அலை – அலைகள்,
ஆர் – வந்துபுரளுகின்ற,
திருஅரங்கத்து – ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியுள்ள,
எம் பிரான் – நம்பெருமாள், (ஸ்ரீராமாவதாரகாலத்தில்),
நமது அன்னையொடும் – நமது தாயாகிய சீதாபிராட்டியுடனே,
தொலையாத – கடப்பதற்கரிய,
கானம் – காட்டை,
கடந்த அ நாள் – நடந்து கடந்த அப்பொழுது,
தடம்தோறும் – அக்காட்டுவழிகளி லெல்லாம்,
கழல் தீண்டுகைக்கு – (அவரது) திருவடிகள் மேற்படும் படி,
புல் ஆய் – புல்லாகியும்,
சிலை ஆய் – கல்லாகியும்,
கிடந்திலமே – கிடவாமற்போனோமே! (எ – று.)

என்றது, அப்பிரானது திருவடிதீண்டும் எப்பொருளாகவாவது நான் பிறந்திருந்தால் அத்திருவடிகளின் பரிசத்தால்
பலபிறப்பெடுத்துத் தாபத் திரயத்தால் அலையாதபடி அப்பொழுதே முத்திப்பேறுவாய்த்திருக்குமென் பது குறிப்பு.
கழல் தீண்டப்பெற்றார்க்கு மீண்டும் பிறவிநேராதென்ற துணிபுபற்றி, இவ்வாறு கூறுகின்றார்.
“செம்பவள வாயான் றிருவேங்கட மென்னு, மெம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே” என்றார் குலசேகரனாரும்.
நமது அன்னை – லோகமாதாவாகிய சீதாபிராட்டி.

இது நிரையசை முதலான கட்டளைக்கலித்துறை.

——————————————————————–

17-தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நிணமும் செறி தசையும்
வேண்டா நாற்றம் மிகும் உடலை வீணே சுமந்து மெலிவேனோ
நீண்டாய் தூண்டா விளக்கு ஒளியாய் நின்றாய் ஒன்றாய் அடியாரை
ஆண்டாய் காண்டா வனம் எரித்த அரங்கா அடியேற்கு இரங்காயே –17-

(இ – ள்.) தீண்டா – தொடப்படாத (அருவருப்பைத் தருவதாய் அசு த்தமான),
வழும்பும் – நிணமும்,
செந்நீரும் – இரத்தமும்,
சீயும் -, நரம்பும் -,
செறி தசையும் – (இடையிடையே) நெருங்கிய சதையும்,
வேண்டா நாற்றம் – விரும்பப்படாத துர்க்கந்தமும்,
மிகும் – மிகுந்திருக்கின்ற;
உடலை – இக்கடைப்பட்ட உடலை,
வீணே – பயனில்லாமல்,
சுமந்து – தரித்து,
மெலிவேனோ – வருந்துவேனோ?
நீண்டாய் – (திரிவிக்கிரமாவதாரத்தில்) உயர்ந்து வளர்ந்தவனே!
தூண்டா விளக்கு ஒளியாய் – தூண்டுதல் வேண்டாமல் தானேயெரிகின்ற தீபத்தினது ஒளிபோன்றவனே!
ஒன்றாய நின்றாய் – ஒப்பற்றதொரு பரம்பொருளாய் (அத்விதீயமாய்) நின்றவனே!
அடியாரை – தொண்டர்களை,
ஆண்டாய் – அடிமைகொண்டவனே!
காண்டாவனம் எரித்த – காண்டவவனத்தை எரிக்கச்செய்த, அரங்கா -!-
அடியேற்கு – அடியேனுக்கு,
இரங்காய் – திருவுள்ளமிரங்கியருளவேண்டும்.

மிகவும்இழிவாகிய பிறவியை ஒழித்து முத்தியளிக்கவேண்டுமென்று வேண்டியவாறு, முன்னிரண்டடி,
உடலின் அருவருத்தற்குஉரிய தாழ்வை விளக்கும். இங்குக்கூறப்பட்ட வழும்பு முதலியவற்றா லாகியதே உடம்பாத லால்,
இவற்றுள் ஒன்றாயினும் சுத்தமுடைய பொருள் உண்டோ? என்பது கருத்து.
(“குடருங் கொழுவுங் குருதியு மென்புந், தொடரு நரம்பொடு தோலு – மிடையிடையே, வைத்த
தடியும் வழும்புமா மற்றிவற்று, ளெத்திறத்தா னீர்ங்கோதையாள்”,
“என்பினைநரம்பிற்பின்னி யுதிரந்தோய்த் திறைச்சிமெத்திப்;
புன்புறந்தோலைப்போர்த்து மயிர்புறம்பொலியவேய்ந்திட்,
டொன்பதுவாயிலாக்கி யூன்பயில்குரம்பை செய்தான்,
மன்பெருந்தச்ச னல்லன்மயங்கிர்மருளவென்றான்” என்பன, உடலின் இழிவைவிளக்குவன.)

நாற்றமென்பது இருவகைக்கும் பொதுவாதலால், தீநாற்றத்தை வேண்டாநாற்றம் என்றார்.
“தூண்டாவிளக்கொளியாய்” என்றது – நித்தியமாய் ஸ்வயம்பிரகாசமான ஞானத்தைக் குணமாகவும் ஸ்வரூபமாகவும்
உடையவனே யென்றபடி; “நந்தா விளக்கே யளத்தற்கரியாய்” என்றார் திருமங்கை யாழ்வாரும்.

கிருஷ்ணனும் அருச்சுனனும் பூம்பந்தேறிட்டு விளையாடச் செய்தே, அக்கினிபகவான் மிகப் பசித்துவந்து
இந்திரனது காவற்காடாய் யாவர்க்கும் அழிக்கவொண்ணாதபடியா யிருக்கின்ற காண்டவவன மென்னும்பூந் தோப்பை
எனக்கு விருந்திடவேண்டுமென்று வேண்ட, கிருஷ்ணார்ச்சுனர்கள் அங்கேபுக் கொதுங்கியிருக்கின்ற அசுரர்
முதலியவர்களை அழித்தருளவேண்டுமென்னும்நோக்கத்தால் நீ அதனைப்புசியென்றுஇசைந்து அளித்தனராதலால்,
“காண்டாவனமெரித்த வரங்கா” என்றார்;

கண்டா வனம் என்பதோர் காடு அமரர்க்கரை என்னது கண்டவன் நிற்க முனே மூண்டார் அழல் உண்ண முநிந்ததுவும் -திரு மங்கை ஆழ்வார் –
காண்டாவென்று நீட்டலாய் வகரங் கடைக்குறைதலாய்க் கிடக்கிறது.

இது, மூன்றும் ஆறுங் காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தம்.

——————————————————————

தவம் –
18- காயிலை தின்றும் கானில் உறைந்தும் கதி தேடித்
தீயிடை நின்றும் பூ வலம் வந்தும் திரிவீர்காள்
தாயினும் அன்பன் பூ மகள் நண்பன் தட நாகம்
பாயன் முகுந்தன் கோயில் அரங்கம் பணிவீரே –18-

காய் இலை தின்றும் – பலங்களையும் சாகங்களையும் பக்ஷித் தும்,
கானில் உறைந்தும் – வனத்தில் வாசஞ்செய்தும்,
தீ யிடை, நின்றும் – பஞ்சாக்கிநிமத்தியிற் பொருந்தியும்,
பூ வலம் வந்தும் – பூமிப்பிரதக்ஷிணஞ் செய்தும்,
கதி தேடி – நற்கதியடைய விரும்பி,
திரிவீர்காள் – தவஞ்செய்து திரிபவர்களே! – (இனி அவ்வாறு வருந்தித் தவஞ்செய்யவேண்டா);
தாயினும் அன்பன் – (உயிர்களிடத்துப்) பெற்றதாயினும் அன்புடையவனும்,
பூ மகள் நண்பன் – திருமகளுக்கும் நிலமகளுக்குங் கணவனும்,
தட நாகம் பாயன் – பெரிய சர்ப்பசயனத்தை யுடையவனுமாகிய,
முகுந்தன் – எம்பெருமானது,
கோயில் அரங்கம் – திருவரங்கம் பெரியகோயிலை,
பணிவீர் – வணங்குங்கள்; (எ – று.)

பகவத்ப்ராப்திக்கு விரோதியான சரீரசம்பந்தாதிகளை அறுத்துக்கழித்து எம்பெருமானைப் பெறவேண்டுமென்று விரும்பி,
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி துன்னும்
இலைக் குரம்பை துஞ்சியும் வெஞ்சுடரோன் மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்து மின்னதோர் தன்மையராய் –
என்கிறபடியே
மனம் பொறிவழிபோகாது நிற்றற்பொருட்டு நீர்பருகியும், காற்றுநுகர்ந்தும், காய் கனி கிழங்கு சருகு வருக்கங்களை உண்டும்
விரதங்களான் உண்டிசுருக்கலும், கோடைகாலத்தில் வெயில்நிலையிலும் பஞ்சாக்நி மத்தியிலும் நிற்றலும்,
மாரிக்காலத்தும் பனிக்காலத்தும் நீர்நிலையிற் பாசியேற நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு,
அவற்றால்வருந்துன்பங்க ளைப்பொறுத்து, இவ்வாறு சரீரத்தையொறுத்து வருந்தவேண்டா;
அடியார்கள் பக்கல் மிக்க அருளுடையவனாகிய எம்பெருமான் புருஷகார பூதைகளான பிராட்டிமாரோடு வந்து
திருவனந்தாழ்வானிற் பள்ளிகொண்டருளுகின்ற திருவரங்கத்தைச் சென்று சேரவே, சகலவிரோதிகளும் போய் அவனைப்பெறலாம்:
சடக்கென அத்தேசத்தைச்சென்றுசேருங்கோளென்று பரோபதேசம் பண்ணுகிறார்;

காயோடு நீடு கனியுண்டு வீசு கடும் கால் நுகர்ந்து நெடும்காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள்
வைத்தும் என்பீர் –தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே –

பஞ்சாக்கினிகளாவன – தவஞ்செய்வோனைச்சுற்றி நாற்றிசையிலும் மூட்டப்பெற்ற அக்கினிகள் நான்கும்,
சூரியனாகிய அக்கினியொன்றும். பூமகள் – இரட்டுற மொழிதல்.

இது, முதலும் மூன்றுங் கூவிளச்சீர்களும், இரண்டும் நான்குந் தேமாச்சீர்களும், ஐந்து புளிமாங்காய்ச்சீருமாகிய கலிநிலைத்துறை.

——————————————————–

19-வீரர் அங்கு ஆகிய ஐவரை மாற்றி விட அரவின்
போர் அரங்கு ஆக நடித்த பொற்றாள் பற்றி பொன்னி நல் சீர்ச்
சீர் அரங்கா நின் தொழும் பன் என்றே சிந்தை செய்கில் அது
கூர் அரம் காண் நெஞ்சமே வஞ்ச மாயக் கொடு வினைக்கே –19-

(இ – ள்.) வீரர் ஆகிய – வலிமையுள்ளவரான,
ஐவரை – ஐம்பொறிகளை,
மாற்றி – (தத்தமக்குரிய புலன்களின்மேற் செல்லாதபடி) அடக்கி, –
போர் -போர்செய்யுந்தன்மையையுடைய,
விடம்அரவு – விஷத்தையுடைய(காளிய னென்னும்) நாகத்தை,
இன் அரங்கு ஆக – இனியநடனசாலையாகக் கொண்டு,
நடித்த – (அதன்படத்தின்மேலேறிக்) கூத்தாடியருளிய,
பொன்தாள் – (நம்பெருமாளது) அழகியதிருவடிகளை,
பற்றி . – (சரணமாக) அடைந்து, –
“பொன்னி நல் நீர் – காவேரி நதியினது நல்ல நீராற் சூழப்பட்ட,
சீர் அரங்கா – ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளியிருப்பவனே! –
நின் தொழும்பன் – (யான்) உனது அடியேன்,”
என்று -, சிந்தை செய்யில் – மனத்தில் நினைத்தால்,
அதுவே – அந்நினைப்புத்தானே, –
நெஞ்சமே – மனமே!
வஞ்சம் மாயம் கொடு வினைக்கு – மிக்க வஞ்சனையையுடைய கொடிய இருவினைகளை அறுப்பதற்கு,
கூர் அரம் – கூரிய வாளாகும்;
காண் – (இதனை நீ) அறிவாயாக; (எ – று.)

ஐம்பொறிகளை யடக்கி எம்பெருமானது திருவடிகளையே தஞ்சமாகப் பற்றித் தாஸோஹம் பாவனை செய்தால்,
எல்லாத்தீவினைகளும் தீர்ந்து முத்திபெறலா மென்பதாம்.
சித் அசித் ஈசுவரன் என்ற தத்வம் மூன்றில் சித் எனப்படுகிற ஜீவாத்மாவுக்கு ஈச்வரனெனப்படுகிற பரமாத்மா
நியாமகனும் தாரகனுமாய்த் தலைவனாதலும், அப்பரமாத்மாவுக்கு ஜீவாத்மா நியாம்யமும் தார்யமுமாய் அடிமையாதலும்
முதலிய மிக்க வேறுபாடுகளைச் சாஸ்திர ஞானத்தினால் பகுத்தறிந்து, தன்னை எம்பெருமானுக்கு அடிமையென்று எண்ணி
அந்தச் சருவேசுவரனுக்கு ஆட்பட்டவனுக்கே அப்பெருமான் அருள்புரிவனென்பது கருத்து.
சர்வேச்வரனது திருவடிகளை வணங்காமல் தானே சருவேசுவரனென்று சொன்ன இரணியனை
அப்பெருமான் நிக்கிரகித்ததும், சர்வேச்வரனுக்கு அடிமையென்று தன்னையெண்ணிய இரணியபுத்திரனான
பிரகலாதனை அப்பெருமான் அநுக்கிரகித்ததும் பிரசித்தம்.
பஞ்சேந்திரங்கள் வெல்லுதற்கரியன வென்பார் “வீரராகிய ஐவர்” என்றார். ஐவர் – தொகைக்குறிப்பு.
மெய் வாய் கண் மூக்கு செவியென்னும், பஞ்சேந்திரியங்களை ஐவரென உயர்திணையாக்கூறியது,
செறலினால் வந்த திணைவழுவமைதி. அங்கு – அசை.
காவிரிநீர்க்கு நன்மையாவது – தன்னில் ஒருகால் மூழ்கியவரையும் அவர்வினையனைத்தையும் போக்கி
ஸ்ரீவிரஜாநதியில் மூழ்குமாறு செய்விக்கும் ஆற்றலுடைமை. ஏ – தேற்றம். அரம் – வாள்விசேஷம். வஞ்ச மாயம் – ஒருபொருட்பன்மொழி.

எம்பெருமானைச் சரணமடைதலை அரமென்றதற்கேற்பக் கொடுவினைகளைச் செடியென்னாமையால்,
ஏகதேசவுருவகவணி. இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி காண்க.

இது, நேரசைமுதலாகிய கட்டளைக்கலித்துறை.

———————————————

20- கேசவனையே செவிகள் கேட்க திரு அரங்கத்து
ஈசனையே சென்னி இறைஞ்சிடுக நேசமுடன்
கண்ணனையே காண்க இரு கண் இணர் கொள் காயம் பூ
வண்ணனையே வாழ்த்துக என் வாய் –20-

(இ – ள்.) என் – எனது,
செவிகள் – காதுகள்,
கேசவனையே -,
கேட்க – கேட்பனவாக;
சென்னி – முடி,
திருவரங்கத்து ஈசனையே – ஸ்ரீரங்கநாதனையே,
இறைஞ்சிடுக – வணங்குவதாக;
இரு கண் – இரண்டு கண்களும்,
நேசமுடன் – பக்தியுடனே,
கண்ணனையே -,
காண்க – காண்பனவாக;
வாய் -,
இணர் கொள் – கொத்தாக மலர்ந்த,
காயாம்பூ வண்ணனையே – காயாமலர் போலுந் திருநிறமுடையவனையே,
வாழ்த்துக – வாழ்த்துவதாக. (எ – று.)

ஆத்மாக்களெல்லாம் இறகொடிந்தபட்சிபோல மூலப்பிரகிருதியிலே கிடந்து நோவுபடாநிற்கையில், அதனைக்கண்டு
எம்பெருமான் தனதுதிரு வுள்ளத்திற் கழிபேரிரக்கங்கொண்டு அவ்வுயிர்கள் தன்னையடைந்து உய்ய வேண்டுமென்று
திருவுள்ளம்பற்றி, கை கால் முதலிய உறுப்புக்களை யமைத்துச் சேதநர்களைப்படைத்தனனாதலின்
அவ்வாறு தோன்றியதன் பயனை இனியாவது பெறுவோமென்று “கேசவனையே செவிகள்கேட்க” என்பது
முதலியனவாக வேண்டிக்கொள்ளுகின்றன ரென்க.
அருமையான மனிதப் பிறப்பை யெடுத்ததற்குப் பயன் பரதேவதையான எம்பெருமானை மனத்தினால் நினைத்தலும்,
வாக்கினால் துதித்தலும், கைகளாற் பூசித்தலும், கால்களாற் பிரதக்ஷிணஞ்செய்தலும், தலையினால் வணங்குதலும்,
கண்களால் தரிசித்தலும், செவிகளால் அவன்புகழ்கேட்டலும், மூக்கினால் அவனதுநிர் மாலியமான பத்திரபுஷ்பாதிகளின்
திவ்வியகந்தத்தை மோந்துநுகர்தலுமே உரியனவென்க.

“அம்பரமு மட்புலனு முண்டுமிழ்ந்த மாயோனுருவ மல்லாற், கட்புலனும் வேற்றுருவங் காணற்க –
புட்புறத்து, மூர்த்திபுகழே முகப்பதல்லான் மற்றொருவர், கீர்த்தி செவிமடுத்துக் கேளற்க –
நீர்த்தரங் கப், பூவெடுத்த வெண்கோட்டுப் புண்ணியனை யல்லா தென், னாவெடுத்து வேறு நவிலற்க –
கோவெடுத்த, கங்கை யுலவுங் கழலினாற் கல்லாதென், செங்கை தலைமிசை போய்ச் சேரற்க –
பங்கயத்தா, டாக்குந் திருத்துழாய்த் தாமமண மல்லாதென், மூக்கும் பிறிதுமண மோவற்க –
மாக்கடல்போ, லஞ்சனவண்ண னடிக்கமல மல்லாதென், நெஞ்சமு மொன்றை நினையுற்க” என்னும்படியான
மனத்துணிவுடையராதலின், இவ்வாறு கூறினார்.

“வாழ்த்துக வாய் காண்ககண் கேட்கசெவி மகுடந்,
தாழ்த்து வணங்குமின் கள் தண்மலராற் – சூழ்த்த,
துழாய் மன்னுநீண்முடி என்தொல்லைமால் தன்னை,
வழாவண்கைகூப்பி மதித்து,”

“வாயவனையல்லது வாழ்த்தாது கையுலகந், தாயவனையல்லது தான்தொழா –
பேய்முலைநஞ், சூணாகவுண் டானுருவொடு பேரல்லாற், காணாகண் கேளாசெவி,”

“புள்ளூரும்பொன் மலையைக் காணாதார் கண்ணென்றுங் கண்ணல்ல கண்டாமே”,

“கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல்லான் மற்றுங் கேட்பரோ” என்பது முதலிய பெரியார் பாசுரங்கள் இங்குக் கருதத்தக்கன.

கேசவன் – பிரமனையும் உருத்திரனையுந் தனது அங்கத்திற் கொண்டவ னென்றும், அழகிய மயிர்முடியை யுடையவனென்றும்,
கேசியென்னும் அசுரனைக் கொன்றவனென்றும் பொருள்படும்.
காயா – ஓர்மரம். காயாம்பூ – மரப்பெயர்முன் இனமென்மை தோன்றிற்று. வண்ணம் – வர்ணம்.

“பேசவரிற் றென்னரங்கன் பேரெல்லாம் பேசுகவாய,
கேசவனைக் காண்கவிழி கேட்கசெவி – யீசனா,
ருண்டியூர்தோறு முழன்றிரவாமற் றவிர் த்தான்,
கண்டியூர் கூப்புக வென்கை” என்பதனோடு இதனை ஒப்பிடுக.

இது, இருவிகற்பத்தால் வந்து நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த நேரிசைவெண்பா.

——————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – 81-112-

February 17, 2022

திருவெட்டு எழுத்து -பெரிய திருமந்திரம்

நம் பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
சம்பரன் மாயம் புரோகிதர் சூழ் வினை தார் அணிவாள்
வெம்படை மாசுணம் மா மத வேழம் விடம் தழல் கால்
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே –81-

(இ – ள்.) சம்பரன் – சம்பரனென்னும் அசுரனது,
மாயம் – மாயையும்,
புரோகிதர் சூழ் வினை – புரோகிதர்கள் (கொல்லும்படி) ஆலோசித்துச் செய்த செயல்களும்,
தார் அணி வாள் வெம் படை – வெற்றிமாலையை யணிந்த வாள் முதலிய கொடிய ஆயுதங்களும்,
மாசுணம் – பெரும் பாம்பு களும்,
மா மதம் வேழம் – பெரிய மதயானைகளும்,
விடம் – விஷமும்,
தழல் – அக்கினியும்,
கால் – காற்றும்,
அம்பரம் – கடலும், முதலானவை -,
பாலனுக்கு – (திருவஷ்டாக்ஷரத்தின்மகிமையை அறிந்து உச்சரித்த) சிறுவனாகிய பிரகலாதாழ்வானுக்கு,
அஞ்சின – பயந்து நடந்தன; (என்றால்), –
நம்பெருமாள் – அந்த நம்பெருமாளது,
எட்டு எழுத்தின் – ஸ்ரீ அஷ்டாக்ஷர மந்திரத்தினது,
பெருமை – மகிமை,
நவிலுமதோ – (என்போல்வாராற்) சொல்லுந் திறமுடையதோ? (எ – று.)

புரோகிதர் – பின்னே வரும் நன்மைதீமைகளை முன்னேதெரிந்து சொல்பவர். இரணியன் பேச்சைக்கேட்டுப் பிரகலாதனைக்
கொல்லும்படி மகாமா யாவியான சம்பராசுரன்செய்த மாயைகளையெல்லாம் ஸ்ரீமந்நாராயணனது நியமநத்தினாலே
திருவாழியாழ்வான் அவனைப் பாதுகாக்கும்பொருட்டு அங்கே யெழுந்தருளித் தகித்துச் சாம்பராக்கிவிட்டதனால், சம்பரன் மாயமும்;
மிகவும் பயங்கரமாகக் காணப்படும்படி புரோகிதர் உண்டாக்கி மேலே யேவின கிருத்தியை வந்து ஒன்றுஞ் செய்யமாட்டாதே
திரும்பிப்போய் அப்புரோகிதர்மேலேவிழுந்து தகிக்க ஆரம்பித்ததனால், புரோகிதர்சூழ்வினையும்;
அங்கிருந்த அசுரர்களெல்லாரும் ஒன்றாய்ச்சேர்ந்து பலவித ஆயுதங்களை
யெடுத்துப் பிரகரித்துவதைக்கும்படி யத்தனிக்க அவன் அவற்றினாற் கிஞ்சித்தும் வேதனையுறாமல் விளங்கியதனால்,
தாரணிவாள்வெம்படையும்; தக்ஷகன் முதலான கொடிய மகாசர்ப்பங்கள் உக்கிரமான விஷங்களைக் கக்கிக் கொண்டுவந்து
அவனுடைய சகல அவயவங்களிலுங் கடிக்கவும் அவனுடையதேகத்திலுள்ள தோலிற் கிஞ்சித்தாயினுஞ் சேதமுண்டாகவில்லை யாகையால், மாசுணமும்;
திக்கஜங்கள் அவனைப் பூமியிலேவீழ்த்தித் தந்தங்களினாலேபாய்ந்து இடிக்க அத்தந்தங்கள் முறிந்து பொடியாய்ப் போனதனால், மாமதவேழமும்;
பாகஞ்செய்வோர் போஜனங்களிலெல்லாங் கலந்து கொடுத்த மகா விஷமானது அந்த நமோச்சாரணப்பரபாவத்தாலே நிர்வீரியமாகி
அவனுடைய உதரத்தில் ஜீர்ணமாய்விட்டதனால், விடமும்; அசுரர்கள் அக்கினியை வளர்த்தி அவனை அதிலே மறையவைத்து
அனலை மூட்டிக் கொளுத்த அவ்வக்கினி கொஞ்சமாகிலும் அவனைத் தகிக்கமாட்டாமல் அதிசீதளமானதனால், தழலும்;
ஸம்சோஷகனென்ற வாயு அதிகசீதளமும் அதிக உக்கிரமு முள்ளவனாகிச் சகிக்கக்கூடாத விதமாய்ப் பிரகலாதனுடைய
திருமேனிக்குள்ளே பிரவேசிக்க அந்தச் சம்சோஷகனை அவனதுஇருதயத்தி லெழுந்தருளி யிருந்த ஸ்ரீமதுசூதனன் விழுங்கி
ஒரு க்ஷணமாத்திரத்திலே நாசஞ்செய்தரு ளினதனால், காலும்; தைத்தியர்கள் நாகபாசங்களினாலே கட்டிக் கடலிலே போகட
அவன் அதில்வீழ்ந்து அசைந்துகொண்டு அதனைவிட்டுப் புறப்பட்டு வெளியில் வந்துவிட்டதனால், அம்பரமும் அஞ்சின வென்க.

இதனால், அநிஷ்டநிவாரணத்திற்குத் தப்பாத உபாயமான படியை விளக்கினாரென்க.
“முதலானவை” என்றதனால், பருவதம் முதலியன கொள்க.

பெரியதிருமந்திரத்தின் மகிமைக்கு ஓர் உதாரணம் எடுத்துக்காட்டிய வாறு; அதன் மகிமையை,
வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் சிறப்பித்துக் கூறியிருப்பனவற்றைச் சம்பிரதாய நூல்களிற் காணலாம்.
“ஸர்வவே தாந்தஸாரார்த்தஸ் ஸம்ஸாரார்ணவதாரக:- கதிரஷ்டாக்ஷரோந்ரூணா மபுநர்ப்பவகாங்க்ஷிணாம்”,
“ஆர்த்தாவிஷண்ணாஸ்ஸிதிலாஸ்சபீதா: கோரேஷு சவ்யாதிஷுவர்த்தமாநா:-
ஸங்கீர்த்ய நாராயண ஸ்ப்தமாத்ரம்விமுக்தது: காஸ்ஸுகிநோபவந்தி”,
“நாராயணேதிஸப்தோஸ்திவாகஸ்திவஸவர்த்திநீ – தாபிநரகேகோரேபதந்தீதிகிமத்புதம்” என்னும்
வடநூல் மேற் கோள்களால் அம்மந்திரோச்சாரணத்தின்பயனை அறிக.
“குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்படுதுயராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணா வென்னும்நாமம்” என்ற பெரியதிருமொழிப் பாசுரமும் இங்குக் கருதத்தக்கது.

————

துவாதசாஷர மகா மந்திரம் –

அத்தா அரங்கத்து அமர்ந்தவனே எழுத்து ஆறு இரண்டின்
வித்து ஆய நின் அருள் கொண்டு அல்லவோ -விளைவு ஓன்று அறிய
உத்தான பாதன் மகன் சலியாது உலகு உள்ளளவும்
எத்தார கைக்கும் முனிவர்க்கும் மெல் சென்று இருக்கின்றதே –82-

(இ – ள்.) அத்தா – தலைவனே!
அரங்கத்து அமர்ந்தவனே – திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கின்றவனே! –
விளைவு ஒன்று அறியா – உண்டாவதனைச் சிறிதும் அறியாத,
உத்தான பாதன் மகன் – உத்தானபாதமகாராசனது குமாரனாகிய துருவன்,
சலியாது – சஞ்சலமில்லாமல்,
உலகு உள்ள அளவும் – லோக முள்ளவரையிலும்,
எ தாரகைக்கும் முனிவர்க்கும் மேல் சென்று இருக்கின்றது – எல்லாநக்ஷத்திரங்களுக்கும் இருடிகளுக்கும் மேலான ஸ்தாநத்திற் போய் அடைந்திருக்கின்றது, –
எழுத்து ஆறு இரண்டின் – ஸ்ரீ துவாதசாக்ஷரமகாமந்திரத்தினது,
வித்து ஆய – விதையாகிய,
நின் அருள்கொண்டு அல்லவோ – உனது கருணையினாலன்றோ? (எ – று.)

துவாதசாக்ஷரமகாமந்திரத்தின் பிரபாவத்திற்கு ஓர்உதாரணம் எடுத்துக் காட்டியவாறு. அம்மந்திரம் –
“நிறைந்தமகிமை துணிவு கீர்த்தி ஐசுவரியம் ஞானம் வைராக்கியம் என்பவற்றையுடையனான வாசுதேவனுக்கு நமஸ்காரம்”
என்னும் பொருளையுடையது. தன்னை உச்சரித்து ஜபிப்பவர்க்கு இஷ்டசித்தியைக் கொடுக்கவல்லது.
துருவன் அந்தமந்திரத்தின் மகிமையால் விமானத்தின்மீது ஏறிக்கொண்டு தேவயாநமார்க்கமாய் நவக்கிரகங்களுக்கும்
மூன்றுலோகத்திற்கும் ஸப்தருஷிகளுடையஸ்தாநத்துக்கும் மேலேயுள்ள விஷ்ணுபதமென்கிற
இடத்திற் சேர்ந்தானென்பதை ஈற்றடியால் விளக்கினர்.
காமவெகுளிமயக்கங்களை யொழித்துப் பரம்பொருளினிடத்தே மனத்தை உறுதிப்படுத்திய யோகிகளுக்கு
இருவினைத்தொல்லைகள் யாவும் தொலைந்தபோது அடையத்தக்க இடம் அது.
அங்குச்சென்றவர்கள் மறுபடி பிறப்படையாமற் பிரமனுடனே முக்திபெறுவார்கள் என அறிக.
உத்தானபாதன் – சூரியகுலத்தில்தோன்றிய பிரசித்திபெற்ற ஓர் அரசன்.

விளைவு ஒன்று அறியா – இன்னது செய்தால் இன்னது வருமென்று அறியாத. இது – துருவனுக்கு அடைமொழி.
இவ்வடைமொழி, துருவனது தவஞ்செய்தற்குத் தகாத மிக்க இளமையைக் காட்டும்.
இனி, இவ்வடை மொழியை உத்தானபாதனுக்கே கூட்டவுமாம்; தனது மனைவியர் இருவரில் இளையாளிடத்து அன்புமிக்குப்
பக்ஷபாதமாகநடப்பது பெருந்தீங்கிற்குக் காரணமென்பதைப் பகுத்துணராமல் நடந்துகொண்டனனாதலின். “சலியாது” என்றது,
பிரமகற்பம்வரையில் துருவன் சிறிதும் ஊறடையாது நின்றமையை வற்புறுத்தும். உள்ளளவு – விகாரம்.

—————-

திருவாயுதங்கள்-

புடைக்கும் குடமுலைப் பூ மகளார் தம் பொருட்டு முந்நீர்
அடைக்கும் பெரிய பெருமாள் அரங்கர் அவர் கரத்துப்
படைக்கும் கமலம் அளிக்கும் மின் ஆழிப்படை படைக்கும்
துடைக்கும் கதை முத்தி மாற்றாது நல்கும் சுரி சங்கமே –83-

(இ – ள்.) புடைக்கும் – (மேன்மேற்) பருக்கின்ற,
குடம் முலை – குடம் போன்ற தனங்களையுடைய,
பூமகளார்தம் பொருட்டு – (இராவணனால் அபகரிக்கப்பட்ட) ஜாநகிப்பிராட்டியை மீட்பதற்காக,
முந்நீர் – கடலை,
அடைக்கும் – திருவணை கட்டியருளிய,
பெரிய பெருமாள் அரங்கர் அவர்-நம்பெருமாளது,
கரத்து – திருக்கையில்,
படைக்கும் – தரிக்கின்ற,
கமலம் – தாமரைமலர்,
அளிக்கும் – காக்கும்;
மின் ஆழி படை – மின்னல் போல விளங்குகின்ற சக்கராயுதம்,
படைக்கும்- (உலகங்களைச்) சிருஷ்டிக்கும்;
கதை – கதாயுதம்,
துடைக்கும் – அழிக்கும்;
சுரி சங்கம் – உள்ளே சுழியைக் கொண்ட வலம்புரிச்சங்கம்,
முத்தி – பரமபதத்தை,
மாற்றாது – கைம்மாறு கருதாமல்,
நல்கும் – கொடுக்கும்; (எ – று.)

பூமகள் – தாமரைப்பூவிலுள்ள திருமகள்; சீதாபிராட்டி இலக்குமியின் அம்சமானவளென்பதுபற்றி, இவ்வாறு கூறியது;
அன்றிக்கே, பூ- வடசொல் லாய், பூமியின்மகள்; இது, அப்பிராட்டி கலப்பை யுழு படைச்சாலினின்று தோன்றியவளென்பதைச் சுட்டும்.
“யோகிகள் ஸ்ரீமகாவிஷ்ணுவைத் தியானிக்கும் போது சதுர்ப்புஜபக்ஷத்தில், சங்கசக்கரகதைகளும்
தாமரைமலரும் ஏந்தியதாய்த் தியானிக்கவேண்டும்” என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் கூறுமாறு காண்க.

———

திருச் சக்கரப்படை –

ஞாலத் திகிரி முது நீர்த் திகிரி நடாத்தும் இந்தக்
காலத் திகிரி முதலான யாவும் -கடல் கடைந்த
நீலத் திகிரி அனையார் அரங்கர் நிறைந்த செங்கைக்
கோலத் திகிரி தலை நாளினில் கொண்ட கோலங்களே –84-

(இ – ள்.) ஞாலம் திரிகி – பூசக்கரமும்,
முதுநீர் திகிரி – ஜலசக்கரமும்,
நடாத்தும் – (இவற்றை) நடத்துகின்ற,
இந்த காலம் திகிரி – இந்தக்காலசக்கரமும்,
முதலான – முதலிய,
யாவும் – எல்லாம், –
கடல் கடைந்த – திருப்பாற் கடலைக் கடைந்தருளிய,
நீலம் திகிரி அனையார் – நீலமலையை யொத்தவராகிய,
அரங்கர் – அரங்கநாதரது,
நிறைந்த – (உத்தமவிலக்கணங்கள்) அமைந்த,
செம் கை – சிவந்த வலத்திருக்கையிலே தரித்த,
கோலம் திகிரி – அழகிய சக்கரம்,
தலைநாளினில் – முற்காலத்தில்,
கொண்ட – எடுத்த,
கோலங்கள் – திருவுருவங்களாம்; (எ – று.)

இதனால், காலசக்கரம் முதலிய எல்லாவற்றிற்கும் திருவாழியாழ்வானே முதற்காரணமென்று கூறியவாறு.
முன்செய்யுளால் திருமால் தமது திருக்கைகளிலேந்திய ஆயுதங்களின்தன்மைகளைப் பொதுவாகக்கூறி,
இச்செய்யுளினாலும் அடுத்த செய்யுளினாலும் திருச்சக்கரத்தின் தன்மையைச் சிறப்பாகக் கூறுகின்றன ரென்க.

வட்டவடிவாயிருத்தலாலும், வட்டமாகச் சூழ்ந்திருத்தலாலும், மாறி மாறிச் சுழன்றுவருதலாலும் –
ஞாலமும், நீரும், காலமும், “திகிரி” எனப்பட் டன. முதுநீர் – கடல்; பழைய நீர்.
“காலத்தினாலேயே மலைகள் சமுத்திரங்கள் முதலான சகல சராசரங்களுக்கும் வளர்தல் நசித்தல் முதலானவை உண்டாகும்” என்று
புராணங்களிற் கூறுதலால், “நடாத்துமிந்தக் காலத்திகிரி” என்றார்.
“முதலான” என்றதனால், சிம்சுமாரசக்கரம் முதலியன கொள்க.

————–

இதுவும் அது –

மோதித் திரை தவழ் நல் நீர் அரங்கர் முடி முதலாம்
சாதிக் கதிர் மணிப் பேர் அணி ஆகி தனஞ்செயன் போர்
பேதித்து இரவு பகல் ஆக விண்ணில் பிறழ்ந்து செங்கேழ்ச்
சோதித் திகிரி திருமேனி எங்கும் சுடர் விடுமே –85-

(இ – ள்.) திரை மோதி தவழ் – அலை யெறிந்து வருகின்ற,
நல் நீர் – நல்ல காவேரிநதியாற் சூழப்பட்ட,
அரங்கர் – திருவரங்கத்துநாதரது,
செம் கேழ் சோதி – சிவந்த நிறமமைந்த ஒளியையுடைய,
திகிரி – சக்கரமானது, –
முடி முதல் ஆம் -கிரீடம்முதலிய,
சாதி கதிர் மணி பேர் அணி ஆகி – சிறந்த ஆகரத்தில்தோன்றிய ஒளியையுடைய இரத்தினங்களாலாகிய பெரிய ஆப ரணகோடியிலேயாகி,
தனஞ்சயன் போர் – அருச்சுனனுடைய (பதினான்கா நாள்) யுத்தத்தில்,
பகல் இரவு ஆக – பகல் இரவாகும்படி,
பேதித்து – வேறுபடுத்தி,
விண்ணில் – ஆகாயத்தில்,
பிறழ்ந்து – விளங்கி,
திருமேனி எங்கும் – (அவரது) திருமேனி முழுவதிலும்,
சுடர் விடும் – ஒளிவீசும்; (எ – று.)

எம்பெருமானது திவ்வியாயுதங்கள் அன்பர்கட்கு ஆபரணகோடிகளா கத் தோன்றி அல்லாதார்க்கு ஆயுதமாக நின்று
நிரசனஞ்செய்யு மென்னும் வரலாறு விளக்கப்பட்டது. தநஞ்ஜயன் – சயத்தையே தனமாகவுடையவன்; வடசொல்:
தருமபுத்திரன்செய்த இராஜசூயயாகத்திற்காக அருச்சுனன் பலதேசத்தரசர்களையும் வென்று
மிக்கபொருள் கொண்டுவந்ததனால், அவனுக்குத் தநஞ்ஜயனென்று பெயர்.

———

திரு வநந்த வாழ்வான் –

ஓல் ஆழி சூழ் புவி உச்சியில் ஏந்தும் உகக் கடையில்
கால் ஆன நற்குண மூர்த்தியைக் காலும் அக்காலம் எல்லாம்
மேலா விளங்கும் புவி மீதில் என் தன் விழுத்துணை ஆம்
மால் ஆம் அரங்க மணவாளர் கண் துயில் மாசுணமே –86-

(இ – ள்.) என்தன் விழு துணை ஆம் – எனது சிறந்த துணையாகிய,
மால் ஆம் – ஆச்சரிய குணசேஷ்டிதரான,
அரங்கம், மணவாளர் – திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற அழகியமணவாளப்பெருமாள்,
கண் துயில் – யோகநித்திரை செய்தற் கிடமாகிய,
மாசுணம் – பெரும்பாம்பு (ஆதிசேஷன்), –
ஓல் ஆழி சூழ் புவி – ஆரவாரத்தையுடைய கடல் சூழ்ந்த பூமியை,
உச்சியில் ஏந்தும் – (தனது) முடிமேல் தாங்கும்;
உகம் கடையில் – யுகாந்த காலத்தில்,
கால் ஆன நல் குணம் மூர்த்தியை காலும் – (தன்) சுவாசத்தினின்றும் பொருந்திய நல்ல குணங்களையுடைய காலாக்கினிருத்திர மூர்த்தியை உண்டாக்கும்;
அ காலம் எல்லாம் – அந்தப்பிரளயகாலமுழுதும்,
புவிமீதில் மேலா விளங்கும் – பூமியின்மேல் வந்து விளங்கும்; (எ – று.)

பிரளயகாலத்தில் ஆதிசேஷன் தன்சுவாசத்தினின்றும் பகவானுடைய அம்சமாகிய காலாக்கினிருத்திரனை யுண்டாக்கிப்
பாதாளங்களை யெல்லாந் தகித்துக்கொண்டு பூமிக்கும் வந்து அதனையுங் கொளுத்திவிடு மென்பதாம்.
ஓல் – ஓலம் என்பதன் கடைக்குறை. விழு – விழுமம் என்ற உரிச்சொல்லின் சிதைவு;
“விழுமம் சீர்மையுஞ் சிறப்பு மிடும்பையும்” என்பது தொல்காப்பியம்.

———-

இதுவும் அது –

சென்றால் குடை ஆம் கடல் புணை ஆம் திருத் தீவிகை ஆம்
நின்றால் இரு திருப் பாதுகை ஆம் நித்திரைக்கு அணை ஆம்
குன்றா மணி ஒளி ஆசனம் ஆம் புனை கோசிகை ஆம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசற்கு அரவு -அரசே –87-

(இ – ள்.) அன்று – அக்காலத்தில் (பிரளயகாலத்தில்),
ஆல்இலையில் -, துயில் – யோகநித்திரை செய்தருளுகின்ற,
அரங்கேசர்க்கு – திருவரங்கநாதனுக்கு, –
அரவு அரசு – (அவரும் பெரியபிராட்டியாருங் கூடிக் கண்ணற்றுத் துகைத்துப் பரிமாறுகைக்கு யோக்கியமான வடிவையுடைய) திருவனந்தாழ்வான், –
சென்றால் – (உகப்புக்குப் போக்குண்டாக அவர்) உலாவியருளப் புக்கால்,
குடை ஆம் – (மழை வெயில் படாதபடி) குடையாகும்;
கடல் – கடலிலே (கண்வளர்ந்தருளும் போதைக்கு),
புணை ஆம் – திருப்பள்ளிமெத்தை யாகும்;
திரு தீவிகை ஆம் – (ஏதேனுமொன்றை விளக்கிட்டுக்காண அபேக்ஷிதமான போது) மங்களதீபமாகும்;
நின்றால் – (ஸ்வேச்சையாலே) எழுந்தருளி நின்றால்,
இரு திரு பாதுகை ஆம் – இரண்டு திருவடிநிலைகளாகும்;
நித்திரைக்கு அணை ஆம் – (சாய்ந்தருளின போதைக்குப் பிராட்டிமார் சீறுமாறு என்னும்படி) திருவணையாகும்;
குன்றா மணி ஒளி ஆசனம் ஆம் – (தன்னிச் சையாலே எழுந்தருளியிருந்தாற்) குறைவுபடாத ஒளியினையுடைய இரத்தினமயமான திவ்விய சிங்காசனமாகும்;
புனை கோசிகை ஆம் – (சாத்தியருளத் திருப்பரியட்டம் அபேக்ஷிதமான சமயத்தில் பும்ஸ்த்வாவஹமாகிய) அழகிய திருப்பரியட்டமாகும்; (எ – று.)

திருவநந்தாழ்வான் எம்பெருமானுக்குப் பலவகைக் கைங்கரியங்களை யுஞ் செய்தலை இங்கு எடுத்துக் கூறினார்.

“சென்றாற் குடையாம் இருந்தாற் சிங்காசனமாம்,
நின்றான் மரவடியாம் நீள்கடலு – ளென்றும்,
புணையாம் மணிவிளக்காம்பூம்பட்டாம்புல்கு,
மணையாம் திருமாற் கரவு” என்றார் பெரியாரும்.

இப்படித் திருவனந்தாழ்வான் மிக்க உவப்போடு பலவடிவங்களை யெடுத்துக்கொண்டு எம்பெருமானுக்கு
ஸேஷவ்ருத்திகளை (அடிமைத்தொழில்களை)ச் செய்வதனால்தான், “சேஷன்” எனப்படுகின்றான்;
இங்கு, “நிவாஸ ஸய்யா ஸந பாதுகாம்ஸீக உபதாநவர்ஷாதபவாரணாதிபி:
ஸரீர பேதைஸ் தவ ஸேஷதாம்கதை: யதோசிதம் ஸேஷ இதீர்யதேஜநை:” என்ற ஆசார்ய ஸூக்தியும் உணர்க.
புணை – தெப்பம். தீவிகை – தீபிகை. பாதுகை – மரவடி. கோசிகை – பட்டாடை. அரவரசு – சர்ப்பராஜன்

இச்செய்யுளில் “அரங்கேசர்க்குஅரவரசு” என்னுஞ் சொற்கள் முன்னர்ப் பலவிடத்துஞ்சேர்ந்து கடைநிலைத்தீவகவணியின்பாற்படும்.

———–

பெரிய திருவடி

சிரம் சேதனன் விழி தேகம் சிறை பின் சினை பதம் கந்
தரம் தோள்கள் ஊரு வடிவம் பெயர் எசுர் சாமமும் ஆம்
பரந்தே தமது அடியார்க்கு உள்ள பாவங்கள் பாற்றி அருள்
சுரந்தே அளிக்கும் அரங்கர் தம் ஊர்திச் சுவணனுக்கே–88-

(இ – ள்.) தமது அடியார்க்கு – தமது பக்தர்களுக்கு,
பரந்து உள்ள – பரவி யிருக்கின்ற,
பாவங்கள் – தீவினைகளை,
பாற்றி – அழியச்செய்து,
அருள் சுரந்து அளிக்கும் – கருணை பொழிந்தருளுகின்ற,
அரங்கர்தம் – நம்பெருமாளது,
ஊர்தி – வாகனமாகிய,
சுவணனுக்கு – பெரிய திருவடிக்கு, –
சிரம் – தலை,
சேதனன் – உயிர்,
விழி – கண்கள்,
தேகம் – உடல்,
சிறை – சிறகுகள்.
பின் சினை – பின்புறம்,
பதம் – பாதங்கள்,
கந்தரம் – கழுத்து,
தோள்கள் -,
ஊரு – தொடை,
வடிவம் – உருவம்,
பெயர் – திருநாமம், (இவைகளெல்லாம்),
எசுர் சாமமும் ஆம் – யஜுர்வேதம் ஸாமவேதம் இவற்றின் ஸ்வரூபங்களாம்; (எ – று.)

கருடன் வேதமயனானதனால், இவ்வாறு கூறினார். “வேதாத் மாவிஹகே ஸ்வர:” “வன்னாதப்புள்” என்றார் பெரியாரும்.
“கருத்மானுக்கு த்ருவ்ருத் தென்பது சிரஸ், ஸ்தோமமென்பது ஆத்மா, காயத்ரினென்பது கண்,
ஸாமமென்பது உடல், ப்ருஹத் ரதந்தரம் என்பவை இரண்டும் இரண்டு சிறகுகள்,
யஜ்ஞாயஜ்ஞியமென்பது தோகை, மற்றைச் சந்தஸுகள் மற்றையவுறுப்புக்கள், பெயர் யஜுஸுக்கள்” என்று
வேதத்திலேயே கூறப் பட்டிருக்கின்றது; ஆகவே, இச்செய்யுள் மறைப்பொருளாதல் காண்க.
கந்தரம் – தலையைத் தரித்துநிற்பது எனக் கழுத்துக்குக் காரணப்பெயர்; கம் – தலை.
சுவணன் – ஸுபர்ணன் என்பதன் சிதைவு; அழகிய இறகுகளை யுடையவனென்பது அவயவப்பொருள்.
ஊர்தி – ஏறிநடத்தப்படுவதெனக் காரணக்குறி.

————-

சேனை முதலியார் –

ஆளில் அமரர் அரங்கேசர் சேவைக்கு அணுகும் தொறும்
கோளின் திரளை விலக்கும் பிரம்பின் கொனை படலால்
தோளில் அடித் தழும்பு உண்டு அச்சுரர்க்கு அச்சுரர் தொழலால்
தாளில் முடித் தழும்பு உண்டு நம் சேனைத் தலைவருக்கே –89-

(இ – ள்.) அமரர் – தேவர்கள்,
ஆளில் – அடிமைசெய்வதற்காக,
அரங்கேசர் – நம்பெருமாளது,
சேவைக்கு -,
அணுகும் தொறும் . சமீபிக்கும் பொழுதெல்லாம்,
கோளின் – வலிமையுடைய,
திரளை – கூட்டத்தை,
விலக்கும். விலக்குகின்ற,
பிரம்பின் -(ஸ்ரீசேனைமுதலியாரது திருக்கையில் தரித்த பிரம்பினது,
கொனை – நுனி,
படலால் – தாக்குதலால், –
அ சுரர்க்கு – அந்தத் தேவர்களுக்கு,
தோளில் -,
அடி தழும்பு – அப்பிரம்படிபட்ட காயம், உண்டு –
அ சுரர் தொழலால் – அத்தேவர் வணங்குதலால், நம் சேனைத்தலைவருக்கு நமது சேனைமுதலியாருக்கு,
தாளில் – திருவடிகளில்,
முடி தழும்பு – (அத்தேவர்களது) கிரீடங்கள் பட்ட காயம், உண்டு -; (எ – று.)

சேனைத்தலைவர் – பரமபதத்திலுள்ள நித்தியமுக்தர்களின் திரளுக்குத் தலைவர், சேனாபதியாழ்வார்:
இவர், விஷ்வக்ஸேநரென்றுங் கூறப்படுவர் எக்காரியம் தொடங்கினாலும் அத்தொடக்கத்தில் விக்கின நிவிருத்தியின்
பொருட்டுச் சைவர்கள் விநாயகபூஜைசெய்வது போல வைஷ்ணவர்கள் விவ்வக்ஸேநாராதநஞ் செய்யவேண்டுதல் மரபாதலை அறிக.
நமதுகுருபரம்பரையில் எம்பெருமான் பிராட்டிகட்குப்பின்னே நம்மாழ்வார்க்கு முன்னேவிளங்கும் பிரதான ஆசாரியர் இவர்.
எம்பெருமானது திருவோலக்கத்தில் சேவிப்பதற்கு நெருங்கிவரும் தேவர்களின் திரளை விலக்கும்போது
இவரது கைப்பிரம்பினடி அத்தேவர்களின் தோள்களிலும், அவர்கள் இவரைச் சாஷ்டாங்கமாக வணங்குகையில்
அவர்களதுமுடித்தழும்பு இவரதுதிருவடிகளி லும் விளங்குமென்று சமத்காரமாகக் கூறப்பட்டது.

————-

சிறிய திருவடி –

ஆதித் திரு எழுத்து ஐந்து உடைத்தாயும் அரா அணிந்தும்
சோதித் திருக் கண்கள் மூன்றுடன் தோன்றும் சுருதி சொன்ன
நீதிக்கு இசைய நடவா மனிதரை நேமி கொண்டு
வாதித் தருளும் பெருமாள் அரங்கர் தம் வாகனமே –90-

இ – ள்.) சுருதி சொன்ன – வேதங்கள் கூறிய,
நீதிக்கு – விதிவிலக் குக்களுக்கு,
இசைய – பொருந்தும்படி,
நடவா – நடவாத,
மனிதரை -,
நேமி கொண்டு – சக்கரத்தால்,
வாதித்தருளும் – அழித்தருளுகின்ற,
பெருமாள் அரங்கர்தம் – நம்பெரியபெருமாளது,
வாகநம் – வாகனமாகிய சிறியதிருவடி, –
ஆதி திரு எழுத்து ஐந்து உடைத்துஆயும் – முதன்மையாகிய பஞ்சாக்ஷரமகா மந்திரத்தை யுடையதாகியும்,
அரா அணிந்தும் – சர்ப்பங்களை ( ஆபரண மாக) அணிந்தும்,
சோதி திரு கண்கள் மூன்றுடன் – (சூரிய சந்திர அக்கினிக ளென்னும்) முச்சுடர்வடிவமாகிய மூன்று திருக்கண்களோடும், தோன்றும் -; (எ – று.)

திருவெழுத்தைந்து – பஞ்சாக்ஷரமகாமந்திரம்; இது, சிவபிரானுக்கு உரியது. சோதித்திருக்கண்கள்மூன்று-
“இறைவனுக்குக் கண்மூன்றும் முச் சுடர்.” இராவணனது இம்சையைப் பொறுக்கமாட்டாமல் தேவர்கள்
யாவரும் திருமாலைச் சரணமடைய, அப்பெருமான் தான் தசரதமகாராஜனுக்குப் புத்திரனாகத் திருவவதரிப்பதாக வாக்களித்து,
தேவர்களை அக்காலத்துத் தனக்குத்துணையாக உதவும்படி கட்டளையிட்டபடியே தேவர்கள் வானரசாதியிற் பலபடியாகப் பிறக்கையில்
சிவபெருமான் தனது அம்சத்தினால் அநுமானை உண்டாக்கினனென்பது, வரலாறு.
சிறியதிருவடி பரமசிவனது அம்சமாதலால், இவ்வாறு கூறினார்;
அதனை, “புராரிமற் றியானே வாத, சேயெனப்புகன்றான்” எனக் கம்பராமாயணத்திற் கூறியதனாலு முணர்க.
இனி, வாதித்து அருளும் எனப் பிரித்து, துஷ்டர்களை நிக்கிரகித்துச் சிஷ்டர்களைப் பரிபாலிப்பவ ரென்றுமாம்.
ஸ்ருதி என்ற வடசொல்லுக்கு – எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்யகிரமத்திற் கர்ணபரம் பரையிற் கேட்டேவருவது என்று அவயவப்பொருள்.
வாஹநம் – வடசொல்; தாங்குவது என்று பொருள்.

———-

இதுவும் அது –

வல் ஆம் முலைத் திருவின் பெருமான் விட்ட வாகனம் போய்
தொல் ஆழி நீரைக் கடந்தது தாளின் சுடர் இரண்டும்
செல்லாத ஊரைத் திரி புரம் கண்டது சேனை வெள்ளம்
எல்லாம் உயக் கொண்டது மருந்து ஆர் கிரி ஏந்தி வந்தே –91-

(இ – ள்.) வல் ஆம் முலை – சூதாடுகருவியை யொத்த தனங்களையு டைய,
திருவின் – திருமகளுக்கு,
பெருமான் – தலைவனாகிய நம்பெருமாள்,
விட்ட – (ஸ்ரீராமாவதாரத்திற் சாநகியைத் தேடுவதற்காக) அனுப்பிய,
வாகனம் – தமது வாகனமாகிய சிறிய திருவடி, –
போய் -,
தொல் ஆழி நீரை – பழைய சமுத்திரஜலத்தை,
தாளின் – தனது பாதங்களால்,
கடந்தது – தாண்டிற்று;
சுடர் இரண்டும் செல்லாத ஊரை – சூரியசந்திரர் இருவரும் (இராவணாஜ்ஞையாலே) நுழைந்து மறியாத இலங்கையை,
திரிபுரம் கண்டது – திரிபுரங்களைப்போல எரியச்செய்தது; (அவ்விலங்கையில் யுத்தம்நடந்த பொழுது),
மருந்து ஆர் கிரி – (ஸஞ்சீவிநியென்னும்) ஓஷதியுள்ள (துரோணமென்னும்) மலையை,
ஏந்தி வந்து – எடுத்துக்கொண்டுவந்து,
சேனை வெள்ளம் எல்லாம் – (ஸ்ரீராமபிரானது எழுபது) வெள்ளஞ் சேனைகளையும்,
உய கொண்டது – பிழைக்கச்செய்தது; (எ – று.)

இச்செய்யுளில் அநுமான்செய்த செயற்கருஞ்செயல்களுள் மூன்றைக் கூறி அவனது பேராற்றலை விளக்கியவாறு.
வல் – மெய்யுவமை; இனி, வலிமையாகிய என்றுமாம். “சுடரிரண்டுஞ்செல்லாத” என்றது,
சூரிய சந்திரர்கள் பிறவிடங்களிற்போலத் தமது மிக்கவெப்பத்தோடுந் தட்பத்தோடுஞ் செல்லாமல்
இலங்கையில் இராவணனிடத்து அச்சத்தால் ஒடுங்கிச்செல்வ ரென்னுங் கருத்தால். முச்சுடர்களுள் இருசுடர் செல்லாத ஊரை
அநுமான் மற்றொரு சுடருக்கு வசமாக்கினன் என்பதாம். அநுமான் மருந்து மலையை ஏந்தி வந்தது,
இராமன் முதலியோர் இந்திரஜித்தின் அஸ்திரங்களால் மூர்ச்சித்துக்கிடந்தபொழுதி லென்க. வெள்ளம் – ஒருபெருந்தொகை.

————-

ஸ்ரீ வைகுண்டம் –

தொல்லைக் கமடத் தலம் நவ கண்டம் தொடு கடல் நீர்
எல்லைக் கிரி தனக்கு இப்புறத்து எண் கிரி அப்புறத்தின்
மல்லைப் பரிதியின் மண்டலம் நாகம் அவ்வான் முகட்டூ ஊர்
அல் அப்புறத்து வைகுந்தம் பொற் கோயில் அரிக்கு இடமே –92-

(இ – ள்.) (முதலில்), தொல்லை கமடம் தலம் – ஆதிகூர்மந் தாங்குகின்ற கீழுலகம்;
நவ கண்டம் – (அதன்மேல்) ஒன்பது கண்டங்கள்;
தொடு கடல் நீர் – (அவற்றைச் சூழ்ந்த) சமுத்திர ஜலம்;
எல்லை கிரி – (அவற்றைச் சூழ்ந்த) சக்கரவாள பருவதம்;
தனக்கு – அதற்கு,
இப்புறத்து – இப்புறத்தில்,
எண்கிரி – அஷ்டகுல பர்வதங்கள்;
அப்புறத்தில் -,
மல்லை பரிதியின் மண்டலம் – வட்டமாகிய சூரியமண்டலம்;
நாகம் – (அதன்மேல்) சுவர்க்கலோகம்;
அ வான் முகடு ஊர் – (அதன்மேல்) அம்மேலுலகங்களினுச் சியிலுள்ள சத்தியலோகம்;
அல் – (அதற்கு வெளியில்) அந்தகாரம்;
அப்புறத்து அதற்குமே லுள்ள,
வைகுந்தம் – ஸ்ரீவைகுண்ட மென்னும் நகரமானது -,
பொன் கோயில் அரிக்கு – அழகிய திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற நம்பெருமாளுக்கு,
இடம் – (பரத்துவம் விளங்கும்படி) எழுந்தருளியிருக்கும் தலமாம்; (எ – று.)

ஐயங்கார் வைகுண்டம் இன்னவிடத்திலுள்ளதென்று ஒருவாறு ஊகித் துணர்தற்பொருட்டுப் பூகோளநிலையை
இப்பாசுரத்திற் சுருக்கிக் கூறுகின்றார்;
எல்லாவற்றிற்குங் கீழிருந்துகொண்டு உலகங்களையெல்லாம் ஆதிகூர்மம் தாங்குகின்றது;
அவற்றையடுத்து அதலம் முதலிய கீழேழுலகங்கள் இருக்கின்றன:
அவற்றிற்குமேல் அஷ்டகுலாசலங்களோடுங் கூடிய ஜம்பூ த்வீபம் முதலிய நவத்வீபங்களைக் கொண்ட பூமி
பெரும்புறக்கடலினாலும் சக்ரவாளமலையினாலும் சூழப்பட்டதாயிருக்கின்றது;
இதற்குமேல் சூரிய மண்டலமும் அப்பால் புவர்லோகம் முதல் ஸத்யலோகம் ஈறாக வுள்ள லோகங்களும் இருக்கின்றன:
இவ்விடத்தோடு ப்ரக்ருதிமண்டலம் முடிந்திடுத லால் அந்தகாரமயமான வெளியொன்று அங்கு இருக்கின்றது;
அப்பால், தேஜோமயமாயும் ஆநந்தமயமாயு முள்ள திருமாலின் ஸ்ரீவைகுண்டலோக மென்பது இருக்கின்ற தென்பதாம்;
இம்முறையே உலகம் அமைந்திருப்ப தென்பதை ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய நூல்களிற் காணலாம்.

எம்பெருமானது ஐவகைநிலைகளுள் பரத்துவநிலை விளங்குந் தானம் இது.
வைகுந்தம் – வைகுண்டம் என்ற வடசொல்லின் திரிபு.
தடையென்னும் பொருளுடைய “குடி” என்னும் வடமொழித்தாதுவினடியாப்பிறந்து “வி” என்னும் எதிர்மறை
யுபசர்க்கம்பெற்ற “விகுண்டா:” என்ற பதம் ஞானசக் தியாதிகளில் தடையில்லாத நித்தியசூரிகளைக் குறிக்கும்;
அவர்கள் வாழ்கி ன்றதானம் – வைகுண்டம்;
இனி, ஞானசக்தியாதிகளில் தடையில்லாத எம்பெருமானது தானமென்றும் பொருள்கூறுவர் ஆன்றோர்.
இன்னும், இச்சொல்லுக்கு – ஒருகாலத்தில், திருமால் தன்னைப் புதல்வனாகப்பெற விரும்பித் தன்னைக்
குறித்துத்தவஞ்செய்த சுப்பிரமுனிமனைவியான விகு ண்டை யென்பவளிடத்தில் ஒரு குமாரனாக அவதரித்ததனால்,
அப்பெருமா னுக்கு “வைகுண்டன்” என்று ஒருதிருநாமம்.
அப்பெயர்தானே அவளது வேண்டுகோளின்படி அவனது உலகத்துக்கும் பெயராக இட்டு வழங்கப் பட்டது என்று கூறப்படுவதும் காண்க.

நவகண்டம் – இந்திரம், கசேரு, தாமிரபருணம் கபஸ்திமான், நாகம், சவுமியம், காந்தருவம், வாருணம், பாரதம்என்பன;
கீழ்விதேகம், மேல் விதேகம், வடவிதேகம், தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரேபதம், வடபரதம், தென்பரதம், மத்திமம் என்பாருமுளர்.
அரி – ஹரி, (அடியவர் அருவினைகளை) அழிப்பவன்; அன்றிக்கே, (துஷ்டர்களை) நிக்கிரகிப்பவன்.
தொடுகடல் – (சகரபுத்திரர்களால்) தோண்டப்பட்ட கடல்.

————

இதுவும் அது

எந்த உலகத்தும் மேலது நித்திய இன்பத்தது
பந்தம் நசிப்பது நித்தரும் முத்தரும் பாரிப்பது
முந்தை மறையின் நின்று அல்லாது எத்தேவர்க்கும் முன்ன அரிது
அந்தம் இலது அரங்கன் மேவு வைகுண்ட மானதுவே –93-

(இ – ள்.) அரங்கன் -, மேவு – எழுந்தருளியிருக்கின்ற,
வைகுந்த மானது – ஸ்ரீவைகுண்ட லோகமானது –
எந்த உலகத்தும் மேலது – எல்லாவுலகங்கட்கும் மேலிடத்திலுள்ளது;
நித்தியம் இன்பத்தது – எப்பொழுதும் அழியாதுள்ள பேரின்பத்தையுடையது;
பந்தம் நசிப்பது – (அங்குச் செல்பவர்க்கு) ஸம்ஸார பாசபந்தம் அழியப்பெறுவது;
நித்தரும் முத்தரும் பாரிப்பது – நித்தியர்களும் முக்தர்களும் வாழப்பெறுவது;
முந்தை மறையின் நின்று அல்லாது – பழமையாகிய வேதங்களைக்கொண்டல்லாமல், (வேறு வகையால்),
எ தேவர்க்கும் – எத்தகைய தேவர்களுக்கும்,
முன்ன அரிது – நினைத்தற்கும் அரிய தன்மையது;
அந்தம் இலது – அழிவில்லாதது; (எ – று.)

மேலது – மேற்பட்ட தன்மைய தென்றுமாம். நித்தியவின்பம் – என்றும் அழியாத நிரதிசயப்பேரின்பம்.
பந்தம் – கட்டு; பந்தமாவது – மனைவி மக்கள் வீடு செல்வம் முதலிய சம்பந்தமுடைய பொருள்களிடத்து உண்டாகும் மனப்பிணிப்பு.
வேதம் எல்லா நூல்கட்கும் மூலகாரணமானதாதலின், அதனை, “முந்தைமறை” என்றார்.
நித்தியர் – ஸ்ரீவைகுண்டத்திலே நிலையாக வாழ்கின்ற அநந்த கருட விஷ்வக்ஸேநாதியர்.
முக்தர் – இவ்வுலகங்களினின்று வீடுபெற்றவர். சிந்தையும் மொழியுஞ் செல்லாநிலைமைத் தாதலால், “முன்னவரிது” என்றார்.
வேதங்களின் உதவியினாலேயே முக்தியுலகம் கிடைக்கக்கூடியதென்பது, மூன்றாமடியின் கருத்து.

————-

திருப் பாற் கடல் –

காவும் சுரபியும் சிந்தா மணியும் கடிக் கமலப்
பூவும் பணிலமும் பொங்கு இள மாவும் புகர்த்தடக்கைம்
மாவும் பிறையும் அமுதமும் எங்கன் மதில் அரங்கர்
மேவும் தரங்கக் கடல் இல்லை யாகில் இவ் விண்ணகர்க்கே –94-

(இ – ள்.) மதில் அரங்கர் – ஏழு மதில்கள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்,
மேவும் – (வியூகநிலையிற்) பள்ளிகொண்டருளு கின்ற,
தரங்கம் கடல் – அலைகளையுடைய திருப்பாற்கடல்,
இல்லைஆகில் -,
இ விண்ணவர்க்கு – இந்தத்தேவர்களுக்கு,
காவும் – கற்பகச்சோலையும்,
சுரபியும் – காமதேனுவும்,
சிந்தாமணியும் – சிந்தாமணி யென்னு மிரத்தினமும்,
கடி கமலம் பூவும் – வாசனையையுடைய தாமரைமலரின் பேர்கொண்ட பதுமநிதியும்,
பணிலமும் – சங்கநிதியும்,
பொங்கு இள மாவும் – விளங்குகின்ற இளைய (உச்சைச்சிரவமென்னுங்) குதிரையும்,
புகர் தட கை மாவும் – செம்புள்ளிகளையுடைய பெரிய துதிக்கையையுடைய (ஐராவதமென்னும்) யானையும்,
பிறையும் – சந்திரனும்,
அமுதமும் -,
எங்ஙன் – (இவையெல்லாம்) எங்கிருந்து உண்டாகும்? (எ – று.)

எம்பெருமான் திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டிருத்தலின் அவனது சம்பந்தத்தால் பாற்கடலினின்று தேவர்கட்கு
இன்றியமையாத எல்லாப் பொருள்களும் உண்டாயின என்பதாம்.
திருப்பாற்கடல் – திருமாலினது ஐவகைநிலையுள் வியூகநிலை விளங்குந் தானம்.
கடி – விளக்கமுமாம். கமலப்பூ திருமகளுக்கு ஆசனமாகவிருந்த செந்தாமரைமல ரென்றுமாம்.
இவையெல்லாம், எம்பெருமான்திருவருளால் அவனது சயனத்தலமான திருப்பாற்கடலைக் கடையும்போது
அதனினின்று உண்டான தேவலோகத்துச் செல்வங்கள்.

———-

ஏழு மதில்களும் திருவரங்க விமானமும்

அருமறை ஓதிய ஓர் எட்டு எழுத்தும் அயன் படைத்த
இரு நில மீதினில், யாவரும் காண இலங்குதுத்திக்
குரு மணி நாகத்தில் எம் கோன் விழி துயில் கொண்டருள
திரு மதில் ஏழும் விமானமும் ஆகிச் சிறக்கின்றவே –95-

(இ – ள்.) அரு மறை ஓதிய – அறிதற்கரிய வேதங்களிற் கூறிய,
ஓர் எட்டு எழுத்தும் – ஒப்பற்ற திருவஷ்டாக்ஷரமும்,
அயன்படைத்த – பிரமன் சிருஷ்டித்த,
இரு நிலம் மீதினில் – பெரிய நிலவுலகத்தில்,
யாவரும்-,
காண – சேவிக்கும்படி,
இலங்கு துத்தி – விளங்குகின்ற படப்புள்ளிகளையும்,
குரு மணி – பெரிய மாணிக்கங்களையுமுடைய,
நாகத்தில் – திருவனந்தாழ் வான்மேல்,
எம் கோன் – நம்பெருமாள்,
விழி துயில் கொண்டருள – யோக நித்திரை செய்தருளும்படி,
திரு மதில் ஏழும் விமானமும் ஆகி – ஏழுதிரு மதில்களும் திருவரங்கவிமானமுமாகி,
சிறக்கின்ற – மேன்மைப்படுகின்றன. (எ – று.)

அருமறையோதியஓரெட்டெழுத்து – விஷ்ணுகாயத்ரியில் தலைமையாக எடுத்துக்கூறப்பட்டுள்ள
ஸகலவேதஸாரமான திருமந்திர மென்றபடி. குரு – நிறமுமாம்.
திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தை ஆராய்பவர்க்குக் கடவுளின் தன்மை புலப்படுவதுபோல, ஸ்ரீரங்கத்திற்செல்பவர்க்கும்
கடவுள் நேரே புலனாவனாதலால், அத்திருப்பதியை அந்தத்திருமந்திரமாகவே உத்ப்ரேக்ஷிக்கின்றனர்:
அஷ்டாக்ஷரத்திருமந்திரத்துள் பிரணவம் – விமானமும், மற்றையேழு திருவெழுத்துக்களும் – ஏழுமதில்களுமாயின வென்க.
திருவரங்கவிமானம் பிரணவாகாரமாக இருத்தல், இவ்வாறு உத்பிரேக்ஷித்துக் கூறுவதற்குக் காரணம்.
விழிதுயில் – விழியாநின்று செய்யுந் துயிலென நிகழ்காலவினைத்தொகை: துயிலாத்துயில், யோகநித்திரை.
இருள்தருமாஞாலத்தில் ஞானசூனியர்களான மனிதரும் சேவித்துத் தத்துவஞானம் பெறுமாறு அத்திருப்பதியில்
எம்பெருமான் எழுந்தருளியிருக்குந் தன்மையைப் பாராட்டி “இரு நிலமீதினில் யாவருங்காண….. சிறக்கின்ற” என்றார்.

——————

இதுவும் அது –

தாழாது இபம் சொல்ல வந்தார் அரங்கர் தயங்கு செம் பொற்
கேழா விமானம் கிளர் செம் பொன் மேரு கிரி -நிகர்த்த
ஏழ் ஆ வரணத்து இடை இடைத் தீவுகள் இவ் அனைத்தும்
சூழ் ஆறு மா கடல் எவ்வாறு நாம் இனிச் சொல்லுவதே –96-

(இ – ள்.) இபம் – கஜேந்திராழ்வான்,
சொல்ல – (ஆதிமூலமேயென்று) கூப்பிட,
தாழாது வந்தார் – காலம்நீட்டியாது (உடனே) அங்கு எழுந்தருளி (அதன் துன்பத்தைத் தீர்த்தருளிய),
அரங்கர் – நம்பெருமாளது,
தயங்கு செம்பொன் கேழ் ஆ விமானம் – விளங்குகின்ற செம்பொன்மயமாகிய விமானம்,
கிளர் செம் பொன் மேரு கிரி – விளங்குகின்ற சிவந்த பொன்மயமான மகாமேருமலையையும், –
ஏழ் ஆவரணத்து இடை – ஏழு மதில்களின் நடுவிலுள்ள இடங்கள்,
இடை தீவுகள்- (கடலின்) நடுவிலுள்ள ஸப்தத்வீபங்களையும், –
இ அனைத்தும் சூழ் ஆறு – இவ்வெல்லாவற்றையுஞ் சூழ்ந்த காவேரி நதி,
மா கடல் – பெரிய கடலையும்,
நிகர்த்த – ஒத்தன;
இனி நாம் எ ஆறு சொல்லுவது – இனிமேல் நாம் (விமானம் முதலியவற்றைப்பற்றி) வேறு எவ்விதமாக வருணித்துக் கூறுவது? (எ – று.)

ஸ்ரீரங்கத்தைச்சுற்றிச்செல்லுங் காவேரிநதி கடலையும், ஸப்தப்ராகார மத்தியிலுள்ள இடங்கள் கடலினிடையேயுள்ள
ஏழுதீவுகளையும், நடுவிலுள்ள பிரணவாகாரமான பொன்மயமாகிய ஸ்ரீரங்கவிமானம் பூமிமத்தியிலுள்ள
மேருபருவதத்தையும் போலு மென்பதாம். “எவ்வாறு நாமினிச் சொல்லுவது” என்றதனால்,
பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்தின் மகிமை வருணித்துச் சொல்வதற்கு எவ்வாற்றாலும் இயலாது என்றவாறு.
இபம் -வடசொல். “ஆம் விமானம்” என்றும் பாடம்.

————-

சயனத் திருக் கோலம்

ஞாலத் திகிரி பகல் இரவு ஆக நடத்தும் இந்தக்
காலத் திகிரி நடக்க வற்றோ வெங்கனல் உமிழ்வாய்
ஆலப் பணி அணை மீதே அரங்கத்து அமர்ந்து உறையும்
நீலக் கடல் கண் விழித்து உறங்கா விடின் நிச்சமுமே –97–

(இ – ள்.) அரங்கத்து – திருவரங்கத்தில்,
வெம் கனல் உமிழ் வாய் – கொடிய நெருப்பை யுமிழ்கின்ற வாயினையும்
ஆலம் – விஷத்தையுமுடைய,
பணி – திருவனந்தாழ்வானாகிய,
அணைமீதே – சயனத்தில்,
அமர்ந்து உறையும் – விரும்பி யெழுந்தருளி யிருக்கின்ற,
நீலம் கடல் – நீலநிறமாகிய கடல் போன்ற நம்பெருமாள்,
நிச்சமும் – தினந்தோறும்,
கண்விழித்து உறங்கா விடின் – யோகநித்திரை செய்து விழியாவிட்டால், –
ஞாலம் திகிரி – பூமி சக்கரத்தை,
பகல் இரவு ஆக – பகலும் இரவுமாக,
நடத்தும் – நடத்துகின்ற,
இந்த -,
காலம் திகிரி – கால சக்கரம்,
நடக்க வற்றோ – இடையறாது நடத்தற்கு வன்மையையுடைய தாகுமோ? (ஆகாது என்றபடி); (எ – று.)

யாவும் நம்பெருமாளது சங்கல்பத்தின்படியே நடக்குமென்றவாறு.
நீலக் கடல் கண்விழித்து உறங்குதல் – கரியகடல்போன்ற திருமேனியையுடைய நம்பெருமாள் (ஜகத்ரக்ஷணசிந்தையோடு)
செய்யும் அறிதுயிலென்க. இங்ஙனம் எம்பெருமான் உலகத்தை ரக்ஷிக்கவேணுமென்னுஞ் சங்கல்பத்து டனே
யோகநித்திரை செய்வதனால்தான் இவ்வுலகில் பகலிரவுகள் தோன்றி இவ்வுலகத்துஉயிர்களை வாழ்விக்கின்றன என்பதாம்.
யோகநித்திரை என்ற தொடர் உலகத்தைப் பாதுகாத்தற்கு உபாயத்தைத் தேடுகின்ற துயில் என்று பொருள்படுதலும்அறியத்தக்கது;
“உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்” என்று நம்மாழ்வார் அருளிச்செய்திருத்தலுங் காண்க.
வற்று – வல் என்னும் பண்படியாப் பிறந்த குறிப்பு முற்று. நிச்சம் – நித்யம் என்ற வடசொல்லின் திரிபு. நீலக்கடல் – உவமவாகுபெயர்.

————–

இதுவும் அது –

தாம் அக் கடை யுகத்துள்ளே விழுங்கி தரித்த பழம்
சேமப் புவனம் செரிக்கும் என்றே சிவன் மா முடிக்கு
நாமப் புனல் தந்த பொற்றாள் அரங்கர் நலம் சிறந்த
வாமத் திருக்கரம் மேலாகவே கண் வளர்வதுவே –98-

(இ – ள்.) சிவன் மா முடிக்கு – சிவபிரானது பெரிய தலைக்கு,
நாமம் புனல் – பரிசுத்தமாகிய கங்காதீர்த்தத்தை,
தந்த – உண்டாக்கிக்கொடுத்தருளிய,
பொன் தாள் – அழகிய திருவடிகளையுடைய,
அரங்கர் -,
நலம் சிறந்த – அழகுமிக்க,
வாமம் திரு கரம் – இடத்திருக்கை,
மேல் ஆக – (தமக்கு) மேலாயிருக்க,
கண் வளர்வது – பள்ளிகொண்டருளுவது, –
தாம் -,
அ கடை யுகத்துள்ளே – அந்த யுகாந்தகாலத்தில்,
விழுங்கி – உட்கொண்டு,
தரித்த – தமதுவயிற்றில் வைத்திருக்கின்ற,
பழ சேமம் புவனம் – தம்மாற் காக்கப்படுகின்ற பழைய உலகங்கள்,
செரிக்கும் என்றே – ஜீர்ணித்துவிடு மென்னுங் கருத்தாலேயாம்; (எ – று.)

“வாமத் திருக்கர மேலாக” என்றதனால், வலத்திருக்கரம் கீழாகக் கண் வளர்ந்தருளுகின்றனர் என்றதாயிற்று;
“மின்னிலங்கு தொடிவலய வியன் வலக்கை கீழ்கொடுத்துத்,
தென்னிலங்கைத் திசைநோக்கித் திருநயனந் துயில்வோய்” என்பர் திருவரங்கக்கலம்பகத்தில்.
இடக்கை கீழ் கொடுத்து வலக்கை மேலாகக் கண்வளர்ந்தருளினால், தமது வயிற்றில் இடப்பக்கத்திலுள்ள
ஜாடராக்கினியின் சுவாலை பட்டு அங்குத் தரிக்கப்பட்டிருக்கின்ற அண்டங்களெல்லாம் அழிந்துவிடு மென்று கருதி,
நம்பெருமாள் அங்ஙன மன்றி வலக்கை கீழ்கொடுத்து இடக்கை மேலாகக் கண்வளர்ந்தருளின ரென்பதாம்.
இது, திருவரங்கநாதன் இயற்கையில் வலக்கை கீழாகவும் இடக்கை மேலாகவும் பள்ளிகொண்டிருத்தற்கு
ஓர் ஏதுவைக் கற்பித்துக் கூறியதனால், ஏதுத்தற்குறிப் பேற்றவணியாம்; தேற்றேகாரம், இதன் உருபாகும்:
இவ்வணியினால். எம்பெருமான் காத்தற்றொழிலிற் கருத்தாயிருக்குந்தன்மை வெளியாம்.
என்றே என்னும் ஏகாரத்தை வினாவாகக் கொண்டு பொருளுரைத்தலுமாம்.
திரிவிக்கிரமாவதாரகாலத்தில் மேலேசென்ற திருமாலினது திருவடியைப் பிரமன் தனது கைக் கமண்டல
தீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அத்தீர்த்தமே கங்காநதியாகப் பெருகி வானத்தினின்று பூமிக்கு வருகையில்
சிவபிரான் தனது சடைமுடியில் ஏற்றன னாதலால், “சிவன்மாமுடிக்கு நாமப்புனல்தந்த பொற்றாளரங்கர்” என்றார்.
இனி, நாமப்புனல் – பிரசித்திபெற்ற கங்காநதி யெனினுமாம்.

—————

திருக்கைகள் –

கதிர் ஆரும் நீள் முடி சேர்ந்த கைப்போது எக்கடவுளர்க்கும்
அதிராசன் ஆனமை காண்மின் என்றே சொல்லும் ஆய பொன்மா
மதில் ஆர் அரங்கர் பொற்றாள் ஆர் திருக்கரம் மற்று இதுவே
சதுரானன் முதல் எல்லா உயிர்க்கும் சரண் என்னுமே –99-

(இ – ள்.) பொன் ஆய மா மதில் ஆர் அரங்கர் – பொன்னாலாகிய பெரிய மதில்கள் பொருந்திய திருவரங்கத்து நாதரது,
கதிர் ஆரும் நீள்முடி சேர்ந்த – ஒளி நிறைந்த நீண்ட கிரீடத்தைப் பொருந்திய,
கை போது – தாமரைமலர்போன்ற வலத்திருக்கையானது, –
“எ கடவுளர்க்கும் – எல்லாத் தேவர்களுக்கும்,
அதிராசன் ஆனமை – (இப்பெருமான்) தலைவனான தன்மையை,
காண்மின் – பாருங்கள்,” என்றே சொல்லும் -;
பொன் தாள்ஆர் – அழகிய திருவடிகளைப் பொருந்திய,
திரு கரம் – இடத் திருக்கையானது,
“இதுவே – இத்திருவடியே,
சதுர்ஆனனன் முதல் – நான்குமுகமுடைய பிரமன் முதலிய, எல்லா உயிர்க்கும் -,
சரண் – புகலிடம்,”
என்னும் – என்று சொல்லும்; (எ – று.)

சயனத்திருக்கோலத்தில் நம்பெருமாளது திருமுடியைச்சேர்ந்த முட க்கிவைத்த வலத்திருக்கையானது
“எல்லாத்தேவர்க்கும் இவனே இறைவன்” என்பதையும், திருவடியைச்சேர்ந்த நீட்டிவைத்த இடத்திருக்கையானது
“பிரமன் முதலிய எல்லாவுயிர்கட்கும் இத்திருவடிகளே புகலிடம்” என்பதையும் குறிப்பிக்கு மென்பது கருத்து.
எம்பெருமான் திருக்கைகளை வைத்திருக்குந்தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொருகருத்தைக்கற்பித்துக்கூறும்
மரபுக்கு ஏற்ப இவ்வாறு இங்குக் கூறுகின்றனரென்க. கிரீடம் தலைமைக்கு அறிகுறியாதல், கருதத்தக்கது.
“கதிர்” என்னுஞ் சொல் ஆகுபெயரால் ஆயிரங் கிரணங்களையுடைய சூரியனை யுணர்த்துமெனக் கொண்டு,
“கதிராருநீண்முடி” என்ற தொடர்க்கு – சூரியனையொத்துவிளங்குகின்ற நீண்டகிரீடம் என்று உரைப்பினுமாம்;
“கதிராயிரமிரவி கலந்தெறித்தாலொத்த நீண்முடியன்” என்ற பெரியார் பாசுரத்தையுங் காண்க.
பிரமனை ஜீவாத்மாக்களுள் ஒருவனாக வைத்துக்கூறியதனால், திருமால் யாவரினும் மேம்பட்ட பரமாத்மா வென்பது தெற்றென விளங்கும்.

———–

வியூக மூர்த்தியே ஸ்ரீ ரெங்க நாதன் –

மோகத் துயில் புரி மெய் போலக் கண்ட முறையினுக்கு இங்கு
ஏகத் திரு உரு என்று அறிந்தேன் இந்திரியை அன்போடு
ஆகத்து வைத்தருள் தென் அரங்கா அங்கும் இங்கும் ஒக்கப்
போகத்துக் கொண்ட பண நாகம் ஓன்று பொறுத்த பின்னே –100-

(இ – ள்.) அன்போடு – அன்புடனே,
இந்திரையை – பிராட்டியை,
ஆகத்து – திருமார்பில்,
வைத்தருள் – வைத்தருளுகின்ற,
தென்அரங்கா – ! –
அங்கும் – திருபாற்கடலிலும்,
இங்கும் – திருவரங்கத்திலும்,
ஒக்க -,
போக த்து கொண்ட – தனது உடலின்மேற் கொண்ட,
பணம் நாகம் ஒன்று – படங்களையுடைய திருவனந்தாழ்வான்,
பொறுத்தபின் – தாங்கியபின்பு (தாங்கியதனால்), –
மோகம் துயில் – பொய்த்துயிலை (யோகநித்திரையை)
மெய் புரி (துயில்) போல கண்ட – மெய்யாகச்செய்கின்ற துயிலைப்போலச் செய்தருளுகின்ற,
முறையினுக்கு – தன்மைக்கு,
இங்கு -,
ஏகம் திரு உரு என்று – (அதுவும் இதுவும்) ஒரு ரூபமே யென்று, அறிந்தேன் -; (எ – று.)

திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ள வியூகரூபமும் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள அர்ச்சாரூபமும் ஒன்றேயென்பது விளக்கப்பட்டது.
இருவகைநிலையிலும் திருவனந்தாழ்வானே திருப்பள்ளிமெத்தை யென்க கண்ட – செய்த;
காணுதலென்பது செய்தலென்னும் பொருளதாதலை “திருநகரங்கண்டபடலம்” என்ற விடத்துங் காண்க.
பாம்பினுடலுக்கு “பேகம்” என்று பெயர். இனி, பணம்கொண்ட நாகம் போகத்துப்பொறுத்தபின் என்றுமாம்.

———–

எம்பெருமானது திருமேனியின் நிறம் நீல நிறம்

சோதித் திரு உரு ஆகாயம் ஆக சுருதி நன்னூல்
சாதித்து நின்று தெளிந்து விட்டேன் மிக்க தானவரைச்
சேதித்த நேமித் திரு அரங்கா சங்கை தீர உன் தன்
ஆதித் திரு உருவின் பேர் அணி நிறம் ஆன பின்னே –101-

(இ – ள்.) மிக்க தானவரை – மிகுந்த (பெருங்கூட்டமான) அசுரர்களை,
சேதித்த – அழித்த,
நேமி – சக்கரத்தையுடைய,
திரு அரங்கர் – !
உன்தன் – உன்னுடைய,
ஆதி – முதன்மையாகிய,
திரு உருவின் – திருவுருவத்தினது.
பேர் அணி நிறம் ஆன பின் – பெரிய அழகிய நிறமாகிய பின்பு, –
சுருதி நல் நூல் சாதித்து நின்று – சிறந்த வேதசாஸ்திரங்களைப் பழகிநின்று, –
சோதி திரு உரு – (உனது) தேஜோமயமான அழகிய ரூபம்,
ஆகாயம் ஆக – ஆகாசம் போன்ற தென்று,
சங்கை தீர – ஐயமற,
தெளிந்துவிட்டேன் – தெளிவுகொண்டேன்; (எ – று.)

நினதுதிருமேனியின்நிறம் ஐம்பெரும்பூதங்களுள்ளும் முதலதாகிய ஆகாயம்போல நீலநிறமான தென்பதாம்.
இவ்வாறுகூறியது – ஆகாயம் எங்கும் வியாபித்திருப்பதுபோல எம்பெருமானும் ஸர்வவியாபியென்பதையும்,
மற்றை உலகத்துப்பொருள்களெல்லாம் ஐம்பெரும்பூதங்களுள் முதலதாகிய ஆகாயத்தினின்று தோன்றுவதுபோலப்
பிரமன்முதலிய எல்லாப்பொருள் களும் அப்பெருமானிடத்தினின்றே தோன்றுமென்பதையும் விளக்கியபடியாம்.
வேதத்தில் எம்பெருமானை ஆகாயமாகவே கூறியிருக்கின்றது; அவ்வாறு கூறியதற்குக் காரணம் –
எம்பெருமானது ஸ்வரூபம் எங்கும் ஒளிவீசுந் தன்மையதாதலா லாகும்; மிக்கபேரொளியுடைமைபற்றி வேதத்தில்
எம் பெருமானை ஆகாசமாகக்கூறியிருப்பதற்கு, திருமேனிநிறம் ஆகாசம்போல நீலநிறமுடைமையால்தான்
அவ்வாறுகூறியதாக இங்குக் கவி சமத்காரமாக வேறொருகாரணங்கற்பித்துக் கூறினரென்க;
இவ்வாறு ஒருகாரணம்பற்றி ஒன்றற்கு ஒருபெயர் கூறியிருப்ப, அப்பெயர்வந்ததற்கு வேறொருவகையாகக் காரணங்கற்பித்துக்கூறுவது –
பிரிநிலைநவிற்சியணியின் பாற்படும்; இதனை வடநூலார் நிருக்தியலங்கார மென்பர்.
எம்பெருமானை ஆகாசமென்றுகூறி யிருப்பதை உக்காமீமாம்ஸையில் ஆகாசாதிகரணத்தின் ஸ்ரீபாஷ்யத்தால் தெளிக.
ஆகாயம் – ஆகாசம். தெளிந்துவிட்டேன் – ஒருசொல். மிகுதல் – திரளுதலாகவேனும், செருக்குதலாக வேனுங் கொள்க.

———-

இது முதல் ஐந்து பாசுரங்கள் ஆனந்த அனுபவம்

ஓங்கார வட்டத்து மாசுணப் பாயில் உலோகம் உண்ட
பூங்கார் விழிக்குப் புலப்பட்டதால் எப்பொழுதும் என்னை
நீங்காது இடர் செய்யும் தீ வினை காள் இனி நின்று நின்று
தேங்காது நீர் உமக்கு ஆன இடத்தே சென்று சேர்மின்களே –102-

(இ – ள்.) எப்பொழுதும் – எக்காலத்தும்,
என்னை நீங்காது – என்னைவிட்டுப் பிரியாமல்,
இடர் செய்யும் – வருத்தத்தை (மேன்மேலுஞ்) செய்கின்ற,
தீவினைகாள் – பாவங்களே! –
ஓங்காரம் வட்டத்து – பிரணவாகார விமான த்துள்,
மாசுணம் பாயில் – ஆதிசேஷனாகிய சயனத்தில்,
உலோகம் உண்ட – லோகங்களை வயிற்றில் வைத்தருளிய,
பூ கார் – அழகிய காளமேகம்,
விழிக்கு – (எனது) கண்களுக்கு,
புலப்பட்டது – விளங்கிற்று;
ஆல் – ஆதலால்,
இனி -,
நீரும் – நீங்களெல்லாரும்,
நின்று நின்று தேங்காது – இங்கு நிரைந்து நிற்காமல்,
அ கானிடத்தே – அந்தக் காட்டினிடத்தே,
சென்று சேர்மின்கள் – போய்ச் சேருங்கள்; (எ – று.)

இதுவரையில் நீங்கள் என்னைத் துன்பப்படுத்தியது போல எம்பெரு மான்திருவருளுக்கு இலக்கான என்னை
இனிப் படுத்தமுடியா தென்று தீவினைகளை ஒறுத்தன ரென்பதாம்.
“நெய்க்குடத்தைப்பற்றியேறுமெறும்பு கள்போல் நிரந்துஎங்குங், கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்
காலம்பெற வுய்யப்போமின், மெய்க்கொண்டுவந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார்” என்ற திருப்பதிகத்தை அடியொற்றியது இச்செய்யுள்,
வட்டம், கார் – ஆகு பெயர்கள். அக்கான் – சேர்தற்கரிய காடு என்றபடி.
இங்குக் கேளாத தீவினைகள் கேட்பதுபோலச் சொல்லப்பட்டன; மரபுவழுவமைதி.

———–

விண் இட்ட சோலை அரங்கத்து மேவிய மெய்ப் பொருளை
கண்ட இட்ட பார்வையின் கட்டி என் கண் வரக் கண்டு உடலாம்
புண் இட்ட வண்ணக் குழியுள் பொதிந்து புறத்து வெள்ளை
மண் இட்டு இலச்சினை இட்டு விள்ளாது உள்ளம் வைத்தேனே –103-

(இ – ள்.) விண் இட்ட சோலை – ஆகாயத்தை யளாவிய சோலைகளை யுடைய,
அரங்கத்து – திருவரங்கத்தில்,
மேவிய – விரும்பி யெழுந்தருளியி ருக்கின்ற,
மெய் பொருளை – பரதத்துவத்தை,
என்கண் வர கண்டு – என்னிடத்தே வரப் பார்த்து,
கண் இட்ட பார்வையின் – கண்வைத்த பார்வையினால்,
கட்டி -,
புண் இட்ட – ஊன் பொருந்திய,
உடல் ஆம் – சரீரமாகிய,
வண்ணம் கிழியுள் – அழகிய சீலையுள்ளே,
பொதிந்து – வைத்துமூடி,
புறத்து – வெளியே,
வெள்ளை மண் இட்டு – வெண்மையாகிய மண்ணை அப்பி,
இலச்சினை இட்டு – முத்திரைவைத்து,
விள்ளாது – விட்டு நீங்காதபடி,
உள்ளம் – மனத்திலே,
வைத்தனென் – வைத்திட்டேன்; (எ – று.)

கட்டிப்பொன்கிடைத்தால் அதனைக் கட்டிக்கொணர்ந்து கிழியில்வைத்துப் பத்திரப்படுத்தி நம்முடையதென்று
தெரிவித்தற்காக அக்கிழியின்வெளியில் மண்ணை யப்பி முத்திரைவைக்கின்ற இயல்பை மனத்திற்கொண்டு இவ்வாறு கூறினர்.
ஸ்ரீரங்கத்து எம்பெருமானைப் பொற்கட்டியாகவும், அவர்தமக்குச்சேவைசாதித்ததை அப்பொன் காணக்கிடைத்ததாகவும்,
தாம் கண்ணாரச்சேவித்துத் தன்மனத்தே பதியவைத்ததனை அப்பொற்கட்டியைக் கட்டிக்கொணர்ந்து
பொற்கிழியிலே பத்திரப்படுத்தியதாகவும், அப்பெருமான் எழுந்தருளியுள்ள உடலின்மேற்புறத்தில் தான்
திருமண்காப்புத்தரித்தலைப் பொற்கிழியின்மேல் மண்ணை அப்பியதாகவும்,
தாம்திருவிலச்சினை தரிப்பதை முத்திரை வைப்பதாகவும், உருவகஞ்செய்தன ரென்க: இது, ஸாவயவரூபகவணியாகும்.
“உன்னைக்கொண்டென்னுள்வைத்தேன்” என்றார்ஆழ்வாரும்.
திருவரங்கநாதனை ‘மெய்ப்பொருள்’ என்றதற்கேற்ப இவ்வாறு கூறினார்.
மெய்ப்பொருள் – நிலையாகிய செல்வம், பரம்பொருள். பார்வையின் – பார்வையாகிய கயிற்றால்.
கிழி – நிதிவைக்குஞ் சீலை வண்ணக்கிழி – வர்ணச்சீலை யென்றுமாம்.
வெள்ளைமண்இடுதல் – திருமண்காப்பிடுதல் (புண்டரம்);
இலச்சினையிடுதல் – தோள்களிற் சங்க சக்ர சின்னந் தரித்தல் (ஸமாஸ்ரயணம்) என்கண் – என் கண்ணினிடத்தே யென்றுமாம்.

———

கைத்து பழ வினை தித்திக்க என் தன் கருத்தினுள்ளே
பைத்துத்தி மெத்தையின் மீதேயிலும் பைங்கேழ் எறிந்து
மைத்து குளிர்ந்து மதுரித்து மெத்தென்று மா மணத்து
நெய்த்து புகர்ந்து நிகர்க்கும் பொன் மேனி நெடுங்கடலே –104-

(இ – ள்.) பைங் கேழ் எறிந்து – பசிய ஒளியை வீசி,
மைத்து – கறுத்து,
குளிர்ந்து -,
மதுரித்து – இனியதாகி,
மெத்தென்று – மிருதுவாய்,
மா மணத்து – மிக்கவாசனைவீசப்பெற்று,
நெய்த்து – பளபளப்புக்கொண்டு,
புகர்த்து – கபிலநிறமுடையதாய்,
நிகர்க்கும் – (இத்தன்மையெல்லாம்) ஒத்திருக்கின்ற,
பொன் – பொன்போன்ற,
மேனி – திருமேனியையுடைய,
நெடுங்கடல் – பெரிய கடல் (நம்பெருமாள்),
பழ வினை கைத்து – பழைய இருவினைகளைப்போக்கி,
என்தன் கருத்தினுள்ளே – எனதுமனத்திலே,
தித்திக்க – இனிக்கும்படி,
பை துத்தி மெத்தையின்மீதே – படங்களையும் புள்ளிகளையுமுடைய (திருவனந்தாழ்வானாகிய) சயனத்தின்மேலே,
துயிலும் – யோகநித்திரைசெய்தருள்வர்; (எ – று.)

“ஸர்வகந்தஸ்ஸர்வரஸ:” என்றபடி எம்பெருமான் எனக்கு எவ்விதத்திலும் இனிமைதருபவ னென்று கருத்து.
தாம் அழகியமணவாளனை ஸ்ரீரங்கத்திலே கண்டு ஸேவித்து ஆட்பட்டது முதல் அப்பெருமான் ஐயங்காருடைய
மனத்தி லெழுந்தருளியிருத்தலினால் ‘என்றன் கருத்தினுள்ளே பொன்மேனி நெடுங்கடல் துயிலும்’ என்றார் எனினுமாம்;
“பனிக்கடலுட் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என், மனக்கடலுள் வாழவல்ல மாய மணாள நம்பீ” என்றார் பெரியாழ்வாரும்:
‘உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைகதேஸத்திலே பண்ணும்;
அங்குத்தை வாஸம் ஸாதநம், இங்குத்தை வாஸம் ஸாத்யம்’ என்ற ஸ்ரீவசநபூஷணமும் கருதத்தக்கது.
கைத்தல் – கோபித்தல்; இங்கு, காரியத்தைக் காரணமாக உபசரித்தார். நெய்த்து – செழித்து, அல்லது வழுவழுத்து என்றுமாம்.
மேனியாகிய கடலென்றுமாம். இனி, நிகர்க்கும் என்பதனை முற்றாகவுங் கொள்ளலாம்.

————

கருட சேவை –

தெள்ளா வரும் பொன்னி சூழ் அரங்கா ஒரு தேவரையும்
உள்ளாது எனது உள்ளம் யான் என் செய்வேன் விண்ணில் ஓர் உவணப்
புள் ஆகி வேதப் பொருள் ஆகி உன்னைத் தன் பொற் கழுத்தில்
கொள்ளா வருகின்ற கோலம் உள்ளே கண்டு கொண்ட பின்னே –105–

(இ – ள்.) தெள்ளா வரும் பொன்னி சூழ் அரங்கா – தெளிவில்லாமல் (மிகக்கலங்கி) வருகின்ற காவேரிநதி சூழ்ந்த திருவரங்கத்து நாதனே!
விண்ணில் – ஆகாசத்தில்,
ஓர் உவணம் புள் – ஒப்பற்ற பெரியதிருவடி,
வேதம் பொருள் ஆகி – வேதார்த்த ஸ்வரூபியாய்,
தன் பொன் கழுத்தில் – தனது ஸ்வர்ணமயமான கழுத்தின்மேல்,
உன்னை -,
கொள்ளா – எழுந்தருளப்பண்ணிக்கொண்டு,
வருகின்ற – விரைந்தோடி வருகின்ற,
கோலம் – அழகை,
உள்ளே – என்மனத்திலே,
கண்டுகொண்டபின் – சேவித்தபின்பு, –
எனது உள்ளம் – என்னுடைய மனம்,
ஒரு தேவரையும் – வேறொரு தேவரையும்,
உள்ளாது – (ஒருதெய்வமாக) மதியாது;
யான் என் செய்வேன் -? (எ – று.)

பரதேவதையாகிய உன்னைக் கண்கூடாகக்கண்டு களித்தபின்பு அபர தேவதைகளும் பொற்பில்லாதவரும்
கீர்த்தியில்லாதவரும் ஆற்றலில்லாத வருமான மற்றை க்ஷுத்ர தேவதைகளை நான் ஒருபொருளாக மதியேன் என்பதாம்.
இதனால், கவி, தமது அநந்யசரணத்வத்தை (வேறொருகடவுளுக்கு ஆட்படாமையை) வெளியிட்டார்.
தெள்ளாவரும் பொன்னிசூ ழரங்கன் – “தெளிவிலாக் கலங்கல்நீர்சூழ் திருவரங்கத்துள் ளோங்கு, மொளியுளார்” என்றார் பெரியாரும்.
இனி, தெள்ளிவருகின்ற பொன்னி யென்றுமாம். உவணப்புள் – கருடப்பறவை. ஆகி – அசை.

————–

முன்பு ஆலிலை மகவு ஆகிய போது இந்த மூதண்டங்கள்
உன்பால் ஒடுங்கி இருந்தது போலும் உத்தி மங்கைக்கு
அன்பா அரங்கத்து என் ஆர் அமுதே அணுவாய் இருந்தும்
என் பால் அகண்டமும் ஆகிய நீ வந்து இருக்கின்றதே –106-

(இ – ள்.) உததி மங்கைக்கு அன்பா – திருப்பாற்கடலில் தோன்றிய திருமகளுக்குக் கணவனே!
அரங்கத்து – திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற,
என் ஆர் அமுதே – எனது கிடைத்தற்கரிய தேவாமிருதமே!
அணு ஆய் இருந்தும் – (எனது மனம்) மிகச்சிறுமையாயிருந்தும்,
என்பால் – அந்த என்மனத்தினிடத்து,
அகண்டமும் ஆகிய – எல்லாமாகிய, நீ -,
வந்து இருக்கின்றது – வந்து எழுந்தருளியிருக்கின்ற தன்மை, – (நீ),
முன்பு – முன்னே,
ஆல் இலை – ஆலிலையில்,
மகவு ஆகிய போது – சிறுகுழந்தையாய்க் கிடந்தருளினபோது,
இந்த முது அண்டங்கள் – இந்தப் பழைய அண்டங்க ளெல்லாம்,
உன்பால் – உன்னிடத்து,
ஒடுங்கி இருந்தது – அடங்கியிருந்த தன்மையை,
போலும் – ஒக்கும்; (எ – று.)

ஸர்வவியாபியாய் மிகப்பேருருவமுடைய நீ எனதுமிகச்சிறுமனத்தில் எழுந்தருளியிருக்குந் தன்மை,
பிரளயகாலத்தில் சிறுகுழந்தைவடிவான உனது வயிற்றினுள் எல்லாப்பிரபஞ்சமும் ஒடுங்கியிருப்பது போலும் என்பதாம்.
ஆதாரமாகிய ஆலிலை அணுக்களை விட, ஆதேயமாகிய பரம்பொருளுக்குப் பருமைதோன்றக் கூறியது, மிகுதியணியின்பாற்படும்.
மக – இளமை. உததி – கடல்; நீர் நிறைந்து தங்குமிடம்: இங்கு, பாற்கடல்.
உததிமங்கை – அதனிடத்துத் தோன்றிய மங்கையெனத் திருமகள்; உததியாற்சூழ்ந்த மங்கையென நிலமகளாகவுமாம்.

——

பகவானைப் பிரார்த்தித்தல் –

வலைப்பால் விடம்பிணைக் கண்ணியர் போகத்தில் மாலுரும் என்
தலைப்பால் கழல் அருள் -தார் அரங்கா பல தாயார் தந்த
முலைப்பாற் கடல் உன் திருக் கழல் ஆணி வெண் முத்து எறியும்
அலைப்பாற் கடலில் அளவு ஆம் எனின் மற்று அதுவும் அன்றே –107–

(இ – ள்.) தார் – திருத்துழாய்மலையையுடைய,
அரங்கா -!-
பல தாயர் தந்த – (இதுவரையில் பல பிறப்புக்களிலும்) பல தாய்மார்கள் கொடுத்த,
முலை பால் கடல் – முலைப்பாலினது வெள்ளம், –
உன் திரு கழல் – உனது திருவடிகளில்,
ஆணி வெள் முத்து – மேன்மையான வெள்ளிய முத்துக்களை,
எறியும் – வீசுகின்ற,
அலை – அலைகளையுடைய,
பால் கடலின் – திருப்பாற்கடலினது,
அளவு ஆம் எனின் – அளவினதாகு மென்றால்,
அதுவும் அன்றே – அதுவும் ஒப்பாகமாட்டாது; (அலைப்பாற்கடலினும் முலைப்பாற்கடல் மிகவும் பெரியது என்றபடி);
(ஆதலால், இனி அப்பால்குடிக்குமாறு பிறவாதபடி) –
வலை – வலையும்,
பால் – அமிருதமும்,
விடம் – விஷமும்,
பிணை – பெண்மான் கண்ணும், (ஆகிய இவைபோன்ற),
கண்ணியர் – கண்களையுடைய மகளிரது,
போகத்தில் – சிற்றின்பத்தில்,
மால் உறும் – பெருமயக்கமடைகின்ற,
என் – எனது,
தலைப்பால் – தலையின்மீது,
கழல் – (உனது) திருவடிகளை,
அருள் – வைத்தருள்வாய்; (எ – று.)

எம்பெருமானைச் சரணமாகப்பற்றும்போது ஜீவாத்மாக்கள் தம்முடைய குற்றங்களையே காணிக்கைப் பொருளாகக் கொண்டு
சரணமடையும் மரபின்படியே ஐயங்காரும் மூன்றடிகளினால் தமது குற்றத்தைக் கூறிச் சரண்புகுந்து,
இரண்டாமடியால் தம்மை யாட்கொண்டு எம்பெருமான் தனது திருவடிகளைத் தமதுமுடியின்மீது பொறித்தருளுமாறு வேண்டுகின்றனரென்க.
“முன்னம்பிறந்த பிறப்போ முடிவில்லை” என்றபடி பலபிறப்பெடுத்து உழன்று வருந்திய என்னை இனிப் பிறப்பற்று
முத்தியடையுமாறு அருள்செய்ய வேண்டுமென்று வேண்டியபடி.
“உன்திருக்கழ லாணிவெண்முத்தெறியும்” என்றது, பாற்கடலானது தன்னிடத்திற்சயனித்துள்ள உனது திருவடிகளில்
சிறந்த முத்துக்களை அலைகளாற்கொழிக்கு மென்றவாறு.
கண்ட ஆடவர்களைக் கவர்தலால் வலையும், இன்பஞ் செய்தலாற் பாலும், துன்பஞ் செய்தலால் விடமும்,
மருட்சி பொருந்திய பார்வையாற் பிணையும் – மகளிர்கண் கட்கு உவமை கூறப்படும்;
இனி, சுற்றிடம் விளர்த்திருத்தலாற் பாலும், நடுவிடம் கறுத்திருத்தலால் விடமும் உவமையாகவுமாம்.
பாலும், விடமுஞ் சேர்த்துச் சொல்லப்படுதலால், அவை பாற்கடலிற் பிறந்த தேவாமிருதமும், ஆலாகலவிடமுமாம். பிணை – ஆகுபெயர்.

———-

இதுவும் அது –

தொடை மாறனும் தமிழ் சொல் மாறனும் தொழ துத்தி வெள்ளைக்
குடை மா சுணத்தில் துயில் அரங்கேச குலவு வை வேல் படைமாறு
கொண்ட மைக் கண்ணியர் பால் வைத்த பாச நெஞ்சை
மடை மாறி உந்தன் திருவடிக்கே வர வைத்தருள் –108-

(இ – ள்.) தொடை மாறனும் – (வேப்பம்பூ) மாலையையுடைய பாண்டியனும்,
தமிழ் சொல் மாறனும் – தமிழினாற் சொல்லுகின்ற (பாமாலையையுடைய) நம்மாழ்வாரும்,
தொழ – தொழும்படி,
துத்தி – படப்புள்ளிகளையுடைய,
வெள்ளை – வெண்மையாகிய,
குடை – குடைபோலக் கவிந்துகொண்டிருக்கின்ற,
மாசுணத்தில் – திருவனந்தாழ்வான்மேல்,
துயில் – பள்ளிகொண்டருளுகின்ற,
அரங்கேச -!-
குலவு – விளங்குகின்ற,
வை – கூர்மையாகிய,
வேல் படை – வேலாயுதத்தோடு,
மாறு கொண்ட – பகைமைகொண்ட (ஒத்த),
மை கண்ணியர்பால் – மையூட்டிய கண்களையுடைய மகளிரிடத்து,
வைத்த -,
பாசம் நெஞ்சை – அன்பினையுடைய (எனது) மனத்தை,
மடைமாறி – மாற்றி,
உன்தன் திருவடிக்கே வர – உனது திருவடிகளுக்கே ஆட்படும்படி,
வைத்தருள் – அன்புவைத்தருள்வாயாக; (எ – று.)

பாண்டியன் – ஸ்ரீவல்லபதேவ னென்பர். குடைமாசுணம் – சென்றாற் குடையாகும் மாசுண மென்றுமாம்.
பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பாலுண்ணுதல் முதலியன செய்யாமல் உலகநடைக்கு மாறாயிருந்ததனால்,
நம்மாழ்வார்க்கு ‘மாறன்’ என்று ஒரு திருநாமம். பகைவர்க்கு மாறாயிருந்து வெல்பவனாதலால், பாண்டியன் ‘மாறன்’ எனப்படுவன்.
நெஞ்சு விஷயங்களிற் பாய்ந்துசெல்லுந் தன்மைய தாதலால், அதனைப் பெருக்காகக் கொண்டு, ‘மடைமாறி’ என்றனர்.
மடைமாறுதல் – ஓரிடத்திற் பாயும் நீரை மற்றோரிடத்துப் பாய்வதற்காக நீர்மடையை மாற்றுதல்.

————-

அநந்ய கதித்வமும் பிரார்த்தனையும் –

கரணம் தவிர்ந்து விழி போய்ச் சுழன்று கலங்கும் என் தன்
மரணம் தனில் வந்து உதவு கண்டாய் கொற்ற வாளி ஒன்றால்
அரணம் கடந்தவன் காணா அரங்க என் ஆர் உயிர்க்கு உன்
சரணம் சரணம் ஒழிந்து இல்லை வேறு இத் தராதலத்தே –109-

(இ – ள்.) கொற்றம் வாளி ஒன்றால் – வெற்றியையுடைய ஒரு பாணத்தினால்,
அரணம் கடந்தவன் – முப்புரங்களையும் வென்ற பரமசிவனும்,
காணா – கண்டறியாத,
அரங்க -!-
என் ஆர் உயிர்க்கு – எனது அருமையான உயிருக்கு,
உன் சரணம் ஒழிந்து – உனதுதிருவடி யன்றிக்கே,
வேறு சரணம் – வேறு அடைக்கலம்,
இ தராதலத்து – இவ்வுலகத்தில்,
இல்லை -; (ஆதலால், நீ), –
கரணம் தவிர்ந்து – கரணங்கள் நிலைகுலைந்து,
விழி போய் – கண்பார்வை மழுங்கி,
சுழன்று – மனஞ் சுழன்று,
கலங்கும் – கலங்குகின்ற,
என்தன் – எனது,
மரணம்தனில் – மரணகாலத்தில்,
வந்து – எழுந்தருளிவந்து,
உதவு – காத்தருள்வாய்; (எ – று.)

நான் அந்திமகாலத்தில் யமபாதையினாற் செயலற்று ஒடுங்குஞ் சமயத்தில் நீ அஞ்சேலென்று அபயமளித்துக்
காக்கவேண்டு மென்பதாம்; அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் என்றபடி.
கரணம் – ஐம்பொறிகளென்றாயினும், திரிகரணங்க ளென்றாயினும், அந்தக்கரணமென்றாயினுங் கொள்க.
அரணம் – மதில். வாளி – விஷ்ணுஸ்வரூபமாகிய அம்பு. “துப்புடையாரை யடைவதெல்லாஞ் சோர்விடத்துத் துணையாவரென்றே,

ஒப்பிலேனாகிலு நின்னடைந்தே னானைக்குநீயருள்செய்தமையால்,
எய்ப்பென்னை வந்து நலியும்போ தங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன்,
அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தே னரங்கத்தரவணைப்பள்ளியானே” என்ற பதிகத்தின் கருத்துக் கொண்டது,
இச்செய்யுள். உபாயாந்தரநிஷ்டர்க்குப்போல, ப்ரபந்நர்க்கு அந்திமஸ்மிருதி வேண்டுமென்ற நியமமில்லை யாதலால், இவ்வாறு கூறுகின்றனர்.

———

ஒன்றிலும் விருப்பம் இன்மை -நைரபேஷ்யம்-

நீடும் திகிரிப் படையாய் உனைக்கற்று நின்னை என்றும்
பாடும் படித் தமிழ்ப் பாடல் தந்தாய் பழ நான் மறை நூல்
தேடும் திரு அரங்கா அடியேன் உயிர் செல்லும் அந்நாள்
வீடும் தர இருந்தாய் எனக்கு எது இனி வேண்டுவதே –110–

(இ – ள்.) நீடும் திகிரி படையாய் – (விரோதிகளளவே விரைந்து) ஓடுகின்ற சக்கராயுதத்தை யுடையவனே! –
பழ நால் மறை நூல் தேடும் – பழைய நான்கு வேதசாஸ்திரங்க ளெல்லாந் தேடுகின்ற,
திருவரங்கா -!-
உனை கற்று – உன்னைப் படித்து,
என்றும் – எந்நாளும்,
நின்னை – உன்னை,
பாடும்படி – (அடியேன்) பாடித்துதிக்கும்படி,
தமிழ் பாடல் – தமிழ்ப் பாடல்களை,
தந்தாய் – ஈந்தருளினாய்;
அடியேன் -,
உயிர் செல்லும் அ நாள் – உயிர் விடுகின்ற அக்காலத்தில்,
வீடும் – மோக்ஷசாம்பிராச்சியத்தையும்,
தர இருந்தாய் – (அடியேனுக்குக்) கொடுக்க இருந்தாய்;
எனக்கு இனி வேண்டுவது ஏது – அடியேனுக்கு இனிமேல் ஒன்றும் பெறவேண்டுவதில்லை; (எ – று.)

தமது ஜாயமாநகடாக்ஷத்தால், எம்பெருமான் தம்மிடத்து நிர்ஹேதுகமாக அருள்செய்தமைபற்றி இனித் தமக்கு
ஒன்றுங் குறையில்லாமையால், இதனால் தம்முடைய நைரபேக்ஷ்யத்தை (ஒன்றிலும் விருப்பின்மையை) வெளியிடுகின்றனரென்க.
உனைக்கற்று – உன்திருநாமங்களையும் வைபவங்களையுங் கற்றறிந்து என்றபடி.
பாடல்தருதல் – பாடும்படி அநுக்கிரகித்தல். தெளிவுபற்றி, இருந்தா யென இறந்தகாலத்தாற்கூறினார்; காலவழுவமைதி.
பேறு தப்பா தென்று துணிந்திருத்தல், பிரபந்நனுக்கு அவசியாபேக்ஷித மென்று மேலோர் அருளிச்செய்திருத்தல் காண்க.

———–

பிற தேவர்க்கு அடிமைப் பட்டு இராமை -அந்ய சேஷத்வ வ்ருத்தி-

ஆவைக் கல் ஆவை எதிர் என்று சொல்லி அழுக்கு அடைந்த
நாவைப் பரிசுத்தம் பண்ணியவே கஞ்ச நஞ்சன் விட்ட
கோவை சகட்டை பகட்டை பொருதிய கோயிலில் வாழ்
தேவைப் பகர்ந்த செஞ்சொல் திரு நாமங்கள் சிற் சிலவே –111-

(இ – ள்.) கஞ்சன் நஞ்சன் விட்ட – விஷம்போன்ற துஷ்டசுவபாவத்தையுடைய கம்ஸன் ஏவியனுப்பிய,
கோவை – எருதையும்,
சகட்டை – சகடா சுரனையும்,
பகட்டை – (குவலயாபீடமென்னும்) யானையையும்,
பொருதிய – கொன்று வென்ற,
கோயிலில் வாழ் தேவை -திருவரங்கம் பெரிய கோயிலில் நித்தய வாசம் பண்ணுகின்ற திருவரங்கநாதனை,
பகர்ந்த – சொல்லித் துதித்த,
செம் சொல் திருநாமங்கள் சில சில – சிலசில செஞ்சொற்களாகிய திருநாமங்கள், –
ஆவை – உண்மையான பசுவையும், கல் ஆவை –

கல்லினாற்செய்யப்பட்ட பசுவையும், எதிர் என்று சொல்லி – ஒப்பென்று கூறி, அழுக்கு அடைந்த – அசுத்தமாகிய,
நாவை – (எனது) நாக்கை, பரிசுத்தம் பண்ணிய – முழுதும் சுத்தமாக்கின; (எ – று.)

ஆவைக் கல்லாவை எதிரென்று சொல்லுதல் – பரதேவதையாகிய ஸ்ரீமந்நாராயணனையும், தேவதாந்தரங்களையும் ஒப்பென்னுதல்.
பெயர் சொல்லித்துதித்தமாத்திரத்தில் காமதேனுவைப்போல எல்லாப்பயனையும் அளிக்கவல்ல எம்பெருமானைத்துதியாமல்
எவ்வளவுகாலம் துதித்து முறையிட்டாலும் சிறிதும்பயன் தருந்திறமையில்லாத கல்லாற்செய்த பசுவையும் மலட்டுப்பசுவையும்
போன்ற தேவதாந்தரங்களைத் துதித்தலால், வாய்வலிப்பேயல்லாமல் அபரிசுத்தமும் நேரிடுமென்க.
முன்பெல்லாம் தேவதாந்தரங்களைப் போற்றி எனதுவாய். அபரிசுத்தமாயிற்று;
இப்போது எம்பெருமானது திருநாமங்களிற் சிலவற்றைச் சொல்லி அதனால் அவ்வெச்சில்வாயைப் பரிசுத்தமாக்கிக்கொண்டே னென்பதாம்.
இதனால், யான் இனிப் பிறதேவர்க்கு ஒருபோதும் அடிமைப்பட்டு அவரைத்துதியே னென்பது பெறப்படுதல் காண்க.
கோ – விருஷபவேஷம் பூண்டுவந்த அரிஷ்டாசுரன். சகடு – பண்டியில் வந்துஆவேசித்த அசுரன் (சகடாசுரன்.)

————-

மனிதக் கவி மொழியா மங்கை வாள் மணவாள வள்ளல்
புனிதக் கவி கொண்டு மாலை செய்தான் புயல் போல் முழங்கும்
தொனி தக்க சங்கம் திருச் சக்கரம் சுடர் வாள் முசலம்
குனி தக்க சார்ங்கம் தரித்தார் அரங்கர் பொற் கோயிலுக்கே –112-

(இ – ள்.) புயல் போல் முழங்கும் – மேகம்போல முழங்குகின்ற,
தொனிதக்க – போரொலி மிக்க,
திரு சங்கம் – அழகிய பாஞ்சசந்நியத்தையும்,
சக்கரம் – சுதரிசனத்தையும்,
சுடர் வாள் – ஒளியையுடைய நந்தகத்தையும்,
முசலம் – கௌமோதகியையும்,
குனி தக்க சார்ங்கம் – வளைவு பொருந்திய சார்ங்கத்தையும்,
தரித்தார் – தாங்கியருளியவரான,
அரங்கர் – திருவரங்கநாதரது,
பொன் கோயிலுக்கு – அழகிய கோயிலுக்கு, –
மனிதக்கவி மொழியா – நரஸ்துதியாகக் கவிபாடாத,
மங்கை வாழ் – திருமங்கையில் வாழ்கின்ற,
மணவாளவள்ளல் – அழகியமணவாளதாசன்,
புனிதம் கவி கொண்டு – பரிசுத்தமாகிய பாக்களால்,
மாலை செய்தான் – ஒருமாலையைச் செய்தான்; (எ – று.)

தொனி – த்வநி. முசலம் – முஸலம்; இருப்புலக்கை. மனிதக்கவி – நரகவனம். மனிதக்கவிமொழியா மணவாளவள்ளல்.
“நாக்கொண்டு மானிடம் பாடவந்தகவியேனல்லேன்” என்றது காண்க.
இது, தன்னைப்பிறன்போலும் நாந்தி கூறுகின்ற பதிகச்செய்யுள்;
சடகோபர் சம்பந்தர் முதலாயினாரும், திவாகரரும், பதினெண்கீழ்க்கணக்குச்செய்தாரும், வடநூலாரும்
முன்னாகப் பின்னாகப் பதிகங்கூறுவது காண்க. இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.

—————-

திருவரங்கத்துமாலை முற்றிற்று.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – 61-80-

February 17, 2022

நாமம் மிகு புகழ் யாதவர் வாழும் நகரில் உம்பர்
தாம் மருவும் சவை தத்தம ஆய தளை அவிழும்
தேமரு பொங்கர் அரங்கேசர் உக்கிர சேனனுக்கு
மாமுடி வைக்கும் படி படி மேல் கொடு வா எனவே –61-

(இ – ள்.) தளை அவிழும் -(அரும்புகள்) கட்டவிழப்பெற்ற,
தேன் மரு – தேன் பொருந்திய,
பொங்கர் – சோலைகளையுடைய,
அரங்கஈசர் – திருவரங்கத்துநாதர், –
உக்கிரசேனனுக்கு – உக்கிரசேனமகாராஜனுக்கு,
மாமுடி வைக்கும்படி – பெரிய கிரீடத்தைச் சூட்டிப் பட்டாபிஷேகஞ் செய்தருளும்படி யாக,
படிமேல் கொடுவா – இப்பூமியின்மேற் கொண்டுவா,
என – என்று (வாயுதேவனைநோக்கி) நியமித்தருள, –
நாமம் மிகும் புகழ் – பேர்மிக்க கீர்த்தியை யுடைய,
யாதவர் – யதுவம்சத்தார்,
வாழும் – வாழ்கின்ற,
நகரில் – வடமதுரா நகரத்தில்,
உம்பர்தாம் மருவும் – தேவர் வீற்றிருத்தற் கிடமாகிய,
சபை – (சுதர்மையென்கிற) சபாமண்டபம்,
தத்தம ஆய – தங்கள் தங்களதாயிற்று (யாதவரெல்லார்க்கும் உரியதாயிற்று என்றபடி); (எ – று.)

கண்ணன் கம்ஸவதஞ்செய்த பின்பு, மகனிழந்தவனும் தன்மாதாமகனு மாகிய உக்கிரசேனமகாராஜனைத்
தளையினின்றும் விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகஞ் செய்தவுடனே வாயுவை நினைக்க,
அவனும் உடனே ஸ்வாமிஸந்நிதிக்கு வந்துநிற்க, அவனை நோக்கி
“ஓ வாயுவே! ஸுதர்மையெ ன்கிறதேவசபையானது நம்முடைய உக்கிரசேன மகாராஜாவுக்கே ஏற்றது;
அதில் யதுவமிசத்தார் வீற்றிருக்கத்தகுந்தவர்; ஆதலால், ஒப்பற்ற அந்தச் சபையை மகாராஜாவுக்கு அனுப்பிவிடு என்று
இந்திரனுக்கு என்கட்டளை யைத் தெரிவித்துச் சபையைக் கொண்டுவா” என்று நியமித்தவுடனே,
அக் கட்டளையை வாயு சிரசில் வகித்துப்போய்ப் புரந்தரனுக்குத் தெரிவிக்க,
அவனும் அச்சபையைச் சமீரணன்கையிற் கொடுத்துவிட, உடனே வாயு அதைக் கொண்டுவந்து
சுவாமிசந்நிதியிற் சமர்ப்பிக்க, அதனைச் சுவாமி உக் கிரசேனனுக்குப் பிரசாதித்தருள,
அச்சபையிலே யாதவர் யாவரும் வீற்றிருந்தார்க ளென்பதாம்.

யாதவர் – தத்திதாந்தநாமம். சவை – ஸபை. தத்தமவாய – தத்தமதாயது என்பதன் விகாரம்.
இனி, தளையவிழும் என்பதனை உக்கிரசேன னென்பதனோடு கூட்டி, தளையினின்றும் விடுவிக்கப்பட்ட என்றுமாம்;
தளை – கால் விலங்கு. உக்கிரசேனன் – கொடியசேனைகளை யுடையவன்.

———–

மறியா எழுந்திரை மா நீர் மதுரையில் மன்னவரைக்
குறியாதவன் படை வந்த அந்நாள் செழும் கோகனகப்
பொறி ஆடு அரவணைத் தென் அரங்கா ஒரு பூதரும் அங்கு
அறியா வகைத் துவரா பதிக்கே எங்ஙன் ஆக்கினையே –62-

(இ – ள்.) செழு கோகனகம் பொறி – செழித்த செந்தாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகளையுடைய,
ஆடு அரவு அணை – படமெடுத்தாடுகின்ற ஆதிசேஷனாகிய சயனத்திற் பள்ளிகொண்டருளுகின்ற,
தென் அரங்கா – !
மறியா எழும் – மடங்கி யெழுகின்ற,
திரை – அலைகளையுடைய,
மா நீர் – மிக்க நீர்வளத்தையுடைய,
மதுரையில் – வடமதுரையில்,
மன்னவரை குறியாதவன் – வேற்றரசர்களை ஒருபொருளாக மதியாத காலயவனனது,
படை – சேனை,
வந்த அ நான் – (யுத்தஞ்செய்ய) வந்தபொழுதில், –
ஒரு பூதரும் அறியாவகை – ஒருவரும் அறியாதபடி, (மதுரையிலிருந்த சகலபிரஜைகளையும்),
துவராபதிக்கே – துவாரகா நகரத்திலே,
எங்ஙன் ஆக்கினை – எப்படிக் கொண்டு போய்ச் சேர்த்தாய்? (எ – று.)

காலயவனனென்னும்யவனதேசாதிபதி யாதவர்மேற்படையெடுத்தற் காக அநேகமிலேச்சரோடு மதுரைக்கு வந்த தருணத்தில்,
கண்ணன் கால யவனனும் ஜராசந்தனுஞ் சேர்ந்து யாதவசேனையை நாசஞ்செய்யக்கூடு மென்று நினைத்துச்
சமுத்திரராஜனைப் பன்னிரண்டுயோசனைதூரம் இடம்விடும்படி கேட்டு,
அவன்விட்ட அவ்வளவு பூமியிலே துவாரகையை நிருமித் தருளி, மதுரையிலிருந்த தன்னுடைய பிரஜைகளை
அந்நகரத்திற் கொண்டு போய்ச் சேர்த்து, யதுவம்சமானது சத்துருபய மற்றதாயிருக்கும்படி செய் தன னென்று புராணம் கூறும்.
மது வென்பவன் கைக்கொண்டிருந்தது பற்றியும், கண்ணுக்கினிமையானது பற்றியும், மதுரையெனப் பெயர்.
ஒரு பூதர் – ஒருவரென்னுமாத்திரையாய் நின்றது. அங்கு – அசை. துவராபதி – த்வாரவதி யென்றவடசொல்லின் திரிபு;
விசாலமான வாயிலையுடையது என்று காரணப்பொருள் பெறும்; இது, முத்திதரும் நகர மேழனுள் ஒன்று.

————

நறைத்துள வம்புனை நம் பெருமாள் விறல் நாம் சொல்வதோ
மறைப் பரி பூட்டிய மா நிலத் தேர் இல்லை வாள் எயிற்றின்
கறைப் பணி நாண் உடை மேருவில் இல்லை கடும் பவனச்
சிறைத் தழல் அம்பு இல்லை ஒன்னார் அறு புரம் செற்றதற்கே –63-

(இ – ள்.) (கண்ணன்), ஒன்னார் – பகைவர்களுடைய,
அறு புரம் – ஆறு பட்டணங்களை,
செற்றதற்கு – அழித்ததற்கு, – (சிவபிரானது திரிபுரசங்காரத் துக்குப்போல),
மறை பரி பூட்டிய – நான்குவேதங்களாகிய குதிரைகளைக் கட்டிய,
மா நிலம் தேர் – பெரிய பூமியாகிய இரதம்,
இல்லை -;
வாள் எயிற்றின் – வாள்போலும் பற்களையும்,
கறை – விஷத்தையுமுடைய,
பணி – சர்ப்பமாகிய,
நாண் உடைய – நாணியையுடைய,
மேரு வில் – மகாமேருபர்வதமாகியவில், இல்லை – ;
கடு பவனம் – கடிய காற்றுப்போன்ற வேகத்தையுடைய,
சிறை – இறகுகளையுடைய,
தழல் – நெருப்பைக்கக்குகின்ற, அம்பு – இல்லை – ; (ஆதலால்), –
நறை துளவம் புனை – வாசனையையுடைய திருத்துழாய்மாலையைச் சூடிய,
நம்பெருமாள் – நம்பெருமாளது,
விறல் – வல்லமையானது,
நாம் சொல்வது ஓ – நம்மாற் சொல்லப்படுந் தன்மையதோ? (அன்றென்றபடி); (எ – று.)

இச்செய்யுளில் சிவபெருமான் முப்புரஞ்செற்றதற்கும் திருமால் அறுபுரஞ்செற்றதற்கு முள்ள வேறுபாட்டைத் தெரிவித்தது,
வேற்றுமையணி யாம்: இதனால், திருமால் அறுபுரஞ்செற்றது, சிவபெருமான் முப்புரஞ் செற்றதினும் பாராட்டத்தக்க தென்பது, கருத்து.
நறை – தேனுமாம். பணி – பணத்தையுடையது; பணம் – படம். தழலம்பு – தழல்போன்ற அம்பென்றுமாம்.
பரமசிவனது திரிபுரசங்காரத்துக்குத் திருமால் கணையாக இருந்து துணையாயினாற்போல,
கண்ணன் அறுபுரமழித்தற்குச் சிவனது துணை சிறிதுமில்லை யென்பார்.
“கடும்பவனச்சிறைத்தழலம்பில்லை” என்றார். ஒன்னார் – ஒன்றா ரென்பதன் மரூஉ; (இணங்காதவர்)

———-

அருட்கொண்டல் அன்ன அரங்கர் சங்கு ஓசையில் அண்டம் எல்லாம்
வெருள் கொண்டு இடர் பட மோகித்து வீழ்ந்தனர் -வேகமுடன்
தருக் கொண்டு போகப் பொறாதே தொடரும் சதமகனும்
செருக் கொண்ட முப்பத்து முக்கோடி தேவரும் சேனையுமே –64-

(இ – ள்.) தரு கொண்டு போக – பாரிஜாதவிருக்ஷத்தைப் பெயர்த்து(த் துவாரகைக்குக்) கொண்டுபோக,
பொறாதே – (அதனை) மனம்பொறாமல்,
வேகமுடன் தொடரும் – வேகத்தோடு பின் தொடர்ந்துவந்த,
சதமகனும் – நூறுயாகங்களையுடைய இந்திரனும்,
செரு கொண்ட – யுத்தஞ்செய்துநின்ற,
முப்பத்துமுக்கோடி தேவரும் -, சேனையும் – (அவர்களது) சேனைகளும், –
அருள் கொண்டல் அன்ன – கருணையாகிய மழையைப் பொழிகின்ற மேகத்தை யொத்த.
அரங்கர் – திருவரங்கநாதரது,
சங்கு ஓசையில் – சங்கத்தினது நாதத்தினால்,
அண்டம் எல்லாம் – அகிலாண்டங்களும்,
வெருள் கொண்டு – அச்சங்கொண்டு,
இடர் பட – துன்பமடையாநிற்க,
மோகித்து வீழ்ந்தனர்; (எ – று.)

அண்டம் – ஆகுபெயர். செரு – செருக்கு என்பதன் விகாரமுமாம்.
முப் பத்துமுக்கோடி தேவர் – ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர்பதினொருவரும், வசுக்கள் எண்மரும்,
மருத்துவர் இருவருமாகிய முப்பத்து மூவரையுந் தலைவராகவுடைய முப்பத்துமூன்று கூறாகிய தேவர்கள்.
“பலவயினானு மெண்ணுத்திணை விரவுப்பெய ரஃறிணை முடிபின செய்யுளுள்ளே” என்றதனால்,
“சதமகனும் செருக்கொண்ட முப்பத்துமுக்கோடிதேவரும் சேனையும்” என உயர்திணையும் அஃறிணையுங் கலந்து
எண்ணி “வீழ்ந்தனர்” என்று உயர்திணையான் முடிந்தன.

———-

நிணக் கோல நேமித் திரு வரங்கேச நினைக்கினிய
குணக் கோனகையும் கண்டனளோ மணிக் குன்றில் வைகும்
கணக் கோதையர் பதினாயிர வரைக் கைப் பிடிக்க
மணக் கோல மும் பதினாறாயிரம் கொண்டு வாழ்ந்த வன்றே –65-

(இ – ள்.) நிணம் – (பகைவரது) கொழுப்புத் தோய்ந்த,
கோலம் – அழகிய,
நேமி – சக்கரத்தையுடைய,
திருவரங்கேச – ! – (நீ),
மணி குன்றில் வைகும் – இரத்தின பருவதத்திலே தங்கியிருந்த,
கணம் கோதையர் பதினாறு ஆயிரவரை – கூட்டமாகிய பதினாறாயிரங் கன்னிகைகளை,
கை பிடிக்க – பாணிக்கிரகணஞ் செய்தருள,
மணம் கோலமும் பதினாறுஆயிரம் கொண்டு – அத்தனையாயிரங் கலியாணத்திருமேனியை யெடுத்து,
வாழ்ந்தஅன்று – மகிழ்ந்திருந்த அப்பொழுது, –
நினக்கு இனிய – உனது திருவுள்ளத்துக்கு உகப்பாகிய,
குணம் – நற்குணத்தையுடைய,
கோகனகையும் – திருமகளும்,
கண்டனளோ – (உன்னைப்) பார்த்தாளோ? (எ – று.)

தான் ஒருத்தி மனைவியாயிருக்க, நீ பதினாறாயிரவரை மணந்ததை இலக்குமி கண்டிருப்பளாகில்,
தான் ஆறியிருப்பளோ? என்பது, த்வநி. கண்ணபிரான் நரகாசுரவதஞ்செய்து, அவனாற் கொண்டுபோகப்பட்ட
மந்தரகிரியினுடைய சிகரமான இரத்தினகிரியிற் பலதிசைகளிலிருந்துங் கொணர்ந்து சிறைவைக்கப்பட்ட
பதினாறாயிரங் கன்னிகைகளையும் ஒவ்வொருவருக்குந் தனித்தனி ஒவ்வொருகணவனாயிருக்கும்படி
அத்தனையாயிரந் திருமேனியெடுத்துப் பாணிக்கிரகணஞ்செய்து அவரவர் மாளிகைகளிலெழுந்தருளி
அவர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்தன னென்பதாம்.

கோகனகை – செந்தாமரையாள்: கோகனகம் – கோகநதம் என்பதன் விகாரம்;
அதற்கு – சக்கரவாகங்கள் இனிமையாகப் பேசப்படுவதென்பதுபொருள்.
பதினாறாயிரத்தொருநூற்றுவ ரென்று ஸ்ரீ விஷ்ணுபுராணத்திற் காணப்படுகின்றது.
கணக்கோதையர் – தேவர், சித்தர், கந்தருவர் முதலிய தேவகணங்களுடைய கன்னிகைக ளென்றுமாம்.
“நிணக்கோலநேமித்திரு வரங்கேச” என்றது – பகைவனைக்கொன்று பதினாறாயிரவரையும் சிறையினின்றும்
மீட்டற்கு ஏற்ற கருவி படைத்தவனே! என்ற குறிப்பு

————–

விடம் தோய் அரவில் துயில் அரங்கேச விசும்பு முட்ட
நடந்து ஓகை தன்னுடன் நாரதன் காண நகைக்கும் முத்து
வடம் தோய் வனமுலை எண் இரண்டாயிரம் மாதர் தங்கள்
இடம் தோறும் நின்று எழில் வேறாய் இருந்தது அங்கு எவ்வண்ணமே –66-

(இ – ள்.) விடம் தோய் – விஷம்பொருந்திய,
அரவில் – ஆதிசேஷசயனத்தில்,
துயில் – யோகநித்திரை செய்தருளுகின்ற, அரங்கேச – ! – (நீ), –
அங்கு – ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில், நாரதன் – ,
விசும்பு முட்ட நடந்து – ஆகாயத்தை யணுகச் சென்று,
ஓகைதன்னுடன் – மகிழ்ச்சியோடு,
காண – பார்க்கும்படி, –
நகைக்கும் – ஒளிவிடுகின்ற,
முத்து வடம் – முக்தாஹாரங்கள்,
தோய் – நிறைந்த,
வனம் முலை – அழகிய தனங்களையுடைய,
எண் இரண்டு ஆயிரம் மாதர்தங்கள் – பதினாறாயிரம் மகளிரது, இடம்தோறும் -,
வேறு எழில் ஆய் – வெவ்வேறு ரூபமாய்,
நின்று இருந்தது – நிலைபெற்றிருந்தது,
எ வண்ணம் – எவ்வாறு? (எ – று.)

நாரதபகவான், ஸ்ரீகிருஷ்ணன் நரகாசுரனைச் சங்கரித்துக் கொண்டு வந்த பதினாறாயிரங் கன்னிகைகளையும்
ஒரு முகூர்த்தத்தில் விவாகஞ் செய்ததைக் கேள்வியுற்று, கண்ணன் அவர்கள் யாவருடனுஞ் செய்யுஞ் செய்கைகளை
யெல்லாங் கண்டு சேவிக்க வேண்டுமென்று அவரவர்களுடைய கிருகங்களிலெல்லாஞ் சென்று,
அவ்வக்கிருகங்கள் தோறும் எம்பெருமான் ஒவ்வொரு திவ்வியஸ்வரூபத்தை வகித்துத் திருவிளையாடல்
செய்தருள்வதைக் கண்டு அதியாச்சரிய மடைந்து துதித்து மகிழ்ந்தன ரென்பதாம்.

தேவர்கள் தோத்திரஞ்செய்வதைக் கேட்டு “இது பகைவர்செய்யும் ஒலியோ?” என்று பொங்கும் பரிவால்
அஸ்தாநே பயசங்கைகொண்டு சீறி விஷத்தைக் கக்குபவன் ஆதிசேஷ னாதலால், இங்கு, அவனை “விடந்தோயரவு” என்றார்;
“ஆங்காரவாரமதுகேட் டழலுமிழும், பூங்காரரவணையான்” என்றார் முதலாழ்வாரும்.
ஓகை – உவகை யென்பதன் மரூஉ. நாரதன் – ஒரு தேவமுனி. நாரம் – மனிதர் கூட்டம்: அதனை, தன் – பேதிப்பவன்;
அன்றிக்கே, நாரம் – மநுஷ்யதர்மத்தை, தன் – கொடுப்பவன் (ஆத்மஞானத்தை உபதேசிப்பவன்) என்றுமாம்.
“நின்றொழில்” என்றும்பாடம். அங்கு – அசை.

————–

பாவிக்க ஒணாத பெருமாள் விநோதம் பகருமதோ
வாவிக்குள்; நாரதன் நாரதி ஆய் ஒரு மன்னவன் தன்
ஆவிக் குலக் கொடி ஆய் நெடும் காலத்து அழிவு இல் இன்பம்
மேவி குடும்பத்து இடும்பை எல்லாம் எய்தி விட்டனனே –67-

(இ – ள்.) பாவிக்க ஒணாத – எண்ண முடியாத,
பெருமாள் – நம்பெருமாளது,
விநோதம் – திருவிளையாட்டு,
பகருமதோ – எளிதிற் சொல்லத்தகுமதோ? (அன்று என்றபடி); (அத்திருவிளையாட்டினால்),
வாவிக்குள் – ஒரு குளத்திலே,
நாரதன் – நாரதமுனிவன்,
நாரதி ஆய் – நாரதி யென்னும் ஒரு மகளாகி,
ஒரு மன்னவன்தன் – ஓரரசனது,
ஆவி – உயிரையொத்த,
குலம் கொடி ஆய் – சிறந்த பூங்கொடிபோன்ற மனைவியாய்,
நெடுங் காலத்து, – பலநாள்,
அழிவு இல் இன்பம் – குறைவில்லாத சிற்றின்பத்தை,
மேவி – அடைந்து;
குடும்பத்து இடும்பை எல்லாம் – குடும்பங்களி லுண்டாகின்ற துன்பங்களையெல்லாம்,
எய்திவிட்டனன் – அடைந்தான்; (எ – று.)

பிரமவிருடிகளையும் மயக்கவல்லது எம்பெருமானது மாயையென்று வியந்து கூறியவாறு.
வேதபுருஷன் எம்பெருமானது குணங்களுள் ஆனந்த குணமொன்றை ஆராயத்தொடங்கி முழுதும் ஆராயமுடியாமல்
“யதோ வாசோநிவர்த்தந்தே, அப்ராப்ய மநஸாஸஹ (பரம்பொருளைக் கிட்டமுடியா மல் வாக்குக்கள் மனத்துடன் திரும்புகின்றன)”
என்று கூறுகின்றா னென்றால், மற்றையோர் அப்பிரானை உள்ளபடியுணர்தல் கைகூடாத காரியமென் பதுதேற்றமாதலால்,
“பாவிக்கொணாதபெருமாள்” என்றார். பாவிக்கவொண் ணாத – தொகுத்தல்
“பாவிக்கொணாத பெருமாள் விநோதம் பகருமதோ” என்று கூறியதைப் பின்மூன்றடிகள் சமர்த்தித்து நிற்றலால்,
இச்செய்யுள் – தொடர்நிலைச்செய்யுட்குறியணியாம்.
நாரதி – நாரதனென்பதன் பெண்பால். வாவி – வாபீ: வடசொல். குலக்கொடி – அடையடுத்த உபமவாகுபெயர்.
ஆவிக் குலக்கொடி – உயிர் போன்ற மிக இனிய மனைவி.

————–

தண் துளவம் புனைதார் அரங்கா ஐவர் தையலுக்கு
வண் துகில் ஓன்று அவைக்கண் உற்ற போது தன் மன்னர் முன்னே
கண் துளி சோரத் தொழுது நின் பேர் கட்டுரைத்த பின்னை
ஒண் துகில் கோடி குவிந்தது எம்மாயம் உரிந்து உரிந்ததே –68-

(இ – ள்.) தண் துளவம் புனை – குளிர்ந்த திருத்துழாயினால் தொடுக்கப்பட்ட,
தார் – மாலையையுடைய, அரங்கா – !
அவைக்கண் – (துரியோதனனது) சபையிலே,
உற்ற போது – (அவனது தம்பியாகிய துச்சாதனனால் இழுத்து வந்து) சேர்ந்த பொழுது, –
தன் மன்னர் முன்னே – தனது கணவர்களாகிய பாண்டவர்களின் முன்பாக,
கண் துளி சோர – கண்ணீர்த்துளி சிந்தும்படி (அழுது),
தொழுது – வணங்கி,
நின் பேர் – உன்னுடைய திருநாமத்தை,
கட்டுரைத்த பின்னை – உறுதியாகச் சொன்னபின்பு,
ஐவர் தையலுக்கு -அப்பாண்டவரது மனைவியாகிய திரௌபதிக்கு,
வள் துகில் ஒன்று – (துரியோதனனது ஏவலினால் துச்சாதனன் உரிந்த) அழகிய ஆடையொன்றுதானே,
ஒள் துகில் கோடி – ஒள்ளிய அநேகவஸ்திரங்களாக,
உரிந்து உரிந்து – கழன்று கழன்று,
குவிந்தது – திரண்டது,
எ – மாயம் – எவ்வகையான மாயமோ?

துச்சாதனன் துகிலுரியத் தொடங்கியபோது திரௌபதியானவள் தனக்குநேரும் மானபங்கத்தைச் சிந்தித்துக்
கண்ணீர் ஆறாய்ப்பெருகவும், துச்சாதனன் பிடித்து இழுத்துவந்தபோது அவிழ்ந்த கூந்தல் அவ்வாறே விரிந்துபுரளவும்,
அவன்வலிய அவிழ்த்தஆடையைத் தன்னாலானவரையுந் தகைந்துபார்த்தும் முடியாமல் தளர்ந்து
அச்செயலொழிந்து தலைமேற் கைகுவியவும், தன்வசந்தப்பிப் பரவசமாய், தத்துவஞானமுதிக்கப்பெற்றவளா தலின்
பர்த்தாக்களாவது பிறதெய்வங்களாவது உதவுவார்களென்ற கருத்தை விட்டு
“பெரிய ஆபத்துக்காலத்தில் உதவுபவன் திருமாலே” என்று துணிந்து அப்பெருமானது திருநாமத்தையே
உச்சரிக்கும்போது மெய்ப்பாட்டினால் உடம்புகுளிரப்பெற்று நாவில் அமிர்து ஊற,
பக்தியின்மேலீட் டினால் உடம்புபுளகமுற, மனம்நெக்குஉருகிக் கிருஷ்ணனைப் பிரார்த்தித்த பிறகு
அவனது திருவருளால் ஆடை மேன்மேல் வளரப்பெற்றன ளென்பதாம்.

இதுவரையில் ஸ்ரீகிருஷ்ணபகவான் செய்தருளிய மாயாசேஷ்டிதங் களைக் கூறிவந்த கவி,
இச்செய்யுளினால் அப்பரமன் தன்சங்கற்பத்தினாற் செய்த காத்தல் தொழிலைக் கூறினாரென்க.
உலகத்தில் விதிவசத்தாற் சுற்ற மாகின்றவர் யாவரும் ஆபத்துக்காலத்தில் உதவமாட்டா ரென்றும்,
எவர்கள் வேறொன்றையும் உபாயமாகப்பற்றாது தன்னையே நம்பித் தன்மீது காப்பாற்றும் பாரத்தை வைக்கின்றார்களோ
அவர்கட்கு எம்பெருமான் தவறாமல் உதவுகின்ற ஆபத்பந்து வாவ னென்றும் இச்செய்யுளில் ஏற்படுதலைக் குறிப்பாக நோக்குக.
“மகத்தான ஆபத்து நேருங்காலத்தில் பகவானாகிய திருமால் தியானிக்கத்தகுந்தவனென்று வசிஷ்டமுனிவர் கூறியுள்ளதை
நினைத்துத் திருமாலைக்குறித்துத் திரௌபதி முறையிடுபவளானாள்” என்று வியாசபாரதம் கூறும்.
“ஸ்திரீகளுக்குப் பர்த்தாக்கள் ரக்ஷகரல்ல ரென்னுமிடம் தர்மபுத்ராதிகள்பக்கலிலும்
நளன்பக்கலிலும் காணலாம்” என்ற ப்ரபந்ந பரித்ராணம் இங்கு நினைக்கத்தக்கது.

திருநாமத்தின் மகிமை இருந்தபடி என்னே! என்று வியந்தவாறு. அத்திருநாமம், கோவிந்த னென்பது.
“ஆறாகி யிருதடங்க ணஞ்சனவெம் புனல் சோர வளகஞ்சோர,
வேறான துகிறகைந்த கைசோர மெய்சோர வேறோர் சொல்லுங்,
கூறாமற் கோவிந்தா கோவிந்தா வென்றரற்றிக் குளிர்ந்த நாவி,
லூறாத வமிழ்தூற வுடல் புளகித் துள்ளமெலா முருகினாளே” என்னும் பாரதச்செய்யுளை நோக்குக.
எம்பெருமானுக்குப் பல திருநா மங்க ளிருக்கவும் கோவிந்தனென்ற இப்பெயரால் விளித்தது,
இந்திரன் விடாப்பெருமழையைப் பொழிவித்தபோது தம்மாலும் தம்மைப்பாதுகாத்தற்கு உரிய இடையராலும்
காக்கமுடியாமல் தவித்துஅலைகிற நிலையிலே பசுக்களையெல்லாம் யாதொருகுறைவுமின்றிக்
கோவர்த்தனமலையைக் கொண்டு உனதுபேரருளினாற் காப்பாற்றியதுபோலவே,
என்னாலும் என்னைப் பாதுகாக்கவேண்டிய பர்த்தாக்களாலும் பாதுகாக்கமுடியாமல் தவித்து அநந்யகதியாய்
உன்னையே சரணமாக நம்பியிருக்கிற என்னை நீ பேரருள் கொண்டு காக்கவேண்டு மென்ற குறிப்பு.
(“இனி, அரைகுலையத் தலைகுலைய அலமாக்கும்படியாக முடிசூடின பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறாள்;
“கோவிந்த – தன் ஆஸ்ரிதரை நோவுபட விட்டிருக்குமவனையோ நான் ஆஸ்ரயித்தது?
“கோவிந்த – நீ கோவிந்தாபிஷேகம் பண்ணிக் கோப்தாவாயிருக்க, ஒருவர்கூறை எழுவருடுக்கும்படி யிருப்பதென்?”
“கோவிந்த – நீ ஆஸ்ரிதரக்ஷணத்திலே தீக்ஷித்திருக்க, “க்ருஷ்ணஸ்ரயா” என்றிருக்கிற என்னைக்ருபைபண்ணாதொழிவதென்?’
‘கோவிந்த – நாராயணாஎன்று உன்சிறுபே ரையோ நான் சொல்லிற்று?……
உன்னிலும்அதிகமான உன் பேரையன்றோ நான் சொல்லிற்று!’
‘கோவிந்த – என்னுடைய ரக்ஷணத்துக்கு மலையெடுக்க வேணுமோ? கண்ணாலே நோக்க அமையாதோ?” என்ற
வியாக்கியான வாக்கியங்கள், இங்கு நோக்கத்தக்கன.)

துளவம் – துளஸீ. ஐவர் – தொகைக்குறிப்பு. இனி, துகில் ஒன்று அவைக் கண் உற்றபோது எனப் பிரித்து,
சபையில் ஒருதுகில் காணப்பட்டபோது என்றுமாம்.

———-

இசை அளவிட்ட அரங்கேசர் ஐவர் தம் ஏவலின் போய்
வசை அளவிட்ட மகிபன் முன்னே வளரும் திரள் தோள்
திசை அளவிட்டன பார் அளவிட்டன சேவடி வான்
மிசை அளவிட்டன பொன் முடி மேல் என் விளம்புவதே –69-

(இ – ள்.) இசை – கீர்த்தியானது,
அளவிட்ட – எல்லாவுலகங்களி லுஞ் சென்று சேரப்பெற்ற, அரங்கேசர் -,
ஐவர்தம் ஏவலின் – பஞ்சபாண் டவர்களது கட்டளையினால்,
போய் – (தூது) சென்று,
வசை அளவிட்ட – இகழ்ச்சிச் சொற்களை மிகுதியாகச் சொல்லிய (அல்லது அபகீர்த்தி மிகுந்த),
மகிபன்முன்னே – துரியோதனனது முன்பே,
வளரும் – மேன்மேல் வளர்ந்த,
திரள் தோள் – திரண்ட (அவரது) தோள்கள்,
திசை அள விட்டன – திக்குக்களை அளாவின;
சேஅடி – சிவந்த திருவடிகள்,
பார் அளவிட்டன – பூமியை அளாவின:
பொன்முடி – பொன்மயமான கிரீடமணிந்த தலைகள்,
மிசை – மேலாக,
வான் – தேவலோகத்தை, அளவிட்டன-;
மேல் – இதனினும் மேலாக,
என் விளம்புவது – யாது சொல்வது? (எ – று.)

இங்குக் குறித்தது, துரியோதனன் தனது சபையில் பாண்டவர்க்குத் தூதாகவந்த கண்ணனைப் படுகுழி பாய்ச்சிச்
சிறையிடத் தொடங்குகையில் கண்ணன் விசுவரூபங்கொண்டபோது உண்டான நிகழ்ச்சியை.
துரியோதனனோ வசையொன்றையே அளவிட்டனன்; நீயோ தோள்களால் திசையையும், சேவடியால் பாரையும்,
முடியால் வானையும் அளவிட்டாய் என ஒருசமத்காரந்தோன்றக் கூறியமை காண்க.
துரியோதனனை “வசை யளவிட்ட மகிபன்” என்றது, கல்வி ஒழுக்கம் முதலிய புகழ்க்குக்காரணமான மேன்மைகளைச்
சிறிதும்பெறாது இழிகுணத்தையே பாராட்டி மிகக் கொண்டவனாதலினால்;
“இசையினும் பெருநன்றெனத் தனதியற்கையால் மிகவளர்த்திடும், வசை” என்பர் பாரதத்தும்.
அளவிட்டன என்ற சொல் ஒரேபொருளிற் பலமுறை வந்ததனால், சொற்பொருட்பின்வருநிலையணி யாம்.

அளவிடுதல் – அளாவிடுதல்; இனி, அளவுவிட்ட என்பதன் விகாரமாகக் கொண்டு
எண்ணிறந்த கீர்த்தியை யுடைய அரங்கேச ரென்றுமாம். மஹிபன் – பூமியைக் காப்பவன்; வடசொல் : மஹீ – பூமி.
முடியாயிரங் கொண்ட மூர்த்தி யாதலால், “அளவிட்டன பொன்முடி” எனப் பன்மையாற் கூறினார்.

————–

மா இரு ஞாயிறு பாரதப் போரில் மறைய அங்கன்
பாய் இருள் நீ தந்தது என்ன கண் மாயம் -பவள நெற்றிச்
சேய் உயர் மா மதில் சூழ் அரங்கேச திரண்டு உதித்த
ஆயிர கோடி திவாகரன் போல் ஒளிர் ஆழி கொண்டே -70-

(இ – ள்.) பவளம் நெற்றி – பவழத்தாலாகிய உச்சியையுடைய,
சேய் உயர் – நெடுந்தூரம் உயர்ந்த,
மா மதில் – பெரிய மதிலால்,
சூழ் – சூழப்பட்ட,
அரங்கஈச – திருவரங்கத்துநாதனே!நீ – ,
பாரதம் போரில் – பாரதயுத்தத்தில்
திரண்டு உதித்த – ஒருங்கே உதயமாகிய,
ஆயிரம் கோடி திவாகரன் போல் – பலகோடி சூரியர்போல,
ஒளிர் – பிரகாசிக்கின்ற,
ஆழிகொண்டு – சக்கரத்தினால்,
மா இரு ஞாயிறு – மிகவும் பெரிய சூரியன்,
மறைய – மறையும்படி,
அங்ஙன் – அவ்வாறு,
பாய் இருள் – பரவிய இருட்டை,
தந்தது – உண்டாக்கியது,
என்ன கண்மாயம் – என்ன கண்கட்டுவித்தையோ? (எ – று.)

அருச்சுனனைக் காத்தற்கு ஸ்ரீகிருஷ்ணபகவான் தனதுதிருக்கையிலுள்ள சக்கரத்தினாற் செய்த செயலை இச்செய்யுளினாற் கூறினார்.

மிக்க ஒளிமயமான சூரியனை இருள்மயமானதொரு பொருளைக்கொண்டு மறைப்பதன்றியே,
“ஸுதர்ஸநம் பாஸ்கரகோடி துல்யம்” என்னும்படி கோடிசூரியபிரகாசமமைந்த
திருவாழியாழ்வானைக்கொண்டு மறைத்தது என்னே! என்று வியந்தவாறு.
இனி, கோடிசூரியபிரகாசமான திருவாழியைக்கொண்டு சூரியனைமறைத்தல் எங்ஙனந்தான் கூடுமெனின், –
சூரியனுடையஒளி கண்ணாலே காணலாம்படி அளவுபட்டிருத்தலால் இருட்டைப் போக்கும்,
அப்படியில்லாமல் திருச்சக்கரத்தினொளி நேராகக் கண்கொண்டு காணமுடியாதவாறு அளவுபடாத
மிக்கபேரொளியை யுடைமையால் மிகவும் பளபளப்புக்கொண்டு கண்களை இருளப்பண்ணு மெனச் சமாதானங் கூறினர் ஆன்றோர்.

அருச்சுனனும் துரியோதனனும் கண்ணனைத் தத்தமக்குப் பாரதயுத் தத்திற் படைத்துணைசெய்யவேண்டுமென்று அழைத்தபோது,
“போரிற் படையெடாதொழிமின்” என்று வேண்டிய துரியோதனனுக்கு ஸ்ரீகிருஷ்ணன்
“நடையுடைப்புரவித்திண்டேர் நானிவற்கூர்வதன்றி, மிடைபடையேவி நும்மோடமர்செயேன் வேந்த” என்று
வாக்குதத்தஞ்செய்துள்ளதையும் மறந்து இங்ஙனஞ் சக்கராயுதத்தைக்கொண்டு தொழில்செய்தத னால்,
தனது வாய்மை தவறியாயினும் அடியார்கட்கு வருகின்ற ஆபத்தைப் போக்கி அவர்களைக் காத்தருள்கிற
பகவானது பேரருளுடைமை வெளியாகின்றது;

“வஞ்சின மறந்து நேமியுந்தரித்து”,
“எழிற்படையெடுக்கிலே னென்றிசைத்த நின்மொழி விட்டு….. முறுகுவெஞ்சினத்த வாழி,
யழற் படையெடுத்தா யன்பர்க்களியை நீ பெரிதுமன்றே” என்பன இங்கு நோக்கத்தக்கன.
இங்குக் கண்ணன் தனது திருவாழியினால் வெயிலைமறைத்தது, “மமப்ராணாஹி பாண்டவா:
(எனக்குப் பிராணன்களன்றோ பாண்டவர்கள்)” என்று கண்ணபிரான் தானே அருளிச்செய்துள்ளபடி
தர்மிஷ்டர்களாகிய பாண்டவர்கள்பக்கல் அவன்கொண்டுள்ள பெருங்கருணையினாலேயே.
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனங்களே திருவவதாரத்தின் நோக்க மாதலால், துரியோதனன் பக்கத்தவனான
சயத்திரதனைத் தொலைத்தற்காக இதுசெய்தனன்.
எம்பெருமானுக்குத் திவ்வியாயுதமான திருவாழி வேண்டியபொழுதெல்லாம் வேண்டியவாறெல்லாம் உதவுதல் இயல்பே.

பாரதர் – சந்திரகுலத் தரசனாகிய பரதனுடைய மரபிற் பிறந்தவர்; அவர் – துரியோதனாதியரும், பாண்டவரும்;
இவர்களுள் நிகழ்ந்த போர், பாரதப்போர். திவாகரன் – தனது உதயஅஸ்தமனங்களாற் பகலிரவுகளை உண்டாக்குபவன்:
திவா – தினம்; பகலுமாம். மாஎன்பது உரிச்சொல்லாதலின், அதன்முன் யகரவுடம்படுமெய் தோன்றிற்று.

————-

நெட்டரவின் பெரு மூச்சு எழ வீசு நெருப்பில் வெந்து
பட்ட கடம்பும் தழைத்தது மீள பசும் துளவின்
மட்டு அவிழ் தொங்கல் பொற்றாள் பட வாளி வெந்தீச்
சுட்ட கருங்கட்டையும் பெற்றது அரு உயிர் சொல்வது என்னே –71-

(இ – ள்.) பசு துளவின் – பச்சைத் திருத்துழாயினாலாகிய,
மட்டு அவிழ் – வாசனை வீசுகின்ற,
தொங்கல் – மாலையையுடைய,
அரங்கர் – திருவரங்கரது,
பொன் தாள் – அழகிய திருவடி,
பட – மேற்பட்டமாத்திரத்தில், –
நெடு அரவின் – பெரிய (காளியனென்னும்) நாகத்தினது,
பெரு மூச்சு -,
எழ – எழும்படி,
வீசும் – வீசுகின்ற,
நெருப்பில் – விஷாக்நி ஜ்வாலையில்,
வெந்து பட்ட – எரிபட்டு அழிந்த,
கடம்பும் – கடப்பமரமும்,
மீள தழைத்தது – மறுபடியும் தளிர்த்து வளர்ந்தது;
வாளி வெம் தீ – (அசுவத்தாமன் ஏவிய) அஸ்திரத்தினது கொடிய நெருப்பினால்,
சுட்ட – சுடப்பட்ட,
கரு கட்டையும் – தீந்துபோன கரிய கட்டையும்,
அரு உயிர் பெற்றது – (மீளவும்) அரிய உயிரை அடைந்தது;
சொல்வது என் – (அத்திருவடிகளின் மகிமையைக்குறித்துச்) சொல்வதென்னை? (எ – று.)

கொடிய காளியனென்னும் பாம்பினது விஷாக்கினியினாற் கருகிக் கிடந்த கடப்பமரமும்,
அசுவத்தாமனது அம்பின் வெப்பத்தினாற் கருகிப் போன கருப்பிண்டமும் கண்ணபிரானது திருவடி பட்ட
மாத்திரத்தால் முறையே தளிர்த்தும் உயிர்பெற்றும் வளர்ந்தமை கூறி அவ்வெம்பெருமானது
அகடிதகடநாசாமர்த்தியத்தை இச்செய்யுளில் விளக்கியவாறு.

மீள என்பதனை “ஆருயிர்பெற்றது” என்பதனோடுங் கூட்டுக.
வாளி – அபாண்டவாஸ்திர மென்பர். சுட்ட கருங்கட்டை – அபிமந்யுவின் மனைவியாகி உத்தரையின் வயிற்றுக்கரு.
“மீளஉருப்பெற்றது” என்றது, இளங்குழந்தையாகி நன்றாக வளர்ந்தமையை.
அவ்வாறு வளர்ந்தவனே பிறகு பரிக்ஷித்துமகாராஜனாயினனென அறிக.

————–

தாளால் சகம் கொண்ட தார் அரங்கா பண்டு சாந்திபன் சொல்
கேளா கடல் புக்க சேயினை மீட்டதும் கேதமுடன்
மாளாப் பதம் புக்க மைந்தரை மீட்டதும் மாறு அலவே
மீளாப் பதம் புக்க பாலரை நீ அன்று மீட்டதற்கே –72-

(இ – ள்.) தாளால் – திருவடியால்,
சகம் கொண்ட உலகங்களை அளந்து வசப்படுத்திக்கொண்ட,
தார் – மாலையையுடைய, அரங்கா -!
பண்டு – முன்னே (கிருஷ்ணாவதாரத்தில்), நீ -,
சாந்திபன் – சாந்தீபிநியென்னும் ஆசாரியனது,
சொல் – வார்த்தையை,
கேளா – கேட்டு,
கடல் புக்க சேயினை – கடலில் முழுகி யிறந்துபோன (அவனுடைய) புத்திரனை,
மீட்டதும் – திரும்பவுங் கொண்டு வந்து (குருதக்ஷிணையாகக்) கொடுத்ததும், –
கேதமுடன் – வருத்தத்தோடு,
மாளா பதம் – புகுதற்கரிய பாதாளலோகத்தை,
புக்க – அடைந்த,
மைந்தரை – (இரணியகசிபுவின் குமாரரும் தேவகியின் கருப்பத்திற் சேர்ந்தவருமாகிய) அறுவரையும்,
மீட்டதும் – திரும்பவும் (தனதுதாயானதேவகி காணும்படி) கொண்டுவந்துகொடுத்ததும், –
அன்று – அந்நாளில்,
மீளா பதம் – மீண்டுந் திரும்பவொண்ணாத பரமபதத்தை,
புக்க – அடைந்த,
பாலரை – (வைதிக னொருவனது) புத்திரரை,
மீட்டதற்கு – திரும்பவுங் கொண்டுவந்து கொடுத்ததற்கு,
மாறு அல – ஒப்பாகமாட்டா; (எ – று.)

இதனால், ஸ்ரீகிருஷ்ணபகவான் தானே நடந்துசென்று இறந்தஉயிரை மீட்டுப் பாதுகாத்தமை சொல்லப்பட்ட தென்க.
கடலிற்புக்கசேயும் பாதாளத்திற்புக்க மைந்தரும் மீளுதற்குஉரிய இடத்திற் சென்றன ராதலால்
அவர்களை மீட்டலில் ஓர்அருமைப்பாடு இல்லை; பிறப்பகத்தே மாண்டொழி ந்த பிள்ளைகள் நால்வரோ
மீளாவுலகமாகிய பரமபதத்திற் புக்கன ராதலால் அவர்களை மீட்டுக்கொடுத்தது முன்னையசெயல்களினும்
மிகவும் பாராட்டத்தக்கதொன்று என்பது கருத்து.
இனி, மீளாவுலகம்புக்க மைந்தர் மீண்டது எங்ஙனமோ வெனின், –
பரமபதஞ்செல்லுதற்குத் தூமாதிமார்க்க மென்றும் அர்ச்சிராதிமார்க்க மென்றும் இரண்டுவழிகள் உள்ளன;
பகவானைத்தியானித்ததன் பயனாக அந்தஎம்பெருமானருளாற் பரமபதமடைகின்றவர் அர்ச்சிராதிமார்க்கத்தாற் செல்லுதலால் மீளுதலிலராவர்;
தூமாதிமார்க்கத்தாற்சென்றாலோ மீண்டுவரலாம்; பிராட்டிமார் கிருஷ்ணாவதாரத்தின் வடிவழகைத் தாம் தரிசிக்க வேணுமென்று
கருதித் தூமாதிமார்க்கத்தால் அப்பிள்ளைகளை யெடுத்துப்போய் வைத்தன ராதலின்,
அவர்கள் ஸ்ரீகிருஷ்ண பகவானால் மீட்டுக்கொணரப்பட்டன ரென்பர்.
இச்செய்யுளில் மீளாப்பதம் புக்க பாலரை மீட்டலாகிய மேற்செயலோடு ஒப்பிடுகையில் கடல்புக்கசேயினை மீட்டதும்
மாளாப்பதம்புக்கமைந்தரை மீட்டதும் குறைவுள்ளனவா மெனக்கூறியதனால், மலர்ச்சியணி தோன்றுதல் காண்க;
இது, வடமொழியில் “உல்லாஸாலங்காரம்” எனப்படும். சாந்திபன் – விகாரம். கேளா மீட்டதென்க.

(“மாதவத்தோன்புத்திரன்போய்மறிகடல்வாய்மாண்டானை,
யோதுவி த்ததக்கிணையாவுருவுருவேகொடுத்தான்,”
“வேதவாய்மொழியந்தணனொ ருவன்எந்தைநின்சரண்என்னுடைமனைவி,
காதல்மக்களைப்பயத்தலுங்கா ணாள்கடியதெய்வங்கொண்டொளிக்குமென்றழைப்ப,
ஏதலார் முன்னேயின் னருளவற்குச்செய்து உன் மக்கள் மற்றிவரென்று கொடுத்தாய்,”
“பூவைபோ லத் தேவகிவந்துசெவ்வாய்திறந்தனள்செப்பலுற்றாள்”,
“துஞ்சியபுதல்வற் கொண்டுதுணையறுகுரவற்குய்த்தாய்,
வெஞ்சினவுருமேறன்னவெகுளியங் களிநல்யானைக்,
கஞ்சன்முன்கோறல்செய்தகருங்கடற்பவளச்செவ்வாய்,
மஞ்சரைத்தருகவென்றுமனங்குழைந்துரைத்துநைந்தாள்,”
“இளங்கிளிமழலை யன்னை யிசைத்தசொற் கேட்டலோடும்,
உளங்கசிந்துருகவின்னேயுய்த்து நீகாண்டியென்னாக்,
களங்கனிவண்ணன் மற்றைக்கலைமதிவண்ணனோடு,
வளங்கெழுசுதல்லோகம்வல்லையிற்சென்றுசார்ந்தான்”,
“காவலனாகிமற் றுக்கண்ணகலுலகங்காக்கும், மாவலியெதிர்கொண்டேத்திமலரடியிரண்டி னானே,
மூவகையுலகங்கொண்டமுழுமுதலுற்றவண்ணம், யாவதோவென் னப்பூவை வண்ணனாங்கினிதியம்பும்”,
“ஆறறிமரீசிமைந்தரறுவருமலரோ னீன்ற, நாறிணர்க்கோதைகொங்கைநயந்தனரென்றுதக்கார்,
வீறினால் விரிஞ்சன்சாவவிளைவினாலவுணராகி, யீறிலாவுணர்வுகுன்றியிரணியற்குதித் தாரன்றே”,
“சிறந்தவெண்முறுவற்செவ்வாய்த்தேவகியகட்டின்மீட்டும்,
பிறந்தனர்பிறங்குஞாங்கர்ப்பெரும்படைக்கஞ்சன்வீட்ட,
இறந்தனர்வந்து நின்பாலிருந்தனர்தருகவென்றாங்,
குறைந்தவர் தமைக்கொண்டெய்தியுய்த் தனனன்னைக்கன்றே”,
“முந்து நூலும் முப்புரிநூலும்முனீந்த, அந்தணாளன் பிள்ளையைஅந்நான்றளித்தான்”,
“ஓதுவாய்மையுமுவனியப்பிறப்புமுனக்கு முன்தந்த அந்தணனொருவன்,
காதலென்மகன்புகலிடங்காணேன் கண்டு நீதருவாயெனக்கென்று,
கோதில்வாய்மையினானுனைவேண்டியகுறைமுடித் தவன்சிறுவனைக்கொடுத்தாய்”,
“தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத் தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய, வென்னப்ப”,
“பிறப்பகத்தே மாண்டொழிந்தபிள்ளைகளைநால்வரையும்,
இறைப்பொழுதிற்கொணர்ந்து கொடுத்தொருப்படுத்தவுறைப்பன்”,
“மாமறையோன் பால்தோன்றி, மாண் டாரைப்பண்டழைத்தார்” என்பன இங்கு நோக்கத்தக்கன.)

———–

பொரும் கேதனப்படை மன்னரை மாய்த்து புவி மடந்தை
பெரும் கேதம் நீக்கி நடந்தது மீள பிறங்கு புள்ளின்
வரும் கேசவன் சக்கர மாயோன் அரங்கன் வரவிடுத்த
கருங்கேசம் ஓன்று தன் இச்சையிலே செய்த காரியமே –73-

(இ – ள்.) பொரும் – போர் செய்கின்ற,
கேதனம் படை – துவசங்க ளோடுகூடிய படையையுடைய,
மன்னரை – அரசரை,
மாய்த்து – அழித்து,
புவி மடந்தை – நிலமகளது,
பெரு கேதம் – பெரிய துன்பத்தை,
நீக்கி -, மீள நடந்தது – திரும்ப நடந்த தொழிலானது, –
பிறங்கு புள்ளின் வரும் – விளங்குகின்ற பெரியதிருவடியின்மேல் எழுந்தருளுகின்ற,
கேசவன் – கேசவனென்னுந் திருநாமமுடையவனும்,
சக்ரம் – சக்கரத்தையுடைய,
மாயோன் – மாயையையுடையவனும்,
அரங்கன் – திருவரங்கநாதனுமாகிய திருமால்,
வர விடுத்த – வரும்படி அனுப்பியருளிய,:
கரு கேசம் ஒன்று – கரிய உரோம மொன்று,
தன் இச்சையிலே செய்த காரியம் – தனது விருப்பத்தின்படி அலட்சியமாகச் செய்த தொழிலாகும்; (எ – று.)

கவி இச்செய்யுளோடு கிருஷ்ணாவதாரத்தை முடிக்கின்றன ராதலின், அவதாரகாரணத்தையும் அதன்பயனையும்
இப்பாசுரத்திற் கூறினாரென்க. பொரும் படை யென்று கூட்டுக.
கேதம் – அதிகபாரத்தைப் பொறுக்க மாட்டாமையா லுற்ற துன்பம்.
கேசவன் என்பதற்கு – கேசியென்கிறஅசு ரனைக் கொன்றவ னென்றும்,
பிரம ருத்திரர்கள் தன்னிடத்தி லுண்டாகப்பெற்றவ னென்றும்,
பிரம ருத்திரர்கள் தன்னிடத்தி லிருக்கப்பெற்றவ னென்றும்,
அழகிய மயிர்முடியை யுடையவ னென்றும் காரணப்பொருள்கள்படும்; வடசொல்.

பூமிதேவி, தன்மேலிருக்கின்ற பெரிய அசுரர்களா லுண்டான மிகுந்த பாரத்தைப் பொறுக்கமாட்டாதவளாய்த் துன்ப முற்றுப்
பிரமதேவன் முதலான தேவர்களின்முகமாய் ஸ்ரீமந்நாராயணனைத் துதிசெய்து பிரார்த்திக்க, அவ்வெம்பெருமான்
தமது திருமேனியினின்றும் வெண்மையுங் கருமையுமான மயிர்கள்போற் காணப்பட்ட தேஜசுகளை யெடுத்து,
“இந்த எனது தேஜசுகள் பூமியில் தேவகியின் கருப்பத்தில் அவதரித்துப் பூமிக்குப் பாரத்தினா லுண்டாகின்ற துன்பத்தை நீக்கும்”
என்று நியமித்து விட, அந்தத் தேஜசுகளே ஸ்ரீராமகிருஷ்ணர்களாய்த் திருவவதாரஞ்செய்து மிகவுங் கொடிய
அசுரரையும் அரசரையு மெல்லாஞ் சங்கரித்தருளிப் பூமிபாரத்தை நீக்கின வென்பது, இச்செய்யுளிற் கூறிய விஷயம்.

———–

ஸ்ரீ வேத வியாசாவதாரம்

அராவணையில் துயில் தென் அரங்கா மறை ஆயும் வண்ணம்
பராசரன் மா மகன் ஆகிய நீ பண்டு பாரதப் போர்
பொரா விழும் நூற்றுவர் சேனை எல்லாம் புனல் கங்கை வெள்ளத்
தராதல மேல் வரக் காட்டியவா தந்தை சந்திக்கவே –74-

(இ – ள்.) அரா அணையில் துயில் தென் அரங்கா – ! –
மறை ஆயும் வண்ணம் – வேதங்களை ஆராய்ந்து சீர்திருத்தும்படி,
பராசரன் மா மகன் ஆகிய – பராசரமுனிவரது சிறந்த புத்திரராகிய வியாசமுனிவராக அவதரித்த, நீ -,
பண்டு – முன்னே,
பாரதம் போர் – பாரதயுத்தத்தில்,
பொரா – போர்செய்து,
விழும் – இறந்துகிடந்த,
நூற்றுவர் – துரியோதனாதியர் நூற்றுவரது,
சேனை எல்லாம் – எல்லாச் சேனைகளையும்,
தந்தை சந்திக்க – (அவர்களது) தாதையாகிய திருதராட்டிரன் கூடிக் காணும்படி,
கங்கை புனல் வெள்ளம் தராதலமேல் – கங்கைஜலத்தின்பிரவாகத்தினிடத்தின்மேல்,
வர – வரும்படி,
காட்டிய ஆ – காண்பித்த விதம், (என்னே!) (எ – று.)

திருமாலின் தசாவதாரங்களைச் சொல்லிக்கொண்டுவந்த ஆசிரியர் இடையே வேதவ்யாஸமுனிவரது அவதாரத்தைக் கூறியது,
இவர் விஷ்ணு வின் அம்சமேயாதலாலும், கிருஷ்ணாவதாரகாலத்தோடு சமகாலத்தவராத லாலும்,
பாண்டவதுரியோதனாதியர்க்கு உறவினராய் ஸ்ரீகிருஷ்ணபகவானைப் போலவே அவர்கட்கு ஹிதாஹிதங்களை
உபதேசித்துவந்தமையாலு மென்னலாம்.
வேதங்களெல்லாம் சிதறி ஒன்றோடொன்று கலந்து ஓதற்கரிதாகி யிருந்த நிலையில்,
திருமால் வியாசரென்னும் பெயருடன் பராசரமுனிவர்க்குப் புத்திரராகத் திருவவதரித்து அவற்றைச் செம்மைப்படுத்தி
ருக் யஜுர்ஸாம அதர்வணங்க ளென்று நான்காகப் பகுத்தன ராதலால், “மறையாயும் வண்ணம் பராசரன்மாமகனாகிய நீ” என்றார்:
இவ்வாறு வேதங்களைப் பகுத்ததனால்தான், இவரை வ்யாஸரென்றும், வேதவ்யாஸரென்றும் வழங்குவரென்க.
பராஸர என்ற வடசொல், பரர்களான (பகைவர்களான) குத்ருஷ்டிகளை ப்ராமாணிகமான தர்க்கங்களாலே
நன்றாக ஹிம்ஸிப்பவ னென்றுகாரணப்பொருள்படும்.
பராசரபகவான் – வசிஷ்டமகாரிஷியினது பௌத்திரர்; புலஸ்திய முனிவரது அனுக்கிரகத்தால் சகல சாஸ்திரஞானமும் பெற்று,
வஸிஷ்டருபதேசத்தால் தத்துவஞானியாகி, பராசரஸ்மிருதியென்று வழங்கப்படும் கலியுகதர்மசாஸ்திரத்தையும்
புராணரத்நமெனப்படும் விஷ்ணுபுராணத்தையும் உரைத்தருளினர்.
ஆ – ஆறு என்பதன் விகாரம். என்னே எனவருவித்து முடிக்க.

———–

கல்கி திருவவதார வைபவம் –

தருமந்தவிர்ந்து பொறை கெட்டு சத்தியம் சாய்ந்து தயை
தெருமந்து தன் பூசனை முழுதும் சிதைய கலியே
பொரும் அந்தக் காலக் கடையினில் எம்பொன் அரங்கன் அல்லால்
அருமந்த கற்கி என்று ஆரே அவை நிலை ஆக்குவரே –75–

(இ – ள்.) தருமம் தவிர்ந்து – தருமங்கள் விட்டு விலகி,
பொறை கெட்டு – பொறுமை அழிந்து,
சத்தியம் சாய்ந்து – உண்மையொழிந்து,
தயை தெருமந்து – அருள் நிலைகலங்கி,
தன் பூசனை முழுதும் – தனது திருவாராதன முழுவதும்,
சிதைய – கெட,
கலியே பொரும் – பாவமே வெல்லுகின்ற,
அந்த காலம் – அந்தக் கலியுகத்தினது,
கடையினில் – முடிவில், –
எம் பொன் அரங்கன் அல்லால் – எமது அழகிய திருவரங்கநாதனல்லாமல்,
அருமந்த – கிடைத்தற்கரிய தேவாமிருதத்தையொத்த,
கற்கி என்று – கற்கியென்று திருவவதாரமெடுத்து,
அவை – அத்தருமம் முதலியவற்றை,
ஆரே – வேறு யாவர்தாம்,
நிலை ஆக்குவர் – நிலைபெறச் செய்வர்? (ஒருவரு மில்லை) ; (எ – று.)

திருமாலினது தசாவதாரங்களுள் மத்ஸ்யாவதாரம் முதலியவற்றில் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநங்கள்
முக்கியமானவையென்றும், இந்தக் கல்கியவதாரத்தில் தர்மஸம்ஸ்தாபநமே முக்கியமா மென்றும் உணர்க.

பொன் அரங்கன் – அழகிய அரங்கன்; அன்றிக்கே, கிடைத்தற்கரிய பொன்போன்ற அரங்கன்:
இலக்குமிக்குக் கணவனாகிய திருவரங்கநாதனு மாம். அருமந்த – அருமருந்தன்ன என்பதன் மரூஉ.
கற்கி – கல்கி; குதிரை. இது, எம்பெருமானது பத்தாந் திருவவதாரம். சந்தவின்பம்நோக்கி, அந்த காலமென இயல்பாயிற்று.

—————-

அந்தர்யாமி வைபவம்

தெள்ளும் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் சிலாகிக்குமாறு
எள்ளும் கரந்து உரை எண்ணெயும் போல் எண் இல் கோடி அண்டத்து
உள்ளும் புறம்பும் ஒழியாது நின்றும் உகங்கள் தொறும்
கொள்ளும் திரு உரு எல்லாம் அவர் அறி கோலங்களே –76-

(இ – ள்.) தெள்ளும் – தெளிவாகிய,
பொன்னி புனல் – காவேரிநதியி னது,
நல் நீர் – நல்ல நீர் சூழ்ந்த,
அரங்கர் – திருவரங்கத்துநாதர், –
சிலாகிக்கும் ஆறு – (யாவரும்) புகழும்படி,
எண் இல் – அளவில்லாத,
கோடி அண்டத்து – அண்டகோடிகளது,
உள்ளும் – உள்ளிடத்திலும்,
புறம்பும் – வெளியிடத்திலும்,
எள்ளும் -, கரந்து உறை – (அதற்குள்ளே) மறைந்து தங்குகின்ற, எண்ணெயும் போல் -,
ஒழியாது நின்றும் – நீங்காது பொருந்தியிருந்தும்,
உகங்கள்தோறும் – யுகங்களிலெல்லாம்,
கொள்ளும் – கொள்ளுகின்ற,
திருஉரு எல்லாம் – அழகிய ரூபங்களெல்லாம்,
அவர் அறி கோலங்களே – அவர் தமது இச்சையினா லெடுத்த திருவவதாரங்களேயாம்; (எ – று.) – ஏ – தேற்றம்.

எம்பெருமான் உலகத்திலுள்ள சேதநாசேதநப்பொருள்களது உள்ளே யும் புறம்பேயும் பிரியாமல் உடனுறையுந் தன்மை,
இச்செய்யுளின் முதல் மூன்றடிகளிற் குறிக்கப்பட்டது.
எம்பெருமான் “ஸாதுக்களை ரக்ஷிக்கும் பொருட்டும், துஷ்டர்களை நிக்கிரகிக்கும்பொருட்டும்,
தருமத்தை நிலை நிறுத்தும் பொருட்டும் யுகங்கள்தோறும் திருவவதரிக்கிறேன்” என்று அருளிச்செய்தபடி
அவ்வப்போது கொள்ளும் அவதாரங்களெல்லாம் தன் விருப்பத்தினாற் கொள்வனவன்றிப் பத்தசேதநரைப்போலக்
கருமவசத் தினாலாவனவல்ல என்னும் உண்மையை ஈற்றடியால் விளக்கினார்.

———-

தத்துவ உண்மை

உம்பர்க்கு அரிய பெருமாள் அரங்கர் தம் உண்மை எல்லாம்
இம்பர்க்கு உலகில் வெளியிட்டவே சரண் இல்லை என்று ஓர்
கும்பக் கட கயம் கூப்பிடச் சென்றதும் கோளரியாய்த்
தம்பத்து உதித்ததும் தாழிக்கு வீட்டினைத் தந்ததுமே –77-

(இ – ள்.) கும்பம் – குடம்போன்ற,
கடம் – மஸ்தகத்தையுடைய,
ஓர் கயம் – ஒப்பற்ற கஜேந்திராழ்வான்,
சரண் இல்லை என்று கூப்பிட – (தடா கத்தில் முதலையாற் பிடிப்புண்டு) “(நினது) உபயசரணமல்லாமல் (எனக்கு) வேறுசரண மில்லை” என்று அழைக்க, –
சென்றதும் – (அதனைப் பாதுகாத் தற்குப் பெரியதிருவடியின்மே லேறிப்) போனதும், –
கோள் அரி ஆய் – வலிமையையுடைய நரசிங்கமாய்,
தம்பத்து – கம்பத்தில்,
உதித்ததும் – திருவவதரித்ததும், –
தாழிக்கு – (ததிபாண்டனது) தயிர்த்தாழிக்கு,
வீட்டினை – பரம பதத்தை,
தந்ததும் – கொடுத்ததும், –
உம்பர்க்கு – தேவர்களுக்கும்,
அரிய – காணுதற்கரிய,
பெருமாள் அரங்கர்தம் – பெரியபெருமாளது,
உண்மை எல்லாம் – தத்துவத்தின் இரகசியங்களையெல்லாம்,
இம்பர்க்கு உலகில் – இவ்வுலகத்திலுள்ளார்க்கு, வெளியிட்ட – வெளிப்படுத்திவிட்டன; (எ – று.)

கஜேந்திராழ்வானைப் பாதுகாத்து நற்கதியளித்தது முதலிய எம்பெரு மானது செயல்கள்,
மற்றைத்தேவரன்றித் திருமாலே பரம்பொரு ளென்னுந் தத்துவத்தை விளக்கு மென்பது கருத்து.
உம்பர்க்கரியபெருமா ளென்ற சொற்போக்கில், அன்பர்க்கெளிய பெருமாளென்பது தொனிக்கும்.
கஜேந்திராழ்வான் “ஆதிமூலமே!” என்று விளித்தபோது அதற்குச் சேவைசாதித்ததனால் திருமாலே பரம்பொருளென்பதும்,
இங்கில்லையோவென்று இரணியன் தூண்புடைப்ப அங்கு அப்பொழுதே தோன்றியமையால் அப்பிரானது அந்தர்யாமித்வமும்,
தாழிக்கு முத்தியளித்ததனால் மோக்ஷப்ரதத்வமும் வெள்ளிடைமலைபோலத் தெள்ளிதிற் புலனாதல் காண்க.
கயம் – கஜம், தம்பம் – ஸ்தம்பம்; வடசொற்கள்.

————

எம்பெருமானது பரிகாரங்கள் -ஏவல் செய்வோர் –

பொங்கு அரவு எனபது மெல் அணை ஊர்தி வெம் புள் அரசு
பங்கய மின்னொடு பார்மகள் தேவி படைப் பவன் சேய்
கிங்கரர் விண்ணவர் சாதக நாடு இறை கேடில் ஒன்றாய்
அம் கண் நெடும் புவி எல்லாம் இடந்த அரங்கருக்கே –78-

(இ – ள்.) கேழல் ஒன்று ஆய் – ஒப்பற்ற வராஹஸ்வரூபியாய்,
அம் கண் – அழகிய இடத்தையுடைய,
நெடு – நீண்ட,
புவி எல்லாம் – பூமிமுழுவதையும்,
இடந்த – கோட்டாற் குத்தியெடுத்த,
அரங்கருக்கு, –
பொங்கு அரவு என்பது – சீறுகின்ற ஆதிசேஷன்,
மெல் அணை – மெல்லிய படுக்கை (மெத்தை;)
வெம் புள் அரசு – உக்கிரமான பெரியதிருவடி,
ஊர்தி – வாகனம்;
பங்கயம் மின்னொடு பார்மகள் – தாமரைமலரில் தோன்றிய மின்னல்போன்ற திருமகளும் நிலமகளும்,
தேவி – மனைவியர்;
படைப்பவன் – படைப்புத்தொழிலையுடைய பிரமன்,
சேய் – புத்திரன்;
விண்ணவர் – தேவர்கள்,
கிங்கரர் – ஏவல் செய்பவர்;
சாதக நாடு – பரமபதம்,
இறை – வீற்றிருக்குமிடம்; (எ – று.)

மின் – உவமவாகுபெயர்.
“போனகம் பதினாலு புவனந் திருப்பள்ளி பொறியரவணைப் பாற்கடல் பூமடந்தையு நிலமடந்தையுந்
தேவியர் புராத னமறைக்கு மெட்டா, வானகம் பேரின்பமுடன் வீற்றிருக்கு மிடம் வாகனம்
வயினதேயன் மலர்வந்த நான்முகன் திருமைந்த னவன்மைந்தன் மதி சூடி வாசவன்முதற், றேனகுந்
தொடைமௌலி முப்பத்து முக்கோடி தேவருன தேவல்செய்வோர்” என்பர், திருவரங்கக்கலம்பகத்தும்,
ஸாதகர் – உபாஸநை செய்வோர்; அவர் தாம்செய்யும் உபாசனையினாற் பெறுதற்கு உரிய நாடாதலின், பரமபதத்தை “சாதகநாடு” என்றார்.

———-

இதுவும் அது –

சிங்காதனம் பொற் கிரி திரு மஞ்சனம் தெய்வ விண் நீர்
கொங்கு ஆர் தொடை உடுத் தாமம் சுடர் உடைக் கோள் விளக்கம்
பொங்கு ஆழி மண் திருப் போனகம் ஆக்கினர் புண்டரிகை
தம் காதலர் நம் பெருமாள் அரங்கர் தமக்கு முன்னே –79-

(இ – ள்.) புண்டரிகைதம் காதலர் – திருமகள்கேள்வராகிய,
நம்பெரு மாள் அரங்கர் – , –
முன்னே – முற்காலத்தில், தமக்கு -,
பொன்கிரி – மேரு மலையை,
சிங்காதனம் – ஸிம்ஹாஸநமும்,
தெய்வம் விண் நீர் – தேவலோகத்திலுள்ள கங்கையை, திருமஞ்சனம் அபிஷேகமும்,
உடு தாமம் – நக்ஷத்திரங்களின் வரிசையை,
கொங்கு ஆர் தொடை – வாசனை நிறைந்த மாலையும்,
சுடர் உடை கோள் – ஒளியையுடைய கிரகங்களை,
விளக்கம் – தீபமும்,
பொங்கு ஆழி மண் – பொங்குகின்ற கடல்சூழ்ந்த பூமியை,
திரு போனகம் – இனியஉணவும்,
ஆக்கினர் – ஆகச் செய்துகொண்டனர்; (எ – று.)

சிங்காதனம் = ஸிம்ஹாஸநம்; சிங்கந் தாங்குவது போலச் செய்யப்பட்ட பீடம்,
சுடருடைக்கோள் – சூரியசந்திரர்களாகவுநாம். “பொங்காழிமண்” என்றதனால், மண் – உணவும்,ஆழிநீர் – பருகும் நீருமாகு தமன்க.

————-

தேவிமார்களின் சிறப்பு –

தேமா மலர்க்கயம் சூழ் கோயில் மேவும் திரு அரங்கர்
தாம் ஆதரித்த திருத்தேவி மாரில் தரங்க உடைப்
பூ மாது நாளும் புரத்தே சுமந்து புரக்கும் மலர்
மா மாது செல்வம் கொடுத்தே உயிர்களை வாழ்விக்குமே –80-

(இ – ள்.) தேன் – தேனையுடைய,
மா – பெரிய,
மலர் – பூக்கள்நிறைந்த,
கயம் – தடாகங்கள்,
சூழ் – சூழ்ந்த,
கோயில் – திருவரங்கம்பெரியகோயிலில்,
மேவும் – எழுந்தருளி யிருக்கின்ற, திரு அரங்கர் -,
தாம் ஆதரித்த – தாம் அன்புவைத்த,
திரு தேவிமாரில் – அழகிய (திருமகள் நிலமகளென்னும்) உபய தேவியர்களுள், –
தரங்கம் உடை – கடலை உடுக்குமாடையாக வுடைய,
பூமாது – நிலமகள்,
நாளும் – எந்நாளும்,
உயிர்களை – புரத்து – தனது உடம்பின் மேலே,
சுமந்து – தாங்கி
புரக்கும் – காப்பாற்றுவாள்;
மலர் மா மாது – தாமரையில் தோன்றிய திருமகள்,
செல்வம் கொடுத்து வாழ்விக்கும் – (அவ்வுயிர்கட்குச்) செல்வத்தைக் கொடுத்துக் காப்பாற்றுவாள்; (எ – று.)

எம்பெருமானது வலப்பக்கத்தில் ஸ்ரீதேவியும், இடப்பக்கத்தில் பூதேவி யும் எப்பொழுதும் விட்டுப்பிரியாமல் உடன் உறைவ ரென்க.
திருமால் காத்தல்தொழிற்கடவு ளாதலால் அவனது தேவிமார்தாமும் தமது கொ” நனுக்கு ஏற்ற குணமுடையவராய்க்
காத்தல் தொழிற்கு உபகாரப்பட்டிருப்ப ரென்று இப்பாசுரத்தால் அருளிச்செய்கிறார்.
தரங்கம் . ஆகுபெயர். பூ, மா – வடசொற்கள். மா – இலக்குமி. “புறத்தே” என்றும் பாடம்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – -41-60-

February 17, 2022

மாதவர் உம்பர் பெருமாள் அரங்கர் வலி உணராது
ஆதவன் மைந்தன் அயிரத்த அந்நாள் இலக்கு ஆய நெடும்
பாதவம் ஏழும் உடனே நெடும் கனை பட்டு உருவ
பூதலம் ஏழும் எழு பாதலங்களும் புண் பட்டவே –41-

இ – ள்.) மாதவர் – மாதவனென்னும்ஒருதிருநாமமுடையவரும்,
உம்பர் பெருமாள் – தேவர்கட்குத் தலைவரு மாகிய,
அரங்கர் – ஸ்ரீரங்கநாதரது அவதாரவிசேஷமான இராமபிரானது,
வலி – வலிமையை,
உணராது – அறியாமல்,
ஆதவன் மைந்தன் – சூரியனது குமாரனான சுக்கிரீவன்,
அயிர்த்த அ நாள் – சந்தேகித்த அக்காலத்தில்,
இலக்கு ஆய – (அச்சுக்ரீவன்சொன்ன படி இராமபாணத்திற்கு) எய்யும்இலக்காகிய,
நெடும் பாதவம் ஏழும் – பெரிய மராமரங்க ளேழும்,
உடனே – ஒருசேர,
நெடுங் கணை பட்டு உருவ – நீண்ட அவ்விராமபாணம் பட்டுப் பாய்ந்து துளைத்தோடிச்செல்லப்பெற,
(அந்த அம்பினாலேயே),
பூதலம் ஏழும் ஏழு பாதலங்களும் புண்பட்ட – பூமி முதலிய மேலுலகங்க ளேழும் (அதலம் முதலிய) கீழுலகங்க ளேழும் விரணமடைந்தன; (எ – று.)

இராமபாணம் அம்மராமரங்களேழுடனே ஏழுலகங்களையும் துளை படுத்தியமையை,
“ஏழுமாமரமுருவிக் கீழுலகமென்றிசைக்கும், ஏழுமூடு புக்குருவிப்பின்னுடனடுத்தியன்ற,
ஏழிலாமையான்மீண்ட தவ்விராகவன் பகழி, ஏழுகண்டபினுருவுமா லொழிவதன்றின்னும்,”
“ஏழுவேலையு முலக மேலுயர்ந்தனவேழும், ஏழுகுன்றமு மிருடிகளெழுவரும் புரவி,
ஏழு மங் கையரெழுவரு நடுங்கின ரென்ப, ஏழுபெற்றதோ விக்கணைக் கிலக்கமென் றெண்ணி” என்ற கம்பராமாயணங்கொண்டும் உணர்க.

“இராமபிரானது வலிமையை யுணராது” என்ற பொருளில் “அரங்கர் வலியுணராது” என்றது,
இந்த அர்ச்சாவதாரமும் அந்த விபவாவதாரமும் ஆகியஇரண்டும் ஸ்ரீமந்நாராயணனது திருமூர்த்திகளே யாதலால்
அவ்வொ ற்றுமைநயம்பற்றி யென்க. இவ்வுரை, முன்னும் பின்னும் கொள்ளத்தக்கது.
ஆதவன் மைந்தன் – மேருமலையின் வடபுறச்சிகரத்தி லுள்ளதொரு சரசில் மூழ்கி யெழுந்தமாத்திரத்தாற் பெண்
வடிவமடைந்த ருக்ஷரஜஸ்என்னும் வாநரராஜனது கழுத்தினழகைக் கண்டு காதல்கூர்ந்த சூரியனது அநுக் கிரகத்தால்
அப்பெண் குரங்கினிடம் தோன்றினவன் சுக்கிரீவ னென்று உணர்க.
சுக்கிரீவனுக்கு “மஹாராஜர்” என்பது, ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் வழங்கும் பெயர். மராமரம் – ஒருவகை ஆச்சாமரம்.

மாதவர், ஆதபன், பாதபம், பூதலம், பாதலம் – வடசொற்கள்.
மாதவன் – மா -இலக்குமிக்கு, தவன் – கணவன் என்று காரணப்பொருள்படும்.
இனி, மாதவர் – பெருந்தவத்தையுடையவரான முனிவர்கட்கும், உம்பர் – தேவர்கட்கும், பெருமாள் – தலைவர் என்று உரைப்பினுமாம்.
உம்பர் – எல்லாவுல கங்கட்கும் மேலதான பரமபதத்தில் வாழும் நித்தியசூரிகளுமாம்.
ஆதபன் – எங்கும் தபிப்பவ னென்று பொருள்படும்; தபித்தல் – வெயிலினாற்சுடுதல். இலக்கு லக்ஷ்ய மென்ற வடசொல்லின் சிதைவு;
எய்யப்படுங் குறி. பாதபம் – மரம்; அடியால் நீரைக்குடிப்ப தென்று காரணப்பொருள்பெறும். உடனே – ஒருங்கு:
சமகாலத்தில். காலதாமதமின்றி விரைவிலே யென்றுமாம்.
மேலே “லகங்கள் – பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம், மஹர்லோகம், ஜநலோகம், தபோலோகம், ஸத்யலோகம் என்பன.
பூதலம் ஏழும் – பூமியின் தீவுகளேழும் என்றலும் ஒன்று.
கீழேழுலகங்கள் – அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் என்பன. புண்பட்ட – பலவின் பால்முற்று.

இப்பாசுரம், இராமபிரானது வேண்டுமளவினும்மிக்கதான பேராற்றலைக் கூறியது.

————

ஒற்றைச் சரம் சுட்ட உட்கடல் போல் புறத்து ஓலம் இட
மற்றைக் கடல் வெந்தது எவ்வண்ணமோ -மத மா அழைக்க
அற்றைக்கு உதவும் அரங்கர் வெங்கோ பத்தை அஞ்சி அரன்
கற்றைச் சடையின் இடையே வெதும்பினள் கங்கையுமே –42-

(இ – ள்.) மதம் மா அழைக்க – மதத்தையுடைய விலங்காகிய கஜேந்திராழ்வான் (“ஆதிமூலமே!” என்று) கூவியழைக்க,
அற்றைக்கு உதவும்.- அப்பொழுதே (ஓடிவந்து அதன்முன்னே நின்று அதனைவருத்திய முதலையைக் கொன்று அந்தயானையைக்) காத்தருளிய,
அரங்கர் – திருவரங்கநாதராகிய இராமபிரானது,
வெம் கோபத்தை – கடுங்கோபத்திற்கு,
அஞ்சி – பயந்து, –
அரன் சடை கற்றையின் இடையே கங்கையும் வெதும்பினள் – சிவபிரானது (கபர்த்தமென்னும்) சடைத்தொகுதியினிடையே (அடங்கியுள்ள) கங்கா தேவியும் வெப்பமடைந்தாள்:
(என்றால்), – ஒற்றை சரம் சுட்ட உள் கடல் போல் – (அந்தஸ்ரீராமனது) ஓரம்பினாற் சுடப்பட்ட உள்ளேயுள்ள நீர்க்கடல் போல,
புறத்து மற்றை கடல் – (அதற்கு) அப்புறத்திலுள்ள மற்றையகடல்களும்
ஓலம்இடவெந்தது – பேரொலிசெய்யுமாறு வெதும்பியது,
எவ்வண்ணமோ – எத்தன்மையதோ! (அதுசொல்லுதற்குஅரிது என்றபடி); (எ – று.)

மகாவீரனான ஸ்ரீராமன் ஜலாதிபதியான வருணன்மீது கோபித்துக் கடலின்மேல் அக்கினி யஸ்திரப் பிரயோகஞ்செய்த பொழுது
அந்த அஸ்திராக் கினிக்கும் அப்பெருமானது கோபாக்கினிக்கும் அஞ்சி ஜலதத்துவமென்ற மாத்திரத்தால்
உருத்திர மூர்த்தியின் ஜடாமகுடத்தில் நெடுநாளாக இருக்கின்ற கங்கையென்னுங் கடவுள்நதியும் கொதித்த தென்றால்,
கடலுக்கே இனமான மற்றைக்கடல்கள் பட்ட பாடு சொல்லுதற்கு ஆமோ! என்பது, இச்செய்யுளின் கருத்து.

ஒருபொருளைக் கூறி அதுகொண்டு மற்றொரு பொருளை எளிதிற்சித்திக்கச்செய்தலால், தொடர்நிலைச் செய்யுட் பொருட்பேறணி;
இதனை வடநூலார் காவ்யார்த்தாபத்தியலங்காரமென்பர்.
“அண்ட மூலத்துக்கப்பாலாழியுங்கொதித்த தே”, தெண்டிரைக்கடலின் செய்கை செப்பியென் றேவன்சென்னி,
பண்டைநாளிருந்தநங்கைகங்கையும்பதைத்தாள் பார்ப்பான், குண்டிகையிருந்தநீருங்குளுகுளுகொதித்ததன்றே” என்ற
கம்பராமாயணம். இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
மற்றைக் கடல்கள் வெந்த வகையை, “உரவுத்திரைநீர்க்கடலடைப்பான் வருணற் பழிச்சி யுயர்கரை யின்.
விரியுந்தருப்பசயனத்தின்மேவி யோரேழ்நாள்நோற்ப, வருணன்போ தந்திலனாக வெகுண்டு வரிவெஞ்சிலையினொடும்,
புருவச்சிலைகால்குனி த்திடலும் புகைந்த வோரேழ்புணரியுமே” என்ற கூர்மபுராணத்தாலும்,
“வரு ணன்மேற் சரம்விட வாரிவெந்ததே,”
“பரவைகளேழினும் பகழிபாய்ந்திட, எரிகனல்மடு்த்திட” என்ற மகாபாகவதத்தாலும் காணலாம்.
நதிவெதும் பியமை கூறியதுகொண்டு நதிபதிவெதும்பியமை உணர்த்தப்பட்டது.
ஒற்றைச் சரம் – எவ்வளவுபெரியபகையையும் அழித்தற்கு வேறொன்றன்உதவியை வேண்டாத தனியம்பு;
ஒப்பற்ற அம்பு எனினுமாம்.
உட்கடல் – இந்த ஜம்பூத்வீபத்தையடுத்துள்ளதான உவர்நீர்க்கடல்.
புறத்து மற்றைக்கடல் – அக்கடலுக்கு அப்பால் ஒன்றன்பின் ஒன்றாகவுள்ள மற்றைஆறுதீவுகளையும்
தனித்தனி சூழ்ந்திருக்கின்ற கருப்பஞ்சாற்றுக்கடல் முதலிய ஆறுகடல்கள்.
இத்தொடரில் அண்டகடாகத்திற்குப் புறத்திலுள்ள ஆவரணஜலமாகிய பெரும்புறக்கடலும் அடங்கும்.

ஸரம், மதம், ஜடா, கங்கா – வடசொற்கள். ஓலம் – ஒலி. ஓலமிட – தமது வருத்தத்தை முறையிடுகின்றாற்போலக் கதற வென்க;
(இராமன்பக்கல்) அபயம்வேண்டுமாறு எனினுமாம். மற்றை – சுட்டியதற்கு இனமுணர்த்தும் இடைச்சொல்.
வெந்தது – வே என்ற பகுதியின் இறந்தகாலத்தொழிற்பெ யர்; பகுதி குறுகிற்று. ஓகாரம், வியப்புத்தோன்ற நின்றது.
மதம் மா – மதங்கொள்ளும் மிருகம்; எனவே, யானையாயிற்று.
“அச்சக்கிளவிக்கு ஐந்து மிரண்டும், எச்சமிலவே பொருள்வயினான” என்ற தொல்காப்பியத்தை நோக்கி
“கோபத்தை யஞ்சி” எனப்பட்டது; உருபுமயக்கமாக, கோபத்திற்கு எனத் திரித்தலுமாம்.
உம் – உயர்வு சிறப்பு. “கங்கா” என்பது வடமொழியிற் பெண்பாற்சொல்லாதலாலும்,
நதிக்குஉரியதெய்வம் ஸ்த்ரீஜாதி யாதலாலும், “வெதும்பினள் கங்கை” எனப் பெண்பாலாற் கூறினார்.

இப்பாசுரமும், மேற்பாசுரம்போலவே இராமனது பேராற்றலை யுணர் த்தியது.

———–

கொங்கு உண்டு வண்டு அமர் தண் தார் அரங்கர் வெங்கோபமுடன்
பொங்கும் சரம் செய்த மாயம் என்னோ தன் புகழ் அடைய
மங்கும் படிக்கு மறம் செய் இராவணன் வாகினி கண்டு
எங்கும் குரங்கு எங்கும் ராமன் என்று ஏங்கி இரிந்திடவே –43-

(இ – ள்.) தன் புகழ் அடைய – தனது கீர்த்தி முழுவதும்,
மங்கும்படிக்கு – அழியும்படியாக,
மறம் செய் – கொடுந்தொழில்களைச் செய்த,
இராவணன் – இராவணனுடைய,
வாகினி – (மூலபலமென்னும்) சேனையானது,
கண்டு – பார்த்து,
எங்கும் குரங்கு எங்கும் ராமன் என்று ஏங்கி இரிந்திட – எங்கே பார்த்தாலும், குரங்கும் எங்கே பார்த்தாலும் இராமனுமா யிருக்கின்ற தென்று ஏக்கமடைந்து அழிந்திடும்படி, கொங்கு உண்டு வண்டு அமர் தண்தார் அரங்கர் வெம் கோபமுடன் பொங்கும் சரம் செய்த – தேனைக்குடித்துக் கொண்டு வண்டுகள் விரும்பிமொய்த்திருக்கப்பெற்ற குளிர்ச்சியான மாலையையுடைய ரங்கநாதராகிய இராமபிரானது கடுங்கோபமுடன் கொதித்து வந்த அம்பு செய்த,
மாயம் – மாயை.
என்னோ – யாதோ! (எ – று.)

அவரதுகோபம் பொங்கியபோதே அம்பும் பொங்கியதனால், “அரங்கர் வெங்கோபமுடன் பொங்குஞ் சரம்” எனப்பட்டது.
இரண்டுபொருள்களுக்கு ஒருவினைபொருந்தச் சொல்லுத லாகிய புணர்நிலையணி இங்குத் தோ ன்றுதல் காண்க.
இதனை வடநூலார் ஸஹோக்தியலங்காரமென்பர்: “உடன்” என்ற மூன்றாம்வேற்றுமையுருபு, இவ்வணிக்கு உரியது.
இனி, அரங்கரது கோபத்தை அவரது அம்பின்மேல்ஏற்றி வெங்கோபமுடன் பொங்குஞ்சரம்” என்றா ரென்றலுமாம்;
உடையானது பண்பை உடைமையின்மேலேற்றிக் கூறும் உபசாரவழக்கு பொங்குரல் – கொதித்துக்கிளர்தல். அரங்கர் சரமென்க.
மற்றும், அந்த அஸ்திரத்திற்குஉரியதேவதை கொள்ளுங் கோபத்தை அம்பின்மேல் ஏற்றவுந் தரும்.
“வெங்கோபமுடன் பொங்கும்” என்ற அடைமொழியை அரங்கர்க்குக் கூட்டவுமாம்.
“என்னோ என்றது, வியப்புப் பற்றி. பிரமனது குலத்திற்பிறந்தமை, வேதமுழுவதும்ஓதியமை,
அநேகசாஸ் திரங்களைக்கரைகண்டமை, நித்தியகர்மாநுஷ்டாநம், அரியதவவேள்விகள் செய்துபெருவரம்பெற்றமை
முதலியவற்றால் இராவணன் தான் அடையும் புகழ் முழுவதும் பொலிவுபெறாது கெடும்படி, தமையனையடக்குதல்,
முனிவர்கட்கும்தேவர்கட்கும் தீங்குவிளைத்தல், பிறர்மனைவியரைக்கவர்தல், பிராட்டியை வஞ்சனையால் அபகரித்தல்
முதலிய பல கொடுந்தொழில்களைச் செய்து பழிபாவம் மிகப்பெற்றதனால், “தன்புகழடைய மங்கும்படிக்கு மறஞ்செய் இராவணன்” என்றார்.

ராவணன் என்ற வடமொழிப்பெயர் – கூச்சலிடுபவ னென்றும், கூச்ச லிடச்செய்பவ னென்றும் பொருள்படும்.
சிவபிரானது கைலாசகிரியைப் பெயர்க்கத்தொடங்கி அதன்கீழ்த் தன்கைகள் அகப்பட்டுநசுங்குண்டபோது பேரிரைச்சலிட்டதனாலும்,
தனது கொடியசெய்கைகளால் உலகத்தைக் கதறச்செய்ததனாலும், இவனுக்கு இப்பெயர். இது, சிவபிரான் இட்டது.
தனக்கும் பிறர்க்கும் இதமறியாத துஷ்டஸ்வபாவமுடையவ னென்பதை இப்பெயர் விளக்கும்.
இனி, விசிரவமுனிவனது புதல்வனெனப் பொருள் படுந் தத்திதாந்தநாம மெனக் கொள்ளுதலு மொன்று.

மாயம், வாகினி – மாயா, வாஹிநீ என்ற வடசொற்களின் விகாரம்.
மாயை – உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும், ஒன்றை மற்றொன்றாகவுங் காட்டும் விசித்திரம்.
தனது நற்குண நற்செய்கைகளினாலும் திருமேனியழகினாலும் எல்லாரையும் மகிழ்விப்பவனென்பது,
ராமனென்ற திருநாமத்தின் பொருள். “ராமன்” எனத்தற்சமமாகவே கூறினார், செய்யுளோசையின்பொருட்டு.
மங்கும்படிக்கு என்றதில் கு – சாரியை. ஏங்கி யிரிந்திடச் செய்த மாயம் என இயையும்.
தண்தார் – திருத்துழாய்மாலையும், மலர்மாலைகளும். கொங்கு உண்டு – வாசனையை மோப்பத்தால் உட்கொண்டு எனினுமாம்.
கொங்கு – பூந்தாதுமாம். ஏங்குதல் – அச்சத்தால் உள்ளமும் உடலும் மெலிதல்.
இரிதல் – அழிதல்; “இடு” என்ற துணைவினை, தேற்ற முணர்த்திற்று.

இராமபிரான் மூலபலத்தை வதைத்தது “ஏழுநாழிகைக்குள்” என்றும், “மூன்றேமுக்கால்நாழிகைக்குள்” என்றும் கூறுதலும் உண்டு.

இப்பாசுரமும். இராமபிரானது பெருந்திறல் கூறியதே.

———-

பேர் ஒத்த ஆயிரம் பேர் மடிந்தால் பிறங்கும் கவந்தம்
நேர் ஒத்த ஆடும் அது ஆயிரம் ஆடின் நெடும் சிலையின்
ஏர் ஒத்த கிண் கிணி சற்று ஒலித்திடும் அது ஓர் யாமம் நின்று
கார் ஒத்த மேனி அரங்கர் தம் போரில் கறங்கியதே –44-

(இ – ள்.) பேர் ஒத்த ஆயிரம் பேர் மடிந்தால் – புகழ்பொருந்திய ஆயிரம் வீரர்கள் (போரில்) இறந்தால்,
கவந்தம் பிறக்கும் நேர்ஒத்த ஆடும் – தலையற்றஉடற்குறை (யொன்று) எழுந்து சரிவரத் தாளவடைவுபொருந்தக்கூத்தாடும்,
அது ஆயிரம் ஆடில் – அவ்வாறு ஆயிரங்கவந்தங்கள் எழுந்துகூத்தாடினால்,
நெடுஞ் சிலையின் ஏர் ஒத்த கிண்கிணி சற்று ஓல்இடும் – பெரிய வில்லிற் கட்டப்பட்டிருக்கின்ற அழகுபொருந்திய மணியானது சிறிதுஒலிக்கும்;
கார் ஒத்த மேனி அரங்கர்தம்போரில் – காளமேகத்தைப்போன்ற திருமேனியையுடைய திருவரங்கநாதராகிய இராமபிரானது யுத்தத்தில்,
அது ஒர் யாமம் நின்று கறங்கியது – அந்தமணி (இராமன் கைக்கொண்ட கோதண்டத்தி லுள்ள மாணி) ஒருயாமகாலம் இடைவிடாமல் ஒலித்தது; (எ – று).

“அரங்கர்தம் போரில்” என்றது, மேற்கூறியபடி இராமபிரான் விசித் திரமாகப் போர்புரிந்து மூலபலவதை செய்தபொழுது என்றபடி.
அப் போரில் மடிந்தவர் அளவற்ற பலரென்பது, இவ்வாறு விளக்கப்பட்டது. அவர்தொகை, கூறுதற்கரிய தென்பதாம்.
இச்செய்யுளிற்கூறிய மரபை, கம்ப ராமாயணத்து மூலபலவதைப்படலத்தில்
“ஆனையாயிரந்தேர்பதினாயிரமடர் பரியொருகோடி,
சேனைகாவலராயிரம்பேர் படிற் செழுங்கவந்தமொன்றாடும்,
கானமாயிரமாயிரகோடிக்குக் கவின்மணி கணிலென்னும்,
ஏனையம் மணி யேழரைநாழிகையாடியதினிதன்றே” என்றதனாலும்,

வில்லிபுத்தூரார் பாரதத்துப் பதினான்காம் போர்ச்சருக்கத்தில்
“அநேகமாயிரம்பேர்படக் கவந்தமொன்றாடு மக்கவந்தங்கள்,
அநேகமாயிரமாட வெஞ்சிலைமணியசைந் தொருகுரலார்க்கும்,
அநேகநாழிகை யருச்சுனன்சிலைமணியார்த்த தக்களம் பட்ட,
அநேகமாயிரம்விருதரை யளவறிந்தார்கொலோவுரைக்கிற்பார்” என்றதனாலுங் காண்க.
சற்று ஓலிடும் – அசைந்து ஒருமுறை ஒலிக்கு மென்றபடி.

யாமம் – வடசொல்: ஏழரைநாழிகைப்பொழுது; ஒருநாளின் எட்டிலொருபகுதி; (மூன்றுமணிநேரம்)
(ஸ்ரீவால்மீகிராமாயணத்து மூலபலவத கட்டத்தில் “திவஸஸ்ய அஷ்டமே பாகே” என்றதற்கு
“ஒருபகலின் எட்டி லொருபாகத்திலே” என்று பொருள்கொண்டு, “மூன்றேமுக்கால்நாழிகை” என்று உரைசெய்திருக்கின்றார்கள்;
அதற்கு – “ஒருநாளின் எட்டிலொரு பாகத்தில்” என்று பொருள்கொண்டால், ஒருயாமகாலத்திலென்றதாகும்.)
கவந்தம் – கபந்த மென்ற வடசொல்லின் திரிபு;
அதற்கு – வடமொழிநிகண் டில், “தொழிலுடன்கூடின தலையற்றஉடல்” என்று பொருள் கூறப்பட்டி ருக்கின்றது.
கிண்கிணி – கிங்கிணீ என்ற வடசொல்லின் விகாரம்; சிறிது ஒலிப்பது என்பது, அதன் காரணப்பொருள்.
கிண்கிணியென்பதைத் தமிழ்ச் சொல்லாகவே கொண்டு, கிண்கிண்என்று ஒலிப்பதெனக் காரணப்பொருள் கூறுதலும் ஒன்று.
பேர் – பெயர் என்பதன் மரூஉ, பிறக்கும் – முற்றெச்சம்.
ஒன்று மூன்று நான்காம் அடிகளில், “ஒத்த” என்பது – இறந்த காலப்பெயரெச்சம்; ஒ – பகுதி;
ஒத்தல் – பொருந்துதலும், சமானித்தலும், இரண்டாமடியில் “ஒத்த” என்றது – செயவென்னும்வாய்பாட்டு வினையெச் சம்;
ஒத்து – பகுதி: ஒத்துதல் – தாளம் போடுதல். ‘சற்று’ – இடைச்சொல். ஒல் இடுதல் – ஒலியைச் செய்தல்.

மேற்பாசுரம்போலவே, இராமன் மூலபலத்தையழித்த திறத்தை வியந்து கூறியது, இப்பாசுரமும்.

————-

சற்பத்து உறங்கும் அரங்கா உன் பாதம் தனை அடைந்த
நற்பத்தருக்கு ஒரு நாசம் உண்டோ நல மா மருத்தின்
வெற்பைக் கொணர்ந்த விறல் அனு மானும் அவ் வீடணனும்
கற்பத்து அளவும் அழியாது இருக்கவும் கற்பித்தையே –45-

(இ – ள்.) சற்பத்து உறங்கும் அரங்கா – ஆதிசேஷன்மேல் (பள்ளிகொண்டு) யோகநித்திரைசெய்தருள்கின்ற திருவரங்கனே!
நலம்ஆம் – நன்மையைத் தருவதான,
மருத்தின் வெற்பை – ஸஞ்ஜீவிபர்வதத்தை,
கொணர்ந்த – தூக்கிக்கொண்டுவந்த,
விறல் அனுமானும் – வலிமையையுடைய ஹநுமானும்,
அ வீடணனும் – அந்த வீபிஷணாழ்வானும்,
கற்பத்து அளவும் அழியாது இருக்கவும் – உலகமுடியுங்காலமளவும்இறவாமலிருக்கும்படியாகவும்,
கற்பித்தையே – (நீ) கட்டளையிட்டருளினையே:(ஆதலால்),
உன்பாதம்தனை அடைந்த நல் பத்தருக்கு ஒரு நாசம் உண்டோ – உனது திருவடிகளை யடைந்த நல்லஅடியார்கட்கு அழிவுஉண்டோ? (இல்லையென்றபடி); (எ – று.)

இராமபிரான் தனது அடியவர்களான அநுமானுக்கும் விபீஷணனுக்கும் பிரமகற்பமளவும்அழியாமற்
சிரஞ்சீவியாய்வாழும்படி அநுக்கிரகஞ் செய்த தாகிய சிறப்புப்பொருளைக்கொண்டு, திருமாலின் திருவடிகளை யடைந்த
மெய்யடியார்கட்கு யாதோரழிவுமுண்டாகா தென்ற பொதுப்பொருளைச் சாதித்தலால், தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி.

அனுமான் – ஹநுமாந் என்ற வடசொல்லின் விகாரம்; இப்பெயர், கன்னத்தில் விசேஷமுடையவ னென்று பொருள்படும்.
ஹநு – கன்னம், மாந் – உடைமைப்பொருள்காட்டும் வடமொழிப்பெயர்விகுதி.
மேருபர்வதத்திற் கேசரியென்ற வாநரவீரனது மனைவியான அஞ்ஜநாதேவியினிடம் வாயு தேவனது
அநுக்கிரகத்தாற் பிறந்த குமாரனான இவன், பிறந்தவுடனே இளஞ்சூரியனைக் கனிந்தபழமென்றுகருதிப் பிடித்தற்குப் பாய்ந்தபொழுது,
அதனையறிந்து கோபங்கொண்ட இந்திரன் வச்சிராயுதத்தினால் அடிக்க
அவ்வடிபட்டுச் சிதைந்த கன்னமுடையவ னானதனால், இவனுக்கு ஹநுமாந் என்று பெயராயிற்று; இது, இந்திரன் இட்டது.
இவ்வாநரவீரன் சுக்கிரீவனுக்கு மந்திரியும் சினேகிதனு மானவன்; ராமலக்ஷ்மணர்கள் சீதையைத் தேடிக்கொண்டு சென்றபொழுது,
அவர்கள்பக்கல் பேரன்புகொண்டுவந்து சந்தித்துப் பணிந்து பேசி இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நட்புச்செய்வித் தவன்;
இராம தூதனாய்ச்சென்று கடல்கடந்து இலங்கைசேர்ந்து சீதையின் வரலாற்றையறிந்து மீண்டுவந்து இராமபிரானிடம் செய்திகூறி,
அதன்பின் இராமன் சென்று இராவணன்முதலிய அரக்கர்களைக் கொல்வதற்கு மிக்க உதவிபுரிந்தவன். “சிறியதிருவடி” என்பது,
ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தில் அநுமானுக்கு வழங்குந் திருநாமம்.

வீடணன் – விபீஷணன் என்றவடசொல்லின் சிதைவு இப்பெயர், (பகை வர்க்கு) விசேஷமாய்ப் பயங்கரனானவனென்று காரணப் பொருள்படும்.
இனி, இதற்கு – பயங்கரனல்லாதவனென்று பொருளுரைப்பாரு முளர். இவன், இராவணனது இறுதித்தம்பி;
நற்குணநற்செயல்களை யுடையவன். இராம பிரான் இராவணாதியரை யழித்தற்பொருட்டுப் பெரியவாநர
சேனையைச் சித்தப்படுத்திக்கொண்டு புறப்பட்டுத் தென்கடலின் இக்கரையைச்சேர்ந்தவள விலே,
இலங்கையில் சபைவீற்றிருந்த இராவணன் இனிச்செய்யத்தக்க தைக்குறித்து மந்திரிகளுடனே இரகசியமாக ஆலோசனை செய்கையில்,
அவனது தம்பியும் சத்துவகுணசீலனுமான விபீஷணன் பற்பலநீதிகளையெ டுத்துக்காட்டி
“மகாபலசாலியான இராமனிடத்திலே சீதையைக் கொண்டு போய் ஒப்பித்துவிடுவதே தகுதி” என்று வற்புறுத்திக்கூறவும்,
இராவணன் அதுகேளானாய்க் கோபங்கொண்டு பலவாறு இகழ்ந்துபேச, விபீஷணன் அதனைப்பொறாது
அத்தமையனையும் சுற்றத்தையும் இனத்தையும் விட்டுத் தீப்பற்றியவிடத்தினின்று வெளிப்படுமாறுபோல
அந்தத்துஷ்டர் கூட்டத்தி னின்று புறப்பட்டு வந்து இராமபிரானைச் சரணமடைந்து அப்பெருமானால் அன்போடு அபயமளித்து
ஏற்றுக்கொள்ளப்பட்டு அவனுக்கு உதவியாகி அரக்கர்களுடைய சூழ்ச்சிகளையெல்லாம் எடுத்துச்சொல்லி,
அவர்களனைவரையும் போரில்அழிததற்குப் பெருந்துணைசெய்து,
ஸ்ரீராமனால் இலங்கை யரசனாக முடிசூட்டப்பட்டன னென்ற வரலாறும், இங்கு அறியத்தக்கது.
‘அவ்வீடணன்’ என்றது, மேன்மைபற்றி; அகரச்சுட்டு, பிரசித்திபற்றி வந்தது.
ரஜோகுண தமோகுணங்களால் மிக்குத் தீயனவற்றையேசெய்யுங் கொடிய அரக்கர்கோஷ்டியில் ஒருவனாயிருந்தும்
ஸத்வகுணமே மிக்கு நல்லனவேசெய்யுமியல்பினனான விபீஷணனது ஞானசீலங்களின் மேன்மை தோன்ற, ‘அவ்வீடணன்’ என்றார்.

அநுமான் மருத்துமலைகொணர்ந்து இலக்குமணனைஉயிர்ப்பித்த இரு முறையிலும் இராமபிரான் அவன்பக்கல்
மிகவுந்திருவுள்ளமுகந்து அவனைச் சிரஞ்சீவியாய் என்றும் வாழும்படி அருள்செய்தனன்.
(கம்பராமாயணத்து யுத்தகாண்டத்தில் மருத்துமலைப்படலத்தில்
“இன்றுவீசலா தெவரு மெம்மொடு, நின்றுவாழுநாள் நெடிதுநல்கினாய்,
ஒன்றுமின்னல்நோயுறுகிலாது நீ, என்றும்வாழ்தியா லினிதெனேவலால்” என்றதும்,
வேலேற்றுப்படலத் தில்
“வீர னனுமனைத் தொடரப் புல்லிப், பெற்றனெ னுன்னை யென்னை பெறாதன பெரியோ யென்றும்,
அற்றிடையீறுசெல்லாவாயுளையாக வென் றான்” என்றதுங் காண்க.)

இராமபிரான் திருவவதாரத்தை முடித்துக் கொண்டு இவ்வுலகத்தைநீத்துத் தன்னடிச்சோதிக்குஎழுந்தருளும்போது
விபீஷணனுக்குச் சிரஞ்சீவியாய்வாழுமாறுஅருள்செய்தன னென்பதை, உத்தரகாண்டத்து இறுதிப்படலத்தில்
“மின்பயில்தடக்கைவேல்வீடணன்தனைப், பொன்பயில்நகர்வயிற் போதி பூதல,
மன்பதையளவு நீவாழ்தியா லென, அன்புடனாணையானகலநீக்கினான்” என்றதனால் உணர்க.
இவர்களில் அநு மானுக்கு “ஒருநாளும்விளியாநாளுமுறுக” என்று பிரமனும்,
“யான் மறு விலாமனத்தேனென்னின், ஊழியோர்பகலாயோதும்யாண்டெலா முலக மேழு,
மேழும்வீவுற்றஞான்று மின்றெனவிருத்தி” என்று சீதாபிராட்டியும்,
விபீஷணனுக்கு “நீயென்றுமிரவாதிருத்தி” என்று பிரமனும் கொடுத்திருக்கின்ற அழிவிலாவரத்தைப் பெருமான்
இங்ஙனம் பரிபாலித்தருளின னென்க.
மற்றையோர்பலரைப் பெருமான் தன்னுடன் வைகுந்தத்திற்கு அழைத்துக்கொண்டுபோகின்றபோது
இவ்விருவரையும் உடன்கொண்டு செல்லாமற் பிரமகற்பமளவும் இவ்வுலகில்வாழுமாறு கட்டளைகூறி
முன்புஅவர்கட்குப்பிரமனும்பிராட்டியும்தந்தவரத்தைப் பரிபாலித்ததை இங்ஙனம் பாராட்டிக்கூறினாருமாம்.
விபீஷணனுக்கு இலங்கையிற் பட்டாபிஷேகஞ் செய்விக்கும்பொழுது இவ்வகைவரமளித்ததாகவும் கூறுவ துண்டு.
“இலங் கைகாத்தளிப்ப வீடணற்காயு ளியம்புமோர் கற்பம தளித்து” என்றது, ஸ்ரீபாகவதம்.

ஸர்ப்ப மென்ற வடசொல்லின் விகாரமான சர்ப்பமென்பது, எதுகை நயம் நோக்கிச் சற்பமெனத் திரிக்கப்பட்டது;
தரையென்பது தறையென வேண்டுமிடத்து ரகரம்மாற்றப்படுதல் போல. யாதம், பக்தர், நாஸம், கல்பம் – வடசொற்கள்.
ஓ – எதிர்மறை. மருத்தின் வெற்பு – மருந்தையுடைய மலை; ஓஷதிகிரி. “மருந்து” என்ற மென்றொடர் வன்றொடராயிற்று;
இன் – சாரியை. நலம் – நன்மையைத்தருகின்ற, மா மருந்து – மஹௌஷதி யென்றுங் கொள்ளலாம். நல என்றுஎடுத்து, நல்ல என்றலுமாம்.
விறல் – வெற்றியுமாம். முன்றாமடியில், உம்மைகள் – எண்ணுப்பொருளன. நான்காம் அடியில், உம்மைகள் – உயர்வுசிறப்பு.
“அழியாதிருக்கவும்” என்ற உம்மையை எச்சப்பொருளதாகக் கொண்டு, அவர்கட்கு முறையே தன்னால்தழுவிக் கொள்ளப்படுதலும்
இலங்கையரசனாதலும் முதலிய `சிறப்புக்களைத் தந்தது மன்றி யென்பதை வருவித்தலுமாம்.
கற்பித்தை – முன்னிலையொருமை யிறந்தகாலமுற்று; ஐ – விகுதி. ஒரு நாசம் உண்டோ – நாசம் ஒன்றேனும் உண்டோ? என்றபடி.

————————

ஆவும் பயமும் அமுதும் ஒப்பு ஆன அரங்கருக்கு
மேவும் புகழ் இன்னும் மேவும் கொலோ அவர் மெய் அருளால்
தாவும் தரங்கத் தடம் சூழ் அயோத்திச் சரா சரங்கள்
யாவும் கிளையுடன் வைகுந்த யோகத்தில் ஆர்ந்திட்டவே –46-

(இ – ள்.) ஆவும் பயமும் அமுதும் ஒப்புஆன – பசுவையும் (அதனிடத்துப்) பாலையும் (அதனிடத்து) இனிமையையும் போலுள்ள,
அரங்கருக்கு – திருவரங்கநாதராகிய இராமபிரானுக்கு,
மேவும் – உண்டான,
புகழ் – கீர்த்தி.
இன்னும் மேவும்கொல்ஓ – வேறு யார்க்கேனும் உண்டாகுமோ? (உண்டாகா தென்றபடி): (ஏனெனில்), –
தாவும் தரங்கம் தடம் சூழ் அயோத்தி சர அசரங்கள் ஆவும் – மேன்மேலெழுந்துவருகின்ற அலைகளையுடைய தடாகங்கள் சூழ்ந்த அயோத்தியாபுரியிலுள்ள சரங்களும் அசரங்களு மாகிய எல்லாப்பொருள்களும்,
கிளையுடன் – (தம்தம்) சுற்றத்துடனே,
அவர் மெய் அருளால் – அந்தஸ்ரீராமபிரானது பழுதுபடாத கருணையினால்,
வைகுந்தலோகத்தில் ஆர்ந்திட்ட – வைகுண்டலோகத்திற் சென்று சேர்ந்திட்டன. (எ – று)

“அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி”,
“கற்பாரிராம பிரானை யல்லால் மற்றுங்கற்பரோ, புற்பாமுதலாப் புல்லெறும்பாதி யொன்றின்றியே,
நற்பாலயோத்தியில்வாழுஞ் சராசரம் முற்றவும், நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார்பெற்றநாட்டுளே” என்றார் ஆழ்வார்களும்.

“இராமபிரானுக்குஉண்டானகீர்த்திவேறியார்க்கேனும் உண்டாகுமோ? என்று ஒருவிஷயத்தைக் கூறி,
அதனை, “அப்பெருமானது திருவருளால் அயோத்திச்சராசரங்கள்யாவும் கிளையுடன் வைகுந்தலோகத்தில் ஆர்ந்திட்டவே” என்ற
தக்க காரணத்தைக்கொண்டு சாதித்தது, ஏதுவணியின் பாற்படும்.
இப்படி தாம்திருவவதரித்த நகரத்தில் வாழ்ந்த சராசரங்களெல் லாவற்றிற்கும் வைகுந்தமளித்தவர் வேறெவரு மில்லை யாகையால்,
இவ்வகைக்கீர்த்தி பெருமாளுக்கே அஸாதாரணமாகின்ற தென்க.

பசுவினிடத்துப் பாலும் அதனிடத்து இன்சுவையும் போல அசித்தாகிய சரீரத்திலே சித்தாகிய ஜீவாத்மாவும்
அதனிடத்தே அந்தர்யாமியான பரமாத்மாவுமாக வாழ்பவரென்பார், “ஆவும் பயமும் அமுதுமொப்பான அரங்கர்” என்றார்.
இது, விசிஷ்டாத்வைத சித்தாந்தம். அமுது – பாலின் ஸார மெனினுமாம். சர + அசரம் = சராசரம்:
தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; உம்மைத்தொகை.
சரம் – அசையும்பொருள், இயங்குதிணைப் பொருள்; ஜங்கமம். அசரம் – அசையாப்பொருள், நிலைத்திணைப்பொருள்;
ஸ்தாவரம். இவையே இருவகைத்தோற்றம். மெய் அருள் – பயன்விளைத்தல்தவறாத அருள்.
பயஸ், அம்ருதம், அயோத்யா, வைகுண்டலோகம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
அயோத்யா என்பது – போர்செய்து வெல்லமுடியாத தென்று பொருள்படும்.
நான்காம்அடியில், “யாவும்” என்பது, “ஆவும்” என விகாரப்பட்டது;
ஆனை, ஆடு, ஆளி, ஆமை, ஆறு, ஆர் என்பன போல. கிளை – மரத்திற்குக் கிளைபோலத் தமக்கு உறுப்பாகும் உறவினம்;
உவமவாகுபெயர். கொல் ஓ என்ற இரண்டு இடைச்சொற்களில், ஒன்று – வினாவகையால் எதிர்மறை குறித்தது; மற்றொன்று – அசை.
ஆர்ந் திட்ட – “அன்” சாரியை பெறாத பலவின்பால் முற்று; “இடு” என்ற துணை வினை, துணிவுணர்த்திற்று.
ஈற்றுஏகாரத்தைத் தேற்றப்பொருள தென்னலாம்; தேவதாந்தரங்களை ஏசுங் கருத்தினதுமாம்.
தரங்கம் – வடசொல். தடம் – சரயூநதியுமாம்; அந்த மகாநதி அயோத்தியாபுரியைத் தழுவுவது போல வளைந்திருத்தலால்,
“தாவுந்தரங்கத்தடஞ்சூழயோத்தி” எனலாகும்.

————-

(இதுவும், அடுத்தபாசுரமும் – ஸ்ரீபலராமாவதார வைபவம்.)

ஒரு தாய் இருந்து வருந்த வைதேகியுடன் சுரத்தில்
ஒரு தாய் சொலச் சென்றது என் அரங்கா வையம் உய்யும் வண்ணம்
ஒரு தாய் உதரத்தில் ஓர் அறு திங்கள் உறைந்த பின்னை
ஒரு தாய் வயிற்றில் வந்து உற்றது எம்மாயம் உரைத்து அருளே –47-

(இ – ள்.) ஒரு தாய் சொல – ஒருதாய் (கைகேயி) சொன்னதனால்,
ஒரு தாய் இருந்து வருந்த – ஒருதாய் (கௌசல்யை) (அயோத்தியாபுரியிலேயே) இருந்து வருந்தும்படி,
வையம் உய்யும் வண்ணம் – உலகத்துஉயிர்கள் (கொடியோரால்நேர்ந்த உபத்திரவம் நீங்கி) வாழும்பொருட்டு,
வைதேகியுடன் சுரத்தில் சென்ற – சீதையுடனே கொடியகாட்டிற்குப்போயருளிய,
தென் அரங்கா – அழகிய திருவரங்கத்துநாதனே! – (நீ),
ஒரு தாய் உதரத்தில் ஓர் அறு திங்கள் உறைந்த பின்னை – ஒருதாயின் (தேவகியினது) திருவயிற்றிலே ஆறுமாதகாலம் வசித்தபின்பு,
ஒரு தாய் வயிற்றில் வந்து உற்றது – மற்றொருதாயின் (ரோகிணியினது) திருவயிற்றில் வந்துசேர்ந்தது,
எ மாயம் – என்ன மாயை!
உரைத்தருள் – சொல்லியருள்வாயாக.

தந்தை ஏவவேண்டுமென்பதை எதிர்பாராமலே இராமபிரான்
“மன்ன வன்பணியன்றாகில் நும்பணிமறுப்பனோ,…… இப்பணி தலைமேற்கொண் டேன்,
மின்னொளிர்கானமின்றேபோகின்றேன் விடையுங்கொண்டேன்” என்று சொல்லிப் புறப்பட்டமை தோன்ற,
“ஒருதாய்சொலச் சென்ற” என்றார்.

“தொத்தலர் பூஞ்சுரிகுழற் கைகேசி சொல்லால் தொன்னகரந் துறந்து” என்றார் குலசேகராழ்வாரும்.
முதலடியில் “ஒருதாய்” என்றது, பெற்றதாயை. இரண்டாமடியில் “ஒருதாய்” என்றது, மாற்றாந்தாயை.
ஒரேவகைச் சொல்லால் இருவரையும் சமமாகக் குறித்தது,
இராமபிரானுக்கு அவர்களினிடம் ஒருநிகராகவுள்ள அன்புநிலையைப்பற்றி யென்க.
புத்திரனைப்பிரிவதனால் வருத்தமுற்ற கௌசல்யை “என்னையும் உன்னுடன் அழைத்துக்கொண்டுபோ” என்று வேண்டவும்,
இராமன் அங்ஙனம் செய்யாமல் “சக்கரவர்த்தியுடன்இருந்து அவர்க்கு ஆவனசெய்தலே அறமாகும்” என்றுசொல்லி
அத்தாயைத் தந்தையினிடம் இருக்க விட்டுச் சென்றன னாதலால், “ஒருதாய் இருந்து வருந்தச் சென்ற” எனப்பட்டது.
“ஈற்றுத்தாய் பின்தொடர்ந் தெம்பிரா னென்றழக், கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன,
சீற்றமிலாதான்” என்றது, பெரியாழ்வார்திருமொழி.
இப்படி வனவாஸஞ்சென்றது ராவணாதிராக்ஷஸஸம்ஹாரஞ்செய்து உலகத்தவர்களை இனிதுவாழச்செய்தற்பொருட் டாதலால்,
“வையம்உய்யும்வண்ணம் சுரத்திற்சென்ற” என்றார். சுரம் – சுடுங்காடு.
(“மாதிரங்கள், மின்னுறுவின் விண்டேர் திரிந்துவெ ளிப்பட்டுக், கன்னிரைந்து தீந்து கழையுடைந்து கால்சுழன்று,
பின்னுந் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவாக், கொன்னவிலும் வெங்கானம்” என அதன்
கொடுமையைத் திருமங்கையாழ்வார் அருளிச்செய்தார்.)
சீதையை எடுத்துச்சென்று இராவணன் அழிய வையம் உய்தற்குப் பெருமாள் பிராட்டி யுடன்வனஞ்சென்றதே மூல மாதலால்,
“வையமுய்யும்வண்ணம் வைதேகி யுடன் சுரத்திற் சென்ற” எனலாயிற்று.

எம்பெருமானால் நியமிக்கப்பட்ட யோகநித்திரை யெனப்படும் மா யை நந்தகோபருடைய கோகுலத்திலே யிருந்த
வசுதேவபத்தினியான ரோகிணியின் வயிற்றி லிருந்த வாயுரூபமான ஆறுமாதத்துக்கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு
வசுதேவருடைய மற்றொருபத்தினியான தேவகியின் வயிற்றி லிருந்த ஆதிசேஷாம்சமான கர்ப்பத்தைக் கொண்டுபோய்
அந்த ரோகிணியின்வயிற்றிற் சேர்த்திட, இங்ஙனம் வசுதேவபத்தினிகளுள் தேவகியின் கர்ப்பத்தில்
(ஏழாவது கருவாக) ஆறுமாசமும், ரோகிணியின் கர்ப்பத்தில் மற்றோர் ஆறுமாசமும் இருந்து
பிறந்தவன் பலராமனென்பது, பின்னிரண்டடியில் அறியத்தக்கது. இவன் – திருமாலின் எட்டாம்அவதாரம்;
இவனிடத்து, ஆதிசேஷனது அம்சமும் கலந்திருந்தது. தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் அவதரிப்பவனும் திருமாலின்
ஒன்பதாம் அவதாரமுமான கண்ணனுக்கு முன்பு இவன் பிறந்ததனால் அவனுக்குத் தமையனாயினன்.
தசாவதாரங்களுள் ஏழாவதான தசரதராமாவதாரத்தோடு எட்டாவதான பலராமாவதாரத்தையுஞ் சேர்த்து அருமைபாராட்டினர்,
இப்பாசுரத்தில்; இரண்டும் அடுத்தஅவதாரங்க ளாதலால். “வையம்உய்யும்வண்ணம்” என்றதை மத்திமதீபமாக,
“உறைந்தபின்னை”, “வந்துற்றது” என்பவற்றோடுங் கூட்டலாம்;

துஷ்டஅசுரர்கள்பலரும் கெட்டஅரசர்கள் பலரும் ஒருங்கே கூடி வசிப்ப தனாலுண்டான பூமிபாரத்தை நிவிருத்திசெய்து
உலகத்தவரைவாழ்வித்தற் பொருட்டு அப்பூமிதேவியின் பிரார்த்தனைப்படி தேவர்கள்வேண்டியதனால் திருமால்
வசுதேவகுமாரராய்ப் பலராமகிருஷ்ணர்களாகத் திருவவதரித்தன னென உணர்க.
இப்படி கருப்பம் ஒருத்திவயிற்றைவிட்டு மற்றொருத்தி வயிற்றிற்கு மாறுவது உலகத்தில் எங்கும் என்றுங்
காணாததோர் அதிவிசித் திர மாதலால், அதற்குக் காரணமான பகவானுடைய அற்புதசக்தியை “எம்மாயம்” என்று கொண்டாடினர்.
மாயை – அகடித கடநா ஸாமர்த்யம், செயற்கரியன செய்யுந் திறம். அது பிறர்கூறுதற்கரிய தென்ற கருத்தால் நீயே உரைத்தருளென்றார்.

வைதேஹீ என்ற வடசொல், விகாரப்பட்டது: உடம்பில்லாமற்போகக் கடவதென்று வசிட்டமுனிவராற்சபிக்கப்பட்டு
விதேகனாகிய நிமியரசனது மரபில் வளர்ந்தவ ளென்று பொருள்படும்;
தத்திதாந்தநாமம். சொல – தொகுத்தல். உதரம் – வடசொல். திங்கள் – சந்திரன்;
அமாவாசைக்கு அமாவாசை ஒருமாச மெனக்கொண்டு சந்திரசம்பந்தத்தாற் காலத்தைவரையறுக் குஞ் சாந்திரமான
ரீதிபற்றி, “திங்கள்” என்று மாதத்திற்குப் பெயர் வழங்க லாயிற்று: “மதி” என்பதும் இது; இலக்கணை. பினை, ஐ – சாரியை

—————-

கதி பட்ட பொன்னி அரங்கேசர் ஆடு -கருந்திரை நீர்
நவின்றிடல் ஆகும் நலம் கெழு கூர் நுதி பட்ட நெட்டலத் தாலே நலம் கெழு –
-கூர் நுதி பட்ட நெடு அலத்தாலே -இழிந்திட நூற்றுவர் தம்
பதி -பட்ட கண் கலக்கம் தெரியாது பகருதற்கே -48-

(இ – ள்.) கதி பட்ட பொன்னி அரங்க ஈசர் – விரைந்தோடுதல் பொ ருந்திய காவேரிநதியாற் சூழப்பட்ட திருவரங்கத்தில் எழுந்தருளியிருக் கின்ற எம்பெருமான்,
ஆடு – (பலராமாவதாரத்தில்) நீராடுகின்ற,
கரு திரை நீர் நதி – கருமையான அலைகளையுடைய நீரையுடைய யமுனையாறு,
பட்ட பாடு – (அவர் கலப்பைகொண்டு இழுத்திட்டதனால்) அடைந்த வருத்தம்,
நவின்றிடல் ஆகும் – (ஒருவாறு) சொல்லுதல்கூடும்;
நலம் கெழு – நன்மை மிக்க,
கூர் நுதி பட்ட – கூர்மையான நுனிபொருந்திய,
நெடு அலத்தாலே – நீண்ட கலப்பையாலே,
இழுத்திட – (அப்பலராமர்) இழுத்திட்டதனால்,
நூற்றுவர்தம் பதி – துரியோதனாதியரது ஊராகிய ஹஸ்திநாபுரி,
பட்ட – அடைந்த,
கண்கலக்கம் – துன்பமோ வென்றால்,
பகருதற்கு – சொல்வதற்கு, தெரியாது -; (எ – று.)

இதனால் இப்பொழுதும் அஸ்தினாபுரி தென்புறம் உயர்ந்து வடபுறம் தாழ்ந்து அப்பக்கத்திலுள்ள கங்கையினுள்ளே
விழுவதுபோல விருக்கின்ற தென்பதை,
“புரவல வின்னுநும்பொன்னஞ்சூட்டெயில், திருநகர் தென்ற லைச்சேணிலோங்குறா,
விரிதிரைக்கங்கையில்வீழ்தல்போன்று மற்று, ஒரு குழையவன்வலியுணர்த்துகின்றதால்” என்ற ஸ்ரீபாகவதத்தால் உணர்க.
(பலராமனுக்குக் கலப்பையும் உலக்கையும் முக்கியஆயுதங்கள்.)
அதனால், அவனுக்கு ஹலாயுதன், ஹலீ, முஸலீ என்ற பெயர்கள் வழங்கும்.
நலம் – சிறப்பு, துஷ்டநிக்கிரகமுமாம். நலங்கெழு – அலத்திற்கு அடைமொழி.
“நலங்கெழுகூர்நுதிபட்டநெட்டலத்தாலேயிழுந்திட” என்றதை மத்திமதீபமாக “நதிபட்ட” என்றதனோடுங் கூட்டுக.
யமுநாநதியின் ஜலம் கருநிறமுடைய தாதலால், “கருந்திரைநீர்நதி” எனப்பட்டது.

கதி, நதீ, ஹலம் – வடசொற்கள். நெடுமை + அலம் = நெட்டலம்: பண்புப்பெயர், ஈறுபோய்த் தன்ஒற்றுஇரட்டியது.
நூற்றுவர் – நூறுபேர்; இங்கே துரியோதனாதியர்க்குத் தொகைக்குறிப்பு.
துன்பம்உண்டானபோது கண் கலங்குதலால், துன்பத்திற்கு “கண்கலக்கம்” என்று ஒருபெயர் வழங்கும்; காரியவாகுபெயர்.
துன்பத்திற்கு “அலக்கண்” என்று ஒருபெயரிருத்தல் இங்குநினைக்கத்தக்கது. பகருதற்குத்தெரியாது – சொல்லமுடியாதென்றபடி.

யமுநாநதிபட்டபாட்டினும் அஸ்தினாபுரி்பட்டபாடு பெரிய தென்பது கருத்து. இங்ஙனம் பலராமனது பேராற்றலை யுணர்த்தினர்.

———–

இது முதல் 25 கவிகள் ஸ்ரீ கிருஷ்ணாவதார மகிமை

பண்டு விழுங்கிய பாரும் திசையும் பனிக் கடலும்
சண்ட நெடும் கிரித்தானம் எல்லாம் சண்பகாடவி மேல்
மண்டு பெரும் புனல் சூழ் அரங்கேசர் தம் வாய் மலருள்
கண்டு மருவினள் சீர் நந்த கோபர் தம் காதலியே –49-

(இ – ள்.) சண்பகம்அடவிமேல் – சண்பகமரச்சோலையின்மேல்,
மண்டு – மிக்குப்பாய்கின்ற,
பெரும்புனல் – பெரியகாவேரிநீரினால்,
சூழ் – சூழப்பட்ட,
அரங்கம் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற,
ஈசர்தம் – பெருமானாகிய கண்ணபிரானது,
வாய் மலருள் – செவ்வாம்பல்மலர்போன்ற திருவா யினுள்ளே, –
பண்டுவிழுங்கிய – முன்னே (கற்பாந்தகாலத்தில்) உட்கொண்ட,
பாரும் – பூமியையும்,
திசையும் – திக்குக்களையும்,
பனி கடலும் – குளிர்ந்த கடலையும்,
சண்டம் நெடுங் கிரி தானம் – மிகவும் பெரிய மலைகளினிடங்களையும்,
எல்லாம் – (அவற்றிலுள்ள) எல்லாப்பொருள்களையும்,
நந்தகோபர்தம் காதலி – நந்தகோபரது மனைவியான யசோதைப்பிராட்டி,
கண்டு – பார்த்து,
சீர் மருவினள் – சிறந்த மகிழ்ச்சியை யடைந்தாள்; (எ – று.)

நந்தகோபர் – இடையர்களையும்பசுக்களையுங்காப்பவர்: நந்தர் – இடையர்; கோ – பசு.
இவர், கண்ணனை வளர்த்த தந்தையார். வசுதேவனும் தேவகியும் கம்ஸனாற்சிறையிலிருத்தப்பட்டு வடமதுரையில்
தளைபூண்டிருக்கையில், திருமால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்திற் கண்ணனாய் அவதரிக்க,
அக்குழந்தையைக் கம்சன்கொல்லக்கூடுமென்ற அச்சத்தால், தாய்தந்தையர் அத்தெய்வக்குழவியின் அநுமதிபெற்று
அந்தச்சிசுவை அதுபிறந்தநடுராத்திரியிலேயே திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாந்தலைவரான நந்தகோபரது
திருமாளிகையிலே இரகசியமாகக் கொண்டு சேர்த்துவிட்டு, அங்கு அப்பொழுது அவர்மனைவியான யசோதைக்கு
மாயையின் அம்சமாய்ப்பிறந் திருந்ததொரு பெண்குழந்தையை எடுத்துக்கொண்டுவந்துவிட,
அதுமுதற் கம்சனைக் கொல்லுகிறவரையிற் கண்ணபிரான் அந்தக்கோகுலத்திலேயே நந்தகோபகுமாரனாய்
யசோதைவளர்க்க வளர்ந்தருளினன்; அங்ஙனம் வளர்கையில் ஒருநாள், கண்ணன் குழந்தையாகிய தன்னை
நீராட்டும்போது மஞ்சளாலே தனது மெல்லியநாவை வழித்த யசோதைக்குத் திவ்ய சக்ஷுசைக்கொடுத்துத்
தன்வாயைத்திறந்துதன்வைபவத்தைக் காட்டியருள, அவள் அந்தப்பிள்ளையின்வாயினுள்ளே ஸகலலோகங்களையும் கண்டனளெ ன்க.

“கையுங்காலும்நிமிர்த்துக் கடாரநீர், பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ் சளா, லையநாவழித்தாளுக் கங்காந்திட,
வையமேழுங்கண்டாள் பிள்ளைவா யுளே,”
“வாயுள் வையகங் கண்ட மடநல்லார், ஆயர்புத்திரனல்ல னருந் தெய்வம்,
பாயசீருடைப் பண்புடைப்பாலகன், மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே” என்றார் பெரியாழ்வாரும்.

சண்டம், கிரி, ஸ்தாநம், சம்பகாடவீ, நந்தகோபர் – வடசொற்கள். வாய் மலர் – முன்பின்னாகத் தொக்க உவமத்தொகை.
மலர் – செந்தாமரை மலருமாம்;
“மண்டிணிஞாலமும் வானமு முட்பட, அண்டமுண்டுமிழ்ந்த தோ ரம்போருகமே” என்பர் திருவரங்கக்கலம்பகத்தில்.
சீர் நந்தகோபர் என்று எடுத்து, ஸ்ரீநந்தகோபர் என்றுஉரைத்து, “மருவினள்” என்பதற்கு – (மகிழ்ந்து அக்குழந்தையை)
அணைத்துக்கொண்டாள் என்றலும் ஒன்று. காதலி – அன்புக்குஉரியவள்; இ – பெயர்விகுதி

————–

உன்னைக் களவில் உரலோடு கட்டி வைத்து உன்னுடைய
அன்னைக்கு ஒருத்தி போது அலை ஆழி மங்கை
தன்னைப் புணர்ந்தருள் தார் அரங்கா அவள் தன் மருங்கில்
பின்னைக் கொடு சென்ற பிள்ளை மற்று ஆர் என்று பேசுகவே –50-

(இ – ள்.) அலை ஆழி மங்கைதன்னை – அலைகளையுடைய திருப்பாற் கடலில் தோன்றிய திருமகளை,
புணர்ந்தருள் – சேர்ந்தருள்கின்ற,
தார் அரங்கா – மாலையையுடைய திருவரங்கனே! –
களவில் – (நீ தயிர்நெய்பால் வெண்ணெய்) திருடியதற்காக,
ஒருத்தி – ஓர்இடைச்சி,
உன்னை உரலோடு கட்டிவைத்து – உன்னை உரலுடன் சேர்த்துக்கட்டிவைத்து,
உன்னுடைய அன்னைக்கு அறிவித்த போது – உனது தாயான யசோதைக்கு (அச்செய்தியை)த் தெரிவிக்கச்சென்றபொழுது,
அவள் – அவ்விடைச்சி,
தன் மருங்கில் – தன்இடையில்,
கொடு சென்ற – கொண்டுபோன,
பிள்ளை குழந்தை, பின்னை ஆர் என்று பேசுக – வேறுயாரென்று சொல்வேனாக? (எ – று.) – நீயே யாயினாய் என்றதாம்.

கண்ணன் இளம்பிராயத்தில் இடையர்வீடுதோறுஞ்சென்று வெண்ணெய் பால் தயிர் நெய் முதலியவற்றைக் களவாடி யுண்டுவர,
அதனை ஒரு நாள் பதிவிருந்து பார்த்த ஒரு கோபஸ்திரீ கிருஷ்ணனைத் தன்வீட்டில் உரலுடன் சேர்த்துக்கட்டிவைத்துவிட்டு,
அச்செய்தியை யசோதையினிடஞ் சொல்லி அவளைக்கொண்டு கண்ணனைத் தண்டிக்கவேண்டு மென்று கருதித்
தன்பிள்ளையை இடுப்பிலெடுத்துக்கொண்டு யசோதையினிடம்வந்து கண் ணன்செய்தியைச்சொல்லிமுறையிட,
அச்சமயத்திற் கண்ணபிரான் மாயை யால் அவளது இடுப்பிலுள்ள பிள்ளை தானாகவும்
அவள்வீட்டிற் கட்டுண்ட பிள்ளை அவள் மகனாகவு மாய்விட, அதுகண்டு
அவள் நாணங்கொண்டு சென் றன ளென்பது, இங்குக் குறித்தது.
களவில் – திருடியபொழுது, அன்னை – வளர்க்குந்தாய்.
“அலைஆழிமங் கைதன்னைப் புணர்ந்தருள்” என்றதற்கு – இரட்டுறமொழிதலென்னும்உத்தியால்,
அலைகளையுடைய கடல் சூழ்ந்த பூமிதேவியைச் சேர்ந்தருள்கின்ற என்ற பொருளுங் கொள்ளலாம்;
“பூமடந்தையும்நிலமடந்தையுந்தேவியர்” ஆதலால்: “பங்கயமின்னொடு பார்மகள் தேவி” என்பர் மேல் 78 – ஆம் பாசுரத்திலும்.
பேசுக – வியங்கோள்முற்று; இங்கே தன்மையொருமைக்கு வந்தது; நீ சொல்வாயாக என முன்னிலையொருமையுமாம்.

————-

கடிக்கும் கரளப் பிறை வாள் எயிற்று வெங்காளியன் மேல்
நடிக்கும் பெரிய பெருமாள் அரங்கர் நறை கமழ் பால்
குடிக்கும் களவுக்கு மாறு கொண்டே ஒரு கோபி பற்றி
அடிக்கும் பொழுதில் பதினால் உலகும் அடிபட்டவே –51-

(இ – ள்.) கடிக்கும் – கடிக்கின்ற,
கரளம் – விஷத்தையுடைய,
பிறை வாள் எயிறு – பிறையையும் வாளையும் போன்ற பற்களையுடைய,
வெம் காளியன் மேல் – கொடிய காளியனென்னுஞ் சர்ப்பத்தின்மேல்,
நடிக்கும் – கூத்தாடுகின்ற,
பெரியபெருமாள் அரங்கர் – பெரிய பெருமாளாகிய அரங்கநாதன், (கிருஷ்ணாவதாரத்தில் இளம்பருவத்தில்),
நறை கமழ் பால் – வாசனைவீசு கின்ற பாலை,
குடிக்கும் – (ஒருவரும்) அறியாதபடி குடிக்கின்ற,
களவுக்கு – திருட்டிற்காக,
மாறு கொண்டு – கோபங்கொண்டு,
ஒரு கோபி – ஓரிடைச்சி,
பற்றி – (அந்தக்கண்ணனைப்) பிடித்து,
அடிக்கும் பொழுதில்-,
பதினாலு உலகும் அடிபட்ட – பதினான்கு உலகங்களிலுள்ளனவான சராசரப்பொருள்க ளெல்லாம் அடிபட்டன; (எ – று.)

கண்ணபிரான் திருவாய்ப்பாடியிற் பால்முதலியவற்றைத் திருடினா னென்று அவனை ஒரு ஆய்ச்சி பருத்த
மத்தைக் கொண்டு அடித்தபொழுது எக் காலமுந் தனது திருவுதரத்திற்குள் அசையாதுவைத்து
அவனாற் பாதுகாக் கப்படும் ஸகலலோகங்களும், அவற்றிலுள்ள சராசரங்கள் யாவும் அடிபட்டன வென்பதாம்.
இங்கு, ஒரு அற்பகாரியத்தைச் செய்கையில் அதனுள் செய் தற்கு அரிய பெருங்காரியம் நிறைவேறுதலாகிய
சிறப்பணி அமைந்திருத்தல் காண்க. பருகுதற்கு அருகமாகாதபடி விஷமாய்க்கிடந்த நீரைப் பருகுதற்கு
உரிய அமுதமாக்கிக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணன் தான் ஒரு ஆய்ச்சி யின்கையிலகப்பட்டு அடிபட்டதும்
அப்பெருமானது திருவுள்ளமே யென்க.
மற்றையோருடைய உடம்பில் அடிபட்டாலோ, அவ்வுணர்ச்சி அவரது உடம்புமாத்திரத்தோடு நிற்கும்;
பகவானுக்கோ சேதநாசேதநங்கள்யா வும் சரீர மாதலால், அப்படிப்பட்டசரீரத்தில் ஓரடி படும்போது
அதனுணர்ச்சி அந்தச் சேதநாசேதங்களெல்லாவற்றுக்கும் உண்டாதல் இயற்கையே யாம்.
இதனால், எல்லாப்பொருள்கட்கும் உயிராயுள்ள எம்பெருமானது ஜகத்சரீரத்துவம் கூறப்பட்டது.
ஸ்ரீகிருஷ்ணபகவானை அடிக்கவேண்டு மென்று விரும்பிய ஆய்ச்சி தன்னைத்தானே யடித்துக்கொண்டவளாதலுங் காண்க.
(இதனை, “வேதமடியுண்டன விரிந்தபலவாகமவிதங்களடியுண்டன வொரைம்,
பூதமடியுண்டன விநாழிகைமுதற்புகல்செய்பொழுதுதொடுசலிப் பில்பொருளின்,
பேதமடியுண்டன பிறப்பிலியிறப்பிலிபிறங்கலரசன்றன் மகளார்,
நாதனமலன்சமரவேதவடிவங்கொடு நரன்கையடியுண்டபொழுதே” என்ற செய்யுளோடு ஒப்பிடுக.)

நறைகமழ்பால் – சுவைமிக்க பால். களவு – தொழிற்பெயர்; கள் – முதனிலை. கோபி – கோபனென்பதன் பெண்பால்;
இனி, இதனுட் கோபத்தை யுடையவளென்னும் பொருளுந் தோன்றுமாறு அறிக.
காளி, காளாத்திரி, யமன், யமதூதி எனப் பாம்பிற்கு விஷப்பற்கள் நான்கு என்பர்.

———–

ஆரம் தரும் பொன்னி சூழ் அரங்கா உன் தன் ஆய்ச்சி வெகு
தூர நெடும் கயிறு எல்லாம் மிசை சேர்த்து வைத்தும் அவை
ஈர மருங்கின் குறைந்திட கண் பிசைந்து எங்கும் அவள்
வேர் அம்புய முகம் கண்டு அளவு ஆன விநோதம் என்னே –52-

(இ – ள்.) ஆரம் தரும் – மாலையை யொக்கின்ற,
பொன்னி – காவேரியால்,
சூழ் – சூழப்பட்ட,
அரங்கா – திருவரங்கத்துநாதனே! –
ஆய்ச்சி – யசோதை,
வெகு தூரம் நெடுங் கயிறு எல்லாம் – மிகவும் நீண்ட கயிறெல்லாவற்றையும்,
மிசை சொத்து வைத்தும் – மேன்மேற் சேர்த்துச் சுற்றிவைத்தும்,
அவை – அக்கயிறுகள்,
உன்தன் – உன்னுடைய,
ஈரம் மருங்கின் – அழகிய இடையினளவினும்,
குறைந்திட – போதாமற் குறைந்துவிடுதலால்,
கண் பிசைந்துஏங்கும் – கண்களைப் பிசைந்து கொண்டு இரங்குகின்ற
அவள் – அவளது,
வேர் – வேர்வையையுடைய,
அம்புயம் முகம் – தாமரைமலர்போன்ற முகத்தை,
கண்டு – பார்த்து, (உடனே நீ),
அளவு ஆன – அக்கயிற்றினளவாகத் திருமேனிசுருங்கிக் காட்டிய, விநோதம்-,
என்னே – யாதோ! (எ – று.)

ஒருநாள் ஸ்ரீகிருஷ்ணபகவான் யசோதைப்பிராட்டி சேர்த்துவைத்திரு ந்தமோர்களையெல்லாம் கீழேகொட்டிவிட்டு,
பொத்தவுரலைக்கவிழ்த்து அதன் மேலேறித் தித்தித்தபாலையும் தடாலினில் வெண்ணெயையும் விழுங்கிக்கொ ண்டிருந்தானாக,
அதனைக்கண்ட அவ்யசோதை “இவனை இஷ்டப்படி போக விடலாகாது; கட்டியே போகடவேணும்” என்று எண்ணி
அவனைப்பிடித்து அதட்டி ஓர் உரலோடு கட்டுவதற்காகத் தாம்புக்கயிற்றைக் கொணர்ந்து முடிந்து முயன்று பார்த்தும்
அவைகளும் போதாதனவேயாக, முடிவில் அப்பிராட்டி இளைத்துச் சோர்ந்து வருந்துகையில்,
ஸ்ரீகிருஷ்ணபகவான் முடிச்சுள்ள ஒருசிறுகயிற்றினாற் கட்டும்படி தானே ஆயினனென்க.

“கண்ணி நுண்சிறுத்தாம்பினாற் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்ழுகண்ணியாற்
குறுங்கயிற்றாற் கட்ட வெட்டென்றிருந்தான்” என்பன பெரியார் பாசுரங்கள்.
(“பெரியவுரலுருட்டியவன்முன்னர்வைத்துப் பிரமனுடனுலகுதந்த பெரியோன்றன்னை,
யரியதவஞ்செய்துமகிழசோதை நங்கை யழகியநற்கயிற்றை யவன்மருங்கிற்சேர்ப்ப,
விருவிரல்மாத்திரம் போதாதாகப் பின்னரிடை யர்மனைத்தாம்பெல்லாமெடுத்துக்கட்டத்,
திருமகன்றனிடைக்கதுவும் போதாதாகத் திகைத்தனள் வந்துரோகிணியுஞ் சிரித்துநின்றாள்,”
“அரிவை யர்கள்மிகநகைக்கவசோதைநங்கை யாயர்மனைத்தாம்பெல்லாமுடிந்தொன் றாக்கிக்,
கரியவனைக்கட்டுதலும் போதாதாகிக் கைசலித்துமெய்வேர்வுசொரி யக்கண்டு,
வரையினமர்யோகிகட்கும் மறைநாலுக்கும் வானவர்க்கும் வாசவற்கு மலரின்வந்த,
பிரமனுக்கு மகப்படாப் பெரியோன் தாய்கைத்தாம்பினா லுலூகலத்திற்பிணிப்புண்டானால்” என்றார் பிறரும்.)
இவ்வாறுநிகழ்ந்தது, அப்பெருமானது அகடிதகடநாஸாமர்த்தியத்தா (கூடாததையுங் கூட்டுவிக்குந் திறமையா) லென்க.

ஆரந்தரும் – மலையினின்றும் முத்துக்களைக் கொணர்ந் தெறிகின்ற என்றும், சந்தனமரத்தை யடித்துக்
கொண்டுவருகின்ற என்றும் உரைக்கலாம். உன்தன் மருங்கு என்க. வெகு – பஹு என்னும் வடசொல்லின் விகாரம்.
வேர் – முகத்துக்கு அடை; இனி, வேரியென்பதன் விகாரமாய், வாசனையையுடைய தாமரை யென்னவுமாம்.
அம்புயம் – அம்புஜம்; நீரில்முளைப்பது: இது – காரணவிடுகுறிப்பெயர். சொத்து – திசைச்சொல் போலும்.
“சேர்த்துவைத்து” என்றும், “சுற்றிவைத்து” என்றும் பாட முண்டு.

———–

சிந்திக்க நெஞ்சு இல்லை நா இல்லை நாமங்கள் செப்ப நின்னை
வந்திக்க மெய் இல்லை வந்து இரு போதும் மொய்ம்மா மலர்ப்பூம்
பந்தித் தடம் புடை சூழ் அரங்கா ததி பாண்டன் உன்னைச்
சந்தித்த நாள் முத்தி பெற்றது என்னோ தயிர்த் தாழியுமே –53-

(இ – ள்.) மொய் – நெருங்கிய,
மா – பெரிய,
மலர் – பூக்களையுடைய,
பூ – அழகிய,
பந்தி – வரிசையாகிய,
தடம் – தடாகங்கள்,
புடை சூழ் – பக்கங்களிற் சூழப்பெற்ற,
அரங்கா – திருவரங்கத்து நாதனே! –
சிந்திக்க – (உன்னைத்) தியானிக்க,
நெஞ்சு இல்லை -:
நாமங்கள் செப்ப – (உனது) திருநாமங்களை உச்சரிக்க,
நா இல்லை – ;
இரு போதும் – காலை மாலை யிரண்டுபொழுதிலும்,
வந்து -,
நின்னை வந்திக்க – உன்னை வணங்க,
மெய் இல்லை – (கை கால் முதலிய அவயவங்களையுடைய) உடம்பு இல்லை; (அங்ஙனமிருக்கவும்),
ததிபாண்டன் உன்னை சந்தித்த நாள் – ததிபாண்டனென்பவன் உன்னையடைந்து முத்திபெற்றபொழுது,
(அவனுடன்), தயிர்த் தாழியும் – (அவனது) தயிர்க்குடமும்,
முத்தி பெற்றது – மோக்ஷலோகமடைந்தது, என்னோ – எவ்வாறோ?

எம்பெருமானைச் சிந்திப்பவர்க்கும் அவனது திருநாமசங்கீர்த்தநஞ் செய்பவர்க்கும் அப்பெருமானை இருசந்திகளிலுஞ்
சென்று சேவிப்பவர்க்கும் மோக்ஷமுண்டாதல் ஸஹஜம்;
இவ்வாறுசெய்தற்கு வேண்டிய கருவிக ளிலொன்று மில்லாத தயிர்த்தாழி முத்திபெற்றது என்ன அதிசயந்தான்! என்றவாறு.
தாழிக்கு முத்தி கொடுத்தலாவது – தாழியிலுள்ள உயிர்க்கு முத்தி கொடுத்தல்:
உலகத்தில் பெயர் சொல்லுதற்குஉரிய எல்லாவஸ்துக்களுக்கும் உயிருண்டென்பது, வேதாந்திகளின் கொள்கை.
ஆனால், அசேதநப்பொருள்கள்பலவற்றில் உயிருண்டென்று சொல்வதற்குக் கூடாதபடியிருத்தல்,
அங்குள்ள உயிர் மிக்கபாபத்தால் ஜ்ஞாநவிகாஸஞ் சிறிதுமில்லாதிருக்கப்பெறுதலா லென்பர்.
இச்செய்யுளில், முத்திபெறுதற்குஉரிய காரணம் தாழியினி டத்தில் இல்லாதிருக்கவும், அது காரியத்தைப் பெற்றதாகக் கூறியது –
விபாவநாலங்காரத்தின்பாற்படும். வந்திக்க மெய்யில்லை – வந்திப்பதற்கு ஏற்ற உடம்பு இல்லை.
ததிபாண்டன் – தயிர்க்கலமுடையவன். தாழியும், உம்மை – இழிவுசிறப்பு.

———

குன்றா விளைவுடன் வண்மை பருவம் குணங்கள் இவை
பொன்றாது இருந்த கண் மாயம் என்னோ -பொன்னி சூழ் அரங்கா
அன்று ஆயர் தம் குல மைந்தர்களாயும் அலகு இல் இளம்
கன்றாயும் நாள் தொறும் சென்று வந்து ஆடிய காலத்திலே -54-

(இ – ள்.) பொன்னி சூழ் அரங்கா – காவேரிநதியாற் சூழப்பட்ட திரு வரங்கத்து நாதனே! – (நீ),
அன்று – கிருஷ்ணாவதாரத்தில்,
அலகு இல் – அளவில்லாத,
ஆயர்தம் குலம் – இடையர்சாதியில் தோன்றிய,
மைந்தர்கள் ஆயும் – பிள்ளைகளாகியும்,
இள கன்று ஆயும் – சிறு பசுவின்கன்றுகளாகியும்,
நாள்தொறும் சென்று வந்து -,
ஆடிய காலத்தில் – விளையாடியபொழுது, – (அப்பிள்ளைகளும் கன்றுகளும்),
குன்றா விளைவுடன் – குறையாத வளர்ச்சியும்,
வண்மை – வளமும்,
பருவம் – பிராயமும்,
குணங்கள் – குணங்களும்,
இவை -, பொன்றாது இருந்த – குறையப்பெறாமலிருந்த,
கண்மாயம் – ஜாலவித்தை, என்னோ – ? (எ – று.)

திரிமூர்த்திகளில் ஒருவனான பிரமனும் எம்பெருமானது திருவிளையா டல்களைக் காணமுடியாமற்போன தன்மையில்
ஈடுபட்டுக் கூறியவாறு. மெய்ச்சிறுவர்களின்மேலும் மெய்க்கன்றுகளின்மேலும் உள்ள பரிவினும் மிக்கபரிவு
போலிச்சிறுவர்களின் மேலும் போலிக்கன்றுகளின் மேலும் ஆயர்களுக்கு உண்டானது
எம்பெருமான் கொண்ட வடிவ மாதலினா லென்பர். எல்லாமாயைகட்கும் மேம்பட்ட மாயை செய்யவல்லாய் நீ யென்பது குறிப்பு.
“என்னோ” என்ற வியப்பு, உனது எதிரில் மாயைசெய்ய வந்தவனுக்கும் உனதுபெருமாயைகள் அறியப்படமாட்டாமற்
போயினவே யென்பதைச் சுட்டும்.
“கற்றின மாயவை காளையர் வான்கண்டு மீணினைவ, கற்றினமாயமு நீ கன்றுகாளையராகிப் பல்ப,
கற்றின மாயர் பரிவுறச்சேரி கலந்தமையுங், கற்றின மாயவொண்ணா வரங்கா செங்கமலற்குமே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்,
வண்மை – அழகுமாம். கண்மாயம் – கண்ணை மறைத்து ஒன்றை வேறாகத் தோற்றுவிக்கும் மாயவித்தை.

———–

நெடும் கான் நிலத்து உடன் கோவலர் தாம் மிக நின்று நெஞ்சம்
நடுங்காது இமைத்திடும் கண்கள் எல்லாம் என்று நண்ணவர் மேல்
விடும் கால நேமி அம்கை அரங்கா கண் விழிக்கு முன்னே
சுடும் கான நல் அனல் துற்ற அம்மாயம் என் சொல்லுகவே –55–

(இ – ள்.) நண்ணலர்மேல் – பகைவர்மேல்,
விடும் – பிரயோகிக்கின்ற,
காலநேமி – (அவர்க்கு) யமனையொத்த சக்கரத்தையேந்திய,
அம்கை – அழகிய திருக்கையையுடைய, அரங்கா – ! –
நெடு கான் நிலத்து – பெரியகாட்டினிடத்தில்,
கோவலர் உடன் மிக – இடையர்கள் மிகத்திரண்டிருக்க,
நின்று – (நீ அவர்கள் நடுவே) நின்று, (அவர்களை நோக்கி),
நெஞ்சம் நடுங்காது – மனம் அஞ்சாமல்,
கண்கள் எல்லாம் இமைத்திடும் – கண்களையெல்லாம் மூடிக்கொள்ளுங்கள்;
என்று – என்றுகூறி, (அவர்கள் அவ்வாறே தங்கள்கண்களை மூடிக் கொண்டு),
கண்விழிக்கும் முன்னே – (அவர்கள்) கண்களைத் திறப்பதற்குமுன்பே,
சுடும் – வெப்பம் பொருந்திய,
கானம் நல் அனல் – பெருங்காட்டுத்தீயை,
துற்ற – முழுதும்விழுங்கியருளிய,
அ மாயம் – அந்த மாயத்தை,
என் சொல்லுக – என்னவென்று சொல்லுக? (எ – று.)

“நெஞ்சம் நடுங்காது கண்கள் இமைத்திடும்” என்ற தொடரில் – நீங்கள் கண்களை மூடாதிருந்தால்,
இக்கனலைப்பார்க்கும்போது அச்சமுண்டாகுமா தலால் அப்படி அச்சமுண்டாகாதவாறு கண்களை மூடிக்கொள்ளுங்க ளென்றும்,
இப்போது யான்கொள்ளும் விராட்ஸ்வரூபத்தைக் கண்டால் நீங்கள் நெஞ்சம்நடுங்குவீர்க ளாதலால் அவ்வண்ணம்
நேராதபடி கண்களைமூடிக் கொள்ளுங்களென்றும் ஸ்ரீகிருஷ்ணன் தந்திரமாகக் கூறின னென்பது தோன்றும்.
இவ்வரலாற்றால், அடுத்தவர்களை யாதரிக்கும் கண்ணனது அற்புத சக்திவெளியாம்.
கோவலர் – கோபாலரென்னும் வடசொல்லின் சிதைவு: பசுக்களைக் காப்பவரென்பது பொருள்; கோ – பசு.
இனி, கோவைக்காத்த லில்வல்லவ ரென்றுமாம். நண்ணலர் – தன்னை விரும்பாதவர். தாம் – அசை.

————-

வானாடரில் சிலர் சென்று கண்டாரில்லை மற்று அதனில்
போனாரில் மீளப் புவியில் வந்தாரில்லை பூவின் மங்கை
ஆனாத செல்வத் திரு அரங்கா கொச்சை ஆயர் எல்லாம்
மேனாள் பரம பதத்தினில் போய் எங்கன் மீண்டதுவே –56-

(இ – ள்.) பூவின் மங்கை – தாமரைமலரில்தோன்றிய திருமகளது,
ஆனாத செல்வம் – நீங்காத செல்வத்தையுடைய,
திரு அரங்கா – !
வான் நாடரில் – தேவலோகத்தவர்களுள்,
சிலர் – சிலரும், (பரமபதத்தை),
சென்று கண்டார் இல்லை – போய்ப் பார்த்தவர் இலர்;
அதனில் போனாரில் – அந்தப்பரமபதத்துச் சென்றவர்களுள்,
மீள – திரும்பவும்,
புவியில் – பூமியில்,
வந்தார் – திரும்பிவந்தவர்,
இல்லை – ஒருவரும் இலர்; (அங்ஙனமிருக்கவும்),
கொச்சை ஆயர் எல்லாம் – கீழ்மையையுடைய இடையரெல்லாரும்,
மேல் நாள் – முற்காலத்தில், பரமபதத்தினில் போய் -,
மீண்டது – மறுபடியுந் திரும்பிவந்தது,
எங்ஙன் – எவ்வாறு! (எ – று.)

என்றது, யமுனையில் தீர்த்தமாடுகின்றசமயத்தில் ஓரசுரனால் வருண லோகத்திற் கொண்டுபோ யொளிக்கப்பட்ட நந்தகோபரை,
ஸ்ரீகிருஷ்ணன் அங்குஎழுந்தருளி மீட்டுவந்தபொழுது, தன்னைப் பூஜித்து உத்தம கதியை யடைய விரும்பிய
சகல கோபாலர்களுக்கும் ஞானக்கண்ணைக் கொடுத்து, தமது திவ்வியதேஜோமயமான ஸ்வரூபத்தையும்,
பரமபதம் முதலிய ஸர்வபுண்ணியலோகங்களையுங் காணும்படி கண்ணன் அருளிய வரலாற்றை உட்கொண்டு.

விலங்குகட்கும் மனிதர்கட்கும் எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு உண்டு, தேவர்கட்கும் மனிதர்கட்கும்;
இப்படி ஜீவாத்மாக்களுள் மிகவும் உயர்ச்சிபெற்ற தேவர்களும் கண்டறியமுடியாத பரமபதத்தை விலங்கோடொத்த
ஆயர்கள் கண்டதே ஓராச்சரியம்: பரமபதத்தைப் போய்க் கண்டறிந்தவர்கள் “நசபுநராவர்த்ததே (மீண்டுந்திரும்புவதில்லை)” என்று
சாஸ்திரத்தில் விதித்திருக்கவும், அந்தப் பரமபதத்தைக் காண்பதற்குஒருசிறிதும் ஸ்வரூபயோக்யதையில்லாத
அந்த இடையர்கள் அதனைக் கண்டதோடு நில்லாமல் சாஸ்திரத்திற்கும் மாறாக அங்குநின்றும் மீண்டுவந்தன ரென்றால்,
இவ்வாறெல்லாம் செய்வித்த உனதுநிலைமையைப் பற்றி எவ்வாற்றானும் பேசமுடியா தென்பதாம்.
சாஸ்திரங்களெல்லாம் எம்பெருமானது ஆஜ்ஞாரூபமே யாதலால், ஸ்வதந்த்ரனான அப்பெருமானே ஒன்றைச்
செய்கையில் அதுவே சாஸ்திரத்தோடு மாறுபட்டதாகா தென்க.
“பூவின்மங்கை யானாதசெல்வம்” என்பதனைத் திருவரங்கத்துக்கு அடைமொழியாகக் கொள்ளலு மொன்று.
கொச்சை – திருந்தாத மழலைச் சொற்களாகவுமாம்.
“கொச்சையாயர்” என்றது, இடங்கை வலங்கை யறியாத அவர்களது தகுதி யின்மையைச் சுட்டுதற்கு.
பரமபதம் – மிகவும் மேலான ஸ்தாநம், மோக்ஷம்; “மீளாவுலகம்” எனப்படுவது. மற்று – வினைமாற்று. எங்ஙன் – எங்ஙன மென்பதன் விகாரம்.

————–

கூன் நந்து உலாவயல் கோயில் உள்ளே பள்ளி கொள்ளும் எங்கள்
ஆனந்த வாரி திருக் குழல் ஊத அறத்தடிந்த
கானம் தழைத்தன கால் வரை நெக்கன கார் முகில் தோய்
வானம் அயர்த்தன வையம் எல்லாம் மெய்ம் மறந்தனவே –57-

(இ – ள்.) கூன் நந்து உலா வயல் – வளைவாகிய சங்கங்கள் உலாவுகிற கழனிகளையுடைய,
கோயிலுள்ளே – திருவரங்கம் பெரிய கோயிலில்,
பள்ளி கொள்ளும் – (ஆதிசேஷசயனத்தின்மீது) பள்ளிகொண்டுயோகநித்திரைசெய் தருளுகின்ற,
எங்கள் ஆனந்தம் வாரி – எங்களது பேரின்பக்கடலாகிய கண்ணபிரான்,
திரு குழல் ஊத – அழகிய வேய்ங்குழலை ஊதும்பொழுது, –
அற தடிந்த கானம் – முற்றவும் (வேரோடு) உலர்ந்த காடுகள்,
தழைத்தன -;
கால் வரை – சாரல்களையுடைய மலைகள்,
நெக்கன – உருகின;
கார் முகில் தோய் – கரிய மேகங்க ளுலாவுகின்ற,
வானம் – வானுலகம்,
அயர்த்தன – சோர்ந்தன;
வையம் எல்லாம் – நிலவுலகமுழுதும்,
மெய் மறந்தன – பரவச மாயின; (எ – று.)

ஸ்ரீ கிருஷ்ணபகவான் வேணுகாநஞ்செய்கையில் சேதநாசேதநங்கள் யாவும் அந்த வேய்ங்குழலின் இன்னிசையி லீடுபட்டன வென்பதாம்.
சங்கீத சாஸ்திரலக்ஷணத்துக்கு நன்குபொருத்தமான மிக இனிய இசைப்பாட்டைக் கேட்டமாத்திரத்தில் பட்டுப்போன
மரங்களும் தளிர்த்துப் பூத்துக் காய்த்துப் பழுத்தலும், கருங்கல்லும் நெகிழ்ந்து கரைந்து உருகுதலும் இயல்பு;
“கலைத்தொழில்படவெழீஇப் பாடினாள் கனிந், திலைப்பொழில் குரங்கின வீன்ற தூண்டளிர்,”
“உருகின மரமுங் கல்லு மோர்த்தெழீஇப் பாடுகின்றான்” என்றார் சிந்தாமணியார்:
“ஆயர், தறித்த மரமத்தனையுந் தழைத்தலர்ந்து பழுத்துதவ,….. கருங்கற்றான்
வெண்ணெயெனக் கரைந்தோட……. தொனித்தகுழ லிசைத்தோய் கேள்” என்பது அழகர்கலம்பகம்.
“படுமரன்களு நறிய பசிய தண்டளிர் தழைய, வடைவுறுங் கழையி னிசை யமுதமுஞ் செவிநிறைய”
“நின்றுயர்வரையுமுருக” என்பர் பாகவதத்தும்.

இச்செய்யுள் – கிருஷ்ணபகவானது வேய்ங்குழலின் இன்னிசையைப் பற்றி உள்ளபடி இனிதாக வருணித்தலால்,
தன்மைநவிற்சியணியாம். ஆநந்தமயாதிகாரத்தில் பரப்பிரமத்தை ஆநந்தமயமென்று கூறியிருத்தலால்,
அந்தப் பரப்பிரமத்தின் சொரூபமான திருவரங்கனை “ஆநந்தவாரி” என்றார். வாரி – நீர்; இங்குக் கடலுக்கு இலக்கணை.
அறத்தடிந்த கானம் என்பதற்கு – நன்றாக வெட்டப்பட்டுப் பட்டுப்போன காடு என்றும் பொருள்கூறுவர்.
கால் – மலையைச்சுற்றிலு மிருக்கின்ற குன்றுகள்: அவற்றிற்கு வடமொழியிற் பாத மென்று பெயர்.
கால்வரை = பாதசைலம். வானம் – அங்குள்ள உலகத்துக்கு ஆகுபெயர்.

———-

ஊரும் திரைப் பொன்னி நல் நீர் அரங்கா உருப்பல ஆய்
காரும் தடித்தும் கலந்தது போல் இடைக் கன்னியர்கள்
யாரும் களிக்க இடையிடையே கலந்து இன்ப நலம்
கூரும் திரு நடம் ஆடிய மாயம் என் கூறுகவே –58-

(இ – ள்.) ஊரும் – மேன்மேல்வருகின்ற,
திரை – அலைகளையுடைய,
பொன்னி – காவேரியினது,
நல் நீர் – நல்லநீராற் சூழப்பட்ட,
அரங்க – திருவரங்கத்துநாதனே! – (நீ கிருஷ்ணாவதாரத்தில்),
இடை கன்னியர்கள் யாரும் களிக்க – இளமையான இடைப்பெண்கள் யாவரும் மகிழும்படி,
பல உரு ஆய் – பலதிருவுருவங்கொண்டு,
இடை இடையே – (அவர்களது) நடுநடுவே,
காரும் தடித்தும் கலந்தது போல் – மேகமும் மின்னலும் ஒருசேரக் கலந்து தோன்றியதுபோல, கலந்து – ,
இன்பம் நலம் கூரும் – சிறந்தஇன்பமிகுகின்ற,
திருநடம் – திருநடநத்தை, ஆடிய -,
மாயம் – மாயையை, என் கூறுக – என்னவென்று சொல்லுக! (எ – று.)

கார் – கண்ணனுக்கும், தடித்து – இடைக்கன்னியருக்கும் உவமை. திரு நடமாடியமாய மென்றது.
கோபஸ்திரீகள்யாவரும் வட்டமாய்நின்றுசெய்த ராஸக்கிரீடையில் அவர் யாவருந் தன்பக்கத்திலேயே நிற்க
மனமுள்ளவராய்த் தன்பக்கத்தை விடாதிருந்ததனால், கண்ணன் யாவர்க்கும் பக்கத்திலிருந் தவன்போலக் காணப்பட்டதனை.
அப்பொழுது ஒவ்வொருத்தியது இவ்விரு கைகளிலுந் தன்கைபொருந்தும்படி அவ்வவரது இருபக்கங்களிலும்
நின்று நின்று சுற்றி வந்ததனால், “இடையிடையே கலந்து” என்றார்.
இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணபகவான் ஆடிய கூத்து, தமிழ்மொழியில் “குரவைக்கூத்து” எனப் பெயர்பெறும்;
“குரவைக்கூத்தே கைகோத்தாடல்” என்பது, திவாகரம்; இதனை, வடமொழியில் “ராஸம்” என்பர்.
பல நாட்டியப்பெண்கள் வட்டமாக நின்று சித்திரமான தாளலயங்களுடன் மெதுவாகவும் உன்னதமாகவுங் கூத்தாடுதல், இதன் இலக்கணம்;
“குரவையென்பது – காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும்
எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்து ஆடுவது”,
“குரவையென்பது கூறுங்காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும், எய்தக் கூறு மியல்பிற் றென்ப” என்பவற்றை இங்கே அறிக.

———-

மின் போல் இடை இடை மாதர் எல்லாம் உன் தன் மெய் தழுவி
நன் போக சாகரத்துள்ளே முழுகவும் நாள் மலராள்
தன் போகமே மகிழ்ந்தார் அரங்கா அண்டர் தாம் அவரை
அன்போடு அணைத்துத் துயின்றது எம்மாயம் அறிந்திலமே –59-

(இ – ள்.) நாள்மலராள் தன் – எந்நாளும் மலர்ந்ததாமரை மலரிலெழுந்தருளி யிருக்கிற திருமகளது,
போகமே – இன்பத்தையே,
மகிழ் – மகிழ்கின்ற,
தார் – திருமாலையையுடைய, அரங்கா – ! –
மின் போல் இடை – மின்னல்போன்ற இடையினையுடைய,
இடை மாதர் எல்லாம் கோபகன்னிகைகள் யாவரும்,
உன்தன்மெய்தழுவி – உன்னுடைய திருமேனியை ஆலிங்கனஞ்செய்துகொண்டு,
நல் போகம் சாகரத்துள்ளே – சிறந்த இன்பமாகிய கடலிலே,
முழுகவும் – அழுந்திக்கிடக்கவும், –
அண்டர் – (அவர்களது கொழுநரான) இடையர்கள்,
அவரை அன்போடு அணைத்து – (அம்மங்கையரிடத்துச் சிறிதும் குற்றம்பா ராட்டாமல்) அவர்களை விருப்பத்தோடு ஆலிங்கனஞ் செய்துகொண்டு,
துயின்றது – தூங்கியது,
எ மாயம் – என்ன மாயை?
அறிந்திலம் – (அதனையாம்) தெரிந்தோமில்லை; (எ – று.)

திருமால் ஸ்ரீராமாவதாரஞ் செய்கையில் அவனது திருமேனியைத் தழுவுதற்குவிரும்பிய தண்டகாரணியமுனிவர் முதலிய
யாவர்க்கும் ஏகபத்நீ வ்ரதங்கொண்டுள்ள தான் வேறொரு திருவவதாரத்தில் தனது ஆலிங்கனத்தைத் தருவதாக
வாக்களித்திருந்தன னாதலால், அதற்கேற்பக் கோபகன் னிகைகளாய்ப் பிறந்த அவர்கட்கெல்லாம்
ஸ்ரீகிருஷ்ணனாகத் திருவவதரித்த தான் தனது வாக்கின்படியே செய்தன னல்லது போகத்தில் இச்சையினால்
அவர்களைத்தழுவினனல்ல னென்பது, இங்குக் கருதத்தக்கது.
தருமத்தை ஸ்தாபிக்க அவதரித்த எம்பெருமான் தருமவிரோதமாக இங்ஙனஞ்செய்வது ஒக்குமோ?
அக்கன்னிகைகளுக்கும் இதனால் பாதக முண்டாகாதோ? எனின், –
அப்பெருமான் தன்னைச்சேர்ந்தவர்களுடைய சகலபாபங்களையும் போக்கடிக்கும்படியான பரிசுத்தியுடையவ னாதலாலும்,
வேதாந்தநிர்ண யத்தின்படி அன்புசெலுத்தவேண்டு மிடத்திலேயே அக்கன்னியர் அன்பு செலுத்தினார்க ளாகையாலும்,
அவர்கட்குச் சகலபாபநிவிருத்தியேயல்லது பாவமுண்டாவதில்லை.
எம்பெருமானுக்கோ, ஜீவாத்மாவுக்கு உண்டாவது போலே பாபபந்தம் உண்டாகாது; ஏனெனில் : –
ப்ருதிவி அப்பு தேயுவாயு ஆகாசம் என்கிற பஞ்சபூதங்கள் எப்படி எல்லாப்பிராணிகளிலும் வியாபித்திருக்குமோ,
அப்படியே, ஸ்வாமி அந்தப்பெண்களினிடத்தும் அவர்களது கணவர்களிடத்தும் மற்றுமுள்ள ஆத்மகோடிகளிலும்
வியாபித்திருக்கும் பரமாத்மாவாகையாலே, அவனுக்குப் புதிதாக ஒருசம்பந்தம் வந்ததில்லை யென்க.
மேலும், ஸ்ரீகிருஷ்ணபகவான் தன்னைப் பாவஞ்சாராத எழு பிராயத்திற்குள் உபநயநமாதற்கு முந்தித்
திருவாய்ப்பாடியி லிருந்தபொழுது இங்ஙனம் கோபகன்னிகைகளுடன் கலந்திருந்தானே யன்றி உபநயமானபின்பு
அக்கன்னிகைகளைக் கண்ணெடுத்துப்பார்த்தலுஞ் செய்தில னென்பதும் இங்கு உணரத்தக்கது.
இன்னும் பலவகையாகவும் ஏற்றசமாதானம் ஆன்றோராற் கூறப்பட்டு வழங்கும்.

————-

நீரில் புகும் கண்டு தேரினைப் பார்க்கும் நிறுத்திய பொன்
தேரில் தொழும் பின்னை நீரினில் காணும் சிறந்த பச்சைக்
காரின் திற மெய் அரங்கனும் சேடனும் கஞ்ச வஞ்சன்
ஊரில் செல உடன் போம் அக்குரூரன் தன் உள் மகிழ்ந்தே –60-

(இ – ள்.) சிறந்த -, பச்சை காரின் – நீலமேகம் போன்ற,
திறம் – தன்மையையுடைய,
மெய் – திருமேனியையுடைய,
அரங்கனும் – கண்ணபிரானும்,
சேடனும் – ஆதிசேஷனது அவதாரமாகிய பலராமபிரானும்,
வஞ்சன் கஞ்சன் – வஞ்சகனாகிய கம்ஸனுடைய,
ஊரின் – ஊராகிய வடமதுரைநகரத்துக்கு,
செல – எழுந்தருளினபொழுது, –
உடன் போம் – கூட (அவர்களை அழைத்துக்கொண்டு) போகின்ற,
அக்குரூரன் – அக்குரூரரென்னும் யாதவபாகவதர், –
நீரில் – (வழியிலுள்ள யமுநாநதியின்) தீர்த்தத்துக்குள்ளே,
புகும் – (மாத்தியாந் நிக ஆராதனத்திற்காகப்) போய் நீராடுவர்;
கண்டு – (அங்குப் பலராமனையுங் கண்ணனையும்) பார்த்து,
தேரினை பார்க்கும் – (அங்கிருந்து உடனே ஓடிக் கரைக்குவந்து) திருத்தேரைப்பார்ப்பர்;
நிறுத்திய பொன் தேரில் (கண்டு) – (கரையிலே) நிறுத்தப்பட்ட பொன்மயமான அந்தத் தேரிலே (அவர்கள்) எழுந்தருளியிருக்கக் கண்டு,
தன் உள் மகிழ்ந்து தொழும் – தான் மன மகிழ்ந்து (அவர்களை) வணங்குவர்;
பின்னை – மறுபடியும் (நீரிலேபோய் முழுகிநிற்க),
நீரினில் காணும் – (அவர்களை) அச்சலத்தினுள்ளே பார்ப்பர்.

கிருஷ்ணபலராமர்களை எப்படியாவது கொல்லவேண்டுமென்று பல அசுரர்களை யேவிப் பார்த்தும் தான்
கருதியசெயல் நிறைவேறாததனால், கம்சன் முடிவில் வில்விழாவென்று ஒருவியாஜம் வைத்து அதற்கு
ஸ்ரீராம கிருஷ்ணர்களை அன்போடு அழைக்கிற பாவனையாக அக்குரூரரைத் திருவாய்ப்பாடிக்குத் தூதனுப்ப,
அவ்வக்குரூரரால் அழைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனுடனே பிரயாணப்பட்டுப் போகையில்
அக்குரூரர் மத்தியான்னக் கடனைமுடிப்பதற்காக வழியிலெதிர்ப்பட்ட காளியமடுவின் கரையில்
கிருஷ்ணபலராமர்களை யேற்றிவந்த தேரை நிறுத்திவிட்டு அம்மடுவில் இறங்கி ஸநாநஞ்செய்கையில்
அந்நீரினுள்ளே ஸ்ரீராமகிருஷ்ணர்களைக் கண்டு “தேரிலிருக்கின்றவர்கள் இங்கு எப்படி வந்தார்கள்?” என்று
சங்கித்துக் கரையேறிச் சென்று தேரைப்பார்த்தனராக, அங்கும் அவர்களைக் கண்டு,
இவ்வாறு மீண்டும் மீண்டும் நீரிலும் தேரிலுங் கண்டு முடிவில் எம்பெருமானது செயலை வியந்து வாயாரவாழ்த்தின ரென்பதாம்.

கஞ்சன் – கம்ஸன் என்பதன் சிதைவு. ஸ்ரீராமகிருஷ்ணர்களைக் கொல்வதற்காக அழைத்துவரும்படி
அக்குரூரருக்குக் கட்டளையிட்டவனா தலால், வஞ்சனெனப்பட்டான். அக்ரூரன் – கொடுந்தன்மையில்லாதவன், யாதவபாகவதன்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – -21-40-

February 17, 2022

பின்னைக்கு இனிய பெருமாள் அரங்கர் பெறாது பெற்ற
முன்னைப் பிரமனை வாழ்விக்க வேண்டி முன் நாள் கவர்ந்த
அன்னம் திரு உரு உள்ளே வளர்ந்ததற்கு ஓர் அண்டம் ஆம்
என்னச் சிறந்தது மூதண்டம் யாம் என் இயம்புவதே –21-

(இ – ள்.) பின்னைக்கு – நப்பின்னைப்பிராட்டிக்கு,
இனிய – பிரியமுள்ள கொழுநரான,
பெருமாள் அரங்கர் – திருவரங்கநாதராகிய நம் பெரிய பெருமாள்,
முன்னை – முன்பு (கற்பத்தொடக்கத்தில்),
பெறாது பெற்ற -அருமையாகப் பெற்ற மகனான, பிரமனை -,
வாழ்விக்க வேண்டி – உய்வித் தற்பொருட்டு,
முன் நாள் கவர்ந்த – முன்பு ஒரு காலத்திற் கொண்ட,
அன்னம் திரு உரு – சிறந்த அன்னப்பறவைவடிவம்,
உள்ளே வளர்ந்ததற்கு -,
ஓர் அண்டம் ஆம் – ஒரு முட்டையாகும்,
என்ன – என்று சொல்லும்படி,
மூது அண்டம் – பழமையான அண்டகோளம்,
சிறந்தது – சிறப்படைந்தது;
(என்றால்), யாம் என் இயம்புவது – (அவ்வன்னத் திருவுருவத்தின் பெருமையைக் குறித்து) நாம் யாதுசொல்வது! (எ – று.)

(“மன்னுமாநிலனும் மலைகளுங் கடலும் வானமுந் தானவருலகுந்,
துன்னுமாயிருளாய்த் துலங்கொளிசுருங்கித் தொல்லைநான்மறைகளும் மறையப்,
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறங்கெடவொருநாள்,
அன்னமா யன்றங்கருமறைபயந்தா னரங்கமாநக ரமர்ந்தானே,” “முன்னுலகங்களேழுமிருள்மண்டியுண்ணமுதலோடுவீடுமறி யாது, என்னிதுவந்ததென்றன் விமையோர் திசைப்ப

வெழில்வேத மின்றி மறையப், பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள்தீர்ந்திவ்வைய மகிழ,
அன்னமதாயிருந்தங்கறநூலுரைத்த வதுநம்மையாளுமரசே,”

“முன்னிவ்வேழுலகுணர்வின்றியிருள்மிக வும்பர்கள் தொழுதேத்த,
அன்னமாகி யன்றருமறைபயந்தவனே” என்றார் திருமங்கையாழ்வார்.)

பாலும் நீரும் கலந்தவிடத்து அவற்றைப்பகுத்து நீரையொழித்துப்பாலை யுட்கொள்ளுந் திறம், வெண்ணிறம்,
பறவைகளிற்சிறத்தல், அழகியவடிவம், நடையழகு, சேற்றில் வெறுப்பு, தாமரைமலரில் வீற்றிருத்தல்
என்னு மிவற்றையுடைய அன்னப்பறவை – ஸாராஸாரங்களைப் பகுத்துணர்ந்து அஸாரத்தைத் தள்ளி
ஸாரத்தைக் கொள்ளுமியல்பு, சுத்தஸத்வகுணபூர்த்தி, மற்றையோரினும்மேம்பாடு, விலக்ஷணமானதன்மை,
நல்நடக்கை, கலக்கத்தில் விருப்பமின்மை, பத்மாஸநத்திலிருப்பு என்னு மிவற்றையுடைய நல்லாசிரியர்க்கு ஏற்ற
உவமையாகச் சிறத்தலால், எம்பெருமான் பிரமனுக்கு வேதங்களை யுபதேசிக்கும் பரம குருவாவதற்கு
அன்ன பறவையுருவத்தை ஏற்ற வடிவமாகக் கொண்டன னென்னலாம்.

“அசுரர்களோடேகலந்து உருமாய்ந்து போன வேதத்தைப் பிரிக்கைக்கு உடலாக,
நீரையும் பாலையும் பிரிக்கவல்ல அன்னத்தின் வடிவைக் கொண்டு” என்றார் பெரியாரும்.

“அண்டம்” என்ற வடசொல்லுக்கு – உலகவுருண்டையென்றும், முட்டையென்றும் பொருள்க ளுண்டு.
பறவைகள், முட்டையினின்று பிறப்பன வாதலால், அண்டஜ மெனப்படும்.
திருமால்கொண்ட ஹம்ஸரூபம் உள்ளே வளர்வதற்கு அண்டகோளம் அண்டமாய் (முட்டையாய்)ச் சிறந்த தென்று,
அண்டமென்ற சொல்லின் நயம்பற்றிக் கற்பனைகூறினர்.
உருண்டைவடிவமான முட்டையில் அன்னப்பறவை வளர்ந்து எழுமாறுபோல,
திருமாலின் ஹம்ஸரூபம் அண்டகோளத்தில் வளர்ந்து தோன்றிற்று என ஒப்புமை யமையும்.

“யாம் என் இயம்புவது” என்றது, எம்மாற்சொல்லமுடியா தென்றபடி,
“யாம்” என்றது, கவிகட்குஉரிய இயற்கைத்தனித்தன்மைப்பன்மை;
மற்றை யோரையுங் கூட்டிய உளப்பாட்டுத்தன்மைப்பன்மையுமாம்.
முன்னைப் பெற்ற என இயையும்.
“முன்னைப் பிரமன்” என்றே எடுத்து, (மற்றைத் தேவர் முதலியோர்க்கு) முதல்வனாகிய பிரம னென்றலுமாம்.
“பெறாப் பேறு” என்றாற் போல, அருமைவிளங்க “பெறாதுபெற்ற பிரமன்” என்றார்.
இந்த அடைமொழி, இயல்பாய் மைந்தனிடத்துத் தந்தைக்குஉள்ள பேரன்பை விளக்கும்.
எல்லாப் பிராணிகளுக்கும் பரமபிதாவான எம்பெருமான்.

தனது முதற்படைப்பான பிரமனிடத்துக் கொண்ட வாத்ஸல்யத்தால், அம்மைந்தனை வாழ்விக்க வேண்டி,
தன் மேன்மையையும் சிரமத்தையும் பாராமலே, அதற்கேற்றதொரு பக்ஷிரூபத்தைக் கொண்டனனென்க.
இனி, திருமால் பிரமனைப்படைக்கவேண்டு மென்னும் பிரயத்தின பூர்வகமான செய்கை சிறிதுமில்லாதிருக்கையிலே
அப்பெருமானது திருநாபித்தாமரை மலர்ந்தமாத்திரத்திற் பிரமன் அதிலிருந்து தானே பிறந்தமை தோன்ற,
“பெறாது பெற்ற பிரமன்” என்றாருமாம்; கீழ் 19 – ஆஞ் செய்யுளை நோக்குக.

பின்னை – நப்பின்னை; ஸ்ரீகிருஷ்ணனது மனைவியரில் தலைமையுடையவள்:
கும்ப னென்னும் இடையர்தலைவனது மகள். இவளை மணஞ்செய்து கொள்ளுதற்காக, இவள்தந்தை கந்யாசுல்கமாகக்குறித்தபடி
யாவர்க்கும்அடங்காத அசுராவேசம்பெற்ற ஏழுஎருதுகளையும் கண்ணபிரான் ஏழுதிருவுருக் கொண்டு சென்று வலியடக்கித்
தழுவின னென்று நூல்கள் கூறும்; இங்ஙனம் இவள்பக்கல் பெருமான் மிக்ககாதல்கொண் டருளியமைபற்றி,
“பின்னைக்கு இனிய பெருமாள்” என்றார்;

(“பின்னைமணாளன்,”
“அம்பொனாருலகமேழுமறிய ஆய்ப்பாடிதன்னுட், கொம்பினார்பின்னை கோலங் கூடுதற் கேறுகொன்றான்,”
“பின்னைநெடும்பணைத்தோள்மகிழ்பீடுடை, முன்னையமரர்முழுமுதல் தானே,”
“பின்னைதன்காதலன்” என்றார் ஆழ்வார்களும்.
“கிருஷ்ணாவதாரத்து ப்ரதாநமஹிஷி இவளாகையாலே, நப்பின்னைப்பிராட்டியை முன்னிடுகிறார்கள்,”
“இவ்வவதாரத்துக்கு ப்ரதாநமஹிஷி இவளிறே. மேன்மைக்கு ஸ்ரீய:பதியென்னுமாபோலேயிறே,
நீர்மைக்கு இவளுக்குவல்லபனென்கிறதும்” என்ற வியாக்கியானவாக்கியங் களும் அறியத்தக்கன.)

இவள் கண்ணபிரானிடத்து மிக்ககாதல்கொண்டிருந் தமையும், “பின்னைக்கினிய பெருமாள்” என்ற தொடரில் தோன்றும்;
“நப்பின்னையாம், விரகதத்தைக்குவிடையேழ்தழுவின வேங்கடவன்,
குரகதத்தைப் பிளந்தான் தோள்களாகிய குன்றங்களே” என்பர் திருவேங்கடத் தந்தாதியிலும்.
இவள், திருமாலின் தேவியருள் நீளாதேவியின் அம்ச மெனப்படுவள்.
இனி, திருப்பாற்கடல்கடைந்தபோது அக்கடலினின்று முன்னே மூதேவி தோன்றப் பின்னே இலக்குமி தோன்றின ளாதலால்,
இலக்குமிக்கு “பின்னை” என்று ஒருபெயர் வழங்கும்; பின்பிறந்தவளென்க:
அத்திருமகளுக்கு இனியபெருமா ளென்ற பொருளில் “பின்னைக்கினிய பெருமாள்” என்றன ரென்றலு மொன்று.

ப்ரஹ்மா, ஹம்ஸம், ரூபம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. வேண்டி – விரும்பி யென்க.
இனி, அன்னத்திருவுருவத்தினுள்ளே வளர்ந்து அதற்கு ஓர் அண்டமாம் (அவ்வன்னத்திற்கு ஒருமுட்டையாம்)
என்னும்படி சிறந்தது மூதண்ட மென்று உரைப்பாரு முளர்.

————-

சூழிக் களிறு வெவ்வாய் முதலை துனித்த உக்ர
பாழித் திகிரிப் படை அரங்கேசர் படைப்ப வன்தன்
ஊழிப் பொழுது ஒரு சேல் ஆய் ஒரு செல் வுள் கரந்த
ஆழிப் பெரும் புனல் காணாது தேடுவர் அவ்விடத்தே –22–

(இ – ள்.) சூழி – தடாகத்தில் இறங்கிய,
களிறு – யானை (கஜேந்திராழ்வான்),
உய்ய – பிழைக்கும்படி,
வெவ் வாய் முதலை துணித்த – கொடிய வாயையுடைய முதலையைத் துண்டுபடுத்திய,
உக்ரம் – பயங்கரமான,
பாழி – வலிமையுள்ள,
திகிரி படை – சக்கராயுதத்தையுடைய,
அரங்க ஈசர் – ரங்கநாதர் –
படைப்பவன்தன் ஊழி பொழுது – சிருஷ்டிகர்த்தாவாகிய பிரமனது தினமான ஒருகற்பத்தின் முடிவில்,
ஒரு சேல் ஆய் – ஒப்பற்றதொரு மீன்வடிவமாகி, –
ஒரு செலு உள் கரந்த ஆழி பெரும் புனல் – (தனது) ஒருபுறமுள்ளினகத்தே யடங்குகின்ற பெரிய கடல்வெள்ளத்தில்,
காணாது – (வேதங்களையும் அவற்றைக்கவர்ந்துசென்ற சோமுகாசுரனையுங்) காணாமல்,
அ இடத்து தேடுவர் – அந்தஇடத்திலே (அவற்றைத்) தேடுபவராயினர்.

“தேவுடைய மீனமாயாமையாயேனமா யரியாய்க் குறளாய், மூவுருவி லிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்
முடிப்பான் கோயில்” என்றபடி முக்கியமான தசாவதாரங்களின் மகிமைகளை இதுமுதற் கூறுகின்றார்.

(“நிலையிடமெங்குமின்றிநெடுவெள்ளமும்பர்வளநாடுமூட விமையோர்,
தலையிடமற்றெமக்கொர்சரணில்லையென்னவரணாவனென்னு மருளா,
லலை கடல்நீர் குழம்பவகடாடவோடி யகல்வானுரிஞ்சமுதுகில்,
மலைகளைமீது கொண்டுவருமீனைமாலை மறவாதிறைஞ்சென்மனனே,”

“வானோரளவும் முதுமுந்நீர்வளர்ந்தகாலம் வலியுருவின்,
மீனாய்வந்துவியந்துய்யக்கொண்டதண் டாமரைக்கண்ணன்” என்பன, பெரியதிருமொழி.

“தேவர்களெல்லையளவுஞ் செல்லக்கடல்வெள்ளம் பரந்தநாள், அத்தையடையத் தன்னுடை ஒருசெலுவிலே அடக்கவல்ல
மிடுக்கையுடைய மத்ஸ்யமாய் வந்து” என்ற வியாக்யாந வாக்கியமும் நோக்கத்தக்கது.

“அருமறையா ரிருக் கெசுர் சாமத்தினோடு மதர்வணமாகியசதுர்வேதங்கள்தம்மைத்,
திருடியெடுத்துக்கொண்டேயுததி சேருந்தீயனுக்காமச்சாவதாரமாய் நீ, ஒருசெலுவிற் சமுத்திரத்தைச் சுருக்கியே
வைத்துச்சிரத்தாற்சோமுகாசுரனைக்கொன்றிட், டிருளறவேவிதிபடைக் கவவ்வேதத்தை யிரங்கி
யளித்தனை யரியே யெம்பிரானே” என்றார் பின் னோரும்.)

செலு – மீனின்உடற்புறத்தேயுள்ள முள்; செதிள் எனவும்படும்: செலு உள் – அவ்வகைமுட்களின் இடையே குழிந்துள்ள இடம்.
இனி, செலு – மீன் செட்டை யெனப்படும் மீன்சிறகு என்றுங் கொள்வர்.

“மானயோசனையள வொழிமெய்யுருவாய்ந்த, மீனமாயின னெடுங்கடற்பரவையின்வீழ்ந்து,
கானவெண்டிரைக்கருங்கடலளறெழக்கலக்கிப், “போனவாளெயிற்றசுரனைத்தட வுறும்புகுந்து” (கந்தபுராணம் – உபதேசகாண்டம்),

“பரமன், உரைசெயற் கரியபருமநீளத்தோ, டொப்பிலாவகுலியாயடைந்தான்” (மகாபாகவதம்) என்றபடி,
எம்பெருமான் எண்ணிடற்கரிய மிகப்பலயோஜனை நீளமும் அதற்கேற்ற பருமனும் வாய்ந்த பெருமீனான போது
அந்தமற்சியத்தின் ஒருசெலு வினகத்தே கடல்வெள்ளம்முழுவதும்ஒடுங்கும்படியிருந்ததென அதன்பெருமையைக் கொண்டாடுவார்

“ஒருசெலுவுட்கரந்த ஆழிப்பெரும்புனல்” என்றும், இங்ஙனம் தான் கொண்ட பெருமீன்வடிவைப்பார்க்கிலும்
கடல் மிகச்சிறிதாயிருக்கவும் அதில் வேதங்களையும் அசுரனையுங் காணாதவர்போலத் தேடினது
பாவனையாற்கொண்ட விளையாட்டே யெனக்கருதி அந்தத் திவ்வியலீலலையில் ஈடுபடுவார்
“காணாது தேடுவ ரவ்விடத்தே” என்றுங் கூறினார்.
“காணாது தேடுவர்” என்றதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவித்து உரைக்கப்பட்டது.

இனி, திருமால் ஒருபெருமீன்வடிவானபோது அதனது ஒருசெலுவினகத்தே அவாந்தரப்பிரளயவெள்ளம்முழுவதும் அடங்கினதாக
அப்பெரும்புனலைக்காணாது வியந்து ஸப்தரிஷிகள் முதலியோர் அங்குத் தேடுவாராயின ரென உரைத்தலு மொன்று;

“முடங்குதெண்டிரையபௌவ முற்றுமோர்செலுவுட்சென்று, மடங்கியதுணரகில்லார் மயர்ந்தனர்
நேடியன்னோ, ரொடுங்கினரேத்தி நின்றா ருயர்வொப்பிலாதமேலோன், தடங் கொள்
சேலுருவின்மாண்பியாவரேசாற்றுநீரார்” என்ற ஸ்ரீபாகவதத்தைக் காண்க:
இவ்வுரைக்கு, ஏற்றஎழுவாய்வருவித்தல்வேண்டும். ஆய் = ஆக என எச்சத்திரிபாம்.
இனி, எழுவாய்செயப்படுபொருள்கள் வருவித்தலின்றி, அரங்கேசர் ஊழிப்பொழுதில் ஒருசேலாகித் தனது
ஒருசெலுவினகத்தே கரந்த ஆழிப்பெரும்புனலைக் காணாமல் அவ்விடத்துத்தேடுவாராயின ரென உரைத்தலும் அமையும்;
(இது, இந்நூலாசிரியரது ஆசார்யரான ஸ்ரீபராசரபட் டர் அருளிச்செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்
“பக்ஷநிகீர்ணோத்கீர்ண மஹாப்தி ஸ்தல ஜல விஹரண ரத கதி ரசத:” என்றதை ஒருசார்உட்கொண்ட தாம்.)
இனி, ஆழிப்பெரும்புனலை ஒருசெலுவினகத்தே கரந்த (மிகப்பெரிய) ஒருசேலா யென்று அந்வயித்து உரைத்தலுமாம்.

களிறுய்யமுதலைதுணித்த வரலாறு, உயர்திணையோடு அஃறிணையோடு பேதமற அடிமைப்பட்ட உயிர்களை
அன்போடு துயர்தீர்த்துப் பாதுகாத்தருள்கின்ற எம்பெருமானது கருணைமிகுதியைக் காட்டும்.
அங்ஙனம் தனது அடிமையான பிராணியினிடத்து அருளினால் அதற்குத்துன்பஞ்செய்தபிராணியின் விஷயமாகப்
பெருமான் தனது குளிர்ந்ததிருவுள்ளத்திலே கொடிய கோபத்தைக்கொண்டருளிய மகாகுணத்தில் ஈடுபட்டு இதனை யெடுத்துக் கூறினர்.

கஜேந்திராழ்வானை முதலைவாயினின்று காத்தருளுதற்பொருட்டு அதுகூப்பிட்டபின்பு மடுவின் கரைதேடிஓடிவந்ததுபோல
வரவேண்டாமல் நம்மை ஐம்பொறிவாயினின்று உடனேபாதுகாத்தற்பொருட்டு நாமிருக்கிற இந்த நிலவுலகத்திலே
கோயில்கொண்டருளின னென்பது தோன்ற,
“களிறுய்ய வெவ்வாய்முதலைதுணித்த வுக்ரபாழித்திகிரிப்படை யரங்கேசர்” என்றார்.
“முதலையும் மூர்க்கனுங் கொண்டதுவிடா” என்றபடி வாயினாற்பிடித்தபிடிவிடாத கொடியஇயல்பினதாதலால்,
“வெவ்வாய்முதலை” எனப்பட்டது;
யானையின் காலையேயன்றி அதற்கு இறைவனான எம்பெருமானது மனத்தையும் புண்படுத்திய கொடிய வாயையுடைய தென்றவாறுமாம்:
“கொடியவாய்விலங்கு” என்றார் திருமங்கையாழ்வாரும்.
இவ்வகையான கொடியபிராணியை எளிதிற்கொல்லுதற்கேற்ற மிகக்கொடிய வலிய படைக்கல மென்பது விளங்க,
“உக்ர பாழித் திகிரிப்படை” எனப்பட்டது.
“உய்ய” என்றது, இம்மையில் உயர்வாழ்தலையேயன்றி மறுமையில் வீடுபெற்றுவாழ்தலையும் உணர்த்தும்.

சூழி – குளம், நீர்நிலை. “சூழிக் களிறு” என்பதற்கு – முகபடாத்தை யணிந்த யானை யென்றுஉரைக்கலாகாது,
காடுமலைகளில் யதேச்சையாய்த்திரிந்துகொண்டிருந்த யானை யாதலால். அன்றி, முகபடாத்தையணிதற் கேற்ற
யானை யென இயற்கையடைமொழி கொண்டதுமாம்.
இனி, தன் இனமாகிய பல பெண்யானைகளினாற் சூழப்பட்டிருந்ததான ஆண்யானை யென்றலு மொன்று.
“உக்கிர” எனத் திரியாது “உக்ர” எனவே கொண்டது, செய்யுளோசைநோக்கி. உக்ரபாழி – நிலைமொழி வடமொழி யாதலின்,
அதன் முன் வருமொழிமுதல்வலி இயல்பாயிற்று. படுக்குங்கருவி; படுத்தல் – அழித்தல்; ஐ – கருவிப்பொருள்விகுதி.
படைப்பவன் – படைத்தற்றொழிற்கடவுள். படைப்பவன்தன் ஊழிப்பொழுது – பிரமனது பகலெனப்படுகின்ற கல்பத்தின் முடிவில்
நேர்ந்த அவாந்தரப்பிரளய காலத்தில்; இதுவே நைமித்திகப்பிரளய மெனப்படுவதும்

——–

(இதுமுதல் மூன்று கவிகள் – ஸ்ரீகூர்மாவதார வைபவம்.)

பாட்டுக்கும் முத்தமிழ் வில்லிபுத்தூர் வரும் பாவை குழல்
சூட்டுக்கும் நல்லவர் தென் அரங்கேசர் தொடு கடல் வாய்
மோட்டுக் கமடத் திரு உருவாகி முது முதுகில்
கோட்டுச் சயிலம் உழுவது என்னாத் துயில் கொண்டனரே –23-

(இ – ள்.) முத் தமிழ் – (இயல் இசை நாடகம்) என மூன்று வகைப்பட்ட தமிழும் வழங்குகின்ற,
வில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூரில்,
வரும் – (பெரியாழ்வார் திருமகளாராய்) வந்து திருவவதரித்த,
பாவை – ஆண்டாளுடைய,
பாட்டுக்கும் – பாமாலைக்கும்,
குழல் சூட்டுக்கும் – (அவள்) தன்திருக்கூந்தலிலே சூடிக் கொடுத்த பூமாலைக்கும்,
நல்லவர் – திருவுள்ளமுகந்தவராகிய,
தென் அரங்க ஈசர் – அழகிய திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற தலைவரான நம்பெருமாள், –
தொடு கடல்வாய் – கடையப்படுகின்ற திருப்பாற்கடலில்,
மோடு கமடம் திரு உரு ஆகி – உயர்ந்த சிறந்த ஆமைவடிவமாகி,
முது முதுகில் கோடு சயிலம் உழுவது என்னா – வலிய (தனது) முதுகிலே சிகரங்களையுடைய மந்தரபர்வதம் தினவுசொறிவ தென்றெண்ணி,
துயில்கொண்டனர் – யோகநித்திரை கொண்டருளினர்; (எ – று.)

பாற்கடல்கடைந்தபொழுது, மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்கள்வேண்டுகோளினால் திருமால்
பெரியதோர் ஆமைவடிவ மெடுத்து அம்மலையின்கீழேசென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம் படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தன னென்பது பிரசித்தம்.
(“அந்தரத்துறையமரரு மசுரருங் கடையும், மந்தரத்தினை மறுகுமவ்வாரிதி மருவிச்,
சுந்தரப்பெருங்கமடமாய் முதுகினிற் சுமந்தான், சுந்தரத்தினிற்கவுத்துவங்கவினிய கண்ணன்” என்றது, பாகவதம்;

“மந்தரமத்தமிழ்ந்தாமற் பாற்கடற்குள் வளர்ந் தாதிகூருமமாய் மலையைத்தாங்கிச்,
சுந்தரவாசுகியை வடமாகச் சுற்றிச் சுராசுரர் நின் றமிர்தங் கடைந்த வந்நாள்” என்றார் பின்னோரும்.

அங்ஙனமிருக்கும்போது, விசைபடக்கடைகையில், பெரிய வலிய மந்தரகிரி தன்முதுகின் பரப்பெல்லாங் கொண்டு சுழன்றுவர,
அதனைத் தினவுசொறிகின்றவாறுபோலக் கொண்டு, துடைகுத்த உறங்குவார்போல, ஸ்ரீமகாகூர்மரூபியான பகவான்
இனிது துயின்றனனென, அப்பரமனது ஆற்றலையும் இளைப்பின்மையையும் எடுத்துக்காட்டினர்.

“செருமிகு வாளெயிற்ற வர வொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே,
வெருவரவெள்ளைவெள்ளமுழுதுங்குழம்பவிமையோர்கள் நின்று கடையப்,
பருவரையொன்றுநின்றுமுதுகிற்பரந்துசுழலக் கிடந்து துயிலும்,
அருவரையன்னதன்மையடலாமையான திருமால் நமக்கொரரணே” என்ற பெரியதிருமொழிப்பாசுரத்தின் கருத்தையுட்கொண்டது, இச்செய்யுள்.

“அழியும்பணிவெண்டிரைபுரட்டு மாழிவயிறுகிடங்கெழுந்து,
கிழிய நெடுமால்வரைதுளங்கிக் கீழ்வீழ்ந்திடலுந் தனிநின்று,
சுழலும்பசும் பொற்கிரிமுதுகுசொறிந்தாங்கணிதினிளநறவ,
முழுகுந்துளவோன்மோட் டாமையுருவமெடுத்துந்தாங்கினனால்” என்ற ஸ்ரீபாகவதத்தையுங் காண்க.

“இயல்புடைக்கமடம் வெரினிடைத்தினவங்கொழிந்தில ததனிலை யெளிதோ” என்றது, மகாபாகவதம்.

எப்படிப்பட்ட பெரிய பாரத்தையும் மிகஎளிதிற் பரிக்கவல்லவன் எம்பெருமா னென்பது இதிற் போதரும்.
உழுதலாவது – பூமியைக் கீறுதல்; இங்கே, இலக்கணையாய், தினவுசொறிதலைக் குறித்தது.
கலப்பை கொண்டுஉழுதலாற் பூமி வருந்தாதவாறு போல மலைதிரிதலாற் பெருமான் வருந்தாதிருந்தன னென்பதும்,
“உழுவது” என்றசொல்லினது ஆற்றலால் விளங்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூராண்டாள் தனதுகூந்தலிற்சூடிக்கொடுத்த பூமாலைகளையும் பாமாலைகளையும் திருமால் திருவுள்ளமுகந்து
ஏற்றுக்கொண்டதனால், “வில்லிபுத்தூர்வரும் பாவை பாட்டுக்கும் குழற்சூட்டுக்கும் நல்லவர்” என்றார்.
“அன்னவயற்புதுவையாண்டா ளரங்கற்குப், பன்னு திருப்பா வைப்பல்பதியம் இன்னிசையாற்,
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை, சூடிக்கொடுத்தாளைச் சொல்லு” என்ற பெரியாரருளிச்செயலும்,
அதன் வியாக்கியானத்தில் “பெரியபெருமாளுக்கு வாசிக காயிக ரூப மாலாப்ரதையாய்” என்றதும் காணத்தக்கன.

வில்லிபுத்தூர் – பாண்டியநாட்டுத் திவ்வியதேசங்கள் பதினெட்டில் ஒன்று. மத்திமதீபமாக, “ஸ்ரீவில்லிபுத்தூர்வரும்பாவை” என்றதை,
முன்நின்ற பாட்டுக்கு என்றதனோடுங் கூட்டுக. இனி, பாட்டுக்கு – (அடியார்கள் பாடும்) பாடல்களுக்கு எனப் பொதுப்படக் கொள்ளுதலுமாம்.
பாடுவது, பாட்டு, சூடுதற்குரியது, சூட்டு. அகத்தியமுனிவரும் பாண்டியராசர்களும் சங்கப் புலவர்களும்
தமிழ்ப்பாஷையைத்தழைத்தோங்கச்செய்ததேசமான பாண்டி வளநாட்டிலுள்ள ஊராதலாலும்,
சங்கத்தமிழ்மாலைமுப்பதுந்தப்பாமே சொன்ன ஆண்டாளுக்கும் தமிழின்னிசைமாலைக ளுரைத்த பெரியாழ்வார்க்கும்
திருவவதாரஸ்தல மாதலாலும், “முத்தமிழ் வில்லிபுத்தூர்” எனப்பட்டது;
“செந்தமிழ்த்தென்புதுவை” என்றார் பெரியாழ்வாரும். முத்தமிழ்ப் பாட்டு என்று கூட்டவுமாம்.
பாவை – சித்திரப்பதுமைே்பா லழகியவள்; கண் மணிப்பாவைே்பா லருமையானவள்; உவமையாகுபெயர்.
நல்லவர் – இனியவர். தொடுகடல் – ஆழ்ந்த கடல் எனினுமாம்.

“மோட்டுக் கமடம்” என்றது, முதுகின் உயர்வுபற்றி. கமடம் – வடசொல். கமடத்திருவுரு = ஸ்ரீகூர்ம ரூபம்.
சயிலம் – ஸைல மென்ற வடசொல்லின் விகாரம்; கல்மயமான தென்பது காரணப்பொருள். என்னா – உடன்பாட்டெச்சம்.
துயில் – முதனிலைத்தொழிற்பெயர். முது முதுகு – முதிர்ந்த முதுகு.
“சயிலம் உழுவது என்னா” என்பதற்கு – மலை தன்முதுகின்மேல் ஊர்வ தென்றேனும் எண்ணாமல் என்று உரைத்தலுமாம்;
இப்பொருளில், “என்னா” என்பது – ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சமாம்.

எம்பெருமானது பேரருளுடைமையும், வரம்பிலாற்றலுடைமையும் இதிற் கூறப்பட்டன.

———–

திரிக்கின்ற பொற் குன்று அழுந்தாமல் ஆமைத் திரு உரு ஆய்
பரிக்கின்றதில் பெரும் பாரம் உண்டே பண்டு நான் மறை நூல்
விரிக்கின்ற உந்தி அரங்கேசர் தம் திருமேனியின் மேல்
தரிக்கின்றது மகரக் கடல் ஆடைத் தரா தலமே –24-

(இ – ள்.) மகரம் கடல் ஆடை தராதலமே – சுறாமீன்களையுடைய கடலை (உடுக்கும்) ஆடையாகக் கொண்ட (கடலாற் சூழப்பட்டதான) இந்தப் பூலோகம்முழுவதுமே,
பண்டு – பழமையாய் (அநாதிகாலமாய்),
நால்மறை நூல் விரிக்கின்ற உந்தி அரங்கேசர் – நான்குவகைப்பட்ட வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் விரிவாகப்புகழ்ந்துகூறப்படுகின்ற திருநாபியையுடைய திருவரங்கநாதர், தம் திருமேனியின்மேல் தரிக்கின்றது – (ஆதிகூர்மரூபியான) தமது திருமேனியின்மீது கொண்டு தாங்கப்பெறுகின்றது;
(என்றால், இப்பொழுது),
திரிக்கின்ற பொற் குன்று அழுந்தாமல் ஆமை திருஉரு ஆய் பரிக்கின்றதில் – கடைந்துக கடையறப்படுகின்ற பொன்மயமான மந்தரமலை (கடலில்) அழுந்திவிடாதபூமியினை கூர்மரூபியாய் (அதனை)ச் சுமப்பதில்,
பெரும் பாரம் உண்டே – அதிகபாரம் உண்டோ ? (இல்லையென்றபடி).

கீழேழுலகங்களுக்கும் கீழே அஷ்டதிக்கஜங்களும் அஷ்டமகாநாகங்களும் நாகராஜனான ஆதிசேஷனும் இருந்து உலகங்களைத் தாங்க,
அவ்விடத்திற்குக்கீழே திருமால் ஆதிகூர்மரூபியாய் எழுந்தருளியிருந்து அவையனைத்தையும் எளிதில் ஒருமலரைப்போலவும்
அணுவைப்போலவும் தன்முதுகின் மீது கொண்டு தாங்குகின்றன னென்பது, நூற்கொள்கை;
மேல் 12 – ஆஞ் செய்யுளில் “தொல்லைக்கமடத்தல நவகண்டந் தொடுகடல்நீர்” என்பதுங் காண்க.
அங்ஙனம்ஈரேழுலகங்களையும் அவற்றைத்தாங்கும் பலவற்றையும் ஆதிகூர்மரூபியாய் எப்பொழுதும் எளிதில்தாங்குகின்ற
ஸ்ரீமந்நாராயணனது வரம்பிலாற்றலுக்கு, அப்பதினான்குஉலகங்களுள்ஒன்றான நிலவுலகத்திலே யுள்ள பலமலைகளில் ஒன்றாகிய
மந்தரகிரி யொன்றைக் கடலில் அழுந்தாதபடி கூர்மரூபங்கொண்டு சிறிதுபொழுது தாங்குதல் ஒருபொருளாமோ? என்பது கருத்து.
அதனைப்பரித்தவனுக்கு இது எவ்வளவு? எனத் தொடர்நிலைச் செய்யுட் பொருட்பேறணி தொனிக்கின்றது.

பொன் குன்று – பொன்னையுடைய மலை; அழகிய மலை யெனினுமாம். பாரம், மகரம், தராதலம் – வடசொற்கள்.
பண்டு தரிக்கின்றது என இயையும். உண்டே, ஏகாரம் – எதிர்மறை. மறை நூல் – உம்மைத் தொகை;
மறையாகிய நூல் என இருபெயரொட்டுப்பண்புத்தொகையுமாம்.
“கடல் வாழ் சுறவு” என்றபடி மகரமீன் கடலிலேயே வாழு மியல்பின தாதலால், “மகரக்கடல்” என்றார்.
பூமியைச் சூழ்ந்துள்ளதான கடலை, பூமியாகிய பெண் உடுக்கும் ஆடையாக வருணித்தல், கவிசமயம்.

———–

ஓர் உரு வெற்பைத் தரித்தது -தானவர் உம்பர் உள்ளாய்
ஈர் உரு நின்று கடைந்தது வேலை -இதனுடை ஓர்
பேர் உரு இன் அமுதோடு பிறந்தது பெண்மை கொண்டு ஓர்
நார் உரு நின்றது அரங்கா இது என்ன நல் தவமே –25-

(இ – ள்.) அரங்கா – ரங்கநாதனே! (திருப்பாற்கடல்கடைகின்ற காலத்தில்),
ஓர் உரு – (உனது) வடிவமொன்று,
வெற்பை தரித்தது – மந்தரமலையைத் தாங்கியது;
ஈர் உரு – (உனது) இரண்டு வடிவங்கள்,
தானவர் உம்பர் உள் ஆய் நின்று – அசுரர்களுள்ளும் தேவர்களுள்ளும் பொருந்தி நின்று,
கடைந்தது – (அக்கடலைக்) கடைந்தன;
ஓர் பேர் உரு – (உனது) மற்றொரு பெரிய வடிவம்,
வேலையிதன் இடை – அக்கடலின்நடுவில்,
இன் அமுதோடே – இனிய அமிருதத்துடனே,
பிறந்தது – தோன்றியது;
ஓர் நார் உரு – அன்புசெய்யத்தக்க (உனது) மற்றொருவடிவம்,
பெண்மை கொண்டு நின்றது – பெண் தன்மையைக்கொண்டு நின்றது;
இதுஎன்ன நல்தவம் – இப்படி நீ ஒருகாலத்திற் பலவடிவங்களைக்கொண்டு அநுக்கிரகித்தது என்ன நல்ல தவத்தின் பயனோ! (எ – று.)

பாற்கடல்கடைகின்றபோது ஸ்ரீமந்நாராயணன் அக்கடலினிடையே மகாகூர்மரூபத்தைத் தரித்து
மந்தரபர்வதத்திற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்ததனால் “ஓருரு வெற்பைத்தரித்தது” என்றும்,
அப்பொழுது வாசுகியின்வாலைப் பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட அசுரர்களும் ஆகிய
இருதிறத்தாரும் அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையற்றவராய் நிற்க அதுநோக்கி
அத்திருமால் தான்ஒரு திருமேனியைத் தரித்துத் தேவர்கள்பக்கத்திலேயும்
வேறொருதிருமேனி யைத்தரித்து அசுரர்கள்பக்கத்திலேயும் நின்று வாசுகியின் வாலையும் தலையையும் பிடித்து
வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்ததனால், ‘தானவரும்பருள்ளாய் ஈருரு நின்றுகடைந்தது” என்றும்,
அப்பால் அந்தஸ்ரீமகாவிஷ்ணு தந்வந்திரியென்னுந் தேவரூபத்தைத் தரித்து அமிருதபூர்ணமான கமண்டலத்தைக்
கையிலெடுத்துக்கொண்டு அந்த க்ஷீரசமுத்திரத்திலிருந்து உதயமானதனால் “வேலையிதனிடை ஓர் பேருரு இன்னமுதோடே பிறந்தது” என்றும்,
அப்பொழுது அசுரர்கள் தந்வந்திரியின்கையிலிருந்த அமிருத கலசத்தைப் பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்ள
அந்த எம்பெருமான் ஜகந் மோஹநகரமான ஒருஸ்திரீரூபத்தைத் தரித்து அசுரர்களை வஞ்சித்து அமுதத்தைக்
கைக்கொண்டு அமரர்கட்குப் பிரசாதித்ததனால் “பெண்மை கொண்டு ஓர்நாருரு நின்றது” என்றுங் கூறினர்.

“அரங்கா இதுஎன்ன நல்தவம்” என்றது, இப்படி நீ ஏககாலத்தில் அநேகரூபங்களைக்கொண்டுசேவை
சாதித்துப் பலவாறுஉதவும்படி அத்தேவர்கள் என்னநல்தவஞ்செய்திருந் தார்களோ வென வியந்தவாறாம்.
இவ்வரலாற்றால், தன்சிரமம் சிறிதும்பா ராட்டாமலே சமயோசிதமானரூபங்களைக்கொண்டு
தன்னைச்சரணமடைந்த வரைப் பரிபாலிக்கும் பகவானது கருணை வெளியாம்.

தாநவரென்ற வடசொல் – (காசியபமுனிவரது மனைவியருள்) தநுவென்பவளது சந்ததியா ரென்று பொருள்படும்;
தத்திதாந்தநாமம். உம்பர் என்ற மேலிடத்தின்பெயர் – இடவாகுபெயராய், மேலுலகத்தில் வசிக்கின்றவர்களான தேவர்களைக் குறிக்கும்.
“ஈருரு கடைந்தது” என்றது, பன்மையொ ருமை மயக்கம்; “இரண்டுகண்ணுஞ் சிவந்தது” என்றாற்போல; (தனித்தனி) கடைந்த தென்க.
“வேலையிதனிடை” என்றதில் “இது” என்றது – பகுதிப் பொருள்விகுதியாய் நின்றது; அன் – சாரியை.
இனி, வேலைகடைந்தது என்று இயைத்துவிட்டு, இதனிடை என்று எடுத்தலுமாம், நார் – அன்பு.

—————

இது முதல் 3 பாசுரங்கள் ஸ்ரீ வராக அவதார வைபவம் –

ஆருக்கு இவரை அளவிடல் ஆம் -தென் அரங்கர் இந்தப்
பாருக்கு அரந்தை தவிர்ப்பதற்காக பழிப்பு இல் பெரும்
சீர் உற்ற செங்கண் கரும்பன்றி ஆகி திருக் குலம்பின்
மேரு கண கணமா தலை நாளில் வினோதிப்பரே –26-

(இ – ள்.) தென் அரங்கர் – அழகிய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப் பவரான எம்பெருமான், –
தலைநாளில் – முன்னொருகாலத்திலே,
இந்த பாருக்கு அரந்தை தவிர்ப்பதற்குஆக – இந்தப்பூமிக்குஉண்டாகிய துன்பத்தை யொழிப்பதற்காக,
பழிப்பு இல்பெருஞ் சீர் உற்ற செம் கண் கரும் பன்றி ஆகி – குற்றமில்லாத மிக்க சிறப்புப் பொருந்தியதும் சிவந்த கண்களையுடையதும் கருநிறமுள்ளது மான வராகாவதாரமாய், திரு குளம்பில் மேரு கணகணம்ஆ – தமது திருவடிக்குளம்பின்கீழே மகாமேருகிரி மிகவுஞ் சிறியதொருபொருளாகும்படி,
வினோதிப்பர் – விளையாடியருளினர்;
(ஆதலால்), இவரை அளவுஇடல் ஆருக்கு ஆம் – இவருடைய பெருமையை அளவிட்டுச்சொல்லுதல் யார்க்குக்கூடும்?
(இவர் பெருமையை உள்ளபடி மதித்துச் சொல்லுதல் எத்துணை வல்லவர்க்கும் அரிய தென்றபடி); (எ – று.)

பூமியைப் பாயாகச்சுருட்டி யெடுத்துப்போன இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொணர்ந்து பழையபடிவிரிப்பதற்காகவும்,
பூமிக்குநேர்ந்த பிரளயாபத்தைப் போக்கியருளுதற்காகவும் எடுத்த திருவவதார மாதலால்,
“பாருக்கு அரந்தை தவிர்ப்பதற்காக” என்றார்.
இழிந்தபிறப்பென்னுங் குற்றம் இந்தத் திவ்வியவராகமூர்த்திக்கு இல்லை யென்பது விளங்க, “பழிப்பில் பெருஞ்சீருற்ற” எனப்பட்டது.
குழந்தை கிணற்றில் விழுந்தால் உடனே அதிற்குதித்துக் குழந்தையையெடுக்குந் தாய்போலப் பூமி கடலினுட்புக்க வளவிலே
நீருக்குஞ்சேற்றுக்கும்பின்வாங்காத வராகரூபமாய்க் கடலினுட் புக்குப் பூமியை மேலேயெடுத்து நிறுத்திய
மகோபகாரகனே பிறவிப்பெ ருங்கடலினின்று உயிர்களை ஈடேற்றுதற்குத் தஞ்சமாகத்தக்கவ னென்றது இங்குத் தொனிக்கும்;

“ஏனத்துருவா யுலகிடந்த வூழியான் பாதம் மருவாதார்க் குண்டாமோ வான்”,
“வராகத், தணியுருவன் பாதம் பணியு மவர் கண்டீர், மணியுருவங் காண்பார் மகிழ்ந்து,”
“எறிதிரைவையமுற்றும், எனத்துருவாயிடந்தபிரா னிருங்கற்பகஞ்சேர், வானத்தவர்க்கு மல்லாதவர் க்கு
மற்றெல்லாயவர்க்கும், ஞானப்பிரானை யல்லா லில்லை நான்கண்ட நல்லதுவே” என்றார் ஆழ்வார்களும்.
கொடிய அசுரன்மீது கோபத்தாற் கண்கள்சிவந்தன வென்க. புண்டரீகாக்ஷனான திருமாலின் அவதார மாதலால்,
செந்தாமரைமலர்போன்ற கண்க ளென்னவுமாம்.
“மலர்ந்தசெந்தா மரைமலரை யொத்த திருக்கண்களுடையவனும், கருநெய்தற்பூவையொத்து விளங்குந்
திருமேனியுடையவனுமான மகாவராகரூபமுடைய ஸ்ரீமந் நாராயணன் கோட்டுநுனியாலே பூமியைஉயரவெடுத்து
மகாநீலமலைபோலப் பாதாளத்தினின்றும் எழுந்தருளினான்” என்றது, விஷ்ணுபுராணம்.

“நீலவரை யிரண்டுபிறைகவ்வி நிமிர்ந்ததொப்பக், கோலவராகமொன்றாய் நிலங்கோட்டிடைக்கொண்ட வெந்தாய்” என்று
ஆழ்வார்அருளிச்செய்த படி, நீலவராக மாதலால், “கரும்பன்றி” எனப்பட்டது.
சிவ புராணங்களிற் கூறியபடி சுவேதவராகத்தைக் குறிப்பதாயின், கருமை – பெருமை யென் னலாம். குளம்பு – குரம்.
“திருக்குளம்பில் மேரு கணகணம்ஆ” என்பதற்கு – காற்குளம்பின்கீழே மேருகிரி
(அகப்பட்டுச் சிலம்பென்னுங் காலணியினுள்ளே யிடப்பட்ட சிறிய பருக்கைக்கற்கள் போலக்)
கணகணவென்று ஒலிக்கும்படி யென்றும் உரைக்கலாம்; கணகணத்தல் – ஈரடுக்கு ஒலிக்குறிப்பு; சப்தாநுகரணம்.
“சூரமத்யகதோ யஸ்ய – மேரு: கணகணாயதே,”
“சிலம்பி னிடைச் சிறுபரல்போற் பெரியமேரு திருக்குளம்பிற் கணகணப்பத் திருவாகாரங், குலுங்க
நிலமடந்தைதனை யிடந்து புல்கிக் கோட்டிடைவைத்தரு ளிய வென்கோமான் கண்டீர்,”
“தீதறுதிங்கள் பொங்குசுட ரும்ப ரும்ப ருலகேழினோடு முடனே, மாதிர மண்சுமந்த வடகுன்று நின்ற மலையாறு மேழுகடலும்,
பரதமர்சூழ்குளம்பி னகமண்டலத்தி னொருபா லொடுங்க வளர்சே, ராதிமுனேனமாகி யரணாய மூர்த்தியது நம்மையாளுமரசே” என்பன காண்க.

ஆருக்கு ஆம் எனஇயையும். ஆருக்கு அளவிடல் எனஇயைத்து, இவரை(த் திருவுருவத்தின்பெருமையில்)
யார்க்கு ஒப்புச்சொல்லலாகு மென்னவுமாம். பார் – பார்க்கப்படுவது என்றாவது பருமையுடையதென்றாவது பொருள்படும் காரணக்குறி.
“செங்கட்கரும்பன்றி” என்றவிடத்துத் தொடைமுரண் காண்க. “தலைநாளில் வினோதிப்பர்” என்றது, இயல்பினால் வந்த காலவழுவமைதி;
“இறப்பே யெதிர்வே யாயிருகாலமுஞ், சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி” என்ற தொல்காப்பியச்சூத்திரத்தின் உரையில்
“இவர் பண்டு இப்பொழிலிடத்து விளையாடுவர்” என்பது உதாரணங் காட்டப்பட்டுள்ளது.

——–

மருமலர்க் கோயில் மடமான் விரும்பும் மதில் அரங்கர்
பெருமையை பேசுவது எப்படி நாம் பிறைவாள் எயிற்றுக்
கரு முகில் கோலப் பெரும் பன்றி ஆய களேபரத்தின்
ஒரு மயிர்க்காலடி யூடே கடல் புக்கு ஒளிந்தனவே –27-

(இ – ள்.) பிறை – பிறைச்சந்திரன்போன்ற,
வாள் எயிறு – ஒளியுள்ள பற்களையும்,
கரு முகில் – காளமேகம்போன்ற (கருநிறமுள்ள),
கோலம் – திருமேனியையு முடைய,
பெரும் பன்றி ஆய – மகாவராகமாகிய,
களேபர த்தின் – திருமேனியினது,
ஒரு மயிர்க்கால் அடிஊடே – ஒருமயிர்க்காலினது அடியிடத்திலேயே,
கடல் புக்கு ஒளித்தன – (ஏழு) கடல்களும் பிரவேசித்து மறைந்தன; (என்றால்), –
மரு மலர் – வாசனையுடைய செந்தாமரைமலரை,
கோயில் – இருப்பிடமாகவுடைய,
மட மான் – மடப்பத்தையுடைய மான் போன்றவளாகிய திருமகள்,
விரும்பும் – விரும்பப்பெற்ற,
மதில் அரங்கர் – மதில்கள்சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான எம்பெருமானு டைய,
பெருமையை – மகிமையை,
நாம் பேசுவது எப்படி – நாம் புகழ்ந்து சொல்வது எவ்வாறு? (எ – று.)

மகாவராகமூர்த்தியின் பெருமை நம்மால் அளவிட்டுச் சொல்லுதற்கரிது என்பதாம்.
பிறை – வளைந்த வடிவிலும், வெண்மையான ஒளியிலும் வக்கிர தந்தத்திற்கு உவமை;
“நீலவரையிரண்டுபிறைகவ்வி நிமிர்ந்ததொப்பக், கோல வராகமொன்றாய்” என்றது காண்க.
வாள் எயிறு – வாள்போலக் கூரிதாய் விளங்கும் பல் லெனினுமாம். களேபரம் – வடசொல்.
மயிர்க்கால் – ரோமத்வாரம், ரோமகூபம், மடமை – இளமையும், பேதைமையுமாம். மான் – உவமையாகுபெயர்.
மருண்டநோக்கில் மகளிர்க்கு மான் உவமை கூறப்படும். மான்விரும்பும் அரங்கர் எனஇயையும்:
திருமகளால் விரும்பப்படும் அரங்கர்; திருமகளை விரும்பும் அரங்கர் எனினுமாம்.
எப்படி – வினா, எதிர்மறைகுறித்தது; முன்செய்யுளிலும், பின்செய்யுள்களிரண்டிலுங்காண்க;
“செம்பொன் மதி லேழுடுத்த திருவரங்கப் பெருங்கோயில்” என்கிறபடி ஸப்தப்ரகாரங்கள்சூழ்ந்த தென்பது தோன்ற,
மதிலரங்க மெனப்பட்டது. அடியூடே, ஏ – இழிவுசிறப்பு.
கடல் – பால்பகா அஃறிணைப்பெயராய் இங்குப்பன்மைகுறித்தலால், “ஒளித்தன” என்னும் பன்மைமுற்றைக் கொண்டது.

————

நிறக்கும் செழும் சுடர்க் கோடும் இப்பாரும் நிசா முகத்துச்
சிறக்கும் பிறையும் களங்கமும் போலும் எனில் சிறு கண்
மறக் குஞ்சரம் செற்ற மாயோன் அரங்கன் வராகம் அது ஆயப்
பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு இனிப் பேசுவதே –28-

(இ – ள்.) நிறக்கும் – நிறங்கொண்ட,
செழுஞ் சுடர் – மிக்க ஒளியையுடைய,
கோடும் – (ஸ்ரீவராகமூர்த்தியினது) வக்கிரதந்தமும்,
இ பாரும் – (அதனாற் குத்தியெடுக்கப்பட்ட) இந்தப்பூமியும், (முறையே),
நிசாமுகத்து சிறக்கும் பிறையும் – இராப்பொழுதின்தொடக்கமாகிய மாலைப்பொழுதிலே சிறப்பாய் விளங்குகிற பிறைச்சந்திரனையும்,
களங்கமும் – (அதனிடத்துள்ள) மறுவையும்,
போலும் – ஒக்கும்:
எனின் – என்றால், –
சிறு கண் – சிறிய கண்களையும்,
மறம் – வலிமையையுமுடைய,
குஞ்சரம் – (குவலயாபீடமென்னும்) யானையை,
செற்ற – கொன்ற,
மாயோன் – கண்ணபிரானாகிய,
அரங்கன் – ரங்கநாதன்,
வராகம்அது ஆய் பிறக்கும் – பன்றிவடிவமாகத் தோன்றிய,
பிறப்பின் – திருவவதாரத்தின்,
பெருமை – பெருமையை,
இனி பேசுவது எ ஆறு – இனி (நாம்) சொல்லுவது எப்படி? (இயலா தென்றபடி); (எ – று.)

இந்நூலாசிரியர்தம் ஆசாரியரான பராசரபட்டரது திருத்தந்தையாராகிய ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச்செய்த ஸுந்தரபாஹுஸ்தவத்தில்
“புராவராஹஸ்ய தவேயமுர்வரா தம்ஷ்ட்ராஹ்வயேந்தோ: கில லக்ஷ்ம லக்ஷிதா” என்றதை அடியொற்றியது இச்செய்யுளென்னலாம்;

“கிளரகன்புனலுணின்றரி யொர்கேழலாய், இளையெனுந் திருவினை யெய்தினானரோ,
உளைவரும் பெருமையோரெயிற்றினுட்புரை, வளரிளம்பிறையிடை மறுவிற் றோன்றவே” என்ற கம்பராமாயணமுங் காண்க.
வக்கிர தந்தத்தாற் குத்தியெடுக் கப்பட்டதான பெரிய பூமி அதிலே பிறையினிடத்துக்களங்கம்போல மிகச் சிறிதாய்க் காணப்பட்ட தென,
அந்தமகாவராகரூபத்தின் பருமையை விளக்கியவாறாம்;

“பன்றியாய்ப் படியெடுத்த பாழியா யென்ப ரது, வென்றி யாருனதெயிற்றின் மென்றுகள் போன் றிருந்ததால்”
என்பர் திருவரங்கக் கலம்பகத்தில்:
“ஏனமொன்றாய் மண்துகளாடி” என்றது, திருவிருத்தம்;
“மஹாவராஹத்தினுடைய திருவெயிற்றுக்கு, ப்ரளயார்ணவகதையான பூமி, ஒருகஸ்தூரிபிந்துவாலே
அலங்காரமிட்டாற்போலே யிருக்கை” என்றது, அதன் வியாக்கியானம்.

“சுறவமெறிகடல்வலயமுழுவது மோர்நுண்டுகளிற் றுலங்குகோட்டி, னுறைவதனைத் தனிநோக்கி” என்ற கூர்மபுராணத்தையும்,
“கருமையிற் றவழக் கலையினிற்றெறிசேதகமெனக் காசினி கோட்டின்,
மருவ வாண்டிருணியாகியபரம னெழுந்து தான் வருகின்றவெல்லை” என்ற மகாபாகவதத்தையும்,

“செய்யதாமரைநான்முகன்செய்தருள், வையம் யர்வு மருப்பிற் றுகளென, வெய்துகொண்டு விரிக்கு மொராயிரம்,
பையரா முடியுச்சி பதித்ததால்” என்ற கந்தபுராணத்து உபதேசகாண்டத்தையுங் காண்க.
“கோடும் பாரும், பிறையுங் களங்கமும் போலும்” என்றது, உவமையணி.
கோடு பிறையையும், பார் களங்கத்தையும் போலும் என முறையே சென்று இயைதலால் முறைநிரனிறைப்பொருள்கோள்;
நிரனிறையணி யெனவும்படும்: க்ரமாலங்கார மென்பர் வடநூலார்.

நிஸாமுகம், களங்கம், குஞ்ஜரம், வராஹம் – வடசொற்கள். கண்சிறுத் திருத்தல், யானைக்கு உத்தமவிலக்கணம்;
“தீயுமிழ் சிறுகணூஞ் செம்புகரு முடைத்தாய்” என்ற அரசயானையிலக்கணத்தைக் காண்க. மறம் – கோபமும், கொலையுமாம்.
குஞ்சரம் என்பது – காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்ப தென்றும், துதிக்கையையுடையதென்றும் காரணப்பொருள்படும்;
குஞ்சம் – புதரும், துதிக்கையும். மாயோன் – மாயையையுடையவன்; மாயையாவது – செய்தற்கு அரியன செய்யுந்திறம்:
பிரபஞ்சகாரணமான மூலப்பிரகிருதியுமாம்; ஆச்சரியகரமான குணங்களுஞ் செயல்களு மென்னலுமாம்.
“வராகமது” என்றதில், “அது” என்பது – பகுதிப்பொருள்விகுதி.

—————

இது முதல் நான்கு பாசுரங்கள் ஸ்ரீ நரசிம்மாவதார வைபவம் –

ஆடும் அரவில் துயில் அரங்கேசன் அரு மகற்கா
நீரும் தறியில் உதித்திலனேல் நிகிலப் பொருள்கள்
ஊடும் புறத்தினும் உண்மை எவ்வாறு இவ்வுலகு அறியும்
ஈடும் எடுப்பும் இலா ஒரு தெய்வம் இவன் எனவே –29-

(இ – ள்.) ஆடும் – படமெடுத்து ஆடுகின்ற,
அரவில் – ஆதிசேஷனிடத் தில்,
துயில் – யோகநித்திரைசெய்தருள்கின்ற,
அரங்கஈசன் – ரங்கநாதன்,
அரு மகற்கு ஆ – (பெறுதற்கு) அரிய மகனாகிய பிரகலாதனுக்காக,
நீடும் தறியில் உதித்திலன் ஏல் – நீண்ட தூணினின்று (நரசிங்காவதாரமாய்த்) தோன்றியிலனானால், –
ஈடும் எடுப்பும் இல்லா ஒரு தெய்வம் இவன் என – (தனக்கு) ஒப்பானபொருளும் (தன்னிலும்) மேம்பட்டபொருளு மில்லாத ஒன்றான கடவு ளிவனே யென்று (எல்லாரும்) நிச்சயிக்கும்படி,
நிகிலம் பொருள்கள் ஊடும் புறத்தினும் உண்மை – எல்லாவஸ்துக்களினுடைய உள் ளிலும் வெளியிலும் (அத்திருமால்) உளனாந்தன்மையை,
இ உலகு எ ஆறு அறியும் – இந்தஉலகம் எப்படி அறியும்? (அறியா தென்றபடி); (எ – று.)

(“அளந்திட்ட துணை யவன்தட்ட வாங்கே, வளர்ந்திட்ட வாளுகிர்ச் சிங்க வுருவாய்,
உளந்தொட் டிரணிய னொண்மார்பகலம், பிளந்திட்ட கைகள்,”
“எங்கு முளன் கண்ணனென்ற மகனைக் காய்ந், திங்கில்லையா லென்றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே யவன் வீயத் தோன்றிய வென், சிங்கப்பிரான் பெருமை யாராயுஞ் சீரமைத்தே” என்றார் ஆழ்வார்களும்.)

வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால் “முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளேவைத்து நாட்டிய தூண் அது”
என்று சங்கிக்கக் கூடுமாதலால் அதற்கு இடமில்லாதபடி அவ்விரணியன்தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப் பார்த்து
அளந்து நாட்டின அவன் வாயில் தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றின னென்பதும்,
வேறுயா ரேனும் கையால்தட்ட அத்தட்டியஇடத்திலிருந்து தோன்றினால்
“அவர் தம்கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டுவந்து தூணிலே பாய்ச்சினர்” என்று சொல்லக்கூடு மாதலால்
அதற்குஇடமில்லாதபடி அவ்விரணியன் தானே தன்கையால் தட்டியவளவில் திருமால் தோன்றின னென்பதும்,
அவன் ஓரிடத்தில்தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் “எங்கும்உளன்” என்று பிரகலாதன் செய்த பிரதிஜ்ஞை தவறி
“நீ சொல்லுகிறவன் இங்கு இல்லை” என்று இரணியன் செய்த பிரதிஞ்ஞை நிலைநிற்கு மாதலால் அதற்கு இடமில்லாதபடி
அவன் தட்டின இடத்திலிருந்தே திருமால்தோன்றி னனென்பதும்,
அவன் தட்டினபின்பு சிறிது நேரங்கழித்து நரசிங்கம் தோன்றினால் “நான் தட்டினபொழுது திருமால் அங்கு இல்லை” என்று
அவன் சொல்லித் திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கின்ற உண்மை
நிலையை மறுக்கக்கூடு மாதலால் அதற்குமிட மில்லாதபடி கர்ப்பம் கருமுதிர்தல் பிரஸவம் முதலியனவும்
குழந்தையாய்ப் பிறத்தல் பிறகு நாளடைவில்வளர்தல் என்பனவும் இல்லாமல் அவ்வெதிரியினும் பருத்து வளர்ந்த
வடிவையுடையவனாய் அப்பொழுதே தோன்றின னென்பதும், அங்ஙனம் தோன்றியவிடத்தும் இரணியன் வெல்லவும்
நரசிங்கமூர்த்திதோற்கவுமானால் “எங்கும்உளன்” என்ற உண்மை நிலைத்தாலும் பரத்வம் ஸித்தியாமற்போய்விடுதல்பற்றி
அதனினும் தோன்றாதிருத்தலே நலமாதலால் அங்ஙனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாதுஅழித்தன னென்பதும்,
தேவர் மனிதர் விலங்கு தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக்களி லுள்ளவற்றில் ஒவ்வொன்றினாலும்
தனித்தனி சாகாதபடியும் பிரமசிருஷ்டிக்குஉட்பட்ட எந்தப்பிராணியினாலும் சாகாதபடியும் அவன் பிரமருத்திராதிகளிடத்துப் பெற்ற
பெருவரம் பழுதுபடாதிருத்தல் வேண்டி நரங்கலந்த சிங்கமாய்த் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு தோன்றின னென்பதும்,
அஸ்திரசஸ்திரங்களில்ஒன்றினாலும் சாகாதபடியும் ஈர முள்ளதனாலும் ஈரமில்லதனாலும் இறவாதபடியும் பெற்ற வரம்
வீண்போகாதவாறு நகங்களினாற்கீண்டு கொன்றனனென்பதும், பகலிலும்இரவிலும் சாகாதபடி பெற்ற வரம் பொய்படாதவாறு
அப்பகலிரவுகளின்சந்தியாகிய மாலைப்பொழுதிற் கொன்றனனென்பதும், பூமியிலும் வானத்திலும்சாகாத படி பெற்ற வரத்தை
ஒதுக்குமாறு தன்மடிமீதுவைத்துக் கொன்றனனென்பதும், வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதபடி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி வாயிற்படியின்மீதுவைத்துக்கொண்டுகொன்றன னென்பதும் முதலியன – அருமையாகக் கருதத்தக்க விஷயங்கள்.

“சுர ரசுரர் முனிவர் நரர் கையிற் பாரிற் சுடர்வானிற் பக லிரவி லுள் புறம்பிற், பெரும் படையிற் றான்
சாகாவிரண்யன்றனைப் பிரகலாதன் தர்க்கித்துண்டென்ற தூணில்; நரகரியாய்ப்பொழுதுபுகுநேரந்தன்னில் நாடியுதித்
துயர்வாசற்படிமீதேறி, இரணியனைத்தொடைமிசைவைத் துகிரினாலே யிருபிளவாக்கினை யரியே யெம்பிரானே” என்பர் பின்னோரும்.

ஸர்வவ்யாபியான பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனே யென்ற உண்மை இத்திருவவதாரத்தின் செயல்களால்
நன்குவிளங்கியதை இப்பாசுரத்தில் எடுத்துக்காட்டினர்.
கடவு ளுண் டென்பதும், அக்கடவுள் திருமாலே என்பதும் இவ்வவதாரத்தினாற் சாதிக்கப்பட்டமை வெளிப்படை.
உயிர்கள் உய்தற்பொருட்டு இவ்வுண்மையைப் பிரதியக்ஷமாக்கியருளினன் எம்பெரு மான்.
அங்ஙனந்தோன்றாமற்போனால் இறைவன் தா னென்பது ஒழியு மென்க.

(“நாரணப்பெயரினா னவையிலாதொளிர்செகற், பூரணச்செயலி னைப்பொலிவுசெய்தருள்வதோர்,
காரணத்தினி னெடுங்கதிர்மணித்தறியில் வந், தாரணத்தினை வளர்த் தவுணனைக்கொன்ற நாள்” என்னும்
இருசமய விளக்கத்தையுங் காண்க.)

“அருமகன்” என்றது, தந்தைக்கு மைந்தனிடம் இயல்பாக இருத்தற்கு உரிய அன்புவிசேடத்தைக் காட்டும்;
அன்றி, “எங்குமுளன் கண்ணன்” என்ற அருமையான பரமார்த்தத்தை எளிதில்வெளியிட்ட மகோபகாரகனான
புதல்வ னென்ற பொருளில் “அருமகன்” என்றாருமாம்.
தனது இளமைப்பருவ முடையகுழந்தை அசங்கதமானதொருவார்த்தையைச் சொன்னாலும் அந்த மழலைச் சொல்லைச்
செவிக்கின்பமாகக்கேட்டு மகிழ்தலும், அவ்விளமகன் தானே தக்கதொருவார்த்தையைக்கூறினால் அதற்கு
மிகமகிழ்ந்து மகனைப் பாராட்டுதலு மாகிய தந்தையியல்பிற்கு மாறாக
இரணியன் பிரகலாதனைப் பகவந்நாமஞ்சொன்ன துவே ஏதுவாக “இவன் என்புத்திர னன்று” என்று கைவிட்டிருக்கவும்,
எம்பெருமானுக்கு அந்தப் பிரகலாதன்பக்கல் உண்டான புத்திரவாத்ஸல்யமும், பகவந்நாமஞ்சொன்னவர்களைத்
தமக்கு எல்லாவகை யுறவினராகவுங் கொள்ளுகின்ற தமதுஇயல்பும்பற்றி, ‘அருமகன்’என்றன ரென்னலாம்.
அவன் தாய்வயிற்றிலிருக்கும்பொழுதேதொடங்கித் தன்சித்தத்தை எம்பெருமான்பக்கல் வைத்த
மகாபாகவதோத்தம னாத லாலும் இங்ஙனங் கூறத்தகும்.

ஈடு மெடுப்பு மில்லா வொருதெய்வம் – “ஒத்தார் மிக்காவை யிலையாய மாமாயா” என்றார் திருவாய்மொழியிலும்.
திருவாய்மொழியில் “ஈடு மெடுப்பு மி லீசன்” என்றதற்கு – சிலரைத் தாழ்ந்தவரென்று உபேக்ஷித்து இட்டு வைக்கையும்
வேறு சிலரை உயர்ந்தவரென்று அங்கீகரித்து எடுத்துக்கொள்ளுதலு மில்லாமல் எல்லார்க்கும் ஸமாநனான
நடுவு நிலைமையுடையவ னென்று பொருள்செய்திருத்தலால், அங்ஙனங் கொள்ளவுந் தகும்.
“உலகு” என்றது, உலகத்துஉயிர்களை; அறிதற்குரியன அவையே யாதலால். புறத்தின், இன் – ஏழனுருபு,
நரசிங்கமூர்த்தியாகிய சூரியன் தோன்றுதற்குத் தூண் உதயபர்வதமாயிருந்த தென்ற கற்பனை, “உதித்திலன்” என்ற சொல் லாற்ற லாற் போதரும்.

————

மறந்த மறையும் மழுங்கிய மந்திரமும் மகமும்
இறந்த தெய்வங்களும் எல்லாம் முன் எங்கு உறைந்து எங்கு இயன்ற
அறம் தரும் கோயில் அரங்கன் அவ் ஆள் அரிக்கு ஆளரியாய்ப்
பிறந்த பின் அன்றோ பிறந்து பெருகிப் பிறங்கியதே –30-

(இ – ள்.) மறந்த மறையும் – மறக்கப்பட்ட வேதங்களும்,
மழுங்கிய மந்திரமும் – விளங்காமற்போன மந்திரங்களும்,
மகமும் – யாகங்களும்,
இறந்த தெய்வங்களும் – ஒழிந்துபோன தெய்வங்களும்,
எல்லாம் – ஆகிய இவையெல்லாம்,
முன் – முன்பு,
எங்கு உறைந்து எங்கு இயன்ற – எங்குத் தங்கி எவ்விடத்திற் சஞ்சரித்தன!
அறம் தரும் கோயில் அரங்கன் – தருமத் தை நிலைநிறுத்துகின்ற திருவரங்கம்பெரியகோயிலிலெழுந்தருளியிருப்பவனான எம்பெருமான்,
அ ஆள் அரிக்கு ஆள் அரி அய் – அந்தப் பராக்கிரமத் தையுடைய பகைவனான இரணியனை யழிப்பதற்காக நரசிங்கவடிவமாய்,
பிறந்த பின் அன்றோ – திருவவதரித்தபின்பன்றோ,
பிறந்து பெருகி பிறங் கியது – (அதெல்லாம்) தோன்றிப் பெருக்கமடைந்து விளங்கிற்று!! (எ – று.)

இரணியன் பிறந்து வளர்ந்து அருந்தவம்புரிந்து பெருவரங்கள்பெற்றுத் தலையெடுத்துச் செருக்கி உலகத்திலே எவரும்
பழையகிரமப்படி வேத மோதவும் மந்திரஜபங்கள்செய்யவும் யாகங்கள்புரியவும் தெய்வங்களை வழி படவுங் கூடா தென்றும்,
தன்னையே கடவுளாகக் கொண்டு அனைவரும் துதித்து வந்தித்து வழிபடவேண்டு மென்றும் கட்டளையிட்டு
அவ்வாணையை எங்குந் தவறாமற் செலுத்திவந்தகாலத்தில் வேதமுதலியன யாவும் இருக்கின்ற இடமும்தெரியாதபடி மறைந்திருந்ததையும்,
இப்படிசிலகாலம்கழி ந்த பின்னர் எம்பெருமான் நரசிங்காவதாரஞ்செய்து இரணியனைத்தொலைக்க அதன்பிறகு
அவ்வேதமுதலியவனைத்தும் தலையெடுத்ததையும் எடுத்துக் காட்டி,
“துஷ்டநிக்கிரகஞ்செய்து வேதங்களையும்வைதிக கருமங்களையும் நிலை நிறுத்திச்சகலதேவர்களையும் வாழ்விப்பவன்
எம்பெருமானே யென்ற உண்மையை உணர்த்தினார்.

“முக்கணானெண்கணானுமுளரியாயிரங்கணானுந்,
திக்கணாந்தேவரோடு முனிவரும் பிறருந் தேடிப்,
புக்கநாடறிகுறாமற்றிரிகின் றார் புகுந்துமொய்த்தார்,
எக்கணாற்காண்டுமெந்தையுருவமென்றிரங்கிநின்றார்” என்ற கம்பராமாயணத்து இரணியன்வதைப்படலம் இங்குநோக்கத் தக்கது.
மறந்த மறை – அத்தியயனமில்லாமையால் மறந்துபோனவேதங்கள்.

“மழுங்கிய” என்பதனை மகத்துக்குங் கூட்டுக; செய்பவரெவருமில்லா மையால் மழுங்கிப்போன யாகங்கள்.
பிழைத்திருத்தல் தெரியாமையால், “இறந்த தெய்வங்கள்” எனப்பட்டன.
(“தரையின்மீதுபோய் மாயவனுரு வெனச்சாற்றும், அரியவேள்வியேமுதலியவறங்களையழித்துப்,
புரியுமந்த ணர்ப்பொன்றுறப்புரிமினோ புரியின், கரியவன்வலிகெடு முலப்பார்கடவுள ரே,”
“என்னவோதலுஞ் சம்பரன்முதலினோரேகித், துன்னும்வேள்வியே முதலியவறங்களைத்தொலைத்து,
மன்னுயிர்க்குழுமாயநன்மனையெரி யூட்டிப், பொன்னினாட்டினும் புலவரைப்புடைத்தனர்புகுந்தே” என்ற ஸ்ரீபாகவ தம், இங்கு நோக்கத்தக்கது.
“அமரரை வதைத்து நீங்கள் விரிவுறுவேதமெல்லாமழிய வேள்வியைச்சிதைத்துத்,
தரையினின்முனிவரெல்லாந்தவஞ்செ யாதியற்று மென்றான்” என்பர் மகாபாகவதத்திலும்.)

இனி, “இரணியன், அநேக வரங்களைப் பெற்று, கர்விதனாகி, திரிலோகங்களையும், ஸ்வாதீநமாக்கிக்கொண்டு,
இந்திரன் சூரியன் வாயு அக்கினி வருணன் சந்திரன் யமன் முதலானார் செய்கிற அதிகாரங்களைத் தானே செய்துகொண்டு,
யாகங்களிலே அவர்களுக்கான அவிர்ப்பாகங்களைத் தானே கைக்கொண்டு, மூன்று லோகங்களையும் ஏகாதிகாரமாய்த்
தானே ஆண்டுகொண்டிருந்தான்; அப்போது, இந்திராதிதேவதைகள், அந்தமகாசூரனுக்குப் பயந்து சுவர்க்க லோகத்தை விட்டு,
மனிதவேஷம்பூண்டு பூமியிற் சஞ்சரித்துக்கொண்டிருந் தார்கள்” என்று ஸ்ரீவிஷ்ணுபுராணம் கூறுதலாலும், இங்ஙனங்கூறத்தகும்.

மந்த்ரம், மகம் தைவம் – வடசொற்கள். மந்திரமும்மகமும், மகரவொற்று – விரித்தல்விகாரம். இழிவுதோன்ற,
தெய்வங்களை அஃறிணையாக்கினர். முன் – காலமுன்; இரணியன்வாழ்ந்தநாளில் என்க.
இயன்ற – “அன்” சாரியைபெறாத பலவின்பால்முற்று. தொகுதியொருமையால், “பிறங்கியது” என்றார்;
“பிறங்கிய” எனப் பன்மையாகப் பாடமோதுவாரும் உளர். ஆள் அரி – ஆண் மையையுடைய பகைவன்.
அரி – வடசொல். ஆள் அரி – நரங்கலந்த சிங் கம். அரி – ஹரி என்ற வடசொல்லின் சிதைவு;
(யானை முதலிய பெரியபிராணிகளையும்) அழிக்கவல்ல தென்பது காரணப்பொருள்.
“அந்தியம்போதி லரியுருவாகி யரியையழித்தவனை” என்று பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடியதனை அடியொற்றி
“ஆளரிக்கு ஆளரியாய்” என்றார்
வாள் அரி என்று எடுத்து, வாள்போலக்கொடிய பகைவனென்றும், வாளாயுதத்தையேந்திய பகைவனென்றும்,
(பொன்னிறமான வடிவையுடைமையால் இரணியனென்று பெயர்பெற்ற) ஒளியையுடைய பகைவ னென்றுங் கொள்ளவுமாம்.
அறம்தரும் அரங்கன் என இயையும். அறம் தரும் – தொலைந்துபோன தருமத்தைக் கொணர்ந்துகொடுக்கின்ற என்க.
இங்கு “அறந்தரும்” என்றது – ஸாபிப்ராயவிசேஷண மாதலால், கருத்துடையடைமொழியணி.

————

அடிக்கண்டிலர் அதலத்தவர் ஐம்முகனோடு அமரர்
கடி கண்டிலர் மலை வான் இவர்ந்ததும் கமலத்து அயனார்
முடி கண்டிலர் அண்ட மா முகடு ஏறியும் மூதுணர்ந்தோர்
படி கண்டிலர் அரங்கேசர் கொள் சிங்கப் படி தனக்கே –31-

(இ – ள்.) அரங்க ஈசர் – ரங்கநாதர்,
கொள் – கொண்ட,
சிங்கம் படி தனக்கு – நரசிங்கவுருவத்திற்கு,
அதலத்தவர் – கீழுலகத்திலுள்ளவர்,
அடி கண்டிலர் – திருவடிகளைக் கண்டாரில்லை;
ஐம்முகனோடு அமரர் – சிவனும் (மற்றைத்) தேவர்களும்,
மலை வான் இவர்ந்தும் – (முறையே) கைலாசகிரி யின்மேலும் சுவர்க்கலோகத்திலும் உயரவிருந்தும்,
கடி கண்டிலர் – திருவரை யைக் கண்டாரில்லை;
கமலத்து அயனார் – (அத்திருமாலின்திருநாபித்) தாமரை மலரில் தோன்றிய பிரமதேவர்,
அண்டம் மா முகடு ஏறியும் – அண்ட கோளத்தினது மிகவுயர்ந்த உச்சியிடத்தில் ஏறியிருந்தும்,
முடி கண்டிலர் – திருமுடியைக் கண்டாரில்லை;
முது உணர்ந்தோர் – (பலவற்றையும் அறிந்த) பழைய பெரியோரும்,
படி கண்டிலர் – அளவைக் கண்டாரில்லை; (எ – று.)

நரசிங்கமூர்த்தி கொண்ட விசுவரூபத்தின் பெருமையைக் கூறியது, இப்பாசுரம்.
அதனை, கம்பராமாயணத்து இரணியன்வதைப்படலத்திலும்
“பிளந்ததுதூணு மாங்கேபிறந்ததுசீயம்பின்னை,
வளர்ந்ததுதிசைகளெட்டும் பகிரண்டமுதலமற்று,
மளந்த தப்புறத்துச்செய்கையாரறிந்தறையகிற்பார்,
கிளர்ந்ததுககனமுட்டை கிழிந்ததுகீழுமேலும்,”

“மன்றலந்துளபமாலைமா னுடமடங்கல் வானிற்,
சென்றது தெரிதல்தேற்றாம் சேவடிபடியிற்றீண்ட,
நின்றதோர்பொழுதி னண்ட நெடுமுகட்டிருந்தமுன்னோன்,
அன்றவனுந்தி வந்தானாமெனத்தோன்றினானால்,”

“நோக்கினார்நோக்கினார் முன்னோக்குறு முகமுங்கையும்,
யாக்கையுந்தாளுமாகியெங்கணுந்தானேயாகி,
வாக்கினான் மனத்தினான்மற்றறிவினா வளக்கவாரா,
மேக்குயர்சீயந்தன்னைக்கண்டனர் வெருவுகின்றார்” எனக் காண்க.

“விண்டிடுதூணினெழுந்தெழிலார்நரமீளி வளர்ந்தசெய,
லெண்டவராலு முணர்ந்தறிதற்கரி தென்றிடில் யாரறிவார்,
அண்டமுகட்டின்வயங்கியமர்ந்திடுமாதியிவ்வரியினொளிர்,
முண்டக வுந்தியின் வந்தது போன்றனன் மூடிவறைதற்கெளிதோ” என்பர் மகா பாகவதத்திலும்.

ஈற்றிலுள்ள “சிங்கப்படிதனக்கு” என்பதை எல்லாவாக்கியங்களிலுங் கூட்டுக; கடைநிலைத்தீவகம்.
அடி – பாதம், கண்டிலர் – எதிர்மறைப்பலர் பாலிறந்தகாலமுற்று. அதலம் – கீழேழுலகங்களிலொன்று;
இங்கு, கீழுலகமென்ற மாத்திரமாய் நின்றது.
ஐம்முகன் – ஐந்துமுகங்களையுடையவன்; சதாசிவ மூர்த்தியாகிய சிவபிரானுக்கு ஐந்து முகங்க ளுண்டு:
ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் என்று அவற்றிற்குப் பெயர்கூறுவர்; ஒடு – எண்ணுப்பொருளது.
ஐம்முகன் மலையிலும், அமரர் வானிலும் இவர்ந்தும் என முறையேசென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
உயர்ந்த இடங்களில் இருந்துங் கண்டாரில்லை யென்றற்கு இதுகூறினார்.
அவர்கட்குக் கைலாசகிரியும் வானுலகமும் உறைவிட மென்பது, வெளிப்படை. இவர்தல் – ஏறுதல்.
“வானிவந்தும்” என்ற பாடத்திற்கு, வான் நிவந்து என்று பிரிந்து இப்பொருளேபடும். நிவத்தல் – உயர்தல்.
கடி – இடை; வடசொல். அயன் – அஜனென்றவடசொல்லின் விகாரம்; திருமாலிடத்தினின்று தோன்றியவ னென்று பொருள்படும்;
அ – விஷ்ணு; “அகாரார்த்தோ விஷ்ணு:” ஆர் என்றபலர்பால்விகுதி, உயர்த்தற்பொருளில்வந்தது,
முடி – சிரசு. “அண்டமாமுகடு” என்றது, மேலேழுலகங்களுள்ளும் மேலதான சத்தியலோகத்தை. அது, பிரமன்வாழுமிடம்.
பிரமனது ஆதிசிருஷ்டியில் உண்டானவர்களும் தத்துவஞானமுடையவர்களுமான ஸநகர்முதலிய யோகிகள், “மூது ணர்ந்தோர்” எனப்பட்டனர்.
படி – ஒப்பும், தன்மையுமாம். சிங்கம் – ஸிம்ஹமென்ற வடசொல்லின் விகாரம்;
(யானைமுதலிய பெரியபிராணிகளையும்) ஹிம்ஸிக்கவல்ல தென்பது காரணப்பொருள்.
“படிதனக்கு” என்பதைப் படியினது என உருபுமயக்க மாக்கியும் உரைக்கலாம்.

———–

அறியின் அரங்கர் முன் ஆளரி ஆகிய அப்பொழுது
கொறியின் அவுணர் தம் வெள்ளங்கள் கோடியும் கொன்றதிலோ
தறியின் வயிற்றின் தகுவன் நெஞ்சும் சரபத்து உடலும்
நெறியின் வகிர்ந்த பின் அன்றோ தணிந்தது நீள் சினமே –32-

(இ – ள்.) அறியின் – ஆராய்ந்து அறியுமிடத்து, –
அரங்கர் – ரங்கநாதர்,
முன் – முன்பு,
ஆள் அரி ஆகிய அ பொழுது – நரசிங்கமாக அவதரித்த அப்பொழுது,
கொறியின் அவுணர்தம் வெள்ளங்கள் கோடியும் கொன்றதிலோ – ஆடுகள்போன்ற அசுரர்களுடைய கோடிவெள்ளங்களையும் கொன்றதனாலோ,
(நீள் சினம் தணிந்தது) – (அந்தநரசிங்கமூர்த்தியினுடைய) மிக்ககோபம் ஆறிற்று
(அவ்வளவினால் ஆறவில்லையென்றபடி); (பின்னை எப்பொழுது ஆறிற் றென்றால், -)
தறியின் வயிறின் – (தான்தோன்றிய) தூணினது நடுவிடத்தை (ப் பிளந்தாற்) போலவே,
தகுவன் நெஞ்சும் – அசுரனான இரணியனது மார்பையும்,
சரபத்து உடலும் – (சிவபிரானாகிய) சரபத்தினது உடம்பையும்,
நெறியின் வகிர்ந்த பின் அன்றோ – முறையே பிளந்தபின்பன்றோ,
நீள் சினம் தணிந்தது – (அச்சிங்க பிரானது) மிக்ககோபம் தணிந்திட்டது; (எ – று.)

நரசிங்கமூர்த்தி இரணியன் கட்டுத் தூணைப்பிளந்துகொண்டு அதிலிரு ந்துதோன்றியவுடனே,
இரணியன் சபையிலிருந்தவர்களும் அவனைச்சார் ந்தவர்களுமானமிகப்பலகோடிக்கணக்காகிய கொடிய அசுரர்களையெல்லாங்
கொன்று அதன்பின்பு இரணியனை வதைத்தனனென்பதும்;
மூவுலகத்திற்கும் பெருந்தீங்கு செய்துவந்த இரணியனை அழித்தற்குத் தேவர்கள்வேண்டு கோளினால் தோன்றிய
திருமாலின் அவதாரமான அச்சிங்கப்பிரான் இரணியனை மார்புகீண்டு அழித்தபின்பும் கோபந்தணியாமல் உக்கிரம் மேலிட்டிருக்க,
அந்தப்பெருங்கோபத்தைக்கண்டு அதனால்உலகமழியுமென்று மயங்கி அஞ்சிய தேவர்கள் ஓடிச் சிவபிரானைச் சரணமடைதலும்,
அக்கடவுள் அவர்கட்கு அபயமளித்து மிகப்பெரியதொரு சரபவடிவங்கொண்டு மிகஆரவாரித்து நரசிங்கத்தை எதிர்த்துவர,
நரசிங்கப்பெருமான் அச்சிவசரபத்தையும் இரணியனைப்போலவே பலவாறு சின்னபின்னப்படுத்தி யழித்து,
பிறகு பிரகலாதன் பணிந்து பிரார்த்தித்ததனாலும், தேவர்கள் துதித்ததனாலும்,
இலக்குமி சமீபித்ததனாலும் சினந்தணிந்தன னென்பதும், இங்கு அறியவேண்டியவை.

(“வாழ்குமரன்மேற் கனகவஞ்சகன்மே லோர்முகத்தே,
சூழ்கருணையும் முனிவுந் தோன்றியவாற் –
கேழ்கிளரும், அங்கவேள்குன்ற வழல்சரபத்தைப்பிளந்த, சிங்கவேள்குன்றத்தினார்க்கு” என்று நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும்,

“புக்ககருடனை யோர்புன்மசகம்வென்றதிற, மொக்குங் கனகனுரங்கீண்ட –
மிக்கதிற, லாளரியைப் பொன்னுக்காயஞ்சிக்கிடந்த சிவன், கோள்விளைத்தா னென்னுங் குறி,”

“பொன்னனுரங்கீண்டதனாற் பொங்குசினமாறிற்றோ, துன்னுசிவசரபஞ்சோரவுயிர் –
அன்னதனைப், பற்றி வகிர்ந்தபின்னர்ப் பாழிநரமடங்க, லுற்றசினந் தணிந்த தூங்கு” என்று பர ப்ரஹ்மவிவேகத்திலுங் கூறுவர்.)

“தன்னைக்கொல்லவந்த சிவசரபத்தை நர சிங்கப்பிரான் இரணியனைப்போலவே நகங்களாற்பிளந்திட்டனன்” என்றும்,
“யாதொரு நரசிங்கமூர்த்தியினுடைய கோபாக்கினியிலே சிவனுருவமான சரபம் சலபமாயிற்றோ” என்றும்
வடமொழிப்புராணங்களில் வருதலும் காண்க; (ஸலபம் – விட்டில், விளக்குப்பூச்சி.)

(இருசமயவிளக்கத்தில் “அன்னவன்சேனையாமவுணர்பல்கோடிபேர், துன்னுவெஞ்செருவிடைத் துகள்படுத்தருளினான்,
பின்னையும்பின்னையும் பெருகுகோபானலம், முன்னையின்பொழுதினும் மும்மடங்காயதால்,”
“வடவையைத்தின்றிடும் வளைகுலக்கிரிகளைப், பொடிபடப்பிசையு மம்புதி களைப் பருகும் வான்,
வெடிபடக்குரல்விடும் விழிநெருப்பெரியு மக், கடையு கத்திடியெனக்கடியபற்கதுவுமால்” என்று பிரமருத்திரேந்திராதி சரபாவ தாரப்பரிச்சேதத்திலும், “அச்செருத்தொடர்விடத்தழல்விழிச்சரபமங், கெய் ச்சிரைத்திடவெடுத்தெற்றியெற்றிப்பெரு,
வச்சிரத்துகிர்களான்மருவவங்கந் தொறும், பச்சிரத்தம்படப் பரிபவம்பண்ணியே,”
“ஈண்டுமாளரிவெகுண் டிரணியன்றனதுடல், கீண்டவாகீண்டு மெய்கிளர்கையாயிரமுறப்,
பூண்டு சுற்றிப்பெரும்பொன்வரைப்புறனுறத், தூண்டினானென்புடன்றோலும் வேறாகவே,”
“கரமுறிந் தேகுதிண்கான்முறிந் தெரிமுகச், சிரமுறிந் திருவகை ச்சிறைகளின்றிறமுறிந்,
துரமுறிந் துடன்முறிந் துக்கதா லென்றுமுப், புர முறிந்தெரிபுகப்பொருதவன்சரபமே” என்று சரபசங்காரப்பரிச்சேதத்திலும் வருவனவுங் காண்க.

இச்சரித்திரத்திற்கு மேற்கோள் -ழுஇத்திறத் தால்விரித்தியானிசைத்தனவெலாம், மைத்தடங்கண்ணினாய்வாமனீயத்து மா,
தித்தியந்தன்னிலுந் தெளிவுறச்செப்பிடும், பத்தியா லின்னமும்பகர்புரா ணங்கள்கேள்,”
“ஒத்தகாருடமிரண்டென்னுநூறாயசீ, ரத்தியாயத்திலே யறையு மாக்கினியமும்,
சுத்தமாநாற்பதிற்சொல்லு நீணாரசிங், கத்துடன் பற்பபாகவதமும்பகருமே” என அந்நூலிலேயே கூறப்பட்டுள்ளது)

சரபம் – இரண்டு தலைகளையும், சிறகுகளையும், கூரியநகமுள்ள எட்டுக் கால்களையும், மேல்நோக்கிய
கண்களையு முடையதொரு மிருகவிசேஷம்; இதனைப் பறவையென்றலு முண்டு. இது, சிங்கத்தை எளிதிற்கொல்லுந்திறமுடையது.
வெறுஞ்சிங்கமன்றி நரசிங்கமாதலாலும், ஸாமாந்யஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலையுடைய புருஷோத்தமனது
அவதாரமான திவ்விய ஸிம்ஹ மாதலாலும், சரபத்தைக் கொன்றிட்டது.

நல்லன தீயன பகுத்துணராமையும், ஒன்றுபோனவழியேஎல்லாம்போ தலும், உடனே தமக்குவரும்
பெருந்தீங்கையறியாதுமகிழ்ந்திருத்தலு மாகிய ஒப்புமைபற்றி. “கொறியி னவுணர்” என்றார். இன் – ஐந்தனுருபு, ஒப்பு.
வெள்ளம் – ஒரு பெருந்தொகை. “கோடியும்” என்ற உம்மை – முற்றுப்பொ ருளது.
கொன்றதில், இல் – ஐந்தனுருபு, ஏது. தறியின், இன் – சாரியை. வயிறு – இலக்கணையாய், நடுவிடத்தைக் குறித்தது;
“கள்ளிவயிற்றி னகில் பிறக்கும்” என்றவிடத்துப்போல. மேலே நெஞ்சு உடல்களைக் கூறுதலால்,
அவற்றோடுஇயையுமாறு “வயிறு” என்ற சொல்லாற் குறித்தனர்; இவ்வாறு வருவது – ரத்நாவளியலங்காரத்தின்பாற்படும்: கவிசமத்காரம்.
இவற்றை “நெறியின்” என்றதனோடு சேர்த்து நயங் காண்க. இன் – ஐந்தனுருபு, ஒப்பு .
“வயிறின்” எனச் சிறுபான்மை உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தின் றகர வொற்று இரட்டாதுநின்றது;
“கறைமிட றணியலு மணிந்தன்று” என்ற விடத்திற் போல. “வயிற்றின்” என்று பாடமோதுவாரு முளர்.
தகுவன் – அசுரன். ஸரபம் – வடசொல். நெறியின் வகிர்தல் – ஒன்றன்பின் ஒன்றாக (கிரமமாய்)ப் பிளத்தல்.
அன்றோ – தேற்றம். முதலடி – முற்றுமோனை. முன்நாள் அரியாகிய என்று பிரித்து உரைத்தலுங் கூடும்.
நெஞ்சு மார்புக் குத் தானியாகுபெயர். சிங்கத்திற்கு ஆடுகளைக்கொல்லுதல் மிகஎளிதாதல் போல,
சிங்கப்பிரானுக்கு அசுரர்களைக் கொல்லுதல் மிகஎளிதாயிருந்த தென்பது, இரண்டாமடியிற் போதரும்;
ஆடுகளைக்கொல்வதுபோல அசுர வெள்ளங்கள்கோடியையுங் கொன்றன னென்க.
“தணிந்தது நீள்சினம்” என்பது, முந்தினவாக்கியத்திலுங் கூட்டப்பட்டது.
தறியின்வயிற்றோடு தகுவன்நெஞ்சோடு சரபத்து உடலோடு வாசியில்லை சிங்கப்பிரானால் எளிதில் வகிரப்படுதலி லென்க.

இப்பாசுரத்தில், எம்பெருமானது பரத்வம், வெளியிடப்பட்டது.

————

இது முதல் ஐந்து கவிகள் திருவிக்ரமான வாமன திருவவதார வைபவம் அருளுகிறார் –

தார் ஏற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல்
சீர் ஏற்ற தொல் நான் முகத்தோன் விளக்கவும் செம்பொன் முடிக்
கார் ஏற்ற மேனி அரங்கேசர் கையும் கழலும் ஒக்க
நீர் ஏற்ற வண் திருக் குறள் ஆகி நிமிர்ந்த அன்றே -33-

(இ – ள்.) வள் திரு குறள் ஆகி – வளத்தையுடைய ஸ்ரீவாமநமூர்த்தி யாகி,
நிமிர்ந்த அன்று – (உடனே திரிவிக்கிரமனாய்) நிமிர்ந்துஉயர்ந்த அந் நாளில், –
தார் ஏற்ற வெள் குடை மாவலி வார்க்கவும் – வெற்றிமாலையைத் தரித்தவனும் ஒற்றைவெண்கொற்றக்குடையையுடையவனுமான மகாபலி சக்கரவர்த்தி (நீர்த்தாரையை) வார்த்துத் தத்தஞ்செய்துகொடுக்கவும்,
தாமரை மேல் சீர் ஏற்ற தொல் நால்முகத்தோன் விளக்கவும் – (திருமாலினது திருநாபித்) தாமரைமலரில் தோன்றியவனும் சிறப்புப்பொருந்தியவனு மாகிய பழமையான பிரமன் (தன்கையிலுள்ள கமண்டலத்தின் தீர்த்தத்தாற்) கழுவிவிளக்கவும்,
செம் பொன் முடி கார் ஏற்ற மேனி அரங்கஈசர் – சிவந்த (மாற்றுயர்ந்த) பொன்மயமான கிரீடத்தையும் காளமேகத்தையொத்த திரு மேனியையுமுடைய ரங்கநாதரது,
கையும் – திருக்கையும்,
கழலும் – திரு வடியும்,
ஒக்க நீர் ஏற்றன – சமகாலத்திலே நீரையேற்றன; (எ – று.)

(“தன்னுருவ மாரு மறியாமல் தானங்கோர், மன்னுங் குறளுருவின் மாணியாய் மாவலிதன்,
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து போர் வேந்தர், மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண், மன்னா தருகென்று வாய்திறப்ப மற்ற வனும்,
என்னால் தரப்பட்ட தென்றலுமே யத்துணைக்கண், மின்னார் மணி முடிபோய் விண்தடவ மேலெடுத்த,
பொன்னார் கனைகழற்கா லேழுலகும் போய்க்கடந்தங், கொன்னா வசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிட த்தை மாவலியை வஞ்சித்துத், தன்னுலக மாக்குவித்த தாளானை” என்ற ஆழ்வார் அருளிச்செயல் அறியத்தக்கது.)

வாமநமூர்த்தி மகாபலியினிடஞ் சென்று தவஞ்செய்தற்குத் தன்காலடியால் மூன்றடியிடம் வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து
அவன் தத்தஞ்செய்த நீரைக் கையில்ஏற்று, உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தையளாவி வளர்ந்தபொழுது,
மேலே சத்திய லோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டலதீர்த்தத்தாற் கழுவிவிளக்க.
அந்த ஸ்ரீபாததீர்த்தமாகக் கங்காநதி பெருகியதும், இங்கு அறியத்தக்கது. பிரமன் திரிவிக்கிரமமூர்த்தியின் திருவடியை விளக்கியது,
தனது இருப்பிடத்திற்கு வந்த பெரியோர்க்குச் செய்ய வேண்டிய ஷோடஸ (பதினாறுவகை) உபசாரங்களிற் பாத்யமென்னும் உபசாரமாம்;
அது, நீர்கொண்டு கால்கழுவுதல்.

கையில் தானஜலத்தை யேற்றவுடனே சிறிதுங்காலதாமமின்றி அதி விரைவில் மேலுலகைத் தாவியளந்து
காலில் நீரையேற்றன னென்னுங் கருத்து நன்குவிளங்க, “கையும் கழலும் ஒக்க நீரேற்றன” என்றார்; ஒக்க – ஒருங்கு.
கைநீரேற்றலாகிய காரணமும், கழல்நீரேற்றலாகிய காரியமும் ஒரேகாலத்தில் நிகழ்ந்தனவாகச் சொல்லுதலால்,
முறையிலுயர்வுநவிற்சியணி; அக்ரமாதிசயோக்தி யென்பர் வடநூலார்.
“காலமொன்றிற் காரண காரியம், நிகழத் தொடுத்தல் முறையிலி யென்ப” என அதன்இலக்கணங் காண்க.
இதில், காரணத்திற்கும் காரியத்திற்கும் முன்பின்தோன்றுகைத் தன்மையில், ஒருகாலத்து உண்டாகுகை கற்பிக்கப்பட்டது.
இது, காரிய விரைவை யுணர்த்துவது.

“மண்தாவெனவிரந்து மாவலியை – ஒண்தாரை, நீரங்கைதோயநிமிர்ந்திலையே நீள்விசும்பி, லாரங்கைதோயவடுத்து” என்ற
பொய்கையாழ்வாரருளிச்செயலின் பொருளை அடியொற்றியது இச்செய்யு ளென்னலாம்:
அதன் உரையில் “உதகஜலமும் திருவடிவிளக்கின ஜலமும் ஏகோதகமாம்படி வளர்ந்திலையோ?” என்றதுங் காண்க.

இங்ஙனம் விரைந்தது, அவன் மனம்மாறாத முன்னம் அளந்துகொள்ளவேண்டுமென்னுங் கருத்தினா லென்பர்.
“அளியினான்மூவடியளந்துகோடியென், றொளிகொளு மா வலியுதகம்பண்ணவே,
களைகணா யுலகினைக் காக்கும் வித்தகன், கிளர்முடி யுயரண்டங்கிழிய வோங்கினான்” என்ற மகாபாகவதத்தைக் காண்க.

மாவலி வார்க்கக் கைநீரேற்றது, நான்முகத்தோன் விளக்க கழல்நீரேற்றது என முறையே சென்று இயைதல், முறைநிரல்நிறைப்பொருள்கோள்.
குறளுக்கு வண்மை – “ஆலமர் வித்தி னருங்குற ளானான்” என்றபடி
மூவுலகத்தையும் ஈரடியிலே அளக்கவல்ல பேருருவைத் தன்னுள் அடக்கிக்கொ ண்டிருத்தல்;
எல்லாவுயிர்களின் முடியிலும் தானாக அடிவைத்து அவற்றை ஆட்கொண்டருளும் உதாரகுணமுமாம்.
நான்முகத்தோனாற் கழல் விளக்கப்படும் மகிமையை யுடையவன் தன்னைச்சரணமடைந்த இந்திரனது குறையைத் தீர்த்தற்காகத்
தான் இரவலனாகி உலகங்களைப்பெற்றுக் கொண்டு பின்னர் அவற்றை இந்திரனுக்குக் கொடுத்தருளின னென
இச் செய்யுளில் எம்பெருமானது பரத்வமும் ஸௌலப்யமும் தந்திரமும் வண்மையும் விளங்குதல் காண்க.

மாவலி – மஹாபலி என்ற வடசொல்லின் விகாரம். “தாரேற்ற,” “வெண்குடை”, “மா” என்ற மூன்றும் – பலிக்கும்,
“தாமரைமேல்”, “சீரேற்ற,” “தொல்” என்ற மூன்றும் – நான்முகத்தோனுக்கும்,
“முடி,” “மேனி” என்ற இரண்டும் – அரங்கேசர்க்கும் அடைமொழிகள். தார் – இங்கு வாகைப்பூமாலை.
முடி, தான் எல்லாவற்றிற்கும் இறைவனென்பதை விளக்குதற்கு அணிந்தது.
“காரேற்ற மேனி” என்றவிடத்து, “ஏற்ற” என்றது – உவமவாசகம்; மேகத்தின் தன்மையைக் கொண்டமேனி யென்றலுமாம். குறள் – குறுகியவடிவம்.

————–

தேமிக்க பச்சைத் துழாய் அரங்கேசர் திருக் குறள் ஆயத்
தாம் இப்புவனம் கிடந்த அந்நாள் மணல் சாகரம் சூழ்
பூமிப் புடை அளவிட்ட பொற்றாமரைப் பூம் கழற்கு
நேமிச் சிலம்பு திருச் சிலம்பு ஆகி நிலை பெற்றதே –34-

இ – ள்.) தேன் மிக்க – மிகுதியான தேனையுடைய,
பச்சை துழாய் – பசுநிறமான திருத்துழாய்மாலையை யணிந்த,
அரங்க ஈசர் – ரங்கநாதர்,
திரு குறள் ஆய் – ஸ்ரீவாமநமூர்த்தியாகி,
இ புவனம் கடந்த அ நாள் – இந்த உலகங்களை அளந்த அப்பொழுது,
மணல் சாகரம் சூழ் பூமி புடை அளவிட்ட – மணலையுடைய கடலினாற் சூழப்பட்ட பூமியினிடத்தை யளந்த,
பொன் தாமரை பூ கழற்கு – அழகிய தாமரைமலர்போன்ற திருவடிக்கு,
நேமி சிலம்பு – (பூமியைச்சூழ்ந்த கடலைச் சுற்றி யுள்ளதாகிய) சக்கரவாள பருவதமானது,
திரு சிலம்பு ஆகி நிலைபெற்றது – அழகிய சிலம்பென்னும் அணியாகி நிற்றலைப் பெற்றது; (எ – று.) – தாம் – அசை.

எம்பெருமான் உலகமளந்தபொழுது “மண்ணொடுங்கத் தானளந்த மன்”,
“நின்றகால் மண்ணெலாம்நிரப்பி யப்புறஞ், சென்றுபாவிற்றிலை சிறிதுபாரெனா”,
“அகலகங்காலினுக் கவனிபோந்தில, ககனமுள்ளடியினிற் கமலத்தாயின, சகலலோகங்களுந் தாளிரண்டினிற்,
புகுதவே நிவந்தனன் புயல்கொண்மேனியான்” என்றபடி பூமியினளவினும்பரந்துவளர்ந்து அதனை யளந்துநின்ற
ஒருதிருவடிக்கு, அப்பூமியைச்சூழ்ந்த கடலைச்சுற்றியுள்ளதான சக்கரவாளகிரி சிலம்பென்னும் அணிபோலிருந்த தெனக் கற்பனை கூறினார்.

பதினாயிரம்யோஜனையுயரமும் பதினாயிரம்யோஜனைபரப்புமுள்ள சக்கரவாள பருவதம் அத்திருவடிக்குச் சிலம்பென்னும் அணி
போன்ற தென்றதனால், அத்திருவடியின் வளர்ச்சி நன்குவிளங்கும்.
“சிலம்பு” என்ற சொல் மலை யென்றும் நூபுரமென்றுங் காலணியென்றும் பொருள்படுதலால், அச்சொல் நயம்பற்றி,
“சிலம்பு சிலம்பாகி நிலைபெற்றது” என்றார்;
முன் (21) “அண்ட மாமென்னச்சிறந்தது மூதண்டம்” என்றாற் போல: சொற்பின்வருநிலை
யணியும் உவமையணியுஞ் சேர்ந்துவந்த சேர்வையணி. ஆகி – உவமவுருபு – காலணியென்ற பொருளில்,
சிலம்புவது சிலம்பு எனக் காரணக்குறி; சிலம்புதல் – ஒலித்தல்.

தேன் + மிக்க = தேமிக்க: “தேன்மொழி மெய்வரி னியல்பும் மென்மை, மேவி னிறுதியழிவும்” என்றார் நன்னூலார்.
தேம் மிக்க என்று எடுத்து, வாசனை மிக்க என்றலுமாம். புவநம், ஸாகரம், பூமி – வடசொற்கள்.
ஸாகரம் – ஸகரசக்கரவர்த்தியினது புத்திரர்களால் தோண்டப்பட்டது; வடமொழித்தத்திதாந்தநாமம்.
சூரியகுலத்துச் சகரமகாராஜன் அசுவமேத யாகஞ்செய்தபொழுது பூமிப்பிரதக்ஷிணத்திற்காகச்செலுத்திய குதிரையை,
பொறாமைகொண்ட தேவேந்திரன் மாயையால் ஒளித்துக்கொண்டு சென்று, பாதாளலோகத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த
கபிலமுனிவர்பின்னே கட்டிவைக்க, அவ்வேள்விக்குதிரையை நாடிச்சென்ற சகரபுத்திரர் அறுபதினாயிரம்பேர்
பூமிமுழுதுந்தேடிக்காணாது, பாதாளலோகத்திற்குப் போதற்பொருட்டுப் பெருவழியாகப் பரதகண்டத்தில்
வடகிழக்குப்பக்கத்தில் தோண்டிச் சென்ற பெரும்பள்ளமே, பின்பு கங்கை முதலியவற்றின்நீரினால் நிறைந்து
ஸாகரமென்னும் பெயர்பெற்றுக் கடலோடு கூடித்தானும் கடலின்பாற்பட்ட தென்பது வரலாறு.
இது, இங்கு, பொதுப்படக் கடலென்றமாத்திரமாய்நின்றது; சிறப்புப்பெயர் பொதுப்பொருளின்மேலும்,
பொதுப்பெயர் சிறப்புப்பொருளின்மேலும் நிற்றல் பாஷைநடை.
“சகரர்தொட்டலாற் சாகரமெனப் பெயர்தழைப்ப, மகரவாரிதி சிறந்தது” என்றது, கம்பராமாயணம்.

————

பூமரு பொங்கர் புடை சூழ் அரங்கர் பொலாங்கழலால்
பாமரு மூவுலகும் கொண்ட போது பழிப்பு இல் பெரும்
காமரு மோலிச் சிகா மணி ஆகி கவுத்துவம் ஆய்
தேமரு நாபி அம் தாமரை ஆனது செஞ்சுடரே –35-

(இ – ள்.) பூ மரு – பொலிவு பொருந்திய (அல்லது மலர்கள்நிறைந்த),
பொங்கர் – சோலைகள்,
புடை சூழ் – எல்லாப்பக்கங்களிலுஞ் சூழ்ந்திருக்கப் பெற்ற,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றவரான எம்பெருமான்,
பொலம் கழலால் – அழகிய திருவடிகளினால்,
பா மரு மூ உலகும் கொண்ட போது – பரப்புப் பொருந்திய மூன்றுஉலகங்களையும் அளந்து தமதாக்கிக்கொண்டபொழுது, –
செம் சுடர் – சிவந்த கிரணங்களையுடைய தான சூரியமண்டலமானது, (முதலில் அப்பெருமானுக்கு),
பழிப்பு இல் – குற்றமில்லாத,
பெரு – பெரிய,
காமரு – அழகிய,
மோலி – முடியிலுள்ள,
சிகாமணி ஆகி – சிரோரத்தினம் போன்றிருந்து, (அதன்பின்),
கவுத்துவம் ஆய் – (திருமார்பிலணிந்த) ஸ்ரீகௌஸ்துபரத்தினம் போன்று, (பிறகு),
தேன் மரு நாபி அம் தாமரை ஆனது – தேன்பொருந்திய அழகிய திருநாபித்தாமரைமலர் போன்றது; (எ – று.)

வாமநமூர்த்தியாகிய திருமால் திரிவிக்கிரமனாக வானத்தையளாவி மேன்மேலோங்கிவளர்ந்தபொழுது,
சூரியன் வரவரக்கீழ்ப்பட்டுப் பலவாறு உவமைகூறுதற்கு உரியனாயின னென்க.
எம்பெருமான் திரிவிக்கிரமனாக நிமிரத்தொடங்கியபொழுது சூரியன் முதலில் திருமுடிமணிபோன்றும்,
இன்னும்சற்றுநிமிர்ந்தவளவில் திருமார்பின்மணியான கௌத்துவம்போன்றும், மற்றும்சற்றுநிமிரவே
திருவுந்தித்தாமரைமலர்போன்று மிருந்தன னென்பது கருத்து.

“மலருந்திமேல்விழமெய்நெரித்தான் வையமேழுந் துஞ்சா,
மலருந்தினா னரங்கன் குறளாய் மண்ணளந்த வந்நாள்,
மலருந் திவாக்கதிர் வண்குடையாய் முடிமாமணியாய்,
மலருந்தியாய்த் திருத்தாள் விரலாழிமணியொத்ததே” என்பர் திருவரங்கத்தந்தாதியிலும்,

தண்டியலங் காரவுரையில் உபமாதீபகவணிக்குஉதாரணமாகக்காட்டிய
“முன்னங்குடை போல் முடிநாயகமணிபோல், மன்னுந்திலகம்போல் வாளிரவி –
பொன்ன கலந், தங்குகவுத்துவம்போ லுந்தித்தடமலர்போ, லங்கணுலகளந்தாற்காம்” என்ற செய்யுளிலும் இக்கருத்து நிகழ்தல் காண்க.

“கவிகையாய் மவுலி யாய்க் கவின்கொண்மார்பினி, லவிர்மலிகவுத்துவமாகியே மருங்,
குவிலுறு நாண்மணியாகிக் கோதிலா, வுவமையிலலரிகீழொளிரவோங்கினான்” என்ற மகாபாகவதமுங் காண்க.

“சேயொளிபரப்பிவையத்திருளறச்சிதைக்குந்தெய்வக், காய்கதிர்க்கடவுள் மற்றோர்கவுத்துவநிகர்ப்பதம்மா” என்றது,
கந்த புராணத்து உபதேசகாண்டமும். உவமையணி.
செந்நிறமான ஆயிரங்கிரண ங்களோடு மலர்ந்து விளங்குஞ் சூரியமண்டலம்,
ஆயிரம் இதழ்களையுடைய செந்தாமரைமலரையொக்கும். மற்றையுவமைகட்கு, வட்டவடிவமும் விளக்கமும் பொதுத்தன்மைகள்.
மோலிச் சிகாமணி – கிரீடத்திலுள்ள நடுநாயக ரத்தினம்.

“மூவுலகு” என்றது, மேல் கீழ் நடு என்ற நோக்கத்தால். மண்ணுலகத் தையளந்ததில் அதன்கீழுலகமும் அடங்குதலால்,
மூவுலகத்தையும் அளந்ததாம். எம்பெருமானுக்கு உரியனவான உலகங்களைத் தன்னுடையன வென்று அபிமானித்த
மகாபலியினது மமகாரம் நீங்கப் பெருமான் அவற்றைத் தமதுஅடியின்பாற்படுத்துத் தம்முடையனவாக்கிக்கொண்டு காட்டியமை தோன்ற,
“கழலால் மூவுலகுங் கொண்டபோது” என்றார்.
மௌலி, சிகாமணி, கௌஸ்துபம், நாபி – வடசொற்கள். கவுத்துவம் – முதற்போலி: இது,
திருமால்மார்பில்அணியும் திவ்வியரத்தினம்; திருப்பாற் கடல்கடைந்தபொழுது அதனினின்றுதோன்றியது.
மரு – மருவு என்பதன் விகாரம். பொங்கர் – (நெடுந்தூரத்திலுள்ளாருங் காணும்படி) உயர்ந்து விளங்குவதென்று காரணப்பொருள்படும்;
அர் – பெயர்விகுதி. ஆகி, ஆய், ஆனது – உவமவாசகங்கள். செஞ் சுடர் – பண்புத்தொகை யன்மொழி யென்றாவது,
அடையடுத்த சினையாகுபெய ரென்றாவது கொள்ளத்தக்கது.

————

ஓதப் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் உலகு அளந்த
பாதத்து நீர் விண் படி பிலம் மூன்றிலும் பால் புரை வெண்
சீதத் தரங்க மந்தாகினி ஆகி செழும் கங்கை ஆய்
மேதக்க போகவதி ஆகி நாளும் விழுகின்றதே –36-

(இ – ள்.) ஓதம் புனல் – வெள்ளமாகிய நீரையுடைய,
பொன்னி – திருக் காவேரிநதியினது,
நல் நீர் – நல்ல நீரினாற் சூழப்பட்ட,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றவரான எம்பெருமானுடைய,
உலகு அளந்த பாதத்து – மேலுலகத்தையளந்த திருவடியினின்று பெருகிய,
நீர் – தீர்த்தமானது, – விண் படி பிலம் மூன்றிலும் – சுவர்க்கலோகம் பூலோகம் பாதாளலோகம் என்ற மூன்றுஇடங்களிலும்,
(முறையே), பால் புரை வெள் சீதம் தரங்கம் மந்தாகினி ஆகி – பால்போன்ற வெண்ணிறமான குளிர்ந்த அலைகளையுடைய மந்தாகினியாகியும்,
செழுங் கங்கை ஆய் – செழிப்புள்ள கங்கை யாகியும்,
மேதக்க போகவதி ஆகி – மேன்மைபொருந்திய போகவதியாகியும்,
நாளும் – எந்நாளும், விழுகின்றது-; (எ – று.)

திருமாலின் மேலுலகளந்ததிருவடியைப் பிரமன் கமண்டலதீர்த்தத்தாற் கழுவிவிளக்கிய ஸ்ரீபாததீர்த்தம்
சுவர்க்கலோகத்திற்பாய்வதற்கு மந்தாகினியென்றும், பூலோகத்திற்பாய்வதற்குக் கங்கையென்றும்,
பாதாளலோகம்நோக்கிப்பாய்வதற்குப் போகவதியென்றும் பெயரென உணர்க;

“பரமன டிப்புன லுலகைப் பாவனஞ்செய்திடும்பொருட்டுப் பண்டைமேரு,
சிரமதனி லளகநந்தையெனவிழுந் திவ்வுலகு கங்காதேவியாகித்,
தரமதனின்மிகுதேவ ருலகினின்மந்தாகினியாய்ச் சக்ரிநேமிப்,
புரமதனிற்போகவதியெனப்பொ லிந்த திந்தநதி’ பின்னுங்கேட்டி” என்றது, பாத்மோத்தரபுராணம்.

சூரிய குலத்துப் பகீரதசக்கரவர்த்தி, கபிலமுனிவனது கண்ணின்கோபத்தீக்கு இலக்காகி உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த
தனதுமூதாதையரான சகரபுத்திரர் அறுபதினாயிரவரைநற்கதிபெறுவித்தற்பொருட்டு, நெடுங்காலந் தவஞ்செய்து,
தேவகங்காநதியை மேலுலகத்திலிருந்து பூமிக்குக் கொணர்ந்து, பாதாளலோகத்திற்கும் கொண்டுபோயின னாதலால்,
மூவுலகத்திலும் அத்தீர்த்தம் உளதாயிற்று. பிரமன் ஸ்ரீபாததீர்த்தஞ்சேர்த்த நீர் சிலநாள் தேவலோகத்துத் தங்கியிருந்து
பின்னர்ப் பகீரதன்கொணர்கின்றபோது கீழுலகங்கட்கும் வந்ததென்க. விண்ணில் மந்தாகினியாகி, படியிற் கங்கையாய்,
பிலத்திற் போகவதியாகி என முறையே சென்றுஇயைதலால், முறைநிரல்நிறைப்பொருள்கோள்.

“ஓதப்புனல்” என்றது, பொன்னிக்கு இயற்கையடைமொழியாய் நின்றது. ஓதம் – குளிர்ச்சியும், அலையும், பெருக்குமாம்.
ஓதம் புனல் – கடலை நோக்கிச்சென்றுசேரும் நீ ரெனினுமாம்.
“மலைத்தலைய கடற்காவிரி, புனல் பரந்து பொன்கொழிக்கும்” என்றபடி தான்பெருகும்பொழுது பொன்னைக்
கொழித்துக்கொண்டுவருதலால், காவேரிக்கு “பொன்னி” என்று பெயர்;
இ – உடைமைப்பொருள் காட்டும் பெண்பால்விகுதி. பாதம், பிலம், சீதம், தரங்கம், மந்தாகிநீ, கங்கா, போகவதீ – வடசொற்கள்.
புரை – உவம வாசகம். கங்கை, வெண்ணிறமான நீரை யுடையது. நாளும், உம்மை – தொறுப்பொருளது.
கங்கைக்குச் செழுமை – நீர்மிகுதியும்,
“எழுமையுங்கூடி யீண்டியபாவ மிறைப்பொழுதளவினி லெல்லாங், கழுவிடும் பெருமைக் கங்கை” என்றபடி
தன்னிடத்து நீராடுபவர்க்குத் தீவினைதீர்த்து நற்கதியருளுதலும்; இச்சொல்லுக்கு – அழகென்ற பொருளும் உண்டு.

———–

ஓலப் புனல் அரங்கேசர் பொற்றாள் பட்டு உடைந்த அண்ட
மேலக் காடாகத் தொளை வழியாக விழும் புனல் போய்
கோலத் திரு உருக் கொண்ட அந்நாள் குரம் பட்டு உடைந்த
மூலக் கடாகத் தொளையால் விழுந்தது முன் புனற்கே –37-

(இ – ள்.) ஓலம் புனல் அரங்கஈசர் – ஆரவாரத்தைச்செய்கிற (காவேரி) நீரினாற் சூழப்பட்ட திருவரங்கத்தின் தலைவரான எம்பெருமானது,
பொன் தாள் – (திரிவிக்கிரமாவதாரத்தில் மேலுலகத்தையளந்துசென்ற) அழகிய திருவடி,
பட்டு – பட்டதனால், உடைந்த -,
அண்டம் மேலக் கடாகம் – அண்டகோளத்தினது மேற்பக்கத்துமூடியில் உண்டான,
தொளை வழி ஆக – துளையின் வழியாக,
விழும் – (பெரும்புறக்கடலினின்று) உள்ளேவிழுந்த,
புனல் – நீரானது, –
கோலம் திரு உரு கொண்ட அ நாள் – (அப்பெருமான்) ஸ்ரீவராகரூபத்தைக் கொண்ட அக்காலத்தில்,
குரம் பட்டு – (அந்த வராகநாயனாரது) திருக்குளம்பு பட்டதனால்,
உடைந்த -, மூலம் கடாகம் – (அண்டகோளத்தினது) அடிப்பக்கத்து மூடியின்,
தொளையால் – துளைவழியாக,
போய் – சென்று,
முன் புனற்கே விழுந்தது – பழமையான அக்கடலிலேயே விழுந்திட்டது; (எ – று.)

“பலிசக்கரவர்த்தியின்யாகத்தில் திரிவிக்கிரமவடிவங்கொண்டு உலகத் தையளந்த விஷ்ணுபகவானுடைய
வாமபாதத்தினது கட்டைவிரல்நுனி யாற் பிளக்கப்பட்ட மேற்பாகத்தையுடைய அண்டகடாகத்தின் தொளை வழியாய் உள்ளே
பிரவேசித்த புறக்கடலின்நீர்ப்பெருக்கு” என்று ஸ்ரீபாக வதத்திலும்,

“ஸ்ரீயஜ்ஞவராகமூர்த்தியினுடைய குளம்பு தாக்கினதனாலே பிளந்த அண்டகடாகத்தினுள்ளே” என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும் வருதல் காண்க.

“பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த, நீரளவுஞ் செல்ல நிமிர்ந்ததே” என்று பொய்கையாழ்வாரருளிச்செய்ததும் காணத்தக்கது.

“அண்டம் மோழை யெழ முடிபாதமெழ வப்ப, னூழியெழ வுலகங் கொண்டவாறே” என்றார் நம்மாழ்வாரும்.

“நண்ணுபொற்றுகளெனநாகர் நாட்டொடு, மண்ணகம்பொதிந்த தோர்பத மற்றோர்பதம்,
விண்ணகங்கட ந்துபோய் விரிஞ்சனாடுறீஇ, ஒண்ணிறவண்டமு முடைய நீண்டதே,”

“செங் கண்மால்மலர்ப்பதஞ் சென்றமோழையிற், றுங்கவண்டத்தினைச்சூழ்ந்தநீள் கடற்,
பொங்கவிழ்ந்தொழுகிய புனலை யன்றுகொல், கங்கையென்றின்ன முங் கழறுகின்றதே” என்ற கூர்மபுராணச் செய்யுள்களையும் காண்க.

புனல் – ஆவரணஜலம். பொன் தாள் – பொன்மயமான வீரக்கழலை யணிந்த திருவடி யென்றுமாம்;
“மேலெடுத்த, பொன்னார்கனைகழற்கா லேழு லகும்போய்க் கடந்து” என்றார் திருமங்கையாழ்வாரும்:
அடியார்களைப் பாதுகாத்தற்கென்று கட்டிய கழ லென்க; இவ்வுரைக்கு, பொன் – கருவி யாகுபெயர்.
முன்புனல் – முன்கூறிய புனல் எனினுமாம். அந் நாள் – பூர்வ காலத்தி லென்றபடி.

கீழ்க் கூறிப்போந்த வராகாவதாரத்தின் வைபவத்தோடு சேர்த்துத் திரிவிக்கிரமாவதாரவைபவத்தைக் கொண்டாடியது, இப்பாசுரம்;
உலகத்தை எடுத்தும் அளந்தும் ஆண்ட அவதாரங்கட்கு ஒற்றுமை யுண்டிறே. மேலக்கடாகம், அ – சாரியை.
கடாஹம், கோலம், குரம், மூலம் – வடசொற் கள். கடாகம் – ஓடு;
விளாஞ்சதையை விளாவோடுபோலவும் தேங்காயைத் தேங்காயோடுபோலவும் பதினான்குஉலகங்களையும்
மேலும் கீழும் பக்கங்களிலும் சூழ்ந்திருக்கின்ற அண்டகபாலம்; அண்டகோளத்தின் ஓடு,
அண்டமேலக்கடாகம் – அண்டகடாகத்தில் மேலிடம். மூலக் கடாகம் – அதிற்கீழி டம்.
கோலம் – பன்றி. புனற்கு = புனலில்; உருபுமயக்கம். பட்டு – படுத லால்: காரணப்பொருட்செயவெனெச்சமாகிய பட என்றதன்திரிபு.

———-

ஸ்ரீ பரசுராம அவதார வைபவம் –

மறிக்கும் கயல் கண்ணி பங்காளன் வாழ் வெள்ளி மால் வரையைப்
பறிக்கும் கபடன் பணிப் புயமோ அவன் பைங்கடகம்
செறிக்கும் புயம் செற்ற ஆயிரம் திண் புயமோ அவற்றைத்
தறிக்கும் திறல் மழுவோ அரங்கா சயத்தார் உடைத்தே –38-

(இ – ள்.) அரங்கா – திருவரங்கனே!
மறிக்கும் – பிறழ்கின்ற,
கயல் – கயல்மீன்போன்ற,
கண்ணி – கண்களையுடையவளான அம்பிகையை,
பங்கு ஆளன் – (தனது இடப்) பக்கத்திலுடையவனான சிவபிரான்,
வாழ் – வசிக்கின்ற,
மால் – பெரிய,
வெள்ளிவரையை – வெள்ளிமயமான மலையாகிய கைலாசத்தை,
பறிக்கும் – அடியோடு பெயர்த்தெடுத்த,
கபடன் – வஞ்சகனான இராவணனது,
பணை புயமோ – பருத்த (இருபது) கைகளோ, –
அவன் – அவ்விராவண னுடைய,
பைங் கடகம் செறிக்கும் புயம் – பசும்பொன்னாலாகிய கடகமென் னும்வளையை யணிந்த கைகளை,
செற்ற – வலியழித்து நெருக்கிக் கட்டிய,
திண் – வலிய,
ஆயிரம் புயமோ – (கார்த்தவீரியார்ச்சுனனது) ஆயிரங் கைகளோ,
அவற்றை தறிக்கும் – அவ்வாயிரங்கைகளையும் வெட்டித் தள்ளிய,
திறம் மழுவோ – (பார்க்கவராமனாகிய நினது) வலிமையையுடைய கோடா லிப்படையோ, –
சயம் தார் உடைத்து – (இவற்றில் எது) வெற்றிமாலையை யுடையது? (எ – று.)

மழுவே வெற்றிமாலையையுடைய தென்பதாம்.
சிவபிரானது கைலாச கிரியைப் பெயர்த்தெடுத்த இராவணன் மிகவலியவனென்றும்,
அவனிலும் கார்த்தவீரியன் வலியவ னென்றும்,
அவனிலும் பரசுராமன் வலியவ னென் றும் கூறியதாயிற்று.

விஷத்தையுண்டு கங்கையைத்தரித்து மேருவில்வளைத்துத் திரிபுரமெரித்து மன்மதனைத்தகித்து யமனையுதைத்து
அழித்தல் தொழில் நிகழ்த்தும் பேராற்றலையுடைய உக்கிரமூர்த்தியாவான் உருத்திர னென்பது பிரசித்தம்.
அக்கடவுள் வீற்றிருக்கின்ற கைலாசகிரியை இராவணன் வேரோடுபெயர்த்தன னென்பதும்,
அங்ஙனம் மிகவலியனாய்த் திக்கு விசயஞ்செய்து திக்கஜங்களையும் வென்ற இராவணனைக்
கார்த்த வீரியார்ச்சுனன் கட்டிச் சிறையிலிட்டன னென்பதும்,
அவ்வருச்சுனனைப் பரசுராமபிரான் தோள்துணித்துத் தொலைத்திட்டன னென்பதும்,
இதிகாசபுராணங்களால் விளங்குகின்றன: ஆகவே, பரசுராமபிரானது வலிமையும் வெற்றியும்
மிகமேம்பட்டன வென்பது நன்குவிளங்கும்;
ஆனதுபற்றி, இங்ஙனம் வினாவுகின்றவகையால் அப்பெருமானது மகிமையை வெளியிட்டார்.
இருபதைவென்ற ஆயிரத்தைத் துணித்த ஒன்று மிகமேம்பட்ட தென நயங் காண்க.
மேல்மேல் ஒன்றினும்ஒன்றுஉயர்ந்ததைச் சொல்லுதலால், மேன்மேலுயர்ச்சியணி; இதனை வடநூலார் ஸாராலங்கார மென்பர்.

“திசையுறுகரிகளைச்செற்றுத் தேவனும், வசையுறக்கயிலையைமறித்து வானெலா,
மசையுறப்புரந்தரனடர்த்ததோள்களி, னிசையினைத் தும்புருவிசையினேத்தவே,”
“ஈசனாண்டிருந்தபேரிலங்குமால்வரை, ஊசிவேரொடும் பறித்தெடுக்கு மூற்றத்தான்,”
“அரண்தருதிண்டோள்சாலவுளவெனி னாற்றலுண்டோ,
கரண்டநீரிலங்கைவேந்தைச் சிறைவைத்த கழற்கால்வீரன்,
திரண்டதோள்வனத்தையெல்லாஞ்சிறியதோர் பருவந்தன்னி,
லிரண்டுதோ ளொருவனன்றோ மழுவினாலெறிந்தா னென்றாள்” என்ற கம்பராமாயணம் இங்கு நோக்கத்தக்கது.

மகளிர்கண்ணுக்குக் கயல் – பிறழ்ச்சியில் உவமம். கயற்கண்ணி – மீநாக்ஷி.
“கயற்கண்ணிபங்காளன் வாழ் வெள்ளிமால்வரையைப் பறிக்குங் கபடன்” என்றதனால்,
பக்கத்திலுள்ள அம்பிகை அஞ்சி மருண்டுநோக்கிச் சிவபிரானைத் தழுவிக்கொள்ளும்படி
இராவணன் கைலாசகிரியைப் பெயர்த்தன னென்பதைக் குறிப்பித்தவாறாம்;
(“அருவியங்குன்றமரக்கன் பெயர்ப்ப, வெருவியவெ ற்பரையன்பாவை – பெருமா, னணியாகமாரத்தழுவினாள்” என்பது காண்க.)
வெள்ளி – வெண்ணிறமுடையது; காரணக்குறி: இ – பெயர்விகுதி.
“எட்டினாற் குடுமியைப்பிடிப்பது, எட்டாவிட்டாற் காலைப்பிடிப்பது” என்பதாக, முன்னும் பின்னும் சிவபிரானை வணங்கிப்
பிரார்த்தித்துப் பற்பலவரங்கள்பெறுப வனாயிருந்தும் இடையில் நன்றி கெட்டவனாய்ச் செருக்கி
அப்பெருமான் வாழ்கின்ற இடத்தைக் களையத்தொடங்கின துரோகி யென்பார். “கபடன்” என்றார்;
சீதாபிராட்டியை வஞ்சனையாற் கவர்பவ னாதல்பற்றி இங்ஙனங் கூறினாரு மாம்.
கபடம், புஜம், கடகம், ஜயம் – வடசொற்கள்.
கடகம் – ஒருவகைக் கைவளை. பைங் கடகம் – பொன்னின் பசுமை, கடகத்தின்மேலேற் றப்பட்டது.
செறித்தல் – சேர்த்தல். அணிந்த கடகம் புயத்தின்வளர்ச்சியால் அழுந்தப்பெற்ற வெனக் கொள்ளலுமாம்;
நாளொருவண்ணம் பொழுதொருமேனியாக அவன்புயங்கள் கொழுத்துச் செழித்துப் பருக்கின்றன வென்க.

“வெள்ளிமால்வரையைப்பறிக்குங் கபடன்” என்றதனால் “இராவணன்” என்பதும்,
“அவன்புயஞ்செற்ற ஆயிரம்புயம்” என்றதனால் “கார்த்தவீரிய னது” என்பதும்,
“அவற்றைத்தறிக்கும் மழு” என்றதனால் “பரசுராமனது” என்பதும் விளங்கின.
சயத் தார் – வெற்றிக்கு அறிகுறியான வாகைப்பூ மாலை; “போர்க்களத்து மிக்கோர் செருவென்றது வாகையாம்” என்பது காண்க.
‘திறம’ சயத்தாருடைத்துழு – “வென்றிமாமழுவேந்தி,”
“செரு நுதலூடுபோகி யவராவி மங்க மழுவாளின் வென்ற திறலோன்” என்றார் திருமங்கையாழ்வாரும்.

இராவணன் – பிரமபுத்திரரான புலஸ்தியமகாமுனிவரது குமாரராகிய விச்சிரவ முனிவருடைய மகன்;
குபேரனுக்குத் தம்பிமுறையானவன்; கேகசியென்னும் இராக்கதமாதினிடம் பிறந்தவன்;
பத்துத்தலைகளையும் இருபதுகைகளையும் உடையவன்; இலங்கைநகரத்தில் வாழ்ந்த ராக்ஷஸராஜன்;
அரியபெரியதவத்தைச்செய்து பெருவரங்கள் பெற்றுச் செருக்கியவன்; திரிலோகாதிபதியான இந்திரனையுமுட்பட வென்று அடக்கி ஆண்டவன்.

கார்த்தவீரியார்ச்சுனன் – சந்திரவம்சத்து யயாதிமகாராசனது மூத்த குமாரனாகிய யதுவினது குலத்தவனாகிற கிருதவீரியனுடைய குமாரன்;
பலபராக்கிரமங்களிற் சிறந்தவன்; நாராயணாம்சமாய் அத்திரிகுமாரராய் விளங்குகின்ற தத்தாத்திரேயமகாமுனிவரை ஆராதித்து
அவருடைய அநுக் கிரகத்தினால் ஆயிரந்தோள்களுடைமை, போரில் வெற்றி, பூமியை முறைப்படி பாதுகாத்தல்,
பகைவர்களால் அவமானப்படாமை, சகலலோகங்களுங் கொண்டாடும்படியான மகாபுருஷனால் மரணம் முதலிய பல வரங்களைப் பெற்று,
அநேக யாகங்களைச் செய்து, மாகிஷ்மதிநகரத்திற் பலகாலம் அர சாட்சிசெய்தவன்.
இவனிடம் விஷ்ணுவினுடைய சக்தி ஆவேசித்திருந்தது. (அதுபற்றிய விவரம் அடுத்தசெய்யுளுரையிற் காண்க.)

பரசுராமன் – உலகத்திலே எவரும் அழிப்பவரில்லாமையாற் கொழுத் துத்திரிந்து கொடுமையியற்றிவந்த
க்ஷத்திரியவம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்தற்பொருட்டு நாராயணமூர்த்தி ஜமதக்கினிமுனிவரது மனைவியான
ரேணுகையினிடம் இராமனாய்த் திருவவதரித்து, பரசுஎன்னுங் கோடாலிப் படையை ஆயுதமாகக்கொண்டு,
அதனாற் பரசுராமனென வழங்கப்பெற்றுத் தனது தந்தையின் ஓமதேனுவைக் கவர்ந்து அவனைக்கொன்றிட்டது
காரண மாகக் கார்த்தவீரியார்ச்சுனனையும் அவனதுகுமாரர்களையுங் கொன்று அத னாலேயே க்ஷத்திரிய வம்சம்
முழுவதன்மேலுங் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொருதலைமுறை பொருது ஒழித்திட்டான்;
ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன் இவன்.

————

இது முதல் எட்டு பாசுரங்கள் ஸ்ரீ ராமாவதார வைபவம்

மாதண்டம் மேவும் கரத்தர் அரங்கர் வடமிதிலைக்
கோதண்டம் வேகம் பிறப்பித்த போது குவட்டு வெள்ளி
வேதண்டம் மேய மழுவாளி நாணினன் வென்றி கண்டு
மூதண்டம் அஞ்சும் மழுவாளி கோபம் முதிர்ந்ததுவே –39-

(இ – ள்.) மா தண்டம் மேவும் கரத்தார் – பெரிய (கௌமோதகி யென்னுங்) கதாயுதம் பொருந்திய திருக்கையை யுடையவராகிய,
அரங்கர் – திருவரங்கநாதர்,
வட மிதிலை – வடக்கிலுள்ள மிதிலாபுரியிலே,
கோதண்டம் வேகம் பிறப்பித்த போது – வில்லை வளைத்து முறித்து அதிலிருந்து உக்கிரமான ஓசையை யுண்டாக்கியபொழுது, –
குவடு வெள்ளி வேதண்டம் மேய மழு ஆளி நாணினன் – சிகரத்தையுடைய வெள்ளிமலையாகிய கைலாசத்திற் பொருந்திவாழ்கின்ற மழுவென்னும்ஆயுதத்தையுடையவனான சிவபிரான் வெள்கினான்;
வென்றி கண்டு – (ஸ்ரீராமபிரானது) அவ்வெற்றியை நோக்கி,
முது அண்டம் அஞ்சும் மழுஆளி கோபம் முதிர்ந்தது – பழமையான அண்ட கோளத்திலுள்ளவரனைவரும் அஞ்சும்படியான கோடாலிப்படையையுடை யவனாகிய பரசுராமனது கோபம் மிக்கது; (எ – று.)

விதேகதேசத்து மிதிலாபுரியில் வாழ்கின்ற ஜநகமகாராஜன், தனது குலத்துப்பூர்விகராஜனான தேவராதனிடம்
சிவபிரானால் வைக்கப்பட்டிருந்த தொரு பெரிய வலிய வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தான் வளர்த்த மகளான
சீதையைக் கல்யாணஞ்செய்துகொடுப்ப தென்று கந்யாசுல்கம் வைத்திருக்க,
வேள்விமுடித்த விசுவாமித்திரமுனிவனுடனே மிதிலைக்குச்சென்ற ஸ்ரீராமபிரான் அவ்வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றுகையில்,
அது பேரொலிபடுமாறு முறிந்திட, அதனாற் சனகன் இராமனாற்றலைக்கண்டு மிக்ககளிப்புக்கொண்டு
சீதையை இராமனுக்கு மணம்புரியலாயின னென்பதும்;
சீதாகல்யாணத்தின்பின் தசரதசக்கரவர்த்தி தனதுகுமாரர்களுடன் மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில்,
பரசுராமன் வலியச் சென்று இராமபிரானை யெதிர்த்து
“முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப் போன சிவதநுசை முறித்த திறத்தை யறிந்தேன்; அதுபற்றிச் செருக்க டையவேண்டா:
வலிய இந்த விஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்” என்று அலக்ஷ்யமாகச்சொல்லித்
தான்கையிற்கொணர்ந்த வில்லைத் தசரதராமன் கையிற் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனைவாங்கி
எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொடுத்து “இந்தப்பாணத்திற்கு இலக்கு யாது?” என்று வினாவ,
பரசுராமன் அதற்குஇலக்காகத் தனது தபோபலம் முழுவதையும் கொடுக்க,
அவன் க்ஷத்திரியவம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேத வித்தும் தவவிரதம்பூண்டவனுமாயிருத்தல்பற்றி
அவனைக்கொல்லாமல் அவ னதுதவத்தைக்கவர்ந்தமாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்பதும், இங்கு அறியவேண்டியவை.

விஷ்ணுவின் தசாவதாரங்களுள் ஆறாம்அவதாரமான பரசுராமன் ஏழாம்அவதாரமான தசரதராமன்மீது கோபித்தலும்,
இவ்விருவரும் ஒருவ ரோடொருவர் பொருதலும், அவர்களில் ஒருவர் மற்றொருவரை வெல்லு தலும் பொருந்துமோ வெனின், –
துஷ்டர்களாய்க் கொழுத்துத்திரிந்த அரசர்களைக் கொல்லுதற்பொருட்டுப் பரசுராமனிடத்தில் ஆவேசித்திருந்த
விஷ்ணுசக்திவிசேஷம் அக்காரியம்முடிந்தபின்பு அவ்விஷ்ணுவின் அம்சா வதாரமான தசரதராமனாற் கவர்ந்து
கொள்ளப்பட்ட தாதலிற் பொருந்து மென்க. இதனால், ஆவேசாவதாரத்தினும் அம்சாவதாரத்திற்கு உள்ள ஏற்றம் விளங்கும்.

ஸ்ரீமந்நாராயணனது விபவாவதாரங்கள் அளவற்றன. அவை, முக்கியம், அமுக்கியம் என இருவகைப்படும்.
இவற்றில், முந்தியது – சிறந்தது; பிந்தியது – அதனிலும் தாழ்ந்தது.
முக்கியமாவது – ஸாக்ஷாதவதாரம். அமுக் கியமாவது – ஆவேசாவதாரம்.
ஆவேசந்தான், ஸ்வரூபாவேசமென்றும் சக்தி யாவேசமென்றும் இருவகையதாம்.
ஸ்வரூபாவேசமாவது – சேதகருடைய சரீரங்களில் எம்பெருமான் தன்னுடையரூபத்துடன் ஆவேசித்து நிற்றல்;
பரசுராமன், பலராமன் போல்வார் இத்திறத்தவர்.
சக்தியாவேசமாவது – சேதநர்பக்கல் காரியகாலத்திலே எம்பெருமான் சக்திமாத்திரத்தால் தோன்றி விளங்குதல்;
கார்த்தவீரியார்ச்சுனன், அருச்சுனன், வியாசர் போல்வார் இத்திறத்தவர்.

இவற்றிற் சக்தியாவேசத்தினும் ஸ்வரூபாவேசம் பிரபலம். இவற்றின் உண்மை நிலையை விஷ்வக்ஸேந ஸம்ஹிதை
முதலிய ஸ்ரீபாஞ்சரா த்ரஸம்ஹிதைகளிலும், தத்வத்ரயத்திலும், அதன் வியாக்கியானத்திலும் பரக்கக் காணலாம்.
தசாவதாரங்களுள் பரசுராமாவதாரமும் பலராமா தாரமும் – ஸ்வரூபாவேசாவதாரங்கள். மற்றவை – ஸாக்ஷாதவதாரங்கள்.
வில் லுங் கையுமாய் உலகத்தை நன்றாய்ஆளுகைக்காகக் கார்த்தவீரியார்ச்சுன னிடம் திருமாலின்சக்தி சிறிது ஆவேசித்திருந்தது.
துஷ்ட க்ஷத்ரியநிரஸநார் த்தமாகப் பரசுராமரிடம் திருமால்தானேசக்திவிசேஷத்தால் ஆவேசித்திரு ந்தான்.
தசரதராமாவதாரம் – ராவணவதத்தின் பொருட்டுத் திருமால்தானே நேராய் அவதரித்தது.
(இவற்றில் முந்தினஇரண்டும் – அஹங்காரயுக்தஜீவர் களை அதிஷ்டித்துநின்றவை.)
இவற்றில் ஒன்றைக்காட்டிலும் ஒன்றற்குஉள்ள உயர்வை, கார்த்தவீரியனைப் பரசுராமன் கொல்ல,
அப்பரசுராமனைத் தசரத ராமன் வென்றதனால் நன்கு விளங்கக் காணலாம்.

(“ஸ்வரூபாவேசாவதார மாய்த் தசாவதாரமத்யே ஸஹபடிதனாய்ப்போருகிற அப்பரசுராமன்தான் நிரஸ்தனானபடி எங்ஙனே யென்னில், –
ஸ்வரூபாவேசத்திலும் ஸாக்ஷாதவ தாரம் ப்ரபலமாகையாலே, அத்யுத்கடத்வமுண்டானபோது இதனாலே அது நிரஸ்தமாகக் குறையில்லை.
சக்த்யாவேசத்தில் ஸ்வரூபாவேசம் ப்ரபலமான வோபாதி, ஸ்வரூபாவேசத்தில் ஸாக்ஷாதவதாரம் ப்ரபலமாகத் தட்டில்லை யிறே.
சக்த்யாவேசத்தில் ஸ்வரூபாவேசம் ப்ரபலமாகையாலேயிறே, ஸஹ ஸ்ரபாஹ்வர்ஜுநன் பரசுராமனாலே நிரஸ்த னாய்த்து”
என்ற வியாக்கியான வாக்கியங்கள் காணத்தக்கன.)

சிவபிரான் தான் அருமையாகக் கைக்கொண்டு ஆண்டு பகைவென்று வந்த மிகவலிய வில்லை ஸ்ரீராமன்
வெகுஅலக்ஷ்யமாக இடக்கையாலெடுத்து நிறுத்தி வளைத்து முறித்தமைபற்றி நாணின னென்க.
ஸ்ரீராமன் அவ்வில்லில் நாணேற்றி அந்நாணியைத்தெறித்துச் சத்தமுண்டுபண்ணி இழுக்கும் பொழுது அவ்வில் முறிகையில்,
அதிலிருந்து பேரிடிமுழக்கம்போலவும் மலை பிளந்தாற்போலவும் அண்டகோளம் அதிரும்படி பெரியசத்தம் எழுந்துபரவி யதை
“கோதண்டவேகம்பிறப்பித்தல்” என்றார். க்ஷத்ரியவம்சநாசகரனான பரசுராமன் அவ்வோசையைக்கேட்டவுடனே
க்ஷத்ரியவம்சந்தளிர்ப்பதைக் குறித்துப்பெருங்கோபங்கொண்டு ஓடிவந்ததனால் “வென்றிகண்டு மழுவாளி கோபமுதிர்ந்தது” எனப்பட்டது. (“சரியில்மன்னிறுத்தவல்வில்லொலியினை ச்சகியமென்னும், வரைமிசையதனிற்கேட்டு மனமுறுசினத்தினோடும்,
பரசு ராமன்றா னெய்திப் பழிப்பிலாவிராமன் றன்னோ, டுருமெனவுலகமஞ்சவுரு த்திவையுரைத்தானம்மா” என்ற
மகாபாகவதம் இங்கே நோக்கத்தக்கது.)

மஹாதண்டம், கரம், மிதிலா, கோதண்டவேகம், வேதண்டம், கோபம் – வடசொற்கள்.
மிதிலை எவ்விடத்திலுள்ள தென்றால், வடக்கி லுள்ளதென வேண்டுதலின், அதனை ‘வடமிதிலை’ என விளங்கக்கூறினார்;
“வடவேங்க டந் தென்குமரி” என்றாற்போல. எனவே, இங்கு ‘வடக்கு’ – இனம்விலக்க வந்த அடைமொழியன் றென்க.
மிதிலை யென்பதற்கு – மிதியென்பவனால் ஏற்படுத்தப்பட்ட நகரமென்பது பொருள்.
மிதியென்பது, ஜநககுலத்தலை வனான ஓரரசனுக்குப் பெயர்; கடைந்ததனாலுண்டானமைபற்றியது.
வேத ண்டம் -மலை. மழு ஆளி – மழுவை ஆள்பவன்: வாளி – மழுவாகிய படைக் கலத்தையுடையவன்.
மழு – எரியிரும்புப்படையும், கோடாலியும்: இதனை வலக்கையிற் கொண்டுள்ளார்.
“வென்றிகண்டு” என்பதை, மத்திமதீபமாக, முன்வாக்கியத்தோடும் கூட்டலாம்; மேம்பாட்டைநோக்கி யென்க.
இனி, மூதண்டம் வென்றிகண்டு அஞ்சும் மழுவாளி யென்னவுமாம். இருபத்தொருமுறை உலகைச்சுற்றிவந்து
க்ஷத்திரியசங்காரஞ்செய்தவ னாதலால், “அண்டமஞ்சும் மழுவாளி” எனப்பட்டான்.
தண்டம் ஏவும் எனப்பிரித்து, கதாயுதத்தைப் (பகைவெல்லுமாறு) பிரயோகிக்கின்ற என்றலு மொன்று. அண்டம் – இடவாகுபெயர்.

இப்பாசுரத்தால், ஸ்ரீராமபிரானது பேராற்றலும், பரத்வமும் கூறப்பட்டன.

————–

மாகம் பிலம் திக்கு இமையோர் உலகம் மழுவுடையோன்
நாகம் நல் நாடு அளவாக பல் நாகம் நடுங்க அம்பு
வேகம் கொடு தொடர பறந்து ஓடியும் மீண்டு வந்து
காகம் சரண் என்ன நம் பெருமாள் உயிர் காத்தனரே –40-

(இ – ள்.) காகம் – காகாசுரன்,
பல் நாகம் நடுங்க அம்பு வேகம் கொடு தொடர – பலதிசைகளிலுள்ள பிராணிகளும் அஞ்சி நடுங்கும்படி (இராம பிரானது) பாணம் வேகங்கொண்டு (தன்னைத்) தொடர்ந்துவருதலால்,
மாகம் – பெரிய ஆகாயமும்,
பிலம் – பாதாளலோகமும்,
திக்கு – திசைகளும்,
இமையோர் உலகம் – தேவலோகமும்,
மழுஉடையோன் நாகம் – மழுவென் னும்ஆயுதத்தையேந்தியவனான சிவபிரானது (கைலாச) கிரியும்,
நல் நாடு – நல்ல இந்தப்பூலோகமும்,
அளவு ஆக – ஆகிய இவற்றின் எல்லையுள்ளவரையிலும்,
பறந்து ஓடியும் – பறந்து ஓடிப்போய்ப் பார்த்தும், (தனக்குப்புக லிட மொன்றும் வாய்க்காமையால்),
மீண்டு வந்து – திரும்பி வந்து,
சரண் என்ன – “(உனது திருவடியே) சரணம்” என்று அடைக்கலம்புக,
நம்பெருமாள் உயிர் காத்தனர் – ஸ்ரீரங்கநாதனாகியஅவ்விராமபிரான்தானே (அந்தக் காகாசுரனது) உயிரைப் பாதுகாத்தருளினர்; (எ – று.)

“சித்திரகூடத் திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட,
அத்திரமேகொண் டெறிய வனைத்துலகுந் திரிந்தோடி,
வித்தகனே யிராமாவோ நின்னபய மென்றழைப்ப,
அத்திரமே யதன்கண்ணை யறுத்தது மோரடையாளம்” என்ற பெரியாழ்வார்திருமொழி, இங்கே நோக்கத்தக்கது.

(அதன் வியாக் கியானத்தில் “முந்துறப் பித்ருக்ருஹத்திலே சென்றவளவில் பிதாவாலும் மாதாவாலும் கைவிடப்பட்டு,
பந்துக்களானவர்கள் கைக்கொள்ளுவர்களோ வென்று அவர்கள்பக்கலிலே சென்றவளவில் அவர்களாலும் பரித்யக்தனாய்,
ஆந்ருஸம்ஸ்யப்ரதாநரான ருஷிகள்தான் கைக்கொள்ளுவர்களோ வென்று அவர்கள்பக்கலிலே சென்றவளவில்
அவர்களும் கைவிடுகையாலே, திறந்து கிடந்த வாசல்கள்தோறும் ஒருகால்நுழைந்தாற்போலே
ஒன்பதின்கால் நுழைந்து மூன்று லோகங்களையும்வளைய ஓடித்திரிந்தவிடத்திலும் ஒருவரும் கைக்கொள்ளாமையாலே
“தமேவ ஸரணம் கத:” என்கிறபடியே “சீறி னாலும் காலைக்கட்டிக்கொள்ளலாம்படியிருக்கும் க்ருபாவா னாகையாலே
விஸ்மயநீயனாய் எல்லாரையும் குணத்தாலே ரமிப்பிக்கவல்லவனே!” என்று சரண்யரான பெருமாள் குணத்தைச் சொல்லி
ஓ!” என்று தன்னுடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக்கொண்டு “உனக்கு அபயம்” என்று ஸரணாகத னானமை தோற்றக் கூப்பிட,
இப்படி ஸரணம்புகுகையாலே,…….க்ருபையாலே பெருமாள் ரக்ஷித்தருளுகிறவளவில்,
காகத்துக்கு ப்ராணப்ரதா நம்பண்ணி, அஸ்த்ரத்துக்கு ஒரு கண்ணழிவு கற்பிக்கையாலே,
முன்பு தலை யறுப்பதாகத்தொடர்ந்த அஸ்த்ரம்தானே அதனுடைய ஒருகண்ணை அறுத்து விட்டது” என்றதும் காண்க.)

“அங்கதஞ்சிநடுங்கி யயன்பதியண்மி, இங்குநின்வரவென்ன வெனக்கனல்வெய்த,
மங்கைபங்கனொடெண்டிசை யுஞ்செல மற்றோர், தங்கள் தங்களிடங்கள் மறுத்தமை தைப்பாய்” என்ற கம்பராமாயணத்தாலும்,
அக்காகம் எங்கும்சரண்பெறாமை விளங்கும்.
பெருமாளுடைய கோபத்திற்கு இலக்கான இதனை ஏற்றுக்கொண்டால் நமக்கு முட்பட என்வருமோ வென்னும் அச்சத்தாலும்,
ஆற்றலில்லாமையாலும், எவரும் அதற்குப் புகலிடமாகவில்லை யென்க. பெருமான் கிருபையாலே மந்தகதியாகச் செலுத்த
அங்ஙனமே மெதுவானநடையுடன் காகத்தை அஸ்திரம் பின்தொடர்ந்து சென்றிருக்கவும்
“அம்பு வேகங்கொடு தொடர” என்றது, அஞ்சியோடுவதும் இயல்பில் விரைந்த நடையில்லாததுமான
காக த்தின் கருத்தாலே யென்க;
“காகமொன்றை முனிந் தயல்கல்லெழு புல் லால், வேகவெம்படைவிட்டது” என்றார் கம்பராமாயணத்திலும்.
இனி, வேகம் – உக்கிரத்தன்மையுமாம்.

மாகம் – மஹாகம் என்ற வடசொல்லின் விகாரம். திக், நாகம், வேகம், காகம் – வடசொற்கள்.
நாகம் – மலை யென்ற பொருளில், இடம்விட்டுப் பெயராத தென்று காரணப்பொருள்பெறும்.
சுவர்க்கத்தை யடைகின்றவர்களுக்கும் மோக்ஷத்தை யடைகின்றவர்களுக்கும் பிரவிருத்தி நிவிருத்தி கர்ம ஸாதநபூமி
இதுவே யாதலால், “நல்நாடு” என்றார். ‘மாகம்’ என்றது, புவர் லோகத்தை.
“இமையோருலகம்” என்றது, ஸுவர்லோகம் முதலியவற்றை. “நல்நாடு” என்றது, பிரமனது சத்தியலோகத்தையு மாகலாம்.
இமையோர் – கண்இமையாதவர்; எதிர்மறைப் பலர்பால் வினையாலணையும்பெயர்: எதிர் மறையாகாரம் புணர்ந்துகெட்டது:
விகுதி முதல் ஆகாரம் ஓகாரமாயிற்று. மாகம் – திசை: திசைகளிலுள்ள பிராணிகளுக்கு இடவாகுபெயர்.
இனி, மலையென்றுங் கொள்ளலாம். நடுங்குதல் – அச்சத்தால் உள்ளமும் உடலும் நடுங்குதல்.
காகம் – காஎன்று கத்துவதெனப் பொருள்படுங் காரணக்குறி.
சரண் – ஸரண மென்ற வடசொல்லின் விகாரம்; பாதுகாப்பவ னென்பது பொருள்.

இப்பாசுரத்தால், ஸ்ரீராமபிரானது ஆற்றலும், அருளும், சரணாகதரக்ஷ கத்வமும், பரத்வமும் கூறப்பட்டன.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – -1-20-

February 16, 2022

ஸ்ரீ திருவரங்கத்து மாலை நூலின் புறமாக முதலிற்கூறிய காப்புச்செய்யு ளொன்றும்,
இறுதியிற் கூறும் தற் சிறப்புப் பாயிரச்செய்யுளொன்றும் நீங்கலாக
நூற்றுப் பதினொரு செய்யு ளுடையது,
இந்நூல், கட்டளைக் கலித்துறையினால் அமைந்தது.

சிறப்புப் பாயிரம் -அபியுக்தர் அருளிய தனியன் –

மறைப் பொருளோ அச்சிரப் பொருளோ மனுவே முதலாம்
முறைப் பொருளே இதிகாகச புராண முதுப் பொருளோ
இறைப் பொருளாம் நம் பெருமாளுடைத் திரு எட்டு எழுத்துள்
உரைப் பொருளோ மணவாளர் தம் மாலையின் உட் பொருளே –

மணவாளர் தம் – அழகிய மணவாள தாசருடைய,
மாலையின் – திருவரங்கத்து மாலையினது,
உள் – உள்ளே யமைந்திருக்கின்ற,
பொருள் – பொருளானது, –
மறை பொருளோ – வேதங்களின் பொருளேயோ?
அ சிரம் பொருளோ – அவ்வேத முடிவுகளின் பொருளேயோ?
மனுவே முதல் ஆம் – மநு ஸ்மிருதி முதலான,
முறை – தரும சாஸ்திரங்களின்,
பொருளோ – பொருளேயோ?
இதிகாச புராணம் முது பொருளோ – இதிகாசங்கள் புராணங்கள் என்னு மிவற்றினது தேர்ந்த பொருளேயோ?
இறை பொருள் ஆம் – பரதத்துவமாகிய,
நம் பெருமாளுடை – நம்பெருமாளுடைய,
திரு எட்டு எழுத்து – ஸ்ரீஅஷ்டாக்ஷரமந்திரத்தினது,
உள்உறை – உட் கருத்தாகிய,
பொருளோ – பொருளேயோ? (என்றவாறு.) – ஏகாரம் – ஈற்றசை.

இங்ஙனம் ஐயந்தோன்றப் பலவாறு விகற்பித்துக் கூறினாராயினும்,
வேதம் வேதாந்தம் தரும சாஸ்திரம் இதிகாசம் புராணம் அஷ்டாக்ஷரம் என்னும் இவை யெல்லாவற்றினது பொருளும்
இத்திருவரங்கத்துமாலையில் அடங்கியிருக்கின்றன வென்பது கருத்தாம்.
எனவே, இவ்வாறு பலவகையாக ஐயப்பட்டது, இன்னதென்று ஒன்றன்மையாலே வரை யறுத்துச் சொல்லத் தெரிந்திலே னென்ற தல்லது,
தேர்ந்து தெளியாமையாற் சொன்ன தன்றென்று அறிக.

புகழு நல் ஒருவன் என்கோ-பொருவில் சீர் பூமி என்கோ –
திகழும் தண் பரவை என்கோ -தீ என்கோ வாயு என்கோ
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ –
இகழ்வில் இவை யனைத்தும் என்கோ –என்றால் போலே ஈடு பட்டு வியந்து சங்கை போலே அருளிச் செய்கிறார் இங்கு

இதனால், இந்நூலின் சிறப்பையும், இந்நூலாசிரியரது வேத சாஸ்திர பாண்டித்திய விசேஷத்தையும் விளக்கியவாறாம்.
மறைப்பொருள் முதலிய யாவும் இந்நூலில் இருத்தலை வெளிப்படையாகக் காணலாம்;
குறிப்பால் நுண்ணிதின் உய்த்து உணரத்தக்க இடங்களும் உண்டு.

(ஓதலாகாதென்று சிலர்க்கு) மறுக்கப்படுதல் பற்றி, மறையென்று பெயர்; மறு – பகுதி, ஐ – செயப்படுபொருள் விகுதி.
இனி, இச்சொல்லுக்கு – (எளிதிலுணரலாகாதபடி) மறைந்துள்ள பொருள்களையுடைய தென்று காரணப் பொருள் கூறவுமாம்.
அவ்வேதந்தான், ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என நான்கு வகையது.
பொருள் – அர்த்தம். வேதத்தின் பிரிவு இரண்டனுள், யாகாதி கிரியைகளைக் கூறுவதும் கர்ம காண்டமெனப்படுவதுமான
பூர்வ பாகத்தின் பொருளை “மறைப்பொருள்” என்றும்,
பகவானைக் குறித்ததும் உபநிஷத்தென்றும் வேதாந்தமென்றும் பிரம காண்டமென்றுங் கூறப்படுவதும்
வேதத்தின் தேர்ந்த கருத்துமான உத்தர பாகத்தின் பொருளை “அச்சிரப்பொருள்” என்றுங் கூறினர்.
அச்சிரம் – வேதசிரம் என்றபடி.

செய்யா மொழியாதலாற் சிறந்த பிரமாணமாகிற வேதத்தின் பொருளை ஐயந்திரிபற நிச்சயிப்பதற்கு உரிய ஸாதநங்கள்,
ஸ்மிருதிகளும் இதிகாச புராணங்களுமாம். ஆதலால், அவை வேதத்திற்கு உப ப்ரும்ஹணங்க ளெனப்படும்;
அவற்றுள், பெரும்பாலும் வேதத்தினது பூர்வ பாகத்தின் அர்த்தம் ஸ்மிருதிகளாலும்,
உத்தர பாகத்தின் அர்த்தம் இதிகாச புராணங்களாலும் நிச்சயிக்கத் தக்கது;
இதிகாசபுராணங்களுட் புராணங்களினும் இதிகாசம் பிரபலமான பிரமாணமாம் என்பது உணர்க.
இதுவே, மறைப்பொருள் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்திய முறைமைக்குக் காரணம்.

(“வேதார்த்தம் அறுதியிடுவது, ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களாலே; ஸ்ம்ருதியாலே, பூர்வபாகத்திலர்த்தம் அறுதியிடக்கடவது;
மற்றையிரண்டாலும், உத்தரபாகத்திலர்த்தம் அறுதியிடக்கடவது. இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரபலம்;
அத்தாலே, அது முற்பட்டது” என்ற ஸ்ரீவசநபூஷண வாக்கியங்களும், அவற்றின் வியாக்கியானங்களும் இங்கு நோக்கத்தக்கன.)

வேதத்தின் பொருளை நினைத்துச் செய்யப்பட்டன வாதலால் ஸ்ம்ருதிகளென்று பெயர் பெற்றனவும்,
ஆப்தர்களான மநு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஞ வல்க்யர் பராசரர் முதலானவர்களாற் சொல்லப்பட்டனவுமான
தரும சாஸ்திரங்கள், “மனுவே முதலாம் முறை” எனப்பட்டன;
அவை, பதினெட்டு. அவையெல்லாவற்றினுள்ளும் மநுஸ்ம்ருதியே மிகச்சிறத்தலால், “மனுவே முதலாம்” என்று
அதனையே தலைமையாக எடுத்துக்கூறினர்;

(எல்லா ருஷிகளும் ஒருதட்டும், மநு ஒரு தட்டுமாம்” என்றும்,
“மநுஸ்ம்ருதிக்கு மாறாக மற்றைப் பதினேழு ஸ்ம்ருதிகளும் ஒரேவாக்காய்ச் சொல்லியிருந்தாலும் அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று” என்றும்,
“மநுஸ்ம்ருதிக்கு விரோதமான ஸ்ம்ருதி புகழையடையாது” என்றும் பல இடங்களில் அந்நூலின் சிறப்புக் கொண்டாடப்பட்டிருத்தல் காணலாம்.)

இதிஹாஸங்களாவன – பூர்வசரித்திரத்தைக் கூறுவனவான ஸ்ரீராமாயணம், மகாபாரதம் முதலியன.
புராணங்களாவன – ஸ்ருஷ்டிக்கிரமம் முதலிய ஐந்துலக்ஷணங்களுடன் கூடியவையான பிராம்மம் பாத்மம் வைஷ்ணவம் முதலிய பதினெட்டாம்.

(புராணத்திற் காட்டில் இதிஹாஸத்துக்கு ப்ராபல்யம் – பரிக்ரஹாதிசயம், மத்யஸ்தசை, கர்த்துராப்ததமத்வம் ஆகிற இவற்றாலே” என்பர் ஆன்றோர்;
இதன் விவரத்தை, தத்வ நிர்ணயம், ஸ்ரீஸஹஸ்ரநாம பாஷ்யம், ஸ்ரீவசநபூஷண வியாக்கியானம் முதலியவற்றிற்
கண்டும், கற்றுங் கேட்டு முணர்ந்த ஆன்றோர்பக்கல் கேட்டும் உணர்க; இங்கு விரிப்பிற் பெருகும்.)

இறைப் பொருள் – தலைமையாகிய பொருள். “முதலாவார் மூவரே யம்மூவருள்ளும், முதலாவான் மூரிநீர் வண்ணன்” என்றபடி
எம்பெருமான் தேவாதி தேவனும் ஸர்வேச்வரனு மாதலால், “இறைப்பொருளாம் நம்பெருமாள்” என்றார்.
“இறைப்பொருளாம்” என்றதைத் திருவெட்டெழுத்திற்கு அடைமொழியாகவுங் கொள்ளலாம்.
எட்டுத்திருவக்ஷரமாய் மூன்றுபதமாயிருப்பதும் நாராயணநாமத்தையுட் கொண்டதுமான பெரியதிருமந்திரம்
ஸகலவேதாந்ததாத்பர்யமாய் எல்லாமந்திரங்களினும் பிரதான மாதலால், “இறைப்பொருளாம் திருவெட்டெழுத்து” எனத்தகும்.

“ஸகலதைவங்களிலும் ஸர்வேஸ்வரன் ப்ரதாநனாகிறாப்போலே, ஸகலமந்த்ரங்களிலும் இம்மந்த்ர விசேஷம் ப்ரதாநமாயிருப்ப தொன்று”
என்று ஆன்றோர் அருளிச் செய்திருப்பதை நோக்குமிடத்து “இறைப்பொருளாம்” என்றதை
நம்பெருமாள், திருவெட்டெழுத்து என்ற இரண்டனோடுஞ் சேர்த்தல் இனிதாம்.

நம்பெருமாள். ஸ்ரீரங்கநாதன். இத்திருநாமம், உயர்ச்சியைவிளக்கும்;
“நம் பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை, யென்ப ரவரவர்த மேற்றத்தால், அன்புடையோர் சாற்று திருநாமங்கள்”
என்ற உபதேசரத்தினமாலையைக் காண்க.
பதரிகாச்சிரமத்தி லெழுந்தருளியிருக்கின்ற நாராயணனது திருவெட்டெழுத்தை “நம்பெருமாளுடைத்திருவெட்டெழுத்து” என்றது,
திவ்வியதேசத்து எம்பெருமான்களில் நம்பெருமாளுக்கு உள்ள தலைமைபற்றி யென்க.
ஸ்ரீரங்கதிவ்வியதேசத்து மூலமூர்த்தியைப் பெரியபெருமாளென்றும், உத்ஸவமூர்த்தியை நம்பெருமாளென்றும் வழங்குவது, ஸம்பிரதாயம்;
இருவர்க்கும் பொதுப்படக் கூறுதலும், “எம்பெருமான்” என்றாற்போல நமதுகடவுளென்றபொருளில் திருமாலை “நம்பெருமாள்” என்றலும் உண்டு.

“ஸம்ஸாரிகள் தங்களையும் ஈச்வரனையும் மறந்து ஈச்வர கைங்கர்யத்தையும் இழந்து இழந்தோமென்கிற இழவு மின்றிக்கே
ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேச்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னை யறிந்து
கரைமரஞ்சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான்”
ஆதலால், “நம்பெருமாளுடைத் திருவெட்டெழுத்து” எனப்பட்டது.
இங்கு, ஆறாம் வேற்றுமையுருபு செய்யுட்கிழமைப் பொருளின்பாற்படும்.
ஆதியில் பதரிகாச்சிரமத்திலே நாராயணனால் நரனுக்கு உபதேசிக்கப்பட்ட திருமந்திர மென்க.
இனி, விஷயமாக வுடைமையை ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய கம்பந்த மெனக் கொண்டு, நம்பெருமாள் விஷயமான
அதாவது ஸ்ரீமந் நாராயணனை யுணர்த்துகின்ற திருமந்திர மென்றலு மாம்.

திருவெட்டெழுத்துள்ளுறைப்பொருள் – பரமாத்மஸ்வரூபம், ஜீவாத்மஸ்வரூபம், இவ்விருவர்க்குமுள்ள ஸம்பந்தத்தின் ஸ்வரூபம் முதலியன.
(“இத்தால், ஈச்வரன் ஆத்மாக்களுக்குப் பதியாய் நின்று ரக்ஷிக்கு மென்கிறது.
ஆக, திருமந்த்ரத்தால், எம்பெருமானுக்கே யுரியேனான நான் எனக்கு உரியனன்றிக்கே யொழிய வேணும்;
ஸர்வ சேஷியான நாராயணனுக்கே எல்லா வடிமைகளுஞ் செய்யப் பெறுவேனாக வேணு மென்ற தாய்த்து” என்ற முழுக்ஷுப்படியைக் காண்க.)

ஓகாரங்கள் – ஐயப்பொருளன. ஸிரஸ், மநு, இதிஹாஸ புராணம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
இங்கு “மனு” என்றது – சுவாயம் புவமநுவினாற் செய்யப்பட்ட நூலைக் குறித்தது; கருத்தாவாகுபெயர்:
“திருவள்ளுவர்” என்றாற் போல. ஏகாரம் – உயர்வுசிறப்பு; அசையுமாம்.
முறையை (ஒழுக்கத்தை) யுணர்த்தும் நூலை “முறை” என்றது, காரிய வாகுபெயரின் பாற்படும்.
முறையென்ற சொல்லுக்கு நூலென்ற பொருளும் உண்டு.

இதிகாச புராணங்களைச் சேர்த்துக்கூறியதன் காரணம், இரண்டும் வேதாந்தப் பொருளைத் தெளிவிப்பனவாதல்.
“இதிஹாஸபுராணம்” என்னும் உம்மைத் தொகை, வடநூல் முடிபு.
“குறைந்த உயிரெழுத்துக்களையுடைய சொல்லாவது சிறப்புடைய சொல்லாவது உம்மைத் தொகையில் முந்திநிற்பதாதல் வேண்டும்” என்ற
வடமொழி வியாகரணநூலார் கொள்கையில் முதல் வகையின்படி “புராணேதிஹாஸம்” என்ன வேண்டி யிருக்க
அங்ஙனங்கூறாது “இதிஹாஸபுராணம்” என அதிக உயிரெழுத்துக்களையுடைய இதிஹாஸ பதத்தை முன்நிறுத்தியது,
அதன் சிறப்பினா லென்க.
“இதிகாச புராண முழுப்பொருளோ” என்ற பாடத்திற்கு – இதிகாசபுராணங்களின் பூர்ணமான அர்த்தமோ வென்பது பொருள்.

மூன்றாமடியின் முதலில் “இறைப்பொருளோ” என்று பாடமாயின்,
இவையெல்லாவற்றிலுஞ் சிறந்ததொரு பொருளோ வென்று உரைக்க.
நம் பெருமாள் – நமது தலைவர். இங்கு “நம்” என்ற தன்மைப் பன்மை, எல்லாவுயிர்களையும் உளப்படுத்தியது.
பெருமாள் = பெருமான்: பெருமையை யுடையவன். இதில், பெருமை யென்ற பண்புப்பகுதி
ஈற்று ஐகாரம்மாத்திரங் கெட்டு “பெரும்” என நின்றது; ஆன் என்ற ஆண்பால் விகுதி, “ஆள்” என ஈறுதிரிந்தது:
ஆள் என்ற பெண்பால் விகுதியே சிறுபான்மை ஆண்பாலுக்கு வந்த தென்றலும் ஒன்று.
அன்றி, பெருமையை ஆள்பவனெனக் கொண்டால், ஆள் என்ற வினைப்பகுதி கருத்தாப் பொருள் விகுதி புணர்ந்துகெட்ட தெனவேண்டும்.

(பெருமாள் என்பதன் பெண்பால், பெருமாட்டி.) “உடைய” என்னும் ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு ஈறு தொக்கு “உடை” என நின்றது.
எட்டு எழுத்து – பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய், அத்தனை யெழுத்துக்களை யுடைய மந்திரத்தைக் குறித்தது.

உள் உறைப் பொருள் – உள்ளே உறுவதாகிய பொருள். உறை – உறு – பகுதி, ஐ – கருத்தாப் பொருள் விகுதி.
உள்ளுறையெனினும், உட்கிடையெனினும் ஒக்கும். முதுப்பொருள். இறைப்பொருள், உள்ளுறைப்பொருள் – பண்புத்தொகைகள்.
இனி, உள்ளே உறைதலையுடைய பொருளென்றுங் கொள்ளலாம்; இப் பொருளில், உறை – முதனிலைத்தொழிற்பெயர்.
இரண்டாம்வேற்றுமையுரு பும்பயனுந்தொக்கதொகை.
ஒரு பெயரின் ஒரு பகுப்பைக் கொண்டு அப் பெயர்முழுவதையுங் குறிப்பதொரு மரபு பற்றி, அழகியமணவாளதாசரை “மணவாளர்” என்றார்;
(இதனை, வடநூலார், “நாமைகதேஸே நாமக்ரஹணம்” என்பர்.)

தம் – அசை. “மணவாளர் தம் மாலை” என்றவிடத்துத் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமையுருபு – செய்யுட்கிழமைப்பொருளது;
கூர்மபுராணம், கபிலரகவல், கம்பராமாயணம், “பற்றற்றான்பற்று” என்றவற்றிற் போல:
அழகிய மணவாள தாசரால் இயற்றப்பட்ட மாலை யென்க.
இனி, விஷ்ணு புராணம், விநாயகரகவல், சீவகசிந்தாமணி என்றாற் போல, “மணவாளர்தம் மாலை” என்றதை
அழகியமணவாளனென்று திருநாமமுடைய ஸ்ரீரங்கநாதன் விஷயமான மாலையென்றுங் கொள்ளலாம்;
திருவரங்கத்துமாலை யென்ற நூற்பெயரின் பரியாய நாமமாம்.
“கோயிலில் வந்த வந்த, மணவாளர் பொற்றிருப்பாதாம்புயங்கட்கு மாலையென, மணவாளர் சூடும்” மாலை யாதலால்,
இருவகையும் ஏற்கும். “மணவாளர்” என்ற பன்மை, உயர்வு பற்றியது. “மாலையினுள்” என்றவிடத்து, உள் – ஏழுனுருபுமாம்.

இச்செய்யுளில் “மணவாளர்” என ஆக்கியோன் பெயரும், “மணவாளர் தம் மாலை” என நூற்பெயரும்,
நுதலிய பொருளும், “மறைப்பொருளோ” என்பது முதலாக விகற்பித்துக் கூறியவாற்றால் நுதலிய பொருளும்,
இவ்வொரு நூலுணர்ந்தவர் அப் பல நூற் பொருள்களையும் ஒருங்கே யுணர்வரென நூற்பயனும்,
அம்மறை முதலியவற்றின் வழி நூலிதுவென நூல்வந்த வழியும், பரந்து கிடந்த அந்நூற்பொருள்கள்
பலவற்றைத் தொகுத்துக் கூறிய நூலிதுவெனத் தொகுத்தலாகிய நூல் யாப்பும்,
அம்மறைப்பொருள் முதலியவற்றை யுணரும் விருப்பமுடையார் பலரும் இந்நூல் கேட்டற்குரிய அதிகாரிகளெனக் கேட்போரும்,
அப்பொருள்கள் பலவற்றையும் சில் வாழ் நாட் பல் பிணிச் சிற்றறிவினராகிய மனிதர்கள் எளிதில் உணர்ந்து உய்யும்படி
ஒருங்கே சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் வேண்டுமென்று ஆசிரியர் கொண்ட அருளே
இந்நூல் செய்ததற்கு ஏது வெனக் காரணமும் பெறப்பட்டன.

“ஆக்கியோன் பெயரேவழியேஎல்லை, நூற்பெயர் யாப்பேநுதலியபொருளே,
கேட்போர் பயனோடு ஆயெண்பொருளும், வாய்ப்பக்காட்டல் பாயிரத்தியல்பே,”

“காலங் களனே காரண மென்றிம், மூவகை யேற்றி மொழிநரு முளரே” என்ற
சிறப்புப்பாயிரத்திலக்கணத்தில் மற்றவை குறிக்கப் படுவன உய்த்துணர்ந்துகொள்க

இக்கவி, அபியுக்தரி லொருவர் செய்தது. இது, வைஷ்ணவசம்பிரதாயத்தில் “தனியன்” எனப்படும்;
(நூலினுட்சேராது) தனியே பாயிரமாக நிற்றல்பற்றியது, அப்பெயர்.
உயர்திணை யாண்பால் விகுதி சிறுபான்மை அஃறிணைக்கும்வருதலை, கடுவன், கோட்டான், தோளுக்கினியான் என்ற விடங்களிற் காண்க;
நாலடியார், சிவஞான சித்தியார் என்ற இடங்களில் “ஆர்” விகுதி போல இங்கு “அன்” விகுதி உயர்வுகுறிப்ப தென்றலுமாம்.

———

காப்பு -திருவரங்க நாதனது திருமேனி திவ்ய அவயவங்களும் திவ்ய பஞ்சாயுதங்களும் –

காப்பு – காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்:
ஆகவே, கவி தமக்கு நேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை நிறைவேற்ற வல்ல
தலைமைப் பொருளின் விஷயமாக உயர்ந்தோர் வழக்கத்தின் படி செய்யுந் தோத்திர மென்பது கருத்து.

நாளும் பெரிய பெருமாள் அரங்கர் நகை முகமும்
தோளும் தொடர்ந்து என்னை ஆளும் விழியும் துழாய் மணக்கும்
தாளும் கரமும் கரத்தில் சங்கு ஆழியும் தண்டும் வில்லும்
வாளும் துணைவருமே தனியேனை வளைந்து கொண்டே –

பெரியபெருமாள் அரங்கர் – பெரியபெருமாளென்று ஒரு திருநாமமுடையவரான ஸ்ரீரங்கநாதருடைய,
நகை முகமும் – மலர்ச்சியை யுடைய திருமுகமும்,
தோளும் – திருத் தோள்களும்,
என்னை தொடர்ந்து ஆளும் விழியும் – என்னை விடாது தொடர்ந்து அடிமை கொள்ளக் கடாக்ஷிக்கின்ற திருக்கண்களும்,
துழாய் மணக்கும் தாளும் – திருத்துழாய் மணம் வீசுகின்ற திருவடிகளும்,
கரமும் – திருக்கைகளும்,
கரத்தில் – அக் கைகளில் ஏந்துகின்ற,
சங்கு ஆழியும் – சங்க சக்கரங்களும்,
தண்டும் – கதையும்,
வில்லும் – தனுசும்,
வாளும் -,
தமியேனை வளைந்து கொண்டு – வேறு துணையுங் கதியுமில்லாத என்னைச் சூழ்ந்து கொண்டு,
நாளும் – தினந்தோறும் (எந்நாளும்),
துணை வரும் – துணையாக வரும்; (எ – று.) – வருமே என்பதில், ஏகாரம் – தேற்றம். ஈற்றுஏகாரம் – அசை.

இங்ஙனம், தமது வழிபடு கடவுளும், எடுத்துக் கொண்ட இப் பிரபந்தத்திற்கு ஏற்புடைக் கடவுளுமாகிய திருவரங்க நாதனது
திருவவயவங்களையும் ஐம்படையையும் தமக்கு நீங்காத துணையாகக் கொண்டமை கூறியதனால்,
எடுத்துக் கொண்ட இந்நூல் இடையூறின்றி இனிது முடியுமென்பது கருத்து.

திருவரங்கத்திற்குப் பெரியகோயிலென்றும், அங்கு எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுக்குப் பெரிய பெருமாளென்றும் திருநாமங்கள் வழங்கும்,
பெருமாள் – இராமபிரான்; (இளையபெருமாள் – லக்ஷ்மணன்:) இராம பிரானால் முன்பு திருவாராதநஞ் செய்யப் பெற்றமை பற்றி,
ஸ்ரீரங்கநாதனுக்கு “பெரியபெருமாள்” என்று திருநாமம். அரங்கர் – ரங்கமென்னும் விமானத்தில் எழுந்தருளியிருப்பவர்.
நகை முகம் – புன்சிரிப்பையுடைய முக மென்றும், ஒளியையுடைய முகமென்றுங் கொள்ளலாம்.
தொடர்தல் – தேடிப்பின் தொடர்தலுமாம்.

துழாய் மணக்குந்தாள் – அடியார்கள் அருச்சித்த திருத்துழாயின் வாசனை வீசப்பெற்ற திருவடி;
இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின்மேற் சார்த்தப்பட்டது. அன்றி,
துழாயினால் மணக்குந் தா ளென்றும், துழாயோடு இயற்கைநறுமணம்வீசுந் தா ளென்றும் கூறலாம்.
இனி, திருத்துழாய் வாசனை வீசுதற்குக் காரணமான திருவடி யென்றல் சிறக்கும். இப்பொருளில், பெயரெச்சம் – காரியப்பொருளது:
“நோய் தீரும் மருந்து” என்றாற் போல, “ஸர்வகந்தன்” என்று பெயர் பெறும்படி
இயற்கைத் திவ்விய பரிமளமுடைய கடவுளாதலால், இங்ஙனங்கூறுதல் ஏற்கும்.
திருத்துழாய் அங்குரித்தது முதல் என்றும் மாறாத நறுமணமுடைய தாதலால்,
என்றும் மாறாத இயற்கை நறுமணமுடைய திருமாலுக்கு உரியதாய்ச் சிறக்கும்.

திருமாலின் சங்கம் – பாஞ்சஜந்ய மென்றும், சக்கரம் – சுதர்சந மென்றும், கதை – கௌமோதகீ யென்றும்,
வில் – சார்ங்க மென்றும், வாள் – நந்தக மென்றும் பெயர்பெறும்.
இவை துஷ்டநிக்கிரகஞ்செய்யுங் கருவியாய்ச் சிறத்தலால், இவற்றைத் தமது இடையூறு தவிர்க்குங் காப்பாகக் கொண்டார்;
அன்றியும், இவை, எம்பெருமானுக்குக் குற்றேவல் செய்யும் பரிஜனங்களாய் எப்பொழுதும் அவனருகில் விடாது நின்று
அவனது திருவுள்ளக் கருத்தின்படி தொழில் செய்யும்:

திருவரங்கத்தந்தாதிக்காப்பில்
அரங்கர் காராழி வண்ணப் பெருமாள் அந்தாதிக்கு காப்பு உரைக்கில் —-
கூராழி சங்கம் திருக்கதை நாந்தகம் கோதண்டமே–என்றதுங் காண்க.

நகைமுகம் முதலியவற்றைக் காப்பாகக்கொண்டது, அவை சிஷ்டபரிபாலனஞ்செய்தற்கு உறுப்பாதலால்.
ஒரு திருக்கை திருச்சங்கையும், அதற்கேற்ற மற்றொரு திருக்கை திருவாழியையுந் தரித்தல் இயல்பாதலால்,
அவற்றை “சங்காழி” எனச் சேர்த்துக்கூறினர்.

“நாளும்” என்ற உம்மை, தொறுப்பொருளது. மற்றை உம்மைகள் – எண்ணுப் பொருளன.
அரங்கர் – உயர்வுப்பன்மை. முகம், கரம் – வடசொற்கள். சங்கு, தண்டு – ஸங்கம், தண்டம் என்ற வடசொற்களின் விகாரம்.
நகை.. நகுத லென “ஐ” விகுதி பெற்ற தொழிற்பெயராகவேனும், நகைத்தலென முதனிலைத்தொழிற்பெயராகவேனுங் கொள்ளத்தக்கது.
துழாய் – துளஸீ என்னும் வடசொல்லின் சிதைவு.
சங்காழி – பன்மைவிகுதி பெறாத அஃறிணையும்மைத்தொகை. ஆழி – வட்டவடிவமாக வுள்ளது;
(அசுரர் முதலிய கொடியவர்களை) அழிப்பதென்று இதற்குக் காரணப் பொருள் கூறவுமாம்.
வரும் – செய்யுமென்முற்று; இது நிகழ்காலமுணர்த்துதலை
“பல்லோர்படர்க்கை முன்னிலை தன்மை, அவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச், செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா”
என்னுந் தொல்காப்பியச் சூத்திரம் நோக்கி யுணர்க.

அரங்கரது நகைமுகம் முதலியன தமக்குத் துணையாய் வருதல் முக்காலத்தினும் உளதாதலால், நிகழ் காலத்தாற் கூறப்பட்டது.
“முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை, எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து, மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்”
என்ற தொல்காப்பியச் சூத்திரத்தின் உரையில் “நிகழுங்காலத்து மெய்ந்நிலைப்பொதுச்சொல்” என்றதற்கு
“நிகழ்காலத்திற்கு உரித்தாய் நின்றும் ஏனைக்காலங்களையும் உள்ளடக்கி நிற்கும் பொருள் நிலைமையினை யுடைய செய்யுமென்னுஞ் சொல்”
என்று பொருள்கூறி, “மலை நிற்கும், தீச்சுடும், ஞாயிறு இயங்கும், திங்களியங்கும்” என்றவற்றை உதாரணங் காட்டினர் நச்சினார்க்கினியர்;
சேனாவரையர்கருத்தும் இதுவே.

தமியேன் – தனித்துள்ள யான்;
இது, தனிமைப்பொருள் குறித்த தமியென்னும் வினைப்பகுதியடியாப்பிறந்து பணிவையுணர்த்துந் தன்மையொருமைப் பெயர்.
“வளைந்துகொண்டு” என்பது, ஒருசொல்நீர்மைத்து; “என்றுகொண்டினையகூறி” என்றவிடத்துப் போல;
“கிளந்தவல்ல வேறுபிற தோன்றினுங், கிளந்தவற்றியலா னுணர்ந்தனர்கொளலே” என்னுந் தொல்காப்பியத்து
இடைச்சொல்லியற் புறனடைச்சூத்திரத்தால் “கொண்டு” என்னும் அசை கொள்ளலும் அமையும்.

———-

திருவாழி சங்கு திரு ஆழி வாழி சிறந்த கொண்டல்
உரு வாழி யோகத் திருத் துயில் வாழி உலகு அளந்த
மரு ஆர் மது மலர்த் தாள் வாழி வாழி வணங்கும் அன்பர்
பெரு வாழி அனைய பெருமாள் அரங்கப் பெரும் செல்வமே –1-

திரு – ஸ்ரீமகாலக்ஷ்மி,
வாழி – வாழக் கடவன்;
சங்கு திரு ஆழி – ஸ்ரீ சங்க சக்கரங்கள்,
வாழி – வாழக் கடவன;
சிறந்த கொண்டல் உரு – சிறந்த காளமேகம் போன்ற (திருமாலின்) திருமேனி,
வாழி – வாழக் கடவது;
திரு யோகம் துயில் – (அப்பெருமானது) சிறந்த யோக நித்திரை,
வாழி – வாழக் கடவது;
உலகு அளந்த – உலகங்களை (இரண்டு அடியாக) அளவிட்ட,
மரு ஆழ் மது மலர் தாள் – வாசனை நிறைந்த தேனை யுடைய தாமரை மலர் போன்ற திருவடிகள்,
வாழி – வாழக் கடவன;
வணங்கும் அன்பர் பெரு வாழ்வு அனைய – நமஸ்கரிக்கின்ற மெய்யடியார்கட்குப் பெரிய வாழ்க்கை போன்ற,
பெருமாள் – பெரிய பெருமாளுடைய,
அரங்கம் பெருஞ் செல்வம் – ஸ்ரீரங்கத்துப் பெரிய ஐசுவரியம்,
வாழி – வாழக் கடவது; (எ – று.)

எம்பெருமானது தரிசனத்தைப் பெற்ற போது, அந்தத் தேவாதிதேவனுடைய முற்றுணர்வு, வரம்பிலாற்றல்,
யாவரையும் பாதுகாக்குந் திறம், அழியா வியல்பு முதலிய திவ்விய குணங்களைக் கருதுதற்கு முன்னே அப்பெருமானது
திவ்விய சௌந்தரியத்திற் கண் செலுத்தி அதனையே சேவித்து அதில் ஈடுபட்டு ஆழ்ந்து பக்தி பரவசராகி,
அதனால் தம் நிலையையும் எம்பெருமான் நிலையையும் மறந்து,
“காலாதீதமான வைகுண்டத்திலே யிருக்கின்ற இந்த அரும் பொருள் காலம் நடையாடப் பெற்ற இவ்வுலகத்திலே
கண்ணுக்கு இலக்காகுதலால், திருஷ்டி தோஷங்காரணமாக இதற்கு என்ன தீங்கு வருமோ! என்று தமக்கு உள்ள ஆதராதிசயத்தால்
அநாவசியமாக அதிக பயசங்கை கொண்டு
“இத்திருமேனிக்கு எவ்வாற்றாலும் ஒருகுறையும் வராதிருக்க வேணும்” என்று வாழ்த்துபவராய்
“திருப்பல்லாண்டு” என்னுந் திவ்வியப்பிர பந்தம் பாடி, இங்ஙனம் பொங்கும் பரிவுடையரானதனாற் பெரியாழ்வாரென்று
பெயர்பெற்ற விஷ்ணுசித்தர் போலவே, இந்த அழகியமணவாள தாசரும் திருவரங்கநாதனைச் சேவித்தவுடனே முதலில் வாழ்த்துக் கூறலானார்.

இதனால், இவரது அன்பின்மிகுதி விளங்கும். எம்பெருமானைக் கண்டவளவிலே அடிமைத் தொழில்கள் செய்து
தமக்கு வேண்டுவனவற்றை வேண்டிப்பெற நினையாமல் அவனது வாழ்வையே தமக்குப்
பரம புருஷார்த்தமாக நினைத்தலின் அருமை பெருமைகளை உணர்க.

பெரியபெருமாளைக் கண்ணெதிரிலே காணும் போது, அப்பெருமானைச் சார்ந்துள்ள செம்பொன்னிறத்தவளான
பெரியபிராட்டியினது திருமேனியொளி காளமேகத்திற் கொடிமின்னல் போலக் கண்களைக் கவரும்படி மிக விளங்குதலால்,
“பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாக்களுக்கும் ஸர்வமங்களங்களை யுஞ்செய்பவளான இத்திருமகளது சேர்க்கை நித்யமாயிக்கவேணும்” என்று
மங்களாசாஸநஞ்செய்பவராய், முதலில் “திருவாழி” என்றார்.

பொய்கையாழ்வார் சூரியதீபத்தையேற்றியும் பூதத்தாழ்வார் ஞானதீபத்தையேற்றியுங் காட்ட
எம்பெருமானைக் காண்கின்ற பேயாழ்வார் முதலில் “திருக்கண்டேன்” என்றமை காணத்தக்கது.

ஒருவன் எம்பெருமானை ஆசிரயிக்கப்புக்கால் அப்பொழுது அவன் குற்றம் பாராமல் அவனைத் தன்நிழலிலே வைத்துச்
சமயமறிந்து எம்பெருமான்திருமுன்பே கொண்டுவிட்டு இவன்குற்றத்தைப் பொறுப்பிப்பதற்குப் பிராட்டியின் புருஷகாரம்
இன்றியமையா தாதலால்
“அந்தமில்சீர்ப், பொற்பாவை தன்னருளாற் பொன்னரங்கர் தாள் பணிந்து, நற்பாலடைந்துய்ந்தேன்நான்” என்றபடி
பிராட்டிமுன்னாகப் பெருமாளையடைய வேண்டியதாதல்பற்றியும் அவளை முதலில்வாழ்த்துதல் ஏற்கும்.

அநந்தரம் சற்று உற்று நோக்குமிடத்து, சந்திரசூரியமண்டலங்கள்போல விளங்குகின்றனவாய் முறையே
அவனது இடத்திருக்கையிலும் வலத்திருக் கையிலுமுள்ள சங்கசக்கரங்களின் சோதி காணப்படுதலால்,
“எம்பெருமானது திருமேனிக்குக் காவலாய்த் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனத்துக்கு உறுப்பாக வுள்ள
இத் திவ்வியாயுதங்கள் என்றும் அழிவின்றி வாழவேண்டும்” என்று ஆசாஸிப்பவராய் “சங்கு திருவாழி வாழி” என்றனர்.

மற்றும்ஊன்றிப் பார்க்கையில், அப்பரமனது முடிவில்லதோரெழில் நீலமேனியும் அத்திருமேனி பள்ளிகொண்டிருக்கிற கிடையும்
கட்புலனாதலால், அவற்றை வாழ்த்தலாயிற்று. எம்பெருமான்திருமேனி நீர்கொண்ட மேகம்போலக் காண்பவர் கண்களைக் குளிரச்செய்து
அவர்கள்தாபந்தவிர்த்து அவர்களை உய்விப்பதாதலால் அதற்கும்,
அந்த அமலனது யோகநித்திரை எல்லாவுயிர்களும் உய்யும்வகையைச் சிந்திப்ப தாதலால் அதற்கும் வாழ்த்துக்கூறல் வேண்டிற்று.

திருமேனியைக் கண்ணுற்றபின்னர் அந்தஆதிமூர்த்தியைத் திருப்பாணாழ்வார்போலத் திருவடிமுதல் திருமுடியீறாகச் சேவித்து
அநுபவித்து ஆனந்தமடையத் தொடங்குகின்றா ராதலால், “தாள்வாழி” என்றார்.
இவ்வளவு அநுபவத்திற்குங் காரணம் கோயில்வாசமென்பது கொண்டு, ஈற்றில் “அரங்கப்பெருஞ்செல்வம்” வாழ்த்தப்பட்டது.

“சங்குதிருவாழி” என்று சேர்த்துக்கூறியதன் காரணம் காப்புச்செய்யு ளுரையிற் கூறப்பட்டது.
யோகநித்திரை – எல்லாவற்றையும் அறிந்து கொண்டே லோகரக்ஷணசிந்தையுடனே தூங்குகின்றது போலப்
பிறர்க்குத் தோன்றவைக்கும் நிலை; இது – அறிதுயில், விழிதுயில், துயிலாத்துயில், பொய்த்துயில், மாயத்துயில் எனவும்படும்.
“மருவார்” என்றது – மலர்க்கும் தாளுக்கும், “வணங்குமன்பர்பெருவாழ்வனைய” என்றது –
பெருமாளுக்கும் அரங்கத்திற்கும் அடைமொழியாகத்தக்கது.

திருவாழி சங்குதிருவாழி வாழி –
“வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,
வடிவார்சோதிவலத்துறையுஞ்சுடராழியும் பல்லாண்டு,
படைபோர்க்குமுழங்குமப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே” என்றார் திருப்பல்லாண்டில்,
தாள்வாழி –
“உன்செவ்வடிசெவ்விதிருக்கா ப்பு” என்றது திருப்பல்லாண்டு.
வாழி பெருமாளரங்கப்பெருஞ்செல்வம் – “ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம்” என்ற வடமொழி மேற்கோளைக் காண்க.

திரு – பெரியபிராட்டியார். வாழிய என்னும் வியங்கோள்வினை முற்று, ஈற்று யகரவுயிர்மெய் கெட்டு “வாழி” என நின்றது.
அதன்முன் வருமொழி முதல்வலி இயல்பாம்: வியங்கோள் ஐம்பால்மூவிடங்கட்கும் பொதுவாத லுணர்க.
“சங்கு திருவாழி” என்ற தொடரின் இடையிலுள்ள “திரு” என்ற அடைமொழியை, மத்திமதீபமாக,
முன்நின்ற “சங்கு” என்றதனோடுங் கூட்டுக;
இவை ஆயுதகோடியில்மாத்திரமன்றி ஆபரண கோடியிலுஞ் சேர்தலால், அழகிய சங்கசக்கரங்க ளெனவுந் தகும்.
“சிறந்த” என்ற விசேஷணம், உபமானமாகிய கொண்டலோடும், உபமேயமாகிய உருவோடும் இயையும்.

கொண்டலுக்குச் சிறப்பு – உலகமும் அதற்குஉறுதி யாகிய அறம்பொருளின்பங்களும் நடத்தற்கு ஏதுவாதலும்,
குளிர்ந்தவடி வுடைமைபற்றிக் கண்டோரால் விரும்பப்படுதலும்.
உருவிற்குச் சிறப்பு –
“அண்டர்கோ னணியரங்க னென்னமுதினைக், கண்ட கண்கள் மற்றொன் றினைக்காணாவே” என்றபடி
கண்டவர் கண்களைக் கவர்தலும், அவரது பிறவிப் பெருங்கடலைப் போக்குதலும்.

உரு – வடிவும், நிறமுமாம். ஆர்மலர் – வினைத்தொகை: மரு வார் என்று எடுத்து, வாசனைநீண்ட என்றலு மொன்று;
நெடுந்தூரமளவும் வாசனைவீசுகின்ற என்று கருத்து.
தாளுக்கு, மது – இனிமை மிகுதி. (“அம்ருதஸ்யந்திநிபாதபங்கஜே” என்பது காண்க.)
அடைமொழி கொடாமல் “மலர்” என்றால், அது, எல்லாமலர்களினுஞ் சிறந்ததாகிய தாமரைமலரைக் குறிக்கும்.
அது – திருவடிகட்கு, செம்மை மென்மை அழகுகளில் உவமம்.

அன்பர் – அன்பையுடையவர்; பக்தர். அவர்கட்கு எல்லாநன்மைகளும் திருவரங்கநாதனாலும் ஸ்ரீரங்கம்கிமையாலும் உண்டாதல்பற்றி,
“அன்பர் பெருவாழ்வனைய பெருமாளரங்கப் பெருஞ்செல்வம்” எனப்பட்டது.
கொண்டல் – நீர்கொண்ட மேகத்திற்குத் தொழிலாகுபெயர்; கொள் – பகுதி, தல் – விகுதி, ளகரதகரங்கள் ணகரடகரங்களானது – சந்தி.
உரு – ரூபமென்ற வடசொல்லின் சிதைவு. யோகம், மது – வடசொற்கள்.

“பெருமாள்” என்பதை, திரு, சங்கு திருவாழி, உரு, துயில், தாள் என்றவற்றோடுங் கூட்டுக.
“பெருமாள் அரங்கப்பெருஞ்செல்வம்” என்பதற்கு – பெரியபெருமாளாகிய ஸ்ரீரங்கத்திலுள்ள பெருஞ்செல்வ மென்றலும் அமையும்;

“உங்கள் பூர்வர்கள் தேடிவைத்த மஹாநிதி இதுகாணும்” என்றுசொல்லி ஆளவந்தார்க்கு மணக்கால்நம்பி
பெரியபெருமாளைச் சுட்டிக்காட்டிய வரலாற்றை யுணர்க;
“ஸ்ரீரங்கமங்களநிதி.” “பெருவாழ்வு” என்றது, அழியாத முத்தியுலகத்துப் பேரின்பவாழ்வுமாம்.

இச்செய்யுள் – தண்டியாசிரியர் கொள்கைப்படி “வாழ்த்து” என்னும் அலங்காரமாம்;
“இன்னார்க் கின்னதியைக வென்று தாம், முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப” என அதனிலக்கண முணர்க.
முதலிடை கடைகளில் மங்கலவாழ்த்தையுடைய காப்பியம் அழிவின்றி நின்று சிறப்புறு மென்பது
ஆன்றோர்கொள்கை யாதலால், முதலில் வாழ்த்துக்கூறினர்;

“ஆதியு மந்தமு நடுவு மங்கலம், ஓதிய முறைமையி னுரைப்ப ராயிடின், ஏதமி லிருநிலக் கிழத்தி யின்புற,
நீதியம் பனுவல்கள் நிலவு மென்பவே” என்பது காண்க.
எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது மரபாதலால், “திரு” என்று தொடங்கினார்;
“வழிபடு தெய்வவணக்கஞ் செய்து, மங்கலமொழி முதல்வகுத், தெடுத்துக்கொண்ட விலக்கண விலக்கியம்,
இடுக்க ணின்றி யினிது முடியும்,”

“சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள், கார் மலை சொல் எழுத்துக் கங்கை
நீர் கடல் பூத் தேர் பொன், ஏருறு மிவை மூவாறும் இதன் பரியாயப்பேரும்,
ஆரு மங்கலச் சொல் செய்யு ளாய்ந்து முன்வைக்க நன்றாம்” என்பன நோக்குக.

————-

படுப்பவரைப் பணி மெல் அணையாகப் பரு வரையால்
தடுப்பவரைப் பண்டு மண்டு கல் மாரி தரணி இடந்து
எடுப்பவரைத் தம் அடியார் இடும் பச்சிலைக்கு முத்தி
கொடுப்பவரை செம் பொற் கோயிலுள்ளே கண்டு கொண்டனனே –2-

பணி – திருவனந்தாழ்வான் (ஆதிசேஷன்),
மெல் அணை ஆக – மெத்தென்ற படுக்கை யாக,
படுப்பவரை – (அதன்மேற்) பள்ளிகொண்டருள்பவரும், –
பண்டு – முன்னே (கிருஷ்ணாவதாரத்தில்),
மண்டு கல்மாரி – (இந்திரன்பெய்வித்த) மிகுதியான கல்மழையை,
பரு வரையால் – பருத்த (கோவர்த்தனமென்னும்) மலையைக்கொண்டு,
தடுப்பவரை – தடுத்தருளியவரும், –
தரணி – (ஹிரண்யாக்ஷனாற் கவர்ந்துகொள்ளப்பட்ட) பூமியை,
இடந்து எடுப்பவரை – (வராகாவதாரமாகிக்) கோட்டினாற்குத்தி யெடுத்தருளியவரும், –
தம் அடியார் இடும் பசுஇலைக்கு – தமதுதிருவடிகளைச்சரணமடைந்த மெய்யடியார்கள் (அத்திருவடிகளில்)
அருச்சிக்கின்ற பசுமையான திருத்துழாய்த்தளத்திற்காக,
முத்தி கொடுப்பவரை – (அவ்வடியார்கட்குத் தமது) பெருவீட்டைக் கொடுத்தருள்பவருமான பெரியபெருமாளை, –
செம்பொன் கோயிலுள்ளே – சிவந்தபொன்மயமான திருவரங்கம் பெரியகோயிலினுள்ளே,
கண்டுகொண்டனன் – தரிசிக்கப்பெற்றேன்; (எ – று.)

எம்பெருமானுக்குச் சகலவித கைங்கரியங்களையுஞ் செய்கின்றவனும் நித்தியர்களிலொருவனும் சர்ப்பராஜனுமான ஆதிசேஷன்,
“புல்கும்அணை யாந் திருமாற்கு அரவு” என்றபடி, அப்பெருமான் சயனிக்கத்திருவுளங் கொண்டபோது
அவனது மென்மைக்குஏற்ற புஷ்பசயனம்போன்ற திருப் பள்ளிமெத்தையாக, அதில் அப்பரமன் பள்ளிகொண்டருளுதலால்,
“பணி மெல்லணையாகப் படுப்பவரை” என்றார்.

“இருளிரியச்சுடர்மணிகளிமைக்கு நெற்றியினத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த,
அரவரசப்பெருஞ் சோதியனந்தனென்னு மணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவித்,
திருவரங்கப்பெரு நகருள் தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடிவருடப் பள்ளிகொள்ளுங்,
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண் டென்கண்ணிணைக ளென்று கொலோ களிக்கு நாளே” என்று
பெரியார் பலகாலுங் காணவிரும்பிய திருமூர்த்தி யாதலால்,
அந்தத்திவ்வியமங்களவிக்கிரகத்தைத் தாம் காணப்பெற்ற பேற்றை
“பணிமெல்லணையாகப்படுப்பவரை….. செம்பொற்கோயிலுள்ளே கண்டுகொண்டனன்” என்று வெளியிட்டார்.

தமக்குக்கட்புலனான வடிவமாதலால் “படுப்பவரைப் பணிமெல்லணையாக” என்று அர்ச்சாவதாரத்தை முதலிலும்,
விபவாவதாரங்களுள் வராகாவதாரம் கிருஷ்ணாவதார த்துக்குமுந்தியதாயினும்
தமக்கு ஸந்நிஹிதமானதுபற்றிக் கிருஷ்ணாவதாரத்தை முதலிலும், அதற்குமுற்பட்ட வராகாவதாரத்தை அதன்பின்னும்,
அடியவர்க்கெளியனாகின்ற ஸௌலப்யமாகிற பொதுநிலையை அதன்பின்னு மாகக் கூறின ரென்க.

“பருவரையாற் பண்டு மண்டு கன்மாரி தடுப்பவர்” “தரணியிடந்தெடுப்பவர்” என்ற இரண்டு விசேஷணங்களும்,
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலன சீல ரென்பதை விளக்கின.
“வாதாசநம்” என்று ஒரு பெயர் பெறும்படி காற்றைஉணவாகக்கொள்வதான பாம்பு அக்காற்றை உச்சுவாசநிச்சு வாசங்களினால்
உட்கொள்ளும்போதும் வெளிவிடும்போதும் உடற்பூரிப்பையும் உடல்தளர்ச்சியையுங் கொள்வதாய்க் காற்றடைத்தமெத்தைபோன்று
இனிதுபள்ளிகொள்ளுதற்குப் பாங்காதல் தோன்ற, “பணி மெல்லணையாக” எனப்பட்டது;

“அடலாயிரவாய்ப்பொருந்து வந்தார் பணிப் பாயார்” என்பர் அழகரந்தாதியிலும்.

(“மகரத்திற்சூரியன்வந்துதித்தகாலில் வந்திக்க விந்திரனைநோக்கிப் பொங்கல்,
மிகவிட்டுக்கயிலைமலைபோலேவைக்க விளையாட்டா யத்தனையு நீயேயுண்ணக்,
ககனத்திலிந்திரனும் வந்துபார்த்துக் கன்மழையை நிரை மீதில் விடுத்தமட்டில்,
இகபரத்திற்கிறையவனே நிரைக்காக் குன்றையெடு த்துமழைதடுத்தனையே யெம்பிரானே” என்பது காண்க.)

திரிலோகாதிபதி யென்று பேர்படைத்தவனான தேவேந்திரன் தானே அவ்வுலகத்தில் ஒரு சார் நிரபராதியாயுள்ள சில
உயிர்கட்கு நலிவுசெய்யப்புக் கவிடத்து எம்பெருமான் தான் அருள்கொண்டு பாதுகாத்தன னென்பதை விளக்கும்,
இவ்வரலாறு; “நாம் கோவர்த்தனமலையை ஆராதித்தோம்: அதனால்நேர்ந்த தீங்கைப் போக்கிக் கண்ணன் காத்தருளினான்” என்று
இடையர்கள் நினைக்க வொண்ணாதெனக் கருதி, அவர்கள் ஆராதித்த மலையைக்கொண்டே காத்தருளின னென்க.
இந்திரன் கல்மழை பொழிந்திட்டதனால், அதனைக் கற்கொண்டுதடுத்தான்;
அன்றி நீர் மழையையே பொழிந்திருப்பானாயின் அதனை நீரைக்கொண்டே தடுக்கவல்ல
ஸர்வசக்த னென்பது தோன்ற, “வரையாற் கல்மாரிதடுப்பவர்” என்றார்.

“கன்மாரியாகையாலே, கல்லையெடுத்து ரக்ஷித்தான்; நீர்மாரியாகில், கடலையெடுத்து ரக்ஷிக்குங்காணும்” என்று
பட்டர் அருளிச்செய்வர்; இத்தால், இன்னதைக்கொண்டு இன்னகார்யஞ் செய்யக் கடவோமென்னும்நியதியில்லை:
ஸர்வசக்தனென்கை” என்ற வியாக்கியான வாக்கியம், இங்கு அறியத்தக்கது.

(“புண்ணியந்தெய்வதமுஞ் சேர்பூலோகத்தைப் புற்பாய்போற்சுருட்டிக் கொண்டே பாதாளம்,
நண்ணிரணியாட்சனைப் பின் தொடர்ந்தே யேகி நலமுடனே யாதிவராகத்தேவாகி,
மண்ணுலகமனைத்துமிடந்தெடுத் தோர் கோட்டில்வைத்துவர வவன்மறிக்க வதைத்துத் தேவ,
ரெண்ணவுலகீ ரேழும்படியப்பண்ணா யிறைவாநாராயணனே யெம்பிரானே” என்பர் பின்னோரும்.)

இப்பொழுதுநடக்கிற சுவேதவராக கல்பத்துக்கு முந்திய பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து
ஸ்ரீவராகாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டுநுனியாற் பூமியை யெடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு.

இயல்பிலே தமக்கு அடிமையான எல்லாவுயிர்களிடத்துங் காரண மின்றியெழுங் கருணையையுடையவனான கடவுள்
அவர்கட்குத் தனது பேரின்பப்பெருவீட்டையளித்தருளுதற்கு ஒருவியாஜமாக அவர்களிடுவதொரு துளஸீதளத்தை
யெதிர்நோக்குகின்றனனென்பது விளங்க, “தம் அடியாரிடும் பச்சிலைக்கு முத்திகொடுப்பவர்” என்றார்.
பயனாகிய அந்தப் பரமபதத்தின் பெருமைக்கு இவர்களிடும் பச்சிலை ஏற்றஸாதநமன்றாதலை நோக்குமிடத்து,
அவனது திருவருள் காரணமின்றியெழுந்ததாத லுணர்க.

“பத்திரத்தையும் புஷ்பத்தையும் பழத்தையும் ஜலத்தையும் எவன் எனக்குப் பக்தியுடன் கொடுக்கின்றானோ,
சுத்தமான மனத்தையுடையனான அவனது பக்தியினாற் கொடுக்கப்பட்டதாகிய அதனை நான் அங்கீகரிக்கின்றேன்” என்று
ஸ்ரீகீதையிற் கண்ணபிரான் தானே அருளிச்செய்திருத்தல் இங்கு உணரத்தக்கது;

“அச்சுத நின்மெய்யடியாருகந்தேயிட்டதணுவெனினுமக மேருவாகக்கொள்வாய்,
நிச்சயமாயுனைநம்பியெண்ணாமூடர்நினைத்திடிலோ நூற்றையொன்றாவுங்கொள்ளாயால்” எனப் பின்னோர் கூறியதுங் காண்க.

“தம்மடியாரிடும் பச்சிலைக்கு முத்திகொடுப்பவர்” என்ற தொடரில், சிறியதைப் பெற்றுக் கொண்டு பெரியதைக் கொடுத்தலாகிய
பரிவர்த்தநாலங்காரந் தோன்றுதல் காண்க;
அதனிலக்கணத்தை, தண்டியலங்காரத்தில் “பொருள்பரிமாறுதல் பரிவருத்தனையே” எனக் காணலாம்;
இது, மாற்றலணி என்றுஞ் சொல்லப்படும்.
“இலைக்கும்” எனப் பிரித்து இழிவுசிறப்பும்மையாகக்கொள்ளுதலு மொன்று. அடியார்கள் எம்பெருமானை வசப்படுத்தும்
பச்சிலையாகின்றது திருத்துழா யென்பதும் இங்குத் தோன்றும்;
ஆகவே, அதனால் அவர்கள்வசப்பட்டு அவர்கட்குப் பெருவீடுதந்திடுகின்றன னென்க.

படுப்பவர் கொடுப்பவர் என்றவற்றில், பகரவொற்றிடைநிலை – எதிர்கால முணர்த்தாமல் தன்மையுணர்த்திற்று;
படுக்குமியல்பினர் கொடுக்குமியல்பினர் என்று பொருள்.
“பண்டு தடுப்பவர்” என்றது, இயல்பினால் இறந்த காலம் எதிர்காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி,
“யாம் பண்டு விளையாடுவது இச்சோலை” என்றாற் போல. “பண்டு” என்பதை, “எடுப்பவர்” என்பதனோடுங் கூட்டுக;
அதுவும் அவ்வகைக் காலவழுவமைதியே. படுப்பவரை, தடுப்பவரை, எடுப்பவரை, கொடுப்பவரை என்றவை –
ஒருபொருளின்மேல் வந்த பலபெயர்கள்;
இவை, “கண்டுகொண்டனன்” என்னும் ஒருவினையைக் கொண்டன.
விசேஷணச்சொற்கள், விசேஷ்யச் சொல் இவையனைத்திலும் வேற்றுமையுருபு விரியவைப்பது, வடமொழி நடை.
இங்கே “படுப்பவரை” என்றதை விசேஷ்யமாகவும், மற்றைமூன்றையும் விசேஷணமாகவுங் கொள்ளுதல் சாலும்.
பணம் – படம்; அதனை யுடையது பணீ யென வடமொழிக்காரணக்குறி; அது ஈறுகுறுகிற்று. மெல் அணை – பண்புத்தொகை.

“வரையால்” என்பதில், “ஆல்” உருபு – கருவிப் பொருளது. கல்மாரி – சிலாவர்ஷம்; ஆலாங்கட்டிமழை. தரணி – வடசொல்;
(பொருள்களைத்) தரிப்ப தென்றறு காரணப்பொருள்படும். இடந்து,இட – பகுதி. அடியார் – அடிமை யென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்.
பசுமை + இலை = பச்சிலை: பண்புப்பெயர், ஈறுபோய்த் தன்ஒற்றுஇரட்டிற்று.

முக்தி என்ற வடசொல்லுக்கு – (பற்றுக்களை) விட்டு அடையு மிடமென்பது உறுப்புப்பொருள்;
வீடு என்ற தமிழ்ப்பெயரும் இப்பொருள் கொண்டதே.
செம்பொன் – மாற்றுயர்ந்த பொன். கோயில் = கோவில்: இலக்கணப்போலி; கோ இல் – இறைவனது இடம், தலைமையான இடம்;
இது தேவாலயங்கட்கெல்லாம் பொதுப்பெயராயினும், நூற்றெட்டுத்திருமால் திருப்பதிகளுள் திருவரங்கம் தலைமைபெற்ற தாதலால்,
அதனை “கோயில்” எனச் சிறப்பாகவழங்குவது, வைஷ்ணவசம்பிரதாயம்;
இது, காரணவிடுகுறி யின்பாற்படும். கண்டுகொண்டனன் – “அன்” விகுதி, தன்மையொருமைக்கு வந்தது.

———-

ஆள் ஆனவர் கண் களி கூர் அரங்கத்து அரவணை மேல்
காள அசலம் எனக் கண்டு கொண்டேன் -மறை காண ஒண்ணாத்
தாள் ஆயிரம் செம்பொன் மா முடி ஆயிரம் தாம நெடும்
தோள் ஆயிரம் திருக் கண் ஆயிரம் கொண்ட சோதியையே –3-

மறை காண ஒண்ணா – வேதங்களாலும் அறியமுடியாத,
தாள் ஆயிரம் – ஆயிரம் திருவடிகளையும்,
செம் பொன் மா முடி ஆயிரம் -சிவந்த பொன்மயமான அழகிய கிரீடத்தைத் தரித்த ஆயிரம்திருமுடிகளையும்,
தாமம் நெடுந் தோள் ஆயிரம் – மாலையைத்தரித்த பெரிய ஆயிரம் திருத்தோள்களையும்,
திரு கண் ஆயிரம் – ஆயிரம் திருக்கண்களையும்,
கொண்ட – தன்னிடத்திற் கொண்ட,
சோதியை – ஒளிவடிவமான ஸ்ரீமந்நாராயண மூர்த்தியை,
ஆள் ஆனவர் கண் களி கூர் அரங்கத்து – அடியார்கள் (கண்டு) கண் களிப்பு மிகுதற்குக் காரணமான திருவரங்கம் பெரிய கோயிலில்,
அரவு அணைமேல் – ஆதிசேஷனாகிய சயனத்தின்மேல்,
காள அசலம் என கண்டு கொண்டேன் – கருநிறமுள்ளதொரு மலை (கிடந்தாற்) போல(ச் சயனத் திருக்கோலமாயிருக்க)க் காணப்பெற்றேன்; (எ – று.)

எல்லாப்பொருள்களையும் உள்ளபடி உணர்ந்து உரைக்கின்ற வேதங்களாலுங் காணமுடியாத பரஞ்சோதி ஸ்வரூபமான
பரமாத்மாவை இந்நிலவுலகத்திலே திருவரங்கத்திருப்பதியில் திருவனந்தாழ்வானாகிய திருப்பள்ளி மெத்தையில்
“பச்சைமாமலைபோல்மேனி பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா” என்றபடி ஒருநீலமலைபோலே
பள்ளிகொண்டிருக்கக் காணப் பெற்றேன் என்று, பிறர்களுக்கு அரியவித்தகனான எம்பெருமான்
பத்துடையடியவர்க்கு எளியனாகின்ற இயல்பையும், தமது பாக்கியவிசேஷத்தையும்,
கீழ்ச்செய்யுள்போலவே இச்செய்யுளும் கொண்டாடிக்கூறியதாம்.

“மறை காணவொண்ணா” என்றது, சோதியோடு இயையும்;
பரப்ரஹ்மஸ்வரூபத்தைத் தான் முழுவதுங் காணமாட்டாமையை, வேதம் தானே கூறுகின்றது.
தேஜோரூபி யாதலால், “சோதி” என்றார்; அடுத்தசெய்யுளில் “ஒண்சுடர்” என்பதுங் காண்க.

ஆள் ஆனவர் – அடிமைப்பட்டவர்.
கண்களிகூர் – கண்களாற்காணுத லால் மனம்களிகூர்தல், அக்கண்களின்மேல் ஏற்றிக்கூறப்பட்டது; ஒருவகை உபசாரவழக்கு.
ஆளானவர்கண்களிகூர் அரங்கம் – “கூர்” என்ற வினைத்தொகை – காரியப்பொருளதாய், காரணப்பெயரைக் கொண்டது.
கூர் – மிகுதிகுறிக்கும் உரிச்சொல். அரவணை – ஸர்ப்பசயநம். அர அணை என்றும் பிரிக்கலாம்.
அரா என்னும் குறியதன்கீழ் ஆகாரம், குறுகியும் அதனோடு உகரமேற்றும் நிற்கும்.
காள + அசலம் = காளாசலம்: தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; பண்புத்தொகை.
காளம் – கருநிறமானது. அசலம் – சலியாதது என மலைக்குக் காரணக்குறி. காளாசலம் – நீலகிரி:
காளமேகம்படிந்ததொரு பெருமலையென்றுங் கொள்ளலாம். என – உவமவுருபு.
காளாசலம் – நிறத்திற்கும், கம்பீரமாகிய தோற்றத்திற்கும் உவமையாம்.
ஒண்ணா – ஒன்றா என்பதன் மரூஉ; ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.
“செம்பொன்மாமுடி” என்றதை அன்மொழித்தொகையாகவாவது அடையடுத்தஆகுபெயராகவாவது கொள்ளவே, சிரசை யுணர்த்தும்.
“செம்பொன்” என்பதை அதனாலாகிய கிரீடத்துக்குக் கருவியாகுபெய ரெனக் கொண்டு, முடி – சிரசு என்றலுமாம்.
மா முடி – பெரிய கிரீடமுமாம். தாமம் – வடசொல்; திருத்துழாய்மாலை, மலர்மாலைகள், பொன்மணிகளாலாகிய ஆரங்கள்,
வனமாலை யென்னுந்திவ்வியமாலை இவைகளையெல்லாங் குறிக்கும்.
தாமம் எனக்கொண்டு, ஒளியென்னவுமாம். “திரு” என்ற அடைமொழியை, தாள் முடி தோள் என்றவற்றிற்குங் கூட்டலாம்.

இங்கே “ஆயிரம்” என்றது, அளவில்லாததென்னும் பொருளது. அங்ஙனங்கொள்ளாவிடின்,
தாளாயிரம் முடியாயிரம் முதலியன சேராவாம். ஆகவே, அளவற்ற பாதம் முதலிய சகல அங்கங்களையு முடையவ னென்பதாம்.
அபரிமிதமாய் அற்புதமாயிருக்கிற மகாஞானமும் மகாசக்தியு முள்ளவன் எம்பெருமான் என்பது, தேர்ந்தபொருள்.
பெருமான் சகல இந்திரியங்களாலே யாதல் ஓர் இந்திரியத்தாலேயாதல் திருமேனியாலேயாதல்
திவ்யாத்மஸ்வரூபத்தாலேயாதல் எல்லாவற்றையும் எப்போதும் எல்லா விதத்திலும்
அறிகின்றவனும் செய்கின்றவனுமா யிருக்கின்றா னென்பது, முக்கியமான கருத்து.
இங்ஙனமேயன்றி, அநேகம் திருமுடிகள் திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் முதலாகிய அவயவங்களாற்
செறிந்திருக்கின்றான் பகவா னென்பது கருத்தன்று.
அளவில்லாத கண் முதலியவற்றை யுடையவன் எப்படி அளவில்லாத காட்சி முதலானவற்றை யுடையனாயிருப் பனோ
அப்படியே பகவானும் என்று எடுத்துக்காட்டினபடியாம்.
மற்றும், விசுவரூபங்காட்டுகிற சமயங்களில்மாத்திரம் எம்பெருமான் பல அவயவங்களைக் கொள்ளுதலும் உண்டு.
இங்கு, சிலர், உலகமெல்லாம் பகவானுடைய சொரூப மாதலால் உலகத்திலுள்ளோருடைய முடி புயம்
முதலியவையெல்லாம் அவனுடையவையா மெனக் கருத்துக்கூறுவர்; அது பலவிதத்திலும் பொருந்தா தென அறிக.
இது, திவ்யாத்மஸ்வரூபம் கூறியபடி.

—–

பூங்கா விரிப்புனற் கோயிலுள்ளே மிக்க போகம் எல்லாம்
யாம் காண யோகத்துயில் கொண்டவாறு எள்ளும் எண்ணெய் யும் போல்
நீங்காது உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி நியாமகன் ஆய்
ஓங்காரம் ஆய் அதன் உட்பொருளாய் நின்ற ஒண் சுடரே –4-

(இ – ள்.) எள்ளும் எண்ணெயும் போல் -,
நீங்காது – இடையறாமல்,
உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி – உலகத்திலுள்ள ஜீவாத்மாக்களுக்கு அந்த ராத்மாவாகியும்,
நியாமகன் ஆய் – (அந்த ஜீவாத்மாக்களுக்கெல்லாம்) தலைவனாகியும்,
ஓங்காரம் ஆய் – பிரணவமந்திரஸ்வரூபியாகியும்,
அதன் உள் பொருள் ஆய் – அம்மந்திரத்தினது உள்ளேயடங்கிய பொருளாகியும்,
நின்ற – (எந்நாளும் அழிவின்றி ஒரேதன்மையதாய்) நிலைபெற்ற,
ஒள் சுடர் – பிரகாசிக்கின்ற சோதியானது,
பூ காவேரி புனல் கோயிலுள்ளே – அழகிய காவேரி நதியின் நீரினாற் சூழப்பெற்ற திருவரங்கம் பெரியகோயிலினகத்தே,
மிக்க போகம் எல்லாம் யாம் காண – மிகுதியான போகங்க ளெல்லாவற்றையும் நாம் காணும்படி,
யோகம் துயில் கொண்ட ஆறு – யோகநித்திரையைக் கொண்டிருக்கின்ற விதம், (என்ன ஆச்சரியம்!) (எ – று.)

உடலினுள்ளே உயிர் அதற்குத் தாரகமாய் நியாமகமாயச் சேஷியாய்த் தங்கியிருத்தல்போலப்
பரமாத்மா ஜீவாத்மாக்களினுள்ளே அந்தர்யாமியாய் அவற்றிற்குத் தான் தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய்
விடாது வீற்றிருத்தலால், “நீங்காது உலகத்து உயிர்க்குஉயிராகி நியாமகனாய்” என்றார்.
“எள்ளும் எண்ணெயும் போல்” என்றா ராயினும், எள்ளினுள் எண்ணெய் போ லென்பது கருத்து;
அது பிரிந்து காட்டாமல் எங்கும் பரந்து மறைந்துநிற்றற்கு உவமை.
எள் – ஜீவாத்மாவுக்கும், எண்ணெய் – பரமாத்மாவுக்கும் உபமானம். “எள்ளுமெண்ணெயும்போல்” என்றதனால்,
எல்லாம் தானாகியும் அல்லதுமாகியும் இறைவன் நிற்கின்ற நிலையைத் தோன்றவைத்தன ரென்னலாம்.

“உலகம்” என்றது, அசித்துக்களை. “உயிர்” என்றது, சித்துக்களை. “உயிர்க்குஉயிர்” என்றது, ஈசுவரனை.
“உலகத்து உயிர்க்கு உயிராகி நியாமகனாய்” என்றதனால், சித்துக்களுக்குப்போலவே அசித்துக்களுக்கும்
பரமாத்மா தாரகனும் நியாமகனும் சேஷியு மாதல் தோன்றும்.
சித் அசித் ஈச்வரன் – தத்துவத்திரயம். இதுவே, விசிஷ்டாத்வைத சித்தாந்தம் எனப்படும்.

“கருதரிய வுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும்பரந்துறையும், ஒரு தனிநாயக மென்றா லுன்புகழ்க்கு வரம்பாமோ”
என்பர் திருவரங்கக் கலம்பகத்திலும்.
(“திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசைப், படர்பொருள்முழுவதுமா யவையவைதொறும்,
உடன்மிசையுயிரெனக்கரந்தெங்கும் பரந்துளன்,”
“பரந்ததண்பரவையுள்நீர் தொறும்பரந்துளன், பரந்த வண்டமிதென நிலவிசும் பொழிவறக்,
கரந்தசிலிடந்தொறு மிடந்திகழ் பொருடொறுங், கரந்தெங்கும்பரந்துளன்” என்றார் நம்மாழ்வாரும்.)

“எள்ளு மெண்ணெயும் போல் நீங்கா துலகத்துயிர்க் குயிராகி” –
“எண்ணுமெண்ணெயுமியைய மற்றெப்பொருளகத்தும், நண்ணுநாரணன்” என்ற பாகவதத்தையும் காண்க.

“ஓங்காரமா யதனுட்பொருளாய் நின்ற வொண்சுடர்” –
“எப்பொழுதும் தியானஞ்செய்துகொண் டிருக்கின்ற யோகிகள், தங்களுடைய பாபபுண்யரூபமான கர்மங்கள் நசித்தவுடனே,
எந்தச் சொரூபத்தைப் பிரணவப்பொருளாகக் காண்கின்றார்களோ,”
“உன்னுடைய ஆராதநரூபமான யாகங்களும், வஷட்காராதிகளும், சகலவேத மூலமான பிரணவமும் நீயே” என்றது விஷ்ணுபுராணம்.
தாரகன் – தாங் குபவன், வாழச்செய்பவன். நியாமகன் – நியமிப்பவன், நடத்துபவன். சேஷி – தலைவன், உடையவன்.

சொல்லும் பொருளும் ஆகிய இரண்டுமாய் நிற்பவன் எம்பெருமானே யாதலால்,
“ஓங்காரமாய் அதனுட்பொருளாய் நின்ற” என்றார்; “ஓங்காரோ பகவாந் விஷ்ணு:” என்றது காண்க.
“ஓங்காரம்” என்றதில், “காரம்” என்பது – சாரியை;
அகாரம், ஆகாரம் என்றவற்றிற் போல. பிரணவம், அகார உகார மகாரங்க ளாகிய
மூன்று ஓரெழுத்தொருமொழிகள் கூடிய தோ ரெழுத்தாம்.
அது ஸகலவேதகாரணமும், ஸகலவேதஸங்க்ரஹமும், ஸகலவேதஸாரமு மாதலால், தலைமைபற்றி எடுத்துக் கூறப்பட்டது.
அதன் பொருள், ஸர்வரக்ஷகனான திருமாலுக்கே உரியபொருள் ஜீவாத்மா என்பது;
இதில், பகவானுக்கே பிராதானியந் தோன்றுதலால், பகவான் பிரணவத்தின் பொருளாவன்:
“ப்ரணவோ பகவத்வாசீ ப்ராதாந்யாதர்த்தஸம்பவாத்” என்பது காண்க.

ஒண்சுடர் – சூரிய சந்திர அக்கினிகளாகிய முச்சுடர்களின் ஒளியினும் மேம்பட்ட பேரொளி;
புறவிருளையே போக்குகின்ற அவ்வொளி களினுஞ்சிறக்குமாறு அகவிருளையும் அகற்றும் ஞானவொளி;
தோற்றக்கேடுகளும் மிகுதிகுறைவுகளுமின்றி என்றும் ஒருபடிப்பட விளங்கும்ஒளி.
இப்படி சேதநாசேதநங்களுக்கு வியாபகனும் அந்தர்யாமியும் மந்த்ரார்த்தஸ்வரூபியும் தேஜோரூபியுமான பரமாத்மா
சில்வாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவினராகிய நாமெல்லாம் எளிதிற்சேவித்து ஈடேறுமாறு இவ்வுலகத்தில்
திருவரங்கம் பெரிய கோயிலிலே பள்ளிகொண்ட திருக்கோலமாய்க் காட்சிதந்தருள்கின்ற
திருவருட்பெருமை என்னே! என்று கொண்டாடியவாறாம். முடிக்குஞ்சொல், வருலித்து உரைக்கப்பட்டது.
விதத்தை யுணர்த்துகின்ற “ஆறு” என்ற சொல் வருமிடங்களில் முடிக்குஞ்சொல் கூறப்படாது எஞ்சிநிற்பதை
இலக்கியங்களிற் பலவிடத்துங் காணலாம்; இது, இசையெச்சம்.
இப்படி “ஆறு” என்ற சொல் முடிபின்றி வியப்புவிளக்குதலை,
“வெள்ளைவாகனக்குரிசில்வின்மை வல்லப மிருந்தவாறே” என்ற வில்லபுத்தூரார் பாரதத்திலுங் காண்க.

“பூங்காவிரிப்புனல்” என்ற அடைமொழி, “தெளிவிலாக்கலங்கல்நீர் சூழ் திருவரங்கம்” என்றபடி தலத்தின் நீர்வளவாய்ப்பைக் காட்டும்.
திருவரங்கம் போகமண்டபமெனப்படுதலின், “மிக்கபோகமெல்லாம் யாம்காண யோகத்துயில்கொண்ட ஆறு” எனப்பட்டது;
மூன்னும் “பெருமா ளரங் கப்பெருஞ்செல்வம்” என்றார். போகம் – வைபவம்: செல்வமும், சுகானுபவமும்.
அங்கு எம்பெருமானுக்கு எல்லா ஐசுவரியங்களும் குறைவறவிருத்தலும்,
அப்பெருமான் தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடி வருட இனிது பள்ளிகொள்ளுதலுங் காண்க.
இனி, “மிக்கபோகமெல்லாம் யாம்காண” என்பதற்கு – (எம்பெருமானைச் சேவித்ததன்பயனாக இம்மைமறுமைவீடுகளில்)
மகாபாக்கியங்களையெல்லாம் நாம் அனுபவிக்கும்படி யென்றும் பொருள் கொள்ளலாம்.
மிக்கபோகம் – வரம்பிலின்ப மெனப்படும் நிரதிசயசுகாநுபவ மென்றலுமாம்.

காவிரி – காவேரீ என்ற வடசொல்லின் விகாரம்; அப்பெயர் – கவேரனென்ற அரசனது மகள் என்று பொருள்படும்.
போகம், யோகம், நியாமகன். ஓங்காரம் – வடசொற்கள். தம்மைப்போன்ற அடியார்களையுஞ் சேர்த்துக்கொண்டு,
உளப்பாட்டுத்தன்மைப்பன்மையாக, “யாம்” என்றார்; கவிகளுக்கு உரிய இயற்கைத்தனித்தன்மைப்பன்மையுமாம்.
எண்ணெய் – எள் நெய்: எள்ளின் சாரம். ஒள் – ஒண்மை யென்ற பண்பின் அடி.
ஒள் + சுடர் = ஒண்சுடர்: பண்படிகளின் லகார ளகாரங்கள் வலிவர னகார ணகாரங் களாம்.
போகம், யோகம், நியாகுபவன், வாழச்செய்பவன். நியாமகன் – நியமிப்பவன், நடத்துபவன். சேஷி – தலைவன், உடையவன்.

———-

கறங்கு ஆழி நாள் எட்டு இலக்கம் இயோசனைகட்செவியின்
பிறங்கு ஆகம் மும்மை இலக்கம் இயோசனை பேர் உலகில்
இறங்கு ஆழி மேகம் எனவே அரங்கத்தில் எந்தை அதில்
உறங்கு ஆகம் நீளம் ஐந்து ஐம்பதினாயிரம் ஒசனையே–5–

(இ – ள்.) கறங்கு – ஆரவாரிக்கின்ற,
ஆழி – திருப்பாற்கடலினது,
(நீளம்) -, நால் எட்டு இலக்கம் யோசனை – முப்பத்திரண்டுலக்ஷம் யோஜனை யளவாம்;
கட்செவியின் – (அதனிடையேயுள்ள) திருவனந்தாழ்வானுடைய,
பிறங்கு ஆகம் – விளங்குகின்ற திருவுடம்பினது,
(நீளம்) -, மும்மை இலக்கம் யோசனை – மூன்றுலக்ஷம் யோஜனையாம்;
பேர் உலகில் இறங்கு ஆழி மேகம் எனவே – பெரிய இந்நிலவுலகத்தி லிறங்கிவந்த சக்கராயுதத்தையு டையதொரு மேகம்போல,
அரங்கத்தில் எந்தை அதில் உறங்கு – திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான்
அந்தத் திருவனந்தாழ்வான் மேலே (பள்ளிகொண்டு) யோகநித்திரைசெய்தருள்கின்ற,
ஆகம் – திருமேனியினது,
நீளம் -நீட்சி,
ஐந்து ஐம்பதினாயிரம் ஓசனை – இரண்டரை லக்ஷம் (இரண்டுலக்ஷத்து ஐம்பதினாயிரம்) யோஜனையாகும்; (எ – று.)

எம்பெருமானுக்கு உரிய பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை என்ற
ஐவகைநிலைகளுள் வியூகநிலை, இதிற் குறிக்கப்பட்டது.
பிரமன் முதலியதேவர்கள் வணங்கி வழிபடுந்தெய்வமாய் எல்லா அவதாரங்களுக்கும் முதலாய்ப்
படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களுக்குக் கர்த்தாவாய்த் திருப்பாற்கடலிலே வாசுதேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய
நான்கு ரூபத்துடன் எழுந்தருளியிருக்கின்ற நிலை, வியூக மெனப்படும்.
அந்த நான்குமூர்த்திகளுட் பிரதானமாகிய வாசுதேவமூர்த்தியின் திருமேனிவளத்தைக் கூறுபவராய்,
அதற்கு அங்கமாகப் பாற்கடலின் நீளமே தொடங்கிக் கூறலானார்.

“ஆழி” என்று பொதுப்படக்கூறினாரேனும், சந்தர்ப்பத்தால், பாற்கடலைக் குறித்தது. நாலெட்டு – பண்புத்தொகை.
“ஆசறவயங்குஞ் சாகநற்றீவி னகல நாலெட்டிலக்கத்தி, னோசனையனந்தன்மிசை யரியுறும்பாலுவரியு மன்னதேயாம்” என்ற
மகாபாகவதத்தாலும் பாற்கடற் பரப்பின் எல்லையை உணரலாம்.
இதனால், “நாலெட்டு” என்பதற்கு – உம்மைத்தொகையாக, பன்னிரண்டுஎனப் பொருள்கொள்ளுதல் பொருந்தாமை, வெளிப்படை.
யோசனை – நான்குகுரோசங் கொண்டது; அவ்வளவை,
“அங்குலமறுநான் கெய்தினதுகரம் கரமோர்நான்கு, தங்குதல் தனுவென்றாகும் தனுவிரண்டது வோர்தண்டம்,
இங்குறுதண்டமானவிராயிரங்குரோ சத்தெல்லை, பங்கமில்குரோசநான் கோரியோசனைப்பாலதாமே” என்பதனாற் காண்க.
யோசனை, சற்று ஏறக்குறையக் காதவளவாம்.

கறங்காழி – வினைத்தொகை; கறங்குதல் – ஒலித்தல். ஆழ்ந்துள்ளது ஆழி யெனக் காரணக்குறி;
இ – கருத்தாப்பொருள்விகுதி. இலக்கம் – லக்ஷமென்ற வடசொல்லின் விகாரம். இலக்கம் – நூறாயிரம்.
யோசனை, ஓசனை – யோஜநா என்ற வடசொல்லின் விகாரங்கள். இலக்கம் + யோசனை = இலக்கமியோசனை:
தன்னொழிமெய்ம்முன் யகரம்வர இகரம் தோன்றிற்று;
இனி, இலக்கம் இயோசனை என்றுபிரித்து, இகரத்தை “யவ்விற்கு, இய்யும் மொழிமுதலாகி முன்வருமே” என்றபடி
யகரத்தை முதலிலேயுடைய வடமொழியின்முன் வந்ததாகக் கொள்ளுதலும் ஒன்று.
கட்செவி – கண்செவி: கண்களாகிய காதுகளையுடையது; பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த. அன்மொழித்தொகை:
கண்களையே காதுகளாகவு முடைய தென்று கருத்து;
பாம்புகட்குக் கண்ணாகிய பொறியொன்றிலேயே காணுதலுங் கேட்டலுமாகிய புலனறிவிரண்டும் அமைந்திருத்தல் காண்க:
இதுபற்றி, வடநூலார் பாம்புக்கு “சக்ஷுஸ்ரவஸ்” என்று ஒருபெயர் கூறுவர்; “கோகனநாகம்” என்றார் வில்லிப்புத்தூராரும்.
“தெரிமாண் தமிழ்மும்மைத் தென்னம்பொருப்பன்” என்றவிடத்துப்போல,
இங்கு “மும்மை” என்பது – மூன்றின் தன்மையை யுணர்த்தாமல் மூன்றென்னும் எண்ணையே உணர்த்தியது:
“இருமைவகை தெரிந் தீண் டறம் பூண்டார்” என்ற திருக்குறளில் “இருமை” என்றதும் இத்திறத்ததே:
இதில், “மை” விகுதி – தன்மையை யுணர்த்தாமல் தன்மையையுடைய பொருளையே உணர்த்தியதனால், பகுதிப்பொருள்விகுதியாம்;
இதனை வடநூலார் ஸ்வார்த்தபாவதத்திதப்ரத்யய மென்பர்.

எம்பெருமானது திருமேனிக்கு மேகம் – நிறத்திலும், கண்டவர் கண் குளிரச்செய்யுந்திறத்திலும்,
அடுத்தவரிளைப்புத்தவிர்த்தலிலும் உவமை.
சக்கராயுதத்தைக் கையிலுடைய திருமாலுக்கு உவமையாதற்பொருட்டு “ஆழி மேகம்” என்றார்; அது – இல்பொருளுவமை.
திருப்பாற்கடல் இந்நிலவுலகத்திலுள்ள தாதலால், மேகத்திற்கு “பேருலகிலிறங்கு” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
மேகம் – வடசொல். ஏ – தேற்றம். எந்தை – எமது பரமபிதா: யாம் என்ற பகுதி, “எம்” என விகாரப்பட்டது;
தை – விகுதி. எந்தை = நம்பெருமாள். நீளம் – நெடுமை.
ஐந்தைம்பதினாயிரம் – பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்; இருநூற்றைம்பதினாயிரம்.
கடலிற் படிந்து அதன்நீரை யுட்கொண்டு கருவுற்ற நீலமேக மென்ற பொருளில் “ஆழி மேகம்” என்றாருமாம்.
இனி, “ஆழி மேகம்” என்றதைப் பன்மைவிகுதிபெறாத அஃறிணையும்மைத்தொகை யென்று கொண்டு,
கடலும் மேகமும் போலவென்று தனித்தனி உவமையாக உரைப்பர் ஒருசாரார்.
பேருலகில் ஆழிஇறங்கு மேகம் என மொழிமாற்றி, பெரிய இவ்வுலகத்திலே அப்பாற்கடலிலிறங்கிப் படிந்ததொரு
மேகம்போல வென்று பொருள்கொள்ளுதலும் அமையும். “நீளம்” என்றதனைப் பிறவற்றிற்குங் கூட்டுக; கடைநிலைத்தீவகம்.
“யோசனை” என்றது, பெயர்ப்பயனிலையாய் நின்றது.

—————

பாற் கடல் நாள் எட்டு இலக்கம் இயோசனை பாற் கடலுள்
மால் கவி கோயில் அகலமும் ஈர் ஐந்து வான் அளவும்
தீற்கம் ஓர் ஏழ் திகழ் பணி மூன்று சிறந்த அகலம்
ஏல்கவின் ஒன்றரை உத்தமர் நீளம் இரண்டரையே –6-

(இ – ள்.) பால் கடல் – திருப்பாற்கடலினது,
(நீளம்) -, நால் எட்டு இலக்கம் யோசனை – முப்பத்திரண்டுலக்ஷம் யோஜனையாம்;
பால் கடலுள் – அந்தத் திருப்பாற்கடலினிடையே,
மால் கவி கோயில் – திருமாலை வளைந்துகொண்டிருக்கின்ற திருக்கோயிலினது,
அகலமும் -, ஈர்ஐந்து (இலக்கம் யோசனை) – பத்துலக்ஷம் யோஜனையாம்;
வான் அளவும் தீற்கம் – ஆகாயத்தை யளாவுகின்ற (அத்திருக்கோயிலின்) உயரம்,
ஒர் ஏழு (இலக்கம் யோசனை) – ஏழுலக்ஷம் யோஜனையாம்;
திகழ் பணி – விளங்குகின்ற திரு வனந்தாழ்வானது,
(நீளம்) -. மூன்று (இலக்கம் யோசனை) – மூன்றுலக்ஷம் யோஜனையாம்;
சிறந்த அகலம் – மேன்மையுற்ற (அத்திருவனந்தாழ்வானது) அகலம்,
ஏல் கவின் ஒன்றுஅரை (இலக்கம் யோசனை) – பொருந்திய அழகையுடைய ஒன்றரைலக்ஷம் யோஜனையாம்;
உத்தமர் – (அதிற்பள்ளி கொண்டருள்கின்ற) புருஷோத்தமரான எம்பெருமானுடைய,
நீளம் – (திருமேனியின்) நீட்சி, இரண்டரை (இலக்கம் யோசனை) – இரண்டரைலக்ஷம் யோஜனையாம்; (எ – று.)

“அகலம்” “தீற்கம்” என்ற சொற்க ளில்லாத இடங்கட்கெல்லாம், “நீளம்” என்பது, தகுதிபற்றி,
முந்தினசெய்யுளிற்போல எடுத்துக்கூட்டப் பட்டது.
“தீற்கம்” என்பதை “பாற்கடல்,” “பணி” என்றவற்றோடுங்கூட்டி, அதற்கு அவ்விடங்களில் நீளமென்று பொருள் கொள்ளுதலுமாம்.
“இலக்கம்,” “யோசனை” என்ற சொற்கள் எடுத்து எல்லா வாக்கியங்களிலுங் கூட்டப் பட்டன; முதனிலைத்தீவகம்.

“பாற்கடல் நாலெட்டிலக்கமியோசனை, “திகழ் பணி மூன்று,” “உத்தமர்நீள மிரண்டரை” என்ற
மூன்று விஷயங்கள் கீழ்ச் செய்யுளிற் கூறியனவே யானாலும்,
“பாற்கடலுள்மாற்கவிகோயிலகலமு மீரைந்து,” “வானளவுந்தீற்க மொரேழு”, “சிறந்தகல மேற்கவினொன்றரை” என்ற
மூன்றுவிஷயங்கள் புதியன வாதலால், இச்செய்யுள் கூறியதுகூற லென்னுங் குற்றத்தின்பாற்படா தென்க.
முன்சொன்ன மூன்று விஷயங்களை இங்கு மீளவுஞ்சொன்னது, அவற்றைச்சார்ந்த விஷயங்களனைத்தையும்
ஒருங்கே தொகுத்துணர்த்தவேண்டு மென்னுங் கருத்தினா லென்க;
“கூறியது கூறினுங் குற்றமில்லை, வேறொரு பொருளை விளைக்கு மாயின்” என்பது காண்க.
வெவ்வேறு நூல்களிற் கூறியவற்றின் மொழிபெயர்ப்பாக இங்ஙனம் தனித்தனி கூறினர்போலும்.

மால் – பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திருமகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இவற்றை யுடையவன்;
தன்னையடைந்தவர்க்குத் தன்பக்கல் மோகத்தை விளைப்பவ னென்றும் பொருள்கொள்ளலாம்.
மாற் கவி – இரண்டாம்வேற்றுமைத்தொகை யாதலின், உயர்திணைப்பெயரீறு திரிந்தது, “இயல்பின் விகாரம்”,
உம்மை – எச்சப்பொருளது, ஈரைந்து – பண்புத்தொகை. அளவும் – அளாவும் என்பதன் விகாரம்.
இனி, “வான் அளவும்” என்பதற்கு – ஆகாயம்வரையிலும் என்று உரைத்தல் சிறப்பன்று.
“தீர்க்கம்” என்ற வடசொல் எதுகைநோக்கி, “தீற்கம்” என்று விகாரப்பட்டது.
சிறந்தகலம் – சிறந்தஅகலம் என்றதன் தொகுத்தல்.
“ஏல் கவின்” என்ற வினைத்தொகையில், லகரம் திரிந்தது, எதுகைநயம்நோக்கி யென்க.
இனி, ஏல் என்பதை முதனிலைத்தொழிற்பெயரென்று கொண்டு, இரண்டாம் வேற்றுமையுருபும்பயனுந் தொக்கதொகை யாக்கி,
ஏற்றலையுடைய அழகென்றலு மொன்று.
நீளத்துக்குஏற்ற அகலமாய் அமைந்து அழகுசெய்து சிறப்ப தென்பது தோன்ற, “சிறந்தகலம்” என்றும், “ஏற்கவின்” என்றுங் கூறின ரென்க.
உத்தமர் – சிறந்தவர்; உத்தமபுருஷர்.
“மால் கவி” என்பதற்கு – மேகங்கள் படிகின்ற வென்று உரைப்பாரு முளர்; பெருமையோடு கவிந்த வென்பர் ஒருசாரார்.

இனி, இச்செய்யுளை ஊன்றி நோக்குமிடத்து, இது இந்நூலாசிரியர் செய்ததன்றி வேறியாரோ செய்து
இந்நூலினிடையே சொருகுகவியாகச் சேர்த்ததென்று சொல்லவும் இடமுண்டு; இத்தன்மையதை வடநூலார் “ப்ரக்ஷிப்தம்” என்பர்.
இங்ஙனம் ஊகித்தற்குஉரிய காரணங்கள்: –
(1) இவ்வகைப் பிரபந்தத்திற் செய்யுள்தோறும் பிரபந்தத்தலைவன் பெயரையேனும் தலப் பெயரையேனுங் கூறும்
மரபிற்கு மாறாக “உத்தமர்” என்ற பொதுப்பெயரைக் கூறுதல்.
(2) கீழ்ச்செய்யுளோடு இச்செய்யுள் ஒருசார் கூறியது கூறலாதல்.
(3) இப்பிரபந்தச்செய்யுள்களின்தொகை 110 என முழுத்தொகையாகாது, இச்செய்யுளைச்சேர்க்குமிடத்து 111 – எனச் சொச்சத்தொகை கொள்ளுதல்.
(4) “நீளம்” என்ற சொல்லைக் கடைநிலைத் தீபகமாக முன்வாக்கியங்களிலும்
“தீற்கம்” என்பதை இடைநிலைத்தீபகமாக முன்பின்வாக்கியங்களிலுங் கூட்டுதற்கு இடமின்றி
“அகலம்” என்ற சொல் இடையிடையேவந்துநின்று “பாற்கடல்,” “பணி” என்றவற்றிற்கு இன்ன அளவென விளங்கவொட்டாமை.
(5) “மாற்கவி” என்ற சொற்றொடரும் “தீற்கம்” என்ற சொற்பிரயோகமும் சிறவாமை.
(6) அவற்றோடு, “சிறந்தகலம்,” “ஏற்கவின்” என்ற தொடர்கள் சொல்லமைப்பிலும் பொருள்வளத்திலுஞ் சிறப்பின்றித்
திவ்வியகவியான ஐயங்காரது செய்யுள்நடையழகிற்கு ஏலாமை.
(7) “வானளவும்” என்றது பயனின்றிநிற்றல்.
இவை முதலாக “குன்றக்கூறல், மிகைபடக்கூறல், கூறியதுகூறல், வழூஉச்சொற்புணர்த்தல், மயங்கவைத்தல்,
வெற்றெனத்தொடுத்தல், நின்றுபயனின்மை” என்ற நூற்குற்றங்களும், பிறவும் உய்த்துணர்ந்து கொள்க.
ஐயங்காரது செய்யுள்களின் சொற்பொருள்வளங்கள்
“தேனையு மமுதையு மனைய தீஞ்சொலோர்ந், தானையின்கன்றென வமைக்கும் பாடலான்,
ஏனைய பாட லொன்றேனு மோதிலான், பூனைபோல்வஞ்சனைப் புந்திகொண்டிலான்” என்று கொண்டாடும்படியிருத்தல், பிரசித்தம்.

———-

அடித்தலம் அந்த அதலம் பொரு திரை ஆழி வையம்
கடித்தலம் நேமிக்கிரி உடை ஆடை கபாலி முன் நாள்
மிடித்து அலமந்தது ஒழித்தான் அரங்கன் விழி இரு கோள்
முடித்தலம் அண்ட முகடு இனி யாம் என் மொழிவதுவே –7-

(இ – ள்.) முன்நாள் – முற்காலத்தில்,
கபாலி – (பிரமனது) தலையோட்டை(க் கையிலே) யுடையவனாகிய சிவன்,
மிடித்து – (அப்பிரமதேவனது சாபத்தால்) வறுமையுற்று,
அலமந்தது – (கண்டஇடமெங்கும் இரந்து) திரிந்து வருந்தியதை,
ஒழித்தான் -போக்கியருளியவனான,
அரங்கன் – திருவரங்க நாதனுக்கு, –
அடி தலம் – திருவடிக ளிருக்குமிடம்,
அந்த அதலம் – அந்த (கீழுலகமாகிய) அதலலோகமாம்:
கடி தலம் – திருவரை யிருக்குமிடம்,
பொரு திரை ஆழி வையம் – மோதுகின்ற அலைகளையுடைய கடலாற் சூழப் பட்ட பூலோகமாம்;
உடை ஆடை – (அத்திருவரையில்) உடுக்கப்படுவதாகிய வஸ்திரம்,
நேமி கிரி – (அப்பூலோகத்தைச் சூழ்ந்திருக்கின்ற) சக்கரவாள பர்வதமாம்;
விழி – திருக்கண்கள்,
இரு கோள் – சூரிய சந்திரர்களாம்;
முடி தலம் – திருமுடி யிருக்குமிடம்,
அண்டம் முகடு – அண்டகோளத்தின் உச்சியாம்; (என்றால்),
இனி யாம் மொழிவது என் – (அப்பெருமானது திருவுருவத்தின் பெருமையைக் குறித்து) இனி நாம் சொல்லத்தக்கது யாதுஉளது!

எம்பெருமானது விராட்ஸ்வரூபத்தின் அல்லது விசுவரூபத்தின் மகத்துவத்தைச் சிறிதுஎடுத்துக்காட்டி,
அது முழுவதுங்கூறுதற்கரிதென்று அதன் அருமைபெருமைகளை விளக்கியது,
இது. சிவபிரான் இரத்தலைத் திருமால் ஒழித்த வரலாற்று முகத்தால், எம்பெருமானுடைய பரத்துவத்தை வெளியிட்டவாறு.

அதலம் – கீழேழுலகங்களி லொன்று; இங்கே, கீழுலகமென்றமாத்திர மாய்நின்றது.
“அந்த” என்று சேய்மைச்சுட்டாற் குறித்தனர், அது பலயோ சனைதூரங்கட்கு அப்பாலுள்ளதனால்; உலகறிசுட்டுமாம்.
வையம் – (பொருள்களை) வைக்குமிட மெனக் காரணப்பொருள்படும்.
நேமிக் கிரி – ஏழுமகா த்வீபங்களைச் சூழ்ந்திருக்கின்ற ஏழு பெருங்கடல்களுக்கும் அப்பாற் கோட்டைமதில்போலச் சூழ்ந்துள்ளதொரு பெருமலை.
சக்ராகாரமாக (வட்டமாக) ப்பூமியைச் சூழ்ந்திருத்தல்பற்றி, அதற்குச் சக்ரவாளமென்று பெயர். அதன் பரியாயநாமமாக “நேமிக்கிரி” என்றார்.
நேமி – சக்கரம், கிரி – மலை. உடை, உடு – பகுதி: ஐ – செயப்படுபொருள்விகுதி.
அலமந்தது – இறந்தகாலத்தொழிற்பெயர்; அலமா – பகுதி; ஈறுகுறுகிற்று. ஒழித்தான் – பெயர்.
கோள் – க்ரஹமென்ற வடமொழிப்பெயர்க்கு ஏற்ற தமிழ்ச்சொல்.
இருசுடரிற் சூரியன் வலக்கண்ணும், சந்திரன் இடக்கண்ணுமாம். தலம், கடி, நேமி, கிரி, கபாலீ, அதலம், அண்டம் – வடசொற்கள்.

————

திண் சுடர் ஆழி அரங்கேசர் திக்கு திருச் செவியில்
மண் கழலில் சத்ய லோகம் சிரத்தில் மருத்து உயிரில்
தண் கதிர் உள்ளத்தில் வான் உந்தியில் செந்தரணி கண்ணில்
ஒண் கனல் இந்திரன் வாழ் முகப் போதில் உதித்தனரே –8-

(இ – ள்.) திண் சுடர் ஆழி அரங்கேசர் – வலிமையையும் ஒளியையு முடைய சக்கராயுதத்தை யேந்திய திருவரங்க நாதரது,
திரு செவியில் – அழகிய காதிலிருந்து,
திக்கு – திக்குக்களும்,
கழலில் – திருவடிகளிலிருந்து,
மண் – பூமியும்,
சிரத்தில் – திருமுடியிலிருந்து,
சத்யலோகம் – சத்தியலோகமும்,
உயிரில் – உயிரிலிருந்து,
மருத்து – வாயுவும்,
உள்ளத்தில் – மனத்திலிருந்து,
தண் கதிர் – குளிர்ச்சியான கிரணங்களையுடைய சந்திரனும்,
உந்தியில் – திருநாபியிலிருந்து,
வான் – ஆகாயமும்,
கண்ணில் – திருக்கண்ணிலிருந்து,
செம் தரணி – செந்நிறமுள்ள சூரியனும்,
வாழ் முகம் போதில் – சிறப்புற்ற தாமரைமலர்போன்ற திருமுகத்திலிருந்து,
ஒள் கனல் இந்திரன் – ஒளியுள்ள அக்கினியும் இந்திரனும்,
உதித்தனர் – (ஆதியில்) தோன்றினார்கள்; (எ – று.)

இது – புருஷஸூக்தத்திற் கூறிய விஷயம்; ‘மறைப்பொருள்.’ அங்குக் கூறிய முறை –
“தண்கதிர் உள்ளத்தில், கண்ணில் தரணி, முகத்தில் இந்திரன் கனல், உயிரில் மருத்து, உந்தியில் வான்,
சிரத்திற் சத்யலோகம், கழல்களில் மண், திக்குக்கள் திருச்செவியில்” என்றுஉள்ளது.
இவ்விஷயம், இதிஹாஸபுராணாதிகளிலும் காணப்படுகின்றது.
“கண்ணிலே சூரியனும், மனத்திலே சந்திரனும், பிராணனிலே வாயுவும், முகத்திலே அக்கினியும், நாபியிலே அந்தரிக்ஷமும்,
சிரத்திலே மேலுலகமும், கர்ணத்திலே திசையும், பாதங்களிலே பூமியும் உண்டாயின” என்றது, விஷ்ணுபுராணம்.
பிறவும் இங்ஙனம் கண்டுகொள்க; விரிப்பிற் பெருகும்.

திக்கு, மண், சத்யலோகம், மருத்து, தண்கதிர், வான், தரணி, கனல், இந்திரன் என
அஃறிணையும் உயர்திணையும் கலந்து எண்ணி, மிகுதியால், ‘உதித்தனர்’ என உயர்திணைப்பன்மைமுடிபைப் பெற்றன;
“பார்ப்பா ரறவோர் பசுப்பத்தினிப்பெண்டிர், மூத்தோர் குழவி யெனுமிவரை” என்றவிடத்துப் போல,
திக்கு மண் சத்யலோகம் வான் என அஃறிணைப்பொருள் நான்காக,
மருத்து தண்கதிர் தரணி கனல் இந்திரன் என உயர்திணைப் பொருள் ஐந்தாதலால், மிகுதி யெனப்பட்டது;
அன்றி அஃறிணையும் உயர்திணையும் விரவிச் சிறப்புப்பற்றி உயர்திணையால் முடிந்தன வெனினும் அமையும்;
“பொன்னனும் குதிரையும் வந்தார்கள்” என்றாற் போல: அஃறிணையினும் உயர்திணை சிறந்ததென்பது வெளிப்படை.
இத்திணைவழுவமைதியை “திணை பால்பொருள் பல விரவின சிறப்பினும், மிகவினும் இழிபினும் ஒருமுடிபினவே” எனக் கூறினர் நன்னூலார்.
மருத்து, தண்கதிர், தரணி, கனல் என்ற சொற்கள் – தேவர்களைக் குறித்தலால், உயர்திணையாம்;
ஆகவே, “உதித்தனர்” என்ற பாடம் வழு வென்று கொண்டு ‘உதித்தன’ என்று திருத்துதல் குற்சிதமாத லுணர்க.
இனி, ப்ரத்யேகாந்வயமாக, “உதித்தனர்” என்ற முற்றை அதற்கு ஏற்ப ‘உதித்தன’, ‘உதித்தது’, ‘உதித்தனன்’
என மாற்றித் தனித்தனிகூட்டிமுடித்தலும் இலக்கணமே.

ரங்கேஸர், திக், ஸத்யலோகம், ஸிரஸ், மருத், தரணி, இந்த்ரன், முகம் – வடசொற்கள்.
ரங்க + ஈசர் = ரங்கேசர்: வடமொழிப்புணர்ச்சி, குணசந்தி: அ ஆ முன் இ ஈ வரின், அவ்விரண்டுங் கெட ஓர்ஏகாரம் தோன்றும்.
“செவியில்” முதலியவற்றில், இல் – ஐந்தனுருபு, நீக்கப்பொருளது. திருவை மற்றைத்திருவவயவங்களுக்குங் கூட்டுக.
சத்யலோகம் – மேலேழுலகங்களுள் மேலது; அதுவே பிரமலோகம்.
தண் கதிர் – பண்புத்தொகை யன்மொழி.
கனல் இந்திரன் – உம்மை தொக்குப் பன்மை விகுதி பெறாது வந்ததனால், உயர்திணைப் பெயர்ச்செவ்வெண்.
வாழ்தல் – மேம்படுதல், முகப்போது – முன் பின்னாகத்தொக்க உவமைத்தொகை.
“வாழ்” என்பதைப் போதிற்கு அடை மொழியாக்கி, இங்கே போதிற்கு வாழ்வு – காலபேதத்தால் வாடுதலும் குவிதலும் இன்றி
எப்பொழுதும் மலர்ந்தபடியே விளங்குத லென்னலாம்.
அங்ஙனம் ஒருமல ருண்டானால் அதுவே எம்பெருமானது திருமுகத்திற்கு உவமையாகு மென இல்பொருளுவமை கூறியவாறாம்.
அரங்கரது நகை முகத்திற்கு உவமையாதற்கு ஏற்ப “வாழ்போது” என்றன ரென்க.
இனி, “வாழ்” என்ற வினைத்தொகையைக் காரணப்பொருளதாக்கி முகத்தோடு இயைத்து,
(அடியவர்) பேரின்பவாழ்வடைதற்குக் காரணமான முக மென்றலுமாம்.
திண்மை – ஆழிக்கு அடைமொழி. ஆழிக்குத் திண்மை – எவ்வளவு வலிமையையுடைய கொடியவரையும் தவறாது அழித்தல் முதலியன.
ஆழிக்குச் சுடர் – ஆயிரங்கோடி திவாகரன்போ லொளிர்தல்.
இனி, திண்சுடர் – மிக்கவொளி யென்னவுமாம். தரணிக்குச் செம்மை – இனம்விலக்க வந்ததல்லாத இயற்கையடைமொழி.
இந்த்ரன் என்பது – பரமைசுவரிய முடையவ னென்று பொருள்படும்.
செய்யுளோசையின் பொருட்டு, “சத்தியலோகம்” என்னாது “சத்யலோகம்” என்றார்.

———-

புரம் ஆயிரம் திருக் கண் மலர் ஆயிரம் புண்டரிகக்
கரம் ஆயிரம் கழற் கால் மலர் ஆயிரம் கண்ணி முடிச்
சிரம் ஆயிரம் திரு நாமமும் ஆயிரம் செய்ய கையில்
அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி அரங்கருக்கே–9–

(இ – ள்.) செய்ய கையில் – சிவந்த (வலத்) திருக்கையிலே,
அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி – ஆயிரம்அரங்களைக்கொண்ட மிக்கவலிமையையுடைய சக்கராயுதத்தை யேந்திய,
அரங்கருக்கு – திருவரங்கநாதர்க்கு, –
புரம் ஆயிரம் – திருமேனி ஆயிரமாம்;
திரு கண் மலர் ஆயிரம் – செந்தாமரைமலர் போன்ற திருக்கண்கள் ஆயிரமாம்;
புண்டரிகம் கரம் ஆயிரம் – செந்தாமரைமலர்போன்ற திருக்கைகள் ஆயிரமாம்;
கழல் கால் மலர் ஆயிரம் – வீரக்கழலையணிந்த செந்தாமரைமலர்போன்ற திருவடிகள் ஆயிரமாம்;
கண்ணி முடி சிரம் ஆயிரம் – மலர்மாலையையும் கிரீடத்தையுந் தரித்த திருமுடிகள் ஆயிரமாம்;
திருநாமமும் ஆயிரம் – திருப்பெயர்களும் ஆயிரமாம்.

“தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க்கண்களாயி ரத்தாய்,
தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய் தமியனேன்பெரியவப்பனே” என்றார் நம்மாழ்வார்.

“வேதஞ்செப்பும், பேராயிரந் திண்பெரும்புயமாயிரம் பெய்துளவத், தாரார்முடியாயிரம்” என்றார் கம்பரும்.
இதன் கருத்து, மூன்றாஞ்செய்யுளினுரையிற் கூறப்பட்டது.

*”நமோஸ்த்வநந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே, ஸஹஸ்ரபாதாக்ஷிசிரோ ருபாஹவே,
ஸஹஸ்ரநாம்நே புருஷாய” என்ற வடநூல்மேற்கோளையுங் காண்க.

புரம், புண்டரீகம், கரம், நாமம், அரம் – வடசொற்கள்.
கண்மலர், கான்மலர் – முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகைகள்.
புண்டரீகமென்பது வெண்டாமரைக்குப் பெயராக நிகண்டுகளிற் கூறப்பட்டிருப்பினும், “புண்டரீகாக்ஷன்” என்ற இடத்திற் போல,
இங்கே, செந்தாமரையைக் குறித்தது; கொடியின் பெயர், இங்கு, மலர்க்கு இலக்கணை.
கழல் – வீரர் தமது வீரத்திற்கு அறிகுறியாகக் காலிலணிவது; வள்ளல்கள் தமது கொடைக்கு அறிகுறியாக அணிவது முண்டு.
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனங்களைத் தான் செய்தருளுதல் விளங்க,
எம்பெருமான் திருவடியிற்கழல்கட்டிக் கொண்டிருக்கின்றன னென்க.
இனி, கான்மலர் – நறுமணத்தையுடைய மலர் போன்ற, கழல் – திருவடி யென்றலுமாம்.
கண்ணி – முடியிற்சூடும் மாலை. நாமமுமாயிரம் – இறந்தது தழுவிய எச்சவும்மை யாதலால், இறுதியில் வைக்கப்பட்டது.
அரம் – சக்கரத்தின் ஆர். திண், திறல் – ஒருபொருட்பன்மொழி.
ஆழிக்குத் திண்திறலாவது – அசுரர் அரக்கர் முதலிய கொடியவ ரனைவரையும் கருதியமனத்தினுங்
கடுகச்சென்று கருவறுத்து உயிர்கவரும் ஆற்றல்.
திண் திறல் – வலிய போர்செய்யவல்ல என்றலு மொன்று. கண்ணி – திருத் துழாய்மாலையுமாம்.

———–

முன் நாள் விசும்பும் புவியும் திசையும் முறை வகுத்த
அன் நான்முகன் தனது ஆவி எல்லாம் மலர் ஆசனை ஆம்
மின் ஆர் மழை முகில் நல் நாகம் மீதில் விழி துயில் கூர்
எம் நாதனுக்கு ஒரு மூச்சு என்று வேதம் இசைக்கின்றதே –10-

(இ – ள்.) முன் நாள் – முற்காலத்தில் (மகாப்பிரளயம் நீங்கியவுடனே தான் எம்பெருமானது திருநாபிக் கமலத்திலிருந்து தோன்றிய காலத்தில்),
விசும்பும் – ஆகாயத்தையும்,
புவியும் – பூமியையும்,
திசையும் – மற்றை யெட்டுத் திக்குகளையும்,
முறை வகுத்த – (அந்தஎம்பெருமானது திருவயிற்றினுள்ளே தான்கண்ட) கிரமத்தின்படி வகைப்படுத்துச் சிருஷ்டித்த,
அ நான் முகன்தனது – நான்குமுகங்களையுடையவனான அந்தப்பிரமனது,
ஆவிஎல்லாம் – உயிர்முழுவதும் (வாழ்நாளெல்லாம்), –
மலர் ஆசனை ஆம் – செந்தாமரைமலரை (த் தான்வீற்றிருக்கும்) பீடமாகவுடையவளான திருமகளாகிற,
மின் – மின்னல்,
ஆர் – பொருந்திய,
மழை முகில் -கார்காலத்து மேகம் (நீலமேகம்) போன்ற திருமேனியையுடையவனான,
நல் நாகம்மீதில் விழிதுயில் கூர் எம் நாதனுக்கு – சிறந்த ஆதிசேஷன்மேல் திருக்கண்வளர்ந்த ருள்கின்ற நம்பெருமாளுக்கு,
ஒரு மூச்சு – ஓர்உயிர்ப்பாம் (ஒரு சுவாசமாம்),
என்று -, வேதம் இசைக்கின்றது – வேதம் சொல்லுகின்றது; (எ – று.)

பத்துத்திக்குகளுள் மேலை “விசும்பு” என்றும், கீழை “புவி” என்றும், மற்றையெட்டையும் “திசை” என்றுங் குறித்தார்.
ஐம்பெரும்பூதங்களுள் முதலதாகிய விசும்பையும், ஈற்றதாகிய புவியையுங் கூறவே, மற்றைப் பூதங்களையுங் கூறியவாறாயிற்று.
இவற்றைக் கூறியது, மற்றைச் சராசரப்பொருள்களுக்கும் உபலஷணம். அகரச்சுட்டு, பிரசித்தி பற்றியது.
மிகவிளங்குகின்ற மெல்லிய வடிவுபற்றி, திருமகளை மின்ன லென்றார்.
மார்பில் திருமகளையுடைய நீலநிறமுள்ளதிருமால், மின்னல்பொருந்திய நீர்கொண்டகாளமேகம் போல்வன்.
ஆதிசேஷனுக்கு நன்மை – எப்பொழுதும் பலவகைக் கைங்கரியங்களைச் செய்தலும், அழிவில்லாமையும் முதலியன.
இனி, நல்ல பாம்பென்னும் வழக்குப்பற்றி, “நன்னாகம்” என்றாருமாம்.
ஆவியெல்லாம் ஒருமூச்சு – பிரமனது உயிர்வாழ்க்கைநாளெல்லாம் எம்பெருமானுக்கு ஒரு மூச்சுவிடுங் கால மென்க.
இதனால், மிகநீண்டஆயுளையுடையவனென்று பிரசித்தனான பிரமதேவனது ஆயுளெல்லை காலவரையறைக்கு உட்படாத
திருமாலுக்கு ஒருமூச்சுவிடுங்காலவளவே யென்று எம்பெருமானது மேன்மையை விளக்கியதாம்.
படைப்புக்குள்ளான பிரமன் முதலிய ஜீவகோடிகளெல்லாம் காலவசப்பட்டனவே யென்பதும்,
காலவசப்படாதவன் எம்பெருமான் ஒருவனேயென்பதும் விளங்க, இதுகூறினார்.
கற்பங்கழிவதனால், எம்பெருமானது ஆயுள் கழிவதில்லையென்க. “ஒருமூச்சு” என்றதும் உபசார வழக்கே.

“கருடவாகனனுக் குலப்பிலாப்பிரமர் கழியும்நாள் கணத்துக்கும் பற்றா,”
“கமலரெண்ணிலர்க ளமர்ந்திடும் பதத்தைக் கழிந்திடுங்காலத்தைக் கடக்கும், விமலன்” என்ற மகாபாகவதமும்,
“ஓரிருபரார்த்தங் கழியுமேல் மலர்வீட்டுறைதரு நான்முக னுலக்கும், ஏர்கெழுபரார்த்த மிரண்டு வெண்டரங்கமெடுத்தெறி
தடங்கடன்முகட்டிற், கார்முகில்கமலக்காடுபூத்துறங்கு காட்சிபோற்கண்வளர் துளவத்,
தாரவன்றனக் கோரிமையென வுரைப்பர் சாற்று மவ்வுரை யுபசாரம்” என்ற ஸ்ரீபாகவதமும், காணத்தக்கன.

புவி, திஸா, நாகம், நாதன், வேதம் – வடசொற்கள். புவியென்பது வடமொழியில் ஏழாம்வேற்றுமைவிரி யாயினும்,
தமிழிற் பெயர்மாத்திரமாய் நிற்கும்.
வேதம் என்பது – (அறியவேண்டியவைகளையெல்லாம்) அறிவிப்பது என்று காரணப்பொருள்பெறும்.
“எந்நாதன்” என்றது, நம்பெருமாளென்ற திருநாமத்தின் பரியாயநாமமாய் நின்றது;
ஆகவே, பிரபந்தவிலக்கணப்படி இச்செய்யுளிற் பிரபந்தத்தலைவனதுபெயர் கூறியதாம்.
முதலடியிலும் மூன்றாமடியிலும் சிறப்புனகரமாகவும், இரண்டாமடியிலும் நான் காமடியிலும் பொதுநகரமாகவும் எதுகையமைத்தன ரென்க;
இவ்வாறு அமைத்தல், ஒருவகைநயம். இதனைப் பலவிடங்களிற் காணலாம்.
இனி, “என்னாதன்” என்ற பாடமும், என் நாதன் என்று பிரிந்து, எனக்குத் தலைவனென அத்திருவரங்கநாதனையே குறிக்கும்;
மந்நாதனென்பது, இதற்கு ஏற்ற வடமொழித்திருநாமமாம்.

—————-

எண்ணில் திகிரிப் பிறப்பிடம் ஆனதும் எண்ணுமவர்
நண்ணிச் சிறக்க இருப்பிடம் ஆனதும் நாசம் இல்லா
விண்ணின் பதிக்குக் கடைத்தலை ஆனதும் விண்ணவர் தம்
கண்ணில் சிறந்ததும் -மா நீர் அரங்கர் தம் கண்ணில் ஒன்றே -11–

(இ – ள்.) எண்ணில் – ஆராய்ந்துபார்க்குமிடத்து, –
திகிரி பிறப்பு இடம் ஆனதும் – சூரியனுக்குப் பிறந்த இடமாகியதும்,
எண்ணுமவர் நண்ணி சிறக்க இருப்புஇடம் ஆனதும் – (தன்னைத்) தியானஞ்செய்யும் அடியார்கள் பொருந்தி மேன்மைப்படுதற்குக் காரணமானதும்,
நாசம் இல்லா விண்ணின் பதிக்கு கடைத்தலை ஆனதும் – (எக்காலத்தும்) அழிதலில்லாத பரம பதத்திற்குச் செல்லும் வழிக்குத் தலைவாயிலாகியதும்,
விண்ணவர்தம் கண்ணின் சிறந்ததும் – தேவர்களுடைய கண்களைக்காட்டிலும் மேன்மைப்பட்டதும்,
மா நீர் அரங்கர்தம் கண்ணில் ஒன்றே சிறந்த காவேரிதீர்த்தத்தாற் சூழப்பட்ட திருவரங்கத்திலே யெழுந்தருளியிருக்கின்றவரான
நம்பெருமாளுடைய திருக்கண்களுள் ஒன்றேயாம் (வலக்கண்ணாம்); (எ – று.)

புருஷஹூக்தம் முதலியவற்றிற் கூறியபடி சூரியன் எம்பெருமானது திருக்கண்ணிலிருந்து ஆதியில் உண்டானதனால்,
“திகிரிப்பிறப்பிடமானது அரங்கர்தங்கண்ணிலொன்று” என்றார்;
முன்னும் (8) “செந்தரணி கண்ணில்” என்றமை காண்க.
(7) “அரங்கன்விழி யிருகோள்,”
“சந்த்ர ஸூர்யௌச நேத்ரே” என்றபடி எம்பெருமானுக்கு வலக்கண் சூரிய னென்பது பற்றி, மற்றை மூன்று விஷயங்கள் கூறுகின்றார்.
சூரியனைத் தியானித்தல் முதலியன செய்பவர். இம்மை மறுமைகளிற் பலவகைநன்மைகளையடைந்து மேம்படுதல்பற்றி,
“எண்ணுமவர் நண்ணிச் சிறக்க இருப்பிடமானது” எனப்பட்டது;
சூரியபகவானுக்கு அவ்வகைமகிமையிருத்தல், “ஆதித்யஹ்ருதயம்” முதலியவற்றால் விளங்கும்.
இருப்பிடம்” என்றது, காரண மென்ற பொருளில் வந்தது; இலக்கணைவழக்கு.
விருப்பு இடம் என்று எடுத்து, விரும்பப் படுவதாகிய விஷய மென்று பொருள்கொள்ளலுமாம்.

“உறுகால்கிளர்பூதமெலா முகினும், மறுகா நெறி” என்றபடி பலவும் அழியுங் கற்பாந்தகாலங்களிலும்
பரமபதம் அழியாது நித்தியமாயிருத்தலால், “நாசமில்லா விண்” என்றார்; “கலங்காப்பெருநகரம்” எனப் பெரியாரும் பணித்தார்.
ஜீவாத்மாக்கள் அர்ச்சிராதிகதியாகிற மார்க்கத்தாற் பரமபதத்திற்குச் செல்லும்பொழுது சூரியமண்டலத்தைப் பிளந்துகொண்டு
அதன்நடுவினாற் செல்லுதலால், “நாசமில்லா விண்ணிற்பதிக்குக் கடைத் தலையானது” எனப்பட்டது;

(“இருளகற்று மெறிகதிரோன் மண்டலத்தூடேற்றி வைத் தேணிவாங்கி,
அருள்கொடுத்திட் டடியவரையாட்கொள்வா னமருமூ ரணியரங்கமே,”
“வெங்கதிர்ப் பரிதிவட்டத் தூடுபோய் விளங்குவாரே,”
“காரார் புரவியேழ் பூண்ட தனியாழித், தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக்கீண்டுபுக்,
காராவமுத மங்கெய்தி யதினின்றும், வாரா தொழிவதொன் றுண்டே,”
“மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தி னன்னடுவு, ளன்னதோ ரில்லியி னூடுபோய் வீடென்னுந்,
தொன்னெறிக்கட் சென்றார்” என்ற ஆழ்வாரருளிச்செயல்களைக் காண்க.)

“அந்தச்சூரியபகவான் தான், இராப்பகல்களின் ஏற்பாட்டிற்குக் காரணமாயும், யோகிகளுக்குச் சகலகிலேசங்களும்
விடுபட்டுப்போகுங்காலமாகிய முடிவுகாலத்தில் தேவயாநமார்க்கமாயு மிருக்கின்றான்” என்றது, ஸ்ரீவிஷ்ணுபுராணம்.

தேவயாநமெனினும், அர்ச்சிராதிமார்க்கமெனினும் ஒக்கும்;
அதாவது – முதலில் அக்கினி, பின்பு முறையே பகல், பூர்வபக்ஷம், உத்தராயணம், வருஷம், காற்று, சூரியன்,
சந்திரன், மின்னல், வருணன், இந்திரன், பிரமன் என்பவர்களுடைய எல்லைகளாம்;
மோக்ஷமடைபவர்கள் போகும் வழி இது. இதன் விவரத்தை, ஸ்ரீபிள்ளைலோகாசாரியர் அருளிச்செய்த
அர்ச்சிராதி யென்னும் ரஹஸ்யக்ரந்தம் முதலியவற்றிற் பரக்கக்காணலாம்.
சூரியமண்டலத்தைக் கீண்டு புக்கு ஊடுருவி அப்பாற்செல்லுதல் அண்டகடாகத்தைப்பேதித்துப் புறப்படுவதற்கு முற்பட்ட தாகையால்,
சூரியனை முக்திமார்க்கத்திற்குத்தலைவாயி லென்றார். கடைத்தலை = தலைக்கடை: முன்பின்னாகச்சொல்நிலை மாறியது, இலக்கணப்போலி,
முதலிலேயுள்ள வாயில் அல்லது முதலாகிய வாயில் என்க. தலை – முதல், கடை – வாயில்.

தேவாதிதேவனாகிய எம்பெருமானுக்கு வலக்கண்ணாகிற சூரியன் அப் பெருமானுக்கு அடிமையாகிற தேவர்களுடைய
கண்களினும் மிகப்பலமட ங்குசிறத்தலால், ‘விண்ணவர்தங் கண்ணிற் சிறந்தது’ எனப்பட்டது.
மற்றும், “கண்ணாவா னென்றும், மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே,”
“சக்ஷுர்மித்ரஸ்ய வருணஸ்யாக்நே:” என்றபடி.
மண்ணுலகத்தவர்க்கேயன்றி விண்ணுலகத்தவரான சூரியன் முதலிய தேவர்கட்கும் கண்போன்றவனான எம்பெருமானுக்கு
“கண்ணிற் சிறந்த வுறுப் பில்லை”, “ஸர்வேந்த்ரியாணாம் நயநம் ப்ரதாநம்” என்றபடி
சிறந்த கண்ணென்னும் உறுப்பாகின்ற சூரியனை அவ்விண்ணவர்களுடைய கண்ணினுங் சிறந்ததென்று சொல்லுதல் ஏற்கும்.

அன்றியும், “ஜகச்சக்ஷு:” என்றபடி உலகத்து உயிர்கட்கெல்லாங் கண்ணாயிருக்குந்தன்மை சூரியனுக்குஉளதே யன்றி
மற்றைத்தேவர்களுடைய கண்களுக்கு இல்லை யாகையால், அரங்கர் தங்கண்ணிலொன்றாகிய சூரியன்
விண்ணவர்தங்கண்ணிற் சிறந்ததெனத்தகுவன்.

“புரவியே ழொருகா லுடைய தேரிலே திருச்சக்கரமொத்துக் காலசக்கரச்செங்கோல்நடாவி
ஜ்யோதிஸ்சக்ரவொளிசுருக்கி அக்நீஷோ மீயதேஜோம்ருதத்துக்குஊற்றும் மந்தேஹர்க்குச்செந்தீயும்
முக்திமார்க்கத் தலைவாசலும் கண்ணாவான் கண்ணிற்பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே”
என்ற ஆசார்யஹ்ருதயும் இங்கு நோக்கத்தக்கது.

திகிரி – வட்டம், வட்டவடிவமான சூரியனுக்கு, வடிவுப்பண்பாகுபெயர். நாஸம் – வடசொல்.
“நாசமில்லா விண்” எனவே, பரமபத மென நன்கு விளங்கிற்று; சுவர்க்கலோகம்முதலியன கற்பந்தோறும்அழியு மென அறிக.
“விண்” என்று தேவலோகமாகிய சுவர்க்கத்திற்கும் பெயருண்டாதலால், அதனை விலக்குதற்கு “நாசமில்லா” என்ற
அடைமொழி கொடுக்கவேண்டிய தாயிற் றென்க. விண் – ஆகாயம்: இங்கே, பரமாகாசம்;
இன் – சாரியை. பதி – வழி. விண்ணிற்பதி – நான்கனுருபும்பயனுந்தொக்கதொகை.
இனி, “விண்ணிற்பதி” என்றதை இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகக் கொண்டு, பரமபதமாகிய நகர மென்றலுமாம்;
பதி – ஊர். இன் அல்லது இல் – ஏழனுருபு எனக் கொண்டு, பரமபதமென்ற திவ்வியலோகத்தி லுள்ள
ஸ்ரீ வைகுண்டநகர மென வகுத்துரைத்தலும் அமையும்.
விண்ணவர்தம் – தம். சாரியை. கண்ணின், இன் – ஐந்தனுருபு, எல்லைப்பொருளது.
காவேரிதீர் த்தத்திற்குச் சிறப்பு – தன்னில்நீராடியவர்க்கும் தன்கரைகளில்வாழ்பவர்க் கும் மாத்திரமே யன்றித்
தனதுதீர்த்தத்திற் பரிசித்த காற்றுச் செல்லுமிட மவ்வளவும் உள்ளார்க்கும் முத்திதரவல்ல மகிமை.
இருப்பிடம் – உறையு மிடம் என்றுகொண்டு, சூரியனைத் தியானித்தவர் அந்தத் தியானத்தின் பயனாகச்
சூரிய லோகத்தையடைவ ரென்னும் பொருளைக் கூறியதாக்கலு மொன்று.
மா நீர் – அரங்கத்திற்கு அடைமொழி. அரங்கர்க்கு அடைமொழியாக்கி சிறந்த தன்மையையுடைய
(திருக் கல்யாண குணங்களை யுடைய) ரங்கநாத ரென்னவுமாம்: இப்பொருளில், நீர் – நீர்மை யென்ற பண்பின் அடி,

————

புறக்கன்று புல் இதழ் முந்நீர் பிரசம் பொரு இல் செம்பொன்
நிறக்குன்று கன்னிகை எண் கிரி தாது நிலம் அதனுள்
பிறக்கும் துகள் முது மாசுணம் நாளம் பிரமன் வண்டு
சிறக்கும் திகிரி அரங்கேசர் உந்திச் செழு மலர்க்கே –12-

(இ – ள்.) சிறக்கும் – மேன்மையுற்ற,
திகிரி – சக்கராயுதத்தை யேந்திய,
அரங்க ஈசர் – திருவரங்கநாதரது,
உந்தி – திருநாபியில் தோன்றிய,
செழுமலர்க்கு – செழுமையான தாமரைமலர்க்கு, –
புறம் குன்று – (பூமியைச்சூழ்ந்த கடலுக்கு) அப்பால் (மதில்போலச்) சூழ்ந்திருக்கின்ற சக்கரவாளபர்வதம்,
புல் இதழ் – புறவிதழாம்;
முந்நீர் – கடல்,
பிரசம் – தேனாம்;
பொருவு இல் – ஒப்பில்லாத,
செம் பொன் – சிவந்த பொன்மயமான,
நிறம் குன்று – ஒளியையுடைய மகாமேருபர்வதம்,
கன்னிகை – கொட்டையாம்;
எண் கிரி – அஷ்ட குலபர்வதங்கள்,
தாது – அகவிதழ்களாம்;
நிலம் – பூமி,
அதனுள் பிறக்கும் துகள் – அம்மலரினுள்ளே தோன்றும் மகரந்தப்பொடியாம்;
முது மாசுணம் – பழமையான பெரும்பாம்பு (ஆதிசேஷன்),
நாளம் – தண்டாம்;
பிரமன் – பிரமதேவன்,
வண்டு – வண்டாவன்; (எ – று.)

இதிற் கூறிய உவமை, தோற்றங் காரணமாகக் கற்பித்தது; மெய்யுவமை.
திருமாலின் திருநாபியினின்று பிரமனுடன் தோன்றிய அண்டகோ ளத்தையே நாபித் தாமரைமலராகக் கொண்டு கற்பனை கூறலாயினர்.

“எல்லாத்தீவுகட்கும் நடுவிலுள்ளதான ஜம்பூத்வீபத்திற்கு நடுவில், மேருவென்கிற சுவர்ணபர்வதமானது –
எண்பத்துநாலாயிரம்யோஜனை உயரமுள்ளதும், பதினாறாயிரம்யோஜனை பூமிக்குள்ளே உருவியதும்,
முப்பத்தீராயிரம்யோஜனை தலையில்விரிந்ததும், பதினாறாயிரம்யோஜனை அடியில்விரிந்ததுமாகி,
பூமியென்னுந் தாமரைமலர்க்குக் கர்ணிகைபோல விளங்குகின்றது” என்றது, ஸ்ரீவிஷ்ணுபுராணம்.

(“கமலமென்பொகுட்டின், நடுவுறை மேருவெனும்வரை யுடைத்தாய் நாவலந்தீவு வாய்த்திடுமே” என்ற ஸ்ரீபாகவதத்தையும்,
“பூமியென்னுங் கமலத்தின் பொகுட்டுப் போலும் பொலங்கிரி” என்ற மகாபாகவதத்தையும்,
“விண்ணுயர் சம்புத்தீவி னடுவுநின்ற மேருவரை செங்கமலப்பொகுட்டுப்போல, நண்ணும்” என்ற கந்தபுராணத்தையும் காண்க.)
புல் இதழ் – (மலரின் வெளியே) புல்லுகின்ற (சார்ந்துள்ள) இதழ் என வினைத்தொகை; புல்லுதல் – சார்தல்.
இனி, (நிறம் மணம் மென்மை அழகு இவற்றில் அகவிதழ்போலச் சிறப்புறாமையாற்) புல்லிதாகிய இதழ் எனப் பண்புத்தொகையுமாம்;
புல்லிது – புன்மையுடையது: இப்பொருளில், புல் – புன்மை யென்ற பண்பின் அடி; புன்மை – சிறுமை.
அண்டத்திற் பூமி கடல்களுக்குப் புறத்தேயுள்ள குன்றைப் புறவிதழென்றும்,
அவற்றினகத்திலுள்ள குன்றுகளை அகவிதழென்றுங் கூறினார்.

கடல், திரவபதார்த்தமாதலால், இங்கே தேனெனப்பட்டது.
மகாமேருவைக் கொட்டையென்றது, நிறமும், “பரந்தும்பர்நிமிர்ந்திடு பைம்பொன்வரை” என்றபடி உயர்ந்து தலை விரிந்த வடிவமும்பற்றி.
எண்கிரி – மால்யவாந், கந்தமாதநம், நிஷதம், ஹேமகூடம், இமயம், நீலம், சுவேதம், சிருங்கம் என்பன;
சிறிது வேறுபடக் கூறுதலு முண்டு.

பூமி, துகள்மயமாதலால், இங்கே பூந்துக ளெனப்பட்டது.
இனி, தாது – கேஸரமென்றும் கிஞ்ஜல்கமென்றுங் கூறப்பட்டு இதழ்களின் உட்புறத்திலே கர்ணிகையைச் சுற்றி
மெல்லிய கம்பிகள்போலவும் பட்டு நூல்கள்போலவுமுள்ள பூந்தாது என்றும்,
அத்தாதிற்பிறக்குந்துகள் – புஷ்ப தூளியெனப்படும் மகரந்தப்பொடியென்றும் உரைப்பாரும் உளர்.
தேன் – மலரினுள்ளே யுள்ளது. மகாமேருவைச் சார்ந்துள்ள மலைகளைக் கேஸர பர்வத மென வழங்குதலுங் காண்க.

ஆதிசேஷனை நாளமென்றது, உள் துளையுள்ள நீண்ட வடிவுபற்றி;
(“தண்ணந்தாமரைத்தாளெனத் தடக்கை யாற் பிலத்தில், நண்ணுஞ் சேடனையெடுத்து” என்றார் நைடதத்திலும்.)
கீழே யிருந்து உலகத்தைத்தாங்குகின்ற ஆதிசேஷன், உலகமாகிய தாமரை மலர்க்குக் காம்பாவன்.
இத்தாமரைமலர்க்கு மேலிடமெனத்தக்க சத்திய லோகத்தில் வாழ்தலாலும்,
எப்பொழுதும் வேதகீதஞ்செய்துகொண்டிருத்த லாலும், பிரமனை வண்டெனலாயிற்று;
“வண்டா யய னான்மறை பாட மலர்ந்த தொரு தாமரைப்போது,
பண்டாலிலையின்மிசைக்கிடந்து பாரு நீரும்பசித்தான்போ, லுண்டா னுந்திக்கடல் பூத்தது” என்றார் கம்பரும்.

திருமாலின் திருநாபியை, இவ்வகைப்பெருந்தாமரைமலரைப்பூத்ததொரு பெருநீர்நிலையாகக் கொள்க.
வண்டுக்கு ரீங்காரம்போல, பிரமனுக்கு வேதங்களை முகங்களாற் பாடுதல். மலரின்மேலிடத்தில் ஏகே்தசத்தில்
வண்டு மொய்த்தல்போல, அரங்கேசருந்திச்செழுமலரின்மேலே ஏகதேசத்திற் பிரமன் அடங்கிக்கிடக்கின்றா னென,
திருமாலினது திருநாபிக்கமலத்தின் பெருமையைத் தெரிவித்தார்.

முந்நீர் – படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மைகளை யுடையது;
அல்லது, ஆற்றுநீர் ஊற்றுநீர் மழைநீர் என்னும் மூன்றுவகை நீரை யுடையது; பண்புத்தொகை யன்மொழி.
கன்னிகை – பொகுட்டு; கர்ணிகா என்ற வடசொல்லின் சிதைவு. கிரி. நாளம், ப்ரஹ்மா – வடசொற்கள்.
ஆதிசேஷன் பிறப்பிறப்பில்லாத நித்ய னாதலால், “முதுமாசுணம்” என்றார்; தொன்று தொட்டுள்ள மகாநாக மென்க.

————-

இரு கூலமும் பொரு மா நீர் அரங்கத்தில் எந்தை அம் தண்
முருகு ஊர் கமல முனி ஆய் வகுக்கும் முறையினால்
புரு கூதனுக்குத் திருத் தம்பி ஆகி புரக்கும் உமை
ஒரு கூறு கொண்ட அரன் ஆய அழிக்கும் உகாந்தத்திலே –13-

(இ – ள்.) இரு கூலமும் – இரண்டு பக்கத்துக் கரைகளையும்,
பொரு -மோதி யுடைக்கின்ற,
மா நீர் – மிகுதியான (காவேரி) நீர்ப்பெருக்கினாற் சூழப்பட்ட,
அரங்கத்தில் – திருவரங்கத்திலே எழுந்தருளியிருக்கின்ற,
எந்தை – எம்பெருமான் (நம்பெருமாள்), –
அம் – அழகிய,
தண் – குளிர்ச்சியான,
முருகு ஊர் – வாசனை வீசுகின்ற,
கமலம் – தாமரை மலரில் தோன்றிய,
முனி ஆய் – பிரமனாகி,
முறைமையினால் வகுக்கும் – கிரமப்படி (உலகங்களையும் அவற்றிலுள்ள சராசரங்களையும்) படைத்தருள்வன்;
புருகூதனுக்கு திரு தம்பி ஆகி – தேவேந்திரனுக்குச் சிறந்த தம்பியாய்த் தோன்றி (உபேந்திர மூர்த்தியாகி),
புரக்கும் – காத்தருள்வன்;
உமை ஒரு கூறு கொண்ட அரன் ஆய் – பார்வதியை ஒருபாகத்திலே (தனது உடம்பின் இடப்பக்கத்திலே) வைத்துக்கொண்ட சிவனாகி,
உக அந்தத்தில் – யுகமுடிவுகாலத்தில் (கற்பாந்தகாலத்தில்),
அழிக்கும் – அழித்தருள்வன்; (எ – று.)

“ஆக்குமா றயனா முதலாக்கியவுலகங், காக்குமாறு செங்கண்ணிறை கருணையங்கடலாம்,
வீக்குமா றரனா மவைவீந்தநாண் மீளப், பூக்கு மாமுத லெவ னவன்பொன்னடி போற்றி” என்ற
வில்லிபுத்தூரார்பாரதம், இங்கு நோக்கத்தக்கது.

பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தராத்மாவாய் நின்று ஸ்ரீமந் நாராயணன் தானே படைப்புஅழிப்புக்களைச் செய்வ னென்க.
இந்த ஒற்றுமைநயம்பற்றியே, ஆழ்வாரும் “சிவனா யயனானாய்” என்றும்,
“முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்றும்,
“தாமோதரனுருவாகிய சிவற்குந் திசைமுகற்கும்” என்றும்,
“அரனயனென வுலகழித்தமைத்துளனே” என்றும் அருளிச்செய்தார்.

இவர்கள் எம்பெருமானுக்குச் சரீரஸ்தாநமாக, அவன் தான் ஆத்மாவாக நின்று தொழில்செய்யு மென்க.
(“இருந்துபடைக்கும் ஆஸநத்தோபாதி ப்ரஹ்மா” என்றது, நம்பிள்ளையீடு.)

திரிலோகாதிபதியான இந்திரன் ஆதியில் அசுரர்கள்நலிதலால் வருந்தித் தேவர்களுடனே திருமாலைச் சரணமடைந்து
“நீ எப்பொழுதும் என்னுலகத்தில் எழுந்தருளியிருந்து என்பகைதவிர்த்து எம்மைப் பாதுகாத்தருளவேண்டும்” என்று வேண்ட,
அதற்கு இணங்கிய ஸ்ரீமகாவிஷ்ணு, காசியபமுனிவனது மனைவியாகிய அதிதி தேவியின் வயிற்றில்
அவ்விந்திரனுக்குத் தம்பியாய் ஓர் அவதார மெடுத்துத் தோன்றி உபேந்திரனெனப் பெயர்கொண்டு
தேவலோகத்தில் அவ்விந்திரனருகிலேநின்று அவனது துயரத்தைத் தீர்த்து அனைத்துயிரையும்
பாதுகாத் தருளலாயினனென்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது.

“ஆக்குந்தொழிற்கு விரிஞ்சியைவைத் தழிக்குந்தொழிற்குச் சிவனைவைத்துக்,
காக்குத்தொழில் தான் கைக்கொ ளருட்கடவுள்” என்றபடி
தானானநிலையில்நின்று காத்தலையும், பிரமருத்ரர்களுக்கு அந்தர்யாமியாய் நின்று படைத்தல் அழித்தல்களையுஞ் செய்தலால்,
“உலகம்யாவையுந்தா முளவாக்கலும், நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா,
அலகிலாவிளையாட்டுடையாரவர், தலைவ ரன்னவர்க்கே சரணாங்களே” என்னும்படி முத்தொழிலும் எம்பெருமானுக்கு உரியதாம்.

உபேந்திராவதாரத்தைச் சொன்னது, துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபால நங்களாற் காத்தல்தொழில்நிகழ்த்துதற்பொருட்டு
அப்பெருமான்கொண் டருளும் மூர்த்திகளுக்கெல்லாம் உபலக்ஷணம்.

“இப்படிபிறந்தபிரமாண்டத்தில், பிரகிருதிஸ்வரூபனும், மக தகங்கார தந்மாத்ரா மகாபூத சரீரகனும்,
ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவன் சதுர்முகசொரூபனாய்த் தானே அவதரித்தான்”,
“அந்த அண்டத்தில், விசுவேசுவரனான நாராயணன் பிரமரூபியாகி ராஜோகுணப்ரதாநனாய்த்
தேவ அசுர கந்தர்வ மநுஷ்ய பசு பக்ஷி தாவரங்களைச் சிருஷ்டித்துக்கொண்டு,
அப்ரமேயபராக்ரமனும் ஷட்குணைச்வர்யஸம் பந்நனுமான தானே ஸாத்விககுணப்ரதாநனாய் லீலார்த்தமாக
யுகங்கள் தோறும் நாநாவிதமான திவ்யாவதாரங்கள் செய்து கல்பாந்தபர்யந்தமும் ஜகத்தைப் பரிபாலநம்
பண்ணிக்கொண்டும், பிரளயகாலத்தில் தாமஸகுண ப்ரதாநனான ருத்ரரூபியாகியிருந்து அதிகபயங்கரனாய்ச்
சராசரங்களான அகிலபூதங்களையும் விழுங்கி, மூன்றுலோகங்களையும் ஏகார்ணவமாகப் பண்ணி,
ஸஹஸ்ரபணாமண்டலமண்டிதனான ஆதிசேஷனாகிய படுக்கையிலே சயனித்துக்கொண்டு,
அப்பால் பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாய் முன்போலவே பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தருள்வன்

ஷட்குணைச்வர்யஸம்பந்நனான ஜநார்த்தநனொருவனே அந்தந்தச்சொரூபங் களில்நின்று
சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால், பிரமா விஷ்ணு ருத்ரன் என்கிற திருநாமங்களையடைகின்றான்”,
“சகலபூதங்களுக்கும் ஆத்மா வாய் எல்லாவற்றையும் தனக்குச்சரீரமாக வுடையவனாகையாலே,
கை கால் முதலான சரீரத்தின் செய்கை சரீரியான ஆத்மாவுக்கு உபகாரகமாவதுபோல்
பிரமாதிகள்செய்யுஞ் சிருஷ்டிமுதலானவையெல்லாம் அவனுக்கு உதவியாக விருக்கும்,”

“தான்ஸர்வசக்தனாயிருக்கப் பிரமாதிகளை இடையில்வைப்பது ஏனெனின், –
அவர்களுக்கு இப்படி வரங்கொடுத்திருக்கின்றா னாகையால்” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணவாக்கியங்கள், இச்செய்யுட்கு மேற்கோளாகலாம்.

கூலம், கமலம், முநி, புருஹூதன், உமா, ஹரன், யுகாந்தம் – வடசொற்கள்.
கமலம் – இங்கே, திருநாபித்தாமரை. முநி – மநநசீலன்: லோக ஸ்ருஷ்டியைக்குறித்து எப்பொழுதும் சிந்தனைகொண்டவன்.
“முறைமையினாற் புருகூதனுக்குத் திருத்தம்பியாகி” என்று இயைத்து,
தான் தேவாதிதேவனேயாயிருக்கவும் ஓர்அவதாரவிசேஷத்திலே ஏறிட்டுக்கொண்ட உறவுமுறைமையினால்
இந்திரனுக்குத்தம்பியாகி யென்றுஉரைப்பினும் அமையும்.
புருஹூத னென்பதற்கு – (யாகங்களில்) மிகுதியாக அழைக்கப்படுதலை யுடையவ னென்பது காரணப்பொருள்;
புரு – மிகுதி, ஹூதம் – அழைக்கப்படுதல். “இருகூலமும்” என்ற உம்மை – இனைத்தென்று அறி பொருளில் வந்த முற்றும்மை.
எந்தை வகுக்கும், புரக்கும், அழிக்கும் – செய்யுமென் முற்றுக்கள் ஆண்பாலுக்கு வந்தன.
முருகு ஊர்தல் – நறுமணம் மிக்குப் பரவுதல்; தேன் நிறைந்து பெருகுதலுமாம்.
யுக + அந்தம் = யுகாந்தம்: தீர்க்கசந்தி. இங்கே, யுகமென்றது – இலக்கணையாய், பிரமனது தினமாகிய கற்பத்தையும்,
அவனது ஆயுளாகிய மகாகற்பத்தையுங் குறிக்கும்:
அவ்விரண்டின்இறுதியிலேதான் பிரளயம்உண்டு என்றும், ஒவ்வொரு யுகத்தின்முடிவிலேயாவது
ஒவ்வொருசதுர்யுகத்தின் முடிவிலேயாவது பிரளயமில்லையென்றும் உணர்க:
ஆகவே, யுகாந்தமென்பதிலுள்ள யுகமென்பது, கல்ப மகாகல்பங்களின் ஈற்றி லுள்ள சதுர்யுகத்திற் கடைசி யுகத்தை யென்றலுமாம்.
ஹரன் – (பிரளயகாலத்தில் எல்லாவற்றையும்) அழிப்பவன்; சங்காரக்கடவுள்.
“முறைமையினால்” என்றதில், “ஆல்” என்ற மூன்றனுருபு – அடைமொழிப்பொருளது.

————

வாரித்தலமும் குல பூதரங்களும் வானும் உள்ளே
பாரித்து வைத்த இவ் அண்டங்கள் யாவும் படைக்க முன் நாள்
வேரிப் பசும் தண் துழாய் அரங்கேசர் விபூதியிலே
மூரிப் புனலில் குமிழ்கள் போலே முளைத்தனவே –14-

(இ – ள்.) வாரி தலமும் – கடல்சூழ்ந்த உலகங்களையும்,
குல பூதரங்களும் – குலபருவதங்களையும்,
வானும் – ஆகாயத்தையும்,
உள்ளே பாரித்து வைத்த – (தமது) அகத்திலே பரப்பிவைத்துள்ள,
இ அண்டங்கள் யாவும் – இந்த அண்டங்க ளெல்லாம், –
முன் நாள் – ஆதிகாலத்திலே,
படைக்க – (எம்பெருமான்) சிருஷ்டிக்கும் போது, –
வேரி பசுந் தண்துழாய் அரங்க ஈசர் விபூதியிலே – தேனை யுடைய பசுநிறமான குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் தரித்த அத்திருவரங்கநாதரது லீலாவிபூதியில்,
மூரி புனலில் குமிழிகள் போல முளைத்தன – பெரு வெள்ளத்திற் (குமிழ்த்த) நீர்க் குமிழிகள் போலத் தோன்றின; (எ – று.)

“அண்டங்கள்தாம், அநேகங்களாய், பதினாலுலோகங்களோடே கூடி, ஒன்றுக்கொன்று பதிற்றுமடங்கான
ஏழாவரணங்களாலுஞ் சூழப்பட்டு, ஈச்வரனுக்கு க்ரீடா கந்துக ஸ்தாநீயங்களாய், ஜலபுத்புதம்போலே
ஏககாலத்திலே ஸ்ருஷ்டங்களாயிருக்கும்” என்றது, தத்வத்ரயம்.

“நிற்குநெடுநீத்த நீரின்முளைத்தெழுந்த, மொக்குளேபோல முரணிற்றவண்டங்க, ளொக்க வுயர்ந்துனுளே
தோன்றி யொளிக்கின்ற, பக்கமறிதற்கெளிதோ பரம்பரனே” என்பது, கம்பராமாயணம்.
“வான்புனலி, னுருவமுறு குமிழி போற் பிரமாண்டமா யுதிக்கும்” என்றார், கூர்மபுராணத்திலும்.
“இப்படி பஞ்சபூதங்களினாலே பிறந்த அண்டம், நீர்க்குமிழிபோலே ஒரு கணப்பொழுதிலே அபிவிருத்தியாயிற்றே யல்லாமல்,
கிரமக்கிரமமாக அபிவிருத்தியாகவில்லை” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணவசனமுங் காண்க.

அண்டங்கள் பல வென்பதும், அவைகளெல்லாம் ஒரேவகையா யிருக்கு மென்பதும்,
அவையாவும் ஒரேகாலத்தில் முழுமொத்தமாய் உற்பத்தியாயின வென்பதும் இதனால் விளங்கும்.
விபூதி – செல்வம்: வடசொல். அது – லீலாவிபூதியெனவும், த்ரிபாத்விபூதி யெனவும் இருவகைய தெனப்படும்.
அவற்றில், லீலாவிபூதி – விளையாட்டுக்கு உரிய செல்வம்;
எம்பெருமானுக்குத் திருவிளையாடலெனப்படுகிற படைப்புக் காப்பு அழிப்புக்கு உரிய பொருள்: பிரபஞ்சம்.
த்ரிபாத்விபூதி – எம்பெருமானது செல்வங்களுள் முக்காற்பங்காகவுள்ளது; முத்தியுலகம்.
மற்றைக்காற்பங்காகவுள்ளது, லீலாவிபூதி. லீலாவிபூதியினும் மும்மடங்குகொண்டது த்ரிபாத்விபூதி யென்க.
இச்செய்யுளிற் குறித்த விபூதி – லீலாவிபூதி யென்னலாம்.

“வாரித்தலம்” என்றது, உவர்நீர் கருப்பஞ்சாறு கள் நெய் தயிர் பால் நன்னீர் என்கின்ற ஏழு சமுத்திரங்களால்
முறையே சூழப்பட்டிருக்கின்ற ஜம்பூ பிலக்ஷம் சால்மலம் குசம் கிரௌஞ்சம் சாகம் புஷ்கரம் என்ற ஏழு தீவுகளையும்.
குலபூதரங்கள் எட்டு, 12 – ஆஞ் செய்யுளி னுரையிற் கூறப்பட்டன.
இங்கே, “குலம்” என்றது, சிறப்பை யுணர்த்தும். பூதரம் என்ற வடசொல் – பூமியைத் தரிப்ப தென்று பொருள்படும்;
பூமிக்கு மேலும் கீழும் நின்று அதனை நிலைநிறுத்துதலாலும், நதிகளின் உற்பத்திக்கு இடமாகி நின்று
அதுகொண்டு நிலவுலகத்துஉயிர்களைப் பாதுகாத்தலாலும், மலைகள் பூதரமென்று பெயர்பெறும்.
அண்டத்தையும் அண்டகாரணங்களையும் எம்பெருமான் தானே உண்டாக்குவன்;
அண்டத்திற்கு உட்பட்ட பொருள்களைப் பிரமன் முதலியோர்க்கு அந்தர்யாமியாய் நின்று உண்டாக்குவன்:
இவற்றில், முந்தியது – ஸமஷ்டிஸ்ருஷ்டி யெனவும், பிந்தியது – வ்யஷ்டிஸ்ருஷ்டி யெனவும் படும்;
இச்செய்யுளிற் கூறியது, ஸமஷ்டிஸ்ருஷ்டி. முந்தினசெய்யுளிற் கூறியது, வ்யஷ்டிஸ்ருஷ்டி.
ஆகவே, கீழ்ச்செய்யுளில் “எந்தை யந்தண்முருகூர்கமலமுனியாய்வகுக்கும்” என்றதனோடு,
இச்செய்யுளில் “அண்டங்கள்யாவும் படைக்க முன்னாள்…… முளைத்தன” என்றது மாறுகொளக்கூறலாகாமை உணர்க.

வாரி – நீர்: வடசொல்; கடலுக்கு இலக்க ணை. யா – அஃறிணைப்பன் மைவினாப்பெயர்; இதில் ‘வை’ விகுதி புணர்ந்துகெட்டது.
இங்கு, வினா -எஞ்சாமைப்பொருளது. உம்மை – முற்று. துழாய் – துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு.
அதனாலாகிய மாலைக்குக் கருவியாகுபெயர். மூரி – பெருமை. வேரி – வாசனையும், பசுமை – வாடாமையுமாம்.
குமிழ்ப்பது குமிழி யெனக் காரணப்பெயர்; இ – கருத்தாப்பொருள்விகுதி:
இனி, முகுள மென்ற வடசொல் குமிழி யெனச் சிதைந்த தென்னவுமாம்; மொக்கு ளென்பது, அதன் பொருள்: அது, நீர்க்குமிழிக்கும் பெயராம்.

———–

நெடும் கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நித்தலும் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதும் ஊழி தன்னில்
கடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடும் கனல் ஆழி அரங்கேசர் தம் திரு ஆணையினே –15-

(இ – ள்.) நிற்றலும் – நாள்தோறும்,
நெடுங் கடல் நிற்பதும் – பெரிய கடல் (மேன்மேற்பொங்கியெழாமல்) ஒருநிலையில்அடங்கிநிற்பதும்,
நாயிறு காய்வதும் – சூரியன் (தவறாமல்வந்து) வெயில்காய்வதும்,
கால் ஒடுங்கி நடப்பதும் – காற்று (உலகம்பொறுக்கும்படி) அடங்கிவீசுவதும்,
தண் கார் பொழிவதும் – குளிர்ச்சியான மேகங்கள் (காலத்தில் வந்து) மழைபொழிவதும்,
ஊழிதனில் சுடும் கனல் பற்றி சுடாதே இருப்பதும் – கற்பாந்தகாலத்தில் (உலகத்தைச்) சுட்டெரிக்கின்ற படபாமுகாக்கினி
(அதற்குமுன்பு உலகத்திற்) பற்றிக் கொண்டு (அதனைச் சுட்டெரித்தழியாமல் கடலினிடையே அடங்கி) இருப்பதும்,
(ஆகிய இவையெல்லாம்),
தும்பை புனைந்து – தும்பைப்பூமாலையைச் சூட்டிக்கொண்டு,
அடும் – (அசுரர் முதலிய கொடியவர்களை) அழிக்கின்ற,
கனல் ஆழி – அக்கினிபோலச் சுவாலைகளைவீசுகின்ற சக்ராயுதத்தையேந்திய,
அரங்கேசர்தம் – திருவரங்கநாதரது,
திரு ஆணையினே – சிறந்த கட்டளையினாலேயாம்; (எ – று.)

சமுத்திரராஜன் முதலியோர் தம்தமக்கு எம்பெருமான் கட்டளையிட்ட தொழிலைத் தாம் சரிவரச்செய்யாவிட்டால்
அப்பெருமான் சீறித் தம்மைத் தண்டிப்பனோ வென்று மிகவும் அஞ்சித் தம்தம்தொழிலில்
ஜாக்கிரதை யுள்ளவரா யொழுகுகின்றன ரென்பது, கருத்து. இது, மற்றைத்தேவர்கட்கும் உபலக்ஷணம்.
ஆதலால், எம்பெருமானது ஸர்வேச்வரத்வம் கூறியவாறாம்; ஸர்வநியாமக னிவனென்க.
இதனால், எம்பெருமானது வரம்பிலாற்றல் கூறப்பட்டது.

“கூரெயிற்றாடலங்கூற்றங்கொல்வதுங், கார்மழை பொழிவதுங் கதிரெறிப்பதும்,
மாருதமுளர்வதும் வாரிநிற்பதும், ஆரழல் சுடலு மென்னாணை யாகுமால்” என்ற ஸ்ரீபாகவதமும்,

“சகலதேவ தைதமக்கியான்றலைவன் சத்தியமே, நிகரில் சாகரங் கரைகடவாததும் நிவருங்,
ககனமேகங்கள் சொரிவதுங் கடல்வடவைத்தீ, வெகுவிலாதது மென்னுடைவினோதவாக்கினையே” என்ற மகாபாகவதமுங் காண்க.

இவ்விஷயம், தைத்திரீயோபநிஷத்திலும் வருகின்றது.
“ஊழிதனிற்சுடுங்கனல் பற்றிச்சுடாதேயிருப்பதும்” என்றதை உபலக்ஷணமாகக் கொண்டு,
மற்றையவற்றிற்கும், கற்பாந்தகாலத்தில் தம்தம்ஆற்றலை மிகுதியாகக்காட்டி அதுகொண்டு
உலகத்தையழிக்குந் தன்மையனவான கடலும் நாயிறும் காலும் காரும் அதற்குமுன்பு அவ்வாறு அழியாமல் அடங்கிநிற்பது மெனக் கொள்க.

இனி, அவை கற்பாந்தகாலத்தில் மிகுதியாகப் பொங்கிப் பரந்தும் அதியுக்கிரமான வெயிலை யெறித்தும்
மிகுதியாகவீசியும் மிகுதியான மழையைப் பொழிந்தும் எங்கும்பற்றியும் உலகங்களையழிப்பதும்
அவர்கட் டளையினாலேயே யென்பது, அருத்தாபத்தியாற் போதரும்.

“தும்பை புனைந்தடுங்கனலாழியரங்கேசர்தந் திருவாணையினே” என்ற சொற்சேர்த்தி யால்,
அவை அங்ஙனம் அஞ்சி அடங்கி நிற்பது அப்பெருமானது திருச்சக்கரத்தையும் ஆஜ்ஞாசக்கரத்தையும் நோக்கி யென்பதுந் தோன்றும்.

“அருளார் திருச்சக்கரத்தா லகல்விசும்புந் நிலனும், இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்” என்ற திருவிருத்தத்தையும்,
“செய்யேல் தீவினை யென் றருள்செய்யு மென்கையார் சக்கரக் கண்ணபிரான்” என்ற திருவாய்மொழியையுங் காண்க.

அண்டத்தின் அகத்திலுள்ள ஏழு கடல்களே யன்றி அண்டத்தின்புறத்திலுள்ள பெரும்புறக்கடலும் அடங்க, “நெடுங்கடல்” என்றார்.
நிற்றல் – நித்யம் என்ற வடசொல்லின் சிதைவு; உம்மை – தொறுப்பொருளது.
இனி, நிற்றல் என்பதை நில்என்றபகுதியின் தொழிற்பெயராகவும் உம்மையை எண்ணுப்பொருளதாகவுங் கொண்டு,
சூரியன் காய்வதும் (ஒருபடிப்பட ஆகாயத்தே) நிற்பது மென்று உரைத்தலுமாம்.

தும்பை யென்ற செடியின்பெயர், அதன் மலர்களினாலாகிய மாலைக்கு இருமடியாகுபெயராம்;
இம்மலர்மாலை, போருக்குரிய அடையாளப்பூமாலையாம்; “அதிரப்பொருவது தும்பையாம்” என்றார் பிறரும்.
இதனைப் போர் செய்யும்வீரர் தாம்தரிப்பதேயன்றித் தமது ஆயுதங்கட்குஞ்சூட்டுவது மரபாதலால், “தும்பைபுனைந்தடுங் கனலாழி” எனப்பட்டது.
ஆணை – ஆஜ்ஞா என்ற வடசொல்லின் சிதைவு; இன் – ஐந்துனுருபு, ஏதுப்பொருளது: ஈற்று ஏகாரம் – பிரிநிலை.
நிற்பது, காய்வது, நடப்பது, பொழிவது, இருப்பது என்ற தொழிற்பெயர்களில்,
இடைநிலை – எதிர்காலமுணர்த்தாமல் தன்மையுணர்த்திநின்றது. “ஆகும்” என வினைமுற்று வருவித்துமுடிக்க.
“கனல்ஆழி” என்பதற்கு – கோபாக்கினியையுடைய சக்கர மென்று உரைப்பாரு முளர்.

————–

ஓலைப் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் உகம் திரியும்
காலத்தினில் கொள்ளை அண்டம் எல்லாம் உண்டு காமர் பசும்
கோலக் குழவி வுருவாய் அகண்டமும் கோத்த வெள்ளத்து
ஆலத்து இலையின் புடைக்கே துயில்வார் அகம் மகிழ்ந்தே –16-

(இ – ள்.) ஓலம் – ஆரவாரத்தைச் செய்கின்ற,
புனல் – நீர்ப்பெருக்கையுடைய,
பொன்னி – காவேரியினது,
நல் நீர் – திவ்விய தீர்த்தத்தாற் சூழப்பட்ட,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான நம்பெருமாள்,
உகம் திரியும் காலத்தினில் – கற்பம் மாறுங் காலத்தில்,
கொள்ளை அண்டம் எல்லாம் உண்டு – மிகுதியான அண்டகோளங்களையெல்லாம் புசித்து (திருவயிற்றில்வைத்துஅடக்கியருளி),
காமர் கோலம் பசுங்குழவி உரு ஆய் – (கண்டவர்) விரும்பத்தக்க அழகையுடைய இளங்குழந்தைவடிவமாய்,
அகண்டமும் கோத்த வெள்ளத்து – எல்லாவிடங்களிலும் இடைவிடாதுபரவிய அந்தப் பிரளயவெள்ளத்தில்,
ஆலத்து இலையின் புடைக்கே – ஆலிலையினிடத்திலே,
அகம் மகிழ்ந்து – திருவுள்ளமுவந்து,
துயில்வார் யோகநித்திரை செய்தருள்வர்; (எ – று.)

பிரமன்முதலிய சகலதேவர்களு முட்பட யாவும் அழிந்து போகின்ற கல்பாந்தகாலத்திலே, ஸ்ரீமகாவிஷ்ணு,
அண்டங்களையெல்லாம் தன்வயிற் றில் வைத்துக்கொண்டு, சிறுகுழந்தைவடிவமாய், பிரளயப்பெருங்கடலிலே
ஆதிசேஷனது அம்சமானதோ ராலிலையின்மீது பள்ளிகொண்டு அறிதுயில் செய்தருள்கின்றன னென்பது, நூற்கொள்கை.
இது – எம்பெருமானது செயற்கரியனசெய்யும் விசித்திரசக்தியையும், பரத்துவத்தையும், பேரரு ளுடைமையையுங் காட்டும்.

புனல் – நீர்; ஆறு எனக் கொண்டு, பொன்னி புனல் – காவேரிநதியி னது, நல் நீர் -நல்ல நீரினாற் சூழப்பட்ட என்றலுமாம்.
இனி, பொன்னி – காவேரியாற் சூழப்பட்ட, நல் நீர் – சிறந்ததன்மையையுடைய,
அரங்கர் – திரு வரங்கத்தி லுள்ளவர் என்றலும் அமையும்;
அரங்கத்திற்கு நல்ல நீர்மையாவது – ஒருமாத்திரைப்பொழுது தன்னிடத்தில்வசித்தவரையும் பரிசுத்தராக்கி
வீடுபேற்றிற்கு உரியராகும்படி செய்யும் மகிமை. உகம் – இங்கே, கற்பம்; (13) “உகாந்தம்” என்றதிற் போல.
உகம் திரியும் காலத்தினில் – ஒருகல்பம்முடிந்து மற்றொருகல்பம்வரவேண்டிய சமயத்தி லென்க; கல்பாந்தத்தி லென்றதாம்.
உண்டு = உட்கொண்டு. காமர் – காமமருவு என்பதன் விகாரம். காமர், கோலம் என்பன – ஒரு பொருட்பன்மொழி யென்றலு மொன்று.
பசுமை – இங்கு இளமைமேலது; நீலநிறத்தைக் குறிப்பதாகவுங் கொள்ளலாம். குழவி – இளமையையுடைய தெனக் காரணப்பொருள்படும்;
குழ – இளமை குறிக்கும் உரிச்சொல்: பகுதி; இ – பெயர்பகுதி. அகண்டம் – வடசொல். ஆலத்து, அத்து – சாரியை.
புடைக்கே = புடையிலே: உருபு மயக்கம். அகம் – அகத்துறுப்பு, அந்த:கரணம்.
அகண்டமுங் கோத்த வெள்ளம் – எல்லாப்பொருள்களையுந் தன்வசத்தில் அடக்கிக்கொண்ட பிரளயநீர்ப்பெருக்கு.
தான் என்று மழிவில்லாதநித்தியனென்பது தோன்றப் பள்ளிகொண்டிருப்பனென்பார், “அகமகிழ்ந்து துயில்வர்” என்றார்.

———-

தாற்றுக் கமுக வனம் சூழ் அரங்கர் சயன முகக்
காற்றுப் புலரும்படி முதல் வீசும் கறைக்களத்தன்
நீற்றுச் சிவந்து எழும் கார் ஆழித் தீச்சுடும் நீள் கழலின்
ஆற்றுப் பெரும் பெருக்கு அண்டம் எல்லாம் கொள்ளும் அந்தத்திலே –17-

(இ – ள்.) அந்தத்திலே – கல்பாந்தகாலத்திலே, –
தாறு கமுக வனம் சூழ் அரங்கர் – குலைகளையுடைய பாக்குமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான எம்பெருமானுடைய,
சயனம் – படுக்கையாகிய ஆதிசேஷனது,
முகம் – (ஆயிரம்) முகங்களினின்றும் எழுகின்ற,
காற்று – காற்றானது,
முதல் – முதலில்,
புலரும்படி வீசும் – (எல்லாப்பொருள்களும்) உலர்ந்துபோகும்படி நெடிதாய் வீசும்;
(பிறகு அந்த முகக்காற்றிலிருந்து),
கறை – களத்தன் – நஞ்சுண்டு கறுத்த கண்டத் தையுடையவனான ருத்திரமூர்த்தி,
நீற்று சிவந்து எழும் – (எல்லாப்பொருள் களையும்) எரித்துநீறாக்கிக்கொண்டு கோபித்துத் தோன்றுவன்;
கார் ஆழி தீ சுடும் – (திருவரங்கநாதர் பள்ளிகொள்ளுகின்ற) கரிய கடலிலே யுள்ள பட பாமுகாக்கினி (உலகத்தை) எரிக்கும்;
நீள் கழலின் ஆறு பெரும் பெருக்கு – (அத்திருமாலினது) நீண்ட திருவடி பட்டதனா லாகிய துளைவழியாற் பெருகிய பெரும்புறக்கடல்வெள்ளம்,
அண்டம் எல்லாம் கொள்ளும் – அண்ட கோளம் முழுவதையும் தன்னிடத்தில்அகப்படும்படி கவர்ந்து கொள்ளும்.

கீழேழுலகங்களுள்ளும்கீழதான பாதாளலோகத்தின்கீழே முப்பத்தினா யிரம்யோஜனையுள்ளஇடத்தில்,
ஸ்ரீமகாவிஷ்ணுவினது ஸம்ஹாரத்திருமேனி யாய் விளங்குகின்றவரும் அத்திருமாலுக்குப்
படுக்கை குடை சிங்காசனம் மரவடி முதலிய பல வடிவமாகிப் பலவகைகைங்கரியஞ்செய்கின்ற வருமான ஆதிசேஷன்
எழுந்தருளியிருந்து உலகங்களைத் தாங்கிக்கொண் டிருக்கின்றனர்;

பிரளயகாலத்திலே, முதலில், அந்தஆதிசேஷனுடைய ஆயி ரம்முகங்களினின்றும் மிகப்பெரிய மூச்சுக்காற்று எழுந்து
நெடுநேரம் நெடுந்தூரம் வீசி, உலகங்களையும் உலகத்துப் பிராணிவர்க்கங்களையும் உலரச் செய்யும்;
பின்பு, அந்தச் சுவாசத்திலிருந்து விஷாக்கனிச்சுவாலைகளோடு கூடின அழித்தற்றொழிற்கடவுளான காலாக்கினி
ருத்திரமூர்த்தி உண்டாகிக் கோபாவேசத்தோடு அதியுக்கிரமாய்க் கீழுலகங்களையெல்லாம் தகித்துக்கொண்டு பூமிக்கும்வந்து
அதையும் கொளுத்தி மேலுலகங்களையும் எரித்திடுவர்;

மற்றும், கடலிடையேயுள்ளதான படபாமுகாக்கினியும் அச்சமயத்தில் வெளிக்கிளம்பி உலகங்களை ஒருபுறம் எரிக்கும்;
பிறகு, அண்டகடாகத்திற்கு வெளியேயுள்ளதான பெரும்புறக்கடல்வெள்ளம் பிரவேசித்து உலகங்களையெல்லாம்
ஜலமயமாக்கி அழிக்கின்றது என்பது, நூற்கொள்கை.
மேல் (86 – ஆஞ் செய்யுள்)
“ஓலாழிசூழ்புவியுச்சியிலேந்து முகக்கடையிற் காலான நற்குணமூர்த்தியைக் காலு மக்காலமெல்லாம்,
மேலாவிளங்கும் புவிமீதீ லென்றன் விழுத்துணையாம், மாலா மரங்கமணவாளர் கண்டுயில் மாசுணமே” என்பதுங்காண்க.
“சேடனானனத் துக்கிரவுதாசனன்றான் சினமுறு முருத்திரனுடனே, மூடிமூவுலகமெரித்திட,”
“சேடன், சீர்தரு முகத்தின்தீயாற் சேர்பொருள்யாவுந் தீய, ஓர்தருமண்டந்தானு முலந்து நீறாகுமன்றே,”
“விடந்திகழ்தீயி னண்டம் வேமியல் விளம்பின் வெய்ய, கொடுந்தழல்பட்டு நீறாங் கோமயபிண்டம்போலாம்,
அடைந்திடும்பருவநூறாங்கதிர் நெடுங்காற்றக்காற்றா, லுடைந்துமுன்னீறாகண்டமுற்றிடு மணுக்களாயே” என்றது, பாகவதம்.
பிறவும் கண்டுகொள்க.

“அரங்கர்” என்பதை, “சயனம்,” “ஆழி,” “கழல்” என்ற மூன்றனோடுங் கூட்டுக.
எம்பெருமான் கடல்கள்தோறுங் கண்வளர்ந்தருள்வ னென்று ஒரு பிரமாணஸித்தி யுண்டாகையாலே,
“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்” என்றபடி
“அரங்கர் காராழி” எனப்பட்டது. “அண்டத்தைக்கவிந்து ஒன்றிலும்ஒன்று பத்துமடங்கு மிகுதியான ஜலம்
அக்கினி வாயு ஆகாசம் அகங்காரம் மகத்தத்துவம் பிரகிருதிதத்துவம் ஆகிய ஏழு ஆவரணங்க ளிருக்கின்றன;
தேங்காயானது எப்படி நார்மட்டைகளினாற் கவியப்பட்டிருக் கின்றதோ,
அப்படி பிரமாண்டம் ஸப்தாவரணங்களினாற் கவியப்பட்டிருக் கின்றது” என்றது, ஸ்ரீவிஷ்ணுபுராணம்.
இப்படி அண்டகடாகத்தைச் சூழ்ந்திருக்கின்ற முதல் ஆவரணமும், அண்டத்தின் அளவினும் பத்துமடங்குமிக்கதுமான
ஜலமே பெரும்புறக்கட லெனப்படுவது. மகாபலி்சக்கரவர்த்தியின் செருக்கை யடக்குதற்பொருட்டு வாமநாவதாரங்கொண்டு சென்று
அம்மாவலிபக்கல் மூவடிவேண்டிய திருமால் திரிவிக்கிரமனாக ஆகாயத்தை யளாவி வளர்ந்து ஓரடியாற் பூமிமுழுவதையும் அளந்து
மற்றோரடியால் மேலுலகத்தை யளத்தற்காக அவ்வடியை நீட்டி மேலேசெலுத்த, அத்திருவடி பட்டதனால்
அண்டகடாகத்தின் மேலிடம் சிறிது உடைபட, அத்தொளை வழியாகப் பெரும்புறக்கடலின்நீர்
அண்டகோளத்தினுள்ளே விழுந்திடலாயிற்று என்பதை,
மேல் 37 – ஆஞ் செய்யுளில் “அரங்கேசர்பொற்றாள்பட்டுடைந்த வண்ட மேலக்கடாகத் தொளைவழியாகவிழும் புனல்” என்பதனாலும் உணர்க.

இவ்வாறு திருமாலினது மேலேநீண்ட திருவடி பட்டதனாலாகிய வழியினாற் பெருகும் பெரும்புறக்கடல்வெள்ளத்தை
“நீள்கழலின் ஆற்றுப்பெரும்பெருக்கு” என்றார்.
இங்கு, ‘ஆறு’ – வழி; நதியன்று. பிரளய காலத்திற் பெரும்புறக்கடற்பெருக்கினால் அண்டம் அழிவதை,
“இந்தப்பிர பஞ்சத்தை மூடிக்கொண்டிருக்கிற அண்டரூபமான பிருதிவியானது, அதைச் சூழ்ந்த அப்பில் லயமாகின்றது” என்று
ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் பிராகிருத பிரளயங் கூறுமிடத்துக் கூறியதனா லுணர்க.
பெரும்புறக்கடலின் நீரை “நீள்கழலின் ஆற்றுப்பெரும்பெருக்கு” என்று வேறுவகையாற்கூறியது, பிறிதினவிற்சியணி.
இனி, திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்திய லோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியை அங்கேயுள்ள
பிரமன் தன் கைக்கமண்டலதீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்தஸ்ரீபாததீர்த்தமாகப் பெருகிய பெருக்கே கங்காநதியாதலும்,
சகரசக்கரவர்த்தியின் குமாரர்கள் அறுபதினாயிரவரும் பாதாளலோகத்திற்குச் செல்லும்பொருட்டு நகங்களாலும் ஆயுதங்களாலும்
தோண்டிய பெரும்பள்ளமே பிறகு பகீரதன் மிகமுயன்று கொண்டுவந்த கங்காநதியின் தீர்த்தத்தால் நிரம்பிக் கடலாகிச்
சாகரமென்று பெயர்பெற்றதும், மகா பிரளயகாலத்திற் கடல் பொங்கியெழுந்து உலகத்தை யழித்தலு மாகிய
தன்மைகளைக் கருதி “நீள்கழலின் ஆற்றுப் பெரும் பெருக்கு அண்டமெல்லாங் கொள்ளும்” என்றதாகவுங் கொள்ளலாம்:
நீண்ட திருவடியினின்று தோன்றிய கங்காநதியின் பெரிய வெள்ளமென்க; இவ்வுரையில், ஆறு – நதி.

க்ரமுகவநம், ஸயநம், முகம், களம், அண்டம், அந்தம் – வடசொற்கள். வனம் – இங்கு, ஊரைச்சூழ்ந்த சோலை.
சயனமானது முகக்காற்றைப் புலரும்படி முதல்வீசும் என்றும் உரைக்கலாம்.
பாற்கடல்கடைகையில் அதனினின்று எழுந்த அதிபயங்கரமான பெருவிஷத்தைக் கண்டமாத்திரத்தில்
அதன் கொடுமையைப் பொறுக்கமாட்டாமல் அஞ்சியோடிய தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விஷத்தைச் சிவபிரான்
அமுதுசெய்து கண்டத்தில் நிறுத்தியதனால் அக்கழுத்துக் கறுத்தமைபற்றி, சிவபிரானுக்கு விஷகண்டனென்றும்
நீலகண்டனென்றும் காளகண்டனென்றும் பெயர்களாயின; அக்கருத்தமைய ‘கறைக்களத்தன்’ என்றார்:
கறை – கறுப்பு, விஷம். நீற்றுதல் – எரித்துச் சாம்பலாக்குதல்.
இங்கு ‘நீற்று’ என்ற வினைப் பகுதிதானே நீற்றியென வினையெச்சப் பொருள்பட்டது;
இதில் விகுதி முதலியன புணர்ந்துகெட்டன வென்க: “வரிப்புனை பந்து” என்றவிடத்து ‘வரி’ என்றதிற் போல:
“வினைபுனைநல்லிலினைகூஉக் கேட்பவும்” என்றவிடத்து ‘இனை’ என்பதும் அது.
செம்மை யென்னும் பண்பின் அடி, “சிவ” என்று விகாரப்படும்;
அது உரிச்சொல்லாய்க் கோபத்தையும் உணர்த்துதலை “கறுப்புஞ்சிவப்பும் வெகுளிப்பொருள” என்ற தொல்காப்பியத்தால் அறிக.
இங்கு “எல்லாம்” என்றது, எஞ்சாமைப்பொருள் குறித்தது. “நீற்றிச் சிவந்தெழும்” என்று பாடம்ஓதாதது,
எதுகைநயம் நோக்கி யென்க. இனி, கார் ஆழி சிவந்துஎழும் தீ கறைக்களத்தன் நீறு சுடும் என்று மொழிமாற்றி,
கரியகடலிற் சிவந்தெழுகின்ற வடவைத்தீயானது (எல்லாப் பொருள்களையும்) சிவபிரானணியும் வெண்ணீறுபோலாம்படி யெரிக்கு மென்று உரைப்பாரு முளர்.

லோகஸம்ஹாரங்கூறுவார், அத்தொழில் எம்பெருமானுடைய அங்க உபாங்கங்களினா லாகுமென்று அவ்விறைவனது மகிமையை வெளியிட்டார்.

————

சின்னூல் பல பல வாயால் இழைத்து சிலம்பி பின்னும்
அந்நூல் அருந்தி விடுவது போலே அரங்கர் அண்டம்
பல் நூறு கோடி படைத்து அவை யாவும் பழம் படியே
மன் ஊழி தன்னில் விழுங்குவர் போத மனம் மகிழ்ந்தே –18-

(இ – ள்.) சிலம்பி – சிலந்திப்பூச்சியானது,
பல பல சில் நூல் – பலபல சிறிய (மெல்லிய) நூல்களை,
வாயால் இழைத்து – வாயினால் நூற்று,
பின்னும் – பின்பு,
அ நூல் அருந்திவிடுவது போல – அந்தநூலை (த் தானே) உட்கொண்டிடுவது போல, –
அரங்கர் -திருவரங்கநாதர்,
பல் நூறு கோடி அண்டம் – பல நூற்றுக்கோடிக்கணக்கான அண்டங்களை,
படைத்து – சிருஷ்டித்து,
மன்னூழிதன்னில் – மகாபிறளய காலத்தில்
அவை யாவும் -அந்த அண்டங்க ளெல்லாவற்றையும்,
போத மனம் மகிழ்ந்து – மிகவும் திருவுள்ளமுவந்து,
பழம் படியே – முன்போலவே (தம்வயிற்றில்தங்கும்படி),
விழுங்குவர் – உட்கொண்டருள்வர்; (எ – று.)

ஸ்வரூபவிகாரமில்லாம லிருந்துகொண்டே சிலவற்றையுண்டாக்குதலும் அங்ஙனமுண்டாக்கினவற்றை யுட்கொள்ளுதலும்
அல்பசக்தியை யுடைய சிலந்திப்பூச்சிக்குஇயல்பாகும்போது, ஸ்வரூபத்திற்குவிகாரமில்லாம லிருந்து கொண்டே
அண்டங்களைப்படைத்தலும் விழுங்குதலுமாகியஇயல்பு ஸர்வசக்திகனான எம்பெருமானுக்குக் கூடுத லரிதோ வென்னுங் கருத்து.

“யதோர்ணநாபிஸ் ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச, ”
“ஊர்ணநாபிர் யதா ஸ்ருஷ்ட்வா, ஸ்வயம் தத் க்ரஸதே புந:-
ததா ஸ்ருஷ்ட்வேதமகிலம், ஸ்வயம் தத் க்ரஸதே ஹரி:.

அமைய இவ்வுவமைகூறின ரென்னலாம்;
“ஒருசிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் ஸர்வசக்திக்குக் கூடாதொழியாதிறே” என்ற தத்வத்ரயத்தையுங் காண்க.
உவமையணி. பரம்பொருளான எம்பெருமானுக்கு அற்பஜந்துவான சிலந்திப்பூச்சியை உவமைகூறியது
இழிவுவமைக்குற்றத்தின்பாற்படாதோ வெனின், படாது; தன்வாயால்வெளிப்படுத்தியதைத் தானே யுட்கொள்ளு தற்குச்
சிலந்தியுவமை சிறத்தலாற் குணம் மிக்கதெனக் கொள்ளப்பட்டது.
“மிகுதலுங் குறைதலுந் தாழ்தலு முயர்தலும், பால்மாறுபடுதலும் பாகுபா டுடைய” என்ற தண்டியலங்காரசூத்திரத்தினாலும்,
அதன் உரையினாலும், உயர்ந்தபொருளை இழிந்தபொருளோடு உவமித்தல்
புன்புலவர்புணர்க்குங் கால் வெறுக்கப்படுவதோர் சிறப்பின்மை தெரிந்து ஆன்றோராற் குற்றமென்று தள்ளப்படுதலும்,
அதுவே நன்புலவர்புணர்க்குங்கால் விரும்பப்படுவதோர் சிறப்புடைமை தெரிந்து ஆன்றோராற் குணமென்றுகொள்ளப்படுதலுங் காண்க.

இவ்வாறே ‘வேம்பின்பு’ வேம்பன்றியுண்ணா தடியேன், நான்பின்னுமுன்சேவடியன்றிநயவேன்,”
“மெல்லியலாக்கைக்கிரிமி குரு வின்மிளிர்தந் தாங்கே, செல்லியசெல்கைத் துலகை யென்காணு மென்னாலுந் தன்னைச்,
சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாதுகற்றேன், பல்லியின் சொல்லுஞ் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டுபண்டே,”
“நாயனையார் கேண்மை கெழீஇக்கொளல் வேண்டும்,”
“குடப்பாற் சில்லுறை போலப், படைக்கு நேரெல்லாந் தானாயினனே” என நல்லிசைப் புலவர்செய்யுள்களில் வருவன கண்டுகொள்க.
“மிகுதல் குறைதல் தாழ்தல் உயர்தல் பால்மாறுபடுதல் முதலியன குற்றமேனும் குணம்மிக்குழிக் கொள்க” என்பர்.
இவ்வுவமை, ஸ்ரீபாகவதத்திலும், ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலும் கூறப்பட்டுள்ளது.

இங்கே, சின்மை – சிறுமையின்மேலது; நுண்மையின்மேலதுமாம்.
அருந்திவிடுவது என்பதில், விடு என்பது – துணிவுணர்த்தும்.
அண்டம் – உலகவுருண்டை. கோடி – நூறுலக்ஷம். மிகப்பல வென்றற்கு, “பன்னூறுகோடி” என்றார்.அண்டம் பன்னூறுகோடி –
“அம்பெரும்புவிக்குத்தானோராயிர கோடியண்ட, மொப்பிலவென்னவுண்டால்,”
“அங்கண்மாஞாலத்தண்ட மாயிர கோடிதன்னில்” என்றது கந்தபுராணம்.
மன் – பெருமை: உரிச்சொல். பழம்படியே போத எனஇயைத்து, முன்போலவே தம்வயிற்றினுட்படும்படி விழுங்குவ ரென்றலுமாம்;
போத – புகுத என்றதன் மரூஉ. வெளியிலிருத்தலோடு திருவயிற்றினுள்ளேயிருத்தலோடு வாசியில்லை யென்னுங் கருத்தால்
“முன்போலவேயிருக்க” என்றாருமாம்.
பிரளயாபத்து நேர்கிற காலத்தில் எல்லாவற்றையும் தமதுதிருவயிற்றினுள்ளே வைத்துக்கொண்டு அவை கெடாதபடி
தாய்போலப் பாதுகாக்கும் எம்பெருமானது இயற்கைப்பேரருளும், வரம்பிலாற்றலும் இங்கு வெளியாம்.
“வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி யுய்யக்கொண்ட, கொற்றப்போராழியான்,”
“பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின்மீதோடிப் பெருகுகாலம், தாயிருக்கும்வண்ணமே யும்மைத்
தன்வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான்” என்றார் திருமங்கையாழ்வாரும்.
“தன்னுள்” என்ற பாடத்திற்கு, மன் ஊழி – பெரிய கற்பாந்தகாலத்தில், தன் உள் போத – தனது வயிற்றி னுள்ளே புகும்படி,
விழுங்குவ ரென்னலாம்; அப்பொழுது, “அரங்கர்” என்றதற்கு ஏற்ப “தம்முள்” என்னாது “தன்னுள்” என்றது, பன்மையொருமை மயக்கத்தின்பாற்படும்.

சிருஷ்டி சங்காரங்கள், இதனாற் கூறப்பட்டன.
னகரத்திற்கும், நகரத்திற்கும், வரிவடிவில் வேறுபாடிருப்பினும் ஒலி வடிவில் மிக்கவேறுபாடில்லாமையால்,
அவை, விரவி, எதுகையில் அமைக் கப்பட்டன.

———-

பந்திக் கமலத் தடம் சூழ் அரங்கர் படைப்பு அழிப்பு
சிந்தித் திடுவதும் இல்லை கண்டீர் அத்திசை முகனோடு
உந்திக் கமலம் விரிந்தால் உகக் கடையில்
முந்திக் குவியில் உடனே குவியும் இம் மூதண்டமே –19-

(இ – ள்.) பந்தி – வரிசையான,
கமலம் – தாமரைமலர்களையுடைய,
தடம் – தடாகங்கள்,
சூழ் – சூழ்ந்த,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான எம்பெருமான்,
படைப்பு அழிப்பு சிந்தித்திடுவதும் இல்லை – சிருஷ்டி சங்காரங்களை நெஞ்சினால்நினைப்பதும் இல்லை;
(மற்று என்னெனில்), –
அ திசைமுகனோடு – அப்பிரமனுடனே,
உந்தி கமலம் விரிந்தால் – (எம்பெருமானது) திருநாபித்தாமரைமலர் (முன்னே) மலர்ந்தால்,
இ முது அண்டம் – பழமையான இந்த அண்டங்கள்,
விரியும் – (உடனே) தோன்றும்;
உகம் கடையில் – கற்பாந்தகாலத்தில்,
முந்தி குவியில் – முன்னே (அத்தாமரைமலர் பிரமனுடன்) மூடினால்,
உடனே -, குவியும் – (இந்த அண்டங்களும்) ஒடுங்கிவிடும்; (எ – று.)

“இருபது மந்தரத்தோளு மிலங்கைக்கிறைவன் சென்னி, யொருபது மந்தரத்தே யறுத்தோ னப்பனுந்தி முன்னாள்,
தரு பதுமந்தர வந்தன நான் முகன்றான் முதலா, வருபது மந்தரமொத்தபல்சீவனும் வையமுமே,”

“ஒரு நாலுமுகத்தவனோ டுலகீன்றா யென்ப ரதுன், திருநாபி மலர்ந்ததல்லால் திருவுளத்திலுணராயால்,”

“வெண்டிரைக்கனைகடல் நெடுவேலிமூதுலக, முண்டுபைத்தலைநாகபோகத்தினிலுறங்குந்,
தண்டுழாய்முகி லுந்தியந்தடத் தினிற் றுளைத்தாட், புண்டரீகமொன்றலர்ந்தது புவியெலாம்பூப்ப,”

“நீல மால்வரைநெற்றியிற்பொடித்தசெங்கதிரே, போலவான்சுடர்பொழிதருமு ளரியம்பொகுட்டின்,
மேலதாகவந்தெழுந்தது வெயில்விரிபசும்பொற், கோல மேவியகுலமறைமழலைவாய்க்குழவி” என்பன இங்கு நோக்கத்தக்கன.

“திசைமுகனோடு”, “உந்திக்கமலம்,” “முந்தி” என்பவற்றை “விரிந் தால்”, “குவியில்” என்னும் இரண்டனோடும்,
“உடனே”, “இம்மூதண்டம்” என்பவற்றை “விரியும்”, “குவியும்” என்னும் இரண்டனோடுங் கூட்டுக.
திசைமுகனோடு அண்டம் விரியும், திசைமுகனோடு அண்டம் குவியும் என்று கூட்டி யுரைக்கவுமாம்.
திசைமுகன் = நான்கு திசையையும் நோக்கிய நான்கு முகங்களை யுடையவன். “அத்திசைமுகன்” என்று சுட்டியது, பிரசித்திபற்றி; உலகறிசுட்டு.
உந்தி – கொப்பூழ். கமலம் – தற்சமவடசொல். “உகக்கடையிற் குவியில்” என்பதற்கு ஏற்ப, கற்பத்தின் தொடக்கத்தில் விரிந்தால் என்க.
முதுமை + அண்டம் = மூதண்டம்: பண்புப்பெயர், ஈறுபோய் ஆதிநீண்டது.
கற்பந்தோறும் அண்டம் ஒரு தன்மையதாயிருத்தல் தோன்ற, “மூதண்டம்” எனப்பட்டது.
அண்டம் பிரவாகம்போல நித்தியமாயிருத்தல் பற்றியும், “மூதண்டம்” எனத்தகும்.
பந்தி – பங்க்தி என்ற வடசொல்லின் விகாரம். கமலத்தடம் – திருக்காவேரியின் மடுக்களாகவுமாம்.
உம்மை – இழிவுசிறப்பு. “கண்டீர்” என்ற முன்னிலைப்பன்மையிறந்தகாலமுற்று, இயல்பு பற்றிய காலவழுவமைதியாய்க்
காண்பீரென்றபொருளில் வரும்; தெளிவு பற்றிய காலவழுவமைதியுமாம்.
இச்சொல் இடைச்சொல்தன்மைப்பட்டு முன்னிலையசையாயும் தேற்றப்பொருள்தருவதாயும் நிற்கும்.
உலகத்தாரை நோக்கி “இந்த உண்மையையும் வியப்பையும் எம்பெருமானது மகிமையையும் அறிவீராக” என்றவாறுமாம்.

——-

அடந்தை நடந்தை வனம் சூழ் அரங்கத்து அரவணை மேல்
கிடந்தனர் துங்கக் கிரிமிசை நின்றனர் கேழல் ஒன்றாய்
இடந்தனர் மீள விழுங்கினர் கான்றன ஈரடியால்
கடந்தனர் கை வழி மண் ஆனது இந்த மண் காரணர்க்கே –20-

(இ – ள்.) அடந்தை நடந்தை வனம் சூழ் – அடந்தை நடந்தை யென்ற சோலைகள் சூழ்ந்த,
அரங்கத்து – திருவரங்கத்தில்,
அரவு அணைமேல் – ஆதிசேஷனாகிய சயனத்தில்,
கிடந்தனர் – பள்ளிகொண்டருளினர்;
துங்கம் கிரிமிசை – உயர்ந்த திருவேங்கடமலையின்மேல்,
நின்றனர் – நின்றருளினர்;
கேழல் ஒன்று ஆய் – ஒப்பற்றதொரு வராகாவதாரமாகி,
இடந்தனர் – கோட்டாற் குத்தியெடுத்தருளினர்;
மீள – பின்பு,
விழுங்கினர் – (கற்பாந்தகாலத்தில்) விழுங்கியருளினர்;
கான்றனர் – (கற்பத்தொடக்கத்தில்) உமிழ்ந்து வெளிப்படுத்தியருளினர்;
ஈர் அடியால் கடந்தனர் – (ஸ்ரீராமாவதாரத்தில்) இரண்டுதிருவடிகளால் நடந்து கடந்தருளினர்;
(ஆகவே), காரணர்க்கு – (எல்லாவற்றிற்குங்) காரணராகிய எம்பெருமானுக்கு,
இந்த மண் – இந்தப்பூமி,
கை வழி மண் ஆனது – (மட்கலம்வனையுங்குயவன்) கைகளால்வழிக்கும் மண் போல ஸ்வாதீனமாயுள்ளது; (எ – று.)

எம்பெருமான் இந்நிலவுலகத்தில் திருவரங்கத்திலே பள்ளிகொண்ட திருக்கோலமாயும்,
திருமலையில் நின்ற திருக்கோலமாயும் எழுந்தருளியிருக்கின்றனர்;
மற்றும், கேழலாய்ப் பூமியை இடந்தும், இறுதியில் விழுங்கியும், பிறகு உமிழ்ந்தும், ஈரடியாற் கடந்தும் அருளினர்:
ஆதலால், ஜகத்காரணரான அப்பெருமானுக்கு, இந்தப் பூமி, குயவன்கைகளால் வழிக்கும்மண்போல,
ஸ்வாதீனமாயும், நினைத்தபடியெல்லாம் முடிவதாயும், எளியதாயும் இருக்கின்ற தென்பதாம்.

இங்கே, “தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி, வேட்கோச்சிறா அர் தேர்க்கால் வைத்த,
பசுமட் குரூஉத்திரள் போல வவன், கொண்ட குடுமித் தித்தண்பணைநாடே” என்ற புறநானூறு, ஒப்பு நோக்கத்தக்கது.

“கிடந் திருந்து நின் றளந்து கேழலாய்க் கீழ்புக்கு, இடந்திடும் தன்னுள்கர க்கும் உமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும்பாரென்னுமடந்தையை, மால் செய்கின்ற மா லார்காண்பாரே” என்ற திருவாய்மொழியையும்,
அதன் ஆறாயிரப்படிவியாக்கியானத்தில் “எம்பெருமான்தனக்கு இந்தஜகத்தானது இஷ்டஸர்வசேஷ்டாவிஷயமா யிருக்கையாலே
அவனுக்கே சேஷ மென்கிறார்” என்றதையும்,

“கோட்டுமண்கொண்டிடந் துகுடங்கையின் மண்கொண்டளந்து, மீட்டுமதுண் டுமிழ்ந்து விளையாடு விமலன்,”
“படைத்தபாரிடந்தளந் ததுண் டுமிழ்ந்து”,
“பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்ட, பேராளன்”,
“இதுநீ, படைத் திடந் துண் டுமிழ்ந்த பார்” முதலிய மற்றையாழ்வாரருளிச்செயல்களையுங் காண்க.

எளிமைகுறித்தற்குக் கைகளினின்றுவழித்தெறியும்மண்ணை உவமைகூறும் உலகவழக்கும் இங்குக் கொள்ளத்தக்கதாம்.

அடைமொழிகொடாமற் சொல்லப்படுஞ் சொல் அவ்வகுப்பிற் சிறந்த பொருளின் மேல்நிற்றல் இயல்பாதலால்,
“கிரி” என்பதற்கு – சிறந்தமலையாகிய திருவேங்கட மென்று பொருள்கொள்ளப்பட்டது;
“கோயில்” என்றது சிறப்பினால் திருவரங்கத்தைக் குறித்தல் போல, “திருமலை” என்பது சிறப்பினால் திருவேங்கடத்தைக் குறித்தலை யுணர்க.
அன்றியும், “கோயில் திருமலை பெருமாள்கோயில்” என்ற சேர்க்கைபற்றியும்
“அரங்கத்தரவணைமேற் கிடந்தனர்” என்றதை அடுத்துநின்ற “துங்கக்கிரி” என்பதற்கு – திருவேங்கடமென்று பொருள்கொள்ளத் தகும்.
இனி, திருவேங்கடம் திருமாலிருஞ்சோலை என்ற இரண்டுமலைகளையுங் கொள்ளலுமாம்;
“இடவமலைக்கும் புயங்கமலைக்கும் ……. இறைவ” என்பர் திருவரங்கத்தந்தாதியில்.
“மீள” என்றதை “கான்றனர்” என்பதனோடு கூட்டலுமாம். ஈரடி – உபயபாதம். கான்றனர். கால் – பகுதி.
அடந்தை, நடந்தை என்பன – ஸ்ரீரங்கத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் வைத்து வளர்த்துப் புஷ்பகைங்கரியஞ் செய்து
வந்த இடமாகிய பூஞ்சோலைக ளென்பர்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–பத்தாவது பத்து விவரணம்- –

February 16, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-——-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-

தாள தாமரையில்
நிருபாதிகமாக பரம பதத்துக்கு ஏறக் கொண்டு போய் விடக்கடவ பரம ஆப்தன்
காளமேகன் என்று நிச்சயித்துக் காளமேகத்தை வழித்துணையாகப் பற்றுகிறார்

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது-எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அர்ச்சிராதி கதிக்கு
உசாத்துணை யாவார் யுண்டோ என்று பார்த்த இடத்து
ஸ்வர்க்காதி லோகங்களுக்குப் போவார் ஒழிய இதுக்கான துணை அற்று இருந்தது

உயர்நலமுடையவனாய் இருக்கிறவன் யாவன் ஒருவன் மரணமான மஹா பயத்துக்கு
விரோதி நிரசன சீலனான காளமேகம் அல்லது துணையில்லை என்று
அவனை வழித்துணையாகப் பற்றுகிறார்

தாள தாமரை
மலையைச் சுமக்குமா போலே பூவின் பெருமை பொறுக்க வல்ல தாளை யுடைத்தான தாமரை
சேற்றின் நன்மையாலே உயர்ந்த தாளையுடைய தாமரை என்கை
இப்படி ஸம்ஸாரமாகிற வன் சேற்று அள்ளலிலே ஹ்ருத் புண்டரீகம் மலருகை அவன் பிரஸாதத்தாலே

தடமணி
தயரதன் பெற்ற மரகத மணித் தடாகத்திலே உபய விபூதிக்கும் ஏக ஸூர்யனானவன்
கருணையாகிற கிரணம் பட்டு அலறுவது ஹ்ருதய கமலம் இறே
தடத்துக்கு அவயவங்கள் ஆகிற பூக்களாலே அலங்கரித்தால் போல் இருக்குமாய்த்து தடம்

உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த செவ்வடி போல் உயர்ந்து காட்டின ப்ரகாசத்தாலே மயர்வு அற
ஹ்ருதயக் கமலமானது வன் சேற்று அள்ளலில் நின்றும் மயர்வற மதிநலம் அருளுகையாலே
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழு தரும்
யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்றும்
மதியாகிற ஞானத்தாலே திரு உலகளந்த திருவடிகள் போலே அதுக்குப் போலியாக உயர்ந்து காட்ட
வரம்புற்ற கதிர்ச் செந்நெல்
தடமணி வயலிலே கதிர்ச் செந்நெலானது வரம்புற்றுத் தாள் சாய்த்து தலை வணங்கும்

திரு வுலகு அளக்கிற போது -லங்கைஸ் ஸூராணாம் என்கிறபடியே தேவர்கள் திரண்டு
காலை நீட்டித் தலையை வணங்கக் கை கூப்பித் தெண்டன் இட்டால் போலே
இரா நின்றதாய்த்து செந்நெல்கள் ஆனவை விழுந்து தலை சாய்ந்து கிடக்கிற போது

இப்படிப்பட்ட தடங்களையும் வயலையும் யுடைத்தான திரு மோகூர் –
ஊரில் போக்யதை அடைய வயலில் காணும் அத்தனை

நாளும் மேவி
நாள் தோறும் அத்யாதரத்தைப் பண்ணி
அவ் ஊரில் விடிந்த விடிவுகள் எல்லாம் இவனுக்கு ஸூப்ரபாதா ச மே நிசா -என்னும்படி யாய்த்து இருப்பது
அவ்வூரில் வாஸம் ஒழிய வேறே ப்ரயோஜனத்தைக் கணிசியாதே இது தானே ப்ரயோஜனமாய் நின்று

அசூரர் இத்யாதி
ஆஸூர சங்கத்தைத் துணித்து அடக்கி விரோதியைப் போக்கி கொடு போக வல்லன் என்று தோன்றும் படி –

தோள் இத்யாதி
இவர் இப்போது அறிந்த படி என் என்னில்
விடு காதானாலும் தோடிட்டு வளர்ந்த காது என்று தெரியும் இறே
அப்படியே உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் –
ஞான ப்ரதனாய் -நித்ய முக்த அநுபாவ்யனாய் -சதுர் புஜனாய் -சங்கு சக்ர கதா தரனாய்
கேசவ கிலேச நாசன என்கிறபடியே மை வண்ண நறும் குஞ்சியை யுடையவனாய் -புண்டரீகாக்ஷனாய் –
சிவந்த கனிந்த வாயை யுடையனாய் -திவ்ய ஸுந்தர்ய உபேதனாய் -மேக ஸ்யாமளமான நிறத்தை யுடையவனாய்
இருக்குமவன் துயர் அறு சுடர் ஆதி தொழுது எழும்படி நாளும் மேவிற்று என்கிறார் –

சுரி குழல் கமலக் கண் கனி வாய்
நெடு நாள் சம்சாரத்தில் பட்ட ஸகல தானங்களும் ஆறும்படி இருக்குமாய்த்து
பின்னே போகிறவனுக்கு முன்னே போகிறவன் ஒருக்கால் திருக்குழலைக் குலைத்து -நொழுந்த -நுழுந்த –
கேசவ கிலேச நாசகனாய் இறே இருப்பது –

கமலம் இத்யாதி
ஷூத்ர விஷயங்களினுடைய பொய்யான நோக்கிலும் பொய்யான முறுவலிலும் அகப்பட்ட நெஞ்சாரல் தீரும்படி
மெய்யான நோக்கும் மெய்யான முறுவலும் இருக்கும்படி சொல்லுகிறது –

காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
ராஜாக்கள் போம்போது முன்னே மகம் நீர் விடுமா போலே முன்னே காளமேகம் ஸுந்தர்ய ஸுகந்த்ய
கல்யாண அம்ருத வ்ருஷ்டி வர்ஷித்துக் கொண்டு போக
பின்னே குளிர்ந்த வாசத்தை அனுபவித்துக் கொண்டு போகலாய் இருக்குமாய்த்து

அவன் அடி நிழல் தடம் ஒழிய -யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
காள மேகத்தை ஒழிய வேறே வழித்துணை மனமே யுடையோம் அல்லோம் என்கிறார் –

————

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

கெடும் இடரிலே
ப்ராப்ய பூமியான பரமபதத்திலே போனால் செய்யும் அடிமையைத்
திருவனந்த புர வ்யாஜத்தாலே மநோ ரதித்தார் –

———–——–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

உயர்வற -என்கிற பாட்டை விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஒருவருக்கு ஒருவர்
சேஷ வ்ருத்தி பண்ணி அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து அத பதித்துப் போக
அங்கன் அன்றிக்கே
ப்ராப்த விஷயமான உயர்நலம் யுடையவன் எவன் அவன் திருவனந்த புரத்திலே ஸந்நிஹிதனானான்
அங்கே ஆஸ்ரயிக்குமவர்கள் நித்ய ஸூரிகளாவார்கள் -அங்கே நீங்களும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவன் பராத்பரன் இங்கே சன்னிஹிதனாகப்
புண்ணியம் செய்து
ஸ்நேஹம் ஆகிற புண்யத்தைப் பண்ணி
புண்ணியம்
வர்ணாஸ்ரம தர்மங்களை இதி கர்த்தவ்யதையாக உடைத்தாய் இருக்கும் இறே

ஆக ஸத் கர்ம பலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை நினைக்கிறது -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற படி
மத் பக்தோ மன் மநா பவ -என்னக் கடவது இறே

மயர்வற
அவித்யாதிகளைப் போக்கி மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளினவன் எவன் அவனுக்கு
நல்ல புனலொடு மலர்கள் தூவி
நல்ல புனலோடே கூடின மலர்களை ப்ரேம பரவசராய்க் கொண்டு பரிமாறி
இத்தால் அர்ச்சனாதிகளைச் சொல்கிறது
மத் யாஜீ மாம் நமஸ்குரு -என்னக் கடவது இறே

எண்ணுமின் எந்தை நாமம்
தியானித்து -ஸததம் கீர்த்த யந்த -என்னா நின்றது இறே
எந்தை நாமம்
இடறினவன் அம்மே என்னுமா போலே திரு நாமம் சொல்லும் போது அதிகாரி சம்பத்து தேட வேண்டா என்ன

ஜீயர் பட்டரைத் திரு நாமம் சொல்லும் போது ப்ரயதனாய்க் கொண்டு சொல்ல வேணுமோ என்ன
கங்கையிலே முழுகப் போனவனுக்கு வேறொரு உவர்க்குழியிலே முழுகிப் போக வேணுமோ
மேலுண்டான நன்மையைத் தருமது அதிகாரி சம்பத்தியைத் தர மாட்டாதோ என்று அருளிச் செய்தார்

தகிரு நாமம் சொல்லுகைக்கு ருசியே யாய்த்து வேண்டுவது -ருசித்தவர்களே அதிகாரிகள்

இப்பிறப்பு அறுக்கும்
கண்டது இறே இத்தினுடைய இழை ஈடு
கவிழ்ந்து பார்க்க இதினிடைய அக்வாயைக் கண்டால் தன்னடையே விரக்தி பிறக்கும் இறே

இப்படி ப்ரத்யஷிக்கச் செய்தேயும் கார்யகரம் ஆகாது இருக்கிறது இறே வாசனையின் கனம்
மம மாயா துரத்யயா -என்னும்
மாயான் தரந்தி தே -என்னும் சொல்கிறபடியே
பாக்யவான்களுக்கே இதனுடைய தோஷ தர்சனத்தைப் பண்ணிக் கழற்றிக் கொள்ளுகைக்கும்
பாக்ய ஹீனருக்கு இதிலே போக்யதா புத்தி பண்ணி அநர்த்தப் படலாம் படி
கர்ம அனுகுணமாக இத்தை இடை எடுத்துக் காணும் ஈஸ்வரன் பண்ணிற்று –

அந்த ஈஸ்வரன் மயர்வற மதிநலம் அருளுகையாலே அதின் அல்ப அஸ்திரத்வாதிகள்
இதுக்கு நிலை நின்ற ஸ்வ பாவம்

இப்பிறப்பு அறுக்கும்
இப்படி ஹேயதயா ஞாதவ்யமான இத்தேஹ ஸம்பந்தத்தை அறுக்கும்

என் செய்தால் என்னில்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் நித்ய விபூதியிலும் போந்து
செறி பொழில் அனந்த புரத்திலே நித்ய வாஸம் பண்ணி அருளுகிற அண்ணல்
செறிந்த சோலையை யுடைத்தான திருவனந்த புரத்திலே வந்து கண் வளர்ந்து அருளுகிற
ஸ்வாமியுடைய கமல பாதம் அணுகித் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

கமல பாதம் என்றது
போக்யமான திருவடிகளைக் கிட்டுமவர்களுக்குத் துயர் அறுக்கும் -பிறவி அறுக்கும் என்றபடி –
சுடர் அடியானது அப்பால் அமரருக்கும் அமரர் ஆனவர்களுக்கும் இப்பிறப்பு அறுக்கும் என்ன வேண்டாதே
தேஹத்தைப் பரிகரித்து அடிமை செய்கிறவர்களுக்கும்
திருவனந்த புரத்திலே நித்யர் முக்தர் முதலானோரும் அடிமை செய்யக் கண் வளர்ந்து அருளுகிறவன்
துயர் அறு சுடர் அடிகளை அணுகுவார் –

ஆஸ்ரயித்தவர்கள்
அமரர் ஆவார்–
அமருக்கும் அமரர் ஆவார்

திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
அவனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நாம்
தேஹாத்ம அபிமானிகளாகிற நீங்களும் அறியும்படி உங்கள் அநர்த்தத்தைத் பார்த்துச் சொன்னோம்

அண்ணலார் கமலபாதம் அணுகுமவர் அமரர் ஆவார்

——–——–

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

வேய் மரு தோளிணையிலே
மநோ ரதித்த போதே ப்ராப்ய தேசத்திலே புகப் பெறாமையாலே இன்னமும் இச் சரீரத்திலே
வைக்கில் செய்வது என் என்று அதி சங்கை பண்ண
ஸர்வேஸ்வரன் தெளிவிக்க அதி சங்கை தீர்ந்தார் –

——–————–

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அர்த்த காம உபேதராய்
அத பதித்தார்கள்
அதிலே தமக்கு பகவத் கடாக்ஷத்தாலே பகவத் அனுபவம் மிகுந்தது –

பணி மொழி
ப்ரமாணங்களோ ஆஸ்ரித பரதந்த்ரர் என்னா நின்றது
இதுக்கு விஸ்லேஷம் வரில் செய்வது என் என்று தன் விஸ்லேஷ பீருத்வத்தை
அவன் தனக்கே அருளிச் செய்கிறார் –

உயர்நலம் யுடையவன் எவன் அவன் ஸுலப்யாதி குண பூர்ணனானவன் ஸந்நிஹிதனாய் இருக்க
இப்படிப்படுகிறது என் என்ன

நீ பசு மேய்க்கக் கடவையான பின்பு நீயும் போனாயே
நீ போனால் நலியக்கடவ ஸந்த்யாதி பதார்த்தங்களாலே நலிவு படுகிற என்னை
ஆஸ்வசிப்பித்து அருள வேணும் என்கிறாள் –

உயர்வற உயர்நலம் யுடையவனான நீ –
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
நீ பிரிவை நினைத்து பிரியேன் என்று சொல்லுகிற உன் வார்த்தை போலே
உன்னைப் பிரியாமைக்காகச் சொல்லும் வார்த்தை அல்ல
உன்னது கள்வப் பணி மொழி யாகையாலே பொய்
இது அனுபவத்துக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகிறதாகையாலே மெய் என்ன

நான் போனேனோ -என்ன

பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பகல் எல்லாம் பசு மேய்க்கப் போனாய்
கண்ணா
என்று சம்போதித்து வைத்து -அவன் தனக்கே நீ போனாய் என்கிறாள் இறே
மேய்க்கிய -மேய்க்கப் போனாய்

நீர் இது அறிந்த படி என் என்ன
நீ மயர்வற மதி நலம் அருளினாயே -அத்தாலே அவித்யாதிகள் நசித்தது
ஸ ஹேதுகம் அல்லாமையாலே அந்த அருள் பக்தி புரஸ் சரமான ஸம்சயத்தைத்
தீர்க்க வேண்டாவோ

என்னைப்
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
நீ போனால் பாதகமாகக் கடவ மல்லிகை கமழ் தென்றல் தொடக்கமானவை மறுவலிடுகையாலே
நீ போனது அநுசிதம் என்கிறாள்

கட்டவிழ்கிற மல்லிகையினுடைய மணத்தை வாடையானது தூவா நின்றது
ராவணன் ஸந்யாஸி வேஷத்தைக் கொண்டு வந்து தோற்றினால் போலே வாடையானது
குளிர்க் காற்றாய் வந்து நலியா நின்றது –

பத்ம கேஸர ஸம் ஸ்ருஷ்ட
மத்தகஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே வாடையை முன் நடக்கவிட்டுக்
கொண்டாயித்து மாலை வருவது
இவளை மதிப்பதால் கூட்டுப்படையாய் வாரா நின்றதாய்த்து

வந்தின்றாலோ
வந்தது கிடாய் -உடம்பிலே பட்டு ஒழிந்தது கிடாய்
பகதத்தன் விட்ட அஸ்த்ரத்துக்கு அர்ஜுனனைப் பின்னே இட்டு உன் மார்பிலே ஏற்றால் போலே
நடுவே புகுந்து வந்து கட்டிக்கொள் என்கிறார் –

பெரிய கிளர்த்தியுடைய மலையானது வரும் என்று அஞ்சுகிறதில்லை -வந்தது

ஆனால் செய்ய அடுப்பது என் என்ன

நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி -அயர்வற்று அனுபவிப்பார்க்கு அபர்யாப்த்த அம்ருதனான
நீ தான் யாவன் ஒருவன் ஸ்ருதி ப்ரஸித்தனான
யுன்
மணி மிகு மார்பினில்
ஸ்ரீ கௌஸ்துபம் மணி நிறம் பெறும்படியான மார்பு என்னுதல்
திரு மார்பு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்திலே புகரேயாம் படி இருக்கும் என்னுதல்
கலவியில் கழற்ற வேண்டாதபடி இரே ஸ்ரீ கௌஸ்துபம் இருப்பது
நிரதிசய ஸூக ஸ்பர்சன் என்னக் கடவது இறே

இவளுடைய ஸ்த்ரீத்வத்துக்கு ஸ்தனம் போலே யாய்த்து அவனுடைய மார்பில் கௌஸ்துபம் –
புருஷோத்தமத்வ லக்ஷணம் இறே
அம்மார்பில் முல்லை மாலையால் என்னுடைய அழகிய முலையை பரிமளிதமாக்கி –
ஸ்ரீ கௌஸ்துபத்தோடே தோளில் மாலையோடே வாசி இன்றிக்கே போக உபகரணமாய்த்து

தோளில் முல்லை மாலையின் பரிமளத்தை என் முலைக்கு ஆக்க வேணும் என்கையாலே
அக்ராம்யமாகக் கலவியைச் சொன்ன படி
குளித்துப் பூச்சூட இருப்பாரைப் போலே யாய்த்து இம்முலைகள்
இவை பிரம்மச்சாரி முலையாகாமே அம்மாலையிலே பரிமளத்தாலே இவற்றை வாசிதமாக்காய் –

அம்மலையில் பரிமளம் இங்கு உற்று ஓங்குவதாகப் பண்ண வேணும்
அம்மாலையின் பரிமளம் முலையிலே யாம்போது கலவியை ஒழிக்கக் கூடாது இறே
கிம் ஸூகம் வனமாலா ஸம் மஹ்ய -என்றால் போலே

உன் வாய் அமுதம் தந்து
சம்ஸ்லேஷ ரஸம் உன்மஸ்தகமாக மிக்க வாறே தாரண அர்த்தமாகச் சில பேச்சு உண்டு இறே
பேசுவது -அப்பேச்சாதல்
அன்றிக்கே வாக் அம்ருதத்தைச் சொல்லவுமாம்
பேச்சு என்று நிர்வகித்துப் போருவது

அணி மிகு தாமரைக் கையை யந்தோ
உன் போக்கை நினைந்து நா நீர் வருகிறது இல்லை
அதுக்குப் பரிஹாரமாகவும் -நான் துயர் அறு சுடர் அடி தொழுது எழும் படியும்
என் நெஞ்சுக்கு இனிமை பிறக்கும் படிக்கும்
ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளையே தொழுது வர்த்தி என்று
உன் பயஹஸ்தமான

அணி மிகு தாமரைக் கையை யாய்
திவ்ய பூஷண அலங்க்ருதமாய் நிரதிசய போக்யமாய் இருந்துள்ள திருக்கைகளை
என் தலையிலே வைக்க வல்லையே
நா நீர் வருகைக்கும் இவர்களுடைய முந்தி கைப்பழம் இருக்கிற படி –

அணி மிகு தாமரைக் கை
ஆபரணம் மிகையாம்படி
சர்வ பூஷண பூஷார்ஹா என்கிறபடியே தனக்குத் தானே ஆபரணமாக கை
பசு மேய்க்கப் போன நீ வரும் அளவும் எனக்குத் தாரகமாக யுன் கையில் ஆபரணத்தைத் தர வேணும்
என்றவர்களுக்காய்த்து வாங்கி இட்டு வைக்கும் இறே
பசு மேய்க்கப் போகைக்குத் தான் ஒப்பித்த படியைச் சொன்னாள் ஆகவுமாம்
அத்தைச் செய்து அவன் போகப் புக்கவாறே சிதிலை யாகிறாள் இறே

தாமரைக் கையை யந்தோ-அடிச்சியோம் தலை மிசை யணியாய்-
குளிர்ந்த தண்ணீர் விடாய்த்தாருக்கு வாராய் என்று சொல்ல வேண்டுவதே யுனக்கு

அடிச்சியோம்
உன் துயர் அறு சுடர் அடி தொழுகையே நிரூபகமான அடியோம்
உன் அழகுக்குத் தோற்ற தோல்வி சொல்லுகிறாள்

தலை மிசை நீ அணியாய்
ஆபரணத்துக்கு ஆபரணம் போலே யாய்த்து இவள் தலைக்கும்
பாத பங்கயமே தலைக்கு அணியாய் என்பது

தாமரைக் கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
என்பதாய்க் காலைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளப் பார்க்கிறார் –
மதீய மூர்த்நாம் அலங்க்ரிஷ்யதி -என்று இறே இவர்கள் இருப்பது

இந் நிர்பந்தங்கள் எல்லாம் ஆர் அறிவார் -வேனுமாகில் எடுத்து வைத்துக் கொள்ளாய் என்ன
காலன் கொண்டு மோதிரம் இடுவாரைப் போலே என் பேற்றுக்கு நான் யத்னம் பண்ணுமவளோ
நீயே மேல் விழுந்ததாகக் கொள்ளுமவள் அன்றோ
நான் என்றும் அத்தலையால் பெறும் இருக்குமவள் இறே இவள் தான் –

அணியாய்
ஆற்றாமை மிக்கது என்னா அல் வழக்குச் செய்யோம் என்ன
நீ அஞ்சல் என்ற கையாலே நிர்ப்பயனாக்கிச் சுடர் அடி தொழுது எழப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

———-——–

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

பத்துடை அடியவரில் சொன்ன பக்தி ஸ்வ ஸாத்யத்தோடே பொருந்தின படியை அருளிச் செய்கிறார்
உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக -சாதனாந்தரங்களாலே
ப்ருஹ்மாதிகள் ப்ரயோஜனாந்தரங்களாலே உயர்வு தாழ்வுமாய் அற்றார்கள் –

அவர்களிலும் தாழ்வான இவர் -ப்ராப்ய பிராபகங்கள் -உயர்வற உயர்நலமுடைய
ஸர்வ ஸ்மாத் பரனே என்று இருக்கிற இவர்
உயர் நலமுடையவனைப் பற்றிப் பிரிய நினைவு இன்றிக்கே இருக்கப் பிரிந்தானாக அதி சங்கை பண்ணி
உம்மை ஒரு நாளும் பிரியோம் காணும் என்றவன் ஆஸ்வசிப்பிக்க -அத்தாலே தரித்து ப்ரீதரானார் –

உபய விபூதி யுக்தனாய் இருந்து வைத்து ஆஸ்ரித ஸூலபனானவன் திருவடிகள் பக்தி யோக லப்யன் என்கிறார் –
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன்
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
உயர்நலம் –ஞான ஆனந்த ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் -ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
சார்வே தவநெறி என்றும்
பத்துடை அடியவருக்கு எளியவன் என்றும்
எளிவரும் இயல்வினன் என்றும் சொன்னவன் திருவடிகளே சார்வு என்கிறார்
சார்வு -ப்ராப்யம்
அங்கு அவன் சார்வு என்கிறார்
இங்கே சார்வே என்று அவதாரணத்துடன் அருளிச் செய்கிறார்

தவ நெறிக்கு -பக்தி மார்க்கத்துக்கு -தபோ மார்க்கம் -என்றபடி –
வணக்குடைத் தவ நெறி என்றாரே அங்கே -அத்தைச் சொல்கிறார்
நமஸ் யந்தச்ச மாம் -என்று நமஸ்ஸைக் கரண சரீரமாக யுடைத்தாய் இருக்கும் இறே பக்தி

தவ நெறி என்னும் காட்டில் பக்தியைச் சொல்லித்தாமோ என்னில்
யஸ்ய ஞான மயந்தப -என்றும் ஞான விசேஷமான பக்தியைத் தபஸ் என்றும் சொல்கிறது –

அன்றிக்கே
இவன் ஒரு ப்ரணாமத்தைப் பண்ணினால் -இவன் நம்மை நோக்காக குவாலாக வருந்தினான்
என்று இது தன்னைப் பெரிய காயக் கிலேசமாக
நினைத்து இருக்கும் அவன் கருத்தால் சொல்லிற்று ஆகவுமாம்

தாமோதரன் தாள்கள்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்றதைச் சொல்லுகிறார் இங்கு
யசோதாதிகள் கையிலே கட்டுண்டு தழும்பு சுமந்ததுவே திரு நாமமாய் இருக்குமவன் இறே

யசோதாதிகள் கட்டுண்பான் ஒருவனான பின்பு அவனை யுகப்பார் அவன் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை

அப்படிப்பட்டவன் ஸூ லபனாகிறான் எவன் அவன் என்னில் மயர்வற மதி நலம் அருளினவன் எவன் அவன்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
தன்னுடைய மேக ஸ்யாமமான குளிர்ந்த வடிவையும் கடாக்ஷ அம்ருத வ்ருஷ்டியை வர்ஷிக்கிற
விகஸிதமான திருக்கண்களையும் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே விசதமாகக் காட்டின படி
விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் உபய விபூதி நாதன் என்கிறார்

கார்மேக வண்ணன்
இந்த பக்தி விளையும் படி கிருஷி பண்ணியும் வர்ஷித்து ருசிக்கு உத்பாதகனாய் இன்பத்தை வளர்த்து
அது பக்குவமானால் பர ஞானத்துக்கு ப்ராப்யமுமான வடிவை யுடையவன்

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி இறே
கார் காலத்து மேகம் என்னுதல்
கறுத்த மேகம் என்னுதல்
புயல் கறுத்த நிறத்தனன் என்றத்தைச் சொல்லுகிறார்

கமல நயனத்தன்
அவ்வடிவுக்குப் பரபாகமாய் அகவாயில் வாத்சல்ய ப்ரகாசகமான குணங்களுக்கு ப்ரகாசகம் இறே திருக்கண்கள்
அனுக்ரஹம் அடையத் தோற்றுவது கண் வழியே இறே
வாத்சல்ய ப்ரகாசகமான வடிவு அழகு அன்றிக்கே மேன்மை கண்டு மேல் விழ வேண்டுமவனாய்த்து

அயர்வறும் அமரர்கள் அதிபதி -தத் வியதிரிக்தங்களிலே வாசனையும் இல்லாத நித்ய முக்தர்களை சந்த
அனுவ்ருத்தி கொள்ளுகிறவன் எவன் அவன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
விக்ரஹ வை லக்ஷண்யமே அன்றிக்கே ஸ்வரூப வை லக்ஷண்யத்தைச் சொல்லுகிறது
யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன் என்றத்தைச் சொல்லுகிறது என்று நிகமிக்கிறார் –

பிருதிவ்யாதி பஞ்ச பூதங்களையும் சொன்ன இத்தாலே
அவற்றின் கார்யமான தேவாதி விசேஷங்களையும் நினைக்கிறது
இத்தால் லீலா விபூதியைச் சொல்கிறது

நேமியான்
கையும் திருவாழியுமாய் நித்ய விபூதியில் இருக்கும் இருப்பை அயர்வறும் அமரர்கள்
அபர்யாப்த்த அம்ருத தாசிகளுக்குப் போக்யமான வனுக்கு அடையாளமும் -அதுவே நிரூபகமும் –

இப்படி உபய விபூதி யுக்தனுடைய துயர் அறு சுடர் அடி தொழுது
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–
இவ்வருகில் ஆக்கனான தேவாதிகள் அன்றிக்கே அவ்வருகில் பெருமக்கள் ஏத்தும்படியான
பெருமையை யுடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

எனக்கு கரணமான நெஞ்சே -வானவர்கள் பேர் பிதற்றும் பெருமையனைத் தொழுது எழு
இங்கும் ருசியுடையாரும் பிதற்றும் அத்தனை

கார் மேக வண்ணனாய் கமல நயனத்தனாய் -நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியனாய்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையை யுடையனாய் இருந்து வைத்துத்
தாமோதரனானவன் திருவடிகள் தவநெறிக்குச் சார்வே
இது நிச்சிதம் –

—————–

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

கண்ணன் கழலிணையில்
வீடுமின் முற்றத்திலே
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் என்று தொடங்கின படியை
அருளிச் செய்து தலைக்கட்டி
பக்தியினுடைய பிரகாரம் இருக்கும் படியை அருளிச் செய்து
பர உபதேசத்தைத் தலைக்கட்டு அருளுகிறார் –

—————–———

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தத்து அளவும் மோக்ஷ சாதனங்களாக
கர்ம ஞானாதிகளை அனுஷ்ட்டிப்பாரும் பக்தி பிரபக்திகளை அனுஷ்ட்டிப்பாருமாகையாலே
கால விளம்பமாய் அதில் எவ்வளவு குறையிலும் பழிப்பது இல்லை

தமக்கு பக்தி ஆர்ஜித்த பக்தியும் அன்றிக்கே -அர்த்தித்துப் பெற்ற பக்தியும் அன்றிக்கே
அருளின பக்தி யாகையாலே
உயர் நலமுடையவன் எவன் அவன் -ஆனந்தாதி குணங்களாலே பரிபூர்ணனான ஸர்வேஸ்வரன்
நாளேல் அறியேன் எனக்குள்ளன நாள் என்ற இவருக்கு மரணமானால் என்று இறே
நாளிட்டுக் கொடுத்தது

அத்தனை க்ரமம் பொறுக்க மாட்டாதே ஈஸ்வரன் தன்னைக் கொண்டு போகையிலே
த்வரிக்கிற படியைக் கண்டு
மரணமானால் என்ற அளவும் பொறுக்கிறிலன் –
நெடுநாளாய்த் தோற்றி ஈஸ்வரன் செய்கிறபடி தமக்குத் தவிராததாய் இருந்தது
இனி இவர்கள் இந்த பிரபத்தி மார்க்கத்தை இழக்க ஒண்ணாது -இத்தை உபதேசிப்போம் என்று
தமக்கு ஒன்றும் பிறருக்கும் ஒன்றும் ஆகாதே த்வயத்தை உபதேசிக்கிறார் –

உயர்வற உயர்நலமுடையவன் எவன் அவன்
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
உயர்நலமுடையவன் எவன் அவன் -மாதவன் -ஸ்ரீ யபதியானவனை ப்ரீதி பிரேரிதரராய் ஆஸ்ரயிக்கவும்
இனிமையோடு திரு நாமம் சொல்லவும் மாட்டாதார்
அந்தப்புர பரிகரமான வார்த்தையைச் சொல்லவே பூர்ண உபாசனத்தில் பலம் ஸித்திக்கும் என்கிறார்

ஞான ஆனந்த ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் இருந்துள்ள ஸ்ரீ யபதியானவனை
மாதவன் என்று த்வயமாக்கி
நாராயண சப்தத்தோடு இத்தைச் சேர்த்துச் சொல்லப் பாருங்கோள்

நாரணம் என்றாரே கீழே
தமக்கு ஈஸ்வரன் மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன் மாதவன் -ஸ்ரீ யபதியான நாராயணன்
தமக்கு பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளி சரணாகதி வழியிலே நிறுத்தினான்

ஓத வல்லீரேல்
உங்களுக்கு ருசி இல்லையாகிலும் பர பிரேரிதரராய்க் கொண்டு ஓதி நிரந்தரமாகச் சொல்ல வல்லீராகில்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் யாவன் ஒருவன் அவன் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தர் பரிசர்யை பண்ண
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்பக் கண்ட சதிர்
மாதவன் என்று என்றே ஓதுகையே மா சதிர்

தீது ஒன்றும் அடையா
உத்தர ஆகத்துக்கு நெஞ்சு செல்லாது
துயர் அறு சுடர் அடி தொழுகையாலே பூர்வாகம் அற்றது

ஏதம் சாராது
என்கையாலே உத்தர ஆகத்துக்கு அஸ்லேஷமே யாம்
ஏதம் சாராவே
பூர்வ ஆகத்தை விஸ்மரிக்கும்
உத்தர ஆகத்துக்கு நெஞ்சு செல்லாது
தொழுது எழு என் மனனே

கீழ்ச் சொன்ன திருமந்திரமும்
இப்பாட்டில் சொன்ன ஸ்ரீமத் பதமும்
தனித்தனியே பக்தி பிரதிபத்திகளுக்கு வாசகம் ஆகையாலே
பேற்றுக்கு அபர்யாப்த்த அர்த்தமாய் நிரதிசய போக்யமான பின்பு
இரண்டையும் சேர்த்துச் சொன்னவர்களுக்குப் பேறு சொல்ல வேண்டா இறே என்று
தன் திரு உள்ளம் போல்வாருக்கு உபதேசித்து அனுபவிக்கிறார் –

——–———–

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அருள் பெறுவாரிலே
தம்மை விக்ரஹத்தோடே திருநாட்டிலே கொண்டு போகைக்காக அவன் வந்து த்வரித்து
அவஸர ப்ரதீஷனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்
உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற என்று மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
தேவதாந்த்ர சாத்தனாந்தர ப்ரயோஜனாந்தரங்களிலே போயிற்று
இவர்களிலும் தண்ணியரான இவர் பெற்ற பேறு சொல்கிறது –

உயர்வற உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் இவருக்குப் பொய் நின்ற ஞானம் தொடங்கி
இவ்வளவும் வர -ஈஸ்வரனை ஆழ்வார் பின் தொடர்ந்தபடி சொல்லிற்று
இது தொடங்கி ஆழ்வாரை ஸர்வேஸ்வரன் பின் தொடருகிற படி சொல்கிறது

உயர் நலம் யுடையவனுடைய அருள் பெறுவார் அடியார்
ஈஸ்வரன் நம்மை விஷயீ கரிக்கையிலே ஒருப்படா நின்றான்
அது தானும் தாம் விதித்தபடி செய்வதாக இரா நின்றான்

உயர்நலம் யுடையவன் -அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு
ஹேது தான் இருக்கிற படி
ஸர்வேஸ்வரன் பண்ணும் ப்ரஸாத அதிசயத்துக்கு விஷய பூதராய் இருப்பார் சிலர் உண்டு –
அவர்கள் நமக்கு ஸ்வாமிகள்
அவர்கள் பக்கல் அவன் பண்ணின அருள் நம்மளவும் வர வெள்ளம் கோத்தது காண் என்கிறார் –

எல்லாரும் அடியார் அன்றோ என்னில்
தான ஹந் த்விஷத -என்று பிரஜை தீம்பிலே கை வைத்தால் மாற்றைக் கொண்டு
வாய் வாய் என்பாரைப் போலே அவன் தானே சீற வேண்டும்படி இருப்பார் சிலர் உண்டு –

அவர்களைப் போல் அன்றியே -ததாமி -என்று அவனுடைய அருளுக்கு விஷய பூதராய் இருப்பார் சிலர் உண்டு –
அவர்கள் பண்ணும் அருளை -அவர்கள் பக்கல் பண்ணும் அருளை நம் பக்கலிலே மயர்வற மதிநலம் அருளினன்
அவித்யாதிகள் சவாசனமாகப் போயிற்று தன் நிர்ஹேதுக கிருபையாலே

அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான்
ராஜாவுக்குப் புறம்பே நாடு முறையில் செல்லா நிற்கத் தன்னையும் தன் ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் இறே
மஹிஷி விஷயத்தில்
அப்படியே அவன் தன்னை முற்றூட்டாகக் கொடுத்து அனுபவிப்பித்தான் –
பாரதந்த்ர ஏக பரராய் இருப்பார் சிலர் உண்டு -அவர்கள் பக்கல் பண்ணும் அருளை என் பக்கலிலே பண்ணினான்

அவர்கள் யார் என்னில்
மந்த்ர ரத்னத்தில் மத்யமபத நிஷ்டர்கள்
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
இருவருக்கும் நிரூபகமாய் இருக்கிற படி
இவர் அருள் பெறுவார் அடியார் தம் அடியார்
அவன் ஆழியான்
இருவருக்கும் நிரூபகம் ததீயரே

காணும்
நீக்கமிலா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் -என்றும்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க-என்றும் சொன்ன வார்த்தையை நினைத்து இருந்தான் –

ஸர்வேஸ்வரன் நம் பக்கலில் முழு நோக்காக ப்ரஸாதத்தைப் பண்ணினான்
திருவாழியை ஒரு கண்ணாலும் இவரை ஒரு கண்ணாலும் பார்ப்பதாகா நின்றான்
விடலில் இத்யாதி
கையில் திருவாழியை விடில் அன்றோ உம்மை விடுவது என்னா நின்றான்

ஆழியான் என்றே நிரூபகம்
அஸ்மாபிஸ் துல்யோ பவது -என்று அவர்கள் பக்கல் பண்ணும் அருளை என் ஒருவன்
பக்கலிலேயும் பண்ணா நின்றான்
அவர்கள் அருள் பெறுவார் அடியார் ஆய்த்து
இவனும் அருள் தருவானாய் அமைகின்றன ஆய்த்து

அமைமின்றான்
பாதி சம்வாதம் குறைவற்றது
அருளின காரியமும் குறைவரத் தருவதாகப் பாரித்து நின்றான்

அவன் பிரசாத அதிசயத்தைப் பண்ணுவதாக பாரியா நின்றானாகில் -அவன் தான் ஸர்வேஸ்வரன் ஆகில்
பின்னைக் கண் அழிவு என் என்னில்

அது நமது விதி வகையே
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அயர் -அசர்வு -அது இல்லாமல்
பூர்வே ஸாத்யர்களால் ஆராதிதனானவன் யாவன் ஒருவன் அவன் நித்ய சம்சாரியாய்ப் போந்த என்னைத்
தன் நித்ய விபூதியிலே கொண்டு போய் அனுபவிக்க வேணும் என்று பாரித்துக் கொடு வந்து புகுந்து
ஆஸ்ரித பரதந்த்ரன் ஆகையாலே நாம் விதித்த படியே செய்வானாகப் பாரா நின்றான்
அது செய்யும் இடத்து நான் சொன்னபடி செய்வானாக வேண்டி இரா நின்றான்
அது நம்முடைய பாக்ய அனுகுணமாக இறே என்று பூர்வர்கள் நிர்வாஹம்

எம்பெருமானார் கேட்டருளி இத்திருவாய் மொழியிலே மேலோடுகிற ரஸத்தோடே சேராதே
நாம் விதித்தபடியே செய்வானாக இருந்தான் என்கிறார் என்று அருளிச் செய்தார்

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று பாரித்துப் போந்தவர் தாமே க்ரியதாம் இதி மாம் வத எனப்
பார்த்து இருந்தால் போலே இவர் சொன்னபடி செய்வானாய் இரா நின்றான்

நமது சொல்வகை என்னாதே விதிவகை என்பான் என் என்னில்
விதி அதிக்ரமத்தில் ப்ரத்யவாயத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்
தான் நினைத்தபடி செய்கைக்குத் தன் பக்கலில் குறைவற்றாலும் இத்தலையில்
இச்சை ஒழியக் கொடு போகாதே யவன் -புருஷோத்தமன் அபும்ஸ்த்வம் வரும்படி செய்யான் –
நமது விதி வகையே
தத அநு ஜா நந்தம் உதார வீக்ஷணை -என்று கடாஷிக்குமவன் கிடீர்
இவன் விதிக்க வேண்டி இருக்கிறான்
அருளுகிறார் ஸர்வேஸ்வரன் ஆகில் அது தான் நாம் விதித்த படி செய்வானாய் இருந்தானாகில்
இனி கண் அழிவு என் என்ன

இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
இனி நீயும் இசையுமத்தனையே வேண்டுவது இதுவே கண்ணழிவும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவர்களும் தானுமாய் இவனை அணையில் வைத்து
ஆதரிக்கைக்காக வந்து நம் அனுமதி பார்த்து இருந்தான்

மருள் ஒழி நீ மட நெஞ்சே
நான் அவன் வழியே போவதாகப் பார்த்தேன் -நீயும் அவன் வழியே போவதாகப் பாராய்
உமக்குத் தான் அவன் வழியே போக வேண்டுகிறது என் என்ன
இருள் தரும் மா ஞாலமாய் இருந்தது -ஸம்ஸாரம் ஆகிறது இருக்க இருக்க அஞ்ஞானத்தைத் தருவது ஒன்றாய் இருந்தது
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆள்வானையும் எதிரிடப் பண்ணிற்றே

மருள் ஒழி
வான் உயர் இன்பம் எய்தில் என் -மற்றை நரகம் எதில் என் என்று இருந்ததோர் பிரமம் உண்டே முன்பு –
இப்போது அத்தைத் தவிர்ந்தேன்

அது தான் தவிர வேண்டுவான் என் என்னில்
ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாஸத்துக்கு உடலாய் இருக்கையாலும்
உகந்து அருளின நிலங்களில் உண்டான ஆதார அதிசயத்தாலும் இறே
இங்கே இருக்கில் என் -அங்கு போய் இருக்கில் என் அவன் எல்லைக்குள்ளே கிடக்கும் அத்தனை இறே
வேண்டுவது இருந்தோம்
அதுவே யாகப்பெறாதே மற்றைப்படிக்கு உடலாய் இருந்தது –

ப்ரக்ருதி வஸ்யனாக்கி சப்தாதி விஷயங்களிலே கொண்டு மூட்டும் ஸம்ஸார ஸ்வ பாவத்தை
அனுசந்தித்த பின்பு விடுவதாகத் துணிந்தேன்

யான் வேண்டேன்
என் புத்தியால் விட்டேன்- அவன் இருத்தில் செய்யலாவது இல்லையே

ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன
மருள் ஒழி நீ
உனக்கு ஒரு நினைவுண்டு -அத்தைத் தவிர்ப்பார்

தீவினை யுள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால் –திருவாறன் விளை யதனை மேவி
வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே என்று
விரோதி கழிந்து போம் வழி எல்லாம் போய்
இது பரமபதத்துக்குப் போம் வழி -இது திருவாறன் விளைக்குப் போம் வழி என்றால்
ப்ராப்ய வஸ்து தான் இங்கேயே வந்து கிட்டிற்றாகில் இங்கேயே அடிமை செய்ய அமையாது
என்று பிரமித்து ஓன்று உண்டு -அத்தைத் தவிர்ப்பார்
மருள் என்று இனி பிரமத்துக்குப் பெயர்

மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன் -அவன் வாட்டாற்றான்
ஆஸ்ரிதரை அருளப்பாடிட்டு நிற்கிறவன் அடி வணங்கித் தொழுது எழு என் மனனே என்கிறார்

வணங்கு என் தன் மட நெஞ்சே
ஸாது நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே –
உத்தேச்ய வசித்து ஸந்நிஹிதமாய்த்து என்று இத்தனை பார்க்கிற அத்தனை போக்கி
நம்மையும் பார்க்க வேண்டாவோ

வாட்டாற்றான் அடி வணங்கே
நமக்கு ஹித காமனாய் வந்திருக்கிறவன் வழியே போய் அவனை
அனுபவிக்கப் பார்க்க வேண்டாவோ

உகந்து அருளின நிலங்களில் வந்து நிற்கிறது நம்மை
அங்கே கொண்டு போகைக்காகவே இருக்கும்
நீயும் அவன் நினைவிலேயே போகப் பாராய்

சுடர் அடி தொழுது வணங்கே
அடி வணங்குகை யாவது ஈர் அரசு தவிருகையே இறே –

———–———

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

செஞ்சொல் கவியில்
தம்மைத் திரு மேனியுடன் கொண்டு போக வேணும் என்று த்வரிக்க
மங்க ஒட்டு -என்று அவனை சரணம் புக்கு ப்ரக்ருதி சம்பந்தத்தை
அறுத்துக் கொண்ட படியை அருளிச் செய்கிறார் –

————–——–

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் கர்ம அனுகுணமான சரீரங்களாலே
ஸ்வர்க்க நரகங்களுக்கு ஹேதுவாய் இருக்க
அதிலே ஒருவரான இவரை இத்திருமேனியோடே கொடு போகைக்கு ஆசைப்படுகிறான் ஈஸ்வரன் –

ப்ரம்மாதிகள் தொடங்கி தத் தத் காதைகள்-ஸ்லோகங்கள் – ஆனவை என்ன -நாலு வேதம் என்ன –
ஆறு ஸாஸ்த்ரம் -சிஷா வ்யாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -போல்வன என்ன –
அஷ்டாதச புராணம் என்ன -சதுஷ் ஷஷ்ட்டி கலைகள் என்ன –
மற்றும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திவ்ய ஸூ க்திகள் என்ன – இவைகள் எல்லாம் பகவானை ஸ்துதிக்கக் கேட்டு
உகந்து இருந்தால் போலே அன்று இறே நம்மாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தாலே
த்வய விவரணமான சரணாகதியை அருளிச் செய்த காதையைக் கேட்ட ஸர்வேஸ்வரன்

உயர்வற உயர்நலம் யுடையவனாய் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனானவனை இந்த திவ்ய கானத்தைக்
கேட்டு மட்டுக்கட்டி அனுபவிக்க மாட்டாதே அத்தாலே வந்த ஆனந்தத்துக்குப் போக்கு விட்டுத்
தென்னா தெனா வென்று ஆளத்தி வையா நின்றான்

இந்தத் திருவாய் மொழி தான் -பக்த்தாம்ருதம் விஸ்வ ஜன அனு மோதனம் சர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங் மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம் நமாம் யஹம் த்ராவிட வேத சாகரம் என்கிறபடியே

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப-விறே இதனுடைய வைபவம் தான் இருப்பது –

உயர் நலமுடையவன் தான் இருப்பது -தம்மோடே கலந்து தம் வாயால் திருவாய் மொழி கேட்ட
ப்ரீதி உள் அடங்காமல் ஆனந்தித்து ஆளத்தி வையா நின்றான் -என்கிறார் –

நன்கு என்னுடலம் கைவிடான் என்னும் அளவன்றிக்கே
என்னுக்தி மாத்ரத்திலே களியா நின்றான் என்கிறார் –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப வாய்த்துத் திருவாய் மொழி தான் அவதரித்தது

ஸ்துத்யனுடைய அவதாரம் போலே யாய்த்து ஸ்துதியினுடைய அவதாரமும்
பரித்ராணாய ஸாதூநாம் -இத்யாதி போலே
அகில ஜகத் பத்ம போதாய அச்யுதா பாநு நா -என்னுமா போலே

நண்ணா -இத்யாதி
பிரதிகூல நிரசனத்துக்கு வேறொரு கருவி எடுக்க வேண்டாதே –
அனுகூல ரக்ஷணத்துக்கும் வேறொன்றும் வேண்டாதே
அநந்ய ப்ரயோஜனராய் இருப்பார்க்கு ஸ்வயம் ப்ரயோஜனமுமாய் இருக்குமாய்த்து

நண்ணா வசுரர் நலிவெய்த
அவ்யபதேசனுக்கு அநந்தரத்தில் அவன்
தன்னப்பன் செய்தவற்றைக் கேட்டு -இவன் என் செய்தானான் -என்று கர்ஹித்தான்
ஒரு மதிலை வாங்கும் காட்டில் அத்தர்சனம் குலைந்ததோ
திருவாய் மொழி என்றும் ஸ்ரீ ராமாயணம் என்றும் வலியான மஹா பிரபந்தங்கள்
இரண்டு உண்டாய் இருக்க -என்றான் ஆய்த்து

இப்படி உகவாதார் நெஞ்சு உளுக்கும் படியான ப்ரபந்தமாய்த்து
விபரீதஸ் ததா ஸூர –என்னக் கடவது இறே
பொருந்தாமை யுடைய அஸூர வர்க்கமானது மண் உண்ணும் படியாக சம்பந்தம் இல்லை
என்ன ஒண்ணாதே
பொருந்தோம் என்கை இறே உள்ளது –

நல்ல அமரர் பொலிவு எய்த
விஷ்ணு பக்தி பரோ தைவ -என்னக் கடவது இறே
அனுகூலமாய் இருக்குமவர்கள் உண்ணாதே தடிக்க -இவர்களுக்கு நன்மையாவது பகவத் பக்தராய் இருக்கை
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் என்னக் கடவது இறே

இது யுமக்குப் பிறந்தபடி என் என்ன –
ஸ்துத்யன் ஆனவன் தன்னை ஸ்துதிக்கும் படி மயர்வற மதிநலம் அருளினான் –

வேதங்களைப் போலே -அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீளுகை அன்றிக்கே
நின் கண் வேட்கை எழுவிப்பேனே -என்று நீ அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
ஒண் சுடர்க் கொழுந்தாய் -பரம பக்தியாய்க் கொழுந்து விட்டு வளரா நின்றது
அது பொங்கி வழிந்த சொல் பண்ணார் பாடல் இன்கவி யாயிற்று

எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
புறம்பு ஓருவர் எண்ணாதன சிலவற்றை எண்ணுவார் உண்டாயிற்று
ஸர்வேஸ்வரன் ரக்ஷகன் -அவனை ஒழிந்த அடங்கலும் அரஷகம் என்று இருக்கை அன்றிக்கே
உபய விபூதி யுக்தனுக்கும் இன்னும் சில விபூதி வேணும் என்றும்
ஸர்வ குண ஸம்பன்னனுக்கும் இன்னம் சில குணங்கள் வேணும் என்றும்
இப்புடைகளிலே எண்ணுவார் யுண்டாய்த்து

நன் முனிவர்
அவனுடைய ஸம்ருத்தியையே மனனம் பண்ணும் ஸ்வ பாவராய் இருக்கை
ஈஸ்வரன் அடியாகத் தங்கள் ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் முனிவர்
அத்தலைக்கே ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் நன் முனிவர்

அவர்கள் இன்பம் தலை சிறப்ப
திருவாய் மொழி அவதரித்த பின்பு அவனுக்குக் குண விபூதி போராது என்று இருந்த
இழவு தீர்ந்து அத்தாலே நிரதிசய ஆனந்த யுக்தரானார்கள் –

அன்றிக்கே
திருவாய் மொழியை ஒழிய வேறொரு ஸம்பத்தும் வேண்டா வென்று இதுவே
மனனம் பண்ணி ஹ்ருஷ்டராம் படியாகவுமாம்

அன்றிக்கே
நல்ல அமரர் -என்றும் நன் முனிவர் என்றும் அயர்வறும் அமரர்கள் ஆகவுமாம்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்னக் கடவது இறே

அயர்வு அறுகை யாவது
அபர்யாப்த்த அம்ருதத்தில் ரஸம் அல்பமாய் பக்தாம்ருதமான திருவாய் மொழியைப்
பானம் பண்ணுகிறவர்கள் அல்லர்

இன்பம் தலை சிறப்பப் பண்ணார் பாடல் இன் கவிகள்
பண்ணோடே சேர்ந்த பாடல் -புஷ்ப்பமானது பரிமளத்தோடே அலருமா போலே
திரு அஷ்டாக்ஷரமானது தளிரும் முறியும் மணமும் மதுவும் யுண்டாமாப் போலே
இதுவும் பண் மிகுந்து இருக்குமாய்த்து

இன் கவிகள்
இசையும் பண்ணும் ஒழிய தோல் களைந்த சுளை போலே கவி தானே இனிதாய் இருக்குமாய்த்து

யானாய்த் தன்னைத் தான் பாடி
என் பேரை இட்டுத் தன்னைத் தான் பாடி
பிதாவானவன் புத்திரனுக்கு பசுவை நீர் வார்த்துக் கொடுத்து அவன் பக்கலிலே
தான் நீர் ஏற்றுப் பசுவை பெறுமா போலேயும்
ஸூதனை வார்த்தை கற்பித்து அவன் சொல்லக் கேட்டு அவன் இனியனாம் போலேயும்

தானே பாடினான் ஆகில் ஸ்ரீ கீதையோடே ஒத்துப் போமே
பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் என்று இவர் அங்கீ காரத்தாலே
அந்த கீதை தானும் வீறு பெற்றது இறே

தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
தென்னா என்னும் -செருக்கால் தென்னா தென்னா என்று ஆளத்தி வைக்குமாய்த்து
திருவாய் மொழியாகிய தேனைக் குடித்துத் தெய்வ வந்து ஆளத்தி வைக்கிற படி

சம்சாரி சேதனனுக்கு பகவல் லாபம் உண்டானால்
ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று ஸாம கானம் பண்ணுமா போலே
அவாக்ய அநாதர என்னும் படி வாய் திறவாமல் இருக்கும் பர ப்ரஹ்மம் –
தைர்ய பங்கம் பிறந்து பாடா நிற்குமாய்த்து

என்னம்மான்
ஸூத வசனம் இனிதாம் போது பிராப்தி யுண்டாக வேணும் இறே
அதுக்கடியான ப்ராப்தியைச் சொல்லுகிறதாய்த்து

திருமாலிருஞ்சோலை யானே
இவரைப் பாடுவித்த முக்கோட்டை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ணபுரத்துறை அம்மானே –
இவரைப் பாடுவித்த முக்கோட்டை இறே இது

தாம் பாடின கவிகள் இனிதானமையை அனுசந்தித்தார் –
இவை தாம் அடியாகப் பிறந்தது என்று சொல்லலாய் இருந்தார் இல்லை –
இதுக்கடி என் என்று பார்த்தார் -அவன் இவர் நெஞ்சிலே புகுந்து பாடுவித்தான் ஆய்த்து

கணபுரத்துறை யம்மான் திருமாலிருஞ்சோலையான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
இதுக்குப் பிரத்யுபகாரம் இல்லையே வணங்கிப் பிழை என்கிறார் –

—–———–

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

திருமாலிருஞ்சோலையிலே
இப்படி ஆதரிக்கிற தேவர் அநாதி காலம் என்னை யுபேஷிக்க வேண்டுவான் என்
இன்று என்னை விஷயீ கரிக்க வேண்டுவான் என் என்று கேட்க
அவன் நிருத்தரனாய்ப் பேசாதே இருக்க
நிர்ஹேதுகமாகாதே என்று நிருத்தரானார் –

——————

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தத்து அளவும்
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ஜங்கமாத் மகமான சரீரங்களிலே
ஓரொன்றிலே அளவிறந்த ஜென்மங்களில் பிறந்த வஸ்துவாய் அன்றோ போயிற்று
நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி யுபேஷித்து விஸ்மரித்து இருந்த நீ
இன்று என்னை விஷயீ கரிக்கைக்கும் முன்பு என்னை யுபேஷிக்கைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் என்கிறார்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் ஸர்வேஸ்வரனான நீ
என்னைப் பரமபதத்தில் கொண்டு போவதாக விரைகிறபடி கண்டனுக்கு
இன்று என் அளவு அல்லாதபடி த்வரிக்கிற நீர் இதுக்கு முன்பு நெடு நாள் விட்டு ஆறி இருக்கக் கூடாது

இதுக்கடி ஏது என்ன
நத்வாமி ஹஸ்தாம் ஜாநீதே -என்று நடுவே சிலர் சொல்ல வேண்டும்படி யாய்த்து –
எழுந்து அருளி இருந்த இடம் அறியாமையாலே யாறி இருந்தார் அத்தனை போக்கி
அறிந்தால் ஒரு க்ஷணம் ஆறி இருப்பாரோ

இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேணுமோ
கமல லோஷண -உன்னுடைய கண் அழகு அன்றோ பிரமாணம்
ராம -அவரை அறியாது ஒழிய வேணுமோ
ந ஜீவேயம் க்ஷணம் அபி விநா தம் அஸி தேஷிணம் என்று க்ஷணம் அபி என்று இறே அவர் இருப்பது
ராம கமல லோஷண -அன்றிக்கே யார் எதிராகக் கண்ணிலே சிவப்பும் சீற்றமும் எல்லாம் என்னுதல்

உயர்வற உயர்நலம் யுடையவனான நீ –
இன்று என்னைப் பொருளாக்கி
அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்துவாம் படிப் பண்ணி
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்றார் இறே

தன்னை
சத்துக்களுக்கு ஸ்ப்ருஹ ணீயனான தன்னை

என்னுள் வைத்தான்
தன்னைப் பிறருக்கு அவகாசம் இல்லாதபடி பண்ணி –
பொருள் இல்லாத என்னைப் பொருளாக்கினான் என்றார் இறே
நித்ய ஸூரி ஸேவ்யனான தன்னை முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான்

இது நீர் அறிந்தபடி என் என்ன -மயர்வற மதிநலம் அருள -அத்தாலே அறிந்தேன் –
என்னுடைய அவித்யாதி கர்மங்கள் வாஸனா ருசி பிரகிருதி சம்பந்தத்தால் வரும் புண்ய பாப கர்மங்கள்
ஸவாசனமாகப் போய் உன்னிடத்தில் பக்தி ரூபா பன்ன ஞானமானது அதி பிரகாசமாக உன்னைக் காட்டக் கண்டேன்

அத்யந்தம் ஸூலபனாய் ஞான சாஷாத்காரமானது ப்ரத்யக்ஷம் போலே தோற்றுகையாலே மடி பிடித்துக் கேட்கிறார்

அன்று -என்கிறது
விசேஷ கடாக்ஷம் பெறுவதற்கு முன்புள்ள நாள் எல்லாவற்றையும் சொல்கிறார் –
இன்று -என்கிறது
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவதற்குப் பின்பு யுண்டான காலத்தை –

என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
பரதந்த்ரனான என்னைப் புறம் போகப் பண்ணிற்று என் செய்க்கைக்காக –
பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது உபேக்ஷிக்கை
இழந்த நாள் இழந்ததும் அவனாலே என்கிறார் –
பரதந்த்ர வஸ்து செல்ல வற்றதோ வர வற்றதோ

நீயோ அயர்வறும் அமரர்கள் அதிபதி -சற்றும் அசாரம் அமலம் அனுபவிப்பார் த்ரிபாத் விபூதியாய்
அவ்வளவு அன்றிக்கே
லீலா விபூதிக்கு நிர்வாஹகரான தேவர் த்ருதீய விபூதியான குன்று எனத் திகழ் மாடங்கள் சூழ்
திருப்பேரனாக எழுந்து அருளிற்றும் எனக்காகவே அன்றோ –

மலைகளைச் சேர வைத்தால் போலே விளங்கா நின்றுள்ள மாடங்கள் சூழ்ந்த திருப்பேரரான
அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன்
அத்யந்தம் ஸூ லபனாய்க் கொண்டு திருப்பேரிலே எழுந்து அருளினது

இப்படி மதிப்பனான உனது துயர் அறு சுடர் அடி தொழுது
உணர்த்தலுற்றேன்
உன் திரு உள்ளக் கருத்தைக் கேட்கலுற்றேன்
என் மனஸ் ஸூ தெளியும்படி
ஓன்று எனக்கு அருள் செய்ய
முன்பு கைவிட்டதற்கு ஹேது சொல்லவுமாம்
இன்று என்னை விஷயீ கரிக்கைக்கு ஹேது சொல்லவுமாம்

உணர்த்தலுற்றேன்
இதுக்கு ஒரு மறு மாற்றம் அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளத்திலே படும்படி
விண்ணப்பம் செய்ய வேண்டி இரா நின்றேன் -என்ன

இது நாம் சொல்ல வேணுமோ -நீரே அறியீரோ என்றான்

அடியேன் அறியேன் சர்வஞ்ஞரான தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்கிறார்

ஆனால் நாம் உம்முடைய நெஞ்சுள் புகுந்த இடத்தில் சம்மதித்து இருந்தீர் -அத்தாலே காணும் என்றான்

அது தான் உண்டோ -யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலேன் -என்கிறார்

அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு என்னை ஆதரித்தீரே என்றான்

மருவித் தொழும் மனமே தந்தாய் -என்று அதுவும் தேவரீரே மயர்வற மதி நலம் அருளிச் செய்தது
அத்தனை அன்றோ என்றார்

ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மோடே ஓக்க விஷயாந்தரங்களிலும் விரும்பாது இருந்தீரே என்றான்

என்னைத் தீ மனம் கெடுத்தாய் என்று அதுவும் தேவரே அன்றோ என்றார்

இவை ஒன்றுமே இல்லையே யாகிலும் நாம் கொடுத்த மதி நலத்தை வளர்த்துக் கொடு போந்தீரே என்றான்

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்று அதுவும் தேவரே அன்றோ என்றார்

இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான்

இதற்கு ஈஸ்வரன் சொன்ன உத்தரம் ஏது என்று பட்டரை ஜீயர் கேட்க
காலாலே தரையைக் கீறிக் கவிழ்ந்து நிற்கும் அத்தனை போக்கி வேறே உத்தரம் உண்டோ
என்று அருளிச் செய்தார்

அதாவது
முன்பு ருசி இல்லாமையாலே என்ன மாட்டான்
இப்போது சாதன அனுஷ்டானம் பண்ணுகையாலே என்ன மாட்டான்

ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு வைஷம்யாதிகள் வரிலோ
ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வரிலோ -என்ன
வாராது
அத்வேஷமும்
இச்சையும்
பிறக்கைக்குத் தான் கிருஷி பண்ணி அது பக்குவமாம் அளவும் பார்த்து இருந்தவனாகையாலே –

அவன் கேட்டதுக்கு ஒரு மறு மாற்றம் சொல்லக் காணாமையாலே அறிந்தோம் இதற்கு
இங்கனே யாக வேணும் என்று பார்த்தார்
தன்னுடைய ஸ்பர்சம் பிரதிகூலமாகை தவிர்ந்து விலக்காத சமயம் பார்த்து இருந்தானாதல் –
தன்னை ஒழிந்தவற்றில் சாதன புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆதலாக அடுக்கும் என்று பார்த்தார் –

ஆனால் இது தன்னை அவனுக்கு உத்தரமாக அருளிச் செய்யாது ஒழிவான் என் என்னில்
சைதன்ய ப்ரயுக்தமாய் வருகிற அத்வேஷத்தை ஸாதனம் என்ன மாட்டானே
சைதன்ய ப்ரயுக்தமான ருசி தானும் ஸ்வரூப அதிரேகி அன்றோ –

உபாய பாவம் தன் தலையிலே யாயிற்றே
நெடுநாள் இவர் தலையிலே பழியிட்டு இழந்த நாம் எத்தைச் சொல்லுவது என்று பேசாதே இருந்தான்
ஹ்ரீரேஷா ஹி மமாதுலா என்று ஆரண்ய காண்டத்தில் ரிஷிகள் முன்பு பெருமாள் வெட்கித் தலை
குனிந்தால் போலே பிற்பாட்டுக்கு லஜ்ஜித்து நிற்குமவன் இறே
இவர் தாமே எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி யாயிற்று இவன் நிலை

உம்முடைய ப்ராப்யம் பெற்றீராகில் உமக்கு இந்த வழி ஆராய வேணுமோ
அதுவே அமையாது என்ன

அதுவே அமையும் என்கிறார்
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்து அன்று இறே விடாய்த்தவன் இளநீர் குடிப்பது என்ன
உகந்து துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –

———-———

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

இதில்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே போம்படியையும்
அங்கு உண்டான ஸத் காரங்களையும்
அவ்வழியாலே போய்ப்புக்கு அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு
அடியார் குழாங்களுடனே இருக்கும் இருப்பை அருளிச் செய்கிறார் –

——–——–

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

உயர்வற என்கிற பாட்டை இப் பாட்டு விவரிக்கிறது -அது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் சாதனாந்தரங்களை அனுஷ்ட்டித்து
ப்ரயோஜனாந்தரங்களிலே சுவர்க்கம் நரகாதிகளுக்குப் போகிற
யாம்ய கதிகளாலே புக்கு அனுபவித்து புக்கு மீண்டும் மீண்டும் இப்படித் திரியா நிற்க

அவர்களிலும் கடை கெட்ட கூவிலும் கை கழிந்த என்னைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே
அபுனரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைத் தந்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்ப் புகுகையும் அங்குள்ளார் ஸத்கரிக்கப் போய்
அங்கு அடியாரோடே இருந்தமையும்
உயர்நலம் யுடையவன் எவன் அவன் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவிக்கிறார்

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் நித்ய ஸூரிகளுடைய திரளிலே சேர்ந்து
அவர்களுக்குப் பிரியகரராய் இருப்பார்கள் என்கிறார்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -மயர்வற மதிநலம் அருளினான் எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் -வந்தவர் எதிர் கொள்ள
ஞானானந்த ஸ்வரூபனான ஸர்வேஸ்வரன் பிராட்டிமாரொடும் நித்ய முக்தரோடும் கூட வந்து எதிர் கொள்ள

ப்ராக்ருதனானவன் அப்ராக்ருதனாய் வருகிற படியே என்று அத்யாச்சர்யத்துடன் வந்து
எதிர் கொண்டு அழைத்துச் சென்று

மா மணி மண்டபத்து –
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே

அந்தமில் பேரின்பத்து அடியாரோடு
யாவதாத்மபாவியாய் நிரதிசய ஆனந்த யுக்த்ராய்க் கொண்டு இருப்பார்கள்

அநந்த கிலேச பாஜனமான சம்சாரத்திலே ஸூகம் என்று பிரமிக்கும் அத்தனை -துக்கமே யுள்ளது –
பாண்டு ஒருவன் மேல் அம்பை விட -சம்சாரத்தில் ஆயிரம் கூற்றில் ஒரு க்ஷணம் ஆயிற்று ஸூகம் யுள்ளது –
அத்தைப் புசிக்க ஒட்டிற்று இல்லையே என்றான் இறே

அடியாரோடு இருந்தமை –கொந்தலர் இத்யாதி
நித்ய வசந்தமான சோலையை யுடைத்தான திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த
போக்கிலே ஒருப்பட்டவாறே திரு நகரி தொடங்கி நித்ய விபூதி அளவும் சோலை செய்தது

சந்தங்கள் ஆயிரத்தும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என்று சரணாகதியானது
ஆயிரம் சாகைகளாய் கொண்டு ரஷிக்க

சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார்
சந்தஸ்ஸூக்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல்
சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல்

இவை வல்லார் முனிவரே
இத்தை அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண ஏக தாரகராய் அனுபவித்துக் கொண்டு
அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்கள் போலே ஆவார்கள் –

——————

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

கீழில் பிறந்தது ஞான அனுசந்தான மாத்ரமாய்ப் பின்பும் இவ்வுடம்புடனே கூடி இருக்கையாலே
பிரிவாற்றாமை யோடே கூப்பிட்டுத்
திருவாணை இட்டுத் தடுத்துப்
பர பக்தி தலை எடுத்துச்
சரணம் புக்கு
தம்முடைய பிரகிருதி சம்பந்தத்தம் அற்று
எம்பெருமானைப் பெற்று க்ருதார்த்தராய் அருளிச் செய்கிறார் –

———–——–

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

உயர்வற என்கிற பாதத்தை இதுவும் விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் காம்ய பலங்களைப்
புஜித்து ஸம்ஸரிப்பார்கள்-
இவர் அங்கன் அன்றிக்கே நிர்ஹேதுகமாக அருளப்பெற்றவர் ஆகையால் ஞான ஆனந்தங்களாலே
உயர்நலமுடைய எம்பெருமானுக்கு இவ்வபேஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்துப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட
இவர் பிரார்த்தித்த படியாகவே பரிபூர்ணனாகக் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அபரிச்சேத்யமான ப்ரக்ருதி ரஹத்வத்திலும் ஆத்ம தத்துவத்திலும் உன்னுடைய ஸங்கல்ப ஞான ரூபத்திலும்
பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் –
என்னுடைய மநோ ரதமும் ஒருபடி முடியப் பெற்றேன்

இனி இல்லை என்னும்படி என்னை விடாய்ப்பித்து அதுக்கு அவ்வருகான விடாயை யுடையையாய்க் கொண்டு
என்னோடே கலந்து உன்னுடைய விடாயும் ஒருபடி கெட்டதே என்கிறார்

உயர்வற உயர் நலம் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
இப்போது ப்ரக்ருதி புருஷர்களைச் சொல்லுகிறது -தம்முடைய அபி நிவேசம் பெரியவற்றிலும் பெரிது என்கைக்காக –

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற வத்தாலே மேல் மேல் என பரபக்தி பரஞான பரமபக்திகளாய்ப் பெருகி வருகிறபடி
அவற்றுக்கு ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லாமையால் அவ்வளவும் சொல்லுகிறது

ஸ்வ கார்யமான மஹதாதிகளைப் பத்து திக்கிலும் புக்கு எங்கும் ஓக்க வியாபித்து நித்யமாய் அபரிச்சேத் யமாய்
சேதனருக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நீளமான பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மா வானவனே

அருளினது பக்தி ரூபா பன்ன ஞானம் ஆகையால்
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
அத்தையும் வியாபித்து அதில் காட்டில் பெரியதாய் -அதுக்கு நியாந்தாவாகையாலே மேலாய்
விகாராதிகள் இல்லாமையாலே அபரிமாணமாய் நிரவதிக தேஜோ ரூபமான ஆத்மவஸ்துவுக்கு ஆத்மா ஆனவனே

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-
அவை இரண்டையும் வியாபித்து -அவற்றுக்கு நிர்வாஹகமாய் -ஸங்கல்ப ரூபமாய் -விசத தமமாய்
விசததமம் ஆகையாவது யுகபத் ஏவ சாஷாத்கார ரூபமாய் இருக்கை
இப்படி ஸூக ரூபமான ஞானத்தை யுடையவனே -என்று ஸங்கல்ப ஞான ரூபத்தைச் சொல்லுதல்

சுடர் ஞான இன்பம் என்று
ஸூக ரூபனாய் பிரகாச ரூபனுமாய் ஆனவனே என்று எம்பெருமானைச் சொன்னதாகவுமாம்

இப்படித் தத்வ த்வயத்துக்கும் அவ்வருகான உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனஸ்ஸினுடைய அவாவானது
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–
தத்வ த்ரயத்தையும் விளாக்குலைக் கொண்டு அவை குளப்படியாம் படியான
என்னுடைய அபிநிவேசத்தையே –
அதிலும் பெரிய உன்னுடைய அபிநிவேசத்தைக் காட்டி வந்து ஸம்ஸ் லேஷித்தாயே
என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஓயும்படி பண்ணிற்றே

அங்கே -பரதம் ஆரோப்யே முதித பரிஷஸ்வஜே என்று நீ மீண்டும் புகுந்து ஸ்ரீ பரதாழ்வானை
மடியில் வைத்து உச்சியை மோந்து உகந்து அணைத்தால் போலே யாயிற்று
இவருடைய விடாய் கெடும்படி கலந்து –

——-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

உயர்வற என்கிற பாட்டை இதுவும் விவரித்து நிகமிக்கிறது –
அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை கதான -ஞான ஆனந்த ஸ்வரூபனாய் –
உயர்வற உயர்நலம் யுடையவனாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
ஸுந்தர்யாதி விசிஷ்டமான நித்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய் –
அபரிமித திவ்ய பூஷண பூஷிதனாய் -ஸர்வ அவயவ உபேதனாய்
சர்வ ஆயுத தரனாய் -லஷ்மீ பூமி நீளா நாயகனாய் –
அஸ்தானே பய சங்கிகளான அநந்த கருட விஷ்வக் சேனாதிகளாலே அனவரத பரிசர்யமாண சரண நளினனாய்
ஸ்ரீ வைகுண்ட ஸர்வேஸ்வரனாய் நித்ய முக்த அநுபாவ்யனாய் இருக்கிறவன்
ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்மாதிகளுக்கு அந்தராத்மாவாய் -தன்னைக்காண வேணும் என்று விடாய்த்து
ஆஸ்ரயித்தார் களுடைய விடாய் தீர ஸம்ஸ்லேஷிக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானைக் காண வேணும்
என்று விடாய்த்துக் கூப்பிட்டு -அவனைப் பெற்று நிர்த்துக்கராய் நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகரான
ஆழ்வாருடைய பக்தி பலாத்கார பூர்வகமாகப் பிறந்த ஆயிரம் திருவாய் மொழியும்

அவற்றிலே வைத்துக் கொண்டு கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரமபக்தியாலே பிறந்த
அந்தாதியான இத்திருவாய் மொழி வல்லார் ஸம்ஸாரத்திலே பிறந்து வைத்தே
அயர்வறும் அமரர்களோடே ஒப்பர் என்கிறார்

உயர்வற என்கிறது அவாவற என்கிறது
உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவாவறச் சூழ் அரி
ஞான ஆனந்தாதி கல்யாண குண விசிஷ்டனாய்
தத் வியதிரிக்தங்களுக்கு ஸ்வாமியாய்
ஸர்வ அபேக்ஷித ப்ரதனான ஸர்வேஸ்வரனைத் தம்முடைய அபிநிவேசம் கெட வந்து கலந்த படியால்
வேறொரு விசேஷணம் இடாதே அது தன்னையே சொல்லுகிறார்

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -அவா வறச் சூழ் அரி என்று திரு நாமம் ஆயிற்று

உயர்வற என்றது -அயனை அரணை
ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர் யாத்மாவாய் மறைந்து நின்றவன்
யாவன் ஒருவன் யவன் அவன்

இப்படி விபூதிமானான உயர் நலம் யுடையவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவனை அவாவறச் சூழ்
அரி என்றது தானே ரூபகமாய்த்து

இப்படிச் செய்கைக்கு ஹேது என் என்னில்
மயர்வற மதி நலம் அருளினன்
திரிமூர்த்தி சாம்யக் கூழ்ப்பை அறப்பண்ணி தன் நிர்ஹேதுக கிருபையாலே பக்தி ரூபா பன்ன
ஞானம் மிகுந்த அவாவாய் தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகு யாயிற்று

அவா வறச் சூழ்கை யாவது
தன்னைக்காண வேணும் என்று விடாய்த்த ஆஸ்ரிதருடைய விடாய் தீர ஸம்ஸ் லேஷிக்கை

அயனை அரனை
என்கிற இஸ் ஸாமா நாதி கரண்யத்தாலே ப்ரஹ்மாதிகள் பக்கல் ஈஸ்வரத்வ சங்கையை அறுக்கிறார்
அவர்களுடைய சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஈஸ்வர அதீனமாகையாலே அவர்களுக்கு
பாரதந்தர்யமே ஸ்வரூபம் –
நிர்வாஹகத்வம் கர்மாதீனமாய் வந்தது அத்தனை

இஸ் ஸாமா நாதி கரண்யத்தில் ஞானம் இன்றியே எளியராய் இருப்பார்க்கு நிர்வஹிப்பதும் சில புடைகள் உண்டு
அயனை அரனை யவாவற்று யரியை யலற்றி யவா வற்று வீடு பெற்ற என்னுதல்

அயனை அரனை அவா வறச் சூழ் அரியை அலற்றி அவா வற்று வீடு பெற்ற என்னுதல்

அரியை அலற்றி யவா வற்று வீடு பெற்ற என்னுதல்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
அலற்றுதல் ஆகிற அயர்வற -அவா வற -அமரர்களான நித்ய ஸூரிகளாகிற அடியார்கள் குழாங்களாகிற
நித்ய ஸூரிகள் திரளிலே வைத்து
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -என்கிற படியே

வீடு பெற்ற
கூப்பிட்டு அவனைப் பெற்று நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராகையாலே நிர்த் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும்
இவருடைய ஸ்ரீ மைத்ரேய பகவான் அவா -உபாத் யாயராக நடத்த நடந்த ஆயிரம்

ஆழ்வாருக்குப் பின்பு நூறு ஆயிரம் கவிகள் போர யுண்டாயித்து
அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசி அற்றது
அவற்றை விட்டு இவற்றைப் பற்றித் துவளுகைக்கு அடி இவருடைய அபி நிவேசம் வழிந்து புறப்பட்ட சொல்லாகை இறே

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும்படி மயர்வற மதி நலம் அருளின பக்தி ப்ரேம அதிசயத்தாலே
பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலே இப்பத்தும்

முடிந்த அவாவில் இப்பத்து அறிந்தார்
இவர் அவாவால் தரிக்க ஒண்ணாமையாலே பொங்கி வழிந்தது
அனுபவம் பொங்கி வழிந்த சொல்லாய்த்து இப்பிரபந்தம்

இவ்வவாவுக்கு உதவிற்றிலன் ஆகில் ஈஸ்வரனும் சேதனன் இன்றிக்கே ஒழியும்

சூழ் விசும்பு அணி முகிலுக்குக் கீழே பரபக்தி யாலே சென்றது
சூழ் விசும்பு அணி முகில் பர ஞானத்தாலே
இத்திருவாய் மொழி பரம பக்தியாலே
பகவத் ப்ரஸாதம் பாதியும் தங்கள் பாதியுமாகச் சொல்லும் அவர்களுக்கு சரீர அவசானத்திலே
இப் பரபக்த்யாதிகள் யுண்டாம் –

இவர் அடியிலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே எழுந்து அருளி இருக்கச் செய்தே யுண்டாய்த்தன
கர்ம ஞான அநு க்ருஹீதையான பக்தியினுடைய ஸ்தானத்திலே
சர்வேஸ்வரனை அருளின அருள் அடியாகப் பிறந்த பரபக்த்யாதிகள் இறே இவரது

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
இத்தை அறிந்தவர்கள் ஸம்ஸாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடே ஒப்பர்

பிறந்தே உயர்ந்தார்
ஸர்வேஸ்வரனுடைய அவதாரத்தோ பாதி இவர்கள் பிறப்பும்

—-

அஸ்மத் குருப்யோ நம
ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சந்திரகிரி ஐயன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மன் நாராயண ஐயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

ஆங்கீரஸ வருஷம் மார்கழி மாதம் 26 தேதி
உயர்வற உயர்நலம் யுடையவன் என்கிற முதல் பாட்டின் விவரண சதகம் என்று
திரு நாமமான வாசக மாலையை
அபர் யாப்தன் திருவடிகளிலே ஸந்தர்ப்பமான மாலையைச் செய்து
அடிமை செய்து அருளினான் திருக்கோனேரி தாஸ்யை
என்று இவர் தாமே அருளிச் செய்து நிகமிக்கிறார் –

——-———–————————

பத்தாவது பத்து விவரணம் முற்றிற்று

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ​மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்