Archive for the ‘திருமங்கை ஆழ்வார்’ Category

ஸ்ரீ பெரிய திருமொழி நூற்றந்தாதி–ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்-

March 26, 2021

ஸ்ரீ நம்மாழ்வார் ஆழ்வார்களில் பிரதானமானவர்.
திருமால் என்னும் உயிரான கருத்தின் விளக்கத்திற்கு வாய்த்த உடலாக இருப்பவர்.
அவருடைய நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி என்பன.
இந்த நான்கும் அவர் மூலம் வெளிப்பட்ட நான்கு திராவிட வேதங்கள், தமிழ் மறைகள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் கூறும் கருத்து.
இதில் முக்கியமானது திருவாய்மொழி ஆயிரம் பாட்டுகள்.
இவருடைய திவ்ய பிரபந்தங்கள் உடல் என்றால் அந்த உடலுக்கு உறுப்புகளாக நின்று பொருள் விளங்க உதவும் நூல்கள்
திருமங்கையாழ்வார் என்னும் கலியன் அவர்களது ஆறு நூல்களாகும்.
பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்பன.
மற்றைய ஆழ்வார்களின் நூல்களும் இவ்வாறு உறுப்புகள் என்ற நிலையில் கொள்ளப்படும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாம் எடுத்துக்கொண்டால், அதில் ஆயிரம் பாட்டுகளும் பத்து பத்துகளாகவும்,
ஒவ்வொரு பத்துக்கும் பத்து திருவாய்மொழிகளாகவும், ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் பத்து பாசுரங்களாகவும் பகுக்கப்பட்டிருக்கின்றன.
அது மட்டுமின்றி ஒவ்வொரு பாசுரமும் முன்பின் பாசுரத்திற்கு அந்தாதி என்னும் தொடையில் அமைந்துள்ளது.
முதல் பாசுரமும் கடைசி, அதாவது பத்தாம்பத்து பத்தாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமும் அந்தாதியாக அமைந்துள்ளன.
அதாவது, உயர்வற என்று ஆரம்பித்து திருவாய்மொழி உயர்வே என்று முடிகிறது.

இதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள் பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக
அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்கிறார் பெரிய ஜீயர் என்று வைணவ உலகம் குலவும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.
திருவாய்மொழி எப்படி அமைந்திருக்கிறது? அந்தாதியாகவன்றோ?
அப்படியே நூறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையில் அமையுமாறு பாடியுள்ளார் மாமுனிகள்.
முதல் வெண்பாவின் முதல் சொல் உயர்வில் ஆரம்பித்து நூறாவது வெண்பாவின் ஈற்றுச் சொல் உயர்வு என்று முடியவேண்டும்.
ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும்.
அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும்.
ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும்.
இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள்.
இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும்.
இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது.
வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை.

பல நூற்றாண்டுகளாக வைணவத்தில் வரியடைவே கற்கப்படும் பனுவல் பயிற்சியான காலக்ஷேபம் என்னும் முறையில்
கற்கப்படும் நூலாகவும் இருந்து வருவது திருவாய்மொழி நூற்றந்தாதி.
வழிவழியாகப் பல வித்வான்களும், பக்தர்களும் திருவாய்மொழிக்கு இப்படி ஓர் அற்புதமான வெண்பாவில்
அந்தாதி அமைந்தது போல திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கும் அமைந்திருந்தால்
நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்ததுண்டு.

அவ்வண்ணம் ஒரு முறை ஸ்ரீராமானுஜனில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்
அவ்வாறு பெரிய திருமொழிக்கு ஒரு நூற்றந்தாதி அமையாது போனதைக் குறித்து
வருத்தம் தெரிவித்ததைப் படித்தார் ஒரு தமிழறியும் பெருமாள்.
அவர்தான் திருக்குருகூர் வரி பாடிய திரு கே பக்ஷிராஜன், வழக்குரைஞர் அவர்கள். வைணவத்தில் ஆழங்கால் பட்டவர்.
அருமையான தமிழ்ப் புலமையும் இருக்கிறது. கூடவே திருமாலின் தண்ணருள், அடியாரின் ஆசி. கேட்க வேண்டுமா?
அற்புதமாகப் பாடியிருக்கிறார் திருமொழி நூற்றந்தாதி என்று. 16-11-1969ல் பரகாலன் பைந்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மொத்தம் இருபது பக்கங்கள். பெற்றவர்கள் எல்லாம் பெருநிதியம் பெற்றார்கள்தாம்.!

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியை ஆயிரம் பாட்டுகளாகப் பாடியிருந்தாலும் அவற்றை அந்தாதியாக அமைத்துப் பாடவில்லை.
ஆனால் பத்து பாசுரங்கள் ஒரு திருமொழி, பத்து திருமொழிகள் ஒரு பத்து அது போல் பத்து பத்துகள் என்று அமைப்புகள்.
ஒவ்வொரு திருமொழிக்கும் ஒரு வெண்பா என்று திரு பக்ஷிராஜன் ஸ்வாமி அந்தாதியாகவே பாடியிருக்கிறார்.
மாறன் செந்தமிழ் மாநாடு போன்று பரகாலன் பைந்தமிழ் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து
அதற்கு திரு பக்ஷிராஜன் அவர்களை ஏதாவது எழுத்துப் பங்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
திரு N S கிருஷ்ணன் என்பாரின் தூண்டுதல் இவருக்கு உற்சாகத்தை மூட்டியிருக்கிறது.

முன்னுரையில் எழுதுகிறார் –

“திருமங்கை மன்னன் கிருபையையும், ஸ்ரீமணவாள மாமுனி திருவருளையும் அவலம்பித்து,
ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகைகளையும் ஒவ்வொரு திருமொழிப் பருப் பொருளையும் பொதுவாக நோக்கி
அப்பொருளின் சாயையிலே வெண்பாவாக எழுத முற்பட்டேன்”

கடவுள் வாழ்த்திலேயே நல்ல நறுந்தமிழுக்கு அச்சாரம் போட்டுவிடுகிறார் திரு பக்ஷியார்.

மாலை வழி மறித்தே மந்திரங்கொள் வாட் கலியன்
கோலத் திரு மொழியால் கூறு பொருள் – ஞாலத்தார்க்
கந்தாதி யில் சுருக்கி ஆக்க முயல் பணியைச்
சிந்தாதே காத்திடுமத் தேவு.

மாறன் எனுமங்கி மற்றை யவன் அங்கமாக்
கூறும் குறையலூர்க் கொற்றவனாம் – வீறுடைய
நீலன் இருவரது நீள் பதங்கள் சூடுகின்றேன்
கோல வணியாகக் கொண்டு.

பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரின் முதல் திருமொழி ஆரம்பிக்கிறது.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

திருமொழி அந்தாதி பேசுகிறது –

வாடி வருந்துமுயிர் வாழ்வு பெறற் கேற்றவழி
ஏடுடைய எட்டெழுத்தே ஏத்துமென – நீடுலகத்
தின்பிலே நைந்த கலியன் இசை மொழிகள்
அன்புடனே தாமொழிந்த வால்.

அடுத்த திருமொழி ஆரம்பம்

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே

திருமொழி நூற்றந்தாதி பேசுகிறது –

வாலி மதனழித்த வல் வில்லி நம் வாழ்வு
கோலிப் பிரிதியிலே கூடினான் – கோல நெஞ்சே
கிட்டி வணங்கென்றே கலியன் கிளத்தினான்
முட்டி வரு பேரார்வ முற்று.

அடுத்த திருமொழி தொடக்கம்

முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே

திருமொழி நூற்றந்தாதி –

முற்ற மூத்து மொய் குழலார் முன்னின் றிகழாமுன்
பற்றிடுமின் தொண்டீர் பதரியுறை – நற்றவன் தன்
தாளை யவன் ஆயிரம் பேர் சாற்றி எனும் கலியன்
மீள வுரை தந்தே நமக்கு

இவ்வாறு போகிறது திருமொழி நூற்றந்தாதி.

ஏனமாய் மண்ணேந்தும் எம்மான் வதரியெனும்
தேனமரும் ஆச்சிரமம் சேர்ந்துள்ளான் – ஊனில்
நலி நெஞ்சே நாளும் தொழு தெழுகென்றே சொல்
கலியனுரை வேதக் கலை.

கலையொடுதீ ஏந்தியவன் சாபம் கழல
அலைகுருதி அன்போ டளித்தான் – நிலவிடுசீர்ச்
சாளக் கிராமமே சாருமெனும் நீலனெனும்
வாளுழவன் சொல் வினைக்கு வாள்.

__________________

வாணிலவு மாதர் நகை தப்பி நிமி வனத்தே
சேணுயர் வான் சேவடியே சேர்தி யெனப் – பேணு நெஞ்சை
மங்கையர்கோன் சொன்ன மறைபேணின் நம்மைவினை
அங்கணுகா மாநிலத்தங் கண்.

__________________

அங்க ணரியாய் அவுணனுடல் கீண்டானைச்
சிங்கவேள் குன்றதனில் சேவித்தே – பொங்குமுளத்
தொள்வாள் கலியன் உரை தேர்ந்து நஞ்சென்னி
கொள்வமவன் பாதமலர்க் கொங்கு

__________________

கொங்கலரும் சோலைக் குளிர்வேங் கடமலையே

இங்கடைவாய் நெஞ்சென் றிதமுரைத்து – மங்கையர்கோன்

செஞ்சொலால் சொன்ன திருமொழியே நந்தமக்குத்

தஞ்சமவன் நங்களுக்குத் தாய்.

__________________

தாய்தந்தை மக்களொடு தாரமெனும் நோய்தவிர்ந்தேன்

வேயுயரும் வேங்கடமே மேவினேன் – மாயா

புவியிலெனை ஆட்கொள் எனப்புகன்ற நீலன்

கவிநமக்கு வாழ்வருளும் கண்

__________________

கண்ணார் கடலை அடைத்தானை வேங்கடத்தே
நண்ணி இடர் களைந்து நல்கெனவே – பண்ணால்
வணங்கியே வேண்டிடுமொள் வாட் கலியன் சொல்லால்
வணங்குவர் ஏறிடுவர் வான்.

———————————–

ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ
பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ
நேயத்தே பித்தளை நற் செம்புகளால் ஆகாதோ
மாயப் பொன் வேணுமோ மதித்து உன்னைப் பேணுகைக்கே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்- திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் இயற்றிய ஸ்ரீ திருவெழுகூற்றிருக்கை–

March 17, 2021

எழுவர் -மங்களா சாசனம்
நாலாயிரம் நாத முனிகளுக்கு அளிக்க உதவிய ஆழ்வான்
அகஸ்தியர் -ஏழு கடல் நீரைப்பருகி -ஆசமனம் -சாரமாக அமுதம் -தாயார் இடம் -குடம் -தானே தாயார் -குட முனிவர் –
பெண் ரஹஸ்யம் வைக்க மாட்டாமல் குட மூக்கு -கும்ப கோணம் -குடந்தை –
அனைத்து மொழிகள் வார்த்தைக்குள் ஆராவமுதமே தானே சாரம் -தேவர்களும் அறியாத -சமஸ்க்ருதம் கூட அறிய மாட்டாமல்
ஆரா அமுதே -ஆழ்வார் ஈடுபட்டு -ரஹஸ்யம் வெளி வந்ததே –
அருளிச் செயல்களையும் வெளியிட்ட வைபவம் -13-ஆழ்வார் -இவர் தானே –
ஆராவமுத ஆழ்வார் ஆதரித்த பேறுகளை -மா முனிகள் –

பூதம் பேய்
பெருமை
பிணி தீர்க்கம்
அடியார் வசம்
வாத்சல்யம்

திரு மங்கை -சார்ங்கம் அம்சம் -வில் பிடித்த இவன் இடம் அபி நிவேசம் இருக்கச் சொல்ல வேண்டுமோ
ஆவியே –குடந்தையே தொழுது -தொடங்கி –
தன குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயன் நினைந்திட்டேனே
ஆறு பிரபந்தங்களிலும் மங்களா சாசனம் –
ஆரா இன்னமுத்தை
குடந்தை -அச்சோ ஒருவர் அழகிய வா

அமுதன் புத்துணர்ச்சி கொடுத்து பெரிய திருமொழி முழுவதும்
திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் அமுதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

ஆண்டாள்
ஆராவமுதனின் சூடிக் களைந்த மாலை -குடந்தை கிடந்த குடமாடி –ஆசைப்பட்டாள் –
கோதாஸ்தவம் -ஆசு கவி -அமுதன் இவளுக்கு -சாரங்க பாணிக்கு துல்ய
கமலை -அமுதனாம் அரங்கனுக்கு மேலை இட்டாள் வாழியே –

பெரியாழ்வார் –பிள்ளைத்தமிழ் -ஆண் குழந்தை -பத்து பருவங்கள் -சப்பாணி -நான்காவது —
ஒன்பதாவது மாதம் உட்கார்ந்து கை கொட்டும்
நான்கு நிலா –
வாசப்படி -படித்தால் மேலே ஏறலாம் -ரேழி -நடை பாதை -கூடம் -சத்சங்கம் -மநம் பக்குவம் -பூஜ -முற்றம்
தூணிலா –முற்றத்து –
வா நிலா அம்புலி வா என்று -நிலா -இங்கு நிலவுகின்ற அம்புலி
நீ நிலா -நீ நின்று சப்பாணி

நம்மாழ்வார் -ஆராவமுதே -அளவு மீறினால் அமுதமும் நஞ்சு இல்லையே இங்கு
கும்பேஸ்வரர் -பின் இருந்து -பின் அழகை பார்க்கவே
ச ஏகதா பவதி -பல வடிவங்கள் -சுற்றி பல ஈஸ்வர கோயில்களில் பருகிக் கொண்டு –
யாருக்கு ஆராவமுதே -சொல்லாமல்
இன்னார் இனையார் இல்லாமல் தனக்கும் கூட -ஆராவமுதன் –
கருடனாக தானே இருந்து -உபய நாச்சியாரும் தானாகவே -ஆதி சேஷனாக இருந்து
உத்சவர் கையில் சார்ங்கம் -மூலவர் திரு நாமம் சாரங்க பாணி
த்யான ஸ்லோகம் -வந்தே சயான போகே சார்ங்க பாணி –
ஆராவமுதன் முன் அழகை பார்க்க எழுந்து இருந்து எட்டிப் பார்த்தான் -திரு மழிசை பிரான் வியாஜ்யமாக –
தானே ஆழ்ந்து ஆழ்வான் திரு நாமம் பெற்றான் -இது இரண்டாவது காரணம்
கீழே நாலாயிரம் அருளியதால் ஆழ்வார் பார்த்தோம்
நெல்லும் கவரி வீசும்படி -உடலும் உருகும் படி
ஏரார் -அழகு குடி கொண்டு கிடந்தாய் –
ஐஸ்வர்யம் கோயிலில் பிரசித்தம் இங்கு சவ்ந்தர்யம் மாதுர்யம் அழகு பிரசித்தம்

வேறே ஒருவர் மூலம் மோக்ஷம் காலனைக் கொண்டு மோதிரம் கொள்ளுவது போல்
பேறு தராமல்
உலகம் -உண்ட -தாயார் உடன்
ராஜ கோபாலனாக வந்து அருள –
சூழ் விசும்பில் -குடந்தை எம் கோவலன் குடி அடியாருக்கே
ஸ்ரீ வித்யா ராஜகோபாலனாக –

திரு மழிசை பிரான் -மூன்றாவது காரணம் -இவரால் –
அமுது செய்த பானகம் விரும்பி அமுது செய்தானே
நடந்த கால்கள் –வாழி -கேசனே –
உத்தான சயனம் -பக்த பராதீனன்
ஆழ்வாரின் வார்த்தையில் ஆழ்ந்து -இது நான்காவது காரணம்
கோ நிலாவ -நந்தன் மகிழ கொட்டாய்

பேயாழ்வார்
சேர்ந்த திருமால் –30-கடல் -குடந்தை -வேங்கடம் -நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு
வாய்ந்த மறை பாடகம் ஆதி சேஷன் திருத்துழாய் –ஒன்பது இடங்கள்
மனசுக்கு வருவது புருஷார்த்தம் -திவ்ய தேசம் -transit places -அங்குத்தை வாசம் சாதனம் இங்குத்தை வாசம் சாதகம்
வாத்சல்யம் காட்டி அருளி –
அத்தி வரதர் உணர்த்தும் தத்வம் -அந்த களேபர -பாசி பிடித்த அனந்த சிராஸ் –
தூய வைகுண்டம் போல் கர்ப்ப க்ருஹம் -வெளி வந்து-உணர்த்தி விட்டு மறைகிறார்

பூதத்தாழ்வார்
எங்கள் திருமால் -செங்கண் -புண்டரீகாக்ஷத்வம் -மைத்தடம் கண்ணினாய் –
இருவருக்கும் பார்த்து கொண்டே இருப்பதால் விளைந்த விகாரம்
நெடு மால் -திரு மார்பா -திருவடி ரேகைகளாலே பரம் பொருள் ஆகிறான் –
இமையோர் தலைமகன் -எங்கள் பெருமான் -அவற்றை விட்டு
பொங்கு அரவணை மேல் குடமூக்கில் கோயிலாகக் கொண்டு –

பாரம்யம் கலியன் -பெருமையை பாடி அருளி
நதார்த்தி சமநம் -அடி பணிந்த அணியார் துயர் ஆர்த்தி போக்கு ஆண்டாள்
தஸ்யா பிதா ஸுசீல்யம் -வடக்கு பிரகாரம் தூணிலா முற்றம் -ஆண்டாள் சந்நிதி
மாதுர்யம் நம்மாழ்வார்
பக்தேஷு விதேயம் -ஆஸ்ரித பரதந்த்ரன்
மஹத் பூதவ் -வாத்சல்யம் -ஸுலப்யம் -accessibility -நாம் பற்றும் படி கோயில் கொண்டு
நீராக கலப்பது ஸுசீல்யம் -பெரியாழ்வார் காட்டி அருளி –
இப்படி பிரதானம் ஏழும்-நதிகள் -சுரங்கள் ஏழு காண்டம் -ஏழு நாட்கள் -ஸப்த பிரகாரம் -ஸப்த கிரி போல்

பெருமை
பக்தர் பிணி தீர்க்கும் கோதை பாட
அருமை எளிமை
ஆராவமுதாய இனிப்பதாய்
அடியார் வசம்
வாத்சல்யம்
திரு உடனே நாம் பற்றும் படி நின்ற வாற்றை இயம்பினாரே -இப்படி ஏழும்

————

எழு ஏழு
கூற்று
இருக்கை
ஏழு கூறுகள் சொற்கள்
அடுக்குகள்
பேர் இன்பத்தால் எழுந்த வார்த்தைகள்
அவன் எழுந்து அருளும் சொல் தேர்
தேர் தட்டில் இருந்து அருளிய சரணாகதி நினைவூட்ட

ஒரே திவ்ய தேசம் பிரபந்தம்
திருமாலையில் வட மதுரை உண்டே
திருப்பள்ளி எழுச்சியில் அயோத்யா உண்டே
கல் தேர் கர்ப்ப க்ரஹம்
மரத்தேர்
சொல் தேர்
ரத பந்தன கவி
ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் மங்களா சாசனம்
வேதம் -ஏழு சந்தஸ்ஸூக்கள்
காயத்ரி ஜகதி சக்கரம்
உஷ்ணு
அனுஷ்ட்ப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் தட்டு

சம்சார துக்கம் போக்கவே
ஆறு அங்கம் கூற அவதரித்தவர் அன்றோ -ஆராவமுதன் இடம் சரணாகதிக்கு நம்மாழ்வார் போல் இவரும்

18 குணங்களை காட்டி சரண்

1- ப்ரம்மா ஸ்ருஷ்ட்டி
2-விரோதி நிரஸனம்
3-ஆஸ்ரித ரக்ஷணம் -மூவடி —அளந்தனை
4-ஆபத் சகத்வம் -நால் திசை –மடுவில் தீர்த்தனை
5-ஸர்வ பல பிரதத்வம்
6-தேவர்களாலும் அறிய முடியாத பெருமை
7-சர்வ ரக்ஷகத்வம்
8-சர்வ போக்யத்வம் -ஆறு சுவை
9-ஆயுதங்கள் தரித்து
10-சர்வ பல பிரதத்வம்
11-புருஷகாரம்
12-ஆராதனைக்கு எளியவன்
13-சரீர சரீரீ பாவம் –
14-பிரதிபந்தகம் போக்கி
15-சாஸ்திரம் ஒன்றாலே அறிந்து கொள்ளும் படி உள்ளவன்
16-ஸ்ரீ யபதித்தவம்
17-சர்வ அந்தர்யாமி
17 மேன்மைகள்
18-ஸுலப்யம் -செல்வம் மல்கு திருக்குடந்தை ஆராவமுதன்
வரும் இடர் அகல சரணாகதி
நம்மாழ்வார் போல்

——————

திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் இயற்றிய திருவெழுகூற்றிருக்கை

ஒருகுணக் கடலே! இருவினை இருள்தனை
நிலந்தரம் செய்யும் ஒருபேர் ஒளியே!
அடைந்திடும் அடியவர்க்கு ஒருதனிப் புகலே!
உடையவர் தந்தம் ஈரடி மலரே!
மூவெழுத்து உணர்ந்தோர் முடியினில் அணியே!
இருநிலந் தனிலே ஒன்றாம் திங்கள்,
ஒன்றிய விண்மீன் தன்னில் தோன்றும்
இருப்பிறப் பினரே! மூவாத் தொண்டரே!
நானிலத் தாரியர் முக்கோல் பகவர்
நன்மொழி யின்படி இருவராய் வந்தே
ஓர்மலை தன்னில் ஒருதனித் தோட்டம்
இருவராய் அமைத்த குரவரே! முக்குணம்
கடந்த அந்நான்மறை வேதியன் அஞ்சல்
அளிக்கவே, நால்திசை தொழுந்திரு மலையினில்
மேவி, முக்காலும் அண்ணல் ஈரடி
ஒன்றிலே, ஒன்றிய மனத்துடன் மலர்த்தொடை
சூட்டி, இருமுப் பொழுதும் கடமையில்
ஊன்றிய சீர் ஆண் பிள்ளையே! நான்மறை
வேதியன் ஐநிலை அறுகுணன், ஐந்தாம்
மறையும் நாலா யிரமும், புகழும்
முப்பதப் பொருள்தன், இருகண் நோக்கின்
ஓரிலக்காகி, அவன்தனக்கு ஓருயர்
மாமனும் ஆகி, ஈரிதழ்க் கோவையால்
தனியனும் பெற்ற தனிப்பெரும் சீலரே!
மூவகை வாக்கியம் ஒருங்கவிட்டு அருளி,
நான்மறை மயர்வினை முழுவதும் நீக்கி,
ஐவகை அர்த்தமும் ஆறொடு பேறும்,
ஏழுலகினுக்கும் தெளிவாய் உரைத்தே,
அறுமதச் செடிதனை அடியுடன் அறுத்தே,
ஐந்து சடங்கொடு நானிலத் தார்க்கெலாம்,
மூன்று இரகசியப் பொருளையும் காட்டி,
நாரணன் ஈரடி சேர்த்திடும் ஆரியர்,
தாள்களில் ஒன்றிய உளந்தன்னாலே,
மதுர கவிகளின் தாசனென்று ஒருபேர்
பெற்ற செல்வரே! ஒன்றாய் இரண்டாய்
மூன்றாய் நான்காய் ஐந்து பூதமாய்,
ஆறாய் ஆகியும் ஆக்கியும் ஆளும்
ஏழு மலையின் நாயகன் முகத்தில்
தழும்பினை ஆற்றிய பத்தியின் ஆறே!
ஐம்புலன் கிரிசை யாவையும், நால்தோள்
நாதனின் தாளிணை சேர்த்த செம்மலே!
முத்தமிழ் இருநூல் ஒருத்தியின் தாளைப்
போற்றிடும் திருமலை அனந்தாழ் வானே!
வித்தகர் உம்மடி எந்தம்
சித்தம் திகழ்ந்திட நித்தம் நலமே!

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -20–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 23, 2021

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

பதவுரை

வானவர் தங்கள் கோனும்–தேவேந்திரனும்
மலர்மிசை அயனும்–பூவிற் பிறந்த பிரமனும்
நாளும்–நாள் தோறும்
தே மலர் தூவி–தேன்மிக்க புஷ்பங்களைப் பணிமாறி
ஏத்தும்–துதிக்கும் படியாக வுள்ள
சே அடி–செவ்விய திருவடிகளை யுடையனாய்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனான
மாலை–ஸர்வேச்வரனைக் குறித்து,
மானம் வேல்–பெருமை தங்கிய வேற் படையை யுடையரான
கலியன்–திருமங்கையாழ்வார்
சொன்ன–அருளிச்செய்த
வண் தமிழ் – செந்தமிழினாலாகிய
மாலை நாலைந்தும்–இப்பாசுரமிருபதையும்
ஊனம் அது இன்றி–குறையொன்று மில்லாமல்
வல்லார் தாம்–கற்று வல்லவர்கள்
ஒளி விசும்பு–பரமபதத்தை
ஆள்வர்–ஆளப்பெறுவர்

தேவர்கட்கு இறைவனான இந்திரனும் திருநாபிக் கமலத்தில் தோன்றிய நான் முகக் கடவுளும்
இடைவிடாது நன் மலர்களைப் பணிமாறி ஸ்துதிக்கப் பெற்றிருக்கின்ற
செங்கண்மால் விஷயமாகக் கொற்ற வேற் பரகாலன் கலியன் சொன்ன இவ்விருபது பாசுரங்களையும்
ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்யப்ரயோஜநராய்க்
கற்று வல்லவர்கள் தெளிவிசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று
பயனுரைத்துத் தலைக் கட்டினாராயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -19–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-

பதவுரை

பிண்டி ஆர் மண்டை ஏந்தி–உளுத்த பொடிகள் உதிருகிற தலை யோட்டைக் கையிலேந்திக் கொண்டு
பிறர் மனை–அயலாருடைய வீடுகளிலே
திரி தந்து–திரிந்து (பிச்சை யெடுத்து)
உண்ணும்–ஜீவித்த
முண்டியான்–மொட்டையாண்டியான ருத்ரனுடைய
சாபம்–ப்ரஹ்ம ஹத்தி சாபத்தை
தீர்த்த–போக்கின
ஒருவன்–அத்விதீயனான் எம்பெருமானுடைய
ஊர்–திருப்பதிகளாய்
உலகம் ஏந்தும்–உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டன வாயு முள்ள
கண்டியூர்–திருக்கண்டியூரென்ன
அரங்கம்–திருவரங்கமென்ன
மெய்யம்–திருமெய்யமென்ன
கச்சி–திருக்கச்சியென்ன
பேர்–திருப்பேர்நகரென்ன
மல்லை–திருக் கடன்மல்லை யென்ன
என்று–ஆகிய இத் திருப்பதிகளைப் பேசிக் கொண்டு
மண்டினார்–அவகாஹிக்குமவர்கள்
உய்யல் அல்லால்–உஜ்ஜீவிக்கலாமத்தனை யொழிய
மற்றையார்க்கு–அல்லாதவர்களுக்கு
உய்யல் ஆமே–உஜ்ஜீவிக்க வழியுண்டோ? (இல்லை)

எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும்
“பதியே பரவித் தொழுந்தொண்டர்“ என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள்
உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார்.
வேதமானது எம்பெருமானை உள்ளபடி யறிந்தார்க்கல்லது உய்ய விரகில்லை யென்றது.
அதனை மறுத்து, திவ்ய தேசங்களிலீடுபடுவார்க்கன்றி மற்றையோர்க்கு உய்ய வழி யில்லை யென்கிறாரிவ்வாழ்வார்.

“உண்ணும் முண்டியான்“ ‘உண்ணும் உண்டியான்“ என்பன பாட பேதங்கள்
உண்டி-உணவு; பிச்சை யெடுத்து உண்ணப் பட்ட உணவை யுடையவன் என்றபடி.

“இளைப்பினையியக்கம் நீக்கி“ என்ற கீழ்ப்பாட்டிற்படியே
வீணாக க்லேசப்படாதே
“காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை யிலிருந்து வாழுஞ் சோம்பரை யுகத்திபோலுஞ் சூழ் புனலரங்கத்தானே!“
என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போது போக்காக இருப்பவர்கட்கே
எம்பெருமானுடைய அநுக்ரஹம் அளவற்றிருக்கு மென்றதாயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -18–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானை ஸ்வ ப்ரயுத்நத்தால் காண விரும்பும் அவர்களின் விருப்பம்
ஒரு நாளும் கை கூடா தென்கிறார்.

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-

பதவுரை

இளைப்பினை இயக்கம் நீக்கி–க்லேசங்களினுடைய ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (ஓர் ஆஸனத்தில்)
இருந்து–அசைவின்றி யிருந்து
முன் இமையை கூட்டி–மேல் இமையைக் (கீழிமையோடே) சேர்த்து
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி–அளவிறந்த பஞ்சேந்திரியங்களைப் பட்டி மேய வொட்டாதபடி தடை செய்து
அவர் கண்–எம்பெருமான் விஷயத்திலே
துளக்கம் இல் சிந்தை நெய்து அன்பு வைத்து–இடை வீடில்லாத ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான பக்தியைப் பண்ணி
ஆங்கு–அந்த நிலைமையிலே
சுடர் விட்டு தோன்றலும்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுமளவிலே
விளக்கினை–விளக்காகிய எம்பெருமானை
விதியில்–சாஸ்திர விதிப்படியே
காண்பார்–காண வேணுமென்றிருக்கிற உபாஸகர்கள்
மெய்ம்மையே–உள்ளபடியே
காண்கிற் பாரே–காண வல்லவராவரோ? (காணகி்ல்லார் என்றபடி)

இளைப்பினை இயக்கம் நீக்கி =
இளைப்பாவது க்லேசம்; க்லேசமாவது ஐவகைப்படும்.-
க்லேசமிதா ராகத்வேஷாபிநிவேசா‘ க்லேசா“ என்று பாதஞ்சல தர்சனத்தில் சொல்லப்பட்டது;
அவித்யை யாவது அஜ்ஞாநம்.
அஸ்மிதையாவது அஹங்காரம்.
ராகமாவது இச்சா விசேஷம்;
த்வேஷமாவது பகை;
அபிநிவேசமாவது மரண பயம். (என்று குஸுமாஞ்சலியில் விவரணம் செய்யப்பட்டுள்ளது.)

ஆக இப்படிப்பட்ட க்லேசங்களின் ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (இருந்து) காற்றாடி போலே
எப்போதும் பறந்து கொண்டே யிருக்குமியல்வினர்க்கு ஓரிடத்தே யிருப்பது அருமை யாகும்;
அப்படிப்பட்ட அருந்தொழிலாகிய இருப்பைச் செய்து

(முன்னிமையைக்கூட்டி)
ஒரு திக்கையும் நோக்காமல் தன் மூக்கின் நுனியையே நோக்கிக் கொண்டிருக்க வேணுமென்று
சொல்லி யிருக்கிறபடி செய்து என்றவாறு. மேலிமையைக் கீழிமையோடு சேர்த்தலே இந்த நிலைமையாகும்.

(அளப்பில் ஐம்புலனடக்கி)
அளவில்லாத விஷயாந்தரங்களிலே பட்டி மேயக் கூடிய பஞ்சேந்திரியங்களை உள் விஷயத்தோடே நிற்கும் படிசெய்து.

(அன்பு அவர் கண்ணே வைத்துத் துளக்கமில் சிந்தை செய்து)
தைல தாரை போலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தான ரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி என்றவாறு.

(ஆங்கே சுடர் விட்டுத் தோன்றலும் இத்யாதி)
ஆக விப்படிப் பட்ட முறையிலே ஜாஜ்வல்ய மாநமாய்க் கொண்டு தோன்றுகிற ஞானத்தாலே
வேத விளக்காகிய எம்பெருமானை சாஸ்திரங்களில் விதித்தபடியே உபாஸனை பண்ணி
ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்று பெரு முயற்சி செய்பவர்கள் அவனை மெய்யாகக் காண முடியுமோ?

அப்பெருமான் தானே தனது நிர்ஹேதுக க்ருபையினால் தன்னைக் காட்டிக் கொடுத்தருளினால் காணலாமத்தனை யொழிய
ஊன் வாட வுண்ணாதுயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து தாம் வாட வாடத்
தவஞ் செய்கையாகிற ஸ்வ ப்ரயத்நங்களாலே அவனை ஸாக்ஷத்கரிக்கை எளிதோ? என்றாராயிற்று.

“பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலா வூழியூழி தவஞ் செய்தார் வெள்கிநிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன்றருளை யீந்த“ என்கிறபடியே
பல்லூழி யூழிகாலமாகத் தவம் புரிந்து வருந்தி நின்றவர்களெல்லாம் வெட்கப்பட்டு நிற்கும்படியாக
ஸ்ரீ கஜேந்திராழ்வான் போல்வார் திறத்திலே பரம க்ருமை செய்தருள்பவனான எம்பெருமானுடைய
ஸ்வபாவத்திற்கு இணங்க இப் பாட்டுக்கு இங்ஙனே உரையிடுதல் மிகப் பொருந்தும்.

பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் இங்ஙனே விரிவாக உரையிட்டருளின பின்,
“அதவா,
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாஸித்துக் காண்பார்க்குக் காணலாமென்றுமாம்“ என்கிற
மற்றொரு நிர்வாஹமும் அருளிச் செய்யப்பட்டுள்ள காண்க.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -17–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்களும் நல் வீடு பெறுகிறார்கள்;
அப்பெருமானை ஏசுகின்ற சிசுபாலாதிகளும் நல் வீடு பெறுகிறார்களென்று சாஸ்திரங்களினால் தெரிகின்றது;
இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை;
எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப் போகிறேன்; என்னால் பேச முடியுமோ?
முடியாததால் * பேருளான் பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான்.

இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில்,
ஏசிப் பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன்,
எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்;
சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா;

ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தியில்லை யாயிற்று;
ஆயினும், மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது;
அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வே னென்கிறார்.

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே–17-

பதவுரை

பேர் உளான்–திருப்பேர் நகரில் எழுந்தருளி
பெருமை–பெருமையை
பேசினார்–பேசினவர்கள்
உய்ந்து போனார்–உஜ்ஜீவித்தார்கள்.
என்பது–என்று சொல்வது
இ உலகின் வண்ணம்–சாஸ்த்ர மர்யாதையாகும்;
பேதையேன்–அறிவு கேடனான நானோவென்
பேசியேன்–(அவன் பெருமையைப் பேச வல்லவனொ!)
ஏச மாட்டேன்–(சிசுபாலாதிகளைப் போலே) ஏசவும் மாட்டேன்;
பிறவி நீத்தார்–ஸம்ஸாரத்தைக் கடந்து முக்தரானார்கள்;
பேசி ஏசினார்–அப் பெருமையைப் பேசிப் பரிஹஸித்த சிசுபாலாதிகளும்
பிறவி நீத்தற்கு–இந்த ஸம்ஸாரத்தை விட்டு நீங்குதற்கு
அலை கடல் வண்ணர் பால்–அலை யெறிகின்ற கடல் போன்ற நிறத்தனான எம்பெருமான் விஷயத்திலே
ஆசையோ பெரிது–ஆதரமோ அதிகமாயிருக்கின்றது;
கொள்க–இதனை உணர்க.

(பேருளான் பெருமை பேசினார் பிறவி நீத்தார்)
‘அப்பக்குடத்தான் ஸந்நிதி என்று ப்ரஸித்த பெற்ற திருப்புர் நகர் ஒன்றைச் சொன்னது
மற்றெல்லாத் திருப்பதிகட்கும் உப லக்ஷணம்.
திருப்பேர் முதலான திவ்ய தேசங்களில் நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்குமவனான எம்பெருமானுடைய
பெருமையைப் பேசுமவர்கள் உஜ்ஜீவித்தமைக்கு உதாரணம் காட்ட வேணுமோ?

(ஏசினார் உய்ந்து போனார்)
‘ஏசினாரும்‘ என்று உம்மை தொக்கிற்றாகக் கொள்க.
“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்,
பற்றி யுரலிடை யாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக் கொலோ“ என்று ஆண்டாள் வயிறெரிந்து
பேசும்படியாக தூஷித்தவர்களில் தலைவனான சிசுபாலன் முதலானவர்கள் ‘ஏசினார்‘ என்பதாற் கொள்ளப்படுவர்;

வைகிறவனுக்கும் பேர் சொல்லி வைய வேண்டி யிருப்பதால் ஏதேனுமொரு படியாலே
நம்முடைய திரு நாமத்தைச் சொன்னானென்று கொண்டு எம்பெருமான் ஏசுகிறவர்களுக்கும் நற் கதி நல்குவதுண்டு.
சிசுபாலனுக்கு மோக்ஷங்கிடைத்தென்பதைப் பராசர மஹர்ஷி பகர்ந்து வைத்தார், என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
‘கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன்,
திருவடி தாட்பாலடைந்த“ என்றார் நம்மாழ்வாரும்.

என்பது இவ்வுலகின் வண்ணம் =
லோகமென்கிற சொல்லால் சாஸ்த்ரத்தைவ் சொல்லுகிற வழக்கமுண்டு.
“எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை யென்றே“ என்ற திருவாய்மொழி வியாக்கியானங்களிலும்,
ஆளவந்தார், ஸ்தோத்ர வியாக்யானங்களிலுங் காணலாம்.
ஆகவே இங்கு உலகின் வண்ண மென்று சாஸ்த்ர மர்யாதையைச் சொன்னபடி.
(சாஸ்த்ரமறிந்த) உலகத்தவர்கள் சொல்லுவார்கள் என்று பொருள் கொண்டாலுங் கொள்ளலாம்.

பேசினேன் –
எம்பெருமானுடைய பெருமையை நான் பேசினேனென்பதாகப் பொருள்படுவதன்று;
‘ஆ! நாம் வெகு நன்றாகப் படித்து விட்டோம் என்றால், படிக்கவில்லை யென்று பொருளாவது போல
இங்கும் எதிர் மறையாகக் கொள்ளத்தக்கது.
எம்பெருமான் பெருமையைப் பேச வல்ல அதிகாரி நானோ என்று இழித்துச் சொல்லுகையில் திருவுள்ளம்.

இங்கே வியாக்யான ஸ்ரீஸூக்தி காண்மின்;-
‘உண்ணப் புக்கு மயிர்ப் பட்டு அழகிதாக உண்டெனென்னுமா போலே“ என்பதாம்.
ஏச மாட்டேன் – ஏசி்ப் பெறக்கூடிய மோக்ஷம் வேண்டா என்றபடி.

மோக்ஷம் பெறுவதற்கு இரண்டு வழிகளே சாஸ்த்ரங்களிற் காண்கின்றன;
எம்பெருமானது பெருமைகளைப் பேசியாவது மோக்ஷம் பெற வேணும்,
சிசுபாலதிகளைப் போலே ஏசியாவது மோக்ஷம் பெற வேணும்;
எனக்கோ பேசத் தெரியாது; ஏசவோ இஷ்டமில்லை; அந்தோ! இழந்தேபோமித்தனையோ.
மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அளவு கடந்திருக்கின்றது! நான் செய்வதேன்? என்றதாயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -16–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப்பாட்டிலே திருமஞ்சனம் பண்ணினார்;
இப்பாட்டிலே திருமாலை சூட்டுகிறார்.
முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்;
“மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்;
“மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.
“வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம்.
“அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம்.

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-

பதவுரை

மாயம்–மாயச் செய்கையை யுடைய
மான்–மாரீசனாகிற மான்
மாய–முடியும்படி
செற்று–கொன்றவனாயும்
மருது–(இரட்டை) மருத மரங்கள்
இற–முறிந்து விழும்படி
நடந்து–நடை கற்றவனாயும்
வையம் தாய்–(த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யளந்து கொண்டவனாயும்
அப்படி–அப்படிப்பட்ட
மா–பெரிதான
பரவை–கடலானது
பொங்க–பொங்கும் படியாக
தட வரை–பெரிதான மந்தர பர்வதத்தை
திரித்து–சுழலச் செய்து
(அமுதமெடுத்து)
வானோர்க்கு–தேவர்களுக்கு
ஈயும்–கொடுத்தவனாயுமுள்ள
மால்–ஆச்ரித வ்யாமோஹ சாலியான
எம் பிரானாருக்கு–எம்பெருமானுக்கு
சொற்கள் என்னும்–வாய்மொழிகளாகிற
தூய–பரிசுத்தமான
மா மாலை கொண்டு–சிறந்த மாலையைக் கொண்டு
தொண்டனேன்–அடியேன்
சூட்டுவேன்–சூட்டுவேன்

முன்பே விச்வாமித்ரருடைய யாகத்தில் மாரீசனை உயிர் மாய்த்திருக்க வேணும்;
அப்போது விட்டிட்டதனாலன்றோ இப்போது இவ்வநர்த்தம் விளைக்க வந்தானென்று
உயிர் மாயத் தொலைத்தானாயிற்று.

பொய்ம் மாய மருதான அசுரரை -பெரியாழ்வார்

வையம் தாய் = ‘தாய்‘ என்றது தாவி யென்றபடி.
“பாயோரடி வைத்ததன் கீழ்ப் பரவை நிலமெல்லாந் தாய்“ என்ற திருவாய்மொழியுங் காண்க.

“அம்மா“ என்பது அமா எனத் தொகுத்தலாயிற்று.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எனது தமிழ்ப் பாசுரங்களாகிய தூய மா மாலையைக் கொண்டு
சூட்டுவேனென்றாயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -15–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக
உகப்பித்து உய்ந்தாள் யசோதைப் பிராட்டி;
அவள் செய்த படிகளை அநுகரித்துப் பேசி உய்ந்தார் பெரியாழ்வார்;
இவ் வாழ்வார் தாமும் அங்ஙனே சில வழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து
மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும்.

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –15-

பதவுரை

முன்-முன் பொருகால்
பொலா–பொல்லாதவனான
இராவணன் தன்–இராவணனுடைய
முது மதிள் இலங்கை–வலிய மதிள்களை யுடைத்தான இலங்கா புரியை
வேவித்து–சுடுவித்து
அனுமன்–சிறிய திருவடி
அன்பினால் வந்து–மகிழ்ச்சியுடனே வந்து
ஆங்கு–கிஷ்கிந்தையாலே
அடி இணை பணிய–உபய பாதங்களையும் தொழும்படியாக
நின்றாற்கு–நின்ற பெருமானுக்கு
அடியனேன்–அடியேன்
என்பு எலாம்–எலும்பெல்லாம்
உருகி–உருகி
உக்கிட்டு–இற்றுப் போய்
என்னுடை–என்னுடைய
நெஞ்சம் என்னும்–நெஞ்சென்று சொல்லப் படுகிற
அன்பினால்–ஆர்வத்தினால்
ஞானம் நீர் கொண்டு ஆட்டுவன்–ஞானமாகிற தீர்த்தத்தைக் கொண்டு திருமஞ்சனம் செய்வேன்.

எம்பெருமான் பரம ஸந்தோஷமாக எழுந்தருளியிருந்த ஒரு ஸமய விசேஷத்தை யெடுத்துரைத்து
அந்த நிலைமையிலேயே நீராட்டங் கொண்டருளச் செய்கிற னென்கிறார்.
பிராட்டியிருக்கும் இடத்தைத் தேடித் தெரிந்து வருமாறு ஸ்ரீராமபிரானால் நியமித்து விடுக்கப்பட்ட
வாநர முதலிகளிலே தலைவரான சிறிய திருவடி இலங்கையிலே வந்து கண்டு

அப்பிராட்டி கையிலே “இத்தகையாலடையாளமீதவன் கை மோதிரமே“ என்று
ஸ்ரீராம நாமாங்கிதமான மோதிரத்தைக் கொடுத்து, சூடாமணியையும் பெற்று,

‘எதிரிகளி்ன் வலிமை எப்படிப்பட்டது? என்று பெருமாள் கேட்டால் அது தெரியாதென்று சொல்ல
வொண்ணாதாகையால் அதையும் தெரிந்து கொண்டு செல்வோமென்று கருதி அதற்காகச்
சில சேஷ்டிதங்களைச் செய்து தன் வாலில் நெருப்பாலே இலங்கையைச் சுடுவித்து

“கண்டேன் சீதையை“ என்று மீண்டு வந்து விண்ணப்பஞ்செய்த ஸமயத்திலே
ஆனந்தக் கடலிலே ஆழ்ந்துகிடந்த பெருமாளுக்கு, அந்நிலையை நினைத்து ஈடுபட்டவனாகி,
அப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமான ப்ரேமமே எனது நெஞ்சாக வடிவெடுத்திருப்பதனால்
என்னுடைய நெஞ்ச மென்னு மன்பினால் ஞானமாகிற திருமஞ்சனத்தால் நீராட்டுவேன் என்கிறார்.

தீர்த்தத்திற்குப் பரிமள த்ரவ்யம் ஸம்ஸ்காரமாவது போல் இங்கு ஞான நீருக்கு அன்பு ஸம்ஸ்காரமாகக் கொள்ளப்பட்டது.
இதனால் மாநஸிகமான திருமஞ்சனத்தைனச் சொன்னவாறு.

“முன் = அதுவுமொரு காலமே! என்று வயிறு பிடிக்கிறார்“
என்ற வியாக்யமான ஸ்ரீஸூக்தி உணரத்தக்கது.

பொலா – பொல்லா என்றபடி தொகுத்தல்
* சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யாக்கனாகையாலே பொல்லாதவன்
என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே
சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -14–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று
ஆனந்த பரவசராய்ப் பேசினவர்,
ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு,
கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார்.

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –

பதவுரை

காவியை–கரு நெய்தல் மலரை
வென்ற–தோற்பித்த
கண்ணார்–கண்களை யுடையரான மாதர்களினது
கலவியே–கலவியையே
கருதி–நினைத்துக் கொண்டு
நாளும்–அநாதி காலமாக
பாவியேன் ஆக எண்ணி–மஹா பாபியாகும்படி மநோ ரதித்து
அதனுள்ளே–அந்தப் பாவப் படு குழியிலேயே
பழுத்தொழிந்தேன்–பரி பக்குவனாய் விட்டேன;
தூவி சேர்–(அழகிய) சிறகையுடைய
அன்னம் மன்னும்–அன்னப் பறவைகள் பொருந்தி வாழ்கிற
சூழ் புனல்–சுற்றிலும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
குடந்தை யானை–திருக்குடந்தைக்குத் தலைவனான எம்பெருமானை
பாவியேன்–பாவியான நான்
பாவியாது–சிந்தியாமல்
பாவியேன் ஆயினேன்–(மேலும்) மஹா பாபியானேன்.

“கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி, நீண்ட வப்பெரியவாய கண்கள்
என்னைப் பேதைமை செய்தனவே!“ என்று ஈடுபட வேண்டிய திருக் கண்களை விட்டொழிந்து,
பிளிச்சைக் கண்ணிகளையெல்லாம் காவியை வென்ற கண்ணாராக ப்ரமித்து
அவர்களோடு கூடி வாழ்வதே பரம புருஷார்த்தமென்று கருதி, ஸுக்ருத லேசமும் பண்ணாத
மஹா பாபி யாவதற்கே வழி தேடி,

(தசரத சக்ரவர்த்தி வெண் கொற்றக் குடை நிழலிலே பழுத்தாற் போலவும்,
நம்மாழ்வார் “உனது பாலேபோற் சீரில் பழுத்தொழி்ந்தேன்“ என்று பகவத் குணங்களிலேயே பழுத்தாற் போலவும்)
அந்தப் பாவங்களிலேயே பழுத்தொழிந்தேன்

நான் பரம போக்யமான திருக் குடந்தைமா நகரிலே திருக் கண் வளர்ந்தருள்கின்ற ஆராவமுதாழ்வாரைச்
சிறிதாகிலும் நெஞ்சில் நினைத்திருந்தேனாகில் பாவங்கள் தொலையப் பெற்றிருப்பேன்.
அது செய்யாமை யன்றோ படுபாவியானேனென்றாராயிற்று.

தூவிசேரன்ன மன்னுங் குடந்தை =
ஞானம் அனுட்டானம் ஆகிய இரண்டு சிறகுகளமைந்த ‘ஹம்ஸர்‘ என்னும்படியான
மஹான்கள் வாழுமிடமென்று ஸ்வாதேசார்த்தங் கூறுவர்.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -13–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

‘இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

பதவுரை

இரும்பு

இரும்பானது
அனன்று

பழுக்கக் காய்ச்சப் பெற்று
உண்ட

உட் கொண்ட
நீரும்

ஜலமும்
போதரும்

வெளியிலே வந்து விடும்;
கொள்க

(இதை) உறுதியாக நினையுங்கோள்;
என் தன்

என்னுடையவையாய்
அரு

போக்கமுடியாதவையாய்
பிணி பாவம் எல்லாம்

நோய்களுக்கு அடியான பாவங்களெல்லாம்
என்னை விட்டு அகன்றன

என்னை விட்டு நீங்கிப் போயின
கரும்பு அமர்

வண்டுகள் பொருந்திய
சோலை சூழ்ந்த

சோலைகளாலே சூழப்பட்ட
மா அரங்கம்

மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
கோயில் கொண்ட

இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிற
கரும்பினை

பரம போக்யனான எம்பெருமானை
என் கண் இணை

எனது இரண்டு கண்களும்
கண்டு கொண்டு

பார்த்த வண்ணமாய்
களிக்கும் ஆறு ஏ

மகிழ்ச்சி யடையும் விதம் என்னே! (என்று வியக்கிறார்)

தம்மை விட்டு ஒருகாலும் பிரிக்கக்கூடாமலிருந்த அரும்பிணி பாவமெல்லாம் அகன்று போன ஆச்சரியத்தினால்

இரும்பனன்றுண்ட நீரும் போதரும் என்கிறார்.

இரும்பானது பழுக்கக் காயந்து நீரைக்குடித்தால் குடித்த நீரடங்கலும் இரும்பிலே சுவறிப் போமத்தனை யொழிய

அந்த இரும்பில் நின்றும் வெளிப்படுத்தியெடுக்க முடியாதென்பது லோகாது பவஸித்தமே யாகிலும்,

அந்த நீரும் அந்த இரும்பில் நின்று வெளிப்பட்டுவிடுமென்று நிச்சயிக்கலாம்;

ஏனென்றால்,

அனன்ற இரும்பு போன்ற என்னிடத்திலே தனித்துப் பிரித்துக் களைந்தொழிக்க வொண்ணாதபடி மங்கிக் கிடந்த

அரும்பிணி பாவங்கள் வெளிப்பட்டனவன்றோ; ஆதலால் இதுபோல் அதுவும் நேரலாம் என்கிறாராயிற்று.

அரும்பிணி பாவமெல்லாம் அகலவே, திருவரங்கம் பெரிய கோயிலிலே நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்கின்ற

பரம போக்யனான பெருமானைக் கண்ணாரக் கண்டு களிக்கப் பெற்றே னென்கிறார் பின்னடிகளில்.

தகாத விஷயங்களைக் கண்டு களித்த என் கண்கள் இன்று ஸ்வரூபாநுரூபமான விஷயத்தைக் கண்டு களிக்கப் பெற்றமை என்ன பாக்கியம்! என்று அதிசயப்படுகிறார்.

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –