ஸ்ரீ மணவாள மா முனி நூற்றந்தாதி –
காப்பு,
நம்மாழ்வார்.
மன்னு புகழ்க் கோயின் மணவாள மா மானிவன்
தன்னடி மீதந்தாதி சாத்தவே-யின்னமுதின்
செந் தமிழால் வேதச் செழும் பொருளை மா நிலத்தே
தந் தருண் மாறன் தாள் சரண்-
எம்பெருமானார்
தாடொடர்பு நின் பாற்றழுவா தவர்க்கிலை நம்
வீட்டை தலென்று விளம்ப வரி–நீடணையாய்
நின்றான் யதிபதியாய் நீணிலத்திலே யுதித்தான்
என் தான் நமக்கேது இடர்
நூல்
பூமாதிலங்கு மணி மார்பரங்கர் புகழ்ந்திடத்தென்
பா மாறன் வேதத் தமிழின் பொருளைப் பகர்ந் தருளஞ்
சீமான் குருகை மணவாள மாமுனி சேவடியாம்
தே மா நிழலுண்ட டைவார் விடாய் கெடச் செய்திடுமே (1)
செய்யனந் தாமரைப் போதுற்று றங்கும் திருவரங்கத்
தையனந்தாதருண் மந்திர முண்டஃதன்றி வெண்மை
மெய்யனந்தாழ்வான் மணவாள மாமுனி மென் கழலுண்டு
உய்யனர்தாப மறத் தொலைத்தின்ப முறுவதற்கே (2)
உறு பொருளின்பமுந் தாயுமெய்த்தந்தையு மொண் குருவு
நறு மலரிந்திரை நாதனு மற்று மிந் நானிலத்தோர்
சிறுமையை நீக்கு மிராமாநுசனெனச் சிந்தை செயுந்
திறமையன் கோயின் மணவாள மா முனித் தேசிகனே (3)
தேசிகர் தங்களடிப்போ துளத்திடைச் சேர்த்தி யவர்
பேசிய நூல் வழிச் சேர் திருவாய் மொழிப் பிள்ளை யன்பால்
வீசிய கீர்த்தி மணவாள மாமுனி மென் கழலை
நேசியு நீணிலத்தீரு மதுட்டுயர் நீங்கடுமே –4-
நீங்கிய தீய வினையாளர் கூறு நெறிகளெலாந்
தேங்கின வெங்கு மகிழ் மாறன் வேதச் செழுந் தமிழ் க
டாங்கின மன்னுயிர் கண் மால் பரனெனச் சாற்றுதலை
யோங்கின ஞான மணவாள யோகி வந்துற்ற பின்பே--5-
உற்றினிதோங்கு மனமே யுனக்கோருறுதி சொல்வன்
இற்றிட வேண்டும் வினைப் பூரியருடனே சித்திடேன்
அற்றவர் போற்று மணவாள மாமுனி நம்பி யருள்
பெற்றிடினீதரப் பெற்றிடுவார் பலர் பேரின்பமே-6-
பேரியல் கொண்ட பெருமாளருளிற் பெருமை பெற்ற
வாரியன் கோயினங் கந்தாடை யண்ணனை யார்ந்த பின் மெய்க்
குரியனாய மணவாள மா முனி தொல் புகழைப்
பாரினிற் பாடிப் பயன் பெறலெற்கொரு பாரமன்றே-7-
பாராளு மன்னர் பதி தொறும் போயவர்பால் வருந்திச்
சிராயனந்தங் கவி பாடுவீர் நறுஞ் செங்கமலத்
தாராளன் கோயின் மணவாள மாமுனி தாளிணையை
யாராதனஞ் செயிலெய்திடு மிங்கும் அங்கு மானந்தமே–8-
ஆனந்த மிக்கு மணவாள மாமுனி யன்பெனக் கொண்
ஞானந்த வாத பெரியோரவன் பெயர் நாடியதாற்
றேனந்துமின் சுவையாம் பா வெனத் துதி செய்வரல்லா
லீனந்தரும் பா வென விகழாரிதை யென்றைக்குமே–9-
என்றிலங் காரணங் காணா வரும் பொருளிந் திரைப் பெ
ணின்றிலங்கஞ்சன மேனி யம்மான் செய் நிய மனத்தா
லொன்றிய கீர்த்தி யிராமாநுசன் பின் புயிர்க்கிரங்கி
யின்றதை யோம்ப மணவாள யோகியி னெய்தினனே–10-
எய்திய நள்ளிருள் போமாறு லககலிற் கடனெய்
பெய்தினனாஞ் சுடரேற்றிய பொய்கைப் பிரான் றமிழின்
மெய் தெரிந்தோது மணவாள மாமுனி மேவிய திப்
பொய் திகழ் ஞாலத் துயிர்க்கின் மீந்து புரந்திடவே–11-
புரந்ரனாமெனப் பூ பதி யாகிப் பொருண் முழுதுந்
தரந்தரம் பெற்றிட வேண்டி வந்துன்றனைச் சார்ந்திலனின்
னிரந்தர மெய் யன்புடையார் பதத் தென்னினைவு நிற்க
வரந்தர வேண்டு மெய்த் தேவே மணவாள மாமுனியே-12-
மா மகிழ் மாறன் றமிழார் கலிக் கண் வரை யெனத்தன்
னாமடுத்தாரியர் நூலரவார்த நலி தரச் செய்
தே மதிவாய்ந்த நரர்க்கமுதாப் பொருளீந்தது காண்
கோமலி கீர்த்தி மணவாள மாமுனிக் கொண்டனின்றே -13-
கொண்ட தன்னுள்ளத் திருள் போயிறை யருள் கூடி யுய்யப்
பண்டை நன் ஞான நிறை விளக்கேற்றிய பண்பினன் சீர்த்
தொண்டர்கள் போற்றுங் கடன் மல்லை நாதன் றுணை யடியை
யண்டி நின்றேந்து மணவாள மாமுனி யாரியனே–14-
ஆரிருண் மாண்ட பின் கோவலுண் மா மலராள் பதியை
நேரினிற் கண்டு நெடுந் தமிழ் பாடிய நின்மலன் றன்
சீரினிற் செல்லு மணவாள யோகியைச் சிந்தை செயில்
வேரினிச் செல்லாதறுப்பான வனம் வினைகளையே–15-
வினையாளர் கூறுஞ் சமயங்கடோறும் விழைந்து முத்தி
நினைவேதுந் தோன்றற் கிடந்தந்திலவென நீக்கி யரி
தனையே துதிக்கு மழிசைக் கிறைவன் றமிழ்ப் பொருட்டே
னினையே பருகு மணவாள மாமுனி யென் குருவே-16-
குருகை வந்தோங்கு மகிழ் மாறன் வேதக் குரை கடல் க
டருந் தொடைச் சொல்லமுதுட் கொடு கோயிற் றடவரை நின்
நிரும்புவிமீதுயிர்க் கூழின் புறப் பொருளே பொழிந்து
வரும் புயல் காணு மணவாள மா முனி மாதவனே-17-
மாதவன் வேங்கடத் தெவ் வுருவாக வுமாவனென
வோதிய சேரலர் கோன் குலசேகரன் ஓண்டமிழ்க்கண்
ஆதரங் கொண்ட மணவாள மாமுனிக் கனமிலரிப்
பூதலத்தே வினைக் காளாக நின்று புழுங்குவரே (18)
புழுங்கும் வழுதிப் பெருமான் மனத்திருள் போக வின்பத்
தழுங்கும்படி மால் பரமென்றுணர்த்தும் அமலனின்சொல்
விழுங்குங் குணங் கொண் மணவாள மாமுனி மேய பின்பே
யொழுங்கும் பொறையுங் குணமுமறிவு முயிர்க்குற்றவே — (19)
உயிர்க்கின்ப நல்கும் பொருட்டன்று வில்லிபுத்தூரெழுஞ் செங்
கயற் கண்ணி யாயர் தங் கன்னிகையா யநுசாரஞ் செய்து
தயிர்க்கஞ்சி யாடும் பிரான் றிருப் பள்ளி யிற்றந்த தமிழ்ப்
பயிர்க்கம்புதங் காண் மணவாள மா முனிப் பண்டிதனே--20-
பண்டரும் வேதப் பசுந் தமிழ் மாலையும் பைந் துளவத்
தண்டொடையுங் கொடு தென்னரகங் கேசனைத் தாழ்ந் தெழுப்புந்
தொண்டர் தம் பாதத் துகளடிப் போதைத் தொழுமவரை
மண்டி நின்றேத்து மணவாள மாமுனி வையகத்தே (21)
வையம் புகழ வரு பாணர் கோனடிவாழ்த்து மெங்க
ளையன் குருகை மணவாள மா முனியன் பெவர்க்குஞ்
செய்யுங் கிரிசைகள் கேளீரிகத்தினிச் சென்ம வினை
நையும்படி செய்தழியாத முத்தியு நல்கடுமே–22-
இடுமே வினைக் கணிடுவதல்லா னரகெய்து வித்த
விடுமே பவமிப் பவத்தை மெய்யென்று விரும்பிய வத்
தொடுமே யுழலுமவர் தம் முறவை யொழித் தருட் கண்
கொடு மேனிலவு மணவாள யோகியைக் கூடுளமே (23)
கூடாரை வெல்லும் பெருமாளரங்கர் குணங்களைக் கொண்
டாடாவவரதருள் பெற்றிருப்பினு மாங்கவர்க்குன்
னேடார் மலர்ப் பதத்துண்டேற்றொடர் பவரீவர் முத்தி
வீடாருமின்ப மணவாள மா முனி மெய்ம்மை யிதே–24-
மையார் கருங்கண் மடவார் மயக்கின் மயங்கியவர்
கையாளினின்று மவமே புரிந்துங்கலங்கி யிந்தப்
பொய்யா முலகிலுழல்கின்ற வென்னைப் புரந்திடுத
லையா கடமை மணவாள மா முனி யற்புதனே–25-
அற்புத நங்கை வடிவினின்றே மடலானறையூர்ப்
பொற் பமர் பூமகள் கேள்வனைப் பாடிப் புகழ்ந்திடு நங்
கற்பக மங்கைப் பரகாலன் செஞ்சொற் கவிகளினு
ணற் பொருடேரு மணவாள மாமுனி நாயகமே–26-
நாயக நங்கை மகவெனத் தோன்றிய நம்பி யன்றிப்
பேயக மற்றொரு செய்வந் தொழாதெனப் பேசிய மெய்த்
தூய குணத் திருக்கோளூரறை தன் றுணை யடியை
நேயம் வைத்தேத்து மணவாள மா முனி நீணிலத்தே–27-
நிலத்தின் மறைப் பொருண்முற்றுந் தமிழினிகழ்த்திய கோ
நலத்தின் பெருமை யவன் பாவருமை நவை யிலுயிரப்
புலத்திற் றெரிக்க மணவாள மா முனி போந்திலனேற்
றலத்திற் புதைத்த பொருள் போல நின்று தளர்வுறுமே–28-
தளரா ரிடுக்கண்கள் எய்தினு மின்பங்கள் சார்ந்திடினுங்
கிளரார் குருகைப் பெருமான் மறையிற் கெழுமியசொல்
வளரா நிலவும்படி செய்த நாதமுனி மலர்த்தா
ளுளராரையுஞ் சொன் மணவாள யோகியை யுன்னினரே -29-
உன்னற்கரிய மறைகளை யாயிர மொண் டமிழாற்
பன்னற்குலகில் வருஞ் சடகோபனைப் பத்தி யென்று
மன்னப் பதிவைத்திறைஞ்சு மணவாள மாமுனியா
மென்னப் பனுண்டெனக் கிங்கொரு நாளும் இடரில்லையே–30-
இட.ங்கொண்ட கீர்த்தி மணவாள மாமுனி யென்னி பம்பூச்
தடங்கொண்ட தென்குருகாபுரி மாறன் றமிழ் மறையின்
நிடங் கொண்ட வின்பப்பொருண் மதம்பாயச் சினத்துந்து முக்கோ
லுடன் கொண்வந்த வப்போதற்றவா திய ரூக்கங்களே-31-
கள்ளார் மலர்ப்பொழிற் றென்னரங்கேசனைக் கண்டு தொழு
துள்ளாருறவை யொழித் துய்யக் கொண்டார் தமொண் கழற்கண்
விள்ளாத வன்பன் மணவாள மாமுனி மென்பதநீர்
கொள்ளா ரிகத்தினிற்றள்ளார் பிறப்பின் கொடுமையையே-32-
கொடுப்பா னருளைக் கொடுத்தும் வினைகள் குலைந்திட வந்
தடுப்பா னெதிரினடுத் தின்ப மென்னு மலை கடற் கண்
மடுப்பானிகத்தின் மடுத்ததன் பின் றிருமால் பதத்தில்
விடுப்பான் குருகை மணவாள யோகியை மேவிடினே-33-
மேவார் தமக்கிலை யெங்கோன ரங்கன் விரை மலர்ச் செம்
பூவார் கழலைப் பொருந்தி நல்லின்பம் புசித்திடுத
லாவாவெனத் திரிந்தாலென் பயனுண்டடை மனமே
பாவார் குருகை மணவாள மாமுனி பாதத்தையே–34-
பாதகராயினுந் தஞ்ச நின்றாளெனப் பற்றிலவர்
மேதக வாய்ந்து நல்லின்ப மெய்ஞ்ஞானம் கண் மேவியிகத்
தேதகவோடழியா முத்தராக விருப்பரென்றும்
போதகமங்கொண் மணவாள மாமுனிப் புண்ணியனே-35-
புண்ணிய நோன்பு கண் முற்றுந் துறந்து புகலெனையே
நண்ணுதி யானினைச் செய்கு வல் பாவநவை யறவென்
றண்ணன் முன்போதிய நீதியெலா நீயவதரிக்க
மண்ணினிற்றேர்ந்ததுயிர் காண் மணவாள மாமுனியே–36-
முனிந்தாலும் தள்ளி மிதித்தாலும் சேயனை முன்பவடன்
மனந்தானிரங்கும் படிக்கமுமல்லது மாட்டகலா
தினன்றானிகர்க்கு மணவாளமாமுனி யென்னப்ப நீ
சினந்தாயெனினும் விடாதுன்கழலை யென் சிந்தனையே-37-
சிந்திக்க வின்பம் தருமரங்கேச ன் திருவருளால்
பந்தித்த தொல் வினை தீர் மணக்கால் நம்பி பாதத்தையே
வந்திக்குங் கோயின் மணவாள மாமுனி வைபவ நும்
புந்திக்கணின்பம் புகட்டும் புலவீர் புகழுமினே–38-
புகழும் பொருளும் பொருந்தி யிப்பூதலம் போற்ற வின்பச்
தகழுமவரு மழியா திருந்திலராதவினால்
இகழும் புவி வாழ்வினை வெறுத் துன்னடி யெய்தி யன்பிற்
றிகழும்படி மணவாள மாமுனி செய்தருளே-39-
௮ருளாழி யேந்தும் பெருமான் சமயத்தணி விளக்கா
லிருள் யாவு நீக்கும் யமுனைத் துறைவ னிணையடி தன்
பொருளா யுகந்த மணவாள மாமுனி பூங்கழலைக்
தெருளார்ந்து இறைஞ்சு மவர்க் கினி மேலில்லை சென்மங்களே-40-
சென்மப் பெரும்பிணிக் குள்ளுற்றுழலுஞ் சிறியவர் தங்
கன்மக் கடுங் கனற் கோர் கடைக் காரெனக் கண்ண பிரான்
றன்மப் பயிர்க்கு நல்வித்தெனத் தோன்றிய தாழ்விலியுள்
வன்மத்தை நீக்கு மணவாள மாமுனி வண்மை நன்றே–41-
வண்மைப் பராங்குசன் றாளே கதியென வாழ்த்து மனச்
திண்மைப் பரம குருவாயுதித்த திருவரங்கத்
துண்மைப் பொருடேர் பெருமாளரைய ரொளிர் கழல் சேர்
தண்மைக் குணத்து மணவாள மாமுனி தாள் சரணே -42-
தாளானிலம் பண்டளந் தோனழகன் றனக் கன்பு கொண்
டாளாகி நின்ற திருமாலை யாண்டா னருளமுதுண்
ணீளார் குணத்து மணவாள மாமுனி நீர்மை சொல
மாளாதிகத் திற்றலை யாயிரங் கொண்ட வாளகிக்கே-43-
வாசம் கலந்த துழாய் மாலை சூடி வரும் பெருமான்
நேசம் கலந்த திருக்கோட்டி நம்பி நிலை யுணர்ந்து
பேசும் புகழெம்மிராமா நுசனடி பெற்றிலகு
தாசன் குருகை மணவாள மாமுனி தாள் கதியே–44-
கதி காட்டு நூலிதுவோ வதுவோ வெனக் கற்று நுங்கண்
மதி காட்டும் பல் வழிச் சென்றுழல்வீர் திருமால ருணற்
பதி காட்டு மின்பப் பயன் காட்டி மாறன் பழ மறை யின்
றுதி காட்டுங் கோயின் மணவாள மாமுனி சொன்னலமே–45-
சொல்லான் மறைப் பொருளெல்லாந் தமிழிற்று லங்கிடச் செய்
நல்லார் குருகை வகுளா பரண னகு மலர்த்தா
ளல்லா திறைஞ்சாத் திருமலை நம்பி யடியலதுள்
புல்லான்றுதியான் மணவாள மாமுனி பூதலத்தே (46)
பூதங்கவர் தெறுக்கால் கொட்டுலை கவி போன்ற நெஞ்சை
யேதம் படர் புலத்தூடுற்றுழலா திருத்தி யின்பப்
போதம் பயிற்றிய மாறனேர் நம்பி புகழ் கொளிரு
பாதம் பரவு மணவாள மாமுனி பண்பினிதே (47)
பண்பாடளி குடைந் தூதும் துளவப் பசுந் தொடையோ
டொண் பா வணியலணி தேவராசனுகப்ப வெழு
நண் பார்தவத்துத் திருக் கச்சி நம்பி நலங்கொடிந் தத்
திண் பார் புரக்கு மணவாள யோகி யென் சேம வைப்பே–48–
வைப்பாய வான் பொருளெல்லா முனது மலரடி யென்
றெப்போதும் வாழ்த்தி யிருக்கு மெய்ஞ்ஞானிய ரீட்ட மெனை
பிப்பாவியா ரென்றிகழா தணைக்கு நல்லின்ப மதி
தப்பாதெனக்கு மணவாள மாமுனி த்ந்தருளே (49)
அரு மா மறைப்பொருண் முற்றுந் தமிழிலருளிய வெம்
பெருமான் குணங் கண்டுவந்து வந்தேத்தும் பெரிய நம்பி
யிரு மா மலர்ப் பதத்துள்ளன்பு கொண்ட வெழிற் குருகை
வரு மா தவத்த மணவாள யோகி யென் மா நிதியே (50)
நிதியா மறை வீந்துலகங் கலியா னிரப்புறுங்கால்
விதியாரனை யினருளா லெழுந்த விமலனின்ப
மதியார் குணத் தெம்மிராமாநுசன் றன் மலரடியே
கதியா யுகந்த மணவாள மாமுனி கார்முகிலே (51)
காரேய் கருணை யிராமாநுசன் றன் கழற் கன்பினர்
யாரே யெனினு மவர் பான் மருவு மருங்குணத்துச்
சீரேய் குருகை மணவாள மாமுனிச் செல்வன் றன் வண்
பேரே துதிக்கிற் றருவானழியாப் பெரும் பதமே 52-
பெரும்பதம் வேண்டி யென் போலியர் போனிதம் பேதற்று நீ
கரும்பினு மின்சுவைப் பாமாலை தந்து கடலுலகந்
தரும் புகழ் கொண்ட விராமாநுசனடி தாழ்ந்திரந்து
வருந்திய தென்கொன் மணவாள யோகி யுன் மாய நன்றே–53-
மாயப் பெரும் பிணிக்குள்ளுற்று நாளுமடி தருமிக்
காயத்தை யான் பரித்தேங்காது நிற்கக் கடைக் கணிப்பாய்
தா யொத்த வின்பத் திராமாநுசனடி தாழ்பவர் பா
னேயததைவைக்கு மணவாள மாமுனி நீ மகிழ்ந்தே –54-
நீ மகிழ்ந்து என் பாலருள் செய வேண்டுவ னீணிலத்தோர்
கோ மகனாயினுமல்லா திரக்கும் குறை யுறினும்
நாமன நின் திரு நாமம் குணகணவின் றெணத்தென்
பா மலி கீர்த்தி மணவாள மாமுனி பண்ணுதற்கே–55-
பண்ணார் பொழிலரங்கம் முதலாய பதிகளொரு
கண்ணாய் மவிந்த விராமாநுசற் கொடு காமரு சீர்
எண்ணார் பரவு மணவாள மாமுனி யெய்திய பின்
றண்ணார் மலர்க்கணிரண்டாகி நின்று தளிரந்ததனவே–56-
தளிர்த்தது சீலத்திராமாநுசன் றன் தரிசனமே
குளித்தது மன்னுயிரின்பக் கடற்குட் கொழுந் தமிழ்ப் பாத
துளித்தது நான்மறை யோடு உலகெங்கும் துழாயவன் பேர்
களித்தது கோயின் மணவாள யோகியைக் கண்டவன்றே–57-
கண்டவ ருள்ளக் கசடறுத் தாட் கொளுங்கார் முகினேர்
மண்டலத் தோங்கு மிராமாச முனி வைபவ முட்
கொண்டறத்தே தளிர்ததாய் யுயிர்க்கீயுங் குருகைப் பிரான்
றண்டமிழ்ப் பாவை மணவாள மா முனி தண்ணளியே—58-
அளிக்குமினித்தாய கடுற்றுயிருழல ல்லலின்றிக்
களிக்குமது நல்லறத்தே தளிர்த்திடக் கண்டு மண் விண்
டுளிக்கும் புகழெம்மிராமாநுச னருட்டுய்த் திரை வாய்க்
குளிக்கும் தவத்து மணவாள யோகி குணத்தியல்பே–59-
குணமேது தொண்டுட் குறியேது வேதக் கொழுந்தெழு நன்
மணமேது ஞான மணமேது தீய வலி கொள் வினைத்
தணவேது தன்ம நினைவேது பாரிற்றனமென வந்
தணவா திருக்கின் மணவாள மாமுனி யாருயிர்க்கே (60)
ஆருண்டெனக் கிணை யென்றைவர் முன்பரு ளச்சுதன் றன்
பேருண்டருங்கதி சேர்ப்பதற் கென்றெணும் பேய் மதியீர்
பாருண்ட கீர்த்தி மணவாள யோகி தன் பற்றிலர்க்குத்
தாருண்டு நீருண்டு சோறுண்டு பேருண்டு தாயுமுண்டே (61)
தாயுண்டு பண்ணிய தந்தை நீ யென்றிருப்பார் தமக்கு
வாயுண்டு நற்கதி தா வென்று கேட்க வோர் வண்மை யற்ற
தீயுண்ட நெஞ்சத் தென் போலியர்க் கென்னுண்டு சென்றிரக்க
நீ யுண்டு பண்ணின் மணவாள மாமுனி நேருமன்றே (62)
நேரோதனத்திற் கிரங்கி நைந்தாயயினேர் விழியார்
வாரேர் தனத்திற்கவல முற்றாயிது வன்றி செஞ்சே
தாரோதுங் கீர்த்தி மணவாள மாமுனி தாணிலையு
ளாரோடுறவுண்டு லைந்தாய் வலி யுனக்கியா துளதே (63)
உளராகவென்று நினைந்தே யுரைப்பர் பல்லோர் தவத்துட்
டளரா வருந்துவர் வீணான தெய்வந் தனைப் பணிந்து
வளரா விரங்குவர் பாரின் மணவாள மாமுனிவன்
கிளரா ருயிர்க்கின்ப நல்க வந்தேய்ததைக் கேட்டுமென்னே (64)
கேட்டா கமங்களுட னீறணீந்திரன் கேடிலியென்
றூட்டா தரத்துலைந் தின் பா மறை தேர்ந்துகந்து வில்வக்
கோட்டூடு நின்று குதித்து வெங் கூற்றைக் குதித்த வெம்பார்
மாட்டோங்கு மன்பிற் சிறந்தோன் மணவாள மா முனியே (65)
மா மதங் கொண்ட பர வாரணங்கண் மடிய வெழுந்
தே மலி சிங்க மிராமாநுனடி யென்ன நின்ற
பூ மலி கீர்த்தி முதலியர் கோனருட் பொற்பை யுன்னிப்
பா மகிழ்ந்தோது மணவாள யோகி யென் பாக்கியமே —66-
எனக்கீந்த பேறிந்த நாலூரவனு மின்றெய்த வரு
டனத் தொன்று பூ மகள் கேள்வா வென்றேத்திய சற்குணத்தெம்
மனத்தொன்றி நின்ற வக்கூரேசன் றாணிலை வாழ்த்திடு நல்
லினத்தொன்று கீர்த்தி மணவாள மாமுனி யென்னப்பனே- (67)
என்னைப் பவக் கலிக்குள் ளுற்றுழலா தெடுத்தருள்வான்
மன்னித் திகழ் வள்ளல் பட்டர் தஞ்செய்ய மலரடியைப்
பன்னிப் பரவு மணவாள மாமுனி பான்மை யிலொன்
றுன்னப் பவம் போமெனி லென்னுறா தருளுற்றவர்க்கே (68)
உற்றார் கலிக்கணுழல்வார் தமக்குதவோர் தருவாய்க்
கற்றா நிகர்க்குங் குணங் கொணஞ்சீயர் கழறிய நூல்
பெற்றார்க்குமோது மணவாள மாமுனி பேர் சொலவாய்
சற்றே திறக்கிற்றிறந்திடு முத்தித் தலைக் கதவே (69)
தலையாயிரங் கொண்ட சேடன் றன் மேற்றுயிறண்டுளவ
மலையார் புயத்துத் திருவரங்கேசன் வடிவெனவிவ்
வலையார் நிலத்திற் பொலிந்த நம்பிள்ளை யருளினுக்கோர்
நிலையாய கோயின் மணவாள யோகி யென்னெஞ்சத்தனே (70)
நெஞ்சிற் கறை யற்றிடத் தமிழ் வேதத்துணீள் பொருளை
யஞ் சொற்களால் வெளியாக்கும் பெரிய வாச்சான் பிள்ளையைக்
கொஞ்சிப் பரவு மணவாள யோகி முக்கோல் கொண்ட திக்
கஞ்சத்தலைப் புவிமீதுயிர்க் கின்பினைக் காட்டுதற்கே –71-
காட்டாவின்பின் செஞ்சிலம்படி நோவக் களித்தெழுங்கா
ரூட்டாக மங்கை யுறை மார்பரங்கனுகக்க விரு
பீட்டாளர் தந்த வடக்குத் திரு வீதிப் பிள்ளை யந்தாள்
சூட்டாற் பரிக்கு மணவாள யோகி யுட் சோர்விலனே (72)
சோர்வுற்ற மன்னுயிர்க்குள்ளன்பு தூண்டத் துணிந்து மறைச
சார்வுற்ற மெய்ப் பொருளெல்லாந் தமிழிடைத் தந்த நந்தாத்
தேர்வுற்ற ஞானத் துலகாரிய னருட் செவ்வி முற்று
மார்வுற்ற சிந்தை மணவாள யோகி யுண்டாள்வதற்கே –73-
ஆளாகி நிற்பவர்க் கில்லை நெஞ்சே யிகத்தல்லலென்று
நீளாசலாம் புயத் திந்திரையோடுறை நேமி யங்கைக்
காளாம்புதத் தெந்தை நல் வீட்டினின்பமுங்கைக் கொள்வராற்
றாளாளன் கோயின் மணவாள மாமுனி தாளிணைக்கே (74)
இணையாருனக்குண்டு நெஞ்சே யறிவிலிதுவதுவென்
றணையா தணைந்தவவரோ டுறவறலன்றி யன்பிற்
றுணையாங் குருகை மணவாள மாமுனி தொண்டர் தங்க
டிணையாரிடந் தொறும் போய்ப் பணிவானருள் செய்தனையே (75)
நையேனினி யிந்த நானிலத்தே யொளிர் ஞாயிறென
மையேயகற்றித் திருவாய் மொழிப் பிள்ளை வண்மை சொல்லி
மெய்யே பரவு மணவாள மாமுனி மேற் றுதிகள்
செய்யேனெனினுமுள் செய்தவர் தாடொழச் சிந்தித்தே –76-
சிந்தாகுல மறுத்தெங் கோனரங்கன் றிருவடி யுட்
டந்தாதரத்திற் பணி பொழுதோர் துயர் சாற்ற வுன்னிச்
செந்தாதிலகிய வாடை முக்கோல் கொடு சீர் யதியாய்
வந்தானுலகை மணவாள மாமுனி வாழ்விக்கவே (77)
வாழ்வைப் பெரிதென வெண்ணி நையேலதுவான் மினினும்
தாழ்வுற்றழி தருந்தன்மை யதாதலிற் சார்ந்திலர் நூல்
சூழ்வுற்ற ஞானியர் நெஞ்சே வெறுத்தச்சுதனருட் க
ணாழ்வுற்ற கோயின் மணவாள மாமுனிக்கன்பு கொள்ளே (78)
அன்பே யுருக்கொடு நின்றது போனின்றனைத் தயிர்க்குந்
துன்பே யகற்றி யறத்தே பயிற்றி யித் தொல்லுலகி
லின்பே கொடுக்கு மணவாள மாமுனி யிங்கு வந்த
பின்பே வருத்தந் தவிர்ந்தாரெமனும் பிரமனுமே (79)
மன மாசகற்றத் திருவரங்கேசன் மகி தலத்திற்
றனமா யுகந்த விராமாநுச னிரு தாளிணை மீக்
கென மா வெழுந்து மணவாள மாமுனி காதல் கொடு
தினமே பொழிந்த கலி யன்றி யுண்டு கொல் செப்புதற்கே–80-
செப்பார் குணத் தெம்மிராமாநுசன் தன் திருவடியை
யெப்போதும் வாழ்த்து மணவாள யோகியை யேத்தி யென்றுந்
தப்பாதவன் செய் திருவாய் மொழி நூற்றந்தாதியை யுள்
வைப்பார் தமக்கிணை பாரீர் எவருண்டு மாதலத்தே (81)
தலத்தாரணந் தமிழ் தந்த நம்மாழ்வார் சரித்திர நூல்
வலத்தாசிரியா் தம் வைபவ மன்னர் வரன் முறை யுண்
மலத்தாசகற்ற வுபதேச ரத்தின மாலை யென்றே
நலத்தாலுரைத்தான் மணவாள மாமுனி நானிலத்தே (82)
நானினி வேண்டுவதுண்டு கொன் முற்றுணர் நாயக வுன்
பானினை வொன்றிப் பரவுவதன்றி யோர் பற்றுமின்றி
மேனிலை காண மணவாள மாமுனி மெய்ச் சுடேரே
நீ நிழல் போற் பிரியாதுறு மென்னுள நேர் செயவே (83)
செயலேதுமின்றி வருந்துயிருட் கொடு தேர் தரவோர்
புயலேய் குணத் துலகாரியன் செய்த பொருவில் கலை
யயலே புதைத்த மணி போற் கிடந்த வரும் பொருளி
னியலே விரித்தான் மணவாள மாமுனி யெந்தை வந்தே (84)
எந்தை யிராமாநுசனடிப் போதை யெப்போது மெண்ணுஞ்
சிந்தையன் கோயின் மணவாள யோகி தெளிதர முன்
செந் தமிழ் வேதத் தரும் பொருளீட்டுள சிர்மை யெலாந்
தந்தனன் காண் பிரமாணத் திரட்டென்ற சாத்திரத்தே (85)
சாத்திரங் கற்றும் பிறர்க்குரைத்தும் மதிற்றா மடங்காக்
கோத்திரரோடும் குலாவுதல் விட்டுக் குருகைப் பிரான்
வாய்த்திரங் காட்டு மறைப் பொருண் முற்றும் வழங்க வந்த
பாத்திரன் கோயின் மணவாள யோகியைப் பற்று நெஞ்சே (86)
பற்றா மனிதரைப் பற்றிய தாலென் பயனுளது
நற்றா யென வெழுந்தாரு யிர்க்கின்ப நலங் கொடுக்குங்
கற்றார் பரவு மணவாள மாமுனி நான் மலரை
யுற்றா லொழியும் பவத்தே வருத்து நும் மூழ்வினையே–87-
ஊழிக் கடுங்கனற் குள்ளுற்ற மான் போலுலைந் துலைந்து
தாழிப் பெரு வயிற்றோடுழல்வீர் நிதி தா வெனப் போ
யாழிப் புவிக்கரசானவர் பாலிரந்தால் வருமோ
வாழிப் பதநம் மணவாள யோகியை வாழ்த்தலற்றே–88-
௮ற்றவர் போற்று மணவாள யோகி யருளிய நூன்
முற்றுமிந் நூலிடை முற்றிலவே யெனின் மூதுலசைச்
சிற்ற வரங்கை யுட் சேர்ப்பதற்கா மெனிற் சிந்து வைக்கை
யிற்றவர் நீந்துதற்கே யுமென்றாலிதிலே யுமன்றே–89-
ஏயும் குணத்து மணவாள யோகி யிருந் தெண்மரைத்
தீயுமு யிர்க்குத் தன் போலருள் செய்ய வெண்டிக் கயங்க
ளாயும் பரமத சிங்கங்களாயு மமைத்திலனேன்
மாயன் பொருளென்று ரைப்பதர்காங் கொலிம் மானிலத்தே-90-
மானிலத்தோங்கு தென் சீ வர மங்கை வளம்பதி யுண்
ஞானியர் போற்று மிராமாநுச முனி நாயகத்தை
யீனமிலென் போலியர் தமைக்காக்க வினிது வைத்தான்
கோனிலை கொண்ட மணவாளயோகி குணக்கடலே–91-
கடலாடை மான் முலை போன் மலி வேங்கடக் கார் வரைக் க
ணடலாழி யங்கைப்பெருமான் பணி கொடிங் காருயிர்க
ளிடராழி நீந்த விராமாநுசமுனியை யிருத்திச்
சுடராயிலங்கு மணவாள யோகி சுகிர்தமென்னே-92-
சுகத்தே யுலகத்துயிர் வாழ் தரத் திருவுள்ளம் வைத்திச்
செகத்தே பரவத்தூர்ப் பட்டர் பிரானெனுஞ் சீயரைக் கொண்
டகத்தேய் பவத்தை யறுத்து விட்டான் குருகாதிபன் சொன்
முகத்தே யிலகு மணவாள யோகி முறை தெரித்தே–93-
முறையோர்ந்திலா துழல்வார் தமைக் கண்டுமுதமொடவர்
கறையே யகற்றி யுணர்வே பயிற்றிக் கதி தருவான்
குறையேதுமின்றி நம் கந்தாடை யண்ணனைக் கோயிலுக்கோ
ரிறையாக வைத்த மணவாள யோகி யன்பென் சொல்வனே–94-
சொல்லு மெறும்பி யப்பா வொடப் பிள்ளாரைத் தூவழிக் கட்
செல்லுங் குணத்தி னப்பிள்ளேயை நீரிச் செகத்துயிர்க
ளல்லும் பகலு மரியே துதித்திட வாக்குவிப்பா
னில்லு மினென்றான் மணவாள மாமுனி நேசம் வைத்தே–95-
நேசித்து நம் திருமாலின் சமய நெறி யிகழ்ந்து
பேசித் திரியும் பிறமதத் தீயர் தம் பேரடக்க
வாசற்ற பிரதிவாதி பயங்கர வண்ணனுக்கோர்
தேசைக் கொடுத்தான் மணவாள மாமுனி சிந்தை செய்தே-96-
சிந்திக்க விந்த மணவாள மாமுனி செய்தது போ
னந்தித் திரைப் புவி மீதெவர் செய்தனர் நாமினி மேற்
பந்தித்த தொல் வினைக்குள்ளுற்று வாடும் பரிசுளதோ
வந்தித்து வாழ்த்தி வழி படுவாமென் மட நெஞ்சமே–97-
நெஞ்சே நமக்கு மணவாள மாமுனி நீணிலத் திற்
செஞ்சேம முற்றிடச் செய்த விந் நன்மையைச் சிந்தித்திடி
னஞ்சேய் வினையு நலமாய் வீடுமொரு நாளுமதற்
கஞ்சேல் வருந்தே லிருப்பா யவன் றனருள் நயந்தே–98-
நயவேனினி யொரு தெய்வத்தை நாளுமந் நான் மறையி
னியலே யுணர்த்து மிராமாநசனெனி லின்பமுற்றி
மயலே பெருகு மணவாள யோகியை வாழ்த்துவர் த
மயலே திரிந்தவர்க் காட் செய்ய வென்னுள மைந்ததுவே–99-
அமையார் புயத்திந்திரை வாழு மார்பனரங்கன் பதந்
தமையே யடைதனின் றண்ணளியால் வரிற் சார்வதல்லா
லெமையே யழைத்த வனீயினும் வேண்வதில்லை கண்டாய்
கமையே நிறைந்த மணவாள யோகி யென் கற்பகமே–100-
கற்புக்கணிகலமாய மின்னார் தம் கணவனல்லா
லற்புக் கிடங்கொடார் நற் பரனெய்தினு மன்னரைப் போற்
சொற்புத்தி நின்னடிப் போதன்றி யொன்றைத் தொழாது செல்வப்
பொற்புற்ற கோயின் மணவாள யோகிப் புகழ்ப் பொருளே–101–
பொருளைப் புதல்வரைப் பூமியை மாதரைப் போற்ற வுன்னி
மருளுற்றுலகில் வருந்து நெஞ்சே பொன் மதிலரங்க
னருளைப் புநைந்த மணவாள மா முனிக் கன்பு கொண்டாற்
றெருளுற்ற ஞானஞ் செறிவுற்று நற்கதி சேர்குலமே- (102)
சோராதகன்ற பெண்ணாண யிர்ப்பின்றி வந்தே பதிபாற்
றாரா யருளை யென வேண்டல் போல நின்றாளடைந்தேன்
சீரார் குணத்து மணவாள யோகி யுன் சிந்தை யென்னோ
வோரா தகற்றிற் கதி வேறிலை யெனக்குத்தமனே– (103)
உத்தமன் கோயின் மணவாள யோகியை யுன்னி யுன்னி
நிச்சமும் போற்று நெறியினர் தாடொழ நேச நெஞ்சில்
வைத்தவர் தாமத் திருநாட்டிடையின் மலர்மகள் கோன்
கைத் தலத்தாலணைப் புண்டிருப்பாருட் களிப்படைந்தே (104)
அடைந்தேன் குருகை மணவாள மாமுனி யம்புயத்தாண்
மிடைந்தே யினியெனை தீண்டாது தீய வினை கடலைக்
கடைந்தேய முதிமையோர்க் கருண் மாயன் கதி பெற உள்
ளுடைந்தேய் வருத்த மொழிந்தேனிகக் தெவரொப் பெனக்கே (105)
எனக்குற்ற செல்வ மணவாள மாமுனி யென்றிருப்பார்
மனக்குற்ற நீங்கி மலமற்று ஞான வழிக்கணின்று
செனக் குற்ற மாற்றிப் பின்றம் போலருள் பெறச் செய்து நம் மா
றனக்குற்ற மெய்ப்பதம் வேண்டிய போதவர் சார்குவரே – (106)
சார்தேனுனது சரணாம்புயத்தைத் தலைக் கொடிவ
ணார்ந்தே னுனதடியார் தமக்காட் செய வன்பர் தந்நோ
யீர்ந்தே யருளு மணவாள யோகி யிதிற் பெரிதோ
பேர்ந்தே யொளிரும் திரு நாட்டிடை யுறும் பேரின்பமே (107)
இன்புற்ற ஞானத்தி ராமாநுசன் தன் இணை யடிக் க
ணன்புற்று நீ யிங்கிருப்பது போல் அவனும் தினமும்
துன்பத்தை நீக்கி மணவாள யோகி யித் தொல்லுலகிற்
புன்பற்ற கற்றப் புனைந்தேன் சிரத்து நின் பூங்கழலே -(108)
பூமாதிலங்கு மணி மார்பரங்கர் புகழ்ந்திடத்தென்
பா மாறன் வேதத் தமிழின் பொருளைப் பகர்ந் தருளஞ்
சீமான் குருகை மணவாள மாமுனி சேவடியாம்
தே மா நிழலுண்ட டைவார் விடாய் கெடச் செய்திடுமே (1
———————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்