ஸ்ரீ எறும்பியப்பாவின் தனியன்
ஸௌம்யஜாமத்ருயோகீந்த்ரசரணாம்புஜஷட்பதம் |
தேவராஜகுரும் வந்தே திவ்யஜ்ஞாநப்ரதம் ஶுபம் ||
ஸௌம்யஜாமத்ருயோகீந்த்ர – அழகியமணவாளமாமுனிகளின்,
சரணாம்புஜஷட்பதம் – திருவடித்தாமரைகளில் வண்டுபோல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும்,
திவ்யஜ்ஞாநப்ரதம் – (தம்மையண்டினவர்க்கு) உயர்ந்த ப்ரஹ்மஜ்ஞாநத்தை அளிப்பவரும்,
ஶுபம் – அறிவினாலும், அநுஷ்டாநத்தாலும் ஶோபிப்பவருமான,
தேவராஜகுரும் – தேவராஜகுரு என்ற எறும்பியப்பாவை,
வந்தே – வணங்கித் துதிக்கிறேன்.
ஸ்ரீ வரவரமுநி திநசர்யை என்னும் நல்லநூலை இயற்றிய ஸ்ரீ தேவராஜகுரு என்று ப்ரஸித்திபெற்ற
எறும்பியப்பா மிகப்பெரிய வித்வானும் கவியுமாவார்.
இவர் மணவாள மாமுனிகளின் ப்ரதாந சிஷ்யர்கள் எண்மரில் ஒருவர்.
ஆசார்யராகிய மணவாளமாமுனிகளையே தெய்வமாகக் கருதிய இப்பெரியவர் அவர் விஷயமாக
வரவரமுநி காவ்யம்,
வரவரமுநிசம்பூ,
வரவரமுநிசதகம் முதலிய பலநூல்களை இயற்றியுள்ளார்.
இவருடைய மற்றுள்ள பெருமைகளைப் பிள்ளைலோகார்ய ஜீயர் அருளிய யதீந்த்ரப்ரவண ப்ரபாவம் என்னும் நூலில் பரக்கக் காணலாம்.
கி.பி.1370 முதல் கி.பி.1443 வரையில் வாழ்ந்தருளிய மணவாள மாமுனிகளின் காலமே இவருடைய வாழ்ச்சிக்காலமாகும்.
இவர் மணவாள மாமுனிகளின் நித்யாநுஷ்டானங்களைப்பற்றி ஸ்ரீ வரவரமுநி திநசர்யை என்ற நூலினையும் இயற்றியுள்ளர்.
இந்நூல் முன்று பிரிவுகளைகொண்டது. பூர்வதிநசர்யை, யதிராஜவிம்ஶதி, உத்தரதிநசர்யை என்பன அப்பிரிவுகள்.
ஒருநாளின் முற்பகுதியின் அநுஷ்டாநத்தையும், பிற்பகுதியின் அநுஷ்டாநத்தையும் முறையே தெரிவிப்பன பூர்வதிநசர்யையும், உத்தரதிநசர்யயும் ஆகும்.
எம்பெருமானாரைப்பற்றி த்யாநித்துத் துதிப்பதும் மணவாளமாமுனிகளின் அநுஷ்டாநத்தில் சேர்ந்ததாகையால்
பெரியோர்கள் மணவாளமாமுனிகள் எம்பெருமானார் விஷயமாக அருளிச்செய்த யதிராஜவிம்ஶதியையும்
பூர்வோத்தர திநசர்யைகளின் இடையில் சேர்த்தருளினர்.
இம்முன்று பகுதிகளைக்கொண்ட ஸ்ரீ வரவரமுநிதிநசர்யை என்னும் நூலுக்கு
ஏறக்குறைய 260 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தருளிய ‘வாதூலவீரராகவஸூரி’ என்ற
திருமழிசை அண்ணாவப்பங்கார்ஸ்வாமி பணித்தருளிய ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவித் தமிழில் ஓருரை எழுதப்படுகிறது.
ஸ்ரீ வரவரமுநிதாஸரென்னும் மறுபெயரையுடைய தேவராஜகுருவாகிய எறும்பியப்பா ‘குரு என்பவர்
ஸாக்ஷாத் நாராயணாவதாரமாகையால் அவருடைய திருநாமத்தை எப்போதும் ஜபிக்கவேண்டும்.
அவருக்கு வசப்பட்டு வாழவேண்டும். அவரிடத்தில் பக்தியைச் செலுத்தவேண்டும்.
அவருடைய அன்புக்கிலக்கானவற்றில் அன்பு காட்டவேண்டும். அவருக்கு ஒரு வருத்தம் நேரிட்டால் மிகவும் வருந்தவேண்டும்.
அவருடைய திருநாமத்தையும், குணங்களையும் த்யாநம் செய்து மகிழவேண்டும்.
தேவதையினிடம் பக்தன் போன்றும், அரசனிடம் வேலையாள்போன்றும்,
ஆசார்யனிடத்தில் ஶிஷ்யன் விநயத்தோடு கூடியவனாய்ப் பணிவிடை செய்யவேண்டும்.
நாம் ஆசார்யனுக்கு தாஸர்கள் என்று பெருமைப்படுதலும், ஆசார்யனைப் பின்செல்லுதலும்
அவருடைய குணங்களைப் பிறர் சொல்லக்கேட்டலும், தானே சொல்லுதலும், நினைத்தலும்
ஶிஷ்யன் செய்யத்தக்க செயல்கள்’ (?) என்றுள்ள உயர்ந்த ஶிஷ்யனைப்பற்றிய ஶாஸ்த்ர வாக்யங்களை அறிந்தவராகையாலும்,
எல்லையற்ற ஆசார்யபக்தியின் பெருமையாலும், தம்முடைய ஆசார்யராகிய பரமபூஜ்யரான மணவாளமாமுனிகளைப்பற்றி
சதகம், காவ்யம், சம்பூ முதலிய க்ரந்தங்களைத் தாம் இயற்றியிருந்தபோதிலும்
அவற்றால் த்ருப்தியடையாமல் ‘குருவின் நித்யாநுஷ்டாநங்களையும் வருணிக்கவேண்டும்’ (?) என்ற ஶாஸ்த்ரத்தினால்
தூண்டப்பெற்ற அதிகமான பற்றையுடையவராய்க் கொண்டு அம்மணவாளமாமுனிகளையே இலக்காகப் பெற்ற
திநசர்யை (நாள்தோறுமுண்டான அநுஷ்டாநத்தைப்பற்றிய நூல்) என்ற க்ரந்தத்தை இயற்றத்தொடங்கி,
செய்யப்போகும் க்ரந்தம் இடையூறேதுமின்றி முடிவு பெறுவதற்காக, தமது ஆசார்யபக்தியென்னும் பெரிய தகுதிக்கேற்ப,
ஆசார்ய நமஸ்காரரூபமான மங்களத்தைச் செய்தருளுகிறார். ‘அங்கே கவேர’ என்று ஶ்லோகத்தினால்.
இத்திநசர்யை என்ற நூல் ஜ்ஞாநம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய நற்குணங்களனைத்தும் நிறையப்பெற்றுப்
பங்க்திபாவநரான (ஒரு கோஷ்டியை முழுவதும் பரிஶுத்தமாக்கும் பெருமையையுடையரான) மணவாளமாமுனிகளைப் பற்றியதாதலால்,
தானும் பங்க்திபாவநமாய்க்கொண்டு ஶுத்தமான ஸத்த்வகுணத்தில் நிலைபெற்ற பரமவைதிக ஸ்ரீ வைஷ்ணவர்களால்
அநுயாக ஸமயத்தில் (கோஷ்டியாக இருந்து பகவத் ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்கும் ததீயாராதன ஸமயத்தில்) முதன்முதலில்
அநுஸந்திக்கப்பட்டு வருகின்றமை ஸம்ப்ரதாயஸித்தமாக உள்ளது.
ஒருபெரிய ததீயாராதன கோஷ்டியில் நல்லறிவும் நன்னடத்தையும் இல்லாத ஒருசிலர் இருந்தால்
அக்கோஷ்டியின் தூய்மை கெடுவதற்கு ப்ரஸக்தியுள்ளமையால், அத்தூய்மையின்மையைப் போக்கித் தூய்மையை
அதிகமாக்கவல்ல பெருமயைப்பெற்றவர் பங்க்திபாவநரான மணவாளமாமுனிகள்,
அவரைப் பற்றி இந்தத் திநசர்யையும் பங்க்திபாவநமென்பது பெரியோர்களின் துணிபு.
அங்கே கவேர கந்யாயாஸ் துங்கே புவந மங்களே |
ரங்கே தாம்நி ஸுகாஸீநம் வந்தே வரவரம் முநிம்||–1-
துங்கே – மிகவும் உயர்ந்த,
புவந மங்களே – உலகோரின் மங்களங்களுக்கு (எல்லாவகையான நன்மைகளுக்கும்) காரணமான,
கவேர கந்யாயா – அங்கே – காவேரி நதியின் மடியில் (நடுவில்) இருக்கும்,
ரங்கே தாம்நி – திருவரங்கமென்னும் திருப்பதியில்,
ஸுக, ஆஸீநம் – ஸுகமாக (உபத்ரவமேதுமில்லாமல்) எழுந்தருளியிருப்பவரும்,
வரவரம் – (உருவம், ஔதார்யம், நீர்மை முதலியவற்றால் அழ்கிய மணவாளப் பெருமாளை ஒத்திருக்கையால்) அழகியமணவாளர் என்ற திருநாமத்தை தரித்திருப்பவரும்,
முநிம் – ஆசார்யனே ஶேஷியென்ற உண்மையை மநநம் செய்பவருமாகிய மணவாளமாமுனிகளை,
வந்தே – வணங்கித் துதிக்கின்றேன்.
“மகி ஸமர்ப்பணே” (கதௌ) என்னும் தாதுவடியாகப் பிறந்த மங்களம் என்னும் சொல்
கம்யம் (அடையப்படும் பயன்) என்ற பொருளையும், இலக்கணையினால் அதற்கு ஸாதனமான உபாயத்தையும் காட்டுகிறது.
இது “கவேர கந்யாயா: அங்கே” என்றவிடத்திலும், “ரங்கேதாம்நி” என்கிறவிடத்திலும் பொருந்துகிறது.
இரண்டும் நமக்கு அடையப்படும் பயனாகவும் மற்றுமுள்ள பயன்களுக்கு உபாயமாகவும் ஆகக் குறையில்லையல்லவா?
‘ரங்கம்’ என்ற சொல் எம்பெருமானுக்கு ப்ரீதியை உண்டாக்குமிடம் என்னும் பொருளைத் தரும்.
‘ஸுகாஸீநம்’ என்பதனால், மணவாளமாமுனிகளின் அவதாரத்திற்குப் பின்பு துலுக்கர் முதலியோரால்
ஸ்ரீரங்கத்திற்கு எவ்வகையான உபத்ரவமுமில்லை என்பது ஸூசிப்பிக்கப்பட்டது.
எம்பெருமானார் காலத்தில் சைவர்களாலும்,
பிள்ளைலோகாசார்யார், வேதாந்ததேசிகர் ஆகியவர் காலத்தில் துலுக்கர்களாலும் உபத்ரவம் நேர்ந்ததுபோல்
மாமுனிகள் காலத்தில் யாராலும் எந்த உபத்ரவமும் உண்டாகவில்லை என்றபடி.
‘வதி – அபிவாதந ஸ்துத்யோ’ என்று தாதுவடிவாகப் பிறந்த ‘வந்தே’ என்னும் வினைச்சொல்,
உடலால் தரையில் விழுந்து வணங்குதலையும், வாயினால் துதித்தலையும் நேராகக் குறிப்பிட்டு,
இவ்விரண்டும் மணவாளமாமுனிகளைப் பற்றிய நினைவில்லாமல் நடவாதாகையால்,
பொருளாற்றலால் நினைத்தலையும் குறிப்பிட்டு, காயிக வாசிக மாநஸிகங்களான மூவகை மங்களங்களையும் தெரிவிப்பதாகும்.
—————————
அவ. – இங்ஙனம் மங்களம் செய்தபிறகு, தம்முடைய ஆசார்யரான மணவாளமாமுனிகள்
தம்திறத்தில் அருள்புரிந்த வகையைக் கூறுமவராய்,
அம்மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் கேட்பதும் அவரை ஸேவிப்பதும் அவரை துதிப்பதுமாகியவை தமக்குப் புருஷார்த்தமென்றும்
ஸம்ஸார துக்கத்தைப் போக்குமதென்றும் கூறுமவராய்க் கொண்டு,
‘ஆசார்யர்களை அவர்களெதிரில் துதிக்கவேண்டும்’ என்று சொல்லுகிறபடியே நேராக ஆசார்யராகிய மாமுனிகளைத் துதிப்பவராய்க் கொண்டு
தாம் செய்ய நினைத்த திநசர்யையின் பொருளைச் சுருங்கக்கூறுகிறார் –
‘மயி ப்ரவிஶதி’ என்று தொடங்கி ‘அநாஸ்பதம்’ (ஶ்லோகம் – 13) என்பதீறாக.
மயி ப்ரவிஶதி ஸ்ரீமந் மந்திரம் ரங்கஶாயிந: |
பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தமவிதூரத: ||–2-
பதவுரை: –
ஸ்ரீமந் – கைங்கர்யமாகிய செல்வம் மிகப்பெற்ற மணவாளமாமுனிகளே!
ரங்கஶாயிந: – ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டருளிய பெரியபெருமாளுடைய,
மந்திரம் – கோயிலைக் குறித்து,
மயி – அடியேன்,
ப்ரவிஶதி ஸதி – சென்று புகும் போது,
பத்யு: – ஜகத்பதியான பெரியபெருமாளுடைய,
பதஅம்புஜம் – தாமரை மலர் போன்ற திருவடிகளை,
த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,
அவிதூரத: – அருகில்,
ஆயாந்தம் – எழுந்தருளிக் கொண்டிருக்கிறவராயும்.
(இதற்கு 12ம் ஶ்லோகத்தில் உள்ள ‘த்வாமேவ’ என்பதனோடு அந்வயம்.
இப்படியே மேலுள்ள ஶ்லோகங்களிலும் அந்வயம் கொள்ளத்தக்கது)
கருத்துரை :- ‘ஸ்ரீமந்’ என்று பிரிக்காமல் ‘ஸ்ரீமத்’ என்று பிரித்து, இதனை மந்திரத்திற்கு அடைமொழியாகவும் ஆக்கலாம்.
அப்போது செல்வமாகிற பகவத் கைங்கர்யத்தைச் செய்வதற்கு மிகவும் உரிய இடம் ஸ்ரீரங்கநாதன் கோவில் என்பது பொருளாகும்.
முதன்முதலில், முக்கியமான மாமுனிகளிடம் பராமுகமாயிருத்தலென்ற தோஷமுள்ளமையினால் அவரை ஸேவிக்க நினையாமல்,
அவ்வளவு முக்கியரல்லாத பெருமாளை ஸேவிப்பதற்காக அடியேன் கோவிலுக்குள் ப்ரவேஶிக்கும் போது,
எதிர்பாராமல் அடியேனுக்கு அருகிலேயே மாமுனிகள் பெருமாளை திருவடி தொழுவதற்காக எழுந்தருளி நின்றார்.
இது அடியேனுடைய பெரிய லாபமென்கிறார்
இதனால். ‘ ஆசார்யகடாக்ஷ வைபவத்தினால், முன்பு அவரிடம் பராமுகமாயிருந்ததற்குக் காரணமான பாவம் தொலைந்ததென்று,
‘நான் கோவிலுக்குள் புகும்போது மாமுனிகள் என் அருகிலே வந்துகொண்டிருக்கிறார்’ என்பதனால் குறிப்பாகக் காட்டப்பட்டதாயிற்று.
பகவானை விட ஆசார்யர் மிகவும் உயர்ந்தவராகையால் அவனை வணங்கச்சென்றபோது ஆசார்யர் எதிர்பட்டமை,
விறகு வெட்டி வயிறு வளர்ப்பவன் விறகு தேடிச்செலும்போது வழியில் எதிர்பாராமல் நிதி கிடைத்தது போலிருந்ததென்று இங்குக் கருத்துக்கூறுவர் உரையாசிரியர்.
எம்பெருமானார் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம்.
அதற்கு அவர் திருவடிகளே உபாயமென்று நினைத்த ஆசார்யநிஷ்டரான மாமுனிகள் கோவிலுக்குள் சென்று
பெரிய பெருமாளைத் தொழுவது – பெருமாளுக்கு மங்களாஶாஸநம் செய்வதற்காகவேயன்றி,
ஸித்தோபயமான பெருமாளைத் தம்முடைய புருஷார்த்தத்திற்கு உபாயமாகப் பற்றுதலாகிய ப்ரபத்தி செய்வதற்காக அன்று.
‘ தேவதாந்தரங்களையும் ஶப்தாதி விஷயங்களையும் உபாய பக்தியையும் உபாயமான எம்பெருமானையும் ஸமானமாக எண்ணியவனாய்,
‘எம்பெருமான் நமக்கு ஸ்வாமி (அவனை ஸ்வயம்ப்ரயோஜநமாக ஸேவித்து மங்களாஶாஸநம் செய்யவேணும்)
என்று நினைப்பவன் பரமைகாந்தி’ என்று ஶாஸ்த்ரம் சொல்லுகையாலே, மாமுனிகள் அத்தகைய பரமைகாந்தியாகையால் என்க. (2).
—————
ஸுதாநிதிமிவ ஸ்வைர ஸ்வீக்ருதோதக்ர விக்ரஹம்|
ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் ||-3-
பதவுரை :-
ஸ்வைர ஸ்வீக்ருத உதக்ர விக்ரஹம் – தமது இஷ்டப்படி தாமே ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய்,
ஸுதாநிதி மிவ (ஸ்திதம்) – திருப்பாற்கடல் போல் வெண்மை நிறமுடையவராய் இருப்பவரும்,
ப்ரஸந்ந அர்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் – (கண்கூசாமல் காணும்படியாகத்) தெளிந்தும் குளிர்ந்துமிருக்கும் ஸூர்யன் (ஒருவன் இருப்பானாகில் அவன்) போன்ற காந்தியினால் சூழப்பட்டவருமாகிய …
கருத்துரை :- ‘ ஆசார்யருடைய திருமேனியை, திருவடி முதலாகத் திருமுடியீறாக, ஶிஷ்யன் த்யானிக்கவேண்டும்’ என்றும்,
‘ ஶிஷ்யன் ஆசார்யன் திருமேனியை ஸேவிப்பதில் பற்றுடையவனாக இருக்கவேண்டும்’ என்றுமுள்ள வசனத்தின்படி
ஆசார்யன் திருமேனியை வருணிக்கிறார் எறும்பியப்பா.
மாமுனிகள் வெள்ளைவெளேரென்ற திருமேனியையுடைய திருவநந்தாழ்வானுடைய அவதாரமாகையாலே
தம்மிஷ்டப்படி தாமே ஏற்றுக்கொண்ட திருப்பாற்கடலுக்குக் காந்தி அதிகமாக இல்லாமையால்,
மேலும் காந்தியையுடைய ஸூரியனை மாமுனிகளுக்கு உபமானமாக்கினார்.
ஸூரியனுடைய காந்தி உக்ரமாகவும் உஷ்ணமாகவும் உள்ளதனால் அதனை நீக்க, ஸூரியனுக்கு ‘ப்ரஸந்ந’ என்ற விஶேஷணமிட்டார். ‘
தெளிந்தும், குளிர்ந்துமிருக்கிற’ என்பது அதன் பொருள். அப்படி ஒரு ஸூரியன் உண்டானால்
அவனுடைய ஒளிபோன்ற ஒளியால் சூழப்பட்டவர் மாமுனிகள் என்று
அபூதோபமையாக (இல்பொருளுவமையாக) ஸூரியனைக் கூறியபடியாம் இது. (3)
——————-
பார்ச்வத: பாணி பத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத் ப்ரியௌ |
விந்யஸ்யந்தம் சநைரங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே ||
பதவுரை:-
பார்ஸ்வத: – இரண்டு பக்கங்களிலும்,
பவத் – தேவரீருக்கு,
ப்ரியௌ – ப்ரீதி பாத்ரர்களான கோயிலண்ணனையும் அவர் திருத்தம்பியாரையும்,
பாணி பத்மாப்யாம் – தாமரை மலர் போன்ற திருக்கைகளால்,
பரிக்ருஹ்ய – நன்றாகப் பிடித்துக் கொண்டு,
ம்ருதுளௌ – ம்ருதுவான,
அங்க்ரீ – திருவடிகளை,
மேதிநீதலே – பூதலத்தில்,
ஸனை: – மெல்ல, மெல்ல,
விந்யஸ்யந்தம் – வைத்து நடப்பவராகிய…
கருத்துரை:- தமதருகில் மாமுனிகள் வருகிறபடியைச் சிறப்பிக்கிறார் இதனால்.
ஆசார்யனே சேஷி என்ற ஜ்ஞாநமும், அவரே உபாயமென்ற உறுதிப்பாடும், அவ்வுபாயத்தினால் பெற்ற ஆசார்ய கைங்கர்யமும்,
இம்மூன்றுக்கும் தகுதியான அநுஷ்டாநமும் உள்ளமையினால்
மணவாளமாமுனிகளுக்குக் கோயிலண்ணனான வரதநாரயணகுருவும்,
அவர் தம்பியரான ஸ்ரீநிவாஸகுருவும் அன்புக்கிலக்காயினர் என்றபடி.
தூய்மையாலும், அழகாலும் மாமுனிகளின் திருக்கண்கள் தாமரை மலர் போன்றனவாயின.
(பரிக்ருஹ்ய) நன்றாகப் பிடித்துக்கொள்ளுதலாவது – மனத்தில் அன்போடு கூடிக் கைகளினால் பிடித்துக்கொள்ளுதலேயாகும்.
அதாவது – தாம் பெரியவரென்றும் ஸிஷ்யர்கள் சிரியவர்களென்றும் நினையாமல் ஸௌஸீயல்யாதிஸயத்தோடு பிடித்துக்கொள்ளுதல்.
இரண்டுத் திருக்கைகளாலும் ஸிஷ்யர்களைப் பிடித்துக்கொண்டால் த்ரிதண்டத்தை தரிக்க முடியாதல்லவா ?
எப்போதும் ஸந்யாஸிகள் த்ரிதண்டத்தை தரிக்கவேண்டுமே.
ஸ்ரீபாஞ்சராத்ர – தத்வஸார ஸம்ஹிதையில்
‘த்ரிதண்டமெனும் பெயர் பெற்ற விஷ்ணுவினுருவத்தை யத்யானவர் எப்போதும் தரிக்கக்கடவர்’ என்றும்,
விஷ்ணு ஸ்ம்ருதியில் ‘யஜ்ஞோபவீதம், த்ரிதண்டம், கமண்டலு ஜலபவித்ரம் கௌபீநம் அரைநாண் என்னுமிவற்றை
யதியானவர் ஆயுளுள்ளவரையில் விடாமல் தரிக்கக்கடவர்’ என்றும் கூறப்பட்டுள்ளதல்லவா? என்று எங்கு ஒரு கேள்வி எழுகின்றது.
இதற்கு விடை வருமாறு. ஜ்ஞானபூர்த்தியையுடைய ஸந்யாஸி விஷயத்திலே –
ஒரு காரணவிஸேஷத்தினால் ஏதோவொரு ஸமயத்தில் த்ரிதண்டமில்லாமலிருப்பினும் தோஷமில்லை.
‘த்யானம், நன்னடத்தை கேள்வியறிவு இயற்கையறிவு யதிதர்மமாகிற வைராக்யம் உலகையடக்குமாற்றல் ஆகிய
இவை எந்த ஸந்யாஸியினிடத்தில் உள்ளனவோ அவனுக்கு த்ரிதண்டம் முதலிய மாத்ரைகளினால் பரிகரங்களினால்
ஆகவேண்டிய பயனேதுமில்லை’ என்று க்ரதுவின் வசநம் இங்குக் காணத்தக்கது.
மேலும் கோயிலுக்குச் செல்வது எம்பெருமானை ஸாஷ்டாங்கமாகத் தடிபோல் கீழே படுத்து வணங்குவதற்காகவே யாகையால்,
தடிபோல் உடலைத் தரையில் படுக்கவைத்து இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் நீட்டி, நீட்டிய இரண்டு கைகளையும்
கூப்பிச்செய்யும் நமஸ்காரமே தண்டவத் ப்ரணாமமாகையால், இப்படிப்பட்ட ப்ரணாமத்தை, த்ரிதண்டத்தைக் கையிலேந்திக் கொண்டு செய்யமுடியாதாகையால் கோயிலுக்குச்செல்லும்போது த்ரிதண்டம் தரியாவிட்டால் குற்றமேதுமில்லை.
இரண்டு கைகளின் நடுவே ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் கைகளைக் கூப்பிக்கொண்டு தண்டனிடும்போது
த்ரிதண்டத்தைத் தரிக்கமுடியாதல்லவா ? என்பதே அக்கேள்விக்கு விடையாகும்.
ஆக, த்ரிதண்டமில்லாமல் ஸந்யாஸி இருக்கக்கூடாதென்ற விதி, பொது விதியேயாகையால்
அது தண்டவத் ப்ரணாமாதி காலங்களில் தவிர மற்ற சமயங்களைப் பற்றியதேயாகும் என்றபடி.
(மேதிநீதலே அங்க்ரீ விந்யஸ்யந்தம்) இங்கு பூமிதலே என்னாமல் மேதிநீதலே என்று பூமியை மேதிநீ என்று குறிப்பிட்டருளியது –
திருமால் மதுகைடபர்களைக் கொல்லும்போது அவர்கள் உடலிலிருந்த மேதஸ்ஸு (கொழுப்பு) பட்டதன் காரணமாக
பூமிக்கு மேதிநீ என்று பெயருண்டானமையால், அவர்களின் கொழுப்பினால் பூசப்பட்டு தூய்மையிழந்த
மேதிநீயானது (பூமியானது) இப்போது மாமுனிகளின் திருவடிகளின் ஸம்பந்தம் பெற்றுத் தூய்மை மிகப்பெற்றதென்று தெரிவிக்கைக்காகவாகும்.
‘நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்கள் உழக்கிய பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே’ (பெரியாழ் திரு 4-4-6) என்று பகவத்பக்தர்களின் பாததூளிபடுதலை இவ்வுலகம் செய்த பாக்யத்தின் பயனாக அருளிச்செய்தாரிறே பெரியாழ்வார். (4)
—————-
ஆம்லாந கோமலாகாரம் ஆதாம்ர விமலம்பரம் |
ஆபீந விபுலோரஸ்கம் ஆஜாநு புஜபூஷணம் ||–5-
பதவுரை:-
ஆம்லாந கோமல ஆகாரம் – வாடாக்குறிஞ்சி மலர் போல ம்ருதுவான திருமேனியையுடையவரும்,
ஆதாம்ர விமல அம்பரம் – மிகச் சிவந்து ஸுத்தமான (காஷாய) வஸ்த்ரமணிந்தவரும்,
ஆபீந விபுல உரஸ்கம் – உயர்ந்த (முன்னுக்குவந்த) விஸாலமான திருமார்பையுடையவரும்,
ஆஜாநு புஜபூஷணம் – முழ்ந்தாள் வரையில் நீண்டு, திருமேனிக்கு ஆபரணம் போன்ற திருக்கைகளை யுடையவருமாகிய…
கருத்துரை:-
திருவடியழகை அநுபவித்துவிட்டு, இனித் திருமேனியின் மென்மையையும்,
ஸந்யாஸாஸ்ரமத்திற்குத் தக்க, திருப்பரிவட்டத்தின் இனிமையையும்,
மற்றுமுள்ள அவயவங்களின் அழகையும் அநுபவிக்கிறார் இதனால்.
(அம்லாந:) – வாடாக்குறிஞ்சிமலர். அது காட்டுவாகை மலர் முதலியவற்றைவிட மெத்தென்றிருக்குமாம்.
அம்லாந கோமலாகாரம் என்றதனால் – முன் ஸ்லோகத்தில் கூறியபடி திருவடிகள் மட்டும் ம்ருதுவானவையல்ல.
திருமேனியே மெத்தென்றிருக்கும் என்று காட்டியபடி.
திருவநந்தாழ்வானேயன்றோ மாமுநிகள்.
சிலர் அம்லான பதத்திற்கு, காட்டுவாகைமலர் என்று பொருள் கூறினர்.
வஸ்த்ரத்திற்குச் சிவப்பு நிறம் துறவறத்திற்கேற்பக் காவிக்கல்லினால் ஏற்றப்பட்டது.
திருப்பாற்கடல்போல் வெள்ளைவெளேரென்ற திருமேனிக்கு, சிவப்பு நிறக்காஷாயத்தினால் உண்டான பளிச்சென்று எடுத்துக்காட்டுகின்ற (பரபாக) ஸோபை, திருபாற்கடலுக்கு அதன்கண் உள்ள பவழங்களால் உண்டான ஸோபை போன்றுள்ளமை குறிப்பாகக் காட்டப்பட்டது.
(ஆபீநவிபுலோரஸ்கம்) திருமார்பு உயர்ந்தும் விஸாலமாகவும் இருத்தல் உத்தமபுருஷலக்ஷணமாகும்.
(ஆஜாநுபுஜபூஷணம்) இங்கு திருக்கைகள் முழந்தாளளவும் நீண்டுள்ளமை கூறியது உண்மையுரையாகும்.
அதனால் ஸிஷ்யர்களைக் கைகளால் பிடித்துக்கொண்டு நடந்தருளும்போது
முழந்தாளளவும் நீண்டதாகத் தென்படாவிட்டாலும் குறையில்லை என்க. அ
ல்லது ஸிஷ்யர்களைப் பிடித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு ஸ்ரமமாக இருக்குமே என்று நினைத்து
இடையிடையில் கைகளைத் தொங்கவிடவும் கூடுமாகையால்,
அச்சமயத்தில் கைகள் முழந்தாளளவும் நீண்டிருத்தல் தென்படுதலால்
அது தன்னை இதனால் கூறினாரென்றலும் பொருந்தும். (5)
——————
ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவள த்விஷா |
சோபிதம் யக்யஸூத்ரேண நாபி பிம்ப ஸநாபிநா ||-6-
பதவுரை:
ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவள த்விஷா – தாமரைத் தண்டிலுள்ள நூல்களின் திரண்ட தொடர்ச்சியினுடைய உருவம் போன்ற வெண்மையான காந்தியையுடையதும்,
நாபி பிம்ப ஸநாபிநா – வட்ட வடிவமான நாபியின் ஸமான தேசத்தையுடையதுமான (=நாபிதேசம் வரையில் தொங்குகின்றதுமான)
யஜ்ஞஸூத்ரேண – யஜ்ஞோபவீதத்தினால்.
சோபிதம் – விளங்குமவருமாகிய
கருத்துரை:
திருமார்பிலுள்ள யஜ்ஞோபவீதத்தை வருணிக்கிறார் இதனால்.
‘புத்தம் புதிய நூல்களால் நிருமிக்கப்பட்டதும் வெண்மை நிறமுள்ளதுமான பூணூலை அணிய வேண்டும்’ என்ற தத்தாத்ரேயரின் வசனம் இங்கு நினைக்கத்தகும்.
மேதாதிதியும் ‘ஸந்யாஸிகளுக்கு யஜ்ஞோபவீதமும் பற்களும் ஜலபவித்ரமும் ஆகிய இம்மூன்றும் எப்போதும் வெண்மையாக இருக்கக்கடவன’ என்று பணித்தார்.
‘உபவீதம் ப்ரஹ்மஸூத்ரம் ஸூத்ரம் யஜ்ஞோபவீதம், யஜ்ஞஸூத்ரம் தேவலக்ஷ்யம் என்ற ஆறும் பூணூலின் பெயர்கள்’ என்றார்கள் மஹரிஷிகள்.
‘யன்ஜ்ஞஸூத்ரேண’ என்ற ஒருமையினால் ஸந்யாஸிகளுக்கு மூன்றுவடம் கொண்ட ஒரு பூணூல்தான் என்பது குறிக்கப்படுகிறது.
‘ஸந்யாஸிக்கு ஒரே பூணூல்,
ப்ரஹ்மசாரிக்கு மான்தோலுடன் கூடிய ஒரே பூணூல்,
க்ருஹஸ்தனுக்கும் வானப்ரஸ்தனுக்கும் (=முதுமையில் மனைவியுடன் வனம் சென்று சேர்ந்து தவம் செய்யுமவனுக்கும்) உத்தரீயத்துக்காக அணியப்படும் ஒரு பூணூலுடன் சேர்ந்து இரண்டு பூணூல்கள் – அதாவது ‘மூன்று’ என்று வ்யாஸரும் பரத்வாஜரும் அறுதியிட்டனர்.
இங்கு ஸந்யாஸிக்கு ஒரே பூணூல் என்றது – ஒரு ஒற்றை வடத்துடன் கூடிய – மூன்று வடங்கொண்ட ஒரே பூணூல் என்றபடி.
‘நாபிக்கு மேல் பூணூல் தரித்தவனுக்கு ஆயுள் குறையும், நாபியின் கீழ் தொங்கும்படி தரித்தவனுக்கு தவம் அழியும்.
ஆகவே நாபியளவாகவே பூணூலணியக்கடவன் என்று மஹரிஷிகள் கூறியதை இங்கு நினைக்கத்தக்கதாகும். (6)
————-
அம்போஜ பீஜ மாலாபி: அபிஜாதபுஜாந்தரம்|
ஊர்த்வபுண்ட்ரைருபஸ்லிஷ்டம் உசிதஸ்தாநலக்ஷணை:||-7-
பதவுரை :-
அம்போஜ பீஜ மாலாபி: – தாமரை மணிகளால் செய்யப்பட்ட மாலைகளினால்,
அபிஜாத புஜ அந்தரம் – அலங்கரிக்கப்பட்டு அழகிய புஜங்களையும் திருமார்பையும் உடையவரும்,
உசித ஸ்தாந லக்ஷணை: – சாஸ்திரம் விதித்ததற்கு ஏற்ற – வயிறு முதலிய இடங்களென்ன, இடைவெளியோடு கூடியுள்ளமை முதலிய லக்ஷணங்களென்ன இவற்றையுடைய,
ஊர்த்வபுண்ட்ரை: – ஊர்த்வபுண்ட்ரங்களுடன் (கீழிருந்து மேல் நோக்கி இடப்படும் திருமண்காப்புகளுடன்)
உபஸ்லிஷ்டம் – பொருந்தப் பெற்றவருமாகிய…
கருத்துரை:-
திருமார்பு அதற்கு இருவருகுமுள்ள புஜங்கள் பூணூல் நாபியாகியவற்றை வருணித்தபின்பு,
திருமார்பு முதலியவற்றோடு தொடர்பு கொண்ட தாமரைமணிமாலையையும் திருமண்காப்புகளையும் வருணிக்கிறார் இதனால்.
“ஸுத்தமான தாமரை மணிமாலையையும், தோள்களில் ஒற்றிக்கொள்ளப்பட்டு அலங்காரமான சங்கு சக்கரப்பொறிகளையும்,
விஷ்ணுவின் பெயர்களிலாவது விஷ்ணு பக்தர்களின் பெயர்களிலாவது ஏதோ ஒன்றையும் தரிக்க வேண்டும்’ என்று பரத்வாஜரும்,
“பூணூலையும், குடுமியையும், திருமண்காப்புகளையும், தாமரை மணிமாலையையும், பட்டு வஸ்த்ரத்தையும், அந்தணன் தரிக்க வேண்டும்’ என்ற பராசரரும் பணித்தருளியவற்றை இங்கு அனுஸந்தித்தல் தகும்.
‘மாலாபி:’ என்ற பஹுவசநத்தினால் தாமரைமணி மாலையோடு, துளஸீ மணிமாலையையும் பட்டினால் செய்யப்பட்ட பலநிறமுள்ள பவித்ரமாலைகளையும் கொள்க. ‘
கருந்துளஸிக் கட்டையினால் செய்த மணிமாலையையும், பட்டுப்பவித்ரங்களையும், தாமரை மணிமாலையையும் எம்பெருமானுக்கு அணிவித்து, அவன் ப்ரஸாதமாகிய இம்மூன்றையும் தரிக்கவேண்டும்’ என்றுள்ள ப்ராஹ்ம புராண வசநம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.
திருமண்காப்பைப் பற்றி, ஸ்ரீபாஞ்சராத்ர – பராஸர ஸம்ஹிதையில் ‘மூக்கின் அடிப்பகுதியில் (புருவ நடுவின் கீழுள்ள மூக்குப்பகுதியில்) ஒரு விரலகலமுள்ள பாதமும்,
நெற்றியின் நடுவில் ஒன்றரை விரல் அகலமுள்ள இடைவெளிப்பகுதியும் இருபக்கங்களிலுமுள்ள கோடுகள் ஒருவிரல் அகலமுடையதுமாக – ஊர்த்வபுண்ட்ரத்தை (கீழிலிருந்து மேலுக்குச் செல்லும் நெற்றிக்குறியை) அந்தணன் தரிக்கவேண்டும்’ என்றுள்ளது.
பாத்மபுராணத்தில் ‘மூக்கின் அடிப்பகுதியிலிருந்து தொடங்கி நெற்றியின் முடிவளவாக ஊர்த்வபுண்ட்ரமிட வேண்டும்.
புருவத்தின் நடுப்பகுதி தொடங்கி நெற்றியின் இறுதிவரையில் இடப்படும் இரண்டு கோடுகளின் நடுவில் இடைவெளியை அமைக்க வேண்டும்.
அவ்விடைவெளி இரண்டு விரலகலமுடையதாகவும், இருகோடுகள் ஒரு விரலகமுடையதாகவும் இருக்கவேண்டும்’ என்று காண்கிறது.
‘விஷ்ணுக்ஷேத்ரத்திலிருந்து வெண்மைநிறமுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டுவந்து,
அதைத் திருவஷ்டாக்ஷரமஹாமந்த்ரத்தினால் அபிமந்த்ரித்து,
அம்மண்ணினால் நெற்றி முதலிய அவயங்களில் கேஸவாதி நாமங்களுக்குத் தக்கபடி
(பன்னிரண்டு) ஊர்த்வபுண்ட்ரங்களை தரிக்கவேண்டும்’ என்ற பராஸர ஸ்ம்ருதியில் குறிக்கப்பட்டுள்ளது.
ஊர்த்வ புண்ட்ரங்களை எறும்பியப்பா இங்குக் கூறியது ஸ்ரீசூர்ணத்திற்கும் உபலக்ஷணம்; ‘
ஊர்த்வபுண்ட்ரத்தின் இடைவெளியில் ஸ்ரீதேவிக்கு அபிமதமான (இஷ்டமான) மஞ்சளால் செய்யப்பட்ட
ஸ்ரீசூர்ணத்தைத் தரிக்கவேண்டும்’ என்று பராஸரர் பணித்தமையால் என்க. (7)
——————-
காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா|
கௌஸேயேந ஸமிந்தாநம் ஸ்கந்தமூலாவலம்பிநா||–8-
பதவுரை:-
காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா – குங்குமப் பூக்களின் ஸமூஹம் போல் செந்நிறமாய்ப் பளபளத்த காந்தியை உடையதாய்,
ஸ்கந்தமூல அவலம்பிநா – தோள்களில் தரிக்கப்பட்டிருக்கிற,
கௌஸேயேந – பட்டுவஸ்த்ரத்தினால்,
மிந்தாநம் – மிகவும் விளங்குமவராகிய….
கருத்துரை:-
ஊர்த்வபுண்ட்ரத்தோடு பொருந்திய தோள்களும் அவற்றில் தரிக்கப்பட்ட பட்டுவஸ்த்ரமும் நினைவுக்கு வரவே அவற்றையும் வருணிக்கிறார் இதனால்.
பட்டு வஸ்த்ரத்தை உத்தரீயமாக அணிந்திருத்தல் இங்குக் கூறப்படுகிறது.
ப்ரஹ்மசாரி, க்ருஹஸ்த்தன், வாநப்ரஸ்தன், ஸ்ந்யாஸி எனப்படுகிற நான்கு ஆஸ்ரமங்களிலுள்ள எல்லா ப்ராஹ்மணர்களுக்கும் பொதுவாக பட்டு வஸ்திரமணிதல் விதிக்கப்பட்டுள்ளது.
பராஸரர் ‘யஜ்ஞோபவீதம் குடுமி ஊர்த்வபுண்ட்ரம் தாமரைமணிமாலை பட்டுவஸ்த்ரமென்னுமிவற்றை ப்ராஹ்மணன் எப்போதும் தரிக்கக்கடவன்’ என்று கூறியது காண்க.
இந்த ப்ரகரணத்தில் ‘உத்தரீயத்தை அணியக்கூடாது’ என்று விலக்கியிருப்பது – அவைஷ்ணவ (வைஷ்ணவரல்லாத) ஸந்யாஸியைப் பற்றியதேயன்றி வைஷ்ணவ ஸந்யாஸியைப் பற்றியதன்றென்று கொள்ளத்தக்கது.
இது தெருவில் எழுந்தருளிக் கொண்டிருக்கிற மாமுநிகளைப் பற்றி வருணிக்கிற ஸ்லோகமாகையால் உத்தரீயம் தோளிலணிந்திருப்பது குற்றத்தின்பாற்படாது.
‘ப்ரதக்ஷிணம் பண்ணும்போதும், தண்டனிடும்போதும், தேவபூஜை செய்யும் போதும், ஹோமம் பண்ணும் போதும், பெருமாளையும் ஆசார்யனையும் ஸேவிக்கும் போதும் தோளில் உத்தரீயம் அணிதல் ஆகாது’ என்றே சாண்டில்யர் கூறியுள்ளதனால் என்க.
இங்குக் குறிப்பிட்ட பட்டுஉத்தரீயம் காஷாய வர்ணமுடையதென்று கொள்க; ஸந்யாஸிகளுக்கு அதுவே நியாயமுடையதாகையாலே. (8)
—————-
மந்த்ரரத்நாநுஸந்தாந ஸந்ததஸ்புரிதாதரம், |
ததர்த்த தத்த்வநித்யாந, ஸந்நத்தபுலகோத்கமம் ||-9-
பதவுரை:-
மந்த்ரரத்ந அநுஸந்தாந ஸந்தத ஸ்புரித அதரம் – மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் சிறிதே அசைகிற உதட்டையுடையவரும்,
ததர்த்த தத்த்வ நித்யாந, ஸந்நத்த புலக உத்கமம் – அந்த த்வய மந்த்ரத்தின் அர்த்தத்திலுள்ள உண்மை நிலையை நன்றாக த்யாநம் செய்வதனால் உண்டான மயிர்க்கூச்செறிதலையுடையவருமாகிய….
கருத்துரை:-
இதனால் அதர ஸொபையை வருணிக்கிறார். அதரம்-உதடு.
‘ஸ்ரீமந்நாராயண சரணௌ ஸரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம:’ என்பது த்வயமந்த்ரம்.
இது திருமந்த்ரமாகிய ‘ஒம் நமோ நாராயணாய’ என்ற மூலமந்த்ரத்தைவிட உயர்ந்ததாகையால் மந்த்ரரத்நமெனப்படுகிறது.
மூலமந்த்ரம் மந்த்ரராஜமென்றும், இது மந்த்ரரத்நம் என்றும் ப்ரஸித்தமாகியுள்ளது.
மந்த்ர ரத்நமென்றால் மந்த்ரங்களுக்குள்ளே மிகவும் ஸ்ரேஷ்டமானது என்றபடியாம்.
‘மந்த்ரங்களுக்குள்ளே பரமமான மந்த்ரம் இது. குஹ்ய(ரஹஸ்ய)ங்களுக்குள்ளே பரமமான குஹ்யம் இது.
வெகு விரைவிலேயே ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பது இது.
திருமந்த்ரத்தில் உண்டான எல்லா விதமான ஸந்தேஹங்களையும் தீர்ப்பது இது.
எல்லாப் பாபங்களையும் போக்கவல்லதுமாகும் இது.
இந்த ஸரணாகதி மந்த்ரம் எல்லாச் செல்வங்களையும், எல்லா நன்மைகளையும் உண்டாக்குமது’ என்று நாரதருக்கு பராஸர முனிவரால் கூறப்பட்டுள்ளது காணத்தக்கது.
இப்படிப்பட்ட பெருமைகளைக் கருதியே இது மந்த்ரரத்நமெனப்பட்டது.
அநுஸந்தானமாவது மெல்ல உச்சரித்தலாகும். த்வயத்தை உச்சரிப்பதனால் எப்போதும் உதடு அசைகிறதென்றபடி.
‘தேஹம் விழும் வரையில் த்வயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும்’ என்பது பராஸரின் வசனம்.
அநுஸந்தானமென்று – மெல்ல உச்சரிக்கின்றமை கூறப்படுவதனால் ‘மந்த்ரத்தைப் பிறர் காதில் விழாதபடி உச்சரித்து ரக்ஷிக்கவேண்டும்’ என்ற ஸாஸ்த்ரார்த்தம் மாமுனிகளால் அநுஷ்டிக்கப்பட்டமை ஸூசிப்பிக்கப்பட்டது.
த்வயத்தை அர்த்தாநுஸந்தானமில்லாமல் மூலமாத்ரமாக உச்சரிப்பது உயர்ந்த அதிகாரிகளுக்கு தகாமையினால் மாமுனிகள் அதன் அர்த்தங்களையும் அநுஸந்திப்பதை இனிக்கூறுகிறார்.
த்வயத்தின் அர்த்தமாவது பிராட்டியும், எம்பெருமானும். பிராட்டியுடன் கூடிய எம்பெருமானைத் தஞ்சமாகப் பற்றுதலுமாம்.
அவற்றின் தத்துவமாவது – பிராட்டியின் புருஷகார பாவமும், அவளால் தலையெடுக்கப்பட்ட வாத்ஸல்யம் முதலிய குணங்களும்,
அக் குணங்களோடு கூடிய ஸித்தோபாயமான நாராயணனும், அவனுடைய திருமேனியும் அதைத் தெரிவிக்கிற திருவடிகளும் ஆகியவை.
நித்யாநமாவது – நிதராம் த்யாநம் என்றபடி.
அதாவது பாவநாப்ரகர்ஷம் என்று சொல்லப்படுகிற – இடைவிடாமல் நினைத்துக் கொண்டேயிருத்தல் ஆகும்.
முற்கூறிய அர்த்த தத்துவங்களை இடைவிடாமல் நினைத்தால் பகவத் பக்தர்களுக்கு ஆஸ்சர்யத்தினாலும் ஸந்தோஷத்தினாலும்
மயிர்கூச்செரிதல் உண்டாவது இயற்கையாகையால், அது மாமுனிகளுக்கு உண்டாகின்றமை இதில் கூறப்பட்டது.
த்வயத்தையும் அதன் அர்த்தங்களையும் நினைத்தலே ப்ரபத்தியாகையால், அப்ரபத்தியை ஒருதடவை மட்டுமே அநுஷ்டிக்க வேண்டியிருத்தலால், இடைவிடாமல் அநுஷ்டித்தமை சொல்லப்படுதல் பொருந்தாதே என்று கேட்கவேண்டா.
மோக்ஷார்த்தமாகப் ப்ரபத்தியை அநுஷ்டித்தல் ஒருதடவையேயாகிலும், நற்போது போக்குவதற்காகவும்,
அநுபவித்து மகிழ்வதற்காகவும் இடைவிடாமல் அவ்வர்த்தத்தின் தத்துவங்களை நினைத்தல் கூடுமென்க.
முற் கூறிய படியேயன்றி ‘ததர்த்த தத்த்வ நித்யாநம்’ என்பதற்கு வேறுபடியாகவும் கருத்துக்கூறுவர்.
‘விஷ்ணு: ஸேஷீ ததீய: ஸுபகுணநிலயோ விக்ரஹ: ஸ்ரீஸடாரி:, ஸ்ரீமாந் ராமாநுஜார்ய பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம் |
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர தஸ்மாத், ஸேஷம் ஸ்ரீமத் குரூனாம் குல மிதமகிலம் தஸ்ய நாதஸ்ய ஸேஷ: ||
[விஷ்ணுவானவர் ஸேஷி (நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொண்டு உகக்கும் தலைவர்).
நற்குணங்களுக்கு இருப்பிடமாகிய அப்பெருமானுடைய திருமேனியே ஸ்ரீஸடாரி என்னும் நம்மாழ்வார்,
அவருடைய திருவடித்தாமரையிணையாக ஸ்ரீமத் ராமாநுஜாசார்யராகிய எம்பெருமானார் விளங்குகிறார்.
குரு: என்ற பதம் அவ்விராமாநுசரிடத்தில் நிறைபொருளுடையதாய் விளங்குகிறது.
வேறு யாரிடத்திலும் விளங்குவதில்லை. ஆகையால் அவ்விராமாநுசருக்கு முன்பும், பின்புமுள்ள மற்ற குருக்களுடைய ஸமூஹம் அனைத்தும் அவ்விராமாநுச முனிவருக்கு ஸேஷமானது.] என்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்தபடியே,
பகவத் ராமாநுஜாச்சார்யரே த்வயத்தில் உள்ள ‘ஸ்ரீமந்நாராயண்சரணௌ’ என்ற சரண்ஸப்தார்த்தம். அதுவே ததர்த்த தத்த்வம்.
அதாவது ஸ்ரீமந்நாராயணனுடைய – நாம் காண்கிற திருவடி ஸ்ரீமந்நாராயணனுடைய சரணங்களல்ல;
பின்னையோவெனில் பகவத் ராமாநுஜரே ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகள் என்பது த்வயமந்த்ரார்த்தத்தின் உண்மைநிலை என்றபடி.
யதீந்த்ரப்ரவணரான (பகவத் ராமாநுஜ பக்தராகிய) மணவாள மாமுனிகளுக்கு ராமாநுஜரென்னும்
ஸ்ரீமந் நாராயண சரணங்களை இடைவிடாமல் த்யானித்தலே முக்கியமாகையால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வத்தை விட
இந்த த்வயார்த்த தத்த்வமே இங்கு எறும்பியப்பாவால் அருளிச்செய்யப்பட்டதென்கை யுக்தமாகும்.
த்வயார்த்த தத்த்வ த்யானத்தினால் மயிர்க்கூர்ச்செறியபெற்ற தேவரீரையே இடைவிடாமல்
கண்ணாரக்காணக்கடவேன் (12ம் ஸ்லோகம்) என்கையால், ‘எம்பெருமானுடைய குணங்களாலே
ஆவேஸிக்கப்பட்டு எம்பெருமான் குணங்களையே த்யானித்து
அதனால் ஆனந்தக் கண்ணீருடனும் மயிர்க்கூச் செறியப்பெற்ற திருமேனியுடனும் விளங்கும் பக்தனானவன்
உடலெடுத்த அனைவராலும் எப்போதும் காணத்தக்கவனாகிறான்’ என்று விஷ்ணு தத்த்வ க்ரந்தத்தில் கூறியபடியே
மணவாளமாமுனிகளைக் கண்ணாரக்காண் எறும்பியப்பா ஆசைப்பட்டபடி இது. (9)
————
ஸ்மயமாநமுகாம்போஜம் தயமாநத்ருகஞ்சலம் |
மயி ப்ரஸாதப்ரவணம் மதுரோதாரபாஷணம் ||-10-
பதவுரை:-
ஸ்மயமாந முக அம்போஜம் – எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய திருமுகமாகிய தாமரைமலரையுடையவரும்,
தயமாந த்ருக் அஞ்சலம் – எப்போதும் கருணை பொங்கப்பெற்ற கடைக்கண்களையுடையவரும்,
மயி – இத்தனை நாள்கள் தம்திறத்தில் பாராமுகம் காட்டியிருந்த அடியேனிடத்தில்,
ப்ரஸாத ப்ரவணம் – அருள்புரிவதில் பற்றுடையவராய்,
மதுர உதார பாஷணம் – செவிக்கினியதாய் ஆழ்ந்த பொருள்களைக் கொண்ட வார்த்தைகளையுடையவருமாகிய….
கருத்துரை:-
அதரத்தில் குடிகொண்ட மந்தஹாஸத்தையும் அதனுடன் கூடிய கடைக்கண் பார்வையையும்
அவ்விரண்டோடு ஒற்றுமை கொண்ட அமுதமொழிகளையும் அம்மூன்றினாலும்
ஊகிக்கத்தக்க – அவர் தம்மிடம் புரியும் அநுக்ரஹத்தையும் வருணிக்கிறார்.
இது தன்னால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வ த்யாநத்தின் தொடர்ச்சியால் தமக்கு மோக்ஷலாபம் உண்டாகிவிட்டதாக நினைத்துத்
தமது விருப்பம் நிறைவேறிய ஸந்தோஷத்தினால் ஸதா மந்தஹாஸமுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.
அதுவேயன்றி இம்மந்தஹாஸத்தை – மேற்கூறப்படும் மதுரவார்த்தைக்கும் பூர்வாங்கமாகவும் கூறலாம்;
ஸந்தோஷத்தை புன்சிரிப்பினால் தெரிவித்துப் பின்பல்லவோ மஹான்கள் மதுரமாக பேசுவது.
இனி, தயையாவது பிறர் துன்பங்கண்டு இரங்குதல்.
‘நாம் இங்ஙனம் த்வயார்த்த தத்வத்யானத்தினால் அடையும் இன்பம் இவ்வுலகோர்க்குக் கிடைக்கவில்லையே,
ஐயோ இவர்கள் ஸம்ஸாரத்தில் உழல்கின்றார்களே’ என்று உலகோர் துன்பங்கண்டு மாமுனிகள் துன்பப்படுகிறாரென்க.
இதுவேயன்றி, மேற்கூறப்படுகின்ற மதுரபாஷணத்திற்கும் இத்தகைய காரணமாகலாம்;
தயையோடல்லவா ஆசார்யர்கள் ஸிஷ்யர்களோடு மதுரமாகப் பேசுவது.
இந்த ஸந்தோஷமும் தயையும் மிகவும் முக்யமான தருமங்களாகும்.
‘ஸத்யம் ஸுத்தி தயை மனங்கலங்காமை பொறுமை ஸந்தோஷம் இவை அனைவர்க்கும் அவசியமாக இருக்க வேண்டிய தருமங்கள்’ என்றுள்ள பரத்வாஜ பரிசிஷ்ட வசநம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.
‘மயி ப்ரஸாத ப்ரவணம்’ என்பதற்கு – ‘அடியேனுக்கு அருள் செய்வதில் பற்றுடையவர்’ என்று முற்கூறிய பொருளேயன்றி,
‘அடியேன் முன்பு பராமுகமாக இருந்ததனால் உண்டான மனக்கலக்கம் நீங்கப்பெற்று,
அதற்கு நேர் முரணாக மனம் தெளிந்திருக்குமிருப்பில் பற்றுடையவராயினர் என்ற பொருளும் கூறலாகும்.
மதுரமாகவும், அர்த்தகாம்பீரியமுடையதாகவும் பேச வேண்டும்.
‘மதுரமான – செவிக்கினிய வார்த்தையைப் பேச வேண்டும்’ என்று மேதாதிதியும்,
‘ஆழ்ந்த பொருளோடு கூடிய பேச்சுக்களையே பேச வேண்டும்’ என்று சாண்டில்யரும் கூறியது காண்க.
இங்கே பேச்சுக்கு ஆழ்ந்த பொருளுடைமையாவது – எந்த வார்த்தை பேசினாலும் முற்கூறிய த்வயத்தின்
ஆழ்ந்த கருத்திலேயே நோக்குடைமையாகும். (10)
————-
ஆத்மலாபாத் ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யந்நாஸ்தீதி நிஸ்சயாத் |
அங்கீகர்த்துமிவ ப்ராப்தம் அகிஞ்சநமிமம் ஜநம் ||-11-
பதவுரை:-
ஆத்மலாபாத் – பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவைத் தன்தொண்டனாக ஆக்கி அவனைப் பெறுவதைவிட,
அந்யத் கிஞ்சித் – வேறான எதுவும்,
பரம் நாஸ்தி – உயர்ந்த லாபம் இல்லை,
இதிநிஸ்சயாத் – என்கிற திடமான எண்ணத்தினால்,
அகிஞ்சநம் – ஏற்றுக்கொள்வதற்குக் காரணமான நற்குணம் சிறிதுமில்லாதவனாய்,
இமம் ஜநம் – (அதற்கு நேர்மாறாக, நீக்குவதற்குக் காரணமாகிய தீய குணங்கள் அனைத்தும் நிறையப்பெற்ற) இந்த மனிதனை (அடியேனை),
அங்கீகர்த்தும் – (திருத்தித் திருமகள்கேள்வனுக்குத் தொண்டனாக்குவதற்காக) ஏற்றுக்கொள்வதற்கென்று,
ப்ராப்தமிவ – (அடியேன் எதிர்பாராமலிருக்கவும்) அடியேனேதிரில் எழுந்தருளுமாப்போலே இருக்கிற….
கருத்துரை:-
முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட மந்தஹாஸம், கருணை பொங்கிய கண்ணிணை, மதுரமான வார்த்தை ஆகியவற்றால் அடியேன் ஊகிக்கிறேன் – அடியேனுக்கருள் செய்வதற்காகவே அடியேன் வரும் ஸமயத்தை நிஸ்சயித்து அடியேன் கோவிலுக்குச் செல்லும்போது எழுந்தருளினார்;
அவருடன் அடியேனுக்கு நேர்ந்த சேர்த்தி தானாகவே நேர்ந்ததன்று – என்பதாக – என்று கூறுகிறார் இதனால்.
ஜந – பிறந்தவன், அகிஞ்சந – குணமில்லாதவன், இமம் – (அயம்) (ஸ்வரத்தைக் கொண்டு பொருள் கொள்க) – குற்றமனைத்துக்கும் கொள்கலமானவன்.
இவற்றால் – உலகத்தில் பூமிபாரமாகவும் உண்டிக்கும் கேடாகவும் பிறந்தது மட்டுமேயன்றி பிறப்புக்குப் பயனாகக் குற்றம் நீக்குதலும் குணம் பெருக்குதலுமின்றிக் கெட்டுப்போனவன் அடியேன் என்று தம்மை இகழ்ந்தார் எறும்பியப்பா என்க.
இத்தகையவனையும் விடாமல் காக்கவந்த மாமுனிகளின் மஹக்ருபை என்னே என்று வியக்கிறார் இதனால்.
ப்ராப்தமிவ – இங்கு ‘இவ’ என்பது உவமையைக் குறிப்பதன்று – ஊகையைக் குறிப்பதாகும்.
ஊகை – (உத்ப்ரேக்ஷை) – கருத்துரையில் கூறப்பட்டது.(11)
——————
பவந்தமேவ நீரந்த்ரம் பஸ்யந் வஸ்யேந சேதஸா |
முநே வரவர ஸ்வாமிந் முஹுஸ்த்வாமேவ கீர்த்தயந் || 12
த்வதந்யவிஷயஸ்பர்ஸவிமுகைரகிலேந்த்ரியை: |
பவேயம் பவது:க்காநாம் அஸஹ்யாநாமநாஸ்பதம் || 13
பதவுரை:-
ஸ்வாமிந் வரவர – தேவரீருடைய ஸொத்தான அடியேனிடத்தில், தாமே அபிமாநம் செலுத்தும் ஸ்வாமித்வத்தையுடைய மணவாளமாமுனிகளே!
முநே – அடியேனை ஏற்றுக்கொள்ளத்தக்க உபாயத்தை மனனம் செய்யும் மஹாநுபாவரே!
பவந்தமேவ – திருமேனியழகு நீர்மை எளிமை முதலிய குணங்களால் பூர்ணரான தேவரீரையே,
நீரந்த்ரம் – இடைவிடாமல்,
பஸ்யந் – கண்டுகொண்டும்,
வஸ்யேந் சேதஸா – (தேவரீரின்னருளால் அடியேனுக்கு) வசப்பட்ட மநஸ்ஸுடன்,
த்வாமேவ – ஸ்தோத்ரம் செய்யத்தக்க தேவரீரையே,
முஹூ – அடிக்கடி,
கீர்த்தயந் – ஸ்தோத்ரம் செய்துகொண்டும், (அஹம் – அடியேன்) (12)
த்வத் அந்ய விஷய ஸ்பர்ஸ விமுகை – தேவரீரைவிட வேறாகிய ஸப்தாதி விஷயங்களைத் தொடுவதில் பராமுகமான (பகைமைபூண்ட),
அகில இந்த்ரியை – கண், மூக்கு முதலிய ஜ்ஞாநேந்த்ரியங்களென்ன, வாக்கு முதலான கருமேந்த்ரியங்களென்ன, இவற்றாலே
அஸஹ்யாநாம் – பொறுக்கமுடியாத,
பவது:க்காநாம் – பிறவியினாலுண்டாகும் து:க்கங்களுக்கு,
அநாஸ்பதம் – இருப்பிடமாகாதவனாக, பவேயம் – ஆகக்கடவேன். (13)
கருத்துரை:-
ஆசார்யனை இடைவிடாமல் கண்ணால் ஸேவித்துக்கொண்டும் வாயால் துதிசெய்து கொண்டும்
மற்றுமுள்ள இந்த்ரியங்களுக்கும் ஆசார்யனையே விஷயமாக்கிக் கொண்டுமிருப்பதனால்
தாம் மோக்ஷத்திற்கே தகுதிபெற்று,
இதுவரையில் இந்த்ரியங்களனைத்தும் உலகிலுள்ள ஸப்தாதி நீசவிஷயங்களையே இலக்காகிக் கொண்டிருந்ததனால்
தமக்கு ஏற்பட்டிருந்த ஸம்ஸாரது:க்கம் இனி மேல் நேராதிருக்க வேணுமென்று மாமுனிகளை ப்ரார்த்திக்கிறார் இவற்றால்.
இங்கு பஸ்யந் கீர்த்தயந் என்ற இரண்டிடங்களிலும் உள்ள ஸத்ரு ப்ரத்யயம் காரணப் பொருளதாகையால்,
காண்பதனாலும் துதிப்பதனாலும் – என்று முறையே பொருள் கொள்க.
இவற்றிற்கு அடுத்த ஸ்லோகத்திலுள்ள ‘பவது:க்காநாம் அநாஸ்பதம் பவேயம்’ என்பதனோடு அந்வயம்.
பவேயம் – என்றதில் லோட்ப்ரத்யயத்திற்கு ப்ரார்த்தனை பொருளாகையால்,
தேவரீரையே கண்டுகொண்டிருப்பதனாலும், ஸ்தோத்ரம் செய்து கொண்டிருப்பதனாலும்
மற்ற ஸப்தாதி விஷயங்களை விட்டு தேவரீரையே இலக்காகப் பெற்ற மற்றுமுள்ள எல்லா இந்த்ரியங்களையும் உடையேனாகையாலும்
மோக்ஷம் பெறுவதற்கே உரியேனாகி – அடியேன் ஸம்ஸார து:க்கங்களுக்கு ஒருநாளும் ஆளாகாதபடி
தேவரீர் க்ருபை செய்யவேணுமென்று ப்ரார்த்தித்தபடி இது.
ஆசார்யனைக் காண்பதனாலும், துதிப்பதனாலும் எம்பெருமான் திருவுள்ளத்தில் ப்ரீதியுண்டாய்,
அதனால் ஸிஷ்யன் மோக்ஷம் பெறுகிறானாகையாலே, ஸிஷ்யன் ஸம்ஸார து:க்கத்திற்கு ஆளாகாமலிருப்பதற்கு
ஆசார்ய தரிசனமும் ஆசாரிய ஸ்தோத்ரமும் பரம்பரயா காரணமென்று கொள்ளத்தக்கது.
தம்முடைய எல்லா இந்த்ரியங்களுக்கும் மற்ற ஸப்தாதி விஷயங்களில் பராங்முகத்வம் (பகைமை பூணுதல்) கூறப்பட்டது கொண்டு,
அவற்றுக்கு மணவாளமாமுனிகளையே இலக்காகவுடைமையை (ப்ரார்த்திப்பதாக) ஊகித்தறிதல் தகும்;
இந்த்ரியங்கள் குர்வத்ரூபங்கள் (ஏதாவது தமக்குத் தக்கதொரு வேலையைச் செய்து கொண்டேயிருக்குந் தன்மையுடையவைகள்)
ஆகையால் ஸப்தாதி விஷயங்களில் பராமுகமான இந்த்ரியங்களுக்கு மணவாளமாமுனிகளையே விஷயமாக (இலக்காக)வுடைமை
அவசியமாகையால் இந்த்ரியங்கள் ஏதாவதொரு விஷயத்தைப் பற்றாமல் வெறுமனே இராவன்றோ?
ஆக – இவ்விரண்டாலும், மாமுனிகளே! அடியேனுடைய எல்லாவிந்த்ரியங்களும் தேவரீரையே இலக்காகக் கொண்டு
அடியேன் மோக்ஷத்திற்குத் தகுதி பெற வேண்டும். நீசமான ஸப்தாதிகளை விஷயமாகக் கொள்ளாமையினால்
பிறவித் துன்பத்திற்கு ஆளாகாமலிருக்க வேண்டும். இங்ஙனமிருக்கும்படி தேவரீர் அருள்புரிய வேணுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று.
கண், காது, கை, கால் முதலிய ஜ்ஞாநேந்த்ரிய கர்மேந்த்ரியங்களனைத்தையும் பகவத் பாகவதாசார்ய கைங்கர்யங்களிலேயே உபயோகிக்க வேண்டும். லௌகீக நீச விஷயங்களில் செலுத்தக்கூடாதென்பது சாண்டில்யஸ்ம்ருதி, பரத்வாஜ பரிசிஷ்டம் முதலிய தர்மசாஸ்த்ர க்ரந்தங்களில் பரக்கக்கூறப்பட்டுள்ளது. விரிப்பிற்பெருகுமென்று விடப்பட்டது.
இதுவரையில் இந்த வரவரமுநிதிநசர்யை என்னும் நூலுக்கு உபோத்காதமாகும். உபோத்காதம் = முன்னுரை.
இதுதன்னில் மேலே சொல்லப்போகிற ஐந்து காலங்களில் செய்ய வேண்டிய
அபிகமநம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் என்ற ஐந்து அம்ஸங்களில் – இஜ்யை தவிர்ந்த
மற்ற நான்கும் குறிப்பாகக் காட்டப்பட்டுள்ளன.
அபிகமநமாவது எம்பெருமானை ஸேவிப்பதற்காக எதிர்கொண்டு செல்வது.
இது ‘பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தம்’ (2) என்று ஜகத்பதியான அழகியமணவாளனை ஸேவிக்கக் கோயிலுக்கு மாமுநிகள் செல்லுவது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.
உபாதாநமாவது – எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தல்.
இது ‘ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யத் நாஸ்தீதி நிஸ்சயாத் – இமம் ஜநம் அங்கீகர்த்துமிவ ப்ராப்தம்’ (11) என்று
பரமாத்மாவுக்கு – ஜீவாத்மாவைத் தொண்டனாக்கி அவனைப்பெறுதலே ப்ரயோஜநமென்று அறுதியிட்டு,
அதற்காக மாமுநிகள் தம்மை ஏற்றுக்கொள்வதற்கு எழுந்தருளல் கூறப்பட்டதனால்,
மாமுனிகள் எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய எறும்பியப்பாவை ஸ்வீகரிப்பதாகிற உபாதாநம் ஸூசிப்பிக்கப்பட்டது.
ஸ்வாத்யாயமாவது – வேத மந்த்ரங்களை ஒதுதல்.
இது ‘மந்த்ரரத்நாநுஸந்தாந ஸந்தத ஸ்புரிதாதரம்’ (9) என்று – வேத மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை
மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் சிறிதசைகிற அதரத்தையுடைமை கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.
யோகமென்பது பகவத் விஷயத்தைப் பற்றிய த்யானமாகும்.
இது ‘ததர்த்த தத்வ நித்யாந ஸந்நத்த புலகோத்கமம்’ (9) என்று அந்த த்வயமந்திரத்தின் உண்மைப் பொருளாகிய
பிராட்டி பெருமாள் முதலிய பொருளையாவது, பகவத் ராமாநுஜமுநிகளையாவது த்யானம் செய்வது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.
இங்ஙனம் முற்கூறிய ஐந்தில் நான்கு அம்ஸங்கள் குறிக்கப்பட்டனவாகக் கொள்க.
ஆக, இவ்வுபோத்காதம் மேலுள்ள நூலுக்குச் சுருக்கமாக அமைந்ததென்க. ‘
எம்பெருமானை எதிர்கொண்டும் எம்பெருமானை ஆராதிப்பதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்தும்,
ஆராதனம் செய்தும், வேத மந்த்ராத்யயனம் செய்தும், வேத மந்த்ரார்த்தத்தை த்யானம் செய்தும்
இப்படிப்பட்ட ஐந்து அம்ஸங்களினால் போதை நற்போதாகப் போக்கவேண்டும்’ என்று பரத்வாஜ முனிவர் பணித்தது காணத்தக்கது.
பூர்வ தினசர்யையின் முன்னுரைப் பகுதி நிறைவு பெற்றது.
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply