Archive for October, 2025

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அஸ்வமேத பர்வம்-ஸ்ரீ  அஸ்வமேதிக உப பர்வம்-ஸ்ரீ காம கீதை-ஸித்த காஸ்யப ஸம்வாதம்! ஸ்ரீ அநு கீதை–

October 21, 2025

காமகீதை – ஆசையை வெல்வதெப்படி? – அஸ்வமேதபர்வம் பகுதி – 13-ஆசை வெல்லப்பட முடியாதது என்பதையும், அதை வெல்வதற்குரிய வழிமுறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலக்கொழுந்தே, (நாடு முதலியவை போன்ற) புறப்பொருட்களைக் கைவிடுவதன் மூலம் விடுதலை {முக்தி} அடையப்படுவதில்லை, சதைக்கு (உடலுக்குத்) தீனிபோடும் பொருட்களைக் கைவிடுவதன் மூலமே அஃது அடையப்படுகிறது.(1) புறப் பொருட்களை மட்டுமே கைவிட்டவனும், அதே வேளையில் ஆசைகள் மற்றும் சதைப் பலவீனங்கள் ஆகியவற்றில் மூழ்கியவனுமான மனிதனால் அடையப்படும் அறம் {பண்பு} மற்றும் மகிழ்ச்சி ஆகியன நமது எதிரிகளின் பங்காகட்டும் {நமது எதிரிகளுக்கு உண்டாகட்டும்}.(2) இரண்டு எழுத்துகளைக் கொண்டது மிருத்யுவாகும் (ஆன்மாவின் மரணம் அல்லது கேடு ஆகும்), மூன்று எழுத்துகளைக் கொண்டது சாஸ்வத பிரம்மம் அல்லது நித்திய ஆன்மாவாகும். இஃது அல்லது அஃது என்னுடையது என்ற அகங்காரம், அல்லது உலகம் சார்ந்த பொருட்களுக்கு அடிமையாக இருக்கும் நிலையே மிருத்தியுவாகும், மேலும் அவ்வுணர்வின்மையே சாஸ்வதமாகும்.(3) ஓ! மன்னா, பிரம்மம் மற்றும் மிருத்யு ஆகிய இவ்விரண்டும் அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களிலும் தங்கள் இருக்கையைக் கொண்டு, புலப்படாத நிலையிலேயே நீடித்து நிச்சயம் ஒன்றோடொன்று போர்புரியச் செய்கின்றன[1].(4)ஓ! பாரதரே, எந்த உயிரினமும் ஒருபோதும் அழிவடைவதில்லை என்பது உண்மையானால், ஓர் உயிரினத்தின் உடலைத் துளைப்பதன் (அழிப்பதன்) மூலம் ஏற்படும் அதன் மரணத்தினால் ஒருவன் குற்றவுணர்வை அடையத் தேவையில்லை.(5) அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய படைப்புடன் கூடிய மொத்த பூமியின் அரசுரிமையையும் அடைந்த மனிதன் அதனிடம் பற்று கொள்ளாமலோ, அதனை அனுபவிப்பதில் மூழ்காமலோ இருந்தால் அம்மனிதனுக்கு இவ்வுலகம் என்ன செய்யும்?(6) ஆனால், ஓ! பிருதையின் மகனே, உலகத்தைத் துறந்து காட்டில் துறவியாகக் காட்டுக்கிழங்குகளையும் உணவுகளையும் உண்டு வாழும் மனிதன் உலகில் உள்ள நல்ல பொருட்களில் ஏக்கம் கொண்டு, அவற்றுக்கு அடிமையாக இருந்தால் அவன் தன் வாயில் மிருத்யுவை (மரணத்தைக்) கொண்டிருக்கலாம் {அவன் மிருத்யுவின் வாயில் இருக்கிறான்} என்று சொல்லப்படுகிறது.(7) ஓ! பாரதரே, புறத்திலும், அகத்திலும் உமக்குள்ள எதிரிகளின் தன்மையை (உமது ஆன்மப் பார்வையின் மூலம்) கவனமாகக் காண்பீராக. நிலையான உண்மையின் இயல்பைக் காண இயன்ற மனிதன், பேரச்சத்தின் (கேட்டின் {அழிவின்}) ஆதிக்கத்தைக் கடக்க இயன்றவனாவான்.(8)

உலகம் சார்ந்த ஆசைகளில் மூழ்கியுள்ளோரின் ஒழுக்கத்தை மனிதர்கள் உவப்பாகப் பார்ப்பதில்லை, ஆசை இல்லாமல் (ஆசையை வேராகக் கொள்ளாத) எந்தச் செயலுமில்லை, மேலும் ஆசைகள் (காமங்கள்) அனைத்தும் மனத்தின் அங்கங்களை (கிளைகளைப்) போன்றனவாகும். எனவே, இதை அறிந்த ஞானிகள் தங்கள் ஆசைகளை அடக்குகின்றனர். பரமாத்மாவோடு ஒன்றிணையும் யோகியானவன், தனது முந்தைய பல்வேறு பிறவிகளின் நடைமுறைகள் {பழக்கங்கள்} காரணமாக, (விடுதலை {முக்தி} அடைவதற்கு) யோகத்தையே மிகச் சரியான வழியாக அறிகிறான். ஆன்மாவின் ஆசைகள் பக்தி மற்றும் அறத்தைக் கடத்துவனவல்ல, ஆசைகளை அடக்குவதே முற்றான உண்மை அறத்தின் வேராக இருக்கிறது என்பதை நினைவுகூரும் மனிதர்கள், முன்னேற்றத்தை அடைந்து விடலாம் என்ற நோக்கத்தோடு ஈகை பயில்தல், வேத கல்வி, தவம், உலகம் சார்ந்த செழிப்பை அடைவதற்கான வேத சடங்குகள், விழாக்கள், வேள்விகள், அறவிதிகள், தியானம் ஆகியவற்றில் ஈடுபடுவதில்லை.(9-11) பழங்கதைகளை அறிந்த தவசிகள், இந்த உண்மையை விளக்கும் வகையில் காமகீதை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கதைகளை உரைக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரரே, அவற்றை விளக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(12)

(காமன் சொல்கிறான்) (“அனைத்து ஆசைகளையும் அடக்குதல், யோகப் பயிற்சி முதலிய) உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் எந்த உயிரினத்தாலும் என்னை அழிக்க இயலாது.(13) ஒரு மனிதன் என் சக்தியை அறிந்தும், வேண்டுதல்கள் {ஜபங்கள்} முதலியவற்றை முணுமுணுப்பதன் மூலம் என்னை அழிக்க முனைந்தால், நானே அவனுக்குள் உள்ள அகநிலைத் தன்னுணர்வு என்று நம்பச் செய்து, வஞ்சிப்பதன் மூலம் நான் அவனை வெல்வேன்[2]. பல்வேறு கொடைகளுடன் கூடிய வேள்விகளின் மூலம் அவன் என்னை அழிக்க விரும்பினால்,(14) அசையும் படைப்புகளுக்கு மத்தியில் மிகவும் அறம்சார்ந்த உயிரினமாக அவனது மனத்தில் தோன்றி வஞ்சிப்பேன், வேதங்கள் மற்றும் வேதாங்கங்களில் தேர்ச்சி அடைவதன் மூலம் என்னை அவன் ஒழிக்க விரும்பினால், அசைவில்லாத படைப்புகளுக்கு மத்தியில் உள்ள அற ஆன்மாவாக அவனது மனத்திற்குத் தோன்றி அவனை வெல்வேன்.(15)வாய்மையைத் தன் பலமாகக் கொண்ட ஒரு மனிதன், பொறுமையின் மூலம் என்னை வெல்ல விரும்பினால்,(16) நான் புலப்படாதவனாக அவனது மனமாகவே அவனுக்குத் தோன்றுவேன். கடும் அறப்பயிற்சிகள் செய்யும்  {கடும் விரதங்களுடன் கூடிய} மனிதன், தவத்தின் மூலம் என்னை அழிக்க விரும்பினால்,(17) அவன் என்னை அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் தவத்தின் தோற்றத்திலேயே அவனது மனத்தில் நான் தோன்றுவேன். கல்விமானான ஒரு மனிதன்,(18) விடுதலையை {முக்தியை} அடையும் நோக்கத்துடன் என்னை அழிக்க விரும்பினால், விடுதலையை நோக்கமாகக் கொண்ட அத்தகைய மனிதனின் முகத்தில் சிரித்து மகிழ்ந்தாடுகிறேன். எந்த உயிரினத்தாலும் கொல்லப்படவோ, அழிக்கப்படவோ முடியாதவனாகவும், எப்போதும் நீடித்திருக்கும் ஒப்பற்றவனாகவும் நானே இருக்கிறேன் {நான் எவனாலும் கொல்லப்பட முடியாதவன்” என்றான் காமன்}.(19)

ஓ! இளவரசே {யுதிஷ்டிரரே}, இந்தக் காரணத்தினால் நீரும் உமது ஆசைகளை (காமத்தை) அறத்தின் பக்கம் திருப்பினால் அந்த வழிமுறையின் மூலம் நீர் உமக்கான நன்மையை அடையலாம்.(20) எனவே, கொடைகளுடன் கூடிய குதிரை வேள்வியையும், பெரும் காந்தியுடையவையும், கொடைகளுடன் கூடியவையுமான பல்வேறு வேள்விகள் பிறவற்றையும் உரிய முறையில் செய்வதற்கு ஆயத்தமாவீராக.(21) போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கும் உமது நண்பர்களைக் கண்டு மீண்டும் துயரம் உம்மை ஆட்கொள்ள வேண்டாம். இந்தப் போரில் கொல்லப்பட்ட மனிதர்களை மீண்டும் உயிருடன் உம்மால் பார்க்க முடியாது.(22) எனவே, இம்மையில் புகழை அடையவும் (மறுமையில்) மிகச் சரியான வழியை அடையவும் கொடைகளுடன் கூடிய மகத்தான வேள்விகளை நீர் செய்வீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(23)

ஸித்த காஸ்யப ஸம்வாதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 16-கீதையை மறுபடியும் உரைக்கும்படி கோவிந்தனிடம் கேட்ட அர்ஜுனன்; சித்தர் மற்றும் காசியபருக்கிடையில் நடந்த உரையாடலைச் சொன்ன கிருஷ்ணன்..

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பகைவர்களைக் கொன்றுவிட்டு சபா மண்டபத்திற்குச் சென்ற உயர் ஆன்ம கேசவன் மற்றும் அர்ஜுனனுக்கிடையில் என்ன உரையாடல் நடந்தது?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் நாட்டை மீட்ட பிருதையின் மகன் (அர்ஜுனன்), தெய்வீக அழகுடைய அந்த அரண்மனையில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், கிருஷ்ணனின் துணையுடனும் வேறு எதையும் செய்யாமல் தன் காலத்தை இன்பமாகக் கழித்தான்.(2) ஒருநாள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவ்விருவரும் சொர்க்கத்தின் ஒரு பகுதியைப் போலத் தூய்மையாகத் தெரிந்த அந்த அரண்மனையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றனர். மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அவர்கள், தங்கள் உறவினர்கள் மற்றும் பணியாட்களால் சூழப்பட்டிருந்தனர்.(3)கிருஷ்ணனுடனான தோழமையால் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பாண்டுவின் மகன் அர்ஜுனன், இனிமைநிறைந்த அம்மாளிகையைக் கண்டு, தன் தோழனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, போர் அணுகி வந்தபோது உன் பெருமையை நான் அறிந்தேன்.(4) ஓ! தேவகியின் மகனே, அண்டத்தின் தலைவனான உன் வடிவத்தை நான் அறிந்தேன்.(5) ஓ! கேசவா, புனிதனான நீ அந்நேரத்தில் அன்புடன் எனக்குச் சொன்னதனைத்தையும் என் மனத்தின் நிலையின்மையால் மறந்துவிட்டேன்.(6) எனினும், அந்த உண்மைகளை அறிய மீண்டும் மீண்டும் நான் ஆவல் கொள்கிறேன். நீயோ விரைவில் துவாரகை செல்லப் போகிறாய்” என்றான்”.(7)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், வலிமைமிக்கவனும், சக்திமானும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், பல்குனனை {அர்ஜுனனை} ஆரத்தழுவி பின்வருமாறு பதில் கூறினான்.(8)வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, “புதிர்கள் {இரகசியங்கள்} எனக் கருதப்படும் உண்மைகளை உன்னைக் கேட்கச் செய்தேன். நிலையான உண்மைகளை நான் உனக்குச் சொன்னேன். அறத்தின் நிலையான வடிவம் {ஸனாதன தர்மத்தின் ஸ்வரூபம்} குறித்தும், நித்திய உலகங்கள் அனைத்தைக் குறித்தும் நான் உனக்குச் சொன்னேன்.(9) நான் உனக்குச் சொன்னதை மடமையினால் நீ புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிவது பெரும் ஒவ்வாமையைத் தருகிறது. அச்சமயத்தில் நான் உன்னிடம் சொன்னது அனைத்தையும் இப்போது நினைவுகூர்ந்து என்னால் உனக்குச் சொல்ல இயலாது.(10) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ நம்பிக்கையற்றவனாகவும், புத்தி கெட்டவனாகவும் இருக்கிறாய். ஓ! தனஞ்சயா, அச்சந்தர்ப்பத்தில் நான் சொன்ன அனைத்தையும் விரிவாக மீண்டும் சொல்ல என்னால் இயலாது.(11)(அப்போது நான் உனக்குச் சொன்ன) அந்த அறம் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளப் போதுமானதற்கும் காலம் அதிகமானதாகும். அது குறித்து மீண்டும் விரிவாக என்னால் சொல்ல முடியாது.(12) யோகத்தில் என்னை நானே குவித்துக் கொண்ட பிறகு பரப்பிரம்மம் குறித்து உன்னிடம் உரையாடினேன். எனினும், அதே காரியம் குறித்த ஒரு பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்கிறேன்.(13) ஓ! கடமையை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் சொல்லப் போகும் அனைத்தையும் என் போதனைக்கு ஏற்ற புத்தியுடன் கேட்டால், உன்னால் உயர்ந்த கதியை அடைவதில் வெல்ல முடியும்.(14) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, ஒரு சந்தர்ப்பத்தில் சொர்க்கத்தில் இருந்து ஒரு பிராமணர் எங்களிடம் வந்தார். தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அவர் பிரம்ம லோகத்தில் இருந்து வந்தார். எங்களால் அவர் முறையாகக் கௌரவிக்கப்பட்டார்.(15) ஓ! பிருதையின் மகனே, சொர்க்க வடிவங்களுக்கு ஏற்புடைய வகையில் எங்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் எவ்வகையான ஐயுணர்வுக்கும் வசப்படாமல் கேட்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(16)பிராமணன், “ஓ! கிருஷ்ணா, (உன் சொந்த நன்மைக்காக அல்லாமல்) அனைத்து உயிரினங்களிடம் கொண்ட கருணையால் உந்தப்பட்டு, மோக்ஷ அறம் தொடர்பாக நீ என்னிடம் எதைக் கேட்டாயோ, மாயைகள் அனைத்தையும் எது அழிக்குமோ, ஓ! உயர்ந்த பலத்தைக் கொண்டவனே,(17) ஓ! மதுசூதனா அதை நான் உனக்கு முறையாகச் சொல்லப் போகிறேன். ஓ! மாதவா, நான் சொல்வதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(18) தவம் செய்தவரும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், காசியபர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பிராமணர் அறப்புதிர்கள் {தர்மங்கள் குறித்த சாஸ்திர ரஹஸ்யங்கள்} அனைத்தையும் அறிந்த மற்றொரு பிராமணரிடம் சென்றார்.(19) உண்மையில், பின்னவர், உயிரினங்களின் மரணம் மற்றும் மறுபிறவிகள் குறித்துச் சாத்திரங்கள் போதிக்கும் அறிவு அனைத்திலும், யோகம் தரும் அனைத்துப் பொருட்களின் நேரடி அறிவு ஆகியவற்றிலும் தேர்ச்சி அடைந்தவராக இருந்தார். அவர் உலகம் தொடர்பான காரியங்களில் உள்ள உண்மைகள் அனைத்திலும் நல்ல நிபுணராக இருந்தார். இன்ப, துன்பங்களின் உண்மையையும் நன்கு அறிந்தவராக இருந்தார்.(20) அவர் பிறப்பு மற்றும் மரணம் குறித்தும், நிறை {புண்ணியம்} மற்றும் குறை {பாவம்} ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளையும் அறிந்திருந்தார். தற்செயல்களின் {சுய கர்மத்தின்} விளைவால் உயர்ந்த மற்றும் இழிந்த உடல் கொண்ட உயிரினங்களால் அடையப்படும் கதிகளைக் காண்பவராக இருந்தார்.(21)

உலகில் இருந்து விடுதலை {முக்தி} அடைந்த ஒருவரைப் போல அவர் வாழ்ந்தார். தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராகவும், முற்றான ஆன்ம அமைதியை அடைந்தவராகவும் இருந்த அவர், தமது புலன்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். பிரம்ம ஒளியால் சுடர்விடுபவராகவும், {நினைத்தாலே} விரும்பிய இடமெங்கும் செல்லக்கூடியவராகவும் இருந்தார். விரும்பினால் அனைவரின் கண்களின் முன்பும் மறைந்து போகும் அறிவியலை அவர் அறிந்திருந்தார். அவர் புலப்படாத சித்தர்கள் மற்றும் தெய்வீக இசைக் கலைஞர்களின் துணையுடன் திரிபவராக இருந்தார். மனிதர்களின் பரபரப்புக்கு அப்பால் ஏதோவோரிடம் அவர்களுடன் அமர்ந்து உரையாடுபவராகவும் இருந்தார். அவர் காற்றைப் போல அனைத்துப் பொருட்களில் இருந்தும் தொடர்பறுந்தவராக இருந்தார். உண்மையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்த காசியபர் அவரைக் காண விரும்பினார். நுண்ணறிவைக் கொண்டவரும், பிராமணர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான அவர் {காசியபர்} அந்தத் தவசியை அணுகினார்.(22-24) தவம் செய்பவரும் புண்ணியம் ஈட்ட விரும்பியவருமான காசியபர், அந்த அற்புதக் குணங்கள் அனைத்தையும் கண்டதும் அந்தத் தவசியின் பாதங்களில் குவிந்த இதயத்துடன் விழுந்தார்.(25) அவருடைய இயல்புக்கு மீறிய சாதனைகளைக் கண்ட காசியபர், ஒரு சீடன் தன் ஆசானுக்காகக் கடமையுணர்வுடனும், மதிப்புடனும் காத்திருப்பதைப் போல அந்த முதன்மையான பிராமணரிடம் காத்திருந்து, அவரைத் தணிப்பதில் வென்றார்.(26) ஓ! பகைவர்களை வாட்டுபவனே {கிருஷ்ணா}, சாத்திரக் கல்வி, சிறந்த ஒழுக்கம் ஆகியவற்றைத் தவிர இந்தச் சாதனைகள் அனைத்தையும் செய்திருந்த அந்தப் பிராமணரை, ஓர் ஆசானிடம் கீழ்ப்படிந்திருக்கும் சீடனைப் போலத் தம் பக்தியால் நிறைவடையச் செய்தார்.(27) காசியபரிடம் நிறைவடைந்த அந்தப் பிராமணர் ஒரு நாள் அவரிடம் உற்சாகமாகவும், உயர்ந்த வெற்றியில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டும் பின்வருமாறு பேசினார். ஓ! ஜனார்த்தனா, அந்த வார்த்தைகளை நான் மீண்டும் சொல்கிறேன் கேட்பாயாக.(28)

வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரான அந்தத் தவசி {சித்தர்}, “ஓ! மகனே {காசியபா}, பல்வேறு செயல்களின் மூலமும், தகுதியின் {புண்ணியத்தின்} துணை மூலமும் இறந்து போகக்கூடிய உயிரினங்கள் இம்மையில் பல்வேறு கதிகளையும், சொர்க்கத்தில் வசிப்பிடத்தையும் அடைகின்றன.(29) எங்கும் உயர்ந்த மகிழ்ச்சி கிடையாது; எங்கும் நிலையான வசிப்பிடம் கிடையாது. துன்பத்துடன் அடையப்பட்ட உயர்ந்த உலகங்களில் இருந்து மீண்டும் மீண்டும் விழ்ச்சிகள் நேரிடும்.(30) பாவத்தில் ஈடுபட்டதன் விளைவாகக் காமமும், கோபமும் நிறைந்தவனாக, பேராசையால் மயக்கப்பட்டவனாக இருந்த நான் பரிதாபகரமான, மங்கலமற்ற பல்வேறு கதிகளை அடைய வேண்டி இருந்தது.(31) நான் மீண்டும் மீண்டும் இறந்து, மீண்டும் மீண்டும் பிறந்தேன். நான் பல்வேறு வகை உணவுகளை உண்டேன், நான் பல்வேறு முலைகளைப் பருகியிருக்கிறேன்.(32)

ஒருவருக்கொருவர் வெவ்வேறான பல்வேறு வகைத் தாய்மாரையும், பல்வேறு வகைத் தந்தைமாரையும் நான் கண்டிருக்கிறேன். ஓ! பாவமற்றவனே, பல்வேறு வகை இன்பங்களையும், பல்வேறு வகைத் துயரங்களையும் எனதாகியிருக்கின்றன.(33) பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் எனக்கு ஏற்புடையவற்றில் இருந்து பிரிக்கப்பட்டு, ஏற்பில்லாதவற்றோடு சேர்க்கப்பட்டிருக்கிறேன். கடும் உழைப்பினால் செல்வத்தை ஈட்டி, அதை இழந்திருக்கிறேன்.(34) அவமதிப்புகள், அதீத துயரங்கள் ஆகியவற்றை மன்னர்களிடம் இருந்தும், உறவினர்களிடம் இருந்தும் நான் அடைந்திருக்கிறேன்.(35) அவமானங்கள், மரணம், மிகக் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் சிறைவாசம் ஆகியவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். நரகத்தில் விழுவதும், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் பெரும் சித்திரவதைகளும் எனதாகியிருக்கின்றன.(36) முதுமையும், நோய்களும் மீண்டும் மீண்டும் என்னைத் தாக்கியிருக்கின்றன, அடிக்கடி அபரிமிதமான அளவில் பேரிடர்கள் நேர்ந்திருக்கின்றன. முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் கருத்துகளில் இருந்தும் பாயும் துன்பங்களை இவ்வுலகில் நான் மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்கிறேன்.(37)

இவை யாவற்றுக்கும் பிறகு, ஒரு நாள், துன்பத்தில் மூழ்கியிருந்த எனக்கு வெறுமையான மனத்தளர்ச்சி {நம்பிக்கையின்மை} ஏற்பட்டது. வடிவமற்ற புகலிடத்தை நான் அடைந்தேன். பெரும் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த நான் இன்ப துன்பங்கள் நிறைந்த இந்தப் பூமியைக் கைவிட்டேன்[1].(38) இந்தப் பாதையைப் புரிந்து கொண்ட நான், இவ்வுலகில் தானே பயின்று வந்தேன். அதன் பிறகு, ஆன்ம அமைதியின் மூலம் நீ காணும் இந்த வெற்றியை அடைந்தேன்.(39) (இங்கிருந்து நான் சென்ற பிறகு) இவ்வுலகத்திற்கு நான் மீண்டும் வர மாட்டேன். உண்மையில், நிலைத்த பிரம்மத்துக்குள் ஈர்க்கப்படும் நிலையை நான் அடையும் வரை, அண்டத்தின் இறுதி அழிவு வரை எனக்கு நேரும் மகிழ்ச்சிகரமான கதிகளையும், இந்த அண்டத்தில் உள்ள உயிரினங்களின் கதிகளையும் பார்த்துக் கொண்டிருப்பேன்[2].(40) இந்தச் சிறந்த வெற்றியை அடைந்திருக்கும் நான் இவ்வுலகில் இருந்து சென்ற பிறகு, அதற்கு மேலிருப்பது எதுவோ (சத்தியலோகத்திற்கு) செல்வேன். அங்கிருந்து மேலும் உயர்வானதை அடைவேன் (பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுவேன்).(41) புலப்படாத நிலையான அந்தப் பிரம்ம நிலையை உண்மையில் நான் அடைவேன். இதில் உனக்கு எந்த ஐயமும் வேண்டாம். ஓ! பகைவரை எரிப்பவனே, இறந்து போகும் உயிரினங்களைக் கொண்ட இவ்வுலகிற்கு மீண்டும் நான் திரும்ப மாட்டேன்.(42)ஓ! பெரும் ஞானியே, நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன். நான் உனக்குச் செய்ய வேண்டியதென்ன என்பதைச் சொல்வாயாக. நீ இங்கே வந்திருக்கும் நோக்கம் நிறைவேறுவதற்கான காலம் வந்துவிட்டது.(43) நீ என்னை நாடி வந்ததற்கான நோக்கத்தை உண்மையில் நான் அறிவேன். அதனால்தான் நான் உனக்கு இந்தச் சிறு குறிப்பைத் தருகிறேன்.(44) ஓ! பெரும் ஞானமும், அனுபவமும் கொண்டவனே, உன் நடத்தையில் நான் உயர்ந்த நிறைவை அடைந்திருக்கிறேன். நீ என்னைக் கேள்வி கேட்கலாம். உன் விருப்பப்படியே உனக்கு நன்மையானவற்றைக் குறித்து நான் உனக்குச் சொல்வேன்.(45) உன் புத்தி பெரியதென நான் நினைக்கிறேன். அந்தப் புத்தியின் துணையுடன்தான் நீ என்னை அறிந்து கொண்டாய் என்பதால் நான் உண்மையில் உன்னை வெகுவாக மெச்சுகிறேன். ஓ! காசியபா, நீ நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாவாய்” என்றார் {அந்த சித்தர்}.(46)

ஜனனமரணங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 17-உயிரினங்களின் பிறப்பு மற்றும் இறப்புக் குறித்துக் காசியபருக்குக் கூறிய சித்தர்…

வாசுதேவன் {கிருஷ்ணன்  அர்ஜுனனிடம்}, “அந்தத் தவசியின் பாதங்களைத் தீண்டிய அந்தப் பிராமணர் {காசியபர்}, பதிலளிப்பதற்கு மிகக் கடினமான சில கேள்விகளை அவரிடம் கேட்டார். அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவர், குறிப்பிடப்பட்ட அந்தக் கடமைகள் குறித்து அப்போது உரையாடினர்.(1)

காசியபர், “உடல் எவ்வாறு சிதைவடைகிறது?<1> மற்றொன்று {மற்றொரு உடல்} எவ்வாறு அடையப்படுகிறது?<2> துன்பம் நிறைந்த மறுபிறவி சுழற்சியை மீண்டும் மீண்டும் கடந்த பிறகு ஒருவன் எவ்வாறு விடுதலை {முக்தி} அடைகிறான்?<3>(2) சிலகாலம் பிரகிருதியை அனுபவித்துவிட்டு, (அந்தப் பிரகிருதி தரும்) குறிப்பிட்ட உடலை ஜீவன் எவ்வாறு கைவிடுகிறது?<4> உடலில் இருந்து விடுபட்ட ஜீவன், அதனில் இருந்து வேறுபட்டதை (பிரம்மத்தை) எவ்வாறு அடைகிறது?<5>(3) ஒரு மனிதன் தன்னால் செய்யப்படும் நல்ல மற்றும் தீய செயல்களை எவ்வாறு அனுபவிக்கிறான் (அனுபவிக்கவும் அதன் விளைவுகளை எவ்வாறு பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்)?<6> உடலை இழந்த ஒருவனுடைய செயல்கள் எங்கிருக்கின்றன {சரீரமற்ற ஆத்மாவுக்கு (சரீரத்திற்குக் காரணமான) கர்மம் எங்கிருந்து வருகிறது}?<7>” என்று கேட்டார்”[1].(4)(முதல் கேள்வி உடல் அழிவடைவது குறித்தது. இரண்டாவது, மீண்டும் உடலை அடையும் விதம் தொடர்புடையது. மூன்றாவது, மறுபிறப்பைத் தவிர்க்கும் விதம் குறித்தது. நான்காவது, ஜீவனுக்கு உடலைக் கொடுக்கச் செயல்படும் காரணங்கள் தொடர்புடையது. “பிரகிருதி” என்று சொல்வதன் மூலம் இயற்கை அல்லது உடலுக்குக் காரணமான விழிப்புணர்வின்மை பொருள் கொள்ளப்படுகிறது. ஐந்தாவது, அன்யத் அல்லது பரம், அஃதாவது இறுதி விடுதலை {முக்தி} அல்லது பிரம்மத்துக்குள் ஈர்க்கப்படுதல் எவ்வாறு நிகழ்கிறது என்பது தொடர்பானது. ஆறாவது, செயற்கனிகள் {செயல்களின் பலன்கள்} எவ்வகையில் அனுபவிக்கப்படுகின்றன அல்லது தாங்கிக் கொள்ளப்படுகின்றன என்பதன் தொடர்பானது. ஏழாவது, உடலற்ற ஜீவனைச் செயல்கள் {கர்மங்கள்} பிணைக்கும் வழிமுறைகளைக் குறித்துப் பேசுகிறது”){கிருஷ்ணனுடன் உரையாடிக் கொண்டிருந்த} பிராமணர், “இவ்வாறு காசியபரால் தூண்டப்பட்டவரும், முக்தருமான அந்தத் தவசி அந்தக் கேளவிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் பதிலளித்தார். ஓ விருஷ்ணி குலக் கொழுந்தே, அவர் சொன்ன பதில்களை நான் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(5)

முக்தரான அந்தத் தவசி {சித்தர்}, “ஜீவன் ஏற்றுக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட உடலால் செய்யப்படுபவையும், வாழ்வை நீட்டிக்கச் செய்யவல்லவையும், புகழைக் கொண்டுவரக்கூடியவையுமான செயல்கள் தீர்ந்து போகும்போது,(6) உடல்கொண்டதும், வாழ்வு குறுகியதுமான அந்த ஜீவன், வாழ்வுக்கும், உடல்நலத்திற்கும் பகையான செயல்களைச் செய்யத் தொடங்குகிறது. அழிவு அணுகும்போது அவனுடைய புத்தி முறையான நடைமுறையில் இருந்து விலகுகிறது.(7) தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதன், தன்னுடைய உடல் கட்டுமானம், பலம், தன் உயிர் மற்றும் வருடத்தின் காலம் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்ட பிறகும் கூட, ஒழுங்கற்ற இடைவெளிகளில் உண்ணவும், தனக்குப் பகையான உணவை உண்ணவும் தொடங்குகிறான்[2].(8) அத்தகைய நேரத்தில் அவன் மிகத் தீங்கான நடைமுறைகளில் {செயல்களில்} ஈடுபடுகிறான். சில வேளைகளில் அவன் அதிகமாக உண்கிறான், மேலும் சில சமயங்களில் அவன் மொத்தமாக உணவைத் தவிர்க்கிறான்.(9) கெட்ட உணவையோ, கெட்ட இறைச்சியையோ உண்கிறான், அல்லது கெட்ட பானத்தைப் பருகுகிறான், அல்லது ஒன்றோடொன்று பொருந்தாத உட்பொருள்களாலான உணவை உண்கிறான். நன்மை தரக்கூடிய கடின உணவை அதிக அளவில் அவன் உண்கிறான், அல்லது முன்பு உண்ட உணவு செரிக்கும் முன்பே மீண்டும் உண்கிறான்.(10)அதிகமான வேலைகளிலும், உரிய அளவுக்கு மீறிய பாலியல் இன்பத்திலும் ஈடுபடுகிறான், அல்லது வேலைக்கான ஆதாரத்தால் தன்னுடைய உடல் உறுப்புகளின் தூண்டுதல்களை ஒடுக்குகிறான்.(11) அல்லது அவன் அதிகச் சுவையுள்ள உணவை உண்ணவோ, பகல் வேளையில் உறங்குவதில் ஈடுபடவோ செய்கிறான். முறையாகச் செரிக்கப்படாத உணவானது, வேளை வரும்போது தானே குற்றங்களை {தோஷங்களைத்} தூண்டுகிறது[3].(12) உடலில் இவ்வாறு குற்றங்கள் தூண்டப்படுவதன் மூலம் அவன் நோயடைந்து மரணத்தை அடைகிறான். சில வேளைகளில் ஒருவன் (தான் இறந்து போவதற்காக) தூக்கிட்டுக் கொள்வது {உத்பந்தனம்} போன்ற பிறழ்நடத்தை அல்லது இயல்பற்ற செயல்களின் ஈடுபடுகிறான்.(13) இந்தக் காரணங்களினால் ஓர் உயிரினத்தின் உடல் அழிவடைகிறது. நான் உனக்குச் சொல்லும் வகையில் இதைச் சரியாகப் புரிந்து கொள்வாயாக.(14)கடுமையடையும் காற்றால் {வாயுவால் / வாதத்தால்} தூண்டப்பட்ட உடல் வெப்பமானது, ஒன்றன்பின் ஒன்றாக உடலின் ஒவ்வொரு பகுதியையும் அடைந்து, உயிர் மூச்சுகள் {மூச்சு நகர்வுகள்} அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.(15) உடல் முழுவதும் தூண்டப்பட்டதை உண்மையில் அறிந்து கொள்ளும் வெப்பமானது, உயிர் தங்கியிருப்பதாகச் சொல்லப்படும் உடலின் முக்கியப் பகுதிகள் அனைத்தையும் மிகக் கடுமையாகத் துளைக்கிறது.(16) இதன் விளைவாக ஜீவன் பெரும் துன்பத்தை உணர்ந்து, தன் உடல் உறையில் இருந்து விரைவாக விடைபெறுகிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, உடல் உறுப்புகளின் முக்கிய அங்கங்கள் இவ்வாறு பீடிக்கப்படும்போது பெரும் துன்பத்தில் மூழ்கும் ஜீவன் உடலை விட்டு நழுவுகிறது என்பதை அறிவாயாக. அனைத்து உயிரினங்களும் பிறப்பு மற்றும் இறப்பால் பீடிக்கப்படுகின்றன.(17,18) ஓ! பிராமணர்களின் தலைவா, ஒரு மனிதன் தன் உடலைக் கைவிடும்போது அவனால் உணரப்படும் வலியானது, அவன் ஒரு கருவறைக்குள் முதலில் நுழையும்போதோ, அதைவிட்டு வெளியேறும்போதோ {பிறக்கும்போதோ} அவனால் உணரப்படும் வலியைப் போன்றதே ஆகும். அவனது மூட்டுகள் கிட்டத்தட்ட விலகி, (கருவறைக்குள்) உள்ள நீரின் மூலம் அவன் பெரும் துன்பமடைகிறான்.(19,20)

(மற்றொரு) கடுங்காற்றால் {வாயுவால்} தூண்டப்படும், உடல் காற்றானது, குளிர் மூலம் தூண்டப்பட்டு, (உடல் என்று அழைக்கப்படும்) பருப்பொருள் ஒன்றியத்தை, எண்ணிக்கையில் ஐந்தான பூதங்களாகச் சிதைவுறச் செய்கிறது.(21) ஐந்து அடிப்படை பூதங்களின் இந்தக் கலவைக்குள் தோன்றும பிராணன் என்றும் அபானன் என்றும் அழைக்கப்படும் உயிர்மூச்சுகளில் வசிக்கும் காற்றானது, துன்பச் சூழ்நிலையில் இருந்து உடல்கொண்ட உயிரினத்தை விட்டு அகன்று, மேல் நோக்கி எழுகிறது.(22) இவ்வாறே காற்றானது உடலை விட்டு விலகுகிறது. பிறகே மூச்சில்லாமை காணப்படுகிறது. அதன் பிறகு அந்த மனிதன் வெப்பம், மூச்சு, அழகு மற்றும் நினைவு அற்றவன் ஆகிறான்.(23) (ஜீவனும் பிரம்மமே என்பதால்) பிரம்மத்தால் கைவிடப்படும் மனிதன் இறந்தவன் எனச் சொல்லப்படுகிறான். அந்த உடலைத் தாங்கியவன், உணரத்தக்க அனைத்துப் பொருட்களையும் எந்தக் குழாய்களின் {புலன்களின்} வழியாக உணர்ந்தானோ, அவற்றின் மூலம் அதற்கு மேலும் அவற்றை அவன் உணரமாட்டான்.(24)

உடலில் உள்ள அந்தக் குழாய்களில் {புலன்களில்} உயிர்மூச்சுகளை உணவில் இருந்து நித்திய ஜீவனே உண்டாக்குகிறது.(25) ஒன்று திரளும் பூதங்கள் சில பகுதிகளில் உறுதியாக ஒன்றிணைகின்றன. அந்தப் பகுதிகளே உடலில் முக்கியப் பகுதிகள் {மர்மஸ்தானங்கள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிவாயாக. இவ்வாறே சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.(26) அந்த முக்கியப் பகுதிகள் துளைக்கப்படும்போது, மேலே எழும் ஜீவனானது, உயிரினத்தின் இதயத்திற்குள் நுழைந்து, தாமதமில்லாமல் அசைவூட்டக் கோட்பாட்டை நிறுத்துகிறது.(27) அந்த உயிரினம் அப்போதும் நினைவுக் கோட்பாட்டுடன் கூடியதாக இருந்தாலும், எதையும் அறியத் தவறுகிறது. முக்கியப் பகுதிகள் அனைத்தும் மூழ்கியதும், அந்த உயிரினத்தின் ஞானம் இருளால் மூடப்படுகிறது.(28)

வசிக்கக்கூடிய இடங்கள் அனைத்தையும் இழந்த ஜீவன் அப்போது காற்றால் கலங்கடிக்கப்படுகிறது. அதன் பிறகு அவன், ஆழமானதும், நீண்டதும், துன்பம் நிறைந்ததுமான மூச்சைவிட்டு,(29) அசைவூட்டமுள்ள உடலை நடுங்கச் செய்தபடி விரைவாக வெளியேறுகிறான். எனினும், உடலில் இருந்து தொடர்பறுந்த ஜீவன், தன் செயல்களால் சூழப்பட்டிருக்கிறான்.(30) தான் செய்த மங்கலச் செயல்கள் அனைத்தின் புண்ணியங்கள் மற்றும் தன் பாவங்கள் அனைத்தாலும் அவன் அனைத்துப் புறங்களிலும் சூழப்படுகிறான். ஞானமும், சாத்தியத் தீர்மானங்களின் அறிவையும் கொண்ட பிராமணர்கள், அவன் புண்ணியத்தைக் கொண்டிருக்கிறானா, அல்லது பாவத்தைக் கொண்டிருக்கிறானா என்பதைச் சில குறியீடுகளின் மூலம் அறிந்து கொள்கிறார்கள். கண்களைக் கொண்ட மனிதர்கள், இருளுக்கு மத்தியில் விட்டில் பூச்சியானது தோன்றி மறைவதைக் காண்பதைப் போலவே, அறிவுக் கண் கொண்டவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான மனிதர்கள், தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் உடலைவிட்டு ஜீவன் செல்வதையும், மறுபிறவியில் அவன் கருவறைக்குள் நுழைவதையும் காண்கிறார்கள். ஜீவனுக்கு மூன்று உலகங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் காணப்படுகிறது.(31,34)

உயிரினங்கள் வசிக்கும் இவ்வுலகம் செயற்களம் என்றழைக்கப்படுகிறது. நல்ல அல்லது தீய செயல்களை நிறைவேற்றும் உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் பேரில் உண்டாகும் கனிகளை அடைகின்றன.(35) தாங்கள் செய்யும் செயல்களின் விளைவாக உயிரினங்கள் இம்மையில் மேன்மையான அல்லது தாழ்ந்த இன்பங்களை அடைகின்றன. இங்கே தீச்செயல் செய்பவர்கள் தங்கள் செயல்களின் விளைவாக நரகத்தை அடைகிறார்கள்.(36) உயிரினங்கள் தலைகீழாகத் தொங்கி மூழ்கி, சமைக்கப்படும் நிலை மிகத் துன்பகரமான ஒன்றாகும். அங்கிருந்து தப்புவது மிகக் கடினமாகும். உண்மையில் ஒருவன் இந்தத் துன்பத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகக் கடினமாக முயல வேண்டும்.(37)

இவ்வுலகில் இருந்து உயர்ந்து சென்ற பிறகு உயிரினங்கள் உண்மையில் வசிக்கப் போகும் உலகங்களை இப்போது சொல்லப் போகிறேன். கவனத்துடன் கேட்பாயாக.(38) நான் சொல்வதைக் கேட்பதன் மூலம், புத்தியில் உறுதியையும், (நல்ல மற்றும் தீய) செயல்களைப் புரிந்து கொள்வதில் ஒரு தெளிவையும் நீ அடைவாய். ஆகாயத்தில் ஒளிரும் நட்சத்திர உலகங்கள், சந்திர வட்டில் மற்றும் சொந்த ஒளியில் அண்டத்தில் ஒளிரும் சூரிய வட்டில் ஆகியவை அறம் சார்ந்த செயல்களைச் செய்த உயிரினங்கள் அனைத்திற்குமான உலகங்கள் என்பதை நீ அறிவாயாக.(39,40)

புண்ணிங்கள் தீர்ந்ததும் அவர்கள் அந்த உலகங்களில் இருந்து மீண்டும் வீழ்ச்சியடைகிறார்கள். சொர்க்கத்திலும்கூட, தாழ்ந்த, மேன்மையான, நடுத்தரமான இன்பநிலைகள் என்ற வேறுபாடு இருக்கிறது.(41) சொர்க்கத்திலேயே கூட, தன்னைவிட அதிகச் செழிப்புடன் இருப்பவர்களைக் கண்டு நிறைவின்மை ஏற்படுகிறது. இவையே நான் விரிவாகக் குறிப்பிட்ட இலக்குகள் {கதிகள்} ஆகும்.(42) இதன்பிறகு, ஜீவன் கருவறை வாசத்தை அடையும் நிலை குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மறுபிறப்பாளனே, நான் சொல்லப் போவதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக” என்றார் {சித்தர்}.(43)

ஜனனம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 18-ஜீவன் கருவறையை அடைவது முதலியவற்றைக் குறித்துக் காசியபருக்குச் சொன்ன சித்தர்…

பிராமணர் {சித்தர் காசியபரிடம்}, “ஜீவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அழிவடைவதில்லை. உடலுக்குப் பின் உடலைப் பெறுவதன் மூலம் அந்தச் செயல்கள் அவற்றுக்குத் தொடர்புடைய கனிகளை {பலன்களை} உண்டாக்குகின்றன.(1) கனி சுமக்கும் மரம், விளைச்சலுக்கான காலம் வரும்போது, பெரும் அளவிலான கனிகளை விளைவிப்பத்தைப் போலவே, தூய இதயத்துடன் அடையப்படும் தகுதியும் {புண்ணியமும்}, (பேரின்பம் எனும்) பயிரைப் பெருமளவில் விளைவிக்கச் செய்யும்.(2) அதே போலவே, பாவம் நிறைந்த இதயத்துடன் செய்யப்படும் பாவம், துன்பமெனும் பெரும்பயிரை விளைவிக்கும். ஆன்மா (அல்லது ஜீவன்), மனத்தை மேலே கொண்டு செயல்படுமாறு தன்னிடமே சொல்லிக் கொள்கிறது.(3) ஜீவன், தான் செய்யும் செயல்கள் அனைத்துடன், காமம் மற்றும் கோபத்தில் மூழ்கி, கருவறைக்குள் எவ்வாறு நுழைகிறது என்பதைக் கேட்பாயாக.(4)

குருதியுடன் கலந்த உயிர்வித்தானது, பெண்களின் கருவறைக்குள் புகுந்து, (அவனது) நல்ல அல்லது தீய செயல்களின் மூலம் பிறந்த (ஜீவனின்) களமாகிறது.(5) அதன் நுட்பம் மற்றும் புலப்படா நிலை ஆகியவற்றின் விளைவால் ஜீவனானது, உடலுக்குப் பின் உடலை அடைந்தாலும் எதனுடனும் பற்று கொள்வதில்லை. எனவே, அது {ஜீவன்} நித்திய பிரம்மம் என்றழைக்கப்படுகிறது[1].(6) அதுவே (ஜீவன், அல்லது பிரம்மமே) உயிரினங்கள் அனைத்தின் வித்தாகிறது. அதன் விளைவாலேயே உயிரினங்கள் உயிருடன் வாழ்கின்றன. கருவில் பகுதி, பகுதியாக அனைத்து அங்கங்களிலும் நுழையும் ஜீவன், மனத்தின் குணத்தை ஏற்றுக் கொண்டும், பிராணனுக்குச் சொந்தமான பகுதிகள் அனைத்துக்குள்ளும் வசித்துக் கொண்டும் (உயிரை {வாழ்வை}) ஆதரிக்கிறது. இதன் விளைவாக மனத்துடன் கூடிய கருவானது தன் அங்கங்களை அசைக்கத் தொடங்குகிறது.(7,8)உருக்கப்பட்ட இரும்பானது (வார்ப்புக்குள்) ஊற்றப்படும்போது, அந்த வார்ப்பின் வடிவைப் பெறுவதைப் போலவே, ஜீவனும் கருவை அடைந்து அவ்வாறே ஆகிறது.(9) இரும்புத்திரளுக்குள் நுழையும் நெருப்பானது, அதை வெகுவாகச் சுடுவதைப் போலவே, கருவில் வெளிப்படும் ஜீவனும் அவ்வாறே செய்கிறது என்பதை அறிவாயாக.(10) அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு (அதனுள் இருக்கும் அனைத்துப் பொருட்களையும்) கண்டுபிடிப்பதைப் போல, மனமும், உடலின் பல்வேறு அங்கங்களைக் கண்டுபிடிக்கிறது.(11) முந்தைய உடலில் ஜீவன் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்கள் எதனையும் நிச்சயம் அஃது அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ வேண்டும்.(12) அவ்வாறு அனுபவிக்கவும், சகித்துக் கொள்ளவும் செய்வதன் மூலம் முந்தைய செயல்கள் தீர்ந்து, ஜீவனானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் தியானத்தில் உள்ள கடமைகளின் அறிவை அடைவதில் வெல்லும் வரை மீண்டும் மீண்டும் வேறு செயல்களைக் குவிக்கிறது.(13)

ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இதைப் பொறுத்தவரை, மீண்டும் மீண்டும் நிகழும் மறுபிறவி சுழற்சிகளின் போது, ஜீவனை மகிழ்ச்சியடையச் செய்யும் செயல்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(14) கொடைகள் {தானம்}, தவம் செய்வது {விரதம்}, பிரம்மச்சரியம், விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பிரம்மம் தரித்தல், தற்கட்டுப்பாடு, அமைதி, அனைத்து உயிரினங்களிடமும் கருணை,(15) ஆசைகளைக் கட்டுப்படுத்தல், கொடூரந்தவிர்த்தல், பிறருக்கு உரியதை அபகரிக்காமல் இருத்தல், போலியான செயல்கள் அனைத்தையும் மனத்தாலும் செய்யாதிருத்தல்,(16) தாய்க்கும், தந்தைக்கும் மதிப்புடன் தொண்டாற்றுதல், தேவர்களையும், விருந்தினர்களையும் கௌரவித்தல், ஆசான்களை வழிபடுதல், இரக்கம், தூய்மை, அனைத்து உறுப்புகளையும் நிலையாகக் கட்டுப்படுத்தல்,(17) நற்செயல்கள் அனைத்தையும் செய்தல் ஆகியவை நல்லொழுக்கமென அமைவதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய ஒழுக்கத்திலிருந்தே உயிரினங்கள் அனைத்தையும் நிலையாகப் பாதுகாக்கும் அறம் எழுகிறது.(18) இத்தகைய ஒழுக்கத்தை  நல்லோருக்கு மத்தியில் எப்போதும் ஒருவன் காணலாம். உண்மையில், அத்தகைய ஒழுக்கம் அங்கேயே நிலையாக வசிக்கிறது. அமைதியான ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் செய்யும் நடைமுறைச் செயல்களே  அறத்தைக் குறிக்கின்றன.(19) நிலையான அறமாக அமையும் நடைமுறைச் செயல்கள் அவர்களுக்கு மத்தியிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. அறம் நோற்கும் ஒருவன் ஒருபோதும் துன்ப கதியை அடைய மாட்டான்.(20)

உலகமானது, அறத்தில் இருந்து வீழும்போது, நல்லோரின் ஒழுக்கத்தின் மூலமே அறப்பாதையில் {மீண்டும்} அது நிலைநிறுத்தப்படுகிறது. யோகியானவன் விடுதலையடைகிறான் {முக்தியடைகிறான்}, எனவே அவன் இவர்களை {நல்லோரை} விடவும் சிறந்தவனாக இருக்கிறான்.(21) நீதிமானாகச் செயல்படும் ஒருவன், தான் செய்ய வேண்டியவற்றை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாக நீண்ட காலம் செய்து வரும்போதே உலகத்திலிருந்து அவன் வீடுபேறடைவது நிகழ்கிறது.(22) ஓர் உயிரினமானது தான் முந்தைய பிறவியில் செய்த செயல்களின் பலன்களை இவ்வாறே அடைகிறது. இந்தச் செயல்கள் அனைத்தும் காரணமாக அமைவதன் விளைவாகவே ஒருவன், தனது உண்மை வடிவில் இருந்து வேறு பட்ட நிலையில் இவ்வுலகை அடைகிறான்.(23) இந்தக் கேள்வியைப் பொறுத்தவரையில் இவ்வுலகில் ஐயமிருக்கிறது. (ஜீவனால்) ஓருடல் ஏற்கப்படுவது முதலில் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?(24)

உலகமனைத்துக்குப் பெரும்பாட்டனான பிரம்மன் முதலில் தன் உடலை அமைத்துக் கொண்டு, அதன்பிறகு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களையும் முழுமையாகப் படைத்தான்.(25) முதலில் தன்னுடலை ஏற்றப் பிறகே அவன் பிரதானத்தைப் படைத்தான். அனைத்தையும் எது மறைக்குமோ, உயர்ந்தது என அனைவரும் எதனை அறிந்தார்களோ அந்தப் பிரதானமே உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் பொருள் காரணமாக அமைகிறது.(26) காணக்கூடிய இஃது {உடல்} அழியத்தக்கதென்றும், மற்றது {காணமுடியாத ஆன்மா} இறப்பற்றது மற்றும் அழிவில்லாதது என்றும் சொல்லப்படுகிறது. (காணப்படக்கூடிய) இது க்ஷரம் (அழியக்கூடியது) என்று சொல்லப்படுகிறது; எனினும், மற்றது {ஆன்மா} இறப்பற்றது (என்றும்) அக்ஷரம் (அழிவற்றது) என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு புருஷனாலும் மொத்தமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட {உடல், ஆன்மா மற்றும் பிரம்மம் ஆகிய} இவை மூன்றும் {உடல் மற்றும் ஜீவன் என்ற} இருமையாக இருக்கின்றன[2].(27) முதலில் (உடல் கொண்ட வடிவில் தோன்றிக்) காணப்பட்ட பிரஜாபதி {பிரம்மன்}, (பிறகு) அடிப்படை பூதங்கள் அனைத்தையும், அசைவற்ற உயிரினங்கள் அனைத்தையும் படைத்தான். இதுவே பண்டைய கேள்வியாகும் {பழைமையான வேதமாகும்}.(28)அதில் (உடலை ஏற்றுக் கொண்டதில்), காலம், பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த குடிபெயர்வுகள், மறுபிறவிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பெரும்பாட்டன் ஓர் எல்லையை விதித்தான்.(29) நுண்ணறிவு கொண்டவனும், தன் ஆன்மாவைக் கண்டவனுமான ஒரு மனிதன், முற்பிறவிகள் குறித்துச் சொல்வதைப் போலவே நான் சொல்வது அனைத்தும் முறையானவையும், சரியானவையுமாகும்.(30) இன்பமும், துன்பமும் நிலையில்லாதவை என்று சரியான பார்வையில் காண்பவனும், உடலைப் புனிதமற்ற திரட்டாகவும், அழிவை செயற்பாட்டு விதியாகவும் கருதுபவனும்,(31) சிறிய அளவிலான இன்பமும் கூட உண்மையில் துன்பமே என்பதை நினைவுகூருபவனுமான மனிதன், கடப்பதற்கு மிக அரிதான உலகம் சார்ந்த இடம்பெயர்வு எனும் இந்தப் பயங்கரப் பெருங்கடலை {ஸம்ஸரஸமுத்திரத்தைக்} கடப்பதில் வெல்வான்.(32) முதுமை, மரணம் மற்றும் நோயால் துன்புற்றாலும், பிரதானத்தைப் புரிந்து கொள்ளும் ஒருவன், நனவுநிலையுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தினுள்ளும் வசிக்கும் நனவுநிலையை {சைதன்யத்தைச்} சமமாகப் பார்ப்பான்.(33) பரம இருக்கையை {மேலான கதியை} நாடும் ஒருவன், (வேறு) பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் பாகுபாடற்றவனாக ஆகிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இது தொடர்பாக வாய்மைக்கு ஏற்புடைய வகையில் நான் உனக்கு ஞானத்தைப் போதிக்கப் போகிறேன்.(34) ஓ! கல்விமானான பிராமணா {காசியபா}, அந்த அழிவற்ற இருக்கையை {மேலான கதியை} நான் அறிவிக்கும்போது, சிறந்த ஞானமாக அமைவதை நீ முழுமையாகப் புரிந்து கொள்வாயாக” என்றார் {சித்தர்}.(35)

மோக்ஷஸாதனம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 19-முக்தியை அடையும் வழிமுறைகளைக் குறித்துக் காசியபருக்குச் சொன்ன சித்தர்; சித்தர் கூறியதை அர்ஜுனனிடம் முழுமையாகச் சொல்லி முடித்த கிருஷ்ணன்…

பிராமணர் {சித்தர் காசியபரிடம்}, “(அனைத்துப் பொருட்களின்) ஒரே கொள்ளிடத்தில் {பிரம்மத்தில்} ஈர்க்கப்பட்டவனும், அனைத்துப் பொருட்களுடனான தன் அடையாளத்தைக் குறித்த எண்ணத்தில் இருந்து விடுபட்டவனும், தன் இருப்பைக் குறித்து நினைப்பதையே நிறுத்தியவனுமான ஒருவன், {யோகத்தின் மூலம்} ஒன்றன்பின் ஒன்றாக இவற்றைப் படிப்படியாகக் கைவிட்டு தன் கட்டுகளைக் கடப்பதில் வெல்கிறான்[1].(1) அனைத்திற்கும் நண்பனும், அனைத்தையும் தாங்குபவனும் {பொறுத்துக் கொள்பவனும்}, அமைதியாக இருப்பவனும், தன் புலன்கள் அனைத்தையும் வென்றவனும், அச்சம் மற்றும் கோபமற்றவனும், ஆன்மக்கட்டுப்பாடு கொண்டவனுமான மனிதன் தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} வெல்கிறான்.(2) தன்னைப் போலவே வேறு உயிரினங்கள் அனைத்துடனும் நடந்து கொள்பவனும், கட்டுப்பாடு, தூய்மை, பகட்டின்மை, மமதையின்மை ஆகியவற்றைக் கொண்டவனுமான ஒருவன் அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்தவனாகக் கருதப்படுகிறான்.(3) பிறப்பிறப்பு {ஜனனமரணம்}, இன்பதுன்பம், ஈட்டலிழத்தல் {லாபநஷ்டம்}, ஏற்புடைமை ஏற்பில்லாமை ஆகியவற்றைச் சமமாகக் காணும் ஒருவனும் விடுதலை {முக்தி} அடைகிறான்.(4) பிறர் பொருளை அபகரிக்க விரும்பாதவனும், எவரையும் அவமதிக்காதவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், பற்றிலிருந்து விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனுமான ஒருவன் அனைத்து வழியில் விடுதலை {முக்தி} அடைந்தவனாவான்.(5)
பகைவனோ, உறவினனோ, பிள்ளையோ இல்லாதவனும், அறம், பொருள் மற்றும் இன்பத்தைக் கைவிட்டவனும், ஆசை அல்லது பேராசையில் இருந்து விடுபட்டவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைந்தவனாவான்.(6) தகுதியையோ {புண்ணியத்தையோ}, குறையையோ {பாவத்தையோ} ஈட்டாதவனும், முற்பிறவிகளில் குவிக்கப்பட்ட தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் குறைகளை {பாவங்களைக்} கைவிட்டவனும், அமைதியான ஆன்மாவை அடைய தன்னுடலின் பூதங்களை வீணாக்குபவனும், முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்தவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்.(7) செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவனும், ஆசை அல்லது பேராசையில் இருந்து விடுபட்டவனும், சகிப்புத் தன்மை கொண்டதாகவோ, பிறப்பு, இறப்பு மற்றும் முதுமையை எப்போதும் கொண்ட அஸ்வத {அரச} மரத்தைப் போலவோ அண்டத்தைப் பார்ப்பவனும்,(8) துறவில் நிலைத்த புத்தியைக் கொண்டவனும், தன் குற்றங்களிலேயே எப்போதும் கண்களைக் கொண்டவனுமான ஒருவன் தன்னைக் கட்டியிருக்கும் கட்டுகளில் இருந்து விரைவாகத் தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} வெற்றி அடைகிறான்[2].(9) மணம் {கந்தம்}, சுவை {ரஸம்}, ஊறு {ஸ்பர்சம் / தீண்டல்}, ஒலி {சப்தம்}, உடைமைகள் {பந்தம்}, பார்வை {ரூபம் / வடிவம்} அற்றதும், அறிய முடியாததுமாகத் தன் ஆன்மாவைக் காண்பவன் விடுதலை {முக்தி} அடைகிறான் {மோக்ஷமடைகிறான்}[3].(10)ஐம்பூதங்களின் குணங்களற்றதாகவும், வடிவமும், காரணமும் அற்றதாகவும், குணங்களை அனுபவித்தாலும் அவையற்றதாகவும் தன் ஆன்மாவைக் காணும் ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்[4].(11) உடல் மற்றும் மனம் தொடர்பான காரியங்கள் அனைத்தையும் புத்தியின் துணையுடன் கைவிடும் ஒருவன், விறகற்ற நெருப்பைப் போல {தனக்கெனத்} தனித்த இருப்பற்ற நிலையைப் படிப்படியாக அடைகிறான்.(12) அனைத்து மனப்பதிவுகளில் {எண்ணங்களில்} இருந்தும் விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்தவனும், உடைமைகளேதும் அற்றவனும், தவத்தின் வழிகாட்டுதலின்படி தன் புலன்கள் அனைத்தையும் பயன்படுத்துபவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்[5].(13) மனப்பதிவுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட ஒருவன், நித்தியமானதும், மேலானதும், அமைதி நிறைந்ததும், நிலையானதும், நீடித்ததும், அழிவற்றதுமான பிரம்மத்தை அடைகிறான்.(14) எதைக் காட்டிலும் மேன்மையானது வேறேதும் இல்லையோ அந்த யோக அறிவியலையும் {யோக சாஸ்திரத்தையும்}, தியானத்தின் மூலம் யோகிகள் எவ்வாறு ஆன்மாவை மிகச்சரியாகக் காண்கிறார்கள் என்பதையும் இனி உனக்குச் சொல்லப் போகிறேன்[6].(15)அது தொடர்பான வழிமுறைகளை நான் முறையாக அறிவிக்கிறேன். உடலுக்குள் உள்ள ஆன்மாவை எவற்றின் வழியாகச் செலுத்துவதன் மூலம் தொடக்கமும், முடிவுமற்ற ஒன்றை ஒருவனால் காண முடியுமோ அந்தக் கதவுகளைக் குறித்து என்னிடம் இருந்து தெரிந்து கொள்வாயாக.(16) புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் {புலன்நுகர் பொருட்களில்} இருந்து விலக்கும் ஒருவன், ஆத்மாவில் தன் மனத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்; அதற்கு முன்பே அவன் கடுமையான தவங்களைச் செய்து, விடுதலைக்கு வழிவகுக்கும் மனக்குவிப்பைப் பயில வேண்டும்[7].(17) எப்போதும் மனச்செறிவாக்கத்தைப் பயில்பவனும், தவங்களை நோற்பவனும், புத்தியுடன் கூடியவனும், கல்விமானுமான ஒரு பிராமணன், உடலுக்குள் ஆன்மாவைக் காணச் செய்யும் யோக அறிவியலின் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.(18) முழுமையான தியானத்தை வழக்கமாகக் கொண்ட அந்த நல்லோன் ஆன்மாவில் மனத்தைச் செறிவடையச் செய்வதில் வென்றால், தன் ஆன்மாவிலேயே பரமாத்மாவைக் காண்பான்.(19) தற்கட்டுப்பாட்டுடனும், எப்போதும் செறிவுடனும் {மனக்குவிப்புடனும்}, தன் புலன்கள் அனைத்தையும் வென்ற நிலையிலும், தூய்மையான ஆன்மாவுடனும் கூடிய ஒரு மனிதன், அத்தகைய முழுமையான மனச்செறிவின் விளைவால் ஆன்மாவைக் கொண்டே ஆன்மாவைக் காண்பதில் வெல்வான்.(20)எவனோ ஒருவனைக் கனவில் காணும் ஒருவன் விழித்துக் கொண்ட பிறகு, “இவன் அவனே” என அடையாளம் கண்டு கொள்வதைப் போலவே ஆழ்ந்த தியானத்தின் சமாதி நிலையில் பரமாத்மாவைக் காணும் நல்லோன், அந்தச் சமாதி நிலையில் இருந்து விழித்துக் கொண்ட பிறகு {மேற்கண்டவாறே} அடையாளம் காண்கிறான்[8].(21) முஞ்சப் புல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிறகு ஈர்க்கைக் காணும் ஒருவனைப் போலவே, உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஆன்மாவையே ஒரு யோகி காண்கிறான்.(22) உடலானது முஞ்சம் என்றழைக்கப் படுகிறது, ஈர்க்கானது ஆன்மாவாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சிறந்த எடுத்துக்காட்டானது யோகத்தை அறிந்த மனிதர்களால் முன்வைக்கப்படுகிறது.(23) உடலைச் சுமப்பவன் யோகத்தில் போதுமான அளவுக்கு ஆன்மாவைக் காணும்போது, அவன் தனக்கு மேல் எவனும் இல்லாதவனாகவும், மூவுலகங்களுக்கும் தலைவனாகவும் ஆகிறான்[9].(24) அவன் தன் விருப்பத்தின் பேரில் பல்வேறு உடல்களை ஏற்கவல்லவனாவதில் வெல்கிறான். முதுமை மற்றும் மரணத்தைத் தவிர்க்கும் அவன் வருந்துவதோ, பெருங்களிப்படைவதோ கிடையாது.(25)யோகத்தில் மனங்குவிந்த தற்கட்டுப்பாடுடைய மனிதன், தேவர்களுக்கான தெய்வத்தன்மையை (தனக்காக) உண்டாக்கிக் கொள்வான். அவன், நிலையற்றதாக இருக்கும் தன் உடலைக் கைவிட்டு மாறாவியல்புடைய பிரம்மத்தை அடைகிறான்[10].(26) உயிரினங்கள் (தன் கண்களுக்கு முன்பே) அழிவடையும்போதும் அவனுக்குள் அச்சம் எழுவதில்லை. உயிரினங்கள் அனைத்தும் பீடிக்கப்படும்போதும் எவனாலும் அவன் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை.(27) ஆசையற்றவனும், அமைதியான மனம் கொண்டவனுமான யோகியானவன், துன்பம், கவலை, அச்சம் ஆகியவற்றாலும், பற்றும் மற்றும் அன்பிலிருந்து உண்டாகும் பயங்கர விளைவுகளாலும் ஒருபோதும் நிலைகுலைவதில்லை.(28) அவனை ஆயுதங்கள் துளைப்பதில்லை; அவனுக்கு மரணமுமில்லை. அவனை விட மகிழ்ச்சியான வேறு எவனையும் இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாது.(29) போதுமான அளவுக்குத் தன் ஆன்மாவைச் செறிவடையச் செய்யும் அவன் நிலையாகத் தன்னைச் சார்ந்தே வாழ்கிறான். அவன், முதுமை, துன்பம் மற்றும் இன்பத்தை விலக்கி சுகமாக உறங்குகிறான்.(30) தனது மனித உடலைக் கைவிடும் அவன் தன் விருப்பத்தின் பேரில் (வேறு) வடிவங்களை ஏற்கிறான். ஒருவன் யோகம் அளிக்கும் கோன்மையை அனுபவிக்கும்போது, யோக அர்ப்பணிப்பில் இருந்து அவன் ஒருபோதும் வீழ்ந்துவிடக்கூடாது[11].(31) ஒருவன் யோகத்தில் போதுமான அர்ப்பணிப்பைச் செலுத்தித் தனக்குள்ளே ஆன்மாவைக் கண்டபிறகு, அவன் நூறு வேள்விகளைச் செய்தவனையும் {இந்திரனையும்} பொருட்படுத்தமாட்டான்[12].(32)முழுமையாகத் தியானிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவன் யோகத்தை அடைவதில் எவ்வாறு வெல்கிறான் என்பதை இனி சொல்லப் போகிறேன் கேட்பாயாக. சூரியனுக்குப் பின்னால் உள்ள திசைப்புள்ளியின் நினைப்பில் மனத்தை நிலைக்கச் செய்து, தான் வாழும் மாளிகைக்கு வெளியே அல்லாமல் உள்ளேயே ஒருவன் வாழ வேண்டும். அந்த மாளிகைக்குள் வசித்துக் கொண்டே மனமானது தன் அக மற்றும் புற (இயக்கங்கள்) வாயிலாகத் தான் வாசிக்கும் அந்தக் குறிப்பிட்ட அறையைப் பார்க்க வேண்டும். ஆழமான தியானத்தில் ஒருவன் (அண்டத்தின் ஆன்மாவான பிரம்மத்தை) அனைத்தையும் பார்க்கும்போது, அந்த மனம் வசிப்பதற்குப் பிரம்மத்தைத் தவிரப் புறப்பொருள் வேறேதும் இல்லை. ஆள் அரவமற்ற காட்டில் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு,(33-36) மனத்தை அவற்றிலேயே நிலைக்கச் செய்யும் ஒருவன், தனது உடலுக்குப் புறத்திலேயும், அகத்திலேயும் உள்ள அனைத்தையும் குறித்துத் தியானிக்க வேண்டும். அவன் தனது பற்கள், மேல்வாய், நாவு, தொண்டை, கழுத்து போன்றவற்றிலும், இதயம் மற்றும் இதயத்தின் நாடிகள் ஆகியவற்றிலும் {மனத்தைச் செலுத்தி} தியானம் செய்ய வேண்டும்”[13].(37)பிராமணர் {சித்தர்} தொடர்ந்தார், “இவ்வாறு நான் சொன்னதும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நுண்ணறிவுமிக்க அந்தச் சீடன் {காசியபன்}, விளக்குவதற்குக் கடினமான இந்த விடுதலை அறம் {மோக்ஷதர்மம்} குறித்து மீண்டும் என்னிடம் கேட்டான்.(38) அவன் {காசியபன்}, “காலாகாலம் உண்ணப்படும் இந்த உணவானது வயிற்றுக்குள் செரிப்பது எவ்வாறு? அது சாறாக மாறுவது எவ்வாறு? மேலமும் அது குருதியாக மாறுவது எவ்வாறு?(39) சதை, மஜ்ஜை, நரம்புகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை அது வளர்ப்பது எவ்வாறு? உடல் படைத்த உயிரினங்களில் இருக்கும் உறுப்புகள் வளர்வது எவ்வாறு?(40) வளரும் மனிதனிடம் பலம் வளர்வது எவ்வாறு? ஊட்டச்சத்தற்றத் தனிமங்கள் அனைத்தும், {மலம் உள்ளிட்ட} மாசுகள் அனைத்தும் தனித்தனியாக வெளியேறுவது எவ்வாறு?(41) மூச்சை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நேர்வது எவ்வாறு? ஆன்மாவானது, உடலுக்குள் குறிப்பிட்ட எந்த இருப்பிடத்தில் வசிக்கிறது?(42)

ஜீவன் முயற்சியுள்ளவனாக உடலைத் தாங்குவது எவ்வாறு? (ஒரு குறிப்பிட உடலை விட்டகன்ற பிறகு) அவன் {ஜீவன்} மீண்டும் வசிக்கும் உடல் எந்த நிறத்தை என்ன வகையைக் கொண்டதாக இருக்கும்?(43) ஓ! புனிதமானவரே, ஓ! பாவமற்றவரே, இவை யாவற்றையும் எனக்கு மிகச் சரியாகச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான் {சீடன் காசியபன்}. ஓ! மாதவா, இவ்வாறே கல்விமானான அந்தப் பிராமணனால் {காசியபனால்} நான் கேள்வி கேட்கப்பட்டேன்.(44) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவனே நான் (என் குருவிடம் இருந்து) கேட்டிருக்கும் வகையிலேயே அவனுக்கு மறுமொழி கூறினே1ன். ஒருவன் தன் அறையில் வைத்த ஏதோ ஒரு மதிப்புமிக்கப் பொருளில் தன் மனத்தை வைத்திருப்பதைப் போலவே,(45) புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தித் தன் உடலில் மனத்தை நிறுத்தி, வழிப்புணர்வின்மைகள் அனைத்தையும் தவிர்த்து ஆன்மாவை நாட வேண்டும்.(46) இவ்வழியில் எப்போதும் விடாமுயற்சியுடன் தன்னில் நிறைவடையும் ஒருவன், குறுகிய காலத்திற்குள் பிரம்மத்தை ஆடைந்து, அதன் மூலம் அவன் பிரதானத்தை அறிகிறான்[14].(47)அவன் கண்களுக்குப் புலப்படுவதில்லை; அதே போலப் புலன்கள் அனைத்திற்கும் புலப்படுவதில்லை. மனம் எனும் விளக்கால் மட்டுமே பேரான்மாவைக் காண முடியும்.(48) அவன் அனைத்துப் பக்கங்களிலும் கைகளையும், கால்களையும் கொண்டவனாகிறான்; அனைத்துப் புறங்களிலும் காதுகளைக் கொண்டவனாகிறான்; உலகில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் அவன் படர்ந்தூடுருவி வசிக்கிறான்[15].(49) ஜீவனானவன், (ஞானம் வாய்க்கும்போது, முஞ்சப் புல்லில் இருந்து ஈர்க்கைக் காண்பதைப் போல) உடலில் இருந்து ஆன்மாவைத் தனியாகக் காண்கிறான். உடலில் மனத்தைத் தாங்குவதன் மூலம் உடலுடன் கூடிய பிரம்மத்தைக் கைவிட்டு, குணங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்ட பிரம்மத்தை அவன் காண்கிறான்[16].(50) அவன் ஆன்மாவை அந்நேரம் உள்ளபடியே மனத்தில் கண்டு புன்னகைக்கிறான். அந்தப் பிரம்மத்தைச் சார்ந்து அவன் என்னில்[17] விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(51) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே {காசியபா}, இந்தப் புதிர்கள் {ரகசியங்கள்} அனைத்தும் இப்போது என்னால் அறிவிக்கப்பட்டன. நான் இவ்விடத்தைவிட்டு அகல உன் அனுமதியை வினவுகிறேன். நீயும் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(52) ஓ! கிருஷ்ணா, அந்தச் சந்தர்ப்பத்தில் என்னால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கடுந்தவங்களைக் கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்ட பிராமணனுமான என் சீடன் {காசியபன்} தான் விரும்பிய இடத்திற்குச் சென்றான்” என்றார் {சித்தர்}”.(53)வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} தொடர்ந்தான், “ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்ன அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தை} முறையாக என்னிடம் சொல்லிவிட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(54) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நீ முழுமையாக உன் மனத்தைச் செலுத்தி இந்த உரையாடலைக் கேட்டாயா? நீ உனது தேரில் இருந்த போது இதையே {இக்கருத்துகளையே} நீ கேட்டாய்.(55) ஓ! பிருதையின் மகனே, குழம்பிய புத்தியைக் கொண்ட, அல்லது கல்வியின் மூலம் எந்த ஞானத்தையும் அடையாத, அல்லது தன் உடலுக்குப் பொருந்தாத உணவை உண்ணும், அல்லது தூய்மையடையாத ஆன்மாவைக் கொண்ட ஒருவனால் இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பது என் கருத்தாகும்[18].(56)ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தேவர்களுக்கு மத்தியில் பெரும்புதிராக {ரகஸ்யமாக} இருப்பது (உனக்கு) அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பிருதையின் மகனே, இந்த உலகத்தில் உள்ள மனிதனால் எந்த இடத்திலோ, எந்த நேரத்திலோ இது கேட்கப்பட்டதில்லை.(57) ஓ! பாவமற்றவனே, உன்னைத் தவிர வேறு எவனும் இதைக் கேட்கத் தகுந்தவனல்ல. இந்நேரத்தில், குழம்பிய உள் ஆன்மாவைக் கொண்ட ஒருவனால் இஃதை எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது.(58) ஓ! குந்தியின் மகனே, தேவர்களின் உலகமானது, செயலறத்தைப் பின்பற்றுபவர்களால் {புண்ணியக் கர்மங்களைச் செய்தவர்களால்} நிறைந்திருக்கிறது. {மனிதன் தன்} இறக்கக் கூடிய உடல் வடிவத்தை (செயல்தவிர்க்கும் அறத்தைப் பயில்வதன் மூலம்) விடுவது தேவர்களுக்கு ஏற்புடையதல்ல[19].(59) ஓ! பிருதையின் மகனே, ஒருவன் தன் உடலைக் கைவிடுவதன் மூலம் இறவா நிலையை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் நித்திய பிரம்ம நிலையே அந்த உயர்ந்த இலக்காகும்.(60) பாவப் பிறவிகளான பெண்கள், வைசியர்கள், சூத்திரர்களும் கூட இவ்வறத்தைப் பின்பற்றுவதன் மூலம் அந்த உயர்ந்த இலக்கை அடைகிறார்கள்.(60) அவ்வாறிருக்கையில், ஓ! பிருதையின் மகனே, பெருங்கல்வி கற்றவர்களும், தங்கள் வகைக்கான கடமைகளில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?[20](62)இது {இவ்வறமானது} (சார்ந்திருக்கும்) காரணங்கள்; இஃதை அடைவதற்குரிய வழிமுறைகள்; அதனை முழுமையான அடைவது {சித்தியடைவது} மற்றும் விடுதலை {முக்தி} என்ற பயன் மற்றும் துன்பம் சார்ந்த உண்மைகளில் உறுதியடைதல் ஆகியற்றுடன் விதிக்கப்பட்டிருக்கிறது.(63) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதைவிடப் பெரிதான மகிழ்ச்சி நிறைந்தது வேறொன்றுமில்லை. ஓ! பாண்டுவின் மகனே, புத்தி, நம்பிக்கை, ஆற்றலுடன் கூடியவனும், இறக்கக்கூடியவனுமான மனிதன், உலகத்தால் உறுதியென {முக்கியமானதெனக்} கருதப்படுவதை உறுதியற்றதெனக் கைவிட்டு, இந்த வழிமுறைகளின் மூலம் குறுகிய காலத்திலேயே பரம நிலையை அடைவதில் வெல்கிறான்[21].(64,65) இதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை என்பது மட்டுமே சொல்லக்கூடியது. ஓ பிருதையின் மகனே, ஆறு மாத காலம் தொடர் பயிற்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒருவனிடம் யோகம் நிகழ்கிறது” {என்றான் கிருஷ்ணன்}.(66)

எழுவகைப்படைப்பு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 20-பூதங்கள், பிராணன் முதலியவற்றைக் குறித்து ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடலை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, இது தொடர்பாகப் பழங்கதையில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) ஒரு குறிப்பிட்ட பிராமணரின் மனைவியானவள், அனைத்து வகை ஞானவிஞ்ஞானங்களில் முழுத் தேர்ச்சியடைந்தவரும், தனியாக அமர்ந்திருந்தவரும், தன் கணவருமான அந்தப் பிராமணரைக் கண்டு, அவரிடம்,(2) “(அறச்) செயல்கள் அனைத்தையும் கைவிட்டு அமர்ந்திருப்பவரும், என்னிடம் கடுமையாக நடந்து கொள்பவரும், {உம்மைத் தவிர வேறு கதி இல்லாதவளான என்னை} எண்ணியுணராதவருமான உம்மைக் கணவராக அடைந்திருக்கும் நான் எந்த உலகத்திற்குச் செல்வேன்?[1](3) கணவனால் அடையப்படும் உலகங்களையே மனைவியும் அடைகிறாள் என நாம் கேள்விப்படுகிறோம். உண்மையில், உம்மைக் கணவராகப் பெற்ற நான் அடையாப்போகும் கதி யாது?” என்று கேட்டாள்.(4)இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டவரும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவருமான அந்தப் பிராமணர் புன்னகைத்தவாறே அவளிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, ஓ! பாவமற்றவளே, நீ சொல்லும் இந்த வார்த்தைகளால் நான் புண்படவில்லை.(5) பிறரின் உதவியுடன் செய்யப்படுபவதும், (செய்யப்படும் பெருந்திரள் தன்மையால்) காணப்படுபவதும் {கண்ணுக்குத் தெரிவதும்}, உண்மையானதுமான எந்தச் செயலும், செயல்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் செய்யப்படுகிறது[2].(6) ஞானம் இல்லாதவர்கள், தங்கள் செயல்களின் மூலம் திரிபுக்காட்சியையே {மாயையே} திரட்டுகின்றனர். ஒருக்கணமும் செயல்களில் இருந்து விடுதலை என்பது இவ்வுலகில் அடையப்பட முடியாததாகும்.(7) பிறப்பு முதல் வேறு வடிவம் அடைவது வரை, உடல், மனம் அல்லது வாக்கால் செய்யப்படும் நல்ல மற்றும் தீய வினைகளை அனைத்து உயிரினங்களும் செய்கின்றன.(8) (சோமச்சாறு மற்றும் ஆகுதிகளுக்கான நெய் போன்ற) புலப்படத்தக்கப் பொருட்களால் வகைப்படுத்தப்படும் அந்த (செயல்) பாதைகள் ராட்சசர்களால் அழிக்கப்பட்டதால், அவற்றில் இருந்து விலகி என் ஆன்மாவின் துணையுடன் உடலில் உள்ள இருக்கையைக் கண்டடைந்தேன்[3].(9) முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்த பிரம்மம் வசிப்பது அங்கேயே, அக்னியுடன் கூடிய சோமன் இருப்பதும் அங்கேயே; அனைத்து உயிரினங்களையும் தாங்குபவனும், புத்தியைத் தூண்டுபவனுமானவனும் (வாயுவும்) அங்கே இருந்து நகர்ந்து கொண்டிருக்கிறான்[4].(10)பெரும்பாட்டனான பிரம்மனும், பிறரும் அந்த இருக்கையை அடைவதற்காகவே {இடத்திற்காகவே} யோகத்தில் குவிந்து அழிவற்றவனை வழிபடுகிறார்கள். கல்விமான்களும், சிறந்த நோன்புகளையும், அமைதியான ஆன்மாக்களையும் கொண்டவர்களும், புலன்களை முற்றாக வென்றவர்களுமான மனிதர்களும் அந்த இருக்கைக்காகவே முயற்சி செய்கிறார்கள்.(11) மணப்புலனால் {மூக்கால்} அதை {பிரம்மத்தை} நுகர இயலாது; நாவால் சுவைக்கவும் முடியாது; தீண்டல் புலன்களால் தொடவும் முடியாது. மனத்தால் மட்டுமே அஃது அடையப்படுகிறது.(12) கண்ணால் அதை வெல்ல முடியாது. கேள்விப் புலனை {காதுகளை} அது கடந்திருக்கிறது. மணம், சுவை, ஊறு, {ஒலி} மற்றும் வடிவம் ஆகிய குணங்களற்றதாக அஃது இருக்கிறது.(13) அதனிலிருந்தே நன்கு விதிக்கப்பட்ட அண்டம் எழுகிறது, மேலும், அதனிலேயே {பிரம்மத்தையே} அது {அண்டம்} நிலைத்துமிருக்கிறது. பிராணன், அபானன், சமானன், வியானன், உதானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள்,(14) அதனிலிருந்தே {பிரம்மத்திலிருந்தே} பாய்கின்றன, மேலும் அதற்குள்ளேயே அவை மீண்டும் நுழைகின்றன. பிராமணன் மற்றும் அபானன் என்ற மூச்சுகள், சமானன் மற்றும் வியானனுக்கிடையிலேயே நகர்கின்றன.(15) ஆன்மா உறங்கும்போது, சமானன் மற்றும் வியானன் ஆகிய இரண்டும் உள்ளீர்க்கப்படுகின்றன. அபானனுக்கும், பிராணனுக்கும் இடையில் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில் உதானன் வசிக்கிறது.(16)

எனவே, பிராணனும், அபானனும், உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைக் கைவிடுவதில்லை. இவ்வாறு உயிர்க் காற்றுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூச்சானது உதானன் என்றழைக்கப்படுகிறது.(17) எனவே பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்} என்னையே தங்கள் இலக்காகக் கொண்டு தவங்களைச் செய்கிறார்கள்[4]. ஒன்றையொன்று வழிங்கி உடலுக்குள் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த உயிர் மூச்சுகள் அனைத்திற்கும் மத்தியில் ஏழு தழல்களால் ஆன வைஸ்வாநரன் என்றழைக்கப்படும் நெருப்பு {அக்னி} சுடர்விட்டெரிகிறது. மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காது,(18,19) மனம் மற்றும் புத்தி ஆகிய இந்த ஏழும் வைஸ்வாநரனுடைய தழலின் ஏழு நாவுகளாக விளங்குகின்றன. முகரத்தக்கது, காணத்தக்கது, பருகத்தக்கது {குடிக்கத்தக்கது}, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது,(20) நினைக்கத்தக்கது, புரிந்து கொள்ளத்தக்கது ஆகிய இவையே எனக்கான ஏழு வகை விறகுகளாகின்றன. முகர்வது, உண்பது, காண்பது, தொடுவது, ஐந்தாவதாகக் கேட்பது,(21) நினைப்பது, புரிந்து கொள்வது ஆகிய இவையே ஏழு பெரும்புரோகிதர்களாகும்.(22)ஓ! அருளப்பட்டவளே, முகரத்தக்கது, பருகத்தக்கது, காணத்தக்கது, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது, நினைக்கத்தக்கது, அறியத்தக்கது என்ற ஏழு நெருப்புகளில், ஏழு வழிகளில் ஏழு ஆகுதிகளை முறையாகக் கைவிடும் வேள்வி செய்பவர்களான கல்விமான்கள், அவற்றைத் தங்கள் கருவறைக்குள் உண்டாக்குகிறார்கள்[5]. பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி,(23,24) மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் (அனைத்துப் பொருட்களின்) கருவறைகள் என்றழைக்கப்படுகின்றன. வேள்விக் காணிக்கைகளாக அமையும் குணங்கள் அனைத்தும் நெருப்பில் பிறந்த குணத்திற்குள் நுழைகின்றன;(25) அந்த வசிப்பிடத்திற்குள் வசிக்கும் அவை தங்கள் தங்களுக்குரிய கருவறைகளில் மீண்டும் பிறக்கின்றன. அனைத்துப் பொருட்களையும் எது உண்டாக்குமோ அதில் அவை அழிவுக்காலம் வரை உள்ளீர்க்கப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கும்.(26) அதிலிருந்தே மணம் உண்டாகிறது, அதிலிருந்தே சுவை உண்டாகிறது, அதிலிருந்தே நிறம் உண்டாகிறது, அதிலிருந்தே தீண்டலுணர்வு உண்டாகிறது;(27) அதிலிருந்தே ஒலி உண்டாகிறது, அதிலிருந்தே ஐயம் எழுகிறது, அதிலிருந்தே அழிவும் உண்டாகிறது. இவ்விதமாகவே இவை ஏழுவகைப் படைப்புகளாக அறியப்படுகின்றன.(28) இவ்வகையிலேயே இவையனைத்தும் பழங்காலத்தவர்களால் புரிந்து கொள்ளப்பட்டன. ஆகுதிகளின் முழுமையான மூன்று காணிக்கைகள் முழுமையடைந்து ஒளியால் நிறைகிறது[6]” என்றார் {பிராமணர்}.(29)

மனம், வாக்கு, ஜீவன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 21-பத்துப் புலன்களின் குணங்களைக் குறித்தும், மனம், சொல் மற்றும் ஜீவனுக்கிடையில் நடந்த உரையாடலைக் குறித்தும் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. பத்து ஹோத்ரிகளின் (ஹோதாக்களின் / வேள்விப்புரோகிதர்களின்) அமைப்பு {விதி} எவ்வகையானது என்பதைப் புரிந்து கொள்வாயாக.(1) ஓ! அழகியே, காதுகள், தோல், இரு கண்கள், நாவு, மூக்கு, இரு கால்கள், இரு கைகள், பிறப்புறுப்பு {உபஸ்தம் / உபத்தம்}, அடியில் உள்ள குதம் {பாயு} மற்றும் வாக்கு ஆகியனவே வேள்வி செய்யும் அந்தப் பத்துப் புரோகிதர்களாகும் {ஹோத்ரிகளாகும்}.(2) ஒலி {சப்தம்}, ஊறு {தீண்டல் / ஸ்பர்சம்}, நிறம் {ரூபம்}, சுவை {ரஸம்}, மணம் {கந்தம்}, வாக்கு, செயல், நடை, உயிர்வித்து {ரேதஸ்}, சிறுநீர், மலம் ஆகியவற்றை வெளியேற்றல் ஆகியவையே பத்து ஆகுதிகளாகும் {ஹவிஸுகளாகும்}.(3)

ஓ! அழகியே, திசைப் புள்ளிகள், காற்று {வாயு}, சூரியன், சந்திரன், பூமி {பிருதிவி}, நெருப்பு {அக்னி}, விஷ்ணு, இந்திரன், பிரஜாபதி மற்றும் மித்திரன் ஆகியவை பத்து (வேள்வி) நெருப்புகள் {அக்னிகள்} ஆகும்.(4) (அறிவு மற்றும் செயல்) புலன்கள் பத்தும் வேள்விப்புரோகிதர்கள் {ஹோத்ரிகள்}. ஆகுதிகள் பத்தாகும். ஓ! அழகியே மனமானது வேள்விக்கரண்டியாகவும், (வேள்வி செய்பவனால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்கள்) செல்வமாகவும் புலன்நுகர் பொருட்களே இந்தப் பத்து நெருப்புகளுக்குள் இடப்படும் விறகுகளாகவும் இருக்கின்றன[1],(5). எஞ்சியிருப்பது தூய்மையான உயர்ந்த ஞானமாகும். (ஞானத்திலிருந்து) இந்த அண்டமனைத்தும் வேறுபட்டவை என்று நாம் கேள்விப்படுகிறோம்.(6)ஞானத்திற்குரிய பொருட்கள் அனைத்தும் மனமாகும். ஞானமானது (மனம் அதனுடன் பற்றில்லாதது என்பதை) உணர மட்டுமே செய்கிறது. நுட்பமான வடிவில் பொதியப்பட்டிருப்பவனான அறிபவன் (அல்லது ஜீவன்), உயிர்வித்தால் உண்டாக்கப்படுகிறது திரளுடலுக்குள் வசிக்கிறான்[2].(7) உடலைச் சுமப்பது {இதயம்} கார்ஹபத்ய நெருப்பு ஆகும். அதனிலிருந்து மற்றொன்று உண்டாகிறது. மனமானது ஆஹவனீய நெருப்பாகும். அதனுள்ளேயே காணிக்கை ஊற்றப்படுகிறது.(8) அதனிலிருந்தே வேதம் (அல்லது சொல்) உண்டானது; (அதனிலிருந்தே மனம் உண்டானது); (படைப்பை விரும்பும்) மனமானது தன்னை வேதத்தில் (அல்லது சொல்லில்) நிறுவி கொள்கிறது. அதன் பிறகு குறிப்பிட்ட நிறங்களில் வேறுபடும் வடிவம் (அல்லது நிறம்) எழுகிறது. அது மனத்தை நோக்கி ஓடுகிறது[3]” என்றார் {பிராமணர்}.(9)அந்தப் பிராமணரின் மனைவி, “ஏன் சொல்லானது முதலில் எழுந்தது? மனத்தால் எண்ணப்பட்ட பின்னர் இருப்புக்குள் சொல் எழுந்ததைக் கண்ட பிறகு மனம் எழுந்ததேன்?(10) மதியானது (பிராணனானது) மனத்தில் புகலிடம் கொள்கிறது என்று எந்த அதிகாரத்தை {சாஸ்திர விதியைக்} கொண்டு சொல்லப்படுகிறது? மேலும், கனவற்ற உறக்கத்தில் {ஸுஷுப்தியில்} மனம் தனித்திருந்தாலும், பிராணனானது (அனைத்துப் பொருட்களையும்} உணர்வதில்லையே ஏன்? அப்போது அதைத் தடுப்பதெது?” என்று கேட்டாள்[4].(11)பிராமணர், “இத்தகைய தலைமைப் பண்பின் விளைவால் (பிராணனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து) தலைவனாக இருக்கும் அபானக் காற்று {அபானவாயு}, அதனையும் {பிராணனையும்} தன்னைப் போலாக்குகிறது. (அபானனைப் போலவே ஆகும்) பிராணக் காற்றின் {பிராணவாயுவின்} கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமே மன இயக்கமெனச் சொல்லப்படுகிறது. எனவே மனமானது பிராணனைச் சார்ந்தே இருக்கிறது (பிராணனோ மனத்தைச் சார்ந்திருப்பதில்லை). எனவே, கனவற்ற உறக்கத்தில் மனம் மறைந்தாலும் பிராணன் மறைவதில்லை.(12) ஆனால், சொல் மற்றும் மனம் குறித்து நீ என்னிடம் கேட்பதால், அவற்றுக்கிடையில் நடந்த உரையாடலை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(13)

பருப்பொருளின் ஆத்மாவிடம் {ஜீவனிடம்} சென்ற சொல் {வாக்கு} மற்றும் மனம் ஆகிய இரண்டும், அவனிடம் {ஜீவனிடம்}, “எங்களில் மேன்மையானவர் யார் என்பதைச் சொல்வாயாக. ஓ! பலமிக்கவனே, எங்கள் ஐயத்தைக் களைவாயாக” என்றன[5].(14)அச்சந்தர்ப்பத்தில், அந்தப் புனிதமானவன் {ஜீவன்}, “மனமே (மேன்மையானது) என்பதில் ஐயமில்லை” என்றான். அவனிடம் {ஜீவனிடம்} சொல்லானவள், “உன் விருப்பமனைத்தையும் நானே கனியச் செய்கிறேன்” என்றாள்[6].(15)பிராமணர் {ஜீவனெனும் பிராமணன் சொல்லிடம் சொல்வது என்று கொள்ள வேண்டும்}, “அசைவது, அசையாதது என எனக்கு இரு மனங்கள் இருப்பதை அறிவாயாக. உண்மையில், அசையாதது என்னிடமுள்ளது; அசைவது உன் ஆளுகையில் இருக்கிறது[7].(16) உன் ஆளுகையில் இருப்பதாகக் குறிப்பிடப்படும் மந்திரம், எழுத்து, அல்லது குரல் வடிவில் உள்ளதே {சொல்லே} உண்மையில் அசையும் மனம் என்று சொல்லப்படுகிறது. எனவே, (புறப்பொருளுடன் மட்டுமே தொடர்புடைய மற்றொரு மனமான) நீயே {அசையும் மனமே} மேன்மையானவன்.(17) ஆனால், ஓ! அழகியே {சொல் எனும் அழகியே}, (அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்வதில்) நீ தானாகவே ஈடுபடுவதால், மூச்சை என்னுள் நிறைத்துக் கொண்டு நான் உன்னைச் சொல்கிறேன்[8].(18) சொல்லெனும் தேவி {சரஸ்வதியான நீ} எப்போதும் பிராணன் மற்றும் அபானனுக்கிடையிலே வசித்து வருகிறாள் {வருகிறாய்}. ஆனால், ஓ! அருளப்பட்டவளே, அபானனில் மூழ்கி, பிராணனிலிருந்து தொடர்பறுத்துக் கொள்வதன் விளைவால் மேல்நோக்கி உந்தப்படும் அவள் {நீ}, பிரஜாபதியிடம் {ஜீவனிடம்} ஓடிச் சென்று, “ஓ! புனிதமானவனே, என்னிடம் நிறைவு கொள்வாயாக” என்கிறாள் {என்றாய்}.(19) அப்போது பிராணன், சொல்லை வளர்த்தெடுத்து மீண்டும் தோன்றுகிறது. எனவே, சொல்லானவள், ஒருபோதும் எதையும் சொல்லாதவளாக ஆழ்ந்த மூச்சை வெளியிடுகிறாள்.(20) சொல்லானவள் எப்போதும் ஒலியுடனும், ஒலியில்லாமலும் பாய்கிறாள். அவை இரண்டில், ஒலியுடன் கூடிய சொல்லைக் காட்டிலும், ஒலியற்ற சொல்லே மேன்மையானவள்.(21) சிறந்த பாலைக் கொண்டுள்ள பசுவைப் போலவே (ஒலியற்ற சொல்லானவள்) பல்வேறு வகைப் பொருள்களைத் தருகிறாள். இவளே, பிரம்மத்தைச் சொல்லும் நித்தியத்தை (விடுதலையை {முக்தியை}) விளைவிக்கிறாள்” {என்றான் ஜீவன்}”.(22) ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, சொல்லானவள், தெய்வீகமானது, தெய்வீகமற்றது என்ற தன்னிரு சக்திகளின் விளைவால் பசுவாகிறாள். சொல்லானவள் இவ்விரு நுட்பமான வடிவங்களில் பாய்வதில் உள்ள வேறுபாட்டைக் காண்பாயாக” என்றார் {பிராமணர்}[9][10].(23)அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “பேச விரும்பினாலும், பழங்காலத்தில் {வாக்கியங்கள் உண்டாகாமல் இருந்ததால்} பேச முடியாதவளாக இருந்த சொல்லின் தேவி என்ன செய்தாள்?” என்று கேட்டாள்.(24)

பிராமணர், “பிராணனால் உடலில் உண்டான சொல்லானவள், பிறகு பிராணனில் இருந்து அபானனை அடைந்தாள். பிறகு உதானனாக மாறி, உடலைவிட்டு வெளியேறி, வியானனைக் கொண்டு அனைத்துப் புறங்களையும் சூழ்ந்தாள்.(25) அதன் பிறகு அவள் சமானனில் வசித்தாள். இவ்வகையிலேயே முற்காலத்தில் சொல்லானவள் பேசினாள். மனமானவன் அசைவில்லாதவனாக இருப்பதன் விளைவால் சிறப்படைகிறான். அசைவுள்ளவளாக இருப்பதன் விளைவால் சொல்லின் தேவியும் சிறப்படைகிறாள்” என்றார் {பிராமணர்}.(26)

மனமும், இந்திரியங்களும்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 22-மனத்துக்கும், புலன்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “ஓ! அருளப்பட்டவளே, வேள்விப்புரோஹிதர்கள் எழுவரின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக ஒரு பழங்கதைச் சொல்லப்படுகிறது.(1) மூக்கு {க்ராணம்}, கண்கள் {சக்ஷுஸ்}, நாவு {ஜிஹ்வை}, தோல் {துவக்கு}, ஐந்தாவதாகக் காதுகள் {ஸ்ரோத்ரம்}, மனம் மற்றும் புத்தி ஆகியவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட தனித்துவம் கொண்ட ஏழு வேள்விப்புரோஹிதர்களாகும்.(2) நுட்பமான வெளியில் வசிக்கும் அவை ஒன்றையொன்று காண்பதில்லை. ஓ! அழகியே, இந்த ஏழு வேள்விப் புரோஹிதர்களையும் அதனதன் இயல்பின்படி அறிந்து கொள்வாயாக” என்றார்.(3)

அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “நுட்பமான வெளியில் இருக்கும் இவை ஒன்றையொன்று காணாமல் இருப்பதெவ்வாறு? ஓ! புனிதமானவரே, அவற்றின் (அவை ஒவ்வொன்றின்) இயல்புகள் என்னென்ன? ஓ! தலைவா, இவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டாள்.(4)

பிராமணர், “(எந்தப் பொருளின்) குணங்களையும் அறியாதிருப்பது, (அந்தப் பொருளைக் குறித்த) அறியாமையே {அவிஜ்ஞானம்} ஆகும்; அதே வேளையில், அந்தக் குணங்களை அறிவது அறிவாகும் (அறிவு {அபிஜ்ஞதை} என்று அழைக்கப்படுகிறது). இந்த ஏழில் எந்த ஒன்றும் மற்றொன்றின் குணங்களை அறிவதிலோ, புரிந்து கொள்வதிலோ ஒருபோதும் வெல்வதில்லை.(5)

நாக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் புத்தி ஆகியன மணங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மூக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(6) மூக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன சுவைகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. நாக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(7) மூக்கு, நாக்கு, காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன நிறங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. கண்கள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(8) மூக்கு, நாக்கு, கண்கள், காதுகள், புத்தி மற்றும் மனம் ஆகியன தீண்டல் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. தோல் மட்டுமே அவற்றை உணர்கிறது.(9) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன ஒலிகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. காதுகள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(10) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் புத்தி ஆகியன ஐயங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மனம் மட்டுமே அவற்றை உணர்கிறது.(11) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் மனம் ஆகியன (உறுதியான அறிவைத்) தீர்மானிக்கும் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை {அவை ஒரு தீர்மானத்தை அடைவதில்லை}. புத்தி மட்டுமேஅவற்றை உணர்கிறது {புத்தியே தீர்மானிக்கிறது}.(12)

ஓ! அழகிய மங்கையே, இது தொடர்பாகப் புலன்களுக்கும், மனத்திற்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(13)

மனம், “நானில்லாமல் மூக்கு நுகர்வதில்லை. (நானில்லாமல்) நாக்கானது சுவையை உணர்வதில்லை. நான் இல்லாதபோது, கண்கள் நிறத்தைப் பற்றுவதில்லை, தோல் தீண்டலை உணர்வதில்லை,(14) காதுகள் ஒலியை உணர்வதில்லை. நான் நித்தியமானவனாகவும், பூதங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகவும் இருக்கிறேன்.(15) வசிப்பதற்கு யாருமில்லாத வெற்று வசிப்பிடங்களைப் போலவும், தழல்கள் தணிக்கப்பட்ட நெருப்பைப் போலவும், நானில்லாத போது புலன்கள் ஒருபோதும் ஒளிர்வதில்லை.(16) ஈரமானவையும், உலர்ந்தவையுமாக உள்ள விறகுகளை (நெருப்பை மூட்டத் தவறுவதைப்) போல, நான் இல்லாமல் புலன்கள் முயன்றாலும், குணங்களையும், பொருள்களையும் உணர்வதில் அனைத்து உயிரினங்களும் தவறுகின்றன[1]” என்றது {மனம்}.(17)இச்சொற்களைக் கேட்ட புலன்கள் {இந்திரியங்கள்}, “உண்மையில், நாங்களோ, எங்கள் பொருட்களோ இல்லாமல் உன்னால் இன்பங்களை அனுபவிக்க முடியுமென்றால் இக்காரியத்தில் நீ நினைப்பதே உண்மையாக இருக்கும்[2].(18) நாங்கள் அழிந்த பிறகு, நிறைவும், உயிர்த்தரிப்பும், உன் இன்பங்களும் தொடருமானால் நீ நினைப்பதே உண்மையாகும்;(19) நாங்கள் அழிந்து, பொருள்கள் இருந்து எங்கள் துணையின்றி உன் விருப்பத்தால் மட்டுமே உன்னால் அவற்றை அனுபவிக்க முடியுமென்றால், நீ நினைப்பதே உண்மையாகும்.(20) மேலும், எங்கள் பொருள்களின் மீது உனக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறதென நீ கருதினால், நிறத்தை மூக்கின் மூலமாகவும், சுவையைக் கண்களின் மூலமாகவும் உணர்வாயாக.(21) மணத்தைக் காதுகளின் மூலமாகவும், தீண்டலை நாவின் மூலமாகவும் உணர்வாயாக. மேலும் ஒலிகளைத் தோலின் மூலமாகவும், தீண்டலைப் புத்தியின் மூலமாகவும் உண்ர்வாயாக.(22) பலம் நிறைந்தவர்கள் எந்த விதிகளின் ஆளுகையையும் ஏற்பதில்லை. விதிகள் பலவீனமானவர்களுக்காக மட்டுமே இருக்கின்றன. இதற்கு முன் அனுபவிக்கப்படாத இன்பங்களைப் பற்றுவாயாக; (பிறரால்) முன்பே சுவைக்கப்பட்டவற்றில் இன்புறுவது உனக்குத் தகாது.(23)சுருதிகளுக்காக (அவற்றை அடைவதற்காக) ஆசானை நாடி, ஸ்ருதிகளை அடைந்த பிறகு (அவற்றின் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம்) அவை சொல்லும் கருத்துகளில் வசிக்கும் சீடனைப் போலவே,(24) கடந்த காலத்திலோ, எதிர்காலத்திலோ, உறக்கத்திலோ, விழிப்புநிலையிலோ எங்களால் காட்டப்படும் பொருட்களை உன்னுடையவையென நீ கருதுகிறாய்.(25) மேலும், புத்தி குறைந்த உயிரினங்களின் மனம் திசைத்திரும்பி உற்சாகமற்றதாக இருக்கும்போதும் நாங்கள் எங்கள் பொருள்களில் இயக்கத்தை வெளிப்படுத்தி அவற்றின் {அந்த உயிரினங்களின்} உயிரைத் தாங்கிப் பிடிப்பதும் காணப்படுகிறது[3].(26) ஓர் உயிரினம், கனவுகளில் ஈடுபட்டு, எண்ணற்ற நோக்கங்களை அமைத்துக் கொண்டாலும், அஃது அனுபவிக்கும் விருப்பத்தால் பீடிக்கப்படும்போது, புலன்நுகர் பொருட்களிடம் மட்டுமே ஓடுவதும் காணப்படுகிறது[4].(27) மன நோக்கங்களை மட்டுமே சார்ந்தவையும், உண்மையான புலன் நுகர் பொருட்களின் தொடர்பற்றவையுமான இன்பங்களுக்குள் ஒருவன் நுழையும்போது, விறகு தீர்ந்ததும் தூண்டப்பட்ட நெருப்பைப் போல உயிர்மூச்சுகள் தீர்ந்து அவன் மரணத்தையே சந்திக்கிறான்[5].(28) நாங்கள் எங்களுக்குரிய குணங்களின் தொடர்புடையவர்களாக இருக்கிறோம் என்பது உண்மையே; எங்களில் ஒன்று மற்றொன்றின் குணங்களை அறியாதிருக்கிறோம் என்பதும் உண்மையே. ஆனால், நாங்கள் இல்லாமல் உன்னால் ஒன்றையும் உணர முடியாது. நாங்கள் இல்லாமல் உனக்கு இன்பமேதும் கிடையாது” என்றன {புலன்கள்}.(29)

பஞ்சவாயுக்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 23-பிராணன், அபானன் முதலிய ஐந்து உயிர்க்காற்றுகளின் சிறப்பைக் குறித்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “ஓ! அருளப்பட்ட மங்கையே, ஐந்து வேள்விப் புரோஹிதர்களின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) பிராணன், அபானன், உதானன், சமானன் மற்றும் வியானன் ஆகியவையே ஐந்து வேள்விப்புரோஹிதர்கள் என்பதைப் பெருங்கோட்பாடாகக் கல்விமான்கள் அறிகிறார்கள்” என்றார்.(20)

அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “இயற்கையாக ஏழு வேள்விப் புரோஹிதர்கள் இருப்பதாக முன்னர் நான் எண்ணியிருந்தேன். உண்மையில் வேள்விப் புரோஹிதர்களின் எண்ணிக்கை ஐந்தானதைக் குறிக்கும் பெருங்கோட்பாட்டை எனக்கு அறிவிப்பீராக” என்று கேட்டாள்.(3)

பிராமணர், “பிராணனால் பேணப்படும் காற்றானது {வாயுவானது} பின்னர் அபானனாகப் பிறக்கிறது. அபானனால் பேணப்படும் காற்றானது வியானனாகப் பெருகுகிறது.(4) வியானனால் பேணப்படும் காற்றானது உதானனாகப் பெருகுகிறது. உதானனால் பேணப்படும் காற்றானது பின்னர்ச் சமானனாக உண்டாகிறது.(5) நல்லவையான அவை பழங்காலத்தில் முதல் பிறவியான பெரும்பாட்டனிடம், “எங்களில் முதன்மையானவர் யார் என்பதைச் சொல்வீராக. {நீர் குறிப்பிடும்} அந்த நபரே எங்கள் தலைவன் ஆகட்டும்” என்றன.(6)

பிரம்மன், “(உங்களில்) எவன் அழிந்தால் உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடையுமோ, எவனுடைய நகர்வால் அவை நகருமோ அவனே உங்களில் முதன்மையானவன் ஆவான். நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்வீராக” என்றான்.(7)

பிராணன், “நான் அழிந்ததும், உயிரினங்களில் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் அசைவதால் அவை மீண்டும் அசைகின்றன. (எனவே) நானே முதன்மையானவன். இதோ அழியப்போகிறேன் பார்ப்பீர்களாக” என்றான் {பிராணன்}”.(8)

பிராமணர் தொடர்ந்தார், “பிறகு பிராணன் அழிந்து மீண்டும் நகரத் தொடங்கியது. அப்போது, ஓ! அருளப்பட்டவளே, சமானனும், உதானனும் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்,(9) “நாங்கள் இவை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதைப் போல நீ இங்கே வசிப்பதில்லை. ஓ! பிராணனே, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. அபானன் மட்டுமே உன் ஆளுகைக்குள் இருக்கிறான். மீண்டும் பிராணன் இயங்கத் தொடங்கியதும், அவனிடம் அபானன் பேசினான்.(10)

அபானன், “நான் அழிவடையும் போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் திரியும்போது அவை மீண்டும் திரிகின்றன. எனவே, நானே முதன்மையானவனாவேன். இதோ அழியப் போகிறேன் பார்ப்பீர்களாக ” என்றான் {அபானன்}”.(11)

பிராமணர் தொடர்ந்தார், “வியானன் மற்றும் உதானன் ஆகிய இருவரும், இவ்வாறு சொன்ன அபானனிடம், “ஓ! அபானா, நீ முதன்மையானவனல்ல. பிராணன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்” என்றனர். பிறகு அபானன் நகரத் தொடங்கியது.(12)

வியானன் மீண்டும் அவனிடம் {அபானனிடம்}, “(உயிர்க் காற்றுகள்) அனைத்திலும் நானே முதன்மையானவன். அதற்கென்ன காரணம் என்பதைக் கேட்பாயாக.(13) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. (எனவே) நானே முதன்மையானவனாவேன். இதோ நான் அழியப் போகிறேன், பார்ப்பாயாக” என்றான் {வியானன்}”.(14)

பிராமணர் தொடர்ந்தார், “பிறகு வியானன் அழிவடைந்து மீண்டும் நகரத் தொடங்கினான். பிராணன், அபானன், உதானன் மற்றும் சமானன் ஆகியோர் இதற்கு,(15) “ஓ! வியானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. சமானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருக்கிறான்” என்றனர்.

வியானன் நகரத் தொடங்கியதும், சமானன் அவனிடம் {வியானனிடம்},(16) “நானே உங்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவேன். அதற்கு என்ன காரணம் என்பதைக் கேட்பாயாக. நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக” என்றான் {சமானன்}.(17)

சமானன் நகரத் தொடங்கியதும்,[1] உதானன் அவனிடம் {சமானனிடம்}, “உயிர்க்காற்றுகள் அனைத்திலும் நானே முதன்மையானவன் ஆவேன். அதற்குக் காரணம் என்னவென்பதைக் கேட்பாயாக.(18) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக” என்றான் {உதானன்}.(19)உதானன் அழிந்து, மீண்டும் நகரத் தொடங்கினான். அப்போது பிராணன், அபானன், சமானன் மற்றும் வியானன் ஆகியோர் அவனிடம், “ஓ! உதானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. வியானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்” என்றனர்”.(20)

பிராமணர் தொடர்ந்தார், “அவ்வாறு திரண்டிருந்த அவர்களிடம் உயிரினங்களின் தலைவனான பிரம்மன், “நீங்கள் அனைவரும் சிறப்புள்ளவர்களாகவும், சிறப்பில்லாதவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவரிலும் ஒருவர் மற்றொருவரின் குணத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.(21) நீங்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குரிய வட்டங்களில் முதன்மையானவர்களாகவும், ஒருவர் மற்றொருவரின் குணங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள்” என்றான்.

இவ்வாறே அனைத்து உயிரினங்களின் தலைவன் அங்கே கூடியிருந்த அவர்களிடம் சொன்னான்,(22) “ஒருவன் நிலையாக இருப்பவன்; மற்றொருவன் நகர்பவன். சிறப்புக் குணங்களின் விளைவால் உயிர்க்காற்றுகள் ஐவரும் நகர்கின்றனர். என் தன்மை ஒன்று. அந்த ஒன்றே பல்வேறு வடிவங்களை ஏற்கிறது {ஒருவன் மற்றொருவனுக்கு ஆத்மாவாக இருந்து பல வகைகளில் பெருகுகிறான்}.(23) நீங்கள் ஒருவருக்கொருவர் நட்பாகவும், ஒருவரையொருவர் நிறைவடையச் செய்பவர்களாகவும் ஆகி அமைதியாக விடைபெற்றுக் கொள்வீராக. நீங்கள் அருளப்பட்டிருப்பீராக, நீங்கள் ஒருவரையொருவர் தாங்குவீராக” {என்றான் பிரம்மன்}”.(24)

உதானனென்னும் பிரம்மம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 24-தேவமதரும், நாரதரும் படைப்பு முதலியவற்றைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்ததைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

பிராமணர் {தன் மனைவியிடம்}, “இது தொடர்பாக நாரதருக்கும், முனிவர் தேவமதருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1)

தேவமதர், “ஓர் உயிரினம் பிறக்கும்போது முதலில் இருப்புக்குள் வருவதெது? பிராணனா? அபானனா? சமானனா? வியானனா? அல்லது உதானனா?” என்று கேட்டார்.(2)

நாரதர், “அந்த உயிரினம் எதைக் கொண்டு படைக்கப்படுகிறதோ அதைவிட வேறொன்று அந்த உயிரனத்தை முதலில் அடைகிறது. உயிர்க்காற்றுகள் குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் செல்லும் இரட்டைகளாக {துவந்தவங்களாக} இருப்பனவென அறியப்படுகின்றன” என்றார் {நாரதர்}[1].(3)

தேவமதர், “(உயிர் காற்றுகளில்) எவரால் ஓர் உயிரினம் உண்டாக்கப்படுகிறது? அவர்களில் முதலில் வருவது எவர்? குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும், கீழ்யோக்கியும் நகரும் இரட்டை உயர்க்காற்றுகள் எவை என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(4)

நாரதர், “சங்கல்பத்தில் (விருப்பத்தில்) இருந்து இன்பம் {ஆனந்தம்} எழுகிறது. அஃது ஒலியில் இருந்தும் எழுகிறது. அது சுவையில் இருந்தும் எழுகிறது; அது நிறத்தில் இருந்தும் எழுகிறது.(5) உயிர்நீரில் {சுக்கிலத்தில்} இருந்து குருதியில் {சோணிதத்தில்} கலந்து முதலில் பாய்வது பிராணனாகும். பிராணனால் உயிர் நீர் மாறுதலையடைந்ததும், அபானன் பாய்கிறது.(6) உயிர்நீரில் இருந்தும் இன்பம் எழுகிறது. சுவையில் இருந்தும் அஃது எழுகிறது. இதுவே உதானனின் வடிவமாகும் (விளைவாகும்). கலவியில் இருந்து இன்பம் உண்டாகிறது.(7) ஆசையில் இருந்து உயிர் நீர் {சுக்கிலம்} உண்டாகிறது. ஆசையில் இருந்து மாதவிடாய் சுழற்சியும் {ரஜஸும்} உண்டாகிறது. சமானன் மற்றும் வியானனால் உண்டாக்கப்பட்ட உயிர்நீர் மற்றும் குருதியின கலவிக்குள்,(8) பிராணன் மற்றும் அபானனைக் கொண்ட இரட்டை குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும் நகர்ந்து நுழைகிறது. வியானன், சமானன் ஆகிய இரண்டும் குறுக்குவெட்டாக நகரும் ஓர் இரட்டையாக அமைகின்றன.(9)

தேவர்கள் அனைவரும் அக்னியாக (நெருப்பாக) இருக்கின்றனர். இதுவே வேதத்தின் போதனையாகும். நுண்ணறிவுடன் கூடிய ஒரு பிராமணனிடம் அக்னியைக் குறித்த அறிவு எழுகிறது.(10) அந்த நெருப்பின் புகை இருளின் (இருள் {தமஸ்} என்றழைக்கப்படும் குணத்தின்) வடிவில் இருக்கிறது. ஆசை என்ற பெயரில் அறியப்படும் குணம் {ரஜஸ்} அதன் சாம்பலில் இருக்கிறது. நல்லியல்பின் குணம் {சத்வ குணம்} ஆகுதிகள் ஊற்றப்படும் நெருப்பின் பகுதியில் இருந்து எழுகிறது[2].(11) வேள்விகளைக் குறித்து அறிந்தவர்கள் சமானனும், வியானனும் நல்லியல்பின் குணத்தில் இருந்து வந்தன என்பதை அறிவார்கள். பிராணனும், அபானனும் (தெளிந்த நெய்யாலான) ஆகுதிகளின் பகுதிகளாகும். அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது.(12) பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த வடிவம் (அல்லது இருக்கை) ஆகும். இரட்டைகளில் தனித்துவமானதெது என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(13) பகலும், இரவும் இரட்டையாக அமைகின்றன. அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது. பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்[3].(14)இருப்பு, இல்லாமை என்பன இரட்டையாக அமைகின்றன. அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது. பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்.(15) முதலில் இருப்பது சமானன். பின்னிருப்பது வியானன். பின்னதின் {வியானனின்} இயக்கம் அதன் {சமானனின்} மூலமே நடைபெறுகிறது. இரண்டாவதாக, மீண்டும் சமானன் இயங்கத் தொடங்குகிறது.(16) வியானன் மட்டுமே அமைதியாக இருக்கிறது. அமைதியே நித்திய பிரம்மமாகும். பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்[4].(17)

நாராயணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 25-செயல்பாடு மற்றும் செய்பவன் ஆகியவை குறித்தும், நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பது குறித்தும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “இது தொடர்பாகச் சாதுர்ஹோத்ரத்தின் ({சாதுர்ஹோத்ர} வேள்வியின்) அமைப்பு {விதி} என்ன என்பது குறித்த இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) அது குறித்த விதிகளை இப்போது முழுமையாகச் சொல்லப் போகிறேன். ஓ! இனிய பெண்ணே, இந்த அற்புதம் நிறைந்த புதிரை {ரகசியத்தை} அறிவிக்கப் போகிறேன் கேட்பாயாக.(2) கருவி {கரணம்}, இயக்கம் {கர்மா}, இயக்கி {செயல்படுத்துபவன் / கர்த்தா}, விடுதலை {முக்தி / மோக்ஷம்} ஆகிய இவையே அண்டத்தைச் சூழ்ந்திருக்கும் நான்கு வேள்விப் புரோகிதர்களாகும். (இது தொடர்பாக) {அதனதனுக்கு} ஒப்படைக்கப்பட்டிருக்கும் காரணங்களை முழுமையாகக் கேட்பாயாக. (3,4)

மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காதுகள், மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் குணங்களின் (குணங்கள் குறித்த அறிவின்) காரணங்கள் {கரணத்தைக் காரணங்களாகக் கொண்டவை} என அறிய வேண்டும். மணம், சுவை, நிறம், ஒலி, எண்ணிக்கையில் ஐந்தாவதாகத் தீண்டல்,(5) {நினைக்கத்தக்க} மனத்தின் நோக்கங்கள், {அறியத்தக்க} புத்தியின் நோக்கங்கள் ஆகிய இவை ஏழும் செயற்காரணங்கள் {கர்மாவைக் காரணங்களாகக் கொண்டவை} ஆகும். நுகர்பவன், உண்பவன், காண்பவன், பேசுபவன், எண்ணிக்கையில் ஐந்தாவதாகக் கேட்பவன்,(6) நினைப்பவன், அறிபவன் ஆகிய இவர்கள் எழுவரும் செயற்பாட்டுக் காரணங்களாக {கர்த்தாவைக் காரணமாகக் கொண்டவர்களாக} அறியப்பட வேண்டும். குணங்களைக் கொண்ட இவை, ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ உள்ள தங்கள் குணங்களையே அனுபவிக்கின்றன[1].(7)ஆத்மாவைப் பொறுத்தவரையில் அது குணங்களற்றதாகும். இவை ஏழும்தான் விடுதலைக்கான காரணங்களாகும். கல்விமான்கள் மற்றும் போதுமான புத்தியைக் கொண்டவர்களிடம் தேவர்களின் நிலையில் உள்ள குணங்கள் உரிய இடத்தில் உள்ளவையும், விதிக்கப்பட்டதற்கு ஏற்புடையவையுமான ஆகுதிகளை உண்கின்றன. கல்வியற்ற ஒருவன், பல்வேறு வகை உணவுகளை உண்டு, அகந்தை புத்தியால் {மமதையால்} பீடிக்கப்படுகிறான்[2].(8,9) தனக்கான உணவை மட்டுமே செரிப்பவன் அகந்தை புத்தியால் அழிவடைகிறான். உண்ணத்தகாத உணவை உண்பதும், மதுவைப் பருகுவதும் அவனை அழிவடையச் செய்கிறது.(10) அவன் (தான் உண்ட) உணவை அழிக்கிறான், அந்த உணவை அழித்து, தன்னையும் அவன் அழித்துக் கொள்கிறான். எனினும், கல்வி கற்றவனும், பலம்பொருந்தியவனுமான மனிதன், தன் உணவை மீண்டும் உற்பத்தி செய்வதற்காக அஃதை அழிக்கிறான்.(11) அவன் உண்ணும் உணவில் இருந்து மிகச் சிறு அத்துமீறலும் நிகழாது.மனத்தால் எண்ணப்படும் எதுவும், வாக்கால் சொல்லப்படும் எதவும்,(12) காதால் கேட்கப்படும் எதுவும், கண்ணால் காணப்படும் எதுவும், தீண்டல் (புலனால் {தோலால்}) தீண்டப்படும் எதுவும், மூக்கால் நுகரப்படும் எதுவும்,(13) புலன்கள் அனைத்தையும், ஆறாவதாக மனத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, உடலுக்குள் எரிந்து கொண்டிருக்கும் உயர்ந்த தகுதிகளைக் கொண்ட நெருப்பான ஆத்மாவுக்குள் ஊற்றப்பட வேண்டிய தெளிந்த நெய்யாலான ஆகுதியாக அமைகிறது[3].(14) என்னைப் பொறுத்தவரையில், யோகத்தால் அமையும் வேள்வியானது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வேள்வி தொடர்கிற இடத்தில் அறிவு நெருப்பை விளைவிக்கும் ஊற்று உதிக்கிறது. மேல்நோக்கிய உயிர் காற்றான பிராணனே அவ்வேள்வியின் ஸ்தோத்திரமாகும். கீழ்நோக்கிய உயிர் காற்றான அபானனே அதன் சஸ்திரமாகும். அனைத்தையும் துறப்பதே, அந்த வேள்வியின் சிறந்த தக்ஷிணையாகும்.(15)பிரம்மமாக உள்ள நனவு {அகங்காரம்}, மனம் மற்றும் புத்தி ஆகிய ஒவ்வொன்றும், ஹோத்ரியும், அத்வர்யு, உத்காத்ரி ஆகியவையாகும். பிரஸாஸ்திரியும், அவரது சாஸ்திரமும் உண்மையாகும். தனி இருப்பை நிறுத்தல் (அல்லது விடுதலையே {முக்தியே}) தக்ஷிணையாகும்[4].(16) இது தொடர்பாக, நாராயணனை அறிந்த மக்கள் சில ரிக்குகளை உரைக்கின்றனர. பழங்காலத்தில் தெய்வீகமான நாராயணனுக்கு விலங்குகள் காணிக்கயளிக்கப்பட்டன[5].(17) அப்போது சில சாமங்களும் பாடப்படுகின்றன. இதில் ஓர் உரிமை ஏற்படுகிறது. ஓ! மருண்டவளே, தெய்வீக நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பதை அறிவாயாக” என்றார் {பிராமணர்}.(18)

காமசாரி, பிரம்மசாரி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 26-பிரம்மன் ஒரே சொல்லால் பிரம்மத்தை உபதேசித்தது; தேவர்கள் முதலியோர் தத்தமது அறிவுக்குத்தக்கபடி அதைப் புரிந்து கொண்டது ஆகியவற்றைக் குறித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “ஆட்சியாளன் ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறொருவனுமில்லை. அந்த ஆட்சியாளன் இதயத்தில் வசிக்கிறான். அவனைக் குறித்து இப்போது சொல்லப்போகிறேன். சாய்தளத்தில் ஓடும் நீரைப் போல அவனால் உந்தப்பட்டும் நான், அவனது வழிநடத்தலின்படியே நகர்கிறேன் {காரியங்களைச் செய்கிறேன்}.(1) ஆசான் {குரு} ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறொருவருமில்லை. அவரைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகை உணர்வுடன் இருக்கின்றன[1].(2) உற்றவன் {உறவினன்} ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. இதயத்தில் வசிக்கும் அவனைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். அவரால் போதிக்கப்படும் உறவினர்கள் உறவினர்களைக் கொண்டவர்களாகிறார்கள்” {என்றார் பிராமணர்}. {கிருஷ்ணன் தொடர்ந்தான்}, “மேலும், ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}[2], {அந்தப் பிரமாணர் தம் மனைவியிடம்}, “முனிவரெழுவரும் {சப்தரிஷிகளும்} ஆகாயத்தில் ஒளிர்கிறார்கள்.(3){ஐயங்களை} அகற்றுபவர் ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறு ஒருவருமில்லை. அவர் இதயத்தில் வசிக்கிறார். அவரைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். குருவுடன் வாழ்வதற்கு உரிய வாழ்வுமுறையில் {பிரம்மச்சரிய ஆசிரமத்தில்} அந்தக் குருவுடன் வாழ்ந்த சக்ரன் {இந்திரன்}, உலகங்கள் அனைத்தின் ஆட்சியுரிமையை அடைந்தான்[3].(4) பகைவன் ஒருவனே. அவனைத்தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. அவன் இதயத்தில் வசிக்கிறான். நான் இப்போது அவனைக் குறித்துச் சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகையுணர்வு உள்ளவையாக இருக்கின்றன.(5)இது தொடர்பாக உயிரினங்கள் அனைத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} இருந்து பாம்புகள் {பன்னகர்கள்}, தேவர்கள் மற்றும் முனிவர்கள் பெற்ற போதனை குறித்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(6) உயிரினங்கள் அனைத்தின் தலைவனைச் சுற்றி அமர்ந்திருந்த தேவர்கள், முனிவர்கள், பாம்புகள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அவனிடம், “எங்களுக்கான உயர்ந்த நன்மை அறிவிக்கப்படட்டும்” என்றனர்.(7)

அந்தப் புனிதமானவன் {பிரம்மன்}. உயர்ந்த நன்மையைக் குறித்துக் கேட்ட அவர்களிடம் ஓரசை {ஓரெழுத்துப்} பிரம்மமான ஓம் என்ற சொல்லை மட்டுமே சொன்னான். இதைக் கேட்ட அவர்கள் பல்வேறு திசைகளில் ஓடிச் சென்றனர்.(8) இவ்வாறு அனைத்துத் திசைகளிலும் ஓடிச் சென்றவர்களுக்கு மத்தியில் ஆசையில் இருந்து எழுந்த தற்போதனையில் இருந்து, முதலில் பாம்புகளிடம் கடிக்கும் மனோநிலை {தன்மை} உண்டானது.(9) அசுரர்களிடம், தங்கள் இயல்பிலேயே பிறந்த பகட்டும், செருக்கும் கூடிய மனோநிலை எழுந்தது. தேவர்கள் கொடைகள் அளிக்கும் தன்மையையும், பெரும் முனிவர்கள் தற்கட்டுப்பாட்டையும் அடைந்தனர்.(10) ஓர் ஆசானிடம் சென்று, ஒரு சொல்லால் போதிக்கப்பட்ட (தூய்மையாக்கப்பட்ட) பாம்புகளும், தேவர்களும், முனிவர்களும், தானவர்களும் பல்வேறு மனநிலைகளை {தன்மைகளை} அடைந்தனர்.(11) தான் பேசுவதைத் தானே கேட்டு, அதை முறையாக ஒருவன் புரிந்து கொள்கிறான். மீண்டும் அவன் பேசும்போது மேலும் கேட்கிறான். {தன்னைத் தவிர அவனுக்கு} இரண்டாவதாக வேறோர் ஆசான் இல்லை[4].(12)அவனது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தே பின்னர்ச் செயல்பாடு தோன்றுகிறது. சொல்பவன், புரிந்து கொள்பவன், கேட்பவன், பகைவன் ஆகியோர் இதயத்தில் நிறுத்தப்படுகின்றனர்.(13) உலகில் பாவகரமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்தவனாகிறான். இவ்வுலகில் மங்கலமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் மங்கலச் செயல்களைச் செய்தவனாகிறான்.(14) ஆசையால் தூண்டப்பட்டுப் புலனின்பங்களுக்கு அடிமையாவதன் மூலம் ஒரு மனிதன் கட்டுப்பாடில்லா ஒழுக்கம் கொண்டவனாகிறான் {காமசாரியாகிறான்}. தன் புலன்களை அடக்குவதிலேயே எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ள ஒருவன் பிரம்மச்சாரியாகிறான்.(15) நோன்புகள் மற்றும் செயல்பாடுகளைக் கைவிடும் அவன் பிரம்மத்தை மட்டுமே அடைக்கலமாகக் கொள்கிறான். எப்போதும் தன்னைப் பிரம்மத்துடன் அடையாளக் கண்டு, இவ்வுலகில் திரிபவன் பிரம்மச்சாரியாகிறான்.(16)

பிரம்மமே அவனது விறகாகும்; பிரம்மமே அவனது நெருப்பாகும்; பிரம்மமே அவனது தோற்றமாகும்; பிரம்மமே அவனது நீராகும்; பிரம்மமே அவனது ஆசான் ஆகும்; பிரம்மத்திலேயே அவன் மூழ்கியிருக்கிறான்.(17) ஞானிகளால் புரிந்து கொள்ளப்படும் வகையில் உள்ள பிரம்மச்சரியம் இவ்வளவு நுட்பமானதே. அதைப் புரிந்து கொண்டு, க்ஷேத்ரஜ்ஞனால் போதிக்கப்படும் அவர்கள் அதையே பின்பற்றுகிறார்கள்” என்றார் {பிராமணர்}.(18)

புனிதக்காடு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 27-ஞானம் மற்றும் பிரம்மம் ஆகியவற்றைக் காடாகச் சித்தரித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “குறிக்கோள்களையே ஈக்களாகவும், கொசுக்களாகவும், இன்ப துன்பங்களை வெப்பம் மற்றும் குளிராகவும்,  கவனமின்மையையே {மோஹத்தையே} காரிருளாகவும், பேராசை மற்றும் நோய்களை ஊர்வனவாகவும் {பாம்புகளாகவும்},  செல்வத்தை ஒற்றை ஆபத்து நிறைந்த சாலையாகவும், கோபம் மற்றும் காமத்தைக் கள்வர்களாகவும் கொண்டவையும், கடக்க முடியாதவையுமான நிலப்பரப்புகளை {உலகத்தைக்) கடந்து பிரம்மமெனும் இந்தப் பெருங்காட்டுக்குள் நான் நுழைந்துவிட்டேன்” என்றார்.(1,2)

அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, அந்தக் காடு எங்கே இருக்கிறது? அதன் மரங்கள் யாவை? ஆறுகள் யாவை? மலைகளும், குன்றுகளும் யாவை? அந்தக் காடு எவ்வளவு தொலைவில் இருக்கிறது?” என்று கேட்டாள்.(3)

பிராமணர், “அதனில் {பிரம்மத்தில்} இருந்து வேறுபட்டது ஏதுமில்லை. அதைவிட மிக இனிமைமிக்க வேறு எதுவுமில்லை. அதில் இருந்து பிரியாமல் இருப்பது வேறேதும் இல்லை. அதைவிடப் பீடிக்கக்கூடியது வேறேதுமில்லை.(4) அதைவிடச் சிறியது வேறேதும் இல்லை. அதைவிடப் பெரியது வேறேதும் இல்லை. அதைவிட நுட்பமானது வேறேதும் இல்லை. அதற்கு ஒப்பான மகிழ்ச்சி வேறேதும் இல்லை.(5) அதற்குள் நுழையும் மறுபிறப்பாளர்கள் இன்ப துன்பங்களை உடனே கடந்து விடுகிறார்கள். (அதன் பிறகு) அவர்கள் வேறு எந்த உயிரினத்தின் முன்பும் அச்சத்துடன் ஒருபோதும் நிற்பதில்லை, அதே போல வேறு எந்த உயிரினமும் அவர்களைக் கண்டு அஞ்சுவதில்லை.(6) அந்தக் காட்டில் {பிரம்மத்தில்} பெரு மரங்கள் ஏழும், கனிகள் ஏழும் இருக்கின்றன, விருந்தினர்கள் எழுவரும் இருக்கின்றனர். அங்கே ஏழு ஆசிரமங்களும், ஏழு தியான யோகங்களும் (யோக வடிவங்களும்) {சமாதிகளும்}, ஏழு தொடக்க நிலைகளும் (வடிவங்களும்) {தீக்ஷைகளும்} இருக்கின்றன. இதுவே அந்தக் காட்டைக் குறித்த விளக்கமாகும்[1].(7)அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {மனமாகிய} மரங்கள் {ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களாலான} ஐந்து நிறங்களிலான சிறந்த மலர்களையும், கனிகளையும் உண்டாக்குகின்றன.(8) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் மரங்கள் இரு வகைகளைச் சார்ந்தவையும், சிறந்த நிறங்களைக் கொண்டவையுமான {புலன் நுகர் பொருட்களின் அனுபவம் என்ற} மலர்களையும், {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(9) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {கண்கள் எனும்} மரங்கள் {இன்பம் துன்பம் என்ற} இரு நிறங்களைச் சார்ந்தவையும், நறுமணம் மிக்கவையுமான {சொர்க்கம் முதலான} மலர்களையும், {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(10) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் மரங்கள், {சுகம் என்ற} ஒரு நிறத்தைச் சார்ந்தவையும், நறுமணமிக்கவையுமான {பிரம்மானுபவமென்கிற} மலர்களையும், {ஆனந்தம் எனும்} கனிகளையும் உண்டாக்குகின்றன.(11) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {புத்தி மற்றும் மனம் என்ற} இரு மரங்கள், வெளிப்படாத வண்ணங்களிலான பல மலர்களையும் {மனோநிலைகளையும்}, {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(12) அங்கே நல்ல மனம் {ஞானம்} கொண்ட ஒரு நெருப்பு {ஆத்மா} இருக்கிறது. அது பிரம்மனுடன் தொடர்பில் இருக்கிறது. அங்கே ஐம்புலன்களும் விறகுகளாகின்றன. (மனம் முதலானவற்றை அதைக் கொண்டு ஹோமம் செய்தால்} அவற்றில் இருந்து விடுதலையின் ஏழு வடிவங்களும் {மோக்ஷங்களும்} ஏழு தொடக்க நிலை வடிவங்களை {தீக்ஷைகளும்} உண்டாக்குகின்றன. குணங்களே கனிகளாக இருக்கின்றன, அந்தக் கனிகளை உண்பவர்களே {தேவர்களென்னும்} விருந்தினர்களாக இருக்கின்றனர்.(13)

அங்கே பல்வேறு இடங்களில் பெரும் முனிவர்கள் {புலன்களுக்குரிய தேவர்கள்} அந்த விருந்தோம்பலை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு வழிபடப்படும் அவர்கள் அழிவடையும்போது {லயமடையும்போது [இல்லாது போகும்போது]} மற்றொரு காடு பிரகாசிக்கிறது.(14) அந்தக் காட்டில், புத்தியே மரம்; விடுதலையே {முக்தியே} கனி; அமைதியே {சாந்தியே} அது கொண்ட நிழல் ஆகும். அது ஞானத்தையே தன் ஓய்வில்லமாகவும், மனநிறைவை நீராகவும், க்ஷேத்ரஜ்ஞனை சூரியனாகவும் கொண்டுள்ளது.(15) மேல்நோக்கியோ, கீழ்நோக்கியோ, கிடைமட்டத்திலோ அதன் எல்லையை உறுதி செய்ய முடியாது.(16) கீழ்நோக்கி முகங்களைக் கொண்டவர்களும் {தலை குனிந்திருப்பவர்களும்}, பிரகாசத்துடன் கூடியவர்களும், தலைமுறைகளை உண்டாக்கக்கூடியவர்களுமான ஏழு பெண்கள் எப்போதும் அங்கே வசித்து வருகின்றனர். உண்மையை உறிஞ்சும் முரண்பாட்டைப் போல அனைத்து உயிரினங்களிடம் இருந்தும் அவர்கள் பல்வேறு சுவைகளைப் பெறுகின்றனர். வசிஷ்டரைத் தங்களில் முதன்மையானவராகக் கொண்டவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான முனிவரெழுவர் {சப்தரிஷிகளும்} அதிலேயே உண்டாகி அங்கேயே வசிக்கின்றனர்.(18)

சூரியனைப் பின்தொடரும் கதிர்களைப் போலவே, புகழ் {கீர்த்தி}, ஒளி {பிரகாசம்}, மேன்மை, அகவொளி {தெளிவு}, வெற்றி, ஒழுங்கு {கச்சிதத்தன்மை}, சக்தி ஆகிய ஏழும் அதைப் பின்தொடர்ந்து செல்கின்றன.(19) அங்கே மலைகளும், குன்றுகளும் ஒன்று திரண்டிருக்கின்றன. பிரம்மத்தில் பிறந்த நீரைக் கொண்ட ஆறுகளும் ஓடைகளும் அங்கே ஓடிக் கொண்டிருக்கின்றன.(20) அங்கே வேள்வி செய்வதற்கான ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் அவை சங்கமுமாகின்றன. தங்கள் ஆன்மாக்களில் நிறைவடைவோர் அங்கே பெரும்பாட்டனை {பிரம்மனை} நோக்கிச் செல்கின்றனர்.(21) ஆசைகளைக் குறைத்துக் கொண்டவர்களும், சிறந்த நோன்புகளைச் செய்வதில் ஆசை கொண்டவர்களும், தவங்களின் மூலம் பாவங்களை எரித்தவர்களுமான மனிதர்கள் தங்கள் ஆன்மாக்களிலேயே கலந்து பிரம்மத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(22) ஞானக்காடு குறித்து அறிந்தவர்கள் அமைதியைப் புகழ்கிறார்கள். பிறவியை அடைந்தவர்கள், அந்தக் காட்டை நோக்கத்தில் கொண்டு தங்கள் துணிவை இழக்காதிருக்க வேண்டும்.(23) பிராமணர்களால் புரிந்து கொள்ளப்பட்டும் அந்தப் புனிதக்காடு இத்தகையதே. அதைப் புரிந்து கொண்ட அவர்கள், க்ஷேத்ரஜ்ஞனால் செலுத்தப்பட்டு (விதிக்கு இணக்கமாக) வாழ்கின்றனர்” என்றார் {பிராமணர்}.(24)

யாகஹிம்ஸை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 28-வேள்விகளில் நேரும் தீங்கு குற்றமாகாது என்று ஓர் அத்வர்யுவுக்கும் யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “நான் மணங்களை நுகர்வதில்லை. நான் சுவைகளை உணர்ஒரு வேள்விச் சடங்கில் நீர் தெளிக்கப்படும் {புரோக்ஷிக்கப்படும்} விலங்கைக் கண்ட ஒரு யதி {சந்நியாஸி}, அத்வர்யுவிடம் “இஃது உயிர்க்கொலை” என்றார்.(7)

அத்வர்யு {சந்நியாசியிடம்}, “இந்த ஆடு அழிவையடையாது. இக்காரியத்தில் வேத அறிவிப்பு உண்மையானால், (இந்த வேள்வியினால்) இவ்விலங்கு பெரும் நன்மையை அடையும்.(8) பூமியாலான இந்த விலங்கின் பகுதி பூமிக்குச் செல்லும். நீரில் பிறந்த இதன் பகுதி நீருக்குள் நுழையும்.(9) இதன் கண்கள் சூரியனுக்குள்ளும்; இதன் காதுகள் பல்வேறு திசைப்புள்ளிகளிலும், இதன் உயிர் காற்றுகள் ஆகாயத்துக்குள்ளும் நுழையும். சாத்திரங்களைப் பின்பற்றும் நான் (இந்த விலங்கைக் கொல்வதற்குத் துணைபுரிவதால்) எத்தீங்கையும் இழைக்கவில்லை” என்றார்.(10)

யதி {சந்நியாசி அத்வர்யுவிடம்}, “இந்த ஆட்டின் உயிர் காற்றுகளை இவ்வாறு பிரிப்பதில் இத்தகைய நன்மையைக் கண்டால், இந்த வேள்வி ஆட்டுக்கானதாகிறது. இதை நீர் செய்ய வேண்டிய அவசியமென்ன {இதனால் உமக்கென்ன பயன்}?(11) (இந்த ஆட்டின்) சகோதரன், தந்தை, தாய் மற்றும் நண்பன் ஆகியோர் இதில் தங்கள் அனுமதியை உமக்கு அளிக்க வேண்டும். (அவற்றிடம்) இஃதை {இந்த ஆட்டை} அழைத்துச் சென்று அவற்றுடன் {அந்த ஆடுகளுடன்} ஆலோசிப்பீராக. இந்த ஆடானது குறிப்பாகச் சுதந்திரமற்றதாகும் {அவற்றை [அந்த ஆடுகளைச்] சார்ந்திருப்பதாகும்}.(12) இதில் தங்கள் ஒப்புதலை அளிக்கக்கூடியவர்களைப் பார்ப்பதே உமக்குத் தகும். அவற்றின் ஒப்புதலைக் கேட்ட பிறகே, இக்காரியம் கருத்தில் கொள்ளத் தகுந்ததாகும்.(13) இந்த ஆட்டின் உயிர்க்காற்றுகள் தங்கள் தங்களுக்குரிய மூலங்களிடம் திரும்பிச் செல்கின்றன. உயிரற்ற உடல் மட்டுமே எஞ்சுகிறது. இதையே நான் நினைக்கிறேன்.(14)

விறகுடன் ஒப்பிடக்கூடிய (ஒரு விலங்கின்) உயிரற்ற உடலின் மூலம் இன்பமடைய விரும்புவோருக்கு (வேள்விக்கான) விறகே அந்த விலங்குதான்.(15) தீங்கிழையாமையே {கொல்லாமையே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். இதுவே நம் பெரியோர் சொல்லிக் கொடுத்ததாகும். கொடுமையற்ற செயலே செய்யப்பட வேண்டும் என்பதே நாம் அறிவதாகும். அதில் (உயிரினங்களைக்) கொல்லாமை என்பதே கருத்தாகும். நான் மேலும் ஏதாவது சொன்னால், பல்வேறு வகையான குற்றச் செயல்களை உம்மால் செய்ய முடியும் (என்று அப்போது தோன்றும்).(17) அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் கொடுமை தவிர்த்தலே நமக்கு ஏற்புடையதாகும். நேரடியாக உணக்கூடியவற்றிலிருந்து நாம் இதை நிறுவுகிறோம். நேரடியான அகப்பார்வையை {கருத்தைக்} கடந்திருப்பதை நாம் சார்ந்திருக்கவில்லை[3]” என்றார் {யதி}.(18)ஒரு வேள்விச் சடங்கில் நீர் தெளிக்கப்படும் {புரோக்ஷிக்கப்படும்} விலங்கைக் கண்ட ஒரு யதி {சந்நியாஸி}, அத்வர்யுவிடம் “இஃது உயிர்க்கொலை” என்றார்.(7)

அத்வர்யு {சந்நியாசியிடம்}, “இந்த ஆடு அழிவையடையாது. இக்காரியத்தில் வேத அறிவிப்பு உண்மையானால், (இந்த வேள்வியினால்) இவ்விலங்கு பெரும் நன்மையை அடையும்.(8) பூமியாலான இந்த விலங்கின் பகுதி பூமிக்குச் செல்லும். நீரில் பிறந்த இதன் பகுதி நீருக்குள் நுழையும்.(9) இதன் கண்கள் சூரியனுக்குள்ளும்; இதன் காதுகள் பல்வேறு திசைப்புள்ளிகளிலும், இதன் உயிர் காற்றுகள் ஆகாயத்துக்குள்ளும் நுழையும். சாத்திரங்களைப் பின்பற்றும் நான் (இந்த விலங்கைக் கொல்வதற்குத் துணைபுரிவதால்) எத்தீங்கையும் இழைக்கவில்லை” என்றார்.(10)

யதி {சந்நியாசி அத்வர்யுவிடம்}, “இந்த ஆட்டின் உயிர் காற்றுகளை இவ்வாறு பிரிப்பதில் இத்தகைய நன்மையைக் கண்டால், இந்த வேள்வி ஆட்டுக்கானதாகிறது. இதை நீர் செய்ய வேண்டிய அவசியமென்ன {இதனால் உமக்கென்ன பயன்}?(11) (இந்த ஆட்டின்) சகோதரன், தந்தை, தாய் மற்றும் நண்பன் ஆகியோர் இதில் தங்கள் அனுமதியை உமக்கு அளிக்க வேண்டும். (அவற்றிடம்) இஃதை {இந்த ஆட்டை} அழைத்துச் சென்று அவற்றுடன் {அந்த ஆடுகளுடன்} ஆலோசிப்பீராக. இந்த ஆடானது குறிப்பாகச் சுதந்திரமற்றதாகும் {அவற்றை [அந்த ஆடுகளைச்] சார்ந்திருப்பதாகும்}.(12) இதில் தங்கள் ஒப்புதலை அளிக்கக்கூடியவர்களைப் பார்ப்பதே உமக்குத் தகும். அவற்றின் ஒப்புதலைக் கேட்ட பிறகே, இக்காரியம் கருத்தில் கொள்ளத் தகுந்ததாகும்.(13) இந்த ஆட்டின் உயிர்க்காற்றுகள் தங்கள் தங்களுக்குரிய மூலங்களிடம் திரும்பிச் செல்கின்றன. உயிரற்ற உடல் மட்டுமே எஞ்சுகிறது. இதையே நான் நினைக்கிறேன்.(14)

விறகுடன் ஒப்பிடக்கூடிய (ஒரு விலங்கின்) உயிரற்ற உடலின் மூலம் இன்பமடைய விரும்புவோருக்கு (வேள்விக்கான) விறகே அந்த விலங்குதான்.(15) தீங்கிழையாமையே {கொல்லாமையே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். இதுவே நம் பெரியோர் சொல்லிக் கொடுத்ததாகும். கொடுமையற்ற செயலே செய்யப்பட வேண்டும் என்பதே நாம் அறிவதாகும். அதில் (உயிரினங்களைக்) கொல்லாமை என்பதே கருத்தாகும். நான் மேலும் ஏதாவது சொன்னால், பல்வேறு வகையான குற்றச் செயல்களை உம்மால் செய்ய முடியும் (என்று அப்போது தோன்றும்).(17) அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் கொடுமை தவிர்த்தலே நமக்கு ஏற்புடையதாகும். நேரடியாக உணக்கூடியவற்றிலிருந்து நாம் இதை நிறுவுகிறோம். நேரடியான அகப்பார்வையை {கருத்தைக்} கடந்திருப்பதை நாம் சார்ந்திருக்கவில்லை[3]” என்றார் {யதி}.(18)

அத்யர்யு, “பூமிக்குச் சொந்தமான மணத்தின் குணங்களை நீர் அனுபவிக்கிறீர். நீர் தொடர்புடைய சுவைகளைப் பருகுகிறீர். ஒளியுடல்களுக்குச் சொந்தமான நிறங்களைக் காண்கிறீர். காற்றைத் தோற்றுவாயாகக் கொண்ட குணங்களைத் தீண்டுகிறீர்.(19) வெளி (அல்லது ஆகாயத்தைத்) தோற்றுவாயாகக் கொண்ட ஒலிகளைக் கேட்கிறீர். மனத்தால் எண்ணங்களைச் சிந்திக்கிறீர். இந்த உட்பொருட்கள் (பூதங்கள்) அனைத்தும் உயிருள்ளவை என்பதே உமது கருத்தாகும்.(20) அப்போது அந்த உயிர்களை எடுக்காமல் நீர் தவிர்ப்பதில்லை. உண்மையில் நீர் கொலையிலேயே ஈடுபடுகிறீர். கொலையில்லாமல் எந்த இயக்கமும் நடைபெறாது {ஹிம்ஸை இன்றி ஒரு காரியமுமில்லை}. அல்லது, ஓ! மறுபிறப்பாளரே, வேறென்ன நீர் நினைக்கிறீர்?” என்று கேட்டார்.(21)
 
யதி, “அழிவற்றது {அக்ஷரம்} மற்றும் அழியக்கூடியது {க்ஷரம்} என்பன ஆன்மாவின் இரட்டை வெளிப்பாடாக அமைகின்றன. இவற்றில் அழிவற்றதே இருப்பில் உள்ளது. அழியக்கூடியது அதிக அளவில் இருப்பில் இல்லாததெனச் சொல்லப்படுகிறது.(22) உயிர்க்காற்று, நாக்கு, மனம், நல்லியல்பின் {சத்வ} குணம், ஆசை {ரஜோ} குணம் ஆகிய அனைத்தும் இருப்பில் உள்ளவை. இருப்பிலுள்ள இவற்றில் இருந்து விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், எந்த எதிர்பார்ப்பையும் வளர்க்காதவனும்,(23) அனைத்து உயிரினங்களிடமும் ஒரே வகையில் {சமமாக} நடந்து கொள்பவனும், மமதையில் இருந்து விடுபட்டவனும், தற்கட்டுப்பாடுடையவனும், தன் சுற்றுச்சூழலில் இருந்து விடுபட்டவனுமான ஒருவனுக்கு எதனிடமும் அச்சம் ஏற்படுவதில்லை[4]” என்றார்.(24)

அத்யர்யு, “ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ஒருவன் நல்லோருடன் வசிக்க வேண்டும். உமது கருத்துகளைக் கேட்பதால் என் புத்தி ஒளியுடன் ஒளிர்கிறது.(25) ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! மறுபிறப்பாளரே, உம்மை ஒரு தேவனாக நம்பும் நான், மந்திரங்களின் உதவியால் இந்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் என்னிடம் குற்றமுண்டாவதில்லை என்று சொல்கிறேன்” என்றார்”.(26)

பிராமணர் தொடர்ந்தார், “இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு யதி அமைதியாக இருந்தார். அத்யர்யுவும் மாயையில் இருந்து விடுபட்டு அந்தப் பெரும் வேள்வியைச் செய்தார்.(27) பிராமணர்கள், மிக நுட்பமான விடுதலையை {முக்தியை} இவ்வகையிலேயே புரிந்து கொள்கிறார்கள்; அதைப் புரிந்து கொண்டு, அதற்கு இணக்கமாகவும், அனைத்தையும் காணும் க்ஷேத்ரஜ்ஞனால் வழிநடத்தப்பட்டும் வாழ்கிறார்கள்” {என்றார் பிராமணர்}.(28)

அஹிம்ஸை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 29-கார்த்தவீரியனுக்கும் பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பரசுராமரின் கதையையும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “இது தொடர்பாகக் கார்த்தவீரியனுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) ஆயிரங்கரங்களையும், கார்த்தவீரியார்ஜுனன் என்ற பெயரையும் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவன் தனது வில்லைக் கொண்டு, பெருங்கடலின் கரைகள் வரை விரிந்திருக்கும் பூமியை வென்றான்.(2) ஒரு காலத்தில், தன் வலிமையில் செருக்குடன் இருந்த அவன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, நீரின் அந்தப் பெருங்கொள்ளிடத்தின் {பெருங்கடலின்} மேல் நூற்றுக்கணக்கான கணைகளை மழையாகப் பொழிந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3)

கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கிய அந்தப் பெருங்கடல் {ஸமுத்திரம்}, “ஓ! வீரா, (என் மீது) உன் கணைகளை ஏவாதே. நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக.(4) ஓ! மன்னர்களில் புலியே, என்னிடம் உறைவிடத்தை அடைந்திருக்கும் உயிரினங்கள், உன்னால் ஏவப்பட்டும் இந்த வலிமைமிக்கக் கணைகளால் கொல்லப்படுகின்றன. ஓ! தலைவா, அவற்றுக்குப் பாதுகாப்பை நல்குவாயாக” என்றது.(5)

அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, “போரில் எனக்கு இணையாகக் களத்தில் என்னை எதிர்த்தது நிற்கக் கூடிய வில்லாளி வேறு எவனும் இருந்தால் அவனது பெயரை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(6)

பெருங்கடல், “ஓ! மன்னா, பெரும் முனிவர் ஜமதக்னியைக் குறித்து நீ கேள்விப்பட்டிருப்பாய், அவருடைய மகன் {பரசுராமர்} உன்னை விருந்தினராக முறையாக வரவேற்கத் தகுந்தவராவார்” என்றது.(7)

அப்போது பெருங்கோபத்தில் நிறைந்த அந்த மன்னன் அங்கிருந்து புறப்பட்டான். அந்த ஆசிரமத்தை அடைந்து, ராமரை {பரசுராமரை} அவன் கண்டான்.(8) ராமருக்குப் பகையான செயல்கள் பலவற்றை அவன் தன் உறவினர்களைக் கொண்டு செய்து, மேலும் மேலும் அந்த உயர் ஆன்ம வீரருக்குத் தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.(9) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, அந்த ராமரின் அளவிடமுடியாத சக்தி, சுடர்விட்டெரிந்து பகைவனின் துருப்புகளை எரித்தது.(10) போர்க்கோடரியை எடுத்துக் கொண்டு தன் சக்தியைத் திடீரென வெளிப்படுத்திய ராமர், பல கிளைகளைக் கொண்ட மரம் போல இருந்தவனும், ஆயிரம் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரனை வெட்டினார்.(11) கொல்லப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் அவனைக் கண்ட அவனது உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி, தங்கள் ஈட்டிகளை {சக்தி ஆயுதங்களை} எடுத்துக் கொண்டு, அங்கே அமர்ந்திருந்த ராமரை நோக்கி அனைத்துப் புறங்களில் இருந்தும் விரைந்தனர்.(12)

ராமரும் தமது வில்லை எடுத்துக் கொண்டு, விரைவாகத் தமது தேரிலேறி கணைமாரியைப் பொழிந்து அந்த மன்னனின் படையைத் தண்டித்தார்.(13) அப்போது, ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் சிலர் சிங்கத்தால் பீடிக்கப்பட்ட மான்களைப் போல மலைக்காடுகளுக்குள் நுழைந்தனர்.(14) ராமரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தங்கள் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாக வெளிப்படுத்த இயலாத அவர்களின் சந்ததியினர், பிராமணர்களைக் காண இயலாததால் {சூத்திரத்தன்மையைக் கொண்ட} விருஷலர்களானார்கள்[1].(15) இவ்வகையில் க்ஷத்திரியர்களான திரவிடர்கள், ஆபீரர்கள், புண்ட்ரர்கள், சபரர்கள் ஆகியோர், (பிறப்பின் மூலம்) க்ஷத்திரியர்களுக்கான கடமைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் (தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்யாமல்) வீழ்ச்சியையடைந்து விருஷலர்களானார்கள்.(16) வீரப்பிள்ளைகளை இழந்திருந்த க்ஷத்திரியப் பெண்கள் பிராமணர்களின் மூலம் ஈன்றெடுத்த க்ஷத்திரியர்களும் மீண்டும் மீண்டும் அந்த ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கொல்லப்பட்டனர்.(17) இவ்வகையில் இருபத்தோரு முறை படுகொலைகள் நடந்தேறின.அதன் இறுதியில், உடலற்ற ஒரு குரல் சொர்க்கத்தில் இருந்து எழுந்து, மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் ராமரிடம் இனிமையாக,(18) “ஓ! ராமா, ஓ! ராமா, இதைத் தவிர்ப்பாயாக. ஓ! மகனே, தாழ்ந்தவர்களாக இருக்கும் க்ஷத்திரியர்களை இவ்வாறு மீண்டும் மீண்டும் அழிப்பதில் என்ன தகுதியை {பயனை} நீ காண்கிறாய்?” என்றது[2].(19)ராமரும் தமது வில்லை எடுத்துக் கொண்டு, விரைவாகத் தமது தேரிலேறி கணைமாரியைப் பொழிந்து அந்த மன்னனின் படையைத் தண்டித்தார்.(13) அப்போது, ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் சிலர் சிங்கத்தால் பீடிக்கப்பட்ட மான்களைப் போல மலைக்காடுகளுக்குள் நுழைந்தனர்.(14) ராமரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தங்கள் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாக வெளிப்படுத்த இயலாத அவர்களின் சந்ததியினர், பிராமணர்களைக் காண இயலாததால் {சூத்திரத்தன்மையைக் கொண்ட} விருஷலர்களானார்கள்[1].(15) இவ்வகையில் க்ஷத்திரியர்களான திரவிடர்கள், ஆபீரர்கள், புண்ட்ரர்கள், சபரர்கள் ஆகியோர், (பிறப்பின் மூலம்) க்ஷத்திரியர்களுக்கான கடமைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் (தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்யாமல்) வீழ்ச்சியையடைந்து விருஷலர்களானார்கள்.(16) வீரப்பிள்ளைகளை இழந்திருந்த க்ஷத்திரியப் பெண்கள் பிராமணர்களின் மூலம் ஈன்றெடுத்த க்ஷத்திரியர்களும் மீண்டும் மீண்டும் அந்த ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கொல்லப்பட்டனர்.(17) இவ்வகையில் இருபத்தோரு முறை படுகொலைகள் நடந்தேறின.அதன் இறுதியில், உடலற்ற ஒரு குரல் சொர்க்கத்தில் இருந்து எழுந்து, மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் ராமரிடம் இனிமையாக,(18) “ஓ! ராமா, ஓ! ராமா, இதைத் தவிர்ப்பாயாக. ஓ! மகனே, தாழ்ந்தவர்களாக இருக்கும் க்ஷத்திரியர்களை இவ்வாறு மீண்டும் மீண்டும் அழிப்பதில் என்ன தகுதியை {பயனை} நீ காண்கிறாய்?” என்றது[2].(19)

இவ்வழியிலேயே, ஓ! அருளப்பட்ட மங்கையே, ரிசீகரின் தலைமையிலான அவரது பாட்டன்கள் அந்த உயர்ஆன்மாவிடம், “இதைத் தவிர்ப்பாயாக” என்றனர்.(20)

எனினும், தமது தந்தை கொலை செய்யப்பட்டதை மன்னிக்க முடியாத ராமர் {பரசுராமர்}, அந்த முனிவர்களிடம், “என்னைத் தடுப்பது உங்களுக்குத் தகாது” என்றார்.(21)

அப்போது, பித்ருக்கள், “ஓ! வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, க்ஷத்திரியர்களில் இழிவான இவர்களைக் கொல்வது உனக்குத் தகாது. ஒரு பிராமணனாக இருக்கும் நீ இந்த மன்னர்களைக் கொல்வது முறையாகாது” என்றனர்.(22)

மன்னன் அலர்க்கன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 30-பரசுராமரின் பித்ருக்கள் அவருக்கு அலர்க்கனின் கதையைச் சொன்னது; க்ஷத்திரியக் கொலையை விட்டுக் கடுந்தவம் செய்த பரசுராமர்…

பித்ருக்கள் {பரசுராமரிடம்}, “இது தொடர்பாக ஒரு பழைய வரலாறு குறிப்பிடப்படுகிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அதைக் கேட்டுவிட்டு அதன்படியே செயல்படுவாயாக.(1) கடும் தவங்களுடன் கூடியவனும், அலர்க்கன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அரச முனி இருந்தான். கடமைகள் அனைத்தையும் அறிந்தவனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனுமான அவன், பேச்சில் வாய்மையுடனும், தன் நோன்பில் மிக உறுதியுடையவனுமாக இருந்தான்.(2) கடல்கள் வரை விரிந்திருக்கும் மொத்த உலகையும் வென்று கடுஞ்சாதனையைச் செய்த அவன், நுட்பமானதில் தன் மனத்தை நிறுவினான்.(3) ஓ பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அந்தப் பெருஞ்சாதனைகள் அனைத்தையும் கைவிட்டு ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, நுட்பமானதை நோக்கி தன் மனத்தைத் திருப்பினான்.(4)

அலர்க்கன், “என் மனம் வலுவாக இருக்கிறது. மனத்தை வென்ற பிறகு ஒருவனின் வெற்றி நிரந்தரமானதாகிறது. பகைவர்களால் சூழப்பட்டிருந்தாலும் நான் (இது முதல்) என் கணைகளைப் பிற பொருட்களின் மீது ஏவுவேன்.(5) நிலையின்மையின் விளைவால் மனிதர்கள் அனைவரையும் செயல்களை நிறைவேற்றுவதில் நிறுவும் மனத்தின் மீது நான் மிகக் கூரிய கணைகளை ஏவப்போகிறேன்” என்றான்.(6)

மனம், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும். உன் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட நிலையில் நீ மரணமடைவாய்.(7) என்னை அழிப்பதற்குரிய வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {மனத்தின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(8)

அலர்க்கன், “இது (மூக்கு) மணங்கள் பலவற்றை நுகர்ந்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி மூக்கின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(9)

மூக்கு, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(10) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {மூக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(11)

அலர்க்கன், “இது (இந்த நாக்கு), சுவைமிக்கச் சுவைகளை அனுபவித்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி நாக்கின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(12)

நாக்கு, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(13) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(14)

அலர்க்கன், “தீண்டலுக்குரிய பல்வேறு பொருட்களைத் தொடும் தோலானது {துவக்கானது}, அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கங்க {கழுகின்} இறகுகளுடன் கூடிய பல்வேறு கணைகளால் அந்தத் தோலைப் பிளக்கப் போகிறேன்” என்றான்.(15)

தோலானது, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(16) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {தோலின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(17)

அலர்க்கன், “இவை (காதுகள்) பல்வேறு ஒலிகளைக் கேட்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கணைகளைக் கூராக்கிக் காதுகளின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(18)

காதுகள், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(19) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றன. {காதுகளின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(20)

அலர்க்கன், “கண்கள், பல்வேறு நிறங்களைக் கண்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கூரிய கணைககைக் கொண்டு கண்களை அழிக்கப்போகிறேன்” என்றான்.(21)

கண்கள், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(22) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(23)

அலர்க்கன், “இது (இந்தப் புத்தி), ஆராயும் முறையின் {பிரஜ்ஞையினால்} துணை கொண்டு பல தீர்மானங்களை {பலவித நிச்சயங்களை} எட்டுகிறது. எனவே, கணைகளைக் கூராக்கி இந்தப் புத்தியின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(24)

புத்தி, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய். என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது {என்றனர் பித்ருக்கள்}”.(25)

{பித்ருக்குள் சொன்னதாகப்} பிராமணர் தொடர்ந்தார், “அப்போது, செய்வதற்கரிய கடுந்தவங்களை அங்கேயே செய்த அலர்க்கன், (தன் தவங்களின்) உயர்ந்த சக்தியின் மூலமும், இந்த ஏழையும் அழிப்பதற்குரிய கணைகளை அடையத் தவறினான்.(26) பலம் கொண்ட அவன், அப்போது குவிந்த மனத்துடன் சிந்திக்கத் தொடங்கினான். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே {பரசுராமா}, நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையான அலர்க்கன், நீண்ட காலம் சிந்தித்தும் யோகத்தைவிடச் சிறந்த வேறெதையும் அடையத் தவறினான். ஒரே நோக்கத்தில் தன் மனத்தை நிறுவிய அவன், யோகத்தில் ஈடுபட்டவாறே முற்றிலும் அசையாதிருந்தான்[1].(27,28) சக்தியுடன் கூடிய அவன், யோகத்தின் மூலமாகத் தன் ஆன்மாவுக்குள் நுழைந்து, ஒரே கணையால் தன் புலன்கள் அனைத்தையும் கொன்று, அதன் மூலம் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(29)ஆச்சரியத்தால் நிறைந்த அந்த அரசமுனி அப்போது இந்த ஸ்லோகத்தைப் பாடினான்: {அலர்க்கன்}, “ஐயோ, புறச்செயல்கள் அனைத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது பரிதாபத்திற்குரியது.(30) ஐயோ, இதற்கு முன்பு இன்பங்களில் தாகத்துடன் ஆசையுள்ள நாம் அரசுரிமையை (அரசுரிமையின் இன்பங்களை) விரும்பினோம். அதன்பிறகு நான் இதைக் கற்றிருக்கிறேன். யோகத்தைவிட உயர்ந்த மகிழ்ச்சி வேறேதும் இல்லை” {என்றான் அலர்க்கன்}.(31) ஓ! ராமா, இஃதை அறிவாயாக. க்ஷத்திரியர்களைக் கொல்வதை நிறுத்துவாயாக. கடுந்தவங்களைப் பயில்வாயாக. அப்போது நீ நன்மையை அடைவாய்” என்றனர் {பித்ருக்கள்}.(32)

இவ்வாறு தமது பாட்டன்மாரால் சொல்லப்பட்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, கடுந்தவங்களைப் பயின்றார். அவற்றைப் பயின்ற அந்த உயர்ந்த அருளைக் கொண்டவர் {பரசுராமர்}, அடைவதற்கரிதான வெற்றியை அடைந்தார்” {என்றார் பிராமணர்}.(33)

காமமடக்கல்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 31-மன்னன் அம்பரீஷ்ன் சொன்ன மோக்ஷஸாதன வழிமுறையைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “இவ்வுலகில் {குணங்கள் என்ற} மூன்று பகைவர்கள் இருக்கின்றன. குணங்களுக்கு ஏற்புடைய வகையில் அவை ஒன்பது வகையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உவகை {ப்ரஹர்ஷம்}, மனநிறைவு {பிரீதி}, மகிழ்ச்சி {ஆநந்தம்} ஆகிய மூன்று குணங்களும் நல்லியல்பின் {சத்வத்தின்} தொடர்புடையவை ஆகும்[1].(1) பேராசை {சோகம்}, கோபம் மற்றும் வெறுப்பு {துவேஷம்} ஆகிய மூன்று குணங்களும் ஆசையின் {ரஜஸின்} தொடர்புடையவை ஆகும். தளர்ச்சி {ஸ்வப்நம்}, சோம்பல், திரிபுணர்வு {மோஹம்} ஆகிய மூன்று குணங்களும் இருளின் {தமஸின்} தொடர்புடையவை ஆகும்.(2) புத்தியுள்ள மனிதன் கணைமாரிகளால் இவற்றை வெட்டி, அமைதியான ஆன்மாவுடன் புலன்களைக் கட்டுப்படுத்தி, சோம்பலில் இருந்து விடுபட்டு, மற்றவற்றை வெல்லத் துணிய வேண்டும்[2].(3)பழைய யுகங்களை {கல்பங்களைக் குறித்து} நன்கறிந்தவர்கள், அமைதியான ஆன்மாவை அடைந்த மன்னன் அம்பரீஷனால் இது தொடர்பாகப் பழங்காலத்தில் பாடப்பட்ட ஸ்லோகங்களைச் சொல்கின்றனர்.(4) {பற்று, பேராசை முதலிய} பல்வேறு வகைக் குற்றங்கள் {தோஷங்கள்} பெருகி, நீதிமான்கள் {ஸாதுக்கள்} பீடிக்கப்பட்டபோது, பெரும் புகழைக் கொண்டவனான அம்பரீஷன், அரசுரிமையை ஏற்பதற்காகத் தன் பலத்தைப் பயன்படுத்தினான்[3].(5) தன் குற்றங்களை அடக்கி, நீதிமான்களை வழிபட்ட அவன், பெரும் வெற்றியை அடைந்து இந்த ஸ்லோகங்களைப் பாடினான்.(6){அம்பரீஷன்}, “என் குற்றங்கள் பலவற்றை நான் வென்றேன். பகைவர்கள் அனைவரையும் நான் கொன்றேன். ஆனால், அழிக்கப்படுத்தகுந்த ஒரு பெரிய தீமை என்னால் அழிக்கப்படாமல் இருக்கிறது.(7) அந்தக் குற்றத்தால் தூண்டப்படும் இந்த ஜீவன், ஆசையில் இருந்து விடுதலை அடையத் தவறுகிறது. ஆசையால் பீடிக்கப்படும் ஒருவன் அறிந்து கொள்ளாமலேயே அகழிகளுக்குள் {பள்ளங்களுக்குள்} ஓடுகிறான்.(8) அந்தக் குற்றத்தால் {தோஷத்தால்} தூண்டப்படும் அவன், தடை செய்யப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறான். கூர்முனை வாளால் நீ அந்தப் பேராசையை {லோபத்தை} வெட்டுவாயாக.(9)

பேராசையில் இருந்து விருப்பம் எழுகிறது. விருப்பத்தில் இருந்தே கவலையும் பாய்கிறது. விருப்பத்தின் வசப்படும் மனிதன் ஆசை {ரஜோ குணம்} தொடர்புடைய குணங்கள் பலவற்றை அடைகிறான்.(10) இவை அனைத்தையும் அடைந்த பிறகு அவன் இருளின் {தமோ குணத்தின்} தொடர்புடைய பல குணங்களை அடைகிறான்.(11) அந்தக் குணங்களின் விளைவால் அவன் உடலோடு கலந்த பற்றுகளுடன் மீண்டும் மீண்டும் பிறவிகளை அடைந்து செயல்படத் தூண்டப்படுகிறான். உயிர்வாழும் காலம் தீர்ந்ததும், பிளந்து சிதறிய உடலைக் கொண்ட அவன் மீண்டும் பிறவிக்குக் காரணமான மரணத்தை அடைகிறான்.(12) எனவே, இதை முறையாகப் புரிந்து கொண்டு, புத்தியால் பேராசையை வெல்லும் ஒருவன் தன் ஆன்மாவுக்குள் ஓர் அரசை விரும்ப வேண்டும். இதுவே (உண்மையான) அரசாகும் {ராஜ்யமாகும்}. வேறு அரசேதும் இங்கே இல்லை. முறையாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஆன்மாவே மன்னனாவான்” {என்றான் அம்பரீஷன்}.(13)

பெரும்புகழைக் கொண்டவனும், முதன்மைக் குற்றமான பேராசையை வெட்டியவனுமான மன்னன் அம்பரீஷன், அரசு குறித்துப் பாடி தன் முன்னேயே வைத்துக் கொண்ட ஸ்லோகங்கள் இவையே ஆகும்” என்றார் {பிராமணர்}.(14)

தர்மச்சக்கரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 32-மமதை விலக்கல் குறித்து ஒரு பிராமணனுக்கும் மன்னன் ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “ஓ! பெண்ணே, இது தொடர்பாக ஒரு பிராமணருக்கும், (மன்னன்) ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) மன்னன் ஜனகன், (ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்) குற்றம் புரிந்த ஒரு பிராமணனைத் தண்டிக்க விரும்பி, அவனிடம், “நீ என் ஆட்சிப்பகுதிகளில் வசிக்கலாகாது” என்றான்.(2)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், மன்னர்களில் சிறந்தவனான அவனிடம் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, உன் ஆளுகைக்குள் உள்ள ஆட்சிப்பகுதிகளின் எல்லைகளை எனக்குச் சொல்வாயாக.(3) ஓ! தலைவா, நான் மற்றொரு மன்னனின் ஆட்சிப்பகுதிக்குள் வசிக்க விரும்புகிறேன். ஓ! பூமியின் தலைவா, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் உன் ஆணைக்குக் கீழ்ப்படிய நான் விரும்புகிறேன்” என்றான்.(4)

புகழ்பெற்ற பிராமணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டும், வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே ஒரு சொல்லையும் மறுமொழியாகச் சொல்லாதிருந்தான்.(5) சூரியனை விழுங்கும் கோளை {ராஹுவைப்} போல, அளவிலா சக்தி கொண்ட அந்த மன்னனின் புத்தித் திடீரென மயங்கியதால், அவன் சிந்தனையில் மூழ்கியவாறு அமர்ந்தான்.(6) அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், ஆறுதலடைந்த அந்த மன்னன், ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு அந்தப் பிராமணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(7)ஜனகன், “மூதாதையர் வழியாக எனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருந்தாலும், மொத்த பூமியில் தேடினாலும் என் ஆட்சிப்பகுதியை நான் காணத் தவறுகிறேன்.(8) பூமியில் அதைக் காண நான் தவறியபோது, (அதை) மிதிலையில் தேடினேன். மதிலையில் நான் அதைக் காணத் தவறியபோது, என் பிள்ளைகளுக்கு மத்தியில் அதைத் தேடினேன்.(9) அங்கேயும் நான் அதைக் காணத் தவறியபோது, எனக்குப் புத்தி மயக்கம் ஏற்பட்டது. அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், நுண்ணறிவு எனக்குத் திரும்பக் கிடைத்தது.(10) அப்போது எனக்கென ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது அனைத்தும் என் ஆட்சிப்பகுதியே என நினைத்தேன். இந்த உடலும் எனதில்லை, அல்லது மொத்த பூமியும் எனதே.(11) அதே நேரத்தில், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அது பிறருக்குச் சொந்தமான அளவுக்கு எனக்கும் சொந்தம் என நினைக்கிறேன். எனவே, விரும்பியவரை நீ (இங்கேயே) வசிப்பாயாக. விரும்பிய வரையில் அனுபவிப்பாயாக” என்றான்.(12)

பிராமணன், “மூதாதையர் வழியாக உனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருக்கும்போது, எந்தப் புத்தியைச் சார்ந்து, {எனதென்ற} அந்த மமதையை விட்டாய் என்பதை எனக்குச் சொல்வாயாக.(13) அனைத்தும் உன் ஆட்சிப்பகுதியாக அமைகிறது என்ற தீர்மானத்திற்கு எந்தப் புத்தியைச் சார்ந்து நீ வந்தாய்? உண்மையில், எந்தக் கருத்தின் மூலம் உனக்கு ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது {எந்தக் கருத்தின் மூலம்} அனைத்தும் உனது ஆட்சிப்பகுதியாகிறது?” என்று கேட்டான்.(14)

ஜனகன், “அனைத்துக் காரியங்களிலும் இங்கே உள்ள {செழுமை மற்றும் வறுமை என்ற} கட்டுவரம்புகள் அனைத்தும் முடிவுள்ளவை என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே, எனதென்று அழைக்கப்படக்கூடிய எதையும் என்னால் காண முடியவில்லை.(15) இது யாருடையது என்று (கருதி), எவருடைய உடைமையையும் குறித்த வேத உரையை நினைத்தேன். எனவே, எனது என்ற (என்று அழைக்கக்கூடிய) எதையும் என் புத்தியைக் கொண்டு என்னால் காண முடியவில்லை[1].(16) இந்தக் கருத்தைச் சார்ந்தே நான் மமதையைக் கைவிட்டேன். நான் எங்கும் ஆட்சிப் பகுதியைக் கொண்டுள்ளேன் என்ற தீர்மானத்திற்கு வர நான் சார்ந்திருக்கும் கருத்தென்ன என்பதை இப்போது கேட்பாயாக.(17) என் மூக்கில் உள்ள மணங்களையும் எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட பூமியானது எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(18) என் நாவுடன் தொடர்புடைய சுவைகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட நீர் எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(19)என் கண்களுக்குத் தொடர்புடைய நிறம் அல்லது ஒளியை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒளி எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(20) என் தோலுடன் தொடர்புடைய தீண்டல் உணர்வுகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட காற்று, எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(21) என் காதுகளுடன் தொடர்புடைய ஒலிகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒலிகள் எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டவையே.(22) என் மத்தில் எப்போதும் உள்ள மனத்தை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட மனமானது எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டதே.(23) நான் செய்யும் இந்தச் செயல்கள் அனைத்தும், தேவர்கள், பித்ருக்கள், பூதங்கள் மற்றும் விருந்தினர்களுக்கானவையே” என்றான் {ஜனகன்}.(24)

அப்போது புன்னகைத்த அந்தப் பிராமணன் மீண்டும் ஜனகனிடம், “நான் தர்மன், உன்னைச் சோதிக்கவே இன்று இங்கே வந்தேன்.(25) பிரம்மத்தை உந்தியாகக் கொண்டதும், புத்தியை ஆரங்களாகக் கொண்டதும், ஒழிவடையாததும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தைச்} சுற்றளவாகக் கொண்டதுமான இந்தச் சக்கரத்தை {தர்மச்சக்கரத்தை} இயக்கத்தில் நிறவக்கூடியவன் நீயே” என்றான்.(26)

பிரம்மஜ்ஞானம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 33-தம் மகிமையைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “ஓ! மருண்டவளே, உன் புத்தியைக் கொண்டு நிந்திக்கும் வகையில் நான் இவ்வுலகில் திரியவில்லை. நான் வேத ஞானம் கொண்ட ஒரு பிராமணன் ஆவேன். நான் விடுதலை பெற்றவன் {முக்தன்}. நான் ஒரு காட்டுத் துறவி. நான் ஓர் இல்லறத்தானின் கடமைகளை நோற்பவன். நோன்புகளையும் நோற்கிறேன்.(1)

நல்ல மற்றும் தீய செயல்களைக் கொண்டு நீ பார்க்கும் வகையில் நானில்லை. இவ்வண்டத்தில் உள்ள அனைத்திலும் நான் படர்ந்தூடுருவி இருக்கிறேன் {வியாபித்திருக்கிறேன்}.(2)

இவ்வுலகில் அசைவனவாகவோ, அசையாதனவாகவோ இருக்கும் உயிரினம் எதுவும், அனைத்து மரங்களிலும் உள்ள நெருப்பைப் போல அனைத்தையும் எரிப்பவனாக {அக்னியாக} என்னை அறிகின்றன.(3)

(ஒரு கையில்) மொத்த உலகத்தின் ஆட்சியுரிமையோ, சொர்க்கத்தின் ஆட்சியுரிமையோ இருக்கிறது, அல்லது {மறுகையில்} (அண்டத்துடன் {பிரம்மத்துடன்} என்னை அடையாளம் காணும்) இந்த ஞானமும் {புத்தியும்} இருக்கிறது. ஞானமே {புத்தியே} என் செல்வமாகும்[1].(4)இல்லறத்தாராகவோ, காட்டில் வசிப்பவராகவோ, ஆசான்களுடன் வசிப்பவராகவோ, சந்நியாசிகளின் மத்தியில் வசிப்பவராகவோ அதை {புத்தியைப்} புரிந்து கொள்பவதே பிராமணர்களுக்கான ஒற்றைப் பாதையாகும்[2].(5)குழப்பமற்றவையான பல {வாழ்வுமுறை / ஆசிரம} அடையாளங்களின் மூலம் ஞானம் {புத்தி} ஒன்றே வழிபடப்படுகிறது. எந்த அடையாளங்களையும், வாழ்வுமுறைகளையும் பின்பற்றுவோர், அமைதியைத் தன் சாரமாகக் கொண்ட {அடக்கமுள்ள} புத்தியை அடைவதன் மூலம், பல்வேறு ஆறுகள் கடலில் கலப்பதைப் போல அந்த ஒன்றையே அடைகின்றனர்[3].(6)இந்தப் பாதையைப் புத்தியின் உதவியுடன் கடக்கலாமே அன்றி உடலால் முடியாது. செயல்களுக்குத் தொடக்கமும், முடிவும் உண்டு, உடலானது செயல்களையே தன் கட்டுகளாக {பந்தங்களாக்} கொண்டுள்ளது[4].(7)எனவே, ஓ! அருளப்பட்ட மங்கையே, மறுமையைக் குறித்த எந்த அச்ச உணர்வும் உனக்குத் தேவையில்லை. உண்மையான உட்பொருளில் {பிரம்ம ஞானத்தில்} உன் இதயத்தை {புத்தியைச்} செலுத்தினால் என் ஆன்மாவுக்குள் நீ வருவாய் {என்னுடைய ஆத்மாவை நீ அடைவாய்}” என்றார் {பிராமணர்}.(8)

க்ஷேத்ரஜ்ஞன் நானே! – அஸ்வமேதபர்வம் பகுதி – 34-பிராமணரும், அவரது மனைவியும், மனமும் புத்தியும் என்பதை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

பிராமணரின் மனைவி {பிராம்மணி}, “அற்பு புத்தி உள்ளவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனுமான ஒரு மனிதனால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. என் புத்தியானது மிகச் சிறியதாகவும், சுருக்கமானதாகவும், குழம்பியதாகவும் இருக்கிறது.(1) (நீர் சொல்லும்) ஞானத்தை அடைவதற்குரிய வழிமுறைகளை எனக்குச் சொல்வீராக. ஞானம் பாயும் அந்த ஊற்றுக் கண்ணைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றாள்.(2)

பிராமணர், “பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள புத்தியானது கீழ் அரணி என்றும்; ஆசான் மேல் அரணி என்றும், தவங்களும், சாத்திரங்களில் நல்ல அறிவும் {அந்த அரணிக்கட்டைகளுக்குள்} உராய்வை ஏற்படுத்தும் காரணிகள் என்றும் அறிவாயாக. அதனிலிருந்து ஞானமெனும் நெருப்பு உண்டாகும்.(3)” என்றார்.(3)

பிராமணரின் மனைவி, “இந்தப் பிரம்ம அடையாளத்தைப் பொறுத்தவரையில், எது க்ஷேத்ரஜ்ஞன் என்று பெயரிடப்படுகிறது? உண்மையில், அதை {அந்த அடையாளத்தைப்} பற்றக்கூடிய {அதைக் குறித்த} விளக்கம் எங்கே தோன்றுகிறது.?” என்று கேட்டாள்[1].(4)பிராமணர், “அவன் {க்ஷேத்திரஜ்ஞன்} அடையாளங்கள் அற்றவனாகவும், குணங்களற்றவனாகவும் இருக்கிறான். அவனே எனக் கருதப்படக்கூடிய எந்தக் காரணமும் இல்லை. எனினும், அவனைக் கைப்பற்றவோ, கைப்பாற்றாதிருக்கவோ உரிய வழிமுறைகளை உனக்குச் சொல்லப் போகிறேன்.(5)

நல்ல வழிமுறைகளைக் காணலாம்; வண்டுகளால் (உணரப்படும் மலர்களைப் போல) அவற்றை உணரலாம். அந்த வழிமுறைகள் செயல்களால் தூய்மையாக்கப்பட்ட புத்தியைக் கொண்டவையாகும். தூய்மையடையாத புத்தியைக் கொண்டோர், தங்கள் அறியாமையின் மூலம், அந்த உட்பொருள் ஞானம் மற்றும் பிறவற்றின் குணங்களோடு இருப்பதாகக் கருதுகிறார்கள்[2].(6) இது செய்யப்படவேண்டும், அல்லது இது செய்யப்படக்கூடாது என்று விடுதலையை {முக்தியை} அடைவதற்கான விதிகள் வகுக்கப்படவில்லை. எவரிடம் ஆன்ம அறிவு எழுகிறதோ அவனால் மட்டுமே காணவும், கேட்கவும் முடியும்[3].(7) புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ஒருவன், வெளிப்பட்டவற்றையும், வெளிப்படாதவற்றையும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பல பகுதிகளாகப் புரிந்து கொள்ள வேண்டும்.(8) உண்மையில் ஒருவன் வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட பல்வேறு பொருட்களையும், நேரடியாக உணரக்கூடிய அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது, எதற்கு மேல் எதுவும் இல்லையோ அது {பிரம்மஜ்ஞானம்}, (தியானம், தற்கட்டுப்பாடு முதலிய) பயிற்சிகளில் இருந்து உண்டாகும்” என்றார்[4]“.(9)அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “அப்போது, க்ஷேத்திரஜ்ஞன் அழிந்ததும் அந்தப் பிராமணரின் மனைவியுடைய மனமானது, க்ஷேத்திர ஞானத்தின் விளைவால் க்ஷேத்திரஜ்ஞனைக் கடந்த ஒன்றானது” என்றான்[5].(10)அர்ஜுனன், “உண்மையில், ஓ! கிருஷ்ணா, இத்தகைய வெற்றியை அடைந்தவர்களான அந்தப் பிராமணனின் மனைவியும், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரும் எங்கே இருக்கின்றனர். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இது குறித்து எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(11)

அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன}“என் மனமே அந்தப் பிராமணன் என்றும், என் புத்தியே அந்தப் பிராமணனின் மனைவி என்றும் அறிவாயாக. ஓ! தனஞ்சயா, க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லப்படுபவன் நானே” என்றான்.(12)

பரப்பிரம்ம ஸ்வரூபம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 35-பரப்பிரம்மத்தையும், அதனை அடையும் வழிமுறையையும் குறித்து ஓர் ஆசானுக்கும், சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், முனிவர்களுக்குப் பிரம்மன் சொன்னதையும் அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “உயர்ந்த அறிவுப்பொருளான பிரம்மத்தைக் குறித்து எனக்கு விளக்குவதே உனக்குத் தகும். உன் கருணையால் எனது மனம் நுட்பமானவையும், ஆய்வு சார்ந்தவையுமான இந்த விளக்கங்களில் திளைத்திருக்கிறது” என்று கேட்டான்.(1)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “பிரம்மம் குறித்த காரியத்தில் ஓர் ஆசானுக்கும், அவரது சீடருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழைய வரலாறு இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! பகைவர்களை எரிப்பவனே, ஒரு காலத்தில் ஒரு புத்திசாலி சீடன், (சுகமாக) அமர்ந்திருந்தவரும், கடும் நோன்புகளைக் கொண்டவரும், தன் ஆசானுமான ஒரு குறிப்பிடத்தக்க பிராமணரிடம், “உண்மையில், உயர்ந்த நன்மை யாது?(3) ஓ! புனிதமானவரே, உயர்ந்த நன்மையை அடைய விரும்பி, என்னை நான் உம் பாதங்களில் கிடத்திக் கொள்கிறேன். ஓ! கல்விமானான பிராமணரே, நான் கேட்பதை எனக்கு விளக்கிச் சொல்லுமாறு தலைவணங்கி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.(4)

ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனனே}, இவ்வாறு சொன்ன அந்தச் சீடனிடம் அந்த ஆசான், “ஓ! மறுபிறப்பாளனே, உன் ஐயங்கள் அனைத்திற்கும் நான் விளக்கம் சொல்வேன்” என்றார்.(5)

ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {அர்ஜுனனே}, தன் ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தன் ஆசானிடம் பேரர்ப்பணிப்பு கொண்டவனுமான அந்தச் சீடன், கூப்பிய கரங்களுடன் பின்வருமாறு பேசினான். ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, அவன் சொன்னதைக் கேட்பாயாக.(6)

அந்தச் சீடன், “நான் எங்கிருந்து வந்தேன்? நீர் எங்கிருந்து வந்தீர்? உயர்ந்த உண்மை எதுவோ அதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் எந்த மூலத்திலிருந்து உண்டாகின?(7) உயிரினங்கள் எதைக் கொண்டு வாழ்கின்றன? அவற்றின் வாழ்வின் அளவு எவ்வளவு? உண்மை எது? ஓ! கல்விமானான பிராமணரே, தவம் எது? நல்லோரால் குணங்கள் என்றழைக்கப்படுவன எவை?(8) மங்கலப் பாதைகள் என்றழைக்கப்படுபவை எவை? மகிழ்ச்சி எது? பாவம் எது? ஓ! புனிதமானவரே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, ஓ! கல்விமானான முனிவரே, என்னுடைய இந்தக் கேள்விக்கு, சரியாகவும், உண்மையாகவும், துல்லியமாகவும் பதிலளிப்பதே உமக்குத் தகும். இவ்வுலகத்தில் {இம்மையில்} இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவல்ல வேறு நபர் யார் இருக்கிறார்?(9,10) ஓ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, இவற்றுக்குப் பதிலளிப்பீராக. என் ஆவல் பெரிதாக இருக்கிறது. விடுதலை {முக்தி} குறித்த கடமைகளில் நன்கு திறம்பெற்றவராக உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவர் நீரே.(11) அனைத்து வகை ஐயங்களையும் களையவல்லவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை. உலக வாழ்வுக்கு அஞ்சி, விடுதலையை அடைய நாம் விரும்புகிறோம்” என்றான்.(12)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனனே}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவனே, தன் ஆசானிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அமைதியுடையவனும், (ஆசானுக்கு) ஏற்புடைய வகையில் எப்போதும் நடந்து கொள்பவனும், கிட்டத்தட்ட ஆசானின் நிழலாகவே அவரது பக்கத்தில் நிலையாக வாழ்ந்தவனும், தற்கட்டுப்பாடுடையவனும், யதியின் வாழ்வை வாழ்ந்தவனும், பிரம்மச்சாரியும், பணிவுடன் அவரது அறிவுரையை நாடியவனுமான அந்தச் சீடனிடம், நுண்ணறிவு மிக்கவரும், நோன்புகளை நோற்பவருமான அந்த ஆசான், அனைத்துக் கேள்விகளுக்கும் முறையான விளக்கங்களைச் சொன்னார்”.(13,14)

ஆசான், “(பழங்காலத்தில்) இவை அனைத்தும் (உலகங்கள் அனைத்திற்கும் பெரும்பாட்டனான) பிரம்மன் மூலம் அறிவிக்கப்பட்டன. முனிவர்களில் முதன்மையானவர்களால் மெச்சப்படுவதும், பயிலப்படுவதும், வேத அறிவைச் சார்ந்ததுமான அஃது உண்மையான உட்பொருளின் கருத்தைக் கொண்டதாகும்.(15) நாம் ஞானத்தையே உயர்ந்த நோக்கமாகவும், துறவையே சிறந்த தவமாகவும் கருதுகிறோம். சூழ்நிலைகளால் மாற்றமடையாததும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் இருப்பதுமான ஆன்ம {ஆன்மா} அறிவின் உண்மை நோக்கத்தை நிச்சயமாக அறிந்தவன், எங்குச் செல்ல விரும்பினாலும், அங்கே செல்வதில் வென்று உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

கல்விமானும், அனைத்துப் பொருட்களின் வசிப்பிடத்தையும் ஒரே இடத்தில் காண்பவனும், அதன் கடுமையைக் காண்பவனும்,(16,17) பன்மையில் ஒருமையைக் காண்பவனுமான ஒருவன் பேரிடரில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் வெல்கிறான்[1]. எதையும் ஆசைப்படாதவனும், எந்தப் பொருளிலும் எனது என்ற கருத்தை வளர்க்காதவனுமான ஒருவன்,(18) இவ்வுலகில் வசித்தாலும், பிரம்மத்துடன் அடையாளங்காணப்படுபவனாகக் கருதப்படுவான். பிரதானத்தின் (அல்லது இயற்கையின்) குணங்களைக் குறித்த உண்மையை அறிந்தவனும், இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களின் படைப்பையும் அறிந்தவனும்,(19) எனது என்ற கருத்தை அமைத்துக் கொள்ளாதவனும், செருக்கற்றவனுமான ஒருவன், தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} நிச்சயம் வெல்வான்.வெளிப்படாததைத் தன் முளைப்பயிராகக் கொண்டதும், புத்தியைத் தன் தண்டாகக் கொண்டதும், உயர்ந்த சுய நினைவை {பெரிய அகங்காரத்தைத்} தன் கிளைகளாகக் கொண்டதும், உயிரணுவின் உணர்வுகளைத் தன் தளிர்களாகக் கொண்டதும், (ஐம்)பெரும்பூதங்களைத் தன் மலர் மொட்டுகளாகக் கொண்டதும், இலைகளுடன் கூடியவையும், மலர்களை எப்போதும் கொண்டவையுமான கொம்புகளாகத் திரள்கூறுகளைக் கொண்டதும், இருப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் சார்ந்திருப்பதும், பிரம்மத்தையே வித்தாகக் கொண்டதும், நித்தியமானதுமான பெரும் மரத்தை முறையாகப் புரிந்து கொண்டு அறிவெனும் கூரிய வாளால் அனைத்து தத்துவங்களையும் வெட்டுபவன், பிறப்பிறப்பைக் கைவிட்டு இறவாமையை அடைகிறான் {அமரனாகிறான்}.(20-23) சித்தர் கூட்டங்களால் நன்கறியப்பட்டவையும், தொலை சுழல்கள் {முந்திய கல்பத்தில் உள்ளவையும்}, உண்மையில் நித்தியமானவையும், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் முதலியவை தொடர்பானவையுமான தீர்மானங்கள், அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகியவற்றை,(24) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, நான் உனக்கு அறிவிக்கப் போகிறேன். இவை நல்லவை என்றழைக்கப்படுபவையாக அமைந்திருக்கின்றன. ஞானம் கொண்ட மனிதர்கள், இவ்வுலகில் அவற்றைப் புரிந்து கொண்டு வெற்றியை அடைகிறார்கள்.(25)

பழங்காலத்தில், பிருஹஸ்பதி, பரத்வாஜர், கௌதமர், பார்க்கவர், வசிஷ்டர், கசியபர், விஷ்வாமித்திரர் ஆகியோர் ஒருவரையொருவர் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஒன்றுகூடினர். அனைத்துப் பாதைகளிலும் பயணித்து, தாங்கள் செய்த செயல்களால் களைப்படைந்த பிறகு அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு ஒன்றுகூடினார்கள்.(26,27) அந்த மறுபிறப்பாளர்கள், தவசியின் மகனான அங்கிரஸைத் தங்கள் தலைமையில் கொண்டு பெரும்பாட்டனின் {பிரம்மனின்} உலகத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்திருந்த பிரம்மனைக் கண்டார்கள்.(28) சுகமாக வீற்றிருந்து அந்த உயர் ஆன்மாவிடம் தலைவணங்கிய அந்தப் பெரும் முனிவர்கள், பணிவுள்ளவர்களாக உயர்ந்த நன்மையெனக் கருதப்படக்கூடிய இந்த முக்கியமான கேள்விகளை அவனிடம் கேட்டார்கள்.(29)

{அவர்கள்}, “ஒரு நல்ல மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? பாவத்தில் இருந்து ஒருவன் எவ்வாறு விடுதலை அடைவான்? எங்களுக்கு மங்கலமான பாதைகள் எவை? வாய்மை எது? பாவம் எது?(30) எந்தச் செயல்பாட்டின் மூலம் வடக்கு {உத்தரம்}, தெற்கு {தக்ஷிணம்} எனும் இரு பாதைகள் {கர்மமார்க்கங்கள்} அடையப்படுகின்றன? அழிவு என்றால் என்ன? விடுதலை {முக்தி} என்றால் என்ன? இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களின் பிறப்பும், இறப்பும் என்னென்ன?” {என்று கேட்டனர்}.(31)

ஓ! சீடா, இவ்வாறு கேட்கப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} சாத்திரங்களுக்கு இணக்கமான வகையில் அவர்களிடம் என்ன சொன்னான் என்பதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். நீ கேட்பாயாக.(32)

பிரம்மன், “அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் வாய்மையில் இருந்து பிறக்கின்றன. அவை தவத்தின் (அல்லது செயல்பாட்டின்) மூலமே வாழ்கின்றன. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவர்களே, இதைப் புரிந்து கொள்வீராக. அவற்றினுடைய செயல்பாடுகளின் விளைவால், தங்கள் சொந்த மூலத்தைக் கடந்து அவை வாழ்கின்றன[2].(33) வாய்மையானது, குணங்களுடன் கலக்கும்போது, எப்போதும் ஐந்து குறியீடுகளுடன் கொண்டதாகிறது. வாய்மையே பிரம்மன், வாய்மையே தவம், வாய்மையே பிரஜாபதி.(34) வாய்மையிலிருந்தே அனைத்து உயிரினங்களும் உண்டாகின. வாய்மையே இருப்பிலுள்ள அண்டமாகும். இதன்காரணமாகவே, யோகத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களும், கோபம் மற்றும் கவலையைக் கடந்தவர்களும், (ஒவ்வொருவரும் கடக்க வேண்டியதும், கீழே உள்ளதுமான சதுப்புநிலத்தைத் தவிர்த்து அனைவரும் செல்ல வேண்டிய) பாலமாக அறத்தைக் கருதுபவர்களுமான பிராமணர்கள் வாய்மையைப் புகலிடமாக அடைகின்றனர். ஒருவரையொருவர் தடுப்பவர்களும், ஞானம் கொண்டவர்களுமான பிராமணர்களையும், வகைகளையும் {வர்ணங்களையும்}, நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சார்ந்தவர்களையும் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(35-37) அறம் அல்லது கடமை என்பது நான்கு கால்களைக் கொண்டிருந்தாலும் ஒன்றேயாகும். மறுபிறப்பாளர்களே, மங்கலமானதும், நன்மையை விளைவிக்கக்கூடியதுமான பாதையைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன்.(38)ஞானம் கொண்ட மனிதர்கள், பிரம்மத்தோடு அடையாளங் காணப்படும் நிலையை அடைவதற்காக இந்தப் பாதையிலேயே தொடர்ந்து நடக்கிறார்கள். உயர்ந்ததும், புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமானதுமான அந்தப் பாதையைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன்.(39) உயர்வாக அருளப்பட்டவர்களே, எது உயர்ந்த இருக்கையோ அதை முழுமையாகவும் விரிவாகவும் புரிந்து கொள்வீராக. பிரம்மச்சாரிகளின் தொடர்புடைய வாழ்வுமுறையே {ஆசிரமமே} முதற்படியாகச் சொல்லப்படுகிறது.(40) இல்லறம் இரண்டாம் படியாகும். அதன் பிறகு காட்டுவாசமாகும். அதன் பிறகு வருவது, அத்யாத்மா தொடர்பான உயர்ந்த படி என்று அறியப்பட வேண்டும்[3].(41) அத்யாத்மாவை அடையாதவரை {சந்நியாசம் பெற்று ஆத்மதரிசனம் உண்டாகாதவரை} ஒருவன் ஒளி, வெளி (அல்லது ஆகாயம்), சூரியன், காற்று {வாயு} ஆகியவற்றையும் இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரையும் பார்க்க முடியாது.(42)(அத்யாத்மாவை அடைவதற்குரிய) வழிமுறைகளை நான் அறிவிக்கப் போகிறேன். அவற்றை நீங்கள் முதலில் புரிந்து கொள்வீராக. கனிகள், கிழங்குகள் மற்றும் காற்றை உண்டு, காடுகளில் வசிக்கும் தவசிகளால் பின்பற்றப்படும் காட்டு வாழ்வுமுறையானது {வானப்ரஸ்தாஸ்ரமமானது}, மூன்று மறுபிறப்பாள வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்} விதிக்கப்பட்டிருக்கிறது. இல்லற வாழ்வுமுறை {கிருஹஸ்தாஸ்ரமம்} அனைத்து வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்} விதிக்கப்பட்டிருக்கிறது.(43,44) ஞானம் கொண்டவர்கள், அறம் அல்லது கடமையானது நம்பிக்கையையே {சிரத்தையையே} தன் (முக்கியக்) குறியீடாகக் கொண்டுள்ளது என்று சொல்கின்றனர். இவ்வாறே தேவர்களிடம் செல்ல வழிவகுக்கும் பாதைகளை நான் உங்களுக்கு அறிவித்துவிட்டேன். இந்தப் பாதைகள் பக்திக்கான பாலங்களாகும்.(45) இவற்றில் ஒரு வாழ்வுமுறையைத் தனியாகப் பின்பற்றுபவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான மனிதன், உயிரினங்கள் அனைத்தின் உற்பத்தி மற்றும் அழிவை காலத்தில் புரிந்து கொள்வதில் எப்போதும் வெல்கிறான்.(46)

நான் இப்போது, அனைத்துப் பொருட்களிலும் பகுதிகளாக வசிக்கும் பூதங்களைக் காரணங்களுடனும், துல்லியமாகவும் அறிவிக்கப் போகிறேன்.(47) பேரான்மா {மஹத்தத்வம்}, புலப்படாதது {அவ்யக்தம்}, அஹங்காரம் (அடையாள உணர்வு), (அறிவு மற்றும் செயல்) புலன்கள் {இந்திரியங்கள்} பதினொன்று, ஐம்பெரும்பூதங்கள்,(48) ஐம்பூதங்களின் {ஒலி முதலிய} குறிப்பிடத்தக்க பண்புகள் ஆகியவை நித்திய படைப்பாக அமைகின்றன. இந்த இருபத்துநான்கு தத்துவங்களும் (இன்னும்) ஒன்றும் சொல்லப்பட்டன.(49) இந்தத் தத்துவங்கள் அனைத்தின் உற்பத்தியையும், அழிவையும் புரிந்து கொள்ளும் ஞானம் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் மத்தியில் மனிதனாக இருப்பவனுமான அந்த மனிதன், ஒருபோதும் மாயை அடையமாட்டான்.(50) தத்துவங்களையும், குணங்கள் அனைத்தையும், தேவர்கள் அனைவரையும் துல்லியமாகப் புரிந்து கொள்பவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைவதில் வெல்கிறான். கட்டுகள் {பந்தங்கள்} அனைத்தில் இருந்தும் விடுபடும் அத்தகைய மனிதன், களங்கமற்ற தூய்மை கொண்ட உலகங்கள் அனைத்தையும் அனுபவிப்பதில் வெல்கிறான்” என்றான் {பிரம்மன்}.(51)

தமஸ்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 36-தமோ குணத்தைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “புலப்படாததும், தெளிவில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதும் {நீக்கமற நிறைந்திருப்பதும்}, எப்போதும் நீடித்திருப்பதும், மாற்றமில்லாததுமாக எது இருக்கிறதோ, அதைக் குணங்கள் மூன்றைக் கொண்டதும், உட்பொருட்கள் {பூதங்கள்} ஐந்தைக் கொண்டதும், இணைவாசல்கள் ஒன்பதைக் கொண்டதுமான நகரமாக (அல்லது மாளிகையாக) அறிய வேண்டும்.(1) இது (பொருட்களை) வேறுபடுத்திப் பார்க்கும் மனம் உள்ளிட்ட பதினொன்றால் சூழப்பட்டதாகவும், புத்தியை ஆட்சியாளனாகக் கொண்டதாகவும், பதினொன்றின் தொகையாகவும் இருக்கிறது[1].(2) அதில் உள்ள மூன்று குழாய்கள் {நாளங்கள்} தொடர்ந்து அஃதை ஆதரிக்கின்றன. இவையே மூன்று நாடிகளாகும். தொடர்ந்து இயங்கும் இவை தங்கள் சாரமாக மூன்று குணங்களைக் கொண்டுள்ளன.(3) இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்} மற்றும் நல்லியல்பு {சத்வம்} ஆகிய இவை (மூன்றே) குணங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. இவை ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன.(4) இவை ஒன்றிலொன்று புகலிடத்தைக் கொள்கின்றன. இவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன. மேலும் இவை ஒன்றோடொன்று கலந்து இருக்கின்றன. ஐந்து (அடிப்படை) பூதங்கள் (இந்த) முக்குணங்களால் வகைப்படுத்தப்படுகின்றன {தனிச்சிறப்படைகின்றன}.(5)நல்லியல்பு {நற்குணம்/சத்வம்} இருளுக்கு {கெட்ட குணத்திற்குப்/ தமஸுக்குப்} போட்டியாகும் {எதிராகும்}. நல்லியல்புக்குப் போட்டியாக இருப்பது ஆசை {ரஜஸ்} ஆகும். நல்லியல்பும் ஆசைக்குப் போட்டியாக இருக்கிறது. நல்லியல்புக்கு இருள் போட்டியாகவும் இருக்கிறது.(6) எங்கே இருள் {தமஸ்} கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே ஆசை {ரஜஸ்} பாயக் காணலாம். எங்கே ஆசை {ரஜஸ்} கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே நல்லியல்பு {சத்வம்} பாயக் காணலாம்.(7) இருளானது {கெட்ட குணமானது/ தமஸ் குணமானது}, இரவை (அல்லது தெளிவின்மையைத்) தன் சாரமாகக் கொண்டிருப்பதை அறிய வேண்டும். {மற்ற இரண்டு குணங்களுடன் சேர்ந்து} மூன்று தன்மைகளைக் கொண்டிருக்கும் இது {தமஸ் குணம்} மாயை {மோஹம்} என்று(ம்) அழைக்கப்படுகிறது. இஃது அநீதியை (அல்லது பாவத்தைத்) தன் குறியீடாகக் கொண்டு எப்போதும் பாவம் நிறைந்த செயல்களிலேயே இருக்கிறது. இதுவே இருளின் இயல்பாக இருக்கிறது, மேலும் இது {கெட்ட குணம்} மற்றவற்றில் {மற்ற இரண்டு குணங்களிலும்} அடைபட்டிருப்பதாகவும் காணப்படுகிறது.(8) ஆசையானது {ரஜஸ் குணமானது} செயல்பாட்டையே தன் சாரமாகக் கொண்டிருக்கிறது. இது வெற்றிகரமான செயல்களுக்குக் காரணமாக அமைகிறது. இது மேலோங்கியிருக்கும்போது உற்பத்தியையே தன் குறியீடாக அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் கொண்டிருக்கிறது.(9) காந்தி, எளிமை மற்றும் நம்பிக்கை ஆகியன அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் நல்லியல்பின் {சத்வ குணத்தின்} வடிவங்களாக, அஃதாவது ஒளியாக இருப்பதாக நல்லோர் அனைவரும் கருதுகின்றனர்.(10)

அவற்றின் {தமஸ் குணத்தின்} தன்மைகளுடைய உண்மையான இயல்பை நான் காரணங்களுடன் இப்போது அறிவிக்கப் போகிறேன். இவற்றைத் திரட்டாகவும், தனித்தனியாகவும் கூறலாம். நீங்கள் அவற்றைப் புரிந்து கொள்வீர்களாக.(11) முற்றான மாயை {மோஹம்}, அறியாமை {அஞ்ஞானம்}, ஈகையின்மை {ஈயாமை}, செயலில் தீர்மானமின்மை {கர்மங்களை நிச்சயிக்காமை}, உறக்கம் {நித்திரை}, அகந்தை {கர்வம்}, அச்சம் {பயம்}, பேராசை, துயரம் {சோகம்}, நற்செயல்களை நிந்தித்தல் {புண்ணியத்தைத் தூஷிப்பது},(12) நினைவிழப்பு {மறதி}, தீர்மானத்தை எட்டுவதில் முதிர்ச்சியின்மை {நல்ல புத்தியின்மை}, நம்பிக்கையின்மை {நாஸ்திகனாக இருப்பது}, ஒழுக்க விதிகள் அனைத்தையும் மீறுதல் {கெட்ட நடை}, பாகுபாட்டை விரும்புதல் {யுக்தாயுக்தங்களை [தகுதி மற்றும் தகுதியின்மைகளைத்] தெரிந்து கொள்ளாமை}, குருட்டுத்தன்மை {எல்லா இந்திரியங்களையும் உள்ளபடி அறியாமை}, தீய நடத்தை {தாழ்ந்த ஜாதியின் தொழில்களைச் செய்வது},(13) செயற்திறன் இல்லாத போதே பெருமையடித்தல் {செய்யப்படாததைச் செய்யப்பட்டதாக நினைப்பது}, அறியாமையில் அறிவின் அனுமானம் {அஜ்ஞானத்தை ஞானமாக நினைப்பது}, நட்பின்மை (அல்லது பகைமை), தீய மனோநிலை {கெட்ட அபிப்பிராயம்}, நம்பிக்கையின்மை {அஸ்ரத்தை}, மூடப்புத்தி,(14) கோணல்புத்தி {நேர்மையில்லாமை}, சேர்ந்திருக்க இயலாமை {நல்லறிவின்மை}, பாவம் நிறைந்த செயல்பாடு {பாபகார்யம்}, புத்தியில்லாமை {அறியாமை}, எழுச்சியின்மை {(சோம்பல் முதலியவற்றால்) ஒன்றும் செய்யாமலிருப்பது}, தளர்ச்சி {பக்தியில்லாமை}, தற்கட்டுப்பாட்டின்மை {இந்திரியங்களை ஜயிக்காமலிருப்பது}, சிறுமையடைதல் {தரமிழத்தல் / இழிவான காரியத்தில் ஆசை}(15) ஆகிய இந்தக் குணங்கள் இருளுக்கு {தமஸ் குணத்திற்குச்} சொந்தமானவையாக அறியப்படுகின்றன.

இவ்வுலக மாயையுடன் தொடர்புடைய பிற மனநிலைகள் அனைத்தும் இருளின் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவையே. எப்போதும் பிறரைத் தவறாகப் பேசுவது, தேவர்களையும், பிராமணர்களையும் நிந்திப்பது,(16,17) ஈகையின்மை, பகட்டு, எண்ணமயக்கம், கோபம், மன்னிக்கும் தன்மை இல்லாமை, அனைத்து உயிரினங்களிடமும் பகைமை ஆகியன இருளின் {தமஸ் குணத்தின்} இயல்புகளாகக் கருதப்படுகின்றன.(18) (வீணான தன்மை அல்லது பயனற்ற தன்மையின் விளைவால்) செய்யப்படும் தகுதியற்ற செயல்கள் எவையும், (கொடையாளியின் தகுதியின்மை, அகாலம், பொருளில் உரிமையின்மை ஆகியவற்றின் விளைவால்) கொடுக்கப்படும் கொடைகள் எவையும், வீணாக உண்பதும் இருள் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவையே.(19) அவதூறு செய்வதில் ஈடுபடுதல், மன்னிக்கும் தன்மையின்மை, பகைமை, பகட்டு, நம்பிக்கையின்மை ஆகியவையும் இருளின் {தமஸ் குணத்தின்} இயல்புகளாகச் சொல்லப்படுகின்றன.(20) இவ்வுலக மனிதர்களில், இவை மற்றும் இவை போன்ற குற்றங்களை இயல்பாகக் கொண்டவர்களும், (சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும்) தடைகளை உடைப்பவர்களுமாக இருப்பவர்கள் அனைவரும் இருள் குணம் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவர்களாக {தாமஸர்களாகக்} கருதப்படுகிறார்கள்.(21)

எப்போதும் பாவம் நிறைந்த செயல்களையே செய்யும் இம்மனிதர்கள் பிறக்கும் கருவறைகளை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். {திர்யக் என்னும்} நரகத்திற்குச் செல்ல விதிக்கப்பட்ட அவர்கள் அந்த வகையிலேயே மூழ்குகிறார்கள். உண்மையில் அவர்கள் காட்டுமிராண்டி படைப்புகளாகப் (பிறக்கும்) நரகத்தில் மூழ்குகிறார்கள்.(22) அவர்கள் அசைவற்ற {உயிரூட்டமற்ற} பொருட்களாகவோ, விலங்குகளாகவோ, சுமை சுமக்கும் விலங்குகளாகவோ, ஊனுண்ணும் உயிரனங்களாகவோ, பாம்புகளாகவோ, புழுக்கள், பூச்சிகள் மற்றும் பறவைகளாகவோ;(23) முட்டையிடும் வகையைச் சேர்ந்த உயிரினங்களாகவோ, நான்கு கால்களைக் கொண்ட பல்வேறு உயிரினங்களாகவோ, மனிதர்களில் கிறுக்கர்களாகவோ, செவிடர்களாகவோ, ஊமைகளாகவோ, பயங்க நோய்களால் பீடிக்கப்பட்ட மனிதர்களாகவோ, தூய்மையற்றவர்களாகவோ ஆகிறார்கள்.(24) தீய நடத்தை கொண்ட இம்மனிதர்கள் எப்போதும் தங்கள் செயல்களின் குறியீடுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருளில் மூழ்குகிறார்கள். அவர்கள் எப்போதும் கீழ்நோக்கிய போக்கு கொண்டவர்களாக (கீழ்நோக்கி இடம் பெயர்பவர்களாக) இருக்கிறார்கள். இருளின் குணம் {தமஸ் குணம்} தொடர்புடைய இவர்கள் இருளில் மூழ்குகிறார்கள் {இவர்கள் அவாக்ஸ்ரோதஸுகள் [இழிவான கதியை அடைவதற்கேற்ற சித்த விருத்தியுள்ளவர்கள்] என்று சொல்லப்படுகின்றனர்}.(25)

அவர்கள் முன்னேற்றத்திற்கும், மேன்மையடைவதற்கும் உரிய வழிமுறைகளையும், உண்மையில் அவர்கள் அவர்கள் அடையும் வழிமுறைகளையும் இப்போது நான் சொல்லப் போகிறேன்.(26) மனித வகையன்றி வேறு வகையில் பிறவி எடுக்கும் மனிதர்கள், கடமைகளில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்களின் அறச் சடங்களை நோக்கமாகக் கொண்டு வளர்ந்து, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்ய விரும்பி,(27) அத்தகைய தூய்மைச் சடங்குகளின் துணை மூலம் மேல்நோக்கி உயர்வதில் வெல்கிறார்கள். உண்மையில், (தங்களை மேம்படுத்திக் கொள்ளப்) போராடும் அவர்கள் இறுதியாகப் பக்திமான்களான இந்தப் பிராமணர்கள் அடையும் அதே உலகங்களை அடைகிறார்கள். உண்மையில், அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள். இதுவே வேதத்தில் உள்ள திறனாய்வாகும்.(28) மனித வகையன்றி வேறு வகையில் பிறவி எடுப்பவர்கள், தங்கள் தங்கள் செயல்களுக்கேற்ப வளர்ந்து முதிர்ந்து, இறுதியில் அவ்வாறே மனிதப் பிறவியையும் அடைகிறார்கள்.(29) பாவம் நிறைந்த பிறவிகளாகச் சண்டாளர்களாகவோ, செவிடர்களாகவோ, குருடர்களாகவோ பிறக்கும் அவர்கள், இவ்வுலகின் போக்கில் இடம்பெயர்ந்து, சரியான முறையில் அடுத்தடுத்து உயர்ந்த சாதிகளை அடைந்து, சூத்திர வகையைக் கடந்து, இருள் {தமஸ் குணம்} தொடர்பான குணங்களின் விளைவுகளைக் கடக்கிறார்கள்.(30,31)

ஆசைக்குரிய பொருட்களில் பற்றுக் கொள்வது பெரும் மாயையெனக் கருதப்படுகிறது. தவசிகள் {வேத மந்திரங்களைக் கண்டவர்கள்; சிறந்த ஞானமுள்ளவர்கள்}, முனிவர்கள் {மனனம் செய்பவர்கள், இன்பதுன்பங்களில் கலக்கமடையாதவர்கள்}, தேவர்கள் ஆகியோரும் இம்மையில் இன்பத்தை விரும்பி மயக்கமடைகின்றனர்.(32) இருள், மாயை, பெரும் மாயை, கோபம் மற்றும் மரணம் என்றழைக்கப்படும் பெருங்குழப்பமான {தாமிஸ்ரம் மற்றும் அந்ததாமிஸ்ரம்} குருடாக்கும் தெளிவின்மை (ஆகிய இவையே ஐந்து பெருந்துன்பங்களாகும்). கோபமே பெரும் தெளிவின்மையாகும் (சில வேளைகளில் இந்தப் பட்டியலில் சேரும் பகைமையோ, வெற்றோ அல்ல).(33) கல்விமான்களான பிராமணர்களே, இருளின் (தமஸ் குணத்தின்) நிறம் (இயல்பு), தன்மை, தோற்றம் ஆகியவற்றைப் பொருத்தவரையில், அனைத்தையும் முறையான வரிசையில் மிகச் சரியாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.(34) இஃதை உண்மையில் புரிந்து கொள்பவன் யார்? இஃதை உண்மையில் காண்பவன் யார்? உண்மையில் இல்லாததை உண்மையாகக் காண்பதே, இருளின் {தமஸ் குணத்தின்} உண்மையான தன்மையாகும்.(35) இருளின் குணங்கள் பல்வேறு வகைகளில் உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இருளின் உயர்ந்த மற்றும் இழிந்த வடிவங்களை முறையாக என்னால் உங்களுக்கு விளக்கப்பட்டது. இங்கே குறிப்பிடப்பட்ட குணங்களை எப்போதும் மனத்தில் தாங்கும் மனிதன், இருள் தொடர்புடைய தன்மைகள் அனைத்தில் இருந்தும் நிச்சயம் விடுபடுவதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்}.(36)

ரஜஸ்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 37-ரஜோ குணத்தைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “இருப்பவற்றுள் சிறந்தவர்களே {பிராமணர்களே}, இப்போது ஆசை (குணம்) குறித்து {ரஜோ குணத்தை} உங்களுக்கு மிகச் சரியாக அறிவிக்கப் போகிறேன். உயர்வாக அருளப்பட்டவர்களே, ஆசை தொடர்புடைய குணங்கள் எவை என்பதைப் புரிந்து கொள்வீராக.(1)

(பிறருக்குத்) தீங்கிழைத்தல் {ஸந்தாபம்}, அழகு {ரூபம்}, உழைப்பு {ஸ்ரமம்}, இன்பம் {ஸுகம்} மற்றும் துன்பம் {துக்கம்}, குளிர் மற்றும் வெப்பம், தலைமை (அல்லது அதிகாரம்) {ஐஸ்வர்யம்}, போர் {சண்டை}, அமைதி, வாதம், நிறைவின்மை {வெறுப்பு}, நீடிக்குந்திறன் {பொறுமை},(2) வலிமை {பலம்}, வீரம் {சௌர்யம்}, செருக்கு {மதம்}, கோபம், முயற்சி {அலைதல்}, சச்சரவு (அல்லது மோதல்) {கலகம்}, பொறாமை, ஆசை, வன்மம் {கோள் சொல்வது}, போர் {யுத்தம்}, எனதென்ற உணர்வு அல்லது மமதை, (பிறரைப்) பாதுகாப்பது {ரக்ஷிப்பது},(3) கொலை, கட்டுதல், பீடித்தல், வாங்கல் மற்றும் விற்றல், வெட்டுதல், மற்றொருவன் அணிந்திருக்கும் கவசத்தைப் பிளத்தல்,(4) கடுமை {உக்ரம்}, கொடூரம் {பயங்கரம்}, நிந்தித்தல் {உரக்கப் பேசுதல்}, பிறர் குற்றங்களைச் சுட்டிக் காட்டல் {பிறனுடைய தனத்தில் ஆசைப்படுவது}, உலகம் சார்ந்த காரியங்களில் முற்றான அர்ப்பணிப்புள்ள எண்ணங்கள் {லோகத்தைப் பற்றின கவலை}, கவலை {தொடர்ச்சியான கவலை}, பகைமை {மாத்ஸர்யம்}, பிறரை நிந்தித்தல் {அவமதித்துப் பேசுவது}, போலிப் பேச்சு {பொய் சொல்வது}, போலியான அல்லது வீணான கொடைகள் {பொய்யான கொடை}, தயக்கம் மற்றும் ஐயம், பேச்சில் தற்பெருமை {விபரீதப் பேச்சு}, புகழ் {ஸ்தோத்திரம் செய்வது} மற்றும் இகழ் {நிந்திப்பது}, போற்றுதல் {கொண்டாதுவது}, ஆற்றல் {ப்ரதாபம்}, எதிர்ப்பு {பரிசர்யை},(5,6) (நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்களைக்) கவனித்தல் {சுஸ்ரூஷை, அதட்டல்}, (ஆசான்கள் மற்றும் பெற்றோரின் ஆணைகளுக்குக்) கீழ்ப்படிதல் {அடுப்பது}, தொண்டு {ஸேவை} அல்லது இக்கட்டில் உதவி, ஆசை அல்லது தாகத்தை வளர்த்தல், புத்திசாலித்தனம் அல்லது திறமையான நடத்தை {வியவஹாரத்தில் திறமை}, கொள்கை {நீதி பேசுவது}, கவனமின்மை {தவறுதல்}, தரக்குறைவாக நடத்தல் {அபவாதம் சொல்வது}, உடைமைகள் {எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது},(7) மனிதர்கள், பெண்கள், விலங்குகள், உயிரற்ற பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு மத்தியில் நீடித்திருக்கும் பல்வேறு வகையான அலங்காரங்கள்,(8) துயரம் {மனவருத்தம்}, நம்பிக்கையின்மை, நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் {நியமங்கள்}, (நல்விளைவுகளை) எதிர்பார்க்கும் செயல்பாடுகள், பொதுத் தொண்டுக்குரிய பல்வேறு செயல்கள்,(9) ஸ்வாஹாவைப் பொறுத்தவரையில் உள்ள சடங்குகள் {ஸ்வாஹாகாரம்}, வணக்கம் {நமஸ்காரம்}, ஸ்வதா மற்றும் வஷட் சடங்குகள் {ஸ்வதாகாரம், வஷட்காரம்}, பிறரின் வேள்விகளை நடத்தித் தருதல் {யாகம் செய்விப்பது}, கல்வி போதித்தல் {ஓதுவித்தல்}, வேள்விகளைச் செய்தல் {யாகம் செய்தல்}, கல்வி {அத்யயனம் செய்வது},(10) கொடையளித்தல் {கொடுப்பது}, கொடையேற்றல் {வாங்குவது}, பரிகாரச் சடங்குகள் {பிராயச்சித்தங்கள்}, மங்கலச் செயல்கள் {மங்களமான காரியம்}, இதையும், அதையும் வேண்டி விரும்புதல், எதற்காகவோ, யாருக்காகவோ உணரப்படும் நோக்கத்தின் தகுதிகளில் உண்டாகும் அன்பு {ஸ்நேகம்},(11) துரோகம் ,வஞ்சனை {கபடம்}, மதிப்பு மற்றும் மதிப்பின்மை, களவு {திருட்டு}, கொலை {ஹிம்ஸை}, மறைக்கும் ஆசை {அருவருப்பு}, சோர்வு {மனவருத்தம்}, விழிப்புணர்வு,(12) பகட்டுத்தோற்றம் {டம்பம்}, அகந்தை {கர்வம்}, பற்று {ஆசை}, அர்ப்பணிப்பு {பக்தி}, மனநிறைவு {திருப்தி}, மகிழ்ச்சி {மிகுந்தஸந்தோஷம்}, சூதாட்டம், மரபுநயக்கேடு {ஜனங்களைப் பற்றிய பேச்சு}, பெண்களில் இருந்து எழும் உறவுகள் {ஸம்பந்தங்கள்}அனைத்தும், ஆடல் {நர்த்தனம்}, கருவியிசை {வாத்தியம்} மற்றும் பாடல்களில் {கானம்} பற்று {அனுபவித்தல்} ஆகிய இந்தக் குணங்கள் அனைத்தும் ஆசைக்குரியவை {ரஜோகுணத்திற்குரியவை} என்று சொல்லப்படுகின்றன.(13,14)

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைத் தியானிப்பவர்களும், அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற முத்தொகையில் {புருஷார்த்தங்களில்} அர்ப்பணிப்புள்ளவர்களும்,(15) ஆசையின் தூண்டுதலால் செயல்பட்டு, ஒவ்வொரு ஆசையின் பொருட்டும் செல்வத்தை அடைவதில் களிப்படைபவர்களுமான மனிதர்கள், ஆசையால் {ரஜோகுணத்தால்} சூழப்பட்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இம்மனிதர்கள் கீழ்நோக்கிய போக்கைக் கொண்டவர்களாவர் {அர்வாக்ஸ்ரோதஸுகள்}.(16) மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் இவர்கள், இன்பத்திற்கு வசப்பட்டவர்களாகிறார்கள். இம்மைக்கு உரியவற்றிலும், மறுமைக்குரிய கனிகளிலும் இவர்கள் ஆசை கொள்கிறார்கள். இவர்கள் கொடை அளிப்பவர்களாகவும், கொடைகளை ஏற்பவர்களாகவும், பித்ருக்களுக்குக் காணிக்கைகளை அளித்து, வேள்வித்தீயில் ஆகுதிகளை ஊற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.(17) ஆசை குணங்களின் வகைகள் உங்களுக்கு (இவ்வாறே) அறிவிக்கப்பட்டன. அது {ரஜோ குணம்} வழிவகுக்கும் ஒழுக்க நடைமுறைகளும் உங்களுக்கு முறையாக விளக்கப்பட்டன. இந்தக் குணங்களை எப்போதும் புரிந்து கொள்ளும் மனிதன், ஆசை {ரஜோ குணம்} தொடர்புடைய இவை அனைத்தில் {ராஜஸமான எல்லாக் குணங்களில்} இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்வதில் வெல்கிறான்” என்றான் {பிரம்மன்}.(18)

ஸத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 38

பிரம்மன், “இனி, (நமது பட்டியலின்படி) மூன்றாவதாக வரும் சிறந்த குணத்தை {ஸத்வ குணத்தை} உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அஃது, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதாகவும், குற்றமற்றதாகவும், நல்லோரின் ஒழுக்கமாகவும் அமைந்திருக்கிறது.(1)

இன்பம் {ஆனந்தம்}, நிறைவு {பிரீதி}, மேதகைமை {மேன்மை}, அறிவொளி {பிரகாசித்தல்}, மகிழ்ச்சி {ஸுகம்}, கஞ்சத்தனமின்மை (அல்லது ஈகை) {தைன்யமில்லாதிருத்தல்}, அச்சமின்மை {பயமில்லாதிருத்தல்}, மனநிறைவு {ஸந்தோஷம்}, நம்பிக்கை கொண்ட மனநிலை {ஸ்ரத்தை},(2) மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துணிவு {தைரியம்}, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமை {அஹிம்ஸை}, சமத்துவம், வாய்மை, நேர்மை, கோபமின்மை, வன்மமின்மை {அஸூயையின்மை}, தூய்மை {சுத்தி}, புத்திக்கூர்மை {ஸாமர்த்தியம்}, ஆற்றல் {பாரக்ரமம்} (ஆகியவை நல்லியல்பின் குணம் தொடர்புடையனவாகும்).(3)

யோகக்கடமையில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், அறிவு {ஞானம்}, ஒழுக்கம் {கர்மம்}, தொண்டு {ஸேவை} ஆகியவற்றை வீணெனக் கருதி, மறுமையில் உயர்ந்ததை அடைகிறான்.(4) எனதென்ற கருத்தில் இருந்து விடுதலை, நானென்ற கருத்தில் இருந்து விடுதல், எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதல், அனைத்தையும் சம கண்ணில் பார்த்தல், ஆசையில் இருந்து விடுதலை ஆகிய இவையே நல்லோரின் நித்திய அறமாக {ஸனாதன தர்மமாக} அமைகின்றன.(5)

தன்னம்பிக்கை {நம்பிக்கை}, அடக்கம் {வெட்கம்}, மன்னிக்கும்தன்மை {பொறுமை}, துறவு {ஈதல்}, தூய்மை {சுத்தி}, சோம்பலின்மை, கொடூரமின்மை, மயக்கமின்மை {மோகமின்மை}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, இழித்துக் கூறும் மனமின்மை {கோள் சொல்லாமை},(6) மகிழ்ச்சி {ஸந்தோஷம்}, நிறைவு {திருப்தி}, பேர் உவகை {கர்வமின்மை}, பணிவு {வணக்கம்}, நன்னடத்தை {நல்ல கார்யத்தைச் செய்வது}, அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட செயல்கள் அனைத்திலும் தூய்மை {மோக்ஷத்திற்குரிய கர்மத்தைக் கபடமின்றிச் செய்தல்}, நேர்மையான புத்தி {சுத்தசித்தனாக இருத்தல்}, (பற்றுகளிலிருந்து) விடுதலை),(7) கருத்தின்மை {உதாஸீனனாக இருப்பது}, பிரம்மச்சரியம், முழுமையான துறவு {எல்லா ஆசைகளையும் விடுவது}, எனதென்ற கருத்தில் இருந்து விடுதலை {மமதையில்லாமை}, எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை {விரும்பாமை}, தொடர்ந்து நீதியைக் கடைப்பிடித்தல் {தர்மங்கெடாமல் இருப்பது},(8) கொடைகள் {தானம்}, வேள்விகள் {யாகம்}, கல்வி {அத்யயனம்}, நோன்புகள் {விரதம்}, கொடையேற்பு {பிரதிக்ரஹம்}, கடமைகளை நோற்றல், தவங்கள் ஆகியன வீணென்ற நம்பிக்கை,(9) என்ற இந்தக் குணங்களை ஒழுக்கமாகக் கொண்டவர்களும், நீதியைப் பின்பற்றுபவர்களும், வேதங்களுக்கு இணக்கமாக இருப்பவர்களுமான பிராமணர்கள், ஞானிகள் என்றும், சரியான பார்வை கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.(10)

பாவங்கள் அனைத்தையும் கைவிட்டு, துன்பத்தில் இருந்து விடுதலையடைந்தவர்களும், ஞானம் கொண்டவர்களுமான அம்மனிதர்கள், சொர்க்கத்தை அடைந்து, (தங்களுக்கென) பல்வேறு உடல்களைப் படைக்கிறார்கள்.(11)

சொர்க்கத்தில் வசிக்கும் தேவர்களைப் போலவே, இந்த உயர் ஆன்மாக்களும் தங்கள் மனத்தின் இயக்கத்தால் {ஈசித்வத்தால்} அனைத்தையும் ஆளும் சக்தி {வசித்வம்}, தற்கட்டுப்பாடு {லகுத்வம்}, நுட்பம் {அணுத்வம்} ஆகியவற்றை அடைகிறார்கள்.(12) இத்தகைய மனிதர்கள் மேல்நோக்கிய போக்கு கொண்டவர்களாக {ஊர்த்வஸ்ரோதஸுகளாகச்} சொல்லப்படுகிறார்கள். இவர்கள் அனைத்தையும் மாற்றியமைக்கவல்ல மெய்யான தேவர்களாக {வைகாரி தேவர்களாக} இருக்கிறார்கள். சொர்க்கத்தை அடையும் அவர்கள், தங்கள் இயல்பின்படியே அனைத்துப் பொருட்களையும் மாற்றி அமைக்கின்றனர்.(13) அவர்கள், தாங்கள் விரும்பும் பொருட்களை அடைந்து அவற்றை அனுபவிக்கின்றனர். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இவ்வாறே நான் நல்லியல்பின் {சத்வ} குணம் தொடர்புடைய ஒழுக்கத்தை உங்களுக்கு விளக்கிச் சொன்னேன். இவற்றை முறையாகப் புரிந்து கொள்ளும் ஒருவன் தான் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவான்.(14) நல்லியல்பு தொடர்பான குணங்களே குறிப்பாக அறிவிக்கப்பட்டன. அந்தக் குணங்களைக் கொண்ட ஒழுக்கமும் முறையாக நிறுவப்பட்டது. எந்த மனிதன் இந்தக் குணங்களை எப்போதும் புரிந்து கொள்வானோ, அவன் இந்தக் குணங்களில் பற்று கொள்ளாமலே இவற்றை அனுபவிப்பதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்}.(15)

முக்குணம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 39-முக்குணங்களைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “குணங்கள் அனைத்தையும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக அறிவிக்க இயலாது. ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} மற்றும் இருள் {தமஸ் குணங்கள்} ஒன்று கலந்த நிலையிலேயே காணப்படுகின்றன.(1) அவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. அவை ஒன்றையொன்று தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன. அதே போல அவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.(2) நல்லியல்பு {சத்வம்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது. இதில் ஐயமேதும் இல்லை. இருளும் {தமஸும்}, நல்லியல்பும் {சத்வமும்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது.(3) அவை ஒன்றாக இணைந்தும், கூட்டாக நகர்ந்தும் தங்கள் பயணத்தைச் செய்கின்றன. உண்மையில் காரணத்தோடோ, காரணமில்லாமலோ செயல்படும்போது அவரை ஒரே அமைப்பாகவே செயல்படுகின்றன.(4)

வளர்ச்சியில் எவ்வளவு வேறுபட்டாலும் ஒன்றோடொன்று சேர்ந்து செயல்படும் இவை அனைத்தும் பெருகும் வகையையும், குறையும் வகையையும் இப்போது அறிவிக்கப் போகிறேன்.(5) எங்கே (எடுத்துக்காட்டாக) தாழ்ந்த உயிரினங்களில் அதிக அளவில் இருள் {தமஸ்} இருக்கிறதோ, அங்கே ஆசை {ரஜஸ்} குறைவான அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறது.(6) எங்கே நடுநிலை உயிரினங்களில் அதிக அளவில் ஆசை {ரஜஸ்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} சிறிய அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடச் சிறிய அளவிலும் இருக்கிறது.(7) எங்கே மேல்நோக்கான போக்குக் கொண்ட உயிரினங்களில் அதிக அளவில் நல்லியல்பு {சத்வம்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} குறைந்த அளவிலும், ஆசை {ரஜஸ்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறதென அறியப்பட வேண்டும்.(8)

நல்லியல்பானது {சத்வம் என்பது} புலன்களில் மாற்றங்களை விளைவிக்கும் ஊற்றாகும். மேலும் அதுவே சிறந்த அறிவொளியாகவும் இருக்கிறது. நல்லியல்பைவிட உயர்ந்த கடமை வேறேதும் விதிக்கப்படவில்லை.(9) நல்லியல்பில் {சத்வத்தில்} நிலைத்திருப்பவர்கள் மேல்நோக்கிச் செல்கிறார்கள். ஆசையில் {ரஜஸில்} நிலைத்திருப்பவர்கள் நடுவில் இருக்கிறார்கள். இருளில் {தமஸில்} நிலைத்திருப்பவர்கள், தாழ்ந்த குணங்களால் வகைப்படுத்தப்பட்டுக் கீழ்நோக்கி மூழ்குவார்கள்.(10) இருள் {தமஸ்} சூத்திரனில் நிகழ்கிறது; ஆசை {ரஜஸ்} க்ஷத்திரியனிலும், உயர்ந்ததாக இருக்கும் நல்லியல்பு {சத்வம்} பிராமணனிலும் நிகழ்கின்றன. இவ்வாறே மூன்று குணங்களும் மூன்று வகைகளிலும் {வர்ணங்களிலும்} இருக்கின்றன.(11) தொலைவில் இருந்து கண்டாலும், இருள், நல்லியல்பு மற்றும் ஆசை என்ற குணங்கள் மூன்றும் கலந்த நிலையிலும், கூட்டாகவும் காணப்படுகின்றன. அவை ஒருபோதும் தனியான நிலையில் காணப்படுவதில்லை[1].(12)தீச்செயல் செய்யும் மனிதர்கள், சூரியன் எழுவதைக் கண்டு அச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் வழியில் வெப்பத்தால் பீடிக்கப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.(13) சூரியன் நல்லியல்பில் வளர்ந்தது; தீச்செயல் புரியும் மனிதர்கள் இருளை {தமஸைக்} குறிக்கின்றனர்; பயணிகள் தங்கள் வழியில் உணரும் வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் என்று சொல்லப்படுகிறது.(14) ஒளியைக் குறிக்கும் சூரியன் நல்லியல்பாகும் {ஸத்வமாகும்}; வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் கொண்டதாகும்; பர்வன் நாட்களில் சூரியன் மறைவது (அல்லது கிரஹணம்} இருளை {தமஸைக்} குறிக்கும் என்று அறியப்பட வேண்டும்.(15) இவ்வாறே இந்த முக்குணங்களும் ஒளியுடல்கள் அனைத்திலும் இருக்கின்றன. அவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வழிகளில் மீண்டும் மீண்டும் செயல்படுகின்றன.(16)

அசைவில்லா பொருட்களின் மத்தியில் இருள் {தமஸ்} குணம் அதிக அளவில் இருக்கிறது. ஆசை {ரஜஸ்} தொடர்புடைய குணங்கள், தொடர் மாற்றங்களுக்கு உட்படும் {அழகு, உறைப்பு, புளிப்பு உள்ளிட்ட} குணங்களாக அவற்றில் {அந்த அசைவற்ற பொருட்களில்} இருக்கின்றன. அவற்றின் எண்ணெய் தன்மையுள்ள குணங்கள், நல்லியல்பின் {சத்வத்தின்} தொடர்புடையனவாகும்[2].(17) பகலை மூன்று வகையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரவு மூன்று வகையாக இருக்குமாறே விதிக்கப்பட்டிருக்கிறது. பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, மாதங்கள், வருடங்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்}, ஸந்திகள்[3] ஆகியவையும் மூன்று வகையாக அறியத்தக்கவையே.(18) கொடுக்கப்படும் கொடைகள் மூன்று வகையாகும். அவற்றில் உண்டாகும் வேள்விகள் மூன்று வகையாகும். உலகங்கள் மூன்று வகையாகும்; தேவர்கள் மூன்று வகையாவர்; ஞானம் மூன்று வகையாகும்; பாதை அல்லது கதியும் மூன்று வகையாகும்.(19) கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், அறம், பொருள், இன்பம், பிராணன், அபானன், உதானன் ஆகியவையும் முக்குணங்களால் நிறைந்தவையே.(20)இவ்வுலகில் உள்ள எந்தப் பொருளிலும், அதில் உள்ள அனைத்திலும் முக்குணங்கள் நிறைந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் இந்த முக்குணங்களும் மாறி மாறி செயல்படுகின்றன.(21) உண்மையில், இந்த முக்குணங்களும் வெளிப்படாத ஒரு வடிவத்திலேயே எப்போதும் செயல்படுகின்றன. நல்லியல்பு {ஸத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் மூன்றின் படைப்பும் நித்தியமானவையே.(22) முக்குணங்களையும் உள்ளடக்கிய புலப்படாதது {அவ்யக்தமானது}, இருள் {தமஸ்}, காணப்படாதது {அவ்யக்தம்}, புனிதமானது {சிவம்}, நிலையானது {தாம்}, பிறப்பற்றது {ரஜஸ்}, கருவறை {யோனி}, நித்தியமானது {ஸநாதனம்}, இயற்கை {பிரகிருதி}, மாற்றம் அல்லது திருத்தம் {விகாரம்}, அழிவு {பிரளயம்}, பிரதானம், உற்பத்தி {பிரபவம்} மற்றும் ஈர்த்தல் {அப்யயம்}, வளர்ச்சியின்மை {அனுத்ரிக்தம்}, சிறிதல்லாதது (அதாவது பெரியது) {அநூனம்}, கலக்கமற்றது {அகம்பம்}, அசையாதது {அசலம்}, நிலையானது {த்ருவம்}, இருப்பில் உள்ளது {ஸத்}, இருப்பற்றது {அஸத்} என்று சொல்லப்படுகிறது.(23,24)

ஆன்மா தொடர்புடைய காரியங்களைத் தியானிப்போரால் இந்தப் பெயர்கள் அறியப்பட வேண்டும்.(25) புலப்படாததன் {அவ்யக்தத்தின்} பெயர்கள் அனைத்தையும், குணங்களையும், (அந்தக் குணங்களின்) தூய இயக்கங்களையும் {கதிகளையும்} மிகச் சரியாக அறிந்தவனும், பிரிவுகள் அனைத்தின் உண்மைகளையும் நன்கறிந்தவனும், உடலில் இருந்து விடுபட்டவனுமான {தேஹாபிமானம் விலகியவனுமான} மனிதன், குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு {கெடுதியற்றவனாகி} முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்” என்றான் {பிரம்மன்}.(23)

மஹத்தத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 40- மஹத்தத்வம் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், ” புலப்படாததிலிருந்து முதலில் பெரும் நுண்ணறிவைக் கொண்டதும், அனைத்துக் குணங்களின் ஊற்றுக்கண்ணுமான பேரான்மாவானது {மஹத்தத்வம்} உண்டானது. அதுவே முதல் படைப்பென்று சொல்லப்படுகிறது.(1) அந்தப் பேரான்மாவானது {மஹத்தத்வமானது}, பேரான்மா, மதி, விஷ்ணு, ஜிஷ்ணு, பெரும் வீரமிக்கச் சம்பு {சம்பு, வீர்யவான்}, புத்தி, ஞானமடைவதற்கான வழிமுறைகள் {பிரஜ்ஞை}, உணர்வதற்கான வழிமுறைகள் {உபலப்தி}, புகழ் {கியாதி}, துணிவு {த்ருதி}, நினைவு {ஸ்ம்ருதி} என்று ஒத்த சொற்களால் {ஒரே பொருளுள்ள பல சொற்களால்} குறிப்பிடப்படுகிறது. கல்விமானான ஒரு பிராமணன் இஃதை அறிந்து கொண்டு ஒருபோதும் மாயையால் தாக்கப்படாமல் இருக்க வேண்டும்.(2,3)

அஃது அனைத்துப் பக்கங்களிலும் கைகளையும், கால்களையும் கொண்டுள்ளது. அனைத்துப் பக்கங்களிலும் அது காதுகளைக் கொண்டுள்ளது. அண்டத்தில் உள்ள அனைத்திலும் அது படர்ந்தூடுருவி இருக்கிறது.(4) பெருஞ்சக்தி கொண்ட அஃது அனைத்தின் இதயத்திலும் நிலைத்திருக்கிறது. நுட்பமடைதல் {அணிமா / உடலைப் பஞ்சினும் ஒப்பதாக மாற்றிப் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் மறைதல்}, அதிக எடையற்றத் தன்மையடைதல் {லகிமா / கனமற்றதாகும் ஆற்றல்}, செல்வாக்கு {பிராப்தி / மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடையப் பெறுதல் / காலநிலைகளை மாறச் செய்தல்} ஆகியவை அதனுடையவையே. அஃது அனைத்திற்கும் தலைவனாகவும் {ஈசானனாகவும்}, பிரகாசத்தோடு அடையாளம் காணப்படுவதாகவும் {ஜோதியாகவும்}, சிதைவை அறியாததாகவும் {அழிவற்றதாகவும்} இருக்கிறது.(5)

புத்தியின் இயல்பைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும், நல்லியல்பின் மனநிலையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அனைவரும், தியானம் பயிலும் அனைவரும், எப்போதும் யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வாய்மையில் உறுதியாக இருப்பவர்களும், புலன்களை அடக்கியவர்களும், ஞானம் கொண்டவர்களும், பேராசையில் இருந்து விடுபட்டவர்கள், கோபத்தை வென்றவர்கள், உற்சாகம் நிறைந்த இதயங்களைக் கொண்டவர்கள், ஞானம் கொண்டவர்கள், எனது என்ற கருத்துகளில் இருந்து விடுபட்டவர்கள், அகந்தையற்றவர்கள் ஆகியோர் அதனையே அடைகின்றனர்.(6,7)

அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்ட இவர்கள் அனைவரும் மேன்மையான {மகத்துவ} நிலையை அடைகிறார்கள். புனிதமானதாகவும், உயர்ந்த இலக்காகவும் இருக்கும் பேரான்மாவை {மகத்தத்வத்தைப்} புரிந்து கொள்ளும் மனிதன், மாயையிலிருந்து விடுபட்டவனாகிறான்.(8) சுயம்புவான விஷ்ணு முதன்மையான படைப்புகளின் தலைவனாகிறான். {இதயக்} குகையில் கிடப்பவனும், பரமனும் {மேலானவன்}, புராதனனும் {புராணபுருஷனும்}, அண்ட வடிவம் கொண்டவனும் {விஷ்வரூபனும்}, பொன்னார்மேனியனும் {ஸுவர்ணமயனும்}, புத்தியுடன் கூடிய மனிதர்கள் அனைவரின் உயர்ந்த இலக்காக {புத்திமான்களின் சிறந்த கதியாக} இருப்பவனுமான அந்தத் தலைவனை {பிரபுவை} இவ்வாறு அறியும் புத்தியுள்ள மனிதன், புத்தியைக் கடந்தவனாக வாழ்கிறான்” என்றான் {பிரம்மன்}.(9)

அஹங்காரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 41-அஹங்காரம் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன்“முதலில் உண்டான அந்த மஹத் {நான் என்று உண்டானதால்) அஹங்காரம் என்றழைக்கப்படுகிறது. நான் என்று அஃது எழுந்தபோது, அஃது இரண்டாம் படைப்பென்று {ஸிருஷ்டி என்று}அழைக்கப்படலாயிற்று.(1)

அந்த அகங்காரத்தின் மாறுதல்களில் இருந்தே உயிரினங்கள் அனைத்தும் உண்டானதால், அதுவே {அஹங்காரமே} அவற்றின் {அந்த உயிரினங்களின்} பிறப்பிடம் {பூதாதி வைகாரிகன்} என்று சொல்லப்படுகிறது. அது தூய ஒளியாகவும் {தைஜஸனனாகவும்}, நனவுநிலையை ஆதரிப்பதாகவும் {சேதனனாகவும்} இருக்கிறது. அதுவே பிரஜாபதியாகும்[1].(2)அஃது ஒரு தேவனாகவும், தேவர்களைப் படைப்பவனாகவும், மனமாகவும் இருக்கிறது. அதுவே மூவுலகங்களையும் படைக்கிறது. “இவை அனைத்தும் நானே” என எது உணருமோ அதுவே இதுவென {அபிமானம் / அகங்காரமெனச்} சொல்லப்படுகிறது.(3)

ஆன்மா தொடர்புடைய அறிவில் நிறைவுடன் இருப்பவர்களும், ஆன்மாவைத் தியானிப்பவர்களும், வேதகல்வி மற்றும் வேள்விகளின் மூலம் வெற்றியை அடைந்தவர்களுமான தவசிகளுக்கான நித்திய உலகம் {ஸனாதனமான லோகம்} {அனிருத்தனென்று பெயருள்ள} அதுவே {அஹங்காரமே} ஆகும்.(4)

ஆன்மாவின் நனவாலேயே ஒருவன் குணங்களை அனுபவிக்கிறான். அனைத்து உயிரினங்களுக்கும் தோற்றுவாயாக இருப்பதும், அனைத்து உயிரினங்களையும் படைப்பதுமான அஃது (அனைத்து உயிரினங்களையும்) இவ்வழியிலேயே உண்டாக்குகிறது. அதுவே அனைத்து மாற்றங்களையும் விளைவிக்கிறது. அதுவே அனைத்தையும் அசைய வைக்கிறது. தன்னொளியால் அதுவே அண்டத்திற்கும் ஒளியூட்டுகிறது” என்றான் {பிரம்மன்}.

அத்யாத்மம், அதிபூதம், தைவதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 42- பூதங்கள் முதலியவை அஹங்காரத்தில் இருந்து படைக்கப்பட்டன என்பதைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “உண்மையில் அகங்காரத்தில் இருந்தே ஐம்பெரும் பூதங்களும் பிறந்தன. அவை பூமி {பிருதிவி}, காற்று {வாயு}, ஆகாயம், நீர் {ஜலம்} மற்றும் ஐந்தாவதாக ஒளியாகும் {தேஜஸாகும்}.(1) இந்த ஐம்பெரும் பூதங்களில் ஒலி, தீண்டல், நிறம், சுவை மற்றும் மணம் ஆகியவற்றின் இயக்கத்தில் அனைத்து உயிரினங்களும் மயக்கமடைகின்றன.(2) ஞானிகளே, பெரும்பூதங்களுக்கு அழிவு ஏற்படப்போகும் நெருக்கத்தில், அண்டத்தின் அழிவுக்காலம் நெருங்கும் போது, அனைத்து உயிரினங்களும் பேரச்சத்தால் பீடிக்கப்படுகின்றன.(3) இருப்பிலுள்ள ஒவ்வொரு பொருளும் எதில் இருந்து உண்டானதோ அதிலேயே கறைந்து போகும். படைப்பு நடைபெற்ற வரிசைக்கு நேர்மாறான வகையில் அழிவு ஏற்படும். உண்மையில், பிறப்பைப் பொறுத்தவரையில் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றில் இருந்து பிறக்கின்றன.(4) இருப்பிலுள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் கறையும்போதும் {முற்பிறவியின்} வலிமைமிக்க நினைவைக் கொண்டவர்களான ஞானிகள் ஒருபோதும் கறைவதில்லை {லயமடைவதில்லை}.(5)

ஒலி, தீண்டல், நிறம், சுவை, ஐந்தாவதாக மணம் என்பன அதன் விளைவுகளாகும். எனினும், நிலையற்றவையான அவை மாயை {அநித்யம்} என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன.(6) பேராசை உண்டானதால் {பயன் கருதி செய்யப்பட்ட செயல்களால்} விளைந்தவையும், ஒன்றுக்கொன்று வேறுபடாதவையும், உண்மைத்தன்மை இல்லாதவையும், சதை மற்றும் குருதியுடன் இணைக்கப்பட்டு இருப்பவையும், ஒன்றையொன்று சார்ந்திருப்பவையும்,(7) ஆன்மாவுக்கு வெளியே இருப்பவையுமான இவை அனைத்தும் ஆதரவற்றவையாகவும், சக்தியற்றவையாகவும் இருக்கின்றன. பிரானன், அபானன், உதானன், சமானன், வியானன் ஆகிய(8) ஐந்து காற்றுகளும் {வாயுக்களும்} எப்போதும் ஆன்மாவுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவையாகும். வாக்கு, மனம், புத்தி ஆகியவற்றுடன் சேர்ந்திருக்கும் இவையே எட்டு உட்பொருட்களாலான அண்டமாக அமைகின்றன {இவை ஜீவனுக்கு மோக்ஷம் வரையில் நித்யமாக இருக்கும் ஸூக்ஷ்ம சரீரமாகும்}.(9) தோல், மூக்கு, காதுகள், கண்கள், நாக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியவனும், மனம் தூய்மையடைந்தவனும், (சரியான பாதையில் இருந்து) புத்தி பிறழாதவனும்,(10) எட்டு நெருப்புகளால் ஒருபோதும் எரிக்கப்படாத மனம் கொண்டவனுமான ஒருவன், தனக்கு மேலேதுமற்ற மங்கல பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.(11)

மறுபிறப்பாளர்களே, பதினோரு உறுப்புகள் என்று அழைக்கப்படுபவையும், அஹங்காரத்தில் எழுந்தவையும் பற்றி {புலன்களைப் பற்றி}நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(12) காதுகள் {செவி}, தோல் {த்வக்கு}, இரு கண்கள், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு, இரு கால்கள், குதம் {பாயு}, பிறப்புறுப்பு {குறி}, இரு கைகள், பத்தாவதாக வாக்கு ஆகியனவே அவை.(13) பதினோராவதாக மனத்தைக் கொண்ட இவையே புலன்களின் கூட்டமாக {இந்திரிய ஸமூஹமாக} அமைகின்றன. ஒருவன் முதலில் இந்தக் கூட்டத்தை வெல்ல வேண்டும். அப்போதுதான் (அவனில்) பிரம்ம ஒளி துலங்கும்.(14) இவற்றுள் ஐந்து அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} என்றும், ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} என்றும் அழைக்கப்படுகின்றன. காதுகள் முதலான ஐந்தும் உண்மையில் அறிவு தொடர்புடையனவாகச் சொல்லப்படுகின்றன.(15) எஞ்சியவை எந்த வேற்றுமையுமின்றிச் செயல்களோடு தொடர்புடையவையாக உள்ளன. மனமானது, இரண்டிற்கும் உரியவையாகக் கருதப்பட வேண்டும். உயர்ந்த நிலையில் இருக்கும் புத்தியானது பனிரெண்டாவதாக இருக்கிறது.(16) இவ்வாறு பதினோரு உறுப்புகளும் {புலன்களும்} முறையான வரிசையில் பட்டியலிடப்பட்டன. இவற்றைப் புரிந்து கொண்டே அனைத்தையும் தாங்கள் அடைந்துவிட்டதாகக் கல்விமான்கள் நினைக்கிறார்கள்.(17)

இதன் பிறகு, பல்வேறு வகையான உறுப்புகள் {புலன்கள்} அனைத்தையும் நான் பட்டியலிடப்போகிறேன். வெளியானது (அல்லது ஆகாயம் என்பது) முதல் அமைப்பாகும் {பூதமாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது காதுகள் என்று அழைக்கப்படுகிறது.(18) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அஃது ஒலியாகிறது. (இதன்) தலைமைத் தேவன் {அதிதைய்வதம்} திசைகளாகும். காற்றானது {வாயு என்பது} இரண்டாவது அமைப்பாகும் {பூதமாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது தோல் {த்வக்} என்று அறியப்படுகிறது.(19) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} தீண்டலுக்குரிய பொருட்கள் என்று அறியப்படுகிறது. இங்கே தலைமைத் தேவன் {அதிதைய்வதம்} தீண்டலாகும் {மின்னலாகும்}. ஒளி மூன்றாவதாகச் சொல்லப்படுகிறது. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது கண்கள் {நேத்திரம்} என்றறியப்படுகிறது.(20) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது நிறம் {ரூபம்} என்று அறியப்படுகிறது; சூரியனே அதன் தலைமைத்தேவனாவான் {அதிதைவதமாவான்}. நான்காவதாக (நான்காவது அமைப்பாக {பூதமாக}) நீர் {ஜலம்} அறியப்பட வேண்டும். ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது நாக்கு என்று சொல்லப்படுகிறது.(21) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது சுவை {ரஸம்} என்று சொல்லப்படுகிறது. இங்கே சோமன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். ஐந்தாவது அமைப்பு {பூதம்} பூமியாகும் {பிருதிவியாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது மூக்கு {க்ராணம்} என்று சொல்லப்படுகிறது.(22) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது மணம் {கந்தம்} என்று சொல்லப்படுகிறது; அங்கே காற்று {வாயு} தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். இவ்வாறே ஐந்து அமைப்புகளும் {பூதங்களும்} எவ்வாறு மூன்று தொகுப்புகளாகப் பிரிந்திருக்கின்றன என்பது அறிவிக்கப்பட்டது.(23)

இனி, (வேறு) புலன்கள் பலவற்றைக் குறித்த அனைத்தையும் நான் அறிவிக்கப் போகிறேன். பாதங்கள் இரண்டும் ஆன்மாவுடன் தொடர்புடையனவாக {அத்யாத்மமென்று) குறிப்பிடப்படுகின்றன என வாய்மை அறிந்த பிராமணர்கள் சொல்கின்றனர்.(24) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அஃது அசைவாக {நடையாக} இருக்கிறது. விஷ்ணு அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். கீழ்நோக்கிப் பாயும் அபானக் காற்றானது {அபான வாயுவானது} {அத்யாத்மமாக} ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது குதம் { பாயு} என்றழைக்கப்படுகிறது.(25) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது கழிவாக {மலஜலமாக} வெளியேறுகிறது. மித்ரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். பிறப்புறுப்பானது ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது அனைத்து உயிரினங்களையும் உண்டாக்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.(26) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அஃது உயிர்வித்தாக {சுக்ரம்-ஆக} இருக்கிறது. பிரஜாபதி {குறி} அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். கைகள் இரண்டும் ஆன்மாவுடன் தொடர்புடையனவென {அத்யாத்மமென்று) ஆன்ம உறவுகளை அறிந்த மனிதர்களால் குறிப்பிடப்படுகின்றன.(27) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது செயல்களாக {கிரியைகளாக} இருக்கிறது. இந்திரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான்.

அடுத்ததாக, தேவர்கள் அனைவருடன் தொடர்புடைய வாக்கு ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(28) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது பேசுபொருளாக {பேசப்படுவதாக} இருக்கிறது. அக்னி அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். ஐம்பூதங்களின் ஆன்மாவுக்குள் நகரும் மனமானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாகக்} குறிப்பிடப்படுகிறது.(29) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது மன இயக்கமாக {ஸங்கல்பமாக} இருக்கிறது. சந்திரமாஸ் {சந்திரன்} அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். உலகவாழ்வின் மொத்த இயக்கத்திற்கும் காரணமாக இருக்கும் அகங்காரமானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(30) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது நனவாக {அபிமானமாக} இருக்கிறது. ருத்ரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். {மனத்தோடு சேர்த்து} ஆறு புலன்களையும் தூண்டும் புத்தியானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(31) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது புரிந்து கொள்ளப்படும் ஒன்றாக {அறிவதாக} இருக்கிறது. பிரம்மன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான்.

இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் மூன்று இருக்கைகள் {ஸ்தானங்கள்} இருக்கின்றன. நான்காவது சாத்தியமற்றதாகும்.(32) அவை {அந்த இருக்கைகள்} நிலம், நீர் மற்றும் ஆகாயமாகும். பிறவிமுறை நான்கு வகைப்படும். முட்டைகளில் இருந்து சில பிறக்கின்றன {அண்டஜம்}; பூமியைப் பிளந்து மேல்நோக்கி எழும் புழுக்களில் இருந்து சில பிறக்கின்றன {உத்பிஜ்ஜம்}; கழிவுப்பொருட்களில் இருந்து சில பிறக்கின்றன {ஸ்வேதஜம்}; கருவறைகளின் சதைப்பந்துகளில் இருந்து சில பிறக்கின்றன {ஜராயுஜம்}.(33) இவ்வாறே உயிரினங்கள் அனைத்தும் நான்கு வகைப் பிறவிமுறைகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. வானத்தில் பறப்பவையும் {பறவைகளும்}, தங்கள் மார்புகளைக் கொண்டு தவழ்பவையும் {பாம்புகளும்}, வேறு சில தாழ்ந்த பிறவிகளும் முட்டைகளில் இருந்து பிறப்பவையாக அண்டஜங்களாக அறியப்பட வேண்டும்.(34) பூச்சிகளும், அதுபோன்ற வேறு உயிரினங்களும் {கிருமிகளும்} கழிவுப்பொருட்களில் இருந்து பிறப்பவையாக {ஸ்வேதஜங்களென்று} சொல்லப்படுகின்றன.(35) இவை இரண்டாம் பிறவிமுறை கொண்டவை என்றும், இழிந்தவையென்றும் சொல்லப்படுகின்றன. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, சில காலம் கழித்து, பூமியைப் பிளந்து வெளிவரும் உயிரினங்கள்,(36) புழுக்களில் இருந்து பிறந்தவை என்று {உத்பிஜ்ஜங்களென்று} சொல்லப்படுகின்றன. இரு கால்களையோ, பல கால்களையோ கொண்டவையும், குறுக்கும்நெடுக்கமாக நடப்பவையுமான {திர்யக்கான கதியுள்ளவையுமான} உயிரினங்கள்,(37) கருவறைகளில் பிறந்தவையாக {ஜராயுஜங்களாக} இருக்கின்றன. அவற்றிலும் சில பழுதுள்ள வடிவம் கொண்டவையாக {வேறுபாடுள்ளவைகளாக} இருக்கின்றன.

பிரம்மத்தின் நித்திய கருவறையை {பிரம்மஸாக்ஷாத்காரத்தை, தவம் என்றும், புண்ணியச் செயல்கள் என்றும் இருவகையாக அறியப்பட வேண்டும்[1]. இதுவே கல்விமான்களின் கோட்பாடாகும். செயல்பாடு {கர்மம்} என்பது வேள்வி, வேள்வியில் அளிக்கப்படும் கொடைகள், பிறவி அடைந்த ஒவ்வொருவருக்கும் புனிதக் கடமையான கல்வி எனப் பலவகைப்படும் என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்; இதுவே பழங்காலத்தவர்களின் போதனையாகும். மறுபிறப்பாளர்களின் தலைவர்களே, இதை முறையாகப் புரிந்து கொண்டவன் யோகத்தைக் கொண்டவன் {யோகி எனக்} கருதப்படுகிறான்.(38-40) அத்தகைய மனிதன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடுவான் என்பதையும் அறிவீராக. இவ்வாறே நான் அத்யாத்மக் கோட்பாட்டை முறையாக உங்களுக்கு அறிவித்தேன்.(41) கடமைகள் அனைத்தையும் அறிந்த முனிவர்களே, ஞானம் கொண்ட மனிதர்கள் என்று கருதப்படுபவர்களால் இந்த ஞானம் {அத்யாத்மவிதி} அடையப்படுகிறது. புலன்கள் {இந்திரியங்கள்}, புலன்நுகர்பொருட்கள் {இந்திரியவிஷயங்கள்}, ஐம்பெரும்பூதங்கள் {ஐந்துமஹாபூதங்கள்}என்ற இவை அனைத்தையும் சேர்த்தே ஒருவன் தன் மனத்தில் கொள்ள வேண்டும்[2].(42) (ஈர்ப்பின் மூலம்) அனைத்தும் மனத்திற்குள் மட்டுப்படும்போது ஒருவன் அதற்கு மேலும் வாழ்வின் இன்பங்களை மதிப்பதில்லை. ஞானம் கொண்ட புத்தியுடன் கூடிய கல்விமான்கள் அதையே உண்மையான இன்பமாகக் கருதுகிறார்[3].(43)இனி, அனைத்து உட்பொருட்களையும் பொருத்தவரையில், மென்மையான மற்றும் கடுமையான வழிமுறைகளின் மூலம் நுண் தத்துவங்களில் பற்றுதலை உண்டாக்குவதும், மங்கலம் நிறைந்ததுமான துறவை {நிவ்ருத்தியைக்} குறித்துச் சொல்லப் போகிறேன்.(44) குணங்களைக் குணங்களற்றவையாகக் கொண்டதும், பற்றிலிருந்து விடுபட்டதும், தனிமையில் வாழ்வதும், வேறுபாடுகளைக் காணாததும், பிரம்மம் நிறைந்ததுமான ஒழுக்கமே இன்பங்கள் அனைத்தின் பிறப்பிடமாகும்.(45) உறுப்புகள் அனைத்தையும் உள்ளீர்த்துக் கொள்ளும் ஆமையைப் போல அனைத்துப்புறங்களில் இருந்தும் ஆசைகள் அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் கல்விமானும், ஆசைகளற்றவனும், அனைத்தில் இருந்தும் விடுபட்டவனுமான மனிதன் எப்போதும் இன்பமாக இருக்கிறான்.(46) ஆசைகள் அனைத்தையும் தன் ஆன்மாவுக்குள் கட்டுப்படுத்தி, தாகத்தை அழித்து, தியானத்தில் குவிந்து, அனைத்து உயிரினங்களிடமும் நண்பனாகும் நல்லிதயம் கொண்டவன் பிரம்மத்துடன் ஒன்றிணைவதற்குத் தகுந்தவனாவதில் வெல்கிறான்.(47) தங்களுக்குரிய பொருட்களை {புலன்நுகர் பொருட்களை} எப்போதும் பின்தொடரும் புலன்களை அடக்குவதன் மூலமும், வசிப்பிடங்களைக் கைவிடுவதன் மூலமும், அத்யாத்ம நெருப்பானது {ஆத்மஜ்ஞானமென்கிற அக்னியானது}, தியானம் செய்யும் மனிதனிடம் சுடர்விட்டெரிகிறது.(48)

விறகுகளில் ஊட்டப்பட்ட நெருப்பானது, சுடர்மிக்கத் தழல்களை வெளிப்படுத்துவதன் மூலம் பிரகாசத்தை அடைவதை {ஒளியைத் தருவதைப்} போலவே பேராத்மாவானது, புலன்களை அடக்குவதன் விளைவால் பிரகாசிக்கிறது.(49) அமைதியான ஆன்மாவைக் கொண்ட ஒருவன் தன் இதயத்திற்குள்ளேயே அனைத்துப் பொருட்களையும் காணும்போது, தன்னொளியால் எரியும் அவன், நுட்பத்திலும் நுட்பமானதும், ஒப்பற்ற சிறப்பைக் கொண்டதும் எதுவோ அதை அடைகிறான்.(50) நெருப்பை நிறமாகவும், நீரையும், வேறு நீர்மங்களையும் குருதியாகவும், காற்றை {வாயுவைத்} தோலாகவும், பூமியை மனத்தைத் தாங்கும் அருவருக்கத்தக்கதாகவும் (சதை மற்றும் எலும்பு முதலியவையாகவும்), வெளியை (அல்லது வானத்தை) ஒலியாகவும் கொண்டதும்; நோய் மற்றும் கவலை பரவியதும்; ஐந்து ஓடைகளிலால் சுழப்பட்டதும்; ஐந்து பூதங்களால் ஆனதும்; ஒன்பது வாயில்களையும், இரண்டு தேவர்களையும் கொண்டதும்; (தூய்மையற்ற தன்மையின் காரணமாக) ஆசை நிறைந்ததும்; காணத்தகுதியற்றதும்; முக்குணங்களால் ஆனதும்; (காற்று {வாயு / வாதம்}, பித்தம், சளி {கபம்} என்ற) மூன்று கூறுகளைக் கொண்டதும்; அனைத்து வகைப் பற்றுகளிலும் இன்புற்றிருப்பதும், மாயை நிறைந்ததுமாக உடல் இருக்கிறது.(51-53)

இந்த மனித உலகில் அசைப்பதற்குக் கடினமானதாகவும், தன்னை ஆதரித்துக் கொள்ளப் புத்தியைச் சார்ந்திருப்பதுமாக அஃது இருக்கிறது. இவ்வுலகில் அவ்வுடலே தொடர்ந்து சுழலும் காலச்சக்கரமாக இருக்கிறது.(54) உண்மையில், பயங்கரமானதும், அடியற்ற பெருங்கடலுமான அது மோகம் என்றழைக்கப்படுகிறது. தேவர்களுடன் கூடிய (மொத்த) அண்டத்தையும் விழிப்படையச் செய்வதும் நீட்டுவதும், சுருக்குவதும் இவ்வுடலே ஆகும்.(55) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவன், நித்தியமானவையும், கைவிடுவதற்கு மிக அரியவையுமான காமம், கோபம், அச்சம், பேராசை, பகை, பொய்மை ஆகியவற்றைக் கைவிடுகிறான். உடலின் முக்குணங்களையும், ஐம்பூதங்களையும் இவ்வுலகில் அடக்கும் ஒருவன் சொர்க்கத்தில் உயர்ந்த இருக்கையை {ஸ்தானத்தைப்} பெறுகிறான். அவனாலேயே முடிவிலி {எல்லையற்ற பேரளவு} அடையப்படுகிறது.(57) ஐம்புலன்களெனும் பெரிய கரைகளைக் கொண்டதும், மனோவிருப்பங்களையே வெள்ளமாகவும், மோகத்தைத் தடாகமாகவும் கொண்ட அந்த ஆற்றைக் கடக்கும் ஒருவன் காமம் மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் அடக்க வேண்டும்.(58)

அத்தகைய மனிதன், குற்றங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, மனத்திற்குள் மனத்தைக் குவித்து, தன்னைத் தனக்குள் கண்டு உயர்ந்ததை {பரப்பிரம்மத்தைக்} காண்பான்.(59) அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்ளும் அவன், சில நேரங்களில் ஒன்றாகத் தோன்றுவதும், சில நேரங்களில் பலவாகவும் தோன்றுபவையும், காலாகாலத்திற்கு மாறிக் கொண்டே இருப்பவையுமான அனைத்து உயிரினங்களிலும் தன்னைத் தானே காண்கிறான்.(60) ஒரு விளக்கில் இருந்து நூறு விளக்குகள் உண்டாவதைப் போல அவனால் எண்ணற்ற உடல்களை உணர முடியும் என்பதில் ஐயமில்லை. உண்மையில், விஷ்ணு அவனே, மித்திரன், வருணன், அக்னி மற்றும் பிரஜாபதியும் அவனே.(61) படைப்பவனும், விதிப்பவனும் அவனே; அனைத்துத் திசைகளிலும் முகங்களைக் கொண்டவனும், பலம் கொண்டவனுமான தலைவன் அவனே. அனைத்து உயிரினங்களின் இதயமாக இருக்கும் அவனில் பேராத்மா {பரமாத்மா} ஒளிர்கிறான்.(62) கல்விமான்களான பிராமணர்கள், தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், பிசாசங்கள், பித்ருக்கள், பறவைகள், ராட்சசக்கூட்டங்கள்; பூத கணங்கள் மற்றும் பெரும் முனிவர்களின் கூட்டங்கள் அனைத்தும் அவனைப் புகழ்கின்றன” என்றான் {பிரம்மன்}.(63)

க்ஷேத்ரஜ்ஞன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 43-க்ஷத்திரியர்களிடம் ரஜோ குணத்தின் முக்கியத்துவம்; ஸத்வ குணம் கொண்ட பிராமணர்கள்; ஓவ்வொன்றின் சிறப்பியல்புகள்; தீங்கிழையாமை; க்ஷேத்ரஜ்ஞன் ஆகியவற்றைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்.

பிரம்மன், “மனிதர்களில் அரச க்ஷத்திரியர்கள் நடுக்குணம் {ரஜோ குணம்} கொண்டவர்கள். வாகனங்களில் யானை (அவ்வாறே); காட்டில் வசிப்பவற்றுள் சிங்கம்;(1) (வேள்வி) விலங்குகள் அனைத்திலும் ஆடு; வளைகளில் வாழ்பவற்றுள் பாம்பு; கால்நடைகளுக்கு மத்தியில் காளை; பெண்களுக்கு மத்தியில் ஆண்கள் (ஆகியோரும் அவ்வாறே).(2) இவ்வுலகில் நியக்ரோதம் {ஆல மரம்}, ஜம்பு {நாவல் மரம்}, பிப்பலம் {அரசமரம்}, சால்மலி {முள்ளிலவமரம்}, சிம்சபை {நூக்கம் / சீஷம்}, மேஷசிருங்கம், {மூங்கில் வகையைச் சார்ந்த} கீசகம் ஆகியவை மரங்களில் முதன்மையானவையாக இருக்கின்றன என்பதில் ஐயமில்லை.(3) ஹிமவான் {இமயமலை}, பாரிபாத்ரம் {பாரியாத்ரம்}, ஸஹ்யம், விந்தியம், திரிகூடவான், ஸ்வேதம், நீலம், பாஸம், கோஷ்டவான் {ராஷ்ட்ரவான்},(4) குருஸ்கந்தம் {ப்ருசஸ்கந்தம்}, மஹேந்திரம், மால்யவான் ஆகிவை மலைகளில் முதன்மையானவையாகும். அதே போல மருத்துகள் கணங்களில் முதன்மையானவர்கள் ஆவர்.(5)

கோள்கள் அனைத்திற்கும் சூரியனும், நட்சத்திரக்கூட்டங்கள் அனைத்திற்கும் சந்திரமாஸும் தலைவர்களாவர். யமன் பித்ருக்களின் தலைவனாவான்; பெருங்கடலானது ஆறுகள் அனைத்திற்கும் தலைமையானதாகும்.(6) வருணன் நீர்நிலைகளின் மன்னனாவான். இந்திரன் மருத்துகளின் மன்னனாவான். வெப்பங்கள் {உஷ்ணங்கள்} அனைத்திற்கும் அர்க்கனும், ஒளிகள் {ஜ்யோதிகள்} அனைத்திற்கும் இந்திரனும் மன்னர்களாவர்[1]. பூதங்களுக்கு அக்னியும், பிராமணர்களுக்குப் பிருஹஸ்பதியும் நித்திய தலைவர்களாவர். சோமன் (இலையுதிர்) மூலிகைகளின் தலைவனாகவும், விஷ்ணு வலிமை நிறைந்த மனிதர்களனைவரிலும் முதன்மையானவனாகவும் திகழ்கின்றனர்.(8) ருத்திரர்களுக்கு {ரூபங்களுக்குத்} தாஷ்டிரியும் {துவஷ்டாவும்}, அனைத்து உயிரினங்களுக்கு {பசுக்களுக்கு} சிவனும் மன்னர்களாக இருக்கின்றனர். தொடக்கச் சடங்குகள் {தக்ஷிணைகள்} அனைத்திலும் முதன்மையாக வேள்வி முதன்மையானதாக இருக்கிறது, தேவர்களில் மகவத் {இந்திரன்} முதன்மையானவனாக இருக்கிறான்[2].(9) திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் தலைவனாக வடக்கு இருக்கிறது; கல்விமான்களான பிராமணர்கள் அனைவருக்கும் தலைவனாகப் பெருஞ்சக்தி கொண்ட சோமன் திகழ்கிறான். மதிப்புமிக்க ரத்தினர்கள் அனைத்திற்கும் குபேரனும், தேவர்கள் அனைவருக்கும் புரந்தரனும் {இந்திரனும்} தலைவர்களாக இருக்கின்றனர்.(10)இவ்வாறே பொருட்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பு இருக்கிறது. பிரஜாபதி உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக இருக்கிறான். எந்தப் பொருளாக இருந்தாலும், நானே பிரம்மம் நிறைந்தவன், நானே முதன்மையானவன்.(11) என்னையோ, விஷ்ணுவையோ தவிர உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை. பிரம்மம் நிறைந்தவனான பெரும் விஷ்ணு, மன்னர்கள் அனைவருக்கும் மன்னனாக {பேரரசனாக} இருக்கிறான். அவனையே ஆட்சியாளனாகவும், படைப்பாளனாகவும், பிறப்பற்ற ஹரியாகவும் அறிவீராக.(12) மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள், தேவர்கள், தானவர்கள் மற்றும் நாகர்களின் ஆட்சியாளன் அவனே ஆவான்.(13) ஆசை நிறைந்த மனிதர்களால் பின்தொடரப்படுபவர்களுக்கு {பெண்களுக்கு} மத்தியில் அழகிய கண்களைக் கொண்ட மஹேஸ்வரியே பெருந்தேவியாவாள்[3].(14) அவள் பார்வதி என்று வேறு பெயரிலும் அழைக்கப்படுகிறாள். உமா தேவியையே பெண்கள் அனைவரிலும் முதன்மையானவளாகவும், மங்கலமிக்கவளாகவும் அறிவீராக. இன்பத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் பெண்களுக்கு மத்தியில் பெரும் காந்தியைக் கொண்ட அப்ஸரஸ்களே முதன்மையானவர்களாவர்.(15)மன்னர்கள் பக்தியில் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள், பிராமணர்கள் பக்திக்குச் செல்லும் பாலங்களாக {அணைகளாக} இருக்கின்றனர். எனவே, மன்னன் எப்போதும் இருபிறப்பாளர்களைப் பாதுகாக்க முனைய வேண்டும்.(16) எந்த மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் நல்ல மனிதர்கள் நலிவடைகிறார்களோ அவர்கள் தங்கள் வகைக்கான அறங்களை இழந்தவர்களெனக் கருதப்படுவார்கள். மறுமையில் அவர்கள் தவறான பாதைகளில் செல்ல நேரிடும் {அவர்கள் இழிவான கதியை அடைவார்கள்}.(17) எந்த மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் நன்மக்கள் பாதுகாக்கப்படுகிறார்களோ, அவர்கள் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.(18) உண்மையில், அந்த உயர் ஆன்மாக்கள் உயர்ந்த இருக்கையை அடைகிறார்கள். மறுபிறப்பாளர்களில் முதன்மையானோரே இதைப் புரிந்து கொள்வீராக. இனி எப்போதும் நீடித்திருக்கும் கடமைகளின் குறியீடுகளை {தர்மலக்ஷணத்தைச்} சொல்லப் போகிறேன்.(19) தீங்கிழையாமையே உயர்ந்த கடமையாகும். தீங்கிழைத்தல் மறத்தின் குறியீடாகும். காந்தி தேவர்களின் குறியீடாகும். மனிதர்கள் செயல்களைத் தங்கள் குறியீடுகளாகக் கொண்டுள்ளனர்.(20)

வானம் (அல்லது வெளி) ஒலியைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. காற்று {வாயு} தீண்டலைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. ஒளியின் சிறப்பியல்பு நிறமாகவும் {ரூபமாகவும்}, நீரின் சிறப்பியல்பு சுவையாகவும் இருக்கின்றன.(21) அனைத்துப் பொருட்களையும் தாங்கும் பூமி மணத்தைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டிருக்கிறது. வாக்கானது, செம்மைப்படுத்தப்பட்ட உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் கொண்ட சொற்களைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது.(22) மனம் எண்ணத்தை {சிந்தையைத்} தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. மேலும் எண்ணமானது, புத்தியின் சிறப்பியல்பாகவும் சொல்லப்படுகிறது. மனத்தால் எண்ணப்படும் பொருட்கள் புத்தியால் துல்லியமாக உறுதி செய்யப்படுகின்றன.(23) புத்தியானது, விடாமுயற்சியின் மூலம் பொருட்கள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது என்பதில் ஐயமில்லை. அறியப்படாமல் இருப்பது (வாழ்வது) நல்ல மனிதனின் சிறப்பியல்பாகும்[4].(24) அர்ப்பணிப்பு {பக்தி}, செயல்களைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. ஞானமானது, துறவின் சிறப்பியல்பாக இருக்கிறது. எனவே, புத்தியுள்ள மனிதன் ஞானத்தை நோக்கமாகக் கொண்டு துறவை பயில வேண்டும்.(25) துறவை மேற்கொள்பவனும், ஞானம் கொண்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும், இருளையும் {அறியாமையையும்}, மரணத்தையும், மூப்பையும் கடந்தவனுமான மனிதன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(26)இவ்வாறே நான் கடமைகளின் குறியீடுகள் குறித்து உங்களுக்கு முறையாக அறிவித்தேன். இனி, குணங்களை அடைவது (புரிந்து கொள்வது) குறித்து உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(27) பூமி தொடர்புடைய மணம், மூக்கால் அடையப்படுகிறது. மூக்கில் வசிக்கும் காற்றானது, மணத்தை உணர்ந்து கொள்வதற்காக (ஒரு முகவராக) நியமிக்கப்பட்டதைப் போல இருக்கிறது.(28) சுவையானது நீரின் சாரமாக இருக்கிறது. அது நாக்கால் அடையப்படுகிறது. நாவில் வசிக்கும் சோமன், சுவையை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(29) ஒளியுடலின் குணம் நிறமாகும். அது கண்களால் அடையப்படுகிறது. எப்போதும் கண்களில் வசிப்பவனாக ஆதித்தியன், நிறத்தை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(31) தீண்டலானது எப்போதும் காற்றுத் தொடர்பானதாக (காற்றின் குணமாக) இருக்கிறது. அது தோலால் உணரப்படுகிறது. தோலில் எப்போதும் வசிக்கும் காற்று {வாயு}, தீண்டலை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது.(31)

வானத்தின் குணம் ஒலியாகும். அது காதுகளால் அடையப்படுகிறது. காதுகளில் வசிக்கும் திசைகள் அனைத்தும், ஒலியை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன.(32) மனத்தின் குணம் எண்ணம் {சிந்தை} ஆகும். அது புத்தியால் அடையப்படுகிறது. இதயத்தில் வசித்து நனவைத் தாங்குபவன் {ஜீவன்}, மனத்தை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(33) புத்தியானது, உறுதிப்பாடு அல்லது நிச்சய உணர்வின் வடிவத்திலும், மஹத்-ஆனது, ஞானத்தின் வடிவத்திலும் உணரப்படுகின்றன. உணரப்படாதது (பிரகிருதி), நிச்சய உணர்வுக்குப் பிறகு அனைத்துப் பொருட்களையும் அடைவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவானதாகும். இதில் ஐயமேதும் இல்லை[5].(34) சாரத்தைப் பொறுத்தவரையில், நித்தியமானதும், குணங்களற்றதுமான க்ஷேத்ரஜ்ஞன், சின்னங்களால் {குறியீடுகளால் / லிங்கத்தால்} அடையப்பட இயலாததாக இருக்கிறது. எனவே சின்னங்களற்ற க்ஷேத்ரஜ்ஞனின் சிறப்பியல்பானது, தூய ஞானமாகும்.(35) புலப்படாதது, க்ஷேத்ரம் என்றழைக்கப்படும் சின்னத்தில் வசித்துக் கொண்டு, குணங்களை உண்டாக்குவதாகவும், ஈர்ப்பதாகவும் இருக்கிறது. அது மறைந்திருந்தாலும், நான் அதைப் பார்க்கவும், அறியவும், கேட்கவும் செய்கிறேன்.(36)புருஷன் அஃதை அறிகிறான்; எனவே அவன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான். க்ஷேத்ரஜ்ஞன், குணங்களின் இயக்கங்களையும், இயக்கமற்ற நிலையையும் உணர்கிறான்.(37) மீண்டும் மீண்டும் உண்டாகுபவையும், புத்தியற்றவையுமான குணங்கள், படைக்கப்பட வேண்டிய பொருட்களாகவும், தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவுகளுடன் கூடியதாகவும் தங்களை ஒருபோதும் அறிவதில்லை.(38) உயர்ந்ததும், பெரியதும், குணங்களையும், குணங்களில் பிறக்கும் பொருட்களையும் கடந்திருப்பதுமான ஒன்றை {பிரம்மத்தை} க்ஷேத்ரஜ்ஞன் மட்டுமே அடைகிறான்; வேறெதுவும் அடைவதில்லை.(39) எனவே, கடமைகளைப் புரிந்து கொள்ளும் ஒருவன், குணங்களையும், புத்தியையும் கைவிட்டு, தன் பாவங்கள் அழிக்கப்பட்டு, குணங்களைக் கடந்தவனாக க்ஷேத்ரஜ்ஞனில் நுழைகிறான் {பரமாத்மாவை அடைகிறான்}.(40) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், எவருக்கும் தலைவணங்காதவனும், ஸ்வாஹா இல்லாதவனும் {ஸ்வாஹாகாரமற்றவனும்}, அசையாதவனும், இருப்பிடமற்றவனுமாக க்ஷேத்ரஜ்ஞன் இருக்கிறான். அவனே உயர்ந்த தலைவனாவான் {தெய்வமாவான் / விபுவாவான்}” என்றான் {பிரம்மன்}.(41)

ஞானம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 44-ஞானமே மோக்ஷஸாதனம் என்பது குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “தொடக்கம், நடுநிலை, முடிவு ஆகியவற்றையும், பெயர் மற்றும் சிறப்பியல்புகளைக் கொண்டவை அனைத்தையும், அவற்றை அடைவதற்குரிய வழிமுறைகளுடன் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(1) முதலில் பகல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகே இரவு எழுந்தது. மாதங்களில் வளர்பிறை நாட்கள் முதன்மையானவை என்று சொல்லப்படுகிறது. விண்மீன் கூட்டங்கள் சிரவணத்தை {திருவோணம் நட்சத்திரத்தைத்} தங்களில் முதன்மையானதாகக் கொண்டுள்ளன; பருவ காலங்கள் தங்களில் பனிக் காலத்தை (குளிர் காலத்தை) முதன்மையானதாகக் கொண்டுள்ளன.(2) மணங்கள் அனைத்தின் பிறப்பிடமாகப் பூமியும், சுவைகள் அனைத்தின் பிறப்பிடமாக நீரும் இருக்கின்றன. நிறங்கள் அனைத்தின் பிறப்பிடமாகச் சூரிய ஒளியும், தீண்டல் உணர்வுகளின் பிறப்பிடமாகக் காற்றும் {வாயுவும்} இருக்கின்றன.(3) அதே போல ஒலியின் பிறப்பிடமாக வெளி (அல்லது வானம்) இருக்கிறது. இவையே பூதங்களின் குணங்களாகும். இனி, பொருட்கள் அனைத்திலும் முதன்மையானவற்றையும், உயர்ந்தவற்றையும் நான் அறிவிக்கப் போகிறேன்.(4)

ஒளிகள் {தேஜஸுகள்} அனைத்திலும் சூரியனே முதன்மையானவன். பூதங்கள் அனைத்திலும் நெருப்பே முதன்மையானது {அக்னியே முதன்மையானவன்}. கல்விக்கிளைகள் {வித்தைகள்} அனைத்திலும் சாவித்ரியே முதன்மையானவள். தேவர்கள் அனைவரிலும் பிரஜாபதியே முதன்மையானவன்.(5) வேதங்கள் அனைத்திலும் ஓம் என்ற அசையே முதன்மையானது, காற்றுகள் {வாயுக்கள்} அனைத்திலும் உயிர் காற்றான பிராணனே முதன்மையானது. இவ்வுலகில் பரிந்துரைக்கப்படும் அனைத்தும் சாவித்ரி என்றழைக்கப்படுகிறது[1].(6) சந்தஸ்கள் அனைத்திலும் காயத்ரி முதன்மையானது; (வேள்வி) விலங்குகள் அனைத்திலும் ஆடு முதன்மையானது. நான்கு கால் உயிரினங்களில் பசுக்களே முதன்மையானவை. மனிதர்கள் அனைவரிலும் இருபிறப்பாளர்கள் முதன்மையானவர்கள்.(7)பறவைகள் அனைத்திலும் பருந்தே முதன்மையானது. வேள்விகளில் நெருப்பில் தெளிந்த நெய்யை ஊற்றுவதே {ஹோமமே} முதன்மையானது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, ஊர்வனவற்றில் பாம்பே முதன்மையானது.(8) யுகங்கள் அனைத்திலும் கிருதமே முதன்மையானது; இதில் ஐயமேதும் இல்லை. மதிப்புமிக்கப் பொருட்கள் அனைத்திலும் பொன்னே முதன்மையானது.(9) செடிகள் அனைத்திலும் யவம் {வாற்கோதுமை} முதன்மையானது. உண்ணத்தக்க, அல்லது விழங்கத்தக்க அனைத்துப் பொருட்களிலும் உணவே முதன்மையானது. பருகத்தகுந்த நீர்மங்கள் அனைத்திலும் நீரே முதன்மையானது.(10)

அசையாத பொருட்கள் அனைத்திலும் வேறுபாடில்லாமல், பிரம்மனின் நித்திய புனிதக் களமான பிலக்ஷமே {ப்லக்ஷமரமே [அரசமரமே]} முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது[2].(11) பிரஜாபதிகள் அனைவரிலும் நானே முதன்மையானவன். இதில் ஐயமேதும் இல்லை. நினைத்தற்கரிய ஆன்மாவும், தானே இருப்பவனுமான விஷ்ணு என்னிலும் உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[3].(12) மலைகள் அனைத்திலும் பெரும் மேருவே முதலில் பிறந்ததெனச் சொல்லப்படுகிறது. அடிவானத்தின் முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்திலும் கிழக்கே முதன்மையானதாகவும், முதலில் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.(13)ஆறுகள் அனைத்திலும், மூன்று ஓடைகளைக் கொண்ட கங்கையே முதலில் பிறந்தவளாகச் சொல்லப்படுகிறாள். அதே போலக் கிணறுகள் மற்றும் நீரின் கொள்ளிடங்கள் அனைத்திலும் பெருங்கடலே முதலில் பிறந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(14) தேவர்கள், தானவர்கள், பூதங்கள், பிசாசங்கள், பாம்புகள் {உரகர்கள்}, ராட்சசர்கள், மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள் ஆகியோர் அனைவருக்கும் உயர்ந்த தலைவனாக {பிரபுவாக} ஈஸ்வரன் இருக்கிறான்.(15) பிரம்மம் நிறைந்தவனும், மூவுலகங்களிலும் தனக்கு உயர்ந்தவர் எவரும் இல்லாதவனுமான பெரும் விஷ்ணுவே {மஹாவிஷ்ணுவே} அண்டமனைத்திலும் முதன்மையானவனாக இருக்கிறான்.(16)

வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திலும் இல்லற வாழ்வுமுறையே {கிருஹஸ்தாஸ்ரமமே [இல்லறமே]} முதன்மையானதாகும். இதில் ஐயமேதுமில்லை. புலப்படாததே {அவ்யக்தமானதே} அனைத்திற்கும் பிறப்பிடமாகவும் முடிவாகவும் உள்ளது.(17) சூரியன் மறைவில் பகலும், சூரியன் எழுச்சியில் இரவும் முடிகின்றன. இன்பத்தின் முடிவு கவலையாகவும், கவலையின் முடிவு இன்பமாகவும் எப்போதும் இருக்கிறது.(18) ஒன்றுதிரளும் அனைத்தும் வெளிப்படுவதையும், ஏற்றங்கள் அனைத்தும் வீழ்ச்சியையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. தொடர்புகள் அனைத்தும் தொடர்பறுதலையும், பிறப்பு இறப்பையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன.(19)

செயல்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன, பிறந்தவை அனைத்தும் நிச்சயம் இறப்பைச் சந்திக்கின்றன. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் இவ்வுலகில் நிலையற்றவையாக இருக்கின்றன.(20) வேள்வி {யாகம்}, கொடைகள் {தானம்}, தவங்கள், கல்வி {அத்யயனம்}, நோன்புகள் {விரதங்கள்}, நியமங்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. ஞானம் மட்டுமே முடிவற்றதாகும் {ஞானத்திற்கு நாசமில்லை}.(21) எனவே, அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், நான், எனது என்ற மமதையில் இருந்து விடுபட்டவனும், அகங்காரமற்றவனுமான ஒருவன் தூய அறிவால் {சுத்தமான ஞானத்தால்} பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்” என்றான் {பிரம்மன்}.(22)

சிஷ்டாசாரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 45-காலச்சக்கரம் எனும் உடல்; இல்லறம்; நல்லோருக்குப் பொருந்தும் ஒழுக்கம் ஆகியவை குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன்“வாழ்வுச்சக்கரம் {காலச்சக்கரம்} சுழன்று கொண்டே இருக்கிறது. அது {அந்தச் சக்கரம்} புத்தியைத் தன் பலமாகவும், மனத்தை (அது சார்ந்திருக்கும்) அச்சாகவும் {ஸ்தம்பமாகவும்}, புலன்கூட்டங்களைக் கட்டுகளாகவும், (ஐந்து) பெரும்பூதங்களைக் குழிசியாகவும் {ஆர்களுக்குக் குடமாகவும்}, இல்லத்தைச் சுற்றளவாகவும் கொண்டிருக்கிறது[1].(1) அது முதுமை {ஜரை} மற்றும் துயரம் {சோகம்} ஆகியற்றில் மூழ்கியிருக்கிறது, நோய்களையும் {வியாதிகளையும்}, பேரிடர்களையும் {வியஸங்களையும்} தன் சந்ததியாகவும் கொண்டிருக்கிறது. அந்தச் சக்கரம் காலம் மற்றும் இடம் {தேசம்}தொடர்புடையதாக இருக்கிறது. அஃது உழைப்பு மற்றும் உடற்பயிற்சியைத் தன் ஒலியாகக் கொண்டுள்ளது.(2) பகலும், இரவும் அந்தச் சக்கரத்தின் சுழற்சிகளாக உள்ளன. வெப்பம் மற்றும் குளிரால் அது சூழப்பட்டிருக்கிறது. அஃது இன்பதுன்பங்களை இணைப்புகளாகவும், பசி தாகங்களைத் தன்னில் {இணைப்புகளில்} அறையப்படும் ஆணிகளாகவும் கொண்டுள்ளது.(3) சூரிய ஒளியும், நிழலும் அதன் தடங்களாக (விளைவுகளாக) இருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உள்ள குறுகிய காலத்திலேயே அதைக் கலக்கம் கொள்ளவல்லதாக இருக்கிறது. அது பயங்கரமான மாய நீரால் சூழப்பட்டிருக்கிறது. அஃது எப்போதும் நனவற்றநிலையில் சுழன்று கொண்டே இருக்கிறது.(4) அது மாதங்களாலும், அரைமாதங்களாலும் {பக்ஷங்களாலும்} அளக்கப்படுகிறது. அஃது எப்போதும் சீரற்றதாக (எப்போதும் மாறும் தன்மை கொண்டதாக), அனைத்து உலகங்களிலும் திரிகிறது. தவமும், நோன்புகளும் அதற்குச் சேறு ஆகின்றன. ஆசையின் சக்தி அதை இயக்குகிறது[2].(5)அது பேரகங்காரத்தால் ஒளியூட்டப்பட்டு, குணங்களின் மூலம் தக்க வைக்கப்படுகிறது. (விரும்பியதை அடையாததால் உண்டாகும்) எரிச்சல்கள் {மனச்சோர்வுகள்} அதைச் சுற்றிலும் கட்டப்பட்டுள்ள பிணைப்புகளாக இருக்கின்றன. அது துன்பம் மற்றும் அழிவுக்கு மத்தியில் சுழல்கிறது.(6) அது செயல்கள் {கர்மங்கள்} மற்றும் செயல்கருவிகள் {காரணங்கள்} ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கிறது. அது பெரியதாகவும், பற்றுகளால் நீட்டிக்கப்படுவதாகவும் இருக்கிறது. ஆசை மற்றும் பேராசையின் {லோபத்தின்} மூலம் அது நிலையற்ற தன்மையை அடைகிறது. அது பலவகையான அறியாமைகளில் இருந்து உண்டாக்குகிறது.(7) அஃது அச்சம் மற்றும் மயக்கம் கொள்வதாகவும், அனைத்து உயிரினங்களின் மயக்கத்துக்குக் காரணமாகவும் இருக்கிறது. அஃது இன்ப துன்பங்களை நோக்கி நகர்ந்து, ஆசை மற்றும் கோபத்தை உடைமையாக அடைகிறது.(8) அது மஹத் முதல் திரள் பூதங்கள் வரையிலான உட்பொருள்களால் ஆனது. அஃது இடைவிடாத உற்பத்தி மற்றும் அழிவின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. அதன் வேகம் மனத்தைப் போன்றதாகும், மேலும் அது மனத்தையே தன் எல்லையாகக் கொண்டுள்ளது[3].(9) முரண்பட்ட இரட்டைகள் மற்றும் நனவற்ற நிலை ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்த வாழ்வுச்சக்கரமானது {உடலானது}, இறவாதவர்களுடன் {தேவர்களுடன்} கூடிய அண்டத்தைக் கைவிடவும், சுருக்கவும், சரிபார்க்கவும் வேண்டும்[4].(10)இந்த வாழ்வுச்சக்கரத்தின் இயக்கத்தையும், நிறுத்தத்தையும் எப்போதும் துல்லியமாகப் புரிந்து கொள்ளும் மனிதன், உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும் ஒருபோதும் மயங்கியவனாகத் தென்படுவதில்லை.(11) அனைத்து மனப்பதிவுகளில் {எண்ணங்களில்} இருந்தும் விடுபட்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்திலும் இருந்து விலகி, பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட ஒருவன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(12) இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, பிரம்மச்சாரி, காட்டில் ஒதுங்கி வாழ்பவன் {வானப்பிரஸ்தன்}, துறவி {ஸந்யாசி} ஆகிய வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} நான்கும் இல்லறத்தானின் வாழ்வுமுறையையே தங்கள் அடித்தளமாகக் கொண்டுள்ளன.(13) இந்த உலகில் பரிந்துரைக்கப்படும் விதிமுறைகளில் {ஆசிரமங்களில்} எவற்றைக் கடைப்பிடித்தாலும் நன்மையே பயக்கும். இத்தகைய நோற்றல் எப்போதும் உயர்வாகவே பேசப்பட்டிருக்கிறது.(14) சடங்குகளால் முதலில் தூய்மையடைந்தவனும், முறையாக நோன்புகளை நோற்றவனும், உயர்ந்த தகுதிகளைக் கொண்ட ஓர் இனத்தில் பிறந்தவனும், வேதங்களைப் புரிந்து கொண்டவனுமான ஒருவன், (தன் ஆசானின் இல்லத்தில் இருந்து) திரும்ப வேண்டும்[5].(15)தான் மணந்து கொண்ட மனைவியிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் நல்லோரைப் போன்ற ஒழுக்கத்துடன், புலன்களை அடக்கி, நிறைந்த நம்பிக்கையுடன் கூடிய ஒருவன் இவ்வுலகில் ஐந்து வேள்விகளைச் செய்ய வேண்டும்.(16) தேவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவளித்த பிறகு எஞ்சியதை உண்பவனும், தன் வாழ்வுமுறையின்படி {ஆசிரமத்தின்படி} வேள்விகளையும், கொடைகளையும் முறையாகச் செய்பவனும்,(17) பற்றில்லாமல் கைகள் மற்றும் கால்களைச் செயல்படுத்துபவனும், பற்றில்லாமல் தன் கண்ணைச் செயல்படுத்துபவனும், தவங்களில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், வாக்கு மற்றும் வாக்கின் வரம்புகளைப் பற்றில்லாமல் செயல்படுத்தாதவனுமான ஒருவன், சிஷ்டன் அல்லது நல்லவன் என்ற பகுப்பின் {பிரிவின்} கீழ் வருவான்[6].(18) அவன் எப்போதும் புனிதநூலை {பூணாலைத்} தரிக்கவும், (தூய) வெள்ளுடை உடுத்தவும், தூய நோன்புகளை நோற்கவும், எப்போதும் நல்லோரின் துணையுடன் இருக்கவும், கொடைகளை அளிக்கவும், தற்கட்டுப்பாட்டைப் பயிலவும் வேண்டும்.(19) அவன் தன் காமத்தையும், வயிற்றையும் அடக்கி, உலகளாவிய கருணையைப் பயின்று, நல்லோருக்குப் பொருந்தும் ஒழுக்கத்தில் {சிஷ்டாசாரத்தில் பொருந்தியவனாகத்} தன்னை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் மூங்கில் தடியையும், நீர் நிறைந்த குடத்தையும் {கமண்டலுவையும்} சுமக்க வேண்டும்.(20)கல்வி பயின்றவனான அவன் கற்பிக்கவும், தானே வேள்வி செய்யவும், பிறரின் வேள்வியை நடத்தித் தரவும் வேண்டும். அவன் தான் பெற்ற கொடைகளை அளிக்கவும் {கொடையளிக்கவும்} வேண்டும். உண்மையில் ஒருவன் இந்த ஆறு செயல்களின் மூலம் தன் ஒழுக்கத்தை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்[7].(21) (சீடர்களுக்குக்) கற்பித்தல், பிறரின் வேள்விகளை நடத்தித் தருதல், தூய்மையானவனிடம் இருந்து கொடைகளை ஏற்றல் ஆகிய இந்த மூன்று செயல்களும் பிராமணர்களுக்கான வாழ்வாதாரமாக {ஜீவனோபாயாமாக} அமைகின்றன என்பதை அறிவீராக.(22) கொடையளித்தல், கல்வி கற்றல் மற்றும் வேள்வி செய்தல் என்று எண்ணிக்கையில் மூன்றாக எஞ்சியிருக்கும் கடமைகள் தகுதியுடன் {புண்ணியத்துடன்} கூடியவையாக இருக்கின்றன[8].(23) தவம் செய்பவனாகவும், தற்கட்டுப்பாடுடையவனாகவும், உலகளாவிய கருணை பயில்பவனாகவும், மன்னிக்கும் தன்மை கொண்டவனாகவும், அனைத்து உயிரினங்களையும் சமமான பார்வையில் பார்ப்பவனாகவும் கடமைகளை அறிந்தவனாகவும் இருக்கும் மனிதன், அந்த மூன்று செயல்களில் ஒருபோதும் கவனமில்லாமல் இருந்து விடக்கூடாது {அவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும்}.(24) தூய இதயம் கொண்டவனும், இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} பின்பற்றுபவனும், கடும் நோன்புகளை நோற்பவனும் இவ்வாறு அர்ப்பணிப்புடன் இருப்பனும், இவ்வாறு கடமைகள் அனைத்தையும் தன் சக்திக்குத் தகுந்தவாறு செய்வபனும், கல்விமானுமான பிராமணன், சொர்க்கத்தைக் கைப்பற்றுவதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்},(25)

உத்தம பதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 46

பிரம்மன், “மேற்குறிப்பிட்ட வழியில் தன் சக்திக்குத் தகுந்தவாறு முறையாகப் படிப்பவனும், பிரம்மச்சாரியாக வாழ்பவனும், தன் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவனும், கல்வி கொண்டவனும், நோன்புகள் நோற்பவனும், புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துபவனும், ஆசானுக்கு ஏற்புடையதும், நன்மையானதும் எதுவோ அதில் அர்ப்பணிப்புள்ளவனும், வாய்மைக் கடமை பயில்வதில் உறுதியாக இருப்பவனும், எப்போதும் தூய்மையுள்ளவனுமான ஒருவன்,(1,2) தன் ஆசானின் அனுமதியுடன் உணவை இகழாமல் உண்ண வேண்டும். பிச்சையில் கிட்டியவற்றால் அமைந்த ஹவிஷ்யத்தை அவன் உண்ண வேண்டும். மேலும் அவன் (வழிகாட்டுதலின் படியே) நிற்கவும், அமரவும், செயல்படவும் வேண்டும்[1].(3) அவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு குவிந்த மனத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அவன் எப்போதும் வில்வத்தலோ, பலாசத்தாலோ ஆன தண்டத்தைத் தரிக்க வேண்டும்.(4) மறுபிறப்பாள மனிதனின் ஆடைகள் பட்டு, பருத்தி, மான் தோல் அல்லது முழுமையாகப் பழுப்புச் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆடையாகவோ இருத்தல் வேண்டும்.(5)முஞ்சப்புல்லாலான கச்சையும் {அரைநாணும்} இருக்க வேண்டும். அவன் தன் தலையில் சடாமுடி தரித்துத் தினமும் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். அவன் புனித நூல் {பூணூல்} தரிக்கவும் {யஜ்ஞோபவீதமுள்ளவனும்}, சாத்திரங்களைப் படிக்கவும், பேராசையில் இருந்து விடுபடவும், நோன்புகள் நோற்பதில் உறுதியாக இருக்கவும் வேண்டும்.(6) அவன் மனத்தை அடக்கியவாறு தூய நீரைக் கொண்டு செய்யப்படும் படையல்களால் தேவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். அத்தகைய பிரம்மச்சாரி மெச்சத்தகுந்தவனாவான்.(7) மேலீர்க்கப்பட்ட உயிர்வித்துடன், மனத்தைக் குவித்து இவ்வாறு அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒருவன் சொர்க்கத்தைக் கைப்பற்றுவதில் வெல்கிறான்.(8) தூய்மைச் சடங்குகள் அனைத்தாலும் தூய்மையடைந்து, பிரம்மச்சாரியாக வாழும் ஒருவன், தன் கிராமத்தில் இருந்து வெளியேறி, அடுத்ததாக (பற்றுகள் அனைத்தையும்) துறந்து, காடுகளில் தவசியாக வாழ வேண்டும்.(9) அவன் விலங்குத் தோல்கள் அல்லது மரப்பட்டைகளை உடுத்திக் கொண்டு, காலையும், மாலையும் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். எப்போதும் காட்டுக்குள்ளேயே வாழும் அவன், ஒருபோதும் மக்கள் வசிக்கும் இடத்திற்குத் திரும்பக் கூடாது.(10)

விருந்தினர்கள் வரும்போது அவர்களை மதித்து, உறைவிடமளிக்கும் அவன், கனிகள், இலைகள், கிழங்குகள் மற்றும் சியாமகம் {சாமை} ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும்.(11) அவன் சோம்பலில்லாமல் தான் பெறும் நீர், காற்று மற்றும் காட்டுப் பொருட்கள் அனைத்தையும் கொண்டு வாழ வேண்டும். அவன் தனது தொடக்க விதிமுறைகளின்படி முறையான வரிசையில் இவற்றைக் கொண்டு வாழ வேண்டும்[2].(12) அவன் தன்னிடம் வரும் விருந்தினருக்கு கனிகளையும், கிழங்குகளையும் கொடுத்து மதிக்க வேண்டும். அதன் பிறகு அவன் சோம்பலில்லாமல் தன்னிடம் உள்ள வேறு உணவுப் பொருட்களையும் கொடுக்க வேண்டும்.(13) பேச்சைக் கட்டுப்படுத்தி, தேவர்களையும், விருந்தினர்களையும் நிறைவடையச் செய்த பிறகு அவன் உண்ணலாம். அவன் மனம் பொறாமையில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். அவன் சிறிதளவே உண்டு, எப்போதும் தேவர்களைச் சார்ந்திருக்க வேண்டும்.(14) தற்கட்டுப்பாடுடன், உலகளாவிய கருணை பயின்று, மன்னிக்கும் தன்மையுடன் கூடிய அவன் (நாவிதரின் இயக்கங்களுக்கு இடமளிக்காமல்) தாடியும், முயிரும் வளர்க்க வேண்டும். வேள்விகளைச் செய்து, சாத்திரக் கல்விக்குத் தன்னை அர்ப்பணிக்கும் அவன், வாய்மைக் கடமையை நோற்பதில் எப்போதும் உறுதியுள்ளவனாக இருக்க வேண்டும்[3].(15)எப்போதும் தூய்மையாக உள்ள உடலுடனும், புத்திசாலித்தனத்துடனும், குவிந்த மனத்தோடு காட்டில் வசித்து, புலன்களை அடக்கியிருக்கும் ஒரு காட்டுத்துறவி {வானப்பிரஸ்தன்} இவ்வாறே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சொர்க்கத்தைக் கைப்பற்றுவான்.(16) விடுதலையை {முக்தியை} அடைய விரும்பும் ஓர் இல்லறத்தானோ {கிருஹஸ்தனோ}, பிரம்மச்சாரியோ, காட்டுத்துறவியோ சிறந்த ஒழுக்கமுறை என்றழைக்கப்படும் நடைமுறையை {உத்தம நடையைப்} பின்பற்ற வேண்டும்.(17) முற்றான தீங்கிழையாமை என்ற உறுதிமொழியை அனைத்து உயிரினங்களுக்கும் அளிக்கும் அவன், தன் செயல்பாடுகள் அனைத்தையும் முற்றிலும் துறக்க வேண்டும். அவன் அனைத்து உயிரினங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதில் தன் பங்கைச் செலுத்தி, உலகளாவிய நட்பைப் பயின்று, புலன்கள் அனைத்தையும் அடக்கி ஒரு தவசியாக இருக்க வேண்டும்.(18) கேட்காமலும் {யாசியாமலும்}, தொல்லையில்லாமலும் {நிச்சயிக்காமலும்}, தானாகவும் {தற்செயலாகவும்} கிடைக்கும் உணவைக் கொண்டு அவன் நெருப்பை அமைக்க வேண்டும். எந்த இடத்தில் புகை அடங்கியிருக்கிறதோ, எங்கே வசிப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே உண்டுவிட்டனரோ அங்கே அவன் பிச்சை வாங்கச் செல்ல வேண்டும்[4].(19) விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் ஒழுக்கத்தை அறிந்த மனிதன், {தான் செல்லப்போகும் இடத்தில்} (சமையலுக்குப் பயன்படுத்தும்) பாத்திரங்கள் துலக்கப்பட்ட பிறகு {அங்கே} பிச்சை கேட்க செல்ல வேண்டும்.(20)தன்னுயிரைத் தாங்கிக் கொள்வதற்கு வேண்டியதை மட்டுமே வேண்டி, குவிந்த மனத்துடன் பிச்சை கேட்கச் செல்லும் அவன் உரிய நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும். பிறருக்குப் பொதுவான வருவாயில் அவன் விருப்பம் கொள்ளக்கூடாது, கௌரவிக்கப்படும்போது உண்ணக்கூடாது.(21) துறவி {சந்நியாசி} வாழ்வுமுறையைப் பின்பற்றும் மனிதன், மதிப்புடன் வழங்கப்படும் கொடைகளைத் தவிர்ப்பதற்காகத் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும். உண்ணும்போது, பிறர் உண்டதன் எச்சத்தையோ, கசப்பு, துவர்ப்பு, கார்ப்புள்ள உணவையோ அவன் உண்ணக்கூடாது.(22) இனிய சுவை கொண்ட உணவு வகைகளையும் அவன் உண்ணக்கூடாது. அவன் தன் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும்.(23) விடுதலையை {முக்தியை} அறிந்த ஒருவன், எந்த உயிரினத்திற்கும் தடங்கல் ஏற்படுத்தாமல் தன் வாழ்வாதாரத்தை அடைய வேண்டும். பிச்சை வாங்கச் செல்லும்போது (அதே நோக்கத்துடன் செல்லும்) மற்றொருவனைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாது.(24)

அவன் தன் பக்தியை வெளியிடக்கூடாது; அவன் ஆசையில் இருந்து விடுபட்டவனாக ஒதுக்குப்புறமான {ஆளரவமற்ற} இடங்களுக்கே செல்ல வேண்டும். வெறுமையான வீட்டையோ, காட்டையோ, ஏதோவொரு மரத்தடியையோ, ஆற்றையோ,(25) ஒரு மலைக்குகையையோ அவன் தன் உறைவிடமாகக் கொள்ளலாம். கோடைக் காலத்தில் அவன் மக்கள் வசிக்கும் இடங்களில் ஓரிரவை மட்டுமே கழிக்கலாம்; மழைக்காலங்களில் அவன் ஒரே இடத்தில் வசிக்கலாம்.(26) அவன் ஒரு புழுவைப் போல உலகில் சூரியனால் சுட்டிக் காட்டப்படும் பாதையில் பயணிக்க வேண்டும். உயிரினங்களிடம் கொள்ளும் கருணையை நோக்கமாகக் கொண்டு அவன் பூமியில் நடக்க வேண்டும்.(27) அவன் ஒருபோதும் எதையும் குவிக்கக்கூடாது, நண்பர்களுடன் வசிப்பதைத் தவிர்க்க வேண்டும். விடுதலையை {முக்தியை} அறிந்த மனிதன் நாள் தோறும் தன் செயல்கள் அனைத்தையும் தூய நீரைக் கொண்டே செய்ய வேண்டும்.(28) அத்தகைய மனிதன் (ஆற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ) இறைக்கப்பட்ட நீரைக் கொண்டே எப்போதும் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். தீங்கிழையாமை {அஹிம்ஸை}, பிரம்மச்சரியம், வாய்மை {ஸத்யம்}, எளிமை {கபடமின்மை},(29) கோபத்திலிருந்து விடுதலை {குரோதமின்மை}, இகழ்வதில் இருந்து விடுதலை {அஸூயையின்மை}, தற்கட்டுப்பாடு {மனவடக்கம்}, புறங்கூறுவதில் இருந்து விடுதலை {கோட்சொல்லாமை} ஆகியவற்றைப் பெற்ற ஒருவன் புலனடக்கத்துடன் கூடியவனாக, உறுதியுடன் இந்த எட்டு நோன்புகளையும் பயில வேண்டும்.(30)

அவன் எப்போதும் பாவமற்றதும், வஞ்சகமற்றதும், கோணலற்றதுமான ஒழுக்க முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பற்றிலிருந்து விடுபட்டவனான அவன், விருந்தினராக வருபவருக்கு (குறைந்தது) ஒரு கவளம் உணவையாவது உண்ணக் கொடுக்க வேண்டும்.(31) அவன் தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும். நீதிமிக்க வழிமுறைகளில் அடையப்பட்ட உணவையே அவன் உண்ண வேண்டும், ஆசையின் ஆணைகளைப் பின்தொடரக்கூடாது.(32) உணவு, உடை ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேலும், அவன் தான் உண்ணக்கூடிய அளவைத் தவிர அதிகமாக ஏற்கக்கூடாது.(33) அவன் பிறரிடம் இருந்து கொடைகளை ஏற்கவோ, பிறருக்குக் கொடையளிக்கவோ தூண்டுதல் பெறக்கூடாது. உயிரினங்களின் ஆதரவற்ற நிலையின் காரணமாக ஞானமுள்ள ஒரு மனிதன் எதையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.(34) அவன் பிறரின் உடைமைகளை அபகரிக்கவோ, எதையும் கேட்காமல் எடுத்துக் கொள்ளவோ கூடாது. எதையும் அனுபவித்து விட்டு, அதை மீண்டும் பெற விரும்புமளவுக்கு அதனில் பற்று கொள்ளக்கூடாது.(35)

அவன் எந்தச் செயலையும் செய்ய விரும்பும்போது, வேறு எவருக்கும் உரிமையற்ற மண், நீர், கற்கள், இலைகள், மலர்கள் கனிகள் ஆகியவற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.(36) கைவினைஞர் {சிற்பி} தொழிலைச் செய்து அவன் வாழக்கூடாது, மேலும் அவன் பொன்னில் ஆசை கொள்ளக்கூடாது. அவன் வெறுக்கவோ, (கல்வி நாடாதவனுக்குக்) கற்பிக்கவோ, எந்த உடைமைகளையும் உரிமையாகக் கொள்ளவோ கூடாது.(37) நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதை {ஸ்ரத்தையினால் பரிசுத்தமானவற்றை} மட்டுமே அவன் உண்ண வேண்டும். அவன் சர்ச்சைகளில் இருந்து விலகயிருக்க வேண்டும். அமுதமாகச் சொல்லப்படும் ஒழுக்க நடைமுறையையே அவன் பின்பற்ற வேண்டும். அவன் எதனிலும் பற்றுக் கொள்ளாமல், எந்த உயிரினத்துடனும் நெருக்கமான உறவுகளில் ஒருபோதும் நுழையாமல் இருக்க வேண்டும்[5].(38) பயனில் எதிர்பார்ப்புள்ள, அல்லது உயிருக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய, அல்லது செல்வத்தையோ, பொருளையோ பதுக்கக்கூடிய எந்தச் செயலையும் அவன் செய்யவோ, செய்வதற்குக் காரணமாக அமையவோ கூடாது.(39) பொருட்கள் அனைத்தையும் புறக்கணித்து, (இல்லமற்றவனாக) சொற்பமானவற்றில் நிறைவடையும் அவன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களிடம் சமமான நடத்தை கொண்டவனாக இருக்க வேண்டும்.(40)அவன் மற்றொருவனை ஒருபோதும் எரிச்சலூட்டக்கூடாது; அதேபோல மற்றொருவனிடம் எரிச்சலடையவும் கூடாது. அனைத்து உயிரினங்களாலும் எவன் நம்பப்படுகிறானோ அவனே விடுதலையை {முக்தியைப்} புரிந்து கொண்டவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்.(41) அவன் கடந்த காலத்தை நினையாமல், எதிர்காலத்தைக் குறித்துக் கவலைகொள்ளாமல் இருக்க வேண்டும். அவன் நிகழ்காலம் பரிந்துரைக்கும் நேரத்தைக் குவிந்த மனத்துடன் அலட்சியம் செய்ய வேண்டும்[6].(42) அவன் கண்ணாலோ, மனத்தாலோ, வாக்காலோ எதையும் ஒருபோதும் தூய்மையிழக்கச் செய்யக்கூடாது. அவன் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ குற்றமெதுவும் செய்யக்கூடாது.(43) ஆமை தன் உறுப்புகளை உள்ளீர்த்துக் கொள்வதைப் போலப் புலன்களை அடக்கும் ஒருவன் தன் புலன்களையும், மனத்தையும் மட்டுப்படுத்தி, முற்றிலும் அமைதியான புத்தியை வளர்த்து, அனைத்திலும் திறனடைய முயற்சிக்க வேண்டும்.(44) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஒருவருக்கும் தலைவணங்காமல், ஸ்வாஹா சொல்லப்படும் சடங்குகளைத் தவிர்க்கும் ஒருவன் நான் என்ற மமதை மற்றும் அகங்காரத்தில் இருந்து விடுபட வேண்டும். தூய இதயத்துடன் கூடிய அவன், தன்னிடம் இல்லாததை அடையவோ, தன்னிடம் இருப்பதைப் பாதுகாக்கவோ முயற்சிக்ககூடாது.(45) எதிர்பார்ப்புகளில் இருந்து விடுபட்டு, குணங்களை நீக்கி, அமைதியடையும் ஒருவன் பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டு, எதையும் சாராதவனாக இருக்க வேண்டும். தன்னிலே பற்றுக் கொண்டு அனைத்தையும் புரிந்து கொள்ளும் ஒருவன், ஐயமில்லாமல் விடுதலையடைவான் {முக்தியடைவான்}.(46)கைகள், கால்கள், முதுகு, தலை, வயிறு அற்றதும், குணங்கள் அனைத்தின் இயக்கத்தில் இருந்தும் விடுபட்டதும், முழுமையானதும் {தனித்திருப்பதும்}, களங்கமற்றதும் {நிர்மலமானதும்}, நிலையானதும் {ஸ்திரமானதும்},(47) மணம் {கந்தம்}, சுவை {ரஸம்}, தீண்டல் {ஸ்பரிசம்}, நிறம் {ரூபம்} மற்றும் ஒலியற்றதும் {சப்தமற்றதும்}, (கவனமான ஆய்வின் மூலம்) புரிந்து கொள்ளப்பட வேண்டியதும் {அனுசரிக்கத்தக்கதும்}, பற்றற்றதும், தசையற்றதும்,(48) கவலையில் இருந்து விடுபட்டதும், மங்காததும் {அழிவற்றதும்}, தெய்வீகமானதும் {திவ்யமானதும்}, ஒரு வீட்டில் வசித்தாலும் அனைத்து உயிரினங்களிலும் இருப்பதுமான சுயத்தை {ஆன்மாவை} உணர்ந்தவர்கள் இறப்பில் இருந்து தப்புவதில் வெல்கிறார்கள்.(49) புத்தியோ, புலன்களோ, தேவர்களோ, வேதங்களோ, வேள்விகளோ, (மேன்மையான அருள் கொண்ட) உலகங்களோ, தவமோ, நோன்புகளோ அஃதை அடைவதில்லை.(50) ஞானம் கொண்டவர்களால் அடையப்படுவதாகவும், அடையாளங்களால் அறிய முடியாததாகவும் அது சொல்லப்படுகிறது. எனவே, அடையாளங்களற்ற அதன் இயல்புகளை அறிந்த மனிதன் பக்தியுடன் கூடிய வாய்மையை {தர்மத்தைப்} பயில வேண்டும்[7].(51) இல்லறம் மேற்கொள்ளும் கல்விமான், உண்மை அறிவுக்கு இணக்கமான ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மயக்கமடையாத ஒருவனும் {ஞானியானவன்}, மயக்கமடைந்த {அஜ்ஞானியான} ஒருவன் பயிலும் பக்தியில் {தர்மத்தில்} குறை காணாமல் அவ்வகையிலேயே அதைப் பயில வேண்டும்[8].(52) நல்லோரின் நடைமுறைகளில் குறைகாணாமல், தன்னை எப்போதும் அவமதிப்பவர்களான பிறரைத் தூண்டும் வகையிலான பக்தி நடைமுறை கொண்ட ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.(53)இத்தகைய ஒழுக்கத்துடன் கூடிய மனிதன் தவசிகளில் முதன்மையானவன் {சிறந்த முனிவன்} எனச் சொல்லப்படுகிறான். புலன்கள், புலன்நுகர் பொருட்கள், (ஐந்து) பெரும்பூதங்கள்,(54) மனம், புத்தி, அகங்காரம், புலப்படாதது {அவ்யக்தம்}, புருஷன் ஆகியவற்றைச் சரியான அனுமானங்களின் துணையுடன் முறையாகப் புரிந்து கொண்ட பிறகே(55) ஒருவன் அனைத்துப் பந்தங்களில் இருந்தும் விடுபட்டுச் சொர்க்கத்தை அடைகிறான். வாய்மையை அறிந்த ஒருவன், உயிர் போகும் வேளையில் இவை அனைத்தையும் புரிந்து கொண்டு(56) உரிய தனிமையான இடத்தில் தியானிக்க வேண்டும். அதன்பிறகு, எதையும் சாராதிருக்கும் அவன் விடுதலையை {முக்தியை} அடைவான். வெளியிலுள்ள {ஆகாயத்திலுள்ள} காற்றைப் போலப் பந்தங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, குவித்தவற்றைத் தீர்த்து, எவ்வகைத் துன்பமுமின்றி மிக உயர்ந்த இலக்கை அவன் அடைவான்” என்றான் {பிரம்மன்}.(57)

பிரம்மவிருக்ஷம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 47-மோக்ஷஸாதனங்களான துறவு, அறிவு, தவம் ஆகியவற்றைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “குறிப்பிட்ட உண்மையைச் சொன்னவர்களான புராதனர்கள், துறவே தவம் என்று சொல்கின்றனர். பிரம்மத்தைப் பிறப்பிடமாகக் கொண்டதில் வசிக்கும் பிராமணர்கள், ஞானமே உயர்ந்த பிரம்மம் என்று புரிந்து கொள்கிறார்கள்[1].(1) பிரம்மம் மிகத் தொலைவிலிருக்கிறது, அஃதை அடைவது வேத ஞானத்தைச் சார்ந்திருக்கிறது. அது முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்ததாகவும், குணங்கள் ஏதும் அற்றதாகவும், நித்தியமானதாகவும், எண்ணமுடியாத குணங்களைக் கொண்டதாகவும், உயர்ந்ததாகவும் இருக்கிறது.(2) ஞானிகள் தங்கள் ஞானம் மற்றும் தவத்தின் மூலமே அந்த உயர்ந்ததைக் காண்கின்றனர். உண்மையில், களங்கமற்ற மனங்களைக் கொண்டவர்களும், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களும், ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {தமோ குணம்} ஆகியவற்றைக் கடந்தவர்களுமாக அவர்கள் இருக்கின்றனர் (அவர்களே அதைக் காண்பதில் வெல்கிறார்கள்).(3)எப்போதும் துறவில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான அவர்கள், இன்பம் மற்றும் அமைதியின் பாதையில் அடையாளம் காணப்படும் உயர்ந்த தலைவனை {பரமேஸ்வரனை} தவத்தின் உதவியால் அடைவதில் வெல்கிறார்கள்.(4) தவம் ஒளி {சிறந்த தீபம்} என்று சொல்லப்படுகிறது. ஒழுக்கம் பக்திக்கு வழிவகுக்கிறது {தர்மத்திற்கு ஸாதமாகும்}. ஞானம் உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. துறவே சிறந்த தவமாகும்.(5) அனைத்தையும் துல்லியமாகத் தீர்மானிப்பதன் மூலம் கலக்கமற்றதும், ஞானத்தோடு அடையாளம் காணப்படுவதும், அனைத்துப் பொருட்களிலும் வசிப்பதுமான சுயத்தை {ஆன்மாவைப்} புரிந்து கொள்ளும் ஒருவன் எங்கும் செல்வதில் வெல்கிறான் {அனைத்தையும் அறிந்தவனென்று இவ்வுலகில் சொல்லப்படுகிறான்}.(6)

சேர்தல் மற்றும் பிரிதல், வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றைக் காணும் கல்விமான் துன்பத்தில் இருந்து விடுபடுகிறான்.(7) எதையும் விரும்பாதவனும், எதையும் இகழாதவனுமான ஒருவன் இவ்வுலகில் வசிக்குபோதே பிரம்மத்துடன் கலப்பதற்குத் தகுந்தவனாகிறான்.(8) பிரதானத்தின் குணங்கள் குறித்த உண்மைகளை அறிந்து, அனைத்துப் பொருட்களிலும் பிரதானம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்பவனும், நான் என்ற மமதையிலிருந்தும், அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவனுமான ஒருவன் நிச்சயம் விடுதலை {முக்தி} அடைகிறான்.(9)

முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், எவருக்கும் தலைவணங்காதவனும், ஸ்வதா சடங்குகளைக் கடந்தவனுமான ஒருவன், எது முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்டதாக இருக்கிறதோ, எது நித்தியமானதோ, எது குணங்களற்றதாக இருக்கிறதோ அஃதை அமைதியான மனநிலையின் துணையால் மட்டுமே அடைந்து விடுகிறான்.(10) குணங்களில் இருந்து வளர்ந்து வரும் நல்லவையோ, அல்லவையோவான செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, வாய்மை, பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடும் ஓர் உயிரினம் நிச்சயம் விடுதலையடைகிறது {முக்தியடைகிறது}.(11) 

புலப்படாததைத் தன் பிறப்பிடமாகக் கொண்டதும், புத்தியைத் தண்டாக {அடிமரமாகக்} கொண்டதும், அகங்காரம் என்ற பெருங்கோட்பட்டை கிளைகளாகக் கொண்டதும், புலன்களைச் சிறு தளிர்கள் முளைக்கும் பொந்துகளாகக் கொண்டதும்,(12) (ஐந்து) பெரும்பூதங்களைப் பெருங்கிளைகளாகக் கொண்டதும், புலன்நுகர் பொருட்களை எப்போதும் இலைகளுடனும், அலங்கரிக்கும் மலர்களுடனும் கூடியதும், இனிமையான மற்றும் இனிமையற்ற கனிகளை உண்டாக்கக்கூடிய சிறு கிளைகளாகக் கொண்டதுமான(13) நித்தியமான பிரம்ம மரமே அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கும் அமைப்பாகிறது. வாய்மையில் ஞானம் என்ற வாளைக் கொண்டு அம்மரத்தை வெட்டிப் பிளக்கும் ஞானமுள்ள மனிதன்,(14) பற்றில் உண்டானவையும், பிறப்பு, முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றை உண்டாக்குபவையுமான கட்டுகளை {பந்தங்களைக்} கைவிட்டு, நான் எனது என்ற மமதை மற்றும் அகங்காரத்தில் இருந்து விடுபட்டு நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைவான்[2].(15)மாற்றமில்லாதவையும், நண்பர்களும், புத்தியற்றவையாக அறியப்பட வேண்டியவையுமான இரு பறவைகள் இருக்கின்றன. இவையிரண்டில் இருந்து வேறுபட்ட மற்றொன்று புத்தி என்றழைக்கப்படுகிறது.(16) ஞான இயல்பற்றதும், புத்தியற்றதுமான சுயம் {ஆன்மா}, எது இயற்கைக்கும் மேலானதோ அதை அறியும்போது, க்ஷேத்திரத்தைப் புரிந்து கொண்டு, குணங்கள் அனைத்தையும் கடந்த புத்தியுடன் கூடியதாக அனைத்தையும் தெரிந்து கொண்டு பாவங்கள அனைத்தில் இருந்து விடுதலை அடைகிறது[3]” என்றான் {பிரம்மன்}.(17)

ஏகத்வம், நானாத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 48-யோகிகளின் வகைகளையும், மோக்ஷத்தை விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு கருத்துகளையும் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “{பிரம்மமே உலகம் என்று சொல்லும்} சிலர் பிரம்மத்தை {பிரபஞ்சம் என்ற} மரமாகக் கருதுகின்றனர். சிலர் பிரம்மத்தை பெருங்காடாக {பிரபஞ்சமாகக்} கருதுகின்றனர். {பிரம்மம் உலகம் ஆவதில்லை, உலகமே பிரம்மத்தில் இருந்து தோன்றுகிறது என்று சொல்லும்} சிலர் கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டுக் கடந்த நிலையாக அதை {பிரம்மத்தைக்} கருதுகின்றனர்.(1) இவை யாவும் புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்து உண்டாகி ஈர்க்கப்படுகிறது என்று அவர்கள் {ஸாங்கியர்கள்} நினைக்கின்றனர். {பிரம்மமே உலகம் என்று சொல்லும்} எவன் தன் முடிவு வருங்காலத்தில் ஒரேயொரு மூச்சுவிடும்பொழுதில் ஆன்மாவை அடைந்து {அதனுடன்} ஒரே நிலையை அடைகிறானோ அவன் இறவாமைக்குத் தகுந்தவனாகிறான். கண்ணிமைக்கும் காலத்திற்குள்ளாக சுயத்தைச் சுயத்தில் அடக்கும் ஒருவன் {பிரம்மத்தில் இருந்தே உலகம் உண்டாகிறது என்று சொல்பவன்} தன் அமைதியின் மூலம் ஞானிகளால் அடையப்படும் வற்றாத உடைமையை {மோக்ஷத்தை} அடைகிறான். பிராணாயாமம்[1] என்றழைக்கப்படும் வழிமுறையின்படி உயிர் மூச்சுகளை மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்துவதன் மூலமும்,(2-4)பத்து, அல்லது பனிரெண்டின்[2] மூலமும் அவன் இருபத்து நான்கையும் கடந்திருப்பதை அடைகிறான்.

இவ்வாறே முதலில் அமைதியான ஆன்மாவை அடையும் {நிர்மலமான சத்வ குணமுள்ள} ஒருவன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைகிறான்.(5) புலப்படாததில் இருந்து எழுவதில் {அவ்யக்தத்தில்} நல்லியல்பின் {சத்வ} குணம் அதிக ஆதிக்கம் செலுத்தும்போது அவன் இறவாமையை அடைய {அமிருதனாக இருக்கத்} தகுந்தவனாகிறான். நல்லியல்பை அறிந்தவர்கள், நல்லியல்பைக் காட்டிலும் உயர்ந்தது வேறேதுமில்லை என்று சொல்லி அதை உயர்வாகப் புகழ்கின்றனர்.(6) புருஷன் நல்லியல்பைச் சார்ந்திருக்கிறான் என்பதை நாம் உள்ளுணர்வின் மூலம் அறிகிறோம். மறுபிறப்பாளர்களே, வேறு எந்த வழிமுறைகளின் மூலமும் புருஷனை அடைவது சாத்தியமில்லை.(7)

மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துணிவு {தைரியம்}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்ஸை}, சீர்மை {ஸமமாக இருப்பது}, வாய்மை {உண்மை}, நேர்மை, அறிவு {ஞானம்}, கொடை {தியாகம்}, துறவு {ஸந்யாஸம்} ஆகியன நல்லியல்பில் இருந்து எழும் ஒழுக்க நடைமுறையின் சிறப்பியல்புகளாக {ஸத்வத்தின் கார்யங்களெனச்} சொல்லப்படுகின்றன.(8) இந்த உள்ளுணர்வின் மூலமே ஞானிகள், புருஷன் மற்றும் நல்லியல்பின் அடையாளங்களை {ஒன்றென} நம்புகிறார்கள். இதில் ஐயமேதுமில்லை.(9) ஞானத்தில் அர்ப்பணிப்புள்ள கல்விமான்கள் சிலர், க்ஷேத்ரஜ்ஞன் {புருஷன்} மற்றும் இயற்கைக்கு {சத்வத்திற்கு} இடையிலான ஒற்றுமையை வலியுறுத்திச் சொல்கின்றனர். எனினும், இது சரியல்ல.(10)

இயற்கையானது {சத்வம்}, புருஷனிலிருந்து வேறுபட்டது எனச் சொன்னால், அதுவும் கருத்தின்மையையே குறிக்கும்.(11) உண்மையில், வேற்றுமையும், ஒற்றுமையும் (புருஷனுக்கும், இயற்கைக்கும் பொருந்துவதாக) அறியப்பட வேண்டும். ஒற்றுமையும் {ஏகத்வமும்}, வேற்றுமையும் {நானாத்வமும்} இவ்வாறே விதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே கல்விமான்களின் கோட்பாடாகும். கொதுகு {கொசு} மற்றும் அத்திப்பழத்தில் ஒற்றுமையும், வேற்றுமையும் காணப்படுகின்றன.(12) நீரில் இருக்கும் மீன் வேறாக இருப்பதைப் போலவே இவை இரண்டின் (புருஷன் மற்றும் இயற்கையின் {சத்வத்தின்} உறவு இருக்கிறது. உண்மையில் அவற்றின் உறவானது தாமரை இலையில் உள்ள நீர்த்துளிகளைப் போன்றதாகும்” என்றான் {பிரம்மன்}”.(13)

ஆசான் தொடர்ந்தார், “{பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், கல்விமான்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான அந்தப் பிராமணர்கள் சில ஐயங்களை உணர்ந்தனர். (எனவே) அவர்கள் மீண்டும் ஒருமுறை (அனைத்துயிரினங்களின்) பெரும்பாட்டனைக் கேள்வி கேட்டனர்” {என்றார் ஆசான்}[3].(14)

ஸம்சயங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 49-பலர் பலவாறாகச் சொல்லும் தர்மங்களில் தங்களுக்குள்ள ஐயங்களைப் பிரம்மனிடம் கேட்ட முனிவர்கள்…

முனிவர்கள் {பிரம்மனிடம்}, “கடமைகளில் {தர்மங்களில்} எது நிறைவேற்றுவதற்கு மிகவும் தகுந்ததாகக் கருதப்படுகிறது? கடமைகளில் பல்வேறு வழிமுறைகள் முரண்பட்டவையாக இருப்பதை நாம் காண்கிறோம்.(1) சிலர் உடலுக்கு (உடல் அழிந்த) பிறகும் (அஃது {ஆத்மா} எஞ்சி) இருக்கிறது என்று சொல்கிறார்கள். மற்றவர்கள் அஃது அவ்வாறிருப்பதில்லை என்று சொல்கிறார்கள். சிலர் அனைத்தும் ஐயம் நிறைந்தன என்று சொல்கிறார்கள். வேறு சிலருக்கு ஐயங்கள் ஏதுமில்லை[1].(2)சிலர், நித்தியமானது (கோட்பாடு) நித்தியமானதல்ல என்று சொல்கிறார்கள். சிலர் அஃது இருக்கிறது என்றும், வேறு சிலர் அஃது இல்லை என்றும் சொல்கிறார்கள். சிலர் அஃது ஒரு வடிவில் அல்லது இரு வடிவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள், வேறு சிலர் அது கலந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.(3) பிரம்மத்தை அறிந்தவர்களும், வாய்மை பேசுபவர்களுமான பிராமணர்கள் சிலர் அஃது ஒன்றே என்று கருதுகிறார்கள். வேறு சிலர் அது வேறுபட்டது எனவும், மேலும் சிலர் அது பல வகையானது என்றும் கருதுகிறார்கள்.(4)

சிலர் காலமும், வெளியும் {இடமும் / தேசமும்} இருக்கின்றன என்று சொல்கின்றனர்; வேறு சிலர் அஃது அவ்வாறில்லை என்று சொல்கின்றனர். சிலர் தங்கள் தலைகளில் ஜடா முடி தரித்து மான் தோல் உடுத்துகின்றனர். வேறு சிலர் தலையை மழித்து, முற்றிலும் அடையின்றி இருக்கின்றனர்.(5) சிலர் குளிப்பதை முற்றிலும் தவிர்ப்பதை ஆதரிக்கின்றனர், சிலர் குளிப்பதை ஆதரிக்கின்றனர். தேவர்கள், பிரம்மத்தை அறிந்த பிராமணர்கள், மற்றும் வாய்மை உணர்வுகளுடன் கூடியவர்களுக்கு மத்தியில் இத்தகைய வேறுபட்ட கருத்துகள் தென்படுகின்றன.(6)

சிலர் உணவு {ஆஹாரம்} உட்கொள்வதை ஆதரிக்கின்றனர்; வேறு சிலர் உண்ணா நோன்புகளில் {உபவாஸங்களில்} அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். சிலர் செயல்பாட்டை {கர்மாவை} மெச்சுகின்றனர். வேறு சிலர் முற்றான அமைதியை {அடக்கத்தை} மெச்சுகின்றனர்.(7) சிலர் விடுதலையை {முக்தியை / மோக்ஷத்தை} மெச்சுகின்றனர். வேறு சிலர் பல்வேறு வகை இன்பங்களை {போகங்களை} மெச்சுகின்றனர்.(8)

சிலர் பல்வேறு வகைச் செல்வங்களை விரும்புகின்றனர். சிலர் வறுமையை விரும்புகின்றனர். சிலர் {தியானம் முதலிய} வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். வேறு சிலர் அவ்வாறில்லை என்கின்றனர்.(9) சிலர் தீங்கிழைக்காத வாழ்வில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். வேறு சிலர் அழிவைச் செய்வதில் அடிமையாக இருக்கிறார்கள். சிலர் தகுதியையும் {புண்ணியம் செய்வதையும்}, மகிமையையும் {புகழடைவதையும்} ஆதரிக்கின்றனர். வேறு சிலர் அவ்வாறில்லை என்கின்றனர்.(10)

சிலர் நல்லியல்பில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். வேறு சிலர் ஐயத்தில் நிறுவப்பட்டுள்ளனர். சிலர் இன்பத்தை ஆதரிக்கின்றனர். சிலர் துன்பத்தை ஆதரிக்கின்றனர். வேறு சிலர் அது தியானம் என்று சொல்கின்றனர்[2].(11) கல்விமான்களான பிராமணர்கள் சிலர் அது வேள்வி என்று சொல்கின்றனர். மேலும் சிலர் அது கொடை என்கின்றனர். சிலர் தவங்களை மெச்சுகின்றனர். வேறு சிலர் சாத்திரக்கல்வியை மெச்சுகின்றனர்.(12)சிலர் ஞானமும், துறவும் (பின்பற்றப்பட வேண்டும்) என்கின்றனர். உட்கூறுகளைச் சிந்திக்கும் வேறு சிலர் {ஸாதனங்கள் எல்லாம் பூர்த்தியாக இருப்பதினாலேயே உண்டாகிறது} அஃது இயற்கை என்கின்றனர். சிலர் அனைத்தையும் போற்றுகின்றனர். சிலர் எதையும் போற்றுவதில்லை.(13) ஓ! தேவர்களில் முதன்மையானவரே, இவ்வாறு குழப்பமுடையதும், பல்வேறு வகை முரண்பாடுகள் நிறைந்ததுமான கடமைகளில் நாங்கள் மயக்கமடைந்து, {சிறந்தது எது என்ற} எந்தத் தீர்மானத்தையும் எட்ட இயலாதவர்களாக இருக்கிறோம்.(14)

“இது நல்லது, இது நல்லது” என்று சொல்லி மனிதர்கள் செயல்படுகிறார்கள். ஒரு கடமையில் {தர்மத்தில்} பற்றுடன் இருக்கும் ஒருவன் அந்தக் கடமையே சிறந்ததென மெச்சுகிறான்.(15) இந்தக் காரணத்தினாலேயே எங்கள் புத்தி {ஒழுங்கற்றதாக} நொறுங்குகிறது, எங்கள் மனமும் திசை திரும்புகிறது. எனவே, ஓ! இருப்பவை அனைத்திலும் சிறந்தவரே, நாங்கள் நன்மையை அறிய விரும்புகிறோம்.(16) எது (பெரும்) புதிரோ, எது க்ஷேத்ரஜ்ஞன் மற்றும் இயற்கைக்கிடையிலான {சத்வத்திற்கிடையிலான} தொடர்பை உண்டாக்குகிறதோ, அதை இதன் பிறகு எங்களுக்கு அறிவிப்பதே உமக்குத் தகும்” என்று கேட்டனர் {முனிவர்கள்}.(17)

கல்விமான்களான அந்தப் பிராமணர்களால் இவ்வாறு கேட்கப்பட்டதும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், அற ஆன்மாவும், சிறப்புமிக்கவனுமான உலகங்களின் படைப்பாளன் {பிரம்மன்} அவர்கள் கேட்டதைக் குறித்துத் துல்லியமாக அவர்களுக்கு அறிவித்தான்” {என்றார் ஆசான்}.(18)

பஞ்சபூத குணங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 50-தர்மத்தோடு கூடிய ஞானமே மோக்ஷஸாதனம் என்பதையும், க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞனுக்கு இடையிலான தொடர்பையும், பஞ்ச பூதங்களின் குணங்களையும் முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “சரி, நீங்கள் கேட்பதை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். தம்மிடம் வந்த சீடனுக்கு ஓர் ஆசானால் சொல்லப்பட்டவற்றை அறிவீராக.(1) அவை அனைத்தையும் கேட்டு (என்னவாக இருக்கலாம் என்பதை) நீங்கள் தீர்மானிப்பீராக. எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமல் இருப்பதே{எல்லாப் பிராணிகளுக்கும் ஹிம்ஸை செய்யாமலிருப்பதே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாக {சிறந்த தர்மத்திற்கு லக்ஷணமாகக்} கருதப்படுகிறது.(2) இது கவலையில் இருந்தும் விடுபட்டதும், புனிதத்தன்மையின் அறிகுறியாகவும் இருக்கும் உயர்ந்த இருக்கையாகும் {ஸ்தானமாகும்}. குறிப்பிட்ட உண்மையைக் கண்டவர்களான புராதனர்கள், ஞானமே உயர்ந்த இன்பம் என்று சொல்கின்றனர்.(3)

எனவே, ஒருவன் தூய அறிவின் மூலம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அழிவு மற்றும் தீங்கு செய்வதில் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத்தில் நம்பிக்கையற்றவர்களாக {நாத்திகர்களாக} இருப்பவர்களும்,(4) பேராசை மற்றும் மயக்கத்துடன் கூடியவர்களாக இருப்பதன் விளைவால் நரகத்திற்குச் செல்வார்கள். எதிர்பார்ப்பால் தூண்டப்பட்டுச் சோம்பலின்றிச் செயல்களைச் செய்பவர்கள்,(5) மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து, இன்பத்தில் திளைக்கிறார்கள். எதிர்பார்ப்புகள் இன்றி, குவிந்த மனத்துடனும், நம்பிக்கையுடனும் செயல்களைச் செய்பவர்களும், கல்வி மற்றும் ஞானத்துடன் கூடியவர்களுமான மனிதர்கள், தெளிவாகப் பார்ப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(6)

இனி, க்ஷேத்ரஜ்ஞன் மற்றும் இயற்கையின் {சத்வத்தின்} சேர்க்கையும், பிரிதலும் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைச் சொல்லப் போகிறேன். மனிதர்களில் சிறந்தவர்களே, கேட்பீராக. பொருள் {விஷயம்} மற்றும் கருப்பொருளுக்கு {விஷயிக்கு} இடையிலான உறவுமுறையாக இது சொல்லப்படுகிறது[1].(7,8) புருஷன் எப்போதும் கருப்பொருளாவான்; இயற்கை {சத்வம்} பொருளெனச் சொல்லப்படுகிறது. கொதுகும் {கொசுவும்}, அத்திப்பழமும் போல இருக்கின்றன என உரையாடலின் முன் பகுதியில் சொல்வதன் மூலம் அவை விளக்கப்படுகின்றன.(9)அனுபவிக்கத்தகுந்த பொருளாக இருக்கும் இயற்கை புத்தியற்றதாகவும், எதையும் அறியாததாகவும் இருக்கிறது. எனினும், அதை அனுபவிப்பவன் அதை அறிவான் எனச் சொல்லப்படுகிறது. அனுபவிப்பவன் க்ஷேத்ரஜ்ஞனாகவும், அனுபவிக்கப்படுவது இயற்கையாகவும் {சத்வமாகவும்} இருக்கின்றன.(10) இயற்கையானது, முரண்பட்ட இரட்டைகளால் அமைந்ததாகவும் {குணங்களைக் கொண்டதாகவும்} இருக்கிறது என்று ஞானிகள் சொல்கின்றனர். மறுபுறம், க்ஷேத்ரஜ்ஞன், முரண்பட்ட இரட்டைகள் அற்றவனாகவும், பகுதிகள் அற்றவனாகவும், நித்தியமானவனாகவும், சாரத்தைப் பொருத்தவரையில் குணங்களில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான்.(11) அவன் அனைத்திலும் ஒரே தன்மையுடனும், ஞானத்துடனும் வசிக்கிறான். தாமரை இலை நீரை (அனுபவிப்பதைப்) போல அவன் {க்ஷேத்ரஜ்ஞன்} எப்போதும் இயற்கையை {சத்வத்தை} அனுபவிக்கிறான்.(12)

ஞானம் கொண்டவனான அவன், குணங்கள் அனைத்துடன் தொடர்பு கொள்ள நேர்ந்தாலும் ஒருபோதும் களங்கப்படாதவனாக இருக்கிறான்.(13) தாமரை இலையில் நிலையில்லாதிருக்கும் நீர்த்துளியைப் போலப் புருஷன் பற்றற்றவனாக இருக்கிறான். இயற்கையானது புருஷனின் உடைமையாக இருக்கிறது என்பதே (சாத்திரங்களின்) நிச்சயமான தீர்மானமாகும்.(14) இவ்விரண்டும் (புருஷனும் இயற்கையும்) பொருள் மற்றும் அதைப் படைப்பவனுக்கிடையிலுள்ள உறவுமுறையுடன் கூடியவையாக இருக்கின்றன[2].இருளடைந்த இடத்திற்கு ஒருவன் தன்னுடன் விளக்கை எடுத்துச் செல்வதைப் போல,(15) உயர்ந்ததை விரும்புபவர்கள் இயற்கை எனும் விளக்குடன் செல்கின்றனர்[3]. (எண்ணையும், திரியும் போன்ற) பொருளும், குணமும் இருக்கும் வரை விளக்கும் ஒளிர்கிறது.(16) எனினும், பொருளும் குணமும் (அல்லது எண்ணெயும், திரியும்) தீரும்போது சுடரும் அணைகிறது. இவ்வாறே இயற்கை வெளிப்படுவதாகச் சொல்லப்படுகிறது, புருஷன் வெளிப்படாதவனாகச் சொல்லப்படுகிறான்.(17) கல்விமான்களான பிராமணர்களே இதைப் புரிந்து கொள்வீராக. சரி, நான் மேலும் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். ஆயிரம் (விளக்கங்களைச்) சொன்னாலும், தீய புத்தி உள்ள ஒருவன் ஞானத்தை அடைவதில் வெல்வதில்லை.(18)எனினும், புத்தியுள்ள ஒருவன், நான்கில் ஒரு பகுதியின் (கால் பாக விளக்கத்தின்) மூலமே மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான். இவ்வாறே கடமைகளை நிறைவேற்றல் வழிமுறைகளைச் சார்ந்தது என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.(19) வழிமுறைகள் குறித்த ஞானமுள்ள புத்திசாலி, உயர்ந்த இன்பத்தை அடைவதில் வெல்கிறான்.(20) பயணத்திற்குத் தேவையான பொருட்கள் இல்லாமல் {கட்டுச்சோறின்றி} சாலையில் பயணிக்கும் மனிதன், மன உலைவுடன் பயணித்து, தன் பயணம் முடிவடைவதற்கு முன்பே அழிவையும் அடைவதைப் போலவே, செயல்களில் கனிகளும், கனியின்மையும் நேரிடும் என்பதை அறிய வேண்டும்[4].(21)ஒருவனுடைய சுயத்திற்கு {அகத்திற்கு} எது ஏற்புடையது, எது ஏற்புடையதல்ல என்பதை ஆய்வு செய்வது நன்மையை விளைவிக்கும்[5]. உண்மையை உணராத மனிதனின் வாழ்வில் முன்னேற்றமானது, ஒரு மனிதன் முன்பின் காணாத நீண்ட சாலையில் மூர்க்கமாகப் பயணிப்பதை {ஓடிச் செல்வதைப்} போன்றதாகும். எனினும், புத்தியுள்ளோரின் முன்னேற்றமானது, அதே சாலையில் வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைச் செலுத்துவதற்குச் சமமானதாகும். மலையின் உச்சிக்கு ஏறிய பிறகு ஒருவன் பூமியின் பரப்பில் கண்களைச் செலுத்தக்கூடாது[6].(22-24)தேரில் பயணித்தாலும், உணர முடியாத துன்பத்தால் பீடிக்கப்படும் ஒரு மனிதனைக் காணும் புத்திசாலி, தேருக்கான பாதை உள்ள தொலைவு வரையே தேரில் பயணிப்பான்[7].(25) கல்விமானான மனிதன், தேருக்கான பாதை முடிவடைவதைக் காணும்போது, மேலும் பயணிக்கத் தன் தேரைத் தவிர்க்கிறான். வாய்மை மற்றும் யோகத்தின் (அல்லது ஞானம் மற்றும் பக்தியின்) விதிகளை அறிந்த புத்திசாலி மனிதனும் இவ்வாறே செல்வான்.(26) குணங்களை அறிந்த மனிதன், அடுத்தடுத்து என்னென்ன என்பனவற்றைப் புரிந்து கொண்டே முன்னேறிச் செல்வான்[8].(27)பயங்கரப் பெருங்கடலில் ஒருவன் அறியாமையால் படகில்லாமல் தன்னிரு கைகளுடன் {கைகளை நம்பி} மட்டுமே மூழ்கும்போது நிச்சயம் அழிவையே எதிர்நோக்குவான்;(28) அதே வேளையில், வேறுபாடுகளை அறிந்த ஞானம் கொண்ட மனிதன் {பகுத்தறியும் மனிதன்}, துடுப்புடன் கூடிய படகில் களைப்பில்லாமல் தடாகத்தைக் கடந்து, மறுகரையை அடைந்து, படகைக் கைவிட்டுவிட்டு, நான், எனது என்ற மமதை எண்ணத்தில் இருந்து விடுபடுகிறான்.(29) இது தேர் மற்றும் பாதசாரி குறித்த எடுத்துக்காட்டின் மூலம் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. பற்றின் விளைவால் அறியாமையில் மூழ்கியிருக்கும் ஒருவன், படகில் ஒட்டும் மீனவனைப் போல அதனுடன் ஒட்டிக் கொள்கிறான்.(30)

நான் எனது என்ற மமதையில் மூழ்கும் ஒருவன் குறுகிய எல்லைகளுக்குள்ளேயே திரிகிறான். ஒரு படகில் ஏறிய பிறகு நிலத்தில் செல்ல முடியாது.(31) அதேபோல, ஒருவன் தேரில் ஏறிய பிறகு நீரில் செல்ல முடியாது. வெவ்வேறு நோக்கங்களுக்கு இவ்வாறே வெவ்வேறு செயல்பாடுகள் உள்ளன.(32) இவ்வுலகில் செயல்கள் செய்யப்படுவதைப் போலவே அவற்றைச் செய்பவனுக்கான விளைவுகளும் நேர்கின்றன. மணமற்றதும், சுவையற்றதும், தீண்டல் மற்றும் ஒலியற்றதும் எதுவோ,(33) புத்தியின் துணையுடன் தவசிகளால் தியானிக்கப்படுவது எதுவோ அது பிரதானம் என்று சொல்லப்படுகிறது.

அந்தப் பிரதானமே வெளிப்படாததாக {புலப்படாததாக / அவ்யக்தமாக} இருக்கிறது. வெளிப்படாததன் வளர்ச்சியே மஹத் ஆகும். பிரதானம் மஹத் ஆன பிறகு நேரும் வளர்ச்சியே அஹங்காரமாகும். அஹங்காரத்திலிருந்து பெரும்பூதங்கள் என்றழைக்கப்படும் வளர்ச்சி உண்டாகிறது.(35) முறையே அந்தப் புலன்நுகர் பொருட்கள், பெரும்பூதங்களிலிருந்து உண்டாகும் வளர்ச்சிகள் என்று சொல்லப்படுகின்றன. வெளிப்படாதது வித்தின் இயல்பைக் கொண்டதாகும். அதன் சாரம் உற்பத்தியாக இருக்கிறது.(36)

பேராத்மா {மஹத்} ஒரு வித்தின் குணங்களைக் கொண்டதென்றும் {காரணமென்றும்}, அஃது ஓர் உற்பத்திப் பொருள் என்றும் {காரியமென்றும்} நாம் கேள்விப்படுகிறோம்[9]. மேலும், அஹங்காரமும் வித்தின் இயல்பைக் கொண்டதாகவும், உற்பத்திப்பொருளாகவும் இருக்கிறது.(37) ஐம்பெரும்பூதங்களும் வித்தின் இயல்பைக் கொண்டவையாகவும், உற்பத்திப் பொருட்களாகவும் இருக்கின்றன. பெரும்பூதங்களுக்குரிய பொருட்கள் {விஷயங்களும்} வித்தின் இயல்பைக் கொண்டு உற்பத்திப் பொருட்களை விளைவிக்கின்றன. இவை சித்தத்தைத் தங்கள் உடைமையாகக் கொண்டுள்ளன. அவற்றில், வெளி {ஆகாயம்} ஒரு குணத்தையும், காற்று {வாயு} இரண்டு குணங்களையும் கொண்டிருக்கின்றன.(38,39)ஒளி, மூன்று குணங்களைக் கொண்டிருப்பதாகவும், நீர் நான்கு குணங்களைக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அசைவன மற்றும் அசையாதன நிரம்பிய பூமி ஐந்து குணங்களைக் கொண்டதாக அறியப்படுகிறது.(40) அவள் அனைத்து உட்பொருட்களின் பிறப்பிடமாகவும், இனியன, அல்லாதன நிறைந்த தேவியாகவும் இருக்கிறாள். ஒலி, தீண்டல், நிறம், சுவை மற்றும் ஐந்தாவதான மணம் ஆகியவை,(41) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, பூமியின் ஐந்து குணங்களாக இருக்கின்றன. எப்போதும் பூமிக்கு உரியதாக இருக்கும் மணம் பல்வேறு வகைகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(42)

நான் மணத்தின் எண்ணற்ற குணங்களை விரிவாகச் சொல்லப் போகிறேன். ஏற்புடையது {இஷ்டம்}, ஏற்பில்லாதது {அனிஷ்டம்}, இனியது {மதுரம்}, புளிப்பானது {அம்லம்}, கடுமையானது {கடு}, பரவலானது {நிர்ஹாரி}, கச்சிதமானது {ஸம்ஹதம்}, எண்ணெயானது {ஸ்நிக்தம்}, உலர்ந்தது {ரூக்ஷம்}, தெளிவானது {விசதம்} என்ற {பத்து} வகைகளில் மணம் இருக்கிறது.(43) இவ்வாறே பூமிக்கு உரிய மணம் பத்து வகைகளில் இருக்கிறது என்று அறியப்பட வேண்டும்[10].(44) ஒலி, தீண்டல், நிறம், சுவை ஆகியன நீரின் குணங்களாகும். நான் இனி சுவையின் குணங்களைச் சொல்லப் போகிறேன். சுவை பல்வேறு வகைப்பட்டதெனச் சொல்லப்படுகிறது.(45)இனியது {இனிப்பு}, புளிப்பு, கடுமையானது {கார்ப்பு}, கசப்பானது, துவர்ப்பானது மற்றும் உவர்ப்பானது என்று {என்ற வகைகளில் சுவை} இருக்கிறது. இவ்வாறே நீர் தொடர்பானது என்று சொல்லப்படும் சுவை ஆறு வகைகளில் இருக்கிறது.(46) ஒளியானது, ஒலி, தீண்டல் மற்றும் நிறம் என்ற மூன்று குணங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நிறம் ஒளியின் குணமாகும், மேலும் நிறம் பல வகையெனச் சொல்லப்படுகிறது.(47) வெள்ளை, கருப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், சாம்பல், குட்டை, நீளம், இளைத்தது, பருத்தது, வட்டம் {நாற்கோணம்}, வட்டம்(48) ஆகிய பனிரெண்டு வகைகள் ஒளிக்குரிய நிறத்திற்கு இருக்கின்றன.

வயது முதிர்ந்தவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், பேச்சில் வாய்மை நிறைந்தவர்களுமான பிராமணர்களால் இது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.(49) ஒலியும் {சப்தமும்}, தீண்டலும் {ஸ்பர்சமும்} காற்றின் {வாயுவின்} இரு குணங்களாக அறியப்படுகின்றன. தீண்டல் பல்வேறு வகைகளில் சொல்லப்படுகிறது.(50) முரடு, குளிர் {சீதம்}, வெப்பம் {உஷ்ணம்}, இளையது {பிச்சிலம்}, தெளிவு {விசதம்}, கடுமை {கடினம்}, எண்ணெய் {ஸ்நிக்தம்}, வழுவழுப்பானது {சிக்கணம்}, வழுக்கும்தன்மையுள்ளது {ஸ்லக்ஷணம்}, துன்பம்நிறைந்தது {தாருணம் / கூச்சம் நிறைந்தது}, மென்மையானது {மிருது}[11](51) என்ற பனிரெண்டு வகைகளில் காற்றின் குணமான தீண்டல் இருக்கிறதென வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், உண்மையைக் கண்டவர்களுமான பிராமணர்களால் சொல்லப்படுகிறது.(52)இனி, வெளி ஒரேயொரு குணத்தைக் கொண்டது, அஃது ஒலி என்று சொல்லப்படுகிறது. ஒலியின் எண்ணற்ற குணங்களை நான் விரிவாகச் சொல்லப் போகிறன்.(53) காந்தாரத்துடன் சேர்ந்த ஷட்ஜம் மற்றும் ரிஷபம், மத்யமம், பஞ்சமம், நிஷாதம், தைவதம், இவற்றையும் தவிர ஏற்புடைய ஒலிகள் {இஷ்டம்}, ஏற்பில்லாத ஒலிகள் {அனிஷ்டம்}, ஸம்ஹதம் {கச்சிதமானது} எனப் பல உட்பொருட்களைக் கொண்டதாக இருக்கிறது[12].(54) வெளியில் பிறக்கும் ஒலி இவ்வாறே பத்து வகைகளாக இருக்கிறது என அறிய வேண்டும்.(ஐந்து) பூதங்களில் வெளியே உயர்ந்ததாகும். அஹங்காரம் அதைவிட உயர்ந்தது.(55) அஹங்காரத்தைவிடப் புத்தி உயர்ந்தது. புத்தியைவிட ஆன்மா உயர்ந்தது. ஆன்மாவைவிடப் புலப்படாதது {அவ்யக்தம்} உயர்ந்தது. புலப்படாததைவிடப் புருஷன் உயர்ந்தவன்.(56) இருப்பிலுள்ள உயிரினங்களுக்கு மத்தியில் உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும் அறிந்தவனும், செயல்கள் அனைத்தின் விதிமுறைகள் அறிந்தவனும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னையே அமைத்துக் கொள்பவனுமான ஒருவன், மங்கிமறையாத ஆன்மாவை அடைகிறான்” என்றான் {பிரம்மன்}.(57)

ஸநாதன தர்மம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 51-க்ஷேத்ரஜ்ஞன் குறித்த மேலும் சில அவதானிப்புகளை முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்; பிரம்மன் சொன்ன சொற்களின்படியே நடக்க வேண்டுமென அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல அர்ஜுனனிடம் அனுமதி கேட்ட கிருஷ்ணன்; அர்ஜுனனின் பதில்..

பிரம்மன், “இந்த ஐந்து பூதங்களைக் கட்டுப்படுத்துவதிலும், அவற்றை வளர்ப்பதிலும் ஆட்சியாளனாக மனமே இருப்பதால், அதுவே பூதங்களின் ஆன்மாவாக இருக்கிறது.(1) மனமே எப்போதும் பெரும்பூதங்களுக்குத் தலைமை தாங்குகிறது. அதிகாரத்தை அறிவிக்கும் புத்தியானது க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுகிறது[1].(2) நல்ல குதிரைகளைப் பூட்டும் சாரதியைப் போல மனமானது புலன்களைப் பூட்டுகிறது. புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியன எப்போதும் க்ஷேத்ரஜ்ஞனுடன் இணைந்திருக்கிறது.(3) பெருங்குதிரைகள் பூட்டப்பட்டதும், புத்தியைக் கடிவாளமாகக் கொண்டதுமான தேரில் ஏறும் தனிப்பட்ட ஆன்மாவானது அனைத்துப் பக்கங்களிலும் அதைச் செலுத்துகிறது.(4) (குதிரைகளாகப்) புலன்கள் பூட்டப்பட்டதும், மனத்தைச் சாரதியாகக் கொண்டதும், புத்தியை நித்திய கடிவாளமாகக் கொண்டதுமாகப் பெரும் பிரம்மத் தேர் இருக்கிறது[2].(5)கல்வியும், ஞானமும் கொண்டவனும், இவ்வழியில் பிரம்மத்தேரை எப்போதும் புரிந்து கொள்பவனுமான மனிதன், அனைத்துப் பொருள்களுக்கு {உலகங்களுக்கு} மத்தியிலும் ஒருபோதும் மயக்கத்தில் {அறியாமையில் / மோஹத்தில்} மூழ்க மாட்டான்.(6) பிரம்மம் எனும் இந்தக் காடு புலப்படாததில் தொடங்கி, பொருட்திரளில் முடிகிது. அஃது அசையும், மற்றும் அசையாத பொருட்களையும் சேர்த்துக் கொண்டு, சூரியன் மற்றும் சந்திரனிடம் இருந்து ஒளியைப் பெற்றுக் கொண்டு, கோள்கள் மற்றும் விண்மீன்கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அஃது ஆறுகள் மற்றும் மலைகள் எனும் வலைகளால் எப்போதும் நிறைந்திருக்கிறது. எப்போதும் அது பல்வேறு வகை நீர்நிலைகளுடன் பிரகாசிக்கிறது. அஃது அனைத்து உயிரினங்களுக்கு வாழ்வாதார வழிமுறையாக இருக்கிறது. மேலும் அஃது அனைத்து உயிரினங்களின் இலக்காகவும் இருக்கிறது. அந்தக் காட்டிலேயே க்ஷேத்ரஜ்ஞன் எப்போதும் திரிகிறான்.(7-9) இவ்வுலகில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் எதுவும் முதலில் அழிவதாக இருக்கிறது {அவையே முதலில் லயமடைகின்றன}. அதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் {பூதங்களையும்} தொகுக்கும் குணங்கள் (அழிவை அடைகின்றன).(10)

குணங்களுக்குப் பிறகு ஐம்பூதங்கள் (அழிவையடைகின்றன). இதுவே பொருட்களின் {பூதங்களின்} படிநிலையாகும். தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், அசுரர்கள்,(11) ராட்சசர்கள் ஆகியோரனைவரும் இயற்கையில் இருந்தே உண்டாகின்றனர், {வேள்விகள் முதலான} செயல்களில் இருந்தோ, {பிரம்மா முதலான} காரணத்தில் இருந்தோ உண்டாவதில்லை. அண்டத்தைப் படைப்பவர்களான பிராமணர்கள் இம்மையில் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்[3].(12) அவர்களில் இருந்து உதிக்கும் அனைத்தும் வேளை வரும்போது கடலில் அலைகளைப் போல அந்த ஐம்பூதங்களிலேயே கறைகின்றன {அழிகின்றன / லயமடைகின்றன}.(13) பெரும்பூதங்கள் அனைத்தும் அண்டத்தைத் தொகுக்கும் பூதங்களைக் கடந்தவையாகும். ஐம்பூதங்களில் இருந்து விடுபட்டவன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(14) பலமிக்கவனான பிரஜாபதியே அனைத்தையும் மனத்திலேயே உண்டாக்கினான். அதே போல முனிவர்களும் தவத்தின் துணையுடன் தேவர்களின் நிலையை அடைந்தனர்.(15)அதேபோலவே, துல்லியத்தை அடைந்தவர்களும், யோகக் குவிப்புக்கு வல்லவர்களும், கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்பவர்களுமாக இருப்பவர்கள் தவத்தின் மூலம் மூவுலகத்தையும் உணர்கிறார்கள்.(16) அடையப்படும் உடைமைகளான அனைத்திற்கும் தவமே வேராக இருப்பதால் மருந்துகள், மூலிகைகள் மற்றும் பல்வேறு அறிவியல்கள் அனைத்தும் தவம் எனும் வழிமுறையால் மட்டுமே அடையப்படுகிறது.(17) தவம் தடுக்கப்பட முடியாதது என்பதால், அடைதற்கரிதான எதுவும், கற்பதற்கரிதான எதுவும், வெல்வதற்கரிதான எதுவும், கடப்பதற்கரிதான எதுவும் என அனைத்தும் தவத்தின் மூலம் அடையப்படுகின்றன.(18) மதுவைப் பருகியவன், பிராமணனைக் கொன்றவன், களவாடுபவன், கருவை அழித்தவன், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவன் ஆகியோரும் நன்கு செய்யப்படும் தவத்தின் மூலம் பாவத்தில் இருந்து தூய்மையடைகிறார்கள்.(19)

மனிதர்கள், பித்ருக்கள், தேவர்கள், (வேள்வி) விலங்குகள், பறவைகள், விலங்குகள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும்,(20) தவங்களில் தங்களை எப்போதும் அர்ப்பணித்துக் கொள்வதன் மூலம், தவத்தால் மட்டுமே வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றன. அதே போலவே, பெரும் மாயசக்திகளுடன் கூடிய தேவர்களும் சொர்க்கத்தை அடைந்தனர்.(21) சோம்பலின்றி, அஹங்காரம் நிறைந்தவர்களாக எதிர்பார்ப்புகளுடன் கூடிய செயல்களைச் செய்பவர்கள் பிரஜாபதியின் முன்னிலையை அடைகிறார்கள்.(22) எனினும், மமதையற்றவர்களும், தூய்மையான தியான யோகத்தின் மூலம் அகங்காரத்தில் இருந்து விடுபட்டவர்களுமான உயர் ஆன்மாக்கள் பெருமைக்குரிய உயர்ந்த உலகங்களை அடைகின்றனர்.(23) சுயத்தைச் சிறப்பாகப் புரிந்து கொள்பவர்கள், தியான யோகத்தை அடைந்து, எப்போதும் தங்கள் மனங்களை உற்சாகம் நிறைந்தவையாக்கி, புலப்படாத இன்பத்திரளுக்குள் நுழைகின்றனர்.(24) மமதை மற்றும் அஹங்காரத்தில் இருந்து விடுபட்டவர்களும், தியான யோகத்தில் நிறைவை அடைந்து மீண்டும் பிறப்பவர்களுமான மனிதர்கள், (அத்தகைய வாழ்வில் இருந்து விடுபடும்போது) புலப்படாத பெரியதற்கு ஒதுக்கப்பட்ட உயர்ந்த உலகத்திற்குள் நுழைகிறார்கள்.(25)

அதே புலப்படாததில் (கோட்பாட்டில்) பிறந்து, இருள் {தமஸ்} மற்றும் ஆசை {ரஜோ} குணங்களில் இருந்து விடுபட்டு, நல்லியல்பின் {சத்வ} குணத்தை மட்டுமே பிற்பற்றுபவன் அதையே மீண்டும் அடைந்து,(26) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான்[4]. அத்தகைய ஒருவனே துல்லியமான க்ஷேத்ரஜ்ஞனாக அறியப்பட வேண்டும். எவன் தன்னை அறிவானோ, அவன் வேதங்களை அறிவான்[5].(27) மனத்தில் (மனக்கட்டுப்பாட்டில்) இருந்து தூய ஞானத்தை அடையும் தவசி தற்கட்டுப்பாட்டுடன் அமர வேண்டும். ஒருவனுடைய மனம் எதனில் நிறுவப்பட்டுள்ளதோ அவன் அதுவாகவே ஆகிறான். இதுவே நித்தியப் புதிராகும் {ஸநாதனமான ரஹஸ்யமாகும்}.(28) புலப்படாததை {அவ்யக்தத்தை} தொடக்கமாகவும், குணத்திரளை {விசேஷங்களை} முடிவாகவும் கொண்டது ஞானமின்மையை {அவித்தையைத்} தன் குறியீடாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நீங்கள் குணங்களற்ற இயல்பைக் கொண்டதெது {அது ஞானம்} என்பதை நீங்கள் புரிந்து கொள்வீராக.(29) மிருத்யு (மரணம்) இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகும்; நித்திய பிரம்மம் மூன்றெழுத்துகளைக் கொண்டதாகும். மமதையே மரணம், மமதைக்கு எதிர்நிலை நித்தியமாகும்[6].(30)கெட்ட புத்தியினால் வழிநடத்தப்படும் சில மனிதர்கள் செயல்களை மெச்சுகின்றனர். எனினும், உயர் ஆன்மாக்களைக் கொண்ட புராதனர்களாக எண்ணப்படுவோர் ஒருபோதும் செயல்களை மெச்சுவதில்லை.(31) செயல்பாட்டின் மூலம் பதினாறாலான உடலுடன் ஓர் உயிரினம் பிறக்கிறது[7]. (உண்மை) ஞானம், (உடலின் நனவுடன் கூடிய சுயத்தை) புருஷனை விழுங்குகிறது. அமிர்தத்தை உண்பவர்களுக்கு இதுவே மிக ஏற்புடையதாக இருக்கிறது[8].(32) எனவே, (வாழ்வெனும் கடலின்) மறுகைவரை விரிந்த பார்வையைக் கொண்டவர்கள், செயல்களில் பற்றேதும் வைப்பதில்லை. எனினும், இந்தப் புருஷன் ஞானம் நிறைந்தவனாக இருக்கிறானேயன்றி செயல்நிறைந்தவனாக அல்ல[9].(33) மரணமற்றவனும், மாற்றமில்லாதவனும், அறியப்படமுடியாதவனும், நித்தியமானவனும், அழிவற்றவனும், பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், கட்டுப்படுத்தப்படாதவனுமான ஆன்மாவைப் புரிந்து கொள்பவன் இறப்பதில்லை.(34) முன்னவனெவனும் இல்லாதவனும், படைக்கப்படாதவனும், மாற்றமில்லாதவனும், வெல்லப்படாதவனும், அமுதம் உண்பவர்களாலும் புரிந்து கொள்ளப்பட முடியாதவனுமான ஆன்மாவை இவ்வாறு புரிந்து கொள்பவன், இவ்வழிமுறைகளின் மூலம் தானே புரிந்து கொள்ளப்பட முடியாதவனாகவும், இறப்பில்லாதவனாகவும் ஆகிறான்.(35)மனப்பதிவுகள் {எண்ணங்கள்} அனைத்தையும் அகற்றி, ஆன்மாவுக்குள் ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, எதைவிடப் பெரியதேதும் இல்லையோ அந்த மங்கலமான பிரம்மத்தை அவன் புரிந்து கொள்கிறான்.(36) புத்தி தெளிவடைந்ததும் அவன் அமைதியை அடைவதில் வெல்கிறான். ஒரு கனவில் நடைபெறுவதைப் போல இருப்பதே அமைதியின் அறிகுறியாகும்[10].(37) இதுவே,, ஞானத்தை நோக்கமாகக் கொண்டவர்களும், விடுதலையடைந்தவர்களுமான இவர்களின் இலக்காகும். அடுத்தடுத்த வளர்ச்சிகளில் பிறக்கும் இயக்கங்கள் அனைத்தையும் அவர்கள் காண்கிறார்கள்[11].(38) இஃது உலகப்பற்றற்றவர்களின் இலக்காகும். இது நித்திய நடைமுறையாகும். இது ஞானிகள் அடையக்கூடிய உடைமையாகும். இதுவே இகழப்படாத ஒழுக்கமுறையுமாகும்.(39) இந்த இலக்கானது, அனைத்து உயிரினங்களிடமும் ஒத்த நடை கொண்டவனும், பற்றற்றவனும், எதிர்பார்ப்பில்லாதவனும் {பயன் கருதாதவனும்}, அனைத்துப் பொருட்களையும் நிகராகக் காண்பவனுமான ஒருவனால் அடையக்கூடியதாக இருக்கிறது.(40) மறுபிறப்பாள முனிவர்களில் முதன்மையானவர்களே, நான் அனைத்தையும் உங்களுக்கு அறிவித்து விட்டேன். இவ்வழியில் உடனே செயல்பட்டு வெற்றியை அடைவீராக” என்றான் {பிரம்மன்}”.(41)ஆசான் தொடர்ந்தார், “ஆசானான பிரம்மனால் இவ்வாறு சொல்லப்பட்டவர்களான அந்த உயர் ஆன்ம தவசிகள் அதன்படியே செயல்பட்டு, (பேரின்ப) உலகங்கள் பலவற்றை அடைந்தனர்.(42) ஓ! அருளப்பட்டவனே, ஓ! தூய ஆன்மா கொண்டவனே, என்னால் அறிவிக்கப்பட்டதும், பிரம்மனால் சொல்லப்பட்டதுமான சொற்களின்படியே நீயும் முறையாகச் செயல்படுவாயாக. அப்போது நீ வெற்றியை அடைவாய்” என்றார் {ஆசான்}”.(43)

வாசுதேவன் சொன்னான், “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இவ்வாறு அந்த ஆசானால் உயர்ந்த அறக்கோட்பாடுகள் கற்பிக்கப்பட்ட அந்தச் சீடன், அதன்படியே அனைத்தையும் செய்து, விடுதலையை {முக்தியை} அடைந்தான்.(44) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த அந்தச் சீடன், எங்கே கவலைப்பட வேண்டியதில்லையோ அந்த இருக்கையை {ஸ்தானத்தை} அடைந்தான்” {என்றான் வாசுதேவன்}.(45)

அர்ஜுனன், “ஓ! கிருஷ்ணா, ஓ! ஜனார்த்தனா, அந்தப் பிராமணரும், அந்தச் சீடரும் உண்மையில் யாவர்? ஓ! தலைவா, அஃது என்னால் கேட்கத்தகுந்ததாக இருந்தால் உண்மையாக எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(46)

வாசுதேவன், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நானே ஆசான் என்றும், என் மனமே என் சீடன் என்றும் அறிவாயாக. ஓ! தனஞ்சயா, உன்னிடம் கொண்ட பற்றின் {அன்பின்} காரணமாக நான் இந்தப் புதிரை {ரஹஸ்யத்தை} உனக்குச் சொன்னேன்.(47) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, உனக்கு என்னிடம் அன்பேதும் இருந்தால் ஆன்மா குறித்த இந்தப் போதனைகளைக் கேட்ட நீ எப்போதும் (அவற்றின்படியே) செயல்படுவாயாக.(48) ஓ! பகைவரைப் பிளப்பவனே, இவ்வறத்தை முறையாகப் பயிலும்போது நீ உன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு முழுமையான விடுதலையை {முக்தியை} அடைவாயாக.(49) முன்னர், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, போருக்கான காலம் வந்தபோது, இந்த அறமே என்னால் (உனக்கு) அறிவிக்கப்பட்டது. எனவே, உன் மனத்தை அதில் நிறுவுவாயாக.(50) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் தலைவரான என் தந்தையைக் கண்டு நெடுங்காலம் ஆகிவிட்டது. ஓ! பல்குனா {அர்ஜுனா}, உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு நான் மீண்டும் அவரைக் காண விரும்புகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}”.(51)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொன்ன கிருஷ்ணனிடம், மறுமொழியாகத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, “நாம் இன்று இந்த நகரத்தில் {இந்திரப்பிரஸ்தத்தில்} இருந்து புறப்பட்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்வோம்.(52) அற ஆன்மாவான மன்னன் யுதிஷ்டிரரை அங்கே சந்தித்து, (உன் நோக்கத்தை) அவரிடம் தெரிவித்தபிறகு நீ உன் சொந்த நகரத்திற்கு {துவாரகைக்குச்} செல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}[12].(53)

அநுகீதை முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அஸ்வமேத பர்வம்-ஸ்ரீ  அஸ்வமேதிக உப பர்வம்-ஸ்ரீ காம கீதை- ஸ்ரீ அநு கீதை உப பர்வம்–

October 21, 2025

யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறிய திருதராஷ்டிரன்! – அஸ்வமேத பர்வம் பகுதி – 01-கங்கைக் கரையில் பீஷ்மருக்குத் தர்ப்பணம் செலுத்தப்பட்டது; உறவுகளின் அழிவினால் துயரடைந்த யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் சொன்ன திருதராஷ்டிரன்; விதுரனின் சொற்களைப் புறக்கணித்ததே துன்பத்துக்குக் காரணமாக அமைந்தது எனச் சொன்ன திருதராஷ்டிரன்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் திருதராஷ்டிரன் (பீஷ்மரின் ஆத்மாவுக்கு) நீர்க்காணிக்கைகளை {தர்ப்பணங்களைச்} செலுத்திய பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், புலன்கள் தடுமாறும் நிலையில் கண்களில் நீர் ததும்ப இருந்தவனுமான யுதிஷ்டிரன், முன்னவனை {திருதராஷ்டிரனைத்} தன் முன்னே விட்டு, (ஆற்றின்) கரையில் ஏறி, வேடனால் துளைக்கப்பட்ட ஒரு யானையைப் போலக் கங்கைக் கரையின் கீழே விழுந்தான்.(1,2) அப்போது கிருஷ்ணனால் தூண்டப்பட்ட பீமன், மூழ்கிக் {விழுந்து} கொண்டிருந்த அவனைத் தாங்கி {ஏந்திக்} கொண்டான். பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவனான கிருஷ்ணன், “இவ்வாறு கூடாது” என்று சொன்னான்[1].(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், கலக்கமடைந்து தரையில் கிடப்பதையும், மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதையும் பாண்டவர்கள் கண்டார்கள்.(4) மன்னன் மனச்சோர்வுற்றவனாகவும், பலமற்றவனாகவும் இருப்பதைக் கண்ட பாண்டவர்கள், துயரத்தில் மூழ்கியவர்களாக அவனைச் சூழ்ந்து கீழே அமர்ந்தனர்.(5)உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனும், ஞானப்பார்வை கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன்களுக்காகப் பெரிதும் துயரில் பீடிக்கப்பட்டவனாக அந்த ஏகாதிபதியிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குருக்களில் புலியே, எழுவாயாக.(6) உன் கடமைகளைக் கவனிப்பாயாக. ஓ! குந்தியின் மகனே, க்ஷத்திரிய நடைமுறையின் படியே நீ இந்தப் பூமியை வென்றாய்.(7) ஓ! மனிதர்களின் தலைவா, இனி நீ உன் தம்பிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அவளை {பூமியை} அனுபவிப்பாயாக. ஓ! அறவோரில் முதன்மையானவனே, நீ எதற்காகத் துயரப்பட வேண்டும் என்பதை {என்பதற்கான காரணத்தை} நான் காணவில்லை. ஓ! பூமியின் தலைவா, கனவில் பெற்ற வளங்களைப் போல நூறு மகன்களை இழந்த காந்தாரியும், நானும் தான் வருந்த வேண்டியவர்கள்.(8) பிறழுணர்வுகளைக் கொண்ட நான், நம் நலத்தை வேண்டிய உயர் ஆன்மாவான விதுரனின் பொருள் பொதிந்த சொற்களைக் கேட்காமல் (இப்போது) வருந்திக் கொண்டிருக்கிறேன்.(9)

அறம் சார்ந்தவனும், தெய்வீக உள்நோக்குப்பார்வை {ஆன்ம அறிவைக்} கொண்டவனுமான விதுரன், “துரியோதனனின் குற்றத்தால் உமது குலம் அழியப் போகிறது.(10) ஓ! மன்னா, உமது குலத்தின் நன்மையை நீர் விரும்பினால் என் ஆலோசனையின்படி செயல்படுவீராக. தீய மனம் கொண்ட ஏகாதிபதியான இந்தச் சுயோதனனைக் கைவிடுவீராக,(11) எவ்வகையிலும் அவனைக் காண கர்ணனையோ, சகுனியையோ அனுமதியாதீர். ஆரவாரமில்லாமல், அவர்களின் சூதாட்டத்தைத் தடுத்து, ஒடுக்கி,(12) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பட்டஞ்சூட்டுவீராக. புலன்களைக் கட்டுப்படுத்தியவனான அவனே நீதியுடன் பூமியை ஆள்வான்.(13) ஓ! ஏகாதிபதி, குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை நீர் ஏற்கவில்லையென்றால், ஒரு வேள்வியைச் செய்து நாட்டின் பொறுப்பை நீரே ஏற்றுக் கொண்டு,(14) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, ஓ! குலத்தை முன்னேற்றுபவரே, அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதி, உமது உறவுகளை உமது அருளில் வாழச் செய்வீராக” என்றான் {விதுரன்}.(15)

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, தொலைநோக்குப் பார்வை கொண்ட விதுரன் இதைச் சொன்ன போதும், மூடனான நான் தீயவனான துரியோதனனைப் பின்தொடர்ந்தேன்.(16) அமைதியான அவனது {விதுரனது} இனிய பேச்சைக் காது கொடுத்துக் கேளாததன் விளைவாகவே நான் இந்தப் பெரும் துயரத்தை அடைந்து, துன்பக் கடலில் மூழ்கியிருக்கிறேன்.(17) ஓ! மன்னா, முதியவர்களான உன் தந்தையும் {நானும்}, தாயும் {காந்தாரியும்} துயரில் மூழ்கியிருப்பதைக் காண்பாயாக. ஓ! மனிதர்களின் தலைவா, நீ துயரமடைவதற்கான எந்நிகழ்வையும் நான் காணவில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}”.(18)

யுதிஷ்டிரனை ஆற்றுப்படுத்திய வியாசர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 02-யுதிஷ்டிரனைத் தேற்றிய கிருஷ்ணன்; காட்டுக்குச் செல்லக் கிருஷ்ணனிடம் அனுமதி கேட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை ஆற்றுப்படுத்திய வியாசர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நுண்ணறிவுமிக்கவனான மன்னன் திருதராஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், புத்திமானான யுதிஷ்டிரன் அமைதியடைந்தான். அப்போது கேசவன் (கிருஷ்ணன்) அவனைத் தூண்டும் வகையில்,(1) “இறந்து போன மூதாதையருக்காக ஒருவன் பெருந்துயரத்தில் ஈடுபட்டால், அவன் அவர்களைத் துயருறவே செய்கிறான்.(2) (எனவே, துயரத்தை நீக்கி) புரோகிதர்களுக்குத் தகுந்த கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றை (இப்போது) செய்வீராக; சோம மதுவால் {ஸோமரஸத்தால்} தேவர்களையும், உரிய உணவு மற்றும் பானத்தால் உமது மூதாதையரின் ஆத்மாக்களையும் நிறைவடையச் செய்வீராக.(3) உமது விருந்தினருக்கு இறைச்சியையும், பானத்தையும், இல்லாதவர்களுக்கு {ஏழைகளுக்கு}, அவர்கள் விரும்பும் கொடைகளையும் கொடுத்து நிறைவடையச் செய்வீராக. உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட ஒருவன் இவ்வாறு தன்னை அமைத்துக் கொள்ளக்கூடாது.(4)

எதை அறிய வேண்டுமோ அதை நீர் அறிந்திருக்கிறீர்; எதைச் செய்ய வேண்டுமோ, அதுவும் செய்யப்பட்டுள்ளது. பாகீரதியின் {கங்கையின்) மகனான பீஷ்மர், கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, நாரதர் மற்றும் விதுரர் ஆகியோரால் சொல்லப்பட்ட க்ஷத்திரியக் கடமைகளை {ராஜதர்மங்களை} நீர் கேட்டிருக்கிறீர்.(5) எனவே, மூடர்களின் பாதையில் நீர் நடப்பது தகாது; உமது மூதாதையரின் பாதையைப் பின்பற்றி (பேரரசுக்குரிய) சுமையைச் சுமப்பீராக {அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வீராக}.(6) ஒரு க்ஷத்திரியன் நிச்சயம் தன் (சொந்த) புகழாலேயே சொர்க்கத்தை அடைய வேண்டும். கொல்லப்பட்ட வீரர்கள் ஒருவரும் (தெய்வீகப் பகுதிகளில் இருந்து) ஒருபோதும் புறங்காட்டி ஓடமாட்டார்கள்.(7) ஓ! வலிமைமிக்க அரசே, உமது துயரைக் கைவிடுவீராக. உண்மையில் நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. இப்போரில் கொல்லப்பட்டவர்களை ஒருக்காலும் உம்மால் காண முடியாது” என்றான் {கிருஷ்ணன்}.(8)

பெரும் ஊக்கம் கொண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அறவோரின் இளவரசனான யுதிஷ்டிரனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு நிறுத்தினான்; யுதிஷ்டிரன் அவனுக்கு இவ்வாறு பதிலளித்தான்.(9) அவன் {யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம்}, “ஓ! கோவிந்தா, உனக்கு என்னிடத்தில் உள்ள அன்பை நான் முழுமையாக அறிவேன். நீ எப்போதும் என்னிடம் அன்புடனும், நட்புடனும் இருக்கிறாய்.(10) ஓ! கதாசக்கரதாரியே, ஓ! யது குலக் கொழுந்தே, ஓ! மகிமைமிக்கவனே, காட்டில் உள்ள தவசிகளின் ஆசிரமங்களுக்குச் செல்ல என்னை நீ அனுமதித்தால், நான் பெரிதும் விரும்பும் காரியத்தைச் செய்தவனாவாய்.(11) என் பாட்டன் {பீஷ்மர்}, மனிதர்களில் முதன்மையானவனும், போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனுமான கர்ணன் ஆகியோரைக் கொன்றுவிட்டு என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.(12) ஓ! ஜனார்த்தனா, என் மனம் தூய்மையடைந்து, இந்தக் கொடும்பாவத்தில் இருந்து நான் விடுபடும் வகையில் எனக்கு ஆணையிடுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.(13)

பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது, பெருஞ்சக்தி கொண்டவரும், வாழ்வின் கடமைகளை அறிந்தவருமான வியாசர், அவனை அமைதிப்படுத்தும் வகையில் இந்தச் சிறந்த சொற்களைப் பேசினார்.(14) அவர் {வியாசர்}, “என் குழந்தாய், உன் மனம் இன்னும் அமைதியடையவில்லை; எனவே, குழந்தைத்தனமான உணர்வில் நீ மீண்டும் மயக்கமடைகிறாய். ஓ! குழந்தாய், மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் எங்கள் பேச்சைக் காற்றில் சிதறடிக்க வேண்டும்?(15) போரிட்டு வாழும் க்ஷத்திரியர்களின் கடமைகளை நீ அறிவாய். தன் பங்கைச் சரியாகச் செய்த மன்னன் கவலையில் மூழ்கக்கூடாது.(16) விடுதலை {முக்திக்} கோட்பாட்டை {மோக்ஷதர்மத்தை} நம்பிக்கையுடன் கேட்டிருக்கிறாய்; ஆசையின் மூலம் எழும் நம்பிக்கையின்மைகளை {அச்ச உணர்வுகளை} உன்னிடம் இருந்து நான் மீண்டும் மீண்டும் களைந்திருக்கிறேன்.(17) ஆனால், பிறழ்புத்தி கொண்டவனான {புத்தி கெட்டவனான} நீ, நான் வெளிப்படுத்தியவற்றைக் கவனிக்காமல் அவற்றை நிச்சயம் முற்றாக மறந்திருக்கிறாய். இவ்வாறு இருக்க வேண்டாம். இத்தகைய அறியாமை உனக்குத் தகாது.(18) ஓ! பாவமற்றவனே, அனைத்து வகை பரிகாரங்களையும் நீ அறிவாய்; மேலும், அரச அறங்கள், மற்றும் கொடைப் பயன்கள் {ராஜதர்மங்கள் மற்றும் தான தர்மங்கள்} அனைத்தையும் நீ கேட்டிருக்கிறாய். (19) ஓ! பாரதா, அறங்கள் அனைத்தையும் அறிந்தவனாகவும், ஆகமங்கள் அனைத்திலும் தேர்ந்தவனாகவும் உள்ள நீ, மீண்டும் மீண்டும் அறியாமையின் மூலம் ஏன் (துயரத்தில்) மதி மயங்குகிறாய்?” என்றார் {வியாசர்}.(20)

அஸ்வமேத யாகம் செய்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 03-யுதிஷ்டிரனிடம் குதிரை வேள்வியைச் செய்யச் சொன்ன வியாசர்; அதற்குப் போதிய பொருளின்மையைச் சுட்டிக்காட்டிய யுதிஷ்டிரன்; மருத்தனின் வேள்வியில் எஞ்சிய பொருளைக் கொண்டு வரச் சொன்ன வியாசர்…

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, உனக்கு ஞானம் போதவில்லை என நான் கருதுகிறேன். ஒருவனும் தன் சொந்த ஒழுக்கத்தால் எந்தச் செயலையும் செய்வதில்லை.(1) ஓ! கௌரவமளிப்பவனே, தெய்வமே நல்ல, அல்லது தீய செயல்களில் அவனை ஈடுபடுத்துகிறது. இதில் வருந்துவதற்கு எங்கே இடமிருக்கிறது?(2) இழிசெயல்களைச் செய்துவிட்டதாக நீயே கருதிக் கொள்கிறாய். எனவே, ஓ! பாரதா, பாவத்தைக் களையும் வழியைக் கேட்பாயாக.(3)

பாவமிழைப்பவர்கள், ஓ! யுதிஷ்டிரா, தவம், வேள்வி மற்றும் கொடைகளின் மூலம் தங்களை அவற்றிலிருந்து எப்போதும் விடுவித்துக் கொள்ளலாம்.(4) ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாவம் நிறைந்த மக்கள், வேள்வி, தவங்கள் மற்றும் ஈகையினால் தூய்மையடைகின்றனர்.(5) உயர் ஆன்ம தேவர்களும், அசுரர்களும் அறத்தகுதியை ஈட்டுவதற்காக வேள்விகளைச் செய்கின்றனர்; எனவே, வேள்விகள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன.(6) உயர் ஆன்ம தேவர்கள் வேள்விகளின் மூலமே இவ்வளவு அற்புதமிக்கப் பலசாலிகளாக வளர்ந்தனர்; சடங்குகளைச் செய்தே அவர்கள் தானவர்களை வெற்றி கொண்டார்கள்.(7)

ஓ! யுதிஷ்டிரா, ராஜசூயம், குதிரை வேள்வி ஆகியவற்றையும், சர்வமேதம் மற்றும் நரமேதம் ஆகியவற்றையும் செய்வதற்கு நீ ஆயத்தமாவாயாக[1].(8) தசரதனின் மைந்தனான ராமனைப் போன்றோ, துஷ்மந்தன் {துஷ்யந்தன்} மற்றும் சகுந்தலையின் மைந்தனும், பூமியின் தலைவனும், அதிகப் பலம் வாய்ந்தவனும், உன் மூதாதையுமான மன்னன் பரதனைப் போன்றோ, விதிக்கு இணக்கமான வகையில் தக்ஷிணைகளுடன் கூடிய குதிரை வேள்வியை {அஸ்வமேத யாகத்தை} நீ செய்வாயாக” என்றார் (9,10).யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “குதிரை வேள்வியானது இளவரசர்களைத் தூய்மையடையச் செய்யும் என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஆனால், நீர் கேட்கத்தகுந்த ஒரு கருத்தையும் நான் கொண்டுள்ளேன்.(11) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பெரும் எண்ணிக்கையிலான இரத்த உறவினர்களைப் படுகொலை செய்து விட்டு சிறு அளவிலான கொடையை அளிப்பதற்குக் கூட நான் இயலாதவனாக இருக்கிறேன்; கொடுப்பதற்கு என்னிடம் செல்வமேதும் இல்லை.(12) துன்பத்தில் இருப்பவர்களும், பச்சையான {ஆறாத புதிய} காயம் கொண்டவர்களும், பரிதாப நிலையில் இருப்பவர்களும், மன்னர்களின் மகன்களுமான இந்தச் சிறுவர்களிடம் என்னால் செல்வத்தை வேண்ட முடியாது.(13) ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நானே பூமியை அளித்துவிட்டு, பெருஞ்சோகத்தில் இருக்கும்போது, ஒரு வேள்வியைச் செய்வதற்காக எவ்வாறு என்னால் கப்பம் விதிக்க முடியும்?(14)

ஓ! தவசிகளில் சிறந்தவரே, துரியோதனனின் குற்றத்தால் பூமியின் மன்னர்கள் அழிவை அடைந்தனர், {அதன் காரணமாக} நாங்களும் சிறுமைகளை அறுவடை செய்தோம்.(15) செல்வத்துக்காகத் துரியோதனன் பூமியைப் பாழாக்கினான்; தீய மனம் கொண்ட அந்தத் திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} கருவூலமும் வெறுமையாக உள்ளது.(16) (இவ்வேள்வியில்) பூமியே தக்ஷிணை; முதல் சந்தர்ப்பத்தில் பரிந்துரைக்கப்பட்ட விதி இதுவே ஆகும். இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கல்விமான்களால் இவ்விதி வழக்கமாகத் தலைகீழாகவே செய்யப்படுகிறது.(17) மேலும், ஓ! தவசியே, (இந்தச் செயல்முறைக்கு) மாற்றாக எதையும் கொள்ள நான் விரும்பவில்லை.[2] ஓ! மதிப்பிற்குரிய ஐயா, இக்காரியத்தில், உமது ஆலோசனையைச் சொல்லி எனக்கு உதவுவதே உமக்குத் தகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(18)பிருதையின் மகனால் {குந்தியின் மகன் யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் சிந்தித்த கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, நீதிமானான அம்மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்},(19) “(இப்போது) வெறுமையாக இருக்கும் இந்தக் கருவூலம் நிறையும். ஓ! பிருதையின் மகனே, உயர் ஆன்ம மருத்தனின் வேள்வியில் பிராமணர்களால் விட்டுச் செல்லப்பட்ட தங்கம் இமவான் (இமய) மலையில் இருக்கிறது” என்றார்[3].(20,21)யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “மருத்தனால் செய்யப்பட்ட அவ்வேள்வியில் எவ்வாறு அவ்வளவு தங்கத்தைத் திரட்ட முடிந்தது? மேலும், ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அவன் {மருத்தன்} எப்போது {எக்காலத்தில்} ஆட்சி செய்தான்?” என்று கேட்டான்.(22)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, கரந்தம குலத்தில் உதித்த அம்மன்னனை {மருத்தனைக்} குறித்துக் கேட்க ஆவல் உனக்கிருந்தால், பெரும் பலம் மிக்கவனும், பெருஞ்செல்வம் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி எப்போது ஆண்டான் என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக” என்றார்.(23)

அரசமுனி மருத்தன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 04-ஸம்வர்த்தர் மற்றும் மருத்தன் ஆகியோரின் வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய வியாசர்; இமய மலையின் வடபுறத்தில் வேள்வி செய்யத் தொடங்கிய ராஜரிஷி மருத்தன்…

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! அறம் சார்ந்தவரே, அரசமுனியான மருத்தனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன். ஓ! துவைபாயனரே {வியாசரே}, ஓ! பாவமற்றவரே, அதை நீர் எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குழந்தாய், கிருத யுகத்தில் மனு (பூமியின்) செங்கோல் தரித்த தலைவராக இருந்தார். அவரது மகன் பிரசாந்தி {பிரஜாதி} என்று அறியப்பட்டான்.(2) பிரசாந்திக்கு க்ஷுபன் {க்ஷுதன்} என்ற மகன் இருந்தான். தலைவனான மன்னன் இக்ஷ்வாகு, க்ஷுபனின் மகனே ஆவான்.(3) ஓ! மன்னா, அவனுடைய {இக்ஷ்வாகுவினுடைய} நூறு மகன்களும் முதன்மையான பக்தி கொண்டவர்களாக இருந்தனர். மன்னன் இக்ஷ்வாகுவினால் அவர்கள் அனைவரும் ஏகாதிபதிகளாக்கப்பட்டனர்.(4) அவர்களில் மூத்தவனான விம்சன், ஒரு முதன்மையான வில்லாளியானான். ஓ! பாரதா, மங்கலனான விவிம்சன், விம்சனின் மகனாவான்.(5)

ஓ! மன்னா, விவிம்சனுக்குப் பதினைந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும், பலமிக்க வில்லாளிகளாகவும், பிராமணர்களை மதிப்பவர்களாகவும், வாய்மை பேசுபவர்களாகவும்,(6) மென்மையானவர்களாகவும், எப்போதும் நல்லதையே பேசுபவர்களாகவும் இருந்தனர். அனைவருக்கும் மூத்தவனான கனீநேத்ரன், தன் தம்பிகள் அனைவரையும் ஒடுக்கினான்.(7) மொத்த நாட்டையும் கைப்பற்றி, தொல்லைகள் அனைத்தையும் களைந்த கனீநேத்ரனால் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை; மக்களும் அவனிடம் நிறைவடையவில்லை.(8) ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, அவனை அரியணையில் இருந்து இறக்கிய அவர்கள், அவனது மகனான ஸுவர்ச்சனுக்கு {ஸுவர்ச்சஸுக்கு} அரசுரிமையில் அதிகாரம் வழங்கி, (தங்கள் இதயங்களில்) மகிழ்ந்திருந்தனர்.(9)

அவனது மகன், (முதலாம்) காரந்தமன் {அவிக்ஷித்}, திரேதா யுகத்தின் தொடக்கத்தில் இந்திரனுக்கு இணையான ஒளியைக் கண்டு, அருள் கொண்டவனாகவும், தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(17) அந்நேரத்தில் அனைத்தும் மன்னர்களும் அவனது கட்டுப்பாட்டில் இருந்தனர்; அதே போல, அவன் தன் செல்வம் கொண்டு செய்த செயல்களாலும், தன்னுடைய ஆற்றலாலும் அவர்களுக்கு மத்தியில் பேரரசனானான்.(18) சுருக்கமாக {சொல்வதென்றால்}, அவிக்ஷித் என்ற பெயரைக் கொண்ட அந்த அறம் சார்ந்த மன்னன் {முதலாம் காரந்தமன்}, வீரத்தில் இந்திரனைப் போன்றவனாக இருந்தான்; மேலும் அவன் வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், தன் புலன்களை அடக்கியவனாகவும் இருந்தான்.(19) அவன், சக்தியில் சூரியனுக்கு ஒப்பானவனாகவும், பொறுமையில் பூமாதேவியைப் போன்றவனாகவும், புத்தியில் இந்திரனைப் போன்றவனாகவும், அமைதியில் இமவான் {இமய} மலையைப் போன்றவனாகவும் இருந்தான்.(20) கல்விமானும், திறன்மிக்கவருமான அங்கிரஸைப் புரோகிதராகக் கொண்டவனும், நூறு குதிரை வேள்விகளைச் செய்தவனுமான அந்த மன்னன் {அவிக்ஷித் / முதலாம் காரந்தமன்}, தன் செயல், எண்ணம், பேச்சு, தற்கட்டுப்பாடு மற்றும் பொறுமை ஆகியவற்றின் மூலம் தன் குடிமக்களின் இதயங்களை மகிழ்ச்சியடையச் செய்தான்.(21,22)

மன்னர்களின் தலைவனும், மருத்தன் என்ற பெயரைக் கொண்டவனுமான அவனுடைய மகன் நற்குணங்களில் தன் தந்தையை விஞ்சியவனாகவும், நீதிமானாகவும், பெரும் புகழைக் கொண்டவனாகவும் இருந்தான்; பத்தாயிரம் யானைகளின் வலிமையுடன் கூடிய அவன் இரண்டாவது விஷ்ணுவைப் போலவே இருந்தான்.(23) அந்த அறம் சார்ந்த ஏகாதிபதி, ஒரு வேள்வியைச் செய்ய விரும்பி, இமயத்தின் வடக்குப் பக்கத்தில் இருந்த மேரு மலைக்குச் சென்று பளபளக்கும் தங்கப் பாத்திரங்களை ஆயிரக்கணக்கில் உண்டாக்கச் செய்தான். அங்கே அந்த உயர்ந்த தங்க மலையில் அவன் {யாகத்திற்கான} சடங்குகளைச் செய்தான்.(24,25) பொற்கொல்லர்கள் {தட்டார்கள்}, எண்ணற்ற கலன்களையும் {குண்டங்களையும்}, பாத்திரங்களையும், சட்டிகளையும் {ஸ்தாலிகளையும்}, இருக்கைகளையும் செய்தனர்.(26) வேள்விச்சாலை இந்த இடத்தில் அருகிலேயே இருந்தது. பூமியின் அறம்சார்ந்த தலைவனான மன்னன் மருத்தன், பிற இளவரசர்களுடன் சேர்ந்து அங்கே ஒரு வேள்வியைச் செய்தான்” என்றார் {வியாசர்}.(27)தந்தையின் தீய நடத்தையையும், அவன் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதையும் கண்ட அவன் {ஸுவர்ச்சன்}, மக்களுக்கு நன்மை செய்வதில் எப்போதும் முனைப்புள்ளவனாகவும், பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், வாய்மை பேசுபவனாகவும், புலன்கள் மற்றும் எண்ணங்களை அடக்கித் தூய்மை பயில்பவனாகவும் இருந்தான். தொடர்ந்த அறம் பயில்பவனான அந்த உயர் ஆன்மாவிடம் {ஸுவர்ச்சனிடம்} குடிமக்களும் நல்ல நிறைவுடன் இருந்தனர்.(10,11) அவன் {ஸுவர்ச்சன்} தொடர்ந்து அறச்செயல்கள் செய்து வந்ததால் அவனது கருவூலங்களும், வாகனங்களும் வெகுவாகக் குறைந்தன. அவனது கருவூலம் வெறுமையானதால், சிற்றரசு இளவரசர்கள் அவனைச் சூழ்ந்து தொல்லை கொடுக்கத் தொடங்கினர்.(12) கருவூலம், குதிரைகள் மற்றும் வாகனங்கள் எண்ணிக்கையில் குறைந்திருக்கும் வேளையில், பல பகைவர்களால் இவ்வாறு ஒடுக்கப்படும்போது, மன்னன் தன்னை ஆதரிப்பவர்களுடனும், தன் தலைநகரின் குடிமக்களுடனும் பெருந்தொல்லைக்கு ஆளானான்.(13) அவனது {ஸுவர்ச்சனது} சக்தி பெரிதும் குறைந்தாலும், அம்மன்னனின் சக்தி அறத்தில் நிறுவப்பட்டிருந்ததால் பகைவர்களால் அவனைக் கொல்ல இயலவில்லை.(14) அவன் தன் குடிமக்களுடன் சேர்ந்து பெருந்துன்பத்தின் எல்லையை அடைந்தபோது, அவன் தன் கையை (வாயினால்) ஊதினான், அதிலிருந்து படைகள் தோன்றின.(15) அவன் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் எல்லைகளில் வாழ்ந்தபடியே அந்த மன்னர்கள் அனைவரையும் வெற்றி கொண்டான். ஓ! மன்னா, இந்தச் சூழ்நிலையிலிருந்து அவன் கரந்தமன்[1] என்று {என்ற பெயரால்} கொண்டாடப்பட்டான்.(16)

பிருஹஸ்பதியைத் தடுத்த இந்திரன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 05-ஸம்வர்த்தர் மற்றும் பிருஹஸ்பதிக்கு இடையிலான சச்சரவு; மருத்தனைக் கண்டு பொறாமை அடைந்த இந்திரன்; மருத்தனின் புரோகிதரான பிருஹஸ்பதியை அவனுக்கு எதிராகத் தூண்டிய இந்திரன்…

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, அம்மன்னன் {மருத்தன்} எவ்வாறு அவ்வளவு பலசாலியானான்? மேலும், ஓ! இருபிறப்பாளரே {பிராமணரே}, அவன் எவ்வாறு அவ்வளவு தங்கத்தை அடைந்தான்?(1) மேலும், ஓ! மதிப்புக்குரிய ஐயா, அந்தச் செல்வம் அனைத்தும் இப்போது எங்கே இருக்கிறது? ஓ! தவசியே, அதை நாம் அடைவது எவ்வாறு?” என்று கேட்டான்.(2)

அதன்பேரில் வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “பிரஜாபதியான தக்ஷனின் எண்ணற்ற பிள்ளைகளான அசுரர்களும், தேவர்களும் (தங்களுக்குள் போரிடுவதற்காக) ஒருவரையொருவர் அறைகூவி அழைத்துக் கொண்டிருந்ததைப் போலவே, ஓ! மன்னா, அங்கிரஸின் மகன்களான பெருஞ்சக்தி கொண்ட பிருஹஸ்பதியும், அவருக்கு இணையான நோன்புகளைக் கொண்ட தவசியான ஸம்வர்த்தரும் ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தனர். பிருஹஸ்பதி மீண்டும் மீண்டும் ஸம்வர்த்தரைக் கவலை கொள்ளச் செய்யத் தொடங்கினார்.(4,5) ஓ! பாரதா, தொடர்ந்து தமது அண்ணனால் கவலைக்குள்ளான அவர், தமது வளங்களைக் கைவிட்டுத் திறந்த வெளியைத் தவிரத் தன் உடலை மறைக்க வேறொன்றும் இல்லாத நிலையில் காட்டுக்குச் சென்றார்[1].(6)(அந்நேரத்தில்) அசுரர்களை வென்று அவர்களை அழித்திருந்த வாசவன் {இந்திரன்}, தெய்வீக உலகங்களின் ஆட்சி உரிமையை அடைந்து, அங்கிரஸின் மூத்த மகனும், பிராமணர்களில் சிறந்தவருமான பிருஹஸ்பதியைத் தன் புரோஹிதராக நியமித்தான். முற்காலத்தில், வலிமை, ஆற்றல் மற்றும் குணம்மிக்க மனிதர்களில் ஒப்பற்றவனும்; சதக்ரதுவைப் போலப் பலமிக்கவனும், அற ஆன்மா கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான மன்னன் கரந்தமன் {ஸுவர்ச்சன்} தன் குடும்பப் புரோஹிதராக அங்கிரஸைக் கொண்டிருருந்தான்.(7-9) ஓ! மன்னா, அவன் தனது வாய் மூச்சின் மூலம் தியானத்தின் காரணமாக உண்டாக்கப்பட்ட வாகனங்களையும், போர்வீரர்களையும், பின்பற்றுவோர் பலரையும், விலைமதிப்புமிக்கச் சிறந்த கட்டில்களையும் கொண்டிருந்தான். மேலும் அவனது சொந்த நற்குணங்களின் மூலம் அந்த ஏகாதிபதி அனைத்து இளவரசர்களையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.(10,11)

மேலும், அவன் விரும்பிய காலம் வரை வாழ்ந்திருந்து தனது சட உடலுடனேயே அவன் சொர்க்கிற்கு உயர்ந்தான். பகைவர்களை வெல்பவனும், யயாதியைப் போன்ற அறவோனுமான அவனது மகன் அவிக்ஷித் {காரந்தமன்},(12) பூமி அனைத்தையும் தன் ஆட்சிப் பகுதிகளின் கீழ் கொண்டு வந்தான். தகுதியிலும், வலிமையில் அம்மன்னன் {அவிக்ஷித்} தன் தந்தைக்கு {ஸுவர்ச்சனுக்கு} ஒப்பானவனாக இருந்தான்.(13) அவன் {அவிக்ஷித்}, பெரும் சக்தி கொண்டவனும், வாசவனுக்கு ஒப்பானவனுமாக மருத்தன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். பெருங்கடல்களை ஆடையாக உடுத்தியிருக்கும் பூமாதேவி அவனிடம் ஈர்ப்பு கொண்டாள்.(14) அவன் எப்போதும் தேவர்களின் தலைவனை {இந்திரனை} எதிர்த்து வந்தான்; ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, வாசவனும் மருத்தனை எதிர்த்து வந்தான்.(15)

பூமியின் தலைவனான மருத்தன், தூய்மையானவனாகவும், கச்சிதம் கொண்டவனாகவும் இருந்தான். பெரும் முயற்சி செய்தாலும் சக்ரனால் {இந்திரனால்} அவனை வெல்ல முடியவில்லை.(16) அவனைக் கட்டுப்படுத்த இயலாத அவன், தேவர்களுடன் சேர்ந்து குதிரைகளைச் செலுத்தி வந்து பிருஹஸ்பதியை அழைத்து அவரிடம் இவ்வாறு பேசினான்.(17) அவன் {இந்திரன்}, “ஓ! பிருஹஸ்பதியே, எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீர் விரும்பினால், தேவர்கள் மற்றும் மூதாதையரின் ஆன்மாக்கள் சார்பாக மருத்தனுக்காக எந்தப் புரோகித அலுவல்களையும் செய்யாதீர். ஓ! பிருஹஸ்பதியே, நான் மூவுலகங்களின் ஆட்சி உரிமையைப் பெற்றிருக்கிறேன், மருத்தனோ வெறுமனே பூமியின் ஆட்சியாளனாக மட்டுமே இருக்கிறான்.(18,19) ஓ! பிராமணரே, தேவர்களின் இறவா மன்னனுக்குப் புரோஹிதராகச் செயல்படும் உம்மால், மரணத்திற்கு உட்படும் மருத்தனுக்கும் புரோஹிதச் செயல்பாடுகளைத் தயக்கமின்றி எவ்வாறு செய்ய முடிகிறது?(20) உமக்கு நன்மை நேரட்டும். என் தரப்பையோ, ஏகாதிபதியான மருத்தனின் தரப்பையோ அடைவீராக. மருத்தனைக் கைவிட்டு என்னிடம் வருவீராக” என்றான் {இந்திரன்}.(21)

தேவர்களின் அரசனால் இவ்வாறு அழைக்கப்பட்ட பிருஹஸ்பதி, சற்று நேரம் சிந்தித்து, இறவாதவர்களின் மன்னனிடம் மறுமொழி கூறினார்.(22) அவர் {பிருஹஸ்பதி}, “உயிரினங்களின் தலைவன் நீயே, உன்னிலேயே உலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. நமுசி, விஷ்வரூபன் மற்றும் பலன் ஆகியோரை அழித்தவன் நீயே.(23) ஓ! வீரா, தேவர்களுக்குச் செழிப்பை உண்டாக்கியவன் நீயே, ஓ! பலனைக் கொன்றவனே, சொர்க்கத்தையும், பூமியையும் ஆதரிப்பவன் நீயே.(24) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ஓ! பாகனைத் தண்டித்தவனே, உனக்குப் புரோகித அலுவல் புரிந்த பிறகு, என்னால் ஒரு மானிட இளவரசனுக்கு எவ்வாறு தொண்டாற்ற முடியும்? நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(25) நெருப்பின் தேவன், வெப்பம் உண்டாக்குவதை நிறுத்தினாலோ, பூமி தன் இயல்பை மாற்றிக் கொண்டாலோ, சூரியன் ஒளி தருவதை நிறுத்தினாலோ கூட நான் ஒருபோதும் {நான் சொன்னதில்} வாய்மையில் இருந்து விலக மாட்டேன்” என்று சொன்னார் {பிருஹஸ்பதி என்றார் வியாசர்}”.(25)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிருஹஸ்பதியின் பேச்சைக் கேட்ட இந்திரன், பகை உணர்வுகள் தீர்ந்தவனாகி, அவரைப் புகழ்ந்துவிட்டு தன் மாளிகைக்குத் திரும்பச் சென்றார்”.(27)

ஸம்வர்த்தர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 06-வேள்வி செய்து தர பிருஹஸ்பதியிடம் வேண்டிய மருத்தன்; பிருஹஸ்பதி மறுத்தது; ஸம்வர்த்தரைக் குறித்து மருத்தனிடம் சொன்ன நாரதர்; ஸம்வர்த்தரைக் கண்டடைந்த மருத்தன்…

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பிருஹஸ்பதி மற்றும் ஞானியான மருத்தன் ஆகியோர் குறித்த பழைய புராணம் குறிப்பிடப்படுகிறது.(1) அங்கிரஸ் மகனான பிருஹஸ்பதி தேவர்களின் தலைவனுடன் (இந்திரனுடன்) செய்து கொண்ட உடன்படிக்கையைக் கேள்விப்பட்ட மன்னன் மருத்தன் ஒரு பெரும் வேள்விக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்தான்.(2) நாநயமிக்கவனான அந்தக் கரந்தமனின் பேரன் {மருத்தன்} தன் மனத்தில் வேள்வி குறித்த கருத்தை உருவாக்கிக் கொண்டு பிருஹஸ்பதியிடம் சென்று இவ்வாறு பேசினான்.(2)

அவன் {மருத்தன் பிருஹஸ்பதியிடம்}, “ஓ! வழிபடத்தகுந்த தவசியே, முன்பொரு சமயம் நீர் முன்மொழிந்த வேள்வியை உமது அறிவுரைக்கு இணக்கமாகச் செய்ய விரும்பி, அதற்குண்டான பொருட்களையும் திரட்டிவிட்டேன். அவ்வேள்வியைச் செய்விக்கும் புரோஹிதராக நான் உம்மையே நியமிக்க விரும்புகிறேன். ஓ! சிறந்தவரே, நீ எங்கள் குடும்பப் புரோஹிதர், எனவே, வேள்விக்குரிய பொருட்களை எடுத்துக் கொண்டு, வேள்வியை நீரே செய்வீராக” என்றான்.(4,5)

பிருஹஸ்பதி {மருத்தனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, உன் வேள்வியைச் செய்ய நான் விரும்பவில்லை. நான் தேவர்களின் தலைவனால் (இந்திரனால்) புரோஹிதராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். மேலும் இவ்வாறே செயல்படுவதாக நான் அவனுக்கு உறுதியளித்திருக்கிறேன்” என்றார்.(6)

மருத்தன் {பிருஹஸ்பதியிடம்}, “பரம்பரையாக நீரே எங்கள் குடும்பப் புரோஹிதராவீர், மேலும், இக்காரணத்திற்காகவே நான் உம்மிடம் மதிப்புக் கொண்டிருக்கிறேன். வேள்விகளில் நீர் எனக்கு உதவ வேண்டும் எனக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. எனவே, என் வேள்வியில் புரோகிதராக நீர் அலுவல் புரிய வேண்டும்” என்றான்.(7)

பிருஹஸ்பதி {மருத்தனிடம்}, “ஓ! மருத்தா, இறவாதவர்களுக்குப் {சொர்க்கவாசிகளுக்குப்} புரோஹிதராகச் செயல்பட்ட நான், இறக்கவல்ல மானிடர்களுக்கு எவ்வாறு அதுபோல் செயல்பட முடியும்?  நீ இங்கிருந்து செல்வாயோ, இருப்பாயோ, இறவாதவர்களைத் {சொர்க்கவாசிகளைத்} தவிர நான் வேறு எவருக்கும் புரோஹிதராகச் செயல்படுவதை நிறுத்தி விட்டேன் என நான் உனக்குச் சொல்கிறேன்.(8) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இப்போது என்னால் உனது புரோஹிதராகச் செயல்பட இயலாது. உன் விருப்பப்படி வேள்வியைச் செய்வதற்காக வேறு எவரையும் நீ நியமித்துக் கொள்வாயாக” என்றார்”.(9)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் மருத்தன், அவமானத்தால் குழப்பமடைந்து, கவலையில் ஒடுக்கப்பட்ட மனத்துடன் இல்லம் திரும்பிக் கொண்டிருக்கும் போது, வழியில் நாரதரைச் சந்தித்தான்.(10) தெய்வீக முனிவரான நாரதரைக் கண்ட அந்த ஏகாதிபதி {மருத்தன்}, கூப்பிய கரங்களுடன் முறையாக வணங்கியபடி அவர் முன்பு நின்றான். அப்போது, நாரதர் அவனிடம் இவ்வாறு சொன்னார். அவர் {நாரதர்}, “ஓ! அரசமுனியே, மனம் நிறைந்தவனாக நீ காணப்படவில்லையே? நீ நலமாக இருக்கிறாயா? ஓ! பாவமற்றவனே, நீ எங்கே சென்றிருந்தாய்? உன் மன வருத்தத்திற்கான காரணம் எங்கிருக்கிறது?(11,12) மேலும், ஓ! மன்னா, ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உனக்கு மறுப்பேதும் இல்லையென்றால் அதை (உன் கவலைக்கான காரணத்தை) எனக்குச் சொல்வாயாக. ஓ! இளவரசே, உன் மனக்கவலையை அகற்றுவதற்கு நான் எல்லா முயற்சிகளையும் செய்வேன்” என்று சொன்னார் {நாரதர் என்றார் வியாசர்}”.(13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும் முனிவரான நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் மருத்தன், தன் அற ஆசானிடம் {உபாத்யாயரிடம்} தனக்குக் கிடைத்த விருப்ப மறுப்பை அவரிடம் தெரிவித்தான்.(14)

மருத்தன் {நாரதரிடம்}, “என் வேள்வியில் புரோஹிதராகச் செயல்பட வேண்டி நான் அங்கிரஸின் மகனும், இறவாதவர்களின் புரோஹிதருமான பிருஹஸ்பதியிடம் சென்றேன், ஆனால் அவர் நான் அளித்த வாய்ப்பை ஏற்கவில்லை.(15) அவரிடம் இருந்து விருப்ப மறுப்பைப் பெற்ற நான் இனியும் வாழ விரும்பவில்லை. ஓ! நாரதரே, இவ்வாறு அவர் என்னைக் கைவிட்டதால், நான் பாவத்தால் மாசடைந்திருக்கிறேன்” என்றான்”.(16)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “அம்மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட நாரதர், ஓ! வலிமைமிக்க இளவரசே {யுதிஷ்டிரா}, அவிக்ஷித்தின் மகனான அவனை {மருத்தனை} மீட்பதாகத் தோன்றும் சொற்களை அவனுக்கு மறுமொழியாகச் சொன்னார்.(17)

நாரதர் {மருத்தனிடம்}, “சம்வர்த்தர் என்ற பெயரைக் கொண்ட அங்கிரஸின் அறம் சார்ந்த மகனொருவர் அனைத்து உயிரினங்களும் ஆச்சரியப்படும் வகையில் பூமி முழுவதும் நிர்வாணமாகத் திரிந்து வருகிறார்;(18) ஓ! இளவரசே, பிருஹஸ்பதி உன் வேள்வியைச் செய்ய விரும்பவில்லையெனில் நீ பலமிக்க அந்தச் சம்வர்த்தரிடம் செல்வாயாக. அவருக்கு உன்னிடம் நிறைவேற்பட்டால் அவர் உனக்கு வேள்வியைச் செய்து தருவார்” என்றார்.(19)

மருத்தன் {நாரதரிடம்}, “ஓ! நாரதரே, நீர் சொன்ன இந்த வார்த்தைகளால் நான் புத்துயிர் பெற்றவனாக உணர்கிறேன். ஆனால், ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, நான் சம்வர்த்தரை எங்கே காணலாம் என்பதையும், என்னால் எவ்வாறு அவரருகில் இருக்க முடியும் என்பதையும், அவரிடம் இருந்தும் விருப்ப மறுப்பைப் பெற்றால் நான் வாழ விரும்பேன் என்பதால், அவர் என்னைக் கைவிடாதவாறு நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(20,21)

நாரதர் {மருத்தனிடம்}, “ஓ! இளவரசே, மஹேஸ்வரனைக் காண விரும்பும் அவர், பித்தன் வேடத்தில் வாராணசி {காசி} நகரத்தில் சுகமாகத் திரிந்து கொண்டிருக்கிறார்.(22) அந்த நகரத்தின் வாயிலை அடைந்ததும், அதனருகில் ஏதோவோரிடத்தில் ஒரு சடலத்தை நீ வைக்க வேண்டும், ஓ! இளவரசே, எந்த மனிதர் அச்சடலத்தைக் கண்டதும் விலகிச் செல்வாரோ அந்த மனிதரையே சம்வர்த்தராக அறிவாயாக,(23) அவரை அறிந்ததும், அந்தப் பலமிக்க மனிதர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் அவரது காலடித்தடங்களைப் பின்தொடர்ந்து சென்று, (நீண்ட காலம்) ஒரு தனிமையான இடத்தில் அவர் இருப்பதைக் கண்டு, பணிவுடன் கரங்களைக் கூப்பி அவரிடம் நீ பாதுகாப்பை நாடுவாயாக.(24) {சம்வர்த்தரான} தம்மைக் குறித்த செய்தியை யார் உனக்குச் சொன்னது என அவர் உன்னைக் கேட்டால், சம்வர்த்தரைக் குறித்து நாரதர் உனக்குச் சொன்னதாக அவரிடம் சொல்வாயாக.(25) {நாரதரான} என்னைப் பின்பற்றுமாறு அவர் உன்னைக் கேட்டுக் கொண்டால், எத்தயக்கமுமின்றி நான் {நாரதராகிய நான்} நெருப்புக்குள் நுழைந்துவிட்டேன் என நீ அவருக்குச் சொல்வாயாக” என்றார் {நாரதர்}”[1].(26)வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “நாரதரின் முன்மொழிவுக்குத் தன் ஒப்புதலை அளித்த அந்த அரசமுனி, அவரை முறையாக வழிபட்ட பிறகு, அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு, வாராணசி நகரகத்திற்குப் புறப்பட்டு,(27) அஃதை {வாராணசியை} அடைந்ததும் நாரதரின் சொற்களை நினைவுகூர்ந்த அந்தப் புகழ்பெற்ற இளவரசன், நகரத்தின் வாயிலில் ஒரு சடலத்தை வைத்துச் சொன்னது போலவே செய்தான்.(28) தற்செயலாக அந்தப் பிராமணரும் {சம்வர்த்தரும்} அதே நேரத்தில் {வாராணசி} நகரத்தின் வாயிலில் நுழைந்தார். அப்போது சடலத்தைக் கண்ட அவர் திடீரென விலகிச் சென்றார்.(29) 

அவர் திரும்பிச் செல்வதைக் கண்டவனும், அவிக்ஷித்தின் மகனுமான அந்த இளவரசன் {மருத்தன்}, கூப்பிய கரங்களுடனும், {சீடனாகி} அவரிடம் இருந்து அறிவுரையைப் பெறும் நோக்கத்துடனும் அவரது பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்து சென்றான்.(30) பிறகு ஒரு தனிமையான இடத்தில் அவரைக் கண்டபோது அந்தச் சம்வர்த்தர் புழுதியையும், சாம்பலையும் இறைத்து அம்மன்னன் மீது சளியையும், எச்சிலையும் துப்பினார்.(31) சம்வர்த்தரால் இவ்வாறு ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டாலும் அந்த மன்னன் பணிவுடனும், கூப்பிய கரங்களுடனும், அந்தத் தவசியை அமைதியடைச் செய்ய முயன்றான்.(32) நீண்ட காலத்திற்குப் பிறகு களைப்படைந்த சம்வர்த்தர், பல கிளைகளைக் கொண்டதும், புனிதமானதுமான ஓர் அரச மரத்தின் குளிர்ந்த நிழலை அடைந்ததும், தன் வழியில் இருந்து விலகி ஓய்வெடுக்க அமர்ந்தார்” என்றார் {வியாசர்}.(33)

உடன்பட்ட ஸம்வர்த்தர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 07-வேள்வி செய்வதற்குப் பிருஹஸ்பதியிடம் அனுமதி பெற்று வருமாறு மருத்தனிடம் கேட்ட ஸம்வர்த்தர்; முன்கதையை ஸம்வர்த்தரிடம் சொன்ன மருத்தன்; நிபந்தனையின் பேரில் வேள்வி செய்வதற்கு இணங்கிய ஸம்வர்த்தர்…

{வியாசர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, சம்வர்த்தர் {மருத்தனிடம்}, “நீ எவ்வாறு என்னை அறிந்து கொண்டாய்? மேலும் என்னைக் குறித்து உனக்குச் சொன்னது யார்? என் நன்மையை விரும்புவாயெனில் இதனை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக.(1) நீ உண்மையைச் சொன்னால், உன் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் நீ அடைவாய், நீ என்னிடம் பொய்யைச் சொன்னால், உன் தலை நூறு துண்டுகளாகப் பிளக்கும்” என்றார்.(2)

மருத்தன் {சம்வர்த்தரிடம்}, “தமது வழியில் திரிந்து கொண்டிருந்த நாரதர், நீர் எங்கள் குடும்பப் புரோஹிதரின் மகன் என உம்மைக் குறித்து என்னிடம் சொன்னார், இது (இந்தத் தகவல்) என் மனத்தை (உம்மிடம்) சீரிய நிறைவடையச் செய்தது” என்றான்.(3)

சம்வர்த்தர் {மருத்தனிடம்}, “இதை நீ என்னிடம் உண்மையாகவே சொல்லியிருக்கிறாய். வேள்விகளைச் செய்யும் ஒருவனாக அவர் (நாரதர்) என்னை அறிவார். தற்போது நாரதர் எங்கே வாழ்கிறார் என்பதை இப்போது எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார்.(4)

மருத்தன் {சம்வர்த்தரிடம்}, “தெய்வீகத் தவசிகளின் இளவரசரான அவர் (நாரதர்), உம்மைக் குறித்த இந்தச் செய்தியை எனக்குச் சொல்லிவிட்டு, உமது பாதுகாப்பில் என்னை விட்டுவிட்டு நெருப்புக்குள் நுழைந்தார்” என்றான்”.(5)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னனிடம் (மருத்தனிடம்) இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட சம்வர்த்தர் பெரும் நிறைவை அடைந்தார், மேலும் அவர் (மருத்தனிடம்), “நானும் இவையனைத்தையும் செய்யவல்லவனே” என்றார்.(6)

பிறகு, ஓ! இளவரசே, பித்தனைப் போல அலைந்து திரியும் அந்தப் பிராமணர் {சம்வர்த்தர்}, கொடுஞ்சொற்களால் மருத்தனை மீண்டும் மீண்டும் வசைபாடி,(7) “பெருமூளைக் கோளாறால் பீடிக்கப்பட்டவனும், தன்மனத்தின் சீரற்ற இச்சைகளின்படி எப்போதும் செயல்படுபவனும், இத்தகைய ஒருமை மனநிலை கொண்டவனுமான என்னைப் புரோஹிதராகக் கொண்டு ஏன் இந்த வேள்வியைச் செய்ய நீ விரும்புகிறாய்?(8) என் அண்ணன் {பிருஹஸ்பதி} வேள்விகளை நடத்த வல்லவர், அவர் வாசவனிடம் (இந்திரனிடம்) சென்று அவனது வேள்விகளைச் செய்து வருகிறார், நீயும் உன் வேள்வியை அவரைக் கொண்டே செய்வாயாக.(9) என் வீட்டுப் பொருட்களையும், அகநிலை உணவர்வுபெற்ற தேவர்களையும், வேள்வி செய்யும் வாடிக்கையாளர்களையும் என அனைத்தையும் என்னிடம் இருந்து பலவந்தமாக அபகரித்துக் கொண்டு, என் உடலை மட்டுமே இப்போதைக்கு என்னிடம் விட்டு வைத்திருக்கிறார்,(10) ஓ! அவிக்ஷித்தின் மகனே {மருத்தனே}, அனைத்து வகையிலும் அவர் என் மதிப்புக்குரியவர் என்பதால், அவரது அனுமதியின்றி எவ்வழியிலும் என்னால் உன் வேள்வியைச் செய்ய இயலாது.(11) எனவே, வேள்வி செய்யும் விருப்பமேதும் உனக்கிருந்தால், முதலில் நீ அந்தப் பிருஹஸ்பதியிடம் சென்று, அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு என்னிடம் திரும்பி வருவாயாக” என்றார்.(12)

மருத்தன், “ஓ! சம்வர்த்தரே, நான் முதலில் பிருஹஸ்பதியிடம்தான் சென்றேன், ஆனால் வாசவனின் {இந்திரனின்} ஆதரவை விரும்பிய அவர், வேள்வி செய்பவனாக என்னை விரும்பவில்லை.(13) அவர் {பிருஹஸ்பதி}, “இறவாதவர்களின் புரோஹிதர் என்ற நிலையை அடைந்த பிறகு, இறந்து போகிறவர்களுக்குப் பணி செய்ய நான் விரும்பவில்லை. பூமியின் தலைவனாகியிருக்கும் மருத்தன் எப்போதும் தன்னை எதிர்க்கும் விருப்பம் கொண்டிருக்கிறான் என்றும், மருத்தனின் வேள்வியைச் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி சக்ரனால் (இந்திரனால்) நான் தடுக்கப்பட்டேன்” என்று சொன்னார். அவ்வாறே ஆகட்டும் என்று பலனைக் கொன்றவனிடம் (இந்திரனிடம்) சொன்னதன் மூலம் உமது அண்ணன் {பிருஹஸ்பதி} அதற்கு இணங்கினார்.(15) ஓ! தவசிகளில் சிறந்தவரே {சம்வர்த்தரே}, தேவர்களின் தலைவனுடைய பாதுகாப்பை அடைவதில் அவர் வென்ற பிறகு, இதய நிறைவுடன் நான் அவரிடம் சென்றேன் என்றாலும் அவர் எனக்குப் புரோஹிதராகச் செயல்பட மறுத்துவிட்டார்.(16) இவ்வாறு மறுக்கப்பட்ட நான் இப்போது நான் கொண்டுள்ள அனைத்தையும் செலவு செய்து உம்மைக் கொண்டு ஒரு வேள்வியைச் செய்து, உமது நற்காரியங்களின் தகுதியால் வாசவனை விஞ்ச விரும்புகிறேன்.(17) ஓ! பிராமணரே {சம்வர்த்தரே}, என்னிடம் எக்குற்றமும் இல்லாமலே பிருஹஸ்பதியால் மறுக்கப்பட்ட நான் இப்போது அவரிடம் சென்று இந்த வேள்வியைச் செய்வதில் அவரது உதவியை நாட விரும்பவில்லை” என்றான்.(18)

சம்வர்த்தர் {மருத்தனிடம்}, “ஓ! மன்னா, நான் உன்னிடம் கேட்கப் போகும் அனைத்தையும் செய்வதற்கு இணங்கினால், நிச்சயம் நீ விரும்பும் அனைத்தையும் நிறைவேற்ற என்னால் முடியும்,(19) என்றாலும், உன் வேள்வியை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் பிருஹஸ்பதியும், புரந்தரனும் (இந்திரனும்) அறிய நேர்ந்தால், கோபத்தால் நிறையும் அவர்கள், உனக்குத் தீங்கிழைக்க அவர்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள் என்றும் உணர்கிறேன்.(20) எனவே, நான் என் பொறுமையையும், மாறாநிலையையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உன் நிலையுறுதியை எனக்கு உறுதிப்படுத்துவாயாக, மாறாக நான் உன்னிடம் கோபமடைந்தால், உன்னையும், உன் குடும்பத்தாரையும் சாம்பலாகக் குறைத்துவிடுவேன் (அழித்துவிடுவேன்)” என்றார்.(21)

மருத்தன் {சம்வர்த்தரிடம்}, “எப்போதேனும் நான் உம்மைக் கைவிட்டால், மலைகள் இருக்கும் வரையும், ஆயிரங்கதிர் சூரியன் தொடர்ந்து வெப்பத்தை வெளியிடும் வரையும் ஒருபோதும் நான் அருள் உலகங்களை அடையமாட்டேன்,(22) நான் உம்மைக் கைவிட்டால், ஒருபோதும் உண்மை ஞானத்தை அடையாதவனாக, உலகம் சார்ந்த (பொருள்) தேடல்களுக்கு அடிமையாகவே நான் நீடித்திருப்பேன்” என்றான்.(23)

சம்வர்த்தர் {மருத்தனிடம்}, “ஓ! அவிக்ஷித்தின் மகனே, இந்தச் செயலைச் செய்வதில் உன் மன விருப்பம் சிறந்திருக்கிறது, ஓ! மன்னா, அதே போலவே, நானும் வேள்வியைச் செய்வதற்கான {சிறந்த} திறனை என் மனத்தில் கொண்டிருக்கிறேன்,(24) ஓ! மன்னா, நீ கொண்டிருக்கும் நல்ல பொருட்கள் அனைத்தும் அழியாதனவாகும், மேலும், சக்ரனையும், தேவர்களையும், கந்தர்வர்களையும் விட நீ அவற்றை {செல்வத்தை} அதிகமாக ஆள்வாய்.(25) என்னைப் பொறுத்தவரையில், செல்வம் திரட்டுவதிலோ, வேள்விக் கொடைகளிலோ விருப்பமேதுமில்லை, இந்திரனுக்கும், என் அண்ணனுக்கும் ஏற்பில்லாததை மட்டுமே நான் செய்யப் போகிறேன் {விரும்புகிறேன்}.(26) நிச்சயம் நான் உன்னைச் சக்ரனுக்கு இணையானவனாக ஆக்குவேன், மேலும் உனக்கு ஏற்புடையதையே செய்வேன் என்பதையும் நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்[1]” என்றார் {சம்வர்த்தர்}.(27)

முஞ்சவான் மலையின் தங்கம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 08-இமயத்தில் உள்ள முஞ்சவான் மலையில் இருக்கும் தங்கத்தைக் குறித்து மருத்தனுக்குச் சொன்ன ஸம்வர்த்தர்; அங்கே சென்று சிவனைத் துதித்து தங்கத்தை அடைந்த மருத்தன்; கவலையடைந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியிடம் சென்ற இந்திரன்…

சம்வர்த்தர் {மருத்தனிடம்}“இமய மலையின் உச்சியில் முஞ்சவான் என்ற பெயரில் ஒரு சிகரம் இருக்கிறது. அங்கே உமையின் துதிக்கத்தக்க தலைவன் (மஹாதேவன்) தொடர்ந்து தவம் செய்து கொண்டிருக்கிறான். வலிமைமிக்கவனும், வழிபடத்தகுந்தவனும், பெரும் பலம் கொண்டவனுமான அந்தத் தேவன் திரிசூல தாரியாக, பல வகைப் பூதகணங்களால் சூழப்பட்டவனாக, அங்கே பெரும் காட்டு மரங்களின் நிழலிலோ, குகைகளிலோ, அந்தப் பெரும் மலையின் முரட்டுச் சிகரங்களிலோ தன் மனைவியான உமையுடன் தன் விருப்பம் போல் திரிந்து கொண்டிருக்கிறான்.(2,3) ருத்திரர்கள், ஸாத்யர்கள், விஷ்வேதேவர்கள், வசுக்கள், யமன், வருணன், தன் பணியாட்களுடன் கூடிய குபேரன்,(4) பூதங்கள், பிசாசங்கள், அஸ்வினி தேவர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், யக்ஷர்கள், தெய்வீக முனிவர்கள்,(5) சூரிய தேவர்கள் {ஆதித்யர்கள்}, காற்றுகளுக்குத் தலைமை தாங்கும் தேவர்கள் {மருத்துகள்}, அனைத்து வகையான ராட்சசர்கள் ஆகியோர் அங்கே பல்வேறு பண்புகளைக் கொண்டவனும், உயர்ந்த ஆன்மாவுமான உமையின் தலைவனை வழிபடுகின்றனர்.(6)

மேலும், ஓ! மன்னா {மருத்தனே}, அங்கே அந்தத் துதிக்கத்தக்க தேவன், வினோதமான கொடூரத் தோற்றங்களுடன் கூடியவர்களும், முரடர்களும், விளையாட்டுத்தனம் கொண்டவர்களுமான குபேரனின் தொண்டர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(7) தன்காந்தியில் ஒளிரும் அந்த மலை காலைச் சூரியனைப் போலப் பிரகாசமானதாக இருக்கிறது.(8) இயற்கையான சதையாலான கண்களுடன் கூடிய எந்த உயிரினத்தாலும் அதன் வடிவத்தையோ, கட்டமைப்பையோ, அங்கே நிலவும் வெப்பம் அல்லது குளிரையோ, சூரியன் ஒளிர்கிறானா? காற்று வீசுகிறதா என்பதையோ உறுதிப்படுத்த முடியாது.(9) மேலும், ஓ! மன்னா, அங்கிருக்கும் எவரையும் முதுமை, பசி, தாகம், மரணம் அல்லது அச்சம் என ஏதும் பீடிக்காது.(10) ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே {மருத்தா}, அம்மலையின் அனைத்துப் பக்கங்களிலும், சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன. மேலும், ஓ! மன்னா, குபேரனுக்கு நன்மை செய்ய விரும்புபவர்களும், உயர்த்திய கரங்களுடன் கூடியவர்களுமான அவனது தொண்டர்கள், அழையாமல் நுழைபவர்களிடம் இருந்து அந்தத் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கின்றனர்.(11)

நீ அங்கே சென்று, சர்வன், வேதன், ருத்ரன், சிதிகண்டன் {கறுத்த கழுத்த கொண்டவன்}, ஸுரூபன், ஸுவர்சன் {நல்ல காந்தி கொண்டவன்}, கபர்தின் {சடையுள்ளவன்}, கராலன் {பயங்கரன்}, ஹர்யக்ஷன் {பொன்னிறக்கண்ணன்}, வரதன்,(13) திரயக்ஷன் {முக்கண்ணன்}, பூஷ்ணோதந்தபித் {சூரியனின் பற்களைத் தகர்த்தவன்}, வாமனன் {குள்ளன்}, சிவன் {நலம் அருள்பவன்}, யாம்யன் {அடக்குபவன்} அவ்யக்தரூபன், ஸத்விருத்தன் {நன்னடை கொண்டவன்}, சங்கரன்,(14) க்ஷேம்யன் {நன்மை செய்பவன்}, ஹரிகேஸன் {பொன்னிற மயிர் கொண்டவன்}, ஸ்தாணு, புருஷன், ஹரிநேத்ரன் {பொன்னிறக் கண்ணன்}, முண்டன், கிருசன் {கோபமுள்ளவன்}, உத்தரணன் {கரையேற்றுபவன்},(15) பாஸ்கரன் {பிரகாசிப்பவன்}, ஸுதீர்த்தன், தேவதேவன், ரம்ஹன் {வேகமுள்ளவன்}, உஷ்ணீஷி {தலைப்பாகை கொண்டவன்}, ஸுவக்த்ரன் {நன்முகம் கொண்டவன்}, ஸஹஸ்ராக்ஷன் {ஆயிரங்கண்ணன்}, மீடுவான் {அனைத்தையும் படைப்பவன்},(16) கிரிசன் {மலையில் படுப்பவன்}, பிரஸாந்தன் {பேரமைதி கொண்டவன்}, யதன் {சந்நியாசி}, சீரவாஸன் {மரவுரியாடை கொண்டவன்}, வில்வதண்டன் {வில்வத்தாலான தண்டம் கொண்டவன்}, சித்தன், ஸர்வதண்டதரன் {அனைவரையும் பாதுகாப்பவன்},(17) மிருகவியாதன் {வேள்வியெனும் மானை அடிக்கும் வேடன்}, மஹான், தனேசன் {வில் கொண்டவன்}, பவன் {படைப்பவன்}, வரன் {சிறந்தவன்}, ஸோமவக்த்ரன் {சந்திரன் போன்ற முகம் கொண்டவன்}, ஸித்தமந்த்ரன், சக்ஷு {கண்ணாக இருப்பவன்},(18) ஹிரண்யபாஹு {பொன்மயக்கரங்கொண்டவன்}, உக்ரன், திக்பதி {திசைகளின் தலைவன்}, லேலிஹானன் {கடைவாயை நாவால் நனைப்பவன்}, கோஷ்டன், சித்தமந்திரன், விருஷ்ணு, பசுபதி, பூதபதி {பூதங்களின் தலைவன்},(19) விருஷன், மாத்ருபக்தன் {தாய்பக்தி கொண்டவன்}, ஸேனானி {படைத்தலைவன்}, மத்யமன், ஸ்ருவஹஸ்தன் {எதிர்பார்க்கும் முகம் கொண்டவன்}, யதி, தன்வி {வில்லாளி}, பார்கவன், அஜன் {பிறப்பற்றவன்},(20) கிருஷ்ணநேத்ரன் {கறுத்த கண் கொண்டவன்}, விரூபாக்ஷன் {பெருவிழியோன்}, தீக்ஷ்ணதம்ஷ்ட்ரன் {கூரிய கோரப் பற்களைக் கொண்டவன்}, தீக்ஷ்ணன், வைஸ்வானரமுகன் {அக்னியை முகத்தில் கொண்டவன்},(21) மஹாத்யுதி, அனங்கன், ஸர்வன் {அனைத்துமாக இருப்பவன்}, திக்பதி, விலோஹிதன் {மிகச் சிவந்தவன்}, தீப்தன் {பிரகாசிப்பவன்}, தீப்தாக்ஷாயன் {பிரகாசிக்கும் கண்களைக் கொண்டவன்}, மஹௌஜன் {சிறந்த ஒளி கொண்டவன்},(22) வசுரேதஸ், ஸுவபு {நல்ல உடல் கொண்டவன்}, பிருது {பருத்தவன்}, கிருத்திவாஸன் {யானைத் தோலை உடையாகக் கொண்டவன்},(23) கபாலமாலி {மண்டையோட்டு மாலை கொண்டவன்}, ஸுவர்ணமுகுடன் {தங்க கிரீடம் கொண்டவன்}, மஹாதேவன், கிருஷ்ணன் {கறுத்தவன்}திரயம்பகன் {முக்கண்ணன்}, அனகன் {குற்றமற்றவன்},(24) குரோதனன் {கோபமுள்ளவன்}, நிருஸம்ஸன் {கொடூரங்கொண்டவன்}, மிருது {மென்மையானவன்}, பாஹுஸாலிதண்டி {கையில் தண்டம் கொண்டவன்}, தப்ததபஸ், அக்ரூரகர்மன் {கொடூரத்தன்மையற்றவன்}, ஸஹஸ்ரஸிரஸ் {ஆயிரந்தலையோன்}, ஸஹஸ்ரசரணன் {ஆயிரங்காலோன்}, ஸ்வதாஸ்வரூபன், பஹுரூபன் {பலவடிவகங்களைக் கொண்டவன்}, தம்ஷ்ட்ரி {கோரப்பற்களைக் கொண்டவன்},(25) பினாகி {பினாகம் என்ற வில்லைக் கொண்டவன்}, மஹாதேவன், மஹாயோகி {பெரும் யோகி}, அவ்யயன் {அழிவற்றவன்}, திரிஸூலஹஸ்தன் {திரிசூலத்தைக் கையில் கொண்டவன்}, வரதன் {வரமளிப்பவன்}, திரயம்பகன் {முக்கண்ணன்}, புவனேஸ்வரன்,(26) திரிபுரக்னன், திரினயனன், திரிலோகேஸன் {மூவுலகங்களுக்கும் ஈசன்}, மஹௌஜன் {சிறந்த பலம் கொண்டவன்}, ஸர்வபூதபிரபவன் {அனைத்துக்கும் மூலமானவன்}, ஸர்வபூததாரணன் {அனைத்துக்கும் கொடுப்பவன்}, தரணீதரன் {பூமியைத் தரிப்பவன்},(27) ஈஸானன், சங்கரன், ஸர்வன், சிவன், விஸ்வேஸ்வரன், பவன், உமாபதி, பஸுபதி, விஸ்வரூபன், மஹேஸ்வரன்,(28) விரூபாக்ஷன், தஸபுஜன் {பத்துக் கரங்களைக் கொண்டவன்}, விருஷபத்வஜன் {காளை கொடி கொண்டவன்}, உக்ரன், ஸதாணு, சிவன், ரௌத்ரன், ஸர்வன், கிரீசன், ஈஸ்வரன்,(29) ஸிதிகண்டன் {நீலகண்டன்}, அஜன், ஸுக்ரன், பிருது {பருத்தவன்}, பிருதுஹரன் {பருத்தவைகளை அழிப்பவன்}, வரன், விஸ்வரூபன், விரூபாக்ஷன், பஹுரூபன் {பல வடிவங்களைக் கொண்டவன்}, உமாபதி,(30) அனங்காங்கஹரன் {மன்மதனின் உடலை அழித்தவன்}, ஹரன் {அபகரிப்பவன்}, ஸரண்யன், மஹாதேவன், சதுர்முகன் {நான்முகன்} என்று அறியப்படும் அந்தத் துதிக்கத்தக்க தேவனை ஆற்றுப்படுத்துவாயாக.(31) அங்கே சென்று அந்தத் தேவனை {மேற்கண்ட பெயர்களைச் சொல்லி} வணங்கி, அவனது பாதுகாப்பை அடைய ஏங்கிக் கேட்பாயாக. ஓ! இளவரசே, உயர் ஆன்மாவும், பெருஞ்சக்தி கொண்டவனுமான மஹாதேவனை இவ்வாறு வணங்கினால் நீ தங்கத்தை அடைவாய்.(32) இவ்வாறு அங்கே செல்லும் மனிதர்கள் தங்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்[1]” என்றார் {சம்வர்த்தர்}.

இவ்வாறு சொல்லப்பட்ட கரந்தமனின் மகன் மருத்தன், அந்த அறிவுறுத்தலுக்கு ஏற்றபடியே செய்தான்.(33) மேலும் அவன் தன் வேள்வியைச் செய்வதற்காக மனித சக்திக்கு மீறிய ஏற்பாடுகளைச் செய்தான். கைவினைஞர்கள் அவ்வேள்விக்காகத் தங்கத்தாலான பாத்திரங்களை உற்பத்தி செய்தனர்[2].(34) தேவர்களின் செல்வத்தைக் காட்டிலும் மேன்மையானதாக இருந்த மன்னன் மருத்தனின் நிறைந்த செல்வத்தைக் கேள்விப்பட்ட பிருஹஸ்பதியும், தமக்கு எதிரான சம்வர்த்தர் செல்வந்தராகிறான் என்ற எண்ணத்தால், இதயம் பீடித்தவராகக் கவலையடைந்து, நிறம் மங்கி, மிகவும் மெலிந்து போனார்.(35,36) பிருஹஸ்பதி வருத்தமடைந்திருப்பதைத் தேவர்களின் தலைவன் அறிந்தபோது, இறவாதவர்களால் தொண்டாற்றப்பட்ட அவரிடம் சென்று இவ்வாறு சொன்னான்” {என்றார் வியாசர்}.(37)

அக்னியின் அச்சம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 09-பிருஹஸ்பதியின் வருத்தம்; பிருஹஸ்பதியை ஏற்றுக்கொள்ளும்படி அக்னி தேவன் மூலம் மருத்தனிடம் சொன்ன இந்திரன்; மருத்தனின் மறுப்பு; அக்னியின் மறுப்பு…

{வியாசர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “இந்திரன், “ஓ! பிருஹஸ்பதி, நீர் அமைதியாக உறங்குகிறீரா? உமது பணியாட்கள் உமக்கு ஏற்புடையவற்றைச் செய்கிறார்களா? நீர் தேவர்களின் நன்மையை நாடுகிறீரா? ஓ! பிராமணரே, தேவர்கள் உம்மைப் பாதுகாக்கிறார்களா?” என்றான்.(1)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, நான் என் படுக்கையில் அமைதியாக உறங்குகிறேன். என் பணியாட்கள் எனக்குப் பிடித்தவாறு நடந்து கொள்கிறார்கள், மேலும் நான் எப்போதும் தேவர்களின் நன்மையை நாடுகிறேன். அவர்களும் என்னை நன்றாகப் பேணிக் காக்கிறார்கள்” என்றார்.(2)

இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, “பிறகு மனத்திலோ, உடலிலோ ஏன் இந்த வலி {துயரம்}? நீர் ஏன் இப்போது நிறம் மங்கி, தோற்றம் குலைந்திருக்கிறீர்? ஓ! பிராமணரே, உமக்கு வலியுண்டாக்கிய மக்கள் அனைவரையும் நான் கொல்லும் வகையில் அவர்கள் {அம்மக்கள்} யார் என்பதை என்னிடம் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பிருஹஸ்பதி, “ஓ! இந்திரா, (பிராமணர்களுக்குப்) பெருங்கொடைகளுடன் மருத்தன் ஒரு பெரும் வேள்வியைச் செய்யப் போகிறான் என்றும், அவனது வேள்வியில் சம்வர்த்தன் புரோகிதனாகச் செயல்படப் போகிறான் என்றும் நான் கேள்விப்படுகிறேன். எனவே, அந்த வேள்வியில் அவன் புரோகிதராகச் செயல்படக்கூடாது என நான் விரும்புகிறேன்” என்றார்.(4)

இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! பிராமணரே, புனித மந்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரான நீர் தேவர்களின் புரோஹிதரான போதே உமது விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்துவிட்டீர். மேலும், மரணம் மற்றும் முதுமையின் ஆதிக்கங்களையும் கடந்துவிட்டீர். உம்மைச் சம்வர்த்தரால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான்.(5)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “பகைவனின் செழிப்பு ஒருவனது உணர்வுகளுக்கு எப்போதும் பெருந்துன்பத்தைத் தரும், இந்தக் காரணத்தினாலேயே நீ தேவர்களுடன் சேர்ந்து அசுரர்களையும், அவர்களின் உற்றார் உறவினர்களையும் துன்புறுத்தி, அவர்களில் மிகச் செழிப்பானவர்களைக் கொல்கிறாய்;(6) ஓ! தேவர்களின் தலைவா, என் பகைவன் செழிப்படைகிறான் என்ற எண்ணத்தில் என் தோற்றம் மாறியிருக்கிறது. எனவே, ஓ! இந்திரா, சம்வர்த்தனையும், மன்னன் மருத்தனையும் அனைத்து வழிமுறைகளினாலும் தடுப்பாயாக” என்றார்.(7)

அக்னியிடம் திரும்பிய இந்திரன், “ஓ! ஜாதவேதா, நான் சொல்வதைப் பின்பற்றி மன்னன் மருத்தனிடம் சென்று, பிருஹஸ்பதியை அவனிடம் கொடுத்து, இந்தப் பிருஹஸ்பதி அவனது வேள்வியைச் செய்து கொடுத்து அவனை இறவாதவனாக்குவார் {அமரனாக்குவார்} என்று அவனிடம் சொல்வாயாக” என்றான்.(8)

அக்னி {இந்திரனிடம்}, “ஓ! போற்றுதலுக்குரியவனே, இப்போதே நான் உன் தூதனாக அங்கே சென்று மன்னன் மருத்தனிடம் பிருஹஸ்பதியைக் கொடுக்கிறேன்” என்றான். இந்திரனின் சொற்களை உண்மையாக்கவும், பிருஹஸ்பதிக்கு மதிப்பளிக்கவும் அக்னி புறப்பட்டுச் சென்றான்”.(9)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “பிறகு அந்த உயர்ஆன்ம நெருப்பு தேவன், குளிர் காலத்தின் இறுதியில் வரம்பற்றுச் சுழன்று முழங்கும் வலிமைமிக்கக் காற்றைப் போலக் காடுகளையும், மரங்கள் அனைத்தையும் சூறையாடியபடி தன் குற்றேவலைப் புரியச் சென்றான்.(10)

மருத்தன் {சம்வர்த்தரிடம்}, “காண்பீராக. இன்று நெருப்பின் தேவன் தன் சொந்த உடலுடன் வருவதைக் காண்கிறேன். எனவே, ஓ! முனிவரே {சம்வர்த்தரே}, அவனுக்கு ஓர் இருக்கையையும், நீரையும், ஒரு பசுவையும், கால் கழுவ நீரையும் அளிப்பீராக” என்றான்.(11)

அக்னி {மருத்தனிடம்}, “ஓ! பாவமற்றவனே, நீ அளிக்கும் காணிக்கைகளான நீர், இருக்கை மற்றும் கால் கழுவுவதற்கான நீர் ஆகியவற்றை நான் ஏற்கிறேன். இந்திரனின் ஆணைக்கிணங்க வந்திருக்கும் அவனது தூதனாக என்னை அறிவாயாக” என்றான்.(12)

மருத்தன் {நெருப்பு தேவனிடம்}, “ஓ! நெருப்பின் தேவா, தேவர்களின் மகிமைமிக்கத் தலைவன் {இந்திரன்} மகிழ்ச்சியாக இருக்கிறானா? எங்களிடம் நிறைவுடன் இருக்கிறானா? தேவர்கள் அவனிடம் மாறாப்பற்றுடன் இருக்கின்றனரா? இவை அனைத்திலும் முறையாக என்னைத் தெளிவடையச் செய்வாயாக” என்றான்.(13)

அக்னி {மருத்தனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, சக்ரன் முற்றான மகிழ்ச்சியுடனும், உன்னிடம் நிறைவுடனும், முதுமையில் இருந்து விடுதலைபெற்றவனாக உன்னை ஆக்கும் விருப்பத்துடனும் இருக்கிறான். தேவர்கள் அனைவரும் அவனிடம் மாறாப் பற்றுடன் இருக்கிறார்கள். ஓ! மன்னா, தேவர்கள் தலைவன் {இந்திரன்} சொன்ன செய்தியைக் கேட்பாயாக.(14) ஓ! இளவரசே, மருத்தனிடம் பிருஹஸ்பதியை அளிக்கவும், உன் வேள்வியை (தேவர்களின்) இந்தப் புரோஹிதர் செய்யவும், இறக்கக்கூடியவனாக மட்டுமே இருக்கும் உன்னை இறவா நிலை அடையச் செய்யும் நோக்கத்துடனும் என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறான்” என்றான்.(15)

மருத்தன் {அக்னி தேவனிடம்}, “இருபிறப்பாள பிராமணரான சம்வர்த்தர் என் வேள்வியைச் செய்யப் போகிறார், மஹேந்திரனின் புரோஹிதராகச் செயல்பட்டவர் இப்போது இறக்கக்கூடிய மனிதர்களின் புரோஹிதராகச் செயல்படுவது நன்றாகத் தெரியவில்லை என நான் பிருஹஸ்பதியிடம் வேண்டுகிறேன்” என்றான்.(16)

அக்னி, “இந்தப் பிருஹஸ்பதி உன் புரோஹிதராகச் செயல்பட்டால், தேவராஜனின் (இந்திரனின்) ஆசியின் மூலம் தேவ மாளிகையின் உயர்ந்த பகுதியை நீ அடைவாய், மேலும் புகழடையும் நீ நிச்சயம் தேவலோகத்தை வெல்வாய்.(17) மேலும், ஓ! மனிதர்களின் தலைவா, பிருஹஸ்பதி உன் புரோஹிதராகச் செயல்பட்டால், மனிதர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளையும், தெய்வீக உலகங்களையும், பிரஜாபதியால் உண்டாக்கப்பட்ட உயர்ந்த உலகங்கள் அனைத்தையும், ஏன் தேவர்களின் மொத்த அரசையும் நீ வெல்ல இயன்றவனாவாய்” என்றான்.(18)

சம்வர்த்தர் {அக்னி தேவனிடம்}, “நீ பிருஹஸ்பதியை மருத்தனிடம் அளிப்பதற்காக மீண்டும் ஒருபோதும் வராதே; ஓ! பாவகா, அவ்வாறு நீ செயல்பட்டால் கோபமடையும் நான் என் கடுந்தீயக் கண்களால் உன்னை எரித்துவிடுவேன் என்பதை அறிவாயாக” என்றார்”.(19)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது அக்னி நெருப்பால் அடையப்போகும் அழிவை அறிந்து, அரச மரத்தின் இலைகளைப் போல நடுங்கிக் கொண்டே தேவர்களிடம் திரும்பிச் சென்றான். பிருஹஸ்பதியோடு வரும் ஆகுதிகளைச் சுமப்பவனை (அக்னியைக்) கண்ட உயர் ஆன்ம சக்ரன் பின்வருமாறு சொன்னான்:”(20)

இந்திரன் {அக்னி தேவனிடம்}, “ஓ! ஜாதவேதா (அக்னியே), என் ஆணையின்படி பிருஹஸ்பதியை மருத்தனிடம் அளிக்கச் சென்றாய். வேள்வியைச் செய்யும் அம்மன்னன் என்ன செய்தான்? அவன் நான் சொன்னதை ஏற்றானா?” என்று கேட்டான்.(21)

அக்னி {இந்திரனிடம்}, “நீ சொன்னதை மருத்தன் ஏற்கவில்லை. என்னால் தூண்டப்பட்ட போது அவன் பிருஹஸ்பதியிடம் கரங்கூப்பி மீண்டும் மீண்டும் சம்வர்த்தரே தன் புரோஹிதராகச் செயல்படுவார் என்று சொன்னான்.(22) மேலும் அவன் உலகம் சார்ந்த, மற்றும் தெய்வீக உலகங்களையும், பிரஜாபதியின் உயர்ந்த உலகங்கள் அனைத்தையும் அடைவதைத் தான் விரும்பவில்லை என்பதையும், அவ்வாறு அவன் நினைத்திருந்தால், இந்திரனின் விதிமுறைகளைத் தானே ஏற்றுக் கொண்டிருப்பான் என்பதையும் உறுதியாகச் சொன்னான்” என்றான்.(23)

இந்திரன், “நீ அந்த மன்னனிடம் திரும்பச் சென்று, அவனைச் சந்தித்து, நான் சொல்லும் முக்கியம் நிறைந்த வார்த்தைகளையும், அவன் அதற்குக் கீழ்ப்படியவில்லையெனில் நான் என் வஜ்ராயுதத்தால் அவனைத் தாக்குவேன் என்பதையும் அவனிடம் சொல்வாயாக.” என்றான்.(24)

அக்னி {இந்திரனிடம்}, “ஓ! வாசவா, இந்தக் கந்தர்வர்களின் மன்னன் {இந்தத் திருதராஷ்டிரன்} உன் தூதனாக அங்கே செல்லட்டும். நான் அங்கே செல்ல அஞ்சுகிறேன். ஓ! சக்ரா, தவப்பயிற்சிகளுக்கு அடிமையானவரும், பெரும் கோபத்திலிருப்பவருமான சம்வர்த்தர் சினத்துடன் இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்னார் என்பதை அறிவாயாக.(25) ‘மன்னன் மருத்தனிடம் பிருஹஸ்பதியை அளிப்பதற்காக எவ்வகையிலாவது நீ மீண்டும் இங்கே வந்தால், என் கடுந்தீயக் கண்களால் உன்னை நான் எரித்துவிடுவேன்’ என்று அவர் சொன்னார்” என்றான்.(26)

சக்ரன் {அக்னி தேவனிடம்}, “ஓ! ஜாதவேதா, வேறு பொருட்கள் அனைத்தையும் எரிப்பவன் நீயே, உன்னைச் சாம்பலாகக் குறைக்க வேறு எவராலும் முடியாது. ஓ! ஆகுதிகளைச் சுமப்பவனே, உன்னை நெருங்க உலகமனைத்தும் அஞ்சுகின்றன. உன்னுடைய இந்தச் சொற்கள் நம்பத்தகாதவையாகும்” என்றான்.(27)

அக்னி {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா, உன் கரங்களின் வலிமையால் நீ சொர்க்கம், பூமி மற்றும் ஆகாயத்தின் ஆட்சிப்பகுதிகளைச் சூழ்ந்து உள்ளடக்கினாய். அவ்வாறிருந்தும், (பழங்காலத்தில்) விருத்திரனால் எவ்வாறு தேவலோகத்தின் அரசுரிமையை உன்னிடம் இருந்து பறிக்க முடிந்தது?” என்று கேட்டான்.(28)

இந்திரன் {அக்னி தேவனிடம்}, “என்னால் என் பகைவர்களை அடங்கச் செய்ய முடியும். நான் விரும்பினால் மலையின் அளவை ஓரணுவாகக்கூட என்னால் குறைக்க முடியும். ஆனால், ஓ! வாஹ்னி, ஒரு பகைவனால் அளிக்கப்படும் சோம பானக் காணிக்கையை நான் ஏற்பதில்லை, பலவீனர்களை வஜ்ராயுதத்தால் நான் தாக்க மாட்டேன் (என்பதால் சில காலத்திற்கு விருத்திரனால் என்னை வெல்ல முடிந்தது). ஆனால் என்னிடம் பகை உண்டாக்கிக் கொள்வதன் மூலம் எந்த மனிதனால் அமைதியாக வாழ முடியும்?(29) நான் காலகேயர்களைப் பூமிக்கு விரட்டிவிட்டேன், தானவர்களைச் சொர்க்கத்தில் இருந்து அகற்றினேன், பிரஹலாதனின் இருப்பைச் சொர்க்கத்தில் முற்றுக்குக் கொண்டு வந்தேன். என்னிடம் பகையைத் தூண்டுவதன் மூலம் எந்த மனிதனால் அமைதியாக வாழ முடியும்?” என்று கேட்டான்.(30)

அக்னி, “ஓ! மஹேந்திரா, பழங்காலத்தில் இரட்டை தேவர்களான அஸ்வினிகளுடன் கூடிய சர்யாதியின் வேள்வியைச் சியவன முனிவர் நடத்தி, சோமக் காணிக்கையைத் தனியாகத் தானே பெற்றுக் கொண்டபோது, கோபத்தில் நிறைந்த நீ சர்யாதியின் வேள்வியைத் தடுக்க முயன்றாய் நினைவிருக்கிறதா?(31) அப்போது உன் வஜ்ரத்தால் சியவனரைப் பலவந்தமாகத் தாக்கினாய். ஓ! புரந்தரா, கோபமடைந்த அந்தப் பிராமணரால், தமது பக்தியின் சக்தியால் வஜ்ராயுதத்துடன் கூடிய உன் கரத்தை முடக்க முடிந்தது.(32) மேலும் சினத்தில் அவர் அனைத்து வடிவங்களையும் ஏற்க வல்லவனும், பயங்கரத் தோற்றம் கொண்டவனும், மதன் என்ற பெயர் கொண்டவனுமான ஓர் அசுரனை உனக்குப் பகைவனாக உண்டாக்கினார். நீ அவனைக் கண்டதும் அச்சத்தால் உன் கண்களை மூடிக் கொண்டாய்.(33) அவனுடைய பெருந்தாடைகளில் ஒன்று பூமியிலும், மற்றொன்று தேவலோகத்திலும் விரிந்திருந்தது. நூறு யோஜனைகள் நீளம் கொண்ட ஆயிரம் கூரிய பற்களுடன் அவன் காணப் பயங்கரனாக இருந்தான்.(34) வெள்ளித் தூண்களைப் போல இருந்த நான்கு முக்கியப் பற்கள் இருநூறு யோஜனை நீளம் கொண்டவையாக இருந்தன. அவன் தன் பற்களைக் கடித்துக் கொண்டும், சூலத்தை உயர்த்திக் கொண்டும் உன்னைக் கொல்லும் நோக்கோடு உன்னைத் தொடர்ந்த போது,(35) அந்தப் பயங்கர ராட்சசனைக் கண்ட நீ, பார்வையாளர்கள் அனைவருக்கும் (பரிதாபம் நிறைந்த) காட்சிப் பொருளானாய். ஓ! தானவர்களைக் கொன்றவனே, அந்த ராட்சசனிடம் கொண்ட அச்சத்தால் கூப்பிய கரங்களுடன் பணிந்து அந்தத் தவசியின் பாதுகாப்பை நீ கேட்டாய்.(36) ஓ! சக்ரா, பிராமணர்களின் வலிமை க்ஷத்திரியர்களுடையதைவிடப் பெரியதாகும். பிராமணர்களைவிட சக்திமிக்கவர்கள் வேறு எவரும் இல்லை. ஓ! சக்ரா, பிராமணர்களின் சக்தியை முறையாக அறிந்த நான், சம்வர்த்தருடன் ஒருபோதும் மோதலை விரும்பவில்லை” என்றான் {அக்னி}.(37)

வேள்வியை நிறைவடையச் செய்த இந்திரன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 10-பிருஹஸ்பதியை ஏற்றுக் கொள்ளும்படி மருத்தனுக்குச் சொல்லி அனுப்பிய இந்திரன்; மருத்தன் மறுத்தது; வேள்வியை நிறைவடையச் செய்த இந்திரன்; அங்கிருக்கும் செல்வத்தைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; அஸ்வமேத வேள்வியைச் செய்யச் சொன்னது…

இந்திரன் {அக்னி தேவனிடம்}, “அவ்வாறே இருக்கிறது. பிராமணர்களின் வலிமை பெரியது, பிராமணர்களைவிடப் பலம் நிறைந்தவர்கள் வேறு எவரும் இல்லை, ஆனால், அவிக்ஷித் மகனின் {மருத்தனின்} அற்பச் செருக்கை எல்லாம் ஒருபோதும் உள்ளச்சமநிலையுடன் பொறுத்துக் கொள்ள இயலாது. நான் என் வஜ்ரத்தைக் கொண்டு அவனைத் தாக்கப் போகிறேன்.(1) எனவே, ஓ! திருதராஷ்டிரா, நான் சொல்வது போலச் சம்வர்த்தரால் கவனிக்கப்படும் மன்னன் மருத்தனிடம் சென்று, “ஓ! இளவரசே, பிருஹஸ்பதியை நீ உன் ஆன்ம ஆசானாக ஏற்றுக் கொள்வாயாக, இல்லையெனில் நான் என் பயங்கர வஜ்ரத்தால் உன்னைத் தாக்கப் போகிறேன்” என்ற இந்தச் செய்தியை அவனிடம் சொல்வாயாக” என்றான்”.(2)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “பிறகு, திருதராஷ்டிரன் அந்த ஏகாதிபதியின் {மருத்தனின்} அரசவைக்குச் சென்று வாசவன் சொன்ன இந்தச் செய்தியைச் சொன்னான்.(3)

{கந்தர்வ மன்னனான} திருதராஷ்டிரன் {மருத்தனிடம்}, “ஓ! மனிதர்களின் தலைவா, இந்திரனின் செய்தியைச் சொல்லும் நோக்கத்துடன் உன்னிடம் வந்திருக்கும் நான் கந்தர்வன் திருதராஷ்டிரன் என்பதை அறிவாயாக. ஓ! மன்னர்களில் சிங்கமே, உயர் ஆன்மா கொண்டவனான அனைத்து உலகங்களின் தலைவன் {இந்திரன்} சொன்ன சொற்களைக் கேட்பாயாக,(4) சிந்தனைக்கெட்டாத சாதனைகளைச் செய்த அவன் (இந்திரன்), “பிருஹஸ்பதியை உன் வேள்வியைச் செய்யும் புரோஹிதராக ஏற்றுக் கொள்வாயாக. நீ என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கவில்லையெனில் பயங்கரமான என் வஜ்ராயுதத்தால் நான் உன்னைத் தாக்குவேன்” என்பதை மட்டும் சொல்லி அனுப்பினான்” என்றான்.(5)

மருத்தன் {திருதராஷ்டிரனிடம்}, “நீயும், புரந்தரன் {இந்திரன்}, விஷ்வேதேவர்கள், வசுக்கள் மற்றும் அஸ்வினிகள் ஆகியோர் அனைவரும், ஒரு நண்பனை வஞ்சிப்பதன் {மித்ரதுரோகத்தின்} விளைவுகளில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதையும், அஃது ஒரு பிராமணரைக் கொலை செய்வதைப் போன்ற பெரும்பாவமாகும் என்பதையும் அறிவீர்கள்.(6) ஓ! இளவரசே, பிருஹஸ்பதியானவர், உயர்ந்த தேவனும், வஜ்ரத்தைத் தாங்கும் உயர்ந்தவனுமான மஹேந்திரனின் புரோகிதராகவே, செயல்படட்டும், சம்வர்த்தர் என் புரோஹிதராகச் செயல்படுவார். அவனது (இந்திரனின்) சொற்களோ, உன்னுடையவையோ உனக்கு உவப்பாக இல்லை” என்றான்.(7)

கந்தர்வன் {திருதராஷ்டிரன்}, “ஓ! இளவரசர்களின் சிங்கமே, வாசவனின் பயங்கரமான போர் அறைகூவல் சொர்க்கத்தில் {ஆகாயத்தில்} முழங்குவதைக் கேட்பாயாக, இந்திரனின் ஒலியைக் கேட்பாயாக. மஹேந்திரன் உன்மீது வெளிப்படையாகவும், உறுதியாகவும் வஜ்ரத்தைப் பயன்படுத்துவான். எனவே, உன் நலத்தைக் குறித்து ஆலோசனை செய்வாயாக. ஏனெனில், அதைச் செய்வதற்குத் தகுந்த நேரமிது” என்றான்”.(8)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “திருதராஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், வாசவனின் ஊளை முழக்கத்தைக் கேட்டவனுமான மன்னன் {மருத்தன்} இந்தச் செய்தியை பக்தியில் உறுதிமிக்கவரும், அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் உயர்ந்தவருமான சம்வர்த்தரிடம் தெரிவித்தான்.(9)

மருத்தன் {சம்வர்த்தரிடம்}, “காற்றில் மிதக்கும் இந்த மழை மேகம், தற்போது இந்திரன் அருகில் இருப்பதையே நிச்சயம் குறிப்பிடுகிறது. எனவே, ஓ! பிராமணர்களின் இளவரசரே, நான் உம்மிடம் உறைவிடத்தை நாடுகிறேன், ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, இந்திரன் மீது நான் கொண்டுள்ள அச்சத்தை என் மனத்தில் இருந்து அகற்றுவீராக.(10) வஜ்ரதாரி, பயங்கரமானதும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதுமான ஒளியையும், கொண்டு வெளியின் பத்து திக்குகளையும் சூழ்ந்து வருகிறான். மேலும் இந்த வேள்விக் கூட்டத்தில் உள்ள என் உதவியாளர்கள் அனைவரும் அச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர்” என்றான்.(11)

சம்வர்த்தர் {மருத்தனிடம்}, “ஓ! மன்னர்களில் சிங்கமே, சக்ரன் மீது நீ கொண்டு அச்சம் விரைவில் விலகும், இந்தப் பயங்கரத் துன்பத்தை நான் என் மந்திரங்களின் {ஸம்ஸ்தம்பினி என்ற வித்தையின்} மூலம் விரைவில் அகற்றுவேன். அமைதியடைவாயாக, இந்திரனால் வெல்லப்படுவோம் என்ற அச்சமேதும் உனதாக வேண்டாம்.(12) நூறு வேள்விகளைச் செய்த தேவனிடம் நீ அஞ்சுவதற்கு ஏதுமில்லை. நான் என்னிடமுள்ள வசியங்களைப் பயன்படுத்துவேன். ஓ! மன்னா, தேவர்கள் அனைவரின் ஆயுதங்கள் ஏதும் அவர்களுக்குப் பயனளிக்காது.(13) வெளியின் திக்குகள் அனைத்திலும் மின்னல் கீற்றுகள் பாயட்டும், மேகங்களுக்குள் நுழையும் காற்றானது காடுகளுக்கு மத்தியில் மழையைப் பொழியட்டும், இங்கே காணப்படும் பெருவெள்ளமும், சொர்க்கங்களும், மின்னல் கீற்றுகளும் பயனளிக்கப் போவதில்லை, உனக்கு அஞ்சுவதற்கு ஏதுமில்லை,(14) வாசவன் எங்கே விரும்புகிறானோ அங்கே மழையைப் பொழியட்டும், உன் அழிவுக்காக நீர்த்திரள்களுக்கு (மேகங்களுக்கு) மத்தியில் மிதக்கும் தன் பயங்கர வஜ்ரத்தையும் பயன்படுத்தட்டும், வாஹ்னி (அக்னி) தேவன் அனைத்து வழியிலும் உன்னைப் பாதுகாத்து, உன்னை உன் விருப்பங்கள் அனைத்தையும் அடையச் செய்வான்” என்றார்.(15)

மருத்தன், “உளையிடும் காற்றுடன் சேர்ந்து இந்தப் பயங்கர வஜ்ர இடி {இடி முழக்கம்} என் காதுகளுக்குப் பயங்கரமானதாகத் தெரிகிறது. மேலும் என் இதயம் மேலும் மேலும் பீடிக்கப்படுகிறது. ஓ! பிராமணரே, தற்போது எனக்கு மன அமைதி இல்லாமல் போய்விட்டது” என்றான்.(16)

சம்வர்த்தர், “ஓ! மன்னா, பயங்கரமான இந்த இடிமுழக்கத்தால் உன் மனத்தில் எழும் அச்சம் இப்பொது அகலும். காற்றின் உதவியுடன் இடியை நான் அகற்றப் போகிறேன், உன் மனத்தில் இருக்கும் அச்சம் அனைத்தையும் விலக்கி வைத்து விட்டு உன் இதயம் விரும்பும் வரம் ஒன்றை ஏற்பாயாக, நான் அதை உனக்காகச் செய்வேன்” என்றார்.(17)

மருத்தன், “ஓ !பிராமணரே, இந்திரன் திடீரென இந்த வேள்விக்கு நேரடியாக வந்து அவனுக்கு அளிக்கப்படும் காணிக்கை ஏற்க வேண்டும் என்றும், வேறு தேவர்கள் அனைவரும் தங்களுக்குரிய காணிக்கைப் பங்குகளைப் பெற்று, அவர்களுக்கு அளிக்கப்படும் ஆகுதிகளை ஏற்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்” என்றான்.(18)

சம்வர்த்தர், “என்னுடைய மந்திர சக்தியால் நான் இந்திரனை இந்த வேள்விக்கு நேரடியாக ஈர்த்திருக்கிறேன். ஓ! ஏகாதிபதி, இந்த வேள்விக்கு வரும் வேறு தேவர்களால் வழிபடப்பட்டுத் தன் குதிரைகளுடன் வந்து கொண்டிருக்கும் இந்திரனைக் காண்பாயாக” என்றார்.(19)

அப்போது பிற தேவர்களால் கவனிக்கப்பட்ட தேவர்களின் தலைவன் {இந்திரன்}, மிகச் சிறந்த குதிரைகளால் இழுக்கப்படும் தன் தேரைச் செலுத்திக் கொண்டு, அவிக்ஷித் மகனுடைய {மருத்தனுடைய} வேள்விப்பீடத்தை அணுகி, அந்த ஒப்பற்ற ஏகாதிபதியின் சோம ஆகுதிகளைப் பருகினான்.(20) புரோஹிதருடன் கூடிய மன்னன் மருத்தன், தேவர்க்கூட்டத்துடன் வந்திருக்கும் இந்திரனை வரவேற்க நிறைவான மனத்துடன் எழுந்து, சாத்திரங்களின்படி முறையான மற்றும் முதன்மையான கௌரவங்களுடன் அந்தத் தேவர்களின் தலைவனை {இந்திரனை} வரவேற்றான்.(21)

சம்வர்த்தர், “ஓ! இந்திரா, உனக்கு நல்வரவு, ஓ! கல்விமானே, ஓ! பலன் மற்றும் விருத்திரனைக் கொன்றவனே, உன் இருப்பால் இவ்வேள்வி மகத்தானதானது. என்னால் உண்டாக்கப்பட்ட இந்தச் சோமச் சாற்றை நீ மீண்டும் பருகுவாயாக” என்றான்.(22)

மருத்தன், “ஓ! இந்திரா, அன்புடன் என்னை நோக்குவாயாக, உன் இருப்பால் என் வேள்வி முழுமையடைந்தது, மேலும் என் வாழ்வும் நல்விளைவுகளால் அருளப்பட்டிருக்கிறது. ஓ! சூரேந்திரா, பிருஹஸ்பதியின் தம்பியான இந்தச் சிறந்த பிராமணர் என் வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுகிறார்” என்றான்.(23)

இந்திரன், “பிருஹஸ்பதியின் தம்பியான இந்த உயர்ந்த சக்தி கொண்ட தவசியை உன் புரோஹிதராக நான் அறிவேன், ஓ! ஏகாதிபதி, இவரது அழைப்பின் பேரில் இந்த வேள்விக்கு வந்த நான், உன்னிடம் முழு நிறைவையடைந்தேன். உன்னிடம் நான் கொண்டிருந்த எதிர்ப்புணர்வு அழிந்தது” என்றான்.(24)

சம்வர்த்தர், “ஓ! தேவர்களின் இளவரசே, “நீ எங்களிடம் நிறைவடைந்திருந்தால், இந்த வேள்விக்கான அனைத்து ஆணைகளையும் நீயே கொடுப்பாயாக, ஓ! சூரேந்திரா, ஓ! தேவா, இஃது உன்னால் ஆனது என்பதை உலகம் அனைத்தும் அறிந்து கொள்ளும் வகையில் (தேவர்களுக்கான) வேள்விப்பங்குகளை நீயே விதிப்பாயாக” என்றார்”.(25)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “அங்கிரஸ் மகனால் {சம்வர்த்தரால்} இவ்வேறு கேட்டுக்கொள்ளப்பட்ட சக்ரன், ஓவியத்தில் மகத்தான வகையில் தெரிவது போன்ற ஆயிரம் சிறந்த அறைகளுடன் கூடிய ஒரு சபாமண்டபத்தைக் கட்டுமாறும், பெரியதும், நீடித்து நிலைக்கக்கூடியதும், கந்தர்வர்கள் மற்றும், அப்சரஸ்கள் ஏறிவரப் பயன்படக்கூடியதுமான படிக்கட்டுகளை விரைவாக நிறைவடையச் செய்யுமாறும், சொர்க்கத்தில் இந்திரனின் அரண்மனையில் உள்ளதைப் போன்று அப்சரஸ்கள் நடனம் ஆடுவதற்காக வேள்விக்களத்தில் ஒரு பகுதியை ஒதுக்குமாறும் தேவர்களுக்கு ஆணையிட்டான்.(26,27)

ஓ! மன்னா, இவ்வாறு ஆணையிடப்பட்ட புகழ்பெற்ற சொர்க்கவாசிகள் சக்ரனின் ஆணைகளை விரைவாக நிறைவேற்றினர். அப்போது, ஓ! மன்னா, புகழப்பட்டவனும், முழுமையாக நிறைவடைந்தவனுமான இந்திரன் மன்னன் மருத்தனிடம்,(28) “ஓ! இளவரசே, உனக்கு முன்பு சென்ற உன் மூதாதையர்களும், வேறு தேவர்களும் இந்த வேள்வியில் உன்னுடன் தொடர்பு கொண்டு, உன்னால் அளிக்கப்பட்ட காணிக்கைகளை ஏற்று முழுமையாக நிறைவடைந்திருக்கின்றனர்.(29) ஓ! மன்னா, மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்கள், அக்னியுடன் தொடர்புடைய {அக்னிக்குக் கொடுக்கப்பட வேண்டிய} சிவப்புக் காளையையும், விஷ்வேதேவர்களுடன் தொடர்புடைய பல நிறத் தோல் கொண்டதும், முறையாகப் புனிதமாக்கப்பட்டதுமான நீல காளையையும் வேள்விப்பீடத்தில் காணிக்கையளிக்கட்டும் {ஆலம்பனம் செய்யட்டும்}” என்றான்.(30)

அப்போது, ஓ! மன்னா, அந்த வேள்வி விழா காந்தியில் வளர்ந்தது, அங்கே தேவர்கள் தாங்களே உணவைத் திரட்டினர், தேவர்களின் தலைவனும், {பச்சைக்} குதிரைகளைக் கொண்டவனுமான சக்ரன் {இந்திரன்}, பிராமணர்களால் வழிபடப்பட்டவனாக வேள்விக்கு உதவி செய்பவனானான்.(31) அப்போது வேள்விப் பீடத்தில் ஏறியவரும், சுடர்மிக்க நெருப்பில் இரண்டாவது உடலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தவருமான சம்வர்த்தர், தேவர்க்கூட்டங்களை உரக்க அழைத்து, புனித மந்திரங்களைச் சொல்லி நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையளித்தார்.(32) பிறகு அந்தப் பலனைக் கொன்றவன் {இந்திரன்} முதலில் சோமச் சாற்றைப் பருகினான், அதன் பிறகு தேவர்க்கூட்டங்கள் சோமத்தைப் பருகினர். அதன் பிறகு மன்னனின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அனைவரும் முழு நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் திரும்பிச் சென்றனர்.(33)

பிறகு, பகைவர்களைக் கொல்பவனான அந்த ஏகாதிபதி, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், பல்வேறு இடங்களில் தங்கக் குவியல்களை வைத்து, பிராமணர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடுத்து செல்வத்தின் தேவனான குபேரனைப் போல மகத்தானவனாகத் தெரிந்தான்.(34) பொங்கும் இதயத்துடன் கூடிய மன்னன், பல்வேறு வகைச் செல்வங்களால் தன் கருவூலத்தை நிறைத்து, ஆன்ம ஆசானின் அனுமதியுடன் (தன் நாட்டுக்குத்) திரும்பி, கடலின் எல்லைகள் வரை நீண்டிருந்த மொத்த ஆட்சிப்பகுதியையும் தொடர்ந்து ஆட்சி செய்தான்.(35) இவ்வுலகில் இவ்வளவு அறம் சார்ந்தவனாக இருந்த அம்மன்னனின் வேள்வியில் அபரிமிதமான அளவில் தங்கம் திரட்டப்பட்டது, ஓ! இளவரசே, இப்போது நீ அந்தத் தங்கத்தைத் திரட்டி, முறையான சடங்குகளுடன் தேவர்களை வழிபட்டு இந்த வேள்வியைச் செய்வாயாக” என்றார் {வியாசர்}”.(36)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது சத்தியவதி மகனின் (வியாசரின்) இந்தப் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பாண்டவ இளவரசனான யுதிஷ்டிரன், அந்த வளங்களைக் கொண்டு தன் வேள்வியைச் செய்ய விரும்பி, தன் அமைச்சர்களுடன் மீண்டும் மீண்டும் ஆலோசனை செய்தான்”.(37)

இந்திரன் விருத்திரன் போர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 11-விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அற்புதச் செயல்களைச் செய்யும் வியாசர் மன்னனுடனான {யுதிஷ்டிரருடனான} தமது பேச்சை நிறைவு செய்த போது, உயர்ந்த பலம் கொண்டவனான வசுதேவர் மகன் (கிருஷ்ணன்) அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான். பிருதையின் மகனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மனம் பீடிக்கப்பட்டவனாகவும், உறவினர்களற்றவனாகவும், போரில் கொல்லப்பட்ட உற்றாருடையவனாகவும் கிரகணத்தால் இருளடைந்த சூரியனைப் போன்றோ, புகையும் நெருப்பைப் போலவோ இருப்பவனாகவும், விழுந்த சிகரம் போலத் தெரிபவனாகவும் இருப்பதை அறிந்த விருஷ்ணி குலத் தூணானவன் (கிருஷ்ணன்), தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஆறுதல் அளிக்கும் வகையில் அவனிடம் இவ்வாறு பேசினான்.(1-3)

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “இதயக் கோணல்கள் அனைத்தும் அழிவுக்கே (நித்திய தண்டனைக்கே) வழிவகுக்கும், மேலும் ஒழுக்கமனைத்தும் பிரம்மத்திற்கே (ஆன்மச் சிறப்புக்கே) வழிகுக்கும். இதுவே, இது மட்டுமே உண்மை ஞானங்கள் அனைத்தின் குறிக்கோளும், நோக்கமுமாகும். (இதைப் புரிந்து கொண்டவனை) மனத்தின் கவனச்சிதறலால் என்ன செய்துவிட முடியும்?(4) உமது சொந்த சதைக்குள் {உடலுக்குள்} இன்னும் மறைந்திருக்கும் பகைவர்களை நீர் அறியவில்லை என்பதால், உமது கர்மமும் ஒழியவில்லை, உமது பகைவர்களும் அடக்கப்படவில்லை.(5) (எனவே) இந்திரனுக்கும், விருத்திரனுக்கும் இடையில் நடந்த போர் குறித்த கதையை நடந்தவாறே, அதனை நான் கேட்டவாறே உண்மையில் உமக்கு உரைக்கப் போகிறேன்.(6)

பழங்காலத்தில், ஓ! மன்னா, பிருத்வியானது (பூமியானது) விருத்திரனால் சூழப்பட்டது. மணங்கள் அனைத்தின் இருக்கையாக இருக்கும் பூமிக்குரிய பொருள் {தன்மை} இவ்வாறு பிரிக்கப்பட்டதால், அனைத்துப் பக்கங்களிலும் கெட்ட மணங்கள் {துர்நாற்றங்கள்} எழுந்தன. நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்) இச்செயலால் மிகவும் சினமடைந்தவனாக விருத்திரன் மீது தன் வஜ்ராயுதத்தை ஏவினான்.(7,8)

வலிமைமிக்கவனான இந்திரனின் வஜ்ராயுத்தால் ஆழமாகக் காயமடைந்த விருத்திரன் (நீர்நிலைகளுக்குள்) நுழைந்தான். அவ்வாறு செய்ததால் அவன் அவற்றின் தன்மைகளை அழித்தான்.(9) விருத்திரனால் நீர்நிலைகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றின் நீர்த்தன்மைகள் அவற்றைவிட்டு அகன்றன. இதனால் பெருங்கோபம் அடைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ராயுதத்தால் அவனைத் தாக்கினான்.(10)

மிகப்பெரும் பலசாலியான இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்ட அவன் (விருத்திரன்) ஜோதிக்குள் (ஒளிப்பொருளுக்குள்) தஞ்சம்புகுந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைச் சுருக்கினான்.(11) விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஒளிரும் பொருள் அதன் தன்மை, நிறம் மற்றும் வடிவத்தை இழந்ததும்(12) கோபம் நிறைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ரத்தை அவன் மேல் ஏவினான்.

அளவற்ற சக்தி கொண்ட இந்திரனால் மீண்டும் இவ்வாறு காயமடைந்த(13) விருந்திரன், திடீரென வாயுவுக்குள் நுழைந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைக் கெடுத்தான்.(14) விருத்திரனால் ஆட்கொள்ளப்பட்ட அந்தப் பொருள் {வாயு} அதன் தன்மையையும், தீண்டலையும் இழந்தது. மீண்டும் கோபத்தால் நிறைந்த இந்திரன், அவன் மீண்டும் தன் வஜ்ரத்தை வீசினான்.

அந்த வலிமைமிக்கவனால் (இந்திரனால்) காயமடைந்த அவன் ஆகாசத்தை (வெளியை) மூழ்கடித்து அதன் உள்ளார்ந்த தன்மையைப் பறித்தான். விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஆகாசத்தின் இயல்பு, ஒலி ஆகியவை அழிந்தன. நூறு வேள்விகளைச் செய்த தேவன் இதனால் பெருஞ்சினம் கொண்டு அவனை மீண்டும் தன் வஜ்ரத்தால் தாக்கினான்.(15,16)

வலிமைமிக்க இந்திரனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {விருத்திரன்} திடீரென (சக்ரனின் {இந்திரனின்}) உடலுக்குள் நுழைந்து அதன் முக்கியப் பண்புகளை அபகரித்தான்.(17) விருத்திரனால் பீடிக்கப்பட்ட அவன் {இந்திரன்} பெரும் மாயையில் நிறைந்திருந்தான்.

ஓ! மதிப்பிற்குரிய ஐயா, பாரதக் குலத்தில் பெரும் வலிமைமிக்கவரே,(18) (அவன் இவ்வாறு பீடிக்கப்பட்டபோது) வசிஷ்டர் அவனுக்கு ஆறுதலளித்தார் என்றும், நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, தன் உடலுக்குள் இருந்த விருத்திரனை தன் புலப்படாத வஜ்ரத்தின் மூலம் கொன்றான் என்று கேள்விப்படுகிறோம். ஓ! இளவரசரே, இந்தத் தெய்வீக ரகசியம் சக்ரனால் பெருந்தவசிகளுக்குச் சொல்லப்பட்டது, பதிலுக்கு அவர்கள் அஃதை எனக்குச் சொன்னார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(19,20)

நோய் போக்கும் வழிமுறைகள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 12-உடல் மற்றும் மன நோய்களைப் போக்கும் வழிமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}“உடல் சார்ந்து {சாரீரம்}, மனம் சார்ந்து {மானஸம்} என இருவகை நோய்கள் உள்ளன. உடலும், மனமும் ஒன்றோடொன்று செயல்பரிமாற்றம் செய்து கொள்ளும்போது, அவை {நோய்கள்} உண்டாகின்றன. மேலும் அவ்விரண்டின் தொடர்பில்லாமல் ஒருபோதும் அவை எழுவதில்லை.(1) உடலில் உண்டான நோய் உடல்நோய் என்றும், மனத்தை இருக்கையாகக் கொண்டது மன நோய் என்றும் அறியப்படுகின்றன.(2) ஓ! மன்னா, குளிர், வெப்பம் (சளி {கபம்} மற்றும் பித்தம்), காற்றுமயவுடனீர் {வாதம்} ஆகியவை {அதாவது வாதம், பித்தம், கபம் ஆகியவை} உடலில் தோன்றும் முக்கிய மாற்றங்களாகும், இந்த உடநீர்கள் சமமாகப் பிரிந்து, முறையான அளவுகளில் இருக்கும்போது அவை உடல்நலத்தைக் குறிக்கும் நல்ல அறிகுறிகளாகின்றன.(3) வெப்ப உடனீர்கள் குளிர்ச்சியாலும், குளிர் உடனீர்கள் வெப்பத்தாலும் செயல்படுகின்றன (தணிக்கப்படுகின்றன). சத்வம், ரஜஸ், தமஸ் என்பவை ஆன்ம குணங்களாகும்,(4) உரிய அளவுகளில் அவற்றின் இருப்பு (மன) நலத்தைக் குறிக்கிறது என்று கல்விமான்களால் சொல்லப்படுகிறது. ஆனால், இவை மூன்றில் ஏதாவதொன்று மேம்பட்டால், (சமநிலையை மீட்டெடுக்க) சில தீர்வுகள் இருக்கின்றன.(5)

மகிழ்ச்சி கவலையாலும், கவலை மகிழ்ச்சியாலும் வெல்லப்படுகின்றன. கவலையால் பீடிக்கப்பட்ட மக்கள் சிலர் (கடந்தகால) மகிழ்ச்சியை நினைவுகூர விரும்புகின்றனர், அதே வேளையில் பிறரோ மகிழ்ச்சியை அனுபவிக்கும்போது, கடந்த காலக் கவலையை நினைவுகூர விரும்புகின்றனர்.(6) ஆனால் நீரோ, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, உமது கவலைகளையும், உமது மகிழ்ச்சியையும் நினைவுகூர விரும்பவில்லை எனும்போது, கவலை என்ற இந்த மாயையைத் தவிர நீர் வேறு எதை நினைவுகூர விரும்புகிறீர்? அல்லது, ஓ! பிருதையின் மகனே, உமது உள்ளார்ந்த இயல்பாக இருக்கும் இதன் மூலம்(7) நீர் தற்செயலாக வெல்லப்படுகிறீரா?

மாதவிடாய் காலத்தில், சபா மண்டபத்தில் பாண்டவர்கள் அனைவரின் முன்னிலும் தன் உடலை மறைத்துக் கொள்ள ஒரேயொரு துண்டுத் துணியுடன் கிருஷ்ணை {திரௌபதி} நின்று கொண்டிருந்த அந்தப் பரிதாபக்காட்சியை நீர் உமது மனத்தில் நினைவுகூர விரும்பவில்லை. நகரத்தை விட்டுப் புறப்பட்டு, நாடு கடந்து, மான் தோலை உமது ஆடையாகக் கொண்டு, பெருங்காட்டில் நீர் திரிந்ததை நினைத்துப் பார்க்கமாட்டீர், அதேபோல, ஜடாசுரனிடம் அடைந்த துன்பம், சித்திரசேனனுடனான போர், சைந்தவர்களால் நீர் அடைந்த துன்பங்கள் ஆகியவற்றையும் நீர் உமது மனத்தில் நினைவுகூரமாட்டீர்.(8-11) ஓ! பிருதையின் மகனே, பகைவர்களை வென்றவரே, நாடு கடத்தப்பட்டு, முற்றான தலைமறைவு வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தபோது கீசகனால் திரௌபதி உதைக்கப்பட்டதையோ,(12) உமக்கும், துரோணருக்கும், பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற போர் நிகழ்வுகளையோ நீர் நினைவுகூர்வதும் முறையாகாது. ஒவ்வொருவரும் தனியாக மனத்தால் எதிர்த்துப் போரிடுவதற்கான நேரம் இப்போது வாய்த்திருக்கிறது[1].(13)எனவே, ஓ! பாரதகுலத்தின் தலைவரே, உமது மனத்திற்கு எதிராகப் போரிடத் தயாராவீராக, நுண்மயமாதல் {தியானம் செய்தல்} மற்றும், உமது சொந்த கர்மத்தின் தகுதியால் புரியாத புதிராக இருப்பதன் (இருக்கும் மனத்தின்) அடுத்தக் கரையை நீர் அடைவீராக.(14) இந்தப் போரில் உமக்கு ஏவுகணைகளோ, நண்பர்களோ, பணியாட்களோ தேவையில்லை. தனியாகப் போரிட வேண்டிய போருக்கான காலம் இப்போது வாய்த்திருக்கிறது.(15) இந்தப் போராட்டத்தில் வெல்லப்பட்டால், நீர் மிக அவலமான நிலையை அடைவீர், ஓ! குந்தியின் மகனே, இஃதை அறிந்து வெற்றியை அடையும்படி செயல்படுவீராக.(16) அனைத்து உயிரினங்களின் விதியையும் இந்த ஞானத்தையும் அறிந்து கொண்டு, உமது மூதாதையரின் ஒழுக்கத்தைப் பின்பற்றி முறையாக உமது நாட்டை ஆள்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(17)

காமகீதை – ஆசையை வெல்வதெப்படி? – அஸ்வமேதபர்வம் பகுதி – 13-ஆசை வெல்லப்பட முடியாதது என்பதையும், அதை வெல்வதற்குரிய வழிமுறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலக்கொழுந்தே, (நாடு முதலியவை போன்ற) புறப்பொருட்களைக் கைவிடுவதன் மூலம் விடுதலை {முக்தி} அடையப்படுவதில்லை, சதைக்கு (உடலுக்குத்) தீனிபோடும் பொருட்களைக் கைவிடுவதன் மூலமே அஃது அடையப்படுகிறது.(1) புறப் பொருட்களை மட்டுமே கைவிட்டவனும், அதே வேளையில் ஆசைகள் மற்றும் சதைப் பலவீனங்கள் ஆகியவற்றில் மூழ்கியவனுமான மனிதனால் அடையப்படும் அறம் {பண்பு} மற்றும் மகிழ்ச்சி ஆகியன நமது எதிரிகளின் பங்காகட்டும் {நமது எதிரிகளுக்கு உண்டாகட்டும்}.(2) இரண்டு எழுத்துகளைக் கொண்டது மிருத்யுவாகும் (ஆன்மாவின் மரணம் அல்லது கேடு ஆகும்), மூன்று எழுத்துகளைக் கொண்டது சாஸ்வத பிரம்மம் அல்லது நித்திய ஆன்மாவாகும். இஃது அல்லது அஃது என்னுடையது என்ற அகங்காரம், அல்லது உலகம் சார்ந்த பொருட்களுக்கு அடிமையாக இருக்கும் நிலையே மிருத்தியுவாகும், மேலும் அவ்வுணர்வின்மையே சாஸ்வதமாகும்.(3) ஓ! மன்னா, பிரம்மம் மற்றும் மிருத்யு ஆகிய இவ்விரண்டும் அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களிலும் தங்கள் இருக்கையைக் கொண்டு, புலப்படாத நிலையிலேயே நீடித்து நிச்சயம் ஒன்றோடொன்று போர்புரியச் செய்கின்றன[1].(4)ஓ! பாரதரே, எந்த உயிரினமும் ஒருபோதும் அழிவடைவதில்லை என்பது உண்மையானால், ஓர் உயிரினத்தின் உடலைத் துளைப்பதன் (அழிப்பதன்) மூலம் ஏற்படும் அதன் மரணத்தினால் ஒருவன் குற்றவுணர்வை அடையத் தேவையில்லை.(5) அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய படைப்புடன் கூடிய மொத்த பூமியின் அரசுரிமையையும் அடைந்த மனிதன் அதனிடம் பற்று கொள்ளாமலோ, அதனை அனுபவிப்பதில் மூழ்காமலோ இருந்தால் அம்மனிதனுக்கு இவ்வுலகம் என்ன செய்யும்?(6) ஆனால், ஓ! பிருதையின் மகனே, உலகத்தைத் துறந்து காட்டில் துறவியாகக் காட்டுக்கிழங்குகளையும் உணவுகளையும் உண்டு வாழும் மனிதன் உலகில் உள்ள நல்ல பொருட்களில் ஏக்கம் கொண்டு, அவற்றுக்கு அடிமையாக இருந்தால் அவன் தன் வாயில் மிருத்யுவை (மரணத்தைக்) கொண்டிருக்கலாம் {அவன் மிருத்யுவின் வாயில் இருக்கிறான்} என்று சொல்லப்படுகிறது.(7) ஓ! பாரதரே, புறத்திலும், அகத்திலும் உமக்குள்ள எதிரிகளின் தன்மையை (உமது ஆன்மப் பார்வையின் மூலம்) கவனமாகக் காண்பீராக. நிலையான உண்மையின் இயல்பைக் காண இயன்ற மனிதன், பேரச்சத்தின் (கேட்டின் {அழிவின்}) ஆதிக்கத்தைக் கடக்க இயன்றவனாவான்.(8)

உலகம் சார்ந்த ஆசைகளில் மூழ்கியுள்ளோரின் ஒழுக்கத்தை மனிதர்கள் உவப்பாகப் பார்ப்பதில்லை, ஆசை இல்லாமல் (ஆசையை வேராகக் கொள்ளாத) எந்தச் செயலுமில்லை, மேலும் ஆசைகள் (காமங்கள்) அனைத்தும் மனத்தின் அங்கங்களை (கிளைகளைப்) போன்றனவாகும். எனவே, இதை அறிந்த ஞானிகள் தங்கள் ஆசைகளை அடக்குகின்றனர். பரமாத்மாவோடு ஒன்றிணையும் யோகியானவன், தனது முந்தைய பல்வேறு பிறவிகளின் நடைமுறைகள் {பழக்கங்கள்} காரணமாக, (விடுதலை {முக்தி} அடைவதற்கு) யோகத்தையே மிகச் சரியான வழியாக அறிகிறான். ஆன்மாவின் ஆசைகள் பக்தி மற்றும் அறத்தைக் கடத்துவனவல்ல, ஆசைகளை அடக்குவதே முற்றான உண்மை அறத்தின் வேராக இருக்கிறது என்பதை நினைவுகூரும் மனிதர்கள், முன்னேற்றத்தை அடைந்து விடலாம் என்ற நோக்கத்தோடு ஈகை பயில்தல், வேத கல்வி, தவம், உலகம் சார்ந்த செழிப்பை அடைவதற்கான வேத சடங்குகள், விழாக்கள், வேள்விகள், அறவிதிகள், தியானம் ஆகியவற்றில் ஈடுபடுவதில்லை.(9-11) பழங்கதைகளை அறிந்த தவசிகள், இந்த உண்மையை விளக்கும் வகையில் காமகீதை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கதைகளை உரைக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரரே, அவற்றை விளக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(12)

(காமன் சொல்கிறான்) (“அனைத்து ஆசைகளையும் அடக்குதல், யோகப் பயிற்சி முதலிய) உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் எந்த உயிரினத்தாலும் என்னை அழிக்க இயலாது.(13) ஒரு மனிதன் என் சக்தியை அறிந்தும், வேண்டுதல்கள் {ஜபங்கள்} முதலியவற்றை முணுமுணுப்பதன் மூலம் என்னை அழிக்க முனைந்தால், நானே அவனுக்குள் உள்ள அகநிலைத் தன்னுணர்வு என்று நம்பச் செய்து, வஞ்சிப்பதன் மூலம் நான் அவனை வெல்வேன்[2]. பல்வேறு கொடைகளுடன் கூடிய வேள்விகளின் மூலம் அவன் என்னை அழிக்க விரும்பினால்,(14) அசையும் படைப்புகளுக்கு மத்தியில் மிகவும் அறம்சார்ந்த உயிரினமாக அவனது மனத்தில் தோன்றி வஞ்சிப்பேன், வேதங்கள் மற்றும் வேதாங்கங்களில் தேர்ச்சி அடைவதன் மூலம் என்னை அவன் ஒழிக்க விரும்பினால், அசைவில்லாத படைப்புகளுக்கு மத்தியில் உள்ள அற ஆன்மாவாக அவனது மனத்திற்குத் தோன்றி அவனை வெல்வேன்.(15)வாய்மையைத் தன் பலமாகக் கொண்ட ஒரு மனிதன், பொறுமையின் மூலம் என்னை வெல்ல விரும்பினால்,(16) நான் புலப்படாதவனாக அவனது மனமாகவே அவனுக்குத் தோன்றுவேன். கடும் அறப்பயிற்சிகள் செய்யும்  {கடும் விரதங்களுடன் கூடிய} மனிதன், தவத்தின் மூலம் என்னை அழிக்க விரும்பினால்,(17) அவன் என்னை அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் தவத்தின் தோற்றத்திலேயே அவனது மனத்தில் நான் தோன்றுவேன். கல்விமானான ஒரு மனிதன்,(18) விடுதலையை {முக்தியை} அடையும் நோக்கத்துடன் என்னை அழிக்க விரும்பினால், விடுதலையை நோக்கமாகக் கொண்ட அத்தகைய மனிதனின் முகத்தில் சிரித்து மகிழ்ந்தாடுகிறேன். எந்த உயிரினத்தாலும் கொல்லப்படவோ, அழிக்கப்படவோ முடியாதவனாகவும், எப்போதும் நீடித்திருக்கும் ஒப்பற்றவனாகவும் நானே இருக்கிறேன் {நான் எவனாலும் கொல்லப்பட முடியாதவன்” என்றான் காமன்}.(19)

ஓ! இளவரசே {யுதிஷ்டிரரே}, இந்தக் காரணத்தினால் நீரும் உமது ஆசைகளை (காமத்தை) அறத்தின் பக்கம் திருப்பினால் அந்த வழிமுறையின் மூலம் நீர் உமக்கான நன்மையை அடையலாம்.(20) எனவே, கொடைகளுடன் கூடிய குதிரை வேள்வியையும், பெரும் காந்தியுடையவையும், கொடைகளுடன் கூடியவையுமான பல்வேறு வேள்விகள் பிறவற்றையும் உரிய முறையில் செய்வதற்கு ஆயத்தமாவீராக.(21) போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கும் உமது நண்பர்களைக் கண்டு மீண்டும் துயரம் உம்மை ஆட்கொள்ள வேண்டாம். இந்தப் போரில் கொல்லப்பட்ட மனிதர்களை மீண்டும் உயிருடன் உம்மால் பார்க்க முடியாது.(22) எனவே, இம்மையில் புகழை அடையவும் (மறுமையில்) மிகச் சரியான வழியை அடையவும் கொடைகளுடன் கூடிய மகத்தான வேள்விகளை நீர் செய்வீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(23)

ஹஸ்தினாபுரம் திரும்பிய யுதிஷ்டிரன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 14-வியாசர் முதலியோர் யுதிஷ்டிரனைத் தேற்றியது; பீஷ்மர் முதலியோருக்கு ஈமச் சடங்குகளைச் செய்து ஹஸ்தினாபுரம் திரும்பிய யுதிஷ்டிரன்..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நண்பர்களை இழந்த அரசமுனி யுதிஷ்டிரன், பெரும் தவத்தகுதிகளைக் கொண்ட இந்த முனிவர்களால் இவ்வாறு ஆறுதல் சொல்லப்பட்டான்.(1) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, வழிபடத்தகுந்த விஷ்டரஸ்ரவனாலும் {கிருஷ்ணனாலும்}, கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தேவஸ்தானர், நாரதர், பீமன், நகுலன், கிருஷ்ணை (திரௌபதி), சகாதேவன், புத்திமானான விஜயன் {அர்ஜுனன்} ஆகியோராலும், இன்னும் பிற பெரும் மனிதர்களாலும், சாஸ்திரங்களை நன்கு அறிந்த பிராமணர்களாலும் உற்சாகமளிக்கப்பட்ட அந்த மனிதர்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தனது மன நோய்கள், தன் அன்புக்குரிய உறவினர்களின் மரணத்தால் எழுந்த கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டான்.(2-4)

இறந்து போன தன் நண்பர்களுக்கான ஈமச் சடங்குகளைச் செய்த அந்த ஏகாதிபதி யுதிஷ்டிரன், பிராமணர்கள் மற்றும் தேவர்களைக் கௌரவித்து, கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமியின் அரசுரிமையைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான்.(5) தன் நாட்டை மீட்ட அந்தக் குரு இளவரசன் {யுதிஷ்டிரன்}, அமைதியான மனத்துடன் கூடியவனாக, அங்கிருந்த வியாசர், நாரதர் மற்றும் பிற தவசிகளிடம் இவ்வாறு சொன்னான்.(6)

{யுதிஷ்டிரன்}, “பெரியவர்களும், புராதனமானவர்களும், முதிர்ந்தவர்களுமான உங்களைப் போன்ற தவசிகளின் வார்த்தைகளால் ஆறுதலடைந்தேன், இப்போது கவலைக்கான எந்தக் காரணமும் எனக்கில்லை.(7) அதேபோல, நான் பெருஞ்செல்வத்தை அடைந்திருக்கிறேன், அதைக் கொண்டு தேவர்களை வழிபடுவேன். எனவே, உங்கள் துணையுடன் நான் இப்போது அந்த வேள்வியைச் செய்வேன்.(8) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அந்த (இமாலயப்) பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது என்று நாம் கேள்விப்படுகிறோம். எனவே, ஓ! பிராமணரே, தவசியே, பாட்டனே, உமது பாதுகாப்பின் கீழ் நாங்கள் இமய மலைகளைப் பாதுகாப்பாக அடையும் வகையில் ஆணையிடுவீராக. நான் செய்யப் போகும் வேள்வி முழுமையாக உமது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது, மேலும், துதிக்கத்தகுந்த தெய்வீக முனிவரான நாரதர் மற்றும் தேவஸ்தானர் ஆகியோரும் எங்கள் நலத்திற்கான நல்ல பொருள் பொதிந்த சிறந்த சொற்களைச் சொல்லியிருக்கின்றனர்.(9,10) பெருஞ்சோதனைகளும், துன்பங்களும் நிறைந்த காலத்தில் பேறற்ற எந்த மனிதனும், அறம்சார்ந்த மனிதர்களால் அங்கீகரிக்கப்படும் இத்தகைய ஆசான்கள் மற்றும் நண்பர்களின் தொண்டைப் பெறும் நற்பேற்றைப் பெற்றதில்லை” {என்றான் யுதிஷ்டிரன்}.(11)

மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பெருந்தவசிகள், மன்னனிடமும் {யுதிஷ்டிரனிடமும்}, கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடமும் இமய மலைப் பகுதிகளுக்குச் செல்லுமாறு ஆணையிட்டுவிட்டு, அங்கே கூடியிருந்த கூட்டத்தின் முன்னிலையே மறைந்து போனார்கள். அதன்பிறகு, தர்மனின் அரச மகனான மன்னன் {யுதிஷ்டிரன்} சற்று நேரம் அங்கே அமர்ந்திருந்தான்.(12,13) பீஷ்மர் மாண்டதன் விளைவால் பாண்டவர்கள் அப்போது அவருடைய ஈமச் சடங்குகளைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவ்வாறு அவர்கள் ஈடுபட்டிருந்தபோது, பீஷ்மர், கர்ணன் மற்றும் முதன்மையான பிற கௌரவர்களின் சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளில் {உத்தரக்கிரியைச் செய்வதில்} பிராமணர்களுக்கு அவர்கள் பெருங்கொடைகளை அளித்ததால் நெடுங்காலம் கடந்ததைப் போலத் தெரிந்தது. அப்போது அந்தக் குருகுல வழித்தோன்றல்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்},(14,15) (போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கான) ஈமச்சடங்குகளைத் திருதராஷ்டிரனோடு சேர்ந்து செய்து, பிராமணர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடையளிதான். முன்னே செல்லும் திருதராஷ்டிரனுடன் கூடிய அந்தப் பாண்டவத் தலைவன் {யுதிஷ்டிரன்}(16) ஹஸ்தினாபுர நகரத்திற்குள் நுழைந்தான். ஞானக்கண்களைக் கொண்டவனும், தன் பெரியப்பாவுமான அரசனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஆறுதல் சொன்ன அந்த அறம்சார்ந்த இளவரசன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகளுடன் சேர்ந்து பூமியைத் தொடர்ந்து ஆண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(17,18)

துவாரகைக்குத் திரும்ப விரும்பிய கிருஷ்ணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 15-களிப்புற்றிருந்த கிருஷ்ணார்ஜுனர்கள்; துவாரகைக்குத் திரும்ப விரும்புவதாகவும், யுதிஷ்டிரரிடம் அதற்கு அனுமதி பெறும்படியும் அர்ஜுனனிடம் கேட்ட கிருஷ்ணன்..

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} [1], “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பாண்டவர்கள் தங்கள் நாட்டை மீண்டும் அடைந்து அமைதியடைந்தபோது, போர்வீரர்களான வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பூமியின் தலைவா, பாண்டவர்கள் தங்கள் ஆட்சிப்பகுதிகளை மீண்டும் அடைந்து தணிவடைந்தபோது, வாசுதேவனும், தனஞ்சயனும் பெரும் மகிழ்ச்சியடைந்து,(2) விசித்திரமான காடுகள், மலைகள், தாழ்வரைகள், புண்ணியத் தீர்த்தங்கள், தடாகங்கள், ஆறுகள், நந்தவனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் சொர்க்கத்தின் தேவர்களைப் போலப் பெரும் நிறைவுடனிருந்து, இந்திரனின் நந்தவனத்தில் திரியும் அஸ்வினி தேவர்களைப் போலப் பெரும் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.(3,4) ஓ! பாரதா, உயர் ஆன்மக் கிருஷ்ணனும் அந்தப் பாண்டுவின் மகனும் (தனஞ்சயனும்) இந்திரப்பிரஸ்தத்தின் அழகிய சபா மண்டபத்திற்குள் நுழைந்து பெரும் இன்பத்துடன் தங்கள் காலத்தைக் கழித்தனர்.(5)

ஓ! இளவரசே, அங்கே அவர்கள் போரில் நிகழ்ந்த பரபரப்பான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கடந்த கால வாழ்வின் துன்பங்கள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து தங்கள் காலத்தைக் கடத்தினர்.(6) இதய மகிழ்ச்சியுடன் கூடியவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான அந்தப் பழங்காலத் தவசிகள் இருவரும், தவசிகள் மற்றும் தேவர்களின் குலங்களைக் குறித்த மரபாய்வுகளைச் செய்வதில் ஈடுபட்டனர்.(7) அப்போது, காரியங்கள் அனைத்தின் நிச்சயத்தை அறிந்த கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் சிறந்த பாணி மற்றும் ஆழத்துடன் இனிமையாகவும், அழகாகவும் பேசினான்.(8) தன் மகன்கள் மற்றும், ஆயிரக்கணக்கான உறவினர்கள் இறந்ததனால் பீடிக்கப்பட்டிருந்த பிருதையின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆறுதலளித்தான்.(9) பெரும் தவத்தகுதியைக் கொண்டவனும், அனைத்துப் பொருட்களின் அறிவியலை அறிந்தவனுமான அவன் முறையாக அவனுக்கு ஆறுதலைக் கூறி, தன் மேனியில் இருந்த பெருஞ்சுமை அகற்றப்பட்டவனைப் போலச் சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொண்டான்.(10) பிறகு அந்தக் கோவிந்தன், நல்ல பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்ட இனிய பேச்சால் அர்ஜுனனுக்கு ஆறுதல் கூறினான்.(11)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! அர்ஜுனா, பகைவர்களுக்குப் பயங்கரனே, உன் கரத்தின் பலத்தைச் சார்ந்து மொத்த உலகையும் மன்னனான தர்மனின் மகன் {யுதிஷ்டிரர்} வென்றிருக்கிறார்.(12) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அறம்சார்ந்த மன்னரான யுதிஷ்டிரர், பீமசேனர் மற்றும் இரட்டையர் தம்பிகள் ஆகியோரின் வலிமையின் மூலம் இப்போது பூமியின் அரசுரிமையை ஒரு பகையுமின்றி அனுபவிக்கிறார்.(13)

ஓ! அறத்தை அறிந்தவனே {அர்ஜுனனே}, அறத்தால் மட்டுமே மன்னரால் தன் நாட்டை எதிரிகள் அனைவரிடம் இருந்து மீட்டெடுக்க முடிந்தது, அறத்தினுடைய செயல்பாட்டின் மூலமே மன்னன் சுயோதனனும் போரில் கொல்லப்பட்டான்.(14) ஓ! பிருதையின் மகனே, குரு குலத்தின் தூணாக இருப்பவனே, பேராசை கொண்டவர்களும், எப்போதும் பேச்சில் முரட்டுத்தனம் கொண்டவர்களும், அறத்திற்கு மாறான நடைமுறையில் விருப்பம் கொண்டவர்களுமான தீய திருதராஷ்டிர மைந்தர்களும்,(15) அவர்களது தொண்டர்களும் கொல்லப்பட்டனர். பூமியின் தலைவரும், தர்மனின் மகனுமான மன்னர் {யுதிஷ்டிரர்}, பூமியில் உள்ள அரசு முழுமையையும் அமைதியாக அனுபவிக்கிறார்.(16) நானும், ஓ! பாண்டுவின் மகனே, உன்னுடன் சேர்ந்து காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியாகத் திரிந்து என் காலத்தைக் கழிக்கிறேன்.(17) ஓ! பகைவர்களுக்குப் பயங்கரனே, எங்கே நீயும், பிருதையும் {குந்தியும்}, தர்மனின் மகனான மன்னரும், பீமசேனரும், மாத்ரியின் இரு மகன்களும் இருக்கிறார்களோ அங்கே நான் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?(18) ஓ! குருவின் வழித்தோன்றலே, வசுதேவர், பலதேவர் மற்றும் பிற விருஷ்ணி குலத் தலைவர்களைக் காணாமல் உன்னுடன் சேர்ந்து இனிமை நிறைந்தவையும், புனிதமானவையும், சொர்க்கம் போன்றவையுமான சபாமண்டபங்களில் வெகு காலத்தைக் கழித்துவிட்டேன்.(19,20)

நான் இப்போது துவாரவதி {துவாரகைக்குச்} செல்ல விரும்புகிறேன். எனவே, ஓ! மனிதர்களில் பெரும் வீரமிக்கவனே {அர்ஜுனா}, நான் செல்வதை ஏற்பாயாக.(21) மன்னர் யுதிஷ்டிரன் பெருந்துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்தபோது, பீஷ்மருடன் சேர்ந்து நானும் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த புராணங்களைச் சொல்லி அவரது துயரைக் களைந்திருக்கிறேன். உயர்ந்த மனம் கொண்டவரும், இசைந்து கொடுப்பவருமான யுதிஷ்டிரன் நமது அரசராக இருந்தாலும், புராணங்கள் அனைத்தையும் அறிந்தவராக இருந்தாலும், எங்கள் வார்த்தைகளில் உரிய கவனத்தைச் செலுத்தினார்.(22) தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} வாய்மைக்கு மதிப்பளித்து, நன்றியுணர்வுடன், அறம்சார்ந்தவர்களாக இருப்பதால் அவரது அறமும், நல்ல குணமும், உறுதியான சக்தியும் எப்போதும் நிலைத்திருக்கும்.(23,24) ஓ! அர்ஜுனா, உனக்கு விருப்பமிருந்தால் உயர்ந்த மனம் கொண்ட அந்த இளவரசரிடம் {யுதிஷ்டிரரிடம்} சென்று, இந்த இடத்தைவிட்டுப் புறப்படும் என் நோக்கத்தை அவரிடம் சொல்வாயாக.(25)

நான் துவாராவதி நகரத்திற்குச் செல்வதைவிடு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, எனக்கு மரணமே நேர்ந்தாலும் அவருக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய நான் விரும்பவில்லை {அவர் விரும்பாவிட்டால் துவாராவதி செல்ல மாட்டேன்}.(26) ஓ! பிருதையின் மகனே, குருவின் வழித்தோன்றலே, உனக்கு ஏற்புடையதையும் நல்லதையும் மட்டுமே செய்ய விரும்பி இப்போது ஓர் உண்மையைச் சொல்கிறேன். அதில் இரு பொருள் கொண்ட ஏதும் எந்த வகையிலும் இருக்காது. திருதராஷ்டிரர் மகனும், அவனுடைய படைகளும், தொண்டர்களும் கொல்லப்பட்ட பிறகும்,(27,28) மலைகள், காடுகள், வனங்கள், கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி மற்றும் பல்வேறு ரத்தினங்கள் நிறைந்திருக்கும் குரு மன்னனின் நாடு ஆகியவை தர்மனின் மகனுடைய {யுதிஷ்டிரருடைய} ஆளுகையின் கீழ் வந்துவிட்ட பிறகும், இனிமேலும் நான் இங்கிருக்க வேண்டிய தேவையில்லை. ஓ! பாரதக் குலத்தில் முதன்மையான இளவரசனே, அந்த அறம் சார்ந்த இளவரசர் {யுதிஷ்டிரர்}, தன் நாடாக உள்ள பூமி முழுவதையும் நீதியுடன் ஆண்டு,(29,30) உயர் ஆன்மாவைக் கொண்ட எண்ணற்ற சித்தர்களின் மதிப்புடன் கூடிய பாராட்டுகளைப் பெற்று, சபையில் உள்ள கட்டியங்கூறுவோரால் தன் புகழ் சொல்லப்பட்டுத் துதிக்கப்பெறட்டும்.(31)

ஓ! குரு குலத்தின் தலைவா {அர்ஜுனா}, குரு குலத்தைப் பெருமளவு உயர்த்தும் மன்னனின் {யுதிஷ்டிரரின்} முன்பு என்னுடன் வந்து துவாரகைக்குத் திரும்பும் என் நோக்கத்தைக் குறித்து அவருக்குச் சொல்வாயாக.(32) ஓ! பிருதையின் மகனே, குருக்களின் உயர் ஆன்ம மன்னர் யுதிஷ்டிரர் என்னிடம் எப்போதும் அன்பும் மதிப்பும் கொள்வதைப் போலவே, நான் என் உடலையும், என் வீட்டில் நான் கொண்டுள்ள செல்வமனைத்தையும் அவரது வசமே வைத்திருக்கிறேன் {அவருக்கே அர்ப்பணம் செய்திருக்கிறேன்}.(33) ஓ! இளவரசே, பார்த்தா (பிருதையின் மகனே), இந்தப் பூமியானது உனது ஆட்சியின் கீழும், சிறந்த குணத்தைக் கொண்டவரும், வழிபடத்தகுந்தவருமான யுதிஷ்டிரருடைய ஆட்சியின் கீழும் இருக்கும்போது, நான் உங்களிடம் கொண்ட அன்புக்காகத் தவிர நான் இங்கிருக்க வேண்டிய அவசியமே இல்லை” என்றான் {கிருஷ்ணன்}.(34)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மீண்டும் மீண்டும் ஐயங்கொள்ளும் அர்ஜுனனிடம், உன்னத இதயம் கொண்ட ஜனார்த்தனன் இவ்வாறு கேட்டுக் கொண்ட போது, அவனுக்குரிய கௌரவங்கள் அனைத்தையும் அளித்த அவன், கவலை நிறைந்தவனாக, வெறுமனே “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(35)

ஸித்த காஸ்யப ஸம்வாதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 16-கீதையை மறுபடியும் உரைக்கும்படி கோவிந்தனிடம் கேட்ட அர்ஜுனன்; சித்தர் மற்றும் காசியபருக்கிடையில் நடந்த உரையாடலைச் சொன்ன கிருஷ்ணன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பகைவர்களைக் கொன்றுவிட்டு சபா மண்டபத்திற்குச் சென்ற உயர் ஆன்ம கேசவன் மற்றும் அர்ஜுனனுக்கிடையில் என்ன உரையாடல் நடந்தது?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் நாட்டை மீட்ட பிருதையின் மகன் (அர்ஜுனன்), தெய்வீக அழகுடைய அந்த அரண்மனையில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், கிருஷ்ணனின் துணையுடனும் வேறு எதையும் செய்யாமல் தன் காலத்தை இன்பமாகக் கழித்தான்.(2) ஒருநாள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவ்விருவரும் சொர்க்கத்தின் ஒரு பகுதியைப் போலத் தூய்மையாகத் தெரிந்த அந்த அரண்மனையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றனர். மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அவர்கள், தங்கள் உறவினர்கள் மற்றும் பணியாட்களால் சூழப்பட்டிருந்தனர்.(3)

கிருஷ்ணனுடனான தோழமையால் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பாண்டுவின் மகன் அர்ஜுனன், இனிமைநிறைந்த அம்மாளிகையைக் கண்டு, தன் தோழனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, போர் அணுகி வந்தபோது உன் பெருமையை நான் அறிந்தேன்.(4) ஓ! தேவகியின் மகனே, அண்டத்தின் தலைவனான உன் வடிவத்தை நான் அறிந்தேன்.(5) ஓ! கேசவா, புனிதனான நீ அந்நேரத்தில் அன்புடன் எனக்குச் சொன்னதனைத்தையும் என் மனத்தின் நிலையின்மையால் மறந்துவிட்டேன்.(6) எனினும், அந்த உண்மைகளை அறிய மீண்டும் மீண்டும் நான் ஆவல் கொள்கிறேன். நீயோ விரைவில் துவாரகை செல்லப் போகிறாய்” என்றான்”.(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், வலிமைமிக்கவனும், சக்திமானும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், பல்குனனை {அர்ஜுனனை} ஆரத்தழுவி பின்வருமாறு பதில் கூறினான்.(8)

வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, “புதிர்கள் {இரகசியங்கள்} எனக் கருதப்படும் உண்மைகளை உன்னைக் கேட்கச் செய்தேன். நிலையான உண்மைகளை நான் உனக்குச் சொன்னேன். அறத்தின் நிலையான வடிவம் {ஸனாதன தர்மத்தின் ஸ்வரூபம்} குறித்தும், நித்திய உலகங்கள் அனைத்தைக் குறித்தும் நான் உனக்குச் சொன்னேன்.(9) நான் உனக்குச் சொன்னதை மடமையினால் நீ புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிவது பெரும் ஒவ்வாமையைத் தருகிறது. அச்சமயத்தில் நான் உன்னிடம் சொன்னது அனைத்தையும் இப்போது நினைவுகூர்ந்து என்னால் உனக்குச் சொல்ல இயலாது.(10) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ நம்பிக்கையற்றவனாகவும், புத்தி கெட்டவனாகவும் இருக்கிறாய். ஓ! தனஞ்சயா, அச்சந்தர்ப்பத்தில் நான் சொன்ன அனைத்தையும் விரிவாக மீண்டும் சொல்ல என்னால் இயலாது.(11)

(அப்போது நான் உனக்குச் சொன்ன) அந்த அறம் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளப் போதுமானதற்கும் காலம் அதிகமானதாகும். அது குறித்து மீண்டும் விரிவாக என்னால் சொல்ல முடியாது.(12) யோகத்தில் என்னை நானே குவித்துக் கொண்ட பிறகு பரப்பிரம்மம் குறித்து உன்னிடம் உரையாடினேன். எனினும், அதே காரியம் குறித்த ஒரு பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்கிறேன்.(13) ஓ! கடமையை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் சொல்லப் போகும் அனைத்தையும் என் போதனைக்கு ஏற்ற புத்தியுடன் கேட்டால், உன்னால் உயர்ந்த கதியை அடைவதில் வெல்ல முடியும்.(14) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, ஒரு சந்தர்ப்பத்தில் சொர்க்கத்தில் இருந்து ஒரு பிராமணர் எங்களிடம் வந்தார். தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அவர் பிரம்ம லோகத்தில் இருந்து வந்தார். எங்களால் அவர் முறையாகக் கௌரவிக்கப்பட்டார்.(15) ஓ! பிருதையின் மகனே, சொர்க்க வடிவங்களுக்கு ஏற்புடைய வகையில் எங்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் எவ்வகையான ஐயுணர்வுக்கும் வசப்படாமல் கேட்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(16)

பிராமணன், “ஓ! கிருஷ்ணா, (உன் சொந்த நன்மைக்காக அல்லாமல்) அனைத்து உயிரினங்களிடம் கொண்ட கருணையால் உந்தப்பட்டு, மோக்ஷ அறம் தொடர்பாக நீ என்னிடம் எதைக் கேட்டாயோ, மாயைகள் அனைத்தையும் எது அழிக்குமோ, ஓ! உயர்ந்த பலத்தைக் கொண்டவனே,(17) ஓ! மதுசூதனா அதை நான் உனக்கு முறையாகச் சொல்லப் போகிறேன். ஓ! மாதவா, நான் சொல்வதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(18) தவம் செய்தவரும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், காசியபர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பிராமணர் அறப்புதிர்கள் {தர்மங்கள் குறித்த சாஸ்திர ரஹஸ்யங்கள்} அனைத்தையும் அறிந்த மற்றொரு பிராமணரிடம் சென்றார்.(19) உண்மையில், பின்னவர், உயிரினங்களின் மரணம் மற்றும் மறுபிறவிகள் குறித்துச் சாத்திரங்கள் போதிக்கும் அறிவு அனைத்திலும், யோகம் தரும் அனைத்துப் பொருட்களின் நேரடி அறிவு ஆகியவற்றிலும் தேர்ச்சி அடைந்தவராக இருந்தார். அவர் உலகம் தொடர்பான காரியங்களில் உள்ள உண்மைகள் அனைத்திலும் நல்ல நிபுணராக இருந்தார். இன்ப, துன்பங்களின் உண்மையையும் நன்கு அறிந்தவராக இருந்தார்.(20) அவர் பிறப்பு மற்றும் மரணம் குறித்தும், நிறை {புண்ணியம்} மற்றும் குறை {பாவம்} ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளையும் அறிந்திருந்தார். தற்செயல்களின் {சுய கர்மத்தின்} விளைவால் உயர்ந்த மற்றும் இழிந்த உடல் கொண்ட உயிரினங்களால் அடையப்படும் கதிகளைக் காண்பவராக இருந்தார்.(21)

உலகில் இருந்து விடுதலை {முக்தி} அடைந்த ஒருவரைப் போல அவர் வாழ்ந்தார். தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராகவும், முற்றான ஆன்ம அமைதியை அடைந்தவராகவும் இருந்த அவர், தமது புலன்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். பிரம்ம ஒளியால் சுடர்விடுபவராகவும், {நினைத்தாலே} விரும்பிய இடமெங்கும் செல்லக்கூடியவராகவும் இருந்தார். விரும்பினால் அனைவரின் கண்களின் முன்பும் மறைந்து போகும் அறிவியலை அவர் அறிந்திருந்தார். அவர் புலப்படாத சித்தர்கள் மற்றும் தெய்வீக இசைக் கலைஞர்களின் துணையுடன் திரிபவராக இருந்தார். மனிதர்களின் பரபரப்புக்கு அப்பால் ஏதோவோரிடம் அவர்களுடன் அமர்ந்து உரையாடுபவராகவும் இருந்தார். அவர் காற்றைப் போல அனைத்துப் பொருட்களில் இருந்தும் தொடர்பறுந்தவராக இருந்தார். உண்மையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்த காசியபர் அவரைக் காண விரும்பினார். நுண்ணறிவைக் கொண்டவரும், பிராமணர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான அவர் {காசியபர்} அந்தத் தவசியை அணுகினார்.(22-24) தவம் செய்பவரும் புண்ணியம் ஈட்ட விரும்பியவருமான காசியபர், அந்த அற்புதக் குணங்கள் அனைத்தையும் கண்டதும் அந்தத் தவசியின் பாதங்களில் குவிந்த இதயத்துடன் விழுந்தார்.(25) அவருடைய இயல்புக்கு மீறிய சாதனைகளைக் கண்ட காசியபர், ஒரு சீடன் தன் ஆசானுக்காகக் கடமையுணர்வுடனும், மதிப்புடனும் காத்திருப்பதைப் போல அந்த முதன்மையான பிராமணரிடம் காத்திருந்து, அவரைத் தணிப்பதில் வென்றார்.(26) ஓ! பகைவர்களை வாட்டுபவனே {கிருஷ்ணா}, சாத்திரக் கல்வி, சிறந்த ஒழுக்கம் ஆகியவற்றைத் தவிர இந்தச் சாதனைகள் அனைத்தையும் செய்திருந்த அந்தப் பிராமணரை, ஓர் ஆசானிடம் கீழ்ப்படிந்திருக்கும் சீடனைப் போலத் தம் பக்தியால் நிறைவடையச் செய்தார்.(27) காசியபரிடம் நிறைவடைந்த அந்தப் பிராமணர் ஒரு நாள் அவரிடம் உற்சாகமாகவும், உயர்ந்த வெற்றியில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டும் பின்வருமாறு பேசினார். ஓ! ஜனார்த்தனா, அந்த வார்த்தைகளை நான் மீண்டும் சொல்கிறேன் கேட்பாயாக.(28)

வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரான அந்தத் தவசி {சித்தர்}, “ஓ! மகனே {காசியபா}, பல்வேறு செயல்களின் மூலமும், தகுதியின் {புண்ணியத்தின்} துணை மூலமும் இறந்து போகக்கூடிய உயிரினங்கள் இம்மையில் பல்வேறு கதிகளையும், சொர்க்கத்தில் வசிப்பிடத்தையும் அடைகின்றன.(29) எங்கும் உயர்ந்த மகிழ்ச்சி கிடையாது; எங்கும் நிலையான வசிப்பிடம் கிடையாது. துன்பத்துடன் அடையப்பட்ட உயர்ந்த உலகங்களில் இருந்து மீண்டும் மீண்டும் விழ்ச்சிகள் நேரிடும்.(30) பாவத்தில் ஈடுபட்டதன் விளைவாகக் காமமும், கோபமும் நிறைந்தவனாக, பேராசையால் மயக்கப்பட்டவனாக இருந்த நான் பரிதாபகரமான, மங்கலமற்ற பல்வேறு கதிகளை அடைய வேண்டி இருந்தது.(31) நான் மீண்டும் மீண்டும் இறந்து, மீண்டும் மீண்டும் பிறந்தேன். நான் பல்வேறு வகை உணவுகளை உண்டேன், நான் பல்வேறு முலைகளைப் பருகியிருக்கிறேன்.(32)

ஒருவருக்கொருவர் வெவ்வேறான பல்வேறு வகைத் தாய்மாரையும், பல்வேறு வகைத் தந்தைமாரையும் நான் கண்டிருக்கிறேன். ஓ! பாவமற்றவனே, பல்வேறு வகை இன்பங்களையும், பல்வேறு வகைத் துயரங்களையும் எனதாகியிருக்கின்றன.(33) பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் எனக்கு ஏற்புடையவற்றில் இருந்து பிரிக்கப்பட்டு, ஏற்பில்லாதவற்றோடு சேர்க்கப்பட்டிருக்கிறேன். கடும் உழைப்பினால் செல்வத்தை ஈட்டி, அதை இழந்திருக்கிறேன்.(34) அவமதிப்புகள், அதீத துயரங்கள் ஆகியவற்றை மன்னர்களிடம் இருந்தும், உறவினர்களிடம் இருந்தும் நான் அடைந்திருக்கிறேன்.(35) அவமானங்கள், மரணம், மிகக் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் சிறைவாசம் ஆகியவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். நரகத்தில் விழுவதும், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் பெரும் சித்திரவதைகளும் எனதாகியிருக்கின்றன.(36) முதுமையும், நோய்களும் மீண்டும் மீண்டும் என்னைத் தாக்கியிருக்கின்றன, அடிக்கடி அபரிமிதமான அளவில் பேரிடர்கள் நேர்ந்திருக்கின்றன. முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் கருத்துகளில் இருந்தும் பாயும் துன்பங்களை இவ்வுலகில் நான் மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்கிறேன்.(37)

இவை யாவற்றுக்கும் பிறகு, ஒரு நாள், துன்பத்தில் மூழ்கியிருந்த எனக்கு வெறுமையான மனத்தளர்ச்சி {நம்பிக்கையின்மை} ஏற்பட்டது. வடிவமற்ற புகலிடத்தை நான் அடைந்தேன். பெரும் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த நான் இன்ப துன்பங்கள் நிறைந்த இந்தப் பூமியைக் கைவிட்டேன்[1].(38) இந்தப் பாதையைப் புரிந்து கொண்ட நான், இவ்வுலகில் தானே பயின்று வந்தேன். அதன் பிறகு, ஆன்ம அமைதியின் மூலம் நீ காணும் இந்த வெற்றியை அடைந்தேன்.(39) (இங்கிருந்து நான் சென்ற பிறகு) இவ்வுலகத்திற்கு நான் மீண்டும் வர மாட்டேன். உண்மையில், நிலைத்த பிரம்மத்துக்குள் ஈர்க்கப்படும் நிலையை நான் அடையும் வரை, அண்டத்தின் இறுதி அழிவு வரை எனக்கு நேரும் மகிழ்ச்சிகரமான கதிகளையும், இந்த அண்டத்தில் உள்ள உயிரினங்களின் கதிகளையும் பார்த்துக் கொண்டிருப்பேன்[2].(40) இந்தச் சிறந்த வெற்றியை அடைந்திருக்கும் நான் இவ்வுலகில் இருந்து சென்ற பிறகு, அதற்கு மேலிருப்பது எதுவோ (சத்தியலோகத்திற்கு) செல்வேன். அங்கிருந்து மேலும் உயர்வானதை அடைவேன் (பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுவேன்).(41) புலப்படாத நிலையான அந்தப் பிரம்ம நிலையை உண்மையில் நான் அடைவேன். இதில் உனக்கு எந்த ஐயமும் வேண்டாம். ஓ! பகைவரை எரிப்பவனே, இறந்து போகும் உயிரினங்களைக் கொண்ட இவ்வுலகிற்கு மீண்டும் நான் திரும்ப மாட்டேன்.(42)ஓ! பெரும் ஞானியே, நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன். நான் உனக்குச் செய்ய வேண்டியதென்ன என்பதைச் சொல்வாயாக. நீ இங்கே வந்திருக்கும் நோக்கம் நிறைவேறுவதற்கான காலம் வந்துவிட்டது.(43) நீ என்னை நாடி வந்ததற்கான நோக்கத்தை உண்மையில் நான் அறிவேன். அதனால்தான் நான் உனக்கு இந்தச் சிறு குறிப்பைத் தருகிறேன்.(44) ஓ! பெரும் ஞானமும், அனுபவமும் கொண்டவனே, உன் நடத்தையில் நான் உயர்ந்த நிறைவை அடைந்திருக்கிறேன். நீ என்னைக் கேள்வி கேட்கலாம். உன் விருப்பப்படியே உனக்கு நன்மையானவற்றைக் குறித்து நான் உனக்குச் சொல்வேன்.(45) உன் புத்தி பெரியதென நான் நினைக்கிறேன். அந்தப் புத்தியின் துணையுடன்தான் நீ என்னை அறிந்து கொண்டாய் என்பதால் நான் உண்மையில் உன்னை வெகுவாக மெச்சுகிறேன். ஓ! காசியபா, நீ நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாவாய்” என்றார் {அந்த சித்தர்}.(46)

ஜனனமரணங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 17-உயிரினங்களின் பிறப்பு மற்றும் இறப்புக் குறித்துக் காசியபருக்குக் கூறிய சித்தர்…

வாசுதேவன் {கிருஷ்ணன்  அர்ஜுனனிடம்}, “அந்தத் தவசியின் பாதங்களைத் தீண்டிய அந்தப் பிராமணர் {காசியபர்}, பதிலளிப்பதற்கு மிகக் கடினமான சில கேள்விகளை அவரிடம் கேட்டார். அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவர், குறிப்பிடப்பட்ட அந்தக் கடமைகள் குறித்து அப்போது உரையாடினர்.(1)

காசியபர், “உடல் எவ்வாறு சிதைவடைகிறது?<1> மற்றொன்று {மற்றொரு உடல்} எவ்வாறு அடையப்படுகிறது?<2> துன்பம் நிறைந்த மறுபிறவி சுழற்சியை மீண்டும் மீண்டும் கடந்த பிறகு ஒருவன் எவ்வாறு விடுதலை {முக்தி} அடைகிறான்?<3>(2) சிலகாலம் பிரகிருதியை அனுபவித்துவிட்டு, (அந்தப் பிரகிருதி தரும்) குறிப்பிட்ட உடலை ஜீவன் எவ்வாறு கைவிடுகிறது?<4> உடலில் இருந்து விடுபட்ட ஜீவன், அதனில் இருந்து வேறுபட்டதை (பிரம்மத்தை) எவ்வாறு அடைகிறது?<5>(3) ஒரு மனிதன் தன்னால் செய்யப்படும் நல்ல மற்றும் தீய செயல்களை எவ்வாறு அனுபவிக்கிறான் (அனுபவிக்கவும் அதன் விளைவுகளை எவ்வாறு பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்)?<6> உடலை இழந்த ஒருவனுடைய செயல்கள் எங்கிருக்கின்றன {சரீரமற்ற ஆத்மாவுக்கு (சரீரத்திற்குக் காரணமான) கர்மம் எங்கிருந்து வருகிறது}?<7>” என்று கேட்டார்”[1].(4)(முதல் கேள்வி உடல் அழிவடைவது குறித்தது. இரண்டாவது, மீண்டும் உடலை அடையும் விதம் தொடர்புடையது. மூன்றாவது, மறுபிறப்பைத் தவிர்க்கும் விதம் குறித்தது. நான்காவது, ஜீவனுக்கு உடலைக் கொடுக்கச் செயல்படும் காரணங்கள் தொடர்புடையது. “பிரகிருதி” என்று சொல்வதன் மூலம் இயற்கை அல்லது உடலுக்குக் காரணமான விழிப்புணர்வின்மை பொருள் கொள்ளப்படுகிறது. ஐந்தாவது, அன்யத் அல்லது பரம், அஃதாவது இறுதி விடுதலை {முக்தி} அல்லது பிரம்மத்துக்குள் ஈர்க்கப்படுதல் எவ்வாறு நிகழ்கிறது என்பது தொடர்பானது. ஆறாவது, செயற்கனிகள் {செயல்களின் பலன்கள்} எவ்வகையில் அனுபவிக்கப்படுகின்றன அல்லது தாங்கிக் கொள்ளப்படுகின்றன என்பதன் தொடர்பானது. ஏழாவது, உடலற்ற ஜீவனைச் செயல்கள் {கர்மங்கள்} பிணைக்கும் வழிமுறைகளைக் குறித்துப் பேசுகிறது”){கிருஷ்ணனுடன் உரையாடிக் கொண்டிருந்த} பிராமணர், “இவ்வாறு காசியபரால் தூண்டப்பட்டவரும், முக்தருமான அந்தத் தவசி அந்தக் கேளவிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் பதிலளித்தார். ஓ விருஷ்ணி குலக் கொழுந்தே, அவர் சொன்ன பதில்களை நான் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(5)

முக்தரான அந்தத் தவசி {சித்தர்}, “ஜீவன் ஏற்றுக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட உடலால் செய்யப்படுபவையும், வாழ்வை நீட்டிக்கச் செய்யவல்லவையும், புகழைக் கொண்டுவரக்கூடியவையுமான செயல்கள் தீர்ந்து போகும்போது,(6) உடல்கொண்டதும், வாழ்வு குறுகியதுமான அந்த ஜீவன், வாழ்வுக்கும், உடல்நலத்திற்கும் பகையான செயல்களைச் செய்யத் தொடங்குகிறது. அழிவு அணுகும்போது அவனுடைய புத்தி முறையான நடைமுறையில் இருந்து விலகுகிறது.(7) தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதன், தன்னுடைய உடல் கட்டுமானம், பலம், தன் உயிர் மற்றும் வருடத்தின் காலம் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்ட பிறகும் கூட, ஒழுங்கற்ற இடைவெளிகளில் உண்ணவும், தனக்குப் பகையான உணவை உண்ணவும் தொடங்குகிறான்[2].(8) அத்தகைய நேரத்தில் அவன் மிகத் தீங்கான நடைமுறைகளில் {செயல்களில்} ஈடுபடுகிறான். சில வேளைகளில் அவன் அதிகமாக உண்கிறான், மேலும் சில சமயங்களில் அவன் மொத்தமாக உணவைத் தவிர்க்கிறான்.(9) கெட்ட உணவையோ, கெட்ட இறைச்சியையோ உண்கிறான், அல்லது கெட்ட பானத்தைப் பருகுகிறான், அல்லது ஒன்றோடொன்று பொருந்தாத உட்பொருள்களாலான உணவை உண்கிறான். நன்மை தரக்கூடிய கடின உணவை அதிக அளவில் அவன் உண்கிறான், அல்லது முன்பு உண்ட உணவு செரிக்கும் முன்பே மீண்டும் உண்கிறான்.(10)அதிகமான வேலைகளிலும், உரிய அளவுக்கு மீறிய பாலியல் இன்பத்திலும் ஈடுபடுகிறான், அல்லது வேலைக்கான ஆதாரத்தால் தன்னுடைய உடல் உறுப்புகளின் தூண்டுதல்களை ஒடுக்குகிறான்.(11) அல்லது அவன் அதிகச் சுவையுள்ள உணவை உண்ணவோ, பகல் வேளையில் உறங்குவதில் ஈடுபடவோ செய்கிறான். முறையாகச் செரிக்கப்படாத உணவானது, வேளை வரும்போது தானே குற்றங்களை {தோஷங்களைத்} தூண்டுகிறது[3].(12) உடலில் இவ்வாறு குற்றங்கள் தூண்டப்படுவதன் மூலம் அவன் நோயடைந்து மரணத்தை அடைகிறான். சில வேளைகளில் ஒருவன் (தான் இறந்து போவதற்காக) தூக்கிட்டுக் கொள்வது {உத்பந்தனம்} போன்ற பிறழ்நடத்தை அல்லது இயல்பற்ற செயல்களின் ஈடுபடுகிறான்.(13) இந்தக் காரணங்களினால் ஓர் உயிரினத்தின் உடல் அழிவடைகிறது. நான் உனக்குச் சொல்லும் வகையில் இதைச் சரியாகப் புரிந்து கொள்வாயாக.(14)கடுமையடையும் காற்றால் {வாயுவால் / வாதத்தால்} தூண்டப்பட்ட உடல் வெப்பமானது, ஒன்றன்பின் ஒன்றாக உடலின் ஒவ்வொரு பகுதியையும் அடைந்து, உயிர் மூச்சுகள் {மூச்சு நகர்வுகள்} அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.(15) உடல் முழுவதும் தூண்டப்பட்டதை உண்மையில் அறிந்து கொள்ளும் வெப்பமானது, உயிர் தங்கியிருப்பதாகச் சொல்லப்படும் உடலின் முக்கியப் பகுதிகள் அனைத்தையும் மிகக் கடுமையாகத் துளைக்கிறது.(16) இதன் விளைவாக ஜீவன் பெரும் துன்பத்தை உணர்ந்து, தன் உடல் உறையில் இருந்து விரைவாக விடைபெறுகிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, உடல் உறுப்புகளின் முக்கிய அங்கங்கள் இவ்வாறு பீடிக்கப்படும்போது பெரும் துன்பத்தில் மூழ்கும் ஜீவன் உடலை விட்டு நழுவுகிறது என்பதை அறிவாயாக. அனைத்து உயிரினங்களும் பிறப்பு மற்றும் இறப்பால் பீடிக்கப்படுகின்றன.(17,18) ஓ! பிராமணர்களின் தலைவா, ஒரு மனிதன் தன் உடலைக் கைவிடும்போது அவனால் உணரப்படும் வலியானது, அவன் ஒரு கருவறைக்குள் முதலில் நுழையும்போதோ, அதைவிட்டு வெளியேறும்போதோ {பிறக்கும்போதோ} அவனால் உணரப்படும் வலியைப் போன்றதே ஆகும். அவனது மூட்டுகள் கிட்டத்தட்ட விலகி, (கருவறைக்குள்) உள்ள நீரின் மூலம் அவன் பெரும் துன்பமடைகிறான்.(19,20)

(மற்றொரு) கடுங்காற்றால் {வாயுவால்} தூண்டப்படும், உடல் காற்றானது, குளிர் மூலம் தூண்டப்பட்டு, (உடல் என்று அழைக்கப்படும்) பருப்பொருள் ஒன்றியத்தை, எண்ணிக்கையில் ஐந்தான பூதங்களாகச் சிதைவுறச் செய்கிறது.(21) ஐந்து அடிப்படை பூதங்களின் இந்தக் கலவைக்குள் தோன்றும பிராணன் என்றும் அபானன் என்றும் அழைக்கப்படும் உயிர்மூச்சுகளில் வசிக்கும் காற்றானது, துன்பச் சூழ்நிலையில் இருந்து உடல்கொண்ட உயிரினத்தை விட்டு அகன்று, மேல் நோக்கி எழுகிறது.(22) இவ்வாறே காற்றானது உடலை விட்டு விலகுகிறது. பிறகே மூச்சில்லாமை காணப்படுகிறது. அதன் பிறகு அந்த மனிதன் வெப்பம், மூச்சு, அழகு மற்றும் நினைவு அற்றவன் ஆகிறான்.(23) (ஜீவனும் பிரம்மமே என்பதால்) பிரம்மத்தால் கைவிடப்படும் மனிதன் இறந்தவன் எனச் சொல்லப்படுகிறான். அந்த உடலைத் தாங்கியவன், உணரத்தக்க அனைத்துப் பொருட்களையும் எந்தக் குழாய்களின் {புலன்களின்} வழியாக உணர்ந்தானோ, அவற்றின் மூலம் அதற்கு மேலும் அவற்றை அவன் உணரமாட்டான்.(24)

உடலில் உள்ள அந்தக் குழாய்களில் {புலன்களில்} உயிர்மூச்சுகளை உணவில் இருந்து நித்திய ஜீவனே உண்டாக்குகிறது.(25) ஒன்று திரளும் பூதங்கள் சில பகுதிகளில் உறுதியாக ஒன்றிணைகின்றன. அந்தப் பகுதிகளே உடலில் முக்கியப் பகுதிகள் {மர்மஸ்தானங்கள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிவாயாக. இவ்வாறே சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.(26) அந்த முக்கியப் பகுதிகள் துளைக்கப்படும்போது, மேலே எழும் ஜீவனானது, உயிரினத்தின் இதயத்திற்குள் நுழைந்து, தாமதமில்லாமல் அசைவூட்டக் கோட்பாட்டை நிறுத்துகிறது.(27) அந்த உயிரினம் அப்போதும் நினைவுக் கோட்பாட்டுடன் கூடியதாக இருந்தாலும், எதையும் அறியத் தவறுகிறது. முக்கியப் பகுதிகள் அனைத்தும் மூழ்கியதும், அந்த உயிரினத்தின் ஞானம் இருளால் மூடப்படுகிறது.(28)

வசிக்கக்கூடிய இடங்கள் அனைத்தையும் இழந்த ஜீவன் அப்போது காற்றால் கலங்கடிக்கப்படுகிறது. அதன் பிறகு அவன், ஆழமானதும், நீண்டதும், துன்பம் நிறைந்ததுமான மூச்சைவிட்டு,(29) அசைவூட்டமுள்ள உடலை நடுங்கச் செய்தபடி விரைவாக வெளியேறுகிறான். எனினும், உடலில் இருந்து தொடர்பறுந்த ஜீவன், தன் செயல்களால் சூழப்பட்டிருக்கிறான்.(30) தான் செய்த மங்கலச் செயல்கள் அனைத்தின் புண்ணியங்கள் மற்றும் தன் பாவங்கள் அனைத்தாலும் அவன் அனைத்துப் புறங்களிலும் சூழப்படுகிறான். ஞானமும், சாத்தியத் தீர்மானங்களின் அறிவையும் கொண்ட பிராமணர்கள், அவன் புண்ணியத்தைக் கொண்டிருக்கிறானா, அல்லது பாவத்தைக் கொண்டிருக்கிறானா என்பதைச் சில குறியீடுகளின் மூலம் அறிந்து கொள்கிறார்கள். கண்களைக் கொண்ட மனிதர்கள், இருளுக்கு மத்தியில் விட்டில் பூச்சியானது தோன்றி மறைவதைக் காண்பதைப் போலவே, அறிவுக் கண் கொண்டவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான மனிதர்கள், தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் உடலைவிட்டு ஜீவன் செல்வதையும், மறுபிறவியில் அவன் கருவறைக்குள் நுழைவதையும் காண்கிறார்கள். ஜீவனுக்கு மூன்று உலகங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் காணப்படுகிறது.(31,34)

உயிரினங்கள் வசிக்கும் இவ்வுலகம் செயற்களம் என்றழைக்கப்படுகிறது. நல்ல அல்லது தீய செயல்களை நிறைவேற்றும் உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் பேரில் உண்டாகும் கனிகளை அடைகின்றன.(35) தாங்கள் செய்யும் செயல்களின் விளைவாக உயிரினங்கள் இம்மையில் மேன்மையான அல்லது தாழ்ந்த இன்பங்களை அடைகின்றன. இங்கே தீச்செயல் செய்பவர்கள் தங்கள் செயல்களின் விளைவாக நரகத்தை அடைகிறார்கள்.(36) உயிரினங்கள் தலைகீழாகத் தொங்கி மூழ்கி, சமைக்கப்படும் நிலை மிகத் துன்பகரமான ஒன்றாகும். அங்கிருந்து தப்புவது மிகக் கடினமாகும். உண்மையில் ஒருவன் இந்தத் துன்பத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகக் கடினமாக முயல வேண்டும்.(37)

இவ்வுலகில் இருந்து உயர்ந்து சென்ற பிறகு உயிரினங்கள் உண்மையில் வசிக்கப் போகும் உலகங்களை இப்போது சொல்லப் போகிறேன். கவனத்துடன் கேட்பாயாக.(38) நான் சொல்வதைக் கேட்பதன் மூலம், புத்தியில் உறுதியையும், (நல்ல மற்றும் தீய) செயல்களைப் புரிந்து கொள்வதில் ஒரு தெளிவையும் நீ அடைவாய். ஆகாயத்தில் ஒளிரும் நட்சத்திர உலகங்கள், சந்திர வட்டில் மற்றும் சொந்த ஒளியில் அண்டத்தில் ஒளிரும் சூரிய வட்டில் ஆகியவை அறம் சார்ந்த செயல்களைச் செய்த உயிரினங்கள் அனைத்திற்குமான உலகங்கள் என்பதை நீ அறிவாயாக.(39,40)

புண்ணிங்கள் தீர்ந்ததும் அவர்கள் அந்த உலகங்களில் இருந்து மீண்டும் வீழ்ச்சியடைகிறார்கள். சொர்க்கத்திலும்கூட, தாழ்ந்த, மேன்மையான, நடுத்தரமான இன்பநிலைகள் என்ற வேறுபாடு இருக்கிறது.(41) சொர்க்கத்திலேயே கூட, தன்னைவிட அதிகச் செழிப்புடன் இருப்பவர்களைக் கண்டு நிறைவின்மை ஏற்படுகிறது. இவையே நான் விரிவாகக் குறிப்பிட்ட இலக்குகள் {கதிகள்} ஆகும்.(42) இதன்பிறகு, ஜீவன் கருவறை வாசத்தை அடையும் நிலை குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மறுபிறப்பாளனே, நான் சொல்லப் போவதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக” என்றார் {சித்தர்}.(43)

ஜனனம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 18-ஜீவன் கருவறையை அடைவது முதலியவற்றைக் குறித்துக் காசியபருக்குச் சொன்ன சித்தர்…

பிராமணர் {சித்தர் காசியபரிடம்}, “ஜீவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அழிவடைவதில்லை. உடலுக்குப் பின் உடலைப் பெறுவதன் மூலம் அந்தச் செயல்கள் அவற்றுக்குத் தொடர்புடைய கனிகளை {பலன்களை} உண்டாக்குகின்றன.(1) கனி சுமக்கும் மரம், விளைச்சலுக்கான காலம் வரும்போது, பெரும் அளவிலான கனிகளை விளைவிப்பத்தைப் போலவே, தூய இதயத்துடன் அடையப்படும் தகுதியும் {புண்ணியமும்}, (பேரின்பம் எனும்) பயிரைப் பெருமளவில் விளைவிக்கச் செய்யும்.(2) அதே போலவே, பாவம் நிறைந்த இதயத்துடன் செய்யப்படும் பாவம், துன்பமெனும் பெரும்பயிரை விளைவிக்கும். ஆன்மா (அல்லது ஜீவன்), மனத்தை மேலே கொண்டு செயல்படுமாறு தன்னிடமே சொல்லிக் கொள்கிறது.(3) ஜீவன், தான் செய்யும் செயல்கள் அனைத்துடன், காமம் மற்றும் கோபத்தில் மூழ்கி, கருவறைக்குள் எவ்வாறு நுழைகிறது என்பதைக் கேட்பாயாக.(4)

குருதியுடன் கலந்த உயிர்வித்தானது, பெண்களின் கருவறைக்குள் புகுந்து, (அவனது) நல்ல அல்லது தீய செயல்களின் மூலம் பிறந்த (ஜீவனின்) களமாகிறது.(5) அதன் நுட்பம் மற்றும் புலப்படா நிலை ஆகியவற்றின் விளைவால் ஜீவனானது, உடலுக்குப் பின் உடலை அடைந்தாலும் எதனுடனும் பற்று கொள்வதில்லை. எனவே, அது {ஜீவன்} நித்திய பிரம்மம் என்றழைக்கப்படுகிறது[1].(6) அதுவே (ஜீவன், அல்லது பிரம்மமே) உயிரினங்கள் அனைத்தின் வித்தாகிறது. அதன் விளைவாலேயே உயிரினங்கள் உயிருடன் வாழ்கின்றன. கருவில் பகுதி, பகுதியாக அனைத்து அங்கங்களிலும் நுழையும் ஜீவன், மனத்தின் குணத்தை ஏற்றுக் கொண்டும், பிராணனுக்குச் சொந்தமான பகுதிகள் அனைத்துக்குள்ளும் வசித்துக் கொண்டும் (உயிரை {வாழ்வை}) ஆதரிக்கிறது. இதன் விளைவாக மனத்துடன் கூடிய கருவானது தன் அங்கங்களை அசைக்கத் தொடங்குகிறது.(7,8)உருக்கப்பட்ட இரும்பானது (வார்ப்புக்குள்) ஊற்றப்படும்போது, அந்த வார்ப்பின் வடிவைப் பெறுவதைப் போலவே, ஜீவனும் கருவை அடைந்து அவ்வாறே ஆகிறது.(9) இரும்புத்திரளுக்குள் நுழையும் நெருப்பானது, அதை வெகுவாகச் சுடுவதைப் போலவே, கருவில் வெளிப்படும் ஜீவனும் அவ்வாறே செய்கிறது என்பதை அறிவாயாக.(10) அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு (அதனுள் இருக்கும் அனைத்துப் பொருட்களையும்) கண்டுபிடிப்பதைப் போல, மனமும், உடலின் பல்வேறு அங்கங்களைக் கண்டுபிடிக்கிறது.(11) முந்தைய உடலில் ஜீவன் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்கள் எதனையும் நிச்சயம் அஃது அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ வேண்டும்.(12) அவ்வாறு அனுபவிக்கவும், சகித்துக் கொள்ளவும் செய்வதன் மூலம் முந்தைய செயல்கள் தீர்ந்து, ஜீவனானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் தியானத்தில் உள்ள கடமைகளின் அறிவை அடைவதில் வெல்லும் வரை மீண்டும் மீண்டும் வேறு செயல்களைக் குவிக்கிறது.(13)

ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இதைப் பொறுத்தவரை, மீண்டும் மீண்டும் நிகழும் மறுபிறவி சுழற்சிகளின் போது, ஜீவனை மகிழ்ச்சியடையச் செய்யும் செயல்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(14) கொடைகள் {தானம்}, தவம் செய்வது {விரதம்}, பிரம்மச்சரியம், விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பிரம்மம் தரித்தல், தற்கட்டுப்பாடு, அமைதி, அனைத்து உயிரினங்களிடமும் கருணை,(15) ஆசைகளைக் கட்டுப்படுத்தல், கொடூரந்தவிர்த்தல், பிறருக்கு உரியதை அபகரிக்காமல் இருத்தல், போலியான செயல்கள் அனைத்தையும் மனத்தாலும் செய்யாதிருத்தல்,(16) தாய்க்கும், தந்தைக்கும் மதிப்புடன் தொண்டாற்றுதல், தேவர்களையும், விருந்தினர்களையும் கௌரவித்தல், ஆசான்களை வழிபடுதல், இரக்கம், தூய்மை, அனைத்து உறுப்புகளையும் நிலையாகக் கட்டுப்படுத்தல்,(17) நற்செயல்கள் அனைத்தையும் செய்தல் ஆகியவை நல்லொழுக்கமென அமைவதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய ஒழுக்கத்திலிருந்தே உயிரினங்கள் அனைத்தையும் நிலையாகப் பாதுகாக்கும் அறம் எழுகிறது.(18) இத்தகைய ஒழுக்கத்தை  நல்லோருக்கு மத்தியில் எப்போதும் ஒருவன் காணலாம். உண்மையில், அத்தகைய ஒழுக்கம் அங்கேயே நிலையாக வசிக்கிறது. அமைதியான ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் செய்யும் நடைமுறைச் செயல்களே  அறத்தைக் குறிக்கின்றன.(19) நிலையான அறமாக அமையும் நடைமுறைச் செயல்கள் அவர்களுக்கு மத்தியிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. அறம் நோற்கும் ஒருவன் ஒருபோதும் துன்ப கதியை அடைய மாட்டான்.(20)

உலகமானது, அறத்தில் இருந்து வீழும்போது, நல்லோரின் ஒழுக்கத்தின் மூலமே அறப்பாதையில் {மீண்டும்} அது நிலைநிறுத்தப்படுகிறது. யோகியானவன் விடுதலையடைகிறான் {முக்தியடைகிறான்}, எனவே அவன் இவர்களை {நல்லோரை} விடவும் சிறந்தவனாக இருக்கிறான்.(21) நீதிமானாகச் செயல்படும் ஒருவன், தான் செய்ய வேண்டியவற்றை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாக நீண்ட காலம் செய்து வரும்போதே உலகத்திலிருந்து அவன் வீடுபேறடைவது நிகழ்கிறது.(22) ஓர் உயிரினமானது தான் முந்தைய பிறவியில் செய்த செயல்களின் பலன்களை இவ்வாறே அடைகிறது. இந்தச் செயல்கள் அனைத்தும் காரணமாக அமைவதன் விளைவாகவே ஒருவன், தனது உண்மை வடிவில் இருந்து வேறு பட்ட நிலையில் இவ்வுலகை அடைகிறான்.(23) இந்தக் கேள்வியைப் பொறுத்தவரையில் இவ்வுலகில் ஐயமிருக்கிறது. (ஜீவனால்) ஓருடல் ஏற்கப்படுவது முதலில் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?(24)

உலகமனைத்துக்குப் பெரும்பாட்டனான பிரம்மன் முதலில் தன் உடலை அமைத்துக் கொண்டு, அதன்பிறகு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களையும் முழுமையாகப் படைத்தான்.(25) முதலில் தன்னுடலை ஏற்றப் பிறகே அவன் பிரதானத்தைப் படைத்தான். அனைத்தையும் எது மறைக்குமோ, உயர்ந்தது என அனைவரும் எதனை அறிந்தார்களோ அந்தப் பிரதானமே உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் பொருள் காரணமாக அமைகிறது.(26) காணக்கூடிய இஃது {உடல்} அழியத்தக்கதென்றும், மற்றது {காணமுடியாத ஆன்மா} இறப்பற்றது மற்றும் அழிவில்லாதது என்றும் சொல்லப்படுகிறது. (காணப்படக்கூடிய) இது க்ஷரம் (அழியக்கூடியது) என்று சொல்லப்படுகிறது; எனினும், மற்றது {ஆன்மா} இறப்பற்றது (என்றும்) அக்ஷரம் (அழிவற்றது) என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு புருஷனாலும் மொத்தமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட {உடல், ஆன்மா மற்றும் பிரம்மம் ஆகிய} இவை மூன்றும் {உடல் மற்றும் ஜீவன் என்ற} இருமையாக இருக்கின்றன[2].(27) முதலில் (உடல் கொண்ட வடிவில் தோன்றிக்) காணப்பட்ட பிரஜாபதி {பிரம்மன்}, (பிறகு) அடிப்படை பூதங்கள் அனைத்தையும், அசைவற்ற உயிரினங்கள் அனைத்தையும் படைத்தான். இதுவே பண்டைய கேள்வியாகும் {பழைமையான வேதமாகும்}.(28)அதில் (உடலை ஏற்றுக் கொண்டதில்), காலம், பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த குடிபெயர்வுகள், மறுபிறவிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பெரும்பாட்டன் ஓர் எல்லையை விதித்தான்.(29) நுண்ணறிவு கொண்டவனும், தன் ஆன்மாவைக் கண்டவனுமான ஒரு மனிதன், முற்பிறவிகள் குறித்துச் சொல்வதைப் போலவே நான் சொல்வது அனைத்தும் முறையானவையும், சரியானவையுமாகும்.(30) இன்பமும், துன்பமும் நிலையில்லாதவை என்று சரியான பார்வையில் காண்பவனும், உடலைப் புனிதமற்ற திரட்டாகவும், அழிவை செயற்பாட்டு விதியாகவும் கருதுபவனும்,(31) சிறிய அளவிலான இன்பமும் கூட உண்மையில் துன்பமே என்பதை நினைவுகூருபவனுமான மனிதன், கடப்பதற்கு மிக அரிதான உலகம் சார்ந்த இடம்பெயர்வு எனும் இந்தப் பயங்கரப் பெருங்கடலை {ஸம்ஸரஸமுத்திரத்தைக்} கடப்பதில் வெல்வான்.(32) முதுமை, மரணம் மற்றும் நோயால் துன்புற்றாலும், பிரதானத்தைப் புரிந்து கொள்ளும் ஒருவன், நனவுநிலையுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தினுள்ளும் வசிக்கும் நனவுநிலையை {சைதன்யத்தைச்} சமமாகப் பார்ப்பான்.(33) பரம இருக்கையை {மேலான கதியை} நாடும் ஒருவன், (வேறு) பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் பாகுபாடற்றவனாக ஆகிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இது தொடர்பாக வாய்மைக்கு ஏற்புடைய வகையில் நான் உனக்கு ஞானத்தைப் போதிக்கப் போகிறேன்.(34) ஓ! கல்விமானான பிராமணா {காசியபா}, அந்த அழிவற்ற இருக்கையை {மேலான கதியை} நான் அறிவிக்கும்போது, சிறந்த ஞானமாக அமைவதை நீ முழுமையாகப் புரிந்து கொள்வாயாக” என்றார் {சித்தர்}.(35)

மோக்ஷஸாதனம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 19-முக்தியை அடையும் வழிமுறைகளைக் குறித்துக் காசியபருக்குச் சொன்ன சித்தர்; சித்தர் கூறியதை அர்ஜுனனிடம் முழுமையாகச் சொல்லி முடித்த கிருஷ்ணன்…

பிராமணர் {சித்தர் காசியபரிடம்}, “(அனைத்துப் பொருட்களின்) ஒரே கொள்ளிடத்தில் {பிரம்மத்தில்} ஈர்க்கப்பட்டவனும், அனைத்துப் பொருட்களுடனான தன் அடையாளத்தைக் குறித்த எண்ணத்தில் இருந்து விடுபட்டவனும், தன் இருப்பைக் குறித்து நினைப்பதையே நிறுத்தியவனுமான ஒருவன், {யோகத்தின் மூலம்} ஒன்றன்பின் ஒன்றாக இவற்றைப் படிப்படியாகக் கைவிட்டு தன் கட்டுகளைக் கடப்பதில் வெல்கிறான்[1].(1) அனைத்திற்கும் நண்பனும், அனைத்தையும் தாங்குபவனும் {பொறுத்துக் கொள்பவனும்}, அமைதியாக இருப்பவனும், தன் புலன்கள் அனைத்தையும் வென்றவனும், அச்சம் மற்றும் கோபமற்றவனும், ஆன்மக்கட்டுப்பாடு கொண்டவனுமான மனிதன் தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} வெல்கிறான்.(2) தன்னைப் போலவே வேறு உயிரினங்கள் அனைத்துடனும் நடந்து கொள்பவனும், கட்டுப்பாடு, தூய்மை, பகட்டின்மை, மமதையின்மை ஆகியவற்றைக் கொண்டவனுமான ஒருவன் அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்தவனாகக் கருதப்படுகிறான்.(3) பிறப்பிறப்பு {ஜனனமரணம்}, இன்பதுன்பம், ஈட்டலிழத்தல் {லாபநஷ்டம்}, ஏற்புடைமை ஏற்பில்லாமை ஆகியவற்றைச் சமமாகக் காணும் ஒருவனும் விடுதலை {முக்தி} அடைகிறான்.(4) பிறர் பொருளை அபகரிக்க விரும்பாதவனும், எவரையும் அவமதிக்காதவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், பற்றிலிருந்து விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனுமான ஒருவன் அனைத்து வழியில் விடுதலை {முக்தி} அடைந்தவனாவான்.(5)
பகைவனோ, உறவினனோ, பிள்ளையோ இல்லாதவனும், அறம், பொருள் மற்றும் இன்பத்தைக் கைவிட்டவனும், ஆசை அல்லது பேராசையில் இருந்து விடுபட்டவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைந்தவனாவான்.(6) தகுதியையோ {புண்ணியத்தையோ}, குறையையோ {பாவத்தையோ} ஈட்டாதவனும், முற்பிறவிகளில் குவிக்கப்பட்ட தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் குறைகளை {பாவங்களைக்} கைவிட்டவனும், அமைதியான ஆன்மாவை அடைய தன்னுடலின் பூதங்களை வீணாக்குபவனும், முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்தவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்.(7) செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவனும், ஆசை அல்லது பேராசையில் இருந்து விடுபட்டவனும், சகிப்புத் தன்மை கொண்டதாகவோ, பிறப்பு, இறப்பு மற்றும் முதுமையை எப்போதும் கொண்ட அஸ்வத {அரச} மரத்தைப் போலவோ அண்டத்தைப் பார்ப்பவனும்,(8) துறவில் நிலைத்த புத்தியைக் கொண்டவனும், தன் குற்றங்களிலேயே எப்போதும் கண்களைக் கொண்டவனுமான ஒருவன் தன்னைக் கட்டியிருக்கும் கட்டுகளில் இருந்து விரைவாகத் தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} வெற்றி அடைகிறான்[2].(9) மணம் {கந்தம்}, சுவை {ரஸம்}, ஊறு {ஸ்பர்சம் / தீண்டல்}, ஒலி {சப்தம்}, உடைமைகள் {பந்தம்}, பார்வை {ரூபம் / வடிவம்} அற்றதும், அறிய முடியாததுமாகத் தன் ஆன்மாவைக் காண்பவன் விடுதலை {முக்தி} அடைகிறான் {மோக்ஷமடைகிறான்}[3].(10)ஐம்பூதங்களின் குணங்களற்றதாகவும், வடிவமும், காரணமும் அற்றதாகவும், குணங்களை அனுபவித்தாலும் அவையற்றதாகவும் தன் ஆன்மாவைக் காணும் ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்[4].(11) உடல் மற்றும் மனம் தொடர்பான காரியங்கள் அனைத்தையும் புத்தியின் துணையுடன் கைவிடும் ஒருவன், விறகற்ற நெருப்பைப் போல {தனக்கெனத்} தனித்த இருப்பற்ற நிலையைப் படிப்படியாக அடைகிறான்.(12) அனைத்து மனப்பதிவுகளில் {எண்ணங்களில்} இருந்தும் விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்தவனும், உடைமைகளேதும் அற்றவனும், தவத்தின் வழிகாட்டுதலின்படி தன் புலன்கள் அனைத்தையும் பயன்படுத்துபவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்[5].(13) மனப்பதிவுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட ஒருவன், நித்தியமானதும், மேலானதும், அமைதி நிறைந்ததும், நிலையானதும், நீடித்ததும், அழிவற்றதுமான பிரம்மத்தை அடைகிறான்.(14) எதைக் காட்டிலும் மேன்மையானது வேறேதும் இல்லையோ அந்த யோக அறிவியலையும் {யோக சாஸ்திரத்தையும்}, தியானத்தின் மூலம் யோகிகள் எவ்வாறு ஆன்மாவை மிகச்சரியாகக் காண்கிறார்கள் என்பதையும் இனி உனக்குச் சொல்லப் போகிறேன்[6].(15)அது தொடர்பான வழிமுறைகளை நான் முறையாக அறிவிக்கிறேன். உடலுக்குள் உள்ள ஆன்மாவை எவற்றின் வழியாகச் செலுத்துவதன் மூலம் தொடக்கமும், முடிவுமற்ற ஒன்றை ஒருவனால் காண முடியுமோ அந்தக் கதவுகளைக் குறித்து என்னிடம் இருந்து தெரிந்து கொள்வாயாக.(16) புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் {புலன்நுகர் பொருட்களில்} இருந்து விலக்கும் ஒருவன், ஆத்மாவில் தன் மனத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்; அதற்கு முன்பே அவன் கடுமையான தவங்களைச் செய்து, விடுதலைக்கு வழிவகுக்கும் மனக்குவிப்பைப் பயில வேண்டும்[7].(17) எப்போதும் மனச்செறிவாக்கத்தைப் பயில்பவனும், தவங்களை நோற்பவனும், புத்தியுடன் கூடியவனும், கல்விமானுமான ஒரு பிராமணன், உடலுக்குள் ஆன்மாவைக் காணச் செய்யும் யோக அறிவியலின் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.(18) முழுமையான தியானத்தை வழக்கமாகக் கொண்ட அந்த நல்லோன் ஆன்மாவில் மனத்தைச் செறிவடையச் செய்வதில் வென்றால், தன் ஆன்மாவிலேயே பரமாத்மாவைக் காண்பான்.(19) தற்கட்டுப்பாட்டுடனும், எப்போதும் செறிவுடனும் {மனக்குவிப்புடனும்}, தன் புலன்கள் அனைத்தையும் வென்ற நிலையிலும், தூய்மையான ஆன்மாவுடனும் கூடிய ஒரு மனிதன், அத்தகைய முழுமையான மனச்செறிவின் விளைவால் ஆன்மாவைக் கொண்டே ஆன்மாவைக் காண்பதில் வெல்வான்.(20)எவனோ ஒருவனைக் கனவில் காணும் ஒருவன் விழித்துக் கொண்ட பிறகு, “இவன் அவனே” என அடையாளம் கண்டு கொள்வதைப் போலவே ஆழ்ந்த தியானத்தின் சமாதி நிலையில் பரமாத்மாவைக் காணும் நல்லோன், அந்தச் சமாதி நிலையில் இருந்து விழித்துக் கொண்ட பிறகு {மேற்கண்டவாறே} அடையாளம் காண்கிறான்[8].(21) முஞ்சப் புல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிறகு ஈர்க்கைக் காணும் ஒருவனைப் போலவே, உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஆன்மாவையே ஒரு யோகி காண்கிறான்.(22) உடலானது முஞ்சம் என்றழைக்கப் படுகிறது, ஈர்க்கானது ஆன்மாவாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சிறந்த எடுத்துக்காட்டானது யோகத்தை அறிந்த மனிதர்களால் முன்வைக்கப்படுகிறது.(23) உடலைச் சுமப்பவன் யோகத்தில் போதுமான அளவுக்கு ஆன்மாவைக் காணும்போது, அவன் தனக்கு மேல் எவனும் இல்லாதவனாகவும், மூவுலகங்களுக்கும் தலைவனாகவும் ஆகிறான்[9].(24) அவன் தன் விருப்பத்தின் பேரில் பல்வேறு உடல்களை ஏற்கவல்லவனாவதில் வெல்கிறான். முதுமை மற்றும் மரணத்தைத் தவிர்க்கும் அவன் வருந்துவதோ, பெருங்களிப்படைவதோ கிடையாது.(25)யோகத்தில் மனங்குவிந்த தற்கட்டுப்பாடுடைய மனிதன், தேவர்களுக்கான தெய்வத்தன்மையை (தனக்காக) உண்டாக்கிக் கொள்வான். அவன், நிலையற்றதாக இருக்கும் தன் உடலைக் கைவிட்டு மாறாவியல்புடைய பிரம்மத்தை அடைகிறான்[10].(26) உயிரினங்கள் (தன் கண்களுக்கு முன்பே) அழிவடையும்போதும் அவனுக்குள் அச்சம் எழுவதில்லை. உயிரினங்கள் அனைத்தும் பீடிக்கப்படும்போதும் எவனாலும் அவன் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை.(27) ஆசையற்றவனும், அமைதியான மனம் கொண்டவனுமான யோகியானவன், துன்பம், கவலை, அச்சம் ஆகியவற்றாலும், பற்றும் மற்றும் அன்பிலிருந்து உண்டாகும் பயங்கர விளைவுகளாலும் ஒருபோதும் நிலைகுலைவதில்லை.(28) அவனை ஆயுதங்கள் துளைப்பதில்லை; அவனுக்கு மரணமுமில்லை. அவனை விட மகிழ்ச்சியான வேறு எவனையும் இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாது.(29) போதுமான அளவுக்குத் தன் ஆன்மாவைச் செறிவடையச் செய்யும் அவன் நிலையாகத் தன்னைச் சார்ந்தே வாழ்கிறான். அவன், முதுமை, துன்பம் மற்றும் இன்பத்தை விலக்கி சுகமாக உறங்குகிறான்.(30) தனது மனித உடலைக் கைவிடும் அவன் தன் விருப்பத்தின் பேரில் (வேறு) வடிவங்களை ஏற்கிறான். ஒருவன் யோகம் அளிக்கும் கோன்மையை அனுபவிக்கும்போது, யோக அர்ப்பணிப்பில் இருந்து அவன் ஒருபோதும் வீழ்ந்துவிடக்கூடாது[11].(31) ஒருவன் யோகத்தில் போதுமான அர்ப்பணிப்பைச் செலுத்தித் தனக்குள்ளே ஆன்மாவைக் கண்டபிறகு, அவன் நூறு வேள்விகளைச் செய்தவனையும் {இந்திரனையும்} பொருட்படுத்தமாட்டான்[12].(32)முழுமையாகத் தியானிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவன் யோகத்தை அடைவதில் எவ்வாறு வெல்கிறான் என்பதை இனி சொல்லப் போகிறேன் கேட்பாயாக. சூரியனுக்குப் பின்னால் உள்ள திசைப்புள்ளியின் நினைப்பில் மனத்தை நிலைக்கச் செய்து, தான் வாழும் மாளிகைக்கு வெளியே அல்லாமல் உள்ளேயே ஒருவன் வாழ வேண்டும். அந்த மாளிகைக்குள் வசித்துக் கொண்டே மனமானது தன் அக மற்றும் புற (இயக்கங்கள்) வாயிலாகத் தான் வாசிக்கும் அந்தக் குறிப்பிட்ட அறையைப் பார்க்க வேண்டும். ஆழமான தியானத்தில் ஒருவன் (அண்டத்தின் ஆன்மாவான பிரம்மத்தை) அனைத்தையும் பார்க்கும்போது, அந்த மனம் வசிப்பதற்குப் பிரம்மத்தைத் தவிரப் புறப்பொருள் வேறேதும் இல்லை. ஆள் அரவமற்ற காட்டில் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு,(33-36) மனத்தை அவற்றிலேயே நிலைக்கச் செய்யும் ஒருவன், தனது உடலுக்குப் புறத்திலேயும், அகத்திலேயும் உள்ள அனைத்தையும் குறித்துத் தியானிக்க வேண்டும். அவன் தனது பற்கள், மேல்வாய், நாவு, தொண்டை, கழுத்து போன்றவற்றிலும், இதயம் மற்றும் இதயத்தின் நாடிகள் ஆகியவற்றிலும் {மனத்தைச் செலுத்தி} தியானம் செய்ய வேண்டும்”[13].(37)பிராமணர் {சித்தர்} தொடர்ந்தார், “இவ்வாறு நான் சொன்னதும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நுண்ணறிவுமிக்க அந்தச் சீடன் {காசியபன்}, விளக்குவதற்குக் கடினமான இந்த விடுதலை அறம் {மோக்ஷதர்மம்} குறித்து மீண்டும் என்னிடம் கேட்டான்.(38) அவன் {காசியபன்}, “காலாகாலம் உண்ணப்படும் இந்த உணவானது வயிற்றுக்குள் செரிப்பது எவ்வாறு? அது சாறாக மாறுவது எவ்வாறு? மேலமும் அது குருதியாக மாறுவது எவ்வாறு?(39) சதை, மஜ்ஜை, நரம்புகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை அது வளர்ப்பது எவ்வாறு? உடல் படைத்த உயிரினங்களில் இருக்கும் உறுப்புகள் வளர்வது எவ்வாறு?(40) வளரும் மனிதனிடம் பலம் வளர்வது எவ்வாறு? ஊட்டச்சத்தற்றத் தனிமங்கள் அனைத்தும், {மலம் உள்ளிட்ட} மாசுகள் அனைத்தும் தனித்தனியாக வெளியேறுவது எவ்வாறு?(41) மூச்சை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நேர்வது எவ்வாறு? ஆன்மாவானது, உடலுக்குள் குறிப்பிட்ட எந்த இருப்பிடத்தில் வசிக்கிறது?(42)

ஜீவன் முயற்சியுள்ளவனாக உடலைத் தாங்குவது எவ்வாறு? (ஒரு குறிப்பிட உடலை விட்டகன்ற பிறகு) அவன் {ஜீவன்} மீண்டும் வசிக்கும் உடல் எந்த நிறத்தை என்ன வகையைக் கொண்டதாக இருக்கும்?(43) ஓ! புனிதமானவரே, ஓ! பாவமற்றவரே, இவை யாவற்றையும் எனக்கு மிகச் சரியாகச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான் {சீடன் காசியபன்}. ஓ! மாதவா, இவ்வாறே கல்விமானான அந்தப் பிராமணனால் {காசியபனால்} நான் கேள்வி கேட்கப்பட்டேன்.(44) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவனே நான் (என் குருவிடம் இருந்து) கேட்டிருக்கும் வகையிலேயே அவனுக்கு மறுமொழி கூறினே1ன். ஒருவன் தன் அறையில் வைத்த ஏதோ ஒரு மதிப்புமிக்கப் பொருளில் தன் மனத்தை வைத்திருப்பதைப் போலவே,(45) புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தித் தன் உடலில் மனத்தை நிறுத்தி, வழிப்புணர்வின்மைகள் அனைத்தையும் தவிர்த்து ஆன்மாவை நாட வேண்டும்.(46) இவ்வழியில் எப்போதும் விடாமுயற்சியுடன் தன்னில் நிறைவடையும் ஒருவன், குறுகிய காலத்திற்குள் பிரம்மத்தை ஆடைந்து, அதன் மூலம் அவன் பிரதானத்தை அறிகிறான்[14].(47)அவன் கண்களுக்குப் புலப்படுவதில்லை; அதே போலப் புலன்கள் அனைத்திற்கும் புலப்படுவதில்லை. மனம் எனும் விளக்கால் மட்டுமே பேரான்மாவைக் காண முடியும்.(48) அவன் அனைத்துப் பக்கங்களிலும் கைகளையும், கால்களையும் கொண்டவனாகிறான்; அனைத்துப் புறங்களிலும் காதுகளைக் கொண்டவனாகிறான்; உலகில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் அவன் படர்ந்தூடுருவி வசிக்கிறான்[15].(49) ஜீவனானவன், (ஞானம் வாய்க்கும்போது, முஞ்சப் புல்லில் இருந்து ஈர்க்கைக் காண்பதைப் போல) உடலில் இருந்து ஆன்மாவைத் தனியாகக் காண்கிறான். உடலில் மனத்தைத் தாங்குவதன் மூலம் உடலுடன் கூடிய பிரம்மத்தைக் கைவிட்டு, குணங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்ட பிரம்மத்தை அவன் காண்கிறான்[16].(50) அவன் ஆன்மாவை அந்நேரம் உள்ளபடியே மனத்தில் கண்டு புன்னகைக்கிறான். அந்தப் பிரம்மத்தைச் சார்ந்து அவன் என்னில்[17] விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(51) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே {காசியபா}, இந்தப் புதிர்கள் {ரகசியங்கள்} அனைத்தும் இப்போது என்னால் அறிவிக்கப்பட்டன. நான் இவ்விடத்தைவிட்டு அகல உன் அனுமதியை வினவுகிறேன். நீயும் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(52) ஓ! கிருஷ்ணா, அந்தச் சந்தர்ப்பத்தில் என்னால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கடுந்தவங்களைக் கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்ட பிராமணனுமான என் சீடன் {காசியபன்} தான் விரும்பிய இடத்திற்குச் சென்றான்” என்றார் {சித்தர்}”.(53)வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} தொடர்ந்தான், “ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்ன அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தை} முறையாக என்னிடம் சொல்லிவிட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(54) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நீ முழுமையாக உன் மனத்தைச் செலுத்தி இந்த உரையாடலைக் கேட்டாயா? நீ உனது தேரில் இருந்த போது இதையே {இக்கருத்துகளையே} நீ கேட்டாய்.(55) ஓ! பிருதையின் மகனே, குழம்பிய புத்தியைக் கொண்ட, அல்லது கல்வியின் மூலம் எந்த ஞானத்தையும் அடையாத, அல்லது தன் உடலுக்குப் பொருந்தாத உணவை உண்ணும், அல்லது தூய்மையடையாத ஆன்மாவைக் கொண்ட ஒருவனால் இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பது என் கருத்தாகும்[18].(56)ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தேவர்களுக்கு மத்தியில் பெரும்புதிராக {ரகஸ்யமாக} இருப்பது (உனக்கு) அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பிருதையின் மகனே, இந்த உலகத்தில் உள்ள மனிதனால் எந்த இடத்திலோ, எந்த நேரத்திலோ இது கேட்கப்பட்டதில்லை.(57) ஓ! பாவமற்றவனே, உன்னைத் தவிர வேறு எவனும் இதைக் கேட்கத் தகுந்தவனல்ல. இந்நேரத்தில், குழம்பிய உள் ஆன்மாவைக் கொண்ட ஒருவனால் இஃதை எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது.(58) ஓ! குந்தியின் மகனே, தேவர்களின் உலகமானது, செயலறத்தைப் பின்பற்றுபவர்களால் {புண்ணியக் கர்மங்களைச் செய்தவர்களால்} நிறைந்திருக்கிறது. {மனிதன் தன்} இறக்கக் கூடிய உடல் வடிவத்தை (செயல்தவிர்க்கும் அறத்தைப் பயில்வதன் மூலம்) விடுவது தேவர்களுக்கு ஏற்புடையதல்ல[19].(59) ஓ! பிருதையின் மகனே, ஒருவன் தன் உடலைக் கைவிடுவதன் மூலம் இறவா நிலையை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் நித்திய பிரம்ம நிலையே அந்த உயர்ந்த இலக்காகும்.(60) பாவப் பிறவிகளான பெண்கள், வைசியர்கள், சூத்திரர்களும் கூட இவ்வறத்தைப் பின்பற்றுவதன் மூலம் அந்த உயர்ந்த இலக்கை அடைகிறார்கள்.(60) அவ்வாறிருக்கையில், ஓ! பிருதையின் மகனே, பெருங்கல்வி கற்றவர்களும், தங்கள் வகைக்கான கடமைகளில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?[20](62)இது {இவ்வறமானது} (சார்ந்திருக்கும்) காரணங்கள்; இஃதை அடைவதற்குரிய வழிமுறைகள்; அதனை முழுமையான அடைவது {சித்தியடைவது} மற்றும் விடுதலை {முக்தி} என்ற பயன் மற்றும் துன்பம் சார்ந்த உண்மைகளில் உறுதியடைதல் ஆகியற்றுடன் விதிக்கப்பட்டிருக்கிறது.(63) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதைவிடப் பெரிதான மகிழ்ச்சி நிறைந்தது வேறொன்றுமில்லை. ஓ! பாண்டுவின் மகனே, புத்தி, நம்பிக்கை, ஆற்றலுடன் கூடியவனும், இறக்கக்கூடியவனுமான மனிதன், உலகத்தால் உறுதியென {முக்கியமானதெனக்} கருதப்படுவதை உறுதியற்றதெனக் கைவிட்டு, இந்த வழிமுறைகளின் மூலம் குறுகிய காலத்திலேயே பரம நிலையை அடைவதில் வெல்கிறான்[21].(64,65) இதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை என்பது மட்டுமே சொல்லக்கூடியது. ஓ பிருதையின் மகனே, ஆறு மாத காலம் தொடர் பயிற்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒருவனிடம் யோகம் நிகழ்கிறது” {என்றான் கிருஷ்ணன்}.(66)

எழுவகைப்படைப்பு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 20-பூதங்கள், பிராணன் முதலியவற்றைக் குறித்து ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடலை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, இது தொடர்பாகப் பழங்கதையில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) ஒரு குறிப்பிட்ட பிராமணரின் மனைவியானவள், அனைத்து வகை ஞானவிஞ்ஞானங்களில் முழுத் தேர்ச்சியடைந்தவரும், தனியாக அமர்ந்திருந்தவரும், தன் கணவருமான அந்தப் பிராமணரைக் கண்டு, அவரிடம்,(2) “(அறச்) செயல்கள் அனைத்தையும் கைவிட்டு அமர்ந்திருப்பவரும், என்னிடம் கடுமையாக நடந்து கொள்பவரும், {உம்மைத் தவிர வேறு கதி இல்லாதவளான என்னை} எண்ணியுணராதவருமான உம்மைக் கணவராக அடைந்திருக்கும் நான் எந்த உலகத்திற்குச் செல்வேன்?[1](3) கணவனால் அடையப்படும் உலகங்களையே மனைவியும் அடைகிறாள் என நாம் கேள்விப்படுகிறோம். உண்மையில், உம்மைக் கணவராகப் பெற்ற நான் அடையாப்போகும் கதி யாது?” என்று கேட்டாள்.(4)இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டவரும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவருமான அந்தப் பிராமணர் புன்னகைத்தவாறே அவளிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, ஓ! பாவமற்றவளே, நீ சொல்லும் இந்த வார்த்தைகளால் நான் புண்படவில்லை.(5) பிறரின் உதவியுடன் செய்யப்படுபவதும், (செய்யப்படும் பெருந்திரள் தன்மையால்) காணப்படுபவதும் {கண்ணுக்குத் தெரிவதும்}, உண்மையானதுமான எந்தச் செயலும், செயல்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் செய்யப்படுகிறது[2].(6) ஞானம் இல்லாதவர்கள், தங்கள் செயல்களின் மூலம் திரிபுக்காட்சியையே {மாயையே} திரட்டுகின்றனர். ஒருக்கணமும் செயல்களில் இருந்து விடுதலை என்பது இவ்வுலகில் அடையப்பட முடியாததாகும்.(7) பிறப்பு முதல் வேறு வடிவம் அடைவது வரை, உடல், மனம் அல்லது வாக்கால் செய்யப்படும் நல்ல மற்றும் தீய வினைகளை அனைத்து உயிரினங்களும் செய்கின்றன.(8) (சோமச்சாறு மற்றும் ஆகுதிகளுக்கான நெய் போன்ற) புலப்படத்தக்கப் பொருட்களால் வகைப்படுத்தப்படும் அந்த (செயல்) பாதைகள் ராட்சசர்களால் அழிக்கப்பட்டதால், அவற்றில் இருந்து விலகி என் ஆன்மாவின் துணையுடன் உடலில் உள்ள இருக்கையைக் கண்டடைந்தேன்[3].(9) முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்த பிரம்மம் வசிப்பது அங்கேயே, அக்னியுடன் கூடிய சோமன் இருப்பதும் அங்கேயே; அனைத்து உயிரினங்களையும் தாங்குபவனும், புத்தியைத் தூண்டுபவனுமானவனும் (வாயுவும்) அங்கே இருந்து நகர்ந்து கொண்டிருக்கிறான்[4].(10)பெரும்பாட்டனான பிரம்மனும், பிறரும் அந்த இருக்கையை அடைவதற்காகவே {இடத்திற்காகவே} யோகத்தில் குவிந்து அழிவற்றவனை வழிபடுகிறார்கள். கல்விமான்களும், சிறந்த நோன்புகளையும், அமைதியான ஆன்மாக்களையும் கொண்டவர்களும், புலன்களை முற்றாக வென்றவர்களுமான மனிதர்களும் அந்த இருக்கைக்காகவே முயற்சி செய்கிறார்கள்.(11) மணப்புலனால் {மூக்கால்} அதை {பிரம்மத்தை} நுகர இயலாது; நாவால் சுவைக்கவும் முடியாது; தீண்டல் புலன்களால் தொடவும் முடியாது. மனத்தால் மட்டுமே அஃது அடையப்படுகிறது.(12) கண்ணால் அதை வெல்ல முடியாது. கேள்விப் புலனை {காதுகளை} அது கடந்திருக்கிறது. மணம், சுவை, ஊறு, {ஒலி} மற்றும் வடிவம் ஆகிய குணங்களற்றதாக அஃது இருக்கிறது.(13) அதனிலிருந்தே நன்கு விதிக்கப்பட்ட அண்டம் எழுகிறது, மேலும், அதனிலேயே {பிரம்மத்தையே} அது {அண்டம்} நிலைத்துமிருக்கிறது. பிராணன், அபானன், சமானன், வியானன், உதானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள்,(14) அதனிலிருந்தே {பிரம்மத்திலிருந்தே} பாய்கின்றன, மேலும் அதற்குள்ளேயே அவை மீண்டும் நுழைகின்றன. பிராமணன் மற்றும் அபானன் என்ற மூச்சுகள், சமானன் மற்றும் வியானனுக்கிடையிலேயே நகர்கின்றன.(15) ஆன்மா உறங்கும்போது, சமானன் மற்றும் வியானன் ஆகிய இரண்டும் உள்ளீர்க்கப்படுகின்றன. அபானனுக்கும், பிராணனுக்கும் இடையில் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில் உதானன் வசிக்கிறது.(16)

எனவே, பிராணனும், அபானனும், உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைக் கைவிடுவதில்லை. இவ்வாறு உயிர்க் காற்றுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூச்சானது உதானன் என்றழைக்கப்படுகிறது.(17) எனவே பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்} என்னையே தங்கள் இலக்காகக் கொண்டு தவங்களைச் செய்கிறார்கள்[4]. ஒன்றையொன்று வழிங்கி உடலுக்குள் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த உயிர் மூச்சுகள் அனைத்திற்கும் மத்தியில் ஏழு தழல்களால் ஆன வைஸ்வாநரன் என்றழைக்கப்படும் நெருப்பு {அக்னி} சுடர்விட்டெரிகிறது. மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காது,(18,19) மனம் மற்றும் புத்தி ஆகிய இந்த ஏழும் வைஸ்வாநரனுடைய தழலின் ஏழு நாவுகளாக விளங்குகின்றன. முகரத்தக்கது, காணத்தக்கது, பருகத்தக்கது {குடிக்கத்தக்கது}, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது,(20) நினைக்கத்தக்கது, புரிந்து கொள்ளத்தக்கது ஆகிய இவையே எனக்கான ஏழு வகை விறகுகளாகின்றன. முகர்வது, உண்பது, காண்பது, தொடுவது, ஐந்தாவதாகக் கேட்பது,(21) நினைப்பது, புரிந்து கொள்வது ஆகிய இவையே ஏழு பெரும்புரோகிதர்களாகும்.(22)ஓ! அருளப்பட்டவளே, முகரத்தக்கது, பருகத்தக்கது, காணத்தக்கது, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது, நினைக்கத்தக்கது, அறியத்தக்கது என்ற ஏழு நெருப்புகளில், ஏழு வழிகளில் ஏழு ஆகுதிகளை முறையாகக் கைவிடும் வேள்வி செய்பவர்களான கல்விமான்கள், அவற்றைத் தங்கள் கருவறைக்குள் உண்டாக்குகிறார்கள்[5]. பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி,(23,24) மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் (அனைத்துப் பொருட்களின்) கருவறைகள் என்றழைக்கப்படுகின்றன. வேள்விக் காணிக்கைகளாக அமையும் குணங்கள் அனைத்தும் நெருப்பில் பிறந்த குணத்திற்குள் நுழைகின்றன;(25) அந்த வசிப்பிடத்திற்குள் வசிக்கும் அவை தங்கள் தங்களுக்குரிய கருவறைகளில் மீண்டும் பிறக்கின்றன. அனைத்துப் பொருட்களையும் எது உண்டாக்குமோ அதில் அவை அழிவுக்காலம் வரை உள்ளீர்க்கப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கும்.(26) அதிலிருந்தே மணம் உண்டாகிறது, அதிலிருந்தே சுவை உண்டாகிறது, அதிலிருந்தே நிறம் உண்டாகிறது, அதிலிருந்தே தீண்டலுணர்வு உண்டாகிறது;(27) அதிலிருந்தே ஒலி உண்டாகிறது, அதிலிருந்தே ஐயம் எழுகிறது, அதிலிருந்தே அழிவும் உண்டாகிறது. இவ்விதமாகவே இவை ஏழுவகைப் படைப்புகளாக அறியப்படுகின்றன.(28) இவ்வகையிலேயே இவையனைத்தும் பழங்காலத்தவர்களால் புரிந்து கொள்ளப்பட்டன. ஆகுதிகளின் முழுமையான மூன்று காணிக்கைகள் முழுமையடைந்து ஒளியால் நிறைகிறது[6]” என்றார் {பிராமணர்}.(29)

மனம், வாக்கு, ஜீவன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 21-பத்துப் புலன்களின் குணங்களைக் குறித்தும், மனம், சொல் மற்றும் ஜீவனுக்கிடையில் நடந்த உரையாடலைக் குறித்தும் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. பத்து ஹோத்ரிகளின் (ஹோதாக்களின் / வேள்விப்புரோகிதர்களின்) அமைப்பு {விதி} எவ்வகையானது என்பதைப் புரிந்து கொள்வாயாக.(1) ஓ! அழகியே, காதுகள், தோல், இரு கண்கள், நாவு, மூக்கு, இரு கால்கள், இரு கைகள், பிறப்புறுப்பு {உபஸ்தம் / உபத்தம்}, அடியில் உள்ள குதம் {பாயு} மற்றும் வாக்கு ஆகியனவே வேள்வி செய்யும் அந்தப் பத்துப் புரோகிதர்களாகும் {ஹோத்ரிகளாகும்}.(2) ஒலி {சப்தம்}, ஊறு {தீண்டல் / ஸ்பர்சம்}, நிறம் {ரூபம்}, சுவை {ரஸம்}, மணம் {கந்தம்}, வாக்கு, செயல், நடை, உயிர்வித்து {ரேதஸ்}, சிறுநீர், மலம் ஆகியவற்றை வெளியேற்றல் ஆகியவையே பத்து ஆகுதிகளாகும் {ஹவிஸுகளாகும்}.(3)

ஓ! அழகியே, திசைப் புள்ளிகள், காற்று {வாயு}, சூரியன், சந்திரன், பூமி {பிருதிவி}, நெருப்பு {அக்னி}, விஷ்ணு, இந்திரன், பிரஜாபதி மற்றும் மித்திரன் ஆகியவை பத்து (வேள்வி) நெருப்புகள் {அக்னிகள்} ஆகும்.(4) (அறிவு மற்றும் செயல்) புலன்கள் பத்தும் வேள்விப்புரோகிதர்கள் {ஹோத்ரிகள்}. ஆகுதிகள் பத்தாகும். ஓ! அழகியே மனமானது வேள்விக்கரண்டியாகவும், (வேள்வி செய்பவனால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்கள்) செல்வமாகவும் புலன்நுகர் பொருட்களே இந்தப் பத்து நெருப்புகளுக்குள் இடப்படும் விறகுகளாகவும் இருக்கின்றன[1],(5). எஞ்சியிருப்பது தூய்மையான உயர்ந்த ஞானமாகும். (ஞானத்திலிருந்து) இந்த அண்டமனைத்தும் வேறுபட்டவை என்று நாம் கேள்விப்படுகிறோம்.(6)ஞானத்திற்குரிய பொருட்கள் அனைத்தும் மனமாகும். ஞானமானது (மனம் அதனுடன் பற்றில்லாதது என்பதை) உணர மட்டுமே செய்கிறது. நுட்பமான வடிவில் பொதியப்பட்டிருப்பவனான அறிபவன் (அல்லது ஜீவன்), உயிர்வித்தால் உண்டாக்கப்படுகிறது திரளுடலுக்குள் வசிக்கிறான்[2].(7) உடலைச் சுமப்பது {இதயம்} கார்ஹபத்ய நெருப்பு ஆகும். அதனிலிருந்து மற்றொன்று உண்டாகிறது. மனமானது ஆஹவனீய நெருப்பாகும். அதனுள்ளேயே காணிக்கை ஊற்றப்படுகிறது.(8) அதனிலிருந்தே வேதம் (அல்லது சொல்) உண்டானது; (அதனிலிருந்தே மனம் உண்டானது); (படைப்பை விரும்பும்) மனமானது தன்னை வேதத்தில் (அல்லது சொல்லில்) நிறுவி கொள்கிறது. அதன் பிறகு குறிப்பிட்ட நிறங்களில் வேறுபடும் வடிவம் (அல்லது நிறம்) எழுகிறது. அது மனத்தை நோக்கி ஓடுகிறது[3]” என்றார் {பிராமணர்}.(9)அந்தப் பிராமணரின் மனைவி, “ஏன் சொல்லானது முதலில் எழுந்தது? மனத்தால் எண்ணப்பட்ட பின்னர் இருப்புக்குள் சொல் எழுந்ததைக் கண்ட பிறகு மனம் எழுந்ததேன்?(10) மதியானது (பிராணனானது) மனத்தில் புகலிடம் கொள்கிறது என்று எந்த அதிகாரத்தை {சாஸ்திர விதியைக்} கொண்டு சொல்லப்படுகிறது? மேலும், கனவற்ற உறக்கத்தில் {ஸுஷுப்தியில்} மனம் தனித்திருந்தாலும், பிராணனானது (அனைத்துப் பொருட்களையும்} உணர்வதில்லையே ஏன்? அப்போது அதைத் தடுப்பதெது?” என்று கேட்டாள்[4].(11)பிராமணர், “இத்தகைய தலைமைப் பண்பின் விளைவால் (பிராணனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து) தலைவனாக இருக்கும் அபானக் காற்று {அபானவாயு}, அதனையும் {பிராணனையும்} தன்னைப் போலாக்குகிறது. (அபானனைப் போலவே ஆகும்) பிராணக் காற்றின் {பிராணவாயுவின்} கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமே மன இயக்கமெனச் சொல்லப்படுகிறது. எனவே மனமானது பிராணனைச் சார்ந்தே இருக்கிறது (பிராணனோ மனத்தைச் சார்ந்திருப்பதில்லை). எனவே, கனவற்ற உறக்கத்தில் மனம் மறைந்தாலும் பிராணன் மறைவதில்லை.(12) ஆனால், சொல் மற்றும் மனம் குறித்து நீ என்னிடம் கேட்பதால், அவற்றுக்கிடையில் நடந்த உரையாடலை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(13)

பருப்பொருளின் ஆத்மாவிடம் {ஜீவனிடம்} சென்ற சொல் {வாக்கு} மற்றும் மனம் ஆகிய இரண்டும், அவனிடம் {ஜீவனிடம்}, “எங்களில் மேன்மையானவர் யார் என்பதைச் சொல்வாயாக. ஓ! பலமிக்கவனே, எங்கள் ஐயத்தைக் களைவாயாக” என்றன[5].(14)அச்சந்தர்ப்பத்தில், அந்தப் புனிதமானவன் {ஜீவன்}, “மனமே (மேன்மையானது) என்பதில் ஐயமில்லை” என்றான். அவனிடம் {ஜீவனிடம்} சொல்லானவள், “உன் விருப்பமனைத்தையும் நானே கனியச் செய்கிறேன்” என்றாள்[6].(15)பிராமணர் {ஜீவனெனும் பிராமணன் சொல்லிடம் சொல்வது என்று கொள்ள வேண்டும்}, “அசைவது, அசையாதது என எனக்கு இரு மனங்கள் இருப்பதை அறிவாயாக. உண்மையில், அசையாதது என்னிடமுள்ளது; அசைவது உன் ஆளுகையில் இருக்கிறது[7].(16) உன் ஆளுகையில் இருப்பதாகக் குறிப்பிடப்படும் மந்திரம், எழுத்து, அல்லது குரல் வடிவில் உள்ளதே {சொல்லே} உண்மையில் அசையும் மனம் என்று சொல்லப்படுகிறது. எனவே, (புறப்பொருளுடன் மட்டுமே தொடர்புடைய மற்றொரு மனமான) நீயே {அசையும் மனமே} மேன்மையானவன்.(17) ஆனால், ஓ! அழகியே {சொல் எனும் அழகியே}, (அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்வதில்) நீ தானாகவே ஈடுபடுவதால், மூச்சை என்னுள் நிறைத்துக் கொண்டு நான் உன்னைச் சொல்கிறேன்[8].(18) சொல்லெனும் தேவி {சரஸ்வதியான நீ} எப்போதும் பிராணன் மற்றும் அபானனுக்கிடையிலே வசித்து வருகிறாள் {வருகிறாய்}. ஆனால், ஓ! அருளப்பட்டவளே, அபானனில் மூழ்கி, பிராணனிலிருந்து தொடர்பறுத்துக் கொள்வதன் விளைவால் மேல்நோக்கி உந்தப்படும் அவள் {நீ}, பிரஜாபதியிடம் {ஜீவனிடம்} ஓடிச் சென்று, “ஓ! புனிதமானவனே, என்னிடம் நிறைவு கொள்வாயாக” என்கிறாள் {என்றாய்}.(19) அப்போது பிராணன், சொல்லை வளர்த்தெடுத்து மீண்டும் தோன்றுகிறது. எனவே, சொல்லானவள், ஒருபோதும் எதையும் சொல்லாதவளாக ஆழ்ந்த மூச்சை வெளியிடுகிறாள்.(20) சொல்லானவள் எப்போதும் ஒலியுடனும், ஒலியில்லாமலும் பாய்கிறாள். அவை இரண்டில், ஒலியுடன் கூடிய சொல்லைக் காட்டிலும், ஒலியற்ற சொல்லே மேன்மையானவள்.(21) சிறந்த பாலைக் கொண்டுள்ள பசுவைப் போலவே (ஒலியற்ற சொல்லானவள்) பல்வேறு வகைப் பொருள்களைத் தருகிறாள். இவளே, பிரம்மத்தைச் சொல்லும் நித்தியத்தை (விடுதலையை {முக்தியை}) விளைவிக்கிறாள்” {என்றான் ஜீவன்}”.(22) ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, சொல்லானவள், தெய்வீகமானது, தெய்வீகமற்றது என்ற தன்னிரு சக்திகளின் விளைவால் பசுவாகிறாள். சொல்லானவள் இவ்விரு நுட்பமான வடிவங்களில் பாய்வதில் உள்ள வேறுபாட்டைக் காண்பாயாக” என்றார் {பிராமணர்}[9][10].(23)அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “பேச விரும்பினாலும், பழங்காலத்தில் {வாக்கியங்கள் உண்டாகாமல் இருந்ததால்} பேச முடியாதவளாக இருந்த சொல்லின் தேவி என்ன செய்தாள்?” என்று கேட்டாள்.(24)

பிராமணர், “பிராணனால் உடலில் உண்டான சொல்லானவள், பிறகு பிராணனில் இருந்து அபானனை அடைந்தாள். பிறகு உதானனாக மாறி, உடலைவிட்டு வெளியேறி, வியானனைக் கொண்டு அனைத்துப் புறங்களையும் சூழ்ந்தாள்.(25) அதன் பிறகு அவள் சமானனில் வசித்தாள். இவ்வகையிலேயே முற்காலத்தில் சொல்லானவள் பேசினாள். மனமானவன் அசைவில்லாதவனாக இருப்பதன் விளைவால் சிறப்படைகிறான். அசைவுள்ளவளாக இருப்பதன் விளைவால் சொல்லின் தேவியும் சிறப்படைகிறாள்” என்றார் {பிராமணர்}.(26)

மனமும், இந்திரியங்களும்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 22-மனத்துக்கும், புலன்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “ஓ! அருளப்பட்டவளே, வேள்விப்புரோஹிதர்கள் எழுவரின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக ஒரு பழங்கதைச் சொல்லப்படுகிறது.(1) மூக்கு {க்ராணம்}, கண்கள் {சக்ஷுஸ்}, நாவு {ஜிஹ்வை}, தோல் {துவக்கு}, ஐந்தாவதாகக் காதுகள் {ஸ்ரோத்ரம்}, மனம் மற்றும் புத்தி ஆகியவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட தனித்துவம் கொண்ட ஏழு வேள்விப்புரோஹிதர்களாகும்.(2) நுட்பமான வெளியில் வசிக்கும் அவை ஒன்றையொன்று காண்பதில்லை. ஓ! அழகியே, இந்த ஏழு வேள்விப் புரோஹிதர்களையும் அதனதன் இயல்பின்படி அறிந்து கொள்வாயாக” என்றார்.(3)

அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “நுட்பமான வெளியில் இருக்கும் இவை ஒன்றையொன்று காணாமல் இருப்பதெவ்வாறு? ஓ! புனிதமானவரே, அவற்றின் (அவை ஒவ்வொன்றின்) இயல்புகள் என்னென்ன? ஓ! தலைவா, இவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டாள்.(4)

பிராமணர், “(எந்தப் பொருளின்) குணங்களையும் அறியாதிருப்பது, (அந்தப் பொருளைக் குறித்த) அறியாமையே {அவிஜ்ஞானம்} ஆகும்; அதே வேளையில், அந்தக் குணங்களை அறிவது அறிவாகும் (அறிவு {அபிஜ்ஞதை} என்று அழைக்கப்படுகிறது). இந்த ஏழில் எந்த ஒன்றும் மற்றொன்றின் குணங்களை அறிவதிலோ, புரிந்து கொள்வதிலோ ஒருபோதும் வெல்வதில்லை.(5)

நாக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் புத்தி ஆகியன மணங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மூக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(6) மூக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன சுவைகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. நாக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(7) மூக்கு, நாக்கு, காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன நிறங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. கண்கள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(8) மூக்கு, நாக்கு, கண்கள், காதுகள், புத்தி மற்றும் மனம் ஆகியன தீண்டல் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. தோல் மட்டுமே அவற்றை உணர்கிறது.(9) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன ஒலிகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. காதுகள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(10) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் புத்தி ஆகியன ஐயங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மனம் மட்டுமே அவற்றை உணர்கிறது.(11) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் மனம் ஆகியன (உறுதியான அறிவைத்) தீர்மானிக்கும் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை {அவை ஒரு தீர்மானத்தை அடைவதில்லை}. புத்தி மட்டுமேஅவற்றை உணர்கிறது {புத்தியே தீர்மானிக்கிறது}.(12)

ஓ! அழகிய மங்கையே, இது தொடர்பாகப் புலன்களுக்கும், மனத்திற்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(13)

மனம், “நானில்லாமல் மூக்கு நுகர்வதில்லை. (நானில்லாமல்) நாக்கானது சுவையை உணர்வதில்லை. நான் இல்லாதபோது, கண்கள் நிறத்தைப் பற்றுவதில்லை, தோல் தீண்டலை உணர்வதில்லை,(14) காதுகள் ஒலியை உணர்வதில்லை. நான் நித்தியமானவனாகவும், பூதங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகவும் இருக்கிறேன்.(15) வசிப்பதற்கு யாருமில்லாத வெற்று வசிப்பிடங்களைப் போலவும், தழல்கள் தணிக்கப்பட்ட நெருப்பைப் போலவும், நானில்லாத போது புலன்கள் ஒருபோதும் ஒளிர்வதில்லை.(16) ஈரமானவையும், உலர்ந்தவையுமாக உள்ள விறகுகளை (நெருப்பை மூட்டத் தவறுவதைப்) போல, நான் இல்லாமல் புலன்கள் முயன்றாலும், குணங்களையும், பொருள்களையும் உணர்வதில் அனைத்து உயிரினங்களும் தவறுகின்றன[1]” என்றது {மனம்}.(17)இச்சொற்களைக் கேட்ட புலன்கள் {இந்திரியங்கள்}, “உண்மையில், நாங்களோ, எங்கள் பொருட்களோ இல்லாமல் உன்னால் இன்பங்களை அனுபவிக்க முடியுமென்றால் இக்காரியத்தில் நீ நினைப்பதே உண்மையாக இருக்கும்[2].(18) நாங்கள் அழிந்த பிறகு, நிறைவும், உயிர்த்தரிப்பும், உன் இன்பங்களும் தொடருமானால் நீ நினைப்பதே உண்மையாகும்;(19) நாங்கள் அழிந்து, பொருள்கள் இருந்து எங்கள் துணையின்றி உன் விருப்பத்தால் மட்டுமே உன்னால் அவற்றை அனுபவிக்க முடியுமென்றால், நீ நினைப்பதே உண்மையாகும்.(20) மேலும், எங்கள் பொருள்களின் மீது உனக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறதென நீ கருதினால், நிறத்தை மூக்கின் மூலமாகவும், சுவையைக் கண்களின் மூலமாகவும் உணர்வாயாக.(21) மணத்தைக் காதுகளின் மூலமாகவும், தீண்டலை நாவின் மூலமாகவும் உணர்வாயாக. மேலும் ஒலிகளைத் தோலின் மூலமாகவும், தீண்டலைப் புத்தியின் மூலமாகவும் உண்ர்வாயாக.(22) பலம் நிறைந்தவர்கள் எந்த விதிகளின் ஆளுகையையும் ஏற்பதில்லை. விதிகள் பலவீனமானவர்களுக்காக மட்டுமே இருக்கின்றன. இதற்கு முன் அனுபவிக்கப்படாத இன்பங்களைப் பற்றுவாயாக; (பிறரால்) முன்பே சுவைக்கப்பட்டவற்றில் இன்புறுவது உனக்குத் தகாது.(23)சுருதிகளுக்காக (அவற்றை அடைவதற்காக) ஆசானை நாடி, ஸ்ருதிகளை அடைந்த பிறகு (அவற்றின் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம்) அவை சொல்லும் கருத்துகளில் வசிக்கும் சீடனைப் போலவே,(24) கடந்த காலத்திலோ, எதிர்காலத்திலோ, உறக்கத்திலோ, விழிப்புநிலையிலோ எங்களால் காட்டப்படும் பொருட்களை உன்னுடையவையென நீ கருதுகிறாய்.(25) மேலும், புத்தி குறைந்த உயிரினங்களின் மனம் திசைத்திரும்பி உற்சாகமற்றதாக இருக்கும்போதும் நாங்கள் எங்கள் பொருள்களில் இயக்கத்தை வெளிப்படுத்தி அவற்றின் {அந்த உயிரினங்களின்} உயிரைத் தாங்கிப் பிடிப்பதும் காணப்படுகிறது[3].(26) ஓர் உயிரினம், கனவுகளில் ஈடுபட்டு, எண்ணற்ற நோக்கங்களை அமைத்துக் கொண்டாலும், அஃது அனுபவிக்கும் விருப்பத்தால் பீடிக்கப்படும்போது, புலன்நுகர் பொருட்களிடம் மட்டுமே ஓடுவதும் காணப்படுகிறது[4].(27) மன நோக்கங்களை மட்டுமே சார்ந்தவையும், உண்மையான புலன் நுகர் பொருட்களின் தொடர்பற்றவையுமான இன்பங்களுக்குள் ஒருவன் நுழையும்போது, விறகு தீர்ந்ததும் தூண்டப்பட்ட நெருப்பைப் போல உயிர்மூச்சுகள் தீர்ந்து அவன் மரணத்தையே சந்திக்கிறான்[5].(28) நாங்கள் எங்களுக்குரிய குணங்களின் தொடர்புடையவர்களாக இருக்கிறோம் என்பது உண்மையே; எங்களில் ஒன்று மற்றொன்றின் குணங்களை அறியாதிருக்கிறோம் என்பதும் உண்மையே. ஆனால், நாங்கள் இல்லாமல் உன்னால் ஒன்றையும் உணர முடியாது. நாங்கள் இல்லாமல் உனக்கு இன்பமேதும் கிடையாது” என்றன {புலன்கள்}.(29)

பஞ்சவாயுக்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 23-பிராணன், அபானன் முதலிய ஐந்து உயிர்க்காற்றுகளின் சிறப்பைக் குறித்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “ஓ! அருளப்பட்ட மங்கையே, ஐந்து வேள்விப் புரோஹிதர்களின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) பிராணன், அபானன், உதானன், சமானன் மற்றும் வியானன் ஆகியவையே ஐந்து வேள்விப்புரோஹிதர்கள் என்பதைப் பெருங்கோட்பாடாகக் கல்விமான்கள் அறிகிறார்கள்” என்றார்.(20)

அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “இயற்கையாக ஏழு வேள்விப் புரோஹிதர்கள் இருப்பதாக முன்னர் நான் எண்ணியிருந்தேன். உண்மையில் வேள்விப் புரோஹிதர்களின் எண்ணிக்கை ஐந்தானதைக் குறிக்கும் பெருங்கோட்பாட்டை எனக்கு அறிவிப்பீராக” என்று கேட்டாள்.(3)

பிராமணர், “பிராணனால் பேணப்படும் காற்றானது {வாயுவானது} பின்னர் அபானனாகப் பிறக்கிறது. அபானனால் பேணப்படும் காற்றானது வியானனாகப் பெருகுகிறது.(4) வியானனால் பேணப்படும் காற்றானது உதானனாகப் பெருகுகிறது. உதானனால் பேணப்படும் காற்றானது பின்னர்ச் சமானனாக உண்டாகிறது.(5) நல்லவையான அவை பழங்காலத்தில் முதல் பிறவியான பெரும்பாட்டனிடம், “எங்களில் முதன்மையானவர் யார் என்பதைச் சொல்வீராக. {நீர் குறிப்பிடும்} அந்த நபரே எங்கள் தலைவன் ஆகட்டும்” என்றன.(6)

பிரம்மன், “(உங்களில்) எவன் அழிந்தால் உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடையுமோ, எவனுடைய நகர்வால் அவை நகருமோ அவனே உங்களில் முதன்மையானவன் ஆவான். நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்வீராக” என்றான்.(7)

பிராணன், “நான் அழிந்ததும், உயிரினங்களில் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் அசைவதால் அவை மீண்டும் அசைகின்றன. (எனவே) நானே முதன்மையானவன். இதோ அழியப்போகிறேன் பார்ப்பீர்களாக” என்றான் {பிராணன்}”.(8)

பிராமணர் தொடர்ந்தார், “பிறகு பிராணன் அழிந்து மீண்டும் நகரத் தொடங்கியது. அப்போது, ஓ! அருளப்பட்டவளே, சமானனும், உதானனும் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்,(9) “நாங்கள் இவை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதைப் போல நீ இங்கே வசிப்பதில்லை. ஓ! பிராணனே, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. அபானன் மட்டுமே உன் ஆளுகைக்குள் இருக்கிறான். மீண்டும் பிராணன் இயங்கத் தொடங்கியதும், அவனிடம் அபானன் பேசினான்.(10)

அபானன், “நான் அழிவடையும் போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் திரியும்போது அவை மீண்டும் திரிகின்றன. எனவே, நானே முதன்மையானவனாவேன். இதோ அழியப் போகிறேன் பார்ப்பீர்களாக ” என்றான் {அபானன்}”.(11)

பிராமணர் தொடர்ந்தார், “வியானன் மற்றும் உதானன் ஆகிய இருவரும், இவ்வாறு சொன்ன அபானனிடம், “ஓ! அபானா, நீ முதன்மையானவனல்ல. பிராணன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்” என்றனர். பிறகு அபானன் நகரத் தொடங்கியது.(12)

வியானன் மீண்டும் அவனிடம் {அபானனிடம்}, “(உயிர்க் காற்றுகள்) அனைத்திலும் நானே முதன்மையானவன். அதற்கென்ன காரணம் என்பதைக் கேட்பாயாக.(13) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. (எனவே) நானே முதன்மையானவனாவேன். இதோ நான் அழியப் போகிறேன், பார்ப்பாயாக” என்றான் {வியானன்}”.(14)

பிராமணர் தொடர்ந்தார், “பிறகு வியானன் அழிவடைந்து மீண்டும் நகரத் தொடங்கினான். பிராணன், அபானன், உதானன் மற்றும் சமானன் ஆகியோர் இதற்கு,(15) “ஓ! வியானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. சமானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருக்கிறான்” என்றனர்.

வியானன் நகரத் தொடங்கியதும், சமானன் அவனிடம் {வியானனிடம்},(16) “நானே உங்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவேன். அதற்கு என்ன காரணம் என்பதைக் கேட்பாயாக. நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக” என்றான் {சமானன்}.(17)

சமானன் நகரத் தொடங்கியதும்,[1] உதானன் அவனிடம் {சமானனிடம்}, “உயிர்க்காற்றுகள் அனைத்திலும் நானே முதன்மையானவன் ஆவேன். அதற்குக் காரணம் என்னவென்பதைக் கேட்பாயாக.(18) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக” என்றான் {உதானன்}.(19)உதானன் அழிந்து, மீண்டும் நகரத் தொடங்கினான். அப்போது பிராணன், அபானன், சமானன் மற்றும் வியானன் ஆகியோர் அவனிடம், “ஓ! உதானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. வியானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்” என்றனர்”.(20)

பிராமணர் தொடர்ந்தார், “அவ்வாறு திரண்டிருந்த அவர்களிடம் உயிரினங்களின் தலைவனான பிரம்மன், “நீங்கள் அனைவரும் சிறப்புள்ளவர்களாகவும், சிறப்பில்லாதவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவரிலும் ஒருவர் மற்றொருவரின் குணத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.(21) நீங்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குரிய வட்டங்களில் முதன்மையானவர்களாகவும், ஒருவர் மற்றொருவரின் குணங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள்” என்றான்.

இவ்வாறே அனைத்து உயிரினங்களின் தலைவன் அங்கே கூடியிருந்த அவர்களிடம் சொன்னான்,(22) “ஒருவன் நிலையாக இருப்பவன்; மற்றொருவன் நகர்பவன். சிறப்புக் குணங்களின் விளைவால் உயிர்க்காற்றுகள் ஐவரும் நகர்கின்றனர். என் தன்மை ஒன்று. அந்த ஒன்றே பல்வேறு வடிவங்களை ஏற்கிறது {ஒருவன் மற்றொருவனுக்கு ஆத்மாவாக இருந்து பல வகைகளில் பெருகுகிறான்}.(23) நீங்கள் ஒருவருக்கொருவர் நட்பாகவும், ஒருவரையொருவர் நிறைவடையச் செய்பவர்களாகவும் ஆகி அமைதியாக விடைபெற்றுக் கொள்வீராக. நீங்கள் அருளப்பட்டிருப்பீராக, நீங்கள் ஒருவரையொருவர் தாங்குவீராக” {என்றான் பிரம்மன்}”.(24)

உதானனென்னும் பிரம்மம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 24-தேவமதரும், நாரதரும் படைப்பு முதலியவற்றைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்ததைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…

பிராமணர் {தன் மனைவியிடம்}, “இது தொடர்பாக நாரதருக்கும், முனிவர் தேவமதருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1)

தேவமதர், “ஓர் உயிரினம் பிறக்கும்போது முதலில் இருப்புக்குள் வருவதெது? பிராணனா? அபானனா? சமானனா? வியானனா? அல்லது உதானனா?” என்று கேட்டார்.(2)

நாரதர், “அந்த உயிரினம் எதைக் கொண்டு படைக்கப்படுகிறதோ அதைவிட வேறொன்று அந்த உயிரனத்தை முதலில் அடைகிறது. உயிர்க்காற்றுகள் குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் செல்லும் இரட்டைகளாக {துவந்தவங்களாக} இருப்பனவென அறியப்படுகின்றன” என்றார் {நாரதர்}[1].(3)

தேவமதர், “(உயிர் காற்றுகளில்) எவரால் ஓர் உயிரினம் உண்டாக்கப்படுகிறது? அவர்களில் முதலில் வருவது எவர்? குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும், கீழ்யோக்கியும் நகரும் இரட்டை உயர்க்காற்றுகள் எவை என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(4)

நாரதர், “சங்கல்பத்தில் (விருப்பத்தில்) இருந்து இன்பம் {ஆனந்தம்} எழுகிறது. அஃது ஒலியில் இருந்தும் எழுகிறது. அது சுவையில் இருந்தும் எழுகிறது; அது நிறத்தில் இருந்தும் எழுகிறது.(5) உயிர்நீரில் {சுக்கிலத்தில்} இருந்து குருதியில் {சோணிதத்தில்} கலந்து முதலில் பாய்வது பிராணனாகும். பிராணனால் உயிர் நீர் மாறுதலையடைந்ததும், அபானன் பாய்கிறது.(6) உயிர்நீரில் இருந்தும் இன்பம் எழுகிறது. சுவையில் இருந்தும் அஃது எழுகிறது. இதுவே உதானனின் வடிவமாகும் (விளைவாகும்). கலவியில் இருந்து இன்பம் உண்டாகிறது.(7) ஆசையில் இருந்து உயிர் நீர் {சுக்கிலம்} உண்டாகிறது. ஆசையில் இருந்து மாதவிடாய் சுழற்சியும் {ரஜஸும்} உண்டாகிறது. சமானன் மற்றும் வியானனால் உண்டாக்கப்பட்ட உயிர்நீர் மற்றும் குருதியின கலவிக்குள்,(8) பிராணன் மற்றும் அபானனைக் கொண்ட இரட்டை குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும் நகர்ந்து நுழைகிறது. வியானன், சமானன் ஆகிய இரண்டும் குறுக்குவெட்டாக நகரும் ஓர் இரட்டையாக அமைகின்றன.(9)

தேவர்கள் அனைவரும் அக்னியாக (நெருப்பாக) இருக்கின்றனர். இதுவே வேதத்தின் போதனையாகும். நுண்ணறிவுடன் கூடிய ஒரு பிராமணனிடம் அக்னியைக் குறித்த அறிவு எழுகிறது.(10) அந்த நெருப்பின் புகை இருளின் (இருள் {தமஸ்} என்றழைக்கப்படும் குணத்தின்) வடிவில் இருக்கிறது. ஆசை என்ற பெயரில் அறியப்படும் குணம் {ரஜஸ்} அதன் சாம்பலில் இருக்கிறது. நல்லியல்பின் குணம் {சத்வ குணம்} ஆகுதிகள் ஊற்றப்படும் நெருப்பின் பகுதியில் இருந்து எழுகிறது[2].(11) வேள்விகளைக் குறித்து அறிந்தவர்கள் சமானனும், வியானனும் நல்லியல்பின் குணத்தில் இருந்து வந்தன என்பதை அறிவார்கள். பிராணனும், அபானனும் (தெளிந்த நெய்யாலான) ஆகுதிகளின் பகுதிகளாகும். அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது.(12) பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த வடிவம் (அல்லது இருக்கை) ஆகும். இரட்டைகளில் தனித்துவமானதெது என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(13) பகலும், இரவும் இரட்டையாக அமைகின்றன. அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது. பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்[3].(14)இருப்பு, இல்லாமை என்பன இரட்டையாக அமைகின்றன. அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது. பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்.(15) முதலில் இருப்பது சமானன். பின்னிருப்பது வியானன். பின்னதின் {வியானனின்} இயக்கம் அதன் {சமானனின்} மூலமே நடைபெறுகிறது. இரண்டாவதாக, மீண்டும் சமானன் இயங்கத் தொடங்குகிறது.(16) வியானன் மட்டுமே அமைதியாக இருக்கிறது. அமைதியே நித்திய பிரம்மமாகும். பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்[4].(17)

நாராயணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 25-செயல்பாடு மற்றும் செய்பவன் ஆகியவை குறித்தும், நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பது குறித்தும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “இது தொடர்பாகச் சாதுர்ஹோத்ரத்தின் ({சாதுர்ஹோத்ர} வேள்வியின்) அமைப்பு {விதி} என்ன என்பது குறித்த இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) அது குறித்த விதிகளை இப்போது முழுமையாகச் சொல்லப் போகிறேன். ஓ! இனிய பெண்ணே, இந்த அற்புதம் நிறைந்த புதிரை {ரகசியத்தை} அறிவிக்கப் போகிறேன் கேட்பாயாக.(2) கருவி {கரணம்}, இயக்கம் {கர்மா}, இயக்கி {செயல்படுத்துபவன் / கர்த்தா}, விடுதலை {முக்தி / மோக்ஷம்} ஆகிய இவையே அண்டத்தைச் சூழ்ந்திருக்கும் நான்கு வேள்விப் புரோகிதர்களாகும். (இது தொடர்பாக) {அதனதனுக்கு} ஒப்படைக்கப்பட்டிருக்கும் காரணங்களை முழுமையாகக் கேட்பாயாக. (3,4)

மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காதுகள், மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் குணங்களின் (குணங்கள் குறித்த அறிவின்) காரணங்கள் {கரணத்தைக் காரணங்களாகக் கொண்டவை} என அறிய வேண்டும். மணம், சுவை, நிறம், ஒலி, எண்ணிக்கையில் ஐந்தாவதாகத் தீண்டல்,(5) {நினைக்கத்தக்க} மனத்தின் நோக்கங்கள், {அறியத்தக்க} புத்தியின் நோக்கங்கள் ஆகிய இவை ஏழும் செயற்காரணங்கள் {கர்மாவைக் காரணங்களாகக் கொண்டவை} ஆகும். நுகர்பவன், உண்பவன், காண்பவன், பேசுபவன், எண்ணிக்கையில் ஐந்தாவதாகக் கேட்பவன்,(6) நினைப்பவன், அறிபவன் ஆகிய இவர்கள் எழுவரும் செயற்பாட்டுக் காரணங்களாக {கர்த்தாவைக் காரணமாகக் கொண்டவர்களாக} அறியப்பட வேண்டும். குணங்களைக் கொண்ட இவை, ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ உள்ள தங்கள் குணங்களையே அனுபவிக்கின்றன[1].(7)ஆத்மாவைப் பொறுத்தவரையில் அது குணங்களற்றதாகும். இவை ஏழும்தான் விடுதலைக்கான காரணங்களாகும். கல்விமான்கள் மற்றும் போதுமான புத்தியைக் கொண்டவர்களிடம் தேவர்களின் நிலையில் உள்ள குணங்கள் உரிய இடத்தில் உள்ளவையும், விதிக்கப்பட்டதற்கு ஏற்புடையவையுமான ஆகுதிகளை உண்கின்றன. கல்வியற்ற ஒருவன், பல்வேறு வகை உணவுகளை உண்டு, அகந்தை புத்தியால் {மமதையால்} பீடிக்கப்படுகிறான்[2].(8,9) தனக்கான உணவை மட்டுமே செரிப்பவன் அகந்தை புத்தியால் அழிவடைகிறான். உண்ணத்தகாத உணவை உண்பதும், மதுவைப் பருகுவதும் அவனை அழிவடையச் செய்கிறது.(10) அவன் (தான் உண்ட) உணவை அழிக்கிறான், அந்த உணவை அழித்து, தன்னையும் அவன் அழித்துக் கொள்கிறான். எனினும், கல்வி கற்றவனும், பலம்பொருந்தியவனுமான மனிதன், தன் உணவை மீண்டும் உற்பத்தி செய்வதற்காக அஃதை அழிக்கிறான்.(11) அவன் உண்ணும் உணவில் இருந்து மிகச் சிறு அத்துமீறலும் நிகழாது.மனத்தால் எண்ணப்படும் எதுவும், வாக்கால் சொல்லப்படும் எதவும்,(12) காதால் கேட்கப்படும் எதுவும், கண்ணால் காணப்படும் எதுவும், தீண்டல் (புலனால் {தோலால்}) தீண்டப்படும் எதுவும், மூக்கால் நுகரப்படும் எதுவும்,(13) புலன்கள் அனைத்தையும், ஆறாவதாக மனத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, உடலுக்குள் எரிந்து கொண்டிருக்கும் உயர்ந்த தகுதிகளைக் கொண்ட நெருப்பான ஆத்மாவுக்குள் ஊற்றப்பட வேண்டிய தெளிந்த நெய்யாலான ஆகுதியாக அமைகிறது[3].(14) என்னைப் பொறுத்தவரையில், யோகத்தால் அமையும் வேள்வியானது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வேள்வி தொடர்கிற இடத்தில் அறிவு நெருப்பை விளைவிக்கும் ஊற்று உதிக்கிறது. மேல்நோக்கிய உயிர் காற்றான பிராணனே அவ்வேள்வியின் ஸ்தோத்திரமாகும். கீழ்நோக்கிய உயிர் காற்றான அபானனே அதன் சஸ்திரமாகும். அனைத்தையும் துறப்பதே, அந்த வேள்வியின் சிறந்த தக்ஷிணையாகும்.(15)பிரம்மமாக உள்ள நனவு {அகங்காரம்}, மனம் மற்றும் புத்தி ஆகிய ஒவ்வொன்றும், ஹோத்ரியும், அத்வர்யு, உத்காத்ரி ஆகியவையாகும். பிரஸாஸ்திரியும், அவரது சாஸ்திரமும் உண்மையாகும். தனி இருப்பை நிறுத்தல் (அல்லது விடுதலையே {முக்தியே}) தக்ஷிணையாகும்[4].(16) இது தொடர்பாக, நாராயணனை அறிந்த மக்கள் சில ரிக்குகளை உரைக்கின்றனர. பழங்காலத்தில் தெய்வீகமான நாராயணனுக்கு விலங்குகள் காணிக்கயளிக்கப்பட்டன[5].(17) அப்போது சில சாமங்களும் பாடப்படுகின்றன. இதில் ஓர் உரிமை ஏற்படுகிறது. ஓ! மருண்டவளே, தெய்வீக நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பதை அறிவாயாக” என்றார் {பிராமணர்}.(18)

காமசாரி, பிரம்மசாரி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 26-பிரம்மன் ஒரே சொல்லால் பிரம்மத்தை உபதேசித்தது; தேவர்கள் முதலியோர் தத்தமது அறிவுக்குத்தக்கபடி அதைப் புரிந்து கொண்டது ஆகியவற்றைக் குறித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “ஆட்சியாளன் ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறொருவனுமில்லை. அந்த ஆட்சியாளன் இதயத்தில் வசிக்கிறான். அவனைக் குறித்து இப்போது சொல்லப்போகிறேன். சாய்தளத்தில் ஓடும் நீரைப் போல அவனால் உந்தப்பட்டும் நான், அவனது வழிநடத்தலின்படியே நகர்கிறேன் {காரியங்களைச் செய்கிறேன்}.(1) ஆசான் {குரு} ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறொருவருமில்லை. அவரைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகை உணர்வுடன் இருக்கின்றன[1].(2) உற்றவன் {உறவினன்} ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. இதயத்தில் வசிக்கும் அவனைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். அவரால் போதிக்கப்படும் உறவினர்கள் உறவினர்களைக் கொண்டவர்களாகிறார்கள்” {என்றார் பிராமணர்}. {கிருஷ்ணன் தொடர்ந்தான்}, “மேலும், ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}[2], {அந்தப் பிரமாணர் தம் மனைவியிடம்}, “முனிவரெழுவரும் {சப்தரிஷிகளும்} ஆகாயத்தில் ஒளிர்கிறார்கள்.(3){ஐயங்களை} அகற்றுபவர் ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறு ஒருவருமில்லை. அவர் இதயத்தில் வசிக்கிறார். அவரைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். குருவுடன் வாழ்வதற்கு உரிய வாழ்வுமுறையில் {பிரம்மச்சரிய ஆசிரமத்தில்} அந்தக் குருவுடன் வாழ்ந்த சக்ரன் {இந்திரன்}, உலகங்கள் அனைத்தின் ஆட்சியுரிமையை அடைந்தான்[3].(4) பகைவன் ஒருவனே. அவனைத்தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. அவன் இதயத்தில் வசிக்கிறான். நான் இப்போது அவனைக் குறித்துச் சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகையுணர்வு உள்ளவையாக இருக்கின்றன.(5)இது தொடர்பாக உயிரினங்கள் அனைத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} இருந்து பாம்புகள் {பன்னகர்கள்}, தேவர்கள் மற்றும் முனிவர்கள் பெற்ற போதனை குறித்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(6) உயிரினங்கள் அனைத்தின் தலைவனைச் சுற்றி அமர்ந்திருந்த தேவர்கள், முனிவர்கள், பாம்புகள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அவனிடம், “எங்களுக்கான உயர்ந்த நன்மை அறிவிக்கப்படட்டும்” என்றனர்.(7)

அந்தப் புனிதமானவன் {பிரம்மன்}. உயர்ந்த நன்மையைக் குறித்துக் கேட்ட அவர்களிடம் ஓரசை {ஓரெழுத்துப்} பிரம்மமான ஓம் என்ற சொல்லை மட்டுமே சொன்னான். இதைக் கேட்ட அவர்கள் பல்வேறு திசைகளில் ஓடிச் சென்றனர்.(8) இவ்வாறு அனைத்துத் திசைகளிலும் ஓடிச் சென்றவர்களுக்கு மத்தியில் ஆசையில் இருந்து எழுந்த தற்போதனையில் இருந்து, முதலில் பாம்புகளிடம் கடிக்கும் மனோநிலை {தன்மை} உண்டானது.(9) அசுரர்களிடம், தங்கள் இயல்பிலேயே பிறந்த பகட்டும், செருக்கும் கூடிய மனோநிலை எழுந்தது. தேவர்கள் கொடைகள் அளிக்கும் தன்மையையும், பெரும் முனிவர்கள் தற்கட்டுப்பாட்டையும் அடைந்தனர்.(10) ஓர் ஆசானிடம் சென்று, ஒரு சொல்லால் போதிக்கப்பட்ட (தூய்மையாக்கப்பட்ட) பாம்புகளும், தேவர்களும், முனிவர்களும், தானவர்களும் பல்வேறு மனநிலைகளை {தன்மைகளை} அடைந்தனர்.(11) தான் பேசுவதைத் தானே கேட்டு, அதை முறையாக ஒருவன் புரிந்து கொள்கிறான். மீண்டும் அவன் பேசும்போது மேலும் கேட்கிறான். {தன்னைத் தவிர அவனுக்கு} இரண்டாவதாக வேறோர் ஆசான் இல்லை[4].(12)அவனது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தே பின்னர்ச் செயல்பாடு தோன்றுகிறது. சொல்பவன், புரிந்து கொள்பவன், கேட்பவன், பகைவன் ஆகியோர் இதயத்தில் நிறுத்தப்படுகின்றனர்.(13) உலகில் பாவகரமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்தவனாகிறான். இவ்வுலகில் மங்கலமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் மங்கலச் செயல்களைச் செய்தவனாகிறான்.(14) ஆசையால் தூண்டப்பட்டுப் புலனின்பங்களுக்கு அடிமையாவதன் மூலம் ஒரு மனிதன் கட்டுப்பாடில்லா ஒழுக்கம் கொண்டவனாகிறான் {காமசாரியாகிறான்}. தன் புலன்களை அடக்குவதிலேயே எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ள ஒருவன் பிரம்மச்சாரியாகிறான்.(15) நோன்புகள் மற்றும் செயல்பாடுகளைக் கைவிடும் அவன் பிரம்மத்தை மட்டுமே அடைக்கலமாகக் கொள்கிறான். எப்போதும் தன்னைப் பிரம்மத்துடன் அடையாளக் கண்டு, இவ்வுலகில் திரிபவன் பிரம்மச்சாரியாகிறான்.(16)

பிரம்மமே அவனது விறகாகும்; பிரம்மமே அவனது நெருப்பாகும்; பிரம்மமே அவனது தோற்றமாகும்; பிரம்மமே அவனது நீராகும்; பிரம்மமே அவனது ஆசான் ஆகும்; பிரம்மத்திலேயே அவன் மூழ்கியிருக்கிறான்.(17) ஞானிகளால் புரிந்து கொள்ளப்படும் வகையில் உள்ள பிரம்மச்சரியம் இவ்வளவு நுட்பமானதே. அதைப் புரிந்து கொண்டு, க்ஷேத்ரஜ்ஞனால் போதிக்கப்படும் அவர்கள் அதையே பின்பற்றுகிறார்கள்” என்றார் {பிராமணர்}.(18)

புனிதக்காடு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 27-ஞானம் மற்றும் பிரம்மம் ஆகியவற்றைக் காடாகச் சித்தரித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “குறிக்கோள்களையே ஈக்களாகவும், கொசுக்களாகவும், இன்ப துன்பங்களை வெப்பம் மற்றும் குளிராகவும்,  கவனமின்மையையே {மோஹத்தையே} காரிருளாகவும், பேராசை மற்றும் நோய்களை ஊர்வனவாகவும் {பாம்புகளாகவும்},  செல்வத்தை ஒற்றை ஆபத்து நிறைந்த சாலையாகவும், கோபம் மற்றும் காமத்தைக் கள்வர்களாகவும் கொண்டவையும், கடக்க முடியாதவையுமான நிலப்பரப்புகளை {உலகத்தைக்) கடந்து பிரம்மமெனும் இந்தப் பெருங்காட்டுக்குள் நான் நுழைந்துவிட்டேன்” என்றார்.(1,2)

அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, அந்தக் காடு எங்கே இருக்கிறது? அதன் மரங்கள் யாவை? ஆறுகள் யாவை? மலைகளும், குன்றுகளும் யாவை? அந்தக் காடு எவ்வளவு தொலைவில் இருக்கிறது?” என்று கேட்டாள்.(3)

பிராமணர், “அதனில் {பிரம்மத்தில்} இருந்து வேறுபட்டது ஏதுமில்லை. அதைவிட மிக இனிமைமிக்க வேறு எதுவுமில்லை. அதில் இருந்து பிரியாமல் இருப்பது வேறேதும் இல்லை. அதைவிடப் பீடிக்கக்கூடியது வேறேதுமில்லை.(4) அதைவிடச் சிறியது வேறேதும் இல்லை. அதைவிடப் பெரியது வேறேதும் இல்லை. அதைவிட நுட்பமானது வேறேதும் இல்லை. அதற்கு ஒப்பான மகிழ்ச்சி வேறேதும் இல்லை.(5) அதற்குள் நுழையும் மறுபிறப்பாளர்கள் இன்ப துன்பங்களை உடனே கடந்து விடுகிறார்கள். (அதன் பிறகு) அவர்கள் வேறு எந்த உயிரினத்தின் முன்பும் அச்சத்துடன் ஒருபோதும் நிற்பதில்லை, அதே போல வேறு எந்த உயிரினமும் அவர்களைக் கண்டு அஞ்சுவதில்லை.(6) அந்தக் காட்டில் {பிரம்மத்தில்} பெரு மரங்கள் ஏழும், கனிகள் ஏழும் இருக்கின்றன, விருந்தினர்கள் எழுவரும் இருக்கின்றனர். அங்கே ஏழு ஆசிரமங்களும், ஏழு தியான யோகங்களும் (யோக வடிவங்களும்) {சமாதிகளும்}, ஏழு தொடக்க நிலைகளும் (வடிவங்களும்) {தீக்ஷைகளும்} இருக்கின்றன. இதுவே அந்தக் காட்டைக் குறித்த விளக்கமாகும்[1].(7)அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {மனமாகிய} மரங்கள் {ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களாலான} ஐந்து நிறங்களிலான சிறந்த மலர்களையும், கனிகளையும் உண்டாக்குகின்றன.(8) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் மரங்கள் இரு வகைகளைச் சார்ந்தவையும், சிறந்த நிறங்களைக் கொண்டவையுமான {புலன் நுகர் பொருட்களின் அனுபவம் என்ற} மலர்களையும், {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(9) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {கண்கள் எனும்} மரங்கள் {இன்பம் துன்பம் என்ற} இரு நிறங்களைச் சார்ந்தவையும், நறுமணம் மிக்கவையுமான {சொர்க்கம் முதலான} மலர்களையும், {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(10) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் மரங்கள், {சுகம் என்ற} ஒரு நிறத்தைச் சார்ந்தவையும், நறுமணமிக்கவையுமான {பிரம்மானுபவமென்கிற} மலர்களையும், {ஆனந்தம் எனும்} கனிகளையும் உண்டாக்குகின்றன.(11) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {புத்தி மற்றும் மனம் என்ற} இரு மரங்கள், வெளிப்படாத வண்ணங்களிலான பல மலர்களையும் {மனோநிலைகளையும்}, {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(12) அங்கே நல்ல மனம் {ஞானம்} கொண்ட ஒரு நெருப்பு {ஆத்மா} இருக்கிறது. அது பிரம்மனுடன் தொடர்பில் இருக்கிறது. அங்கே ஐம்புலன்களும் விறகுகளாகின்றன. (மனம் முதலானவற்றை அதைக் கொண்டு ஹோமம் செய்தால்} அவற்றில் இருந்து விடுதலையின் ஏழு வடிவங்களும் {மோக்ஷங்களும்} ஏழு தொடக்க நிலை வடிவங்களை {தீக்ஷைகளும்} உண்டாக்குகின்றன. குணங்களே கனிகளாக இருக்கின்றன, அந்தக் கனிகளை உண்பவர்களே {தேவர்களென்னும்} விருந்தினர்களாக இருக்கின்றனர்.(13)

அங்கே பல்வேறு இடங்களில் பெரும் முனிவர்கள் {புலன்களுக்குரிய தேவர்கள்} அந்த விருந்தோம்பலை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு வழிபடப்படும் அவர்கள் அழிவடையும்போது {லயமடையும்போது [இல்லாது போகும்போது]} மற்றொரு காடு பிரகாசிக்கிறது.(14) அந்தக் காட்டில், புத்தியே மரம்; விடுதலையே {முக்தியே} கனி; அமைதியே {சாந்தியே} அது கொண்ட நிழல் ஆகும். அது ஞானத்தையே தன் ஓய்வில்லமாகவும், மனநிறைவை நீராகவும், க்ஷேத்ரஜ்ஞனை சூரியனாகவும் கொண்டுள்ளது.(15) மேல்நோக்கியோ, கீழ்நோக்கியோ, கிடைமட்டத்திலோ அதன் எல்லையை உறுதி செய்ய முடியாது.(16) கீழ்நோக்கி முகங்களைக் கொண்டவர்களும் {தலை குனிந்திருப்பவர்களும்}, பிரகாசத்துடன் கூடியவர்களும், தலைமுறைகளை உண்டாக்கக்கூடியவர்களுமான ஏழு பெண்கள் எப்போதும் அங்கே வசித்து வருகின்றனர். உண்மையை உறிஞ்சும் முரண்பாட்டைப் போல அனைத்து உயிரினங்களிடம் இருந்தும் அவர்கள் பல்வேறு சுவைகளைப் பெறுகின்றனர். வசிஷ்டரைத் தங்களில் முதன்மையானவராகக் கொண்டவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான முனிவரெழுவர் {சப்தரிஷிகளும்} அதிலேயே உண்டாகி அங்கேயே வசிக்கின்றனர்.(18)

சூரியனைப் பின்தொடரும் கதிர்களைப் போலவே, புகழ் {கீர்த்தி}, ஒளி {பிரகாசம்}, மேன்மை, அகவொளி {தெளிவு}, வெற்றி, ஒழுங்கு {கச்சிதத்தன்மை}, சக்தி ஆகிய ஏழும் அதைப் பின்தொடர்ந்து செல்கின்றன.(19) அங்கே மலைகளும், குன்றுகளும் ஒன்று திரண்டிருக்கின்றன. பிரம்மத்தில் பிறந்த நீரைக் கொண்ட ஆறுகளும் ஓடைகளும் அங்கே ஓடிக் கொண்டிருக்கின்றன.(20) அங்கே வேள்வி செய்வதற்கான ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் அவை சங்கமுமாகின்றன. தங்கள் ஆன்மாக்களில் நிறைவடைவோர் அங்கே பெரும்பாட்டனை {பிரம்மனை} நோக்கிச் செல்கின்றனர்.(21) ஆசைகளைக் குறைத்துக் கொண்டவர்களும், சிறந்த நோன்புகளைச் செய்வதில் ஆசை கொண்டவர்களும், தவங்களின் மூலம் பாவங்களை எரித்தவர்களுமான மனிதர்கள் தங்கள் ஆன்மாக்களிலேயே கலந்து பிரம்மத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(22) ஞானக்காடு குறித்து அறிந்தவர்கள் அமைதியைப் புகழ்கிறார்கள். பிறவியை அடைந்தவர்கள், அந்தக் காட்டை நோக்கத்தில் கொண்டு தங்கள் துணிவை இழக்காதிருக்க வேண்டும்.(23) பிராமணர்களால் புரிந்து கொள்ளப்பட்டும் அந்தப் புனிதக்காடு இத்தகையதே. அதைப் புரிந்து கொண்ட அவர்கள், க்ஷேத்ரஜ்ஞனால் செலுத்தப்பட்டு (விதிக்கு இணக்கமாக) வாழ்கின்றனர்” என்றார் {பிராமணர்}.(24)

யாகஹிம்ஸை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 28-வேள்விகளில் நேரும் தீங்கு குற்றமாகாது என்று ஓர் அத்வர்யுவுக்கும் யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “நான் மணங்களை நுகர்வதில்லை. நான் சுவைகளை உணர்வதில்லை. நான் நிறங்களைக் காண்பதில்லை. நான் தீண்டுவதில்லை. (எழும்) பல்வேறு ஒலிகளையும் நான் கேட்பதில்லை. எவ்வகைக் காரியத்தையும் {தீர்மானத்தையும்} நான் செய்வதில்லை.(1) விரும்பப்படும் பொருட்களை விருப்பம் கொள்வது இயற்கையே; விரும்பப்படாத பொருட்களை வெறுப்புக் கொள்வதும் இயற்கையே. அசைவூட்டமுள்ள உடல்களுக்குள் ஆன்மா நுழையும்போது, மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் செல்லும் உயிர் காற்றுகளின் {பிராண வாயு மற்றும் அபான வாயுவின்} மூலம் இயற்கையில் இருந்தே விருப்பும், வெறுப்பும் எழுகின்றன[1].(2) அவற்றில் இருந்து பிரிந்த நிலையிலேயே மற்றவை இருக்கின்றன; அவற்றில் நித்திய இயல்புகள் இருக்கின்றன; (இவற்றையும்) அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களையும், யோகிகள் உடலில் காண்கின்றனர். அதில் வசிக்கும் நான், ஒரு போதும் ஆசை, கோபம், முதுமை மற்றும் மரணத்தின் மூலம் எழும் எதனிலும் பற்று கொள்வதில்லை.(3)தாமரையின் {தாமரை இலையில் உள்ள} நீர்த்துளியில் எந்தக் களங்கமும் இல்லாததைப் போலவே, விரும்பத்தக்க பொருள் எதனிலும் விருப்பமின்மை, தீமை எதனிலும் வெறுப்பின்மை ஆகிய என் இயல்புகளிலும் எந்தக் களங்கமுமில்லை[2].(4) மாறுபட்ட இயல்புகளைக் காணும் நிலையான ஒருவனுக்கு (கொள்கைக்கு) இவை நிலையற்ற உடைமைகளாகின்றன. செயல்பாடுகள் நிகழ்த்தப்பட்டாலும், சூரியக் கதிர்களின் திரள் வானத்தைப் பற்றாததைப் போல {அவன் அனுபவிக்கும்} இன்பங்களின் திரளும் அவற்றுடன் அவனைப் பற்றுகொள்ளச் செய்யாது. இது தொடர்பாக ஓர் அத்வர்யுவுக்கும், ஒரு யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! புகழ்பெற்ற பெண்மணியே, அதைக் கேட்பாயாக.(5,6)ஒரு வேள்விச் சடங்கில் நீர் தெளிக்கப்படும் {புரோக்ஷிக்கப்படும்} விலங்கைக் கண்ட ஒரு யதி {சந்நியாஸி}, அத்வர்யுவிடம் “இஃது உயிர்க்கொலை” என்றார்.(7)

அத்வர்யு {சந்நியாசியிடம்}, “இந்த ஆடு அழிவையடையாது. இக்காரியத்தில் வேத அறிவிப்பு உண்மையானால், (இந்த வேள்வியினால்) இவ்விலங்கு பெரும் நன்மையை அடையும்.(8) பூமியாலான இந்த விலங்கின் பகுதி பூமிக்குச் செல்லும். நீரில் பிறந்த இதன் பகுதி நீருக்குள் நுழையும்.(9) இதன் கண்கள் சூரியனுக்குள்ளும்; இதன் காதுகள் பல்வேறு திசைப்புள்ளிகளிலும், இதன் உயிர் காற்றுகள் ஆகாயத்துக்குள்ளும் நுழையும். சாத்திரங்களைப் பின்பற்றும் நான் (இந்த விலங்கைக் கொல்வதற்குத் துணைபுரிவதால்) எத்தீங்கையும் இழைக்கவில்லை” என்றார்.(10)

யதி {சந்நியாசி அத்வர்யுவிடம்}, “இந்த ஆட்டின் உயிர் காற்றுகளை இவ்வாறு பிரிப்பதில் இத்தகைய நன்மையைக் கண்டால், இந்த வேள்வி ஆட்டுக்கானதாகிறது. இதை நீர் செய்ய வேண்டிய அவசியமென்ன {இதனால் உமக்கென்ன பயன்}?(11) (இந்த ஆட்டின்) சகோதரன், தந்தை, தாய் மற்றும் நண்பன் ஆகியோர் இதில் தங்கள் அனுமதியை உமக்கு அளிக்க வேண்டும். (அவற்றிடம்) இஃதை {இந்த ஆட்டை} அழைத்துச் சென்று அவற்றுடன் {அந்த ஆடுகளுடன்} ஆலோசிப்பீராக. இந்த ஆடானது குறிப்பாகச் சுதந்திரமற்றதாகும் {அவற்றை [அந்த ஆடுகளைச்] சார்ந்திருப்பதாகும்}.(12) இதில் தங்கள் ஒப்புதலை அளிக்கக்கூடியவர்களைப் பார்ப்பதே உமக்குத் தகும். அவற்றின் ஒப்புதலைக் கேட்ட பிறகே, இக்காரியம் கருத்தில் கொள்ளத் தகுந்ததாகும்.(13) இந்த ஆட்டின் உயிர்க்காற்றுகள் தங்கள் தங்களுக்குரிய மூலங்களிடம் திரும்பிச் செல்கின்றன. உயிரற்ற உடல் மட்டுமே எஞ்சுகிறது. இதையே நான் நினைக்கிறேன்.(14)

விறகுடன் ஒப்பிடக்கூடிய (ஒரு விலங்கின்) உயிரற்ற உடலின் மூலம் இன்பமடைய விரும்புவோருக்கு (வேள்விக்கான) விறகே அந்த விலங்குதான்.(15) தீங்கிழையாமையே {கொல்லாமையே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். இதுவே நம் பெரியோர் சொல்லிக் கொடுத்ததாகும். கொடுமையற்ற செயலே செய்யப்பட வேண்டும் என்பதே நாம் அறிவதாகும். அதில் (உயிரினங்களைக்) கொல்லாமை என்பதே கருத்தாகும். நான் மேலும் ஏதாவது சொன்னால், பல்வேறு வகையான குற்றச் செயல்களை உம்மால் செய்ய முடியும் (என்று அப்போது தோன்றும்).(17) அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் கொடுமை தவிர்த்தலே நமக்கு ஏற்புடையதாகும். நேரடியாக உணக்கூடியவற்றிலிருந்து நாம் இதை நிறுவுகிறோம். நேரடியான அகப்பார்வையை {கருத்தைக்} கடந்திருப்பதை நாம் சார்ந்திருக்கவில்லை[3]” என்றார் {யதி}.(18)அத்யர்யு, “பூமிக்குச் சொந்தமான மணத்தின் குணங்களை நீர் அனுபவிக்கிறீர். நீர் தொடர்புடைய சுவைகளைப் பருகுகிறீர். ஒளியுடல்களுக்குச் சொந்தமான நிறங்களைக் காண்கிறீர். காற்றைத் தோற்றுவாயாகக் கொண்ட குணங்களைத் தீண்டுகிறீர்.(19) வெளி (அல்லது ஆகாயத்தைத்) தோற்றுவாயாகக் கொண்ட ஒலிகளைக் கேட்கிறீர். மனத்தால் எண்ணங்களைச் சிந்திக்கிறீர். இந்த உட்பொருட்கள் (பூதங்கள்) அனைத்தும் உயிருள்ளவை என்பதே உமது கருத்தாகும்.(20) அப்போது அந்த உயிர்களை எடுக்காமல் நீர் தவிர்ப்பதில்லை. உண்மையில் நீர் கொலையிலேயே ஈடுபடுகிறீர். கொலையில்லாமல் எந்த இயக்கமும் நடைபெறாது {ஹிம்ஸை இன்றி ஒரு காரியமுமில்லை}. அல்லது, ஓ! மறுபிறப்பாளரே, வேறென்ன நீர் நினைக்கிறீர்?” என்று கேட்டார்.(21)

யதி, “அழிவற்றது {அக்ஷரம்} மற்றும் அழியக்கூடியது {க்ஷரம்} என்பன ஆன்மாவின் இரட்டை வெளிப்பாடாக அமைகின்றன. இவற்றில் அழிவற்றதே இருப்பில் உள்ளது. அழியக்கூடியது அதிக அளவில் இருப்பில் இல்லாததெனச் சொல்லப்படுகிறது.(22) உயிர்க்காற்று, நாக்கு, மனம், நல்லியல்பின் {சத்வ} குணம், ஆசை {ரஜோ} குணம் ஆகிய அனைத்தும் இருப்பில் உள்ளவை. இருப்பிலுள்ள இவற்றில் இருந்து விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், எந்த எதிர்பார்ப்பையும் வளர்க்காதவனும்,(23) அனைத்து உயிரினங்களிடமும் ஒரே வகையில் {சமமாக} நடந்து கொள்பவனும், மமதையில் இருந்து விடுபட்டவனும், தற்கட்டுப்பாடுடையவனும், தன் சுற்றுச்சூழலில் இருந்து விடுபட்டவனுமான ஒருவனுக்கு எதனிடமும் அச்சம் ஏற்படுவதில்லை[4]” என்றார்.(24)

அத்யர்யு, “ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ஒருவன் நல்லோருடன் வசிக்க வேண்டும். உமது கருத்துகளைக் கேட்பதால் என் புத்தி ஒளியுடன் ஒளிர்கிறது.(25) ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! மறுபிறப்பாளரே, உம்மை ஒரு தேவனாக நம்பும் நான், மந்திரங்களின் உதவியால் இந்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் என்னிடம் குற்றமுண்டாவதில்லை என்று சொல்கிறேன்” என்றார்”.(26)

பிராமணர் தொடர்ந்தார், “இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு யதி அமைதியாக இருந்தார். அத்யர்யுவும் மாயையில் இருந்து விடுபட்டு அந்தப் பெரும் வேள்வியைச் செய்தார்.(27) பிராமணர்கள், மிக நுட்பமான விடுதலையை {முக்தியை} இவ்வகையிலேயே புரிந்து கொள்கிறார்கள்; அதைப் புரிந்து கொண்டு, அதற்கு இணக்கமாகவும், அனைத்தையும் காணும் க்ஷேத்ரஜ்ஞனால் வழிநடத்தப்பட்டும் வாழ்கிறார்கள்” {என்றார் பிராமணர்}.(28)

அஹிம்ஸை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 29-கார்த்தவீரியனுக்கும் பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பரசுராமரின் கதையையும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “இது தொடர்பாகக் கார்த்தவீரியனுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) ஆயிரங்கரங்களையும், கார்த்தவீரியார்ஜுனன் என்ற பெயரையும் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவன் தனது வில்லைக் கொண்டு, பெருங்கடலின் கரைகள் வரை விரிந்திருக்கும் பூமியை வென்றான்.(2) ஒரு காலத்தில், தன் வலிமையில் செருக்குடன் இருந்த அவன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, நீரின் அந்தப் பெருங்கொள்ளிடத்தின் {பெருங்கடலின்} மேல் நூற்றுக்கணக்கான கணைகளை மழையாகப் பொழிந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3)

கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கிய அந்தப் பெருங்கடல் {ஸமுத்திரம்}, “ஓ! வீரா, (என் மீது) உன் கணைகளை ஏவாதே. நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக.(4) ஓ! மன்னர்களில் புலியே, என்னிடம் உறைவிடத்தை அடைந்திருக்கும் உயிரினங்கள், உன்னால் ஏவப்பட்டும் இந்த வலிமைமிக்கக் கணைகளால் கொல்லப்படுகின்றன. ஓ! தலைவா, அவற்றுக்குப் பாதுகாப்பை நல்குவாயாக” என்றது.(5)

அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, “போரில் எனக்கு இணையாகக் களத்தில் என்னை எதிர்த்தது நிற்கக் கூடிய வில்லாளி வேறு எவனும் இருந்தால் அவனது பெயரை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(6)

பெருங்கடல், “ஓ! மன்னா, பெரும் முனிவர் ஜமதக்னியைக் குறித்து நீ கேள்விப்பட்டிருப்பாய், அவருடைய மகன் {பரசுராமர்} உன்னை விருந்தினராக முறையாக வரவேற்கத் தகுந்தவராவார்” என்றது.(7)

அப்போது பெருங்கோபத்தில் நிறைந்த அந்த மன்னன் அங்கிருந்து புறப்பட்டான். அந்த ஆசிரமத்தை அடைந்து, ராமரை {பரசுராமரை} அவன் கண்டான்.(8) ராமருக்குப் பகையான செயல்கள் பலவற்றை அவன் தன் உறவினர்களைக் கொண்டு செய்து, மேலும் மேலும் அந்த உயர் ஆன்ம வீரருக்குத் தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.(9) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, அந்த ராமரின் அளவிடமுடியாத சக்தி, சுடர்விட்டெரிந்து பகைவனின் துருப்புகளை எரித்தது.(10) போர்க்கோடரியை எடுத்துக் கொண்டு தன் சக்தியைத் திடீரென வெளிப்படுத்திய ராமர், பல கிளைகளைக் கொண்ட மரம் போல இருந்தவனும், ஆயிரம் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரனை வெட்டினார்.(11) கொல்லப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் அவனைக் கண்ட அவனது உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி, தங்கள் ஈட்டிகளை {சக்தி ஆயுதங்களை} எடுத்துக் கொண்டு, அங்கே அமர்ந்திருந்த ராமரை நோக்கி அனைத்துப் புறங்களில் இருந்தும் விரைந்தனர்.(12)

ராமரும் தமது வில்லை எடுத்துக் கொண்டு, விரைவாகத் தமது தேரிலேறி கணைமாரியைப் பொழிந்து அந்த மன்னனின் படையைத் தண்டித்தார்.(13) அப்போது, ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் சிலர் சிங்கத்தால் பீடிக்கப்பட்ட மான்களைப் போல மலைக்காடுகளுக்குள் நுழைந்தனர்.(14) ராமரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தங்கள் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாக வெளிப்படுத்த இயலாத அவர்களின் சந்ததியினர், பிராமணர்களைக் காண இயலாததால் {சூத்திரத்தன்மையைக் கொண்ட} விருஷலர்களானார்கள்[1].(15) இவ்வகையில் க்ஷத்திரியர்களான திரவிடர்கள், ஆபீரர்கள், புண்ட்ரர்கள், சபரர்கள் ஆகியோர், (பிறப்பின் மூலம்) க்ஷத்திரியர்களுக்கான கடமைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் (தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்யாமல்) வீழ்ச்சியையடைந்து விருஷலர்களானார்கள்.(16) வீரப்பிள்ளைகளை இழந்திருந்த க்ஷத்திரியப் பெண்கள் பிராமணர்களின் மூலம் ஈன்றெடுத்த க்ஷத்திரியர்களும் மீண்டும் மீண்டும் அந்த ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கொல்லப்பட்டனர்.(17) இவ்வகையில் இருபத்தோரு முறை படுகொலைகள் நடந்தேறின.அதன் இறுதியில், உடலற்ற ஒரு குரல் சொர்க்கத்தில் இருந்து எழுந்து, மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் ராமரிடம் இனிமையாக,(18) “ஓ! ராமா, ஓ! ராமா, இதைத் தவிர்ப்பாயாக. ஓ! மகனே, தாழ்ந்தவர்களாக இருக்கும் க்ஷத்திரியர்களை இவ்வாறு மீண்டும் மீண்டும் அழிப்பதில் என்ன தகுதியை {பயனை} நீ காண்கிறாய்?” என்றது[2].(19)

இவ்வழியிலேயே, ஓ! அருளப்பட்ட மங்கையே, ரிசீகரின் தலைமையிலான அவரது பாட்டன்கள் அந்த உயர்ஆன்மாவிடம், “இதைத் தவிர்ப்பாயாக” என்றனர்.(20)

எனினும், தமது தந்தை கொலை செய்யப்பட்டதை மன்னிக்க முடியாத ராமர் {பரசுராமர்}, அந்த முனிவர்களிடம், “என்னைத் தடுப்பது உங்களுக்குத் தகாது” என்றார்.(21)

அப்போது, பித்ருக்கள், “ஓ! வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, க்ஷத்திரியர்களில் இழிவான இவர்களைக் கொல்வது உனக்குத் தகாது. ஒரு பிராமணனாக இருக்கும் நீ இந்த மன்னர்களைக் கொல்வது முறையாகாது” என்றனர்.(22)

மன்னன் அலர்க்கன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 30-பரசுராமரின் பித்ருக்கள் அவருக்கு அலர்க்கனின் கதையைச் சொன்னது; க்ஷத்திரியக் கொலையை விட்டுக் கடுந்தவம் செய்த பரசுராமர்…

பித்ருக்கள் {பரசுராமரிடம்}, “இது தொடர்பாக ஒரு பழைய வரலாறு குறிப்பிடப்படுகிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அதைக் கேட்டுவிட்டு அதன்படியே செயல்படுவாயாக.(1) கடும் தவங்களுடன் கூடியவனும், அலர்க்கன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அரச முனி இருந்தான். கடமைகள் அனைத்தையும் அறிந்தவனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனுமான அவன், பேச்சில் வாய்மையுடனும், தன் நோன்பில் மிக உறுதியுடையவனுமாக இருந்தான்.(2) கடல்கள் வரை விரிந்திருக்கும் மொத்த உலகையும் வென்று கடுஞ்சாதனையைச் செய்த அவன், நுட்பமானதில் தன் மனத்தை நிறுவினான்.(3) ஓ பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அந்தப் பெருஞ்சாதனைகள் அனைத்தையும் கைவிட்டு ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, நுட்பமானதை நோக்கி தன் மனத்தைத் திருப்பினான்.(4)

அலர்க்கன், “என் மனம் வலுவாக இருக்கிறது. மனத்தை வென்ற பிறகு ஒருவனின் வெற்றி நிரந்தரமானதாகிறது. பகைவர்களால் சூழப்பட்டிருந்தாலும் நான் (இது முதல்) என் கணைகளைப் பிற பொருட்களின் மீது ஏவுவேன்.(5) நிலையின்மையின் விளைவால் மனிதர்கள் அனைவரையும் செயல்களை நிறைவேற்றுவதில் நிறுவும் மனத்தின் மீது நான் மிகக் கூரிய கணைகளை ஏவப்போகிறேன்” என்றான்.(6)

மனம், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும். உன் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட நிலையில் நீ மரணமடைவாய்.(7) என்னை அழிப்பதற்குரிய வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {மனத்தின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(8)

அலர்க்கன், “இது (மூக்கு) மணங்கள் பலவற்றை நுகர்ந்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி மூக்கின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(9)

மூக்கு, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(10) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {மூக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(11)

அலர்க்கன், “இது (இந்த நாக்கு), சுவைமிக்கச் சுவைகளை அனுபவித்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி நாக்கின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(12)

நாக்கு, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(13) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(14)

அலர்க்கன், “தீண்டலுக்குரிய பல்வேறு பொருட்களைத் தொடும் தோலானது {துவக்கானது}, அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கங்க {கழுகின்} இறகுகளுடன் கூடிய பல்வேறு கணைகளால் அந்தத் தோலைப் பிளக்கப் போகிறேன்” என்றான்.(15)

தோலானது, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(16) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {தோலின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(17)

அலர்க்கன், “இவை (காதுகள்) பல்வேறு ஒலிகளைக் கேட்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கணைகளைக் கூராக்கிக் காதுகளின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(18)

காதுகள், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(19) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றன. {காதுகளின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(20)

அலர்க்கன், “கண்கள், பல்வேறு நிறங்களைக் கண்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கூரிய கணைககைக் கொண்டு கண்களை அழிக்கப்போகிறேன்” என்றான்.(21)

கண்கள், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(22) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(23)

அலர்க்கன், “இது (இந்தப் புத்தி), ஆராயும் முறையின் {பிரஜ்ஞையினால்} துணை கொண்டு பல தீர்மானங்களை {பலவித நிச்சயங்களை} எட்டுகிறது. எனவே, கணைகளைக் கூராக்கி இந்தப் புத்தியின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(24)

புத்தி, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய். என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது {என்றனர் பித்ருக்கள்}”.(25)

{பித்ருக்குள் சொன்னதாகப்} பிராமணர் தொடர்ந்தார், “அப்போது, செய்வதற்கரிய கடுந்தவங்களை அங்கேயே செய்த அலர்க்கன், (தன் தவங்களின்) உயர்ந்த சக்தியின் மூலமும், இந்த ஏழையும் அழிப்பதற்குரிய கணைகளை அடையத் தவறினான்.(26) பலம் கொண்ட அவன், அப்போது குவிந்த மனத்துடன் சிந்திக்கத் தொடங்கினான். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே {பரசுராமா}, நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையான அலர்க்கன், நீண்ட காலம் சிந்தித்தும் யோகத்தைவிடச் சிறந்த வேறெதையும் அடையத் தவறினான். ஒரே நோக்கத்தில் தன் மனத்தை நிறுவிய அவன், யோகத்தில் ஈடுபட்டவாறே முற்றிலும் அசையாதிருந்தான்[1].(27,28) சக்தியுடன் கூடிய அவன், யோகத்தின் மூலமாகத் தன் ஆன்மாவுக்குள் நுழைந்து, ஒரே கணையால் தன் புலன்கள் அனைத்தையும் கொன்று, அதன் மூலம் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(29)ஆச்சரியத்தால் நிறைந்த அந்த அரசமுனி அப்போது இந்த ஸ்லோகத்தைப் பாடினான்: {அலர்க்கன்}, “ஐயோ, புறச்செயல்கள் அனைத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது பரிதாபத்திற்குரியது.(30) ஐயோ, இதற்கு முன்பு இன்பங்களில் தாகத்துடன் ஆசையுள்ள நாம் அரசுரிமையை (அரசுரிமையின் இன்பங்களை) விரும்பினோம். அதன்பிறகு நான் இதைக் கற்றிருக்கிறேன். யோகத்தைவிட உயர்ந்த மகிழ்ச்சி வேறேதும் இல்லை” {என்றான் அலர்க்கன்}.(31) ஓ! ராமா, இஃதை அறிவாயாக. க்ஷத்திரியர்களைக் கொல்வதை நிறுத்துவாயாக. கடுந்தவங்களைப் பயில்வாயாக. அப்போது நீ நன்மையை அடைவாய்” என்றனர் {பித்ருக்கள்}.(32)

இவ்வாறு தமது பாட்டன்மாரால் சொல்லப்பட்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, கடுந்தவங்களைப் பயின்றார். அவற்றைப் பயின்ற அந்த உயர்ந்த அருளைக் கொண்டவர் {பரசுராமர்}, அடைவதற்கரிதான வெற்றியை அடைந்தார்” {என்றார் பிராமணர்}.(33)

காமமடக்கல்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 31-மன்னன் அம்பரீஷ்ன் சொன்ன மோக்ஷஸாதன வழிமுறையைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “இவ்வுலகில் {குணங்கள் என்ற} மூன்று பகைவர்கள் இருக்கின்றன. குணங்களுக்கு ஏற்புடைய வகையில் அவை ஒன்பது வகையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உவகை {ப்ரஹர்ஷம்}, மனநிறைவு {பிரீதி}, மகிழ்ச்சி {ஆநந்தம்} ஆகிய மூன்று குணங்களும் நல்லியல்பின் {சத்வத்தின்} தொடர்புடையவை ஆகும்[1].(1) பேராசை {சோகம்}, கோபம் மற்றும் வெறுப்பு {துவேஷம்} ஆகிய மூன்று குணங்களும் ஆசையின் {ரஜஸின்} தொடர்புடையவை ஆகும். தளர்ச்சி {ஸ்வப்நம்}, சோம்பல், திரிபுணர்வு {மோஹம்} ஆகிய மூன்று குணங்களும் இருளின் {தமஸின்} தொடர்புடையவை ஆகும்.(2) புத்தியுள்ள மனிதன் கணைமாரிகளால் இவற்றை வெட்டி, அமைதியான ஆன்மாவுடன் புலன்களைக் கட்டுப்படுத்தி, சோம்பலில் இருந்து விடுபட்டு, மற்றவற்றை வெல்லத் துணிய வேண்டும்[2].(3)பழைய யுகங்களை {கல்பங்களைக் குறித்து} நன்கறிந்தவர்கள், அமைதியான ஆன்மாவை அடைந்த மன்னன் அம்பரீஷனால் இது தொடர்பாகப் பழங்காலத்தில் பாடப்பட்ட ஸ்லோகங்களைச் சொல்கின்றனர்.(4) {பற்று, பேராசை முதலிய} பல்வேறு வகைக் குற்றங்கள் {தோஷங்கள்} பெருகி, நீதிமான்கள் {ஸாதுக்கள்} பீடிக்கப்பட்டபோது, பெரும் புகழைக் கொண்டவனான அம்பரீஷன், அரசுரிமையை ஏற்பதற்காகத் தன் பலத்தைப் பயன்படுத்தினான்[3].(5) தன் குற்றங்களை அடக்கி, நீதிமான்களை வழிபட்ட அவன், பெரும் வெற்றியை அடைந்து இந்த ஸ்லோகங்களைப் பாடினான்.(6){அம்பரீஷன்}, “என் குற்றங்கள் பலவற்றை நான் வென்றேன். பகைவர்கள் அனைவரையும் நான் கொன்றேன். ஆனால், அழிக்கப்படுத்தகுந்த ஒரு பெரிய தீமை என்னால் அழிக்கப்படாமல் இருக்கிறது.(7) அந்தக் குற்றத்தால் தூண்டப்படும் இந்த ஜீவன், ஆசையில் இருந்து விடுதலை அடையத் தவறுகிறது. ஆசையால் பீடிக்கப்படும் ஒருவன் அறிந்து கொள்ளாமலேயே அகழிகளுக்குள் {பள்ளங்களுக்குள்} ஓடுகிறான்.(8) அந்தக் குற்றத்தால் {தோஷத்தால்} தூண்டப்படும் அவன், தடை செய்யப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறான். கூர்முனை வாளால் நீ அந்தப் பேராசையை {லோபத்தை} வெட்டுவாயாக.(9)

பேராசையில் இருந்து விருப்பம் எழுகிறது. விருப்பத்தில் இருந்தே கவலையும் பாய்கிறது. விருப்பத்தின் வசப்படும் மனிதன் ஆசை {ரஜோ குணம்} தொடர்புடைய குணங்கள் பலவற்றை அடைகிறான்.(10) இவை அனைத்தையும் அடைந்த பிறகு அவன் இருளின் {தமோ குணத்தின்} தொடர்புடைய பல குணங்களை அடைகிறான்.(11) அந்தக் குணங்களின் விளைவால் அவன் உடலோடு கலந்த பற்றுகளுடன் மீண்டும் மீண்டும் பிறவிகளை அடைந்து செயல்படத் தூண்டப்படுகிறான். உயிர்வாழும் காலம் தீர்ந்ததும், பிளந்து சிதறிய உடலைக் கொண்ட அவன் மீண்டும் பிறவிக்குக் காரணமான மரணத்தை அடைகிறான்.(12) எனவே, இதை முறையாகப் புரிந்து கொண்டு, புத்தியால் பேராசையை வெல்லும் ஒருவன் தன் ஆன்மாவுக்குள் ஓர் அரசை விரும்ப வேண்டும். இதுவே (உண்மையான) அரசாகும் {ராஜ்யமாகும்}. வேறு அரசேதும் இங்கே இல்லை. முறையாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஆன்மாவே மன்னனாவான்” {என்றான் அம்பரீஷன்}.(13)

பெரும்புகழைக் கொண்டவனும், முதன்மைக் குற்றமான பேராசையை வெட்டியவனுமான மன்னன் அம்பரீஷன், அரசு குறித்துப் பாடி தன் முன்னேயே வைத்துக் கொண்ட ஸ்லோகங்கள் இவையே ஆகும்” என்றார் {பிராமணர்}.(14)

தர்மச்சக்கரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 32-மமதை விலக்கல் குறித்து ஒரு பிராமணனுக்கும் மன்னன் ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “ஓ! பெண்ணே, இது தொடர்பாக ஒரு பிராமணருக்கும், (மன்னன்) ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) மன்னன் ஜனகன், (ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்) குற்றம் புரிந்த ஒரு பிராமணனைத் தண்டிக்க விரும்பி, அவனிடம், “நீ என் ஆட்சிப்பகுதிகளில் வசிக்கலாகாது” என்றான்.(2)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், மன்னர்களில் சிறந்தவனான அவனிடம் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, உன் ஆளுகைக்குள் உள்ள ஆட்சிப்பகுதிகளின் எல்லைகளை எனக்குச் சொல்வாயாக.(3) ஓ! தலைவா, நான் மற்றொரு மன்னனின் ஆட்சிப்பகுதிக்குள் வசிக்க விரும்புகிறேன். ஓ! பூமியின் தலைவா, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் உன் ஆணைக்குக் கீழ்ப்படிய நான் விரும்புகிறேன்” என்றான்.(4)

புகழ்பெற்ற பிராமணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டும், வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே ஒரு சொல்லையும் மறுமொழியாகச் சொல்லாதிருந்தான்.(5) சூரியனை விழுங்கும் கோளை {ராஹுவைப்} போல, அளவிலா சக்தி கொண்ட அந்த மன்னனின் புத்தித் திடீரென மயங்கியதால், அவன் சிந்தனையில் மூழ்கியவாறு அமர்ந்தான்.(6) அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், ஆறுதலடைந்த அந்த மன்னன், ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு அந்தப் பிராமணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(7)ஜனகன், “மூதாதையர் வழியாக எனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருந்தாலும், மொத்த பூமியில் தேடினாலும் என் ஆட்சிப்பகுதியை நான் காணத் தவறுகிறேன்.(8) பூமியில் அதைக் காண நான் தவறியபோது, (அதை) மிதிலையில் தேடினேன். மதிலையில் நான் அதைக் காணத் தவறியபோது, என் பிள்ளைகளுக்கு மத்தியில் அதைத் தேடினேன்.(9) அங்கேயும் நான் அதைக் காணத் தவறியபோது, எனக்குப் புத்தி மயக்கம் ஏற்பட்டது. அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், நுண்ணறிவு எனக்குத் திரும்பக் கிடைத்தது.(10) அப்போது எனக்கென ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது அனைத்தும் என் ஆட்சிப்பகுதியே என நினைத்தேன். இந்த உடலும் எனதில்லை, அல்லது மொத்த பூமியும் எனதே.(11) அதே நேரத்தில், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அது பிறருக்குச் சொந்தமான அளவுக்கு எனக்கும் சொந்தம் என நினைக்கிறேன். எனவே, விரும்பியவரை நீ (இங்கேயே) வசிப்பாயாக. விரும்பிய வரையில் அனுபவிப்பாயாக” என்றான்.(12)

பிராமணன், “மூதாதையர் வழியாக உனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருக்கும்போது, எந்தப் புத்தியைச் சார்ந்து, {எனதென்ற} அந்த மமதையை விட்டாய் என்பதை எனக்குச் சொல்வாயாக.(13) அனைத்தும் உன் ஆட்சிப்பகுதியாக அமைகிறது என்ற தீர்மானத்திற்கு எந்தப் புத்தியைச் சார்ந்து நீ வந்தாய்? உண்மையில், எந்தக் கருத்தின் மூலம் உனக்கு ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது {எந்தக் கருத்தின் மூலம்} அனைத்தும் உனது ஆட்சிப்பகுதியாகிறது?” என்று கேட்டான்.(14)

ஜனகன், “அனைத்துக் காரியங்களிலும் இங்கே உள்ள {செழுமை மற்றும் வறுமை என்ற} கட்டுவரம்புகள் அனைத்தும் முடிவுள்ளவை என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே, எனதென்று அழைக்கப்படக்கூடிய எதையும் என்னால் காண முடியவில்லை.(15) இது யாருடையது என்று (கருதி), எவருடைய உடைமையையும் குறித்த வேத உரையை நினைத்தேன். எனவே, எனது என்ற (என்று அழைக்கக்கூடிய) எதையும் என் புத்தியைக் கொண்டு என்னால் காண முடியவில்லை[1].(16) இந்தக் கருத்தைச் சார்ந்தே நான் மமதையைக் கைவிட்டேன். நான் எங்கும் ஆட்சிப் பகுதியைக் கொண்டுள்ளேன் என்ற தீர்மானத்திற்கு வர நான் சார்ந்திருக்கும் கருத்தென்ன என்பதை இப்போது கேட்பாயாக.(17) என் மூக்கில் உள்ள மணங்களையும் எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட பூமியானது எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(18) என் நாவுடன் தொடர்புடைய சுவைகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட நீர் எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(19)என் கண்களுக்குத் தொடர்புடைய நிறம் அல்லது ஒளியை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒளி எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(20) என் தோலுடன் தொடர்புடைய தீண்டல் உணர்வுகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட காற்று, எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(21) என் காதுகளுடன் தொடர்புடைய ஒலிகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒலிகள் எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டவையே.(22) என் மத்தில் எப்போதும் உள்ள மனத்தை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட மனமானது எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டதே.(23) நான் செய்யும் இந்தச் செயல்கள் அனைத்தும், தேவர்கள், பித்ருக்கள், பூதங்கள் மற்றும் விருந்தினர்களுக்கானவையே” என்றான் {ஜனகன்}.(24)

அப்போது புன்னகைத்த அந்தப் பிராமணன் மீண்டும் ஜனகனிடம், “நான் தர்மன், உன்னைச் சோதிக்கவே இன்று இங்கே வந்தேன்.(25) பிரம்மத்தை உந்தியாகக் கொண்டதும், புத்தியை ஆரங்களாகக் கொண்டதும், ஒழிவடையாததும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தைச்} சுற்றளவாகக் கொண்டதுமான இந்தச் சக்கரத்தை {தர்மச்சக்கரத்தை} இயக்கத்தில் நிறவக்கூடியவன் நீயே” என்றான்.(26)

பிரம்மஜ்ஞானம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 33-தம் மகிமையைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…

பிராமணர், “ஓ! மருண்டவளே, உன் புத்தியைக் கொண்டு நிந்திக்கும் வகையில் நான் இவ்வுலகில் திரியவில்லை. நான் வேத ஞானம் கொண்ட ஒரு பிராமணன் ஆவேன். நான் விடுதலை பெற்றவன் {முக்தன்}. நான் ஒரு காட்டுத் துறவி. நான் ஓர் இல்லறத்தானின் கடமைகளை நோற்பவன். நோன்புகளையும் நோற்கிறேன்.(1)

நல்ல மற்றும் தீய செயல்களைக் கொண்டு நீ பார்க்கும் வகையில் நானில்லை. இவ்வண்டத்தில் உள்ள அனைத்திலும் நான் படர்ந்தூடுருவி இருக்கிறேன் {வியாபித்திருக்கிறேன்}.(2)

இவ்வுலகில் அசைவனவாகவோ, அசையாதனவாகவோ இருக்கும் உயிரினம் எதுவும், அனைத்து மரங்களிலும் உள்ள நெருப்பைப் போல அனைத்தையும் எரிப்பவனாக {அக்னியாக} என்னை அறிகின்றன.(3)

(ஒரு கையில்) மொத்த உலகத்தின் ஆட்சியுரிமையோ, சொர்க்கத்தின் ஆட்சியுரிமையோ இருக்கிறது, அல்லது {மறுகையில்} (அண்டத்துடன் {பிரம்மத்துடன்} என்னை அடையாளம் காணும்) இந்த ஞானமும் {புத்தியும்} இருக்கிறது. ஞானமே {புத்தியே} என் செல்வமாகும்[1].(4)இல்லறத்தாராகவோ, காட்டில் வசிப்பவராகவோ, ஆசான்களுடன் வசிப்பவராகவோ, சந்நியாசிகளின் மத்தியில் வசிப்பவராகவோ அதை {புத்தியைப்} புரிந்து கொள்பவதே பிராமணர்களுக்கான ஒற்றைப் பாதையாகும்[2].(5)குழப்பமற்றவையான பல {வாழ்வுமுறை / ஆசிரம} அடையாளங்களின் மூலம் ஞானம் {புத்தி} ஒன்றே வழிபடப்படுகிறது. எந்த அடையாளங்களையும், வாழ்வுமுறைகளையும் பின்பற்றுவோர், அமைதியைத் தன் சாரமாகக் கொண்ட {அடக்கமுள்ள} புத்தியை அடைவதன் மூலம், பல்வேறு ஆறுகள் கடலில் கலப்பதைப் போல அந்த ஒன்றையே அடைகின்றனர்[3].(6)இந்தப் பாதையைப் புத்தியின் உதவியுடன் கடக்கலாமே அன்றி உடலால் முடியாது. செயல்களுக்குத் தொடக்கமும், முடிவும் உண்டு, உடலானது செயல்களையே தன் கட்டுகளாக {பந்தங்களாக்} கொண்டுள்ளது[4].(7)எனவே, ஓ! அருளப்பட்ட மங்கையே, மறுமையைக் குறித்த எந்த அச்ச உணர்வும் உனக்குத் தேவையில்லை. உண்மையான உட்பொருளில் {பிரம்ம ஞானத்தில்} உன் இதயத்தை {புத்தியைச்} செலுத்தினால் என் ஆன்மாவுக்குள் நீ வருவாய் {என்னுடைய ஆத்மாவை நீ அடைவாய்}” என்றார் {பிராமணர்}.(8)

க்ஷேத்ரஜ்ஞன் நானே! – அஸ்வமேதபர்வம் பகுதி – 34-பிராமணரும், அவரது மனைவியும், மனமும் புத்தியும் என்பதை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

பிராமணரின் மனைவி {பிராம்மணி}, “அற்பு புத்தி உள்ளவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனுமான ஒரு மனிதனால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. என் புத்தியானது மிகச் சிறியதாகவும், சுருக்கமானதாகவும், குழம்பியதாகவும் இருக்கிறது.(1) (நீர் சொல்லும்) ஞானத்தை அடைவதற்குரிய வழிமுறைகளை எனக்குச் சொல்வீராக. ஞானம் பாயும் அந்த ஊற்றுக் கண்ணைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றாள்.(2)

பிராமணர், “பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள புத்தியானது கீழ் அரணி என்றும்; ஆசான் மேல் அரணி என்றும், தவங்களும், சாத்திரங்களில் நல்ல அறிவும் {அந்த அரணிக்கட்டைகளுக்குள்} உராய்வை ஏற்படுத்தும் காரணிகள் என்றும் அறிவாயாக. அதனிலிருந்து ஞானமெனும் நெருப்பு உண்டாகும்.(3)” என்றார்.(3)

பிராமணரின் மனைவி, “இந்தப் பிரம்ம அடையாளத்தைப் பொறுத்தவரையில், எது க்ஷேத்ரஜ்ஞன் என்று பெயரிடப்படுகிறது? உண்மையில், அதை {அந்த அடையாளத்தைப்} பற்றக்கூடிய {அதைக் குறித்த} விளக்கம் எங்கே தோன்றுகிறது.?” என்று கேட்டாள்[1].(4)பிராமணர், “அவன் {க்ஷேத்திரஜ்ஞன்} அடையாளங்கள் அற்றவனாகவும், குணங்களற்றவனாகவும் இருக்கிறான். அவனே எனக் கருதப்படக்கூடிய எந்தக் காரணமும் இல்லை. எனினும், அவனைக் கைப்பற்றவோ, கைப்பாற்றாதிருக்கவோ உரிய வழிமுறைகளை உனக்குச் சொல்லப் போகிறேன்.(5)

நல்ல வழிமுறைகளைக் காணலாம்; வண்டுகளால் (உணரப்படும் மலர்களைப் போல) அவற்றை உணரலாம். அந்த வழிமுறைகள் செயல்களால் தூய்மையாக்கப்பட்ட புத்தியைக் கொண்டவையாகும். தூய்மையடையாத புத்தியைக் கொண்டோர், தங்கள் அறியாமையின் மூலம், அந்த உட்பொருள் ஞானம் மற்றும் பிறவற்றின் குணங்களோடு இருப்பதாகக் கருதுகிறார்கள்[2].(6) இது செய்யப்படவேண்டும், அல்லது இது செய்யப்படக்கூடாது என்று விடுதலையை {முக்தியை} அடைவதற்கான விதிகள் வகுக்கப்படவில்லை. எவரிடம் ஆன்ம அறிவு எழுகிறதோ அவனால் மட்டுமே காணவும், கேட்கவும் முடியும்[3].(7) புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ஒருவன், வெளிப்பட்டவற்றையும், வெளிப்படாதவற்றையும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பல பகுதிகளாகப் புரிந்து கொள்ள வேண்டும்.(8) உண்மையில் ஒருவன் வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட பல்வேறு பொருட்களையும், நேரடியாக உணரக்கூடிய அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது, எதற்கு மேல் எதுவும் இல்லையோ அது {பிரம்மஜ்ஞானம்}, (தியானம், தற்கட்டுப்பாடு முதலிய) பயிற்சிகளில் இருந்து உண்டாகும்” என்றார்[4]“.(9)அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “அப்போது, க்ஷேத்திரஜ்ஞன் அழிந்ததும் அந்தப் பிராமணரின் மனைவியுடைய மனமானது, க்ஷேத்திர ஞானத்தின் விளைவால் க்ஷேத்திரஜ்ஞனைக் கடந்த ஒன்றானது” என்றான்[5].(10)அர்ஜுனன், “உண்மையில், ஓ! கிருஷ்ணா, இத்தகைய வெற்றியை அடைந்தவர்களான அந்தப் பிராமணனின் மனைவியும், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரும் எங்கே இருக்கின்றனர். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இது குறித்து எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(11)

அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன}“என் மனமே அந்தப் பிராமணன் என்றும், என் புத்தியே அந்தப் பிராமணனின் மனைவி என்றும் அறிவாயாக. ஓ! தனஞ்சயா, க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லப்படுபவன் நானே” என்றான்.(12)

பரப்பிரம்ம ஸ்வரூபம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 35-பரப்பிரம்மத்தையும், அதனை அடையும் வழிமுறையையும் குறித்து ஓர் ஆசானுக்கும், சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், முனிவர்களுக்குப் பிரம்மன் சொன்னதையும் அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “உயர்ந்த அறிவுப்பொருளான பிரம்மத்தைக் குறித்து எனக்கு விளக்குவதே உனக்குத் தகும். உன் கருணையால் எனது மனம் நுட்பமானவையும், ஆய்வு சார்ந்தவையுமான இந்த விளக்கங்களில் திளைத்திருக்கிறது” என்று கேட்டான்.(1)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “பிரம்மம் குறித்த காரியத்தில் ஓர் ஆசானுக்கும், அவரது சீடருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழைய வரலாறு இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! பகைவர்களை எரிப்பவனே, ஒரு காலத்தில் ஒரு புத்திசாலி சீடன், (சுகமாக) அமர்ந்திருந்தவரும், கடும் நோன்புகளைக் கொண்டவரும், தன் ஆசானுமான ஒரு குறிப்பிடத்தக்க பிராமணரிடம், “உண்மையில், உயர்ந்த நன்மை யாது?(3) ஓ! புனிதமானவரே, உயர்ந்த நன்மையை அடைய விரும்பி, என்னை நான் உம் பாதங்களில் கிடத்திக் கொள்கிறேன். ஓ! கல்விமானான பிராமணரே, நான் கேட்பதை எனக்கு விளக்கிச் சொல்லுமாறு தலைவணங்கி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.(4)

ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனனே}, இவ்வாறு சொன்ன அந்தச் சீடனிடம் அந்த ஆசான், “ஓ! மறுபிறப்பாளனே, உன் ஐயங்கள் அனைத்திற்கும் நான் விளக்கம் சொல்வேன்” என்றார்.(5)

ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {அர்ஜுனனே}, தன் ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தன் ஆசானிடம் பேரர்ப்பணிப்பு கொண்டவனுமான அந்தச் சீடன், கூப்பிய கரங்களுடன் பின்வருமாறு பேசினான். ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, அவன் சொன்னதைக் கேட்பாயாக.(6)

அந்தச் சீடன், “நான் எங்கிருந்து வந்தேன்? நீர் எங்கிருந்து வந்தீர்? உயர்ந்த உண்மை எதுவோ அதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் எந்த மூலத்திலிருந்து உண்டாகின?(7) உயிரினங்கள் எதைக் கொண்டு வாழ்கின்றன? அவற்றின் வாழ்வின் அளவு எவ்வளவு? உண்மை எது? ஓ! கல்விமானான பிராமணரே, தவம் எது? நல்லோரால் குணங்கள் என்றழைக்கப்படுவன எவை?(8) மங்கலப் பாதைகள் என்றழைக்கப்படுபவை எவை? மகிழ்ச்சி எது? பாவம் எது? ஓ! புனிதமானவரே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, ஓ! கல்விமானான முனிவரே, என்னுடைய இந்தக் கேள்விக்கு, சரியாகவும், உண்மையாகவும், துல்லியமாகவும் பதிலளிப்பதே உமக்குத் தகும். இவ்வுலகத்தில் {இம்மையில்} இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவல்ல வேறு நபர் யார் இருக்கிறார்?(9,10) ஓ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, இவற்றுக்குப் பதிலளிப்பீராக. என் ஆவல் பெரிதாக இருக்கிறது. விடுதலை {முக்தி} குறித்த கடமைகளில் நன்கு திறம்பெற்றவராக உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவர் நீரே.(11) அனைத்து வகை ஐயங்களையும் களையவல்லவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை. உலக வாழ்வுக்கு அஞ்சி, விடுதலையை அடைய நாம் விரும்புகிறோம்” என்றான்.(12)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனனே}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவனே, தன் ஆசானிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அமைதியுடையவனும், (ஆசானுக்கு) ஏற்புடைய வகையில் எப்போதும் நடந்து கொள்பவனும், கிட்டத்தட்ட ஆசானின் நிழலாகவே அவரது பக்கத்தில் நிலையாக வாழ்ந்தவனும், தற்கட்டுப்பாடுடையவனும், யதியின் வாழ்வை வாழ்ந்தவனும், பிரம்மச்சாரியும், பணிவுடன் அவரது அறிவுரையை நாடியவனுமான அந்தச் சீடனிடம், நுண்ணறிவு மிக்கவரும், நோன்புகளை நோற்பவருமான அந்த ஆசான், அனைத்துக் கேள்விகளுக்கும் முறையான விளக்கங்களைச் சொன்னார்”.(13,14)

ஆசான், “(பழங்காலத்தில்) இவை அனைத்தும் (உலகங்கள் அனைத்திற்கும் பெரும்பாட்டனான) பிரம்மன் மூலம் அறிவிக்கப்பட்டன. முனிவர்களில் முதன்மையானவர்களால் மெச்சப்படுவதும், பயிலப்படுவதும், வேத அறிவைச் சார்ந்ததுமான அஃது உண்மையான உட்பொருளின் கருத்தைக் கொண்டதாகும்.(15) நாம் ஞானத்தையே உயர்ந்த நோக்கமாகவும், துறவையே சிறந்த தவமாகவும் கருதுகிறோம். சூழ்நிலைகளால் மாற்றமடையாததும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் இருப்பதுமான ஆன்ம {ஆன்மா} அறிவின் உண்மை நோக்கத்தை நிச்சயமாக அறிந்தவன், எங்குச் செல்ல விரும்பினாலும், அங்கே செல்வதில் வென்று உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

கல்விமானும், அனைத்துப் பொருட்களின் வசிப்பிடத்தையும் ஒரே இடத்தில் காண்பவனும், அதன் கடுமையைக் காண்பவனும்,(16,17) பன்மையில் ஒருமையைக் காண்பவனுமான ஒருவன் பேரிடரில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் வெல்கிறான்[1]. எதையும் ஆசைப்படாதவனும், எந்தப் பொருளிலும் எனது என்ற கருத்தை வளர்க்காதவனுமான ஒருவன்,(18) இவ்வுலகில் வசித்தாலும், பிரம்மத்துடன் அடையாளங்காணப்படுபவனாகக் கருதப்படுவான். பிரதானத்தின் (அல்லது இயற்கையின்) குணங்களைக் குறித்த உண்மையை அறிந்தவனும், இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களின் படைப்பையும் அறிந்தவனும்,(19) எனது என்ற கருத்தை அமைத்துக் கொள்ளாதவனும், செருக்கற்றவனுமான ஒருவன், தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} நிச்சயம் வெல்வான்.வெளிப்படாததைத் தன் முளைப்பயிராகக் கொண்டதும், புத்தியைத் தன் தண்டாகக் கொண்டதும், உயர்ந்த சுய நினைவை {பெரிய அகங்காரத்தைத்} தன் கிளைகளாகக் கொண்டதும், உயிரணுவின் உணர்வுகளைத் தன் தளிர்களாகக் கொண்டதும், (ஐம்)பெரும்பூதங்களைத் தன் மலர் மொட்டுகளாகக் கொண்டதும், இலைகளுடன் கூடியவையும், மலர்களை எப்போதும் கொண்டவையுமான கொம்புகளாகத் திரள்கூறுகளைக் கொண்டதும், இருப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் சார்ந்திருப்பதும், பிரம்மத்தையே வித்தாகக் கொண்டதும், நித்தியமானதுமான பெரும் மரத்தை முறையாகப் புரிந்து கொண்டு அறிவெனும் கூரிய வாளால் அனைத்து தத்துவங்களையும் வெட்டுபவன், பிறப்பிறப்பைக் கைவிட்டு இறவாமையை அடைகிறான் {அமரனாகிறான்}.(20-23) சித்தர் கூட்டங்களால் நன்கறியப்பட்டவையும், தொலை சுழல்கள் {முந்திய கல்பத்தில் உள்ளவையும்}, உண்மையில் நித்தியமானவையும், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் முதலியவை தொடர்பானவையுமான தீர்மானங்கள், அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகியவற்றை,(24) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, நான் உனக்கு அறிவிக்கப் போகிறேன். இவை நல்லவை என்றழைக்கப்படுபவையாக அமைந்திருக்கின்றன. ஞானம் கொண்ட மனிதர்கள், இவ்வுலகில் அவற்றைப் புரிந்து கொண்டு வெற்றியை அடைகிறார்கள்.(25)

பழங்காலத்தில், பிருஹஸ்பதி, பரத்வாஜர், கௌதமர், பார்க்கவர், வசிஷ்டர், கசியபர், விஷ்வாமித்திரர் ஆகியோர் ஒருவரையொருவர் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஒன்றுகூடினர். அனைத்துப் பாதைகளிலும் பயணித்து, தாங்கள் செய்த செயல்களால் களைப்படைந்த பிறகு அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு ஒன்றுகூடினார்கள்.(26,27) அந்த மறுபிறப்பாளர்கள், தவசியின் மகனான அங்கிரஸைத் தங்கள் தலைமையில் கொண்டு பெரும்பாட்டனின் {பிரம்மனின்} உலகத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்திருந்த பிரம்மனைக் கண்டார்கள்.(28) சுகமாக வீற்றிருந்து அந்த உயர் ஆன்மாவிடம் தலைவணங்கிய அந்தப் பெரும் முனிவர்கள், பணிவுள்ளவர்களாக உயர்ந்த நன்மையெனக் கருதப்படக்கூடிய இந்த முக்கியமான கேள்விகளை அவனிடம் கேட்டார்கள்.(29)

{அவர்கள்}, “ஒரு நல்ல மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? பாவத்தில் இருந்து ஒருவன் எவ்வாறு விடுதலை அடைவான்? எங்களுக்கு மங்கலமான பாதைகள் எவை? வாய்மை எது? பாவம் எது?(30) எந்தச் செயல்பாட்டின் மூலம் வடக்கு {உத்தரம்}, தெற்கு {தக்ஷிணம்} எனும் இரு பாதைகள் {கர்மமார்க்கங்கள்} அடையப்படுகின்றன? அழிவு என்றால் என்ன? விடுதலை {முக்தி} என்றால் என்ன? இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களின் பிறப்பும், இறப்பும் என்னென்ன?” {என்று கேட்டனர்}.(31)

ஓ! சீடா, இவ்வாறு கேட்கப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} சாத்திரங்களுக்கு இணக்கமான வகையில் அவர்களிடம் என்ன சொன்னான் என்பதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். நீ கேட்பாயாக.(32)

பிரம்மன், “அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் வாய்மையில் இருந்து பிறக்கின்றன. அவை தவத்தின் (அல்லது செயல்பாட்டின்) மூலமே வாழ்கின்றன. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவர்களே, இதைப் புரிந்து கொள்வீராக. அவற்றினுடைய செயல்பாடுகளின் விளைவால், தங்கள் சொந்த மூலத்தைக் கடந்து அவை வாழ்கின்றன[2].(33) வாய்மையானது, குணங்களுடன் கலக்கும்போது, எப்போதும் ஐந்து குறியீடுகளுடன் கொண்டதாகிறது. வாய்மையே பிரம்மன், வாய்மையே தவம், வாய்மையே பிரஜாபதி.(34) வாய்மையிலிருந்தே அனைத்து உயிரினங்களும் உண்டாகின. வாய்மையே இருப்பிலுள்ள அண்டமாகும். இதன்காரணமாகவே, யோகத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களும், கோபம் மற்றும் கவலையைக் கடந்தவர்களும், (ஒவ்வொருவரும் கடக்க வேண்டியதும், கீழே உள்ளதுமான சதுப்புநிலத்தைத் தவிர்த்து அனைவரும் செல்ல வேண்டிய) பாலமாக அறத்தைக் கருதுபவர்களுமான பிராமணர்கள் வாய்மையைப் புகலிடமாக அடைகின்றனர். ஒருவரையொருவர் தடுப்பவர்களும், ஞானம் கொண்டவர்களுமான பிராமணர்களையும், வகைகளையும் {வர்ணங்களையும்}, நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சார்ந்தவர்களையும் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(35-37) அறம் அல்லது கடமை என்பது நான்கு கால்களைக் கொண்டிருந்தாலும் ஒன்றேயாகும். மறுபிறப்பாளர்களே, மங்கலமானதும், நன்மையை விளைவிக்கக்கூடியதுமான பாதையைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன்.(38)ஞானம் கொண்ட மனிதர்கள், பிரம்மத்தோடு அடையாளங் காணப்படும் நிலையை அடைவதற்காக இந்தப் பாதையிலேயே தொடர்ந்து நடக்கிறார்கள். உயர்ந்ததும், புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமானதுமான அந்தப் பாதையைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன்.(39) உயர்வாக அருளப்பட்டவர்களே, எது உயர்ந்த இருக்கையோ அதை முழுமையாகவும் விரிவாகவும் புரிந்து கொள்வீராக. பிரம்மச்சாரிகளின் தொடர்புடைய வாழ்வுமுறையே {ஆசிரமமே} முதற்படியாகச் சொல்லப்படுகிறது.(40) இல்லறம் இரண்டாம் படியாகும். அதன் பிறகு காட்டுவாசமாகும். அதன் பிறகு வருவது, அத்யாத்மா தொடர்பான உயர்ந்த படி என்று அறியப்பட வேண்டும்[3].(41) அத்யாத்மாவை அடையாதவரை {சந்நியாசம் பெற்று ஆத்மதரிசனம் உண்டாகாதவரை} ஒருவன் ஒளி, வெளி (அல்லது ஆகாயம்), சூரியன், காற்று {வாயு} ஆகியவற்றையும் இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரையும் பார்க்க முடியாது.(42)(அத்யாத்மாவை அடைவதற்குரிய) வழிமுறைகளை நான் அறிவிக்கப் போகிறேன். அவற்றை நீங்கள் முதலில் புரிந்து கொள்வீராக. கனிகள், கிழங்குகள் மற்றும் காற்றை உண்டு, காடுகளில் வசிக்கும் தவசிகளால் பின்பற்றப்படும் காட்டு வாழ்வுமுறையானது {வானப்ரஸ்தாஸ்ரமமானது}, மூன்று மறுபிறப்பாள வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்} விதிக்கப்பட்டிருக்கிறது. இல்லற வாழ்வுமுறை {கிருஹஸ்தாஸ்ரமம்} அனைத்து வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்} விதிக்கப்பட்டிருக்கிறது.(43,44) ஞானம் கொண்டவர்கள், அறம் அல்லது கடமையானது நம்பிக்கையையே {சிரத்தையையே} தன் (முக்கியக்) குறியீடாகக் கொண்டுள்ளது என்று சொல்கின்றனர். இவ்வாறே தேவர்களிடம் செல்ல வழிவகுக்கும் பாதைகளை நான் உங்களுக்கு அறிவித்துவிட்டேன். இந்தப் பாதைகள் பக்திக்கான பாலங்களாகும்.(45) இவற்றில் ஒரு வாழ்வுமுறையைத் தனியாகப் பின்பற்றுபவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான மனிதன், உயிரினங்கள் அனைத்தின் உற்பத்தி மற்றும் அழிவை காலத்தில் புரிந்து கொள்வதில் எப்போதும் வெல்கிறான்.(46)

நான் இப்போது, அனைத்துப் பொருட்களிலும் பகுதிகளாக வசிக்கும் பூதங்களைக் காரணங்களுடனும், துல்லியமாகவும் அறிவிக்கப் போகிறேன்.(47) பேரான்மா {மஹத்தத்வம்}, புலப்படாதது {அவ்யக்தம்}, அஹங்காரம் (அடையாள உணர்வு), (அறிவு மற்றும் செயல்) புலன்கள் {இந்திரியங்கள்} பதினொன்று, ஐம்பெரும்பூதங்கள்,(48) ஐம்பூதங்களின் {ஒலி முதலிய} குறிப்பிடத்தக்க பண்புகள் ஆகியவை நித்திய படைப்பாக அமைகின்றன. இந்த இருபத்துநான்கு தத்துவங்களும் (இன்னும்) ஒன்றும் சொல்லப்பட்டன.(49) இந்தத் தத்துவங்கள் அனைத்தின் உற்பத்தியையும், அழிவையும் புரிந்து கொள்ளும் ஞானம் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் மத்தியில் மனிதனாக இருப்பவனுமான அந்த மனிதன், ஒருபோதும் மாயை அடையமாட்டான்.(50) தத்துவங்களையும், குணங்கள் அனைத்தையும், தேவர்கள் அனைவரையும் துல்லியமாகப் புரிந்து கொள்பவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைவதில் வெல்கிறான். கட்டுகள் {பந்தங்கள்} அனைத்தில் இருந்தும் விடுபடும் அத்தகைய மனிதன், களங்கமற்ற தூய்மை கொண்ட உலகங்கள் அனைத்தையும் அனுபவிப்பதில் வெல்கிறான்” என்றான் {பிரம்மன்}.(51)

தமஸ்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 36-தமோ குணத்தைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “புலப்படாததும், தெளிவில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதும் {நீக்கமற நிறைந்திருப்பதும்}, எப்போதும் நீடித்திருப்பதும், மாற்றமில்லாததுமாக எது இருக்கிறதோ, அதைக் குணங்கள் மூன்றைக் கொண்டதும், உட்பொருட்கள் {பூதங்கள்} ஐந்தைக் கொண்டதும், இணைவாசல்கள் ஒன்பதைக் கொண்டதுமான நகரமாக (அல்லது மாளிகையாக) அறிய வேண்டும்.(1) இது (பொருட்களை) வேறுபடுத்திப் பார்க்கும் மனம் உள்ளிட்ட பதினொன்றால் சூழப்பட்டதாகவும், புத்தியை ஆட்சியாளனாகக் கொண்டதாகவும், பதினொன்றின் தொகையாகவும் இருக்கிறது[1].(2) அதில் உள்ள மூன்று குழாய்கள் {நாளங்கள்} தொடர்ந்து அஃதை ஆதரிக்கின்றன. இவையே மூன்று நாடிகளாகும். தொடர்ந்து இயங்கும் இவை தங்கள் சாரமாக மூன்று குணங்களைக் கொண்டுள்ளன.(3) இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்} மற்றும் நல்லியல்பு {சத்வம்} ஆகிய இவை (மூன்றே) குணங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. இவை ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன.(4) இவை ஒன்றிலொன்று புகலிடத்தைக் கொள்கின்றன. இவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன. மேலும் இவை ஒன்றோடொன்று கலந்து இருக்கின்றன. ஐந்து (அடிப்படை) பூதங்கள் (இந்த) முக்குணங்களால் வகைப்படுத்தப்படுகின்றன {தனிச்சிறப்படைகின்றன}.(5)நல்லியல்பு {நற்குணம்/சத்வம்} இருளுக்கு {கெட்ட குணத்திற்குப்/ தமஸுக்குப்} போட்டியாகும் {எதிராகும்}. நல்லியல்புக்குப் போட்டியாக இருப்பது ஆசை {ரஜஸ்} ஆகும். நல்லியல்பும் ஆசைக்குப் போட்டியாக இருக்கிறது. நல்லியல்புக்கு இருள் போட்டியாகவும் இருக்கிறது.(6) எங்கே இருள் {தமஸ்} கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே ஆசை {ரஜஸ்} பாயக் காணலாம். எங்கே ஆசை {ரஜஸ்} கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே நல்லியல்பு {சத்வம்} பாயக் காணலாம்.(7) இருளானது {கெட்ட குணமானது/ தமஸ் குணமானது}, இரவை (அல்லது தெளிவின்மையைத்) தன் சாரமாகக் கொண்டிருப்பதை அறிய வேண்டும். {மற்ற இரண்டு குணங்களுடன் சேர்ந்து} மூன்று தன்மைகளைக் கொண்டிருக்கும் இது {தமஸ் குணம்} மாயை {மோஹம்} என்று(ம்) அழைக்கப்படுகிறது. இஃது அநீதியை (அல்லது பாவத்தைத்) தன் குறியீடாகக் கொண்டு எப்போதும் பாவம் நிறைந்த செயல்களிலேயே இருக்கிறது. இதுவே இருளின் இயல்பாக இருக்கிறது, மேலும் இது {கெட்ட குணம்} மற்றவற்றில் {மற்ற இரண்டு குணங்களிலும்} அடைபட்டிருப்பதாகவும் காணப்படுகிறது.(8) ஆசையானது {ரஜஸ் குணமானது} செயல்பாட்டையே தன் சாரமாகக் கொண்டிருக்கிறது. இது வெற்றிகரமான செயல்களுக்குக் காரணமாக அமைகிறது. இது மேலோங்கியிருக்கும்போது உற்பத்தியையே தன் குறியீடாக அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் கொண்டிருக்கிறது.(9) காந்தி, எளிமை மற்றும் நம்பிக்கை ஆகியன அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் நல்லியல்பின் {சத்வ குணத்தின்} வடிவங்களாக, அஃதாவது ஒளியாக இருப்பதாக நல்லோர் அனைவரும் கருதுகின்றனர்.(10)

அவற்றின் {தமஸ் குணத்தின்} தன்மைகளுடைய உண்மையான இயல்பை நான் காரணங்களுடன் இப்போது அறிவிக்கப் போகிறேன். இவற்றைத் திரட்டாகவும், தனித்தனியாகவும் கூறலாம். நீங்கள் அவற்றைப் புரிந்து கொள்வீர்களாக.(11) முற்றான மாயை {மோஹம்}, அறியாமை {அஞ்ஞானம்}, ஈகையின்மை {ஈயாமை}, செயலில் தீர்மானமின்மை {கர்மங்களை நிச்சயிக்காமை}, உறக்கம் {நித்திரை}, அகந்தை {கர்வம்}, அச்சம் {பயம்}, பேராசை, துயரம் {சோகம்}, நற்செயல்களை நிந்தித்தல் {புண்ணியத்தைத் தூஷிப்பது},(12) நினைவிழப்பு {மறதி}, தீர்மானத்தை எட்டுவதில் முதிர்ச்சியின்மை {நல்ல புத்தியின்மை}, நம்பிக்கையின்மை {நாஸ்திகனாக இருப்பது}, ஒழுக்க விதிகள் அனைத்தையும் மீறுதல் {கெட்ட நடை}, பாகுபாட்டை விரும்புதல் {யுக்தாயுக்தங்களை [தகுதி மற்றும் தகுதியின்மைகளைத்] தெரிந்து கொள்ளாமை}, குருட்டுத்தன்மை {எல்லா இந்திரியங்களையும் உள்ளபடி அறியாமை}, தீய நடத்தை {தாழ்ந்த ஜாதியின் தொழில்களைச் செய்வது},(13) செயற்திறன் இல்லாத போதே பெருமையடித்தல் {செய்யப்படாததைச் செய்யப்பட்டதாக நினைப்பது}, அறியாமையில் அறிவின் அனுமானம் {அஜ்ஞானத்தை ஞானமாக நினைப்பது}, நட்பின்மை (அல்லது பகைமை), தீய மனோநிலை {கெட்ட அபிப்பிராயம்}, நம்பிக்கையின்மை {அஸ்ரத்தை}, மூடப்புத்தி,(14) கோணல்புத்தி {நேர்மையில்லாமை}, சேர்ந்திருக்க இயலாமை {நல்லறிவின்மை}, பாவம் நிறைந்த செயல்பாடு {பாபகார்யம்}, புத்தியில்லாமை {அறியாமை}, எழுச்சியின்மை {(சோம்பல் முதலியவற்றால்) ஒன்றும் செய்யாமலிருப்பது}, தளர்ச்சி {பக்தியில்லாமை}, தற்கட்டுப்பாட்டின்மை {இந்திரியங்களை ஜயிக்காமலிருப்பது}, சிறுமையடைதல் {தரமிழத்தல் / இழிவான காரியத்தில் ஆசை}(15) ஆகிய இந்தக் குணங்கள் இருளுக்கு {தமஸ் குணத்திற்குச்} சொந்தமானவையாக அறியப்படுகின்றன.

இவ்வுலக மாயையுடன் தொடர்புடைய பிற மனநிலைகள் அனைத்தும் இருளின் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவையே. எப்போதும் பிறரைத் தவறாகப் பேசுவது, தேவர்களையும், பிராமணர்களையும் நிந்திப்பது,(16,17) ஈகையின்மை, பகட்டு, எண்ணமயக்கம், கோபம், மன்னிக்கும் தன்மை இல்லாமை, அனைத்து உயிரினங்களிடமும் பகைமை ஆகியன இருளின் {தமஸ் குணத்தின்} இயல்புகளாகக் கருதப்படுகின்றன.(18) (வீணான தன்மை அல்லது பயனற்ற தன்மையின் விளைவால்) செய்யப்படும் தகுதியற்ற செயல்கள் எவையும், (கொடையாளியின் தகுதியின்மை, அகாலம், பொருளில் உரிமையின்மை ஆகியவற்றின் விளைவால்) கொடுக்கப்படும் கொடைகள் எவையும், வீணாக உண்பதும் இருள் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவையே.(19) அவதூறு செய்வதில் ஈடுபடுதல், மன்னிக்கும் தன்மையின்மை, பகைமை, பகட்டு, நம்பிக்கையின்மை ஆகியவையும் இருளின் {தமஸ் குணத்தின்} இயல்புகளாகச் சொல்லப்படுகின்றன.(20) இவ்வுலக மனிதர்களில், இவை மற்றும் இவை போன்ற குற்றங்களை இயல்பாகக் கொண்டவர்களும், (சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும்) தடைகளை உடைப்பவர்களுமாக இருப்பவர்கள் அனைவரும் இருள் குணம் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவர்களாக {தாமஸர்களாகக்} கருதப்படுகிறார்கள்.(21)

எப்போதும் பாவம் நிறைந்த செயல்களையே செய்யும் இம்மனிதர்கள் பிறக்கும் கருவறைகளை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். {திர்யக் என்னும்} நரகத்திற்குச் செல்ல விதிக்கப்பட்ட அவர்கள் அந்த வகையிலேயே மூழ்குகிறார்கள். உண்மையில் அவர்கள் காட்டுமிராண்டி படைப்புகளாகப் (பிறக்கும்) நரகத்தில் மூழ்குகிறார்கள்.(22) அவர்கள் அசைவற்ற {உயிரூட்டமற்ற} பொருட்களாகவோ, விலங்குகளாகவோ, சுமை சுமக்கும் விலங்குகளாகவோ, ஊனுண்ணும் உயிரனங்களாகவோ, பாம்புகளாகவோ, புழுக்கள், பூச்சிகள் மற்றும் பறவைகளாகவோ;(23) முட்டையிடும் வகையைச் சேர்ந்த உயிரினங்களாகவோ, நான்கு கால்களைக் கொண்ட பல்வேறு உயிரினங்களாகவோ, மனிதர்களில் கிறுக்கர்களாகவோ, செவிடர்களாகவோ, ஊமைகளாகவோ, பயங்க நோய்களால் பீடிக்கப்பட்ட மனிதர்களாகவோ, தூய்மையற்றவர்களாகவோ ஆகிறார்கள்.(24) தீய நடத்தை கொண்ட இம்மனிதர்கள் எப்போதும் தங்கள் செயல்களின் குறியீடுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருளில் மூழ்குகிறார்கள். அவர்கள் எப்போதும் கீழ்நோக்கிய போக்கு கொண்டவர்களாக (கீழ்நோக்கி இடம் பெயர்பவர்களாக) இருக்கிறார்கள். இருளின் குணம் {தமஸ் குணம்} தொடர்புடைய இவர்கள் இருளில் மூழ்குகிறார்கள் {இவர்கள் அவாக்ஸ்ரோதஸுகள் [இழிவான கதியை அடைவதற்கேற்ற சித்த விருத்தியுள்ளவர்கள்] என்று சொல்லப்படுகின்றனர்}.(25)

அவர்கள் முன்னேற்றத்திற்கும், மேன்மையடைவதற்கும் உரிய வழிமுறைகளையும், உண்மையில் அவர்கள் அவர்கள் அடையும் வழிமுறைகளையும் இப்போது நான் சொல்லப் போகிறேன்.(26) மனித வகையன்றி வேறு வகையில் பிறவி எடுக்கும் மனிதர்கள், கடமைகளில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்களின் அறச் சடங்களை நோக்கமாகக் கொண்டு வளர்ந்து, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்ய விரும்பி,(27) அத்தகைய தூய்மைச் சடங்குகளின் துணை மூலம் மேல்நோக்கி உயர்வதில் வெல்கிறார்கள். உண்மையில், (தங்களை மேம்படுத்திக் கொள்ளப்) போராடும் அவர்கள் இறுதியாகப் பக்திமான்களான இந்தப் பிராமணர்கள் அடையும் அதே உலகங்களை அடைகிறார்கள். உண்மையில், அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள். இதுவே வேதத்தில் உள்ள திறனாய்வாகும்.(28) மனித வகையன்றி வேறு வகையில் பிறவி எடுப்பவர்கள், தங்கள் தங்கள் செயல்களுக்கேற்ப வளர்ந்து முதிர்ந்து, இறுதியில் அவ்வாறே மனிதப் பிறவியையும் அடைகிறார்கள்.(29) பாவம் நிறைந்த பிறவிகளாகச் சண்டாளர்களாகவோ, செவிடர்களாகவோ, குருடர்களாகவோ பிறக்கும் அவர்கள், இவ்வுலகின் போக்கில் இடம்பெயர்ந்து, சரியான முறையில் அடுத்தடுத்து உயர்ந்த சாதிகளை அடைந்து, சூத்திர வகையைக் கடந்து, இருள் {தமஸ் குணம்} தொடர்பான குணங்களின் விளைவுகளைக் கடக்கிறார்கள்.(30,31)

ஆசைக்குரிய பொருட்களில் பற்றுக் கொள்வது பெரும் மாயையெனக் கருதப்படுகிறது. தவசிகள் {வேத மந்திரங்களைக் கண்டவர்கள்; சிறந்த ஞானமுள்ளவர்கள்}, முனிவர்கள் {மனனம் செய்பவர்கள், இன்பதுன்பங்களில் கலக்கமடையாதவர்கள்}, தேவர்கள் ஆகியோரும் இம்மையில் இன்பத்தை விரும்பி மயக்கமடைகின்றனர்.(32) இருள், மாயை, பெரும் மாயை, கோபம் மற்றும் மரணம் என்றழைக்கப்படும் பெருங்குழப்பமான {தாமிஸ்ரம் மற்றும் அந்ததாமிஸ்ரம்} குருடாக்கும் தெளிவின்மை (ஆகிய இவையே ஐந்து பெருந்துன்பங்களாகும்). கோபமே பெரும் தெளிவின்மையாகும் (சில வேளைகளில் இந்தப் பட்டியலில் சேரும் பகைமையோ, வெற்றோ அல்ல).(33) கல்விமான்களான பிராமணர்களே, இருளின் (தமஸ் குணத்தின்) நிறம் (இயல்பு), தன்மை, தோற்றம் ஆகியவற்றைப் பொருத்தவரையில், அனைத்தையும் முறையான வரிசையில் மிகச் சரியாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.(34) இஃதை உண்மையில் புரிந்து கொள்பவன் யார்? இஃதை உண்மையில் காண்பவன் யார்? உண்மையில் இல்லாததை உண்மையாகக் காண்பதே, இருளின் {தமஸ் குணத்தின்} உண்மையான தன்மையாகும்.(35) இருளின் குணங்கள் பல்வேறு வகைகளில் உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இருளின் உயர்ந்த மற்றும் இழிந்த வடிவங்களை முறையாக என்னால் உங்களுக்கு விளக்கப்பட்டது. இங்கே குறிப்பிடப்பட்ட குணங்களை எப்போதும் மனத்தில் தாங்கும் மனிதன், இருள் தொடர்புடைய தன்மைகள் அனைத்தில் இருந்தும் நிச்சயம் விடுபடுவதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்}.(36)

ரஜஸ்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 37-ரஜோ குணத்தைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “இருப்பவற்றுள் சிறந்தவர்களே {பிராமணர்களே}, இப்போது ஆசை (குணம்) குறித்து {ரஜோ குணத்தை} உங்களுக்கு மிகச் சரியாக அறிவிக்கப் போகிறேன். உயர்வாக அருளப்பட்டவர்களே, ஆசை தொடர்புடைய குணங்கள் எவை என்பதைப் புரிந்து கொள்வீராக.(1)

(பிறருக்குத்) தீங்கிழைத்தல் {ஸந்தாபம்}, அழகு {ரூபம்}, உழைப்பு {ஸ்ரமம்}, இன்பம் {ஸுகம்} மற்றும் துன்பம் {துக்கம்}, குளிர் மற்றும் வெப்பம், தலைமை (அல்லது அதிகாரம்) {ஐஸ்வர்யம்}, போர் {சண்டை}, அமைதி, வாதம், நிறைவின்மை {வெறுப்பு}, நீடிக்குந்திறன் {பொறுமை},(2) வலிமை {பலம்}, வீரம் {சௌர்யம்}, செருக்கு {மதம்}, கோபம், முயற்சி {அலைதல்}, சச்சரவு (அல்லது மோதல்) {கலகம்}, பொறாமை, ஆசை, வன்மம் {கோள் சொல்வது}, போர் {யுத்தம்}, எனதென்ற உணர்வு அல்லது மமதை, (பிறரைப்) பாதுகாப்பது {ரக்ஷிப்பது},(3) கொலை, கட்டுதல், பீடித்தல், வாங்கல் மற்றும் விற்றல், வெட்டுதல், மற்றொருவன் அணிந்திருக்கும் கவசத்தைப் பிளத்தல்,(4) கடுமை {உக்ரம்}, கொடூரம் {பயங்கரம்}, நிந்தித்தல் {உரக்கப் பேசுதல்}, பிறர் குற்றங்களைச் சுட்டிக் காட்டல் {பிறனுடைய தனத்தில் ஆசைப்படுவது}, உலகம் சார்ந்த காரியங்களில் முற்றான அர்ப்பணிப்புள்ள எண்ணங்கள் {லோகத்தைப் பற்றின கவலை}, கவலை {தொடர்ச்சியான கவலை}, பகைமை {மாத்ஸர்யம்}, பிறரை நிந்தித்தல் {அவமதித்துப் பேசுவது}, போலிப் பேச்சு {பொய் சொல்வது}, போலியான அல்லது வீணான கொடைகள் {பொய்யான கொடை}, தயக்கம் மற்றும் ஐயம், பேச்சில் தற்பெருமை {விபரீதப் பேச்சு}, புகழ் {ஸ்தோத்திரம் செய்வது} மற்றும் இகழ் {நிந்திப்பது}, போற்றுதல் {கொண்டாதுவது}, ஆற்றல் {ப்ரதாபம்}, எதிர்ப்பு {பரிசர்யை},(5,6) (நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்களைக்) கவனித்தல் {சுஸ்ரூஷை, அதட்டல்}, (ஆசான்கள் மற்றும் பெற்றோரின் ஆணைகளுக்குக்) கீழ்ப்படிதல் {அடுப்பது}, தொண்டு {ஸேவை} அல்லது இக்கட்டில் உதவி, ஆசை அல்லது தாகத்தை வளர்த்தல், புத்திசாலித்தனம் அல்லது திறமையான நடத்தை {வியவஹாரத்தில் திறமை}, கொள்கை {நீதி பேசுவது}, கவனமின்மை {தவறுதல்}, தரக்குறைவாக நடத்தல் {அபவாதம் சொல்வது}, உடைமைகள் {எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது},(7) மனிதர்கள், பெண்கள், விலங்குகள், உயிரற்ற பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு மத்தியில் நீடித்திருக்கும் பல்வேறு வகையான அலங்காரங்கள்,(8) துயரம் {மனவருத்தம்}, நம்பிக்கையின்மை, நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் {நியமங்கள்}, (நல்விளைவுகளை) எதிர்பார்க்கும் செயல்பாடுகள், பொதுத் தொண்டுக்குரிய பல்வேறு செயல்கள்,(9) ஸ்வாஹாவைப் பொறுத்தவரையில் உள்ள சடங்குகள் {ஸ்வாஹாகாரம்}, வணக்கம் {நமஸ்காரம்}, ஸ்வதா மற்றும் வஷட் சடங்குகள் {ஸ்வதாகாரம், வஷட்காரம்}, பிறரின் வேள்விகளை நடத்தித் தருதல் {யாகம் செய்விப்பது}, கல்வி போதித்தல் {ஓதுவித்தல்}, வேள்விகளைச் செய்தல் {யாகம் செய்தல்}, கல்வி {அத்யயனம் செய்வது},(10) கொடையளித்தல் {கொடுப்பது}, கொடையேற்றல் {வாங்குவது}, பரிகாரச் சடங்குகள் {பிராயச்சித்தங்கள்}, மங்கலச் செயல்கள் {மங்களமான காரியம்}, இதையும், அதையும் வேண்டி விரும்புதல், எதற்காகவோ, யாருக்காகவோ உணரப்படும் நோக்கத்தின் தகுதிகளில் உண்டாகும் அன்பு {ஸ்நேகம்},(11) துரோகம் ,வஞ்சனை {கபடம்}, மதிப்பு மற்றும் மதிப்பின்மை, களவு {திருட்டு}, கொலை {ஹிம்ஸை}, மறைக்கும் ஆசை {அருவருப்பு}, சோர்வு {மனவருத்தம்}, விழிப்புணர்வு,(12) பகட்டுத்தோற்றம் {டம்பம்}, அகந்தை {கர்வம்}, பற்று {ஆசை}, அர்ப்பணிப்பு {பக்தி}, மனநிறைவு {திருப்தி}, மகிழ்ச்சி {மிகுந்தஸந்தோஷம்}, சூதாட்டம், மரபுநயக்கேடு {ஜனங்களைப் பற்றிய பேச்சு}, பெண்களில் இருந்து எழும் உறவுகள் {ஸம்பந்தங்கள்}அனைத்தும், ஆடல் {நர்த்தனம்}, கருவியிசை {வாத்தியம்} மற்றும் பாடல்களில் {கானம்} பற்று {அனுபவித்தல்} ஆகிய இந்தக் குணங்கள் அனைத்தும் ஆசைக்குரியவை {ரஜோகுணத்திற்குரியவை} என்று சொல்லப்படுகின்றன.(13,14)

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைத் தியானிப்பவர்களும், அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற முத்தொகையில் {புருஷார்த்தங்களில்} அர்ப்பணிப்புள்ளவர்களும்,(15) ஆசையின் தூண்டுதலால் செயல்பட்டு, ஒவ்வொரு ஆசையின் பொருட்டும் செல்வத்தை அடைவதில் களிப்படைபவர்களுமான மனிதர்கள், ஆசையால் {ரஜோகுணத்தால்} சூழப்பட்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இம்மனிதர்கள் கீழ்நோக்கிய போக்கைக் கொண்டவர்களாவர் {அர்வாக்ஸ்ரோதஸுகள்}.(16) மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் இவர்கள், இன்பத்திற்கு வசப்பட்டவர்களாகிறார்கள். இம்மைக்கு உரியவற்றிலும், மறுமைக்குரிய கனிகளிலும் இவர்கள் ஆசை கொள்கிறார்கள். இவர்கள் கொடை அளிப்பவர்களாகவும், கொடைகளை ஏற்பவர்களாகவும், பித்ருக்களுக்குக் காணிக்கைகளை அளித்து, வேள்வித்தீயில் ஆகுதிகளை ஊற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.(17) ஆசை குணங்களின் வகைகள் உங்களுக்கு (இவ்வாறே) அறிவிக்கப்பட்டன. அது {ரஜோ குணம்} வழிவகுக்கும் ஒழுக்க நடைமுறைகளும் உங்களுக்கு முறையாக விளக்கப்பட்டன. இந்தக் குணங்களை எப்போதும் புரிந்து கொள்ளும் மனிதன், ஆசை {ரஜோ குணம்} தொடர்புடைய இவை அனைத்தில் {ராஜஸமான எல்லாக் குணங்களில்} இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்வதில் வெல்கிறான்” என்றான் {பிரம்மன்}.(18)

ஸத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 38

பிரம்மன், “இனி, (நமது பட்டியலின்படி) மூன்றாவதாக வரும் சிறந்த குணத்தை {ஸத்வ குணத்தை} உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அஃது, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதாகவும், குற்றமற்றதாகவும், நல்லோரின் ஒழுக்கமாகவும் அமைந்திருக்கிறது.(1)

இன்பம் {ஆனந்தம்}, நிறைவு {பிரீதி}, மேதகைமை {மேன்மை}, அறிவொளி {பிரகாசித்தல்}, மகிழ்ச்சி {ஸுகம்}, கஞ்சத்தனமின்மை (அல்லது ஈகை) {தைன்யமில்லாதிருத்தல்}, அச்சமின்மை {பயமில்லாதிருத்தல்}, மனநிறைவு {ஸந்தோஷம்}, நம்பிக்கை கொண்ட மனநிலை {ஸ்ரத்தை},(2) மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துணிவு {தைரியம்}, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமை {அஹிம்ஸை}, சமத்துவம், வாய்மை, நேர்மை, கோபமின்மை, வன்மமின்மை {அஸூயையின்மை}, தூய்மை {சுத்தி}, புத்திக்கூர்மை {ஸாமர்த்தியம்}, ஆற்றல் {பாரக்ரமம்} (ஆகியவை நல்லியல்பின் குணம் தொடர்புடையனவாகும்).(3)

யோகக்கடமையில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், அறிவு {ஞானம்}, ஒழுக்கம் {கர்மம்}, தொண்டு {ஸேவை} ஆகியவற்றை வீணெனக் கருதி, மறுமையில் உயர்ந்ததை அடைகிறான்.(4) எனதென்ற கருத்தில் இருந்து விடுதலை, நானென்ற கருத்தில் இருந்து விடுதல், எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதல், அனைத்தையும் சம கண்ணில் பார்த்தல், ஆசையில் இருந்து விடுதலை ஆகிய இவையே நல்லோரின் நித்திய அறமாக {ஸனாதன தர்மமாக} அமைகின்றன.(5)

தன்னம்பிக்கை {நம்பிக்கை}, அடக்கம் {வெட்கம்}, மன்னிக்கும்தன்மை {பொறுமை}, துறவு {ஈதல்}, தூய்மை {சுத்தி}, சோம்பலின்மை, கொடூரமின்மை, மயக்கமின்மை {மோகமின்மை}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, இழித்துக் கூறும் மனமின்மை {கோள் சொல்லாமை},(6) மகிழ்ச்சி {ஸந்தோஷம்}, நிறைவு {திருப்தி}, பேர் உவகை {கர்வமின்மை}, பணிவு {வணக்கம்}, நன்னடத்தை {நல்ல கார்யத்தைச் செய்வது}, அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட செயல்கள் அனைத்திலும் தூய்மை {மோக்ஷத்திற்குரிய கர்மத்தைக் கபடமின்றிச் செய்தல்}, நேர்மையான புத்தி {சுத்தசித்தனாக இருத்தல்}, (பற்றுகளிலிருந்து) விடுதலை),(7) கருத்தின்மை {உதாஸீனனாக இருப்பது}, பிரம்மச்சரியம், முழுமையான துறவு {எல்லா ஆசைகளையும் விடுவது}, எனதென்ற கருத்தில் இருந்து விடுதலை {மமதையில்லாமை}, எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை {விரும்பாமை}, தொடர்ந்து நீதியைக் கடைப்பிடித்தல் {தர்மங்கெடாமல் இருப்பது},(8) கொடைகள் {தானம்}, வேள்விகள் {யாகம்}, கல்வி {அத்யயனம்}, நோன்புகள் {விரதம்}, கொடையேற்பு {பிரதிக்ரஹம்}, கடமைகளை நோற்றல், தவங்கள் ஆகியன வீணென்ற நம்பிக்கை,(9) என்ற இந்தக் குணங்களை ஒழுக்கமாகக் கொண்டவர்களும், நீதியைப் பின்பற்றுபவர்களும், வேதங்களுக்கு இணக்கமாக இருப்பவர்களுமான பிராமணர்கள், ஞானிகள் என்றும், சரியான பார்வை கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.(10)

பாவங்கள் அனைத்தையும் கைவிட்டு, துன்பத்தில் இருந்து விடுதலையடைந்தவர்களும், ஞானம் கொண்டவர்களுமான அம்மனிதர்கள், சொர்க்கத்தை அடைந்து, (தங்களுக்கென) பல்வேறு உடல்களைப் படைக்கிறார்கள்.(11)

சொர்க்கத்தில் வசிக்கும் தேவர்களைப் போலவே, இந்த உயர் ஆன்மாக்களும் தங்கள் மனத்தின் இயக்கத்தால் {ஈசித்வத்தால்} அனைத்தையும் ஆளும் சக்தி {வசித்வம்}, தற்கட்டுப்பாடு {லகுத்வம்}, நுட்பம் {அணுத்வம்} ஆகியவற்றை அடைகிறார்கள்.(12) இத்தகைய மனிதர்கள் மேல்நோக்கிய போக்கு கொண்டவர்களாக {ஊர்த்வஸ்ரோதஸுகளாகச்} சொல்லப்படுகிறார்கள். இவர்கள் அனைத்தையும் மாற்றியமைக்கவல்ல மெய்யான தேவர்களாக {வைகாரி தேவர்களாக} இருக்கிறார்கள். சொர்க்கத்தை அடையும் அவர்கள், தங்கள் இயல்பின்படியே அனைத்துப் பொருட்களையும் மாற்றி அமைக்கின்றனர்.(13) அவர்கள், தாங்கள் விரும்பும் பொருட்களை அடைந்து அவற்றை அனுபவிக்கின்றனர். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இவ்வாறே நான் நல்லியல்பின் {சத்வ} குணம் தொடர்புடைய ஒழுக்கத்தை உங்களுக்கு விளக்கிச் சொன்னேன். இவற்றை முறையாகப் புரிந்து கொள்ளும் ஒருவன் தான் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவான்.(14) நல்லியல்பு தொடர்பான குணங்களே குறிப்பாக அறிவிக்கப்பட்டன. அந்தக் குணங்களைக் கொண்ட ஒழுக்கமும் முறையாக நிறுவப்பட்டது. எந்த மனிதன் இந்தக் குணங்களை எப்போதும் புரிந்து கொள்வானோ, அவன் இந்தக் குணங்களில் பற்று கொள்ளாமலே இவற்றை அனுபவிப்பதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்}.(15)

முக்குணம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 39-முக்குணங்களைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “குணங்கள் அனைத்தையும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக அறிவிக்க இயலாது. ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} மற்றும் இருள் {தமஸ் குணங்கள்} ஒன்று கலந்த நிலையிலேயே காணப்படுகின்றன.(1) அவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. அவை ஒன்றையொன்று தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன. அதே போல அவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.(2) நல்லியல்பு {சத்வம்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது. இதில் ஐயமேதும் இல்லை. இருளும் {தமஸும்}, நல்லியல்பும் {சத்வமும்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது.(3) அவை ஒன்றாக இணைந்தும், கூட்டாக நகர்ந்தும் தங்கள் பயணத்தைச் செய்கின்றன. உண்மையில் காரணத்தோடோ, காரணமில்லாமலோ செயல்படும்போது அவரை ஒரே அமைப்பாகவே செயல்படுகின்றன.(4)

வளர்ச்சியில் எவ்வளவு வேறுபட்டாலும் ஒன்றோடொன்று சேர்ந்து செயல்படும் இவை அனைத்தும் பெருகும் வகையையும், குறையும் வகையையும் இப்போது அறிவிக்கப் போகிறேன்.(5) எங்கே (எடுத்துக்காட்டாக) தாழ்ந்த உயிரினங்களில் அதிக அளவில் இருள் {தமஸ்} இருக்கிறதோ, அங்கே ஆசை {ரஜஸ்} குறைவான அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறது.(6) எங்கே நடுநிலை உயிரினங்களில் அதிக அளவில் ஆசை {ரஜஸ்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} சிறிய அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடச் சிறிய அளவிலும் இருக்கிறது.(7) எங்கே மேல்நோக்கான போக்குக் கொண்ட உயிரினங்களில் அதிக அளவில் நல்லியல்பு {சத்வம்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} குறைந்த அளவிலும், ஆசை {ரஜஸ்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறதென அறியப்பட வேண்டும்.(8)

நல்லியல்பானது {சத்வம் என்பது} புலன்களில் மாற்றங்களை விளைவிக்கும் ஊற்றாகும். மேலும் அதுவே சிறந்த அறிவொளியாகவும் இருக்கிறது. நல்லியல்பைவிட உயர்ந்த கடமை வேறேதும் விதிக்கப்படவில்லை.(9) நல்லியல்பில் {சத்வத்தில்} நிலைத்திருப்பவர்கள் மேல்நோக்கிச் செல்கிறார்கள். ஆசையில் {ரஜஸில்} நிலைத்திருப்பவர்கள் நடுவில் இருக்கிறார்கள். இருளில் {தமஸில்} நிலைத்திருப்பவர்கள், தாழ்ந்த குணங்களால் வகைப்படுத்தப்பட்டுக் கீழ்நோக்கி மூழ்குவார்கள்.(10) இருள் {தமஸ்} சூத்திரனில் நிகழ்கிறது; ஆசை {ரஜஸ்} க்ஷத்திரியனிலும், உயர்ந்ததாக இருக்கும் நல்லியல்பு {சத்வம்} பிராமணனிலும் நிகழ்கின்றன. இவ்வாறே மூன்று குணங்களும் மூன்று வகைகளிலும் {வர்ணங்களிலும்} இருக்கின்றன.(11) தொலைவில் இருந்து கண்டாலும், இருள், நல்லியல்பு மற்றும் ஆசை என்ற குணங்கள் மூன்றும் கலந்த நிலையிலும், கூட்டாகவும் காணப்படுகின்றன. அவை ஒருபோதும் தனியான நிலையில் காணப்படுவதில்லை[1].(12)தீச்செயல் செய்யும் மனிதர்கள், சூரியன் எழுவதைக் கண்டு அச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் வழியில் வெப்பத்தால் பீடிக்கப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.(13) சூரியன் நல்லியல்பில் வளர்ந்தது; தீச்செயல் புரியும் மனிதர்கள் இருளை {தமஸைக்} குறிக்கின்றனர்; பயணிகள் தங்கள் வழியில் உணரும் வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் என்று சொல்லப்படுகிறது.(14) ஒளியைக் குறிக்கும் சூரியன் நல்லியல்பாகும் {ஸத்வமாகும்}; வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் கொண்டதாகும்; பர்வன் நாட்களில் சூரியன் மறைவது (அல்லது கிரஹணம்} இருளை {தமஸைக்} குறிக்கும் என்று அறியப்பட வேண்டும்.(15) இவ்வாறே இந்த முக்குணங்களும் ஒளியுடல்கள் அனைத்திலும் இருக்கின்றன. அவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வழிகளில் மீண்டும் மீண்டும் செயல்படுகின்றன.(16)

அசைவில்லா பொருட்களின் மத்தியில் இருள் {தமஸ்} குணம் அதிக அளவில் இருக்கிறது. ஆசை {ரஜஸ்} தொடர்புடைய குணங்கள், தொடர் மாற்றங்களுக்கு உட்படும் {அழகு, உறைப்பு, புளிப்பு உள்ளிட்ட} குணங்களாக அவற்றில் {அந்த அசைவற்ற பொருட்களில்} இருக்கின்றன. அவற்றின் எண்ணெய் தன்மையுள்ள குணங்கள், நல்லியல்பின் {சத்வத்தின்} தொடர்புடையனவாகும்[2].(17) பகலை மூன்று வகையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரவு மூன்று வகையாக இருக்குமாறே விதிக்கப்பட்டிருக்கிறது. பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, மாதங்கள், வருடங்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்}, ஸந்திகள்[3] ஆகியவையும் மூன்று வகையாக அறியத்தக்கவையே.(18) கொடுக்கப்படும் கொடைகள் மூன்று வகையாகும். அவற்றில் உண்டாகும் வேள்விகள் மூன்று வகையாகும். உலகங்கள் மூன்று வகையாகும்; தேவர்கள் மூன்று வகையாவர்; ஞானம் மூன்று வகையாகும்; பாதை அல்லது கதியும் மூன்று வகையாகும்.(19) கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், அறம், பொருள், இன்பம், பிராணன், அபானன், உதானன் ஆகியவையும் முக்குணங்களால் நிறைந்தவையே.(20)இவ்வுலகில் உள்ள எந்தப் பொருளிலும், அதில் உள்ள அனைத்திலும் முக்குணங்கள் நிறைந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் இந்த முக்குணங்களும் மாறி மாறி செயல்படுகின்றன.(21) உண்மையில், இந்த முக்குணங்களும் வெளிப்படாத ஒரு வடிவத்திலேயே எப்போதும் செயல்படுகின்றன. நல்லியல்பு {ஸத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் மூன்றின் படைப்பும் நித்தியமானவையே.(22) முக்குணங்களையும் உள்ளடக்கிய புலப்படாதது {அவ்யக்தமானது}, இருள் {தமஸ்}, காணப்படாதது {அவ்யக்தம்}, புனிதமானது {சிவம்}, நிலையானது {தாம்}, பிறப்பற்றது {ரஜஸ்}, கருவறை {யோனி}, நித்தியமானது {ஸநாதனம்}, இயற்கை {பிரகிருதி}, மாற்றம் அல்லது திருத்தம் {விகாரம்}, அழிவு {பிரளயம்}, பிரதானம், உற்பத்தி {பிரபவம்} மற்றும் ஈர்த்தல் {அப்யயம்}, வளர்ச்சியின்மை {அனுத்ரிக்தம்}, சிறிதல்லாதது (அதாவது பெரியது) {அநூனம்}, கலக்கமற்றது {அகம்பம்}, அசையாதது {அசலம்}, நிலையானது {த்ருவம்}, இருப்பில் உள்ளது {ஸத்}, இருப்பற்றது {அஸத்} என்று சொல்லப்படுகிறது.(23,24)

ஆன்மா தொடர்புடைய காரியங்களைத் தியானிப்போரால் இந்தப் பெயர்கள் அறியப்பட வேண்டும்.(25) புலப்படாததன் {அவ்யக்தத்தின்} பெயர்கள் அனைத்தையும், குணங்களையும், (அந்தக் குணங்களின்) தூய இயக்கங்களையும் {கதிகளையும்} மிகச் சரியாக அறிந்தவனும், பிரிவுகள் அனைத்தின் உண்மைகளையும் நன்கறிந்தவனும், உடலில் இருந்து விடுபட்டவனுமான {தேஹாபிமானம் விலகியவனுமான} மனிதன், குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு {கெடுதியற்றவனாகி} முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்” என்றான் {பிரம்மன்}.(23)

மஹத்தத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 40- மஹத்தத்வம் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், ” புலப்படாததிலிருந்து முதலில் பெரும் நுண்ணறிவைக் கொண்டதும், அனைத்துக் குணங்களின் ஊற்றுக்கண்ணுமான பேரான்மாவானது {மஹத்தத்வம்} உண்டானது. அதுவே முதல் படைப்பென்று சொல்லப்படுகிறது.(1) அந்தப் பேரான்மாவானது {மஹத்தத்வமானது}, பேரான்மா, மதி, விஷ்ணு, ஜிஷ்ணு, பெரும் வீரமிக்கச் சம்பு {சம்பு, வீர்யவான்}, புத்தி, ஞானமடைவதற்கான வழிமுறைகள் {பிரஜ்ஞை}, உணர்வதற்கான வழிமுறைகள் {உபலப்தி}, புகழ் {கியாதி}, துணிவு {த்ருதி}, நினைவு {ஸ்ம்ருதி} என்று ஒத்த சொற்களால் {ஒரே பொருளுள்ள பல சொற்களால்} குறிப்பிடப்படுகிறது. கல்விமானான ஒரு பிராமணன் இஃதை அறிந்து கொண்டு ஒருபோதும் மாயையால் தாக்கப்படாமல் இருக்க வேண்டும்.(2,3)

அஃது அனைத்துப் பக்கங்களிலும் கைகளையும், கால்களையும் கொண்டுள்ளது. அனைத்துப் பக்கங்களிலும் அது காதுகளைக் கொண்டுள்ளது. அண்டத்தில் உள்ள அனைத்திலும் அது படர்ந்தூடுருவி இருக்கிறது.(4) பெருஞ்சக்தி கொண்ட அஃது அனைத்தின் இதயத்திலும் நிலைத்திருக்கிறது. நுட்பமடைதல் {அணிமா / உடலைப் பஞ்சினும் ஒப்பதாக மாற்றிப் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் மறைதல்}, அதிக எடையற்றத் தன்மையடைதல் {லகிமா / கனமற்றதாகும் ஆற்றல்}, செல்வாக்கு {பிராப்தி / மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடையப் பெறுதல் / காலநிலைகளை மாறச் செய்தல்} ஆகியவை அதனுடையவையே. அஃது அனைத்திற்கும் தலைவனாகவும் {ஈசானனாகவும்}, பிரகாசத்தோடு அடையாளம் காணப்படுவதாகவும் {ஜோதியாகவும்}, சிதைவை அறியாததாகவும் {அழிவற்றதாகவும்} இருக்கிறது.(5)

புத்தியின் இயல்பைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும், நல்லியல்பின் மனநிலையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அனைவரும், தியானம் பயிலும் அனைவரும், எப்போதும் யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வாய்மையில் உறுதியாக இருப்பவர்களும், புலன்களை அடக்கியவர்களும், ஞானம் கொண்டவர்களும், பேராசையில் இருந்து விடுபட்டவர்கள், கோபத்தை வென்றவர்கள், உற்சாகம் நிறைந்த இதயங்களைக் கொண்டவர்கள், ஞானம் கொண்டவர்கள், எனது என்ற கருத்துகளில் இருந்து விடுபட்டவர்கள், அகந்தையற்றவர்கள் ஆகியோர் அதனையே அடைகின்றனர்.(6,7)

அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்ட இவர்கள் அனைவரும் மேன்மையான {மகத்துவ} நிலையை அடைகிறார்கள். புனிதமானதாகவும், உயர்ந்த இலக்காகவும் இருக்கும் பேரான்மாவை {மகத்தத்வத்தைப்} புரிந்து கொள்ளும் மனிதன், மாயையிலிருந்து விடுபட்டவனாகிறான்.(8) சுயம்புவான விஷ்ணு முதன்மையான படைப்புகளின் தலைவனாகிறான். {இதயக்} குகையில் கிடப்பவனும், பரமனும் {மேலானவன்}, புராதனனும் {புராணபுருஷனும்}, அண்ட வடிவம் கொண்டவனும் {விஷ்வரூபனும்}, பொன்னார்மேனியனும் {ஸுவர்ணமயனும்}, புத்தியுடன் கூடிய மனிதர்கள் அனைவரின் உயர்ந்த இலக்காக {புத்திமான்களின் சிறந்த கதியாக} இருப்பவனுமான அந்தத் தலைவனை {பிரபுவை} இவ்வாறு அறியும் புத்தியுள்ள மனிதன், புத்தியைக் கடந்தவனாக வாழ்கிறான்” என்றான் {பிரம்மன்}.(9)

அஹங்காரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 41-அஹங்காரம் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன்“முதலில் உண்டான அந்த மஹத் {நான் என்று உண்டானதால்) அஹங்காரம் என்றழைக்கப்படுகிறது. நான் என்று அஃது எழுந்தபோது, அஃது இரண்டாம் படைப்பென்று {ஸிருஷ்டி என்று}அழைக்கப்படலாயிற்று.(1)

அந்த அகங்காரத்தின் மாறுதல்களில் இருந்தே உயிரினங்கள் அனைத்தும் உண்டானதால், அதுவே {அஹங்காரமே} அவற்றின் {அந்த உயிரினங்களின்} பிறப்பிடம் {பூதாதி வைகாரிகன்} என்று சொல்லப்படுகிறது. அது தூய ஒளியாகவும் {தைஜஸனனாகவும்}, நனவுநிலையை ஆதரிப்பதாகவும் {சேதனனாகவும்} இருக்கிறது. அதுவே பிரஜாபதியாகும்[1].(2)-அஃது ஒரு தேவனாகவும், தேவர்களைப் படைப்பவனாகவும், மனமாகவும் இருக்கிறது. அதுவே மூவுலகங்களையும் படைக்கிறது. “இவை அனைத்தும் நானே” என எது உணருமோ அதுவே இதுவென {அபிமானம் / அகங்காரமெனச்} சொல்லப்படுகிறது.(3)

ஆன்மா தொடர்புடைய அறிவில் நிறைவுடன் இருப்பவர்களும், ஆன்மாவைத் தியானிப்பவர்களும், வேதகல்வி மற்றும் வேள்விகளின் மூலம் வெற்றியை அடைந்தவர்களுமான தவசிகளுக்கான நித்திய உலகம் {ஸனாதனமான லோகம்} {அனிருத்தனென்று பெயருள்ள} அதுவே {அஹங்காரமே} ஆகும்.(4)

ஆன்மாவின் நனவாலேயே ஒருவன் குணங்களை அனுபவிக்கிறான். அனைத்து உயிரினங்களுக்கும் தோற்றுவாயாக இருப்பதும், அனைத்து உயிரினங்களையும் படைப்பதுமான அஃது (அனைத்து உயிரினங்களையும்) இவ்வழியிலேயே உண்டாக்குகிறது. அதுவே அனைத்து மாற்றங்களையும் விளைவிக்கிறது. அதுவே அனைத்தையும் அசைய வைக்கிறது. தன்னொளியால் அதுவே அண்டத்திற்கும் ஒளியூட்டுகிறது” என்றான் {பிரம்மன்}.

அத்யாத்மம், அதிபூதம், தைவதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 42- பூதங்கள் முதலியவை அஹங்காரத்தில் இருந்து படைக்கப்பட்டன என்பதைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “உண்மையில் அகங்காரத்தில் இருந்தே ஐம்பெரும் பூதங்களும் பிறந்தன. அவை பூமி {பிருதிவி}, காற்று {வாயு}, ஆகாயம், நீர் {ஜலம்} மற்றும் ஐந்தாவதாக ஒளியாகும் {தேஜஸாகும்}.(1) இந்த ஐம்பெரும் பூதங்களில் ஒலி, தீண்டல், நிறம், சுவை மற்றும் மணம் ஆகியவற்றின் இயக்கத்தில் அனைத்து உயிரினங்களும் மயக்கமடைகின்றன.(2) ஞானிகளே, பெரும்பூதங்களுக்கு அழிவு ஏற்படப்போகும் நெருக்கத்தில், அண்டத்தின் அழிவுக்காலம் நெருங்கும் போது, அனைத்து உயிரினங்களும் பேரச்சத்தால் பீடிக்கப்படுகின்றன.(3) இருப்பிலுள்ள ஒவ்வொரு பொருளும் எதில் இருந்து உண்டானதோ அதிலேயே கறைந்து போகும். படைப்பு நடைபெற்ற வரிசைக்கு நேர்மாறான வகையில் அழிவு ஏற்படும். உண்மையில், பிறப்பைப் பொறுத்தவரையில் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றில் இருந்து பிறக்கின்றன.(4) இருப்பிலுள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் கறையும்போதும் {முற்பிறவியின்} வலிமைமிக்க நினைவைக் கொண்டவர்களான ஞானிகள் ஒருபோதும் கறைவதில்லை {லயமடைவதில்லை}.(5)

ஒலி, தீண்டல், நிறம், சுவை, ஐந்தாவதாக மணம் என்பன அதன் விளைவுகளாகும். எனினும், நிலையற்றவையான அவை மாயை {அநித்யம்} என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன.(6) பேராசை உண்டானதால் {பயன் கருதி செய்யப்பட்ட செயல்களால்} விளைந்தவையும், ஒன்றுக்கொன்று வேறுபடாதவையும், உண்மைத்தன்மை இல்லாதவையும், சதை மற்றும் குருதியுடன் இணைக்கப்பட்டு இருப்பவையும், ஒன்றையொன்று சார்ந்திருப்பவையும்,(7) ஆன்மாவுக்கு வெளியே இருப்பவையுமான இவை அனைத்தும் ஆதரவற்றவையாகவும், சக்தியற்றவையாகவும் இருக்கின்றன. பிரானன், அபானன், உதானன், சமானன், வியானன் ஆகிய(8) ஐந்து காற்றுகளும் {வாயுக்களும்} எப்போதும் ஆன்மாவுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவையாகும். வாக்கு, மனம், புத்தி ஆகியவற்றுடன் சேர்ந்திருக்கும் இவையே எட்டு உட்பொருட்களாலான அண்டமாக அமைகின்றன {இவை ஜீவனுக்கு மோக்ஷம் வரையில் நித்யமாக இருக்கும் ஸூக்ஷ்ம சரீரமாகும்}.(9) தோல், மூக்கு, காதுகள், கண்கள், நாக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியவனும், மனம் தூய்மையடைந்தவனும், (சரியான பாதையில் இருந்து) புத்தி பிறழாதவனும்,(10) எட்டு நெருப்புகளால் ஒருபோதும் எரிக்கப்படாத மனம் கொண்டவனுமான ஒருவன், தனக்கு மேலேதுமற்ற மங்கல பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.(11)

மறுபிறப்பாளர்களே, பதினோரு உறுப்புகள் என்று அழைக்கப்படுபவையும், அஹங்காரத்தில் எழுந்தவையும் பற்றி {புலன்களைப் பற்றி}நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(12) காதுகள் {செவி}, தோல் {த்வக்கு}, இரு கண்கள், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு, இரு கால்கள், குதம் {பாயு}, பிறப்புறுப்பு {குறி}, இரு கைகள், பத்தாவதாக வாக்கு ஆகியனவே அவை.(13) பதினோராவதாக மனத்தைக் கொண்ட இவையே புலன்களின் கூட்டமாக {இந்திரிய ஸமூஹமாக} அமைகின்றன. ஒருவன் முதலில் இந்தக் கூட்டத்தை வெல்ல வேண்டும். அப்போதுதான் (அவனில்) பிரம்ம ஒளி துலங்கும்.(14) இவற்றுள் ஐந்து அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} என்றும், ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} என்றும் அழைக்கப்படுகின்றன. காதுகள் முதலான ஐந்தும் உண்மையில் அறிவு தொடர்புடையனவாகச் சொல்லப்படுகின்றன.(15) எஞ்சியவை எந்த வேற்றுமையுமின்றிச் செயல்களோடு தொடர்புடையவையாக உள்ளன. மனமானது, இரண்டிற்கும் உரியவையாகக் கருதப்பட வேண்டும். உயர்ந்த நிலையில் இருக்கும் புத்தியானது பனிரெண்டாவதாக இருக்கிறது.(16) இவ்வாறு பதினோரு உறுப்புகளும் {புலன்களும்} முறையான வரிசையில் பட்டியலிடப்பட்டன. இவற்றைப் புரிந்து கொண்டே அனைத்தையும் தாங்கள் அடைந்துவிட்டதாகக் கல்விமான்கள் நினைக்கிறார்கள்.(17)

இதன் பிறகு, பல்வேறு வகையான உறுப்புகள் {புலன்கள்} அனைத்தையும் நான் பட்டியலிடப்போகிறேன். வெளியானது (அல்லது ஆகாயம் என்பது) முதல் அமைப்பாகும் {பூதமாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது காதுகள் என்று அழைக்கப்படுகிறது.(18) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அஃது ஒலியாகிறது. (இதன்) தலைமைத் தேவன் {அதிதைய்வதம்} திசைகளாகும். காற்றானது {வாயு என்பது} இரண்டாவது அமைப்பாகும் {பூதமாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது தோல் {த்வக்} என்று அறியப்படுகிறது.(19) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} தீண்டலுக்குரிய பொருட்கள் என்று அறியப்படுகிறது. இங்கே தலைமைத் தேவன் {அதிதைய்வதம்} தீண்டலாகும் {மின்னலாகும்}. ஒளி மூன்றாவதாகச் சொல்லப்படுகிறது. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது கண்கள் {நேத்திரம்} என்றறியப்படுகிறது.(20) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது நிறம் {ரூபம்} என்று அறியப்படுகிறது; சூரியனே அதன் தலைமைத்தேவனாவான் {அதிதைவதமாவான்}. நான்காவதாக (நான்காவது அமைப்பாக {பூதமாக}) நீர் {ஜலம்} அறியப்பட வேண்டும். ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது நாக்கு என்று சொல்லப்படுகிறது.(21) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது சுவை {ரஸம்} என்று சொல்லப்படுகிறது. இங்கே சோமன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். ஐந்தாவது அமைப்பு {பூதம்} பூமியாகும் {பிருதிவியாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது மூக்கு {க்ராணம்} என்று சொல்லப்படுகிறது.(22) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது மணம் {கந்தம்} என்று சொல்லப்படுகிறது; அங்கே காற்று {வாயு} தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். இவ்வாறே ஐந்து அமைப்புகளும் {பூதங்களும்} எவ்வாறு மூன்று தொகுப்புகளாகப் பிரிந்திருக்கின்றன என்பது அறிவிக்கப்பட்டது.(23)

இனி, (வேறு) புலன்கள் பலவற்றைக் குறித்த அனைத்தையும் நான் அறிவிக்கப் போகிறேன். பாதங்கள் இரண்டும் ஆன்மாவுடன் தொடர்புடையனவாக {அத்யாத்மமென்று) குறிப்பிடப்படுகின்றன என வாய்மை அறிந்த பிராமணர்கள் சொல்கின்றனர்.(24) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அஃது அசைவாக {நடையாக} இருக்கிறது. விஷ்ணு அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். கீழ்நோக்கிப் பாயும் அபானக் காற்றானது {அபான வாயுவானது} {அத்யாத்மமாக} ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது குதம் { பாயு} என்றழைக்கப்படுகிறது.(25) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது கழிவாக {மலஜலமாக} வெளியேறுகிறது. மித்ரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். பிறப்புறுப்பானது ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது அனைத்து உயிரினங்களையும் உண்டாக்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.(26) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அஃது உயிர்வித்தாக {சுக்ரம்-ஆக} இருக்கிறது. பிரஜாபதி {குறி} அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். கைகள் இரண்டும் ஆன்மாவுடன் தொடர்புடையனவென {அத்யாத்மமென்று) ஆன்ம உறவுகளை அறிந்த மனிதர்களால் குறிப்பிடப்படுகின்றன.(27) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது செயல்களாக {கிரியைகளாக} இருக்கிறது. இந்திரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான்.

அடுத்ததாக, தேவர்கள் அனைவருடன் தொடர்புடைய வாக்கு ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(28) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது பேசுபொருளாக {பேசப்படுவதாக} இருக்கிறது. அக்னி அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். ஐம்பூதங்களின் ஆன்மாவுக்குள் நகரும் மனமானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாகக்} குறிப்பிடப்படுகிறது.(29) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது மன இயக்கமாக {ஸங்கல்பமாக} இருக்கிறது. சந்திரமாஸ் {சந்திரன்} அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். உலகவாழ்வின் மொத்த இயக்கத்திற்கும் காரணமாக இருக்கும் அகங்காரமானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(30) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது நனவாக {அபிமானமாக} இருக்கிறது. ருத்ரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். {மனத்தோடு சேர்த்து} ஆறு புலன்களையும் தூண்டும் புத்தியானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(31) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது புரிந்து கொள்ளப்படும் ஒன்றாக {அறிவதாக} இருக்கிறது. பிரம்மன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான்.

இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் மூன்று இருக்கைகள் {ஸ்தானங்கள்} இருக்கின்றன. நான்காவது சாத்தியமற்றதாகும்.(32) அவை {அந்த இருக்கைகள்} நிலம், நீர் மற்றும் ஆகாயமாகும். பிறவிமுறை நான்கு வகைப்படும். முட்டைகளில் இருந்து சில பிறக்கின்றன {அண்டஜம்}; பூமியைப் பிளந்து மேல்நோக்கி எழும் புழுக்களில் இருந்து சில பிறக்கின்றன {உத்பிஜ்ஜம்}; கழிவுப்பொருட்களில் இருந்து சில பிறக்கின்றன {ஸ்வேதஜம்}; கருவறைகளின் சதைப்பந்துகளில் இருந்து சில பிறக்கின்றன {ஜராயுஜம்}.(33) இவ்வாறே உயிரினங்கள் அனைத்தும் நான்கு வகைப் பிறவிமுறைகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. வானத்தில் பறப்பவையும் {பறவைகளும்}, தங்கள் மார்புகளைக் கொண்டு தவழ்பவையும் {பாம்புகளும்}, வேறு சில தாழ்ந்த பிறவிகளும் முட்டைகளில் இருந்து பிறப்பவையாக அண்டஜங்களாக அறியப்பட வேண்டும்.(34) பூச்சிகளும், அதுபோன்ற வேறு உயிரினங்களும் {கிருமிகளும்} கழிவுப்பொருட்களில் இருந்து பிறப்பவையாக {ஸ்வேதஜங்களென்று} சொல்லப்படுகின்றன.(35) இவை இரண்டாம் பிறவிமுறை கொண்டவை என்றும், இழிந்தவையென்றும் சொல்லப்படுகின்றன. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, சில காலம் கழித்து, பூமியைப் பிளந்து வெளிவரும் உயிரினங்கள்,(36) புழுக்களில் இருந்து பிறந்தவை என்று {உத்பிஜ்ஜங்களென்று} சொல்லப்படுகின்றன. இரு கால்களையோ, பல கால்களையோ கொண்டவையும், குறுக்கும்நெடுக்கமாக நடப்பவையுமான {திர்யக்கான கதியுள்ளவையுமான} உயிரினங்கள்,(37) கருவறைகளில் பிறந்தவையாக {ஜராயுஜங்களாக} இருக்கின்றன. அவற்றிலும் சில பழுதுள்ள வடிவம் கொண்டவையாக {வேறுபாடுள்ளவைகளாக} இருக்கின்றன.

பிரம்மத்தின் நித்திய கருவறையை {பிரம்மஸாக்ஷாத்காரத்தை, தவம் என்றும், புண்ணியச் செயல்கள் என்றும் இருவகையாக அறியப்பட வேண்டும்[1]. இதுவே கல்விமான்களின் கோட்பாடாகும். செயல்பாடு {கர்மம்} என்பது வேள்வி, வேள்வியில் அளிக்கப்படும் கொடைகள், பிறவி அடைந்த ஒவ்வொருவருக்கும் புனிதக் கடமையான கல்வி எனப் பலவகைப்படும் என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்; இதுவே பழங்காலத்தவர்களின் போதனையாகும். மறுபிறப்பாளர்களின் தலைவர்களே, இதை முறையாகப் புரிந்து கொண்டவன் யோகத்தைக் கொண்டவன் {யோகி எனக்} கருதப்படுகிறான்.(38-40) அத்தகைய மனிதன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடுவான் என்பதையும் அறிவீராக. இவ்வாறே நான் அத்யாத்மக் கோட்பாட்டை முறையாக உங்களுக்கு அறிவித்தேன்.(41) கடமைகள் அனைத்தையும் அறிந்த முனிவர்களே, ஞானம் கொண்ட மனிதர்கள் என்று கருதப்படுபவர்களால் இந்த ஞானம் {அத்யாத்மவிதி} அடையப்படுகிறது. புலன்கள் {இந்திரியங்கள்}, புலன்நுகர்பொருட்கள் {இந்திரியவிஷயங்கள்}, ஐம்பெரும்பூதங்கள் {ஐந்துமஹாபூதங்கள்}என்ற இவை அனைத்தையும் சேர்த்தே ஒருவன் தன் மனத்தில் கொள்ள வேண்டும்[2].(42) (ஈர்ப்பின் மூலம்) அனைத்தும் மனத்திற்குள் மட்டுப்படும்போது ஒருவன் அதற்கு மேலும் வாழ்வின் இன்பங்களை மதிப்பதில்லை. ஞானம் கொண்ட புத்தியுடன் கூடிய கல்விமான்கள் அதையே உண்மையான இன்பமாகக் கருதுகிறார்[3].(43)இனி, அனைத்து உட்பொருட்களையும் பொருத்தவரையில், மென்மையான மற்றும் கடுமையான வழிமுறைகளின் மூலம் நுண் தத்துவங்களில் பற்றுதலை உண்டாக்குவதும், மங்கலம் நிறைந்ததுமான துறவை {நிவ்ருத்தியைக்} குறித்துச் சொல்லப் போகிறேன்.(44) குணங்களைக் குணங்களற்றவையாகக் கொண்டதும், பற்றிலிருந்து விடுபட்டதும், தனிமையில் வாழ்வதும், வேறுபாடுகளைக் காணாததும், பிரம்மம் நிறைந்ததுமான ஒழுக்கமே இன்பங்கள் அனைத்தின் பிறப்பிடமாகும்.(45) உறுப்புகள் அனைத்தையும் உள்ளீர்த்துக் கொள்ளும் ஆமையைப் போல அனைத்துப்புறங்களில் இருந்தும் ஆசைகள் அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் கல்விமானும், ஆசைகளற்றவனும், அனைத்தில் இருந்தும் விடுபட்டவனுமான மனிதன் எப்போதும் இன்பமாக இருக்கிறான்.(46) ஆசைகள் அனைத்தையும் தன் ஆன்மாவுக்குள் கட்டுப்படுத்தி, தாகத்தை அழித்து, தியானத்தில் குவிந்து, அனைத்து உயிரினங்களிடமும் நண்பனாகும் நல்லிதயம் கொண்டவன் பிரம்மத்துடன் ஒன்றிணைவதற்குத் தகுந்தவனாவதில் வெல்கிறான்.(47) தங்களுக்குரிய பொருட்களை {புலன்நுகர் பொருட்களை} எப்போதும் பின்தொடரும் புலன்களை அடக்குவதன் மூலமும், வசிப்பிடங்களைக் கைவிடுவதன் மூலமும், அத்யாத்ம நெருப்பானது {ஆத்மஜ்ஞானமென்கிற அக்னியானது}, தியானம் செய்யும் மனிதனிடம் சுடர்விட்டெரிகிறது.(48)

விறகுகளில் ஊட்டப்பட்ட நெருப்பானது, சுடர்மிக்கத் தழல்களை வெளிப்படுத்துவதன் மூலம் பிரகாசத்தை அடைவதை {ஒளியைத் தருவதைப்} போலவே பேராத்மாவானது, புலன்களை அடக்குவதன் விளைவால் பிரகாசிக்கிறது.(49) அமைதியான ஆன்மாவைக் கொண்ட ஒருவன் தன் இதயத்திற்குள்ளேயே அனைத்துப் பொருட்களையும் காணும்போது, தன்னொளியால் எரியும் அவன், நுட்பத்திலும் நுட்பமானதும், ஒப்பற்ற சிறப்பைக் கொண்டதும் எதுவோ அதை அடைகிறான்.(50) நெருப்பை நிறமாகவும், நீரையும், வேறு நீர்மங்களையும் குருதியாகவும், காற்றை {வாயுவைத்} தோலாகவும், பூமியை மனத்தைத் தாங்கும் அருவருக்கத்தக்கதாகவும் (சதை மற்றும் எலும்பு முதலியவையாகவும்), வெளியை (அல்லது வானத்தை) ஒலியாகவும் கொண்டதும்; நோய் மற்றும் கவலை பரவியதும்; ஐந்து ஓடைகளிலால் சுழப்பட்டதும்; ஐந்து பூதங்களால் ஆனதும்; ஒன்பது வாயில்களையும், இரண்டு தேவர்களையும் கொண்டதும்; (தூய்மையற்ற தன்மையின் காரணமாக) ஆசை நிறைந்ததும்; காணத்தகுதியற்றதும்; முக்குணங்களால் ஆனதும்; (காற்று {வாயு / வாதம்}, பித்தம், சளி {கபம்} என்ற) மூன்று கூறுகளைக் கொண்டதும்; அனைத்து வகைப் பற்றுகளிலும் இன்புற்றிருப்பதும், மாயை நிறைந்ததுமாக உடல் இருக்கிறது.(51-53)

இந்த மனித உலகில் அசைப்பதற்குக் கடினமானதாகவும், தன்னை ஆதரித்துக் கொள்ளப் புத்தியைச் சார்ந்திருப்பதுமாக அஃது இருக்கிறது. இவ்வுலகில் அவ்வுடலே தொடர்ந்து சுழலும் காலச்சக்கரமாக இருக்கிறது.(54) உண்மையில், பயங்கரமானதும், அடியற்ற பெருங்கடலுமான அது மோகம் என்றழைக்கப்படுகிறது. தேவர்களுடன் கூடிய (மொத்த) அண்டத்தையும் விழிப்படையச் செய்வதும் நீட்டுவதும், சுருக்குவதும் இவ்வுடலே ஆகும்.(55) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவன், நித்தியமானவையும், கைவிடுவதற்கு மிக அரியவையுமான காமம், கோபம், அச்சம், பேராசை, பகை, பொய்மை ஆகியவற்றைக் கைவிடுகிறான். உடலின் முக்குணங்களையும், ஐம்பூதங்களையும் இவ்வுலகில் அடக்கும் ஒருவன் சொர்க்கத்தில் உயர்ந்த இருக்கையை {ஸ்தானத்தைப்} பெறுகிறான். அவனாலேயே முடிவிலி {எல்லையற்ற பேரளவு} அடையப்படுகிறது.(57) ஐம்புலன்களெனும் பெரிய கரைகளைக் கொண்டதும், மனோவிருப்பங்களையே வெள்ளமாகவும், மோகத்தைத் தடாகமாகவும் கொண்ட அந்த ஆற்றைக் கடக்கும் ஒருவன் காமம் மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் அடக்க வேண்டும்.(58)

அத்தகைய மனிதன், குற்றங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, மனத்திற்குள் மனத்தைக் குவித்து, தன்னைத் தனக்குள் கண்டு உயர்ந்ததை {பரப்பிரம்மத்தைக்} காண்பான்.(59) அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்ளும் அவன், சில நேரங்களில் ஒன்றாகத் தோன்றுவதும், சில நேரங்களில் பலவாகவும் தோன்றுபவையும், காலாகாலத்திற்கு மாறிக் கொண்டே இருப்பவையுமான அனைத்து உயிரினங்களிலும் தன்னைத் தானே காண்கிறான்.(60) ஒரு விளக்கில் இருந்து நூறு விளக்குகள் உண்டாவதைப் போல அவனால் எண்ணற்ற உடல்களை உணர முடியும் என்பதில் ஐயமில்லை. உண்மையில், விஷ்ணு அவனே, மித்திரன், வருணன், அக்னி மற்றும் பிரஜாபதியும் அவனே.(61) படைப்பவனும், விதிப்பவனும் அவனே; அனைத்துத் திசைகளிலும் முகங்களைக் கொண்டவனும், பலம் கொண்டவனுமான தலைவன் அவனே. அனைத்து உயிரினங்களின் இதயமாக இருக்கும் அவனில் பேராத்மா {பரமாத்மா} ஒளிர்கிறான்.(62) கல்விமான்களான பிராமணர்கள், தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், பிசாசங்கள், பித்ருக்கள், பறவைகள், ராட்சசக்கூட்டங்கள்; பூத கணங்கள் மற்றும் பெரும் முனிவர்களின் கூட்டங்கள் அனைத்தும் அவனைப் புகழ்கின்றன” என்றான் {பிரம்மன்}.(63)

க்ஷேத்ரஜ்ஞன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 43-க்ஷத்திரியர்களிடம் ரஜோ குணத்தின் முக்கியத்துவம்; ஸத்வ குணம் கொண்ட பிராமணர்கள்; ஓவ்வொன்றின் சிறப்பியல்புகள்; தீங்கிழையாமை; க்ஷேத்ரஜ்ஞன் ஆகியவற்றைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்.

பிரம்மன், “மனிதர்களில் அரச க்ஷத்திரியர்கள் நடுக்குணம் {ரஜோ குணம்} கொண்டவர்கள். வாகனங்களில் யானை (அவ்வாறே); காட்டில் வசிப்பவற்றுள் சிங்கம்;(1) (வேள்வி) விலங்குகள் அனைத்திலும் ஆடு; வளைகளில் வாழ்பவற்றுள் பாம்பு; கால்நடைகளுக்கு மத்தியில் காளை; பெண்களுக்கு மத்தியில் ஆண்கள் (ஆகியோரும் அவ்வாறே).(2) இவ்வுலகில் நியக்ரோதம் {ஆல மரம்}, ஜம்பு {நாவல் மரம்}, பிப்பலம் {அரசமரம்}, சால்மலி {முள்ளிலவமரம்}, சிம்சபை {நூக்கம் / சீஷம்}, மேஷசிருங்கம், {மூங்கில் வகையைச் சார்ந்த} கீசகம் ஆகியவை மரங்களில் முதன்மையானவையாக இருக்கின்றன என்பதில் ஐயமில்லை.(3) ஹிமவான் {இமயமலை}, பாரிபாத்ரம் {பாரியாத்ரம்}, ஸஹ்யம், விந்தியம், திரிகூடவான், ஸ்வேதம், நீலம், பாஸம், கோஷ்டவான் {ராஷ்ட்ரவான்},(4) குருஸ்கந்தம் {ப்ருசஸ்கந்தம்}, மஹேந்திரம், மால்யவான் ஆகிவை மலைகளில் முதன்மையானவையாகும். அதே போல மருத்துகள் கணங்களில் முதன்மையானவர்கள் ஆவர்.(5)

கோள்கள் அனைத்திற்கும் சூரியனும், நட்சத்திரக்கூட்டங்கள் அனைத்திற்கும் சந்திரமாஸும் தலைவர்களாவர். யமன் பித்ருக்களின் தலைவனாவான்; பெருங்கடலானது ஆறுகள் அனைத்திற்கும் தலைமையானதாகும்.(6) வருணன் நீர்நிலைகளின் மன்னனாவான். இந்திரன் மருத்துகளின் மன்னனாவான். வெப்பங்கள் {உஷ்ணங்கள்} அனைத்திற்கும் அர்க்கனும், ஒளிகள் {ஜ்யோதிகள்} அனைத்திற்கும் இந்திரனும் மன்னர்களாவர்[1]. பூதங்களுக்கு அக்னியும், பிராமணர்களுக்குப் பிருஹஸ்பதியும் நித்திய தலைவர்களாவர். சோமன் (இலையுதிர்) மூலிகைகளின் தலைவனாகவும், விஷ்ணு வலிமை நிறைந்த மனிதர்களனைவரிலும் முதன்மையானவனாகவும் திகழ்கின்றனர்.(8) ருத்திரர்களுக்கு {ரூபங்களுக்குத்} தாஷ்டிரியும் {துவஷ்டாவும்}, அனைத்து உயிரினங்களுக்கு {பசுக்களுக்கு} சிவனும் மன்னர்களாக இருக்கின்றனர். தொடக்கச் சடங்குகள் {தக்ஷிணைகள்} அனைத்திலும் முதன்மையாக வேள்வி முதன்மையானதாக இருக்கிறது, தேவர்களில் மகவத் {இந்திரன்} முதன்மையானவனாக இருக்கிறான்[2].(9) திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் தலைவனாக வடக்கு இருக்கிறது; கல்விமான்களான பிராமணர்கள் அனைவருக்கும் தலைவனாகப் பெருஞ்சக்தி கொண்ட சோமன் திகழ்கிறான். மதிப்புமிக்க ரத்தினர்கள் அனைத்திற்கும் குபேரனும், தேவர்கள் அனைவருக்கும் புரந்தரனும் {இந்திரனும்} தலைவர்களாக இருக்கின்றனர்.(10)இவ்வாறே பொருட்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பு இருக்கிறது. பிரஜாபதி உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக இருக்கிறான். எந்தப் பொருளாக இருந்தாலும், நானே பிரம்மம் நிறைந்தவன், நானே முதன்மையானவன்.(11) என்னையோ, விஷ்ணுவையோ தவிர உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை. பிரம்மம் நிறைந்தவனான பெரும் விஷ்ணு, மன்னர்கள் அனைவருக்கும் மன்னனாக {பேரரசனாக} இருக்கிறான். அவனையே ஆட்சியாளனாகவும், படைப்பாளனாகவும், பிறப்பற்ற ஹரியாகவும் அறிவீராக.(12) மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள், தேவர்கள், தானவர்கள் மற்றும் நாகர்களின் ஆட்சியாளன் அவனே ஆவான்.(13) ஆசை நிறைந்த மனிதர்களால் பின்தொடரப்படுபவர்களுக்கு {பெண்களுக்கு} மத்தியில் அழகிய கண்களைக் கொண்ட மஹேஸ்வரியே பெருந்தேவியாவாள்[3].(14) அவள் பார்வதி என்று வேறு பெயரிலும் அழைக்கப்படுகிறாள். உமா தேவியையே பெண்கள் அனைவரிலும் முதன்மையானவளாகவும், மங்கலமிக்கவளாகவும் அறிவீராக. இன்பத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் பெண்களுக்கு மத்தியில் பெரும் காந்தியைக் கொண்ட அப்ஸரஸ்களே முதன்மையானவர்களாவர்.(15)மன்னர்கள் பக்தியில் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள், பிராமணர்கள் பக்திக்குச் செல்லும் பாலங்களாக {அணைகளாக} இருக்கின்றனர். எனவே, மன்னன் எப்போதும் இருபிறப்பாளர்களைப் பாதுகாக்க முனைய வேண்டும்.(16) எந்த மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் நல்ல மனிதர்கள் நலிவடைகிறார்களோ அவர்கள் தங்கள் வகைக்கான அறங்களை இழந்தவர்களெனக் கருதப்படுவார்கள். மறுமையில் அவர்கள் தவறான பாதைகளில் செல்ல நேரிடும் {அவர்கள் இழிவான கதியை அடைவார்கள்}.(17) எந்த மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் நன்மக்கள் பாதுகாக்கப்படுகிறார்களோ, அவர்கள் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.(18) உண்மையில், அந்த உயர் ஆன்மாக்கள் உயர்ந்த இருக்கையை அடைகிறார்கள். மறுபிறப்பாளர்களில் முதன்மையானோரே இதைப் புரிந்து கொள்வீராக. இனி எப்போதும் நீடித்திருக்கும் கடமைகளின் குறியீடுகளை {தர்மலக்ஷணத்தைச்} சொல்லப் போகிறேன்.(19) தீங்கிழையாமையே உயர்ந்த கடமையாகும். தீங்கிழைத்தல் மறத்தின் குறியீடாகும். காந்தி தேவர்களின் குறியீடாகும். மனிதர்கள் செயல்களைத் தங்கள் குறியீடுகளாகக் கொண்டுள்ளனர்.(20)

வானம் (அல்லது வெளி) ஒலியைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. காற்று {வாயு} தீண்டலைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. ஒளியின் சிறப்பியல்பு நிறமாகவும் {ரூபமாகவும்}, நீரின் சிறப்பியல்பு சுவையாகவும் இருக்கின்றன.(21) அனைத்துப் பொருட்களையும் தாங்கும் பூமி மணத்தைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டிருக்கிறது. வாக்கானது, செம்மைப்படுத்தப்பட்ட உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் கொண்ட சொற்களைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது.(22) மனம் எண்ணத்தை {சிந்தையைத்} தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. மேலும் எண்ணமானது, புத்தியின் சிறப்பியல்பாகவும் சொல்லப்படுகிறது. மனத்தால் எண்ணப்படும் பொருட்கள் புத்தியால் துல்லியமாக உறுதி செய்யப்படுகின்றன.(23) புத்தியானது, விடாமுயற்சியின் மூலம் பொருட்கள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது என்பதில் ஐயமில்லை. அறியப்படாமல் இருப்பது (வாழ்வது) நல்ல மனிதனின் சிறப்பியல்பாகும்[4].(24) அர்ப்பணிப்பு {பக்தி}, செயல்களைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. ஞானமானது, துறவின் சிறப்பியல்பாக இருக்கிறது. எனவே, புத்தியுள்ள மனிதன் ஞானத்தை நோக்கமாகக் கொண்டு துறவை பயில வேண்டும்.(25) துறவை மேற்கொள்பவனும், ஞானம் கொண்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும், இருளையும் {அறியாமையையும்}, மரணத்தையும், மூப்பையும் கடந்தவனுமான மனிதன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(26)இவ்வாறே நான் கடமைகளின் குறியீடுகள் குறித்து உங்களுக்கு முறையாக அறிவித்தேன். இனி, குணங்களை அடைவது (புரிந்து கொள்வது) குறித்து உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(27) பூமி தொடர்புடைய மணம், மூக்கால் அடையப்படுகிறது. மூக்கில் வசிக்கும் காற்றானது, மணத்தை உணர்ந்து கொள்வதற்காக (ஒரு முகவராக) நியமிக்கப்பட்டதைப் போல இருக்கிறது.(28) சுவையானது நீரின் சாரமாக இருக்கிறது. அது நாக்கால் அடையப்படுகிறது. நாவில் வசிக்கும் சோமன், சுவையை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(29) ஒளியுடலின் குணம் நிறமாகும். அது கண்களால் அடையப்படுகிறது. எப்போதும் கண்களில் வசிப்பவனாக ஆதித்தியன், நிறத்தை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(31) தீண்டலானது எப்போதும் காற்றுத் தொடர்பானதாக (காற்றின் குணமாக) இருக்கிறது. அது தோலால் உணரப்படுகிறது. தோலில் எப்போதும் வசிக்கும் காற்று {வாயு}, தீண்டலை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது.(31)

வானத்தின் குணம் ஒலியாகும். அது காதுகளால் அடையப்படுகிறது. காதுகளில் வசிக்கும் திசைகள் அனைத்தும், ஒலியை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன.(32) மனத்தின் குணம் எண்ணம் {சிந்தை} ஆகும். அது புத்தியால் அடையப்படுகிறது. இதயத்தில் வசித்து நனவைத் தாங்குபவன் {ஜீவன்}, மனத்தை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(33) புத்தியானது, உறுதிப்பாடு அல்லது நிச்சய உணர்வின் வடிவத்திலும், மஹத்-ஆனது, ஞானத்தின் வடிவத்திலும் உணரப்படுகின்றன. உணரப்படாதது (பிரகிருதி), நிச்சய உணர்வுக்குப் பிறகு அனைத்துப் பொருட்களையும் அடைவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவானதாகும். இதில் ஐயமேதும் இல்லை[5].(34) சாரத்தைப் பொறுத்தவரையில், நித்தியமானதும், குணங்களற்றதுமான க்ஷேத்ரஜ்ஞன், சின்னங்களால் {குறியீடுகளால் / லிங்கத்தால்} அடையப்பட இயலாததாக இருக்கிறது. எனவே சின்னங்களற்ற க்ஷேத்ரஜ்ஞனின் சிறப்பியல்பானது, தூய ஞானமாகும்.(35) புலப்படாதது, க்ஷேத்ரம் என்றழைக்கப்படும் சின்னத்தில் வசித்துக் கொண்டு, குணங்களை உண்டாக்குவதாகவும், ஈர்ப்பதாகவும் இருக்கிறது. அது மறைந்திருந்தாலும், நான் அதைப் பார்க்கவும், அறியவும், கேட்கவும் செய்கிறேன்.(36)புருஷன் அஃதை அறிகிறான்; எனவே அவன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான். க்ஷேத்ரஜ்ஞன், குணங்களின் இயக்கங்களையும், இயக்கமற்ற நிலையையும் உணர்கிறான்.(37) மீண்டும் மீண்டும் உண்டாகுபவையும், புத்தியற்றவையுமான குணங்கள், படைக்கப்பட வேண்டிய பொருட்களாகவும், தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவுகளுடன் கூடியதாகவும் தங்களை ஒருபோதும் அறிவதில்லை.(38) உயர்ந்ததும், பெரியதும், குணங்களையும், குணங்களில் பிறக்கும் பொருட்களையும் கடந்திருப்பதுமான ஒன்றை {பிரம்மத்தை} க்ஷேத்ரஜ்ஞன் மட்டுமே அடைகிறான்; வேறெதுவும் அடைவதில்லை.(39) எனவே, கடமைகளைப் புரிந்து கொள்ளும் ஒருவன், குணங்களையும், புத்தியையும் கைவிட்டு, தன் பாவங்கள் அழிக்கப்பட்டு, குணங்களைக் கடந்தவனாக க்ஷேத்ரஜ்ஞனில் நுழைகிறான் {பரமாத்மாவை அடைகிறான்}.(40) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், எவருக்கும் தலைவணங்காதவனும், ஸ்வாஹா இல்லாதவனும் {ஸ்வாஹாகாரமற்றவனும்}, அசையாதவனும், இருப்பிடமற்றவனுமாக க்ஷேத்ரஜ்ஞன் இருக்கிறான். அவனே உயர்ந்த தலைவனாவான் {தெய்வமாவான் / விபுவாவான்}” என்றான் {பிரம்மன்}.(41)-

ஞானம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 44ஞானமே மோக்ஷஸாதனம் என்பது குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “தொடக்கம், நடுநிலை, முடிவு ஆகியவற்றையும், பெயர் மற்றும் சிறப்பியல்புகளைக் கொண்டவை அனைத்தையும், அவற்றை அடைவதற்குரிய வழிமுறைகளுடன் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(1) முதலில் பகல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகே இரவு எழுந்தது. மாதங்களில் வளர்பிறை நாட்கள் முதன்மையானவை என்று சொல்லப்படுகிறது. விண்மீன் கூட்டங்கள் சிரவணத்தை {திருவோணம் நட்சத்திரத்தைத்} தங்களில் முதன்மையானதாகக் கொண்டுள்ளன; பருவ காலங்கள் தங்களில் பனிக் காலத்தை (குளிர் காலத்தை) முதன்மையானதாகக் கொண்டுள்ளன.(2) மணங்கள் அனைத்தின் பிறப்பிடமாகப் பூமியும், சுவைகள் அனைத்தின் பிறப்பிடமாக நீரும் இருக்கின்றன. நிறங்கள் அனைத்தின் பிறப்பிடமாகச் சூரிய ஒளியும், தீண்டல் உணர்வுகளின் பிறப்பிடமாகக் காற்றும் {வாயுவும்} இருக்கின்றன.(3) அதே போல ஒலியின் பிறப்பிடமாக வெளி (அல்லது வானம்) இருக்கிறது. இவையே பூதங்களின் குணங்களாகும். இனி, பொருட்கள் அனைத்திலும் முதன்மையானவற்றையும், உயர்ந்தவற்றையும் நான் அறிவிக்கப் போகிறேன்.(4)

ஒளிகள் {தேஜஸுகள்} அனைத்திலும் சூரியனே முதன்மையானவன். பூதங்கள் அனைத்திலும் நெருப்பே முதன்மையானது {அக்னியே முதன்மையானவன்}. கல்விக்கிளைகள் {வித்தைகள்} அனைத்திலும் சாவித்ரியே முதன்மையானவள். தேவர்கள் அனைவரிலும் பிரஜாபதியே முதன்மையானவன்.(5) வேதங்கள் அனைத்திலும் ஓம் என்ற அசையே முதன்மையானது, காற்றுகள் {வாயுக்கள்} அனைத்திலும் உயிர் காற்றான பிராணனே முதன்மையானது. இவ்வுலகில் பரிந்துரைக்கப்படும் அனைத்தும் சாவித்ரி என்றழைக்கப்படுகிறது[1].(6) சந்தஸ்கள் அனைத்திலும் காயத்ரி முதன்மையானது; (வேள்வி) விலங்குகள் அனைத்திலும் ஆடு முதன்மையானது. நான்கு கால் உயிரினங்களில் பசுக்களே முதன்மையானவை. மனிதர்கள் அனைவரிலும் இருபிறப்பாளர்கள் முதன்மையானவர்கள்.(7)பறவைகள் அனைத்திலும் பருந்தே முதன்மையானது. வேள்விகளில் நெருப்பில் தெளிந்த நெய்யை ஊற்றுவதே {ஹோமமே} முதன்மையானது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, ஊர்வனவற்றில் பாம்பே முதன்மையானது.(8) யுகங்கள் அனைத்திலும் கிருதமே முதன்மையானது; இதில் ஐயமேதும் இல்லை. மதிப்புமிக்கப் பொருட்கள் அனைத்திலும் பொன்னே முதன்மையானது.(9) செடிகள் அனைத்திலும் யவம் {வாற்கோதுமை} முதன்மையானது. உண்ணத்தக்க, அல்லது விழங்கத்தக்க அனைத்துப் பொருட்களிலும் உணவே முதன்மையானது. பருகத்தகுந்த நீர்மங்கள் அனைத்திலும் நீரே முதன்மையானது.(10)

அசையாத பொருட்கள் அனைத்திலும் வேறுபாடில்லாமல், பிரம்மனின் நித்திய புனிதக் களமான பிலக்ஷமே {ப்லக்ஷமரமே [அரசமரமே]} முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது[2].(11) பிரஜாபதிகள் அனைவரிலும் நானே முதன்மையானவன். இதில் ஐயமேதும் இல்லை. நினைத்தற்கரிய ஆன்மாவும், தானே இருப்பவனுமான விஷ்ணு என்னிலும் உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[3].(12) மலைகள் அனைத்திலும் பெரும் மேருவே முதலில் பிறந்ததெனச் சொல்லப்படுகிறது. அடிவானத்தின் முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்திலும் கிழக்கே முதன்மையானதாகவும், முதலில் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.(13)ஆறுகள் அனைத்திலும், மூன்று ஓடைகளைக் கொண்ட கங்கையே முதலில் பிறந்தவளாகச் சொல்லப்படுகிறாள். அதே போலக் கிணறுகள் மற்றும் நீரின் கொள்ளிடங்கள் அனைத்திலும் பெருங்கடலே முதலில் பிறந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(14) தேவர்கள், தானவர்கள், பூதங்கள், பிசாசங்கள், பாம்புகள் {உரகர்கள்}, ராட்சசர்கள், மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள் ஆகியோர் அனைவருக்கும் உயர்ந்த தலைவனாக {பிரபுவாக} ஈஸ்வரன் இருக்கிறான்.(15) பிரம்மம் நிறைந்தவனும், மூவுலகங்களிலும் தனக்கு உயர்ந்தவர் எவரும் இல்லாதவனுமான பெரும் விஷ்ணுவே {மஹாவிஷ்ணுவே} அண்டமனைத்திலும் முதன்மையானவனாக இருக்கிறான்.(16)

வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திலும் இல்லற வாழ்வுமுறையே {கிருஹஸ்தாஸ்ரமமே [இல்லறமே]} முதன்மையானதாகும். இதில் ஐயமேதுமில்லை. புலப்படாததே {அவ்யக்தமானதே} அனைத்திற்கும் பிறப்பிடமாகவும் முடிவாகவும் உள்ளது.(17) சூரியன் மறைவில் பகலும், சூரியன் எழுச்சியில் இரவும் முடிகின்றன. இன்பத்தின் முடிவு கவலையாகவும், கவலையின் முடிவு இன்பமாகவும் எப்போதும் இருக்கிறது.(18) ஒன்றுதிரளும் அனைத்தும் வெளிப்படுவதையும், ஏற்றங்கள் அனைத்தும் வீழ்ச்சியையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. தொடர்புகள் அனைத்தும் தொடர்பறுதலையும், பிறப்பு இறப்பையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன.(19)

செயல்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன, பிறந்தவை அனைத்தும் நிச்சயம் இறப்பைச் சந்திக்கின்றன. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் இவ்வுலகில் நிலையற்றவையாக இருக்கின்றன.(20) வேள்வி {யாகம்}, கொடைகள் {தானம்}, தவங்கள், கல்வி {அத்யயனம்}, நோன்புகள் {விரதங்கள்}, நியமங்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. ஞானம் மட்டுமே முடிவற்றதாகும் {ஞானத்திற்கு நாசமில்லை}.(21) எனவே, அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், நான், எனது என்ற மமதையில் இருந்து விடுபட்டவனும், அகங்காரமற்றவனுமான ஒருவன் தூய அறிவால் {சுத்தமான ஞானத்தால்} பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்” என்றான் {பிரம்மன்}.(22)

சிஷ்டாசாரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 45-காலச்சக்கரம் எனும் உடல்; இல்லறம்; நல்லோருக்குப் பொருந்தும் ஒழுக்கம் ஆகியவை குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன்“வாழ்வுச்சக்கரம் {காலச்சக்கரம்} சுழன்று கொண்டே இருக்கிறது. அது {அந்தச் சக்கரம்} புத்தியைத் தன் பலமாகவும், மனத்தை (அது சார்ந்திருக்கும்) அச்சாகவும் {ஸ்தம்பமாகவும்}, புலன்கூட்டங்களைக் கட்டுகளாகவும், (ஐந்து) பெரும்பூதங்களைக் குழிசியாகவும் {ஆர்களுக்குக் குடமாகவும்}, இல்லத்தைச் சுற்றளவாகவும் கொண்டிருக்கிறது[1].(1) அது முதுமை {ஜரை} மற்றும் துயரம் {சோகம்} ஆகியற்றில் மூழ்கியிருக்கிறது, நோய்களையும் {வியாதிகளையும்}, பேரிடர்களையும் {வியஸங்களையும்} தன் சந்ததியாகவும் கொண்டிருக்கிறது. அந்தச் சக்கரம் காலம் மற்றும் இடம் {தேசம்}தொடர்புடையதாக இருக்கிறது. அஃது உழைப்பு மற்றும் உடற்பயிற்சியைத் தன் ஒலியாகக் கொண்டுள்ளது.(2) பகலும், இரவும் அந்தச் சக்கரத்தின் சுழற்சிகளாக உள்ளன. வெப்பம் மற்றும் குளிரால் அது சூழப்பட்டிருக்கிறது. அஃது இன்பதுன்பங்களை இணைப்புகளாகவும், பசி தாகங்களைத் தன்னில் {இணைப்புகளில்} அறையப்படும் ஆணிகளாகவும் கொண்டுள்ளது.(3) சூரிய ஒளியும், நிழலும் அதன் தடங்களாக (விளைவுகளாக) இருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உள்ள குறுகிய காலத்திலேயே அதைக் கலக்கம் கொள்ளவல்லதாக இருக்கிறது. அது பயங்கரமான மாய நீரால் சூழப்பட்டிருக்கிறது. அஃது எப்போதும் நனவற்றநிலையில் சுழன்று கொண்டே இருக்கிறது.(4) அது மாதங்களாலும், அரைமாதங்களாலும் {பக்ஷங்களாலும்} அளக்கப்படுகிறது. அஃது எப்போதும் சீரற்றதாக (எப்போதும் மாறும் தன்மை கொண்டதாக), அனைத்து உலகங்களிலும் திரிகிறது. தவமும், நோன்புகளும் அதற்குச் சேறு ஆகின்றன. ஆசையின் சக்தி அதை இயக்குகிறது[2].(5)அது பேரகங்காரத்தால் ஒளியூட்டப்பட்டு, குணங்களின் மூலம் தக்க வைக்கப்படுகிறது. (விரும்பியதை அடையாததால் உண்டாகும்) எரிச்சல்கள் {மனச்சோர்வுகள்} அதைச் சுற்றிலும் கட்டப்பட்டுள்ள பிணைப்புகளாக இருக்கின்றன. அது துன்பம் மற்றும் அழிவுக்கு மத்தியில் சுழல்கிறது.(6) அது செயல்கள் {கர்மங்கள்} மற்றும் செயல்கருவிகள் {காரணங்கள்} ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கிறது. அது பெரியதாகவும், பற்றுகளால் நீட்டிக்கப்படுவதாகவும் இருக்கிறது. ஆசை மற்றும் பேராசையின் {லோபத்தின்} மூலம் அது நிலையற்ற தன்மையை அடைகிறது. அது பலவகையான அறியாமைகளில் இருந்து உண்டாக்குகிறது.(7) அஃது அச்சம் மற்றும் மயக்கம் கொள்வதாகவும், அனைத்து உயிரினங்களின் மயக்கத்துக்குக் காரணமாகவும் இருக்கிறது. அஃது இன்ப துன்பங்களை நோக்கி நகர்ந்து, ஆசை மற்றும் கோபத்தை உடைமையாக அடைகிறது.(8) அது மஹத் முதல் திரள் பூதங்கள் வரையிலான உட்பொருள்களால் ஆனது. அஃது இடைவிடாத உற்பத்தி மற்றும் அழிவின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. அதன் வேகம் மனத்தைப் போன்றதாகும், மேலும் அது மனத்தையே தன் எல்லையாகக் கொண்டுள்ளது[3].(9) முரண்பட்ட இரட்டைகள் மற்றும் நனவற்ற நிலை ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்த வாழ்வுச்சக்கரமானது {உடலானது}, இறவாதவர்களுடன் {தேவர்களுடன்} கூடிய அண்டத்தைக் கைவிடவும், சுருக்கவும், சரிபார்க்கவும் வேண்டும்[4].(10)இந்த வாழ்வுச்சக்கரத்தின் இயக்கத்தையும், நிறுத்தத்தையும் எப்போதும் துல்லியமாகப் புரிந்து கொள்ளும் மனிதன், உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும் ஒருபோதும் மயங்கியவனாகத் தென்படுவதில்லை.(11) அனைத்து மனப்பதிவுகளில் {எண்ணங்களில்} இருந்தும் விடுபட்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்திலும் இருந்து விலகி, பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட ஒருவன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(12) இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, பிரம்மச்சாரி, காட்டில் ஒதுங்கி வாழ்பவன் {வானப்பிரஸ்தன்}, துறவி {ஸந்யாசி} ஆகிய வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} நான்கும் இல்லறத்தானின் வாழ்வுமுறையையே தங்கள் அடித்தளமாகக் கொண்டுள்ளன.(13) இந்த உலகில் பரிந்துரைக்கப்படும் விதிமுறைகளில் {ஆசிரமங்களில்} எவற்றைக் கடைப்பிடித்தாலும் நன்மையே பயக்கும். இத்தகைய நோற்றல் எப்போதும் உயர்வாகவே பேசப்பட்டிருக்கிறது.(14) சடங்குகளால் முதலில் தூய்மையடைந்தவனும், முறையாக நோன்புகளை நோற்றவனும், உயர்ந்த தகுதிகளைக் கொண்ட ஓர் இனத்தில் பிறந்தவனும், வேதங்களைப் புரிந்து கொண்டவனுமான ஒருவன், (தன் ஆசானின் இல்லத்தில் இருந்து) திரும்ப வேண்டும்[5].(15)தான் மணந்து கொண்ட மனைவியிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் நல்லோரைப் போன்ற ஒழுக்கத்துடன், புலன்களை அடக்கி, நிறைந்த நம்பிக்கையுடன் கூடிய ஒருவன் இவ்வுலகில் ஐந்து வேள்விகளைச் செய்ய வேண்டும்.(16) தேவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவளித்த பிறகு எஞ்சியதை உண்பவனும், தன் வாழ்வுமுறையின்படி {ஆசிரமத்தின்படி} வேள்விகளையும், கொடைகளையும் முறையாகச் செய்பவனும்,(17) பற்றில்லாமல் கைகள் மற்றும் கால்களைச் செயல்படுத்துபவனும், பற்றில்லாமல் தன் கண்ணைச் செயல்படுத்துபவனும், தவங்களில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், வாக்கு மற்றும் வாக்கின் வரம்புகளைப் பற்றில்லாமல் செயல்படுத்தாதவனுமான ஒருவன், சிஷ்டன் அல்லது நல்லவன் என்ற பகுப்பின் {பிரிவின்} கீழ் வருவான்[6].(18) அவன் எப்போதும் புனிதநூலை {பூணாலைத்} தரிக்கவும், (தூய) வெள்ளுடை உடுத்தவும், தூய நோன்புகளை நோற்கவும், எப்போதும் நல்லோரின் துணையுடன் இருக்கவும், கொடைகளை அளிக்கவும், தற்கட்டுப்பாட்டைப் பயிலவும் வேண்டும்.(19) அவன் தன் காமத்தையும், வயிற்றையும் அடக்கி, உலகளாவிய கருணையைப் பயின்று, நல்லோருக்குப் பொருந்தும் ஒழுக்கத்தில் {சிஷ்டாசாரத்தில் பொருந்தியவனாகத்} தன்னை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் மூங்கில் தடியையும், நீர் நிறைந்த குடத்தையும் {கமண்டலுவையும்} சுமக்க வேண்டும்.(20)கல்வி பயின்றவனான அவன் கற்பிக்கவும், தானே வேள்வி செய்யவும், பிறரின் வேள்வியை நடத்தித் தரவும் வேண்டும். அவன் தான் பெற்ற கொடைகளை அளிக்கவும் {கொடையளிக்கவும்} வேண்டும். உண்மையில் ஒருவன் இந்த ஆறு செயல்களின் மூலம் தன் ஒழுக்கத்தை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்[7].(21) (சீடர்களுக்குக்) கற்பித்தல், பிறரின் வேள்விகளை நடத்தித் தருதல், தூய்மையானவனிடம் இருந்து கொடைகளை ஏற்றல் ஆகிய இந்த மூன்று செயல்களும் பிராமணர்களுக்கான வாழ்வாதாரமாக {ஜீவனோபாயாமாக} அமைகின்றன என்பதை அறிவீராக.(22) கொடையளித்தல், கல்வி கற்றல் மற்றும் வேள்வி செய்தல் என்று எண்ணிக்கையில் மூன்றாக எஞ்சியிருக்கும் கடமைகள் தகுதியுடன் {புண்ணியத்துடன்} கூடியவையாக இருக்கின்றன[8].(23) தவம் செய்பவனாகவும், தற்கட்டுப்பாடுடையவனாகவும், உலகளாவிய கருணை பயில்பவனாகவும், மன்னிக்கும் தன்மை கொண்டவனாகவும், அனைத்து உயிரினங்களையும் சமமான பார்வையில் பார்ப்பவனாகவும் கடமைகளை அறிந்தவனாகவும் இருக்கும் மனிதன், அந்த மூன்று செயல்களில் ஒருபோதும் கவனமில்லாமல் இருந்து விடக்கூடாது {அவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும்}.(24) தூய இதயம் கொண்டவனும், இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} பின்பற்றுபவனும், கடும் நோன்புகளை நோற்பவனும் இவ்வாறு அர்ப்பணிப்புடன் இருப்பனும், இவ்வாறு கடமைகள் அனைத்தையும் தன் சக்திக்குத் தகுந்தவாறு செய்வபனும், கல்விமானுமான பிராமணன், சொர்க்கத்தைக் கைப்பற்றுவதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்},(25)

உத்தம பதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 46

பிரம்மன், “மேற்குறிப்பிட்ட வழியில் தன் சக்திக்குத் தகுந்தவாறு முறையாகப் படிப்பவனும், பிரம்மச்சாரியாக வாழ்பவனும், தன் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவனும், கல்வி கொண்டவனும், நோன்புகள் நோற்பவனும், புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துபவனும், ஆசானுக்கு ஏற்புடையதும், நன்மையானதும் எதுவோ அதில் அர்ப்பணிப்புள்ளவனும், வாய்மைக் கடமை பயில்வதில் உறுதியாக இருப்பவனும், எப்போதும் தூய்மையுள்ளவனுமான ஒருவன்,(1,2) தன் ஆசானின் அனுமதியுடன் உணவை இகழாமல் உண்ண வேண்டும். பிச்சையில் கிட்டியவற்றால் அமைந்த ஹவிஷ்யத்தை அவன் உண்ண வேண்டும். மேலும் அவன் (வழிகாட்டுதலின் படியே) நிற்கவும், அமரவும், செயல்படவும் வேண்டும்[1].(3) அவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு குவிந்த மனத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அவன் எப்போதும் வில்வத்தலோ, பலாசத்தாலோ ஆன தண்டத்தைத் தரிக்க வேண்டும்.(4) மறுபிறப்பாள மனிதனின் ஆடைகள் பட்டு, பருத்தி, மான் தோல் அல்லது முழுமையாகப் பழுப்புச் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆடையாகவோ இருத்தல் வேண்டும்.(5)முஞ்சப்புல்லாலான கச்சையும் {அரைநாணும்} இருக்க வேண்டும். அவன் தன் தலையில் சடாமுடி தரித்துத் தினமும் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். அவன் புனித நூல் {பூணூல்} தரிக்கவும் {யஜ்ஞோபவீதமுள்ளவனும்}, சாத்திரங்களைப் படிக்கவும், பேராசையில் இருந்து விடுபடவும், நோன்புகள் நோற்பதில் உறுதியாக இருக்கவும் வேண்டும்.(6) அவன் மனத்தை அடக்கியவாறு தூய நீரைக் கொண்டு செய்யப்படும் படையல்களால் தேவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். அத்தகைய பிரம்மச்சாரி மெச்சத்தகுந்தவனாவான்.(7) மேலீர்க்கப்பட்ட உயிர்வித்துடன், மனத்தைக் குவித்து இவ்வாறு அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒருவன் சொர்க்கத்தைக் கைப்பற்றுவதில் வெல்கிறான்.(8) தூய்மைச் சடங்குகள் அனைத்தாலும் தூய்மையடைந்து, பிரம்மச்சாரியாக வாழும் ஒருவன், தன் கிராமத்தில் இருந்து வெளியேறி, அடுத்ததாக (பற்றுகள் அனைத்தையும்) துறந்து, காடுகளில் தவசியாக வாழ வேண்டும்.(9) அவன் விலங்குத் தோல்கள் அல்லது மரப்பட்டைகளை உடுத்திக் கொண்டு, காலையும், மாலையும் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். எப்போதும் காட்டுக்குள்ளேயே வாழும் அவன், ஒருபோதும் மக்கள் வசிக்கும் இடத்திற்குத் திரும்பக் கூடாது.(10)

விருந்தினர்கள் வரும்போது அவர்களை மதித்து, உறைவிடமளிக்கும் அவன், கனிகள், இலைகள், கிழங்குகள் மற்றும் சியாமகம் {சாமை} ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும்.(11) அவன் சோம்பலில்லாமல் தான் பெறும் நீர், காற்று மற்றும் காட்டுப் பொருட்கள் அனைத்தையும் கொண்டு வாழ வேண்டும். அவன் தனது தொடக்க விதிமுறைகளின்படி முறையான வரிசையில் இவற்றைக் கொண்டு வாழ வேண்டும்[2].(12) அவன் தன்னிடம் வரும் விருந்தினருக்கு கனிகளையும், கிழங்குகளையும் கொடுத்து மதிக்க வேண்டும். அதன் பிறகு அவன் சோம்பலில்லாமல் தன்னிடம் உள்ள வேறு உணவுப் பொருட்களையும் கொடுக்க வேண்டும்.(13) பேச்சைக் கட்டுப்படுத்தி, தேவர்களையும், விருந்தினர்களையும் நிறைவடையச் செய்த பிறகு அவன் உண்ணலாம். அவன் மனம் பொறாமையில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். அவன் சிறிதளவே உண்டு, எப்போதும் தேவர்களைச் சார்ந்திருக்க வேண்டும்.(14) தற்கட்டுப்பாடுடன், உலகளாவிய கருணை பயின்று, மன்னிக்கும் தன்மையுடன் கூடிய அவன் (நாவிதரின் இயக்கங்களுக்கு இடமளிக்காமல்) தாடியும், முயிரும் வளர்க்க வேண்டும். வேள்விகளைச் செய்து, சாத்திரக் கல்விக்குத் தன்னை அர்ப்பணிக்கும் அவன், வாய்மைக் கடமையை நோற்பதில் எப்போதும் உறுதியுள்ளவனாக இருக்க வேண்டும்[3].(15)எப்போதும் தூய்மையாக உள்ள உடலுடனும், புத்திசாலித்தனத்துடனும், குவிந்த மனத்தோடு காட்டில் வசித்து, புலன்களை அடக்கியிருக்கும் ஒரு காட்டுத்துறவி {வானப்பிரஸ்தன்} இவ்வாறே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சொர்க்கத்தைக் கைப்பற்றுவான்.(16) விடுதலையை {முக்தியை} அடைய விரும்பும் ஓர் இல்லறத்தானோ {கிருஹஸ்தனோ}, பிரம்மச்சாரியோ, காட்டுத்துறவியோ சிறந்த ஒழுக்கமுறை என்றழைக்கப்படும் நடைமுறையை {உத்தம நடையைப்} பின்பற்ற வேண்டும்.(17) முற்றான தீங்கிழையாமை என்ற உறுதிமொழியை அனைத்து உயிரினங்களுக்கும் அளிக்கும் அவன், தன் செயல்பாடுகள் அனைத்தையும் முற்றிலும் துறக்க வேண்டும். அவன் அனைத்து உயிரினங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதில் தன் பங்கைச் செலுத்தி, உலகளாவிய நட்பைப் பயின்று, புலன்கள் அனைத்தையும் அடக்கி ஒரு தவசியாக இருக்க வேண்டும்.(18) கேட்காமலும் {யாசியாமலும்}, தொல்லையில்லாமலும் {நிச்சயிக்காமலும்}, தானாகவும் {தற்செயலாகவும்} கிடைக்கும் உணவைக் கொண்டு அவன் நெருப்பை அமைக்க வேண்டும். எந்த இடத்தில் புகை அடங்கியிருக்கிறதோ, எங்கே வசிப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே உண்டுவிட்டனரோ அங்கே அவன் பிச்சை வாங்கச் செல்ல வேண்டும்[4].(19) விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் ஒழுக்கத்தை அறிந்த மனிதன், {தான் செல்லப்போகும் இடத்தில்} (சமையலுக்குப் பயன்படுத்தும்) பாத்திரங்கள் துலக்கப்பட்ட பிறகு {அங்கே} பிச்சை கேட்க செல்ல வேண்டும்.(20)தன்னுயிரைத் தாங்கிக் கொள்வதற்கு வேண்டியதை மட்டுமே வேண்டி, குவிந்த மனத்துடன் பிச்சை கேட்கச் செல்லும் அவன் உரிய நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும். பிறருக்குப் பொதுவான வருவாயில் அவன் விருப்பம் கொள்ளக்கூடாது, கௌரவிக்கப்படும்போது உண்ணக்கூடாது.(21) துறவி {சந்நியாசி} வாழ்வுமுறையைப் பின்பற்றும் மனிதன், மதிப்புடன் வழங்கப்படும் கொடைகளைத் தவிர்ப்பதற்காகத் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும். உண்ணும்போது, பிறர் உண்டதன் எச்சத்தையோ, கசப்பு, துவர்ப்பு, கார்ப்புள்ள உணவையோ அவன் உண்ணக்கூடாது.(22) இனிய சுவை கொண்ட உணவு வகைகளையும் அவன் உண்ணக்கூடாது. அவன் தன் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும்.(23) விடுதலையை {முக்தியை} அறிந்த ஒருவன், எந்த உயிரினத்திற்கும் தடங்கல் ஏற்படுத்தாமல் தன் வாழ்வாதாரத்தை அடைய வேண்டும். பிச்சை வாங்கச் செல்லும்போது (அதே நோக்கத்துடன் செல்லும்) மற்றொருவனைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாது.(24)

அவன் தன் பக்தியை வெளியிடக்கூடாது; அவன் ஆசையில் இருந்து விடுபட்டவனாக ஒதுக்குப்புறமான {ஆளரவமற்ற} இடங்களுக்கே செல்ல வேண்டும். வெறுமையான வீட்டையோ, காட்டையோ, ஏதோவொரு மரத்தடியையோ, ஆற்றையோ,(25) ஒரு மலைக்குகையையோ அவன் தன் உறைவிடமாகக் கொள்ளலாம். கோடைக் காலத்தில் அவன் மக்கள் வசிக்கும் இடங்களில் ஓரிரவை மட்டுமே கழிக்கலாம்; மழைக்காலங்களில் அவன் ஒரே இடத்தில் வசிக்கலாம்.(26) அவன் ஒரு புழுவைப் போல உலகில் சூரியனால் சுட்டிக் காட்டப்படும் பாதையில் பயணிக்க வேண்டும். உயிரினங்களிடம் கொள்ளும் கருணையை நோக்கமாகக் கொண்டு அவன் பூமியில் நடக்க வேண்டும்.(27) அவன் ஒருபோதும் எதையும் குவிக்கக்கூடாது, நண்பர்களுடன் வசிப்பதைத் தவிர்க்க வேண்டும். விடுதலையை {முக்தியை} அறிந்த மனிதன் நாள் தோறும் தன் செயல்கள் அனைத்தையும் தூய நீரைக் கொண்டே செய்ய வேண்டும்.(28) அத்தகைய மனிதன் (ஆற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ) இறைக்கப்பட்ட நீரைக் கொண்டே எப்போதும் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். தீங்கிழையாமை {அஹிம்ஸை}, பிரம்மச்சரியம், வாய்மை {ஸத்யம்}, எளிமை {கபடமின்மை},(29) கோபத்திலிருந்து விடுதலை {குரோதமின்மை}, இகழ்வதில் இருந்து விடுதலை {அஸூயையின்மை}, தற்கட்டுப்பாடு {மனவடக்கம்}, புறங்கூறுவதில் இருந்து விடுதலை {கோட்சொல்லாமை} ஆகியவற்றைப் பெற்ற ஒருவன் புலனடக்கத்துடன் கூடியவனாக, உறுதியுடன் இந்த எட்டு நோன்புகளையும் பயில வேண்டும்.(30)

அவன் எப்போதும் பாவமற்றதும், வஞ்சகமற்றதும், கோணலற்றதுமான ஒழுக்க முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பற்றிலிருந்து விடுபட்டவனான அவன், விருந்தினராக வருபவருக்கு (குறைந்தது) ஒரு கவளம் உணவையாவது உண்ணக் கொடுக்க வேண்டும்.(31) அவன் தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும். நீதிமிக்க வழிமுறைகளில் அடையப்பட்ட உணவையே அவன் உண்ண வேண்டும், ஆசையின் ஆணைகளைப் பின்தொடரக்கூடாது.(32) உணவு, உடை ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேலும், அவன் தான் உண்ணக்கூடிய அளவைத் தவிர அதிகமாக ஏற்கக்கூடாது.(33) அவன் பிறரிடம் இருந்து கொடைகளை ஏற்கவோ, பிறருக்குக் கொடையளிக்கவோ தூண்டுதல் பெறக்கூடாது. உயிரினங்களின் ஆதரவற்ற நிலையின் காரணமாக ஞானமுள்ள ஒரு மனிதன் எதையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.(34) அவன் பிறரின் உடைமைகளை அபகரிக்கவோ, எதையும் கேட்காமல் எடுத்துக் கொள்ளவோ கூடாது. எதையும் அனுபவித்து விட்டு, அதை மீண்டும் பெற விரும்புமளவுக்கு அதனில் பற்று கொள்ளக்கூடாது.(35)

அவன் எந்தச் செயலையும் செய்ய விரும்பும்போது, வேறு எவருக்கும் உரிமையற்ற மண், நீர், கற்கள், இலைகள், மலர்கள் கனிகள் ஆகியவற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.(36) கைவினைஞர் {சிற்பி} தொழிலைச் செய்து அவன் வாழக்கூடாது, மேலும் அவன் பொன்னில் ஆசை கொள்ளக்கூடாது. அவன் வெறுக்கவோ, (கல்வி நாடாதவனுக்குக்) கற்பிக்கவோ, எந்த உடைமைகளையும் உரிமையாகக் கொள்ளவோ கூடாது.(37) நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதை {ஸ்ரத்தையினால் பரிசுத்தமானவற்றை} மட்டுமே அவன் உண்ண வேண்டும். அவன் சர்ச்சைகளில் இருந்து விலகயிருக்க வேண்டும். அமுதமாகச் சொல்லப்படும் ஒழுக்க நடைமுறையையே அவன் பின்பற்ற வேண்டும். அவன் எதனிலும் பற்றுக் கொள்ளாமல், எந்த உயிரினத்துடனும் நெருக்கமான உறவுகளில் ஒருபோதும் நுழையாமல் இருக்க வேண்டும்[5].(38) பயனில் எதிர்பார்ப்புள்ள, அல்லது உயிருக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய, அல்லது செல்வத்தையோ, பொருளையோ பதுக்கக்கூடிய எந்தச் செயலையும் அவன் செய்யவோ, செய்வதற்குக் காரணமாக அமையவோ கூடாது.(39) பொருட்கள் அனைத்தையும் புறக்கணித்து, (இல்லமற்றவனாக) சொற்பமானவற்றில் நிறைவடையும் அவன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களிடம் சமமான நடத்தை கொண்டவனாக இருக்க வேண்டும்.(40)அவன் மற்றொருவனை ஒருபோதும் எரிச்சலூட்டக்கூடாது; அதேபோல மற்றொருவனிடம் எரிச்சலடையவும் கூடாது. அனைத்து உயிரினங்களாலும் எவன் நம்பப்படுகிறானோ அவனே விடுதலையை {முக்தியைப்} புரிந்து கொண்டவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்.(41) அவன் கடந்த காலத்தை நினையாமல், எதிர்காலத்தைக் குறித்துக் கவலைகொள்ளாமல் இருக்க வேண்டும். அவன் நிகழ்காலம் பரிந்துரைக்கும் நேரத்தைக் குவிந்த மனத்துடன் அலட்சியம் செய்ய வேண்டும்[6].(42) அவன் கண்ணாலோ, மனத்தாலோ, வாக்காலோ எதையும் ஒருபோதும் தூய்மையிழக்கச் செய்யக்கூடாது. அவன் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ குற்றமெதுவும் செய்யக்கூடாது.(43) ஆமை தன் உறுப்புகளை உள்ளீர்த்துக் கொள்வதைப் போலப் புலன்களை அடக்கும் ஒருவன் தன் புலன்களையும், மனத்தையும் மட்டுப்படுத்தி, முற்றிலும் அமைதியான புத்தியை வளர்த்து, அனைத்திலும் திறனடைய முயற்சிக்க வேண்டும்.(44) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஒருவருக்கும் தலைவணங்காமல், ஸ்வாஹா சொல்லப்படும் சடங்குகளைத் தவிர்க்கும் ஒருவன் நான் என்ற மமதை மற்றும் அகங்காரத்தில் இருந்து விடுபட வேண்டும். தூய இதயத்துடன் கூடிய அவன், தன்னிடம் இல்லாததை அடையவோ, தன்னிடம் இருப்பதைப் பாதுகாக்கவோ முயற்சிக்ககூடாது.(45) எதிர்பார்ப்புகளில் இருந்து விடுபட்டு, குணங்களை நீக்கி, அமைதியடையும் ஒருவன் பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டு, எதையும் சாராதவனாக இருக்க வேண்டும். தன்னிலே பற்றுக் கொண்டு அனைத்தையும் புரிந்து கொள்ளும் ஒருவன், ஐயமில்லாமல் விடுதலையடைவான் {முக்தியடைவான்}.(46)கைகள், கால்கள், முதுகு, தலை, வயிறு அற்றதும், குணங்கள் அனைத்தின் இயக்கத்தில் இருந்தும் விடுபட்டதும், முழுமையானதும் {தனித்திருப்பதும்}, களங்கமற்றதும் {நிர்மலமானதும்}, நிலையானதும் {ஸ்திரமானதும்},(47) மணம் {கந்தம்}, சுவை {ரஸம்}, தீண்டல் {ஸ்பரிசம்}, நிறம் {ரூபம்} மற்றும் ஒலியற்றதும் {சப்தமற்றதும்}, (கவனமான ஆய்வின் மூலம்) புரிந்து கொள்ளப்பட வேண்டியதும் {அனுசரிக்கத்தக்கதும்}, பற்றற்றதும், தசையற்றதும்,(48) கவலையில் இருந்து விடுபட்டதும், மங்காததும் {அழிவற்றதும்}, தெய்வீகமானதும் {திவ்யமானதும்}, ஒரு வீட்டில் வசித்தாலும் அனைத்து உயிரினங்களிலும் இருப்பதுமான சுயத்தை {ஆன்மாவை} உணர்ந்தவர்கள் இறப்பில் இருந்து தப்புவதில் வெல்கிறார்கள்.(49) புத்தியோ, புலன்களோ, தேவர்களோ, வேதங்களோ, வேள்விகளோ, (மேன்மையான அருள் கொண்ட) உலகங்களோ, தவமோ, நோன்புகளோ அஃதை அடைவதில்லை.(50) ஞானம் கொண்டவர்களால் அடையப்படுவதாகவும், அடையாளங்களால் அறிய முடியாததாகவும் அது சொல்லப்படுகிறது. எனவே, அடையாளங்களற்ற அதன் இயல்புகளை அறிந்த மனிதன் பக்தியுடன் கூடிய வாய்மையை {தர்மத்தைப்} பயில வேண்டும்[7].(51) இல்லறம் மேற்கொள்ளும் கல்விமான், உண்மை அறிவுக்கு இணக்கமான ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மயக்கமடையாத ஒருவனும் {ஞானியானவன்}, மயக்கமடைந்த {அஜ்ஞானியான} ஒருவன் பயிலும் பக்தியில் {தர்மத்தில்} குறை காணாமல் அவ்வகையிலேயே அதைப் பயில வேண்டும்[8].(52) நல்லோரின் நடைமுறைகளில் குறைகாணாமல், தன்னை எப்போதும் அவமதிப்பவர்களான பிறரைத் தூண்டும் வகையிலான பக்தி நடைமுறை கொண்ட ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.(53)இத்தகைய ஒழுக்கத்துடன் கூடிய மனிதன் தவசிகளில் முதன்மையானவன் {சிறந்த முனிவன்} எனச் சொல்லப்படுகிறான். புலன்கள், புலன்நுகர் பொருட்கள், (ஐந்து) பெரும்பூதங்கள்,(54) மனம், புத்தி, அகங்காரம், புலப்படாதது {அவ்யக்தம்}, புருஷன் ஆகியவற்றைச் சரியான அனுமானங்களின் துணையுடன் முறையாகப் புரிந்து கொண்ட பிறகே(55) ஒருவன் அனைத்துப் பந்தங்களில் இருந்தும் விடுபட்டுச் சொர்க்கத்தை அடைகிறான். வாய்மையை அறிந்த ஒருவன், உயிர் போகும் வேளையில் இவை அனைத்தையும் புரிந்து கொண்டு(56) உரிய தனிமையான இடத்தில் தியானிக்க வேண்டும். அதன்பிறகு, எதையும் சாராதிருக்கும் அவன் விடுதலையை {முக்தியை} அடைவான். வெளியிலுள்ள {ஆகாயத்திலுள்ள} காற்றைப் போலப் பந்தங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, குவித்தவற்றைத் தீர்த்து, எவ்வகைத் துன்பமுமின்றி மிக உயர்ந்த இலக்கை அவன் அடைவான்” என்றான் {பிரம்மன்}.(57)

பிரம்மவிருக்ஷம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 47-மோக்ஷஸாதனங்களான துறவு, அறிவு, தவம் ஆகியவற்றைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “குறிப்பிட்ட உண்மையைச் சொன்னவர்களான புராதனர்கள், துறவே தவம் என்று சொல்கின்றனர். பிரம்மத்தைப் பிறப்பிடமாகக் கொண்டதில் வசிக்கும் பிராமணர்கள், ஞானமே உயர்ந்த பிரம்மம் என்று புரிந்து கொள்கிறார்கள்[1].(1) பிரம்மம் மிகத் தொலைவிலிருக்கிறது, அஃதை அடைவது வேத ஞானத்தைச் சார்ந்திருக்கிறது. அது முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்ததாகவும், குணங்கள் ஏதும் அற்றதாகவும், நித்தியமானதாகவும், எண்ணமுடியாத குணங்களைக் கொண்டதாகவும், உயர்ந்ததாகவும் இருக்கிறது.(2) ஞானிகள் தங்கள் ஞானம் மற்றும் தவத்தின் மூலமே அந்த உயர்ந்ததைக் காண்கின்றனர். உண்மையில், களங்கமற்ற மனங்களைக் கொண்டவர்களும், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களும், ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {தமோ குணம்} ஆகியவற்றைக் கடந்தவர்களுமாக அவர்கள் இருக்கின்றனர் (அவர்களே அதைக் காண்பதில் வெல்கிறார்கள்).(3)எப்போதும் துறவில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான அவர்கள், இன்பம் மற்றும் அமைதியின் பாதையில் அடையாளம் காணப்படும் உயர்ந்த தலைவனை {பரமேஸ்வரனை} தவத்தின் உதவியால் அடைவதில் வெல்கிறார்கள்.(4) தவம் ஒளி {சிறந்த தீபம்} என்று சொல்லப்படுகிறது. ஒழுக்கம் பக்திக்கு வழிவகுக்கிறது {தர்மத்திற்கு ஸாதமாகும்}. ஞானம் உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. துறவே சிறந்த தவமாகும்.(5) அனைத்தையும் துல்லியமாகத் தீர்மானிப்பதன் மூலம் கலக்கமற்றதும், ஞானத்தோடு அடையாளம் காணப்படுவதும், அனைத்துப் பொருட்களிலும் வசிப்பதுமான சுயத்தை {ஆன்மாவைப்} புரிந்து கொள்ளும் ஒருவன் எங்கும் செல்வதில் வெல்கிறான் {அனைத்தையும் அறிந்தவனென்று இவ்வுலகில் சொல்லப்படுகிறான்}.(6)

சேர்தல் மற்றும் பிரிதல், வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றைக் காணும் கல்விமான் துன்பத்தில் இருந்து விடுபடுகிறான்.(7) எதையும் விரும்பாதவனும், எதையும் இகழாதவனுமான ஒருவன் இவ்வுலகில் வசிக்குபோதே பிரம்மத்துடன் கலப்பதற்குத் தகுந்தவனாகிறான்.(8) பிரதானத்தின் குணங்கள் குறித்த உண்மைகளை அறிந்து, அனைத்துப் பொருட்களிலும் பிரதானம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்பவனும், நான் என்ற மமதையிலிருந்தும், அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவனுமான ஒருவன் நிச்சயம் விடுதலை {முக்தி} அடைகிறான்.(9)

முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், எவருக்கும் தலைவணங்காதவனும், ஸ்வதா சடங்குகளைக் கடந்தவனுமான ஒருவன், எது முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்டதாக இருக்கிறதோ, எது நித்தியமானதோ, எது குணங்களற்றதாக இருக்கிறதோ அஃதை அமைதியான மனநிலையின் துணையால் மட்டுமே அடைந்து விடுகிறான்.(10) குணங்களில் இருந்து வளர்ந்து வரும் நல்லவையோ, அல்லவையோவான செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, வாய்மை, பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடும் ஓர் உயிரினம் நிச்சயம் விடுதலையடைகிறது {முக்தியடைகிறது}.(11) 

புலப்படாததைத் தன் பிறப்பிடமாகக் கொண்டதும், புத்தியைத் தண்டாக {அடிமரமாகக்} கொண்டதும், அகங்காரம் என்ற பெருங்கோட்பட்டை கிளைகளாகக் கொண்டதும், புலன்களைச் சிறு தளிர்கள் முளைக்கும் பொந்துகளாகக் கொண்டதும்,(12) (ஐந்து) பெரும்பூதங்களைப் பெருங்கிளைகளாகக் கொண்டதும், புலன்நுகர் பொருட்களை எப்போதும் இலைகளுடனும், அலங்கரிக்கும் மலர்களுடனும் கூடியதும், இனிமையான மற்றும் இனிமையற்ற கனிகளை உண்டாக்கக்கூடிய சிறு கிளைகளாகக் கொண்டதுமான(13) நித்தியமான பிரம்ம மரமே அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கும் அமைப்பாகிறது. வாய்மையில் ஞானம் என்ற வாளைக் கொண்டு அம்மரத்தை வெட்டிப் பிளக்கும் ஞானமுள்ள மனிதன்,(14) பற்றில் உண்டானவையும், பிறப்பு, முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றை உண்டாக்குபவையுமான கட்டுகளை {பந்தங்களைக்} கைவிட்டு, நான் எனது என்ற மமதை மற்றும் அகங்காரத்தில் இருந்து விடுபட்டு நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைவான்[2].(15)மாற்றமில்லாதவையும், நண்பர்களும், புத்தியற்றவையாக அறியப்பட வேண்டியவையுமான இரு பறவைகள் இருக்கின்றன. இவையிரண்டில் இருந்து வேறுபட்ட மற்றொன்று புத்தி என்றழைக்கப்படுகிறது.(16) ஞான இயல்பற்றதும், புத்தியற்றதுமான சுயம் {ஆன்மா}, எது இயற்கைக்கும் மேலானதோ அதை அறியும்போது, க்ஷேத்திரத்தைப் புரிந்து கொண்டு, குணங்கள் அனைத்தையும் கடந்த புத்தியுடன் கூடியதாக அனைத்தையும் தெரிந்து கொண்டு பாவங்கள அனைத்தில் இருந்து விடுதலை அடைகிறது[3]” என்றான் {பிரம்மன்}.(17)

ஏகத்வம், நானாத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 48-யோகிகளின் வகைகளையும், மோக்ஷத்தை விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு கருத்துகளையும் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “{பிரம்மமே உலகம் என்று சொல்லும்} சிலர் பிரம்மத்தை {பிரபஞ்சம் என்ற} மரமாகக் கருதுகின்றனர். சிலர் பிரம்மத்தை பெருங்காடாக {பிரபஞ்சமாகக்} கருதுகின்றனர். {பிரம்மம் உலகம் ஆவதில்லை, உலகமே பிரம்மத்தில் இருந்து தோன்றுகிறது என்று சொல்லும்} சிலர் கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டுக் கடந்த நிலையாக அதை {பிரம்மத்தைக்} கருதுகின்றனர்.(1) இவை யாவும் புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்து உண்டாகி ஈர்க்கப்படுகிறது என்று அவர்கள் {ஸாங்கியர்கள்} நினைக்கின்றனர். {பிரம்மமே உலகம் என்று சொல்லும்} எவன் தன் முடிவு வருங்காலத்தில் ஒரேயொரு மூச்சுவிடும்பொழுதில் ஆன்மாவை அடைந்து {அதனுடன்} ஒரே நிலையை அடைகிறானோ அவன் இறவாமைக்குத் தகுந்தவனாகிறான். கண்ணிமைக்கும் காலத்திற்குள்ளாக சுயத்தைச் சுயத்தில் அடக்கும் ஒருவன் {பிரம்மத்தில் இருந்தே உலகம் உண்டாகிறது என்று சொல்பவன்} தன் அமைதியின் மூலம் ஞானிகளால் அடையப்படும் வற்றாத உடைமையை {மோக்ஷத்தை} அடைகிறான். பிராணாயாமம்[1] என்றழைக்கப்படும் வழிமுறையின்படி உயிர் மூச்சுகளை மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்துவதன் மூலமும்,(2-4)பத்து, அல்லது பனிரெண்டின்[2] மூலமும் அவன் இருபத்து நான்கையும் கடந்திருப்பதை அடைகிறான்.இவ்வாறே முதலில் அமைதியான ஆன்மாவை அடையும் {நிர்மலமான சத்வ குணமுள்ள} ஒருவன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைகிறான்.(5) புலப்படாததில் இருந்து எழுவதில் {அவ்யக்தத்தில்} நல்லியல்பின் {சத்வ} குணம் அதிக ஆதிக்கம் செலுத்தும்போது அவன் இறவாமையை அடைய {அமிருதனாக இருக்கத்} தகுந்தவனாகிறான். நல்லியல்பை அறிந்தவர்கள், நல்லியல்பைக் காட்டிலும் உயர்ந்தது வேறேதுமில்லை என்று சொல்லி அதை உயர்வாகப் புகழ்கின்றனர்.(6) புருஷன் நல்லியல்பைச் சார்ந்திருக்கிறான் என்பதை நாம் உள்ளுணர்வின் மூலம் அறிகிறோம். மறுபிறப்பாளர்களே, வேறு எந்த வழிமுறைகளின் மூலமும் புருஷனை அடைவது சாத்தியமில்லை.(7)

மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துணிவு {தைரியம்}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்ஸை}, சீர்மை {ஸமமாக இருப்பது}, வாய்மை {உண்மை}, நேர்மை, அறிவு {ஞானம்}, கொடை {தியாகம்}, துறவு {ஸந்யாஸம்} ஆகியன நல்லியல்பில் இருந்து எழும் ஒழுக்க நடைமுறையின் சிறப்பியல்புகளாக {ஸத்வத்தின் கார்யங்களெனச்} சொல்லப்படுகின்றன.(8) இந்த உள்ளுணர்வின் மூலமே ஞானிகள், புருஷன் மற்றும் நல்லியல்பின் அடையாளங்களை {ஒன்றென} நம்புகிறார்கள். இதில் ஐயமேதுமில்லை.(9) ஞானத்தில் அர்ப்பணிப்புள்ள கல்விமான்கள் சிலர், க்ஷேத்ரஜ்ஞன் {புருஷன்} மற்றும் இயற்கைக்கு {சத்வத்திற்கு} இடையிலான ஒற்றுமையை வலியுறுத்திச் சொல்கின்றனர். எனினும், இது சரியல்ல.(10)

இயற்கையானது {சத்வம்}, புருஷனிலிருந்து வேறுபட்டது எனச் சொன்னால், அதுவும் கருத்தின்மையையே குறிக்கும்.(11) உண்மையில், வேற்றுமையும், ஒற்றுமையும் (புருஷனுக்கும், இயற்கைக்கும் பொருந்துவதாக) அறியப்பட வேண்டும். ஒற்றுமையும் {ஏகத்வமும்}, வேற்றுமையும் {நானாத்வமும்} இவ்வாறே விதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே கல்விமான்களின் கோட்பாடாகும். கொதுகு {கொசு} மற்றும் அத்திப்பழத்தில் ஒற்றுமையும், வேற்றுமையும் காணப்படுகின்றன.(12) நீரில் இருக்கும் மீன் வேறாக இருப்பதைப் போலவே இவை இரண்டின் (புருஷன் மற்றும் இயற்கையின் {சத்வத்தின்} உறவு இருக்கிறது. உண்மையில் அவற்றின் உறவானது தாமரை இலையில் உள்ள நீர்த்துளிகளைப் போன்றதாகும்” என்றான் {பிரம்மன்}”.(13)

ஆசான் தொடர்ந்தார், “{பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், கல்விமான்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான அந்தப் பிராமணர்கள் சில ஐயங்களை உணர்ந்தனர். (எனவே) அவர்கள் மீண்டும் ஒருமுறை (அனைத்துயிரினங்களின்) பெரும்பாட்டனைக் கேள்வி கேட்டனர்” {என்றார் ஆசான்}[3].(14)

ஸம்சயங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 49-பலர் பலவாறாகச் சொல்லும் தர்மங்களில் தங்களுக்குள்ள ஐயங்களைப் பிரம்மனிடம் கேட்ட முனிவர்கள்…

முனிவர்கள் {பிரம்மனிடம்}, “கடமைகளில் {தர்மங்களில்} எது நிறைவேற்றுவதற்கு மிகவும் தகுந்ததாகக் கருதப்படுகிறது? கடமைகளில் பல்வேறு வழிமுறைகள் முரண்பட்டவையாக இருப்பதை நாம் காண்கிறோம்.(1) சிலர் உடலுக்கு (உடல் அழிந்த) பிறகும் (அஃது {ஆத்மா} எஞ்சி) இருக்கிறது என்று சொல்கிறார்கள். மற்றவர்கள் அஃது அவ்வாறிருப்பதில்லை என்று சொல்கிறார்கள். சிலர் அனைத்தும் ஐயம் நிறைந்தன என்று சொல்கிறார்கள். வேறு சிலருக்கு ஐயங்கள் ஏதுமில்லை[1].(2)சிலர், நித்தியமானது (கோட்பாடு) நித்தியமானதல்ல என்று சொல்கிறார்கள். சிலர் அஃது இருக்கிறது என்றும், வேறு சிலர் அஃது இல்லை என்றும் சொல்கிறார்கள். சிலர் அஃது ஒரு வடிவில் அல்லது இரு வடிவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள், வேறு சிலர் அது கலந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.(3) பிரம்மத்தை அறிந்தவர்களும், வாய்மை பேசுபவர்களுமான பிராமணர்கள் சிலர் அஃது ஒன்றே என்று கருதுகிறார்கள். வேறு சிலர் அது வேறுபட்டது எனவும், மேலும் சிலர் அது பல வகையானது என்றும் கருதுகிறார்கள்.(4)

சிலர் காலமும், வெளியும் {இடமும் / தேசமும்} இருக்கின்றன என்று சொல்கின்றனர்; வேறு சிலர் அஃது அவ்வாறில்லை என்று சொல்கின்றனர். சிலர் தங்கள் தலைகளில் ஜடா முடி தரித்து மான் தோல் உடுத்துகின்றனர். வேறு சிலர் தலையை மழித்து, முற்றிலும் அடையின்றி இருக்கின்றனர்.(5) சிலர் குளிப்பதை முற்றிலும் தவிர்ப்பதை ஆதரிக்கின்றனர், சிலர் குளிப்பதை ஆதரிக்கின்றனர். தேவர்கள், பிரம்மத்தை அறிந்த பிராமணர்கள், மற்றும் வாய்மை உணர்வுகளுடன் கூடியவர்களுக்கு மத்தியில் இத்தகைய வேறுபட்ட கருத்துகள் தென்படுகின்றன.(6)

சிலர் உணவு {ஆஹாரம்} உட்கொள்வதை ஆதரிக்கின்றனர்; வேறு சிலர் உண்ணா நோன்புகளில் {உபவாஸங்களில்} அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். சிலர் செயல்பாட்டை {கர்மாவை} மெச்சுகின்றனர். வேறு சிலர் முற்றான அமைதியை {அடக்கத்தை} மெச்சுகின்றனர்.(7) சிலர் விடுதலையை {முக்தியை / மோக்ஷத்தை} மெச்சுகின்றனர். வேறு சிலர் பல்வேறு வகை இன்பங்களை {போகங்களை} மெச்சுகின்றனர்.(8)

சிலர் பல்வேறு வகைச் செல்வங்களை விரும்புகின்றனர். சிலர் வறுமையை விரும்புகின்றனர். சிலர் {தியானம் முதலிய} வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். வேறு சிலர் அவ்வாறில்லை என்கின்றனர்.(9) சிலர் தீங்கிழைக்காத வாழ்வில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். வேறு சிலர் அழிவைச் செய்வதில் அடிமையாக இருக்கிறார்கள். சிலர் தகுதியையும் {புண்ணியம் செய்வதையும்}, மகிமையையும் {புகழடைவதையும்} ஆதரிக்கின்றனர். வேறு சிலர் அவ்வாறில்லை என்கின்றனர்.(10)

சிலர் நல்லியல்பில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். வேறு சிலர் ஐயத்தில் நிறுவப்பட்டுள்ளனர். சிலர் இன்பத்தை ஆதரிக்கின்றனர். சிலர் துன்பத்தை ஆதரிக்கின்றனர். வேறு சிலர் அது தியானம் என்று சொல்கின்றனர்[2].(11) கல்விமான்களான பிராமணர்கள் சிலர் அது வேள்வி என்று சொல்கின்றனர். மேலும் சிலர் அது கொடை என்கின்றனர். சிலர் தவங்களை மெச்சுகின்றனர். வேறு சிலர் சாத்திரக்கல்வியை மெச்சுகின்றனர்.(12)சிலர் ஞானமும், துறவும் (பின்பற்றப்பட வேண்டும்) என்கின்றனர். உட்கூறுகளைச் சிந்திக்கும் வேறு சிலர் {ஸாதனங்கள் எல்லாம் பூர்த்தியாக இருப்பதினாலேயே உண்டாகிறது} அஃது இயற்கை என்கின்றனர். சிலர் அனைத்தையும் போற்றுகின்றனர். சிலர் எதையும் போற்றுவதில்லை.(13) ஓ! தேவர்களில் முதன்மையானவரே, இவ்வாறு குழப்பமுடையதும், பல்வேறு வகை முரண்பாடுகள் நிறைந்ததுமான கடமைகளில் நாங்கள் மயக்கமடைந்து, {சிறந்தது எது என்ற} எந்தத் தீர்மானத்தையும் எட்ட இயலாதவர்களாக இருக்கிறோம்.(14)

“இது நல்லது, இது நல்லது” என்று சொல்லி மனிதர்கள் செயல்படுகிறார்கள். ஒரு கடமையில் {தர்மத்தில்} பற்றுடன் இருக்கும் ஒருவன் அந்தக் கடமையே சிறந்ததென மெச்சுகிறான்.(15) இந்தக் காரணத்தினாலேயே எங்கள் புத்தி {ஒழுங்கற்றதாக} நொறுங்குகிறது, எங்கள் மனமும் திசை திரும்புகிறது. எனவே, ஓ! இருப்பவை அனைத்திலும் சிறந்தவரே, நாங்கள் நன்மையை அறிய விரும்புகிறோம்.(16) எது (பெரும்) புதிரோ, எது க்ஷேத்ரஜ்ஞன் மற்றும் இயற்கைக்கிடையிலான {சத்வத்திற்கிடையிலான} தொடர்பை உண்டாக்குகிறதோ, அதை இதன் பிறகு எங்களுக்கு அறிவிப்பதே உமக்குத் தகும்” என்று கேட்டனர் {முனிவர்கள்}.(17)

கல்விமான்களான அந்தப் பிராமணர்களால் இவ்வாறு கேட்கப்பட்டதும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், அற ஆன்மாவும், சிறப்புமிக்கவனுமான உலகங்களின் படைப்பாளன் {பிரம்மன்} அவர்கள் கேட்டதைக் குறித்துத் துல்லியமாக அவர்களுக்கு அறிவித்தான்” {என்றார் ஆசான்}.(18)

பஞ்சபூத குணங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 50-தர்மத்தோடு கூடிய ஞானமே மோக்ஷஸாதனம் என்பதையும், க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞனுக்கு இடையிலான தொடர்பையும், பஞ்ச பூதங்களின் குணங்களையும் முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…

பிரம்மன், “சரி, நீங்கள் கேட்பதை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். தம்மிடம் வந்த சீடனுக்கு ஓர் ஆசானால் சொல்லப்பட்டவற்றை அறிவீராக.(1) அவை அனைத்தையும் கேட்டு (என்னவாக இருக்கலாம் என்பதை) நீங்கள் தீர்மானிப்பீராக. எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமல் இருப்பதே{எல்லாப் பிராணிகளுக்கும் ஹிம்ஸை செய்யாமலிருப்பதே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாக {சிறந்த தர்மத்திற்கு லக்ஷணமாகக்} கருதப்படுகிறது.(2) இது கவலையில் இருந்தும் விடுபட்டதும், புனிதத்தன்மையின் அறிகுறியாகவும் இருக்கும் உயர்ந்த இருக்கையாகும் {ஸ்தானமாகும்}. குறிப்பிட்ட உண்மையைக் கண்டவர்களான புராதனர்கள், ஞானமே உயர்ந்த இன்பம் என்று சொல்கின்றனர்.(3)

எனவே, ஒருவன் தூய அறிவின் மூலம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அழிவு மற்றும் தீங்கு செய்வதில் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத்தில் நம்பிக்கையற்றவர்களாக {நாத்திகர்களாக} இருப்பவர்களும்,(4) பேராசை மற்றும் மயக்கத்துடன் கூடியவர்களாக இருப்பதன் விளைவால் நரகத்திற்குச் செல்வார்கள். எதிர்பார்ப்பால் தூண்டப்பட்டுச் சோம்பலின்றிச் செயல்களைச் செய்பவர்கள்,(5) மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து, இன்பத்தில் திளைக்கிறார்கள். எதிர்பார்ப்புகள் இன்றி, குவிந்த மனத்துடனும், நம்பிக்கையுடனும் செயல்களைச் செய்பவர்களும், கல்வி மற்றும் ஞானத்துடன் கூடியவர்களுமான மனிதர்கள், தெளிவாகப் பார்ப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(6)

இனி, க்ஷேத்ரஜ்ஞன் மற்றும் இயற்கையின் {சத்வத்தின்} சேர்க்கையும், பிரிதலும் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைச் சொல்லப் போகிறேன். மனிதர்களில் சிறந்தவர்களே, கேட்பீராக. பொருள் {விஷயம்} மற்றும் கருப்பொருளுக்கு {விஷயிக்கு} இடையிலான உறவுமுறையாக இது சொல்லப்படுகிறது[1].(7,8) புருஷன் எப்போதும் கருப்பொருளாவான்; இயற்கை {சத்வம்} பொருளெனச் சொல்லப்படுகிறது. கொதுகும் {கொசுவும்}, அத்திப்பழமும் போல இருக்கின்றன என உரையாடலின் முன் பகுதியில் சொல்வதன் மூலம் அவை விளக்கப்படுகின்றன.(9)அனுபவிக்கத்தகுந்த பொருளாக இருக்கும் இயற்கை புத்தியற்றதாகவும், எதையும் அறியாததாகவும் இருக்கிறது. எனினும், அதை அனுபவிப்பவன் அதை அறிவான் எனச் சொல்லப்படுகிறது. அனுபவிப்பவன் க்ஷேத்ரஜ்ஞனாகவும், அனுபவிக்கப்படுவது இயற்கையாகவும் {சத்வமாகவும்} இருக்கின்றன.(10) இயற்கையானது, முரண்பட்ட இரட்டைகளால் அமைந்ததாகவும் {குணங்களைக் கொண்டதாகவும்} இருக்கிறது என்று ஞானிகள் சொல்கின்றனர். மறுபுறம், க்ஷேத்ரஜ்ஞன், முரண்பட்ட இரட்டைகள் அற்றவனாகவும், பகுதிகள் அற்றவனாகவும், நித்தியமானவனாகவும், சாரத்தைப் பொருத்தவரையில் குணங்களில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான்.(11) அவன் அனைத்திலும் ஒரே தன்மையுடனும், ஞானத்துடனும் வசிக்கிறான். தாமரை இலை நீரை (அனுபவிப்பதைப்) போல அவன் {க்ஷேத்ரஜ்ஞன்} எப்போதும் இயற்கையை {சத்வத்தை} அனுபவிக்கிறான்.(12)

ஞானம் கொண்டவனான அவன், குணங்கள் அனைத்துடன் தொடர்பு கொள்ள நேர்ந்தாலும் ஒருபோதும் களங்கப்படாதவனாக இருக்கிறான்.(13) தாமரை இலையில் நிலையில்லாதிருக்கும் நீர்த்துளியைப் போலப் புருஷன் பற்றற்றவனாக இருக்கிறான். இயற்கையானது புருஷனின் உடைமையாக இருக்கிறது என்பதே (சாத்திரங்களின்) நிச்சயமான தீர்மானமாகும்.(14) இவ்விரண்டும் (புருஷனும் இயற்கையும்) பொருள் மற்றும் அதைப் படைப்பவனுக்கிடையிலுள்ள உறவுமுறையுடன் கூடியவையாக இருக்கின்றன[2].இருளடைந்த இடத்திற்கு ஒருவன் தன்னுடன் விளக்கை எடுத்துச் செல்வதைப் போல,(15) உயர்ந்ததை விரும்புபவர்கள் இயற்கை எனும் விளக்குடன் செல்கின்றனர்[3]. (எண்ணையும், திரியும் போன்ற) பொருளும், குணமும் இருக்கும் வரை விளக்கும் ஒளிர்கிறது.(16) எனினும், பொருளும் குணமும் (அல்லது எண்ணெயும், திரியும்) தீரும்போது சுடரும் அணைகிறது. இவ்வாறே இயற்கை வெளிப்படுவதாகச் சொல்லப்படுகிறது, புருஷன் வெளிப்படாதவனாகச் சொல்லப்படுகிறான்.(17) கல்விமான்களான பிராமணர்களே இதைப் புரிந்து கொள்வீராக. சரி, நான் மேலும் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். ஆயிரம் (விளக்கங்களைச்) சொன்னாலும், தீய புத்தி உள்ள ஒருவன் ஞானத்தை அடைவதில் வெல்வதில்லை.(18)எனினும், புத்தியுள்ள ஒருவன், நான்கில் ஒரு பகுதியின் (கால் பாக விளக்கத்தின்) மூலமே மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான். இவ்வாறே கடமைகளை நிறைவேற்றல் வழிமுறைகளைச் சார்ந்தது என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.(19) வழிமுறைகள் குறித்த ஞானமுள்ள புத்திசாலி, உயர்ந்த இன்பத்தை அடைவதில் வெல்கிறான்.(20) பயணத்திற்குத் தேவையான பொருட்கள் இல்லாமல் {கட்டுச்சோறின்றி} சாலையில் பயணிக்கும் மனிதன், மன உலைவுடன் பயணித்து, தன் பயணம் முடிவடைவதற்கு முன்பே அழிவையும் அடைவதைப் போலவே, செயல்களில் கனிகளும், கனியின்மையும் நேரிடும் என்பதை அறிய வேண்டும்[4].(21)ஒருவனுடைய சுயத்திற்கு {அகத்திற்கு} எது ஏற்புடையது, எது ஏற்புடையதல்ல என்பதை ஆய்வு செய்வது நன்மையை விளைவிக்கும்[5]. உண்மையை உணராத மனிதனின் வாழ்வில் முன்னேற்றமானது, ஒரு மனிதன் முன்பின் காணாத நீண்ட சாலையில் மூர்க்கமாகப் பயணிப்பதை {ஓடிச் செல்வதைப்} போன்றதாகும். எனினும், புத்தியுள்ளோரின் முன்னேற்றமானது, அதே சாலையில் வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைச் செலுத்துவதற்குச் சமமானதாகும். மலையின் உச்சிக்கு ஏறிய பிறகு ஒருவன் பூமியின் பரப்பில் கண்களைச் செலுத்தக்கூடாது[6].(22-24)தேரில் பயணித்தாலும், உணர முடியாத துன்பத்தால் பீடிக்கப்படும் ஒரு மனிதனைக் காணும் புத்திசாலி, தேருக்கான பாதை உள்ள தொலைவு வரையே தேரில் பயணிப்பான்[7].(25) கல்விமானான மனிதன், தேருக்கான பாதை முடிவடைவதைக் காணும்போது, மேலும் பயணிக்கத் தன் தேரைத் தவிர்க்கிறான். வாய்மை மற்றும் யோகத்தின் (அல்லது ஞானம் மற்றும் பக்தியின்) விதிகளை அறிந்த புத்திசாலி மனிதனும் இவ்வாறே செல்வான்.(26) குணங்களை அறிந்த மனிதன், அடுத்தடுத்து என்னென்ன என்பனவற்றைப் புரிந்து கொண்டே முன்னேறிச் செல்வான்[8].(27)பயங்கரப் பெருங்கடலில் ஒருவன் அறியாமையால் படகில்லாமல் தன்னிரு கைகளுடன் {கைகளை நம்பி} மட்டுமே மூழ்கும்போது நிச்சயம் அழிவையே எதிர்நோக்குவான்;(28) அதே வேளையில், வேறுபாடுகளை அறிந்த ஞானம் கொண்ட மனிதன் {பகுத்தறியும் மனிதன்}, துடுப்புடன் கூடிய படகில் களைப்பில்லாமல் தடாகத்தைக் கடந்து, மறுகரையை அடைந்து, படகைக் கைவிட்டுவிட்டு, நான், எனது என்ற மமதை எண்ணத்தில் இருந்து விடுபடுகிறான்.(29) இது தேர் மற்றும் பாதசாரி குறித்த எடுத்துக்காட்டின் மூலம் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. பற்றின் விளைவால் அறியாமையில் மூழ்கியிருக்கும் ஒருவன், படகில் ஒட்டும் மீனவனைப் போல அதனுடன் ஒட்டிக் கொள்கிறான்.(30)

நான் எனது என்ற மமதையில் மூழ்கும் ஒருவன் குறுகிய எல்லைகளுக்குள்ளேயே திரிகிறான். ஒரு படகில் ஏறிய பிறகு நிலத்தில் செல்ல முடியாது.(31) அதேபோல, ஒருவன் தேரில் ஏறிய பிறகு நீரில் செல்ல முடியாது. வெவ்வேறு நோக்கங்களுக்கு இவ்வாறே வெவ்வேறு செயல்பாடுகள் உள்ளன.(32) இவ்வுலகில் செயல்கள் செய்யப்படுவதைப் போலவே அவற்றைச் செய்பவனுக்கான விளைவுகளும் நேர்கின்றன. மணமற்றதும், சுவையற்றதும், தீண்டல் மற்றும் ஒலியற்றதும் எதுவோ,(33) புத்தியின் துணையுடன் தவசிகளால் தியானிக்கப்படுவது எதுவோ அது பிரதானம் என்று சொல்லப்படுகிறது.

அந்தப் பிரதானமே வெளிப்படாததாக {புலப்படாததாக / அவ்யக்தமாக} இருக்கிறது. வெளிப்படாததன் வளர்ச்சியே மஹத் ஆகும். பிரதானம் மஹத் ஆன பிறகு நேரும் வளர்ச்சியே அஹங்காரமாகும். அஹங்காரத்திலிருந்து பெரும்பூதங்கள் என்றழைக்கப்படும் வளர்ச்சி உண்டாகிறது.(35) முறையே அந்தப் புலன்நுகர் பொருட்கள், பெரும்பூதங்களிலிருந்து உண்டாகும் வளர்ச்சிகள் என்று சொல்லப்படுகின்றன. வெளிப்படாதது வித்தின் இயல்பைக் கொண்டதாகும். அதன் சாரம் உற்பத்தியாக இருக்கிறது.(36)

பேராத்மா {மஹத்} ஒரு வித்தின் குணங்களைக் கொண்டதென்றும் {காரணமென்றும்}, அஃது ஓர் உற்பத்திப் பொருள் என்றும் {காரியமென்றும்} நாம் கேள்விப்படுகிறோம்[9]. மேலும், அஹங்காரமும் வித்தின் இயல்பைக் கொண்டதாகவும், உற்பத்திப்பொருளாகவும் இருக்கிறது.(37) ஐம்பெரும்பூதங்களும் வித்தின் இயல்பைக் கொண்டவையாகவும், உற்பத்திப் பொருட்களாகவும் இருக்கின்றன. பெரும்பூதங்களுக்குரிய பொருட்கள் {விஷயங்களும்} வித்தின் இயல்பைக் கொண்டு உற்பத்திப் பொருட்களை விளைவிக்கின்றன. இவை சித்தத்தைத் தங்கள் உடைமையாகக் கொண்டுள்ளன. அவற்றில், வெளி {ஆகாயம்} ஒரு குணத்தையும், காற்று {வாயு} இரண்டு குணங்களையும் கொண்டிருக்கின்றன.(38,39)ஒளி, மூன்று குணங்களைக் கொண்டிருப்பதாகவும், நீர் நான்கு குணங்களைக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அசைவன மற்றும் அசையாதன நிரம்பிய பூமி ஐந்து குணங்களைக் கொண்டதாக அறியப்படுகிறது.(40) அவள் அனைத்து உட்பொருட்களின் பிறப்பிடமாகவும், இனியன, அல்லாதன நிறைந்த தேவியாகவும் இருக்கிறாள். ஒலி, தீண்டல், நிறம், சுவை மற்றும் ஐந்தாவதான மணம் ஆகியவை,(41) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, பூமியின் ஐந்து குணங்களாக இருக்கின்றன. எப்போதும் பூமிக்கு உரியதாக இருக்கும் மணம் பல்வேறு வகைகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(42)

நான் மணத்தின் எண்ணற்ற குணங்களை விரிவாகச் சொல்லப் போகிறேன். ஏற்புடையது {இஷ்டம்}, ஏற்பில்லாதது {அனிஷ்டம்}, இனியது {மதுரம்}, புளிப்பானது {அம்லம்}, கடுமையானது {கடு}, பரவலானது {நிர்ஹாரி}, கச்சிதமானது {ஸம்ஹதம்}, எண்ணெயானது {ஸ்நிக்தம்}, உலர்ந்தது {ரூக்ஷம்}, தெளிவானது {விசதம்} என்ற {பத்து} வகைகளில் மணம் இருக்கிறது.(43) இவ்வாறே பூமிக்கு உரிய மணம் பத்து வகைகளில் இருக்கிறது என்று அறியப்பட வேண்டும்[10].(44) ஒலி, தீண்டல், நிறம், சுவை ஆகியன நீரின் குணங்களாகும். நான் இனி சுவையின் குணங்களைச் சொல்லப் போகிறேன். சுவை பல்வேறு வகைப்பட்டதெனச் சொல்லப்படுகிறது.(45)இனியது {இனிப்பு}, புளிப்பு, கடுமையானது {கார்ப்பு}, கசப்பானது, துவர்ப்பானது மற்றும் உவர்ப்பானது என்று {என்ற வகைகளில் சுவை} இருக்கிறது. இவ்வாறே நீர் தொடர்பானது என்று சொல்லப்படும் சுவை ஆறு வகைகளில் இருக்கிறது.(46) ஒளியானது, ஒலி, தீண்டல் மற்றும் நிறம் என்ற மூன்று குணங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நிறம் ஒளியின் குணமாகும், மேலும் நிறம் பல வகையெனச் சொல்லப்படுகிறது.(47) வெள்ளை, கருப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், சாம்பல், குட்டை, நீளம், இளைத்தது, பருத்தது, வட்டம் {நாற்கோணம்}, வட்டம்(48) ஆகிய பனிரெண்டு வகைகள் ஒளிக்குரிய நிறத்திற்கு இருக்கின்றன.

வயது முதிர்ந்தவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், பேச்சில் வாய்மை நிறைந்தவர்களுமான பிராமணர்களால் இது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.(49) ஒலியும் {சப்தமும்}, தீண்டலும் {ஸ்பர்சமும்} காற்றின் {வாயுவின்} இரு குணங்களாக அறியப்படுகின்றன. தீண்டல் பல்வேறு வகைகளில் சொல்லப்படுகிறது.(50) முரடு, குளிர் {சீதம்}, வெப்பம் {உஷ்ணம்}, இளையது {பிச்சிலம்}, தெளிவு {விசதம்}, கடுமை {கடினம்}, எண்ணெய் {ஸ்நிக்தம்}, வழுவழுப்பானது {சிக்கணம்}, வழுக்கும்தன்மையுள்ளது {ஸ்லக்ஷணம்}, துன்பம்நிறைந்தது {தாருணம் / கூச்சம் நிறைந்தது}, மென்மையானது {மிருது}[11](51) என்ற பனிரெண்டு வகைகளில் காற்றின் குணமான தீண்டல் இருக்கிறதென வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், உண்மையைக் கண்டவர்களுமான பிராமணர்களால் சொல்லப்படுகிறது.(52)இனி, வெளி ஒரேயொரு குணத்தைக் கொண்டது, அஃது ஒலி என்று சொல்லப்படுகிறது. ஒலியின் எண்ணற்ற குணங்களை நான் விரிவாகச் சொல்லப் போகிறன்.(53) காந்தாரத்துடன் சேர்ந்த ஷட்ஜம் மற்றும் ரிஷபம், மத்யமம், பஞ்சமம், நிஷாதம், தைவதம், இவற்றையும் தவிர ஏற்புடைய ஒலிகள் {இஷ்டம்}, ஏற்பில்லாத ஒலிகள் {அனிஷ்டம்}, ஸம்ஹதம் {கச்சிதமானது} எனப் பல உட்பொருட்களைக் கொண்டதாக இருக்கிறது[12].(54) வெளியில் பிறக்கும் ஒலி இவ்வாறே பத்து வகைகளாக இருக்கிறது என அறிய வேண்டும்.-(ஐந்து) பூதங்களில் வெளியே உயர்ந்ததாகும். அஹங்காரம் அதைவிட உயர்ந்தது.(55) அஹங்காரத்தைவிடப் புத்தி உயர்ந்தது. புத்தியைவிட ஆன்மா உயர்ந்தது. ஆன்மாவைவிடப் புலப்படாதது {அவ்யக்தம்} உயர்ந்தது. புலப்படாததைவிடப் புருஷன் உயர்ந்தவன்.(56) இருப்பிலுள்ள உயிரினங்களுக்கு மத்தியில் உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும் அறிந்தவனும், செயல்கள் அனைத்தின் விதிமுறைகள் அறிந்தவனும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னையே அமைத்துக் கொள்பவனுமான ஒருவன், மங்கிமறையாத ஆன்மாவை அடைகிறான்” என்றான் {பிரம்மன்}.(57)

ஸநாதன தர்மம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 51-க்ஷேத்ரஜ்ஞன் குறித்த மேலும் சில அவதானிப்புகளை முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்; பிரம்மன் சொன்ன சொற்களின்படியே நடக்க வேண்டுமென அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல அர்ஜுனனிடம் அனுமதி கேட்ட கிருஷ்ணன்; அர்ஜுனனின் பதில்..

பிரம்மன், “இந்த ஐந்து பூதங்களைக் கட்டுப்படுத்துவதிலும், அவற்றை வளர்ப்பதிலும் ஆட்சியாளனாக மனமே இருப்பதால், அதுவே பூதங்களின் ஆன்மாவாக இருக்கிறது.(1) மனமே எப்போதும் பெரும்பூதங்களுக்குத் தலைமை தாங்குகிறது. அதிகாரத்தை அறிவிக்கும் புத்தியானது க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுகிறது[1].(2) நல்ல குதிரைகளைப் பூட்டும் சாரதியைப் போல மனமானது புலன்களைப் பூட்டுகிறது. புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியன எப்போதும் க்ஷேத்ரஜ்ஞனுடன் இணைந்திருக்கிறது.(3) பெருங்குதிரைகள் பூட்டப்பட்டதும், புத்தியைக் கடிவாளமாகக் கொண்டதுமான தேரில் ஏறும் தனிப்பட்ட ஆன்மாவானது அனைத்துப் பக்கங்களிலும் அதைச் செலுத்துகிறது.(4) (குதிரைகளாகப்) புலன்கள் பூட்டப்பட்டதும், மனத்தைச் சாரதியாகக் கொண்டதும், புத்தியை நித்திய கடிவாளமாகக் கொண்டதுமாகப் பெரும் பிரம்மத் தேர் இருக்கிறது[2].(5)கல்வியும், ஞானமும் கொண்டவனும், இவ்வழியில் பிரம்மத்தேரை எப்போதும் புரிந்து கொள்பவனுமான மனிதன், அனைத்துப் பொருள்களுக்கு {உலகங்களுக்கு} மத்தியிலும் ஒருபோதும் மயக்கத்தில் {அறியாமையில் / மோஹத்தில்} மூழ்க மாட்டான்.(6) பிரம்மம் எனும் இந்தக் காடு புலப்படாததில் தொடங்கி, பொருட்திரளில் முடிகிது. அஃது அசையும், மற்றும் அசையாத பொருட்களையும் சேர்த்துக் கொண்டு, சூரியன் மற்றும் சந்திரனிடம் இருந்து ஒளியைப் பெற்றுக் கொண்டு, கோள்கள் மற்றும் விண்மீன்கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அஃது ஆறுகள் மற்றும் மலைகள் எனும் வலைகளால் எப்போதும் நிறைந்திருக்கிறது. எப்போதும் அது பல்வேறு வகை நீர்நிலைகளுடன் பிரகாசிக்கிறது. அஃது அனைத்து உயிரினங்களுக்கு வாழ்வாதார வழிமுறையாக இருக்கிறது. மேலும் அஃது அனைத்து உயிரினங்களின் இலக்காகவும் இருக்கிறது. அந்தக் காட்டிலேயே க்ஷேத்ரஜ்ஞன் எப்போதும் திரிகிறான்.(7-9) இவ்வுலகில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் எதுவும் முதலில் அழிவதாக இருக்கிறது {அவையே முதலில் லயமடைகின்றன}. அதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் {பூதங்களையும்} தொகுக்கும் குணங்கள் (அழிவை அடைகின்றன).(10)

குணங்களுக்குப் பிறகு ஐம்பூதங்கள் (அழிவையடைகின்றன). இதுவே பொருட்களின் {பூதங்களின்} படிநிலையாகும். தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், அசுரர்கள்,(11) ராட்சசர்கள் ஆகியோரனைவரும் இயற்கையில் இருந்தே உண்டாகின்றனர், {வேள்விகள் முதலான} செயல்களில் இருந்தோ, {பிரம்மா முதலான} காரணத்தில் இருந்தோ உண்டாவதில்லை. அண்டத்தைப் படைப்பவர்களான பிராமணர்கள் இம்மையில் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்[3].(12) அவர்களில் இருந்து உதிக்கும் அனைத்தும் வேளை வரும்போது கடலில் அலைகளைப் போல அந்த ஐம்பூதங்களிலேயே கறைகின்றன {அழிகின்றன / லயமடைகின்றன}.(13) பெரும்பூதங்கள் அனைத்தும் அண்டத்தைத் தொகுக்கும் பூதங்களைக் கடந்தவையாகும். ஐம்பூதங்களில் இருந்து விடுபட்டவன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(14) பலமிக்கவனான பிரஜாபதியே அனைத்தையும் மனத்திலேயே உண்டாக்கினான். அதே போல முனிவர்களும் தவத்தின் துணையுடன் தேவர்களின் நிலையை அடைந்தனர்.(15)அதேபோலவே, துல்லியத்தை அடைந்தவர்களும், யோகக் குவிப்புக்கு வல்லவர்களும், கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்பவர்களுமாக இருப்பவர்கள் தவத்தின் மூலம் மூவுலகத்தையும் உணர்கிறார்கள்.(16) அடையப்படும் உடைமைகளான அனைத்திற்கும் தவமே வேராக இருப்பதால் மருந்துகள், மூலிகைகள் மற்றும் பல்வேறு அறிவியல்கள் அனைத்தும் தவம் எனும் வழிமுறையால் மட்டுமே அடையப்படுகிறது.(17) தவம் தடுக்கப்பட முடியாதது என்பதால், அடைதற்கரிதான எதுவும், கற்பதற்கரிதான எதுவும், வெல்வதற்கரிதான எதுவும், கடப்பதற்கரிதான எதுவும் என அனைத்தும் தவத்தின் மூலம் அடையப்படுகின்றன.(18) மதுவைப் பருகியவன், பிராமணனைக் கொன்றவன், களவாடுபவன், கருவை அழித்தவன், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவன் ஆகியோரும் நன்கு செய்யப்படும் தவத்தின் மூலம் பாவத்தில் இருந்து தூய்மையடைகிறார்கள்.(19)

மனிதர்கள், பித்ருக்கள், தேவர்கள், (வேள்வி) விலங்குகள், பறவைகள், விலங்குகள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும்,(20) தவங்களில் தங்களை எப்போதும் அர்ப்பணித்துக் கொள்வதன் மூலம், தவத்தால் மட்டுமே வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றன. அதே போலவே, பெரும் மாயசக்திகளுடன் கூடிய தேவர்களும் சொர்க்கத்தை அடைந்தனர்.(21) சோம்பலின்றி, அஹங்காரம் நிறைந்தவர்களாக எதிர்பார்ப்புகளுடன் கூடிய செயல்களைச் செய்பவர்கள் பிரஜாபதியின் முன்னிலையை அடைகிறார்கள்.(22) எனினும், மமதையற்றவர்களும், தூய்மையான தியான யோகத்தின் மூலம் அகங்காரத்தில் இருந்து விடுபட்டவர்களுமான உயர் ஆன்மாக்கள் பெருமைக்குரிய உயர்ந்த உலகங்களை அடைகின்றனர்.(23) சுயத்தைச் சிறப்பாகப் புரிந்து கொள்பவர்கள், தியான யோகத்தை அடைந்து, எப்போதும் தங்கள் மனங்களை உற்சாகம் நிறைந்தவையாக்கி, புலப்படாத இன்பத்திரளுக்குள் நுழைகின்றனர்.(24) மமதை மற்றும் அஹங்காரத்தில் இருந்து விடுபட்டவர்களும், தியான யோகத்தில் நிறைவை அடைந்து மீண்டும் பிறப்பவர்களுமான மனிதர்கள், (அத்தகைய வாழ்வில் இருந்து விடுபடும்போது) புலப்படாத பெரியதற்கு ஒதுக்கப்பட்ட உயர்ந்த உலகத்திற்குள் நுழைகிறார்கள்.(25)

அதே புலப்படாததில் (கோட்பாட்டில்) பிறந்து, இருள் {தமஸ்} மற்றும் ஆசை {ரஜோ} குணங்களில் இருந்து விடுபட்டு, நல்லியல்பின் {சத்வ} குணத்தை மட்டுமே பிற்பற்றுபவன் அதையே மீண்டும் அடைந்து,(26) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான்[4]. அத்தகைய ஒருவனே துல்லியமான க்ஷேத்ரஜ்ஞனாக அறியப்பட வேண்டும். எவன் தன்னை அறிவானோ, அவன் வேதங்களை அறிவான்[5].(27) மனத்தில் (மனக்கட்டுப்பாட்டில்) இருந்து தூய ஞானத்தை அடையும் தவசி தற்கட்டுப்பாட்டுடன் அமர வேண்டும். ஒருவனுடைய மனம் எதனில் நிறுவப்பட்டுள்ளதோ அவன் அதுவாகவே ஆகிறான். இதுவே நித்தியப் புதிராகும் {ஸநாதனமான ரஹஸ்யமாகும்}.(28) புலப்படாததை {அவ்யக்தத்தை} தொடக்கமாகவும், குணத்திரளை {விசேஷங்களை} முடிவாகவும் கொண்டது ஞானமின்மையை {அவித்தையைத்} தன் குறியீடாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நீங்கள் குணங்களற்ற இயல்பைக் கொண்டதெது {அது ஞானம்} என்பதை நீங்கள் புரிந்து கொள்வீராக.(29) மிருத்யு (மரணம்) இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகும்; நித்திய பிரம்மம் மூன்றெழுத்துகளைக் கொண்டதாகும். மமதையே மரணம், மமதைக்கு எதிர்நிலை நித்தியமாகும்[6].(30)கெட்ட புத்தியினால் வழிநடத்தப்படும் சில மனிதர்கள் செயல்களை மெச்சுகின்றனர். எனினும், உயர் ஆன்மாக்களைக் கொண்ட புராதனர்களாக எண்ணப்படுவோர் ஒருபோதும் செயல்களை மெச்சுவதில்லை.(31) செயல்பாட்டின் மூலம் பதினாறாலான உடலுடன் ஓர் உயிரினம் பிறக்கிறது[7]. (உண்மை) ஞானம், (உடலின் நனவுடன் கூடிய சுயத்தை) புருஷனை விழுங்குகிறது. அமிர்தத்தை உண்பவர்களுக்கு இதுவே மிக ஏற்புடையதாக இருக்கிறது[8].(32) எனவே, (வாழ்வெனும் கடலின்) மறுகைவரை விரிந்த பார்வையைக் கொண்டவர்கள், செயல்களில் பற்றேதும் வைப்பதில்லை. எனினும், இந்தப் புருஷன் ஞானம் நிறைந்தவனாக இருக்கிறானேயன்றி செயல்நிறைந்தவனாக அல்ல[9].(33) மரணமற்றவனும், மாற்றமில்லாதவனும், அறியப்படமுடியாதவனும், நித்தியமானவனும், அழிவற்றவனும், பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், கட்டுப்படுத்தப்படாதவனுமான ஆன்மாவைப் புரிந்து கொள்பவன் இறப்பதில்லை.(34) முன்னவனெவனும் இல்லாதவனும், படைக்கப்படாதவனும், மாற்றமில்லாதவனும், வெல்லப்படாதவனும், அமுதம் உண்பவர்களாலும் புரிந்து கொள்ளப்பட முடியாதவனுமான ஆன்மாவை இவ்வாறு புரிந்து கொள்பவன், இவ்வழிமுறைகளின் மூலம் தானே புரிந்து கொள்ளப்பட முடியாதவனாகவும், இறப்பில்லாதவனாகவும் ஆகிறான்.(35)மனப்பதிவுகள் {எண்ணங்கள்} அனைத்தையும் அகற்றி, ஆன்மாவுக்குள் ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, எதைவிடப் பெரியதேதும் இல்லையோ அந்த மங்கலமான பிரம்மத்தை அவன் புரிந்து கொள்கிறான்.(36) புத்தி தெளிவடைந்ததும் அவன் அமைதியை அடைவதில் வெல்கிறான். ஒரு கனவில் நடைபெறுவதைப் போல இருப்பதே அமைதியின் அறிகுறியாகும்[10].(37) இதுவே,, ஞானத்தை நோக்கமாகக் கொண்டவர்களும், விடுதலையடைந்தவர்களுமான இவர்களின் இலக்காகும். அடுத்தடுத்த வளர்ச்சிகளில் பிறக்கும் இயக்கங்கள் அனைத்தையும் அவர்கள் காண்கிறார்கள்[11].(38) இஃது உலகப்பற்றற்றவர்களின் இலக்காகும். இது நித்திய நடைமுறையாகும். இது ஞானிகள் அடையக்கூடிய உடைமையாகும். இதுவே இகழப்படாத ஒழுக்கமுறையுமாகும்.(39) இந்த இலக்கானது, அனைத்து உயிரினங்களிடமும் ஒத்த நடை கொண்டவனும், பற்றற்றவனும், எதிர்பார்ப்பில்லாதவனும் {பயன் கருதாதவனும்}, அனைத்துப் பொருட்களையும் நிகராகக் காண்பவனுமான ஒருவனால் அடையக்கூடியதாக இருக்கிறது.(40) மறுபிறப்பாள முனிவர்களில் முதன்மையானவர்களே, நான் அனைத்தையும் உங்களுக்கு அறிவித்து விட்டேன். இவ்வழியில் உடனே செயல்பட்டு வெற்றியை அடைவீராக” என்றான் {பிரம்மன்}”.(41)ஆசான் தொடர்ந்தார், “ஆசானான பிரம்மனால் இவ்வாறு சொல்லப்பட்டவர்களான அந்த உயர் ஆன்ம தவசிகள் அதன்படியே செயல்பட்டு, (பேரின்ப) உலகங்கள் பலவற்றை அடைந்தனர்.(42) ஓ! அருளப்பட்டவனே, ஓ! தூய ஆன்மா கொண்டவனே, என்னால் அறிவிக்கப்பட்டதும், பிரம்மனால் சொல்லப்பட்டதுமான சொற்களின்படியே நீயும் முறையாகச் செயல்படுவாயாக. அப்போது நீ வெற்றியை அடைவாய்” என்றார் {ஆசான்}”.(43)

வாசுதேவன் சொன்னான், “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இவ்வாறு அந்த ஆசானால் உயர்ந்த அறக்கோட்பாடுகள் கற்பிக்கப்பட்ட அந்தச் சீடன், அதன்படியே அனைத்தையும் செய்து, விடுதலையை {முக்தியை} அடைந்தான்.(44) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த அந்தச் சீடன், எங்கே கவலைப்பட வேண்டியதில்லையோ அந்த இருக்கையை {ஸ்தானத்தை} அடைந்தான்” {என்றான் வாசுதேவன்}.(45)

அர்ஜுனன், “ஓ! கிருஷ்ணா, ஓ! ஜனார்த்தனா, அந்தப் பிராமணரும், அந்தச் சீடரும் உண்மையில் யாவர்? ஓ! தலைவா, அஃது என்னால் கேட்கத்தகுந்ததாக இருந்தால் உண்மையாக எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(46)

வாசுதேவன், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நானே ஆசான் என்றும், என் மனமே என் சீடன் என்றும் அறிவாயாக. ஓ! தனஞ்சயா, உன்னிடம் கொண்ட பற்றின் {அன்பின்} காரணமாக நான் இந்தப் புதிரை {ரஹஸ்யத்தை} உனக்குச் சொன்னேன்.(47) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, உனக்கு என்னிடம் அன்பேதும் இருந்தால் ஆன்மா குறித்த இந்தப் போதனைகளைக் கேட்ட நீ எப்போதும் (அவற்றின்படியே) செயல்படுவாயாக.(48) ஓ! பகைவரைப் பிளப்பவனே, இவ்வறத்தை முறையாகப் பயிலும்போது நீ உன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு முழுமையான விடுதலையை {முக்தியை} அடைவாயாக.(49) முன்னர், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, போருக்கான காலம் வந்தபோது, இந்த அறமே என்னால் (உனக்கு) அறிவிக்கப்பட்டது. எனவே, உன் மனத்தை அதில் நிறுவுவாயாக.(50) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் தலைவரான என் தந்தையைக் கண்டு நெடுங்காலம் ஆகிவிட்டது. ஓ! பல்குனா {அர்ஜுனா}, உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு நான் மீண்டும் அவரைக் காண விரும்புகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}”.(51)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொன்ன கிருஷ்ணனிடம், மறுமொழியாகத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, “நாம் இன்று இந்த நகரத்தில் {இந்திரப்பிரஸ்தத்தில்} இருந்து புறப்பட்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்வோம்.(52) அற ஆன்மாவான மன்னன் யுதிஷ்டிரரை அங்கே சந்தித்து, (உன் நோக்கத்தை) அவரிடம் தெரிவித்தபிறகு நீ உன் சொந்த நகரத்திற்கு {துவாரகைக்குச்} செல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}[12].(53)

அநுகீதை முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அநுசாஸன பர்வம்-ஸ்ரீ தான தர்ம உப பர்வம்-பகுதி -2-ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்-ஸ்ரீ சாவித்ரி -ஸ்ரீ காயத்ரி-மந்திரம்!

October 21, 2025

ஸ்ரீ விஷ்ணுஸஹஸ்ரநாமம் – விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 149-விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்{ அந்தப் பெயர்களைச் சொல்வதாலோ, கேட்பதாலோ கிட்டும் பலன்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடமைகள் அனைத்தையும், புனிதச் செயல்கள் அனைத்தையும், மனிதர்களின் பாவங்களைத் தூய்மையாக்கும் பொருட்களையும் முழுமையாகக் கேட்ட யுதிஷ்டிரன், சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம்} மீண்டும் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}“உலகில் ஒரே தேவன் என்று யாரைக் கூறலாம்? நமது ஆன்மப் புகலிடமான ஒரே பொருளாக யாரைக் கூறலாம்? எவனை வழிபடுவதன் மூலம், அல்லது எவனுடைய புகழைப் பாடுவதன் மூலம் மனிதர்கள் நன்மையை அடைவார்கள்?(2) உமது தீர்மானத்தின்படி அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறம் எது? எந்த மந்திரங்களை உரைப்பதன் மூலம் பிறவி மற்றும் வாழ்வின் கட்டுகளில் இருந்து ஓர் உயிரினத்தால் விடுபட முடியும்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தளர்வனைத்தையும் வீசியெறிந்துவிட்டு, அண்டத்தின் தலைவனும், எல்லையற்றவனும், அனைத்திலும் முதன்மையானவனுமான தேவதேவனின் (வாசுதேவனின்) ஆயிரம் பெயர்களைச் சொல்லி அவனுடைய புகழை உற்சாகமாகப் பாட வேண்டும்.(3) மாற்றமில்லாதனான அவனை மதிப்புடனும், பக்தியுடனும் எப்போதும் வழிபடுவதன் மூலமும், அவனைத் தியானிப்பதன் மூலமும், அவனது புகழைப் பாடி, அவனுக்குத் தலைவணங்குவதன் மூலமும், அவனுக்காக வேள்வி செய்வதன் மூலமும், தொடக்கமும், முடிவும், அழிவும் இல்லாதவனும், உலகங்கள் அனைத்தின் பரமத் தலைவனும், அண்டத்தைக் கட்டுப்படுத்தி ஆள்பவனுமான அந்த விஷ்ணுவைப் புகழ்வதன் மூலமும் ஒருவன் கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்லலாம்.(6) உண்மையில், பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனாகவும், அனைவரின் புகழ் மற்றும் சாதனைகளைப் பெருக்குபவனாகவும், அனைத்து உலகங்களையும் ஆள்பவனாகவும், பேரற்புதம் நிறைந்தவனாகவும், அனைத்து உயிரினங்களின் தோற்றத்துக்கான அடிப்படைக் காரணமாகவும் அவனே இருக்கிறான்.(7) என் தீர்மானத்தின்படி, தாமரைக்கண்ணனான வாசுதேவனிடம் பக்தியுடன் அவனது புகழைப் பாடி எப்போதும் அவனை வழிபடுவதே ஒருவன் செய்யும் அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறமாகும்.(8)

உயர்ந்த சக்தி அவனே. உயர்ந்த தவம் அவனே. உயர்ந்த பிரம்மம் அவனே. உயர்ந்த புகலிடம் அவனே.(9) புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவன் அவனே. மங்கலப் பொருட்கள் அனைத்திலும் புனிதமிக்கவன் அவனே. தேவர்கள் அனைவருக்கும் தேவன் அவனே, உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமில்லா நிலையான தந்தை அவனே.(10) தொடக்க யுகம் தொடங்கியபோது உயிரினங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தே உண்டாகின. யுகம் தீர்ந்ததும் அனைத்துப் பொருட்களும் அவனிலேயே மறைகின்றன[1].(11) ஓ! மன்னா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அண்டத்தை ஆள்பவனுமான விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் கேட்பாயாக, அவை பாவங்களை அழிப்பதில் பெருந்திறன் கொண்டவையாகும்.(12) முனிவர்களால் பாடப்பட்ட உயரான்ம வாசுதேவனின் ரகசியமான மற்றும் நன்கறியப்பட்ட குணங்களில் இருந்து எடுக்கப்பட்ட அவனுடைய பெயர்கள் அனைத்தையும் அனைவருடைய நன்மைக்காவும் உனக்குச் சொல்லப் போகிறேன்[2][3].(13)

அவை, ஓம்! தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவன் {விஸ்வம்}, அனைத்துப் பொருட்களையும் மறைப்பவன் {விஷ்ணு}, வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஊற்றப்படும் இடமாக இருப்பவன் {வஷட்காரன்}, கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் தலைவன் {பூதபவ்யபவத்ப்ரபு}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவன் {பூதக்ருத், பூதப்ருத்},  அனைத்துப் பொருட்களையும் நிலைநிறுத்துபவன் {பாவன்},  அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருப்பவன் {பூதாத்மா},  அனைத்துப் பொருட்களையும் தோற்றுவித்தவன்{பூதபாவநன்}<1-9>;(14)

தூய ஆன்மா கொண்டவன் {பூதாத்மா}, உச்சமான உயர்ந்த ஆன்மா {பரமாத்மா}, விடுதலையடைந்த {முக்தியடைந்த} மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக இருப்பவன் {முக்தாநாம்பரமாகதி}, மாற்றமற்றவன் {அவ்யயன்}, உறைக்குள் மறைந்து கிடப்பவன் {புருஷன்}, சான்றாளன் {ஸாக்ஷீ}, தான் வசிக்கும் உடல் உறையை அறிந்தவன் {க்ஷேத்ரஜ்ஞன்}, அழிவற்றவன் {அக்ஷரன்}<10-17>;(15)

யோக தியானத்தின் போது மனம் ஓயும் இடமாக இருப்பவன் {யோகன்}, யோகம் அறிந்தோர் அனைவருக்குமான வழிகாட்டி அல்லது தலைவன் {யோகவிதாம்நேதா}, பிரதானம் (அல்லது பிரகிருதி) மற்றும் புருஷன் ஆகிய இரண்டின் தலைவன் {ப்ரதாநபுருஷேஸ்வரன்}, சிங்கத்தலையுடன் கூடிய மனித வடிவினன் {நாரஸிம்மவபு}, அழகிய சிறப்புக்கூறுகளையும், செய்கருவிகளையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அழகுமயிர் படைத்தவன்{கேசவன்}, புருஷர்களில் முதன்மையானவன் {புருஷோத்தமன்}<18-24>;(16)

அனைத்துப் பொருட்களின் உடல் வடிவமாக இருப்பவன் {ஸர்வன்}, அனைத்தையும் அழிப்பவன் {சர்வன்}, சத்வம், ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் மூன்றையும் கடந்திருப்பவன் {சிவன்}, அசைவற்றவன் {ஸ்தாணு}, அனைத்தின் தொடக்கமாக இருப்பவன் {பூதாதி}, அண்ட அழிவின்போது அனைத்தும் மூழ்கும் கொள்ளிடமாக இருப்பவன் {நிதிரவ்யயன்}, மாற்றமில்லாதவன் {ஸம்பவன்}, விரும்பியது போலப் பிறப்பவன் {பாவநன்}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களையும் (மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் வடிவில்) கனியச் செய்பவன் {பர்த்தா}, அனைத்துப் பொருட்களையும் தாங்கிப் பிடிப்பவன் {ப்ரபவன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தும் உண்டாகும் மூலமாக இருப்பவன், பலமிக்கவன் {ப்ரபு/பிரபு}, அனைத்தின் மீதும் கட்டற்ற தலைமையைக் கொண்டவன் {ஈஸ்வரன்}<25-37>;(17)

தானாகத் தோன்றியவன் {ஸ்வயம்பூ}, தன்னை வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {சம்பு}, சூரிய வட்டிலுக்கு மத்தியில் (பொன்வடிவில் உள்ள) தலைமை மேதை {ஆதித்யன்}, தாமரைக்கண்ணன் {புஷ்கராக்ஷன்}, உரத்த குரல் கொண்டவன் {மஹஸ்வநன்}, தொடக்கமும் முடிவுமற்றவன் {அநாதிநிதநன்}, (அனந்தன் மற்றும் பிறரின் வடிவில்) அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவன் {தாதா}, செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் அனைத்தையும் விதிப்பவன் {விதாதா}, பெரும்பாட்டனான பிரம்மனையும் விட மேன்மையானவன் {தாதுருத்தமன்}<38-46>;(18)

அளவற்றவன் {அப்ரமேயன்}, புலன்களின் தலைவன் (அல்லது சுருள் மயிர்க் கொண்டவன்) {ஹ்ருஷீகேசன்}, தொடக்கக் காலத் தாமரை உதித்த உந்தி கொண்டவன் {பத்மநாபன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {அமரப்ரபு}, அண்டத் தச்சன் {விஸ்வகர்மா}, மந்திரமாக இருப்பவன் {மநு}, அனைத்துப் பொருட்களையும் பலவீனப்படுத்துபவன், அல்லது மெலியச் செய்பவன் {த்வஷ்டா}, மிகப் பெரியவன் {ஸ்தவிஷ்டன்}, புராதனமானவன் {ஸ்தவிரன்}, தாங்கி நிலைத்திருப்பவன் {த்ருவன்/துருவன்} <47-56>;(19)

(புலன்களாலோ, மனத்தாலோ) பற்றப்பட முடியாதவன் {அக்ராஹ்யன்}, நித்தியமானவன் {சாஸ்வதன்}, கிருஷ்ணன், சிவந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்}, அண்ட அழிவின் போது அனைத்து உயிரினங்களையும் கொல்பவன் {ப்ரதர்த்தநன்}, அறிவு, வலிமை மற்றும் பிறவகைக் குணங்களில் பெரியவன் {பரப்பூதன்}, ஒவ்வொரு உயிரினத்தின் (மேல், நடு மற்றும் கீழ் என) மூன்று பகுதிகளில் வசிப்பவன் {த்ரிககுப்தாமா}, தூய்மைப்படுத்துபவன் {பவித்ரம்}, மங்கலம் நிறைந்த உயர்ந்தவன் {மங்களம்பரம்}<57-64>;(20)

அனைத்து உயிரினங்களையும் அனைத்துச் செயல்களையும் செய்யத் தூண்டுபவன் {ஈசாநன்}, செயல்படுவதற்கான உயிர்மூச்சை உண்டாக்குபவன் {{ப்ராணதப்ராணன்}, அனைத்து உயிரினங்களையும் வாழச் செய்பவன் {ஜ்யேஷ்டன்}, மூத்தவன் {ஸ்ரேஷ்டன்}, உயிரினங்களின் தலைவர்களாகக் கருதப்படுவோர் அனைவரிலும் முதன்மையானவன் {ப்ரஜாபதி}, பொன்னையே தன் வயிறாகக் கொண்டவன் {ஹிரண்யகர்ப்பன்}, பூமியை வயிறாக் கொண்டவன் {பூகர்ப்பன்}, ஸ்ரீ அல்லது லட்சுமியின் தலைவன் {மாதவன்}, மதுவைக் கொன்றவன் {மதுஸூதநன்}<65-73>;(21)

எல்லாம் வல்லவன்{ஈஸ்வரன்}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, வில் தரித்தவன் {தந்வீ}, ஆய்வுகள் அனைத்தின் உள்ளடக்கத்தையும் மனத்தில் கொள்ளவல்லவன் {மேதாவீ}, கருடனைச் செலுத்திக் கொண்டு அண்டத்தில் திரிபவன் {விக்ரமன்}, தனக்கு அளிக்கப்படும் காணிக்கைகளுக்குத் தகுந்தவனாகவும் அவற்றை முறையாக அனுபவிக்கும் சக்தி கொண்டவனாகவும் இருப்பவன் {க்ரமன்}, ஒப்பற்றவன் {அநுத்தமன்}, குழப்பமடையாதவன் {துராதர்ஷன்}, செய்யப்படும் அனைத்துச் செயல்களையும் அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, அனைத்துச் செயல்களுடன் அடையாளங்காணப் படுபவன் {க்ருதி}, தன் உண்மையான சுயத்தையே சார்ந்திருப்பவன் {ஆத்மவாந்}<74-84>;(22)

தேவர்கள் அனைவரின் தலைவன் {ஸுரேசன்}, அனைத்தின் புகலிடமாக இருப்பவன் {சரணன்}, உயர்ந்த இன்பத்தின் உடல் வடிவம் {சர்ம}, அண்டத்தின் வித்தாக இருப்பவன் {விஸ்வரேதஸ்}, அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமாக இருப்பவன் {ப்ரஜாபவன்}, (அறியாமை உறக்கத்தில் மூழ்கியிருக்கும் ஜீவனை விழிப்படையச் செய்பவனாக இருக்கும் விளைவால்) பகலாக இருப்பவன் {அஹஸ்}, ஆண்டாக இருப்பவன் {ஸவம்த்ஸரன்}, (பிடிக்கப்பட முடியாதவனாக இருப்பதால்) பாம்பாக இருப்பவன் {வியாளன்}, திட நம்பிக்கையின் உடல்வடிவமாக இருப்பவன் {ப்ரத்யயன்}, அனைத்தையும் காண்பவன் {ஸர்வதர்சநன்}<85-94>;(23)

பிறப்பற்றவன் {அஜன்}, அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஸ்வரன்}, வெற்றி அடைந்தவன் {ஸித்தன்}, வெற்றி {ஸித்தி}, (அனைத்துப் பொருட்களுக்கும் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களின் தொடக்கமாக இருப்பவன் {ஸர்வாதி}, சிதைவைக் கடந்தவன் {அச்யுதன்}, மூழ்கிய பூமியை உயர்த்திய பெரும்பன்றி மற்றும் காளைமாட்டின் வடிவில் அறமாக இருப்பவன் {வ்ருஷாகபி}, அளவற்ற ஆன்மா கொண்டவன் {அமேயாத்மா}, அனைத்து வகைக் கலவிகளில் இருந்தும் தனித்து நிற்பவன்{ஸர்வயோகவிநிஸ்ருதன்}<95-103>;(24)

வசுக்கள் என்றழைக்கப்படும் தேவர்களுக்கு மத்தியில் பாவகனாக இருப்பவன் (அல்லது தன்னை வழிபடுபவர்களிடம் வசிப்பவன்) {வஸு}, கோபம், வெறுப்பு, செருக்கு மற்றும் பிற தீய உணர்வுகளில் இருந்து விடுபட்டிருக்கும் தயாள ஆன்மா கொண்டவன் {வஸுமநஸ்}, வாய்மையாக இருப்பவன் {ஸத்யன்}, தன்னை வழிபடுபவர்களால் அளக்கப்படுபவன் {ஸமாத்மா}, தன் நடுநிலையின் விளைவால் ஒரே தன்மையிலான ஆன்மாவைக் கொண்டவன் {ஸம்மிதன்}, மாற்றம் அல்லது சீர்திருத்தங்கள் அனைத்தையும் கடந்து எப்போதும் சமமாக இருப்பவன் {ஸமன்}, தன்னை வழிபடுபவர்களின் விருப்பங்களை அருள ஒருபோதும் மறுக்காதவன் {அமோகன்}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {புண்டரீகாக்ஷன்}, அறத்தின் மூலம் எப்போதும் தனிச்சிறப்புடன் கூடிய செயல்களைச் செய்பவன் {விருஷகர்மா}, அறத்தின் வடிவமாக இருப்பவன் {வ்ருஷாக்ருதி}<104-113>;(25)

அனைத்து உயிரினங்களையும் (அல்லது அவற்றின் துன்பங்களை) அழிப்பவன் {ருத்ரன்}, பல தலைகளைக் கொண்டவன் {பஹுசிரஸ்}, அண்டத்தைத் தாங்குபவன் {பப்ரு}, அண்டத்தின் பிறப்பிடமாக இருப்பவன் {விஸ்வயோநி}, தூய அல்லது களங்கமற்ற புகழைக் கொண்டவன் {சுசிஸ்ரவஸ்}, அழிவற்றவன் {அம்ருதன்}, நித்யமாக நிலைத்திருப்பவன் {சாஸ்வதஸ்தாணு}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் (அல்லது சிறந்த செயல்களைச் செய்பவர்களுக்கு எழுச்சி தருபவன்) {வராரோஹன்}, அண்டத்தில் உண்டாகி வெளிவரும் பிருக்ருதியைக் கலங்கடிக்க இயன்ற குறியீடுகளைக் கொண்ட தவங்களின் அறிவைக் கொண்டவன் {மஹாதபஸ்}<114-122>;(26)

எங்கும் செல்பவன் (அனைத்துப் பொருட்களின் காரணியாக அவற்றில் நீக்கமற நிறைந்திருப்பவன்) {ஸர்வகன்}, அனைத்தும் அறிந்தவன் {ஸர்வவித்}, மாற்றமற்ற ஒளியாகச் சுடர்விடுபவன் {பாநு}, (பக்தர்களின் வடிவில்) எங்கும் தன் துருப்பினரைக் கொண்டவன் (அல்லது எவனைக் கண்டால் தானவத் துருப்புகள் அனைத்துத் திசைகளிலும் சிதறுமோ அவன்) {விஷ்வக்ஸேநன்}, அனைவராலும் விரும்பப்படுபவன் (அல்லது வேண்டப்படுபவன்) (அல்லது தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன்) {ஜநார்த்தநன்}, வேதமாக இருப்பவன் {வேதன்}, வேதங்களை அறிந்தவன் {வேதவித்}, வேதங்களின் அங்கங்கள் (அல்லது கிளைகள்) அனைத்தையும் அறிந்தவன் {அவ்யங்கன்}, வேதங்களின் அங்கங்களை (துணை அறிவியல்கள் அனைத்தையும்) பிரதிபலிப்பவன் {வேதாங்கன்}, வேத விளக்கங்களைத் தீர்மானிப்பவன் {வேதவித்}, ஞானத்தில் தனக்கு மேம்பட்ட எவனும் இல்லாதவன் {கவி}<123-133>;(27)

உலகங்கள் அனைத்திலும் ஆளுமை கொண்டவன் {லோகாத்யக்ஷன்}, தேவர்களிடம் ஆளுமை கொண்டவன் {ஸுராத்யக்ஷன்}, (ஒன்றையோ, மற்றொன்றையோ நாடுபவர்களுக்கான கனிகளைக் கொடுப்பதற்கு) அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கண்காணிப்பவன் {தர்மாத்யக்ஷன்}, விளைவாகவும் {காரியமாகவும்}, காரணமாகவும் இருப்பவன் (அல்லது பிரகிருதியைக் கடந்திருக்கும் விளைவால் முன்நிகழ்வுகளில் செய்யப்பட்ட எந்தச் செயல்களாலும் தன் வாழ்வு தீர்மானிக்கப்படாதவன்) {க்ருதாக்ருதன்}, (அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன், வாசுதேவன் என்ற நான்கு வடிவங்களைக் கொண்டதன் விளைவால்) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, (மேற்கண்ட) நான்கு வடிவங்களில் அறியப்படுபவன் {சதுர்வ்யூஹன்}, (அசுரத் தலைவன் ஹிரண்யகசிபுவைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையுடன் கூடிய மனித வடிவத்தை அவன் ஏற்ற போது தோன்றிய) நான்கு கொம்புகளைக் கொண்டவன் {சதுர்த்தம்ஷ்ட்ரன்}, (சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றைப் பிடித்துக் கொள்வதற்கான) நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்புஜன்}<134-141>;(28)

பிரகாசத்தால் சுடர்விடுபவன் {ப்ராஜிஷ்ணு}, உணவுக்கொடையாளி {போஜநன்}, நல்லோரைப் பேணிவளர்ப்பவன் {போக்தா}, தீயோரைப் பொறுத்துக் கொள்ளாதவன் (அல்லது தன் பக்தர்கள் அவ்வப்போது செய்யும் மீறல்களைப் பொறுத்துக் கொள்பவன்) {ஸஹிஷ்ணு}, அண்டம் உயிர் பெறும் முன்பே இருப்பவன் {ஜகதாதிஜன்},  எப்போதும் வெற்றி பெறுபவன்{அனகோவிஜயன்}, தேவர்களையே வெற்றி கொள்பவன் {ஜேதா}, அண்டத்தின் பொருட்காரணமாக இருப்பவன் {விஸ்வயோநி}, பொருட் காரணங்களில் மீண்டும் மீண்டும் {உடல்களை எடுத்து அவற்றில்} வசிப்பவன் {புநர்வஸு}<142-150>;(29)

இந்திரனின் தம்பி (அல்லது சாதனைகளிலும், குணங்களிலும் இந்திரனைக் கடந்தவன்) {உபேந்த்ரன்}, (மூவுலகங்களின் ஆட்சி உரிமையில் இருந்து அசுர மன்னன் பலியை வஞ்சித்து, அதையே இந்திரனுக்குக் கொடுப்பதற்காகக் கசியபரின் மனைவியான அதிதியிடம்) குள்ளனாகப் பிறந்தவன் {வாமநன்}, நெடியவன் (பலியின் வேள்வியில் மூன்று அடிகளால் சொர்க்கம் பூமி மற்றும் பாதாள லோகங்களை மறைப்பதற்குப் பெரும் அண்ட வடிவம்) {ப்ராம்சு}, வீணாகும் {பயனற்ற} செயலேதும் செய்யாதவன் {அமோகன்}, (தன்னை வழிபடுபவர்கள், தன்னைக் கேட்பவர்கள், தன்னை நினைப்பவர்கள் ஆகியோரைத்) தூய்மை செய்பவன் {சுசி}, புகழ்வாய்ந்த சக்தியும் பலமும் கொண்டவன் {ஊர்ஜிதன்}, குணங்கள் அனைத்திலும் இந்திரனைக் கடந்தவன் {அதீந்த்ரன்}, தன்னை வழிபடுபவர்க்ள அனைவரையும் ஏற்பவன் {ஸங்க்ரஹன்}, படைப்பின் காரணனாக இருப்பதன் விளைவால் அந்தப் படைப்பாகவே இருப்பவன் {ஸர்க்கன்}, பிறவி, வளர்ச்சி, மரணம் ஆகியவற்றுக்கு ஆட்படாமல் ஒரே வடிவில் எப்போதும் தன்னைத் தாங்கிக் கொள்பவன் {த்ருதாத்மா}, அண்டத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் அதனதன் செயல்பாடுகளில் நிறுவுபவன் {நியமன்}, அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் கட்டுப்படுத்துபவன் {யமன்}<151-162>;(30)

தங்கள் உயர்ந்த நன்மையை அடைய விரும்பவர்களால் அறியத்தகுந்தவன் {வேத்யன்}, தன்வந்திரியின் வடிவில் தெய்வீக மருத்துவனாக இருப்பவன் (அல்லது, உலகில் ஒருவனைக் கட்டிப்போடும் பந்தங்களெனும் முன்மையான நோயைக் குணப்படுத்துபவன்) {வைத்யன்}, எப்போதும் யோகத்தில் ஈடுபடுபவன் {ஸதாயோகீ}, அறத்தை நிறுவ பேரசுரர்களைக் கொல்பவன் {வீரஹா}, தேவாசுரர்களால் கடையப்பட்டபோது பெருங்கடலில் இருந்து உதித்த லக்ஷ்மியின் தலைவன் (அல்லது, செழிப்பு மற்றும் கல்விக்குரிய தேவிகள் இருவரையும் பேணி வளர்ப்பவன்) {மாதவன்}, (தன்னைச் சுவைப்பதில் வெல்பவர்களுக்கு அவன் கொடுக்கும் இன்பத்தின் விளைவால்) தேனாக இருப்பவன் {மது}, புலன்களைக் கடந்தவன் (அல்லது, தன்னை நோக்கித் திரும்பாதவர்களுக்குத் தெரியாதவன்) {அதீந்த்ரியன்}, (மஹாதேவனையும், தேவர்களையும் பல நிகழ்வுகளில் வஞ்சித்ததன் விளைவால்) பெரும் மாய சக்திகளைக் கொண்டவன் {மஹாமாயன்}, (வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்வதில்) பெரும் சக்தியை வெளிப்படுத்துபவன் {மஹோத்ஸாஹன்}, பலத்தில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபலன்}<163-172>;(31)

புத்தியில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாபுத்தி}, வலிமையில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாவீர்யன்}, திறனில் அனைவரையும் கடந்திருப்பவன் {மஹாசக்தி}, தன் உடலில் இருந்து வெளிப்படும் பிரகாசத்தின் மூலம் அண்டத்தைக் காண்பவன் {மஹாத்யுதி}, கண்களால் (அல்லது வேறு எந்தப் புலனாலோ, அறிவுப்புலனாலோ) உறுதிப்படுத்த இயலாத உடலைக் கொண்டவன்{அநிர்த்தேஸ்யவபு}, அழகுகள் அனைத்தையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, தேவர்களாலோ, மனிதர்களாலோ புரிந்து கொள்ள முடியாத ஆத்மாவைக் கொண்டவன் {அமேயாத்மா}, பெருங்கடலில் மறைந்திருக்கும் மதிப்புமிக்கப் பொருட்களை அடைவதற்காகத் தேவர்களும், அசுரர்களும் பெருங்கடலைக் கடைவதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தபோது, பெரும் ஆமையின் வடிவில் பெரும் மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கியவன் (அல்லது, அனைத்தையும் மூழ்கடித்துவிடும் நோக்கத்துடன் பல நாட்கள் இடையறாமல் மழையைப் பொழிந்த இந்திரனின் கோபத்தில் இருந்து பிருந்தாவனம் என்ற இனிய இடத்தில் வசித்தோரைப் பாதுகாக்க கோவர்த்தன மலையை உயரத் தூக்கியவன்) {மஹாத்ரித்ருத்}<173-180>;(32)

அனைத்து வகைத் தடைகளையும் துளைக்கும் வகையில் பெரும் தொலைவுக்குத் தன் கணைகளை ஏவவல்லவன் {மஹேஷ்வாஸன்}, மூழ்கியிருந்த பூமியை வலிமைமிக்கப் பன்றியின் வடிவத்தை ஏற்று உயர்த்தியவன் {மஹீபர்த்தா}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் வசிக்கச் செய்தவன் (ரதியின் கணவனான காமனோடு அடையாளங்காணத் தக்கவன்) {ஸ்ரீநிவாஸன்}, அறவோரின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, முழு அர்ப்பணிப்பில்லாமல் வெல்லப்பட முடியாதவன் (அல்லது, சக்திகளைப் பயன்படுத்தும் எவனையும் தடுக்க வல்லவன்) {அநிருத்தன்}, தேவர்களை மகிழ்ச்சியடையச் செய்பவன் (அல்லது, நிறைவான இன்பத்தின் உடல்வடிவமாக இருப்பவன்) {ஸுராநந்தன்}, மூழ்கிய பூமியை மீட்டவன் (அல்லது, தன்னை நோக்கி பக்தர்களால் பாடப்படும் மந்திரங்களைப் புரிந்து கொள்பவன்) {கோவிந்தன்}, நாநயமிக்க மனிதர்கள் அனைவரையும்விடத் திறம்பெற்றவன் (தன்னை அறிந்தவர்கள் அனைவரின் துன்பங்களையும் போக்குபவன்) {கோவிதாம்பதி}<181-188>;(33)

சுடர்மிக்கப் பிரகாசம் நிறைந்தவன் {மரீசி}, தன்னைத் துதிப்போரின் துன்பங்களை அடக்குபவன் (அல்லது, தங்கள் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட மனிதர்கள் அனைவரையும் தண்டிப்பதற்காக அண்டத்தை அழிக்கும் யமனின் வடிவத்தை ஏற்பவன்) {தமநன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச்சொல்வதற்காக அன்னப்பறவையின் வடிவை ஏற்றவன் (அல்லது, அனைவரின் உடல்களுக்குள்ளும் நுழைபவன்) {ஹம்ஸன்}, இறகு படைத்த ஆகாயவாசிகளின் இளரவசனான கருடனையே தன் வாகனமாகக் கொண்டவன் {ஸுபர்ணன்}, பரந்த பூமியைத் தலையில் தாங்கும் சேஷன் அல்லது அனந்தனுடன் அடையாளங்காணப் படுவதன் விளைவால் பாம்புகளில் முதன்மையானவனாக இருப்பவன் (அல்லது, அண்ட அழிவுக்குப் பிறகு பரந்த நீர்ப்பரப்பில் உறங்குவதற்காகப் பாம்புகளின் இளவரசனுடைய தலையைப் படுக்கையாகக் கொள்பவன்) {புஜகோத்தமன்}, தங்கம் போன்ற அழகிய உந்தியைக் கொண்டவன் {ஹிரண்யநாபன்}, இமயமலைச் சாரலில் உள்ள பதரியில் நாராயணனின் வடிவில் கடுந்தவங்களைப் பயின்றவன் {ஸுதபஸ்}, தாமரைக்கு ஒப்பான உந்தியைக் கொண்டவன் (அல்லது பெரும்பாட்டனான பிரம்மன் பிறந்த ஆதி தாமரையைத் தன் உந்தியில் கொண்டவன்) {பத்மநாபன்}, அனைத்து உயிரினங்களின் தலைவனாக இருப்பவன் {ப்ரஜாபதி}<189-197>;(34)

மரணத்தைக் கடந்தவன் (அல்லது, தன்னிடம் பக்தி கொண்டோரின் மரணத்தை விலக்குபவன்) {அம்ருத்யு}, தன்னை வழிபடுபவர்களிடம் எப்போதும் கருணைக் கண்களைச் செலுத்துபவன் (அல்லது, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவன்) {ஸர்வத்ருக்}, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவன் (அல்லது, பக்தியுடன் ஒருமனத்தோடு தன்னை வழிபடுவோர் அனைவரையும் அமுதத்தால் நனைப்பவன்) {ஸிம்மன்}, விதிப்பவர்கள் அனைவருக்கும் விதியாக இருப்பவன் (அல்லது, மனிதர்கள் செய்யும் செயல்களால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பவன்) {ஸந்தாதா}, செயல்கள் அனைத்தின் கனிகளைத் தானே இன்புறவும், பொறுக்கவும் செய்பவன் (அல்லது, தன் தந்தையின் ஆணையின் பேரில் நாடு கடந்து சென்று, இலங்கையில் உள்ள தன் தீவுக்கு ராட்சசன் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்டுத் தருவதாக உறுதியளித்திருந்தவனும், குரங்குகளின் தலைவனுமான சுக்ரீவனுக்கு உதவி செய்து அவனது அண்ணனின் பிடியில் இருந்து அவனது நாட்டை மீட்டுத் தருமாறு ஒப்பந்தமிட்டவனும், தசரதனின் மகனுமான ராமன்) {ஸந்திமாந்}, எப்போதும் ஒரே வடிவில் இருப்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களிடம் பேரன்புடன் இருப்பவன்) {ஸ்திரன்}, எப்போதும் இயங்குபவன் (அல்லது, அனைத்து உயிரினங்களின் இதயத்துக்குள்ளும் உதிக்கும் காமனின் வடிவை ஏற்பவன்) {அஜன்}, தானவர்களாலோ, அசுரர்களாலோ தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் (ராவணனைக் கொன்று, தன் மனைவியான சீதையை மீட்டவன், அல்லது சிருங்கவேரபுரம் என்ற பெயரில் அறியப்படும் நாட்டில் வசிக்கும் சண்டாளர்களின் தலைவன் குஹகனிடம் நட்பைக் கொண்ட ராமனின் வடிவத்தைக் குறிப்பிடும் வகையில் தாழ்ந்த வகுப்பனிடமும், சண்டாளர்களிடமும் கருணை காட்டுபவன்) {துர்மர்ஷணன்}, தீயோரைத் தண்டிபவன் (அல்லது, (அல்லது, ஸ்ருதி மற்றும் ஸ்மிருதிகளின் படி அனைத்து மனிதர்களின் ஒழுங்கையும் முறைப்படுத்துபவன்) {சாஸ்தா}, உண்மை ஞானத்தையே தன் அடையாளமாகக் கொண்ட ஆன்மா (அல்லது கருணையும், பிற இனிய குணங்களையும் கொண்ட ராமனின் வடிவை ஏற்றுத் தேவர்களின் பகைவனான ராவணனை அழித்தவன்) {விஸ்ருதாத்மா}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் (அல்லது, தகாத மனிதர்களுக்குக் கொடையளிப்பவர்களைத் தவிர்ப்பவனோ, கொடை கொடுப்பதைத் தடுப்பவனைக் கொல்பவனோ) {ஸுராரிஹா}<198-208);(35)

அறிவியல்கள் அனைத்தையும் போதிப்பவனும், அனைத்துக்கும் தந்தையுமானவன் {குரு}, பெரும்பாட்டனான பிரம்மனுக்குப் போதிப்பவன் {குருதமன்}, அனைத்து உயிரினங்களுக்கும் வசிப்பிடமாகவோ, ஓய்விடமாகவோ இருப்பவன் {தாம}, பொய்மை எனும் களங்கத்திலிருந்து விடுபட்ட நல்லவர்களுக்கு நன்மை செய்பவன் {ஸத்யன்}, கலங்கடிக்கப்பட முடியா ஆற்றலைக் கொண்டவன் {ஸத்யபராக்ரமன்}, சாத்திரங்களினால் அங்கீகரிக்கப்படாத, அல்லது அனுமதிக்கப்படாத செயல்களில் தன் கண்களை ஒருபோதும் செலுத்தாதவன் {நிமிஷன்}, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்பட்ட, அல்லது அனுமதிக்கப்பட்ட செயல்களில் தன் கண்களைச் செலுத்துபவன்{அநிமிஷன்},  வைஜயந்தி என்ற பெயரில் அழைக்கப்படும் மங்காத வெற்றி மாலையைச் சூடுபவன் {ஸ்ரக்வீ}, வாக்கின் தலைவன் {வாசஸ்பதி}, தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவருக்கும், இழிந்தவர்களிலும் இழிந்தவர்களுக்கும் தன் அருளை வழங்கி மீட்ட பெரும் தயாளனுமான ஒருவன் {உதாரதீ}<209-218>;(36)

முக்தியடைய விரும்பும் மனிதர்களை முதன்மையான நிலையான முக்தி நிலைக்கு வழிநடத்துபவன் (அல்லது, வலிமைமிக்கப் பெரிய மீனின் வடிவை ஏற்று, அண்ட அழிவின் போது, பூமியை மறைத்த நீர் வெளியில் நீந்தி, தன் கொம்புகளில் கட்டப்பட்ட படகில் மநுவையும், பிறரையும் பாதுகாப்பாக வழிநடத்தியவன்) {அக்ரணீ}, அனைத்து உயிரினங்களின் தலைவன் (அல்லது, அண்ட அழிவின் போது அனைத்தையும் மூழ்கடிக்கும் நீர்வெளியில் விளையாடுபவன்) {க்ராமணீ}, வேதங்களையே வார்த்தைகளாகக் கொண்டவன் {ஸ்ரீமாந்}, அண்ட அழிவின் போது நீருக்குள் மூழ்கிய வேதங்களை மீட்டவன் {ந்யாயன்}, அண்டத்தின் இயக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {நேதா}, உயிரினங்கள் அனைத்தையும் செயல்படச் செய்ய, அல்லது முயற்சிக்கச் செய்யக் காற்றின் {வாயுவின்} வடிவை ஏற்றவன் (அல்லது, எப்போதும் அழகிய அசைவுகளைக் கொண்டவன், அல்லது தான் உண்டாக்கிய உயிரினங்கள் தன்னைத் துதிக்க வேண்டும் என விரும்புபவன்) {ஸமீரணன்}, ஆயிரம் தலைகளைக் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தா}, அண்டத்தின் ஆத்மாவாக இருந்து அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விஸ்வாத்மா}, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்}<219-226>;(37)

ஆயிரம் கால்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாத்}, அண்டச் சக்கரத்தைத் தன் விருப்பப்படி சுழலச் செய்பவன் {ஆவர்த்தநன்}, ஆசையில் இருந்து விடுபட்டவனும், ஜீவனையும், ஜீவன் சார்ந்தவற்றையும் நிறுவும் சூழ்நிலைகளைக் கடந்தவனுமான ஒருவன் {நிவ்ருத்தாத்மா}, உலகப் பந்தம் கொண்ட மனிதர்கள் அனைவரின் பார்வையில் இருந்து மறைந்திருப்பவன் (அல்லது அறியாமை எனும் கட்டைக் கொண்டு மனிதர்கள் அனைவரின் கண்களையும் மறைத்தவன்) {ஸம்வ்ருதன்}, தன்னிடம் இருந்து விலகியவர்களக் கலங்கடிப்பவன் {ஸம்ப்ரமர்த்தநன்}, சூரியனோடு அடையாளங்காணப்படுபவனாக இருப்பதன் விளைவால் நாளைத் தொடங்கி வைப்பவனும், அனைத்தையும் அழிக்கும் காலனையே அழிப்பவனுமாக இருப்பவன் {அஹஸ்ஸம்வர்த்தகன்},, தொடக்கமில்லாதவன் (அல்லது நிலையான வசிப்பிடம் இல்லாதவன்) {வஹ்நி}, புனித நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகளைக் குறிப்பிட்டோருக்கு அளிப்பவன் (அல்லது, தன்னுடைய உடலின் சிறு பகுதியில் மட்டுமே வைத்து அண்டத்தைத் தாங்குபவன்) {அநிலன்}, (சேஷனின் வடிவிலோ, பூமியைக் காத்த பெரும் பன்றியின் வடிவத்திலோ, பூமியை ஆதரித்து நுட்பமாக ஊடுருபவனாகவோ)ஆகாயத்தில் பூமியைத் தாங்கிப் பிடிப்பவன் {தரணீதரன்}<227-235>;(38)

சிசுபாலனைப் போலப் பகைவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துப் பேரருள் புரிபவன் {ஸுப்ரஸாதன்}, ரஜஸ் (ஆசை) மற்றும் தமோ (இருள்) குணங்களிலிருந்து விடுபட்டு களங்கமற்ற சத்வ குணத்துடன் தூய நிலையில் இருப்பவன் (அல்லது, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்தவன்) {ப்ரஸந்நாத்மா}, அண்டத்தை ஆதரிப்பவன் {விஸ்வஸ்ருக்}, அண்டத்திற்கு உணவளிப்பவன் (அல்லது அஃதை அனுபவிப்பவன்) {விஸ்வபுக்விபு}, எல்லையில்லா பலத்தை வெளிப்படுத்துபவன் {ஸத்கர்த்தா}, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் தன்ன வழிபடுபவர்களைக் கௌரவிப்பவன் {ஸத்க்ருதன்}, பிறரால் கௌரவிக்கப்பட்ட, அல்லது துதிக்கப்பட்டவர்களால் கௌரவிக்கப்படவோ, துதிக்கப்படவோ நேர்பவன் (நீடித்த சகிப்புடன் கூடிய அழகிய செயல்களைக் கொண்டவன்) {ஸாது}, பிறரின் காரியங்களை நிறைவேற்றுபவன் (அல்லது பிறருக்கு நன்மை செய்பவன்) {ஜஹ்நு}, அண்ட அழிவின் போது தனக்குள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவன் (அல்லது, தேவர்களுக்கோ, தன்னை வழிபடுபவர்களுக்கோ எதிராக இருப்பவர்களை அழிப்பவன்) {நாராயணன்}, நீரையே தன் இல்லமாகக் கொண்டவன் (அல்லது, அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே புகலிடமாக இருப்பவன், அல்லது அனைத்து உயிரினங்களின் அறியாமையை அழிப்பவன்) {நரன்}<236-246>;(39)

வேறுபாடுகளைக் களைந்தவன் {அஸங்க்யேயன்}, அளவற்ற பொருட்களின் உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன் {அப்ரமேயாத்மா},  அனைவருக்கும் மேலான புகழைப் பெற்றவன், அறவோரைப் பேணி வளர்ப்பவன் {சிஷ்டக்ருத்}, உலகங்கள் அனைத்தையும் தூய்மையாக்குபவன் {சுசி}, அனைத்து உயிரினங்களின் விருப்பங்களையும் கனியும் நிலையால் மகுடம் சூட்டச் செய்பவன் {ஸித்தார்த்தன்}, தன் விருப்பங்கள் எப்போதும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தஸங்கல்பன்}, அனைவருக்கும் வெற்றியை அளிப்பவன் {ஸித்திதன்}, வேண்டுவோருக்கு வெற்றியை அளிப்பவன் {ஸித்திஸாதநன்}<247-256>;(40)

புனிதநாட்கள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் (அல்லது, தன் சிறந்த குணங்களால் இந்திரனையே மறைப்பவன்) {வ்ருஷாஹீ}, விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் தன்னை வழிபடுபவர்களுக்குப் பொழிபவன் {வ்ருஷபன்}, அண்டம் முழுவதும் நடப்பவன் {விஷ்ணு}, (உயர்ந்த இடத்திற்கு ஏற விரும்புகிறவர்களுக்கு) அறத்தால் அமைந்த சிறந்த படிக்கட்டுகளை அளிப்பவன் {வ்ருஷபர்வா}, வயிற்றில் அறத்தைக் கொண்டவன் (அல்லது, கருவரையில் பிள்ளையைப் பாதுகாக்கம் தாயைப் போல இந்திரனைப் பாதுகாப்பவன்) {வ்ருஷோதரன்}, (தன்னை வழிபடுபவர்களைப்) பெருக்குபவன் {வர்த்தநன்}, பெரும் அண்டமாகப் பரவத் தன்னைப் பரப்பிக் கொள்பவன் {வர்த்தமாநன்}, அனைத்திலிருந்தும் (அவற்றில் ஊடுருவாமல்) தனித்து இருப்பவன் {விவிக்தன்}, ஸ்ருதிகளெனும் பெருங்கடலின் கொள்ளிடமாக இருப்பவன் {ஸ்ருதிஸாகரன்}<257-264>;(41)

(அண்டத்தையே தாங்க வல்ல) சிறந்த கரங்களைக் கொண்டவன் {ஸுபுஜன்}, எந்த உயிரினத்தாலும் சுமக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, பிரம்மன் என்றழைக்கப்படும் ஒலிகள் பாய்ந்த இடமாக இருப்பவன் (அல்லது வேதமாக இருப்பவன்) {வாக்மீ}, அண்டத்தலைவர்கள் அனைவரின் தலைவன் {மஹேந்த்ரன்}, செல்வத்தைக் கொடுப்பவன் {வஸுதன்}, தன் பலத்தில் தானே வசிப்பவன் {வஸு}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {நைகரூபன்}, பெரும் வடிவம் படைத்தவன் {ப்ருஹத்ரூபன்}, விலங்குகள் அனைத்திலும் வேள்வியின் வடிவில் வசிப்பவன் {சிபிவிஷ்டன்}, அனைத்துப் பொருளும் வெளிப்படும் காரணன் {ப்ரகாசநன்}<265-274>;(42)

பெரும் வலிமை, சக்தி மற்றும் காந்தியுடன் கூடியவன் {ஓஜஸ்தேஜோத்யுதிதரன்}, தன்னை வழிபடுபவர்களுக்குக் காணத்தக்க வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன் {ப்ரகாசாத்மா}, எரியும் சக்தியால் அறமற்றவர்களை எரிப்பவன் {ப்ரதாபநன்}, (வளம் முதலிய) ஆறு வகைக் குணங்களின் வளம் கொண்டவன் {ருத்தன்}, பெரும்பாட்டனான பிரம்மனுக்கு வேதங்களைச் சொன்னவன் {ஸ்பஷ்டாக்ஷரன்}, சாம, ரிக் மற்றும் யஜூஸ் (வேதங்களின்) வடிவில் இருப்பவன் {மந்த்ரன்}, உலகின் உயிரினங்கள் அனைத்தையும் குளுமைப்படுத்தும் சந்திரனின் கதிர்களைப் போல உலகத் துன்பங்களில் எரிந்து கொண்டிருக்கும் தன் வழிபாட்டாளர்களுக்கு ஆறுதலளிப்பவன் {சந்த்ராம்சு}, சூரியனைப்போன்ற சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடியவன் {பாஸ்கரத்யுதி}<275-282>;(43)

எவன் மனத்திலிருந்து சந்திரன் உதித்தானோ அவன் {அம்ருதாம்சூத்பவன்}, தன்னொளியில் தானே சுடர்விடுபவன் {பாநு}, முயலால் குறிப்பிடப்படும் ஒளிக்கோளைப் போல அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஊட்டுபவன் {சசபிந்து}, தேவர்களில் திறம் பெற்றவன் {ஸுரேஸ்வரன்}, உலகப்பற்றெனும் நோய்க்குப் பெரும் மருந்தாக இருப்பவன் {ஒளஷதம்}, அண்டத்தின் பெரும் பாலமாக இருப்பவன் {ஜகதஸ்ஸேது}, வீண்போகாத அறிவும் மற்றும் பிற குணங்களுடனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலுடனும் இருப்பவன் {ஸத்யதர்மபராக்ரமன்}<283-289>;(44)

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென அனைத்துக் காலங்களிலும் உயிரினங்கள் அனைத்தாலும் வேண்டப்படுபவன் {பூதபவ்யபவந்நாதன்}, தன்னை வழிபடுபவர்களிடம் கருணைப் பார்வையைச் செலுத்தி அவர்களை மீட்பவன் {பவன்}, புனிதமானவர்களை மேலும் புனிதப்படுத்துபவன் {பாவநன்}, ஆன்மாவில் உயிர் மூச்சைக் கலக்கச் செய்பவன் (அல்லது, விடுதலையடைந்தவர்களையும் {முக்தி பெற்றவர்களையும்}, விடுதலையடையாதவர்களையும் பல்வேறு வடிவங்களை ஏற்றுக் காப்பவன்) {அநலன்}, விடுதலையடைந்தோரின் {முக்தி அடைந்தோரின்} ஆசைகளைக் கொல்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் மனங்களில் தீய ஆசைகள் எழாமல் தடுப்பவன்) {காமஹா}, காமனின் தந்தை (ஆசை அல்லது காமத்தின் கோட்பாடு) {காமக்ருத்}, மிக இனிமையானவன் {காந்தன்}, அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுபவன் {காமன்}, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள்பவன் {காமப்ரதன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறன் கொண்டவன் {ப்ரபு}<290-299>;(45)

நான்கு யுகங்களையும் நடைமுறையில் தொடங்கச் செய்பவன் {யுகாதிக்ருத்}, யுகங்களைத் தொடர்ச்சியாகச் சக்கரமாகச் சுழலச் செய்பவன் {யுகாவர்த்தன்}, பல்வேறு வகை மாயைகளுடன் கூடியவன் (அதன் மூலம், பல்வேறு யுகங்களைப் பல்வேறு வகைச் செயல்களின் மூலம் வேறுபடுத்திக் காட்டும் காரணமாக இருப்பவன்) {நைகமாயன்}, (ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் அனைத்தையும் விழுங்குவதன் விளைவால்) உண்பவர்களில் பெரியவன் {மஹாசநன்}, (பக்தர்கள் அல்லாதோருக்குப்) பிடிபட இயலாதவன் {அத்ருஸ்யன்}, (மிகப்பெரிய) வெளிப்படு வடிவத்துடன் கூடியவன் {வ்யக்தரூபன்}, (தேவர்களின்) ஆயிரம் பகைவர்களை அடக்கியவன் {ஸஹஸ்ரஜித்}, எண்ணற்ற பகைவர்களை அடக்கியவன் {அநந்தஜித்}<300-308>;(46)

(பெரும்பாட்டன் மற்றும் ருத்திரனாலும்) விரும்பப்படுபவன் (அல்லது வேள்விகளில் துதிக்கப்படுபவன்) {இஷ்டோவிசிஷ்டன்}, அனைத்திற்கும் மேலான புகழ்பெற்றவன், ஞானிகள் மற்றும் அறவோரால் விரும்பப்படுபவன் {சிஷ்டேஷ்டன்}, தலைப்பாகையில் (மயில்) இறகுகளுடன் கூடிய ஆபரணத்தைக் கொண்டவன் {சிகண்டீ}, அனைத்து உயிரினங்களையும் தன் மாயையால் கலங்கடிப்பவன் {நஹுஷன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் தன் அருளைப் பொழிபவன் {வ்ருஷன்}, அறவோரின் கோபத்தைக் கொல்பவன் {க்ரோதஹா}, அறமற்றவர்களைக் கோபத்தால் நிறைப்பவன் {க்ரோதக்ருத்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுபவன் {கர்த்தா}, அண்டத்தையே தன் கரங்களில் தாங்குபவன் {விஸ்வபாஹு}, பூமியை நிலைநிறுத்துபவன் {மஹீதரன்}<309-318>;(47)

(தொடக்கம், பிறவி அல்லது தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி, வீழ்ச்சி, அழிவு என்ற) நன்கு அறியப்பட்ட ஆறு மாறுபாடுகளைக் கடந்தவன் {அச்யுதன்}, (தன் சாதனைகளின் விளைவால்) பெரும் புகழைக் கொண்டவன் {ப்ரதிதன்}, (நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) உயிரினங்கள் அனைத்தையும் {உயிரோடு} வாழச் செய்பவன் {ப்ராணன்}, உயிரைக் கொடுப்பவன் {ப்ராணதன்}, (உபேந்திரனின் வடிவத்தில் அல்லது குள்ள வடிவத்தில் உள்ள) வாசவனின் தம்பி {வாஸவாநுஜன்}, அண்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அபாம்நிதி}, (அனைத்திலும் பொருள் காரணமாக இருப்பதன் விளைவால்) அனைத்து உயிரினங்களையும் மறைப்பவன் {அதிஷ்டாநன்}, (எப்போதும் பிழை கடந்தவனாகவும்) எப்போதும் விழிப்புடன் இருப்பவன் {அப்ரமத்தன்}, தன் மகிமையில் நிறுவப்பட்டவன் {ப்ரதிஷ்டிதன்}<319-327>;(48)

அமுத வடிவில் பாய்பவன் (அல்லது, அனைத்தையும் வற்றச் செய்பவன்) {ஸ்கந்தன்}, அறப்பாதையை நிலைநிறுத்துபவன் {ஸ்கந்ததரன்}, அண்டத்தின் சுமையைச் சுமப்பவன் {துர்யன்}, வேண்டுவோர் விரும்பும் வரங்களைக் கொடுப்பவன் {வரதன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}, வசுதேவரின் மகன் (அல்லது, அண்டத்தைத் தன் மாயைகளில் மறைத்து, அதன் மத்தியில் விளையாடிக் கொண்டிருப்பவன்) {வாஸுதேவன்}, இயல்புக்குமீறிய வகையில் ஒளிர்பவன் {ப்ருஹத்பாநு}, தேவர்கள் தோன்றக் காரணமானாவன் {ஆதிதேவன்}, பகைவரின் நகரங்கள் அனைத்தையும் துளைப்பவன் {புரந்தரன்}<328-336>;(49)

துன்பங்கள் மற்றும் கவலைகள் அனைத்தையும் கடந்தவன் {அசோகன்}, உலக வாழ்வெனும் பெருங்கடலைப் பாதுகாப்பாகக் கடக்க நம்மை வழிநடத்துபவன் {தாரணன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரின் இதயங்களில் இருந்தும் மறுபிறவி குறித்த அச்சத்தை விலக்குபவன் {தாரன்}, எல்லையற்ற துணிவும் ஆற்றலும் கொண்டவன் {சூரன்}, சூர குலத்தில் பிறந்தவன் {செளரி}, அனைத்து உயிரினங்களையும் ஆள்பவன் {ஜநேஸ்வரன்}, அனைவருக்கும் அருள்தரவிரும்புபவன் {அநுகூலன்}, (நல்லோரைக் காத்து, தீயோரை அழித்து, அறத்தை நிறுவுவதற்காகப்) பூமிக்கு நூறு முறை வருபவன் {சதாவர்த்தன்}, தன் கரங்களில் ஒன்றில் தாமரையைக் கொண்டவன் {பத்மீ}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {பத்மநிபேஷணன்}<337-346>;(50)

உந்தியில் தொடக்ககாலத் தாமரையைக் கொண்டவன் (அல்லது, தாமரையில் அமர்ந்திருப்பவன்) {பத்மநாபன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {அரவிந்தாக்ஷன்}, தன்னை வழிபடுபவர்களால் இதயத்தாமரையில் அமர்ந்திருப்பவனாகத் துதிக்கப்படுபவன் {பத்மகர்ப்பன்}, (தன் மாயையின் மூலம்) ஜீவனின் உடல்வடிவத்தை ஏற்பவன் {சரீரப்ருத்}, அனைத்து வகைப் பலங்களையும் கொண்டவன் {மஹர்த்தி}, ஐந்து அடிப்படை பூதங்களின் வடிவில் வளர்பவன் {ருத்தன்}, புராதன ஆன்மா {வ்ருத்தாத்மா}, பெரிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்}, தேரின் கொடிக்கம்பத்தில் கருடன் அமர்ந்திருக்கப் பெற்றவன் {கருடத்வஜன்}<347-355>;(51)

ஒப்பற்றவன் {அதுலன்}, (சிங்கத்தைக் கொல்லும் விலங்கான} சரபன், தீயோரைப் பயங்கரமாகத் தாக்குபவன் {பீமன்}, காலத்தில் நேர்ந்தவை அனைத்தையும் அறிந்தவன் {ஸமயஜ்ஞன்}, வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் நெய்யாக இருப்பவன் {ஹவிஸ்}, அவ்வாறு ஊற்றப்படும் நெய்யை தேவர்களின் வடிவில் ஏற்பவன் {ஹரி}, அனைத்து வகைச் சான்றுகளாலும் அறியப்படுபவன் {ஸர்வலக்ஷணலக்ஷண்யன்}, எப்போதும் செழிப்பு அமர்ந்திருக்கும் மார்பைக் கொண்டவன் {லக்ஷமீவாந்}, போர்கள் அனைத்திலும் வெல்பவன் {ஸமிதிஞ்சயன்}<356-364>;(52)

அழிவைக் கடந்தவன் {விக்ஷரன்}, செவ்வண்ணம் ஏற்பவன் (அல்லது, தன்னை வழிபடுபவர்களின் எதிரிகளிடம் கோபம் நிறைந்தவன்) {ரோஹிதன்}, அறவோர் தேடும் பொருளாக இருப்பவன் {மார்க்கன்}, அனைத்துக்கும் வேராக இருப்பவன் {ஹேது}, (குழந்தையாக இருக்கும்போது யசோதனையால் கட்டப்பட்டதால்) வயிற்றைச் சுற்றிலும் கயிற்றின் தடத்தைக் கொண்டவன் {தாமோதரன்}, தீங்குகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவன் அல்லது தாங்கிக் கொள்பவன் {ஸஹன்}, மலைகளின் வடிவில் பூமியைத் தாங்குபவன் {மஹீதரன்}, வழிபடத்தகுந்தவை அனைத்திலும் முதன்மையானவன் {மஹாபாகன்}, பெரும் வேகம் கொண்டவன் {வேகவாந்}, பெரும் அளவிலான உணவை விழுங்குபவன் {அமிதாசநன்}<365-374>;(53)

படைப்பை உண்டாக்கி இயங்கச் செய்தவன் {உத்பவன்}, பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் எப்போதும் கலங்கடிப்பவன் {க்ஷோபணன்}, பிரகாசமாக ஒளிர்பவன் (அல்லது, இன்பத்தில் திளைப்பவன்) {தேவன்}, வயிற்றில் பலம் கொண்டவன் {ஸ்ரீகர்ப்பன்}, அனைத்தையும் ஆளும் பரமன் {பரமேஸ்வரன்}, அண்டம் உண்டான பொருளாக இருப்பவன் {கரணம்}, அண்டத்தை உண்டாக்கிய காரணப்பொருளானவன் {காரணன்}, அனைத்துப் பொருள்களையும் சாராதிருப்பவன் {கர்த்தா}, அண்டத்தில் பன்முகத்தன்மையை விதிப்பவன் {விகர்த்தா}, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் {கஹநன்}, மாயத்திரை மூலம் தன்னை மறைத்துக் கொள்பவன்{குஹன்}<375-385>;(54)

குணங்கள் ஏதும் அற்ற சித் ஆக இருப்பவன் {வ்யவஸாயன்}, அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {வ்யவஸ்தாநன்}, அண்டப் பேரழிவின் போது அனைத்துப் பொருட்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்ஸ்தாநன்}, தன்னை வழிபடுபவனுக்கு முதன்மையான இடத்தை ஒதுக்குபவன் {ஸ்தாநதன்}, நீடித்து நிலைத்திருப்பவன் {த்ருவன்}, உயர்ந்த பலத்தைக் கொண்டவன் {பரர்த்தி}, வேதங்களில் மகிமைப்படுத்தப்படுபவன் {பரமஸ்பஷ்டன்}, நிறைவுடன் இருப்பவன் {துஷ்டன்}, எப்போதும் முழுமையாக இருப்பவன்{புஷ்டன்}, மங்கலப் பார்வை கொண்டவன் {சுபேக்ஷணன்}<386-395>;(55)

யோகிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {ராமன்}, (அண்ட அழிவின் போது அனைத்தும் அவனிடமே கலப்பதால்) அனைத்து உயிரினங்களின் கதியாக இருப்பவன் {விராமன்}, {விரதன்}, குறையற்ற பாதையாக இருப்பவன் {மார்க்கன்}, ஜீவனின் வடிவில் இருந்து கொண்டு முக்திக்கு வழிநடத்துபவன் {நேயன்}, (ஜீவனிலிருந்து முக்திக்கு) வழிநடத்துபவன் {நயன்}, வழிநடத்த எவனும் இல்லாதவன் {அநயன்}, பெரும் வலிமை கொண்டவன் {வீரன்}, வலிமை நிறைந்த அனைத்திலும் முதன்மையானவன் {சக்திமதாம்ஸ்ரேஷ்டன்}, நிலைநிறுத்துபவன் {தர்மம்}, கடமை மற்றும் அறம் அறிந்த அனைவரிலும் முதன்மையானவன் {தர்மவிதுத்தமன்}<396-404>;(56)

படைப்புக் காலத்தில் பொருட்கள் அனைத்தையும் அமைப்பதற்காகப் பிரிந்து கிடக்கும் பூதங்களை ஒன்றாகச் சேர்ப்பவன் {வைகுண்டன்}, அனைத்து உடல்களிலும் வசிப்பவன் {புருஷன்}, க்ஷேத்ரஜ்ஞனின் வடிவில் இருந்து கொண்டு அனைத்து உயிரினங்களையும் செயல்படச் செய்பவன் {ப்ராணன்}, அண்டப் பேரழிவின் போது அழித்த உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவன் {ப்ராணதன்}, அனைவராலும் மதிப்புடன் வணங்கப்படுபவன் {ப்ரணமன்}, மொத்த அண்டத்திலும் விரிந்திருப்பவன் {ப்ருது}, ஆதி பொன்முட்டையைத் தன் வயிறாகக் கொண்டு அனைத்தையும் உண்டாக்குபவன் {ஹிரண்யகர்ப்பன்}, தேவர்களின் பகைவர்களை அழிப்பவன் {சத்ருக்நன்}, (பொருள் காரணமாக இருக்கும் தன்னில் இருந்து உதித்த) அனைத்திலும் படர்ந்திருப்பவன் {வ்யாப்தன்}, இனிய நறுமணங்களைப் பரவச் செய்பவன் {வாயு}, புலன் இன்பங்களை அலட்சியம் செய்பவன் {அதோக்ஷஜன்}<405-415>;(57)

பருவ காலங்களுடன் அடையாளம் காணப்படுபவன் {ருது}, தன்னை வழிபடுபவர்கள் தன்னைக் காண்பதால் மட்டுமே அவர்கள் விரும்பும் நோக்கத்தை அவர்களை அடையச் செய்பவன் {ஸுதர்சநன்}, அனைத்து உயிரினங்களையும் பலவீனப்படுத்துபவன் {காலன்}, தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன் {பரமேஷ்டீ}, (எங்கும் நிறைந்திருப்பதன் விளைவால்) எங்கும் அறியப்படவல்லவன் {பரிக்ரஹன்}, அனைவரையும் அச்சங்கொள்ளச் செய்பவன் {உக்ரன்}, அனைத்து உயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸம்வத்ஸரன்}, {தக்ஷன்}, அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றும் திறமை கொண்டவன் {விஸ்ராமன்}, பிறரைவிட அதிகத் திறன் கொண்டவன் {விஸ்வதக்ஷிணன்}<416-425>;(58)

மொத்த அண்டமும் படர்ந்திருக்கும் இடமாக இருப்பவன் {விஸ்தாரன்}, அனைத்துப் பொருட்களும் எப்போதும் சார்ந்திருப்பவனாகவும், அசைவில்லாதவனாகவும் இருப்பவன் {ஸ்தாவரஸ்தாணு}, சான்றுப் பொருளாக இருப்பவன் {ப்ரமாணன்}, அழிவில்லாத, மாற்றமில்லாத வித்தாக இருப்பவன் {பீஜமவ்யயம்}, (மகிழ்ச்சியாக இருப்பதன் விளைவால்) அனைவராலும் வேண்டப்படுபவன் {அர்த்தன்}, (விருப்பங்கள் அனைத்தும் நிறைவடைந்ததன் விளைவால்) ஆசையற்றவன் {அநர்த்தன்}, (அண்டத்தை மறைக்கும்) பெரும் உறையாக இருப்பவன் {மஹாகோசன்}, அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைப் பொருட்களையும் கொண்டவன் {மஹாபோகன்}, (விருப்பத்திற்குரிய பொருட்களனைத்தையும் அடையவதற்குரிய) பெருஞ்செல்வம் கொண்டவன் {மஹாதனன்}<426-434>;(59)

மனத்தளர்ச்சிக்கு அப்பாற்பட்டவன் {அநிர்விண்ணன்}, துறவின் வடிவில் இருப்பவன் {ஸ்தவிஷ்டன்}, பிறப்பற்றவன் {பூ}, அறம் கட்டப்படும் தூணாக இருப்பவன் {தர்மயூபன்}, வேள்வியின் பெரும் உடல்வடிவம் {மஹாமகன்}, ஆகாயத்தில் சுழலும் நட்சத்திர சக்கரத்தின் நடுப்பகுதியாக {மையமாக} இருப்பவன் {நக்ஷத்ரநேமி}, நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் நிலவாக இருப்பவன் {நக்ஷத்ரீ}, அனைத்துச் சாதனைகளையும் செய்யவல்லவன் {க்ஷமன்}, அனைத்துப் பொருட்களும் மறையும்போது தன் ஆன்மாவில் இருப்பவன் {க்ஷாமன்}, படைக்கும் விருப்பத்தைப் பேணி வளர்ப்பவன் {ஸமீஹநன்}<435-444>;(60)

அனைத்து வேள்விகளின் உடல்வடிவமாக இருப்பவன் {யஜ்ஞன்}, வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளில் துதிக்கப்படுபவன் {இஜ்யன்}, மனிதர்கள் செய்யும் வேள்விகளில் இருக்கும் தேவர்கள் அனைவரிலும் மிகவும் துதிக்கப்படத்தகுந்தவன் {மஹேஜ்யன்}, விதிப்படி விலங்குகள் காணிக்கையளிக்கப்படும் வேள்விகள் அனைத்தின் உடல்வடிவமாக இருப்பவன் {க்ரது}, எந்த உணவையும் உட்கொள்ளும் முன்னர் மனிதர்களால் துதிக்கப்படுபவன் {ஸத்ரம்}, முக்தி நாடுபவர்களின் புகலிடமாக இருப்பவன் {ஸதாம்கதி}, அனைத்து உயிரினங்களும் செய்யும் மற்றும் செய்யத்தவறும் செயல்களைக் காண்பவன் {ஸர்வதர்சீ}, குணங்கள் அனைத்தையும் கடந்த ஆன்மாவைக் கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, அடையப்பட முடியாததும், எல்லையற்றதும், அனைத்தையும் நிறைவேற்றவல்லதுமான ஞானத்திற்கு ஒப்பானவன் {ஜ்ஞானமுத்தமம்}<445-454>;(61)

(வேண்டுபவனுக்குத் தூய இதயத்துடன் அருள்வழங்க வல்ல) சிறந்த நோன்புகளை நோற்பவன் {ஸுவ்ரதன்}, எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்}, நுட்பமிக்கவன் {ஸூக்ஷ்மன்}, (வேதத்தின் வடிவிலோ, குழல் இசைக்கும் கிருஷ்ணனாகவோ) இனிமைமிக்க ஒலிகளை வெளியிடுபவன் {ஸுகோஷன்}, (தன்னை வழிபடுபவர்கள் அனைவருக்கும்) மகிழ்ச்சியைக் கொடுப்பவன் {ஸுகதன்}, மறுவுதவியேதும் எதிர்பாராமல் பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருத்}, அனைத்து உயிரினங்களையும் மகிழ்ச்சியில் நிறைப்பவன் {மனோஹரன்}, கோபத்தை வென்றவன் {ஜிதக்ரோதன்}, (பெரும் வலிமைமிக்க அசுரர்களைக் கொல்லும் வகையிலான) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {வீரபாஹு}, அறமற்றோரைக் கிழித்தெறிபவன் {விதாரணன்}<455-464>;(62)

ஆன்ம அறிவற்றவர்களைத் தன் மாயையால் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கச் செய்பவன் {ஸ்வாபநன்}, (அனைத்து மனிதர்கள் மற்றும் பொருட்களிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாகத்) தன்னைத்தானே சார்ந்திருப்பவன் {ஸ்வவசன்}, மொத்த அண்டத்திலும் முற்றாகப் பரவியிருப்பவன் {வ்யாபீ}, முடிவிலா வடிவங்களில் இருப்பவன் {நைகாத்மா}, முடிவிலா எண்ணிக்கையிலான தொழில்களில் ஈடுபடுபவன் {நைககர்மக்ருத்}, அனைத்திலும் வாழ்பவன் {வத்ஸரன்}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரிடமும் முழு அன்பைக் கொண்டவன் {வத்ஸலன்}, (அனைத்து உயிரினங்களும் அவனிடம் இருந்து உண்டான கன்றுகளாக இருப்பதன் விளைவால்) அண்டத்தின் தந்தையாக இருப்பவன் {வத்ஸீ}, பரந்திருக்கும் பெருங்கடலின் வடிவில் தன் வயிற்றில் ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டிருப்பவன் {ரத்நகர்ப்பன்}, கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {தநேஸ்வரன்}<465-474>;(63)

அறத்தைப் பாதுகாப்பவன் {தர்மகுப்}, அறக்கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தர்மக்ருத்}, அறத்தின் ஆதாரமாக இருப்பவன் {தர்மீ}, எப்போதும் இருப்பவன் {ஸத்}, (வெளிப்படும் அண்டம் மாயையின் விளைவாக இருப்பதால் அண்டத்தின் வடிவில்) இல்லாதவன் {அஸத்}, (வெளிப்படும் அண்டத்தின் வடிவில்) அழியத்தக்கவன் {க்ஷரம்}, அழிவற்ற சித் ஆக இருப்பவன் {அக்ஷரன்}, உண்மை அறிவற்ற ஜீவனின் வடிவில் இருப்பவன் {அவிஜ்ஞாதா}, சூரியனின் வடிவில் ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராம்சு}, (சேஷன், கருடன் முதலிய வலிமைமிக்கப் பெரும் உயிரினங்களை) விதிப்பவன் {விதாதா}, சாத்திரங்கள் அனைத்தையும் படைத்தவன் {க்ருதலக்ஷணன்}<475-485>;(64)

எண்ணற்ற ஒளிக்கதிர்களின் நடுவில் சூரியனின் வடிவில் இருப்பவன் {கபஸ்திநேமி}, அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவன் {ஸத்வஸ்தன்}, பேராற்றல் கொண்டவன் {ஸிம்மன்}, யமன் மற்றும் அதே பலத்தைக் கொண்ட பிறரை ஆள்பவன் {பூதமஹேஸ்வரன்}, (தொடக்கத்தில் இருந்தே இருப்பனாதலால்) தேவர்களில் பழைமையானவன் {ஆதிதேவன்}, அனைத்து நிலைகளையும் கைவிட்டு தன் மகிமையில் தானே இருப்பவன் {மஹாதேவன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {தேவேசன்}, தேவர்களை நிலைநிறுத்தபவனையும் (இந்திரனையும்) ஆள்பவன் {தேவப்ருத்குரு}<486-493>;(65)

பிறப்பையும், அழிவையும் கடந்தவன் {உத்தரன்}, (கிருஷ்ணனின் வடிவில்) பசுக்களைப் பாதுகாத்து வளர்ப்பவன் {கோபதி}, அனைத்து உயிரினங்களையும் ஊட்டி வளர்ப்பவன் {கோப்தா}, அறிவால் மட்டுமே அணுகப்படக்கூடியவன் {ஜ்ஞானகம்யன்}, பழைமையானவன் {புராதநன்}, உடலாக அமையும் பூதங்களை நிலைநிறுத்துபவன் {சரீரபூதப்ருத்}, (ஜீவனின் வடிவில் இன்ப துன்பங்களை) அனுபவிப்பவன் {போக்தா}, பெரும்பன்றியின் வடிவை ஏற்றவன் (அல்லது, ராமனின் வடிவில் இருந்த போது பெரும் குரங்குக்கூட்டத்தின் தலைவனாக இருந்தவன்) {கபீந்த்ரன்}, தன்னால் செய்யப்பட்ட மகத்தான வேள்வியில் அபரிமிதமான கொடைகளை அனைவருக்கும் வழங்கியவன் {பூரிதக்ஷிணன்}<494-502>;(66)

ஒவ்வொரு வேள்வியிலும் சோமத்தைப் பருகுபவன் {ஸோமபன்}, அமுதம் பருகுபவன் {அம்ருதபன்}, சோமனின் (சந்திரமாஸின்) வடிவில் மூலிகை, செடி, கொடிகளை ஊட்டி வளர்ப்பவன் {ஸோமன்}, முடிவிலா எண்ணிக்கையில் பகைவர்கள் இருந்தாலும் ஒரு கணப்பொழுதில் அவர்களை வெல்பவன் {புருஜித்}, இருப்பிலுள்ளவை அனைத்திலும் முதன்மையான அண்ட வடிவைக் கொண்டவன் {புருஸத்தமன்}, தண்டிப்பவன் {விநயன்}, அனைவரையும் வெல்பவன் {ஜயன்}, கலங்கடிக்க இயலாத நோக்கங்களைக் கொண்டவன் {ஸத்யஸந்தன்}, கொடைகளுக்குத் தகுந்தவன் {தாசார்ஹன்}, உயிரினங்களிடம் இல்லாதவற்றைக் கொடுப்பவனும், அவற்றைப் பாதுகாப்பவனுமாக இருப்பவன் {ஸாத்வதாம்பதி}<503-512>;(67)

உயிர்மூச்சைத் தாங்குபவன் {ஜீவன்}, தன் உயிரினங்கள் அனைத்தையும் நேரடி பார்வையில் உள்ள பொருட்களாகக் காண்பவன் {விநயிதா}, சுயத்தைத்தவிர வேறெதையும் ஒருபோதும் காணாதவன் {ஸாக்ஷீ}, முக்தியை அளிப்பவன் {முகுந்தன்}, சொர்க்கம், பூமி, பாதாளம்  ஆகியவற்றை தன் காலடிகளால் (எண்ணிக்கையில் மூன்று) மறைத்தவன் {அமிதவிக்ரமன்}, நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடம் {அம்போநிதி}, வெளி, காலம் மற்றும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் {அநந்தாத்மா}, அண்டப் பேரழிவின் போது, பெரும் நீர்ப்பரப்பில் கிடப்பவன் {மஹோததிசயன்}, அனைத்தையும் அழிப்பவன் {அந்தகன்}<513-521>;(68)

பிறப்பற்றவன் {அஜன்}, அதிகம் துதிக்கப்படுபவன் {மஹார்ஹன்}, தன் இயல்பில் தோன்றுபவன் {ஸ்வாபாவ்யன்}, (கோபம் மற்றும் தீய ஆசைகளின் வடிவில் உள்ள) பகைவர்கள் அனைவரையும் வெல்பவன் {ஜிதாமித்ரன்}, தன்னைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {ப்ரமோதன்}, இன்ப வடிவம் {ஆநந்தன்}, பிறரை மகிழ்ச்சியில் நிறைப்பவன் {நந்தநன்}, மகிழ்க்கான காரணங்கள் அனைத்துடன் பெருகுபவன் {நந்தன்}, வாய்மையையும், பிற அறங்களையும் தன் குறியீடுகளாகக் கொண்டவன் {ஸத்யதர்மா}, மூவுலகங்களையும் தன் காலடிகளில் கொண்டவன் {த்ரிவிக்ரமன்}<522-530>;(69)

(வேதங்களை மொத்தமாக அறிந்து வைத்திருக்கும்) முனிவர்களில் முதல்வன் {மஹர்ஷி}, ஆசான் கபிலராக இருப்பவன் {கபிலாசார்யன்}, அண்டத்தை அறிந்தவன் {க்ருதஜ்ஞன்}, பூமியை ஆள்பவன் {மேதிநீபதி}, மூன்று பாதங்களைக் கொண்டவன் {த்ரிபதன்}, தேவர்களைப் பாதுகாப்பவன் {த்ரிதசாத்யக்ஷன்}, (அண்டப் பேரழிவின் போது, மனுவின் படகைத் தன் கொம்புகளில் கட்டி இழுத்துச்சென்ற மீன் வடிவில் இருந்த போது) பெரும் கொம்புகளைக் கொண்டவன் {மஹாஸ்ருங்கன்}, செயல்பட்டவர்களை இன்பத்தை அனுபவிக்கவோ, துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவோ செய்து செயல்களைத் தீர்ப்பவன் {க்ருதாந்தக்ருத்}<531-538>;(70)

பெரும்பன்றியானவன் {மஹாவராஹன்}, வேதாந்தத்தின் துணையுடன் புரிந்துகொள்ளப்படுபவன் {கோவிந்தன்}, (தன்னை வழிபடுபவர்களின் வடிவில்) அழகிய துருப்புகளைக் கொண்டவன் {ஸுஷேணன்}, பொன்கங்கணங்கள் கொண்டவன் {கநகாங்கதீ}, (உபநிஷத்துகளின் துணையுடன் மட்டுமே அறியப்படும் வகையில்) மறைந்திருப்பவன் {குஹ்யன்}, (அறிவு மற்றும் பலத்தில்) ஆழம் நிறைந்தவன் {கபீரன்}, அடைதற்கரியவன் {கஹநன்}, சொல்லையும், எண்ணத்தையும் கடந்தவன் {குப்தன்}, சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவன் {சக்ரகதாதரன்}<539-547>;(71)

விதி விதிப்பவன் {வேதஸ்}, (உதவியாளன் வடிவில் இருக்கும்) அண்டத்தின் காரணன் {ஸ்வாங்கன்}, ஒருபோதும் வெல்லப்பட முடியாதவன் {அஜிதன்}, தீவில் பிறந்த கிருஷ்ணராக {வியாசராக} இருப்பவன் {க்ருஷ்ணன்}, (சிதைவைக் கடந்திருப்பதன் விளைவால்) நீடித்திருப்பவன் {த்ருடன்}, அனைத்தையும் செதுக்குபவன்  {ஸங்கர்ஷணன்}, சிதைவுக்கு அப்பாற்பட்டவன் {அச்யுதன்}, வருணன், (வசிஷ்டர் அல்லது அகஸ்தியரின் வடிவில்) வருணனின் மகனாக இருப்பவன் {வாருணன்}, அசையாத மரமாக இருப்பவன் {வ்ருக்ஷன்}, இதயத்தாமரையில் தன் உண்மை வடிவத்தை வெளிப்படுத்துபவன் {புஷ்கராக்ஷன்}, மனச்சாதனையின் மூலமே படைத்து, காத்து, அழிப்பவன் {மஹாமநஸ்}<548-558>;(72)

(அரசுரிமை முதலிய) ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந்}, (அண்டப் பேரழிவின் போது) ஆறு குணங்களையும் அழிப்பவன் {பகஹா}, (அனைத்து வகைச் செழிப்பிலும் பெருகுபவனாக இருக்கும் விளைவால்) இன்பநிலையாக இருப்பவன் {நந்தீ}, {வைஜயந்தம் என்றழைக்கப்படும்) வெற்றிமாலையால் அலங்கரிக்கப்படுபவன் {வநமாலி}, (பலதேவன் அவதாரத்தில்) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன் {ஹலாயுதன்}, (பலியை வஞ்சித்த குள்ளனின் வடிவில்) அதிதியின் கருவறையில் பிறந்தவன் {ஆதித்யன்}, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {ஜ்யோதிராதித்யன்}, (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகளைத் தாங்கிக் கொள்பவன் {ஸஹிஷ்ணு}, அனைத்துப் பொருட்களின் முதன்மையான புகலிடமாக இருப்பவன் {கதிஸத்தமன்}<559-567>;(73)

(சாரங்கம் என்றழைக்கப்படும்) முதன்மையான வில்லை ஆயுதமாகக் கொண்டவன் {ஸுதந்வா}, (பிருகு குல ராமராய் {பரசுராமராய்} இருந்து) தன் கோடரியை இழந்தவன் {கண்டபரசு}, கடுமைமிக்கவன் {தாருணன்}, விரும்பும் பொருட்கள் அனைத்தையும் கொடுப்பவன் {த்ரவிணப்ரதன்}, சொர்க்கத்தையே (பலியின் வேள்வியில் தான் ஏற்று வந்த வடிவத்துடன்) தன் தலையால் தொட்டுவிடக் கூடிய அளவுக்கு நெடிதுயர்ந்தவன் {திவிஸ்ப்ருக்}, அண்டம் முழுவதும் பார்வை கொண்டவன் {ஸர்வத்ருக்}, (வேதங்களைப் பகுத்தவன்) வியாசன் {வ்யாஸன்}, வாக்கு அல்லது கல்வியை ஆள்பவன் {வாசஸ்பதி}, பிறப்புறுப்புகளின் தலையீடின்றி இருப்புக்குள் எழுந்தவன் {அயோநிஜன்}<568-576>;(74)

மூன்று (முதன்மையான) சாமங்களில் பாடப்படுபவன் {த்ரிஸாமா}, சாமங்களைப் பாடுபவன் {ஸாமகன்}, சாமங்களாக இருப்பவன் {ஸாம}, (துறவின் உடல்வடிவமாக இருப்பதன் விளைவால்) உலகபந்தங்களுக்கு அழிவைத் தருபவன் {நிர்வாணம்}, (நோயைச் சீராக்கப் பயன்படும்) மருந்தாக இருப்பவன் {பேஷஜம்}, (மருந்தைப் பயன்படுத்தும்) மருத்துவன் {பிஷக்}, (உயிரினங்கள் முக்தி அடைவதற்குத் தகுந்தவையாக) துறவறம் என்றழைக்கப்படும் நான்காவது வாழ்வு முறையை விதித்தவன் {ஸந்யாஸக்ருத்}, தன்னை வழிபடுபவர்களைப் பொறுத்தவரையில் (ஆன்ம அமைதியைக் கொடுக்கும் நோக்கில்) அவர்களின் ஆசைகளைத் தணிவடையச் செய்பவன் {சமன்}, (உலகப் பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் தொடர்பறுத்ததன் விளைவால்) நிறைவாய் இருப்பவன் {சாந்தன்}, பக்தி மற்றும் ஆன்ம அமைதிக்கான புகலிடமாக இருப்பவன் {நிஷ்டாசாந்திபராயணன்}<577-585>;(75)

அழகிய அங்கங்களைப் பெற்றவன் {சுபாங்கன்}, ஆன்ம அமைதியைத் தருபவன் {சாந்திதன்}, படைத்தவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் மார்பில் இன்பத்தில் திளைப்பவன் {குமுதன்}, அண்டப் பேரழிவுக்குப் பின்னர்ப் பாம்புகளின் இளவரசனான சேஷனின் உடலில் (யோக) உறக்கத்தில் கிடப்பவன் {குவலேசயன்}, பசுக்களுக்கு நன்மை செய்பவன் (அல்லது, மக்கள் தொகையில் அவதியுறும் பூமியின் கனத்தைக் குறைக்க மனிதனின் வடிவில் பிறந்தவன்) {கோஹிதன்}, அண்டத்தை ஆள்பவன் {கோபதி}, அண்டத்தைப் பாதுகாப்பவன் {கோப்தா}, காளையைப் போன்ற கண்களைக் கொண்டவன் {வ்ருஷபாக்ஷன்}, அன்புடன் அறத்தைப் பேணி வளர்ப்பவன் {வ்ருஷப்ரியன்}<586-595>;(76)

புறமுதுகிடாத வீரன் {அநிவர்த்தீ}, பற்றுகள் அனைத்தில் இருந்தும் விலகிய ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, அண்டப் பேரழிவின் காலத்தில் அண்டத்தை நுட்பமான வடிவில் குறைப்பவன் {ஸம்க்ஷேப்தா}, துன்புறும் தன் வழிபாட்டாளர்களுக்கு நன்மை செய்பவன் {க்ஷேமக்ருத்}, கேட்டதும் கேட்டவனின் பாவம் அனைத்தும் தூய்மையடையும் பெயரைக் கொண்டவன் {சிவன்}, தன் மார்பில் மங்கலச் சுழியைக் கொண்டவன் {ஸ்ரீவத்ஸவக்ஷஸ்}, செழிப்பின் தேவி எப்போதும் வசிக்கும் இடமாக இருப்பவன் {ஸ்ரீவாஸன்}, (செழிப்பின் தேவியான) லட்சுமியால் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் {ஸ்ரீபதி}, செழிப்புடன் கூடியவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸ்ரீமதாம்வரன்}<596-604>;(77)

தன்னை வழிபடுபவர்களுக்குச் செழிப்பைத் தருபவன் {ஸ்ரீதர்}, செழிப்பை ஆள்பவன் {ஸ்ரீசன்}, செழிப்புடையவர்களுடன் எப்போதும் வாழ்பவன் {ஸ்ரீநிவாஸன்}, அனைத்து வகைச் செல்வங்களின் கொள்ளிடம் {ஸ்ரீநிதி}, அறத்தை அளவாகக் கொள்ளும் அடிப்படையில் அறச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அனைவருக்கும் செழிப்பைக் கொடுப்பவன் {ஸ்ரீவிபாவநன்}, செழிப்பின் தேவியைத் தன் மார்பில் கொண்டவன் {ஸ்ரீதரன்}, தன்னைக் குறித்துக் கேட்பவர்கள், தன்னைப் புகழ்பவர்கள், தன்னைத் தியானிப்பவர்கள் ஆகியோருக்குச் செழிப்பை அளிப்பவன் {ஸ்ரீகரன்}, அடைதற்கரிய மகிழ்ச்சியை அடையும் நிலையின் உடல்வடிவமாக இருப்பவன் {ஸ்ரேயஸ்}, அனைத்து வகை அழகையும் கொண்டவன் {ஸ்ரீமாந்}, மூவுலகங்களின் புகலிடமாக இருப்பவன் {லோகத்ரயாஸ்ரயன்}<605-614>;(78)

அழகிய கண்களைக் கொண்டவன் {ஸ்வக்ஷன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {ஸ்வங்கன்}, மகிழ்ச்சிக்கான நூறு தோற்றுவாய்களைக் கொண்டவன் {சதாநந்தன்}, உயர்ந்த மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பவன் {நந்தி}, (ஆகாயத்து ஒளிக்கோள்களின் இடங்களையும், பாதைகளையும் பராமரிப்பவனாக இருப்பதால்) ஆகாயத்து ஒளிக்கோள்கள் அனைத்தையும் ஆள்பவன் {ஜ்யோதிர்க்கணேஸ்வரன்}, ஆன்மாவை வென்றவன் {விஜிதாத்மா}, மேன்மையான வேறு எவனாலும் ஆளப்படாத ஆன்மா கொண்டவன் {விதேயாத்மா}, எப்போதும் அழகிய செயல்களைச் செய்பவன் {ஸத்கீர்த்தி}, (உள்ளங்கை நெல்லிக்கனி போல மொத்த அண்டத்தையும் காண்பவனாக அவன் சொல்லப்படுகிறான், எனவே) ஐயங்கள் அனைத்தும் விலகப் பெற்றவன் {சிந்நஸம்சயன்}<615-623>;(79)

அனைத்து உயிரினங்களையும் கடந்தவன் {உதீர்ணன்}, திசைகள் அனைத்திலும் பரந்த பார்வை கொண்டவன் {ஸர்வதர்க்ஷு}, தலைவனற்றவன் {அநீசன்}, எக்காலத்திலும் நேரும் மாற்றங்கள் அனைத்தையும் கடந்திருப்பவன் {சாஸ்வதஸ்திரன்}, (ராமனின் வடிவில்) வெறுந்தரையில் கிடந்தவன் {பூசயன்}, (தன் அவதாரங்களின் மூலம்) பூமியை அலங்கரிப்பவன் {பூஷணன்}, பலத்தின் சுயமாக இருப்பவன் {பூதி}, துன்பங்கள் அனைத்தையும் கடந்தவன் {விசோகன்)}, தன்னை வழிபடுபவர்கள் அனைவரும் தன்னை நினைத்ததும் அவர்களின் துன்பங்களைக் களைபவன் {சோகநாசநன்}<624-632>;(80)

பிரகாசம் கொண்டவன் {அர்ச்சிஷ்மாந்}, அனைவராலும் வழிபடப்படுபவன் {அர்ச்சிதன்}, (அனைத்தும் தன்னுள் வசிப்பதைப் போன்ற) நீர்க்குடமாக இருப்பவன் {கும்பன்}, தூய ஆன்மா கொண்டவன் {விசுத்தாத்மா}, தன்னைக் குறித்துக் கேட்பவர் அனைவரையும் தூய்மையடையச் செய்பவன் {விசோதநன்}, கட்டற்ற சுதந்திரம் கொண்டவன் {அநிருத்தன்}, போர்க்களங்களில் இருந்து ஒருபோதும் திரும்பாத தேரைக் கொண்டவன் {அப்ரதிரதன்}, பெருஞ்செல்வம் கொண்டவன் {ப்ரத்யும்நன்}, அளவற்ற ஆற்றல் கொண்டவன் {அமிதவிக்ரமன்}<633-641>;(81)

காலநேமி என்ற பெயரைக் கொண்ட அசுரனைக் கொன்றவன் {காலநேமிநிஹா}, சூரன் குலத்தில் பிறந்தவன் {செளரி}, வீரன் {சூரன்}, தேவர்கள் அனைவரின் தலைவன் {சூரஜநேஸ்வரன்}, மூவுலகங்களின் ஆன்மாவாக இருப்பவன் {த்ரிலோகாத்மா}, மூவுலகங்களையும் ஆள்பவன் {த்ரிலோகேசன்}, சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களையே தன் மயிராகக் கொண்டவன் {கேசவன்}, கேசியைக் கொன்றவன் {கேசிஹா}, (அண்டப் பேரழிவின் போது) அனைத்தையும் அழிப்பவன் {ஹரி}<642-650>;(82)

வேண்டப்படும் விருப்பங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தேவன் {காமதேவன்}, அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமபாலன்}, விரும்புபவன் {காமீ}, அழகிய வடிவம் கொண்டவன் {காந்தன்}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் முற்றான ஞானம் கொண்டவன் {க்ருதாகமன்}, குணங்களின் மூலம் விவரிக்க இயலாத வடிவம் கொண்டவன் {அநிர்த்தேஸ்யவபு}, பிரகாசக் கதிர்களால் சொர்க்கத்தை நிறையச் செய்பவன் {விஷ்ணு}, {வீரன்}, எல்லையற்றவன் {அநந்தன்}, (அர்ஜுனன் அல்லது நரனின் வடிவில்) படையெடுப்பின் மூலம் திரண்ட செல்வத்தை அடைந்தவன் {தநஞ்சயன்}<651-660>;(83)

மந்திரங்கள், வேள்விகள், வேதங்கள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்திலும் முதன்மையானவன் {ப்ரம்மண்யன்}, தவங்களைப் படைத்தவனும், தவமுமாக இருப்பவன் {ப்ரம்மக்ருத்ப்ரம்மா}, (பெரும்பாட்டன்) பிரம்மனின் வடிவத்தில் இருப்பவன் {ப்ரம்ம}, தவங்களைப் பெருகச் செய்பவன் {ப்ரம்மவிவர்த்தநன்}, பிரம்மத்தை அறிந்தவன் {ப்ரம்மவித்}, பிராமண வடிவத்தில் இருப்பவன் {ப்ராம்மணன்}, பிரம்மம் என்றழைக்கப்படுபவன் {ப்ரம்மீ}, வேதங்கள் அனைத்தையும், அண்டத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவன் {ப்ரம்மஜ்ஞன்}, பிராமணர்களைப் பிடித்தவனாகவும் பிராமணர்களுக்குப் பிடித்தமானவனாகவும் எப்போதும் இருப்பவன் {ப்ராம்மணப்ரியன்}<661-670>;(84)

பெரும்பகுதிகளை மறைக்கவல்ல காலடித்தடங்களைக் கொண்டவன் {மஹாக்ரமன்}, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மா}, பெருஞ்சக்தி கொண்டவன் {மஹாதேஜஸ்}, பாம்புகளின் மன்னான வாசுகியுடன் அடையாளங்காணப்படுபவன் {மஹோரகன்}, வேள்விகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாக்ரது}, வேள்வி செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {மஹாயஜ்வா}, வேள்விகளில் முதன்மையான ஜபமாக இருப்பவன்{மஹாயஜ்ஞன்}, வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகள் அனைத்திலும் முதன்மையானவன் {மஹாஹவிஸ்}<671-678>;(85)

அனைவராலும் பாடப்படுபவன் {ஸ்தவ்யன்}, (தன்னை வழிபடுபவர்களால்) பாடப்பட விரும்புபவன் {ஸ்தவப்ரியன்}, தன்னை வழிபடுபவர்களால் சொல்லப்படும் துதிகளாக இருப்பவன் {ஸ்தோத்ரம்}, துதிக்கும் செயலே ஆனவன்{ஸ்துதன்}, துதிகளைப் பாடுபவன் {ஸ்தோதா}, (தீமையான அனைத்துடனும்) போரிட விரும்புபவன் {ரணப்ரியன்}, அனைத்து வகையிலும் முழுமையானவன் {பூர்ணன்}, அனைத்து வகைச் செழிப்பாலும் பிறரை நிறைப்பவன் {பூரயிதா}, நினைவுகூரப்பட்ட உடனேயே பாவங்கள் அனைத்தையும் அழிப்பவன் {புண்யன்}, செய்யும் அனைத்தையும் அறச்செயல்களாகச் செய்பவன் {புண்யகீர்த்தி}, அனைத்து வகை நோய்களையும் கடந்தவன் {அநாமயன்}<679-689>;(86)

மனோ வேகம் கொண்டவன் {மநோஜவன்}, அனைத்து வகைக் கல்விகளையும் படைத்து அவற்றை அறிவிப்பவன் {தீர்த்தகரன்}, பொன்னையே உயிர்வித்தாகக் கொண்டவன் {வஸுரேதஸ்}, (கருவூலத் தலைவனான குபேரனாக) செல்வத்தை வழங்குபவன் {வஸுப்ரதன்}, அசுரர்களின் செல்வத்தை அழிப்பவன் {வஸுப்ரதன்}, வசுதேவரின் மகன் {வாஸுதேவன்}, அனைத்துயிரினங்களும் வசிக்கும் இடமாக இருப்பவன் {வஸு}, அனைத்துப் பொருட்களிலும் வசிக்கும் மனத்தைக் கொண்டவன் {வஸுமநஸ்}, தன்னிடம் புகலிடம் நாடுவோர் அனைவரின் பாவங்களையும் எடுப்பவன் {ஹவிஸ்}<690-698>;(87)

அறவோரால் அடையப்படுபவன் {ஸத்கதி}, எப்போதும் நற்செயல்களைச் செய்பவன் {ஸத்க்ருதி}, அண்டத்தின் ஒரே உட்பொருளாக இருப்பவன் {ஸத்தா}, பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துபவன் {ஸத்பூதி}, உண்மை அறிந்தோர் அனைவரின் புகலிடமாக இருப்பவன் {ஸத்பராயணன்}, பெரும் வீரர்களைத் தன் துருப்பினராகக் கொண்டவன் {சூரஸேநன்}, யாதவர்களில் முதன்மையானவன் {யதுரேஷ்டன்}, அறவோரின் வசிப்பிடமாக இருப்பவன் {ஸந்நிவாஸன்}, யமுனையின் கரைகளில் (பிருந்தாவனத்தில்) இன்பமாக விளையாடுபவன் {ஸுயாமுநன்}<699-707>;(88)

படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பூதாவாஸன்}, அண்டத்தைத் தன் மாயையால் நிறைக்கும் தேவன் {வாஸுதேவன்}, முதன்மையானவை அனைத்தும் (முக்தியடையும்போது அவற்றோடு) கலந்திருப்பவன் {ஸர்வாஸுநிலயன்}, ஒருபோதும் நிறைவடையாத பசி கொண்டவன் {அநலன்}, அனைவரின் செருக்கையும் அடக்குபவன் {தர்ப்பஹா}, நியாயமான செருக்குடன் அறவோரை நிறைப்பவன் {தர்ப்பதன்}, மகிழ்ச்சியில் பெருகுபவன் {அத்ருப்தன்}, பிடிக்கப்பட முடியாதவன் {துர்த்தரன்}, ஒருபோதும் வெல்லப்படமுடியாதவன் {அபராஜிதன்}<708-716>;(89)

அண்டவடிவம் கொண்டவன் {விஸ்வமூர்த்தி}, பெருவடிவம் கொண்டவன் {மஹாமூர்த்தி}, சக்தியிலும், பிராகசத்திலும் சுடர்விடும் வடிவம் கொண்டவன் {தீப்தமூர்த்தி}, (செயல்களால் தீர்மானிக்கப்படுவது போன்ற) வடிவமற்றவன் {அமூர்த்திமாந்}, பல்வேறு வடிவங்களைக் கொண்டவன் {அநேகமூர்த்தி}, வெளிப்படாதவன் {அவ்யக்தன்}, நூறு வடிவங்கள் கொண்டவன் {சதமூர்த்தி}, நூறு முகங்களைக் கொண்டவன் {சதாநநன்}<717-724>;(90)

தனியொருவன் {ஏகன்}, (மாயையால்) பலராகத் தெரிபவன் {நைகன்}, {அனைத்தையும் தன்னுள் கொண்டவன்} {ஸவ}, இன்பம் நிறைந்தவன் {க}, விசாரிக்கத்தகுந்த மகத்தான காரிய வடிவம் கொண்டவன் {கிம்}, இவை அனைத்துமானவன் {யத்}, அஃது என்றழைக்கப்படுபவன் {தத்}, உயர்ந்த புகலிடம் {பதமநுத்தமம்}, பொருட்காரணங்களுக்குள் ஜீவனை அடைப்பவன் {லோகபந்து}, அனைவராலும் விரும்பப்படுபவன் {லோகநாதன்}, மது குலத்தில் பிறந்தவன் {மாதவன்}, தன்னை வழிபடுபவர்களிடம் அதிக அன்பு கொண்டவன் {பக்தவத்ஸலன்}<725-735>;(91)

பொன்வண்ணன் {ஸுவர்ணவர்ணன்}, பொன் போன்ற (வண்ணத்தில்) அங்கங்கள் கொண்டவன் {ஹேமாங்கன்}, அழகிய அங்கங்களைக் கொண்டவன் {வராங்கன்}, சந்தனத்தாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {சந்தநாங்கதீ}, வீரர்களைக் கொல்பவன் {வீரஹா}, இணையற்றவன் {விஷமன்}, (குணமற்ற விளைவால்) சுழியத்தைப் போன்றவன் {சூந்யன்}, (தான் கொண்ட முழுமையின் விளைவால்) எந்த அருளும் தேவைப்படாதவன் {க்ருதாசிஸ்}, சொந்த இயல்பு, பலம் மற்றும் ஞானத்தில் ஒருபோதும் பிறழாதவன் {அசலன்}, காற்றின் வடிவில் அசைபவன் {சலன்}<736-745>;(92)

ஆன்மா இல்லாத எதனுடனும் தன்னை ஒருபோதும் அடையாளம் காணாதவன் {அமாநீ}, தன்னை வழிபடுபவர்களுக்குக் கௌரவங்களை அளிப்பவன் {மாந்தன்}, அனைவராலும் மதிக்கப்படுபவன் {மாந்யன்}, மூவுலகங்களின் தலைவன் {லோகஸ்வாமீ}, மூன்று உலகங்களையும் நிலைநிறுத்துபவன் {த்ரிலோகக்ருக்}, உடன்படிக்கைகளின் உள்ளடக்கங்கள் அனைத்தையும் தன் மனத்தில் தாங்க வல்ல நினைவுடன் கூடிய புத்தி கொண்டவன் {ஸுமேதஸ்}, வேள்வியில் பிறந்தவன் {மேதஜன்}, பெரும்புகழுக்குத் தகுந்தவன் {தந்யன்}, புத்தியும் நினைவும் ஒருபோதும் தவறாதவன் {ஸத்யமேதஸ்}, பூமியை நிறைநிறுத்துபவன் {தராதரன்}<746-755>;(93)

சூரியனின் வடிவில் வெப்பத்தை வெளியிடுபவன் {தேஜோவ்ருஷன்}, அழகிய அங்கங்களைச் சுமப்பவன் {த்யுதிதரன்}, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸர்வசஸ்த்ரப்ருதாம்வரன்}, தன்னை வழிபடுபவர்களால் அளிக்கப்படும் மலர் மற்றும் இலை காணிக்கைகளை ஏற்பவன் {ப்ரக்ரஹன்}, ஆசைகள் அனைத்தையும் அடக்கி தன் பகைவர்கள் அனைவரையும் கலங்கடிப்பவன் {நிக்ரஹன்}, தனக்கு முன்பு நடக்க யாருமில்லாதவன் {வ்யக்ரன்}, நான்கு கொம்புகளைக் கொண்டவன் {நைகஸ்ருங்கன்}, கதனின் அண்ணன் {கதாக்ரஜன்}<756-764>;(94)

நான்கு வடிவங்களைக் கொண்டவன் {சதுர்மூர்த்தி}, நான்கு கரங்களைக் கொண்டவன் {சதுர்ப்பாஹு}, தன்னில் இருந்து நான்கு புருஷர்களை உதிக்கச் செய்தவன் {சதுர்வ்யூஹன்}, நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, நான்கு வகைகளையும் {வர்ணங்களையும்} சார்ந்த மனிதர்களுக்குப் புகலிடமாக இருப்பவன் {சதுர்க்கதி}, (மனம், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்}, நினைவு ஆகிய) நான்கு ஆன்மாக்களைக் கொண்டவன் {சதுராத்மா}, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நான்கு நோக்ககளின் பிறப்பிடமாக இருப்பவன் {சதுர்ப்பாவன்}, நான்கு வேதங்களை அறிந்தவன் {சதுர்வேதவித்}, தன் பலத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியவன் {ஏகபாத்}<765-772>;(95)

உலகச் சக்கரத்தை வட்டமாகச் சுழலச் செய்பவன் {ஸமாவர்த்தன்}, உலகப் பற்றுகள் அனைத்திலும் இருந்து தொடர்பறுந்த ஆன்மா கொண்டவன் {நிவ்ருத்தாத்மா}, வெல்லப்பட இயலாதவன் {துர்ஜயன்}, கடக்கப்பட இயலாதவன் {துரதிக்ரமன்}, அடைதற்கு மிக அரியவன் {துர்லபன்}, அணுகுதற்கரியவன் {துர்க்கமன்}, நுழைவதற்கு அரிதானவன் {துர்க்கன்}, (யோகியராலும்) இதயத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கு அரியவன் {துராவாஸன்}, (தானவர்களுக்கு மத்தியில் உள்ள) பெரும்பலமிக்கப் பகைவர்களைக் கொல்பவன் {துராரிஹா}<773-781>;(96)

அழகிய அங்கங்களைக் கொண்டவன் {சுபாங்கன்}, அண்டத்தில் உள்ள அனைத்தின் சாரமாக இருப்பவன் {லோகஸாரங்கன்}, (அண்டமெனும் துணியை நெய்வதற்குரிய) மிக அழகிய கயிறுகள் மற்றும் இழைகளைக் கொண்டவன் {ஸுதந்து}, எப்போதும் நீண்டு கொண்டிருக்கும் கயிறுகளையும், இழைகளையும் கொண்டவன் {தந்துவர்த்தகன்}, இந்திரனால் செய்யப்படும் செயல்களைச் செய்பவன் {இந்த்ரகர்மா}, பெருஞ்செயல் புரிபவன் {மஹாகர்மா}, செய்யத்தவறிய செயல்களற்றவன் {க்ருதகர்மா}, வேதங்கள் மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் தொகுத்தவன் {க்ருதாகமன்}<782-789>;(97)

உயர்ந்த பிறப்பைக் கொண்டவன் {உத்பவன்}, பேரழகன் {ஸுந்தரன்}, இதயம் முழுவதும் பரிவிரக்கத்தால் நிறைந்தவன் {ஸுந்தர்}, உந்தியில் விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்டவன் {ரத்நநாபன்}, சிறந்த ஞானத்தையே கண்ணாகக் கொண்டவன் {ஸுலோசநன்}, பிரம்மனாலும், அண்டத்தில் உள்ள முதன்மையானோர் பிறராலும் வழிபடத்தகுந்தவன் {அர்க்கன்}, உணவுக் கொடையாளி {வாஜஸநி}, அண்டப் பேரழிவின் போது கொம்புகளை ஏற்றவன் {ஸ்ருங்கீ}, தன் பகைவர்களை எப்போதும் மிக அற்புதமாக வெல்பவன் {ஜயந்தன்}, அனைத்தையும் அறிந்தவன், தடுக்கப்பட முடியாத ஆற்றலுடன் கூடியோரை எப்போதும் வெல்பவன் {ஸர்வவிஜ்ஜயீ}<790-799>;(98)

பொன் போன்ற அங்கங்களைக் கொண்டவன் {ஸுவர்ணபிந்து}, (கோபம், வெறுப்பு, அல்லது வேறு ஆசைகளால்) கலங்கடிக்கப்பட முடியாதவன் {அக்ஷோப்யன்}, வாக்குகள் அனைத்தையும் ஆள்வர்கள் அனைவரையும் ஆள்பவன் {ஸர்வவாகீஸ்வரேஸ்வரன்}, ஆழமான தடாகமாக இருப்பவன் {மஹாஹ்ரதன்}, ஆழ்ந்த படுகுழியாக இருப்பவன் {மஹாகர்த்தன்}, காலத்தின் ஆதிக்கத்தைக் கடந்தவன் {மஹாபூதன்}, அடிப்படை பூதங்கள் அனைத்தையும் தனக்குள் நிறுவிக் கொண்டவன் {மஹாநிதி}<800-806>;(99)

பூமியை மகிழச் செய்பவன் {குமுதன்}, குந்த மலர்களைப் போன்ற ஏற்புடைய கனிகளை அருள்பவன் {குந்தரன்}, (ராம அவதாரத்தில்) கசியபருக்கு பூமியைக் கொடையாக அளித்தவன் {குந்தன்}, பூமியின் வெப்பத்தைத் தன் மழைப்பொழிவால் தணிக்கும் மழை நிறைந்த மேகத்தைப் போல (சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) மூன்றுவகைத் துன்பங்களை அழிப்பவன் {பர்ஜந்யன்}, அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்பவன் {பவநன்}, தன்னைத் தூண்ட எவரும் இல்லாதவன் {அநிலன்}, அமுதம் பருகியவன் {அமிதாசன்}, சாகாவுடல் படைத்தவன் {அம்ருதவபு}, அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்}, ஒவ்வொரு திசையிலும் முகமும் கண்களும் திரும்பப்பெற்றவன் {ஸர்வதோமுகன்}<807-816>;(100)

(மலர்கள் மற்றும் இலைகள் போன்ற காணிக்கைகளுடன்) எளிதில் வெல்லபடக்கூடியவன் {ஸுலபன்}, சிறந்த நோன்புகளைச் செய்தவன் {ஸுவ்ரதன்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தன்}, பகைவர் அனைவரையும் வெல்பவன் {சத்ருஜித்}, பகைவர் அனைவரையும் எரிப்பவன் {சத்ருதாபநன்}, பிற மரங்களுக்கு மேலாக எப்போதும் வளரும் நெடிய ஆல மரமாக இருப்பவன் {ந்யக்ரோதன்}, புனிதமான அத்திமரமாக இருப்பவன் {உதும்பரன்}, அரச மரமாக இருப்பவன் (அல்லது, அழியாத வடிவங்களில் இருப்பது போலவே அண்டத்தில் அழியும் வடிவங்களிலும் இருப்பதன் விளைவால் நீடித்து நிற்காதவன்) {அஸ்வத்தன்}ஆந்திர நாட்டின் சாணூரனைக் கொன்றவன் {சாணூராந்த்ரநிஷூதநன்}<817-825>;(101)

ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரார்ச்சிஸ்}, (காளி, கராளி முதலிய வடிவங்களில்) ஏழு நாவுகளைக் கொண்டவன் {ஸப்தஜிஹ்வன்}, (நெருப்பின் தேவனுடன் அடையாளம் காணப்படும் விளைவால்) ஏழு தழல்களைக் கொண்டவன் {ஸப்தைதஸ்}, தன் வாகனத்தை இழுக்க ஏழு குதிரைகளைக் கொண்டவன் (அல்லது, சப்தம் என்றழைக்கப்படும் குதிரையைக் கொண்டவன்) {ஸப்தவாஹநன்}, வடிவமற்றவன் {அமூர்த்தி}, பாவமற்றவன் {அநகன்}, நினைத்தற்கரியவன் {அசிந்த்யன்}, அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவன் {பயக்ருத்}, அச்சங்கள் அனைத்தையும் அழிப்பவன் {பயநாசநன்}<826-834>;(102)

மிகச் சிறியவன் {அணு}, மிகப் பெரியவன் {ப்ருஹத்}, மெலிந்தவன் {க்ருசன்}, பருத்தவன் {ஸ்தூலன்}, குணங்களுடன் கூடியவன் {குணப்ருத்}, குணங்களைக் கடந்தவன் {நிர்க்குணன்}, மிகச்சிறந்தவன் {மஹாந்}, கைப்பற்றப்பட முடியாதவன் {அத்ருதன்}, (தன்னை வழிபடுபவர்களால்) எளிதில் கைப்பற்றப்படுபவன் {ஸ்வத்ருதன்}, சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸ்வாஸ்யன்}, தற்செயலான உலகங்களைச் சார்ந்த மக்களைத் தன் வழித்தோன்றல்களாகக் கொண்டவன் {ப்ராக்வம்சன்}, ஐந்து அடிப்படை பூதங்கள் உள்ளடங்கிய படைப்பைச் செய்பவன் {வம்சவர்த்தநன்}<835-846>;(103)

(ஆனந்தனின் வடிவில்) கனமான சுமைகளைச் சுமப்பவன் {பாரப்ருத்}, வேதங்களில் அறிவிக்கப்பட்டவன் {கதிதன்}, யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவன் {யோகீ}, யோகியர் அனைவரின் தலைவன் {யோகீசன்}, அனைத்து ஆசைகளையும் கொடுப்பவன் {ஸர்வகாமதன்}, நாடுவோருக்கு ஆசிரமம் அளிப்பவன் {ஆஸ்ரமன்}, சொர்க்கத்தின் இன்ப வாழ்வு நிறைவடைந்து மீண்டும் இவ்வாழ்வுக்குத் திரும்பும் யோகியரை புதிதாக யோகத்தைச் செய்யச் செய்பவன் {ஸ்ரமணன்}, யோகியரின் பலன்கள் தீர்ந்தும் கூட அவர்களில் பலத்தை நிறுவுபவன் {க்ஷாமன்}, (உலக மரமாக இருந்து வேதங்களில் சந்தங்களின் வடிவில்) நல்ல இலைகளாக இருப்பவன் {ஸுபர்ணன்}, காற்றை வீசச் செய்பவன் {வாயுவாஹநன்}<847-856>;(104)

(ராமனின் வடிவில்) வில் தரித்தவன் {தநுர்த்தரன்}, ஆயுத அறிவியல் அறிந்தவன் {தநுர்வேதன்}, தண்டக் கோலாக இருப்பவன் {தண்டன்}, தண்டிப்பவன் {தமயிதா}, தண்டனைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {அதமன்}, வெல்லப்பட முடியாதவன் {அபராஜிதன்}, அனைத்துச் செயல்களையும் செய்யத்தகுந்தவன் {ஸர்வஸஹன்}, மனிதர்கள் அனைவரையும் அவரவர் கடமைகளில் நிறுவுபவன் {நியந்தா}, தன்னைப் பணியில் நிறுவ எவரும் இல்லாதவன் {நியமன்}, தன்னைக் கொல்ல யமன் எவனும் இல்லாதவன் {யமன்}<857-866>;(105)

வீரமும் ஆற்றலும் கொண்டவன் {ஸத்வவாந்}, சத்வ (நல்லியல்பின்) குணம் கொண்டவன் {ஸாத்விகன்}, வாய்மையுடன் அடையாளங்காணப் படுபவன் {ஸத்யன்}, வாய்மையிலும், அறத்திலும் அர்ப்பணிப்புள்ளவன் {ஸத்யதர்மபராயணன்}, முக்தி அடையத் தீர்மானித்தவர்களால் விரும்பப்படுபவன் (அல்லது, பேரழிவு நேரும்போது இந்த அண்டம் எவனிடம் செல்லுமோ அவன்) {அபிப்ராயன்}, தன்னை வழிபடுபவர்கள் அளிக்கும் அனைத்து வகைப் பொருட்களுக்கும் தகுந்தவன் {ப்ரியார்ஹன்}, (மந்திரங்கள், மலர்கள் மற்றும் வேறு மதிப்புமிக்கக் காணிக்கைகளால்) துதிக்கத்தகுந்தவன் {அர்ஹன்}, அனைவருக்கும் நல்லது செய்பவன் {ப்ரியக்ருத்}, அனைவரின் மகிழ்ச்சியையும் பெருக்குபவன் {ப்ரீதிவர்த்தநன்}<867-875>;(106)

ஆகாயப்பாதை கொண்டவன் {விஹாயஸகதி}, சுயப்பிரகாசத்தில் ஒளிர்பவன் {ஜ்யோதி}, பேரழகுடன் கூடியவன் {ஸுருசி}, வேள்வி நெருப்பில் இடப்படும் காணிக்கைகளை உண்பவன் {ஹுதபுக்விபு}, எங்கும் வசிப்பவன் {ரவி}, பெரும்பலம் கொண்டவன் {விரோசநன்}, சூரியனின் வடிவில் பூமியின் ஈரத்தை உறிஞ்சுபவன் {ஸூர்யன்}, பல்வேறு ஆசைகளைக் கொண்டவன், அனைத்தையும் பெறுவபன், அண்டத்தைப் பெற்றவன் {ஸவிதா}, சூரியனை கண்ணாகக் கொண்டவன் {ரவிலோசநன்}<876-885>;(107)

எல்லையற்றவன் {அநந்த}, வேள்விக் காணிக்கைகள் அனைத்தையும் ஏற்பவன் {ஹுதபுக்}, மனத்தின் வடிவில் பிரகிருதியை அனுபவிப்பவன் {போக்தா}, இன்பத்தை அளிப்பவன் {ஸுகதன்}, (அறத்திற்காகவும், அறத்தைப் பாதுகாக்கவும்) மீண்டும் மீண்டும் பிறப்பவன் {நைகதன்}, இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் முதலில் பிறந்தவன் {அக்ரஜன்}, (விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதன் விளைவால்) மனத்தளர்வைக் கடந்தவன் {அநிர்விண்ணன்}, அறவோர் வழுவும்போது மன்னிப்பவன் {ஸதாமர்ஷீ}, அண்டம் நிலைக்கும் அடித்தளமாக இருப்பவன் {லோகாதிஷ்டாநன்}, மிக அற்புதமானவன் {அத்புதன்}<886-895>;(108)

தொடக்கக் காலம் முதல் இருப்பவன் {ஸநாத்}, பெரும்பாட்டன் முதலியோர் பிறப்பதற்கு முன்பே இருப்பவன் {ஸநாதந்தமன்}, பழுப்பு நிறம் கொண்டவன் (அல்லது கண்டடைபவன், அல்லது இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் தன் கதிர்களால் ஒளியூட்டுபவன்) {கபிலன்}, பெரும் பன்றியின் வடிவமேற்றவன், அனைத்தும் அழிந்த பிறகும் இருப்பவன் {கபிரவ்யயன்}, அனைத்து அருள்களையும் வழங்குபவன் {ஸ்வஸ்திதன்}, அருள்களைப் படைப்பவன் {ஸ்வஸ்திக்ருத்}, அருள்கள் அனைத்துடன் அடையாளம் காணப்படுபவன் {ஸ்வஸ்தி}, அருள்களை அனுபவிப்பவன் {ஸ்வஸ்திபுக்}, அருள்களைப் பொழிபவன் {ஸ்வஸ்திதக்ஷிணன்}<896-905>;(109)

கோபமற்றவன் {அரெளத்ரன்}, பாம்பான சேஷனின் வடிவில் மடங்கிச் சுருண்டு கிடப்பவன் {குண்டலீ}, சக்கரந்தரித்தவன் {சக்ரீ}, பேராற்றல் கொண்டவன் {விக்ரமீ}, ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளின் உயர்ந்த ஆணைகளால் முறைப்படுத்தப்பட்ட ஆட்சியைக் கொண்டவன் {ஊர்ஜிதசாஸநன்}, வாக்கின் துணையால் விவரிக்கப்பட இயலாதவன் {சப்தாதிகன்}, வாக்கின் உதவியால் வேதாங்கங்களில் சொல்லப்பட்டவன் {சப்தஸ்ஹன்}, மூவகைத் துன்பங்களால் பீடிக்கப்பட்டவர்களைக் குளிர்விக்கும் பனித்துளியாய் இருப்பவன் {சிசிரன்}, இருளை விலக்கும் வல்லமுடையுடன் அனைத்து உடல்களிலும் வாழ்பவன் {சர்வரீகரன்}<906-914>;(110)

கோபமற்றவன் {அக்ரூரன்}, எண்ணம், சொல் மற்றும் செயலின் மூலம் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுவதில் திறன் படைத்தவன் {பேசலன்}, குறுகிய காலத்திற்குள் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றவல்லவன் {தக்ஷன்}, தீயோரை அழிப்பவன் {தக்ஷிணன்}, மன்னிக்கும் தன்மை கொண்ட மனிதர்களில் முதன்மையானவன் {க்ஷமிணாம்வரன்}, ஞானியர் அனைவரிலும் முதன்மையானவன் {வித்வத்தமன்}, அச்சமனைத்தையும் கடந்தவன் {வீதபயன்}, எவனுடைய பெயர்களும், சாதனைகளும் கேட்கப்படுமோ, உரைக்கப்படுமோ, அறத்திற்கு வழிவகுக்குமோ அவன் {புண்யஸ்ரவணகீர்த்தநர்}<915-922>;(111)

மயக்கம் நிறைந்த உலகப் பெருங்கடலில் இருந்து அறத்தைப் பாதகாப்பவன் {உத்தாரணன்}, தீயோரை அழிப்பவன் {துஷ்க்ருதிஹா}, அறமே ஆனவன் {புண்யன்}, தீய கனவுகள் அனைத்தையும் விலக்குபவன் {துஸ்வப்நநாசநன்}, தன்னை வழிபடுபவர்களை விடுதலைக்கான {முக்திக்கான} நல்ல பாதையில் செலுத்துவதற்காகத் தீய பாதைகள் அனைத்தையும் அழிப்பவன் {வீரஹா}, சத்வ குணத்தில் இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் {ரக்ஷணன்}, நற்பாதையில் நடப்பவன் {ஸந்தன்}, வாழ்வே ஆனவன் {ஜீவநன்}, அண்டம் முழுவதும் பரவியிருப்பவன் {பர்யவஸ்திதன்}<923-931>;(112)

எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவன் {அநந்தரூபன்}, எல்லையற்ற செல்வத்தைக் கொண்டவன் {அநந்தஸ்ரீ}, கோபத்தை அடக்கியவன் {ஜிதமந்யு}, அறவோரின் அச்சங்களை அழிப்பவன் {பயாபஹன்}, எண்ணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தன்னுணர்வு உள்ளவர்களுக்கு அனைத்துப் புறங்களிலும் நீதிக்கனிகளைக் கொடுப்பவன் {சதுரஸ்ரன்}, அளவிலா ஆன்மா கொண்டவன் {கபீராத்மா}, பல்வேறு வகையில் தகுந்த செயல்களைச் செய்தோருக்கு பல்வேறு வகையான கனிகளை அளிப்பவன் {விதிசன்}, (தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு) பல்வேறு வகையில் ஆணைகளை நிறுவுபவன் {வ்யாதிசன்}, சரியான கனியுடன் கூடிய ஒவ்வொரு செயலிலும் பற்று கொண்டவன் {திசன்}<932-940>;(113)

தொடக்கமற்றவன் {அநாதி}, பூமி மற்றும் காரணங்கள் அனைத்தின் கொள்ளிடம் {பூர்ப்புவன்}, செழிப்பின் தேவியை எப்போதும் தன் புறத்தில் கொண்டவன் {லக்ஷ்மீ}, வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {ஸுவீரன்}, அழகிய கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {ருசிராங்கதன்}, உயிரினங்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஜநநன்}, உயிரினங்கள் அனைத்தும் பிறப்பதற்கான மூலக் காரணன் {ஜநஜந்மாதி}, தீய அசுரர்கள் அனைவரையும் அச்சுறுத்துபவன் {பீமன்}, பயங்கர ஆற்றலைக் கொண்டவன் {பீமபராக்ரமன்}<941-949>;(114)

அடிப்படையான ஐந்து பூதங்களின் வசிப்பிடமாகவும் கொள்ளிடமாகவும் இருப்பவன் {ஆதாரநிலயன்}, அண்டப் பேரழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் தன் தொண்டையில் விழுங்குபவன் {தாதா}, மலரைக் காண்பதைப் போல ஏற்புடைய இனிய புன்னகை கொண்டவன் (அல்லது, மலர்களின் வடிவில் புன்னகைப்பவன்) {புஷ்பஹாஸன்}, எப்போதும் விழிப்புநிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஜாகரன்}, உயிரினங்கள் அனைத்துக்கும் தலைமையாக நிற்பவன் {ஊர்த்வகன்}, அறவோர் செய்யும் செயல்களுடன் கூடிய ஒழுக்கம் கொண்டவன் {ஸத்பதாசாரன்}, [பரீக்ஷித் மற்றும் பிறரின் வழக்கில் நேர்ந்தது போல்] இறந்தோரை மீட்பவன்{ப்ராணதன்}, தொடக்க அசையான ஓம் ஆக இருப்பவன் {ப்ரணவன்}, அறச்செயல்கள் அனைத்தையும் விதித்தவன் {பணன்}<950-958>;(115)

பரமாத்மாவைக் குறித்த உண்மையை வெளிப்படுத்துபவன் {ப்ரமாணன்}, ஐந்து மூச்சுக்காற்றுகள் மற்றும் ஐம்புலன்களின் வசிப்பிடமாக இருப்பவன் {ப்ராணநிலயன்}, உயிரினங்களின் வாழ்வை ஆதரிக்கும் உணவாக இருப்பவன் {ப்ராணத்ருத்}, பிராணன் என்றழைக்கப்படும் உயிர் மூச்சின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தையும் வாழச் செய்பவன் {ப்ராணஜீவநன்},  தத்துவ அமைப்புகள் அனைத்திலும் சிறந்த தத்துவமாக இருப்பவன் {தத்வம்தத்வவித்}, அண்டத்தின் ஒரே ஆன்மாவாக இருப்பவன் {ஏகாத்மா}, பிறப்பு, முதுமை மற்றும் மரணத்தைக் கடந்தவன் {ஜந்மம்ருத்யுஜராதிகன்}<959-965>;(116)

பூ, புவ, ஸ்வ மற்றும் செய்யப்படும் பிற ஹோம காணிக்கைகளின் புனித அசைகளின் விளைவால் அண்டத்தைக் காப்பவன் {பூர்ப்புவஸ்வஸ்தரு}, பெரும்பாதுகாவலன் {தாரன்}, அனைவரின் தந்தையாக இருப்பவன் {ஸவிதா}, பெரும்பாட்டனுக்கே (பிரம்மனுக்கே) தந்தையாக இருப்பவன் {ப்ரபிதாமஹன்}, வேள்வியின் வடிவில் இருப்பவன் {யஜ்ஞன்}, (வேள்விகளில் துதிக்கப்படும் பெருந்தேவனாக அவனே இருப்பதால்) வேள்விகள் அனைத்தின் தலைவன் {யஜ்ஞபதி}, வேள்வி செய்பவன் {யஜ்வா}, வேள்விகளையே தன் அங்கங்களாகக் கொண்டவன் {யஜ்ஞாங்கன்}, வேள்விகள் அனைத்தையும் நிலைநிறுத்துபவன் {யஜ்ஞவாஹநன்}<966-975>;(117)

வேள்விகளைப் பாதுகாப்பவன் {யஜ்ஞப்ருத்}, வேள்விகளைப் படைத்தவன் {யஜ்ஞக்ருத்}, வேள்விகள் செய்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {யஜ்ஞீ}, வேள்விகள் அனைத்தின் வெகுமதிகளையும் அனுமதிப்பவன் {யஜ்ஞபுக்}, வேள்விகள் அனைத்தையும் நிறைவேறச் செய்பவன் {யஜ்ஞஸாதநன்}, வேள்விகளின் இறுதியில் ஆகுதிகள் முழுமையையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவை அனைத்தையும் நிறைவடையச் செய்பவன் {யஜ்ஞாந்தக்ருத்}, பலனில் விருப்பமின்றிச் செய்யப்படும் வேள்விகளோடு அடையாளங்காணப் படுபவன் {யஜ்ஞகுஹ்யன்}, அனைத்து உயிரினங்களையும் நீடிக்கச் செய்யும் உணவாக இருப்பவன் {அந்நம்}, அந்த உணவை உண்பவன் {அந்நாதன்}<976-984>;(118)

இருப்பின் காரணன் {ஆத்மயோநி}, தானாகத் தோன்றியவன் {ஸ்வயஞ்சாதன்}, திடமான பூமியைத் துளைத்துச் சென்றவன் (சென்று பாதாள லோகத்தில் ஹிரண்யாக்ஷன் மற்றும் பிறரைக் கொன்றவன்) {வைகாநன்}, சாமங்கள் பாடுபவன் {ஸாமகாயநன்}, தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவன் {தேவகீநந்தநன்}, அனைத்தையும் படைப்பவன் {ஸ்ரஷ்டா}, பூமியின் தலைவன் {க்ஷிதீசன்}, தன்னை வழிபடுபவர்களின் பாவங்களை அழிப்பவன் {பாபநாசநன்}<985-992>;(119)

(பாஞ்சஜன்யம் என்ற) சங்கைத் தன் கையில் சுமப்பவன் {சங்கப்ருத்}, ஞானம் மற்றும் மாயையாலான வாளைச் சுமப்பவன் {நந்தகீ}, இடையறாமல் யுகச்சக்கரத்தைச் சுழலச் செய்பவன் {சக்ரீ}, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் புலன்களில் தன்னைச் செலுத்திக் கொள்பவன் {சார்ங்கதந்வா}, மிகத்திடமான புத்தியுடன் கூடிய கதாயுதத்தைக் கொண்டவன் {கதாதரன்}, தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவன் {ரதாங்கபாணி}, கலங்கடிக்கப்பட முடியாதவன் {அஷோப்யன்}, அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவன் {ஸர்வப்ரஹரணாயுதன்}<993-1000>[1].(120) ஓம், அவனை வணங்குகிறேன்[2].இவ்வாறே எப்போதும் பாடப்பட வேண்டிய, மகிமை பொருந்திய உயர் ஆன்ம கேசவனின் சிறப்பான ஆயிரம் பெயர்களை எந்த எதிர்பார்ப்புமின்றி உனக்கு உரைத்தேன்.(121) ஒவ்வொரு நாளும் இந்தப் பெயர்களைக் கேட்பவனோ, உரைப்பவனோ இம்மையிலும், மறுமையிலும் ஒருபோதும் எந்தத் தீங்கையும் சந்திக்க மாட்டான்.(122) இஃதை ஒரு பிராமணன் செய்தால் அவன் வேதாந்தத் திறன் பெறுவதில் வெல்வான்; ஒரு க்ஷத்திரியன் செய்தால் அவன் எப்போதும் போர்க்களத்தில் வெற்றியாளனாக இருப்பான். ஒரு வைசியன் செய்தால் அவன் செழிப்படைவான். அதே வேளையில் ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(123) ஒருவன் அறத்தகுதியீட்ட விரும்பினால் (இந்தப் பெயர்களைக் கேட்பதாலோ, உரைப்பதாலோ) அஃதை ஈட்டுவதில் வெல்கிறான். ஒருவன் செல்வத்தை விரும்பினால், அவன் (இவ்வழியில் செயல்பட்டு) செல்வத்தை ஈட்டுவதில் வெல்வான். புலனின்பங்களில் ஆசை கொண்ட மனிதனும் கூட, ஆனைத்து வகை இன்பங்களையும் அனுபவிப்பதில் வெல்கிறான். சந்ததியை விரும்பும் மனிதன் (இவ்வொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம்) சந்ததியை அடைகிறான்.(124)

எந்த மனிதன், அவனிடம் முழுமையாகத் திருப்பப்பட்ட இதயத்துடன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, பக்தியுடனும், விடாமுயற்சியுடனும், ஒவ்வொரு நாளும் வாசுதேவனின் இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வானோ(125) அவன் பெரும்புகழ், உற்றார் உறவினருக்கு மத்தியில் திறன்மிக்க நிலை, நீடித்த செழிப்பு ஆகியவற்றையும், இறுதியாக அவனுக்கான உயர்ந்த நன்மையை (அவனுக்கான உயர்ந்த நன்மையான முக்தியையே) அடைவதிலும் வெல்கிறான்.(126) அத்தகைய மனிதன் எந்நேரத்திலும் அச்சமடையாதவனாகப் பேராற்றலையும் பெரும் சக்தியையும் கொண்டிருப்பான். நோய் ஒருபோதும் அவனைப் பீடிக்காது; நிறத்தில் காந்தி, பலம், அழகு, சாதனைகள் ஆகியன அவனுடையவையாகின்றன.(127) நோயாளி சுகம்பெறுவான்; துன்பங்களில் பீடிக்கப்படுபவன் அவற்றில் இருந்து விடுபடுவான், பேரிடரில் மூழ்கியவன் அதனிலிருந்து விடுபடுவான்.(128) அந்த முதன்மையானவனின் ஆயிரம் பெயர்களை உரைப்பதன் மூலம், அவனது புகழை பக்தியுடன் பாடும் மனிதன், சிரமங்கள் அனைத்தையும் விரைவாகக் கடப்பதில் வெல்கிறான்.(129) வாசுதேவனைப் புகலிடமாகக் கொண்டவனும், அவனிடம் பக்தி கொண்டவனுமான மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நித்திய பிரம்மத்தை அடைகிறான்.(130)

வாசுதேவனிடம் பக்தி கொண்டோர் ஒருபோதும் எத்தீங்கையும் அடைய மாட்டார்கள். அவர்கள், பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஆகிய அச்சங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.(131) பக்தியுடனும், நம்பிக்கையுடனும் (வாசுதேவனின் ஆயிரம் பெயர்கள் அடங்கிய) இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் ஒரு மனிதன் ஆன்ம இன்பம், மன்னிக்கும் இயல்பு, செழிப்பு, புத்தி, நினைவு மற்றும் புகழ் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(132) அறம் சார்ந்த முதன்மையான மனிதர்களான அவர்களிடம் கோபமோ, பொறாமையோ, பேராசையோ, தீய புத்தியோ ஒருபோதும் தோன்றாது.(133)

சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் வானம், திசைப்புள்ளிகள், பூமி, பெருங்கடல் ஆகியவற்றுடன் கூடிய வெளியானது உயர் ஆன்ம வாசுதேவனின் ஆற்றலாலேயே ஆதரவடைந்து நிலைநிறுத்தப்படுகிறது.(134) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும் கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது.(135) புலன்கள், மனம், புத்தி, உயிர் {சத்வ குணம்}, சக்தி {வன்மை}, பலம் மற்றும் நினைவு ஆகியன வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. உண்மையில், க்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இவ்வுடலும், க்ஷேத்திரத்தை அறிபவன் என்றழைக்கப்படும் புத்தியுடன் கூடிய ஆன்மா ஆகியவையும் வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(136) சாத்திரங்களில் உள்ள காரியங்கள் அனைத்திலும் (நடைமுறைகள் உள்ளடங்கிய) ஒழுக்கமே முதன்மையானது எனச் சொல்லப்படுகிறது. அறம் ஒழுக்கத்தையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மங்கா புகழ் கொண்ட வாசுதேவன் அறத்தின் தலைவனாகச் சொல்லப்படுகிறான்.(137)

முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், (அடிப்படை) பெரும்பூதங்கள், உலோகங்கள், உண்மையில், அசையும் மற்றும் அசையாதனவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும் நாராயணனிலிருந்தே உதித்தது.(138) யோகம், சாங்கிய தத்துவம், ஞானம், அனைத்து வகை இயந்திரக் கலைகள், வேதங்கள், பல்வேறு வகைச் சாத்திரங்கள் என அனைத்தும் ஜனார்த்தனனிலிருந்தே உண்டாகின.(139) விஷ்ணு, பல்வேறு வடிவங்களில் பரவியிருக்கும் ஒரே பெரும்பொருளாக இருக்கிறான். மூவுலகங்களையும் மறைப்பவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மாவுமான அவன் அவை அனைத்தையும் அனுபவிக்கிறான். அவனது மகிமை குறைவறியாதது, அவன் (அண்டத்தின் உயர்ந்த தலைவனாக) அதை அனுபவிக்கிறான்.(140) சிறப்புமிக்க விஷ்ணுவைப் புகழ்வதும், வியாசரால் தொகுக்கப்பட்டதுமான இந்தப் பாடல், உயர்ந்த மகிழ்ச்சியையும், உயர்ந்த நன்மையையும் (முக்தியையும்) அடைய விரும்பும் மனிதனால் பாடப்பட வேண்டும்.(141) பிறப்பற்ற தேவனும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவனும், அண்டத்திற்கு மூலமாகவோ, காரணமாகவோ இருப்பவனும், சிதைவறியாதவனும், பெரியவையும், தாமரை இதழ்களைப் போன்றவையுமான கண்களைக் கொண்டவனுமான அந்த அண்டத் தலைவனை வழிபட்டுத் துதிப்பவர்கள் எந்த ஏமாற்றத்தையும் ஒருபோதும் சந்திப்பதில்லை” என்றார் {பீஷ்மர்}.(142)

சாவித்ரி மந்திரம்! – அநுசாஸனபர்வம் பகுதி – 150-தேவர்கள், முனிவர்கள், மன்னர்கள் மற்றும் பலரின் பெயர்கள் அடங்கிய சாவித்திரி மந்திரத்தை {காயத்ரியை} யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும்ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, ஒவ்வொரு நாளும் சொல்வதன் மூலம் ஒருவன் பெருமளவு அறத்தகுதிக்குரிய பலன்களை ஈட்டச் செய்யும் மந்திரம் எது?(1) பயணம் புறப்படும்போதோ, புதிய கட்டடத்திற்குள் நுழையும்போதோ, எந்தச் செயலையும் செய்யும்போதோ, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகளின் போதோ சொன்னால் வெற்றியை உண்டாகும் மந்திரம் எது?(2) உண்மையில் வேதங்களுக்கு இணக்கமாக, தீய ஆதிக்கங்கள் அனைத்தையும் தணிக்கவோ, செழிப்பு, அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவோ, தீமையிலிருந்து பாதுகாக்கவோ, பகைவர்களை அழிக்கவோ, அச்சங்களை விலக்கவோ உரிய மந்திரம் எது?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, வியாசரால் அறிவிக்கப்பட்ட அந்த மந்திரத்தைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சாவித்ரியால் {சூரியனால்} விதிக்கப்பட்டிருக்கும் அது பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகும். அஃது ஒரு மனிதனிடம் இருக்கும் பாவங்கள் அனைத்தையும் உடனே தூய்மையாக்கவல்லதாகும்.(4) ஓ! பாவமற்றவனே, அந்த மந்திரத்தின் விதிகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்மையில், ஓ! பாண்டு மகன்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த விதிகளைக் கேட்பதன் மூலம் ஒருவன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைகிறான்.(5) அம்மந்திரத்தைப் பகலும், இரவும் உரைப்பவன் பாவத்தால் ஒருபோதும் களங்கமடையமாட்டான். அந்த மந்திரத்தை உனக்கு இப்போது உரைக்கப்போகிறேன். குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(6) உண்மையில், ஓ! இளவரசே, இதைக் கேட்கும் மனிதன் நீண்ட வாழ்நாளை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்து, இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தில் திளைப்பான்.(7) ஓ! மன்னா, க்ஷத்திரியக் கடமைகளின் நடைமுறையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வாய்மை நோன்பை {சத்திய விரதத்தை} நிலையாக நோற்றவர்களுமான அரசமுனிகளில் முதன்மையானவர்களால் ஒவ்வொரு நாளும் இம்மந்திரம் உரைக்கப்பட்டது.(8) உண்மையில், ஓ! மன்னர்களில் புலியே, புலனடக்கத்துடனும், ஆன்ம அமைதியுடனும் ஒவ்வொரு நாளும் இந்த மந்திரத்தைச் சொல்லும் ஏகாதிபதிகள் ஒப்பற்ற செழிப்பை அடைவதில் வெல்வார்கள்.(9)

உயர்ந்த நோன்புகளைக் கொண்ட வசிஷ்டரையும், வேதப்பெருங்கடலான பராசரரையும் மதிப்புடன் வணங்குகிறேன். பெரும் நாகனான அனந்தனை வணங்குகிறேன். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் மற்றும் மங்கா மகிமை கொண்ட அனைவரையும் வணங்குகிறேன்.(10) முனிவர்களையும், உயர்ந்தவற்றில் உயர்ந்தவனும், முதன்மையானோர் அனைவருக்கும் வரங்களை அளிப்பவனுமான தேவதேவனை வணங்குகிறேன். ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், மங்கலமிக்கவனும், ஆயிரம் பெயர்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனனை வணங்குகிறேன்.(11)

அஜன் ஏகபாத் {அஜைகபாத்}, அஹிர்ப்புத்நியன், வெல்லப்பட இயலாத பிநாகி, ருதன், பித்ருரூபன், திரியம்பகன், மஹேஸ்வரன்,(12) விருஷாகபி, சம்பு, ஹவனன், ஈஸ்வரன் என எண்ணிக்கையில் பதினொருவராக {11} உள்ள இவர்கள் உலகங்கள் அனைத்தின் தலைவர்களாகக் கொண்டாடப்படும் ருத்திரர்களாவர்.(13) இந்தப் பதினோரு உயர் ஆன்மாக்களே (வேதங்களின்) சதருத்ரத்தில் நூற்றுவராகக் குறிப்பிடப்படுகின்றனர்.

அம்சன், பகன், மித்ரன், வருணன், தாதா, அர்யமா, ஜயந்தன், பாஸ்கரன்,(14) த்வஷ்டா, பூஷா, இந்திரன், விஷ்ணு ஆகியோர் பன்னிருவராவர். ஸ்ருதி அறிவிப்பது போலக் கசியபரின் மகன்களான இந்தப் பன்னிருவரும் {12} ஆதித்யர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.(15)

தரன், துருவன், ஸோமன், ஸாவித்ரன், அநிலன், அநலன், பிரத்யூஷன், பிரபாஸன் ஆகியோர் சாத்திரங்களில் சொல்லப்படும் எட்டு {8} வசுக்களாவர் {அஷ்டவசுக்களாவர்}.(16)

நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினி இரட்டையராகச் {2} சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மார்த்தாண்டனின் {சூரியனின்} மகன்களாவர், அவனது மனைவியான ஸம்ஜ்ஞாதேவியின் மூக்கில் இருந்து இவர்கள் வெளிவந்தனர்.(17)

இனி இவ்வுலகில் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சாட்சிகளாக இருப்போரின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன்.(18) தேவர்களில் தலைவர்களான அவர்கள் புலப்படாத நிலையில் இருந்தாலும் அனைத்தையும் காண்கின்றனர். உண்மையில், அவர்கள் அனைத்து உயிரினங்களும் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் காண்கின்றனர். அவர்கள் மிருத்யு, காலன்,(19) விஷ்வேதேவர்கள், வடிவங்களுடன் கூடிய பித்ருக்கள், தவங்களையே செல்வமாகக் கொண்ட பெரும் முனிவர்கள், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட முனிவர்கள், மற்றும் தவங்கள், முக்தி ஆகியவற்றில் அர்ப்பணிப்பு கொண்டோர் ஆகியோராவர்.(20) இவர்கள் தங்கள் பெயர்களைச் சொல்லும் மனிதர்களுக்குப் பல்வேறு வகை நன்மைகளைச் செய்கின்றனர். உண்மையில் தெய்வீக சக்தி கொண்ட அவர்கள், பெரும்பாட்டனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு இன்ப உலகங்களை அத்தகைய மனிதர்களுக்கு அளிக்கிறார்கள்.(21) அனைத்து உலகங்களிலும் வசித்திருக்கும் அவர்கள், அங்கு நடைபெறும் செயல்களைக் கவனமாகக் குறித்துக் கொள்கின்றனர். உயிரினங்கள் அனைத்தின் தலைவர்களான அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அபரிமிதமான அளவில் ஈட்டுபவனாகிறான்.(22) அவன் மறுமையில் அண்டத்தின் தலைவனால் உண்டாக்கப்பட்ட பல்வேறு மங்கல, இன்ப உலகங்களை அடைகிறான்.(23)

அனைத்து உயிரினங்களின் தலைவர்களான இந்த முப்பத்துமூவர்[1], பேருடல் படைத்த நந்தீஸ்வரன், காளையைத் தன் கொடிச் சின்னமாகக் கொண்ட உயர்ந்தவன், கணேஸ்வரன் என்றழைக்கப்படுபவனின் தொண்டர்கள் மற்றும் துணைவர்களாக இருக்கும் உலக ஆட்சியாளர்கள் அனைவர், சௌமியர்கள், ரௌத்திரர்கள், யோகிகள் என்றழைக்கப்படுபவர்கள், பூதங்கள் என்றறியப்படுபவர்கள்,(24,25) ஆகாயத்து ஒளிக்கோள்கள், ஆறுகள், வானம், பறவைகளின் இளவரசன் (கருடன்), தவங்களின் விளைவால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அசையும் மற்றும் அசையாத வடிவம் கொண்டிருப்பவர்கள்,(26) இமவான் {இமய மலை}, அனைத்து மலைகள், நான்கு பெருங்கடல்கள், பவனின் ஆற்றலுக்கு இணையான ஆற்றலைக் கொண்ட அவனது தொண்டர்கள்,(27) எப்போதும் வெற்றியாளனாக இருக்கும் சிறப்புமிக்க விஷ்ணு, ஸ்கந்தன், அம்பிகை ஆகிய இந்தப் பெரும் ஆன்மாக்களின் பெயர்களைப் புலனடக்கத்துடன் சொல்லும் ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(28)இனி மானவர்கள் என்றறியப்படும் முதன்மையான முனிவர்களின் பெயர்களை நான் சொல்லப் போகிறேன். அவர்கள் யவக்ரீதர், ரைப்யர், அர்வாவஸு, பராவஸு;(29) ஔஷிஜர், கக்ஷீவான், அங்கிரஸின் மகனான பலர் {பலன்} ஆகியோராவர். பிறகு, மேதாதியின் மகனான கண்வரும், பரிஷதரும் வருகின்றனர்.(30) பிரம்ம சக்தி கொண்ட இவர்கள் அனைவரும் அண்டத்தைப் படைத்தவர்களாக (சாத்திரங்களில்) சொல்லப்படுகின்றனர். ருத்திரன், அநலன் மற்றும் வசுக்களில் இருந்து இவர்கள் உண்டானார்கள். இவர்களின் பெயர்களைச் சொல்வதால் மக்கள் பெரும் நன்மைகளை அடைகிறார்கள்.(31) உண்மையில், பூமியில் நற்செயல்களைச் செய்யும் மக்கள், தேவர்களுடன் சொர்க்கத்தில் இன்புற்றுத் திளைக்கிறார்கள். இம்முனிவர்களே இந்திரனின் புரோகிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் வாழ்கிறார்கள்.(32) குவிந்த கவனத்துடன் இம்முனிவர்களின் பெயர்களைச் சொல்லும் மனிதன், இந்திரலோகத்திற்கு உயர்வதிலும், அங்கே பெரும் கௌரவங்களை அடைவதிலும் வெல்கிறான்.(33)

உன்முசு, பிரமுசு, பெருஞ்சக்தி கொண்ட ஸ்வஸ்தியாத்ரேயர், திருடவ்யர், ஊர்த்தவபாஹு, திரணஸோமாங்கிரஸ்,(34) மித்ராவருணனின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவருமான அகஸ்தியர் ஆகிய எழுவரும் இறந்தோரின் மன்னனான யமனின் ரித்விஜர்களாகத் தென் பகுதியில் வசிக்கின்றனர்.(35)

திருடேயு, ருதேயு, பெரும்புகழ் கொண்ட பரிவ்யாதர், சூரியனின் காந்தியுடன் கூடியவர்களான ஏகதர், திவிதர், திரிதர் ஆகியோர்,(36) அறம் சார்ந்த அத்ரியின் மகனான ஸாரஸ்வதர் ஆகிய எழுவரும் வருணனின் பெரும் வேள்வியில் ரித்விஜர்களாகச் செயல்பட்டனர். இவர்கள் அனைவரும் மேற்குப் பகுதியில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டுள்ளனர்.(37)

அத்ரி, சிறப்புமிக்க வசிஷ்டர், பெரும் முனிவர் கசியபர், கோதமர், பரத்வாஜர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர்,(38) பெரும் சக்தி கொண்டவரும், கடுமை நிறைந்தவரும், ரிசீகரின் மகனுமான ஜமதக்னி ஆகிய இவர்கள் எழுவரும், கருவூலத்தலைவனின் {குபேரனின்} ரித்விஜர்களாக வடக்குப்பகுதியில் வசிக்கின்றனர்.(39)

எத்திசையிலும் அடைபடாமல் அனைத்துத் திசைகளிலும் வாழும் வேறு முனிவர்கள் எழுவர் இருக்கின்றனர். மனிதர்களுக்குப் புகழையும் அவர்களுக்கான நன்மைகள் யாவையும் கொடுக்கும் அவர்கள், உலகங்களைப் படைத்தவர்களாகப் பாடப்படுகின்றனர்.(40)

தர்மன், காமன், காலன், வஸு, வாஸுகி, அனந்தன், கபிலன் ஆகிய இவ்வேழு பேரும் {நாகர்களும்} உலகத்தைத் தாங்குபவர்களாக இருக்கின்றனர்.(41) ராமர் {பரசுராமர்}, வியாசர், துரோணரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரே (முதன்மையானவர்களாகக் கருதப்படும்) வேறு முனிவர்களாவர். இந்தப் பெரும் முனிவர்களே ஒவ்வொன்றிலும் ஏழேழு பேரைக் கொண்ட ஏழு கூட்டங்களாகப் பிரிந்திருக்கின்றனர்[2].(42) மனிதர்கள் அனுபவிக்கும் அமைதியையும் நன்மையையும் உண்டாக்குபவர்கள் பல்வேறு திசைப்புள்ளிகளின் ஆட்சியாளர்களாக {திக்பாலர்களாகச்} சொல்லப்படுகின்றனர். இம்முனிவர்கள் எந்தெந்தெந்த திசையில் இருக்கின்றனரோ அந்த அந்தத் திசையை நோக்கி ஒருவன் வழிபட வேண்டும்.(43)உயிரினங்களைப் படைத்தவர்களான அம்முனிவர்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவர்களாகக் கருதப்படுகிறார்கள். கடுந்தவங்களைச் செய்தவர்களும், பெரும் தற்கட்டுப்பாடுடையவர்களுமான ஸம்வர்த்தர், மேருஸாவர்ணர், அறம்சார்ந்தவரான மார்க்கண்டேயர், ஸாங்கியர், யோகர், நாரதர், துர்வாஸர் ஆகியோர் மூவுலகங்களிலும் கொண்டாடப்படுபவர்களாக இருக்கிறார்கள்.(45) ருத்திரனுக்கு இணையான வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்கள் பிரம்ம லோகத்தில் வாழ்கின்றனர். அவர்களின் பெயர்களை மதிப்புடன் சொல்லும் மகனற்ற மனிதன் மகனை அடைகிறான், ஓர் ஏழை செல்வத்தை அடைகிறான்.(46) உண்மையில் அவர்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(47)

பூமி முழுவதும் ஆட்சி செய்த பேரரசனும், ஏகாதிபதிகளில் முதன்மையான பிராஜபதிக்கு இணையானவனும், வேனனின் மகனும், கொண்டாடப்பட்ட மன்னனுமான பிருவின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். (அன்பினாலும், பாசத்தினாலும்) பூமி {பூமாதேவி} அவனது மகளானாள் {எனவே, அவள் பிருத்வி என்றழைக்கப்பட்டாள்}. சூரிய குலத்தைச் சேர்ந்தவனும், ஆற்றலில் மஹேந்திரனுக்கு இணையானவனுமான புரூரவனின் பெயரும் ஒருவனால் சொல்லப்பட வேண்டும்.(48) இளையின் மகனான அவன் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவனாக இருந்தான். உண்மையில், புதனின் அன்புக்குரிய மகனான அவனின் {புரூரவனின்} பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(49) மூவுலகங்களில் கொண்டாடப்படும் வீரனான பரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். கிருத யுகத்தில் மகத்தான கோமேத வேள்வியில் {கவாமயனயாகம்} தேவர்களைத் துதித்து, மஹாதேவனுக்கு இணையானவனாக இருந்த பெரும் காந்தி கொண்ட ரந்திதேவனின் பெயரும் சொல்லப்பட வேண்டும். தவங்களுடன் கூடியவனும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவனும், உலகின் அனைத்து வகை நன்மைகளுக்கும் தோற்றுவாயாக இருந்தவனுமான அவன் அண்டத்தை வென்றவனாக இருந்தான்.(51)

பெரும்புகழைக் கொண்ட அரச முனி ஸ்வேதனின்[3] பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும். மஹாதேவனை நிறைவடையச் செய்த அவனுக்காகவே அந்தகன் கொல்லப்பட்டான்.(52) சொர்க்கத்தில் பாய்ந்த புனித ஆற்றை {கங்கை ஆற்றை} மஹாதேவனுடைய அருளின் மூலம் (மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்க பூமியில் பாயச்செய்ய {அவ்வாற்றைப்}) கீழே கொண்டு வந்தவனும், பெரும்புகழுடைய அரசமுனியுமான பகீரதனின் பெயரையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(53) பகீரதனே, சகரனின் அறுபதாயிரம் மகன்களின் சாம்பலைக் கங்கையின் புனித நீரில் நனையச் செய்து, அவர்களைப் பாவத்தில் இருந்து மீட்டவனாவான். உண்மையில், நெருப்பைப் போன்ற சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவர்களும், பேரெழில்வாய்ந்தவர்களும், உயர்ந்த சக்தியைக் கொண்டவர்களுமான இவர்கள் அனைவரின் பெயர்களையும் ஒருவன் சொல்ல வேண்டும்.(54) அவர்களில் சிலர் அச்சந்தரும் வடிவங்களைக் கொண்டவர்களாகவும், பெரும்வலிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். உண்மையில், ஒருவன் புகழைப் பெருக்கவல்லவர்களான தேவர்கள், முனிவர்கள், மற்றும் அண்டத்தின் தலைவர்களான மன்னர்கள் ஆகியோரின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(55) சாங்கியம், உயர்ந்ததில் உயர்வான யோகம், ஹவ்யம், கவ்யம், ஸ்ருதிகள் அனைத்தின் புகலிடமான பரப்பிரம்மம் ஆகியவை,(56) அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் நன்மைகளைச் செய்யவல்ல ஊற்றுக்கண்களாகச் சொல்லப்பட்டுள்ளன. புனிதமானவையும், பாவத்தைத் தூய்மை செய்பவையுமான இவை மிக உயர்வாகச் சொல்லப்பட்டுள்ளன. நோய்கள் அனைத்தையும் சீராக்கும் மருந்துகளாகவும், அனைத்துச் செயல்களிலும் வெற்றியைத் தருபவையாகவும் இவையே இருக்கின்றன[4].(57)ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் புலனடக்கத்துடன் காலையும், மாலையும் இப்பெயர்களைச் சொல்ல வேண்டும். இவர்களே பாதுகாப்பவர்கள். இவர்களே மழையைப் பொழியச் செய்கிறார்கள். இவர்களே ஒளிர்ந்து ஒளியையும், வெப்பத்தையும் தருகிறார்கள். இவர்களே {காற்றை} வீசச் செய்கிறார்கள் . இவர்களே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறார்கள்.(58) இவர்களே அண்டத்தின் தலைவர்களாகவும், அனைத்தையும் சாதிப்பதில் உயர்ந்த புத்தியைக் கொண்டவர்களாகவும், மன்னிக்கும் தன்மை கொண்டவர்களாகவும், புலன்களை முற்றாக ஆள்பவர்களாகவும் கருதப்படுகிறார்கள். உண்மையில் இவர்களே மனிதர்களுக்கு நேரும் தீமைகள் அனைத்தையும் அகற்றுபவர்கள் என்று சொல்லப்படுகிறது.(59) நல்ல மற்ற தீய செயல்கள் அனைத்தின் சாட்சிகளாக இருப்பவர்கள் இந்த உயர் ஆன்மாக்களே. ஒருவன் தனக்கான நன்மைகள் அனைத்தையும் நிச்சயம் அடைய முடியும் என்பதால் அவன் காலையில் எழுந்ததும் இவர்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(60)

இவர்களின் பெயர்களைச் சொல்பவன் நெருப்பு மற்றும் கள்வர்களிடம் உள்ள அச்சங்களில் இருந்து விடுபடுவான். அத்தகைய மனிதன் எத்தடையாலும் தடுக்கப்படமாட்டான். இந்த உயர் ஆன்மாக்களின் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் அனைத்து வகைத் தீய கனவுகளில் இருந்தும் விடுபடுவான்.(61) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடும் அத்தகைய மனிதர்கள் மங்கலமான குடும்பங்களில் பிறக்கிறார்கள். புலனடக்கத்துடன் கூடிய மறுபிறப்பாளன், வேள்விகளின் தொடக்கச் சடங்குகள் செய்யப்படும்போது இந்தப் பெயர்களைச் சொல்வதன் விளைவால்,(62) அறவோனாகவும், ஆன்ம கல்வியில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், மன்னிக்கும் தன்மை {பொறுமை}}, தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனாகவும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனாகவும் ஆகிறான். நோயால் பீடிக்கப்பட்ட மனிதன் இவற்றைச் சொன்னால், நோயின் வடிவத்தில் இருக்கும் தன் பாவத்தில் இருந்து அவன் விடுபடுகிறான்.(63) ஒரு வீட்டிற்குள் இவற்றைச் சொல்வதன் மூலம், அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைத்து வகைத் தீமைகளில் இருந்தும் விடுபடுவார்கள். வயலில் இவற்றைச் சொல்வதன் மூலம், அனைத்து வகைப் பயிர்களும் செழித்து வளரும்.(64)

பயணத்திற்குப் புறப்படும் சமயத்திலோ, ஒருவன் தன் வீட்டில் இருந்து வெளியே இருக்கும் போதோ அவற்றை உரைத்தால் அவன் நற்பேற்றை அடைவான். இந்தப் பெயர்கள் ஒருவனுடைய சுயத்திற்கும், தன் பிள்ளைகள் மனைவிகள், செல்வம்,(65) அவனுடைய வித்துகள் மற்றும் செடிகளுக்கும் பாதுகாப்பைத் தரும். போரிடும் சமயத்தில் இப்பெயர்களை உரைக்கும் க்ஷத்திரியன் தன் பகைவர்கள் அழிவடைவதையும், தானும், தன் தரப்பும் நற்பேற்றால் மகுடம் சூடப்படுவதையும் காண்பான். தேவர்கள் மற்றும் பித்ருக்களை மதிக்கும் வகையில் சடங்குகளைச் செய்யும்போது இந்தப் பெயர்களை உரைக்கும் மனிதன், வேள்வியின் ஹவ்யம் மற்றும் கவ்யத்தைப் பித்ருக்களும், தேவர்களும் உண்பதற்கு உதவி செய்தவனாவான். இவற்றை உரைக்கும் மனிதன், நோய்கள், இரைதேடும் விலங்குகள், யானைகள் மற்றும் கள்வர்களிடம் கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவான்.(66-68) அவனுடைய துன்பச் சுமை குறைந்து அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுதலையடைகிறான்.

சிறப்புவாய்ந்த இந்த சாவித்ரி மந்திரத்தை {காயத்ரி மந்திரத்தை} ஓடத்திலோ, வாகனத்திலோ, மன்னர்களின் சபைகளிலோ சொல்வதன் மூலம் ஒருவன் உயர்ந்த வெற்றியை அடைகிறான். எங்கே இந்த மந்திரஙகள் உரைக்கபடுகின்றனவோ, அங்கே நெருப்பும் மரத்தை எரிக்காது.(69,70) அங்கே பிள்ளைகள் இறக்கமாட்டார்கள், பாம்புகள் வசிக்காது. உண்மையில், அத்தகைய இடங்களில் மன்னன், பிசாசங்கள், அல்லது ராட்சசர்களிடம் இருந்து எந்த அச்சமும் நேராது[5].(71) உண்மையில் இந்த மந்திரங்களைச் சொல்லும் மனிதனுக்கு, நெருப்பிடமோ, நீரிடமோ, காற்றிடமோ, இரைதேடும் விலங்குகளிடமோ எந்த அச்சமும் நேராது.(72) முறையாக உரைக்கப்படும் இந்த சாவித்திரி மந்திரங்கள் அமைதியை அளித்து, நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} நன்மையைச் செய்யும். மதிப்புடன் அவற்றை உரைக்கும் மனிதர்கள் அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டு, இறுதியாக உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(73) பிரம்மத்தின் வடிவிலான இந்த சாவித்திரி மந்திரங்களை உரைப்பதன் மூலம் அடையப்படும் விளைவுகள் இவையே. பசுக்களின் மத்தியில் வைத்து இந்த மந்திரங்களை உரைக்கும் மனிதன், அந்தப் பசுக்கள் கனிநிறைந்தவையாக இருப்பதைக் காண்பான்.(74) பயணம் புறப்பட்டாலோ, பயணத்தில் இருந்து வீடு திரும்பினாலோ ஒருவன் ஒவ்வொரு தருணத்திலும் இந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(75)முனிவர்கள் கொண்டுள்ள பெரும் புதிரை {ரகசியத்தை} உள்ளடக்கிய இந்த மந்திரங்கள், அமைதியாக உரைக்கப்படும்போது மிக உயர்ந்தவையாகின்றன. வேள்வித்தீயில் ஆகுதி ஊற்றி முறையாக உரைப்போருக்கு இந்த மந்திரங்கள் இவ்வாறே அமைகின்றன[6].(76) நான் உனக்குச் சொன்னவை பராசரருடைய சிறந்த கருத்துகளாகும். இவை முற்காலத்தில் சக்ரனிடம் சொல்லப்பட்டன. வாய்மை, அல்லது நித்திய பிரம்மத்தைப் பிரதிபலிக்கும் அதனை நான் உனக்கு முழுமையாக உரைத்திருக்கிறேன்.(77) அனைத்து உயிரினங்களின் இதயமாக அமைந்திருக்கும் இஃது உயர்ந்த ஸ்ருதியாக இருக்கிறது. சோம குல, சூரிய குல இளவரசர்களான ராகவர்கள் மற்றும் குரவர்கள் {குரு வம்சத்துக் கௌரவர்கள்} அனைவரும்,(78) தங்களைத் தூய்மை செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் இந்த மந்திரங்களைச் சொல்கிறார்கள்.இவையே மனித இனத்தின் உயர்ந்த கதியாக அமைகிறது. தேவர்கள், ஏழு முனிவர்கள் மற்றும் துருவனின் பெயர்களை ஒவ்வொரு நாளும் உரைப்பதால் அனைத்து தொல்லைகளிலிருந்தும், துன்பங்களில் இருந்தும் தப்பிக்கும் வழி ஏற்படுகிறது. உண்மையில், இவ்வாறு உரைப்பது ஒருவனைத் துன்பத்தில் இருந்து விரைவாக மீட்கிறது.(79)பழங்காலத்து தவசிகளான கசியபர், கோதமர், பிருகு, அங்கிரஸ், அத்ரி, சுக்ரர், அகஸ்தியர், பிருஹஸ்பதி ஆகியோரும், மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் இந்த மந்திரங்களைத் துதித்தனர். பரத்வாஜரின் மகனால் அங்கீகரிக்கப்பட்ட இம்மந்திரங்கள் ரிசீகரின் மகன்களால் அடையப்பட்டன. உண்மையில் அவற்றை வசிஷ்டரிடம் இருந்து மீண்டும் அடைந்த சக்ரனும், வசுக்களும் தானவர்களிடம் போரிடச் சென்று அவர்களை அடக்கினர்.(80) பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைக் கல்விமானும், வேதங்களை நன்கறிந்தவனுமான ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதனும், ஒவ்வொரு நாளும் பாரதக் கதையைத் தன் வீட்டில் உரைக்கச் செய்யும் மனிதனும் ஒரே பலன்களை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(81) பிருகுவின் பெயரைச் சொல்வதன் மூலம் ஒருவனிடம் அறம் பெருகுகிறது. வசிஷ்டரை வணங்குவதன் மூலம் அவனது சக்தி பெருகுகிறது. ரகுவை வணங்குவதன் மூலம் அவன் போர்க்களங்களில் வெற்றிவாகை சூடுகிறான். அசுவினிகளின் புகழைச் சொல்வதன் மூலம் ஒருவன் நோய்களில் இருந்து விடுபடுகிறான்.(82) ஓ! மன்னா, இவ்வாறு நித்திய பிரம்மத்திற்கு ஒப்பான சாவித்திரி மந்திரங்களை நான் உனக்குச் சொன்னேன். வேறேதும் என்னிடம் கேட்ட விரும்பினால், நீ அவ்வாறே செய்வாயாக. ஓ! பாரதா நான் உனக்குப் பதிலளிப்பேன்” என்றார் {பீஷ்மர்}.(83)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ அநுசாஸன பர்வம்-ஸ்ரீ தான தர்ம உப பர்வம்-ஸ்ரீசிவ ஸஹஸ்ர நாமம்

October 21, 2025

ஸ்ரீசிவஸஹஸ்ரநாமம் – சிவனின் ஆயிரம் பெயர்கள்! – அநுசாஸனபர்வம் பகுதி – 17-தண்டி முனிவரால் அருளப்பட்டதாக உபமன்யு சொன்ன சிவஸஹஸ்ரநாமத்தை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! யுதிஷ்டிரரே, மறுபிறப்பாள முனிவர் உபமன்யு, தம் மனத்தைக் குவித்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி (மஹாதேவனுக்குப் பொருந்தும்) இந்தப் பெயர்களின் தொகுப்பைத் தொடக்கமுதல் சொல்லத் தொடங்கினார்.(1)

உபமன்யு, “பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட சிலவற்றையும், முனிவர்களால் சொல்லப்பட்ட சிலவற்றையும், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களில் தோன்றும் சிலவற்றைக் கொண்டவையும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவையுமான பெயர்களைச் சொல்லி அனைத்து உயிரினங்களின் துதிக்குத் தகுந்தவனான அந்தப் பெருந்தேவனைத் துதிக்கப் போகிறேன்.(2) திறம்பெற்ற மனிதர்களால் (பெருந்தேவனுக்குப் பொருத்தமான) அந்தப் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் அவை, வாய்மையும் வெற்றியும் நிறைந்தவையும், {அந்தப் பெயர்களைச்} சொல்வோரின் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வல்லவையுமாக இருக்கின்றன. வேத உரைகளால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவரும், தமது அர்ப்பணிப்பின் துணையால் அப்பெயர்களைக் கண்டடைந்தவருமான தண்டியால் அவை மஹாதேவனுக்குப் பயன்படுத்தப்பட்டன.(3) உண்மையில், நன்கறியப்பட்ட அறவோர் மற்றும் தத்துவங்கள் அனைத்தையும் அறிந்த தவசிகள் பலரால் சொல்லப்பட்ட அப்பெயர்களைக் கொண்டு, முதன்மையானவனும், முதல்வனே ஆனவனும், சொர்க்கத்திற்கு வழிவகுப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மைகளைக் கொடுப்பவனுமான அந்த மங்கலனை நான் துதிக்கப் போகிறேன்.(4) (அவை உண்மையில் எங்கிருந்து உண்டானதோ அந்தப்) பிரம்ம லோகத்தில் இருந்து பரவிய அப்பெயர்கள் அண்டம் முழுவதும் கேட்கப்படுகின்றன. அவை அனைத்தும் உண்மை நிறைந்தவையாக இருக்கின்றன. வேதங்களின் மூலம் (அண்டத்திற்கு) அறிவிக்கப்பட்டவனும், நித்தியமானவனுமான அந்தப் பரப்பிரம்மனை அப்பெயர்களைக் கொண்டு நான் துதிக்கப் போகிறேன்.(5)

ஓ! யது குலத் தலைவா {கிருஷ்ணா}, நான் இப்போது அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் அவற்றைக் கேட்பாயாக. நீ {கிருஷ்ணா} அந்தப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட வழிபாட்டாளனாவாய். தேவர்கள் அனைவரிலும் தனித்துவமானவனும், சிறப்புமிக்கவனுமான அந்தப் பவனை நீ வழிபடுவாயாக.(6) நீ அவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாக இருப்பதாலேயே நீ கேட்கும்படி நான் அப்பெயர்களைச் சொல்லப் போகிறேன். மஹாதேவனே நித்திய பிரம்மமாவான். நூறு வருடங்கள் தொடர்ந்து சொன்னாலும், யோக பலம் கொண்டவர்களாலும் அந்தப் பெருந்தேவனின் மகிமையையும், பலத்தையும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. உண்மையில் மஹாதேவனின் தொடக்கமும், நடுவும், முடிவும் தேவர்களாலேயே கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை.(7,8) ஓ! மாதவா, உண்மை இவ்வாறிருக்கையில், மஹாதேவனின் குணங்களை வேறு யாரால் உரைக்க முடியும்? இருப்பினும், சிறப்புமிக்கவனும், முற்றான ஞானம் கொண்டவனுமான அந்தப் பரமதேவனின் கருணையால், நான் அவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால் சில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளின் தொகுதி என்ற வடிவில் நான் அவனது குணங்களைச் சொல்லப் போகிறேன்.(9) அந்த உயர்ந்த தலைவனின் அனுமதி பெறாமல் எவராலும் அவனைத் துதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில், அவனது அனுமதி பெறுமளவுக்கு நற்பேறு பெற்ற பிறகே அவனைத் துதிப்பதில் வென்றேன்.(10)

பிறவியும், அழிவும் அற்றவனும், அண்டத்தின் மூலக் காரணனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், வெளிப்படாத தோற்றம் கொண்டவனுமான அந்தப் பெருந்தேவனின் பெயர்களில் சிலவற்றை மட்டும் நான் குறிப்பிடுகிறேன்.(11) ஓ! கிருஷ்ணா, வரமளிப்பவனும், துதிக்கத்தக்க தேவனும், பலமிக்கவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவனுமான அந்தத் தேவனின் பெயர்களில் பிரம்மன் மூலம் சொல்லப்பட்ட சிலவற்றைக் கேட்பாயாக.(12) நான் சொல்லப் போகும் இந்தப் பெயர்கள், தயிரில் இருந்து வெண்ணையை எடுப்பதைப் போல, பழங்காலத்தில் பெரும்பாட்டனால் சொல்லப்பட்ட பத்தாயிரம் பெயர்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.(13) தங்கமானது மலைப்பாறைகளின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், தேனானது மலர்களின் சாரத்தைப் பிரதிபலிப்பதைப் போலவும், மந்தமானது {நெய்யானது} வெண்ணையைப் பிரதிபலிப்பதைப் போலவும், தொகுக்கப்பட்டிருக்கும் இப்பெயர்கள், பெரும்பாட்டனான பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தப் பத்தாயிரம் பெயர்களின் சாரத்தையே பிரதிபலிக்கின்றன.(14) இந்தப் பெயர்களின் தொகுப்பானது, மிகக் கொடிய பாவத்தையும் கழுவும் வல்லமை பெற்றதாகும். நான்கு வேதங்களின் தகுதி இதற்கும் உண்டு. இது முயற்சியுடன் புரிந்து கொள்ளப்பட்டு, குவிந்த ஆன்மாவுடன் நினைவில் செதுக்கப்பட வேண்டும்.(15)

இது மங்கலம் நிறைந்ததாகும். இது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இது ராட்சசர்களுக்கு அழிவை உண்டாக்கும்[1]. இது பரிசுத்தமடையச் செய்யும் பெருமை கொண்டது. பெருந்தேவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அவனிடம் அர்ப்பணிப்புள்ளவனும், நம்பிக்கையுள்ளவனுமான ஒருவனுக்கு மட்டுமே இது சொல்லப்பட வேண்டும். அர்ப்பணிப்பில்லாதவனும், நம்பிக்கையில்லாதவனும், தன் ஆன்மாவை வெல்லாதவனுமான ஒருவனுக்கு ஒருபோதும் இதைச் சொல்லக் கூடாது[2].(16) ஓ! கிருஷ்ணா, அனைத்துப் பொருட்களின் மூலக் காரணனும், பரமாத்மாவும், பெருந்தேவனும், சிறப்புமிக்கவனுமான மஹாதேவனிடம் வன்மத்தை வளர்க்கும் உயிரினம் தனக்கு முன்பான மூதாதையருடனும், தனக்குப் பின் வரும் தன் பிள்ளைகள் அனைவருடனும் நிச்சயம் நரகத்திற்கே செல்வான்.(17) இப்போது நான் சொல்லப்போகும் இந்தப் பெயர்களின் தொகுப்பு தியான யோகமாகப் பார்க்கப்படுகிறது. இது யோகமாகவும் காணப்படுகிறது. தியானத்தின் உயர்ந்த நோக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. ஒருவன் ஜபமாக இதைத் தொடர்ந்து உரைக்க வேண்டும். இஃது அறிவுக்கு இணையானதாகும். இஃது உயர்ந்த புதிரைக் கொண்டதாகும்.(18) ஒருவன் தன் இறுதிக் கணத்திலாவது, இதை உரைத்தாலோ, உரைப்பதைக் கேட்டாலோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான். இது புனிதமானதாகும். அனைத்து வகை நன்மைகளும் நிறைந்த இது மங்கலமானதாகும். இஃது அனைத்துப் பொருட்களிலும் சிறந்ததாகும்.(19) அண்டமனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மனால் பழங்காலத்தில் தொகுக்கப்பட்டு, சிறந்த துதிகள் {ஸ்தோத்திரம்} அனைத்திலும் முதன்மையான இடத்தில் அவனால் இது வைக்கப்பட்டது.(20)

அந்தக் காலத்திலிருந்து உயரான்ம மஹாதேவனின் மகிமையையும், பெருமையையும் சொல்லும் இந்தத்துதி தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு, துதிகள் அனைத்தின் மன்னனாக {ஸ்தோத்திர ராஜவெனக்} கருதப்படுகிறது.(21) துதிகள் அனைத்தின் மன்னனான இது, முதலில் பிரம்மலோகத்தில் இருந்து தேவலோகமான சொர்க்கத்திற்குச் சொல்லப்பட்டது. தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பெற்றார். எனவே, இது தண்டியால் தொகுக்கப்பட்ட துதியாக அறியப்படுகிறது.(22) தண்டி இதைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தார். இது மங்கலப் பொருட்கள் அனைத்திலும் மங்கலமானதாகும், இது கொடும்பாவங்களையும் கழுவவல்லதாகும்.(23) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, துதிகள் அனைத்திலும் சிறந்த துதியான இதை நான் உனக்கு உரைக்கப் போகிறேன். வேதங்களின் வேதமானவனை, புராதனப் பொருட்கள் அனைத்திலும் பழமையானவனை,(24) சக்திகள் அனைத்திற்கும் சக்தியாக இருப்பவனை, தங்கள் அனைத்திற்கும் தவமாக இருப்பவனை, அமைதியான உயிரினங்கள் அனைத்திலும் பேரமைதி கொண்டவனை, காந்திகள் அனைத்திலும் காந்தி கொண்டவனை,(25) கட்டுப்பாடு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் கட்டுப்பாடுடையவனை, நுண்ணறிவு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் நுண்ணறிவைக் கொண்டவனை, தேர்களின் தேவனாகவும், முனிவர்களின் முனிவனாகவும் காணப்படுபவனை,(26) வேள்விகள் அனைத்தின் வேள்வியாகவும், மங்கலம் நிறைந்த பொருட்கள் அனைத்திலும் பெரும் மங்கலம் கொண்டவனாகவும் கருதப்படுபவனை, ருத்திரர்கள் அனைவரின் ருத்திரனை, பிரகாசத்துடன் கூடிய அனைத்திலும் பிரகாசமிக்கவனை,(27) யோகிகள் அனைவரின் யோகியை, காரணங்கள் அனைத்தின் காரணனை, இல்லாமையில் உலகங்கள் அனைத்தும் சென்று சேர்பவனை,(28) இருப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக இருப்பவனை, அளவற்ற சக்தியுடைய ஹரன் என்று அழைக்கப்படுபவனையே இந்தத் துதி குறிப்பிடுகிறது. அந்தப் பெரும் சர்வனின் ஆயிரத்தெட்டுப் பெயர்களை {சிவசஹஸ்ரநாமத்தை} உரைக்கப் போகிறேன் கேட்பாயாக.(29) ஓ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, அந்தப் பெயர்களைக் கேட்பதால் நீ உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாயாக {என்றார் உபமன்யு}.{உபமன்யு சொன்னார்}, “ஓம் {ௐ}. அசைவற்றவன் {ஸ்திரன்} நீயே. நிலையானவன் {ஸ்தாணு} நீயே, பலமிக்கவன் {ப்ரபு} நீயே, பயங்கரன் {பாநு / பீமன்} நீயே, முதன்மையானவன் {பரவரன்} நீயே, வரமளிப்பவன் {வரதன்} நீயே, மேன்மையானவன் {வரன்} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தாலும் கொண்டாடப்படுபவன் {ஸர்வவிச்யாதன்} நீயே, அனைத்துப் பொருட்களும் {ஸர்வன்} நீயே, அனைத்தையும் படைத்தவன் {ஸர்வகன்} நீயே, பவன் நீயே.(30-1) தலையில் சடாமுடி தரித்தவன் {ஜடி} நீயே, விலங்கின் தோலை ஆடையாக அணிபவன் {சர்மி} நீயே, மயிலைப் போலத் தலையில் கொண்டை கொண்டவன் {சிகண்டி/சீகி/கட்கீ} நீயே, மொத்த அண்டத்தையும் அங்கங்களாகக் கொண்டவன் {ஸர்வாங்கன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் {ஸர்வபாவநன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருக்கும் விளைவால் ஹரன் நீயே. மானுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவன் {ஹரிணாக்ஷன்} நீயே, அனைத்து உயிரினங்களையும் அழிப்பவன் {ஸர்வபூதஹரன்} நீயே, அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கும் உயர்ந்தவன் {ப்ரபு} நீயே.(31-2)

அனைத்துச் செயல்பாடுகளும் உண்டாகும் ப்ரவ்ருத்தி நீயே, செயலின்மை {நிவ்ருத்தி} நீயே, நோன்புகளை நோற்பவன் {நியதன்} நீயே, நித்தியமானவன் {சாஸ்வதன்} நீயே, மாற்றமில்லாதவன் {த்ருவன்} நீயே, சுடலையில் வசிப்பவன் {ஸ்மசாநவாஸி} நீயே, தலைமை முதலிய நன்கறியப்பட்ட ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந} நீயே, ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிப்பவன் {கசரன்} நீயே, புலன்களால் அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {கோசரன்} நீயே, பாவம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிப்பவன் {அர்த்தநன்} நீயே.(32-3) அனைவரும் வணங்கத்தக்கவன் {அபிவாத்யன்} நீயே, பெருஞ்செயல்களைச் செய்பவன் {மஹாகர்மன்} நீயே, தவங்களையே செல்வமாகக் கொண்டவன் {தபஸ்வி} நீயே, பூதங்கள் அனைத்தையும் விரும்பியபடி படைத்தவன் {பூதபாவநன்} நீயே, பித்தன் போல வேடமிட்டு உண்மை இயல்பை மறைப்பவன் {உந்மத்தவேஷப்ரச்சந்நன்} நீயே, உலகங்கள் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தின் ஆசான் {ஸர்வலோகப்ரஜாபதி} நீயே.(33-4) அளவிடமுடியாத வடிவம் கொண்டவன் {மஹாரூபன்} நீயே, பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே, அறத்தின் வடிவம் {வ்ருஷரூபன்} நீயே, பெரும்புகழ் {மஹாயசஸ்} நீயே, உயர்ந்த ஆன்மா {மஹாத்மா} நீயே, அனைத்து உயிரினங்களின் ஆன்மா {ஸர்வபூதாத்மா} நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் {விஸ்வரூபன்} நீயே, (அனைத்துப் பொருட்களையும் அழிக்கும் காலத்தில் அண்டத்தை விழுங்குவதற்கான) பெரும் கோரப்பற்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(34-5)

உலகங்கள் அனைத்தின் பாதுகாவலன் {லோகபாலன்} நீயே, அறியாமை எனும் இருளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆன்மா {அந்தர்ஹிதாத்மா} {வெளிப்படா குணம் கொண்டவன்} நீயே, மகிழ்ச்சி {ப்ரஸாதன்} நீயே. கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஹயகர்த்தபி} நீயே. மறுபிறவியெனும் இடியில் இருந்து ஜீவனைப் பாதுகாப்பவன் {பவித்ரன்} நீயே, துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே, தூய்மை, தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளால் அடையத்தக்கவன் {நியமன்} நீயே. தூய்மை மற்றும் தற்கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து வகை நோன்புகள் மற்றும் நியமங்களின் புகலிடம் {நியமாச்ரிதன்} நீயே.(35-6) அனைத்துக் கலைகளையும் அறிந்த தெய்வீகக் கைவினைஞன் {ஸர்வகர்மா} நீயே, (எவராலும் படைக்கப்படாத) சுயம்பு {ஸ்வயம்பூதன்} நீயே. அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களின் தொடக்கம் {ஆதி} நீயே, அனைத்துப் பொருட்களையும் படைக்கும் ஹிரண்யகர்ப்பன் {ஆதிகரன்} நீயே, வற்றாத பலமும் இன்பநிலையும் {நிதி} நீயே, ஆயிரம் கண்களைக் கொண்டவன் {ஸஹஸ்ராக்ஷன்} நீயே, பெரும் சக்தியுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {விசாலாக்ஷன்} நீயே, ஸோமன் நீயே. ஆகாயத்தில் ஒளிர்வதற்காக உயிரினங்களில் அறவோரை மகிமையின் வடிவங்களை ஏற்கச் செய்பவன் {நக்ஷத்ரஸாதகன்} நீயே.(36-7)

சந்திரமாஸ் {சந்திரன்} நீயே, ஸூர்யன் நீயே, சனிக்கோள் {சநி} நீயே, சந்திரனின் இறங்கு கணு {கேது} நீயே, ஏறு கணுவும் {க்ரஹன் / ராஹு} நீயே,  மங்கலன் (செவ்வாய் கோள்) {கோள்களின் தலைவன்} {க்ரஹபதி} நீயே, பிருஹஸ்பதி (வியாழன் கோள்) நீயே, சுக்கிரன் (வெள்ளி கோள்) நீயே, புதன் (புதன் கோள்) நீயே, அத்ரியின் மனைவியை வழிபடுபவன் {அதரி} நீயே, {அத்ரியாநமஸ்கர்த்தன்}, கோபம் கோண்ட வேள்வியானது மானின் வடிவில் தப்பி ஓடிய போது அந்த வேள்வியை நோக்கி கணை ஏவியவன் {ம்ருகபாணார்ப்பணன்} நீயே, பாவமண்டாதவன் {அநகன்} நீயே.(37-8) அண்டத்தைப் படைக்கும் சக்தி கொண்ட தவங்களை உடையவன் {மஹாதபஸ்} நீயே, அண்டத்தை அழிக்கும் சக்தி கொண்ட தங்களை உடையவன் {கோரதபஸ்} நீயே, (பக்தர்களிடம் கொண்ட பெருங்கருணையின் விளைவால்) உயர்ந்த மனம் கொண்டவன் {அதீநன்} நீயே, உன்னிடம் வருபவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவன் {தீநஸாதகன்} நீயே, (சூரியனாகவும், கோள்களாகவும் வடிவத்தை ஏற்றுக் காலச்சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருப்பதால்) வருடத்தை உண்டாக்குபவன் {ஸம்வத்ஷரகரன்} நீயே, (பிரணவ வடிவம், வேறு புனிதச் சொற்கள் மற்றும் அசைகளின் வடிவில் இருக்கும்} மந்திரன் {மந்தரன்} நீயே, (வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் வடிவில்) அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அதிகாரம் கொடுப்பவன் {ப்ரமாணன்} நீயே, உயர்ந்த தவம் {பரமதபன்} நீயே.(38-9)

யோகத்தில் அர்ப்பணிப்புமிக்கவன் {யோகி} நீயே, (தியான யோகத்தின் மூலம்) பிரம்மத்தில் கலக்கச் செய்பவன் {யோஜ்யன்} நீயே, (காரணங்களுக்குக் காரணனான) பெரும் வித்து {மஹாபீஜன்} நீயே, அண்டத்தில் வெளிப்பட்ட வடிவத்தில் வெளிப்படாததைக் காட்டுபவன் {மஹாரேதஸ்} நீயே, அளவிலா வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே, தங்கத்தையே வித்தாகக் கொண்டவன் {ஸ்வர்ணரேதஸ்} நீயே, (அனைத்துப் பொருட்களாகவும் இருந்து பேரறிவைக் கொண்டவனாக இருப்பதால்) அனைத்தையும் அறிந்தவன் {ஸர்வஜ்ஞன்} நீயே, அனைத்துப் பொருட்களின் காரணன் {ஸுபீஜன்} நீயே, இம்மையிலிருந்து மறுமைக்குச் செல்லும் வழிமுறைகளுக்கான (அறியாமை மற்றும் ஆசை எனும்) செயல்பாட்டு வித்தாக இருப்பவன் {பீஜவாஹனன்} நீயே.(39-10) பத்துக் கரங்களைக் கொண்டவன் {தசபாஹு} நீயே, (எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதால்) இமைக்காத கண்களைக் கொண்டவன் {அநிமிஷன்} நீயே, நீலமிடறு (தொண்டை) கொண்டவன் {நீலகண்டன்} நீயே, உமையின் தலைவன் {உமாபதி} நீயே, அண்டத்தில் தோன்றும் எண்ணற்ற வடிவங்கள் அனைத்தின் தோற்றுவாயும் {விஷ்வரூபன்} நீயே, சுயமேன்மை கொண்டவன் {ஸ்வயம்ஸ்ரேஷ்டன்} நீயே, வலிமையில் வீரன் {பலவீரன்} நீயே, செயலாற்றலற்ற பருப்பொருள் {பலன்} நீயே, (சாங்கியர்களால் சொல்லப்படும்) தத்துவங்கள் அனைத்தும் {கணன்} நீயே.(40-11) தத்துவங்களை விதிப்பவனும் ஆள்பவனும் {கணகர்த்தன்} நீயே, கணங்கள் என்றழைக்கப்படும் உன் தொண்டர்களின் தலைவன் {கணபதி} நீயே, முடிவிலா வெளியை மறைப்பவன் {திக்வாஸஸ்} நீயே, ஆசையின் தேவனான காமன் நீயே, (ஞானத்தையே தவமாகக் கொண்ட) மந்திரங்களை அறிந்தவன் {மந்தரவித்} நீயே, (ஆத்மாவின் இயல்பையும், குணங்களையும் உறுதி செய்வதும், ஆத்மா அல்லாதவற்றிலிருந்து வேறுபடுவதுமான தத்துவமாக நீயே இருப்பதால்) உயர்ந்த மந்திரம் {பரமோமந்த்ரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் உன் ஆத்மாவில் இருந்து பிறந்ததால்) அண்டத்தின் காரணன் {ஸர்வபாவகரன்} நீயே, (இருப்பில் உள்ள அனைத்தும் மறையும்போது, வெளிப்படாத பிரம்மமான உன்னிலேயே கலப்பதால்) அண்டத்தை அழிப்பவன் {ஹரன்} நீயே.(41-12)

உன் கரங்களில் ஒன்றில் கமண்டலம் தரிப்பவன் {கமண்டலுதரன்} நீயே. மற்றொன்றில் வில்லைத் தரிப்பவன் {தந்வி} நீயே. மற்றொன்றில் கணைகளைத் தரிப்பவன் {பாணஹஸ்தன்} நீயே. மற்றொன்றில் மண்டையோட்டைத் தரிப்பவன் {கபாலவாந்} நீயே. வஜ்ரத்தைத் தரிப்பவன் {அசநி} நீயே. நூறு கொல்லியை {சதக்நியைத்} தரிப்பவன் நீயே. வாள் தரிப்பவன் {கட்கி} நீயே. போர்க்கோடரி தரிப்பவன் {பட்டிசி} நீயே. சூலந்தரித்தவன் {ஆயுதங்கள் அனைத்தையும் தரிப்பவன்} {ஆயுதி} நீயே. துதிக்கத்தக்கவன் {மஹாந்} நீயே.(42-13) உன் கரங்களில் ஒன்றில் வேள்விக் கரண்டியைக் கொண்டிருப்பவன் {ஸ்ருவஹஸ்தன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {ஸுரூபன்} நீயே. அபரிமிதமான சக்தியைக் கொண்டவன் {தேஜஸ்} நீயே. உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரை அலங்கரிக்கும் அனைத்தையும் அளவில்லாமல் கொடுப்பவன் {தேஜஷ்கரன்} நீயே. தலையில் தலைப்பாகை அணிபவன் {உஷ்ணீஷி} நீயே. அழகிய முகம் கொண்டவன் {ஸுவக்த்ரன்} நீயே. காந்தியிலும் பலத்திலும் பெருகுபவன் {உதக்ரன்} நீயே. எளிமையும், பணிவும் கொண்டவன் {விந்தன்} நீயே.(43-14) மிக நெடியவன் {தீர்க்கன்} நீயே. புலன்களையே கதிர்களாகக் கொண்டவன் {ஹரிகேசன்} நீயே. ஆசான்களில் பேராசான் {ஸுதீர்த்தன்} நீயே. (இருப்பிலுள்ள தூய இன்ப நிலையான)[3] பரப்பிரம்மம் {க்ருஷ்ணன்} நீயே. (செல்வந்தனான ஒரு வைசியனால் அவமதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்த பிராமணனுக்கு ஆறுதலளிக்க) நரியின் வடிவை ஏற்றவன் {ஸ்ருகாலரூபன்} நீயே. (தவங்களில் இருந்து பெறும்) பலத்திற்காகக் காத்திராமல் நோக்கங்களை அனைத்தும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டவன் {ஸித்தார்த்தன்} நீயே. (துறவின் குறியீடாக) மொட்டைத் தலையுடன் இருப்பவன் {முண்டன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்பவன் {ஸர்வசுபங்கரன்} நீயே.(44-15)பிறப்பற்றவன் {அஜன்} நீயே. எண்ணற்ற வடிவங்களைக் கொண்டவன் {பஹுரூபன்} நீயே. அனைத்து வகை நறுமணங்களையும் மேனியில் தரிப்பவன் {கந்தகாரி} நீயே. (மன்னன் பகீரதனின் மெய்யுறுதியுடன் கூடிய வேண்டுதலால் கங்கை நீரைக் கொடுத்தாலும்) சொர்க்கத்தில் இருந்து கங்கை ஆறு பாய்ந்த போது, தலையில் உள்ள சடாமுடியில் அதனை உறிஞ்சிக் கொண்டவன் {கபர்த்தி} நீயே. அரசையும், தலைமைத்துவத்தையும் கொடுப்பவன் நீயே. காமமடக்கும் கடும் நோன்பிலிருந்து ஒருபோதும் வீழாத பிரம்மச்சாரி {ஊர்த்வரேதஸ்} நீயே. பாலுறவுக் காமம் அடக்கலில் புகழ்பெற்றவன் {மேல்நோக்கிய குறியைக் கொண்டவன்} {ஊர்த்வலிங்கன்} நீயே. எப்போதும் அண்ணாந்து {மல்லாந்து / மேல்நோக்கிப்} படுப்பவன் {ஊர்த்வசாயி} நீயே. பலத்தையே வசிப்பிடமாகக் கொண்டவன் {நபஸ்தலன்} நீயே.(45-16) தலையில் மூன்று சடைகளைக் கொண்டவன் {த்ரிஜடி} நீயே. மரவுரி தரித்தவன் {சீரவாஸஸ்} நீயே. (கடுஞ்சீற்றத்தின் விளைவால்) ருத்திரன் நீயே. தேவர்களின் படைத்தலைவன் {ஸேநாபதி} நீயே, அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {விபு} நீயே. பகலில் உலவுபவன் {அஹஸ்சரன்} நீயே. இரவில் உலவுபவனும் {நக்தஞ்சரன்} நீயே[4]. கடுங்கோபம் கொண்டவன் {திக்மமந்யு} நீயே. (வேத கல்வி மற்றும் தவங்களால் பிறக்கும்) பளிச்சென்ற பிரகாசம் கொண்டவன் {ஸுவர்ச்சலன்} நீயே.(46-17) உன் புனித நகரான வாராணசியை அழிப்பதற்காக மதங்கொண்ட யானையின் வடிவில் வந்த பெரும் அசுரனைக் கொன்றவன் {கஜஹன்} நீயே. அண்டத்தை ஒடுக்குபவர்களான தைத்தியர்களைக் கொல்பவன் {தைத்யஹன்} நீயே. அண்டத்தை அழிக்கும் காலன் நீயே. அண்டத்தின் தலைமை ஆணையாளன் {லோகதாதா} நீயே. சிறந்த சாதனைகள் அனைத்தின் சுரங்கம் {குணாகரன்} நீயே. சிங்கம் மற்றும் புலியின் வடிவம் {ஸிம்மசார்த்தூலரூபன்} நீயே. {குருதியால் நனைந்த} யானைத் தோலை உடுத்தியிருப்பவன் {ஆர்த்ரசர்மாம்பராவ்ருதன்} நீயே.(47-18) காலத்தின் தடுக்கப்பட முடியாத ஆதிக்கத்தைக் கடந்த, காலத்தை வஞ்சிக்கும் யோகி {காலயோகி} நீயே. அசல் ஒலி {மஹாநாதன்}நீயே. விருப்பங்கள் அனைத்தின் கனியும் {ஸர்வகாமன்} நீயே. நான்குவழிகளில் துதிக்கப்படுபவன் {சதுஷ்பதன்} நீயே[5]. (வேதாளம் மற்றும் பிறவற்றைப் போன்ற) இரவுலாவி {நிசாசரன்} நீயே. சடலங்களின் துணையுடன் திரிபவன் {பிரேதசாரி} நீயே. பூதங்களின் துணையுடன் திரிபவன் {பூதசாரி} நீயே. இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்கும் உயர்ந்த தலைவன் {மஹேஸ்வரன்} நீயே.(48-19) இருப்பிலுள்ள மற்றும் இருப்பில் இல்லாத அனைத்துப் பொருட்களின் வடிவில் உன்னை முடிவிலாமல் பெருக்கிக் கொண்டவன் {பஹுபூதன்} நீயே. மஹத் மற்றும் ஐம்பூதங்களின் எண்ணற்ற கலவைகளைத் தாங்குபவன் {பஹுதரன்} நீயே. ராஹு என்ற பெயரில் அறியப்படும் ஆதி அறியாமை, அல்லது தமஸ் {ஸ்வர்ப்பாநு} நீயே. அளவற்றவன் {அமிதன்} நீயே. விடுதலை அடைந்தவர்களால் {முக்தர்களால்} அடையப்படும் உயர்ந்த கதி நீயே. நடன விரும்பி {ந்ருத்யப்ரியன்} நீயே. எப்போதும் நடனமாடிக் கொண்டிருப்பவன் {நித்யநர்த்தன்} நீயே. பிறரை நடனமாடச் செய்பவன் {நர்த்தகன்} நீயே. அண்டத்தின் நண்பன் {ஸர்வலாலஸன்} நீயே.(49-20)அமைதியான, மென்மையான குணம் கொண்டவன் {கோரன்} நீயே. அண்டத்தை உண்டாக்கவும், அழிக்கவும் வேண்டிய தவப் பலத்தைக் கொண்டவன் {மஹாதபஸ்} நீயே. மாயையின் பந்தங்களால் உயிரினங்கள் அனைத்தையும் கட்டியிருப்பவன் {பாசன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {நித்யன்} நீயே. (கைலாச) மலையில் வசிப்பவன் {கிரிருஹன்} நீயே. பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், வெளி போன்ற பொருட்கள் அனைத்திலும் பற்றற்றவனும் {நபன்} நீயே. ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரஹஸ்தன்} நீயே. வெற்றி {விஜயன்} நீயே. சோம்பலற்றவனும், விடாமுயற்சி தேவைப்படும் காரியங்களில் தாமதம் செய்யாதவனும் {வ்யவஸாயன், அதந்த்ரிதன்} நீயே.(50-21) அச்சமற்றவன் {அதர்ஷணன்} நீயே. அச்சமும் {தர்ஷணாத்மா} நீயே. பலியின் வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தவன் {யஜ்ஞஹன்} நீயே. பக்தர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் {காமநாசகன்} நீயே. தக்ஷனின் வேள்வியை அழித்தவன் {தக்ஷாயாகபஹாரி} நீயே. இனிமையானவன் {ஸுஸஹன்} நீயே. சற்றே இனிமையானவன் {சார்பற்றவன்} {மத்யமன்} நீயே.(51-22) கடுஞ்சீற்றம் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் சக்தியை அபகரிப்பவனும் {தேஜோபஹாரி} நீயே. அசுரன் பலனைக் கொன்றவன் {பலஹன்} நீயே. எப்போதும் மகிழ்ச்சிமிக்கவன் {முதிதன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் செல்வத்தின் {அர்த்தன்} வடிவம் நீயே. ஒருபோதும் வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. உன்னைத் தவிரத் துதிக்கத்தக்கவன் எவனும் இல்லாதவன் {அவரன்} நீயே. (பெருங்கடலின் வடிவில்) ஆழ்ந்த முழக்கங்களை இடுபவன் {கம்பீரதோஷன்} நீயே. (வெளியின் வடிவில் இருப்பதால்) எவராலும் அளக்க முடியாத ஆழத்தைக் கொண்டவன் {கம்பீரன்} நீயே. எவராலும் அளக்க முடியாத பலமும், வலிமையும் கொண்ட துணைவர்கள் மற்றும் காளையைக் கொண்டவன் {கம்பீரபலவாஹநன்} நீயே.(52-23) (மேல் நோக்கிய வேர்களைக் கொண்டதும், கீழ்நோக்கித் தங்கும் கிளைகளைக் கொண்டதுமான உலக மரம் {ந்யக்ரோதரூபன்} நீயே. ஆலமரம் {ந்யக்ரோதன்} நீயே. அண்டத்திற்கு அழிவு நேரும் வேளையில், அளவற்ற நீரில் ஓர் ஆலம் இலையில் உறங்கிக் கொண்டிருப்பவன் {வ்ருக்ஷகர்ணஸ்திதி} நீயே. ஹரி, ஹரன், கணேசன், அர்க்கன், அக்னி, வாயு முதலி வடிவங்களில் வழிபாட்டாளர்கள் அனைவருக்கும் கருணை காட்டுபவன் {விபு} நீயே. (கடலைகளை மெல்வதைப் போல எண்ணற்ற உலகங்களை மென்று விரைவாக அவற்றை விழுங்க வல்லவன் என்பதால்) கூரிய பற்களைக் கொண்டவன் {ஸுதீக்ஷ்ணதசநன்} நீயே. வடிவத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய அளவு கொண்டவன் {மஹாகாயன்} நீயே. அண்டத்தை உடனே விழுங்கும் அளவுக்குப் பெரிய வாயைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே.(53-24) எவனுடைய துருப்புகள் எங்கும் துதிக்கப்படுமோ அவன் {விஷ்வக்ஸேநன்} நீயே. யானைகளின் இளவரசன் கைப்பற்றப்பட்ட போது தேவர்களின் அச்சங்கள் அனைத்தையும் அகற்றியவன் {ஹரி} நீயே. அண்டத்தின் வித்து {யஜ்ஞன்} நீயே. போர்க்கொடியில் சின்னமாகக் கொண்ட அதே காளையை வாகனமாகவும் கொண்டவன் {ஸம்யுகாபீடவாஹநன்} நீயே. அக்னியையே ஆன்மாவாகக் கொண்டவன் {தீக்ஷ்ணதாபன்} நீயே. தேரில் பச்சை குதிரைகள் பூட்டப்பட்ட சூரியன் {ஹர்யச்வன்} நீயே. ஜீவனின் நண்பன் {ஸஹாயன்} நீயே. அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய முறையான காலத்தை அறிந்தவன் {கர்மகாலவித்} நீயே.(54-25)

(கொண்டாடப்படும் சக்கரத்தை அடைவதற்காக) விஷ்ணுவால் துதிக்கப்பட்டவன் நீயே. விஷ்ணு நீயே. {ப்ரஸாதிதன், யஜ்ஞன்} பெருங்கடல் {ஸமுத்ரன்} நீயே. நெருப்பைக் கக்கிக் கொண்டும், வேள்வி நெய்யைப் போல உப்பு நீரைக் குடித்துக் கொண்டும் பெருங்கடலுக்குள் திரியும் குதிரைத் தலை {படபாமுகன்} நீயே. அக்னியின் நண்பனான காற்று {வாயு / ஹுதாசநஸஹாயன்} நீயே. மென்மையான தென்றலாலும் கலக்கப்படாதபோது ஓய்ந்திருக்கும் பெருங்கடலைப் போல அமைதியான ஆன்மா கொண்டவன் {ப்ரசாந்தாத்மா} நீயே. மந்திரங்களின் துணையுடன் வேள்விகளில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யெனும் ஆகுதிகளைப் பருகுபவன் {ஹுதாசநன்} நீயே.(55-26) அணுகப்பட முடியாதவன் {உக்ரதேஜஸ்} நீயே. முடிவிலா அண்டத்தில் பிரகாசத்தைப் பரப்புபவன் {மஹாதேஜஸ்} நீயே. போரில் வல்லவன் {ஜந்யன்} நீயே. வெற்றியடையும்பொருட்டுப் போரில் எப்போது ஈடுபட வேண்டும் என்ற காலத்தை நன்கறிந்தவன் {விஜயகாலவித்} நீயே. கோள்களின் நகர்வுகளைக் குறித்த அறிவியல் {ஜோதிடம்} {ஜ்யோதிஷாம்அயநன்} நீயே. வெற்றியின் வடிவம் {ஸித்தி} நீயே. (உடல் ஒருபோதும் சிதைவடையாதவனாக இருப்பதால்) எப்போதும் உடலைக் கொண்டவன் {ஸர்வவிக்ரஹன்} நீயே.(56-27) தலையில் குடுமி தரிப்பதால் இல்லறத்தான் {கிருஹஸ்தன் / சிகி} நீயே. தலை மொட்டையாக இருப்பதால் சந்நியாசி {முண்டி} நீயே. (வானப்ரஸ்தனாக இருப்பதால்) தலையில் சடாமுடி தரிப்பவன் {ஜடி} நீயே. (உன்னோடு அடையாளங்காணப்படும் அறவோர் நடந்து செல்லும் பாதை பிரகாசமானதாக இருப்பதால்) உன் கடுங்கதிர்களுக்காகப் புகழ்பெற்றவன் {ஜ்வாலி} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் உடலில் பொதிந்திருக்கும் இதய ஆகாயத்தில் தோன்றுபவன் {மூர்த்திஜன்} நீயே. ஒவ்வொரு உயிரினத்தின் மண்டையோட்டுக்குள் (மூளைக்குள்) நுழைபவன் {மூர்த்தகன்} நீயே. வயதின் தோல்சுருக்கங்களைத் தரித்தவன் {பலி} நீயே. மூங்கில் புல்லாங்குழலைத் தரிப்பவன் {வேணவி} நீயே. சிறு முரசும் {பணவமும்} கொண்டவன் {பணவி} நீயே. தாளி என்றழைக்கப்படும் இசைக்கருவியைத் தரிப்பவன் {தாளி} நீயே. தானியங்களின் உமி நீக்க மரக்கலத்தைப் பயன்படுத்துபவன் {கலி} நீயே. யமனை மறைக்கும் மாயையை மறைப்பவன் {காலகடங்கன்} நீயே[6].(57-28) ஆகாயக் கோள்களால் அமைந்த காலச்சக்கர நகர்வுகளில் எப்போதும் புத்தியைச் செலுத்துவதால் கணியன் {சோதிடன் / நக்ஷத்ரவிக்ரஹமதி} நீயே. சத்வம், ரஜஸ், தமஸ் குணங்களின் விளைவாக இருக்கும் பொருட்களில் புத்தியைச் செலுத்தும் ஜீவன் {குணபுத்தி} நீயே. அழிவேற்படும்போதும் அனைத்துப் பொருட்களும் எதில் கலக்குமோ அந்நிலை {லயன்} நீயே. எவ்வகை மாற்றத்திற்கும் உட்படும் எந்தப் பொருளையும் தன்னில் கொள்ளாத நிலையாவன் {அகமன்} நீயே. அனைத்து உயிரினங்களின் தலைவன் {ப்ரஜாபதி} நீயே. பரந்த அண்டம் முழுவதும் பரவும் கரங்களைக் கொண்டவன் {விஸ்வபாஹு} நீயே. நுணுக்கமான எண்ணற்ற வடிவங்களில் வெளிப்படுபவன் {விபாகன்} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வகன்} நீயே. (படைக்கும் பொருட்களை அனுபவிக்காதவனாக இருப்பதால்) வாயில்லாதவன் {முகமில்லாதவன் /  அறிவாயிருப்பவன் {அமுகன்} நீயே.(58-29) உலகப் பந்தங்களில் இருந்து உயிரினங்களை விடுவிப்பவன் {விமோசநன்} நீயே. எளிமையாக அடையத்தக்கவன் {ஸுஸரணன்} நீயே. தங்கக் கவசத்துடன் வெளிப்படுபவன் {ஹிரண்யகவசோத்பவன்} நீயே. லிங்கச் சின்னத்தில் தோன்றுபவன் {மேட்ரஜன்} நீயே. நீர்க்கோழிகள் மற்றும் விலங்குகளைத் தேடி காடுகளில் திரிபவன் {பலசாரி} நீயே. மொத்த உலகத்திலும் திரிந்து கொண்டிருப்பவன் {மஹீசாரி} நீயே. எங்குமிருப்பவன் {ஸ்ருதன்} நீயே.(59-30)மூவுலகங்களிலும் முழக்கப்படும் எக்காளங்கள் அனைத்தினாலும் உண்டாக்கப்படும் முழக்கம் {ஸர்வதூர்யநிநாதி} நீயே. அனைத்து உயிரினங்களையும் உறவினர்களாகக் கொண்டவன் {ஸர்வாதோத்யபரிக்ரஹன்} நீயே. (சேஷன் என்றழைக்கப்படும் வலிமைமிக்க நாகனைப் போல நீ இருப்பதால்) பாம்பின் வடிவம் கொண்டவன் {வ்யாலரூபன்} நீயே. (ஜைகிஷவ்யரையோ, பிற யோகியரையோ போல) மலைக்குகைகளில் வாழ்பவன் {குஹாவாசி} நீயே. (தேவர்ப்படைத்தலைவன்) குஹனைப் போன்றவன் {குஹன்} நீயே. மலர் மாலைகளை அணிபவன் {மாலி} நீயே. உலகப் பொருட்களை அடைவதால் எழும் மகிழ்ச்சியை அனுபவிப்பவன் {தரங்கவிதன்} நீயே.(60-31) பிறப்பு, இறப்பு மற்றும் அழிவு என்ற மூன்று நிலைகளை அனைத்து உயிரினங்களும் எதனிலிருந்து பெறுகின்றனவோ அந்நிலை {த்ரிதசன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று கால நிலைகளில் தோன்றும், அல்லது இருக்கும் பொருட்கள் அனைத்தையும் தாங்குபவன் {த்ரிகாலத்ருக்} நீயே. முற்பிறவி செயல்கள் மற்றும் தற்காலத்தில் செய்த செயல்கள் அனைத்தின் விளைவுகளில் இருந்தும், அறியாமை மற்றும் ஆசைகளில் உள்ள பற்றுகள் அனைத்தில் இருந்தும் உயிரினங்கள் விடுவிப்பவன் {கர்மஸர்வபந்தவிமோசநன்} நீயே. அசுரத் தலைவர்களைக் கட்டுபவன் {அஸுரேநத்ராணாம்பந்தநன்} நீயே. போரில் பகைவர்களைக் கொல்பவன் {யுதிசத்ருவிநாசகன்} நீயே.(61-32) ஞானத்தால் மட்டுமே அடையப்படுபவன் {ஸாங்க்யப்ரஸாதன்} நீயே. துர்வாசர்கள் {துர்வாஸர்} நீயே. அறவோர் அனைவராலும் பணிவிடை செய்யப்படுபவனும், துதிக்கப்படுபவனும் {ஸர்வஸாதுநிஷேவிதன்} நீயே. பிரம்மன் மற்றும் பிறரின் வீழ்ச்சிக்குக் காரணன் {ப்ரஸ்கந்தநன்} நீயே. செயல்களுக்குத் தகுந்த இன்ப துன்பங்களை அனைத்து உயிரினங்களுக்கும் நியாயமாகப் பகிர்ந்து கொடுப்பவன் {விபாகஜ்ஞன்} நீயே. ஒப்பற்றவன் {அதுல்யன்} நீயே. வேள்விகளில் கொடுக்கப்படும், பெறப்படும் பங்குகளை நன்கறிந்தவன் {யஜ்ஞபாகவித்} நீயே.(62-33) எங்கும் வசிப்பவன் {ஸர்வவாஸன்} நீயே. எங்கும் திரிபவன் {ஸர்வசாரி} நீயே. அழிவற்றவன் {த்ரோத்தமன்} நீயே. {துர்வாசன், வாஸவன், அமரன் நீயே} இமய மலைகளைப் போன்றவன் {ஹைமன்} நீயே. பசும்பொன்னைச் செய்பவன் {ஹேமகரன்} நீயே. செயல்களற்றவன் {அயஜ்ஞன்} நீயே. செயல்கள் அனைத்தின் கனிகளையும் உன்னில் தாங்குபவன் {ஸர்வதாரி} நீயே. தாங்குபவர்களாகக் கருதப்படும் முதன்மையான உயிரினங்கள் அனைத்தும் {தரோத்தமன்} நீயே.(63-34) குருதி தோய்ந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்} நீயே. முடிவிலா அண்டம் முழுவதும் பரவும் பார்வையுடன் கூடிய கண்களைக் கொண்டவன் {மஹாக்ஷன்} நீயே. எப்போதும் வெற்றிவாகை சூடும் சக்கரங்களுடன் கூடிய தேரைக் கொண்டவன் {விஜயாக்ஷன்} நீயே. பெரும் கல்வியுடையவன் {விசாரதன்} நீயே. பணியாட்களான உன் பக்தர்களை ஏற்பவன் {ஸங்க்ரஹன்} நீயே. புலன்களை அடக்கி ஒடுக்குபவன் {நிக்ரஹன்} நீயே. செயல்படுபவன் {கர்த்தன்} நீயே. பாம்புகளாலான இழைகளையும் துணிகளையும் கொண்ட ஆடைகளை உடுத்துபவன் {ஸர்ப்பசீரநிவாஸநன்} நீயே.(64-35)

பரமன் {முக்யன்} நீயே. தேவர்களில் இறுதியானவன் {அமுக்யன்} நீயே. நன்கு வளர்ந்தவன் {தேஹன்} நீயே. காஹளம் {எக்காளம் / காளம் / காகளம்} என்றழைக்கப்படும் இசைக்கருவியைக் கொண்டவன் {காஹலி} நீயே. அனைத்து ஆசைகளையும் அளிப்பவன் {ஸர்வகாமதன்} நீயே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்று கால நிலைகள் அனைத்திலும் அருளின் உடல்கொண்ட வடிவம் {ஸர்வகாலப்ரஸாதன்} நீயே. எப்போதும் நன்கு பயன்படுத்தப்படும் வலிமையைக் கொண்டவன் {ஸுபலன்} நீயே. (கிருஷ்ணனின் அண்ணனான) பலராமனின் வடிவத்தை ஏற்றவன் {பலரூபத்ருதன்} நீயே.(65-36) விரும்பப்படும் அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான விடுதலையாக {முக்தியாக}, அல்லது உயிரினங்கள் அடையும் உயர்ந்த கதிகள் அனைத்துமாக இருப்பவன் {ஸர்வகாமவரன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் கொடுப்பவன் {ஸர்வதன்} நீயே. திசைகள் அனைத்திலும் முகத்தைக் கொண்டவன் {ஸர்வதோமுகன்} நீயே. வெளி அல்லது அந்தப் பூதத்தின் மாறுபாடுகளில் இருந்து அனைத்து வடிவங்களும் உதித்ததைப் போலவே பல்வேறு உயிரினங்கள் எவனிடம் உதித்தவனவோ அவன் {ஆகாசநிர்விரூபன்} நீயே. உடல் என்றழைக்கப்படும் குழிக்குள் விழுபவன் {நிபாதி} நீயே. (உடலால்அமைந்த குழிக்குள் விழுந்து உன் பங்குக்கான கவலையைக் கடக்க முடியாதவனாக இருப்பதால்) ஆதரவற்றவன் {யாருக்கும் உட்படாதவன்} {அவசன்} நீயே. இதய ஆகாயத்தில் வசிப்பவன் {ககன்} நீயே.(66-37) மிகக் கொடிய வடிவம் கொண்டவன் {ரௌத்ரரூபன்} நீயே. அம்சு என்றழைக்கப்படும் தேவன் நீயே. அம்சுவின் தோழன் நீயே, ஆதித்தியன் என்றழைக்கப்படுபவன் நீயே. எண்ணற்ற கதிர்களைக் கொண்டவன் {பஹுரச்மி} நீயே. பளிச்சென்ற பிரகாசத்துடன் கூடியவன் {ஸுவர்ச்சஸி} நீயே. காற்றை விடப் பெரும் வேகம் கொண்டவன் {வஸுவேகன், மஹாவேகன்} நீயே. மனோ வேகம் கொண்டவன் {மநோவேகன்} நீயே. அறியாமையுடன் கூடிய அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பவன் {நிசாசரன்} நீயே.(67-38) ஒவ்வொரு உடலிலும் வசிப்பவன் {ஸர்வவாஸி} நீயே. செழிப்பைத் தோழனாகக் கொண்டு வசிப்பவன் {ஸ்ரீயாவாஸி} நீயே. அறிவையும், கல்வியைக் கற்பிப்பவன் {உபதேசகரன்} நீயே. முற்றான அமைதி குறித்த கல்வியைக் கற்பிப்பவன் {அகரன்} நீயே. (அமைதியைப் போதிப்பவனாக இருப்பதால்) உள்ளடங்கிப் பேசாதவன் {முநி} நீயே. ஆன்மாவைக் காண உடலைக் கடந்தவன் {ஆத்மநிராலோகன்} நீயே. நன்கு துதிக்கப்படுபவன் {ஸம்பக்நன்} நீயே. (கருவூலங்கள் அனைத்தின் தலைவன் {குபேரன்} அந்தக் கருவூலங்களை உன்னிடம் இருந்தே பெற்றதால்) ஆயிரங்கணக்கானவற்றைக் கொடுப்பவன் {ஸஹஸ்ரதன்} நீயே.(68-39) (கசியபர் மற்றும் வினதையின் மகனான கருடனாக இருப்பதால்) பறவைகளின் இளவரசன் {பக்ஷி} நீயே. உதவி செய்யும் நண்பன் {பக்ஷன்} நீயே. (ஆயிரம் சூரியர்கள் சேர்ந்தது போன்ற காந்தியைக் கொண்டவனாக இருப்பதால்) பெரும் பிரகாசம் கொண்டவன் {ரூபன், அதிதீப்தன்} நீயே. படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் ஆசான் {விசாம்பதி} நீயே. பசிகளைத் தூண்டுபவன் {மயங்கச் செய்பவன்} {உந்மாதன்} நீயே. காம தேவன் {மதநன்} நீயே. அனைவராலும் விரும்பப்படும் அழகிய பெண்களின் வடிவம் {காமன்} நீயே. உலகின் மரம் {அச்வதன்} நீயே. கருவூலங்களின் தலைவன் {அர்த்தகரன்} நீயே. புகழைக் கொடுப்பவன் {யசஸ்} நீயே.(69-40)

உயிரினங்கள் அனைத்தின் செயல்களுக்காக (இன்ப துன்பங்கள் என்ற வடிவில்) அவற்றின் கனிகளைப் பகிர்ந்தளிக்கும் தேவன் {வாமதேவன்} நீயே. நீ பகிர்ந்து கொடுக்கும் அந்தக் கனிகளும் {ப்ராக்} நீயே. (இருப்பில் ஏதும் இல்லாத காலத்தில் இருப்பதால்) மிகப் பழமையானவன் {தக்ஷிணன்} நீயே. மூவுலகங்களையும் ஓரடியில் மறைக்கத் தகுந்தவன் {வாமனே} நீயே. அசுரத் தலைவன் பலியை வஞ்சித்து (அவனது அரசுரிமையை அபகரித்து இந்திரனுக்கு மீட்டளித்தவனான குள்ளனும் {வாமநன்} நீயே. (சனத்குமாரர் மற்றும் பிறரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட யோகி {ஸித்தயோகி} நீயே. (வசிஷ்டர் மற்றும் பிறரைப் போல) பெரும் முனிவன் {மஹரிஷி} நீயே. (ரிஷபர் மற்றும் தத்தாத்ரேயர் ஆகியவர்களைப் போல) எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படுபவன் {ஹித்தார்த்தன்} நீயே. (யாஜ்ஞவல்கியர் மற்றும் பிறரைப் போன்ற) சந்நியாசி {ஸித்தஸாதகன்} நீயே.(70-41) துறவி வகைக் குறியீடுகளால் அலங்கரிக்கப்பட்டவன் {பிக்ஷு} நீயே. அத்தகைய குறியீடுகள் அற்றவன் {பிக்ஷுரூபன்} நீயே. துறவி வகையினரின் நடைமுறைகளைக் கடந்து நிற்பவன் {விபணன்} நீயே. அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் உயிரினங்கள் அனைத்தையும் காப்பவன் {மென்மையானவன்} {ம்ருது} நீயே. (மகிமையையும், அவமதிப்பையும் ஒன்றாகவே கருதுபவனாதலால்) ஆசைகளேதும் அற்றவன் {அவ்யபன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் என்றழைக்கப்படுபவன் {மஹாஸேநன்} நீயே. தேவர்களின் படைத்தலைவன் மீது இந்திரன் வஜ்ரத்தை ஏவியபோது, அவனது உடலில் இருந்து எழுந்த விசாகன் நீயே. அறுபது தத்துவங்கள் அல்லது அண்டத்தின் தலைமைப் பொருட்களை அனுபவிப்பவன் {ஷஷ்டிபாகன்} நீயே. (புலன்கள் அதனதன் செயல்பாடுகளுக்கு உன்னாலேயே வழிநடத்தப்படுவதால்) புலன்களின் தலைவன் {கவாம்பதி} நீயே.(71-42) (மலைகளைப் பிளக்கும்) வஜ்ரத்தைத் தரிப்பவன் {வஜ்ரஹஸ்தன்} நீயே. முடிவற்றவன் {விஷ்கம்பி} நீயே. போர்க்களத்தில் தைத்தியர் படையைக் கலங்கடிப்பவன் {சமூஸ்தம்பநன்} நீயே. தன் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும், எதிரிகளின் படைப்பிரிவுகளுக்கு மத்தியிலும் தேரில் வலம் வந்து, அவர்களை அழித்து, நலமாகவும், பாதுகாப்பாகவும் திரும்பி வருபவன் {வ்ருத்தாவ்ருத்தசரன்} நீயே. (பிரம்ம அறிவின் விளைவால்) உலகப் பெருங்கடலின் அடியாழத்தை அறிந்தவன் {தாலன்} நீயே. (கிருஷ்ணன் பிறந்த குலத்தைத் தோற்றுவித்த) மது என்றழைக்கப்படுபவன் நீயே. தேனுக்கு ஒப்பான நிறத்தில் கண்களைக் கொண்டவன் {மதுகலோசநன்} நீயே.(72-43) பிருஹஸ்பதிக்கு அடுத்து பிறந்தவன் {வாசஸ்பத்யன்} நீயே. வேள்விகளில் அதர்யுக்கள் செய்யும் செயல்களைச் செய்பவன் {வாஜஸநன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சார்ந்தவர்களாலும் எப்போதும் துதிக்கப்படுபவன் {நித்யம் ஆஸ்ரமபூஜிதன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்பு மிக்கவன் {ப்ரம்மசாரி} நீயே. (துறவியாக இருக்கும் விளைவால்) உலகில் மனிதர்களின் வசிப்பிடங்களில் திரிபவன் {லோகசாரி} நீயே. அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் {ஸர்வசாரி} நீயே. வாய்மை அறிந்தவன் {விசாரவித்} நீயே.(73-44) ஒவ்வொரு இதயத்தையும் அறிந்து, அவற்றுக்கு வழிகாட்டுபவன் {ஈசாநன்} நீயே. மொத்த அண்டத்திலும் பரவி இருப்பவன் {ஈச்வரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தின் நற்செயல்கள் மற்றும் தீச்செயல்களுக்கான கனிகளை அவற்றுக்கு வெகுமதியாகக் கொடுப்பதற்காக அச்செயல்களைத் திரட்டிச் சேகரிப்பவன் {காலன்} நீயே. அண்ட அழிவைப் பின்தொடரும் இரவிலும் உயிரோடு இருப்பவன் {நிசாசாரி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரித்தவன் {பிநாகவாந்} நீயே. உன் கணைகள் எட்டும் இலக்குகளான தைத்தியர்களுடனும் வசிப்பவன் {நிமித்தஸ்தன்} நீயே. செழிப்பின் ஆசான் {நிமித்தன்} நீயே. {நந்தி, நந்திகரன்}, ராமாவதாரத்தில் ராவணனுக்கு எதிரான படையெடுப்பில்  பெருங்குரங்கின் உதவி பெற்ற விஷ்ணு {ஹரி} நீயே.(74-45)

உன் தோழர்களாக இருக்கும் கணங்களின் தலைவன் {நந்தீஸ்வரன்} நீயே. பல்வேறு கணங்கள் ஒவ்வொன்றும் {நந்தி} நீயே. அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பவன் {நந்தநன்} நீயே. {நந்திவர்த்தநன்}. அனைவரின் மகிழ்ச்சியை அதிகரிப்பவன் நீயே {பகஹாரி} நீயே. இந்திரனைப் போன்ற உயர்ந்தவர்களின் அரசுரிமையையும். செழிப்பை பறிப்பவன் {நிஹந்தன்} நீயே. மரணம் என்ற வடிவில் அண்டத்தை அழிப்பவனாக இருப்பவன் {காலன்} நீயே. அறுபத்து நான்கு கலைகளில் வசிப்பவன் நீயே. மிகப் பெரியவன் {ப்ரம்மன்} நீயே. (முப்பாட்டன்களின் தந்தையாக இருப்பதால்) பெரும்பாட்டன் {பிதாமஹன்} நீயே. {சதுர்முகன்}.(75-46) தேவர்களாலும். அசுரர்களாலும் துதிக்கப்படும் பெரும் லிங்கம் {மஹாலிங்கன்} நீயே. ஏற்புடைய அழகிய குணங்களைக் கொண்டவன் {சாருலிங்கன்} நீயே. இருப்பிலுள்ள அனைத்துக் கருத்துகளுக்கும் உள்ள பல்வேறு வகைச் சாட்சிகளைப் புரிந்து கொள்ளச் செய்பவன் {லிங்காத்யக்ஷன்} நீயே. பார்வை மற்றும் பிற புலன்களின் மூலம் பெறப்படும் கருத்துக்ள அனைத்தின் தலைவன் {ஸுராத்யக்ஷன்} நீயே. (புலன்கள் அனைத்தையும் இதயத்துக்குள் ஈர்த்து. அவ்விடத்தில் அவை அனைத்தையும் கலப்பதற்கு உன் துணை தேவை என்பதால்) யோகத்தின் தலைவன் {யோகாத்யக்ஷன்} நீயே. (யுகங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்து) கிருதம் மற்றும் பிற யுகங்களைத் தாங்குபவன் {யுகாவஹன்} நீயே.(76-47) (நற்செயல் மற்றும் தீச்செயல்கள் அனைத்தின் கனிகளையும் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) வித்துகளின் தலைவன் {பீஜாத்யக்ஷன்} நீயே. அத்தகைய வித்துகளின் மூலக் காரணன் {பீஜகர்த்தன்} நீயே. ஆன்மா தொடர்பாகச் சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள வழிகளில் செயல்படுபவன் {அத்யாத்மாநுகதன்} நீயே. வலிமைக்கும். பிற குணங்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் {பலன்} நீயே. மஹாபாரதம் மற்றும் பிற வகை வரலாறுகள் அனைத்தும் {இதிஹாஸன்} நீயே. மீமாம்ஸை என்றழைக்கப்படும் சாத்திரங்கள் {கல்பன்} நீயே. (இயக்கவியலை நிறுவிய) கௌதமர் நீயே. சந்திரனின் பெயரில் உள்ள இலக்கணப் பெரும் சாத்திரத்தின் ஆசான் {நிசாகரன்} நீயே.(77-48) எதிரிகளைத் தண்டிப்பவன் {தம்பன்} நீயே. எவராலும் தண்டிக்கப்பட முடியாதவன் {அதம்பன்} நீயே. அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்திலும் உண்மையாக இருப்பவன் {வைதம்பன்} நீயே. அர்ப்பணிப்பு கொண்டோருக்குக் கீழ்ப்படிபவன் {வஸ்யன்} நீயே. பிறரை அடக்க வல்லவன் நீயே {வஸகரன்} நீயே. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் சச்சரவுகளுக்கு ஒத்திசைபவன் {கலி} நீயே. (பூலோகம் முதலான) பதினான்கு உலகங்களைப் படைத்தவன் நீயே {லோககர்த்தன்} நீயே. பிரம்மன் முதல் (புல் மற்றும் துரும்பைப் போன்ற) இழிந்த தாவர வடிவங்கள் ஈராக அனைத்து உயிரினங்களையும் பேணிக் காப்பவன் {பசுபதி} நீயே. ஐம்பூதங்களைப் படைத்தவன் {மஹாகர்த்தன்} நீயே. (பற்றற்றவனாக எப்போதும் இருப்பதால்) எதையும் ஒருபோதும் அனுபவிக்காதவன் {அநௌஷதன்} நீயே.(78-49) அழிவற்றவன் {அக்ஷரன்} நீயே. இன்பநிலையின் உயர்ந்த வடிவம் {பரமம்ப்ரம்ம} நீயே. வலிமையில் செருக்குடைய தேவன் {பலவத்} நீயே. சக்ரன் நீயே. அறநெறி சாத்திரங்களில் காணப்படுவதும், குற்றவாளிகளைப் பீடிப்பதுமான தண்டனை {நீதி} நீயே. உலகத்தில் நிலவும் கொடுங்கோன்மையின் வடிவம் {அநீதி} நீயே. தூய ஆன்மா கொண்டவன் {சுத்தாத்மா} நீயே. (அனைத்து வகைக் களங்கங்களில் இருந்தும் மேம்பட்டவனான) களங்கமற்றவன் {சுத்தன்} நீயே. துதிக்கப்படத் தகுந்தவன் {மாந்யன்} நீயே. இடையறாமல் தோன்றி மறையும் உலகம் {கதாகதன்} நீயே.(79-50)

பெருமளவு அருளைக் கொண்டவன் {பஹுப்ரஸாதன்} நீயே. நல்ல கனவுகளைக் கொண்டவன் {ஸுஸ்வப்நன்} நீயே. அண்டத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி {தர்ப்பணன்} நீயே. அக மற்றும் புறப்பகைவர்கள் அனைவரையும் அடக்குபவன் {அமித்ரஜித்} நீயே. வேதத்தைப் படைத்தவன் {வேதகாரன்} நீயே. தந்திரங்களிலும், புராணங்களிலும், மனிதமொழி வடிவிலும் உள்ள சாற்று மொழியைப் படைத்தவன் {மந்த்ரகாரன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வித்வாந்} நீயே. போரில் எதிரிகளைக் கலங்கடிப்பவன் {ஸமரமர்த்தநன்} நீயே.(80-51) அண்ட அழிவுக் காலத்தில் தோன்றும் பயங்கர மேகங்களில் வசிப்பவன் {மஹாமேகநிவாஸி} நீயே. (அண்ட அழிவைக் கொண்டு வரும் விளைவால்) மிகப் பயங்கரன் {மஹாகோரன்} நீயே. மனிதர்கள் அனைவரையும், அனைத்துப் பொருட்களையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் வெல்பவன் {வசீகரன்} நீயே. பேரழிவை உண்டாக்குபவன் {அக்நிஜ்வாலன்} நீயே. நெருப்பையே சக்தியாகக் கொண்டவன் {மஹாஜ்வாலன்} நீயே. நெருப்பைவிட வலிய சக்தி கொண்டவன் {அதிதூம்ரன்} நீயே. அனைத்தையும் எரிக்கும் யுகநெருப்பு {ஹுதன்} நீயே. வேள்வி ஆகுதிகளின் மூலம் நிறைவடைய வல்லவன் {ஹவி} நீயே.(81-52) மந்திரங்களின் உதவியுடன் வேள்விகளில் ஊற்றப்படும் நீரும், பிற நீர்மங்களும் {வ்ருஷ்ணன்} நீயே. நல்ல மற்றும் தீய செயல்களுடன் தொடர்புடைய கனிகளைச் சிதறடிக்கும் அற தேவனின் வடிவத்தில் இருப்பவன் நீயே, பேரின்பத்தைக் கொடுப்பவன் {சங்கரன்} நீயே. எப்போதும் பிரகாசத்துடன் கூடியவனும் {நித்யம்வர்ச்சஸ்வி} நீயே. நெருப்பின் வடிவம் {தூமகேதநன்} நீயே. வைடூரிய நிறம் கொண்டவன் {நீலன்} நீயே. லிங்கச் சினத்தில் எப்போதும் இருப்பவன் {அங்கலுப்தன்} நீயே. அருள் நிலையின் ஊற்றுக்கண் {சோபநன்} நீயே. நோக்கங்களைச் செயல்படுத்துவதில் எதனாலும் கலங்கடிக்கப்பட இயலாதவன் {நிரவக்ரஹன்} நீயே.(82-53) அருளை வழங்குபவன் {ஸ்வஸ்திதன்} நீயே. அருளின் வடிவம் {ஸ்வஸ்திபாவன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் பங்கு கொடுக்கப்படுபவன் {பாகி} நீயே. வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் ஒவ்வொரு பங்கையும் பகிர்பவன் {பாககரன்} நீயே. பெரும் வேகம் கொண்டவன் {லகு} நீயே. அனைத்துப் பொருட்களிலும் தொடர்பறுந்தவன் {பற்றற்றவன்} {உத்ஸங்கன்} நீயே. வலிமைமிக்க உறுப்புகளைக் கொண்டவன் {மஹாங்கன்} நீயே. உற்பத்திச் செயல்பாட்டில் ஈடுபடுபவன் {மஹாகர்ப்பபராயணன்} நீயே.(83-54) (விஷ்ணுவின் வடிவத்தில் இருக்கும்) கரிய நிறத்தவன் {க்ருஷ்ணவர்ணன்} நீயே. (கிருஷ்ணனின் மகனான சாம்பனின் வடிவத்தில் இருக்கும்) வெண்ணிறத்தவன் {ஸுவர்ணன்} நீயே. உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் புலன்கள் {ஸர்வதேஹிநாம் இந்த்ரியன்} நீயே. பெரும் பாதம் கொண்டவன் {மஹாபாதன்} நீயே. பெருங்கரங்களைக் கொண்டவன் {மஹாஹஸ்தன்} நீயே. பேருடல் படைத்தவன் {மஹாகாயன்} நீயே. பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே.(84-55)

பெருந்தலை கொண்டவன் {மஹாமூர்த்தன்} நீயே. பேரளவுகளைக் கொண்டவன் {மஹாமாத்ரன்} நீயே. பரந்த பார்வையைக் கொண்டவன் {மஹாநேத்ரன்} நீயே. அறியாமையற்ற இரவின் இல்லம் {நிசாலயன்} நீயே. அழிப்பவனை அழிப்பவன் / யமனுக்கு யமன் {மஹாந்தகன்} நீயே. பெருங்காதுகளைக் கொண்டவன் {மஹாகர்ணன்} நீயே. பெரிய உதடுகளைக் கொண்டவன் {மஹோஷ்டன்} நீயே. பெரும் கன்னங்களைக் கொண்டவன் {மஹாஹநு} நீயே.(85-56) பெரும் மூக்கைக் கொண்டவன் {மஹாநாஸன்} நீயே. பெரும் தொண்டை கொண்டவன் {மஹாகம்பு} நீயே. பெரும் கழுத்தைக் கொண்டவன் {மஹாக்ரீவன்} நீயே. உடலின் பற்றுகளை அறுப்பவன் {ச்மசாநபாக்} நீயே. பரந்த மார்பைக் கொண்டவன் {மஹாவக்ஷஸ்} நீயே. பரந்த நெஞ்சம் {மஹோரஸ்கன்} நீயே. அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மா {அந்தராத்மா} நீயே. மடியில் மானைக் கொண்டவன் {ம்ருகாலயன்} நீயே.(86-57) மரத்தில் கனிகள் தொங்குவதைப் போல எண்ணற்ற உலகங்கள் எதில் தொங்குமோ அவன் {லம்பநன்} நீயே. அண்ட அழிவின் போது அண்டத்தை விழுங்க உதடுகளைத் திறப்பவன் {லம்பிதோஷ்டன்} நீயே. {மஹாமாயன்}. பாற்கடல் {பயோநிதி} நீயே. பெரிய பற்களைக் கொண்டவன் {மஹாதந்தன்} நீயே. பெரிய தாடைகளைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. பெரிய நாவைக் கொண்டவன் {மஹாஜிஹ்வன்} நீயே. பெரிய வாயைக் கொண்டவன் {மஹாமுகன்} நீயே.(87-58) பெரிய நகங்களைக் கொண்டவன் {மஹாநகன்} நீயே. பெரிய மயிர்களைக் கொண்டவன் {மஹாரோமன்} நீயே. முடிவிலா நீளம் கொண்ட முடிகளைக் கொண்டவன் {மஹாகேசன்} நீயே. பெரும் வயிறு படைத்தவன் {மஹாகோசனே} நீயே, பெரும் நீளம் கொண்ட சடாமுடி தரித்தவன் {மஹாஜடன்} நீயே. எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாக இருப்பவன் {ப்ரஸந்நன்} நீயே. அருளின் வடிவம் {ப்ரஸாதன்} நீயே. நம்பிக்கையின் வடிவம் {ப்ரத்யயன்} நீயே. (போரில் ஆயுதமாக அல்லது) வில்லாக மலைகளைக் கொண்டவன் {கிரிஸாதநன்} நீயே.(88-59) பிள்ளையிடம் தாயைப் போல அனைத்து உயிரினங்களிடமும் அன்பு நிறைந்தவன் {ஸ்நேஹநன்} நீயே. அன்பேதும் இல்லாதவன் {அஸ்நேஹநன்} நீயே. வெல்லப்படாதவன் {அஜிதன்} நீயே. தியான (யோகத்தில்) எப்போதும் அர்ப்பணிப்புள்ளவன் {மஹாமுநி} நீயே. உலக மரத்தின் வடிவம் கொண்டவன் {வ்ருக்ஷாகாரன்} நீயே. உலக மரத்தால் குறிப்பிடப்படுபவன் {வ்ருக்ஷகேது} நீயே. (பூதங்கள் அனைத்திலும், ஒருபோதும் தணிவடையாத நெருப்பைப் போல) உண்பதில் ஒருபோதும் தணிவடையாதவன் {நெருப்பு} {அநலன்} நீயே. (நெருப்போடு அடையாளம் காணப்படுவதன் விளைவால்) இடத்திற்கு இடம் செல்லம் காற்றையே வாகனமாகக் கொண்டவன் {வாயுவாஹநன்} நீயே.(89-60)

மலைகளிலும் சிறு குன்றுகளிலும் திரிபவன் {கண்டலி} நீயே. மேரு மலைகளில் வசிப்பிடம் கொண்டவன் {மேருதாமன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவாதிபதி} நீயே. தலையை அதர்வணங்களாகக் கொண்டவன் {அதர்வசீர்ஷன்} நீயே. வாயை சாமங்களாகக் கொண்டவன் {ஸாமாஸ்யன்} நீயே. எண்ணற்ற கண்களை ஆயிரம் ரிக்குகளாகக் கொண்டவன் {ரிக்ஸஹஸ்ராமிதேக்ஷணன்} நீயே.(90-61) பாதங்களையும, கரங்களையும் யஜுஸ்களாகக் கொண்டவன் {யஜுப்பாதபுஜன்} நீயே. உபநிஷதங்கள் {குஹ்யன்} நீயே. (சாத்திரங்களில் தோன்றும்) மொத்த சடங்குகளும் {ப்ரகாசன்} நீயே. அசைவன அனைத்தும் {ஜங்கமன்} நீயே. வேண்டுதல்களை ஒருபோதும் வீண்போகச்செய்யாதவன் {அமோகார்த்தன்} நீயே. எப்போதும் அருள் வழங்குபன் {ப்ரஸாதன்} நீயே. அழகிய வடிவம் கொண்டவன் {அபிகம்யன்} நீயே. {ஸுதர்சநன் நீயே}.(91-62)  (பக்தர்கள் உன்னை நெருங்கும் அளவுக்கு) பக்தர்களை நெருங்குபவன் {உதவி செய்பவன்} {உபகாரன்} நீயே. அன்புக்குரியவன் {ப்ரியன்} நீயே. {ஸர்வன்}. அனைவருக்கும் பிடித்த தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோகங்கள் {கநகன்} நீயே. புடம்போட்ட தங்கத்தைப் போன்ற பிரகாசம் கொண்டவன் {காஞ்சநச்சவி} நீயே. (அண்டத்தின்) தொப்புளாக இருப்பவன் {நாபி} நீயே. (உன் மகிமைக்காக வேள்வி செய்வோரின் நன்மைக்காக) வேள்விக் கனிகளை வளரச் செய்பவன் {நந்திகரன்} நீயே. வேள்விகளைப் பொறுத்தவரையில் அறவோர் கொள்ளும் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வடிவம் {பாவன்} நீயே. அண்டத்தை வடிவமைத்தவன் {புஷ்கரஸ்தபதி} நீயே. (மலைகள் மற்றும் பொருட்களின்) வடிவில் அழிவற்றவனாக இருப்பவன் {ஸ்திரன்} நீயே.(92-63) ஒரு மனிதன் கடந்து செல்ல வேண்டிய பனிரெண்டு நிலைகள்[7] {த்வாதசன்} நீயே. (இப்பட்டியலில் உள்ள பத்து நிலைகளுக்கிடையில் ஏற்கப்படும் நிலைகளில்) அச்சத்தை உண்டாக்குபவன் {த்ராஸநன்} நீயே. அனைத்துப் பொருட்களின் தொடக்கம் {ஆத்யன்} நீயே. யோகத்தின் மூலமாகப் பரப்பிரம்மத்தில் ஜீவனைக் கலக்கச் செய்வன் {யஜ்ஞன்} நீயே. ஜீவன் மற்றும் பரப்பிரம்மத்திற்கிடையில் யோகத்தின் மூலம் கலப்பை எது உண்டாக்குமோ அது {யஜ்ஞஸமாஹிதன்} நீயே. (ஆழ்ந்த மயக்கத்துடன் கூடிய) வெளிப்படாதவன் {நக்தன்} (காமம், கோபம், பேராசை, தீய ஆசைகளை உண்டாக்குவதால்) நான்காம் யுகத்தின் தலைமைத் தேவன் {கலி} நீயே. (அண்டத்தில் அடுத்தடுத்து பிறப்பிறப்புகளை உண்டாக்கும்) நித்தியமான காலம் {காலன்} நீயே.(94) ஆமையின் வடிவில் இருப்பவன் {மகரன்} நீயே. காலனால் வழிபடப்படுபவன் {காலபூஜிதன்} நீயே. (93-64)தோழர்களின் {கணங்களின்} மத்தியில் வாழ்பவன் {ஸகணன்} நீயே. கணங்களின் பட்டியலில் உன் பக்தர்களைச் சேர்ப்பவன் {கணகாரன்} நீயே. உன் தேருக்குப் பிரம்மனை சாரதியாகக் கொண்டவன் {பூதவாஹநஸாரதி} நீயே. சாம்பலில் {திருநீற்றில்} உறங்குபவன் {பஸ்மசயன்}[8] நீயே. சாம்பலால் அண்டத்தைக் காப்பவன் {பஸ்மகோப்தன்} நீயே. சாம்பலாலான உடலைக் கொண்டவன் {பஸ்மபூதன்} நீயே. அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளும் மரம் {தரு} நீயே. கணங்களின் வடிவைக் கொண்டவன் {கணன்} நீயே.(94-65)

பதினான்கு உலகங்களையும் பாதுகாப்பவன் {லோகபாலன்} நீயே. அனைத்து உலகங்களையும் கடந்திருப்பவன் {அலோகன்} நீயே. (எந்தக் குறையுமில்லாத) முழுமையானவன் {மஹாத்மா} நீயே. அனைத்து உயிரினங்களாலும் துதிக்கப்படுபவன் {ஸர்வபூஜிதன்} நீயே. (தூய்மையானவனும், களங்கமற்றவனுமாக இருப்பதால்) வெண்மையானவன் {சுக்லன்} நீயே. உடல், வாக்கு மனம் ஆகியவற்றை முன்னிலும் களங்கமற்றவையாகக் கொண்டவன் {த்ரிசுக்லன்} நீயே. விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் தூய இருப்பை அடைந்தவன் {ஸம்பநநன்} நீயே. எவ்வகைத் தூய்மையின்மையாலும் களங்கப்பட இயலாதவன் {சுசி} நீயே. பழங்காலத்தின் பேராசான்களால் அடையப்பட்டவன் {பூதநிஷேவிதன்} நீயே.(95-66) அறம் அல்லது நான்கு வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} முறையான வடிவம் {ஆச்ரமஸ்தன்} நீயே. சடங்குகள் மற்றும் வேள்விகளின் வடிவில் உள்ள அறம் {க்ரியாவஸ்தன்} நீயே. அண்டத்தின் தெவ்வீக வடிவமைப்பாளனுடைய திறனின் வடிவம் {விச்வகர்மமதி} நீயே. அண்டத்தின் ஆதி வடிவமாகத் துதிக்கப்படுபவன் {வரன்} நீயே. பரந்த கரங்களைக் கொண்டவன் {விசாலசாகனே} நீயே. தாமிர வண்ணம் இதழ்களைக் கொண்டவன் {தாம்ரோஷ்டன்} நீயே. பெருங்கடலில் உள்ள பேரளவு நீரின் வடிவம் {அம்புஜாலன்} நீயே. (மலைகள் மற்றும் குன்றுகளின் வடிவில்) உறுதியாக நிலைத்திருப்பவன் {ஸுநிச்சலன்} நீயே.(96-67) கபிலர் நீயே. பழுப்பு நிறத்தவன் {கபிசன்} நீயே. வெண்கலவை கொண்ட வண்ணங்கள் அனைத்தும் {சுக்லன்} நீயே. வாழ்வுக்காலம் {ஆயுஸ்} நீயே. தொன்மையானவன் {பரன்} நீயே. அண்மையானவன் {அபரன்} நீயே. கந்தர்வன் நீயே. தேவர்களின் தாயான அதிதியின் வடிவில் இருப்பவன் (அல்லது அனைத்துப் பொருட்களின் தாயான பூமியின் வடிவில் இருப்பவன்) {அதிதி} நீயே. பறவைகளின் இளவரசனும், வினதையிடம் கசியபருக்குப் பிறந்தவனும் தார்க்ஷயன் என்று வேறுபெயரால் அழைக்கப்படுபவனும் {தார்க்ஷயன்} நீயே. எளிதில் புரிந்துகொள்ளப்படக்கூடியவன் {ஸுவிஜ்ஞேயன்} நீயே. ஏற்புடைய சிறந்த வாக்கை உடையவன் {ஸுசாரதன்} நீயே.(97-68) போர்க்கோடரி தரித்தவன் {பரச்வதாயுதன்} நீயே. வெற்றியை விரும்புபவன் {தேவன்} நீயே. திட்டங்களை நிறைவேற்றுவதில் பிறருக்குத் துணை புரிபவன் {அநுகாரி} நீயே. {கிருஷ்ணனைப் போன்ற} சிறந்த நண்பன் {ஸுபாந்தவன்} நீயே. துளையுள்ள இரு சுரைக்காய்களால் அமைந்த வீணையைச் சுமப்பவன் {தும்பவீணன்} நீயே. (அண்ட அழிவின்போது வெளிப்படும்) பயங்கரக் கோபம் {மஹாக்ரோதன்} நீயே. மனிதர்கள் மற்றும் தேவர்களைவிட உயர்ந்தவர்களை (பிரம்மன் மற்றும் விஷ்ணுவைப்) பிள்ளைகளாகக் கொண்டவன் {மேல்நோக்கிய உயிரணு கொண்டவன் / புலன்களை வென்றவன்}  {ஊர்த்வரேதஸ்} நீயே. அண்ட அழிவிக்குப் பிறகு நீரில் மிதக்கும் விஷ்ணுவின் வடிவம் {ஜலேசயன்} நீயே.(98-69) பெருஞ்சீற்றத்துடன் அனைத்தையும் எரிப்பவன் {உக்ரன்} நீயே. வாரிசுகளை உண்டாக்குபவன் {வம்சக்ரன்} நீயே. பரம்பரை பரம்பரையாகத் தொடரும் குடும்பமும், குலமும் {வம்சன்} நீயே. மூங்கிலாலான புல்லாங்குழலின் இசை {வம்சநாதன்} நீயே. களங்கமற்றவன் {அநிந்திதன்} நீயே. எவனுடைய உடலில் ஒவ்வொரு உறுப்பும் அழகாய் இருக்குமோ அவன் {ஸர்வாங்கரூபன்} நீயே. மாயை நிறைந்தவன் {மாயாவி} நீயே. திரும்பிவரும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் {பிரதிபலன் பாராமல்} பிறருக்கு நன்மை செய்பவன் {ஸுஹ்ருதன்} நீயே. {வாயு என்றழைகெகப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(99-70)ஜீவனைக் கட்டும் உலகபந்தங்கள் {பந்தநன்} நீயே. அந்தக் கட்டுகளைப் படைப்பவன் {பந்தகர்த்தன்} நீயே. அத்தகைய கட்டுகளை அறுப்பவன் {ஸுபந்தநவிமோசநன்} நீயே. (வேள்விகள் அனைத்திற்கும் பகைவர்களான} தைத்தியர்களிலும் வசிப்பவன் {ஸயஜ்ஞாரி} நீயே. (அனைத்துச் செயல்களையும் கைவிட்டவர்களான) செயல்கள் அனைத்தின் பகைவர்களில் வசிப்பவன் {ஸகாமாரி} நீயே. பெரும் பற்களைக் கொண்டவன் {மஹாதம்ஷ்ட்ரன்} நீயே. வலிமைமிக்க ஆயுதங்கள் {மஹாயுதன்} நீயே.(100-71) பெரிதும் நிந்திக்கப்படுபவன் {பஹுதாநிந்திதன்} நீயே. தாருகா வனத்தில் வசிக்கும் முனிவர்களைத் திகைக்கச் செய்தவன் {சர்வன்} நீயே. தாருகா வனத்தில் வசிப்பவர்களும், உன்னை இகழ்பவர்களுமான முனிவர்களுக்கும் நன்மை செய்பவன் {சங்கரன்} நீயே. அம்முனிவர்களின் அச்சங்கள் அனைத்தையும் விலக்கி, அவர்களுக்கு முக்தியளிப்பவன் {சங்கரன்} நீயே. (உடுக்கத் தேவையான ஆடையை அடைய இயலாத விளைவால்) செல்வமற்றவன் {அதநன்} நீயே. தேவர்களின் தலைவன் {அமரேசன்} நீயே. (தேவர்களில் உயர்ந்தவனாகக் கருதப்பட்டு இந்திரனாலும் துதிக்கப்படுவதன் விளைவால்) தேவர்களில் பெரியவன் {மஹாதேவன்} நீயே. விஷ்ணுவாலும் துதிக்கத்தக்கவன் {விச்வதேவன்} நீயே. தேவர்களின் பகைவர்களைக் கொல்பவன் {ஸுராரிஹா} நீயே.(101-72) அதளபாதாளத்தில் (சேஷன் என்ற பாம்பின் வடிவில்) வசிப்பவன் {அஹிர்புத்நியன்} நீயே. புலப்படாதிருக்கும் காற்றானது அனைவராலும் உணரப்படுவதைப் போலவே புலப்படாதவனாக இருப்பினும் புரிந்து கொள்ளப்படக்கூடியவன் {அநிலோபன் / அநிலாபன்} நீயே. அனைத்தின் வேர் வரை பரந்த ஞானம் கொண்டவனும், அனைத்துப் பொருட்களின் உள் இயல்பை அறிந்தவனும் {சேகிதாநன்} நீயே. உன்னில் இன்பம் கொள்பவனில் இன்பம் கொள்பவன் {ஹவிஸ்} நீயே. அஜைகபாத் என்றழைக்கப்படும் பதினோரு ருத்திரர்களில் ஒருவன் நீயே. மொத்த அண்டத்தின் ஆட்சியாளன் {காபாலி} நீயே. (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற நன்கறியப்பட்ட முக்குணங்களால் மறைக்கப்படுவதன் விளைவால்) அண்ட ஜீவன்கள் அனைத்தின் வடிவம் {த்ரிசங்கு} நீயே. முக்குணங்களுக்கு உட்படாதவன் {அஜிதன்} நீயே. குணங்கள் அனைத்தையும் கடந்தவனும், மொழி வழங்கும் எந்த உரிச்சொல்லின் துணையாலும் விளக்கப்பட இயலாதவனுமான தூய இருப்பு {சிவன்} நீயே.(102-73) தந்வந்தரி என்றழைக்கப்படும் மருத்துவ இளவரசன் நீயே. (பாவிகளுக்கு நேரும் பேரிடர்களை உண்டாக்கும் விளைவாக உள்ள) வால்நட்சத்திரம் {தூமகேது} நீயே. ஸ்கந்தன் என்றழைக்கப்படும் தேவர்ப்படைத்தலைவன் நீயே. இணைபிரியாத் தோழனும், உலகக் கருவூலங்கள் அனைத்தின் தலைவனும், குபேரன் என்றழைக்கப்படுபவனுமான யக்ஷர்களின் மன்னன் {வைச்ரவணன்} நீயே. தாத்ரி {தாதா} நீயே. சக்ரன் நீயே. விஷ்ணு நீயே. மித்ரன் நீயே. (தெய்வீகத் தச்சனான) தாஷ்டிரி {த்வஷ்டா} நீயே. துருவ நட்சத்திரம் {த்ருவன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்குபவன் {தரன்} நீயே.(103-74) வசுக்களில் பிரபாவன் என்றழைக்கப்படுபவன் {ப்ரபாவன்} நீயே. (அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் இணைக்கும் ஆன்ம இழையாக) எங்கும் செல்லவல்ல காற்று {ஸர்வகோவாயு} நீயே. அர்யமான் {சூரியனின் பெயர்} {அர்யமா} நீயே. சாவித்ரி {ஸவிதா} நீயே. ரவி நீயே. உஷங்கு என்ற பெயரில் அறியப்பட்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான புராதன மன்னன் {எரியும் கதிர்களைக் கொண்டவன்} {உஷங்கு} நீயே. பல்வேறு வழிகளில் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவன் {விதாதா} நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும் நிறைவளிக்கவல்ல) மாந்தாத்ரி {மாந்தாதா} நீயே. அனைத்து உயிரினங்களும் உயிர் பெறும் இடம் {பூதபாவநன்} நீயே.(104-75)

பல்வேறு வடிவங்களில் இருப்பவன் {விபு} நீயே. அண்டத்தில் இருக்கும் பல்வேறு வண்ணங்களை உண்டாக்குபவன் {வர்ணவிபாவி} நீயே. (உன்னில் இருந்து உண்டாகுபவையாக உள்ள_ ஆசைகள் அனைத்தையும், குணங்கள் அனைத்தையும் தாங்குபவன் {ஸர்வகாமகுணாவஹன்} நீயே. தொப்புளில் தாமரையைக் கொண்டவன் {பத்மநாபன்} நீயே. வலிமைமிக்க எண்ணற்ற உயிரினங்களுள்ள கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. சந்திரனைப் போன்ற அழகு நிறைந்த முகத்தைக் கொண்டவன் {சந்த்ரவக்த்ரன்} நீயே. {வாயு என்றழைக்கப்படும்} காற்று {அநிலன்} நீயே. {அக்னி என்றழைக்கப்படும்} நெருப்பு {அநலன்} நீயே.(105-76) பெரும் வலிமை {பலவாந்} நீயே. ஆன்ம அமைதி கொண்டவன் {திறனை வெளிக்காட்டாதவன்} {உபசாந்தன்} நீயே. பழைமையானவன் {புராணன்} நீயே. அறத்தின் துணையால் அறியப்படுபவன் {புண்யசஞ்சு} நீயே. {ஸ்ரீ என்றழைக்கப்படும்} லக்ஷ்மி {ஈ} நீயே. (பரமதேவனைத் துதிக்க மனிதர்களுக்குப் பயன்படும்) செயற்களத்தை அமைப்பவன் {குருகர்த்தன்} நீயே. செயற்களத்தில் வாழ்பவன் {குருவாஸி} நீயே. செயற்களத்தின் ஆன்மா {குருபூதன்} நீயே. அரச குணங்களைத் தூண்டுபவன் அல்லது அவற்றுக்கான மருந்து {குணௌஷதன்} நீயே.(106-77) (கனவற்ற உறக்க நிலையை வெளிக்காட்டும் நினைவற்ற இயல்பைக் கொண்ட நீயாகவே அனைத்துப் பொருட்களும் ஆகின்றன என்று ஸ்ருதிகள் அறிவிப்பதால்) அனைத்துப் பொருட்களும் கிடக்கும் இடம் {ஸர்வாசயன்} {தர்ப்பசாரி} நீயே. உயிர் மூச்சுகளுடன் கூடிய அனைத்து உயிரினங்களின் தலைவன் {ஸர்வேஷாம்ப்ராணிநாம்பதி} நீயே. தேவர்களுக்குத் தேவன் {தேவதேவன்} நீயே. இன்பநிலையுடன் தொடர்புடையவன் {ஸுகாஸக்தன்} நீயே. (காரண வடிவமான) ஸத் நீயே. (விளைவின் / காரிய வடிவமான) அஸத் நீயே. அனைத்திலும் சிறந்தவன் {ஸர்வரத்நவித்} நீயே.(107-78) கைலாச மலைகளில் வசிப்பவன் {கைலாஸகிரிவாஸி} நீயே. இமய மலைகளுக்குச் செல்பவன் {ஹிமவத்கிரிஸம்ச்ரயன்} நீயே. கரைகளில் நிற்கும் மரங்களை அடித்துச் செல்லும் பேரோடையைப் போல அனைத்தையும் அடித்துச் செல்பவன் {கூலஹாரி} நீயே. புஷ்கரை, பெருந்தடாகங்கள் மற்றும் இயற்கையான நீர்நிலைகள் அனைத்தையும் படைத்தவன் {கூலகர்த்தன்} நீயே. முடிவிலா ஞானவகைகளைக் கொண்டவன் {பஹுவித்யன்} நீயே. முடிவற்ற அருளை வழங்குபவன் {பஹுப்ரதன்} நீயே.(108-79) (மனிதர்களின் நன்மைக்காக இந்நாட்டுப் பொருட்களை வேறு நாட்டிற்கும், வேறு நாட்டுப் பொருட்களை இந்த நாட்டிற்கும் கொண்டு வரும்) வணிகன் {வணிஜன்} நீயே. மரத்தச்சன் {வர்த்தகி} நீயே. (உன் கோடரிக்குக் காம்பை வழங்கும் உலகமெனும்) மரம் {வ்ருக்ஷன்} நீயே. வகுளம் {மகிழம்} என்றழைக்கப்படும் மரம் நீயே. சந்தன மரம் {சந்தநம்} நீயே. {ஏழிலைப்பாலை என்றழைக்கப்படும்} சத மரம் {சதம்} நீயே. மிக உறுதியான கழுத்தைக் கொண்டவன் {ஸாரக்ரீவன்} நீயே. பெருந்தோள்களைக் கொண்டவன் {மஹாஜத்ரு} நீயே. (செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியானவனாக இருந்தாலும்) அமைதியற்றவன் {ஆசையற்றவன்} {அலோலன்} நீயே. (அரிசி, கோதுமை மற்றும் பிற தானிய வகைகளில் உள்ள) முக்கியப் பயிர்களும், செடிகளும் {மஹௌஷதன்} நீயே.(109-80)

பிறர் தங்கள் இதயங்களில் விரும்பும் பொருட்களை அடைய வெற்றியை அருள்பவன் {ஸித்தார்த்தகாரி}, {ஸித்தார்த்தன்} நீயே. வேதங்கள் மற்றும் இலக்கணத்தில் சரியான தீர்மானங்கள் {சந்தோவ்யாகரணோத்தரன்} நீயே. சிங்க முழக்கம் செய்பவன் {ஸிம்மநாதன்} நீயே. சிங்கப் பற்களுடன் கூடியவன் {ஸிம்மதம்ஷ்ட்ரன்} நீயே. பயணங்கள் செய்யச் சிங்கத்தில் செல்பவன் {ஸிம்மகன்} நீயே. சிங்கத்தால் இழுக்கப்படும் தேரைக் கொண்டவன் {ஸிம்மவாஹநன்} நீயே.(110-81) உண்மையின் உண்மையென அழைக்கப்படுபவன் {ப்ரபாவாத்மா} நீயே. அண்டத்தின் காலனை உணவுத்தட்டாகக் கொண்டவன் {ஜகத்காலஸ்தாலன்} நீயே. உலகங்களுக்கு நன்மையை எப்போதும் நாடுபவன் {லோகஹிதன்} நீயே. (விடுதலையின் {முக்தியின்} இன்பநிலைக்கு வழிவகுக்கும் வகையில்) உயிரினங்கள் அனைத்தையும் துன்பத்தில் இருந்து மீட்பவன் {தரு} நீயே. சாரங்கம் என்றழைக்கப்படும் பறவை {ஸாரங்கன்} நீயே. புதிய அன்னப்பறவை {நவசக்ராங்கன்} நீயே. (சேவலைப் போலவோ, மயிலைப் போலோ} நீ தலையில் கொண்டுள்ள மகுடத்தின் விளைவாக அழகுடன் தெரிபவன் {கேதுமாலி} நீயே. நீதியை நிலைநாட்ட ஞானிகள் அமரும் சபைகளைப் பாதுகாப்பவன் {ஸபாவநன்} நீயே.(111-82) அனைத்து உயிரினங்களின் வசிப்பிடம் {பூதாலயன்} நீயே. அனைத்து உயிரினங்களையும் பேணிப் பாதுகாப்பவன் {பூதபதி} நீயே. (நித்திய பூதங்களாக அமைந்திருக்கும்) பகலும், இரவும் {அஹோராத்ரன்} நீயே. குற்றமற்றிருப்பதால் ஒருபோதும் இகழப்படாதவன் {அநிந்திதன்} நீயே.(112-83) அனைத்து உயிரினங்களையும் தாங்குபவன் {ஸர்வபூதாநாம்வாஹிதன்} நீயே. அனைத்து உயிரினங்களின் புகலிடம் {நிலயன்} நீயே. பிறப்பற்றவன் {விபு} நீயே. இருப்பவன் {பவன்} நீயே. எப்போதும் கனிநிறைந்தவன் {அமோகன்} நீயே. தாரணை, தியானம் மற்றும் சமாதியுடன் கூடியவன் {சார்ந்தோருக்குக் கட்டுப்பட்டவன்} {ஸம்யதன்} நீயே. உச்சைஸ்ரவஸ் முதலிய குதிரைகள் {அச்வன்} நீயே. உணவளிப்பவன் {போஜநன்} நீயே. உயிரினங்களின் உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பவன் {ப்ராணதாரணன்} நீயே.(113-84) பொறுமையுடன் கூடியவன் {த்ருதிமாந்} நீயே. நுண்ணறிவு கொண்டவன் {மதிமாந்} நீயே. முயற்சியும், புத்திசாலித்தனமும் கொண்டவன் {தக்ஷன்} நீயே. அனைவராலும் மதிக்கப்படுபவன் {ஸத்க்ருதன்} நீயே. அறம் மற்றும் மறத்திற்கான {புண்ணியபாவங்களுக்கான} கனிகளைக் கொடுப்பவன் {யுகாதிபன்} நீயே. (புலன்களுக்குத் தலைமை தாங்கி அவை தங்கள் தங்களுக்குரிய செயல்களைச் செய்ய வைப்பதால்) புலன்களைப் பேணிக் காப்பவன் {கோபாலி} நீயே. ஒளிக்கோள்கள் அனைத்தின் தலைவன் {கோபதி} நீயே. பொருட்களின் திரட்டுகள் அனைத்தும் {க்ராமன்} நீயே. மாட்டுத் தோல்களாலான உடைகளைக் கொண்டவன் {கோசர்மவஸநன்} நீயே. பக்தர்களின் துயரை அகற்றுபவன் {ஹரி} நீயே.(114-85)

தங்கக் கரம் கொண்டவன் {ஹிரண்யபாஹு} நீயே. தங்கள் தங்களுக்குள் நுழைய முயலும் யோகியரின் உடல்களைப் பாதுகாப்பவன் {ப்ரவேசிநாம்குஹாபாலன்} நீயே. எதிரிகள் அனைவரையும் ஒன்றுமற்ற நிலைக்குக் குறைப்பவன் {ப்ரக்ருஷ்டாரி} நீயே. மகிழ்ச்சியைப் பெருமளவில் கொண்டவன் {மஹாஹர்ஷன்} நீயே. தடுக்கப்பட முடியாத காம தேவனை வென்றவன் {ஜிதகாமன்} நீயே. புலன்களை வென்றவன் {ஜிதேந்த்ரியன்} நீயே.(115-86) இசையின் எட்டாம் சுரமான காந்தாரம் நீயே. (இனிமை நிறைந்த கைலாய மலைகளில் அமைந்திருப்பதன் விளைவால்) சிறப்பான மற்றும் அழகிய இல்லம் கொண்டவன் {ஸுவாஸன்} நீயே. எப்போதும் தவங்களுடன் தொடர்புடையவன் {தபஸ்ஸக்தன்} நீயே. உற்சாகம் மற்றும் நிறைவின் வடிவம் {ரதி} நீயே. முடிவற்றவன் அல்லது பரந்தவன் {நரன்} நீயே. தொகுக்கப்பட்டவற்றுள் முதன்மையான பாடல் {மஹாகீதன்} நீயே. நீண்ட அடிகள் மற்றும் பெரும் தாவல்களுடன் ஆடுபவன் {மஹாந்ருத்யன்} நீயே. அப்ஸரஸ்களின் பல்வேறு இனக்குழுக்களால் மதிப்புடன் துதிக்கப்படுபவன் {அப்ஸரோகணஸேவிதன்} நீயே.(116-87) (காளைச் சின்னம் பொறிக்கப்பட்ட) பெரும் கொடிமரத்தைக் கொண்டவன் {மஹாகேது} நீயே. மேரு மலை {மஹாதாது} நீயே. பெரும் மலைச்சிகரங்கள் அனைத்தின் மத்தியிலும் திரிபவன் {நைகஸாநுசரன்} நீயே. பற்றிக்கொள்ள மிகக் கடினமான பெரும் வேகத்தைக் கொண்டவன் {சலன்} நீயே. சொற்களால் விளக்கப்பட முடியாதவனாக இருப்பினும் ஆசான்களால் சீடர்களுக்கு விவரிக்கப்படவல்லவன் {ஆவேதநீயன்} நீயே. ஆசான்களால் சீடர்களுக்குப் போதிக்கப்படும் கல்வயின் வடிவம் {ஆதேசன்} நீயே. இனிய நறுமணங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் உணரக் கூடியவன் {ஸர்வகந்தஸ்ஸுகாவஹன்} நீயே.(117-88) நகரங்கள் மற்றும் அரண்மனைகளின் முகப்புவாயில் {தோரணன்} நீயே. அரணமைக்கப்பட்ட நகரங்களைச் சூழ்ந்திருப்பவையும், முற்றுகையிடப்பட்ட கோட்டைக் காவற்படைகளுக்கு வெற்றியை அளிப்பவையுமான அகழிகள் மற்றும் குழிகளின் வடிவம் {தாரணன்} நீயே. காற்று நீயே {வாதன்} நீயே. மதில்கள் மற்றும் அகழிகளால் சூழப்பட்ட அரணமைக்கப்பட்ட நகரங்கள் மற்றும் ஊர்களின் வடிவம் {பரிதீபதி} நீயே. (கருடனின் வடிவில் நீயே இருப்பதால்) சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்தின் இளவரசன் {கேசரன்} நீயே. எதிர்பாலினக் கலவியால் உற்பத்தியைப் பெருக்குபவன் {ஸம்யோகன்} நீயே. அறங்கள் மற்றும் அறிவுகள் அனைத்திலும் முதன்மையானவன் {வர்த்தநன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் முதல்வன் {வ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் அறங்கள் அனைத்திலும் மூத்தவனுக்கும் மேன்மையானவன் {அதிவ்ருத்தன்} நீயே. அறிவு மற்றும் குணங்கள் அனைத்தையும் கடந்தவன் {குணாதிகன்} நீயே.(118-89) நித்தியமானவனும், மாற்றமில்லாதவனும், சுயம்சார்ந்தவனும் {நித்யாத்மஸஹாயன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசானும், பாதுகாவலனும் {தேவாஸுரபதி} நீயே. அனைத்து உயிரினங்களின் ஆசானும், பாதுபாவலனும் {பதி} நீயே. கவசம் தரிப்பவன் {யுக்தன்} நீயே. பகைவர்கள் அனைவரையும் கலங்கடிக்கவல்ல கரங்களைக் கொண்டவன் {யுக்தபாஹு} நீயே. சொர்க்கத்தில் ஸுபர்வன் என்றழைக்கப்படுபவனைக் காட்டிலும் துதிக்கத்தக்க பொருள் {திவிஸுபர்வணோதேவன்} நீயே.(119-90)

அனைத்துப் பொருட்களையும் தாங்கும், அல்லது சுமக்கும் சக்தியை அருள்பவன் {ஆஷாடன்} நீயே. அனைத்துப்பொருட்களையும் சுமக்கவல்லவன் {ஸுஷாடன்} நீயே. (ஒருபோதும் உறுதியற்றவனாக இல்லாத) நிலையுறுதி கொண்டவன் {த்ருவன்} நீயே. (எக்களங்கமும் இல்லாத) வெண்மையானவன், அல்லது தூயன் {ஹரிணன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும்) அழிக்கவல்ல திரிசூலம் தரிப்பவன் {ஹரன்} நீயே. அண்டத்தில் தொடர்ந்து பிறப்பிறப்பில் சுழன்று கொண்டிருப்போருக்கு உடல் வடிவங்களை அளிப்பவன் {ஆவர்த்தமாநேப்யோவபு} நீயே. செல்வத்தைவிட மதிப்புமிக்கவன் {வஸுச்ரேஷ்டன்} நீயே. (நன்மை மற்றும் பணிவன்பின் வடிவிலான) அறவழி அல்லது ஒழுக்கம் {மஹாபதன்} நீயே.(120-91) (வெறும் கோபத்தால் தூண்டப்படாமல்) ஆழமான முறையான ஆய்வுக்குப் பின் பிரம்மனின் தலையை அறுத்தவன் {சிரோஹாரி} நீயே. {விமர்சன் நீயே}. கைவரை நூல் {ரேகை சாஸ்திரம்}, அடிக்காலியல், தலை அமைப்பியல், மற்றும் விசித்திர மனத்தன்மைகளைக் குறிக்கும் உடல்வடிவம் தொடர்புடைய பிற அறிவுக்கிளைகள் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மங்கலக்குறிகள் அனைத்தையும் கொண்டவன் {ஸர்வலக்ஷணலக்ஷிதன்} நீயே. தேரின் அக்ஷம் என்றழைக்கப்படும் மரச்சட்டமாக இருப்பவனும், உடலெனும் தேரில் தொடர்புடையவனும் {ரதயோகிஅக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களிலும் அவற்றின் ஆன்மாவாக நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால்) அனைத்துப் பொருட்களிலும் தொடர்புடையவன் {ஸர்வயோகி} நீயே. வீரர்களுக்கு வீரனான பெரும் வலிமை கொண்டவன் {மஹாபலன்} நீயே.(121-92) வேதம் {ஸமாம்நாயன்} நீயே. ஸ்மிருதிகள், இதிஹாஸங்கள், புராணங்கள் மற்றும் பிற சாத்திரங்கள் {அஸமாம்நாயன்} நீயே. ஒவ்வொரு புண்ணியத்தலத்தின் சிறப்புமிக்கத் தேவன் {தீர்த்ததேவன்} நீயே. பூமியைத் தேராகக் கொண்டவன் {மஹாரதன்} நீயே. ஒவ்வொரு உயிரின உடற்தொகுப்புக்குள்ளும் நுழையும் செயலாற்றலற்ற பூதங்கள் {நிர்ஜீவன்} நீயே. செயலாற்றலற்ற பூதங்களாலான ஒவ்வொரு தொகுப்புக்கும் உயிரைக் கொடுப்பவன் {ஜீவநன்} நீயே. உயிரற்ற பருப்பொருளில் உயிரை உட்செலுத்தும் புனித மந்திரங்களும், பிரணவமும் {மந்த்ரன்} நீயே. அமைதியான பார்வைகளைச் செலுத்துபவன் {சுபாக்ஷன்} நீயே. (அனைத்துப் பொருட்களையும் அழிப்பவனாக இருப்பதால்) மிகக் கடுமையானவன் {பஹுகர்க்கசன்} நீயே.(122-93) மதிப்புமிக்க எண்ணற்ற குணங்களையும், உடைமைகளையும் கொண்டவன் {ரத்நப்ரபூதன்} நீயே. சிவந்த உடல் கொண்டவன் {ரத்நாங்கன்} நீயே. நீ பருகுவதற்காகப் பல குளங்கள் நிறைவதால் பரந்த பெருங்கடல்கள் அனைத்தும் {மஹார்ணவநிபாநவித்} நீயே. உலக மரத்தின் வேர் {மூலன்} நீயே. பெருஞ்சிறப்புகளைக் கடந்து ஒளிர்பவனும், மிக அழகியவனும் {விசாலன்} நீயே. அமுதத்தின் வடிவம் {அம்ருதன்} நீயே. காரணம், விளைவு {காரியம்} ஆகிய இரண்டும் {வ்யக்தாவ்யக்தன்} நீயே. (பெரும் யோகியாக இருப்பதால்) தவப்பெருங்கடல் {தபோநிதி} நீயே.(123-94) இருப்பின் உயர்ந்த நிலைக்கு உயரச் செய்பவன் {ஆரோஹணன்} நீயே. அந்நிலையை ஏற்கனவே அடைந்தவன் {அதிரோஹன்} நீயே. தூய ஒழுக்கம், தூய செயல்கள் மற்றும் நோன்புகளுக்காகப் புகழ்பெற்றவன் {சீலதாரி} நீயே. (அறநடத்தையின் விளைவால்) பெரும்புகழ் கொண்டவன் {மஹாயசஸ்} நீயே. (ஆற்றல் மற்றும் துணிவின் வடிவமாக நீயே இருப்பதால்) படைகளின் ரத்தினம் {ஸேநாகல்பன்} நீயே. தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவன் {மஹாகல்பன்} நீயே. யோகம் நீயே. யுகங்கள் மற்றும் கல்பங்களால் அளக்கப்படும் நித்திய காலத்தை உண்டாக்குபவன் {யுகசரன்} நீயே. உயிரினங்கள் அனைத்தையும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்புபவன் {ஹரி} நீயே.(124-95)

(அடுத்தடுத்த யுகங்களில் வெளிப்படும் {யுகரூபத்தில்} அறம், மறம் மற்றும் அவற்றின் கலவைகளின் வடிவம்) {மஹாரூபன்} நீயே. பெரியவனும், வடிவமற்றவனும் {மஹாநாகஹநன்} நீயே. மதங்கொண்ட பெரும் யானையின் வடிவில் வாராணசி என்ற புனித நகரத்தை எதிர்த்து வந்த வலிமைமிக்க அசுரனைக் கொன்றவன் {வதன்} நீயே. காலனின் வடிவம் {ந்யாயநிர்வபணன்} நீயே. உயிரினங்கள்அனைத்தின் தகுதிகளுக்கு ஏற்ப அவற்றின் விருப்பங்களைக் கனியச் செய்பவன் {பாதன்} நீயே. {பண்டிதன்} நீயே. அணுகப்படக்கூடியவன் {அசலோபமன்} நீயே.(125-96) புலன்களின் உணர்வைக் கடந்த அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் {பஹுமாலன்} நீயே. தத்துவங்களை அறிந்தவன் (என்பதால் முற்றிலும் நிலையாக இருப்பவன்) {மஹாமாலன்} நீயே. இடைவிடாமல் அழகில் ஒளிர்பவன் {சுசீஹரஸுலோசநன்} நீயே. கழுத்தில் இருந்து பாதம் வரை நீளும் மாலைகளை அணிபவன் {விஸ்தாரன்} நீயே. சந்திரனைத் தன் அழகிய கண்களாகக் கொண்ட ஹரன் {லவணன்} நீயே. பரந்து விரிந்த உப்புப் பெருங்கடல் {கூபன்} நீயே. (கிருதம், திரேதம், துவாபரம் என்ற) மூன்று யுகங்கள் {த்ரியுகன்} நீயே. பிறருக்கான நற்பலன்கள் நிறைந்த தோற்றம் கொண்டவன் {ஸபலோதயன்} நீயே.(126-97) (சாத்திரங்கள், ஆசான் மற்றும் தியான வடிவங்களில்) மூன்று கண்களைக் கொண்டவன் {த்ரிலோசநன்} நீயே. (ஆதி பூதங்களின் நுண்வடிவங்களாக இருப்பதால்) மிக நுட்பமான வடிவங்களைக் கொண்டவன் {விஷண்ணாங்கன்} நீயே. குண்டலங்கள் அணிந்த காதுகளைக் கொண்டவன் {மணிவித்தன்} நீயே. சடாமுடி தரித்தவன் {ஜடாதரன்} நீயே. மூக்கொலியைக் குறிக்கும் (எழுத்தில்) புள்ளியாக இருப்பவன் {பிந்து} நீயே. ஹ என்ற மூச்சொலியைக் குறிக்கும் (எழுத்தில்) இரு புள்ளிகளாக இருப்பவன் {படைப்பவன்} {விஸர்க்கன்} நீயே. சிறந்த முகத்தைக் கொண்டவன் {ஸுமுகன்} நீயே. பகைவனின் அழிவுக்காகப் போர்வீரனால் ஏவப்படும் கணை {சரன்} நீயே. போர்வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் {ஸர்வாயுதன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கவல்ல பொறுமையுடன் கூடியவன் {ஸஹன்} நீயே.(127-98) அக மற்றும் புறச் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்துவதால் எழும் ஞானம் கொண்டவன் {நிவேதநன்} நீயே. இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்துவதன் விளைவால் வெளிப்படும் உண்மை {ஸுகாஜாதன்} நீயே. காந்தாரம் என்றழைக்கப்படும் உலகத்தில் இருந்து எழும் காதுக்கு மிக இனிய சுரம் {ஸுகந்தாரன்} நீயே. (பிநாகம்) என்றழைக்கப்படும் பெரும் வில்லைத் தரிப்பவன் {மஹாதநு} நீயே. அனைத்துப் பொருட்களையும் தாங்கும் தலைமையானவனாக இருப்பதல்லாமல் அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஆசைகளும் புத்தியும் {அண்ட அழிவு வரை செயல்மணத்தைக் காக்கும் தலைவன்} {கந்தபாலீபகவாந்} நீயே. செயல்கள் அனைத்தையும் உண்டாக்குபவன் {ஸர்வகர்மணாம்உத்தாநன்} நீயே.(128-99) அண்ட அழிவுக்காலத்தில் எழுவதும், பாற்குடத்தில் பாலைக் கடையும் பெண்ணின் கரத்தில் இருக்கும் மத்தைப் போல மொத்த அண்டத்தையும் கடையவல்லவனுமான காற்று {மந்தாநோபஹுலோவாயு} நீயே. முழுமையாக இருப்பவன் {ஸகலன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் காண்பவன் {ஸர்வலோசநன்} நீயே. உள்ளங்கைகளைத் தட்டுவதால் எழும் ஒலி {தலஸ்தாலன்} நீயே. உணவிருக்கும் பாத்திரமாக, அல்லது உணவாகப் பயன்படும் உள்ளங்கையைக் கொண்டவன் {கரஸ்தாலி} நீயே. கடினமான உடல் படைத்தவன் {ஊர்த்வஸம்ஹநநன்} நீயே. மிகப் பெரியவன் {மஹாந்} நீயே.(129-100)

குடையின் வடிவில் இருப்பவன் {சத்ரன்} நீயே. சிறந்த குடையைக் கொண்டவன் {ஸுச்சத்ரன்} நீயே. அனைத்து உயிரினங்களுடனும் அடையாளம் காணப்படுபவனாக நன்கறியப்பட்டவன் {விக்யாதோலோகன்} நீயே. இரண்டு அடியால் அண்டத்தை மறைத்து, மூன்றாவது அடிக்கு இடத்தைக் கேட்டவன் {ஸர்வாச்ரயக்ரமன்} நீயே. மொட்டைத்தலை கொண்டவன் {முண்டன்} நீயே. மிகக் கோர வடிவம் கொண்டவன் {விரூபன்} நீயே. முடிவற்ற திருத்தங்களுக்கு உட்பட்டு, அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமானவன் {விக்ருதன்} நீயே. சந்நியாசத்தின் குறியீடாக நன்கறியப்பட்ட தண்டத்தைக் கொண்டவன் {தண்டி} நீயே. குண்டத்தைக் கொண்டவன் {குண்டி} நீயே. செயல் வழிமுறைகளின் மூலம் அடையப்பட இயலாதவன் {விகுர்வணன்} நீயே.(130-101) பச்சை நிறக் கண்களைக் கொண்ட விலங்குகளின் மன்னனோடு (சிங்கத்தோடு) அடையாளம் காணப்படுபவன் {ஹர்யக்ஷன்} நீயே. திசைகள் அனைத்தின் வடிவம் {ககுபன்} நீயே. வஜ்ரதாரி {வஜ்ரி} நீயே. நூறு நாவுகளைக் கொண்டவன் {சதஜிஹ்வன்} நீயே. ஆயிரம் கால்களையும் {ஸஹஸ்ரபாத்}, ஆயிரம் தலைகளையும் கொண்டவன் {ஸஹஸ்ரமூர்த்தன்} நீயே. தேவர்களின் தலைவன் {தேவேந்த்ரன்} நீயே. தேவர்கள் அனைவருமாக அமைந்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. பேராசான் {குரு} நீயே.(131-102) ஆயிரங்கரங்களைக் கொண்டவன் {ஸஹஸ்ரபாஹு} நீயே. அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்பவன் {ஸர்வாங்கன்} நீயே. அனைவராலும் நாடப்படும் பாதுகாப்பு {சரண்யன்} நீயே. அனைத்து உலகங்களையும் படைத்தவன் {ஸர்வலோகக்ருத்} நீயே. புனிதத்தலங்கள் மற்றும் புண்ணிய நீர்நிலைகள் என்ற விடவங்களில் பாவங்கள் அனைத்தையும் கழுவும் பெரும் தூய்மையாளன் {பவித்ரன்} நீயே. மூன்று உயர்ந்த மந்திரங்களைக் கொண்டவன் {த்ரிக்குந்மந்த்ரன்} நீயே. (அதிதி மற்றும் கசியபரின் மகனும், உபேந்திரன் என்று அறியப்பட்ட குள்ள வடிவம் கொண்டவனும், அசுரன் பலியை வஞ்சித்து மூவுலகங்களின் அரசுரிமையைப் பெற்று தேவர்களின் தலைவனிடம் மீண்டும் கொடுத்த) இளையவன் {கநிஷ்டன்} நீயே. (ஹரிஹரன் என்றழைக்கப்படும் வடிவத்துடன் இருப்பதால்) கருப்பு மற்றும் பழுப்பு என்ற இரண்டாகவும் இருப்பவன் {கருஞ்சிவப்பு நிறமாக இருப்பவன்} {க்ருஷ்ணபிங்களன்} நீயே.(132-103) பிராமணர்களின் தண்டத்தை அமைப்பவன் {ப்ரம்மதண்டவிநிர்மாதா} நீயே. நூற்றுவக்கொல்லி {சதக்னி}, பாயக்கயிறு, ஈட்டி {சக்தி} ஆகியவற்றைத் தரித்தவன் {சதக்நீபாசசக்திமாந்} நீயே. ஆதித் தாமரையில் பிறந்தவன் {பத்மகர்ப்பன்} நீயே. பெரும் கருவறையைக் கொண்டவன் {மஹாகர்ப்பன்} நீயே. வேதங்களைத் தன் கருவறையில் கொண்டவன் {ப்ரம்மகர்ப்பன்} நீயே. அண்ட அழிவைத் தொடர்ந்து முடிவிலாதிருக்கும் நீரில் எழுபவன் {ஜலோத்பவன்} நீயே.(133-104) பிரகாச ஒளியின் கதிர்களுடன் கூடியவன் {கபஸ்தி} நீயே. வேதங்களைப் படைத்தவன் {ப்ரம்மக்ருத்} நீயே. வேத கல்வி {ப்ரம்மி} நீயே. வேதங்களின் பொருள் அறிந்தவன் {பிரம்மவித்} பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொண்டவன் {ப்ராம்மணன்} நீயே. பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்கள் அனைவரின் புகலிடம் {கதி} நீயே. அளவற்ற வடிவு கொண்டவன் {அநந்தரூபன்} நீயே. எண்ணற்ற உடல்களைச் சுமப்பவன் {நைகாத்மா} நீயே. தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவன் {திக்மதேஜாஸ்வயம்புவன்} நீயே.(134-105)

(சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) உலகளாவிய முக்குணங்களைக் கடந்த இயல்பாக அல்லது ஆன்மாவாக இருப்பவன் {ஊர்த்வகாத்மா} நீயே. ஜீவன்கள் அனைத்தின் தலைவன் {பசுபதி} நீயே. காற்று வேகம் கொண்டவன் {வாதரம்ஹஸ்} நீயே. மனோவேகம் கொண்டவன் {மநோஜவன்} நீயே. சந்தனக் குழம்பை எப்போதும் பூசிக் கொள்பவன் {சந்தநி} நீயே. ஆதி தாமரையின் நுனி {பத்மநாளாக்ரன்} நீயே. தெய்வீகப் பசுவான சுரபியைச் சபித்து மேன்மையான இடத்தில் இருந்து தாழ்ந்த இடத்திற்கு அனுப்பியவன் {ஸுரப்யுத்தரணன்} நீயே. உன் எல்லையைக் காண முடியாத பிரம்மன் {நரன்} நீயே.(135-106) பெரும் கர்ணிகார மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படுபவன் {கர்நிகாரமஹாஸ்ரக்வி} நீயே. நீல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் கொண்டவன் {நீலமௌலி} நீயே. பிநாகம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவன் {பிநாகத்ருத்} நீயே. இமயத்தின் மகளான உமையின் கணவன் {உமாபதி} நீயே. {உமாகாந்தன்}, தலையில் கங்கையைத் தாங்குபவன் {ஜாஹ்நவீத்ருக்} நீயே.  {உமாதவன் நீயே}.(136-107) (மூழ்கிப்போன பூமியை உயர்த்த பெரும்பன்றியின் வடிவை ஏற்றதன் விளைவால்) வலிமைமிக்கவன் {வரோவராஹன்} நீயே. பல்வேறு அவதாரங்களை ஏற்று அண்டத்தைப் பாதுகாப்பவன் {வரதன்} நீயே. துதிக்கத்தகுந்தவன் {வரேண்யன்} நீயே. இடிபோன்ற குரலில் வேதங்களை உரைத்த குதிரைத்தலையுடன் கூடிய ஆதி இருப்பு {ஸுமஹரஸ்வநன்} நீயே. பேரருளாளன் {மஹாப்ரஸாதன்} நீயே. பெரிதாக அடக்கி ஒடுக்குபவன் {தமநன்} நீயே. (ஆசைகளின் வடிவில் இருக்கும்) பகைவர்கள் அனைவரையும் கொல்பவன் {சத்ருஹன்} நீயே. (ஆண்பாதி, பெண்பாதியாக இருப்பதால்) வெள்ளையும், பழுப்புமாக இருப்பவன் {ச்வேதபிங்களன்} நீயே.(137-108) தங்கம் போன்ற நிறத்தையுடைய உடலைக் கொண்டவன் {பீதாத்மா} நீயே. (அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் உள்ளிட்ட) ஜீவனின் ஐந்து உறைகளைக் கடந்திருக்கும் தூய இன்பத்தின் வடிவம் {பரமாத்மா} நீயே. கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாவைக் கொண்டவன் {ப்ரயதாதத்மா} நீயே. பிரதானம் என்றழைக்கப்படும் அறியமை சார்ந்திருப்பதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்டதும், அண்டம் உண்டாகக் காரணமானதுமான அடித்தளம் {ப்ரதாநத்ருத்} நீயே. அனைத்துத் திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் {ஸர்வபார்ச்வமுகன்} நீயே. (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முக்கண்களைக் கொண்டவன் {த்ரியக்ஷன்} நீயே. (பேரளவில் அறத்தைக் கொண்டிருக்கும் விளைவால்) உயிரினங்கள் அனைத்திலும் மேன்மையானவன் {தர்மஸாதாரணவரன்} நீயே.(138-109) அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் ஆன்மா {சராசராத்மா} நீயே. (புலப்படமுடியாத) நுட்பமான ஆத்மாவின் வடிவம் {ஸூக்ஷ்மாத்மா} நீயே. கனிகளில் ஆசையற்று உயிரினங்களால் அடையப்படும் அறச்செயல்கள் அனைத்தின் கனியாக விடுதலை {முக்தி} என்ற வடிவில் இறவாமையை அருள்பவன் {அம்ருதகோவ்ருஷேச்வரன்} நீயே. தேவர்களின் தேவர்களுக்கும் ஆசான் {ஸாத்யரிஷி} நீயே. அதிதியின் மகனான வசு {ஆதித்யவஸு} நீயே. எண்ணற்ற ஒளிக்கதிர்களைக் கொண்டவனும் {விவஸ்வாந்}, அண்டத்தை உண்டாக்குபவனும் {ஸவிதா}, வேள்விகளில் பருகப்படும் சோமத்தின் வடிவமும் {அம்ருதன்} நீயே.(139-110)

புராணங்கள் மற்றும் புனித வரலாறுகள் பிறவற்றின் ஆசானான வ்யாஸன் நீயே. (புராணங்கள் மற்றும் பிற புனித வரலாறுகளோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) வியாசரின் மூளையில் உதித்த சுருக்கப்பட்ட மற்றும் சுருக்கப்படாத படைப்புகள் {ஸம்க்ஷேபோவிஸ்தரஸ்ஸர்க்கன்} நீயே. ஜீவன்களின் மொத்த தொகை {பர்யயோநரன்} நீயே. பருவகாலம் {ருது} நீயே. வருடம் {ஸம்வத்ஸரம்} நீயே. மாதம் {மாஸம்} நீயே. அரைத்திங்கள் {பக்ஷம்} நீயே. இக்காலங்களை நிறைவு செய்யும் புனித நாட்கள் {ஸங்க்யாஸமாபநன்} நீயே.(140-111) கலை நீயே. காஷ்டை நீயே. லவம் நீயே. மாத்திரை நீயே. முஹூர்த்தம் நீயே. அஹஸ் {பகலாய் இருப்பவன்} நீயே. க்ஷபம் நீயே. க்ஷணம் நீயே. அண்டமெனும் மரம் நிற்கும் மண் {விச்வக்ஷேத்ரம்} நீயே. (எங்கே உயிரினங்கள் அனைத்தும் எழுமோ அந்த மாயையுடன் கூடிய புலப்படாத சைதன்யத்தின் வடிவமாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் வித்து {ப்ரஜாபீஜம்} நீயே. மஹத்தத்துவம் {லிங்கம்} நீயே. (மஹத் தத்துவத்தை உண்டாக்கும் நனவுநிலையின் வடிவமாக இருப்பதால்) ஜீவனின் அரும்பு {ஆத்யநிர்க்கமம்} நீயே.(141-112) ஸத் அல்லது விளைவு {காரியம்} நீயே. அஸத் அல்லது காரணம் நீயே. (புலன்களுக்குப் பிடிபடும் வகையில்) புலப்படுபவன் {வ்யக்தம்} நீயே. (புலன்களுக்குப் பிடிபடாத வகையில்) புலப்படாமல் இருப்பவன் {அவ்யக்தம்} நீயே. தந்தை {பிதா} நீயே. தாயும் {மாதா} நீயே. பாட்டன் {பிதாமஹன்} நீயே. (தவங்களோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) சொர்க்கத்தின் வாயில் {ஸ்வர்க்கத்வாரம்} நீயே. (ஆசையோடு அடையாளம் காணப்படுபவனாக இருப்பதால்) அனைத்து உயிரினங்களின் உற்பத்தி வாயில் {ப்ரஜாத்வாரம்} நீயே. (எதனால் மட்டுமே பிரம்மத்தோடு கலக்கும் நிலைக்கு வழிநடத்த முடியுமோ அந்த ஆசையின்மையோடு அடையாளம் காணப்படுபவனாக இருக்கும் காரணத்தால்) விடுதலையின் {முக்தியின்} வாயில் {மோக்ஷத்வாரம்} நீயே. சொர்க்கத்தின் இன்பநிலைக்கு வழிவக்கும் அறச்செயல்கள் {த்ரிவிஷ்டபம்} நீயே.(142-113) நிர்வாணம் (அல்லது தனிப்பட்ட இருப்பைத் தவிர்த்த விடுதலை {முக்தி} நிலை) நீயே. (ஒவ்வொரு உயிரினத்திற்கும் அனைத்து வகை இன்பங்களையும் கொடுத்து) மகிழ்ச்சிப்படுத்துபவன் {ஹ்லாதநன்} நீயே. (அறவோரில் முதன்மையானோர் அடையும்) வாய்மையின் உலகம் {ப்ரம்மலோகன்} நீயே. (அறவோரால் அடையப்படும்) வாய்மையின் உலகத்தைக் காட்டிலும் மேன்மையான நிலை {பரகதி} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களைப் படைத்தவன் {தேவாஸுரவிநிர்மாதா} நீயே. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரபராயணன்} நீயே.(143-114) (பிருஹஸ்பதி மற்றும் சுக்ரனின் வடிவில் இருப்பதால்) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஆசானாக இருப்பவன் {தேவாஸுரகுரு} நீயே. எப்போதும் வெற்றியடைபவன் {தேவன்} நீயே. தேவர்களாலும், அசுரர்களாலும் எப்போதும் வழிபடப்படுபவன் {தேவாஸுரநமஸ்க்ருதன்} நீயே. யானையை வழிநடத்தும் மஹாமாத்ரத்தைப் போலத் தேவர்களையும், அசுரர்களையும் வழிநடத்துபவன் {தேவாஸுரமஹாமாத்ரன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அனைவருக்கும் உரிய புகலிடம் {தேவாஸுரகணாச்ரயன்} நீயே.(144-115)

(இந்திரன் மற்றும் விரோசனன் ஆகிய இருவரின் வடிவிலும் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைவனாக இருப்பவன் {தேவாஸுரகணாத்யக்ஷன்} நீயே. (தேவ மற்றும் தைத்திய படைத்தலைவர்களான கார்த்திகேயன் மற்றும் கேசியின் வடிவில் நீயே இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களின் போர்த்தலைவன் {தேவாஸுரகணாக்ரணி} நீயே. புலன்களைக் கடந்து ஒளிர்ந்து கொண்டிருப்பவன் {தேவாதிதேவன்} நீயே. (நாரதர் மற்றும் பிறரைப் போன்ற) தெய்வீக முனிவர்களின் வடிவில் இருப்பவன் {தேவரிஷி} நீயே. (பிரம்மன் மற்றும் ருத்திரனின் வடிவில் இருப்பதால்) தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு வரங்களை அளிப்பவன் {தேவாஸுரவரப்ரதன்} நீயே.(145-116) தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதயங்களை ஆள்பவன் {தேவாஸுரேச்வரன்} நீயே. (அண்டம் அழியும்போது) அண்டம் நுழையப் போகும் இடம் {விச்வன்} நீயே. தேவர்கள் மற்றும் அசுரர்களின் இதங்களை ஆள்பவனுக்கும் புகலிடமாக இருப்பவன் {தேவாஸுரமஹேச்வரன்} நீயே. தேவர்கள் அனைவராலுமான உடல்படைத்தவன் {ஸர்வதேவமயன்} நீயே. சிந்திக்கத் தனக்கு மேம்பட்ட எதுவும் இல்லாதவன் {அசிந்த்யன்} நீயே. தேவர்களின் உள் ஆன்மாவாக இருப்பவன் {தேவதாத்மா} நீயே. சுயத்தில் பிறந்தவன் {ஆத்மஸம்பவன்} நீயே.(146-117) அசைவற்ற பொருட்களின் வடிவம் {மாயையைப் பிளந்து வெளிப்படுபவன்} {உத்பித்} நீயே. மூன்று அடிகளில் உலகை மறைத்தவன் {த்ரிவிக்ரமன்} நீயே. பெருங்கல்வி கொண்டவன் {வைத்யன்} நீயே. களங்கமற்றவன் {விரஜன்} நீயே. ரஜஸ் குணத்தில் இருந்து விடுபட்டவன் {நீரஜன்} நீயே. அழிவைக் கடந்திருப்பவன் {அமரன்} நீயே. புகழ் துதிகளால் துதிக்கப்பட வேண்டியவன் {ஈட்யன்} நீயே. காலத்தைப் பிரதிபலிக்கும் தடுக்கப்பட முடியாத யானையின் ஆசான் {ஹஸ்தீச்வரன்} நீயே. கலிங்கர்களின் நாட்டில் வழிபடப்படும் புலிகளின் தலைவனுடைய வடிவம் {வ்யாக்ரன்} {வியாக்ரேஸ்வரன்} நீயே. (ஆற்றலில் ஏற்றம் கொண்டவனாக இருப்பதன் விளைவால்) தேவர்களுக்கு மத்தியில் சிங்கம் என்றழைக்கப்படுபவன் {தேவஸிம்மன்} நீயே. மனிதர்களில் முதன்மையானவன் {நரர்ஷபன்} நீயே.(147-118) பெரும் ஞானம் கொண்டவன் {விபுதன்} நீயே. வேள்விக் காணிக்கைகளில் முதல் பங்கை எடுத்துக் கொள்பவன் {அக்ரவரன்} நீயே. உணரப்பட முடியாதவன் {ஸூக்ஷ்மன்} நீயே. தேவர்கள் அனைவரின் மொத்தத் தொகை {ஸர்வதேவன்} நீயே. தவங்களால் மேம்பட்டிருப்பவன் {தபோமயன்} நீயே. எப்போதும் சிறந்த யோகத்தில் இருப்பவன் {ஸுயுக்தன்} நீயே. மங்கலமானவன் {சோபநன்} நீயே. வஜ்ரம் தரித்தவன் {வஜ்ரி} நீயே. பிராசங்கள் என்றழைக்கப்படும் பிறக்கும் தோற்றுவாய் {ப்ராஸாநாம்ப்ரபவன்} நீயே. பக்தர்களால் பல்வேறு வழிகளில் அடையப்படுபவன் {அவ்யயன்} நீயே.(148-119) (தேவர்ப்படைத்தலைவனான) குஹன் நீயே. இன்பநிலையின் உயர்ந்த எல்லை {காந்தன்} நீயே. படைப்போடு அடையாளம் காணப்படுபவன் {நிஜஸர்க்கன்} நீயே. (விடுதலையை {முக்தியை} அருளி) உயிரினங்களை மரணத்தில் இருந்து காப்பவன் {பவித்ரன்} நீயே. பிரம்மஹத்தி உட்பட அனைத்துப் பாவங்களையும் கழுவுபவன் {ஸர்வபாவநன்} நீயே. காளைகள் மற்றும் கொம்பு படைத்த பிற விலங்குகளின் வடிவில் இருப்பவன் {ஸ்ருங்கி} நீயே. மலைச்சிகரங்களை விரும்புபவன் {ஸ்ருங்கப்ரியன்} நீயே. சனிக்கோள் {பப்ரு} நீயே. யக்ஷர்களின் தலைவனான குபேரன் {ராஜராஜன்} நீயே. முற்றான களங்கமற்ற நிலை {நிராமயன்} நீயே.(149-120)

மகிழ்ச்சியை ஊக்கப்படுத்துபவன் {அபிராமன்} நீயே. தேவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தவன் {ஸுரகணன்} நீயே. அனைத்துப் பொருட்களையும் இடை நிறுத்துபவன் {தவிர்ப்பவன்} {விராமன்} நீயே. அனைத்து வாழ்வுமுறைகளின் தொடர்புடைய கடமைகள் அனைத்தும் {ஸர்வஸாதநன்} நீயே. நெற்றியிலும் ஒரு கண் கொண்டவன் {லலாடாக்ஷன்} நீயே. பளிங்குப் பந்தைப் போல அண்டத்தை வைத்து விளையாடுபவன் {விச்வதேவன்} நீயே. மானின் வடிவைக் கொண்டவன் {ஹரிணன்} நீயே. ஞானம் மற்றும் தவத்தின் வடிவிலான சக்தியுடன் கூடியவன் {ப்ரம்மவர்ச்சஸன்} நீயே.(150-121)(இமயம் மற்றும் மேரு முதலியவற்றின் வடிவிலான) அடையாத பொருட்கள் அனைத்தின் தலைவன் {ஸ்தாவராணாம்பதி} நீயே. பல்வேறு நோன்பு மற்றும் நியமங்களின் மூலம் புலன்களை அடக்கியவன் {நியமேந்த்ரியவர்த்தநன்} நீயே. நோக்கங்கள் அனைத்தும் நிறைவடைந்தவன் {ஸித்தார்த்தன்} நீயே. விடுதலையுடன் {முக்தியுடன்} அடையாளம் காணப்படுபவன் {ஸித்தபூதார்த்தன்} நீயே. நாங்கள் வழிபடுபவனிடத்தில் இருந்து வேறுபட்டவன் {அசிந்த்யன்} நீயே. வாய்மையையே தவமாகக் கொண்டவன் {ஸத்யவ்ரதன்} நீயே. தூய இதயம் கொண்டவன் {சுசி} நீயே.(151-122) (நோன்புகளுக்கான கனிகளைக் கொடுப்பவனாக இருக்கும் விளைவால்) நோன்புகள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவன் {வ்ரதாதிபன்} நீயே. (துரியத்தின் வடிவில் இருக்கும்) உயர்ந்தவன் {பரம்} நீயே, ப்ரம்மம் நீயே. பக்தர்களின் உயர்ந்த புகலிடம் {பக்தாநாம்பரமாகதி} நீயே. (விடுதலை கொண்டவனாக {முக்தனாக} இருப்பதால்) பந்தங்கள் அனைத்தையும் கடந்தவன் {விமுக்தன்} நீயே. லிங்க உடலில் இருந்து விடுபட்டவன் {முக்ததேஜஸ்} நீயே. அனைத்து வகைச் செழிப்புடன் கூடியவன் {ஸ்ரீமாந்} நீயே. பக்தர்களின் செழிப்பை அதிகரிப்பவன் {ஸ்ரீவர்த்தநன்} நீயே. இடையறாத மாற்றங்களுக்கு உட்படுபவன் {ஜகத்} நீயே[9].(152-123)ஓ! கிருஷ்ணா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்கத் தேவனுடைய பெயர்களை அவற்றின் முக்கியத்துவத்தின் வரிசையில் புகழ்ந்து பாடினேன். நமது துதிகள், வழிபாடு மற்றும் மதிப்புக்குத் தகுந்தவனும், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களாலும் புகழப்பட முடியாதவனும், முனிவர்களாலும் துதிக்கப்பட முடியாதவனும், அனைவரின் பெருந்தேவனுமான அந்த அண்டத் தலைவனின் புகழை வேறு எவனால் துதிக்க முடியும்?(153) எனினும், உயர்ந்த பலத்தைக் கொண்ட தேவனும், நுண்ணறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனுமான அந்த வேள்விகளின் தலைவனிடம் கொண்ட அர்ப்பணிப்பால், அவனிடம் இருந்து அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனைப் புகழ்ந்தேன்.(154) ஒருவனிடம் மங்கலத்தைப் பெருக்கும் இந்தப் பெயர்களால் அருள்நிலையின் பெருந்தேவனைப் புகழ்வதன் மூலம் அர்ப்பணிப்பு மிக்க ஆன்மா மற்றும் தூய இதயத்துடன் கூடிய ஒரு வழிபாட்டாளன் தன்னை {சுயத்தை} அடைவதில் வெல்கிறான்.(155)

பிரம்மத்தை அடையும் சிறந்த வழிமுறைகளை வெளிப்படுத்தும் ஒரு துதியாக இந்தப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. இந்தத் துதியின் துணையுடன் நிச்சயம் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்வான். முனிவர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் இந்தத் துதியைத் துதிப்பதன் மூலம் அந்த உயர்ந்த தேவனைப் புகழ்கின்றனர் {துதிக்கின்றனர்}.(156) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்டவரால் துதிக்கப்படும்போது, இவ்வாறு தன் புகழைப் பாடுவோரிடம் மஹாதேவன் நிறைவை அடைகிறான். அந்தச் சிறப்புமிக்கத் தேவன் தன் பக்தர்களிடம் எப்போதும் கருணை நிறைந்தவனாவான். எல்லாம் வல்லவனான அவன் தன்னை வழிபடுவோருக்கு விடுதலையை {முக்தியை} அளிக்கிறான்.(157) நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் {பக்தியும்} கொண்ட மனிதர்களில் முதன்மையானோர், உயர்ந்தவனும், நித்திய தேவனுமான ஈசானனின் {இந்தத்} துதியைக் கேட்டாலும், பிறருக்காக மதிப்புடன் உரைத்தாலும், அவர்கள் தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் கிடக்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும், நடக்கும் போதும், விழித்திருக்கும்போதும், கண் இமைகளைத் திறக்கும்போதும், அவற்றை மூடும்போதும் என அனைத்து நேரங்களிலும் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அவனை இவ்வாறே துதித்து, அவனைக் குறித்தே மீண்டும் மீண்டும் நினைத்து, தங்கள் சக மனிதர்களுக்கு மத்தியில் மதிப்பிற்குரியவர்களாகி பெரும் நிறைவையும், பேரின்பத்தையும் அடைவார்கள்.(158-161)

பல்வேறு வகைகளில் பல கோடி பிறவிகளின் போக்கில் ஓர் உயிரினம் தன் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்ளும்போதே, அவனது இதயத்தில் மஹாதேவனிடம் அர்ப்பணிப்பு {பக்தி} உண்டாகும்.(162) (அண்டத்தின்) மூலக்காரணனான பவனை வழிபடும் ஒவ்வொரு வழிமுறையையும் அறிந்த ஒருவனுடைய இதயத்தில் நற்பேற்றால் மட்டுமே அந்தப் பெருந்தேவனிடம் சிதறாத அர்ப்பணிப்பானது {பக்தியானது} முழுமையாக எழும்.(163) ஒரே நோக்கத்தைக் கொண்டதும், நடைமுறையில் ஒருபோதும் தடுக்கப்பட முடியாததுமான ருத்திரனிடம் கொள்ளும் களங்கமற்ற தூய அர்ப்பணிப்பானது தேவர்களிடம் அரிதாகக் காணப்பட்டாலும் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படவில்லை.(164) ருத்திரனின் அருளின் மூலமே மனிதர்களின் இதயங்களில் இத்தகைய அர்ப்பணிப்பு எழுகிறது. இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால், மஹாதேவனுடன் முழுமையாகத் தங்களை அடையாளம் காணும் மனிதர்கள், உயர்ந்த வெற்றியை அடைவதில் வெல்கிறார்கள்.(165)

தன்னை நாடுவோருக்கு அருளை எப்போதும் வழங்கும் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், முழு ஆன்மாவைத் தன்னிடம் செலுத்துவோரைப் பணிவன்புடன் இவ்வுலகத்தில் இருந்து மீட்கிறான்.(166) மறுபிறவியிலிருந்து உயிரினங்களைக் காக்கும் அந்தப் பெருந்தேவனைத் தவிர, பிற தேவர்கள் அனைவரும், மனிதர்களுக்குத் தவங்களைப் போல வேறு ஏதும் பலத்தின் ஊற்றுக்கண் இல்லாததால் அவற்றைத் தொடர்ந்து வீணாக்கச் செய்கின்றனர்.(167) ஆன்ம அமைதியைக் கொண்டவரும், காந்தியில் இந்திரனுக்கு ஒப்பானவருமான தண்டி, விலங்குத் தோல்களை உடுத்தியிருந்தவனும், இருப்பில் உள்ள மற்றும் இல்லாத பொருட்கள் அனைத்தின் தலைவனுமான அந்தப் பெருந்தேவனை இவ்வாறே துதித்தார்.(168) இந்தத் துதியை பிரம்மனே சுமந்திருந்தான் (தனக்குள் வைத்திருந்தான்). உண்மையில் பிரம்மன் சங்கரன் முன்னிலையிலேயே இதைத் துதித்தான். (பிரம்மத்தை அறிந்தவனாகவும், பிரம்மத்தை அறிந்தோரிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும் இருப்பதால்) பிராமணன் நீயே. எனவே, உன்னால் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.(169) இது பாவங்கள் அனைத்தையும் கழுவி தூய்மைப்படுத்தும். இது யோகத்தையும், விடுதலையையும் {முக்தியையும்}, சொர்க்கத்தையும், மனநிறைவையும் கொடுக்கும்.(170)

இந்தத் துதியைக் கொண்டு சிதறாத அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} சங்கரனைத் துதிப்பவன், சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளில் அர்ப்பணிப்புள்ளோரின் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள்.(171) ஒரே அர்ப்பணிப்புடன் இந்தத் துதியைக் கொண்டு தினமும் ஒரு வருடம் துதிக்கும் வழிபாட்டாளன் தான் விரும்பும் கதியை அடைவதில் வெல்கிறான்.(172) இந்தத் துதி பெரும் புதிரைக் கொண்டதாகும். இது தொடக்கத்தில் படைப்பாளனான பிரம்மனின் நெஞ்சத்தில் வசித்தது. பிரம்மன் இதைச் சக்ரனுக்குச் சொன்னான். சக்ரன் இதை மிருத்யுவுக்குச் சொன்னான்.(173) மிருத்யு இதை ருத்திரர்களுக்குச் சொன்னான். தண்டி ருத்திரர்களிடம் இருந்தே இதைப் பெற்றார். உண்மையில், தண்டி தமது கடுந்தவங்களுக்கு வெகுமதியாகப் பிரம்மலோகத்தில் இதைப் பெற்றார்.(174) தண்டி இதைச் சுக்கிரனுக்குச் சொன்னார், பிருகு குலச் சுக்கிரன் இதைக் கௌதமருக்குச் சொன்னார். ஓ! மதுவின் வழித்தோன்றலே, கௌதமர் தம் பங்குக்கு இதை வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார்.(175)

மனு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட நாராயணனுக்கு இதைச் சொன்னான். சாத்தியர்களில் ஒருவனாக எண்ணப்படுபவனும், குறைவில்லா மகிமை கொண்டவனும், சிறப்பு மிக்கவனுமான நாராயணன் இதை யமனுக்குச் சொன்னான்.(176) வைவஸ்வத யமன் இதை நசிகேதனுக்குச் சொன்னான். ஓ! விருஷ்ணி குலத்தவனே, நசிகேதன் இதை மார்க்கண்டேயருக்குச் சொன்னான்.(177) ஓ! ஜனார்த்தனா, என் நோன்புகள் மற்றும் நியமங்களுக்கு வெகுமதியாக நான் இதை மார்க்கண்டேயரிடம் இருந்து பெற்றேன். ஓ! பகைவர்களைக் கொல்பவனே, பிறரால் கேட்கப்படாத இந்தத் துதியை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(178) இத்துதி சொர்க்கத்திற்கு வழிவகுக்கும். இது நோய்களை விலக்கி, நீண்ட வாழ்நாளை அளிக்கும். இது {இந்தத் துதி} வேதங்களுக்கு இணக்கமானதும், உயர்ந்த புகழுக்குத் தகுந்ததுமாகும்” {என்றார் உபமன்யு}”[10].

(சாந்தி பர்வம் -285 பகுதியில் தக்ஷன் சிவனை ஆயிரத்தெட்டு பெயர்களால் துதித்ததும் சிவ சஹஸ்ர நாமாவளி என்று அழைக்கப்படுகிறது. வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் வரும் சிவ சஹஸ்ர நாமாவளி அதனுடன் ஒத்துப் போகிறது. முனிவர் உபமன்யு சொன்ன துதியை யுதிஷ்டிரனுக்குக் கிருஷ்ணன் நினைவுகூர்கிறான். இதுவும் சிவஸஹஸ்ரநாமாவளி என்றே அழைக்கப்படுகிறது. லிங்க புராணத்திலும் சிவஸஹஸ்ரநாமாவளி இடம்பெற்றிருக்கிறது. அஃது இந்தச் சிவஸஹஸ்ரநாமாவளியோடு ஒத்துப் போகிறது. மஹாபாரத அனுசாசன பர்வம் 17ம் பகுதியில் வரும் இத்துதியே உண்மையில் சிவஸஹஸ்ரநாமாவளியாக அங்கீகரிக்கப்படுகிறது.)கிருஷ்ணன் தொடர்ந்தான், “ஓ! பார்த்தரே, பிரம்மச்சரிய நோன்பை நூற்று, புலன்களைக் கட்டுப்படுத்தி, தூய இதயத்துடன் முழுமையாக ஒரு வருடத்திற்கு இந்தத் துதியைத் துதிப்பவன், ஒரு குதிரை வேள்வியின் கனிகளை அடைவதில் வெல்கிறான். தானவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், யாதுதானர்கள், குஹ்யர்கள் மற்றும் பாம்புகளால் அவனுக்கு {இத்துதியைத் துதிப்பவனுக்கு} எத்தீங்கையும் செய்ய முடியாது” {என்றான் கிருஷ்ணன்}.(179-180)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம்-பகுதி 3-ஸ்ரீ வியாசரின் ஸ்ரீ நாராயணீயம்!-

October 21, 2025

பிரம்மன் முதலிய தேவர்கள் தவமிருந்ததையும்; நாராயணன் அவர்களுக்கு வரமளித்ததையும், பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி அறங்களை நாராயணன் பிரம்மனுக்குச் சொன்னதையும் தமது சீடர்களுக்குச் சொன்ன வியாசர்…

சௌனகர் {சௌதியிடம்}, “வேதங்களையும், அதன் அங்கங்களையும் முழுமையாக அறிந்தவனும், சிறப்புமிக்கத் தேவனும், பலமிக்கவனுமான நாராயணன், ஒரே நேரத்தில் வேள்விகளைச் செய்பவனாகவும், அவற்றை அனுபவிப்பவனாகவும் எவ்வாறு இருக்கிறான்?(1) மன்னிக்கும் தன்மையுடன் கூடிய அவன், (தவிர்க்கும் தன்மையான) நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுகிறான். உண்மையில், நிவிருத்தியின் கடமைகளை அந்தப் பலமிக்கப் புனிதமானவனே விதித்திருக்கிறான்.(2) அவ்வாறிருக்கையில், பிரவிருத்தி அறத்தின் மூலம் விளையும் வேள்விப் பங்குகளைத் தேவர்கள் பலர் ஏன் எடுத்துக் கொள்கின்றனர்? தவிர்க்கும் அறத்தின் விதிகளைச் சிலர் பின்பற்றுகின்றனர், அவன் ஏன் தன் மனோநிலைக்கு முரணாகச் சிலரை படைத்திருக்கிறான்?(3) ஓ! சூதா, இந்த எங்கள் ஐயங்களை விலக்குவாயாக. இந்த ஐயம் நித்தியமானதாகவும், பெரும்புதிர் தொடர்புடையதாகவும் தெரிகிறது. (பிற) சாத்திரங்களுக்கு இணக்கமானவையும், நாராயணன் குறித்தவையுமான கதைகள் அனைத்தையும் நீ கேட்டிருக்கிறாய்” என்றார் {சௌனகர்}.(4)

சௌதி, “ஓ! சிறந்த சௌனகரே, வியாசரின் சீடரான வைசம்பாயனர், இக்காரியம் குறித்து ஜனமேஜயனால் கேள்வி கேட்கப்பட்டபோது சொன்னவற்றை உமக்குச் சொல்கிறேன்.(5) உயிரினங்கள் அனைத்தின் உள்ளார்ந்த ஆன்மாவாக இருப்பவனான நாராயணனின் மகிமையைக் கேட்டவனும், நுண்ணறிவும், ஞானமும் மிக்கவனுமான ஜனமேஜயன் சரியாக இக்காரியங்களைக் குறித்து வைசம்பாயனரிடம் கேட்டான்.(6)

ஜனமேஜயன் {வைசம்பாயனர்}, “பிரம்மன், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகியோருடன் கூடிய மொத்த உலகங்களும், செழிப்பை உண்டாக்குபவையாகச் சொல்லப்படும் செயல்களுடன் ஆழமான தொடர்புடையவையாகத் தெரிகின்றன.(7) ஓ! மறுபிறப்பாளரே, இருப்பை இல்லாமலாக்குவதும், உயர்ந்த நிலையுமான விடுதலை {முக்தி} நிலையானது உம்மால் சொல்லப்பட்டது. தகுதி, தகுதியின்மை ஆகிய இரண்டுமற்று விடுதலையடைபவர்கள் {முக்தியடைபவர்கள்}, ஆயிரம் கதிர்களைக் கொண்ட பெருந்தேவனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள் என நாம் கேட்கிறோம்.(8) ஓ! பிராமணரே, நித்தியமான விடுதலை அறத்தை {மோக்ஷ தர்மத்தைப்} பயில்வது மிகக் கடினமானதாகத் தெரிகிறது. இதிலிருந்து மாறுபடும் தேவர்கள் அனைவரும், வேள்வி நெருப்புகளிலும், இதே வழிமுறைகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் பிற காணிக்கைகளிலும், மந்திரங்களுடன் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள்.(9) மேலும், பிரம்மன், ருத்திரன், வலனைக் கொன்றவனான பலமிக்கச் சக்ரன் {இந்திரன்}, சூரியன், விண்மீன்களின் தலைவன் (சத்திரமாஸ்), காற்றின் தேவன் {வாயு}, நெருப்பின் தேவன் {அக்னி}, நீர்நிலைகளின் தேவன் {வருணன்}, (உயிரோட்டமான) அளவற்ற வெளி {ஆகாயம்}, (விழிப்புணர்வு கொண்ட) அண்டம், எஞ்சிய சொர்க்கவாசிகள் ஆகிய இவர்கள், தன் முயற்சியால் கொண்டுவரப்படும் விழிப்புடன் கூடிய இருப்பை அழிக்கும் வழிமுறையை அடைவது குறித்து அறியாதவர்களாக இருப்பதாகத் தெரிகிறது[1].(10,11) எனவே, அழிவற்ற, மாற்றமில்லாத பாதையை அவர்கள் அடையவில்லை என்பது உறுதியானதாகும். அந்தப் பாதையைவிட்டு விலகி, காலத்தால் அளக்கப்படும் விழிப்புடன் கூடிய இருப்புநிலைக்கு வழிவகுக்கும் பிரவிருத்தி அறத்தை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.(12) உண்மையில், நிலையற்ற வெகுமதிகளைக் கொடுக்கும் செயல்களுடன் பற்றுடைய இது பெருங்களங்கமாகும். ஓ! மறுபிறப்பாளரே, இந்த ஐயம் என் இதயத்தில் குத்திய வாளாக {தைத்த முள்ளாக} இருக்கிறது. இதுகுறித்த பழைய கதைகளைச் சொல்லி அஃதை அகற்றுவீராக.(13) ஓ! மறுபிறப்பாளரே, பல்வேறு வகை வேள்விகளில் மந்திரங்களின் துணையுடன் தேவர்களுக்கு அளிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளில் அவர்கள் தங்களுக்குரிய பங்குகளை எடுத்துக் கொள்வதாக எக்காரணத்தினால் சொல்லப்படுகிறது? மேலும் தேவர்கள் வேள்விகளில் ஏன் துதிக்கப்படுகின்றனர்?(14) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பிறர் செய்யும் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளின் பங்கை எடுத்துக் கொள்ளும் அவர்கள் யாருக்காகப் பெரும் வேள்விகளைச் செய்கிறார்கள்?” என்று கேட்டான்.(15)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நீ என்னிடம் கேட்ட இந்தக் கேள்வி ஓர் ஆழ்ந்த புதிர் தொடர்புடையதாகும். தவங்களைச் செய்யாதவனும், புராணங்களை அறியாதவனுமான எந்த மனிதனாலும் இதற்கு விரைவாகப் பதிலளிக்க முடியாது.(16) எனினும், வியாசர் என்று அழைக்கப்படுபவரும், தீவில் பிறந்தவரும், வேதங்களை வகுத்த பெரும் முனிவருமான எங்கள் ஆசான், முன்பொரு காலத்தில் எங்களால் கேள்வி கேட்கப்பட்டபோது சொன்னதை உனக்குச் சொல்கிறேன்.(17) சுமந்தர், ஜைமினி, உறுதியான நோன்புகளைக் கொண்ட பைலர், நான்காவதாக {வைசம்பாயனனாகிய} நான், ஐந்தாவதாக உகர் ஆகியோர் சிறப்புமிக்க வியாசரின் சீடர்களாக இருந்தோம்.(18) எண்ணிக்கையில் ஐவராக இருந்த நாங்கள் தற்கட்டுப்பாடு மற்றும் நோன்புகளில் தூய்மை கொண்டவர்களாகவும், கோபத்தையும் எங்கள் புலன்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தோம். எங்கள் ஆசான் மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட வேதங்களை எங்களுக்குக் கற்பித்து வந்தார்.(19) ஒரு காலத்தில், மலைகளில் முதன்மையானதும், சித்தர்களும், சாரணர்களும் வசித்து வந்த இடமும், இனிமை நிறைந்ததுமான மேருவின் சாரலில் வேத கல்வியில் நாங்கள் ஈடுபட்டு வந்தபோது, நீ இன்று வெளிப்படுத்திய இதே ஐயம் எங்கள் மனங்களில் எழுந்தது.(20) எனவே, நாங்கள் இது குறித்து எங்கள் ஆசானிடம் கேட்டோம். எங்கள் ஆசான் சொன்ன பதிலை நான் கேட்டேன். ஓ! பாரதா, அந்தப் பதிலை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன்.(21)

அறியாமையால் ஏற்படும் அனைத்து வகை இருளையும் அகற்றுபவரும், பராசரரின் மகனுமான வியாசர், தமது சீடர்களால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(22) “உண்மையில் நான் மிகக் கடுமையான தவங்களைச் செய்திருக்கிறேன். மனிதர்களில் சிறந்தவர்களே, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து நான் முழுமையாக அறிந்திருக்கிறேன்.(23) பாற்கடலின் கரைகளில் நான் வசித்திருந்தபோது, என் தவங்கள் மற்றும் புலன்களில் நான் கொண்டிருந்த கட்டுப்பாட்டின் விளைவால் நாராயணன் என்னிடம் நிறைவு கொண்டான். அந்தப் பெருந்தேவன் கொண்ட நிறைவின் விளைவால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைக் குறித்து முழுதுணரும் அறிவு என் மனத்தில் எழுந்தது.(24) உங்கள் மனங்களைக் கலக்கமடையச் செய்தும் இந்தப் பெரும் ஐயங்களைக் குறித்து முறையான வரிசையில் சொல்கிறேன் கேட்பீராக. ஞானக் கண் மூலம் நான் கல்பத்தின் தொடக்கத்தில் நேர்ந்தவை அனைத்தையும் கண்டேன்.(25) சாங்கியர்கள் மற்றும் யோகத்தை அறிந்தவர்கள் ஆகிய இருவரும் பரமாத்மா என்ற பெயரில் எவனை அழைக்கிறார்களோ, அவனே தன் செயல்களின் விளைவால் முதன்மையான புருஷனாகக் கருதப்படுகிறான். கல்விமான்களால் புலப்படாதது {அவ்யக்தம்} அல்லது பிரதானம் என்றழைக்கப்படும் பிரகிருதி அவனிலிருந்தே எழுகிறது.(26) பலமிக்கதான அந்தப் புலப்படாததிலிருந்தே உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்காக அநிருத்தன் என்றழைக்கப்படுபவன் எழுந்தான். அந்த அநிருத்தனே, உயிரினங்களுக்கு மத்தியில் பேரான்மா என்ற பெயரால் அறியப்படுகிறான்.(27) அந்த அநிருத்தனே புலப்படுபவனாகி {வியக்தனாகி}, பெரும்பாட்டனான பிரம்மனைப் படைத்தான். அனைத்து வகைச் சக்திகளையும் கொண்ட அநிருத்தனே, நனவுநிலை {அகங்காரம்} என்ற மற்றொரு பெயரால் அறியப்படுகிறான்.(28)

அந்த நனவுநிலையிலிருந்து {அகங்காரத்திலிருந்து} பூமி, காற்று, வெளி, நீர் மற்றும் ஐந்தாவதாக ஒளி என்ற ஐம்பெரும்பூதங்கள் எழுந்தன.(29) (எண்ணிக்கையில் ஐந்தான) பெரும்பூதங்களைப் படைத்த பிறகு அவன் அவற்றின் குணங்களைப் படைத்தான்[2]. பிறகு அவன் அந்தப் பெரும்பூதங்களைக் கலந்து உடல்கொண்ட பல்வேறு வடிவங்களைப் படைத்தான். அவர்களைச் சொல்கிறேன் கேட்பீராக.(31) மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, உயர் ஆன்ம வசிஷ்டர், சுயம்புவான மனு ஆகிய எண்மர் பிருகிருதியின் தனிமங்களாக அறியப்பட வேண்டும். உலகங்கள் அனைத்தும் இவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(31) அப்போது, உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், உயிரினங்கள் அனைத்தின் வெற்றிக்காக அங்கங்கள் அனைத்துடன் கூடிய வேதங்களையும், அங்கங்களோடு கூடிய வேள்விகளையும் படைத்தான். பிருகிருதியின் இந்த எட்டுத் தனிமங்களில் இருந்தே இந்தப் பரந்த அண்டம் எழுந்தது.(32) பிறகு, கோபம் எனும் கோட்பாட்டில் இருந்து ருத்திரன் எழுந்தான். உயிர் கொண்ட அவன், தன்னைப் போன்ற இன்னும் பத்து பேரைப் படைத்தான். இந்தப் பதினோரு ருத்திரர்களும், விகார புருஷர்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.(33) ருத்திரர்கள், (எட்டு) பிரகிருதிகள், தெய்வீகமான பல்வேறு முனிவர்கள் ஆகியோர் உயிர் பெற்று, அண்டத்தைத் தாங்குவதற்காகவும், அதன் இயக்கத்தை நோக்கில் கொண்டும் பிரம்மனை அணுகினார்கள்.(34)பெரும்பாட்டனிடம் பேசிய அவர்கள், “ஓ! புனிதமானவரே, ஓ! பெரும்பலமிக்கவரே, நாங்கள் உம்மால் படைக்கப்பட்டோம். ஓ! பெரும்பாட்டனே, எங்களில் எவரெவர் எந்தெந்த காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக.(35) எந்தக் குறிப்பிட்ட காரியங்களைக் கண்காணிப்பதற்காக எந்த அதிகாரம் உம்மால் படைக்கப்பட்டிருக்கிறது? எங்களில் எவர், எந்த வகை நனவுநிலையை {அகங்காரத்தைக்} கொண்டு, இவற்றில் எந்த அதிகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்?(36) எங்கள் அதிகாரத்திற்குத் தக்கப்படி கடமைகளையாற்ற எங்கள் ஒவ்வொருவருக்கும் எந்தெந்த அளவுக்குப் பலம் விதிக்கப்பட்டிருக்கிறது?” {என்று கேட்டனர்}. அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்}, பின்வரும் வழியில் அவர்களுக்கு மறுமொழி கூறினான்.(37)

பிரம்மன், “தேவர்களே, இக்காரியத்தைக் குறித்து என்னிடம் கேட்பதில் நீங்கள் நன்றாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருப்பீராக. உங்கள் கவனத்தில் உள்ள அதே காரியம் குறித்தே நானும் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.(38) மூவுலகங்களும் எவ்வாறு தாங்கப்பட வேண்டும்? எவ்வாறு அதை முன்னெடுக்க வேண்டும்? உங்களுடைய பலமும், என்னுடைய பலமும் எவ்வாறு கதியை நோக்கிப் பயன்படுத்தப்பட வேண்டும்?(39) நாம் அனைவரும் இந்த இடத்தை விட்டு அகன்று, உலகத்தின் சாட்சியாகவும், இருப்பில் உள்ளவர்களில் முதன்மையானவனுமான அந்தப் புலப்படாதவனிடம் {அவ்யக்தனிடம்} செல்வோம். எது நமக்கான நன்மை என்பதை அவன் நமக்குச் சொல்வான்” என்றான்.(40)

இதன்பிறகு, அந்தத் தேவர்களும், முனிவர்களும், மூவுலகங்களுக்கும் நன்மை செய்ய விரும்பி, பாற்கடலின் வடகரைக்குப் பிரம்மனுடன் சென்றனர்.(41) அங்கே வந்ததும் அவர்கள் வேதங்களில் பிரம்மன் அறிவித்தபடியே கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினர். அந்தக் கடுந்தவங்கள் மஹாநியமம் (நோன்புகள் மற்றும் நியமங்களில் முதன்மையானது) என்ற பெயரால் அறியப்பட்டன.(42) மேல் நோக்கிய கண்களுடனும், மேலுயர்த்திய கரங்களுடனும், நிலையான மனத்துடனும் அங்கே அவர்கள் மரக்கட்டைகளைப் போல அசையாதிருந்தனர்.(43) அவர்கள் ஆயிரம் தேவ வருடங்களுக்கு இந்தக் கடுந்தவங்களைச் செய்தனர். அந்தக் காலம் நிறைவடைந்ததும், வேதங்கள் மற்றும் அவற்றின் அங்கங்களுடன் இணைக்கமான இந்த இனிய வார்த்தைகளை அவர்கள் கேட்டனர்.(44)

அருளப்பட்டவனும், புனிதமானவனுமான அவன் {அவ்யக்தன்}, “தேவர்களே, பிரம்மனின் துணையுடன் கூடியவர்களும், தவச் செல்வத்தைக் கொண்டவர்களுமான முனிவர்களே, உங்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி மதித்து, இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன்.(45) உங்கள் இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிவேன். உண்மையில், உங்கள் சிந்தனைகள் மூவுலங்களின் நன்மைக்கானவையே. உங்கள் சக்தியையும், பலத்தையும் பெருக்கி, (செயல்களுக்கான ஒருதலைச்சார்பு கொண்ட) பிரவிருத்தியை உங்களுக்குக் கொடுப்பேன்.(46) தேவர்களே, என்னைத் துதிக்கும் விருப்பத்தில் நீங்கள் இந்தத் தவங்களைச் செய்திருக்கிறீர்கள். இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவர்களே, நீங்கள் மேற்கொண்ட அந்தத் தவங்களுக்கான சிறந்த கனிகளை இப்போது அனுபவிப்பீராக.(47) இந்தப் பிரம்மன் உலகங்கள் அனைத்தின் தலைவனாவான். பலம் கொண்ட அவன் உயிரினங்கள் அனைத்தின் பெரும்பாட்டனாவான். நீங்கள் தேவர்களில் முதன்மையானவர்களாகவும் இருக்கிறீர்கள். என் மகிமைக்காக நீங்கள் அனைவரும் குவிந்த மனங்களுடன் வேள்விகளைச் செய்வீராக.(48) நீங்கள் செய்யப்போகும் அந்த வேள்விகளின் காணிக்கைகளில் எப்போதும் எனக்கு ஒரு பங்கைக் கொடுப்பீராக. படைப்பின் தலைவர்களே, அதன் பிறகு உங்கள் ஒவ்வொருவருக்குமுரிய அதிகாரங்களையும், உங்கள் நன்மைக்காக விதிக்கப்பட்டவற்றையும் ஒப்படைப்பேன்” என்றான் {அவ்யக்தன்}.(49)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தேவர்களின் தேவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், பெரும் முனிவர்கள் மற்றும் பிரம்மன் ஆகியோர் அனைவரும், தங்கள் உடலில் மயிர்க்கூச்சம் ஏற்படும் வகையில் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(50) அவர்கள், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி விஷ்ணுவைக் கௌரவிப்பதற்கான ஒரு வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த வேள்வியில் பிரம்மனே கூட விஷ்ணுவுக்கான காணிக்கைகளில் ஒரு பகுதியை அர்ப்பணித்தான்.(51) பிரம்மனைப் போலவே தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் ஒவ்வொருவரும் அதே போன்ற பகுதிகளை அந்தப் பெருந்தேவனுக்குக் காணிக்கையாக அளித்தனர். இவ்வாறு பெருமதிப்புடன் விஷ்ணுவுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டும் கிருத யுகத்திற்காக விதிக்கப்பட்ட விதிகளின்படியே இருந்தன.(52) தேவர்கள், முனிவர்கள் மற்றும் பிரம்மன் ஆகியோர், அந்த வேள்வியில், சூரியனின் நிறத்தைக் கொண்டவனாகவும், இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவனாகவும், தமஸ் குணத்தின் எல்லையைக் கடந்திருப்பவனாகவும், பரந்தவனாகவும், அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவனாகவும், அனைத்தின் உயர்ந்த தலைவனாகவும், வரங்களை அளிப்பவனாகவும், பலங்கொண்டவனாகவும் அந்தப் பெருந்தேவனைத் துதித்தனர்.(53)

வரமளிப்பவனும், புலப்படாதவனும், உடலற்றவனுமான அந்தப் பெருந்தேவன் {நாராயணன்}, இவ்வாறு துதிக்கப்பட்டு, அங்கே கூடியிருந்த சொர்க்கத்தின் தேவர்களிடம்:(54) “இவ்வேள்வியில் உங்களால் அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் என்னை வந்தடைந்தன. நான் உங்கள் அனைவரிடமும் நிறைவுடன் இருக்கிறேன். நான் உங்களுக்கு வெகுமதிகளை அளிக்கப் போகிறேன். இருப்பினும், அவை நீங்கள் திரும்பி வரவேண்டிய கதிகள் நிறைந்தவையாகவே இருக்கும்[3].(55) தேவர்களே, நான் உங்களிடம் கொண்ட அன்பு மற்றும் என் அருளின் விளைவால், இந்த நாள் முதல், இதுவே உங்கள் தனித்துவமான சிறப்பியல்பாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு யுகத்திலும் பெரும் அளவிலான காணிக்கைளுடன் கூடிய வேள்விகளைச் செய்து, பிரவிருத்தியில் பிறக்கும் கனிகளை அனுபவிப்பவர்களாக இருப்பீர்கள்.(56) தேவர்களே, வேதங்களில் விதிகளின்படி வேள்விகளைச் செய்யப் போகும் மனிதர்கள், தங்கள் வேள்விக் காணிக்கைகளில் உங்கள் அனைவருக்குமுரிய பங்குகளைக் கொடுப்பார்கள்.(57) இந்த வேள்வியில் எவன் எந்தக் காணிக்கையைக் கொடுத்தானோ, அவன் (இத்தகைய வேறு வேள்விகளில்) இதே போன்ற பங்கைப் பெறுபவனாக வேத சூத்திரங்களில் அமைப்பேன்.(58) உங்கள் அதிகாரத்திற்குரிய காரியங்களைக் கவனிக்கப் படைக்கப்பட்ட நீங்கள், அந்த வேள்விகளில் நீங்கள் புறம் {காணிக்கைகளின்} பங்குகளைச் சார்ந்த உங்கள் பலத்துடன் உலகங்களைத் தாங்குவீர்களாக.(59)உண்மையில், நீங்கள் பல்வேறு உலகங்களில் நடைபெறும் சடங்குகள் மற்றும் நோன்புகளின் மூலம் பிருவிருத்தியின் கனிகளில் எழும் உங்கள் பலத்தைப் பெற்று அந்த உலகக் காரியங்களைத் தொடர்ந்து தாங்குவீராக.(60) மனிதர்களால் செய்யப்படும் வேள்விகளில் இருந்து உங்கள் பலத்தைப் பெறும் நீங்கள் என்னைப் பலப்படுத்துவீர்கள். இவையே உங்கள் அனைவருக்காகவும் நான் சிந்திப்பதாகும்.(61) இந்நோக்கத்திற்காகவே நான் வேதங்களையும், வேள்விகளையும், செடிகள் மற்றும் மூலிகைகளையும் படைத்திருக்கிறேன். பூமியில் மனிதர்களின் மூலம் இவற்றால் முறையாகத் தொண்டாற்றப்படும் தேவர்கள் நிறைவை அடைவார்கள்.(62) தேவர்களில் முதன்மையானவர்களே, இந்தக் கல்பத்தின் முடிவு வரை, பிரவிருத்தி அறத்தின் விளைவைச் சார்ந்திருக்கும் வகையில் உங்கள் அமைப்புகளை உண்டாக்கி, உங்கள் படைப்பை விதித்திருக்கிறேன். இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவர்களே, அவரவருக்குரிய அதிகாரத்தின்படி நீங்கள் மூவுலகங்களின் நன்மையை நாடுவதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீராக.(63) மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் ஆகிய இந்த ஏழு முனிவர்களும் {இந்த சப்தரிஷிகளும்} என் மனோவிருப்பத்தாலேயே படைக்கப்பட்டார்கள் {இவர்கள் என் மானஸபுத்திரர்கள்}. இவர்கள் வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானோராவார்கள். உண்மையில் அவர்கள் வேத ஆசான்களாக ஆவார்கள். வாரிசுகளை உண்டாக்கும் செயலுக்குத் தங்களை அர்ப்பணிப்பதையே இவர்கள் {சப்தரிஷிகளும்} நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதால் பிரவிருத்தி அறத்தில் பற்றுள்ளவர்களாகவே இவர்கள் இருப்பார்கள்.(65)

செயல்கள் மற்றும் நோன்புகளில் ஈடுபடும் உயிரினங்களுக்கு இதுவே நான் சொல்லும் நித்திய பாதையாகும். உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்கு அதிகாரம் படைத்த பலமிக்கத் தலைவன் அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான்.(66) ஸனர், ஸநத்ஸுஜாதர், ஸநகர், ஸநந்தனர், ஸநத்குமாரர், கபிலர், ஏழாவதாக ஸநாதனர்(67) ஆகிய இந்த ஏழு முனிவர்களும் {இந்த சப்தரிஷிகளும்} பிரம்மனின் ஆன்ம மகன்களாவர் {பிரம்மனின் மானஸ புத்திரர்களாவர்}. (கல்வி அல்லது முயற்சியைச் சார்ந்திராமலேயே) ஞானம் தானாக இவர்களை அடையும். இவர்கள் எழுவரும் நிவிருத்தி அறத்தில் பற்றுடையவர்களாவர். இவர்களே யோகத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானோராவார்கள். இவர்கள் சாங்கிய தத்துவத்தில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்களே கடமை குறித்த சாத்திரங்களின் ஆசான்களாக இருப்பார்கள், இவர்களே நிவிருத்தி அறத்தின் கடமைகளை அறிமுகம் செய்து, அவற்றை உலகங்களில் பாயச் செய்வார்கள்.(69)

புலப்படாததிலிருந்து (பிரகிருதியிலிருந்து) நனவுநிலையும் {அகங்காரமும்}, (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முப்பெரும் குணங்களும் உண்டாகின. பிரகிருதியைக் கடந்திருப்பவன் க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுகிறான்.(70) நானே அந்த க்ஷேத்ரஜ்ஞன் ஆவேன். செயல்களில் பற்றுடையோருக்குரிய பாதையானது, மறுபிறவிகளைக் கொண்டதாகும். அந்தப் பாதையில் ஒருவனால் திரும்பாத இடத்தை அடையமுடியாது. பல்வேறு உயிரினங்கள் பல்வேறு கதிகளுக்காகப் படைக்கப்படுகின்றன. சில பிரவிருத்தி பாதையைக் கருத்தில் கொண்டும், சில நிவிருத்தி பாதையைக் கருத்தில் கொண்டும் படைக்கப்படுகின்றன. ஓர் உயிரினம் எந்தப் பாதையைப் பின்பற்றுகிறோ, அதற்குரிய வெகுமதியையே அஃது அனுபவிக்கிறது. இந்தப் பிரம்மனே, உலகங்கள் அனைத்தின் ஆசானாவான். பலம் கொண்ட இவனே அண்டத்தைப் படைக்கிறான்.(71,72) அவனே உங்கள் தாயும், தந்தையும், பாட்டனும் ஆவான். என் ஆணையின் பேரில் அனைத்து உயிரினங்களுக்கு அவன் வரங்களை அளிக்கிறான்.(73) அவனது ஆணையின் பேரில் அவனது புருவத்தில் இருந்து உதித்தவனும், பலம் கொண்டவனுமான அவனுடைய மகன் ருத்திரன், படைக்கப்பட்டவை அனைத்தையும் தாங்குவான்.(74) நீங்கள் உங்களுக்குரிய அதிகாரங்களை அடைந்து, விதிப்படி உலகங்களின் நன்மையை நாடுவீராக. உலகங்கள் அனைத்திலும் சாத்திரச் செயல்பாடுகள் நடைபெறட்டும். இதில் எந்தத் தாமதமும் வேண்டாம்.(75)

தேவர்களில் முதன்மையானோரே, அனைத்து உயிரினங்களின் செயல்களையும், அதன்மூலம் அவை அடையப்போகும் கதிகளையும் நீங்களே விதிப்பீராக. உயிரினங்கள் அனைத்தும் வாழக்கூடிய கால அளவையும் நீங்களே நிர்ணயிப்பீராக.(76) யுகங்கள் அனைத்திலும் முதன்மையானதும், இப்போது நடைபெறுவதுமான இந்த யுகம், கிருதம் என்ற பெயரில் அறியப்பட வேண்டும். இந்த யுகத்தில் செய்யப்படும் வேள்விகளில் உயிரினங்கள் கொல்லப்படக்கூடாது. என் ஆணையன்றி வேறுவகையில் இது நடைபெறக்கூடாது.(77) இந்த யுகத்தில் அறம் முழுமையாகத் தழைக்கும். இதன் பிறகு திரேதம் என்றழைக்கப்படும் யுகம் நேரும். அந்த யுகத்தில் வேதங்கள் ஒரு பகுதியை இழக்கும். அவற்றில் மூன்று மட்டுமே நீடித்திருக்கும்.(78) அந்த {திரேத} யுகத்தில் செய்யப்படும் வேள்விகளில், விலங்குகள் புனித மந்திரங்களின் துணையால் காணிக்கையாக்கப்பட்ட பிறகு கொல்லப்படும். அறத்தைப் பொறுத்தவரையில் ஒரு பகுதியை இழந்து மூன்று பகுதிகள் மட்டுமே தழைக்கும்.(79) திரேதம் முடிந்ததும், துவாபரம் என்ற பெயரிலான கலப்பு யுகம் நேரும். அந்த யுகத்தில் அறம் இரண்டு பகுதிகளை இழக்கும், இரண்டு பகுதிகள் மட்டுமே தழைக்கும்.(80) துவாபரம் முடிந்ததும் நேரும் யுகம் திஷ் என்றழைக்கப்படும், அது தனக்கு முன்பு கலியை {கலிபுருஷனைக்} கொண்டுவரும். அறம் மூன்று பகுதிகளை இழக்கும். அனைத்து இடங்களிலும் ஒரேயொரு பகுதி மட்டுமே நீடித்திருக்கும்” என்றான் {நாராயணன்}.(81)

அந்தப் பெருந்தேவன் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, தேவர்களும், தெய்வீக முனிவர்களும் அவனிடம், “அந்த யுகத்தில் ஒவ்வொரு இடத்திலும் அறத்தின் நான்காவது பகுதி மட்டுமே நீடித்திருக்கும் என்றால், ஓ! புனிதமானவனே, நாங்கள் எங்கே செல்வோம்? என்ன செய்வோம்?” என்று கேட்டனர்.(82)

அதற்கு அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {நாராயணன்}, “தேவர்களில் முதன்மையானோரே, அந்த யுகத்தில், அனைத்து உயிரினங்களிடமும் கருணை நிறைந்த கடமைகளின் துணையுடன் எங்கெல்லாம் வேதங்கள், வேள்விகள், தவங்கள், வாய்மை, தற்கட்டுப்பாடு ஆகியவை அப்போதும் நீடித்திருக்குமோ அத்தகைய இடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும். பாவத்தால் உங்களை ஒருபோதும் தீண்ட முடியாது” என்றான்”.(83)

வியாசர் தொடர்ந்தார், “அந்தப் பெருந்தேவனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட தேவர்களும், அவர்களுடன் கூடிய முனிவர்கள் அனைவரும், அவனுக்குத் தலைவணங்கிய பிறகு, தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்றனர்.(84) சொர்க்கவாசிகள் அந்த இடத்தைவிட்டு அகன்ற பிறகு, அப்போது அநிருத்தனின் வடிவில் வசித்திருந்த அந்தப் பெருந்தேவனைக் காணும் விருப்பத்தில் அங்கேயே இருந்தான்.(85) அந்தத் தேவர்களில் முதன்மையானவன் ஒரு பெரிய குதிரைத் தலையைக் கொண்ட வடிவை ஏற்றுப் பிரம்மனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். வேதங்களையும், அதன் அங்கங்களையும் உரைத்தபடியே அவன் ஒரு கமண்டலத்துடனும், திரிதண்டத்துடனும், பிரம்மனின் முன்னிலையில் தோன்றினான்.(86) உலகங்கள் அனைத்தையும் படைப்பவன் {பிரம்மன்}, அளவிலா சக்தி கொண்ட அந்தப் பெருந்தேவனைக் குதிரைத் தலை மகுடம் சூட்டப்பட வடிவில் கண்டு, அந்த வரமளிக்கும் தலைவனைத் தலைவணங்கி வழிபட்டு, அவனது முன்னிலையில் மதிப்புடன் கரங்கூப்பி நின்றான். அந்தப் பெருந்தேவன் பிரம்மனை ஆரத்தழுவி இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்.(88)

அந்தப் புனிதமானவன் {அஸ்வசிரஸுடன் கூடிய பெருந்தேவன்}, “ஓ! பிரம்மாவே, உயிரினங்கள் பின்பற்றவேண்டிய செயல் நடைமுறைகளைக் குறித்துச் சிந்திப்பாயாக. நீயே அண்டத்தின் தலைவனாகவும், ஆசானாகவும் இருக்கிறாய். உன் மேல் சுமையை நிறுத்திபிறகு விரைவில் நான் கவலையில் இருந்து விடுபடுவேன்.(89) எனினும், தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் கடினமான நிலை ஏற்படும் நேரங்களில், அந்த நெருக்கடி நிலையின் முக்கியத்துவத்தை நான் புரிந்து கொள்ளும் வகையிலான வடிவங்களில் வந்து பிறப்பேன் {அவதாரம் எடுப்பேன்}” என்றான்.(90)

இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, குதிரைத் தலையைக் கொண்ட அந்த மகத்தான வடிவம் அங்கேயே, அப்போதே மறைந்தது. அவனது ஆணையை ஏற்ற பிரம்மனும் விரைவில் தன் உலகத்திற்குச் சென்றான்.(91) இதனாலேயே, ஓ! அருளப்பட்டவர்களே, தொப்புளில் தாமரையைக் கொண்ட அந்த நித்திய தேவன், வேள்விகளில் முதல் பங்கை ஏற்பவனாகி, அதன் காரணமாகவே வேள்விகள் அனைத்தையும் நித்தியமாகத் தாங்குபவன் என்றழைக்கப்படுகிறான்.(92) அழிவில்லாத கனிகளை விரும்பும் உயிரினங்கள் எந்தக் கதியை அடைய விரும்புகின்றனவோ அந்தக் கதியைக் கொண்ட நிவிருத்தி அறத்தையே அவன் பின்பற்றுகிறான். அதே நேரத்தில் அண்டத்தில் பல்வேறு கருத்துகளைக் கொடுக்கும் நோக்கத்தில் அவனே பிறருக்காகப் பிரவிருத்தி அறத்தையும் விதித்தான்.(93) இருப்பிலுள்ள படைக்கப்பட்ட அனைத்திற்கும் அவனே தொடக்கமும், நடுநிலையும், முடிவுமாக இருக்கிறான். அவனே அவர்களது படைப்பாளனாகவும், தியானிக்கத் தகுந்து பொருளாகவும் இருக்கிறான். செயல்படுபவனாகவும், செயலாகவும் அவனே இருக்கிறான். யுக முடிவில் அண்டத்தைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டு, உறங்கச் சென்று மற்றொரு யுகம் தொடங்கும்போது மீண்டும் அண்டத்தைப் படைக்கிறான்.(94)

உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், முக்குணங்களைக் கடந்தவனும், பிறப்பற்றவனும், அண்டமே வடிவானவனும், சொர்க்கவாசிகள் அனைவரின் வசிப்பிடமாகவும், புகலிடமாகவும் இருப்பவனுமான அந்தச் சிறப்புமிக்கவனை நீங்கள் அனைவரும் வணங்குவீராக.(95) அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனாகவும், ருத்திரர்களின் தலைவனாகவும், ஆதித்தியர்கள் மற்றும் வசுக்களின் தலைவனாகவும் உள்ள அவனை நீங்கள் வணங்குவீராக.(96) அசுவினிகளின் தலைவனும், மருத்துகளின் தலைவனும், வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்விகள் அனைத்தின் தலைவனும், வேதாங்கங்களின் தலைவனுமான அவனை நீங்கள் வணங்குவீராக.(97) பெருங்கடலில் எப்போதும் வசிப்பவனும், ஹரி என்றழைக்கப்படுபவனும், தர்ப்பைப் புற்களைப் போன்ற முடியைக் கொண்டவனுமான அவனை நீங்கள் வணங்குவீராக. அமைதி மற்றும் நிலையமைதியாக இருப்பவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் மோக்ஷ அறத்தைப் புகட்டுபவனுமான அவனை வணங்குவீராக.(98) தவங்கள், அனைத்துவகைச் சக்திகள், புகழ் ஆகியவற்றின் தலைவனும், வாக்கின் தலைவனும், ஆறுகளின் தலைவனுமான அவனை வணங்குவீராக.(99) கபர்தின் {சடையுள்ளவன்} என்றழைக்கப்படுபவனும், பெரும் பன்றியும், ஒற்றைக் கொம்புடன் கூடிய குதிரையும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், சூரியனும், நன்கறியப்பட்ட குதிரைத் தலையைக் கொண்டவனும், எப்போதும் நான்கு வகை வடிவங்களில் வெளிப்படுபவனுமான அவனை வணங்குவீராக.(100) வெளிப்படாதவனும், அறிவால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியாதவனும், அழியத்தக்கதாகவும், அழிவில்லாததாகவும் இருப்பவனுமான அவனை வணங்குவீராக. மாற்றமில்லாதவனாக இருக்கும் அந்த உயர்ந்த தேவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.(101) அவன் ஞானக் கண்ணின் துணையால் மட்டுமே அறிய முடிந்த உயர்ந்த தலைவனாக இருக்கிறான். இவ்வாறு, பழங்காலத்தில் ஞானக்கண்ணின் துணையால் நான் அந்த முதன்மையான தேவனைக் கண்டேன்.(102) சீடர்களே, நீங்கள் கேட்ட அனைத்தையும் சொல்லிவிட்டேன். நீங்கள் என் சொற்களின்படி செயல்பட்டு, ஹரி என்றழைக்கப்படும் அந்த உயர்ந்த தலைவனுக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றுவீராக. வேத சொற்களில் அவன் புகழைப் பாடித் துதித்து, முறையான சடங்குகளின்படி அவனை வழிபடுவீராக” என்றார் {வியாசர்}”.(103)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வேதங்களைத் தொகுத்தவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான அவர், இது குறித்து எங்களால் கேட்கப்பட்ட போது இவ்வாறே சொன்னார். உயர்ந்த அறவனோனான அவரது மகனும் {சுகரும்}, சீடர்கள் {நாங்கள்} அனைவரும் இஃதை அவர் சொன்னபோது கேட்டுக் கொண்டிருந்தோம்.(104) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, எங்கள் ஆசானும், நாங்களும், நான்கு வேதங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரிக்குகளால் அந்தப் பெருந்தேவனை {நாராயணனைத்} துதித்தோம்.(105) இவ்வாறே நீ கேட்டது குறித்த அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். ஓ! மன்னா, தீவில் பிறந்தவரான எங்கள் ஆசான் இவ்வாறே எங்களுக்குச் சொன்னார்.(106)

“அந்தப் புனிதமான தலைவனை வணங்குகிறோம்” என்ற வார்த்தைகளை எவன் சொல்கிறானோ, குவிந்த கவனத்துடன் இந்த உரையாடலை எவன் கேட்கிறானோ, எவன் படிக்கிறானோ, எவன் பிறருக்குச் சொல்கிறானோ,(107) அவன் புத்தியும், உடல்நலமும் கொண்டவனாகவும், அழகையும், பலத்தையும் உடையவனாகவும் ஆவான். நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த நோயில் இருந்து அவன் விடுபடுவான்; கட்டுகளில் {பந்தங்களில்} அகப்பட்டிருந்தால் அந்தக் கட்டுகளில் இருந்து அவன் விடுபடுவான். ஆசைகளைப் பேணி வளர்க்கும் மனிதன், (இதன் மூலம்) தன் விருப்பங்கள் அனைத்தும் கனியப்பெற்று, நீண்ட வாழ்நாளையும் எளிதாக அடைவான்.(108)

ஒரு பிராமணன் இதைச் செய்வதால் வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாவான். ஒரு க்ஷத்திரியன் இதைச் செய்வதால் வெற்றியால் மகுடம் சூட்டப்படுவான். ஒரு வைசியன் இதைச் செய்வதால் பெரும் லாபங்களையும், ஒரு சூத்திரன் இதைச் செய்வதால் பேரின்பத்தையும் அடைவார்கள்.(109) மகனற்ற மனிதன் ஒரு மகனை அடைவான். கன்னிப்பெண் விரும்பத்தக்க கணவனை அடைவாள். கருவுற்ற பெண்மணி {இதைச் செய்தால்} ஒரு மகனை ஈன்றெடுப்பாள்.(110) மலட்டுப் பெண்ணும் கருவுற்று, மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என்ற செல்வத்தை அடைவாள். பயணத்தில் இந்த உரையை வரிசை மாறாமல் உள்ளடியே கூறுபவன், தன் வழியில் எந்தத் தடங்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாகச் செல்வான். உண்மையில், ஒருவன் இந்த உரையைப் படிப்பதாலோ, உரைப்பதாலோ {கேட்பதாலோ}, தான் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவான்.(111) நிறைவான முடிவைக் கொண்டதும், இருப்பிலுள்ள அனைத்திலும் முதன்மையான உயர்ந்த ஆன்மாவின் {பரமனின்} குணங்களைச் சுமந்திருப்பதுமான அந்தப் பெரும் முனிவரின் {வியாசரின்} இந்த வார்த்தைகளையும், முனிவர்களின் பெருங்கூட்டமும், சொர்க்கவாசிகளும் {தேவர்களும்} சொல்லும் இந்த உரையைக் கேட்டுப் பரமனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் பெரும் மகிழ்ச்சியை அடைவார்கள். {இது வியாஸமகரிஷியின் உறுதியான வார்த்தை}” {என்றார் வைசம்பாயனர்}.(112)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம்-பகுதி 2-ஸ்ரீ பராசர கீதை–

October 21, 2025

கர்மபலன்! – சாந்திபர்வம் பகுதி – 291-நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இதன்பிறகு எங்களுக்கு நன்மையானது எது என்பதை எனக்குச் சொல்வீராக. ஓ! பாட்டா, அமுதம் போல எனக்குத் தோன்றும் உமது வார்த்தைகளால் என் தாகம் தீரவில்லை.(1) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! வரங்களை அளிப்பவரே, எந்த நற்செயல்களை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையை அடைவதில் வெல்கிறான்?” என்று கேட்டான்.(2)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட மன்னன் ஜனகன், உயர் ஆன்ம பராசரரிடம் என்ன கேட்டான் என்பதை உனக்குச் சொல்கிறேன்.(3)

ஜனகன் {பராசரரிடம்}, “இம்மையிலும், மறுமையிலும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையளிப்பது எது? இது தொடர்பாக அறியப்பட வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், ஒவ்வொரு அறத்தின் விதிகளையும் அறிந்தவருமான பராசரர்[1], மன்னனுக்கு உதவ விரும்பி இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(5)பராசரர் {ஜனகனிடம்}, “செயல்களால் ஈட்டப்படும் அறமே இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையைக் கொடுக்கும். அறத்தைவிட உயர்ந்ததேதும் கிடையாது எனப் பழங்காலத்துத் தவசிகள் சொல்லியிருக்கின்றனர்.(6) அறக்கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் சொர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனகா}, உடல் கொண்ட உயிரினங்களின் அறமானது, செயல்கள் குறித்து (சாத்திரங்களில் விதிக்கப்பட்ட) விதிகளில் இருக்கிறது. பல்வேறு வாழ்வுமுறைகளில் உள்ள நல்ல மனிதர்கள் அனைவரும், அந்த அறத்திலேயே தங்கள் நம்பிக்கையை நிறுவி தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுகின்றனர்[2].(7) ஓ! குழந்தாய், இவ்வுலகில் நான்கு வகை வாழ்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. (கொடைகளை ஏற்கும் பிராமணர்கள்; வரிகளைப் பெறும் க்ஷத்திரியர்கள்; உழவைச் செய்யும் வைசியர்கள், தொண்டாற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வர்ணங்களே அந்த நான்கு வாழ்வு வகைகளாகும்). மனிதர்கள் எங்கே வாழ்கின்றனரோ அங்கே அவர்களை ஆதரிக்கும் வழிமுறைகள் தோன்றுகின்றன.(8) அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களைப் பல்வேறு வழிகளில் நிறைவேற்றும் உயிரினங்கள், ஐம்பூதங்களுக்குள் கரைந்து போகும்போது {தங்கள் அழிவின் போது}, பல்வேறு கதிகளை அடைகின்றன[3].(9) வெங்கலப்பத்திரங்கள், நீர்மமாக்கப்பட்ட தங்கத்திலோ, வெள்ளியிலோ ஊறவைக்கபடும்போது அந்த உலோகங்களின் வண்ணத்தைப் பற்றிக் கொள்வதைப் போலவே முற்பிறவி செயல்களையே முற்றாகச் சார்ந்திருக்கும் ஓர் உயிரினமும், அந்தச் செயல்களின் தன்மையிலிருந்து தன் வண்ணத்தை ஏற்றுக் கொள்கிறது.(10) விதையில்லாமல் ஏதும் முளைக்க முடியாது. மகிழ்ச்சிக்கு வழிவகுக்கவல்ல செயல்களை நிறைவேற்றாமல் எவனும் மகிழ்ச்சியை அடைய முடியாது. ஒருவனுடைய உடல் (அடிப்படை பூதங்களுக்குள்) கறைந்து போகும்போது (அழிவடையும்போது), அவன் முற்பிறவி நற்செயல்களின் விளைவால் மட்டுமே மகிழ்ச்சியை அடைகிறான்.(11)ஓ! குழந்தாய், ஓர் ஐயுறுவாதி, “விதியின் விளைவெனவோ, முற்பிறவிகளில் செய்த அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களின் விளைவெனவோ இவ்வுலகில் எதையும் நான் காணவில்லை. {அறிந்ததைக் கொண்டு, அறியாததைக் குறித்த கருத்தை அடையும்} ஊகத்தால் இருப்பையோ, விதியின் செயல்பாட்டையோ நிறுவமுடியாது[4]. தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர் (தங்கள் முற்பிறவி செயல்களால் அல்லாமல்) தங்கள் சொந்த இயல்பின் விளைவாலேயே அந்த நிலையை அடைந்தார்கள்.(12) மனிதர்கள் முற்பிறவியில் தாங்கள் செய்த செயல்களை அடுத்தப் பிறவியில் நினைவுகூர்வதில்லை. எந்தக் குறிப்பிட்ட பிறவியிலும் அடையப்பட்ட கனிகளை விளக்குவதற்காக, முற்பிறவியில் செய்யப்பட்டதாக நான்கு வகைச் செயல்களின் பெயர்களையே எப்போதும் குறிப்பிடுகின்றனர்[5].(13) வேதங்களையே அதிகாரமாகக் கொண்ட தீர்மானங்கள், இவ்வுலக மனிதர்களின் நடத்தையை ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும், மனிதர்களின் மனங்களை அமைதியடையச் செய்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஓ குழந்தாய், (ஐயுறுவாதி தொர்ந்து கொண்டிருக்கிறார்), உண்மை ஞானம் கொண்ட மனிதர்கள் சொல்பவற்றை இவற்றால் பிரதிபலிக்க முடியாது” {என்று ஓர் ஐயுறுவாதி சொல்கிறான்}.(14) இந்தக் கருத்துத் தவறானதாகும். உண்மையில், கண், மனம், நாக்கு மற்றும் தசைகளால் ஒருவன் செய்யும் நான்கு வகைச் செயல்களில் உள்ள கனிகளையே அவன் அடைகிறான்[6].(15)ஓ! மன்னா, ஒரு மனிதன் தன் செயல்களின் கனியாக முழு மகிழ்ச்சியை அடைகிறான், சில வேளைகளில் அதே வளியில் துன்பத்தை அடைகிறான், சிலவேளைகளில் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் சேர்ந்தே அடைகிறான். {செய்யப்படும் செயல்கள்} அறமோ {புண்ணியமோ}, பாவமோ செயல்கள் (அனுபவக்கப்படாமலோ, அவற்றின் கனிகளைத் தாங்கிக் கொள்ளாமலோ) ஒருபோதும் அழிவதில்லை[7].(16) ஓ! குழந்தாய், சிலவேளைகளில் நற்செயல்களால் உண்டாகும் மகிழ்ச்சி மறைக்கப்படும். வாழ்வெனும் கடலில் மூழ்கும் மனிதனின் கவலைகள் மறையும் வரை அது {மகிழ்ச்சி} வெளிப்படாது.(17) கவலை (பொறுத்துக் கொள்வதன் மூலம்) தீர்ந்த பிறகு, ஒருவன் தன் நற்செயல்களை (அதன் கனிகளை) அனுபவிக்கத் தொடங்குகிறான். ஓ மன்னா, நற்செயல்களின் கனிகள் தீர்ந்ததும், பாவச் செயல்களின் கனிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதை அறிவாயாக.(18) தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, பொறுமை, சக்தி, நிறைவு, பேச்சில் வாய்மை, பணிவு, தீங்கிழையாமை, வியசனம் என்றழைக்கப்படும் தீச்செயல்களில் இருந்து விடுதலை, புத்திக்கூர்மை ஆகிய இவையே மகிழ்ச்சியை உண்டாக்குபவை.(19) எந்த உயிரினமும், நற்செயல்கள் அல்லது தீச்செயல்களின் கனிகளை நித்தியமாக அனுபவிப்பதில்லை. ஞானம் கொண்ட மனிதன், தன் மனத்தைத் திரட்டுவதிலும், நிலைக்கச் செய்வதிலும் முனைப்பைச் செலுத்த வேண்டும்.(20)ஒருவன் மற்றொருவனின் நற்செயல்களையோ, தீச்செயல்களையோ ஒருபோதும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ முடியாது. உண்மையில், அவன் தான் செய்யும் செயல்களின் கனிகளை மட்டுமே இன்புறவும், பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்.(21) எனினும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்று கொள்வோர் முற்றிலும் வேறுபட்ட பாதையில் நடக்கிறார்கள்.(22) அடுத்தவன் செய்வதால், தானும் நிந்திகக்கூடிய செயலை ஒருவன் செய்யக்கூடாது. உண்மையில், பிறரைக் கண்டிக்கும் செயலைத் தானே செய்வதின் மூலம் அவன் பரிகாசத்தையே ஈட்டுவான்.(23) துணிவற்ற க்ஷத்திரியன், அனைத்து வகை உணவையும் உண்ணும் பிராமணன், (உழவு மற்றும் வர்த்தகக் காரியங்களில்) முயற்சியற்ற வைசியன், சோம்பலுடன் கூடிய (எனவே, உழைப்பை வெறுக்கும்) சூத்திரன், நன்னடத்தை இல்லாத கல்விமான், அறவொழுக்கமற்ற உயர்குடி பிறவி, வாய்மையில் இருந்து வீழ்ந்த பிராமணன், கற்பற்ற, தீய பெண்,(24) பற்றுகளைக் கொண்ட யோகி, தனக்காக மட்டுமே சமைத்துக் கொள்ளும் ஒருவன், விவாதத்தில் ஈடுபடும் மூடன், மன்னன் இல்லாத நாடு, யோகத்தில் ஈடுபடாதவனும், குடிமக்களிடம் பற்றைப் பேணி வளர்க்காதவனுமான மன்னன் ஆகிய இவர்கள் அனைவரும் பரிதாபத்திற்குரியவர்கள்” என்றார் {பராசரர்}.(25)

தற்கட்டுப்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 292-நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதன் தொடர்ச்சியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.

பராசரர் {ஜனகனிடம்}, “மனத்துடன் கூடிய உடலெனும் இந்தத் தேரை அடைந்து, ஞானம் எனும் கடிவாளத்தைக் கொண்டு, புலன்நுகர் பொருட்களெனும் குதிரைகளைக் கட்டுப்படுத்தும் மனிதனை நுண்ணறிவு கொண்டவன் {அவன் புத்திமான்} என நிச்சயம் கருதலாம்.(1) ஓ! மறுபிறப்பாளனே, தற்சார்புடைய மனம் கொண்டவனும், வாழ்வாதார வழிமுறைகளைக் கைவிட்டவனுமான ஒரு மனிதனால் (பரமனிடம் குவிந்த தியானம் மற்றும் பரமனிடம் கொள்ளும் பக்தியின் வடிவில்) செய்யப்படும் வணக்கமுறை மிகுந்தப் பாராட்டுக்குரியதாகும்; அந்த வணக்கமுறையானது, செயல்களைக் கடப்பதில் வென்ற மனிதனிடம் பெறப்பட்ட போதனையின் விளைவால் கிடைப்பதேயன்றி, {ஆன்ம} முன்னேற்றத்தில் ஒரே நிலையில் உள்ள மனிதர்களின் விவாதப் பரிமாற்றத்தால் கிடைப்பதல்ல[1].(2) ஓ! மன்னா {ஜனகனே}, இவ்வளவு கடினத்துடன் குறிப்பிட்ட அளவுக்கான வாழ்நாள் காலத்தை அடைந்து பிறகு, (புலன்களின் ஈடுபாட்டால்) அஃதை ஒருவன் குறைத்துக் கொள்ளக் கூடாது. மறுபுறம், மனிதன் எப்போதும் அறச்செயல்களின் மூலம் படிப்படியாக அடையக்கூடிய முன்னேற்றத்திற்காக எப்போதும் முயற்சிக்க வேண்டும்[2].(3) ஜீவன் தன் வெவ்வேறு இருப்புக் காலங்களில் ஆறு வெவ்வேறு நிறங்களை அடைந்த பிறகு, மேன்மையான நிறத்தில் இருந்து கீழே விழுபவன் கண்டிப்புக்கும், நிந்தனைக்கும் தகுந்தவனாவான். எனவே, நற்செயல்களின் விளைவை அடைந்த ஒருவன் ரஜஸ் குணத்தால் களங்கமடைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் தன் நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டும்[3].(4) மனிதன் செய்யும் அறச்செயல்களின் மூலம் மேன்மையான நிறத்தை அடைகிறான். அடைதற்கரிய மேன்மையான நிறத்தை அடைய இயலாத மனிதன், பாவம் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் (நரகில் மூழ்கி, தாழ்ந்த நிறத்தில் வீழ்வதன் மூலம்) தன்னைத் தானே கொன்று கொள்கிறான்.(5)விழிப்பற்ற நிலையிலோ, அறியாமையிலோ செய்யப்படும் பாவம்நிறைந்த செயல்கள் அனைத்தும் தவங்களின் மூலம் அழிக்கப்படுகின்றன. எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவச் செயலானது மிகுந்த துன்பத்தை உண்டாக்குகிறது.(6) எனவே, ஒருவன் கவலையை மட்டுமே கனியாகக் கொண்ட பாவச் செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.(7) நுண்ணறிவுமிக்க மனிதன், பாவம் நிறைந்த தன்மையைக் கொண்ட ஒரு செயலானது, பெரும் பயனை விளைவிப்பதாக இருந்தாலும், சண்டாளனைத் தீண்டாத ஒரு தூய மனிதனைப் போல அஃதை {அந்தப் பாவச்செயலை} ஒருபோதும் செய்யமாட்டான்[4].(8) பாவச் செயல்கள் துன்பம் நிறைந்தவையாக இருப்பதையே நான் காண்கிறேன். பாவத்தின் மூலம், பாவியின் பார்வையே வக்கிரமடைவதால் அவன் தன் உடலையும், ஆன்மாவோடு கூடிய உடலின் அங்கங்களையும் சீர்குலைத்துக் கொள்கிறான்.(9) இந்த உலகில் துறவை மேற்கொள்ளாத மூடன், இம்மையில் விடைபெற்றுச் செல்லும்போது பெரும் துன்பத்தால் பீடிக்கப்படுகிறான்.(10)ஓ! மன்னா, நான் சொல்வதைக் கவனத்துடன் கேட்பாயாக, நிறமற்ற துணி புழுதியடையும்போது, அதைத் தூய்மைப்படுத்தலாம், ஆனால் கருப்புச் சாயம் கொண்ட துணியைத் தூய்மைப்படுத்த முடியாது; பாவத்தின் வழக்கிலும் அதேதான் நேர்கிறது.(11) அறிந்தே பாவமிழைத்த மனிதன், அந்தப் பாவத்தைக் கழிப்பதற்காக அறச்செயல்களைச் செய்தால், அந்த நல்ல மற்றும் தீய செயல்களுக்குண்டான கனிகளைத் தனித்தனியாக அனுபவிக்கவும், தாங்கிக் கொள்ளவும் வேண்டும்[5].(12) பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்}, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு, அறியாமையால் செய்யப்பட்ட தீங்கேற்படுத்தும் செயல்கள் அனைத்தும் அறச்செயல்களால் கழிக்கப்படுகின்றன என்று சொல்கிறார்கள்.(13) எனினும், அறிந்தே செய்யப்பட்ட பாவத்தை அறத்தால் ஒருபோதும் கழிக்க முடியாது. பிரம்ம சாத்திரங்களை அறிந்தவர்களும், பிரம்மத்தை ஓதுபவர்களுமான மறுபிறப்பாளர்கள் இவ்வாறே சொல்கிறார்கள். அறவோராலோ, பாவிகளாலோ அறிந்தும், அறியாமலும் செய்யப்படும் எந்தச் செயலும் (அவற்றின் கனிகள் அனுபவிக்கப்படாத, அல்லது தாங்கிக் கொள்ளப்படாத வரையில்) எஞ்சியேயிருக்கின்றன என்பதே என் பார்வையாகும்[6].(15)முழு ஆய்வுடன் மனமறியச் செய்யப்பட்ட செயல்கள், அதனதன் பருமை அல்லது நுண்மையின்படி திரளான, அல்லது நுட்பமான கனிகளை விளைவிக்கின்றன[7].(16) எனினும், ஓ! அற ஆன்மா கொண்டவனே {ஜனகனே}, பெரும் தீங்கு நிறைந்த செயல்கள், அறியாமையில் செய்யப்பட்டிருந்தால், அவற்றுக்குண்டான விளைவுகளைத் தவறாமல் உண்டாக்குபவையும், நரகத்திற்கே கூட வழிவகுப்பவையுமான அந்தச் செயல்கள், பொருத்தமற்ற வகையிலான விளைவுகளை {அற்பவிளைவுகளையே} அவனிடம் உண்டாக்கும்.(17) தேவர்கள், அல்லது மதிப்பிற்குரிய தவசிகள் போன்றோரால் செய்யப்படும் (ஐயம் நிறைந்த அல்லது அறமற்ற இயல்பைக் கொண்ட) செயல்களைப் பொறுத்தவரையில், அவற்றை ஓர் அறவோன் செய்யக்கூடாது; கேள்விப்பட்டாலும் அவற்றை நிந்திக்கக்கூடாது.(18) ஓ! மன்னா {ஜனகனே}, தன் திறனைக் குறித்துச் சிந்தித்து உறுதியடைந்து, அறச்செயல்களைச் செய்யும் மனிதன், நிச்சயம் தனக்கான நன்மையை அடைவான்.(19) சுடப்படாத {மண்} பாத்திரத்தில் ஊற்றப்படும் நீரானது படிப்படியாகக் குறைந்து, இறுதியில் மொத்தமாக வெளியேறிவிடும். எனினும், அது சுடப்பட்ட பாத்திரத்தில் ஊற்றப்பட்டால், அளவு குறையாமல் அப்படியே எஞ்சி நிற்கும். அதே போலவே, புத்தியின் துணையுடன் சிந்திக்காமல் செய்யப்படும் செயல்கள் நன்மையை விளைவிப்பதில்லை; அதே வேளையில் தீர்மானத்துடன் செய்யப்பட்ட செயல்கள், மங்கா சிறப்புடன் எஞ்சி தங்கள் விளைவாக மகிழ்ச்சியை விளைவிக்கும்.(20)நீருள்ள பாத்திரத்தில் மேலும் நீர் ஊற்றப்பட்டால், அங்கே ஏற்கனவே இருந்த நீரின் அளவு அதிகரிக்கும்; அதே போலவே தீர்மானத்துடன் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், அவை நியாயமானவையாக இருந்தாலும், வேறு வகையில் இருந்தாலும், அறத்தின் {புண்ணியத்தின்} அளவு அதிகரிக்கவே செய்கிறது.(21,22) ஒரு மன்னன், தன் எதிரிகளையும், தங்கள் மேன்மையை உறுதிசெய்ய முனையும் அனைவரையும் அடக்கி, முறையாக ஆண்டுத் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஒருவன், புனித நெருப்பைத் தூண்டி, பல்வேறு வேள்விகளில் அவற்றில் ஆகுதிகளை ஊற்றி, மத்திம வயதிலோ, முதிர் வயதிலோ காடுகளுக்குள் ஓய்ந்து, (இறுதி இரண்டு வாழ்வுமுறைகளைப் பயின்று) அங்கேயே வாழ வேண்டும்.(23) தற்கட்டுப்பாடு, அறவொழுக்கம் ஆகியவற்றைக் கொண்ட ஒருவன், தன்னைப் போலவே பிற உயிரினங்களையும் பார்க்க வேண்டும். மேலும், ஓ! மன்னா, அவன் பெரியோர்களை மதிக்க வேண்டும். வாய்மையும், நன்னடத்தையும் பயில்வதன் மூலம் அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான்” என்றார் {பராசரர்}.(24)

அறஞ்செயவிரும்பு! – சாந்திபர்வம் பகுதி – 293-அறம் செய்ய விரும்புவதே மேன்மையடையும் வழி என ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “இவ்வுலகில் உள்ள எவரும், மற்றொருவருக்கு நன்மை செய்வதில்லை. எவரும் பிறருக்குக் கொடையளிப்பதும் காணப்படுவதில்லை. அனைவரும் தங்களுக்காகச் செயல்படுவதே காணப்படுகிறது.(1) மக்கள் அன்பில்லாதவர்களாகும்போது, தங்கள் பெற்றோரையும், தங்கள் உடன் பிறந்தோரையும் கைவிடுவது காணப்படுகிறது. வேறு வட்டங்களைச் சார்ந்த உறவினர்களைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?[1](2) புகழ்பெற்றவருக்குக் கொடுக்கப்படும் கொடை, புகழ்பெற்றவரால் கொடுக்கப்படும் கொடைகள் ஆகிய இரண்டும் சமமான தகுதிக்கே {புண்ணியத்திற்கே} வழிவகுக்கும். எனினும், இவ்விரு செயல்களில் கொடையேற்பதைவிடக் கொடையளிப்பது மேன்மையானது[2].(3) உரிய வழிமுறைகளில் அடையப்பட்டு, உரிய வழிமுறைகளில் பெருக்கப்படும் செல்வமானது, அறமீட்டும் நிமித்தமாகக் கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும்.(4) அறமீட்ட விரும்புபவன், பிறருக்குத் தீங்கிழைக்கும் வழிமுறைகளில் ஒருபோதும் செல்வத்தை ஈட்டக்கூடாது. ஒருவன் செல்வத்தைப் பற்றார்வத்துடன் தேடாமல், தன் சக்திக்குத்தக்க செயல்களையே செய்ய வேண்டும்.(5)

(தாகத்துடன் கூடிய) விருந்தினருக்கு குளிர்ந்த அல்லது நெருப்பில் சுடப்பட்ட நீரை அர்ப்பணிப்புமிக்க மனத்துடன் கொடுப்பதன்மூலம், பசித்தவனுக்கு உணவிட்ட செயலுக்குரிய தகுதியை {புண்ணியத்தை} ஒருவன் ஈட்டுகிறான்.(6) உயர் ஆன்ம ரந்திதேவன், கிழங்குகள், கனிகள் மற்றும் இலைகளைத் தவசிகளுக்குக் காணிக்கையளித்து அவர்களை வழிபட்டதன் மூலம் உலகங்கள் அனைத்திலும் வெற்றியை அடைந்தான்.(7) சிபியின் அரச மகன் {சிபி எனும் நகரத்தைச் சேர்ந்த மன்னன் [சைப்யன்]}, தோழனுடன் {மாடானுடன்}[3] கூடிய சூரியனுக்கு அதே வகைக் காணிக்கைகளை அளித்து அவனை நிறைவடையச் செய்ததன் மூலம் இன்ப உலகங்களை அடைந்தான்.(8) மனிதர்கள் அனைவரும் பிறவி அடைவதன் மூலம் தேவர்கள், விருந்தினர்கள், பணியாட்கள், பித்ருக்கள் மற்றும் தங்கள் சுயத்திற்குக் கடன்பட்டவர்களாகிறார்கள். எனவே, ஒவ்வொருவரும் அந்தக் கடன்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளத் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும்.(9) ஒருவன், வேதங்களைக் கற்பதன் மூலம் பெரும் முனிவர்களிடம் தான் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். அவன் வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களிடம் பட்ட கடனிலிருந்து விடுபடுகிறான். சிரார்த்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் அவன் பித்ருக்களிடம் பட்ட கடனில் இருந்து விடுபடுகிறான். நன்மை செய்வதன் மூலம் சக மனிதர்களிடம் பட்ட கடனை அவன் அடைக்கிறான்.(10)வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், அவற்றின் கருத்தைச் சிந்திப்பதன் மூலமும், வேள்விகளில் எஞ்சியவற்றை உண்பதன் மூலமும், தன் உடலைப் பராமரிப்பதன் மூலமும் ஒருவன் தன் சுயத்திற்கு {ஆன்மாவுக்குப்} பட்ட கடனை அடைக்கிறான். அவன் தன் பணியாட்களுக்குப் பட்ட கடனுக்காகத் தொடக்கத்தில் இருந்தே செயல்கள் அனைத்தையும் முறையாகச் செய்ய வேண்டும்.(11) மனிதர்கள் செல்வமற்றவர்களாக இருந்தாலும், பெரும் முயற்சிகளின் மூலம்[4] வெற்றியை அடைவது காணப்படுகிறது. முனிவர்கள் தேவர்களை முறையாகத் துதிப்பதன் மூலமும், வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை முறையாக ஊற்றுவதன் மூலமும், தவ வெற்றியை அடைவது காணப்படுகிறது.(12) ரிசீகரின் மகன், விஷ்வாமித்திரரின் மகனானான். வேள்விக் காணிக்கைகளில் பங்குகளை {அவிர்ப்பாகங்களைக்} கொண்ட தேவர்களை ரிக்குகளைக் கொண்டு துதிப்பதன் மூலம் அவன் மறுமையில் வெற்றியை அடைந்தான்[5].(13) உசனஸ், தேவர்களின் தேவை நிறைவு செய்ததன் மூலம் சுக்கிரனானார். உண்மையில், (உமா) தேவியின் புகழைத் துதித்தன் மூலம் அவர் ஆகாயத்தில் பெருங்காந்தியுடன் திளைக்கிறார்[6].(14)மேலும், அசிதர், தேவலர், நாரதர், பர்வதர், கக்ஷீவான், ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமர்}, தூய ஆன்மாவைக் கொண்ட தாண்டியர்,(15) வசிஷ்டர், ஜமதக்னி, விஷ்வாமித்திரர், அத்ரி, பரத்வாஜர், ஹரிசமச்ரு, குண்டாதரர் சுருதச்ரவஸ்(16) ஆகிய இந்தப் பெருமுனிகள், ரிக்குகளின் துணையுடனும், குவிந்த மனங்களுடனும் விஷ்ணுவைத் துதித்ததன் மூலமும், தவங்களின் மூலமும், நுண்ணறிவுடன் கூடிய அந்தப் பெருந்தேவனின் அருளின் மூலமும் வெற்றியை அடைந்தனர்.(17) தகுதியில்லாத பல மனிதர்கள், அந்த நல்ல தெய்வத்தைத் துதித்ததன் மூலம் தனிச்சிறப்பு வாய்ந்த பெரும் நிலையை அடைந்தனர். ஒருவன் தீய அல்லது நிந்திக்கத்தக்க எந்தச் செயலையும் செய்வதன் மூலம் முன்னேற்றத்தை நாடக்கூடாது.(18) அறவழிகளில் ஈட்டப்பட்ட செல்வமே உண்மையான செல்வமாகும். அறமற்ற வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் நிந்தனைக்குரியதாகும். அறமே அழிவற்றதாகும். செல்வத்தின் மீது கொண்ட விருப்பத்தால் அஃது ஒருபோதும் இவ்வுலகில் கைவிடப்படக்கூடாது.(19) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், தேவர்களுக்குத் தன் தினத் துதிகளைக் காணிக்கையாக்குபவனுமான அற ஆன்மா கொண்ட மனிதனே அறவோர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, வேதங்கள் அனைத்தும் (தக்ஷிணை, கார்ஹபத்யம், ஆஹவனியம் என்ற) மூன்று புனித நெருப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.(20)

எந்தப் பிராமணன், {குறைவற்ற} செயல்களை முழுமையாகச் செய்வானோ அவன் {அந்த மூன்று நெருப்புகளடங்கிய} புனித நெருப்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். செயல்களைச் செய்யாமல் இருப்பவன், அந்தப் புனித நெருப்பைப் பராமரிப்பதைவிட, அஃதை உடனே கைவிடுவதே சிறந்தது[7].(21) புனித நெருப்பும், தாய், பெற்ற தந்தை, ஆசான் ஆகியோரும், முறையாகப் பணிவிடை செய்யவும், பணிவுடன் தொண்டு புரியவும் தகுந்தவர்கள் ஆவர்.(22) செருக்கடையச் செய்யும் உணர்வுகள் அனைத்தையும் கைவிட்டு, முதியோரிடம் காத்திருந்து, அவர்களுக்குத் தொண்டாற்றுபவனும், கல்விமானும், காமம் இல்லாதவனும், அன்பின் கண்ணோடு உயிரினங்கள் அனைத்தையும் பார்ப்பவனும், செல்வமற்றவனும், தன் செயல்களில் அறவோனும், (எவருக்கும்) எத்தீங்கையும் செய்யும் விருப்பம் இல்லாதவனுமான மனிதனே, இவ்வுலகில் உண்மையில் மதிப்பிற்குரிய மனிதனாக நல்லோராலும், பக்திமான்களாலும் வழிபடப்படுகிறான்” என்றார் {பராசரர்}.(23)

வர்ணதர்மங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 294-வர்ணங்களின் கடமைகளையும்; அறத்தைத் தக்கவைத்துக் கொள்ள வர்ணக்கடமைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “தாழ்ந்த வகையினர் {சூத்திர வர்ணத்தார்}, {பிராமண, க்ஷத்திரிய, வைசியர் என்ற} பிற மூன்று வகையினரிடம் தங்கள் வாழ்வாதாரத்தை அடைவதே முறையாகும். அன்புடனும், மதிப்புடனும் {பிற வர்ணத்தாரால்} கொடுக்கப்படும் அத்தகைய தொண்டு அவர்களை {சூத்திரர்களை} அறவோராக்கும்.(1) எந்தச் சூத்திரனின் மூதாதையராவது தொண்டில் ஈடுபடாமல் இருந்தாலும் கூட, அவன் (தொண்டைத் தவிர) பிற தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. உண்மையில், தொண்டையே அவன் தனது தொழிலாகக் கொள்ள வேண்டும்.(2) அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்கள் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ள நல்லோருக்கே துணைபுரிய வேண்டும், ஒருபோதும் தீயோருக்குத் துணை புரியக் கூடாது என்பது என்னுடைய கருத்து.(3)

கிழக்கு மலைகளில் {உதயப் பர்வதத்தில்} உள்ள தங்கமும், உலோகங்களும், சூரியனுக்கு அருகாமையில் இருப்பதால் பெரும் காந்தியுடன் சுடர்விடுவதைப் போலவே, தாழ்ந்த வகையினரும் நல்லோருடன் கொள்ளும் உறவால் காந்தியுடன் ஒளிர்வார்கள்.(4) வெள்ளைத் துணியானது சாயத்தின் நிறத்தை ஏற்கிறது. சூத்திரர்களின் வழக்கிலும் அவ்வாறே நடக்கிறது[1].(5) எனவே, ஒருவன் நல்ல குணங்கள் அனைத்துடனும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமேயன்றி ஒருபோதும் தீய குணங்களைப் பற்றக்கூடாது. இவ்வுலகில் மனிதர்களின் வாழ்நாள் மிகவேகமானதும், நிலையற்றதுமாகும்.(6)இன்பத்திலும், துன்பத்திலும் நல்லதை மட்டுமே ஈட்டும் ஞானியே உண்மையில் சாத்திரங்களை அவதானிப்பவனாகக் கருதப்படுகிறான்.(7) புத்தியுடைய மனிதன், அறம்பிறழ்ந்த எந்தச் செயலிலும் உயர்ந்த பயன்களே இருந்தாலும், அஃதை ஒருபோதும் செய்யமாட்டான். அத்தகைய செயல்கள் உண்மையில் நன்மையானதாகக் கருதப்படுவதில்லை.(8) சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்களை அபகரித்து, (தகுந்த மனிதர்களுக்கே) கொடையாக அளித்தாலும் கூட, சட்டத்தை மீறும் அம்மன்னன் (அவன் செய்த செயலை உணர்த்தும் வகையிலான) வெற்று ஒலியைத் தவிர (அந்த ஈகையிலிருந்து) வேறு எந்தக் கனியையும் அடையமாட்டான். மறுபுறம் களவு எனும் பாவத்தையே அவன் ஈட்டுகிறான்.(9)

அண்டந்தழுவிய மதிப்புடைய தாத்ரி என்றழைக்கப்படும் ஒருவனைச் சுயம்பு {பிரம்மன்} முதலில் படைத்தான். தாத்ரி அனைத்து உலகங்களையும் தாங்கிப்பிடிப்பதில் ஈடுபடும் ஒரு மகனை {பர்ஜன்யனைப்} படைத்தான்[2].(10) அந்தத் தேவனை {பர்ஜன்யனை} வழிபடும் வைசியன், தன்னை ஆதரித்துக் கொள்வதற்காக உழவிலும், கால்நடை வளர்த்தலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். க்ஷத்திரியர்கள், பிற வகையினர் {பிற வர்ணத்தார்} அனைவரையும் பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பிராமணர்கள் அனுபவிக்க மட்டுமே வேண்டும்[3].(11) சூத்திரர்களைப் பொறுத்தவரையில் அவர்கள், வேள்விகளில் காணிக்கையளிக்கப்படும் பொருட்களைப் பணிவுடனும் நேர்மையுடனும் சேகரிக்கும் பணியிலும், வேள்விகள் செய்யப்பட்ட இடங்களையும் பீடங்களையும் தூய்மைப்படுத்துவதிலும் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு வகையினரும் இவ்வழியில் செயல்பட்டால் அறத்திற்கு எக்குறைவும் நேராது.(12)அறம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டால், பூமியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியடையும். பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தின் மகிழ்ச்சியைக் காணும் சொர்க்கத்தின் தேவர்கள் மகிழ்ச்சியால் நிறைகிறார்கள்.(13) எனவே தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளுக்கு ஏற்புடைய வகையில் பிற வகையினரைப் பாதுகாக்கும் மன்னன் மதிக்கத் தகுந்தவனாகிறான். அதே போல, சாத்திரக் கல்வியில் ஈடுபடும் பிராமணனும், செல்வமீட்டுவதில் ஈடுபடும் வைசியனும்,(14) குவிந்த கவனத்துடன் பிற மூன்று வகையினருக்கும் எப்போதும் தொண்டு செய்வதில் ஈடுபடும் சூத்திரனும் மதிப்புக்குத் தகுந்தவர்களாவர். ஓ! மனிதர்களின் தலைவா, வேறுவழிகளில் தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் ஒவ்வொரு வகையும் {வர்ணமும்} அறத்தில் இருந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.(15

ஆயிரக்கணக்கான கொடைகளை ஒருபுறம் வைத்தாலும், அறம் சார்ந்து ஈட்டப்பட்டு, துன்பத்துடன் ஒருவன் கொடுக்கும் இருபது சோழிகளே கூட {சோகிகளேகூட / இருபது பணம் கூட} பெரும் நன்மையை விளைவிக்கும். {அவ்வாறெனில் அறம்சார்ந்து ஈட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கொடைகள் எவ்வளவு பெரிய நன்மைகளை விளைவிக்கும்?} (16) ஓ! மன்னா {ஜனகனே}, பிராமணர்களை முறையாக மதித்து அவர்களுக்குக் கொடைகளை அளிக்கும் மனிதர்கள், அந்தக் கொடைகளுக்கு ஒப்பான சிறந்த கனிகளை அறுவடை செய்வார்கள்.(17) கொடையேற்பவரைத் தேடி, உரிய முறையில் அவரைக் கௌரவித்துக் கொடையாளியால் கொடுக்கப்படும் கொடை மதிப்புமிக்கதாகும். வேண்டுதலின் பேரில் கொடையாளி கொடுக்கும் கொடை நடுத்தரமானதாகும்.(18)

எனினும், அவமானப்படுத்தும் வகையில் எந்த மதிப்புமில்லாமல் கொடுக்கப்படும் கொடையானது (தகுதியின் {புண்ணியத்தின்} அடிப்படையில்) மிகத் தாழ்ந்ததாகும். உண்மையைச் சொல்லும் தவசிகள் இதையே சொல்கின்றனர்.(19) வாழ்வெனும் பெருங்கடலில் மூழ்கும் மனிதன், பல்வேறு வழிகளின் மூலம் அந்தப் பெருங்கடலைக் கடக்கவே முனைய வேண்டும். உண்மையில், இவ்வுலகக் கட்டுகளில் இருந்து விடுபடும் வகையில் அவன் முயற்சிக்க வேண்டும்.(20) பிராமணன் தற்கட்டுப்பாட்டால் ஒளிர்கிறான்; க்ஷத்திரியன் வெற்றியாலும், வைசியன் செல்வத்தாலும்; சூத்திரன் (மூவகையினுக்கு) தொண்டு புரிவதில் {பணி செய்வதில்} உள்ள புத்திசாலித்தனத்தாலும் மகிமையில் ஒளிர்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(21)

காமகுரோதலோபம்! – சாந்திபர்வம் பகுதி – 295-மனிதர்களின் உடலுக்குள் புகுந்து காமம், குரோதம் மற்றும் லோபத்தைத் தூண்டிய அசுரர்கள்; சிவனிடம் தேவர்கள் செய்த முறையீடு; முப்புரமெரித்த சிவன்; சப்தரிஷிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தோன்றியது; பூமியில் மீண்டும் அறம் தழைத்தது ஆகியவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “கொடையேற்பதன் மூலம் பிராமணனாலும், போரில் வெல்லப்பட்ட வெற்றியால் க்ஷத்திரியனாலும், தன் வகைக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைசியனாலும், பிற மூன்று வகையினருக்கும் தொண்டு செய்வதன் மூலம் சூத்திரனாலும் ஈட்டப்படும் செல்வம், அளவில் சிறியதாக இருப்பினும் புகழத் தக்கதாகும். மேலும் அறமீட்டுவதில் செலவிடப்படும்போது, பெரும் நன்மைகளை அது விளைவிக்கும். பிற மூன்று வகையினருக்கும் சூத்திரனே நிலையான தொண்டாற்றுபவனாகச் சொல்லப்படுகிறான்.(2) வாழ்வின் அழுத்தத்தில், ஒரு பிராமணன் க்ஷத்திரிய, வைசிய வகைகளின் கடமைகளைச் செய்தால், அவன் அறத்தில் இருந்து வீழ்ந்தவனாக மாட்டான். எனினும், ஒரு பிராமணன் தாழ்ந்த வகையின் {சூத்திரனின்} கடமைகளைச் செய்யும்போது, நிச்சயம் அவன் வீழவே செய்கிறான்.(3) ஒரு சூத்திரன், பிற மூன்று வகையினரிடம் செய்யும் தொண்டில் இருந்து வாழ்வாதாரத்தை ஈட்டமுடியவில்லையெனில், விதிப்படியே அவன் வணிகம், கால்நடை வளர்த்தல், சிற்பக் கலைகள் ஆகிவற்றைப் பின்பற்றலாம்.(4) உலகில் நிந்திக்கத்தக்கவையாகக் கருதப்படுபவையான அரங்க நாடகங்களில் தோன்றுதல், பல்வேறு வடிவங்களில் வேடந்தரித்தல், பதுமையாட்டம் {பொம்மலாட்டம்}, மது மற்றும் இறைச்சி விற்பனை, இரும்பு மற்றும் தோல் விற்பனை ஆகிய தொழில்களில் ஏற்கனவே ஈடுபடாத {தன் முன்னோர்கள் செய்யாத மேற்கண்ட தொழில்களில் இதுவரை ஈடுபடாத} ஒருவன், தன் வாழ்வாதரத்தை ஈட்டுவதற்காக அவற்றை ஒருபோதும் செய்யக்கூடாது. இவற்றில் ஈடுபடுவோர், அவற்றைக் கைவிட்டால் பெரும் தகுதியை ஈட்டலாம் என்றே நாம் கேள்விப்படுகிறோம்.(5,6)

வாழ்வில் வெற்றியடைந்தவன், ஆணவம் நிறைந்த மனத்தின் விளைவால் பாவம் நிறைந்தவனாக நடந்து கொள்ளும்போது, அச்சூழ்நிலையில் அவனது செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகின்றன.(7) முந்தைய காலங்களின் மனித இனம் தற்கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும், அறத்தை அவர்கள் பெரும் மதிப்போடு போற்றியதாகவும்; வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பின்பற்றிய நடைமுறைகள் அனைத்தும், சாத்திர விதிகளுக்கு ஏற்புடையதாக இருந்ததாகவும்; சீ! என்று சொல்வதே அவர்களுக்குரிய ஒரே தண்டனையாக இருந்ததாகவும் புராணங்களில் இருந்து நாம் கேள்விப்படுகிறோம்.(8) ஓ! மன்னா, நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அறத்தைத் தவிர மனிதர்களுக்கு மத்தியில் வேறு எதுவும் மெச்சப்படுவதில்லை. அறத்தில் பெரும் முன்னேற்றமடைந்த அந்தக் காலத்து மனிதர்கள், அவர்கள் கண்ட நற்குணங்களை மட்டுமே வழிபட்டனர்.(9) எனினும், ஓ! குழந்தாய், உலகில் அறம் மேலோங்குவதை அசுரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (எண்ணிக்கையிலும், சக்தியிலும்) பெருகிய அசுரர்கள் (காமம் மற்றும் கோபம் என்ற வடிவில்) மனிதர்களின் உடல்களுக்குள் புகுந்தனர்.(10) அப்போதுதான் அறத்தை அழிக்கும் செருக்கு மனிதர்களிடம் உண்டானது. செருக்கில் இருந்து ஆணவமும், ஆணவத்தில் இருந்து கோபமும் எழுந்தன.(11) மனிதர்கள் இவ்வாறு கோபத்தில் மூழ்கியபோது, பணிவுடன் கூடிய நடத்தையும், நாணமும் மறைந்து, அலட்சியப்போக்கு அவர்களை மூழ்கடித்தது.(12)

கவனமின்மையால் பீடிக்கப்பட்ட அவர்களால் முன்பைப் போலப் பார்க்க முடியாததன் விளைவால், அவர்கள் எந்தவொரு மனத்தாங்கலும் இல்லாமல் ஒருவரையொருவர் ஒடுக்குவதன் மூலம் செல்வத்தை அடையத் தொடங்கினர்.(13) மனிதர்கள் இவ்வாறான போது, “சீ” என்று நிந்திக்கும் தண்டனையால் மட்டுமே குற்றவாளிகளிடம் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை. மனிதர்கள், தேவர்களுக்கோ, பிராமணர்களுக்கோ எந்த மதிப்பையும் அளிக்காமல் தங்கள் புலன்களை முழுமையாக {புலன்நுகர் பொருட்களில்} ஈடுபடுத்த தொடங்கினர்.(14) அந்நேரத்தில் தேவர்கள், பொறுமையுடையவனும், பலவடிவத் தன்மை கொண்டவனும் {பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும்}, முதன்மையான குணங்களைக் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனுமான சிவனிடம் சென்று அவனது பாதுகாப்பை நாடினார்கள்.(15) தேவர்கள் தங்கள் இணைந்த சக்தியை அவனுக்குக் {சிவனுக்குக்} கொடுத்தனர், அதன் பேரில் அந்தப் பெருந்தேவன் {சிவன்}, ஆகாயத்தில் வசித்து வந்த ஆசை {காமம்}, கோபம் {குரோதம்}, பேராசை {லோபம்} ஆகிய மூன்று அசுரர்களையும், அவர்களது வசிப்பிடங்களையும் தன்னுடைய ஒரே கணையால் பூமியில் வீழ்த்தினான்[1].(16) கடும் ஆற்றலைக் கொண்டவனும், தேவர்களைப் பீதியடையச் செய்தவனுமான அசுரர்கள் தலைவனும் {மஹாமோஹனும்}, சூலந்தரித்த மஹாதேவனால் கொல்லப்பட்டான்.(17) அசுரர்களின் தலைவன் கொல்லப்பட்டபோது, மனிதர்கள் மீண்டும் தங்கள் முறையான இயல்புகளை அடைந்து, முந்தைய காலங்களைப் போல மீண்டும் வேதகல்வியிலும், பிற சாத்திரங்களைக் கற்பதிலும் ஈடுபடத் தொடங்கினர்.(18)அப்போது பழங்காலத்தின் ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்} முன்வந்து தேவர்களின் தலைவனாகவும், சொர்க்கத்தின் ஆட்சியாளனாகவும் வாசவனை {இந்திரனை} நிறுவினார்கள். மேலும் அவர்கள் மனித இனத்தைத் தண்டிக்கும் தண்டக்கோலைத் தாங்களே தங்கள் பணியாக ஏற்றுக் கொண்டனர்.(19) அந்த ஏழு முனிவர்களுக்குப் பிறகு (மனிதர்களை ஆள்வதற்காக) மன்னன் விப்ருதுவும், க்ஷத்திரிய வகையைச் சார்ந்த இன்னும் பல மன்னர்களும் தனித்தனி மனிதக்குழுக்களைத் தனித்தனியாக ஆள்வதற்காக வந்தனர்.(20) (மஹாதேவன் உயிரினங்களின் மனத்தில் இருந்து தீய ஆசைகள் அனைத்தையும் அகற்றிய போது) அந்தப் பழங்காலத்தில் தீய உணர்வுகள் அகலாத குறிப்பிட்ட சில முதியவர்கள் இருந்தனர்.(21) அவர்களுடைய தீய மனநிலையின் விளைவாலும், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளாலும், பயங்கர ஆற்றலைக் கொண்ட பல மன்னர்கள் தோன்றி, அசுரர்களுக்குத் தகுந்த செயல்களை மட்டுமே செய்யத் தொடங்கினர்.(22) அதீத மடமை கொண்ட மனிதர்கள் அந்தத் தீயச் செயல்களைக் கடைப்பிடித்து, அவற்றையே அதிகாரமிக்கவையாக நிறுவி, இந்த நாள் வரை அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்[2].(23) ஓ! மன்னா, இந்தக் காரணத்தினாலேயே நான், சாத்திரங்களின் உதவியுடன் முறையாகச் சிந்தித்து, ஒருவன் தீங்கு அல்லது வன்மம் நிறைந்த செயல்கள் அனைத்தையும் தவிர்த்து ஆன்ம ஞானம் அடைவதற்கு முயல வேண்டும் என்று உனக்குச் சொல்கிறேன்.(24) ஞானம் கொண்ட மனிதன், அறச்சடங்குகளைச் செய்வதற்காக நெறிகளைக் கைவிட்டு அறமற்ற வழிகளின் மூலம் செல்வத்தை நாடமாட்டான். அத்தகைய வழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வம் ஒருபோதும் நன்மை பயக்காது.(25)நீ இவ்வகை க்ஷத்திரியனாக வேண்டும். உன் புலன்களை அடக்கி, உன் நண்பர்களுக்கு ஏற்புடையவனாகி, உனது வகைக்கான கடமைகளின்படி உன் குடிமக்கள், பணியாட்கள் மற்றும் பிள்ளைகளைப் பேணி வளர்ப்பாயாக.(26) (மனித வாழ்வில் தோன்றும்) செழுமை மற்றும் வறுமையின் கலவையின் மூலம் நட்புகளும், பகைமைகளும் எழுகின்றன. (ஒவ்வொரு ஜீவனையும் பொறுத்தவரையில்) ஆயிரமாயிரம் இருப்புகள் தொடர்ந்து சுழல்கின்றன, ஜீவ இருப்பின் ஒவ்வொரு நிலையிலும் இவை நேர்ந்தே ஆக வேண்டும்[3].(27) இந்தக் காரணத்தினால் நீ ஒவ்வொரு வகை நற்குணங்களிலும் பற்றுக் கொள்ள வேண்டும், ஒருபோதும் களங்கங்களின் {குற்றங்களில்} பற்றுக் கொள்ளக் கூடாது. எந்த அறமும் அற்றவனும், மிகுந்த மூடனுமான ஒரு மனிதன்கூட, தனது எந்த நல்ல குணத்திற்காகவும் புகழப்படுவதைக் கேட்டால், இன்பத்தால் நிறைவான். நற்குணத்தின் தன்மை இத்தகையதே ஆகும்[4].(28) ஓ! மன்னா, அறமும் {புண்ணியமும்}, பாவமும் மனிதர்களுக்கு மத்தியில் மட்டுமே இருக்கின்றன. இவை மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களுக்கு மத்தியிலும் இல்லை.(29) எனவே, உணவுத் தேவையோ, பிற அவசிய தேவைகளோ ஏற்படும்போது, அவற்றைக் கடக்கும் ஒருவன், அற மனநிலையுடனிருந்து, ஞானத்தை அடைந்து, எப்போதும் தன்னைப் போலவே பிற உயிரினங்கள் அனைத்தையும் பார்த்து, எந்த வகைத் தீங்கையும் செய்வதில் இருந்து முற்றாக விலக வேண்டும்.(30) ஒருவனுடைய மனம் ஆசையற்றதாகி, அதனிலிருந்து இருள் அனைத்தும் அகலும்போதுதான் ஒருவன் மங்கலமானதை அடைவதில் வெல்கிறான் {க்ஷேமத்தை அடைகிறான்}” என்றார் {பராசரர்}.(31)

தவம்! – சாந்திபர்வம் பகுதி – 296-பற்றால் விளையும் பேராசை, பேராசையால் நேரும் பாவங்கள், பாவங்களால் நேரும் அழிவு ஆகியவற்றையும்; தவத்தின் மேன்மையையும் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “இல்லறவாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் ஒருவன் செய்ய வேண்டிய கடமை விதிகள் குறித்து நான் இப்போது உனக்குச் சொன்னேன். இனி தவங்களின் விதிகளைக் குறித்து உனக்குச் சொல்லப்போகிறேன். இக்காரியத்தைச் சொல்லப்போகிறேன் நீ கேட்பாயாக.(1) ஓ! மன்னா, ரஜஸ் மற்றும் தமஸ் {ஆசை மற்றும் இருள் குணங்கள்}, பற்றிலிருந்து உண்டாகும் “நான்” என்ற அகந்தை {மமதை} ஆகியற்றால் நிறைந்த உணர்வானது இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} இதயத்தில் எழுவது பொதுவாகக் காணப்படுகிறது.(2) இல்லற வாழ்வை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} மேற்கொள்ளும் ஒருவன், பசுக்கள், வயல்கள், பல்வேறு வகைச் செல்வங்கள், மனைவிகள், பிள்ளைகள் மற்றும் பணியாட்களை அடைகிறான்.(3) இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றும் ஒருவன், இந்த நோக்கங்களிலேயே தன் கண்களைத் தொடர்ந்து செலுத்துகிறான். இச்சூழ்நிலைகளில் ஒருவனுடைய விருப்பு வெறுப்புகள் அதிகரித்து, (நிலையற்றவையான) தன் உடைமைகளை நித்தியமானவை என்றும், அழிவற்றவை என்றும் கருதுகிறான்.(4) ஓ! மன்னா, ஒருவன் விருப்பு வெறுப்பில் மூழ்கி, உலகப் பொருட்களை ஆள்வதில் வசப்படும்போது, கவனமின்மையிலிருந்து எழும், அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அவனைப் பீடிக்கிறது {பற்றுகிறது}.(5)

இவ்வுலகின் இன்பங்களில் பெரும்பங்கைக் கொண்டிருக்கும் மனிதனே அருளப்பட்டவன் என்று நினைத்து இன்பத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கும் மனிதன், தன் பற்றின் விளைவால், புலன்களுக்கு நிறைவைத் தரும் காரியங்களைத் தவிர வேறு எந்த இன்பத்தையும் காணாதவனாகிறான்.(6) அத்தகைய பற்றால் விளையும் பேராசையில் மூழ்கும் அவன், தன் உறவினர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முனைந்து, பிறகு அவர்களை நிறைவு செய்வதற்காகத் தன் சக்திக்குத்தக்க ஒவ்வொரு வழிமுறையாலும் செல்வத்தைப் பெருக்க முனைகிறான்.(7) பிள்ளைகள் மீது கொண்ட அன்பால் நிறையும் அத்தகைய மனிதன், செல்வத்தை அடைவதற்காக, தீமையென அவன் அறிந்த செயல்களைச் செய்து, செல்வத்தை இழக்கும்போது துயரில் வீழ்கிறான்.(8) கௌரவங்களை ஈட்டி, தன் திட்டங்களின் தோல்வியை எப்போதும் தடுக்கும் அவன், இன்பத்திற்கான தன் ஆசையை நிறைவு செய்யும் வழிமுறைகளிலேயே செயல்படுகிறான். இறுதியில், அவன் நாடும் நடத்தையின் தவிர்க்கமுடியாத விளைவாக அழிவை அடைகிறான்.(9) எனினும், புத்தியுடையவர்களும், அழிவற்ற பிரம்மத்தை ஓதுபவர்களும், மங்கலமான, நன்மையான செயல்களை மட்டுமே செய்ய முனைபவர்களும், ஆசையில் இருந்து மட்டுமே எழுபவையும், கட்டாயமற்றவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்களுமானவர்களே உண்மையான இன்பநிலையை அடைகிறார்கள் என்பது நன்கறியப்பட்டதாகும்.(10)

ஓ! மன்னா, பற்றை மையமாகக் கொண்ட அத்தகை பொருட்கள் அனைத்தையும் இழப்பது, செல்வத்தை இழப்பது, உடல்நோய் மற்றும் மனத்துன்பங்களின் வேதனை ஆகியவற்றில் மூலம் ஒரு மனிதன் மனத்தளர்ச்சியில் வீழ்க்கிறான். இந்த மனத்தளர்ச்சியின் மூலம் ஆன்ம விழிப்புணர்வு எழுகிறது. அத்தகைய விழிப்புணர்வில் இருந்து சாத்திரக் கல்வி எழுகிறது. ஓ! மன்னா, ஒருவன் சாத்திரக் கருத்துகளின் சிந்தனையில் இருந்து தவத்தின் மதிப்பைக் காண்கிறான்.(12) எது மிக முக்கியமானது, எது தற்செயலானது என்ற அறிவைக் கொண்ட அரிய மனிதன், ஏற்புடைய மனைவிகள், பிள்ளைகள் ஆகியவற்றைக் கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியானது முற்றான துன்பத்திற்கே வழிவகுக்கிறது என்ற உண்மையால் ஈர்க்கப்பட்டுத் தவங்களைச் செய்ய முனைகிறான்[1].(13) ஓ! குழந்தாய், தவங்கள் அனைவருக்குமானவை. தாழ்ந்த வகை மனிதர்களுக்கும் (சூத்திரர்களுக்கும்) அவை விதிக்கப்பட்டிருக்கின்றன. தவங்கள், தன் புலன்கள் அனைத்தையும் ஆளும் தற்கட்டுப்பாடுடைய மனிதனைச் சொர்க்கத்தின் வழியில் நிறுத்துகின்றன[2].(14) ஓ! மன்னா, பலமிக்கவனான உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவன் {ஹிரண்யகர்ப்பன்}, குறிப்பிட்ட இடைவெளிகளில் நோன்புகளைப் பயின்று, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தவங்களின் மூலமே படைத்தான்.(15)ஓ! குழந்தாய், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அக்னி, அஸ்வினிகள், மருதர்கள், விசுவேதேவர்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள், மருத்துக்கள்,(16) யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் சொர்க்கவாசிகளும், இன்னும் பிற தேவர்கள் அனைவரும் தங்கள் தவங்களின் மூலமே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர்.(17) தொடக்கத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட பிராமணர்கள், பூமியை மட்டுமல்லாமல் சொர்க்கத்தையும் தங்கள் தவங்களால் கௌரவித்ததன் மூலம் வெற்றியடைந்து இன்பத்துடன் திரிந்தனர்.(18) மனிதர்களின் இந்த உலகில், மன்னர்களும், உயர் குடியில் பிறந்த இல்லறவாசிகள் பிறர் அனைவரும் தாங்கள் செய்த தவங்களின் விளைவால் மட்டுமே தங்கள் நிலையை அடைந்தனர்[3].(19) அவர்கள் அணியும் பட்டுத்துணிகள், தங்கள் மேனியில் அலங்கரித்துக் கொள்ளும் சிறந்த ஆபரணங்கள், அவர்கள் செலுத்தும் விலங்குகள் மற்றும் வாகனங்கள், அவர்கள் அமரும் இருக்கைகள் ஆகியன அனைத்தும் அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(20)ஆயிரக்கணக்கில் அவர்களால் அனுபவிக்கப்படும் அழகிய பெண்கள் மற்றும் அரண்மனை மாளிகை வாசம் ஆகியவை அவர்களின் தவங்களால் விளைந்தவையே.(21) விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், பல்வேறு வகைகளிலான இனிய உணவுப் பொருட்கள் ஆகியவை அறம் சார்ந்து செயல்படுபவர்களின் {நல்வினை செய்பவர்களின்} உடைமைகளாகின்றன.(22) ஓ! எதிரிகளை எரிப்பவனே, தவங்களால் அடைய முடியாத ஏதும் மூவுலகிலும் இல்லை. உண்மை ஞானம் அற்றவர்களும் கூடத் தங்கள் தவங்களின் விளைவால் துறவை வெல்கிறார்கள்[4].(23) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, செழிப்புடன் {மகிழ்ச்சியில்} இருந்தாலும், துன்பத்திலிருந்தாலும் ஒரு மனிதன் சாத்திரங்களை நினைவுகூர்ந்து, தன் புத்தி மற்றும் மனத்தின் துணை கொண்டு பேராசையைக் கைவிட வேண்டும்.(24) நிறைவில்லாமையே துயரை உண்டாக்குகிறது. (பேராசையின் விளைவே நிறைவின்மையாகும்). பேராசை புலன்களின் கலக்கத்திற்கே வழிவகுக்கும். ஒருவனுடைய புலன்கள் கலக்கமடைந்தால், தொடர்ந்து பயன்படுத்தாத ஞானத்தை {வித்தையைப்} போலவே அவனது விவேகம் {பிரஜ்ஞை} காணாமல் போகும்[5].(25)ஒருவனுடைய விவேகம் மறையும்போது, எது சரியானது எது முறையற்றது என்பதை வேறுபடுத்திப் பார்க்க அவன் தவறுகிறான். எனவே, ஒருவனுடைய மகிழ்ச்சி அழியும் (அழிந்து துன்பவசப்படும்) போது அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும்.(26) எது ஏற்புடையதோ அதுவே மகிழ்ச்சி {இன்பம்} என்றழைக்கப்படுகிறது. எது ஏற்பில்லாததோ அது துன்பம் என்று சொல்லப்படுகிறது. தவங்கள் பயிலப்படும்போது {அவற்றின் மூலம்} மகிழ்ச்சியே விளைகிறது. அவை பயிலப்படாத போது, துன்பமே விளைகிறது. தவங்களைப் பயில்வது மற்றும் தவிர்ப்பதால் உண்டாகும் கனிகளைக் காண்பாயாக.(27) களங்கமற்ற தவங்களைப் பயில்வதன் மூலம் மக்கள் எப்போதும் அனைத்து வகை மங்கல விளைவுகளையே அடைந்து, நல்ல பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து, பெரும் புகழை அடைகிறார்கள்[6].(28) எனினும், கனியில் விருப்பத்தால் {பலன் மீது கொண்ட ஆசையால்} அவற்றை (களங்கமற்ற தவங்களைக்) கைவிடும் ஒருவன், உலகம் சார்ந்த உடைமைகளைக் காரணமாகக் கொண்ட ஏற்பில்லாத விளைவுகள் பலவற்றையும், அவமதிப்பையும், பல்வேறு வகைத் துன்பங்களையும், அவற்றின் கனிகளையும் {பலன்களையும்} அடைவான்.(29) அறம், தவங்கள், ஈகை பயில்வதில் விருப்பமுடைமை இருந்தாலும், தடுக்கப்பட்ட அனைத்து வகைச் செயல்களைச் செய்யும் விருப்பமும் மனத்தில் எழுகிறது. இவ்வாறு பல்வேறு வகைப் பாவச் செயல்களைச் செய்யும் ஒருவன் நரகத்திற்கே செல்கிறான்[7].(30)ஓ! மனிதர்களில் சிறந்தவனே {ஜனகனே}, இன்பத்திலும் துன்பத்திலும் தனக்காக விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாத மனிதன் சாத்திரக் கண் கொண்டவன் {சாத்திரநேத்திரமுடையவன்} என்று சொல்லப்படுகிறான்.(31) ஓ! ஏகாதிபதி, தீண்டல், நாக்கு {சுவை}, பார்வை {ஒளி}, மணம் மற்றும் கேட்பது {ஒலி} ஆகியவற்றுக்கு உரிய புலன்களின் நிறைவால் ஒருவன் அடையும் இன்பமானது, வில்லால் ஏவப்பட்ட கணை பூமியில் விழுவதற்கு ஆகும் காலம் வரையே நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.(32) குறுகிய காலத்தையே கொண்ட அந்த இன்பம் முடிந்ததும், ஒருவன் மிகக்கூரிய துன்பத்தையே அனுபவிக்கிறான். விடுதலையால் {முக்தியின் மூலம்} விளையும் ஒப்பற்ற நிலையை மூடர்களே மெச்சமாட்டார்கள்.(33) புலன்களின் நிறைவில் உண்டாகும் துன்பத்தைக் காணும் ஞானிகள், விடுதலையை {முக்தி} அடையும் நோக்கில் அமைதி மற்றும் தற்கட்டுப்பாடெனும் நற்பண்புகளை வளர்க்கிறார்கள். அவர்களுடைய அறவொழுக்கத்தின் விளைவால் செல்வத்தாலோ, இன்பத்தாலோ அவர்களை ஒருபோதும் துன்புறுத்துவதில் வெல்ல முடியாது.(34) இல்லறவாசிகள் முயற்சியில்லாமல் அடையப்படும் செல்வத்தையும், பிற உடைமைகளையும் எந்தக் கழிவிரக்கமும் இல்லாமல் அனுபவிக்கலாம். எனினும், (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) அவர்களின் வகைக்கான கடமைகளைப் பொறுத்தவரையில், அவற்றை அவர்கள் முயற்சியின் உதவியுடனே வெளிப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து[8].(35)கௌரவம் அடைந்தவர்கள், உயர் குடியில் பிறந்தவர்கள், சாத்திரங்களின் கருத்தை நோக்கியே எப்போதும் தங்கள் கண்களைக் கொண்டவர்கள் ஆகியோரின் நடைமுறைகளை, கட்டுப்பாடில்லாத மனங்களைக் கொண்ட பாவிகளால் ஒருபோதும் பின்பற்ற இயலாது.(36) வீண்தற்பெருமையின் ஆதிக்கத்தில் மனிதனால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் அழிவையே அடைகின்றன. எனவே, மதிப்பிற்குரியவர்களுக்கும், உண்மையான அறவோருக்கும் தவத்தைத் தவிர இவ்வுலகில் செய்ய வேறெந்த செயலும் இல்லை[9].(37) எனினும், செயல்களுக்கு அடிமைகளாக இருக்கும் இல்லத்தாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் முழு இதயங்களுடன் தங்களை அச்செயல்களில் நிறுவிக் கொள்ள வேண்டும். ஓ! மன்னா, தங்கள் வகைக்கான கடமைகளைப் பின்பற்று அவர்கள், கவனத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் வேள்விகளையும், அறச்சடங்குகள் பிறவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும்.(38) உண்மையில், நதி {ஆற்றின் பெண்பால்} மற்றும் நதங்களான {ஆற்றின் ஆண்பால்} ஆறுகள்[10] அனைத்தும் பெருங்கடலையே தங்கள் புகலிடமாகக் கொள்வதைப் போல, அனைத்து வகைகளைச் சார்ந்த மனிதர்களும், இல்லறத்தானையே புகலிடமாகக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(39)

வர்ண, கோத்திர வேறுபாடு! – சாந்திபர்வம் பகுதி – 297-தவம் குன்றியதால் விளைந்த வர்ண வேறுபாடு; நான்கு வர்ணங்களின் அடிப்படைத் தோற்றம்; வர்ணங்களின் கலப்பால் உண்டான கோத்திரங்கள்; வர்ணங்களுக்குத் தனிச்சிறப்புடைய கடமைகள் மற்றும் வர்ணங்களுக்குப் பொதுவான கடமைகள்; களங்கமேற்படுத்துவது பிறவியா? செயல்களா? போன்றவற்றை ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! பெரும் முனிவரே {பராசரரே}, பல்வேறு வகைகளை {வர்ணங்களைச்} சார்ந்த மனிதர்களின் மத்தியில் உள்ள இந்த வர்ண வேறுபாடு எங்கிருந்து வந்தது? இதை நான் அறிய விரும்புகிறேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) ஒருவன் ஈன்றெடுக்கும் வாரிசு தன் சுயமே ஆகும் என ஸ்ருதிகள் சொல்கின்றன. உண்மையில் பிரம்மனிலிருந்து எழுந்த அனைவரும் பிராமணர்களாகத்தானே இருந்திருக்க வேண்டும். பிராமணர்களில் இருந்து எழுந்த மனிதர்கள் ஏன் அந்தப் பிராமணர்களில் இருந்து வேறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்?” என்று கேட்டான்.(2)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, நீ சொல்வது போலத்தான் இஃது இருக்கிறது. ஈன்றெடுக்கப்பட்ட வாரிசானவன் ஈன்றவனைத் தவிர வேறு எவனும் அல்ல. எனினும், தவத்தில் இருந்து வீழ்ந்ததன் விளைவால் பல்வேறு நிறங்களைக் கொண்ட வர்க்க {வர்ண} வேறுபாடுகள் தோன்றின. நிலமும் {தாயும்}, வித்தும் {தந்தையும்} நல்லவையாக {நல்லவர்களாக} இருந்த போது விளைந்த பயிர் {வாரிசானவன்} தகுதிமிக்கதாக {புண்ணியவானாக / பிராமணனாக} இருந்தது {இருந்தான்}. எனினும், நிலமும், வித்தும் வேறுவகையில் அல்லது தாழ்ந்த வகையில் இருக்கும்போது விளையும் பயிர் தாழ்வடைகிறது.(3,4) அனைத்து உயிரினங்களின் தலைவன் {பிரம்மன்}, உலகங்களைப் படைக்கத் தன்னை நிறுவிக் கொண்டபோது, சில உயிரினங்கள் அவனது வாயிலிருந்தும், சில அவனது கரங்களில் இருந்தும், சில அவனது தொடைகளில் இருந்தும், சில அவனது பாதங்களில் இருந்து வந்ததைச் சாத்திரங்களை அறிந்தவர்கள் அறிவார்கள்.(5) ஓ! குழந்தாய், இவ்வாறு அவனது வாயிலிருந்து எழுந்தவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவனது கரங்களில் இருந்து எழுந்தவர்கள் க்ஷத்திரியர்கள் என்று பெயரிடப்பட்டார்கள். ஓ! மன்னா, அவனது தொடைகளில் இருந்து எழுந்தவர்கள், செல்வமிக்க வர்க்கமான {வர்ணத்தாரான} வைசியர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இறுதியாக, அவனது பாதங்களில் இருந்து பிறந்தவர்கள் தொண்டாற்றும் வர்க்கமான {வர்ணத்தாரான} சூத்திரர்களாகினர்.(6) ஓ! ஏகாதிபதி, இந்த நான்கு வகைகள் {வர்ணங்கள்} மட்டுமே இவ்வாறு படைக்கப்பட்டன. இதற்கு மேலும் உள்ள வர்க்கங்கள் {கலப்புவர்ணங்கள்}, மேலும் மேலும் இவற்றுக்குள் நேர்ந்த கலப்பால் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது.(7) ஓ! ஏகாதிபதி, க்ஷத்திரியர்கள் என்றழைக்கப்படும் அதிரதர்கள், அம்பஷ்டர்கள், உக்கிரர்கள், வைதேஹகர்கள், ச்வபாகர்கள், புக்கஸர்கள், ஸ்தேநர்கள், நிஷாதர்கள், ஸூதர்கள், மாகதர்கள், அயோகர்கள், காரணர்கள், விராத்தியர்கள், சண்டாளர்கள் ஆகியோர் அனைவரும் உண்மையில் இருந்த நான்கு வகையினர் ஒருவரோடொருவர் கலந்ததால் எழுந்தவர்களாவர்” என்றார் {பராசரர்}[1].(8,9)

ஜனகன் {பராசரரிடம்}, “அனைவரும் பிரம்மனில் இருந்து மட்டுமே எழுந்திருக்கும்போது, மனிதர்களிடம் எவ்வாறு இன {கோத்திர} வேற்றுமை உண்டானது? ஓ! தவசிகளில் சிறந்தவரே, இவ்வுலகில் முடிவில்லா வேற்றுமைகளைக் கொண்ட இனங்கள் {கோத்திரங்கள்} காணப்படுகின்றன.(10) வேற்றுமையற்ற தோற்றம் {பிறப்பைக்} கொண்டிருக்கும்போதும் தவங்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் எவ்வாறு பிராமணர்களின் நிலையை அடைவார்கள்? உண்மையில், தூய கருவறைகளில் பிறந்தவர்களும், தூய்மையற்ற கருவறைகளில் பிறந்தவர்களும் பிராமணர்களாகிறார்களே?” என்று கேட்டான்[2].(11)பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, தவங்களின் மூலம் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் வென்ற உயர் ஆன்ம மனிதர்களின் நிலையானது, அவர்கள் அடைந்த தாழ்ந்த பிறவிகளால் பாதிக்கப்பட்டது என்று கருத முடியாது.(12) ஓ! ஏகாதிபதி, பெரும் முனிவர்கள் பாகுபாடற்ற கருவறைகளில் பிள்ளைகளைப் பெற்று, அவர்களுக்கு {அந்தப் பிள்ளைகளுக்குத்} தங்கள் தவச் சக்தியின் மூலம் முனிவர்களின் நிலையை அளித்தனர்[3].(13) என் பாட்டா வசிஷ்டர், ரிஷ்யசிருங்கர், காசியபர், வேதர், தாண்டியர், கிருபர், காக்ஷீவான், கமடர் மற்றும் பிறரும்,(14) ஓ! மன்னா, யவக்ரீதர், பேசுபவர்களில் முதன்மையான துரோணர், ஆயு, மதங்கர், தத்தர், துருபதர் {திருமதர்}, மாத்ஸ்யர் ஆகியோர் அனைவரும்,(15) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா, தங்கள் தவத்தின் வன்மையால் தங்கள் தங்களுக்குரிய {முனிவர்களின் / பிராமண} நிலைகளை அடைந்தனர்.(16) ஓ! ஏகாதிபதி, முதலில் அங்கிரஸ், கசியபர், வசிஷ்டர் மற்றும் பிருகு என்ற நான்கு {மூலக்} கோத்திரங்கள் (இனங்கள்) மட்டுமே இருந்தன.(17) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, செயல்கள் மற்றும் ஒழுக்கத்தின் விளைவால் காலாகாலத்தில் பல கோத்திரங்கள் இருப்புக்கு வந்தன. அந்தக் கோத்திரங்களின் பெயர்கள், அவற்றை நிறுவியோரின் தவங்களால் உண்டானவையாகும். நல்ல மனிதர்கள் அவற்றை {கோத்திரங்களைப்} பயன்படுத்துகின்றனர்” என்றார் {பராசரர்}[4].(18)ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! புனிதமானவரே, பல்வேறு வகைகளின் {வர்ணங்களின்} சிறப்புக் கடமைகளைக் குறித்து எனக்குச் சொல்வீராக. அவற்றின் பொதுவான கடமைகளையும் எனக்குச் சொல்வீராக. நீர் அனைத்தையும் அறிந்தவராவீர்” என்றான்.(19)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, கொடைளை ஏற்பது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, சீடர்களுக்குப் போதிப்பது ஆகியன பிராமணர்களின் சிறப்புக் கடமைகளாகும். பிற வகையினரை {வர்ணத்தாரைப்} பாதுகாப்பது க்ஷத்திரியனுக்கு முறையானதாகும்.(20) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியன வைசியர்களின் தொழில்களாகும். ஓ! மன்னா, அதே வேளையில் இந்த (மூன்று) மறுபிறப்பாள வகையினருக்கும் தொண்டாற்றுவது சூத்திரர்களின் தொழிலாகும்.(21) ஓ! ஏகாதிபதி, நான்கு வகையினரின் {வர்ணத்தாரின்} சிறப்புக் கடமைகளை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! குழந்தாய், இந்த நான்கு வகையினருக்கும் {பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்களுக்கும்} பொதுவான கடமைகளை இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(22) கருணை{குரூரத்தன்மையில்லாமை}{1}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்சை}{2}, விழிப்புணர்வு {தவறுதலில்லாமை}{3}, பிறருக்கு உரியவற்றைக் கொடுத்தல் {விலகியிருத்தல்}{4}, இறந்து போன மூதாதையர்களைக் கௌரவிக்கும் வகையில் சிரார்த்தங்கள் செய்தல் {ச்ராத்தகர்மம்}{5}, விருந்தினர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய விருந்தோம்பலைச் செய்தல் {அதிதிபூஜை}{6}, வாய்மை {ஸத்தியம்}{7}, கோபத்தை அடக்குதல் {குரோதமில்லாமை}{8},(23) தான் மணந்த மனைவியரிடம் நிறைவடைதல்{9}, (அக மற்றும் புறத்) தூய்மை {சுசியாயிருத்தல்}{10}, வன்மம் இல்லாமை {அஸூயையின்மை}{11}, தன்னறிவு அடைதல் {ஆத்மஜ்ஞானம்}{12}, துறவு {பொறுமை}{13} ஆகிய கடமைகள், ஓ! மன்னா, அனைத்து வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} பொதுவானவையாகும்.(24)

பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வகையினரும் மறுபிறப்பாளர்களாவர் {இரு பிறப்பாளர்கள் / த்விஜர்களாவர்}. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவர்கள் அனைவருக்கும் இக்கடமைகளில் சம உரிமை உண்டு.(25) ஓ! ஏகாதிபதி, இந்த மூன்று வகையினரும் தங்கள் தங்களுக்குரிய வர்க்கங்களை {வர்ணங்களைச்} சார்ந்த ஏதோவொரு அறவோனை முன்மாதிரியாகக் கொண்டு பெரும் தகுதியை ஈட்டுவதைப் போலவே, தங்களுக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு கடமைகளைச் செய்து துன்பத்தையும் அடைகின்றனர்.(26) சூத்திரன் (தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்வதால்) ஒருபோதும் வீழ்வதுமில்லை, மறுபிறப்புச் சடங்குகளேதும் செய்யத் தகுந்தவனாவதுமில்லை. வேதங்களில் இருந்து வரும் கடமைகளின் நடைமுறைகள் அவனுடையவையல்ல. எனினும், அனைத்து வகையினருக்கும் பொதுவான {மேற்குறிப்பிடப்பட்ட} பதிமூன்று கடமைகளைப் பயில்வதில் இருந்து அவன் தடை செய்யப்படுவதில்லை.(27) ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகனே}, ஓ! ஏகாதிபதி, வேதங்களைக் கற்ற பிராமணர்கள், {அறவோனான} ஒரு சூத்திரனைப் பிரம்மனுக்கு இணையானவனாகக் கருதுகிறார்கள். எனினும், நானோ அத்தகைய ஒரு சூத்திரனை உலகங்கள் அனைத்தில் முதன்மையானவனும், அண்டத்தில் பிரகாசிப்பவனுமான விஷ்ணுவாகவே பார்க்கிறேன்[5].(28) தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்த மனிதர்கள், (காமம் மற்றும் கோபம் முதலிய) தீய ஆசைகளை விட விரும்பி நல்லோரின் ஒழுக்கத்தை நோற்றுச் செயல்படலாம்; உண்மையில் அவ்வாறு செயல்படும்போது, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் சடங்குகள் அனைத்தையும், அவற்றில் பிற வகையினரால் சொல்லப்படும் மந்திரங்களைத் தவிர்த்து அவற்றை {அந்தச் சடங்குகளைச்} செய்வதன் மூலம் அவர்கள் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறார்கள்.(29) எங்கெல்லாம் தாழ்ந்த வகையை {வர்ணத்தைச்} சார்ந்தவர்கள் நல்லோரின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியை அடைவதில் வென்று, அதன் விளைவாக இம்மையிலும், மறுமையிலும் தங்கள் காலத்தை இன்பமாகக் கழிக்கிறார்கள்” என்றார் {பராசரர்}.(30)ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! பெரும் தவசியே, ஒரு மனிதன் தன் செயல்களால் களங்கமடைகிறானா? அல்லது, அவன் பிறக்கும் வகை அல்லது வர்க்கத்தின் {வர்ணத்தின்} மூலம் களங்கமடைகிறானா? இந்த ஓர் ஐயம் என் மனத்தில் எழுகிறது. இஃதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்.(31)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டும் களங்கத்தின் மூலங்களே ஆகும். அவற்றின் வேறுபாட்டை இப்போது கேட்பாயாக.(32) பிறப்பால் களங்கமடைந்தாலும், பாவம் செய்யாமல் இருக்கும் மனிதன் பிறவி மற்றும் செயல்களால் உண்டாகும் பாவங்களைத் தவிர்க்கிறான்.(33) எனினும், மேன்மையான பிறவியைக் கொண்ட ஒருவன் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்தால், அச்செயல்கள் அவனைக் களங்கப்படுத்தும். எனவே, செயல்கள் மற்றும் பிறவி ஆகிய இரண்டிலும் (பிறவியை விட) அதிகக் களங்கத்தைச் செயல்களே உண்டாக்குகின்றன” என்றார்.(34)

ஜனகன் {பராசரரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்கள் அனைவரிலும் சிறந்தவரே, இவ்வுலகில் பிற உயிரினங்களுக்கு எந்தத் தீங்கையும் இழைக்காமல் செய்யப்படும் அறச்செயல்கள் என்னென்ன?” என்று கேட்டான்.(35)

பராசரர் {ஜனகனிடம்}, “ஓ! ஏகாதிபதி, மனிதர்களை எப்போதும் மீட்கும் தீங்கில்லா செயல்களைக் குறித்துக் கேட்டாய், நான் சொல்வதைக் கேட்பாயாக.(36) தங்கள் இல்லற நெருப்புகளை ஒருபுறம் வைத்து, உலகப் பற்றுகள் அனைத்தில் இருந்தும் தங்கள் தொடர்புகளை அறுத்துக் கொள்ளும் மனிதர்கள், கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறார்கள். படிப்படியாக யோக பாதையில் அடியெடுத்து வைக்கும் அவர்கள், இறுதியாக உயர்ந்த பேரின்ப நிலையை (விடுதலையை {முக்தியைக்}) காண்கிறார்கள். நம்பிக்கையும் பணிவும் கொண்டு, எப்போதும் தற்கட்டுப்பாட்டைப் பயின்று, கூரிய புத்தியுடன், செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவர்கள் நித்தியமான இன்ப நிலையை அடைகிறார்கள்.(37,38) ஓ! மன்னா, மனிதர்களில் அனைத்து வர்க்கத்தினரும் {வர்ணத்தாரும்} இவ்வுலகில் முறையான அறச்செயல்கள், வாய்மை பேச்சு, அறமற்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் சொர்க்கத்திற்கு உயர்கிறார்கள். இதில் எந்த ஐயமும் கிடையாது” என்றார் {பராசரர்}.(39)

மனிதப்பிறவியின் மேன்மை! – சாந்திபர்வம் பகுதி – 298-மனிதப்பிறவியின் மேன்மை; அதற்குரிய பல தர்மங்கள் ஆகியவற்றைக் ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பராசரர் {ஜனகனிடம்}, “அர்ப்பணிப்பற்ற {குணமில்லாத} மனிதர்களுக்கு அவர்களின் தந்தைமார், நண்பர்கள், ஆசான்கள், ஆசான்களின் மனைவியர் ஆகியோரால் தங்கள் அர்ப்பணிப்பில் உள்ள தகுதிகளை {புண்ணியங்களை} அவர்களுக்குக் கொடுக்க இயலாது {இவர்கள் அவர்களுக்குப் பயன்படுவதில்லை}. அத்தகைய பெரியோரிடம் உறுமிக்க அர்ப்பணிப்பைக் கொண்டவர்களும், அவர்களுக்கு ஏற்புடையதைப் பேசுபவர்களும், அவர்களின் நன்மையை நாடுபவர்களும், நடத்தையால் அவர்களுக்கு அடங்கியிருப்பவர்களும் மட்டுமே அர்ப்பணிப்பின் தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியும். (1) தந்தையே தன் பிள்ளைகளுக்குத் தேவர்களில் உயர்ந்தவனாவான். தாயைவிட உயர்ந்தவன் தந்தை எனச் சொல்லப்படுகிறது. ஞானத்தை அடைவதே உயர்ந்த உடைமையாகக் கருதப்படுகிறது. புலன்நுகர் பொருட்களை அடக்கியவர்கள் (ஞானத்தை அடைவதன் மூலம்) உயர்ந்ததை (விடுதலையை {முக்தியை}) அடைகிறார்கள்.(2)

எந்த க்ஷத்திரிய இளவரசன், போர்க்களத்திற்குச் சென்று, அனைத்துத் திசைகளிலும் பறக்கும் நெருப்புக் கணைகளுக்கு மத்தியில் காயமடைந்து அவற்றால் எரிபடுகிறானோ, அவன் தேவர்களால் அடையப்படும் உலகங்களை நிச்சயம் அடைந்து, அங்கே முற்றிலும் நிறைவான சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிக்கிறான்.(3) ஓ! மன்னா, களைப்படைந்தவனையோ, அச்சமடைந்தவனையோ, ஆயுதம் இல்லாதவனையோ, அழுது கொண்டிருப்பவனையோ, போரிட விருப்பமில்லாதவனையோ, கவசம் தரிக்காதவனையோ, தேர்கள், குதிரை மற்றும் யானை இல்லாதவனையோ, போரிடும் முயற்சியை நிறுத்தியவனையோ, நோயுற்றவனையோ, இடத்தை இரந்து கேட்பவனையோ, இளம் வயதினனையோ, முதிர்ந்தவனையோ ஒரு க்ஷத்திரியன் தாக்கக்கூடாது.(4) கவசம், தேர்கள், குதிரை, யானை ஆகியவற்றைக் கொண்டவனும், தன் வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவனும், தன் நிலைக்கு இணையான நிலையைக் கொண்டவனுமான ஒருவனுடனேயே ஒரு க்ஷத்திரியன் போரிட வேண்டும்.(5) இணையானவன் அல்லது மேம்பட்டவனின் கைகளில் நேரும் மரணமே மெச்சத்தக்கது; இழிந்தவன், அல்லது கோழை, அல்லது வறியவனின் கைகளில் நேர்வதல்ல {அவ்வாறு நேரும் மரணம் மெச்சப்படுவதில்லை}. இது நன்கறியப்பட்டதாகும்.(6) பாவி, அல்லது இழி பிறவி, அல்லது தீய நடத்தை கொண்டவன் கைகளில் நேரும் மரணம் மகிமையற்றதும், நரகத்திற்கு வழிவகுப்பதுமாகும்.(7)

வாழ்நாள் காலம் தீர்ந்தவனை எவனாலும் காப்பாற்ற முடியாது. அதே போலவே, வாழ்நாள் காலம் தீராதவனை எவனாலும் கொல்லவும் முடியாது.(8) ஒருவன் தன் அன்புக்குரிய பெரியோர்களை, (தன் நன்மைக்காக) இழி செயல்கள் செய்வதிலிருந்தும், பிறருக்கு தீங்கு செய்யும் செயல்களில் இருந்தும் தடுக்க வேண்டும். அவன் பிறரின் உயிரை எடுப்பதன் மூலம் தன் வாழ்நாளை நீட்டிக்க விரும்பக்கூடாது.(9) புனிதத் தலங்களில் வசித்து மனிதர்களின் கடமைகளை நோற்கும் இல்லறவாசிகள் அனைவரும், தங்களை உயிரைவிட நேரும்போது, புனித ஓடைகளின் கரைகளில் {ஆற்றங்கரைகளில்} தங்கள் உயிரை விடுவதே மெச்சத்தகுந்ததாகும்.(10) ஒருவனுடைய வாழ்நாள் காலம் தீர்ந்ததும், ஐந்து பூதங்களுக்குள் அவன் கறைந்துபோகிறான். சில வேளைகளில் (விபத்துகளின் மூலம்) இது திடீரென நேர்கிறது, சில வேளைகளில் (இயற்கையின்) விளைவுகளால் இது நேர்கிறது.(11)

உடலை அடைந்த ஒருவன், (மகிமையற்ற விபத்தின் மூலம் ஒரு புனிதத்தலத்தில்) அழிவை அடைந்தால், அதே வகையிலான மற்றொரு உடலை அடைகிறான். விடுதலையின் {முக்தியின்} பாதையில் இருந்தாலும் ஒரு பயணியாகும் அவன், ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்குச் செல்லும் மனிதனைப் போல மற்றொரு உடலை அடைகிறான்.(12) அத்தகைய மனிதன் அடையும் இரண்டாம் உடலுக்கு (புனிதத்தலத்தில் அவனது மரணம் நேர்ந்தாலும் கூட) விபத்தாலான அவனது மரணம் மட்டுமே காரணமாகும். அதற்கு இரண்டாம் காரணம் வேறேதும் இல்லை. உடல்படைத்த உயிரினங்கள் (புனிதத்தலங்களில் நேரும் விபத்தாலான மரணத்தின் விளைவால்) அடையும் புதிய உடலானது இருப்பிற்கு வந்து ருத்திரர்கள் மற்றும் பிசாசங்களோடு பற்று கொள்கிறது[1].(13) அத்யாத்மாவை அறிந்த கல்விமான்கள், தோலால் மறைக்கப்பட்டிருக்கும் பெருநரம்புகள், சிறு நரம்புகள், எலும்புக்கூட்டங்கள், தூய்மையற்ற பொருட்கள்கள், ஐம்பூதக் கலவைகள், புலன்கள், ஆசையில் பிறக்கும் புலன்நுகர் பொருட்கள் ஆகியவற்றின் திரட்டே உடல் என்று சொல்கிறார்கள். (உண்மையில்) அழகும், பிற சாதனைகளுமற்ற இந்தத் திரட்டே, முற்பிறவி ஆசைகளின் சக்தியால் மனித வடிவத்தை ஏற்கிறது.(14,15)உரிமையாளனால் {ஆன்மாவால்} கைவிடப்பட்ட உடல் அசைவற்றதாகவும், உயிரற்றதாகவும் {ஜீவனற்றதாகவும்} ஆகிறது. உண்மையில், அடிப்படை உட்பொருட்கள் தங்கள் தங்களுக்குரிய இயல்புகளுக்குத் திரும்பும்போது, உடலானது தூசியுடன் கலக்கிறது.(16) செயல்களின் சேர்க்கையால் உண்டான இந்த உடல், அதன் செயல்களால் தீர்மானிக்கப்பட்ட சூழ்நிலைகளிலேயே மீண்டும் தோன்றுகிறது. ஓ! விதேஹர்களின் ஆட்சியாளா {ஜனகா}, உண்மையில் எந்தச் சூழ்நிலைகளில் இந்த உடல் அழிவடைகிறதோ, அந்தச் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் மறுபிறவியில், அதன் முற்பிறவி செயல்களின் கனிகளை அஃது அனுபவிப்பதும், தாங்கிக் கொள்வதும் காணப்படுகிறது.(17) ஓ! மன்னா, ஜீவன், தான் வசித்திருந்த உடலின் அழிவுக்குப் பிறகு, உடனே வேறு உடலில் பிறப்பெடுப்பதில்லை.(18) பரந்த மேகத்தைப் போல அது சில காலம் வானத்தில் திரிந்திருக்கிறது. ஓ! ஏகாதிபதி, புதிய கொள்ளிடத்தை அடைந்தபிறகே அது மறுபிறப்பை எடுக்கிறது.(19)

ஆன்மாவானாது மனத்தைவிட உயர்ந்ததாகும். மனமானது, புலன்களைவிட உயர்ந்ததாகும். அசையும் {ஜீவனுள்ள} உயிரினங்களே படைக்கப்பட்ட பொருட்களில் முதன்மையானவையாகும்.(20) அசையும் உயிரினங்களிலும், இரு கால்களைக் கொண்டவை மேன்மையானவையாகும். இரண்டு கால் உயிரினங்களில் மறுபிறப்பாளர்கள் மேன்மையானவர்களாவர்.(21) மறுபிறப்பாளர்களில் விவேகிகள் மேன்மையானவர்களாவர். விவேகிகளில் அன்ம அறிவை அடைபவர்கள் மேன்மையானவர்களாவர். ஆன்ம அறிவை அடைந்தவர்களில் பணிவுள்ளவர்கள் மேன்மையானவர்களாவர்.(22) மனிதர்கள் அனைவரையும் பொறுத்தவரையில் பிறப்பை மரணம் பின்தொடர்கிறது. இது தீர்மானிக்கப்பட்டதாகும். சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களின் ஆளுகையில் உள்ள உயிரினங்கள், முடிவைக் கொண்ட செயல்களையே நாடுகின்றன.(23) சூரியன் வடக்கத்திய சாய்வில் {உத்தராயணத்தில்} இருக்கும் போதும், புனிதமான, மங்கலமான காலம் {முகூர்த்தம்} மற்றும் நட்சத்திரத்தின் போதும் அழிவை அடையும் மனிதன் அறவோனாகக் கருதப்படுகிறான்.(24) பாவங்கள் அனைத்தில் இருந்தும் தன்னைக் கழுவிக் கொண்டு, தான் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தையும் தன் சக்திக்குத் தக்க செய்து, எந்த மனிதனுக்கும் துன்பத்தைத் தருவதைத் தவிர்த்து, தானாக நேரும் வேளையில் மரணத்தை அடைபவன் அறவோனாவான்.(25)

நஞ்சு உட்கொண்டு, தூக்கிட்டு, எரித்துக் கொண்டு, கள்வர்களின் கரங்களில், விலங்குகளின் பற்களில் மரணத்தை அடையும் ஒருவன் மகிமையற்றவனாகச் சொல்லப்படுகிறான்.(26) அறவோர், மிகுந்த வேதனைகளைத் தரும் வகையிலான மன மற்றும் உடல் நோய்களால் பீடிக்கப்பட்டாலும், இத்தகைய மரணங்களை அடைவதில்லை.(27) ஓ! மன்னா, அறவோரின் உயிர்கள் {ஜீவன்கள்}, சூரியனைத் துளைத்துக் கொண்டு, பிரம்மலோகங்களுக்கு உயர்கின்றன. அறமற்றோர் மற்றும் பாவிகளாக இருந்தோரின் உயிர்கள் {ஜீவன்கள்} நடு உலங்களில் திரிந்து கொண்டிருக்கின்றன. பாவிகளின் உயிர்கள் அடி ஆழங்களில் {பாதாளங்களில்} மூழ்கிப் போகின்றன. (மனிதனுக்கு) ஒரேயொரு எதிரிதான் உண்டு, மற்றொன்றில்லை. ஓ! மன்னா, அந்த எதிரியானது அறியாமையாகும். அதனால் மூழ்கடிக்கப்பட்ட ஒருவன், அச்சம் நிறைந்த, மிக் கொடூரச் செயல்களைச் செய்ய வழி நடத்தப்படுகிறான்.(28,29) ஓ! மன்னா, எந்த எதிரி ஸ்ருதிகளில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளின் படி பெரியோர்களிடம் காத்திருப்பதன் {அவர்களுக்குப் பணிவிடை செய்வதன்} மூலம் ஒருவனின் சக்திக்குள் அடக்கப்பட வேண்டுமோ, எந்த எதிரியை நிலையான முயற்சிகளைத் தவிர வேறு எதனாலும் வெல்ல முடியாதோ, அந்த எதிரி {அறியாமை} ஞானம் எனும் கணைகளின் மூலம் மட்டுமே நொறுக்கப்படுகிறது.(30)

தகுதியை {புண்ணியத்தை} அடைய விரும்பும் மனிதன் முதலில் பிரம்மச்சாரியாகி வேதங்களைப் பயின்று, நோன்புகளை நோற்க வேண்டும். அதன் பிறகு அவன் இல்லற வாழ்வுமுறையில் {கிருஸ்தாஸ்ரமத்தில்} நுழைந்து வழக்கமான வேள்விகளைச் செய்ய வேண்டும். தன் குலத்தை நிறுவிய பிறகு அவன் காட்டுக்குள் நுழைந்து, தன் புலன்களை அடக்கி, விடுதலையை {முக்தியை} வெல்ல விரும்ப வேண்டும்.(31) ஒருவன் ஒவ்வொரு இன்பத்தையும் தவிர்ப்பதன் மூலம் தனது ஆண்மையை ஒருபோதும் நீக்கிக் கொள்ளக் கூடாது. ஒருவன் சண்டாளனாகவே ஆனாலும், அனைத்துப் பிறவிகளிலும் மனித நிலையே அவனுக்கு விரும்பத்தக்கதாகும்.(32) ஓ ஏகாதிபதி, உண்மையில் மனிதனானால் தகுதிமிக்கச் செயல்களின் மூலம் ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள முடியும் என்பதால் அந்த வகை (மனிதப்) பிறப்பே முதன்மையானதாகும்.(33) மனித நிலையில் இருந்து வீழ்ந்து விடக்கூடாது என்பதாலே மனிதர்கள் ஸ்ருதிகளின் அதிகாரத்தால் வழிநடத்தப்படும் அறச்செயல்களை எப்போதும் செய்கிறார்கள்.(34) அடைதற்கரிய மனித நிலையை அடைந்த எந்த மனிதன், வன்மத்தில் ஈடுபட்டு, அறவோரை அவமதித்து, ஆசையின் வசப்படுகிறானோ, அவன் நிச்சயம் தன் ஆசைகளால் வஞ்சிக்கப்படுவான்.(35) எந்த மனிதன் அன்பால் வழிநடத்தப்பட்ட கண்களுடன் அனைத்து உயிரினங்களையும் அன்பால் வளர்க்கத்தகுந்தவை என்று கருதுவானோ, எவன் அனைத்து வகைச் செல்வங்களையும் அலட்சியம் செய்வானோ,(36) எவன் அவற்றுக்கு ஆறுதல் அளித்து, உணவளித்து, ஏற்புடைய வார்த்தைகளைச் சொல்வானோ, எவன் அவற்றின் மகிழ்ச்சியில் மகிழ்ந்தும், துயரில் துன்புறுவானோ, அவன் மறுமையில் ஒருபோதும் துன்புறமாட்டான்.(37)

ஒருவன் சரஸ்வதி {சரஸ்வதி ஆறு}, நைமிசக்காடு {நைமிசவசன்}, புஷ்கரை நீர்நிலைகள் மற்றும் உலகில் உள்ள புனிதத்தலங்கள் அனைத்திற்கும் சென்று, கொடைகளை அளித்து, துறவைப் பயின்று, இனிய குணங்களைக் கொண்டு, நீராடல்கள் மற்றும் தவங்களின் மூலம் தன் உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.(38) தங்கள் வீடுகளுக்குள்ளேயே மரணத்தை அடையும் மனிதர்களின் உடல்களுக்கு ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டும். சுடலைக்கு {சுடுகாட்டுக்கு} வாகனங்களின் எடுத்துச் செல்லப்படும் அவர்களது உடல்கள் {சடலங்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட தூய்மைச் சடங்குகளின் படி அங்கே எரிக்கப்பட வேண்டும்.(39) அறச்சடங்குகள், நன்மைக்கான விழாக்கள், வேள்விகளைச் செய்வது, பிறரின் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, கொடைகள், தகுதிமிக்கப் பிற செயல்களைச் செய்வது, இறந்து போன தன் முன்னோர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் தன் சக்திக்குத்தக்க செய்வது ஆகிய அனைத்தையும் ஒருவன் தன் {ஆன்ம} நன்மைக்காகவே செய்கிறான்.(40) ஓ !மன்னா, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களும், பிற சாத்திரங்களும், களங்கமற்ற செயல்களைக் கொண்ட ஒருவனின் நன்மைக்காகவே உண்டாகின” என்றார் {பராசரர்}”.(41)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, இவை அனைத்தும் விதேஹர்களின் ஆட்சியாளனுடைய {ஜனகனின்} நன்மைக்காக உயர் ஆன்ம தவசியால் {பராசரரால்} அவனுக்குச் சொல்லப்பட்டவையாகும்”.(42)

முக்திக்கான வழிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 299-முக்திக்கான வழிமுறைகள் குறித்து ஜனகனுக்குச் சொன்ன பராசரர்…

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மிதிலையின் ஆட்சியாளனான ஜனகன், அனைத்துக் கடமைகளிலும் குறிப்பிட்ட அறிவை கொண்ட உயர் ஆன்ம பராசரரிடம் மீண்டும் கேள்வி கேட்டான்.(1)ஜனகன் {பராசரரிடம்}, “எது நன்மையை விளைவிக்கும்? (உயிரினங்களுக்கு) எது சிறந்த பாதை? {அடையும் பொருளில் எது} எந்தச் சாதனை ஒருபோதும் அழிவடையாதது? எந்த இடத்திற்குச் சென்ற பிறகு ஒருவன் திரும்ப வேண்டியதில்லை? ஓ! உயர்ந்த புத்தியைக் கொண்டவரே, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

பராசரர் {ஜனகனிடம்}, “(பற்றுகளில் இருந்து) தொடர்பறுத்துக் கொள்வதே நன்மைக்கான வேர் ஆகும். அறிவே உயர்ந்த பாதை. பயின்ற தவங்கள் ஒருபோதும் அழிவடைவதில்லை. தகுந்தோருக்கு அளிக்கப்படும் கொடைகளும் தொலைந்துபோவதில்லை.(3) பாவத்தின் கட்டுகளை ஒருவன் உடைக்கும்போது, அவன் அறத்தில் இன்பம் கொள்ளத் தொடங்குகிறான். ஒருவன் கொடைகள் அனைத்திலும் உயர்ந்த கொடையான அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதிமொழியை எடுக்கும்போது, அவன் வெற்றியை அடைகிறான்.(4) (தகுந்த மனிதர்களுக்கு) ஆயிரம் பசுக்களையும், நூறு குதிரைகளையும் கொடையளிப்பவனும், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதி மொழியை அளிப்பவனும், அனைத்து உயிரினங்களிடமிருந்தும் பதிலுக்குத் தீங்கிழையாமையையே உறுதிமொழியாகப் பெறுகின்றனர்.(5) அனைத்துவகைச் செல்வம் மற்றும் இன்பங்களின் மத்தியில் வாழும் ஒருவன், புத்தி அருளப்பட்டவனாக இருந்தால், அவற்றோடு வாழமாட்டான்; புத்தியில்லாதவனோ நிலையற்றவையான இன்பப் பொருட்களிலேயே முழுமையாக வாழ்கிறான்.(6) தாமரை இலையை நனைக்க முடியாத நீரைப் போல ஞானியிடம் பாவத்தால் ஒட்ட முடியாது. மரத்தோடு உறுதியாக ஒட்டிக் கொள்ளும் அரக்கைப் போலப் பாவமானது புத்தியில்லாதவனிடம் உறுதியாக ஒட்டிக் கொள்கிறது[1].(7)பலன்களைத் தாங்கிக் கொள்ளாமல் {அனுபவிக்காமல்} தீர்ந்துபோகாத பாவமானது, அதைச் செய்தவனை ஒருபோதும் விடுவதில்லை. அதேபோல, பாவம் செய்தவனும், நேரம் வரும்போது அதனிலிருந்து எழும் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளவே வேண்டும்.(8) எனினும், தூய ஆன்மாக்களைக் கொண்டோரும், பிரம்மத்தின் இருப்பை உணர்ந்தவர்களும், தங்களுடைய செயல்களின் கனிகளால் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை.(9) அறிவு மற்றும் செயற்புலன்களை {ஞானகர்மேந்திரியங்களைப்} பொறுத்தவரையில் அவற்றில் கவனமில்லாதவனும், தன் தீச்செயல்களை அறிந்து கொள்ளாதவனும், நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டிலும் இதயப்பற்று கொண்டவனும் பேரச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள்.(10) எப்போதும் பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவனும், கோபத்தை முழுமையாக அடக்கியவனுமான ஒருவன், உலகம் சார்ந்த பொருட்களில் இன்புற்று வாழ்ந்திருந்தாலும் பாவத்தால் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(11) ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்ட மதில் {அணை} அடித்துச் செல்லப்படாமல் இருக்கும்வரை, நீரைப் பெருகச் செய்வதைப் போலவே, இன்ப நுகர் பொருட்களில் பற்றில்லாத மனிதன், சாத்திர வரையறைகளுடன் கூடிய அறமென்ற மதிலை உண்டாக்கிக் கொண்டு ஒருபோதும் தளர்வுறாமல் இருக்கிறான். மறுபுறம், அவனது தகுதிகளும், தவங்களும் அதிகரிக்கின்றன[2].(12)(சூரிய காந்தம் என்றழைக்கப்படும்) தூய ரத்தினமானது தன்னைத் தானே உறிஞ்சி ஈர்த்துக் கொள்வதைப் போலவே, சூரியக் கதிர்களை ஆளும் விதியின் படியே, குவிந்த கவனத்தின் {தியானத்தின்} உதவியுடன் யோகமானது விளைகிறது[3].(13) எள் வித்துகள், (நறுமணமிக்க) மலர்களுடன் மீண்டும் மீண்டும் கலப்பதன் விளைவால் மிகுந்த ஏற்புடைய குணத்தை அடைவதைப் போலவே, சத்வ குணமும் மனிதர்கள் எந்த அளவுக்குத் தூய ஆன்மாக்களைக் கொண்ட பிற மனிதர்களோடு பழகுகிறார்களோ அந்த அளவுக்கு {அவர்களிடம் சத்வ குணம்} உண்டாகிறது.(14) ஒருவன் சொர்க்கவாசத்தை விரும்பும்போது, அவன் தன் மனைவியர், செல்வம், பதவி, வாகனங்கள், பல்வேறு வகை நற்செயல்கள் ஆகியவற்றைக் கைவிடுகிறான். உண்மையில், ஒருவன் அத்தகைய மனநிலையை அடையும்போது, அவனது புத்தியானது, புலன்நுகர் பொருட்களில் இருந்து தொடர்பறுத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(15) (மறுபுறம்) புலன்நுகர் பொருட்களில் பற்றுக் கொண்ட புத்தியோடு கூடிய மனிதன், தனக்கான நன்மை எது என்பதைக் காண்பதில் குருடனாகி, தூண்டிலிலுள்ள இறைச்சியைக் கண்ட மீனை (மீனானது அழிவால் இழுத்துச் செல்லப்படுவதைப்) போல உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களிடமும் தன் இதயத்தால் இழுத்துச் செல்லப்படுகிறான்.(16)பல்வேறு அங்கங்களாலான உடலைப் போல மரணமடையக்கூடிய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தே நீடித்திருக்கின்றன. அவை ஒரு வாழைத்தண்டைப் போலவே வீரியமற்றவையாக இருக்கின்றன. (தற்சார்புடன் இருக்க விட்டால்) அவை (பலவீனமான பொருட்களாலான) ஒரு படகைப் போல இந்த உலகப் பெருங்கடலில் மூழ்குகின்றன[4].(17) அறமீட்டுவதற்குக் குறிப்பிட்ட நேரம் என்று ஏதும் கிடையாது. மரணம் எந்த மனிதனுக்காகவும் காத்திருக்காது. மனிதன் தொடர்ந்து மரணத்தின் {காலனின்} கோரப்பற்களை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும்போது, அனைத்து நேரங்களிலும் அறச்செயல்களைச் செய்வது முறையானதே.(18) கவனத்துடன் இருக்கக்கூடிய ஒரு குருட்டு மனிதனால் தன் சொந்த வீட்டுக்குள் உலவமுடிவதைப் போலவே, யோகத்தில் நிலைத்த மனம் கொண்ட ஞானியானவன், (தான் பின்பற்ற வேண்டிய) பாதையில் செல்வதில் வெற்றியடைகிறான்.(19) பிறப்பின் விளைவால் மரணம் எழுவதாகச் சொல்லப்படுகிறது. பிறவியானது மரணத்தின் ஆளுகைக்கு உள்ளடங்கியதே. விடுதலையின் {முக்தியின்} கடமை நடைமுறைகளை அறியாத ஒருவன், விதியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இயலாதவனாகப் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் சக்கரமாகச் சுழல்கிறான்.(20)புத்தியால் பரிந்துரைக்கப்பட்ட பாதையில் நடக்கும் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை ஈட்டுகிறான். விரிவானவை துன்பத்தில் நிறைந்திருக்கின்றன, அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை என்று சொல்லப்படுகிறது. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்ம மகிழ்ச்சியை விளைவிப்பதாகும்[5].(21) தாமரைத்தண்டு தன்னுடன் கூடிய சேற்றை விரைவாக விட்டகல்வதைப் போலவே, ஆன்மாவானது மனத்தை வேகமாகக் கைவிடுகிறது[6].(22) மனமே முதலில் ஆன்மாவை யோகத்தை நோக்கிச் செலுத்துகிறது. பிறகு யோகம் மனத்தினுள் கலக்கிறது. ஆன்மா யோகத்தில் வெற்றியடையும்போது, குணங்களற்ற தன் சுயத்தைப் பார்க்கிறது[7].(23) புலன் நுகர் பொருட்களுக்கு மத்தியில் ஈடுபட்டு, அத்தகையே ஈடுபாட்டைத் தன்னுடைய பணியெனக் கருதும் ஒருவன், அந்தப் பொருட்களில் அவன் கொண்ட இத்தகைய அர்ப்பணிப்பின் விளைவால் தன்னுடைய உண்மையான பணியில் இருந்து வீழ்கிறான்.(24) ஒரு ஞானியின் ஆன்மாவானது, அதன் அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தில் உயர்ந்த இன்பநிலையை அடையும் அதே வேளையில், ஞானமில்லாத ஒருவன் மிகுந்த ஆழத்தில் மூழ்குகிறான், அல்லது இடைநிலை உயிரினங்களுக்கு மத்தியில் பிறப்பை அடைகிறான்.(25)சுடப்பட்ட மண் பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரானது, ஒழுகாமல் குறைவில்லாமல் அங்கேயே எஞ்சியிருப்பதைப் போலவே, கடுந்தவங்களுக்கு உள்ளான ஒருவடைய உடலானது, (பிரம்மலோகத்தில் உள்ள) இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் (மறுக்காமல்) அனுபவிக்கிறது.(26) அதே போல உலகம் சார்ந்த பொருட்களை அனுபவிக்கும் மனிதனால் ஒருபோதும் விடுதலை {முக்தியை} அடைய முடியாது. மறுபுறம், (இவ்வுலகில்) அத்தகைய பொருட்களைக் கைவிடும் மனிதன், இம்மையில் பெரும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(27) பிறவிக் குருடனான ஒருவன், தன் வழியைக் காண இயலாததைப் போலவே ஒளிபுகாத கூட்டுக்குள் மறைக்கப்பட்டிருக்கும் ஆன்மாவுடன் கூடிய ஒரு புலனின்பவாணன், மூடுபனியால் சூழப்பட்டு (தான் அடைய வேண்டிய உண்மைப் பொருளைக்) காணத் தவறுவதே காணப்படுகிறது.(28) வணிகன் கடலோடி தங்கள் மூலதனத்திற்குத் தகுந்த இலாபங்களை ஈட்டுவதைப் போலவே, மனிதர்களின் இந்த உலகில் உள்ள உயிரினங்களும், தங்கள் தங்களுக்குரிய செயல்களின்படியே தங்கள் கதிகளை அடைகின்றன.(29) காற்றை விழுங்கும் பாம்பைப் போலவே, காலனும் முதுமையெனும் வடிவில் பகல்களாலும், இரவுகளாலும் ஆன இந்த உலகில் திரிந்து அனைத்து உயிரினங்களையும் விழுங்குகிறான்.(30)

ஓர் உயிரினம், பிறக்கும்போது, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட செயல்களின் கனிகளை அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறது. ஒருவனுடைய முற்பிறவிகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாக அல்லாமல் ஏற்புடைய, அல்லது ஏற்பில்லாத எதையும் ஒருவன் அனுபவிப்பதோ, தாங்கிக் கொள்வதோ இல்லை.(31) கிடந்தாலும், நடந்தாலும், சும்மா அமர்ந்தாலும், தன் தொழில்களில் ஈடுபட்டாலும், ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும், (முற்பிறவிகளில் அவன் செய்த) நல்ல மற்றும் தீய செயல்களே அவனை எப்போதும் அணுகுகின்றன.(32) பெருங்கடலின் மறுகரையை அடைந்த ஒருவன், தான் எங்கிருந்து பயணித்து வந்தானோ அதே இடத்திற்குத் திரும்புவதற்குக் கடலைக் கடக்க விரும்புவதில்லை[8].(33) (ஆறு அல்லது தடாகத்தின்) நீரில் மூழ்கிய தன் படகைக் கயிற்றின் உதவியால் எழுப்பும் மீனவனைப் போலவே, மனமும், உடல் உணர்வில் இருந்து விடுதலையடையாமல் உலகப் பெருங்கடலில் மூழ்கிய ஜீவனைத் தியான யோகத்தின் உதவியால் எழுப்புகிறது[9].(34) ஆறுகள் அனைத்தும் கடலை நோக்கி ஓடி, அதனுள் கலப்பதைப் போலவே மனமும், யோகத்தில் ஈடுபடும்போது, தொடக்ககாலப் பிரகிருதியுடன் கலக்கிறது[10].(35)பற்றின் சங்கிலிகள் பலவற்றால் கட்டப்பட்ட மனங்களைக் கொண்டவர்களும், அறியாமையில் மூழ்கியிருப்பவர்களுமான மனிதர்கள், நீரில் மணல் வீடுகளைப் போல அழிவை அடைகின்றனர்[11].(36) தன் உடலை ஒரு வீடாகவும், அதன் (அக மற்றும் புறத்) தூய்மையைப் புனித நீராகவும் கருதுவதும், புத்தியின் பாதையில் நடப்பதுமான உடல் படைத்த ஓர் உயிரினம், இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறது.(37) விரிவானவை துன்பத்தை உண்டாக்குகின்றன; அதே வேளையில் சுருங்கியவை மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. அனாத்மாவால் {ஆத்மா அல்லாதவற்றால்} பிரதிபலிக்கப்படும் கனிகள் {பலன்கள்} விரிவானவை. (சுருக்கமானவற்றை உள்ளடக்கிய) துறவே ஆன்மாவுக்கான நன்மையை விளைவிக்கிறது.(38) ஒருவனுடைய தீர்மானத்தால் எழும் அவனது நண்பர்களும், (தன்னல) காரணங்களுக்காகப் பற்றுக் கொள்ளும் அவனது உறவினர்களும், அவனது மனைவியர், மகன்கள் மற்றும் பணியாட்களும் அவனுடைய செல்வத்தை விழுங்க மட்டுமே செய்கின்றனர்.(39) தாயாலோ, தந்தையாலோ ஒருவனுடைய மறுமைக்கான சிறு நன்மையையும் அளிக்க முடியாது. ஒருவனுயை வாழ்வாதாரத்திற்கான உணவைக் கொடைகளே கொண்டிருக்கின்றன. உண்மையில், ஒருவன் தன்னுடைய செயல்களின் கனிகளை அனுபவிக்கவே வேண்டும்.(40) தாய், மகன், தந்தை, சகோதரன், மனைவி, நண்பர்கள் ஆகியோர் தங்கத்தின் அருகிலேயே தங்கக்கோடுகளால் வரையப்பட்டதைப் போன்றவர்களாவர்.(41)முற்பிறவியில் செய்யப்பட்ட நன்மையான மற்றும் தீமையான செயல்கள் அனைத்தும் இழைத்தவனை வந்து சேரும். முற்பிறவியின் செயல்களுக்கான விளைவைத் தற்காலத்தில் அனைவரும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ செய்கிறார்கள் என்பதை அறிந்து ஆன்மாவானது, (இனிமையற்ற கனிகள் அனைத்தையும் தவிர்க்கும் வகையில் செயல்பட) புத்தியைப் பல்வேறு திசைகளில் தூண்டுகிறது.(42) உரிய துணைகளுடனும், மெய்யுறுதியுடனும் கூடிய முயற்சியைச் சார்ந்து தன் பணிகளில் தன்னை நிறுவிக்கொள்ளும் ஒருவன் தோல்விகளை ஒருபோதும் சந்திப்பதில்லை.(43) ஒளிக்கதிர்கள் ஒருபோதும் சூரியனைக் கைவிடாததைப் போலவே, செழிப்பும் ஐயமில்லா நம்பிக்கையுடன் கூடிய ஒருவனை ஒருபோதும் கைவிடுவதில்லை.(44) களங்களமற்ற ஆன்மாவைக் கொண்ட மனிதனால், நம்பிக்கையுடனும், மெய்யுறுதியுடனும், உரிய வழிமுறைகளின் துணையுடனும், செருக்கில்லாமலும், புத்தியுடனும் செய்யப்படும் செயலானது ஒருபோதும் தொலைந்து போகாது.(45) ஓர் உயிரினம் தாயின் கருவறையில் வசிக்கும் காலத்திலேயே, முற்பிறவிகளில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் அடைகிறது. தடுக்கப்பட முடியாத மரணம் {மிருத்யு}, காலத்தின் {காலனின்} துணையுடன் கொண்டுவரும் உயிருக்கான அழிவானது, அரத்தால் அரியப்படும் மரத்தின் தூசியைச் சிதறடிக்கும் காற்றைப் போல அனைத்து உயிரினங்களையும் தங்கள் கதிக்கு வழிநடத்திச் செல்கிறது.(46) முற்பிறவியில் தன்னால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்களின் மூலமே மனிதன் தங்கத்தையும், விலங்குகளையும், மனைவியரையும், பிள்ளைகளையும், கௌரவப் பிறவியையும், மதிப்புமிக்க உடைமைகளையும், தனது மொத்த செழிப்பையும் அடைகிறான்” என்றார் {பராசரர்}”.(47)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா, வாய்மைக்கு இணங்க தவசியால் {பராசரரால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், அறவோர்களில் முதன்மையானவனுமான ஜனகன், முனிவர் {பராசரர்} சொன்ன அனைத்தையும் கேட்டு, அதன் மூலம் பேரின்பத்தை அடைந்தான்”.(48)

பராசர கீதை முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வானர கீதை – ஸ்ரீ பராசர சம்ஹிதையிலிருந்து ஸ்ரீ அனுமனின் ஸ்துதி :

October 21, 2025

வானர கீதை என்பது கிஷ்கிந்தாவில் உள்ள 38 வானரர்களால் அனுமனைப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும் .
இந்திரன் முன்னிலையில் அனைத்து ரிஷிகளுக்கும் மகரிஷி அகஸ்தியரால் விவரிக்கப்பட்டது மற்றும் பராசரம் சம்ஹிதையின் ஒரு பகுதியாக எழுதப்பட்டுள்ளது . இது அனுமன் , அவரது வெவ்வேறு அவதாரங்கள் மற்றும் மந்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்களைக் கொண்டுள்ளது .
மராஷி பராசரர் பின்னர் இதை மைத்ரேய முனிவரிடம் கூறினார் .

பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும்போது , உங்கள் இடது உள்ளங்கையை உங்கள் இடது முழங்காலில் வைத்து , வலது உள்ளங்கையை ஞான முத்ராவைக் காட்டி , உங்கள் இதயத்தின் அருகில் வைத்து , ரிஷிகளால் போற்றப்பட்ட அனுமன் , வாழை மரங்களுக்கு நடுவில் 10 மில்லியன் உதய சூரியனைப் போல பிரகாசிக்கிறார் . பரபிரம்மத்தை தியானிப்பது என் மனதையும் ஆன்மாவையும் அழிக்க வேண்டும் .

சஞ்சீவனி மலையை தூக்கியவர் , என் மனதில் உள்ள துயரத்தை நீக்குங்கள் . சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட ஒருவர் , என்னை ஆசீர்வதியுங்கள் . வானரங்களில் சிறந்தவர் , என்னைக் காப்பாற்றுங்கள் .

சுக்ரீவா கூறுகிறார் , அனுமனைப் பார்த்ததற்கு சமமான ( அவருடைய தரிசனம் ) 100 தங்க மலை சிகரங்களை , 100 கோடி மாடுகளை தானம் செய்வதை விட அதிகம் என்கிறார் .

அனுமானின் பெயரை எடுத்துக் கொள்வது எனக்கு புனித நீராடுவது போன்றது என்று கந்தமாதனா கூறுகிறார் . அனுமனின் பெயர் என் ஜபம் ( பாராயணம் ) . அனுமனின் பெயர் எனது தியானம் . நான் எப்போதும் விரும்புவது அனுமனைப் புகழ்வது தான் என்று கூறுகிறார் .

சுஷேனா கூறுகிறார் , ஸ்ரீ ராம பக்தனான அனுமனின் கதையைக் கேட்டு , அவருடைய குணங்களைப் பாராட்டி , ஓ ராமசதா , என் வாழ்நாள் முழுவதும் உங்கள் பாதங்களை வணங்க விரும்புகிறேன் என்கிறார் .

அங்கதா சொல்கிறார் , சுவர்ச்சலா தேவி என் தாய் , வாயுதேவரின் மகன் , அனுமன் என் தந்தை . அனுமன் பக்தர்கள் அனைவரும் எனது உறவினர்கள் . அவரது நிலை 3 உலகங்களுக்கு சமம் என்கிறார் .

நிலா சொல்கிறார் , தன் பக்தர்களுக்கு கல்பவரிக்கையைப் போன்றவர் , இனிமையானவர் , நல்ல குணங்கள் கொண்டவர் , வாயுவின் மகன் சுவார்சலையின் கணவர் , வரம் தருபவர், நான் அந்த அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

மகாத்மா அனுமன் என்ன சொன்னாலும் நான் அதை பின்பற்றுவேன் என்று கவக்ஷா கூறுகிறார் . இதைத் தவிர வேறு எந்த பெரிய தர்மமும் எனக்குத் தெரியாது . ஓ ஆஞ்சநேயா , என்னையும் என் தர்மத்தையும் காப்பாற்று என்கிறார் .

மைண்டா கூறுகிறார் , வாயுவின் மகனே , உன் கட்டளைகளைப் பின்பற்றி , உன்னால் தோற்றுவிக்கப்படுகிறேன் , உன்னால் தூண்டப்பட்ட உணர்வுகள் மற்றும் நல்ல அல்லது கெட்ட செயல்கள் எதுவாக இருந்தாலும் , அவை அனைத்தும் உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும் மற்றும் உங்களை மகிழ்விக்க வேண்டும் என்கிறார் .

த்விவிதா சொல்கிறார் , இராவணனையும் அவனுடைய ஆட்களையும் கொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இருந்தது , ஆனால் ராமச்சந்திராவுக்கும் அவருடைய சகோதரனுக்கும் புகழ் சேர்க்க , நீங்கள் அவர்களை அவர்களுக்காக விட்டுவிட்டீர்கள் . அத்தகைய பெரிய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

சரபா கூறுகையில் , செவ்வாய்க்கிழமை அனுமனின் பூஜை செய்ய வேண்டும் . அத்தகைய நபர் தெளிவான மனம் , நீண்ட ஆயுள் , செல்வம் , நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களைப் பெறுவார் என்கிறார் .

கவயா கூறுகையில் , சூரியனை இறைச்சியாகவும் , பெருங்கடலை மாடு மாட்டு வண்டியால் ஆன குழியாகவும் , ராவணனை புல் வைக்கோலாகவும் கருதிய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன்  என்கிறார் .

பிரஹஸ்தா கூறுகையில் , கடலில் எளிதில் பாய்ந்தவர் , ஜானகி தேவியின் துயர் என்ற நெருப்பை எடுத்து , அதனுடன் இலங்கையை எரித்தார் , நான் அத்தகைய அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

நளன் கூறுகையில் , நான் அனுமனின் தாமரை பாதத்தை வணங்குகிறேன் . சிறந்த முடிவுகளை ஏற்படுத்தும் அவருடைய பெயர்களை நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன் என்கிறார் .

தர்மகா கூறுகையில் , போரில் கொல்லப்பட்ட 67 கோடி வானரர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தவர் , அத்தகைய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

கஜா சொல்கிறார் , யார் உடலுடன் வால் இணைத்திருக்கிறார்கள் , அவருடைய தந்தை பார்வதியின் கணவர் சங்கரா , பளபளக்கும் கைகள் , வஜ்ராயுதா போன்ற பற்கள் ( தந்தங்கள் ) , அவருடைய தாய் அஞ்சனா தேவி , எனக்கு அத்தகைய அனுமனை மட்டுமே தெரியும் என்கிறார் .

ஞானம் , வலிமை , புகழ் , தைரியம் , அச்சமின்மை , நோய் எதிர்ப்பு சக்தி , துன்பம் இல்லை , நல்ல பேச்சு ஆகியவை அனுமனை தியானிப்பதன் மூலம் அடையப்படுகின்றன என்று ரிக்ஷராஜாசா கூறுகிறார் .

சம்பாதி கூறுகையில் , சீதை , ராமரின் துயரத்தை நீக்கிய மற்றும் பக்தர்களுக்கு இன்பமாக தோன்றும் அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

வேகவன் கூறுகையில் , முழு உலகிலும் வருங்கால பிரம்மாவிலும் ( படைப்பாளர் ) ஸ்ரீராமருக்கு மிகவும் பிரியமான அஞ்சனா தேவியின் மகனான அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

இந்த பூமியில் அனுமனுக்கு இணையான கடவுள் இல்லை என்று ருந்திரகிரீவா கூறுகிறார் . இது பிரம்மா , பார்வதி , பரமேஸ்வரரால் அறிவிக்கப்பட்டது , அவர்களும் அவரை வணங்குகிறார்கள் என்கிறார் .

முழு வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் ஆழமான பகுப்பாய்விற்குப் பிறகு , மகரிஷிகள் ஒருமனதாக அனுமனை விட பெரிய கடவுள் இல்லை என்று முடிவு செய்துள்ளனர் என்கிறார் .

அனுமன் என்றென்றும் சுபகாரியமாக இருக்கட்டும் என்று சுதாம்ஷ்டரா கூறுகிறார் . வானரர்களின் நாயகனே , நீங்கள் என்றென்றும் சுபமாக இருக்கட்டும் . அஞ்சனாவின் மகனே , உனக்கு எப்பொழுதும் ஐஸ்வர்யம் வரட்டும் ! ராமருக்கு மிகவும் பிரியமானவளே , நீங்கள் எல்லா நேரங்களிலும் மங்களகரமானவர்களாக வெளிப்படுவீர்களாக ! என்கிறார் .

இந்த முழு பிரபஞ்சமும் அனுபவித்த ஆனந்தத்திற்கு ( ஆனந்தம் ) காரணமான கருணையின் ( கருணராசா ) உணர்வுகளால் நிறைந்திருக்கும் அனுமானுக்கு நான் வணங்குகிறேன் என்று ரிஷபன் கூறுகிறார் . பிரம்மாவைத் தவிர வேறு யாருமல்ல என்கிறார் .

பிருது கூறுகிறார் , அனுமன் எல்லாவற்றையும் அருளும் கடவுள் . கொடுக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் அவர் காரணம் . அவர் இருப்புக்கான அனைத்து விமானங்களின் பாதுகாவலர் . அவர் நல்ல செயல்களின் செயல்திறனை ஊக்குவிப்பவர் . அவர்தான் நல்ல செயல்களைச் செய்கிறார் மற்றும் செயல்களின் பலனை அனுபவிப்பவர் அவர்தான் என்கிறார் .

ஜாம்பவான் கூறுகிறார் , ஓ அனுமன் ! இந்த உலகில் உள்ள முட்டாள்தனமான , அறிவற்ற மக்கள் உங்கள் தெய்வீக பெயரை கூட மறந்துவிட்டன ர், இது ஒரு நபருக்கு உலக இன்பங்கள் ( புக்தி ) மற்றும் விடுதலை ( முக்தி ) ஆகிய இரண்டையும் ஆசீர்வதிக்கிறது . இதை விட வித்தியாசமாக என்ன இருக்க முடியும் ? என்கிறார் .

ஜோதிர்முக கூறுகிறார் , ஓ மகாத்மா ஹனுமந்தா ! நீங்கள் இறைவனின் அனைத்து பக்தர்களிடமும் மிக உயர்ந்த பாரிஜாத மலர் ( இரவு பூக்கும் மல்லிகை ) ஆவீர் . இந்தப் பிறவியில் , என்னுடைய எல்லா பிரார்த்தனைகளுக்கும் ஒரே ஒரு வெகுமதியை நான் தேடுகிறேன்  –  உங்கள் தாமரை பாதத்தில் சேவை செய்யும் பக்தர்களின் பாதங்களிலிருந்து வரும் தூசி , எனக்கு அதிர்ஷ்டத்தைத் தரட்டும் . இதைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை என்கிறார் .

சுமுகா கூறுகிறார் , ஓ நாக்கு , அனைத்து சுவைகளின் ( ராசா ) சாரத்தை அறிந்த நீங்கள் , மிகவும் அமிர்த சுவைகளை அனுபவிக்க நித்தியமாக ஏங்குகிறீர்கள் . அனுமனின் பெயர் என்று அழைக்கப்படும் சுவையான தேனை தயவுசெய்து குடிக்கவும் என்கிறார் .

கோலங்குலா சொல்கிறார் , ஒரு அசுத்தமான நாள் பற்றிய கேள்வி எங்கே இருக்கிறது , ஒரு சுப நேரம் , நட்சத்திரம் ( நட்சத்திரம் ) , யோகம் மற்றும் கரணம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க பஞ்சாங்கத்தை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் எங்கே ? அனுமானின் பாதங்கள் ? அத்தகைய நபர் எதற்கும் பயப்படத் தேவையில்லை ; ஒவ்வொரு கணமும் அவருக்கு ஒரு நல்ல தருணம் மட்டுமே என்கிறார் .

குமுதா சொல்கிறார் , எல்லா உயிர்களுக்கும் புகலிடமாக இருக்கும் அனுமனின் பாதங்கள் இந்த பூமியில் வசிக்கின்றன . ஓ நாக்கு , உங்களுடன் அனுமானை நோக்கிச் செல்லும் பாடல்களும் பிற பாதைகளும் உள்ளன . பூமியின் மக்களிடையே குறைபாடு பற்றிய கேள்வி எங்கே இருக்கிறது ? என்கிறார் .

சதாபலி கூறுகிறார் , ஹனுமந்தா ! உங்கள் தாமரை பாதங்களுக்கு சேவை செய்யும் இந்த வாய்ப்பைப் பெறுவதன் மூலம் நான் முற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டேன் . நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள் . என் மீதுள்ள இந்த கருணையால் , நான் தகுதியுள்ளவனாகவும் பெரியவனாகவும் ஆனேன் என்கிறார் .

கேசரி ( அனுமனின் தந்தை ) , அனுமானே ! உன்னைத் தவிர எனக்கு அடைக்கலம் தர யாருமில்லை . நீங்கள் மட்டுமே என் பாதுகாவலர் . எனவே முழுமையான இரக்க உணர்வுடன் , தயவுசெய்து என்னை எப்போதும் பாதுகாக்கவும் என்கிறார் .

மாரீச்சா , அனுமனே ! நான் எப்போதும் பாவங்களில் மூழ்கி இருக்கிறேன் . என்னுடைய இந்த மனம் பாவம் செய்வதிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுகிறது மற்றும் அதை நோக்கி ஆழமாக சாய்ந்துள்ளது . நான் , பயங்கரமான பாவி , மோசமான பாவங்களை செய்கிறேன் . ஆயினும் , ஆண்டவரே , நான் உங்கள் நித்திய பாதுகாப்பை நாடுகிறேன் என்கிறார் .

சதா பாபோகா என்றால் ‘ நித்தியமாக பாவங்களில் மூழ்குவது ‘ . நிஷ்டியூதம் என்பது செய்த பாவங்களின் மூலம் அறியப்படுவதாகும் . பாபாத்மா ஒரு ‘ பாவம் ’ என்கிறார் .

தருணா கூறுகிறார் , ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்று அனுமன் ஆணையிட்டால் , அது தவிர்க்க முடியாமல் நிறைவேறும் ! ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது என்று அனுமன் விரும்பினால் , அது ஒருபோதும் நிறைவேறாது ! இதை எதுவும் மாற்ற முடியாது . இது இப்படியிருக்க , நாம் அத்தியாவசியமான மற்றும் கட்டாயமானதாகக் கருதும் இந்த உடல் உழைப்பு மற்றும் முயற்சிகள் அனைத்தும் உண்மையில் தேவையற்றதாக இருக்கலாம் என்கிறார் .

கோமுக கூறுகிறார் , ஓ அனுமன் ! முடிவற்ற இரக்கத்தால் நிரம்பி வழிகின்ற இறைவா ! என்னை உங்கள் வேலைக்காரனாக கருதி , தயவுசெய்து என்னை மன்னியுங்கள் , பாதுகாக்கவும் , ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தவறுகளைச் செய்துகொண்டிருக்கும் அந்த துரோகி என்கிறார் .

பரமேஸ்வராவுக்கு ஒரே மாதிரியான அர்த்தம் கொண்ட மிகவும் பிரபலமான பாடல் உள்ளது –

அபாரதா சஹஸ்ராணி க்ரியந்தே ஆஹர்நிசம் மாயா ,
தஸோ யம் இதி மாம் மத்வா க்ஷமஸ்வ பரமேஸ்வர

பொருள் : ஓ கடவுளே ! நான் ஆயிரக்கணக்கான தவறுகளை செய்து வருகிறேன் . என்னை உமது அடியாளாக கருதி , தயவுசெய்து என்னை மன்னித்து பாதுகாக்கவும் .

எல்லோரும் தவறு செய்கிறார்கள் . இருப்பினும் , சிலர் மட்டுமே தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்கிறார்கள் . மகாத்மாக்கள் அவர்கள் செய்யாத தவறுகளை கூட ஏற்றுக்கொள்கிறார்கள் .

பவனசா ( பனசா ) கூறுகிறார் , முழுமையான உண்மையின் கோணத்தில் பார்க்கும்போது , அனுமனை விட பெரிய உண்மை இல்லை ! அவரை விட உயர்ந்தது எதுவுமில்லை ! எனவே வேறு எந்த சிந்தனையையும் மகிழ்விக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்  .

பனசா என்றால் பலாப்பழம் என்பது முட்கள் நிறைந்த மற்றும் கடினமான வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது , ஆனால் , விரிசல் திறந்தால் , உள்ளே பல்ப் போன்ற சதைப்பழங்கள் உள்ளன . இந்த சதைப்பற்றுள்ள பழங்கள் ஒவ்வொன்றும் வடிவம் மற்றும் இனிப்பில் ஒரே மாதிரியானவை . (ப லாப்பழத்திற்குள் உள்ள அனைத்து சதைப்பழங்களிலும் ஒரே சாரம் பாய்கிறது ) . அதேபோல் , பிரபஞ்சத்தில் காணப்படும் இந்த பன்முக வடிவங்கள் இரட்டை அல்லாத இறைவனின் வடிவங்கள் .

சுஷேனா கூறுகையில் , அனுமன் தாய் , தந்தை , அண்ணன் , சகோதரி , கல்வி , பணம், இறைவன் , எல்லாம் எனக்கு என்கிறார் .

ஹரிலோமா கூறுகிறார் , அனுமன் இங்கே , அங்கே , எல்லா இடங்களிலும் மற்றும் நீங்கள் விரும்பும் இடத்திலும் இருக்கிறார் . அனுமனைத் தவிர வேறு யாரிடமும் நான் பிரார்த்தனை செய்வதில்லை என்கிறார் .

ரங்கா கூறுகிறார் , நான் சரணடைந்து எல்லாவற்றையும் அனுமனுக்கு வழங்குகிறேன் , அவரிடம் நான் மன்னிப்பு எதிர்பார்க்கிறேன் என்கிறார் .

விதுஷ்டா கூறுகையில் , அனுமன் என்னை நிலத்திலும் , நீரின் கீழும் , காற்றிலும் பாதுகாக்கட்டும் . காடுகளிலும் எல்லா இடங்களிலும் வாயுவின் மகன் என்னைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் .

வானர கீதா என்பது வானரர்களால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும் . ஒவ்வொரு பாவத்தையும் கழுவும் ஒரு சிறந்த சக்திவாய்ந்த பாடல் இது ! அது அந்த நபருக்கு ஒவ்வொரு விதமான அறிவையும் அளிக்கிறது ! இந்த வானர கீதை அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் அதிகரிக்கும் திறன் கொண்டது . இது உச்ச அறிவை அளிக்கிறது . வானர கீதையை மிகுந்த பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் அனுமனின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவார்கள் .

———————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம்-பகுதி 2-ஸ்ரீ சிவ ஸஹஸ்ர நாமம்-

October 21, 2025

சிவபெருமானின் ஆயிரத்தெட்டுப் பெயர்களைச் சொல்லித் துதித்த தக்ஷன்; தக்ஷனுக்கு வரமளித்த சிவன்; பாசுபத விரதம் குறித்துச் சொன்ன சிவன்; சிவசஹஸ்ரநாமத்தைச் சொல்வதால் உண்டாகும் பயனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்}, “யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, உயிரினங்களின் மூதாதையான தக்ஷன் பெருந்தெய்வத்தை {மஹாதேவனைத்துதித்த அந்தப் பெயர்களை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! பாவமற்றவரே, மதிப்புடன் கூடிய ஆவல் என்னை அவற்றைக் கேட்கத் தூண்டுகிறது” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இயல்புக்கு மீறிய செயல்களைச் செய்பவனும், இரகசிய நோன்புகளையுடையவனுமான அந்தத் தேவதேவனின் இரகசியமான மற்றும் வெளிப்படையான பெயர்களை இப்போது கேட்பாயாக.(2)

தக்ஷன், ஓ! தேவதேவர்கள் அனைவருக்கும் தலைவா {ஈஸ்வரா}, அசுரர்களின் படைகளை அழிப்பவனை நான் வணங்குகிறேன். தேவர் தலைவனின் பலத்தை முடக்குபவன் நீயே. தேவர்களாலும், தானவர்களாலும் துதிக்கப்படுபவன் நீயே.(3) ஆயிரங்கண் கொண்டவன் நீயே, கடுமை நிறைந்த கண் கொண்டவன் நீயே, முக்கண்ணன் நீயே. யக்ஷ ஆட்சியாளனின் நண்பன் நீயே. அனைத்து இடங்களிலும், அனைத்துத் திசைகளிலும் பரந்திருக்கும் கரங்களையும் கால்களையும் கொண்டவன் நீயே. அனைத்துப் புறங்களிலும் திரும்பும் கண்களும், தலையும், வாயும் கொண்டவன் நீயே.(4) அண்டத்தில் எங்கும் காதுகளைக் கொண்டவன் நீயே, ஓ! தலைவா, எங்கும் இருப்பவன் நீயே. கணை போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே, பெரிய காதுகளைக் கொண்டவன் நீயே, குடம் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. பெருங்கடலின் கொள்கலன் நீயே.(5) யானை, அல்லது காளை, அல்லது விரிந்த உள்ளங்கையைப் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. உன்னை வணங்குகிறேன். நூறு வயிறுகளைக் கொண்டவனே, நூறு மயிர்ச்சுழிகளைக் கொண்டவனே, நூறு நாவுகளைக் கொண்டவனே. நான் உன்னை வணங்குகிறேன்.(6)

காயத்ரியை பாடுபவர்கள், உன் பெருமைகளையே துதித்தே அந்தக் காயத்ரியைப் பாடுகின்றனர், சூரிய வழிபாட்டாளர்கள், சூரியனைத் துதிப்பதில் உன்னையே துதிக்கின்றனர். பிரம்மன் என்றும், இந்திரன் என்றும், (அளவற்ற) ஆகாயம் {ஊர்த்தவன்} என்றும் முனிவர்கள் உன்னையே கருதுகின்றனர்.(7) ஓ! வலிமைமிக்க வடிவம் கொண்டவனே, பெருங்கடலும் வானும் உன் இரு வடிவங்களாகும். கொட்டிலுக்குள் உள்ள பசுவைப் போல அனைத்துத் தேவர்களும் உன் வடிவத்திலேயே வசிக்கின்றனர்.(8) சோமன், அக்னி, நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, ஆதித்தியன், விஷ்ணு, பிரம்மன், பிருஹஸ்பதி ஆகியோரை நான் உன் உடலிலேயே காண்கிறேன்.(9) ஓ சிறப்புமிக்கவனே, காரணனும், விளைவும் {காரியமும்}, செயல்பாடும் {ப்ரிகையை}, உண்மை மற்றும் உண்மையற்ற அனைத்திற்கான கருவியும் நீயே, படைப்பும், அழிவும் நீயே.(10)

பவன் என்றும், சர்வன் என்றும் ருத்திரன் {பாவத்தை விலக்குபவன்} என்றும் அழைக்கப்படும் உன்னை வணங்குகிறேன். வரங்களை அளிப்பவனான {வரதனே} உன்னை நான் வணங்குகிறேன்.(11) அனைத்து உயிரினங்களின் தலைவனான உன்னை வணங்குகிறேன். அந்தகனைக் கொல்பவனான உன்னை வணங்குகிறேன்.(12) மூன்று சடை, மூன்று தலை ஆகியவற்றைக் கொண்டு, சிறந்த திரிசூலத்தைத் தரித்து, மூன்று கண்களைக் கொண்டவன் நீயே, எனவே, திரயம்பகம் என்றும் திரிநேத்திரன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே. மூன்று நகரத்தை {திரிபுரத்தை} அழித்த உன்னை வணங்குகிறேன்.(13) சண்டன் {குரூர வடிவத்தக் கொண்டன்} என்றும் குண்டன் {சட்டி போன்றவன்} என்றும் அழைக்கப்படுவனும், (அண்ட) முட்டையாய் இருப்பவனும், (அண்ட) முட்டையைச் சுமப்பவனும், தவசியின் தண்டத்தைத் தரித்தவனும், எங்கும் காதுகளைக் கொண்டவனும், தந்திமுண்டன் என்றழைக்கப்படுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(14) மேல்நோக்கிய கோரப் பற்களும், தலைமயிரும் கொண்டவனும், களங்கமற்று வெண்மையாயிருப்பவனும் {சுக்லனும்}, அண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருப்பவனும் {அவத்தன்}, {ரஜோ குணத்தால்} சிவப்பானவனும் {விலோஹிதனும்}, பழுப்பானவும் {தூம்ரனும்}, நீலத் தொண்டை கொண்டவனுமான {நீலகண்டனுமான} உன்னை வணங்குகிறேன்.(15)

ஒப்பிலாத பயங்கர வடிவம் கொண்டவனே {விரூபனே}, மிக மங்கலமானவனே {சிவனே} உன்னை நான் வணங்குகிறேன். சூரியனே, கழுத்தில் சூரியர்களின் மாலை தரித்தவனே, சூரியச் சின்னம் பொறித்த கொடிமரங்களையும், கொடிகளைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்.(16) பூத கணங்களின் தலைவனே, காளையின் கழுத்தைக் கொண்டவனே, வில்லைத் தரித்தவனே {தந்வியே}, எதிரிகள் அனைவரையும் நொறுக்குபவனே, தண்டனையின் வடிவமே {தண்டனே}, மரவுரியாடை தரித்தவனே, உன்னை வணங்குகிறேன்.(17) வயிற்றில் தங்கம் கொண்டவனே, தங்கக் கவசம் பூண்டவனே, தங்க மகுடம் கொண்டவனே, உலகில் உள்ள தங்கமனைத்திற்கும் தலைவனே, உன்னை வணங்குகிறேன்.(18) துதிக்கப்படுபவனே {ஸ்துதனே}, துதிக்கத் தகுந்தவனே {ஸ்துத்பனே}, துதிக்கப்பட வேண்டியவனே {ஸ்தூயமானவனே}, அனைத்துப் பொருளும் ஆனவனே {சர்வனே}, அனைத்தையும் விழுங்குபவனே, அனைத்தின் ஆன்மாவாக இருப்பவனே, உன்னை வணங்குகிறேன்.(19) (வேள்விகளில்) ஹோத்ரியே {ஹோதாவே}, (வேள்விகளில்) ஓதப்படும் (வேத) மந்திரமே {மந்திரனே}, வெள்ளைக் கொடிகளையும், கொடிமரங்களையும் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். அண்டத்தின் தொப்புளாய் இருப்பவனே {நாபனே, நாப்யனே}, ஐம்பூதங்களின் வடிவில் காரணக் காரியமாய் இருப்பவனே, மறைப்பவை அனைத்தையும் மறைப்பவனே உன்னை வணங்குகிறேன்.(20)

கிருசநாசன் {மெல்லிய மூக்குடையவன்} என்றழைக்கப்படுபவனே, மெல்லிய அங்கங்களைக் கொண்டவனே, மெலிவானவனே {கிருசனே} உன்னை வணங்குகிறேன். எப்போதும் உற்சாகமாய் இருப்பவனே {ஸம்ஹ்ருஷ்ட விஹ்ருஷ்டனே}, குழப்பமான ஒலிகள் மற்றும் குரல்களின் உடல்வடிவமே {கிலகிலனே}, உன்னை வணங்குகிறேன்.(21) பூமியில் படர்ந்திருப்பவனே {சயமே}, ஏற்கனவே படர்ந்து விரிந்திருப்பவனே {சயிதனே}, செங்குத்தாக எழுந்து நிற்பவனே {உத்திதனே} உன்னை வணங்குகிறேன். நிலையானவனே {ஸ்திதனே}, ஓடுபவனே {தாவமே}, வழுக்கைத் தலை கொண்டவனே {முண்டனே}, தலையில் சடாமுடி தரித்தவனே {ஜடிலனே} உன்னை வணங்குகிறேன்.(22) ஆடல் விருப்பம் கொண்டவனே, காற்றால் நிறைந்த கன்னங்களைத் தட்டி வாயை உடுக்கையாக்குபவனே {முக வாத்தியம் வாசிப்பவனே} உன்னை வணங்குகிறேன்[1]. ஆறுகளில் மலரும் தாமரைகளை விரும்புபவனே, பாடுவதையும், இசைக்கருவிகளை இசைப்பதையும் விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(23) மூத்த பிறவியே {ஜ்யேஷ்டனே}, உயிரினங்கள் அனைத்தில் முதன்மையானவனே {ச்ரேஷ்டனே}, அசுரன் பலனைக் கொன்றவனே உன்னை வணங்குகிறேன். காலத்தின் உரிமையாளனே {காலனின் கடவுளே}, கல்பத்தின் வடிவமே {கல்யனே}; அனைத்து வகைச் சிறு மற்றும் பேரழிவுகளின் வடிவமே {க்ஷயனே, உபக்ஷயனே} உன்னை வணங்குகிறேன்.(24) பயங்கரமாகவும், பேரிகையொலிக்கு ஒப்பாகவும் சிரிப்பவனே, பயங்கர நோன்புகளை நோற்பவனே உன்னை வணங்குகிறேன். கடுமையானவனும், பத்துக் கரங்களைக் கொண்டவனுமான உன்னை எப்போதும் நான் வணங்குகிறேன்.(25)கைகளில் எலும்புகளை {மண்டையோட்டைத்} தரித்தவனே, ஈமச்சிதைகளின் சாம்பலை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். அச்சத்தை ஏற்படுத்துபவனே {விபீஷ்ணனே}, காண்பதற்குப் பயங்கரனே {பீஷ்மனே}, பயங்கர நோன்புகளையும், நடைமுறைகளையும் கொண்டவனே {பீமனே} உன்னை வணங்குகிறேன்.(26) விகார வாயை {முகத்தைக்} கொண்டவனே, கத்தி போன்ற நாக்கைக் கொண்டவனே, பெரிய பற்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சமைத்த மற்றும் பச்சை இறைச்சியை விரும்புபவனே, சுரைக்காய் வீணையில் மிகுந்த விருப்பமுள்ளவனே உன்னை வணங்குகிறேன்[2].(27) மழையைப் பொழியச் செய்பவனே {வ்ருஷனே}, அறம் விளைய உதவுபவனே {வ்ருஷ்யனே}, நந்தி வடிவனே {நந்திரூபனே}, அறத்தின் சுயமே உன்னை வணங்குகிறேன். காற்றையும், பிற சக்திகளையும் போல எப்போதும் நகர்பவனே {கடங்கடனே}, அனைத்துப் பொருட்களையும் கட்டுப்படுத்துபவனே {தண்டனே}, (காலமெனும் கொப்பரையில்) அனைத்து உயிரினங்களையும் சமைப்பதில் எப்போதும் ஈடுபடுபவனே {பசபசனே} உன்னை வணங்குகிறேன்.(28) அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவனே, மேன்மையானவனே, வரங்களை அளிப்பவனே {வரதனே} உன்னை வணங்குகிறேன். சிறந்த மாலைகளையும், சிறந்த நறுமணப் பொருட்களையும், சிறந்த ஆடைகளையும் கொண்டவனே, சிறந்த உயிரினங்களுக்குச் சிறந்த வரங்களை அளிப்பவனே உன்னை வணங்குகிறேன்.(29) பற்றுள்ளவனே {ஆசையுள்ளவனே}, பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டவனே {ஆசையற்றவனே}, தியான யோகத்தின் வடிவமே {பாவநனே}, அக்ஷங்களின் மாலைகளால் {ருத்ராக்ஷமாலைகளால்} அலங்கரிக்கப்பட்டவனே உன்னை வணங்குகிறேன். காரணத்தில் கலந்தவனே {ஸம்பந்நனே}, விளைவுகளில் விலகுபவனே {விபிந்நனே}, நிழலாகவும், ஒளியாகவும் இருப்பவனே {சாயனே, ஆத்பனரூபனே} உன்னை வணங்குகிறேன்.(30)இனிமையானவனே, பயங்கரமானவனே, மிகப் பயங்கரமானவனே உன்னை வணங்குகிறேன். மங்கலமானவனே {சிவனே}, அமைதியானவனே {சாந்தனே}, பேரமைதிமிக்கவனே உன்னை வணங்குகிறேன்.(31) ஒரு காலைக் கொண்டவனே, பல கண்களைக் கொண்டவனே, ஒரே தலை கொண்டவனே, கடுமையானவனே {ருத்ரனே}, அற்ப காணிக்கைகளில் நிறைவடைபவனே, ஒப்புரவை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(32) அண்டத்தின் கைவினைஞனே {பஞ்சாலனே}, அமைதிக் குணத்துடன் எப்போதும் கலந்தவனே உன்னை வணங்குகிறேன். பகைவரை அச்சுறுத்தும் மணியை {கண்டாமணியைக்} கொண்டவனே, மணியில் உண்டாகும் கிங்கிணி வடிவானவனே {கண்டாநாதரூபனே}, காதுகளால் உணர முடியாத ஒலியின் வடிவானவனே உன்னை வணங்குகிறேன்.(33) ஒன்றுசேர்ந்த ஆயிரம் மணியொலியைப் போன்றவனே, மணிமாலைகளை விரும்புபவனே, உயிர் மூச்சு உண்டாக்கும் ஒலியைப் போன்றவனே, மணங்கள் அனைத்தின் வடிவமே {கந்தனே}, கொதிக்கும் நீர்மங்களின் குழம்பிய ஒலியின் வடிவமே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(34) மூன்று ஹுங்களைக் கடந்தவனே, இரண்டு ஹுங்களை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். மிக அமைதியானவனே, மலையின் மரங்களுடைய நிழலையே வசிப்பிடமாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்[3].(35)உயிரினங்கள் அனைத்தின் இதயச் சதையை விரும்புபவனே, பாவங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவனே {தாரகரே}, வேள்விக் காணிக்கைகளின் வடிவமே {தரனே} உன்னை வணங்குகிறேன். வேள்வியின் வடிவமே {யஜ்ஞனே}, வேள்வி செய்பவனே {யஜியே}, வேள்வி நெய் ஊற்றப்படும் வாயுடைய பிராமணனே {ஹுதனே}, மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட நெய் ஊற்றப்படும் நெருப்பே {ப்ரஹுதனே} உன்னை வணங்குகிறேன்[4].(36) (வேள்வியின்) ரித்விஜர்களின் வடிவமே {யஜ்ஞவாஹனே}, புலன்களைக் கட்டுக்குள் கொண்டவனே {தாந்தனே}, சத்வமே ஆனவனே {தப்யனே}, ரஜஸையும் கொண்டவனே {ஆத்மநனே} உன்னை வணங்குகிறேன். ஆற்றங்கரை வடிவானவனே {தடனே}, ஆறுகளே ஆனவனே {தட்யனே}, ஆறுகள் அனைத்தின் தலைவனே (பெருங்கடலே) {ஸமுத்திரமே} உன்னை வணங்குகிறேன்.(37) உணவை அளிப்பவனே {அந்நதனே}, உணவுகள் அனைத்தின் தலைவனே, உணவை உண்பவனுக்கு ஒப்பானவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரம் கரங்களைக் கொண்டவனே, ஆயிரம் கால்களைக் கொண்டவனே,(38) கரங்களில் ஆயிரம் திரிசூலங்களை உயர்த்திப் பிடிப்பவனே, ஆயிரம் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உதிக்கும் சூரியனின் வடிவானவனே, குழந்தையின் வடிவானவனே,(39) பிள்ளைகளின் வடிவில் உள்ள ஊழியர்கள் {நண்பர்கள்} அனைவரின் பாதுகாவலனே, பிள்ளைகளின் பொம்மை வடிவானவனே உன்னை வணங்குகிறேன். முதியவனே {வ்ருத்தனே}, பேராசைமிக்கவனே {லுப்தனே}, ஏற்கனவே கலக்கமடைந்தவனே {க்ஷுப்தனே}, கலக்கமடையப் போகிறவனே {க்ஷோபணனே} உன்னை வணங்குகிறேன்.(40)கங்கை அலைகளின் அடையாளம் கொண்ட சடையைக் கொண்டவனே, முஞ்ச {தர்ப்பைப்} புற்களுக்கு ஒப்பான சடைமயிர் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். (நன்கறியப்பட்ட) ஆறு செயல்களில் நிறைவடைபவனே, மூன்று செயல்களைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவனே உன்னை வணங்குகிறேன்[5].(41) {நான்கு} வாழ்வுமுறைகளுக்குரிய {ஆசிரமங்களுக்குரிய} கடமைகளை வகுத்தவனே உன்னை வணங்குகிறேன். ஒலிகளால் துதிக்கத்தகுந்தவனே {குஷ்யனே}, கவலை வடிவானவனே, ஆழ்ந்த குழப்பமான ஒலியின் வடிவானவனே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(42) வெண்மையும், பழுப்பும், கருப்பும், சிவப்புமெனக் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உயிர்மூச்சுகளை வென்றவனே, ஆயுதங்களின் வடிவானவனே {தண்டனே}, அனைத்துப் பொருட்களையும் பிளப்பவனே {ஸ்போடநனே}, மிக மெலிதானவனே {க்ருசனே} உன்னை வணங்குகிறேன்.(43) அறம், இன்பம், பொருள் மற்றும் விடுதலையை எப்போதும் சொல்பவனே உன்னை வணங்குகிறேன். சாங்கியனே, சாங்கியர்களில் முதன்மையானவனே, சாங்கிய யோகத்தை அறிமுகம் செய்தவனே உன்னை வணங்குகிறேன்.(44) (பயணங்களில்) தேருள்ளவனே, தேரில்லாதவனே உன்னை வணங்குகிறேன். நாற்சந்தி சாலைகளைத் தேராகக் கொண்டவனே, கருப்பு மானின் தோலை மேலாடையாக {உத்தரீயமாகக்} கொண்டவனே, பாம்பை புனித நூலாகக் கொண்டவனே {ஸர்ப்பயஜ்ஞோபவீதமுடையவனே} உன்னை வணங்குகிறேன்.(45)ஈசானனே {மிக விரும்பப்படுபவனே}, வஜ்ரம் போன்ற கடின உடல் கொண்டவனே, பச்சை {மஞ்சள்} சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். முக்கண்ணனே, அம்பிகையின் தலைவனே, புலப்படுபவனே {வ்யக்தனே}, புலப்படாதவனே {அவ்யக்தனே} உன்னை வணங்குகிறேன்.(46) ஆசையே {காமனே}, ஆசைகளைக் கொடுப்பவனே {காமதனே}, ஆசைகள் அனைத்தையும் கொல்பவனே {காமகநனே}, நிறைவு மற்றும் நிறைவின்மையைப் பாகுபடுத்துபவனே உன்னை வணங்குகிறேன். அனைத்துப் பொருளாக இருப்பவனே {ஸர்வனே}, அனைத்துப் பொருளையும் கொடுப்பவனே {ஸாவதனே}, அனைத்துப் பொருளையும் அழிப்பவனே {ஸாவகநனே} உன்னை வணங்குகிறேன். மாலை வானில் தோன்றும் வண்ணங்களாக {சிவப்பு வண்ணமாக} இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(47) வலிமையும், பலமும் ஆனவனே, வலிமைமிக்கக் கரங்களாக இருப்பவனே, வலிமைமிக்கவனே, பெரும் பிரகாசம் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். பெரும் மேகத் திரளைப் போலத் தெரிபவனே, நித்தியத்தன்மையின் வடிவமே உன்னை வணங்குகிறேன். நன்கு வளர்ந்த உடலைக் கொண்டவனே {மஹாகாலரூபியே}, மெலிந்த அங்கங்களைக் கொண்டவனே, தலையில் சடாமுடி தரித்தவனே, மரவுரியும், விலங்குத் தோலும் அணிபவனே உன்னை வணங்குகிறேன்.(48) சூரியனையோ, நெருப்பையோ போன்ற பிரகாசத்தையுடைய சடாமுடி கொண்டவனே, மரவுரியும், தோலும் ஆடையாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரஞ்சூரியப் பிரகாசம் கொண்டவனே, எப்போதும் தவங்களில் ஈடுபடுபவனே உன்னை வணங்குகிறேன்.(49) நோய்த்தூண்டல் உள்ளவனே {உந்மாதநனே / மயக்கமடையச் செய்பவனே}, நூற்றுக்கணக்கான அலைகளைக் கொண்ட கங்கை நீரால் நனைந்த சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சந்திரன், யுகங்கள் மற்றும் மேகங்களை மீண்டும் மீண்டும் சுழற்றுபவனே உன்னை வணங்குகிறேன்[6].(50)உணவே {அந்நமே}, உணவை உண்பவனே {அத்தா}, உணவைக் கொடுப்பவனே {போக்தா}, உணவை வளர்ப்பவனே {அந்நதனே}, உணவை உண்டாக்குபவனே உன்னை வணங்குகிறேன். உணவை சமைப்பவனே, சமைத்த உணவை உண்பவனே {பக்வபுக்}, காற்றும் நெருப்புமாக இருப்பவனே {பவனனே, அநலனே} உன்னை வணங்குகிறேன்.(51) ஓ! தேவதலைவர்கள் அனைவரின் தலைவனே {தேவேசனே}, பாலூட்டிகள் {ஜராயுஜங்கள்}, முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை {அண்டஜங்கள்}, கழிவில் பிறப்பவை {ஸ்வேதஜங்கள்}, தாவரங்கள் {உத்பிஜ்ஜங்கள்} ஆகிய நான்கு வகை உயிரினங்களாக இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(52) அசைபவை மற்றும் அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட அண்டத்தைப் படைத்தவனே, அவற்றை அழிப்பவனே உன்னை வணங்குகிறேன். ஓ! பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனே, பிரம்மத்தை அறிந்தவர்கள் உன்னையே பிரம்மமாகக் கருதுகின்றனர்.(53) பிரம்மத்தைச் சொல்பவர்கள் உன்னையே மனத்தின் உயர்ந்த தோற்றமாகவும், ஆகாயம், காற்று மற்றும் ஒளி உறங்கும் புகலிடமாகவும் சொல்கின்றனர். ரிக்குகள், சாமங்கள் மற்றும் ஓம் எனும் அசை நீயே.(54) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, சாமங்களைப் பாடி பிரம்மத்தைச் சொல்பவர்கள், ஹாயி-ஹாயி, ஹுவா-ஹாயி, ஹுவா-ஹோயி என்ற அசைகளைச் சொல்லும்போது உன்னையே தொடர்ந்து பாடுகின்றனர்[7].(55)யஜுஸ்கள், ரிக்குகள் மற்றும் வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் காணிக்கைகளால் ஆனவன் நீயே. வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளில் உள்ள துதிகளில் துதிக்கப்படுபவன் நீயே.[8](56) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், கலப்பு வர்ணங்களும் நீயே. வானத்தில் தோன்றும் மேகத்திரள்கள் நீயே; மின்னல் நீயே; இடிமுழக்கம் நீயே.(57) வருடங்கள் நீயே, பருவ காலங்கள் நீயே, மாதங்கள் நீயே, பிறைநாட்களும் நீயே. யுகம் நீயே, கண் இமைப்பால் பிரதிபலிக்கப்படும் நேரம் {நிமிடம்} நீயே, காஷ்டை நீயே, நட்சத்திரங்கள் நீயே, கோள்கள் நீயே, கலையும் நீயே.(58) மரங்கள் அனைத்தின் உச்சி நீயே, மலைகள் அனைத்தின் சிகரங்கள் நீயே. இழிந்த விலங்குகளில் புலி நீயே, பறவைகளில் கருடன் நீயே, பாம்புகளில் அனந்தன் நீயே.(59) பெருங்கடல்கள் அனைத்திலும் பாற்கடல் நீயே, ஆயுதம் ஏவும் கருவிகளில் வில் நீயே. ஆயுதங்களில் வஜ்ரம் நீயே, நோன்புகளில் வாய்மை நீயே.(60)வெறுப்பும் நீயே, விருப்பும் நீயே; பற்றும் நீயே, (தீர்மான) மயக்கமும் நீயே; மன்னிக்கும் தன்மை நீயே, மன்னிக்கா தன்மையும் நீயே. முயற்சி நீயே, பொறுமை நீயே, பேராசை நீயே, காமம் நீயே, கோபம் நீயே; வெற்றி நீயே, தோல்வியும் நீயே.(61) கதாயுதம் தரித்தவன் நீயே, கரங்களில் கட்டாங்கமும், ஜர்ஜ்ஜரமும் தரித்தவன் நீயே. வெட்டுபவன், துளைப்பவன், அடிப்பவன் நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும்) வழிகாட்டுபவனும், இன்ப துன்பங்களைக் கொடுப்பவனும் நீயே.(62) {யமம் ஐந்து, நியமம் ஐந்து என்ற} பத்து ஒழுக்கங்களால் குறிப்பிடப்படும் அறம் நீயே; அனைத்து வகைச் செல்வம், அல்லது பொருள் நீயே; இன்பமும் நீயே. கங்கை நீயே, பெருங்கடல்கள் நீயே, ஆறுகள் நீயே, குளங்கள் {பல்வலங்கள் / குட்டைகள்} நீயே, தடாகங்கள் {ஸரஸ்கள் / ஏரிகள்} நீயே.(63) மெல்லிய கொடிகள் நீயே, அடர்த்தியான செடிகொடிகள் நீயே, அனைத்து வகைப் புற்களும் நீயே, உதிர்களின் மூலிகைகள் நீயே. இழிந்த விலங்குகள் நீயே, பறவைகள் நீயே. அனைத்துக் காரியங்கள் மற்றும் செயல்களின் தோற்றம் நீயே, கனிகளும், மலர்களும் விளையும் பருவகாலங்கள் நீயே.(64) வேதங்களின் தொடக்கம் நீயே, அவற்றின் முடிவும் நீயே; காயத்ரி நீயே, ஓம் எனும் அசை நீயே.(65)

பச்சையானவன் {ஹரிதம்} நீயே, சிவப்பானவன் {ரோஹிதம்} நீயே, நீலமானவன் {நீலம்} நீயே, கருப்பானவன் {கிருஷ்ணம்} நீயே, குருதி வண்ணம் {ரத்தம்} நீயே, சூரிய வண்ணம் {அருணம்} நீயே, அடர்பழுப்பானவன் {கத்ரு} நீயே, {கபிலம் / கரிக்குருவியின் நிறம் நீயே}, மென்பழுப்பவானவன் {கபோதம்} நீயே, அடர் நீலமானவன் {மேசகம் / மயில்தோகையின் நிறம்} நீயே[9].(66) நிறமற்றவன் நீயே, சிறந்த நிறம் நீயே, நிறங்களை உண்டாக்குபவன் நீயே, ஒப்பற்றவன் நீயே. தங்கப் பெயர் கொண்டவன் நீயே, தங்கத்தை விரும்புபவன் நீயே.(67) இந்திரன் நீயே, யமன் நீயே, வரமளிப்பவன் நீயே, செல்வத்தின் தலைவன் நீயே, அக்னி நீயே, கிரகணம் {ஒளி மறைப்பு} நீயே, சித்திரபானு என்றழைக்கப்படும் நெருப்பு நீயே, ராஹு நீயே, சூரியன் நீயே.(68) வேள்வி நெய் ஊற்றப்படும் நெருப்பு நீயே. நெய்யை ஊற்றுபவன் நீயே. நெய் ஊற்றி கௌரவிக்கப்படுபவன் நீயே, ஊற்றப்படும் நெய்யே ஆனவன் நீயே, அனைவரின் பலமிக்கத் தலைவன் நீயே. திரிசுபர்ணர்கள் என்றழைக்கப்படும் பிராமண வகையினர் நீயே; வேதங்கள் அனைத்தும் நீயே; யஜுஸ்களில் சதருத்ரீயம் என்றழைக்கப்படும் பகுதிகள் நீயே.(69) புனிதங்களில் புனிதன் நீயே, மங்கலமான அனைத்துப் பொருட்களிலும் மங்கலமானவன் நீயே. அசைவற்ற உடலில் அசைவு {ஹிண்டுகள்} நீயே. மனித வடிவில் வசிக்கும் சித் நீயே. குணங்களை அடைந்து, அழிவை அடையத்தக்கவனாகுபவனும் நீயே. ஜீவன் நீயே, குணங்கள் இல்லாதிருக்கையில் ஒருபோதும் அழிவில்லாதவன் நீயே. ஜீவனுடன் கூடிய உடலின் வடிவில் சிதைவுக்கும், மரணத்திற்கும் தகுந்தவனாக இருப்பினும் முழுமையானவன் நீயே.(70)உயிர்மூச்சு நீயே, சத்வம் நீயே, ரஜஸ் நீயே, தமஸ் நீயே, குற்றமில்லாதவன் நீயே. பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள் நீயே. விழிதிறப்பும் {உந்மேஷமும்}, விழி அடைப்பும் {நிமேஷமும்} நீயே. தும்மலும் {க்ஷுதமும்}, கொட்டாவியும் {ஜ்ரும்பிதமும்} நீயே, எப்போதும் உள்நோக்கித் திரும்பிய சிவந்த கண்களைக் கொண்டவன் நீயே. பெரிய வாயும், வயிறும் படைத்தவன் நீயே.(72) ஊசிகளைப் போல உன் உடலில் மயிர் கொண்டவன் நீயே. பச்சையான தாடி கொண்டவன் நீயே {செம்பட்டையான மீசை கொண்டவன் நீயே}. மேல்நோக்கிய தலைமயிர் கொண்டவன் நீயே. வேகத்திலும் வேகமானவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையின் கோட்பாடுகளை அறிந்தவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையை விரும்புபவன் நீயே.(73) நீரில் உலவும் மீன் {மத்ஸ்யன்} நீயே, வலையில் சிக்கிய மீனும் {ஜலசரன்} நீயே. நிறைவானவன் நீயே, விளையாட்டை விரும்புபவன் நீயே, அனைத்து வகைச் சச்சரவுகளின் வடிவமாக இருப்பவன் நீயே. காலம் {கலி} நீயே, கெட்ட காலம் {துஷ்காலன்} நீயே, முதிரா காலம் {அகாலன்} நீயே, மிகைமுதிர்ந்த காலம் {அதிகாலன்} நீயே[10].(74) கொலை {மரணம் / மிருத்யு} நீயே, (கொல்லும்) கத்தி {க்ஷுரம்} நீயே, கொல்லப்படுபவனும் {க்ருத்யன்} நீயே. துணைவன் {பக்ஷன்} நீயே, எதிரி நீயே, துணைவர்களையும், எதிரிகளையும் அழிப்பவன் நீயே. மேகங்கள் தோன்றும் காலம் நீயே, பெரும்பற்கள் நீயே, சம்வர்த்தகமும், வலாஹமும் நீயே[11].(75)காந்தியின் வடிவில் புலப்படுபவன் {கண்டன்} நீயே. மாயையால் பீடிக்கப்பட்டதன் விளைவால் மறைந்திருப்பவன் {புலப்படாதவன் / அகண்டன்} நீயே. உயிரினங்களை அவற்றின் செயல்களின் கனிகளால் இணைப்பவன் {கடி} நீயே. கையில் மணியைக் கொண்டவன் {கண்டி} நீயே. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் (உன் பொம்மைகளாக வைத்துக் கொண்டு) விளையாடுபவன் {சருசேலி} நீயே. காரணங்கள் அனைத்தின் காரணம் {மிலீமிலி} நீயே. (பிரணவத்தின் வடிவிலான) பிரம்மம் நீயே, ஸ்வாஹா நீயே, தண்டதாரி {தண்டி} நீ, வழுக்கை {மொட்டைத்} தலையன் {முண்டன்} நீயே, சொற்கள், செயல்கள் மற்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தியவன் நீயே.(76) நான்கு யுகங்கள் நீயே, நான்கு வேதங்கள் நீயே, நான்கு (வேள்வி) நெருப்புகள் உற்பத்தியாகும் மூலம் நீயே. நான்கு வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகள் அனைத்தையும் இயக்குபவன் நீயே. நான் வகைகளை {வர்ணங்களை} உண்டாக்குபவனும் நீயே.(77) பகடையில் எப்போதும் விருப்பம் கொண்டவன் நீயே. வஞ்சகன் {சூதாடி / தூர்த்தன்} நீயே. கணங்களாகப் பிரிந்திருக்கும் பூதங்களின் தலைவன் நீயே, அவர்களின் ஆட்சியாளனும் நீயே. சிவப்பு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, செவ்வாடைகளை உடுத்துபவன் நீயே. மலைச்சாரலில் உறங்குபவன் {கிரிசன்} நீயே, சிவப்பு வண்ணத்தை {காஷாயன்} விரும்புபவன் நீயே.(78) கலைஞன் {சில்பிகன்} நீயே; கலைஞர்களில் முதன்மையானவன் நீயே; கலைகள் அனைத்தின் தோற்றமும் நீயே. பகனின் கண்களைப் பிடுங்கியவன் நீயே; கடுமையானவன் நீயே, பூஷனின் பற்களைச் சிதைத்தவன் நீயே.(79) ஸ்வாஹா நீயே, ஸ்வதா நீயே, வஷட் நீயே, வணக்கத்தின் வடிவம் நீயே, வழிபாட்டாளர்கள் அனைவராலும் சொல்லப்படும் நமஸ் நமஸ் {நமோநமஹ} என்ற சொற்கள் நீயே. பிறர் அறியாத நோன்புகளையும், தவங்களையும் கொண்டவன் நீயே. பிரணவம் {தாரகன்} நீயே; நட்சத்திரக்கூட்டங்கள் மின்னிக் கொண்டிருக்கும் ஆகாயம் நீயே.(80)

தாத்ரி {தாதா / விஷ்ணு}, விதாத்ரி {விதாதா / நான்முகப் பிரம்மன்}, சந்தாத்ரி {சந்தாதா / அனைத்தையும் ஒன்றாகச் செய்பவன்}, விதாத்ரி {விதிகளை வடிவமைப்பவன் / மஹேஸ்வரன்}, உயர்ந்த காரணமான அனைத்துப் பொருட்களின் புகலிடமாகவும் {தாரணனாகவும்}, புகலிடங்கள் அனைத்தின் சார்பற்றவனாகவும் {அதரனாகவும்} இருப்பவன் நீயே. பிரம்மத்தை அறிந்தவன் {பிரம்மம்} நீயே, தவம் நீயே, வாய்மை நீயே, பிரம்மச்சரியத்தின் ஆன்மா நீயே, எளிமை {ஆர்ஜவம்} நீயே.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா {பூதாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தின் படைப்பாளன் {பூதக்ருத்} நீயே, முழு இருப்பு {பூதன்} நீயே, கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவை எழுந்த காரணன் நீயே. பூமி {பூ:} நீயே, ஆகாயம் {புவ:) நீயே, சொர்க்கம் {ஸ்வ:) நீயே. நித்தியமானவன் நீயே, தற்கட்டுப்பாடு கொண்டவன் {தாந்தா} நீயே, பெருந்தேவன் {மஹாதேவன்} நீயே.(82) தொடக்கம் {தீக்ஷிதன்} நீயே, தொடக்கமில்லாதவன் {அதீக்ஷிதன்} நீயே. மன்னிப்பவன் {க்ஷாந்தன்} நீயே, மன்னிக்காதவன் நீயே; புரட்சியாளர்கள் {அடங்காதவர்கள்} அனைவரையும் தண்டிப்பவன் நீயே. சந்திர மாதம் நீயே, யுகச்சக்கரம் (கல்பம்) நீயே, அழிவு {ஸம்வர்த்தன்} நீயே, படைப்பும் {ஸம்பரவர்த்தகன்} நீயே.(83) காமம் {காமன்} நீயே, உயிர் வித்து {பிந்து} நீயே, நுட்பமானவன் {அணு} நீயே, திரளானவன் {ஸ்தூலன்} நீயே, கர்ணிகார மலர்களாலான மாலைகளை விரும்புபவன் நீயே. நந்தி போன்ற முகத்தைக் கொண்டவன் நீயே, பயங்கர முகத்தைக் கொண்டவன் நீயே, அழகிய முகம் கொண்டவன் {ஸுமுகன்} நீயே, கொடூர முகம் {துன்முகன்} கொண்டவன் நீயே, முகமற்றவன் {அமுகன்} நீயே.(84) நான்கு முகம் கொண்டவன் நீயே, பல முகங்களைக் கொண்டவன் நீயே, போரில் ஈடுபடும்போதும் நெருப்பின் முகம் {அக்நிமுகன்} கொண்டவன் நீயே. தங்க வயிற்றைக் கொண்டவன் (நாராயணன்) {ஹிரண்யகர்ப்பன்} நீயே, (உணவும், உடைமைகளும் அற்ற பூமியில் பற்று கொள்ளாத) பறவை {சகுநி} நீயே, (வலிமைமிக்கப் பாம்புகளின் தலைவன்) அனந்தன் நீயே, (பெரிதிலும் பெரிதான) விராட் நீயே.(85)

மறத்தை {அநீதியை} அழிப்பவன் நீயே, மஹாபார்ஸ்வன் என்றழைக்கப்படுபவன் நீயே, சண்டதாரன் நீயே, பூதகணங்களின் தலைவன் நீயே. பசுவைப் போன்ற இழிந்தவன் நீயே, பசுவின் பாதுகாவலன் நீயே, காளைகளின் தலைவனை {நந்தியை} உன் பணியாளாகக் கொண்டவன் நீயே.(86) மூவுலகங்களின் பாதுகாவல் நீயே, கோவிந்தன் நீயே, புலன்களை இயக்குபவன் நீயே, புலன்களால் புரிந்து கொள்ள முடியாதவன் நீயே. உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே, நிலையானவனே நீயே, அசைவற்றவன் {நிஷ்கம்பன்} நீயே, நடுங்காதவன் {கம்பன்} நீயே, நடுக்கத்தின் வடிவம் நீயே.(87) தடுக்கப்பட முடியாதவன் நீயே, நஞ்சுகள் அனைத்தையும் முறிப்பவன் நீயே, (போரில்) தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் நீயே, கடந்து செல்லப்பட முடியாதவன் நீயே, நடுங்கச்செய்ய முடியாதவன் நீயே, அளவிட முடியாதவன் நீயே, வெல்லப்பட முடியாதவன் நீயே, வெற்றி {ஜயன்} நீயே.(88) வேகம் {சசன்} நீயே, சந்திரன் நீயே, (அண்டத்தை அழிப்பவனான) யமன் நீயே, (செல்லவிடாமல்) குளிர், வெப்பம், பசி, பலவீனம் மற்றும் நோயை பொறுப்பவன் நீயே. மனத்துயர்கள் அனைத்தும் நீயே, உடல் நோய்கள் அனைத்தும் நீயே, அந்த நோய்களற்றவன் நீயே.(89) மானின் வடிவில் தப்பிச் செல்ல முயற்சித்த என் வேள்வியை அழித்தவன் நீயே. நோய்கள் அனைத்தின் தோற்றமும், விலக்கமும் நீயே. உயர்ந்த முகடு {சிகண்டி} நீயே. தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் நீயே. காட்டுத் தாமரைகளின் மத்தியில் வசிப்பவன் நீயே.(90)

தவசியின் தண்டத்தைத் தரித்தவன் நீயே. மூன்று வேதங்களை முக்கண்களாகக் கொண்டவன் நீயே. கடுமையான தண்டனைகளைக் கொடுப்பவன் நீயே. (அண்டம் உதித்தபோது தோன்றிய) முட்டையை அழிப்பவன் நீயே. நஞ்சு மற்றும் நெருப்பு ஆகிய இரண்டையும் பருகுபவன் நீயே, தெய்வங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே. சோமம் பருகுபவன் நீயே, மருத்துகளின் தேவன் நீயே.(91) அமுதம் பருகுபவன் நீயே. அண்டத்தின் ஆண்டவன் நீயே. மகிமையில் ஒளிப்பவன் நீயே, ஒளிர்வதனைத்தின் தலைவன் நீயே. நஞ்சிலிருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாப்பவன் நீயே. பாலும், சோமமும் பருகுபவன் நீயே. சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்தவர்களைப் பாதுகாப்பவர்களில் முதன்மையானவன் நீயே. தேவர்களில் முதல்வனை {பிரம்மனைப்} பாதுகாப்பவன் நீயே.(92) தங்கமே உயிர் வித்தாகக் கொண்டவன் {ஹிரண்யரேதஸ்} நீயே. ஆண் நீயே, பெண் நீயே, அலி நீயே. குழந்தை நீயே, இளைஞன் நீயே, பற்கள் உதிர்ந்த முதிர்ந்தவன் {ஸ்தவிரன்} நீயே, நாகர்களில் முதன்மையானவன் {ஐராவதன்} நீயே, சக்ரன் {இந்திரன்} நீயே, அண்டத்தை அழிப்பவன் நீயே, படைப்பாளன் நீயே.(93) பிரஜாபதி நீயே, பிரஜாபதிகளில் துதிக்கப்படுபவன் நீயே, அண்டத்தை ஆதரிப்பவன் நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் நீயே, பெருஞ்சக்தி கொண்டவன் நீயே, அனைத்துத் திசைகளிலும் திரும்பி முகங்களைக் கொண்டவன் நீயே. சூரியனையும், சந்திரனையும் இரு கண்களாய் கொண்டவன் நீயே, பெரும்பாட்டனை இதயமாகக் கொண்டவன் நீயே. பெருங்கடல் நீயே. சரஸ்வதி தேவியை உன் வாக்காகக் கொண்டவன் நீயே, நெருப்பையும் {அநலனையும்}, காற்றையும் {அநிலனையும்} உன் வலிமையாக {பலமாகக்} கொண்டவன் நீயே. பகலும், இரவும் நீயே. இமை திறத்தல் மற்றும் அடைத்தல் உள்ளிட்ட செயல்கள் அனைத்தும் நீயே.(94) ஓ! மங்கல தேவனே {சிவ பெருமானே}, பிரம்மனோ, கோவிந்தனோ {விஷ்ணுவோ}, புராதன முனிவர்களோ உண்மையில் உன் மகிமையைப் புரிந்து கொள்ளத் தகுந்தவர்களல்ல.(95)

நீ கொண்ட நுட்பமான வடிவங்கள் எங்களுக்குப் புலப்படவில்லை. ஓ!, தந்தையானவன் தன் மடியில் பிறந்த பிள்ளைகளைப் பாதுப்பத்தைப் போல என்னைக் காப்பாயாக.(96) ஓ! என்னைப் பாதுகாப்பாயாக. நான் உன் பாதுகாப்புக்குத் தகுந்தவனாவேன். ஓ! பாவமற்றவனே நான் உன்னை வணங்குகிறேன். ஓ! சிறப்பு மிக்கவனே, உன் பக்தர்களிடம் கருணை நிறைந்தவன் நீயே. நான் எப்போதும் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்.(97) பெருங்கடலின் அடுத்தக் கரையில், புரிந்து கொள்ளக் கடினமான வடிவில், பல்லாயிரம் மனிதர்களை மறைத்துத் தனிமையில் உள்ளவன் என் பாதுகாவலனாகட்டும்.(98) புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவர்களும், சத்வ குணத்தைக் கொண்டவர்கள், தங்கள் உயிர் மூச்சுகளை ஒழுங்கு செய்தவர்களும், உறக்கத்தை வென்றவர்களுமான மனிதர்களால் பிரகாசமான ஒளியின் வடிவில் காணப்பட்ட யோகத்தின் ஆன்மாவை நான் வணங்குகிறேன்.(99) சடாமுடி தரித்தவனும், தவசியின் தண்டத்தைக் கையில் கொண்டவனும், நீண்ட வயிற்றுப் பகுதியைக் கொண்ட உடலைக் கொண்டவனும், முதுகில் கமண்டலம் கட்டப்பட்டவனும் பிரம்மனின் ஆன்மாகவும் இருப்பவனை நான் வணங்குகிறேன்.(100)

நீரின் ஆன்மாவாக இருப்பவனை, மேகத்தை முடியாய் கொண்டவனை, மூட்டுகளில் ஆறுகளைக் கொண்டவனை, வயிற்றில் நான்கு கடல்களைக் கொண்டவனை நான் வணங்குகிறேன்.(101) யுக முடிவு நேரும்போது உயிரினங்களை அனைத்தையும் விழுங்கி அண்டத்தை மறைக்கும் நீர்ப் பரப்பில் (உறங்குவதற்கு) பரந்து விரிந்து கிடப்பவனின் பாதுகாப்பை நான் நாடுகிறேன்.(102) ராஹுவின் வாய்க்குள் நுழைந்து இரவில் சோமனைப் பருகுபவனும், சுவர்பானுவாகி சூரியனையும் விழுங்குபவனும் என்னைப் பாதுகாக்கட்டும்.(103) பிரம்மனின் படைப்புக்குப் பிறகு உன்னில் இருந்து எழுந்த குழந்தனைகளான தேவர்கள் (வேள்விக் காணிக்கைகளில்) தங்களுக்குரிய பங்குகளை அனுபவிக்கிறார்கள். ஸ்வாஹா மற்றும் ஸ்வதாவுடன் செய்யப்படும் காணிக்கைகளை அவர்கள் (அமைதியாக) அனுபவிக்கட்டும், அந்தக் கொடைகளில் இருந்து அவர்கள் இன்பத்தை அடையட்டும். நான் அவர்களை வணங்குகிறேன்.(104) அனைத்து உடல்களிலும் கட்டைவிரல் அளவில் வசிக்கும் மூர்த்திகள் {ருத்திரர்கள் / மஹாருத்திரனின் பகுதிகள்} என்னை எப்போதும் பாதுகாத்து, நிறைவு கொள்ளச் செய்யட்டும்.(105)

உடல்படைத்த உயிரினங்களில் வசித்து, தாங்கள் துன்புற்று அழாமல் அவற்றைத் துயரில் அழச் செய்து, தாங்கள் மகிழ்ச்சியடையாமல் அவற்றை மகிழ்ச்சியடைச் செய்யும் அந்த மூர்த்திகளை எப்போதும் நான் வணங்குகிறேன்.(106) ஆறுகள், பெருங்கடல்கள், குன்றுகள், மலைகள், மலைக்குகைகள், மரத்தின் வேர்கள், பசுக்கொட்டில்கள், அடைதற்கரிய காடுகள், நாற்சந்திகள், சாலைகள், வெட்ட வெளிகள், (ஆறுகள், தடாகங்கள் மற்றும் பெருங்கடல்களின்) கரைகள், யானைச்சாலைகள், குதிரைச் சாலைகள், தேர்ச்சாலைகள், கைவிடப்பட்ட தோட்டங்கள் மற்றும் வீடுகள், ஐம்பூதங்கள், முக்கிய மற்றும் துணைத் திசைகளில் வசிக்கும் ருத்திரர்களை நான் எப்போதும் வணங்குகிறேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட வெளியிலும், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களிலும் வசிப்பவர்களையும், பாதாள லோகத்தில் வசிப்பவர்களையும், துறவை மேற்கொண்டவர்களையும், உயர்ந்ததை அடைவதற்கான பிற மேன்மையான நடைமுறைகளில் ஈடுபடுபவர்களையும் நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(107-110)

எண்ணமுடியாதவர்களும், அளவிடமுடியாதவர்களும், வடிவமில்லாதவர்களும், முடிவிலா குணங்களைக் கொண்டவர்களுமான ருத்திரர்களை நான் வணங்குகிறேன்.(111) ஓ! ருத்திரா, அனைத்து உயிரினங்களையும் படைதவன் நீயே, ஓ! ஹரனே, அனைத்து உயிரினங்களின் ஆண்டவன் நீயே, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மாவும் நீயே என்பதால்தான் (என் வேள்விக்கு) உன்னை நான் அழைக்கவில்லை.(112) அபரிமிதமான கொடைகளுடன் வேள்விகள் அனைத்திலும் துதிக்கப்படுபவனே நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் நீயே என்பதால்தான் நான் உன்னை அழைக்கவில்லை.(113) அல்லது, ஓ! தேவா, உன் நுட்பமான மாயையில் திகைப்படைந்த நான் உன்னை அழைக்கத் தவறிவிட்டேன்.(114) என்னிடம் நிறைவு கொள்வாயாக, ஓ! பவா, ரஜஸ் குணத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் என்னிடம் அருள்கூர்வாயாக. ஓ! தேவா, என் மனம், புத்தி, சித்தம் அனைத்தும் உன்னிலேயே வசிக்கிறது” என்றான் {என்று துதித்தான் தக்ஷன்}[12].(115)அனைத்து உயிரினங்களின் தலைவனான மஹாதேவன் {சிவன்}, இந்தத் துதிகளைக் கேட்டு (மேலும் தக்ஷனுக்குத் தீங்கிழைக்க எண்ணாமல்) நின்றான். உண்மையில், மிகவும் நிறைவடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, தக்ஷனிடம், “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்ட தக்ஷா, உன் துதிகளால் நான் நிறைவடைந்தேன். மேலும் என்னைத் துதிக்க வேண்டாம். நீ என் உதவியைப் பெறுவாய்.(117) ஓ! உயிரினங்களின் மூதாதையே, (நிறைவடையாத இந்த ஒரு வேள்வியின் விளைவாக) என் அருளால் ஆயிரம் குதிரை வேள்விகள் மற்றும் நூறு வாஜபேயங்களின் கனியை நீ ஈட்டுவாய்” என்றான்.(118)

சொற்களின் முற்றான ஆசானான மஹாதேவன் மீண்டும் தக்ஷனிடம், உயர்ந்த ஆறுதல் கூறும் வகையில், “உலகின் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனே நீயே இருப்பாயாக.(119) ஓ! தக்ஷா, இந்த வேள்வியில் நிகழ்ந்த தீங்குகளுக்கான நீ துயரடையாதே. முந்தைய கல்பங்களில் கூட நான் உன் வேள்வியை அழித்திருக்கிறேன்[13].(120) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, நான் மேலும் உனக்குச் சில வரங்களைக் கொடுக்கப் போகிறேன். என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக. உன் முகத்தில் பரவியிருக்கும் இந்த உற்சாகமற்ற தன்மையைக் களைந்து, சிதறாத கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(121){சிவன் தொடர்ந்தான்}, “ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களிலிருந்தும், ஸாங்கியத்திலிருந்தும் பெற்ற அறிவுக்குப் பொருத்தமான வாதத்தின் துணையால், பல நீண்ட வருடங்கள் செய்யக்கூடிய கடுந்தவங்களைத் தேவர்களாலும், தானவர்களாலும் செய்ய முடிந்தது.(122) எனினும், நான் வகுத்த சாரமானது ஒப்பற்றதும், அனைத்து திசைகளிலும் நன்மையை உண்டாக்கவல்லதுமாகும். இஃது அனைத்து வகை வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} கொண்ட மனிதர்களாலும் செய்யப்படலாம். இது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. பல வருடங்கள், அல்லது புலன்களை அடங்கிய மனிதர்களின் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம் இஃது அடையப்படுகிறது. இது புதிரால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஞானமற்றவர்கள் இதைக் கண்டிக்கத்தக்கதாகக் கருதுகிறார்கள்.(123) இது நான்கு வகைகள் {வர்ணங்கள்} மற்றும் நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} ஆகியவற்றில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு முரண்பட்டதும், மிகச் சொற்பமான கடமைகளில் மட்டுமே உடன்பட்டதுமாக இருக்கிறது. (அனுமானங்களில் இருந்து) தீர்மானங்களை (வரையறுக்கும்) அறிவியலில் நன்கு திறம்பெற்றவர்களாலும் அனைத்து வாழ்வுமுறைகளையும் கடந்து, அதைப் பின்பற்றத் தகுந்தவர்களாலும் அதன் ஏற்புடைமையைப் புரிந்து கொள்ள முடியும்.(124) ஓ! தக்ஷா, பழங்காலத்தில், பாசுபதம் என்றழைக்கப்பட்ட மங்கலமான அறம் {விரதம்} என்னால் உண்டாக்கப்பட்டது. அவ்வறத்தைச் சரியாகப் பின்பற்றுவது அபரிமிதமான நன்மைகளை உண்டாக்கும்.(125) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, அந்த நன்மைகள் யாவும் உனதாகட்டும். உன் இதயத்தில் உள்ள இந்த நோயை விலக்குவாயாக” என்றான்{சிவன்}. இந்த வார்த்தைகளைச் சொன்ன மஹாதேவன் {சிவன்}, தன் மனைவி (உமை) மற்றும் தன் தொண்டர்கள் அனைவருடன் அளவிலா ஆற்றலைக் கொண்ட தக்ஷனின் பார்வையில் இருந்து மறைந்து போனான்.(126)

தக்ஷனால் முதலில் சொல்லப்பட்ட இந்தத் துதியை உரைப்பவன், அல்லது மற்றொருவனால் உரைக்கப்படுவதைக் கேட்பவன், சிறு தீமையையும் சந்திக்காமல் நீண்ட வாழ்நாளை அடைவான்.(127) உண்மையில், தேவர்களில் முதன்மையானவனாகச் சிவன் இருப்பதைப் போலவே துதிகள் அனைத்திலும் முதன்மையாக ஸ்ருதிகளுக்கு ஏற்புடைய இந்தத் துதியும் இருக்கிறது.(128)  புகழ், அரசாட்சி, மகிழ்ச்சி, இன்பம், பொருள் {லாபம்}, செல்வம் ஆகியவற்றை விரும்பும் மனிதர்களும், கல்வியில் விருப்பமுள்ளவர்களும் இந்தத் துதியைப் பக்தியுணர்வுடன் கேட்க வேண்டும்.(129)  நோயால் பீடிக்கப்பட்டவன், துன்பத்தால் வருந்துபவன், துயரில் மூழ்கியவன், கள்வர்கள் அல்லது அச்சத்தால் பீடிக்கப்பட்டவன், அரசனின் வெறுப்புக்கு உள்ளானவன் ஆகியோர் (இந்தத் துதியை உரைப்பதால், அல்லது கேட்பதால்) அச்சத்தில் இருந்து விடுபடுவார்கள்.(130)
இந்தத் துதியைக் கேட்பது, அல்லது உரைப்பதன் மூலம் ஒருவன் உலகம் சார்ந்த இந்த உடலுடனே, மஹாதேவனின் தொண்டர்களாக அமைந்திருக்கும் கணங்களுக்கு இணையான தன்மையை அடைவான். (இந்தத் துதியின் மூலம்) ஒருவன் சக்தியையும், புகழையும் பெறுவான், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(131) இந்தத் துதி உரைக்கப்படும் இல்லத்தில் ராட்சசர்களாலோ, பிசாசங்களாலோ, பூதங்களாலோ, விநாயகர்களாலோ எந்த அமளிகளிலும் ஈடுபடமுடியாது.(132)

பிரம்மச்சரிய நடைமுறைகளை நோற்று இந்தத் துதியைக் கேட்கும் பெண்ணானவள், தன் தந்தை மற்றும் தன் கணவனின் இல்லத்தில் ஒரு தேவியின் வழிபாட்டை வெல்வாள்.(133) இந்தத் துதியைக் கவனத்துடன் கேட்பவன் அல்லது உரைப்பவனின் செயல்கள் அனைத்தும் எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படும்.(134) இந்தத் துதியை உரைப்பதன் விளைவால் ஒருவன் தன் மனத்திற்குள் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும், வார்த்தைகளில் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும் அவை கனிவதால் மகுடம் சூட்டப்படும்.(135) தற்கட்டுப்பாட்டைப் பயின்று மஹாதேவன், குஹன், உமை, நந்தி ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு உரிய சடங்குகளை உரிய முறையில் அர்ப்பணிப்புடன் செய்யும் மனிதன், தான் விரும்பிய அனைத்துப் பொருட்களையும், அனுபவிக்கத்தக்க, இன்பத்திற்குரிய அனைத்தையும் அடைவான்.(136) அத்தகைய மனிதன் இப்பிறவியை விட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தால், இடைநிலை உயிரினங்களான விலங்குகளாகவோ, பறவைகளாகவோ மீண்டும் ஒருபோதும் பிறப்பை அடைய மாட்டான். இதைப் பராசரரின் மகனான பலமிக்க வியாசரும் சொல்லியிருக்கிறார்” என்றார் {பீஷ்மர்}.(137)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்–ஸ்ரீ  பீஷ்மரின் துதி – ஸ்ரீ விஷ்ணு ஸ்தவராஜம்!–

October 21, 2025

விஷ்ணு ஸ்தவராஜம்” என்பது பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட விஷ்ணுவைப் போற்றும் பல துதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும். இது பொதுவாக ‘கல்கி புராணம்’, ‘நரசிம்ம புராணம்’ மற்றும் ‘மகாபாரதத்தின் சாந்தி பர்வம்’ போன்ற நூல்களில் காணப்படுகிறது. இந்த ஸ்தோத்திரங்கள் விஷ்ணுவின் பல்வேறு வடிவங்களையும், அவரின் மகிமையையும், அவரைத் துதிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் விவரிக்கின்றன.  

கல்கி புராணத்தில்: விஷ்ணுவின் யோக சக்தியைப் பற்றியும், லட்சுமியைப் பற்றியும், பக்தர்களின் துதி ஆகியவற்றையும் விவரிக்கும் ஒரு துதிப்பாடலாக அமைந்துள்ளது. 

நரசிம்ம புராணத்தில்: நரசிம்மபுராணத்தின் ஒரு பகுதியாக வரும் துதிப் பாடல்களில், நரகம் போன்ற கொடிய இடங்களில் தர்மம் மற்றும் ஞானம் இல்லாதவர்கள் அடையும் துன்பங்களைப் பற்றியும், யமலோகத்தைப் பற்றியும் கூறுகிறது. 

      மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில்: பீஷ்மர் விஷ்ணுவை வணங்கிப் பாடும் துதிப்பாடலாக உள்ளது.

      ————

      பீஷ்மரின் துதி – ஸ்ரீ விஷ்ணு ஸ்தவராஜம்! – சாந்திபர்வம் பகுதி – 47-பீஷ்மர் எவ்வாறு உயிர்துறந்தார் என வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பாவங்களை அழிக்கும் ஸ்ரீவிஷ்ணுஸ்வராஜம் என்ற பீஷ்மரின் துதியை ஜனமேஜயனுக்கு உரைத்த வைசம்பாயனர்…

      ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “கணைப்படுக்கையில் கிடந்தவரான பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்} எவ்வாறு தன் உடலை விட்டார்? அவர் என்ன வகை யோகத்தைப் பின்பற்றினார்?” என்று கேட்டான்.(1)

      வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! குருக்களில் புலியே, உயர் ஆன்ம பீஷ்மர் எவ்வாறு தன் உடலை விட்டார் என்பதைத் தூய்மையான இதயத்துடனும், குவிந்த கவனத்துடனும் கேட்பாயாக.(2) சூரியன் துருவத்தைக் கடந்து வட பாதையில் {உத்தராயணத்தில்} நுழைந்தபோது, பீஷ்மர் குவிந்த கவனத்துடன், (உடலில் இருந்து விடுபட்டாலும் தொடர்புடன் கூடிய) தமது ஆன்மாவை (முழுமையாக விடுபட்ட நிலையுடன் கூடிய) தமது ஆன்மாவுக்குள் நுழையச்செய்தார்[1].(3) முதன்மையான பிராமணர்கள் பலரால் சூழப்பட்டிருந்த அந்த வீரர், எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த உடலுடன், எண்ணற்ற கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பேரழகுடன் பிரகாசித்தார்.(4)வேதங்களை அறிந்த வியாசர், தெய்வீக முனிவரான நாரதர், தேவஸ்தானர், அஸ்மகர், சுமந்து,(5) ஜைமினி, உயர் ஆன்ம பைலர், சாண்டில்யர், தேவராதர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட மைத்திரேயர்,(6) அசிதர், வசிஷ்டர், உயர் ஆன்ம கௌசிகர், ஹரிதர், லோமசர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அத்ரியின் மகன்,(7) பிருஹஸ்பதி, சுக்கிரர், பெரும் தவசியான சியவனர், சனத்குமாரர், கபிலர், வால்மீகி, தும்புரு, குரு,(8) மௌத்கல்யர், பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, பெருந்தவசியான திருணபிந்து, பிப்பலாதர், வாயு, ஸம்வர்த்தர், புலஹர், கதர் {கசர்},(9) காசியபர், புலஸ்தியர், கிரது, தக்ஷன், பராசரர், மரீசி, அங்கிரஸ், காஸ்மியர், கௌதமர், தவசி காலவர்,(10) தௌம்யர், விபாண்டர், மாண்டவ்யர், தௌம்ரர், கிருஷ்ணாநுபௌதிகர், பிராமணர்களில் முதன்மையான உலூகர், பெருந்தவசி மார்க்கண்டேயர், பாஸ்கரி, புராணர் {பூர்ணர்}, கிருஷ்ணன், சூதர் ஆகிய அறவோர்களில் முதன்மையானோரான இவர்களாலும்,(11) நம்பிக்கையும், தற்கட்டுப்பாடும், மனோ அமைதியையும், உயர்ந்த அருளையும் கொண்ட இன்னும் பலராலும் சூழப்பட்டிருந்த அந்தக் குருவீரர் {பீஷ்மர்}, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலத் தெரிந்தார்.(12)

      கணைப்படுக்கையில் நீண்டு கிடந்தவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர், தூய்மையான இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் கிருஷ்ணனை நினைத்தார்.(13) அவர், யோகத்தின் தலைவனும், நாபியில் தாமரையைக் கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், விஷ்ணு என்றும், ஜிஷ்ணு என்றும் அழைக்கப்படுபவனுமான மதுசூதனனின் புகழை உற்சாகமான பலத்த குரலில் பாடினார்.(14) நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரும், பலமிக்கவரும், உயர்ந்த அற ஆன்மாவுமான பீஷ்மர், குவிந்த கரங்களுடன் இவ்வாறே வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தார்.(15)

      பீஷ்மர், “ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னைப் புகழும் விருப்பத்தால் சுருக்கமாகவும், விரிவாகவும் என்னால் சொல்லப்படும் இவ்வார்த்தைகளில் மகிழ்வாயாக.(16) தூய்மையானவனும், தூய்மையேயானவனும் நீயே. அனைத்தையும் கடந்தவன் நீயே. அஃது என மக்களால் சொல்லப்படுபவன் நீயே. உயர்ந்த தலைவன் நீயே. ஓ! அண்டத்தின் ஆன்மாவும், அனைத்துயிரினங்களின் தலைவனும் ஆனவனே, முழு இதயத்துடன் நான் உனது புகலிடத்தை நாடுகிறேன் {உன்னைச் சரணடைகிறேன்}[2].(17) தொடக்கமும் {ஆதியும்}, முடிவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயர்ந்தனவற்றிலும் உயர்ந்தவனும், பிரம்மமும் {பரப்பிரம்மமும்} நீயே. தேவர்களும், முனிவர்களும் கூட உன்னை அறியமாட்டார்கள். நாராயணன் என்றும், ஹரி என்றும் அழைக்கப்படும் தெய்வீகப் படைப்பாளன் மட்டுமே உன்னை அறிவான்.(18) முனிவர்கள், சித்தர்கள், பெரும் நாகர்கள், தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் நாராயணன் மூலமே உன்னைக் குறித்துச் சிறிது அறிவார்கள். உயர்ந்தனவற்றில் உயர்ந்தவனும், சிதைவை அறியாதவனும் நீயே.(19) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும் நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியமாட்டார்கள்.(20)அனைத்து உலகங்களும், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் உன்னுள் வாழ்ந்து, (அழிவுக்காலம் வரும்போது) உன்னிலேயே நுழைகின்றன. நூலில் கோர்க்கப்பட்ட ரத்தினங்களைப் போல, பண்புகள் கொண்ட அனைத்துப் பொருட்களும் உயர்ந்த தலைவனான உன்னிலேயே வசிக்கின்றன[3].(21) உனது செயல்பாடும், உனது உறுப்புகளானதும், மனம் மற்றும் பொருள்களாலானதுமான இவ்வண்டம், வலுவான நூலில் கோர்க்கப்பட்ட மலர்ச்சரத்தைப்போல, படர்ந்தூடுருவி அழியாமல் நிலைத்திருக்கும் ஆன்மாவான உன்னில் வசிக்கிறது.(22) ஆயிரக்கணக்கான தலைகளையும், கால்களையும், கண்களையும், கரங்களையும், மகுடங்களையும், பிரகாசமிக்க முகங்களையும் கொண்ட ஹரி என்று அழைக்கப்படுபவன் நீயே. தெய்வீகமானவனும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன் என்று அழைக்கப்படுபவன் நீயே.(23) நுண்ணியவற்றில் நுண்ணியமானவனும், திரள்களில் {பெரியவற்றில்} திரளானவனும் {பெரியவனும்}, கனமானவற்றில் கனமானவனும், உயர்ந்தவற்றில் உயர்வானவனும் நீயே.(24) வாக்குகள் {மந்திரங்கள்}, அனுவாக்குகள் {பிராம்மணங்கள்}, நிஷதங்கள் {உபாஸனாவிதிகள்}, உபநிஷதங்கள் ஆகியவற்றில் கருதப்படும் தடுக்கப்படமுடியாத பரம்பொருள் நீயே. எப்போதும் உண்மையையே அறிவிக்கும் சாமங்களிலும் {சாம வேதத்திலும்} கருதப்படும் உண்மையின் வடிவம் நீயே[4].(25)நான்கு பகுதிகளாலான ஆன்மாவைக் கொண்டவன் நீயே. (அனைத்து உயிரினங்களின்) புத்தியில் மட்டுமே வெளிப்படுபவன் நீயே. நம்பிக்கையில் கட்டுப்பட்டிருப்போரின் தலைவன் நீயே. ஓ! தேவா, (நம்பிக்கை நிறைந்தோரால்) சிறந்த, உயர்ந்த, இரகசியமான நான்கு பெயர்களால் புகழப்படுபவன் நீயே[5].(26) தவங்கள் எப்போதும் உன்னில் நிலைத்திருக்கின்றன. (உன்னை நிறைவு செய்வதற்காக உயிரினங்களால்) செய்யப்படும் தவங்கள், உன் வடிவிலேயே வாழ்கின்றன. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்ட அறிவு நீயே. அண்டமே ஆனவனும் நீயே. அனைத்துமறிந்தவன் நீயே. அண்டத்தில் அனைத்தையும் படைத்தவன் நீயே[6].(27) சுடர்மிக்க நெருப்பை உண்டாக்கும் இரு கட்டைகளை {அரணிக்கட்டைகளைப்} போல, பூமியில் பிரம்மத்தைக் காக்க தெய்வீகமானவர்களான தேவகி மற்றும் வசுதேவரிடத்தில் பிறந்தவன் நீயே[7].(28) ஓ! கோவிந்தா, அர்ப்பணிப்புள்ள ஒரு வழிபாட்டினன் {பக்தன்} தன் நித்திய முக்திக்காக மனத்தில் இருந்து அனைத்தையும் விலக்கி, விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, தூய ஆன்மாவான உன்னையே தன் ஆன்மாவில் காண்கிறான்.(29) மகிமையில் சூரியனுக்கும் மேம்பட்டவன் நீயே. புலன்கள் மற்றும் அறிவுக்கு அப்பாற்பட்டவன் நீயே. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உன் கரங்களில் என்னை நிறுத்துகிறேன் {கொடுக்கிறேன்}.(30)(அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவான) புருஷன் என்று புராணங்களில் சொல்லப்படுபவன் நீயே. யுகங்களின் தொடக்கத்தில் பிரம்மன் என்றும், அண்ட அழிவின் போது சங்கர்ஷணன் என்றும் சொல்லப்படுபவன் நீயே. புகழத்தக்கவனான உன்னை நான் துதிக்கிறேன்.(31) ஒருவனேயானாலும், எண்ணற்ற வடிவங்களில் இன்னும் பிறந்து கொண்டிருப்பவன் நீயே. விருப்பங்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவன் நீயே. ஓ! அனைத்து விருப்பங்களையும் அளிப்பவனே, உன்னிடம் அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினர் {பக்தர்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளை நம்பிக்கையுடன் செய்து தங்களைத் தியாகம் செய்கின்றனர்.(32) அண்டம் கிடக்கும் உறையென அழைக்கப்படுபவன் நீயே. நீரில் நீந்தும் அன்னங்களையும், வாத்துகளையும் போல உலகங்கள் அனைத்தும் உன்னிலேயே மிதக்கின்றன.(33) உண்மை நீயே. ஒருவனும், அழிவற்றவனும் நீயே. பிரம்மம் நீயே. மனத்திற்கும், பொருளுக்கும் அப்பாற்பட்ட “அது” நீயே. தொடக்கமும், நடுநிலையும், முடிவும் இல்லாதவன் நீயே. தேவர்களும், முனிவர்களும் உன்னை அறியமாட்டார்கள்.(34) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள், பெரும் உரகர்கள் ஆகியோர் குவிந்த ஆன்மாக்களோடு எப்போதும் உன்னைத் துதிக்கின்றனர். கவலைகள் அனைத்திற்கும் பெரும் மருந்து நீயே.(35) பிறப்பும், இறப்பும் அற்றவன் நீயே. தெய்வீகமானவன் நீயே. தான்தோன்றி நீயே. அழிவற்றவன் நீயே. புலப்படாதவனும், அறிவுக்கு எட்டாதவனும் நீயே. ஓ! பலமிக்கவனே, ஹரி என்றும் நாராயணன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே[8].(36)அண்டத்தின் படைப்பாளனாகவும், அண்டத்தில் இருக்கும் அனைத்துக்கும் தலைவனாகவும் வேதங்களால் அறிவிக்கப்படுபவன் நீயே. அண்டத்தின் உயர்ந்த பாதுகாவலன் நீயே. சிதைவற்றவன் நீயே. உயர்ந்தவன் {பரம்} என்று அழைக்கப்படுபவன் நீயே.(37) தங்க நிறம் கொண்டவன் நீயே, அசுரர்களைக் கொல்பவன் நீயே. ஒருவனேயாயினும், அதிதியால் பனிரெண்டு வடிவங்களில் பெறப்பட்டவன் நீயே.(38) வளர்பிறையில் தேவர்களை அமுதத்தால் நிறைவு செய்பவனும், தேய்பிறையில் பித்ருக்களை நிறைவு செய்பவனும், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அனைவரின் தலைவனுமான சோமனாக இருக்கும் உனது அந்த வடிவத்தை நான் வணங்குகிறேன்.(39) அடர்ந்த இருளுக்கு மறுபுறத்தில் வசிக்கும் பெரும் பிரகாசத்துடன் கூடிய ஒரே ஒருவன் நீயே. உன்னை அறிந்து கொள்ளும் ஒருவன், மரணம் குறித்த எந்த அச்சத்தையும் விடுகிறான். அறிவை அடையச் செய்யும் பொருளாக இருக்கும் அந்த உன் வடிவத்தை நான் வணங்குகிறேன்[9].(40)மகத்தான உக்தவேள்வியில், பிராமணர்கள் பெரும் ரிக்காக உன்னைத் துதிக்கின்றனர். பெரும் நெருப்பு வேள்வியில் {அக்நிசயன யாகத்தில்} அவர்கள் உன்னைத் தலைமை அத்யர்யுவாக (புரோகிதராகப்) பாடுகிறார்கள். வேதங்களின் ஆன்மா நீயே. உன்னை நான் வணங்குகிறேன். ரிக்கும், யஜுரும், சாமங்களும் உன் வசிப்பிடங்களாகும்[10]. (வேள்விகளில் பயன்படுத்தப்படும்) ஐந்து வகைப் புனித காணிக்கைகள் {ஆகுதிகள்} நீயே. வேதங்களில் பயன்படுத்தப்படும் ஏழு ஊடுகள் {சந்தங்கள்} நீயே. வேள்வியாலான உனது அந்த வடிவை நான் வணங்குகிறேன்[11].(42) பதினேழு ஓரசை ஒலிகளுடன் ஹோம நெருப்பில் காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்படுகின்றன. ஹோமத்தின் ஆன்மாவானவன் நீயே. நான் உன்னை வணங்குகிறேன்.(43) வேதங்கள் பாடும் புருஷன் நீயே. யஜுஸ் என்பது உனது பெயராகும். வேத சந்தங்கள் உன் அங்கங்களாகும். மூன்று வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் வேள்விகள் உனது மூன்று தலைகளாகும். ரதந்தரம் என்றழைக்கப்படும் பெரும் வேள்வி நிறைவை வெளிப்படுத்தும் உன் குரலாகும். புனிதப் பாடல்களாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்.(44) அண்டப் படைப்பாளர்களால் செய்யப்பட்டு, ஆயிரம் வருடங்கள் நீடித்த பெரும் வேள்வியில் தோன்றிய முனிவன் நீயே. தங்கச் சிறகுகள் கொண்ட பெரும் அன்னம் நீயே. அன்னத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[12].(45)வேர்களுடன் கூடிய அனைத்து வகை இணை மற்றும் பின்னொட்டு சொற்களும் உனது அங்கங்களாகும். சந்திகள் உன் மூட்டுகளாகும். மெய்யெழுத்துகளும், உயிரெழுத்துகளும் உன் ஆபரணங்களாகும். வேதங்கள் உன்னைத் தெய்வீகச் சொல்லென அறிவிக்கின்றன. சொல்லாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[13].(46) மூவுலகங்களின் நன்மைக்காக வேள்வியாலான அங்கங்களுடன் கூடிய ஒரு பன்றியின் வடிவையேற்று, {நீரில்} மூழ்கியிருந்த பூமியை உயர்த்தியவன் நீயே. முடிவிலா ஆற்றலாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(47) பாம்பால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் ஆயிரந்தலைகளுடன் யோகத்தில் உறங்குபவன் நீயே. உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(48) எவ்வழிகளால் முக்தி அடையப்படுமோ, எவ்வழிகளால் புலன்கள் கட்டுப்படுத்தப்படுமோ அந்த வழிகளுடனும், உண்மையுடனும் (வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்கும்) நல்லோருக்கான பாலத்தை {அணையைக்} கட்டுபவன் நீயே. உண்மையாலான அந்த உனது வடிவை நான் வணங்குகிறேன்.(49) பல்வேறு அறங்களை {சமயங்களைப்} பயிலும் மனிதர்கள், பல்வேறு கனிகளின் விருப்பத்தால் செயலூக்கம் பெற்று, பல்வேறு சடங்குகளுடன் உன்னை வழிபடுகின்றனர். அறத்தாலான அந்த உன் வடிவை {தர்மஸ்வரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்[14].(50)உன்னிலிருந்தே அனைத்துப் பொருள்களும் உண்டாகின. ஆசையெனும் கொள்கையை உடைய உடற்கட்டுகளுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தையும் தூண்டுபவன் நீயே. தூண்டலாலான அந்த உன் வடிவை {காமரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(51) பெருமுனிவர்கள், வடிவமில்லாத உன்னை வடிவங்களுக்குள் தேடுகின்றனர். க்ஷேத்ரஜனன் என்றழைக்கப்படும் நீ க்ஷேத்திரத்தில் அமர்ந்திருக்கிறாய். க்ஷேத்திரத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[15].(52) விழிப்புடன் தன்னில் நிலைத்திருப்பவனானாலும், விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் இருப்பவனாகச் சாங்கியர்கள் உன்னை விவரிக்கின்றனர். மேலும் அவர்கள் உன்னைப் பதினாறு பண்புகளைக் கொண்டவனாகவும், பதினேழாம் {17} எண்ணைக் குறிப்பனவாகவும் சொல்கின்றனர்[16].(53) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட யோகியர்கள், தங்கள் உறக்கத்தைக் கைவிட்டு, மூச்சைத் தவிர்த்து, தமக்குள் ஒடுங்கி அழிவில்லா ஒளியாகவே உன்னைக் காண்கின்றனர்.(54) அமைதி நிறைந்த சந்நியாசிகள், தங்கள் பாவபுண்ணியங்கள் அனைத்தையும் அழித்ததன் விளைவால் மறுபிறவி எனும் அச்சத்திலிருந்து விடுபட்டு உன்னை அடைகின்றனர். முக்தியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[17].(55)ஆயிரம் யுகங்களின் முடிவில், சுடர்மிகும் தழல்களுடன் உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. கடுமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(56) அனைத்து உயிரினங்களையும் எரித்து, அண்டத்தைப் பரந்த நீர்க்கொள்ளிடமாக்கி, அந்நீரில் குழந்தையின் வடிவில் உறங்குபவன் நீயே. மாயையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(57) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தான்தோன்றியின் நாபியில் ஒரு தாமரை உதித்தது. அந்தத் தாமரையிலேயே இவ்வண்டம் நிறுவப்பட்டது. தாமரையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(58) ஆயிரம் தலைகள் கொண்டவன் நீயே. அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவன் நீயே. அளவிலா ஆன்மா கொண்டவன் நீயே. நான்கு பெருங்கடல்களைப் போலப் பரந்தவையான நான்கு வகை ஆசைகளையும் அடக்கியவன் நீயே. யோக உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(59) மேகங்கள் உன் தலையின் மயிரில் இருக்கின்றன. ஆறுகள் உன் அங்கங்களின் பல்வேறு மூட்டுகளில் இருக்கின்றன. நான்கு பெருங்கடல்களும் உனது வயிறாகும். நீராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(60)

      பிறப்பு மற்றும் இறப்பால் உண்டாகும் மாற்றம் உன்னிலிருந்தே எழுகிறது. மேலும், அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் மீண்டும் மீண்டும் உன்னில் கலக்கின்றன. காரணத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(61) இரவில் உறங்காதவன் நீயே. பகலிலும் செயல்படுபவன் நீயே. (அனைத்தின்) நல்ல மற்றும் தீய செயல்களை நோக்குபவன் நீயே. (அண்டத்தை) நோக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(62) உன்னால் செய்ய முடியாத செயலேதும் இல்லை. மேலும் நல்ல செயல்களைச் சாதிக்க எப்போதும் தயாராக இருப்பவன் நீயே. செயலின் வடிவமான, வைகுண்டன் என்றழைக்கப்படும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(63) அறத்தையும், அதிகாரத்தையும் தங்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருந்த க்ஷத்ரியர்களைப் போரில் கோபத்துடன் இருபத்தோரு முறை அழித்தவன் நீயே. கொடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(64) ஐந்து பாகங்களாக உன்னையே வகுத்துக் கொண்டு, அனைவரின் உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர்மூச்சுகளாக {பிராண வாயுக்களாக} இயங்கி, அனைத்து உயிரினங்களும் அசைவதற்குக் காரணமானவன் நீயே. காற்றாலான {வாயுவாலான} அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(65)

      மாதங்கள் என்றழைக்கப்படும் வடிவங்களிலும், பருவங்கள், அயணங்கள், வருடங்கள் ஆகிய வடிவங்களிலும் யுகந்தோறும் தோன்றி, படைப்பு மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவன் நீயே. காலத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(66) பிராமணர்கள் உனது வாயாகவும், க்ஷத்திரியர்கள் உன் இரு கைகளாகவும், வைசியர்கள் உன் வயிறு மற்றும் தொடைகளாகவும், சூத்திரர்கள் உன் பாதங்களாகவும் வாழ்கின்றனர். வர்ணத்தாலான அந்த உன் வடிவை {வர்ணரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(67) நெருப்பே உன் வாயாகும். சொர்க்கங்கள் உன் தலையின் மகுடமாகும். வானம் உனது நாபியாகும். பூமி உனது பாதங்களாகும். சூரியன் உனது கண்ணாகும். திசைப்புள்ளிகள் உனது காதுகளாகும். (மூன்று) உலகங்களாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(68) காலத்திலும் மேன்மையானவன் நீயே. உயர்ந்தவற்றில் உயர்ந்தவன் நீயே. அண்டத்தின் தொடக்கமாக இருக்கும் தொடக்கமில்லாதவன் நீயே. அண்டத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(69) வைசேஷிக தத்துவத்தின் படி உன் பண்புகளைத் தீர்மானிக்கும் இவ்வுலகின் மனிதர்கள், உன்னையே உலகின் பாதுகாவலனாகக் கருதுகிறார்கள். பாதுகாவலனாக இருக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[18].(70)உணவு, பானம், எரிபொருள் {விறகு} ஆகிய வடிவங்களை ஏற்கும் நீ, இன்பங்களையும், உயிரினங்களின் உயிர் மூச்சுகளையும் {பிராண வாயுக்களையும்} அதிகரித்து, அவர்களின் இருப்பைத் தாங்கிப் பிடிக்கிறாய். உயிராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(71) உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக நான்கு வகை உணவுகளை[19] நீ உண்கிறாய். வயிற்றில் அக்னியின் வடிவை ஏற்று அந்த உணவை நீயே செரிக்கிறாய். செரிமான வெப்பத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(72) பாதி மனிதன், பாதிச் சிங்கம் என்ற வடிவை ஏற்று, பழுப்புக் கண்கள் மற்றும் பழுப்பு பிடரி மயிர் ஆகியவற்றைக் கொண்டு, பற்களையும், நகங்களையும் ஆயுதமாகக் கொண்டு அசுரர்களின் தலைவனுடைய உயிரை எடுத்தவன் நீயே. பெருகும் வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(73) தேவர்களோ, கந்தர்வர்களோ, தைத்தியர்களோ, தானவர்களோ உண்மையில் உன்னை அறியமாட்டார்கள். நுட்பமேயான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(74) பாதாளலோகத்தில், சிறப்புமிக்க, பலமிக்க, அழகிய அனந்தனின் வடிவை ஏற்று, உலகைத் தாங்குபவன் நீயே. வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(75)படைப்பின் தொடர்ச்சிக்காக, அன்பு, பாசமெனும் பற்றுகளால் உயிரினங்கள் அனைத்தையும் திகைக்கச் செய்பவன் நீயே. (யோகிகள் எதற்காக முயல்கின்றனரோ அந்த) உண்மையான தன்னறிவு ஐம்பூதங்களே என்பதை அறியும் அந்த அறிவைக் கருதியே, அறிவுக்காக மக்கள் உன்னை அணுகுகின்றனர். அறிவாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(77) உன் உடல் அளவில்லாததாகும். உன் அறிவும் கண்களும் அனைத்திற்கும் அர்ப்பணிப்புள்ளவையாகும். எல்லைகள் அனைத்திற்கும் அப்பால் உள்ள எல்லையற்றவன் நீயே. பரந்த தன்மையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(78) சடாமுடிதரித்து, கையில் தண்டத்துடனும், நீண்ட வயிற்றுடனும் {தொங்கும் தொந்தியுடனும்}, அம்பறாத்தூணியையே இரக்கும் ஓடாகவும் கொண்ட துறவியின் வடிவை ஏற்றவன் நீயே. பிரம்மத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[20].(79) திரிசூலதாரியும், தேவர்களின் தலைவனும், முக்கண்ணனும், உயர்ந்த ஆன்மா கொண்டவனும் நீயே. உன் உடல் எப்போதும் சாம்பலால் {திருநீற்றால்} பூசப்பட்டிருக்கிறது. உனது லிங்கச் சின்னம் எப்போதும் மேல்நோக்கியே இருக்கிறது. ருத்திரன் என்ற அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(80)அரைபிறை வடிவங்கள் உன் நெற்றியின் ஆபரணங்களாகும். கழுத்தைச் சுற்றும் புனித நூலாகப் பாம்புகளைக் கொண்டவன் நீயே. பிநாகை மற்றும் திரிசூலதாரி நீயே. கடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா நீயே. அனைத்துயிரினங்களைப் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. கோபம், பகை, பாசம் ஆகியவை அற்றவன் நீயே. அமைதியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(82) அனைத்தும் உன்னில் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் நீயே. எங்கும் இருப்பவன் நீயே. எங்கும், எப்போதும் அனைத்துமாக இருப்பவன் நீயே. ஒவ்வொரு பொருளிலும் இருக்கும் உன் வடிவை நான் வணங்குகிறேன்.(83) அண்டத்தையே செயலாகக் கொண்டவனும், அண்டத்தின் ஆன்மாவாக இருப்பவனும், அண்டம் எழுந்த பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருள்களுக்கும் அழிவாக இருப்பவனும், (அனைத்துப் பொருட்களில் இருக்கும் பூதங்களான) ஐந்தைக் கடந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(84) மூவுலகங்களாய் இருப்பவனும், மூவுலகங்களிலும் மேன்மையானவனுமான உன்னை நான் வணங்குகிறேன். திசைகள் அனைத்துமான உன்னை நான் வணங்குகிறேன். அனைத்தும் நீயே, அனைத்தின் ஒரே கொள்ளிடம் நீயே.(85)

      ஓ! தெய்வீகத் தலைவா, ஓ! விஷ்ணு, ஓ! அனைத்து உலகங்களின் நித்திய மூலமே உன்னை நான் வணங்குகிறேன். ஓ! ரிஷிகேசா, படைப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே, வெல்லப்படமுடியாதவன் நீயே.(86) கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றில் வெளிப்படும் உன் தெய்வீக வடிவை என்னால் காண முடியவில்லை. எனினும், (உனது செயல்களில் நம்பிக்கையுடன்) உன் நித்திய வடிவை என்னால் உண்மையில் காண முடியும்.(87) உன் தலையால் சொர்க்கத்தையும், பாதத்தால் பூமியையும், ஆற்றலால் மூவுலகங்களையும் நிறைத்திருப்பவன் நீயே. அழிவற்றவனும், அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும் நீயே.(88) திசைகளே உனது கரங்களாகும், சூரியனே உனது கண்ணாகும், ஆற்றலே உனது உயிர்நீராகும். அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே.(89) ஓ! மங்கா மகிமை கொண்ட கோவிந்தா, காயாம்பூவைப் போன்ற நிறம் கொண்ட மஞ்சள் ஆடை உடுத்தியவனான உன்னை, அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்களே வழிபடுகின்றனர்.(90)

      ஓ! கிருஷ்ணா, ஒரே முறை உன்னிடம் தலைவணங்கினாலும், அது பத்து குதிரை வேள்விகளின் நிறைவுக்கு இணையானதாகும். பத்து குதிரைவேள்விகளைச் செய்தவனும், மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபட மாட்டான். எனினும், கிருஷ்ணனை வழிபடும் மனிதன் மறுபிறவியில் இருந்து தப்புகிறான்.(91) தங்கள் நோன்பாகக் கிருஷ்ணனையே கொண்டோரையும், இரவின்போதும், உறக்கத்திலிருந்து விழிக்கும்போதும் கிருஷ்ணனையே நினைப்போரையும் கிருஷ்ணனையே தங்கள் மேனியாகக் கொண்டவர்கள் என்று சொல்லலாம்., மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட தெளிந்த நெய்யாகுதிகள் சுடர்மிக்க நெருப்பில் நுழைவதைப் போல, அம்மனிதர்கள் (மரணத்திற்குப் பிறகு) கிருஷ்ணனுக்குள்ளேயே நுழைகின்றனர்.(92) ஓ! விஷ்ணுவே, நரகத்தின் அச்சத்தை விலக்குபவனும், உலகவாழ்வெனும் பெருங்கடலின் சுழியில் மூழ்கியவனை, ஒரு படகைப் போல நரகின் அச்சத்தில் இருந்து விடுவிப்பவனான உன்னை நான் வணங்குகிறேன்.(93) ஓ! தேவா, பிராமணனின் நிலையைக் கொண்டவனும், பிராமணர்கள் மற்றும் பசுக்களுக்கு நன்மை செய்பவனும், அண்டத்திற்கு நன்மை செய்பவனும், கிருஷ்ணன் மற்றும் கோவிந்தனாக இருப்பவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(94) ஹரி என்ற ஈரெழுத்தானவை, காட்டுவழியில் பயணிக்கும் வணிகர்களையும், சோகம் மற்றும் துயரங்களைக் கொண்ட உலகின் நோய்கள் அனைத்தையும் நன்கு குணமடையச் செய்யும் மருந்தையும் தனக்குள் கொண்டவையாகு[21].(95)உண்மையானது விஷ்ணுவால் நிறைந்திருப்பைத் போலவும், அண்டமானது விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், அனைத்தும் விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், என் ஆன்மாவும் விஷ்ணுவால் நிறைந்து, என் பாவங்கள் அழிவையடையட்டும்.(96) உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட நான், மகிழ்ச்சியான முடிவை அடைய விரும்பி, உனது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! தேவர்களில் சிறந்தவனே, எது எனக்கு நன்மையோ, அதையே எனக்கு {செய்ய} நினைப்பாயாக.(97) ஓ! விஷ்ணுவே, அறிவுக்கும், தவங்களுக்கும் பிறப்பிடமான பிறப்பற்றவன் நீயே. இவ்வாறே நீ புகழப்படுகிறாய். ஓ! ஜனார்த்தனா, ஓ! தேவா, பேச்சை (மட்டுமே) கொண்ட வேள்வியால் இவ்வாறு என்னால் வழிபடப்படும் நீ என்னிடம் நிறைவு கொள்வாயாக.(98) வேதங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தவங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தேவர்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். எங்கும், எப்போதும் அனைத்தும் நாராயணனே” என்று துதித்தார் {பீஷ்மர்}”.(99)

      வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன பீஷ்மர், குவிந்த மனத்துடன் கிருஷ்ணனிடம், “கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று சொல்லி வணங்கினார்.(100) பீஷ்மரின் வழிபாட்டைத் தன் யோக ஆற்றலால் அறிந்தவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான மாதவன், (அவரது {பீஷ்மரது} உடலுக்குள் நுழைந்து), கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் ஆகியவற்றின் தெய்வீக அறிவை அவருக்கு அளித்து அங்கிருந்து சென்றான்.(101) பீஷ்மர் அமைதியடைந்தபோது, (அவரைச் சுற்றிலும் அமர்ந்து) பிரம்மத்தை ஓதிக்கொண்டிருந்தவர்கள், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன், அந்தக் குருக்களின் உயர் ஆன்மத் தலைவரை {பீஷ்மரைச்} சிறந்த வார்த்தைகளால் துதித்தனர்.(102) பிராமணர்களில் முதன்மையானோரான அவர்கள், உயிரினங்களில் முதன்மையான கிருஷ்ணனையும் புகழ்ந்தபடியே, மெல்லிய குரல்களால் பீஷ்மரை மீண்டும் மீண்டும் பாராட்டினர்.(103) உயிரினிங்களில் முதன்மையான மாதவன் {கிருஷ்ணன்}, தன்னிடம் பீஷ்மர் கொண்ட அர்ப்பணிப்பை (தனது யோக சக்தியால்) அறிந்து, தன் ஆசனத்தில் இருந்து திடீரென எழுந்து தன் தேரில் ஏறினான்.(104) {அப்போது} கேசவனும், சாத்யகியும் ஒரே தேரில் சென்றனர். சிறப்பு மிக்க இளவரசர்களான யுதிஷ்டிரனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மற்றொரு தேரில் சென்றனர்.(105) பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவனும்} மூன்றாவதிலும், மனிதர்களில் காளையரான கிருபர், எதிரிகளை எரிப்பவனான யுயுத்சு, சூதனான சஞ்சயன் ஆகியோர், ஒரு நகரத்தைப் போலத் தெரிந்த தங்கள் தங்கள் தேர்களிலும் சென்றனர். அவர்கள் அனைவரும், தங்கள் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சென்றனர்.(106,107) அந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, பிராமணர்களால் சொல்லப்பட்ட தனக்கான புகழுரைகளைக் கேட்டபடியே மகிழ்ச்சியாகச் சென்றான். அந்தக் கேசியைக் கொன்றவன் {கிருஷ்ணன்}, (வீதியெங்கும்) கூப்பிய கரங்களுடனும், வணங்கிய தலைகளுடனும் காத்திருந்த மக்களை மகிழ்ச்சியான இதயத்துடன் வணங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}[22].(108)“இவ்விதம் பீஷ்மரால் சொல்லப்பட்ட ஸ்ரீகிருஷ்ணஸ்துதியைப் பக்தியுடன் படிப்பவனும், கேட்பவனும், ஸ்ரீகிருஷ்ணனுடைய அனுக்ரஹத்தால் பாபங்களெல்லாம் அற்று, முடிவில் ஸ்ரீ கிருஷ்ணபகவானை அடைகிறான். யோகிகள் உயிர்நீங்குங்காலத்தில் மிக்கப் பிரயத்தனத்துடன் மனத்தில் எந்தப் பகவானை நிலைக்கப் பாவனைச் செய்கிறார்களோ அந்த ஹரியைப் பீஷ்மர் எதிரிற்கண்டு கிருதார்த்தராயத் தம்முயிரைவிட்டார். முன்காலத்தில் பீஷ்மராற் சொல்லப்பட்டதும் மஹாபாபங்களை நாசஞ்செய்வதும், ஆச்சர்யமான செய்கையுள்ள ஸ்ரீ விஷ்ணுவைப் பற்றியதுமான இந்த ஸ்தவராஜம் முடிவுபெற்றது. பரிசுத்தனாகி மோக்ஷவிருப்பமுள்ள மனிதன் நிந்திக்கப்பட்ட பாவங்களை விலக்கும் இந்த ஸ்தவராஜத்தைப் படித்துத் தாமாகக் கிடைத்த அழிவுள்ள உலகங்களைக் கடந்து மஹாத்மாவினுடைய அழிவற்ற பதத்தைப் பெறுகிறான்”

      ——————————————————————————

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

      ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்–ஸ்ரீ கிருஷ்ண சத நாமாவளி! —

      October 21, 2025

      சதநாமாவளி! – சாந்திபர்வம் பகுதி – 43-நூறு பெயர்களால் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்; மனம் நிறைந்த கிருஷ்ணன்…

      வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் ஞானியும், தூய்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், நாட்டை மீண்டும் அடைந்து, முடிசூட்டுவிழாவும் முடிந்த பிறகு, தாமரைக் கண்ணனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனிடம் கரங்களைக் கூப்பி,(1) “ஓ! கிருஷ்ணா, ஓ! யதுக்களில் புலியே, உன் அருளாலும், உன் கொள்கை, வலிமை, நுண்ணறிவு, ஆற்றல் ஆகியவற்றாலுமே நான் என் மூதாதையரின் நாட்டை மீண்டும் அடைந்தேன். ஓ! தாமரைக் கண்ணனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே நான் உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(2,3) நீயே ஒரே தலைவன்[1] என்று அழைக்கப்படுகிறாய். மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} உன்னை எண்ணற்ற பெயர்களால் அழைக்கின்றனர்.(4)அண்டத்தின் படைப்பாளனே, உனக்கு வணக்கம். நீயே அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறாய், அண்டமானது உன்னிலிருந்தே எழுந்திருக்கிறது. விஷ்ணு நீயே, ஜிஷ்ணு நீயே, ஹரி நீயே, கிருஷ்ணன் நீயே, வைகுண்டன் நீயே, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே {புருஷோத்தமன் நீயே}.(5) புராணங்களில் சொல்லப்படுவதைப் போல அதிதியின் கருவறையில் ஏழு முறை பிறப்பை எடுத்தவன் நீயே. பிருஸ்னியின் கருவறையில் பிறப்பெடுத்தவன் நீயே[2]. கல்விமான்களால் மூன்று யுகங்கள் {திரியுகன்} என்று சொல்லப்படுபவன் நீயே[3].(6) சாதனைகள் அனைத்தாலும் புனிதமானவன் {சுசிஸ்ரவஸ்} நீயே. எங்கள் புலன்களின் தலைவன் {ஹ்ருஷீகேசன்} நீயே. வேள்விகளில் வழிபடப்படும் பெருந்தலைவன் {க்ருதார்ச்சிஸ்} நீயே. பெரும் அன்னம் {ஹம்சன்} என்றழைக்கப்படுபவன் நீயே, முக்கண் சம்பு நீயே. விபு மற்றும் தாமோதரன் என்று அழைக்கப்பட்டாலும் ஒருவனாகவே இருப்பவன் நீயே.(7) பெரும்பன்றி {வராகன்} நீயே, நெருப்பு {அக்னி} நீயே, சூரியன் {பிருஹத்பானு} நீயே, கொடியில் காளைச் சின்னத்தைக் கொண்டவன் {ரிஷபன்} நீயே, கருடனையும் சின்னமாகக் கொண்டவன் {தார்க்ஷ்யலக்ஷணன்} நீயே. பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவன் {அநீகஸாஹன்} நீயே, அண்டத்தின் அனைத்து வடிவங்களிலும் படர்ந்தூடுருவியிருப்பவன் {புருஷன்} நீயே, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் {சிபிவிஷ்டன்} நீயே.(8) அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானவன் {உருக்ரமன்} நீயே, கடுமையானவன் {வரிஷ்டன்} நீயே, போரின் படைத்தலைவன் {உக்ரஸேநாநீ} நீயே, உண்மை {ஸத்யன்} நீயே, உணவை அளிப்பவன் {வாஜஸநி} நீயே, (தேவர்களின் படைத்தலைவனான) குஹன் நீயே, எதிரிகளின் ஒளியை மங்கச் செய்து அவர்களை வீணாகச் செய்யும் மங்காதவன் {அச்சுதன்} நீயே, தூய இரத்தம் கொண்ட பிராமணன் {ஸம்ஸ்கிருதன்} நீயே, கலப்பில் பிறந்தவன் {விக்ருதி} நீயே, பெரியவன் {வ்ருஷன்} நீயே.(9) உயர்வாக நடப்பவன் {கிருஷ்ணதர்மன்} நீயே, மலைகள் {ஆதி} நீயே, விருஷதர்ப்பன் என்றும், வ்ருஷாகபி என்றும் அழைக்கப்படுபவன் நீயே, பெருங்கடல் {ஸிந்து} நீயே, பண்புகளற்றவன் {விதூர்மி} நீயே, மூன்று கூன்களைக் கொண்டவன் {த்ரிககுப்} நீயே, மூன்று வசிப்பிடங்களைக் கொண்டவன் {த்ரிதாமா} நீயே, சொர்க்கத்தில் இருந்து இறங்கி பூமியில் மனித வடிவங்களை எடுப்பவன் {த்ரிவ்ருத்} நீயே.(10) பேரரசன் {ஸம்ராட்} நீயே, விராட் நீயே, ஸ்வராட் நீயே[4]. ஸ்வாராட் நீயே, தேவர்களின் தலைவன் நீயே, அண்டம் உதித்த காரணம் {பூதமயன்} நீயே, எல்லாம் வல்லவன் {பவன்} நீயே, எல்லாம் வல்லவன் {விபு} நீயே, அனைத்து வடிவிலும் இருப்பவன் {பூ} நீயே, வடிவமற்றவனும் {அதிபூவும்} நீயே, கிருஷ்ணன் நீயே, நெருப்பு {கிருஷ்ணவர்த்மா} நீயே.(11)படைப்பாளன் {ஸ்விஷ்டகிருத்} நீயே, தெய்வீக மருத்துவர்களின் தந்தை {பிஷஜாவர்த்தன்} நீயே, (தவசி) கபிலன் நீயே. உயரம் குறைந்தவன் {வாமனன்} நீயே[5].(12) வேள்வியின் வடிவம் {யக்ஞன்} நீயே, துருவன்[6] நீயே, கருடன் {பதங்கன்} நீயே, யக்ஜசேனன் {ஜயத்ஸேனன்} என்றழைக்கப்படுபவன் நீயே. சிகண்டி நீயே, நகுஷன் நீயே, பப்ரு நீயே, ஆகாயத்தில் விரிந்திருக்கும் புநர்வஸு நீயே,(13) பழுப்புநிறம் கொண்டவன் {ஸுபப்ரு} நீயே, உக்தம் என்ற பெயரில் அறியப்படும் வேள்வி {ருக்மயஜ்ஞன்} நீயே, ஸுஷேணன் நீயே, அனைத்துப் பக்கங்களிலும் ஒலியை எழுப்பும் பேரிகை {துந்துபி} நீயே. எடை குறைந்த தேர்ச்சக்கரத்தைக் கொண்டவன் {கபஸ்திநேமி} நீயே, செழிப்பின் தாமரை {ஸ்ரீ பத்மன் நீயே}, புஷ்கரன் என்றழைக்கப்படுபவன் நீயே, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவன் {சுஷ்மதாரணன்} நீயே.(14) செழிப்புமிக்கவன் {ருபு} நீயே, பலமிக்கவன் {விபு} நீயே, மிக நுட்பமானவன் {ஸர்வஸூக்ஷ்மன்} நீயே, வேதங்களை விளக்குபன் {தரித்ரீ} நீயே. பெரிய நீர் கொள்ளிடம் {அம்போநிதி} நீயே, பிரம்மன் நீயே, புனிதமான புகலிடம் {பவித்ரதாமன்} நீயே, அனைத்து வசிப்பிடங்களையும் அறிந்தவன் {தாமவித்து} நீயே, ஹிர்ணயகர்ப்பன் நீயே, ஸ்வதா நீயே, ஸ்வாஹா நீயே, கேசவனும் நீயே.(15) இவ்வுலகத்துடைய இருப்பின் {உற்பத்திக்குக்} காரணமும், இல்லாமையின் {அழிவின்} காரணமும் நீயே. முதலில் இந்த உலத்தைப் படைத்தவன் நீயே. ஓ! அண்டத்தைப் படைத்தவனே, இவ்வண்டம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஓ! சாரங்கம், சக்கரம் மற்றும் வாளைத் தரிப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}[7].(16)சபைக்கு மத்தியில் வைத்து நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு துதிக்கப்பட்ட தாமரைக்கண்ணனான கிருஷ்ணன் நிறைவடைந்தான். பிறகு அந்த யாதவர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, ஏற்புடைய பேச்சுகள் பலவற்றால் பாண்டுவின் மூத்த மகனைத் திளைக்க வைக்கத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

      ——————————————————————————

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்