Archive for the ‘ஸ்ரீ விஷ்ணு புராணம் –’ Category

ஸ்ரீ விஷ்ணு புராணம் நான்காவது அம்சம்—-முதல் பாகம் —

February 28, 2021

1. ககுத்துமியின் கதை
2. சசாத, ககுஸ்தா, மாந்தாதா வரலாறுகள்
3. புருகுச்ச, சகர மாமன்னர்களின் வரலாறுகள்
4. சகர புத்திரரின் வரலாறும், சக்கரவர்த்தித் திருமகனார் வைபவமும்
5. நிமி வம்ச வரலாறு

——————–

1. ககுத்துமியின் கதை

பராசர முனிவரை நோக்கி மைத்ரேயர், சுவாமி! சத்கருமம் செய்யப் புகுந்தவருக்குச் செய்யத்தக்க நித்திய நைமித்திக ரூபமான கர்மங்களின் சொரூபத்தையும் வருணாசிரம முறைகளையும் தாங்கள் எனக்குக் கூறினீர்கள். இனிமேல் அரசர்களின் வமிசங்களைத் தங்களிடமிருந்து நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் கிருபை செய்து அவற்றை எனக்கு விளங்கச் சொல்ல வேண்டும் என்று வேண்டினார். அவரது ஆசாரியரான பராசர முனிவர் கூறலானார். மைத்ரேயரே! இந்த வைவஸ்வத மனுவின் வமிசமானது; மகா யாக கர்த்தாக்களையும் மகாவீரர்களையும் மகாசூரரையும் கொண்ட பேரரசர்கள் வாழ்ந்த பெரியதொரு வமிசமாகும். இந்த வமிசத்தின் வரலாற்றை சகல பாபங்களும் நசிக்கும் பொருட்டு நான் உமக்குச் சொல்லுகிறேன்! ஜகங்களுக்கெல்லாம் ஆதிகாரணமானவரும் ரிக், யஜுர், ஸாமாதி மயருமான ஸ்ரீமந்நாராயண பகவானுடைய மூர்த்தி ஸ்வரூபமாய், இரணியகர்ப்பர் என்ற பெயரையுடையவராய் இந்தப் பிரமாண்டத்தின் அதிபதியான பிருமாவானவர், பூர்வத்தில் உண்டானார் அல்லவா? அந்தப் பிருமாவின் வலதுகட்டை விரலிலிருந்து தக்ஷப் பிரஜாபதி தோன்றினார். தக்ஷருடைய புத்திரி அதிதி. அந்த அதிதியின் மகன் விவசுவான் என்ற சூரியனாகும். அவனது மகன் மனு, மனுவுக்கு இஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், பிருக்ஷத்திரன் என்று ஒன்பது பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே, அந்த மனுபுத்திரனுக்காக மித்ரா வருணனைக் குறித்து ஒரு யாகம் செய்ய அதில் ஹோதாவின் அபசாரத்தால் இளை என்ற கன்னியொருத்தி பிறந்தாள். அவள் மித்திராவருணர்களுடைய அனுக்கிரகத்தால் மீண்டும் பெண்ணாகி, சந்திரனுடைய மகனான புதனுடைய ஆஸ்ரமத்தின் அருகே திரிந்து கொண்டிருந்தாள்.

புதன்-அவள் மீது காமங்கொண்டு அவளோடு கூடிமகிழ்ந்து புரூரவன் என்ற பிள்ளையைப் பெற்றான். அந்தப் புரூரவன் பிறந்த பிறகு, பெண்ணாக மாறி சுத்தியும்னன் மறுபடியும் ஆணாக மாற வேண்டும் என்று மகா தேஜோமயமான முனிவர்கள் விரும்பினார்கள். அதற்காக யாக மயனாகவும், ரிக், யஜுர், ஸாம, அதர்வண மயனாகவும், மனோ மயனாகவும் ஞான விஞ்ஞானமயனாகவும், அன்னமயனாகவும், அமிருத மயனாகவும் சர்வமயனாகவும், இவை ஒன்றுமாகாதவனாயும், ஆறு குணசம்பன்னனாயும் இருக்கும். யக்ஞ புருஷனைக் குறித்து அம்முனிவர்கள் யாகஞ்செய்து, அந்த யாகத்தில் தோன்றிய ஸ்ரீயப்பதியினுடைய அனுக்கிரகத்தினால் இளையானவள் மீண்டும் ஆண் பிள்ளையாகி சுத்தியும்னன் என்ற பெயரைப் பெற்றான். அவனுக்கு உத்கலன், கயன், விதானன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுத்தியும்னனோ, முன்பு பெண்ணாக இருந்ததனாலே ஆட்சியுரிமை பெறவில்லை. ஆயினும் வசிஷ்ட மாமுனிவரின் சொற்படி, அவனது தந்தை பிரதிஷ்டானம் என்ற நகரத்தைப் புரூரவனுக்குக் கொடுத்தான். பிருக்ஷத்திரன் என்பவன் ஒருநாள் வசிஷ்டருடைய பசுக்கூட்டத்தைக் காவல் புரிந்து கொண்டிருக்கும்போது, இரவில் அந்தப் பசுக்கூட்டத்தில் புகுந்த ஒரு புலியைக் கொல்லப்போய் குறி தவறி ஒரு பசுவைக் கொன்றுவிட்டான். அதனால் குருவின் சாபம் பெற்றுச் சூத்திரனானான், கரூசனிடத்திலிருந்து கரூர தேசத்தைக் காத்து வந்த மகா பராக்கிரமசாலிகளான க்ஷத்திரியர்கள் பிறந்தார்கள். திருஷ்டன் என்பவனுக்கு நரபாகன் என்பவன் பிறந்தான். அவனுக்குப் பலந்தனன் பிறந்தான். அந்தப் பலந்தனன் மகனான வச்சப்பிரீதி என்பவன், மிகவும் புகழ் பெற்றிருந்தான். அவனது மகன் பிராம்சு அந்தப் பிராம்சுவுக்கு பிரசாபதி என்பவன் பிறந்தான். அவனுக்குக் கனி மித்திரன் அவனுக்கு சக்ஷúஷன், சக்ஷúஷனுக்கு மிகவும் பராக்கிரசாலியான விமிசன். அவனுக்கு விம்சகன், அவனுக்குக் கனிநேத்திரன் அவனுக்கு அதிவிபூதி, அவனுக்கு மாவீரனான கரந்தமன், அவனுக்கு அவிக்ஷித்து, அந்த அவிக்ஷித்துக்கு நற்குணமுடைய மருத்தன் என்ற ரீதியில் புதல்வர்கள் பிறந்தார்கள். மருத்தனைப் பற்றி இரண்டு பாடல்கள் இப்போதும் வழங்குகின்றன. இந்தவுலகத்தில் மருத்தனுடைய யாகத்தைப் போல் யாருடைய வேள்வி தான் இருந்தது? அந்த யாகத்திற்கு வேண்டிய கருவிகள் யாவும் செம்பொன்னாற் செய்யப்பட்டு விளங்கின. அந்த வேள்வியிலே, சோமபானத்தால் இந்திரனும் தக்ஷிணையால் அந்தணரும், உடல் தெரியாதிருக்கும்படி மகிழ்ந்தார்கள். மேலும் அதில் வாயுக்களே உணவுகளைப் பரிமாறிய வேலையாட்கள் ஆனார்கள். தேவர்கள் சபையோராயினர்.

அத்தகைய மருத்தன் மாமன்னனாக இருந்து நரிஷ்யந்தனன் என்னும் மகனைப் பெற்றான். அந்த நரிஷ்யந்தனன் மகன் தமன். தமனின் மகன் ராஜவர்த்தனன். அவனுக்கு சுவிருத்தி, சுவிருத்திக்குக் கேவலன்; கேவலனுக்கு சுதிருதி, அவனுக்கு நரன், நரனுக்குச் சந்திரன், அவனுக்குக் கேவலன், அவனுக்குப் பந்துமான், அவனுக்கு வேகவான், அந்த வேகவானின் மகன் புதன்; அவனுடைய மகன் திருணபிந்து! திருணபிந்துவுக்கு இளிபிளை என்ற பெண் பிறந்தாள். அந்தத் திருணபிந்து மன்னனை அலம்புசை என்ற அப்சர மங்கை விரும்பிப் புணர்ந்து விசாலன் என்ற மகனை ஈன்றெடுத்தாள். அவன்தான் வைசாலி என்ற நகரத்தை உண்டாக்கினான். அவனுக்கு ஹேமசந்திரன் என்ற மகன் பிறந்தனன். அவன் மகன் சந்திரன்; அவனுடைய மகன் தூமிராஷன்; அவனுக்குச் சருஞ்யன்; அவன் மகன் சகதேவன், அவனுக்கு கிருசாசுவன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சோமதத்தன் என்ற புதல்வன் பிறந்து, பத்து அஸ்வமேதயாகம் செய்தான். அவனது மகன் ஜனமேஜயன். ஜனமேஜயனின் மகன் சுமதி அவர்களனைவரும் வைசாலியை ஆண்டுவந்த அரசர்களாவார்கள், இவர்களைப் பற்றி ஒரு சுலோகம் வழங்கி வருகிறது. வைசாலி நகரை ஆண்ட அரசர்கள் யாவரும் மூலபுருஷனான திருணபிந்து மாமன்னனுடைய அனுக்கிரகத்தால் தீர்க்காயுளையுடையவர்களாயும், மகாத்மாக்களாகவும், வீரர்களாயும், தர்மசீலராயும் இருந்தார்கள் என்பதுதான் அந்தச் சுலோகமாகும். இனி சர்யாதி என்பவனுக்குச் சுகன்னியை என்ற மகள் ஒருத்தி பிறந்தாள். அவளைச் சியவனர் என்ற மிகவும் புகழ்பெற்ற முனிவர் ஒருவர் திருமணம் புரிந்து கொண்டார். அந்தச் சர்யாதிக்கு ஆனர்த்தனன் என்ற ஒரு மகன் உண்டு. மேலைக் கடற்கரையில் அவன் ஆண்ட தேசத்துக்கு ஆனர்த்தம் என்ற பெயர் வழங்கலாயிற்று. அவனுக்கு ரேவதன் என்ற மகன் பிறந்து அவன் குசஸ்தலி என்ற நகரத்திலிருந்து கொண்டு ஆனர்த்த நாட்டை ஆண்டுவந்தான். அந்த ரேவதனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மூத்தவன் தான் ககுத்துமி என்பவனாகும், அவனுக்கு ரைவதன் என்ற பெயரும் வழங்கி வரலாயிற்று. அவனுக்கு ரேவதி என்ற மகள் ஒருந்தி பிறந்தாள். அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இவளை யாருக்குக் கொடுக்கலாம் என்று கேட்கும் பொருட்டு பிரம்மலோகத்துக்குக் ககுத்துமி சென்றான். ஹாஹா ஹுஹு என்ற கந்தர்வர்கள் இருவர் அதிதானம் என்று வழங்கப்பட்ட இனிய சங்கீதத்தைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அது சித்திரை, தக்ஷிணை வார்த்திகை என்ற மூன்று வழிகளின் பரிவிர்த்தங்களினால் சுற்றிக்கொண்டு வருவதை அநேக யுககாலம் வரையில் அவ்வரசன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தான். அவ்வளவு அதிக காலம் சென்றதைக் கூட ஒரு முகூர்த்த காலமாகவே நினைத்தான். அந்தச் சங்கீதம் முடிந்த பிறகு, சதுர்முகனை வணங்கிய ரைவத மன்னன் இந்தக் கன்னிகைக்கு தகுதியான கணவன் யார்? என்று பிரும்மாவைக் கேட்டான். அதற்கு அவர் மன்னனே! நீ நினைத்துக் கொண்டிருக்கும் வரன்களைச் சொல்வாயாக என்றார். அவரைக் ககுத்துமி மன்னன் வணங்கித் தான் நினைத்திருந்த சிலரது பெயர்களைச் சொல்லி, தேவா! இவர்களில் யாருக்கு நான் என் புதல்வியைக் கொடுக்கலாம்? அவனைத் தேர்ந்து சொல்லுங்கள் என்று கேட்டான்.

அரசனே! நீ யாரை எண்ணிக் கொண்டிருந்தாயோ அவர்களுடைய பிள்ளைகளும் அந்தப் பிள்ளைகளுடைய சந்ததியினரும் இப்போது பூவுலகில் இல்லை. நீ இங்கு நடந்த சங்கீத நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த நேரத்திற்குள் எத்தனையோ யுகங்கள் கழிந்து விட்டன. இப்போது பூவுலகத்தில் வைவஸ்வத மனுவந்தரத்திலே இருபத்தெட்டாவது சதுர்யுகம் முடியப் போகிறது. கலியுகம் நெருங்குகிறது. இப்போது பூர்வகாலத்தைச் சேர்ந்த நீ ஒருவனே இருப்பதால், இக்காலத்தவரான யாருக்காவது இந்தப் பெண்ணை, நீ ஒருவனாகவேக் கொடுக்க வேண்டும். இப்போது உன்னுடைய புத்திரர், மித்திரர், மனைவியர், மந்திரிகள், உறவினர், ஏவலாட்கள், சேனைகள் முதலியன யாவுமே ஒழிந்து போய்விட்டன! என்றார் பிருமா. அதைக்கேட்ட ரைவத மன்னன் மிகவும் நடுங்கி, சுவாமி! இப்படியானால் என் மகளின் கதிதான் என்ன? இனி இந்தக் கன்னியை யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கேட்டான். ரைவத மன்னனே; அஜனாயும் சர்வமயனாயும் இருக்கிற எவனுக்கு ஆதி மத்தியம், அந்தம் என்ற இந்த மூன்றையும் யானும் மற்றவரும் அறியோமோ பரமேசுவரனான எவனுடைய ஸ்வரூபத்தையும் மேலான பிரபாவத்தையும், பலத்தையும் அறியோமோ, கலா முகூர்த்தாதி மயமான காலமானது பரமபதம் என்று சொல்லப்பட்ட எவனுடைய திரிபாத விபூதியை மாற்றமாட்டாதோ, உற்பத்தி நாசங்கள் இல்லாதவனாயும் சர்வ சரீரகனாயும், கர்வமயமான பெயர்களும் ரூபங்களும் இல்லாதவனாயும் என்றும் ஒருபடியே இருப்பவனாயுமுள்ள எவனுடைய அருளால் நான் படைப்பவனாகினேனோ எவனுடைய குரோத அம்சத்தால் ருத்திரமூர்த்தி சங்காரகர்த்தன் ஆனானோ, எந்தப் பரமபுருஷன் எங்கள் இருவருக்குமிடையில் காத்தலுக்கு உரிய கர்த்தாவாக அவதரித்து எழுந்தருளியிருக்கிறானோ எவன் தனது அம்சத்தினால் என்னுள் ஆவிப்பவித்து படைக்கிறானோ தானே புருஷ ஸ்வரூபியாக இருந்து காக்கிறானோ ருத்திரனிடத்தில் அம்ச ஆவிர்ப்பாவத்தால் சர்வ சங்காரஞ் செய்கிறானோ; எவன் இந்திரன் முதலியோரின் வடிவிலே உலகத்தைக் காக்கிறானோ எவன் சூரிய சந்திர ரூபியாகி இருளைப் போக்குகிறானோ, பூமி ரூபியாகி எல்லாவற்றையும் எவன் சுமக்கிறானோ, வாயுரூபியாக யாவற்றையும் எவன் அசைக்கிறானோ, அக்னிரூபியாகி பாகத்திற்கு எவன் உபயோகமாகிறானோ ஆகாயரூபியாக இருந்து சகலத்துக்கும் எவன் இடங்கொடுக்கிறானோ, தண்ணீரும் சோறுமாகி உலகத்தின் திருப்திக்கு எவன் காரணமாகிறானோ, எவன் யாவற்றையும் தன்னையும் தனக்குத்தானே பரிபாலனம் செய்கிறானோ, எவன் இதரங்களையும் தன்னையும் தானே அழித்துக் கொள்கிறானோ இந்தச் சிருஷ்டி ஸ்திதி, சங்கார கர்த்தாக்களாகிய மூவருக்கும் சிருஷ்டிக்கப்படுவனவும், காக்கப்படுவனவும், சங்கரிக்கப்படுவனவுமாக மூன்றுக்கும் வேறாய் விகாராதிகள் இல்லாமல் எவன் விளங்குகிறானோ, எவனிடம் உலகம் யாவுமே இருக்கின்றனவோ எவன் சகலலோக சொரூபியாக இருக்கிறானோ எவன் எல்லாவற்றுக்கும் முதலாவதாக இருக்கிறானோ எவன் இவ்வுலகத்தில் எங்கும் இருக்கிறானோ அந்தச் சர்வேஸ்வரனான விஷ்ணுபகவான் இப்போது பூவுலகத்தில் தன் அமிசத்தால் ஒரு திருவவதாரஞ் செய்திருக்கிறான்.

முன்பு உம்முடைய தலைநகரான குசஸ்தலியானது இப்போது யாதவ மன்னர்களால் ஆளப்பட்டு வருகிறது. துவாரகை என்ற பெயரையுடைய அந்த நகரம் தேவேந்திரனின் தலைநகரைப் போல் இருக்கிறது. அதில் எம்பெருமானார் ஆதிசேஷனது அம்சத்தினால் அவதரித்து பலராமன் என்ற திருப்பெயரோடு எழுந்தருளியிருக்கிறார். அரசனே! அவனுக்கு உன் மகளைப் பத்னியாகச் சமர்ப்பிப்பாயாக. உன் மகள், பெண்களில் இரத்தினத்தைப் போன்றவள் ஆகையால் இருவருக்கும் பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று பிருமதேவர் கூறினார். பிறகு ககுத்துமி மன்னன் பூவுலகம் வந்தான். அங்கேயிருந்தவர்கள் மிகக்குட்டையான வடிவமும், அற்ப தேஜஸும், அற்பமான ஞானசக்திகளும் கொண்டவர்களாக இருப்பதைக் கண்டு வியந்த வண்ணம் துவாரகைக்குச் சென்றான். அங்கு பலராமனுக்கு தன் செல்வியை மணஞ்செய்து கொடுத்தான். தாலத்துவசரான அந்தப் பலராமன் தன்னைவிடத் தான் மணந்தவள் அதிக உயரமாக இருந்ததால் தமது ஆயுதமான கலப்பையால் வணக்கியருளினான். அந்தப் பொற்கொடியும் அவரது உணர்ச்சிக்கு ஏற்றப் பிரமாணம் உடையவளாய், வேறு கன்னிகையைப் போலாகி விட்டாள். பிறகு ககுத்துமி மன்னன் தவஞ்செய்ய, இமயமலைச் சாரலுக்குச் சென்று விட்டான்.

—————-

2. சசாத, ககுஸ்தா, மாந்தாதா வரலாறுகள்

ககுத்துமி மன்னன், பிருமலோகத்திலிருந்து பூவுலகத்திற்கு வராமல் இருந்தபோது, புண்ணியஜனர் என்ற அரக்கர்கள் குசஸ்தலிப் பட்டணத்தை அழித்தார்கள். அதிலிருந்த அவனது தம்பியரெல்லாம் அவ்வரக்கர்களுக்குப் பயந்து நான்கு திசைகளிலும் ஓடியதால் அந்தக்குலத்து அரசர்கள் எங்கும் இருந்தார்கள். விருஷ்டன் என்பவன் மூலமாக, வார்ஷ்டகம் என்ற ராஜகுலம் உண்டாயிற்று. நரபாகன் என்பவனின் மகனும் நரபாகன் என்ற பெயரையே பெற்றிருந்தான். அவனுக்கு அம்பரீஷனும், அம்பரீஷனுக்கு விரூபனும், விரூபனுக்கு பிரஷதசுவன் என்பவனும் பிறந்தார்கள். பிரஷதசுவனுக்கு ரதீதரன் தோன்றினான். இவனைப் பற்றிய சுலோகம் ஒன்று வழங்குகிறது. அதாவது ரதீதர கோத்திரத்தில் பிறந்தவர்கள் க்ஷத்திரியர்களாக இருந்தாலும் அங்கிரசு என்ற பிராமண முனிவரின் சம்பந்தத்தினாலும் தவவலிமையினாலும் பிராமண ரூபமாகி, க்ஷத்திரிய சம்பந்தமுள்ள பிராமணராக விளங்கி வந்தார்கள். வைவச்சுத மனுவானவர் தும்மும் போது, அவரது மூக்கிலிருந்து இஷ்வாகு என்ற புதல்வன் பிறந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள் உண்டு. அவர்களில் விகுக்ஷி நிமி தண்டன் என்போர் முக்கியமானவர்கள். சகுனி முதலிய ஐம்பது பிள்ளைகள் உத்தராபதம் என்ற வடநாட்டின் வேந்தரானார்கள். நாற்பத்தெட்டுப் பேர் தக்ஷிணபதம் என்ற தென்னாட்டை ஆண்டு வந்தார்கள். அந்த இஷ்வாகு மாமன்னன் அஷ்டகையில் புதியதான மாமிசத்தைக் கொண்டுவரும்படித் தனது மகனான விகுக்ஷி என்பவனுக்குக் கட்டளையிட்டான். விகுக்ஷியும் தன் தந்தையின் ஆணையை ஏற்று, காட்டுக்குச் சென்று பல மிருகங்களைக் கொன்று மிகவும் களைப்படைந்து தாங்கமுடியாத பசியினால் அவற்றில் ஒரு முயலைக் கொன்று தின்று விட்டு மீதமான மிருகங்களின் இறைச்சியைக் கொண்டு வந்து தன் தகப்பனிடம் ஒப்படைத்தான். அரசன் அவற்றைப் புரோக்ஷிக்கும் பொருட்டு தனது குலகுருவான வசிஷ்டரை வேண்டினான், அவர் அவற்றைப் பார்த்து, அரசனே! இந்த அசுத்தமான மாமிசம் எதற்கு? துராத்மாவான உனது மகன் இவற்றில் ஒரு முயலின் இறைச்சியை உண்டதால் மற்றுள்ள யாவுமே அசுத்தமாகி விட்டன என்று சொன்னார். அதனால் அந்த விகுக்ஷிக்கு சசாதன் (சசாதன்-முயலைத் தின்றவன்) என்ற பெயர் உண்டாயிற்று. அதற்குப் பிறகு இஷ்வாகு இறந்த பிறகு அவனது மகனான சசாதன் அரசனாகி, நீதி தவறாமல் ஆண்டு வந்தான்.

அவனுக்குப் புரஞ்சயன் என்ற மகன் ஒருவன் பிறந்தான். அவனுக்குப் பின்வரும் காரணத்தால் ககுஸ்தன் என்ற பெயர் உண்டாயிற்று. அதாவது திரேதா யுகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெரும்போர் ஒன்று நடந்தது. அதில் தேவர்கள் தோல்வியடைந்து ஸ்ரீவிஷ்ணுவை ஆராதித்தார்கள். பகவான் நாராயணன் அவர்கள் முன்பு தோன்றி, தேவர்களே உங்கள் கருத்தை நான் அறிந்தேன். நீங்கள் அஞ்சவேண்டாம், நான் பூமியில் சசாதனுடைய மகனாகப் புரஞ்சயன் என்ற க்ஷத்திரியனின் சரீரத்திலே எனது அம்சத்தால் பிரவேசித்து அந்த அரக்கர்ரகளைச் சங்காரம் செய்வேன். ஆகையால் நீங்கள் அந்தப் புரஞ்சயனை, உங்களுக்குச் சகாயமாய்ப் போருக்கு வரும்படி வேண்டுங்கள் என்று அருளிச் செய்தார். தேவர்கள் ஸ்ரீயப்பதியின் திருவடிகளை வணங்கி விடைபெற்றுப் புரஞ்சயனிடம் சென்றனர். தேவர்கள், புரஞ்சயனைக் கண்டு அரசனே! எங்களது பகைவர்களை வெல்வதற்கு, நீயே எங்களுக்குத் துணைபுரியவேண்டும். இதை மறுக்காமல் ஏற்று நிறைவேற்ற வேண்டும்! என்றார்கள். தேவர்களே! நான் உங்களுக்குத் துணைசெய்ய வேண்டுமானால், நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்ததினால் மூவுலகங்களையும் ஆளும்படியான தேவேந்திரனே எனக்கு வாகனமாக வரவேண்டும்! அவனது தோளின்மீது ஏறிக்கொண்டு தான், நான் அந்த அசுரர்களோடு போர் செய்யமுடியும்! என்றான் புரஞ்சயன் அதைத் தேவர்கள் ஏற்றனர். இந்திரன் காளையுருவம் பெற்றான். புரஞ்சயன் அந்த ரிஷபத்தின் முசுப்பின் மீது ஏறிக்கொண்டு ஸ்ரீஅச்சுதனின் தேஜஸினால் பூரித்தவனாகி அசுரர்கள் அனைவரையுமே அழித்து, தேவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தான். விருஷபத்தின் (ககுத்) முகப்பின் (ஸ்த) மீது ஏறியதால் அவனுக்கு ககுஸ்தன் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்த ககுஸ்த மன்னனுக்கு அனேனசு பிறந்தான். அவனுக்குப் பிருது என்பவன் பிறந்தான். பிருதுவுக்கு விஷ்டராசுவன் என்பவன் பிறந்தான். அவனுக்கு யுவனாசுவன் என்பவன் பிறந்தான். அவன் சந்திர அம்சையில் பிறந்ததால் அவனுக்குச் சந்திரன் என்றும் ஒரு பெயருண்டு. அவனுக்கு சாபஸ்தி என்ற குமாரன் பிறந்தான். அவன் சாபஸ்தி என்ற நகரத்தைத் தோற்றுவித்தான். அவனுக்குப் பிருகதசுவன் பிறந்தான். அவனுக்கு குவலயாசுவன் பிறந்தான். அவன் உதங்கமா முனிவருக்குப் பகைவனாக இருந்த துந்து என்ற அசுரனைத் தனது இருபத்தோராயிரம் பிள்ளைகளோடு கூடிச் சென்று கொன்றதால் துந்துமாரன் என்ற பெயரைப் பெற்றான். அவனது பிள்ளைகளில் திருடாசுவன், சந்திராசுவன், கபிலாசுவன் என்ற மூவரைத் தவிர மற்றைய யாவரும் அந்த அசுரனின் தீமூச்சுக் காற்றால் வெந்து மடிந்தார்கள். அவர்களில் திருடாசுவனுக்கு அரியசுவன் பிறந்தான். அவனுக்கு நிகும்பனும், நிகும்பனுக்கு அமிதாசுவனும், அவனுக்கு கிருசாசுவனும், அவனுக்குப் பிரசேனசித்தும், அவனுக்கு யுவனாசுவனும் பிறந்தார்கள்.

யுவனாசுவன் நெடுநாள் புத்திரப் பேறில்லாமையினால் வெறுப்படைந்து, முனிவர்கள் வாழும் ஆசிரமங்களருகே திரிந்து கொண்டிருந்தான். முனிவர்கள் அவன் மீது கருணை கொண்டு, அவனுக்குப் புத்திரன் உண்டாவதற்காக, ஒரு யாகத்தை நடத்தினார்கள். அந்த யாகமானது நள்ளிரவில் முடிந்தது. உடனே தவசிகள் அனைவரும் மந்திர ஜபத்தால் தூய்மையாக்கப்பட்டிருந்த ஒரு தண்ணீர்க் கலசத்தை யாக வேதிகையின் நடுவே வைத்து விட்டு, உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த அரசனுக்குத் தாகம் அதிகமாக இருந்தது. அவன், முனிவர்களை எழுப்புவதற்குப் பயந்து அளவற்ற மந்திரங்களால் ஜபிக்கப்பட்டிருந்த அந்தக் கலசத்து நீரைக் குடித்து விட்டான். பொழுது விடிந்தவுடன் முனிவர்கள் எழுந்து, இந்தக் கலசத்து நீரை யார் குடித்தது? இதை யுவனாசுவரனுடைய மனைவியானவள் குடித்திருந்தால் அவள் மகாப் பலப் பராக்கிரமமுள்ள புத்திரனைப் பெற்றிருப்பாளே? அத்தகைய மந்திர நீரை யார் நாசஞ்செய்தது? என்று கேட்டார்கள். அரசன் நடந்தவற்றை அவர்களிடம் கூறி மன்னிப்பு வேண்டினான். இப்படியிருக்க, அந்த அரசனுடைய வயிற்றிலே, நாளாக நாளாக கர்ப்பம் வளர்ந்து வந்தது. மாதங்கள் நிறைந்தவுடன் அந்தக் கர்ப்பம் அவனுடைய வயிற்றைத் தன் கட்டை விரலினாலே கிழித்துக் கொண்டு வெளியே வந்தது. அரசன் மரணமடைந்தான். இவ்விதமாக குழந்தைப் பிறந்தவுடன் முனிவர்கள் ஒன்றுகூடி, பிறந்த இந்தக் குழந்தை, யாருடைய முலைப்பாலைப் பருகும்? என்று கேட்டார்கள். அப்போது அங்கே வந்த தேவேந்திரன் என்னைத் தாயாக வைத்து முலையுண்ணும் என்று சொல்லித் தனது பவித்திர விரலை, அந்தக் குழந்தையின் வாயில் கொடுக்க, அந்தப் பிள்ளை அந்த விரலிலிருந்து ஒழுகிய அமிர்தத்தைக் குடித்து ஒரே நாளில் வளர்ந்தது. இந்திரனுக்கு மாந்தாதா என்ற பெயரும் உண்டு. ஆகையால் அந்த அரசகுமாரனுக்கு மாந்தாதா என்ற பெயர் உண்டாயிற்று. அவன் மாமன்னனாகி பூமண்டலத்தை ஆண்டு வந்தான். இவனைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு. அதாவது எவ்வளவிலே சூரியன் உதயமாகிறானோ, எவ்வளவிலே அஸ்தமனமாகிறானோ, அந்த எல்லைகளுக்கு உட்பட்ட பூமண்டலம் முழுமையும் மாந்தாதாவின் ராஜ்யமாக இருந்தது! என்பது தான் அந்தப் பாடலாகும்.

அந்த மாந்தாதா, சசபிந்து என்பவனின் மகளாகிய இந்துமதி என்பவளை மணந்து, புருகுச்சன், அம்பரீஷன், நாபாகன் என்ற பிள்ளைகளையும் ஐம்பது பெண்களையும் பெற்றான். அந்தக் காலத்தில் ரிக் வேதமறிந்த சவுபரி என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கிப் பன்னிரண்டு ஆண்டுக்காலம் தவஞ்செய்து கொண்டிருந்தார். அந்தத் தண்ணீரில் சம்மதன் என்ற மிகப்பெரிய மீன் ஒன்று, பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், உறவினர்களாகிய தன் கிளைகள் அநேகம் முன்னும் பின்னும் பக்கங்களிலும் வாலிலும் தலையிலும் ஏறி விளையாடச் சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அதனால் சவுபரி முனிவரது மனஒருமைப்பாடு நீங்கியது. அவர் அந்த மச்சம் தன் கிளைகளோடு கூடி அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் கண்டு, ஓ! இந்த மீனோ விரும்பத்தகாத ஈனப் பிறப்பிற் பிறந்தது. ஆயினும் அது மிகவும் பாக்கியமுள்ளது. ஏனென்றால் புத்திர பவுத்ராதிகள் விளையாடிக் கொண்டிருக்க, அவற்றோடு இணைபிரியாமல் சஞ்சரித்து மகிழ்கின்றது. இதைப் பார்க்க நமக்கே எவ்வளவு ஆசையுண்டாகிறது? ஆகையால் நாமும் இப்படியாவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசித்து அந்தத் தடாகத்திலிருந்து வெளியே வந்து, சந்தானத்துக்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு மாந்தாதா மன்னனிடம் வந்தார். இவர் வந்த செய்தியை அறிந்த மன்னன் அவரை எதிர்கொண்டழைத்து உபசரித்தான். அவனை சவுபரி முனிவர் நோக்கி, அரசனே! நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ எனக்குக் கன்னிகாதானம் கொடுக்க வேண்டும். என்னுடைய வேண்டுதலை மறுக்காதே! ககுஸ்த வமிசத்தாரிடம் வந்த யாசகர் தாம் விரும்பியதைப் பெறாமலிருந்ததில்லை அல்லவா? இவ்வுலகில் எத்தனையோ அரசர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குங் கன்னிகைகள் இருக்கிறார்கள். ஆயினும், யாசகரின் இஷ்டத்தை நிறைவேற்றும் விரதமுடையது உனது குலம். உனக்கு ஐம்பது பெண்கள் இருக்கிறார்களல்லவா? அவர்களில் ஒருத்தியை எனக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டும். என் பிரார்த்தனை நிறைவேறாமற் போயின் நான் வருந்துவேன். நான் வருந்தாமல் இருக்க, என் துன்பத்தை நீதான் நீக்கவேண்டும் என்றார். இவ்விதமாகச் சவுபரி முனிவர் சொன்னவுடன், மாந்தாதா மன்னன் அவரை உற்றுப் பார்த்தான். மூப்பினால் தளர்ந்து, தலை நரைத்திருந்தார் சவுபரி முனிவர்! ஆனாலும் அவருடைய வலிமையைப் பற்றிய பயத்தினால் அவரது விண்ணப்பத்தை மறுக்கமாட்டாமல் மாந்தாதா மன்னன் தலைகுனிந்து நெடுநேரம் யோசித்தான். அப்போது சவுபரி முனிவர், அரசனே! எதைப் பற்றிச் சிந்தனை செய்கிறாய்? நான் ஒன்றும் தகாததைச் சொல்லவில்லையே? அவசியம் யாருக்காவது கொடுத்தே தீரவேண்டிய கன்னியை எனக்குக் கொடுக்கும்படித்தானே நான் கேட்டேன்? இதனால் நீ புண்ணியம் பெறுவாய்! என்றார்.

அவரை அரசன் நோக்கி தவமுனிவரே! எனது குலமுறைப்படி, கன்னிகை யார் மீது இஷ்டப்படுகிறாளோ, அந்த வரனுக்கே அவளைக் கொடுப்பது வழக்கம். இது இப்படியிருக்கத் தேவரீரது வேண்டுதலோ எமது எண்ணங்களுக்கு மேற்பட்டது. அதனால் தான் செய்வதறியாமல் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதைக்கேட்ட முனிவர் இந்த அரசன் நமது வேண்டுகோளை மறுக்க இதை ஓர் உபாயமாகச் சொல்லிவிட்டான் என்றே யோசித்தார். ஏனென்றால் இந்த முனிவன் முழுக்கிழவன். ஆகையால் எத்தகைய பெண்ணும் இவரை விரும்பமாட்டாள். அப்படியிருக்க நல்ல பருவமுடைய நம் கன்னியர் இவரை விரும்புவார்களோ? ஆகையால் தானே ஆசையற்றுப் போகட்டுமே என்று அரசன் நினைத்தே அப்படிக் கூறிவிட்டான். இனி அதற்கேற்ப நடக்கவேண்டும் என்று சவுபரிக் கிழவர் தமது மனதில் எண்ணிக்கொண்டு அரசனைப் பார்த்து, அரசனே! உங்கள் குலவிரதத்தை நான் அழிக்கவிரும்பவில்லை; என்னை உமது கன்னிகைகள் இருக்கும் அந்தப்புரத்திற்குப் போகும்படி, அந்தப்புரக் காவலாளிக்குக் கட்டளையிடுவாயாக. கன்னிகையே என்னைக் கதாலிப்பவளாயின் நான் கல்யாணஞ் செய்து கொள்கிறேன். இல்லாவிட்டால் முதிர்ந்த வயதில் இந்த முயற்சி எனக்கு ஏனென்று விட்டு விடுகிறேன்! என்றார். பிறகு அவர் கூறியபடியே செய்யும் வண்ணம் அந்தப்புரக் காவலாளிக்கு அரசன் கட்டளையிட்டான். அக்காவலாளியோடு சவுபரி முனிவர் கன்னிப் பெண்களின் அந்தப்புரத்தினுள்ளே போகும்போது சித்த கந்தர்வர்களைவிட மேம்பட்ட அழகான ரூபத்தை எடுத்துக் கொண்டார். சேவகன், முனிவரை அந்தப்புரத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு அங்கிருந்த கன்னியரைப் பார்த்து உங்கள் தந்தையான அரசரிடம் இந்த முனிவர் கன்னிகை வேண்டி வந்தார். கன்னிகைகளில் யார் பிரியப்பட்டு இவரை வரித்துக் கொள்கிறார்களோ, அவர்களையே அவர்களிஷ்டப்படி இந்த முனிவருக்குக் கொடுப்பேன் என்று மகாராஜா கட்டளையிட்டிருக்கிறார் என்றான். அதைக் கேட்டதும் அரசகுமாரிகள் அந்த முனிவரை வந்துப் பார்த்தார்கள். முனிவரின் புதுவடிவத்தையும் இளமை துள்ளும் மோகன ரூப அழகுகளையும் கண்டு அக்கன்னிகைகள் அனைவரும் காமாவேசமுடையவர்களாகி நல்ல மதத்த ஆண் யானையை பெண் யானைகள் சூழ்வதைப் போலச் சூழ்ந்து கொண்டு, நான் நான் என்று பரபரப்புடன் போட்டியிட்டு அவரை வரித்தார்கள். இதனால் அப்பெண்களிடையே கலகம் ஏற்பட்டது; அவர்கள் அனைவருமே அவரை விரும்பினார்கள். எனவே அங்கு நடந்தவற்றைக் காவலாளி அரசரிடம் தெரிவித்தான். அதைக் கேட்டதும் மாந்தாதா மன்னன் மிகவும் வியப்படைந்து, என்ன இது? இனி என்ன செய்வேன்? என்ன சொல்லி விட்டேன்? என்று மனம் கலங்கி, தனக்கு விருப்பம் இல்லாதிருந்தும், வாக்குக் கொடுத்து விட்டதற்காகப் பயந்து, தன் கன்னிப்பெண்களையெல்லாம் சவுபரி முனிவருக்கே திருமணஞ் செய்து கொடுத்தான்.

பிறகு, சவுபரி முனிவர் அரசகுமாரிகளை அழைத்துக் கொண்டு ஆசிரமத்தை அடைந்தார். அதன்பிறகு சிற்பியான விசுவகர்மாவை அழைத்து தமது மனைவியருக்குத் தனித்தனியாக மாளிகைகளையும் அன்னங்கள் நீந்தும் தடாகங்களையும் மலர் வனங்களையும் அமைத்துக் கொடுக்கச் செய்தார். அவ்வாறே விசுவகர்மாவும் அமைத்துக் கொடுத்தான். பின்பு, சவுபரி மாமுனிவரது ஆக்ஞையினால் அந்த மாளிகைகளில் நந்தனம் என்ற மகாநதியானது நித்தியமாக இருந்து வந்தது. அந்த மாளிகைகளில் ராஜகுமாரிகள் வசித்து போகங்களிலும் போஜன வகையிலும் திருப்தியடைந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அவர்களுடைய தந்தையான மாந்தாதா மன்னன் ஒரு சமயம் தன் பெண்கள் மீதுள்ள அன்பினால், அவர்களைப் பார்ப்பதற்காக முனிவரது ஆசிரமத்தை அடைந்தான். ஆசிரமம் இருந்த இடத்தில் ஸ்படிக மயமாய் விளங்கிய மாடமாளிகைகளைக் கண்டு அதிசயித்து ஒரு மாளிகையினுள்ளே நுழைந்தான். அங்கிருந்த தனது மகளைக் கண்டு, கண்களில் கண்ணீர் ததும்ப மகளே! நீ சுகமாக இருக்கிறாயா? அல்லது அசுகமாக இருக்கிறாயா? முனிவர் உன்னிடத்தில் அன்பாக இருக்கிறாரா? நீ நம்முடைய அந்தம்புரவாசத்தை நினைக்கிறாயா? என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் தந்தையே! நான் சுகமாகவே இருக்கிறேன். எனக்கென்று ரமணீயமான உப்பரிகையும், அழகான தோட்டமும், நீர்ப்பறவைகளோடு தாமரை முதலியவை விளங்கும் தாடகங்களும், மனதிற்கினிமையான போஜனங்களும், திவ்வியமான ஆடையாபரணங்களும் மிகவும் பரிமளமுள்ள மலர்களும் மிகவும் மென்மையான சயனா சனங்களும் இன்னும் இல்லறத்துக்குரிய யாவுமே நன்றாக இருக்கின்றன ஒரு குறையும் எங்களுக்கில்லை. இருப்பினும் பிறந்த இடம் எப்படி மறக்கும்? ஆனால் துக்கத்துக்குக் காரணம் ஒன்றும் இருக்கிறது. அது என்னவென்றால், என் கணவராகிய அந்த முனிவர் எப்போதும் என்னிடமே காதல்கொண்டு, என்னை விட்டுப்பிரியாமல் இருக்கிறார். எனது சகோதரிகளே நினைப்பதில்லை இது தான் என்மனதை வருத்துகின்றது என்றாள்.

பிறகு மாந்தாதா மன்னன் மற்றொரு மகளின் மாளிகைக்குச் சென்று, அவளிடமும் முன்போலவே, அவளது சுகத்தைப் பற்றி விசாரித்தான். அதற்கு அவளும் தனக்கு கிருஹ பூஷண, சயன, போஜனாதி சவுக்கியங்களில் ஒன்றும் குறைவில்லை என்றும், ஆயினும் தன் கணவன் தன்னை விட்டுப் பிரியாமல் எந்நேரமும் தன்னுடனேயே மகிழ்ந்திருப்பதினால் தனது சகோதரிகளுக்கு நேர்ந்துள்ள துக்கமே தனக்குத் துக்க காரணமாக இருக்கிறதென்றும் சொன்னான். பிறகு மன்னன் இதுபோலவே ஒவ்வொரு புதல்வியின் மாளிகைக்கும் சென்று விசாரித்தான். எல்லோரும் ஒன்றுபோலவே பதில் சொல்லி, அவனை நன்கு உபசரித்தார்கள். இதனால் மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஏகாந்தத்தில் உட்கார்ந்திருந்த சவுபரி முனிவரைக் காணச் சென்று, அவரால் மரியாதை செய்யப்பெற்று, வெகு விநயத்துடன் அவரை நோக்கி, ஓ மகானுபவரே! தங்களின் உயர்வான சித்தியின் பிரபாவத்தைக் கண்டேன். நான் இதுபோன்ற சம்பத்து விலாசம் இருப்பதைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. இது எவ்வளவோ அவ்வளவும் உமது தவத்தின் பயன் ஆகும்! என்று சொல்லி, அவரை மிகவும் புகழ்ந்தான். பிறகு அவருடன் சிலகாலமிருந்து, இஷ்டமான போகங்களை அனுபவித்து, அதன் பிறகு தனது தலைநகரை அடைந்தான். சிலகாலத்துக்குப் பிறகு, சவுபரி முனிவரின் பத்தினிகளான குமாரிகளுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகள் மீது சவுபரி முனிவருக்கு நாளுக்கு நாள் ஆசையும், அன்பும் அதிகமாயிற்று. அதனால் அவர் மமதையடைந்து, இந்தக் குழந்தைகள் மழலைச் சொற்களைச் சொல்லிக்கொண்டு சிற்றடிகளால் நடக்குமோ? இவர்கள் யவனமுடையவர்களாவார்களோ? இவர்கள் திருமணம் புரியத்தக்க பெண்களோடு கூடியிருக்கக் காண்பேனோ? இவர்களுக்குக் குழந்தைகள் உண்டாகுமோ? அக்குழந்தைகள் வளர்ந்து மனைவியரோடு சேர்ந்து சந்தானமுடையவர்களாக இருப்பதை நான் கண்டு களிப்பேனோ என்று இந்தவிதமாகக் காலம் செல்லச் செல்ல அவரது மனோரதங்கள் வளர்ந்து கொண்டே இருந்ததால், அவர் வேறு சிந்தனையில்லாமல் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது சவுபரி முனிவர் தமக்குத் தாமே யோசிக்கலானார். ஓஹோ! எனக்கு நேர்ந்த மோகத்தை என்னவென்று சொல்வேன்? பதினாலாயிரம் ஆண்டுகள் சென்றாலும் இந்த மனோரதங்கள் ஒழியாது போலத் தோன்றுகிறதே! ஏனென்றால் முன்பு இருந்த மனோரதங்கள் நிறைவேற நிறைவேற புதியதான வெவ்வேற மனோரதங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனவே. நாம் கோரியபடி குழந்தைகள் பிறந்து தவழ்ந்து சித்தடிவைத்து நடந்து வளர்ந்து பருவம் அடைந்து மணஞ்செய்து மக்களையும் பெறக் கண்டோம். இப்பொழுதோ, நமது மனமோ, பேரன்மாருக்கும் சந்ததியுண்டாவதைக் காண விரும்புகிறது. அதைக் கண்டாலும் வேறொன்று மேலும் உண்டாகும். அது நிறைய, வேறொன்று உண்டாகும். மேன்மேலும் ஆசையுண்டாவதைத் தடுப்பதுதான் எப்படி? மரணம் அடைவதனால் மாத்திரம் இந்த மனோரதங்களுக்கு முடிவுண்டாகுமேயன்றி வேறொன்றினாலும் முடிவுண்டாகாது.

இது இப்போது தான் எனக்கு நன்றாகத் தெரிகிறது. இவ்வாறு கோரிக்கைகளிலே அழுந்தியிருப்பவனுக்கு ஒருபோதும் மனமான பரம்பொருளைப் பற்றமாட்டாது. தண்ணீரில் வாசஞ்செய்யும்போது மித்திரனான மச்சத்தின் சேர்க்கையினால் அல்லவோ எனது சமாதி நிஷ்டைக்குலையலாயிற்று? சகவாச தோஷத்தால் அல்லவா, நான் அரசகுமாரிகளை மனைவியர்களாக அடைய நேர்ந்தது. இந்தப் பெண்டிரைக் கொண்டதால் அன்றோ மேன்மேலும் ஆசைப்பெருக்கம் உண்டாயிற்று. ஒரு பெண்டிரைக் கொள்வதும் ஒரு புத்திரனைப் பெறுவதுமே வெகு துக்கத்துக்குக் காரணமாக இருக்கும்போது ஐம்பது பெண்டிரையும் நூறு பிள்ளைகளையும் பெற்று நான் துக்கத்தைப் பெருக்கிக் கொண்டேனே? நான் தண்ணீரிலிருந்து செய்த தவப்பேற்றுக்கு இந்தச் செல்வப்பேறு இடையூறாயிற்றே? மச்சத்தின் கூட்டுறவால் ஏற்பட்ட மக்கட்பேற்றின் விருப்பத்தால் மனங்கவரப்பட்டுப் போனேனே? சங்கமற்றிருப்பதே முனிவர்களுக்கு மோக்ஷத்தின் காரணமாகும் சங்கத்தினால் குற்றங்கள் அல்லவா உண்டாகும்? யோக நிஷ்டை கை கூடியவனும் சங்கத்தால் வீழ்வானாகில் அற்ப சித்தியுள்ள என்போன்றோருக்கு கேட்கவும் வேண்டுமோ? இனிமேலாவது தக்க முயற்சிசெய்து, ஆன்மாவைக் காக்கவேண்டும். ஆகையால் எல்லாவற்றையும் அளிக்கவல்லவனும் இத்தகையது என்று சிந்திக்க ஒண்ணாத திவ்யச் சொரூபமுள்ளவனும், அணுவுக்கு அணுவாயும், மகத்துக்கு மகமாயும் இருப்பவனும், முன்பு ஒரு யுகத்திலே வெண்மையாயும் இந்த யுகத்திலே கருமையாயுமிரா நின்ற திவ்விய மங்கள விக்கிரஹமுள்ளவனும், பிரகிருதிக்கு உட்படாத தூய்மையுருவும், பிரகிருதிக்கு உட்பட்ட சுத்தமல்லாத சொரூபமுடையவனும், லோகேசுவரனுமான ஸ்ரீவிஷ்ணுபகவானை ஆராதிக்கக் கடவேன். சகல தேஜோரூபியாகவும், சர்வ ஸ்வரூபியாகவும், வெளிப்பட்டதும் வெளிப்படாததுமான திருமேனியை உடையவனாகவும், காரிய காரண ரூபியாகவும், தேச காலாதி பரிச்சேதமில்லாதவனாகவும் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவினிடத்திலே மீண்டும் பிறவியில்லாமல் இருத்தற்கு என் சித்தம் சஞ்சலமின்றி ஸ்திரமாக இருக்கக் கடவது. சர்வ பூதாத்துமகனாகவும் நிர்மலனாகவும் சர்வேசுவரனாகவும் ஆதி மத்யாந்தர ரகிதனாகவும் இருக்கும். அந்த அநந்தனைக் காட்டிலும் வேறாகத் தோன்றும்படியான பொருள் ஒன்றும் இல்லையோ அந்தத் தேசிகனுக்கு எல்லாம் தேசிகனாக எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவை சரணமாகப் பற்றுகிறேன்! என்று இவ்விதம் தனக்குத்தானே சிந்தித்த சவுபரி முனிவர், புத்திரர்களையும் வீடு, தோட்டம் முதலிய யாவற்றையும் பற்றற விட்டு, தமது மனைவியருடன் வனத்துக்குச் சென்று, வானப் பிரஸ்தர் செய்யவேண்டிய நித்தியக்கர்ம அனுஷ்டானங்களைச் செய்து கொண்டு, சகல பாவங்களையும் போக்கிக் கொண்டு, அதனால் பக்குவமான சித்த நிலையை அடைந்து, அக்கினிகளே ஆத்மாவிலே ஏற்றிவிட்டுச் சந்நியாச ஆசிரமத்தில் பிரவேசித்தார். அவ்விதமாகி, சகல கிரியாக லாபத்தையும் எம்பெருமானுக்கே ஆராதனமாகச் சமர்ப்பித்து நாசம் இல்லாததும், விகார சூன்யமானதும் மரணாதிகளுக்கு இடமாகாததும் அளவற்றதும், பரம பாகவதர்கள் அடையும்படியானதுமான விஷ்ணுலோகம் என்று சொல்லப்படும் பரமபதத்தை அடைந்தார். மைத்ரேயரே! மாந்தாதா மன்னனைப் பற்றிய வரலாற்றிலேயே, இந்த சவுபரி முனிவரின் சரிதத்தையும் நான் உமக்கு சொன்னேன். இதை எவன் ஸ்மரிக்கிறானோ, படிக்கிறானோ, படிக்க வைக்கிறானோ, கேட்கிறானோ, கேட்பிக்கிறானோ, தரிக்கிறானோ, எழுதுகிறானோ, எழுதுவிக்கிறானோ, அதன்படி நடக்கிறானோ, நடத்துவிக்கிறானோ, உபதேசிக்கிறானோ, அவர்களுக்கெல்லாம் எட்டுப் பிறவிகள் வரையிலும் தீயச் சிந்தையும், தீய ஒழுக்கமும் தீயவழியில் மனம் வாக்கு செல்லுதலும், பரித்தியாகம் செய்ய வேண்டியவைகளிலே அபிமானமும் உண்டாவதில்லை!

—————

3. புருகுச்ச, சகர மாமன்னர்களின் வரலாறுகள்

மைத்ரேயரே! இனிமேல் மாந்தாதாவின் பரம்பரையைச் சொல்கிறேன். மாந்தாதாவின் மகனான அம்பரீஷனுக்கு யுவனாசுவன் என்ற புத்திரன் உண்டானான். அவனுக்கு அரிதன் பிறந்தான். அந்தக்காலத்தில் பாதாள உலகத்தில் மவுனேயர் என்ற ஆறுகோடிக் கந்தருவர்கள் இருந்தார்கள். அவர்கள் நாக குலத்தாரின் முக்கியமான இரத்தினங்களையும், ஆட்சியையும் பறித்துக் கொண்டார்கள். அதனால் நாகர்கள், திருப்பாற்கடலில் சென்று சகல தேவ தேவனான ஸ்ரீவிஷ்ணு பெருமானைத் தோத்திரஞ் செய்தார்கள். எம்பெருமான் யோக நித்திரை நீங்கி, தாமரை மலர் மலர்ந்தாற்போலத் திருக்கண் மலர்ந்தருளினார். அப்போது நாகர்கள், சுவாமீ! அடியேங்களுக்குக் கந்தருவருடைய பயம் மிகுந்துள்ளது. இது எப்படித் தீரும்? என்று கேட்டார்கள். அதற்கு முதலும் முடிவும் இல்லாத எம்பெருமான் நாகர்களே! மாந்தாதாவின் மகன் புருகுச்சன் என்பவனிடத்திலே நான் ஆவேசித்து, உங்கள் பகைவர்களை அடக்குகிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன்பிறகு நாகர்கள் அவரை வணங்கி விடைபெற்று, பாதாளம் சென்று தங்கள் சகோதரியான நர்மதையை அந்தப் புருகுச்ச மன்னனின் பத்தினியாகும்படி அனுப்பிவைத்தார்கள். அவள் புருகுச்சனோடு சேர்ந்து, அந்த மன்னனைப் பாதாளலோகத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். பிறகு புருகுச்ச மாமன்னன், எம்பெருமானது தேஜோ விசேஷத்தால் ஆவேசமுற்று, கந்தர்வர்கள் அனைவரையும் நாசஞ்செய்து, தன் பட்டணத்தை அடைந்தான். அப்போது நாகமன்னர்கள் ஒன்றுகூடி, நர்மதையை அழைத்து, நர்மதாய்! யார் உன்னை நினைத்தாலும் உன் பெயரைக் கீர்த்தனஞ் செய்தாலும், அவனுக்கு சர்ப்ப பயம் இல்லாமற் போகக் கடவது என்று நர்மதைக்கு வரங்கொடுத்தார்கள். இதற்கு ஒரு பாடலும் உண்டு. அதாவது காலையில் நர்மதைக்கு நமஸ்காரம், இரவிலும் நர்மதைக்கு நமஸ்காரம். ஓ! நர்மதாய் உனக்கு நமஸ்காரம் நீ என்னை நச்சுப்பாம்புகள் கடிக்காமல் ரட்சிக்க வேண்டும்! என்று எவனொருவன் சொல்லிக் கொண்டு, இரவு பகல்களில் இருள் மூடிய இடங்களுக்குச் சென்றாலும் அவனைப் பாம்புகள் கடிப்பதில்லை. இவ்விதமாகத் தியானித்துக் கொண்டு, விஷத்தையே அருந்தினாலும் அதனால் ஒரு தீங்கும் உண்டாவதில்லை. இவ்விதமாக நர்மதைக்கு நாகேந்திரர்கள் வரங்கொடுத்து விட்டு, புருகுச்ச மன்னனுக்கும் அவனது சந்ததி அற்றுப் போகாதவாறும் பெருகும்படியும் வரங்கொடுத்தார்கள்.

புருகுச்ச மன்னன் நர்மதையோடு கூடிமகிழ்ந்து திரசதஸ்யு என்பவனைப் பெற்றான். அவனுக்கு அநரண்யன் பிறந்தான். அவனை இராணவன் திக்விஜயம் செய்துவரும்போது; சண்டை செய்து கொன்றான். அந்த அநரண்யனுக்கு பிரஷதசுவன் பிறந்தான். அவன் மகன் ஹரியசுவன், அவன் மகன் ஹஸ்தன். அவனுக்கு வசுமனது, அவனுக்குத் திரிதன்வா, அவனுக்குத் திரையாருணி. அவனுக்குச் சத்தியவிரதன் பிறந்தான். அவன் தான் திரிசங்கு என்ற பெயரைப் பெற்றவன். அந்த திரிசங்கு ஒரு சமயம் தன் தந்தையின் சாபத்தால் சண்டாளனாக மாறினான். அப்போது பன்னிரண்டு ஆண்டுக்காலம் மழையில்லாமல் ஏற்பட்ட ஒரு பெரும் பஞ்சத்தில் விசுவாமித்திரரின் மனைவியும் மக்களும் பிழைக்கும் பொருட்டு அவன் தினந்தோறும் மிருக இறைச்சிகளைக் கொண்டு வந்து கொடுத்தான். சண்டாளனிடம் வாங்கும் குற்றம் அவர்களுக்கு ஏற்படாதவாறு அந்த இறைச்சிகளைக் கங்கைக் கரையிலிருந்த ஓர் ஆலமரத்தின் கிளையிலே கட்டிக் கொண்டுவந்தான். இதனால் விசுவாமித்திரர் அவன் செயலையறிந்து மகிழ்ந்து, திரிசங்குவை அவனது உடலுடன் சொர்க்கலோகம் ஏற்றினார். அந்தத் திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திர மன்னனாகும். அவன் மகன் லோஹிதாசன் அவன் மகன் ஹிரிதன், ஹரிதனுக்கு சஞ்சு என்ற குமாரி பிறந்தாள். சஞ்சுவுக்கு விஜயன், வசுதேவன் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களின் விஜயனுக்கு குருகன் பிறந்தான். அவனுக்கு விருகனும், விருகனுக்குப் பாகுவும் பிறந்தார்கள். அந்தப் பாகுமன்னன் ஹேஹயர்களால் வெல்லப்பட்டு, கர்ப்பிணியான தன் மனைவியுடன் காட்டுக்குச் சென்றான். அங்கு அவளுடைய சக்களத்தியானவள் அவளுடைய கர்ப்பம் அழிந்து போகும்படி அவளுக்கு விஷத்தைக் கொடுத்தாள். அதனால் அந்த கருவானது ஏழாண்டுக் காலம் அவளது வயிற்றிலேயே இருந்தது. இந்நிலையில் பாகு அரசனுக்கு வயது சென்றதால் அவன் அவுர்வ மாமுனிவருடைய ஆசிரமத்தின் அருகே மரணமடைந்தான். அப்போது கர்ப்பவதியான அவனது மனைவி, சிதையடுக்கித் தன் கணவனை அதன் மீது வைத்து, தானும் அவனுடனே அனுமரணஞ்செய்து கொள்ள முயன்றாள். இதையறிந்த அவுர்வ மாமுனிவர் தமது ஆசிரமத்திலிருந்து அங்கு வந்து, அவளை நோக்கி, பெண்ணே! இது வீணான எண்ணம் மகா பலப்பராக்கிரமசாலியாக அநேக யாகங்களைச் செய்யக்கூடியவனாய், கீர்த்திக்குரிய மகன் ஒருவன் உன் வயிற்றில் இருக்கிறான். ஆகையால் நீ இவ்விதமாக மரணமடைய வேண்டாம்! என்றார். உடனே, அவளும் அந்த முயற்சியைக் கைவிட்டாள். முனிவர், அவளைத் தம்முடைய ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி வந்தார். சில நாட்களில் அவள் வயிற்றிலிருந்து நஞ்சுடன் கூடிய மகா தேஜஸ் வாய்ந்த ஒரு புதல்வன் பிறந்தான். அந்தப் பிள்ளைக்கு அவன் விஷத்துடன் பிறந்ததால், சகரன் என்ற பெயரைச் சூட்டினார் அவுர்வ முனிவர். சகரன் வளர்ந்த பிறகு அவனுக்கு உபநயனஞ் செய்வித்து சகல வேத சாஸ்திரங்களையும் அவனுக்குக் கற்பித்தார். மேலும் பிருகு முனிவரால் உபதேசிக்கப்பெற்ற ஆக்கினோயாஸ்திரத்தையும் அவனுக்கு உபதேசித்தார்.

இவ்விதமாக ஓதியுணர்ந்த சகரன் என்ற அரசிளங்குமரன் ஒருநாள் தன் தாயை நோக்கி, அம்மா, என் தந்தை எங்கே? நாம் மன்னர் குலத்தில் பிறந்தும் இந்த காட்டுக்கு ஏன் வந்தோம்? என்று கேட்டான். அவள் நடந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொன்னாள். அதைக்கேட்ட ராஜகுமாரன் சகரன் கோபங்கொண்டு, அன்று முதல் ஹேஹய வம்சத்தையே துவம்சம் செய்வதாகச் சபதம் செய்தான். பிறகு, அவன் தன் சபதப்படியேப் பகைவர்களை அழித்தான். அதோடு, பகைவருடன் சேர்ந்திருந்த சகர், யவனர், காம்போஜர், பாரதர், பப்பிலவர் முதலியவர்களையும் நாசஞ்செய்ய முனைந்தான். எனவே அவர்கள் அனைவரும் அவனை எதிர்க்க முடியாமல் வசிஷ்ட முனிவரைச் சரணடைந்தார்கள். அவர்களைப் பிழைத்திருக்கும் பிணங்களாக வசிஷ்ட முனிவர் நினைத்துக்கொண்டு சகரனிடம் சென்று, மன்னா! இவர்கள் உயிரோடு இருந்தாலும் இறந்தவர்களுக்கு ஒப்பாவார்கள். இவர்களே மறுபடியும் இறக்கச் செய்வதில் யாது பயன்? நானே, உன் சபதத்துக்கு விரோதம் ஏற்படாமல் இருக்க, அவர்களை வைதிக சம்பந்த சூனியராகச் செய்து விட்டேன். ஆகவே நீ அவர்களை விட்டு விடுவாயாக என்றார். சகர மன்னனும் அப்படியே ஒப்புக்கொண்டு, குருவாக்கிய பரிபாலனம் செய்தான். ஆயினும் அவர்களில் யவனரை மொட்டைத் தலையராகவும், சகரைப் பாதித்திலை மழித்தவராகவும், பாரதரை தலைமயிர் தொங்க விட்டவராகவும், பப்பிலவரைத் தாடிவளர்ப்பவராகவும் செய்து, அவர்களது வேஷங்களை மாற்றி, அவர்களை வேதாத்தியயனாதி சூனியர்களாக ஆக்கிவிட்டான். அவர்கள் அனைவரும் இவ்விதமாகத் தருமம் இழந்தனர். ஆகையால் மிலோச்சராகக் கருதப்பட்டனர். அதன் பிறகு சகர மகாராஜன் தன் நகரத்துக்குச் சென்று; தன் ஆணைக்குப் பங்கம் ஏற்படாதவாறு சகலதுவீப சமுத்திரங்களோடு கூடிய இந்தப் பூமியை நீதியாய்ப் பரிபாலித்து வந்தான்.

————

4. சகர புத்திரரின் வரலாறும், சக்கரவர்த்தித் திருமகனார் வைபவமும்

சகர மன்னனுக்கு காசியபரின் மகளாகிய சுமதி என்பவளும் விதர்ப்ப ராஜனின் மகளாகிய கேசினி என்பவளும் மனைவியராக விளங்கினார்கள். அவ்விரு மங்கையரும் மக்கட்பேற்றையடைய அவுரவ முனிவரை ஆராதித்தார்கள். அதனால் அம்முனிவர் மகிழ்ந்து அவர்களை நோக்கி, ராஜபத்தினிகளே! உங்களில் ஒருத்தி வமிசம் விளங்குவதற்கான ஒரு பிள்ளையையும் மற்றொருத்தி அப்படியில்லாத அறுபதினாயிரம் பிள்ளைகளையும் பெறலாம். யாருக்கு எது விருப்பமோ, அதைப் பெறலாம்! என்று ஒரு வரங்கொடுத்தார். பத்தினி கேசினி என்பவள், தன் வமிச விருத்திக்குரிய ஒருவனையே விரும்பினாள். அவளுடைய சக்களத்திச் சுமதியோ அறுபதியிரம் பிள்ளைகளைப் பெற விரும்பினாள். அப்படியே ஆகட்டும் என்று முனிவர் வாழ்த்தவே, அவ்விருவரும் சில நாட்களில் அவ்வாறே பிள்ளைகளைப் பெற்றார்கள். அவர்களில் கேசினியின் குமாரனான அசமஞ்சசனுக்கு அம்சுமான் என்பவன் பிறந்தான். அந்த (அசமஞ்சசம்-தீயவை) அசமஞ்சசன் சிறுவனாக இருக்கும்போது மிகவும் தீமையான செயல்களையே செய்து வந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர் உண்டாயிற்று. சகரமன்னனோ தன் மகன் சிறுவனாக இருப்பதால் இப்படிப்பட்டத் தீங்கைச் செய்கிறான். பருவம் வந்தால் புத்திசாலியாகவும் நல்ல நடத்தையுடையவனாகவும் ஆவான் என்று நினைத்திருந்தான். ஆனால் அசமஞ்சசனோ வாலிபனாகியும் தீமையே செய்து வந்ததனால் அவனைச் சகர மன்னன், காட்டுக்குத் துரத்திவிட்டான். பிறகு அறுபதினாயிரம் பிள்ளைகளும் அசமஞ்சசனைப் போலவே, துஷ்டத்தனங்களைச் செய்யலானார்கள். அவர்களால் உலகத்தில் யாகாதி சத்காரியங்களும் சத்திய சவுசாதி ஆசாரங்களும் ஒழிந்து போவதைக் கண்ட தேவர்கள், ஸ்ரீபுரு÷ஷாத்தமரின் அம்சமாக விளங்கியக் கபில முனிவரை அணுகி வணங்கி, கபில பகவானே! சகர மன்னனின் பிள்ளைகளெல்லாம் கொடியவர்களாகி உலகத்தை அழித்து வருகிறார்கள். இதுவரையில் அவர்களால் அழிந்தவை இனியெப்படியாகுமோ தெரியவில்லை. துன்பமடைந்த இந்த ஜகத்தைக் காப்பாற்றவல்லவோ, தாங்கள் அவதரித்திருக்கிறீர்கள்! என்றார்கள். அதற்கு அவர், தேவர்களே, சில நாட்களுக்குள்ளேயே அவர்கள் அனைவரும் மாண்டு போவார்கள் என்றார். தேவர்கள் ஆறுதலடைந்தார்கள்.

இது இவ்விதமிருக்க, சகரமன்னன் அசுவமேத யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினான். அதன் காரணமாகத் தன் பிள்ளைகளின் காவலில் யாகக் குதிரையைச் சுற்றுப்பயணத்திற்காக ஓட்டி விட்டான். அந்தக் குதிரையை யாரோ ஒருவன் கொண்டு போய்ப் பாதாளத்தில் விட்டுவிட்டான். பிறகு சகரனின் குமாரர்கள் அந்தக் குதிரையின் குளம்படியை அடையாளமாகக் கொண்டு ஒவ்வொரு காதமாகப் பூமியை வெட்டித் தோண்டிக் கொண்டு சென்றார்கள். பாதாள லோகத்தின் உள்ளே போய் அங்கே திரிந்து கொண்டிருந்த யாகக் குதிரையையும் அதற்குக் கொஞ்சம் தொலைவிலே, தேஜஸோடு ஜ்வலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கபில பகவானையும் கண்டார்கள். உடனே அந்தத் தீயவர்கள், இதோ! இவன் தான் நமது குதிரையைத் திருடிக் கொண்டு, யாகத்தைத் தடுத்து நமக்கு அபகாரஞ் செய்தவன். ஆகவே, இவனைக் கொல்லுங்கள்! என்று கூவிக்கொண்டே ஆயுதங்களுடன் முனிவர் மீது பாய்ந்தார்கள். இப்படியவர்கள் ஓடிவரும் போது முனிவர் சற்று உக்கிரமாக அவர்களைப் பார்த்தார். அந்தப் பார்வையில் அவர்கள் பற்றி எரிந்து சாம்பலாய்க் குவிந்தார்கள். இதுபோலத் தனது யாகக் குதிரை போனதையும், புத்திரர்கள் அழிந்தொழிந்ததையும் அறிந்து சகரமன்னன், தன் பேரனாகிய அம்சுமானை அழைத்து, அந்தக் குதிரையைக் கொண்டு வரும்படிக் கட்டளையிட்டான். அவனும் சகர குமாரர்கள் தோண்டிய வழியிலேச் சென்று கபில முனிவரைக் கண்டான். அவரை வணங்கித் தொழுதான். அப்போது அவர் அவனை நோக்கி பிள்ளாய்! நீ குதிரையைக் கொண்டு போய் உனது பாட்டனாரிடம் கொடுத்து யாகத்தை நிறைவேற்று வாயாக. உனது பேரன் சொர்க்கத்திலுள்ள கங்கா நதியைப் பூலோகத்துக்குக் கொண்டு வருவான் என்ற வரத்தையும் உனக்கு நான் தந்தேன். போ என்று அருளினார். சுவாமி! பிராமண சாபத்தால் அழிந்த அடியேனது பாட்டன்மார்கள் சுவர்க்க லோகத்தையடையும்படியான ஒரு வரத்தை நீங்கள் அளிக்க வேண்டும் என்று அம்சுமான் பிரார்த்தித்தான். அதற்குக் கபிலமுனிவர் பிள்ளாய்! நான் தான் உன் பேரன் கங்கையைக் கொண்டு வருவான் என்று முன்னமே சொன்னேனே! அந்த மகாநதியின் புனித நீரால், இறந்தவர்களின் எலும்பும் சாம்பலும் ஸ்பரிசக்கப்பட்டவுடனேயே அவர்கள் தேவலோகம் செல்வார்கள். பக்தி சிரத்தையோடு நீராடுவோரைப் பாவந்தீர்த்துக் கடைத்தேற்றும் சக்தியையுடையது கங்கையாகும். ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிக் கட்டைவிரலிற் தோன்றிய மகாநதியின் மகிமை இது மட்டுமல்ல. தன்னிடத்திற் கருத்தேயில்லாமல் இறந்தவனுடைய சரீரத்தைச் சார்ந்த எலும்பு, தோல், நரம்பு, ரோமம், சாம்பல் முதலியவற்றுள் ஏதாகிலும் அந்தப் புனிதநீரால் ஸ்பரிசிக்கப்பட்டால் கூட அந்தவுடலுக்கு உரியவன் உடனே சொர்க்கம் செல்வான் என்று சொன்னார். அதன் பிறகு அம்சுமான் அவரை வணங்கி, யாகக்குதிரையை அவிழ்த்துக் கொண்டு சென்று தன் பாட்டனாரிடம் ஒப்படைத்தான். சகர மன்னனும் அசுவமேத யாகத்தை நிறைவேற்றித் தன் பிள்ளைகள் தோண்டியப் பள்ளத்தில் பாய்ந்த சமுத்திரத்தைத் தனது புத்திரனாகப் பாவித்து லோகாந்தரஞ் சென்றான்.

அவன் மகன் அம்சுமானுக்குத் திலீபன் என்ற அரசன் பிறந்தான். அவனுடைய மகன் பகீரதன். அவன் சொர்க்கத்திலிருந்து கங்கையாகப் பூமிக்கு வரவழைத்து, பாகீரதி என்ற பெயரடையச் செய்தான். அந்தப் பகீரதனுக்கு சுஹோத்திரன் பிறந்தான். அவனுக்கு நாபாகனும், அவனுக்குச் சிந்துத்துவீபனும், அவனுக்கு அயுதாயும் பிறந்தார்கள். அயுதாயுவுக்கு ருதுபர்ணன் பிறந்தான். அவன் அக்ஷஹிருதயம் என்ற சூதாட்ட நூலைக் கற்றுத் தேர்ந்து, நளனுக்குத் துணைவனானான். ருதுபர்ணனின் மகன் சர்வகாமன் அவன் மகன் சுதாசனுக்குச் சவுதாசன் என்றும் மித்திரசஹன் என்றும் பெயர் கொண்ட குமாரன் உண்டானான். அவன் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்று திரிந்து கொண்டிருக்கும் போது இரண்டு புலிகளைக் கண்டான். அவ்விரண்டிலேயே அந்தக் காட்டிலுள்ள மற்ற மிருகங்கள் அழிக்கப்படுகின்றன என்று நினைத்து, அவற்றில் ஒன்றை அம்பினால் எய்துக் கொன்றான். அந்த அம்பு பாய்ந்து இறக்கும்போது அந்தப் புலியானது ஒரு மகா பயங்கர முகத்தோடு கூடி ராட்சஸ ரூபமாய் விழுந்தது. இரண்டாவது புலியோ, ராட்சஸனாக வெளிப்பட்டு அவனை நோக்கி, உன்மீது நான் என் பகையை தீர்த்துக் கொள்வேன்! என்று சபதமிட்டு மறைந்தது. பிறகு சிறிது காலத்திற்கெல்லாம் சவுதாசன் யாகஞ்செய்யத் துவங்கினான். அவனதுக் குலகுருவான வசிஷ்ட முனிவர் அந்த யாகத்துக்கு வேண்டிய காரியங்களைத் தயார் செய்து விட்டு சற்று, வெளியே போயிருந்தார். அந்த சமயத்தில் ராட்சஸன் வசிஷ்ட முனிவரைப் போன்ற வேடத்துடன் அங்கு வந்து, எனக்கு யாகத்தின் முடிவில் மனித இறைச்சியைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். ஆகையால் முன்னதாகவே அதைக் கொண்டு வந்து பாகஞ்செய்து வைப்பாயாக. நான் சீக்கிரம் வந்து விடுவேன்! என்று சொல்லி விட்டுப் போனான். பிறகு அவனே சமையற்காரனைப் போல வேடம் தரித்து வந்து, குரு பத்தியினால் சவுதாத மன்னன் கட்டளையிட்டதை ஏற்று மனுஷ்ய மாமிசத்தைச் சமைத்து, மன்னன் முன்பு கொண்டு வந்து வைத்தான். சவுதாச மன்னனும் அந்த மனித இறைச்சியை ஒரு பொன் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, வசிஷ்டரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவர் வந்தவுடன் அதை அவருக்குக் கொடுத்தான். அதைக் கண்டவுடனேயே வசிஷ்டர் இதென்ன! இந்த அரசனுக்கு ஏன் இந்தத் துன்மார்க்கப் புத்தி உண்டாயிற்று? திடீரென்று மாமிசத்தை நமக்கு கொண்டு வந்து கொடுக்கிறானே! இது என்ன இறைச்சி? என்று யோசித்தார். யோக திருஷ்டியினால் அதை நரமாமிசம் என்று அறிந்து மிகவும் கோபங்கொண்டு சவுதாச மன்னனை நோக்கி, தவமுனிவர்கள் புசிக்கக் கூடாதது எது என்பதை நீ அறிந்திருந்துங்கூட இதை என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டாய். ஆகையால் நீயே இதில் மிகுந்த விருப்பம் கொண்டவனாகக் கடவை! என்று சாபங்கொடுத்தார். அதைக்கேட்டதும் சவுதாசன் கலங்கி, சுவாமி! தாங்கள் விரும்பியவண்ணம் தானே அடியேன் இப்படிச் செய்தேன்? என்றான். வசிஷ்டர் நிகழ்ந்தவற்றை அறிந்து, அவனிடம் இரக்கங்கொண்டு, அரசனே! நீ ஒரு ராக்ஷசனால் வஞ்சிக்கப்பட்டாய் உன்மேல் எந்தக் குற்றமுமில்லை; ஆயினும் நான் இட்ட சாபம் வீணாகாது. ஆனால் நான் இட்ட சாபம் உனக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் வரையிலும் தான் பலிக்கும்! என்றார்.

உடனே சவுதாசன் கோபங்கொண்டு, குற்றம் எதுவும் செய்யாத எனக்கு நீங்கள் சாபமிட்டது அநியாயம்! ஆகையால் நானும் உங்களைச் சபிப்பேன் என்று சொல்லிக் கையிலே நீரை எடுத்து வீசமுயன்றான். அப்போது அவனது மனைவியாகிய மத்யந்தி என்பவள், தன் நாயகனின் கையைப் பிடித்துக்கொண்டு, மகாராஜா! நமது குலத்துக்குத் தெய்வமாயும் குருவாயும் இருக்கும் வசிஷ்ட முனிவரை நீங்கள் இப்படிச் செய்வது சரியல்ல! என்று சமாதானப்படுத்தித் தடுத்தாள்.
பிறகு சவுதாசன் தன் கையிலே எடுத்த சாபஜலத்தை தரையிலே விட்டால் மழை பெய்யாமல் போய்விடும் என்றும் நினைத்து, அந்த நீரைத் தன் கால்களின் மீது விட்டுக் கொண்டான். அவனது கோபாக்கினியால் காய்ந்த அந்தத் தண்ணீர், அவன் பாதங்களில் பட்டதனால் அவையிரண்டும் ஒளியிழந்து கருமை கலந்து வெண்மையாயின. ஆதலால் அவனுக்கு கல்மாஷபாதன் என்ற பெயர் வழங்கலாயிற்று. வசிஷ்டர் இட்ட சாபத்தின்படி அந்த மன்னன் ஆறாவது ஜாமந்தோறும் ராக்ஷச சுபாவமுடையவனாய் நாட்டிலே புகுந்து மனிதர்களை அடித்துக் கொன்று நர மாமிசம் புசித்து வந்தான். இது இப்படியிருக்க, ஒருநாள் வசந்த காலத்தில் பிராமணனான ஒரு முனிவர் தன் மனைவியுடன் கூடி மகிழ்ந்து காம லீலையில் மூழ்கியிருப்பதை அரக்க வடிவில் இருந்த சவுதாச மன்னன் கண்டான். அவனது பயங்கர உருவத்தைக் கண்டு ரிஷித் தம்பதிகள் பயந்து ஓடினார்கள். அவர்களில் முனிவனை அவன் பிடித்துக் கொண்டு ஓடினான். அப்போது ரிஷிபத்தினியான பிராமணப் பெண், அந்த ராக்ஷசனை நோக்கி, ஐயனே! நீ ராக்ஷசனல்லவே! மித்திரன் என்கிற அரசன் அல்லவா நீ! நீயோ எல்லாவற்றையும் அறிந்தவன் மேலும் பெண்ணுக்குரிய இன்பத்தைச் சிறப்பாக அறிந்தவன் நீயாயிற்றே? அப்படியிருக்க; நான் கருதிய இன்பப் பயனை அடையாமலிருக்கும்போது, நீ என் கணவனை நாசஞ்செய்வது நியாயமல்லவே! அவரை விட்டு விடு! என்று கெஞ்சிக் கேட்டுப் புலம்பினாள். அவள் புலம்பிக் கொண்டிருக்கும்பொழுதே, அரக்க வடிவிலுள்ள சவுதாசன் கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல், நரமாமிசம் புசிக்கும் வெறியோடு புலியானது பசுவைப் பிடித்துச் சென்று புசிப்பதைப் போல அவளது கணவனைத் தின்று விட்டான். அதனால், பிராமண மனைவி மிகவும் கோபங்கொண்டு அவனை நோக்கி, அடப்பாவி! என்னை இவ்விதமாக வீணாக்கி; என் கணவனைக் கொன்று புசித்தாய். ஆகையால் நீ காமபோகத்துக்காக முயற்சிக்கும்போது மரணமடைவாயாக! என்று சாபமிட்டுப் பிறகு தீக்குளித்து மடிந்து போனாள். அதன் பிறகு பன்னிரண்டு ஆண்டுக்காலம் சென்று சவுதாச மன்னனின் சாபம் தீர்ந்தது. ஒரு சமயம் அவன் சம்போகத்தில் இச்சைக் கொண்டு தன் மனைவியை நெருங்கினான். அப்போது அவனது பத்தினியாகிய மதயந்தி என்பவள் பார்ப்பனி இட்ட சாபத்தை நினைவூட்டினாள். அதனால் அரசன் ஸ்திரீ போகத்தை விட்டுவிட்டான். இப்படியானதினால் அவனுக்குச் சந்ததியில்லாமற் போயிற்று. அதனால் அவன் தன் குருவாகிய வசிஷ்ட மகரிஷியை வேண்ட, அம்மகரிஷியும் அவனது பத்தினியாகிய மதயந்தியிடம் புத்திரன் உண்டாகச் செய்தார்.

அதனால் ஏற்பட்ட கருவானது ஏழாண்டுக் காலம் வரை மதயந்தியின் வயிற்றிலிருந்து வெளிப்படாமலே இருந்தது. அதனால் மதயந்தி ஆத்திரப்பட்டு ஒரு கல்லைக் கொண்டு வயிற்றிலே இடித்துக் கொண்டாள். அதன் விளைவாகப் புத்திரனும் பிறந்தான். அவனுக்கு அச்மகன் என்று பெயரிட்டார்கள். அந்த அச்மகனுக்கு மூலகன் என்ற பிள்ளை பிறந்தான். அந்தச் சமயம் பரசராமர், பூவுலகத்திலுள்ள க்ஷத்திரிய வமிசத்தையெல்லாம் அழிப்பதாகச் சபதம் செய்திருந்தார். அதனால் பரசுராமனது பார்வையிற்படாதவாறு மூலகனைப் பெண்கள் நிர்வாணமாகச் சூழ்ந்து கொண்டு அவனைக் காப்பாற்றினார்கள். அதனால் அவனுக்கு நாரீகவசன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்த மூலகனுக்குத் தசரதன் என்பவன் பிறந்தான். அவன் மகன் இளிபிளி. அவன் மகன் விசுவஸஹன். அவன் மகன் கட்வாங்கன். முன்பொரு காலத்தில் தேவாசுர யுத்தம் நடந்தபோது கட்வாங்கனை தேவர்கள் அணுகி அவனுடைய உதவியை வேண்டினார்கள். அதற்கிணங்கிக் கட்வாங்கன் போர் புரிந்து அசுரர்களை வென்றான். அதனால் தேவர்கள் அவனைத் தமது உலகத்துக்கு அழைத்து சென்று அரசே! உமக்கு இஷ்டமான வரத்தைக் கேட்பீராக என்றார்கள். அதற்கு அவன் நீங்கள் எனக்கு வரமளிக்க வேண்டுமென்று விரும்புவது உண்மையெனில் என் ஆயுள் எவ்வளவு என்று முதலில் சொல்லுங்கள் என்றான். அவர்கள் உமக்கு இன்னும் ஒரு முகூர்த்த காலந்தான் ஆயுசு இருக்கிறது என்று சொன்னார்கள். உடனே அவன் அவர்களிடம் விடைபெற்று மிகவும் வேகமான விமானத்தில் ஏறிக்கொண்டு வெகு விரைவாகப் பூவுலகையடைந்து பிராமணரை விட ஆன்மாவின் மீது எனக்கு பிரியமில்லாமல் இருந்ததும் தேவ மனுஷ்ய பசு, பக்ஷி, விருட்ச முதலிய யாவற்றிலும் எம்பெருமானுடைய சான்னித்தியமே நித்தியமாகவுள்ளது என்று நான் நினைத்திருந்தும் உண்மையானால் முனிவர்களால் தியானஞ் செய்யப்பட்ட அந்தப் பகவானை நான் யாதொரு தடையுமின்றி அடைவேனாக! என்று வாசுதேவன் என்ற திருபெயருடைய பரமாத்மாவிடத்தில் வேதாந்த வாக்கியத்தின்படி ஆன்ம சமர்ப்பணம் செய்து அங்கேயே வயப்படுவதாகிய மோட்ச ஆனந்தத்தை அடைந்தான். இந்த அரசனைப் பற்றி சப்த ரிஷிகள் பாடியப் பாடல் ஒன்றுண்டு. அதாவது கட்வாங்கன் என்ற ராஜரிஷிக்கு ஈடாக இந்தப் பூமியில் யாருமே உண்டாகமாட்டான். ஏனென்றால் ஒரு முகூர்த்த காலம் ஆயுள் இருக்கும் போது சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தது தனது ஞானசத்தியங்களால் சகல கதிகளையும் சகல லோகங்களையும் தாண்டி அவற்றையெல்லாம் ஸ்ரீவாசுதேவனிடம் லயித்துள்ள தனக்குள்ளேயே கண்டான் அன்றே என்பதுதான் அந்தப் பாடலாகும். அந்தக் கட்வாங்க மன்னனுக்கு தீர்க்கபாகு என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ரகுமன்னன் பிறந்தான். அவனுக்கு அஜமகாராஜன் பிறந்தான், அவன் மகன் தசரத மன்னன்.

எல்லா வகையான சுகுண பூர்ணனான பத்மநாபன், லோகரக்ஷணத்துக்காகத் தனது அமிசத்தைக் கொண்டு, ஸ்ரீராம, லக்ஷ்மண, பரத சத்ருக்கினர் என்ற நான்கு ரூபமாக, அந்தத் தசரத மகாராஜனிடம் அவதரித்தான். அந்தச் சக்கரவர்த்தித் திருமகன் ராமன், விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காப்பதற்காக எழுந்தருளுமளவில், வழியில் தாடகை என்ற கொடிய அரக்கியையும், அந்த யாகத்துக்குத் தீங்கு இழைக்க வந்த தாடகையின் மகனான சுபாகு முதலிய அநேக அரக்கர்களையுஞ் சங்கரித்து, தாடகையின் மற்றொரு குமாரனான மாரீசனை வாயு அஸ்திரத்தால் சமுத்திரத்தில் தள்ளிவிட்டார். தமது திருவடி மகிமையினால் அகலிகையின் சாபத்தைப் போக்கி அவளைத் தூயவள் ஆக்கினார். பிறகு, ஜனக மாமன்னரின் நகரத்துக்குச் சென்று, அங்கு பூசித்து வைக்கப்பட்டிருந்த சிவதனுசை முறித்தார். ஜனக மகாராஜனின் திருமாளிகையில் அயோநிஜையாய் அவதரித்து, வீரியசுல்க்கையாய் விளங்கிய சீதை என்ற ஸ்ரீமகாலக்ஷ்மியின் அம்சமானப் பெண்மணியை திருக்கலியாணஞ் செய்தருளினார். பிறகு, ஸ்ரீராமன் கல்யாணக் கோலத்தோடும் சீதையோடும் தம்முடைய அயோத்திமா நகரத்துக்குத் திரும்பி வரும்போது வழியில் பரசுராமரைச் சந்தித்தார். சகல க்ஷத்திரிய குலங்களையும் வேரோடு அழித்து வந்த பரசுராமரோ பொறாமையால் ஸ்ரீராமனை எதிர்த்து வந்தார்.

பலபராக்கிரமங்களால் உண்டான அவருடைய செருக்கை ஸ்ரீராமர் அழித்தார். பிறகு யுவராஜ்யப் பட்டாபிஷேகத்தை விரும்பாமல், மாற்றாந் தாயின் பேச்சுக் கிணங்கத் தந்தையின் வாக்கியத்தை சிரமேற் கொண்டு, சீதாபிராட்டியோடும் இளைய பெருமாளான லக்ஷ்மணரோடும், தண்டகாரண்யத்தில் பிரவேசித்து விராதனைக் கொன்றார். காமவெறியால் தீங்கிழைக்கத் துணிந்த சூர்ப்பனகையை இலக்குமணர் விகாரப்படுத்தியதால் மிகவும் கோபங்கொண்டு பதினாலாயிரம் வீரரோடு போருக்கு வந்த கரதூஷணர்களையும் கபந்தனையும் அழித்து அருளினார். அதற்குப் பிறகு சுக்ரீவனைத் தோழனாக்கிக் கொண்டு அவனுக்குப் பகைவனான வாலியைக் கொன்றார். சுக்ரீவன் அனுப்பிய வானர வீரர்களில் அனுமனால் இலங்கையில் இராவணன் அபகரித்துச் சென்ற சீதாபிராட்டி காவலில் இருப்பதை அறிந்து வானர சேனைகளுடன் புறப்பட்டு, சமுத்திரத்தை அணையாற் கட்டி இராவணன், கும்பகர்ணன் முதலிய அரக்கர்களை அழித்தார். உலகத்தாரின் ஒப்புரவுக்காகச் சீதையை அக்கினிப் பிரவேசம் செய்வித்தார். அக்கினியால் துதிக்கப்பட்ட சீதாதேவியை மீண்டும் ஏற்று, மறுபடியும் அயோத்திக்கு எழுந்தருளிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அந்தப் பட்டாபிஷேக மகோற்சவத்தை நூறு ஆண்டுக்காலஞ் சொன்னாலும் முடியாது. ஆயினும் அதனை நான் சுருக்கமாகச் சொல்கிறேன். திவ்விய அலங்காரச் சோபிதமான மகாமண்டபத்தில் நவரத்தினச் சகிதமான சிங்காதனத்தின் மேல் சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீராமர் சீதாபிராட்டியாருடன் வீற்றிருந்தார். இளைய பெருமாளான லக்ஷ்மணரும், பரதாழ்வானும், சத்துருக்கினாழ்வானும் சத்திர சாமரங்களை வீசிய வண்ணம் பக்கங்களில் முகமலர்ந்து நின்றார்கள். விபீஷணாழ்வானும் சுக்ரீவ மகாராஜனும் அங்கதன், ஜாம்பவான் முதலானவர்களும் ஆலவட்டம் முதலியவற்றை ஏந்தி மிக்க மகிழ்ச்சியுடன் புடைசூழ்ந்திருந்தார்கள். சிறிய திருவடி எனப்படும் அனுமான் திருவடிவாரத்து, ரத்தின பீடத்திலிருந்து ஆனந்த பரவசத்துடன் சேவித்தான். பிரம்மா, இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்ற அட்டதிக் பாலகரும் மற்றுமுள்ள சகல தேவதைகளும் வசிஷ்டர், வாமதேவர், வால்மீகி, மார்க்கண்டேயர், விஸ்வாமித்திரர், பரத்வாஜர், அகஸ்தியர் முனிவர்களும், ரிக், யஜுர், சாமம் முதலிய வேதவாக்கியங்களைக் கொண்டு துதித்தார்கள். வீணை, வேணு, மிருதங்கம், படஹம், சங்கம், காஹளம், கோமுகம் முதலிய இசைக்கருவிகள் முழங்க, நிருத்த கீத முதலான மங்கள நிகழ்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்க கப்பமேந்திக் காத்திருக்கும் மன்னர்களின் நடுவே ஆசாரியர் அமைச்சர்கள் முதலியவர்கள் முறையே விதிப்படித் திவ்ய தீர்த்தங்களினால், சகல லோக ரக்ஷணம் செய்து அருள வேண்டும் ஸ்வாமி என்று பிரார்த்தனை செய்து பட்டாபிஷேக மகோற்சவத்தை நடத்தினார்கள். அதன்பிறகு பதினோராயிரம் ஆண்டுக்காலம் யாவரும் குறைவற்றுக் களித்தும் வரும்படி ஸ்ரீராம பத்திர பகவான் சகல பூமண்டலத்தையும் ஆண்டு வந்தார்.

இளவரசாய் இருந்த பரதாழ்வான் மிகவும் கொடியவர்களாக இருந்த மூன்று கோடி கந்தர்வர்களைச் சங்கரித்து, அவர்களது வசமாயிருந்த ராஜ்யங்களைத் தமதுக் கைவசஞ் செய்து கொண்டார். சத்துருக்கினாழ்வானும் யமுனை ஆற்றின் கரையில் ஒரு பெரிய வனத்தில் இருந்துகொண்டு, மிகக்கொடுமை செய்து வந்த மது புத்திரனான லவணாசுரனைச் சங்கரித்து அந்தக் காட்டை அழித்து மதுரை என்ற ஒரு திவ்ய நகரத்தை நிர்மாணித்தருளினார். இளையப்பெருமாளான லக்ஷ்மணரோ ஸ்வாமியை விட்டு இணை பிரியாமல் கைங்கர்ய நிரதராய் எழுந்தருளியிருந்தார். இவ்விதமாக ஸ்ரீராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கினர் என்ற இந்த நால்வரும் லோகத்திற்கு இதத்தையும் தருமத்தையும் நிலைநாட்டி தமதுலகத்துக்கு எழுந்தருளினார்கள். அந்த நால்வரிடத்திலும் மிகவும் பக்தியுடையவராக இருந்த கோசல நாட்டாரும் அவர்களுடைய சாலோக்கியத்தை அடைந்தார்கள். ஸ்ரீராமபிரானுக்கு குசன் லவன் என்ற இரண்டு குமாரரும், லக்ஷ்மணருக்கு அங்கதன், சந்திரகேது என்ற இரு புதல்வர்களும், பரதருக்கு தக்ஷகன், புஷ்கலன் என்ற இரு குமாரர்களும், சத்துருக்கினருக்கு சுபாகு, சூரசேனன் என்றிரு மக்களும் உண்டானார்கள். அவர்களில் ஸ்ரீராமகுமாரனான குசனுக்கு அதிதி என்ற குமாரன் பிறந்தான். அதிதிக்கு நிஷதன், நிஷதனுக்கு அனலன், அனலனுக்கு நபசு, நபசுக்கு புண்டரீகன்; புண்டரீகனுக்கு ஷேமதனுவா, அவனுக்கு தேவானீகன், அவனுக்கு அகீனகு, அவனுக்கு குரு எனப்பிறந்தார்கள். குருவின் மகன் பாரியாத்திரன், அவன் மகன் பலன், அவன் மகன் சலன், அவன் மகன் உற்தன், அவன் மகன் வச்சிரநாபன், அவன் மகன் சங்கணன், அவன் மகன் வியுக்ஷிதாசுவன், அவன் மகன் விசுவயஹன், அந்த விசுவயஹனின் மகனாகிய ஹிரண்யநாபன் மகாயோகியரில் உயர்ந்தவனாய், ஜயிமுனியின் சீடராகிய யாக்ஞவல்கிய மகாமுனிவரிடமிருந்து யோக வித்தையைக் கற்றான். அவனுக்கு தனயன், புஷ்யன் அவனுக்கு துருவசந்தியும், துருவசந்திக்கு சுதரிசனனும், அவனுக்கு அக்னிவர்ணனும், அக்கினிவர்ணனுக்கு சீக்கிரகனும், அவனுக்கு மருவென்பவனும் பிறந்தார்கள். மரு என்பவன் தன் யோகசக்தியால் இமயமலையின் பக்கத்திலுள்ள கலாபக் கிராமத்தில், இப்போதும் யாருக்கும் தெரியாமல் வாசஞ்செய்து கொண்டு இருக்கிறான். அவன் தான் இனிவரும் கிருத யுகத்தில் சூரிய வமிசத்து அரசர்களில் முதல்வனாவான். அவனுக்கு பிரசுசுருகன் என்ற மகன் ஒருவனுண்டு. அவனுக்கு சுசந்தி என்பவன் மகன். அவனுக்கு அமர்ஷன் அவனுக்கு ஸஹஸ்வான்; அவனுக்கு விசுவபவன் அவனுக்கு பிரகத்பலன் அவன் பாரதப்போரில் அர்ச்சுனனது மகனான அபிமன்யுவினால் கொல்லப்பட்டான். இவ்விதமாக இஷ்வாகுவின் குலத்தில் பிறந்த அரசர்களில் முக்கியமான சிலரைப் பற்றிச் சொன்னேன். இவர்களது வரலாறுகளைக் கேட்பதால், பாவங்கள் தீரும். எவன் இந்த வரலாறுகளை சிரத்தையோடு படிக்கிறானோ அவன் இம்மையில் தனக்கு வேண்டியவைகளைப் பெற்று இறுதியில் சுவர்க்கத்தையும் அடைவான்!

————–

5. நிமி வம்ச வரலாறு

இஷ்வாகுவின் மகனான நிமி என்பவன் ஆயிரம் ஆண்டுகள் நடத்த வேண்டிய ஒரு யாகத்தை ஆரம்பித்து, அதற்கு வசிஷ்ட முனிவரை ஹோதாவாக நியமித்தான். அப்போது வசிஷ்டர் அவனை நோக்கி, அரசனே! தேவேந்திரன் ஐநூறு ஆண்டுகள் வரையிலும் தொடர்ந்து செய்யவேண்டிய யாகத்துக்கு என்னை முன்னமே வரித்திருப்பதால், அதுவரையில் நீ பொறுத்திருக்க வேண்டும். அதுமுடித்ததும் உடனே நான் வந்து உன் யாகத்தையும் நிறைவேற்றுகிறேன் என்று சொன்னார். அதைக் கேட்டதும் நிமி மன்னன் மவுனமாக இருந்து விட்டான். வசிஷ்டர் தம் இஷ்டப்படி அரசன் ஒப்புக்கொண்டான் என்று நினைத்து, இந்திரனுடைய யாகத்தைச் செய்விக்கச் சென்றார். ஆனால் நிமி மன்னனோ அந்தக் காலத்திலேயே கவுதமர் முதலிய முனிவர்களைக் கொண்டு தனது யாகத்தை நடத்தினான். வசிஷ்டர் இந்திரனுடைய யாகத்தை நடத்தி முடித்துவிட்டு நிமியினுடைய யாகத்தைச் செய்விக்க வேண்டுமே என்று வெகு துரிதமாக வந்தார். வந்தவர் அந்த யாகத்தை கவுதமரைக் கொண்டு நிமி மன்னன் முன்னரே நடத்தி விட்டான் என்று தெரிந்து கொண்டு, அவ்வரசன் தூங்கிக் கொண்டு இருக்கும்போதே அவனுக்கு ஒரு சாபமிட்டார். அதாவது நீ என்னை அவமதித்து இந்த யாக காரியத்தைக் கவுதமருக்குக் கொடுத்ததால் உனக்கு உடம்பே இல்லாமல் போகக் கடவது! என்று சபித்தார். அதன் பிறகு விழித்துக் கொண்ட நிமி மன்னன் தனக்கு வசிஷ்டர் சாபமிட்டதை அறிந்து, தானும் குருவுக்கு ஒரு சாபமிட்டான். இந்தத் துஷ்ட குருவானவர், என்னோடு பேசி நடந்தவற்றின் நியாயத்தையறியாமல் தூங்கிக் கொண்டிருந்த என்னை சபித்ததால் அவருக்கும் உடம்பில்லாமல் போகக் கடவது! என்று பதில் சாபமிட்டு விட்டான். பிறகு நிமி மன்னன் தனது உடலை விட்டு விட்டான். வசிஷ்ட மகரிஷியும் தம் உடலை விட்டு விட்டு ஊர்வசியைக் கண்டதனால் சிதறி விழுந்திருந்த மித்திரா வருணருடைய வீரியத்திற் பிரவேசித்து, வேறு தேகத்தை எடுத்துக் கொண்டார். நிமி மன்னனின் தேகமோ, திவ்விய பரிமளத் தைலத்தில் சீர்படுத்தப்பட்டு சுருங்குதல் முதலிய குற்றங்களில்லாமல் அப்போது தான் இறந்தவனுடைய தேகத்தைப் போலிருந்தது, இது இப்படியிருக்க அந்த யாகத்தின் முடிவில், பாகம் பெறுவதற்காக வந்த தேவர்களை நோக்கி, யாகத்தை நடத்திய ருத்துவிக்குகள், நீங்கள் எஜமானனுக்கு ஒரு வரங்கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு தேகமற்ற நிமி சொல்லலானான். ஓ தேவர்களே! நீங்கள் சகல சம்சார துக்கங்களையும் போக்கக் கூடியவர்கள். ஆன்மாவும் உடலும் தனித்தும் பிரிந்திருப்பதைக் காட்டிலும் மனிதனுக்கு வேறு துக்கம் உண்டோ? ஆகையால் எனக்குத் தேகம் வேண்டும். ஆயினும் இந்தச் சரீரத்தில் வசிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை எல்லோருடைய கண்களிலும் நான் வசிக்க விரும்புகிறேன். அத்தகைய வரத்தை நீங்கள் எனக்கு தரவேண்டும் என்றான். தேவர்கள் அவன் விரும்பியபடி அவனைச் சகல ஜனங்களுடைய கண்களிலும் இருக்கச் செய்தார்கள். அதுமுதல் சகல பூதங்களும் கண்களை இமைக்கலாயினர்.

அந்த நிமியரசனுக்கப் புத்திரனில்லாமற் போனதால் முனிவர்கள் அனைவருங்கூடி, ராஜ்யத்துக்கு அரசன் இல்லாமல் போனால் ஏற்படக்கூடியத் துன்பத்துக்குப் பயந்து, அவனுடைய உடல் அரணியில் இட்டு கடைந்தார்கள். அதிலிருந்து ஒரு குமாரன் பிறந்தான். அவன் அவ்விதமாகப் பிறந்ததனால் அவனுக்கு ஜனகன் என்ற பெயர் உண்டாயிற்று. மேலும் அவனுடைய தந்தை விதேகனாகையால் வைதேகன் என்றும், கடையப்பட்டதனாலே மிதி என்றும் பெயர்கள் உண்டாயின. அவன் பெயராலேயே அவனுடைய நகரத்துக்கு மிதிலை என்றும் அவன் பிதாவின் பெயரால் அவனது ராஜ்யத்துக்கு விதேக தேசம் என்ற பெயரும் உண்டாயிற்று. அந்த ஜனகனுடைய மகன், உதாவசு அவன் மகன் நந்திவர்த்தனன் அவன் மகன் கேது, அவனுக்கு தேவராதன், அவனுக்குப் பிருகதுத்தன்; அவனுக்கு மகாவீரியன், அவனுக்கு சுதிருதி, அவனுக்கு திருஷ்டகேது, அவனுக்கு அரியசுவன், அவனுக்கு மரு, அவனுக்கு பிரதிகன், அவனுக்கு கிருதரதன், அவனுக்கு தேவமீடன் என்றவாறு புதல்வர்கள் பிறந்தார்கள். தேவமீடனின் புதல்வன் விபுதன் அவன் மகன் மகாதிருதி. அவன் மகன் கிருதராதன், அவனுக்கு மகாரோமா, மகாரோமாவுக்கு சுவர்ண ரோமா, அவன் மகன் இருசுவ ரோமா அவனது மகன்தான் சீரத்வஜன் என்ற ஜனக மகாராஜனாகும். அவர் வேள்விச் சாலைக்காகப் பூமியை உழும் போது, கலப்பையின் வழியிலே சீதாபிராட்டி அவதரித்தாள். சீரத்வஜ மகாராஜனின் தம்பியான குசத்துவஜன் என்பவன், சாங்காசியம் என்ற பட்டணத்தை ஆண்டுவந்தான். அந்த சீரத்வஜ ஜனகருடைய மகன் பானுமான், அவனுக்கு சுத்தியும்னன்; அவனுக்கு சுசி, அவனுக்கு ஊர்ஜன் என்ற மகன் பிறந்தான். அவன் மகன் சதத்துவசன், அவனுக்கு கிருதி, அவன் மகன்ரஞ்சனன், அவன் மகன் புருஜித்து, அவன் மகன் அரிஷ்டநேமி, அவன் மகன் சுருதாயு, அவன் மகன் சுபார்சுவன், அவன் பிள்ளை சிருஞ்சயன், அவனுக்கு ÷க்ஷமாவீ, ÷க்ஷமாவீக்கு அனேனசு, அவனுக்கு பவுமரதன், அவனுக்கு சத்தியரதன், அவனுக்கு உபகு, உபகுவுக்கு உபகுப்தன் அவன் மகன் சுவரகதன், அவனுக்கு சுவாங்கன், சுவாங்கனுக்கு சுபானன், அவனுக்குச் சுவர்ச்சசு, அவனுக்கு சுபாஷன், அவன் மகன் சுசுருதன். அவன் மகன் ஜயன், ஜயனின் மகன் விஜயன். விஜயனின் மகன் இருதன், இருதனின் மகன் சுநயன், சுநயனுக்கு வீதஹவ்யன், அவன் மகன் திருதி, திருதியின் மகன் பகுளாசுவன், அவன் மகன் கிருதி, இந்தக் கிருதியினிடம் முடிந்தது ஜனக வம்சம். இவர்கள் தாம் மிதிலை நகரத்தை ஆண்டு வந்த அரசர்களாவார்கள். இவர்களில் பலர் ஆத்ம வித்தையில் நிஷ்டை பயின்ற மகானுபாவர்கள்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் மூன்றாவது அம்சம்—-இரண்டாம் பாகம் —

February 28, 2021

9. வாழ்க்கையின் நான்கு தருமங்கள்
10. விரத விவாகக் கிரியைகள்
11. இல்லற ஒழுக்கம்
12. நல்லொழுக்கம்
13. சிரார்த்த வகைகள்
14. சிரார்த்த காலம்
15. சிரார்த்தம் செய்யும் முறைகள்
16. சிரார்த்த பொருட்கள்
17. நக்கின சொரூபம்
18. ஜைன பவுத்த மத பிரவர்த்தனையும், சததனுவின் கதையும்

————-

9. வாழ்க்கையின் நான்கு தருமங்கள்

சகர மாமன்னனே! கேட்பாயாக. முதலில் பிரும்மசரியா சிரம தர்மத்தைச் சொல்கிறேன், சிறுவனாக இருப்பவன் உபநயனம் செய்யப்பெற்று, விரத நியமங்களோடு வேதங்களை ஓதிக்கொண்டு, குருவின் இல்லத்திலேயே இருக்க வேண்டும். சவுசாசார சம்பன்னனாய்க் குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும். விரத அனுஷ்டானமுடையவனாய் வேதங்களை ஓதவேண்டும். காலையிலும் மாலையிலும் சூரியனையும் அக்கினியையும் மனம் ஒன்றிப் பூஜிக்க வேண்டும். குருவை வணங்கி வரவேண்டும். சீடன் தன் குருநாதர் நிற்கும் அளவில் தானும் நிற்கவும், அவர் போகும்போது தானும் உடன் செல்லவும், அவர் மேலே உட்கார்ந்தால் கீழே உட்காரவும் வேண்டும். ஒருபோதும் அவருக்கு விரோதமான காரியங்களைச் செய்யக்கூடாது அவர் ஓதென்று கட்டளையிட்டவுடனேயே அவருக்கு எதிரில் நின்றுவேறு நினைப்பின்றி வேதத்தை ஓதி உணரவேண்டும். அதன் பிறகு, குருவின் அனுமதியைப் பெற்று பிøக்ஷயினால் தான் கொண்டு வந்த அடிசிலை உண்ண வேண்டும். ஆசிரியர் நீராடியபிறகு அந்த நீரில் சீடன் நீராட வேண்டும். தினந்தோறும் காலையில் சமித்து, தருப்பை முதலியவைகளைக் குருவுக்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இவ்விதமாகக் குருவினிடத்தில் ஓதவேண்டிய வேதங்களை அந்தந்த ஞானம் வருமளவும் ஓதிய பிறகு அவரிடம் அனுமதி பெற்று குருவுக்கு காணிக்கை அளித்துவிட்டுக் கிருகஸ்தாசிரமத்துக்குப் போக வேண்டும். இனி கிருகஸ்தாசிரமம் என்ற இல்லற வாழ்க்கையின் ஒழுக்கத்தைச் சொல்கிறேன். பிரம்மச்சரியத்தைக் கழித்த பிறகு விதிப்படி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தனக்குத் தகுந்த தொழிலில் திரவியஞ்சம்பாதித்து, இல்லற வாழ்வை நடத்த வேண்டும். பருவக்காலங்களில் பிண்டம் இடுவதினாலும் எள்ளுடன் கூடிய தண்ணீராலும் பிதுர்க்களையும், யாகங்களினால் தேவர்களையும், அன்னங்களினால் அதிதிகளையும், வேத அத்தி யமனத்தினால் முனிவர்களையும், சந்ததியினால் பிரமதேவனையும் பூதபலி கர்மத்தால் பூதங்களையும், வாத்சலியம் அன்பினால் சகல உலகங்களையும் திருப்திப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இவ்விதம் செய்து வருகிற கிரஸ்தன் தனது சுக கர்மங்களினால் சம்பாதிக்கப்பட்ட அநேக புண்ணிய உலகங்களை அடைவான். பிøக்ஷயெடுத்துண்ணும் துறவிகள் பிரமச்சாரிகள் யாருண்டோ, அவர்கள் யாவரும் கிருகஸ்தனிடத்திலேயே நிலைபெற்றிருக்கின்றனர். ஆகையால் இந்த இல்லறமானது உயர்ந்ததாகும். மேலும் வேதங்களைக் கற்பதற்காகவும் தீர்ந்த ÷க்ஷத்திர யாத்திரைக்காகவும் பூமியைப் பார்ப்பதற்காகவும், பிராமணர்கள் சுதேசம் விட்டுத் திரிந்து கொண்டிருக்கின்றனர். சிலர் ஓரிடம் என்றில்லாமலும் ஆகாரமில்லாமலும் அஸ்தமனமாகும் இடமே வீடாகக் கொண்டு தங்குவோராகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகையோர் அனைவருக்கும் இல்லறத்தோரே சார்பாகவும், ரட்சிப்போராகவும் இருக்கின்றனர். இத்தகைய தேசாந்திரிகள் வருமளவில் நல்வரவு கேட்பது போன்ற இனிமையான பேச்சுக்களை இல்லறத்தோன் பேசி, ஆசனம், போஜனம், சயனம் முதலியவற்றை வழங்கவேண்டும். அதிதியானவன் எவனிடம் வந்து தன்னாசை கெட்டுத் திரும்பிப் போகிறானே, அந்த அதிதியானவன் அந்த இல்லறத்தானுக்குத் தனது பாவத்தைக் கொடுத்து விட்டு, அவனது புண்ணியத்தைத் தான் கொண்டு போகிறான்.

இல்லறத்தில் இருப்பவனுக்குப் பிறரை அவமதித்தல், அகங்காரம், டம்பம் கொடுத்து விட்டோமே என்ற மனத்தவிப்பு அடித்தல்; வைதல் இவையெல்லாம் மேன்மையாக மாட்டா! இத்தகைய கெட்ட குணங்களில்லாமல் நற்குணமுடையவனாய்; எந்த கிரஸ்தன் தனக்குரிய தர்மங்களை நன்றாகச் செய்து வருகின்றானோ அவன் சகல இடையூறுகளிலிருந்தும் விடுபட்டு உத்தமமான உலகங்களை அடைவான். இப்படிக் கிருஸ்தா சிரமத்திலிருந்து செய்ய வேண்டியவைகளைச் செய்து; வயது முதிர்ந்தவுடன் தனது புத்திரர்கள் வசம் தனது பத்தினியை ஒப்புவித்தாகிலும் அவளையும் தன்னுடன் அழைத்து கொண்டாகிலும் வனத்திற்குச் செல்லவேண்டும். அவ்வாறு செல்லுதலே வானப் பிரஸ்தாசிரமமாகும். இனி; வானப்பிரஸ்தாசிரம தர்மங்களைச் சொல்கிறேன். வானப்பிரஸ்தனானவன் இலை, கனி, கிழங்கு வகைகளைப் புசித்துக் கொண்டு தாடியும் சடையும் தரித்தவனாய், எல்லாப் பொருள்களிலும் பற்றற்று முனிவனாய் அந்தக் காட்டில் தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். முனிவனாக இருப்பவன், தோலையாகிலும் நாணற்புல் மரவுரி முதலியவற்றையாகிலும் உடுக்க வேண்டும். முச்சந்திகளிலும் நீராட வேண்டும். அந்த வானப்பிரஸ்தனுக்குத் தேவதா ஆராதனையும் ஹோமமுமான காரியங்களாகும். அரசே! முனிவனானவன் அப்பியஞ்சனம் செய்து கொள்ள வேண்டுமாயின் காட்டெண்ணையினால் செய்து கொள்வதே தகுதியானதாகும்! தவஞ்செய்தலும் குளிர்வெப்பம் முதலியவற்றை சகித்துக் கொள்வதும் முனிவனுக்குச் சிறப்பான தர்மங்களாகும். இத்தகைய முறையில் எந்த முனிவன் வானப்பிரஸ்த தருமத்தை அனுஷ்டிப்பானோ, அவனது தீராத தோஷங்களையெல்லாம் அக்கினி தகிப்பது போலத் தகித்து நிலையான உலகங்களை அடைவான். நான்காவது சந்நியாசிக்குரிய ஆசிரமம் என்று சொல்வார்கள். எவன் புத்திரக்களத்திராதிகளிலும் பொருள் முதலானவைகளிலும் மனப்பற்றில்லாமல் இருக்கிறானோ அவன் நான்காவதாச் சிரமத்தில் பிரவேசிக்க வேண்டும். இவ்விதமாகக் காமக்குரோத மாச்சரியங்கள் இல்லாமல் சந்நியாசம் பெற்றுத் தர்மார்த்த தர்மங்களுக்கு உரிய சகல முயற்சிகளையும் விட்டு; பிரம்மஞான நிஷ்டை செய்து வரவேண்டும். அந்தச் சந்நியாசி நண்பரிடமும் பகைவரிடமும் ஒரேவிதமான மித்திர பாவத்துடனிருந்து, மிருகங்கள், பறவைகள் முதலிய பலவற்றுக்கும் வாக்கு, மனம், காயம் என்ற மூன்றிலும் துரோகஞ் செய்யாமல் இருக்க வேண்டும். புத்திராதித் தொடர்புகளையும் விட்டுவிட வேண்டும். கிராமத்தில் ஓரிரவும், பட்டணத்தில் ஐந்து இரவுகளும்; இப்படி யாக இடத்துக்குத் தக்கவாறு வாசஞ்செய்து கொண்டு ஒருவருடைய பகைமையோ; நட்போ வராதவாறு நடந்து கொள்ள வேண்டும். யதியானவன்; வீட்டில் இருப்போரெல்லாம் புகிக்கும் காலம் அறிந்து சாதி குலாச்சாரங்களில் சிறந்தவர் வீட்டுக்கு யாசகத்துக்குப் போகலாம். சந்நியாசியானவன் காமக்குரோத, லோப மதபேதங்களை விட்டு விட்டு ஒன்றிலும் எனது என்ற அபிமானம் இல்லாதவனாக இருக்க வேண்டும். எந்தத் துறவி சகல, பூதங்களுக்கும் அபயங்கொடுத்துச் சஞ்சரிக்கிறானோ; அவனுக்கு சகல பூதங்களாலும் பயமில்லை. இப்படி பிராமணன் துறவியாகித் தன்னுடைய அக்கினி ஹோத்திரத்தை, தனது சரீரத்திலேயே இருக்கச் செய்து தன் சரீரத்தில் இருக்கும் அக்கினியைக் குறித்து, தன் முகமாகிய குண்டலத்தில், பிøக்ஷயினால் கிடைத்த அவிசுகளை விதிப்படி ஓமஞ்செய்து வருவானாகில் அவன் அக்கினி சயனஞ் செய்தவர்கள் அடையும் உலகங்களை அடைவான். இது சாதாரண சந்நியாசிகளைக் குறித்ததாகும். விசேஷ சந்நியாசிக் கிரமத்தைக் கேட்பீராக. எவன் நிச்சய புத்தியுள்ளவனாய், தூய்மையாளனாய் இந்தச் சந்நியாசத்தை முறைப்படி ஆஸ்ரயிக்கிறானோ அவர் எரிகரும்பில்லாத அக்கினியைப் போல, மிகவும் சாந்தமான ஜோதியாய் விளங்கும் பிரமலோகத்தை அடைவான்.

——————-

10. விரத விவாகக் கிரியைகள்

சகர மாமன்னன், அவுர்வமா முனிவரை நோக்கி, முனிவரே வருணாசிரம தர்மங்களைத் தாங்கள் கூறியருளினீர்கள். இனி, புருஷனுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கூறவேண்டும் என்றான். அரசனே; நீ கேட்ட தருமங்களைச் சொல்கிறேன். கவனமாகக் கேட்பாயாக. தந்தை முதலில் காப்பாதானம் முதலியவற்றைச் செய்து; பிள்ளை பிறந்தவுடன் அதற்கு ஜாதகர்மாதிகளான சகல கிரியைகளையும் அப்யுதயங்களாயும் செய்ய வேண்டும். பிராமணர்கள் தேவக் கிரியையாகிலும் நாந்தீ பிதுர்க்கிரியையாகிலும் செய்யும்போது பிராமணர்களை இரட்டையாகவும்; கிழக்குமுகமாக எழுந்தருளச் செய்து; திருப்தியடையும்படி திருவமுது செய்விக்க வேண்டும். நாந்தீ முகர்களான பிதுர்க்களைக் குறித்து தயிர், யவங்கள், இலந்தை இவற்றோடு கலந்த பண்டங்களை மகிழ்ச்சியோடு தேவ தீர்த்தத்தினாலேயாகிலும் பிரஜாபத்திய தீர்த்தத்தினாலே யாகிலும் பிரதக்ஷிணமாகக் கொடுக்க வேண்டும். இதுபோலவே மற்ற விருத்திகளிலும் செய்வது அவசியம். பிறகு தகப்பன் பத்தாவது நாள் முதலாக சாஸ்திரங்களில் சொல்லிய நாட்களில் தகப்பனே அந்தப் பிள்ளைக்குப் பெயர் சூட்ட வேண்டும். தன் குலதெய்வத்தின் பெயரையாவது, தன் மூதாதையரின் பெயரையாவது முன்னிட்டதாயும், புருஷனுக்குப் புருஷவாசகமாயும், ஸ்திரீக்கு ஸ்தீரிவாசகமாயும், பொருட் குறைவற்றதாயும், வெட்கமாகவோ, அருவருக்க வைப்பதாகவோ இராததாகவும், சமமான எழுத்துள்ளதாயும், மிக நீளாததாயும், மிகவும் குறுகாததாயும், அதிகக் கடினமான எழுத்தற்றதாயும், எளிதில் அழைக்கக் கூடியதாயும் உள்ள பெயரை வைக்க வேண்டும். அந்தப் பெயரானது பிராம்மணருக்கு சர்வ என்ற சொல்லோடும்; க்ஷத்திரியருக்கு வர்ம என்ற சொல்லோடும்; வைசியருக்கு குப்த என்ற சொல்லோடும், சூத்திரருக்குத் தாஸ என்ற சொல்லோடும் இறுதியில் அமைந்ததாக இருக்க வேண்டும். விஷ்ணுசர்மா; இந்திர வர்மா, சந்திரகுப்தன், ஹரிதாஸ் என்பது போலப் பெயரிட வேண்டும்.

இதுபோலப் பெயரிட்ட பிறகு, உபநிஷ்கிரமணம் முதல் உபநயனம் ஈறாகவுள்ள சம்ஸ்காரங்களைப் பிதாவினால் செய்யப் பெற்றவுடன், அந்தப் பிள்ளை குருவிடம் சென்று, முன் சொல்லிய விதிப்படி வேதசாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்து குருவுக்குத் தக்ஷிணை கொடுத்து; வேத விரதங்களை அனுஷ்டித்து; கிருதஹஸ்தாசிரமத்துக்குப் போக இச்சிப்பாணாகில்; அவன் திருமணஞ்செய்து கொள்ள வேண்டும். அல்லது நைஷ்டிக பிரமச்சாரியாகக் காலத்தைக் கழிக்க வேண்டும். அப்படிப் பிரமச்சாரியாக வாழ்ந்தால்; குருவுக்கோ அல்லது குருபுத்திரர்களிடமோ பணிவிடைசெய்து வரவேண்டும். அதுவுமில்லையெனில் தன் விருப்பம் போல வானப்பிரஸ்தனாகவோ, சந்நியாசியாகவோ ஆகலாம். ஒருவன் திருமணஞ் செய்துகொள்ளும் விஷயத்தில்; தன் வயதுக்கு மூன்றில் ஒரு பங்குக்கு மேற்படாத வயதுள்ள பெண்ணாகவும், அதிக அடர்த்தியான கூந்தலும் மிகக்குறைவான கூந்தலும் இல்லாதவளாகவும், அதிக கறுப்பாகவோ, வெளுப்பாகவோ இல்லாத நல்ல நிறமுடையவளாகவும், அளவுக்கு மேற்படாமலும் குறையாமலும் உள்ள அவயவங்கள் வாய்ந்தவளாகவும், சூத்திராதிகளால் வளர்க்கப்படாதவளாகவும், இழிகுலத்தில் பிறவாதவளாகவும், உடம்பில் மிகவும் ரோமங்கள் மொய்த்திராதவளாகவும், வியாதியில்லாதவளாகவும்; துஷ்டத்தனமும் துஷ்ட வார்த்தைகளும், அற்றவளாகவும் குஷ்டம் முதலிய நோயுடைய தாய் தந்தையருக்குப் பிறவாதவளாகவும்; மீசை முதலான புருஷ லட்சணங்கள் இல்லாதவளாகவும்; ஆண் பிள்ளையைப் போன்ற தோற்றம் இல்லாதவளாகவும்; பருத்த கனமான குரலில்லாதவளாகவும், மெலிவற்றவளாகவும், காக்கை போன்ற குரலற்றவளாகவும், இமைகளில் மயிர்ச் செறிவுள்ளவளாகவும், வட்டமாகவோ, வேறுவிதமாகவோ அவலக்ஷணப்படாத நேத்திரங்களைக் கொண்டவளாகவும், ரோமம் நிறைந்த கணைக்கால்களும் உயர்ந்த புறக்கால்களும் இல்லாதவளாகவும்; சிரிக்கும்போது கபோலங்கள் பாழி போல் குழிவடையாதவளாகவும் உக்கிரமான காந்தியும் மிகச் சிவந்த கண்களும், மிகப் பெருத்த கைகால்களும் இல்லாதவளாகவும் இரண்டு புருவங்களும் சமமாக அமைந்தவளாகவும் அப்புருவங்கள் நெருங்கி ஒன்றோடொன்று இணைந்திராதவளாகவும் மிகவும் இடைவெளியுள்ள பற்களற்றவளாகவும், கொடுமையும் பயங்கரமுமான தோற்றமில்லாதவளாகவும் உள்ள பெண்ணையே திருமணஞ் செய்துகொள்ள வேண்டும். மேலும் அந்தப் பெண்ணின் தாய்வழியில் ஐந்து தலைமுறைக்கும் தகப்பன் வரிசையில் ஏழுதலைமுறைக்கும் உட்படாதவளாக இருக்கவேண்டும். இத்தகைய கன்னிகையை நியாயமான விதிமுறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்தத் திருமணம் பிராம்மம் தைவம் ஆரிஷம் பிரஜாபத்தியம், ஆசுரம் காந்தருவம் ராக்ஷசம், பைசாசம் என்ற எட்டுவகையாகும். இவற்றினுள் எந்த வருணத்துக்கு எது தகும் என்று முனிவர்கள் விதித்துள்ளனரோ அந்த விவாகத்தையே செய்யவேண்டும். மற்றவற்றை ஒதுக்கிவிடவேண்டும். இவ்விதமாகத் திருமணஞ் செய்து கொண்டவளுடன், யாதொரு குறைவுமில்லாமல் இல்லறம் நடத்தி வருபவன் சுகமும் பயனும் பெறுவான்.

—————

11. இல்லற ஒழுக்கம்

சகர மாமன்னன் அவுர்வ முனிவரை நோக்கி, சுவாமி! இல்லறத்தான் கடைபிடிக்க வேண்டிய நல்ல ஒழுக்கங்களைப் பற்றி நான் அறியவிரும்புகிறேன். எத்தகைய நல்லஒழுக்கங்களில் ஒரு மனிதன் இம்மையிலும் மறுமையிலும் துன்பமடைய மாட்டானோ அத்தகையவற்றை எனக்குச் சொல்லியருள வேண்டும் என்றான். அரசனே! நல்ல ஒழுக்கமுறைமையைச் சொல்கிறேன் கேட்பாயாக. நல்லொழுக்கமுடையவனால் இம்மை மறுமைகள் சாதிக்கப்படும். சாதுக்கள் என்போர் தோஷம் இல்லாதவர்கள். அவர்களுடைய ஒழுக்கமே சதாசாரம் எனப்படும். இவற்றைச் சொன்னவரும் செய்தவரும் சப்த ரிஷிகளும் மனுக்களும் பிரஜாயதிகளுமாவர். புத்திசாலியாக இருப்பவன் பிராம்ம முகூர்த்தத்தில் விழித்து எழவேண்டும். மனதிலே தருமத்தையும் அதனோடு விரோதப்படாத அர்த்தத்தையும் சிந்திக்கவேண்டும். இந்த இரண்டுக்கும் எந்தவிதமான விரோதமும் உண்டாக்காத காமத்தைச் சிந்திக்கலாம். இப்படி சிந்திப்பதால் இம்மை மறுமைப் பயன்கள் கெடாமல் இருக்கும். தர்ம விரோதிகளான அர்த்த காமங்களை விடவேண்டும். தருமமேயானாலும் பின்பு சுகத்தையுண்டாக்காததாயும் லோக விரோதமாயும் இருக்குமானால் அதை விட்டுவிட வேண்டும். இவ்விதமாகச் சிந்தித்து எழுந்த பிறகு, நைருதி மூலையில், அம்பு பாயுமளவு தூரத்துக்கு அப்பால் சென்று, ஜலமலாதிகளைக் கழிக்க வேண்டும். வீட்டிலேயே கால் கழுவுதல் முதலிய அசுத்தமான காரியங்களைச் செய்யக்கூடாது.

தனது நிழல், மரத்து நிழல், பசு, சூரியன், அக்கினி, காற்று, பெரியோர் ஆகியவைகளுக்கு எதிராக இருந்து மலஜலங் கழிக்கலாகாது. உழுத நிலத்திலும் பயிர்களின் நடுவிலும், பசுக்கள் இருக்குமிடத்திலும், ஜன சமூகத்திலும் வழியிலும் ஆற்றங்கரைகளிலும், தண்ணீரிலும் மயானத்திலும் மலஜலங் கழிக்கலாகாது. பூணூலை காதில் சுற்றிக் கொண்டு வஸ்திரத்தால் தலையை மூடிக்கொண்டு, பகலில் வடக்கு முகமாகவும், இரவில் தெற்கு முகமாகவும் இருந்து மல ஜலாதிகளைக் கழிக்க வேண்டும். இவ்விதம் செய்யச் சங்கடமாக இருந்தால் தக்கவாறு செய்யலாம். அந்த இடங்களில் நெடு நேரம் இராமலும் ஒன்றும் பேசாமலும் காரியம் முடிந்தவுடன் செத்தைகளால் அந்த இடத்தை மறைத்துவிட்டு வரவேண்டும். பிறகு புற்றுமண், பெருச்சாளி தோண்டிய மண், தண்ணீருக்குள் இருக்கிற மண், சவுசஞ் செய்து மிகுந்த மண், அசுத்த பூமியிலிருக்கும் மண், மிகச்சிறிய பூச்சிகளோடு கூடிய மண், கலப்பையால் கிளப்பப்பட்ட புழுதி மண், ஆகியவற்றை விட்டு வேறுமண்ணைக் கொண்டு வந்து, முதலாவதாக அசுத்தத்தின் நாற்றமும் பற்றும் போகும்படிச் சவுசம் செய்து, பிறகு சுத்திக்காக இலிங்கத்தில் ஒருமுறையும், அபானத்தில் மூன்று முறையும் இடக்கையில் பத்துத் தரமும், மறுபடியும் இரண்டு கைகளிலும் ஏழு முறைகளும் மண்ணிட்டுச் சுத்தமான நீரினால் கழுவிக்கொண்டு, சுத்தமாயும் துர்க்கந்தமற்றதாயும், குமிழி கிளம்பாததாயுமுள்ள ஜலத்தினால் மும்முறை ஆசமனஞ்செய்து தலையைத் துடைத்து, சிரசில் புரோஷித்தல், இருதயம் முதலான அங்கங்களைத் தொடுதல் முதலிய விதிகளை முறைப்படிச் செய்து, பிறகு அகமர்ஷண சூத்த முதலான மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே நீராடி, சந்தியா வந்தனம் முதலிய கிரியைகளை விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். பிறகு தலை ஆற்றி, அலங்கரித்தல் முதலிய மங்களங்களைச் செய்து கொண்டு தனக்கு விதித்திருக்கிற வகையால் திரவிய சம்பாதனை செய்தல் வேண்டும். சோமஸ்ம்ஸ்தைகள், ஹவிஸ் ஸம்ஸ்தைகள், பாக ஸம்ஸ்தைகள் என்ற யாகங்களெல்லாம் திரவியத்தைக் கொண்டே செய்ய வேண்டியவைகளாகையால், பிராமணன் தனத்தைச் சம்பாதிக்க வேண்டும். நியாயமான முறையில் தனத்தைச் சம்பாதிக்க முயற்சிசெய்து, நடுப்பகலானவுடன் மறுபடியும் நீராட வேண்டும். எப்போதும் நதிகள், நதங்கள், தடாகங்கள் இவற்றின் நன்னீரிலே நீராட வேண்டும். இவைகள் கிடைக்காமற்போனால் கிணற்று நீரை எடுத்துக் கொண்டாகிலும் அதற்கும் சக்தியில்லாமற் போனால் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்தாகிலும் நீராட வேண்டும். இப்படிக் குளித்த பிறகு பரிசுத்தமான வஸ்திரங்களை அணிந்து தேவதைகளுக்கும், ரிஷிகளுக்கும், பிதுர்களுக்கும் அவரவர் தீர்த்தத்தினாலே விதிப்படித் தர்ப்பணஞ் செய்ய வேண்டும்.

பிதுர்க்கள், பிதாமகர், பிரபிதாமகர், மாதாமகர் மாத்ரு பிதாமகர், மாத்ரு பிரபிதாமகர் ஆகியவைகளுக்கு தர்ப்பணஞ் செய்ய வேண்டும். காமியமாய் மாதா, மாதாமகி, அவர்களுடைய தாய், குருபத்தினி, குரு, அம்மான் முதலானோர், இஷ்டமித்திரன், அரசன், இவர்களுக்கும் ப்ரீதியுண்டாகும்படி தர்ப்பணஞ் செய்யலாம். அப்போது ஜெபிக்க வேண்டியது தேவாசுர, யக்ஷ, நாககந்தருவ, ராக்ஷச, பைசாச, குஹ்யக, சித்த, கூச்மாண்ட, தருக்களும் ஜலம், பூமி, காற்று இவைகளைப் பற்றிய ஜந்துக்களும் என்னால் கொடுக்கப்படும் இந்தத் தண்ணீரால் திருப்தியடைய வேண்டும். நரகங்களில் பல யாதனைகளில் இருப்பவர்களின் சோர்வு நீங்குவதற்காக இந்தத் தண்ணீரை நான் விடுகிறேன். எனக்கு உறவினராக இருப்பவர்களுக்கும் உறவினராகாதாருக்கும் ஜன்மாந்தரத்தில் பந்துக்களாக இருந்தவர்களுக்கும் என்னிடத்தில் தண்ணீரை வேண்டுவோருக்கும் எங்கேயாவது பசி, தாகங்களால் வருந்தியிருப்போருக்கும் நான் விடுகின்ற இந்த எள்ளுந் தண்ணீரும் திருப்தியை உண்டாக்கக் கடவன என்று இவ்விதமாகச் சொல்லித் தர்ப்பணம் செய்ய வேண்டும். அரசனே! இதற்குப் பெயர் காமியத் தர்ப்பணம், இதனால் சகல லோகத்துக்கும் பிரீதியுண்டாகும். இதனால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இதுபோல மனப்பூர்வமாகச் சிரத்தையோடு காமிய தர்ப்பணத்தைச் செய்து பிறகு மாத்தியான்னிகம் செய்து, வேதங்களாலே பிரகாசித்துக் கொண்டு உலகப் படைப்புக் கர்த்தாவாய், மகாசுத்தியுள்ளவராய்க் கர்மசாக்ஷியாய் ஸ்ரீவிஷ்ணு தேஜோமயராய் விளங்கும் சூரிய பகவானுக்கு நமஸ்காரம் என்று சொல்லியவண்ணம் சூரியார்க்கியம் விடவேண்டும். பிறகு தன் வீட்டிலிருக்கும் தேவதா பிம்பத்துக்குத் திருமஞ்சனம், திருமாலை, தூபதீபாதிகள் தளிகைகள் முதலிய உபசாரங்களினால் ஆராதனை செய்யவேண்டும். பிறகு, பிரமாகுதி முதலானவை சுவ தேவஞ்செய்து, கிரகங்கள், காசியபர், அனுமதி இவர்களுக்கு அன்னபலியிட்டு அதன் மீதியை பிருத்துவீபர்ச் சனியர்களுக்காக அவுபாசன சமீபத்திலிட வேண்டும். பிறகு, வீட்டின் வாசலில் தாதாவிதாதாக்களுக்கும், நடுவில் பிரம்மாவுக்கும் நான்கு திசைகளில் இந்திரன், யமன், வருணன், சந்திரன் என்ற நான்கு திக்குத் தேவதைகளுக்கும், வாயுவுக்கும் பிருமா அந்தரிஷம் சூரியன் இவர்களுக்கும் வடகிழக்கில் தன்வந்தரிக்கும் அன்ன பலியிட வேண்டும். இவ்விதமாக சைசுவதேவ பூதபலி கருமத்தைச் செய்து, விசுவதேவர், பூதங்கள், விசுவபதி, பிதுர்க்கள், யக்ஷர், இவர்களை எண்ணிப் பலியிட்டு, பிறகு அன்னத்தைச் சுத்தமான பூமியிலே சகல பூதங்களுக்காகப் போட்டு தேவதைகள், மனிதர், மிருகங்கள், பறவைகள், சித்தர் யக்ஷர் நாசர் தைத்தியர், பிரேதங்கள், பிசாசுகள், மரங்கள், எறும்புகள், பூச்சிகள், புழுக்கள் முதலிய சகல ஜந்துக்களுக்கும் யார் என்னாலே கொடுக்கப்படும். அன்னத்தை இச்சிக்கிறார்களோ அவர்களுக்கும் யாருக்கும் தாய் தந்தை சுற்றத்தார் யாவரும் இல்லாமலும் அன்னங்கிடைக்காது இருக்கிறார்களோ அவர்களுக்கும் இதோ இங்கு நான் அன்னத்தைக் கொடுத்தேன். இதனால் அவர்கள் திருப்தியடைந்து சுகமாக இருக்கக்கடவர். சகல பூதங்களும் நானும் இந்த அன்னமும் எல்லாம் ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபமேயல்லாது வேறில்லாமையால் சகல பூதங்களுக்கு சரீரமான இந்த அன்னத்தை அவர்களது சவுக்யத்துக்காக இங்கே இடுகிறேன். தேவகணங்கள் எட்டு வகையினருக்கும் ஒருவிதமான மனுஷ்ய கணமும், ஐந்து விதமான திரியக்குக் கணமுமாகிய பதினான்கு பூதகணங்களிலும் சேர்ந்த சகல பிராணிகளுக்கும் திருப்தி ஏற்பட இந்த அன்னத்தை இங்கு விடுகிறேன். இதனால் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடையக் கடவர்! என்று சொல்லிப் பூமியில் அன்னத்தைப் போடவேண்டும். இல்லறத்தானே எல்லோருக்கும் ஆதாரமானவன்.

பிறகு நாய், சண்டாளன், பறவைகள் இவைகளுக்காகவும், பதிதர்களினாலும் புத்திரர் இல்லாதவர்கள் யாரோ அவர்களுக்காகவும் நிலத்தில் அன்னத்தைப் போட வேண்டும். இப்படியெல்லாம் செய்த பிறகு கால்நாழிகையாவது அதிதிகளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். வந்த அதிதிகளை நல்வரவு கூறி வரவேற்று, ஆசனங்கொடுத்து உபசரித்து உட்காரவைத்து அன்போடு அன்னமிடுவதனாலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பிரியமாகப் பதில் சொல்வதனாலும் அவர்கள் போகும் போது அவர்கள் பின்சென்று வழியனுப்புவதனாலும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். குலமும் பெயரும் தெரியாதவனாக வேறிடத்திலிருந்து வந்தவனாக நிலையாக ஓரூரிலே வாசஞ்செய்யாதவனாக இருக்கிற அதிதியை நன்றாக பூஜிக்க வேண்டும். அன்னிய தேசத்திலிருந்து வந்தவனாகவும் தனக்கு யாதொரு உறவும் இல்லாதவனாகவும், தரித்திரனாகவும் இருந்து போஜனம் செய்ய வந்த அதிதியை பூஜித்துப் போஜனம் செய்வித்து விடாமல் தான் மட்டுமே சாப்பிடுகிறவன் நரகத்தை அடைவான். இவ்விதமாக வந்த அதிதியைக் குலம் கோத்திரம் சாகாதிகளை விசாரிக்காமல் சதுர்முகப் பிருமனைப் போல பாவித்து பூஜிக்க வேண்டும். மேலும் சுதேசியாய்ப் பஞ்சயக்ஞ பராயணனாய், குலகோத்திர ஆசாரங்களிலே தனக்கு நன்றாய்த் தெரிந்தவனாக இருக்கிற ஒருவனையாகிலும் பிதுருக்களுக்காகப் போஜனம் செய்விக்க வேண்டும். இதுவுந் தவிர தான் உண்டு மிகுதியான அன்னத்தை தனியே எடுத்து வைத்திருந்து அதை நன்றாய் வேதமோதியிருக்கிற பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும். சந்நியாசி பிரமசாரிகளுக்கும் மும்மூன்று கவளங்களுக்கும் குறையாமல் கொடுக்க வேண்டும். விபவமிருந்தால் தடையில்லாமல் எவ்வளவாகிலும் யாவருக்கும் வேண்டியமட்டும் கொடுக்கலாம். இவ்விதமாக முன் சொன்னவர்கள் உட்பட நான்கு வகைப்பட்ட அதிதிகளைப் பூஜிப்பவன் அதிகக்கடினமான பாதங்களிலிருந்தும் நீங்குவான். அதிதியானவன் எவனுடைய வீட்டுக்கு வந்து தனது ஆசை முறிந்து திரும்பிச் செல்கிறானோ அந்தக் கிருஹஸ்தனுடைய புண்ணியங்களையெல்லாம் அவன் கொண்டு செல்கிறான். தாதவும் பிரமனும் இந்திரனும் வசுக்களும் அக்கினியும் சூரியனும் ஆகிய இவர்கள் அதிதியினிடத்தில் பிரவேசித்து அவன் கொடுக்கும் அன்னத்தைப் புசிக்கிறார்கள். ஆகையால் அதிதி பூஜை செய்ய முயற்சிக்க வேண்டும். எவன் விருந்தினனை விட்டு உண்கிறானோ அவன் அன்னத்தைப் புசிக்காமல் பாவத்தைப் புசிப்பவனாவான். பிறகு புக்ககம் செல்லாத கன்னியரையும் கர்ப்பவதியையும் கிழவர்களையும் பாலர்களையும் முன்னதாகப் புசிக்கும்படி செய்து பிறகுதான் இல்லறத்தோன் புசிக்க வேண்டும். இவர்கள் எல்லாம் உண்ணாமலிருக்கத் தான் மட்டும், முன்னதாக உண்பவன் இவ்வுலகில் பாவத்தையே சாப்பிட்டு மரணமடைந்த பின் நரகத்திற்குச் சென்று சிலேஷ் மத்தை உண்பான். நீராடாமல் உண்பவன் மலத்தையே உண்கிறான். ஜபஞ்செய்யாமல் உண்பவன் சீழ் இரத்தங்களை உண்கிறான். வைசுவதேவாதி சுத்தியில்லாமல் உண்பவன், சிறுநீரை உண்கிறான். பாலர் முதலானோருக்கு முன்னதாக உண்பவன் மிருக மலத்தை உண்கிறான். ஹோமம் செய்யாமல் புசிப்பவன் கிருமிகளைப் புசிக்கிறான். அதிதிகளுக்குக் கொடாமல் புசிப்பவன் விஷத்தைப் புசிக்கிறான்.

—————

அரசனே! கிருஹஸ்தன் எப்படிப் புசிக்க வேண்டுமோ எப்படிப் புசித்தால் பாப சம்பந்தம் வராமல் இம்மையில் ஒப்பற்ற ஆரோக்கியமும் பலவிருத்தியும் அனிஷ்ட சாந்தியும் உண்டாகுமோ, அந்த முறையையும் சொல்கிறேன் கேட்பாயாக. இல்லறத்தோன் விதிப்படி நீராடி, தேவ ரிஷி பிதுர்த் தர்ப்பணம் செய்து, ஜபத்தையும் ஓமத்தையும் நிறைவேற்றி விட்டு, சுத்தமான வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டு, அதிதிகளுக்கும் குருமார்களுக்கும் அடுத்தவர்களுக்கும் கொடுத்துத் தானும் நல்ல பரிமள புஷ்பங்களைத் தரித்து, சிறந்த இரத்தினாதிகளை கையில் இட்டுக் கொண்டு; நிலையாக இருந்து அமுதுண்ண வேண்டும். ஒற்றை வஸ்திரமுடையவனாகவும் ஈரமான கைகால்களையுடையவனாகவும் புசிக்கலாகாது. முகத்தைச் சுத்தம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாகப் புசிக்க வேண்டும். கிழக்கு முகமாகவாவது வடக்கு முகமாகவாவது உட்கார்ந்து புசிக்க வேண்டும். மூலைக்கு எதிராகப் புசிப்பதும் மனக்கவலையோடு புசிப்பதுங்கூடாது. மேலும் சிறப்பும் இதமுமான அன்னத்தையே சுத்த தீர்த்தத்தினாலே புரோக்ஷித்துப் புசிக்க வேண்டும். அங்கஹீனர் வியாதி பிடித்தவர் முதலியவர்கள் கொண்டு வந்ததும் அருவருப்பாக இருப்பதும் நன்றாகப் பக்குவம் செய்து பாகப்படாததுமான அன்னத்தைப் புசிக்கக் கூடாது. நாற்கலி, முக்காலி ஆகியவை மீது வைத்திருக்கும் பாத்திரங்களிலும், அசுத்தமான தேகங்களிலும் சந்தி முதலான காலங்களிலும், பலவிதமான ஜனங்கள் கூடியிருக்கும் இடங்களிலும், போஜனஞ்செய்யலாகாது. அக்கினிக்கும் பசியாக இருப்பவர்களுக்கும், யோக்கியர்களுக்கும் அன்னமிட்டுக் கோபதாபம் இல்லாதவனாய்ச் சிறந்ததும் சுத்தமுமான பாத்திரத்திலே பழையதாகாத யோக்கியமான அன்னத்தை, மந்திரங்களாலே மந்தரித்து உட்கொள்ள வேண்டும். கனிகள், கிழங்குகள், வற்றல்கள், நெல்லி வடகம் போன்ற வடகங்கள், லட்டு போன்ற பண்டங்களைத் தவிர, மற்றைய பழைய உணவுகளையும், சாரமற்ற உணவுகளையும் ஒருபோதும் உண்ணக்கூடாது. விவேகமுள்ளவன், தேன், நெய், மாவு இவற்றைத் தவிர மற்ற உண்டு மீதானவற்றை உண்ணலாகாது. மதுரமானவற்றை முதலிலும், புளிப்பு உப்புகளை இடையிலும், கைப்பு, காரம் முதலானவற்றைக் கடைசியிலும் உண்ணல் வேண்டும். முதலில் நீர்த்தவைகளையும் பிறகு கடினமானவைகளையும் மறுபடியும் நீர்த்தவைகளையும் புசிக்க வேண்டும். இவ்விதம் சாப்பிடுவதால் பலமும் ஆரோக்கியமும் குறையாது. சாப்பிடுவதற்கு முன்பு, அன்னத்தை நிந்திக்காமலும் மவுனமாகவும் பிராணாதி ஐந்து ஆகுதிகளை வெகு நியமமாகச் செய்ய வேண்டும். இவ்விதமாக நன்றாகச் சாப்பிட்டு ஆபோசனம் செய்து கைகளை அடிவரையிலும் நன்றாகச் சுத்தம் செய்து கொண்டு மீண்டும் ஆசமனம் செய்து சொஸ்தமும் சாந்தமுமான மனத்தோடு, கிழக்கு முகமாகவாவது, வடக்கு முகமாகவாவது ஆஸனத்தின் மீது உட்கார்ந்து இஷ்ட தேவதைகளைச் சிந்திக்க வேண்டும்.

மேலும் அக்கினியானது காற்றினால் வளர்க்கப்பட்டு ஆகாயத்தினால் இடங்கொடுக்கப் பெற்றிருக்கிற அன்னத்தை ஜீரணம் செய்து, என் தேகத்தை நிறைவு செய்ய; அதனால் எனக்கு சுகம் உண்டாகக் கடவது! அன்னமானது ஜீரணிக்கப்பட்டு; என் உடற்கூறான பிருதிவி; அப்பு; தேயு; வாயுக்களுக்கு பலமுண்டாக்க அதனால் எனக்குக் குறைவற்ற சுகம் உண்டாகக் கடவது! இந்த அன்னமானது என்னுடைய பிராணம் அபானம் புஷ்டியுண்டாக்க, எனக்கு இடையூறில்லாத சுகமுண்டாக்கக் கடவது. உதா அக்கினியும், வடவாக்கினியும் நான் புசித்த அன்னத்தையெல்லாம் ஜீரணம் செய்து அந்த அன்னத்தின் திரிபினால் விளைவதில் சுகத்தை எனக்கு உண்டக்கக் கடவது. ஸ்ரீவிஷ்ணு ஒருவரே சகல இந்திரியங்களுக்கும் தேகங்களுக்கும் ஆன்மாவாகி ஞானசக்தி; பல ஐஸ்வரிய வீரிய தேஜஸ் என்கிற ஷட்குண பரிபூரணராய், யாவற்றுக்கும் முக்கியராயிருக்கிறார் என்கின்ற யாதொரு சத்தியமுண்டோ அந்த சத்தியத்தினாலே நான் உண்ட அன்னமானது எனக்கு ஆரோக்கியம் ஏற்பட ஜீரணமாகக் கடவது! என்று உச்சரித்து வயிற்றைத் தடவிப் பிறகு எழுந்து ஆயாசம் உண்டாகமாட்டாத காரியங்களைச் சோம்பலில்லாமல் செய்ய வேண்டும். வேத மார்க்கத்துக்கு விரோதமாகாத நல்ல சாஸ்திரங்களைப் பார்ப்பது முதலான சத்காரியங்களாலே நாளைக் கழித்து நிலைபெற சித்தத்துடன் சந்தியாவந்தனம் செய்தல் வேண்டும். சாயங்காலச் சந்தியைக் கதிரவன் பாதி மறைத்துக் கொண்டிருக்கும்போதும் உதயகால சந்தியை நக்ஷத்திரங்கள் மறையாதிருக்கும்போதும் கைகால்களை நன்றாக சுத்தம் செய்து விதிப்படி உபாசிக்க வேண்டும். பிள்ளை பெற்றத் தீட்டு சாவுத்தீட்டு உன்மாத முதலானவற்றால் வந்த மனோவிகாரம் வியாதி பெரும்பயம் இவைகளுள்ள காலம் ஒழிந்த மற்றக் காலங்கள் எல்லாவற்றிலும் காலை மாலைச் சந்திகளில் சூரிய உபஸ்தானம் செய்தல் வேண்டும். முன்பு சொன்ன நோய் போன்ற துன்பங்களில்லாத காலத்தில் சூரியனால் உதயஞ்செய்யப்பெறும் விடப்பெற்றும் யாராவது தூங்குவானாகில் அவன் பிராயச் சித்தத்துக்கு உட்படுவான். அரசனே! சூரியன் உதயமாகும் முன்பே எழுந்து காலைச் சந்தியையும் உபாசிக்க வேண்டும். இந்தச் சந்தியாவந்தனங்களைச் செய்யாத துராத்மாக்கள் தாமிகிரம் என்ற நகரமடைவார்கள். சந்தியாவந்தனம் செய்த பிறகு பாகஞ்செய்த அன்னத்தை தன் மனைவியுடன் கூட, வைசுவ தேவத்திற்காகப் பலியிடவேண்டும். அப்போதும் சண்டாளர் போன்றோருக்கும் அன்னத்தைத் தரையிலிட வேண்டும். வந்த அதிதிகளுக்குக் கால் அலம்பத் தண்ணீர் கொடுப்பது, ஆசனம் கொடுப்பது வணக்கத்தோடு நல்வரவு கூறி விசாரிப்பது போன்ற உபசாரங்களினாலும் அன்னங்கொடுத்து படுக்க வசதி செய்து கொடுப்பது போன்ற அதிதி பூஜையைச் செய்ய வேண்டும். பகலில் வந்த அதிதியை பூசியாமற் போனால் என்ன பாதகம் உண்டு என்று சொல்லப்படுமோ அதைவிட எட்டு மடங்கு அதிகமான பாதகம் இரவில் அதிதி பூஜை செய்யாதவனுக்கும் ஏற்படும். ஆகையால் இரவில் வந்த அதிதியை நன்றாகப் பூஜிக்க வேண்டும். அதனால் சகல தேவதைகளும் பூஜிக்கப்பட்டவராவார்கள். அதிதிக்குப் போஜனம் கொடுக்க சக்தியில்லா விட்டால் ஏதாகிலும் சிறிதளவு உணவு அல்லது தண்ணீர் அல்லது படுக்கை அல்லது இடமாகிலும் கொடுத்து உபசரிக்க வேண்டும்.

அதிதி பூஜை செய்தபிறகு தானும் உண்டு, பாதங்களைக் கழுவிக்கொண்டு, வெடிப்பில்லாததும் யானைத் தந்தம் முதலியவற்றினாலாவது நல்ல மரத்தினாலவாது செய்யப்பட்டதும், விசாலமானதும், ஒடியாததும் மேடு பள்ளங்கள் இல்லாமற் சமமானதும் அழுக்கில்லாததும் ஐந்து மயமாகாததும் மேலே ஆடைகளால் பரப்பப்பட்டதுமான படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும். படுக்கும்போது கிழக்கிலாவது தெற்கிலாவது தலைவைப்பது நல்லது. மற்ற திசைகளில் தலைவைப்பது ரோகங்களுக்குக் காரணமாகும். ருதுக் காலத்தில் தனது மனைவியிடம் சேர்வது நல்லது. அப்படிச் சேரும்போது கூட புருஷ நட்சத்திரத்திலே சுபமான காலத்திலே சஷ்டி முதலிய மேன்மேலும் சுபமான இரட்டைப்பட்ட இரவுகளிலே சேர்வதும் சிறப்பானதாகும். அனுகூலப்படாதவளையும், வியாதியினால் துன்பப்படுகிறவளையும், ருதுவுடையவளையும், இஷ்டப்படாதவளையும், கோபித்திருப்பவளையும், யோக்கியமாகாதவளையும், கர்ப்பிணியையும், திறமில்லாதவளையும் பிறன்மீது மனம் வைத்திருப்பவளையும் காமமில்லாதவளையும் மாற்றானது ஸ்திரீயையும் பசியால் வருந்துகிறவளையும், மிகப் புசித்திருப்பவளையும், ஜலமலாதி உபத்திரவங்களுள்ளவளையும் சேரலாகாது. மற்றும் எப்படிச் சேரவேண்டும் என்றால் ஸ்நானாதிகளினால் நிர்மலனாய்க் கந்தபுஷ்பாதிகளைத் தரித்தவனும் தகுந்த ஆகாரத்தை உண்டவனாய் ஆசையுங் காமமும் உள்ளவனாய்ச் சேரவேண்டும். சதுர்த்தசி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி, சூரிய சங்கராந்தி ஆகிய பாவ காலங்களில் எண்ணெயிட்டுக் கொள்ளுதல் பெண்டிரோடு புணர்தல், மாமிசம் உண்ணுதல் ஆகியவற்றைச் செய்பவன் மலமூத்திர போஜனம் என்ற நகரத்தையடைவான். ஆகையால் இத்தகைய பருவ காலங்களில் விவேகிகள் நியமம் உள்ளவர்களாய், நல்ல நூல்களை வாசித்தும் எம்பெருமானைத் தியானித்தும் மந்திர ஜபஞ் செய்து கொண்டும் இருக்க வேண்டும். அன்னிய ஸ்திரீயைச் சம்போகிப்பதும், மிருகங்களோடு கூடிச் சுகித்தலும் கூடாது. தேவதைகள், பிராமணர், ஆசாரியர், இவர்களுக்கு உரிய இடங்களிலும், நாற்சந்திகளிலும், தீர்த்தங்களிலும், ஆலயங்களிலும், கொட்டில்களிலும், ஜனங்கள் சேருமிடங்களிலும், மயானங்களிலும், அவற்றைச் சேர்ந்த பூங்காவிலும், புண்ணிய காலங்களிலும், பகலிலும், தரையிலும், சந்திகளிலும் மனதினாலும் ஸ்திரீ போகஞ் செய்ய எண்ணக்கூடாது. பிறர் மனையாளை மனத்தாலும் நினைக்கத்தகாது. வாக்கினால் பேசுவதும் மகாபாவமாகும். அத்தகையோர் இங்கும் ஆயுசு க்ஷீணிக்கப்பட்டு இறந்த பின் நரக வாதனைகளையும் அனுபவித்து அதன் பிறகு எலும்பில்லாத புழு முதலிய பிறவிகளாகப் பிறப்பார்கள். இவ்விதமாகப் பர ஸ்திரீகமனம் இருமையிலும் கேட்டைத் தருவது என்பதை நினைத்து, ஸ்வஸ்திரீகளிடத்திலேயே ருதுக்காலங்களில் சேரவேண்டும். ருதுக்காலமில்லாத போதும் முன்னுரைத்த குற்றங்கள் இல்லாமலும் புணரலாம்.

—————-

12. நல்லொழுக்கம்

சகர மாமன்னனே, மேலுங் கேட்பாயாக, தேவதைகள், பசுக்கள், பிராமணர் போன்ற பெரியோர்கள், ஆசாரியர் ஆகியோரைப் பூசிக்க வேண்டும். இருகாலங்களில் சந்தியை வணங்க வேண்டும். அக்கினிப் பரிசரியைச் செய்துவரவேண்டும். எப்பொழுதும் நல்ல ஆடைகளையும் சுபகரமான விஷ்ணுகிராந்தி முதலிய அவுஷதிகளையும் விஷநாசகமான கருடப்பச்சை முதலியவற்றையும் தரிக்க வேண்டும். நன்றாக அலங்கரிக்கப்பட்ட தலைமயிரும், உடம்பிலும் உசிதமான அலங்காரமுடையவனாய் நல்ல பூமாலைகளைத் தரித்திருக்கவேண்டும். கொஞ்சமாகிலும் பிறர் பொருளை அபகரியாமலும் அற்பமாகவாகிலும் பிரியமில்லாத பேச்சைப் பேசுவதிலும் பொய்யைப் பேசலாகாது. பிறருடைய குற்றங்களை எடுத்துச் சொல்வதுங்கூடாது. அயளான் மனையாளை விரும்புவதும் பகையை விரும்புவது கூடாத காரியங்களாகும். துஷ்ட வாகனத்தின் மேல் ஏறுவதும் தண்ணீர் அலப்பியிடித்த ஆற்றங்கரை முதலானவைகளைச் சேர்வதும் தகாத காரியங்கள். துவேஷியாய் இருப்பவன் பதி தன் பைத்தியம் பிடித்தவன், பலரோடு பகை கொண்டவன், அதிகத் துன்பப்படுத்துந் தன்மையுடையோன், விபசாரியைச் சேர்ந்தவன் வெள்ளாட்டியைக் கொண்டவன், அற்பன், பொய்யன் மிகச்செலவு செய்வோன், அபவாதம் உண்டாக்குவோன், வஞ்சகன் இத்தகையவரோடு நட்புக் கொள்ளலாகாது. ஒன்றியாய் வழிப்பயணஞ் செல்லக்கூடாது. வெள்ளத்துக்கு எதிராய் நீந்தக்கூடாது. தீப்பட்ட வீட்டில் பிரவேசித்தலையும் மரத்தின் நுனியில் ஏறுவதையும், பற்களைக் கடித்தலையும், மூக்கைத் தூக்குதலாக இழுப்பதையும் தவிர்க்க வேண்டும். வாயை மூடிக்கொள்ளாமல் கொட்டாவி விடுவதையும், பெருமூச்செறிவதையும் இருமுவதையும் செய்யவேண்டாம். இரைச்சலிட்டுச் சிரிப்பதும், ஓசையுடன் அபானவாயு விடுவதும், நகங்களை கடிப்பதும், செத்தையைக் கிள்ளிக் கொண்டிருப்பதும், மீசையைக் கடிப்பதும், உதட்டைக் கசக்குவதும் கூடாது. அசுத்தமும் அயோக்கியமுமான வெளிச்சங்களைப் பார்க்கலாகாது. அப்படியே நிர்வாணமாக இருக்கும் பெண்களையும், உதயாஸ்தமன காலத்துச் சூரியனையும் பார்க்கலாகாது. சவத்தைக் கண்டு ஊங்காரம் செய்யக்கூடாது. அந்தச் சவத்தின் சேரகமானது சோமனுடைய அம்சமாகும். நாற்சந்தி, மேடை அமைத்து பூஜிக்கப்படும். மரம், மயானம், உத்தியானவனம் கெட்ட பெண்களின் அண்மை இவற்றை இரவில் எப்போதும் விட்டுவிட வேண்டும். பூஜிக்கத்தக்கவர்கள், தேவர்கள், பிராமணர்கள் சோதிகள் இவற்றின் நிழல்களைக் கடக்கலாகாது. தனித்துக் காட்டுக்குப் போவது, பாழும் வீட்டில் வாசஞ்செய்வது இவையும் நல்லதல்ல. பயிர், எலும்பு, முள், அசுத்தம், பலியிட்ட சாம்பல் உமி குளித்த நீரால் நனைத்த நிலம் இவற்றைவிட்டு விலகிச் செல்லவேண்டும். யாராயினும் அயோக்கியராக இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ளலாகாது. சூதான வழிகளை நினைக்கக் கூடாது. பாம்புகள், மதயானைகள், செந்துக்களைத் தொடர்தல் அவற்றின் எதிரிலே எழுந்து நெடுநேரம் நிற்றல், முதலானவை கூடாது. அதிகம் விழித்திருத்தல், மிகவும் அதிகமாக நித்திரை செய்தல், அதிகமாக நிற்றல், அதிகம் படுத்திருத்தல், மிகவும் வருந்துதல் இவையெல்லாம் நல்லதல்ல.

பற்களினால் துன்புறுத்தும் செந்துக்களையும், கொம்புகளால் துன்பஞ் செய்யும் பிராணிகளையும் பனியையும் எதிர்காற்றையும் வெயிலையும் கண்டு விலக வேண்டும். நிர்வாணமாக இருந்துகொண்டும், கச்சத்தை விட்டுக் கொண்டும், குளிப்பதும் தூங்குவதும் ஆசமனஞ் செய்வதும் தேவபூஜை செய்வதும் கூடாது. அதுபோலவே ஹோமம் தேவபூஜை; ஆசமனாதி கிரியைகள், ஜபம் இவைகளை ஒற்றை வஸ்திரத்தோடும் செய்யவேண்டாம். நன்மையான நடத்தையுடையவரோடு ஒரு கணமாகிலும் சேர்ந்திருப்பது சிறந்ததாகும். அதமரோடுங்கூட பகைகொள்ள வேண்டாம். விவாகமானாலும், விவாதமானாலும் தனக்குச் சமமானவரோடு தான் செய்யவேண்டும். கலகத்துக்கு ஆரம்பஞ் செய்யவேண்டாம். வீணான பகைமையை விட்டுவிட வேண்டும். ஒருவரது பகையினால் கிஞ்சித்துக் கஷ்டம் வந்தாலும் சகித்துக் கொள்ளலாமே யல்லாமல் அதனால் வருகிற லாபத்தைக் கொள்ளலாகாது. குளித்தவுடன் வஸ்திரத்தால் உடம்பைத் துடைக்க வேண்டுமேயொழிய கையினால் துடைத்துக் கொள்ளக்கூடாது. பிறர்மீது தண்ணீர் தெறிக்கும்படி மயிரை உதறக்கூடாது. நின்று கொண்டு ஆசமனாதிகளைச் செய்யக்கூடாது. பாதத்தினால் பாதத்தை மிதித்துக்கொள்ளக் கூடாது. பெரியோரின் எதிரில் பாதத்தை நீட்டலாகாது. குருவுக்கு எதிராக படுப்பதும், உட்காருவதும் கூடாது. தேவாலயத்தையும், நாற்சந்தியையும் மங்களமானவற்றையும் பூஜிக்கத்தக்கவர்களையும் வலஞ்சுற்றிப் போக வேண்டுமேயல்லாமல் இடஞ்சுற்றிப் போகலாகாது. அல்லாதவற்றை இடப்புறம் சுற்றிப் போகவேண்டும். சந்திரன், சூரியன், அக்னி, தண்ணீர், காற்று, பெரியோர் ஆகியோருக்கு எதிரில் காறியுமிழ்வதும், மல மூத்திரங்களை விடுவதும் செய்யக்கூடாது. நின்றுகொண்டே சிறுநீர் முதலியவைகளை விடுதலும், வழியிலே அப்படிச் செய்வதும் கெட்ட காரியமாகும். கோழை, மலம், மூத்திரம், உதிரம் இத்தகையவற்றை மிதித்துப் போகக்கூடாது. போஜனாதி காலங்களிலும் ஜபஹோமார்ச்சனாதி காலங்களிலும், கோழையை உமிழ்தல், மூக்கை சிந்துதல் முதலிய செய்கைகளை செய்யலாகாது. ஜனங்களின் சமூகத்திலும் அப்படி செய்யலாகாது. பெண்டிர்களை அவமதிக்கவும் கூடாது. அவர்களிடம் அதிக நம்பிக்கை வைக்கவும் கூடாது. அவர்களைக் கண்டு பெருமைப்படவுங்கூடாது. அவர்களை இகழ்வதும் நல்லதல்ல. நல்லொழுக்கத்தை வேண்டுகிற விவேகியானவன் மங்களகரமானவற்றையும் புஷ்ப ரத்தினாதிகளையும் பெரியோர்களையும் சேவியாமல் வெளியே போகலாகாது. மகாஜனங்கள் சேருமிடங்களை வணங்க வேண்டும். வேத சாஸ்திரங்களில் வல்லவரான சான்றோரை அடுத்திருக்க வேண்டும். எவன் இப்படி தேவதைகளையும், ரிஷிகளையும், பிதுர்க்களையும், அதிதிகளையும், பெரியோர்களையும், அந்தந்த விதிப்படிப் பூஜித்துக் கொண்டு வருவானோ அவன் உத்தமமான உலகங்களை அடைவான்.

மேலும் மனவசியம் உள்ளவனாகித் தகுந்த காலங்களில் இருமாயும், பிரியமாயும், மிதமாயும் பேசுகிறவன், மகா சந்தோஷ காரணங்களாயும் அக்ஷயங்களாயும் இருக்கிற உலகங்களைப் பெறுவான். எவன் விவேகமும் தீயொழுக்கத்தில் நாணமும், பொறுமையும் உடையவனாய் வேதத்தில் நம்பிக்கை கொண்டு கல்வியிலும் குலத்திலும் மேலானவரிடத்திலும் வணக்கமாய் நடக்கிறானோ அவன் ஒப்பற்ற உத்தம உலகங்களை அடைவான். அகாலத்தில் மேக கர்ஜனை முதலானவை உண்டாகும்போதும், அமாவாசை முதலிய பருவ காலங்களிலும் ஆசவுசங்களிலும் கிரகண காலங்களிலும் வேதத் தியயனம் செய்யாமல் இருக்க வேண்டும். எவன் கோபங்கொண்டவர்களைச் சமாதானப்படுத்தியும், யாரிடத்தும் மாச்சரியமில்லாமலும் எல்லோருக்கும் உறவினனைப் போல இருப்பதும் பயப்பட்டவர்களுக்குத் தேறுதல் சொல்வதுமாய்ச் சாது வாயிருக்கிறானோ அத்தகையவனுக்குச் சொர்க்கமும் அற்பப் பலன் என்றே சொல்ல வேண்டும். மழை, வெய்யில் முதலானவைகளிலும், இரவிலும், காடுகளிலும் குடை மிதியடிகள் தடி முதலியவற்றைத் தரித்தவனாகி, தேகத்துக்கு தீங்கு நேராதவாறு சஞ்சரிக்க வேண்டும். அப்படி சஞ்சரிக்கும் போது மேற்பார்வையும், பக்கப் பார்வையும், தூரப் பார்வையும் விட்டு நுகத்தடியளவு தூரம் செல்லும் வழியை நன்றாகப் பார்த்துச் செல்ல வேண்டும். தீமைக்கு ஏதுவான எல்லாவற்றையும் விட்டு எவன் ஒருவன் நடக்கிறானோ அவனுக்குத் தர்மார்த்த கர்மங்களில் கொஞ்சமும் குறைவு வராது. எவன் நல்ல ஒழுக்கமும் விவேகமும் கொண்டவனாய் வித்தை, விநயம், இவற்றில் தேர்ந்தவனாய், தனக்குத் துரோகம் செய்பவனிடத்திலும், துரோக சிந்தனையில்லாதவனாய், தன்னை வைதவனிடத்திலும் பிரியமாய்ப் பேசுபவனாய் யாவரிடத்தும் கருணையுடன் மனவுருக்கத்துடன் இருப்பானோ, அவனுக்கு மோக்ஷம் அருகிலேயே இருக்கும். எவர்கள் காமக் குரோதிகளுக்கு உட்படாமல், நல்ல ஒழுக்கமுடையவர்களாய் இருக்கிறார்களோ, அவர்களது பிரபாவத்தினால் தான் இந்தப் பூமியே நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் பிறருக்கு நம் மீது அன்பு உண்டாகக் காரணமான சத்தியத்தையே பேசவேண்டும். சத்தியமேயானாலும் பிறருக்கு துக்க காரணமாகுமாயின் அந்த விஷயத்தில் ஒன்றும் பேசாமல் மவுனமாக இருக்க வேண்டும். ஒன்று ஒருவனுக்கு விருப்பமில்லாமல் இருக்கும்போது,அதுவே அவனது நலனுக்குக் காரணமாக இருக்கக்கூடும். ஆகையால் அதனையே சொல்ல வேண்டும். வேந்தனே! முடிவைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேட்பாயாக. இம்மையிலும் மறுமையிலும் எது பிராணிகளுக்கு நலனை உண்டாக்கவல்லதோ, அத்தகையக் காரியத்தையே மனோவாக்குக் காயம் என்கின்ற மூன்று காரணங்களிலும் செய்துவர வேண்டும்.

—————

13. சிரார்த்த வகைகள்

அவுர்வ முனிவர் மேலுஞ் சொல்கிறார். பிள்ளை பிறந்தவுடன் தந்தையானவன் தான் உடுத்தியிருக்கும் வஸ்திரத்துடன் நீராட வேண்டும், உடனே ஜாதகர்மமும் அப்பியுதய சிரார்த்தமும் செய்யவேண்டும். அந்த சிரார்த்தத்தில் தேவர்களுக்காகவும், பிதுர்களுக்காகவும் இரட்டையாகப் பிராமணர்களை வரித்து அவர்களைப் பிரதக்ஷிண வரிசையாகப் பூஜித்துப் போஜனமும் செய்விக்க வேண்டும். கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ இருந்து கொண்டு இலந்தையுடன் தயிர் சேர்த்த அக்ஷதையுடன் செய்த பண்டங்களைத் தேவ தீர்த்தத்தினாலாவது பிரம்ம தீர்த்தத்தினாலாவது கொடுக்க வேண்டும். இந்தச் சிரார்த்தத்தினால் நாந்தீமுகமாக இருக்கும் பிதுர்க்கணம் மிகவும் திருப்தியடையும். ஆகையால் புத்திரன், புத்திரிகளுக்குத் திருமணஞ் செய்யும்போதும், கிரஹப்பிரவேசங்களிலும் சிறுவருக்குப் பெயரிடும்போதும் சீமந்தத்திலும் உன்னயனத்திலும், புத்திரன் முதலானோரின் முகதரிசனத்திலும் மற்றுமுள்ள விருத்திகளில் எல்லாம் நாந்தீ சிரார்த்தம் அவசியம் செய்ய வேண்டும். அரசனே! இதுவரை பிதுர்க்களின் பூஜாக்கிரமத்தைச் சொன்னேன். இனி இறந்தோருக்காகச் செய்யும் கர்மவிதிகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. இறந்தவருடைய தேகத்தை நல்ல தண்ணீரைக் கொண்டு நீராட்டி மாலைகளால் அலங்கரித்து விதிப்படித் தகனஞ் செய்து பந்துக்கள் அனைவரும் உடுத்திருக்கும் ஆடைகளுடனேயே நீராடிக் குளித்து தெற்குமுகமாக இருந்து இரு இன்னானுக்கு என்று தன் இருகைகளாலும் தண்ணீரை எடுத்துத் தர்ப்பணமாக விடவேண்டும். அப்படிச் செய்த பிறகு மாடுகள் பிரவேசிக்கும் போதாகிலும் நட்சத்திரங்கள் காணும்போதாகிலும் கிருகத்தினுள் பிரவேசித்து தரையில் புல் முதலியவற்றைப் பரப்பி அவற்றின்மீது படுத்துக் கொள்ள வேண்டும். இப்படியேயிருந்து தீட்டுக் காரியங்களைச் செய்யவேண்டும். அதாவது காலையில் மட்டும் ஒருமுறை புசித்துக் கொண்டு தினந்தோறும் இறந்தவனுக்குத் தரையில் பிண்டம் போடவேண்டும். பந்துக்கள் புசிப்பதனால் இறந்தவனுக்குத் திருப்தி ஏற்படும். ஒன்றாவது மூன்றாவது ஏழாவது ஒன்பதாவது நாட்களில் வஸ்திரத் தானமும் ஊருக்கு வெளியே ஸ்நானமும் செய்து எள்ளு தண்ணீரும் விடவேண்டும். நான்காவது நாளில் அஸ்தி சஞ்சயனஞ் செய்யவேண்டும். சஞ்சயனமான பிறகு ஏழுதலைமுறைக்கு உட்பட்டவரைத் தீண்டினாலும் குற்றமில்லை. ஏழுதலைமுறைக்கு மேற்பட்டவர்களான சமானோதகரோ வாசனைப்பூச்சு பூமாலை முதலிய போகங்களைத் தவிர மற்றெல்லா கிரியைகளுக்கும் யோக்கியராவர். சபிண்டரும் சஞ்சயனங் கழித்த பிறகு படுக்கையிற் படுக்கவும், ஆசனத்தில் உட்காரவுஞ் செய்யலாம். ஸ்திரீ போகம் மட்டுமே கூடாது. சிறுவனும், மகாநதி மலைகளினூடேயுள்ள தேசாந்திரங்களுக்குப் போனவனும் ஜாதி குலாச்சாரங்களை விட்டுப் பதிதனானவனும் சந்நியாசியும் மரணமடைந்தால் அப்போது ஸ்நானம் செய்வதாலேயே தீட்டுப் போகும். இப்படியே மனப்பூர்வமாக ஜலம், விஷம் உறிப்போட்டு கொள்ளுதல் முதலானவைகளினாலே செத்தவர்களைப் பற்றியும் தீட்டுக் கொண்டாட வேண்டுவதில்லை. இப்படியெல்லாம் இறந்தவர்களைப் பற்றி ஞாதிகளுக்குப் பத்து நாட்கள் தீட்டு உண்டு. ஆகையால் அந்தப் பத்து நாட்களும் அவர்களுடைய அன்னத்தை பிறர் புசிக்கக் கூடாது. அவர்களும் தானம் கொடுத்தல், தானம் வாங்குதல், யாகஞ்செய்தல், வேதம் ஓதுதல் முதலிய கர்மங்களைச் செய்யக்கூடாது.

பிராமணருக்குப் பத்துநாட்கள் தீட்டு, க்ஷத்திரியர்களுக்குத் தீட்டு பன்னிரண்டு நாட்கள், வைசியருக்கு அரைமாதம், சூத்திரருக்கு ஒரு மாதம் ஆகும். இப்படியாகத் தீட்டிலிருந்து அது அழியும் கடைசி நாளில் ஒற்றைப்படப் பிராமணரை வைத்து விதிப்படிப் போஜனாதிகள் செய்வித்து அந்தப் பிராமணர் புசித்த பாத்திரத்தின் சமீபத்தில் தருப்பைகளைப் பரப்பி, இறந்தவனுக்குப் பிண்டம் போட்டு, ஆதி ஏகோத்திஷ்ட சிரார்த்தத்தை நிறைவேற்ற வேண்டும். இதைச்செய்த பிறகு, பிராமணர் முதலிய நான்கு வருணத்தினரும் முறையே தண்ணீர், ஆயுதம், கசை, தடி இவற்றை ஸ்பரிசித்துச் சுத்தராக வேண்டும், பிறகு யாவரும் தங்கள் வர்ணங்களுக்குரிய வைதீக கர்மங்களையும் பிழைப்பு வேலைகளையுஞ் செய்யலாம். கர்த்தாவானவன் மாதந்தோறும் இறந்த திதிகளில் ஏகோத்திஷ்ட விதியினால் மாசிமகம் செய்து வரவேண்டும். அந்த ஏகோத்திஷ்டங்களில் ஆஹ்வானம், அக்கிநவுகரணம், வைசுவ தேவிகவிப்பிர நிமந்திரணம், ஆகிய இவற்றை செய்யலாகாது. மேலும் அதில் ஒரு பவித்திரத்தோடு ஒரு அர்க்கியம் கொடுக்க வேண்டும். பிராமணர் புசித்த பிறகு பிரேதனுக்கு ஒரே பிண்டம் போடவேண்டும். எஜமானன், அபிரம்யதாம் என்று கேட்க பிராமணர்கள் அபிரதாஸ்ம என்று பதில் சொல்ல வேண்டும். கடைசியாக இன்னாருக்கு இது அக்ஷயம் என்று சொல்ல வேண்டும். இப்படியே வருஷம் முடிவு வரையில் ஏகோத்திஷ்ட விதியால் சிரார்த்தம் செய்து பிறகு சபிண்டீகரணம் செய்ய வேண்டும். அதுவும் ஆண்டின் இறுதியிலாவது, ஆறுமாதத்திலாவது, பன்னிரண்டாம் நாளிலாவது ஏகோத்திஷ்ட விதியினாலேயே செய்ய வேண்டும். அதில் எள்ளும் வாசனைத் திரவியமும் கலந்த ஜலத்தினால் நிறைக்கப்பட்டவைகளாய், பிதுர்க்களுக்காக மூன்று அர்க்கிய பாத்திரங்களும், பிரேதனுக்காக ஒரு அர்க்கிய பாத்திரமும் வைத்து, அந்தப் பிரேத பாத்திர ஜலத்தை பிதுர்ப் பாத்திரம் மூன்றிலும் கலக்க வேண்டும். இப்படியாக அர்க்கிய சம்யோஜனஞ் செய்வதால் அந்தப் பிரேதன் பிதுருத்துவத்தை அடைய அவன் முதலான பிதுர்க்களைப் பார்வணம் முதலான சிரார்த்த விதிகளால் அர்ச்சிக்க வேண்டும்.

இறந்தோனுக்குக் கருமம் செய்ய வேண்டிய கர்த்தாக்கள் புத்திரன், பவுத்திரன், புத்திரனுடைய பவுத்திரன் சகோதரன் அவனுடைய சந்ததி சபிண்டருடைய சந்ததி ஆகிய இவர்களில் முந்தினவரில்லாதபோது பிந்திவர் முறையே கனர்த்தாக்களாகிறார்கள். இவர்கள், எல்லோருமே இல்லாதபோது சமானோதகருடைய சந்ததியும் அதன் பிறகு தாயின் பக்ஷத்துச் சபிண்டருடைய சந்ததியும் அதன்பின் அந்தப் பக்ஷத்துச் சமானோதக சந்ததியும் முறையே கிரியை செய்யவேண்டும். இந்த இரண்டு குலங்களும் நசித்தப் போனால் பெண்டுகள் இந்தக் கிரியைகளை செய்யலாம். பிறகு பிதாவின் சார்பிலும்,மாதாவின் சார்பிலும் உள்ள சபிண்ட சமானோதர்களாகிலும் அல்லது சஹாத்தியாயி சீடன் முதலானவர்களாகிலும், ஒரு கூட்டத்தில் சேர்ந்தவர்களாகிலும், கர்மம் செய்யலாம். இந்தக் கிரியைகளில் பூர்வங்கள் என்றும் மத்திமங்கள் என்றும் உத்தரங்கள் என்றும் மூன்று விதங்களுண்டு. தகனந் தொடங்கி தண்ணீரைத் தீண்டுமளவில் உள்ளவைகள் பூர்வக்கிரியைகளாகும். மாதந்தோறும் செய்யத்தக்க மாசிகங்கள் மத்திமக் கிரியைகள், பிரேதன், பிதுர்க்களில் கலக்கத்தக்கதான சபிண்டீகரணத்துக்குப் பிறகு செய்ய வேண்டிய பிதுர்க்கிரியைகள் எல்லாம் உத்தரக் கிரியைகளாகும்! தந்தை தாய்களுடைய சபிண்ட சமானோதர்களினாலேயும், சகாத்தியாயி முதலானவர்களினாலேயும் பொருள் எடுத்துக் கொள்கிற ராஜாவினாலேயும் பூர்வக் கிரியைகள் செய்யப்படலாம். உத்தரக்கிரியைகளோ புத்திரன் முதலானவர்களினாலேயே செய்யப்படவேண்டும். அல்லது புத்திரியின் புத்திரர்களாலுஞ் செய்யலாம். பெண்டுகளுக்கும் ஆண்டுதோறும் இறந்த திதிகளிலே ஏகோத்திஷ்ட விதியினால் உத்தரக்கிரியை செய்ய வேண்டும். அரசனே! அந்த உத்தரக்கிரியைகளை எப்பொழுதும் எப்படியெப்படிச் செய்யவேண்டுமோ அந்தக் கிரமங்களைச் சொல்லுகிறேன்.

—————

14. சிரார்த்த காலம்

ஒருவன் அக்கறையோடும், சிரத்தையோடும் சிரார்த்தம் செய்வதனால், பிரம்மா, இந்திரன், ருத்திரன், அசுவினி, தேவர், சூரியன், அக்னி வசுக்கள், வாயு, விசுவேதேவர், பிதுர்க்கள், முனிவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், சர்ப்பங்கள் முதலிய ஜந்துக்களும் மற்றுமுண்டான பூதங்கள் போன்ற யாவற்றையும் மகிழவைக்கிறான். மாதந்தோறும் அபர பக்ஷத்திலும் அமாவாசையிலும் அஷ்டகைகளிலும் சிரார்த்தஞ்செய்ய வேண்டும். அதற்குரிய காலத்தைச் சொல்கிறேன். சிரார்த்தத்துக்குத் தகுதியான பொருள்கள் கிடைத்தபோதும், தகுதியான பிராமணன் நேர்ந்தபோதும், வியதீ பாதத்திலும் அயனத்திலும் விஷுவத்திலும் சந்திர சூரிய கிரகணங்களிலும், சூரியன் பன்னிரண்டு ராசிகளில் பிரவேசிக்கும் காலங்களிலும், நட்சத்திர பீடையும் கிரக பீடையும் உண்டாகும் காலங்களிலும் கெட்ட கனவுகளைக் கண்டபோதும், தானியத்தைப் புதிதாகக் கொண்டு வந்தபோதும் காமியச் சிரார்த்தங்களைச் செய்யலாம். அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி ஆகிய நட்சத்திரங்களுடன் கூடுமேயானால் அப்பொழுது செய்கிற சிரார்த்தம் பிதுர்க்களுக்கு வருஷத்துக்குத் திருப்தியை உண்டாக்கும். திருவாதிரை, புனர்பூசம், பூசம் இந்த நட்சத்திரங்களுடன் கூடிய அமாவாசையில் செய்த சிரார்த்தத்தினால் பிதுர்க்கள் பன்னிரண்டு ஆண்டுகள் திருப்தியடைவார்கள். அவிட்டம், சதயம், பூரட்டாதியோடு கூடிய அமாவாசை தேவர்களுக்குங் கிடைக்காத புண்ய காலமாகும். இந்த ஒன்பது நட்சத்திரங்களிலும் அமாவாசை கூடியபோது சிரார்த்தம் செய்யலாம். இதனால் பிதுர்க்களுக்கு விசேஷ திருப்தியுண்டாகும்.

மாமன்னா! இன்னுங் கேட்பாயாக, பிதுர்க்களிடத்தில் அதிக பத்தியுடையவனான புரூரவ சக்கரவர்த்தி கேட்க; ஜனககுமாரர் கூறிய பாடலின் பொருளைச் சொல்கிறேன். வைகாசி மாதத்தில் சுக்கில பக்ஷத் திரிதியையும், கார்த்திகை மாதத்தில் சுக்கில பக்ஷ நவமியும், புரட்டாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத் திரயோதசியும், மாசி மாதத்து அமாவாசையுமாகிய இந்த நான்கு திதிகளும் யுகாதிகள் என்றும் மிகவும் புண்ணியகாலம் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றிலும் சந்திர சூரிய கிரணங்களில் மூன்று அஷ்டகைகளிலும் இரண்டு அயனங்களிலும் எள்ளுடன் கூடியத் தண்ணீரையாவது பிதுர்க்களை உத்தேசித்து ஒருவன் பக்தியுடன் விடுவானாகில் அவன் ஆயிரம் ஆண்டுகள் வருஷ சிரார்த்தம் செய்த பயனை அடைவான். இது ரகசியமான விஷயம் என்று பிதுர்க்கள் கூறுகின்றனர். மாசி மாதத்து அமாவாசையானது எப்போதாவது சதய நட்சத்திரத்துடன் கூடுமாயின் அது பிதுர்க்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். அற்ப புண்யமுள்ள மனிதர்களுக்கு அது கிடையாது. அரசே! அந்தக் காலத்தில் அவிட்ட நட்சத்திரம் சேருமானால், அப்போது அன்னம் அல்லது தண்ணீரைப் பிதுர்க்களைக் குறித்துக் கொடுத்தவனுக்கு பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்க்களைத் திருப்தி செய்த பயன் கிடைக்கும். அந்தக் காலத்திலேயே பூரட்டாதியும் சேருமானால் அதில் செய்யும் சிரார்த்தத்தால் பிதுர்க்கள் திருப்தியடைந்து ஆயிரம் யுகங்கள் வரை சுகமாகத் தூங்குவார்கள். கங்கை, யமுனை, விபாசை, சரஸ்வதி, கோமதி என்ற நதிகளுக்கும், நைமிசம் என்ற ÷க்ஷத்திரத்துக்கும் ஒருவன் சென்று குளித்து அன்போடு பிதுர்ப்பூஜை செய்தால், அவனது பாவங்கள் நீங்கும். அரசனே! பிதுர்க்கள் நாம் எப்போது புரட்டாசி மாதத்தில் புத்திராதிகள் செய்த அபர பக்ஷத் திரயோதசி சிரார்த்தத்தினால் திருப்தியடைந்து மாசி அமாவாசையிலும் புத்திரர்கள் செய்த புண்ணிய தீர்த்த ஜல தர்ப்பணங்களால் திருப்தியடைவோம் என்று பாடுகிறார்கள். மனிதருக்குத் தூய்மையானச் சித்தமும் பரிசுத்தமான பொருளும் மேன்மையான காலமும், சாஸ்திரங்களின் சொல்லப்பட்ட விதிகளும் சற்குணமுள்ள பாத்திரமும் சிறந்த அன்பும் சேருமானால் சகல இஷ்டங்களும் சித்தியாகும். மன்னனே, இது விஷயமாகப் பிதுர்க்கள் கீதமிசைப்பதைக் கேட்பாயாக.

பிதுர்க் கீதங்களாவன, எவன் திரவிய வஞ்சனையில்லாமல், நமக்குப் பிண்டங்களைப் போடத்தக்கவனோ விபவமுண்டானால் வஞ்சனையின்றி ரத்தினம், ஆடைகள், தனம் முதலிய சகல போகங்களையும் நமக்காகப் பிராமணருக்குத் தானஞ் செய்பவனோ, அன்னமிடுவதற்கு மட்டுமே தகுதியான விபவமுடையவனாகில் இத்தகைய காலங்களில் மிக்க அன்போடு நல்ல பிராமணருக்கு அன்னமிடுவானோ, அதற்கு சக்தியில்லாமற் போனால் இயன்ற அளவு தானியத்தையாவது பிராமணருக்கு ஆழமாய்த் தரவல்லவனோ, அல்லது சிறு தக்ஷிணையையாவது கொடுப்பவனோ, அதற்கும் சக்தியில்லையெனில் நுனிக்கையினால் சிற்சில எள்ளுகளையாவது நல்லதொரு பிராமணனுக்கு வணங்கி நமஸ்கரித்துக் கொடுப்பவனோ, அதுவும் வழியில்லையெனில் ஏழெட்டு எள்ளுடன் நமக்கு ஒரு கைத் தண்ணீராவது விடவல்லவனோ, இதுவுமுடியாதபோது, எங்கிருந்தாவது பசுக்களுக்குத் தக்க உணவைச் சம்பாதித்து, நம்முடைய மகிழ்ச்சிக்காகச் சிரத்தையுடன் பசுக்களுக்குக் கொடுக்கிறானோ, ஒன்றுமேயில்லாதபோது, காட்டுக்குச் சென்று கைகளை உயரத்தூக்கி, உரத்த குரலுடன் சூரியன் முதலான லோக பாலகரை நோக்கி எனக்குப் பிதுர்ச் சிரார்த்தம் செய்யத்தக்க தனம் பொருள் எதுவும் இல்லை. எனது பிதுர்க்கள் திருப்தியடைய வேண்டும். எனக்கு ஒன்றுமில்லை என்று இதோ என்னிரண்டு கைகளையும் வாயுவின் மார்க்கமான ஆகாயத்தில் தூக்கிவிட்டேன்! என்று இந்த வசனங்களைப் படிப்பானோ, அத்தகைய புண்ணியவானும் புத்திமானுமான ஒருவன் நமது குலத்தில் பிறக்கவேண்டும் என்று பிதுர்க்கள் பாடியுள்ளார்கள், என்று ஜனக குமாரர் புரூரவ மன்னனிடம் கூறினார். அதை நான் உனக்கு சொன்னேன். இவ்விதமாகப் பிதுர்க்கள் தனமுள்ளபோதும் இல்லாதபோதும் நடக்கவேண்டிய முறைகளைச் சொன்னவண்ணம் செய்பவன், பூரணமாகச் சிரார்த்தம் செய்த நற்பயனை அடைவான்.

—————-

15. சிரார்த்தம் செய்யும் முறைகள்

சகர மாமன்னனை நோக்கி, அவுர்வ முனிவர் மேலும் கூறலானார். அரசனே! சிரார்த்தத்துக்கு வரிக்கவேண்டிய பிராமணர்களின் தகுதியைக் கூறுகிறேன். மூன்று நாசிகேதானுவாகங்களை ஓதி அதன்படி நடப்பவனாகவும் மூன்று மதுருக்குகளை ஓதி அதன்படி நடப்பவனும், திரிசுபர்ணானுவாகங்களை ஓதி அதன்படி அனுஷ்டான முடையவனும் மதுவித்தையில் நிஷ்டை பெற்றவனும், ஷடங்க வேதாத்தியயனஞ் செய்தவனும் அந்த வேதத்தின் பொருளையறிந்தவனும், வேத விதிப்படி அனுஷ்டானமுடையவனும் பரப்பிரமத் தியானஞ் செய்பவனும் ஜ்யேஷ்ட சாமத்தை ஓதவல்லவனும், ஆகிய இவர்களே முக்கியமானவர்களாகையால் அவர்களையே வரித்துப் போஜனம் செய்விக்க வேண்டும். இருத்து விக்கும் உடன் பிறந்தாளின் குமாரனும், புத்திரியின் மகனும் மருமகனும், மாமனாரும் அம்மானும், தவசியும் பஞ்சாக்கினி உபாசனை செய்பவனும் பஞ்சாக்கினி வித்தையிலே நிஷ்டை பெற்றவனும்; சீடனும், சம்பந்தியும் மாதா பிதாக்களை பூஜிப்பவனுமான இவர்களை முந்தியவர் நேர்ப்படாதபோது வரிக்கலாம். இவர்களும் கிடைக்கவில்லையென்றால், சுத்தமான பிராமணரைத் தேடி வரிக்க வேண்டுமே தவிர தகாதவர்களைச் சிரார்த்தத்துக்கு வைக்கக்கூடாது. தகாதவர்கள் யார் என்றால் மித்திரத் துரோகம் செய்பவன், புழுத்த நகமுடையவன், சொத்தைப் பல்லுடையவன். நபுஞ்சகன்; கன்னியரைக் கெடுத்தவன், அக்னியையும் வேதத்தையும் அகாரணமாய் விட்டவன், சோம விக்கிரயஞ் செய்பவன், மெய்யாகவோ அன்றிப் பொய்யாகவோ பதிதன் என்று தள்ளப்பட்டவன், திருடுவோன், கோட்சொல்லிக் கெடுப்பவன், ஊராருக்காகக் கூலி வாங்கிக் கொண்டு யாகஞ் செய்பவன், வேதத்தைக் கூலிக்கு ஓதுவிப்பவன், ஓதியவன், கைம்பெண்ணைக் கலியாணஞ் செய்தவன், தாய் தந்தையரை விட்டவன், சூத்திர மங்கையின் குழந்தைகளை எடுத்துவளர்ப்பவன். சூத்திரமங்கையை மணந்துகொண்டவன் தேவ தாந்தரங்களைப் பூஜித்துப் பிழைப்பவன்; இத்தகையோர் சிரார்த்தத்தில் நிமந்திருணத்துக்குத் தகுந்தவர்களல்லர். சிரார்த்தத்துக்காக; முதல் நாளிலேயே யோக்கியரான பிராமணரை வரித்து, தேவார்த்தமாகவும் பிதுரார்த்தமாகவும் க்ஷணஞ்செய்யும்படி தனித்தனியே பிரார்த்திக்க வேண்டும். பிறகு கோபதாபத்தையும் ஸ்திரீ சங்கமத்தையும் வருந்துவதையும் சிரார்த்தஞ் செய்பவனும் வரிக்கப்பட்டவனும் செய்யாமல் நியமத்துடன் இருக்க வேண்டும். சிரார்த்தம் செய்பவனாவது வரிக்கப்பட்டவனாவது ஸ்திரீ போகஞ்செய்வது மகாதோஷமாகும். அவ்விதம் செய்பவன் தனது பிதுர்க்களை ரேதசின் குழியிலே தள்ளிய பாபத்தை அடைவான். ஆகையால், தர்மசீலரான பிராமணர்களை, முதல் நாளே நிமந்திரணஞ் செய்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திரிய நிக்கிரகம் செய்து யதிகளாக இருக்கும் பிராமணரை முன்னே நிமந்திரணஞ் செய்யாமற் போனாலும் அன்றையத் தினம் அவர்கள் வீட்டுக்கு வருவாராயின் அவர்களையும் சிரார்த்தத்தில் வைக்கலாம்.

இவ்விதம், பிராமணார்த்தமாய் வந்தவருக்கு கால் அலம்பல் முதலிய உபசாரங்களைச் செய்து, பவித்திர பாணியாய் ஆசமனம் முதலானவைகளைச் செய்து, சுத்தர்களாக இருக்கும் அவர்களை ஆசனத்தில் அமர்த்தி, அமுது செய்விக்க வேண்டும். பிதுர் ஸ்தானத்தில் ஒற்றையாகவும், தேவஸ்தானத்தில் இரட்டையாகவும் அல்லது இச்சைக்கேற்ப ஒவ்வொருவரையாவது வைக்க வேண்டும். அதுபோலவே மாதாமசனுடைய சிரார்த்தத்தையும் பக்தியுடன் தேவ வரணத்தோடு கூடியதாகச் செய்ய வேண்டும். பிதுர் சிரார்த்தம் மாதாமக சிரார்த்தம் ஆகிய இவ்விரண்டுக்கும் ஒரே விசுவதேவ வரணஞ் செய்யவும் கூடும் பிதுர்வர்க்க மாதாமகவர்க்கங்களைச் சேர்ந்த தேவதாஸ் தானத்துப் பிராமணரைக் கிழக்கு முகமாகவும், பிதுர் ஸ்தானத்துப் பிராமணரை வடக்கு முகமாகவும் உட்கார வைத்துப் போஜனமளிக்க வேண்டும். இவ்விருவருக்கும் சிரார்த்தத்தைத் தனித்தனியே செய்ய வேண்டும் என்று சில முனிவர்கள் கூறுகிறார்கள். மற்றுள்ள ரிஷிகள் ஓரிடத்தில் ஒரு பாகத்தினாலேயே செய்யலாமென்று சொல்கிறார்கள். இருக்கத் தருப்பையைக் கொடுத்து அர்க்கிய விதியோடு பூசித்து, அவர்களுடைய அனுக்கியையினாலே ஆவாஹனம் செய்யவேண்டும். யவோதகத்தினால் தேவர்களுக்கு அர்க்கியம் கொடுத்து, கந்த, புஷ்ப, தூப தீபங்களினால் பூஜிக்க வேண்டும். பிதுர்க்கள் விஷயமாகச் செய்வதையெல்லாம் அப்பிரதக்ஷிணமாகச் செய்ய வேண்டும். அந்தப் பிதுர்க்களிடம் அனுக்கியை பெற்று இரட்டிப்பானத் தருப்பைகளை ஆசனத்தில் போட்டு மந்திர பூர்வமாக ஆவாகனஞ்செய்து திலோதகத்தினாலே அர்க்கியம் முதலானவற்றைக் கொடுத்து மற்ற உபசாரங்களையும் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் யாராவது ஒரு பிராமணன் அன்னம் வேண்டி அதிதியாக வந்து விட்டால், முன்பு வரிக்கப்பட்ட பிராமணரிடத்தில் அங்கீகாரம் பெற்று அவனுக்கும் அமுதளிக்கலாம். சில யோகிகள் நாநாவித வேடமுடையவராய் தமது சொரூபம் இன்னதென்று அறியாத வகையில் மனிதருக்கு உபகாரிகளாகச் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் சிரார்த்த காலத்தில் நேரிட்ட அதிதியை அவசியமாகப் பூஜிக்க வேண்டும். அரசனே! அந்த அதிதியை உபசரிக்காவிட்டால் சிரார்த்தம் செய்த பயன் எல்லாம் அழிந்து போகும். பிறகு அக்கினியிலே கறியமுதும் காரமான வஸ்துக்களும் சேராத தூய்மையான அன்னத்தை அந்தப் பிராமணரின் அங்கீகாரத்தைப் பெற்று, அக்கினிக்கும் சோமனுக்கும் இயமனுக்கும் மந்திரங்களோடு மும்முறை ஆகுதி செய்ய வேண்டும். இவ்விதம் ஹோமம் செய்து மிகுந்த அன்னத்தைப் பிராமணருக்குரிய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பிறகு நான்றாகப் பாகஞ்செய்யப்பட்டு சுவையாயும் இஷ்டமாயும் உள்ள அன்னங்களை சம்பூர்ணமாக அந்தப் பிராமணர்களுக்குப் பரிமாறி, இதைத் தேவரீரது திருவுள்ளம்படி அங்கீகரிக்க வேண்டும்! என்று கீழ்ப்படிதலான வார்த்தைகளால் ஆராதிக்க வேண்டும். அவர்களும் மவுனத்துடனும் முகமலர்ச்சியுடனும் அங்கீகரித்து நன்றாக அமுதுண்ண வேண்டும், கர்த்தாவும் கோபதாபமின்றியும் துரிதப்படாமலும் வேண்டியவற்றையெல்லாம் அன்போடு பரிமாற வேண்டும். பிறகு, ர÷க்ஷõக்கின மந்திரத்தைப் படித்து பூமியில் எள்ளைப் பரப்பி, அந்த பிராமணரைத் தனது பிதுர்க்களாகப் பாவிக்க வேண்டும்.

இவ்விதமாகச் செய்யும் சிரார்த்தங்களில் அந்தந்தத் தருணத்தில், பிதாவும் பிதாமகனும், பிரபிதா மகனும் இப்போது பிராமணருடைய உடல்களில் இருந்துகொண்டு என்னால் திருப்தியடைவாராக! பிதாவும், பிதாமகனும், பிரபிதா மகனும் இப்போது எனது ஓமத்தால் ஆப்பியாயனஞ் செய்யப்பட்ட மூர்த்திகளாகத் திருப்தியடைவார்கள். பிதாவும் பிதாமகனும் பிரபிதா மகனும் நான் இப்பொழுது பூமியில் இட்டப் பிண்டத்தினால் திருப்தியடையக் கடவர். பிதாவும், பிதாமகனும், பிரபிதா மகனும் நான் சொன்ன இந்த வார்த்தைகளால் திருப்தி அடைவார்களாக. யாக விக்கினகாரிகளான ராக்ஷசரெல்லாம் நாசமடைவார்களாக. யக்ஞங்களுக்கு ஈஸ்வரனும் விகாராதிகளில்லாத ஸ்வரூபமுடையவனுமான ஸ்ரீஹரியே இங்கு சகல அவியங்களையும் கவியங்களையும் அமுது செய்து கொண்டு எழுந்தருளியிருக்கிறான். அந்த எம்பெருமானுடைய சான்னியத்தியத்தினால் சகலமான ராட்சதரும் அசுரர்களும் உடனே ஓடிப்போவார்களாக. என்று சொல்லிப் பிரார்த்திக்க வேண்டும். அந்தப் பிராமணர் அமுது செய்து திருப்தியடைந்த பிறகு விகிரான்னமிட வேண்டும். பிறகு, அவர்கள் தமது கை கால்களை சுத்தம் செய்துகொள்ளத் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் தண்ணீர் தரவேண்டும். பிறகு அவர்களது நியமனம் பெற்று, வியஞ்சனாதிகளோடும், எள்ளோடும் கூடிய அன்னப்பிண்டங்களைச் சாந்தச் சித்தனாகப் போட்டு பிதுர்த் தீர்த்தத்தினால் திலோதகம் விடவேண்டும். மாதாமக விஷயத்திலும் இந்தத் தீர்த்தத்தினாலேயே பிண்ட நிர்வபணஞ் செய்ய வேண்டும். தெற்கு நுனியாகப் போடப்பட்ட தருப்பைகளில் புஷ்ப தூபாதிகளால் பூஜிக்கப்பட்ட பிண்டங்களை சுவாமிகள் அமுதுசெய்த பாத்திரத்தின் அண்மையில் முதன்மையாகப் பிதாவுக்கும் பிறகு முறையே பிதாமஹ பிரபிதாமஹருக்கும் போட வேண்டும். பிண்டத்துக்காகப் பரப்பப்பட்ட தருப்பைகளின் அடியில் நாலாவர் முதலானவர்களை லேபகர்ஷணங்களினால் மகிழ்விக்க வேண்டும். இதுபோலவே மாதாமஹரையும் வாசனைத் திரவியங்களோடும் மலர்களுடனும் கூடிய பிண்டங்களினால் திருப்தி செய்விக்க வேண்டும்.

அரசனே! முதலில் பிதுர்க்களுக்கு அன்புடன் ஸ்வதாகாரஞ் செய்து, அந்தப் பிதுர்க்கள் ஸ்வதாங்கீகாரத்துடன் ஆசிர்வதிக்க, இயன்ற அளவு தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும். பிறகு தேவ திருப்தியைக் காட்டும்படியான வாக்கியங்களை அவர்களைச் சொல்லும்படிச் செய்து, அவர்களுடைய ஆசிகளைப் பிரார்த்தித்துப் பெற்றுக்கொண்டு, முதலில் பிதுர்க்களுக்கும் பிறகு தேவர்களுக்கும் விசர்ச்சனஞ் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் இதுவே கிரமம் என்பதை அறிவாயாக. விசுவ தேவதந்திர பக்ஷத்திலே தேவார்த்தமான பிராமணரை முதலில் அர்ச்சித்தும், பிறகு பிதுர் வர்க்கத்தையும் அதன் பிறகு மாதாமஹ வர்க்கத்தையும் அர்ச்சிக்க வேண்டும். விசர்ச்சனமோ முதலில் பிதுர்க்களுக்கும் பிறகு மாதாமஹர்களுக்கும் அதன்பிறகு விசுவதேவருக்கும் செய்யவேண்டும். இப்படிச் செய்து முடிந்த பிறகு இனிமையும் தாழ்மையும் உள்ள வசனங்களால் அவர்களை மேன்மைப்படுத்தி, வாசல் வரைக்கும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்கள் விடை கொடுக்கத் திரும்பி வந்து வைசுவதேவக் கிரியை செய்து, தனக்குப் பூஜ்யரும் பந்துக்களும் பிருத்தியருமானவர்களுடன் போஜனம் செய்ய வேண்டும். இப்படியாகப் பிதுர்ச்சிரார்த்த மாதாமஹ சிரார்த்தங்களைச் செய்வதால் அவனுக்கு பிதுர்க்களின் அனுக்கிரகத்தினால் சர்வாபீஷ்ட சித்தியும் உண்டாகும். சிரார்த்தத்தில் தவுகித்திரன், குதம்பம் திலம், இம்மூன்றும் பவித்திரங்கள். மேலும் வெள்ளியைப் பற்றிச் சொல்வதும் கொடுப்பதும் காட்டுவதும் பவித்திரங்கள். சிரார்த்தஞ் செய்தவனுக்கும் புசித்தவனுக்கும் குரோதம் வழிநடை துரிதம் ஆகிய மூன்றும் கூடாதவை. விசுவதேவரும் பிதுர்க்களும் மாதாமகரும் சிரார்த்தம் செய்பவருடைய குலம் எல்லாவற்றையும் போஷிப்பார்கள். பிதுர்க்களுடைய கணமானது சோமனை ஆதாரமாகக் கொண்டது. அந்தச் சந்திரனோ யோகத்தை ஆதாரமாகக் கொண்டிருப்பவன். ஆகையால் சிரார்த்தத்திலே யோகியை நிமந்திரிப்பது மிகவும் சிறப்புடையதாகும். ஆயிரம் பிராமணருக்கு முன்பு ஒரு யோகி எழுந்தருளியிருந்தால், அவர் தம்மையும் யஜமானனையும் கடைத்தேறச் செய்யவல்லவராவர் என்பதை அறிந்து கொள்வாயாக.

—————-

16. சிரார்த்த பொருட்கள்

சகர மாமன்னனே! கேட்பாயாக! ஹவிசினால் மட்டுமின்றி மாமிசத்தாலும் சிலர் சிரார்த்தம் செய்வதுண்டு. இது நிற்க சிரார்த்தத்துக்கு மிகவும் விசேஷமான பொருள்களைக் கூறுகிறேன். காலசாகம் என்ற ஒருவகைக் கீரையும், நல்லதேனும் பிரசாந்திகங்கள் என்ற ஒருவகைக் காட்டுத் தானியமும், செந்நெல்லும், வெண்சாமை, கருஞ்சாமைகளும், வழுதுணை, பிரண்டை முதலான காட்டு மூலிகைகளும், கிழங்குகளும், யவதானியங்களும், உளுந்தும், கோதுமையும், நல்ல நெல்லும், எள்ளும், மலையகத்தியும், கடுகும், பாகல், பலா, கதலி, அவரை முதலியவைகளும் சிறந்தவை. கயா என்னும் திவ்வியத் தலத்தை அடைந்து, அங்கு செய்யும் சிரார்த்தமானது மிகவும் சிறப்புடையது. அதனால் ஜன்மசாகில்யமாம். இனிச் சிரார்த்தத்துக்கு ஆகாதவற்றைச் சொல்கிறேன். ஆக்கிரயணம் என்னும் சடங்கு செய்யாமல் அறுத்த தானியமும் காராமணியும், அணுவென்ற அற்பதானியமும் மசூரங்களும், சுரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி போன்றவையும் காந்தாராகம் என்ற சம்பாவும், கரம்பம் என்ற தானியமும் பிரத்தியக்ஷமான உப்புமிகுந்த பொருள்களும் உவர் நிலத்தில் உண்டான பொருள்களும் சிவப்பல்லாத பிசின்களும், உப்பும், வாயினால் சொல்ல நன்றாக இராதவைகளும், கண்ணுக்கு இனிமையற்றவைகளும், இரவில் கொண்டு வந்து வைத்த ஜலம் முதலியவைகளும் கன்றில்லாத பசுவின் பாலும், பசுமாடு குடித்துத் திருப்தியடையக் கூடாத அற்ப ஜலமும், யாரும் கையாளாமல் விட்டு வைத்திருக்கும் கிணற்றின் தண்ணீரும், துர்க்கந்தமுள்ள தண்ணீரும், நுரைத்த நீரும், ஒற்றைக் குளம்புடைய மிருகங்களின் பாலும், ஒட்டகத்தின் பாலும், ஆட்டுப்பாலும், எருமைப்பாலும், மான் பாலும் இவையெல்லாம் சிரார்த்த காரியங்களுக்கு உபயோகிக்கத் தகாதவையாகும். மேலும் நபும்ஸகன், குலத்தாரால் தள்ளப்பட்டவன், சண்டாளன், பாஷாண்டன் அருவருக்கத்தக்க ரோகமுடையவன் வேத தருமங்களை விட்டவன் ஆகிய இவர்களாலும் கோழி, நாய், குரங்கு, ஊர்ப்பன்றி ஆகிய இவைகளினாலும் ராஜஸ்வலையான ஸ்திரீ சவுசாசாரஹீனன், பிணம் தூக்கிப் பிழைப்பவன் ஆகியவர்களால் பார்க்கப்பட்ட இடங்களிலே பிதுர்க்களும் தேவர்களும் அமுது செய்யமாட்டார்கள். ஆகையால் யாரும் பார்க்கக் கூடாத மறைவிடத்திலே மிகுந்த பக்தியுடன் பூமியில் எள்ளை இறைத்து இராக்கதர்களை ஓட்டி சிரார்த்தஞ்செய்ய வேண்டும். ரோமம் பூச்சி முதலானவைகளுடனும் கஞ்சி முதலியவைகளுடனும் கூடிய பழையது அல்லாத அன்னத்தைப் பக்தி சிரத்தையோடு நமது கோத்திரங்களைச் சொல்லி இடுவோமானால் அந்த அன்னம் பிதுர்க்கள் உண்கின்ற அமிர்தாதி உணவாகத் திகழும்.

அரசனே! கலாபக் கிராமத்தின் உபவனத்தில் மனுபுத்திரனான இஷ்வாகு மாமன்னனுக்கு பிதுர்க்கள் பாடித் தந்த கீதம் ஒன்று வழங்குகிறது. அதாவது எவர் ஒருவர் கயைக்குச் சென்று நமக்குப் பிண்டம் போடுவார்களோ, அத்தகைய யோக்கியர் நம்முடைய குலத்தில் பிறப்பார்களா? எவர் பாத்திரபத கிருஷ்ணத்திரயோதசியிலும் மகா அமாவாசையிலும் தேன் நெய்யுடன் பாயாசான்னம் கொடுப்பார்களோ, அப்படிப்பட்டவர் நமது குலத்தில் பிறப்பார்களா? எவர் கவுரி என்ற பத்து வயதுக் கன்னியை நல்ல பாத்திரத்தாற் தானம் செய்து திருமணம் செய்விப்பார்களோ, நீலம் (நீலம்-உடல் முழுவதும் சிவந்து முகமும் வாலும் வெண்மையாய் கொம்பும் குளம்பும் சிறிது வெளுத்திருக்கும் எருது) என்ற காளையை விடுவார்களோ, விதிப்படி தக்ஷிணை கொடுத்து அசுவமேதமாவது செய்வார்களோ அத்தகையோர் நமது குலத்தில் பிறப்பார்களா? என்று இவ்விதமாகத் தமது மனோ விருப்பங்காட்டி அவற்றைச் சிறப்பித்திருக்கிறார்கள்.

————–

17. நக்கின சொரூபம்

பராசர முனிவர் தமது சீடரை நோக்கி, மைத்ரேயரே! பூர்வத்தில் சகரமாமன்னனுக்கு அவுரவ முனிவர் அருளிச்செய்த சதாசாரத்தை நான் உமக்குக் கூறுகிறேன். இந்தச் சதாசாரத்தைக் கடந்தால் எவனும் நலன்களைப் பெறமாட்டான்! என்று கூறினார். சுவாமி! ஷண்டன் அபவித்தன் என்று சொல்லப்ட்ட நபும்ஸகன், தள்ளப்பட்டவன் முதலியவர்களைப் பற்றிச் சொன்னீர்கள். நக்கினன் என்பவனைப் பற்றி நீங்கள் எதுவும் கூற வில்லை. நக்கினன் என்பவன் யார்? எந்தவித நடக்கையினால் அப்பெயர் வருகிறது? இந்த நக்கின ஸ்வரூபத்தைப் பற்றித் தாங்கள் கூறுவதை நான் கேட்க விரும்புகிறேன்! தர்மவான்களுக்கெல்லாம் உயர்ந்தவரான தேவரீருக்குத் தெரியாத விஷயமில்லை. ஆகையால் நக்கின ஸ்வரூபத்தைப் பற்றிக் கூறவேண்டுகிறேன் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். ரிக்கு, யஜுர், சாமம் என்ற பெயரையுடைய வேதமானது பிராமணரது வர்ணங்களுக்கு, மறைவாக இருக்கிறது. அத்தகைய வேதத்தை விட்டவன் யாரோ! அவனே நக்கினன் என்று அறிவீராக. நக்கினன் என்ற சொல்லுக்கு உலகத்தில் ஆடையில்லாமல் திகம்பரனாக இருப்பவன் என்று பொருள். ஆயினும் சாஸ்திரத்தில் நக்கினன் என்பது வேதரூபமான மறைவை இழந்தவன் என்பது பொருளாகும். திரயீ என்ற இந்த மூன்று வேதங்களும் வர்ணங்களுக்கு மறைவு மட்டுமல்ல, சம்ரக்ஷணமாகவும் இருக்கிறது, இத்தகைய வேதத்தை மோகத்தால் விட்டு விடுவோன் எவனோ, அவனே நக்கினன் என்று வழங்கப்படுவான். மேலும் ஒன்றைச் சொல்கிறேன் கேட்பீராக. எல்லா தருமங்களையும் அறிந்த எனது பிதாமஹரான வசிஷ்ட முனிவர் பீஷ்மருக்கு அருளிச் செய்த நக்கின சொரூப சம்பந்தமாகச் சொன்ன விஷயத்தை நான் உமக்குச் சொல்கிறேன்.

பூர்வத்தில் ஒரு காலத்தில் தேவதைகளுக்கும், அசுரர்களுக்கும் தேவமானத்தில் நூறு ஆண்டுகள் வரைக்கும் மகத்தான யுத்தம் ஒன்று நடந்தது. அதில் ஹ்ராதன் முதலிய அசுரர்களால் தேவர்கள் தோல்வியுற்று, மிகவும் துக்கமடைந்து திருப்பாற்கடலின் வடகரைக்குச் சென்று தவஞ்செய்து சகல உலகநாதனான ஸ்ரீவிஷ்ணுவின் மகிழ்ச்சிக்காக நாங்கள் எந்த வார்த்தையைச் சொல்வோமா, அதனால் இப்போதே அந்தப் பகவான் பிரசன்னமாகக் கடவாராக! எந்த மகாத்மாவிடமிருந்து பிரபஞ்சங்கள் யாவும் தோன்றினவோ அவையாவும் எங்கே மீண்டும் ஒடுங்குமோ அத்தகையவனைத் துதிக்கவல்லவர் யாருண்டு? ஆயினும் பகைவர் செய்த அவமானத்தால் நாங்கள் அபயம் வேண்டித் துதிக்கிறோம். உனது உண்மை நிலை வாக்குக்கு எட்டுமோ? எம்பெருமானே! நீயே பூமியும், ஜலமும், நெருப்பும், காற்றும், ஆகாயமும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்குவித அந்தக்கரணமும், பிரகிருதியும், அந்தப் பிரகிருதிக்கு மேற்பட்ட புருஷனுமாக இருக்கின்றாய். பிருமா முதல் துரும்பு வரை, ரூபப்பட்டதும் படாததுமாய் காலதேச பேதமுள்ளதாயுள்ள இந்தப் பிரபஞ்சம் யாவும் உன்னுடைய ஒரே திருமேனியாக இருக்கிறது. அதற்குள்ளே, ஆதியில் உனது நாபிக் கமலத்திலிருந்து படைப்புக் காரணமாக உண்டான எந்த ரூபம் உண்டோ அந்தப் பிரம ஸ்வரூபத்தை நாங்கள் வணங்குகிறோம்! என்று துதித்தார்கள்.

உடனே அத்தேவர்களின் எதிரில் திருவாழி, திருச்சங்கு முதலான திவ்ய ஆயுத சமேதனாய் பெரிய திருவடி நாயினார் திருத்தோளின் மீது எழுந்தருளி, நீலமேகச் சியாமளனாய் சேவை சாதிக்கும் ஸ்ரீமந் நாராயணனை தேவர்கள் கண்களால் கண்டு, பல்லாயிரம் முறைகள் தண்டம் சமர்ப்பித்து, ஸ்வாமீ! அடியேங்களை அனுக்கிரகித்து அருள்செய்ய வேண்டும். உம்மையே தஞ்சமாக அடைந்த அடியேங்களை அசுரரிடமிருந்து காத்தருள வேண்டும். ஹ்ராகன் முதலிய அசுரர்கள் எல்லாம் பிரமாவின் கட்டளையையும் மீறி எங்களுக்குச் சேரவேண்டிய மூன்று உலக ஹவிர்ப்பாகங்களையும் அபகரித்துக் கொண்டார்கள். நாங்களும் அந்த அசுரர்களும் சர்வாத்மகனான உன்னுடைய அம்சங்களே ஆகிறோம், ஆயினும் அவத்தையால் தோன்றிய பேதத்தால் இந்த உலகத்தை வேறாகக் காண்கிறோம். ஆகையால் இவ்விதம் வேண்டலாயிற்று. நாங்கள் தேவர்கள் தான் எனினும் வேதமார்க்கத்தை அனுசரித்து தங்களுக்குரிய தருமங்களில் நின்றவர்களாய் தபஸுடன் கூடிய அந்த அசுரர்களை ஜெயிக்க எங்களுக்கு சக்தியில்லை. சர்வாத்மகனான பகவானே! நாங்கள் அந்த அசுரரை எப்படி வெல்ல முடியுமோ, அத்தகைய உபாயத்தை அடியேங்களுக்கு தந்தருள வேண்டும்! என்று வேண்டினார். உடனே ஸ்ரீவிஷ்ணுபகவான் தமது திருமேனியிலிருந்து ஒரு மாயா மோகனை உண்டாக்கித் தேவர்களைக் கடாட்சித்து, தேவர்களே! இந்த மாயா மோகன் அவ்வசுரர்களை மோகமடையச் செய்வான். அதனால் அவர்கள் வேத வழியைவிட்டு உங்களால் கொல்லப்படுவார்கள். இப்படிச் செய்யலாமோவென்றால் உலக ரட்சண்யத்திலிருக்கும் எனக்கு பிருமாவின் கட்டளையைக் கடந்து நடப்பவர்கள் தேவராயினும் அசுரராயினும் மற்று யாராயினும் வதைக்கத் தக்கவராகிறார்கள். ஆகையால் நீங்கள் அஞ்சவேண்டாம். இந்த மாயாமோகன் உங்களுக்கும் முன்னதாகச் சென்று உங்களுக்கு உதவி செய்வான் என்ற திருவாய் மலர்ந்தருளினார். தேவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து பெருமாளைத் திருவடிதொழுது, தமது இருப்பிடம் சென்றார்கள். மாயா மோகனும் அவர்களுடன் கூடவே சென்று அசுரர்களிடம் போய்ச் சேர்ந்தான்.

————–

18. ஜைன பவுத்த மத பிரவர்த்தனையும், சததனுவின் கதையும்

கேளுங்கள், மைத்திரேயரே! அந்த மாயாமோகன் நர்மதை நதிக்கரைக்குச் சென்று, அங்கே சிரத்தையோடு தவஞ்செய்யும், அசுரரைக் கண்டு திகம்பரனாகவும், மழுங்க மழித்த தலையுடைனும், மயிற்றேகையைக் கையில் ஏந்தியவனாகவும் அவர்களருகே சென்று அசுரவேந்தர்களே! நீங்கள் எதற்காகத் தவஞ்செய்கிறீர்கள்? நீங்கள் செய்யும் தவத்துக்கு இம்மைப் பயனை விரும்புகிறீர்களா? அல்லது மறுமைப் பயனை வேண்டுகிறீர்களா? அதைச் சொல்லுங்கள்? என்று இனிமையாகக் கேட்டான். அதற்கு அசுரர்கள் புத்திமானே, நாங்கள் பரலோக லாபத்துக்காகவே தவஞ்செய்கிறோம். இந்த விஷயத்தில் நீ என்ன நினைக்கிறாய், அதைச் சொல்! என்றார்கள். தைத்தியர்களே! உங்களுக்கு மோட்சம் வேண்டுமானால் நான் சொல்லும் கர்மங்களைச் செய்யுங்கள். மோட்சத்துக்கு வழியாக இருக்கும் இந்தத் தருமத்திற்கு நீங்கள் ஏற்றவர்கள்! இதில் ஐயமில்லை. இந்தத் தருமமே மோட்சத்துக்கு ஏற்றது. இதைவிட உயர்ந்த தருமம் வேறு எதுவும் இல்லை. இந்தத் தருமத்தில் நீங்கள் இருப்பீர்களானால் மோட்சத்தைப் பெறுவீர்கள். நீங்கள் அனைவரும் மகா பலசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருக்கிறீர்கள். ஆகையால் இதற்குத் தகுந்தவர் நீங்களே! மேலும் இது தருமத்தின் பொருட்டேயாகும். அதர்மத்தின் பொருட்டுமாகும் இது மோட்சத்தின் பொருட்டாகும். மோட்சத்தின் பொருட்டும் ஆகாது. இது செய்யத்தக்கதாயும், தகாததாயும் இருக்கும், இது திகம்பரருடைய தருமமாயும் வெகு வஸ்திரம் தரித்தவர்களுடைய தருமமாகவும் இருக்கிறது. இது மிகவும் பரமார்த்தமாகவும் இருக்கிறது. பரமார்த்தமாகவும் இராது! என்று ஏழுவிதமான ஒருபடிப்படாத வாதங்களைக் காட்டினார் என்று மாயா மோகன் சொல்லி அநேகவிதமான யுக்திப் பிரமாணங்களைக் கொண்டு, அவ்வசுரர்களை வேத மார்க்கத்திலிருந்து இழுத்துவிட்டு, அசுர தர்மங்களை விட்டுவிடச் செய்தான், (அர்ஹத) தகுந்தவர்கள் என்று அடிக்கடி சொல்லிவந்ததனாலேயே அவர்களுக்கு ஆர்ஹதர் என்றும் அவனுக்கு அருகன் என்றும் பெயர் உண்டாயிற்று. இவ்விதமாக அருக மதபோதனைகளால் அந்தத் தைத்திரியர்கள் வேத தர்மங்களைக் கைவிட்டு அவன் கூறிய தருமத்தையே ஏற்று நடந்தார்கள். அவர்களால் பலர் அருகமதத்தாரானார்கள்.

மைத்ரேயரே! இவ்விதமான பிறகு, மாயா மோகன் அந்த வேடத்தை விட்டுச் சிவப்பு ஆடைகளை அணிந்த, ஜிதேந்திரிய ரூபங்கொண்டு மற்ற அசுரர்களிடமும் சென்று, சாந்தமாயும் இனிமையாயும் சில வார்த்தைகள் கூறலானான். அசுரர்களே! நீங்கள் இப்போது செய்து வரும் தர்மம் சுவர்க்கத்திற்காகவா? மோட்சத்திற்காகவா? எதற்கானாலும் ஆகட்டும். ஜீவ ஹிம்சையுள்ள இந்தத் தருமங்களால் என்னதான் பயன் உண்டு! நான் சொல்வதைக் கேளுங்கள். காண்கின்ற யாவும் விஞ்ஞான மயம் என்று அறியுங்கள். இந்த உலகமெல்லாம் யாதொரு ஆதாரமும் இல்லாததாய் பிராந்தி ஞானத்தால் உண்டான பொருளாக இருக்கிறது, இதுபோலவே அநாதியாகவே தோஷமுடையதாய், சம்சார சங்கடத்திலே மிகவும் உழன்று கொண்டிருக்கிறது. இந்தக் காரியம் இப்படியே தான் இதை அறிந்து கொள்ளுங்கள், அறிந்து கொள்ளுங்கள்! (புத்யத, புத்யத!) என்று மாயா மோகன் சொன்னான், அதனால் புத்தன் என்ற பெயருள்ளவனாகிய அந்த மாயா மோகன் வேத விரோதமான யுக்திகளாலே அசுரர்களை, மோகமடையச் செய்து, வேத தருமங்களை விட்டுவிடச் செய்தான். இதனால் அவ்வசுரர்களும் மற்றையோரும் பவுத்தர்களானார்கள். பிறகு மாயா மோகன், வேறுவிதமான பாஷாண்ட கற்பனைகளால் பற்பல அசுரர்களைக் கவர்ந்து குறுகிய காலத்திலேயே, வைதீக மார்க்கத்தை விட்டுவிடச் செய்தான். அதனால் அவ்வசுரர்கள் வேதத்தையும் யாகத்தையும் யாகாதி கர்மங்களையும் தேவதைகளையும், அந்தணரையும் தூற்றலானார்கள். எப்படியென்றால் இம்சை பாவம் என்று சொல்லும் வேதங்களே மறுபடியும் இம்சையைத் தரும சாதனமாகச் சொன்னது எவ்விதத்திலும் யுக்திக்கு ஒத்ததல்ல? அக்கினியில் சொரிந்த ஹவிசுகள் எரிக்கப்பட்டுச் சாம்பலாய்ப் போனபின் பயனைத் தரும் என்பது ஒன்றுமறியாத பையலின் பேச்சைப் போன்றதாகும்! அநேக யாகங்கள் செய்து இந்திரப் பதவியை அடைந்தவன் வன்னிக்கட்டை முதலான கட்டைகளைத் தின்னும்படி நேருமானால் அந்தக் கட்டைகளின் இலைகளைத் தின்னும் மிருகங்களின் பிறவியானது, அந்த இந்திரனின் பிறப்பைவிடச் சிறப்புடையதாகும் அல்லவா? யாகத்தில் கொல்லப்பட்ட பசுவுக்குச் சொர்க்கம் கிடைக்குமேயானால் அந்த எஜமானன் தன் தந்தையையே யாகத்தில் கொல்லலாம் அல்லவா? சிரார்த்தத்தில் ஒருவன் புசிக்க மற்றொருவனுக்குத் திருப்தியுண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் வழிநடக்கும் தன் பந்துக்கள் சோற்று மூட்டையைச் சுமந்து, வருத்தப்படாமல் இருக்கும்படியாக, மக்கள் ஏன் மற்றவருக்கு அன்னமிடக்கூடாது! என்று இவ்விதமாக அசுரர்களெல்லாம் தூற்றும்படி மாயா மோகன் கற்பித்தான். பிறகு மாயாமோகன் பார்த்தீர்களா, அசுரர்களே? ஆபத்தவாக்கியம் என்று நீங்கள் சொல்லுகிறீர்களே அது என்ன? ஆகாயத்திலிருந்து குதித்ததோ, இல்லையோ? ஆகையால் யார் யார் இதைச் சொன்னாலும் யுக்தி யுக்தமாக இருக்கிற வாக்கியத்தைத்தான் நீங்களும் நானும் ஏற்கவேண்டுமேயல்லாமல், வீணாக ஏதோவொரு நம்பிக்கையால் அங்கீகரிக்கலாகாது, என்று சொன்னேன். அதனால் அசுரர்களில் ஒருவன் கூட வேதத்தை விரும்பவில்லை.

இவ்வாறு அசுரர்கள் வழி தப்பியவுடன், தேவர்கள் அவர்களுடன் தருமத்திற்காக யுத்தம் புரிந்து வென்றார்கள்! முனிவரே முன்பு அவ்வசுரர்கள் வைதீக மதாசாரமாகிய பலமுள்ள கவசத்தைப் பூண்டிருந்ததால் பகைவர்களால் எதிர்க்க முடியாத வலிமையுடன் இருந்தார்கள். பிறகு அந்தக் கவசம் இல்லாததால் எளிதில் வெல்லப்பட்டு விட்டார்கள். எனவே எந்த மக்கள் தங்களுடைய நல்ல மதத்தை விட்டு துர் மதங்களில் பிரவேசிப்பார்களோ அவர்கள் அனைவரும் வேதம் என்னும் காப்பை இழந்தவர்களாவதால் அவர்கள் நக்கினர் ஆவர். இங்கு பிரம்மச்சாரி கிரகஸ்தன், வானப்பிரஸ்தன் சந்நியாசி என்ற நான்கு ஆசிரமங்களையுடையவர்களைத் தவிர ஐந்தாவதாக ஒருவன் இல்லை. ஒருவன் இல்லறத்தை விடுவானாகில் அவன் வானப்பிரஸ்தத்தையாவது சந்நியாசத்தையாவது உடனே அடைய வேண்டும். அப்படிச் செய்யாமலிருந்தால் அவனும் நக்கினன் என்றே வழங்கப்படுவான். எவன் வேதம் விதித்த நித்திய கர்மங்களைச் செய்யச் சக்தியுள்ளவனாக இருந்தும் அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுகிறானோ அவன் அந்தத் தினத்திலிருந்தே பதிதன் ஆகிறான். ஆயினும் பிராயச்சித்தத்தினாலே அவன் சுத்தனாகலாம். ஒருவன் யாதொரு ஆபத்துமில்லாமலிருக்க பதினைந்து நாட்கள் நித்திய கர்மங்களை விடுவானானால் அவன் விசேஷமாய்ப் பதிதனாகிறான். அத்தகையவன் விசேஷப் பிராயச்சித்தத்தினால் சுத்தியடையலாம். ஒரு ஆண்டுக்காலம் எவன் நித்தியக் கிரியைகளைச் செய்யாமல் விடுகிறானோ, அவன் மகாப்பாதகன் அவனைப் பார்த்தவன், அந்தத் தோஷம் நீங்குவதற்கு சூரிய தரிசனம் செய்யவேண்டும். அந்த மாபாவியைத் தீண்டினால் உடுத்த ஆடையோடு ஸ்நானம் செய்ய வேண்டும். அந்தப் பாவிக்கோ யாதொரு பிராயச்சித்தமும் இல்லை. தேவர் ரிஷி பிதுர் பூதங்கள் எவன் வீட்டில் பூஜிக்கப்படுவதில்லையோ அவனை விடப்பாவிகள் இந்த உலகத்தில் இல்லை எவனுடைய வீடும் உடலும் தேவர் முதலானோருடைய இன்பமில்லாத பெருமூச்சால் கெட்டிருக்கிறதோ அந்தப் பாவியுடன் உட்காருதல், பேசுதல் போன்ற சம்பந்தமிருக்கக் கூடாது. அத்தகைய பாவிகளோடு, ஒரு ஆண்டுக்காலம் புகுவோனுக்கு அவனுக்குச் சமமான பாதகமேயுண்டாகும். அந்த மகாபாதகன் வீட்டில் உண்பதும், படுப்பதும் ஓரிடத்திலே கூடியிருப்பதுமாகிய விசேஷ சம்பந்தங்களைச் செய்பவன், அவனைப் போலவே மகாப் பதிதனாகின்றான். அந்தணர் முதலிய நான்குவர்ணத்தாரும் தத்தமக்குரிய தர்மத்தை விட்டு, இழிவான கருமங்களில் இருந்தாலும் அவர்களும் நக்கினர் என்ற பெயரையே பெறுவார்கள். எங்கு நான்கு வர்ணத்தாருக்கும் அத்யந்த சங்கரமுண்டாயிருக்கிறதோ அங்கே நல்ல நடத்தையுடையோர் இருப்பது மிகவும் கேடு பயப்பதாகும். ஏனெனில், தேவர் ரிஷிகளைப் பூசிக்காமல் புசிப்பவனோடு பேசினாலும் நரகமுண்டாகும். ஆகையால் அத்தகையோருடன் தமக்குள் எத்தகைய சம்பந்தமும் ஏற்படாமலிருக்க வேண்டும். தேவ பிதுர்க்களைக் குறித்துச் செய்யப்படும் சிரார்த்தமும் அத்தகைய நக்கினரால் பார்க்கப்படுமானால் அவர்களுக்குப் ப்ரீதி உண்டாகாது.

மைத்ரேயரே! ஒரு கதையைச் சொல்கிறேன் கேளும். பூர்வகாலத்தில் சததனு என்ற புகழ்பெற்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சயிபியை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள். அவள் தன் கணவனுக்குரிய தருமங்களையே முக்கியமாகக் கருதியிருந்தாள். அவளோ மகாப் பதிவிரதை சகல லக்ஷணங்களுடனும் கூடிய அத்தகைய மனைவியோடு சததனு மன்னன் ஜபங்கள், ஓமங்கள், தானங்கள், உபவாசங்கள், அர்ச்சனைகள் முதலியவைகளால் தேவதேவனான ஸ்ரீஜனார்த்தனனை ஆராதித்து வந்தான். இப்படியிருக்க ஒரு காலத்தில் அந்தத் தம்பதிகள் இருவரும் கார்த்திகை, ஏகாதசியில் உபவாசமிருந்து கங்கா நதியில் ஒருமிக்க நீராடிக் கரையேறினார்கள். அப்போது அங்கே ஒரு பாஷாண்டி எதிரில் வந்தான். அவனைப் பார்த்ததும் அரசனின் மனைவி அவனோடு பேசாமல் மவுனமாகவே இருந்து அவனைப் பார்த்த தோஷம் நீங்கச் சூரிய தரிசனம் செய்தாள். அந்த அரசனோ தனக்கு வில்வித்தை கற்றுத் தந்த ஆசிரியனுக்கு அந்தப் பாஷாண்டி நண்பன் என்ற கவுரவத்தை முன்னிட்டு அவனிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். பிறகு அரசன் தன் மனையாளோடு, ஸ்ரீமந்நாராயணனுக்குத் திருவாராதனம் முதலியவற்றைச் செய்துவந்தான். பிறகு சிலகாலம் கழித்து அந்த அரசன் மரணமடைந்தான். அப்போது அவனது மனைவியும் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். சததனு மன்னனோ உபவாச விரதம் இருக்கும்போது பாஷாண்ட சல்லாபஞ் செய்த அபசாரத்தினால் நாயாகப் பிறந்தான். அவனது மனைவியோ, காசி மன்னனின் மகளாகப் பிறந்து சர்வ லக்ஷணங்களும் பொருந்தியவளாய் கல்வியில் தேர்ந்தவளாய், பூர்வஜன்ம நினைவுடையவளாகவும் இருந்தாள். அவளை அவளுடைய தகப்பன் திருமணஞ் செய்துகொடுக்க முயன்றான். அப்போது அந்தப்பெண், தனக்கு திருமணம் வேண்டுவதில்லையென்று சொல்லி, தகப்பனது முயற்சியைத் தடுத்துவிட்டாள். பிறகு அவள் தன் கணவன் நாயாக இருப்பதை அறிந்து விதிசை என்ற நகரத்துக்குச் சென்று நாயாக இருக்கிற தன் கணவனைக் கண்டு, தினந்தோறும் அன்போடும் மரியாதையோடும் நல்லுணவுகளைக் கொண்டுவந்து கொடுத்துவந்தாள். அந்த நாயானது அவள் கொடுக்கும் உணவுகளை உண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் சாதியியல்பின்படி மிகப்பணிவான செய்கைகளைச் செய்து வந்தது. அதைக் கண்டு ராஜகன்னியானவள் மிகவும் வெட்கமடைந்து அந்த நாயைக் கும்பிட்டு ஐயா, மகாராஜாவே! நீங்கள் விரதநாளில் தீர்த்த ஸ்நானம் செய்ய பிறகு, ஒரு பாஷாண்டியோடு தாட்சண்யத்தினால் பேசினீர்கள் அல்லவா? அந்தப் பாதகத்தினால் அல்லவா இந்த ஈனமான நாய் பிறவியாகப் பிறந்து உம்மடியாளாகிய எனக்கு வணக்கஞ் செய்கிறீர்கள்! நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்! என்று அரசனுக்கு ஞாபகமூட்டினாள். அவள் சொன்னதைக் கேட்டதும் நாயுருவமான அரசன், நெடுநேரம் யோசித்து முற்பிறவியின் நினைப்பைக் கொண்டு மிகுந்த வெறுப்பையடைந்தான்; பிறகு அந்தப் பட்டணத்தை விட்டு ஓடிச்சென்று ஒரு மலைமீதேறிக் கீழே விழுந்து நரிப்பிறப்பை அடைந்தான். பிறகு, அரசகுமாரி ஞானதிருஷ்டியினால் தன் கணவனுக்கு நேரிட்ட இரண்டாவது பிறவியை அறிந்து கோலஹலம் என்ற மலையில் நரியாக இருந்த தனது கணவனைக் கண்டு முன்போலவே வணக்கத்துடன் ஐயனே! நீங்கள் நாயாக இருந்தபொழுது, பாஷாண்ட சம்பாஷணையினால் உங்களுக்கு அத்தகைய பிறவி நேர்ந்தது என்று உங்களுக்கு நினைப்பூட்டினேன். அதை இப்பொழுதும் நினையுங்கள் என்றாள். அதைக் கேட்ட நரியாக இருந்த மன்னன் அவள் பேசுவது சத்தியம் என்று நினைத்து அந்தக் காட்டில் இரை எதுவும் தேடாமல் பட்டினி கிடந்து, உயிர் துறந்து மனிதர் இல்லாத காட்டிலே மீண்டும் ஒரு செந்நாயாகப் பிறந்தான். அப்போதும் அவன் மனைவி, செந்நாயிடம் öன்று நீங்கள் செந்நாயல்ல நீங்கள் சததனு என்ற மன்னனாயிற்றே! நாயாகவும் நரியாகவும் இரு பிறப்பெடுத்த நீங்கள் இப்போது செந்நாயானது ஏன் தெரியுமா? என்று பூர்வ ஜன்ம நினைவுகளை ஞாபகப்படுத்தினாள்.

உடனே அரசன் தன் செந்நாய் உடலைவிட்டுக் கழுகாகப் பறந்தான். அதன் பிறகு ராஜகுமாரி அந்தக் கழுகிடம் சென்று, ஐயா! நீங்கள் கழுகு செய்யும் செயல்களைச் செய்தது போதும், நீங்கள் முந்திய பிறவியில் பாஷாண்டனோடு பேசிய பாபத்தாலல்லவா இப்படியானீர்கள் என்றாள். அதை அரசன் நினைத்து, மீண்டும் செத்து, மறுபடி ஒரு காகமாகப் பிறந்தான். அப்போதும் அந்தப் பதிவிரதை அந்த காகத்திடம் சென்று சகல அரசர்களும் வசப்பட்டு உமக்குக் கப்பம் செலுத்தப் பெற்றிருந்த நீங்கள், இப்போது பலி போஜனம் செய்யும் காகமாகப் பிறந்துவிட்டீர்களே! இதை நினையுங்கள் என்று முற்பிறவி நிகழ்ச்சியை நினைப்பூட்டினாள். அரசன் அதை நினைத்து அந்த உடலைவிட்டு, கொக்காகப் பிறந்து, மனையாளால் நினைவூட்டப்பெற்று, இறந்து பிறகு மயிலாகப் பிறந்தான். அதை அழகான அரசகுமாரி உணர்ந்து அந்த மயிலைத் தனது அரண்மனைக்குக் கொண்டுவந்து, அதற்குரிய இனியவுணவுகளை வழங்கி தன் தந்தை செய்த அசுவமேத யாகத்தின் அவபிரத தீர்த்தத்திலே நீராட்டித் தானும் நீராடி, மயிலாக இருந்த அந்த மன்னனுக்கு நாய் பிறப்பு முதல் மயூரப் பிறப்பு வரையில் நேர்ந்த பிறப்புகளை நினைவுபடுத்தினாள். பிறகு மயிலாக இருந்த மன்னன், தன் பிறவிகளை எண்ணித் துயரமடைந்து உடலைவிட்டு ஜனகமன்னனின் மகனாகப் பிறந்தான். இவ்விதமாக அவன் வளர்ந்து வந்தபோது பதிவிரதையான அரசிளங்குமரி தனக்குக் கல்யாண எத்தினஞ் செய்யும்படித் தன் தந்தையைத் தூண்டினாள். அவளது தந்தையும் அவளது சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தான். அந்த சுயம்வரத்துக்கு ஏராளமான அரசகுமாரர்கள் வந்தார்கள். அவர்களில் விதேக ராஜகுமாரனான தன் கணவனையே அந்த காசிராஜன் மகள் வரித்தாள். அவனை மணந்து அவனுடன் சகல போக பாக்கியங்களையெல்லாம் அனுபவித்து வாழ்ந்து வந்தாள். அவளுடைய நாயகனான ராஜகுமாரன் தன் தந்தை சொர்க்கமடைந்த பிறகு அந்த விதேக ராஜ்யத்துக்கு அரசனாகி, பலரை வென்று திறை பெற்று பல யாகங்களையும் செய்து பல தானங்களையும் வழங்கி, பல புத்திரர்களையும் பெற்று, நீதிமுறையில் ஆட்சி செய்து, ஒரு யுத்தத்தில் தருமவழியில் உயிரை விட்டான். அப்போதும் அவன் மனைவி, அவனுடன் மகிழ்ச்சியாக உடன்கட்டை ஏறினாள். பிறகு அந்தத் தருமபத்தினியுடன் அரசன் இந்திரலோகத்தையும் கடந்து போய்ச் சகல இஷ்டங்களையும் பெறக்கூடிய மகாபுண்ணிய உலகங்களை அடைந்தான். இவ்விதமாக அத்தம்பதிகள் முன் சொன்னது போலத்தூய்மை பெற்று, ஒருவரை ஒருவர் பிரியாத புண்ணிய உலகினை அடைந்தார்கள்.

மைத்ரேயரே! இவ்வாறு பாஷாண்ட சம்பாஷணையினால் உண்டான பாவத்தையும் அசுவமேத யாகத்தின் அவபிரத ஸ்நானத்தின் புண்ணியத்தையும் உமக்குச் சொன்னேன். எனவே மகாபாவிகளான பாஷாண்டிகளோடு பேசுவது முதலானவற்றை விட்டுவிடவேண்டும். அனுஷ்டான காலத்தில் அதை விசேஷமாக விட்டுவிடவேண்டும். இதுவரை பலவகையான நக்கினர்களையும் உமக்குக்கூறினேன். இவர்கள் பார்த்தாலுங்கூட சிரார்த்தம் அழிந்து போகும். இவர்களுடன் பேசுவதால் அந்தந்த நாளில் செய்த புண்ணியங்கள் நசித்துப் போகும். வீணாகச் சண்டை வளர்ப்பவரும், மழுங்க மொட்டையடித்துக் கொள்வோரும் தேவபூஜை செய்யாமல் உணவருந்துவோரும், அகமும் புறமும் தூய்மையற்றவரும், பிதுர்க்களுக்குப் பிண்டமும் தண்ணீரும் இடுவதை விட்டவர்களுமான இத்தயை அசத்துக்களுடன் எவ்விதமான சம்பந்தங் கொண்டாலும் நரகமே அடைய நேரிடும். நல்லவருடன் சேர்வோரே மேன்மையான பதங்களை அடையப்பெறுவார்கள்.

மூன்றாவது அம்சம் முடிந்தது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் மூன்றாவது அம்சம்—-முதல் பாகம் —

February 28, 2021

1. கடந்த மனுவந்தரங்கள்
2. இனிவரும் மனுவந்தரங்களின் விளக்கம்
3. வேதவியாசர்கள் வரிசை
4. வேத சாகைகளின் பேதங்கள்
5. யஜுர் வேத சாகைகள்
6. சாம, அதர்வண வேதங்கள், புராணங்கள்
7. வைணவத்தின் பெருமை
8. ஆராதனை முறையும் வருணாசிரம தருமமும்

————–

1. கடந்த மனுவந்தரங்கள்

மைத்ரேய முனிவர், பராசரரை நோக்கி, மகரிஷியே! பூமி, சமுத்திரங்கள், முதலானவற்றைப் பற்றியும், சூரியன் சந்திரன் முதலிய கோள்களைப் பற்றியும், தேவதைகள் ரிஷிகள் ஆகியோரின் படைப்பையும், துருவனுடைய சரிதத்தையும், பிரகலாதனின் வரலாற்றையும், அடியேனுக்குக் கூறினீர்கள். இனிமேல் சகல மனுவந்தரங்களையும், அவற்றின் அதிபதிகளையும், தேவர்களையும் பற்றித் தங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன் என்றார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! ஆதியில் சுவாயம்புவ மநுவிலிருந்து துவங்கி, சுவாரோ சிஷர், உத்தமர், தாமசர் ரைவதர், சாக்ஷúஷர் என்ற மனுக்கள் அறுவரும் முறையே சென்றனர். இப்பொழுது சூரியகுமாரரான வைவஸ்வத மனுவினுடைய அந்தரம் நடைபெறுகின்றது. இந்தக் கல்பத்தின் ஆதியில் நடந்த சுவாயம்புவ மநுவந்தரத்தையும் அதிலிருந்த தேவர், முனிவர் முதலானவர்களையும் சொன்னேன். இனி, சுவாரோசிஷ மனுவந்தரத்தில், பாராவாரர், துஷிதர் என்ற தேவதைகளும் விபச்சித் என்ற இந்திரனும் ஊர்ஜ ஸ்தம்பன், பிராணன், தத்தன், அக்கினி, ரிஷபன், நிஸ்வான், சார்வரீவான் என்ற சப்தரிஷிகளும் இருந்தனர். இப்படி இரண்டாவது மனுவந்தரம் நடந்தது. மூன்றாவது உத்தம மனுவந்தரம். இதில் சுசாந்தி என்பவன் இந்திரனானான். சுதாமாக்கள், சத்தியர், சிவர், பிரதர்த்தனர், வசவர்த்திகள் என்ற ஐந்து கணதேவதைகள் கணம் ஒன்றுக்குப் பன்னிருவராகச் சேர்ந்திருந்தார்கள். வசிஷ்டருடைய பிள்ளைகள் சப்தரிஷிகள், அஜன், பரசுதிவியன், முதலியவர்கள் மனுவின் குமாரர்கள். நான்காவது தாமச மனுவின் அந்தரத்திலே சுபாரர், ஹரிகள் சத்தியர் சுதீகர் என்ற கணதேவதையர் கணமொன்றுக்கு இருபத்தேழு பேர்களாக இருந்தார்கள். சிபிச் சக்கரவர்த்தி நூறு அசுவமேத யாகங்களைச் செய்ததால் வஜ்ரா யுதமேந்திய இந்திரனானான். ஜோதிர்த்தாமா, பிருகு, காரியன், சைத்திரன், அக்னி, தனகன், பீவான் என்ற சப்தரிஷிகள் இருந்தனர். நரன், கியாதி, சேதுரூபன், சானு, சங்கன் முதலியோர் அந்தத்தாமச மனுவின் புத்திரர்கள். ஐந்தாவது ரைவத மனுவந்தரம். இதில் விபு என்பவன் இந்திரன், அமிதாபர், பூதனயர் வைகுண்டர், சுசமேதர் என்பவர்கள் தேவகணங்களாய்க் கணத்துக்கு பதினான்கு பேர்களாக இருந்தார்கள். இரணிய ரோமா, வேதசிரீ ஊர்த்துவபாகு, அபரன், வேதபாகு, சுதாமா, பர்ச்சனியன் என்பவர்கள் சப்தரிஷிகள். சுசம்பாவியன், பலபந்து, சத்தியகன் முதலியவர்கள் இந்த மனுவின் குமாரர்கள்.

இந்தச் சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், நைவதர் என்ற மனுக்கள் நால்வரும் பிரியவிரதருடைய வமிசத்தில் பிறந்தவர்கள். அந்தப் பிரியவிரதர் என்பவர் ராஜரிஷியாவார். அவர் தவத்தால் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதித்து தன் குலத்தில் மனுவந்தராதியதிகள் உண்டாகும்படியான பாக்கியத்தைப் பெற்றார். ஆறாவது மனுவந்திரத்தின் அதிபதி சாக்ஷீஷர் என்ற மனுவாகும். மனோ ஜவன் என்பவன் இந்திரன், ஆப்பியர், பிரசூதர், பவியர், பிருதுகர், லேகர் என்ற ஐவர் கணதேவதைகள். இவர்கள் கணமொன்றுக்கு எட்டுப்பேராக இருந்தனர். இவர்கள் மகானுபாவர்கள். சுமேதன் விரஜன் அவிஷ்மான். உத்தமன் மது அதிநாமா சகிஷ்ணு என்போர் சப்தரிஷிகள். ஊரு பூரு சதத்தியும்னன் முதலான அந்த மனுவின் புத்திரர்கள் அரசரானார்கள். இனி இப்போது நடைபெறும் ஏழாவது மனுவந்தரத்துக்குச் சூரிய புத்திரரான சிரார்த்த தேவன் மனுவாகி இருக்கிறான். இதில் ஆதித்தியர், வசுக்கள், ருத்திரர் முதலானோர் தேவதைகளாக இருக்கிறார்கள். புரந்தரன் என்பவன் இந்திரன். வசிஷ்டர், காசியபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், விசுவாமித்திரர், பரத்வாஜர் என்போர் சப்தரிஷிகள். இஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், கரூஷன், விரூஷத்திரன் இந்த ஒன்பதின்மரும் மனுவின் புத்திரர்கள். உலக ரட்சணைக்குரிய ஒப்பற்ற ஸ்ரீவிஷ்ணுவின் சாத்வீக சுக்தியானது சகல மனுவந்தரங்களிலேயும் தேவதாவதாரத்தினால் மனு முதலானோரிடமும் வியாபித்துள்ளது. ஸ்ரீமகாவிஷ்ணு சுவாயம்புவ மனுவந்தரத்தில் ஆகுதி என்பவளிடம் யக்ஞன் என்ற திருப்பெயரோடு அவதரித்தார். பிறகு உத்தம மனுவந்தரத்திலே சத்யை என்பவளிடம் சத்தியன் என்ற திருப்பெயரோடு அவதரித்தார். மறுபடியும் அவர் தாம்ச மனுவந்தரத்திலே ஹரியை என்பவளது கர்ப்பத்தில் ஹரிகள் என்ற தேவர்களுடன் ஹரி என்ற திருப்பெயரில் அவதரித்தார். சாக்ஷúஷ மனுவந்தரத்தில் விகுண்டையின் கருவில் வைகுண்டர் என்ற தேவதைகளோடு வைகுண்டர் என்ற திருப்பெயரில் அவதரித்தார். இந்த வைவசுவத மனுவந்தரம் வந்தபோது, காசிபருக்கு அதிதியிடத்திலே வாமனரூபியாய் அவதரித்து மூன்றடிகளால் சகல உலகங்களையும் ஆக்ரமித்து பகையழித்து அவற்றைப் புரந்தரனுக்கு அளித்தார். இவ்விதமாக ஸ்ரீவிஷ்ணுபகவான் ஏழு மனுவந்தரங்களிலும் ஏழு திருவவதாரம் செய்து மனு முதலான சகல பிரஜைகளையும் காத்து வருகிறார். அந்த சுவாமியானவர் தமது சக்தியினால் மனு முதலான சகல பிரபஞ்சத்தையும், அனுப்பிரவேசித்திருப்பதால் விஷ்ணு என்ற திருப்பெயரைப் பெற்றார். சகல மனுக்களும் சகல சப்த ரிஷிகளும், சகல மனுகுமாரர்களும், இந்திரர்களும் யாவரும் ஸ்ரீவிஷ்ணுவின் ஐசுவரியமானவர்கள் என்பதை அறிவீராக!

—————–

2. இனிவரும் மனுவந்தரங்களின் விளக்கம்

பராசரரே! இதுவரை உண்டான மனுவந்தரங்களைச் சொன்னீர்கள்! இனிவரும் மனுவந்தரங்களையும் அடியேனுக்குச் சொல்லியருள வேண்டும் என்று மைத்ரேயர் வேண்டினார். பராசரர் கூறலானார். சூரியனுக்கு சமிக்ஞை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள். அவர் விசுவகர்மாவின் மகள். சிரார்த்த தேவன் என்ற மனுவும் யமதர்மராஜனும் யமுனா என்ற நதியும் அவளுக்குப் பிறந்தனர். சமிக்ஞை தன் கணவனின் தேஜஸைச் சகிக்கமுடியாமல் தன் நிழல் என்று சொல்லும்படியான தன்னைப்போன்ற ஒருத்தியையுண்டாக்கி சாயாதேவியெனும் அப்பெண்ணைத் தன் கணவனுக்குப் பணிவிடைகள் செய்யும்படி வைத்துவிட்டு தவஞ்செய்யக் காட்டுக்குச் சென்றாள். சூரியன் அந்தச் சாயாதேவியைத் தன் பத்தினியாகிய சமிக்ஞை என்றே நினைத்து அவளிடத்திற் சேர்ந்து, சனியையும் மற்றொரு மனுவையும் தபதி என்பவளையும் பெற்றான். இது இப்படியிருக்க, ஒருநாள் யமன் சாயாதேவியைத் தனது தாயாகவே நினைத்து, உதைக்கப்போகும் போது சாயாதேவி கோபங்கொண்டு அவனை சபித்தாள். அவள் கருணையில்லாதவளாக இருந்ததால், அவள் தன் தாயல்ல என்பதை யமன் உணர்ந்தான். பிறகு சாயாதேவி உண்மையைச் சொல்லக் கேட்ட சூரியன், யோகதிருஷ்டியினால் ஆலோசித்தான். அப்போது தன் மனைவி சமிக்ஞை என்பவள் பெண் குதிரையின் வடிவில், வனத்தில் தவஞ்செய்து கொண்டிருப்பதை சூரியன் அறிந்தான். பிறகு சூரியன், தானும் குதிரையின் வடிவு எடுத்துக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்குச் சென்று அவளிடத்தில் அசுவினி தேவதைகள் இருவரையும், வீரியத்தின் கடைசிப் பாகத்தினால் ரேவந்தன் என்பவனையும் உண்டாக்கி மறுபடியும் அந்தச் சமிக்ஞையை தனது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். பின்பு விசுவகர்மாவானவன், சூரிய மண்டலத்தைத் தனது சாணைச் சக்கரத்தில் வைத்துத் தேய்த்து, அவனது தேஜசில் எட்டில் ஒரு பங்கைக் குறைத்து விட்டான். இவ்விதம் விசுவகர்மாவினால் தேய்த்துத் தள்ளப்பட்ட தேஜோபாகமானது, மிகவும் பிரகாசத்தோடு பூமியில் விழுந்தது. பூமியில் விழுந்த அந்தத் தேஜோ பாகத்தைக் கொண்டு விசுவகர்மா ஸ்ரீவிஷ்ணுவுக்குச் சக்கரத்தையும், சிவனுக்கு சூலத்தையும், சுப்ரமணியனுக்கு வேலாயுதத்தையும், குபேரனுக்கு சிபிகை என்ற ஆயுதத்தையும் செய்து கொடுத்தான்.

சூரியனுக்கு சாயாதேவியிடம் பிறந்த இரண்டாவது குமாரனை மனுவென்று சொன்னேன் அல்லவா? அந்த மனு முன்பிருந்த மனுவுக்கு இணையாக இருந்ததனால் சாவர்ணி என்று அழைக்கப்பட்டார். இனி வரும் எட்டாவது மனுவந்தரம் அந்தச் சாவர்ணியினுடையதாகும். அந்த மனுவந்தரத்தில் சுபதர், அமிதாபர் முக்கியர் என்ற தேவர்கள் உண்டாவார்கள். அந்தத் தேவர்கள் கணத்துக்கு இருபதின்மராக இருப்பார்கள். தீப்திமான், காலவர், இராமர், கிருபர், அசுவத்தாமா, எனது மகனான வியாசர், ருஷிய சிருங்கர் ஆகிய இவர்கள் அந்த மனுவந்தரத்தின் சப்தரிஷிகள். ஸ்ரீவிஷ்ணுவின் திருவருளால் பாதாளத்தில் வாசஞ்செய்து கொண்டிருக்கும் விரோசன குமாரரான பலிச்சக்கரவர்த்தி அந்த மனுவந்தரத்தில் தேவர்களுக்கு அரசனாவான். விரஜன், சர்வரீவரன், நிர்மோகன் முதலனா அந்த மனுவின் புதல்வர்கள் அரசராவார்கள். இனி ஒன்பதாவது மனு தக்ஷசாவர்ணி என்பவராவார்! அவரது அந்தரத்தில் வார், மரீசி கர்ப்பர் சுதர்மாக்கள் என்ற தேவர்கள் கணமொன்றுக்கு பன்னிருவராக இருப்பார்கள். அத்தேவதைகளுக்கு அற்புதன் என்போன் அதிபதியாவான். சவனன், தியுதிமான், அவியன் வசு மேதாதிதி, ஜோதிஷ்மான் சத்தியன் என்பவர்கள் சப்தரிஷிகள் ஆவார்கள். திருதகேது தீப்தகேது பஞ்சஹ்ஸ்தன் நிராமயன் பிருதுச் சிரவன் முதலியோர் அந்தத் தக்ஷõசார்வணி மனுவின் குமாரர்களாவர். இனிப் பிரமசாவர்ணி என்பவர் பத்தாவது மனுவாவர். அந்த அந்தரத்தில் சுதர்மாக்கள், வீருதர் என்ற தேவர்கள் நூறு நூறாய்ச் சேர்ந்த கூட்டமாக இருப்பார்கள். அவர்களுக்கு மகா பலசாலியான சாந்தி என்பவன் இந்திரனாவான். அந்த அந்தரத்தில் ஹவிஷ்மான், சுகிருதன், சத்தியன் தபோ மூர்த்தி, நாபாகன், அப்பிரதிமௌஜன், சத்தியகேது என்பவர்கள் சப்தரிஷிகளாவார்கள். சுஷேத்திரன், உத்தமன்ஜு, புரிஷேணன் முதலான பதின்மர் அந்த மனுவின் குமாரர்களாவார்கள். அவர்கள் இந்தப் பூமியை ரக்ஷித்து வருவார்கள். பதினோராவது மனு தர்மசாவர்ணி என்பவர், அவருடைய அந்தரத்திலே விகங்கமரென்றும், காமகமரென்றும், நிர்வாணரென்றும் ருசிகள் என்றும் சொல்லப்பட்ட தேவர்கள் முக்கியமாவார்கள். அவர்கள் கணம் ஒன்றுக்கு முப்பது முப்பது பேரிருப்பார்கள். விருஷா என்பவன் அவர்களுக்கு இந்திரனாவான். அப்போது நிச்சரன், அக்னித் தேஜன், வபுஷ்மான்; கிருணி; ஆருணி; அவிஷ்மான், அனகன் என்பவர்கள் சப்தரிஷிகளாவார்கள். சர்வத்திரகன்; ஸ்வதர்மா; தேவானீகன் முதலியவர்கள் அந்த மனுவின் புதல்வர்களாவார்கள். ருத்திர புத்திரராகிய ருத்திர சாவர்ணி என்பவர் பன்னிரண்டாவது மனுவாவார். அவருடைய அந்தரத்தில் ருது தாமா என்பவன் இந்திரனாவான். அரிதர், ரோகிதர், சமனசர், சுகர்மர்; சுராபர் என்ற தேவர் கூட்டம் ஒன்றுக்குப் பப்பத்துப் பேராக இருப்பார்கள். தபஸ்வீ, சுதபன், தபோமூர்த்தி, தபோரதி, தபோதிருதி, தபோதியுதி, தபோதனன் என்ற இந்த எழுவரும் சப்தரிஷிகள். தேவவான், உபதேவன், தேவசிரேஷ்டன் முதலான அந்த மனுபுத்திரர்கள் அரசர்களாவார்கள். ரவுச்சியன் என்பவர் பதின்மூன்றாவது மனுவாவர். சுத்திராமர், சுதாமர், சுகர்மர் என்ற தேவதைகள் கணத்துக்கு முப்பத்து மூவராக இருப்பார்கள். மகாவீரியனான திவஸ்வதி என்பவன் இந்திரனாவான். நிர்மோஹன், தத்துவதர்சி நிஷ்பிரகம்பியன், நிருச்சுகன், திருதிமான் புதல்வர்களான சித்திரசேனன், விசித்திரன் முதலியவர்கள் அப்பொழுது வேந்தராவார்கள். பதினாலாவது மனுவாக பவுமன் என்பவனாவான். அந்தக்காலத்தில் சுசி என்பவன் இந்திரனாக இருப்பான். சாக்ஷúஷர், பவித்திரர், கனிஷ்டர், பிராசிதர், வாசாவிருத்தர் என்று தேவகணங்கள் ஐந்துண்டு. அக்கினிபாகு; சுசி; சுக்கிரன், மாகதன், ஆக்னீத்திரன், யுத்தன், ததாஜிதன் என்போர் சப்தரிஷிகளாவார்கள். அந்த மனுவுக்கு உரு, கம்பீரபுத்தி முதலனா குமாரர்கள் பிறப்பார்கள். அவர்கள் தான் இந்தப் பூமியைக் காத்து வருவார்கள்.

கிருதயுக முதல் நான்கு யுகங்களின் முடிவில் வேதங்களுக்கும் அழிவுண்டாகும் அல்லவா? அப்போது அந்தச் சப்தரிஷிகள் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்து மீண்டும் அந்த வேதங்களைப் புதுப்பிப்பார்கள். கிருது யுகந்தோறும் அந்தந்த மனுக்கள் சுமீருதி என்ற தரும சாஸ்திரத்தை இயற்றி வருவார்கள். தேவதைகளோ மனுவந்தரம் முடியும் வரையில் யாகங்களில் ஹவிர்ப்பாகங்களைப் புசித்து வருவார்கள். மனுபுத்திரர்களாலும் அவரது குலத்தில் பிறக்கும் அரசர்களாலும் மனுவந்தரத்தின் இறுதிவரையிலும் பூமியானது ரக்ஷிக்கப்பட்டுவரும். இப்படியே மனுவந்தரம் தோறும் அவராலேயே உலகவுபகாரம் நிகழ்ந்து வரும். மனுவும் சப்தரிஷிகளும் தேவர்களும் இந்திரனும் மனுவின் புதல்வர்களும் எம்பெருமானுடைய சங்கல்ப காரியத்தை நிறைவேற்றும் அதிகார புருஷர்களாக விளங்குவார்கள். இவ்விதமாகப் பதினான்கு மனுவந்தரங்கள் கழியும்போது, ஆயிரம் யுகங்களின் அளவுள்ள ஒரு கல்பகாலம் சம்பூரணமாகின்றது. இது ஒரு பகற்காலம், இவ்வளவேயுள்ள இரவுக்காலமும் கழிந்த பிறகு பிரம சொரூபத்தை அனுஷ்டித்து எழுந்தருளியிருப்பவனும் முதல் சிருஷ்டி கர்த்தாவும், சகல ஐசுவரியமுள்ளவனும், சகல சொரூபியுமான ஸ்ரீஜனார்த்தன பகவான், மூவுலகையும் உட்கொண்டு யோக நித்திரையை ஆஸ்ரயித்து உலகமெல்லாம் அழிந்த மகார்ணவ ஜலத்திலே ஆதிசேடனாகிய படுக்கையிலே திருக்கண் வளர்வான். பிறகு, பகவான் யோக நித்திரையிலிருந்து விழித்து, ரஜோகுணத்தை யாச்ரயித்து முன்போலவே உலகப்படைப்பை நடத்துவான். மனுவந்தரந்தோறும் உள்ள மனு தேவ இந்திர சப்தரிஷி மனுபுத்திரர்கள் யாவரும் ஸ்திதியைச் செய்யவல்ல ஸ்ரீவிஷ்ணுவின் சாத்வீக அம்சமாவார்கள். உலகங்களை நிலைபெறச் செய்யும் தொழிலுடைய ஸ்ரீவிஷ்ணு சகல உயிரினங்களுக்கும் இதம் உண்டாகும்படிக் கிருதயுகத்தில் கபிலாதி சொரூபங்களைத் தரித்து உத்தமமான ஞானத்தைப் பிரகாசித்து அருள்வான். திரேதா யுகத்தில் அந்தந்தச் சக்கரவர்த்திகளின் சொரூபத்தைத் தரித்து, துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனங்களைச் செய்து வருகின்றார். துவாபர யுகத்திலே வேதவியாஸ சொரூபமாகி, ஒன்றாக இருக்கும் வேதத்தை இருக்கு முதலான நான்கு பிரதான பிரிவுகளாகவும் சாகா பேதங்களாலே அநேகம் பிரிவுகளாகவும் பிரிந்து உலகத்தை அனுக்கிரஹிக்கிறான். கலியுகத்திலோ கல்கி யவதாரஞ் செய்து, வேத சாஸ்திரங்களையும் தருமங்களையும் கடந்து நடக்கும் துஷ்டர்களை வழியிலே நிறுத்துகிறான். இவ்வாறு ஸ்ரீவிஷ்ணுபகவான் அந்தந்த ரூபத்தினால் உலகங்களைப் படைத்தும், காத்தும், சங்கரித்தும் வருகிறான். ஆகையால் சர்வபூத சொரூபியான எம்பெருமானைவிட ஒரு வஸ்துவும் இல்லை என்ற உண்மையை இந்தப் பிரகரணத்திலும் இதற்கு முந்தியவைகளாலும் உமக்கு தெளிவாகச் சொன்னேன். மைத்ரேயரே! இனித்தெரிந்து கொள்ள வேண்டியவை ஏதேனும் இருந்தால் கேட்பீராக.

——————

3. வேதவியாசர்கள் வரிசை

பராசர முனிவரே! தாங்கள் கூறியதிலிருந்து, சகலமும் ஸ்ரீவிஷ்ணுவினிடத்தில் உண்டாகி, அவனிடத்திலேயே நிலைபெற்று லயித்து அவனுக்குச் சொரூபமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அந்த மகாத்மாவான எம்பெருமான் யுகந்தோறும் வியாசரூபியாகி வேதங்களைப் பிரித்தருளுகிறான் என்று கூறினீர்கள். எந்தெந்த யுகத்தில் யார் யார் வியாசர் ஆனார்களோ, அவர்களையும் வேதத்தின் சாகைகளைப் பற்றியச் சிறப்புகளையும் அடியேனுக்குச் சொல்லவேண்டும் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! வேதம் என்கிற மகாவிருட்சத்திற்குக் கிளைகள் பலவுண்டு. அளவற்ற அவற்றை விரித்துச் சொல்வது கடினம். ஆகையால் சுருக்கமாகச் சொல்கிறேன்; கேளும். எம்பெருமான் துவாபரயுகம்தோறும் வியாசராக அவதரித்து, மக்களுக்கு உற்சாகம், சாமர்த்தியம் ஓதித்தரிக்குஞ் சக்தி இவையெல்லாம் அற்பமாக இருப்பதைக் கண்டு, அவர்களின் நலனுக்காக ஒன்றாயிருக்கின்ற வேதத்தைப் பல பிரிவுகளாக்கி அருள்செய்கிறார். அந்த எம்பெருமான் எந்த உடலைச் சேர்ந்து, வேதபேதங்களைச் செய்தருளுகின்றானோ அவையெல்லாம் வேதவியாசர் என்ற திருநாமமுடைய திருமேனிகள் என்று அறிவீராக. இனி இந்த மனுவந்தரத்தில் யார் யார் வேதவியாசரானார்களோ அவர்களைப் பற்றியும் கூறுகிறேன்; கேளும். இந்த வைவஸ்வத மனுவந்தரத்திலே துவாபர யுகந்தோறும் மாமுனிவர்களால், இருபத்தெட்டு முறைகள் வேதம் பிரிக்கப்பட்டது. ஆகையால் இதுவரையிலும், இருபத்தெட்டு வியாசர்கள் சென்றிருக்கிறார்கள். முதலாவது துவாபர யுகத்தில் பிரம்மாவே வேதவியாசராக விளங்கினார். இரண்டாவது யுகத்தில் வைவஸ்வதமனு வியாசரானார். மூன்றாவது யுகத்தில் சுக்கிரரும், நான்காவதில் பிரகஸ்பதியும், ஐந்தில் சூரியனும், ஆறில் இயமனும், ஏழில் தேவேந்திரனும், எட்டாவதில் வசிஷ்டரும், ஒன்பதாவதில் சாரசுவதரும், பத்தாவதில் திரிதாமாவும், பதினோராவதில் திரிவிருஷாவும், பன்னிரண்டில் பரத்வாஜா மாமுனிவரும், பதின்மூன்றில் அந்தரிஷரும், பதினான்கில் தருமியும், பதினைந்தாவது யுகத்தில் திரையாருணியும், பதினாறாவது யுகத்தில் தனஞ்செயனும், பதினேழாவது யுகத்தில் கிருதஞ்சயனும், பதினெட்டாவது யுகத்தில் சஞ்சயனும், வேதவியாசரானார்கள். பிறகுள்ள துவாபரங்களில் முறையே பரத்வாஜர், கவுதமர், ஹரியாத்துமா என்று இதர புராணங்களில், கூறப்படும் உத்தமர் என்பவர், வாஜீசிரவன் என்ற மறுபெயருடைய வேனன், திருணபிந்து என்ற பெயருடைய சோமசுஷ்மாயணன், வால்மீகி என்னும் திருப்பெயரால் புகழ்பெற்ற பார்க்கவரிக்ஷர் இவர்கள் வேதவியாசராயினர். இதுபோல் இருபத்து நான்கு துவாபரயுகங்கள் கழிந்த பிறகு, இருபத்தைந்தாவது துவாபரத்தில் என் தந்தையான சக்தி மாமுனிவரும் இருபத்தாறாவதில் நானும், இருபத்தேழாவதில் ஜாதுகர்ணர் என்பவரும் வேதவியாசர்களானோம். பிறகு இருபத்தெட்டாவதான இந்தத் துவாபரயுகத்தில் என் மகனான கிருஷ்ணத் துவைபாயனன் வேதவிபாகஞ்செய்தான். இப்படி இருபத்தெட்டு மாமுனிவர்கள் துவாபரயுக முடிவான காலங்களில் வேதத்தை நான்காகப் பிரித்து உலக உபகாரம் செய்து வந்தார்கள். இனிவரும் துவாபர யுகத்தின் கடைசியில் துரோண குமாரனான அசுவத்தாமா வியாசராவார்.

ஏகாக்ஷர ஸ்வரூபமாய் நாசவிகாரங்களையடையாமலிருந்த பிரணவமானது உச்சரிக்கப்படுமளவில் தான் விரிவதனாலும் வேதத்தை விரிப்பதனாலும் பிரமம் என்று சொல்லப்படும், அஃது எவ்விதமெனில்; பிரணவத்தினிடத்தில் நித்தியமாக இருக்கிற முதல் மூன்று வியாகிருதிகளும் ரிக்கு முதலான நான்கு வேதங்களும் சொல்லப்படுகின்றன. ஆகையால் அத்தகைய மகிமையுள்ள பிரணவஸ்வரூபமான சுத்தப் பிரமத்தின் பொருட்டுத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! உலகத்தின் பிரளயத்திற்கும் உற்பத்திக்கும் எது காரணமாக இருக்கிறதோ, எது மகத்தத்துவத்திற்கும் மேன்மையானதாக மறைக்கப்படும் பொருளாக உள்ளதோ அத்தகைய பிரணவ பிரம்மத்திற்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். அகாதமாயும், அபாரமாயும் அழிவற்றதாயும் உலகத்தை யோகிப்பதாயுள்ள தமோ குணத்துக்கு இருப்பிடமாயும், சத்வகுணகாரியமான பிரகாசத்தினாலும் ரஜோகுண காரியமான பிரவர்த்தனத்தாலும் தருமம் முதலிய சகல புருஷார்த்த சாதகமாயும், சாங்கிய நூலறிவுடையோருக்குப் பிரகிருதி புருஷ விவேகத்தின் உபாயமாதலால் நிலைபெறும் இடமாகவும் சமதமாதி குணங்களைச் சாதிக்கவல்ல யோகியருக்கு அவற்றை சாதிக்கும் உபாயமாயும் விளங்குகிற அந்த சப்த பிரம்மத்துக்குத் தண்டனிடுகிறேன்! எது அவியக்தமாயும் அமுதமாயும் சாஸ்தவமாயும் இருக்கிற பிரவிருத்திப் பிரம்மாக இருக்கிறதோ அதை நான் வணங்குகிறேன். சர்வப் பிரபஞ்ச காரணமானப் பிரதானமாயும் பரமாத்ம ஸ்வரூபாதிகளைக் காட்டுவதனால் பரமாத்மாவுக்குக் காரணமாயும், உபநிஷத்துகளில் அக்ஷய முதலாய்ப் பிரதானம் ஈறாகவுள்ள சொற்களால் வெகுவிதமாய் சொல்லப்படுவதாயும், பிரிவற்றதாயும் சுத்தமாயும் இருக்கிற அந்தப் பிரணவப் பிரமத்தை வணங்குகிறேன்! பரமாத்மாவான ஸ்ரீவாசுதேவனுக்கு ஸ்வரூபமாக இருக்கிற அந்தப் பிரணவரூபமான பரப்பிரமத்திற்கு நிதம் எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். உறுப்பான அக்ஷர வகையால் மூன்றாய்ப் பிரிந்திருந்தாலும் அவயவ விஸ்வரூபத்தில் பிரிவற்றதாக இருக்கின்ற அந்தப் பிரணவமானது அந்த ஸ்ரீவாசுதேவனேயாகும்; சகல பூதங்களிலும் அந்த வாசுதேவன் ஒருவனே எழுந்தருளியிருந்தாலும், பேதபுத்தி விஷயங்களான பிரமம் சூத்திர இந்திராதி மூர்த்திகளை அநுஷ்டித்திருப்பதால் வெவ்வேறாகக் கருதப்படுகிறான். அவனே இருக்கு வேதசொரூபியும், யஜுர்வேத சொரூபியும், சாமவேத ஸ்வரூபியுமாய் இந்த மூன்று வேதாரசாரமான பிரணவ ஸ்வரூபியாகவும் புருஷார்த்த ஸ்வரூபியாகவும் இருக்கிறான். அவனே சகல ஆத்மாக்களிலும் அந்தராத்மாவாக இருக்கிறான், அவனே பிரிவற்ற வேதரூபமாக இருந்து பலவிதமான வேதங்களாகப் பேதிக்கப்படுகிறான். அந்த அனந்தனான ஸ்ரீபகவானே; வேத சாகைகளைப் பிரிக்கும் வியாசாதி ஸ்வரூபியாகிறான். சகல வேத சாகைகளின் ஞானமும் இந்த ஸ்ரீஅனந்தனே என்பதையும் அறிவீராக!

—————————-

4. வேத சாகைகளின் பேதங்கள்

மைத்ரேயரே! ஆதியில் பிரம்மாவினால் அத்தியயனம் செய்யப்பட்ட வேதம், நான்கு பாதங்களையுடையதாகவும் அநேகவாயிரம் கிளைகளைக் கொண்டதாகவும் இருந்தது. அதிலிருந்து அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம் என்கிற ஐந்தும், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம யக்கியம் என்ற பஞ்சமகா யக்கியங்களும் ஆகப் பத்துவிதமான யக்கியங்களும், திரவியம், தேசம், பலம், காலம், ஞானம்; கர்மம், காரகம், சிரத்தை அவஸ்தை ஆகிருதி, நிஷ்டை என்ற உறுப்பினையுடையனவாக உண்டாயின. இந்த யாகங்கள் யாவும் சர்வபீஷ்டங்களையும் கொடுக்கும் திறமுள்ளனவாகும். பிறகு, இருபத்தெட்டாவது யுகத்தில் எனது மகனான வியாசர் மகா சமர்த்தராகையால் நான்கு பாதங்களைக் கொண்ட அந்தவொரு வேதத்தை நான்காகப் பிரித்தார். இவர் இப்பொழுது எப்படிப் பிரித்தாரோ, அப்படியே முந்திய யுகங்களிலும் நானும் மற்ற முனிவர்களும் பிரித்தோம். வியாசர் பிரித்ததைப் போலவே, ஸ்ரீமந் நாராயணாம்சம் பெற்று, மற்ற வியாசர்களும் அவ்வப்போது வேதத்தைப் பிரித்தருளினார்கள் என்பதை அறிவீராக. மைத்ரேயரே! இந்தப் பூவுலகத்தில் ஸ்ரீவாசுதேவனைத் தவிர மற்றொருவன் மகாபாரதம் இயற்ற வல்லவனாகான். ஆகையால் கிருஷ்ணத் துவைபாயர் என்ற பெயரையுடைய இந்த வியாசரை ஸ்ரீமந்நாராயண அம்சம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! இந்தத் துவாபார யுகத்தில் என் குமாரனான வியாசர் வேதங்களைப் பிரித்தவிதத்தைக் கூறுகிறேன்! கேளும். வியாச மாமுனிவர், வேதங்களைப் பிரிக்கும்படி சதுர்முகப் பிருமனால் நியமிக்கப்பட்டார். அவர் தாம் பிரித்த வேத சாகைகளை அத்தியயன பரம்பரையினால் பிரவர்த்திப்பிக்க வல்லவர்களான சீடர்களை ஆராய்ந்து தேடி இருக்கு வேதத்திற்கு பைல மகாமுனிவரையும், யஜுர் வேதத்துக்கு வைசம்பாயன மகாமுனிவரையும், சாம வேதத்துக்கு ஜைமினி முனிவரையும், அதர்வண வேதத்துக்கு சுமந்து முனிவரையும் இதிஹாச புராணங்களுக்கு மகா மேதையான ரோமஹர்ஷணர் என்ற சூதரையும் பரிக்கிரகித்து அருளினார். அத்துவர்யு உத்காதா, ஹோதா பிரம்மா என்ற நால்வகையான (சாதுர்ஹோத்திரம்) ரித்துவிக்குகளில் காரியமுள்ளதாகையால், யாக ஹேதுவாக இருந்த வேதம் ஒன்றையே நான்காகப் பிரித்தார். அவற்றினால் யக்கியங்களை நடத்தியருளினார். யஜுர் வேதங்களினால் அத்துவாயு காரியத்தையும் இருக்கு வேதங்களினால் ஹோதாவின் காரியத்தையும், சாம வேதங்களினால் உத்காதாவின் செயலையும் இந்த மூன்று வேதங்களினாலேயும் அரசர்களுக்கு வேண்டிய சாந்திக பவுஷ்டிகாதிகளையுடைய அதர்வண வேதத்தாலேயும் பிரம்மாவின் செயலையும் ஏற்படுத்தினார்.

இனி வேதங்களைப் பிரித்தது எப்படியெனில், அகண்டமான வேதத்திலிருந்து இருக்குகளையெல்லாம் பிரித்தெடுத்து ஒன்றாக்கி அதனை இருக்கு வேதம் என்றும், யசுகளைப் பிரித்தெடுத்துச் சேர்த்து யஜுர்வேதம் என்றும், சாமங்களைப் பிரித்தெடுத்து சேர்த்து சாமவேதம் என்றும், மூன்று வேதங்களைச் செய்து, அரசர்களுக்கு முக்கியமான காரியங்களையும் புரோகித கிருத்தியத்தையும் நிறைவேற்றுவதற்காக அதர்வ பாகங்களையெல்லாம் சேர்த்தெடுத்து அதர்வண வேதத்தையும் செய்தருளினார். இவ்விதமாக, முன்பு ஒன்றாக இருந்த வேத விருட்சமானது நான்கு கிளைகளாகப் பிரிந்து பிறகு பெருங்காடாயிற்று. பைலமா முனிவருக்கு வேதத்தை இரண்டு சம்ஹிதைகளாகச் செய்து இந்திரப் பிரமாதி என்பவருக்கு ஒன்றையும், பாஷ்களர் என்பவருக்கு மற்றொன்றையும் அருளினார். அந்தப் பாஷ்கள முனிவர் தாம் பெற்ற சம்ஹிதையை நான்காகச் செய்து போத்தியர், அக்கினி, மாடகர், யாக்கியவல்கியர், பராசரர் என்ற நால்வருக்கு, ருக்கு வேத சாகையின் பிரிவுகளான சாகைகளைப் போதித்தருளினார். அந்த இந்திரப் பிரமதி என்ற முனிவர் தாம் ஓதிய ரிக்வேத சம்ஹிதையை தமது மகனான மாண்டூகேயர் என்பவருக்கு போதித்தார். அந்த சம்ஹிதை சிஷ்ய பிரசிஷ்ய பரம்பரையினாலே வளர்ந்து கொண்டிருந்தது. இப்படியிருக்கும் பொழுது வேதமித்திரன் என்ற சாகலயர் தாம் ஓதிய இந்திர பிரமதி சாகையை ஐந்தாகச் செய்து முத்கலன் கோமுகன் வாச்சியன், சாலீயன், சைச்சிரன் என்ற தம்முடைய மாணவர் ஐவருக்குக் கொடுத்தார். அந்தச் சாகலருடைய சப்பிரமசாரியாண சாகபூர்ணா என்பவர் இந்திரபிரமதி சம்ஹிதையை மூன்றாகச் செய்து நிருத்தம் என்ற வேதாங்கம் ஒன்றையும் செய்து ஆக நான்கையும் தமது மாணவரான கிரவுஞ்சன், வைதாளிகன், பலாகன், நிருத்தன் என்ற நால்வருக்கும் வழங்கினார். முன்பு சொல்லிய சாகலியருடைய சப்பிரமச்சாரியான பாஷ்கலி என்பவர், இந்திர பிரமிதி சாøயை மூன்றாக்கி காலாயனி, கார்க்கியர், ஜபர் என்ற மாணவர் மூவருக்கு வழங்கினார். இந்தவிதமாக ரிக் வேதத்தின் சாகைகளும் அனு சாகைகளும் பிரதி சாகைகளும் உண்டாயின. மைத்ரேயரே! ருக்வேதசாகா கர்த்தாக்களான பஹ்ருசரை நான் உமக்குத் தெரிவித்தேன்.

—————–

5. யஜுர் வேத சாகைகள்

மைத்ரேயரே! யஜுர்வேத விருட்சத்துக்குப் பிரதானமான இருபத்தேழு சாகைகளை வைசம்பாயன மகாமுனிவர் செய்தார். பிறகு அவற்றைத் தமது சீடர் அநேகருக்குக் கொடுத்தார். அவர்களும் முறைப்படி ஓதி வந்தனர். அந்த வைசம்பாயன மகாமுனிக்கும் பிரமராதருடைய குமாரரான யாக்கியவல்க்கியர் என்பவர் சீடராக இருந்தார். அவர் முக்கியமான தருமங்களையெல்லாம் அறிந்தவர். அவர் குருவுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். முன்பொரு சமயம், மகாமேருவிலே முனிவர்களெல்லாம் கூடித் தமது சபைக்கு எந்த ரிஷி இன்று வராமலிருக்கிறாரோ அவருக்கு ஏழு தினங்களுக்குள் பிரம்மஹத்தி தோஷம் வரக்கடவது என்று ஒரு சாபம் உண்டாக்கி இருந்தார்கள். அந்த ஏற்பாட்டைக் கடந்த இந்த வைசம்பாயன மகாமுனிவர் ஒரு நாள் தம்முடன் பிறந்தவனின் புத்திரரான பாலகன் ஒருவனைக் காலினால் தீண்ட, அந்தப் பாலகன் மரணமடைந்தான். அதனால் அவருக்கு பிரமஹத்தி தோஷம் சம்பவித்தது. அப்பொழுது வைசம்பாயனர் தமது சீடர்களை நோக்கி, ஓ சீடர்களே! எனக்காக நீங்கள் பிரம்மஹத்தி நீங்கும்படியான விரதத்தைச் செய்யுங்கள். வேறு ஒன்றும் நினைக்காதீர்கள்! என்று நியமித்தார். அப்போது யாக்கியவல்கியர் குருவை நோக்கி, ஆசாரியாரே! அற்ப தேஜஸ் உள்ளவர்களான இவர்களை ஏன் வருத்தவேண்டும்? அடியேன் ஒருவனே அந்த விரதத்தைச் செய்கிறேன் என்று சொல்ல, குருவானவர் கோபமடைந்து, யாக்கிய வல்கியரை நோக்கி, நீ பிராமணரை அவமானம் செய்தாய்! இத்தகைய நீ எனக்கு சீடனாக இருக்கத் தகாது. ஆகையால் என்னிடத்தில் ஓதிய வேதங்களை விட்டுவிடு. உத்தமமான பிராமணர்களை தேஜஸ் இல்லாதவர்கள் என்று சொன்னாய், இத்தகைய சீடர் எனக்கிருந்து ஆவதென்ன? அன்றியும் என் கட்டளையையும் பங்கப்படுத்தினாய். ஆகையால் வேதங்களை விட்டுவிடு! என்று கண்டித்தார். உடனே யாக்யவல்கியர், ஓ ஆசாரியாரே! தங்களிடமுள்ள பக்தியினால் இப்படிச் சொன்னேனேயல்லாது வேறில்லை. அப்படியிருக்கக் கோபித்துக் கொள்கிற உம்மாலேயும் எனக்கு ஆகவேண்டியதில்லை. உம்மிடத்தில் ஓதின வேதமும் எனக்கு வேண்டாம்! என்று சொல்லி, உதரத்தினால் பூசப்பட்ட ரூபமுடையவைகளாய்க் காணப்பட்ட யஜுர் வேதங்களைக் கக்கி, இதோ உங்களது வேதங்களை உங்களிடமே கொடுத்தேன்! என்று சொல்லிவிட்டுத் தம்முடைய மனதின் படிபோய்விட்டார். பின்பு யாக்யவல்கியர் கக்கிய வேதங்களை மற்றப் பிராமணர்கள், நேரடியாக இந்தக் கக்கலை உண்பது தகுதியல்ல வென்று எண்ணித் தித்திரி என்ற பறவைகளாக மாறி உண்டார்கள். ஆகையால் அவர்களுக்குத் தைத்திரீயர்கள் என்ற பெயர் உண்டாயிற்று. பிறகு வைசம்பாயனரின் மாணவர்கள் அனைவரும் தமது குருவின் கட்டளையை ஏற்று, பிரம்மஹத்தி நீங்குவதற்கான விரதத்தை ஆஸ்ரயித்து அனுசரித்தார்கள். அவர்களுக்கு அதனால் சரணாத்துவர்யுக்கள் என்ற பெயர் வழங்கலாயிற்று.

யாக்கியவல்கியரோ, சூரிய பகவானிடமே யசுசுகளைக் கிரகிக்க வேண்டும் என்று கருதி பிராணாயாமம் முதலியவற்றால் சூரியனைத் துதித்துப் போற்றலானார். மோட்சத்துக்கு மார்க்கமாயும், அளவற்ற தேஜஸைக் கொண்டவராயும், ருக்கு, யஜுர், சாம வேதங்களின் ரூபமாயும் இருக்கிற சூரியனை வணங்குகிறேன்! வெய்யிலுக்கும் மறைக்கும் ஹேதுவாக இருப்பதால் அக்கினி சோம ரூபியாகவும் அதன் காரணமாக உலகத்துக்குக் காரணமாயும், வெளிச்சத்தைத் தருபவராயும் அமிர்த ஹேதுவான காந்தியை பரிப்பவராயும் இருக்கும் அவருக்குத் தண்டனிடுகிறேன்! கலை காஷ்டை, நிமிஷம் முதலிய காலத்தை அறிவிக்கும் சொரூபத்தைக் கொண்டவராயும், தியானிக்க தக்கவராயும், பிரணவ ரூபியாயும், பிரபஞ்ச ரூபியாயும் இருப்பவருக்கு எனது வந்தனம் உரியதாகுக! தனது கிரணங்களினாலே சந்திரனைப் போஷித்துத் தேவதைகளையும், ஸ்வதாமிர்தத்தினாலே பிதுர்க்களையும் காத்து ரட்சித்து வருகின்ற திருப்தி ரூபமானவருக்கு நமஸ்காரஞ் செய்கிறேன். பனி, வெப்பம், மழை ஆகியவற்றை உண்டாக்கி, ஹரிக்கின்றவராயும் முக்காலங்களின் ஸ்வரூபியாகவும் இருக்கும் சூரியபகவானுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். இந்த உலகத்தின் இருளைப் போக்கி, ஜகத்துக்கெல்லாம் அதிபதியாயும், சத்துவகுணசரீரம் உள்ளவராயும் இருக்கிற ஆதித்த பகவானுக்கு நமஸ்காரங்களைச் செய்கிறேன். எந்தத் தேவன் உதயமாகாமற் போனால் ஜனங்கள் சத்கருமங்களைச் செய்வதற்குத் தகுதியுடையவராக மாட்டார்களோ, தண்ணீரும் சுத்த ஹேதுவாக மாட்டாதோ, அத்தகைய சூரியதேவனை வணங்கித் தொழுகிறேன்! எந்தத் தேவனது கதிர்களால் ஸ்பரிசிக்கப்பட்டு மனிதன் சத்காரியங்களுக்கு யோக்கியன் ஆகின்றானோ, அத்தகைய சுத்தி காரணமான தேவனைத் தொழுகின்றேன்! பிரேரகனாயும் உற்பத்தி செய்பவனாயும் அந்தகாரத்தைப் போக்குவோனாகவும் இருக்கின்ற தேவனுக்கு எனது வணக்கங்கள்! தேவர்களுக்கெல்லாம் அதியாய் இருக்கும் ஆதித்த பகவானுக்கு பலமுறைகள் வந்தனஞ் செய்கிறேன். எந்த தேவனுடைய தேரானது இதமும் ரமணீயமுமான தேஜோமயமாக இருக்கிறதோ, குதிரைகள் ஞானரூபங்களாயும், அமிர்தங்களாயும் இருந்து அந்த ரதத்தை இழுக்கின்றனவோ, உலகங்களுக்கெல்லாம் கண்ணாக இருக்கும் அந்தப் பகவானைத் தொழுகிறேன்! என்று இவ்விதமாக யாக்கியவல்கியர் சூரியனை வணங்கி வழிபட்டு வந்தார். அப்போது சூரியபகவான் குதிரை வடிவில் அவர் முன்பு, தோன்றி, ஓ முனிவரே! உமக்கு வேண்டும் வரத்தைக் கேளும்; என்றார். அதனால் யாக்கியவல்கியர் சூரியனைத் தொழுது, சுவாமி! எனது குருவான வைசம்பாயன மகாமுனிவருக்கும், தெரியாத யஜுர் வேதங்களை எனக்கு வழங்கி அருள்புரிய வேண்டும்! என்று வேண்டினார். உடனே சூரியபகவான், அவருக்கு அவர் வேண்டிய வண்ணம் வியாசரது உபதேசமில்லாமையால், வைசம்பாயன முனிவருக்குத் தெரியாத அயாதயாமங்கள் என்ற யஜீசுகளை வழங்கியருளினார். அந்த சாகைகளை அத்தியயனஞ் செய்தவர்களுக்கு வாஜிகள் அல்லது வாஜசனேயர் என்ற பெயர் வழங்கலாயிற்று. சூரியன் (வாஜி) குதிரை வடிவத்தில் அந்த வேதத்தை உபதேசித்ததால் அந்தப் பெயர் உண்டாயிற்று. அந்த வாஜசனேய, சங்கிசையை யாக்கியவல்கிய முனிவர் காண்வசாகை முதலிய பதினைந்து சாகைகளாகப் பிரித்தார். இவ்வாறு தான் யஜுர் வேதத்தின் பிரிவுகள் உண்டாயின.

——————-

6. சாம, அதர்வண வேதங்கள், புராணங்கள்

மைத்ரேயரே! சாமவேத விருட்சத்தின் சாகா பேதங்களையும் கேட்பீராக, வியாசரது சீடரான ஜைமினியானவர், தம்முடைய குமாரரான சுமந்து என்பவருக்கு ஒரு சம்ஹிதையை உபதேசிக்க அவரும் தம்முடைய மகனான சுத்துவா என்பவருக்கு அதை உபதேசித்தார். பிறகு அந்தச் சுத்துவாவின் மகனான சுகர்மா என்பவர் தம் தந்தையிடம் தாம் கற்ற அந்த ஜைமினி சம்ஹிதையை ஓராயிரம் பிரிவுகளாகப் பிரித்துத் தமது மாணவருக்கும் கொடுத்தார். கவுசல்யர் என்னும் பெயர் பெற்றிருந்த அந்த ஹிரண்யநாபருக்கு வடநாட்டார் ஐநூறு பேர், சாம சாகையை ஓதும் சீடர்களானார்கள். அவர்கள் ஐநூறு சாகைகளை ஓதிக்கொண்டு ஒரு காலத்தில் கீழ்த்திசையில் இருந்ததால் கீழ்த்திசை சாமகர் என்று வழங்கப்பட்டனர். அந்த பவுஷ்பிஞ்சி என்பவருக்கும் லோகாக்ஷி கவுமுதி, கக்ஷீவான் லாங்கலி முதலிய சீடர்கள் இருந்தனர். அவர்கள் தாங்கள் ஓதிய சங்கிதைகளைப் பலவாக விரிவுரை செய்தனர். முன்னே சொன்ன இரணிய நாபருடைய சீடர்களில் ஒருவரான கிருதநாமா என்பவர் இருபத்து நான்கு சங்கிதைகளைத் தமது மாணவருக்கு ஓதுவித்தார். அவர்களும் இந்தச் சாம வேதத்தை மிகவும் விரிவுபடுத்தினர். இவ்விதமாகச் சாமவேதச் சாகைகளின் பிரிவுகள் உண்டாயின. இனி அதர்வண வேதத்தின் விரிவைச் சொல்கிறேன். வேதவியாச முனிவரிடம் அதர்வண வேதத்தைக் கற்றறிந்த சுமந்து என்ற முனிவர், அந்த அதர்வண வேதத்தைத் தமது சீடரான கபந்தர் என்பவரிடம் வழங்கினார். அந்த கபந்த முனிவர் அதை இரண்டு பிரிவுகளாக்கி தேவதரிசர், பத்தியர் என்ற சீடருக்கு வழங்கினார். அந்தத் தேவதரிசருக்கு, மேதன் பிரமபலி, சவுல்கா யனிபிப்பலாதன் என்ற நான்கு மாணவர்கள் இருந்தனர். அவர்கள் தேவதரிசர் செய்த நான்கு சங்கிதைகளையும் முறையே ஓதிவந்தனர்; பத்தியருக்கு ஜாபாலி குமுதாதி, சவுனகர் என்ற மூன்று மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் தமது ஆசிரியர் பிரித்த மூன்று சங்கிதைகளையும் பல சங்கிதைகளாகச் செய்தனர். அந்த சவுனகர் என்பவர் தம்முடைய சங்கிதையை இரண்டாகச் செய்து பப்புரு என்பவருக்கும், சைந்தவர் என்பவருக்கும் வழங்கினார். சைந்தவரின் சீடரான முஞ்சிசேர் என்பவர் தாம் பெற்ற சங்கிதை இரண்டாகப் பிரித்தார். அந்த சங்கிதைகளில் முக்கியமான பாகங்கள் ஐந்தாகும். அவை நக்ஷத்திர கல்ப்பம், வேத கல்ப்பம், சங்கீதா கல்ப்பம், ஆங்கிரச கல்ப்பம், சாந்தி கல்ப்பம் என்பனவாகும். நட்சத்திர கல்பம் என்பது நக்ஷத்திராதிகளுடைய சொரூப குணாதிகளை விவரிப்பதாகும். வேதகல்ப்பமாவது, பிரமத்துவம் முதலிய புரோகித காரியங்களைத் தெரிவிப்பதாகும். சங்கிதா கல்ப்பம் என்பது மந்திரங்களின் ஏற்பாட்டை உணர்த்துவது ஆங்கிரச கல்ப்பம்; ஸ்தம்பனமோஹன மாரணாதிகளான அபிசாரங்களைக் காட்டுவது யானை குதிரை முதலியவை பற்றிய பதினெட்டு சாந்திகளை விதிப்பது-சாந்தி கல்ப்பமாகும். இவைகளே அதர்வண வேதத்தில் சிறப்பானவை. இவ்விதமாக நான்கு வேதங்களின் விகற்பங்களை நான் உமக்கு அறிவித்தேன்.

இனிமேல், புராணங்களின் வரலாற்றைக் கூறுகிறேன்; கேளும்! புராணம் என்பது சாஸ்திரங்கள் அனைவற்றிலும் முதன்மையானதாகும். அது கிருதயுகத்தில் பிரும்மாவினால் நூறுகோடி கிரந்த விஸ்தாரமாக இயற்றப்பட்டு, பிராம்மம் என்ற பெயருடன் ஒன்றாகவே இருந்தது. பின்பு, திரேதா யுகத்திலே அதை ரிஷிகள் நூற்றுப் பதினெட்டு சம்ஹிதைகளோடு கூடிய பதினெட்டுப் பிரிவுகளுடன் கோடிக்கிரந்த விஸ்தாரமாகச் செய்தனர். பிறகு, வேதவியாசர் துவாபரயுகத்தின் இறுதியில் அப்புராணங்களின் சாரங்களை எடுத்து, நான்கு லக்ஷம் கிரந்த விஸ்தாரமுடையதாய், பாரதாதி ஆக்கியானங்களும் பிருதிவீ கீதை பிதுரு கீதை முதலான காதைகளையும் வராக கல்ப்பாதி, கல்ப்ப நிர்ணயங்களும், சிருஷ்டி மனுவந்தராதிகளும், வமிச வமிசானு சரிதங்களும் விளங்கும்படியாக பதினெட்டுப் புராண சங்கிதைகளைச் செய்து, தமது மாணவரான சூதமுனிவருக்கு உபதேசித்தனர். அந்த சூதர் என்ற ரோம ஹர்ஷணருக்கு சுமதி, அக்கினி, வர்ச்சன், மித்திராயு, சாம்சபாயனன், அகிருதவிரணன், சாவர்ணி என்ற சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் அகிருத விரணரும் சாவர்ணியும்; சாம்சபாயனரும்; வியாச கிருதமான புராண சங்கிதையைப் பற்றி தாங்களும் சில சங்கிதைகளைச் செய்தனர்; இவற்றுக்கு எல்லாம் மூலமானதாக; ஒரு சங்கிதையை ரோமஹர்ஷணர் செய்தார். இந்த நான்கின் சாரத்தைக் கொண்டுதான்; நான் இந்தப் புராணத்தை இயற்றினேன். புராணங்கள் யாவற்றினும் முதன்மையாக இருந்தது பிரம்மபுராணம், அதை முதலாகக் கொண்ட பதினெட்டுப் புராணங்கள் உண்டென்று புராணங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அவையாவன, பிராம்மம், பாத்துமம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீபம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம் பவுஷ்யத்து, பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்காந்தம், வாமனம், கவுர்மம், மாச்சியம், காருடம், பிரமாண்டம் முதலியன அவற்றின் முறையே இதுவாகும். இந்தப் புராணங்கள் யாவும் சிருஷஅடி, சங்காரம், வமிசங்கள் மனுவந்திரங்கள். வமிசங்களுடைய வரலாறுகள் ஆகியவற்றை அறிவிப்பனவாகும்.

மைத்ரேயரே! உமக்கு இப்போது நான் சொல்லி வருவது பத்மபுராணத்துக்குப் பிற்படச் சொல்லிய விஷ்ணு புராணமாகும். இது புராண வரிசையில் மூன்றாவதாகும், எல்லாப் புராணங்களிலும் சொல்லப்படுகிற சிருஷ்டி முதலியவற்றில் ஸ்ரீவிஷ்ணுவே மூலம் என்று கர்த்துருத்துவாதி அறங்களைக் கொண்டு சொல்லப்படுகிறது. ஆன்ம கோடிகளில் அறியவேண்டிய அறங்கள் அனைத்தையும், முன்பு சொன்ன நான்கு வேதங்களும் அவற்றின் அங்கங்களான சிøக்ஷ வியாகரணம் காந்தம்; நிருத்தம்; ஜோதிடம்; கல்ப்பம் என்ற ஆறும், மீமாம்சையும், நியாய நூலும், இதிகாச புராணங்களும், அறநூல்களும் ஆகிய பதினான்காகும். இவற்றுக்கு வித்யா ஸ்தானங்கள் என்றும் பெயர் உண்டு. இவை தவிர ஆயுர்வேதம் என்ற வைத்திய சாஸ்திரமும் தனுர்வேதம் என்ற ஆயுத சாஸ்திரமும் அர்த்தி சாஸ்திரம் என்ற ராஜநீதி சாஸ்திரமும் உபவித்தைகள் என்று சொல்லப்படும். இவையனைத்தும் பதினெட்டு வித்தைகள் என்று பொதுப்பட வழங்குகின்றன. இந்த வித்தைகளை வகுத்தவர்கள் பிரமரிஷிகள், தேவரிஷிகள், ராஜரிஷிகள் என்ற மூவகை முனிவர்களாவர். மைத்ரேயரே! நீங்கள் கேட்டபடி வேதத்தின் மூல சாகைகளையும், அச்சாகைகளின் பிரிவுகளையும் அவற்றின் கர்த்தாக்களையும் அவை பிரிவதன் காரணத்தையும் உமக்குத் தெரியும்படிச் சொன்னேன். சகல மனுவந்திரத்திலேயும் இப்படி சாகைகளின் பிரிப்பது சமமாக நிகழ்ந்துவரும், ஆதியில் பிரும்மாவினால் அறியப்பட்ட வேதம் நித்தியமானது. ஆகையால் இந்தச் சாகைகள் அனைத்தும் அவற்றின் விகற்பங்கள் ஆகும். இவ்விதமாக வேத சம்பந்தமான யாவற்றையும் சொல்லிவிட்டேன். இனி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

—————-

7. வைணவத்தின் பெருமை

மைத்ரேயர் தமது குருவை நோக்கி, முனிவர் பெருமானே! நான் கேட்டவற்றுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லிவிட்டீர்கள். இனியும் ஒரு விஷயம் இருக்கிறது அதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். அதாவது சப்தத்துவீபங்களும் பாதாளங்களும் மேலேழு உலகங்களும் அடங்கியிருக்கிற இந்தப் பிரம்மாண்டத்துக்குள்ளே ஸ்தூலங்களும் சூஷ்மங்களும், சூஷ்மத்தில் சூஷ்மங்களும் ஸ்தூலங்களில் ஸ்தூலங்களுமாக ஏராளமான உயிரினங்கள் வாசஞ்செய்கின்றன. இத்தனை பெரிய பிரம்மாண்டத்துக்குள்ளே அங்குலத்தின் எட்டில் ஒரு பங்கு இடமானாலுங்கூட பிராணிகள் இல்லாமலிருப்ப தில்லை. இந்த உயிரினங்கள் எல்லாம் கர்மபந்தத்தினாலே, இங்கே பிறக்கின்றன. பின்னர் ஆயுளின் முடிவிலே எமனுக்கு வயப்பட்டு, அவனால் நியமிக்கப்பட்ட அந்தந்த வாதனைகளை அனுபவித்து, அந்த வாதனைக்காலம் தீர்ந்த பிறகு தேவாதி யோனிகளிலே பிறந்திருக்கிறார்களே இவ்விதமாக உயிரினங்கள் ஜனன மரணக்கிரமத்தில் சுழன்று கொண்டேயிருக்கின்றன என்பது சாஸ்திரங்களின் நிச்சயம். இத்தகைய சம்சாரத்திலே சரீரிகள் எந்தக் காரியஞ்செய்தால் எமனுக்கு வயப்படாமல் தப்புவார்கள். அந்தக் காரியம் யாது? இதை அடியேனுக்குக் கூறியருள வேண்டுகிறேன் என்று வேண்டினார், பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! இந்தக் கேள்வியைத் தான் முன்பு ஒரு காலத்தில் நகுலன் பீஷ்மரைக் கேட்டான். அதற்குப் பீஷ்மர் சொன்னதாவது, குழந்தாய்! கலிங்க தேசத்திலிருந்து எனக்கு நண்பரான பிராமணர் ஒருவர் வந்திருந்தார். அவரை நான் கேட்டவைகளில் எதெது எப்படியெப்படியாகும் என்று சொல்வாரோ, அப்படியப்படியே நிகழ்ந்தன. அவர் பூர்வஜன்ம ஞானமும் யோக திருஷ்டியும் உடையவர். ஆகையால், நான் கேட்டவைகளுக்கு அவர் சொன்னது ஒருபோதும் பொய்த்ததில்லை. அந்த நம்பிக்கையினாலே நீ கேட்ட கேள்வியை நானும் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் யோகியானவர், நான் கேட்ட கேள்வியைக் குறித்து மிகவும் இரகசியமான யமகிங்கர சம்வாதம் ஒன்றை என்னிடம் சொன்னார். அதாவது ஒரு காலத்தில் பாசக்கயிற்றைக் கைகளில் எடுத்துக் கொண்டு பிராணிகளைக் கவர்ந்து வரச்சென்ற தன்னுடைய சேவகனை யமதர்மராஜன் தன்னருகே அழைத்து, தூதுவனே! நீ உனது தொழிலை நடத்தும்போது ஸ்ரீமதுசூதனை ஆஸ்ரயித்தவரைத் தீண்டாதே விட்டு விடு. நான் மற்றவர்களுக்கு பிரபுவேயல்லாது வைணவருக்குப் பிரபுவல்லேன் சகல தேவதைகளாலும் ஆராதிக்கப்பட்ட பெருமாளாலே நான் எமன் என்று பெயரிடப்பட்டுச் சகல பிராணிகளுடைய பாப புண்ணியங்களையெல்லாம் ஆராய்ந்து நடத்தும்படி நியமிக்கப்ப்டேன்! ஆகையால், அந்த ஸ்ரீஹரிக்கு வசப்பட்டு இருக்கிறானே தவிர, சுதந்திரனாக இல்லை. அவர் எனக்கிட்ட அதிகாரத்தில் நான் சிறிதளவு தவறினாலும் கூட என்னையும் அந்த ஸ்ரீவிஷ்ணுவானவர் தண்டிப்பார். கை வளையல், கிரீடம், குண்டலம் முதலிய ஆபரணங்களிலேயும் காரணமான ஸ்வர்ணம் ஒன்றே வியாபித்திருக்கிறது. அதுபோல சுரர், நரர் பசு முதலான சகல காரிய வர்க்கங்களிலும் அந்த ஸ்ரீஹரி ஒருவனே வியாபித்திருக்கிறார். ஆகையால் அவரே சர்வேஸ்வரனாகும்.

மற்ற தேவர்கள் எல்லாம் அவருடைய வியாப்தியைக் கொண்டு அவரிட்ட கட்டளைகளைச் செலுத்தி வருகிறார்கள். காற்றினால் கிளப்பப்பட்ட மண்புழுதி, காற்றடங்கியதும் மறுபடியும் பூமியிலேயே படிவது போல், பகவத் சங்கல்பத்தினால் உண்டான சுரநராதிகள் அனைத்தும், பகவத் குணவைஷம்யம் அடங்கியதும் அந்தப் பகவானிடத்திலேயே லயமடைந்து விடுகின்றன. சகல தேவதைகளாலும் அர்ச்சிக்கப்பட்ட திருவடித்தாமரைகளுள்ள அந்த ஸ்ரீஹரியை எந்த மனிதன் நிருபாதிகமாகச் சேவித்துக் கொண்டிருப்பானோ அந்த மனிதனைக் கண்டதும் நெருப்பைக் கண்டதுபோல் தூரத்தில் விட்டோடிப் போகக் கடவாயாக! என்று கட்டளையிட்டான். அதற்கு கிங்கரன், எமதேவரே! அந்த ஸ்ரீவிஷ்ணுவினுடைய பக்தனை இன்னான் என்று நான் அறிந்து நடப்பதற்காக அந்த மகா புருஷனுடைய லக்ஷணங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன் என்றான். அதற்கு யமதர்மன், கேளாய்; கிங்கரனே! எவன் தன்னுடைய வருணாசிரம தர்மங்களை பகவானுடைய ஆக்ஞா கைங்கரியங்களாகக் கருதி, அதனின்று தவறாமலும், தனது நண்பனிடத்திலும் பகைவரிடத்திலும் பாரபட்சமின்றி சமபுத்தியுள்ளவனாகவும், ஒரு பொருளையும் அபகரிக்காதவனாகவும், ஓருயிரையுங் கொல்லாதவனாகவும் மிகவும் தூய்மையான இதயமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அந்தப் புருஷனையே ஸ்ரீவிஷ்ணுபக்தன் என்று அறிந்து கொள்வாயாக. தூய்மையான ஞானமுடைய எவனுடைய சித்தமானது கலி சம்பந்தமான ராகத்துவேஷங்களால் அழுக்கடையாமல் எப்போதுமே ஸ்ரீமந்நாராயணன் வாசஞ்செய்யப்பெற்று விளங்குமோ, அந்த மனிதனை ஸ்ரீஜனார்த்தனனுடைய பரமபக்தன் என்று அறிவாயாக. அன்பர்களின் இதயகமலங்களில் படிக மலைபோல் ஸ்ரீபகவான் நிர்மலனாய் எழுந்தருளியிருக்கும் போது மாச்சரியம் முதலான தோஷங்கள், பறந்து போகும். குளிர்ச்சியான சந்திரனுடைய கதிர்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் அக்கினியின் காந்தியும்; சிறப்பும் பெருமையடையாததுபோல்! எவனது இதயத்தில் ஸ்ரீவாசுதேவன் எழுந்தருளியிருப்õனோ, அந்த மனிதன் நிர்மல புத்தியுடையவனாகவும், மாச்சரியம் முதலிய குறைகள் அற்றவனாகவும், மிகவும் சாந்தனாகவும், தூய்மையான ஒழுக்கமுடையவனாகவும், இனிமையாகவும் மிதமாகப் பேசுபவனாகவும்; கர்வம், வஞ்சனையற்றவனாகவும் விளங்குவான். அந்த அனாதியான பகவான் எவனுடைய இதயத்தில் எழுந்தருளியிருக்கிறானோ அவன்; இளமையான தேமாமரமானது தானிருக்குஞ் செழிப்பினாலேயே தனக்குள் இருக்கிற பூசாரத்தைக் காட்டுவதுபோல, உலகத்திலுள்ள எவருக்குள்ளும் சாந்தனாய் விளங்குவான். அந்த அவியயனாய் அநாதியான ஸ்ரீஹரிபகவான் சங்கு, சக்கராதி ஆயுத சமேதனாய் ஒருவனுடைய இதயத்தில் வீற்றிருப்பானானால் அந்தப் புருஷனுடைய பாவமெல்லாம் சூரியன் இருக்குமிடத்திலே அந்தகாரம் மறைவது போல, பாபவினாசனனான அந்தப் பகவானாலே கண்டிக்கப்பட்டுபோம். இயம, நியமாதிகளாலே பாவத்தைக் கழித்தவர்களாயும் எப்பொழுதும் ஸ்ரீ அச்சுதனிடத்திலே பற்றி நிற்கின்ற சித்தமுள்ளவர்களாயும் மாச்சரியம் மதம் முதலிய குற்றங்கள் கழித்தவர்களான புருஷர்களைக் கண்டால்; கிங்கரனே; நீ மிகவும் தூரத்தில் விலகிப்போய் விடுவாயாக.

எந்தப் புருஷன் யாருமில்லாத ஏகாந்த ஸ்தானத்திலே பிறரது பொருளான சுவர்ணராசி ஜொலித்துக் கொண்டிருக்கக் கண்டாலும் அதைத் துரும்பு போல நினைத்துத் தீண்டாமற் போவானோ, எம்பெருமான் ஒருவனையேயன்றி மற்ற எதையும் புத்திபிற்பற்றாமல் இருப்பானோ அவன் ஸ்ரீவிஷ்ணு பக்தன் என்று தெரிந்து கொள்வாயாக. இனிமேல் ஸ்ரீவிஷ்ணு பக்தியற்ற பாவியினுடைய இலக்கணமுஞ் சொல்கிறேன், கேட்பாயாக. எவன் பிறரது பொருளை எவ்விதத்திலாவது அபகரிப்பவனாகவும், உயிர்களைக் கொல்வோனாகவும், கடினமாகப் பேசுவோனாகவும், தீவினையால் வீணான மதம் பொருந்திச் சித்தங்கலங்கியவனாகவும் இருக்கிறானோ; அவனது இதயத்தில் அந்த ஸ்ரீஅனந்தன் வாசஞ்செய்யமாட்டான். எவன் நற்புத்தியில்லாதவனாய் பிறருடைய செல்வத்திலே பொறாமைப்படுபவனாயும், எம்பெருமானை ஆராதியாமலும் பாகவத விஷயத்தில் திரவியத்தை வினியோகப்படுத்தாமலும் இருக்கிறானோ, அந்த அதமனுடைய மனதில் ஸ்ரீஜனார்த்தனன் எழுந்தருளமாட்டான். எவன் தனது நண்பனிடத்திலும், உறவினரிடத்திலும், மனைவியிடத்திலும், மக்களிடத்திலும், பெற்றோரிடத்திலும் வஞ்சனையுள்ளவனாய், பணமே பெரிதாகப் பேராசை கொண்டவனாக இருக்கிறானோ, அந்த அதம் ஸ்ரீவிஷ்ணு பக்தனல்ல என்பதைத் தெரிந்துகொள். எவன் அயோக்கிய நினைவும் அயோக்கிய செயலிலும் நாட்டமும், அயோக்கிய சகவாசமும் பாபகர்மச் செயலும் செய்பவனாகக் கழிக்கின்றானோ அந்த மனித மிருகத்தை ஸ்ரீவிஷ்ணு பக்தன் அல்லன் என்று அறிந்து கொள்வாயாக! பரமபுருஷனான ஸ்ரீவாசுதேவனொருவனே சகல பிரபஞ்சமும் தாமுமாகத் திருமேனியுடையவனாக இருக்கிறான் என்று யாருக்கு ஸ்ரீஅனந்தனிடத்திலே சர்வ வியாபகத்துவ புத்தி ஸ்திரமாக இருக்கிறதோ, அத்தகைய மகான்களைக் கண்டால் தூரத்தில் விலகிப் போவாயாக! ஓ பத்மநாபா! வாசுதேவா, விஷ்ணுவே, தரணீதரா, அச்சுதா, சங்கு சக்கர கதாபாணி, நீ அடியேங்களுக்கு சரணமாக வேண்டும், என்று யாரால் சொல்லிக் கொண்டிருப்பார்களோ, அத்தகைய மகாபரிசுத்த புருஷர்களை நீ கண்ணெடுத்தும் பாராமல் தூரமாக ஓடிப்போவாயாக. சத்தியஞானானந்தமயனாய்ப் பிரகாசிக்கும் அந்த எம்பெருமான் எவனுடைய இதயகமலத்தில் வாசஞ்செய்து கொண்டிருப்பானோ அந்த மகாபுருஷனுடைய கடாக்ஷம் இருக்குமிடமெல்லாம் நீ செல்லத்தக்கவனல்ல, நானும் அங்கு செல்லத்தக்கவன் அல்லேன் பதறிச் சென்றால், எம்பெருமானது திருவாழியின் தேஜோவிசேஷத்தால் பதராக்கப்பட்டு விடுவோம். அந்த மகான், ஸ்ரீவைகுண்ட திவ்வியலோகத்துக்கே எழுந்தருளத்தக்கவன். ஆகையால் சூரியாதி உலகங்களைப் போல நம்முடைய லோகம் அந்தப் பரமபாகவதன் பரமபதத்துக்குச் செல்லும் வழியாகாமையினால், அவனது கடாக்ஷத்தக்கும் உரியதல்ல என்று சூரியனது மகனான யமகர்மராஜன் தன் சேவகனுக்குக் கட்டளையிட்டான். அந்த யமகிங்கரன், இந்த ரகசியத்தை எனக்கு உபதேசித்தான். பீஷ்மரே! உம்மிடம் உள்ள நட்பினால் அதை நான் உமக்குப் போதித்தேன்! என்று அந்த கலிங்கதேசத்துப் பிராமணர் எனக்குக் கூறினார். அந்த ரகசியத்தை நான் உமக்குச் சொன்னேன். இந்தச் சம்சாரப் பெருங்கடலில் ஆழ்ந்து கிடக்கும் பிராணிகளுக்கு ஸ்ரீமந்நாராயணனைவிடப் புகலிடம் வேறில்லை. எவன் எம்பெருமானிடம் ஆன்ம சமர்ப்பணம் செய்துள்ளானோ, அவன் திறத்திலே யமகிங்கரரும்; காலதண்டமும்; காலபாசமும் ஒன்றுஞ் செய்ய இயலாது. இதை நீர் நன்றாக அறிந்து கொள்வீராக என்று பீஷ்மர் நகுலருக்குப் போதித்தார். மைத்ரேயரே! நான் அதை உமக்குச் சொன்னேன். இனி யாது கேட்கவேண்டுமோ கேளும்.

—————–

8. ஆராதனை முறையும் வருணாசிரம தருமமும்

சுவாமீ! இந்த சம்சாரத்தை வெல்ல வேண்டுவோர் ஸ்ரீவிஷ்ணு பகவானை ஆராதிக்க வேண்டும் என்பது சித்தமாயிற்றல்லவா? இனிமேல் அந்த லோகநாதனை ஆராதிக்க வேண்டிய வழிமுறைகளையும், அப்படி ஆராதிக்கும் மனிதர், எந்தப் பயனை அடைவார்கள் என்பதையும் நான் அறிய விரும்புகிறேன். எனவே அவற்றை அடியேனுக்கு விளக்கியருள வேண்டும் என்று மைத்ரேயர், பராசர முனிவரிடம் வேண்டி நின்றார். பராசரரான பிரமரிஷி கூறலானார். மைத்ரேயரே! நீங்கள் இப்போது என்னைக் கேட்ட விஷயத்தை முன்பொரு காலத்தில் சகரமாமன்னன், அவுர்வ மகாரிஷியைக் கேட்டான். அதற்கு அந்த முனிவர் கொடுத்த விடையை நான் உமக்குச் சொல்லுகிறேன் கேளும். சகர மகாராசன், பிருகு மாமுனிவரின் குமாரரான அவுர்வ மகாமுனிவரை வணங்கி, ஸ்ரீவிஷ்ணுவின் ஆராதனை சம்பந்தமான காரியத்தையும், அந்த ஆராதனையால் விளையும் பயனையும் கேட்க அந்த முனிவர் அருளி செய்கிறார். சகர மாமன்னா! ஸ்ரீமந்நாராயணனை ஆராதனை செய்பவன் இந்தப் பூலோக வாழ்வுக்குரிய ஐசுவரியங்களையும் சொர்க்கலோக சம்பந்தமான இந்திராதி போகங்களையும், சொர்க்கத்திலிருப்பவரும் விரும்புகின்ற சதுர்முகாதி பதங்களையும் யாவற்றுக்கும் மேலான மோட்சானந்தத்தையும் பெறுவான். ஆராதனை செய்பவன் எதை எதை எவ்வளவுக்கெவ்வளவு விரும்புகிறானோ அதையதை அவ்வவ்வளவும் பெறுவான். இதில் ஐயமில்லை. அந்தச் சுவாமியை ஆராதிக்கும் வகையெப்படி என்றால், அதையும் சொல்கிறேன் கேட்பீராக. வர்ணாசிரமங்களுக்கு ஏற்ற ஒழுக்கமுள்ளவனாலேயே அந்தப் பரமபுருஷன் ஆராதிக்கப்படுவான். இந்த வழியேயல்லாமல் வேறுவழிகள் அவ்வெம்பெருமானுக்கு மகிழ்ச்சியளிப்பதல்ல. இந்திராதி தேவதாந்தா சம்பந்தமுடையவைகளாகத் தோன்றும் சகல யாகங்களினாலேயும் யாரும் அந்த எம்பெருமானையே பூஜிக்கின்றான். எந்த மந்திரங்களை ஜெபித்தாலும் அவனையே ஜபிக்கிறான். இதுபோலவே அன்னியரை ஹிம்சை செய்தாலும் அவனையை இம்சித்தவனாகிறான். எம்பெருமானே சகல தேவதைகளிலும் வியாபித்திருப்பவன். ஆகையால் எவனும் தனக்குள்ள வர்ணாசிரமங்களுக்குரிய நல்லொழுக்க முடையவனாயிருந்தே அந்த சுவாமியை ஆராதனை செய்ய வேண்டும். பிராமணனானாலும், வேந்தனானாலும், வைசியனானாலும், சூத்திரனானாலும் தனக்குரிய தருமத்தோடு எம்பெருமானை ஆராதிக்க வேண்டுமேயன்றி வேறுவிதமாக ஆராதித்தல் கூடாது. யார் பிறர்மீது அபவாதஞ் சொல்வதும், கோட் சொல்வதும், பொய் பேசுவதும் பிறர் நடுங்கும்படியாகப் பேசுதலுமாகிய குற்றங்களில்லாதவனோ அவனாலே தான் எம்பெருமான் ஆராதிக்கப்படுவான். எவன் பிறர் மனையாளிடத்திலும் பிறர் பொருளிடத்திலும், பிறரைத் துன்புறுத்தலும், மனம் பற்றாமல் இருப்பவனோ அப்படிப்பட்டவனாலேயே, பரமபுருஷன் மகிழ்விக்கப்படுவான். எவன் உயிரினங்களை அடிக்காமலும், துன்புறுத்தாமலும், கேடு நினைக்காமலும் இருப்பானோ, அவனால் தான் புரு÷ஷாத்தமன் மகிழ்விக்கப்படுவான். தேவர் விப்பிரர், ஆசாரியார் ஆகியவர்களுடைய பணிவிடைகளில் எவன் நிராதனாக இருப்பானோ அவனாலேதான் ஸ்ரீயப்பதி மகிழ்வடைவான். எவன் தனது மக்கள் மனைவி முதலியவரிடத்தில் அன்போடு நன்மைகளை நினைப்பதைப்போலவே, பிறரிடத்திலும் நன்மையை நினைத்திருப்பானோ, அவனே ஸ்ரீமந்நாராயணனுக்கு மகிழ்ச்சியூட்டவல்லவன்! யாருடைய மனம், ராகத் துவேஷாதிகளால் கெட்டுப் போகாமலிருக்குமோ, அந்தத் தூய்மையான மனத்தினாலேயே ஸ்ரீகோவிந்தன் மகிழ்விக்கப்படுவான், அரசனே வருணாசிரமங்களில் சாஸ்திரங்களினால் ஏற்பட்ட தருமங்கள் எவைகள் உண்டோ, அவைகளில் தவறாமல் நிற்பவன் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதிக்கத் தக்கவன் என்று அதர்வமா முனிவர் சொன்னார்.

அதைக் கேட்ட சகர மாமன்னன், முனிவரே! வர்ணாசிரமங்களையும் அவற்றிற்குரிய தருமங்களையும் நான் அறிய விரும்புகிறேன், ஆகையால் அவற்றை அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய முனிவர் தொடர்ந்து கூறலானார். அரசே! பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வகை வருணத்தாரின் தர்மங்களையும் நான் சொல்கிறேன். மனம் ஒன்றிக் கேட்பீராக. பிராமணன் தானம் கொடுக்கவும், தானம் பெறவும், யாகங்கள் செய்யவும் அதிகாரமுடையவனாய், வேத அத்தியயனத்தை விடாமற் செய்து கொண்டு நாள்தோறும் ஸ்நானத் தர்ப்பணாதிகளையும் சிரவுதஸ்மார்த்த அக்னி ஹோத்திரங்களையும் செய்து வரவேண்டும். பிழைப்புக்காகப் பிறருக்கு வைதிக கருமங்களைச் செய்வித்தலும், வேதசாஸ்திரங்களை ஓதுவித்தலும் நியாயமான நேர்மை வழிகளில் சம்பாதித்த பொருளைக் கொண்டு பிறர் கொடுக்கும் யோக்கியமான தானங்களை ஏற்றுக்கொள்வதுமாகிய செயல்களைச் செய்யலாம். பிராமணன் உயிரினங்கள் அனைத்துக்கும் நன்மையைச் செய்யவேண்டுமேயல்லாது தீமையைச் செய்யலாகாது. ஏனெனில் எல்லா உயிரினங்களிடத்தும் அன்பாக இருப்பதே பிராமணனுக்கு உயர்வு ஆகும். இந்தத் தன்மைதான் அந்தணன் என்கின்ற பெயருக்குக் காரணமாகும். பிறருடைய ரத்தினக் கற்களை, பருக்காங் கற்களைப் போல சமமான எண்ணங்கொண்டு கருதவேண்டும். ரிது காலத்திலே தன் பத்தினியோடு சேர்வது பிராமணனுக்கு நியாயமாகும். இனி க்ஷத்திரியன், தன் விருப்பப்படி பிராமணருக்குத் தானங்கள் கொடுக்கவும், யாகங்களைச் செய்யவும் வேதசாஸ்திரங்களை ஓதவும் அதிகாரமுடையவன். அவனுக்கு ஆயுதம் எடுத்துச் சேவிப்பதும், பூமியைக் காப்பதும் ஜீவனங்களாகும். ஆயினும் பூமியைக் காப்பதே முக்கியமாகும். அரசர்கள் யாவரும் பூமியைப் பரிபாலனம் செய்தே கிருத கிருத்தியராகிறார்கள். ஏனென்றால், அந்தத் தேசத்தில் நடக்கும் யாகம், தவம் முதலிய புண்ணிய கருமங்களில் அரசனுக்கும் பங்குண்டாகிறது என்பதையும் அறிவீராக. எந்த அரசன் துஷ்டரைத் தண்டித்து, நல்லோரைப் பரிபாலனஞ் செய்து, வருணாசிரம தர்மங்களை நிலைநிறுத்துகிறானோ அந்த அரசன் தனக்கு இஷ்டமான புண்ணிய உலகங்களை அடைகிறான். இனி வைசியன், பிரம்மதேவனின் பசுக்களைப் பரிபாலனஞ் செய்தலும் பயிர் செய்தலுமாகிய செயல்களைப் பிழைப்பாகக் கற்பித்தான். அவனுக்கும், வேத அத்தியயனமும் தானமும், யாகமும் செய்ய அதிகாரமுண்டு. மேலும் அவன் முந்தியவர்களைப் போல, நித்திய நைமித்திய தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டும் வரவேண்டும். சூத்திரனோ முந்தியவருக்கு ஊழியஞ் செய்து பிழைத்தலும் அவர்களுக்குச் சேவ பூதனாக இருந்து அவரால் போஷிக்கப்படவும் வேண்டும் அல்லது சரக்குகளைக் கொண்டு விற்றுவரும் பொருளினாலாவது பிழைப்பதையுமே பிழைப்புத்தொழிலாகக் கொண்டிருக்கிறேன். மேலும் அவனுக்குத் தானங்கொடுக்கவும் பாகயக்ஞவிதியினால், பிதுர்க்கிரியை முதலான கருமங்களைச் செய்யவும் அதிகாரமுண்டு. வேத வேதங்கள் ஒழிந்தவற்றை ஓதலாம். சகல வர்ணத்தாரும் தங்கள் ஊழியக்காரர் முதலானவர்களைப் போஷிப்பதற்காக வேண்டும் பொருள் நியாயமான வழிகளில் சம்பாதிக்கலாம். சந்ததிக்காகத் தத்தமது பெண்டிரிடத்தில் ருதுக்காலங்களில் சேரலாம். எல்லா வருணத்தாருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய குணங்களாவன.

சகல பூதங்களிடமும் தயை, பொறுமை, கர்வமில்லாமை சத்தியம், சித்தி, வீண் வருத்தமின்மை, மங்களச் செய்கை, இனிமையாகப் பேசுதல், சிநேகிக்கும் குணம், வீணாசையின்மை, லோபியாகாமை அழுக்காறின்மை ஆகியவை முக்கியமாகும். பிரம்மச்சரியம் முதலிய ஆசிரமங்களுக்கும் இந்தத் தருமங்கள் பொதுவானவையாகும். ஆயினும் பிராமணாதிகளுக்கு ஆபத்தருமங்களைச் சொல்கிறேன் கேட்பீராக. பிராமணன் அரசனது கருமத்தையும் க்ஷத்திரியன் வைசியரது கருமத்தையும், வைசியர் சூத்திரரது கருமத்தையும் செய்யலாம். பிராமணர், க்ஷத்திரியர் ஆகிய இருதரத்தாரும் சூத்திரரது கருமத்தைச் செய்யலாகாது. பிராமணர், க்ஷத்திரியர் ஆகிய இருதரத்தாரும் சக்தியுடையோராக இருந்தால் கீழோருடைய கருமங்களை விட வேண்டும். ஆபத்தில் சூத்திர கருமம் தவிர மற்றையக் கீழான தருமங்களைச் செய்யலாம். இவ்விதமாக அல்லாமல் அவனவன் நினைப்பது போல் அந்தந்தத் தொழில்களைச் செய்து சாதி சங்கரஞ் செய்யலாகாது. அரசே! வருண தருமங்களை இப்போது நான் உனக்குச் சொன்னேன், இனிமேல் ஆசிரம தருமங்களை சொல்கிறேன். கேட்பாயாக என்று அவுர்வ மகாமுனிவர் சகர மாமன்னனிடம் கூறலானார்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம்—-இரண்டாம் பாகம் —

February 28, 2021

9. சிம்சுமார சக்கரம்
10. சூரியனின் ரதம்
11. சூரியனின் சிறப்பு செயல்கள்
12. சந்திர மண்டலம்
13. ஜடபரதர் உபாக்கியானம்
14. பரம்பொருள் தெளிவு
15. ருபுநித உபாக்கியானம்
16. நிதாகரும் ஜடபரதரும் முக்தியடைந்தது

———————–

9. சிம்சுமார சக்கரம்

மைத்ரேயரே! ஸ்ரீஹரி பகவானின் சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலத் தோன்றுகின்ற நட்சத்திரக் கூட்டமாகிய ரூபத்தின் வால்பகுதியில் துருவன் இருக்கிறான். அங்கிருந்து துருவன் சுற்றிக்கொண்டு, சந்திர சூரியாதி கிரகங்களையெல்லாம் சுற்றித் திருப்ப அவைகளும் சக்கரத்தைப் போல அவனைச் சுற்றி சுழல்கின்றன. சந்திர சூர்யர்களும் மற்றுமுள்ள கிரகங்களும், நட்சத்திரங்களும் காற்றின் வடிவமான கயிறுகளினால் கட்டப்பட்டு துருவனிடம் இணைந்துள்ளன. ஆகாயத்திலிருக்கும் நட்சத்திரக்கூட்டம் யாவும், சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலக் காணப்படும். அதன் இதயத்திலே சகல தேஜோலோகங்களுக்கும் ஆதார பூதனான ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளியிருக்கிறான். உத்தானபாதனுடைய மகனான துருவன் அந்த உலகநாதனை ஆராதித்து, நட்சத்திரமயமான அந்தச் சிம்சுமாரத்தின் வாலினிடத்தில் இருக்கை பெற்றான். அந்த சிம்சுமாரத்திற்கு ஆதாரம் ஸ்ரீயப்பதியேயாகும். அந்தச் சிம்சுமாரமோ துருவனுக்கு ஆதாரம். அந்தத் துருவனோ, சூரியனுக்கு ஆதாரம், அந்த சூரியனோ தேவ, மனுஷ்யாதி சகலத்துக்கும் ஆதாரம். அது எவ்விதமெனில் சூரியன் ரசவத்தான ஜகங்களை எட்டு மாதங்களில் இழுத்துப் பொழிய அந்த வர்ஷத்தினாலே சகல உயிரினங்களுக்கும் உபயோகமான உணவுகள் உண்டாகின்றன. அன்னத்தாலே தான் சகலமும் உண்டாகி வளர்கின்றன. மேலும் சூரியன் தனது உக்கிரமான கிரணங்களினால், லோகத்திலிருந்து தண்ணீரை ஆகர்ஷித்து, சந்திரனிடம் பெய்ய, அந்தச் சந்திரனும் வாயு நாடி மயங்களான வழிகளினால் புகையும் காற்றும் நெருப்புமான வடிவுள்ள மேகங்களிலே விட, அந்த மேகங்களிலிருந்து நீரானது உலகில் பொழிகிறது. அந்த மேகங்களிலிருந்து தண்ணீர் நழுவி விழாமையினால் அம்மேகங்களுக்கு அப்பிரங்கள் என்று பெயர் வந்தது. ஆனாலும் காற்றினால் அம்மேகங்கள் அலைக்கப்படும் காலத்தால் உண்டான பரிபாகத்தினால் தண்ணீர் நிர்மலமாகி விழுகிறது. ஆறுகள், பூமி, கடல்கள், பிராணிகள் ஆகியவற்றிலுள்ள நால்வகை ஜலத்தையும் கவர்ந்துதான் சூரியன் வர்ஷிக்கிறான். மேலும் ஆகாய கங்கையின் ஜலத்தைத் தனது கிரணங்களால் கொண்டு, மேகங்களிற் சேர்க்காமலே வர்ஷிப்பதும் உண்டு. அந்தத் தூய்மையான நீர் படுவதனால் மனிதனது பாவந்தீரும். அவன் நரகமடைவதில்லை. அந்த ஸ்நானம் திவ்யஸ்நானம் என்று வழங்கப்படும்.

முனிவரே! சூரியன் காணப்படும் போதே எந்த நீர் மேகமின்றி ஆகாயத்திலிருந்து விழுகிறதோ அதுதான் ஆகாய கங்கையின் நீர் என்று சொல்லப்படும். அன்றியும் கிருத்திகை முதலான ஒற்றைப்பட்ட நட்சத்திரங்களிலே சூரியன் விளங்கிக் கொண்டேயிருக்க, ஆகாயத்திலிருந்து விழுகிற நீரானது, திக்கஜங்களினாலே பொழியப்படும். ஆகாய கங்கா ஜலமாகச் சொல்லப்படும், ரோகிணி முதலிய இரட்டைப்பட்ட நட்சத்திரங்களிலே சூரியன் விளங்கிக் கொண்டேயிருக்க, வானத்திலிருந்து மேகமின்றிப் பொழியும் தண்ணீரானது சூரியன் பெய்யும் ஆகாய கங்கா ஜலமாகக் கூறப்படும். எந்தத் தண்ணீரானது மேகங்களினாலே வர்ஷிக்கப்படுகின்றதோ, அது பிராணிகளின் பிழைப்புக்காக ஓஷதிகளைப் போஷித்து அமுதமென்று சொல்லப்படும். இவ்விதமாக மழையினாலே ஓஷதிகள் பயன் கொடுக்குமளவும் போஷிக்கப்பட்டனவாகி நிற்க, அவற்றைக் கொண்டு, சாஸ்திர நோக்கமுடைய மனிதர்கள் விதிப்படிப் பலவகைப்பட்ட யக்ஞங்களைச் செய்து, தேவதைகளைத் திருப்தி செய்கிறார்கள். இவ்விதமாக யாகங்களும், வேதங்களும், பிராமணாதி ஜாதிகளும், தேவதைகளும், பறவைகளுமான இந்த உலகம் எல்லாம் மழையினாலேயே காக்கப்படுகின்றன. ஏனெனில் உணவை விளைவிப்பதே மழையல்லவா? அந்த மழையை உண்டாக்குவோன் சூரியன்! அந்த சூரியனுக்கு ஆதாரமானவன் துருவன்! அந்த துருவனுக்கு ஆதாரமாக இருப்பது சிம்சுமார சக்கரம்! அந்த சக்கரத்துக்கு ஆதாரம் ஸ்ரீமந்நாராயணன். இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணன் அந்தச் சிம்சுமார சக்கரத்தின் இதயத்தில் இருந்து கொண்டு, சகல பிராணிகளையும் தரிக்கும்படித் தாங்கிக் கொண்டிருக்கிறான்.

—————–

10. சூரியனின் ரதம்

மைத்ரேயரே! சூரியன் சஞ்சாரஞ் செய்யும் தட்சிணாயன உத்தராயண எல்லைகளின் நடுவாகிய கிராந்தி விருத்தங்கள் நூற்றியெண்பத்து மூன்று. அம்மண்டலங்களிலேதான் சூரியன் உத்தராயணத்தில் ஏறுவதும், தட்சிணாயனத்தில் இறங்குவதுமான முந்நூற்று அறுபத்தாறு கதிகளினால் ஒரு வருஷத்தைக் கழிக்கிறான். சூரியனது தேரானது சூரியர்களாலும், ரிஷிகளாலும், கந்தர்வராலும், அப்சரசுகளாலும், இயக்கர்களாலும், சர்ப்பங்களாலும் ஏற்றப்பட்டிருக்கும். அந்த இரதத்தில் சித்திரை மாதத்தில் தாதா என்ற சூரியனும், கிரதஸ்தலை என்ற அப்சரசும், புலஸ்தியர் என்ற முனிவரும், வாசுகி என்ற சர்ப்பமும், ரதபிருத்து என்ற இயக்கனும், ஹேதி என்ற அரக்கனும், தும்புரு என்ற கந்தர்வனும் வசிப்பார்கள். வைகாசி மாதத்தில் அர்யமா என்ற சூரியனும், புலகன் என்ற முனிவரும், புஞ்சிகஸ்தலை என்ற அப்சரசும், ரதவுஜா என்ற யக்ஷனும், கச்சவீரன் என்ற சர்ப்பமும், நாரதன் என்ற கந்தர்வனும், பிரஹேதி என்ற ராட்சனும் வசிப்பார்கள். ஆனி மாதத்தில் மித்திரன் என்ற சூரியனும், அத்திரி என்ற முனிவரும், தக்ஷகன் என்ற சர்ப்பமும், பவுருஷேயன் என்ற அரக்கனும், ஹாஹா என்ற கந்தர்வனும், ரதஸ்வனன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். ஆடிமாதத்தில் வருணன் என்ற சூரியனும், வசிஷ்டர் என்ற முனிவரும் சகஜநியை என்ற அப்சரசும், ஹூ ஹூ என்ற கந்தர்வனும், நாகம் என்ற சர்ப்பமும், ரதன் என்ற ராக்ஷசனும், சித்திரன் என்னும் யக்ஷனும் வசிப்பார்கள். ஆவணி மாதத்தில் இந்திரன் என்ற சூரியனும், விசுவாவசு என்ற கந்தர்வனும், சுரோதா என்ற யக்ஷனும், ஏலாபுத்திரன் என்ற சர்ப்பமும், அங்கிரசு என்ற ரிஷியும், பிரமலோசை என்ற அப்சரஸும், சர்ப்பி என்ற ராக்ஷசனும் இருப்பார்கள்.

புரட்டாசியில், விவசுவான் என்ற சூரியனும், பிருகு என்ற முனிவரும், அனுமலோசா என்ற அப்சரசும், சங்கபாலன் என்ற சர்ப்பமும், வியாக்கிரன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். ஐப்பசியில் பூஷா என்ற சூரியனும் வசுருசி என்ற கந்தர்வனும், வாதன் என்ற ராட்சசனும், தனஞ்செயன் என்ற சர்ப்பமும், கவுதமர் என்ற முனிவரும், கிருதாசி என்ற அப்சரசும், சுஷேணன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். கார்த்திகையில் பர்ச்சனியன் என்ற சூரியனும்; விசுவாவசு என்ற கந்தர்வனும், பரத்துவாஜர் என்ற முனிவரும், ஐராவதம் என்ற சர்ப்பமும், விசுவாசி என்ற அப்சரஸும், சேனஜித்து என்ற யக்ஷனும், ஆப என்ற ராக்ஷசனும் வசிப்பார்கள். மார்கழியில் அம்சன் என்ற சூரியனும், காசியபர் என்ற முனிவரும், தார்க்ஷயன் என்ற யக்ஷனும், மகாபத்மன் என்ற சர்ப்பமும், வித்தியுத்து என்ற ராக்ஷசனும், சித்திரசேனன் என்ற கந்தர்வனும், ஊர்வசி என்ற தேவமங்கையும் இருப்பார்கள். தை மாதத்தில் பகன் என்ற சூரியனும், கிருது என்ற முனிவனும், ஊர்ணாயு என்னும் கந்தர்வனும், ஸ்பூர்ஜன் என்ற அரக்கனும், கார்க்கோடகன் என்ற சர்ப்பமும், அரிஷ்டநேமி என்ற யக்ஷனும், பூர்வசித்தி என்ற தேவமங்கையும் வசிப்பார்கள். மாசிமாதத்தில் துவஷ்டா என்ற சூரியனும், ஜமதக்னி என்ற முனிவனும், திலோத்தமை என்ற தேவதாசியும், கம்பளன் என்ற சர்ப்பமும், பிரம்மா பேதன் என்ற அரக்கனும், இருதசித்து என்ற யக்ஷனும், திருதராஷ்டிரன் என்ற கந்தர்வனும் வசிப்பார்கள். பங்குனியில் விஷ்ணு என்ற சூரியனும், விசுவாமித்திரர் என்ற முனிவரும், ரம்பை என்ற தேவமங்கையும் சூரியவர்ச்சசு என்ற கந்தர்வனும், சத்தியசித்து என்னும் யக்ஷனும், அசுவதரன் என்ற சர்ப்பமும், யக்ஞாபேதன் என்ற அரக்கனும் வாசஞ்செய்வார்கள். மைத்ரேயரே! இவ்விதமாக ஒவ்வொரு மாதமும் இவர்கள் அனைவரும் ஸ்ரீவிஷ்ணு சக்தியினால் வியாபிக்கப்பட்டு உலகத்தை ஒளிபெறச் செய்வதற்காக சூரிய ரதத்தில் இருப்பார்கள்; இனி இவர்களுடைய செயல்களைக் கேளுங்கள். சூரியமண்டலத்தில் பிரகாசிக்கும் சூரியனுக்குத் தேஜஸ் விருத்தியாகும்படி ரிஷிகள் துதிக்கிறார்கள். கந்தர்வர்கள் கானமிசைக்கிறார்கள். தேவமங்கையர் நடனமாடுகிறார்கள். அரக்கர்கள் சூரியனுக்குப் பின் செல்கிறார்கள். சர்ப்பங்கள் சுமக்கின்றன. இயக்கர் கடிவாள முதலானவற்றைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள். இவர்களைத் தவிர வாலகிலியர்கள் என்ற முனிவர்கள் எப்போதும் சூரியனைச் சூழ்ந்து உபாசனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவ்விதமாகச் சூரியமண்டலத்தில் வாசஞ்செய்கிற ஏழு கணங்களும் அந்தந்தச் சமயங்களிலே பனி வெப்பம் தண்ணீர் ஆகியவற்றைப் பொழிவதற்குக் காரணமாக இருக்கின்றன.

——————–

11. சூரியனின் சிறப்பு செயல்கள்

பராசர முனிவரே! சூரிய மண்டலத்தில் பனி, வெப்பம், மழை இவற்றிற்குக் காரணமாக ஏழு கணங்கள் இருக்கின்றன என்றும் கந்தர்வர் யக்ஷர் ராக்ஷசர் முனிவர் வாலகிலியர் அப்சரசுகர் நாகர் ஆகியோரது தொழில்கள் இன்னதின்னது என்றும் கூறியருளினீர்கள்! ஆயினும் சூரியனுடைய தொழில் இன்னது என்பதைச் சொல்லவில்லையே! கணங்களே பனி, வெப்பம், தண்ணீர் ஆகியவற்றைப் பொழியுமானால் சூரியனுடைய தொழில்தான் என்ன? சூரியனால் மழை உண்டாகிறது என்று நீங்கள் முன்பு சொன்னீர்கள். அன்றியும் சூரியன் உதயமாகி உச்சியில் வந்து அஸ்தமனமாகிறான் என்று ஜனங்கள் சொல்கிறார்கள். இத்தகைய செயல்கள் இந்த ஏழு கணங்களுக்கும் பொதுவாக இருக்குமானால், சூரியனுக்குச் சிறப்பு யாது? அதைச்சொல்ல வேண்டும் என்று மைத்ரேயர் கேட்டார். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! ரிக்கு, யஜுர், சாமம் என்ற மூன்று வேதவடிவாகிய ஸ்ரீவிஷ்ணு சக்தியே சூரிய ரூபமாகப் பிரகாசித்துக் கொண்டு, காய்வதுமல்லாமல், உலகத்தின் பாபத்தையும் போக்கிக் கொண்டு இருப்பதனாலே, அந்த மண்டலத்தில் வாசஞ்செய்கிற ஆதித்தன் முதலிய கணங்கள் ஏழிலும் அந்த ஆதித்தனே முக்கியமானவன். அந்தந்த மாதத்தில் வருகிற சூரியனிடத்தில் மூன்று வேதமயமான ஸ்ரீவிஷ்ணு சக்தியானது பிரவேசம் செய்து விளங்குகிறது. விடியற்காலத்தில் இரிக்குகளும், மத்தியான காலத்தில் யஜுசுகளும், சாயங்காலத்தில் சாமங்களும், சூரிய சரீரகனாய் சூரியனுக்குள்ளே விளங்குகின்ற ஸ்ரீவிஷ்ணுவைத் துதிக்கின்றன. இந்த ரிக்கு முதலிய மூன்று வேதங்களும் ஸ்ரீவிஷ்ணுவுக்குச் சரீரமாக இருக்கின்றன. ஸ்ரீவிஷ்ணு சக்தியானது சூரியனுக்குள்ளே மட்டுமின்றி பிரமாதிகளுக்குள்ளும் பிரவேசித்து அந்தந்தக் காரியங்களை நடத்துகிறது. படைப்பின் துவக்கத்தில் ரிக்கு வேதமயமான பிரம்மாவாகவும், ஸ்திதியிலே, யஜுர் வேதமயமான ஸ்ரீவிஷ்ணுவாகவும் முடிவில் சாமவேதமயமான ருத்திரனாகவும், ஸ்ரீமந்நாராயணனுடைய சக்தியானது பிரகாசிக்கின்றது. ஆகையால் ருத்திர சம்பந்தமான சாமத்துவனியானது அசுத்தமென்று எண்ணப்படுகிறது. இவ்வாறு வேதத்திரய ரூபமான ஸ்ரீவிஷ்ணுவினுடைய சுத்த சாத்வீக சக்தியானது, தனது சரீரமாக இருக்கும் ஏழு கணங்களுக்குள்ளே சூரியனிடத்திலே சிறப்பாகப் பிரவேசித்திருப்பதால் சூரியனே சிறப்பாகப் பிரகாசித்துக் கொண்டு உலகத்தில் உண்டான அந்தகாரங்களையெல்லாம் நாசம் செய்கிறான்.

இவ்விதமாக வேதமயமான ஸ்ரீவிஷ்ணுசக்தியின் அணுப்பிரவேசாதி அதிசயத்தினால் சூரியன் பிரதானமானதைப் பற்றியே அந்த சூரியனை முனிவர்கள் துதித்துக் கொண்டும் கந்தர்வர்கள் பாடிக்கொண்டும் அரம்பையர்கள் ஆட்டத்தினால் மகிழ்வித்துக் கொண்டும் இராக்கதர் பின் தொடர்ந்து கொண்டும், நாகர்கள் சுமந்து கொண்டும், வாலகிலியர்கள் உபாசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அந்த மண்டலத்திலே சக்தி ரூபத்தைத் தரித்துக் கொண்டுள்ள ஸ்ரீவிஷ்ணுபகவான் சப்தகணங்களைப் போலத் தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை. அந்தச் சப்தகணமும் ஸ்ரீவிஷ்ணுவைவிட வேறுபட்டவைகளே அணுப்பிரவேசம் எப்படியெனில் ஒரு ஸ்தம்பத்தில் இருக்கிற கண்ணாடிக்கு அருகில் எவனெவன் வருகிறானோ, அவனெல்லாம் தனது சாயலை அந்தக் கண்ணாடியில் காணும்படி அதன் காந்தியை அடைவதைப் போல் அந்த மண்டலத்திலே நிலைத்திருக்கிற ஸ்ரீவிஷ்ணுசக்தியை அங்கே மாதந்தோறும் வருகிற சூரியனும் அடைகிறான். அத்தகைய சூரியன் பிதுர்க்கள் தேவதைகள் மானிடர் முதலியோரைத் திருப்தியடையச் செய்வது எப்படியெனில் சூரியகிரண பிரபாவத்தினாலே நிறைக்கப்பட்டு அமிர்தமயமாக இருக்கும் சந்திரனைக் கிருஷ்ண பக்ஷத்திலே அக்னி முதலிய தேவதைகள் பானஞ்செய்து மிகுந்துள்ள இரண்டு கலைகளுள் ஒன்றை அமாவாசையில் பிதுருக்கள் பானஞ்செய்கிறார்கள். இதுதான் அவர்கள் திருப்தியடையும் விதமாகும். பூமியிலிருந்து தனது கிரணங்களினால் இழுக்கப்படும் ரசத்தை மறுபடியும் மழையாகப் பொழிந்து பயிர்களை விருத்தி செய்து மனுஷ்யாதிகளை சூரியன் திருப்தி செய்கிறான் என்பதை முன்னமே சொன்னேன். இவ்விதமாக சூரியபகவான் தேவர்களுக்கு பக்ஷத்திருப்தியும் பிதுர்களுக்கு மாசத் திருப்தியும் மனுஷ்யாதிகளுக்குத் தினத்திருப்தியும் செய்து வருகிறான்.

——————-

12. சந்திர மண்டலம்

மைத்ரேயரே! சந்திரனுடைய தேரானது மூன்று சக்கரங்களைக் கொண்டது. முல்லைப்பூ வர்ணமுடைய பத்துக்குதிரைகள் இடப்பக்க, வலப்பக்கங்களில் கட்டப்பட்டது. துருவனை ஆதாரமாகக் கொண்டு வேகமாகச் செல்லக்கூடியது. அந்த தேரினால் சந்திரன் நாகவீதி முதலிய வீதிகள் அமைந்துள்ள நட்சத்திரங்களிலே சஞ்சரிக்க வருகிறான். சூரிய கிரணங்களுக்கு எப்படியோ அப்படியே சந்திரனுக்கும், உதயாதி காலங்களிலே குறைவும் வளர்ச்சியும் உண்டு. சூரிய ரதத்திலுள்ள குதிரைகளைப் போல ஜலத்திற் பிறந்த சந்திர ரதத்தின் அசுவங்களும், கல்பத்தின் ஆரம்பத்தில் ஒரே முறை ரதத்தில் கட்டப்பட்டு, அதன் முடிவு வரை இருப்பன. தேவதைகளாலே பானஞ்செய்யப்பட்டு, அதன் ஒரு கலையோடு மிகுந்துள்ள அந்தச் சந்திரனைச் சூரியன் ஒரு கிரணத்தால் முன்பு தேவர்கள் பானஞ்செய்ததைப் போல; ஒவ்வொரு நாளைக்கு ஒரு கலையாக வளர்த்து நிறைக்கின்றான். இவ்விதம் அறை மாதத்தில் சந்திரனிடம் நிறைக்கப்படுகின்ற அமிர்தத்தை முப்பத்து மூவாயிரத்து முந்நூற்று முப்பத்தி மூன்று அமுதபானர்களாகிய தேவதைகள் பானம் செய்கின்றனர். இவ்விதம் தேவர்களால் பானஞ்செய்யப்பட்டு, இரண்டு கலைகள் மிகுந்தவனாய்ச் சந்திரன் சூரிய கிரணங்களில் மறைவதால், சூரிய மண்டலத்தில் பிரவேசித்தவன் போலாகி அமை என்ற கிரணத்தில் வாசஞ்செய்கிறான். அதனால் அந்த நாள் அமாவாசை என்று வழங்கப்படுகிறது. அந்த நாள் இரவு பகல்களில் சந்திரன் முந்தித் தண்ணீரிலும் பிந்திக்கொடி முதலியவைகளிலும் இருந்து, பிறகு சூரியனை அடைகிறான். ஆகையால் அந்த நாளில் எவனாகிலும் செடி கொடி முதலியவற்றைச் சேதித்தாலும் இலையை உதிர்த்தாலும் பிரம்மஹத்தி செய்த பாவத்தை அடைவான். கலாரூபமான பதினைந்தாவது பங்கினாலே, சந்திரன் சிறிது மிகுந்திருக்கிற அமாவாசையின் அபராண்ணத்திலே குறைந்துள்ள சந்திரனைப் பிதுர்க்கள் அமிர்த பானத்துக்காக உபாசித்து, அமிர்தமயமான அந்தப் பதினைந்தாம் கலையைப் பானஞ்செய்கிறார்கள். சவுமியர் என்றும், பர்ஹிஷதர் என்றும், அக்னிஷ்வாத்தர் என்றும் மூன்று பிரிவினராக இருக்கிறார்கள். அந்தப் பிதுர்க்கள் அமாவாசையில் சந்திர கிரணத்தினின்று ஒழுகும் அமிர்தத்தையுண்டு மேன்மையான மாசத் திருப்தி அடைகிறார்கள். இவ்விதமாகச் சந்திரன் அமிர்தமயமாயும், குளிர்ச்சியுள்ளவையுமான, ஜல பரமாணுக்களாலே சுக்கிலபக்ஷத்தில் தேவதைகளையும், கிருஷ்ண பக்ஷத்தில் பிதுர்க்களையும் திருப்தி செய்து புல் பூண்டு செடி கொடிகளை உண்டாக்குவதாலும், நிலவால் மகிழ்ச்சியூட்டுவதாலும் மனுஷ்ய மிருக பக்ஷிசாதிகளைத் திருப்தி செய்கிறான்.

இந்தச் சந்திரனது மகனான புதனுடைய தேரானது, வாயு, அக்கினி இவற்றினால் தோன்றியதாய், பூமியிற் பிறந்த பொன் நிறமான எட்டுக் குதிரைகளுடன் கூடியதாய், வரூதம் என்ற முன்தாங்கும் உறுப்பும், அனுகர்ஷம் என்ற அடிப்பகுதியைத் தாங்கும் உறுப்பும், பதாகை முதலிய அவயவமும் கொண்டதாகும். சுக்கிரனுடைய ரதமும் இத்தகைய அவயவ அலங்காரங்களைக் கொண்டதாய் எட்டுக்குதிரைகளைக் கட்டியதாய் மிகப்பெரியதாய், பொன்மயமானதாய் விளங்கும் அங்காரகனுடைய இரதமும் பெரியது. அது அக்கினியிற் பிறந்து பத்மராகம் போலச் சிவந்த எட்டு குதிரைகள் பிணைக்கப்பட்டது. பிரகஸ்பதியின் தேரும் எட்டுக் குதிரைகள் பூட்டியதாகும். அந்தத் தேரிலே ஏறிய குருபகவான், ஒவ்வொரு வருஷம் இருக்கிறார். சனியானவன் ஆகாயத்தில் பிறந்த சித்திர வர்ணமான ரதத்தில் ஏறி, மெல்லச் சஞ்சரிக்கின்றான். ராகுவின் தேரானது சிறிது வெண்ணிறமுடையதாய், வண்டின் நிறமுடைய எட்டுக்குதிரைகள் பூட்டியதாய் அமைந்துள்ளது. இத்தகைய ரதத்தில் ஏறிய ராகுவானவன் சூரியனுக்கு மேலே அந்தகாரமயமான மூன்றாவது ஸ்தானத்தில் சஞ்சரித்துக் கொண்டு, பருவகாலங்களில் அங்கிருந்து திரும்பி பூமி முதலியவற்றின் சாயைகளிலே புகுந்து சூரிய சந்திரர்களை மறைத்து கிரகணங்களை ஏற்படுத்துகிறான். அதுபோலவே கேதுவின் ரதத்தில் புகை வர்ணமுடைய எட்டுக்குதிரைகள் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கேதுவும் ராகுவைப் போலக் கிரகணங்களை உண்டாக்குவான். இவ்விதமாக சூரியன் முதலிய நவகிரகங்களின் ரதங்கள் அமைந்திருக்கும் இந்தக் கிரக நட்சத்திர மண்டலங்கள் யாவுமே, வாயுரூபமான கயிறுகளால் துருவனோடு இணைக்கப்பட்டு தத்தமது சாரத்தில் சுழல்கின்றன. ஆகாயத்தில் உண்டான மண்டலங்கள் அனைத்தும், அத்தனைக் காற்றுக் கயிறுகளினாலே கட்டப்பட்டு, செக்கை இழுக்கும் எருதுகள் தாமாகச் சுற்றுவ÷õடு செக்கையும் சுற்றுவிப்பதுபோல், தாமும் சுற்றிக்கொண்டு தங்களுக்கு ஆதாரமான துருவனையும் சுற்றுவிக்கின்றன. மேலும் இந்தக் கிரகங்கள் யாவும் காற்றின் வடிவான சக்கரத்தினால் தினந்தோறும் ஏவப்பட்டு, கொள்ளிக்கட்டை சுழல்வது சக்கரம் சுழல்வதாகக் காணப்படுவதைப் போல், சுழல்கின்றன. ஆகையால் இந்தக் காற்றுக்குப் பிரவகம் என்ற பெயர் உண்டாயிற்று. இது நிற்க; முன்பு நான் சிம்சுமாரா திருதியான துருவாதார ரூபம் என்று சொன்னேன் அல்லவா? அதையுங் கூறுகிறேன், கேளுங்கள்.

அந்த ஸ்வரூபத்தைக் காண்பவன் அன்றையப் பகலில் செய்த பாவத்திலிருந்து விடுபடுவதுமன்றி, அந்தச் சிம்சுமார சக்கரத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளனவோ, அத்தனை ஆண்டுகள் சுகமாக ஜீவித்திருப்பான். நட்சத்திர ரூபிகளான சில தேவதைகள் அதன் அவயவமாய் இருப்பார்கள். அந்தச் சிம்சுமாரத்துக்கு உத்தானபாதன் மேல் வாயிலிலும், யக்ஞன் கீழ்வாயிலிலும், தருமன் சிரத்திலும், நாராயணன் இதயத்திலும், அசுவினி தேவதைகள் கால்களிலும், வருணனும் அயர்மாவும் பின் தொடைகளிலும், சம்வச்சரம் குறியிலும், மித்திரன் அபானத்திலும், அக்கினியும் மகேந்திரனும் காசிபனும் துருவனும் முறையே வாலிலும் உள்ளனர். இந்த அக்கினி முதலிய நான்கு நட்சத்திரங்களும் மற்ற அவயவங்களிலுள்ள நட்சத்திரங்களைப் போல் அஸ்தமனமாகாமல் எப்போதும் காணப்படுவன. மைத்ரேயரே! நீங்கள் கேட்டது போல, பூமியின் இருப்பையும், அதில் மலைகள், கடல்கள், தேசங்கள் ஆகியவற்றின் அமைப்பையும், ஆகாயத்திலுள்ள கிரக நட்சத்திரங்களின் இருப்பையும் கூடியவரையில் சொன்னேன். மேலும் அதன் சுருக்கத்தைச் சொல்கிறேன், கேட்பீராக. ஸ்ரீவிஷ்ணுவின் சரீரமான ஜலம் யாதுண்டோ, அதிலிருந்து தாமரைப் பூவைப் போன்ற பூமியானது பருவதசமுத்திரங்களுடன் உண்டாயிற்று. ஆகையால் இந்தப் பூமியும் அவருடைய சரீரமேயாகும்! இதுமட்டுமல்ல சூரியாதி ஜோதிகளும் பூமி முதலிய உலகங்களும், வனங்களும், மலைகளும், திசைகளும், நதிகளும், ஆழக்கடல்களும் என்றும் இருக்கின்றதென்று சொல்லத்தக்க சித்தும் மாறுவதனாலே இல்லையென்று சொல்லத்தக்க அசித்தும் யாவுமே அந்த ஸ்ரீவிஷ்ணுவின் சரீரங்களாக இருக்கின்றன. ஞானமே வடிவான, சகல ஜீவன்களையும் சரீரமாகக் கொண்டுள்ள அந்த ஸ்ரீபகவானுக்கும் ஞானமே சுத்தஸ்வரூபமேயல்லது தேவமனுஷ்யாதிரூபமன்று. ஆகையால் பர்வதசமுத்திர பூமியாதி ரூபபேதங்கள் எல்லாம் ஜீவன்களுடைய கர்ம வசத்திலுண்டான ஞானபேதத்தைப் பற்றியவைகளாகும். எப்போது இப்படிப்பட்ட ஞானமயமான தனது சொரூபம் சுத்தமானதாகத் தோன்றும், சகலமும் கர்மமூலமான நினைப்பின் பேதத்தினாலே வெவ்வேறு விதமாகத் தோன்றுவதாகுமேயன்றி, இயல்பாகவே அவ்வவ் வஸ்துக்களில் அந்தந்த பேதங்கள் இருக்கமாட்டாது ஞானமயமான பொருளே நிலையானதாகையால் அஸ்தி (இருக்கிறது) என்று உள்பொருளாய்க் கூறப்படும். ஞானம் இல்லாத ஜடம் யாவும் மாறிப் போவனவாகையால் நாஸ்தி (இல்லை) என்று இல்பொருளாய்ச் சொல்லப்படும். ஏனெனில் ஆன்மஸ்வரூபத்தைக் காட்டிலும் ஆதியும், மத்தியமும் முடிவும் இல்லாததும் எப்போதும் மாறாமல் ஒரே ரூபத்தையுடையதுமான பொருள் எங்கே இருக்கிறது? எது அடிக்கடி வேறுபாட்டை அடைகிறதோ அதில் உண்மை எங்கே இருக்கிறது? இவற்றை உதாரணப்படுத்திக் காட்டுகிறேன்.

முதலில் பிருத்வியானது மண் உருண்டையாகி, பிறகு குடமாகி, அது உடையக் கபாலமாகி, அந்தக் கபாலம் துண்டு துண்டாகிச் சூரணமாகி, அப்புறம் துகளாகி அதற்குப் பிறகு அணுவாக மாறுகின்றது. இவையெல்லாம் ஆத்ம ஸ்வரூப யதார்த்தம் தெரியாமல் தேவமனுஷ்யாதி ரூபமாக நிச்சயித்துக் கொண்டவர்களுக்குத் தங்களால் அனுபவிக்கப்படுகின்ற வெவ்வேறு பொருளாகக் காணப்படுகின்றன அல்லவா? இவற்றில் எதை வஸ்துவென்று சொல்லலாம். ஞானகாரமான ஆன்ம வஸ்துவைத் தவிர வேறு எதுவுமே இருக்கிறது என்று சொல்லத்தக்க வஸ்துவல்ல. அந்த ஞானகாரமோ அவரவருடைய கர்ம பேதத்தினால் மாறுபட்ட சித்தமுடைய ஜனங்களுக்கு தேவாதி சரீரப் பிரவேசத்தால் அந்தந்த ரூபமாகத் தோற்றமளிக்கிறது. ஆன்ம ஸ்வரூபமானது இயல்பில் கர்மமில்லாததும், அதனால் வருகின்ற பிரகிருதி சம்பந்தமான மலமில்லாததும், அதனால் உண்டாகத்தக்கதான சோஹ மோஹலோ பாதி தோஷ சம்பந்தம் இல்லாதுடம் தேய்வு வளர்ச்சி முதலியன இல்லாமையால் ஒரே ரூபமானதுமாய் இருக்கிறது. இத்தகைய ஞானரூபமான ஆத்ம ஸ்வரூபமே ஸ்ரீவாசுதேவனுடைய சரீரம்! ஆகையால் அது தன்மயமாக இருக்கின்றது. அந்த ஸ்ரீவாசுதேவராத்மகம் ஆகாத பொருள் ஒன்றுமில்லை. மைத்ரேயரே! இந்தவிதமாக ஞானஸ்வரூபம் ஒன்றே நித்தியமாக இருக்கிறது. ஆகையால் சத்திய பதார்த்தம் என்றும் மற்றது மாறி மாறி அழிவதனாலே அசத்தியம் என்றும் உண்மையை உமக்குச் சொன்னேன். சொல்லாமல் மட்டுமே இருக்கிறது என்று சொல்லத்தக்க நானாவித ஸ்வரூபமுடைய வஸ்துக்கள் யாவும் கர்மாதீனமாகவே இருக்கின்றன. அந்தக் கர்ம ஸ்வரூபம் யக்ஞம் என்றும் பசு என்றும், இரித்விக்குள் என்றும் அக்கினி என்றும், சோமம் என்றும், அரை என்றும் சொர்க்காபேஷை என்றும்! இப்படிப் பலவகையில் கர்ம மார்க்கத்தில் காணப்பட்டவைகளாகும். இவைகளுக்குப் பயன் புவர்லோகம் முதலிய உலகங்களேயாகும். நான் உம்மிடம் சொல்லி விளக்கிய லோகச்சிறப்புகள் எத்தனையுண்டோ அத்தனையிலும் கர்ம வசியனாக இருக்கும். புருஷன் மாறி மாறிப் போய் வந்து கொண்டிருக்கிறான். ஆகையால் இந்தக்கர்ம மார்க்கப்பயன்களிலே ருசி வைக்காமல் எல்லாம் அஞ்ஞானத்தால் தோன்றுவனவென்றும், ஞானம் ஒன்றே நித்திய சுத்த நிர்மல ரூபமானது என்றும் அறிந்து, ஸ்ரீவாசுதேவ பகவானை அடைவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்.

———————

13. ஜடபரதர் உபாக்கியானம்

பராசர மகரிஷியே! நான் கேட்டவண்ணம் பூமி, கடல், நதிகள், கிரகங்கள் முதலியவற்றின் ஸ்வரூபங்களையும் மூன்று உலகமும் ஸ்ரீவிஷ்ணுவையே ஆதாரமாகக் கொண்டு நிலைபெற்றிருப்பதையும் ஞானஸ்வரூபமே முக்கியமானது என்பதையும் நீங்கள் எனக்கு விளக்கியருளினீர்கள்! பரத மாமன்னனது சரிதத்தை பின்னர் அறிவிப்பதாகச் சொன்னீர்கள். அதன்படி இப்போது அதைக் கூறியருளல் வேண்டும். யோகத்துடன் கூடி ஸ்ரீவாசுதேவனிடத்தில் இதயத்தை நிலைநிறுத்தித் தியானஞ்செய்து கொண்டு சாளக்கிராம ÷க்ஷத்திரத்தில் வசித்த அந்தப் பரதமகாராஜனுக்கு, ஸ்ரீஹரித்தியான பிரபாவத்தாலும், ÷க்ஷத்திர மகிமையினாலும் மோட்சமுண்டாகாமல், மறுபடி பிராமண ஜன்மம் எப்படி ஏற்பட்டது? அவர் அந்தப் பிராமணப் பிறவியில் என்ன செய்தார்? அந்த விஷயங்களை நீங்கள் எனக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்றார் மைத்ரேயர். உடனே பராசரர் கூறலானார். மைத்ரேயரே! அந்தப் பரத மகாராசன் எம்பெருமானது திருவடிகளையே தியானஞ் செய்துகொண்டு சாளக்கிராமத்திலேயே பலகாலம் வசித்து வந்தார். அவர் மகா குணவான்; மிகவும் உத்தமர், அவர் சொப்பனம் மத்தியம் உள்பட சகல அவஸ்தைகளிலும் யக்ஞேச, அச்சுத கோவிந்த, மாதவ, அநந்த, கேசவ, விஷ்ணோ ஹ்ருஷிகேசா வாசுதேவா, உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்பதை உச்சரித்துக் கொண்டிருந்தாரேயல்லாது வேறொன்றையும் உச்சரிக்கவில்லை. வைதிக கிரியைகளை நடத்துவதற்காக சமித்து, புஷ்பம் தருப்பை முதலியவற்றைச் சேகரிப்பது போன்ற செயல்களைத் தவிர வேறெதையுஞ் செய்ததில்லை. இவ்விதமாகப் பரதர் பற்றில்லாமல் யோக தவம் செய்து வரும் போது, ஒருநாள் மகாநதியில் நீராடிச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து கொண்டிருக்கும்போது, அங்கே கருவுயிர்க்கும் தருணமுடைய மான் ஒன்று, தன்னந்தனியாகத் தண்ணீர் குடிக்க வந்தது. அது நீர் அருந்திக் கொண்டிருக்கும்போது, அதிபயங்கரமான சிங்கத்தின் கர்ஜனைக்குரல் கேட்டது. அந்தக் கர்ஜனையைக் கேட்ட மான் மிகவும் பயந்து திகைத்துப் பரபரப்புடன்; நதியின் உயர்ந்த கரை மீது ஏறிச் சென்றது. அப்போது அதன் கர்ப்பமானது கீழேயிருந்த நதி நீரில் விழுந்து அலைகளிலே மிதந்தது. பரதர் அந்தமான் குட்டியைக் கண்டு இரக்கங்கொண்டு, அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். இது இப்படியிருக்க அந்தமான், கருப்பம் விழுந்த அதிர்ச்சியினாலும் மிக உயரத்தில் ஏறிய வருத்தத்தாலும் கீழே விழுந்து இறந்தது. தாய்மாமன் இறந்ததும் அதன் சின்னஞ்சிறு மான்குட்டி அந்தரமாக இருப்பதையுங்கண்ட பரதயோகி மிகவும் இரக்கங்கொண்டு, அந்தக் குட்டியை எடுத்துக் கொண்டு தமது ஆசிரமம் சேர்ந்தார்.

பிறகு, அவர் மான் குட்டியை வெகு அன்புடனே வளர்த்து வந்தார். ஆசிரமத்தின் அருகாமையில் இருந்த இளம்புற்களை மேய்ந்து கொண்டும், புலியைக் கண்டால் பயந்து ஆசிரமத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொண்டும் காலையில் புறப்பட்டு மேய்ந்து விட்டு, மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பிவந்து தங்கிக்கொண்டும் இருந்தது. இவ்விதமாக அந்த மான் ஓடி விளையாடுவதைக் கண்ட பரதரின் மனம், அதனிடத்தில் பற்றும் பாசமும் கொள்ளலாயிற்று. ராஜ்யம், மக்கள் முதலிய பந்தபாசங்களை விட்டு, யோக நிஷ்டையிலிருந்த அந்த முனிவர் மான் மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார். அதைச் சிறிது நேரம் காணவிட்டாலுங்கூட, ஐயோ நம்முடைய மான்குட்டியைக் காணவில்லையே? அதைச் செந்நாய் தின்றதோ, புலியறைந்ததோ, இன்னமும் வரவில்லையே? என்ன செய்வேன்? என்று வருந்துவார் அந்த மான் விளையாடிய இடங்களில் அதன் சிறு குளம்புகளில் பெயர்க்கப்பட்ட மேடு பள்ளமான இடத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவேன்? அப்படிப்பட்ட என்னுடைய மான் குட்டி எங்கே போயிற்றே தெரியவில்லையே! அது என்னருகே வந்து, தனது கொம்பினால் என்னுடம்பை உரசி, சுகம் உண்டாக்குமோ? அது ÷க்ஷமமாய் இங்கே திரும்பி வந்து சேர்ந்து சுகத்தை உண்டாக்குமோ இங்கு வராமல் துன்பத்தை உண்டாக்குமோ? என்ன செய்வேன்? இப்போதுதான் முளைத்த தனது சிறுபற்களால் கடித்த தருப்பைப் புற்களும் நாணல்களும் சாமவேதிகளான பிரமச்சாரிகளைப் போல் மொட்டையாகத் தோன்றுகின்றனவே? இவ்வாறு அது மறுபடியும் வந்து மேயக் காண்பேனோ? என்று பரத மகரிஷி வருந்துவதும், அது வந்ததும் பெருமகிழ்ச்சியடைவதுமாக இருந்தார். இவ்வாறு அந்த மான் குட்டியின் மீது அன்பு பாராட்டி வந்ததால், ராஜ்ய போகாதிகளைத் துறந்த அவருக்கும் சமாதி நிஷ்டை கலைந்தது. இந்நிலையில் அவருக்கு மரண காலமும் நெருங்கியது. அப்போது, தந்தையை அவனது அன்பு மகன் நோக்குவதைப் போல, அந்த மான்குட்டியானது கண்ணில் கண்ணீர் ததும்ப நோக்கிக் கொண்டிருந்தது. அதுபோலவே, பிரியமான மகனைத் தந்தை பார்ப்பது போல பரதரும் கண்ணீர் ததும்ப மான்குட்டியைப் பார்த்துக் கொண்டே பிராணனை விட்டார். அதனால் மறுபிறவியில் அவர், கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார். ஆயினும் தனது யோகச் சிறப்பினால் பூர்வ ஜன்ம ஞானமுடையவராக இருந்தார். அதனால் வெறுப்புற்றுத் தன் தாயைப் பிரிந்து முன்பிருந்த சாலக்கிராம ÷க்ஷத்திரத்தை அடைந்து, அங்குள்ள உலர்ந்த புற்களையும், சருகுகளையும் தின்று, மானாகப் பிறக்க ஹேதுவான கர்மங்களைக் கழித்து, அங்கேயே மரணமடைந்தார். பிறகு, அந்த ஊரிலேயே, நல்ல ஒழுக்கமும் யோக நிஷ்டையும் மிகுந்த உத்தமமான பிராமணர் குலத்திலே பூர்வ ஜன்ம ஸ்மரணையோடு பிறந்தார். பூர்வஞானம் தோன்றியதால், முன்பு போலவே சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்ந்தவராய் எல்லாவிதமான ஞானத்திலும் தேர்ச்சி பெற்றவராய், ஆத்ம சொரூபத்தைப் பிரகிருதிக்கு வேறாகவும், தேவாதி சகல சரீரங்களிலும் உள்ள ஆத்ம ஸ்வரூபம் யாவும் தம்மைவிடப் பேதமில்லாமல், விலக்ஷணமான ஞானகாரமுள்ளவையாகப் பாவித்து வந்தார்.

வேத சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்தார். அவர் ஆத்மஞானியாக இருந்ததால் எந்தவொரு கர்மத்தையும் செய்யவில்லை, மேலும், அழுக்கு நிறைந்த உடம்போடும், அழுக்கேறிய கந்தை ஆடைகளோடும், ஊத்தைப் பல்லோடும், கண்டோர் அருவருத்து, அவமதிக்கும்படி நடந்து வந்தார். உலகோர் செய்யும் வெகு மதிப்பானது, யாக சம்பத்துக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கும். அவமதிப்போ, கர்வ அகங்காரங்களைப் போக்குவதால் யோக சித்தியைத் தருவதாகும். ஆகையால் யோகியானவன், யாவரும் தன்னிடம் சேராமல், தன்னை அவமானம் செய்யும்படி ஜடனைப் போலக் காட்டிப் பெரியோருடைய ஒழுக்கத்திற்குப் பழுதுவராமல் காத்து நடக்கவேண்டும்! என்று இரணிய கர்ப்பவாக்கியங்களை நினைத்து அந்தப் பிராமணர் வித்துவானாக இருந்தும் மூடனைப் போலவும் பித்தனைப் போலவும் திரிந்து கொண்டிருந்தார். இவ்விதமாக அவர் இருந்ததால், அவருக்கு ஜடபரதர் என்ற பெயர் வழங்கலாயிற்று. புழுத்துக் கெட்டுப்போன உழுந்து, யவதானியம் முதலியவற்றால் செய்த அப்பங்களையோ, கீரையையோ காட்டுக் கிழங்குகளையோ ஏதாவது ஒன்றை அவர் தின்று பிராணதரணை செய்து வந்தார். இந்நிலையில் அவரது தந்தை இறந்தார். அவருடைய தம்பியரும், அண்ணன்மார்களும் மற்றுமுள்ள பந்துக்களும், அற்ப ஆகாரம் கொடுத்து, அவரைக் கொண்டு கழனி வேலையைச் செய்வித்து வந்தார்கள். அவர் அந்த வேலையைக் கூடத் திருத்தமாக செய்யாமல் மூடனைப் போலச் செய்துவந்தார். அவர், இதுபோன்று அற்ப ஆகாரத்தைப் புசித்து வந்தாலும் அவர் உடல் நன்றாகப் பருத்தும் கண்கள் இரண்டும் வித்தியாசமில்லாமல் சமமாக விளங்கவே தோற்றத்தில் மாற்றமின்றி இருந்துவந்தார். அவரது உறவினரும் ஊராரும் கூலி கொடுக்காமல், சிறிது ஆகாரத்தை அவருக்குக் கொடுத்து வேலை வாங்கி வந்தார்கள். அவர்கள் எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் ஜடபரதர் அந்த வேலையைத் தடையின்றிச் செய்தார். முன்பு சொன்னதுபோல், அழுக்குத் தீர்ப்பது போன்ற செய்கைகள் ஒன்றுமில்லாமல், சிகை, யக்ஞோபவீதம் முதலிய பிராமணக் குறிகளும், நீராடல் சந்தியாவந்தனம் செய்தல் முதலிய பிராமணச் செயல்கள் மட்டுமே உடையவராய், பித்தனைப் போலவே ஜடபரதர் திரிந்துவந்தார். இந்நிலையில், சவ்வீர ராஜனுடைய சாரதியானவன் அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து, இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான். பலியிடுவதற்குரிய அலங்காரங்களையெல்லாம் அவருக்குச் செய்து, காளியின் திருக்கோயிலின் எதிரே, கொலை செய்யும் இடத்தில் கொண்டு நிறுத்தினான். அந்தக் காளியானவள். அவர் மகாயோகி என்பதையறிந்து, அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே, தன் கத்தியினால் வெட்டி, அவனது கழுத்திலிருந்து ஒழுகிய ரத்தத்தை தன் பரிவாரத்துடன் கூடச்சேர்ந்து குடித்து மகிழ்ந்தாள்.

பிறகு ஒருநாள், சவ்வீர ராஜனுடைய சேவகன் ஒருவன் ஜடபரதரைப் பிடித்துக்கொண்டு சென்றான். ஜடபரதரை, அரசனது சிவிகையைச் சுமப்பதற்குத் தகுந்த சிவியானாக நினைத்து, அமிஞ்சி பிடித்துப் போட்டான். ஒருநாள் அரசன், இஷிமதி நதி தீரத்தில் இருந்த கபில மகாமுனிரைக் காண்பதற்கு விரும்பினான். துக்கமயமான சம்சாரத்தில் எது உயர்ந்தது! என்பதை அந்த முனிவரிடமிருந்து தெரிந்து கொள்ள அரசன் விரும்பினான். எனவே அவன் பயணப்பட்டான். அவ்வரசனுடைய பல்லக்குப் போயிகளாக அமிஞ்சி பிடித்துப் போட்டிருந்த ஆட்களிலே ஜடபரதரும் சேர்ந்திருந்தார். சகல ஞானமும் உணர்ந்தவராக அவர் இருந்தாலும் கூட, தமது முற்பிறவிப் பாவங்களைத் தொலைக்க, அவர் பல்லக்கை சுமந்து சென்று கொண்டிருந்தார். அப்படிப் போகும் போது, நுகத்தடியளவு தூரம் ஜந்து வொன்றும் இல்லாபடித் தரையைப் பார்த்துக்கொண்டே அவர் மெதுவாக நடந்து சென்றார். மற்றவர்கள் துரிதமாக நடந்தனர். பல்லக்கின் வேகம் குறைந்தது. அதனால் சிவிகையில் இருந்த அரசன் சரியாய் நடங்கள்! என்று சிவிகை யாரை அதட்டினான். அவன் அப்படி அதட்டியும் பல்லக்கின் வேகம் குறைந்ததால், அரசன் மிகவும் கோபத்துடன் சிவியாரே! என் பேச்சையுங் கடந்து ஏனிப்படி நடக்கிறீர்கள்? என்று பலமுறைகள் கூவினான். அதற்கு சிவியாட்கள், மகாராஜா! எங்களின் குற்றமில்லை. இவன்தான் இப்படி நடக்கிறான் என்று ஜடபரதரைக் குற்றம் சாட்டினார்கள். அதைக்கேட்ட அரசன், அடா! என் பல்லக்கைச் சிறிது தூரந்தானே நீ சுமந்திருக்கிறாய்! இதனாலேயே விடாய்த்துப் போய்விட்டாயே! மேலும் நீ வருத்தத்தை! சகிக்க மாட்டாதவனோ! பிரத்யக்ஷத்தில் நீ பருத்தவனாகவே காணப்படுகிறாயே! என்று கேட்டான். அதற்கு ஜடபரதர், அரசே! நான் பருத்தவனும் அல்ல. உனது பல்லக்கை நான் சுமக்கவும் இல்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை. அதனால் நான் ஆயாசமும் அடையவில்லை! என்றார். அதைக் கேட்ட அரசன், அவரது கருத்தைப் புரிந்துகொள்ளாமல் பார்வையில் நீ பருமனாகத்தானே தோன்றுகிறாய்? இப்போது உனது தோளில் என் பல்லக்கு இருக்கிறது. சுமை சுமந்தால் எந்தப் பிராணிக்கும் களைப்பு ஏற்படும் என்பது நிச்சயமாக இருக்க நீ ஏன் பொய் சொல்கிறாய்? என்று கேட்டான். அதற்கு ஜடபரதப் பிராமணர், அரசே! நீ என்னவோ பிரத்யக்ஷமாய்க் கண்டேன் என்று சொன்னாயே அந்த வஸ்துவை முன்னே நான் அறியச் சொல்வாயாக அது பலம் உள்ளது என்பதையும் இல்லாதது என்பதையும் பற்றிப் பிறகு பேசலாம். மேலும் என்னாலே சிவிகை சுமக்கப்பட்டது. அது இப்போதும் என்மேல் இருக்கிறது என்று சொன்னாயல்லவா? இது சுத்தப்பொய். அதைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக? நிலத்திலே இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அவற்றின்மேல் கணைக்கால்கள் இருக்கின்றன. அவற்றிலே தொடைகள் இரண்டும் நிற்கின்றன. அவற்றை ஆதாரமாகப் பற்றி நிற்கிறது. வயிறு, மார்பு, கைகள், தோள்கள் இவையனைத்தும் வயிற்றின் மேல் இருக்கின்றன. இந்தத் தோளின் மீது படிந்திருப்பது சிவிகை இப்படியிருக்க எனக்கு ஏது பாரம்? அந்தச் சிவிகையிலே நீ என்று உன்னால் நினைக்கப்பட்ட தேகம் இருக்கிறது. அந்தத் தேகத்தில் நீ இருக்கிறாய். அதுபோலவே, இந்த தேகத்தில் நான் இருக்கிறேன்.

அரசே! நீயும் நானும் தேகங்களாய் மாறி நிற்கிற மற்றவரும் பிருத்வி முதலிய பஞ்சபூதங்களாலே சுமக்கப்படுகிறோம். இந்தப் பூதவர்க்கமும் குணங்களின் வெள்ளத்திலே வீழ்ந்து, அதன் வசத்தால் நடத்தல் முதலிய செயல்களைச் செய்கின்றன. சத்துவம் முதலான குணங்கள் கருமங்களுக்கு வசப்பட்டிருக்கின்றன. அந்தக் கருமங்கள் அவித்தையினாலே சம்பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வவித்தை சகல பிராணிகளிலும் இருக்கின்றது. ஆத்மாவோ சுத்தமாய், நாசமில்லாததாய், பசி முதலியவைகள் இல்லாததாய் சத்துவாதி குணரகிதமாய், குணமயமான பிரகிருதியைக் காட்டிலும் வேறானதாக இருக்கிறது. அது சகல ஜந்துக்களிலும் தேகம்போல் அநேக அம்சமாய் இராமல் ஒரே அம்சமாக இருக்கிறது. அது வளர்வதுமில்லை; தேய்வதுமில்லை. இப்படியாக ஆன்மாவுக்கு விருத்தியோ தேய்வோ இல்லாமலிருக்க, நான் பருத்திருக்கிறேன் என்று எந்த யுக்தியினாலே சொன்னாய்? அன்றியும் பூமி, பாதம், கணைக்கால், தொடை, இடை முதலான உறுப்புகளின் அடுக்கின் மேலுள்ள தோளில் இருக்கும் பல்லக்கினால் எனக்குப் பாரம் உண்டென்றால் அந்தப் பாரம் உனக்கும் சமமாக இருக்க வேண்டும். மேலும் சகலமான பேருக்கும் இந்தப் பல்லக்கின் பாரம் மட்டுமல்ல, காடு, மலை, வீடு முதலானவற்றைப் பற்றிய பாரமும் உண்டென்றே சொல்ல வேண்டும். இப்படியின்றி, ஆன்மாவானது பிராகிருதங்களான அவயவங்களைவிட வேறு என்பது சித்தப்படும்போது, நான் பாரத்தைச் சுமக்கிறேன் என்பது ஏது? இந்தப் பல்லக்கு எந்தப் பொருளால் ஆனதோ, அந்தப் பொருளால் ஆனது தான் இந்த உடம்புமாகும். இதில் தான் எனக்கும் மற்றவருக்கும் மமத்துவம்! எனது என்ற அபிமானம் உள்ளது! என்று சொல்லி விட்டுப் பல்லக்கைச் சுமந்து கொண்டு சென்றார். இதைக் கேட்டவுடன் அரசன் திடுக்கிட்டு சிவிகையிலிருந்து கீழே இறங்கி ஜடபரத யோகியாரின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, ஐயா! அடியேன் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்தருள வேண்டும். தேவரீர் ஜடனைப்போல ரூபந்தரித்துள்ளீர். தேவரீர் யார் என்றே தெரியவில்லை. என்ன காரணத்தினால் என்ன பயனைக் கருதி இங்கே எழுந்தருளினீர்கள் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்! என்றான். அரசே! நீ யார் என்று என்னைக் கேட்டாயல்லவா? அதற்கு நான் இன்னார் என்று விடையளிக்க முடியவில்லையே! எப்பயனை கருதி எதனால் இங்கே வந்தாய் என்பதற்குப் பதில் சொல்ல வேண்டுவதில்லை. எங்கும் வருவதற்குப் பயன் அனுபவமே. இந்தச் சுகதுக்க அனுபவங்கள். புண்ணிய பாவங்களால் உண்டானவைகளாய். இடத்தையும் காலத்தையும் பற்றியிருப்பதால் ஜீவன்கள் தனது கர்மானுபவத்திற்கு உரியதேச காலங்களிலே தேகாதிகளைப் பெற்று வருகின்றனர் என்றார் ஜடபரதர்.

யோகியாரே! சகல காரியங்களுக்கும் தருமா தருமங்களும் காரணம் என்பதும் சுகதுக்க அனுபவித்திற்காகத் தேகம் பிரவேசிப்பது என்பது சரிதான். ஆனால் நான் இன்னார் என்று ஆன்மாவைக் குறித்துச் சொல்லக்கூடாது என்று கூறினீர்களே? அதையறிய விரும்புகிறேன் ஆத்மா என்பது இல்லாத பொருள். ஆகையால் அப்படிச் சொல்லக்கூடாது என்றால் ஆத்மா இருக்கிற வஸ்துவேயல்லாமல் இல்லாததன்றே இந்த நான் என்னும் சொல் ஆன்மாவின்மேல் பிரயோகிப்பது குற்றம் அல்லவே? இப்படியிருக்க நான் இன்னான் என்று சொல்ல முடியாது என்று நீங்கள் எப்படிச் சொன்னீர்கள்? என்று அரசன் கேட்டான். அரசே! ஆன்மாவைக் குறித்து நான் என்னும் சொல்லைப் பிரயோகிப்பது குற்றமல்ல. அதுவும் சரிதான். ஆனால் நான் இன்னான் என்பதனால் ஆத்மாவல்லாத தேகாதிகளிலே ஆத்மபுத்தியும், இப்படிப்பட்ட பிராந்தியைத் தெரிவிக்கும் சொல்லாவதும் ஆகிய குற்றங்கள் உண்டாம். அரசே! நான் என்று சொல்வது எது? நாக்கும், உதடுகளும், பற்களும், தாழ்களும் தான். நான் என்று சொல்கின்றன என்று நினைக்கிறாயே, அவைகள் அனைத்தும் கருவிகளே யல்லாமல் கர்த்தாவான ஆத்மாவன்று, தேகத்தைக் காட்டிலும் வேறானது. ஞானமே வடிவாகக் கொண்ட நான் என்னும் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறான வடிவுள்ள ஆத்ம ஸ்வரூபம் ஒன்று இருக்குமானால் என்னை இன்னான் என்று சொல்லலாம். அப்படித்தான் இல்லையே? ஆன்மா நித்தியப்பொருள். உடல் முதலியவை அநித்தியப் பொருள்கள். ஆகையால் அரசனாகிய நீயும் இந்தச் சிவிகையைச் சுமக்கின்ற நாங்களும் எல்லாமே இருக்கும் பொருளல்ல. எப்படியெனில் முன்பு மரமாக இருந்தது வெட்டப்பட்டு கட்டையாயிற்று. பிறகு அது நீ ஏறியிருக்கிற பல்லக்கு ஆயிற்று. இந்த நிலையில் அதற்கு மரம் என்றோ கட்டை என்றோ பெயர்களில்லை! மகாராஜா மரத்தின்மேல் ஏறியிருக்கிறார் என்று இவர்களே சொல்வார்களா? அல்லது கட்டையின் மேல் இருக்கிறார் என்றுதான் சொல்வார்களா? சிவிகையில் இருக்கிறார் என்றுதானே சொல்வார்கள்? இதனை ஆராய்ந்தால் சிவிகை என்பது ஒருவகை ஜோடிப்பே ஆகும். அதாவது கட்டைகள் அடுக்கப்பட்ட ஜோடிப்பு. இந்த ஜோடிப்பைப் பிரித்துவிட்டுப் பிறகு பல்லக்கு எங்கே என்பதை தேடிப்பார். அதுபோலவே சலாகை முதலியவற்றைப் பிரித்துக் குடையைத் தேடிப்பார். இந்த நியாயத்தாலேயே, இன்னார், நான் இன்னார் எப்படி என்பது தெரியும், கர்மவசத்தால் உண்டாகியிருக்கிற தேகங்களிலே புருஷன் என்றும் ஸ்திரீ என்றும், மாடென்றும், ஆடென்றும், யானையென்றும், குதிரையென்றும், மரம் என்றும் கொடி என்றும் வழங்கப்படுகின்றன. நீ, நான் என்கிற சொற்களின் முக்கியப் பொருளான ஆன்ம சொரூபமானது ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல, தேவனுமல்ல, மனிதனுமல்ல, மிருகமுமல்ல, மரமுமல்ல. இத்தேவத்துவலதி தர்மங்கள் எல்லாம் கர்மத்தினால் வந்த சரீரரத்தின் ரூபபேதங்களேயாகும். அரசே! நீ உலகத்தாருக்கு அரசன்! தகப்பனுக்கு மகன்! பகைவனுக்கு பகைவன்! மனைவிக்கு மணாளன்! மகனுக்குப் பிதா! இப்படடியிருக்க உன்னை யார் என்று நான் சொல்வேன். மேலும் நீ என்ன சிரசா, கழுத்தா, வயிறா? இந்த உடம்புக்கு நீ யார்? உனக்கு இந்த உடல்யாது? இவ்விதமாய்ச் சகல உறுப்புகளுக்கும் வேறாய் இருக்கிற நீயே நன்றாக ஆலோசித்து நான் யார் என்று சிந்தித்துக்கொள். உண்மை இப்படியிருக்க என்னை நான் இன்னான்! என்று வேறுபடுத்தி எப்படிச் சொல்லமுடியும் என்று ஜடபரதர் விளக்கினார்.

——————

14. பரம்பொருள் தெளிவு

ஆத்ம தத்துவத்தைப் பற்றி ஜடபரதர் கூறியதும் அரசன், அவரை நோக்கி சுவாமீ! சகல ஜந்துக்களிலும் பிரகிருதியிலும் வேறாய் ஞானஸ்வரூபமாய் மகத்தானதாய் ஒரேவிதமான ஆத்ம ஸ்வரூபம் உண்டென்றும் கூறினீர்கள். சிவிகையை நான் சுமக்கவில்லை; என்னிடத்தில் சிவிகையும் இல்லை; இந்த உடல் சுமக்கின்றது. நம்மைவிட அது வேறானது. திரிகுணங்களின் ஏவலினால் பஞ்சபூதங்கள் அசைகின்றன. அந்தக்குணப் பிரவிருத்தியும் கருமத்தினால் ஏவப்படுகிறது. ஆகையால் அவற்றால் எனக்கென்ன என்றும் தாங்கள் இத்தகைய பரமார்த்தங்களைக் கூறினீர்கள். மகானே! நான் இந்தச் சம்சாரத்தில் எது உயர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கபில மஹாமுனிவரிடம் போகப் புறப்பட்டேன். இதனிடையில் அந்தப் பரமார்த்த விஷயத்தைத் தேவரீர் அருளிச் செய்ததால் என்மனம் தங்களையே நாடுகின்றது. கபில முனிவர் உலக அஞ்ஞானத்தைப் போக்கும் பொருட்டு பூமியில் இறங்கிய ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமானவர். தங்களையே அந்தக் கபிலராக நான் கருதுகிறேன். ஆகையால் அடியேனுக்கு எது உயர்ந்ததோ அதனை அறிவிக்க வேண்டும், என்றான். அரசே! இப்போது நீ என்னை உயர்வைப் பற்றிக் கேட்கிறாயா? அல்லது பரமார்த்தத்தைப் பற்றிக் கேட்கிறாயா? சிரேயசு என்பதும் பரமார்த்தம் என்பதும் ஒன்றல்ல. எந்த மனிதன் தனது இஷ்ட தேவதைகளை ஆராதித்துப் பணம் முதலிய சம்பத்துக்களை இச்சிக்கின்றானோ அந்தச் செலவப்பேறே சிரேயசு எனப்படும். அதுபோலவே, சந்தானத்தை இச்சிப்பவன் அதையடைவது சிரேயசாகும். யக்ஞாதி கர்மங்களைச் செய்து சுவர்க்காதிகளைப் பெற நினைப்பவனுக்கு அந்தச் சுவர்ககாதிகளே சிரேயசாகும். எந்தவொரு பயனையுங்கருதாமல் யாகாதி கர்மங்களைச் செய்பவனுக்கு அந்தக் கருமமே உயர்வாகும். யோக நிஷ்டையிலிருந்து ஆத்மத் தியானஞ் செய்வோருக்கு அதுவே உயர்ந்தது. அந்த ஆன்மாவுக்குப் பரமாத்மாவோடு ஒன்றாகக் கூடுதல் மேலான சிரேயசாகும். இப்படி ஒன்றுக்கொன்று மேலான ஏழு சிரேயசுகள், முக்கியமானவைகள். இவற்றின் உட்பிரிவான சிரேயசுகளும் உண்டு. இவையெல்லாம் பரமார்த்தங்களல்ல. எப்படியெனில் பணமே பரமார்த்தமானால் அதைத் தருமத்திற்காகவும், காமத்திற்காகவும் செலவு செய்வார்களல்லவா? அப்படிச் செலவு செய்வதனால் அது பரமார்த்தம் ஆகமாட்டாது. இதனால் சாதிக்கப்படுகின்ற தர்ம, காமங்களும் அழியக்கூடியவை. ஆதலால் அவை பரமார்த்தம் என்று சொல்லப்படமாட்டா; காரியங்கள் எல்லாம் காரணங்களுக்குப் பரமார்த்தமேயல்லாமல் யாவற்றுக்கும் ஆகமாட்டாது. ராஜ்யம் முதலானவை பரமார்த்தம் என்றால், அவை நிலையானதாகாமையால் அவை பரமார்த்த மாகாத்ரிக்கு, யஜுர், சாமம் என்ற வேதங்களின் விதிப்படி செய்கின்ற யாக கருமத்தையே பரமார்த்தம் என்று நீ நினைத்திருந்தாயானால், அதுவுமல்ல மண் என்ற காரணப்பொருளினால் உண்டாக்கப்படும் குடம் முதலியவைகளுக்கான காரியங்கள் எல்லாம் காரணமான மண்ணின் தன்மையையே அடைந்திருப்பதைப் போல், நாசப்படத்தக்க சமித்து; நெய், தர்ப்பை முதலியவற்றால் செய்யப்படும் யாகாதி கர்மமும் நாசப்படத்தக்கது. ஆகையால் அதுவும் பரமார்த்தமாகாது. பரமார்த்தம் என்பது நாசப்படாததாக ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டதேயாகும்! யாதொரு பயனையும் விரும்பாமற் செய்கிற யாகங்கள், மோக்ஷத்துக்குச் சாதனமானவை. ஆகையால் அவை பயனைக் கொடுத்தவுடன் நசிப்பதால் அது பரமார்த்தமல்ல ஆன்மத் தியானமும், விசதம் விசத்தரம், பிறவற்றினின்றும் தெளிவு, நற்றெளிவு என்று இவ்வகைப்பட்ட அவஸ்தா பேதங்களை யடைதலாலும், போனதை நினைத்தல், பிரத்யக்ஷத் தோற்றம் முதலாக க்ஷணந்தோறும் மாறுதலினாலும் அது பரமார்த்தமன்று.

பரமாத்மாவோடு ஆத்மா ஐக்கியமாகின்ற யோகமே பரமார்த்தம் என்று சிலர் நினைக்கிறார்கள் அல்லவா? அப்படிப்பட்ட யோகம் பொய்; ஆகையால் அதுவும் பரமார்த்தம் அன்று! அந்த யோகம் ஏன் பொய்யென்றால் ஒரு பொருள் மற்றொரு பொருளாக ஆகமாட்டாதாகையால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாக மாறமாட்டாது. ஆகையால் அரசே! நான் முன்பு சொன்னவைகள் யாவும் சிரேயசுகள் என்பதில் ஐயமில்லை. பரமார்த்தம் எதுவென்று சுருக்கமாகச் சொல்கிறேன், கேள். தேகத்தைப் போலப் பல பொருளாயிராமல் ஒரு பொருளாயும், ஞானத்தினால் எங்கும் வியாபிக்கக் கூடியதாயும், தேகத்தைப் பற்றிய வித்தியாசமின்றிச் சமமாயும், நிர்மலமாயும், சத்துவாதிகுண சம்பந்தம் இல்லாததாயும், பிரகிருதிக்கு வேறுபட்டதாயும், உற்பத்தி விநாச விருத்தி க்ஷயாதிகள் இல்லாததாயும், நுண்மையினாலே அக்கினி வாயு ஜலாதிகளான அழிக்கும் பொருள்களுக்கு உட்படாததாயும், பற்றிக்கொள்ளுதல் முதலான தோஷங்கள் இன்றி, தேகாதிகளுக்கு அதிபதியாயும் இருக்கிற ஆத்மஸ்வரூபம் எதுவுண்டோ அது மேலான ஞானவடிவமாய், அவித்யா ரூபங்களான ஜாதி நாமாதிகளோடு பூதம், வர்த்தமானம், பவிஷியத் என்ற மூன்று காலங்களிலேயும் கூடாதது. தன்னுடையதும் பிறரதுமான தேகங்களில் இருக்கின்ற அந்த ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி எல்லாம் ஒரே விதம் என்ற ஞானம் எதுவுண்டோ, அந்த ஞானஸ்வரூபம் தான் பரமார்த்தமாம்! ஆதலால் தேக வித்தியாசத்தினால் மாறுபாடாக நினைப்பவர்கள் யதார்த்தத்தை அறியாதவர்கள். புல்லாங்குழலின் உள்ளே நுழைந்த காற்று ஒன்றாயிருந்தும் அதன் துவார பேதங்களினால் அந்தக் காற்றுக்கு ஆறுவகை ஸ்வரபேத நாமதேயம் உண்டாவதைப்போல, ஆத்துமஸ்வரூபம் பேதம் இல்லாததாக இருந்தும், அதற்குப் புறம்பான கர்ம பேதத்தினால் வந்த சரீர பேதத்தைப் பற்றி, தேவன், மனிதன் என்ற விவகாரம் உண்டாகிறது. அந்தக் கர்மாவாகிய மறைவு அழிந்தால் அந்தத் தேவாதிபேதம் இல்லவேயில்லை என்று அறிவாயாக! என்று ஜடபரதர் உபதேசித்தார்.

————–

15. ருபுநித உபாக்கியானம்

மைத்ரேயரே! இவ்விதமாக ஜடபரதர் கூறியும் அந்த அரசன் மனம் திடப்படாமையால் ஒன்றுமே பேசாமல் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது ஜடபரதர், ஞானபேதம் இன்மையைப் பற்றிய கதையொன்றைச் சொல்லத் துவங்கினார். அரசே! நிதாகருக்கு ஞானத்தை உண்டாக்க ருபு என்பவர் பூர்வத்தில் பரமேஷ்டிக்கு ருபு என்ற குமாரர் ஒருவர் உண்டு. அவர் இயல்பாகவே தத்துவ ஞானமுடையவராக இருந்தார். அவருக்குப் புலஸ்திய முனிவரின் குமாரரான நிதாகர் என்பவர் சீடராக இருந்தார். அவருக்கு அந்த ருபு சகலகலா ஞானங்களையும் ஓதுவித்தார். அவ்வளவு கலைகளைக் கற்றிருந்தும் கூட நிதாகருக்கு ஆத்தும ஸ்வரூபத்தில் பேதம் இல்லாமையைப் பற்றிய வாசனை இல்லை என்பதை ருபு அறிந்துகொண்டார். ஆயிரம் ஆண்டுகள் சென்ற பிறகு தேவிகா நதிக்கரையில், புலஸ்தியர் ஏற்படுத்திய ஓர் உத்தியான வனத்தில் நிதாகர் வசித்துக் கொண்டிருந்தார். அவரைக் காண ருபு முனிவர் சென்றார். அப்போது நிதாகர் வைசுவ தேவத்தை முடித்துவிட்டு, வாசலில் வந்து அதிதிகளை எதிர்பார்க்கும் தருணத்தில், ருபு முனிவர் வருவதைக் கண்டார் வந்தவரை நிதாகர் உபசரித்து, சுவாமி! அமுது செய்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். அதற்கு ருபு முனிவர், பிராமணோத்தமரே! உமது வீட்டில் நான் புசிக்கத்தக்க பொருள் என்ன இருக்கிறது? ஈனமான போஜனத்தில் எனக்குப் பிரியமில்லை என்றார். உடனே நிதாகர், சுவாமி என் கிருஹத்தில் அரிசி மாவினாலும் யவதானியங்களாலும் செய்யப்பட்ட அப்பளங்கள் இருக்கின்றன. காய், கிழங்கு, கனி வகை உணவுப்பொருள்கள் உள்ளன. அவற்றையெல்லாம் தேவரீர் அமுது செய்தருளலாம் என்றார். குருநாதரோ, இவையெல்லாம் அற்ப போஜனங்கள்! எனக்கு இவற்றை அருந்தப் பிரியமில்லை. மோர்க்குழம்பு, பாயாசம், தேன் குழல், முதலியவற்றைப் புசிக்க விரும்புகிறேன் என்றார். உடனே, நிதாகர் தம் மனைவியை அழைத்து அடி! நம்முடைய இல்லத்துக்கு ஒரு பெரிய மகான் வந்திருக்கிறார். அவருக்கு, நம் வீட்டில் மிகவும் உயர்ந்த பொருள் எதுவுண்டோ அதைக் கொண்டு அன்னஞ்செய்து, அவருக்கு உணவிடுவாயாக! என்றார். அவரது மனைவியும் தன் கணவனின் கட்டளையை ஏற்று, அக்காரவடிசில் முதலியவற்றைச் செய்து; பரிமாறினாள். அவற்றை ருசித்துப் புசித்துக் கொண்டிருந்த ருபுவை பார்த்து, சுவாமி! தங்களுக்குத் திருப்தியும் சந்துஷ்டியும் உண்டாயினவா? தேவரீர் திருவுள்ளம் நலமா? தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம்எது! எங்கிருந்து எழுந்தருளியிருக்கின்றது? எங்கே எழுந்தருள உத்தேசித்து, இங்கே எழுந்தருளியது? இவற்றையெல்லாம் எனக்குச் சொல்ல வேண்டும் என்று நிதாகர் கேட்டார்.

பிராமணோத்தமரே! எவனுக்குப் பசியுண்டோ அவனுக்குத்தான் அன்னத்தைப் புசிப்பதனால் திருப்தி உண்டாகிறது. எனக்கு பசியில்லை அப்படியிருக்கு எனக்குத் திருப்தியுண்டாவென்று ஏன் கேட்கிறீர்? பிருதிவி சம்பந்தமான தாதுவானது கர்ப்பத்திலிருக்கும் அக்கினியால் அழிக்கப்படும் அளவில் பசியும் அந்த அக்னி வேகத்தினால் உள்ளேயிருக்கும் நீர் வற்றிப் போவதால் தாகமும் உண்டாகின்றன. (இந்தப் பசி தாகங்கள் இச்சா ரூபங்கள் ஆகையால் அவை மனோதர்மமாகும்.) ஆயினும் தாது க்ஷயத்தினால் உண்டாகின்றனவாகையால் தேக தருமங்களாகின்றன. எனக்கு இவை இல்லையே! ஆகையால் பசியினால் உண்டான திருப்தி இப்போது மட்டுமல்ல, எப்போதுமே எனக்கு இல்லை. மனது நலமாயிருப்பது சந்துஷ்டியும் சித்தத்தின் தன்மைகளுமேயாகும். ஆகையால் இவ்விரண்டையும் பற்றிச் சித்தத்தையல்லவா கேட்க வேண்டும்? என்னை ஏன் கேட்கிறீர்? நான் மட்டுமல்ல, என்னைப் போலுள்ள ஆன்மாக்களுக்கெல்லாம் இந்தப் பசி முதலானவை இல்லையென்று அறிவீராக. வாசஸ்தானம் எது? எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று நீர் கேட்டவைகளுக்குப் பதில் சொல்கிறேன் கேளும். புருஷன் தேவமனுஷ்யாதி சகல சரீரங்களிலேயும் இருக்கத்தக்கவனாய், சகல அசேதனங்களிலேயும் வியாபிக்கத்தக்கவனாய்; ஆகாயத்தைப் போல ஒன்றோடும் ஒட்டாதவனாய் இருக்கிறான். இத்தகைய ஆன்மாவைப் பார்த்து எங்கே இருக்கிறாய்? எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்ற கேள்விகளுக்குப் பொருள் இல்லை! ஆகையால், அத்தகைய நான் போகிறவனுமல்லன்; வருகிறவனுமல்லன்; ஓரிடத்தில் இருப்பவனுமல்லன் நீயும் மற்றவர்களும் கூட அப்படியேதான்! ஆனால் வருவதும் போவதுமாகத் தோன்றுவது தேகவசத்தினாலேயாகும். ஆகையால் போக்குவரத்துகளுக்குக் கர்த்தாவாகத் தோன்றும் இந்தத் தேகம் நான் அன்று; அதுபோலவே நீயும் அன்று? மற்றவர்களும் மற்றவர்கள் அன்று! ஆனால் நல்ல போஜனம் அளிப்பாய்; அற்ப ஆகாரம் வேண்டாம் என்று நான் சொன்னது சுபாவ சித்தமோ உபாதியைப் பற்றியதோ என்று உமது கருத்தை அறியப் பரீட்சை செய்தேனேயன்றி நான் மெய்யாகக் கேட்கவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி சொல்கிறேன், கேட்பீராக.

உண்பவனுக்கு இது சுவையுள்ளது; இது ருசியில்லாதது என்று ஒரு நியதியும் இல்லை. யாதொரு வியாதியும் இல்லாமல் நல்ல பசியுள்ளவனுக்கு புழுத்த உளுந்து முதலியவற்றால் செய்த தாழ்வான உணவுகளும் ருசியாகவே இருக்கும். அப்படியில்லாதவனுக்குத் தேன்குழல், அக்காரவடிசில் முதலியவை ருசிகரம் ஆகாமற் போகின்றன. ஆகையால் உண்பவனுடைய உடலின் தன்மையின்படி உணவுகளில் ருசியும் அருசியும் உண்டாகின்றன. எனவே மதுரம் என்பதும் அமதுரம் என்பதும் அவுபாதிகமேயன்றி சுவாபிகமன்று, மண்ணாற்கட்டிய வீடு, மண்ணாலேயே பூசப்பட்டு உறுதியாவது போல, பிருத்வி மயமான இந்த உடலும் பிருத்விச் சம்பந்தமான பொருள்களாலேயே உறுதியாக வேண்டியுள்ளது. அதனால் தான் யாவருமே உணவருந்த வேண்டுவது அவசியம். யவம்; கோதுமை, பயிறு முதலிய தானியங்களும் நெய் எண்ணெய் பால் தயிர் முதலிய ரசவஸ்துக்களும் வெல்லம் கனிகள் முதலிய பொருள்களும் பிருத்வி சம்பந்தமான அணுக்களேயாகும். ஆகையால் நான் முன்பு சொல்லி வந்த விஷயங்கள் யாவையும் நன்றாக அறிந்து, இது இனிப்பு இது இனிப்பல்ல என்றும், இவன் தேவன் இவன் மனிதன் என்றும், பேதவிசாரனை செய்யும் மனதை, இத்தகைய பேதங்களெல்லாம் கர்மத்தினால் வந்த விகாரங்கள், என்றும் ஆத்ம சொரூபத்தில் வைஷமியம் யாதும் இல்லை என்றும் சமத்துவ ஞானம் உள்ளதாகச் செய்யவேண்டும். இத்தகைய சமத்துவ புத்திதான் மோக்ஷகாரணமாகும் என்றார் ருபு. நிதாகர் தம் குருவை வணங்கி, ஐயனே! பரமார்த்தத்தைப் பற்றித் தாங்கள் கூறிய வசனங்களைக் கேட்டு என் அஞ்ஞானம் நீங்கியது. தாங்கள் யாரோ தெரியவில்லை. சாதித்தருள வேண்டும்! என்று விண்ணப்பஞ்செய்தார். ருபு, தன் சீடனை நோக்கி, உமக்கு ஆசாரியனான ருபு என்பவன் தான் நான்! உமக்கு ஞானத்தைப் போதிக்கவே இங்கு வந்தேன். நினைத்தபடி உமக்குப் பரமார்த்தத்தைத் தெரிவித்தேன். இனி நான் என்னிடம் போகிறேன். உமக்குச் சுருக்கமாக ஒன்றைச் சொல்கிறேன் கேளும். தேவ மனுஷ்யாதி பேதமாய்க் காணப்படுகின்ற சேதன ஸ்வரூபம் யாவும் ஒன்றேயல்லாமல் பேதப்பட்டதன்று. தேவாதி பேதங்களோ கர்ம வசத்தினால் வந்த பூதவிகாரங்களாகும். இப்படிச் சேதனா சேதனாத்துமகமான சகல பிரபஞ்சமும் ஸ்ரீவாசுதேவன் என்னும் திருநாமமுடைய பரமாத்மாவுக்குத் திருமேனியாய் இருக்கின்றன! என்று கூறினார். அதைக்கேட்ட நிதாகர், இனி அடியேன் அப்படியே நினைத்திருக்கிறேன் என்று தண்டம் சமர்ப்பித்து மகாபக்தியோடு உபசாரஞ்செய்தார். அதன் பிறகு ருபு முனிவர் தம் இருப்பிடத்தை அடைந்தார்.

———————-

16. நிதாகரும் ஜடபரதரும் முக்தியடைந்தது

ஜடபரத மகரிஷி சவ்வீர ராஜனை நோக்கி, அரசே! கேள், மறுபடியும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ருபுவானவர் தம் சீடர்களுக்கு ஞானோபதோம் செய்ய நினைத்து, அந்த நகரத்துக்குச் சென்றார். அப்போது பரிவாரங்களுடன் அரசன் பட்டணப்பிரவேசம் செய்து கொண்டிருந்தான். நிதாகர் காட்டிலிருந்து சமித்து, கருப்பைகளைச் சேகரித்துக் கொண்டு சந்தடியாக இருந்ததால் தீட்டுப் படுவோம் என்று பட்டணத்தினுள் போகாமல் தூரத்தில் நின்று கொண்டிருந்தார். பசியினால் மெலிந்திருந்த நிதாசரைக் கண்ட ருபு முனிவர், ஓ பிராமணரே! நீங்கள் ஏன் ஒன்றியாக இங்கே நிற்கிறீர்? என்று கேட்க, அதற்கு நிதாகர், சுவாமி! இங்கு அரசன் பட்டணத்துக்குள் போகிறான். ஆகையால் ஜனநெருக்கம் அதிகமாக இருப்பதால், உள்ளே போகமுடியாமல் இங்கே நிற்கிறேன் என்றார். அதைக் கேட்டதும் ருபு முனிவர், ஐயனே! அரசன் யார்? ஜனங்கள் யார்? எனக்குத் தெரியவில்லை நீரோ அதைத் தெரிந்தவராக இருக்கிறீர்! ஆகையால் எனக்குத் தெரியும்படிச் சொல்லவேண்டும் என்றார். உடனே நிதாகர், அதோ பாரும், பெரியமலைச் சிகரம் போன்று மிகப்பெரியதாக இருக்கும் யானையின் மேல் ஏறிக்கொண்டு பிரகாசிக்கிறானே, அவன் தான் அரசன்! அவனைச் சுற்றி நிற்பவர்கள் பரிவாரங்கள்! என்றார். அதற்கு ருபு புன்முறுவலுடன், ஐயா! நீர் அரசர் என்றும் யானை என்றும் வெவ்வேறான லக்ஷணமுடையனவாய், இரண்டு பொருள்களை ஒரே சமயத்தில் சொல்கிறீர்கள். எனக்கோ அவற்றில் பேதம் தெரியவில்லை. என்ன விசேஷமோ அதை எனக்குத் தெளிவுபடுத்த வேண்டும். யார் அரசன்! எது யானை? இதையறிய விரும்புகிறேன் என்றார். அவரை நிதாகர் வியப்புடன் பார்த்தபடி, என்ன பிராமணரே! கீழே இருப்பது யானை, மேலே இருப்பது அரசன்! இது உமக்குத் தெரியவில்லையா? என்று கேட்டார். பிராமணரே! கீழே இன்னது மேலே இன்னது என்று எனக்கு நன்றாகத் தெரிவிக்க வேண்டும் என்று ருபு சொன்னார், உடனே நிதாகர் ருபு முனிவரின் மேல் ஏறிக்கொண்டு இப்பொழுது நான் சொல்வதைக் கேளும். நான் இருக்குமிடம்தான் மேல்; மேலே என்னைப்போல் ஏறியிருப்பவனே அரசன்! நீர் இருக்கும் இடம்தான் கீழ், உம்மைப் போல கீழே சுமந்து கொண்டிருப்பதை யானையென்று அறியும்! இந்த விஷயம் உமக்குத் தெரிவதற்குத்தான் கண்கூடாகக் காண்பித்தேன்! என்றார் நிதாகர். பிறகு ருபு புன்முறுவலுடன் சரிதான் நீ என்பதும் நான் என்பதும் எனக்குத் தெரிந்தால் அல்லவோ மற்றைய காரியங்களை நான் அறிந்து கொள்வேன்? அந்தப் பேதமே எனக்குத் தெரியவில்லை! ஆகையால் நீ நான் என்பவர்கள் யாரோ என்பதை தெரியச்சொல்ல வேண்டும் என்றார். எனக்கு இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் நிதாகர் பரபரப்புடன் அவரது திருவடிகளில் விழுந்து தண்டம் சமர்ப்பித்து சுவாமீ! தேவரீர் எனது ஆசாரியரான ருபுவென்று நினைக்கிறேன். மற்றவர்களுடைய இதயம் இப்படி ஆத்ம அபேத ஞானத்தால் தூய்மையடைந்திருக்õது. ஆகையால் நீங்கள் எனது குருநாதர் என்பதில் சந்தேகமேயில்லை என்றார். அதை ருபுமுனிவர் ஆமோதித்து, நான் ருபுதான்! நீ எனக்குச் செய்த பணிவிடைக்கு மகிழ்ந்து உனது ஞானத்தை நிலைப்படுத்த நான் இங்கு வந்தேன். பரமார்த்த சாரமான அபேத ஞானத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொன்னேன் என்று சொல்லிவிட்டுத் தமது இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். நிதாகரும் சகல ஆத்ம சொரூபங்களும் ஒரே வகையானவையே என்ற உறுதியடைந்து, யாவற்றையும் பிரம்மஸ்வரூபமாகத் தியானித்து, மேலான மோட்சத்தை அடைந்தார்.

அரசே! நீயும் அப்படியேதான். சத்துருக்கள், மித்திரர்கள் என்ற வித்தியாசமின்றி, கர்மவசத்தால் எங்கும் இருக்கின்ற ஆத்ம சொரூபம் ஒருவிதமானதே என்பதை நினைத்திருப்பாயாக. களங்கமற்ற சுத்தமான ஆகாயம் ஒன்றேதான் ஆயினும் அது உபாதி வசத்தால் கறுப்பு, வெளுப்பு என்று வெவ்வேறாகத் தோன்றுகிறது. அதுபோலவே ஒரே விதமான ஆத்ம ஸ்வரூபம் அஞ்ஞானிகளுக்கு வெவ்வேறாகத் தோற்றமளிக்கிறது. இதை இன்னுஞ் சுருக்கமாகச் சொல்கிறேன், கேள். எந்தெந்தப் பொருளுண்டோ, அந்தந்தப் பொருள்கள் யாவும் ஸ்ரீ அச்சுதனுடைய சொரூபம்தான்! அவனுக்கு வேறானதும் மேலானதும் எதுவுமில்லை. நானும் அவன் ஸ்வரூபம்; நீயும் அப்படியே சகலமும் அப்படித்தான். ஆகையால் எல்லாம் வேறு வேறு என்கின்ற பேதபுத்தியாகிய அஞ்ஞானத்தை விட்டு விடு என்று ஜடபரதயோகியார் கூறினார். அரசன் சுத்த ஞானியானான் ஜடபரதயோகியும் பூர்வ ஜன்ம ஸ்மரணத்தினால் ஞானயோகமடைந்து அந்தப் பிறவியிலே மோட்சமடைந்தார். இத்தகைய மகானுபாவரான ஜடபரத யோகியாரின் இந்த மேன்மையான சரிதத்தை எவன் ஒருவன் சொல்லுகிறானோ, எவன் பக்தியுடன் இதைக் கேட்கிறானோ அத்தகையோரெல்லாம் சுத்த ஞானமுடையவர்களாகி மோக்ஷம் பெறுதற்குத் தக்கவராவர்.

இரண்டாவது அம்சம் முடிந்தது.

———————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம்—-முதல் பாகம் —

February 28, 2021

1. பிரியவிரத வம்சம்
2. பூமண்டலத்தின் பிரிவுகள்
3. பாரததேச வர்ணனை
4. பிலக்ஷத் தீவுகளின் வர்ணனை
5. பாதாள லோகம்
6. நரக லோகம்
7. புவர்லோக, மேல் லோகங்களும் கிரக நிலைகளும்
8. சூரிய மண்டலமும் அதன் மார்க்கமும்

—————————–

1. பிரியவிரத வம்சம்

பராசர முனிவரே! உலகப்படைப்புப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதிலளித்து விட்டீர்கள். நீங்கள் கூறியருளிய முதலம்சத்தில், உலகப்படைப்பு சம்பந்தமாக நான் மீண்டும் ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறேன். சுவாயம்புவ மனுவின் பிள்ளைகளான பிரியவிரதன், உத்தானபாதன் என்பவர்களில், உத்தானபாதனுக்கு துருவன் என்ற மகன் பிறந்தான் என்று அருளிச்செய்தீர்கள். மற்ற பிரியவிரதனுடைய வமிசத்தை பற்றித் தாங்கள் கூறவில்லை. ஆகையால் அதைச் சொல்ல வேண்டும் என்று மைத்ரேயர் கேட்டார். அதற்கிணங்கி பராசர மகரிஷி கூறலானார். கேளும் மைத்ரேயரே! அந்த பிரியவிரதன் கர்த்தமப் பிரஜாபதியின் குமாரியை மணந்து சம்ராட்டு, குஷி என்ற இரு பெண்களையும் ஆக்கினீத்திரன், அக்கினிபாகு, வபுஷ்மான், தியுதிமான், மேதா, மேதாதிதிபவியன், வைனன், புத்திரன், ஜியோதிஷ்மான் என்ற பத்துப்பிள்ளைகளையும் பெற்றான். அவர்கள் மகாஞானியர். அவர்களில் ஜியோதிஷ்மான் என்பவன் தனது பெயருக்கேற்ற வகையில் மிகவும் தேஜஸ் உடையவனாக விளங்கினான். பிரியவிரதனின் பிள்ளைகளில் மேதா, அக்கினிபாகு, புத்திரன் என்ற மூவரும் பூர்வஜன்ம ஞானத்தால் யோகாப்பியாசத்தில் முக்கிய மகானுபவராய் அரசாட்சி முதலியவற்றில் பற்றற்றவராய், கர்ம பலன்களை விரும்பாதவாய் விதிப்படிக் கர்மாதிகளைச் செய்து வந்தனர். அதனால் பிரியவிரதன் தன்னுடைய ஆட்சியிலிருந்த ஏழு தீவுகளை அந்த எழுவருக்கும் ஒப்படைத்தான். அவர்களில் ஆக்கினீத்திரன் என்பவன் ஐம்பூத்வீபத்தையும், மேதாதி என்பவன் பிலக்ஷத்துவீபத்தையும், வபுஷ்மான் என்பவன் குசத்வீபத்தையும், தியுதிமான் என்பவன் கிரவுஞ்சக்தி வீபத்தையும், பவியன் என்பவன் சாகத்துவீபத்தையும், வைனன் என்பவன் புஷ்பகரத்து வீபத்தையும் அரசாண்டு வந்தார்கள்.

ஜம்பூத் தீவின் அதிபதியான ஆக்கினீத்திரனுக்கு, நாபி கிம்புருஷன், ஹரிவருஷன், இளாவிரதன், ரமியன், இரண்வான் குரு; பத்திராசுவன், கேதுமாலன் என்ற ஒன்பது புதல்வர்கள் பிறந்தனர். அவர்களுடைய தந்தை தனது அரசான ஜம்பூத்வீபத்தை ஒன்பது பங்காக்கி, நாபிக்கு தென்பகுதியான பாரத வருஷத்தையும், ஹரிவருஷனுக்கு நைஷத்தையும், இளாவீரதனுக்கு மேருமலையின் இடைப்பட்ட இளாவிருத வருஷத்தையும், ரம்மியனுக்கு நீலாசலத்தைச் சேர்ந்த ரம்மியக வருஷத்தையும், ஹிரண்யவானுக்கு அதற்கு வடக்கிலுள்ள ஸ்வேத வருஷத்தையும், குரு என்பவனுக்கு சிருங்கலத் என்ற மலைக்கு வடக்கிலுள்ள குரு வருஷத்தையும், பத்திராசுவனுக்கு மேருமலையின் கிழக்கேயுள்ள பத்திராசுவ வருஷத்தையும், கேதுமாலனுக்கு கந்தமாதன வருஷத்தையும் கொடுத்து அவர்களுக்கு ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்து விட்டுத் தவவேடம் பூண்டு, மிகவும் தூய்மையான ஸாளக்கிராமம் என்ற திவ்விய ÷க்ஷத்திரத்திற்குப் போய்ச் சேர்ந்தான். கிம்புருஷ வருஷம் முதலான எட்டு வாசஸ்தானங்களிலும் வசிப்போருக்கு யாதொரு முயற்சியும் இல்லாமலேயே பெரும்பான்மையின் சுகானுபவயே கிடைக்கும். துக்க அனுபவமும், மூப்பு, சாவு, இவை பற்றிய பயமும், தருமம், அதருமம் என்பவைகளும் உத்தமன், மத்தியமன், அதமன் என்ற வித்தியாசங்களும், பிராணிகளுடைய உடல் குறைதல் போன்ற அடையாளமுள்ள யுகபேதங்கள் இல்லை.

ஹிமாஹ்வயம் அல்லது பாரதம் என்ற தேசத்துக்கு அதிபதியான நாபி என்பவருக்கு, மேரு தேவி என்பவளிடத்தில் மிகவும் தேஜசுடைய ரிஷபர் என்பவர் பிறந்தார். அவர் நூறு பேருக்குள்ளே மூத்தவர். அந்த ரிஷப மகாராஜன் தர்மமாக ராஜ்ய பரிபாலனஞ்செய்து, பலவிதமான யாகங்களையும் நிறைவேற்றி, மூத்தகுமாரனான பரதனுக்கு ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்வித்து விட்டு, தவஞ்செய்யும் பொருட்டுப் புலகருடைய ஆஸ்ரமமான சாளக்கிராம ÷க்ஷத்திரத்திற்குச் சென்றார். அங்கு அவர் வானப் பிரஸ்த விதிப்படி தவங்களையும், யாகங்களையுஞ்செய்து, அந்த தவமுயற்சியினால் உடலிலுள்ள நம்புகள் வெளித்தோன்றும்படி மிகவும் இளைத்துப் போய், பிறகு தனது ஆடைகளையெல்லாம் எறிந்து, நிர்வாணமாய், வாயில் பந்து போன்ற கற்கவளத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்து மகாப்பிரஸ்தானம் போய்விட்டார். இவ்விதமாக பரத மகாராஜனுக்குக் கொடுக்கப்பட்டதால் இந்த தேசத்திற்குப் பாரத வருஷம் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்தப் பரதனுக்கு தர்மசீலனான சுமதி என்ற புதல்வன் பிறந்தான். பரதனும், நீதிமுறைப்படி அரசாண்டு, யாகங்களைச் செய்து, பிறகு புத்திரனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, சாளக்கிராம ÷க்ஷத்திரத்திற்குச் சென்று, யோகாப் பியாசஞ் செய்து, பிராணனை விட்டான். அவன் மறுபடியும் உத்தமமான யோகியர் வமிசத்தில் ஒரு பிராமணனாகப் பிறந்தான். மைத்ரேயரே! அந்தப் பரதனின் சரித்திரத்தை பிறகு சொல்கிறேன். பரதனின் குமாரனான சுமதிக்கு, இந்திரத்தியும்னன் என்ற குமாரன் பிறந்தான். அவனுக்குப் பரமேஷ்டி என்பவன் குமாரன் அவனுக்குப் புத்திரன் பிரதிஹாரன். அவனுடைய மகன் பிரதிகர்த்தா. அவனுக்குப் பவன் என்பவனும், அவனுக்கு உத்கீதி என்பவனும், அவனுக்கு பிரஸ்தாவன் என்பவனும் பிறந்தார்கள். அவன் மகன் பிருது. பிருதுவின் மகன் நக்தன், அவனுடைய மகன் கயன்; கயனுடைய மகன் நான், அவன் மகன் விரோகணன், அவன் மகன் வீரியன், அவன் மகன் தீமான். அவன் மகன் மகாந்தன், அவன் மகன் பாவனன், அவன் மகன் துவஷ்டா, அவனுக்கு விரஜன், விரஜனுக்கு ரஜன். அவன் மகன் சதஜித்து, அந்த சதஜித்துக்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர்; அவர்களில் மூத்தவன் விஷ்வக்ஜோதி, இந்த விஷ்வக்ஜோதி முதலியவர்களால்தான் பிரஜைகள் நன்றாக வளர்க்கப்பட்டார்கள், அவர்களால் இந்தப் பாரத வருஷம் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவர்களது குலத்தில் பிறந்தவர்களால், பாரத பூமியானது எழுபத்தொரு சதுர்யுகம் வரை அனுபவிக்கப்பட்டது. இதுதான் சுவாயம்புவமனுவின் படைப்பாகும். இந்த வராக கல்பத்தில், முதலாவது மனுவான சுவாயம்புவமனுவின் காலத்தில்தான் இந்தப் பிரியவிரத சந்ததிக் கிரமம் நடந்தது.

—————-

2. பூமண்டலத்தின் பிரிவுகள்

பராசர முனிவரே! தாங்கள் சுவாயம்புவமனுவின் படைப்புக் கிரமத்தைக் கூறியருளினீர்கள். இனி பூமியின் மண்டலத்தையும் அதிலுள்ள சமுத்திரங்கள், தீவுகள், மலைகள், காடுகள், நதிகள், தேவர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அளவு, ஆதாரம், சொரூபம் ஆகியவற்றைக் கூறவேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! இந்த விஷயங்களை விவரித்துச் சொல்வதற்கு அநேகம் ஆயிரம் ஆண்டுகள் போதாது. ஆயினும் நான் சுருங்கச் சொல்கிறேன். இந்தப் பூமியானது ஜம்புத்துவீபம், சால்மலத்துவீபம், பிலக்ஷதவீபம், குசத்துவீபம், கிரவுஞ்சத்துவீபம், சாகத்துவீபம், புஷ்கரத்துவீபம் என்ற ஏழு த்வீபங்களாகப் பிரிந்திருக்கின்றன. இந்த ஏழு த்வீபங்களும் உப்பு, கருப்பஞ்சாறுகள், நெய், தயிர், பால், சுத்தநீர் என்ற ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ளன. இவற்றினுள்ளே, ஜம்புத்வீபம் என்பது எல்லாவற்றுக்கும் நடுவில் இருக்கிறது. அதற்கு நடுவில் மேரு என்ற சுவர்ண மலையானது எண்பத்து நாலாயிரம் யோசனை உயரமும், பதினையாயிரம் யோசனை பூமிக்குள்ளே ஊடுருவியும், முப்பத்தேழாயிரம் யோசனை தரையில் விரிந்ததும், பதினாறாயிரம் யோசனை அடியில் விரிந்ததுமாகி, பூமி என்ற தாமரை மலருக்குக் கர்ணிகையைப் போல விளங்குகிறது. இதற்குத் தென்திசையில் இமவான்; ஏமகூடம், நிஷதம் ஆகிய மூன்றும் வடபுறத்தில் நீலம், சுவேதம், சிருங்கி என்ற மூன்றும் வருஷங்களின் எல்லை மலைகளாக இருக்கின்றன. அவற்றின் நடுவேயிருக்கும் இரண்டு மலைகள் லக்ஷம் யோசனைப் பிரமாணம் உள்ளனவாயும், மற்றவை பதினாயிரம் யோசனை குறைந்தவையாயும் இருக்கின்றன. அவையெல்லாம் இரண்டாயிரம் யோசனை உயரமும் அவ்வளவு பரப்பளவும் கொண்டவையாம். இந்த ஜம்புத்வீபத்தில் முதல் பாரதவர்ஷமும் அடுத்து கிம்புருஷமும் அடுத்து ஹரி வருஷமும் மூன்றும் மேருவின் தெற்கேயுள்ளவை. ரம்மியக வருஷம், ஹிரண்மய வருஷம், குரு வருஷம் ஆகிய மூன்றும் வடக்கில் உள்ளவை. பாரத வருஷம் எப்படித் தெற்கின் கடைசியோ, அப்படியே குருவருஷம் வடக்கின் கடைசியாக இருக்கின்றது. மேருவைச் சுற்றிலுமுள்ள பூமி இளாவருஷம் என்று சொல்லப்படும். இவ்வருஷங்கள் ஒவ்வொன்றும் ஒன்பதினாயிரம் யோசனை பரப்புடையவை. இந்த இளாவிருத வருஷத்தில் நான்கு மலைகள் மேருவுக்குத் தாங்கிகளாக இருக்கும்படி உண்டாக்கப்பட்டு, பதினாயிரம் யோசனை உயரமுள்ள உன்னத கேஸ்ர பர்வதங்களாக இருக்கின்றன. அவற்றின் கிழக்கே மந்தரமும், தெற்கில் கந்தமாதனமும், மேற்கில் விபுலமும், வடக்கில் சுபார்சுவமும் இருக்கின்றன. அந்த மலைகளில் முறையே கடம்பு, நாவல், அத்தி, ஆல் என்ற மரங்கள் பதினோராயிரம் யோசனை அளவுள்ளனவாய், கொடிமரங்களை நாட்டியதுபோல் அமைந்துள்ளன.

முனிவரே! அந்த நாவல் மரத்தைப் பற்றித்தான் இந்தப் பூமிக்கு ஜம்பூத்வீபம் என்ற பெயர் உண்டாயிற்று. அந்த நாவல் மரத்தின் பழங்கள் மகாகஜப் பிரமாணமுள்ளவைகளாய் மலையின் மீது விழுந்து சிதைய அவற்றின் ரசத்தினால் ஜம்பு நதி என்ற புகழ்பெற்ற ஒருநதி ஓடுகின்றது. அந்த நதியின் தண்ணீரை அவ்விடத்தார் பானஞ்செய்வதால் அவர்களுக்கு வியர்வையும் துர்க்கந்தமும் மூப்பும் இந்திரியங்களில் பலக்குறைவும் உண்டாவதில்லை. மேலும் மனமானது எப்பொழுதும் நல்லநிலையில் இருக்கும். அவ்வாற்றங்கரையின் மண்ணானது அந்த ரஸத்தில் நனைந்து காற்றினால் உலர்ந்து ஜாம்பூநதம் என்ற பெயரைக் கொண்டு சித்தர்கள் தரிக்கும்படியான ஸ்வர்ணமாகின்றது. அந்த மேருமலைக்குக் கிழக்கில் பத்திராசுவ வருஷமும், மேற்கில் கேதுமால வருஷமும் இருக்கின்றன. அன்றியும் மேருவின் கிழக்கு முதலாகிய நான்கு திசைகளிலும் முறையே சைத்திரரதம், கந்தமாதனம், வைப்பிராசம், நந்தனம் என்ற நான்கு உத்தியானவனங்கள் உள்ளன. அவற்றில் அருணோதம் மகாபத்திரம் ஸிதோதம்; மானசம் என்ற நான்கு ஏரிகள் தேவதா யோக்கியங்களாக இருக்கின்றன. அந்த மேருவின் கிழக்கில் ஸிதாம்பம், குமுத்துவான்; குரரி; மாலியவான். வைகங்கம் முதலான கேஸர பர்வதங்கள் உண்டு. சில திரிகூடம், கிசிரம், பதங்கம், ருசிகம், நிஷம் முதலியன தென்புறத்தில் உள்ள கேஸர பர்வதங்கள் சிகிவாஸம், வைடூரியம் கபிலம் கந்தமாதனம், ஜாருதி முதலானவை. மேருவைச் சுற்றிலும் இருக்கிற அவயவங்களில் சேர்ந்திருக்கும் சங்ககூடம், ரிஷபம், ஹம்சம், நாகம், காளாஞ்சம் முதலியன வடகேசர அசலங்களாகும்.

மைத்திரேயரே! மேருவுக்கு மேல் பதினாலாயிரம் யோசனை விசாலமுள்ள பிரம்மாவின் மாபெரும் பட்டணம் இருக்கிறது. அதைச்சுற்றி, எட்டுத்திசைகளிலும் லோக பாலகர் எட்டுப்பேருக்கும் சிறந்த பட்டணங்கள் உண்டு. ஸ்ரீவிஷ்ணு பாதத்தினின்றும் உதித்த கங்காநதி ஆகாயத்திலிருந்து சந்திரமண்டலத்தில் விழுந்து அதை நனைத்துக்கொண்டு மேருவின் மீதிருக்கும் பிரம்மாவினுடைய நகரத்திற்கு நாலுபுரத்திலும் நான்கு பிரிவாக விழுந்து சீதை, அளகநந்தை சட்சு, பத்திரை என்ற பெயர்களைப் பெற்று விளங்குகின்றன. அவற்றுள் சீதை என்ற நதியானது மலை மேல் மலையாக ஆகாயமார்க்கத்திலிருந்து பத்திராசுவ வருஷத்தில் இறங்கிச் சமுத்திரத்தில் சேருகின்றது. அதுபோலவே அளகநத்தை நதியும் தென்புறத்து மலைகளின் வழியாய்ப் பாரதவருஷத்தில் சென்று ஏழு பிரிவாய்ப் பிரிந்து சமுத்திரத்தில் விழுகின்றது. சட்சு என்னும் நதியும் மேற்குமலைகளைக் கடந்து கேதுமால வருடத்தில் சென்று சமுத்திரத்தில் சங்கமமாகிறது. அதுபோலவே பத்திரை வடமலைகளின் வழியாகக் குருவருஷத்தில் புகுந்து கடலையடைகிறது. மாலியவர்து, கந்தமாதனம் என்ற மலைகள் நீலநிஷதபர் வதங்களின் அளவாக இருக்கின்றன. அவற்றின் நடுவிலேதான் மேருமலையானது கர்ணிகையைப் போலுள்ளது. பாரதகேது, மாலபத்திராசுவ வருஷங்கள் எல்லைப்புற மலைகளாகி, ஜடராதிகளுக்கு வெளியே இந்தப்பூமி என்ற தாமரை மலருக்கு நான்கு இதழ்களாக விளங்குகின்றன. ஜடரம்; ஏமகூடம் என்ற மலைகள் தெற்கு வடக்காக, நீல நிஷத மலைகளின் அளவில் தென்புற எல்லை மலைகளாக இருக்கின்றன. கந்தமாதனம் கைலாயம் என்ற இரண்டு மலைகளும் எண்பதினாயிரம் யோசனையுடையவை. அவை கிழக்குத்திசையின் எல்லை மலைகளாய் நீண்டு சமுத்திர நடுவில் இருக்கின்றன. நிஷதம்; பாரியாத்திரம் இவ்விரண்டும்; கீழ்த்திசை மலைகளைப் போலவே மேலைத்திசையின் எல்லை மலைகளாக இருக்கின்றன. திரீசிருங்கம்; ஜாருதி என்பவை; முன்னே சொன்ன மலைகளைப் போலவே நீண்டு சமுத்திரத்தின் நடுவே வடக்கெல்லை மலைகளாக இருக்கின்றன.

முனிவரே; இவ்விதம் இளாவிரத வருஷத்தில் உட்பிரிவின் எல்லை மலைகளாக இரண்டாயிரம் இருக்கின்றன. மகாமேருவின் நான்கு புறத்திலும் கேசரமலைகள் சில இருக்கின்றன என்று சொன்னேன் அல்லவா? அந்த சிதனாசல மலை முதலியவற்றின் நடுவேயுள்ள சரிவான பள்ளத்தாக்குகள் சித்தசாரணர்கள் வாசஞ் செய்யுமிடங்களாக உள்ளன. அவற்றிலே மிகவும் மனோகரமான ஸ்ரீவனம் கிம்சுகவனம்; நளவனம்; சயித்திர ரதம் என்ற வனங்களும் ஹேமசித்திரம், பூதவனம், பிரமபாரிசம், சுநாபகம் என்ற புரங்களும் இருக்கின்றன. அங்கே ஸ்ரீமகாலக்ஷ்மி, விஷ்ணு, அக்னி, சூரியன் முதலிய தேவர்களுக்கும் வாசஸ்தலங்கள் இருக்கின்றன. அம்மலைச் சந்துகளில் கந்தர்வ யக்ஷõதிகள் கீதவாத்தியமிசைத்து ஆடிப்பாடிக் கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் பூலோக சொர்க்கங்கள் என்று வழங்கப்படும். இவற்றைப் புண்ணியவான்கள் போய்ச் சேருவார்களேயல்லாமல், மற்றவர் அனேக பிறவிகளையெடுப்பினும் போய்ச் சேரமாட்டார்கள். ஸ்ரீவிஷ்ணுபகவான் பத்திராசுவ வருஷத்தில் ஹயக்ரீவரூபியாக எழுந்தருளியிருக்கிறார். கேதுமால வருஷத்திலே வராஹரூபியாகவும், பாரத வருஷத்திலே கூர்ம ரூபியாகவும்; குரு வருஷத்திலே மச்சரூபியாகவும் எழுந்தருளியிருக்கிறார். அந்த ஸ்ரீஹரிபகவான் சர்வசொரூபியாய்ச் சர்வாதாரமாய் எங்குமேயுள்ளார். முன்பு சொன்ன கிம்புருஷாதி வருஷங்கள் எட்டிலும் சோகம், ஆயாசம், பயம்; பசி முதலிய துன்பங்களில்லாமல் பிரஜைகள் எல்லாம் நல்ல மனதுடன் தேஜோபலாதிகளையுடையவராய்ப் பதினாயிரம் பன்னீராயிரம் ஆண்டுகள் வரை ஜீவிப்பார்கள். அங்கே மழையே பெய்வதில்லை. பூமியில் சுரக்கும் தண்ணீரே எப்போதும் போதுமானதாக இருக்கும். அங்கே கிருதயுகம் திரேதாயுகம் முதலிய கால கற்பனைகள் இராது. அவ்வருஷங்களுக்குள்ளே ஒவ்வொன்றிலும் எவ்வேழு குலபர்வதங்களும் உண்டு. அந்தப் பருவதங்களிலிருந்து அநேகமாயிரம் நதிகள் உண்டாகி வெகு ரமணீகரமாய்ப் பாய்கின்றன.

————

3. பாரததேச வர்ணனை

சமுத்திரத்துக்கு வடக்கே இமயத்திற்குத் தெற்கே இருக்கிற பூமியானது பரதனுடைய சந்ததியார் வசிப்பதால், பாரதவர்ஷம் என்ற பெயரைப்பெற்றது. மைத்ரேயரே! இதன் பரப்பளவு ஒன்பதாயிரம் யோசனை தூரமாகும். சொர்க்கத்தையடைகிறவர்களும், மோக்ஷத்தையடைகிறவர்களுக்கும் பிரவிருத்தி, நிவர்த்தி கர்வ சாதன பூமியாக இருப்பது இதுவேயாகும். இதில் மகேந்திரம், மலயம், ஸஹ்யம், சுத்திமான், ரீக்ஷம் விந்தியம், பாரியாத்திரம் என்ற ஏழுவித மலைகள் இருக்கின்றன. பிராணிகள் இங்கிருந்து தான் சொர்க்கமடைகிறார்கள். மோக்ஷத்தைப் பெறுகிறார்கள். மிருகாதி பிறவிகளையும் நரகத்தையும் இங்கிருந்தே அடைகிறார்கள். இதைவிட வேறிடத்தில் மனிதர்களுக்கு சொர்க்கானுபவர்க்கங்களுக்கு உரிய கர்மங்கள் விதிக்கப்படவில்லை. இந்தப்பாரத வருஷத்துக்கு இந்திர த்வீபம் கசேரு, தாம்பர பர்ணம், கபஸ்திமான், நாகத்வீபம், சவுமியத்வீபம், காந்தர்வத்வீபம், வாருணத்வீபம், பாரதத்துவீபம் என்ற பெயருடைய ஒன்பது பிரிவுகள் உண்டு. அவற்றில் ஒன்பதாவது பிரிவான பாரதத்துவீபம் என்பதே நாமிருக்கும் இந்தப் பூமியாகும். இது சகரர் தோண்டிய கடலால் சூழப்பட்டுள்ளது. இந்தப்பாரத கண்டமானது தெற்கு வடக்கில் ஆயிரம் யோசனையளவாக இருக்கிறது. கிழக்கில் கிராத தேசமும், மேற்கில் யவனதேசமும் இருக்கின்றன. நடுவில் பிரம்ம க்ஷத்திரிய; வைசிய; சூத்திரர் என்ற நான்கு வருணத்தினரும் வகுப்பின்படி இருக்கின்றனர். யாகங்களைச் செய்வதும், யுத்தஞ்செய்து துஷ்டர்களையடக்குதலும், வாணிபஞ்செய்தலும், சிற்பத்தொழில் செய்வதுமாகிய ஜீவன உபாயங்களிலே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதில் சதத்துரு சந்திர பானக முதலிய நதிகள்; இமயமலையிலிருந்து பெருகுகின்றன. வேதஸ்மிருதி முதலிய நதிகள் பாரியாத்திர பருவதத்திலிருந்து உண்டாகிப் பாய்கின்றன. நருமதை, சுரசை, முதலிய நதிகள் விந்திய மலையில் உற்பத்தியாகின்றன. தாபீ, பயோஷ்ணீ, நிர்விந்தியை முதலிய நதிகள் சஹ்ய பர்வதத்தின் தாழ்வரையின்று உண்டாகின்றன. கிருதமாலை, தாம்பரபருணீ நதிகள் மலயாசலத்தில் உண்டாகின்றன. திரிசாமா, ரிஷிகுல்யா முதலிய நதிகள் மகேந்திரகிரியில் உதிக்கின்றன. குமாரீ முதலிய நதிகள் சுத்திமத்தென்னும் மலையில் பிறந்தவை. இவற்றைச் சார்ந்த உபநதிகளும் வேறு ஆறுகளும் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இவ்வாற்றங்கரையில் குரு பாஞ்சாலம், மத்தியதேசம், பூர்வதேசம், காமரூபம், ஆந்திரம், கலிங்கம், மகதம், பாண்டியதேசம், அபராந்தம், சவுராஷ்டிரம், சூத்திர தேசம், ஆபீரதேசம், பாப்பர தேசம், மாருகம், மாளவம், பாரியாத்தி ரம்சவ்வீரம், சிந்து, ஊணம், சால்வம், கோசலம், மத்திரம், ஆராமம், அம்பஷ்டம், பாரசீகம் முதலிய பல தேசத்து மக்களும் வாசஞ்செய்து கொண்டு, அவற்றின் தண்ணீரைப் பானம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் தான் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகை யுகபேதங்களும் உண்டு.

இங்குதான் யோகியர் தவஞ்செய்கின்றனர். யாகசீலர் யாகஞ்செய்கின்றனர். தானசீலர் தானம் செய்கின்றனர். இவ்விதமான பரலோக சாதகமான நல்ல தருமங்களை ஜனங்கள் ஆதரவோடு செய்து வருகின்றனர். இந்த ஜம்புத்தீவிலே யக்ஞ புருஷனாகவும், யக்ஞ சொரூபியாகவும் இருக்கிற ஸ்ரீவிஷ்ணுபகவான் யக்ஞங்களினால் ஆராதிக்கப்படுகிறான். ஏனெனில் இந்தச் சம்புத் தீவானது பரலோக சாதகமான கருமங்களைச் செய்யத் தகுந்த இடமாகையால், பாரதவருஷம் தான் உயர்வானது. மற்ற பூமியெல்லாம் போகங்களுக்கு உரியனவாம். ஒரு ஜந்து அநேகப் பிறவிகளிலே செய்த புண்ணியத்தினாலே இவ்விடத்தில் மனிதப்பிறவியாகப் பிறக்கும்; இந்தப் பாரத வருஷத்தைப் பற்றித் தேவதைகள் பாடியபாட்டைக் கேளுங்கள். சொர்க்கத்துக்கும் மோக்ஷத்துக்கும் ஏதுவான கர்மங்களுக்குச் சாதகமாயிருக்கிற இந்தப் பாரதவருஷத்திலே தேவஜன்மத்துக்குப் பின்னாயினும் இந்த ஜன்மத்தைப் பெறுவாராயின் அவர்களே புண்ணியவான்கள். அவர்களே தேவர்களிலும் மேலானவர்கள். அவ்விடத்து ஜனங்கள் கர்ம பயன்களிலே கருத்தை வைக்காமல் செய்யும் கருமங்களையெல்லாம் பரமாத்மாவான ஸ்ரீவிஷ்ணுவுக்கு அர்ப்பணஞ்செய்து நிர்மலர்களாய் அந்த அநந்தனிடத்திலே லயத்தை அடைகின்றனர். நமக்குச் சொர்க்கப் பிராப்தி காரணமான கருமம் அனுபவித்தலினாலே அழிந்த பிறகு எவ்விடத்திலே தேக சம்பந்தைப் பெறுவோமா அதையும் அறியோம். இப்போது பாரதவருஷத்திலே பிறவி பெற்று ஞானேந்திரியக் கர்மேந்திரியங்களைக் குறைவறப் பெற்றவர்கள், சுலபமாய், ஆன்மா கடைத்தேறும் வழியைத் தேடச் சக்தி பெற்றவர்களாவார்கள். ஆகையால் அவர்கள் மகாபுண்ணியவான்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மைத்ரேயரே! இப்படி ஒன்பது வருஷங்களாகப் பிரிந்து லக்ஷம் யோசனை பரப்பளவுள்ள ஜம்புத்து வீபத்தின் விவரத்தைச் சுருக்கமாகச் சொன்னேன். இந்த ஜம்புத்து வீபத்தைச் சுற்றிய வளையத்தைப் போல் லவண சமுத்திரமானது லக்ஷ யோசனை விஸ்தாரமுடையதாக அமைந்திருக்கிறது.

—————–

4. பிலக்ஷத் தீவுகளின் வர்ணனை

இந்த ஜம்புத்தீவானது உப்புக் கடலினால் சுற்றப்பட்டது போலவே, இந்த லவண சமுத்திரம் பிலக்ஷத் தீவினாலே சுற்றப்பட்டிருக்கிறது. ஜம்புத்தீவின் பரப்பளவு லக்ஷயோசனையாகும். அதைவிட இருமடங்கு பரப்பளவைக் கொண்டது பிலக்ஷத்தீவாகும். இந்த பிலக்ஷத்தீவின் அதிபதியான மேதாதிதி என்பவனுக்கு சாந்தஹயன், சிவன், சிசிரன், சுகோதயன், ஆனந்தன், ÷க்ஷமகன், துருவன் என்று ஏழுபிள்ளைகள் இருந்தார்கள். அந்தத் தீவில் அவர்களின் பெயராலேயே சாந்தஹயம், சிவம், சிசிரம், சுகதம், ஆனந்தம், ÷க்ஷமகம், துருவம் என்ற ஏழு தேசங்கள் ஏற்பட்டன. அவற்றுக்கு கோமேதகம், சந்திரம், நாதம் துந்துபி சோமகம், சுமனசு, வைபிராஜம் என்ற ஏழு மலைகள் எல்லைகளாகும். மிகவும் ரமணீயமான இந்த மலைகளிலுள்ள ஜனங்கள் தேவ கந்தர்வாதிகளோடு வேடிக்கையாக வாசஞ்செய்து கொண்டிருப்பார்கள். அங்கு சகல ராஜ்யங்களும் தூய்மையானவை. அங்கு ஜனங்கள் வெகுகாலம் கழித்த பின்பே மரணமடைவார்கள். நோய்களும் மனோவியாதிகளும் அங்கில்லை. அந்த ஏழு வருஷங்களிலும் சமுத்திரத்தோடு சேரத்தக்க அது தப்தை சிகி வபாவை, திரிதிவை, சுக்கிலமை, அமிருதை, சுகிருதை என்ற ஏழு நதிகள் ஓடுகின்றன. இவையெல்லாம் பெயர் சொன்னவுடன் பாதங்களை நீக்கும் மகிமை வாய்ந்தவை. மேலும் பற்பல சிற்றாறுகளும், சிறுமலைகளும் அங்குள்ளன. அவ்விடத்தார் உத்சர்ப்பிணி என்ற விருத்தி காலமும் அவசர்ப்பிணி என்ற க்ஷய காலமும் கிருதாதியுக பேதங்களுமில்லாமல் எப்போதுமே திரேதா யுகத்திற்குச் சமமான காலமுடையோராய் அந்த மலைச்சாரல்களில் வசிப்பார்கள். இந்த ஆற்று நீரைப் பானஞ்செய்து சுகமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்த பிலக்ஷத்தீவு முதலாய் சாகத்தீவு வரையிலுள்ள பூமிகளில் நோயற்று ஐயாயிரம் ஆண்டுகள் வரையில் மக்கள் வாழ்வார்கள். இந்த ஐந்து தீவுகளிலுள் வருணாசிரம தர்மம் உண்டு. அங்கே ஆரியகர், இகரர், வீதிசியர், பாவியர் என்ற நான்கு பிரிவுகள் உண்டு. அந்தத் தீவின் நடுவே முன்பே சொன்ன நாவல் மரத்தின் அளவில் ஒரு கல்லால மரம் இருக்கிறது. அதனால் தான் அந்தத் தீவுக்கு பிலக்ஷத் தீவு என்ற பெயர் வழங்கலாயிற்று. அங்கே சர்வேசுவரனான ஸ்ரீவிஷ்ணுபகவான் சோமரூபியாய், ஆரியகர் முதலானவர்களால் ஆராதிக்கப்படுகிறார். அந்தப்பிலக்ஷத் தீவானது அதன் அளவாயுள்ள கருப்பஞ்சாற்றுக் கடலால் சூழப்பட்டுள்ளது.

இனி, சால்மலித் தீவைப் பற்றிக் கூறுகிறேன். கேட்பீராக-இந்தச் சால்மலித் தீவுக்கு அதிபதியான வபுஷ்மா என்பவனுக்குச் சுவேதன் அரிதன் ஜிமூதன், ரோஹிதன்; வைத்துதன், மானசன், சுப்பிரபன் என்ற ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களது பெயரில் அங்கு ஏழு தேசங்கள் உண்டு அத்தீவின் அளவு, பிலக்ஷத் தீவைவிட இருமடங்கு அதிகம். அங்கு குமுதம் உன்னதம்: பலாஹம் துரோணம் கங்கம் மகிஷம் ககுத்துமான் என்ற ஏழு மலைகள் ஏழு வருஷங்களுக்கும் எல்லைகளாக அமைந்துள்ளன. அவை நானாவித இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம் அவற்றினுள்ளே துரோணம் என்ற மலை, மூலிகைகளின் பிறப்பிடம்; பூர்வத்தில் ஆஞ்சநேயர் அங்கிருந்து தான் சஞ்சீவினி முதலிய ஒஷதிகளைச் சக்கரவர்த்தித் திருமகனுக்காக இலங்கைக்குக் கொண்டு சென்றார். அந்தத் தீவில் யோனி, தோயை விதிருஷ்ணை சந்திரை சுக்கிலை விமோசினி நிவிருத்தி என்ற நதிகள் ஏழுண்டு. அங்கு கபிலர் அருணர் பீதர் கிருஷ்ணர் என்ற நான்கு வருணத்தினர் சர்வசொரூபியான எம்பெருமானை; வாயு ரூபியாகப் பாவித்து யாகங்களைச் செய்து பூஜித்து வருகிறார்கள். அங்கு சகல தேவதைகளும் சாந்நித்யமாய் இருக்கின்றனர். அதன் நடுவில் மிகவும் பெரியதான இலந்தை மரம் ஒன்றிருக்கிறது. அதனாலேயே அந்தத் தீவிற்கு சால்மலத் தீவு என்ற பெயர் உண்டாயிற்று. அதைச் சுற்றிலும்; மதுச் சமுத்திரம் சூழ்ந்துள்ளது. இந்தச் சமுத்திரத்தைச் சுற்றிலும், இதற்கு இரட்டிப்பு அளவுள்ள குசத்வீபம் இருக்கிறது. அதற்கு அதிபதியான ஜியோதிஷ்மானுக்கு உத்பிதன், வேணுமான்; சுவைரதன்; லம்பன் திருதி பிரபாகரன் கபிலன் என்ற ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுடைய பெயராலேயே அங்கு ஏழுதேசங்கள் இருக்கின்றன. அதில் தேவ, அசுர யக்ஷ கின்னர கிம்புருஷ கந்தர்வாதி தேவகணங்களும் தாமிகன் தக்ஷ்மிகன் தேஹர் மந்தேஹர் என்ற நான்குவகை ஜனங்களும் வசிக்கின்றனர். அந்த நான்கு வருணத்தினரும் தமது கர்மாதிகாரம் நிவர்த்தியாகும் பொருட்டு ஞானனுஷ்டானமுடையோராய் பிரம்மரூபியான ஸ்ரீஜனார்த்தனனை ஆராதித்து உக்கிரமான பயன்தரவல்ல பூர்வ ஜன்மங்களைத் தொலைக்கின்றனர். அவ்விடத்தில் வித்திருமம், ஹேமசைலம் தியுதிமான் புஷ்பவான் குசேசயம் ஹரி மந்தரம் என்ற ஏழுமலைகள் இருக்கின்றன. தூதபாயை சிவை பவித்ரை சுமதி வித்யு தம்பை மஹி என்ற ஏழுநதிகள் அங்கு பாய்கின்றன. இவை தவிர உபநதிகளும் உபபர்வதங்களும் அநேகம் அங்கு உள்ளன. சிறந்த நாணற்புல் அங்கு இருப்பதாலேயே அந்தத் தீவுக்கு குசத்வீபம் என்ற பெயர் உண்டாயிற்று. இந்தத் தீவின் அளவுள்ள சர்ப்பி சமுத்திரம் (நெய்க்கடல்) இதைச் சூழ்ந்துள்ளது.

இச்சமுத்திரத்தை கிரவுஞ்சத தீவு சுற்றிக் கொண்டிருக்கிறது. இதன் வளமையைச் சொல்கிறேன்; கேளுங்கள் இந்தத் தீவானது முந்திய தீவைவிட இருமடங்கு பரப்பளவு கொண்டது. இதன் அரசனான தியுதிமான் என்பவருக்கு குசலன், மனுகன், உஷ்ணன், சிவான், அந்தகாரகன், முனு, துந்துபி என்ற ஏழுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களின் பெயரால் அங்கு ஏழுதேசங்கள் உண்டு. மேலும் கிரவுஞ்சம் வாமனம் அர்த்தகாரகம் வடவாக்கினிக்கு சமமான இரத்தினசைலம், திவாவிருது புண்டரீகன் துந்துபி என்ற ஏழு மலைகள் எல்லை மலைகளாக இருக்கின்றன. அவற்றுள் கிரவுஞ்சம் என்ற பருவதத்தைப் பற்றி அந்தத் தீவுக்கு அப்பெயர் வந்தது. இந்த மலைகள் எல்லாம் ஒன்றிலொன்று இரட்டிப்பான அளவுள்ளனவாக இருக்கும். இந்த மலைகள் எல்லாம் சித்த சாரண கிம்புருஷ கின்னராதிகள் வினோதமாய் விளையாடிக் கொண்டிருக்கு மிடங்களாகும்; இந்த வருஷங்கள் ஏழிலும் புஷ்கரர் புஷ்கலர் தன்னியர் திஷ்யர் என்ற நான்கு வருணத்தாரும் தேவதானவர்களுடன் வாசஞ்செய்வார்கள். கவுரீ குமுத்துவதீ சந்தியா ராத்திரி மனோ ஜவா கியாதி புண்டரீகா என்ற ஏழுபெரிய நதிகளும் பல உபநதிகளும் பாய்கின்றன. இங்குள்ளவர்கள் ருத்திர ரூபியாய் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீஜனார்த்தனனை யாகங்களால் ஆராதித்து வருகிறார்கள். இத்தகைய கிரவுஞ்சத் தீவானது அதன் அளவுக்குத் தயிர்க்கடலால் சூழப்பட்டுள்ளது. இனி அந்தக் கடலைச் சூழ்ந்துள்ள சாகத் தீவானது அளவில் கிரவுஞ்சத் தீவை விட இருமடங்குள் பெரியது. அதில் அந்தத் தீவின் அதிபதியான பவிரயன் என்பவனின் குமாரர்களான ஜலதம், குமாரம், சுகுமாரம். மரிசகம், குசுமோதம், சுமோதம், மகாத்துருமம் என்பவர்களின் பெயரில் ஏழுபிரதேசங்கள் உள்ளன. அவற்றின் எல்லைகளாக உதயகிரி, ஜலதாரம், ரைவதகம், சியாமம், அம்போகிரி, ஆம்பிகேயம், கேசரி என்ற ஏழுமலைகள் உள்ளன. அங்கு சித்தர் கந்தருவர் விளையாடுமிடமாக சாகம் என்ற மகாவிருட்சம் விளங்குவதால் அதற்குச் சாகத்துவீபம் என்ற பெயர் உண்டாயிற்று. அதன் இலைகளில் உறைந்து காற்று வீசும்போது மிகுந்த ஆனந்தவுல்லாசமுண்டாகும். அங்கு பாப ஹரங்களான சுகுமாரீ, குமாரீ, நளினீ, வேணுகீ இக்ஷú தேனுகை, கபஸ்தீ என்ற ஏழு முக்கிய நதிகள் ஓடுகின்றன. அங்கு தரும ஹானியும் பரஸ்பரக் கலகமும் மரியாதையை மீறுதலும் இராது. மங்கர், மாகதர், மானசர், மந்தகர் என்ற நான்கு வருணத்தார் அங்கு வசிக்கின்றனர். அங்கு சூரிய சொரூபியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிஷ்ணுபகவானைத் தங்களுக்கு விதித்துள்ள ஞான கருமங்களினால் ஆராதித்து வருகின்றனர். இந்த சாகத்வீபமானது அதன் அளவையுடைய க்ஷீரசமுத்திரத்தால் (பாற்கடலால்) சூழப்பட்டுள்ளது.

மைத்ரேயரே! இந்தப் பாற்கடலைச் சுற்றி புஷ்கரம் என்ற தீவுள்ளது. அதன் அளவு சாகத்வீபத்தின் அளவைவிட இரட்டிப்பானது. அந்தத் தீவிலே அதன் அதிபதியான சவனனுக்கு பிள்ளைகள் இருவர் உண்டு. அவர்களது பெயரில், மகாபீதம், தாதகீ என்ற இரண்டு பிரதேசங்கள் இருக்கின்றன. அவற்றை மானகோத்ரம் என்ற பெரிய மலையானது இரண்டாகப் பிரித்து தீவின் நடுவே வளையம்போல் அமைந்துள்ளது. அந்தமலை ஐம்பதாயிரம் யோசனை உயரமும் அதன் அளவு விஸ்தீரணமுங்கொண்டது. அங்குள்ள மக்கள் வியாதி சோகம் முதலிய துன்பம் இல்லாமல் பதினாயிரம் ஆண்டு ஜீவித்துச் சுகமாக இருக்கிறார்கள். மேலானவன், கீழானவன் என்ற வேறுபாடும், கொல்பவனும் கொல்லப்படுவோனும், பொறாமை, அசூயை, பயம், கோபம் முதலிய துர்க்குணங்களும் மெய் பொய்களும் அங்கு இல்லை. முன்னே சொன்ன மானசோத்ரம் அன்றி வேறு மலைகளும் நதிகளும் அங்கு இல்லை. அங்கிருக்கும் மனிதர்கள் அனைவரும் தேவர்களுக்கு இணையான ரூபமுடையவர்கள். அங்கு வர்ணாசிரம ஆசாரங்களும் தரும நடக்கைகளும் இல்லை. அங்கு வேதம் ஓதுதல், பயிரிடுதல் போன்ற பிழைப்புகளும், ராஜநீதி முறைகளும் மேலோருக்குக் கீழோர் பணிசெய்தல் போன்ற செயல் முறைகளும் இல்லை. அது பூலோக சொர்க்கம் என்று சொல்லப்பட்டு சுத்த போகத்திற்கே உரியதாக இருக்கிறது. நோய், மூப்பு முதலியன அங்இ இல்லை. அங்கு பிருமதேவன் வாசஞ்செய்யும் விசேஷச் சிறப்புடைய ஆலமரம் ஒன்றுள்ளது. அதனாலேயே அதற்குப் புஷ்கரத்வீபம் என்ற பெயர் உண்டாயிற்று. அந்தத் தீவைச் சுற்றிலும் அதன் அளவேயுள்ள சுத்தோதக சமுத்திரம் (சுத்த நீர்க்கடல்) சூழ்ந்துள்ளது. மைத்ரேயரே! இந்த விதமாக, அந்த ஏழு தீவுகளும் ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டிருக்கின்றன. தீவுகளும் சமுத்திரங்களும் ஒரே அளவாயுள்ளன. முந்திய த்வீபச முத்திரங்களைவிடப் பிந்திய சமுத்வீப இரட்டித்த அளவுள்ளவை சகல சமுத்திரங்களிலும் எப்போதும் தண்ணீர் சமமாகவே இருக்கும் உயர்வதும் தாழ்வதுமில்லை. ஆயினும் ஒருபாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் அக்னியின் சம்பந்தத்தால் பொங்குவதும் அக்னியின் சம்பந்தம் நீங்கும் போது தணிவதுமாயிருப்பது போல் சுக்கில பக்ஷ, கிருஷ்ண பக்ஷ காலங்களில் சந்திரனுடைய உதய அஸ்தம காலங்களில் பொங்கவும் தணியவும் செய்கின்றன. இப்படிப் பொங்குவதும் அடங்குவதும் ஐந்நூற்று ஐம்பது அங்குலம் வரையுமே உள்ளது என்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. அந்த புஷ்கரத்தீவில் ஷட்சரங்களோடு கூடிய அன்னமானது முயற்சியின்றி கிடைக்கும் முன்பு சொன்ன சுத்த நீர்க்கடலின் புறத்தே உலகநிலை காணப்படவில்லை. ஆயினும் முந்திய பூமிக்கு இரட்டிப்பான சுத்த சுவர்ணபூமி காணப்படுகிறது. அங்கே ஒரு ஜீவனும் இல்லை. அதற்குப் பின்னால் பதினாயிரம் யோசனை உயரமும், பதினாயிரம் யோசனை பரப்பும் உள்ள லோகா லோகம் என்ற பெருமலை ஒன்றுள்ளது. அதன் நாற்புறமும் அந்தகாரம் சூழ்ந்துள்ளது. அந்த இருளுக்குப் புறத்தே அண்டச் சுவர் சுற்றிக் கொண்டிருக்கிறது. இவ்விதமாக இந்த பூமியானது சகல சமுத்திர த்வீபங்களோடும், அண்ட தாடகத்தோடும் ஐம்பது கோடி யோசனையளவுடன் யாவற்றுக்கும் உற்பத்தி ரக்ஷணைகளைச் செய்துகொண்டு, கந்தம் முதலிய குணங்கள் ஐந்தையும் கொண்டு விளங்குகிறது!

——————-

5. பாதாள லோகம்

மைத்ரேயரே! பூமியின் பரப்பளவைப் பற்றி சொன்னேன். அதன் உயரம் எழுபதினாயிரம் யோசனை. அதில் அதலம், விதலம், நிதலம், ரசாதலம், மகாதலம், சுதலம், பாதாளம் என்ற ஏழு கீழ் லோகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் பதினாயிர யோசனை அளவுடையதாகும். இவற்றில் வெண்மை, கருமை, செம்மை, பொன்மையாகிய நிறங்களைக் கொண்ட பருக்கை மலைகளும் பொன்மயமான பூமிகளும் இருக்கின்றன. அங்குள்ள மித்தையான மேடைகளில் தானவர், தைத்யர், முதலிய அசுர ஜாதியினரும், பெருமையுடைய நாகஜாதியினரும், வாசஞ்செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு சமயம் நாரத முனிவர் பாதாளத்திலிருந்து ஸ்வர்க்கத்திற்கு வந்து, தேவ சபையில் இந்திரனை நோக்கி, பாதாள லோகங்கள் சொர்க்கலோகத்தை காட்டிலும் மிகவும் அழகாக இருக்கின்றன. அங்குள்ள நாகஜாதியினர் அணிந்துள்ள ஆபரணங்களிலுள்ள திவ்விய ரத்தினங்கள் மிகப்பிரகாசமாகவும், மிக மகிழ்ச்சியளிப்பவையாகவும் விளங்குகின்றன. ஆகையால் பாதாளத்துக்கு இணை ஏது? என்றார். அங்கே தைத்யதானவருடைய பெண்கள் அங்கும் இங்குமாகத் திரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்ப்பவன் மகா விரக்தியுடையவனாக இருந்தாலும் மையல் கொண்டு அவர்கள் மீது மனதை இழந்து விடுவான். அங்கு பகலில், சூரிய கிரணங்கள் வெப்பம் இல்லாமல் வெளிச்சத்தை மட்டும் வீசிக்கொண்டிருக்கும். அதுபோலவே சந்திரக் கிரணங்களும் சைத்தியஞ் செய்யாமல், வெளிச்சத்தை மட்டுமே தருகின்றன. இஷ்டத்திற்கேற்ற உணவுகளையும் பானங்களையும் அருந்தி அங்கிருப்பவர் காலஞ்செல்வதையே அறியாமல் குதூகலமாக இருக்கிறார்கள். அங்கு, மகாவினோதமான உதயமான வனங்களும், ரமணீயமான நதிகளும், தாமரைத் தடாகங்களும், குயில் முதலிய பறவைகளின் இனிய கீதமும், அதிசுகந்த புல்லாங்குழல் இசை, மிருதங்க முழக்கம் முதலான ஒலிகளும், ஆடல்பாடல்களும் இன்னும் வேண்டிய போக பாக்கியங்களும் எப்போதும் சம்பூரணமாய் அனுபவிக்கப்படுகின்றன. இந்தப் பாதாளத்துக்குக் கீழே, முப்பதாயிரம் யோசனையுள்ள இடத்திலே ஸ்ரீமகாவிஷ்ணுவின் தமோ குணாசிரயமான திருமேனியுடன் விளங்கும் ஆதிசேஷன் எழுந்தருளியிருக்கின்றார். அவர் அநந்தன் என்ற திருநாமத்தால் புகழப்பட்டு, தேவர்களாலும் முனிவர்களாலும் பூசிக்கப்படுகிறார். மேலும் ஸ்வஸ்திகம் என்ற ரேகையினால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் திருமுடிகளோடுங்கூடி அந்தத் திருமுடிகளிலுள்ள திவ்யரத்தின காந்திகளாலே திக்குகளை ஒளிரச்செய்து கொண்டும், லோக நலன் கருதி அசுரர்கள் அனைவரையும், சக்தி ஹீனராக்கி கொண்டிருக்கும் திருவிழிகளையுடையவராய், எப்பொழுதும் கிரீட வரிசைகளைத் தரித்து, முடியில் அக்கினி ஜ்வலிக்கும் வெள்ளி மலையைப் போலவும், நீளமானப் பட்டாடையையும் வெண்மையான முத்துமாலைகளையும் தரித்து, ஆகாய கங்கை மேலே விழவும் இடையிலே மேகஞ்சூழவும் இருக்கும் கைலாய மலையைப் போலவும் விளங்குகிறார்.

திருக்கைகளில் உலக்கையும், கலப்பையும் தரித்தவராய் காந்தி வாருணி என்ற தேவிகள் உபாசிக்க அவர் வீற்றிருக்கிறார். அவரது முகங்களிலிருந்து பிரளய காலத்திலே விஷாக்கினிச் சுவாலைகளோடு கூடிய காலாக்னி ருத்திரன் சங்கர்ஷண மூர்த்தியாலே ஆவேசிக்கப்பட்டு உண்டாகி ஜகத்தையெல்லாம் நாசஞ்செய்வான். அந்த ஆதிசேடன் இந்தப் பூமி மண்டலத்தை தனது திருமுடிகளில் ஓராபரணத்தைப் போலத் தரித்துக்கொண்டு, பாதாளத்தின் அடியில் சகலதேவதைகளாலும் பூஜிக்கப்படுகிறார். அங்குள்ள பகவானின் பலத்தையும், சக்தியையும் வருணிக்க தேவர்களாலும் இயலாது. நான் முன்பே சொன்னது போல, த்வீப, சமுத்திர பருவதாதிகளோடுங்கூடிய இந்தப் பூமண்டலம் அவரது திருமுடியில் ஒரு பூமாலையைப் போல் விளங்குகிறது. ஆனால் அவரது சறிப்பை விவரிக்க யாவருக்கும் இயலாது, அந்த அனந்தன் மதத்தினால் கண்கள் சுழலக் கொட்டாவி விடுவாரானால் இந்தப் பூமி முழுவதுமே நடுநடுங்கும் தேவ; தானவ, யக்ஷ, கந்தர்வ, சித்த சாரணாதிகளும் அவருடைய குணங்களின் முடிவைக் காணமாட்டாராகையால், அவருக்கு அனந்தன் என்ற திருநாமம் உண்டாயிற்று. அவருடைய திருமேனியில் நாககன்னியர் கைம்மலர்களால் சமர்ப்பித்த ஹரிச்சந்தணமானது, அவரது மூச்சுக்காற்றால் வீசப்பட்டு, திக்குகளில் மேல் கந்தப்பொடி இறைத்தது போலாகிறது. முன்பு ஒரு காலத்தில் கர்க்கர் என்ற பெயர்பெற்ற ஒரு மாமுனிவர் அவரை நெடுநாட்கள் ஆராதித்து, சூரியாதி சகல கிரகசாரக் கிரமங்களையும், அந்தக் கிரகசாரத்தினால் குறிக்கப்படுகிற பல சிறப்புகளையும், நன்றாக அறிந்தார். அத்தகைய அந்த நாகராஜனால் இந்தப் பூமியானது தரிக்கப்பட்டு, தேவ மனுஷியாதிகளோடு கூடிய லோக வரிசையைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

————-

6. நரக லோகம்

மைத்ரேயரே! பூமியின் கீழே இருக்கும் இருட்பள்ளத் தண்ணீருக்குங்கீழே, பாபிகள் வதைக்கப்படும் நரகஸ்தானங்கள் உள்ளன. அவை ரவுரவம், சூகரம், ரோதம், தாலம், விஸஸுதம், மகாச்சுவாலம், தப்தகும்பம், லவணம், விலோகிதம், ருதிராம்பம், வைதரணி கிருமிசம், கிருமிபோஜனம், அசியத்திரவனம், கிருஷ்ணம், லாலாபட்சம், பூயவகம், அக்கினிச்சுவாலம் அதச்சிரம் சந்தமிசம் கிருஷ்ண சூத்திரம் தமசு அவீசி சுவபோசனம் அப்பிரதிஷ்டம் முதலிய ஆயிரம் கொடிய நாகங்கள் இயமனுடைய அதிகாரத்தில் இருக்கின்றன. இதில் ரவுரவம் குரு என்ற மிருகத்தினால் துன்புறுத்தும் இடம், சூகரம்-பன்றிகளால் பீடிக்கப்படும் இடம், ரோதம்-அசையவொட்டாமல் நிறுத்தப்படும் இடம், தாலம்-பனை மரத்தினின்று விழச்செய்து, அதன் மட்டைகளால் அறுக்கப்படும் இடம், விஸநஸம்-கைவாளால் அறுக்குமிடம். மகாச்சுவாலம்-பெருநெருப்பு, தப்தகும்பம்-காய்ச்சிய எண்ணெய்குடம். லவணம்-அறுத்து அறுத்து காய்ச்சி உப்பிடுவது. விலோகிதம்-உதிரத்தை உறியும்படிச் செய்வது, ருதிராரம்பம்-காய்ச்சிய ரத்தத்தில் போகுமிடம், வைதரணி-கடப்பதற்கு வருத்தமான ஆறு கிருமிசம் புழுக்கள் துளைக்கும் இடம். கிருமிபோஜனம்-புழுக்களைத் தின்னும் இடம், கிருஷ்ணம்-நெருங்கின இரும்பு முட்கள் மேலே நடக்க செய்யும் இடம், தாருணம்-சகிக்கத் தகாத குளிராயிருக்கும் இடம், சந்தமிசம்-சந்தமிசினி என்ற ஆயுதத்தால் நாக்கைப் பிடுங்கும் இடம், கசிபத்திரவனம்-நாற்புறமும் கொடிய கத்திகளை நாட்டி நடக்கவைக்குமிடம், பூயவஹம்-அதிக துர்க்கந்தமாய் நிமிஷமும் பொறுக்கக்கூடாத இடம், கிருஷ்ண சூத்திரம்-சக்கரத்தில் ஏற்றிக் கால்விரலில் ஒரு கயிற்றை மாட்டி உடல் எல்லாம் ஒன்றாகும்படி இறுக்கக் கட்டி அறுக்கப்படும்படியான இடம். இங்கு பாவிகளுக்கு ஆயுதபயம், ஜந்து பயம் முதலிய சகலவிதமான பயங்களும் உண்டு. அவற்றினுள்ளே விழுகிற பாவிகளுக்குள் பொய் சாட்சி சொல்பவன் பட்சபாதத்தினால் விவகாரத்தில் அநியாயமாகப் பேசுவோன், பொய் சொல்வோன் ஆகியோர் ரவுரவ நரகத்தில் வீழ்கின்றனர். சிசுவைக் கொல்வோர், பட்டணத்தை அழிப்போர், பசுக்களைக் கொல்வோர், மூச்சைத் திணற வைப்போர், ரோதமடைவோர், மத்தியபானஞ்செய்வோர் பிரமஹத்தி செய்வோர், பொன்னைத் திருடுவோர் இவர்களோடு சேர்ந்தவர்களும் சூகர நரகத்தில் வீழ்வார்கள். அரசனைக் கொல்வோன், வைத்தியனைக் கொல்வோன், குருவின் மனைவியோடு கூடி மகிழ்பவன், உடன்பிறந்தாளைச் சேர்ந்து இன்புறுபவன், அரசரின் ஊழியரைக் கொல்வோன் ஆகியோர் தப்தகும்பம் என்னும் நகரத்திற்கு இரையாவார்கள். மனைவியை விற்போன் தன்னிடம் அன்பாக இருப்பவனைக் கைவிடுவோன், அடைக்கலம் புகுந்தவனை அடித்து விரட்டுபவன் முதலானவர்கள் தப்த லோகத்திற்கு ஆளாவார்கள். மகள், மருமகள் முதலானவரோடு புணர்கின்றவன், குருவை அவமதிப்போன், கோபித்துத் திட்டுபவன், முதலானவர்கள் மகாச்சுவால நரகத்தைச் சேர்வார்கள். தேவதூஷணை செய்பவனுக்கும், புணரக்கூடாத பெண்களோடு புணர்கிறவனுக்கும் லவணம் என்னும் நரகம் கிடைக்கும். திருடனுக்கும், உலக ஒப்புரவை அழிப்பவனுக்கும் விலோமம் நேரிடும். தேவ தூஷணை, பிராமண தூஷணை, பிதுரு தூஷணைச் செய்பவனும், உத்தம வஸ்துக்களைத் தூஷிப்பவனும், பிறருக்குத் தீங்கு செய்வோனும், சூனியம் வைப்பவனும், கிருமிசம் கிருமி பஷம் என்பவற்றில் விழுவார்கள்.

பிதுர்க்களையும் அதிதிகளையும் விட்டு முன்னதாக உண்பவனும், வேடர் முதலியோருக்கு அம்புகள், கத்திகள் முதலிய ஆயுதங்களைச் செய்து கொடுப்பவர்களும், விசஸநத்தைச் சேர்வார்கள். அயோக்கியரிடத்தில் தானம் ஏற்போர், வைதீக கருமங்களுக்குத் தகாதவனுக்கு அவற்றைச் செய்விப்பவன், சோதிட நூலை உணராமல் பயன் சொல்வோன் ஆகியோர் அதோமுகத்தில் வாதைப்படுவார்கள். சாகசஞ்செய்பவனுக்கும் பிறருக்குக் கொடுக்காமல் தான் ஒருவனே நல்ல வஸ்துவைப் புசிப்பவனுக்கும், பூயவக வேதனை உண்டாகும். பூனை, கோழி, ஆடு, நாய், பன்றி, பறவைகள் முதலியவற்றை எப்போதும் மிகவும் கொஞ்சி வளர்ப்பவனும் அந்த நரகத்தையே அடைவான். கூத்தாடிப் பிழைக்கும் பிராமணன், மல்யுத்தம் செய்து பிழைக்கும் பிராமணன், தூண்டில் முதலிய கருவிகளால் மீன்களைப் பிடிக்கும் பிராமணன், குண்டகோளகர் முதலியோரின் அன்னத்தைத் தின்பவன், விடமிடுவோன், கோட் சொல்வோன், மனைவியைக் கூட்டிக் கொடுத்து பிழைப்பவன், பருவமற்ற காலத்தில் பொருளாசையால் பருவச் சடங்குகளைச் செய்பவன், வீட்டைக் கொளுத்துவோன், நட்பைக் கெடுப்பவன், பறவைகளைக் கொலைக்கு விற்பவன், ஊருக்காக யாகஞ்செய்பவன், யாகத்தில் சோமம் என்ற ஆட்டாங்கொடியை விற்பவன் முதலியோர் ருதிராம்பத்தில் விழுவார்கள். யாகத்தை அழிப்பவன், ஊரையழிப்பவன் முதலியோர் வைதரணி நரகத்தை அடைவார்கள். பணம், வயது முதலியவற்றால் செருக்கடைந்து, கிராமத்து எல்லைகளை மாற்றுபவர்கள், சுத்தம் இல்லாதவர்கள், மோசஞ்செய்து பிழைப்பவர்கள் ஆகியோர் கிருஷ்ணத்தை அடைவார்கள். வைதீக உபயோகமில்லாமல் வீணாகப்பலாசு முதலிய மரங்களை வெட்டுபவர்கள், ஆடுகளை விற்பவர், மிருகங்களைக் கொன்று திரிகின்றவர் முதலியவர்களும் அக்கினிச் சுவாலத்தில் பிரவேசிப்பார்கள். கொளுத்தக் கூடாத பாண்டம் முதலியவற்றில் தீயிடுகின்றவனும், அதிலேயே சேருவான், விரதலோபஞ் செய்பவன், தனக்குரிய ஆசிரம தர்மத்தை விடுவோன், சந்தமிசத்தில் வீழ்ந்து வேதனைப்படுவான். பிரமச்சாரிகளாக இருந்தும் பகலிலும் இரவிலும் ஜீவசத்தான சுக்கிலத்தை விடுபவர்கள், புத்திரராலே ஓதுவிக்கப்படுபவர்கள் ஆகியோர் சுவபோஜனத்தில் படுவார்கள், தத்தமது வர்ணாசிரம விரோதமான காரியங்களைச் செய்தல் மனோவாக்குக் காயங்களினால் பாதசஞ் செய்தல் முதலான துர்ச்செயல்களை உடையவரெல்லாம் இதுபோலவே அந்தந்த நரகங்களில் சேர்வார்கள். இதுபோலவே அநேகவிதமான பாவங்களைச் செய்பவர்கள் வேதனைப்படும்படியான நரகங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. நரகலோகத்திலிருக்கும் பிராணிகள் தலைகீழாக இருந்து கொண்டு சுவர்க்கத்திலுள்ள தேவர்களைப் பார்த்துத் துன்பப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். தலைகீழாக அவஸ்தைப்படும் நரகவாசிகளைப் பார்த்து தேவர்களும் மிகவும் பயந்து கொண்டிருப்பார்கள். பாவிகள் நரக வேதனைகளை அனுபவித்த பிறகு, தாவரங்களாகவும், புழுக்களாகவும், ஜலவாசிகளாகவும், பறவைகளாகவும், மிருகங்களாகவும், மனிதராகவும், மனிதரில் தர்மசீலராகவும், தேவர்களாகவும் மோக்ஷமயைத்தக்கவராகவும் ஆவார்கள்.

இவர்கள் எல்லாம் முந்தினவரில் பிந்தினவர் ஆயிரத்தில் ஒரு பங்காய் முந்தையப் பிறவியிற் பிந்தியப்பிறவித் தொடர்பு கொண்டு, மோக்ஷமடையும் வரை உழன்று கொண்டே இருப்பார்கள். சுவர்க்கத்தில் எத்தனை ஆன்மாக்கள் இருக்குமோ, அத்தனை ஆன்மாக்கள் நரகத்திலும் உண்டு. எந்த ஜீவன் பாவஞ்செய்து பிராயச்சித்தம் செய்து கொள்ளவில்லையோ, அது நரகத்தையடையும், வேதங்களில் எந்தெந்தப் பாவங்களுக்கு, எந்தெந்தப் பிராயச்சித்தம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவற்றை நன்றாக ஆராய்ந்து மனு முதலிய மாமுனிவர்கள், அற்பத்திற்கு அற்பமாகவும், கனத்திற்குக் கனமாகவும் தாங்கள் இயற்றிய தரும நூல்களில் கூறியுள்ளனர். மைத்ரேயரே! சாந்திராயணம் முதலிய தவங்களாயும், யக்ஞம், தானம் முதலிய கர்மங்களாயும் விதிக்கப்பட்டிருக்கும் சகல பிராயச்சித்தங்களும் மேலான பிராயச்சித்தம் ஸ்ரீகிருஷ்ணனுடைய ஸ்மரண சங்கீர்த்தனங்களேயாகும்! அதாவது எம்பெருமான் நிருபாதி சர்வசேஷி என்றும் தான் அவனுக்குச் சர்வதேச சர்வகால சர்வாவஸ்தைகளிலும் கிருபாதிகதாசன் என்றும், அவற்றில் கர்த்துருத்வாதிகள் சுவா தந்தரியத்தால் அல்லவென்றும் அவற்றைப் போக்கும் உபாயம் அவனே என்றும் நினைத்து, அவனது திருவடிகளையே சரணடைந்து அவனது திருநாமங்களையே கீர்த்தனம் செய்து கொண்டிருத்தலாகும். ஆகையால் இந்த ஸ்ரீகிருஷ்ண ஸ்மரணப் பிராயச்சித்தமானது பகவத்குண பிரபாவத்தாலும் ஆத்ம ஸ்வரூபத்தாலும் தெளிந்து நிற்கின்ற விலக்ஷணதிகாரிக்கேயன்றி மற்றவருக்கல்ல. மற்றவருக்கோ கருமாதிகளே என்று தெரிந்து கொள்ள வேண்டும். எவன் பாவஞ்செய்தபோது, ஐயோ! இனிச் செய்யமாட்டேன். எம்பெருமான் நியமித்த நியமனத்தை உல்லங்கனம் செய்தேனே இனி என்ன செய்வேன்? என்று மனம் தரிப்பானோ அவனுக்கே பிராயச்சித்தத்தில் அதிகாரமுண்டு. அத்தகையவனுக்கு விதித்த பிராயச்சித் தங்களுக்குள்ளே முன்சொல்லப்பட்ட ஸ்ரீஹரி சம்ஸ்மரணமே சிறந்தது, அதுவும் ஒரு தரம் செய்வதே போதுமானது. பலதரஞ் செய்தாலே இனிச் செய்யும் பாவங்களுக்குக் காரணமான பூர்வ பாவங்களின் ஸ்மஸ்காரத்தையழித்து, வரும் பாவங்களை நாசஞ்செய்யும். இந்த ஸ்ரீஹரிஸ்மரணத்துக்கு காலநியமம் வேண்டுவதில்லை. காலை, நடுப்பகல், மாலை, இரவு ஆகிய எந்தக் காலத்திலும், எந்த மனுஷனானாலும், எவ்விதமாக வேண்டுமானாலும் ஸ்மரிக்கலாம். அவ்விதம் ஸ்மரித்துக் கொண்டே ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்தவன் அப்போதே சகல பாவங்களிலிருந்தும் கிலேசங்களிலிருந்தும் நீங்கியவனாய் மோட்சமடைவான். அத்தகையவனுக்குச் சொர்க்கத்தை அடைவது இடையூறாகவே இருக்கும். ஜப ஹோம அர்ச்சனாதி சகல கருமங்களிலும் ஸ்ரீவாசுதேவ ஸ்மரணஞ்செய்கின்ற மகாத்மாவுக்கு இந்திரப்பதவி கிடைப்பதும் இடையூறுதான். ஏனென்றால் மீண்டும் திரும்பும்படியான சொர்க்கத்தை அடைவதற்கும் மோக்ஷ காரணமான ஸ்ரீவாசுதேவாதி திவ்ய நாம ஸ்மரணத்துக்கும் உள்ள தாரதம்மியத்தை நீரே அறிந்து கொள்வீராக. ஆகையால் எப்பொழுதும் ஸ்ரீவிஷ்ணுபகவானை ஸ்மரிக்கிற மனிதன் அவனது சகல பாதகங்களும் நீங்குவதால் நரகமடையமாட்டான்.

மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதல்லவா சொர்க்கம்? நரகமோ இதற்கு மாறாக இருப்பதாகும். புண்ய பாவங்களே சொர்க்க நரக சாதகங்கள். ஆகையால் உபசார வழக்காய் அவைகளே சொர்க்க நரகமாக வழங்கப்படுகின்றன. மேலும் ஒரே வஸ்து புருஷ பேதத்தால் சுகஹேதுவாகவும், துக்க ஹேதுவாகவும், பொறாமை கோபம் முதலியவைகளுக்குக் காரணமாகவும் இருக்கிறது. மேலும் ஒருவனுக்கு ஒரே வஸ்து காலதேச அவஸ்தா பேதத்தால் ஒருமுறை சுகஹேதுவாகவும், மற்றொரு முறை துக்க ஹேதுவாகவும், கோபானுக்கிரக ஹேதுவாகவும் ஆகின்றது. ஆகையால் இது சுகம், இது துக்கம் என்று ஒரு வஸ்துவை நிர்ணயித்துச் சொல்லக்கூடுவதில்லை. கர்மவசமான மனோவிருத்தி பேதத்தினாலே, வஸ்துக்களில் சுக துக்காதி ஸ்வரூபமுண்டாவதைப் பற்றி பகவத் பிராப்தியாகிற மோக்ஷத்தைத் தவிர மற்றெல்லா நிருபாதிக சுகரூபமாயும் ஸ்திரமாயும், இராமையினால் சுவர்க்காதிகளும் இடையூறாகும். இவ்விதமாக மனோவிருத்தியான ஞானமானது விஷயங்களை பற்றுமாயின், சம்சார பந்தத்துக்குக் காரணமாகிறது. அப்படிப் பற்றாமல் இருந்தால் பிரமப் பிராப்திக்குக் காரணமாகின்றது. ஆகையால் மனோவியாபாரத்தினாலே சம்சார மோக்ஷங்களாகிய சகலமும் உண்டாகின்றன. மோக்ஷ சாதனமாகிய வித்தையும், பயனைக் கருதாமல் செய்யும் செயலாகிய அவித்தையும் ஞானத்தினாலேயே சாதிக்கப்படுபவை. மைத்ரேயரே! நீங்கள் கேட்டபடி பூமண்டல, பாதாள, நரகங்கள், மலைகள், நதிகள், சமுத்திரங்கள் ஆகியவை பற்றிய யாவையும் தங்களுக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இனி நீங்கள் எதைக் கேட்க விரும்புகிறீர்கள்? இவ்விதமாக பராசரர் கேட்டார்.

——————-

7. புவர்லோக, மேல் லோகங்களும் கிரக நிலைகளும்

பிரம்ம முனிவரில் உயர்ந்தவரே பூலோக சொரூபங்களை நீங்கள் கூறக்கேட்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். இனி புவர்லோகம் முதலிய மேலுலகங்களின் சொரூபங்களையும் சூரியன் முதலிய கோள்களின் அமைப்பையும் அளவுகளையும் சொல்லியருள வேண்டுகிறேன் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! சூரிய சந்திரர்களது கிரணங்களாலே எவ்வளவு தூரம் பிரகாசம் படுகிறதோ, அவ்வளவு தூரம் சமுத்திரங்கள்; நதிகள், மலைகள் முதலியவற்றோடு கூடிய பாகமானது பூலோகம் என்று வழங்கப்படுகிறது. இந்தப் பூமியானது அண்டகடாஹத்தை நாற்புறமும் தொட்டிருப்பதாகிய வட்டப்பரப்பின் அளவு எதுவோ; அதுவே வியாசப் பிரமாணமான அளவையுடைய ஆகாயமாகும். இது புவர்லோகம்! பூமிக்கு லக்ஷம் யோசனை தூரத்திலே சூரிய மண்டலம் அமைந்துள்ளது. அதற்கு லக்ஷம் யோசனை தூரத்திலே சந்திரமண்டலம் இருக்கிறது. அந்தச் சந்திர மண்டலத்துக்குச் சரியாக லக்ஷம் யோசனை தூரத்தின் மேலே நக்ஷத்திர மண்டலம் இருக்கிறது. அந்த நக்ஷத்திர மண்டலத்துக்கு மேலே இரண்டு லக்ஷம் யோசனை தூரத்திலே புதன் மண்டலம் இருக்கிறது. அதற்கும் அதனளவு தூரத்தில் சுக்கிர மண்டலம் இருக்கிறது. சுக்கிரமண்டலத்துக்கு அவ்வளவு தூரத்தில் அங்காரக மண்டலமும், அதற்கு அவ்வளவு தூரத்தில் பிரகஸ்பதி மண்டலமும், அதற்குமேல் அவ்வளவு தூரத்தில் சனி மண்டலமும் இருக்கின்றன. அதற்கு மேல் லக்ஷயோசனை தூரத்தில் துருவ மண்டலமானது சகல சேரதிச் சக்கிரத்திற்கு நடுவே நாட்டியுள்ள கம்பத்தைப் போல் விளங்குகிறது. இவ்வளவுதான் சுவர்லோகம் இவ்விதம் உயரத்திலுள்ள மூன்று லோகமும் யாக பலானுபவத்துக்கு ஸ்தானமாக இருக்கிறது. யாகமோ இந்தப் பாரத வருஷத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அந்த துருவ மண்டலத்துக்கும் மேலே கோடி யோசனை தூரத்திலே, ஒரு கல்பகாலம் வாழ்கின்ற பிருகு முதலிய முனிவர்கள் வாசஞ்செய்யும் மகர்லோகம் இருக்கிறது. அதற்கு மேலே இரண்டுகோடி யோசனை தூரத்தில் பிருமபுத்திரரான ஜனகாதிகள் வாசஞ்செய்யும் ஜனலோகம் இருக்கிறது. அதற்குமேல் எட்டுக்கோடி யோஜனை தூரத்தில் தபோலோகம் இருக்கிறது. அதில் வைராஜர் என்ற தேவதைகள், பிரளய அக்கினியினால் உண்டான வெப்பம் இல்லாமல் இருக்கின்றனர். தபோலோகத்துக்கு மேல் பன்னிரண்டு யோஜனை தூரத்தில் சத்தியலோகம் இருக்கிறது. அதுதான், மீண்டும் மரணமடையாதவர்கள் வாசஞ்செய்யும் பிரம்மலோகம் என்று கருதப்படுகிறது. இவற்றின் விவரத்தைச் சுருக்கமாகச் சொல்கிறேன். காலாலே நடந்து செல்லத்தக்க தாய்ப்பூமி சம்பந்தப்பட்ட வஸ்து எதுவுண்டோ அதுவெல்லாம் பூலோகம் என்று சொல்லப்படும். அதன் நிலப்பரப்பை முன்னமே சொல்லிவிட்டேன். பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில்; சித்தர்களும் முனிவர்களும் வாசஞ்செய்யும் இடம் எதுவோ, அதுவே புவர்லோகம். அது லோகங்களில் இரண்டாவதாகும்.

துருவனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பதினான்கு லக்ஷம் யோஜனை அளவான இடம் சுவர்க்கலோகம் ஆகும். இந்த மூன்று உலகங்களுக்கும் கல்பந்தோறும் உண்டாக்கப்படுவதால் கிருதகம் என்றும், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்ற இந்த மூன்றும் கல்பந்தோறும் உண்டாக்கப்படாமையினால் அகிருதகம் என்றும் வழங்கப்படும். இந்தக் கிருதகம், அகிருதகம் என்ற இரண்டுக்கும் நடுவில் மஹர்லோகம் இருக்கிறது. அது கல்ப முடிவில் ஜன சூனியமாகிறதேயன்றி, அதன் சொரூபம் நசிப்பதில்லை. ஆகையால், அது கிருதாகிருதகம் என்று வழங்கப்படும். மைத்ரேயரே! இந்த மேலேழு லோகங்களும், பாதாளங்களாகிய கீழேழுலகங்களும் பிரம்மாண்டத்தின் பரப்பு எனப்படும். இவை விளாம்பழத்தில் விதையானது ஓட்டினால் சுற்றிலும் சூழப்பட்டிருப்பது போல, மேலும் கீழும் பக்கங்களிலும் அண்ட கடாஹத்தினாலே சூழப்பட்டுள்ளது. இந்த அண்ட கடாஹமானது, பத்து மடங்கு அதிகமான தண்ணீராலும் அந்த ஜலமாவது அக்கினியினாலும் அந்த அக்கினியானது வாயுவினாலும், அந்த வாயுவானது ஆகாசத்தினால் பப்பத்துப் பங்கு அதிகமாக சூழப்பட்டிருக்கின்றன. அந்த ஆகாசமும் பத்துப் பங்கு அதிகமான பூதாதியினாலும், அந்தப் பூதாதியும் பத்துப் பங்கு அதிகமான மஹத் தத்துவத்தாலும் சூழப்பட்டுள்ளது. இந்த மஹத் தத்துவத்தைப் பிரகிருதி தத்துவம் சூழ்ந்துள்ளது. அது காலத்தைப் பற்றிய முடிவையோ இடத்தைப் பற்றிய அளவையோ கொண்டிராமையால், அனந்தம் என்று வழங்கப்பட்டு, முடிவில்லாததாய் யாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. அதில் இப்படிப்பட்ட அநேக ஆயிரங்கோடி கோடி அண்டங்கள் உள்ளன. அன்றியும் ஞானத்தினாலே வியாபிக்கத்தக்கவனும், சுயம்பிரகாசனும் ஞான சொரூபியுமான சீவனும் அந்தப் பிரதான தத்துவத்தின், மரத்தில் நெருப்பைப் போலவும், எள்ளில் எண்ணெயைப் போலவும் மறைந்துள்ளான். இவ்விதமாக ஒன்றோடொன்று கலந்திருக்கும் தன்மையுடைய பிரகிருதியும் புருஷனும் சகலபூத வியாபகமான ஸ்ரீவிஷ்ணு சக்தியினாலே வியாபிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓ மகாபுத்திமானே! அந்த விஷ்ணு சக்தியே பிரகிருதி புருஷர்களை வேறுபடுத்துவதாகிய மோக்ஷத்துக்கும், கூட்டுவதாகிய பந்தத்துக்கும் காரணமாக இருப்பதுந் தவிர, படைப்புக்காலத்திலே சத்துவாதி குணங்கள் விஷமப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. காற்றானது அநேகம் நீர்த்துளிகளை யாதொரு பற்றுமில்லாமல் வகிப்பது போல் அந்த விஷ்ணு சக்தியும் பிரகிருதி புருஷ ரூபமான யாவற்றையும் பற்றில்லாமலேயே வகிக்கின்றது. வேர், கவை, கிளை, இலை முதலிய அவயவங்களுடன் கூடிய மரமானது, முதலில் விதையிலிருந்து எப்படி உண்டாயிற்றோ, எப்படி அதனின்று வேறுவிதைகளும், அவற்றிலிருந்து வேறு மரங்களும் உண்டாகி, அவ்விதமான காரணத்தினாலே வியாபிக்கப்பட்டிருக்கின்றனவோ, அதுபோலவே சத்துவாதி குணமயங்களான மஹத்தத்துவம் முதல் பிருத்வியாதி பூதங்கள் ஈறாக உள்ள வஸ்துக்கள் யாவும் அவ்வியக்கத்தினின்றே உண்டாகின்றன. பிறகு அவற்றிலிருந்து தேவ, மனுஷியாதிகளும் அவர்களிடமிருந்து அவர்களுடைய புத்திரர்களும், பவுத்திரர்களும் உண்டாகி வருகின்றனர். விதையிலிருந்து மரமும், மரத்திலிருந்து விதைகளும் இப்படியாகப் பெருகி வருவதனால் அவற்றிற்குக் குறையவில்லை. அந்த மரம் விதையிலிருந்து உண்டானாலும் அதற்கு ஆகாசம், காலம் முதலானவை கூடச் சேர்த்திருத்தலினாலே காரணமாவது போல், பிரகிருதியிலிருந்து உண்டாகிற பிரபஞ்சத்துக்கு ஸ்ரீஹரிபகவான் அந்தப் பிரகிருதியின் சான்னியத்தினால் காரணமாகின்றதால் பரிணாம விகாரமில்லாமல் இருக்கின்றார்.

மைத்ரேயரே! நெல்லின் விதையிலேயே மறைந்திருக்கிற வேர், தாள்இலை, முளை, கதிர், பூ, பால், அரிசி, உமி என்பன. உழவு, விதைப்பு, நீர் பாய்ச்சல் முதலிய முளைத்தற்கு வேண்டுவதான காரியக் கருவிகளைப் பெற்று நன்றாய்ப் புலனாவதுபோல் பலவிதமான கர்மங்களில் வீழ்ந்துள்ள ஆத்மாக்கள், ஸ்ரீவிஷ்ணு சக்தியை அடைந்து, தேவ மனுஷ்யாதி பேதத்தினால் வெளிப்படுகின்றன. வேதத்தின் காரண வாக்கியங்களின்படி எங்கிருந்து இந்த உலகமெல்லாம் உண்டாகுமோ, எங்கே நிலைபெற்றிருக்குமோ, எங்கே லயத்தை அடையுமோ, எதனால் வியாபிக்கப்பட்டிருக்குமோ, அந்தப் பரப்பிரமம் விஷ்ணுவேயாகும். பிரம்மம் என்பது பரமபதம் என்பதும் சத்து, அசத்து என்பதும் எதுவும் அந்த ஸ்ரீவிஷ்ணுவேயாகும். இந்த உலகங்கள் யாவும் வித்தியாசமின்றி அந்த விஷ்ணுவினுடையதாய் இருக்கிறது. அவ்யக்தமான மூலப்பிரகிருதி சரீரகனும், வியக்தமான லோக சரீரகனும் அந்த ஸ்ரீவிஷ்ணுவே! அந்த ஸ்ரீவிஷ்ணு தேவனே, தன்னைப் பெறுவதற்குச் சாதனமான யாகாதிகளுக்குக் கர்த்தாவாகவும் உத்தேசிய தேவதையாகவும் கிரியா சொரூபியாகவும் அதன் பயனாகவும் அந்தக் கிரியைகளின் உபகரணங்களான சொரூபம் முதலியனவாகவும் இருக்கின்றன. அவனைவிட மேலானது வேறொன்றும் இல்லை. அவனே யாவற்றுக்கும் சொரூப யோக்கியதா சக்திகளைக் கற்பிப்பவன் என்பது கருத்து.

————-

8. சூரிய மண்டலமும் அதன் மார்க்கமும்

மைத்ரேயரே! பிரம்மாண்ட நிலையை உமக்கு விளக்கிக் கூறினேன். இனி சூரியன் முதலான கிரகங்களின் நிலையைச் சொல்லுகிறேன் கேளுங்கள். சூரியனுடைய தேரானது பதினாயிரம் யோசனை விசாலமுள்ளதாய் ஒன்பதாயிரம் யோசனை வரை சூரிய மண்டலத்தினால் வியாபிக்கப்பட்டிருக்கும். அதன் இருபுறத்து இருசுகளையும் சேர்க்கும் கட்டையானது இருபதினாயிரம் யோசனை அளவையுடையது. அதன் ஒருபுறத்தில் இருசு ஒரு கோடியே ஐம்பத்தேழு லக்ஷம் யோசனையளவுள்ளது. அதிலே தான் சக்கரம் ஒன்று மாட்டப்பட்டிருக்கும். அந்தச் சக்கரமானது சம்வச்சர ஸ்வரூபமாக இருக்கும். அதற்குக் காலை, நடுப்பகல், பிற்பகல் என்ற நாட்பிரிவுகள் மூன்றும் இருசு கோத்திருக்கும் இடமாயிருக்கும். சம்வத்சரம், பரிவச்சரம், இடாவச்சரம், அநுவச்சரம், இத்வச்சரம் என்ற வருஷங்கள், பேதங்கள் ஐந்தும் அரங்களாகும். இரிதுக்கள் ஆறும் சுற்று வட்டங்களாக இருக்கும். இத்தகைய அவயவங்கள் உள்ளதாயும், க்ஷயமில்லாதிருக்கிற அந்தச் சக்கரத்திலே தான் காலச்சக்கரம் முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அந்த இரதத்துக்கு காயத்ரி பிருகிதி உஷ்ணிக் ஜகதீ, திருஷ்டுப் அனுஷ்டுப், பஸ்தி என்ற சந்தங்கள் ஏழுமே குதிரைகளாக இருக்கின்றன. அந்தச் சூரிய ரதத்தில் மற்றொரு புறத்து இருசு, நாற்பத்தையாயிரத்து ஐநூறு யோசனை அளவுள்ளது. நுகத்தடியின் அளவும் இருசின் அளவும் சமமாகும். அந்தச் சிற்றிருசானது, தனது நுகத்தடியின் பாதியோடு கூட, வாயுரூபமான கயிறுகளுடன் கட்டப்பட்டுத் துருவனை ஆதாரமாகக் கொண்டுள்ளது. பேரிரிசு கோக்கப்பட்டிருக்கம் சக்கரமானது மானசோத்திர பர்வதத்தின் மீதுள்ளது. அந்தப் பர்வதத்தின் மேல் கிழக்கில் வஸ்வோகசாரா என்ற இந்திரனுடைய பட்டணமும், தெற்கில் சம்யமனி என்ற எமனுடையப் பட்டணமும் மேற்கில் சுகா என்ற வருணனுடைய பட்டணமும், வடக்கில் விபாவநீ என்ற சோமனுடைய பட்டணமும் இருக்கின்றன.

சூரியன் தென்திசையை அடையும்போது ஜோதிச்சக்கரத்தின் கடைசியை அடைந்தவனாகி, எறிந்த அம்பைப் போல் விரைவாக ஓடுகிறான். அந்தச் சூரியபகவான் தான் இரவு பகல் என்ற ஏற்பாட்டுக்குக் காரணமாயும் யோகிகளுக்குச் சகல கிலேசங்களும் விடுபட்டுப் போகுங்காலமாகிய முடிவுக்காலத்தில் தேவயான வழியாகவும் இருக்கிறான். (தேவயானம் என்பது அர்ச்சிராதி மார்க்கம், அதாவது முதலில் அக்னி, பிறகு முறையே பகல் பூர்வ பக்ஷம், உத்தராயணம், வருஷம், காற்று, சூரியன், சந்திரன், மின்னல், வருணன், இந்திரன், பிரமன் என்பவர்களது எல்லைகளாம். மோக்ஷம் அடைபவர்கள் செல்லும் வழி இதுவேயாகும். சூரியன் நமக்கு எப்படிப் பகலிலே அதிக உஷ்ணமாயும், பிரகாசமாயும் காணப்படுகிறானோ அதுபோலவே எங்கும் இருக்கிறான். ஆகையால் உதயாஸ்தமன பேதங்கள் இல்லை. ஆனால் திக்குவி திக்குகள் எதிலும் எவர்களுக்கு எங்கே காணப்படுகிறானோ அங்கே உதயம் என்றும், அதற்கு நேர்கோணத்தில் அஸ்தமனம் என்றும் உலக விவகாரம் உண்டாயுள்ளது. ஆகவே, எப்பொழுதும் உதயாஸ்தமனங்கள் உண்டாயிருக்கிற காரணம் இவ்வளவேயல்லாமல் சூரியனுக்கு இயல்பாக உதயமும் அஸ்தமனமும் இல்லவே இல்லை. இந்திரன் முதலியவருடைய பட்டணங்களில் சூரியன் எங்கிருந்தாலும் அதனையும் பக்கத்துக் கோணங்கள் இரண்டையும் புரங்கள் இரண்டையும் ஸ்பரிசிக்கிறேன். உதயமானது முதல் கிரணங்கள் வளரப்பெற்றிருந்து நடுப்பகலுக்கு மேல் கிரணங்கள் சுருங்கப்பெற்றவனாய் அஸ்தமனமாகிறான். இந்த உதயாஸ்தமனங்களைக் கொண்டுதான், கிழக்கு என்றும் மேற்கென்றும் திக்குகள் வகுக்கப்பட்டன. இதைக்கொண்டே வலதுபுறம் தென்திசை எனவும், இடதுபுறம் வடதிசை எனவும் குறிக்கப்படுகின்றன. சூரியன் எதிரில் எவ்வளவு காய்கிறானோ, அவ்வளவு பின்புறத்திலும் பக்கங்களிலும் காய்கிறான். ஆனால் மகாமேருவில் இருக்கிற பிரமசபையில் செல்லும்போது, அதன் காரணங்களாலே, சூரிய கிரணங்கள் ஒளி மழுங்கித் திரும்புவதால் அந்தச் சபையைச் சூரியன் காய்வதில்லை. இதுபோன்ற உதய அஸ்தமயங்களினாலேயே, கிழக்கு முதலிய திசைகள் ஏற்பட்டிருப்பதால், மேருமலையானது சகல வருஷங்களுக்கும் வடக்காகவே ஆகின்றது. அதனால் மேருவின்மேல், பிரமசபையின் காந்தியினால் பகலும், சூரிய சஞ்சாரமின்மையால் இரவுமாக எப்போதுமே இருக்கும்.

அஸ்தமயமாகிற சூரியனுடைய கிரணங்கள் அக்னியில் பிரவேசிப்பதால் அந்த அக்கினியானது, இரவில் அதிகமாகப் பிரகாசிக்கிறது. அக்கினிக் கிரணங்கள் பகலில் சூரியனிடத்தில் பிரகாசிப்பதால் சூரியன் அதிகமாய்ப் பிரகாசிக்கிறான். இப்படியாக உஷ்ணப் பிரகாசமுள்ள தேஜஸ் இரண்டும் மாறி மாறி ஒன்றிலொன்று கலந்து விளங்குகின்றன. மேருவின் புறத்திலும், வடபுறத்திலும் பூமியின் பாதியில் சூரியன் உதயமாகும்பொழுது இருளான இரவும், வெளிச்சமான பகலும் முறையே தண்ணீரில் பிரவேசிப்பதால், அந்தத் தண்ணீரானது சிறிது சிவப்பாகவும்,வெளுப்பாகவும் ஆகிறது. இவ்விதமாக புஷ்கரத்தீவின் நடுவினால் பூமியில் முப்பதில் ஒரு பங்கைச் சூரியன் கடப்பதனால் நாலில் முப்பதில் ஒரு பங்காகிய முகூர்த்தக்காலம் உண்டாகிறது. குயவனுடைய சக்கரத்தில் திரிகின்ற பூச்சியைப் போல, ஜோதிச் சக்கரத்தில் திரிகின்ற சூரியன் தென்திசை நீங்கி, உத்தராயணத்தின் முதலான மகரத்திலே வரும்போது, முற்பட்ட பகலிரவுகளை விட வித்தியாசமான பகலிரவுகளைச் செய்து வருவான். பிறகும் அப்படியே முறையாகக் கும்பம்; மீனம் என்ற ராசிகள் இரண்டையும் கடந்து மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது, பூமத்தியாகிய விஷுவத்தின் கதியைச் சேர்ந்து பகலிரவுகளைச் சரியாகச் செய்வான். அங்கிருந்து சஞ்சரிக்கும் போது, நாள்தோறும் பகல் வளர்ந்து கொண்டே வர, இரவு க்ஷீணித்துக் கொண்டே வரும். இப்படியாக மிதுனம் வரையில் சூரியன் சென்று, கர்க்கடக ராசிக்குத் திரும்பும் போது தக்ஷிணாயனம் உண்டாகும். குயவனது சக்கரத்தின் நுனியிலிருக்கும் பூச்சியைப் போல், தக்ஷிணாயனத்திலே சூரியன் விரைவாகச் சஞ்சரித்துக் கொண்டு, பன்னிரண்டு முகூர்த்த காலமான பகலினால் பதின்மூன்றரை நட்சத்திரங்களையும், பதினெட்டு முகூர்த்த காலமான இரவினாலே மற்ற பதின்மூன்றரை நட்சத்திரங்களையும் கடக்கிறான். மறுபடியும் உத்தராயணத்துக்கு வரும்போது, குயவனின் சக்கரத்தின் நடுவே கிடக்கும் பூச்சியைப் போல், மந்தமாகச் சஞ்சரித்துக் கொண்டு முந்திய இரவு பகல்களுக்கு மாறான இரவு பகல்களை உண்டாக்குகிறான். ஆகவே, உத்தராயணத்தில் பகலின்; வளர்ச்சி பதினெட்டு முகூர்த்த அளவாகவும், இரவின் குறைவு பன்னிரண்டு முகூர்த்த அளவாகவும், இருக்கும் சக்கரத்தின் நாபியானது அங்கேயே அதிமந்தமாய்ச் சுழல்வது போலவே ஜோதிச் சக்கர மையத்தினாலேயே துருவனும் சுழன்று கொண்டிருக்கிறான். இவ்விதம் தட்சிணாயன உத்தராயணங்களிலே; அந்தந்த ராசி மண்டலங்களைச் சூரியன் கடக்கும். திறத்தால், பகல் வளர இரவு குறைதலும், இரவு வளரப் பகல் குறைவதுமாக இருக்கும் சூரியனோ பகலிலும் இரவிலும் அவ்வாறு ராசிகளைச் சமமாகக் கடக்கிறான். ஆயினும் ராசிகளின் அளவு வித்தியாசத்தினால் இரவு பகல்களில் வித்தியாசம் உண்டாகின்றது. மேலும் இந்த மாறுபாடு அங்கங்கேயிருந்து பார்ப்பவர்களுடைய பார்வையிற்படுகின்ற உதயாஸ்தமய பேதத்தினாலுமாகும்.

இரவு உஷையென்றும், பகல் வியுஷ்டி என்றும் வழங்கப்படும் இந்த உஷா, வியுஷ்டிகளின் நடுவானது சந்தி என்று வழங்கப்படும். இப்படிச் சந்தி ஏற்படும்போது, மந்தேகர் என்ற அரக்கர் சூரியனையே புசிக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு நித்ய மரணமும் உடல் நாசமாகாமலிப்பதுமாகப் பிரமதேவனாலே சாபமிடப்பட்டிருக்கிறது. அவ்வசுரர்கள் சூரியன்மீது பாயும்போது, சூரியனுக்கும் அசுரர்களுக்கும் கொடிய யுத்தம் உண்டாகிறது. அதன் நிமித்தம் பிராமணோத்தமர்கள் பிரணவ, வியாகிருதி காயத்ரீ மந்திரங்களினாலே அபிமந்தரித்த தண்ணீரை எறிகின்றனர். அந்தத் தண்ணீரானது வஜ்ரம் போலாகி அசுரரை நாசஞ்செய்கிறது. பிறகு, பிராமணர்களாலே அக்னி ஹோத்திரத்தில் மந்திரத்துடன் ஆகுதி செய்யப்படும். முதல் ஆகுதியினால் ஆயிரங்கிரகணங்களுக்குள்ள சூரியன் என்னுஞ் ஜோதியானது உலகமெல்லாம் பிரகாசிக்கும்படி விளங்குகிறது. அந்தப் பிரணவமானது ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபமாய்; வியாகிருதி தேவதைகளுக்கு இடமாய் வேதங்களுக்கு எல்லாம் அதிபதியாக இருப்பதால், அதன் உச்சாடன மகிமையால் அரக்கருக்கு நாசம் உண்டாகிறது. நிர்விகாரமாய், உள்ளே தோன்றும் ஜோதியாக இருக்கிற ஸ்ரீவிஷ்ணுவினுடைய உத்தம அம்சமானது சூரியனாகி, அந்தப் பிரணவத்தைப் பொருந்தியிருப்பதால், அதையது தெரிவித்துக் கொண்டு, அந்த ஜோதியை நடத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய பிரபாவமுள்ள பிரணவத்தினால் ஸ்ரீவிஷ்ணுவின் தேஜோமயமான சூரியன் விளக்கப்பட்டதாகி மந்தேகர் என்ற பெயரையுடைய பாபங்களைக் கொளுத்தி விடுகிறது. ஆகையால் சந்தியாவந்தன காரியத்தை எவனும் விட்டு விடலாகாது. விடுவதனாலே, சூரியனைக் கொன்ற பாபத்தை அடைவான். இவ்விதமாக வாலகிலியர் முதலான மகாபிராமணர்களாலே ஏட்சிக்கப்பட்டு சூரியபகவான் லோக சம்ரட்சணார்த்தமாய் அப்புறஞ்செல்கிறான். சந்தியாகால நிர்ணயத்தைச் சொல்கிறேன். கேட்பீராக பதினைந்து நிமிஷங்கள் ஒரு காஷ்டை முப்பது காஷ்டைகள் ஒரு கலை, முப்பது கலைகள் ஒரு முகூர்த்தம். அவை முப்பது சேர்ந்து இரவும் பகலுமாகிய ஒரு நாளாம். இப்படிப்பட்ட நாளில் விருத்தியானாலும் க்ஷயமானாலும் அவற்றுக்கு ஏற்ற அளவைக் கொண்ட பதினைந்தாம் பங்கான ஒரு முகூர்த்த காலமே சந்தியா காலமாகும். உதயகாலந் தொடங்கி சூரியன் மூன்று முகூர்த்தஞ் செல்லுமளவும் பிராதக் காலம் என்று சொல்லப்படும். அது பகலில் ஐந்தில் ஒரு பங்காம் அதற்குமேல் மூன்று முகூர்த்த காலம் சங்கலம் என்று சொல்லப்படும். அந்தச் சங்கல காலத்தின் மேலே மூன்று முகூர்த்த காலமானது மத்தியான்னமாகும். அதன் பிறகு மூன்று முகூர்த்தகாலமானது அபரான்ன காலம் ஆகும். பின்பு உள்ள மூன்று முகூர்த்தகாலம் சாயான்ன காலம். இப்படிச் சரியான பதினைந்து முகூர்த்தமுள்ள பகலானது விஷுவத் காலத்திலாகும். இந்த நாளானது உத்தராயண தக்ஷிணாயனங்களிலே வளர்ந்துங் குறைந்தும் ஒரு போது, பகலினால் இரவு விழுங்கப்பட்டும், மற்றொருபோது இரவினால் பகல் விழுங்கப்பட்டும் இருக்கும். சரத்ருதுவின் ஆரம்பமான துலாராசியில் சூரியன் வருகையிலும் வசந்த ருதுவின் ஆரம்பமான மேஷ ராசியில் சூரியன் இருக்கும்போதும் விஷுவம் என்ற காலம் உண்டாகின்றது. அதுதான் ஏற்றக்குறைவில்லாத இரவு பகல்களை உடையதாகும்.

சூரியன் கர்க்கடக ராசியில் இருக்கும்போது, தட்சிணாயனமும், மகர ராசியில் இருக்கும்போது உத்தராயணமும் ஆகும். பிராம்மணோத்தமரே! முன்பு நான் முப்பது முகூர்த்த அளவானது ஒரு நாளாகும் என்று சொன்னேன். அவை பதினைந்து கூடியது ஒரு பக்ஷம். இரண்டு பக்ஷங்கள் ஒரு மாதம், சூரிய கதியினாலாகும் இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகும். மூன்று ருதுக்கள் ஒரு அயனமாகும். இரண்டு அயனங்கள் ஒரு வருஷம். இவ்வருஷமானது சவுரம், சாந்திரம், சாவனம், நாக்ஷத்திரம் என்று நான்கு வகைப்படும். இப்படி விகற்பிக்கிற வருஷங்கள் ஐந்து கூடி, ஆரம்பத்தைப் போல விகற்பமின்றி முடிவதாலே, யுகம் என்ற பெயரையடையும், அவற்றுள் முதலாவது சம்வச்சரம் என்றும், இரண்டாவது பரிவச்சரம் என்றும் மூன்றாவது இடாவச்சரம் என்றும், நான்காவது இத்வச்சரம் என்றும், ஐந்தாவது அனுவச்சரம் என்றும் வழங்கப்படும். சுவேதமலைக்கு வடக்கே சிருங்கவான் என்ற மலை ஒன்றுண்டு. அது மூன்று கொடிமுடிகளைக் கொண்டது. அந்த முடிகளில் ஒன்று தென்புறத்திலும், மற்றொன்று வடபுறத்திலும் இன்னொன்று நடுவிலும் இருக்கின்றன. தென்புறச் சிருங்கத்தில் சூரியன் சஞ்சரிப்பதனால் உத்தராயணமும், நடுவே வருவதால் விஷுவமும் உண்டாகின்றன. கிருத்திகையின் முதற்பாதத்தில் சூரியன் இருக்கும்போது, சந்திரன் விசாக நட்சத்திரத்தின் நாலாம் பாதத்தில் இருப்பான். சூரியன் விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சஞ்சரிக்கும்போது சந்திரன் கிருத்திகையின் முதலில் இருப்பான். இத்தகைய காலம் தான் மகாவிஷுவம் என்ற புண்ணிய காலம் ஆகும். அப்போது சிரத்தையுடைய புருஷர், தேவதைகள், பிதுர்கள் இவர்களை உத்தேசித்து பிராமணருக்குத் தானங்கொடுக்க வேண்டும். இது தானத்துக்கு முகமாயுள்ளது. அப்போது தானங்கொடுப்பவன் மகாபுண்ணியம் செய்தவனாகிறான். இனி, யாக காலங்களைக் கூறுகிறேன். பகல், இரவு, அர்த்தஜாமம் என்ற பக்ஷம், கலை, காஷ்டை, க்ஷணம், பவுர்ணமி, அமாவாசை, சந்திரன் காணப்படாத குரு என்பதுமான அமாவாசையின் பிரிவுகள் பூரண சந்திரனிலுள்ள ராகை என்பதும் குறைந்த சந்திரனிலுள்ள அனுமதி என்பதுமான பவுர்ணமாவாசையிலுள்ள பிரிவுகள் தபம், தபசியம், மது மாதவம் சுக்கிரம் சுசி என்கிற மாசி முதலிய மாதங்களாகிய உத்தராயண ருதுக்கள் மூன்று, நபம் ந சியம், இஷம், ஊர்ச்சம், சகம், சகசியம் என்கிற ஆவணி முதலிய மாதங்களாகிய தக்ஷிணாயன ருதுக்கள் மூன்று. இந்தக் காலங்கள் எல்லாம் முக்கியமான யாக காலங்கள் என்பதை நன்றாய் அறிதல் வேண்டும்.

முன்பு லோகா லோகம் என்று ஒரு பெரிய மலையைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அதன் நாற்புறங்களிலும் கர்த்தமப் பிரஜாபதியின் பிள்ளைகளான சுதன்வா, சங்கபா என்பவர்களும் ஹிரண்ய ரோமா, கேதுமான் என்ற வேறு இருவரும் ஆகலோகபாலகர்கள் நால்வர் இருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் சுகதுக்கங்களும், ராகத்வேஷாதிகளுமான துன்பங்கள் இல்லை. மைத்ரேயரே! அகஸ்திய வீதிக்கு வடக்காகவும், அஜ வீதிக்குத் தெற்காகவும், வைசுவானவ வழிக்கு வெளியிலிருக்கிற மார்க்கம் பிதுர்யானமாகும். அதாவது, அதுவே பிதுர்லோகஞ்சேரும் வழியாகும். அங்கே அக்னிஹோத்ரமுடையவரான சில முனிவர்கள் வாசஞ்செய்து கொண்டு வேதத்திலுள்ள கர்மகாண்டங்களைத் துதித்துக் கொண்டு யாகமுயற்சிகளை செய்து கொண்டுமிருப்பார்கள். அந்த உலகத்தை அடைய விரும்புவோருக்குத் தான் பிதுர்யானம் என்ற தூமாதி மார்க்கம் உண்டு. (தூமாதி மார்க்கம் அதாவது முதலில் தூமம், பிறகு முறையே இரவு அமர பக்ஷம், தக்ஷிணாயனம் மாதங்கள், பிதுர்லோகம், ஆகாயம், சந்திரன் என்பவை எல்லைகள். இந்த வழியிற்சென்றவர்கள் கர்மலோகானுபவம் முடிவுபெற்றதும், மீண்டும் சந்திரனை விட்டு, ஆகாயம், காற்று, புகை, மேகம், மழை நீர், விதைகள் இவற்றின் ஸ்திரீ புருடர்களையடைந்து கர்மங்களுக்கேற்ற தேகத்தோடு பிறப்பார்கள்.) அவ்வுலகத்திலிருக்கும் பிதுர்க்கள், கர்மகாண்டம் அழியாதபடி சந்ததிகளினாலும் தபசினாலும் வேதத்தியானங்களினாலும் ஸ்தாபித்து வருவதும் அல்லாமல் முந்தினவர் பிந்தினவர்களுடைய வமிசத்திலேயும், பிந்தியவர் முந்தினவர்களுடைய வமிசத்திலேயும் பிறந்து கொண்டே, இந்த மூன்று உலகமும் அழியும் காலமாகிய பிருமாவின், நாள்வரை இருப்பார்கள். நாகவீதிக்கு வடக்காகவும், சப்தரிஷி வீதிக்கு தெற்காகவும் உள்ள மார்க்கம் தேவமார்க்கம் என்று சொல்லப்படும். அங்கு, இந்திரிய வெற்றியுள்ளவர்களாய் சித்திபெற்ற நிர்மல பிரமச்சாரிகளான சில மகாத்துமாக்கள் இருக்கின்றனர். அவர்கள் சந்ததியை வெறுத்திருப்பதால் மிருத்யுவை வென்றவர்களானார்கள். அந்த எண்பதாயிரம் இருடிகளும் சூரியனுடைய வடபுற வழியை ஆஸ்ரயித்துப் பிருமாவின் தினபரியந்தம் யாதொரு துன்பமும் அழிவும் இன்றி இருப்பார்கள். இந்த இருப்பு, லோபமும் குரோதாதிகளும் ஸ்திரீ சம்போகமும் விருப்பு வெறுப்புக்களும் இல்லாமையினாலும் கர்மத் தொடர்பை விட்டிருப்பதாலும் யோகத்திலிருந்து வழுவாமையினாலும் சத்தாதி விஷயங்களில் குற்றத்தைக் காண்பதாலும் அவ்விடத்தில் இருப்பவர் பிருமதினத்தின் முடிவுவரை நிலை நிற்பதாலும் அது அமிருத்வம் என்று வழங்கப்படும். இந்தப் பிரும தின அந்தமான காலமே பிரம்மஹத்தி செய்த பாவத்தின் பயனாக நரகத்தை அனுபவிப்பதற்கும் ஏற்படுத்திய காலமாகும். அந்தக் காலத்தில் பூமி முதல் துருவன் இருக்கும் ஸ்தானம் அளவும் அழிந்து போய்விடும்! சப்தரிஷிகளுக்கு மேலே வடபுறத்திலே துருவ நட்சத்திரம் இருக்குமிடம் யாதுண்டோ அது திவ்வியமாகவும் மகாப் பிரகாசமாகவும் இருக்கின்ற மூன்றாவது ஆகாய ஸ்தானம் அது விராட்புருஷனுக்கு இருதய நாடிஸ்தானமானது பற்றி, அங்கே விஷ்ணு எழுந்தருளியிருக்கிறார். ஆகையால் அதற்கு விஷ்ணுபதம் என்ற பெயர் ஏற்பட்டது. அது காமாதி தோஷங்களைக் கழித்துப் பரமாத்துமாவினிடத்தில் மனதைப் பதியவைத்த யோகிகளுக்கு, புண்ணிய பாப கர்மங்களெல்லாம் க்ஷயித்தபோது அடையத்தக்க ஸ்தானமாகும். யோகிகள் பாவபுண்ணியங்கள் ஒழிந்ததாலே சுகதுக்க அனுபவ ரூப சம்சார ஏதுக்களில்லாதவர்களாய் எந்த உத்தமமான இடத்திலே சென்று ஆனந்தத்தோடு இருப்பார்களோ அதுதான் ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாகும்!

லோகதாக்ஷிகளான தருமன், துருவன் முதலிய மகாத்மாக்கள் எங்கே இருந்து கொண்டு அந்த ஸ்ரீவிஷ்ணுவினுடைய ஐசுவரியத்துக்குச் சமானமான ஐசுவரியமாகிய இந்திரிய வெற்றியினாலே சீர்ப்பட்டிருக்கும் யோகப் பிரபாவம் உள்ளவர்களாய் விளங்குகின்றன. ரா அதுதான் ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாகும்! சராசரங்கள் எல்லாம் எங்கே குறுக்காகவும் நெடுக்காகவும் கோக்கப்பட்டு, எங்கே இருப்பனவாய், உண்டாவனவாய் இருக்குமோ அதுவே ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாம். எது ஆகாயத்திலே சூரியனைப் போல் மகாத்மாக்களுக்கு சுத்த விசேஷ ஞானத்தினாலே பிரத்யக்ஷமாய் விளங்குமோ, அதுவே ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாகும். அங்கே சென்றவர்கள் மீண்டும் சம்சாரபந்தத்தையடையாமல் பிரம்மாவுடன் கூடி மோட்சத்தை அடைவார்கள். அது கிரம முந்தி ஸ்தானமாகையால், மோக்ஷ ஸ்தானமான பரமபதம் என்று சொல்லப்படும். அதுஎப்படி லோகாதாரமாகிறது என்பதைச் சொல்கிறேன் கேளுங்கள். மகா தேஜஸுள்ள துருவன் அங்கே நடுக்கூச்சம் போல் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறான் அன்றோ? அந்தத் துருவனிடத்திலே சகல கிரக நக்ஷத்திரங்களும் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கின்றன. அந்தக்கிரக நக்ஷத்திரங்களில் மேகங்கள் நாட்டப்பட்டு மழையானது சகல ஓஷதிகளின் மூலமாக படைப்புக்குக் காரணமாயும் தேவதைகள் முதலானோருக்கு போஷணையாகவும் இருக்கிறது. அதனாலேயே நெய் முதலிய அவிசொரிகின்ற ஆகுதி மூலமாகத் தேவர்கள் திருப்தியடைந்தவர்களாய் லோகசிருஷ்டிக்கும் ஸ்திதிக்கும் காரணமாகின்றனர். இவ்விதமாக இந்த விஷ்ணுபதம் என்கிற பரிசுத்தமான மூன்றாவது ஸ்தானமானது மூன்று உலகங்களுக்கும் ஆதாரமாயும் விருத்தி ஹேதுவாயும் இருக்கிறது. மைத்ரேயரே! அந்த விஷ்ணு பதத்தின் பரிசுத்தப் பிரபாவத்தை மேலும் கேட்பீராக, அங்கிருந்து சகல பாதகங்களையும் நாசஞ்செய்யவல்ல கங்கை என்று நதியானது உண்டாகி, தேவ மங்கையரின் சரீரத்திலுள்ள குங்குமப் பூச்சினால் பொன் நிறமுடையதாய் விளங்குகின்றது. ஸ்ரீவிஷ்ணு பகவானுடைய இடது திருவடித் தாமரையின் கட்டைவிரல் நகத்திலுண்டான பிரவாகத்திலிருந்து பெருகி வரும் அந்தக்கங்கை நதியைத் துருவன் இரவும் பகலும் பக்தியோடு தனது சிரசில் வகிக்கிறேன். பிறகு, சப்தரிஷிகள் பிராணாயாமம் செய்து கொண்டு, அந்தக் கங்கையின் அலைகளினால் ஜடைகள் மிதக்க, அகமர்ஷண ஸ்நானம் செய்துகொண்டு இருக்கிறார்கள். பிறகு அந்தக் கங்கை நதியின் ஜலப்பிரவாகத்தினால் சந்திர மண்டலம் நன்றாக நனைக்கப்பட்டு இரவில் அதிகக் காந்தியை அடைந்து விளங்குகிறது.

பிறகு, அது சந்திர மண்டலத்தை விட்டுப் புறப்பட்டு, மேருமலையின் மீது விழுந்து சீதா, அளகந்தா சட்சு பத்திரை என்ற பெயர்களை பெற்று நான்கு திசைகளிலும் இவ்வுலகத்தைத் தூய்மைப்படுத்தும் பொருட்டு இறங்கி வருகின்றது. அந்த நான்கு பிரிவுகளில் தென்புறம் வருகிற அளகநந்தை என்ற கங்கையின் பிரிவை, சிவன் மகா பக்தியோடு நூறு வருஷத்துக்கு மேலான காலமும் தன் சிரசில் தரித்துப் பிறகு விடுகின்றார். அது சிவனுடைய ஜடாமகுடத்திலிருந்து தரையில் வீழ்ந்து, சகரகுமாரருடைய நொறுங்கிய எலும்புகளை நனைத்து, அந்தப் பாவிகளையும் சொர்க்கஞ்சேரும்படிச் செய்தது. இந்த மகாநதியில் ஸ்நானம் செய்தவுடனேயே சகல பாவங்களும் பாழாவதுமன்றி, மகா புண்ணியமும் உண்டாகும். புத்திராதிகள் அதன் தண்ணீரினால் பிதுர்க்களுக்கு ஒருமுறை தர்ப்பணம் செய்வார்களானால் அதனால் அந்தப் பிதுருக்கள் நூறு ஆண்டுகள் மட்டும் ஒப்பற்ற திருப்தியை அடைவார்கள். அந்தக் கங்கா நதியின் கரையில் பிராமணரும் க்ஷத்திரியரும் யக்ஞேசுவரனான ஸ்ரீபுரு÷ஷாத்தமனை மகா யக்ஞங்களினாலே ஆராதித்து, இந்த உலகத்தில் மேல் உலகத்திலும் மிகுந்த செல்வத்தை அடைந்தார்கள். யோகிகளும் அதன் நன்னீரில் நீராடிப் பாவங்கள் நசிக்கப்பெற்று ஸ்ரீகேசவனிடத்திலே சித்த லயத்தினால் மோக்ஷõனந்தமும் பெற்றார்கள். அந்தக் கங்கையானது தன்னில் மூழ்குகிறவர்களுக்கும், தன்னை உண்பவருக்கும், துதிப்பவருக்கும், பரிகசிப்பவருக்கும், விரும்புகிறவருக்கும், காண்பவருக்கும், கேட்பவருக்கும் சகல பாவநிவர்த்தி செய்யும்படியான மகிமையை உடையது; நூறு காதத்துக்கு அப்புறம் இருந்தாகிலும் கங்கை! சங்கை! என்ற நாம சங்கீர்த்தனம் செய்தவர்களுக்கும், மூன்று பிறவிகளினாலே நேர்ந்துள்ள பாவங்களை ஒழிக்கும். இவ்விதமாக மூவுலகங்களையும் தூய்மைப்படுத்தவல்ல கங்கை நதியானது அவதரிக்கப் பெற்ற புனித ஸ்தலமாக, அந்த விஷ்ணுபாதமானது விளங்குகிறது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம்—நான்காம் பாகம் –

February 28, 2021

21. தனு முதலியோர் வமிச வரலாறு
22. தேவரதிகாரமும் பகவத் மகிமையும்

————–

21. தனு முதலியோர் வமிச வரலாறு

மைத்ரேயரே! இத்தகைய புகழ்மிக்க பிரகலாதனனுக்குச் சிபிபாஷ்கலன், விரோசனன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். விரோசனனுக்கப் பலிச் சக்கரவர்த்தி பிறந்தான். பலிக்கு பாணாசுரன் முதலிய நூறு பிள்ளைகள் பிறந்தனர். இது நிற்க, இரணியாட்சனுக்குச் சர்ச்சுரன் சகுனி, பூதசந்தாயனன், மகாநயான், மஹாபாஹி, காலநாபன் என்ற பிள்ளைகள் அறுவர் பிறந்தார்கள். இது திதியின் வமிசமாகும். இனி காசிபருக்குப் பாரியையான தனு முதலிய பெண்களின் வமிசங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள் தனு என்பவளுக்கு துவிமூர்த்தா, சம்பரன் அஜோமுகன், சங்குசிரன், கபிலன், சங்கரன், ஏகவத்திரன், தாரகன், சொர்ப்பானு, விருஷர்பர்வா, புலோமன், விப்ரசித்தி முதலிய அதிபலசாலிகளான பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே சொர்ப்பானுவுக்குப் பிரபை என்பவளும் விருஷபர்வாவுக்குச் சர்மிஷ்டையென்பவளும், வைசுவாநாதனுக்கு உபதாநவி அயசிரை புலோமை காலகை என்ற நான்கு கன்னிகைகளும் பிறந்தார்கள். அவர்களில் புலோமை, காலகை என்பவர்கள் மரீசிக்கு மனைவியாயினர். அவர்களுக்கு புலோலமர், காலகேயர் என்ற புகழ்பெற்ற அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். இரணியனுக்குச் சகோதரியான சிம்ஹிகை என்பவள் விப்பிரசித்திக் மனைவியாகி திரியமிசன் சல்லியன் நபன் வாதாவி இல்லலன், நமுசிககிருமன், அந்தகன், நரகன், காலநாபன் ராகு என்ற மகாசக்தியுள்ள பிள்ளைகளைப் பெற்றான். இவ்விதமாகத் தனுவென்பவனின் வமிச்தி மகாபலசாலிகளான அசுரர்கள் பலர் பிறந்தார்கள். இவர்களுக்கு சஹஸ்ர சங்கைகளாகப் புத்திர பவுத்திர சந்தானங்கள் உண்டாயின. முன்பு நான் சொன்னது போல ஆத்ம ஞானியான பிரகலாதாழ்வானின் வமிசத்தில் நிவாதகவசர் என்ற தைத்தியர் தோன்றினர். தாம்பரை என்பவளுக்குக் காசிபர் மூலமாக சுதி, சேனி, பரசி, சுக்ரீவை கிருத்தரி, சுசி என்ற ஆறுபெண்கள் பிறந்தார்கள். அவர்களில் சுகிக்குக் கோட்டான்களும், காக்கைகளும் பிறந்தன. சேனி என்பவளுக்குப் பருந்துகளும், பரசிக்குச் செம்போத்துகளும், கிருத்திரிக்கு கழுகுகளும்; சுகிக்குத் தண்ணீர்ப் பறவைகளும், சுக்ரீவைக்குக் குதிரைகளும் ஒட்டகங்களும் பிறந்தன. இது தாம்பரையின் வமிச விபரமாகும். இனி, விந்தைக்குக் கருடன், அருணன் என்ற இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களில் கருடன் சர்ப்பங்களைப் புசிப்பவனாய் கடூரமான ரூபமுடையவனாய் பறவையினத்துக்கெல்லாம் உயர்ந்தோனாய் புகழ்பெற்றிருந்தான். சுரசை என்பவளுக்கு ஆகாயத்தில் பறக்கும் ஆற்றலுடைய ஆயிரம் பாம்புகள் பிறந்தன. கத்துருவுக்குப் பலமும் தேஜசுடைய அநேக பணமண்டல மண்டிதங்களாயுள்ள அநேகம் நாகங்கள் உண்டாயின. அவை கருடனுக்கு வயப்பட்டிருந்தன. அந்த நாகர்களில் சேஷன், வாசுகி, தக்ஷகன், சங்கன், சுவேகன், மகாபத்மன், கம்பளன், அசுவதரன், ஏலாபுத்திரன், கார்க்கோடகன், தனஞ்சயன் என்போர் முக்கியமானவர்கள். அவர்கள் விஷச்சுவாலையோடும் தந்தங்களுடனும் கூடிய முகங்களோடும் விளங்குவார்கள்.

குரோதவசை என்பவளுக்குப் பதினாயிரம் ராட்சச சர்ப்பங்களும், நிலத்திலும் நீரிலும் சஞ்சரிக்கும் பறவைகளும் பிறந்த குரோதவச கணம் என்ற பெயரைப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் கோரமானவர்கள். சுரபி என்பவளுக்கு மரங்களும், கொடிகளும், புற்களும் உண்டாயின. சுஷை என்பவளுக்கு யட்ச ராட்சதர்களும், மனு என்பவளுக்க அப்சரசுகளும், அரிஷ்டை என்பவளுக்கு மகாபலசாலிகளான கந்தர்வர்களும் பிறந்தார்கள். இந்தவிதமாக தாவர ஜங்கமங்களான காசிபரின் சந்தானங்களையெல்லாம் சொன்னேன். அவர்களுடைய புத்திர பவுத்திராதி சந்ததிகளோ எண்ணமுடியாத அளவில் பெருகின. மைத்ரேயரே! இது சுவாரோசிஷ மனுவந்தரத்துப் படைப்பாகும். இனி வைவஸ்வத மனுவந்திரத்தில் வருணன் ஒரு யாகம் நடத்த, அதில் சதுர்முகப் பிருமன் ஹோதாவாகி அதை நிர்வாகம் செய்தான். அப்போது பிரஜா சிருஷ்டி செய்தவிதத்தை விவரமாகக் கூறுகிறேன் கேளுங்கள். தேவ, ரிஷி, கந்தர்வ பன்னகாதிகளுக்கும் பிதாமகனான சதுர்முகன் நூதன சிருஷ்டி செய்ய காலம் பெறாமல் பூர்வத்தில் சுவாரோசிஷ மனுவந்தரத்திலே தன் சங்கல்பத்தால் உண்டான சப்தரிஷிகளை நோக்கி, வைவசுவத மனுவந்தரத்திலே நீங்களே பிரஜைகளைப் படையுங்கள்! என்று நியமித்தான். இவர்களும் அப்படியே செய்தனர். இது நிற்க. தேவர் தேவதைகளினாலே அசுரர்கள் எல்லாம் விநாசமாய்ப் போனதால், திதி என்பவள் புத்திர சோகமடைந்து அநேக காலம் தன் கணவரான காசிபரை ஆராதித்து வந்தாள். அவர் அதனால் மகிழ்ந்து திதியை நோக்கி, பெண்ணே! உனக்கு பிரியமான வரத்தைக் கேள்! என்றார். அதற்கு அவள், எனக்கு இந்திரனைச் சங்கரிக்கத் தக்கவனான ஒரு மகன் உண்டாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். அதைக் கேட்டதும் காசிபமுனிவர் அவளைப் பார்த்து எனது பிரிபுத்தினியே; உனக்கு இந்திரனை சங்கரிக்கத்தக்க மகன் வேண்டும் என்றால் நூறு ஆண்டுகள் சம சித்தத்துடன் சுசியாய்க் கர்ப்பத்தைத் தரித்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால் உன் விருப்பப்படி மகன் ஒருவன் பிறப்பான் என்று சொல்லி, அவளுடன் கூடிக் கலந்தார். அதனால் அவருடைய மனைவி கருவுற்று நித்தியமும் சுசியாய் விரதம் அனுஷ்டித்து வந்தாள். இப்படியிருக்க இந்தச் செய்தியை இந்திரன் அறிந்தான். உடனே அவன் சூழ்ச்சி செய்து அந்த ரிஷிபத்தினியின் அருகில் வந்து இருந்து; அவளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு அவளது கர்ப்பத்தை சிதைக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். இப்படியிருக்க சிலநாள் குறைய நூறு ஆண்டுகள் நிறையும் காலத்தில் ஒருநாள் திதிதேவி பாதசுத்தி செய்யாமல் படுக்கையில் படுத்து நித்திரை செய்தாள். அப்போது இந்திரன் அவள் சுத்தமில்லாமல் அசுசியாக இருப்பதையறிந்து வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு; அவள் வயிற்றிலே சூட்சும ரூபத்துடன் சென்று அந்தக்கர்ப்பத்தை ஏழு துண்டுகளாகத் துண்டித்தான். அப்போது அந்தச் சிசு, பெருஞ்சப்தத்துடன் ரோதனம் செய்ய இந்திரன், ரோதனம் செய்யாதே என்று பலமுறைகள் கூறி கோபங்கொண்டு அந்த ஏழு துண்டுகளையும் மறுபடியும் எவ்வேழாகத் துண்டித்தான். அந்த நாற்பத்தொன்பது துண்டங்களுக்கும் மரோதி (ரோதனம் செய்யாதே) என்று சொன்ன காரணத்தால் மருத்துக்கள் என்ற நாமதேயம் உண்டாயிற்று. பிறகு, அந்த மருத்துக்கள் விவேக சத்துவ சம்பன்னராய் இந்திரனுக்கு உதவலானார்கள்.

———————

22. தேவரதிகாரமும் பகவத் மகிமையும்

மைத்ரேயரே! பூர்வத்தில் மிருது மாமன்னன் மாமுனிவர்களால் முடிசூட்டப் பெற்ற போது கிரக நட்சத்திரங்களுக்கும் ஓஷதிகளுக்கும் பிராமணர்களுக்கும் வேள்விகளுக்கும், தவங்களுக்கும், சந்திரனை அரசாக பிருமதேவன் நியமித்தான். குபேரனை ராஜாக்களுக்கு அதிபதியாகவும் வருணனை ஜலத்துக்கு அதிபதியாகவும், விஷ்ணு என்னும் சூரியன் ஆதித்யர்களுக்கும் அதிபதியாகவும், தக்ஷனை கர்த்தமர் முதலிய பிரஜாநாகருக்கு அதிபதியாகவும், இந்திரனை வசு ருத்திர, ஆதித்திய பிரமுகமான தேவதைகளுக்கு அதிபதியாகவும், பிரகலாதனைத் தைத்யதானவருக்கு அதிபதியாகவும், யமதர்மனை பிதுர்தேவதைகளுக்கு அதிபதியாகவும், ஐராவதத்தை யானைகளுக்கு அதிபதியாகவும், வாசுகியை பாம்புகளுக்கெல்லாம் அரசாகவும் விருஷப ராஜனைப் பசுக்களுக்கு அதிபதியாகவும், ஹிமவானை மலைகளுக்கு அரசாகவும், கபிலரை முனிவர்களுக்கு அரசாகவும், சிங்கத்தை மிருகங்களுக்கு அதிபதியாகவும், கல்லால மரத்தை மரங்களின் அரசாகவும் ஏற்படுத்தி, இவ்விதமாக அந்தந்த சாதிகளுக்குத் தக்கபடி தலைவர்கள் ஆகும்படி ராஜ்யாதிபத்யங் கொடுத்தருளினான். இப்படிச் செய்த பிறகு அந்த பிரம்மா வைராசப் பிரஜாதிபதியின் குமாரனான சுதன்வாவைக் கீழ்த்திசைக்கு அதிபதியாகவும், கர்த்தமப் பிரஜாபதியின் தனயனான சங்கபதனை தென்திசைக்கு அதிபதியாகவும், ரஜசு என்ற பிரஜாபதியின் மகனான கேதுமா என்பவனை மேலைத்திசைக்கு அதிபதியாகவும், பர்வசன்யப் பிரஜாபதியின் மகனான ஹிரண்யரோமா என்பவனை வடதிசைக்கு அதிபதியாகவும் நியமித்தான். அவர்களால் தீவுகள், சமுத்திரங்கள், மலைகள் ஆகியவற்றுடன் கூடிய பூமண்டலம் யாவும், இது வரையில் தங்கள் எல்லைகளிலே தர்மமாக பரிபாலிக்கப்பட்டு வருகின்றன. இப்போது நான் சொன்னவர்களும் மற்ற அரசர்களும் ஜகத்தை ரக்ஷிப்பதில் புகுந்துள்ள ஸ்ரீமந்நாராயணனுடைய விபூதியாக இருப்பவர்கள் என்று அறிந்து கொள்வீராக. பூர்வத்தில் இருந்தோரும் இப்போது இருப்போரும் இனிமேல் உண்டாவோருமான பூதாதிபதிகள் யார் யாருண்டோ அவர்கள் அனைவரும் சர்வமயனாக இருக்கும். விஷ்ணுவின் அம்ச பூதர் என்று அறிவீராக. தேவ, தானவ பைசாச மானுட, பட்சி, மிருக, பன்னதாதிபதிகளும், கிரகாதிபதிகளும் விருட்ச பருவதாதிபதிகளுமாக இருப்போரும், சென்றோரும் உண்டாவோரும், யாவரும் சர்வ பூதமயனான ஸ்ரீவிஷ்ணுவின் அமிச பூதரேயன்றி வேறல்ல.

மைத்ரேயரே! ஜகத் ரட்சண தீட்சிதனும், சர்வேசுவரனுமான ஸ்ரீஹரியைத் தவிர யாருக்கும் காக்கும் திறமையில்லை இதுமட்டுமல்ல. அவன் சத்துவ குணாச்ரியமான சொரூபத்தோடு எப்படி ஜகத்தை ரட்சிக்கிறானோ அப்படியே ராஜச தாமச குணங்களை அங்கீகரித்துப் படைப்புக் காலத்தில் படைப்புக் கர்த்தாவாகிச் சங்காரஞ்செய்துகொண்டும் இருக்கிறான். அந்த ஜனார்த்தனன் சிருஷ்டியிலும் நான்கு வகையின்னாய் அப்படியே ஸ்திதி சங்காரங்களிலும், நந்நான்கு பேதமுடையவனாகவும் இருக்கிறான். எப்படியெனில் முதல் அம்சத்தில் பிரமாவாகவும், இரண்டாவது அம்சத்தில் மரீசிப் பிரஜாபதிகளாகவும், மூன்றாவது அம்சத்தில் காலமாயும், நான்காவது அம்சத்தில் சகலபூதங்களாயும், ரசோகுணத்தை ஆஸ்ரயித்துப் படைப்பான். ஸ்திதிக் காலத்தில் சத்தவ குணாசிரயமான முதலமிசத்தினால் நானாவித திவ்ய அவதார ரூபிராயும், இரண்டாவது அம்சத்தினால் மனுவாதி ரூபியாயும், மூன்றாவது அம்சத்தில் காலரூபியாயும், நான்காவது அம்சத்தில் சகல பூதங்களிலிருந்தும் ரட்சிப்பான். சங்கார காலத்தில் தமோ குணத்தை ஆஸ்ரயித்து முதலம்சத்தால் ருத்ரரூபத் தரித்தும், இரண்டாவது அம்சத்தால் அக்னி; வாயு, அந்தகாதி ரூபங்களைக் கொண்டும், மூன்றாவது அம்சத்தால் காலசொரூபந் தரித்தும், நான்காவது அம்சத்தில் சர்வபூத அந்தரியாமியாக இருந்தும் சங்கரிப்பான். மைத்ரேயரே! இவ்விதமாகக் கல்பந்தோறும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய கிரியைகளில் எம்பெருமானுக்கு நந்நான்கு பேதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பிருமாவும் தஷாதிகளும் காலமும் சகல பூதங்களும் ஸ்ரீவிஷ்ணுபகவானுடைய லோகசிருஷ்டி ஹேதுக்களான லீலா விபூதிகளாகும். உபேந்திராதியவதார சொரூபங்களும் மனு முதலானவர்களும் காலமும் சகல பூதங்களும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய லோக சங்கார காரணங்களான விபூதிகளாகும். பிரம்மாவும் மரீசி முதலிய பிரஜாபதிகளும் ஆதிகாலம் முதலாகப் பிரளயகாலம் வரையிலும் சதுர்வித பூதசாதங்களைப் படைத்து வருகிறார்கள். ஆதிகாலத்தில் பிரம்மாவினாலும் இடையிலே மரீசி முதலிய பிரஜாபதிகளாலும் பிறகு அந்தந்த ஜந்துக்களாலும் படைக்கப்பட்டு வருகின்றன. படைப்புக்கெல்லாம் முக்கிய காரணம் காலம் கால சக்தியல்லாமல் பிரம்மாவும் தக்ஷõதிகளும் பிரஜைகளும் படைக்கமாட்டார்கள். ஸ்திதியும் இப்படியே கால சக்தியில்லாமல் நடைபெறாது.

பிரளயத்திலே ருத்திராதிகளும் கால சக்தியின்றி சங்கரிக்கமாட்டார்கள். மைத்ரேயரே! அநேக வார்த்தைகளினால் பிரயோசனமென்ன? எதனால் எது படைக்கப்படுகிறதோ, அந்தப் படைக்கப்படும் வஸ்துவின் படைப்பைக் குறித்துக் காரணமாக இருக்கும் அந்த வஸ்துவெல்லாம் எம்பெருமானின் திருமேனியேயாகும். இதுபோலவே, ஒன்றைச் சங்கரிக்கின்ற வஸ்து எதுவுண்டோ அதுவும் சங்கார ஹேதுவான ஜனார்த்தனனுடைய வுத்திர ரூபமாகும். ஸ்ரீவிஷ்ணுவே, சிருஷ்டியும் ரக்ஷணையும் சங்காரமும் செய்யும் ஜீவன்களுக்கு அந்தரியாமியாகிச் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களைச் செய்தருளுகிறான். இந்தவிதமாகவே சத்துவ, ராஜச, தமோ குணங்களில் புகுந்து சிருஷ்டிக்காலம் முதலிய காலங்களினால் மூன்றுவிதமாக இருக்கிற பிரம்மாதி ஸ்தாவாரந்தமான நாராயணனுடைய ரூபத்தை விவரித்தேன். இனிமேல் முக்தஜீவமயமான அவனுடைய ரூப அந்தரத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். பிரகிருதி குணவர்ச்சிதமும் ஞானகுணவத்தும் சுயம்பிரகாசமும் உபமான ரகிதமும், சகலபூத வியாபகமும், பிரம்மாதி ஜீவசாதங்களைவிட உயர்ந்த முக்த ஜீவ ஸ்வரூபமும் ஸ்ரீமந்நாராயணனுடைய பரஸ்வரூபம் என்று வழங்கப்படும். அதுவும் நான்குவிதமாக இருக்கும். இவ்வாறு பராசர மகரிஷி கூறிவிரும்போது, மைத்ரேயர் குறுக்கிட்டு முனிவரே! ஞானமயமாய், நாராயணனுக்குச் சரீரபூதமான முக்த சொரூபம் நான்குவிதம் என்றீர்களே, அதைச்சற்று விளக்கமாகக் கூறவேண்டும்! என்று வேண்டினார். அதற்குப் பராசரர் பின்வருமாறு விளக்கம் கூறலானார். மைத்ரேயரே! உலகத்தில் விருப்பதற்கு உரிய பொருளைச் சம்பாதிப்பதற்குக் கருவியாக இருப்பது சாதனம் என்றும், இஷ்டவஸ்துவானது சாத்தியம் என்றும் சொல்லப்படும். மோட்சத்தை விரும்பும் யோகிகளுக்கு பிராணயாமம் போன்றவை சாதனமாயும் பரப்பிரம்மமானது சாத்தியமாகவும் உள்ளன. யோகிகளுக்கு முக்தி நிமித்தமாக யோக சாஸ்திரத்தினாற் பிறந்த பிராணாயாமம் முதலிய சாதனங்களுடைய ஞானமானது அந்த ஞானமய ஸ்வரூபத்திற்கு முதல் பேதமாகும். பாதமோட்சனார்த்தமாக யோகப் பயிற்சி செய்து கொண்டிருப்பவனுக்கு சாத்தியமாய் சாஸ்திரத்தினால் உண்டான ஆன்ம விஷயமான ஞானமானது இரண்டாவது பேதமாகும். இவ்விரண்டும் சாத்திய சாதன சம்பந்தத்தினாலே சேர்ந்ததாய், தேவ மனுஷியாதி பேதமில்லாத ஆன்மாவைப் பற்றி வியாபித்திருக்கிற தியான ரூபமான ஞானமானது மூன்றாவது பேதம். இந்த மூன்று வகையான ஞானங்களுக்கும் சாதனமாக இருத்தலாகிய விசேஷம் யாது உண்டோ அதைத் தள்ளுதலினாலே தோன்றும் ஆத்மசாட்சாத்காரமானது நான்காவது பேதம்! இந்த ஞானம் பொருளான ஆன்ம ஸ்வரூபமானது சாதனா அனுஷ்டானம் இல்லாததாய் ரூபாதிகளுக்கு கோசரமாகத்தாய் சுருக்கமின்றி வியாபித்திருப்பதாய், உபமான ரகிதமாய், தன்னாலேயே அறியத்தக்கதாய், விருத்தி க்ஷயாதிகளற்றதாய், குறிகளால் அறியப்படாததாய், உணவாசை முதலிய ஆறு ஊர்ஜிகமற்றதாய் பற்றாததாய் நின்று ஞானமயனான ஸ்ரீவிஷ்ணுபகவானுக்கு பிரமம் என்ற பெயர் கொண்ட சொரூபம் என்று வழங்கப்படும். எந்த யோகிகள் அந்த ஸ்வரூபத்திலே முடிவுகாலத்து நினைப்பின் சக்தியினாலே, வேறான நினைப்புகளையெல்லாம் தவிர்த்து, சகல உபாதிகளும் இல்லாமையாகிற லயத்தை அடைகிறார்களோ; அவர்கள் சம்சாரம் என்ற கழனியில் விதைப்பதற்கு உமி நீங்கிய அரிசியைப் போலாவார்கள்.

நான் இப்போது விவரித்த முக்த ஸ்வரூபத்துக்கு உள்ள சகல குணங்களையும் கொண்டதாய், நித்திய சுத்தமாய், சர்வாத்மகமாய், பரிபூரணமாய், வேறுகுணங்களில்லாததாய் கல்யாண குணங்களைக் கொண்டதாய், ஸ்ரீவிஷ்ணு என்ற திருநாமமுடைய உத்தம ஸ்வரூபம் ஒன்றுண்டு. அதுதான் பரப்பிரம்மம் என்று வழங்கப்படும். அந்த பரப்பிரம்மத்தை அடைந்த யோகியானவன் புனராவிருத்தி இல்லாமல், புண்ணிய பாவ வர்ஜிதனாய், சகல கிலேசமும் இல்லாதவனாய், அத்யந்த நிர்மலமான ஆனந்தானுபவஞ்செய்து கொண்டிருப்பான். அந்தப் பரப்பிரம்மத்துக்கு மூர்த்தம் அமூர்த்தம் என்று சொல்லப்பட்டு அழியாததாகையால் அக்ஷரம் என்ற பெயரைப் பெறும். ஏகதேசத்திலிருக்காத அக்கினியின் பிரபைச் சிறப்பு பரவலாக வியாபித்திருப்பதைப் போலவே, பரப்பிரம்மமான நாராயணனுடைய சக்தி சிறப்பானது. சகல ஜெகத்தையும் வியாபித்துள்ளது. அக்கினியின் அருகிலேயிருந்தால் பிரபைச் சிறப்பு அதிகமாக இருக்கும். தூரத்திலிருந்தால் அது சொற்பமாக இருக்கும். அதுபோலவே, ஸ்ரீமந்நாராயணனுடைய சக்தியும் பிரமாதி ஸ்தாவராந்தமான ஜகத்தில் ஏறவுங் குறையவும் வியாபித்துள்ளது. அதன் விவரத்தையும் சொல்லுகிறேன். கேளுங்கள். பிரம்ம, விஷ்ணு ருத்திரரிடத்திலே, பிரம சக்தியானது அதிகஅளவில் வியாபித்திருக்கும் அதிலே பிரம ருத்திரர்களிடத்திலே அனுப்பிரவேசமாகவும் விஷ்ணுவினிடத்திலே சொரூபமாகவும் இருக்கும் என்று அறியவேண்டும். இனி, அவர்களைக் காட்டிலும் தக்ஷõதிகளும் அவர்களைவிட மனிதர்களும், அவர்களைவிட பசு, பட்சி சரீஷ ரூபங்களும், அவற்றை விட மரஞ்செடி கொடிகளும் முறைமுறையாகக் குறைந்திருக்கும். இவ்விதமாக உற்பத்தி நாசம் முதலிய விற்பங்களையுடையதாயும், கணக்கற்றதாயும், நித்தியமாயும் இருக்கிற இந்தப் பிரபஞ்சம் எம்பெருமானுக்கு ஒரு ரூபமாகும்! பூர்வத்தில் சொல்லப்பட்ட சர்வ சக்திகளையும் கொண்டவனுக்கு மூர்த்தமான வேறொரு ரூபமும் உண்டு. மந்திர ஜபாதி சகிதமான சாலம்பனம் என்ற மகாயோகத்தை பயிலு போது யோகிகளுக்குள்ளே அஸ்திர பூஷணாதி சகிதமும் திவ்வியமுமான விஷ்ணு தேவனுடைய அந்த ரூபந்தான் தியானஞ்செய்ய வேண்டுவதாகும். சித்தத்தை நிச்சலமாக்கி யோகாப்பியாசஞ் செய்யும் யோகியாருக்கு இப்போது நான் அறிவித்த தியானச் சிறப்பு சித்திக்கும். மைத்ரேயரே! அந்த எம்பெருமானுக்கு முன்பு சொன்ன சகலரூபங்களை விட பரமமான ரூபம் அந்த விஷ்ணு ஸ்வரூபமேயல்லாது வேறல்ல. அதுவே திருவுள்ளமுகந்த ஸ்வரூபம். ஏனென்றால், அந்த ஸ்ரீஹரியே சர்வாத்துமகமான பரப்பிரம சொரூபம். அவனிடமே சகல லோகங்களும் வஸ்திரங்களில் நூல்களைப் போலக் கலந்து கோப்புண்டு இருக்கின்றன. எப்படியெனில் சகல உலகங்களும் அவனாலே உண்டாகி, அவனிடத்திலேயே நின்றிருக்கின்றன. க்ஷராக்ஷரமயனான ஸ்ரீவிஷ்ணு, பிரகிருதி புருஷாதிகளையெல்லாம் அஸ்திர பூஷணங்களாகத் திரிந்திருப்பவன்-இவ்வாறு பராசரர் கூறியதும் மைத்ரேயர் குறுக்கிட்டு, முனிவர் பெருமானே! ஸ்ரீமந்நாராயணன் சகல ஜகத்தையும் அஸ்திரபூஷண சொரூபமாகத் தரித்திருக்கும் விதத்தை சொல்ல வேண்டும்! என்று கேட்டார்.

பராசரர் அதற்கு பின்வருமாறு விவரித்து கூறினார். அப்பிரமேயனாயும், சர்வ சக்தனாயும் சர்வேசுவரனாயும் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானுக்குத் தெண்டம் சமர்ப்பித்து , என் பிதாமகனான வசிஷ்ட முனிவர் அருளிச்செய்த வண்ணம் ஸ்ரீமந்நாராயணனுடைய அஸ்திரபூஷணாதி சொரூபத்தை விவரிக்கிறேன்; கேளுங்கள். உலகத்தோடு ஒட்டாதவனும் பிரகிருதி குணராகிதனுமான க்ஷேஷத்திரக்ஞனே, கவுஸ்துபமணியாகவும் ஜகதாதி காரணமான மூலப்பிரகிருதியே! ஸ்ரீவச்சம் என்ற மறுவாகவும், புத்தியே! கவுமோதகி என்ற கதாயதமாகவும், சாமசாகங்காரமே பாஞ்சசன்னியம் என்ற சங்காகவும், சாத்விகங்காரமே சாரங்கம் என்ற வில்லாகவும், சலனாத்மகமான மனமே மகாவேகத்தில் வாயுவையும் மிஞ்சக்கூடிய சுதர்சனம் என்ற சக்கரமாகவும், பஞ்ச மஹா பூதங்களும், முத்து மாணிக்க மரகத இந்திர நீல வஜ்ஜிரமயமாய், பஞ்சவர்ணமான வைஜயந்தி என்ற வனமாலையாகவும், ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் அம்புகளாகவும், வித்தையே அத்யந்த நிர்மலமான நந்தகம் என்ற கத்தியாகவும், அவித்தையே அந்தக் கத்தியின் உறையாகவும் ஸ்ரீமந்நாராயணன் பிரகிருதி புருஷர்களையெல்லாம் அஸ்திர பூஷண சொரூபமாகத் தரித்துக் கொண்டு விசித்திர சக்தியுக்தனாகிச் சேதனருக்கெல்லாம் இதஞ்செய்தருள்வான். வித்தையும் அவித்தையும் சேதனமும் அசேதனமும் நாராயணனிடத்தில் தான் இருப்பவை கலா, காஷ்டா முகூர்த்த அகோராத்திர மாச அயன சம்வச்சரரூபமான காலமும் ஸ்ரீஹரி சொரூபமாகும். பூலோக புவர்லோக சவர்லோகங்களும், மகாலோக, ஜனலோக தவலோக சத்தியலோகங்களும், மகாலோக, ஜனலோக தவலோக சத்தியலோகங்களும், தேவ, மனுஷ்ய பசு, பக்ஷியாதி உயிர் வகைகளும், ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்கிற வேதங்களும், உபநிஷத்தக்களும் இதிஹாசங்களும், வேதாங்கங்களும், மநுவாதி ஸ்மிரிதிகளும், கல்ப சூத்திரங்களும் காவியங்களும் கீதங்களும் மற்றும் உண்டான இதர சாஸ்திர வகையும் மூர்த்தங்களாயும் அமூர்த்தங்களாயும் இருக்கும் பதார்த்தங்களும் ஸ்ரீமந்நாராயணனுடைய சரீரமே என்று நினையுங்கள். யாவருக்கும் ஸ்ரீஹரியே ஆத்மபூதன்! சகலமும் அவனே! அவனைக் காட்டிலும் காரியமும் காரணமுமான வேறுபொருள் இல்லை என்ற திடசித்தம் எவனுக்கு ஏற்படுகிறதோ, அவன் பிறவித்தொடர்புடைய, தொந்த துக்கமில்லாமல் பரமமான மோட்ச ஆனந்தத்தை அடைவான். மைத்ரேயரே! சகலபாபக்ஷயகரமான ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் முதலாம் அமிசத்தை, இருபத்திரண்டு அத்தியாயங்களில் விளக்கமாகச் சொன்னேன். இந்த முதலாவது அம்சத்தை கேட்ட மனிதருக்கு, புண்ணிய நதிகளில் பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகைப் பவுர்ணமி அமாவாசையில் ஸ்நானம் செய்த பயன் உண்டாகும். புத்திர பவுத்திர தன கனக, வஸ்து வாகனங்களும் அட்சயமான பரமபத சுகமும் உண்டாகும்! தேவ, ரிஷி, பிதுர், கந்தர்வ, யக்ஷர் ஆகியோரது படைப்பு வரிசை முறையைக் கேட்டவருக்க, தேவ, ரிஷி கந்தர்வாதிகளனைவரும் மகிழ்ந்து வலுவிலேயே சகல அபீஷ்டங்களையும் கொடுப்பார்கள்.

முதல் அம்சம் முடிந்தது.

———————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம்—மூன்றாம் பாகம் –

February 28, 2021

15. கண்டு மகரிஷியின் காதலும் தக்ஷ வமிசமும்
16. பிரகலாத சரித்திரப் பிரச்னை
17. பிரகலாதன் சரிதம்
18. அசுரப்புரோகிதர்களைக் காத்தல்!
19. பிரகலாதனின் பிரார்த்தனை
20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்-

————————

15. கண்டு மகரிஷியின் காதலும் தக்ஷ வமிசமும்

பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே கேளும்!
பிரசேதசர்கள் கடல் நீரில் மூழ்கிக் கடுந்தவஞ் செய்துவந்த காலத்தில் அவர்களது தந்தையான பிராசீனபரிஹி,
நாரத முனிவரின் உபதேசத்தைப் பெற்று அரசாட்சியைத் துறந்து, யோக நிஷ்டை புரியலானார்.
அதனால் அராஜகமாகி ஜனங்கள் பயிர்த்தொழிலைக் கைவிட்டனர். ஆகையால் பூமியில் உண்டான விருட்சங்களில்
கிளைகள் அதிகமாகி மிகவும் நெருங்கிப் பூமியையும் வானத்தையும் மூடிக்கொண்டன.
அதனால் காற்றுக்கூட வீச முடியாமற் போயிற்று. இவ்விதமாக மரங்கள் எல்லாம் வானளாவ இருந்ததால்,
பதினாயிரம் ஆண்டுகள் காற்றுஞ் சஞ்சரிக்க இடமில்லாமல் இருந்தது. சகல ஜனங்களும் அசையவும் முடியாமல் நாசமடைந்தனர்.
பிறகு பிரசேதசர்கள் ஜலத்திலிருந்து வெளிப்பட்டு வந்து, மரங்கள் வளர்ந்து உலகை மூடியிருப்பதால்
பிரஜாக்ஷயமுண்டானதைக் கண்டு மிகவும் கோபங்கொண்டார்கள்.

உடனே, தங்கள் முகங்களிலிருந்து வாயுவையும், அக்கினியையும் உண்டாக்கினார்கள்.
அந்தப் பெருங்காற்று, மரங்களை எல்லாம் வேரோடு வீழ்த்தியது. காலாக்கினிக்குச் சமமான அந்த அக்கினி அவற்றை எரித்தது.
இதனால் மரங்கள் யாவும் ஏககாலத்தில் நாசமாகத் துவங்கின. ஆங்காங்கே ஒன்றிரண்டு மரங்கள் நின்றன.
தவிர, மற்றவையெல்லாம் நாசமடைந்தன. அதைக்கண்டு ஓஷதிகளுக்கு அதிபதியான சந்திரன் கலங்கி,
பிரசேதசர்களிடம் வந்து கூறலானான். அரசகுமாரர்களே; நீங்கள் கோபத்தை விட்டு என் வார்த்தையைக் கேளுங்கள்.
மரங்களுக்கும் உங்களுக்கும் இடையே ஓர் உடன்பாடு செய்து நட்பை ஏற்படுத்துகிறேன்.
மரங்களுக்கெல்லாம் மகளான மாரிஷை என்ற கன்னியை, நான் எதிர்காலத்தையுணர்ந்து எனது கிரணங்களால் வளர்த்து வந்திருக்கிறேன்.
ஜகன்மோகன ரூபலாவண்ய மிகுந்த அந்தப் பெண் மாரிஷையை உங்களுக்குப் பாரியையாகத் தருகிறேன்.
அவள் உங்கள் வமிசத்தை அபிவிருத்தி செய்யத்தக்கவள். அந்தப் பெண்ணிடம் உங்கள் தேஜஸின் பாதியினாலும்,
எனது தேஜஸின் பாதியினாலும், மகா பண்டிதனான தக்ஷன் என்ற பிரஜாபதி பிறப்பான்.
அவன் அக்கினிக்கு ஈடான தேஜஸையுடையவனாக, வெகுவான பிரஜாவிருத்தி செய்வான்.
அந்தக் கன்னிகையின் உற்பத்தி விவரத்தைக் கூறுகிறேன்; கேளுங்கள்.

பூர்வத்தில் வேதசாஸ்திரங்களை நன்றாக அறிந்தவரான கண்டு என்ற மாமுனிவர்;
கோமதி என்ற அழகிய நதிகரையில் அருந்தவஞ்செய்து கொண்டிருந்தார். இந்திரன் அவருடைய தவத்தைக் கெடுக்க நினைத்து
பிரமிலோசை என்ற தேவலோக மங்கையை அனுப்பினான். அந்தப் பொற்கொடியாள் மாமுனிவரின் ஆசிரமத்துக்கு வந்து
மனோகரலாவண்ய ஆடல்களால் அவரை மோகிக்கச் செய்தாள். கண்டு மாமுனிவர், அவளுடைய அழகில் மனங்கலங்கியவராய்,
அவளுடன் கூடி மந்திர பருவதத்தில் நூறு ஆண்டுக்காலம் கிரீடித்துக் கொண்டிருந்தார்.
பிறகு அந்தப் பெண்ணரசி, முனிவரை நோக்கி பிராமண உத்தமரே! நான் இனி தேவலோகம் போகிறேன்.
எனக்கு விடைகொடுத்து அனுப்புங்கள் என்றாள். கண்டுமா முனிவரோ அவளைப் பிரிவதற்கு மனமில்லாமல்,
நல்லவளே! நீ இன்னும் சில நாட்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று கெஞ்சினார்.

அதனால் பிரமிலோசையாள்; மீண்டும் நூறு ஆண்டுகள் அம்முனிவரின் இஷ்டபோகங்களுக்கு இசைந்து
அவருக்குத் திருப்தியுண்டாக்கினாள். பிறகு, அவள் அவரை நோக்கி; மகாத்மாவே! நான் சுவர்க்கத்திற்குப் போகிறேன்.
உத்தரவு கொடுங்கள் என்றாள். அப்போதும் கண்டுமா முனிவர் அவளைப் பிரிய மனமில்லாமல் அடி; கட்டழகி போகலாம் இரு! என்றார்.
அதன்படியே தெய்வப்பெண் பிரமிலோசையும் மீண்டும் நூறு ஆண்டுகளுக்கு மேல் அவருடன் இருந்து பிறகு
ஒருநாள் அவரை நோக்கிப் புன்னகையுடன் நான் இனியாகிலும் தேவலோகம் செல்ல அனுமதி கொடுங்கள் என்று கேட்டாள்.
அப்போது கண்டு முனிவர் காமப் பரவசத்தால், அவளை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, அழகிய புருவமுடையவளே!
இன்னும் ஒரு கணம் இரு, நீ போய்விட்டாய் என்றால் நெடுங்காலம் வரமாட்டயல்லவா? என்றார்.
கட்டழகி பிரமிலோசை தன்னை முனிவர் சபித்து விடுவாரே என்று பயந்து, சிறிது நாள் குறைய
இருநூறு ஆண்டுகள் அவருடன் கூடியிருந்து, பிறகு மீண்டும் தேவருலகம் செல்ல வேண்டும் என்று முனிவரிடம் விடை கேட்டாள்.
அப்போதும் கண்டுமாமுனிவர் போகத்தில் திருப்தியடையாமல், மேலும் சிலகாலம் தன்னுடன் இருக்கும்படி வேண்டினார்.
இவ்விதம் பிரமிலோசை பிரிவுவிடை கேட்கக் கேட்க இன்னும் சில நாள் இரு! சிலநாள் இரு! என்று
கண்டுமாமுனிவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். பிரமிலோசையும் சாப பயத்தாலும் தாட்சண்யத்தாலும்
அவருடைய பரிதாப நிலையைக் கண்டு இரங்கியும், தன்னைப் பிரிந்தால் அவர் மிகவும் வருந்தி வாடுவாரே என்ற பச்சாதாபத்தாலும்,
அவரைப் பிரிய மனமில்லாமலும், பிரிவதற்கு மார்க்கமில்லாமலும் தவித்தாள். எத்தனையோ வகையான
இன்பங்களை எத்தனையோ ஆண்டுகள் அனுபவித்த கண்டுமாமுனிவரின் காதல் நாளுக்கு நாள் வலிமை பெறலாயிற்று.

இப்படியிருக்கும் போது ஒரு சமயம் கண்டுமாமுனிவர், அவசர அவசரமாக எழுந்து, தமது ஆசிரமத்தை விட்டு
எங்கோ புறப்பட்டுச் சென்றார். அப்போது தெய்வ அழகி பிரமிலோசை அவரைத் தடுத்து, இப்போது நீங்கள்
இவ்வளவு அவசரமாக எங்கே போகிறீர்கள்! என்று கேட்டாள். அதற்கு முனிவர், பெண்ணே!
மாலைப்பொழுது முடிந்து சந்தியா காலம் நெருங்கி விட்டது. ஆகையால் நான் சந்தியாவந்தனம் செய்யப்போகிறேன்.
அப்படிச் செய்யவில்லையென்றால் என் கடமையில் ஒன்றை நிராகரித்ததாகி விடும் என்றார்.
அதைக் கேட்டதும் பிரமிலோசை புன்னகையுடன் அவரை நோக்கி, சர்வ தர்மக்ஞரே!
சந்திப்பொழுது விரைவது இப்பொழுது தானா உங்களுக்குத் தெரிந்தது. எத்தனையோ ஆண்டுகளெல்லாம்
உங்களுக்கு ஒரே நாளாக இருப்பது அனைவருக்குமே வியப்பைத் தருமே? இதை யாரிடத்திலாவது சொல்லிப்பாரும்! என்றாள்.

அவளை நோக்கி முனிவர், பெண்ணே! நீ அதிகாலையில் நதிக்கரையிலிருந்து வந்தாய்.
அப்போது உன்னைப்பார்த்த நான் என் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தேன். இப்போது இன்றைய நாள் முடிந்து,
சாயங்காலமானபடியால் சந்தியாவந்தனம் செய்யப் போகிறேன். இதற்கு நீ ஏன் என்னைப் பரிகாசம் செய்கிறாய்?
உண்மையைச் சொல் என்றார். அதற்குப் பிரமிலோசை, பிராமணோத்தமரே!
நான் அதிகாலையில் நதிக்கரைக்கு வந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் இன்று அதிகாலையில் அல்ல!
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒருநாளின் அதிகாலையில் நான் வந்தேன்.
நான் உம்மிடம் வந்து எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்து விட்டன என்றாள்.

அதைக்கேட்டதும் கண்டுமா முனிவர் மிகவும் பயந்து நடுநடுங்கி பிரமிலோசையை நோக்கி, பெண்ணே!
நான் உன்னுடன் கூடி எத்தனை காலம் சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்? அதை நீயே சொல்வாயாக! என்று கேட்டார்.
அதற்கு அவள், முனிவரே! நான் வந்து தொள்ளாயிரத்து ஏழு ஆண்டுகளும் ஆறுமாதமும் மூன்று நாட்களும் ஆயின! என்றாள்.
அந்தத் தேவமங்கையைப் பார்த்து கண்டு மாமுனிவர் குழப்பத்துடன், பெண்ணே! நீ சொல்வது யதார்த்தமோ அல்லது பரிஹாசமோ?
உண்மையைச் சொல். நான் உன்னுடன் கூடியிருந்தது ஒரே நாள் தான் என்று நினைக்கிறேன் என்றார்.
பிரமிலோசை தலையாட்டி அந்தணரில் உயர்ந்தவரான உம்மிடம் நான் ஏன் உண்மையில்லாததை சொல்கிறேன்?
அதுவும் அறவழியை அனுசரித்து நீங்கள் கேட்கும் இந்த விஷயத்தில் நான் பொய் சொல்வேனா?
ஆகையால் நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்றாள்.

உடனே தவமுனிவர் தன்னைத்தானே கடிந்துகொண்டார். சை! என் தவம் எல்லாம் நஷ்டமாயிற்றே! நான் என்ன செய்வேன்?
பிரமவித்துக்களான பிராமணர்களுக்குக் குலதனமாகிய வேதத்தியனம் வீணாயிற்றே! என் விவேகம் எல்லாம் பறிபோய் விட்டதே!
என்னை வஞ்சிப்பதற்காக எவனோ ஒருவன் இந்த வனிதையை என்னிடம் அனுப்பிவிட்டானோ?
பசி, தாகம், சோகம், மோகம், வார்த்திக்யம், மரணம் ஆகிய ஷடூர்மி! என்று சொல்லப்படும்.
இந்த ஆறு விகாரங்களும் இல்லாமல் நிர்மலமாக இருக்கும் பரப்பிரமத்தை அறியும் பொருட்டு மனதையடக்கியாள வேண்டும்
என்று நிச்சயஞ் செய்த எனது விவேகத்தை அபகரித்து, என்னை யோகப் பிரஷ்டனாகச் செய்த காமம் என்னும்
மாபெரும் பூதத்தை தகிக்க வேண்டும். சாந்திராயாணதி விரதங்களும் வேதாப்பியாசமும் மற்றுமுண்டான
மோட்ச காரணங்களான புண்ணியங்களும் நரகத்திற்கு வழியான துஷ்ட சகவாசத்தால் பாழாக்கப்பட்டனவே?
என்று கண்டு மாமுனிவர் தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டே;

தேவமங்கையான பிரமிலோசையை நோக்கி, அடி பாதகீ! நீ இனிமேலாவது என்னை விட்டு உன்னிச்சையாகப் போய்விடு.
நீ வந்து உன்னுடைய நடையுடை பாவனைகளால் என் சித்தத்தை கலக்கி, என் தவத்தைக் குலைத்து
இந்திரனுக்கு சாதகமான காரியங்களைச் செய்து விட்டாய். இத்தகைய உன்னை என் கோபாக்கினி
சுவாலைகளினால் சாம்பலாக்கிவிட வேண்டும். ஆயினும் சத்புருஷடன் ஏழடி உடன் நடந்தவர்கள் கூட நண்பர்கள் ஆவார்கள்.
ஆகையால் இத்தனைக் காலமும் என்னுடன் நீ கூடியிருந்ததை எண்ணி உன்னை மன்னித்தேன்.
நியாயமாக விசாரித்தால் உன்னைக் குறைசொல்லி ஒரு பயனும் இல்லை.
நான் எனது ஐம்புலன்களையும் வெல்லமாட்டாமல் காமமோக பரவசமானதால், குற்றமே என்னுடையதாகின்றது.
தேவேந்திரனுக்குப் பிரீதியாக என்னுடைய தவத்துக்கு ஊறு விளைத்த உன்னுடைய மாமோகத்திற்கு இருப்பிடமான
மாயையைத் தகிக்க வேண்டும்! என்று கோபித்தார். உடனே தெய்வப்பெண் பிரமிலோசை பயத்தால் நடுநடுங்கி,
தன் உடல் வியர்க்க கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடல் வியர்க்க, மெய் சிலிர்த்துக் கொடிபோல நிற்கும்
அந்தப்பெண் கொடியை நோக்கி மாமுனிவர் கோபத்துடன் போ, போ! என்று உரக்கக் கூவினார்.
உடனே, அவரது கோபத்திற்குப் பயந்து பிரமிலோசை அந்த ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டு, வானத்து வழியே செல்லும்பொழுது,
அவள் தனது சரீரத்தில் உண்டான வியர்வையை மரங்களின் நுனியிலிருந்த துளிர்களினாலே துடைத்து,
விருட்சங்களில் போட்டு, மரத்தின் மேல் மரமாகத் தாண்டிச் சென்றாள்.

பிரமிலோசை என்னும் அந்தத் தெய்வ மங்கையிடம் கண்டு மாமுனிவரால் உண்டான கர்ப்பமானது
அவளுடைய ரோம கூபங்களிலிருந்து வியர்வையாகக் கசிந்து வந்ததால்; அந்தக் கர்ப்பத்தை விருட்சங்கள் தரித்தன.
பிறகு, அவ்வியர்வையெல்லாம் வாயுவினால் கூட்டப்பெற்று ஒன்றாய்த் திரண்டன. அவற்றை சந்திரனாகிய நான்
எனது கிரணங்களினால் வளர்த்து வந்தேன். இவ்விதமாக அந்த கர்ப்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வர,
அதிலிருந்து மிகவும் அழகிய கன்னி ஒருத்தி தோன்றினாள். அவள் தான் இப்பொழுது மாரிஷை என்ற பெயருடன் வளர்ந்து கொண்டிருக்கிறாள்.

இந்த மரங்களே இந்த மங்கையை உங்களுக்குத் தருவதால், உங்களுடைய கோபத்தை விட்டு விடுங்கள்.
இந்த மாரீஷையானவள் கண்டுமாமுனிவர் பிரமிலோசையிடம் விட்ட வீரியத்தாலே, தருக்களிலே தரித்து,
வாயுவும் நானும் வளர்த்ததால், கண்டு முனிவருக்கும் மரங்களுக்கும் எனக்கும் வாயுவுக்கும் பிரமிலோசைக்கும் மகளாகிறாள்.

இது நிற்க, கண்டு மகரிஷியானவர், பிரமிலோசை சென்ற பிறகு தமது தவம் க்ஷீணித்ததற்காக மிகவும் மனம் வருந்தி,
ஸ்ரீவிஷ்ணு தேவனின் நிவாஸ ஸ்தானமான ஸ்ரீபுருஷோத்தமம் என்று வழங்கப்படும் ஒரு மலைக்கு வந்து அங்கே
ஏகாக்கிர சித்தத்தோடு ஹரியை ஆராதித்தவண்ணம் மகாநிஷ்டையிலிருந்து வந்தார் இவ்வாறு சந்திரன் கூறி முடித்தான்.
அதைக்கேட்ட பிரசேதசர்கள் சந்திரனை நோக்கி, மகாத்மாவே ஸ்ரீமந்நாராயணன் திருவுள்ளம் உவக்கும்படி கண்டு
மகரிஷி செய்த அந்தப் பிரமபார ஸ்துதியை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.
அதை நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். உடனே சந்திரன் கூறினான்.

முடிவற்றதும், தாண்டக் கூடாததும் காமக் குரோத மோகாதி திமிங்கலங்கள் நிறைந்ததும் பயங்கரமானதுமான
சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு ஒரு தெப்பத்தைப் போல இருப்பவனும், இதற்குப் பரமமான முடிவாக இருப்பவனும்,
உபதேச பரம்பரையினால் அறியப்பட்டவனும் அளவற்ற சக்தியுடையவனும், தேச, கால, பொருள்களாலே
பரிச்சேதிக்க ஒண்ணாதவனும் நிறைவு பெறாத கர்மாதிகளைத் தனது திருநாம சங்கீர்த்தனத்தினாலே நிறைவேற்றுகிறவனும்,
பிரம்மாதிகளான சகல ஆன்ம கோடிகளுக்கும் மேம்பட்டவனாய் காரணமாய் நிரதிசய ஆனந்தரூபனாய் இருக்கிறவனும்,
பிரம்மாதிகளைப் போல், காலவசத்தாலே அகப்படாமல் சகல சக்திகளோடுங்கூடி நித்தியமாய்த் தேஜோமயமாய் விளங்கும்
திவ்யமங்கள விக்கிரகமுடையவனாய் ஆனந்த ஸ்வரூபியாய் இருப்பவனும், முக்கியத்துக்கு முடிவிடமாயும்
வேத வைதீகங்களைப் பரிபாலிப்பவனாயும் பிரதானமும் சீவனும் பிரளய காலத்தில் லயமடைகிற ஸ்தானமாயும்,
யாவற்றுக்கும் கலப்புண்டாகாமல் இருக்கும்படி ஏற்பட்ட அணையாயும், முக்தியடைந்தவர்களுக்கும் மேம்பட்டவன்
என்று சொல்லும்படியான காரணத்துவ சேஷித்துவங்களையுடையவனாகவும், பிரபஞ்சத்துக்கு பரிய வசானமான
காலத்துக்கும் ஸ்தானமாயும் ஆகாயம் முதலான விபுத்திர வியங்களையும் நிறைப்பவனாயும்,
சகல ரக்ஷகர்களும் ரக்ஷகனாயும் இருக்கிற ஸ்ரீவிஷ்ணுதேவா! ஜகத்துக்குக் காரணமான விராட் புருஷனும்
அவனுக்கு காரணமான அகங்காரமும் அதற்குக் காரணமான மகத்தத்துவமும் அதற்குக் காரணமான பிரகிருதியும்
இந்தத் தத்துவங்களின் முக்கிய காரியங்களும் ஆகி, காரிய காரண ரூபமாகக் காணப்பட்டுக் கொண்டு,
சுவாபாவிகங்களும் அனந்தங்களுமான ஞானம், பலம், ஐசுவரியம், வீரிய சக்தி தேஜசவுசீரிய, வாதசல்லய சௌரிய,
தைரியாதி சகல கலியாண குணங்களுக்கும் ஆசிரயனாகி கிரியா சொரூபங்களாலேயும் கர்த்துரு சொரூபங்களாலேயும்,
சேதனா சேதனங்களையெல்லாம் ரட்சித்து வருகின்றான். வேதங்களுக்கு அதிபதியும் வேத வேதாந்தங்களினால் அறியப்படுவோனும்,
வேத வேதாந்த சாஸ்திரங்களும், அந்த ஸ்ரீவிஷ்ணுவேயன்றி வேறல்ல. சாஸ்திர ஜன்யம், விவேக ஜன்யம் என்று வழங்கப்படும்
இரண்டுவித ஞானமும், முதல் வேத பிரவர்த்தனான பிரமாவும் ஸ்மிருதி பிரவர்த்தகரான மனு முதலானவரும்,
இந்த அச்சுதனேயாவன். அபக்ஷயாதி தோஷங்களை அடையாமல் ஜனன ரகிதமும் அட்சரமும் நித்தியமுமான
பரப்பிரமம் அந்த ஸ்ரீவிஷ்ணுவேயாகும்! அந்தப் பிரமமே, பக்த பரிபாலானார்த்தமாக இந்தப் புனிதப் புருஷோத்தம
க்ஷேக்ஷத்திரத்தில் சகல கல்யாண குணங்களும் பூரணமாக விளங்கும்படி புரு÷ஷாத்தமன் என்கின்ற
அரீச்சாரூபியாய்த் திருவவதாரஞ்செய்தருளி விளங்கா நின்றது. ஆகையால் அந்தக் கேசவனைச் சிந்தித்து சரணடைந்து
நிற்கிற அடியேனிடத்தில் சத்கிரியா யோகங்களுக்குப் பங்கம் ஏற்படும்படி உண்டாகும்.
ராகத்து வேஷலோப மோகாதி துர்க்குணங்கள் சாந்தமாகக் கடவன! என்று கண்டு முனிவர்
பரமமான பிரமபார ஸ்துதியை ஜபித்து கேசவனை ஆராதித்து சித்திபெற்றுப் பரமபதத்திற்குச் சென்றார்.

இனி மாரிஷை என்னும் கன்னிகையின் முந்திய பிறவியின் சரிதத்தைச் சொல்கிறேன், கேளுங்கள்,
இதைச் சொல்வதால் எனக்குப் பெரியதொரு காரிய சித்தியும் இதைக் கேட்பதால் உங்களுக்கு மேன்மையான
பல சித்தியும் உண்டாகும். உருவின் கர்ப்பத்தில் ஜனித்த இந்த மாரிஷை பூர்வஜன்மத்தில் ஓர் அரசனின் பத்தினியாக இருந்தாள்.
புத்திரப் பேறடையாமலேயே இளவயதில் விதவையானாள். பிறகு பக்தியுடன் ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்து வந்தாள்.
அதனால் அந்த எம்பெருமான் திருவுள்ளம் உவந்து, பிரத்யட்சமாகி அந்தப் பெண்ணைப் பார்த்து,
பெண்ணே! உனக்குப் பிரியமான வரத்தைக் கேள் என்றார். அதற்கு ராஜபத்தினியும் சுவாமியைப் பார்த்து,
சுவாமி! அடியேன் இளவயதிலேயே வைதவ்யத்தையடைந்து சந்தானமற்ற துர்த்தசையில் இருக்கிறேன்.
இதனால் எனது இந்தப் பிறவியே வீணாயிற்று! இனி உம்முடைய கருணையால் அடியேனுக்கு ஜன்ம ஜன்மங்களிலேயும்
சர்வ ஜகத் பூஜ்யர்களான புருஷர்களும் பிரமனுக்கு இணையான புத்திரனும் உண்டாக வேண்டும்.

நானும், சகலஜன இருதயானந்தகரமான அழகோடு, அயோநிஜையாய்ப் பிறக்க வேண்டும்.
தேவரீர், கிருபை கூர்ந்து இந்த வரங்களை எனக்கு வழங்கியருள வேண்டும் என்று வேண்டினாள். வணங்கி வழிபட்டாள்.
தன் முன்பு வழிபாடு செய்த அந்த வனிதையை விஷ்ணு பகவான் தமது தாமரை மலர்க்கரங்களால் எடுத்து;
பெண்ணே! உனக்கு வேறொரு பிறவியிலே பிரசித்தியும் புகழும் உடையவர்களாய் மகா உதாரகுணமுள்ள
கணவர்கள் பத்துப்பேர் உண்டாவார்கள். மகாத்மாவாகவும்; பலபராக்கிரமத்துடன் பிரமனுக்கு சமானமாகவும் உள்ள
மகன் ஒருவனும் பிறந்து, திரிலோகமும் நிறையும் படியான சந்தானத்தையுடையவனாய் அனேக வமிசங்களுக்குக் கர்த்தாவாக இருப்பான்.
நீயும் பேரழகும் நற்குணங்களும் கொண்ட பதிவிரதையாய் அயோநிஜையாய், சகல ஜனங்களுக்கும் இருதய
ஆனந்தமுண்டாகும்படி இருக்கக் கடவாய்! என்று அருளிச் செய்து அந்தர்த்தானமானார்.

இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணனுடைய கிருபையால் இச்சித்த வரங்களைப் பெற்ற அந்த ராஜபத்தினியே
இப்பொழுது மாரிஷையாக பிறந்திருக்கிறாள். ஆகையால் பிரசேதசர்களே; அந்தக் கன்னிகையை நீங்கள் ஏற்பீராக
என்று சந்திரன் சொன்னான். உடனே பிரசேதசரர்கள் தங்கள் கோபத்தை விட்டுச் சாந்தமடைந்தார்கள்.
மரங்களும் தங்கள் கன்னிகையான மாரிஷையை கொடுக்க, அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொண்டார்கள்.
பிறகு அந்த மங்கையிடம் பிரசேதசரர்கள் பதின்மராலும் மகானுபாவனான தக்ஷப் பிரஜாபதி பிறந்தான்.
இந்தப் பிரஜாபதியே பூர்வத்தில் பிரமாவினுடைய தக்ஷிண அங்குஷ்டத்திலிருந்து பிறந்திருந்தான்.
மகா தபசியாசியான அந்தத் தக்ஷன், பிரஜைகளைச் சிருஷ்டிக்க நினைத்து சரங்களும் அசரங்களும்
இருபாதங்களும், நான்கு பாதங்களுமான ஐந்து ஜாதங்களைப் படைத்து பிரமாவின் ஆக்ஞையைப் பரிபாலித்தான்.
அந்த விவரத்தைக் கேளுங்கள்.

தக்ஷன் ஐம்பது பெண்களைப் பெற்றான். அவர்களில் பத்துப்பெண்களைத் தருமனுக்கும் பதின்மூன்று பெண்களை காசியபருக்கும், இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் கொடுத்தான். அப்பெண்களிடம் தேவ; தைத்ய, தானவ புசங்க, கந்தர்வ, தேவர்கள் ஜனித்தார்கள். மைத்ரேயரே! அது முதலாகத்தான் பிரஜைகள் ஆண் பெண் உடலுறவினால் பிறந்து வருகின்றனர். அதற்கு முன் பூர்வ காலத்திலே தவம் மிகுந்த மகாத்மாக்கள் வெறும் தரிசன ஸ்பரிச சங்கல்பத்தினாலேயே சந்தானங்களை உண்டாக்கி வந்தனர். இவ்வாறு பராசரர் கூறி நிறுத்தினார். அப்போது மைத்ரேயர், அவரை நோக்கி, முனிவரே பூர்வத்தில் தக்ஷன் என்பவன் பிரும்மாவின் வலது பாதத்தின் கட்டை விரலில் பிறந்தான் என்று கேட்டிருக்கிறேன். இப்போது பிரசேதசர்களால் பிறந்தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இந்த விஷயம் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. சந்திரனுக்குப் பாட்டனான தக்ஷன், திரும்பவும் அவனுக்கு எப்படி மாமனானான்? என்று கேட்க பராசரர் கூறலானார். சகல பூதங்களுக்கும் உற்பத்தியும் அழிவும் நித்தியம்! ஆகையால் திவ்ய ஞானமுடைய முனிவர்களுக்கு இதில் சந்தேகம் உண்டாவதில்லை. அவர்கள் மயங்குவதுமில்லை தக்ஷன் முதலான சகல தேவ முனிவர் கூட்டமும் யுகந்தோறும் பிறந்து லயத்தை அடைந்து வருகின்றனர். ஆகையால் இதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. பூர்வகாலத்தில் வயதும் இல்லை. பெரியவன் சிறியவன் என்று வேறுபாடும் இல்லை. தவத்தாலும் ஞானத்தாலும் உயர்ந்தவர்களே மேலானவராகக் கருதப்பட்டார்கள்! என்றார் பராசரர். முனிவரே! தேவர்கள்; தானவர்கள், கந்தருவர்கள், ராக்ஷசர்கள் முதலானவர்களின் உற்பத்தியை எனக்குத் தெளிவாகக் கூறவேண்டும் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். கமலாசனான பிருமனின் நியோகத்தால் முன்பு தேவர்கள் ரிஷிகள்; கந்தர்வர்கள்; அசுரர்கள், பன்னகாதி பூதங்கள் முதலானவர்களைத் தக்ஷன் தனது சங்கற்பமாத்திரத்தாலேயே சிருஷ்டித்தான். அவை அபிவிருத்தியாகாமல் நசித்துப் போனதைக் கண்டு, அவன் மீண்டும் பிரஜாசிருஷ்டியில் முயன்றான். அதற்காக வீரணப் பிரஜாபதியின் மகளான அசிக்கினி என்பவளை மணந்து அவளிடம் ஐயாயிரம் பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் அரிய சுவர்கள் என்கிற பெயரால் புகழ்பெற்று, பிரஜாவிருத்தி செய்ய எத்தனித்தார்கள். அப்போது நாரத முனிவர் அவர்களிடம் வந்து, அரிய சுவர்களே! பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்த நீங்கள் ஒரு காரியத்தை முன்னதாகச் செய்ய வேண்டும். அதாவது பூமியின் நிலப்பரப்பையும் உயர்வையும் தாழ்வையும் அறிய வேண்டும். நீங்கள் பாலியர்கள் ஆகையால் அதனை அறியமாட்டீர்கள். அப்படியிருக்க நீங்கள் பிரஜைகளைச் சிருஷ்டிப்பது எப்படி? தடையில்லாமல் எங்குமே செல்லும் திறமையுடைய நீங்கள் பூமியின் அளவு பரிமாணங்களை ஏன் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் பூமி பரிமாணத்தை அறிந்து வருகிறோம் என்று கூறிவிட்டு நான்கு திக்கிலும் சென்று, சமுத்திரத்தில் சேரும் நதிகளைப் போல் திரும்பி வராமலேயே மறைந்து விட்டார்கள். அவ்வாறு அரியசுவர்கள் நாசமடைந்ததைப் பிரசேதசனான தக்ஷன் கேட்டுத் திரும்பவும் வீரண புத்திரியான அசிக்கினியிடத்தில் ஆயிரம் மக்களைப் பெற்றான். அவர்கள் சபளாசுவர்கள் என்ற பெயருடன் பிரஜா சிருஷ்டி செய்ய எத்தனித்தனர். அப்போது முன்போலவே நாரத முனிவர் வந்து முன் சொன்னது போல அவர்களிடம் சொன்னார். உடனே அவர்கள் சரிதான் என்று தங்கள் மூத்த சகோதரர்கள் சென்ற மார்க்கத்திலேயே பூமியின் பரிமாணத்தை அறிந்து வரச்சென்று திரும்பி வராமலே போய்விட்டார்கள். அதுமுதல், தூரதேசதனான சகோதரனைத் தேடிக்கொண்டு ஒருவன் சென்றால் நாசமடைவான்! என்பது சொல் வழக்காயிற்று.

பிறகு சபளா சுவர்களும் நாசம் அடைந்ததைத் தக்ஷன் கேள்விப்பட்டு மிகவும் கோபங்கொண்டு நாரதரை அழைத்து, நாரதா! எங்குமே நிலைபெறாமல் திரிந்து கொண்டேயிருப்பாயாக என்று சபித்தான். மீண்டும் தக்ஷன் பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்து, அசிக்கினியிடத்தில் அறுபது பெண்களைப் பெற்றான். அவர்களிலே பத்துப்பெண்களைத் தருமனுக்கும், பதின்மூன்று பெண்களைக் காசியபருக்கும், இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் திருமணம் செய்து கொடுத்தான். அரிஷ்டநேமிக்கு நால்வரையும், வெகு புத்திரனுக்கு இருவரையும், ஆங்கிரசுக்கு இரண்டு பெண்களையும், பிருசாசுவனுக்கு இரண்டு பெண்களையும் கொடுத்தான். முதல் பத்துப் பெண்களாகிய அருந்ததி, வசு, ஜாமி, லங்கை, பானு, மருத்வதி, சங்கல்பை, முகூர்த்தை, சாத்தியை, அசுவை என்று சொல்லப்பட்ட கன்னிகளைத் திருமணஞ்செய்து கொண்ட தருமன், விசுவையின் மூலம் விசுவ தேவதைகளையும், சாத்தியையிடம் சாத்தியர்களையும், மருத்துவதியிடம் மருத்தவத்தர்களையும், முகூர்த்தையிடம் முகூர்த்தர்களையும், பானுவிடம் பானுக்களையும், லங்கையிடம் சகோஷனையும், ஜாமியிடம் நாகவீதி என்ற திவ்யமார்க்க அபிமானியையும், அருந்ததியிடம் பூமியைச் சேர்ந்த பொருள்கள் அனைத்தையும் சங்கல்பையிடம் சங்கல்ப்பன் என்பவனையும் பெற்றான். அவர்களில் அபாரமான பலமும் தேஜஸும் உடையவர்களாய் விளங்கும் அக்கினி முதலான வசுக்களின் வமிசத்தை விவரமாகச் சொல்கிறேன்; கேளுங்கள். ஆபன், துருவன், சோமன், அனிலன், பிரத்தியூஷன், பிரபாசன் முதலான வசுக்கள் எண்மர் ஆவர். அவர்களில் ஆபனுக்கு வைஸ்தப்த்தன், சிரமன், சிராந்தன், துனி என்ற பிள்ளைகள் உண்டானார்கள். துருவனுக்கு சகல உலகங்களையும் நடத்தும் காலன் உற்பத்தியானான். சோமனுக்கு வர்ச்சன் என்ற மகன் பிறந்தான். அவனால்தான் ஜனங்களுக்கு வர்ச்சஸ் என்ற பிரகாசம் உண்டாகிறது. தருமனுக்கு மனோகரை என்பவளிடம் திரவிணன், உதவகன், சிசிரன், பிராணன், ரமணன் என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். அனலனுக்கு சிவை என்பவளிடத்தில் புரோசவன், அவிக்தி, யாதகதி என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். அனலன் என்றால் அக்கினியாகும். ருத்திர வீரியத்தை அக்கினியே ஏற்றுக்கொண்டு வழியில் நாணற் புதரில் விட்டதால், சுப்ரமணியரை அக்கினி புத்திரன் என்றும் இங்கு கூறப்படுகிறது. சாகன் முதலியோர், குமாரனின் தம்பியர் ஆவர். அனலனுக்கு நாணற்புதரிலே குமாரன் என்று சொல்லப்படும் சுப்பிரமணியன் உண்டானான். அவனுடைய முதுகிலிருந்து, சாகன், விசாகன், நைகமேஷன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுப்பிரமணியன் கிருத்தைகளின் ஸ்தன்ய பானஞ் செய்ததால் அவர்களுக்குப் பிள்ளையாகிக் கார்த்திகேயன் என்ற பெயரைப் பெற்றான். பிரத்யூஷனுக்கு தேவன் என்ற முனிவன் ஜனித்தான். அவனுக்க பொறுமையும் புத்தியும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் ஒருவன் பிரகஸ்பதி, அந்தப் பிரகஸ்பதிக்குச் சகோதரியான ஒருத்தி யோக சித்தியுடையவளாய், விரக்தியடைந்து பிரமசரியத்தோடு உலகமெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் வசுக்களில் எட்டாவதான பிரபாசனனுக்கு மனைவியாகி விசுவகர்மாவைப் பெற்றாள். அவன் விசித்திரங்களான அநேக சிற்பக்கலைகளை அறிந்தவனாய் தேவதச்சனாகி அநேக திவ்ய ஆபரணங்களையும் விமானாதிகளையும் நிர்மாணஞ் செய்தான்.

அவன் செய்த சிற்பங்களில் சிலவற்றை அறிந்துதான் பூவுலகிலுள்ள ஜனங்கள் வேலை செய்து பிழைக்கிறார்கள். மேலும் அந்தப் பெண்ணரசியிடம், அனஜகபாத், அகிர்ப்புத்தினியன், துவஷ்டா, ருத்திரன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் துவஷ்டாவுக்கு விசுவரூபன் என்னும் மகாதவசியான புத்திரன் ஒருவன் பிறந்தான். அறிஞனான ருத்திரனுடைய அமிசமாய் அரண்பகுரூபன், திரியம்பகன், விருஷாகபி சம்புகபர்த்தி, ரைவதன், மிருக வியாழன், சர்வன் கபாலி என்னும் பதினொருவர் பிறந்து, ருத்திரன் என்ற பெயரைப் பெற்று, திரிலோகாதிபதிகளாய் விளங்குகிறார்கள். இவர்களிடமிருந்து அளவற்ற தேஜஸ் வாய்ந்த நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். இது இவ்விதமிருக்க காசிபருக்கு மனைவியாக இருந்த அதிதி, திதி, தனு, அரிஷ்டை, சுரசை, கஷை சுரபி, வினதை, தாம்பிரை, குரோதவசை, இளை, கத்துரு, முனி என்ற பெயருடைய பதின்மூன்று பத்தினிகளில் அதிதி என்பவளுக்குப் பூர்வத்தில் சாட்சுஷ மன்வந்தரத்திலே துஷிதர் என்ற பன்னிரண்டு தேவதைகள். வைவஸ்வத மனுவந்தரம் வரும்போது நாம் யாவரும் அதிதியின் கர்ப்பத்திலே ஜனிக்க வேண்டும்! என்று நிச்சயித்து கொண்டே பிறந்தார்கள். அவர்கள் இந்திரன் விஷ்ணு அரியமன் தாதா; துவஷ்டா, பூஷா, விவசுவான், சவிதா, மித்திரன், வருணன், அமிசு, பகன் என்ற பெயர்களைப் பெற்று, துவாச ருத்திரர்கள் என்று வழங்கப்படுகின்றனர். இப்படியாக வைவஸ்வத மனுவந்தரத்திலே ஆதித்தியர் என்று சொல்லப்படுவோர், சாட்சுஷ மனுவந்தரத்தில் துஷிதர் என்று வழங்கப்பட்டனர். சந்திரனுக்கு மனைவியான அசுவினி முதலான இருபத்தேழு பெண்களுக்கும் காந்தியுள்ள மக்கள் உண்டானார்கள். அரிஷ்டநேமியின் பத்தினிகள் நால்வருக்கும் பதினாறு பிள்ளைகள் பிறந்தார்கள். வெகுபுத்திரனுக்கு பத்தினிகளான இருவரிடத்திலும் காற்று, வெயில், மழை, துர்ப்பிஷம், இவற்றுக்கு ஏதுக்களாய் கபில வர்ணமும் இரத்த வர்ணமும் அரித்ராவர்ணமும், நீலவண்ணமும் கொண்ட நான்கு மின்னல்கள் உண்டாயின. ஆங்கிரசுக்கு பிரம ரிஷிகள் துதிக்கத்தக்க மேன்மை பெற்ற பிரதியங்கிரகங்கள் என்ற மந்திரங்கள் உதித்தன. பிருசாசுவனுக்கு, திவ்விய பாணங்கள் பிறந்தன. இவ்விதமாகக் கல்பாதி காலத்திலே உண்டான முப்பத்து முக்கோடி தேவதைகளும், தினந்தோறும் சூரியன் உதயமாகி மறைவதைப் போல ஒவ்வொரு மனுவந்தரத்திலும் பிறந்து கொண்டே வருவார்ரகள். இவர்கள் சுயஇச்சைப்படி பிறப்பார்கள். திதி என்பவளிடத்தில் காசிபருக்கு இரணியகசிபுவும், இரணியாக்ஷனும், விப்ரசித்தி என்ற ராக்ஷதனுக்குப் பாரியையான சிம்மிகை என்ற பெண்ணும் பிறந்தார்கள். அவர்களில் இரணியகசிபுக்கு அனகிலாதன், ஹிலாதன், பிரகலாதன், சம்கிலாதன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே பிரகலாதன் ஜீதேந்திரியனும், மகா பாகவதனுமாய் ஸ்ரீமந்நாராயணனிடத்தில் பக்தியுடையவனாய் விளங்கி வந்தான்.

தைத்திய ராஜனான இரணியகசிபுவின் கட்டளையினால், அசுரர் கொளுத்திய அக்கினியும் ஸ்ரீவாசுதேவனது இதயகமலத்தில் வசித்ததால் மகாத்மாவான பிரகலாதனைத் தகிக்கமாட்டாமற் போயிற்று. பிரகலாதன் என்னும் அந்த மகானுபாலன், பாசங்களினால் கட்டப்பட்ட கடலின் நடுவேயிருந்து அசைந்த போது அநேக மலைகளும் காடுகளும் நடுங்கின. பூமண்டலமே நடுங்கியது. எங்குமே எம்பெருமானைப் பாவித்ததால், அந்த மகானின் உடல் மலைபோலக் கடினமாயிற்று. அதனால் அசுரர்கள் பிரயோகித்த பாணங்கள் அவரைப் பாதிக்கவில்லை. இரணியகசிபு ஏவிய லிஷாக்கினிச் சுவாலை வீசும் சர்ப்பங்கள் அந்த மகாத்மாவை பீடிக்கவில்லை. பர்வதங்களால் அமுக்கப்பட்ட போதும், ஸ்ரீவிஷ்ணு ஸ்மரணை என்ற கவசத்தால் பிரகலாதன் காக்கப்பட்டு, மரணமடையாமற் போனான். சொர்க்கத்தின் உயரமான இடத்திலிருந்து, பிரகலாதனை இரணியகசிபு கீழே தள்ளியபோதும் அந்த மகாத்மாவை பூமாதேவி ஏந்திக் கொண்டாள். அதன்பிறகு இரணியகசிபு மிகவும் ஆத்திரமடைந்து சம்சோஷகன் என்ற வாயுவை ஏவினான். ஆனால் மதுசூதனான விஷ்ணுவின் இருதயத்திலே பிரகலாதன் இருந்ததால், அந்த வாயு பிரகலாதனிடம் புகுந்து நாசமடைந்து போயிற்று. திக்கு கஜங்கள் எல்லாம் இரணியகசிபுவின் உத்தரவினால் பிரகலாதன் மீது பாய்ந்து தந்தங்கள் ஒடிந்து, மதமழிந்தன. நைத்தியப் புரோகிதர்களால் நிருமிக்கப்பட்ட கிருத்தியைகள். கோவிந்த சரணாரவிந்தங்களில் மனதைச் செலுத்தியிருந்த அந்த மஹா யோகிந்தனைப் பாதிக்காமற் போயின. மகாமாயாவியான சம்பராசுரன் என்பவன், புண்ணிய புருஷனான பிரகலாதன் மீது ஏவிய அனந்த மாயைகளும் ஸ்ரீவிஷ்ணுவின் திருக்கையால் விடப்பட்ட சக்கராயுதத்தால் சாம்பலாயின. இரணியகசிபுவின் சமையற்காரர்கள் ஆலகாலம் என்ற கொடிய விஷத்துடன் கலந்து வைத்த அன்னமானது பிரகலாதனின் உதரத்தில் ஜீரணமாகி விட்டது. சர்வ பூதசமனும் சர்வ உயிர்களுக்கும் மித்திரனான அந்த மகாத்மா, தன் சரீரத்தைப் போலவும் தன் பிள்ளைகளைப் போலவும், சர்வ பூதங்களையும் லாலனை செய்து வருவான். அந்த ஞானி சத்புருஷர்களுக்கெல்லாம் உபமானமாகப் புகழ்பெற்று விளங்கினான்.

————–

16. பிரகலாத சரித்திரப் பிரச்னை

பராசரரே! மனு வமிசத்தில் பிறந்த உத்தானபாதன், துருவன் முதலிய மாமன்னர்களின் வரலாறுகளையும் அனாதி புருஷனான ஸ்ரீவிஷ்ணுவே ஜகத் காரணமான பிரமம் என்ற பொருளையும் தங்களிடம் விளக்கமாகக் கேட்டறிந்தேன். ஆனால் தைத்ய புங்கவனான பிரகலாதனே; அக்னியும் ஆயுதங்களும் அழிக்கமாட்டாமற் போயின என்றும் சமாகித சித்தனான அந்தத் தைத்திய உத்தமன் மலைகளினால் அமுக்கப்பட்ட போதிலும் மரணமடையாதிருந்தான் என்றும் அந்தப் பிரகலாதாழ்வானின் பெருமைகளையெல்லாம் நீங்களே புகழ்ந்து கூறினீர்கள்! ஆகையால் தத்துவஞானமும் பகவத் பக்தியுமுடைய பிரகலாத மகானுபாவனின் ஒப்பற்ற சரித்திரத்தை நான் கேட்க விரும்புகிறேன். அந்த மகதர்மிஷ்டனை; அசுரர்கள் ஏன் ஆயுதத்தால் புடைத்தார்கள்? பாரங்களால் கட்டிச் சமுத்திரத்தில் ஏன் போட்டார்கள்? திக்கஜங்களைக் கொண்டு அவனை ஏன் அவர்கள் துன்புறுத்த வேண்டும்? அவனை ஏன் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள்? அவனை ஏன் அக்கினியில் போட்டு எரித்தார்கள்? அவன் மீது ஏன் சர்ப்பங்களை கடிக்கவிட்டார்கள்? இரணியகசிபுவின் சமையற்காரர், அன்னத்தில் விஷத்தை ஏன் கலந்து வைத்தார்கள்? இவையெல்லாம் ஏன் நிகழ்ந்தன? அந்தப் பரமபாகவதரான பிரகலாத ஆழ்வான் சரித்திரத்தை நான் கேட்க விரும்புகிறேன். இந்தச் செய்கைகள் எதனாலும் பிரகலாதன் மரணமடையாமல் இருந்தது ஆச்சரியமல்ல! ஏனென்றால் ஸ்ரீவிஷ்ணுவின் சரணாவிந்தங்களிலே சித்தத்தை நிலைபெற வைத்தவனை நிக்கிரகிக்க வல்லவன் இந்த ஜகத்திலேயே இல்லையே? ஆனால் தங்கள் குலத்தில் பிறந்த பிரகலாதன், ஸ்ரீகேசவனை ஆராதனை செய்து அசுரரிடையே பகைமை ஏற்படுத்தியதா? அதுவும் விஷ்ணு பக்தரான பிரகலாதாழ்வானுக்கு அசுரர்கள் ஏன் அத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள்? இவற்றையும் பிரகலாதாழ்வானின் பிரபாவங்களையும் கேட்பதற்கு நான் மிகவும் ஆவல் கொண்டிருக்கிற÷ன். தாங்கள் கிருபை கூர்ந்து அதைக் கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார்.

———–

17. பிரகலாதன் சரிதம்

பரமஞானியும் உதார சரிதராயும் விளங்கும் பிரகலாதரின் பிரபாவத்தை பராசர முனிவர் சொல்லலானார். பூர்வத்திலே மிகவும் பராக்கிரமமுடையவனும் அதிதியின் மகனுமான இரணியகசிபு என்ற ஓர் அரக்கன் இருந்தான். அந்த அரக்கன் கோரமான தவங்களினால் பிரம்மாவை மகிழச்செய்து, தனக்குத்தேவர்களாலோ, மிருகங்களாலோ மரணம் விளையக்கூடாது என்பது போன்ற அநேகவரங்களைப் பெற்றான். அதனால் அவன் கர்வம் மிகுந்து, மூன்று உலகங்களையும் தீனப்படுத்திக் கொண்டான். இந்திரன், வருணன், ஆதித்தன், வாயு, அக்கினி, சந்திரன், யமன் முதலியோரது அதிகாரங்களைத் தனது கைவசப்படுத்திக் கொண்டான். வேள்விகளில் அவர்களுக்குரிய அவிர்ப்பாகங்களையும் தானே கைக்கொண்டான் மூன்று உலகங்களையும் சாதிதேச்காரமாய் ஆண்டு வந்தான். அப்போது இந்திரன் முதலிய தேவர்கள் அவனுக்குப் பயந்து சுவர்க்கலோகத்தை விட்டு, மானிட வேடம் பூண்டு பூவுலகில் சஞ்சரித்தார்கள். இந்தவிதமாக இரணியகசிபு மூன்று உலகங்களையும் ஏகச்சக்கிராதிபதியாக மிகவும் அகங்காரத்தோடு ஆண்டு வந்தான். கந்தர்வர்கள் கீதம் பாட, சித்தசாரணர் மிருதங்கம் முதலிய வாத்தியங்களை, வாசிக்க தேவலோகத்து அப்சர மங்கையர் நடனமாட, ஸ்படிக மயமும் அப்ரகசிலா மயமுமான அதிவுன்னதமான அழகிய உப்பரிகையில் இரணியகசிபு மிகவும் மகிழ்ச்சியோடு, மதுபானம் அருந்திய வண்ணம், மனதுக்கிச்சையான சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் அனைவருக்கும் தானே தலைவன் தானே எல்லாம் தானே சர்வ வல்லமை பொருந்திய ஈசுவரன் என்று அகப்பாவம் கொண்டு தன்னைத் தவிர வேறு எதையும் வணங்கக்கூடாதென்றும் கட்டளை பிறப்பித்திருந்தான். அவனுக்குப் பிரகலாதன் என்று ஒரு குமாரன் இருந்தான். அவன் பாலியத்தில் உபாத்தியாயரின் வீட்டிலிருந்து, பாலர் படிக்கவேண்டிய படிப்பைப் படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் பிரகலாதன் தன் ஆசிரியரோடு, தன் தந்தையிடம் வந்து, வணங்கி நின்றான்; அப்போது மிகவும் தேஜஸோடு விளங்கும் தன் குமாரனை அசுர மன்னன் இரணியகசிபு வாரியணைத்துக் கொண்டு மனம் மகிழ்ந்து, குழந்தாய்! உன் குருநாதர் இத்தனை நாட்களாய் அதிக முயற்சியுடன் உனக்குச் சொல்லிக் கொடுத்த விஷயங்களின் சாராம்சத்தைச் சொல் பார்க்கலாம் என்றான். உடனே பிரகலாதன் பக்திச்சிரத்தையோடு, என் மனதில் இருக்கும் சாராம்சத்தைக் கூறுகிறேன் கேளுங்கள். ஆதிமத்தியாந்தரகிதனும் அஜனுமாகி விருத்தியும் க்ஷயமும் இல்லாமல், சர்வபூத அந்தராத்மாவாய் சிருஷ்டியாதிகளுக்கு காரணங்களான யாவற்றுக்குமே காரணமாய், எப்பொழுதுமே ஆனந்தசொரூபமாய் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவான அச்சுதனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்றான். குமாரனின் அந்த வார்த்தையைக் கேட்டதும் இரணியகசிபுவுக்குக் கோபம் மூண்டது. அவன் கண்கள் சிவந்தன, உதடுகள் துடிதுடித்தன. அவன் பயங்கரமான ரூபமடைந்து தன் புத்திரனின் குருவைப் பார்த்து, ஏ தர்ப்புத்தியுள்ளவனே! நிசாரமும் சத்துரு பட்ச துதியுமான இந்த சுலோகத்தை என் பாலகனுக்குச் சொல்லிக் கொடுத்த, என்னை அவமானஞ் செய்யலாமா? என்று கேட்டான். அதனால் ஆசிரியர் பயந்து நடுங்கி இரணியகசிபை நோக்கி, தைத்ய ஈசுவரா! கோபிக்க வேண்டாம். உமது குமாரன் நான் உபதேசித்த விதமாகப் படிக்கவில்லை! என்றார். உடனே இரணியகசிபு தன் பாலகனை நோக்கி, பிரகலாதா! உன் உபாத்தியாயர் இப்படி உனக்கு உபதேசிக்கவில்லை என்று சொல்கிறாரே, இப்படி யார் உனக்குப் போதித்தார்கள்? என்று சினத்துடன் கேட்டான். பிரகலாதனோ புன்முறுவலுடன் தன் தந்தையைப் பார்த்து ஐயா எவன் சர்வ பூதங்களின் இதயத்திலே இருக்கிறானோ, அந்த ஸ்ரீவிஷ்ணுவே சகல ஜனங்களுக்கும் புத்தியைக் கற்பிப்பவன் பரமாத்வான அந்தத் தேவனையன்றி வேறு யார் கற்பிப்பவன் இருக்கிறான்? என்றான்.

இரணியனுக்குக் கோபம் முற்றியது. அவன் தன் சின்னஞ்சிறு பாலகனான பிரகலாதனைக் கடிந்து நோக்கி, துர்புத்தியுள்ளவனே! உலகத்திற்கே ஈசுவரனான என் கண் முன்னாலேயே பயமின்றி நின்று வேறு எவனையோ அடிக்கடி பயமில்லாமல் துதிக்கிறாயே, அந்த விஷ்ணு என்பவன் யார்? என்று கேட்டான். எவனுடைய பரமார்த்த ஸ்வரூபம் இன்னதன்மையதென்று சொல்லக்கூடாமல் யோகீந்திரர்களுக்கும் தியான கம்மியமாக இருக்குமோ, எவனால் உலகமெல்லாம் உண்டாயிற்றோ எவன் விஸ்வமயனாக இருக்கிறனோ அந்தப் பரமேஸ்வரனே ஸ்ரீவிஷ்ணு என்று அறிவீராக! என்றான் பிரகலாதன். அதை எதிர்க்கும் விதமாக இரணியகசிபு துள்ளிச் சினந்து, மூடனே! யோகீஸ்வரனாக நான் இருக்கப் பரமேசுவரன் என்ற பெயர் வேறு ஒருவனுக்கும் உண்டோ? நீ நாசமடையப் போவதால் தான் என் முன்னாலேயே துணிந்து நின்று பலவிதமாக அன்னியனைத் துதிக்கிறாய்? என்று குமுறினான். பிரகலாதனோ அமைதியாக, தைத்யேசுவரனே! பரப்ரம்ம பூதனான ஸ்ரீவிஷ்ணுவே எனக்கும் உமக்கும் சகல பிரஜைகளுக்கும் நிலைப்படுத்துவோனும் சிருஷ்டிப்பவனுமாக இருக்கிறான். ஆகையால் நீங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? கோபத்தை விட்டுச் சாந்தமாக இருங்கள் என்றான். அதை இரணியகசிபால் பொறுக்கமுடியவில்லை. துர்புத்தியுடைய இந்தச் சிறுவனின், இதயத்தில் எவனோ ஒரு பாபகர்மமுடையவன் பிரவேசித்து மோகத்தையுண்டாக்கியிருக்கிறான். அதனால்தான் இவன் இப்படிப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பலவாறாகச் சொல்கிறான்! என்று உறுமினான். சர்வலோக வியாபகனான அந்த ஸ்ரீமகாவிஷ்ணு என் இதயத்தில் மட்டுமல்ல; சகல உலகங்களிலும் வியாபித்திருக்கிறார். அதனால் என்னையும், உம்மையும் மற்றுமுள்ள சகலரையும் அந்த விஷ்ணுவே அந்தந்தக் காரியங்களில் பிரவேசிக்கச் செய்கிறார் என்றான் பிரகலாதன். அவன் சின்னஞ்சிறு பையன் என்றே; தன் புத்திரன் என்றோ பாராமல் இரணியன் மிகவும் குரோதம் கொண்டு; தன் அருகில் இருந்த அசுரர்களை அழைத்து துராத்மாவான இந்த மூடனைக் குருவின் வீட்டிற்குக் கொண்டு போய் நன்றாகத் தண்டிக்கச் சொல்லுங்கள்! ஒரு துராத்மா இவனுக்குப் பகைவனை துதிக்கும்படிப் போதித்திருக்கிறேன்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் அசுரர்கள் பிரகலாதனைக் குருவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயே அவனைத் தள்ளிவிட்டுப் போனார்கள். அங்கே பிரகலாதன் தன் குருவுக்குப் பணிவிடைகள் புரிந்து; கல்வி பயின்று வந்தான்.

சிறிது காலஞ்சென்ற பிறகு இரணியன் தனது மகனை அழைப்பித்து; மகனே பிரகலாதா! ஏதேனும் ஒரு சுலோகத்தைச் சொல்! என்றான். அதனால் பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, எவனிடத்திலிருந்து மூலப்பிரகிருதியும் சமஷ்டி ரூபமான ÷க்ஷத்ரக்ஞனும் உண்டானார்களோ; எவனிடத்திலிருந்து சராசரத்மகமான சகல பிரபஞ்சமும் ஜனித்தனவோ; அப்படிப்பட்ட சர்வதாரனப் பூதனான ஸ்ரீவிஷ்ணுதேவன் நமக்குப் பிரத்யட்சமாகக் கடவன்! என்றான். அதைக்கேட்டதும் இரணியன் அளவிலாத கோபங்கொண்டு அங்கிருந்த அசுரரை நோக்கி; இந்தத் துராத்மாவைச் சித்திரவதை செய்து கொல்லுங்கள்! இவன் பிழைத்திருப்பதால் யாதொரு பயனுமில்லை. இவன் தன் சார்புடைய இனத்தவருக்குத் தீங்கு செய்யத் தலைப்பட்டதால் இக்குலத்துக்கு நெருப்பு போல இருக்கிறான் என்று கட்டளை பிறப்பித்தான். உடனே அசுரர்கள் அநேகர் கூடி, பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பிரகலாதனைத் தாக்கி வதைக்க முயன்றார்கள். அப்பொழுது பிரகலாதன் புன்முறுவலுடன், அசுரர்களே உங்களிடமும் என்னிடமும் உங்களுடைய ஆயுதங்களிலுங்கூட ஸ்ரீமந்நாராயணனே பரிபூரணமாய் நிறைந்திருக்கிறான் என்பது சத்தியம்! இந்தச் சத்தியத்தினாலே உங்கள் ஆயுதங்கள் என்மீது பாயாதிருக்கட்டும்! என்று சொன்னான். அப்படி அவன் சொல்லியுங்கூட அசுரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தடி, கத்தி, சூலசக்கரம் முதலிய ஆயுதங்களால் பிரகலாதனை வதைக்கலானார்கள். ஆயினும் பிரகலாதன் அவற்றால் சிறிதும் வேதனையடையாமல் விசேஷ காந்தியுடனே பிரகாசித்தான். அப்போது அவனது தந்தை இரணியன் அவனைப் பார்த்து, அடா துர்புத்தியுடையவனே! இனியேனும் எனது பகைவனைத் துதி செய்யாமல் இருந்தால் உனக்கு அபயங்கொடுக்கிறேன். அதிக மூடத்தன்மையை அடையாமல் சன்மார்க்கனாக இரு என்று புத்தி புகட்ட முயன்றான். அதை பிரகலாதன் ஏற்றுக்கொள்ளாமல், பிதாவே! எவனைச் சிந்திதகதவுடன் பிறப்பு, இறப்பு, மூப்பு முதலிய சமஸ்த பயங்களும் ஓடிப்போகுமோ, அத்தகைய பயங்களையெல்லாம் போக்கடிக்கும் அனந்தனான ஸ்ரீமகாவிஷ்ணு, எனது இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது எனக்குப் பயம் என்பது ஏது? என்று நிமிர்ந்து நின்றான்.

அதைப் பார்த்து இரணியன் அளவிலாத ஆங்காரம் கொண்டு மகா நாகங்களை அழைத்து, ஓ கொடிய பாம்புகளே! மிகவும் துர்புத்தியும் துர்நடத்தையுமுள்ள இந்தப் பையனை விஷச்சுவாலைகள் மிக்க உங்கள் பற்களால் கடித்து இப்போதே இவனை நாசமடையச் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான்; உடனே தக்ஷகன் முதலான கொடிய பாம்புகளெல்லாம் உக்கிரமான விஷங்களைக் கக்கிக் கொண்டு பிரகலாதனின் சகல அவயவங்களிலும் கடித்தன. ஆனால் அந்தப் பாலகனோ ஸ்ரீவிஷ்ணுவிடம் தன் சிந்தை முழுவதையும் நிலைநிறுத்தியிருந்ததால் ஆனந்தப் பரவசமாகி அக்கொடிய பாம்புகள் தனது அறியாமல் இருந்தான். பிறகு விஷசர்ப்பங்களெல்லாம் தோல்வியடைந்து இரணியனிடம் சென்று அரசே எங்களுடைய பற்கள் ஒடிந்துவிட்டன. முடியிலிருக்கும் இரத்தினங்கள் வெடித்தன. படங்களிலே மகத்தான தூபம் ஒன்று உண்டாயிற்று. இதயம் நடுங்கியது. இவையெல்லாமல் அந்தப் பாலகனின் தேகத்தில் சிறிதும் சேதம் உண்டாகவில்லை. ஆகையால் எங்களிடத்தில் நீங்கள் கோபிக்காமல், இந்தக் காரியத்தை ஒழித்து வேறு ஒரு காரியத்தைக் கட்டளையிடுங்கள்! என்று கெஞ்சி விழுந்தன. இரணியன் அப்போதும் குரோதம் அடங்காமல் திக் கஜங்களைக் கூப்பிட்டு, ஓ! திசை யானைகளே! உங்களுடைய தந்தங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி மிகக் கெட்டியாகவும் உக்கிரமாயும் விளங்குகின்றன. அத்தந்தங்களினால்; அந்தத் துராத்மாவான பிரகலாதன் மீது பாய்ந்து, அவனைக் கொன்றொழியுங்கள். அரணியில் பிறந்த அக்கினியே அந்த அரணியை தகிப்பதுபோல தைத்திய குலத்தில் பிறந்த இந்த அதமன் தன் குலத்தையே நாசஞ்செய்பவனாக இருக்கிறான்! என்றான். உடனே திக்கஜங்கள் பிரகலாதனை பூமியிலே வீழ்த்தி பருவத சிகரங்களைப் போன்ற தங்களுடைய தந்தங்களை பிரகலாதன் மீது பாயவைத்து இடித்தன. அப்படி அவை பாயும் போது; கோவிந்த சரணாவிந்தங்களையே பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தானாகையால் அந்தப் பாலகனது மார்பிலே யானைகளின் தந்தங்கள் பட்டதும்; அவை முறிந்து பொடிப்பொடியாய்ப் போயின.

அப்போது பாலகன் பிரகலாதன் தன் தந்தை இரணியனைப் பார்த்து; தந்தையே! வைரத்தைவிட உறுதியான திசையானைகளின் தந்தங்கள் என் மீது பட்டுப் பொடிப்பொடியானது என்னுடைய பலத்தால் அல்ல. பாபங்களையெல்லாம் நாசஞ்செய்யவல்ல ஸ்ரீஜனார்த்தனருடைய ஸ்மரண மகிமையினால் தான் என்பதை நினைப்பீராக! என்று சொன்னான். அதைக்கேட்டதும் இரணியன் அதிக ஆத்திரமடைந்து திக்கஜங்களை அப்பால் விரட்டிவிட்டுத் தன் அசுரர்களை நோக்கி, தைத்தியர்களே! பாபகர்மனான இந்தப் பாலகனைக் கொன்றொழிக்காமல் விடக்கூடாது. காலாக்கினிக்கு ஈடான மஹா அக்கினியை வளர்த்து அதிலே இவனைப் போட்டு எரியுங்கள் என்று சொல்லிவிட்டு; வாயுதேவனான காற்றைக் கூப்பிட்டு மாருதனே! அந்தப் பெரு நெருப்பை உனது காற்றால் ஜ்வலிக்கச் செய்! என்று கட்டளையிட்டான். அசுரர்களோ மலைபோல் விறகுகளைக் குவித்து; அந்தக் குவியலுக்குள் பாலகனான பிரகலாதன் மறையும்படி அவற்றினுள்ளே அமுக்கி மூடிவைத்து, நெருப்பை மூட்டிக் கொளுத்தினார்கள். அப்போது பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, பிதாவே! பிராண்ட மாருதத்தால் ஜ்வலிக்கப்பட்டும்; இந்த அக்கினி சிறிதளவுகூட என்னைத் தகிக்கவில்லை. மேலும் நான் கிடக்கும் இந்த நெருப்பு மயமான விறகுக் குவியலோ, பத்துத் திசைகளிலும் நல்ல தாமரை மலர்களை நிறைவித்து அதிகக் குளிர்ச்சியாகச் செய்யப்பட்டவை போலிருப்பதையே நான் உணர்கிறேன்! என்று சிரித்தான்.

இது இப்படியிருக்கும்போது, இரணியனுக்குப் புரோகிதர்களும், சுக்கிரனுடைய குமாரர்களுமான சண்டாமர்க்கர் என்பவர்கள் இரண்யனை நல்வார்த்தைகளால் துதித்து; அசுர ஈஸ்வரனே உமக்கு விரோதிகளான தேவர்கள் மீது உமது கோபத்தைச் செலுத்த வேண்டுமே தவிர உமது சொந்த மகனான இந்தப் பாலகனிடம் உமது கோபத்தையெல்லாம் செலுத்துவது முறையல்ல! இவன் இனிமேலும் சத்துருபட்ச ஸ்துதி செய்யாமல் இருக்கும்படி நாங்கள் இவனுக்குக் கற்பிக்கிறோம்! பாலியப்பருவம் சகல துர்க்குணங்களுக்கும் இருப்பிடமானபடியால் பாலகனான இந்தக் குமாரனிடத்தில் கோபிக்க வேண்டாம். நாங்கள் போதிப்பதாலும் இவன் ஹரிபக்தியை விடாமல் இருப்பானாயின் இவனை வதைப்பதற்கான துர்ச்செயல்களை நாங்களே செய்கிறோம்! என்று வேண்டிக்கொண்டார்கள். அதனால் இரணியன் சிறிது மனமிளகித் தன்னுடைய அசுரர்களை ஏவி மகாக்கினியின் மத்தியில் போட்டிருந்த பிரகலாதனை வெளியே இழுத்துவரச் செய்தான். மறுபடியும் குருகுலத்துக்கே போகும்படி பிரகலாதனுக்கு இரணியன் கட்டளையிட்டான். அதன்பிறகு, குருகுலத்தில் பிரகலாதன் வசித்துக் கொண்டிருந்தான். அங்கே அவனுடைய குருவானவர் பாடம் போதிக்காத சமயங்களில் பிரகலாதன் தன்னோடு படிக்கும் தைத்ரிய பாலர்களான அசுரச் சிறுவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்துக் கொண்டு அவர்களுக்கு விஷ்ணு பக்தியையும், உண்மையான ஞானமார்க்கத்தையும் உபதேசித்து வரலானான். ஓ தைத்திய பாலர்களே! பரமார்த்தமான விஷயத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன் கேளுங்கள். என் வசனங்களைப் பொய்யாக என்ன வேண்டாம். ஏனென்றால் நான் பொருள்மீது ஆசை வைத்து இதை உங்களுக்கு உபதேசிக்க வந்தவனல்ல. ஆகையால் நான் சொல்வதை நம்பிக் கேளுங்கள். மனிதன் பிறந்தவுடன் பாலியமும், யவனமும், அதற்குப் பிறகு தடுக்கமுடியாத கிழத்தன்மையும் வந்து, கடைசியில் மிருத்யுவான மரணத்திற்கே வசமாவான். தைத்ய பாலர்களே! மனிதர்களிடம் இவையெல்லாம் உண்டாவதை நீங்களும் நானும் கண்ணெதிரில் கண்டிருக்கிறோம். இதுமட்டுமல்ல. மரணமடைந்தவனுக்கு மீண்டும் பிறவியுண்டாவதும் மெய்யேயாகும். இதற்கு சுருதி ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களே பிரமாணங்களாம்! அவற்றை நீங்களும் கற்றறிந்திருக்கிறீர்கள். இந்தத் தேகம் பிறப்பதற்குக் காரணம், பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களோடு கூடிய ஸ்திரமான ஆன்மாவேயல்லாமல் வேறு காரணம் அகப்படாமையால் சுக்கில சுரோணிதங்களுக்கு ஆளாவதான ஆன்மாவே முக்கிய காரணம். ஆகையால் மனிதனுக்கு கர்ப்பவாசம் முதல் சரீரம் விழும் வரையிலும், சர்வ அவஸ்தையிலும் துக்கம் ஒன்று தான் நிச்சயம்! அன்னபானாதிகளாலே பசியும் தாகமும் தீருவதும், அந்தந்த உபாயங்களாலே சீத உஷ்ணாதி உபத்திரவங்கள் விலகுவதையுங் கொண்டு அதையே சுகம் என்று நினைப்பது உண்மையில் அவிவேகமே ஆகும்!

அது எப்படியெனில், அன்னபானாதிகளைச் சம்பாதிப்பதற்காகச் செய்யும் பிரயாசையினால் உண்டாகும் துக்கங்கள் சொல்லத்தரமல்ல. இந்த அன்னாதிகளால் அஜீர்ணமாகும்போது எத்தனை துக்க ஹேதுவாகின்றன? இதற்கு உதாரணம் கேளுங்கள், வாத தோஷங்களால் மரத்திருக்கிற அங்கங்களையுடைவர்களுக்கும், வதைப்பதாலேயே தேகசுகத்தை விரும்புகிறவர்களுக்கும், அவர்களுடைய உடம்பைக் குத்துவதும், கசக்குவதும், பிசைவதும், மிதிப்பதும், அடிப்பதுமே சுகமாகத் தோன்றுகின்றன; காமமோகிகளாக இருப்பவர்களுக்கோ ஊடலும் கூடலும் காமினீ சரண தாடனமுமே சுகமாகத் தோன்றும் இப்படியாகத் துக்க ஏதுக்களில் சுகப்பிராந்தி உண்டாயிருப்பதைக் காண்பீர்கள். இதுபோலவே, மாமிச சிலேஷ்ம, மலமூத்திராதி மயமான உடலில் சவுந்தர்ய, சவுகுமார்ய, சவுரப்பிய காந்தி முதலான குணங்கள் உண்டென்று நினைப்பதும் வெறும் மனப்பிராந்தியே தவிர வேறல்ல. ரத்தமாமிச, சிலேஷ்ம மலமூத்திர மச்சஸ்நாயு அஸ்திகளின் சமூகமாக இருக்கும் தேகத்தின் மீது பிரியம் வைப்பவன் நரகத்திலேயும் பிரியம் வைக்கலாம். குளிரினால் நெருப்பும், தாகத்தினால் தண்ணீரும், பசியினால் அன்னமும் சுகமாகத் தோன்றுகின்றன. குளிரும் தாகமும் பசியும் இல்லாதபோது அக்கினியும் தண்ணீரும் அன்னமும் துக்க ஏதுக்களாகவே இருக்கும். பிள்ளைகளே! மனிதன் எவ்வளவு தனதானிய ரத்னாதிகளைக் கிரகித்துக் கொள்கிறானோ அவ்வளவையும் துக்கம் என்று நினைக்க வேண்டும். மனிதனின் மனத்துக்குப் பிரியமான புத்திர, மித்திர களத்திராதி சம்பந்தங்கள் எத்தனை சம்பாதிக்கிறானோ அத்தனையும் இதயத்தில் தைத்த ஆணிகளைப் போலவே இருக்கும்! மனிதன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவனுடைய இதயத்தில் இருக்கிற தனதானிய ரத்னாதிகளை நாசமும், அக்கினியுபாதையும் கோரபயமுமில்லாமல் ஸ்திரமாய்ப் பாதித்துக்கொண்டேயுள்ளன. வீட்டில் கள்வர் பயமில்லாமல் இருந்தாலும், இருதயத்தில் பொருள்களிடத்துள்ள ஆசையால், அவை உண்டாகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பிறக்கும்போது அனுபவிக்கிற துக்கத்தைப் போலவே மரணத்திலும் துக்கம் உண்டாகிறது. பிறகு, யமவாதனையிலும் மகாதுக்கமே உண்டாகும். கர்ப்பவாசத்தில் கொஞ்சமேனும் சுகம் இருக்குமா என்று நீங்களே சொல்லுங்கள். எனவே எங்குமே சுகமில்லை ஆகையால் ஜகம் எங்கும் துக்கமயமாகவே இருக்கிறது.

இப்படியாகச் சகல துக்கங்களுக்கும் இருப்பிடமான சம்சார சாகரத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே கடக்கச் செய்பவன் உங்களுக்கு நான் உண்மையையே சொல்கிறேன். நாம் பால்யரானதால் விரகதி மார்க்கத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று நினைக்கவேண்டாம். பால்ய, யௌவன ஜரா, மரணாதி அவஸ்தைகள் உடலுக்கேயன்றி ஆத்மாவுக்கு இல்லை. உடலில் ஆன்மாதான் ஜனன மரணாதி ரகிதனாய், சாஸ்வதனாக இருக்கிறான். உலகத்தில் மனிதன், தன்னுடைய பாலப்பருவம் கடந்த பிறகு யவ்வன வயதிலே ஆன்மாவுக்கு இதஞ்செய்து கொள்கிறேன் என்றும், யவ்வனத்தை அடைந்தபோது வயோதிகத்திலே உயர்ந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறேன் என்றும் நினைப்பான். பிறகு வயது முதிர்ந்து, மூப்புவந்து இந்திரியங்கள் பலவீனப்பட்டுப் போகும் போது, இனிமேல் என்ன செய்வேன்? திடமாக இருந்தபோதே ஆத்தும இதஞ்செய்துகொள்ளாமல் மூடனாகப் போனேனே! என்று கவலைப்படுவான். இதுவுமல்லாமல் துராசார மோகங்கொண்டு, ஒருநாளும் உயர்வான மார்க்கத்துக்கு உரியவனாக மாட்டான். எப்படியென்றால், பலவித கிரீடா விளையாடல் விசேஷங்களால் பாலியத்தையும், சந்தன குசுமவனிதையர்களின் பரவசத்தினாலே வாலிபத்தையும், அசக்தியினாலேயே வயோதிகத்தையும் போக்கிக் கொண்டு, அஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்கிறார்கள். ஆகையால் கங்கை நதியின் அருகிலிருந்தும் வண்ணான் தனக்குத் தாகமெடுத்தவுடன் தண்ணீரைக் குடிக்காமல், இந்தத் துணியைத் துவைத்தாகட்டும் இந்த ஆடையைத் துவைத்தாகட்டும் என்ற காலத்தைப் போக்குவதைப் போலவும், செம்படவன் இந்த மீனைப் பிடித்தாகட்டும் என்று பொழுதைப் போக்குவதைப் போலவும், எதிர்காலத்தை நினைத்து தற்காலப் பருவத்தைப் போக்கக்கூடாது. பாலிய, யவ்வன, ஜரா மரணாதி அவஸ்தைகள் உடலுக்கு உண்டே தவிர ஆன்மாவுக்கு இல்லை என்று நினைத்து விவேகமுடையவர்களாய், நீங்கள் உஜ்ஜீவிக்கும்படியான முயற்சிகளைச் செய்யுங்கள். இதுவே விரக்திமார்க்கம்! இது அசத்தியம் என்று நினைக்காதீர்கள் எப்போதும் சம்சார பந்த நிவாரணியான ஸ்ரீமந்நாராயணனையே நினையுங்கள். அந்த எம்பெருமானை நினைப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அந்தத் திருப்பெயரை ஸ்மரித்தவுடனேயே சகல பாபங்களும் நாசமாய் சகல சுபங்களும் உண்டாகும். ஆகையால் அந்த மகாவிஷ்ணுவையே நினைத்து மகாத்துமாக்கள் உஜ்ஜீவிப்பார்கள். சர்வபூதந்தர் பாமியான நாராயணனிடத்தில் உங்களுக்கு நட்புணர்வு உண்டாகட்டும்! அவனது லீலா சாதனங்களான சேதனங்களிடத்தில் சினேகஞ்செய்யுங்கள். அதனால் மோகம் முதலிய சகல கிலேசங்களும் விலகும் ஆத்தியாத்து மாகாதி, தாபத்ரயத்தினால் ஜகம் யாவும் துன்பப்படுபவை. ஆகையால் மிகவும் பரிதாபப்பட வேண்டிய பிராணிகளிடத்தில் எவன்தான் துவேஷத்தை வைப்பான்? ஒருவேளை செல்வம், கல்வி, பலம் முதலியவற்றில் தன்னைவிட சகல ஜீவர்களும் சகல பிராணிகளும் செழிப்பாக இருப்பதாகவும், தான் ஒருவனே அப்படியில்லாமல் சக்தியீனனாக இருப்பதாகவும் மனிதன் நினைத்தானானால் அப்போதும் துவேஷம் பாராட்டாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துவேஷஞ் செய்வதால் ஹானியே ஏற்படும் ஆகையால்; மயித்திரி; கருணை; முதிதை; உபேஷை என்ற மனத்தெளிவின் காரணங்களை மந்திமாதிகாரிகளின் மதத்தை அனுசரித்து உங்களுக்குச் சொன்னேன். மந்திமாதிகாரிகள் என்போர் உலகத்தைப் பகவானின் சொரூபமாக நினைக்காமல் வேறாக நினைக்கிற சாங்கியராவர். இனி உத்தமாதிகாரிகளின் கருத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.

சகல பிரபஞ்சமும் சர்வாத்மாவான ஸ்ரீமந்நாராயணருடைய சொரூபம் என்று நினைத்து, ஞானமுள்ளவர்கள் சகல பூதங்களையும் உன்னைப்போலவே அபேதமாக நினைக்கவேண்டும். ஆகையால், நானும் நீங்களும் அசுர சுபாவத்தை விட்டுவிட்டு, பெரும் ஆனந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்வோமாக. சூரியன், சந்திரன், வருணன், இந்திரன், வாயு, அக்கினி முதலானவர்களாலே ஒருபேறுமில்லை. இதற்கு என்ன செய்வது என்றால், தேவ, அசுர; யக்ஷ;ராக்ஷச, கின்னர பன்னகாதிகளாலும் மனுஷ்ய; பசு; பக்ஷி; மிருகங்களாலும் அதிகாரம்; ஜ்வரம், குன்மம், முதலிய மகாரோகங்களாலும் ராக, துவேஷ, லோப, மோக மதமாச்சாரியங்களாலும் எது நாசஞ்செய்யப்படாததோ அப்படிப்பட்ட பரமானந்தத்தைப் பெறுவதற்கு ஸ்ரீகேசவனது திருவடிகளில் இதயத்தை நிலைநிறுத்த வேண்டும். இதனால் சுகமடையலாம். ஆகையால் அசாரமான சம்சார மார்க்கத்தில் உண்டாகும் தேவ மனுஷ்யாதி சரீரங்களுக்கு உரிய ஸ்வர்க்க போகங்களுக்கு ஆசைப்பட வேண்டாம். உங்களுக்கு நான் வலுவில் வந்து நன்மையானவற்றையே சொல்கிறேன். சர்வபூதங்களிடத்திலும் சமத்துவ புத்தியுடன் இருங்கள். சர்வபூத சமத்துவந்தான் அச்சுதனுக்குச் செய்யும் ஆராதனையாகும். சர்வ நாதனான விஷ்ணுபெருமான் பிரசன்னமானானேயாகில் துர்லபமான பொருள்கள் என்னதான் இருக்கமுடியும்? ஆனாலும் தர்மார்த்த கர்மங்களைப் பிரார்த்திப்பது நல்லதன்று. அவை அற்பங்கள்! அவைகளினால் பயன் என்ன? மோட்சத்தையும் விரும்பவேண்டாம். ஏனென்றால் நன்றாய்ப் பழுத்த மாமரத்தின் அருகே சென்றவனுக்கு தற்செயலாய்ப் பழங்கிடைப்பது போல பரப்பிரமமான அனந்தன் என்ற மகாகல்ப விருட்சத்தை அணுகியவனுக்கு மோக்ஷõனந்தம் என்கிற பலன் தற்செயலாகவே கிடைத்துவிடும், இதில் சந்தேகமில்லை என்று பாலகன் பிரகலாதன் கூறினான்.

————

18. அசுரப் புரோகிதர்களைக் காத்தல்!

பிரகலாதனின் உபதேசங்களைக் கேட்டதும் அசுரகுமாரர்கள் மிகவும் யோசித்துவிட்டு, இரணியனின் கட்டாயத்துக்குப் பயந்து, பிரகலாதன் சொன்னவற்றையெல்லாம் அந்த அசுரேஸ்வரனிடம் கூறிவிட்டார்கள். அதனால் இரணியன் அதிகக் கோபமும் அகங்காரமும் கொண்டு தன் சமையற்காரனைக் கூப்பிட்டு, பரிசாரகர்களே! மந்தபுத்தி படைத்தவன் தான் என் குமாரன் பிரகலாதன் அவன் கெட்டதுமல்லாமல், மற்றவருக்கும் துன்மார்க்கமான உபதேசங்களைச் சொல்லி, அவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் பிரகலாதனைத் தாமதமின்றி அழித்தொழிக்க வேண்டும். அவனறியாத வண்ணம் அவனுடைய ஆகாரங்களிலெல்லாம் ஆலகாலம் என்ற கொடிய விஷத்தைக் கலந்து அவனுக்குக் கொடுங்கள். இந்தக் காரியத்தில் சந்தேகம் வேண்டாம்! என்று கட்டளையிட்டான். பரிசாரகர்களும் அப்படியே விஷங்கலந்த அன்னத்தை பிரகலாதனுக்கு கொடுத்தார்கள். அதையறிந்த பிரகலாதன், தன் மனதில் யாதொரு மாறுபாடும் இல்லாமல், அனந்தன் என்ற திவ்யநாமதே யத்தினால் அந்த அன்னங்களையெல்லாம் வாங்கி மகிழ்ச்சியுடன் அமுது செய்தான். ஸ்ரீஅனந்தனின் நாமத்தை உச்சரணை செய்த பெருமையால் அன்னத்தில் கலந்துள்ள விஷமெல்லாம் தன் வீரியத்தை இழந்து பிரகலாதனின் ரத்தத்திலேயே ஜீரணமாகிவிட்டது. அந்த மகாவிஷம் பிரகலாதனுக்கு ஜீரணமானதைப் பார்த்ததும் சமையற்காரர்கள் மகாபயம் பிடித்தவர்களாய் இரணியனிடம் ஓடி நடந்தவற்றைக் கூறினார்கள். அதனால் இரணியன் இன்னும் கோபங்கொண்டு, புரோகிதர்களான சண்டாமர்க்கர்களைக் கூப்பிட்டு, புரோகிதர்களே, விரைவில் அந்த துன்மார்க்கப்பையலைக் கட்டியிழுத்துச் சென்று உங்கள் மந்திர பலத்தால் பயங்கரமான கிருத்தியை உண்டாக்கி, அவனை அழித்து விடுங்கள் என்று கட்டளையிட்டான். புரோகிதர்களான பிராமணர்கள் அசுரேஸ்வரனின் ஆக்ஞையை ஏற்று பிரகலாதனை அணுகினார்கள். வணக்கமாக நின்று கொண்டிருக்கும் பிரகலாதனைப் பார்த்து, சிறுவனே! திரிலோக விக்கியாததமான பிரமகுலத்தில் உதித்து, இரணியனின் மகனான உனக்கு எந்தத் தேவதைகளால் என்ன ஆகவேண்டும்? விஷ்ணுவான அந்த அனந்தனாலே தான் உனக்கு என்ன பயன்? உன் பிதாவான இரணியகசிபோ சகல உலகங்களுக்கும் அதிபதியாக இருப்பதால் நீயும் அப்படியே அதிபதியாக இருக்கலாம். ஆகையால் சத்துருபட்ச ஸ்தோத்திரத்தை விட்டுவிடுவாயாக: சகல உலகங்களுக்கும் உன் தந்தையே பூஜிக்கத்தக்கவராகவும் பரமகுருவாகவும் இருக்கிறார். ஆகையால் இப்போது நீ அவரது கட்டளையை ஏற்று நடப்பதே நியாயம்! என்று புத்திமதி கூறினார்கள்.

மகாத்மாக்களே! நீங்கள் சொல்வது மெய்தான். மூன்று உலகங்களிலும் பிரமபுத்திரனான மரீசியின் வமிசம் மேலானது தான். என் தந்தை மேன்மையானவர், தேஜோ பல பராக்கிரமங்களையுடையவர் என்பதும் உண்மைதான். அவரே பரமகுரு என்பதும் நியாயமே! அத்தகைய என் தந்தைக்கு நான் சிறிதாவது அபராதம் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, அனந்தனாலே பயன் என்ன என்று நீங்கள் சொன்னீர்களே, அந்த வசனம் ஒன்றுதான் பொருள் அற்றது! என்றான் பிரகலாதன். பிறகு மரியாதைக்காக ஒன்றும் சொல்லாமல், புன்னகையுடன் பிரகலாதன் அவர்களைப் பார்த்து, புரோகிதர்களே! விஷ்ணுவான அந்த அனந்தனால் என்ன பயன் என்ற உங்களது வாக்கியம் நேர்த்தியாக இருக்கிறது. அனந்தனாலே காரியம் என்னவென்று நீங்கள் கேட்டது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் சொல்லுகிறேனே என்று மனதில் கிலேசங்கொள்ள வேண்டாம். அனந்தனாலே உண்டாகும் பயனை நான் சொல்கிறேன் கேளுங்கள். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்று சொல்லப்படும் நால்வகை புருஷார்த்தங்களும் எவனால் உண்டாகுமோ, அந்த அனந்தனாலே பிரயோசனமென்ன என்று நீங்கள் சொல்வதை நான் எப்படி அங்கீகரிப்பேன்? மரீசி முதலியவர்கள் அனந்தனை ஆராதித்தே, அவனது கிருபையினாலே தாம் விரும்பியதையெல்லாம் பெற்றார்கள். தத்துவ ஞானிகளான பரமாத்மாக்கள் ஞானநிஷ்டையினாலே அந்த பரமாத்மாவை ஆராதித்து, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தார்கள். சம்பத்து ஐசுவரியம், பெருமை, சந்தானபலம் ஆகிய நல்ல காரியத்துக்கும் மோட்சத்துக்கும் ஒன்றாலேயே பெறத்தக்க காரணம் எதுவென்றால் அது ஸ்ரீஹரியினுடைய ஆராதனையேயாகும். இப்படித் தருமார்த்த காம மோட்சங்கள் எவனிடமிருந்து பெறப்படுமோ, அப்படிப்பட்ட அனந்தனாலே என்ன பயன் என்று நீங்கள் கேட்டீர்கள்? பிராமணர்களே! இதுவென்ன நியாயம்? மேலும் நான் பல வார்த்தைகளைச் சொல்லி பயன் என்ன? நீங்களோ எனது ஆசிரியர்கள். ஆகையால் சந்தேகமின்றி நல்லதாயினும் பொல்லாததாயினும் என்னிடம் சொல்லுங்கள். இதனால் சிறப்பிராது அற்ப விவேகம் தான் இருக்கும். இனி என்னுடைய முடிவான சித்தாந்தத்தைக் கூறுகிறேன். கர்த்தாவும், வளர்ப்பவனும், சங்கரிப்பவனும் உலகநாதனும் எல்லோருடைய இதயத்திலிருப்பவனும், யாவற்றையும் அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படுபவனும் அந்த ஸ்ரீமந்நாராயணனே யல்லாமல் வேறு ஒருவனுமல்ல; பாலியனான நான் இப்படிச் சொல்வதைக் கேட்டுப் பொறுத்தருள வேண்டும்! என்று பிரகலாதன் கூறினான்.

பாலகனே! இனிமேல் நீ இப்படிச் சத்துருபக்ஷ ஸ்தோத்திரமான வார்த்தைகளைச் சொல்லமாட்டாய் என்று எண்ணித்தான், நெருப்பின் மத்தியிலே தகிக்கப்பட்டிருந்த உன்னை வெளியே இழுக்கச் செய்தோம். மூடனாகையால் அதையே நீ மறுபடியும் பேசுகிறாய். இனியும் உன் பிடிவாத்தை விடாமல் இருப்பாயானால், கிருத்தியை உண்டாக்கி ஒரு கணத்தில் உன்னை நாசமாக்குவோம்! என்றார்கள் புரோகிதர்கள். பிராமணர்களே! ஒருவனால் ஒருவன் ரட்சிக்கப்படுவதுமில்லை அழிக்கப்படுவதுமில்லை. அவனவன் தனது சதாகாரத்தினாலேயே தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். நற்செயல்களால், சகல பயன்களும் நற்கதியும் உண்டாகின்றன. ஆகையால் எப்போதும் நல்லவற்றையே செய்யவேண்டும்! என்றான் பிரகலாதன். அசுரப் புரோகிதர்கள் கோபம் அடைந்து மந்திரங்களை உச்சாடனம் செய்து, மிகவும் பயங்கர முகத்துடன் தீச்சுவாலை வீசும்படியான ஒரு கிருத்தியை உண்டாக்கி அதைப் பிரகலாதன் மீது ஏவினார்கள். அது பூமிநடுங்க தன் பாதங்களை எடுத்து வைத்து மிகவும் கோபத்துடன் தனது சூலத்தினாலே, பிரகலாதனின் மார்பைத் தாக்கியது. அந்தச் சூலம் பிரகலாதனின் மார்பிலே பட்டவுடனேயே சடசடவென ஒடிந்து தரையில் விழுந்து பொடிப்பொடியாயிற்று! பகவானும் ஜகதீஸ்வரனுமான ஸ்ரீஹரி எங்கே பிரியாமல் இருப்பானோ, அங்கே வஜ்ராயுதமானாலும் பொடியாய்ப் போகும் என்றால் சூலத்தின் கதியை பற்றிச் சொல்லவா வேண்டும்? இவ்விதமாக அந்த கிருத்தியையினால் ஒன்றும் செய்யமுடியாமற் போகவே, அது தன்னைக் குற்றமில்லாத இடத்திற்கு ஏவிய புரோகிதர்கள் மீதே திரும்பி விழுந்து அவர்களைத் தகிக்கத் துவங்கியது. அதனால் தவிக்கிற ஆசிரியர்களைக் கண்டதும் பிரகலாதன் மிகவும் பரிவு கொண்டு அவர்களை ரக்ஷிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணா! ஸ்ரீஅனந்தா! இவர்களைக் காப்பாயாக! என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் ஓடிச்சென்று, சுவாமியைத் துதிக்கலானான்.

ஓ சர்வ வியாபகனே! ஜகத்ரூபனே! ஜகத்கர்த்தாவே! ஜனார்த்தனனே! கடினமான மந்திர அக்னியால் தகிக்கப்படும் இந்தப் பூசுரர்களைக் காப்பாயாக. சர்வ பூதங்களிடத்திலும் ஜகத் குருவான ஸ்ரீவிஷ்ணுவே வியாபித்திருக்கிறார் என்பது சத்தியமானால் இந்தப் புரோகிதர்கள் பிழைப்பார்களாக. ஸ்ரீவிஷ்ணு யாவரிடத்திலும் பிரியமாய் இருப்பவன் என்று நான் நினைத்து, சத்துரு பக்ஷத்திலும் துவேஷமில்லாமல் நான் இருப்பேனேயானால், இந்தப் பிராமணர்கள் பிழைக்கவேண்டும். என்னைச் சங்கரிக்க வந்த க்ஷத்திரிய அசுரர்களிடமும் எனக்கு விஷம் இட்ட சமையற்காரர்களிடமும், அக்கினியை மூட்டிய தானவர்களிடமும் தந்தங்களாலே என்னைப் பிடித்துப் பிடித்துக் குத்திய திக்கு கஜங்களிடத்திலும்; விஷங்கக்கி என்னைக் கடித்த பாம்புகளிடமும் என் சிநேகிதர்களிடமும் நான் சமமான புத்தியுடையவனாக இருந்து, எங்கும் ஒரு தீங்கும் நினைக்காமல் இருந்தேன் என்றால் அந்தச் சத்தியத்தினாலேயே இந்த அசுரப்புரோகிதர்கள் பிழைத்து சுகமாக இருக்கவேண்டும்! என்று பிரகலாதன் பிரார்த்தித்தான். அதனால் அப்புரோகிதர்களின் வேதனை ஒழிந்தது. அவர்கள் மகிழ்ச்சியுடன், பிரகலாதாழ்வானைப் பார்த்து, குழந்தாய்! நீ தீர்க்காயுளுடன் எதிரற்ற வீரிய பலபராக்கிரமங்களும், புத்திர பவுத்திர தனாதி ஐசுவரியங்களும் பெற்றுச் சுகமாக இருப்பாயாக! என்று ஆசிர்வதித்துவிட்டு, இரணியனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார்கள்.

————

19. பிரகலாதனின் பிரார்த்தனை

இரணியன் தன் புரோகிதர்கள் உண்டாக்கிய கிருத்தியை வீணானதைக் கேட்டுத் திகைத்தான். பிறகு அவன் தன் புத்தரனை அழைத்து, பிரகலாதா! உன் பிரபாவம் அதியற்புதமாக இருக்கிறதே! இதற்குக் காரணம் என்ன? இது மந்திரத்தால் உண்டானதா! இயல்பாகவே உள்ளதா? தெரியச் சொல்! என்றான். பிரகலாதன் தன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு, ஐயனே! எனக்கு இந்தப் பிரபாவம் மந்திர தந்திரங்களால் உண்டானதல்ல! இயற்கையாகவே உள்ள சுபாவமுல்ல எவனெவன் இதயத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு நிலையாகப் பிரகாசிப்பானோ, அவனவனுக்கெல்லாம் இத்தகைய பிரபாவம் உண்டு! யார் ஒருவன் தனக்குக் கேடு நினையாததைப் போலப் பிறருக்கும் கேடு நினைக்காமல் இருப்பானோ அப்படிப்பட்டவனுக்குப் பாவத்தின் காரியமாகிய பாவம் உண்டாவதில்லை. எவன் மனோவாக்குக் காயங்களினால் யாருக்கும் துரோகஞ்செய்யாமல் இருக்கிறேன். இப்படி நல்ல சிந்தையுள்ளவனான எனக்கு ஆத்தியாத் மிகம், ஆதி தெய்வீகம், ஆதி பவுதிகம் என்ற மூலகைத் துக்கமும் எப்படி உண்டாகும்? ஆகையால், விவேகமுள்ளவர்கள் ஸ்ரீஹரியே சர்வாத்துமகனாக இருக்கிறான் என்று நினைத்து, சகல பூதங்களிடமும் சர்வதேச, சர்வ காலங்களிலும் இடைவிடாமல் அன்பு செலுத்த வேண்டும்! என்று பிரகலாதன் சொன்னான். இரணியன் இன்னும் குரோதத்தால் பொங்கி, அங்கிருந்த அசுரகிங்கரர்களைக் கூவியழைத்து இந்த துஷ்டப்பையனான பிரகலாதனை இழுத்துகக் கொண்டு போய் நூறு யோசனை உயரமுள்ள உப்பரிகையின் மேலே இருந்து, கீழே தள்ளுங்கள். அந்த மலையின் மேல் விழுந்து இவனது உடம்பெல்லாம் சின்னாபின்னமடைந்து சிதையட்டும்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் கிங்கரர்களும் பிரகலாதனை இழுத்துப்போய் மிகவும் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள். ஆனால் பிரகலாதன் தனது இதயகமலத்தில் புண்டரிதாஷனான ஸ்ரீமந்நாராயணனையே நினைத்துக் கொண்டிருந்ததால் பூமிதேவி வெளிப்பட்டு சர்வபூத ரட்சகனின் பக்தனான பிரகலாதனை தன் கைகளால் ஏந்திக் கொண்டாள்.

அப்படிக் கீழே விழுந்தும் தனது அங்கத்தில் கிஞ்சித்தும் சேதமில்லாமல் சுகமாய் எழுந்துவந்த தன் மகனைப் பார்த்து, இரணியன் மனம் பொறாமல் மகாமாயவியான சம்பராசுரனைக் கூவி அழைத்து, அசுர உத்தமனே! துன்மார்க்கனான இந்தப் பையனைச் சாகடிக்க நான் எத்தனை உபாயம் செய்தும் இவன் சாகாமலே தப்பிவிடுகிறான்! ஆகையால் உமது மாயா சக்தியினால் இந்தத் துராத்மாவைச் சங்கரிக்க வேண்டும்! என்றான்.

அதற்கு சம்பராசுரன் இணங்கி, அசுரேஸ்வரா! எனது மாயாபலத்தைப் பாரும்! சஹஸ்ரகோடி மாயைகளைச் செய்து இந்த பிரகலாதனை நானே சாகடிக்கிறேன்! என்று சொல்லி விட்டு பிரகலாதன் மீது பலவகையான மாயைகளைப் பிரயோகித்தான். ஆனால் பிரகலாதனோ அந்த அசுரன் மீதும் வெறுப்படையாமல் ஸ்ரீமதுசூதனான விஷ்ணுவையே நினைத்துக் கொண்டிருந்தான். அப்போது ஸ்ரீமந்நாராயணனின் நியமனத்தால் அநேகமாயிரம் ஜ்வாலைகளோடு கூடிய திருவாழி புறப்பட்டு, பிரகலாதனை ரட்சிப்பதற்காக அதிவேகமாக வந்து, சம்பராசுரனின் மாயைகளையெல்லாம் தகித்துச் சாம்பலாக்கியது. பிறகு, இரணியன் இன்னும் பிடிவாதமான குரோதம் கொண்டு சம்சோஷகன் என்ற வாயுவைப் பார்த்து, சீக்கிரமாக இந்தத் துஷ்டனை நாசஞ்செய்வாயாக! என்று கட்டளையிட்டான். அந்த வாயு அசுரனும் அதிகுளிர்ச்சியும் அதிஉஷ்ணமும் கொண்டு, பிரகலாதனின் திருமேனியினுள்ளே பிரவேசித்தான். ஆனால் பிரகலாதன் தன் இருதயத்திலே ஸ்ரீமந்நாராயணனைத் தரித்திருந்தபடியால், அங்கு குடிகொண்டிருக்கும் ஸ்ரீமதுசூதனன் ரட்சகமூர்த்தியாய் எழும்பி, அந்தச் சம்சோஷகனை விழுங்கி ஒரே கணத்தில் நாசஞ்செய்தருளினார். அதைக்கண்ட இரணியன் பிரமித்தான். இதுபோல சம்பரனால் ஏவப்பட்ட மாயைகளும் சம்சோஷக வாயுவும் நாசமடைந்ததையறிந்த பிரகலாதன் மீண்டும், குருகுலத்துக்குச் சென்று அங்கே படித்துக் கொண்டிருந்தான். குருகுலத்தில் அவனுடைய ஆசாரியர், அவனுக்குத் தினந்தினம் சுக்கிர நீதியை உபதேசித்து வந்தார். சிலகாலம் சென்ற பிறகு அவர் தம்மிடம் பிரகலாதன் நீதி சாஸ்திரத்தை கற்றறிந்து விட்டதாக நினைத்து, அவனையும் அழைத்துக் கொண்டு, இரணியனிடம் சென்றார். அவர் இரணியனை நோக்கி, அசுரேந்திரனே! உனது புத்திரன் சுக்கிர நீதியை நன்றாகப் பயின்று சகல விஷயங்களிலும் சமர்த்தனாகி விட்டான்! என்றார். இரணியன் சிறிது மனச்சமாதானமடைந்து பிரகலாதனைப் பார்த்து, மகனே! அரசனானவன், நண்பர்களிடமும் பகைவரிடமும், நடுவரிடத்திலும், விருத்தி, சாமியம், க்ஷயம் என்பவை நேரிடும் சமயங்களிலும் எப்படியிருக்க வேண்டும்? புத்திசொல்லும் மந்திரிகளிடமும் காரியசகாயரான அமாத்தியரிடமும் பாகியர் என்னும் வரிவாங்கிச் சேர்க்கும் அதிகாரிகளிடமும், ஆப்பியந்தார் என்று சொல்லப்படும் அந்தப்புர அதிகாரிகளிடமும், தன்னுடைய குடிமக்களிடமும், தன்னால் ஜெயிக்கப்பட்டுத் தன்னிடம் சேவகம் செய்யும் பகைவரிடமும் மன்னன் என்போன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சந்தி, விக்கிரகம் முதலியவற்றில் எங்கே எதையெதைச் செய்ய வேண்டும்? தனக்குள்ளே இருந்து மர்மங்களை அறிந்து, பிறகு பிறராலே பேதப்படுத்திக் கொண்டு போக உடன்பட்டிருக்கும். தன் ஜனங்கள் விரோதமாகாமல் இருக்க அரசன் என்ன செய்ய வேண்டும்? சைலதுர்க்கம், வனதுர்க்கம், ஜலதுர்க்கம் முதலிய துர்க்கங்களை எப்படி அமைப்பது? அசாத்தியர்களால் வனத்தில் வாசஞ்செய்யும் மிலேச்சர்களை வசப்படுத்தும் உபாயம் யாது? திருடர் முதலிய துஷ்டர்களை நிக்ரஹிக்கும் விதம் என்ன? இவற்றையும் சாமதான பேதாதி உபாயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் நீதி சாஸ்திரத்திலே நீ கற்றிருப்பவைகளையும் சொல்வாயாக உன் மனதில் இருக்கும் கருத்தை நான் அறிய விரும்புகிறேன் என்றான்.

தந்தையே! ஆசாரியர் எனக்குச் சகல சாஸ்திரங்களையும் உபதேசித்தார்; நானும் படித்தேன். ஆயினும் இவையெல்லாம் எனக்கு அர்த்தமற்றதாகவும், அசாரமாகவுமே தோன்றுகின்றன. மித்திராதிகளை வசப்படுத்த, சாம தான பேத தண்டங்களைச் செய்யும்படி நீதி சாஸ்திரத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. ஐயனே கோபிக்க வேண்டாம்! ஜகத்திலே சத்துரு மித்திரர்களை நான் காணவில்லை. ஆகையால் சாமதானாதி உபாயங்கள் வீணானவையே! சாத்தியம் இல்லாதபோது வெறும் சாதனத்தால் பயன் என்ன? சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, ஜகத் ஸ்வரூபமாகவும் ஜகந்நாதனாகவும் கோவிந்தனே எழுந்தருளியிருக்கும்போது, இந்த ஜகத்தில் சத்துரு மித்துரு என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஸ்ரீவிஷ்ணுபகவான் உம்மிடமும் என்னிடமும் மற்றுமுள்ள சகல ஜகத்திலேயும் பரிபூரணமாக நிறைந்திருக்கிறாராகையால் சத்துரு மித்திரன் என்ற பேதம் எப்படி உண்டாகும்? இகலோக போகசாதனங்களாய் வீணான சொற்கள் விரிந்து, அவித்தைக்கு உட்பட்டிருக்கும் நீதி சாஸ்திரங்களால் என்ன பயன்? ஐயனே! பந்தங்கள் நீங்கும்படியான பிரமவித்தைப் பயிற்சிக்கே முயற்சி செய்ய வேண்டும். மின்மினிப் பூச்சியைப் பார்த்து அக்கினி என்று பாலகன் பிரமிப்பது போல் சிலர் அஞ்ஞானத்தால் அவித்தையை வித்தையென்று நினைக்கிறார்கள். எது சம்சார பந்தத்துக்குக் காரணமாகாதோ அப்படிப்பட்ட கருமமே கருமமாகும்! எது மோக்ஷத்துக் காரணமாகுமோ அப்படிப்பட்ட வித்தையே வித்தையாகும். மற்ற கருமங்கள் யாவுமே வீணான ஆயாசத்தை யுண்டாக்குமேயொழிய வேறாகாது. ஆகையால், நீதி சாஸ்திரத்தால் வரும் ராஜ்யாதி பயன்களைத் துச்சமாக நினைத்து, உத்தமமான விஷயத்தைச் சொல்கிறேன். பூமியில் ராஜ்ய அபேட்சையில்லாதவனும் தன அபேட்சையில்லாதவனும் உண்டோம். ஆயினும் பூர்வ புண்யவசத்தால் கிடைக்கத் தக்கதே கிடைக்குமேயல்லாது. நினைத்தது கிடைக்காது. கோபாக்கியமுடைய என் தந்தையே! ஜகத்தில் யாவரும் தமக்கு ஐசுவரியம் உண்டாக வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். ஆயினும் அது ஜன்மாந்திர பாக்கிய வசத்தாலன்றி முயற்சியால் உண்டாகாது.

விவேகமில்லாதவர்களக்கும் முயற்சி செய்யாதவருக்கும் நீதி சாஸ்திர மறியாதவருக்கும் அதிர்ஷ்டவசத்தால் ராஜ்யாதிகள் உண்டாகின்றன. ஆகையால் ஐசுவரியத்தை விரும்புவோரும் புண்ணியத்தையே செய்ய முயலவேண்டும். தேவ மனுஷ்ய, மிருக பட்சி விருட்ச ரூபமுடைய பிரபஞ்சம் யாவும் ஸ்ரீஅனந்தனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றன. ஆனால் அஞ்ஞானிகளுக்கு அவை வேறு போலத் தோன்றுகின்றன. ஸ்ரீவிஷ்ணு பகவான் விசுவதா ரூபதரன். ஆகையால் தாவர சங்கமாதமகமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று நினைத்து விவேதியாக இருப்பவன் சகல பூதங்களையும் ஆத்மசமானமாகப் பாவித்திருக்க வேண்டும். இந்த ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவனிடத்திலே அனாதியாயும் ஷட்குண ஐசுவரிய சம்பன்னான அந்தப் புருஷோத்தமன் பிரசன்னமாவான். அவன் பிரசன்னனானால், சகல விதமான கிலேசங்களும் விலகிப் போய்விடும்! என்றான். பிரகலாதன் அதைக்கேட்ட இரணியன், சகிக்கமாட்டாமல் கோபத்துடன் தன் சிங்காதனத்திலிருந்து எழுந்து, தன் குமாரனின் மார்பிலே உதைத்து கையோடு கையை அறைந்து, அருகிலிருந்த அசுரர்களைப் பார்த்து, ஓ விப்ரசித்து! ராகுவே! ஓ பலனே! இந்தப் பயலை நாகபாசங்களினால் கட்டியிழுத்து, சமுத்திரத்திலே தூக்கிப் போடுங்கள் தாமதம் செய்ய வேண்டாம். இல்லையெனில் தைத்தியதானவ சமூகங்கள், மூடனான இந்தப் பாவியின் வழியில் சென்று கெட்டுப் போய்விடும். என்ன சொல்லியும் இவன் மாறவில்லை. இவனை நான் சொன்னபடிச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். தைத்யர்கள் அவனது கட்டளையை ஏற்று, பிரகலாதனை நாகபாசங்களாற் கட்டிக்கடலில் போட்டார்கள்.

பிரகலாதன் அதில் விழுந்து அசைந்ததும் கடல்நீர் எல்லை கடந்து, ஜகமெங்கும் வியாபித்தது. இவ்விதம் கடல்நீர் பொங்கிப்பூமியில் வியாபிப்பதைக் கண்ட இரணியன் தைத்யர்களை அழைத்து சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் அந்தத் துஷ்டன் மீது மலைகளை நெருக்கமாக அடுக்குங்கள்! அந்தப் பையன் பிழைப்பதால் யாதொரு பயனும் இல்லை. ஆகையால் ஜலராசியின் நடுவில், மலைகளால் நாலாபுறமும் அமுக்கப்பட்டுக் கொண்டே பல ஆண்டுகள் இருந்தானாகில் அவன் உயிரை விட்டுவிடுவான்! என்றான். பிறகு தைத்ய தானவர்கள் உயர்ந்த மலைகளைப் பறித்துக் கொண்டுவந்து பிரகலாதன் மீது போட்டு, அவனைச் சுற்றிலும் ஆயிரம் யோசனைக்கு மலைகளை அடுக்கினார்கள். இவ்விதம் பிரகலாதாழ்வான் சமுத்திர மத்தியில், அத்தனைத் தொல்லைகளிலும் ஏகாக்கிர சித்தனாய் அச்சுதனையே துதிக்கலானான்! புண்டரிகாக்ஷனே! உனக்கு எனது வணக்கம், புருஷோத்தமனே உனக்குத் தெண்டனிடுகிறேன். சர்வலோக ஸ்வரூபனே! உனக்கு நமஸ்காரம்! உக்கிரமான சக்கர ஆயுதமுடையவனே உனக்குத் தெண்டனிடுகிறேன். பிரமண்ணியம் என்று சொல்லப்பட்ட தவம் வேதம் முதலியவைகளுக்குத் தேவனாகவும், கோக்களுக்கும், பிராமணருக்கும் இதனாகவும், ஜகத்துக்கெல்லாம் ரக்ஷகனாயும், ஸ்ரீகிருஷ்ணன் என்றும், கோவிந்தன் என்னும் திருநாமமுடைய உனக்கு மேலும் மேலும் தண்டனிடுகிறேன். பிரமரூபமாகி உலகங்களைப் படைத்துக் கொண்டும், தனது சொரூபமாகி ரட்சித்துக் கொண்டும், கல்பாந்தத்திலே ருத்திர ரூபமாகிச் சங்கரித்துக் கொண்டும், திரமூர்த்தியாக விளங்கும் உனக்குத் தெண்டனிடுகிறேன்! ஓ அச்சுதனே! தேவ அசுர கந்த வசித்த கின்னர சாத்திய பன்னக யக்ஷ ராக்ஷச பைசாச மனுஷிய பட்க்ஷ ஸ்தாவர பிபீவிகாதிகளும், பிரித்வி அப்பு, தேயு வாயு ஆகாயங்களுக்கும் சப்த ஸ்பரிச ரச கந்தங்களும், மனோ புத்தி சித்த அகங்காரங்களும், காலமும் அதன் குணங்களும் இவற்றின் பரமார்த்தமான ஆன்மாவும் இவையெல்லாம் நீயே! வித்தை அவித்தை சத்தியம், அசத்தியம் பிரவிர்த்தி, நிவர்த்தி ரோதோக்த்த சர்வகர்மங்களும் நீயே! விஷ்ணுபகவானே! சமஸ்த கர்மபோகத்தை அனுபவிப்பவனும் சர்வகர்ம பயன்களும் நீயே! ஓ மகாப்பிரபுவே! உன்னிடமும் இதரரிடமும் சேஷ பூதங்களான சகல உலகங்களிலே நீ வியாபித்திருப்பதும், உபதான நிமித்தகாரண ரூபமான ஐசுவரியும் அனந்த ஞானசக்தியும் உனது கல்யாண குணங்களைக் குறிக்கின்றன. பரமயோகிகள் உன்னைத் தியானிக்கின்றனர். யாகசீலர் உன்னைக் குறித்து யாகஞ்செய்கின்றனர். நீயே பிதுர் ரூபமும் தேவ ரூபமும் கொண்டு, ஹவ்ய கவ்யங்களைப் புசிக்கிறாய்! ஓ அச்சுதா! மகத்தகங்காரம் முதலான சூட்கமங்களும் பிரித்வி முதலிய பூதங்களும் அவற்றினுள்ளே அதிசூட்சுமமான ஆத்ம தத்துவமாகிய இந்தச் சூட்சும பிரபஞ்சமெல்லாம் எங்கேயிருக்கிறதோ, எங்கே உண்டாகிறதோ, அது சொரூப குணங்களிலே பெருத்த உனது மகாரூபமாக இருக்கிறது! சூக்ஷ்மம் முதலான யாதொரு சிறப்புமில்லாமல், சிந்திப்பதற்கும் அரியதாய் யாதொரு ரூபம் உண்டோ அதுவே உன்னுடைய பரமாத்ம சொரூபம்! இத்தகைய புருஷோத்தமனான உனக்குத் தெண்டமிடுகிறேன். சர்வாத்மகனே! சகல பூதங்களிலும் சத்வாதி குணங்களைப் பற்றியதாய் யாதொரு பிரகிருத சக்தி இருக்கிறதோ, ஜீவ ஸ்வரூபமான அந்தச் சக்தியை நான் வணங்குகிறேன்; வாக்குக்கும் மனதுக்கும் எது எட்டாததோ, யாதொரு விசேஷத்தினாலும் எது விசேஷப்படுத்தக் கூடாததோ, ஞானிகளுடைய ஞானத்தால் எது நிரூபிக்கப்படக்கூடியதோ அத்தகைய முந்தாத்தும ஸ்வரூபமாக இருக்கிற உனது மேன்மையான சக்திக்குத் தெண்டனிடுகிறேன்!

எவனுக்கு வேறானது ஒன்று இல்லையோ, எவன் எல்லாவற்றுக்கும் வேறாக இருக்கிறானோ, அத்தகைய பகவானான ஸ்ரீவாசுதேவனுக்குத் தெண்டனிடுகிறேன்! கர்மாதீனமான நாம ரூபங்கள் இல்லாமல் விலக்ஷணனாய் இருப்பதாக மட்டும் எவன் காரணப்படுவானோ அத்தகைய மகாத்மாவுக்கு எனது நமஸ்காரம்! சங்கர்ஷணாதி வியூகரூபியானவனுக்கு நமஸ்காரம்! தேவதைகளும் எவனுடைய பராத்பரமான ரூபத்தைக் காணமுடியாமல், மச்சகூர்மாதி அவதார ரூபங்களையே அர்ச்சனை செய்வார்களோ, அந்தப் பரமாத்மாவுக்கு வந்தனம்! எவன் ருத்திராதி சகல பூதங்களுக்கும் அந்தர்மியாகி சுபாசுபங்களை கண்டு கொண்டிருப்பானோ, அந்தச் சர்வசாட்சியும் பரமேஸ்வரனுமான ஸ்ரீவிஷ்ணுதேவருக்குத் தெண்டனிடுகிறேன்! காணப்படும் இந்தச் சகமெல்லாம் எவனோடு பேதமின்றி இருக்கிறதோ அந்த விஷ்ணுவுக்கு வந்தனஞ் செய்கிறேன்! யாவற்றுக்கும் ஆதியான அந்த ஸ்ரீஹரி எனக்குப் பிரசன்னனாகக் கடவன் அட்சரம் என்ற பெயருடையவனாக இருக்கும். எவனிடம் பிரபஞ்சமெல்லாம் நூலில் வஸ்திரம் கலந்திருந்திருப்பது போலக் கலந்தும், நூலில் மணிகள் சேர்க்கப்பட்டிருப்பது போலச் சேர்க்கப்பட்டும் இருக்கிறதோ, அந்தத் தியானசம்யனான அச்சுதன் என்னிடம் தோன்றக்கடவன்! சர்வ ஸ்வாமியாய் சர்வ சேஷயாய் இருக்கிற அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! எவனிடம் சகலமும் படைப்புக் காலத்தில் உண்டாகுமோ, எவன் சகல சரீரனாகவும், சகல ஆதாரமாகவும் இருக்கிறானோ, அந்த சுவாமிக்குப் பலமுறைகள் தெண்டனிடுகிறேன். யாவுமே எம்பெருமானது விபூதியாய், அவனைப் பற்றியே நிற்பதும் இயல்வதுமாய் சற்றேனும் சுதந்திரமில்லாமல் இருப்பதைப் பற்றியே எம்பெருமானை யாவும் என்றும் அவனன்றி வேறொன்றுமில்லை என்றும் அவனுள்ளேயே சொருகித் தன்னையும் அனுசந்தித்தபடியாகும். இதுவே விசிஷ்õத்துவைதம். ஸ்ரீஅனந்தன் எங்கும் ஆன்மாவாய், அகமும், புறமும் வியாபித்து ஞானானந்தமயனாய் நிறைந்திருப்பதால், நானும் அவனாகவே இருக்கிறேன். ஆகையால் என்னிடத்திலிருந்தே யாவும் உண்டாயிற்று. நானே யாவுமாக இருக்கிறேன். எப்போதும் இருக்கிற என்னிடத்திலே எல்லாம் இருக்கின்றன. நானே அவ்யயனாயும், நித்தியனாயும் வேறொரு ஆதாரமின்றி தன்னிலேயே தானாக இருக்கும் பரமாத்மாவாக இருக்கிறேன். நான் படைக்கும் முன்பு பிரமம் என்ற பெயரையுடையவனாக இருந்தேன். அப்படியே பிரளய காலத்திலும் எல்லாம் உள்ளே ஒடுங்கும்படியான பரமபுருஷனாக இருப்பேன்! என்று பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தான்.

—————

20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்

சர்வ காரணனும் சர்வாத்மகனுமான ஸ்ரீவிஷ்ணுதேவன் தன்னையே சரீரமாகக் கொண்டு
உள்ளும்புறமும் வியாபித்துப் பூரணமயமாக இருப்பதால் விஷ்ணுமயமாகத் தன்னையே பிரகலாதன் நினைத்து,
விஷ்ணுவல்லாத பொருள் எதையுமே காணாமையால், திரிகுணாத்மகமாய் அனாதிப் பிரகிருதி வாசனாமலினமாய்,
மற்றக் காலத்திலே தோன்றுகின்ற ஆன்ம ஸ்வரூபத்தை மறந்தான்.
தான் அவ்யயனும் நித்தியனுமான பரமாத்மாவுக்குச் சரீர பூதராய், தன்மயர்ணனை நினைத்தான்.
இவ்விதமான யோகாப்பியாசப் பிரபாவத்தால் கிரமக் கிரமமாகச் சகல சருமங்களிலிருந்தும் விடுபட்டவனாய்
அந்தியந்த பரிசுத்தனான பிரகலாதனின் அந்தக்கரணத்திலே ஞானமயனும் அச்சுதனுமான பகவான் ஸ்ரீவிஷ்ணுவே பிரகாசித்தருளினான்.

யோகப் பிரபாவத்தினாலேயே பிரகலாதன் விஷ்ணு மயமானதால், அந்தப் பாலகனின் உடல் கட்டியிருந்த
நாகபாச பந்தங்கள் அனைத்துமே கணத்தில் சின்னாபின்னமாகச் சிதறுண்டு விழுந்தன.
பிறகு சமுத்திரமானது கரைகளை மூழ்த்தியது. அப்போது, பிரகலாதன் தன்மீது போடப்பட்டிருந்த மலைகளையெல்லாம்
விலக்கித் தள்ளிக்கொண்டு, சமுத்திரத்தை விட்டு வெளியில் வந்து, ஆகாயங்கவிந்த உலகத்தைப் பார்த்தும் லவுகித் திருஷ்டியினால்,
தான் பிரகலாதன் என்றும் இரணியனின் மகன் என்றும் நாமசாதிபாதி விசேஷண சமேதனாக மறுபடியும் தன்னை நினைத்தான்.
புத்திசாலியான அந்த அசுர சிகரமணி ஏகாக்கிர சித்தமுடன், மனோவாக்குக் காயங்களைச் சுவாதீனமாக்கிக் கொண்டு,
வியாகுலத்தை விட்டு, அநாதிப் புரு÷ஷாத்தமனான அச்சுதனை மீண்டும் துதித்தருளினான்.

பரமார்த்த பிரயோஜனமானவனே! ஸ்தூல சூட்சுமரூபனே வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருப்பவனே!
பஞ்சேந்திரியாதிக் கலைகளையெல்லாம் கடந்தவனே! சகலேசுவரனே! நிரஞ்சனனே குணங்களைத் தோற்றுவித்தவனே!
குணங்களுக்கு ஆதாரமானவனே! பிராகிருத குணம் இல்லாதவனே! சகல சற்குணங்களையும் கொண்டவனே!
மூர்த்தமும் அமூர்த்தமும் ஆனவனே! மஹாமூர்த்தியான விசுவரூபமும், சூத்ம மூர்த்தியான வியூக ரூபமும்,
வெளிப்படையாகத் தோன்றும் விபவ ரூபமும் அப்படி தோன்றாத, பரஸ்வரூபம் உடையவனே!
சத்துரு சங்கார காலங்களில் குரூரமாகவும் சுபாவத்தில் சாந்தமாகவும் விளங்கும் உருவமுடையவனே!
ஞான மயனாயும் அஞ்ஞான மயனாயும் இருப்பவனே! நன்மையாய் இருப்பவனே! உண்மையும் இன்மையும் கற்பிப்பவனே!
நித்திய அநித்திய பிரபஞ்ச ஆத்மகனே! பிரபஞ்சங்களுக்கம் மேற்பட்டவனே! நிருமலர் ஆஸ்ரயிக்கப்பெற்றவனே!
அச்சுதனே! உனக்குத் தண்டனிடுகிறேன். ஏகா! அநேகா வாசுதேவா! ஆதிகாரண! உனக்கு வணக்கம்!
எவன் ஸ்தூல ரூபத்தால் தோன்றுபவனும், எவன் சூட்சும ரூபத்தால் தோன்றாதவனுமாக இருக்கிறானோ,
எவன் சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, யாவற்றிலும் தானே விலக்ஷணமாக இருக்கிறானோ,
இந்த உலகம் யாவும் விஷம சிருஷ்டி காரணமாகாத எவனிடமிருந்து உண்டாயிற்றே அந்தப் புரு÷ஷாத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன்
என்று பலவாய்த் தோத்திரஞ்செய்த பிரகலாதனிடம்

ஸ்ரீஹரி பகவான் பிரசன்னனாய்ப் பீதாம்பராதி திவ்ய லக்ஷணங்களோடு அவனுக்குப் பிரத்யட்சமாய் சேவை சாதித்தான்.
அப்போது அந்தப் பரம பாகவதனான பிரகலாதன் பயபக்தியுடன் எம்பெருமானைத் சேவித்து மகிழ்ச்சியினால்
நாத்தடுமாற ஸ்ரீவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! என்று பலமுறைகள் சொல்லிப் பிரார்த்தித்தான்.

சுவாமீ! சரணாகதி செய்தோரின் துக்கத்தைப் போக்கடிப்பவரே! ஸ்ரீகேசவா! அடியேனிடத்தில் பிரசன்னமாகி
இந்தப் படியே எக்காலமும் பிரத்யக்ஷமாய்ச் சேவை தந்து ரட்சித்து அருள்செய்ய வேண்டும்! என்று பிரகலாதன் வேண்டினான்.

அப்போது விஷ்ணுபகவான் அப்பாலகனைப் பார்த்து பிரகலாதா!
நீ இதர பயன்களை இச்சிக்காமல் என்னிடத்திலேயே பரமமான ஏகாந்த பக்தியைச் செய்தபடியால், உனக்குப் பிரசன்னமானேன்.
உனக்கு இஷ்டமான வரங்களை வேண்டிக்கொள் என்று அருளிச்செய்தார்.

சுவாமி! அடியேன் தேவ, திரியக், மனுஷ்யாதி ஜன்மங்களிலே எந்த ஜன்மத்தை எடுத்தாலும்
அந்த ஜன்மங்களில் எல்லாம் உன்னிடம் இடையறாத பக்தியுடையவனாக இருக்க வேண்டும்.
மேலும் விவேகமில்லாத ஜனங்களுக்கு நல்ல சந்தன வனிதாதி போக்கிய வஸ்துக்களில் எத்தகைய ஆசையுண்டாகுமோ
அத்தகைய பிரீதிச் சிறப்பானது, உன்னை ஸ்மரிக்கின்ற அடியேனுடைய மனத்தினின்றும் நீங்காமல் இருக்க வேண்டும்!
என்று பிரகலாதன் வேண்டிக் கொள்ளவே

எம்பெருமான் அந்தப் பக்த சிகாமணியைக் கடாட்சித்து, பிரகலாதா! முன்னமே என்னிடம் பிரியாத பக்தி உனக்கு உண்டாயிருக்கிறது.
இன்னமும் அப்படியே அது அபிவிருத்தியாகும். அதிருக்கட்டும் இப்பொழுது உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்று
அனுக்கிரகம் செய்ய, பிரகலாதாழ்வான் பிரார்த்திக்கலானான்.

எம்பெருமானே! உன்னைத் துதிக்கும் அடியேனிடத்தில் மாச்சரியம் பாராட்டியதால், அசஹ்யமான அபசாரம் பண்ணினவரானாலும்
இரணியன் என்னுடைய தகப்பனார் என்பதால் அவரைப் பாவமில்லாதவராகும்படி அனுக்கிரகஞ்செய்ய வேண்டும்!
மேலும் ஆயுதங்களால் அடிக்க வைத்தும், நெருப்பிலே போட்டும், சர்ப்பங்களைக் கொண்டு கடிக்கச் செய்தும்
போஜனத்திலே விஷத்தைக் கலந்தும், நாக சர்ப்பங்களைக் கட்டி சமுத்திரத்திலே போடுவித்தும்,
பர்வதங்களால் துவைத்தும் இவ்வாறு மற்றும் பலவிதங்களான தொல்லைகளைச் செய்து உன் பக்தனான அடியேனை
அழிக்கப் பார்த்த என் தகப்பனுக்குச் சம்பவித்திருக்கின்ற அளவற்ற மகாபாவங்கள் உனது கடாட்சத்தினாலேயே நாசமாக வேண்டும்.
இதுதான் அடியேன் வேண்டும் வரமாகும்! என்றான் பிரகலாதன்.

உடனே மதுசூதனன் புன்முறுவலுடன் பிரகலாதா! என் அனுக்கிரகத்தால் நீ கேட்டவாறே ஆகும்.
சந்தேகமில்லை இன்னமும் உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்றான்.

புரு÷ஷாத்தமனே, உனது திருவடித் தாமரைகளிலே பிரியாத பக்தி உண்டாகும்படி அனுக்கிரகித்தால், அடியேன் கிருதார்த்தனானேன்.
சகல ஜகத்காரண பூதனான உன்னிடத்தில் எவனுக்கு அசஞ்சலமான பக்திச் சிறப்புண்டாகுமோ அவனுக்கு
சர்வ உத்தமமான மோட்சமும் உண்டல்லவா? அப்படியிருக்க, அவனுக்குத் தர்மார்த்த காமங்களால் ஆகவேண்டுவது என்ன? என்றான் பிரகலாதன்.

குழந்தாய்! உன் இதயம் என்னிடம் பக்தியுடன் எப்படிச் சஞ்சலமற்று இருக்கிறதோ, அப்படியே எனது அனுக்கிரகத்தால்
பரமமான மோக்ஷõனந்தத்தையும் பெறுவாயாக! என்று ஸ்ரீபகவான் அருளிச் செய்து
பிரகலாதன் பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, அந்தர்த்தானமானார்.

பிரகலாதன் மீண்டும் நகரத்துக்கு வந்து தன் தந்தையை வணங்கி நின்றான்.
இரணியன் தன் பாலகனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, உச்சிமோந்து, கண்களில் கண்ணீர் ததும்ப,
அடா குழந்தாய்! நீ பிழைத்து வந்தாயா? என்று அன்போடும் ஆசையோடும் கொஞ்சினான்.

பரமதார்மீகனான பிரகலாதனும், தன் தகப்பனுக்கும் ஆசாரியாருக்கும் பணிவிடை செய்துகொண்டு சுகமாக இருந்தான்.
சிறிது காலத்திற்குப் பிறகு, இரணியன் முன்பு நேர்ந்த பிரம்மசாபவசத்தால் பகவானிடம் துவேஷம் முற்றி,
மறுபடியும் தன் மகனான பிரகலாதனைக் கொல்ல முயன்றபோது, ஸ்ரீஹரிபகவான், அந்த அசுரனைச் சங்கரிக்க தீர்மானித்தார்.

தேவராலோ, மனிதராலோ, மிருகங்களாலோ தனக்கு மரணம் விளையக்கூடாது என்று இரண்யன் முன்பு
வரம் பெற்றிருந்தானாகையால், மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் நரசிம்ம உருவமெடுத்த
இரண்யனைக் கொல்ல வேண்டுமென்று விஷ்ணு கருதினார். இரண்யன் கோபத்துடன் தன் மகன் பிரகலாதனை நோக்கி,
உன் ஆண்டவன் இந்தத் தூணிலும் இருப்பானோ! என்று ஒரு தூணைச் சுட்டிக்காட்டி ஏளனமாகச் சிரித்து
அந்தத் தூணை எட்டி உதைத்தான். உடனே ஹரிபகவான் நரசிம்மரூபியாக அவ்வரக்கன் சுட்டிக் காட்டிய தூணிலிருந்து தோன்றி
அவ்வசுர வேந்தனைச் சங்கரித்து அருளினார். பிறகு பரம பாகவதனான பிரகலாதன், தைத்ய ராஜ்யத்தில் முடிசூட்டிக்கொண்டு,
அந்த ராஜ்ய போகத்தினால் பிராரப்த கர்மங்களைக் கழித்து புத்திர பவுத்திராதிகளைப் பெற்று
பிராரப்த கர்ம அனுபவமாகிற அதிகாரங்கழிந்தவுடன், இரண்டையும் விட்டு மோக்ஷத்தையடைந்தான்.

மைத்ரேயரே! பரமபக்தனான பிரகலாதனின் மகிமையை வணக்கமாகச் சொன்னேன்.
எவன் மகாத்மாவான பிரகலாதனின் சரிதத்தை ஒருமித்த மனத்துடன் கேட்பானோ, அவனுக்கு அப்போதே
சகல பாவங்களும் தீர்ந்து போகும். பிரகலாதனின் சரிதத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும்,
அகோராத்திர கிருதங்களான பாவங்கள் நீங்கப்பெறுவர். இதில் ஐயமில்லை. எவன் இந்தச் சரிதத்தைப் படிக்கிறானோ,
அவன் பவுர்ணமியிலும், துவாதசியிலும், அஷ்டமியிலும் புனிதமான தோத்திரத்திலே சூரிய கிரகண புண்ணிய காலத்தில்
சுவர்ண சிருங்கம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட உபயதோமுகியான பசுக்களை சற்பாத்திரத்திலே
பூரண மயமான தக்ஷணைகளோடு தானஞ்செய்த பயனையடைவான். உபயதோமுகி என்பது இருபுறத்தும் முகத்தையுடையது.
கன்றையீன்று கொண்டிருக்கும்போதே, பசுவைத் தானம் செய்வது. எவன் ஒருவன் பக்தியுடன்
இந்தப் பிரகலாதாழ்வானின் திருக்கதையைக் கேட்கிறானோ, அவனை ஸ்ரீமந்நாராயணன் பிரகலாதனைக் காத்தது போலவே,
சகல ஆபத்தையும் விலக்கிச் சர்வகாலமும் ரட்சித்து அருள்வான்.

—————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம்—இரண்டாம் பாகம் —

February 28, 2021

9. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும்
10. பிருகு, மரீசி முதலானோர் வமிசம்
11. துருவன் கதை
12. சிறுவன் துருவனின் பெருந்தவம்!
13. பிருது சக்கரவர்த்தியின் சரிதம்
14. பிரசேதசர்களின் இலட்சியம்

————-

9. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும்
பராசரர் மேலும் தொடர்ந்து கூறலானார்;
மைத்திரேயரே!
நீர் அறிந்து கொள்ள விரும்பிய பிராட்டியாரின் திருவவதார சரித்திரத்தை,
நான் முன்பு மரீசி மாமுனிவரிடம் கேட்டறிந்தபடிக் கூறுகிறேன், கேளும்.
ருத்திரருடைய அம்சமான மிகவுங்கோபமுள்ள துர்வாச மஹாமுனிவர், பூமண்டலமெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
அவர் ஒரு சமயம், மனிதர்கள் எளிதில் அடைய முடியாத வனத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது,
அங்கே ஒரு வித்தியாதர மங்கை தென்பட்டாள்.
அவளது கையில் பரிமள மிகுந்த ஒரு மலர் மாலை இருப்பதைத் துர்வாச முனிவர் கண்டார்.
அவர் அந்த மங்கையை நோக்கி, பெண்ணே! இந்தப் பரிமளம் மிகுந்த மலர் மாலையை என்னிடம் கொடுப்பாயாக என்று யாசித்தார்.
அந்த மாலையை வித்தியாதர மங்கை அவரிடம் பக்தியோடு கொடுத்தாள்.

அந்த மலர் மாலையை துர்வாசர் தமது தலையிலே சுற்றிக்கொண்டு சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, வழியிலே தேவேந்திரன் தன் வாகனமான ஐராவதத்தின் மீது பவனி வந்து கொண்டிருந்தான்,
அவனை துர்வாசர் கண்டதும் தமது சிரசில் சுற்றியிருந்த மலர் மாலையை அவிழ்த்து
யானையின் மீது அமர்ந்திருக்கும் இந்திரன் மீது விட்டெறிந்தார்.
இந்திரன் அந்த மலர் மாலையை பிடித்து, ஐராவத யானையின் மத்தகங்கள் மீது போட்டான்.
அதனால் அந்த யானை மதங்கொண்டு, அந்தப் பூமாலையை தன் துதிக்கையால் எடுத்து, முகந்து பார்த்துத் தரையில் எறிந்தது.

அதைக் கண்டதும் துர்வாசருக்கு மிகவும் கோபம் பொங்கியது. அவர் இந்திரனை நோக்கி,
அடா, வாசவா! ஸ்ரீ ஐசுவரிய கர்வத்தால் ஸ்ரீமகாலக்ஷ்மியின் வாசஸ்தலமான மலர்மாலையை அங்கீகரிக்காமற் போனாய்.
சிரசில் நான் சூடிய மாலையை நீ மதிக்காமல் தரையில் எறிந்துவிட்டாய்.
ஆகையால் உன்னுடைய ஐசுவரியங்கள் சீக்கிரம் நாசம் அடையக்கடவது!
என்னை அவமதித்த காரணத்தால் உன் உலகம் மகாலட்சுமியின் வாசம் ஒழிந்து துர்த்தசை அடையக் கடவது என்று சபித்தார்.

பிறகு இந்திரன் வெகு பரபரப்புடன் தன் யானையிலிருந்து இறங்கி, துர்வாச முனிவரின் பாதங்களில் வீழ்ந்து,
தன்னை மன்னிக்கும்படி கெஞ்சினான். அப்படியவன் வேண்டிக்கொண்டும், துர்வாசரின் கோபம் அடங்கவில்லை.

தேவேந்திரா! தயையுடைய இதயமற்றவன் நான்! என்னிடம் மன்னிக்கும் சுபாவம் இல்லை.
உனக்கு உட்பட்டுப் பின் பாட்டு பாடும் முனிவர்கள் வேறே இருக்கிறார்கள்! நான் துர்வாசன்! மற்ற முனிவர்களைவிட மாறுபட்டவன்!
கவுதமர் முதலியவர்கள், நீ முன்பு செய்த துரோகத்திற்காக உன்னைச் சபித்துப் பிறகு
உன்னுடைய விநயத்தின் காரணமாக உனக்கு தயவுசெய்தார்கள். அதுபோலவே என்னையும் நினைத்து விட்டாய்!
நான் அப்படிப்பட்டவனல்ல வசிஷ்டர் முதலிய முனிவர்கள் உன்னைச் சிறப்பாகத் துதிப்பதாலேயே உனக்கு இவ்வளவு இறுமாப்பு!
அதனால் தான் என்னை நீ அவமதித்தாய். குற்றஞ்செய்தால் தண்டிப்பது தான், நீதியே ஒழிய மன்னிப்பது என் வழக்கமல்ல!
நீ ஏன் பயந்தவனை போலக் கபட நாடகம் ஆடுகிறாய்? வந்த வழியே செல்! என்று சொல்லி விட்டுத் துர்வாச முனிவர் சென்று விட்டார்.

இந்திரனும் தன் யானையின் மீது ஏறித் தேவலோகம் சென்று விட்டான்.
கேளும் மைத்ரேயரே! அன்று முதல் மூன்று உலகங்களும் லட்சுமி கடாக்ஷமற்று, தாவரங்களுங்கூட க்ஷீணித்தன.
அன்று முதல் யாகாதி கர்மங்களும் நன்றாக நடைபெறவில்லை. தவமுனிவர்கள் நன்றாகத் தவஞ்செய்யவில்லை.
தான தருமங்களில் மக்கள் கவனஞ் செலுத்தவில்லை. மக்களிடையே சத்துவகுணம் நலிந்து லோபம் மிகுந்தது.
அற்ப விஷயத்திலும் பேராசை மிகுந்தது. அது ஏனென்றால், சத்துவகுணம் எங்கே இருக்குமோ,
அங்கே தான் திருமகள் வாசம் செய்வாள்.
சத்வகுணமும் லட்சுமி கடாட்சத்தையே அனுசரித்திருக்கும் லட்சுமி கடாட்ச மற்றவர்களிடம் சத்துவ குணமும் இராது
இந்தப்படியே திரிலோகங்களும் லட்சுமி கடாட்சம் குறைந்தவனாய் மிகவும் துர்தசையடைந்ததால்,
அரக்கர் கூட்டத்தினர் தேவர்களுக்கு தீங்கிழைக்கலானார்கள்.

அதனால் லோபாதி துர்க்குணங்களுடையவர்களாகவும், லட்சுமி கடாட்சமில்லாதவர்களாகவும்
பலமும் சத்துவமும் இல்லாமலும் இருந்த அசுரர்கள் துள்ளியெழுந்து தேவர்களுடன் போர் செய்யத் துவங்கினர்.
தேவர்கள் தோற்று, பிருமதேவனைச் சரணடைந்தார்கள்.
தேவேந்திரன் தனக்கு அசுரர்களால் ஏற்பட்டுள்ள துர்த்தசையைக் கூறினான். அதைக்கேட்டதும் பிருமதேவன்,
தேவர்களே! பராபரங்கள் என்று சொல்லப்படும் உயர்ந்தவைகளுக்கும், தாழ்ந்தனவற்றிற்கும் ஈசுவரனும்
அசுரரையெல்லாம் நாசஞ்செய்ய வல்லவனும் உற்பத்தி, ஸ்திதி, லயங்களுக்குக் காரணமானவனும்
தனக்கு ஒரு காரணமின்றிதானே சுதந்தரமாக இருப்பவனும், பிரஜாபதிகளுக்கெல்லாம் அதிபதியாக விளங்குபவனும்
ஒருவராலும் வெல்ல முடியாதவனும், முடிவற்றவனும் பிரகிருதி புருஷாக்களிடம் உட்புகுந்து காரியங்களைச் செய்பவனும்,
தனது திருவடிகளையடைந்தவரின் துன்பங்களை நீக்க வல்லவனுமான ஸ்ரீமகாவிஷ்ணுவை சரணமடையுங்கள்.
அவர் உங்களுக்கு ஷேமத்தைச் செய்தருளுவார்! என்று சொல்லி,

அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு திருப்பாற்கடலின் வடகரையிற்சென்று ஸ்ரீயப்பதியை உத்தேசித்துத்
தேவர்களுடன் துதி செய்யலானார். சர்வமயனும், சர்வ ஈசனும், முடிவற்றவனும் பிறப்பில்லாதவனும்;
சுருங்கல் முதலியவையற்றவனும் உலக ஆதாரனும் தனக்கு வேறு ஆதாரமற்றவனும்; அப்பிரமேயனும்;
பேதிக்க முடியாதவனும் சூட்சுமத்திலும் அதிசூட்சுமமானவனும் ஸ்தூலங்களில் அதிஸ்தூலமானவனும் ஆகிய
ஸ்ரீமந் நாராயணனுக்குத் தண்டனிடுகிறேன்!
அடியேன் முதலான சகல பிரபஞ்சமும் எவனிடமிருந்து தோன்றியதோ; எவனிடம் இருக்கின்றதோ;
எவனிடம் லயமாகுமோ; சர்வ பூதங்களும் எவனுடைய சரீரமோ எந்தத் தேவன் மேலானவர்களுக்கும் மேலானவனோ;
எவன் இருபத்து நான்கு தத்துவங்களுக்கும் பரனான புருஷனுக்கும் மேற்பட்டவன் என்று பரமான்மா என்னும்
மோட்சத்தை அபேட்சிக்கிற யோகிகளால் மோட்சத்துக்காக நினைக்கப்படுகிறானோ எவனிடத்தில்
பிராகிருதமான சத்துவாதி குணங்களில்லையோ, தூய்மையான சகல வஸ்துக்களுக்கும் மிகவும் தூயவனான
அந்த ஆதிபுருஷன் அடியவரான எங்களுக்குப் பிரத்தியட்சமாக வேண்டும்.
கலை; காஷ்டை; நிமிஷம் முதலிய கால சூத்திரத்திற்குக் கோசரமான இடத்தில் பிராட்டி,
திவ்விய மங்கள விக்கிர சமபரி ஜனம் முதலான விபூதிகள் இல்லையோ அப்படிப்பட்ட ஸ்ரீஹரி, எங்களுக்குப் பிரசன்னமாவானாக!

எவன் பரமேசுவரனாயும் அஜனுமாக இருந்தும் எல்லோருக்கும் அந்தர்யாமியாக இருப்பதால் முக்தியடைந்த ஆன்மாவாக
உபசார வழக்காகச் சொல்லப்படுகிறானோ, அந்த ஸ்ரீமந்நாராயணனானவன் எங்களுக்குப் பிரசன்னமாவானாக!
எவன் காரணமாகவும், காரியமாகவும், காரணத்திற்குக் காரியமாகவும், காரியத்திற்குக் காரியமாகவும் இருக்கிறானோ,
அவன் பிரசன்னமாவானாக! பிரகிருதியின் காரியமான மகத்தின் காரியமான அகங்காரம் எது உண்டோ,
அதன் காரியமான தன் மாத்திரைகளும் உண்டல்லாவா? அவற்றின் காரியமான பஞ்ச மகாபூதங்கள் உண்டல்லவா?
அவற்றின் காரியமான பிரம்மாண்டத்தின் காரியமாக இருக்கிற பிரம்மனும், அவனிடத்தில் உண்டான தட்சாதிகளும் ஆகிய
இந்த லோகப் பிரவாகம் எல்லாம் எவன் தானேயாக இருக்கிறானோ, அத்தகைய எம்பெருமானை நாங்கள் சரணடைகிறோம்!

எவன் சப்தம் முதலிய சகல போக்கியங்களையும் அனுபவிப்பவனாகவும், சப்தம் முதலிய அனுபவப் பொருளாகவும்,
சகலப் பிரபஞ்சங்களுக்கும் சிருஷ்டி கர்த்தாவாகவும், சிருஷ்டி காரியமாகவும், சர்வ சரீரகனாவும் இருக்கிறானோ
அப்படிப்பட்ட கர்த்தனை நாங்கள் வணங்குகிறோம்! விசுத்த ஞானமயமும் அஜமும் அட்சரமும் அவ்யயமும் அவ்யக்தமுமாய்த்
தூலமும் சூட்சுமமுமல்லாமல், சகல விசேஷண வர்ச்சினமாக இருக்கிற அந்த பரமாத்மாவான விஷ்ணு சொரூபத்தை வணங்குகிறோம்!
பரப்பிரும்ம சொரூபனான அந்தப் புருஷோத்தமனுடைய பதினாயிரத்தில் பதினாயிரம் அம்சமான ஏகதேசமான அம்சத்தில்,
சகல பிரபஞ்ச சக்தியும் இருக்கிறதோ, அந்த அவ்யனுக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்?

எப்போதும் தியானத்தில் இருக்கிற யோகிகள் தங்களுடைய பாவ புண்ணிய ரூபமான கர்மங்கள் நசித்தவுடன்
எந்தச் சொரூபத்தைப் பிரணவப் பொருளாகக் காண்கின்றனரோ,
எந்த சொரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் நானும் சங்கரனும் அறியமாட்டாமோ,
தனக்கு முன்பு யாரும் இன்றி தானே யாவற்றுக்கும் முன்னாக இருக்கிற எந்தத் தேவனுடைய சக்திகள்
பிரம்ம விஷ்ணு சிவாத்துமகங்களாகி சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்யுமோ அந்த
ஸ்ரீமகாவிஷ்ணுவினுடைய சொரூபத்திற்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்.

சர்வேசுவரா! சர்வபூத சொரூபா! அச்சுதா! ஸ்ரீவிஷ்ணுபகவானே! உனது திருவடித்தாமரையை நம்பியிருக்கும்
அடியோர்களுடைய கண்களுக்கு எதிரே பிரசன்னமாவீராக! என்று சதுர்முகப் பிருமதேவன் துதித்தார்
மற்ற தேவர்களும் எம்பெருமானைத் தெண்டனிட்டு, தேவதேவ! எங்கள் முன் பிரசன்னமாகிச் சேவை சாதித்தருள வேண்டும்!
எம்பெருமானே ! இரண்யகர்ப்பனும் ருத்திரனும் உன்னுடைய பரமசொரூபத்தை மெய்யாக அறியமாட்டார்கள்.
ஜகத்நிவாசனாய் எங்கும் நிறைந்தவனான உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! என்று துதி செய்தார்கள்.
அதைக்கண்ட பிருகஸ்பதி முதலான தேவரிஷிகளும் துதி செய்வாராயினர்.

ஆதியாயும், யக்ஞ புருஷனாயும், சகல யக்கியங்களால் ஆராதிக்கத் தக்கவனாயும், பூர்விகர்களுக்குப் பூர்விகனாவும்,
ஜகத்தை சிருஷ்டிக்கிற பரமேஷ்டிக்குத் தந்தையாயும், இன்னபடி என்று
சிறப்பிக்கப்படக்கூடாதவனாயும் இருக்கிற ஸ்ரீயப்பதிக்குத் தெண்டன் இடுகிறோம்.
ஆறுகுண சம்பன்னனே! முற்பட்டவைகளுக்கும் பிற்பட்டவைகளுக்கும் அதிபதியானவனே! பாக்கிய சொரூபியே!
அழிவற்றவனே! உன்னுடைய திருவடித் தாமரைகளைச் சரணமாகப் பற்றிய அடியேங்கள்மீது கிருபை கொண்டு சேவை சாதிப்பாயாக!
எம்முன் இந்தப் பிரமதேவனும், ஏகாதச ருத்திரர்களுடன் இந்த மகாதேவனும், துவாதச ஆதித்தர்களுடன்
இந்தப் பூஷாவும், திரேதாக்கினிகளோடு இந்த அக்கினியும் அசுவினி தேவதைகளும் வசுக்களும் மருத்துகளும்,
விசுவ தேவதைகளும், சாத்தியரும்; மற்றுமுள்ள தேவகணங்களுடன் இந்தத் தேவேந்திரனும்
அசுர சேனைகளால் ஜெயிக்கப்பட்டு உன் திருவடித் தாமரைகளையே தஞ்சமாகப் பற்றித் தெண்டன் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைக் கண்ணோக்கம் காட்டி அருள்செய்ய வேண்டும் பரமாத்மா! என்று தேவரிஷிகள் துதித்தார்கள்.

அப்போது எம்பெருமானான ஸ்ரீமகாவிஷ்ணு சக்கராதி லட்சணங்களுடன் அத்தேவ கணங்களுக்குப்
பிரத்தியட்சமாகி சேவை தந்து அருளினார். இவ்விதம் திருவாழித் திருச்சங்குடன் திவ்விய மங்கள விக்கிரகாதிகளையுடையவராய்,
தேஜோராவியாய்ச் சேவை சாதித்த எம்பெருமானைச் சதுர்முகப் பிருமாவும் மற்ற தேவர்களும் சேவித்து
ஆனந்தத்தால் கண்கள் மலர்ந்து, அதிசயத்தால் அடிக்கடி கீழே விழுந்து வணங்கி எம்பிரானைத் துதிக்கலானார்கள்.

சுவாமி! அநந்தமான தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமின்றி சமமான அனுக்கிரகம் செய்பவன் நீ!
பிரமனும் ருத்திரமூர்த்தியும் இந்திரனும் அக்கினியும் வாயுவும் வருணனும் ஆதித்தனும் யமனும் வசுக்களும் மருத்துக்களும்
விசுவதேவர்களும் மற்றும் இங்கு வந்திருக்கிற சகல தேவர்களும் நீயே! ஏனெனில் நீயே அனைவரிடமும் இருந்து நடத்துகிறாய்,
ஆத்மாவுக்குக் கரணங்கள் போல எல்லோரும் உனக்குச் சேஷபூதராக இருக்கிறார்கள்.
அன்றியும் உன்னுடைய ஆராதனையான யாகங்களும் சகலவேத மூலமான பிரணவமும் நீ!
இவ்விதமான சகல ஆராதனைகளையும் ஏற்று மனமிரங்கிக் காப்பவனும் நீ! எல்லாவற்றையும் அறிபவனும் நீயே!
எல்லாவற்றாலும் அறியப்படுவதும் நீயே! உன்னிடமே அகிலப்பிரபஞ்சமும் நிற்கின்றது.
அடியேங்கள் அசுரர்களால் ஜயிக்கப்பட்டு மிகவும் விசனமடைந்து, சர்வலோக கரணியனான உன்னைச் சரணமடைந்தோம்.
சகல பாபநாசகரனான உன்னைச் சரணமடையுமளவு தான் புருஷனுக்கு உபத்திரவமும் விஷயா பிலாஷையும்
மோகமும் துக்கமும் உண்டாகியிருக்கும். தயா சமுத்திரனே! சரணாககரான எங்கள் முன் பிரசன்னமாக வேண்டும்,
என்று கைகூப்பித் தொழுதார்கள். அப்போது சர்வக்ஞனான எம்பெருமான் முகம் மலர்ந்து அனுக்கிரகம் புரிந்து அருள்புரியலானார்.

தேவதைகளே! எனது தேஜஸ் சிறப்பினால் உங்களுடைய பல, சத்துவ, தேஜோ தைரியங்களை
அபிவிருத்தியடையச் செய்கிறேன். அசுர தைத்தியர்களோடு நீங்கள் ஓர் உடன்பாடு செய்து கொண்டு
திருப்பாற்கடலில் சகல அவுஷதிகளையும் போட்டு, மந்தர மலையை மத்தாகவும் வாசுகியைக் கடையும் கயிறாகவும் செய்து கொண்டு
அமிர்தத்தை அடையவேண்டிக் கடையுங்கள்.
அதனால் உண்டாகும் பயனை நாம் இரு தரத்தாரும் சரியாகப் பங்கிட்டுக் கொள்வோமென்று அந்த தைத்திரியர்களிடம் பேசி,
அவர்களை உங்கள் வசம் செய்து கொள்ளுங்கள். இவ்விதமாக, நீங்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும்போது
உண்டாகும் அமிர்தத்தை நீங்கள் பானஞ்செய்து நீங்களே மகா பலசாலிகளாகி அமரர்களாவீர்கள்!
நான் அந்த அமிர்தம் அசுரர்களுக்குக் கிடைக்காதவாறு செய்கிறேன்.
இந்தச் செயலில் உங்களுக்கு வேண்டிய சகாயங்களைச் செய்கிறேன் என்று மகாவிஷ்ணு கூறினார்.

அதைக் கேட்டு தேவர்கள் மகிழ்ந்து, சுவாமியின் சன்னதியிலிருந்து விடைபெற்றுச் சென்று,
தங்களுடைய விரோதிகளான அசுரர்களோடு சாம உபாயத்தினால் சமாதானம் செய்து கொண்டு,
அமிர்தம் கடைவதில் ஒன்றுபட்டார்கள். இருதரப்பினரும் திருப்பாற்கடலில் அமிர்தம் கடைவதில் முனைந்தார்கள்.
சகல மூலிகைகளையும் கொண்டு வந்து, சரத்கால மேகத்தைப் போல மிகவும் வெண்மையாக இருக்கும்.
திருப்பாற்கடலில் போட்டு, மந்தரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு,
அதிக உற்சாகத்தோடு கடையத் துவங்கினார்கள். அப்பொழுது எம்பெருமானான விஷ்ணு ஒரு தந்திரம் செய்து,
வாசுகி சர்ப்பத்தின் வாலைத் தேவர்கள் பிடிக்கும்படியும் அசுரர்கள் அதன் தலையைப் பிடிக்கும்படியும் செய்தார்.
அதன் விளைவாக வலுவும் பராக்கிரமங்களும் மிக்க அசுரர்கள் விஷாக்கினிச் சுவாலையுடன் கூடிய
வாசுகி என்ற பாம்பின் பெருமூச்சுக் காற்றினால் தேஜசு குறைந்து, பலவீனர்களானார்கள்.
அந்தக் கொடிய பாம்பின் சுவாச வேகத்தினால் மேகங்கள் அடித்துத் தள்ளப்பட்டு அதன் வால் பக்கமாகச் சேர்ந்த
அம்மேகங்கள் பெருமழை பொழியவே, தேவர்கள் அம்மழைத் திவலைகளால் களைப்பு நீங்கிச் சுகமடைந்தார்கள்.

அப்பொழுது ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலின் மையத்தில் மகா கூர்மரூபந்தரித்து, (ஆமை உருவம் தரித்து)
மந்திர மலைக்கு ஆதாரமாக இருந்து அதைச் சுழலச் செய்யச் சாதகமாக இருந்தார்.
மேலும் வேறொரு திருமேனியுடன் அசுரர்களின் பக்கத்திலே நின்று சங்கு, சக்கராதி திவ்விய ஆயுதங்களைத் தரித்து
வாசுகியின் வாலையும், தலையையும் பிடித்து இடமும் வலமுமாக இழுத்துக் கடைந்தார்.
அதுமட்டுமல்ல, அவர் மிகவும் பெரியதான ஒரு திவ்விய உருவமெடுத்து, அந்த மந்த மலையின், மேற்புறத்தை ஆக்கிரமித்து,
அதைப் பலப்படுத்தியருளினார். பின்னர் விஷ்ணுபகவான், தேவரும், அசுரரும் அறியமாட்டாத அதிரகசியமான
வேறொரு சொரூபத்தால் தேவர்களுக்கும் தைரியவுற்சாகங்களை அபிவிருத்தி செய்து கொண்டிருந்தார்.
இவ்விதமாக ஸ்ரீயப்பதியின் சகாயத்தைக் கொண்டு, தேவர்களும் அசுரர்களும் கடைந்த திருப்பாற்கடலிலிருந்து
சகல தேவர்களாலும் பூஜிக்கத்தக்க காமதேனு உற்பத்தியாயிற்று. அதை கண்ட அசுரரும் தேவரும் மகிழ்ந்தனர்.

பின்னர் சித்தர்களும் மோகத்தால் கலக்கமுற்று அதிசயிக்க சகலலோக மோகினியான வாருணிதேவி,
மோனமயக்கத்தால் சுழலும் கண்களுடன் தோன்றினாள். மீண்டும் மந்திரமலையால் கடையப்பட்ட
திருப்பாற்கடலிலிருந்து அபூர்வமான திவ்வியப் பரிமள சுகந்தத்துடன் பாரிஜாத விருட்சம் தோன்றியது.
அதன்பிறகு ஜகன்மோகன ரூபலாவண்யமுள்ள அற்புதமான அப்சரஸ்திரீகளும்,
குளிர்ச்சியடைய கிரணங்களைக் கொண்ட சந்திரனும் தோன்றினர். அந்தச் சந்திரனை ருத்திரமூர்த்தி எடுத்துக்கொண்டார்.
பிறகு பாற்கடலில் உற்பவமான ஆலகால விஷத்தைச் சிவபெருமானும் நாகேந்திரர்களும் கிரகித்துக் கொண்டார்கள்.
அதன் பிறகு, பகவதம்சமான தன்வந்திரி என்ற தேவன் வெண்மையான ஆடைகளையும், மலர் மாலைகளையும் அணிந்து,
அமிர்தம் நிறைந்த கமண்டலத்தைக் கையிலே ஏந்திய வண்ணம், அந்தத் திருப்பாற்கடலிலிருந்து உதயமானான்.
அமிர்த கலசத்தோடு தோன்றிய அந்தத் தேவனைக் கண்ட தேவர்களும் அசுரர்களும் மனக்களைப்பு நீங்கி மகிழ்ந்தார்கள்.

பிறகு அதியற்புதமாகவும், அபூர்வமாகவும், திவ்வியப் பிரகாசச் சிறப்போடும் மலர்ந்த செந்தாமரை மலரை ஆசனமாகக் கொண்டும்,
தாமரை மலர்களைத் திருக்கரங்களில் தரித்து கொண்டும், மகாலட்சுமி வடிவமான ஜகன்மாதாவான பெரிய பிராட்டியார்
திருவவதாரஞ் செய்வதைக் கண்டு, முனிவர்களெல்லாம் மகிழ்ந்து ஸ்ரீசூக்தங்களைக் கொண்டு துதித்தார்கள்.
அப்போது பிராட்டியின் சன்னதியில் விசுவாவசு முதலிய கந்தருவர்கள் கீதங்களைப் பாடினார்கள்.
கிருதாகி முதலிய அப்சரசுகள் நடனமாடினார்கள். கங்கை முதலிய மகாநதிகள் தங்கள் தூய நன்னீரைக் கொண்டு,
பிராட்டியின் திருமஞ்சனத்திற்குச் சேவை செய்தன. திக்கு கஜங்கள் நவரத்தின கசிதமான பொற்கலசங்களில்
அந்த நத நீரை எடுத்து, பிராட்டிக்குத் திருமாலையொன்றைத் தாயாருக்குச் சமர்ப்பித்து விசுவகர்மன் ர
த்தினாபரணங்களைத் தாயாரின் திருமேனியிலே சாற்றினான். இவ்விதமாக அவரவர் செய்த கைங்கரியங்களைத்
திருவுள்ளம் பற்றிப் பிராட்டியார் திருமஞ்சனம் செய்தருளி, திருவாபரணம் திருமாலை முதலியவற்றைச் சாற்றிக்கொண்டு,
மூவரும் தேவரும் பார்த்திருக்க விஷ்ணுபெருமானின் திருமார்பில் எழுந்தருளினாள்.

பிறகு பெரிய பிராட்டியார் அகங்குளிர்ந்து கடாட்சித்ததால் தேவர்கள் மகிழ்ந்தார்கள்.
அசுரர்களோ பெருமானிடத்தில் பக்தியற்றவர்களாக இருந்ததால் பிராட்டியாரின் கடாட்சத்தை இழந்து தீன ஸ்திதியை அடைந்தார்கள்.
இப்படியிருக்கும்போது அசுரர்களான தைத்திரியர்கள், தன்வந்திரியின் கரத்திலிருந்த அமிர்த கலசத்தைப்
பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டார்கள். அப்போது ஸ்ரீமந்நாராயணன் ஜகன்மோகனகரமான மங்கையுருவமெடுத்து,
அசுரர்களை மயக்கியிழுத்து, வஞ்சித்து அமிர்தம் அவ்வசுரர்களுக்கு எட்டாதபடி செய்து அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தார்.
இவ்விதம் பகவத்கிருபையினால் கிடைத்த அந்த அமிருதத்தைத் தேவர்கள் அருந்தியதால் பலம் பெற்று விளங்கினார்கள்.
அதைக்கண்டு கோபங்கொண்ட அசுரர் தைத்ய தானவர்கள் பலவித ஆயுதங்களை ஏந்தித் தேவர்களுடன் போர் புரிந்தார்கள்.
அமிர்தபானஞ்செய்த அமரர்களோ, அசுரர்களுடன் தைரியமாகப் போரிட்டு, அவர்களைப் பாதாளத்திற்குத் துரத்தினார்கள்.
பிறகு தேவேந்திரனும் தேவர்களும் ஸ்ரீயப்பதியை வணங்கி விடைபெற்று தேவலோகம் சென்று
சுகபோகங்களை இடையூறின் அனுபவித்து வரலானார்கள்.

முனிவரே! அப்போது சூரியன் பிரகாசமான கிரணங்களுடன் தன் வழியில் மாறாமல் சஞ்சரித்து வந்தான்.
மற்றுமுள்ள கிரகங்களும் நட்சத்திரங்களும் தம் வழியில் மாறாமல் சஞ்சரித்தன. அக்கினியும் வலஞ்சுழித்தது.
சகல ஜனங்களும் தரும சிந்தையுடையவராய்ச் சுகமாக வாழ்ந்தார்கள். இவ்விதம் மூன்று உலகங்களும் லக்ஷ்மிகடாட்சம் பெற்றன.
இப்படியிருக்குங் காலத்தில் தேவேந்திரன் தன் பதவியை அடைந்து மகாலட்சுமியான பிராட்டியைத் துதித்துத் தோத்திரம் செய்யலானான்.
சகல உலகத்திற்கும் தாயாராய், திருப்பாற்கடலில் திருவவதாரம் செய்தவளாய், மலர்ந்த தாமரையைப் போன்ற திருக்கண்களுடையவளாய்,
திருமாலின் திருமார்பில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவிக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன்.
தாமரை மலரில் வீற்றிருந்து, தாமரை மலரைத் திருக்கையில் தரித்து, தாமரை மலர் போன்ற திருவிழிகளுடன்
தாமரை மலரையொத்த திருமுக மண்டலமுள்ளவளும், உந்தித் தாமரை பூத்தவனின் திருவுள்ளத்திற்கு
உகந்தவளுமான ஸ்ரீதேவியைச் சேவிக்கிறேன்! உலகங்களைத் தூய்மை செய்து அருள்கின்ற தாயே,
சித்தியும் சுவாகையும் சுதையும் சொதையும் சந்தியும் ராத்திரியும் பிரபையும் மேதையும் சிரத்தையும் சரஸ்வதியும் எல்லாம் நீயே!
சகலமங்கள சொரூபிணியான தாயே! யக்ஞவித்தை என்கின்ற கர்ம மீமாம்சையும், மகாவித்தையென்கின்ற
இந்திர ஜாலவித்தையும் குஹ்ய வித்தை என்கின்ற வேதாந்த வித்தையும் நீயே!
தர்க்க வித்தையும், வேத வித்தையும் கிருஷிகோரக்ஷண வாணிப வித்தையும், தண்டநீதி வித்தையும் நீயே!
இவ்விதம் சாந்தங்களாகவும் அசாந்தங்களாகவும் இருக்கிற உருவங்களைக் கொண்டு மூன்று உலகங்களையும் நீயே நிறைந்திருக்கிறாய்.
தாயே! சகல யக்ஞ சொரூபனாகவும், மகா யோகிகளுக்கும் தியானித்து அறியத்தக்க தேவதேவனுமான கதாதரனின்
திருமேனியில் உன்னைத் தவிர வேறு யார்தான் வீற்றிருக்க முடியும்? உலகமாதாவே!
உன் கடாட்சத்தை இழந்த போது மூன்று உலகங்களும் நாசமடைந்தவை போலாகித் திரும்பவும்
உனது கடாட்சத்தைப் பெற்றதால் சவுபாக்கியங்களைப் பெற்றன. தாயே! கருணை நிறைந்த
உனது கடாட்ச வீட்சண்யத்தாலே பிராணிகளுக்கு
பாரியா, புத்திர, பந்து, மித்திர, கிருக, ÷க்ஷத்திர, தன வாகனாதிகள் எப்பொழுதுமே உண்டாகின்றன.

எம்பெருமாட்டியே! உன் கடாட்சம் பெற்றவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் அதிகாரமும் சத்துரு வெற்றியும் சுகமும் கிடைப்பது அரிதல்ல.
பிராட்டியே! சகல பிரபஞ்சத்துக்கும் நீயே அன்னை! தேவதேவனான நாராயணனே தந்தை! தாயே!
நீங்கள் இருவரும் சேர்ந்தே சராசர ஸ்வரூபமான இந்த பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கிறீர்கள்.
ஸ்ரீவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் தாயே! அடியேங்களது புத்திர, மித்திர வர்க்கங்களையும் பசுக்களையும்,
பூஷணங்களையும் ஒருநாளும் பிரியாது இருந்தருள வேண்டும். யாவற்றையும் தூய்மையாக்கவல்ல தாயே;
எங்களுடைய தனகோசத்தையும் தொழுவத்தையும், இல்லங்களையும், உடலையும், களத்திரத்தையும்,
ஒருநாளும் பிரியாமல் இருந்தருள வேண்டும். நிர்மலையான தாயே! உன் கடாட்சம் தூரமானால்
மக்கள் சவுசீல மகாகுணங்களும் தன தானியமும் இல்லாமற் போவார்கள்.
குணக்குறையுடையோராலும் உன் கடாட்சம் பெற்றவர்கள். எல்லா சவுபாக்கியங்களையும் பெற்றுப் பிரபுக்களாக வாழ்வார்கள்.

ஸ்ரீவிஷ்ணு வல்லபையான தாயே! உன் கருணைக்குப் பாத்திரமானவனே குணவான்; புண்ணியவான்; புத்திமான். சூரன்,
பராக்கிரமசாலியாவான்! ஜகத்தையெல்லாம் வளர்க்கும் தாயே! நீ வெறுத்தால், ஒருவனுடைய வாய்மை, சமதர்மம்
முதலிய சற்குணங்களும் துர்க்குணங்களாகி விடும். உனது திருக்கல்யாண குணங்களை
நான்முகப் பிரமனாலும் துதிக்க இயலாதே அப்படியிருக்க அடியேன் எப்படிப் புகழ்வேன்?
ஆயினும் தாயே கருணை கூர்ந்து எம்மை விட்டுவிடாமல் காத்தருள வேண்டும் என்று தேவேந்திரன் துதித்தான்.
அப்பொழுது, எங்கும் நிறைந்தவளான ஸ்ரீதேவிப்பிராட்டியார் திருவுள்ளம் உவந்து புரந்தரன் முன்பு தோன்றி,
தேவேந்திரா! நீ செய்த வழிபாட்டில் நான் மகிழ்ந்து உனக்கு வரமளிக்க வந்தேன்.
உனக்கு வேண்டிய வரங்களைக் கேள் என்று அருளிச்செய்தாள். தேவேந்திரன் உடனே ஸ்ரீதேவியை வணங்கித் தாயே,
நீ திரிலோகத்திலும் இடைவிடாமல் எழுந்தருளியிருக்க வேண்டும். எவனருகிலும் இந்தத் தோத்திரத்தினால் உன்னைத் துதித்தால்
அவனை நீ ஒருநாளும் கைவிடாமல் காத்து ரட்சிக்க வேண்டும்! என்று இரண்டு வரங்களைக் கொடுத்தருளும்படி வேண்டினான்.
அவன் வேண்டிய பிரார்த்தனையை ஸ்ரீதேவிப்பிராட்டியார் ஏற்றுக்கொண்டு, அமரேந்திரா!
நீ விரும்பிய வண்ணம் ஆட்சிபுரியும் உனது உலகத்தை விட்டு நான் நீங்குவதில்லை.
எவன் தினந்தோறும் காலை மாலைகளில் இந்த ஸ்ரீ தோத்திரத்தால் என்னைத் துதிக்கிறானோ,
அவனுக்கு நான் அருள்புரிகிறேன்! என்று இரண்டு வரங்களைத் தந்தருளினாள்.

மைத்ரேயரே!
பூர்வத்தில் ஸ்ரீதேவி, பிருகு முனிவருக்கு கியாதி என்ற மங்கையினிடத்தில் அவதரித்தாள் என்று சொன்னேனல்லவா?
பிறகு அமிர்தங்கடைந்த காலத்தில், திருப்பாற்கடலிலும் அவதரித்தாள். இதுமட்டுமல்ல,
உலகநாதரான ஜனார்த்தனன் எப்போதெப்போது உலகங்களில் அவதரிப்பானோ, அப்போதைக்கப்போது ஸ்ரீதேவியும் அவனுடன்கூட,
அந்த அவதாரப் பயன்பெற, அவதாரம் செய்து அருள்வாள்.
முன்பு ஸ்ரீமந்நாராயணன் அதிதியின் குமாரனாக அவதரித்தபோது ஸ்ரீதேவிப்பிராட்டியார் பதுமை என்ற திருப்பெயரோடு அவதரித்தாள்.
விஷ்ணு, பரசுராமனாக அவதரித்தபோது இவள் தரணியாக அவதரித்தாள்,
அவன் சக்கரவர்த்தித் திருமகன் ராமனாக அவதரித்தபோது இவள் சீதா பிராட்டியாக அவதரித்தாள்.
அந்த எம்பெருமான் கண்ணனாக அவதாரம் செய்த போது இவள் ருக்மணியாக அவதரித்தாள்.
இதுபோலவே மற்றைய அவதாரங்களிலேயும் இப்பிராட்டி, பெருமாளை விட்டு பிரியாமல் கூடவே அவதரித்துக் கொண்டிருப்பாள்.
எம்பெருமான் தேவதா சொரூபத்தோடு அவதரித்தால் ஸ்ரீதேவியும் அதற்கேற்ற தெய்வத் திருமேனியுடன் அவதரிப்பாள்.
மனுஷ்ய சொரூபத்தோடு பெருமாள் அவதரித்தால் தேவியும் மனுஷ்ய ரூபத்தோடு அவதரிப்பாள்.

மைத்திரேயரே!
ஸ்ரீமகாலக்ஷ்மியின் இந்த திருவவதாரத்தை எந்த மனிதன் பக்தியுடன் பாராயணம் செய்கிறானோ,
எவன் பக்தியோடு கேட்கிறானோ, அவனுடைய இல்லத்தில் பெரிய பிராட்டியாரான ஸ்ரீதேவி என்றும் பிரியாமல் எழுந்தருளியிருப்பாள்.
எந்தக் கிருஹங்களிலே இந்த ஸ்ரீதேவியின் சரித்திரம் தினந்தோறும் படிக்கப்படுகிறதோ,
அந்தக் கிருகங்களில் கலகத்திற்கு ஆதாரமான வறுமை இராது. ஸ்ரீதேவி, முன்பு பிருகு முனிவரின் புத்திரியாகிப்
பின்னர் மீண்டும் திருப்பாற்கடலில் அவதாரஞ்செய்த விதத்தை உமக்கு அறிவித்தேன். சகல ஐசுவரிய காரணமாக,
இந்திரனால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை யாராகிலும் தினந்தோறும் பக்தியுடன் படிப்பார்களானால்
அவர்கள் ஒருக்காலும் அசுபத்தை அடையமாட்டார்கள். சர்வாபீஷ்டங்களும் நிறைவேறி அவர்கள் சிறப்பாக வாழ்வார்கள்.

————-

10. பிருகு, மரீசி முதலானோர் வமிசம்

பராசர மகரிஷியே! உங்கள் தயவால் ஸ்ரீதேவியின் திருவவதார வைபவத்தை அறிந்து கொண்டேன்.
இனிமேல் பிருகு முதலானோருடைய வமிச வரலாற்றைக் கூறியருள வேண்டும் என்று மைத்ரேயர் வேண்டினார்.

பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார். மைத்ரேயரே!
பிருகு முனிவருக்குக் கியாதி என்ற பத்தினியிடம் ஸ்ரீவிஷ்ணு பத்தினியான லட்சுமியும்
தாதா விதாதா என்ற பிள்ளைகள் இருவரும் உண்டானார்கள் அல்லவா?
அந்தத் தாதாவும் விதாதாவும் மேரு புத்திரிகளான ஆயதி, நியதி என்னும் கன்னியரை முறைப்படியே விவாகஞ் செய்து கொண்டார்கள்.
அவர்களில் தாதாவுக்குப் பிராணன் என்கிற மகன் பிறந்தான். அவனுக்கு துதிமான் என்னும் மகன் பிறந்தான்.
அவனுக்கு அசாவான் என்ற குமரன் பிறந்தான். விதாதாவுக்கு மிருகண்டு என்று புத்திரன் உற்பத்தியானான்.
அந்த மிருகண்டுக்கு மார்க்கண்டேயன் பிறந்தான். அந்த மார்க்கண்டேயனுக்கு வேதசிரன் என்ற மகன் பிறந்தான்.
அவர்களாலே பிருகு வமிசம் உலகத்தில் பரவி வந்தது.

இந்நிலையில் மரீசி மாமுனிவருக்குச் சம்பூதி என்ற மனைவியிடம் பவுர்ணமாசன் என்ற புத்திரன் பிறந்தான்.
அவனுக்கு விரசன், பர்வதன் என்னும் இருபிள்ளைகள் பிறந்தார்கள்.
அவர்களுடைய சந்ததிக் கிரமத்தைப் பின்னால் சொல்லுவேன்.
ஆங்கிரசமுனிக்கு பத்தினியான ஸ்மாருதி என்பவள் சீனிவாலி, குரு, ராகை அனுமதி என்று சொல்லப்பட்ட
நான்கு பெண்களைப் பெற்றாள்.
அத்திரி மாமுனிவருக்கு மனைவியான அனுசூயை என்பவள் சந்திரனையும், துர்வாசரையும் தத்தாத்திரேயர் என்ற மகாயோகியையும் பெற்றாள்.
அவன் பூர்வ ஜன்மத்தில் சுவாயம்புவ மநுவந்திரத்திலே அகஸ்தியனாக இருந்தான்.
புலஹன் என்ற முனிவருக்குக்ஷமை என்பவளிடத்தில் கர்த்தமன் அர்வரீவான் சகிஷ்ணு என்ற மூன்று பிள்ளைகள் தோன்றினார்கள்.
கிரது என்னும் மாமுனிவருக்கு சன்னதி என்பவளிடத்தில், ஊர்த்துவரேதஸரும் கட்டை விரற் பரிமாணமுள்ளவரும்
சூரியப்பிரகாசிகளுமான வாலக்கில்யர் என்ற அறுபதினாயிரம் முனிவர்கள் உண்டானார்கள்.
வசிஷ்டருக்கு ஊர்ச்சை என்ற பெண்ணிடம் ரசனும், காத்திரனும்; ஊர்த்தபாகுவும் சவனனும், அனகனும் சுதபனும் சுக்கிரனும்,
ஆகிய சப்த மாமுனிவர்கள் பிறந்தார்கள்.

பிரமதேவனுக்கு மூத்த மகனான அக்கினி என்பவனுக்கு சுவாஹா என்ற பத்தினியிடம் பாகவன், பவமானன், சுசி
என்னும் பிள்ளைகள் மூவர் பிறந்தார்கள். அவர்களது சந்ததியில் நாற்பத்தைந்து பிள்ளைகள் பிறந்தார்கள்.
இவர்களும் இவர்களுடைய தகப்பன்மார்கள் மூன்று பேரும் கூடஸ்தனான அக்கினியபிமானி தேவதையும்
ஆக நாற்பத்தொன்பது பேர்களும் அக்கினிகள் என்று வழங்கப்படுகிறார்கள்.

மைத்ரேயரே!
சதுர்முகப் பிரமன் சிருஷ்டித்த அக்கினிஷ்வாத்தர் என்றும் பர்ஹீஷதர் என்றும் சொல்லப்பட்டு யாகம் செய்தவர்களும்
யாகம் செய்பவர்களுமான பிதுர்க்கணங்களைச் சேர்ந்து ஸ்வதை என்னும் பெண்மணியானவள் மேனை, வைதரணி
என்கிற இரு பெண்களைப் பெற்றாள். அவ்விருவரும் யோகப் பயிற்சியில் சிறந்து பிரமவாதிகளாய்த் திகழ்ந்தார்கள்.
இவ்விதமாக விருத்தியான தக்ஷ புத்திரிகளுடைய சந்தானக்கிரமம் சொன்னேன்.
இதை விசுவாசத்தோடு ஸ்மரணஞ் செய்த மனிதன் சந்தானமில்லதாவனாக மாட்டான்.

————-

11. துருவன் கதை

பராசரர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேய முனிவரே!
சுவாயம்புவ மநுவுக்குப் பிரியவிரதன் உத்தானபாதன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள்.
அவர்களிலே உத்தானபாதனுக்கு சுருசி, சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தார்கள்.
அப்பத்தினிகளில் சுருசி என்பவள் தான் உத்தனபாதனுக்கு மிகவும் பிரியமுள்ளவளாக இருந்தாள்.
அவளுக்கு உத்தமன் என்று வழங்கப்பட்ட மகன் ஒருவன் இருந்தான். அவன் தகப்பனுக்கு மிகவும் பிரிய மகனாக இருந்தான்.
சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு பிரியமில்லை. அந்தப் பெண்ணுக்குத் துருவன் என்ற மகன் பிறந்தான்.
அவன் நற்குண நற்செய்கைகளைக் கொண்டவன். ஒருநாள் சின்னஞ்சிறுவனான துருவன் தன் தந்தையான
உத்தானபாத மன்னனின் அந்தப்புரத்திற்குச் சென்றான். அங்கே தனது தகப்பனது மடியில் தன் சகோதரன் உத்தமன்
உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

தானும் அவனைப் போல, தன் தகப்பன் மடியில் உட்கார வேண்டும் என்று துருவன் ஆசைப்பட்டு, தந்தையின் அருகே சென்றான்.
அப்போது சுருதி தன்னருகில் இருந்ததால், துருவனின் விருப்பத்தை அரசன் ஏற்கவில்லை.
இவ்விதமாகத் தகப்பன் மடியின் மீது உட்கார வந்த சக்களத்தி மகனான துருவனைப் பார்த்து, சுருசி ஏளனமாகச் சிரித்து,
பாலனே! நீ ஏன் வீண் முயற்சி செய்கிறாய்! என் வயிற்றில் பிறக்காமல் வேறொருத்தியின் வயிற்றில் பிறந்த நீ,
இத்தகைய உயர்ந்த சிம்மாசனத்தில் இருக்க நினைப்பதா? விவேகமல்லாத நீ இந்த அரசனின் மகன் தான் என்றாலும்,
ராஜ்யலட்சுமி வாசம் புரியும் இந்தச் சிங்காசனத்துக்கு நீ தகுந்தவனல்ல. என் மகனே அதற்குத் தகுதியுடையவன்,
வீணாக ஏன் வருந்த வேண்டும். பாக்கியமில்லாத சுநீதி வயிற்றில் நீ பிறந்ததை நினைக்க வேண்டாமா? இங்கிருந்து போ!
என்று இழிவாகக் கூறினாள். அவள் பேசியதைக் கேட்ட துருவன் கோபங்கொண்டு, மனக்கலக்கமடைந்து, சரேலென்று தன் தாய் வீட்டுக்குச் சென்றான்.

கோபமாகக் கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க வந்த துருவனை அவனுடைய அன்னை சுநீதி
தனது மடியில் உட்கார வைத்துக்கொண்டு, மகனே! உன் கோபத்துக்குக் காரணம் என்ன?
உன்னை யார் சமாதானஞ் செய்வார்கள்? உன் தந்தையை யாராவது அவமதித்தார்களா? என்று கேட்டாள்.
அதற்குத் துருவன், தன் மாற்றாந்தாயான சுருசி கூறியவற்றையெல்லாம் தன் தாயிடம் சொன்னான்.
அதைக்கேட்ட சுநீதி, மகனே! சுருசி சொன்னவைகள் யாவும் உண்மைதான். நீ சொற்ப பாக்கியமுடையவன்.
ஏனென்றால் மிகவும் புண்ணியமுள்ள குழந்தை சத்துருக்களால் இப்படி தூற்றப்படுமோ?
இத்தனையும் உன்னுடைய பூர்வ ஜன்ம நற்பலனை யாராவது அபகரிக்க முடியுமா?
செய்யாத கர்ம பலனைக் கொடுக்கத்தான் யாரால் முடியும்? பாக்கியவான்களுக்கே, மகாராஜயோக்கியமான சிம்மாசனமும்,
ரதகஜதுரகபதாதிகள் போன்ற நால்வகை சேனைகளும் சுகபோகங்களும் கிடைக்கும்.
சுருசியானவள் பாக்கியசாலி! புருஷன் தன்னிடத்திலேயே பிரியமாக இருப்பதற்குப் பாக்கியஞ் செய்திருக்கிறாள்.
நானோ அவருக்கு மனைவி என்ற பெயரை மட்டுமே உடையவளாய் துக்கப்படுகிறேன். உத்தமன் புண்ணியம் செய்தவன்.
அதனால் தான் அவன் சுருசியின் மகனாகப் பிறந்தான். சொற்ப பாக்கியமுடைய நீ என் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்தாய் மகனே!
இதற்கு நாம் என்ன செய்யலாம்? எவனுக்கு எந்த மட்டும் அதிர்ஷ்டமோ அந்த மட்டிலே அவன் மகிழ்ந்திருக்க வேண்டும்.
இதுதான் புத்திமான்களின் செயல். ஆகையால் ஐசுவரியத்தை நினைத்துத் துக்கப்படாமல் இரு!

சுருசி சொன்னவைகளைக் கேட்டு உன் மனம் பொறுக்காவிட்டால் உனக்கும் அத்தகைய மேன்மையுண்டாவதற்குச்
சகல முயற்சிகளையும் புண்ணியத்தையும் செய்ய எத்தனஞ்செய். தர்மாத்மாவாய், நல்ல நடத்தையுடையவனாய்,
சர்வபூத தயாபரனாகவும், சர்வஜனமித்திரனாகவும் இருந்து கொண்டு நல்லவற்றைச் செய்து வந்தால்,
தண்ணீர் பள்ளத்தை நாடிச்செல்வது போல், சம்பத்துக்களும் குணவானான மனிதனிடத்தில் தானாகவே வந்து சேர்கின்றன என்று சொன்னாள்.

அதைக்கேட்ட துருவன், தாயே! நீ சொன்ன வார்த்தைகள் சுருசி சொன்ன கொடிய நஞ்சினால் பிளந்த
என் இதயத்தில் பதியவில்லை. ஐசுவரிய கர்வத்தால் அவளால் நிராகரிக்கப்பட்ட நான்,
மிகவும் உத்தமமான உயர்ந்த பதவியை அடைய எத்தனஞ் செய்கிறேன். பார்! புண்ணியசாலி என்ற சுருசியின் கர்ப்பத்தில் பிறவாமல்,
உன்னுடைய ரத்தத்திலே நான் பிறந்தவனானலும், என்னுடைய ஆற்றலைப் பார் என் அண்ணன் உத்தமனே
என் தந்தையின் ராஜ்யத்தை அனுபவிக்கட்டும். நான் என்னுடைய சுயசக்தியினாலே அதைவிட உயர்ந்த பதவியை அடைவேன்.
ஒருவர் கொடுத்ததைப் பெற்று மகிழாமல் நானே முயன்று, என் தகப்பனுக்கும் அசாத்தியமான மிகவும் உயர்ந்த பதவியை
எனது தவத்தினால் சம்பாதிக்கிறேன்! என்று சொல்லி தாயாரின் அனுமதியைப் பெற்று அங்கிருந்து
அதிவிரைவாகப் புறப்பட்டு தலைநகரைக் கடந்து, அருகிலிருந்த ஒரு காட்டுக்குள் சென்றான்.

அங்கே, கறுப்பு மான் தோல்களைத் தரித்து குசப்புல்லை ஆசனமாகக் கொண்டு ஏழு முனிவர்களான
சப்த ரிஷிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட துருவன் வணங்கி, முனிவர்களே!
நான் மன்னன் உத்தானபாதனுக்குச் சுநீதி வயிற்றில் பிறந்த மகன். துருவன் என்பது என் பெயர்.
நான் மிகவும் மனக்கவலையோடு தங்களது திவ்யசன்னதிக்கு வந்தேன் என்றான்.

ராஜகுமாரனே! நீயோ நாலைந்து வயதுள்ளவனாகவே இருக்கிறாய். இவ்வளவு சிறியவனான உனக்கும்
மனக்கிலேசம் உண்டாகக் காரணம் என்ன? உன் தந்தை வாழ்ந்து கொண்டிருப்பதால் உன் குடும்பத்தைக்
காப்பாற்ற வேண்டும் என்ற பாரமில்லையே! உன் ஆசைக்கு உரியபொருள் அகப்படவில்லையே என்று
மன்னன் மகனான நீ வருந்த வேண்டியுமிராது! உன் உடம்பில் எந்தவிதமான நோயும் இருப்பதாக
உன் தோற்றத்திலேயே தெரியவில்லை! அப்படியிருக்க உன் மன வெறுப்புக்குக் காரணம் என்ன? என்று சப்தரிஷிகள் கேட்டார்கள்.

என் தாய்க்குச் சக்களத்தியாகிய சுருதி சொன்ன வார்த்தைகளால் எனக்கு வெறுப்புண்டாயிற்று.
அந்த அவமானத்தாங்காமல் இங்கு வந்தேன் என்றான். துருவன் அதைக் கேட்டதும் ஏழு முனிவர்களும் ஒருவருடன் ஒருவர்
கலந்து இந்த சிறுவன் மாற்றாந்தாயின் பேச்சைப் பொறுக்கமாட்டாமல் இங்குவந்து விட்டான்.
இவனது ராஜகளையைப் பார்த்தீர்களா? இவ்வளவு சிறிய பையனுக்கும் அவமானம் பொறுக்க முடியவில்லையே, என்று பேசிக்கொண்டு,
துருவனை நோக்கி, ராஜகுமாரனே, நீ மனஸ்தாபங்கொண்டு மனம் நொந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறாய்!
உனக்கு எங்களால் ஆகவேண்டிய உதவி என்ன? என்று கேட்டார்கள்.

துருவன் அவர்களை நோக்கி, முனிவர்களே! அடியேன் ராஜ்யத்தையோ அல்லது மற்ற பொருள்களையோ விரும்புகிறவன் அல்ல.
ஆனால் பூர்வத்தில் ஒருவனாலேயும் அனுபவிக்கப்படாததாய், அபூர்வமானதாய், சகல ஸ்தானங்களுக்கும் உன்னதமானயிருக்கிற
ஸ்தானத்தை நான் அடைய விரும்புகிறேன். இந்த மனோரதம் நிறைவேறுவதற்காக உபாயத்தை எனக்கு கூறியருள வேண்டும் என்றான்.
அதற்குச் சப்தரிஷிகள் ஒவ்வொருவராகப் பின்வருமாறு கூறினார்கள்.

அரசகுமாரனே! ஸ்ரீகோவிந்தனுடைய சரணாரவிந்தங்களையடைந்து ஆராதனை செய்யாதவர்களுக்கு,
சர்வ உத்தமமான பதவி கிடைக்காது. ஆகையால் நீ பக்தியுடன், அச்சுதனை ஆராதிப்பாயாக! என்றார் மரீசி முனிவர்.
ராஜகுமாரனே! உலகநாயகனாக ஜனார்த்தனன் யாரைக் கடாட்சிக்கிறானோ அவனே, அக்ஷயமான
திவ்விய ஸ்தானத்தை உடையவனாவான். என் வாக்கு சத்திய வாக்கென்று நினை! என்றார் அத்திரி முனிவர்
ஆங்கிரசர், சராசராத்மகமான சகல பிரபஞ்சமும் எவனுடைய குட்சியில் இருக்கிறதோ,
அந்தக் கோவிந்தனுடைய சரண கமலங்களை அர்ச்சனை செய்! சர்வ உன்னதப் பதவியை அடைவாய்! என்றார்.
பிறகு, புலஹ முனிவர், எவன் பரப்பிரமமும், பரமப்பிராப்பியமாகவும் சர்வ வியாபகனுமாக இருக்கிறானோ
அந்த ஸ்ரீஹரியை ஆராதனம் செய்வதால், அத்தியந்தம் அசாத்தியமான மோட்சத்தையும் அடையலாம் என்றால்
இதர ஸ்தானங்களை அடைவதற்கு என்ன சந்தேகம்? என்றார்.
அப்புறம் கிருதுமாமுனிவர் எவன் யக்ஞங்களாலே ஆராதிக்கப்படும் புருஷனாகவும், யக்ஞ சொரூபியாகவும்,
யக்ஞங்களுக்கு அதிபதியாகவும் இருக்கும் மகா புருஷனே, அந்த ஜனார்த்தனன் திருவுள்ளங்கொண்டானானால்
அடையத் தகாத ஸ்தானமும் உண்டோ? என்றார்.
அதன் பிறகு, புலஸ்திய முனிவர், பூர்வத்திலே இந்திரன் ஜகத்பதியான எவனை ஆராதித்து சர்வ உன்னதமான
இந்திரப்பதவியை அடைந்தானோ. அப்படிப்பட்ட யக்ஞேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவை ஆராதனை செய்! என்றார்.
பிறகு வசிஷ்ட முனிவர், குழந்தாய், ஸ்ரீவிஷ்ணு பகவானை ஆராதனை செய்வாயாகில் இதுவரையில் இல்லாத
நூதனமான ஸ்தானம் ஒன்றை நீ மனத்தால் நினைத்தாலும், அதையும் சித்தமாக அடைவாய்,
அப்படியிருக்க முன்பே படைக்கப்பட்ட மூன்று உலகங்களுக்கும் உட்பட்ட மேலான ஸ்தானத்தை
அடைவதற்குச் சந்தேகம் என்ன? என்று கூறினார்.

மாதவர்களே! தாங்கள் ஆராதக்க வேண்டிய அச்சுதனை
அடியேனுக்குத் தெரியும்படி செய்தீர்கள், அவ்வெம்பெருமான் கிருபை செய்யும்படி ஜெபிக்க வேண்டிய மந்திரத்தையும்
ஆராதனை செய்யும் முறைகளையும் அடியேனுக்கு அறிவிக்க வேண்டும் என்று துருவன் கேட்டான்.

ஓ ராஜபுத்திரனே!
ஸ்ரீவிஷ்ணுவிடம் பக்தி செய்ய விரும்பும் மனிதன் முதலாவதாக விஷய அபிலாøக்ஷகளை நீத்து விட்டு
மனதை நிர்மலமாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மனதை முகுந்தனுடைய சரணாரவிந்தங்களிலே
தன்னுள்ளே நிச்சலமாகச் சேர்ந்து, வேறு நினைவில்லாமல் அந்தத் திருவடிகளையே பாவித்துக்கொண்டு,
தூயவனாய், வியஷ்டி சமஷ்டி ரூபமாய் பிரகிருதியும் புருஷனும் சரீரமாகவுமுள்ள சுத்த ஞானமயனான
வாசுதேவனுக்கு தெண்டன் சமர்ப்பிக்கிறேன் என்ற பொருளையுடைய மகாமந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
உனது பிதாமகனான சுயாம்புவமநுவானவர் இந்த மகாமந்திரத்தினாலே ஜனார்த்தனனை உபாசித்தார்.
அதனால் பகவான் திருவுள்ளம் உகந்து, அந்த மநுவுக்கு அவர் விரும்பியபடியே
திரிலோக துர்லபமான ஐசுவரியத்தைப் பிரசாதித்து அருளினார். நீயும் அப்படியே அந்த மகாமந்திரத்தை ஜெபித்து
ஸ்ரீயப்பதியை ஆராதனை செய் என்று மகரிஷிகள் கூறினார்கள்.

——————-

12. சிறுவன் துருவனின் பெருந்தவம்!

சப்தரிஷிகளிடமும் உபதேசம் பெற்ற துருவன் மனமகிழ்ந்து அவர்களை வணங்கி விட்டு,
யமுனை நதி தீரத்திலிருந்த மதுவனத்துக்குச் சென்றான். அங்கு மாமுனிவர்கள் உபதேசித்த வண்ணம்
ஸ்ரீவிஷ்ணுவைத் தனது இதய கமலத்தில் தியானித்துக் கொண்டிருந்தான். இப்படியே ஒரே நினைவாகத் தியானம்
செய்து கொண்டிருந்த துருவனின் சித்தத்தில் சர்வ பூதங்களிலும் உள்ளவனான
ஸ்ரீஹரிபகவான் அதிகப் பிரகாசமாய்த் தோன்றியருளினார்.

மைத்திரேயரே! இவ்விதம் அந்தப் பரமயோகியான துருவனுடைய இதயத்தில் எம்பெருமான்
எழுந்தருளியிருந்ததால் சகலத்தையும் தரிக்கிற பூதேவி, அந்தப் பரமயோகியைத் தாங்கமாட்டாமல் இருந்தாள்.
பூமியில் துருவன் தன் இடக்காலை ஊன்றி, வலக்காலை மடித்துத் தவம் செய்தபோது,
பூமியானது இடதுபக்கத்தில் தாழ்ந்தும், வலக்காலை ஊன்றிய போது வலப்பக்கம் தாழ்ந்தும் நின்றது.
பிறகு துருவ யோகி ஒரே பாதத்தில் எட்டை விரலால் பூமியில் நின்றபோது, பூமண்டலமே மலைகளுடன் நடுங்கியது.
மகா நதிகளும் சப்த சாகரங்களும் கலங்கிப்போயின. இவ்விதமாக மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும்
கலக்கம் உண்டானதைக் கண்டு, அந்த மநுவந்திரத்திலே இருந்த யாமர் என்னும் தேவதைகள் சித்தங்கலங்கினர்.

அவர்கள் இந்திரனுடன் ஆலோசித்துத் துருவனுடைய தியானத்திற்கு விக்கினம் செய்ய முயன்றார்கள்.
இந்திரனின் கட்டளையை ஏற்ற கூசுமாண்டங்கள் என்னும் பயங்கர பூதகணங்கள் அந்த மகாயோகியான
துருவனின் தவத்தைக் கலைக்கப் பல மாயங்கள் செய்தன. எப்படியெனில், துருவனுக்குத் தாயான சுநீதியின்
சொரூபத்தைத் தரித்த மாயை ஒன்று துருவனிடம் வந்து, மகனே! உன் உடல் அபாயமடைய்கூடிய
கொடிய தவத்தை உடனே நிறுத்து! ஐயோ மகனே! அநேக காலம் தவமிருந்து உன்னைப் பெற்றேனடா?
அனாதையும் பேதையுமான என்னைத் தனியே அலைய விட்டு மாற்றாந்தாயின் பேச்சிற்காக,
நீ இப்படி வருவது நியாயமோ? கதியற்ற எனக்கு நீ அல்லவா கதி! ஐந்து வயதுப் பாலகனான நீ எங்கே?
மிகவும் கடுமையான இந்தத் தவம் எங்கே? பயனற்ற இந்த முயற்சியிலிருந்து உன் மனதைத் திருப்பிக்கொள்.
அப்பனே! நீ விளையாடுகிற பருவமடா இது! இதற்குப் பிறகு வேதங்களை அத்தியனஞ்செய்யும் காலம்!
அதன்பிறகு மோகானுபவங்களுக்குரிய காலம். அதன் பிறகே தவஞ்செய்வதற்குரிய காலமாகும்!
விளையாடும் காலத்தில் ஆன்மக்கிலேசமான தவஞ் செய்வது நல்லதல்ல. தாயான என் வார்த்தையைக் கேட்டு;
இந்தப் பிராயத்துக்குத் தக்கபடி, என்னுடன் வரவேண்டியது தான் உனக்கு நியாயம்.
இந்த தவத்தை விடாமற் போனால் நான் இப்போது உன் எதிரில் என் பிராணனை விட்டு விடுகிறேன் என்று
இப்படியாகத் தன் கண்களிலே கண்ணீர் தாதை தாரையாகப் பெருகக் கதறியழுது கொண்டு நின்றாள்.

மாயையான சுநீதியை தன் முன்னால் கண்டும், துருவன் ஸ்ரீமந்நாராயணனின் திவ்விய திருவடிகளிலேயே
சித்தத்தை வைத்திருந்ததால், கண் திறந்து பார்க்கவில்லை.
பிறகு அந்த மாயா சுநீதி துருவனை நோக்கி, குழந்தாய்! கோர அரக்கர்கள் உன்னைச் சம்கரிப்பதற்காகக்
கதை கட்கம் முதலான ஆயுதங்களோடு வருகிறார்கள். இப்பொழுதே உன் தவத்தை விட்டுவிட்டு ஓடிவா!
என்று சொல்லி விட்டு மறைந்து போனாள். பிறகு பலவித ஆயுதங்களுடன் அக்கினிச்சுவாலை வீசும்
முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றினார்கள். அவர்கள் போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள்.
குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக்கொண்டு அகோரமாக ஊளையிட்டன.

சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்!
தின்னுங்கள் என்று பெருங்கூச்சலிட்டுப் பயமுறுத்தினார்கள்.
துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதை லயப்படுத்தியதால்,
அப்பூதகணங்களின் சப்தங்களும் பயமுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற் போயின.
அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திர சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்து கொண்டு,
மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன.

அதைக்கண்ட தேவதைகள் அந்த மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ
என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து,
ஜகத்தாரகண பூதனான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து,
தேவதேவனே! துருவனின் தவ வலிமையினால் நாங்கள் தகிக்கப்படுகிறோம்.
அதனால் உம்மைச் சரணடைந்தோம் சந்திரன் தினந்தோறும் தனது கலைகளினால் அபிவிருத்தியடைவதைப் போல,
உத்தானபாதனின் மகன் துருவனும் தவச்சிறப்பால் வளர்ந்து வருகிறான். ஆகையால் நாங்கள் பயப்படுகிறோம்.
அந்தப்பாலகன், இந்திர, வருண, குபேர, சூரிய சந்திராதிகளுடைய பதவிகளிலே எதைக்கேட்பானோ தெரியவில்லை.
ஆகையால் அவனுடைய தவத்தை நிறுத்தி; எங்களுடைய கவலையைத் தீர்க்க வேண்டும்! என்றார்கள்.

அவர்களை மகாவிஷ்ணு கடாட்சித்து, சிறுவன் துருவன் பெருந்தவம் புரிகிறான் என்றாலும்
இந்திரன், சூரியன், சந்திரன் ஆகியோரது அதிகாரங்களில் எதையும் அவன் விரும்பவில்லை.
அவனது மனோரதத்தை நான் அறிவேன். ஆகையால் நீங்கள் கவலைப்படாமல், உங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லுங்கள்.
நான் துருவனுக்கு இஷ்டமான வரத்தைக் கொடுத்து அவனது தவத்தை நிறுத்துகிறேன் என்று அருளிச்செய்தார்.
பிறகு, தேவர்கள் திருமாலிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.

அதன் பின்னர் சர்வாத்மகனான எம்பெருமான் துருவனுடைய ஒன்றித்த தியானத்துத் திருவுள்ளம் உவந்து
நான்கு திருத்தோளுடைய திருமேனியோடு துருவன் முன்பு காட்சி கொடுத்து உத்தானபாதனின் மகனே!
உனக்குச் சுபமுண்டாகக் கடவது. உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்து, உனக்கு விருப்பமான வரத்தைத் தருவதற்கே நான் வந்தேன்.
நீ உனது சித்தத்தை என் மீது நிலையாக நிறுத்தியதால் நான் மகிழ்ந்தேன். உனக்கு விருப்பமான வரத்தைக் கேட்பாயாக! என்றார்.

துருவன் கண்களைத் திறந்து தான் தியானித்த விதத்திலேயே சங்கு சக்கரம் கதை கட்கம் சாரங்கம் முதலிய
பஞ்சாயுதங்களோடும், கிரீட வனமாலிகா கௌஸ்துப பீதாம்பர அலங்காரத்தோடும் எழுந்தருளிய ஸ்ரீயப்பதியைக் கண்டு
பூமியில் விழுந்து தெண்டனிட்டு; மெய்சிலிர்க்க பயபக்தியுடன் தேவதேவனான ஸ்ரீமந்நாராயணனைத் துதி செய்யலானான்.

இந்த மகாபுருஷனைக் குறிப்பிட என்ன வாக்கியத்தை சொல்வேன்? யார் சொன்னது போலத் துதிப்பேன்?
என்று துருவன் மனங்கலங்கி, ஒன்றுமே தோன்றாமல் விஷ்ணு பகவானைச் சரணடைந்து
ஸ்வாமி ஷட்குண ஐசுவரிய சம்பன்னனே! அடியேனது தவத்துக்குத் திருவுள்ளம் உகந்தீரானால்
உம்மையே ஸ்தோத்திரம் செய்ய நினைக்கும் எனக்கு அதற்கேற்ற ஞானத்தை வழங்கியருள வேண்டும்.
வேதாந்த வேதிகளான பிரமாதிகளும் உமது மகிமையைச் சொல்ல வல்லவர்களல்லர்.
அப்படிப்பட்ட உம்மைப் பாலகனான நான் எப்படித் துதிப்பேன்? அடியேன் மனது மது சரண கமலங்களிலே பதிந்து,
பக்தியுடன் உம்மைத் துதிக்கவே விரும்புகிறது.
ஆகையால் அடியேனுக்கு அதற்கேற்ற ஞானோதயத்தை தந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க,

ஸ்ரீகோவிந்தன், சகல வித்யாமயமான தமது பாஞ்சசன்யத்தினாலே, அப்பாலகனின் முகத்தில் ஸ்பரிசித்து அருளினான்.
துருவனுக்கு ஞானோதயமானதால் அவன் பிரசன்ன முகத்துடன் தெண்டனிட்டு
பிரிதிவி அப்பு தேஜசு, வாயு, ஆகாயங்களும் தன்மாத்திரைகளும் மனசும், மற்றுமுள்ள இந்திரியங்களும்
மகத்தகங்காரங்களும் மூலப்பிரகிருதியும் எவனுடைய ரூபங்களோ, அந்தச் சர்வேஸ்வரனான
விஷ்ணு பகவானுக்குத் தெண்டனிடுகிறேன்! இயல்பிலேயே தூய்மையானவனாய், சூட்சும ரூபியாய், ஞானத்தால்
எங்கும் வியாபித்திருப்பவனாய், பிரகிருதிக்கும் பரனாக இருக்கும் புருஷனும் எவனுடைய ரூபமாக இருக்குமோ,
அந்தக் குணாகரனான புரு÷ஷாத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன்! பிருதிவி முதலான பூதங்களும், சந்தாதி குணங்களும்,
புத்தி முதலியவைகளும், சம்சாரியான ஜீவனும் ஆகியவர்களைக் காட்டிலும் பரனான மூத்த புருஷன்
எவனுடைய ரூபமாக இருக்குமோ அத்தகைய ஜகத்பதிக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன்!
பிரம லக்ஷ்ணமுள்ளதாய் சகல உலகத்திற்கும் அதிபதியாய் தூய்மையானதாயுள்ள உமது சொரூபத்துக்கு வணக்கம்.

சர்வாத்மகனே! சமஸ்த சக்திகளும் அமைந்துள்ள பிரகத்துவத்தினாலும் ஜகதாகாரத்தினாலும் மகாப்பிரமாணமாக இருப்பதாலும்,
பிரமம் என்ற நாமதேயமுடையதாய், விகாரமில்லாதாய், யோகி சிந்தியமாய் விளங்கும் உமது திவ்விய சொரூபத்துக்கு வணக்கம்.
நீரே சகஸ்ர சிரசுகளும், ஆயிரம் பாதங்களும், ஆயிரம் கண்களும் உடையவராய், புருஷராய், சர்வத்தையும் வியாபித்து,
பூமியென வழங்கும் சராசரமயமான பிரபஞ்சத்தைவிடப் பதின்மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளீர்! புரு÷ஷாத்தமனே!
விராட்டு என்று வழங்கப்பட்ட அவ்யக்த சரீரகனான அநிருத்தனும் ஸ்வராட்டு என்று சொல்லப்பட்ட
கேவல ஆத்ம பிராப்தியுள்ளவனும், சம்ராட்டு என்று சொல்லப்பட்ட பிரமதேவனும், உம்மிடமிருந்தே உண்டானார்கள்.
சமஷ்டி தேகனான ஹிரணியகர்ப்பன் என்ற அந்தப் புருஷன் பிரிதிவிக்கு அதோ பாகத்திலும் பாரிச தேகத்திலும்,
ஊர்த்துவ தேகத்திலும் வியாபித்துள்ளான். உம்மிடத்திலேயே பிரபஞ்சங்களெல்லாம் உண்டாயின.
இவ்விதம் உம்மால் படைக்கப்பட்டு உம்முடைய ரூபமாயிருக்கிற இரணியகர்ப்பனு தரத்திலே
அகில பிரபஞ்சங்களும் அடங்கியிருப்பதால் எல்லாமே உமக்குள்ளே என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமோ?
யாவும் ஓமஞ்செய்யப் பெற்ற யாகமும், பிரஷதாச்சியம் என்ற அவிசும் கிராமியங்கள் ஆரணியங்கள் என்ற
இருவிதமான பசுக்களும், ரிக்கு, யஜுர், சாம வேதங்களும் சந்தங்களும் அசுவங்களும், அஜாதிகங்களும்,
ஒற்றைப்பல் வரிசையுள்ள ஜந்து சாதங்களும் மிருகங்களும் உம்மிடத்தலேயே உண்டாயின.

இன்னும் உம்மிடத்திலேயே உண்டாகவும் போகின்றன.
உமது வானத்திலே பிராமணர்களும் உமது புயங்களில் க்ஷத்திரியர்களும், கண்களிலே சூரியனும்,
மனதிலே சந்திரனும், பிராணத்திலே வாயுவும், முகத்திலே அக்கினியும், நாபியில் அந்தரிட்சமும் சரீரத்திலே சொர்க்கமும்,
கர்ணங்களிலே திசைகளும் பாதங்களிலே பூமியும் உண்டாயின. அது விஸ்தீரணமுள்ள ஆலமரம்,
அதிக நுண்ணிய பீஜத்திலே அடங்கியிருந்தாற்போல, மகத்தான இந்தப் பிரபஞ்சம் எல்லாம்
பிரளய காலத்திலே ஆதிகாரண பூதனான உம்மிடத்திலேயே அடங்கியிருந்தன.
வடவிருட்சம் மறுபடியும் விதையிலிருந்து தோன்றிச் சாகோபசாகமாக விஸ்தாரமாவது போல்,
படைப்புக் காலத்திலேயே பிரபஞ்சம் எல்லாம் உம்மிடத்திலிருந்தே உண்டாகிப் பரவின.

ஜகந்நாயகனே! பட்டைகள் ஒன்றின்மேல் ஒன்றாய் மூடப்பெற்று, ஏகாதாரமாகத் தோன்றும் இளவாழைக் கன்றே
பெரிதானதும் வேறாகாமல் இருப்பதுபோல, சூக்ஷ்ம சிதசித்தர்களோடு கூடிக் காரணரூபமான உம்மைக் காட்டிலும்
ஸ்தூல சிதசித்துக்களின் ரூபமாய்க்காரியமான இந்தப் பிரபஞ்சம் வேறாகாமல் இருக்கிறத.
சுத்த ஆனந்தம் இடைவிடாமல் நிகழ்வதும் எப்பொழுதும் ஒரே விதமாயிருக்கிற ஞானமும் உம்மிடத்தில் உண்டு
இப்படியல்லாமல் மகிழ்ச்சியும் துக்கமும் உண்டாக்குவதும் சுத்த துக்கத்தை உண்டாக்குவதுமான ஞானங்கள் உம்மிடம் இல்லை.
ஏனெனில் பிராகிருதங்களான சத்துவாதி குணங்களோடு நீங்கள் கலப்பில்லாமல் அப்பிராகிருத சுத்தசத்துவ மயனாக இருக்கிறவரல்லவா?
பிரபஞ்சத்துக்கு வேறாய் நிற்கின்ற ஒரே ஆத்மாவாய், சர்வபூத சரீரகனாய் விளங்கும் உமக்கு வந்தனஞ் செய்கிறேன்.
சூட்சும பிரகருதியும் ஸ்தூலப் பிரகிருதியும் புருஷனும் விராட்டு; ஸ்வராட், சம்ராட்டு என்பவர்களும் எல்லாம் நீரே அல்லவா?
எல்லோருடைய அந்தக் கரணங்களிலேயும் அக்ஷயமான ஞானமயனாகப் பிரகாசிப்பவரும் நீரே அன்றே
நீரே அதனதன் சாரமாக எல்லாவற்றிலும் இருக்கிறீர்? உம்மிடத்திலேயே சர்வமும் இருக்கின்றன.
ஆகையால் சர்வாத்மகனான உனக்குத் தெண்டனிடுகிறேன்!

எல்லாவற்றுக்கும் காரணமாய் எல்லாவற்றிலும் வியாபித்து எல்லாவற்றினுள்ளேயும் இருக்கின்றவர் நீரே!
ஆகையால் நீரே என் மனோரதத்தை அறிந்திருப்பீர். ஆகையால், அடியேன் விண்ணப்பம் செய்ய வேண்டுவது என்ன?
சுவாமி, உம்மைப் பிரத்யட்சமாகக் கண்டு தெண்டன் சமர்ப்பித்தேனாகையினால் அடியேனது மனோரதங்கள் நிறைவேறின
அடியேனது தவமும் பலித்தது. நான் கிருதார்த்தனானேன்! என்று துதி செய்து நின்றான்.

அவனை நோக்கி விஷ்ணு புன்முறுவலுடன், அரசகுமாரனே! என்னைக் கண்டு வணங்கியதால் உன் தவம்
பலித்தது சரிதான், ஆயினும் நான் உனக்கு சேவை கொடுத்தது வீணாகக் கூடாது.
ஆகையால் உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்பாயாக. நான் பிரத்யட்சமானோனானால்
எவருக்குமே சகல மனோரதங்களும் கைகூடும்! என்றார்.

தேவதேவனே! சர்வபூத அந்தர்யாமியான உமக்கு அடியேனது விருப்பம் தெரிந்தேயிருக்கும் இருப்பினும்
நீரே நியமித்ததால் விண்ணப்பிக்கிறேன். இந்திரன் உமது அனுக்கிரகத்தினால் அல்லவோ,
திரிலோக ராஜ்யத்தை அனுபவிக்கிறேன்? ஜனார்த்தனனே! சுருசியானவள் தனது கர்ப்பத்தில் நான் பிறவாததால்
ராஜருக்குத் தகுதியான சிங்காதனத்துக்குநான் அருகனல்ல என்று என்னைப் பார்த்து இறுமாப்புடன் ஏளனம் செய்தாள்.
ஆகையால் ஜகத்துக்கு ஆதாரமும் சர்வ உத்தமும் அவ்யயமுமான உன்னத ஸ்தானத்தை அடையவே நான் விரும்புகிறேன்.
இதற்கு தேவரீர் திருவருள் புரிய வேண்டும்! என்றான் துருவன்.

ஸ்ரீபகவான், துருவனைக் கடாட்சித்து, பாலனே! நீ விரும்பிய பதவியை அடையக் கடவாய்,
இதற்குக் காரணம் வேறொன்றுண்டு சொல்கிறேன் கேள். பூர்வ ஜன்மத்திலே நீ ஒரு பிராமணனாகப் பிறந்து,
தாய் தந்தையருக்குப் பணிவிடைகள் செய்தும், ஏகாக்கிர சித்தத்துடன், என்னையும் ஆராதித்து வந்தாய்.
சிலகாலம் சென்ற பிறகு, உனக்கு யௌவன வயது வந்தபோது, சர்வாபரண பூஷிதனும் சகல போக சம்பன்னனும்
மகா சுந்தர தேகமுடையவனுமான ஒரு ராஜகுமாரன் உனக்கு நண்பனானான்.
அப்போது நீ அவனுடைய ஐசுவரிய போகங்களைக் கண்டு ஆசைப்பட்டு, ராஜபுத்திரனாகப் பிறக்க வேண்டும் என்று இச்சித்தாய்.
ஆகையால் உன் மனோரதத்துக்கு ஏற்றதாக உனக்குத் துர்லபமான உத்தானபாதனது மாளிகையில் பிறந்தாய்.
என்னைத் துதியாத மற்றவர்களுக்கு ஜகத் பூசிதமான சுவாயம்புவமநுவின் வமிசத்தில் பிறவியுண்டானது கிட்டாததாகும்.
இப்பொழுதும் நீ அத்யந்த பக்தியால் என்னை மகிழ்வித்தாய்.

என்னிடத்தில் சித்தத்தை நிறுத்தி என்னைத் தியானித்த மனிதன் அதிசீக்கிரத்தில் சர்வோத்தமனான மோட்சத்தை அடைவானானால்,
அற்பமான சொர்க்காதி பயன்களை அடைவதில் விந்தையில்லை. நீயும் எனது அனுக்கிரகத்தினால் மூன்று உலகங்களுக்கும்
மேன்மையானதாய் சந்திர, அங்காரக, புத, பிரகஸ்பதி ஸ்தானங்களுக்கும், நட்சத்திர மண்டலத்துக்கும்,
சப்த ரிஷிகளின் மண்டலத்திற்கும் விமானரூடராய்ச் சித்தர்கள், சஞ்சரிக்கிற ஸ்தானங்களுக்கும் அதியுன்னதமாய்
திகழும் ஸ்தானத்தை அடைந்து, சுகமாய் இருப்பாயாக. தேவதைகளில் சிலர் நான்கு யுகங்கள் வரையிலும்
சில மநுவந்தரப் பரியந்தமுமல்லாமல் அதிக காலம் இருக்கமாட்டார்கள். நீயோ எனது கிருபையால்,
கல்ப காலம்வரை அந்தச் சர்வ உன்னத ஸ்தானத்தில் சுகமாக இருக்கக் கடவாய்.
உன்னுடைய தாயான சுநீதியும் திவ்ய விமானத்தில் ஏறிக்கொண்டு, நட்சத்திர ரூபமாய் பிரகாசித்துக் கொண்டு
கல்பாந்த பரியந்தமும் உன் அருகிலேயே இருக்கக் கடவள். வானத்திலே துருவ நட்சத்திரமாய்த் திகழும்
உன்னை எவனாகிலும் அதிகாலையிலும் மாலையிலும் மனவுறுதியுடன் கீர்த்தனம் செய்வானாகில்
அவன் மகாபுண்யத்தைப் பெறுவான் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இவ்விதமாக திருமாலிடம் வரம் பெற்ற துருவன், சர்வலோகன்னத ஸ்தானத்தை அடைந்தான்.
தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்ததனாலும் தவச்சிறப்பாலும், ஸ்ரீமத்துவாத சாக்ஷர மகாமந்திர மகிமையினாலும்
மகான்மாவான துருவனுக்கு உண்டான அபிமானத்தையும், ஐஸ்வரியத்தையும் பார்த்த அசுரகுருவான
சுக்கிராச்சாரியார் மகிழ்ந்து, சப்த ரிஷிகளும் எந்த மகாத்மாவை குறித்துக்கொண்டு சஞ்சரிக்கின்றனரோ,
அந்தத் துருவனது மேன்மையான தவத்தின் சிறப்பை என்னவென்று சொல்வேன்?
இது வெகுவிந்தையானது இந்தப் பிரபாவத்தைக் கொண்டாட யாராலே ஆகும்?
இதமும் சத்தியமுமான வாக்குள்ள துருவனின் தாயான சுநீதியின் மகிமையை வர்ணிக்கத்தக்க கவிகளும் உலகில் உண்டோ?
அந்தப் பெண்ணரசி துருவனைக் கர்ப்பத்தில் தரித்ததால்; சர்வ உத்தமும் நிலையான தன்மையும் உடைய
அந்தத் திவ்விய ஸ்தானத்தையடைந்தாள் என்ன அதிர்ஷ்டம்! என்ன விந்தை! என்று சில கவிகளால் துதித்தார்.

மைத்ரேயரே! துருவன் சர்வோன்னதமான பதவியைப் பெற்றதைக் கண்டு
எந்த மனிதன் கீர்த்தனம் செய்வானோ, அவனது சகல பாவங்களும் நிவர்த்தியாகும்.
சொர்க்க லோகத்தில் வாசஞ்செய்வான். அன்றியும் அவன் வானத்திலும் பூமியிலும்
ஸ்தானப் பிரஷ்டமாகாமல் சகல சவுபாக்கியமும் கொண்டவனாய்த் தீர்க்காயுளுடன் வாழ்வான்!

———–

13. பிருது சக்கரவர்த்தியின் சரிதம்

துருவ சரித்திரத்தை பராசரர் கூறிவிட்டு அந்த வமிசத்தின் வரிசையையும் கூறலானார்.
அருந்தவஞ் செய்து ஸ்ரீமந் நாராயணனுடைய கிருபையினால் சர்வ உத்தமமான பதவியை அடைந்த துருவன்,
சம்பு என்பவளை திருமணம் செய்து கொண்டான்.
அவனுக்கு சிஷ்டி, பவியன் என்ற பிள்ளைகள் இருவர் பிறந்தார்கள்.
அவர்களில் சிஷ்டி என்பவன், சுச்சாயை என்பவளைத் திருமணம் செய்து கொண்டு
ரிபு, ரிபுஞ்சயன், ரிப்பிரன்; விருகலன், விருக தேஜசன் என்னும் பிள்ளைகள் ஐவரைப் பெற்றான்.
அவர்களில் ரிபு என்பவன் பிரகதீ என்ற மனைவியிடத்தில் சாட்சுஷன், சர்வதேஜசன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றான்.
அவர்களில் சாட்சுஷன் வருண சந்ததியில் பிறந்தவரும் வீரணாப் பிரஜாபதிக்கு மகளுமான புஷ்கரணியிடத்தில்
ஆறாவது மநுவந்தரத்துக்கு அதிபதியான மநுவைப் பெற்றான்.
அந்த மநுவுக்கு வயிராசன் என்ற பிரஜாபதியின் மகளான நட்வளை என்பவளிடத்தில்
ஊரு பூரு, சதத்தியும்னன், தபஸ்வி, சத்தியவான், சுசி, அக்கினிஷ்டோமன், அதிராத்திரன், சுத்தியும்னன், அபிமன்யு
என்னும் பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள்.
ஊரு என்பவன், அக்கினியின் குமாரியை மணந்து மகா தேஜசுடைய அங்கன் சுமனசு, சுவாதி, கிரதி அங்கிரசு, சிபி
என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான்.
அங்கனுக்கு மிருத்து புத்திரியான சுநீதை என்பவளிடத்தில் வேனன் என்பவன் பிறந்தான்.
மகா முனிவர்கள் புத்திரார்த்தமாக அந்த வேனன் என்பவனது வலது கையைக் கடைந்தனர்.
அப்போது அதனிடமிருந்து பிருது என்பவன் பிறந்தான். அவன் பிரஜைகளின் நன்மைக்காக தேனு ரூபம் தரித்த
பூமியிலிருந்து வேண்டிய பொருள்களைக் கறந்து கொடுத்தான்! இவ்வாறு பராசரர் கூறிவரும்போது,
மைத்ரேயர் குறுக்கிட்டு முனிவரே! வேனனுடைய வலது கரத்தை மகரிஷிகள் கடைந்தார்களே.
அதிலிருந்து பிருது என்பவன் எப்படித் தோன்றினான்? அதை விவரமாகச் சொல்லவேண்டும் என்று கேட்டார்.

பராசரர் கூறலானார்: மைத்ரேயரே!
மிருத்துவுக்கு முதல் மகளான சுருதை என்பவள், அங்கன் என்னும் அரசனுக்கு மனைவியாகி
வேனன் என்ற புதல்வனைப் பெற்றாள். அந்த வேனன் மிருத்துவின் தோஷத்தினால் குணவீனனாய்ப்
பால்யம் முதல் துஷ்ட சுபாவமுடையவனாகவே இருந்தான்.
அவன் பட்டாபிஷேகம் செய்து கொண்டது முதல் யாரும் இன்று முதல் யக்ஞங்களைச் செய்ய வேண்டாம்.
தானங்கள் கொடுக்க வேண்டாம் ஓமங்கள் செய்யவேண்டாம். நானே யக்ஞங்களுக்கு அதீஸ்வரன்!
என்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என்று பறையறைவித்தான்.

அதைக் கேட்ட முனிவர்கள் அனைவரும் அந்த அரசனிடம் சென்று, அரசே!
நாங்கள் தேசத்துக்கும் மக்களுக்கும் இதமான தீர்க்க சத்திர யாகம் செய்து, யக்கிய ஈசுவரனான ஸ்ரீஹரியை ஆராதிக்கிறோம்.
அதனால் உனக்கும் யக்ஞ பாகத்தில் பங்கு கிடைக்கும். யக்ஞ புருஷனான ஸ்ரீமந்நாராயணன்,
நாங்கள் செய்யும் வேள்வியினால் திருவுள்ளம் உவந்து, உனக்குச் சகல பீஷ்டங்களையும் வழங்கியருள்வான்.
எவனது ஆட்சியில் யாகாதி சத்கருமங்களாலே யக்ஞேசுவரனான புரு÷ஷாத்தமன் பூஜிக்கப்படுவானோ
அந்த அரசனுக்கு அவ்வெம்பிரான் சகல மனோரதங்களையும் அருள்வான்! என்று நயமாகக் கூறினார்கள்.

அதற்கு மன்னன் வேனன், என்னைவிட அர்ச்சிக்கத் தகுந்தவன் வேறு யார் உண்டு?
யக்ஞேசுவரன் என்று நீங்கள் கூறும் அந்த ஹரி என்பவன் யார்?
பிரேமா, விஷ்ணு, சிவன், இந்திரன், யமன்! வருணன், குபேரன், வாயு, அக்கினி, சந்திரன்! சூரியன், பூமி
என்ற தேவர்களும், மற்ற சுபானுக்கிரக ஆற்றலுடைய யாவரும் அரசனுடைய சரீரத்திலேயே இருக்கின்றனர்.
ஆகையால் மன்னவனே சர்வதேவ சொரூபி என்று சாஸ்திரங்கள் கூறுவதை அறிந்தே நான் கட்டளையிட்டான்.
ஆகவே, கட்டளைப்படி நடந்து கொள்ளுங்கள். மங்கையர் தங்கள் கணவருக்குப் பணிவிடை செய்வதே
முக்கிய தருமம் என்பது போல், அரசனாகிய என்னுடைய ஆக்ஞையை ஏற்று நடப்பதே உங்களுக்குத் தர்மமாகும் என்றான்.

அரசே! யக்ஞங்கள் செய்ய எங்களுக்கு அனுமதியுங்கள். தர்மத்தை நாசஞ்செய்ய வேண்டாம்.
சராசராத்மகமான பிரபஞ்சங்கள் எல்லாம் வேள்விகளிலே ஓமஞ்செய்யும் அவிசினாலேயே செழிப்படைகின்றன! என்றார்கள் ரிஷிகள்.
அவர்கள் கூறியதற்கு வேனன் இணங்காமல் பிடிவாதமாகவே இருந்தான். அதனால் முனிவர்களுக்கு கோபம் பொங்கியது.
அவர்கள், இவன் ஆதியந்தமில்லாதவனும் ஜகத்பிரபுவும் யக்ஞ புருஷனுமான ஸ்ரீயப்பதியை இகழ்கிறான் அல்லவா?
இவன் ராஜ்ய பரிபாலனத்துக்குத் தகுந்தவனல்ல; இந்தத் துராத்மாவைக் கொன்றாலும் நமக்குப் பாவம் வராது!
என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு, மந்திரங்களால் சுத்தி செய்யப்பட்டிருந்த குச தர்ப்பைகளாலே அந்த அரசனை அடித்தார்கள்.
அவன் பூர்வத்திலேயே; சர்வேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவையும் அவனது மகிமையை விளக்கும் வேதத்தையும்
அவனது ஆராதனையான யாகத்தையும் நிந்திப்பதாகிய அக்கினியால் தகிக்கப்பட்டிருந்ததால்
முனிவர்களின் தருப்பைப் புல்லின் அடிபட்டவுடனே உயிர் இழுந்து கீழே விழுந்தான்.

அந்த சமயத்தில் நான்கு திசைகளிலும் ஏராளமான துன்பும் தூசியும் பறந்து ஆகாயம் எங்கும் வியாபித்தது.
அதைக் கண்ட மகரிஷிகள் அங்கிருந்த மக்களைப் பார்த்து; இந்தத் தூசி என்ன காரணத்தால் உண்டாயிற்று? என்று கேட்டார்கள்.
அதற்கு ஜனங்கள், உங்களால் பூமண்டலம் அராஜகமானதினால் அனேக ஜனங்கள் ஆங்காங்கே பிரவேசித்துப்
பிறருடைய திரவியங்களை அபகரிப்பதற்காக வேகமாய் வருகிறார்கள்.
அத்தகைய கள்ளர்களின் கால்பட்ட வேகத்தினால் தூளிப்படலமாகிய இந்தத் தூசியும் தும்பும் தோன்றியது? என்றார்கள்.
அதைக்கேட்ட முனிவர்கள் ஆலோசித்து, ஒரு புத்திரனை உண்டாக்க வேண்டுமென்று தீர்மானித்து
அபுத்திரனான வேனனது தொடையைக் கடைந்தார்கள்.

அப்போது அதிலிருந்து எரிந்த கட்டையைப் போன்ற கறுப்பு நிறமும் விகாரமான முகமும்,
குட்டையான உடலும் கொண்ட ஒரு மனிதன் தோன்றி, முனிவர்களை நோக்கி, நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் நிஷீத (உட்கார்) என்று சொன்னார்கள். அதன் காரணமாக அவன் நிஷாதன் என்ற பெயரைப் பெற்றான்.
விந்தியமலை வாசியரான வேடர்கள் அவனது பரம்பரையில் உண்டானார்கள்.
ஆகையால் அவர்கள் நிஷாதர்கள் என்று வழங்கப்பட்டனர். இவ்விதமாக மன்னன் வேனனின் பாபங்களெல்லாம்
ஒருங்கே திரண்டு புருஷாகாரமாகப் பிறந்தன. அன்று முதல் நிஷாத ஜாதி உலகத்தில் உண்டாயிற்று.
அதன் பிறகு முனிவர்கள் வேனனுடைய வலதுகையைக் கடைந்தார்கள்.
அந்தக் கையிலிருந்து அக்கினியைப் போல் ஜொலிக்கும் திவ்ய தேஜோவிராஜிதனும் மகாப் பிரதாபம் கொண்டவனுமான
ஒரு குமாரன் தோன்றினான். பிருது மாமன்னன் என்று அவனுக்குப் பெயர் வைக்கப்பட்டது,
அவன் பிறந்ததுமே ஆகாயத்திலிருந்து அசகவம் என்ற ஒரு வில்லும் திவ்வியமான பாணங்களும் விழுந்தன.
அவற்றை பிருது கைக்கொண்டான். அவன் தோன்றியதுமே சகல பூதங்களும் பெருமகிழ்ச்சியடைந்தன.

வேனனும் சற்புத்திரன் உண்டானதால் புத்து என்ற நரகத்திலிருந்து நீங்கிச் சொர்க்கத்தையடைந்தான்.
அப்போது சமுத்திரங்களும் நதிகளும் பிருதுவுக்கு அபிஷேகம் செய்வதற்கான புனித நன்னீரையும்
திவ்விய ரத்தினங்களையும் கொண்டு வந்து வணங்கி நின்றன. பிரமனும் ஆங்கிரசர் என்னும் தேவதைகளோடும்
சகல பூதங்களோடும், வந்து வேனனுடைய மகனான பிருது சக்கரவர்த்தியைச் சகல பூமண்டலங்களுக்கும்
அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்தான். அப்போது பிருது சக்கரவர்த்தியின் வலது கையில், சக்கரம்
இருப்பதை பிருமா பார்த்து, இவன் நாராயண அம்சமுடையவன் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தார்.

மைத்ரேயரே!
எவருடைய வலது ஹஸ்தத்தில்; விஷ்ணு சின்னமான சக்கரரேகை காணப்படுமோ அவர்கள்
தேவர்களாலும் வெற்றி பெறக்கூடாத பராக்கிரமமுடையவர்களாய்; மாமன்னர்களிலே உயர்ந்தவராய் விளங்குவார்கள்.
இவ்விதம்; பிருது சக்கரவர்த்தி முடிசூட்டிக்கொண்டு, முறைப்படி ஆட்சி செலுத்தி வரும்போது,
அவனது தகப்பனான வேனனுடைய உபத்திரவத்தினால் வருந்திய மக்கள், இவனது நற்குணங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.
பிரஜைகளைக் காத்து, அவர்களுடைய அன்பைப் பெற்றதால்; அவன் அவனிராஜன் என்று வழங்கப்பட்டான்.
அவன் தேரில் ஏறிப் புறப்படும்போது சமுத்திரங்கள் இரையாமல் ஸ்தம்பித்தன.
பர்வதங்கள் எல்லாம் அவனுக்கு வழிவிட்டு நின்றன. அவனது விருதுக்கொடிகள் கிளைகளிலே படுமே என்ற
பயத்தினால் உயர்ந்த மரங்கள் தணிந்து நின்றன. பூமி உழாமலே விளைந்தது. நினைத்த மாத்திரத்திலேயே பயன்கள் சித்தித்தன.
பசுக்கள் வேண்டும் அளவு பாலைச் சுரந்தன. இலை மடிப்புக்களில் எல்லாம் தேன் நிறைந்திருந்து
பிரும்மாவைக் குறித்துச் செய்த வேள்வியிலே, இந்தப் பிருது மாமன்னன் தோன்றியவுடனே,
அந்த யக்கியத்தின் சுத்தியா காலத்தில் சூதனும் மாகதனும் தோன்றினர்.

இப்படிப் பிறந்த சூதமாகதர்களைப் பார்த்து மகாமுனிவர்கள், பிரதாப சாலியான பிருது மன்னனை
அவனது குணகர்ம வரலாறுகளைச் சொல்லித் துதியுங்கள்! இவன் துதிப்பதற்குத் தகுந்தவன் என்று கட்டளையிட்டார்கள்.
சூதமாகதர் தயங்கி, முனிவர்களே! இவர் இப்போது தானே பிறந்தவர்?
ஆகையால் இவரது குணங்களையும் புகழையும் நாங்கள் அறியோமே!
எதைச் சொல்லி, நாங்கள் இவரைப் புகழ்வோம்? என்று கேட்டார்கள்.

அதற்கு முனிவர்கள், இவன் சக்கரவர்த்தியும் மிக வலிவுடையவனுமாகி, உலகத்துக்கு இதமான பல செயல்களைச் செய்வான்!
ஆகையால் இவனுக்கு இனிமேல் விளங்கத்தக்க குணங்களைப் பற்றித் துதி செய்யுங்கள்! என்றார்கள்.
அதைக்கேட்டு, பிருது சக்கரவர்த்தியும் தன்னுள்ளே தனக்குத்தானே நினைக்கிறான்.
உலகத்திலே சற்குணங்களினால் மன்னனுக்குப் புகழும் பெருமையும் உண்டாகும்.
இம்முனிவர்கள் என்னைத் துதிக்கச் சொன்னதே நான் சற்குணங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்
என்பதற்கான ஓர் உபதேசமாகும். ஆகையால் நான் குணவான் ஆவேன்.
இம்மாகதர்கள் கீர்த்தனஞ்செய்யும் குணங்களை ஏற்று, இவர்கள் காட்டும் துர்க்குணங்களை விட்டு விடுகிறேன் என்று சித்தமாக இருந்தான்.

அப்போது சூதமாகதர்கள் அந்த அரசகுமாரனான பிருதுவை இந்த மகாராஜகுமாரன் சத்தியசீலன்; தானசீலன்;
பிரதிக்ஞையை நிறைவேற்ற வல்லவன்; செய்யத்தகாத காரியத்தைச் செய்யக் கூசுபவன்.
ஜெயசாலி பொறுமையுள்ளவன் நட்புக்குணமுடையான், மகாப் பிரதாபவான், துஷ்டர்களைத் தண்டிக்கும் குணமுடையவன்,
இனிய பேச்சுத் திறனுடையான்; பூஜிக்க தகுந்தவரைப் பூஜிப்பவன்; யாகசீலன்; பிராமண பக்தன்;
யோக்கியரிடத்தில் அன்புடையவன். சத்துரு மித்துருக்களிடம் சமபுத்தியோ பட்சபாதமற்று சகல விவகாரங்களையும் தீர்ப்பவன்!
என்று நல்ல குரலோடு நன்றாகத் துதி செய்தார்கள்.

சூதனும் மாகதனும் இவ்வாறு எடுத்துக் கூறிய சற்குணங்களையெல்லாம் பிருது மன்னன் தன் உள்ளத்தில்
பதிய வைத்துக்கொண்டு; அக்குணங்களுடன் ஆட்சி செய்து; பலவிதமான யாகங்களை நடத்தி
அதிக தட்சணை கொடுத்து வந்தான். அவனது தந்தை வேனன் மடிந்ததால்; பூமி அராஜகமாயிற்று.
அதனால் பிருது மன்னனது ஆட்சியின் ஆரம்பத்திலே; பிரஜைகள் அனைவரும் பசியால் வருந்தியவர்களாய்
அரசனிடம் சென்று அரசே! நீர் முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பே; பூமண்டலம் அராஜகமாகி சகலவோஷதி
வர்க்கங்களையும் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு விட்டது. ஆகையால் இப்போது ஆகார வசதியில்லாமல்
பிரஜைகள் பசி வாதையால் அழிந்து வருகின்றனர். அன்ன பானங்களைக் கொடுத்து எங்களை ரட்சிப்பதற்காகவே
பிரம்மா உங்களைப் படைத்து எங்களுக்கு வழங்கினார்.
ஆகையால் பசியால் பீடிக்கப்பட்ட எங்களைக் காத்து ரட்சிக்க வேண்டும்! என்று முறையிட்டார்கள்.

அதைக் கேட்ட பிருது மன்னன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, அசகவம் என்ற வில்லையும் அம்புகளையும்
எடுத்துக் கொண்டு பூமியை எதிர்க்கச் சென்றான், அப்போது பூமாதேவியானவள்;
பசுவின் ரூபத்தைத் தரித்து பயந்து ஓடினாள். மன்னனும் அவளை விடாமல் பின் தொடர்ந்து சென்றான்.
அதனால் பூதேவி பிரம்மலோகம் முதலிய உலகங்களுக்கும் ஓடிச்சென்று எங்கும் அடைக்கலம் அடைய முடியாமல்
வில்லும் கையுமாய்த் தன்னைத் துரத்திவரும் வேந்தனை நோக்கி; பிருது மன்னனே!
பெண் வதையினால் பாதகம் சம்பவிக்கும் அல்லவா, அதையறிந்தும் ஏனிப்படிச் செய்கிறாய்? என்று கேட்டாள்.
வசுந்தரையே! துஷ்டகாரியஞ் செய்பவரை வதைப்பதால் பலருக்கு நன்மையுண்டாகுமானால்
அப்படிப்பட்ட வதையைச் செய்வதால் புண்ணியம்தான் உண்டாகும்! என்றான் பிருது.

அரசே! பிரஜைகளுக்கு இதமுண்டாவதற்காக என்னை அழித்தால்,
சதுர்வித பூதசாதங்களுக்கும் ஆதாரம் என்ன? என்றாள் பூமிதேவி.
உற்று அவளை பிருது நோக்கி வசுந்தரா என்னுடைய ஆக்ஞையை மீறி துர்விநீதையாய் நடக்கிற உன்னை
என்னுடைய அம்புகளால் சங்கரித்து எது யோக சக்தியினால் சகல பிரஜைகளையும் தரிக்கிறேன்! என்றான்.

அதைக்கேட்ட பூதேவி பயத்தால் நடுங்கி, பிருதுவை வணங்கி அரசே!
உபாயத்தினால் சகல காரியங்களும் சிந்திக்குமேயல்லாமல் வேறு வகையால் சித்திக்காது.
ஆகையால் நான் ஓர் உபாயம் சொல்கிறேன். கேட்பாயாக உலகத்தில் உண்டான ஓஷதி நிகரங்களையெல்லாம்
நான் என்னுள்ளேயே அடங்கும்படி கிரகித்திருக்கிறேன். ஆகையால் அவை என்னிடம் க்ஷீரரூபமாக இருக்கின்றன.
வேண்டுமானால் பால்ரூபமாக இருக்கும் அந்த ஓஷதிகளை உலக நன்மைக்காக நான் வழங்குகிறேன்.
தகுந்தவொரு கன்றையுண்டாக்கிக் கொடுப்பாயாக. அந்தக் கன்றினிடமுள்ள அன்பினால் பால் ரூபமாகவுள்ள
ஓஷதிகளைக் கறக்கச் செய்வேன். நான் கொடுக்கும் க்ஷீரங்கள் ஜகமெல்லாம் வியாபிக்கும் பொருட்டு
தடையாகவுள்ள மலைகளையெல்லாம் விலக்கி; என்னை மேடுபள்ளமில்லாமல் நிரவவும் என்றாள்.

பிருதுவும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லித் தன்னுடைய வில்லின் நுனியால் அவற்றைப் புறத்தே தள்ளி
பூமண்டலத்தைச் சமமாகச் செய்தான். மைத்ரேயரே! பூர்வ காலத்தில் மலைகள் எல்லாம் மிகவும் நெருங்கி
முழுவதும் பரவியிருந்ததாலே பூமண்டலத்தில் நகரப்புரங்களும் கிராமங்களுமாகிய குடியிருப்புகள் பிரிவு படாமல் இருந்தன.
பயிர்த்தொழிலும் பசு வளர்ப்பும் வாணிபமும் இல்லை. பிருது மன்னன் முடிசூட்டிக் கொண்டது முதல் இவ்வேறுபாடுகள் உண்டாயின.
எங்கெங்கே பூமியானது மேடு பள்ளங்கள் இல்லாமல் சமமாக இருக்குமோ அங்கங்கே, புரங்களையும் கிராமங்களையும்
அந்த அரசன் ஏற்படுத்தி, அவற்றில் பிரஜைகளை வசிக்கச் செய்தான். பூர்வத்தில் கந்த, மூல பலாதிகளே
பிரஜைகளுக்கு ஆதாரமாக இருந்தன. ஜகம் அராஜகமானபோது அவைகளும் கிடைப்பது கஷ்டமாயிற்று.

ஆகையால் பிருது மன்னன் சுவாயம்புவமனுவைக் கன்றாக்கி தனது ஹஸ்தத்தை பாத்திரமாகச் செய்து,
தேனுரூபிணியான பூமியினிடத்தில் சகல ஸஸ்யங்களையும் கறந்தான். அதனால் பிரஜைகள் மகிழ்ச்சியடைந்து,
அவன் உண்டாக்கிய ஆகாரத்தினால் பலத்தையும் சக்தியையும் பெற்று சுகமாக இருந்தார்கள்.
அவன் கொடுத்த அன்னத்தால் தான் இன்றளவும் பிரஜைகள் ஜீவித்திருக்கின்றனர்.
பிருது மன்னன் பூமிக்குப் பிராணனைக் கொடுத்ததால் தந்தையானான் அந்தக் காரணத்தாலேயே
பூமிக்கு பிருத்வி என்ற பெயர் உண்டாயிற்று.

பிறகு தேவதைகளும், முனிவர்களும், தைத்தியர்களும், ராக்ஷசர்களும், கந்தருவர்களும், நாகர்களும்,
பிதுர்க்களும், விருட்சங்களும், பிருது மன்னனின் கருணையால் தத்தமது சாதிக்கான பாத்திரத்தையும்
கன்றையும் கறப்பவனையும் உண்டாக்கி, தங்களுக்குரிய மகிழ்ச்சியை அடைந்தார்கள்.
சகல பூததாரணியாயும், எல்லாவற்றையும் உண்டாக்குபவளாயும், காப்பவளாயும்,
ஸ்ரீமகாவிஷ்ணுவின் பாதாம்புயத்தில் பிறந்தவளுமான பூமாதேவி என்னும் பிருதிவி முன்புபோல்
சகல பூதங்களுக்கும் இஷ்டங்களைக் கொடுக்கத் துவங்கினாள்.

மைத்ரேயரே!
இவ்விதமான வேனன் மன்னனின் குமாரனான பிருது சக்கரவர்த்தி புகழுடையவனாய் விளங்கினான்.
எவன் இத்தகைய பிருது மாமன்னனுடைய சரித்திரத்தைப் படிக்கிறானோ, படிக்கக் கேட்கிறானோ,
அவன் பாவந்தீர்ந்து, துர்ச்சொப்பன பயமில்லாமல் சுகமாக இருப்பான்!

——————

14. பிரசேதசர்களின் இலட்சியம்

பராசர முனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே!
பிருது மன்னனுக்கு அந்தர்த்தானன்; வாதி என்றும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள்.
அந்தர்த்தானன் திருமணம் புரிந்து கொண்டு சிகண்டி நீ என்னும் மனைவியிடம் ஹவிர்த்தானன் என்ற மகனைப் பெற்றான்.
அவனுக்கு அக்கினியின் மகளான தீக்ஷிணையிடத்தில் பிராசீனபர்ஹி, சுக்கிரன், கயன், கிருஷ்ணன், விரசன், அசினன்
என்று ஆறு குமாரர்கள் உண்டாயினர். அவர்களில் ஹிவர்த்தானனின் மூத்த மகனான பிராசீனபர்ஹி என்பவன்,
பிராசீனக்கிரகங்களான தருப்பைகளை பூமியில் பரப்பி யக்ஞங்கள் செய்ததால் அவனுக்கு பிராசீனபர்ஹி என்ற பெயர் உண்டாயிற்று.

அவன் சமுத்திரனின் புதல்வியான சுவர்ணை என்பவளைக் கல்யாணம் செய்து கொண்டு
பிரசேதர்கள் என்னும் பத்துப்பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் தனுர் வேதத்தில் கரை கண்டவர்கள்.
அவர்கள் அனைவரும் ஒரே பயனை அபேட்சித்து, ஒரே தர்மத்தைச் செய்து, சமுத்திர நீரில் பதினாயிரம் ஆண்டுகள்
மூழ்கியிருந்து தவஞ்செய்தார்கள். ஏனெனில், பிரும்மாவின் கட்டளைப்படி பிராசீனபரிஹியானவன்
பிரஜைகளை அபிவிருத்தி செய்ய நினைத்தான். தன் புத்திரரான பிரசேதசர்களை நோக்கி,
பிள்ளைகளே! வேததேவனான பிதாமகர், பிரஜாவிருத்தி செய்யும்படி என்னை நியமித்தார்.
நான் அப்படியே ஆகட்டும் என்று அவரது கட்டளைக்கு இசைந்தேன்.
ஆகையால், நீங்கள் எனக்குப் பிரியமாகும்படிப் பிரஜாவிருத்தி செய்யுங்கள் என்றார்.
பிரசேதசரும் தந்தையின் வாக்கை ஏற்று, ஐயா! நாங்கள் பிரஜாபிவிருத்தி செய்யத்தக்க ஆற்றலையுடையவராக,
எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? அதை விளங்கச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள்.

பிராசீனபரிஹி தன் புத்திரர்களைப் பார்த்து, ஸ்ரீவிஷ்ணுவை ஆதரித்து
ஒருவன் தன் இஷ்டத்தைப் பெறுவானே அல்லாமல், வேறு ஓர் உபாயத்தினாலும் இஷ்ட சித்தியைப் பெறமுடியாது.
இனி நான் சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. ஆகையால் உங்கள் இஷ்டம் சித்தியாக வேண்டும் என்று
விரும்பினால் ஸ்ரீகோவிந்தனை ஆராதனை செய்யுங்கள். பிரஜாவிருத்தி செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள்,
புருஷனுக்குத் தர்மார்த்த காம மோக்ஷம் என்கின்ற நான்குவித புருஷார்த்தங்களிலே அபிலாஷையுண்டானால்,
ஆதியந்தரகிதனும் பகவானுமான புரு÷ஷாத்தமனை அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஆதிகாலத்தில் பிரும்மா ஜனார்த்தனனை ஆராதித்துத் தான் சிருஷ்டிக்கும் ஆற்றலைப் பெற்றான்.
அதுபோல், உங்களுக்கும் அச்சுதனை ஆராதிப்பதால் பிரஜா விருத்திக்குரிய சாமார்த்தியமும் உண்டாகும்! என்று சொன்னான்.

அதைக்கேட்ட பிரசேதசர்கள் பத்துப் பேரும் தந்தையின் வாக்குப்படி தவஞ்செய்ய நிச்சயித்தார்கள்.
அதனால் சமுத்திரத்திலே மூழ்கி ஏக சிந்தனையுடன் சர்வலோக சரண்யனும் ஜகத்பதியுமான
ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடித்தாமரைகளில் மனதை நிறுத்தி, பதினாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்த வண்ணம்
சகல அபீஷ்டங்களையும் வழங்கவல்ல லக்ஷ்மி நாராயணனை மனமாரத் துதித்தார்கள்.

இவ்வாறு பராசரர் கூறிவரும்போது மைத்ரேயர் அவரை நோக்கி முனிவரே!
பிரசேதசர்கள் சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டு ஸ்ரீவிஷ்ணுபகவானைத் துதித்தார்கள் என்றீர்கள்.
அந்தத்தோத்திரத்தை அடியேனுக்குச் சொல்ல வேண்டும் என்றார்.

அதற்குப் பராசரர் பிராமண உத்தமரே! பக்திப் பரவசத்தினால் தன்மயமாய் சாகா ஜலத்தில் நின்று கொண்டு,
பிரசேதசர்கள் செய்த ஸ்ரீவிஷ்ணு ஸ்துதியைச் சொல்கிறேன். அமைதியாகக் கேளுங்கள்! என்று கூறலானார்.

சகலமான சப்தஜாதங்களும் எங்கே சென்று நிலைபெறுமோ அத்தகைய சகல உலகங்களுக்கும்,
சிருஷ்டி சங்காரகர்த்தாவான பரமபுருஷனை நாங்கள் வணங்குகிறோம்!
சூரிய சந்திராதி சோதிக் கணங்களையும் பிரகாசிக்கச் செய்யும் அந்தப் பிராகிருத ஜோதிமயனும்
உபமானரகிதனும் நுண்ணிய ரூபனும், கால பரிச்சேதமில்லாதவனும் சராசரத்மகமான ஜகத்துக்குக் காரண பூதனுமான
ஸ்ரீவிஷ்ணு மூர்த்திக்குத் தெண்டஞ் சமர்ப்பிக்கிறோம்!
எவனுக்குப் பகலானது முதல் ரூபமாகவும் இரவு இரண்டாவது ரூபமாகவும், சக்தி மூன்றாவது ரூபமாகவும் இருக்குமோ
காலவடிவான அந்தப்பரந்தாமனுக்குத் தண்டனிடுகிறோம்.

எவன் அமிர்தமாகித் தினந்தோறும் தேவதைகளாலும் பிதுர்க்களாலும் உண்ணப்படுகிறானோ
எவன் ஓஷதிகளைக் கொண்டு எல்லாவற்றிற்கும் ஜீவனாக விளங்குகிறானோ,
அந்தச் சந்திரரூபியான பகவானுக்குத் தண்டனிடுகிறோம். எவன் உஷ்ணமயமாகித் தனது கிரணங்களால்
இருளைப் போக்கி ஆகாயத்தை ஒளிரச் செய்து கொண்டு, தாபத்திற்கும் சயத்திற்கும் ஜலத்திற்கும் காரணமாக இருக்கிறானோ
சூரியாத் மகனான அந்தப் பகவானுக்குத் தண்டனிடுகிறோம்!
எவன் கடினமான ரூபமுள்ளவனாய் இந்தவுலகத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு,
சப்த, ஸ்பரிச, ரூப, ரச கந்தங்களுக்கு ஆசிரயமாய் விளங்கிறானோ அந்தப் பூமிஸ்வரூபியான எம்பெருமானை வணங்குகிறோம்!

சுக்கிலமும் சுரோணிதமுமாய், உலகங்களுக்குக் காரணமாக இருக்கிற ஜலம் என்பது யாதோ,
பக்தாக்ஷகனுடைய அந்த ஸ்வரூபத்துக்கு வந்தனஞ் செய்கிறோம். எவன் சகல தேவதைகளுக்கும் மூலமாக இருந்து
கவ்யத்தைப் புசிக்கிறானோ, அந்த அக்னி ஸ்வரூபியான பரமாத்மாவுக்குத் தெண்டனிடுகிறோம்!
பிராண அபானதி ரூபமாகச் சரீரங்களிலே இருந்து கொண்டு, எப்பொழுதும் சுவாசிப்பது போன்ற செயல்களைச் செய்பவனாகவும்,
ஆகாயத்தினின்று முற்பன்னனாயும் இருக்கிற வாயுதேவதா ஸ்வரூபியான ஜெகதீஸ்வரனுக்குத் தெண்டனிடுகிறோம்!
எவன் சர்வபூதங்களுக்கும் அவகாசம் கொடுத்து, அனந்தமூர்த்தியாயும் சுத்தமாயும் இருக்கிறானோ
அத்தகைய ஜகத்துக்கு கர்த்தாவாகிய ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிரணாமஞ் செய்கிறோம்!
எவன், க்ஷரமும் அக்ஷரமும் ஆன இந்திரிய ஸ்வரூபியாய், சப்தாதி விஷயங்களைக் கிரகித்துக் கொண்டு,
ஞானத்துக்கு ஆதாரமாக இருக்கிறானோ, அந்தப் பிரணதார்த்திஹரனான் பெருமானுக்குத் தெண்டம் சமர்ப்பிக்கிறோம்!
இந்திரியங்களாலே கிரகிக்கப்பட்ட சப்தாதி விஷயங்களை ஆன்மா அறிவதற்குக் கருவியாய் நிற்கும்
மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்று சொல்லப்பட்ட அந்தக்கரண சொரூபியான சர்வேசுவரனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறோம்!

அளவில்லாதவனான எவனிடத்திலிருந்து சகல பிரபஞ்சமும் இருக்கிறதோ, எவனிடத்திலிருந்து அவை உண்டாயிற்றோ,
எங்கே லயிக்கிறதோ, அந்தப் பிரகிருதி ரூபமுடையவனுக்கு நமஸ்காரம் செய்கிறோம்!
எவன் பிராகிருதமான சத்வாதி குணங்களல்லாமல் சுத்தனாக இருந்து பிரகிருதி சம்பந்தமுடைய
சத்துவாதி குணங்களைக் கொண்டவனைப் போலப் பிராந்தியினால் தோற்றமளிக்கிறானோ
அந்த ஜீவாத்மா ரூபியான புரு÷ஷாத்தமனுக்கு தண்டம் சமர்ப்பிக்கிறோம்.
அறிவு குறுகுவதும் விரிவதுமான விகாரமில்லாதவனும், பிறப்பற்றவனும், சுத்தனும் பிரகிருதி சம்பந்தமில்லாதவனும்,
பிரகிருதி புருஷர்களைவிட உயர்வுள்ளவனுமாக இருக்கிற மூத்த ஜீவன் உண்டோ அந்த ஸ்வரூபத்தில் விளங்குகின்ற
ஸ்ரீவிஷ்ணுபகவானுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறோம்!

தீர்க்கமும் ஸ்தூலமும் சூட்சுமமும் ரத்தமும் நீலமுமல்லாமல் இருப்பதாய், ஒட்டுதலும் சாயையும் தேகமும் அவயவங்களும்
இல்லாததாய், இடைவெளி இல்லாததாய் இன்ப துன்பமுற்றதாய் சப்த ஸ்பரிச ரூபரச கந்தங்கள் இல்லாததாய்,
கண் மூக்கு காது முதலியவையும், வாக்கு பாணி பாதாதிகளும், அந்தக்கரணமும் இல்லாததாய்
நாமே தோத்திரங்களும் அன்னபானாதிகளில் உண்டாகும் சுகமும்;
தன்னைவிட வேறொரு தேஜஸும் தனக்கு ஒரு காரணமும் இல்லாததாய்;
பயம் பிரமம் நித்திரை ஜனன மரணம் முதலிய குற்றங்கள் இல்லாததாய்,
சலனமில்லாததாய், பரமேசுரத்துவாதி சகல கல்யாண குணங்களுடையதாய் யாவற்றுக்கும் இருப்பிடமாய்,
தனக்கு ஓர் ஆதாரமற்றதாய், வாக்கு மனம் இரண்டுக்கும் எட்டாததாய், கண்ணால் காணக்கூடாததாய்,
இவ்விதமாக எல்லாவிதத்திலும் உயர்ந்ததாய், பரமபிராப்பியமுமாய் விளங்கும் அந்த ஸ்ரீவிஷ்ணுபகவானுடைய
ஸ்வரூபத்தை நாங்கள் வணங்குகிறோம்! என்று பிரசேதசர்கள் எம்பெருமானைத் துதித்த வண்ணம்
சமுத்திர ஜலத்தில் இருந்தவாறு பதினாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்தார்கள்.

பிறகு ஷட்குண சம்பன்னனான ஹரி அவர்களிடம் கிருபை கூர்ந்து, அந்த சமுத்திர ஜலத்திலேயே பிரத்யட்சமானார்.
அப்பொழுது மலர்ந்த நீலோத்பல மலரிதழைப் போன்ற நீலச்சாயையுடன் பிரகாசிக்கும் திவ்வியத் திருமேனியோடும்
கிரீட மகாகுண்டலங்களாகிய திவ்விய ஆபரணங்களோடும், சங்கு சக்கராதி திவ்ய ஆயுதங்களோடும்,

ஸ்ரீமந்நாராயணன் தோன்றி, பட்சியரசான பெரிய திருவடியின் (கருடனின்) திருத்தோளில் அமர்ந்து வந்து சேவை சாதித்தார்.
அவரைப் பிரசேதசர்கள் தங்கள் கண்குளிரக் கண்டு பக்திப் பரவசத்தால் தலைவணங்கித் தண்டப் பிரணமங்கள் செய்து,
கைகூப்பி வணங்கி நின்றார்கள். பகவான் அவர்களை நோக்கி பிரசேதசரே உங்கள் தவத்தைக் கண்டு மகிழ்ந்த நான்
உங்களுக்குப் பிரசன்னமானேன். உங்களுக்கு வேண்டும் வரங்களை கேட்பீராக என்று அருளிச் செய்தார்.

அவர்கள் மீண்டும்; ஸ்ரீயப்பதியை வணங்கி எமது தந்தையின் வாக்குப்படி நாங்கள் பிரஜாவிருத்தி செய்வதற்கு
எங்களுக்குச் சாமர்த்தியம் ஏற்படும்படி கிருபை செய்ய வேண்டும்! என்று பிரார்த்தித்தார்கள்.
பகவான் அவர்கள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டு மறைந்தார்.
பிரசேதசர்களும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தினால் இச்சித்த வரத்தைப் பெற்று,
கடலிலிருந்து எழுந்து தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.

———————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம்—முதல் பாகம் —

February 28, 2021

ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 அம்சங்கள் -அத்தியாயங்கள் -ஸ்லோகங்கள் –
1-20–அஸ்திர பூஷண அத்யாயம் உச்சம் முடியும்
2-பூகோளம் காலம் இதன் கடைசியில் -ஆத்மா பரமாத்மா சம்பந்தம் -ரிபு கதை
3-வேதங்கள் -வியாசர் பிரிப்பது
4- அவதாரங்களின் விவரணம்
5- கிருஷ்ண அவதார விவரணம்
6- கலி

——

ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம் –கிட்டத்தட்ட 6000 ஸ்லோகங்கள் இதில்

1. புராணம் கேட்ட வரலாறு–
2. பிரபஞ்ச உற்பத்தி–
3. காலப் பிரமாணம்–
4. ஸ்ரீவராஹ அவதார வைபவம்–
5. தேவ மனிதப் படைப்புகள்–
6. வருணாசிரமங்கள்-
7. பிருகு முதலியவர்களின் படைப்பு
8. ருத்திர சிருஷ்டியும் ஸ்ரீதேவி வைபவமும்

—————–

1. புராணம் கேட்ட வரலாறு

18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது ஸ்ரீ விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது.
ஒருநாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார்.
அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார்.
என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்?
சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே
சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள்.
தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே!
உலகம் உண்டான விதத்தையும் இனி உண்டாகப்போகும் விதத்தையும் நான் அறிய விரும்புகிறேன்.
தாங்கள் அருள்புரிய வேண்டும்! மேலும், இந்த உலகம் எல்லாம் எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது?
எங்கிருந்து எப்படி உண்டாயிற்று? எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்?
நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனும் ஐந்து பருப்பொருட்களில் -பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும்
பஞ்சபூதங்களின் நிலை என்ன? எதனால் அவை விளங்கும்?
இவ்விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய உற்பத்தியையும், மலைகள், கடல்கள் இவற்றின் தோற்றத்தையும்
பூமியிருக்கும் விதத்தையும் சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றின் நிலையையும் அளவுகளையும்
தேவர்களின் வம்சங்களையும், மனுக்களையும், மனுவந்தாரங்களையும், மகாகல்பங்களையும்,
நான்கு யுகங்களால் விகற்பிக்கப்பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும் அவற்றின் முடிவு நிலைகளையும்,
சகல யுகதர்மங்களையும் தங்களிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஓ முனிவரில் உயர்ந்தவரே! தேவர்கள், அரசர்கள், முனிவர்கள் முதலானவர்களின் வரலாறுகளையும்
வியாச முனிவர் வகுத்தருளிய வேதசாகைப் பிரிவுகளையும் பிராமணன் முதலிய வருணங்களின் குலதர்மங்களையும்,
பிரமச்சரியம் முதலான நான்கு ஆச்சிரமங்களின் தருமங்களையும் தங்களிடமே நான் கேட்க விரும்புகிறேன்.
வசிஷ்ட முனிவரின் மகனான சக்தியின் குமாரரே! இவ்விஷயங்கள் யாவற்றையும் எனக்கு கூறியருள
தாங்கள் திருவுள்ளங்கொள்ள வேண்டும். இவ்வாறு மைத்ரேய முனிவர் பராசர முனிவரை வேண்டினார்.

அதற்குப் பராசர முனிவர், அவரை நோக்கிக் கூறலானார்.
தருமங்களையெல்லாம் அறிந்துள்ள மைத்ரேயரே! உலக உற்பத்தி முதலியவற்றை அறிந்துள்ள என் பாட்டனாரான
ஸ்ரீவசிஷ்ட பகவான் எனக்கு அருளிச் செய்த முன் விருத்தாந்தத்தை நீர் எனக்கு மீண்டும் நினைப்பூட்டினீர்.
அதாவது, முன்பு ஒரு சமயம், விசுவாமித்ரரால் ஏவப்பட்ட அரகன் ஒருவன் என் தகப்பனாரைப் பழித்தான் என்ற சங்கதியை அறிந்தேன்.
உடனே மிகவும் கோபம் அடைந்து அந்த அரக்கர்களை அழியச் செய்யும்படியான யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினேன்.
அந்த யாகத்தினால் பல்லாயிரம் அரக்கர்கள் அழிந்தார்கள். அதைக்கண்ட என் பாட்டனாரான வசிஷ்ட முனிவர்,
பிள்ளாய் உன் கோபத்தை விட்டுவிடு. அரக்கர்கள் மீது குற்றம் இல்லை. உன் தகப்பன் மாய்வதற்கு அப்படிப்பட்ட விதியிருந்தது.
இத்தகைய கோபம் மூடருக்குத்தான் தோன்றுமே ஒழிய ஞானியருக்குக் கோபம் வராது குழந்தாய்!
யாரால் யார் கொல்லப்படுகிறான்? ஒருவனால் மற்றொருவன் கொல்லப்படுவதில்லை.
அவனவன் தான் செய்த பாவ புண்ணியங்களையே புசிக்கிறான். மனிதன் மிகவும் வருந்திச் சம்பாதித்த புகழையும் தவத்தையும்
அவனுடைய கோபமானது அழித்து விடுகிறது. சொர்க்கம் மோட்சம் ஆகிய இரண்டையும் கொடுப்பதற்குக் காரணமாகிய
கோபத்தை முனிவர்கள் அனைவருமே விட்டு விடுகிறார்கள்.

ஆகையால், பேரனே! நீ அந்தக் கோபத்திற்கு வசப்பட்டு விடாதே! எந்தவிதமான அபராதமும் செய்வதறியாத
பேதையரான அரக்கர்களில் அநேகர் இதுவரை எரிந்துபோனது போதும்! இனி இந்த யாகத்தை நிறுத்திவிடு.
பெரியோருக்குப் பொறுமையாக இருப்பதே சிறந்த ஆசாரமாகும்! என்றார் –
நானும் அவருடைய வாக்குக்கு மதிப்பளித்து, என் யாகத்தை நிறுத்தி விட்டேன் -அதனால் வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சியடைந்தார்.
அப்போது பிரம்ம புத்திரரான புலஸ்திய முனிவர் அங்கு வந்தார். அவர் வந்ததும் என் பாட்டனார் அவருக்கு ஆசனமும், அர்க்கியமும்
(இருக்கையும் திருவடி கழுவுதலும்) கொடுத்து உபசரித்தார்.

மைத்ரேயரே! புலசு முனிவருக்கு தமையனாரான அந்த புலஸ்திய முனிவர் என்னை நோக்கி,
பராசரர்! உனக்கு பெருங்கோபமும் வைரமும் இருந்துங்கூட குருவாக்கிய பரிபாலனத்திற்காக, பொறுமையடைந்தாய்.
ஆகையால் இனிமேல் நீ சகல சாஸ்திரங்களையும் அறியக்கடவாய்.
கோபத்தால் நமது சந்ததியாரை அழியாமற்செய்த உன் பொறுமையின் பெருமையை பாராட்டி, உனக்கு நாங்கள் வேறொரு வரந்தருகிறோம்.
அதாவது நீ புராண சம்ஹிதையைச் செய்யும் சக்தியுடையவனாகக் கடவாய்!
தேவதையின் உண்மை இயல்புகள் அதாவது இதுதான் மேலான தேவதை என்பதை நீ அறியக்கடவாயாக
பிரவிருத்தி, நிவர்த்தி (முயற்சி, நீக்கம்) என்ற இரு வகைக் கருமங்களிலேயும் உன் புத்தியானது எமது அனுக்கிரகத்தில் நிலைத்தும்,
சந்தேகமற்றும் விளங்குவதாக! என்று கூறினார்.
அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வசிஷ்ட முனிவர். என்னைப் பார்த்து பராசரா! புலஸ்தியர் அருளியவை, உனக்குச் சித்தியாகட்டும்! என்றார்.

இவ்விதமாக மகாஞானியரான புலஸ்தியராலும் வசிஷ்டராலும் கூறப்பட்டவையெல்லாம்
இப்போது நீர் கேட்ட கேள்விகளால் மீண்டும் என நினைவுக்கு வந்தன.
மைத்ரேயரே! பெரியோரின் அருள்பெற்றதால் சிறப்பான ஞானம் பெற்ற நான், யாவற்றையும் உமக்குக் கூறுகிறேன்.
நன்றாகக் கேளும். புராணக்கருத்தின்படி பார்த்தால், உலகமானது ஸ்ரீவிஷ்ணுவினாலேயே உண்டாக்கப்பட்டு,
அவரிடத்திலே தான் இருக்கிறது. தொடர்புக்கும் முடிவுக்கும் அவரேதான் கர்த்தாவாகும்.
இந்த உலகங்கள் எல்லாம் அவராலேயே வியாபிக்கப்பட்டு, அவருடைய சொரூபமாகவே இருக்கின்றன.
அவரேதான் உலகம்! இவ்வாறு மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி சுருக்கமாகப் பதில் சொன்னார்.

—————–

2. பிரபஞ்ச உற்பத்தி

மைத்ரேயருக்குப் பராசர முனிவர் புராணஞ்சொல்லத் துவங்கி, அதன் முக்கிய விஷயமான ஸ்ரீவிஷ்ணுவைப் பலவகையாகத் துதிக்கலானார்.
விகாரமற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத இயல்புடைய
திவ்விய மங்கள விக்கிரகமுடையவனாய், சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும்படியான ஜயசாலியான
ஸ்ரீமகா விஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைக்கும் போது ஹிரண்யகர்ப்ப ரூபியாகவும்,
காக்கும் போது ஹரிரூபியாகவும், சங்கரிக்கிறபோது சங்கர ரூபியாகவும் இருந்து
வழிபடுவோருக்கு விடுதலை யளிப்பவருமான ஸ்ரீவாசுதேவருக்கு என் வணக்கம் உரியதாகுக!
ஒன்றாயும் பலவுமான சொரூபமுள்ளவராயும், காரணவஸ்தையிலேயே ஒன்றாய் சூட்சுமமுமாய் அவ்யக்தமுமான ரூபத்தையும்
காரியாவஸ்தையிலே அநேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான ரூபத்தையும் உடையவராகி, அனாதியான பிரகிருதி வாசனையாலே,
கட்டுப்பட்ட சேதனங்களுக்கெல்லாம் மோட்ச காரணமான ஸ்ரீவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக!
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய், நிமேஷான் மேஷ சூரிய கமனாதி சகல பதார்த்த ஸ்வரூபமான
காலத்தையே தனது சரீரமாக உடையவராயும், அந்தக்காலத்துக்குட்படாத மேன்மையான சொரூபமுடையவராயும்,
சர்வ வியாபகருமானவருக்கு என் வணக்கம் உரியதாகுக!
பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய் ஆதிசூட்சுமத்துக்கும் சூட்சுமமான ரூபமாய், எல்லாவற்றினுள்ளும் அந்தரியாமியாய்
பிரகிருதி சம்பந்தத்தினாலே குற்றமடையாமல் என்றும் உண்மையான ஞானத்துக்குரியவராய்,
கல்யாண குணங்களால் புருஷோத்தமர் என்று வழங்கப்படுபவரான எம்பெருமானைச் சேவித்தேன்.
தெண்டனிட்டேன். அதன் பிறகு இதனைச் சொல்லுகிறேன்.

பரமார்த்தமாக விசாரிக்குமிடத்தில் சுத்த ஞான சொரூபமாய், அஞ்ஞானம், தூக்கம் ஆகியவை இல்லாத அத்தியந்த நிர்மலராய்,
அனாதிப் பிரகிருதி வாசனையினால் உண்டான பிரமிப்பினால் தேக இந்திரியாதிகளை ஆன்மாவாக நினைப்போருக்கு
தேவ, மனுஷ்யாதி ரூபமாகத் தோன்றுபவராய், சேதனங்களிலெல்லாம் வியாபித்து, ஜகங்களைக் கிரகித்து,
தனது சங்கல்ப மாத்திரத்தாலேயே, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்து கொண்டு,
தன் திருவுளத்தாலல்லது கருமவசத்தினாலே பிறப்பு இறப்பில்லாதவருமான ஸ்ரீவிஷ்ணு பகவானை
தக்ஷப்பிரஜாபதி முதலிய முனிவர்கள் சேவித்து வணங்குகிறார்கள்.

பிறகு அவர்கள், உலகத்துக்கெல்லாம் படைப்புக் கர்த்தராயும், எம்பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவராயும்,
யாவற்றின் உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்த உலகத் தந்தையாகவும் விளங்கும் பிரம்மாவினிடம் கேட்க
அவர் அருளியதைச் சொல்கிறேன்.

பிரம்மதேவன் அருளியதை கேட்டறிந்தவர்களான தக்ஷர் முதலிய முனிவர்கள், உள்ளத் தூய்மையுடன் நர்மதை நதிக்கரையில்
ஆட்சி புரிந்து வந்த புருகுத்சன் என்ற மன்னனுக்கு, தாம் பிரம்மனிடம் கேட்டவற்றைக் கூறினார்கள்.
அதை அந்த மன்னன் சாரஸ்வதன் என்ற முனிவருக்கு உபதேசித்தான்.
அந்த மாமுனிவரின் திருவருளால், நான் அவற்றை அறிந்தேன். இவ்விதமாக, ஆசாரிய பரம்பரை ரீதியில் நான் அறிந்து
இந்த மகா புராணத்தை விளக்கமாக உமக்குச் சொல்கிறேன்.

மைத்ரேயரே! சொரூப குணங்களின் மேம்பட்ட லோகாதிபதிகளுக்குள்ளே உயர்ந்தவர்களான பிரம்மாதிகளில் உயர்ந்தவரும்,
தன்னை விட உயர்ந்தோரில்லாத வருமாய்ப் பரமாத்மாவாய், சேதனா சேதனங்களுக்கெல்லாம் தானே ஆதாரமாய்,
தனக்கு வேறெதுவும் ஆதாரமில்லாதவராய் தன்னிடத்திலே தானிருப்பவராய்,
தேவ மனுஷ்யாதி ஜாதிகளையும் கறுப்பு வெளுப்பு முதலிய வர்ணங்களையும் கிரியைகளையும் திரவியங்களையும்
சொல்கின்ற இயல்புகள் இல்லாதவராய் குறைதல். விநாசம், திரிதல், வளர்தல், பிறப்பு என்ற விவகாரங்களை விட்டிருக்கையால்,
சர்வகாலங்களிலும் அப்பிரமேயங்களான ஞானம், சக்தி, தேஜஸ், பலம் முதலிய ஷட்குண சொரூபத்தோடே இருப்பவர்
என்று சொல்லக்கூடியவராய், சேதன அசேதனங்கள் யாவற்றிலும் மேலும் கீழும் உள்ளும் புறமும் பக்கமும்
தான் வசித்துக் கொண்டு சேதனா சேதனங்களும் தன்னிடத்தில் வசிக்கத்தக்கதாகிய, சர்வலோக வியாபகமான சொரூபமுடையவராய்,
ஒன்றிலும் ஒட்டாமல் எல்லாமே தன்னால் விளங்கும்படிப் பிரகாசிப்பவராகையால்,
ஸ்ரீவாசுதேவர் என்ற வேதாந்த அறிஞர்கள் கொண்டாடும்படியிருக்கிறார்.

சொரூபத்திலும் குணத்திலும் பெருமையுடையவர் ஆகையால் பிரமம், பரமன் என்றும் சொல்லப்பட்டு நித்தியனும்
ஜனனரகிதனும் அட்சரனும் எப்பொழுதும் ஒரேவிதமான சொரூபனுமாய், துக்கம் அஞ்ஞானம் முதலிய ஈன குணங்களற்றவராகையினாலே,
நிர்மலராய் தோன்றுவதும், தோன்றாததுமான சகல லோகங்களையும் சரீரமாகக் கொண்டவராய்,
புருஷ ரூபமாயும் கால ரூபராயும் இருக்கிற பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் பகவான் ஒருவர் உண்டல்லவா?
அந்தப் பிரம்மத்துக்குச் சேதனமான ஷேத்ரஞ்ஞன் முக்கிய சரீரம்.

அறிஞர்கள் பிரதானம், புருஷம், வியக்தம், காலம் ஆகியவை விஷ்ணுவின் தூய்மையும் மிகவுயர்வுடையதுமான நிலை என்று கருதுகின்றனர்.
இந்த நான்கு நிலைகளும் தக்க அளவுகளின் அமைப்புகளாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்விக்கின்றன.
மூலப்பிரகிருதியும், சீவனும், தேவமனுஷ்யாதி வியக்தங்களும், காலமும் வகுத்தபடியே அந்தப் பரமாத்மாவின்
சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களினுடைய தோற்றத்திற்கும் விளக்கத்திற்கும் சாதனமான ரூபங்களாக இருக்கும்.
அது எப்படியெனில்
வியக்தமான சராசரங்களும் அவ்வியக்தமான பிரகிருதியும் சேதனமான ஷேத்ரஞ்ஞன் கலாகாஷ்டாதி ரூபமான காலமும்
ஸ்ரீவிஷ்ணுவினாலேயே தாங்கப்பட்டும் ஆளப்பட்டும் இருப்பதால் அவருக்கே சொரூபமாக இருக்கும்.
சகல இஷ்டங்களும் நிறைந்துள்ள அவருக்குச் சிருஷ்டி முதலியவற்றை ஏன் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பீராயின்,
அதற்கு சொல்கிறேன். விளையாடும் பாலகனுக்கு அந்த விளையாட்டே பயனுவது போல,
பரமாத்மாவுக்குச் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் முதலியவை விலைகளேயன்றி வேறு பயன் கிஞ்சித்தும் இல்லை என்று அறிவீராக.
இனிமேல் படைப்புக் கிரமத்தைக் கேளுங்கள்: எம்பெருமானுக்குச் சரீரம் என்று எதைச் சொன்னேனோ,
அந்த அவ்வியக்தமானது பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் மனு முதலானவர்களால் சொல்லப்படுகின்றது.
அது சேதனா சேதனங்கள் அடங்கியது ஆகையால் நித்தியமாய். அளவில்லாததாய் தான் அசேதனமாகியும்
மரங்களிடத்தில் அக்கினியிருப்பது போலத் தன்னிடத்திலே சேதனங்களான சீவகோடிகள் எல்லாம் இருக்கப்பெற்று,
அக்ஷயமுமாய் அப்பிரமேயமுமாய் பகவானேயல்லாது வேறு ஒரு ஆதாரமுமற்றதாய், நிச்சலமாய்,
சப்த, ஸ்பரிச, கந்த, ரூப, ரச, கந்தங்கள் இல்லாததாய், சத்துவ, ரஜஸ், தாமச குணத்துமகமாய்,
ஜகத்துக்குக் காரணமாய் காரணம், உற்பத்தி, விநாசம் என்ற இம்மூன்றும் இல்லாததாக இருக்கும்.

இந்த சிருஷ்டிக்குப் பூர்வத்தில், மகாப்பிரளயமானவுடனே அதனாலேயே யாவும் வியாபிக்கப்பட்டிருந்தது.
மைத்ரேயரே!
வேதாந்தத் தத்துவ பிரமவாதிகள், பிரதானத்தை தெரிவிப்பதான இந்தப் பொருளையே சொல்வார்கள். எப்படியெனில்,
அப்பொழுது பகலும் இரவும் ஆகாயமும், பூமியும், காற்றும், நீரும், சூரிய சந்திராதி ஜோதிகளும் இருளும்,
சாத்துவிக, தாமச, ராஜசகுண விலாசங்களும் மற்றுமுண்டான வஸ்துக்கள் ஒன்றும் இல்லாமல்
மூலப்பிரகிருதி ஒன்று மட்டுமே சமஷ்டி புருஷ ரூபமாக இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேம்பட்டதான அந்த ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபத்தினின்று, பிரதானம் என்கிற பிரகிருதியும்
புருஷன் என்கிற ஆத்துமாவும் உண்டாகி, சிருஷ்டிக்கு உபயோகமான சேர்க்கையில்லாதவைகளாய்,
அந்த எம்பெருமானுடைய எந்த ரூபத்தினால் தரிக்கப்பட்டிருந்தனவோ அது
அவருக்குக் காலம் என்கின்ற பெயரையுடையதான ஒரு சொரூபமாக இருக்கும்.

மைத்ரேயரே!
வியக்தமான மகத்தகங்காராதிகள் அந்தப் பிரகிருதியில் இருக்கும். பிரகிருதியும் பரமாத்மாவிடத்தில் லயப்பட்டதனால்
மகாப்பிரளயத்துக்குப் பிராகிருதப் பிரளயம் என்றும் பெயருண்டு. அந்தக் காலம் அனாதியானது.
அந்தக் காலத்துக்கு எப்போதும் முடிவில்லாமையினாலே, சிருஷ்டி ஸ்திதி, சங்காரங்கள் அவிச்சின்ன பிரவாக ரூபமாய்ப் பிரவர்த்திக்கின்றன.

மைத்ரேயரே! பிரகிருதி சம குணமாகவும் புருஷன் வேறாகவும் இருக்குமிடத்தில் விஷ்ணுவின் ஸ்வயரூபமான காலமானது
சிருஷ்டிக்கு அனுகூலமாகப் பிரவர்த்திக்கிறது. பிறகு பரப்பிரமமும் பரமாத்மாவும் செகன் மயனும், சர்வக்தனும்
சர்வபூதேஸ்வரனும் சர்வாத்மகனும், பரமேஸ்வரனுமான ஸ்ரீஹரி, தன்னிச்சையினாலேயே லீலார்த்தமாகப்
பிரகிருதி புருஷர்களிடத்தில் பிரவேசித்து, ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வில்லாமல் சமமாக இருக்கிற
சத்துவ, ராஜஸ, தாமச குணங்களுக்கு வைஷம்மியங்களைக் கற்பித்து, பிரகிருதி புருஷர்களுக்குச் சலனமுண்டாக்கி அருளினார்.

எப்படி வாசனையானது அதிகம்பீரமான மனதுக்கு தன் சான்னித்யத்தினாலேயே விகாரத்தை உண்டு பண்ணுகிறதே அல்லாது
யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ, அது அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ,
அது போலவே பரமேஸ்வரன் தன் சான்னித்ய விசேஷத்தாலேயே பிரகிருதி புருஷர்கள் பிரபஞ்சத்தைப் படைப்பிக்கக் கலக்குகிறான்.
வாசனையானது மனோவிகாரத்துக்கு நிமித்தம். பரமாத்மாவோ பிரபஞ்சத்துக்கு நிமித்தகாரணம் மட்டுமல்ல
தானே சலனமுண்டாக்குகிறவனாய், சலிப்பிக்கப்படுவதுமான பிரகிருதி புருஷ ஸ்வரூபமாகத் தானே ஆகின்றான்.
ஆகையால் உபாதான காரணமும் அவனே! சூட்சும ரூபமும் ஸ்தூல ரூபமுமான பிரகிருதியும்,
வியஷ்டி சமஷ்டி ரூபமான பிரம்மாதி ரூபங்களும் வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருக்கின்ற பிரபஞ்சமும்
மூலப்பிரகிருதியும் சர்வேசுரனாய் புரு÷ஷாத்தமானாயிருக்கின்ற விஷ்ணுவின் ஸ்வரூப மாகையினாலே,
காரியமான செகத்தும் அவனன்றி வேறல்ல. இது நிற்க.

மைத்ரேயரே!
ஜீவனுடைய கர்மவசத்தினாலே சலனப்பட்ட பிரகிருதியினின்றும் சத்துவ, ராஜச, தாமஸ, குண வைஷம்மிய ரூபமான
மகத்தத்துவம் உற்பத்தியாயிற்று. பராத்பரனான ஸ்ரீவிஷ்ணுவினுடைய சரீரமான பிரகிருதியானது.
தன்னால் உண்டான மகத்தத்துவத்தை மூடிக்கொண்டது. அந்த மகத்தத்துவம் சாத்வீக ராஜச, தாமசம் என்ற குணத்திரயத்தை கொண்டதாய்,
விதையானது மேற்புறம் தோலால் மூடப்பட்டிருப்பதைப் போல பிரகிருதியினால் மூடிக்கொள்ளப்பட்டது.
அப்பால், அந்த மகத்தத்துவத்திலிருந்து வைகாரிகம், தைஜஸம், பூதாதிகள் என்ற மூன்றுவித அகங்காரம் பிறந்தது.
அதில் சாத்விக அகங்காரம் வைகாரிகம் ஆகும். ராஜச அகங்காரம் தைஜஸம் ஆகும். தாமஸ அகங்காரம் பூதாதி என்று சொல்லப்படும்.
அந்த அகங்காரங்கள் திரிகுணாத்மகமான படியினாலே, பஞ்ச பூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் ஏதுவாக இருக்கும்.
பிரகிருதியினாலே மகத்தத்துவம் மூடப்பட்டது போல அகங்காரம் மகத்தத்துவத்தினாலே மூடப்பட்டு இருந்தது
அதில் பூதாதி என்று வழங்கப்பட்ட தாமச அகங்காரம் விகாரப்பட்டு, சப்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று.
அதிலிருந்து, சப்தத்தை லக்ஷணமாகக் கொண்ட ஆகாசம் பிறந்தது. அந்த ஆகாசம் தாமச அகங்காரத்தாலே மூடிக்கொண்டது.
அந்த ஆகாசம் விகாரப்பட்டு, ஸ்பரிச தன்மாத்திரையை உண்டாக்க, அதனால் காற்று தோன்றியது.
அந்தக் காற்றுக்கு ஸ்பரிசம் குணமாகும். அந்த ஸ்பரிச தன் மாத்திரையான வாயுவும் ஆகாசத்தாலே மூடப்பட்டது.
அந்த வாயு விகாரப்பட்டு ரூப தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் தேஜசு பிறந்தது. அந்த தேஜசு அசாதாரணமான குணத்தையுடையது.

ஸ்பரிச தன்மாத்திரையினாலே ரூப தன்மாத்திரையான தேஜசு மூடப்பட்டுள்ளது.
தேஜசு விகாரப்பட்டு ரச தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து அப்பு பிறந்தது, ரச தன்மாத்திரையான அப்புவும்,
ரூப தன்மாத்திரையினாலே மூடப்பட்டது. அந்த அப்பு விகாரப்பட்டு, கந்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று.
அதனால் பிருத்வி பிறந்தது. பிருதிவிக்குக் கந்தம் அசாதாரண குணமாக இருக்கும் சூட்சுமம் கண்ணுக்குப் புலனாகாதபடியினால்
பஞ்சமகாபூத காரணங்களான சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்களுடனே கூடிய சூட்சும பூதங்கள் தன்மாத்திரைகள்
என்று சொல்லப்படும் ஸ்தூலங்களான ஆகாசாதி பூதங்களிலே சப்தாதி குணங்கள் விகசிதமாய்க் காணப்படும்.
தன்மாத்திரைகள் அதிநுண்ணியதாய் சரீரலகுத்துவமும், அற்புதப் பிரகாசமும், பிரசன்னத்துவமும் உண்டாக்குகிற
சாந்தமான சாத்வீக குணமும், வியாகுலமும் நானாவித வியாபாரங்களும் உண்டாக்குகின்ற கோரமான ராஜசகுணமும்,
நித்திரையும் ஆலசியமும் உண்டாக்குகின்ற மூடமான தாமச குணமும் இல்லாதிருக்கும்.
இவ்விதமாக ஆகாசாதி பூதங்களும், தன்மாத்திரைகளும் பூதாதியென்று வழங்கப்படும் தாமச அகங்காரத்தால் பிறந்தன
தைஜசம் என்று வழங்கப்பட்ட ராஜச அகங்காரத்தால் இந்திரியங்கள் உண்டாயின என்று சிலர் கூறுவார்கள்.
வைகாரிகம் என்று சொல்லப்பட்ட சாத்வீக அகங்காரத்தால் இந்திரியங்கள் பிறந்தன என்றும் சிலர் கூறுவார்கள்.
இந்த இரு பக்ஷங்களிலேயும் மனதுடன் பதினோரு இந்திரியங்கள் சாத்வீக அகங்காரத்திலே பிறந்தன என்பதே நிச்சயம்.
ராஜச அகங்காரம், சாத்வீக தாமச அகங்காரங்கள் இரண்டுக்கும் சகாயமாக இருக்கும்.

இனி, இந்த ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகியவற்றின் சொரூபத்தைக் கேளுங்கள்!
மெய் கண், மூக்கு, வாய், செவி என்ற இவ்வைந்தும் ஞானேந்திரியங்கள்!
இவற்றுக்கு ஸ்பரிசம், ரூபம், கந்தம், ரசம், சப்தம் என்ற இவ்வைந்தும் போக்கிய பதார்த்தங்கள்,
வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய ஐந்தும் கர்மேந்திரியங்கள்,
வசனம், கர்மம், கமனம், சொர்க்கம், ஆனந்தம், இன்னுமிவை ஐந்தும் அவ்வைந்துக்கும் காரியங்கள்,
ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற பூதங்கள் தமக்கு அசாதாரண குணமான சப்த, ஸ்பரிச, ரூப ரச, கந்தங்கள்,
(பூமியில் ஐந்தும், நீரில் நான்கும், தீயில் மூன்றும், காற்றில் இரண்டும், வானில் ஒன்றும்) தாங்கள் மேன்மேலும் அதிகமாகப் பெற்று,
அன்னியோன்னிய சையுக்தமாய்ச் சாத்வீக, ராஜச, தாமச குணாத்மகங்களான படியால்,
சாந்தங்களாயும் கோரங்களாயும் மூடங்களாயும் சிறப்புற்று விளங்கும். இந்த விதமாகப் பிறந்த பஞ்சபூதங்களும்
நானாவித சக்தி யுக்தங்களாய் ஒன்றோடொன்று கலந்து ஐக்கியமாயின.
அதெப்படியென்றால், பிரிதிவியில் அப்புவும், தேயுவும், வாயுவும், ஆகாயமும், ஜலத்தில் பூமி, தேயு, வாயு, ஆகாயமும்,
தேயுவில் பிருதிவி, அப்பு வாயு, ஆகாயமும், ஆகாயத்தில் பிருத்வி, அப்பு தேயு மாருதங்களும் கலந்தன.
இதுவே பஞ்சீகரப் பிரகாரம் இவ்விதமாக அன்னியோன்னியமாகக் கலந்ததனாலே பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிப்பதற்கும்
நான்குவதைப் பிறவிகளைச் சிருஷ்டிப்பதற்கும் சாமர்த்தியமுடையவைகளாய், ஜீவனுடைய கர்ம விசேஷத்தினாலும்
பிரகிருதி மகத்தகங்கார தன்மாத்திரைகளின் சையோகத்தினாலும் ஈசுவர சங்கல்பத்தினாலும் பிரமாண்டத்தை உண்டாக்கின.

இப்படி, பஞ்ச பூதங்களினாலே பிறந்த அந்த அண்டம் நீர்க்குமிழி போல ஒரு கணப்பொழுதிலே
அபிவிருத்தியாயிற்றே யல்லாமல் கிரமக் கிரமமாக அபிவிருத்தியாகவில்லை, இவ்விதமாகப் பிரகிருதியினாலே உண்டான
அதி விசாலமான பிரமாண்டம் பிரகிருதி சரீரகரான ஸ்ரீவிஷ்ணு பகவானுக்கு லீலா ஸ்தானமாய் மகா ஜலத்திலே மிதந்து கொண்டிருந்தது.
இவ்விதமாகப் பிறந்த பிரம்மாண்டத்தில் பிரகிருதி சொரூபனும் மகத்தகங்காரத் தன்மாத்திரா மகாபூத சரீரகனும்
ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவர் சதுர்முக ஸ்வரூபமாய்த் தானே அவதரித்தார்.

அந்த அண்டத்துக்கு மேருமலையானது உல்ப்பம்; மற்ற மலைகள் ஜராயு; சமுத்திரங்கள் கர்ப்போதகமுமாகும்.
உல்ப்பம் என்றால் கருவை சுற்றியுள்ள ஆடையைப் போன்ற ஒன்றாகும். ஜராயு வென்றால் அதன்மீது சுற்றியிருக்கிற கருப்பை,
கர்ப்போதகமாவது அதிலிருக்கும் தண்ணீர் அந்தப் பிரமாண்டத்தில் மலைகள், தீவுகள், சாகரங்கள் ஜோதிச் சக்கரங்கள்,
மனுஷ்யர், தேவர், அசுரர் ஆகியவை பிறந்தன. இப்படியுண்டான பிரம்மாண்டத்தை கவிந்து,
ஒன்றுக்கொன்று தசகுணோத்தரமான சகலமும் அக்கினியும் காற்றும் ஆகாயமும் தாமச அகங்காரமும் மகத்தத்துவமாகிய
சத்தாவரணங்களும் இருக்கின்றன. எப்படி தேங்காயானது நார் மட்டை ஆகியவற்றால் கவியப்பட்டிருக்கிறதோ அதுபோலவே,
பிரம்மாண்டமும் சத்தாவரணங்களாலே கவியப்பட்டுள்ளது.

அந்த அண்டத்தில் விசுவரூபமான நாராயணர், பிரமரூபியாகி,
ரஜோகுணத்தைப் பிரதானமாகவுடையவராய் தேவ, அசுர, கந்தர்வ மனுஷ்ய, பசு, பக்ஷி தாவரங்கள் ஆகியவற்றைப் படைத்துக் கொண்டு,
அப்பிரமேயப் பராக்கிரமனும் சட்குண ஐசுவரிய சம்பன்னனுமான தானே சாத்வீகக்குணப் பிரதானனாய்,
லீலார்த்தமாக யுகங்கள் தோறும் நானாவிதமான திவ்விய அவதாரங்களைச் செய்து கல்பாந்தர பரியந்தமும்
ஜகத்தைப் பரிபாலனம் செய்து கொண்டும், பிரளய காலத்தில் தாமச குணப் பிறதானனாய் ருத்திர ரூபியாகிறான்.

அப்பொழுது அதிபயங்கரனாய் சராசரங்களான அகில பூதங்களையும் விழுங்கி, மூவுலகங்களையும் ஏகார்ணவமாகச் செய்து,
ஸஹஸ்ர பணு மண்டல மண்டிதனான ஆதிசேடனாகிய படுக்கையில், சயனித்துக் கொண்டு பிறகு
பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாகி, முன்போலவே, பிரபஞ்சத்தை படைத்தருள்வான்.

ஷட்குண சம்பன்னனான ஜனார்த்தனன் ஒருவன், அந்தந்தச் சொரூபங்களில் நின்று, சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால்,
பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருப்பெயர்களைப் பெறுகின்றான். அந்தப் பகவான் தானே சிருஷ்டி கர்த்தாவாக இருந்து
சராசர சரீரகனாக தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் அப்படியே தானே காக்கின்றான். யுகமுடிவில் தானே சங்கரிக்கின்றான்.

ஆகையால் சிருஷ்டி கர்த்தாவாகவும் சங்கார கர்த்தாவாகவும் தோற்றுகிறவர்களுக்கும் சிருஷ்டிக்கப்படுவதும்
சங்கரிக்கப்படுவதுமாகத் தோற்றுபவைகளுக்கும் தாரதம்மியம் ஒன்றும் இல்லை.
ஏனெனில் பிருத்வி அப்பு, தேயு, வாயு ஆகாயங்களும் இந்திரியங்களும் மனமும் ஷேத்ரஞ்ஞனுமாகிய சக்ல பிரபஞ்சங்களும்
அந்த ஸ்ரீமந் நாராயணனேயாம்! எப்படியெனில் சகல பூதங்களுக்கும் ஆன்மாவாய், எல்லாவற்றையும் தனக்கு
சரீரமாகவுடையவனாகையால் கை, கால் முதலிய சரீரத்தின் செய்கை, சரீரியான ஆன்மாவுக்கு உபகாரமாவது போல,
பிரம்மாதிகள் செய்கின்ற சிருஷ்டி முதலியவை யாவும் அவனுக்கு உதவியாக இருக்கும்.

இனிமேல், நான் சொன்னவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்கிறேன். அதாவது,
சேதனாசேதனங்களான சகல பிரபஞ்சங்களும், சரீரமாயிருப்பதான சொரூபமுடையவனாகையாலே பிரமாதி ரூபங்களில்,
படைப்பவன் அவன் ! படைக்கப்படுபவனும் அவன்! காப்பவன்-அவன். காக்கப்படுவோனும் அவன்! சங்கரிக்கிறவன் அவன்;
சங்கரிக்கப்படுகிறவனும் அவனே! ஆனால் தான் சர்வசக்தனாக இருக்கும்போது, பிரம்மாதிகளை இடையில் வைப்பது
ஏனெனில் அவர்களுக்கு அப்படிச் செய்யும்படி அவனே வரங்கொடுத்திருக்கிறேன்.
ஆகையால் தான், மைத்ரேயரே! அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவே சகல விதத்திலும் உபாசிக்கத் தக்கவனாக இருக்கிறான்!

———–

3. காலப் பிரமாணம்

பராசர முனிவரே! நிர்க்குணமும் அப்பிரமேயமும் தூய்மையும் நிர்மலமுமான பரப்பிரம்மத்திற்குச்
சிருஷ்டி. ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை எப்படிக்கூடும்? என்று மைத்ரேயர் கேட்டார்.

பராசர மகரிஷி கூறலானார் : மைத்ரேயரே!
அக்கினிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு.
அதுபோலவே, எம்பெருமானாருக்கும் படைத்தல் முதலியவைகளுக்குக் காரணமான சக்திகள் உண்டு.
அதனாலே பரமாத்மா சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்தருள்கிறான்.
ஸ்ரீமந் நாராயணன் பிரபஞ்ச, சிருஷ்டி உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன்.

நாராயணன் என்ற திருநாமமுடைய பகவான் உலகங்களுக்குப் பிதாமகனான பிரம்மாவாக அவதரித்தான் என்று
உபசாரத்தினால் சொல்லப்படுவது மகாப்பிரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய திருமேனியில் பிரவேசித்திருந்து
மீண்டும் தோன்றுவதனால் தான் என்பதை அறிந்துகொள்ளும் அந்தப் பிரம்மாவுக்கு அவருடைய அளவில் நூறாண்டுக்காலம் ஆயுசு உண்டு.
அதற்கு பரம என்று பெயர். அதில் பாதி பரார்த்தம் என்று சொல்லப்படும் காலமானது விஷ்ணு சொரூபம் என்று முன்பே சொன்னேன் அல்லவா!
அந்தக் காலத்தினாலே சதுர்முகப் பிரும்மனுக்கும் அந்தியம் உண்டாகும். அதனால் மலைகள், சமுத்திரங்கள் முதலிய
சகல சராசரங்களுக்கும் வளர்தல், நசித்தல் முதலியவை உண்டாகும்.

இது இப்படியிருக்க இனி காலப் பிரமாணத்தின் இயல்பைக் கூறுகிறேன். மைத்ரேயரே!
நிமிஷகள் பதினைந்து கூடியது ஒரு காஷ்டை; அந்தக் காஷ்டை முப்பதானால் அது ஒரு கலை,
அந்தக் கலைகள் முப்பதானால் ஒரு முகூர்த்தம், அந்த முகூர்த்தம் முப்பதானால் அது மனுஷ்யர்களுக்கு ஒரு அகோராத்திரம்;
அதாவது ஒருநாள். அந்த அகோராத்திரங்கள் முப்பதானால் இரண்டு பக்ஷங்களோடு கூடிய ஒரு மாதம்
அந்த மாதம் பன்னிரண்டானால் தட்சணாயனம் உத்திராயணம் என்ற இரண்டு அயனங்கள் சேர்ந்து ஒரு வருஷமாகும்.
தட்சணாயனம் தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயணம் பகலுமாகவும் இருக்கும்.
தேவமானத்தில் பன்னீராயிரம் ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம்.
அதில் கிருதயுகம் நாலாயிரமும் சந்தி, சந்தியம்சங்கள் எண்ணூறு திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும்.
திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட மூவாயிரத்தறு நூறு ஆண்டுகள்,
துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட இரண்டாயிரத்து நானூறு தேவ ஆண்டுகள்.
கலியுகத்திற்கு ஆயிரமும் சந்தி சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறுமாக இருக்கும்
சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்தியகாலம்
சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம் சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது,
கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களைப் பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது.
இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் திரும்பினால்
சதுர்முகனாகிய பிரமனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும்.
அந்த சதுர்முகனுடைய தினத்தில் பதினான்கு மநுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மநுவந்தரப் பிராமணத்தைக் கூறுகிறேன், கேட்பீராக;

மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும், இந்திரன் மநுக்கள், மநு புத்திரரான அரசர்கள்
ஆகியவர்களும் ஏககாலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏககாலத்திலே சங்கரிக்கப்படுவார்கள்.
தேவமானத்தில் எழுபத்தோரு மகாயுகம் ஒரு மநுவந்தரம் என்று சொல்லப்படும்.
இந்திராதி நூறு தேவதைகளுக்கும் மநுக்களுக்கும் இதுவே ஆயுட் பிரமாணமாகும்.
ஒரு மநுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்தீராயிரம் ஆண்டுகள் அளவாகும்.
அது மனுஷிய மானத்தினாலே, முப்பது கோடியும் அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும்.
இப்படிப் பதினாலு மநுவந்தரங்களானால் பிரமனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும்.

அந்தத் தினப் பிரளயத்தில், பூலோக, புவர்லோக சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும்
அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள், அந்தப் பிரளயாக்கினி ஜ்வாலையின் கனல் வேகத்தைப் பொறுக்க முடியாமல்
தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்குச் செல்வார்கள். அதன் பிறகு, சப்த சாகரங்களும் பொங்கித்
திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும்
அந்தச் சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன், திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய
அநுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி, அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால்,
ஆதிசேடனாகிய சயனத்தில் சயனித்துக் கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய்,
முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன்.
இதுபோல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான்.
இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு ஆனால் சதுர்முகப் பிரமனின் ஆயுள் முடியும்
அதில் ஐம்பது ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று.
அது பிரமனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது.
இது வராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீவராக கல்பம்!

————–

4. ஸ்ரீவராஹ அவதார வைபவம்

குருநாதரே! நாராயணன் என்ற திருநாமத்தைக் கொண்ட அந்தப் பிரம ஸ்வரூபியான பகவான்.
இந்தக் கல்பத்தின் துவக்கத்தில் சர்வ பூதங்களையும் எந்தவிதம் படைத்தார் என்பதையும்
முந்திய பாத்தும கல்பத்தைப் பற்றிய பிரளயத்துக்குப் பிற்பட்டதான இந்த வராக கல்பப் படைப்பைப் பற்றியும்
எனக்கு விளக்க வேண்டுகிறேன் என்று மைத்ரேயர் கேட்டார்.

பராசர மகரிஷி கூறலானார்.
மைத்ரேயரே! பிரஜாபதிகளுக்கு அதிபதியாய், நாராயணத்துமகனாய், தேவ தேவனுமான அந்தப் பிரமரூபியான பகவான்,
பிரஜைகளைப் படைத்த விதத்தைக் கூறுகிறேன். முன்பு சொன்னது போல சதுர்யுக சஹஸ்ர சங்கையான இரவெல்லாம்
யோக நித்திரை செய்து, விடியற்காலத்தில் நித்திரை தெளிந்து பிரபோதம் அடைந்து,
சத்வகுணம் மேலிட்டவனாகிய சதுர்முகப் பிரமன், சூனியமான மூன்று உலகங்களையும் படைக்கத் திருவுள்ளம் கொண்டான் –
பராத்பரனும் ஷட்குண சம்பன்னனும் அனாதியும் சர்வ ஜகத்காரண பூதனும் சதுர்முக ஸ்வரூபனுமான
அந்த ஸ்ரீமந்நாராயண மூர்த்தியே சகல லோகங்களுக்கும் பிரபு ஆவார்.
படைப்புக் காலத்தில் அவரே பிரமாவினிடத்தில் அனுப் பிரவேசித்துப் படைப்பைப் படைக்கின்றார்.

அவர், மகாஜலத்திலே சயனித்திருந்தார் அல்லவா? அதனால் மநுவாதி ரிஷிகள், நாராயண சப்த நிர்வசனத்தை
தெரிவிக்கிற சுலோகத்தை அருளிச் செய்தார்கள். நரசப்த வாச்சியனனான பரமாத்மாவினிடத்தில் ஜனித்த
உதகங்கள் நாரங்கள் என்று சொல்லப்படும். ஏனென்றால் அவை நாராயணருக்குப் பிறப்பிடமான படியினாலும்
அவரிடமிருந்து அவை தோன்றியதாலும், அவை பிரம்மனின் முதலாவது சயனத்தில் நிகழ்ந்ததாலும்
அவர் நாராயணன் என்று வழக்கப்பட்டார்.
இத்தகைய திவ்வியத் திருநாமமுடைய எம்பெருமான் நீர் மீது தாமரை இலை ஒன்று மிதக்க கண்டு,
ஏகார்ணவமான பிரளய யோகத்தில் பூமியானது மூழ்கி யுள்ளதாக முடிவு செய்து, அதனை மேலேயெடுக்க
முந்தைய கல்பங்களின் மஸ்ய, கூர்மாதி திவ்விய அவதாரங்களைச் செய்தருளியது போல
இந்தக் கல்பத்தில் ஸ்ரீவராகவதாரம் எடுக்க விழைந்தார். அத்தகைய திருவவதாரத்தை, வேதங்களால் சொல்லப்பட்ட
யாகாதிகர்மங்களால் நிரூபிக்கத் தக்கதாகவும், சர்வ லோக ரக்ஷணர்த்தமாகவும் தாம் மேற்கொண்டு,
ஜனக ஸனந்தனாதி யோகிகளால் வேதவசனங்களால் துதிக்கப் பெற்று, தமக்குத் தாமே ஆதாரமாகி,
ஏகார்ணவ பிரளயோதகத்தில் பிரவேசித்தருளினார்.
இவ்விதமாகப் பூமியாகிய தன்னை உத்தரிப்பதற்காகப் பாதாளத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானை.
பூதேவி யானவள் வணங்கி பக்தி பூர்வமாகத் துதிப்பாளாயினள்.

பூதேவியின் துதி:
தாமரை போன்ற திருவிழிகளையுடையவனே! சங்குசக்கரகதாதி திவ்விய ஆயுதமுள்ளவனே!
உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன். பூர்வத்தில் மகார்ணவத்தில் மூழ்கிக் கிடந்த என்னை நீயே உத்தரித்தாய்;
இப்போதும் அது போன்றே என்னை உத்தரித்தருள வேண்டும். ஜனார்த்தனா! உன் மகத்தகங்கார தன்மாத்திரைகளும் பிரகிருதியும்,
சீவனும் யாவுமே உனது திருச்சரீரமல்லவோ! க்ஷத்திரக்கிய சொரூபனும் பரமாத்மாவும் சமஸ்த ஜகத் வியாபகனுமான உனக்கு நமஸ்காரம்!
அவ்வியக்தமான பிரபஞ்சமும் காலமும் சொரூபமாகவுடைய உனக்கு நமஸ்காரம்!
பிரம ரூப, ஸ்வயரூப, ருத்திர ரூபமும் தரித்து சர்வ பூதங்களுக்கும் சிருஷ்டி கர்ததாவாகவும் ரக்ஷகனாகாவும்
சங்காரகனாகவும் இருந்து கல்பாந்த காலத்தில் சகல பூதங்களையும் கிரகித்து மூன்று லோகங்களையும்
தண்ணீரானது பொங்கி அமிழ்த்தும் படிச்செய்து, பின்னர் அந்த மகா பிரளயத்திலேயே சயனம் செய்து,
பரம யோகிகளாலே கோவிந்தா என்று தியானிக்கப்படுபவனும், நீயே அன்றே!
பரமாத்பனும் திவ்வியனுமான உனது நிஜஸ்வரூபத்தை எவரே அறிவர்? நீ ஜகத்தை ரக்ஷிப்பதற்காக, லீலார்த்தமாகத் தரித்த
உனது அவதாரங்களை யன்றே தேவர்களும் ஆராதிக்கிறார்கள்? மோட்சத்தை விரும்பும் மாமுனிவர்களும் பர பிரமமான
உன்னையே ஆராதித்து முத்தராய் பரமானந்தத்தை அடைகின்றனர். யாவற்றுக்கும் ஆதாரமும் ஆதேயமும், தாரகனும்
பிரகாசகனுமாகையால் ஸ்ரீவாசுதேவன் என்கின்ற திருநாமம் கொண்ட உன்னை ஆராதிக்காமல் எவன் தான் முக்தியடைவான்?
மனத்தால் கிரகிக்கப்பகிற சுகம் முதலானதும், கண் முதலிய இந்திரியங்களாலே கிரகிக்கத்தக்க ரூபாதிகளும்
புத்தியினாலே பரிசோதிக்கும்படியான பிரமாணந்தரங்களும் உனது சொரூபங்களன்றே?

தேவதேவா! உன்னிடத்திலே பிறந்து, உன்னையே ஆஸ்ரயித்து, உனது சரீர பூதையாய் உன்னிடத்திலேயே
நிலைத்திருப்பவளாகையால் உலகங்கள் யாவும் என்னை மாதவி என்று சொல்லும்;
சகல ஞான சொரூபனே! நீ ஜெயசாலியாகக் கடவை! ஸ்தூலப் பிரபஞ்ச ஸ்வரூபனே! நீ வாழ்க! அவ்யயனே!
அளவில்லாதவனாகையனாலே அனந்தன் என்ற திருநாமமுடையவனே! வியக்த பூதாதி சொரூபனே; அவ்வியக்த ரூபனே!
உத்கிருஷ்டங்களுக்கும் நிசருஷ்டங்களுக்கும் ஆன்மாவானவனே! விசுவாத்மகனே! யக்கியங்களுக்கு அதிபதியே! நீ வாழ்க!
யக்யங்களும் வஷட்காரமும் நீயே! பிரணவமும் திரேதாக்கினிகளும் நீயே! சதுர்வேதங்களும் நீ!
யக்ஞத்திற்கு உரிய புருஷனும் நீ! ஓ! புருஷோத்தமா; சூரிய சந்திராதி கிரகங்களும், அசுவினியாதி நட்சத்திரங்களும்
மூர்த்தமான திரவியங்களும், மூர்த்தமல்லாதவைகளும் காணப்படுபவைகளும், காணப்படாதவைகளும்
நான் சொன்னவைகளும், சொல்லாதவைகளும் சமஸ்தமும் நீயே! சகலமான தேவதைகளுக்கும் மேலான ஸ்வாமி!
இப்படி யாவற்றுக்கும் ஆத்மபூதனான உனக்குத் தெண்டன் இடுகிறேன்.

இவ்விதமாகப் பூமிபிராட்டியானவள் வெகுவாய் ஸ்துதி செய்தாள். அந்தப் பூமியைத் தரிப்பவனான ஸ்ரீயப்பதியானவன்
வராக ரூபத்திற்கு அநுகுணமான சாம வேதமயமான இர்குர் என்ற சப்தத்தினாலே பூமிப்பிராட்டியார் செய்த தோத்திரத்திற்குத்
திருவுள்ளம் உகந்ததைக் காட்டியருளினான். பிறகு மலர்ந்த செந்தாமரை மலரை ஒத்த திருக்கண்களையுடையவனும்
கருநெய்தற் பூவையொத்து விளங்கும் திருமேனியுடையவனுமான மகா வராக ரூபமுடைய ஸ்ரீமந் நாராயணன்,
தனது கொம்பு நுனியினாலே பூமியை உயர எடுத்து மகா நீலமலைபோல பாதாளத்திலிருந்து எழுந்தருளினான்.
இவ்விதம் தோன்றிய ஸ்ரீயக்கிய வராக மூர்த்தியின் மூச்சுக்காற்று வேகத்தால் எழும்பிய வியர்வை ஜலமானது
ஜனலோகம் வரைப் பாய்ந்து, அங்கு பகவத் தியானஞ்செய்து கொண்டு மிகவும் தூயவராயிருக்கும்
ஜனக சனந்தருடைய தேகங்களிற்பட்டு, அவர்களை மேலும் தூயவராக்கியது.

அதே சமயத்தில், வராக மூர்த்தியாரின் குளம்புகளால் தாக்கப்பட்ட அந்த ஜலமானமானது அண்ட கடாகத்தினுள்ளே
பாதாளத்துக்கு வெகு இரைச்சலுடன் இறங்கிற்று. அந்த மஹா வராஹமூர்த்தியினுடைய சுவாச நிசுவாச வேகத்தால்
பூலோகவாசிகளான ஜனங்கள் தள்ளப்பட்டு, ஒதுங்கலாயினார்கள்.
இவ்வாறு பிரளயார்ணவோதகத்தினால் நனைந்த திருவுதரத்தோடு, தனது கோட்டுமுனையில் பூமியை எடுத்துக் கொண்டு,
ரசாதல லோகத்திலிருந்து எழுந்தருளினார். அவர் தமது திவ்வியத் திருமேனியை உதறியருளுமளவில்,
அந்த வராக மூர்த்தியினுடைய ரோம கூபங்களின் நடுவே நின்று காணப்பட்ட ஜனக ஸனந்தன ஸ்னந்குமாராதியான
யோகிகள் ஆனந்தம் மிகுந்து பக்தியுடன் வணங்கித் துதி செய்தருளினார்கள்.

பிரமன் முதலான லோக ஈஸ்வரருக்கெல்லாம் மேலான ஈசுவரனே! சங்கு சக்கரம், கதை வாள் வில் என்ற
பஞ்சாயுதங்களைத் தரித்தவனே! முத்தொழில்களுக்கும் கர்த்தாவும் ஆள்பவனும் நீயே ஸ்வாமி!
வேதங்கள் உன்னுடைய சரண கமலங்களில் இருக்கின்றன. யூபஸ்தம்பங்கள் உன்னுடைய கோரைப்பற்கள்
யக்கியங்களெல்லாம் உன்னுடைய தந்தங்கள் நானாவிதமான வேதிகைஸ்தான சயனம் எல்லாம் உனது திருமுகத்திலிருக்கின்றன.
அக்கினியே உனது நாக்கு! உன்னுடைய ரோமங்கள் தருப்பைப் புற்கள்; ஆகையால் யக்கிய ரூபமாய்
யக்கியத்தினால் ஆராதிக்கப்படும் புருஷன் நீயே இரவும் பகலும் உனது திருக்கண்கள் சகல வேதங்களுக்கும்
ஆதியான பிரணவமே உனது சிரசு புருஷ சூக்தம் முதலான சூக்தங்கள். எல்லாம் உன்னுடைய பிடரியின்
ரோமங்கள் சாமவேதமே உன்னுடைய கம்பீரமான நாதம் பிராக் வம்சமென்கிற அக்கினி சாலையின் முன்புறமானது உன்னுடைய திருமேனி!

இப்படியாக மூர்த்தியாய், அனாதியாயுள்ள ஷட்குண ஐசுவரியை சம்பன்னனான எம்பெருமானே!
உன் திருவடிவைப்பினாலே பூமியை ஆக்கிரமித்து பதம் கிரமம் என்ற ஏற்பாடுகளுடன்கூடிய அளவற்றதாய்,
ஆதியில் நின்ற சப்த பிரமமும் நீயே! அக்ஷர சொரூபியாயும் அழியும் தன்மையற்றவனாயும் சகல சொரூபியாயுமிருக்கிற ஸ்வாமி!
சராசர மயமான உலகங்களுக்கு எல்லாம் நீயே ஒப்பில்லாத ஈஸ்வரன்! தம்தம் விருப்பங்களைப் பிரார்த்திக்கத்
தக்கவனாக நீயே இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிந்தோம். ஆகையால் உன்னையே பிரார்த்திக்கின்றோம்.
கிருபை செய்ய வேண்டும். திவ்வியமான உனது கோரைப் பல்லின் நுனியிலே காணப்படுகின்ற
இந்த சமஸ்த பூமண்டலமானது தாமரைத் தடாகத்திலே பிரவேசித்து விளையாடிய மதயானையானது
தனது கொம்பிலே, சேறுடன் கூடிய தாமரையைத் தூக்கிவந்தால் எப்படிக் காணப்படுமோ, அப்படித் தோற்றமளிக்கிறது.

ஒப்பற்ற மகிமையுடையவனே, ஓ ஜகந்நாதா! உண்மையான பொருள் நீ ஒருவனேயன்றி வேறொன்றுமில்லை.
எப்படியெனில், சராசர மயமான சகலமும் உன்னால் வியாபிக்கப்பட்டு உனது திருமேனியாக இருப்பதனால்,
இவையாவுமே உனது மகிமையாகும். நீயே பரமார்த்தமாகிறாய். உலகத்துக்குக் காரண பூதனாய்,
உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உன் மகிமை சொல்லாத முடியாததன்றே!
சத்து, அசத்து என்னும் விவேகம் இல்லாத அஞ்ஞானிகள், உன்னுடைய சரீரமான பிரபஞ்சத்தைப்
பிராந்தி ஞானத்தால் வேறான தேவமனுஷ்யாதி ரூபமாக நினைக்கிறார்கள்.
புத்தியீனர்களான ஜனங்கள் ஞானமயமான தமது நிஜ சொரூபங்களை அறியாமல்,
தான் அமரன் என்றும் தான் மனுஷியன் என்றும் இது மிருகம், இது தாவரம் என்றும் பிராந்தி வசத்தினாலே
நினைத்து மோகார்வணத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

ஆத்ம சொரூபத்தை எவர் ஞானசாரமாக அறிந்து பகவானை அனுபவிக்கத்தக்க யோக நிலைக்குத் தக்கதான
பரிசுத்த மனமுடையவர்களோ, அவர்கள் பிரகிருதிவிகாரமான தேவ மனுஷ்யாகி ரூபமாகக் காணப்படுகிற
இந்தப் பிரபஞ்சத்தையே ஞான குணமுள்ள ஆன்ம சொரூபமாகவும் உனது திருமேனியாகவும் காண்கிறீர்கள்;
யாவற்றிலும் அந்தர்மியாக இருக்கும் ஸ்வாமி! சகல உலகங்களுக்கு இருப்பிடமாக இருப்பவனே!
அறியக்கூடாத மகிமையை உடையவனே! சேவிப்பவர்களின் இதயம் குளிரத் தகுந்ததான செந்தாமரைமலர்
போன்ற திருக்கண்களையுடையவனே! இந்தப் பூமியை உத்தரித்து அடியேங்களுக்கு
சுகத்தினைக் கொடுத்து அருள் செய்ய வேண்டும்.
கோவிந்தா! நீ உலக உபகாரத்திற்காகவன்றே சிருஷ்டியில் பிரவேசிக்கிறாய் உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்.
அடியேங்களுக்குச் சுகம் அருள்வாயாக! என்று ஜகன சனந்தனர் முதலிய யோகிகள் துதித்தார்கள்.
இப்போது ஸ்ரீவராக ரூபமுடைய பரமாத்மாவானவன் மகார்ணவத்திலிருந்து பூமியை எடுத்து
பழையபடியே ஜலத்தின் மீது நிறுத்தி அருள்புரிந்தான்.

இவ்விதம், அந்தப் பெருவெள்ளத்தின் மேல் நிருமிக்கப்பட்ட பூமியானது, கப்பல்போல உருக்குவிந்து பரந்ததாகையாலே
அது அந்த மகார்ணவ ஜலத்தில் மிதந்ததேயல்லாமல் மூழ்கவில்லை. பிறகு, சர்வகாரணனும் அனாதியுமான ஸ்ரீஹரிபகவான்,
பூதேவி பிரார்த்தித்தவண்ணம் அந்தப் பூமியில் தன்னுடைய சங்கல்பமாத்திரத்தாலே, முன்பு எரிந்து போன பர்வதம்
முதலியவற்றையெல்லாம், மீண்டும் முன்போலவே படைத்து அருளினான்.
இவ்விதமான ஸ்ரீமந் நாராயணன், ரஜோ குணப்பிரமமாய், ஏழு தீவுகளாக இருக்கிற பூமியின் பகுதிகளையும்
மற்றும் புவர்லோகம் முதலிய உலகங்களையும் மீண்டும் படைத்தருளினான்.

எம்பெருமான் சிருஷ்டிக்கு, நிமித்தம் மட்டுமேயாகிறான்.
அவனால் படைக்கப்படும் வஸ்துக்களுடைய சக்திகளே முக்கிய சக்திகளாகின்றன.
மைத்ரேயரே!
எம்பெருமான் நடுநிலைமையானவன், நிமித்த காரணன் ஆகையால் இப்படிஅவன் படைப்பதனால்,
அவனுக்கு வைஷம்மியமும் நிர்த்தயத்துவமும் இல்லை. உயிரினங்கள் அனாதி கர்மவசத்தினாலே
பூர்வ கர்மானுரூபமாக நானாவித கர்ம மார்க்கங்களிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன.
சர்வ சமநிலையாளனும் சாட்சிபூபதனுமான பரம புருஷனைத் தவிர பிரபஞ்சத்துக்கு வேறொரு காரணமுமில்லை.
சீவாத்துமாக்களுடைய அனாதி சர்மவாசனா சக்தியினாலே, நல்ல பிறவிகளும் கெட்ட பிறவிகளுமாய் அந்தந்த வஸ்துகள் மாறிவிடும்.
ஆகையால் தான் ஸ்ரீயப்பதி முக்கிய காரணமாக இருந்தாலும் சேதனர்களுடைய கர்மங்களைக் கொண்டே
சிருஷ்டி நானாவிதம் ஆகவேண்டியிருப்பதால், அவை பிரதானமாக உபசார வழக்கை முன்னிட்டு சொல்லப்பட்டன என்று அறிவீராக!

———————

5. தேவ மனிதப் படைப்புகள்

ஓ குருநாதரே! ஆதிகாலத்தில் தேவதைகள், ரிஷிகள், பிதுர்க்கள், அசுரர், மனிதர் முதலானவர்களையும்
மிருகங்களையும், பறவைகளையும், மற்றுள்ள தாவரங்களையும் பூசரங்களையும் கேசரங்களையும்
நீர்வாழும் உயிரினங்களையும் பிரம்மதேவர் எப்படிப் படைத்தார்?
அவைகளுக்குக் குணங்களும் சுபாவங்களும் ரூபங்களும் யாவை?
இந்த விஷயங்களையெல்லாம் விஸ்தாரமாக அடியேனுக்கு கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார்.

பராசரர் கூறலானார். மைத்ரேயரே;
அந்தப் பிரமதேவன் பிரபஞ்ச சிருஷ்டி செய்ய நினைத்துக் கொண்டிருக்கும்போது சர்வ நியாமகனான
நாராயணனால் ஏவப்பட்ட நினையாத நினைவினாலே தாமச குணப் பிரதானமான சிருஷ்டியொன்று உண்டாயிற்று.
அது தமஸ் மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் என்று சொல்லப்பட்ட பேதங்களினாலே ஐந்துவிதமாக,
விருட்சங்களும், புதர்களும், கொடிகளும், பூண்டுகளும் புல்லுகளுமென ஐவகையான தாவரப்படைப்பாக இருந்தது.

அது சுத்த தாமச படைப்பாகையால்; தண்ணீர் முதலானவைகளைக் கிரகிப்பது முளைப்பது, செழிப்பது முதலிய
காரியங்களுக்கு ஏற்ற அற்ப அறிவுள்ளவனேயன்றி தன்னை இப்படிப்பட்டதென்று அறிவதும்
சப்தாதி விஷயங்களையும், சுகதுக்கங்களையும் அறிவதுமாகிய அறிவற்றதாக இருக்கும்.

பிரமன்; அவற்றைப் பார்த்து, தமோகுணப் பிரசுரமான இந்தத் தாவரங்கள் முன்னே பிறந்தன என்றனன்,
ஆகையால் தாவரங்களே முக்கிய படைப்பாயின சதுர்முகப் பிரமனே, இந்தத் தாவரங்கள் லோக வியாபாரத்திற்குரிய ஆற்றல் அற்றவை;
ஆகையால், இவற்றில் பயன் இல்லையே என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அப்போது பிரமனின் பாரிசபாகங்களிலிருந்து மிருகங்கள் முதலிய திரியக்குசாதிகள் பிறந்தன.
அவை பக்கங்களின் குறுக்காகப் பிறந்தனவாகையால் திரியக்குகள் என்று சொல்லப்பட்டன.
அவையும் விவேமில்லாதவைகளாய், ஞான சூன்யமாகவும், ஒழுக்கமற்ற நடத்தையுடனும் தாயைச் சேர்தல்
முதலிய அக்கிரமச் செயல்களுடனும் தமது ஞானம் என்ற நினைப்புடனும் தேகத்தையே ஆன்மாவாக எண்ணிக்கொண்டும்
அகங்கார மயமாய், இருபத்தெட்டு வகையினவாய் சுகதுக்கங்களை மட்டுமே தெரிந்தவைகளாய்,
தகப்பன், தாய், அண்ணன், தம்பி என்ற சம்பந்தமெதையும் அறியாதனவாய் இருந்தன.

அதைக்கண்ட சிருஷ்டி கர்த்தாவான பிரமன்; ஆகா! ஈனமான இந்தத் திரியக்கு சாதிகளாலும் பயன் எதுவுமில்லை.
ஆகையால் சிறப்புடைய சிருஷ்டியைச் செய்யவேண்டும் என்று சிந்தனை செய்யலானான்;
அப்பொழுது மூன்றாவது படைப்பு தோன்றலாயிற்று.

பிரமனின் சரீரத்தின் ஊர்த்துவ பாகத்திலிருந்து சத்வகுணப் பிரதானராயும் சுகானுபவமும் ஆனந்தமும் மிகுந்தவராயும்
ஆன்ம ஞானமும் விவேகமும் உள்ளவராயும்; நித்திய சந்தோஷமுடையவர்களான தேவதைகள் உதித்தார்கள்.
அவர்கள் ஊர்த்துவஸ்தானத்திலிருந்து பிறந்ததால், ஊர்த்துவ சுரோதசுகள் என்ற பெயரைப் பெற்று;
பூமியைத் தீண்டாதவர்களாக இருந்தனர். பிரமன்! இந்த வகையாகத் தமது மூன்றாவது படைப்பில்;
சத்துவகுணப் பிரதானராகப் பிறந்த தேவர்களைக் கண்டு மகிழ்ந்தார்.

ஆயினும் கர்மசாதகம் ஏற்படாததால், தேவர்களின் படைப்பினாலேயும் பயனில்லை என்று பிரமன் நினைத்து
லோகசாதகமான வேறொரு சிருஷ்டியை உண்டாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, சத்திய சங்கல்பனான அவருடைய மத்யப் பகுதியிலிருந்து, பூமியை நோக்கிய சிருஷ்டி ஒன்று உண்டாயிற்று.
அதில் தான் மனிதர்கள் பிறந்தார்கள். அவர்கள் பிரமனின் மத்திய தேகத்திலிருந்து தோன்றியதால்
மத்திய லோகத்தில் வாசஞ்செய்யத் தக்கவர்களானார்கள் அவர்கள் ஒரு காலத்தில் சாக்துவிக குணாதிக்கமும்,
ஒரு காலத்தில் ராஜசகுணோ திரேகமும் ஒரு காலத்தில் தாமச குணம் கொண்டவர்களாய் துக்கத்துக்கு உட்பட்டவர்களாய்
உணவு உட்கொள்ளல் முதலிய காரியங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு,
ஆத்தும, மன, புத்தி; இந்திரியாதி விவேகங்களும் புறத்துள்ள வஸ்துக்களின் ஞானங்களையும் கொண்டவர்களாய்,
உலகியல் செயல்களைச் செய்யாதவராய் இருந்தார்கள். இவர்கள் அர்வாக் சுரோதஸுகள் என்று வழங்கப்படுகிறார்கள்.

அதன் பிறகு; அம்புஜாசனனான பிரமன், தாவர ஜாதிகளுக்கும் மிருக ஜாதிகளுக்கும் தேவதைகளுக்கும் மனிதர்களுக்கும்
அவித்தை, அசக்தி, சந்துஷ்டி, சித்தி என்ற நான்கு வகை குணச்சிறப்புகளை உண்டாக்கினான்.
இது தாமசமாயும் சாத்வீகமாயும் இருந்ததால் அனுக்கிரக சிஷ்டியென்று சொல்லப்படும்.
அப்பால் சனக, சனந்தன, சனத்குமார ருத்திராதிகளையும் பிரமன் படைத்தார். இது கவுமார சிருஷ்டி என்று சொல்லப்படும்.

மைத்ரேயரே!
இவ்விதம் தாவரப்படைப்பு, திரியக்குப் படைப்பு, தேவப் படைப்பு, மனிதப் படைப்பு அனுக்கிரகப் படைப்பு, கவுமாரப் படைப்பு
என்ற ஆறுவிதமான படைப்பு சிறப்புகளைக் கூறினேன். இந்தப் படைப்புகள் ஒன்பது வகை என்றும் சொல்லப்படும்.
அதாவது முன்பே கூறிய மகத்தத்துவப் படைப்பும், ஏகாதச இந்திரியங்களுக்குக் காரணமான
சத்துவ, ராஜச தமோ குணத்துமகமான அகங்காரப் படைப்பும், அதற்கப்பால் ஆகாசாதி பஞ்ச மகாபூத காரணங்களான
தன்மாத்திரைகளின் படைப்பும் ஆகிய அந்த மூன்றும் சமஷ்டி சிவ ஸ்வரூபனான இரண்யகர்ப்பனுடைய
சங்கல்பமில்லாமல் தோன்றியிருந்ததனால் அது பிராகிருதப் படைப்பு என்று சொல்லப்படும்.
ஆயினும் அதையும் அவனால் உண்டான படைப்பு என்று சொல்லப்படும்.

ஆயினும் அதையும் அவனால் உண்டான படைப்பு என்றே சொல்லலாம். எப்படியென்றால்,
நித்திரையிலிருக்கும் என்னுடைய இச்சையில்லாமலேயே சுவாச நிவாசங்களும் நித்திரையும் பிறந்திருக்க,
அவற்றுக்கு அவனையே கர்த்தாவாக வழங்குவதைப் போல், மகத்தகங்கார தன்மாத்திரைகள் சதுர்முகனுக்கும்
முன்னமே சம்பவித்தவைகளாகையினால், இரண்யகர்ப்பனுடைய கர்ம விசேஷத்தினால் உண்டானதாக,
அதுவும் அவனுடைய செயலாகவே சொல்லப்படும். முன்னே சொன்ன பிராகிருத சிருஷ்டி மூன்று ஒழிய;
நான்காவதான தாவர சிருஷ்டியும் ஐந்தாவதான திரியக்கு சிருஷ்டியும், ஆறாவதான தேவசிருஷ்டியும்
ஏழாவதான மனிதப்படைப்பும்; எட்டாவதான அவித்தை முதலான அனுக்கிரகப்படைப்பும் ஆகிய படைப்புகள் ஐந்தும்
பிரம்மாவின் விகிருதியினால் உண்டானதால் வைகிருதங்கள் என்று சொல்லப்படும் ஒன்பதாவது படைப்பாகிய கவுமாரம்;
பிராகிருதம் வைகிருதாத்துமகமாக இருக்கும். இப்படி இரணியகர்ப்பனாலே உண்டாக்கப்பட்ட ஜகத்துக்கு மூலங்களான
ஒன்பதுவித படைப்பையும் சொன்னேன்

இனி இந்தப் படைப்புகளின் விஷயமாக நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?
இவ்வாறு பராசர மகரிஷி கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி,
முனிவரே! படைப்பு வகைகளைத் தாங்கள் சுருக்கமாகத்தான் சொன்னீர்கள்.
இதைத் தெளிவாக விளக்க வேண்டும் என்றார். பராசரர் சொல்லத் துவங்கினார்.

மைத்ரேயரே!
அனாதி கர்ம வாசனையினால் கட்டுண்டவர்களும் நானாவித கர்ம பயன்களை அனுபவிப்பவர்களான சேதனர்கள்
பூர்வ வாசன வசத்தினால்; சங்காரகாலத்தில்; சங்கரிக்கப்பட்டு படைப்புக் காலங்களில்
தேவ மனிஷ்யத் திரியிக்கு தாவர ஜன்மங்களாகப் பிறப்பார்கள்.
சிருஷ்டித் தொழிலிலுள்ள பிதாமகனுடைய இச்சையினால்; அம்பஸ் என்ற பெயரால் வழங்கப்படும்
தேவாசுர பிதுர் மனுஷ்ய ஜாதிகள் நான்கும் உண்டாயின அதன் விவரங்களையும் கூறுகிறேன்.

கமலாசனன் : படைப்புத்தொழில் விஷயமாக ஒரு தேகத்தோடு சிந்தித்திருக்கும்போது; தமோகுண உத்திரேகத்தினால்;
அவருடைய இடையின் கீழ்ப்புறத்திலிருந்து அரசர்கள் தோன்றினார்கள் பிறகு அந்த விரிஞ்சன்;
தமோகுணத்துமகமான அந்தத்தேகத்தை ஒழித்துவிட; அது இருள் மிகுந்த இரவாயிற்று.
பிறகு; அவர் திரும்புவம் பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்து வேறொரு தேகந்தரித்து; சந்துஷ்ட சிந்தனாக இருக்க;
அந்தத்தேவனின் முகத்திலிருந்து சத்துவகுணாதிக்கமுள்ள தேவர் தேவதைகள் ஜனித்தார்கள்.
பிறகு, அந்தப்பிதாமகன்; அந்த உடலையும் விட்டுவிட்டார். அது சத்துவ குணமயமான பகலாயிற்று.
பிறகு அவன் ரஜோகுணாதிசகமான மனிதர்களை படைத்து அந்தத் தேகத்தையும் விட்டுவிட;
அது பிரகாசமான பிராதக்கால சந்ததியாயிற்று. அதனால் மனிதர்கள் பிராதச்சந்தியிலேயும் பிதுர்க்கள்
சாயஞ்சந்திலேயும் பலவான்களாக இருப்பார்கள்.

மைத்ரேயரே!
பகல், இரவு, சாயங்காலம், விடியற்காலம் ஆகிய இந்த நான்கும் பிரமதேவனுக்கு முக்குணங்களோடு கூடிய சரீரங்கள்.
பிறகு அந்தப் பிரமதேவன் மேலும் சிருஷ்டி செய்வதற்கு தமோகுணாதிக்கமுள்ள மற்றொரு சரீரத்தைத் தரித்தார்.
உடனே அவருக்குப் பொறுக்கமுடியாத பசியுண்டாயிற்று. அதனால் தீவிரக்கோபம் உண்டாயிற்று.
அந்தக் கோபத்தினால் இருட்டிலிருந்து விகாரரூபம் பயங்கரமுமான தாடி மீசைகளுமுள்ள ஒருவிதமான புருஷர்களை பிருமன் படைத்தார்.
அவர்களில் பசியுற்ற சிலர் ஜக்ஷõம (உண்ணக் கடவேம்) என்றனர். பசியுறாத சிலர் ரக்ஷõம (காக்கக்கடவேம்) என்றனர்.
இப்படிக் கூறிய அவர்களைப் பார்த்துப் பிரமன் புன்னகை செய்து, பசியைப் பொறுக்கமுடியாமல் ஜக்ஷõம என்று கூறியவரை,
யக்ஷராகக் கடவர் என்றும், ரக்ஷõம என்றவர்கள் ராக்ஷசராகக் கடவர் என்றும் அருளிச்செய்தார்.
இரணியகர்ப்பன் இவ்வாறாகப் பிறந்த யக்ஷரையும் ராக்ஷஸரையும் பார்த்து, மனதில் பிரியமற்று மீண்டும் சிந்திக்கலானார்.
அப்போது அவரது சிரத்திலிருந்த கேசங்கள் ஈனமாய்க் கழன்று விழுந்து, மறுபடியும் சிரத்தின் மீது ஏறின.
இப்படி நகர்ந்து ஏறியதாலே அவை சர்ப்பங்கள் என்றும் அவை ஈனமானதினாலே அகிகள் என்றும் சொல்லப்பட்டன.
மீண்டும் பிரமன் கோபாவேசத்தினாலே சிருஷ்டிக்க நினைக்க, கபில நிறத்தோடு கூடி, ரத்தமாமிச
ஆகாரங்களுள்ளவைகளான பூதங்கள் அநேகம் உண்டாயின.

பிறகு, தியான பாராயணனாய், விரிஞ்சன் தனது அங்கங்களினின்றும் அந்தக் கணத்திலேயே கந்தருவர்களை உற்பத்தி செய்தார்.
அவர்கள் சமத்காரமாய்ப் பாடிக்கொண்டிருந்ததால் கந்தர்வர்கள் என்று வழங்கப்பட்டனர்.
இவ்விதமாகச் சதுர்முகனால் சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்கள் சக்திகளினால் ஏவப்பட்டு,
அதனதன் கர்மானுகுணமாய் வெகுவிதமான பூதங்களைப் படைத்து மீண்டும் சுயேச்சையான வயதைக் கண்டு,
பாரிசங்களினால் பறவைகளையும், மார்பினால் ஆடுகளையும், முகத்தினால் வெள்ளாடுகளையும், உதரத்தினால் பசுக்களையும்,
பாதத்தினால் குதிரைகளையும், யானைகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும்,
கடம்பு மான்களையும் மற்றுமுள்ள மிருகஜாதிகளையும் படைத்தார்.
மீண்டும் ரோம தபங்களினாலே பலவித உபயோகமுள்ள ஒளஷதாதிகளையும் தானியங்களையும் உண்டாக்கினார்.

இவ்விதமாய்ப் பிதாமகன் கல்பாதியான கிருதயுகத்தில் ஓஷதிகளையும், பசுக்களையும், பறவைகளையும்,
மாடுகளும், ஆடுகளும், குதிரைகளும், ஒட்டகங்களும், வெள்ளாõடுகளும், கோவேறு கழுதைகளும்
கிராமியங்களால் பசுஜாதிகள் என்று அறிவீராக. சிங்கம், புலி முதலிய துஷ்ட மிருகங்களும்,
இரு குளம்புள்ள மிருக வகைகளும், யானைகளும், குரங்குகளும், பறவைகளும், சலசரங்களான மச்ச கூர்மாதிகளும்
சர்ப்பங்களும் ஆகிய ஏழு ஜாதிகளும் ஆரணிய பசு விசேஷங்கள் என்று அறிவீராக.

அதன் பிறகு பிதாமகன் காயத்திரி சந்தமும் இருக்கு வேதமும் திரிவிருத் என்ற ஸ்தோமமும் ரதந்தர சாமமும்
அக்கினிஷ்டோமமும் தனது கிழக்கு முகத்தினால் உண்டாக்கினர். யஜுர்வேதமும் திருஷ்டுபு, சந்தமும், பஞ்சதஸ்தோமமும்
பிருதச்சாமமும், உத்தியம் என்கிற யாக விசேஷமும், தக்ஷிண முகத்தினால் உண்டாகச் செய்தார்.
சாம வேதமும் செகதீச்சந்தமும், வைரூப்பியம் என்கின்ற சாம விசேஷமும் அதிராத்திரியாகமும் பச்சிம முகத்தினால் உண்டாக்கினார்.
அதர்வண வேதமும், ஏகவிம்சஸ்தோமமும், அனுஷடுப் சந்தமும் வைராசம் என்கின்ற சாம விசேஷமும் அப்தோர்யாமம் என்கின்ற
யக்கியமும் உத்தரமுகத்தினாலே உண்டாக்கினார்.
நானாவிதமான உயிரினங்களைப் பலவித அவயங்களினாலே நான்முகப் பிரமன் உண்டாக்கினார்.
இவ்விதமாகப் பிதாமகன், தேவ அசுர, பிதுர் மனுஷியாதி பூதசாதிகளைச் சிருஷ்டித்துத் திரும்பியும்
பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்று உற்சாகத்தோடு சங்கல்பித்து,
கின்னரர் கந்தர்வர் அப்சரஸுகள், யக்ஷர்கள், ராக்ஷதர், பைசாசர் முதலியவர்களையும்
பசு, பட்சி, சர்ப்ப மிருகங்களையும் தாவர சங்கமங்களையும் உண்டாக்கினார்.

இப்படி ஆதிகர்த்தாவும் லோகேசுவரனுமான சதுர்முகப்பிரமன் பலவித பூதஜாதிகளை உண்டாக்கினார்.
அவை சில குரூர சுபாவங்களும் சில மென்மையான சுபாவங்களும் சில இம்சை செய்பவைகளும்,
சில இம்சை செய்யாதவைகளும், சில தர்ம சொரூபங்களும், சில அதர்ம சொரூபங்களும்,
சில சத்திய மயங்களும் சில அசத்திய மயங்களுமாகப் பூர்வப் படைப்பில் எப்படிப்பட்ட கர்மங்களை அடைந்தனவோ
அப்படிப்பட்ட கர்மங்களையே இந்தப் படைப்பிலும் அடைந்தன. பிறகு தேக, இந்திரிய மனபுத்திச் சிறப்புகளுக்கும்
சப்த ஸ்பரிசாதி, யோக்கிய வஸ்துக்களுக்கும் வேத வசனங்களைக் கொண்டே தேவ, ரிஷி, பிதுர், மனுஷ்ய பட்சி,
மிருகாதிகளுக்கு பெயர்களையும், ரூபங்களையும் அறிந்து பெயர்களையும் உருவங்களையும் பிருமன் உண்டாக்கினார்.

மைத்ரேயரே!
இவ்விதமாகவே முனிவர்களுக்கும் வசிஷ்டாதி நாமங்களை நித்தியமான வேத சப்தங்களைக் கொண்டே உண்டாக்கினார்.
ஏனெனில், வசந்தம் முதலிய ருதுக்காலங்கள் தோறும் அந்தந்தக் காலத்துக்குரிய வாசனை முதலியவை
இயல்பாகவே உண்டாவதைப் போல் கிருத திரேதா யுகங்களிலே, அந்தந்த யுகத்திற்கான சிறப்புக்கள் தாமாகவே உற்பவிக்கும்.
இந்த விதமாகப் பிரம்மா கல்பாதி காலத்தில் எம்பெருமானுடைய சக்தியினாலே;
அனுப்பிரவேசித்து தூண்டப்பட்டு பிரபஞ்சங்களை அதனதன் கர்மங்களின்படியே படைத்தான்;
இதில் சகல படைப்புகளும் கல்பாதி கிருதயுகத்திலும் யாகாதிகளும் அவற்றின் உபகரணங்களும் திரேதாயுகாதியிலும் படைத்தான்.
இப்படியே ஒவ்வொரு கல்பத்திலும் படைப்புகள் படைக்கப்பட்டு; சிருஷ்டிகள் நடைபெற்றுவரும்.

——————–

6. வருணாசிரமங்கள்

தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் முதலியவற்றின் படைப்புக் கிரமங்களைப் பற்றிப்
பராசர முனிவர் கூறியதும் மைத்ரேய முனிவர் அவரை நோக்கி, மகரிஷியே!
மனிதர்கள் படைக்கப்பட்டதைப் பற்றி நீங்கள் சுருக்கமாகச் சொன்னீர்கள்.
இனி அவர்களுடைய குணங்களைப் பற்றியும், வருணாசிரம விவரங்களை பற்றியும்,
ஆசார வேறுபாடுகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்! என்றார்.

அதற்குப் பராசரர் பின்வருமாறு கூறலானார்:
பூர்வத்தில் பிரமன் மனிதர்களைப் படைக்க வேண்டும் என்று சிந்தித்தபோது,
அவரது முகத்திலிருந்து சத்வகுணமுடையவர்களான பிராமணர்கள் தோன்றினார்கள்.
அவரது மார்பிலிருந்து ராஜசகுணமுடைய க்ஷத்திரியர்கள் தோன்றினார்கள்.
தொடைகளிலிருந்து ராஜசகுணமும் தாமஸகுணமும் கலந்தவைசியர்கள் தோன்றினார்கள்.
பாதங்களிலிருந்து தமோ குணமுடைய சூத்திரர்கள் தோன்றினார்கள்.

இவ்விதம் பிரமதேவனின் முகம், மார்பு, தொடைகள், பாதங்கள் என்னும் அவயங்களிலிருந்து பிறந்த
பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களை யாகங்களுக்குரிய செயல்களை செய்யும்படி அவர் நியமித்தார்.
மைத்ரேயரே!
இந்த நால்வகையான மக்களும் யாகங்களுக்கு முக்கியமானவர்கள். யாகங்களால் தேவதைகள் திருப்தியடைந்து,
காலாகாலத்தில் மழைபொழிந்து மனிதரைத் திருப்தியுறச் செய்வார்கள்.
ஆகவே உயர்வுக்கு ஏதுக்களான யாகங்கள் மக்களால் முக்கியமாகச் செய்யத் தக்கவையாகும்.
வேத சாஸ்திரத்திற்கு விரோதமான ஒழுங்கீனங்களை விட்டு சன்மார்க்கத்தில் நடக்கிற சத்புருஷர்கள்
சொர்க்கசுகத்தையும் மோக்ஷõனந்தத்தையும் தம் மனிதப்பிறவியிலேயே அடைவார்கள்.
இவ்விதமாக இரண்யகர்ப்பனால் படைக்கப்பட்ட நான்கு வர்ண மக்களும், சாஸ்திர விசுவாசத்தினால்
சதா சாரமும் விநயமும் அடைந்து, நிர்மலமான இருதயமுடையவராய் சகலவிதமான சத்கருமங்களையும் செய்துகொண்டு
காமக்குரோத லோபம் இல்லாமல், நினைத்த இடத்தில் நினைத்தபடி வசித்து,
நிர்மலமான இதயத்தில் இறைவனைத் தியானித்துத் தத்துவ ஞானம் பெற்று தெளிந்தவர்களாய் சற்கதியடைந்தார்கள்.

இதுபோல் கிருதயுகத்திலிருந்து திரேதாயுகத்தின் இடைக்காலம் வரை நடந்தது.
பிறகு, நாராயணாம்சம் என்று சொல்லப்பட்ட காலவசத்தினாலே,
மனிதருடைய சத்துவ புத்தியும் தைரியமும் ஆயுளும் குறையும்படி நேரிட்டது. அதனால் மோகமும் லோபமும் மேலிட்டன.
அதருமம் மிகுதியாயிற்று அதனால் மோட்சமார்க்கத்திற்கு விரோதமான ராகத்துவேஷங்கள் பிரபலமாயின.
ஆகையால் இயல்பாகவே உண்டாகத்தக்க ஞானமும், தொந்தங்களை வெல்லத்தக்க சக்தியும் மக்களிடம் குறைந்தன
முன்பெல்லாம் பெண்கள் முதலியவை இல்லாமலேயே ஆனந்தம் உண்டாவதுண்டு.
யோகப் பயிற்சியினால் சிரசிலுள்ள சந்திர மண்டலத்தினின்றும் ஒழுகும் அமிருதத்தினாலே பசியுங்கூட இல்லாமல் இருந்தது.
ஒருமுறை மழை பெய்தாலே பயிர்கள் செழுமையாக வளர்ந்தன. நினைத்தபோதே மரங்கள் பலிதமாயின.
நினைத்தவை நினைத்தவாறே கைகூடின பரத்வாச முனிவருக்கு நடந்தது. போலவே, கற்பக விருட்சங்கள் வந்து வேண்டியதைக் கொடுத்தன.
வேண்டும்போதெல்லாம் மழை பெய்தது. உழுது வருந்தாமல் பூமி விளைந்தது இவ்விதமான
எட்டுச் சித்திகளும் நாளடைவில் க்ஷீணித்து பாதகச் செயல்கள் அதிகமாயின.

அதனால் பூமியில் வாழும் மக்கள், ராகத்துவேஷ. லோப, மோகாதி தொந்த துக்கங்களினால் பீடிக்கப்பட்டு,
ஒருவரையொருவர் விசுவாசியாமல் மலைப் பிரதேசங்களிலும், தண்ணீர் சூழ்ந்த நிலப்பகுதியிலும் வசித்தார்கள்.
அங்கு கோட்டைகள், கொத்தளங்கள், அகழிகள் முதலியவற்றை அமைத்தார்கள். நகரங்களையும் வீதிகளையும்
வீடுகளையும் கட்டிக்கொண்டார்கள். மழை, காற்று, வெய்யில் இவற்றின் உபத்திரவங்களை நீக்கிக் கொள்வதற்கான
உபாயங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். பிழைப்பிற்காகப் பயிர்த்தொழில்கள், ஆடு மாடுகள் வளர்த்தல் வாணிபம்
முதலியவற்றைச் செய்தார்கள்.
பயிர்த்தொழிலால் விளைந்த சம்பா முதலிய நெல், யவம், கோதுமை, சோளம், கேழ்வரகு, தினை, உளுந்து,
பயிறு சிறு கடலை, துவரை, மொச்சை, கொள்ளு, கடலை, சணல் ஆகிய தற்காலிக பயன்களை அனுபவித்தார்கள்.
இந்தப் பதினேழு வகையான தானியங்களும் கிராமியங்கள் என்று வழங்கப்படும்.
நெல், யவம், உளுந்து, கோதுமை, சிறுதானியம் என்ற பிரியங்கு, கொள்ளு, சாமை; செந்நெல்,
காட்டு எள், கெவீது, மூங்கிலரிசி, மற்கடகம் என்ற பதினான்கு விதமான தானியங்களும் கிராமிய ஆரணியங்கள்
என்று பெயர் பெற்று யாகங்களுக்குப் பயன்பட்டன. இவை யக்கியங்களுக்கும் பிரஜா அபிவிருத்திக்கும் காரணமாயின.

எனவே, அவற்றைக் கொண்டு, பராபரவிவேகமுள்ள ஞானிகள் நாள்தோறும் பாவங்களைப் போக்கதக்க
பஞ்ச மகா யாக்கியங்களைச் செய்வார்கள். முனிவரே! தினமும் யாகாதி கர்மங்களைச் செய்வதால்,
புருஷர்கள் சகலபாவ விமுக்தராய்ப் பரம சுகத்தை அடைவார்கள்.
ஆதிகாலத்தில் எவருடைய மனமானது கால வசத்தால் பாபதூஷிதமாயிற்றே, அவர்கள் யக்கியாதி நற்கருமங்களில்
விசுவாசமில்லாமல் பாதங்களை அபிவிருத்தி செய்து; வேதங்களையும் நற்கருமங்களையும் நிந்திக்கலானார்கள்.
யாகங்களுக்கு இடையூறுகளைச் செய்தார்கள். தேகத்தைப் போஷிப்பதற்கான செயல்களை மட்டுமே செய்தார்கள்.
லோக விருத்திக்கு விரோதிகளாய், துராத்மாக்களுமாய்; துராசாரமுடையவர்களுமாய்;
குடில் புத்தியை உடையவர்களானார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்.

பிரம; க்ஷத்திரிய: வைசிய; சூத்திராதி (நான்கு) வருணங்களையும் நான்கு ஆசிரமங்களையும் இரண்யகர்ப்பன் நிர்மித்து,
வர்ணாசிரமத்திற்கு உரிய மரியாதைகளையும் ஏற்படுத்தி; அவரவரது தாரதம்மானு குணமாகப் புண்ணிய லோகங்களையும் ஏற்படுத்தினார்.
ஸ்வதர்ம அனுஷ்டான பராயணரான பிராமணர்களுக்குப் பிரஜாபத்திய லோகத்தையும், போரில் புறங்கொடாத க்ஷத்திரியர்களுக்கு;
இந்திரலோகத்தையும், ஸ்வதர்ம நிரதரான வைசியருக்கு மருத்துக்களின் லோகத்தையும்;
பணிவிடைக்காரரான சூத்திரர்களுக்கு கந்தர்வலோகத்தையும், குரு பணிவிடை செய்வதில் ஊக்கமுடைய
பிரம்மச்சாரிகளுக்கு ஊர்த்தரே தஸரான எண்பத் தெண்ணாயிரம் யதீச்சுவர்கள் வாசம் செய்யும் திவ்விய லோகத்தையும்?
வானப்பிரஸ்தருக்கு சப்தரிஷி லோகத்தையும், கிரகஸ்தருக்குப் பிரஜாபத்திய லோகத்தையும்;
சந்நியாசிகளுக்குப் பிரமலோகத்தையும் தோற்றுவிக்க சங்கல்பம் செய்தார்.

இவையாவும் கர்ம மார்க்கத்தினால் உண்டான புண்ணிய லோகங்களாகும்.
இனி ஞானியருக்குக் கிடைக்கும் உலகங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள்.
ஆத்மத் தியானிகளான யோகீசுரர்களுக்கு அமிர்தஸ்நானம் உண்டாம்.
(அமிர்த ஸ்நானம் என்பது துருவலோகத்துக்கு மேலே; கங்கை தோன்றும் இடம்.)
தினமும் யோகப்பயிற்சிகளைச் செய்தும்; பிரமத் தியானத்தை செய்து கொண்டும் இருக்கிற மகாத்மாக்களுக்கெல்லாம்;
நித்திய சூரிகளாலே காணப்பட்ட பரமபதம் உண்டாகும்.
சந்திர சூரியாதி கிரகங்களும் காலக் கிரமத்தில் அதனதன் இடம் விட்டு; பலமுறைகள் நீங்குகின்றன.
துவாதசாக்ஷர மந்திரத்தை ஜெபிக்கிற மகான்மாக்கள் என்றைக்கும் திரும்பி வராமல்; பரமனாந்தத்தை அனுபவிக்கிறார்கள்.
இனிப் பாபஞ்செய்கிற கெட்டவர்கள் அடையத்தக்க லோகத்தை அறிவிக்கிறேன்.
தாமிஸ்வரம்; அந்தாமிஸ்ரம்; ரௌரவம்; மகா ரௌரவம், அசிபத்ரவனம்; காலசூத்திரம்; அவீசிமத்து என்ற
மகா கொடிய நரகங்கள் எல்லாம்; வேதங்களை நிந்தித்து; யக்கிய விக்னஞ்செய்கிற பாபாத்துமாக்களுக்கு உண்டாகும்.

————————

7. பிருகு முதலியவர்களின் படைப்பு

சதுர்முகனாகிய பிரமதேவன்; பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு இருக்கும்போது
அவனுடைய சங்கல்பத்தினால் அவனது அங்கத்திலிருந்து தர்மத்தை அனுபவிக்கும்படியான
தேக; இந்திரியங்களுடன் கூடிப்பிறந்த தேவமனுஷிய திரியத் தாவரங்களான சதுர்வித சங்கங்களும் அபிவிருத்தியடையாமற் போயின.
அதைக்கண்ட பதுமகர்ப்பன் மீண்டும் பிரஜா சிருஷ்டி செய்ய எண்ணி
பிருகு புலஸ்தியர்: கிரது; அங்கிரசு; மரீசி; அத்திரி; தக்ஷர்; வசிஷ்டர்; நாரதர் என்ற ஒன்பது புத்திரர்களைத்
தனது மனத்தாலே படைத்தான். அவர்கள் பிரம்மாவுக்கு இணையானவர்களாக இருந்ததால் நவபிரமாக்கள் என்று புகழ்பெற்றனர்.
இந்த நவப்பிரம்மாக்களுக்கு முன்பே பிதாமகன் ஸனக, ஸனந்தனாதிகளைச் சிருஷ்டித்தான்.
அவர்கள் பிரமாவுக்கு இணையானவர்களாக இருந்ததால் நவபிரமாக்கள் என்று புகழ்பெற்றனர்.
இந்த நவப்பிரம்மாக்களுக்கு முன்பே பிதாமகன் ஸனக, ஸனந்தனாதிகளைச் சிருஷ்டித்தான்.
அவர்கள் வைராக்கியத்துடன் மோட்சமார்க்க நிரதர்களாய்; பிரஜா சிருஷ்டியில் ஈடுபடாமல் சர்வ சங்கப் பரித்யாகிகளாய்
யோக நிஷ்டை பெற்று, காமக்ரோத மதாச்சரியங்கள் இல்லாதவர்களாய் கிருதார்த்தர்களாக இருந்தார்கள்.
அவர்கள் பிரஜா சிருஷ்டியைச் செய்யாமல் இருந்ததால் பதும கர்ப்பனுக்கு பொறுக்கமுடியாத குரோதம் உண்டாயிற்று.
அப்போது மூன்று உலகங்களையும் எரித்துவிடும்படியான கோபாக்கினி ஜ்வாலைகள் பொருந்தியும்
பயங்கரமாகப் புருவங்களை நெறித்துக் கொண்டும், குரோதத்தினால் ஜ்வலித்துக் கொண்டும் இருக்கிற
பிரம்மாவின் லலாடத்திலிருந்து நடுப்பகல் சூரியனைப் போன்ற பிரகாசமுடையவரும்,
அர்த்தநாரி ரூபத்தைத் தரித்தவரான ருத்திரமூர்த்தி தோன்றினார்.

அந்த ருத்திரமூர்த்தி அதியுன்னத சரீரமுடையவராகவும், உக்கிர குணமுள்ளவராகவும்
பாதியுடம்பு ஆணும் பாதியுடம்பு பெண்ணுமாகவும் விளங்கினார். அம்மூர்த்தியை பிரம்மா நோக்கி;
இரண்டு விதமாக இருக்கிற நீயே உன்னைத் தனித்தனியாக பிரிப்பாயாக! என்ற சொல்லி அந்தர்த்தானமானார்,
அதன் பிறகு அந்த ருத்திரமூர்த்தியும், ஆண் பெண் உருவமாக இருந்த தன் உடம்பை பெண் உருவாகவும், ஆண் உருவாகவும்
தனியே பிரித்து, வேறாகிப் பின்பு அந்தப் புருஷரூபத்தையும் பதினோறு விதமாகப் பிரித்து,
பெண் ரூபத்தையும் பலவிதங்களாகப் பிரித்தார்.
அவை சவுமியங்களாகவும், பயங்கரங்களாகவும், காந்தங்களாகவும், கோரங்களாகவும், கறுத்தனவாகவும்,
வெளுத்தனவாகவும் பலவகைப்பட்டிருந்தன. பிறகு இரணியகர்ப்பன், பிரஜைகளை காக்கும் பொருட்டுத் தன்னுடைய
அம்சத்தினாலே புத்திரன் ஒருவனைச் சிருஷ்டித்தார். அவன் சுவாயம்புவமநு என்ற பெயரைப் பெற்று,
பிரஜா பரிபாலனஞ் செய்து கொண்டிருந்தான். பிரம்மா, தம் அம்சத்தினால் தாமாகவே மநு என்ற புருஷன் ஆனதைப்போலவே,
தமது பத்தினியின் அம்சத்தினாலே ஒரு ஸ்திரீயை உண்டாக்கினார்.
அந்த மங்கை சதரூபை என்ற பெயர் கொண்டு தனக்குச் சரியான புருஷன் வேண்டும் என்று தவஞ்செய்து, தூய்மையாக இருந்தாள்.
அப்போது பிரமனின் கட்டளைப்படி சதரூபையை மநுமணந்து அவளிடத்தில் பிரியவிரதன், உத்தானபாதன் என்னும்
இரு பிள்ளைகளையும் பிரசூதி, ஆகுதி என்ற இரண்டு பெண்களையும் பெற்றான்.
பிறகு அழகும் குணமும் பொருந்திய இரண்டு பெண்களில், பிரசூதி என்பவனைத் தக்ஷனுக்கும்,
ஆகுதியை ருசி என்பவனுக்கும் மறுமணஞ்செய்து கொடுத்தான். ருசி என்பவன் ஆகுதி என்பவளைச் சேர்ந்து,
யக்கியன் என்ற பிள்ளையையும் தக்ஷிணை என்ற பெண்ணையும் பெற்றான்.
பிறகு அந்த யக்கியன் தனக்குப் பத்தினியாகத் தன்னுடன் படைக்கப்பட்ட தக்ஷிணை என்பவனிடத்திலே
பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் முதல் மநுவந்தரத்தில் யாமர் என்ற தேவர்களாயினர்.

அதுபோலவே தக்ஷன் என்பவன் பிரசூதியின் மூலம் இருபத்து நான்கு பெண்களைப் பெற்றான்.
அவர்களிலே, சிரத்தை, லட்சுமி, திருதி, துஷ்டி, புஷ்டி, மேதை, கிரியை; புத்தி, லஜ்ஜை வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி
என்ற பதின்மூன்று கன்னிகைகளைத் தர்மனுக்குத் திருமணஞ்செய்து கொடுத்தான்.
அந்த தர்மன் தன்பத்தினிகளில் ஒருத்தியான சிரத்தையிடத்தில் காமனையும், லக்ஷ்மியிடத்திலே தர்ப்பனையும்,
துஷ்டியிடம் சந்தோஷனையும், புஷ்டியிடம் லோபனையும், மேதையிடத்தில் சுருதனையும்,
கிரியையிடத்தில் தண்டன், நயன், விநயன் என்னும் மூவரையும், புத்தியிடம் போதனையும், லஜ்ஜையிடத்தில் விநயனையும்,
வபுவினிடத்தில் விவசாயனையும், சாந்தியினிடத்திலே ஷேமனையும், சித்தியிடம் சுகனையும், கீர்த்தியினிடத்திலே யசனையும் பெற்றான்.

அவர்களில் சிரத்தையின் புத்திரனான காமன் என்பவன் ரதி என்பவளிடத்தில் ஹர்ஷன் என்ற பிள்ளையைப் பெற்றான்.
பிறகு தக்ஷன் தன் பெண்களான கியாதி (மகிமை) சதி, (உண்மை) சமபூதி (தகுதி) ஸ்மிருதி (நினைவு), பிரீதி (அன்பு),
க்ஷமை (பொறுமை) சன்னதி (எளிமை), அநுசூயை (தயை), ஊர்ச்சை (சக்தி), சுவாகை (சமர்ப்பணம்), சுவதை (துதி)
என்ற பெயரையுடைய பதினோரு பெண்களையும் முறையே
பிருகு மகரிஷிக்கும், ருத்திரனுக்கும், மரீசிக்கும், அங்கிரசுக்கும், புலஸ்தியனுக்கும், புலகனுக்கும், கிரதுவுக்கும்,
அத்திரிக்கும், வசிஷ்டனுக்கும், அக்கினிக்கும், பிதுர்த்தேவதைகளும் மணஞ்செய்து கொடுத்தான்.

இது இப்படியிருக்க அதர்மன் என்பவன் ஹிம்சை என்ற பெண்ணைச் சேர்ந்து, அநிருதன் (பொய்யை) என்கிற புதல்வனையும்
நிகிருதி (வேசித்தன்மை) என்ற புத்திரியையும் பெற்றான்.
அவ்விருவரும் சேர்ந்து பயன், நரகன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றனர்.
அப்பிள்ளைகள் தங்களுடன் பிறந்த மாயை வேதனா என்பவர்களையே மணந்தார்கள்.
அவர்களில் மாயை என்னும் மங்கை சர்வப் பிராணிகளையும் அபகரித்துக் கொள்ளும் மிருத்யுவைப் பெற்றாள்.
வேதனை என்பவள் ரவுரவனைச் சேர்ந்து துக்கன் என்பவனைப் பெற்றாள்.
அந்த மிருத்யுவுக்கு வியாதி, சூரை, சோகன், திருஷ்னை, குரோதன் என்ற பிள்ளைகள் பிறந்தனர்.
அவர்கள் அனைவரும் துக்கமயமான இயல்புடையவர்களாய், அதர்ம சொரூபிகளாய் ஊத்தரே தசுக்களாய்,
மனைவி மக்களற்றவர்களாய், ஜகத்தின் அழிவுக்கு ஏதுக்களாக இருந்தார்கள்.

முனிவரே! அதர்மாதி சொரூபங்கள் யாவும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய ரவுத்திரமான சரீரங்கள்!
அவை நித்தியப் பிரளயத்துக்கு ஏதுக்கள், தக்ஷன், மரீசி, அத்திரி, பிருகு முதலிய பிரஜாபதிகள் நித்திய சிருஷ்டிக்கு காரணமாவர்.
மநுவும் மநுவின் புத்திரர்களும் சன்மார்க்கராயும் வீரியமே முக்கியமாக நினைத்தவராயுமுள்ள நித்திய சூரஸ்திதிக்கு காரணமாவார்கள்.
இவ்வாறு பராசரர் கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, பிராணிகள் யாவும் அநித்தியங்களாக இருக்க,
நித்திய ஸ்திதியும் நித்திய பிரளயமும் உண்டாவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார்.

அதற்குப் பராசரர் பதில் கூறலானார். மைத்ரேயரே!
பூதபாவனனும் அறியக்கூடாத சொரூபமுடையவனும் தடையற்றவனுமான ஸ்ரீமதுசூதனன் என்ற பெயரையுடைய பகவானே,
தன் சக்தியினாலேயே சிறப்புடைய மநு முதலான அந்தந்த ரூபங்களைக் கொண்டு, சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களை நடத்துகிறான்.
அவற்றை நித்தியங்கள் என்றேன். இனி பிரளய பேதங்களைப் பற்றிச் சொல்கிறேன்.
பிரளயமானது, நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம், நித்தியம் என்று நான்கு விதமாகும்.
அவற்றுள், எதனிடத்தில் ஜகத்பதியானவர் சயனிக்கிறாரோ அதுவே, பிரமனுடைய தனி அந்தியத்தில் உண்டாகும் நைமித்திகப் பிரளயமாகும்.
நான்முகப் பிரமனின் ஆயுள் முடிவில் பிரமாண்டம் உடைந்து சகல பூதங்களும் பிரகிருதியினிடத்தில் வயப்படுவது பிராகிருதப் பிரளயமாகும்.
யோகியானவன் ஞானதிசயத்தினால், அநாதி காம வாசனைகளால் செய்யப்பட்ட சங்கங்களையும் துறந்து,
பரமாத்துமாவிடம் சாயுஜ்யத்தை அடைவது ஆத்தியந்திகப் பிரளயம் என்று வழங்கப்படும்.
சதுர்வித பூதங்களும் தத்தமது ஆயுள் முடிவில் மரணமடைவது நித்தியப் பிரளயம் என்று சொல்லப்படும்.

இனி, சிருஷ்டி பேதங்களைக் கேளும், பிரமன் பிறப்பதற்கு முன்பே, பிரகிருதியினால் மகத்தகங்கார தன்மாத்திரைகளை
உண்டாக்குவது பிராகிருத சிருஷ்டி என்றும் தினப் பிரளயத்தின் முடிவிலே பிரஜைகளை உண்டாக்குவது
நைமித்திக சிருஷ்டி என்றும் சொர்க்க நரகாதி போக அனுபவமான பிறகு
ஜீவாத்துமாக்களே மனிதர், மிருகம், பறவை முதலான உருவங்களாகப் பிறப்பது நித்திய சிருஷ்டி என்றும் பவுராணிகர்கள் சொல்வார்கள்.
மைத்ரேயரே! ஜகத் காரண பூதரான ஸ்ரீவிஷ்ணு பகவான்,
சர்வபூத சரீரங்களிலேயும் இருந்து கொண்டே சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்கிறார்.

ஆனால் எம்பெருமான் எல்லாச் சரீரங்களிலேயும் எப்போதுமே இருக்கும்போது, சிருஷ்டியாதிகள் காலபேதத்தினால்
உண்டாக வேண்டுவது ஏன் என்று கேட்பீர்கள்.
சகல பூதங்களிலும் சிருஷ்டி ஸ்திதி, சங்கார சக்திகள் எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனுடைய சங்கல்பத்திற்குத் தக்கவாறே
உண்டாகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தப்படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய சக்திகள் மூன்றும்
சத்வகுணம், ராஜஸகுணம், தாமச குணம் ஆகிய முக்குணங்களால் உண்டானவை.
எவன் இவைகளுக்கு உட்படாமல் சர்வ சங்கவிமுக்தனாய், பிரம சாயுஜ்யத்தை அடைவானோ,
அவன் அப்படியே இருப்பதன்றி மீண்டும் திரும்பமாட்டான்!

—————-

8. ருத்திர சிருஷ்டியும் ஸ்ரீதேவி வைபவமும்

பராசரர் தொடர்ந்து மைத்ரேயரை நோக்கிக் கூறலானார். மைத்ரேயரே!
நான்முகனான பிரம்மதேவன் தாமச சிருஷ்டியைச் செய்தான் என்று முன் சொன்னேன் அல்லவா?
அதைச் சொல்கிறேன்; கேளுங்கள்.
கல்பாதி காலத்திலே இரணியகர்ப்பன் தனக்குச் சமமான ஒரு குமாரனைப் பெற வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது,
அவனுடைய மடியில், கறுப்புஞ்சிவப்பும் கலந்த நீலலோகிதனான குமாரன் ஒருவன் தோன்றினான்.
அவன் இனிய குரலுடன் அழுதுகொண்டு ஓடினான். பிதாமகன் அவனை நோக்கி, மகனே! ஏன் ரோதனம் செய்கிறாய்? என்று கேட்க,
அவன் எனக்கு நாமதேயம் கொடும் என்று கூறினான்.
அதைக் கேட்ட பிரும்மா, தேவனே நீ ருத்திரன் என்ற பெயர் பெற்று புகழ் அடையக் கடவாய்! ரோதனம் செய்யாமல்
தைரியமாய் இரு என்று சொன்னார். அப்படிச் சொல்லியும் ருத்திரன் மீண்டும் ஒருதரம் ரோதனஞ் செய்ததால்,
பிரமன் அவனுக்குப் பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்கிரன், மகாதேவன் என்ற ஏழு பெயர்களைச் சூட்டி,
அப்பெயர்களையுடைய ருத்திர மூர்த்திகளுக்கு வெவ்வேறு ஸ்தானங்களையும், பத்தினிகளையும், புத்திரர்களையும் கொடுத்தார்.

அந்த எழுவரின் ஸ்தானங்களாவன?
சூரியன், ஜலம், பூமி, அக்கினி, வாயு, ஆகாயம், தீட்சிதனான பிராமணன் சந்திரன் என்பனவாகும்
அவன் அங்கு இருப்பதால் அதுவே சரீரமாயின. ருத்திராதி நாமமுடைய அந்த எட்டு மூர்த்திகளுக்கும் முறையே
சுவர்ச்சலை, உஷை சுகேசி, சிவை சுவாகை. திசை, தீட்சை, ரோகிணி என்ற எட்டு பெண்களும் பத்தினிகளாவார்கள்.
இவர்களுக்கு சனி, சுக்கிரன், அங்காரகன், மனோஜவன், கந்தன், சொர்க்கன் சந்தானன், புதன் ஆகிய எண்மரும் பிள்ளைகள்
இவர்களுடைய புத்திர பவுத்திராதி பரம்பரையினரால் கலகம் நிறைந்தது. இவ்விதம் அஷ்டமூர்த்தியாகிய ருத்திரன்
தக்ஷப் பிரஜாபதியின் புத்திரியான சசிதேவியைக் கல்யாணம் செய்துகொண்டான்.
அந்தச் சசிதேவியும் தன் தந்தையின் கோபத்தால் தானும் கோபித்துத் தன் சரீரத்தை விட்டுவிட்டாள்.
பிறகு அவள் இமவானுக்கு மேனை என்ற மனைவியிடம் உமை என்ற பெயரோடு மறுபடியும் பிறந்தாள்.
சிவபெருமான் தன்னையே நினைத்துக் கொண்டிருந்த அந்தக் கன்னியை மீண்டும் திருமணஞ்செய்து கொண்டார்.
இது இப்படியிருக்க, முன்பு சொன்னபடி, பிருகு முனிவர் தம் மனைவியான கியாதியிடம் தாதா விதாதா என்ற பிள்ளைகளையும்,
ஸ்ரீமந்நாராயணனுக்குப் பிரிய பத்தினியான ஸ்ரீதேவி என்பவளையும் பெற்றார்.

இதைக் கேட்டதும் மைத்ரேயர், முனிவரே! அமிருதமதன காலத்தில் ஸ்ரீமஹாலட்சுமியானவள் திருப்பாற்கடலில்
அவதரித்தாள் என்பது உலகம் அறிந்ததாயிற்றே!
அப்படியிருக்க பிருகு முனிவரின் மகளாக ஸ்ரீதேவி பிறந்தாள் என்பது எவ்விதம் பொருந்தும்? என்று கேட்டார்.
அதற்குப் பராசரர் கூறலானார்; மைத்ரேயரே!
உலக மாதாவான பிராட்டியானவள் என்றைக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானை விட்டுப் பிரியாதவளாய், நித்யையாக இருப்பவள்
அவளுக்கு பிறவிகள் இல்லை. ஆயினும் எம்பெருமானைப் போலவே, அவளும் அவதரிப்பதும் மறைவதுமாக இருப்பாள்.
எம்பெருமானைப் போலவே, ஸ்ரீதேவிப் பிராட்டியும், சகல கலியாண குணங்களோடு விளங்குவாள்.
சகல பூதங்களுக்கும் தாயும் தந்தையுமான அந்தத் திவ்வியத் தம்பதிகளுடைய விபூதி வைபவத்தைக் கூறுகிறேன், கேளும்.

சொல்லுக்குப் பொருள் அந்தப் பெருமாள். அந்தப் பொருளைத் தெரிவிக்கும் சொல் இந்தப் பிராட்டி;
நீதி இவள்; அந்த நீதியின் உபாயமான நயம் அவன் இவள் புத்தி; அந்தப் புத்தியாலாகும் போதம் அவன்.
தருமம் அந்த ஸ்ரீமந்நாராயணன்; அந்தத் தருமத்திற்குச் சாதகமான சத்கிரியை ஸ்ரீதேவி;
படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப்படைப்புச் சக்தி ஸ்ரீதேவி; படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப் படைப்புச் சக்தி ஸ்ரீதேவி;
இவன் பூமி; இந்தப் பூமியை தரிப்பவன் விஷ்ணு; அந்தப் பகவான் சந்தோஷம்; அதை உண்டாக்கும் சந்துஷ்டி ஸ்ரீதேவி;
இச்சை என்பது ஸ்ரீதேவி; காமம் என்பது பகவான்; யக்ஞம் ஜகந்நாதன். தக்ஷிணை ஜகன்மாதா! புரோடாசம் சனார்த்தனன்;
ஆச்சியாகுதியானது கமலை. பிராக்கு வம்சம் என்பது மதுசூதனன்; பத்தினிச் சாலை என்பது ஸ்ரீதேவி யூபஸ் தம்பம் ஸ்ரீஹரி;
யாகவயனம் ஸ்ரீலக்ஷ்மி! எம்பெருமான்-தர்ப்பை: பிராட்டியே சமித்து! சாமவேதம்-பகவான்; அதில் சேர்ந்த உத்கீதி என்பது லக்ஷ்மி!
வாசுதேவன் அக்னி; இந்திரையானவள் சுவாகா தேவி.

ஸ்ரீவிஷ்ணு பகவானே சங்கரன்; ஸ்ரீ மகாலக்ஷ்மியே கவுரி. கேசவனே சூரியன்; அவனது பிரபையே கமலை!
விஷ்ணுதேவன் பிதுர்தேவதா சொரூபி; ஜகன் மாதாவோ ஆகாயம் அதி விஸ்தாரமான அதன் பரப்பே விஷ்ணு
அந்த ஸ்ரீயப்பதியே சந்திரன். அந்தச் சந்திரனின் காந்தியாகிய நிலவே ஸ்ரீதேவி! சர்வாக்தனான ஸ்ரீஹரியே வாயு;
அந்தச் சந்திரனின் காந்தியாகியே நிலவே ஸ்ரீதேவி! சர்வக்தனான ஸ்ரீஹரியே வாயு; அந்தக் காற்றின் செய்கையே திருமகள்!
சமுத்திரம் கோவிந்தன்; அந்தச் சமுத்திரத்தின் அலை முதலான விகிருதியெல்லாம் ஸ்ரீதேவி! மதுசூதனனே தேவேந்திரன்;
இந்திரையே இந்திராணி சக்கரதரனான பகவானே யமன்; கமலாயையே யமபத்தினியான தூமார்னே!
ஸ்ரீதரனே குபேரன்; ஸ்ரீதேவியே அந்தக் குபேரனின் பெருஞ்செல்வம்! விஷ்ணுவே வருணன் லக்ஷ்மியே வருணனின் பத்தினியான கவுரி!
கோவிந்தனே தேவ சேனாதிபதியான கந்தன்; இந்திரையே தேவசேனை! கதாதரனே பிடிப்பு; அதற்கு காரணமான சக்தியே ஸ்ரீதேவி!
நிமிஷம் நாராயணன் காஷ்டை லக்ஷ்மி! முகூர்த்தம்-வாசுதேவன் அந்த முகூர்த்தத்தின் அவயவமான கலை ஸ்ரீ லோகமாதா!
திருவிளக்கு-சர்வேசுவரன்; அதன் காந்தி-லோகநாயகி! ஸ்ரீ மகாவிஷ்ணு விருட்சம்; ஸ்ரீதேவி கொடி!
சக்கரதரன் பகல் ஸ்ரீகாந்தை இரவு! விஷ்ணுவே மணமகன்; ஸ்ரீதேவியே மணமகள்! பகவான் நதி! சொரூபன்;
ஸ்ரீதேவி நதி சொரூபை நாராயணன் லோபம்; லக்ஷ்மியே ஆசை! கோவிந்தன் ராகம்; ஸ்ரீதேவியே அதன் காரணமாகிய காதல்!
மைத்ரேயரே! இப்படி அநேக வாக்கியங்களைச் சொல்லிப் பயன் என்ன?
அந்தத் திவ்விய தம்பதிகளின் விபூதியைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள்.
தேவதைகளுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும் திரியக்குகளிலும், மற்றுமுண்டான பொருட்களிலும் உள்ள
ஆண் தன்மையான பெயரையுடையனவெல்லாம் ஸ்ரீஹரியே;
பெண் லிங்கமான பெயருடையனவெல்லாம் ஸ்ரீதேவியே; என்று நினைப்பீராக!
இவ்விருவரினும் வேறான வஸ்து ஒன்றும் இல்லை. எல்லாம் அவர்களில் வியாபிக்கப்பட்டு அவர்களது விபூதியாகவே இருக்கின்றன!

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் – பூ ஸ்துதி–அம்சம் -1-அத்யாயம் -4–

June 26, 2020

ஸ்ரீ எம்பெருமான் ஸ்ருஷ்டிக்கு ப்ரம்மனை ஸ்ருஷ்டித்தபின், பாத்ம கல்பம் முடியும் தறுவாயில்
ப்ரம்மன் உறக்கம் நீங்கிக் கண் விழித்தபோது பெரும் நீர்ப்பரப்பில் தான் தாமரையில் இருப்பதைக் கண்டார்.

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூனவ:
அயனம் தஸ்ய தா:பூர்வம் தேன நாராயண: ஸ்ம்ருத:

அப்போது நீர்க்கடலில் ஸ்ரீ எம்பெருமான் ஸயனத் திருக்கோலம் கண்டார்.
இவ்வாறு நீரில் இருந்த பிரபுவுக்கு ஸ்ரீ நாராயணன் என்ற பெயர் வந்தது.
அந்த நாரத்திலிருந்து ஸ்ருஷ்டிக்கப்பட்டவை நாரங்கள். அவற்றை உள்ளும் புறமும் இருந்து அவனே தாங்குகிறான்.
ஒரு மீன் அல்லது ஆமை அல்லது ஸ்ரீ வராஹ வடிவெடுக்கிறான். இப்போது ப்ரம்மன் வேத கீதம் பாட,
ஸநகாதிகள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவன் அந்நீரில் பாய்ந்து இறங்குவதை நோக்கிய ஸ்ரீ பூமிப் பிராட்டி சொன்னாள்:

பூமி ஸ்துதி

நமஸ்தே ஸர்வ பூதாய துப்யம் சங்க கதாதர
மாம் உத்தாராஸ்மாதத்ய த்வம் த்வத்தோஹம் பூர்வமுத்திதா

த்வத்தோஹம் உத்திதா பூர்வம் த்வன் மாயாஹம் ஜனார்த்தன
ததான் யானி ச பூதாநி ககநாதீன் யஸேஷத:

நமஸ்தே பரமாத்மாத்மன் புருஷாத்மன் நமோஸ்துதே
ப்ரதான வ்யக்த பூதாய கால பூதாய தே நம:

த்வம் கர்த்தா ஸர்வ பூதானாம் த்வம் பாதா த்வம் விநாச க்ருத்
ஸர்காதிஷு ப்ரபோ ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராத்ம ரூபத்ரூக்

சம்பக்ஷயித்வா சகலம் ஜகத் ஏகார்ணவீ க்ருதே
சேஷே த்வமேவ கோவிந்த! சிந்த்யமானோ மநீஷிபி:

பாவதோ யத் பாரம் தத்வம் தத்ர ஜானாதி கஸ்சன
அவதாரேஷு யத் ரூபம் ததர்ச்சந்தி திவௌகச:

த்வமாராத்ய பரம் ப்ரஹ்ம யாதா முக்திம் முமூக்ஷவ:
வாசுதேவமனாராத்ய கோ மோக்ஷம் ஸமவாப்ஸ்யதி

யத் கிஞ்சித் மனஸாக்ராஹ்யம் யத்க்ராஹ்யம் சக்ஷுராதிபி:
புத்தயா ச யத் பரிச்சேத்யம் தத்ரூபமகிலம் தவ

த்வன் மயாஹம் த்வதாதாரா த்வத் ஸ்ருஷ்டா த்வாமுபாச்ரிதா
மாதவீம் இதி லோகோயம் அபிதத்தே ததோஹி மாம்

ஜயாகில ஞான மய ஜய ஸ்தூல மயாவ்யய
ஜயானந்த ஜயாவ்யக்த ஜய வ்யக்தமய ப்ரபோ

பராபராத்மன் விச்வாத்மன் ஜய யஞ பதேனக
த்வம் யஜ்ஞஸ்த்வம் வஷட்காரஸ்த்வ மோங்காரஸ் த்வம் அக்நய:

தவம் வேதாஸ்த்வம் ததங்கானித்வம் யஜ்ஞ புருஷோ ஹரே!
ஸூர்யாதயோ க்ரஹாஸ்தாரா நக்ஷத்ராணி அகிலம் ஜகத்

மூர்த்ராமூர்த்தம் அத்ருஸ்யஞ்ச கடினம் புருஷோத்தம யதோக்தம் யஸ்ச நைவோக்தம் மயாத்ர பரமேச்வர!
தத் ஸர்வம் த்வம் நமஸ் துப்யம் பூயோ பூயோ நமோ நம:

அருளிச்செயலில் ஆழ்வார்கள் பூமியை எம்பெருமான் இடந்தும் கிடந்தும் நடந்தும் கடந்தும்
தோள்களால் ஆரத் தழுவியும் தன்னுடையதே உலகென நின்றான் என்று பாடுவது இங்கு காணக் கிடைக்கிறது.
இதன் திரண்ட பொருள்:

“எல்லாப் பொருள்களாகவும், கதை, சக்ரம் ஏந்தியவனுமான ப்ரபுவே வணக்கம்!
எப்போதும் போல் என்னை இவ்விடத்திலிருந்து தூக்கி நிறுத்துவீராக.
ஆகாசமும், மற்றெல்லாப் பொருள்களும் போலே நானும் உம்மிடமிருந்தே தோன்றினேன்,
உம்மையே தொடர்கிறேன், உம்மிலேயே உள்ளேன்.
ஸ்ரீ பரமாத்மனே! தெரிந்தும், தெரியாமலும் எல்லா பூதங்களுமாய் உள்ளீர், அவற்றின் ஆத்மாவாய் உள்ளீர்.
(அவற்றுக்கு சத்தை/இருப்பு கொடுக்கிறீர்)

எல்லாவற்றையும் ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ர ஸ்வரூபங்களில் ஸ்ருஷ்டி, ஸம்ரக்ஷண, ஸம்ஹார காலங்களில்
ஸ்ருஷ்டிப்பவர் , ரக்ஷிப்பவர், ஸம்ஹரிப்பவர் நீரே. கோவிந்தா! எல்லாவற்றையும் விழுங்கிய பின்,
உலகம் முழுவதையும் வ்யாபித்துள்ள மஹா ஸமுத்ரத்தில், யோகிகளால் த்யானிக்கப்பட்டு தேவரீர் ஸயனித்துள்ளீர்.
எவரும் உமது உண்மை ஸ்வரூபம் அறிகிலர்; தேவர்கள் நீர் விரும்பிக் காட்டும் திவ்ய ஸ்வரூபத்தை விரும்பி தரிசிக்கிறார்கள்.
இறுதியில் மோக்ஷம் பெறவேண்டும் என விரும்புவோர், வாசுதேவனே! உம்மையே த்யானிக்கிறார்கள்,
உம்மை அன்றி வேறு எவரை த்யானிப்பர்?
மனதால் அஞ்சப்படுபவையோ, புலன்களால் காணப்படுபவையோ, அரிவால் உணரப்படுபவையோ யாவும் உமது வடிவமே.

நான் உம் உடைமை, நீரே என் ஸ்ருஷ்டி கர்த்தா, நான் உம்மையே சரணாகப் புகல் அடைகிறேன்.
ஆகவே இப்ரபஞ்சத்தில் எனக்கு ஸ்ரீ மாதவி (ஸ்ரீ மாதவன் எனும் ஸ்ரீ விஷ்ணுவின் மஹிஷி) எனும் ஸ்தானம் கிடைக்கிறது.
ஞான ஸாரத்திற்கு மங்களம், மாறாமல் அழியாமல் இருப்பதற்கு மங்களம், நித்யமானதற்கு மங்களம்,
தானே காரணமாயும் கார்யமாயும் இருப்பவருக்கு மங்களம்;
வ்யக்தமாயும் அவ்யக்தமாயும் இருப்பவருக்கு, பிரபஞ்ச ஸ்வரூபிக்கு, அப்பழுக்கற்ற யஜ்ஞ ஸ்வாமிக்கு மங்களம்!
தேவரீர் யஜ்யம், தேவரீரே அர்க்யம், தேவரீரே ஓங்காரம், தேவரீரே யாக அக்னி, தேவரீரே வேதங்கள்,
அவற்றைச் சார்ந்த விஞ்ஞானங்கள், தேவரீரே அனைவரும் தொழும் ஹரி. ஸூர்யன், க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள்,
முழு உலகம், வடிவுள்ளன, வடிவற்றன, காணப்படுவன, கண்ணுக்குப் புலனாகாதன,
நான் சொன்னவை/சொல்லாமல் விட்டவை யாவுமே புருஷோத்தமனே! தேவரீர் ஆவீர்.
உமக்கு வணக்கம், வணக்கம், மீண்டும் மீண்டும் வணக்கம்.”

இவ்வாறு பூமி துதித்தவுடன், நீரிலிருந்து நீல மேகம் போல் ஒரு பெருங்கேழல் (ஸ்ரீ வராஹ) வடிவில் மெலிதான
ஸாம கானம்போல் முனகலோடு நீர் சொரிய எழுந்த ஸ்ரீ எம்பெருமான் ஸநக ஸநந்தனாதிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
மாறாத அன்பு நோக்கோடு பூமியை நேராக ஏந்திக் கொண்டு, ரிஷிகள், தேவர்கள் ஸ்துதி செய்து கொண்டிருக்க
அந்த பூகோளத்தை நீரில் மேற்பரப்பில் உறுதியாக வைத்தார்.

இந்தப் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மா ஒரு கருவியாக மட்டுமே உள்ளார்.
“நிமித்த மாத்ரமேவாஸீத் ஸ்ருஜ்யதாம் ஸர்க கர்மணி” என்கிறார் பராசரர்.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர மகரிஷி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.