Archive for the ‘Aandaal’ Category

ஸ்ரீ திருப்பாவை–குத்து விளக்கெரிய– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 3, 2021

கீழ்ப்பாட்டால் நப்பின்னைப் பிராட்டியை உணர்த்திச்
“சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்” என வேண்டினவாறே அவள் கதவைத் திறப்போமென்று எழுந்து புறப்பட,

அதனைக் கண்ட கண்ணபிரான், “நம்மைப் பற்றினாரை இவள் தன் அடியாராக அபிமானிப்பது போல,
நாமும் இவளைப் பற்றினாரை நம்மடியாராக அபிமானிக்க வன்றோ அடுப்பது’
ஆன பின்பு நம்முடையாரான இவ்வாய்ச்சிகட்கு இவள் முற்பட்டுக் காரியஞ் வெய்தாளாக்கூடாது’
இவளை நோக்கிக் ‘கடை திறவாய்’ என்ற இவர்கட்கு நாம் முற்பட்டுக் காரியஞ்செய்தோமாக வேணும்’
அதனால் வரும் புகழச்சியை நாம் பெறவேணும்” எனக் கருதித் தான் சடக்கென எழுந்து நப்பின்னையைக் கதவு
திறக்கவொட்டாமல் மற்கட்டாகக் கட்டிப் பிடித்திழுத்துப் படுக்கையில் தள்ளித் தானும் அவள் மேல் விழுந்து,
அவளுடைய திருமேனியின் ஸ்பர்சத்தினால் தானும் மயங்கி, ஆய்ச்சிகள் வந்த காரியத்தையும் மறந்து கிடக்க,

இவர்கள் அவனை எழுப்பின வளவில்,
நப்பின்னை, ‘நம்முயற்சியைத் தடை செய்து ஆய்ச்சிகளின் வெறுப்புக்கு நம்மை உறுப்பாக்கின இவனை
வாய்திறக்க வொட்டுவதில்லை’ என்று அவனை விடை சொல்லவும் வல்லமை யறும்படி சிக்கனக் கட்டிக்கொண்டு கிடக்க,

இங்ஙன் மீண்டும் இவளை உணர்த்துவதும்
கண்ண பிரானை உணர்த்துதற்காகவே என்க–

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

பதவுரை

குத்து விளக்கு–நிலை விளக்குளானவை
எரிய–(நாற்புரமும்) எரியா நிற்க,
கோடு கால் கட்டில் மேல்–யானைத் தந்தங்களினாற் செய்த கால்களை யுடைய கட்டிலிலே
மெத்தென்ற–மெத்தென்றிருக்குமதாயும்
பஞ்ச சயனத்தின் மேல் ஏறி–(அழகு, குளிர்த்தி மென்மை, பரிமளம், வெண்மை என்னும்)
ஐந்து குணங்களையுடைய துமான படுக்கையின் மீதேறி
கொத்து அலர் பூ குழல்–கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான
நப்பின்னை–நப்பின்னைப் பிராட்டியினுடைய
கொங்கை–திருமுலைத் தடங்களை
மேல் வைத்து–தன் மேல் வைத்துக் கொண்டு
கிடந்த–பள்ளி கொள்கின்ற
மலர் மார்பா–அகன்ற திருமார்பை யுடைய பிரானே!
வாய் திறவாய்–வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்
மை தட கண்ணினாய்–மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணை யுடைய நப்பினாய்!
நீ–நீ
உன் மணாளனை–உனக்குக் கணவனான கண்ண பிரானை
எத்தனை போதும்–ஒரு நொடிப் பொழுதும்
துயில் எழ ஒட்டாய்–படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒட்டுகிறாயில்லை;’
எத்தனையேலும்–க்ஷண காலமும்
பிரிவு ஆற்ற கில்லாய்–(அவளைப்) பிரிந்து தரித்திருக்க மாட்டுகிறாயில்லை;’
ஆல்–ஆ! ஆ!!.
தகவு அன்று–நீ இப்படி இருப்பது உனக்குத்) தகுதியானது’
தத்துவம்–(இஃது) உண்மை’
ஏல் ஓர் எம் பாவாய்

முதலடியில் முந்துறமுன்னம் “குத்து விளக்கெரிய” என்றது-
நம்மைப் போல் ‘பொழுது விடியிற் செய்வதென்? என்று அஞ்சாமலும்,
இருளைத் தேட வேண்டாமலும் விளக்கினொளியிற் கிடந்து கிருஷ்ணன் முகத்தைக் கண்டு களிக்கப் பெறுகின்ற
இந் நப்பின்னை என்ன நோன்பு நோற்றாள் கொலோ?’ என்னும் வியப்பை விளக்குமென்க.

குத்து விளக்கு –
இஷ்டமான இடங்களில் பேர்த்து வைப்பதற்கு உரிய விளக்கு “கோட்டுக்கால் கட்டில் ” என்றதும் –
‘எங்களைப் போலே நெரிஞ்சிற்காடும் மணற் கொட்டகமுந்தேடி ஓட வேண்டாமல், இவள் ஒருத்தி மாத்திரம்
வாய்த்த படுக்கையில் சுகமாகக் கிடக்கப் பெறுவதே! என்னும் நினைவு நிகழ்வதைக் காட்டும்.

நந்தகோபன் உந்துமதகளிற்றனாகக் கூறப்பட்டனனாதலால்
அவனது மாளிகையிற் கோட்டுக்கால் கட்டில் இருக்கத் தட்டில்லையே.

பஞ்சசயனம் – அழகு குளிர்த்தி, மென்மை, பரிமளம், வெண்மை என்கிற ஐங்குணங்களின் அமைப்பு-
சிறந்த சயநத்தின் இலக்கணமாதல் அறிக.

இவ்வைங்குணங்களுள் மென்மையுஞ் சேர்ந்திருக்க, மெத்தன்ன என்று தனியே கூறியது
மற்ற குணங்களிலும் மென்னை படுக்கைக்கு விசேஷ குணமாதாலும், அது இப்படுக்கை யில மிக்கியிருப்பதனாலுமென்க.

இனி, “பஞ்சசயன” மென்பதற்கு, துளிர், மலர், பஞ்சு, மெல்லிய கம்பளம், பட்டு என்னும்
இவ்வைந்து வஸ்துக்களினால் செய்யப்பட்ட சயனமென்றும் பொருள் கூறுவர் சிலர்.

கொத்தமலர்பூங்குழல் நப்பின்னை –
இதனால் அவளுடைய குழலின் சீர்மை கூறிய வாறு’ மொக்குகளைப் பறித்துக் குழலிலே சூடினால்
அவை தன்னிலத்திற்போலே அலரப்பெற்ற கூந்தலையுடைய நப்பின்னை என்றபடி

“கொங்கை மேல் மார்பை வைத்துக் கிடக்கின்றவனே! என்றும்,
நப்பின்னையின் கொங்கையைத் தன் மார்பின்மீது வைத்துக் கொண்டு கிடப்பவனே! என்றும்
இரு வகையாகப் பொருள் தோன்றும். இவற்றுள் முந்திய பொருள் அவதாரிகைக்கு நன்கு பொருந்தும்;
நப்பின்னையைக் கீழே தள்ளி, அவள்மேல் கண்ண பிரான் பள்ளி கொண்டவாராக வன்றோ அவதாரிகை வைக்கப்பட்டது.

“மலர் மார்பா! எழுந்து வாராய்” என்னாது,
“வாய் திறவாய்” என்றது-குணமும் குணியும் போலே ஒரு பொருள் என்னலாம்படி
கிடக்கிறவர்களைப் பிரிக்கலாகாது என்னும் நினைவாலும்.
இவன் கிடந்த விடத்திற்கிடந்தே முகிலினது முழக்கம் போன்ற மிடற்றோசை செவிப்படுமாறு
ஒரு பேச்சுப் பேசுவது நமக்குப் போருமென்னும் நினைவாலுமென்க.

“மலர் மார்பா! வாய் திறவாய்” என்ற சொல்லமைதியால்,
நீ உன் மார்பை நப்பின்னைக்குத் தந்தாயேலும் வாயையாகிலும் எங்களுக்குத் தரலாகாதா? என் இரக்கின்றமை தோற்றுமென்ப.

இப்படி இவர்கள், “வாய் திறவாய்” என்றதைக் கேட்டருளின, கண்ணபிரான்,
“இவ்வாய்ச்சிகள் மிகவும் நொந்தனர் போலும், இங்ஙனம் இவர்களை வருத்த முறுத்துவது தருமமன்று’
‘இதோ வந்து கதவைத் திறக்கின்றேன்’ என்று ஒரு வார்த்தை சொல்லுவோம்” என்று
திருவுள்ளமிரங்கி வாயைத் திறக்கப் புக்கவாறே

நப்பின்னை, “அவர்களுக்காகக் கதவைத் திறக்க எழுந்துசென்ற நம்முடைய முயற்சியைத் தடுத்த
இவன்றனது முயற்சியை நாம் நிறைவேற வொட்டுவோமோ?” என்றெண்ணி
கண்ணன் வாய்திறக்க வொண்ணாதபடி கழுத்தைக் கட்டி அமுக்கிக் கொண்டு கிடக்க,

அதனைச் சாலக வாசலாலே கண்ட ஆய்ச்சிகள் நப்பின்னையை நோக்கி,
“ஆஸ்ரிதர் காரியத்தைத் தலைக் கட்டுவிப்பதற் கென்றே கங்கணமிட்ட நீயும் இங்ஙன் செய்வது
தகுதியன்று காண்” என்கிறார்கள், பின் நான்கடிகளால்.

தத்துவம் அன்று தகவு என்பதற்கு இருவகையாகப் பொருள் கூறுவர், எங்ஙனே யெனில்?
தத்துவம்-
நாங்கள் இவ்வளவாகச் சொன்ன வார்த்தை, ஆற்றாமையாலே கண்ணாஞ் சுழலையிட்டுச் சொன்னதன்று’
உண்மையே சொன்னோ மத்தனை காண்’
அன்று தகவு –
எங்கள் பக்கலிலும் நீ இங்ஙன் உபேக்ஷை தோற்றுவிருப்பது தருமமன்று, என்பது ஒருவகை யோஜனை.

தகவு தத்துவம் அன்று என இயைத்து,
உனக்கு நீர்மை உண்டென்பது உண்மையன்று, என்று மற்றோர் வகை யோஜனை.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை–உந்து மதகளிற்றன்– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 3, 2021

கன்னிகை யின்றிக் கண்ணாலங் கோடிப்பது போல்,
ப்ரதான பூதையான நப்பின்னைப் பிராட்டியைப் பற்றாமல்,
வழிப் போக்கர்களோடொந்த வாசற் காப்பானையும் நந்த கோபனையும் பலதேவனையும்
பற்றுவதனால் பயன் யாது கொல்?”
என்று கண்ணபிரான் திருவுள்ளத்திற் கொண்டுளதை நினைத்த இவ் வாயர்ப் பெண்டிர்
நப்பின்னைப் பிராட்டியை உணர்த்தும் பாசுரம், இது–

உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

உந்து மத களிற்றன்–(தன்னால் வென்று) தள்ளப்படுகின்ற மத யானைகளை யுடையவனும்
தோள் வலியன்–புஜ பலத்தை யுடையவனுமான
நந்தகோபாலன்–நந்த கோபானுக்கு
மருமகளே–மருமகளானவளே!
நப்பின்னாய்–ஓ! நப்பின்னைப் பிராட்டியே!
கந்தம் கமழும் குழலீ–பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலுடையவளே
கடை திறவாய்–தாழ்ப்பாளைத் திறந்திடு’
கோழி–கோழிகளானவை
எங்கும் வந்து-எல்லா விடங்களிலும் பரவி
அழைத்தன காண்–கூவா நின்றனகாண்’ (அன்றியும்),
மாதவி பந்தல் மேல்–குருக்கத்திக் கொடிகளாலாகிய பந்தலின் மேல் (உறங்குகிற)
குயில் இனங்கள்–குயிற் கூட்டங்கள்
பல்கால்-பல தடவை
கூவின காண்-கூவா நின்றன காண்’
ஓடாத–போர்க் களத்தில் முதுகு காட்டி) ஓடாத
பந்து ஆர்விரலி –பந்து பொருந்திய விரலை யுடையவளே!
(க்ருஷ்ணனோடு விளையாடு கைக்கு உபகரணமான) பந்து
உன் மைத்துனன் பேர் பாட-உனது கணவனான கண்ண பிரானுடைய திரு நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக
சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து–சீர்மை பொருந்திய (உன்) கை வளைகள் ஒலிக்கும் படி (நடந்து) வந்து
செந்தாமரை கையால்–செந்தாமரைப் பூப் போன்ற (உன்) கையினால்
மகிழ்ந்து திறவாய்-(எங்கள் மீது) மகிழ்ச்சி கொண்டு (தாழ்ப்பாளைத், திறந்திடு’
ஏல் ஓர் எம் பாவாய்

எம்பெருமானைப் பற்றுவார்க்கு ஒரு புருஷகாராபேக்ஷ உள்ளவாறு போலப்
பிராட்டியைப் பற்றுவார்க்கும் ஒரு புருஷகாரம் அபேக்ஷிதமாக வேண்டாவோ? என்னில்’ வேண்டா’
அவளுடைய கருணை தானே அவளைப் பற்றுகைக்குப் புருஷகாரமாக வற்றாம்
’ நெருப்பை ஆற்றுகைக்கு நீர் வேண்டும்’ நீரை ஆற்றுகைக்கு நீரே போதுமன்றோ.

எம்பெருமானைப் பற்றும் போது பிராட்டி முன்னாகப் பற்ற வேணுமென்று பிரமாணங்கிடக்க,
இப்போது இவர்கள் நப்பின்னையைப் பற்றுவதென்? எனில்’
க்ருஷ்ணாவதாரத்திற்கு இவள் ப்ரதாந மஹிஷியாதலால் இவளைப் பற்றுகின்றனரென்க.

(உந்து மத களிற்றன் இத்தியாதி)
கண்ண பிரானைச் சொல்லும் போது “நந்தகோபன் குமரன்” என்று
நந்தகோபருடைய ஸம்பந்தத்தை யிட்டுச் சொல்வது போல,
நப்பின்னையும் நந்தகோபர் ஸம்பந்தத்தை யிட்டுக் கூறுகின்றனர்,
அவருடைய ஸம்பந்தம் இவளுகப் புக்கு உறுப்பாயிருத்தலால்.

“உந்து மத களிற்றன்” என்பதற்கு
மதயானைகளை உந்துமவன்-நொறுக்கித் தள்ளுமவன்,
உந்துகின்ற (பெருக்குகின்ற) மத நீரையுடைய களிறு போன்றவன், (அல்லது)
களிறுகளை யுடையவன் எனப்பொருள்கள் காண்க.

“ஓடாத தோள் வலியன்” என்பதற்கு
போர்க்களத்திற் பகைவரைக் கண்டு அஞ்சி ஓடாத மிடுக்கன் என்றும்,
நாட்டில் நடையாடாத (லோக விலக்ஷணமான) தோள் வலியை யுடையவன் என்றும் பொருள் கொள்க.

இங்ஙன் சிறப்பித்துக் கூறுகைக் கீடான வலியின் கனம் இவர் பக்கல் இருக்கவே யன்றோ
கண்ணனிடத்துக் கறுக்கொண்ட கஞ்சன் தான் நேரில் வந்து தீங்கு செய்ய மாட்டாமல்,
பூதயனை ஏவுவது சகடாசுரனை ஏவுவதாய் இப்படி களவிலே நலியப் பார்த்தது.
அக்கஞ்சன் மாளிகையின் கீழ் பிள்ளைகளை வளர்த்த நந்தகோபர்க்கு இவ்வளவு வலி இன்றிமையாததாம்.

நித்ய ஸம்ஸாரியாயிருப்பவன் தனது அநீதிகளை நினைத்து அஞ்சினால்
எம்பெருமானுடைய குணங்களை அநுஸந்தித்து அச்சங்கெடுவது போல,
கண்ணபிரான் செய்யுந் தீமைகளை நினைத்து அஞ்சுமாய்ச்சிகள் நந்தகோபருடைய தோள் வலியை நினைத்து அச்சங் கெடுவராம்.

இங்ஙனம் பெரு மிடுக்கைப் பெற்றுள்ள இவர் அஹங்கார லேசமுற்றவராய்,
தாழ்ந்தார்க்கும் பரம ஸுலபராயிருக்குந் தன்மையைத் தெரிவிக்கும் ‘நந்தகோபாலன், என்று இவர் படைத்த பெயர்.
நப்பின்னை கும்பர் மகளாயிருக்க, அவளைக் “கும்பர் மகளே!” என்று விளியாது “நந்தகோபலன் மருமகளே!” என
விளித்தற்குக் கருத்து யாதெனில்’ நப்பின்னை இளமையே தொடங்கி இங்கே வளருகையாலும்,
தனது தந்தையரை மறந்திட்டதனாலும்,

“இராமழை பெய்த வீர வீரத்துள் பனை நுகங்கொண்டு யானையோ;
பூட்டி வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும் வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே,
செங்கேழ்வரகுப் பசுங்கதிர் கொய்து கன்று காத்துக் குன்றிலுணக்கி ஊடு பதர் போக்கி
முன்னுதவினோர்க்குதவிக் காடுகழியிந்தனம் பாடுபார்த் தெடுத்துக் குப்பைக்கீரை உப்பின்று
வெந்ததை இரவற்றாலம் பரிவுடன் வாங்கிச் சோறது கொண்டு பீறலடைத்த ஒன்று
விட்டொருநாள் தின்று கிடப்பினும் நன்றே தோழி! நங்கணவன் வாழ்வே.”என்றபடி
புத்தகத்தில் வாழ்வையே பெருக்க மதித்து
ஸ்ரீ நந்தகோபருடைய ஸம்பந்தத்தைத் தனக்குப் பெறாப் பேறாக
நினைத்திருப்பதனாலும் இங்ஙன் விளிக்கப்பட்டனள் எனக் கொள்க.

இவர்கள் இங்ஙன் அழைக்கையிலும், அவள் “கண்ணன் பிறந்த பின்னர் நந்தகோபர்க்கு மருமகளாகாதவள்
திருவாய்ப்பாடியில் எவள்? இப்போது இவர்கள் அழைப்பது நம்மைத் தானென்றறிவது எங்ஙனம்?”
என நினைத்துப் பேசாதே கிடந்தாள்’ இதனை அறிந்த அவர்கள் ‘நப்பின்னாய்!’ எனப் பேர் கூறி அழைக்கின்றனர்.

நந்தகோபலனுக்கு மருமக்கள் பலர் கிடப்பினும் அவர்களைக் கொண்டு எமக்குப் பணியென்?
உன்றன் காலில் விழுமவர்கள் காண் நாங்கள் என்பது உட்கருத்து.

இங்ஙனம் ஆய்ச்சிகள் விளிக்க, அதனைக் கேட்ட நப்பின்னை
“க்ருஷ்ணாநுபவம் நானொருத்தியே பண்ணுகிறேனென்றும், க்ருஷ்ணனோடே நாமும் கலவி செய்யுமாறு
இவள் கருணை புரிந்திலன் என்றும் இவ்வாய்ச்சிகட்கு நம்மேற் சிறிது சீற்றமிருக்குக் கூடுமாதலால்,
இப்போது இவர்களுக்கு மறுமொழி கூறாதிருப்போம்” என்றெண்ணி மீண்டும் பேசாதே கிடக்க’
“கந்தங் கமழுங் குழலீ!” என்கிறார்கள்’

நீ உள்ளே கிடக்கவில்லை என்று தோற்றுமாறு சலஞ் செய்தியேலும் உன்னுடைய குழலின் பரிமளம்
உன் இருப்பைக் கோட் சொல்லித் தாரா நின்றதே! எங்கள் கூக்குரலுக்கு நீ மறுமொழி தந்திலையாகிலும்
உன் குழலின் கந்தம் கடுகவந்து மறுமொழி தாராநின்றதே! என்கிறார்களெனக்கொள்க.
கந்தம் – வடசொற்றிரிபு.

இவர்கள் இங்ஙனம் கூறுவதைக் கேட்ட நப்பின்னை “மலரிட்டு நாம் முடியோம்;’ என்று முதலில் பண்ணின
ப்ரதிஜ்ஞையை நாம் மீறிக் கிடக்கும்படியை இவர்களுணர்ந்தனர் போலும்” என்று அஞ்சி மீண்டும் பேசாதே கிடக்க,
“கடை திறவாய்” என்கிறார்கள்.

அனைவருமாகத் திரண்டு பண்ணின ப்ரதிஜ்ஞையை அதிலங்கநஞ் செய்து நீ பூ முடித்தாற்போல
நாங்களும் எங்கள் சென்னிப் பூவை (கண்ணனை) அணிந்து கொள்ளும்படி கதவைத் திறந்து விடாய் என்றபடி,
அப்பரிமள வெள்ளம் வெளிப் புறப்படுமாறு கதவைத் திறந்து விடாய் என்றபடியுமாம்.

இதனைக் கேட்ட நப்பின்னை ‘இங்ஙன் நடுநிசியில் வந்தெழுப்புவதென்?
பொழுது விடிய வேண்டாவோ கதவைத் திறக்கைக்கு? என்ன’
இவர்கள் ‘பொழுது விடிந்தொழிந்து என்ன’ அவள் ‘விடிந்தமைக்கு அடையாளங் கூறுமின்’ என்ன’
இவர்கள் கோழியழைத்தமையை அடையாளமாகக் கூறுகின்றனர்.

இங்ஙனங் கோழி கூவினதைப் பொழுது விடிவுக்கு அடையாளமாகக் கூறியதைக் கேட்ட நப்பின்னை,
சாமக்கோழிகளின் கூவுதல் பொழுது விடிவுக்கு அடையாளம் ஆகாது ’ அவை சற்றுப்போது கூவிப்பின்னை உறங்கும்’
இங்ஙன் அவை சாமந்தோறுங் கிளர்ந்தடங்கும்’ இனி வேறடையாள முண்டாகிற கூறுமின்” என்ன’
குருக்கத்திப் பந்தலின்மேற் கிடந்துறங்கின குயிலினங்கள் பல்கால் கூவினமையை அடையாளமாகக் கூறுகின்றனர்’

“வந்தெங்குங் கோழியழைத்தனகாண்” என்றாற் போலப் “பலகால் குயிலினங்கள் கூவினகாண்” என்றாற் போதுமே,
“மாதவிப்பந்தல் மேல்” எனக் கூறியதற்குக் கருத்து யாதெனில்’
படுக்கையின் வாய்ப்பாலே அவை பொழுது விடிந்தமையையு முணராமல் உறங்க வேண்டியிருக்க,
உணர்ந்தெழுந்தன வென்றால், பொழுது நன்றாக விடிந்ததாக வேண்டாவோ? என்றவாறு.
மாதவிப் பந்தல் குயில்கட்கு மிகவும் வாய்த்த படுக்கையாம்.
மாதவி-வடசொல் விகாரம்.

இப்படிப்பட்ட அடையாளந்தன்னை இவர்கள் கூறவும் நப்பின்னை
“இவ்வடையாளம் மாத்திரம் கண்ணழிவற்றதோ?
கொத்தலர் காவின் மணித்தடங் கண்படை கொள்ளுமிளங்குயிலே,
என் தத்துவனை வரக்கூகிற்றியாகில் தலையல்லாற் கைம்மாறி லேனே’ (நாச்சியார்திருமொழி.) என்று
உறங்குங் குயில்களையும் கிளப்பிக் கூவச் சொல்லி வருத்துகிறவர்களன்றோ?

இவர்கள் சொல்லியபடி அவை கூவாதொழியல்
‘இன்று நாராயணனை வரக்கூவாயேல் இங்குத்து நின்றுந்துரப்பன்’ என்று அவற்றைச் சோலையினின்றுந்
துரத்தி விடுவதாகச் சொல்லி அச்சமுறுத்துகிறவர்களுமன்றோ இவர்கள்.
ஆன பின்பு இவர்களில் இருப்பையே கூலியாகக் கொண்டு அவை கூப்பிட்டனவாமத்தனை’

இக் கூவுதல் ஒரு அடையாளமாக வற்றன்று” என்றெண்ணிப் பேசாதே கிடந்தாள்’
கிடக்கவே, மீண்டும் அவளை விளிக்கின்றனர் “பந்தார் விரலி!” என்று.

கண்ணபிரானும் நப்பின்னைப் பிராட்டியும் இரவிற் பந்தடித்து விளையாட, அவ்விளையாட்டில் கண்ணபிரான்
தோற்றனனாக’ நப்பின்னை, தனக்கு வெற்றியைத் தந்த அப்பந்தைக் கையாலணைத்துக் கொண்டே கிடந்துறங்க,
அதனைச் சாலக வாசலாற் கண்ணுற்ற இவ்வாய்ச்சிகள் “பந்தார்விரலி” என்கின்றன ரென்க.

நாங்களும் பந்து போல் ஒரு அசேதந வஸ்துவாகப் பிறந்திருந்தோமாகில் எங்களையும் நீ
உன் கைக்குள் அடக்கிக் கொள்வாயன்றோ? என்ற கருத்தும் இதனில் தோற்றும்.

தாம் வந்த காரியத்தைக் கூறுகின்றனர், “உன் மைத்துனன் பேர்பாட” என்று. அதாவது –
“இன்னாளடியான், இன்னாளடியான்” என்று எல்லையின்றி அவன் படைத்துள்ள பல பெயர்களையுஞ் சொல்லி
வாயாரப் பாடுவதற்கு என்றபடி.

இங்ஙனங் கூறக்கேட்ட நப்பின்னை,
“யந்த்ரத்தினால் கதவைத் திறந்து கொள்ளலாம்படி பண்ணி வைத்திருக்கிறேன்’
உபாயமாகத் திறந்துகொண்டு புகுருங்கள்” என்ன’

அதனைக் கேட்ட ஆய்ச்சிகள், “நாங்கள் ஸ்வ ப்ரயத்நத்தினால் பேறு பெற நினைத்துளோமோ?
உன்னாலே பெறவிருக்கிறவர்களன்றோ? உன் கைபார்த்திருக்கிறவர்களன்றோ?
நாங்களே திறந்து கொண்டு புகவல்லோமல்லோம்’
உன்றன் கையில் வளைகள் நன்கு ஒலிக்க,
அவ்வொலியைக் கேட்டு எங்கள் நெஞ்சு குளிரும்படி நீயே எழுந்து வந்து
திறக்கவேணு மென்கிறார்கள், கடையிரண்டிகளால்.

செந்தாமரைக் கையால் –
இயற்கையாயுள்ள செம்மைக்கு மேல் பந்து பிடித்த தனாலும் மிக்க செம்மையுடைய கையால் என்க.

சீரார் வளை –
வளைக்குச் சீர்மையாவது – என்றுங் கழலாதிருக்கப் பெருகை.
ஒரு காலாகிலும் விஸ்லேஷம் நேர்ந்தாலன்றோ
‘தாமுகக்குந் தங்கையிற் சங்கமே போலாவோ யாமுகக்கு மென்கையிற் சங்கமு மேந்திழைவீர்!” என்றும்,
“என்னுடைய கழல் வளையைத் தாமுங்கழல் வளையே யாக்கினரே” என்றும்,
“என்னுடைய கழல் வளையே யாக்கினரே” என்றும் வருந்தவேண்டுவது.
நப்பின்னை நித்ய ஸம்ஸ்லிஷ்டை யாகையாலே சீரார் வளைக் கையாளா யிருப்பளிறே.
இவ் வளையின் ஓசையைக் கேட்டுக் கண்ணனும் உணர்ந்தானாய்,
தாங்களும் வாழ்ந்தாராகக் கருதி ‘ஒலிப்ப’ என்கிறார்கள்.

க்ருஷ்ண ஸம்ஸ்லேஷத்துக்கு விரோதமாக வொண்ணாதென்று நப்பின்னை கிடந்தபடியே கதவைத் திறக்க முயல,
அதனை யறிந்த இவர்கள், எங்களுக்காக நீ நாலடி நடந்து வந்தாய்’ என்னும் பரிசை நாங்களும் பெறுமாறு
எழுந்து வந்து திறக்க வேணுமென்பார், “வந்து திறவாய்” என்கிறார்கள்.

இப் பாட்டு எம்பெருமானார் விசேஷித்து உகந்தருளின் பாட்டு என்று நம் முதலிகள் மிகவும் ஆதரித்துப் போருவராம்.
அவ்வரலாறு வருமாறு:-
எம்பெருமானார் திருப்பாவை அநுஸந்தாநத்துடன் மாதுகரத்திற் கெழுந்தருளுகிற அடைவில்,
ஒரு நாள் பெரியநம்பி திருமாளிகைக்கு எழுந்தருள அப்போது திருக்காப்பு சேர்ந்திருக்கையாலே,
அநுஸந்தாநத்தைக் கேட்டு அத்துழாய் திருக்காப்பு நீக்கியருள,

எம்பெருமானார் அவளைக் கண்டவாறே மூர்ச்சித்துவிழ, அத்துழாய் பெரியநம்பி பக்கலிற் சென்று,
“ஐயா! கதவைத் திறந்து சென்றேன்’ என்னைக் கண்டவுடனே ஜீயர்மூர்ச்சித்து விழுந்தார்” என்ன’
நம்பி ஸர்வஜ்ஞாராகையாலே “உந்து மதகளிறு அநுஸந்தாநமா யிருக்கவடுக்கும்” என்றருளிச் செய்ய,

அதனைக்கேட்ட அத்துழாய் ‘ஆவதென்? என்ன’

“செந்தாமரைக்கையால் சீரார்வளை யொலிப்ப வந்து திறவாய், என்று அநுஸந்தியா நிற்க
நீ திறந்தவாறே அவ்வாறே உன்னைக் கண்டு
‘நப்பின்னையை ஸேவிக்கப் பெற்றேன்’ என்று மூர்த்தித்தாராக வேணும்” என்று நம்பி அருளிச் செய்தார்.

ஆகையாலே இப்பாட்டு எம்பெருமானாருகந்ததென்று நம் முதலிகள் ஆதரிப்பாரென்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை–அம்பரமே தண்ணீரே சோறே– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 3, 2021

திருவாசல் காக்கும் முதலிகளின் அநுமதி கொண்டு உள்ளே புகுந்த ஆய்ச்சிகள்
ஸ்ரீநந்த கோபரையும் யசோதைப் பிராட்டியையும் கண்ண பிரானையும் நம்பி மூத்த பிரானையும்
திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம், இது–

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

பதவுரை

அம்பரமே–வஸ்த்ரங்களையே
தண்ணீரே–தீர்த்தத்தையே
சோறே–சோற்றையே
அறம் செய்யும்–தருமமாக அளிக்கின்ற
எம்பெருமான் நந்தகோபாலா–எமக்கு ஸ்வாமியான நந்த கோபரே!
எழுந்திராய்–எழுந்திருக்க வேணும்.
கொம்பு அனார்க்கு எல்லாம்–வஞ்சிக் கொம்பு போன்ற மாதர்களுக்கெல்லாம்
கொழுந்தே–முதன்மை யானவளே!
குலம் விளக்கே–(இக்) குலத்திற்கு (மங்கள) தீபமாயிருப்பவளே
எம்பெருமாட்டி–எமக்குத் தலைவியானவளே!
அசோதாய்–யசோதைப் பிராட்டியே!
அறிவுறாய்–உணர்ந்தெழு’
அம்பாம் ஊடு அறுத்து–ஆகாசத்தை இடைவெளி யாக்கிக் கொண்டு
ஓங்கி–உயர வளர்ந்து
உலகு அளந்த–எல்லா) உலகங்களையும் அளந்தருளின
உம்பர்கோமானே–தேவாதி தேவனே!
உறங்காது–இனிக்) கண்வளர்ந்தருளாமல்
எழுந்திராய்–எழுந்திருக்க வேணும்
செம்பொன் கழல் அடி–சிவந்த பொன்னாற் செய்த வீரக் கழலை அணிந்துள்ள திருவடியை யடைய
செல்வா–சீமானே!
பலதேவா! –பல தேவனே!
உம்பியும் நீயும்–உன் தம்பியாகிய கண்ணனும் நீயும்
உறங்கேல்–உறங்காதொழிய வேணும்’

“பர்த்தாவினுடைய படுக்கையும் ப்ரஜையினுடைய தொட்டிலையும் விடாத மாதாவைப் போலே” என்றும்,
“ஸ்ரீநந்தகோபரையும் க்ருஷ்ணனையும் விடாத யசோதைப் பிராட்டியைப் போலே” என்றும், (முமுக்ஷுப்படியில்)
அருளிச் செய்தபடி, முதற்கட்டில் கண்ணபிரானும், நான்காங்கட்டில் நம்பி மூத்தபிரானும் பள்ளி கொள்வது முறையாதலால்,
அம்முறையை அடியொற்றி உணர்த்தியவாறு.
கண்ணனை ஆய்ச்சிகள் களவு காண்பார் கொல்! என்னுமச்சத்தினாலும் நந்தகோபர் முன் கட்டில் கிடப்பராம்.

இதில், முதலிரண்டடிகள் நந்தகோபரை உணர்த்தும்.
நந்தகோபருடைய கொடை மேன்மையைக் கூறும் முதலடி.
“வஸ்த்ரேண வபுஷா வாசா” என்றபடி மேனிக்கு நிறங்கொடுக்கும் பொருள்களில் முதன்மையான ஆடைகளையும்,
தாரகமான தண்ணீரையும், போஷகமான சோற்றையும் வேண்டுவார்க்கு வேண்டியபடி அறமாக அளிக்கவல்லவனே! என்றபடி.

“அறஞ் செய்யும்” என்றமையால், புகழைப் பயனாகக் கருதாமல் கொடையையே பயனாகப் பேணிக் கொடுக்கின்றமை விளங்கும்.
யாசகர்கள் கொண்டவல்லது தரிக்கமாட்டாதவாறுபோல,
இவர் கொடுத்தவல்லது தரிக்கமாட்டாரென்பது ஆழ்ந்தக் கருத்து.

“அம்பரமே தண்ணீரே சோறே” என்ற ஏகாரங்கள் பிரிநிலைப் பொருளனவாய்,
வஸ்த்ரங்களை மாத்திரம் தானஞ்செய்பவன், தண்ணீரை மாத்திரம் தானஞ்செய்பவன், சோற்றை மாத்திரம் தானஞ்செய்பவன்
என்னும் பொருளைத்தரும்.

அம்பரமும் தண்ணீரும் சோறும் நந்தகோபன் தானஞ் செய்ததாக எங்குங் கண்டதில்லை.
அப்படியிருக்க இங்கே இவர்கள் இப்படி கூறுவது எது கொண்டென்னில்,
இவையெல்லாம் தானஞ் செய்தமை கண்ணபிரானிடத்துந் கண்டதாதலால்
இவனுக்குக் காரண பூதனான நந்தகோபனிடத்திலே ஏறிட்டுச் சொல்லுகிறபடி போலும்.
“காரணகுணாஹீ கார்யே ஸங்க்ராமந்தி” என்கிற நியாயத்தைக் கருதிக் கூறலாமன்றோ.

எம்பெருமான் – “உண்ணுஞ்சோறு பருகுநீர்தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன்” என்றபடி,
எங்களுக்கு அம்பரமுந் தண்ணீருஞ் சோறுமாயுள்ள கண்ணபிரானை எமக்குத் தந்து
எங்கள் ஸத்தையை நோக்கும் ஸ்வாமி நீயன்றோ என்றபடி.

ஆக இவ்வளவால் நந்தகோபரை விளித்து, “எழுந்திராய்” என்று அவரைத் திருப்பள்ளி யுணர்த்தியவாறே,
இவர்கள் உள்ளே புகுவதை அவர் அநுமதித்தமை தோன்றவிருக்க,
பின்னர் இடைக்கட்டிற் புகுந்து யசோதைப் பிராட்டியை உணர்த்துகின்றனர் – மூன்று நான்காமடிகளால்.

எம்பெருமானைப் பற்றும்போது பிராட்டியை முன்னிட்டுப் பற்றுமாபோலே,
இங்குக் கீழ் நந்தகோபரைப் பற்றும்போதும் யசோதைப் பிராட்டியை முன்னிட ப்ராப்தமாயிருக்க,
முன்னர் நந்தகோபரைப் பற்றிப் பின்னர் யசோதையைப் பற்றுவது என்னெனில்’

பர்த்தாவை முலையாலணைக்கைக்காகவும் பிள்ளையை முலைப்பால் கொடுத்து வளர்க்கைக்காகவும்
யசோதைப் பிராட்டி இடைக்கட்டிற் கிடக்கிறபடியால், கண்ணாற் காண்கிறபடிக்கு மேற்பட ஒன்றுமறியப் பெறாத
இவ்வாய்ச்சிகள் கண்டபடியே பற்றுகிறார்களெனக் கொள்க.

கொம்பனார்க்கெல்லாங் கொழுந்தே! –
கொம்பு என்னும் பொதுப்பெயர், இங்கு வஞ்சிக் கொம்பு என்ற சிறப்புப் பெயரின் பொருள் பெற்றது.
சிறந்த மாதர்களின் இடைக்கு வஞ்சிக் கொம்பை உவமை கூறுதல் கவிமரபென்க’
அது துவட்சியிலும் நேர்மையிலும் இடைக்கு உவமையாம்.

அனார்-அன்னார்என்றபடி’ அப்படிப்பட்டவர் என்பது அதன் பொருள்’ எனவே, கொம்பு போன்றவர் என்றதாயிற்று.
செடிக்கு ஒரு தீங்கு நேர்ந்தால், கொழுந்தில் முதலில் வாட்டம் பிறப்பதுபோல
பெண்டிர்க்கு ஒரு கேடு வந்தால் முந்துற யசோதை பக்கலில் வாட்டங் காணப்படுவது பற்றிக் “கொழுந்தே!” எனப்பட்டாள். முற்றுவமை.

இங்ஙன் வேண்டப்பட்ட யசோதைப் பிராட்டியும் இவர்கள் உட்புகுவதற்கு இசைந்தமை தோற்ற இருக்க,
மூன்றாங்கட்டிற் புக்குக் கண்ணபிரானை உணர்த்துகின்றனர், ஐந்தாறமடிகளால்.
இப்போது உலகளந்தவபதாநத்தை எடுத்துக் கூறுவது –
வேண்டாதார்தலையிலும், வேண்டாவென மறுத்தவர் தலையிலும் திருவடியை வைத்தருளின நீ,
திருவடிகளில் விழுந்து யாசிக்கு மெங்களை அடிமை கொள்ளா தொழிவது எங்ஙனே? என்னுங் கருத்தினாலென்க.

உறங்காது எழுந்திராய்-“ஸதா பச்யந்தி ஸூரய:” என்றபடி ஒரு கணப்பொழுதுங் கண்ணுறங்காது
ஸேவித்துக் கொண்டிருந்த நித்யஸூரிகளைத் துடிக்க விட்டு எம்மை உகந்து இங்கு வந்த நீ
எங்களுக்கும் முகங்காட்டாமல் உறங்கி, எங்களையுந் துடிக்கவிடாதேகொள் என்றவாறு.

இவர்கள் இங்ஙன இரந்து எழுப்பந் செய்தேயும், அவன் ‘இவர்கள் நம்பி மூத்த பிரானை எழுப்பாமல்
நம்மை எழுப்புகின்றனராதலால் முறைகெடச் செய்தார்களாய்த்து’
ஆன பின்பு இவர்களுக்கு நாம் முகங் கொடுப்பது தகுதியன்று’ என்று பேசாதே கிடந்தான்’
இவ்வாய்ச்சிகள் இங்கித மறியவல்லவராதலால் அக்கருத்தினை உணர்ந்து ‘முறை கெட உணர்த்தினோமே! எனச்
சிறிது மனம் நொந்து, கடையிரண்டடிகளால் நம்பி மூத்தபிரானை உணர்த்துகின்றனர்.

செம்பொற் கழலடிச் செல்வா! –
தனக்குப் பின்பு ஸாக்ஷாத் ஸ்ரீக்ருஷ்ணன் பின்னே பிறக்க
முன்னே பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே!” என்ற ஆறாயிரங்காண்க.

பலதேவற்குச் செல்வமாவது –
கண்ணபிரானுக்கு அடிமை செய்யப் பெறுகை.
லக்ஷ்மணோ லக்ஷ்மிசம்பந்த:” என்று இளையபெருமாள் இராமபிரானுக்குப் பின் பிறந்து படைத்த செல்வத்தைப்
பலதேவன் கண்ணபிரானுக்கு முன் பிறந்து படைத்தன னென்க.

உம்பியும் நீயுமுறங்கேல் –
உலகத்தில் படுக்கையில் பள்ளி கொள்வார் உறங்குவது கண்டோ மத்தனை யன்றிப் படுக்கையுங்கூட உறங்குவதைக் கண்டிலோம்’
ஆகையாலே அவனுக்குப் படுக்கையான நீயும், எங்களுக்குப் படுக்கையான அவனும் உறங்காது
உணர வேணுமென்கிறார்களென்பது ரஸோக்தி.

பலராமன் சேஷாவதாரமாகையாலே அனந்தன் மேற்கிடந்த வெம்புண்ணியனுக்குப் படுக்கையாகத் தட்டில்லையிறே.
கண்ண பிரான் இவர்களுக்குப் படுக்கையாவது ப்ரணயத்தாலே.

இப் பாட்டில், முதலடியிலும் ஐந்தாமடியிலுமுள்ள அம்பரம் என்னுஞ் சொல், தற்சம வடசொல்’
அச் சொல்லுக்கு வடமொழியில், ஆடையென்றும் ஆகாசமென்றும் பலபொருள்களுண்டு.
உம்பி – ‘உன்தம்பி’ என்பதன் மரூஉ.
உறங்கேல் – முன்னிலை எதிர்மறை வினைமுற்று.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை–நாயகனாய் நின்ற– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 3, 2021

கீழ்ப் பத்துப்பாட்டுகளினால் பத்துப் பெண்களை உணர்த்தின படியைக் கூறியது –
திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலங் குடிற்பெண்களையு முணர்த்தியவாற்றிற்கு உபலக்ஷணம்.

முந்துற முன்னமுணர்ந்த பெண்கள்
உறங்குகின்ற மற்றைப் பெண்களை யுடையுமுணர்த்தித் தம்முடன் கூட்டிக்கொண்டு
எல்லோரும் பெருங்கூட்டமாகத் திரண்டு
ஸ்ரீ நந்தகோபர் திருமாளிகை வாசலிற் சென்று சேர்ந்து,
திருக்கோயில் காப்பானையும்
திருவாசல் காப்பானையும் நோக்கித்
‘திருவாசல் திருக்காப்பு நீக்கவேணும்’ என்று இரக்கும்படியைக் கூறும் பாசுரம் இது–

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும்
தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

பதவுரை

நாயகன் ஆய் கின்ற–(எமக்கு) ஸ்வாமியாயிருக்கிற
நந்தகோபனுடைய–நந்தகோபருடைய
கோயில்–திரு மாளிகையை
காப்பானே-காக்குமவனே!
கொடி-த்வஜபடங்கள்
தோன்றும்-விளங்கா நிற்கப்பெற்ற
தோரணம் வாசல்–தோரண வாசலை
காப்பானே–காக்குமவனே!
மணி-அழகிய
கதவம்-கதவினுடைய
தாள்–தாழ்ப்பாளை
திறவாய்–திறக்க வேணும்’
ஆயர் சிறுமி யரோ முக்கு–இளமை தங்கிய இடைப் பெண்களாகிய எமக்கு
மாயன்–ஆச்சர்யச் செயல்களை யுடையவனும்
மணிவண்ணன்–நீலமணி போன்ற திரு நிறத்தை யுடையவனுமான கண்ண பிரான்
நென்னலே–நேற்றே
அறை பறை வாய் நேர்ந்தான–ஒலி செய்யும் பறைளைத் தருவதாக வாக்களித்தான்’
துயில் எழ–(அவ் வெம்பெருமான்) துயிலினின்றும் எழுந்திருக்கும்படி
பாடுவான்-பாடுகைக்காக
தூயோம் ஆய்–பரிசுத்தைகளாய்
வந்தோம்–(அடியோம்) வந்திருக்கின்றோம்’
அம்மா–ஸ்வாமி!
முன்னம்முன்னம்–முதல் முதலிலே
வாயால்–(உமது) வாயினால்
மாற்றாதே–மறுக்காதொழிய வேணும்’ (அன்றியும்)
நேசம் நிலை கதவம்–கண்ண பிரான் பக்கலில்) பரிவுற்றிருக்கும் நிலைமையையுடைய கதவை
நீ–நீயே
நீக்கு–நீக்க வேணும்’

இப்பாட்டில் முதலடி-கோயில் காப்பானையும்,
இரண்டாமடி – வாசல் காப்பானையும் உணர்த்துகின்றது.

கோபுர வாசல் போன்ற வெளிப்புறத்து வாசலைக் காப்பவன்-கோயில் காப்பானென்றும்,
த்வஜஸ்தம்பத்தி னருகிலுள்ள வாசல் போன்ற உட்புறத்து வாசலைக் காப்பவன் – வாசல்காப்பானென்றும்
இங்குக் கூறப்படுகின்றன வெனக்கொள்க.

“நாயகனாய்நின்ற” என்ற அடை மொழி –
நந்தகோபனுக்கு இட்டதாகவுமாம்’
கோயில் காப்பானுக்கு இட்டதாகவுமாம்.

இவ் வாயர் மாதர் கடகரையே சேஷியாகக் கருதும் அதிகாரிகளாகையால்
அவர்களை நாயகரென்கிறார்கள்.
ஒருவன் ஒரு ரத்நத்தைத் தந்தால அதன் விலையின் மேன்மையை அறியவறிய,
அதனைக் கொடுத்தவன் பக்கலில் அளவற்ற ஆதரம் பிறக்குமாறு போல,
கடகர் முகமாக எம்பெருமானைப் பக்கலில் பெருநன்றி பாராட்டுவர்.

ஆனது பற்றியே ஆளவந்தார்
எம்பெருமானை ஸ்தோத்ர ரத்நத்தினால் துதிக்க இழிந்து,
முந்துற முன்னம் நாதமுனிகள் முதலிய ஆசாரியர்களைத் துதித்தருளினர்.

“கண்ணபிரான் கோயில் காப்பானே!” என்னாமல்
“நந்தகோபனுடைய கோயில காப்பானே” என்றது –
பரமபதத்தில் எம்பெருமான் ஸ்வதந்த்ரனாயிருந்து பட்டபாடு தீர
நந்தகோபற்குப் பிள்ளையாய் பிறந்து
பார தந்திரியத்தைப் பேணினனாதலால் அவன் திருவுள்ள முகக்குதற்காகவென்க.

“ கண்ணபிரானுடைய கோயில்” என்றால்,
இவன் நந்தகோபருடைய அபிமாநத்தில் ஒதுங்கியிருக்கையாகிற பாரதந்திரியம் பரிமளிக்க வழியில்லையே.

திருக்கோயில் காக்கும் முதலி இவர்களுக்கு மிகவுங் கௌரவித்தத் தக்கவனாயிருக்க,
அவனதிகரித்த காரியத்தையிட்டு அவனை விளிப்பது இழிவன்றோவெனில்
துகில் தோய்ப்பவனே!
‘வண்டி ஓட்டுமவனே! ‘என்றிருப்படியெல்லாம் விளிப்பது போலன்று இங்கு இவர்கள் விளித்த விளி.

‘நந்தகோபனுடைய கோயிலைக் காண்பவனாக அமையப்பெற்ற உன்றன் பாக்கியமே பாக்கியம்’ என்று
இவர்களுக்கு உள்ள உகப்பு இத்தகைய விளிச்சொல்லாய் வழிந்து புறப்பட்டபடி.

அக் கோயில் காப்பானும் இங்ஙன் விளித்தலையே
தனக்குப் பரம புருஷார்த்தமாக நினைப்பானொருவனிறே.
அன்றியும்,
இதனால் சேஷ வ்ருத்தியடியாக வரும் பெயரே ஆத்மாவுக்கு ஸ்வரூப அநு ரூபமென்னும்
சாஸ்த்ரார்த்தமும் வெளியிமப்பட்டவாறாம்.

இங்ஙனம் இவர்கள் அவனைப்புகழ்ந்து விளிக்க, அவன் மிகவுமுள் குளிர்ந்து, கண்ணாலே,
‘புகுருங்கள்’ என்று நியமனங்கொடுக்க,
அவ்வாசலற் புகுந்து உள்ளே சென்று, தோரண வாசல் காக்கும் முதலியயை உணர்த்துகின்றனர்,
கொடித்தோன்றுமென்று தொடங்கி

இனி, இரண்டு ஸம்போதநமும் ஒருவனையே நோக்கியவை என்று நிர்வஹித்தலுமொக்கும்.

தோரண வாசலுக்குக் “கொடித்தோன்றும்” என்ற அடைமொழி இட்டதற்குக் கருத்து:-
திருவாய்பபாடிலுள்ள மாளிகைகளெல்லாம் ஒரு படிப்பட்டுத் தோற்றுதலால்,
நடுநிசியில் அலமந்துவரும் ஆயர்மாதர்நின்று தடுமாறாதே
‘இது நந்தகோபர்திருமாளிகை’ என்று சடக்கென உணர்ந்து
தெளிந்து வருதற்காகக் கொடிகட்டி வைக்கப்பட்டிருக்குமென்க.

பெருவிடாய்ப்பட்டவர்க்குத் தண்ணீர்ப் பந்தல்கள் நெடுந்தூரத்தினின்றுந் தோற்றவேணுமென்று
தார்மிகர்கள் கொடிகட்டித் தோரணம் நாட்டுவரன்றோ.

“பெருமானைக் காணப் பெறாதே ஆர்த்தனான ஸ்ரீ பரதாழ்வான்,
ராமாச்ரம ஸூசகமான தூம வல்கலங்களைக் கண்டு தரித்தாற்போலே
கொடியையும் தோரணத்தையுங் கண்டு இவர்கள் தரிக்கைக்காகவாயிற்று நட்டுவைத்தது” என்ற ஆறாயிரமறிக.

வாசல் காப்பனே! –
கொடியுந் தோரணமும் அசேதநமாதையால் அவை எம்மை அழைக்கவும் மாட்டா,
உள்ளே கொண்டு புகவும் மாட்டா’ இனிநீ சைதந்யம் பெற்றதற்கு ப்ரயோஜநம் பெறுதியென்கிறார்கள்.

பண்டு கண்ணபிரான் “அர்ஜுனன் ஸுபத்ரையைக் கொண்டுபோக நீங்கள் அநுமதி பண்ணியிருங்கள்” என்று
வாசல் காப்பருக்கு அருளிச் செய்திருந்தது போல,
“பெண்களை உள்ளே புகவிடு” என்று இவ்வாசல் காப்பானுக்கும் நியமித்திருக்கக்கூடுமென்று இவர்களின் நினைவு போலும்.

மணிக்கதவந் தாள் திறவாய் –
கதவின் இனிமையிலே எங்கள் கண்ணும் நெஞ்சும் பிணிப்புண்ண வொண்ணாமல் கதவைத் திறந்து
எம்மை உள்ளே புகவிடாய் என்கிறார்கள்.

இவர்கள் வேண்டுமாற்றைக் கேட்கலுற்ற அவன்,
“பயம்மிக்க தேசத்தில் நடுநிசியில் வந்து கதவைத் திறக்க அழைக்கிறவர் யார்?” என்ன’

அதற்கு இவர்கள் “அச்சந் தவிர்ப்பானிருக்குமிடத்தில் அஞ்சவேண்டும் ப்ரஸக்தி என்?” என்ன’

அது கேட்ட அவன்,
“யுகம் த்ரே தாயுகமாய்,
காலம் நல்லடிக்காலமாய்,
தமப்பனார்சம்ப்ரமந்தகனாய்,
பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகளாய்,
அவர்கள் தாம் வழியே போய் வழியே வரு மவர்களுமாய்,
ஊரும் திருவயோத்யையுமா யிருந்தமையாலே ராமாவதாரத்தில் அச்சமற்றிருந்தது’

இப்போது அங்ஙன் அஞ்சவேண்டாதே
பாலிலே யுண்டு பனியிலே கிடக்கிதோ?
காலம் கலிக்குத் தோள்தீண்டியான த்வாபராந்தமாய்,
தமப்பனார்பசும்புல் சாவமிதியாத பரமஸாதுவான நந்தகோபராய்,
பிள்ளைகள் சிறுவராய்,
பின்னையும் தீம்பரில் தலைவராய்,
இருப்பிடம் இடைச்சேரியாய்,
அதுதான் கம்ஸனுடைய ராஜ்யத்திற்கு மிகவும் அணித்தாய்,
அவனுக்கு இறையிறுக்குமூராய்,
அவன்றான் பரம சத்துருவாய்,
எழும்பூண்டெல்லாம் அஸுரமயமாயிக்க.
அச்சங் கெட்டிருக்கு மிடமிதுவாவ தெங்ஙனே?” என்ன’

அது கேட்ட இவர்கள் “எங்களுக்கு அஞ்சவேணுமோ? நாங்கள் பெண்பிள்ளைகள் அல்லோமோ?” என்ன’

அதுகேட்ட இவர்கள் “அவள் ராக்ஷஸி, நாங்கள் இடைப்பெண்கள்’ அவளோடொக்க எங்களைக் கருதலாமோ?’ என்ன’

அதற்கு அவன், “ஆய்ப்பெண்களா? பூதனை ஆய்ப்பெண்ணல்லளோ? அவள் செய்துபோன தீமையை நீங்கள் அறியீரோ?
நன்றாகச் சொன்னீர்கள்’ இடைச்சிகளுக்கென்றோ மிகவும் அஞ்ச வேண்டும்” என்ன’

அதற்கு உத்தரமாக “ஆயர் சிறுமியரோம்” என்கிறார்கள்.

இவர்கள் இங்ஙனங் கூறியதைக் கேட்ட அவ்வாசற் காவலோன்,
“சிறுமியராகி லென்? ஆஸுரமானதொரு கன்று (வத்ஸாஸுரன்) வந்து நலியப்பார்த்ததன்றோ?
யாம் பருவங்கொண்டு நம்பவல்லோமல்லோம்’ வந்தக் காரியத்தைச் சொல்லுங்கள்.
வார்த்தையில் அறிகிறோம்” என்றான்’

அதற்கு இவர்கள் “அறை பறை” என்கிறார்கள்’
நோன்புக்குப் பறை வேண்டி வந்தோமென்றபடி.

அதனைக் கேட்ட அவன், “அதுவாகில் பெருமான் திருப்பள்ளி யுணர்ந்தெழுந்த பின்னர்
விண்ணப்பஞ் செய்து தருகிறோம். ‘நில்லுங்கள்’ என்றான்.

அதற்கு இவர்கள் “நென்னலேவாய் நேர்ந்தான்” என்கிறார்கள்’
நீ இன்றைக்கு விண்ணப்பஞ் செய்ய வேண்டாதபடி
நேற்றே அப்பெருமான் எமக்குப் பறைதருவதாக அருளிச்செய்தான் என்றவாறு.

இங்ஙன் இவர்கள் “நென்னலேவாய் நேர்ந்தான்” என்னக் கேட்ட வாசல் காப்பான்,
எம்பெருமான் உங்கள் காரியத்தைச் செய்து தருவதாக அருளிச்செய்தானேலும் அவன் எங்களை இங்கு வைத்தற்கு
ஒரு பயன் வேண்டாவோ? எங்கள் பணிக்கு அவனோ கடவான்?
வந்தவர்களின் ஸ்வரூப ஸ்வபாவங்களை ஆராய்வதற்கென்றே நியமிக்கப்பெற்றுள்ள நாங்கள்
உங்கள் அகவாயை ஆராய்ந்துணராமல் விடமுடியாது’ என்றான்’

அதற்கு உத்தரமாக இவர்கள் “தூயோமாய் வந்தோம்” என்கிறார்கள்.
இதன் கருத்து:- நீங்கள் வருந்தி ஆராயவேண்டும்படி நாங்கள் வந்தோமல் லோம்’
நீங்கள் இங்ஙனே அஞ்சும்படி கருத்துக்குற்றமுடையோ மல்லோம்’
உபாநயந் தரபாரராயும் உபேயாந்தரபரராயும் வந்தோமல்லோம்’
அத்தலைக்குப் பல்லாண்டு பாடுகையே பரம புருஷார்த்தமாக நினைத்து வந்தோம் யாம் என்றவாறு.

தூயோம்-தூய்மையுடையோம்’
தூய்மையானது – தங்கள் தலையிலுஞ் சில அதிகப்ரஸங்கங்களை ஏறிட்டுக் கொள்ளாமல்
‘நம்முடைய ரக்ஷணத்திற்கு அவனே கடவன்’ என்றிருக்கும் அத்யவஸாய விசேஷம்.

இவ்வாறு இவர்கள் இயம்பக் கேட்ட அவன், “உங்கள் தூய்மையை நாடறியுமாறு நீங்கள் அநந்யப்ரயோஜநைகள்
என்கைக்கு ஏற்ற அடையாளஞ் சொல்லுங்கள்’
உங்களாற்றாமையைக் கண்டால் ஒருபறை பெற்றுப் போக வந்தீராகத் தோன்றவில்லை” என்றான்’

அதற்கு விடையாகத் “துயிலெழப்பாடுவான்-வந்தோம் என்கிறார்கள்.
அவன் உணர்ந்தெழும் போதை அழகுக்கு மங்களாசாஸநம் பண்ணவந்தோம் என்றபடி.
“துயிலெழ பாடுவான்” “துயிலெடை பாடுவான்” என்பன பாட பேதங்கள்.

இங்ஙன மிவர்களின் பேச்சுக்களைக் கேட்ட திருவாசல் காப்பான்,
அபிஸந்தியின் சிறப்பை உள்ளபடி அறிந்துவைத்தும்,
இவர்கள் பேச்சின் இனிமையை இன்னும் செவியாற் பருகவிரும்பி,
“ஆகிலுங் நீங்கள் இவ்வகாலத்தில் உள்ளே புகுரவொண்ணாது”. என மறுத்துக் கூறுவான் போல் தோற்றினான்’

பிறர் கருத்தறிவதில் வல்லவர்களான இவ்வாய்ச்சிகள் அதனை அறிந்து,
‘என் அப்பனே! நீ நெஞ்சாலே சிலவற்றை நினைத்தியேலும், வாயால் நெருப்பைச் சொரிந்தாற்போல்
மறுத்துக் கூறாதொழிய வேணும்” என்கிறார்கள் ஏழாமடியினால்.

இங்ஙன மியம்புகின்ற இவ்வாய்ச்சிகளின் ஆர்த்தியின் கனத்தையும்
அகவாயிற் சுத்தியையும் ஆராய்ந்தறிந்த
அவ்வாசல் காப்பான், “ஆகில் நான் உங்களை மறுக்கவில்லை’
கதவைத் தள்ளிக்கொண்டு புகுருங்கள்” என்ன’

அதுகேட்ட ஆய்ச்சிகள்,’ “நாயகனே! எம்பெருமான் திறத்து உனக்குள்ள பரிவிற்காட்டிலும்
மிக விஞ்சின பரிவு இக்கதவிற்கு உள்ளதுபோலும்’ எங்களால் தள்ளமுடியாது”
நீயே திறக்க வேணும்” என்கிறார்கள், கடைபிடியால்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை–எல்லே இளம்கிளியே — -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 3, 2021

எல்லாப் பெண்களுடைய திரட்சியையுங் காணக் கருதிக் கிடப்பாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது.

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

பதவுரை

இளம் கிளியே–இளமை தங்கிய கிளி போன்றுள்ளவளே!
எல்லே–(இஃது) என்னே!
இன்னம்–இத்தனை பெண் பிள்ளைகள் திறண்டுவந்த பின்பும்
உறங்குதியோ–தூங்குகின்றாயோ? (என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க;)
நங்கைமீர்–பெண்காள்!
போதர்கின்றேன்–(இதோ) புறப்பட்டு வருகிறேன்;
சில் என்று அழையேல்மின்–சிலுகு சிலுகென்று அழையாதேயுங்கள்; (என்று உறங்குகிறவள் விடைசொல்ல)
இளங்கிளியே !
வல்லை –(நீ வார்த்தை சொல்லுவதில்) வல்லமை யுடையவள்;
உன் கட்டுரைகள்-உனது கடுமையான சொற்களையும்
உன் வாய்-உன் வாயையும்
பண்டே-நெடு நாளாகவே
அறிதும்-நாங்கள் அறிவோம்; (என்று உணர்த்த வந்தவர்கள் சொல்ல,)
நீங்கள் வல்லீர்கள்–இப்படிச் சொல்லுகிற) நீங்கள் தான் (பேச்சில்) வல்லமை யுமையீர்
(அன்றேல்)–
நானே தான் ஆயிடுக–(நீங்கள் செல்லுகிறபடி) நான் தான் (வல்லவளாய்) ஆகக் கடவேன்;
(உங்களுக்கு நான் செய்ய வேண்டுவதென்? என்று உள்ளுறங்குமவள் கேட்க;
நீ–நீ
ஒல்லை–சீக்கிரமாக
போதாய்–எழுந்து வா
உனக்கு–(தனியே) உனக்கு மட்டும்
வேறு என்ன உடையை–(நீ) வேறு என்ன (அதிசயத்தை) உடையையாயிரா நின்றாய்? என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க;)
எல்லாரும்–(வர வேண்டியவர்கள்) எல்லாரும்
போந்தாரோ–வந்தனரோ? (என்று உறங்குமவள் கேட்க)
போந்தார்–(எல்லோரும்) வந்தனர்;
போந்து எண்ணிக்கை கொள்–(நீ எழுந்துவந்து) எண்ணிப் பார்த்துக் கொள்;
(என்று உணர்த்த வந்தவர்கள் கூற,)
(என்னை ஏதுக்காக வரச் சொல்லுகிறீர்களென்று உறங்குமவள் கேட்க;)
வல் ஆனை–(குவலயாபீட மென்னும்) வலிய யானையை
கொன்றானை–கொன்றொழித்தவனும்
மாற்றாரை–சத்ருக்களான கம்ஸாதிகளை
மாற்று அழிக்க வல்லானை–மிடுக்கு அழிந்தவர்களாகச் செய்தருள வல்லவனும்
மாயனை–அற்புதனுமான கண்ணபிரானை
பாட–பாடுகைக்காக
(ஒல்லை நீ போதாய், என்றழைக்கிறார்கள்)
ஏல் ஓர் எம்பாவாய்

கீழ்ப் பத்துப் பாட்டிலும் நிகழ்ந்த வினா விடைகள் இப்பாட்டில் வெளிப் படையாகக் காணப் படும்.
“புள்ளுஞ் சிலம்பினகாண்” என்ற பாட்டுத் தொடங்கிக் கீழ்ப் பாட்டளவுமுள்ள ஒன்பது பாட்டுக்களிலும்
உணர்த்துமவர்களுடைய பாசுரமொன்றேயன்றி உறங்குமவளுடைய ஆபோதிரூபமான பாசுரமொன்றும்
வ்யக்தமாகக் காணப்படவில்லை; அது, சொற்றொடை நோக்கி அவதாரிகையாக எடுத்துரைக்கப்பட்டது;
இப்பாட்டிலோவென்னில்;

முதலடி – உணர்த்தமவர்களின் பாசுரம்;
இரண்டாமடி – உறங்குமவளின் பாசுரம்-
மூன்றாமடி – உணர்த்துமவர் பாசுரம்;
நான்காமடி உறங்குமவள் பாசுரம்;
ஐந்தாமடி – உணர்த்துமவர் பாசுரம்;
ஆறாமடியில், முற்கூறு – உறங்குமவள் பாசுரம் -மேல்முழுதும் – உணர்த்துவர் பாசுரம்.

ஆறாயிரப்படி அருளிச்செயல் :- “திருப்பாவையாகிறது இப்பாட்டிறே,
பகவத் விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் *சிற்றஞ் சிறுகாலையிலே* சொல்லுகிறது;
பாகவத விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் இப்பாட்டிலே சொல்லுகிறது” என்று.

பாகவத விஷயத்திலிருக்கும்படி இப்பாட்டில் கூறியவாறென்? எனில்,
“சில பாகவதர் தன்னை வெறுக்கில் ஏதேனுமொரு விரகாலே அவர்களை மை கொள்ளுகிற முகத்தாலே
ஈஸ்வரனை மைகொள்ள வேணுமென்னுமிடம் –
“ரூஹ்ராணி ஸ்ருண்சந்வை ததா பாகவதேரி தாந். ப்ரணாமபூர்வகம் வந்த்யா யோ வதேத் வைஷ்ணவோ ஹி ஸ:” என்று
ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் சொல்லுகிற பிரமாணத்தில் பிரஸித்தம்” என்று ரஹஸ்யத்ரய ஸாரத்தில்
அபராத பரிஹாராதிகாரத்தில் தூப்புற்பிள்ளை அருளிச் செய்தபடி –
பாதவதர்களால் ஏதேனுமொருபடியாகக் குற்றம் சாட்டப் பொற்றவர்கள், அப்பாகவதர் திருவடிகளில் தலை சாய்த்து,
‘இக்குற்றம் அடியேனுடையதுதான் ஷமித்தருளவேணும்’ எனப் பிரார்த்தித்துப் பொறுப்பித்தல் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாதலால்,
அவ்வாறே இப்பாட்டில் “நானே தானாயிடுக” என்று –
பிறர் கூறிய குற்றம் தன்னிடத்தே யுள்ளதாகத் தானிசைந்தமை கூறப்படுதலால், பாகவத விஷயத்திலிருக்கும்படி சொல்லிற்றாகிறது.
“திருப்பாவையாகிறது இப்பாட்டிறே” என்றதும் இவ்வர்த்த விசேஷத்தில் ஊற்றத்தினாலேயென்பது அறியத் தக்கது.

“உங்கள் புழைக்கடை” என்ற பாட்டால் அயல் திருமாளிகைப் பெண்ணை உணர்த்துங்கால்
“பங்கயக் கண்ணனைப் பாட” என்றதைக்கேட்ட இவள் அப்பேச்சின் இனிமையை நினைந்து
நெஞ்சு குளிர்ந்து அப்பாசுரத்தைத் தன் மிடற்றிலிட்டு நுண்ணிதாகப் பாடின குரலின் மென்மையைச் செவியுற்ற இவர்கள்
அவளை “இளங்கிளியே!” என விளிக்கின்றனர்;
எல்லே! என்றது – ஸம்போதனக் குறியாகவுமாம்;
ஆச்சரியக் குறிப்பிடைச் சொல்லாகவுமாம்.

உணர்த்த வந்தவர்கள் உறங்குமவளை, ‘இளங்கிளியே!’ என விளித்ததும் அவள் நினைத்தாள்;
நம் அயலகத்துப் பெண்ணை ‘நாணாதாய்!’ என வெறுத்துரைத்தவிவர்கள்
நம்மை நோக்கி ‘இளங்கிளியே!’ என்றால், இதை நாம் மெய்யே புகழ்ச்சியாகக் கருதலாகாது.
உறக்கத்தில் அவளிலும் மேற்பட்டவளாயிராநின்ற நாம் நிந்தைக்கு உரியோமத்தமையன்றிப் புகழ்தற்கு உரியோமல்லோம்;
ஆனபின்பு, இப்போது இவர்கள் புகழ்ச்சி தோன்ற விளித்தமைக்குக் கருத்து வேறாக வேணும்?
“மாசுடையுடம்பொடு தலையுலறி வாய்ப்புறம் வெளுத்து” என்னும்படி
எங்களுடம்பு வைவர்ணியமடைந்து வாயும் வெளுத்திருக்க, உன் உடம்பு கிருஷ்ண ஸம்ச்லேஷத்தினால் பசுகுபசுகென்று,
வாயும் சிவந்து குறியழியாமே கிடக்கிறபடி வெகு அழகிதாயிராநின்றது! என்ற கருத்துப்பட;
‘இளங்கிளியே!’ என்ற மெல்லிய பேச்சினால் நிந்திக்கின்றனரே யன்றி வேறில்லை;
இவ்வளவில் இவர்களுக்கு நாம் ஒரு மறுமாற்றந் தந்தால் வெறுப்பா” மென்று பேசாதே கிடந்தாள்;

கிடக்க, இவர்கள் “இன்ன முறங்குதியோ” என்கிறார்கள்.
நாங்கள் வருவதற்கு முன் உறங்கினாயேலும், எங்களது ஆர்த்தி தோற்றுங் கூக்குரல் செவிப்பட்ட பின்னரும்
உறங்குவது தருமமோ? என்றவாறு.

அவள் தான் உள்ளே உறங்குகிறாளல்லளே; பங்கயக் கண்ணனை அநுஸந்தித்துக் கொண்டன்றோ கிடக்கிறாள்;
அவ்வநுஸந்தாநத்திற்கு இவர்களின் வன்சொற்களெல்லாம் இடையூறாயிருந்தமையால்,
“சில்லென்றழையேன்மின்” என்றாள்.
சில்ல்லென்றழைத்தல் – நெஞ்சு வெறுப்புண்ணுமாறு அழைத்தல்;
சில் என்றவிது – ஒருவகை அநுகாரக் குறிப்பிடைச் சொல்.

அவள் அங்ஙனஞ் சொல்லக்கேட்ட இவர்கள், ‘எங்களைப் பிரிந்து ஒரு கணப்பொழுதும் தரிக்கமாட்டாதிருந்த உனக்கு
இன்று எங்கள் காட்சியும் பேச்சும் வெறுப்புக்கு உறுப்பாம்படி உனக்கு வந்த பூர்த்தி என்கொலம்மா!’ என்ன;

அதற்கு அவள், ‘என் தன்மையை அறியாமல் என்னிடத்து விபரிதமானதொரு கருத்துக் கொண்டு,
இளங்கிளியே! என்று விளிக்கிற நீங்களன்றோ பூர்த்தி யுள்ளவர்கள்;
வாய் திறவாதிருக்க வல்லீராகில் நான் புறப்படுகிறேன் என்பாள் – “நங்கைமீர் போதர்கின்றேன்” என்றாள்.

அவள் இங்ஙனஞ் சொல்லக்கேட்ட இவர்கள், “ஆ! ஆ!! ‘நங்கைமீர்!’ என்ற உறவற்ற சொல்லாலே
எம்மை நீ சொல்லவல்லை என்பதை நாங்கள் இன்றுதானோ அறிகின்றோம்?
*சில்லென்றழையேன்மின் என்பது,
நங்கைமீர்! என்பதாய் இப்படி கடுமையாக நீ கூற வல்லை யென்பதை யாம்
நெடுநாளாகவே அறிகின்றோமம்மா! என்கிறார்கள் மூன்றாமடியால்.

இவர்கள் இங்ஙனஞ் சொல்வதைக் கேட்ட அவள்,
‘நீங்கள் உங்கள் குற்றத்தைப் பிறர் தலைமீது ஏறிடா நின்றீர்கள்;
வன் சொற்கள் கூறுந்திறமை உங்கள் பக்கலுள்ளதென்றே யன்றி யான ஒரு வன்சொல்லுஞ் சொல்ல வல்லேனல்லேன்’
என்று சொல்லி, உத்தரணந்தன்னிலே வைஷ்ணவ லக்ஷணத்தை ஆராய்ந்தாள்;
பாகவதர் ஒரு வைஷ்ணவனை நோக்கி ஒரு குற்றஞ் சாற்றினராகில், அவன் மெய்யே அக்குற்றமுற்ற வனல்லனேலும்
பாகவதர் பேச்சின் கௌரவ்யதை நிமித்தமாக, அவர் கூறிய குற்றத்தைத் தான் இசைந்து கொடு நிற்றல்
ஸ்வரூப மென்று புராண நூல்கள் புலப்படுத்தாநிற்க, நாம் “வல்லீர்க்ள நீங்களே” எனமறுத்துப் பேசுவது
அஸஹ்யாபசாரத்திலுங் கொடியதாமெனக் கருதி, மீண்டு
“நானே தானாயிடுக” என்கிறாள்.

இங்ஙனே அவர்கள் கூறிய குற்றத்தைத் தான் இசைந்து, ‘இங்ஙன் குற்றவாளியாகிய நான் உங்கள்
திறத்துச் செய்ய வேண்டியதென்? என்று கேட்க,

உணர்த்த வந்தவர்கள் ‘உன் குற்றத்தை நீ இசைந்த பின்பு விளம்பமற இத்திரளில் வந்து
பொறுப்பிக்கவன்றோ வேண்டுவது’ என்பார், “ஒல்லை நீ போதாய்” என்றனர்.

அவள் இதனைக் கேட்டதும், ‘இதோ வருகின்றேன்’ என்று புறப்பட்டுவரத் தொடங்கினாள்;

உத்தரணத்திலேயே அவள் தம் திரளில் வந்து புகாமையால், நாம் போதாய் என்றவுடனே இவள்
அரைகுலையத் தலை குலைய ஓடிவாராதே தாழ்க்கைக்கு அடி என்?
நாம் படும்பாடு இவள் படாதொழிவதென்?’ என்று உள்வெதும்பி, “உனக்கென்ன வேறுடையை” என்கிறார்கள்.

பஞ்சலங் குடிற்பெண்களுக்கு மில்லாத உனக்கென்று வேறாக நீ என்ன அதிசயத்தை உடையளா யிராநின்றாய்
எங்களுடன் வந்து கூடாமைக்கு? என்றவாறு.
உடையை என்பது – முன்னிலையொருமை நிகழ்காலக் குறிப்பு வினைமுற்று.

இங்ஙனிவர்கள் “உனக்கென்ன வேறுடையை” என க்ஷேபித்துரைத்தமை கேட்கலுற்ற அவள்,
தோழிகாள்! உங்களோடு கூடுவதிற் காட்டிலும் எனக்கு வேறொரு காரியமுண்டோ?
வர வேண்டும் பெண்களனைவரும் வந்தபின் புறப்படலாமென்று கிடக்கிறேனத்தனை;
எல்லாப் பெண்களும் வந்து கூடினரா? கண்டு கூறுமின்’ என்ன அதுகேட்ட

இவர்கள், ‘க்ருஷ்ண விரஹத்தினால் துவண்ட பெண்களெல்லோரும் உன்னைக் காண்கைக்காக
உன் மாளிகை வாசலேறப் போந்து படுகாடுகிடக்கின்றனர்;
ஆயினும் இன்னும் ஒருவரிருவர் வராதிருக்கக்கூடும் என நினைத்தியேல் வந்து கணக்கிட்டுக்கொள்’ என்றனர்.

கணக்கிட்டுக் கொள்ளுமாறு விறும்புதற்குப் பல கருத்துக்கள் கூறலாம்; –
ஒவ்வொறு பெண்ணும் அவளால் தனித்தனியே காணப்பெறுதல், பேர்சொல்லப்பெறுதல், விரல்தொட்டு எண்ணப்பெறுதல்,
ஸ்பர்ச ஸுகமநுபவிக்கப் பெறுதல், பஞ்சலங் குடிற்பெண்களாகையாலே எண்ணிமுடிக்குமளவும்
அவளைப் பிரியாதே அநுபவிக்கப் பெறுதல் – முதலிய பலபேறுகளைக் கருதினரென்க.

இவர்கள் இங்ஙனங் கூறக்கேட்ட அவள் ‘நாமனைவருங் கூடிச்செய்யவேண்டுங் காரியமேது?’ என்ன;
கண்ணபிரானது கீர்த்திமைகளைப் பாட வேணுமென்கிறார்கள், கடையிரண்டடிளால்.

(மாற்றாரை மாற்றழிக்க வல்லானை.) கண்ணபிரான், பகைவரைக் கண்டால் இன்று போய் நாளைவா’ என்ற
இராமபிரானைப் போல் ஒரு பேச்சுப்பேசான்; வெட்டொன்று துண்டிரண்டாக்கி முடித்திடுவன்.
குவலயாபீடத்தின் கொம்பை முறித்துக் கொன்று, உட்புகுந்து சாணூர முஷ்டிகாதி மல்லர்களை மடித்து,
உயர்ந்த மஞ்சத்தில் வீற்றிருந்த கஞ்சனைக் குஞ்சி பிடித்திழுத்துத் தள்ளி வதைத்து,
இப்படியாகச் செய்த சிறுச்சேவகங்கள் பலவற்றை நினைக்க.

இப்படி எதிரிகளைப் படுத்துமவன் ஆய்ச்சிகள் பக்கலில் வந்தால் அவர்களுக்குக் குழைச்சரக்காய்க்
கட்டவு மடிக்கவு மிசைந்து நிற்பானாதலால், மாயனை எனப்பட்டது.
பாடஏல், பாடேல்; தொகுத்தல்.

சைவசமய குரவர் நால்வருள் ஒருவராகிய மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தில்,

“ஒண்ணித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ?
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோ மவ்வளவுங்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேதவிழுப் பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்
தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய்.”–என்ற நான்காம் பாட்டு,
“எல்லேயிளங்கிளியே” என்னும் இப்பாட்டின் பொருள் நடையை அடியொற்றியதென்பதை இங்கு உணர்க.

(ஸ்வாபதேசம்.)
பாண் பெருமாளுக்கு அடுத்தவரும் ஸாவக நிஷ்டருமான திருமங்கையாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இவ்வாழ்வார் இரண்டு ஆய்ச்சிகளுக்குப் பரஸ்பர ஸம்வாதமாக
*மானமரு மென்னொக்கி* என்றொரு பதிகம் அருளிச்செய்தவராதலால் இவரை யுணர்த்தும் பாசுரம்
பரஸ்பர ஸம்வாத ரூபமாகவே அமைக்கப்பட்டது.

“கிளிபோல் மிழற்றி நடந்து” மென்கிளிபோல் மிக மிழற்று மென்பேதையே என்று பல பாசுரங்களில்
இவர் தம்மைக் கிளியாகச் சொல்லிக் கொண்டவராதலால் கிளியே! என்ற விளி இவர்க்குப் பொருந்தும்;
அன்றியும்,
சொல்லிற்றையே சொல்லுவது கிளியின் இயல்பு.
அதுபோல இவர் ‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற’ என்றபடி
நம்மாழ்வார் ஸ்ரீஸூக்திகளை யநுசரித்தே அருளிச் செய்பவராதலாலும் கிளியென்றது.

இரண்டாமடி திருமங்கையாழ்வாருடைய விடையளிப்பு. (வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்.)
இது கலியனை நோக்கி ஆண்டாள் கூறுமது. ‘வாசிவல்லீரிந்தரிர்! வாழ்ந்தேபோம் நீரே’ என்று நீர்
மிகக் கடினமாகப் பேச வல்லீரென்பது எனக்கு,

(பண்டே – நீர் அவதரித்துப் பாசுரம் பேசுவதற்கு முன்னமே) தெரியுங்காணும் என்றாள்.

அதுகேட்ட கலியன் வல்லீர்கள் நீங்களே
‘கொள்ளும் பயனென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்,
அள்ளிப்பறித்திட்டவன் மார்பிலெறிந்து என்னழலைத் தீர்வேனே’ என்று அற வெட்டிதாகச் சொன்ன
உன் பேச்சு கடினமா? என் பேச்சு கடினமா? நீயே பார்க்கலாம் – என்றார்.

என்றவுடனே *நண்ணாதவாளவுணர் *கண்சோர வெங்குறுதி* முதலிய திருமொழிகளில் தாம் அநுஸந்தித்த
பாகவத சேஷத்வ காஷ்டையை நினைத்து *நானே தானாயிடுக* என்றார்.

“உனக்கென்ன வேறுடையை” என்றது திருமங்கை யாழ்வார்க்கு அஸாதாரணமான
திருமடல் திவ்யப்ரபந்த வக்த்ருவத்தை யுளப்படுத்தியதாகும்.

(எல்லாரும் போந்தராரோ இத்யாதி.) கலியனுக்கு முன்னமே மற்றுமுள்ள ஆழ்வார்கள் அவதரித்து,
பன்னிருவர் என்கிற ஸங்கியை இவரோடு நிரம்பிற்று என்று தெரிவிக்கப்பட்டது.

(வல் ஆனை கொன்றானை – மாயனைப் பாட.)
ஆனையைக் கொன்ற விஷயத்தை ஒரு ஆச்சரியமாக எடுத்துப் பேசினவர் கலியன்.
“ஆவரிவை செய்தறிவார் அஞ்சன மாமலை போலே” என்ற பெரிய திருமொழி காண்க.

அடிக்கடி கலியன் வாய் வெருவுவதும் வல்லானை. கொன்ற வரலாற்றையே;
“கவள யானைகொம் பொசித்த கண்ணனென்னும்” இத்யாதிகள் காண்க.

(மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட) எம்பெருமான் தன் திறத்தில்; மாறு செய்பவர்களது செருக்கை
வெகு ஆச்சரியமாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற சரிதைகளுள் கோவர்த்தநோத்தாரண கதை மிகச் சிறந்தது.
மாறுசெய்த இந்திரனுக்கு ஒரு தீங்குமிழைக்காமலே கண்ணன் அவனது கொழுப்பை யடக்கினனிறே.
இக்கதையிலே கலியன் மிக்க வூற்றமுடையவர்;
பெரிய திருமொழியை முடிக்கும் போதும் “குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை” என்றார்;
சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தை முடிக்கும்போதும் “குன்றெடுத்த தோளினானை” என்றே தலைக் கட்டினார்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை–உங்கள் புழக்கடைத் தோட்டத்து — -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

ஆய்ச்சியர் திரளுக்கெல்லாம் தலைவியாய்,
‘நான் எல்லார்க்கும் முன்னே உணர்ந்து வந்து எல்லாரையும்
உணர்த்தக் கடவேன்’ என்று சொல்லி வைத்து,
அதனை மறந்து உறங்குவாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது–

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

பதவுரை

உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள்-உங்கள் (வீட்டுப்) புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற தடாகத்திலுள்ள
செங் கழுநீர்-செங்கழுநீர்ப் பூக்களானவை
வாய் நெகிழ்ந்து-விகஸிக்க,
ஆம்பல் வாய் கூம்பின-ஆம்பல் மலர்களின் வாய் மூடிப் போயின;
(அன்றியும்,)
செங்கல் பொடி கூறை வெண் பல் தவத்தவர்–காவிப் பொடியில் (தோய்த்த) வஸ்திரங்களையும் வெளுத்த
பற்களையுமுடையராய் தபஸ்விகளாயிருந்துள்ள ஸந்நியாஸிகள்,
தங்கள் திருக் கோயில் சங்கு இடுவான்-தமது திருக் கோயில்களைத் திறவு கோலிட்டுத் திறக்கைக்காக
போகின்றார்–போகா நின்றனர்;
எங்களை-எங்களை
முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்-முந்தி வந்து எழுப்புவதாகச் சொல்லிப் போன நங்கையே!
நாணாதாய்-(‘சொன்னபடி எழுப்ப வில்லையே!’ என்னும்) வெட்கமுமில்லாதவளே
நா உடையாய்-(இனிய பேச்சுக் பேசவல்ல) நாவைப் படைத்தவளே!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன்-சங்கையும் சக்கரத்தையும் தரியா நின்றுள்ள விசாலமான திருக் கைகளை யுடையவனும்
பங்கயக் கண்ணனை-தாமரைபோற் கண்ணனுமான கண்ண பிரானை
பாட-பாடுகைக்கு
எழுந்திராய்-எழுந்திரு;
ஏல் ஓர் எம் பாவாய்!

உணர்ந்த ஆய்ச்சிகள் எல்லாருமாகத் திரண்டு இவள் மாளிகை வாசலிலே வந்து நெடும் போதாக நாங்கள்
உன் வாசலில் வந்து நின்று துவளா நிற்க, நீ எழுந்திரா தொழிவதென்?’ என்ன;

‘பொழுது விடியவேண்டாவோ எழுந்திருக்கைக்கு? பொழுது விடிந்தமைக்கு அடையாளமென்?’ என்று அவள் கேட்க:

‘செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல்வாய் கூம்பினமை அடையாளமன்றோ?’ என்று இவர்கள் சொல்ல;

அதற்கு அவள், ‘அஹஹ! உங்கள் மயக்கமிருந்தவாறு என்கொல்!
நீங்கள் என் வாசலில் வந்த களிப்பின் மிகுதியால் உங்கள் கண்கள் அலர்ந்து,
நீங்கள் என் முகம் பெறாதொழியவே வெள்கி வெறுத்து உங்கள் வாய் மூடிப்போன்மையைச்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினதாக நீங்கள் நினைத்திட்டீர்கள்;
இது உங்களுடைய ப்ரமமே யொழிய வேறன்று’ என்ன;

அதற்கு இவர்கள், ‘பேதாய்! வாவியிற் செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல்வாய் கூம்பினமையைச் சொன்னோங்காண் நாங்கள்’ என்ன;

அதற்கு அவள், ‘இரவெல்லாம் வயலெங்குமுலாவி மொக்குகளை மலர்த்துவதும் மலர்களை
மூடுவிப்பதுமன்றோ உங்களுக்குக் காரியம்’ என்ன;

அது கேட்ட இவர்கள்’ ‘கட்டுங்காவலுமாயுள்ள தோட்டத்து வாவிகளிலிருக்கும்படியைச் சொன்னோங்காண்’ என்ன;

அதற்கு அவள், ‘அங்கும் நீங்கள் சென்றதாகத்தான் நான் சொல்லுகிறேன், என்ன;

‘நாங்கள் வந்தோமென்கைக்கு ஸம்பாவனையுமில்லாத உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியிலுள்ள படியைச் சொல்லுகிறோம்’ என்றார்கள்.

புறம்பு நின்று உட்புகுவதற்கு வழிபெறாது துவள்கின்ற இப்பெண்டிர், அவள் வீட்டுப் புழைக்கடையிற் செங்கழுநீர்
வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினபடியை அறிந்ததெங்ஙனே? ஏனில்;
மற்றுமுள்ள விடங்களிலெங்கும் அவை வாய்நெகிழ்ந்து வாய் கூம்பியிருக்கின்றமையை இவர்கள் நன்கு அறிந்துள்ளவர்களாதலால்,
இவள் வீட்டுப் புழைக்கடையிலும் அங்ஙனம் நிகழ்ந்திருக்கத் தட்டில்லை என நிச்சயித்துக் கூறுகின்றனர் என்க;
எனவே, அநுமானங்கொண்டறிந்து கூறினரென்றபடி.

இவ்வடையாளத்திற்கும் அவள் ஒரு கண்ணழிவுகூற, வேறோரடையாளங் கூறுகின்றனர்; –
(செங்கற்பொடிக்கூறை இத்தியாதி.)
திவ்யதேசங்களில் ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளித் திறவுகோல் கொடுத்துத்
திருக்காப்பு நீக்குவிக்கிற ஸம்பிரதாய முண்டாதலால் இங்ஙனே சொல்லுகிறது.

இவ்வடையாளங் கூற, உள்ளுள்ளவள் கேட்டு,
“தோழிகாள்! ‘ஸததம் கீர்த்த யந்தோமாம்’ என்றும்,
‘தெரித்தெழுதி, வாசித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது’ என்றுமுள்ள பிரமாணங்களை மறந்தீர்களோ?
பரமை காந்திகளான பாகவதர்கள் ஒருகால் பகவதாராதநம் பண்ணி மற்றைப் போது கிடந்துறங்குவரென்று நினைத்தீர்களோ?
எப்போதும் அவர்கள் பகவதாராதநத்திலேயே ஊன்றியிருப்பர்களாதலால் அவர்களுடைய பணி விடிவுக்கு அடையாளமாகாது” என்ன;

மேல் அதற்கு உத்தரமாகச் சொல்லுகிறார்கள், எங்களை என்று தொடங்கி;
நங்காய்! ‘நான் எல்லாரிலும் முன்பு உணர்ந்தெழுந்து வந்து தோழிகளையெல்லாம் உணர்த்துகிறேன்’ என்று சொல்லிச் சென்ற நீ,
இப்போது எழுந்து வந்தவர்களைமயும் மறுத்துப் பேசுவது சால அழகிதாயிருந்தது;
இஃதடங்கலும் உனது நிறைவுக்குக் குறையாமத்தனையாதலால் கடுக எழுந்துவா என்கிறார்கள்.

நாணாதாய் – நீ எழுந்து வாராதொழியிலும் ஒழிக; ‘சொன்னபடி செய்திலோமே!’ என்று நெஞ்சிற் சிறிது
வெட்கமுங்கொண்டிலையே; அம்மா! உன்னைப்போற் சுணை கெட்டவள் இவ்வுலகத்தில் வேறொருத்தியுமிலள் என்றவாறு.

உடனே நாவுடையாய்! என அன்பார விளிக்க, அதுகேட்ட அவள், ‘தோழிகாள் நீங்கள் எனக்காக மிக வருந்தினீர்கள்;
இதோ எழுந்து வருகிறேன், நான் செய்ய வேண்டிய காரியமென்ன? சொல்லுங்கள்’ என்ன;

வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையனாய்த் தாமரை போற் கண்ணனான கண்ணபிரானுடைய
கீர்த்திகளைப் பாடுதற்காக அழைக்கின்றோ மத்தனைகாண் என்கிறார்கள்.

கண்ணபிரான் திருவவதரிக்கும் போது திருவாழியுந் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகியார் அதுகண்டு அஞ்சி,
‘அப்பனே! இவ்வாயுதங்களை மறைத்துக்கொள், மறைத்துக்கொள்; எழும் பூண்டெல்லாம் அஸுரமயமாயிருக்கப் பெற்ற
இந்நிலத்தில் இவை விளங்குவதற்குரியனவல்ல’ என வேண்ட; அவன் அங்ஙனமே அவ்வாயுதங்களை
உடனே உபஸம்ஹரித்திட்டானென்று இதிஹாஸபுராணங்கள் இயம்பா நிற்க,
இவ்வாய்ச்சிகள் அக்கண்ணபிரானைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல் பொருந்துமாறென்? எனில்;

கண்ணபிரான் அவ்வாயுதங்களை மறைத்திட்டது உகவாத பகைவர்கட்காகவே யாதலால்
அவர்களை யொழிந்த மற்றை அன்பர்கட்குத் தோற்றத்தட்டில்லை யெனக்கொள்க;

“நெய்த்தலை நேமியுஞ் சங்கும் நிலாவிய, கைத்தலங்கள் வந்து காணீரே” என்று யசோதைப் பிராட்டி
ஆய்ப்பாடியிற் பெண்டுகளை அழைத்துக் காட்டின பாசுரமுங் காண்க.

(ஸ்வாபதேசம்)
தொண்டரடிப் பொடிகளுக்கு அடுத்த திருப்பாணாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், நங்காய்! நாணாதாய்! நாவுடையாய்! என்ற மூன்று விளிகளும் பாண் பெருமாளுக்கு நன்கு பொருந்தும்,

நங்கை யென்பது குண பூர்த்தியைச் சொல்லுகிறது.
லோக ஸாரங்க மஹாமுனிகள் வந்து என் தோளின்மீது ஏறிக்கொள்ளுமென்ன,
அத்யந்த பார தந்திரிய ஸ்வரூபத்தை நினைத்து அதற்கு உடன் பட்டமை குண பூர்த்தி,

அங்ஙனம் அந்தணர் தலைவரது தோளின்மீது ஏறியீருக்கச்செய்தேயும் சிறிதும் செருக்குக் கொள்ளாமல்
‘அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன் என்றே பேசினவராதலால் நாணாதவர். (நாண் – அஹங்காரம்)

‘பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்’ என்று தேசிகன் பணித்தபடி
ஸகல வேதார்த்தங்களையும் பத்துப் பாசுரத்திலே அடக்கிப் பேசின பரம சதுரராதலால் நாவுடைடயார்

“கையினார் சுரிசங்கனலாழியர்” என்று சங்கொடு சக்கர மேந்தின வழகை யநுபவித்தமை பற்றியும்
‘கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்’ என்று
கண்ணழகில் ஈடுபட்டும் பேசினமை பற்றியும் ‘சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாட என்றாள்.

இவ்வாழ்வார் தமது சாதி நிலைமைக்கு ஏற்ப வாழ்ந்த விடத்தைக்கருதி உங்கள் புழைக்கடை யித்யாதி அருளிச் செய்யப்பட்டது.

இவரது சரிதையில் ஸம்பந்தப்பட்ட லோகஸாரங்க மஹாமுனிகளின் தன்மையைக் காட்டுவது போலுள்ளது
செங்கற் பொடிக்கூறை யித்யாதி.

‘எங்களை முன்ன மெழுப்புவான் வாய் பேசும் நங்காய்’ என்பதில் ஒரு அழகிய பொருள் தொனிக்கும்.
(அதாவது-) எழுப்புவதாவது – தூக்கிக் கொள்வது. எங்களை என்றது பாகவதர்களை யென்றபடி.
பாண்பெருமாளே! உம்முடைய முதற் பாசுரத்தில் ‘அடியார்க் கென்னையாட்படுத்தவிமலன்’ என்ற
சொல் நயத்தை நோக்குங்கால் பாகவதர்களை நீர் தோளில் தூக்கிக் கொண்டாடுபவர் போலத் தெரிகின்றது.
உமது கதையோ அப்படியில்லை. மஹாபாகவதரான லோகஸாரங்க மஹா முனியின் தோளின் மீதேறி நீர் இருந்ததாகவுள்ளது.
ஆகவே, முந்துற முன்னம் பாகவத சேஷத்வத்தை நீர் சொல்லிக் கொண்டது வாய்பேசு மத்தனையே போலும் என்று விநோதமாகக் கூறுகிறபடி.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை–கனைத்து இளம் கற்றெருமை– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

நாட்டிலிருந்து போதோடு காட்டிலிருந்த போதோடு வாசியற பெருமாளைப் பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு
திரியும் இளைய பெருமாளைப் போன்று, கண்ண பிரானை யன்றி மற்றொருவரையும் அறியாமல்
என்று மொக்க அவனையே பின் தொடர்ந்து
அவன் பக்கலில் மிகவும் பரிவு பூண்டிருப்பா னொருவனுடைய தங்கையாய்ச்
சீர்மை பெற்றிருப்பாளொரு ஆய்ப் பெண்ணை உணர்த்தும் பாசுரம், இது–

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

இள கன்று எருமை-இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை
கனைத்து–(பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக் கொண்டு
கன்றுக்கு இரங்கி–(தன்) கன்றின் மீது இரக்கமுற்று
நினைத்து–(கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)
முலை வழியே நின்று பால் சோர-முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக, (அப்பெருக்கினால்)
இல்லம்-வீட்டை
நனைத்து – (முழுவதும்) ஈரமாக்கி
சேறு ஆக்கும் நல் செல்வன்-சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த செல்வத்தை யுடையவனுடைய
தங்காய்-தங்கையானவளே!
பனி-பனியானது
தலை வீழ-எங்கள் தலையிலே விழும்படி
நின் வாசல் கடை பற்றி-உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு,
சினத்தினால்-(பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால்
தென் இலங்கை கோமானை-தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை
செற்ற-கொன்றொழித்தவனும்
மனத்துக்கு இனியானை–சிந்தனை இனியனுமான இராம பிரானை
பாடவும்-(நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும்
நீ-நீ
வாய் திறவாய்-வாய்திறந்து பேசுகிறாயில்லை,
இனித் தான்-எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும்
எழுந்திராய்-எழுந்திரு;
ஈது என்ன பேர் உறக்கம்-இஃது என்ன ஓயாத தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும்-(இச்சேரியிலுள்ள) எல்லா வீட்டுக் காரர்களாலும்
அறிந்து-(நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிறவிது) அறியப்பட்டதாயிற்று:

நெடும் போதாக நின் வாசற் கடையை நாங்கள் பற்றிக் கொண்டு,
முன் பொலா விராவணன்றன் முதுமாதிளிலங்கை செற்ற சீரிய சேவகத்தை எடுத்துப் பாடா நின்றாலும்
நீ வாய் திறவாதே கிடந்துறங்குகின்றாய்; இங்ஙனும் ஓருறக்கங்கூடுமோ?
உன்னைக் காணாதே நாங்கள் அலமந்து தளர்ந்திருக்க மாற்றை நீ அறிந்து வைத்தும்
இங்ஙனுறங்குகை உரியதன்று, இனிக் கடுக உணர்ந்து வாராய், என்கிறார்கள்.

இதில் முதலிரண்டை அடிகளால் இவள் தமையனுடைய செல்வத்தின் சிறப்புக் கூறப்படுகின்றது.
அவன் அநவரதம் கண்ண பிரானுடன் கூடித் திரிபவனாதலால் கறவைகளைக் காலந் தவறாது கறக்கப் பெறான்;
அக் கறவைகள் வகுத்த காலத்திற் கறக்கப் பெறாமையாலே முலை கடுத்து ‘கன்று என்படுகிறதோ!’ என்று
வாசலிலே நின்று குமுறி, தூரத்திற் கட்டப் பட்டிரா நின்றுள்ள கன்றின் மீது தனது பாவ பந்தத்தைச் செலுத்தி,
பாவநா ப்ரகர்ஷத்தாலே, கன்று முலையின் வாய் வைத்ததாகக் கொண்டு, கை வழியாகவு மன்றி,
கன்றின் வாய் வழியாகவு மன்றி முலை வழியே பால் சொரியா நிற்கும்;
அந்தப் பாற் பெருக்கினால் வீடு முழுவதும் வெள்ளமானபடியா தொன்றுண்டு –
அதனைச் செல்வமென்றிட்டு, இங்ஙனொத்த செல்வமுடையானுக்குத் தங்கையாகப் பிறந்தவளே! என்று அவளை விளிக்கின்றனர்.

கனைத்தல் – குமுறுதல்;
இடைவீடின்றித் தானஞ் செய்தலையே தொழிலாக வுடைய உதார சிகாமணிகள் ஒரு கணப் பொழுது
கொடாதொழியில் மனந்தளும்புமாறு போலவும்,
எம்பெருமான் அடியார் காரியங்களைச் செவ்வனே செய்யப் பெறாதொழியில்
“ருணம் ப்ரவ் ருத்தமிவ மே ஹ்ருதயாந்நாபஸர்ப்பதி” என்று திருவுள்ளந் தளும்புமாறு போலவும்,
பசுக்கள் கிரமமான காலத்திற் கறக்கப் பெறாதொழியில் முலைக் கடுப்புற்றுக் கனைத்தல் இயல்பென்க.

நின்று பால் சோர –
முகில் மழை பொழிய நினைத்தால் கடலிற்புக்கு நீரை முகந்து கொண்டு வந்து பின்பு பொழிய வேணும்;
இக்கறவைகட்கு அவ்வருத்த மில்லை, நினைவே ஊற்றாகப் பால் சுரக்குமாதலால்;
அந் நினைவு மாறாமையால் திருமலையில் திரு அருவிகள் போன்று பால் மாறாதே பெருகுமென்க.
“பகவத் விஷயப் பொருள் கூற வேணும்” என்று ஒருவர் கேளாதொழியினும் கற்றுணர்ந்த ரஸிகர்
தமது செல்லாமையாலே தாமே பகவத் விஷயார்த்தங்களை எடுத்துரைக்குமாறு போலவும்,

அர்ஜுநன் கேளாதேயிருக்கக் கண்ணபிரான் கீதையில்
“பூய ஏவ மஹா பாஹோ! ச்ருணு மே பரமம் வச:” என்று கூறத்தொடங்கினாற்போலவு மாயிற்றுக் கறவைகளின்படி.

மேல் நான்காவது முதல் இரண்டரை அடிகளால் இவர்கள் தாங்கள் செய்யும் படியைக் கூறுகின்றனர்;
கீழ் “ஆழிமழைக்கண்ணா!” என்ற பாட்டில் பர்ஜந்ய தேவதைக்கு அருளிப்பாடிட்டு மழைபெய்ய நியமித்தார்களாதலால்,
அக்கட்டளையின்படி அவன் பெய்யும் மழை தலையிலே விழுமாறு இவளது வீட்டு வாசற்கணையத்தை
அவலம் பித்துக் கொண்டு நிற்குமாற்றைக் கூறும், நான்காமடி.

இராமபிரான் இராவனனோடு போர்புரியும் போது அவன் மிகவும் எளிவரவு பட்டமையைக்கண்டு இரக்கமுற்று,
“நிசாசரர் கோமானே! போரில் மிகவும் வருத்தமுற்றாய்; ஆதலின் இன்று இருப்பிடஞ்சென்று சிறிது தேற்றமடைந்து
நாளை போர்க்கு வா, அப்போது என் வலியைக் காண்பாய்” என்று நியமநம் தந்து தானே போகவிட்டருளினமை
முதலிய பல குணங்களினால் ஈடுபடுத்துந்தரமுடையனாதல் பற்றி “மனத்துக் கினியானை” என அடைமொழி கொடுக்கப்பட்டது.

கண்ணபிரான் பெண்களைப் படுத்தும்பாடுகளை நினைத்தால்
“வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே” என்னும்படியிருத்தலால்,
அவன் மனத்துக்கு இனியனல்லன் போலும்.

இனித்தானெழுந்திராய் –
எங்களுடைய ஆர்த்தியைக் கண்டு எழுந்திரா தொழியில் ஒழி;
மனத்துக்கினியானுடைய பாட்டுக்களைக் கேட்கவாகிலும் உணருதி என்றபடி.

ஈதென்ன பேருறக்கம் –
உறக்கம் இருவகைப்படும் – லௌகிகமும் வைதிகமும்.
தமோ குணத்தின் பிராசுர்யத்தினால் உறங்குகின்ற ஸம்ஸாரிகளின் உறக்கம் – லௌகிகம்.
அனைத்துலகங்களினுடையவும் காவலைச் சிந்தனை செய்து கொண்டு உறங்குவான்
போல் யோகு செய்யும் எம்பெருமானுடைய நித்திரை வைதிகம்.
இவ்விரு வகையிலுஞ் சேராதே யிருப்பதொரு விலக்ஷண நித்திரையாயிராநின்றது உன் உறக்கம் என்கிறார்களென்க.

“அனைத்தில்லத்தாருமறிந்து” என்பதற்கு இரண்டு வகையாகக் கருத்துரைக்கலாம்;
நீ பரஸம்ருத்தியையே பிரயோஜநமாகவுடையையாதலால், ‘இப்பாடியிலுள்ள பெண்களில் ஒருத்தி தப்பாமல்
அனைத்தில்லத்தாரும் உணர்ந்து வரவேண்டும்’ என நினைத்துக்கிடக்கிறாயாகில்,
அங்ஙனமே அனைத்தில்லத்தாரும் அறிந்து வந்தாயிற்று; இனி நீ உணர்ந்துவா என்கிறார்கள், என்பது ஒரு கருத்து;

பாடியிலுள்ள பெண்களெல்லாருந் திரண்டு வந்து உன் மாளிகை வாசலில் நின்று கூப்பிட,
நீ சிறிது பொழுது உணராமற் கிடக்க, இதனால் உனக்கு வரும் மதிப்பை அனைவரும் அறிய வேண்டுமென்று கிடக்கிறாயாகில்,
அங்ஙனும் அறிந்தாயிற்று; இனி உணர்ந்துவா, என்கிறார்கள் என்பது மற்றோர் கருத்து.
இவ்விரண்டினு ள் பின்னருரைத்த கருத்து சிறக்குமென்க.

(ஸ்வாபதேசம்)
பூதத்தாழ்வார்க்கு அடுத்து முந்தினவரான பொய்கை யாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
தங்காய்! என்ற விளி இவர்க்கு நன்கு பொருந்தும்
உலகில் தங்கையென்று ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் தமக்கையென்று மூதேவியையும் வழங்குவர்கள்.
‘சேட்டை தம்மடி யகத்து’ என்ற திருமலைப் பாசுரத்தில், தமக்கைக்கு வாசகமான ஜ்யேஷ்டா என்ற சொல்லால்
மூதேவியைக் குறித்தமை காண்க.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாமரை மலரிற் பிறந்தவள்.
‘வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தாள் வாழியே’ என்கிறபடியே பொய்கை யாழ்வாரும் தாமரைப் பூவில் தோன்றியவர்
இந்த வொற்றுமைநயம் பற்றி தங்காய்! என விளிக்கத் தகுதியுடையாரிவ் வாழ்வார்.

“நனைத் தில்லஞ் சேறாக்கும்” என்ற விசேடணமும் இவர்க்கு வெகு நேர்த்தியாகப் பொருந்தும்.
ராவணவதாநந்தரம் திருவயோத்திக்கு மீண்டு எழுந்தருளா நின்ற பெருமாளை நோக்கி பரத்வாஜ மஹர்ஷி
“பங்க திக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதிக்ஷதே” என்றார்.
இங்கு பரதாழ்வான் சேறு பூசப் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டதன் கருத்து யாது?
இரவும் பகலும் நிச்சலும் அழுதழுது நினைத்தில்லம் சேறாக்கினன் என்றபடி.
“வண்பொன்னின் பேராறு போல் வருங் கண்ண நீர் கொண்டு
அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர்” என்றார் குலசேகரப் பெருமாளும்.
அவ் வண்ணமாகவே பொய்கை யாழ்வாரும்
“பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று தாமே பேசினபடியே
அழுதவராதலால் நினைத்தில்லஞ் சேறாக்கின ரென்க.

(கனைத்து)
முதன் முதலாகப் பேசத் தொடங்கும் போது கனைப்பது இயல்பு.
பொய்கையார்க்கு முன்னம் பேசினவர்கள் யாருமில்லை.
இவரே முதன் முதலாகப் பேசத் தொடங்கினவரென்பது இவ்வினை யெச்சத்தினால் தோற்றுவிக்கப்படும்.

(இளங்கற்றெருமை) எருமை என்றால் மஹிஷீ;
லக்ஷித லக்ஷணாக்ரமத்தால் தேவ தேவ திவ்ய மஹிஷீ என்றவாறு.
எம்பெருமானுக்கு திவ்ய மஹிஷியான பிராட்டியை யொப்பவர் இவ்வாழ்வார் என்பது ஸூசகம்.
“இளங் கன்றுகளையுடைய” என்று விசேஷணமிட்டதனால், மற்றை யாழ்வார்களனைவரும் இவர்க்கு
வத்ஸ ஸ்தாநீயாகளாய் இவர் மாத்ரு ஸ்தாநீயர் என்று காட்டினபடி. ஆழ்வார்களுள் முதல்வரிறே யிவர்.

(கன்றுக்கிரங்கி) இவர் ஸ்ரீ ஸூக்தி யருளிச் செய்யத் தொடங்கினது கன்றுகளான நம் போல்வார்
பக்கலிலுள்ள பரம க்ருபையா லென்கை.

(நினைத்து முலை வழியே நின்று பால் சோர.)
பகவத் குணங்களை நினைத்தவாறே அந்த நினைவு தானே ஊற்றாகப் பால் போன்ற ஸ்ரீ ஸூக்திகள் பெருகப்புக்கன என்ற படி.

(பனித்தலை வீழ நின்வாசல் கடைபற்றி)
இவர் பொய்கையில் தோன்றினவராதலால் இவரது வாசற்கடையைப் பற்றுவார்க்குப் பணித்தலை வீழ ப்ராப்தமே யாகுமிறே.

(சினத்தினால் இத்யாதி.)
இது ஸ்ரீராம குண கீர்த்தனம். மஹர்ஷிகளின் ஞானக் கண்ணுக்கும் இலக்காகாத வொரு ஸ்ரீராம சரிதம்
இவ்வாழ்வாருடைய அகக்கண்ணுக்கு இலக்கானமை
“பூமேய மாதவத் தோன்தாள் பணிந்த வாளரக்கன் நீண்முடியைப் பாதமத்தா லெண்ணினான் பண்பு.” என்ற
இவரது பாசுரத்திற் பொலியும்.
அதில் “நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே!” என்றதற்குப்பொருந்த “மனத்துக் கினியானை” என்றாள். (

இனித் தானெழுந்திராய்) “பழுதே பல பகலும்” என்கிற பாசுரம் பேசின பிறகுங்கூட உறங்கலாமோ? என்கை.

முழுக்ஷப்படியில் ‘பழுதே பல பகலும் போயின வென்று இறந்த நாளைக்குக் கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை”
என்ற ஸ்ரீ ஸூக்தியும் இங்கு அநுஸந்தேயம்.

(அனைத்தில்லத்தாரு மறிந்து) “அறியுமுலகெல்லாம் யானேயு மல்லேன்” என்ற இவ்வாழ்வாரது பாசுரத்தை
அழகாக நினைப்பூட்டுகிறபடி காண்மின்.

இப்பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை யெல்லாம் உணர்த்திற்றாயிற்று.
“ஆழ்வார்கள் பன்னிருவர்” என்றுமுள்ள ஸம்ப்ர தாயப்படிக்கு ஸ்ரீ மதுர கவிகளும் ஆண்டாளும்
ஆழ்வார் கோஷ்டியில் சேராதவர்களாதலால் இவ்விருவரையும் உணர்த்துவதும் இப்பாட்டிலேயே அறியக் கிடக்கிறது.
எங்ஙனே யென்னில்;
நற்செல்வன் தங்காய்! என்றது நற்செல்வன் தங்கையே! என்று பொருள்படுதலால்
நற்செல்வன் தன்னுடைய கையாக இருப்பவனே! என்றபடியாகும்.
இங்கு நற்செல்வ னென்பது நம்மாழ்வாரை, அவர் திருவாய்மொழி அருளிச் செய்கையில்
மதுரகவிகள் அவருடைய சையின் ஸ்தாநீயராயிருந்து பட்டோலை கொண்டாராதலால் இந்த விளி மதுர கவிகட்குப் பொருந்தும்.

இனி நற்செல்வனென்று எம்பெருமானாரைச் சொல்லிற்றாகி
அவருடைய தங்கையென்று ஆண்டாளையுஞ் சொல்லக் குறையில்லை
“கோதற்ற ஞானத் திருப்பாவை பாடியபாவை தங்கை” என்றும்,
“பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்று முள்ளவை காண்க.
ஆண்டாள் தன்னைத் தானே உணர்த்திக் கொள்ளுகை பொருந்துமோவென்று விரஸமாக வினவுவார்க்கு
நாம் விடையளிக்க வல்லோமல்லோம்.
சொற்சுவை அமைந்திருக்கு மழகை அநுபவித்துப் போருகிறோ மத்தனை.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை–கற்றுக் கறவைக் கணங்கள்– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

கண்ணபிரான் ஊருக்காக ஒரு பிள்ளையாய் அனைவராலுங் கொண்டாடப்பட்டு வளர்ந்தருளுமாறுபோல,
ஊருக்காக ஒரு பெண் பிள்ளையாயிருப்பாளாய்,
கணவனோடு கலவி செய்கைக்குப் பாங்கான பருவமுடையளாய்,
அவனைப் பெறுதற்கு நானோ நோற்பேன்?
வேணுமாகில் அவன்றானே நோற்று வருகிறான் என்று கிடக்கிறாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது–

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம்
பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பதவுரை

கன்று கறவை–கன்றாகிய பசுக்களின்னுடைய
பல கணங்கள்–பல திரள்களை
கறந்து–கறப்பவர்களும்
செற்றார்–சத்துருக்களினுடைய
திறல் அழிய–வலி அழியும்படி
சென்று–(தாமே படையெடுத்துச்)சென்று
செரு செய்யும்-போர் செய்யுமவர்களும்
குற்றம் ஒன்று இல்லாத-ஒருவகைக் குற்றமும் அற்றவர்களுமான
கோவலர் தம்-கோபாலர்களுடைய (குடியிற் பிறந்த)
பொன் கொடியே-பொன் கொடி போன்றவளே!
புற்று அரவு அல் குல் புனமயிலே–புற்றிலிருக்கிற பாம்பின் படம் போன்ற அல்குலையும் காட்டில்
(இஷ்டப்படி திரிகிற) மயின் போன்ற சாயலையுமுடையவளே!
செல்வம் பெண்டாட்டி-செல்வமுள்ள பெண் பிள்ளாய்!
போதராய்–(எழுந்து) வருவாயாக.
சுற்றத்து தோழிமார் எல்லாரும்-பந்து வர்க்கத்திற் சேர்ந்தவர்களும் தோழிமார்களுமாகிய எல்லாரும்
வந்து-(திரண்டு) வந்து
நின் முற்றம் புகுந்து-உனது (திரு மாளிகையின்) முற்றத் தேறப் புகுந்து
முகில் வண்ணன் பேர் பாட–கார் மேக வண்ணனான கண்ணபிரானுடைய திருநாமங்களைப் பாடச் செய்தேயும்
நீ-(பேருறக்கமுடைய) நீ
சிற்றாது-சலியாமலும்
பேசாது-(ஒன்றும்) பேசாமலும்
உறங்கும் பொருள் எற்றுற்கு-உறங்குவது என்ன பிரயோஜனத்திற்காகவோ? (அறியோம்)
ஏல் ஓர் எம் பாவாய்-

உனது உறவுமுறையார் தோழிமார் என்ற வர்க்கங்களில் ஒருவர் தப்பாமல் அனைவருந் திரண்டு வந்து
எம்பெருமான் திரு நாமங்களைப் பாடாநிற்க, நீ உடம்பிலும் அசைவின்றி வாயிலும் அசைவின்றி
இங்ஙனே கிடந்துறங்குவது என்ன பயனைக் கருதியோ என்கின்றனர்.
முதலிரண்டடிகள் கோவலர்க்கு அடைமொழி.

ராஜகுமாரன் முலை சரிந்த பெண்டிரைப் பாராதவாறு போலக் கண்ணபிரான் கன்றுகளை யன்றிப்
பசுக்களைப் பெரும் பான்மையாகக் காணக் கடவனல்லனாதலால்,
இவன் தனது கர ஸ்பர்சத்தினாற் பசுக்களையுங் கன்றாக்கி யருள்வனென்க.

கணங்கள் பல என்றமையால் கறவைகள் தனித் தனியே எண்ண முடியாமையே யன்றியே
அவற்றின் திரள்களும் எண்ண முடியா வென்பது தோற்றும்.

எம்பெருமானது மேன்மையைப் பொறாதார் எம்பெருமானடியார்க்குப் பகைவர்
எம்பெருமானடியாரின் மேன்மையைப் பொறாதார் எம்பெருமானுக்குப் பகைவர்.
இவ் விருவகைப் பகைமையுங் கம்ஸனுக்கு உண்டென்பது,
தீய புந்திக் கஞ்சனுன்மேற்சினமுடையன் என்ற பெரியாழ்வார் திருமொழியினாலும்,
சாது சனத்தை நலியுங்கஞ்சனை என்ற திருவாய்மொழியினாலும் விளங்கும்.

கோவலர் தம் பொற்கொடியே என்ற விளியினால்,
ஜநக ராஜன் திருமகள் ஜநகா நாம் குலே கீர்த்திமாரிஷ்யதி மேஸுதா என்றபடி
ஜநககுலத்திற்குப்புகழ் படைத்தாற்போல,
இவள் கோவலர் குடியை விளக்கஞ்செய்பவளென்பதும்,
ஒரு கொள் கொம்போடு அணைந்தன்றி நிற்கமாட்டாத கொடி போல
ஒரு கணவனோடு புணர்ந்தன்றித் தரிக்க மாட்டாதவளென்பதும் போதருமென்க.
இத்தால், எங்களோடு கூடி, உனக்கு; கொள் கொம்பான திருஷ்ணனைச் சேரப்பாராய் என உணர்த்தியவாறாமென்க.

புற்று அரவு அல்குல் –
புறம்பு புறப்பட்டுத் திரிந்து புழுதிபடைத்த உடம்புடைத்தாயிருக்கை யன்றியே
தன் இருப்பிடந் தன்னிலே கிடக்கும் அரவரசின் படமுங்கழுத்தும் போல
ஒளியையும் அகலத்தையுமுடைய நிதம்பத்தை யுடையவளே! என்றபடி.

இவர்கள் தானும் பெண்டிராயிருக்கச் செய்தே இவளுடைய அல்குலை வருணித்தது நெஞ்சினால் ஆண்மை பூண்டமையாலென்க.
பெண்டிருமாண்மை வெஃகிப்பேதுறு முலையினாள் (சீவக சிந்தாமணி) என்றது காண்க.

இனி, கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய், (கம்பராமாயணம்.)
வராக வாமனனே அரங்காவட்ட நேமிவல வாராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதரஞ் செய்வேன் (திருவரங்கத்தந்தாதி.)
என்பவாதலால், ஆண் பெண்ணாகு மிடமு முண்டென்று உணர்க.

பும்ஸாம் த்ருஷ்டி சித்நாபஹாரிணம் என்று பெருமாள் ஆண்களையும் பெண்ணுடை உடுக்கப் பண்ணுமாபோலே
பெண்களை ஆண்களாக்குகிறது இவளுடைய அல்குல் என்ற ஆறாயிரப்படி அருளிச்செயல் இங்கு அறியற்பாலது.

புற்றுக்குள்ளே யடங்கின பாம்புபோலே நுட்பமான இடையை யுடையவளே! என்னவுமாம்.

நான் புறப்பட மற்றெல்லாரும் வந்தாரோ? என்று அவள் கேட்க; கூறுகின்றனர்.
(சுற்றத்துத் தோழிமார் இத்தியாதி.)
சுற்றத்தாரும் தோழிமாருமென்றாவது, சுற்றத்தாரான தோழிமார் என்றாவது உரைக்கலாம்.

புனமயிலே! முகில் வண்ணன் பேர்பாட, நீ எற்றுக்குறங்கும் பொருள் என இயைத்து,
மயில் முகிலின் பேரைக் கேட்டவுடனே களித்துக் கூத்தாட வேண்டியிருக்க,
நீ இங்ஙனே கிடந்துறங்குவது என்றிய? என க்ஷேபிக்கின்றனரெனக் கருத்துக் கூறுக.

சிற்றாதே :- சிற்றல்-சிதறுதல்; அங்கங்களை அசைத்தலுஞ் செய்யாமல் என்றபடி.

(ஸ்வாபதேசம்)
பேயார்க்கு அடுத்த முந்தினவரான பூதத்தாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! என்ற விளி பூதத்தார்க்கு நன்கு பொருந்தும்.
பல பொருள்களை யுடையதான கோ என்னும் சொல் கோதா என்ற விடத்திற்போல ஸ்ரீ ஸூக்தியைச் சொல்கிறதிங்கு.
கோவலர் – ஸ்ரீ ஸூக்திகளை யருளவல்லவர்களான ஆழ்வார்கள்.
குற்றமொன்றில்லாத என்ற விசேடணம் முதலாழ்வார்கள் மூவர்க்கே பொருந்தும்;
யோநிஜத்வமாகிற வொருகுற்றம் மற்றையாழ்வார்களுக்குண்டு;
அக்குற்ற மொன்றும் இல்லாத கோவலர் முதலாழ்வார்கள்

அவர்களுள் பொற்கொடியே!
கோல் தேடி யோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம் என்கிற பாசுரத்தினால்
தம்மை ஒரு கொடியாகச் சொல்லிக்கொண்டவர் பூதத்தாழ்வாரே யாவர்.
எம்பெருமானாகிற உபத்நத்தைத் தேடிச் செல்லுகின்ற கொடி போல்வேன் நான் என்றவர் இவரேயிறே.
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்பது முதலாழ்வார் மூவர்க்கும் பொதுவான வாசகம்.

கற்றுக் கறவை கன்றாகிய கறவை. (கறவை யென்பதனால் ஸ்ரீ ஸூக்தி விவஸ்த்ம்)
மற்றை யாழ்வார்கள் பெரிய பாசுரங்கைள யளித்தார்கள்.
முதலாழ்வார்கள் அங்ஙனன்றிக்கே வெண்பாவகிய மிகச் சிறிய பாசுரங்களை யளித்தார்கள்.
பொய்கையாழ்வாரருளிய திருவந்தாதி கறவைக் கணம்;
பூதத்தாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள்;
பேயாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள் பல.
க்ரமேண ஏகவசந த்விவசந பஹுவசநங்கள் இணங்கின அழகு காண்க

(செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்)
தேசமெங்கும் திரிந்து பகவத விரோதிகளை நிரஸிக்க வேணுமென்கிற அர்த்தத்தை
எண்டிசையும் பேர்த்தகரம் நான்குடை யான் பேரோதிப் பேதைகாள்!
தீர்த்தகரராமின திரிந்து என்ற பாசுரத்தினால் வெளியிட்டவர் இவ்வாழ்வாரே.

புற்றரவல்குல் என்பது இடையழகை வருணிப்பதாகும்.
ஸ்வாப தேசத்தில் இடையழகாவது பக்தியின் பெருமை.
ஞானம் பக்தி விரக்தி என்ற மூன்றில் பக்தியானது இடைப்பட்டதாதலால் இடையழகென்பது பக்தியின் அழகேயாகும்.
இவ்வாழ்வார் தம்முடைய திருந்தாதியை முடிக்குமிடத்து
என்றனளவன்றால் யானுடையவன்பு என்றே முடித்தார். இதனால் இவரது இடையழகு நன்கு வெளிப்பட்டதாயிற்று.
அன்பிலே தொடங்கி அன்பிலே தலைக்காட்டினார்.

புனமயிலே! என்ற விளியும் இவர்க்கு அழகாகப் பொருந்தும்.
பொழிலிடத்தே வாழும் மயில்; இவ்வாழ்வார் தோன்றிய தலமோ திருக்கடல்மல்லை;
அதனைப் பாடின கலியன் கடி பொழில் சூழ்கடன் மல்லை என்றே பன்முறையும் பாடினர்.
மயில் மேகத்தைக் காண்பதிலே மிகக் குதூஹல முடைத்தாதலால்,
மேகம் நீர்பருக வருமிடமான கடற் கரையிலே மயில்கள் மகிழ்ந்து நிற்கும்.
இவ்வாழ்வார் நின்றவிடமும் கடற கரையிலேயிறே.

(சுற்றுத்துத் தோழிமாரித்யாதி.) இவர்க்குப் பொய்கையாரும் பேயாரும் சுற்றத்தவர்கள்;
மற்றையாழ்வார்கள் தோழிமார்.

(முகில் வண்ணன் பேர் பாட.)
முந்துற முன்னம் முகில் வண்ணன் பேர் பாடினவர் இவ்வாழ்வாரேயாவர்;
உலகேழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் ஏத்துமென்னெஞ்சு என்ற இவர் பாசுரம் காண்க
புன மயில் முகில் வண்ணனைத் தானே பாடும்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை–நோற்றுச் சுவர்க்கம்– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
மஹாநுபாவரை உணர்த்துதல், இப் பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்–

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பதவுரை

நோற்று–நோன்பு நோற்று
சுவர்க்கம் புகுகின்ற–ஸுகாநுபவம் பண்ணா நின்ற
அம்மனாய்–அம்மே!
வாசல் திறவாதார்–வாசற்கதவைத் திறவாதவர்கள்
மாற்றமும் தாராரோ–ஒருவாய்ச் சொல்லுங் கொடுக்க மாட்டாரோ?
நாற்றத் துழாய் முடி–நறு நாற்றம் வீசா நின்றுள்ள திருத் துழாய் மாலையை அணிந்துள்ள திரு முடியையுடைய
நாராயணன்–நாராயணனும்,
நம்மால் போற்ற பறை தரும்–நம்மால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றுப் புருஷார்த்தங்களைத் தந்தருள்பவனும்
புண்ணியனால்–தர்மமே வடிவு கொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால்
பண்டு ஒரு நாள்–முன் ஒரு காலத்திலே
கூற்றத்தின் வாய் வீழ்ந்த–யமன் வாயில் (இரையாக) விழுந்தொழிந்த
கும்பகரணனும்–கும்பகர்ணனும்
தோற்று–தோல்வி யடைந்து
பெருந்துயில்–(தனது) பேருறக்கத்தை
உனக்கே தான் தந்தானோ–உனக்கே தான் கொடுத்து விட்டானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்–மிகவும் உறக்கமுடையவளே!
அரும் கலமே–பெறுதற்கரிய ஆபரணம் போன்றவளே!
தேற்றம் ஆய் வந்து திற–தெளிந்து வந்து, (கதவைத்) திறந்திடு;
ஏல் ஓர் எம் பாவாய்,

எல்லாருமுடன் கூடிக் குளிக்கக் கடவோம், உடன் கூடி நோன்பு நோற்கக் கடவோம்.
உடன் கூடிக் கிருஷ்ணாநுபவம் பண்ணக் கடவோம்’ என்று சொல்லி வைத்து,
நாங்கள் உணர்த்தவும் உணராதே கிடந்துறங்கதியேலும்,
‘இப்போது கதவைத் திறக்க அவகாசமில்லை’ என்றொரு வாய்ப் பேச்சுத் தான் சொன்னாலாகாதோ?
இங்ஙனொத்த பேருறக்கம் உனக்கு வந்த வழி யாது கொல்? பண்டு இராம பிரானது அம்புக்கு இலக்காகி
மாண்டொழிந்த கும்பகரணன் தனது உறக்கத்தை உனக்குத் தந்தொழிந்தானோதான்? ஆ! சால நன்று இது;
இப் பேருறக்கம் உனக்கு ஆகாது காண்; நீ ஒருத்தி எங்கள் திரளில் வந்து கூடாமையால்
இத் திரள் இருள் மூடிக்கிடக்குமாற்றை வந்து காணாய் தோழி! என்கிறார்கள்.

முதலடிக்கு மூன்று வகையாகக் கருத்துரைக்கலாம் :-
கண்ண பிரானுடைய திருமாளிகைக்கு அடுத்த திருமாளிகையாய் இடைச் சுவரற்றிருப்பதனால்,
கண்ண பிரானோடு இடைவீடின்றிச் சுகாநுபவம் பண்ணும்படி நீ நோற்ற நோன்பு என கொல்?
முன் பிறவியில் நோற்ற நோன்பின் பயனாக இப்போது கிருஷ்ணாநுபவ ஸுகம் பெற்று நிற்றி என்கிறாளென்பது முதற் கருத்து.

பொழுது விடிந்த பின்னரும் உணாந்தெழுந்து வாராமையினால், அம்மே! இங்ஙன் கிடந்துறங்கா நின்ற நீயோ
நோன்பு நோற்றச் சுகாநுபவம் பண்ணப் போகிறாய்?
நினைவுக்கும் செயலுக்கும் பொருத்தம் அழகிதாயிருந்தது! என ஏசியவாறாகக் கொள்ளுதல், இரண்டாங்கருத்து.

எல்லாருமொக்கக்கூடி நோன்பு நோற்றுக் கிருஷ்ணாநுபஸுகம் பெறுவோம்’ என்று சொல்லி வைத்து,
நீ தனியே நோன்பு நோற்றுச் சுகாநுபவம் பண்ணுவது என்ன தருமம்! என வெறுக்கின்றவாறாகக் கொள்ளுதல், மூன்றாங் கருத்து.

இவள் நோற்ற நோன்பாவது –
ஸித்த ஸதாந ஸ்வீகாரமென்க.
க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ்தத்வதோயே தேஷாம் ராஜந்! ஸர்வயஜ்ஞாஸ் ஸமாப்தாழூவிது- என்ற மஹாபாரதங்காண்க.

ஸ்வர்க்கமென்ற வடசொற்றிரிபாகிய சுவர்க்க மென்னுஞ் சொல், இங்குச் சுகத்தைச் சொல்லிற்று.
“யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ்த்வயா விநா”
(உன்னுடன் கூடி யிருத்தல் – சுவர்க்கம்; உன்னைப் பிரிந்திருத்தல் – நரகம்) என்ற ஸ்ரீராமாயணம் நோக்கத்தக்கது.

புகுகின்ற என்ற அடைமொழி – உள்ளே கிருஷ்ணா நுபவ ஸுகம் நிகழுமாற்றத்தைக் கூறும்;
இதனால் அநுபவத்தில் இடைவீடின்மையும் தோற்றுமென்ப.

அம்மனாய்! என்ற விளியால் – நீ இங்ஙன் தனியே ஸுகாநுபவம் பண்ணுவது உன் பெருமைக்குப் பொருந்து மத்தனை
யன்றித் தோழமைக்குத் தகாதென்பது போதரும். அம்மனை என்பதன் ஈறு திரிந்த விளி; தாயே! என்று பொருள்.

அசோக வநத்திற் பிராட்டி களிப்பின் மிகுதியால்
“ப்ரஹர்ஷேணாவருத்தா ஸா வ்யஜஹார ந கிஞ்சந” என்றபடி ஒன்றும் பேசாதே திடுக்கிட்டுக் கிடந்தாற் போல,
இவளும் இவர்களது மதுரமான வாய் மொழியைக் கேட்டுப் பரமாநந்தத்திற்கப் பரவசப் பட்டிருந்தமையாலும்,
‘இவர்களுக்கு அடிச்சியாகிய என்னை இவர்கள், ‘தாயே!’ என்று விளித்துப் பழியிடுகின்றனரே’ என்ற உள் வெதுப்பினாலும்,
‘நாம் கிருஷ்ணாநுபவம் பண்ணுவதாக இவர்கள் பழியிடா நின்றார்கள்;
இத் தருணத்தில் நாம் இவர்கட்கு மறு மொழி கூறுதல் தகாது’ என்ற நினைவினாலும் அவள் பேசாதே கிடந்தாள்;

அவளது கருத்தை அறியாத இவர்கள், தாங்கள் வெளியே நின்று துவள்கிற துவட்சி பொறுக்க மாட்டாமல்,
“மாற்றமுந் தாராரோ வாசல் திறவாதார்” என்கிறார்கள்.
நீ வாயைத் திறவாதொழியினும் கதவையாகிலுந் திறக்கலாகாதோ? என்றவாறு.
உன் உடம்பைக் கிருஷ்ணனுக்குத் தந்தால், உன் பேச்சை எங்களுக்குத் தரலாகாதோ? என்றிப் புடைகளிலே கருத்துரைப்பர்.

முதலடியில் ‘அம்மனாய்’ என முன்னிலைப்படுத்தி விளித்தமைக்கு ஏற்ப
“மாற்ற முந தாராயோ வாசல் திறவாதாய்” என முன்னிலையாகவன்றோ கூற அடுப்பது;
படர்க்கையாகக் கூறியுள்ளவிது பொருந்துமாறென் எனில்:
“ஓரிடம் பிறவிடந்தழுவலுமுளவே” (நன்னூல்) என்பது இலக்கணமாகலின் இது பொருந்துமென்க.

இங்ஙன் இவர்கள் பழியிட்டுக் கூவுகின்றமையை உணர்ந்த அவள்,
‘ஐயோ! நம் மேல் இவர்கள் வீண் பழி இடுகின்றனரே;
இவர்கட்கு ஒரு மறு மொழி சொல்லியாகிலும் பிழைப்போம்’ என்றெண்ணி,
“தோழிகாள்! நீங்கள் நெடும் போதாக இங்ஙனே பழியிடுவதென்? கண்ணபிரான் இங்கு இல்லையே” என்ன;

அது கேட்ட இவர்கள் அம்மா! நன்று சொன்னாய்; நீ மறைத்தாயாகிலும் திருத்துழாய் மணம் அவனிருப்பைக்
கோட் சொல்லித் தாரா நின்றதே; அதனை நீ மறைக்க வல்லை யல்லையே’ என்ன;

அதற்கு அவள், “அந்தோ! பாரமே!! அவன் இப்போது இங்குக் கிடந்தால் தான் துழாய் மணநாறுமென்று கருதுகின்றீர்களோ?
ஒருகால் அவன் அணைத்து விட்டால் அந்நாற்றம் நூறு குளிக்கு நிற்குமென்பதை நீங்கள் அறியீரோ?
அன்றியும், நான் உங்களைப் பிரிந்து வந்து படுக்கையிற் சாய்ந்தபோதே தொடங்கி
நீங்கள் வாசலைப் பற்றிக்கொண்டு நிற்கிறீர்கள்; கட்டுங்காவலுமான வாசலிலே அவன் எங்ஙனம் புகவல்லன்?
இவற்றை ஆராயாது நீங்கள் பழியிடுவது தருமமன்று” என்ன;

“அவன் எங்களைப் போலக் கதவு திறக்குந்தனையும் காத்திருக்க வேணுமோ?
அவன் நாராயணனென்பதை நாங்களறியோமோ, நீ தான் அறியாயோ; அவன் வியரபகனாயிருந்து வைத்து,
வேண்டின விடத்தே வந்து தோற்றமாட்டிற்றிலனாகில் அவனுடைய வியாப்திக்குப் பிரயோஜனம் என்னாகும்?” என்று இவர்கள் சொல்ல;

அவள் மறுமாற்றஞ்சொல்ல வல்லமையற்று வாய் திறவாதே கிடந்து உறங்குமவள் போலப் பாவனை செய்தாள்;
குறட்டை விட்டாள்; அதனைச் செவியுற்ற இவர்கள்,
‘அம்மா! கும்பகரணனும் உனக்குத்தோற்றுத் தனது உறக்கத்தை உனக்கே தந்தொழிந்தனனோ?’ என்கிறார்கள்.

கும்பகரணன் இவட்குத் தோற்றுத் துயில் தருகையாவதென் எனில்;
சிற்பிகள் இருவர்கூடி, ‘நாமிருவரும் தனித்தனியே ஒரு பதுமை யெழுதுவோம்,
பின்பு மத்தியஸ்தர்கள் எவனுடைய சிற்பத்தை இகழ்ந்துரைக்கின்றனரோ, அவன் அன்று முதல்
சிற்ப வேலையை விட்டிட வேண்டியது’ என்று ஸமயபந்தஞ் செய்து கொண்டு, இருவருஞ் சித்திரமெழுத,
முடிவில் இகழ்வடைந்தோன் முன் ஸமயபந்தத்தின்படி சிற்பத்தொழிலை விட்டிடுமாறுபோல,
கும்பகரணனும் இவளுங்கூடி, ‘நாமிருவரும் உறங்குவோம்; உறக்கத்தில் தோல்வியடைந்தோர்
உறக்கத்தை விட்டிடவேண்டியது’ என்று ஸமயபந்தஞ்செய்துகொண்டு உறங்க, அதில் கும்பகரணன் தோல்வியடைந்து,
ஸமயபந்தத்தின்படி உறக்கத்தை விட்டிட, அவ்வுறக்கத்தை இவள் கைப்பற்றினாள் எனக் கவிமரபிற்கேற்பச்
சமத்காரந் தோற்றக் கூறப்பட்டுள்ளமை அறிக. இதனால் இவளது உறக்கத்தின் ஒப்புயர்வின்மை கூறியவாறாம்.

“ஸ்ரீ பரசுராமாழ்வானை வென்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கினாற் போலே,
நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக்கொண்டாயோ?” என்பது ஆறாயிரப்படி.

கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
தன்னால் சிறையிலடைக்கப்பட்டிருந்த யமனுடைய வாயில் வீழ்ந்தானென்க.
கூற்றம் – உடலையு முயிரையும் வேறு கூறாக்குபவன், யமன். “வாய்விழுந்த” என்றும் ஓதுவர்.

இராமபிரானை புண்ணியன் என்றது – “ராமோ விக்ரஹவாத் தர்ம:” என்னம் பிரமாணத்தை அடியொற்றியதாம்.

‘அஸஹ்யாபசாரிகளில் அக்ரேஸரனான இராக்கதப் பையலோ டொக்காம்மைச் சேர்க்கின்றனரே இவர்கள்!
இஃது என்ன கொடுமை! இனி வெளியிற் சென்று முகங்காட்டுவோம்’ என்று எண்ணி,
தான் உணர்ந்தமை தோற்றச் சோம்பல் முறித்தாள்;

அதனை உணர்ந்த இவர்கள், ‘ஓ! உறக்க மிருந்தபடி யென்!’ என வியந்து,
“ஆற்ற அனந்தலுடையாய்!” என விளிக்கின்றனர்.
பின்பு சாலக வாசலாலே அவளுணர்ந்தபடியை உற்று நோக்கினார்கள்; அவள் தங்கள் திரளில் வந்து கூடினால்
நவரத்நமாலையில் நாயகக்கல் அழுத்தினாற்போலாமெனக் கருதி, அருங்கலமே! என்கிறார்கள்.
நாயகமணி இல்லாத ஹாரம் போல் இத்திரள் இருள் மூடிக்கிடக்கிறது; இதனை நீ விளக்கவாராய் என விளித்தவாறாம்.

இவர்களுடைய ஆதராதிசயத்தை உணர்ந்த அவள் துணுக்கென்று வரப்புறப்பட, அஃதறிந்த இவர்கள்,
“தேற்றமாய் வந்து திற” என்கிறார்கள்.
புறப்பட்டு மேல் நிலங்களில் நின்று தடுமாறாதே தெளிந்து வந்திழிந்து திற என்றபடி.
இதற்கு மற்றொரு வகையாகவுங் கருத்துரைக்கலாம் :-

பஞ்சவடியிற் பிராட்டியைப் பிரிந்த இராமபிரான் கிஷ்கிந்தையிற் புக்கு ஸுக்ரிவ மஹாராஜனை நண்பனாகக் கொண்டு
வாலியை வதைசெய்து மால்யவத் பர்வதத்தில் கார்காலத்தைக் கழித்தவனந்தரம்,
‘ஸுக்ரிவன் பிரதிஜ்ஞை பண்ணியிருந்தபடி இன்று காறும் படை திரட்டிக் கொண்டு போர்க்குப் புறப்படவில்லை’ என்ற
அளவற்ற சீற்றத்தினால் இளையபெருமாளை நியமித்தருள, அவரும் அந்நியமநத்தைச் சிரமேற் கொண்டு
ஸுக்ரிவன பள்ளியறை வாசலிற் போந்து நாணொலியைத் தலைப்பெய்விக்க,
அவரது சீற்றத்தைத் தணிக்கக் கருதிய தாரை வெளிவரும் போது, ஸம்போக லக்ஷணங்களை மறைத்திடாது
அரை குலையத் தலை குலைய வந்தாற்போல வாராதே கொள்;
இத்திரளில் உன்னை நியமிக்கக் கடமைப்பட்ட குருகுல மாதருமுளராதலால் ஸுரத சின்னங்களை நன்கு மறைத்து
ஸதஸ்ஸில் வருகைக்கு உரிய கோலத்துடன் வந்து திறவாயாக என்கிறார்கனென்றுமாம்.

“ஊராகத் திரண்டுகிடக்கிறது; அவர்களிலே உன்னையும் நியமிக்க வல்லாருண்டு’
அவர்கள் முன்னே படுக்கையில் சாய்ந்தபடியே வாராதே உன்னைப் பேணிக்கொண்டு ஸதஸ்யையாய் வந்து திற”

ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.

(ஸ்வாபதேசம்)
திருமழிசை யாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான பேயாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
ஓடித் திரியும் யோகிகளாய் ஒருவரோடு ஒருவர் சேராமல் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த
பொய்கையார் பூதத்தார் பேயார் இம்மூவரையும் ஒன்று சேர்த்து அநுபவிக்கக் கருதிய எம்பெருமான்
ஒரு பெரு மழையை வியாஜமாக்கித் திருக்கோவலிடை கழியில் நெருக்கி யநுபவித்தானென்பது வரலாற்றின் சுருக்கம்.

இப்பேயாழ்வாரைப் பற்றித் திருவரங்கத்தமுதனார் நூற்றந்தாதியில் அருளிச் செய்யுமிடத்து
“மன்னிய பேர் இருள் மாண்ட பின் கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்” என்றார்.
பொய்கையாரும் பூதத்தாரும் இரு விளக்கேற்றி யிருளை யகற்ற,
இவ் வாழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று தொடங்கிப் பலாநுபவம் செய்தருளினார் என்பர் ஆன்றோர்.
அவ்வர்த்தமே யிங்கு முதலடியிற் பொலியும்.

நோற்று –
மற்றையிரண்டு ஆழ்வார்களும் விளக்கேற்றுகையாகிற உபாயாநுஷ்டானஞ் செய்யவே என்றபடி.

சுவர்க்கமாவது ஆனந்தாநுபவம்.
“யஸ்த்வயாஸஹ ஸஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயாவிநா” என்று ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டி அருளிச் செய்ததுங் காண்க.

“வாசல் திறவாதார்” என்றது பேயாழ்வார்க்கு மிகவும் பொருத்தமான லிங்கம்.
திருக்கோவ லிடைகழியில் பொய்கையார் முன்னே புகுந்து தாளிட்டுக் கொண்டார்;
பிறகு பூதத்தார் வந்து சேர அவர்க்கு அப்பொய்கையார் வாசல் திறந்தார்.
பிறகு வந்து சேர்ந்த பேயார்க்குப் பூதத்தார் வாசல் திறந்தார்.
இப் பேயார்க்குப் பிறகு ஒருவரும் வந்து புகாமையினால் வாசல் திறக்கவேண்டிற்றில்லை.
ஆகவே வாசல் திறவாதார் என்றது பேயாழ்வார்க்கு மிகப்பொருத்தமாக அமைந்த குறிப்பு.

(நாற்றத்துழாய்முடி நாராயணன்)
இவ்வாழ்வாருடைய பாசுரங்கள் திருத்துழாய் மயமாகவேயிருக்கும்.
திருக்கண்டேனுக்கு அடுத்த பாசுரம் “பொன் தோய்வரை மார்பில் பூந்துழாய்” என்பது.
அதற்கடுத்த பாசுரம் “மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்வன்” என்பது.
முடிவு பாசுரத்திலும் “தண்டுழாய்த்தார் வாழ் வரை மார்பன்” என்றார்.
இடையிலும் பல பாசுரங்கள் காண்க.

ஒன்பதாவது பாசுரத்தில் (நாமம் பல சொல்லி – யென்பதில்)
நாராயணனையும் திருத்துழாயையும் கண்ணனையும் சேர்த்துப் பாடினார் பேயார். இதுவும் ஒரு சிறந்த பொருத்தம்.

“காண்காணென விரும்பும் கண்கள்” என்று ஒரு நொடிப் பொழுதும் கண்மூடி யிருக்க மாட்டாமையைச்
சொல்லிக் கொண்ட நீர் கும்பகர்ணனுக்கும் மேலாக இன்னமும் துயில் கொள்ளல் தகுதியோ என்கிறாள்
பண்டோருநாளென்று தொடங்கி.

இப்பாட்டில் நட்ட நடுவில் இராமபிரானுடைய திவ்ய சரித்திர மொன்றை ஆண்டாள் அமைத்தது
பேயாழ்வாருடைய திருவந்தாதியில் நட்ட நடுவில்; “அவனே – இலங்காபுரமெரித்தானெய்து” என்றும்
“எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழ” என்றும் அருளிச் செய்தமைக்கு நன்கு ஒக்கும்.

திருமழிசையாழ்வாரை யுணர்த்தின் கீழ்ப்பாட்டில் அனந்தலோ என்று வெறும் அனந்தலே சொல்லிற்று.
இப் பாட்டில் ஆற்றவனந்தலுடையாய்! என்கிறது –
மழிசையர் கோனுக்கும் இவ்வாழ்வார் ஆசாரியராதலால் விசேஷணமிட்டபடி அனந்தல் என்று
ஹேயமான உறக்கமன்று சொல்லுகிறது.
ழூஉரோவிந்யஸ்த ஹஸ்தாஸ்தே நித்ராயந்தே ஸுநிர்ப்பரா :- என்று பகவச் சாஸ்திரங்களில்
கொண்டாடப்பட்ட ‘அனந்தல்’ பரமை காந்தித்வ ஸீமா பூமியைக் காட்டுமது.

(அருங்கலமே!) எம்பெருமானது திருவருளை மிக அருமையாகப் பெற்ற ஸத் பாத்ரமே ! என்றபடி.
பாசுரம் தொடங்கும் போதே “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று ஆனந்தமாகத் தொடங்கப்பெற்ற
பகவத் பரமக்ருபா பாத்ரபூதர் மற்றொரு ஆழ்வாரில்லையே.

(தேற்றமாய் வந்துதிற) உம்முடைய திருநாமமோ பேயார்;
பேய்த்தனமாக வாராமல் தேறி வந்து திறவும் என்கிறாள்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை–தூமணி மாடத்து– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

March 2, 2021

மைத்துனமை யுறவுடையா ளொருத்தியை உணர்த்தும் பாசுரம் இது –

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.

பதவுரை

தூ மணி மாடத்து–பரிசுத்தமான மாணிக்கங்கள் அழுத்திச் சமைத்த மாளிகையில்
சுற்றும்–நாற் புறமும்
விளக்கு எரிய–விளக்குகள் எரியவும்
தூபம் கமழ–(அகில் முதலியவற்றின்) வாசனைப் புகைகள் மணம் வீசவும்,
துயில் அணை மேல் கண் வளரும்–மென்மையான படுக்கையின் மீது நித்திரை செய்யா நின்ற,
மாமான் மகளே–அம்மான் பெண்ணே!
முணி கதவம்–மாணிக்கக் கதவினுடைய
தாள்–தாழ்ப்பாளை
திறவாய்–திறந்திடுவாயாக,
மாமீர்–அம்மாமீ!
அவளை–(உள்ளே உறங்குகிற) உன் மகளை
எழுப்பீரோ–எழுப்ப மாட்டீரோ?
உன் மகள்;–உன் மகளானவள்
ஊமையோ–வாய்ப் புலன் இல்லாதவளோ?
அன்றி–அல்லாமற் போனால்
செவிடோ–செவிப் புலன் இல்லாதவனோ? (அன்றி)
அனந்தலோ–பேருறக்க முடையவளாயிருக்கின்றாளோ? (அன்றி)
பெரு துயில்-பெரிய படுக்கையில்
ஏமப்பட்டாளோ–காவலிடப்பட்டாளோ? (அன்றி)
மந்திரம்பட்டாளோ–மந்திர வாதத்தினால் கட்டுப் படுத்தப் பட்டானோ?
மா மாயன்–‘அளவிறந்த ஆச்சரியச் செய்கைகளை யுடையவனே!’
மாதவன்–‘திருமகள் கேழ்வனே!’
வைகுந்தன்–‘ஸ்ரீ வைகுண்டநாதனே!’
என்று என்று–என்று பலகால் சொல்லி
நாமம் பலவும்–(எம்பெருமானுடைய) திரு நாமங்கள் பலவற்றையும்
நவின்று–(வாயாரக்) கற்றோம்;
(இனியாகிலும் உன் மகள் உணரலாகாதா?)
ஏல் ஓர் எம் பாவாய்!

சுற்றும் விளக்குகள் வளங்கப் பெற்றுத் தூபங்கள் மணம் வீசாநிற்கப் பெற்ற நன்மணி மாடத்தில்
மெல்லணைமேற் கண் துயில்கின்ற மாமான் மகளை நோக்கி “மணிக்கதவம் தாள் திறவாய்” என்று
வெளியே நிற்பவர்கள் சொல்ல,

அவள் அதனைக் கேட்டு வைத்தும் மறுமொழி ஒன்றுங் கூறாதாளாய்க்கிடக்க,
அங்ஙனே கிடக்கும்படியைக் கண்ட அவள் தாயார்
“இத்தனை பெண்பிள்ளைகள் வருந்தி வாசலிலே நின்று துவள,
இவள் ஒரு பேச்சும் பேசாதே கிடந்துறங்குவது என்ன நீதி!’ என்று
நெஞ்சிற் கொண்ட இரக்கம் முகத்திலே
தோற்றும்படி யிருக்குமாற்றை இவ்வாய்ச்சிகள் கண்டு,

‘மாமீர்! அவளொருத்தி எங்கள் திரளிற் புகாமை யாலே
நாங்கள் படும்பாட்டைக் கண்டீரே; உமது மகளைச் சிறிது உணர்த்தலாகாதா?
நாங்கள் நெடும்போதாக நின்று கூவச் செய்தேயும் இவள் மறுமாற்ற மொன்றும் தருகின்றிலளே;
இவள் ஊமையா? செவிடா? பேருறக்கம் பிடித்தவளா? அன்றி, இவள் எழுந்திருக்கக் கூடாதென்று
யாரேனும் படுக்கையில் காவலிட்டிருக்கிறார்களா?
அன்றி மந்திர வாதத்தினால் ஸர்ப்பத்தைத் தடை கட்டுவது போல்,
இவள் படுக்கையினின்றும் எழுந்திருக்க வொண்ணாதபடி ஆரேனும் மந்த்ர ப்ரயோகம் பண்ணி விட்டார்களா?
நாங்கள் ஒரு வகையாகவும் நிர்ணயிக்க மாட்டுகின்றிலோம்’ என்ன;

இதனைக் கேட்ட தாயார் ‘நீங்கள் இங்ஙனே ஒன்றும் சங்கிக்க வேண்டா;
அவளுக்கும்படியான பகவந் நாமங்களைப் பகரத்தொடங்கினீர்களாகில்
அவள் தன்னடையே உணர்ந்தெழுந்துவருவள்’ என்ன;

‘அங்ஙனமும் செய்தற்றது; நாங்கள் இவ்வளவாகச் சொன்ன பகவந் நாமங்கட்கு ஓர் வறையறையில்லை காணும்;
இன்னும் யாம் என் செய்வோம்’ என்கிறார்கள்.

தூமணி மாடம்
நம்மாழ்வார் திருவாய் மொழியில் திருத்துலைவில்லி மங்கலத்தை வருணிக்கத் தொடங்கி,
“துவளில் மாமணிமாடமோங்கு துலைவில்லி; மங்கலம்” என்றார்.
இங்கு அங்ஙனன்றித் “தூ மணிமாடம்” எனப்பட்டது.
இவ்விரண்டிற்கு முள்ளவாகும்யென் என்னில்;

துவள்இல் என்ற அடைமொழியினால் –
துலைவில்லி மங்கலத்து மாடங்களின் மணிகள், முதலில் துவளுற்றிருந்து
பின்னர் துவளற்றனவாயின வென்பது தோற்றுவிக்கப்படும்.

இங்கு தூ என்ற அடைமொழியினால் –
இங்குற்ற மாடத்து மணிகள் பிறப்பே தொடங்கிப் பரம பாவநங்களாய் எஞ்ஞான்றும் துவளின் ஸம்பந்தத்தைப்
பெறாதன வென்பது தோற்றுவிக்கப்படும். (துவள் — தோஷம்)

இங்கு, முக்தர்படியையும் நித்தியர்படியையும் நெஞ்சிற் கொள்க;
முக்தராகிறார் – சில நாள் வரை ஸம்ஸார ஸாகரத்தில் அழுந்திக் கிடந்து, பின்னர் அப்பற்று அறப் பெற்றோர்;
(இது, துவளில் என்றபடிக்கு ஒக்கும்.)
நித்தியராகிறார் – என்றும் ஸம்ஸாரஸம்பந்தமே யில்லாதாராய் அநவரதம் பரவாஸுதேவன் பதவிணையிற்
பரிசரியை பண்ணும் அநந்த கருட விஷ்வக்ஸேநர்கள் போல்வார்; (இது தூ என்றபடிக்கு ஒக்கும்.)

புறம்பே நின்று துவள்கின்ற எங்கள் நெஞ்சு இருண்டு புகையா நிற்க, உள்ளே சுற்றும் விளக்கெரியும்படியாகப்
பெற்ற பாக்கியமே பாக்கியம்! என்னும் வயிற்றெரிச்சல் முதலடியில் தோற்றுமாறு காண்க.

“புறம்பே நின்று ‘மணிக்கதவம் தாள் திறவாய்’ என்கிறவர்கள்
உள்ளெரிகிற விளகக்கறிந்தபடி என்னென்னில்;
மாணிக்கக் குப்பியிலே அகவாயிலுள்ளது நிழலிட்டுத் தோற்றுமா போலே
தூமணிமாடமாகையாலே உள்ளெரிகிற விளக்குத் தோற்றுமிறே” என்ற
ஆறாயிரப்படி அருளிச்செயலை இங்கே கூட்டிக்கொள்க.

“தூபம் கமழ” என்ற சொல் நயத்தால்,
கண்ணுக்குப் புகையாகத் தோன்றுகை யன்றியே வெறும் பரிமளமேயாயிருக்குமாறு தோன்று மென்ப.

துயிலணை –
படுத்துக் கொண்டவுடனே உறக்கத்துக்குப் பரவசமாக்கவல்ல மெத்தை யென்க;
இதனால், அப்படுக்கையின் மென்மை, குளிர்த்தி முதலிய குணங்கள் விளங்கும்.
“மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளியாலோ” என்றபடி நாங்கள் பள்ளியிற்சாயப் பெறாதேயிருக்க,
நீ துயிலணையிற் கண்வளர்வது நமது நட்புக்கு நன்றாகப் பொருந்துமம்மா! என
வெறுத்துக் கூறுகின்ற சொற்போக்கு இது என்றுணர்க.

“துயிலணைமேல உறங்கும்” என்னாதே “கண் வளரும்” என்றது –
பகவத் விஷயத்தில் அவகாஹித்தவர்கள் கௌரவிக்கத் தக்கவரென்ற கருத்தை காட்டுதற்கென்க.
ஊடே வெறுத்துக் கூறுவதெல்லாம் ஆற்றாமையின் செயலத்தனையிறே.

(“மாமான் மகளே)
திருவாய்ப்பாடியிலே ஒரு ப்ரக்ருதி ஸம்பந்தம் தனக்கு உஜ்ஜீவந ஹேதுவாக
ஆண்டாள் ஆசைப்பட்டபடி” என்பது ஆறாயிரப்படி.

“ஊமையோ? செவிடோ? என்ற வினாக்களுக்கு உட்கருத்து :-
ஆர்த்தர் விஷயத்தில் இரக்கமுற்று ‘ஐயோ !’ என்றொரு வாய்ச் சொல் சொல்வதற்கும்
அவகாசமில்லையோ உன் மகளுக்கு?
ஆர்த்தரான எங்களுடைய கூக்குரல் செவிப்பட வொண்ணாதபடி உன் மகள் உள்ளே செய்யுங் காரியம் என்னோ?

அனந்தலோ ? –
கண்ண பிரானோடு நெடும் போதாக் கூடிக் களித்துப் படுக்கையில் இப்போது தான் சாய்ந்தனளோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? –
உன் மகள் எங்களை உறங்க வொட்டாதவாறு போல அவளை ஆரேனும் உணர வொண்ணாதபடி
மந்திரவாதஞ்செய்து கட்டுப்படுத்தினரோ?
“பெய்யுமாமுகில் போல்வண்ணா! உன்றன் பேச்சுஞ் செய்கையும், எங்களை மையலேற்றி மயக்க
உன் முகம் மாய மந்திரந்தான் கொலோ?” என்ற நாச்சியார் திருமொழியை இங்கு அநுஸந்திக்க.

ஏமம் என்பதை, ஹேம என்னும் வடசொல்லின் விகாரமாகக் கொள்ளில்
கநகமான பெருந்துயிலில் மந்திரப்பட்டாளோ? என்று பொருளாம்.
ஏமம் – இரா, இன்பம், உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி.

இவர்கள் இங்ஙனே வினவக்கேட்ட தாயார்,
“பெண்காள்! நீங்கள் இவளது பிரகிருதியை உணர்ந்திருந்து இவளை எழுப்பவேண்டும் முறையை உணர்ந்தீர்களே;
இங்ஙனே மெழுப்பினால் இவள் எழாள். தென்றலுஞ் சிறு துளியும் பட்டாற் போல
அவள் உகக்குந் திருநாமங்களை வாயார அநுஸந்தித்தீர்களாகில் சடக்கென உணர்ந்து வாராளோ” என்ன;
அங்ஙனுஞ் செய்தற்றதென்கிறார்கள், கடையிருண்டடிகளால்.

மா மாயன் :-
அபலைகளான பெண்களைத் தன்வசப்படுத்திக் கொள்ளுதற்குச் சாதனமான
பல ஆச்சரிய குண சேஷ்டிதங்களை உடையவன் என்றபடி.

மா தவன் :-
இடக்கை வலக்கை அறியாத இடைச்சிகளை மாத்திரம் வசப்படுத்திக் கொண்டவனல்லன் அவன்;
அல்லி மலர் மகளை இறையு மகலவொண்ணாதபடி மார்பில் அழுத்திக் கொண்டுள்ளவன் காண்மின் என்றவாறு.

வைகுந்தன் :-
இங்ஙன் பெண்களை மாத்திரம் தோற்பிக்குமவனல்லன்; கண்கள் துஞ்சாமே கண்டபடியே நிற்கும்
நித்திய ஸூரிகளை ஒரு நாடாகவுடையன் என்கை.

என்றென்று
என்றமையால் அவைபோல்வன பல திருநாமங்கள் கூறினமை தோன்னும்.

(ஸ்வாபதேசம்).
நம்மாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான திருமழிசைப் பிரானை யுணர்த்தும் பாசுரமிது.
இதில் மாமான் மகளே! என்ற விளி ஒருவகையான தேஹ ஸம்பந்த்தில் நோக்குடையது.
ஆண்டாளுக்கும் திருமழிசை யாழ்வார்க்கும் ஒரு வகையான தேஹ ஸம்பந்தமுண்டு :
அதாவது – ஸ்ரீதேசிகன் கோதாஸ்துதியில்
“கமலாமிவாந்யாம் கோதாம்” என்றும்
“ஸந்த : பயோதி துஹிதுஸ் ஸஹஜாம் விதுல் த்வாம்” என்றும் அருளிச் செய்தபடியே
ஆண்டாள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியாவள்

“பார்க்கவீ லோகஜநநீ க்ஷ்ரஸாகரஸம்பவா” என்ற அமரகோசத்தின் படியும் இதிஹாஸ புராண வரலாற்றின் படியும்
லக்ஷ்மி (ஆண்டாள்) ப்ருகு குலத்தில் தோன்றியவள்.
திருமழிசைப்பிரானும் ப்ருகு குலத்தில் தோன்றியவரென்பது சரித்திர ஸித்தம்.
இத்தகைய ஸமாந குலஸம்பந்தம் இங்கு நோக்கத்தக்கது.
ரிஷி குலத்திலே பிறந்து பிரம்பன் குடியிலேயானார் அவர்.
ப்ராஹமண குலத்திலே பிறந்து கோபாலர் குலத்திலேயானாள் இவள். இதுவும் ஒற்றுமை நயம்.

(தூமணி மாடத்து) சிறந்த மாணிக்கக் குப்பியினுள்ளேயுள்ளது வெளியில் நிழலிட்டுத் தோன்றும்.
திருமழிசைப்பிரான் “உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று வேண்டிக் கொண்டபடியே
உள்ளிருந்த திருமால் அப்படியே வெளியிற் பொசிந்து காட்சி தந்தமையால்
இவர் தூமணிமாட மென்னத் தகுதியுடையார்.

(சுற்றும் விளக்கெரிய) விளக்காவது ஞானவொளி.
“சாக்கியங் கற்றோஞ் சமண்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்,” என்றபடி
இவ்வாழ்வார் ஸகல மதங்களிலும் புக்கு ஸர்வதோமுகமான ஞான விளக்கம் பெற்றவராதலால்
சுற்றும் விளக்கெரிதல் இவர்க்கு அஸாதாரணம்.

“யானறிந்தவாறு – ஆரறிவார்” என்றும்
“என் மதிக்கு விண்ணெல்லாமுண்டோ விலை” என்றும் இவரது பாசுரங்களினாலும் இது ஸித்தம்.

(தூபம் கமழ) சிறந்த ஞானமிருத்தல் மாத்திரம் பயன்படாது; அது நன்கு பரிமளிக்க வேண்டும்.
எம்பெருமானையன்றி வேறொரு தெய்வத்தைத் தொழாதிருத்தலே ஞானத்திற்குப் பரிமளம்.
“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்பது இவ்வாழ்வாருடைய திருவாக்காகும்.

(துயிலணை மேல் கண்வளரும்) இவ்வாழ்வாருடைய திருக்கண் செல்வது
சயனத் திருக்கோலமான எம்பெருமான்களின் மீது தான்.
கச்சி வெஃகாவிலும் திருக்குடந்தையிலுமே பெரும்பாலும் இவர் காலம் கழித்தது.
சயனத் திருப்பதிகளையே ஒரு கோர்வையாக வெடுத்துப் பாசுரம் பாடினவரும் இவ்வாழ்வார்;
நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தணையரங்கம் பேர் அன்பில் –
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனவான்” என்றது காண்க.

(துயிலணை மேல் கண்வளரும் மாமானுடைய மகளே!)
மகள் என்றதனால் விதேயத்வம் சொன்னபடி.
மகள் சொற்படி தந்தை கேட்பதும் தந்தை சொற்படி மகள் கேட்பதும் வழக்கம்.
மாமான் என்றது மஹா மஹான் என்றபடி.
துயிலணை மேல் கண்வளரும் மாமான் யதோக்தகாரி யெம்பெருமான்;
அப்பெருமாள் இவ்வாழ்வார் சொற்படி கேட்டவர்;
‘கணி கண்ணன் போகின்றான் – நீயுமுயன்றன் பைந் நாகப் பாய் சுருட்டிக்கொள்’ என்ற போது
அப்படியே சுருட்டிக்கொண்டு புறப்பட்டார்;
“உன்றன் பைந்நாகப்பாய் விரித்துக்கொள்” என்ற போதும் அப்படியே.

இனி, துயிலணைமேற் கண்வளரும் மாமான் – ஆராவமுதன்;
அப்பெருமாளும் “எழுந்திருந்து பேசுவாழி கேசனே” என்ற
இவ்வாழ்வாரது வேண்டுகோளின்படி எழுந்திருந்தவர் என்பது ப்ரஸித்தம்.

(உன் மகள் தான் ஊமையோ)
வாய் திறவாமலே ஹஸ்த சேஷ்டை முதலியவற்றால் காரியம் செய்வது ஊமைகளின் பணி.
இவ்வாழ்வாரும் யாத்திரை யடைவில் பெரும்புலியூரென்னும் கிராமத்தில் ஒரு வேதியன் வீட்டு வாசல்
திண்ணையில் சிறிது பொழுது எழுந்தருளியிருக்க அங்கு வேதமோதிக்கொண்டிருந்த அந்தணர்கள்
நீறுபூத்த நெறுப்புப்போலுள்ள ஆழ்வாருடைய மஹிமையைத் தெரிந்து கொள்ளாமல்
அவரைக் கீழ்ச்சாதியராக வெண்ணி வேதாத்யயனம் அவருடைய காதிற்படலாகாது என்று கருதி ஓத்துத் தவிர்ந்திருக்க,
அக்குறிப்பை யறிந்த ஆழ்வார் அவ்விடத்தை விட்டுத் தூரத்திற் சென்று வேறோரகத்து மேடையில் வீற்றிருக்கையில்
அந்த வேதியர்கள் மீண்டும் வேதமோதத் தொடங்கி, விட்ட வாக்கியம் தோன்றாது மயங்கி நிற்க,
ஆழ்வார் அது கண்டு கறுப்பு தெற்களைக் கையுகிராலே இடந்துபோட,
அப்பொருளுள்ள வேதவாக்கியம் அவர்கட்குத்தோன்றிற்று:
அதாவது – “க்ருஷ்ணானாம் வ்ரித்றீணாம் நகநிர்பிந்நம்” என்பது.

உடனே அவர்கள் ப்ரதக்ஷ்ண ப்ரணாமாதிகளால் இவரை உபசரித்து க்ரதார்த்தராயினர் என்பது சரித்திர வரலாறு.
இங்ஙனமாக வாய் திறவாமலே, இங்கிதத்தினால் காட்டினது பற்றி ஊமையோ என்றது.
சொன்ன சொற்களைச் செவி யேற்காதவர் செவிடர்: அந்தச் செவிடும் இவரது சரிதையில ப்ரஸித்தம்:
முன் சொன்ன பெரும்புலியூரில் அந்தணரடிகள் யாகஞ் செய்து கொண்டிருந்த விடத்தில்
இவ்வாழ்வாரை எழுந்தருள்வித்துக் கொண்டு போய்ச் சில மஹான்கள் இவர்க்கு அக்ர மொழிகளை வர்ஷிக்க,
அவற்றை இவ்வாழ்வார் செவியேற்காதிருந்தனர் என்ற வரலாறு காண்க.

(அனந்தலோ) தூக்கமோ என்றபடி, பரமைகாந்திகட்குத் தூக்கமாவது பாஹ்ய விஷயங்களிற் சிறிதும்
நெஞ்சு செல்லாதிருக்கப் பெறுதலே.
“உன்னைத் தெரித்தெழுதி வர்சித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினென் போது” என்றும்
“தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாமமேத்தப் பொழுதெனக்கு மற்றதுவே போதும்” என்று மருளிச்
செய்யு மிவ்வாழ்வார்க்கு இந்த நிலைமையே அனந்தலாகும்.

(ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ)
மற்றையாழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வாருடைய பரமைகாந்தித்வம் மிக விலக்ஷணம் என்பது இங்கு அறியத்தக்கது.
“பிதிரு மனமிலேன் பிஞ்ஞகன்றன்னோடெதிர்வன், அவனெனக்கு நேரான்” என்னும் படியான
திரு நாவீறு இவர்க்கே அஸாதாரணமன்றோ!
இது தான் பெருந்துயில்,
எம்பெருமானை யொழிந்த மற்றையோரைக் கண்கொண்டு பாராமையிற் பெருமை.

(மாமாயன்)
“மாயமென்ன மாயமே” என்றும்,
“மாயமாய மாக்கிகனாய் உன்மாயமுற்று மாயமே” என்றும்
பலகாலும் எம்பெருமானது மாமாயங்களைப் பேசுகிறவர் இவ்வாழ்வார்.

(மாதவன்) “மாதவனை ஏத்தாதார் ஈனவரே” என்றவரும் இவ்வாழ்வாரே,
“திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” என்றதுங் காணலாம்.

(வைகுந்தன்)
“வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு” என்றவர் இவ்வாழ்வாரே.
வைகுந்தனது சேவடிமேல் தாம் பாசுரம் பாடினவராகச் சொல்லிக்கொண்டார்.

ஆகவே, மாமாயன், மாதவன், வைகுந்தனென்ற திருநாமங்கள்
இவ்வாழ்வார்க்குப் பரம போக்யங்களென்பது ஸூசிதம்.

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-