ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்-ஸ்ரீ மோக்ஷ தர்மம்-பகுதி 2-ஸ்ரீ சிவ ஸஹஸ்ர நாமம்-

சிவபெருமானின் ஆயிரத்தெட்டுப் பெயர்களைச் சொல்லித் துதித்த தக்ஷன்; தக்ஷனுக்கு வரமளித்த சிவன்; பாசுபத விரதம் குறித்துச் சொன்ன சிவன்; சிவசஹஸ்ரநாமத்தைச் சொல்வதால் உண்டாகும் பயனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்}, “யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, உயிரினங்களின் மூதாதையான தக்ஷன் பெருந்தெய்வத்தை {மஹாதேவனைத்துதித்த அந்தப் பெயர்களை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓ! பாவமற்றவரே, மதிப்புடன் கூடிய ஆவல் என்னை அவற்றைக் கேட்கத் தூண்டுகிறது” என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இயல்புக்கு மீறிய செயல்களைச் செய்பவனும், இரகசிய நோன்புகளையுடையவனுமான அந்தத் தேவதேவனின் இரகசியமான மற்றும் வெளிப்படையான பெயர்களை இப்போது கேட்பாயாக.(2)

தக்ஷன், ஓ! தேவதேவர்கள் அனைவருக்கும் தலைவா {ஈஸ்வரா}, அசுரர்களின் படைகளை அழிப்பவனை நான் வணங்குகிறேன். தேவர் தலைவனின் பலத்தை முடக்குபவன் நீயே. தேவர்களாலும், தானவர்களாலும் துதிக்கப்படுபவன் நீயே.(3) ஆயிரங்கண் கொண்டவன் நீயே, கடுமை நிறைந்த கண் கொண்டவன் நீயே, முக்கண்ணன் நீயே. யக்ஷ ஆட்சியாளனின் நண்பன் நீயே. அனைத்து இடங்களிலும், அனைத்துத் திசைகளிலும் பரந்திருக்கும் கரங்களையும் கால்களையும் கொண்டவன் நீயே. அனைத்துப் புறங்களிலும் திரும்பும் கண்களும், தலையும், வாயும் கொண்டவன் நீயே.(4) அண்டத்தில் எங்கும் காதுகளைக் கொண்டவன் நீயே, ஓ! தலைவா, எங்கும் இருப்பவன் நீயே. கணை போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே, பெரிய காதுகளைக் கொண்டவன் நீயே, குடம் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. பெருங்கடலின் கொள்கலன் நீயே.(5) யானை, அல்லது காளை, அல்லது விரிந்த உள்ளங்கையைப் போன்ற காதுகளைக் கொண்டவன் நீயே. உன்னை வணங்குகிறேன். நூறு வயிறுகளைக் கொண்டவனே, நூறு மயிர்ச்சுழிகளைக் கொண்டவனே, நூறு நாவுகளைக் கொண்டவனே. நான் உன்னை வணங்குகிறேன்.(6)

காயத்ரியை பாடுபவர்கள், உன் பெருமைகளையே துதித்தே அந்தக் காயத்ரியைப் பாடுகின்றனர், சூரிய வழிபாட்டாளர்கள், சூரியனைத் துதிப்பதில் உன்னையே துதிக்கின்றனர். பிரம்மன் என்றும், இந்திரன் என்றும், (அளவற்ற) ஆகாயம் {ஊர்த்தவன்} என்றும் முனிவர்கள் உன்னையே கருதுகின்றனர்.(7) ஓ! வலிமைமிக்க வடிவம் கொண்டவனே, பெருங்கடலும் வானும் உன் இரு வடிவங்களாகும். கொட்டிலுக்குள் உள்ள பசுவைப் போல அனைத்துத் தேவர்களும் உன் வடிவத்திலேயே வசிக்கின்றனர்.(8) சோமன், அக்னி, நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, ஆதித்தியன், விஷ்ணு, பிரம்மன், பிருஹஸ்பதி ஆகியோரை நான் உன் உடலிலேயே காண்கிறேன்.(9) ஓ சிறப்புமிக்கவனே, காரணனும், விளைவும் {காரியமும்}, செயல்பாடும் {ப்ரிகையை}, உண்மை மற்றும் உண்மையற்ற அனைத்திற்கான கருவியும் நீயே, படைப்பும், அழிவும் நீயே.(10)

பவன் என்றும், சர்வன் என்றும் ருத்திரன் {பாவத்தை விலக்குபவன்} என்றும் அழைக்கப்படும் உன்னை வணங்குகிறேன். வரங்களை அளிப்பவனான {வரதனே} உன்னை நான் வணங்குகிறேன்.(11) அனைத்து உயிரினங்களின் தலைவனான உன்னை வணங்குகிறேன். அந்தகனைக் கொல்பவனான உன்னை வணங்குகிறேன்.(12) மூன்று சடை, மூன்று தலை ஆகியவற்றைக் கொண்டு, சிறந்த திரிசூலத்தைத் தரித்து, மூன்று கண்களைக் கொண்டவன் நீயே, எனவே, திரயம்பகம் என்றும் திரிநேத்திரன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே. மூன்று நகரத்தை {திரிபுரத்தை} அழித்த உன்னை வணங்குகிறேன்.(13) சண்டன் {குரூர வடிவத்தக் கொண்டன்} என்றும் குண்டன் {சட்டி போன்றவன்} என்றும் அழைக்கப்படுவனும், (அண்ட) முட்டையாய் இருப்பவனும், (அண்ட) முட்டையைச் சுமப்பவனும், தவசியின் தண்டத்தைத் தரித்தவனும், எங்கும் காதுகளைக் கொண்டவனும், தந்திமுண்டன் என்றழைக்கப்படுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(14) மேல்நோக்கிய கோரப் பற்களும், தலைமயிரும் கொண்டவனும், களங்கமற்று வெண்மையாயிருப்பவனும் {சுக்லனும்}, அண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருப்பவனும் {அவத்தன்}, {ரஜோ குணத்தால்} சிவப்பானவனும் {விலோஹிதனும்}, பழுப்பானவும் {தூம்ரனும்}, நீலத் தொண்டை கொண்டவனுமான {நீலகண்டனுமான} உன்னை வணங்குகிறேன்.(15)

ஒப்பிலாத பயங்கர வடிவம் கொண்டவனே {விரூபனே}, மிக மங்கலமானவனே {சிவனே} உன்னை நான் வணங்குகிறேன். சூரியனே, கழுத்தில் சூரியர்களின் மாலை தரித்தவனே, சூரியச் சின்னம் பொறித்த கொடிமரங்களையும், கொடிகளைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்.(16) பூத கணங்களின் தலைவனே, காளையின் கழுத்தைக் கொண்டவனே, வில்லைத் தரித்தவனே {தந்வியே}, எதிரிகள் அனைவரையும் நொறுக்குபவனே, தண்டனையின் வடிவமே {தண்டனே}, மரவுரியாடை தரித்தவனே, உன்னை வணங்குகிறேன்.(17) வயிற்றில் தங்கம் கொண்டவனே, தங்கக் கவசம் பூண்டவனே, தங்க மகுடம் கொண்டவனே, உலகில் உள்ள தங்கமனைத்திற்கும் தலைவனே, உன்னை வணங்குகிறேன்.(18) துதிக்கப்படுபவனே {ஸ்துதனே}, துதிக்கத் தகுந்தவனே {ஸ்துத்பனே}, துதிக்கப்பட வேண்டியவனே {ஸ்தூயமானவனே}, அனைத்துப் பொருளும் ஆனவனே {சர்வனே}, அனைத்தையும் விழுங்குபவனே, அனைத்தின் ஆன்மாவாக இருப்பவனே, உன்னை வணங்குகிறேன்.(19) (வேள்விகளில்) ஹோத்ரியே {ஹோதாவே}, (வேள்விகளில்) ஓதப்படும் (வேத) மந்திரமே {மந்திரனே}, வெள்ளைக் கொடிகளையும், கொடிமரங்களையும் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். அண்டத்தின் தொப்புளாய் இருப்பவனே {நாபனே, நாப்யனே}, ஐம்பூதங்களின் வடிவில் காரணக் காரியமாய் இருப்பவனே, மறைப்பவை அனைத்தையும் மறைப்பவனே உன்னை வணங்குகிறேன்.(20)

கிருசநாசன் {மெல்லிய மூக்குடையவன்} என்றழைக்கப்படுபவனே, மெல்லிய அங்கங்களைக் கொண்டவனே, மெலிவானவனே {கிருசனே} உன்னை வணங்குகிறேன். எப்போதும் உற்சாகமாய் இருப்பவனே {ஸம்ஹ்ருஷ்ட விஹ்ருஷ்டனே}, குழப்பமான ஒலிகள் மற்றும் குரல்களின் உடல்வடிவமே {கிலகிலனே}, உன்னை வணங்குகிறேன்.(21) பூமியில் படர்ந்திருப்பவனே {சயமே}, ஏற்கனவே படர்ந்து விரிந்திருப்பவனே {சயிதனே}, செங்குத்தாக எழுந்து நிற்பவனே {உத்திதனே} உன்னை வணங்குகிறேன். நிலையானவனே {ஸ்திதனே}, ஓடுபவனே {தாவமே}, வழுக்கைத் தலை கொண்டவனே {முண்டனே}, தலையில் சடாமுடி தரித்தவனே {ஜடிலனே} உன்னை வணங்குகிறேன்.(22) ஆடல் விருப்பம் கொண்டவனே, காற்றால் நிறைந்த கன்னங்களைத் தட்டி வாயை உடுக்கையாக்குபவனே {முக வாத்தியம் வாசிப்பவனே} உன்னை வணங்குகிறேன்[1]. ஆறுகளில் மலரும் தாமரைகளை விரும்புபவனே, பாடுவதையும், இசைக்கருவிகளை இசைப்பதையும் விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(23) மூத்த பிறவியே {ஜ்யேஷ்டனே}, உயிரினங்கள் அனைத்தில் முதன்மையானவனே {ச்ரேஷ்டனே}, அசுரன் பலனைக் கொன்றவனே உன்னை வணங்குகிறேன். காலத்தின் உரிமையாளனே {காலனின் கடவுளே}, கல்பத்தின் வடிவமே {கல்யனே}; அனைத்து வகைச் சிறு மற்றும் பேரழிவுகளின் வடிவமே {க்ஷயனே, உபக்ஷயனே} உன்னை வணங்குகிறேன்.(24) பயங்கரமாகவும், பேரிகையொலிக்கு ஒப்பாகவும் சிரிப்பவனே, பயங்கர நோன்புகளை நோற்பவனே உன்னை வணங்குகிறேன். கடுமையானவனும், பத்துக் கரங்களைக் கொண்டவனுமான உன்னை எப்போதும் நான் வணங்குகிறேன்.(25)கைகளில் எலும்புகளை {மண்டையோட்டைத்} தரித்தவனே, ஈமச்சிதைகளின் சாம்பலை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். அச்சத்தை ஏற்படுத்துபவனே {விபீஷ்ணனே}, காண்பதற்குப் பயங்கரனே {பீஷ்மனே}, பயங்கர நோன்புகளையும், நடைமுறைகளையும் கொண்டவனே {பீமனே} உன்னை வணங்குகிறேன்.(26) விகார வாயை {முகத்தைக்} கொண்டவனே, கத்தி போன்ற நாக்கைக் கொண்டவனே, பெரிய பற்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சமைத்த மற்றும் பச்சை இறைச்சியை விரும்புபவனே, சுரைக்காய் வீணையில் மிகுந்த விருப்பமுள்ளவனே உன்னை வணங்குகிறேன்[2].(27) மழையைப் பொழியச் செய்பவனே {வ்ருஷனே}, அறம் விளைய உதவுபவனே {வ்ருஷ்யனே}, நந்தி வடிவனே {நந்திரூபனே}, அறத்தின் சுயமே உன்னை வணங்குகிறேன். காற்றையும், பிற சக்திகளையும் போல எப்போதும் நகர்பவனே {கடங்கடனே}, அனைத்துப் பொருட்களையும் கட்டுப்படுத்துபவனே {தண்டனே}, (காலமெனும் கொப்பரையில்) அனைத்து உயிரினங்களையும் சமைப்பதில் எப்போதும் ஈடுபடுபவனே {பசபசனே} உன்னை வணங்குகிறேன்.(28) அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவனே, மேன்மையானவனே, வரங்களை அளிப்பவனே {வரதனே} உன்னை வணங்குகிறேன். சிறந்த மாலைகளையும், சிறந்த நறுமணப் பொருட்களையும், சிறந்த ஆடைகளையும் கொண்டவனே, சிறந்த உயிரினங்களுக்குச் சிறந்த வரங்களை அளிப்பவனே உன்னை வணங்குகிறேன்.(29) பற்றுள்ளவனே {ஆசையுள்ளவனே}, பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டவனே {ஆசையற்றவனே}, தியான யோகத்தின் வடிவமே {பாவநனே}, அக்ஷங்களின் மாலைகளால் {ருத்ராக்ஷமாலைகளால்} அலங்கரிக்கப்பட்டவனே உன்னை வணங்குகிறேன். காரணத்தில் கலந்தவனே {ஸம்பந்நனே}, விளைவுகளில் விலகுபவனே {விபிந்நனே}, நிழலாகவும், ஒளியாகவும் இருப்பவனே {சாயனே, ஆத்பனரூபனே} உன்னை வணங்குகிறேன்.(30)இனிமையானவனே, பயங்கரமானவனே, மிகப் பயங்கரமானவனே உன்னை வணங்குகிறேன். மங்கலமானவனே {சிவனே}, அமைதியானவனே {சாந்தனே}, பேரமைதிமிக்கவனே உன்னை வணங்குகிறேன்.(31) ஒரு காலைக் கொண்டவனே, பல கண்களைக் கொண்டவனே, ஒரே தலை கொண்டவனே, கடுமையானவனே {ருத்ரனே}, அற்ப காணிக்கைகளில் நிறைவடைபவனே, ஒப்புரவை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன்.(32) அண்டத்தின் கைவினைஞனே {பஞ்சாலனே}, அமைதிக் குணத்துடன் எப்போதும் கலந்தவனே உன்னை வணங்குகிறேன். பகைவரை அச்சுறுத்தும் மணியை {கண்டாமணியைக்} கொண்டவனே, மணியில் உண்டாகும் கிங்கிணி வடிவானவனே {கண்டாநாதரூபனே}, காதுகளால் உணர முடியாத ஒலியின் வடிவானவனே உன்னை வணங்குகிறேன்.(33) ஒன்றுசேர்ந்த ஆயிரம் மணியொலியைப் போன்றவனே, மணிமாலைகளை விரும்புபவனே, உயிர் மூச்சு உண்டாக்கும் ஒலியைப் போன்றவனே, மணங்கள் அனைத்தின் வடிவமே {கந்தனே}, கொதிக்கும் நீர்மங்களின் குழம்பிய ஒலியின் வடிவமே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(34) மூன்று ஹுங்களைக் கடந்தவனே, இரண்டு ஹுங்களை விரும்புபவனே உன்னை வணங்குகிறேன். மிக அமைதியானவனே, மலையின் மரங்களுடைய நிழலையே வசிப்பிடமாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்[3].(35)உயிரினங்கள் அனைத்தின் இதயச் சதையை விரும்புபவனே, பாவங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துபவனே {தாரகரே}, வேள்விக் காணிக்கைகளின் வடிவமே {தரனே} உன்னை வணங்குகிறேன். வேள்வியின் வடிவமே {யஜ்ஞனே}, வேள்வி செய்பவனே {யஜியே}, வேள்வி நெய் ஊற்றப்படும் வாயுடைய பிராமணனே {ஹுதனே}, மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட நெய் ஊற்றப்படும் நெருப்பே {ப்ரஹுதனே} உன்னை வணங்குகிறேன்[4].(36) (வேள்வியின்) ரித்விஜர்களின் வடிவமே {யஜ்ஞவாஹனே}, புலன்களைக் கட்டுக்குள் கொண்டவனே {தாந்தனே}, சத்வமே ஆனவனே {தப்யனே}, ரஜஸையும் கொண்டவனே {ஆத்மநனே} உன்னை வணங்குகிறேன். ஆற்றங்கரை வடிவானவனே {தடனே}, ஆறுகளே ஆனவனே {தட்யனே}, ஆறுகள் அனைத்தின் தலைவனே (பெருங்கடலே) {ஸமுத்திரமே} உன்னை வணங்குகிறேன்.(37) உணவை அளிப்பவனே {அந்நதனே}, உணவுகள் அனைத்தின் தலைவனே, உணவை உண்பவனுக்கு ஒப்பானவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரம் கரங்களைக் கொண்டவனே, ஆயிரம் கால்களைக் கொண்டவனே,(38) கரங்களில் ஆயிரம் திரிசூலங்களை உயர்த்திப் பிடிப்பவனே, ஆயிரம் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உதிக்கும் சூரியனின் வடிவானவனே, குழந்தையின் வடிவானவனே,(39) பிள்ளைகளின் வடிவில் உள்ள ஊழியர்கள் {நண்பர்கள்} அனைவரின் பாதுகாவலனே, பிள்ளைகளின் பொம்மை வடிவானவனே உன்னை வணங்குகிறேன். முதியவனே {வ்ருத்தனே}, பேராசைமிக்கவனே {லுப்தனே}, ஏற்கனவே கலக்கமடைந்தவனே {க்ஷுப்தனே}, கலக்கமடையப் போகிறவனே {க்ஷோபணனே} உன்னை வணங்குகிறேன்.(40)கங்கை அலைகளின் அடையாளம் கொண்ட சடையைக் கொண்டவனே, முஞ்ச {தர்ப்பைப்} புற்களுக்கு ஒப்பான சடைமயிர் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். (நன்கறியப்பட்ட) ஆறு செயல்களில் நிறைவடைபவனே, மூன்று செயல்களைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவனே உன்னை வணங்குகிறேன்[5].(41) {நான்கு} வாழ்வுமுறைகளுக்குரிய {ஆசிரமங்களுக்குரிய} கடமைகளை வகுத்தவனே உன்னை வணங்குகிறேன். ஒலிகளால் துதிக்கத்தகுந்தவனே {குஷ்யனே}, கவலை வடிவானவனே, ஆழ்ந்த குழப்பமான ஒலியின் வடிவானவனே {கலகலனே} உன்னை வணங்குகிறேன்.(42) வெண்மையும், பழுப்பும், கருப்பும், சிவப்புமெனக் கண்களைக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். உயிர்மூச்சுகளை வென்றவனே, ஆயுதங்களின் வடிவானவனே {தண்டனே}, அனைத்துப் பொருட்களையும் பிளப்பவனே {ஸ்போடநனே}, மிக மெலிதானவனே {க்ருசனே} உன்னை வணங்குகிறேன்.(43) அறம், இன்பம், பொருள் மற்றும் விடுதலையை எப்போதும் சொல்பவனே உன்னை வணங்குகிறேன். சாங்கியனே, சாங்கியர்களில் முதன்மையானவனே, சாங்கிய யோகத்தை அறிமுகம் செய்தவனே உன்னை வணங்குகிறேன்.(44) (பயணங்களில்) தேருள்ளவனே, தேரில்லாதவனே உன்னை வணங்குகிறேன். நாற்சந்தி சாலைகளைத் தேராகக் கொண்டவனே, கருப்பு மானின் தோலை மேலாடையாக {உத்தரீயமாகக்} கொண்டவனே, பாம்பை புனித நூலாகக் கொண்டவனே {ஸர்ப்பயஜ்ஞோபவீதமுடையவனே} உன்னை வணங்குகிறேன்.(45)ஈசானனே {மிக விரும்பப்படுபவனே}, வஜ்ரம் போன்ற கடின உடல் கொண்டவனே, பச்சை {மஞ்சள்} சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். முக்கண்ணனே, அம்பிகையின் தலைவனே, புலப்படுபவனே {வ்யக்தனே}, புலப்படாதவனே {அவ்யக்தனே} உன்னை வணங்குகிறேன்.(46) ஆசையே {காமனே}, ஆசைகளைக் கொடுப்பவனே {காமதனே}, ஆசைகள் அனைத்தையும் கொல்பவனே {காமகநனே}, நிறைவு மற்றும் நிறைவின்மையைப் பாகுபடுத்துபவனே உன்னை வணங்குகிறேன். அனைத்துப் பொருளாக இருப்பவனே {ஸர்வனே}, அனைத்துப் பொருளையும் கொடுப்பவனே {ஸாவதனே}, அனைத்துப் பொருளையும் அழிப்பவனே {ஸாவகநனே} உன்னை வணங்குகிறேன். மாலை வானில் தோன்றும் வண்ணங்களாக {சிவப்பு வண்ணமாக} இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(47) வலிமையும், பலமும் ஆனவனே, வலிமைமிக்கக் கரங்களாக இருப்பவனே, வலிமைமிக்கவனே, பெரும் பிரகாசம் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். பெரும் மேகத் திரளைப் போலத் தெரிபவனே, நித்தியத்தன்மையின் வடிவமே உன்னை வணங்குகிறேன். நன்கு வளர்ந்த உடலைக் கொண்டவனே {மஹாகாலரூபியே}, மெலிந்த அங்கங்களைக் கொண்டவனே, தலையில் சடாமுடி தரித்தவனே, மரவுரியும், விலங்குத் தோலும் அணிபவனே உன்னை வணங்குகிறேன்.(48) சூரியனையோ, நெருப்பையோ போன்ற பிரகாசத்தையுடைய சடாமுடி கொண்டவனே, மரவுரியும், தோலும் ஆடையாகக் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரஞ்சூரியப் பிரகாசம் கொண்டவனே, எப்போதும் தவங்களில் ஈடுபடுபவனே உன்னை வணங்குகிறேன்.(49) நோய்த்தூண்டல் உள்ளவனே {உந்மாதநனே / மயக்கமடையச் செய்பவனே}, நூற்றுக்கணக்கான அலைகளைக் கொண்ட கங்கை நீரால் நனைந்த சடாமுடி கொண்டவனே உன்னை வணங்குகிறேன். சந்திரன், யுகங்கள் மற்றும் மேகங்களை மீண்டும் மீண்டும் சுழற்றுபவனே உன்னை வணங்குகிறேன்[6].(50)உணவே {அந்நமே}, உணவை உண்பவனே {அத்தா}, உணவைக் கொடுப்பவனே {போக்தா}, உணவை வளர்ப்பவனே {அந்நதனே}, உணவை உண்டாக்குபவனே உன்னை வணங்குகிறேன். உணவை சமைப்பவனே, சமைத்த உணவை உண்பவனே {பக்வபுக்}, காற்றும் நெருப்புமாக இருப்பவனே {பவனனே, அநலனே} உன்னை வணங்குகிறேன்.(51) ஓ! தேவதலைவர்கள் அனைவரின் தலைவனே {தேவேசனே}, பாலூட்டிகள் {ஜராயுஜங்கள்}, முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை {அண்டஜங்கள்}, கழிவில் பிறப்பவை {ஸ்வேதஜங்கள்}, தாவரங்கள் {உத்பிஜ்ஜங்கள்} ஆகிய நான்கு வகை உயிரினங்களாக இருப்பவனே உன்னை வணங்குகிறேன்.(52) அசைபவை மற்றும் அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட அண்டத்தைப் படைத்தவனே, அவற்றை அழிப்பவனே உன்னை வணங்குகிறேன். ஓ! பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனே, பிரம்மத்தை அறிந்தவர்கள் உன்னையே பிரம்மமாகக் கருதுகின்றனர்.(53) பிரம்மத்தைச் சொல்பவர்கள் உன்னையே மனத்தின் உயர்ந்த தோற்றமாகவும், ஆகாயம், காற்று மற்றும் ஒளி உறங்கும் புகலிடமாகவும் சொல்கின்றனர். ரிக்குகள், சாமங்கள் மற்றும் ஓம் எனும் அசை நீயே.(54) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, சாமங்களைப் பாடி பிரம்மத்தைச் சொல்பவர்கள், ஹாயி-ஹாயி, ஹுவா-ஹாயி, ஹுவா-ஹோயி என்ற அசைகளைச் சொல்லும்போது உன்னையே தொடர்ந்து பாடுகின்றனர்[7].(55)யஜுஸ்கள், ரிக்குகள் மற்றும் வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் காணிக்கைகளால் ஆனவன் நீயே. வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளில் உள்ள துதிகளில் துதிக்கப்படுபவன் நீயே.[8](56) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், கலப்பு வர்ணங்களும் நீயே. வானத்தில் தோன்றும் மேகத்திரள்கள் நீயே; மின்னல் நீயே; இடிமுழக்கம் நீயே.(57) வருடங்கள் நீயே, பருவ காலங்கள் நீயே, மாதங்கள் நீயே, பிறைநாட்களும் நீயே. யுகம் நீயே, கண் இமைப்பால் பிரதிபலிக்கப்படும் நேரம் {நிமிடம்} நீயே, காஷ்டை நீயே, நட்சத்திரங்கள் நீயே, கோள்கள் நீயே, கலையும் நீயே.(58) மரங்கள் அனைத்தின் உச்சி நீயே, மலைகள் அனைத்தின் சிகரங்கள் நீயே. இழிந்த விலங்குகளில் புலி நீயே, பறவைகளில் கருடன் நீயே, பாம்புகளில் அனந்தன் நீயே.(59) பெருங்கடல்கள் அனைத்திலும் பாற்கடல் நீயே, ஆயுதம் ஏவும் கருவிகளில் வில் நீயே. ஆயுதங்களில் வஜ்ரம் நீயே, நோன்புகளில் வாய்மை நீயே.(60)வெறுப்பும் நீயே, விருப்பும் நீயே; பற்றும் நீயே, (தீர்மான) மயக்கமும் நீயே; மன்னிக்கும் தன்மை நீயே, மன்னிக்கா தன்மையும் நீயே. முயற்சி நீயே, பொறுமை நீயே, பேராசை நீயே, காமம் நீயே, கோபம் நீயே; வெற்றி நீயே, தோல்வியும் நீயே.(61) கதாயுதம் தரித்தவன் நீயே, கரங்களில் கட்டாங்கமும், ஜர்ஜ்ஜரமும் தரித்தவன் நீயே. வெட்டுபவன், துளைப்பவன், அடிப்பவன் நீயே. (அனைத்து உயிரினங்களுக்கும்) வழிகாட்டுபவனும், இன்ப துன்பங்களைக் கொடுப்பவனும் நீயே.(62) {யமம் ஐந்து, நியமம் ஐந்து என்ற} பத்து ஒழுக்கங்களால் குறிப்பிடப்படும் அறம் நீயே; அனைத்து வகைச் செல்வம், அல்லது பொருள் நீயே; இன்பமும் நீயே. கங்கை நீயே, பெருங்கடல்கள் நீயே, ஆறுகள் நீயே, குளங்கள் {பல்வலங்கள் / குட்டைகள்} நீயே, தடாகங்கள் {ஸரஸ்கள் / ஏரிகள்} நீயே.(63) மெல்லிய கொடிகள் நீயே, அடர்த்தியான செடிகொடிகள் நீயே, அனைத்து வகைப் புற்களும் நீயே, உதிர்களின் மூலிகைகள் நீயே. இழிந்த விலங்குகள் நீயே, பறவைகள் நீயே. அனைத்துக் காரியங்கள் மற்றும் செயல்களின் தோற்றம் நீயே, கனிகளும், மலர்களும் விளையும் பருவகாலங்கள் நீயே.(64) வேதங்களின் தொடக்கம் நீயே, அவற்றின் முடிவும் நீயே; காயத்ரி நீயே, ஓம் எனும் அசை நீயே.(65)

பச்சையானவன் {ஹரிதம்} நீயே, சிவப்பானவன் {ரோஹிதம்} நீயே, நீலமானவன் {நீலம்} நீயே, கருப்பானவன் {கிருஷ்ணம்} நீயே, குருதி வண்ணம் {ரத்தம்} நீயே, சூரிய வண்ணம் {அருணம்} நீயே, அடர்பழுப்பானவன் {கத்ரு} நீயே, {கபிலம் / கரிக்குருவியின் நிறம் நீயே}, மென்பழுப்பவானவன் {கபோதம்} நீயே, அடர் நீலமானவன் {மேசகம் / மயில்தோகையின் நிறம்} நீயே[9].(66) நிறமற்றவன் நீயே, சிறந்த நிறம் நீயே, நிறங்களை உண்டாக்குபவன் நீயே, ஒப்பற்றவன் நீயே. தங்கப் பெயர் கொண்டவன் நீயே, தங்கத்தை விரும்புபவன் நீயே.(67) இந்திரன் நீயே, யமன் நீயே, வரமளிப்பவன் நீயே, செல்வத்தின் தலைவன் நீயே, அக்னி நீயே, கிரகணம் {ஒளி மறைப்பு} நீயே, சித்திரபானு என்றழைக்கப்படும் நெருப்பு நீயே, ராஹு நீயே, சூரியன் நீயே.(68) வேள்வி நெய் ஊற்றப்படும் நெருப்பு நீயே. நெய்யை ஊற்றுபவன் நீயே. நெய் ஊற்றி கௌரவிக்கப்படுபவன் நீயே, ஊற்றப்படும் நெய்யே ஆனவன் நீயே, அனைவரின் பலமிக்கத் தலைவன் நீயே. திரிசுபர்ணர்கள் என்றழைக்கப்படும் பிராமண வகையினர் நீயே; வேதங்கள் அனைத்தும் நீயே; யஜுஸ்களில் சதருத்ரீயம் என்றழைக்கப்படும் பகுதிகள் நீயே.(69) புனிதங்களில் புனிதன் நீயே, மங்கலமான அனைத்துப் பொருட்களிலும் மங்கலமானவன் நீயே. அசைவற்ற உடலில் அசைவு {ஹிண்டுகள்} நீயே. மனித வடிவில் வசிக்கும் சித் நீயே. குணங்களை அடைந்து, அழிவை அடையத்தக்கவனாகுபவனும் நீயே. ஜீவன் நீயே, குணங்கள் இல்லாதிருக்கையில் ஒருபோதும் அழிவில்லாதவன் நீயே. ஜீவனுடன் கூடிய உடலின் வடிவில் சிதைவுக்கும், மரணத்திற்கும் தகுந்தவனாக இருப்பினும் முழுமையானவன் நீயே.(70)உயிர்மூச்சு நீயே, சத்வம் நீயே, ரஜஸ் நீயே, தமஸ் நீயே, குற்றமில்லாதவன் நீயே. பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள் நீயே. விழிதிறப்பும் {உந்மேஷமும்}, விழி அடைப்பும் {நிமேஷமும்} நீயே. தும்மலும் {க்ஷுதமும்}, கொட்டாவியும் {ஜ்ரும்பிதமும்} நீயே, எப்போதும் உள்நோக்கித் திரும்பிய சிவந்த கண்களைக் கொண்டவன் நீயே. பெரிய வாயும், வயிறும் படைத்தவன் நீயே.(72) ஊசிகளைப் போல உன் உடலில் மயிர் கொண்டவன் நீயே. பச்சையான தாடி கொண்டவன் நீயே {செம்பட்டையான மீசை கொண்டவன் நீயே}. மேல்நோக்கிய தலைமயிர் கொண்டவன் நீயே. வேகத்திலும் வேகமானவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையின் கோட்பாடுகளை அறிந்தவன் நீயே. குரல் மற்றும் கருவி இசையை விரும்புபவன் நீயே.(73) நீரில் உலவும் மீன் {மத்ஸ்யன்} நீயே, வலையில் சிக்கிய மீனும் {ஜலசரன்} நீயே. நிறைவானவன் நீயே, விளையாட்டை விரும்புபவன் நீயே, அனைத்து வகைச் சச்சரவுகளின் வடிவமாக இருப்பவன் நீயே. காலம் {கலி} நீயே, கெட்ட காலம் {துஷ்காலன்} நீயே, முதிரா காலம் {அகாலன்} நீயே, மிகைமுதிர்ந்த காலம் {அதிகாலன்} நீயே[10].(74) கொலை {மரணம் / மிருத்யு} நீயே, (கொல்லும்) கத்தி {க்ஷுரம்} நீயே, கொல்லப்படுபவனும் {க்ருத்யன்} நீயே. துணைவன் {பக்ஷன்} நீயே, எதிரி நீயே, துணைவர்களையும், எதிரிகளையும் அழிப்பவன் நீயே. மேகங்கள் தோன்றும் காலம் நீயே, பெரும்பற்கள் நீயே, சம்வர்த்தகமும், வலாஹமும் நீயே[11].(75)காந்தியின் வடிவில் புலப்படுபவன் {கண்டன்} நீயே. மாயையால் பீடிக்கப்பட்டதன் விளைவால் மறைந்திருப்பவன் {புலப்படாதவன் / அகண்டன்} நீயே. உயிரினங்களை அவற்றின் செயல்களின் கனிகளால் இணைப்பவன் {கடி} நீயே. கையில் மணியைக் கொண்டவன் {கண்டி} நீயே. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் (உன் பொம்மைகளாக வைத்துக் கொண்டு) விளையாடுபவன் {சருசேலி} நீயே. காரணங்கள் அனைத்தின் காரணம் {மிலீமிலி} நீயே. (பிரணவத்தின் வடிவிலான) பிரம்மம் நீயே, ஸ்வாஹா நீயே, தண்டதாரி {தண்டி} நீ, வழுக்கை {மொட்டைத்} தலையன் {முண்டன்} நீயே, சொற்கள், செயல்கள் மற்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தியவன் நீயே.(76) நான்கு யுகங்கள் நீயே, நான்கு வேதங்கள் நீயே, நான்கு (வேள்வி) நெருப்புகள் உற்பத்தியாகும் மூலம் நீயே. நான்கு வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகள் அனைத்தையும் இயக்குபவன் நீயே. நான் வகைகளை {வர்ணங்களை} உண்டாக்குபவனும் நீயே.(77) பகடையில் எப்போதும் விருப்பம் கொண்டவன் நீயே. வஞ்சகன் {சூதாடி / தூர்த்தன்} நீயே. கணங்களாகப் பிரிந்திருக்கும் பூதங்களின் தலைவன் நீயே, அவர்களின் ஆட்சியாளனும் நீயே. சிவப்பு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, செவ்வாடைகளை உடுத்துபவன் நீயே. மலைச்சாரலில் உறங்குபவன் {கிரிசன்} நீயே, சிவப்பு வண்ணத்தை {காஷாயன்} விரும்புபவன் நீயே.(78) கலைஞன் {சில்பிகன்} நீயே; கலைஞர்களில் முதன்மையானவன் நீயே; கலைகள் அனைத்தின் தோற்றமும் நீயே. பகனின் கண்களைப் பிடுங்கியவன் நீயே; கடுமையானவன் நீயே, பூஷனின் பற்களைச் சிதைத்தவன் நீயே.(79) ஸ்வாஹா நீயே, ஸ்வதா நீயே, வஷட் நீயே, வணக்கத்தின் வடிவம் நீயே, வழிபாட்டாளர்கள் அனைவராலும் சொல்லப்படும் நமஸ் நமஸ் {நமோநமஹ} என்ற சொற்கள் நீயே. பிறர் அறியாத நோன்புகளையும், தவங்களையும் கொண்டவன் நீயே. பிரணவம் {தாரகன்} நீயே; நட்சத்திரக்கூட்டங்கள் மின்னிக் கொண்டிருக்கும் ஆகாயம் நீயே.(80)

தாத்ரி {தாதா / விஷ்ணு}, விதாத்ரி {விதாதா / நான்முகப் பிரம்மன்}, சந்தாத்ரி {சந்தாதா / அனைத்தையும் ஒன்றாகச் செய்பவன்}, விதாத்ரி {விதிகளை வடிவமைப்பவன் / மஹேஸ்வரன்}, உயர்ந்த காரணமான அனைத்துப் பொருட்களின் புகலிடமாகவும் {தாரணனாகவும்}, புகலிடங்கள் அனைத்தின் சார்பற்றவனாகவும் {அதரனாகவும்} இருப்பவன் நீயே. பிரம்மத்தை அறிந்தவன் {பிரம்மம்} நீயே, தவம் நீயே, வாய்மை நீயே, பிரம்மச்சரியத்தின் ஆன்மா நீயே, எளிமை {ஆர்ஜவம்} நீயே.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா {பூதாத்மா} நீயே, உயிரினங்கள் அனைத்தின் படைப்பாளன் {பூதக்ருத்} நீயே, முழு இருப்பு {பூதன்} நீயே, கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவை எழுந்த காரணன் நீயே. பூமி {பூ:} நீயே, ஆகாயம் {புவ:) நீயே, சொர்க்கம் {ஸ்வ:) நீயே. நித்தியமானவன் நீயே, தற்கட்டுப்பாடு கொண்டவன் {தாந்தா} நீயே, பெருந்தேவன் {மஹாதேவன்} நீயே.(82) தொடக்கம் {தீக்ஷிதன்} நீயே, தொடக்கமில்லாதவன் {அதீக்ஷிதன்} நீயே. மன்னிப்பவன் {க்ஷாந்தன்} நீயே, மன்னிக்காதவன் நீயே; புரட்சியாளர்கள் {அடங்காதவர்கள்} அனைவரையும் தண்டிப்பவன் நீயே. சந்திர மாதம் நீயே, யுகச்சக்கரம் (கல்பம்) நீயே, அழிவு {ஸம்வர்த்தன்} நீயே, படைப்பும் {ஸம்பரவர்த்தகன்} நீயே.(83) காமம் {காமன்} நீயே, உயிர் வித்து {பிந்து} நீயே, நுட்பமானவன் {அணு} நீயே, திரளானவன் {ஸ்தூலன்} நீயே, கர்ணிகார மலர்களாலான மாலைகளை விரும்புபவன் நீயே. நந்தி போன்ற முகத்தைக் கொண்டவன் நீயே, பயங்கர முகத்தைக் கொண்டவன் நீயே, அழகிய முகம் கொண்டவன் {ஸுமுகன்} நீயே, கொடூர முகம் {துன்முகன்} கொண்டவன் நீயே, முகமற்றவன் {அமுகன்} நீயே.(84) நான்கு முகம் கொண்டவன் நீயே, பல முகங்களைக் கொண்டவன் நீயே, போரில் ஈடுபடும்போதும் நெருப்பின் முகம் {அக்நிமுகன்} கொண்டவன் நீயே. தங்க வயிற்றைக் கொண்டவன் (நாராயணன்) {ஹிரண்யகர்ப்பன்} நீயே, (உணவும், உடைமைகளும் அற்ற பூமியில் பற்று கொள்ளாத) பறவை {சகுநி} நீயே, (வலிமைமிக்கப் பாம்புகளின் தலைவன்) அனந்தன் நீயே, (பெரிதிலும் பெரிதான) விராட் நீயே.(85)

மறத்தை {அநீதியை} அழிப்பவன் நீயே, மஹாபார்ஸ்வன் என்றழைக்கப்படுபவன் நீயே, சண்டதாரன் நீயே, பூதகணங்களின் தலைவன் நீயே. பசுவைப் போன்ற இழிந்தவன் நீயே, பசுவின் பாதுகாவலன் நீயே, காளைகளின் தலைவனை {நந்தியை} உன் பணியாளாகக் கொண்டவன் நீயே.(86) மூவுலகங்களின் பாதுகாவல் நீயே, கோவிந்தன் நீயே, புலன்களை இயக்குபவன் நீயே, புலன்களால் புரிந்து கொள்ள முடியாதவன் நீயே. உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே, நிலையானவனே நீயே, அசைவற்றவன் {நிஷ்கம்பன்} நீயே, நடுங்காதவன் {கம்பன்} நீயே, நடுக்கத்தின் வடிவம் நீயே.(87) தடுக்கப்பட முடியாதவன் நீயே, நஞ்சுகள் அனைத்தையும் முறிப்பவன் நீயே, (போரில்) தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் நீயே, கடந்து செல்லப்பட முடியாதவன் நீயே, நடுங்கச்செய்ய முடியாதவன் நீயே, அளவிட முடியாதவன் நீயே, வெல்லப்பட முடியாதவன் நீயே, வெற்றி {ஜயன்} நீயே.(88) வேகம் {சசன்} நீயே, சந்திரன் நீயே, (அண்டத்தை அழிப்பவனான) யமன் நீயே, (செல்லவிடாமல்) குளிர், வெப்பம், பசி, பலவீனம் மற்றும் நோயை பொறுப்பவன் நீயே. மனத்துயர்கள் அனைத்தும் நீயே, உடல் நோய்கள் அனைத்தும் நீயே, அந்த நோய்களற்றவன் நீயே.(89) மானின் வடிவில் தப்பிச் செல்ல முயற்சித்த என் வேள்வியை அழித்தவன் நீயே. நோய்கள் அனைத்தின் தோற்றமும், விலக்கமும் நீயே. உயர்ந்த முகடு {சிகண்டி} நீயே. தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் நீயே. காட்டுத் தாமரைகளின் மத்தியில் வசிப்பவன் நீயே.(90)

தவசியின் தண்டத்தைத் தரித்தவன் நீயே. மூன்று வேதங்களை முக்கண்களாகக் கொண்டவன் நீயே. கடுமையான தண்டனைகளைக் கொடுப்பவன் நீயே. (அண்டம் உதித்தபோது தோன்றிய) முட்டையை அழிப்பவன் நீயே. நஞ்சு மற்றும் நெருப்பு ஆகிய இரண்டையும் பருகுபவன் நீயே, தெய்வங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே. சோமம் பருகுபவன் நீயே, மருத்துகளின் தேவன் நீயே.(91) அமுதம் பருகுபவன் நீயே. அண்டத்தின் ஆண்டவன் நீயே. மகிமையில் ஒளிப்பவன் நீயே, ஒளிர்வதனைத்தின் தலைவன் நீயே. நஞ்சிலிருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாப்பவன் நீயே. பாலும், சோமமும் பருகுபவன் நீயே. சொர்க்கத்தில் இருந்து வீழ்ந்தவர்களைப் பாதுகாப்பவர்களில் முதன்மையானவன் நீயே. தேவர்களில் முதல்வனை {பிரம்மனைப்} பாதுகாப்பவன் நீயே.(92) தங்கமே உயிர் வித்தாகக் கொண்டவன் {ஹிரண்யரேதஸ்} நீயே. ஆண் நீயே, பெண் நீயே, அலி நீயே. குழந்தை நீயே, இளைஞன் நீயே, பற்கள் உதிர்ந்த முதிர்ந்தவன் {ஸ்தவிரன்} நீயே, நாகர்களில் முதன்மையானவன் {ஐராவதன்} நீயே, சக்ரன் {இந்திரன்} நீயே, அண்டத்தை அழிப்பவன் நீயே, படைப்பாளன் நீயே.(93) பிரஜாபதி நீயே, பிரஜாபதிகளில் துதிக்கப்படுபவன் நீயே, அண்டத்தை ஆதரிப்பவன் நீயே, அண்டத்தையே வடிவமாகக் கொண்டவன் நீயே, பெருஞ்சக்தி கொண்டவன் நீயே, அனைத்துத் திசைகளிலும் திரும்பி முகங்களைக் கொண்டவன் நீயே. சூரியனையும், சந்திரனையும் இரு கண்களாய் கொண்டவன் நீயே, பெரும்பாட்டனை இதயமாகக் கொண்டவன் நீயே. பெருங்கடல் நீயே. சரஸ்வதி தேவியை உன் வாக்காகக் கொண்டவன் நீயே, நெருப்பையும் {அநலனையும்}, காற்றையும் {அநிலனையும்} உன் வலிமையாக {பலமாகக்} கொண்டவன் நீயே. பகலும், இரவும் நீயே. இமை திறத்தல் மற்றும் அடைத்தல் உள்ளிட்ட செயல்கள் அனைத்தும் நீயே.(94) ஓ! மங்கல தேவனே {சிவ பெருமானே}, பிரம்மனோ, கோவிந்தனோ {விஷ்ணுவோ}, புராதன முனிவர்களோ உண்மையில் உன் மகிமையைப் புரிந்து கொள்ளத் தகுந்தவர்களல்ல.(95)

நீ கொண்ட நுட்பமான வடிவங்கள் எங்களுக்குப் புலப்படவில்லை. ஓ!, தந்தையானவன் தன் மடியில் பிறந்த பிள்ளைகளைப் பாதுப்பத்தைப் போல என்னைக் காப்பாயாக.(96) ஓ! என்னைப் பாதுகாப்பாயாக. நான் உன் பாதுகாப்புக்குத் தகுந்தவனாவேன். ஓ! பாவமற்றவனே நான் உன்னை வணங்குகிறேன். ஓ! சிறப்பு மிக்கவனே, உன் பக்தர்களிடம் கருணை நிறைந்தவன் நீயே. நான் எப்போதும் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்.(97) பெருங்கடலின் அடுத்தக் கரையில், புரிந்து கொள்ளக் கடினமான வடிவில், பல்லாயிரம் மனிதர்களை மறைத்துத் தனிமையில் உள்ளவன் என் பாதுகாவலனாகட்டும்.(98) புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவர்களும், சத்வ குணத்தைக் கொண்டவர்கள், தங்கள் உயிர் மூச்சுகளை ஒழுங்கு செய்தவர்களும், உறக்கத்தை வென்றவர்களுமான மனிதர்களால் பிரகாசமான ஒளியின் வடிவில் காணப்பட்ட யோகத்தின் ஆன்மாவை நான் வணங்குகிறேன்.(99) சடாமுடி தரித்தவனும், தவசியின் தண்டத்தைக் கையில் கொண்டவனும், நீண்ட வயிற்றுப் பகுதியைக் கொண்ட உடலைக் கொண்டவனும், முதுகில் கமண்டலம் கட்டப்பட்டவனும் பிரம்மனின் ஆன்மாகவும் இருப்பவனை நான் வணங்குகிறேன்.(100)

நீரின் ஆன்மாவாக இருப்பவனை, மேகத்தை முடியாய் கொண்டவனை, மூட்டுகளில் ஆறுகளைக் கொண்டவனை, வயிற்றில் நான்கு கடல்களைக் கொண்டவனை நான் வணங்குகிறேன்.(101) யுக முடிவு நேரும்போது உயிரினங்களை அனைத்தையும் விழுங்கி அண்டத்தை மறைக்கும் நீர்ப் பரப்பில் (உறங்குவதற்கு) பரந்து விரிந்து கிடப்பவனின் பாதுகாப்பை நான் நாடுகிறேன்.(102) ராஹுவின் வாய்க்குள் நுழைந்து இரவில் சோமனைப் பருகுபவனும், சுவர்பானுவாகி சூரியனையும் விழுங்குபவனும் என்னைப் பாதுகாக்கட்டும்.(103) பிரம்மனின் படைப்புக்குப் பிறகு உன்னில் இருந்து எழுந்த குழந்தனைகளான தேவர்கள் (வேள்விக் காணிக்கைகளில்) தங்களுக்குரிய பங்குகளை அனுபவிக்கிறார்கள். ஸ்வாஹா மற்றும் ஸ்வதாவுடன் செய்யப்படும் காணிக்கைகளை அவர்கள் (அமைதியாக) அனுபவிக்கட்டும், அந்தக் கொடைகளில் இருந்து அவர்கள் இன்பத்தை அடையட்டும். நான் அவர்களை வணங்குகிறேன்.(104) அனைத்து உடல்களிலும் கட்டைவிரல் அளவில் வசிக்கும் மூர்த்திகள் {ருத்திரர்கள் / மஹாருத்திரனின் பகுதிகள்} என்னை எப்போதும் பாதுகாத்து, நிறைவு கொள்ளச் செய்யட்டும்.(105)

உடல்படைத்த உயிரினங்களில் வசித்து, தாங்கள் துன்புற்று அழாமல் அவற்றைத் துயரில் அழச் செய்து, தாங்கள் மகிழ்ச்சியடையாமல் அவற்றை மகிழ்ச்சியடைச் செய்யும் அந்த மூர்த்திகளை எப்போதும் நான் வணங்குகிறேன்.(106) ஆறுகள், பெருங்கடல்கள், குன்றுகள், மலைகள், மலைக்குகைகள், மரத்தின் வேர்கள், பசுக்கொட்டில்கள், அடைதற்கரிய காடுகள், நாற்சந்திகள், சாலைகள், வெட்ட வெளிகள், (ஆறுகள், தடாகங்கள் மற்றும் பெருங்கடல்களின்) கரைகள், யானைச்சாலைகள், குதிரைச் சாலைகள், தேர்ச்சாலைகள், கைவிடப்பட்ட தோட்டங்கள் மற்றும் வீடுகள், ஐம்பூதங்கள், முக்கிய மற்றும் துணைத் திசைகளில் வசிக்கும் ருத்திரர்களை நான் எப்போதும் வணங்குகிறேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட வெளியிலும், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்களிலும் வசிப்பவர்களையும், பாதாள லோகத்தில் வசிப்பவர்களையும், துறவை மேற்கொண்டவர்களையும், உயர்ந்ததை அடைவதற்கான பிற மேன்மையான நடைமுறைகளில் ஈடுபடுபவர்களையும் நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(107-110)

எண்ணமுடியாதவர்களும், அளவிடமுடியாதவர்களும், வடிவமில்லாதவர்களும், முடிவிலா குணங்களைக் கொண்டவர்களுமான ருத்திரர்களை நான் வணங்குகிறேன்.(111) ஓ! ருத்திரா, அனைத்து உயிரினங்களையும் படைதவன் நீயே, ஓ! ஹரனே, அனைத்து உயிரினங்களின் ஆண்டவன் நீயே, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கும் ஆன்மாவும் நீயே என்பதால்தான் (என் வேள்விக்கு) உன்னை நான் அழைக்கவில்லை.(112) அபரிமிதமான கொடைகளுடன் வேள்விகள் அனைத்திலும் துதிக்கப்படுபவனே நீயே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் நீயே என்பதால்தான் நான் உன்னை அழைக்கவில்லை.(113) அல்லது, ஓ! தேவா, உன் நுட்பமான மாயையில் திகைப்படைந்த நான் உன்னை அழைக்கத் தவறிவிட்டேன்.(114) என்னிடம் நிறைவு கொள்வாயாக, ஓ! பவா, ரஜஸ் குணத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் என்னிடம் அருள்கூர்வாயாக. ஓ! தேவா, என் மனம், புத்தி, சித்தம் அனைத்தும் உன்னிலேயே வசிக்கிறது” என்றான் {என்று துதித்தான் தக்ஷன்}[12].(115)அனைத்து உயிரினங்களின் தலைவனான மஹாதேவன் {சிவன்}, இந்தத் துதிகளைக் கேட்டு (மேலும் தக்ஷனுக்குத் தீங்கிழைக்க எண்ணாமல்) நின்றான். உண்மையில், மிகவும் நிறைவடைந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, தக்ஷனிடம், “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்ட தக்ஷா, உன் துதிகளால் நான் நிறைவடைந்தேன். மேலும் என்னைத் துதிக்க வேண்டாம். நீ என் உதவியைப் பெறுவாய்.(117) ஓ! உயிரினங்களின் மூதாதையே, (நிறைவடையாத இந்த ஒரு வேள்வியின் விளைவாக) என் அருளால் ஆயிரம் குதிரை வேள்விகள் மற்றும் நூறு வாஜபேயங்களின் கனியை நீ ஈட்டுவாய்” என்றான்.(118)

சொற்களின் முற்றான ஆசானான மஹாதேவன் மீண்டும் தக்ஷனிடம், உயர்ந்த ஆறுதல் கூறும் வகையில், “உலகின் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனே நீயே இருப்பாயாக.(119) ஓ! தக்ஷா, இந்த வேள்வியில் நிகழ்ந்த தீங்குகளுக்கான நீ துயரடையாதே. முந்தைய கல்பங்களில் கூட நான் உன் வேள்வியை அழித்திருக்கிறேன்[13].(120) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, நான் மேலும் உனக்குச் சில வரங்களைக் கொடுக்கப் போகிறேன். என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக. உன் முகத்தில் பரவியிருக்கும் இந்த உற்சாகமற்ற தன்மையைக் களைந்து, சிதறாத கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(121){சிவன் தொடர்ந்தான்}, “ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்களிலிருந்தும், ஸாங்கியத்திலிருந்தும் பெற்ற அறிவுக்குப் பொருத்தமான வாதத்தின் துணையால், பல நீண்ட வருடங்கள் செய்யக்கூடிய கடுந்தவங்களைத் தேவர்களாலும், தானவர்களாலும் செய்ய முடிந்தது.(122) எனினும், நான் வகுத்த சாரமானது ஒப்பற்றதும், அனைத்து திசைகளிலும் நன்மையை உண்டாக்கவல்லதுமாகும். இஃது அனைத்து வகை வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} கொண்ட மனிதர்களாலும் செய்யப்படலாம். இது விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது. பல வருடங்கள், அல்லது புலன்களை அடங்கிய மனிதர்களின் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம் இஃது அடையப்படுகிறது. இது புதிரால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஞானமற்றவர்கள் இதைக் கண்டிக்கத்தக்கதாகக் கருதுகிறார்கள்.(123) இது நான்கு வகைகள் {வர்ணங்கள்} மற்றும் நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} ஆகியவற்றில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு முரண்பட்டதும், மிகச் சொற்பமான கடமைகளில் மட்டுமே உடன்பட்டதுமாக இருக்கிறது. (அனுமானங்களில் இருந்து) தீர்மானங்களை (வரையறுக்கும்) அறிவியலில் நன்கு திறம்பெற்றவர்களாலும் அனைத்து வாழ்வுமுறைகளையும் கடந்து, அதைப் பின்பற்றத் தகுந்தவர்களாலும் அதன் ஏற்புடைமையைப் புரிந்து கொள்ள முடியும்.(124) ஓ! தக்ஷா, பழங்காலத்தில், பாசுபதம் என்றழைக்கப்பட்ட மங்கலமான அறம் {விரதம்} என்னால் உண்டாக்கப்பட்டது. அவ்வறத்தைச் சரியாகப் பின்பற்றுவது அபரிமிதமான நன்மைகளை உண்டாக்கும்.(125) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, அந்த நன்மைகள் யாவும் உனதாகட்டும். உன் இதயத்தில் உள்ள இந்த நோயை விலக்குவாயாக” என்றான்{சிவன்}. இந்த வார்த்தைகளைச் சொன்ன மஹாதேவன் {சிவன்}, தன் மனைவி (உமை) மற்றும் தன் தொண்டர்கள் அனைவருடன் அளவிலா ஆற்றலைக் கொண்ட தக்ஷனின் பார்வையில் இருந்து மறைந்து போனான்.(126)

தக்ஷனால் முதலில் சொல்லப்பட்ட இந்தத் துதியை உரைப்பவன், அல்லது மற்றொருவனால் உரைக்கப்படுவதைக் கேட்பவன், சிறு தீமையையும் சந்திக்காமல் நீண்ட வாழ்நாளை அடைவான்.(127) உண்மையில், தேவர்களில் முதன்மையானவனாகச் சிவன் இருப்பதைப் போலவே துதிகள் அனைத்திலும் முதன்மையாக ஸ்ருதிகளுக்கு ஏற்புடைய இந்தத் துதியும் இருக்கிறது.(128)  புகழ், அரசாட்சி, மகிழ்ச்சி, இன்பம், பொருள் {லாபம்}, செல்வம் ஆகியவற்றை விரும்பும் மனிதர்களும், கல்வியில் விருப்பமுள்ளவர்களும் இந்தத் துதியைப் பக்தியுணர்வுடன் கேட்க வேண்டும்.(129)  நோயால் பீடிக்கப்பட்டவன், துன்பத்தால் வருந்துபவன், துயரில் மூழ்கியவன், கள்வர்கள் அல்லது அச்சத்தால் பீடிக்கப்பட்டவன், அரசனின் வெறுப்புக்கு உள்ளானவன் ஆகியோர் (இந்தத் துதியை உரைப்பதால், அல்லது கேட்பதால்) அச்சத்தில் இருந்து விடுபடுவார்கள்.(130)
இந்தத் துதியைக் கேட்பது, அல்லது உரைப்பதன் மூலம் ஒருவன் உலகம் சார்ந்த இந்த உடலுடனே, மஹாதேவனின் தொண்டர்களாக அமைந்திருக்கும் கணங்களுக்கு இணையான தன்மையை அடைவான். (இந்தத் துதியின் மூலம்) ஒருவன் சக்தியையும், புகழையும் பெறுவான், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவான்.(131) இந்தத் துதி உரைக்கப்படும் இல்லத்தில் ராட்சசர்களாலோ, பிசாசங்களாலோ, பூதங்களாலோ, விநாயகர்களாலோ எந்த அமளிகளிலும் ஈடுபடமுடியாது.(132)

பிரம்மச்சரிய நடைமுறைகளை நோற்று இந்தத் துதியைக் கேட்கும் பெண்ணானவள், தன் தந்தை மற்றும் தன் கணவனின் இல்லத்தில் ஒரு தேவியின் வழிபாட்டை வெல்வாள்.(133) இந்தத் துதியைக் கவனத்துடன் கேட்பவன் அல்லது உரைப்பவனின் செயல்கள் அனைத்தும் எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படும்.(134) இந்தத் துதியை உரைப்பதன் விளைவால் ஒருவன் தன் மனத்திற்குள் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும், வார்த்தைகளில் அமைத்துக் கொள்ளும் விருப்பங்கள் அனைத்தும் அவை கனிவதால் மகுடம் சூட்டப்படும்.(135) தற்கட்டுப்பாட்டைப் பயின்று மஹாதேவன், குஹன், உமை, நந்தி ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு உரிய சடங்குகளை உரிய முறையில் அர்ப்பணிப்புடன் செய்யும் மனிதன், தான் விரும்பிய அனைத்துப் பொருட்களையும், அனுபவிக்கத்தக்க, இன்பத்திற்குரிய அனைத்தையும் அடைவான்.(136) அத்தகைய மனிதன் இப்பிறவியை விட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தால், இடைநிலை உயிரினங்களான விலங்குகளாகவோ, பறவைகளாகவோ மீண்டும் ஒருபோதும் பிறப்பை அடைய மாட்டான். இதைப் பராசரரின் மகனான பலமிக்க வியாசரும் சொல்லியிருக்கிறார்” என்றார் {பீஷ்மர்}.(137)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading