ஸ்ரீ.வில்லிபாரதம் – நான்காம் பாகம் -44. பதினாறாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட
பூதனைதன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல் வண்ணா!
மாதவ, யாதவ, வாசவ, கேசவ, மாயா, ஆயா, மதுசூதா!
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன், அடியேனே!-

மாதுலன் ஆகிஉம் – மாமனாக இருந்தும், ஏதிலன் ஆகிய –
பகைவனான,வஞ்சன் – வஞ்சனையையுடையவனாகிய, கஞ்சன் – கம்சன், வர
விட்ட – செல்லும்படி ஏவியனுப்பிய, பூதனை தன்  -பூதனை யென்பவளது,
உயிர் – பிராணன், முலை பொழி பாலொடு – அவள்முலையினின்று பெருகிய
பாலுடனே, போதர – (உடம்பைவிட்டு) நீங்கும்படி, உண்ட – முலையுண்ட, புயல்
வண்ணா – மேகம்போலுங் கரிய திருநிறமுடையவனே!  மா தவ – இலக்குமி
கணவனே! யாதவ -யதுகுலத்தில்திருவவதரித்தவனே! வாசவ –
உபேந்திரனானவனே! கேசவ – பிரமனையும்உருத்திரனையும்
அங்கத்திற்கொண்டவனே! மாயா – மாயையையுடையவனே!
ஆயா – இடையர்குலத்தில் வளர்ந்தவனே! மது சூதா – மதுவென்னும் அசுரனை
அழித்தவனே! ஆதிஉம் அந்தம்உம் ஆகிய – (எல்லாப் பொருள்கட்கும்) முதலும்
ஈறுமான, நின் – உனது, புகழ் அல்லாது – கீர்த்தியையே (எப்பொழுதுஞ்
சொல்லுவேனே) யல்லாமல், (வேறொன்றையும்), அடியேன் – (உனது)
அடியவனாகிய யான், உரையேன் – (ஒருபொழுதுஞ்) சொல்லேன்; (எ – று.)

     இந்திரனைக்காத்தற்பொருட்டு அவன் வேண்டுகோளினால் அவனுக்குத்
தம்பியாகத் திருவவதரித்து விரோதிநிரஸநஞ் செய்து அவனருகில்
எழுந்தருளியிருக்கின்ற உபேந்திரமூர்த்தியை ‘வாசவ’ என இந்திரன்பெயராற்
கூறினர்;இனி, வாசவ – இந்திரஸ்வரூபியானவனே என்றேனும், எல்லா ஐசுவரியமும்
உடையவனே என்றேனும் பொருள் கூறலாம். க்ஷத்திரியஜாதியிலே சிறந்த
சந்திரவமிசத்திற் பேர்பெற்ற யதுகுலத்திற் பிறந்திருந்தும் இடையர் சாதியிற்சேர்ந்து
வளர்ந்து கன்று மேய்த்து ஒருத்தி கட்டவும் ஒருத்தி குட்டவுந் தன்னைக்
காட்டிக்கொடுத்த சௌலப்பியகுணத்தின் மிகுதி விளங்க, ‘ஆயா’ என்றார். ‘யாதவ,
ஆயா’ என்னுஞ் சொற்களினால் வசுதேவகுமாரனாய்த் தேவகி திருவயிற்றிலுதித்து
நந்தகோபர்மனையில் யசோதையின்மகனாய் வளர்ந்தருளிய கண்ணனது தன்மை
கூறப்பட்டதனால், சூரியபுத்திரனாய்க் குந்திவயிற்றிலுதித்துத் தேர்ப்பாகன்மனையில்
ராதைமகனாய்க் வளர்ந்த கன்னனது போரைக் கூறுகின்ற இப்பருவத்துக்கு
இக்காப்புச்செய்யுள் மிகப்பொருந்துமாறு உய்த்துணர்க. பி – ம்: ஏதிலனாகியும்

     இதுமுதற் பதினொருகவிகள் – பெரும்பாலும் முதல்நான்குசீர் விளச்சீர்களும்,
ஐந்துஆறாஞ் சீர்கள் மாச்சீர்களும், ஈற்றுச் சீரொன்று மாங்காய்ச்சீருமாகிய
கழிநெடிலடிநான்கு கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.

கங்கை மகன், சிலையின் குரு என்பவர், காதி மலைந்தே கையற்றார்;
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது, வெல்ல வல்லோர்
இலர்’ என்றே,
‘அங்கர் பிரானை வரூதினியின் பதி ஆக!’ என்று அருள்செய்து,
அவனோடும்
வெங் களம் உற்றனன்-நஞ்சு உமிழும் கொடி வேக நாகவிறலோனே!2.- துரியோதனன் கர்ணனைச் சேனாபதியாக்கிப் போர்க்களஞ் சேர்தல்.

நஞ்சு உமிழும் – விஷத்தைக் கக்குகின்ற, வேகம் – சில
மிகுதியுள்ள,நாகம் – சர்ப்பத்தின் வடிவத்தை யெழுதிய, கொடி – துவசத்தையுடைய,
விறலோன்- வலிமையையுடையவனான துரியோதனன்,- ‘கங்கை மகன் –
கங்கையின்புத்திரனாகிய பீஷ்மனும், சிலையின் குரு – வில்லாசிரியனாகிய
துரோணனும்,என்பவர் – என்று சிறப்பித்துச்சொல்லப்படுகின்ற வீரர்கள், காதி
மலைந்துஏ -(தம்மால் ஆனமட்டும் பகைவரைக்) கொன்று போர்செய்தே,
கையற்றார் -செயலொழிந்து அழிந்தனர்; இனி – இனிமேல், இங்கு -இப்போரில்,
வெல்லவல்லோர் – (பகைவரைச்) சயிக்க வல்லவர், என் உயிர் நண்பனை
அல்லது -எனது உயிரோடொத்த சிநேகிதனாகிய கர்ணனையேயல்லாமல், இலர் –
(வேறுஎவரும்) இல்லை,’ என்றுஏ – என்று துணிந்தே,- அங்கர் பிரானை –
அங்கதேசத்தார்க்கு அரசனாகிய கர்ணனை, வரூதினியின் பதி ஆக என்று –
‘சேனைக்குத் தலைவனாகுக” என்று, அருள் செய்து – அருளோடு சொல்லி,-
அவனோடு உம் – அக்கர்ணனுடனே,- வெம் களம் – கொடிய போர்க்களத்தை
உற்றனன் – அடைந்தான் ; (எ -று.)

     பீஷ்மதுரோணாதியர் தொலைந்தபின்பும் போர்செய்யுந்துணிவு சிறிதும்
ஒழிந்தில னாதலால், ‘விறலோன்’ என்றார்.      

சொல் தவறாத துரோணனை மௌலி துணித்த திட்டத்துய்மன்னும்,
கொற்றவர் ஐவரும், மற்று உள பூபரும், வைனதேயக் கொடியோனும்,
உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று,
‘இற்றை அருஞ் சமம் வெல்லுதல் எம் கடன்’ என்று துன்றி
எதிர் கொண்டார்.3.- பாண்டவர் போர்க்களஞ் சேர்தல்.

சொல் தவறாத – வார்த்தைதப்பாத, துரோணனை – துரோணா
சார்யனை,மௌலி துணித்த – தலையறுத்திட்ட, திட்டத் துய்மன்உம் –
த்ருஷ்டத்யும்நனும், கொற்றவர் ஐவர்உம் – வெற்றியையுடைய பஞ்சபாண்டவர்களும்,
மற்று உள பூபர்உம் – மற்றுமுள்ள அரசர்களும், வைனதேயன் கொடியோன்உம் –
கருடத்துவசத்தையுடையவனான கிருஷ்ணனும், – உற்று எழு – திரண்டு
புறப்படுகின்ற, கச ரத துரக பதாதிகள் ஆன – யானைகளும் தேர்களும்
குதிரைகளும் காலாள்களுமாகிய (நான்கு அங்கங்களையுடைய), சேனையுடனே –
சேனையோடு, சென்று – (போர்களத்துக்குப்) போய்,- ‘இற்றை அருஞ் சமம் –
இன்றைத்தினத்து அரிய யுத்தத்தில், வெல்லுதல் – (பகைவரைச்) சயித்தல், எம்
கடன் – எமது கடமை’, என்று – என்று எண்ணிக்கொண்டு, துன்றி – நெருங்கி,
எதிர்கொண்டார் – (பகைவர் சேனையை) எதிர்த்தார்கள்; (எ -று.)

     ‘சொற்றவறாத துரோணன்’ என்றது – சபதஞ்செய்தபடி அருச்சுனனைக்
கொண்டு துருபதனை வென்று கட்டிக்கொணரச் செய்ததனாலும், முதல்நாள்போரிற்
க்ருஷ்ணன் முன்னிலையிற் சொன்னபடி அசுவத்தாமன் இறந்தமைகேட்டுச்
செயலொழிந்து திருஷ்டத்யும்நனாற் கொல்லப்பட இறந்ததனாலும்.இனி – அருள்
கொண்டு கூறினாலும் வெகுண்டு கூறினாலும் அந்தந்தப்பயன்களைத் தந்தே
விடுகின்ற நிறைமொழிகளை யுடைமையாலென்றுமாம்.  

கற்கியும், வண்டுஇனம் மொய்க்க மதம் பொழி கரியும்,
தேரும், காலாளும்,
பொற் கொடியும், குடை வர்க்கமும், மாலையும், ஒன்னார்
எண்ணும் பூபாலர்,
நிற்கும் நிலம்தொறும் நிற்கும் நிலம்தொறும், நின்று நின்று
வினை செய்ய,
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகரவியூகம்
வகுத்தானே.4.- கர்ணன் தன்சேனையை மகரவியூகமாக வகுத்தல்.

மல் கெழு – மற்போரில் வல்ல, திண் புயம் – வலிய
தோள்களையுடைய, அர்க்கன் மகன் – சூரியகுமாரனாகிய கர்ணன்,- கற்கிஉம்
குதிரைகளும், வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரிஉம் – வண்டுக்கூட்டம்
மொய்க்கும்படி மதநீரைச் சொரிகின்ற யானைகளும், தேர்உம் – இரதங்களும்,
காலாள்உம் – பதாதிகளும், பொன் கொடிஉம் – பொற்காம்பையுடைய
துவசங்களும்,குடை வர்க்கம்உம் – குடைவரிசைகளும், மாலைஉம் –
(போர்க்குஉரிய)மாலைகளும், முன் – முதலியவற்றை, உளர் – உடையவர்,
என்னும் – என்றுசொல்லப் படுகின்ற, பூபாலர் – அரசர்கள், நிற்கும்
நிலம்தொறுஉம் நிற்கும்நிலம்தொறுஉம் – (தாம்தாம்) நிற்பதற்குஉரிய
இடங்கள்தோறும், நின்றுநின்று-, வினைசெய்ய – போர்தொழிலைச் செய்யும்படி,
பெரு மகரயூகம் வகுத்தான் – பெரியமகரவியூகமாக (ச் சேனையை)
அணிவகுத்தான்; (எ -று.)

     பொன் – அதனாலாகிய காம்புக்குக் கருவியாகுபெயர். மகரத்தின்
வாயிடத்திலே கர்ணனும், கண்களிலே சகுனியும் உலூகனும், சிரசிலே
அசுவத்தாமனும், கழுத்திலே துரியோதனன் தம்பிமாரனைவரும், இடையிலே
பெருஞ்சேனைசூழ்ந்த துரியோதனனும், முன் இடக்காலிலே நாராணகோபாலரோடு
கூடிய கிருதவர்மாவும், வலக்காலிலே திரிகர்த்தரோடுந் தென்னாட்டாரோடுங்
கூடியகிருபனும், பின் இடைக்காலிலே தன் பெருஞ் சேனையுடன் சல்லியனும்,
வலக்காலிலே ஆயிரந்தேரோடும் முந்நூறுயானையுடனும் சுசேனனும், வாலிலே
பெருஞ்சேனைசூழவிசித்திர சித்திரசேனரும் நின்றன ரென்று வியாசபாரதத்திற்
கூறப்பட்டுள்ளது. பி -ம்: ஒன்னாரெண்ணும் பூபாலர்.   

பானுவின் மைந்தன் முனைந்து மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான்;
போன அருஞ் சமர் போக; தனித்தனி பொருது வேறும், போர்’ என்றே,
சேனையின் மன்னவர் யாவரும், வெம் பரிமாவின்மேலும் தேர்மேலும்
யானையின்மேலும் இருந்தவர், அவ்வவர் தம்மோடு
அம்ம இகலுற்றார்.5.-கௌரவசேனை பாண்டவசேனையோடு போர்தொடங்குதல்.

வெம் பரிமாவின் மேல்உம் – கொடிய குதிரைகளின் மேலும்,
தேர்மேலும்-, யானையின்மேலும்-, இருந்தவர் – இருந்தவராகிய, சேனையின்
மன்னவர் யாவர்உம் – (துரியோதன) சேனையிலுள்ள அரசர்கள் எல்லாரும்,-
‘பானுவின் மைந்தன் – சூரிய புத்திரனாகிய கர்ணன், முனைந்து – மிகமுயன்று,
மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான் – (இன்றைக்குத்) திருதிராஷ்டிரன்மகனான
துரியோதனனது சேனைக்குத் தலைவனாயினான்: போன அருஞ் சமர் போக –
(இத்தனை நாளாய்க்) கழிந்த அரிய போர் கழிக; (இனி), தனி தனி போர்
பொருது -தனித்தனியே போர்செய்து, வேறும் – (பகைவரை) வெல்வோம்,’
என்று – என்றுதுணிந்து,- அ அவர்தம்மோடு – அவ்வவ்வாறு குதிரை
முதலியவற்றின்மேலிருந்தஎதிரிகளுடனே, இகல் உற்றார் – போர்தொடங்கினார்கள்;
(எ-று.)-அம்ம -உக்கிரமாகப் போர் தொடங்கிய தன்மையை விளக்கவந்த
வியப்பிடைச்சொல். வேறும்- தன்மைப்பன்மை வினைமுற்று, வெல் – பகுதி

நாமம் இரண்டொடு பத்துடை நாயகன் நவில, வெஞ் சேனையின் நாதன்,
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த,
நேமி வியூகமதாக வகுத்து, இடை நின்று போர் செய் நிலயத்தில்,
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம்
மேல் கொண்டான்.6.-திட்டத்துய்மன் சக்கரவியூகம் வகுக்க,
வீமன்யானைமேலேறுதல்

நாமம் இரண்டொடு பத்து உடை – பன்னிரண்டு
திருநாமங்களையுடைய, நாயகன் – (யாவர்க்குந்) தலைவனாகிய கிருஷ்ணபகவான்,
நவில – சொல்ல, (அச்சொல்லின்படி), வெம் சேனையின் நாதன் – (பாண்டவரது)
கொடிய சேனைக்குத் தலைவனான திட்டத்துய்மன், மா மரு – பெருமைபொருந்திய,
கொற்றம் – வெற்றியையுடைய, வரூதினி-(தன்) சேனையாகிற, வேலையை – கடலை,
மருவார் அஞ்சி வெருவு எய்த – பகைவர்கள் (கண்டு) அச்சமுற்றுக்
கலக்கமடையும்படி, நேமி வியூகமது ஆக – சக்கரவியூகமாக, வகுத்து –
அணிவகுத்து, இடை நின்று – நடுவில் நின்று, போர் செய்-யுத்தஞ் செய்கின்ற,
நிலயத்தில் – இடத்தில்,-வீமன் – வீமசேனன், வயம்புனை தேரினை விட்டு –
(தான்ஏறியிருந்த) வெற்றியைக்கொண்ட தேரை விட்டு இறங்கி, வெம்போர் –
கொடிய போரைச் செய்யவல்ல, ஒரு வேழம் மேல்கொண்டான் – ஒருயானையின்
மேல் ஏறிக்கொண்டான்;

     நாமமிரண்டொடுபத்துடைநாயகன் – துவாதசநாமமுடையவன்:
அந்நாமங்களாவன -கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு,
மதுசூதநன், திரிவிக்கிரமன்,வாமநன், ஸ்ரீதரன், இருடீ கேசன், பதுமநாபன்,
தாமோதரன் , என்பன, சக்ரவ்யூஹம்- சக்கரம் போல வடிவமமையும்படி
சேனையை வகுப்பது, பதினாறாம் போர்நாளிற்பாண்டவசேனை அர்த்தசந்திர
வியூகமாக வகுக்கப்பட்டதென வடமொழிப்பாரதத்தில் உள்ளது.   

அடிக் கை கனத்து, மதம் பொழி ஆழியின் அளவும் புகரால்
அழகு எய்தி,
மடிக்கினும், மண் உறு கையது; செந் நிற வாயது; தேயா மதிதன்னை
ஒடித்து இரு பக்கமும் வைத்தென மகரிகை ஒன்றி, ஒன்றி
ஒன்னார் மெய்
இடிக்கும் மருப்பது; புன்னையின் நாள்மலர் என்னும் சீரது,
இரு கண்ணும்.7.-இதுமுதல் நான்கு கவிகள் – ஒருதொடர்: அந்தயானையின்
வருணனை.

அடிக்கை கனத்து கையின் அடி பருத்து, மதம்பொழி ஆழியின்
அளவுஉம் – மதசலத்தைச்சொரிகின்ற நுனிக்கைவரையிலும், புகரால் –
செம்புள்ளிகளினால், அழகு எய்தி – பொலிவு பெற்று, மடிக்கின்உம் மண் உறு –
மடக்கினாலும் நிலத்தளவுந் தாழ்ந்து தொங்குகின்ற, கையது – துதிக்கையையுடையது;
செம்நிறம் வாயது – சிவந்த நிறத்தையுடைய வாயையுடையது; தேயா மதி தன்னை
– குறையாத [பூர்ண] சந்திரனை, ஒடித்து – இரண்டு துண்டாக்கி, இரு பக்கம்உம் –
இரண்டுபக்கங்களிலும், வைத்து என – வைத்தாற் போல, மகரிகை ஒன்றி –
பூண்பொருந்தி, ஒன்னார் மெய் – பகைவரது உடம்பை, ஒன்றி இடிக்கும் –
தாக்கிக்குத்துகின்ற, மருப்பது – தந்தங்களை யுடையது; இரு கண்உம் – இரண்டு
கண்களும்,புன்னையின் நாள் மலர் என்னும் – புன்னை மரத்தின் புதிய பூ வென்று
உவமைகூறப்படுகின்ற, சீரது – தன்மையையுடையது; (எ – று.)-மேற் பத்தாம்பாட்டில்
வரும் ‘அவ்வேழம்’ என்பது இதுமுதல் மூன்று கவிகட்கும் எழுவாயாம்.

திலகமும் ஓடையும் இலகுறு நெற்றியது; ஆலவட்டச் செவியாலே,
பல திசை மாருதம் உய்ப்பது; செம் புகர் பட்டின் தொழிலின்
பயில்கிற்பது;
உலகினை மேல்கொளுமவனது எனக் களி ஊறியதால்; அங்குலம் ஒத்து,
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது, அம் பொன்
குவடு என்ன.

திலகம்உம் – (சிந்தூரத்) திலகமும், ஓடைஉம் – பட்டமும், இலகு
உறு-விளங்கப்பெற்ற, நெற்றியது – நெற்றியையுடையது; ஆலவட்டம் செவியால் –
பெருவிசிறிபோன்ற காதுகளினால், மாருதம் – காற்றை, பல திசை –
பலதிக்குக்களிலும், உய்ப்பது – வீசுவது; செம் புகர் – (உத்தம இலக்கணமாகிய)
சிவந்த புள்ளிகள், பட்டின் தொழிலின் – செம்பட்டினாற் செய்த சித்திர
வேலைபோல, பயில்கிற்பது – பொருந்தப்பெற்றது, உலகினை மேல் கொளுமவனது
என – (மூன்று) உலகங்களையும் அரசாளுகின்ற தேவேந்திரனது
ஐராவதயானைபோல, களி ஊறியது – மதக்களிப்புப் பொருந்தியது; அங்குலம்
ஒத்து – (உத்தம கஜலக்ஷணத்தின் படி) அங்குலங்கள் அமைந்து, குலவிய –
விளங்குகின்ற, மத்தகம் – தலையானது, ஒத்த கழுத்தில் – (அதற்குத்) தக்ககழுத்தில்,
அம் பொன் குவடுஎன்ன – அழகிய பொன்மயமான (மேருமலையின்)சிகரம் போல,
உயர்ந்தது – உயர்ந்திருக்கப்பெற்றது; (எ – று.)

     ஆலவட்டம்  – தாலவ்ருந்தமென்பதன் சிதைவு. ஆல் ஈற்றசை. பி – ம்:
அவனிது.  

உரத்தினில் முச் சுழி உடையது; தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை
செய்யும் தரத்தது;
வெண்ணெய் நிறத்த நகத்தது; தண் அம் துளவன் நிலை ஒத்த
திரத்தினது; ஆமை கிடந்த எனும் புற
அடியது; அங்கம் திண்ணென்றே
உரத்தது; நல் உதரத்தது; இளங் கமுகு ஒத்தது அம்ம, வாலதி;

உரத்தினில் – மார்பில், முச்சுழி உடையது –  (உத்தம
இலக்கணமாகிய)மூன்று சுழிகளையுடையது; தாள் – கால்கள், வலி –
வலிமையினால் , கல் தூண்ஒப்பு என்று – கற்கம்பத்துக்கு ஒப்பானவை யென்று,
உரை செய்யும்-சொல்லத்தக்க,தரத்தது – தன்மையையுடையது; வெண்ணெய்
நிறத்த – வெண்ணெய் போலும்வெண்ணிறத்தையுடைய, நகத்தது –
நகங்களையுடையது; தண் அம்துளவன் -குளிர்ந்த அழகிய
திருத்துழாய்மாலையையுடைய திருமாலினது, நிலை – வடிவத்தை,ஒத்த –
போன்ற, திரத்தினது – (கருநிறத்) தன்மையையுடையது;  ஆமைகிடந்தஎனும் –
ஆமைகள் கீழே கிடந்தன வெனத்தக்க, புறம் அடியது -புறங்கால்களையுடையது;
அங்கம் திண்ணென்று உரத்தது – உடம்பு திண்ணென்றுவலிமையையுடையது;
நல்உதரத்தது – அழகிய வயிற்றையுடையது; வாலதி – வால்,இளங்
கமுகுஒத்தது – இளமையான பாக்குமரத்தை ஒத்திருக்கப்பெற்றது; (எ-று.)-
அம்ம – அசை; சிறப்புப் பற்றிய வியப்பிடைச்சொல்லுமாம்.

தூணும் விலங்கும் முறிப்பது; பாகு பரிக்கோல் யாவும் தூரத்தே
காணினும், நின்று கொதிப்பது; தன் நிழல் கண்டு சீறும் கருத்தது;
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது; மேரு நிகர் என்னச்
சேண் உயர் போதர, எழு முழம் உடையது;-தெவ்வர் அஞ்சும்
அவ் வேழம்.

தூண்உம் விலங்குஉம் முறிப்பது – கட்டுத்தறியை ஒடித்து (க்
கட்டிய)இருப்புச்சங்கிலியை அறுத்துவிடத்தக்கது; பாகு – பாகனும், பரிக்கோல் –
அங்குசமும்(முதலிய), யாஉம்-எல்லாவற்றையும், தூரத்து காணின்உம் –
வெகுதூரத்திற்கண்டாலும், நின்று – (அஞ்சாமல்) நின்று, கொதிப்பது –
மனம்வெதும்புந்தன்மையையுடையது; தன் நிழல் கண்டு – தனதுநிழலைப்
பார்த்து,சீறும் – (வேறொருயானை யென்றெண்ணிக்) கோபிக்கின்ற, கருத்தது –
எண்ணமுடையது; நீள் – நீண்ட [மேன்மையான], நடம் முதலிய – நடனம்
முதலான,தொழில் ஒருநால்உம் – நான்குதொழில்களும், நிரந்தது – நிரம்பப்
பெற்றது; மேருநிகர் என்ன – மகாமேருமலைக்குச் சமமென்னும்படி, சேண் உயர்
போதர – மிக்க உயர்ச்சி பெற, எழு முழம் உடையது – ஏழுமுழம் உயரமுடையது;
தெவ்வர்அஞ்சும் – பகைவர்கள் (கண்டு) அஞ்சும்படியான, அ வேழம் – அந்த
(வீமனேறிய)யானை; (எ -று.)-தொழில்நான்கு- நடனம், துரிதகதி, மந்தகதி, ஓட்டம்
என்பன. பி -ம்: நிரந்த. நீணடை முதலிய தொழில்களி யாவு நிரம்பி, சேணுயர்
பேரளவுடையதிறத்தது.

ஆசு இல் அருந் திறல் ஆசுகன் மைந்தனும், ஆண்மைக்கு எண்ணும்
அடல் வீரன்
காசி நரேசனும், ஏழ் உயர், ஏழ் மத மாரி சிந்தும், கரி மேலோர்,
தூசியின் வந்து, முனைந்து முனைந்து இரு தோலும் போர் செய்ய,
வாசவர் ஓர் இருவோர், இரு கார்மிசை மலைவது என்ன, மலைவுற்றார்.11.- மூன்றுகவிகள் – வீமனும் கேமதூர்த்தியும்
யானைமீதிருந்து பொருதலைக் கூறும்.

ஆசு இல் – குற்றம் இல்லாத, அருந் திறல் – அருமையான
வலிமையையுடைய, ஆசுகன் மைந்தன்உம் – வாயுகுமாரனான வீமனும்,
ஆண்மைக்கு எண்ணும் – பராக்கிரமத்தில் மதிக்கப்படுகின்ற, அடல் வீரன் –
வலியவீரத்தன்மையுடையவனாகிய, காசிநரேசன்உம் – காசீநகரத்தரசனான
கேமதூர்த்தியும்,- ஏழ் உயர் வெம் மதம் மாரி சிந்தும் கரி மேலோர் – ஏழுமுழம்
உயர்ந்ததும் வெவ்விய மதநீர்மழையைச் சொரிகின்றதுமான (தம்தம்)
யானையின்மேலேறியவர்களாய்,- தூசியின் – முற்சேனையிலே, முந்த – முன்னே,
முனைந்து – விரைந்துசென்று, இருதோல்உம் தோல்உம் – (தங்கள்)
யானைகளிரண்டும், முனைந்து – கோபங்கொண்டு, போர் வெய்ய-
(ஒன்றோடொன்று) யுத்தஞ்செய்யாநிற்க,- வாசவர் ஓர் இருவோர் – இரண்டு
இந்திரர்,இரு கார்மிசை- (தம்வாகனமாகிய) மேகம் இரண்டன்மேல் (ஏறிக்கொண்டு),
மலைவதுஎன்ன – (தம்மிற்) போர் செய்துபோல, மலைவு உற்றார்-
(ஒருவரோடொருவர்),போர்செய்யத் தொடங்கினர்; (எ-று.)

     இந்திரர் – வீமசேனனுக்கும் கேமதூர்த்திக்கும், இந்திரனுக்கு வாகனமாகிய
மேகம் – அவரேறிய கரியயானைக்கும் உவமை. வாசவரிருவர் தம்மில்மலைதல்,
இல்பொருளுவமை. திறலுக்கு ஆசு – தோல்வி. ஏழ் – ஏழுமுழத்துக்கு
எண்ணலளவையாகுபேயர். பி -ம்: ஏழுயரேழ் மதமாரி.

அங்குசம், வார்த்தை, வன் தாள், அடைவினில் பயிற்றி, ஏனை
வெங் கதி நடையோடு ஓட்டம் விதமுற விரைவின் காட்டி,
அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து,
செங் கையில் சிலையும் கோலி, தீ விழித்து உடன்று சேர்ந்தார்.

(அவ்விருவரும்),- அங்குசம் – மாவெட்டியும், வார்த்தை –
வாய்ச்சொல்லும், வல் தாள் – வலிய கால்வைப்புக்களும் (ஆகிய இவற்றால்),
அடைவினில் பயிற்றி – முறைப்படி பழக்கி,- ஏனை – பின்னும், வெம் கதி –
துரிதமானநடையையும், நடையோடு – மந்தமான நடையையும், ஓட்டம் –
ஓட்டத்தையும், விதம்உற – பல வகைப்பட, விரைவின் – விரைவாக, காட்டி –
காண்பித்து,- அங்க சாரியினால் – உடம்பினது வலதுசாரி இடதுசாரியாகச்
செல்லுந்தன்மையைக் கண்டு, நல் நூல் அறிஞர் கொண்டாட – நல்ல யானை
நூலை அறிந்தவர்கள் மெச்சும்படி, ஊர்ந்து – (தம்தம்யானைகளைச்) செலுத்திக்
கொண்டு,- செம் கையில் – சிவந்த கையிலே, சிலைஉம் கோலி – வில்லையும்
வளைத்து, தீ விழித்து. நெருப்புப்பொறிசிந்த விழித்துப்பார்த்து, உடன்று –
பெருங்கோபங்கொண்டு, சேர்ந்தார் – (தம்மில்) நெருங்கினார்கள்; (எ -று.)

     இதுமுதல் எட்டுக்கவிகள் – பதினான்காம்போர்ச்சருக்கத்தின் 155-
ஆங்கவிபோன்ற அறுசீராசிரியவிருத்தங்கள்.    

கோடு கைம் முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல
நீடு உயர் மாவும் மாவும், நெருப்பு எழ முனைந்து சீற,
ஆடவர்தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி,
சேடனும் அமரர் கோவும் வெருக் கொள, செருச் செய்தாரே.

கோடு – தந்தங்களும், கை – துதிக்கையும், முதல் ஆ – முதலாக,
ஒன்பது உறுப்பின்உம் – ஒன்பது அவயவங்களாலும், கோறல் வல்ல –
(பகைவரைக்)கொல்லுதலில் வல்ல, நீடு உயர் – மிக உயர்ந்த, மாஉம் மாஉம்-
(அந்த) இரண்டுயானைகளும், நெருப்பு எழ – நெருப்புப்பொறி சிதறும்படி,
முனைந்து சீற -உக்கிரமாகக் கோபியாநிற்க,- ஆடவர்தாம்உம் –
ஆண்மையையுடையவர்களானவீமசேனனும் கேமதூர்த்தியும்,- எண் இல் –
கணக்கில்லாத, அம்பு மா மழைகள் -பெரிய பாணவர்ஷங்களை, ஏவி –
சொரிந்துகொண்டு,- சேடன்உம்-(கீழுலுகத்திலுள்ள) ஆதிசேஷனும், அமரர்
கோஉம்- (மேலுலகத்திலுள்ள)தேவேந்திரனும், வெரு கொள – அச்சங்
கொள்ளும்படி, செரு செய்தார் -போர்செய்தார்கள்; (எ – று.)- ஒன்பது உறுப்பு –
கால்கள் நான்கு, துதிக்கை ஒன்று,தந்தம் இரண்டு, மஸ்தகம் ஒன்று, வால் ஒன்று
என்பன.

ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல், அஞ்சி,
காசி மன் கேமதூர்த்தி காய் அயில் ஒன்று வாங்கி,
வீசி, அக் காளை மார்பின் எறிதலும், வீமன் ஏ ஒன்று
ஏசு இல் அவ் வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான்.14.- வீமன் கேமதுர்த்தியின் வேலையும் யானையையும்
துணித்தல்

ஆசுகன் குமரன் – வாயுகுமாரனான வீமனது, வல்வில் – வலிய
வில்லினாலெய்யப்படுகின்ற, ஆசுகம் – அம்புகளை, பொறாமல் –
பொறுக்கமாட்டாமல், காசிபன் கேமதுர்த்தி – காசீநகரத்தை ஆள்கின்றவகினாய
கேமதுர்த்தியென்பவன், அஞ்சி – பயந்து, காய் அயில் ஒன்று வாங்கி –
(பகைவர்களைக்) கொல்லும்படியான ஒரு வேலாயுதத்தை எடுத்து, அ காளை
மார்பின் வீசி எறிதலும் – இளவெருது போன்ற அவ்வீமனதுமார்பிலே வேகமாய்
எறிந்தவளவிலே,- வீமன்-,-ஏசு இல் அ வேல்உம் – குற்றமில்லாத அந்த
வேலாயுதமும், தெவ்வன் யானைஉம் – பகைவனான அக்காசீராசனது யானையும்,
துணிய – துண்டுபட்டுவிழும்படி, ஏ ஒன்று – ஒரு பாணத்தை, எய்தான் –
பிரயோகித்தான்; (எ -று.)-கேமதூர்த்தி – க்ஷேமதூர்த்தி.

கேமன் அக் கரியினின்றும், கிரியினின்றும் இழியும் ஆளி
ஆம் என, தரணி எய்தி, அடல் வயிர்த் தண்டு ஒன்று ஏந்தி,
வீமன் அன்று ஊர்ந்த வெங் கை வெற்பினைப் புடைத்து
வீழ்த்தான்;
பூ மரு தாரினானும் பூவின்மேல், சுரும்பின் பாய்ந்தான்5.- கேமதூர்த்தி வீமனதுயானையை அடித்துத்தள்ளுதல்.

கேமன் – கேமதூர்த்தி,- அ கரியினின்றுஉம் – அந்த
யானையினின்றும், கிரியினின்று இழியும் ஆளி ஆம் என – மலையினின்று
இறங்குகின்ற சிங்கம்போல, தரணி எய்தி – தரையில் இறங்கி வந்து,- அடல்
வயிர்தண்டு ஒன்று ஏந்தி – மிக்க வலிமையையுடைய கதாயுதமொன்றை எடுத்து
(அதனால்), வீமன் அன்று ஊர்ந்த – வீமசேனன் அப்பொழுது ஏறிநின்ற, வெம்கை
வெற்பினை – வெவ்விய துதிக்கையையுடைய மலைபோன்றதான யானையை,
புடைத்து – அடித்து, வீழ்த்தான் – கொன்று கீழேதள்ளினான்; பூ மரு தாரினான்
உம்- மலர்களால் தொடுக்கப்பட்ட போர் மாலையையுடையவனான வீமசேனனும்,-
பூவின்மேல் சுரும்பின் – மலரிற்பாய்கிற வண்டுபோல, (பூவின்மேல்) பாய்ந்தான் –
தரையிற் குதித்தான்; (எ – று.)-பூ- இரட்டுற மொழிதல்.

கரி அமர்க்கு ஒருவரான இருவரும், காலில் நின்று,
பரிய அக் கதைப்போர் வல்ல பார்த்திவர் பலரும் காண,
‘கிரியொடு கிரி செய் பூசல் இது’ எனக் கிளக்குமாறு,
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார்?16.- வீமனும் கேமதூர்த்தியும் கதாயுத்தஞ்செய்தல்.

கரி அமர்க்கு – யானைமேலேறிச்செய்யும் போரில், ஒருவர்
ஆன -ஒப்பற்றவராகிய, இருவர்உம் – இரண்டுபேரும் [வீமனும் கேமனும்],
காலின் நின்று -(யானையில்லாமையால்பூமியிற்) கால்களால் நின்றுகொண்டு,
பரிய அ கதை போர்வல்ல பார்த்திவர் பலர்உம் காண – பருத்த
கதாயுதத்தாற்செய்கின்ற அந்த யுத்தத்தில்வல்ல அரசர்களெல்லலாரும் (வியந்து)
காணும்படி,- கிரியொடு கிரி செய் பூசல் இதுஎன கிளக்கும் ஆறு – மலையும்
மலையும் (தம்மிற் பகைத்துச்) செய்கின்றபோர் இதுவென்று (ஒப்புமையாற்)
சொல்லுமாறு, புரிவு இலார் -(வேறு ஓர்) எண்ணமும்இல்லாமல், பொருத –
செய்த, போர் – யுத்தத்தை, யாவர் ஏ புகல வல்லார் -எவர்தாம் (இத்
தன்மையதென்று) சொல்லவல்லவர்? (எ – று.)-புரிவு -(போரைத்தவிர்த்து
வேறொன்றில்) விருப்புமாம். மற்று – அசை.

தண்டொடு தண்டம் ஏந்தி, சாரிகை பலவும் காட்டி,
‘கொண்டலின் முழக்கு ஈது’ என்ன, ‘குரை கடல் ஒலி ஈது’ என்ன,
கண்டவர்க்கு அன்றிக் கேட்டார்க்கு உரைப்பு அருங்
கணக்கின் தாக்கி,
கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான்.17.- வீமன் கேமதூர்த்தியைக் கொல்லுதல்.

(அவ்வீரரிருவரும்),- தண்டொடு தண்டம் ஏந்தி – (தம் தம்)
கதாயுதத்தையெடுத்துக்கொண்டு, சாரிகை பலஉம் காட்டி – (வலதுசாரி
இடசாரிமுதலிய) பலவகை நடைவிகற்பங்களையுஞ் செய்து காண்பித்து,
கொண்டலின்முழக்கு ஈது என்ன – மேகத்தின் இடி யோசை இதுவென்று
சொல்லவும், குரைகடல் ஒலி ஈது என்ன – ஒலிக்கின்ற கடலின் ஓசை இது
வென்னவும்,(பெருமுழக்கமுண்டாக), கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்குஉரைப்பு
அருங்கணக்கின் – (பிரதியக்ஷமாகப்) பார்த்தவர்கட்கேயல்லாமல் (புறத்திருந்து)
கேட்டவர்கட்கும் (இத்தன்மையதென்று) சொல்லுதற்கு அரிய தன்மையாக,
தாக்கிக்கொண்டு – தாக்கிப்போர்செய்துகொண்டிருந்து,- (பின்பு அப்போரில்),
வீமன்-,வல் காயம் ஒன்றால் – வலிய கதையின் வீச்சு ஒன்றினால், கேமனை
கொன்றான்,-(எ -று.)-காயம், காய் – பகுதி.

எறிந்த தண்டு அமரில் கேமன் இறந்தனன்’ என்ற போழ்தின்,
முறிந்தது, வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை;
அறிந்து, எதிர் ஊன்றி, வென்றி ஆண் தகைக் கன்னன் மீளப்
பிறிந்த பல் அணியும் ஒன்ற, பேர் அணி ஆக்கி நின்றான்.18.- கர்ணன், கேமனிறந்ததனால் நிலைகுலைந்த சேனையை
ஒழுங்குபடுத்துதல்

எறிந்த தண்டு அமரில் – வீசியடித்துச் செய்த கதாயுத்தத்தில்,
கேமன்இறந்தனன்-, என்ற போழ்தில் – என்ற மாத்திரத்திலே,- வேலை ஞாலம்
முழுதுஉடை – கடல்சூழ்ந்த நிலவுலகம் முழுவதையும் (தனதாக) உடைய,
நிருபன் -துரியோதனராசனது, சேனை-, முறிந்தது – வலிகெட்டு நிலைகெட்டது
வென்றி -வெற்றியையும், ஆண் தகை – ஆண்மைக்குணத்தையுமுடைய,
கன்னன் – கர்ணன்- அறிந்து – (அதனை) அறிந்து, எதிர் ஊன்றி – எதிரிற்
சென்று தைரியப்படுத்தி,-பிறிந்த – (சிதறுண்டு தனித்தனி) பிரிந்துபோன, பல்
அணிஉம் – பலவகைச்சேனைகளும், மீள – திரும்பவும், ஒன்ற – ஒருங்குதிரள,
பேர் அணி ஆக்கிநின்றான் – பெரியவகுப்பாகப் படைவகுத்து நின்றான்;

பேர் அணிகலம் சேர் மார்பன் பேர் அணி ஆக்கி நின்ற
போர் அணி மிக்க சேனைப் பொலிவு கண்டு, ஒலி கொள் வண்டு ஆர்
தார் அணி அலங்கல் மௌலித் தருமன் மா மதலை சேனை,
ஓர் அணியாகக் கூடி, உடன்று எதிர் நடந்தது அன்றே.19.- பாண்டவசேனை கௌரவவேனையை எதிர்த்தல்

பேர் அணிகலம் சேர் மார்பன் – பெரிய ஆபரணங்கள் பொருந்திய
மார்பினையுடைய கர்ணனால், பேர் அணி ஆக்கி நின்ற – பெரியவகுப்பாகப்
பகுக்கப்பட்டுநின்ற, போர் அணி மிக்க சேனை – யுத்தத்தையே (தனக்கு)
அலங்காரமாகக்கொண்ட மிகுந்த சேனையினது, பொலிவு – விளக்கத்தை, கண்டு –
பார்த்து,- ஒலி கொள்வண்டு ஆர் – ஒலித்தலைக்கொண்ட வண்டுகள் மொய்க்கின்ற,
தார் அணி அலங்கல் – மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிய, மௌலி –
முடியினையுடைய, தருமன் மா மதலை – சிறந்த தருமபுத்திரனது, சேனை-,-ஓர்
அணி ஆக கூடி – ஒருதிரளாகச் சேர்ந்து, உடன்று – கோபித்து, எதிர் நடந்தது –
எதிரே சென்றது; (எ -று.)

     பேரணிகலஞ்சேர்மார்பன் – வீரர்க்குச்சிறந்த ஆபரணமெனப்படுகின்ற
போரிற்படும் பெரும்புண்கள் பொருந்திய மார்பையுடையா னெனினுமாம்.

மகரிகையும் இரு பணைகளும், விரி நுதல் மருவு கலனொடு மினல்
என ஒளி விட,
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள்
எழ எழ,
அகலம் உடையன முதுகு இரு புடையினும், அணியும் மணி கண கண
என, அதிர்தரு
ககன முகில் என உயர் வடிவு உடையன, கதியின் விததியின்
முடுகின-கரிகளே.இதுமுதல் நான்குகவிகளால், சதுரங்களை வருணிக்கின்றார்.

20.- யானை வருணனை.

மகரிகைஉம் – பூண்களும், இரு பணைகள்உம் – (அவற்றை
அணிந்த)இரண்டுதந்தங்களும், விரி நுதல் மருவு கலனொடு – பரந்த நெற்றியிலே
அணிந்த(பட்டம்முதலிய) ஆபரணங்களுடனே, மினல் என – மின்னல்போல,
ஒளி விட -ஒளியை வீசவும்,- அளி – வண்டுகள், இகலி – நெருங்கி
[மாறுபட்டு](மொய்த்து),முரல் – ரீங்காரஞ்செய்தற்கு இடமான, இரு கவுளின்உம் –
இரண்டுகன்னங்களினின்றும், உடன் இழியும் – ஒருங்குபெருகுகின்ற, மதம் மழை –
மதநீர்வெள்ளம், குமிழிகள் எழ எழ – குமிழிகள் மிகுதியாக உண்டாகப்பெறவும்,-
அகலம் உடையன – பரப்பையுடையனவாகிய, முதுகு இருபுடையின்உம் – முதுகின்
இரண்டுபக்கங்களிலும், அணியும் – அணியப்பட்டுள்ள, மணி – மணிகள், கணகண
என – கண கண என்று ஒலிக்கவும்,- அதிர்தரு ககனம் முகில் என – இடி
முழங்குகின்ற வானத்திற்செல்லும் மேகங்கள்போல,- உயர் வடிவு உடையன கரிகள்
– உயர்ந்த உருவத்தையுடையனவாகிய யானைகள், – கதியின் விததியின் –
பலவகைநடைவிகற்பங்களோடு, முடுகின – விரைந்துசென்றன; (எ – று.)

     கரிய யானைகள் – காளமேகத்துக்கும், தந்தங்களும் ஆபரணங்களும் –
மின்னலுக்கும், மதமழை – நீர்மழைக்கும், மணியோசை – இடி யோசைக்கும்
உவமை. இவற்றில், ஈற்றெழுத்துஒழிய மற்றை உயிரெழுத்தனைத்தும்
குற்றெழுத்தாகவே வந்தது, குறுஞ்சீர்வண்ணம். விததி – வடசொல்.

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்
சீரும்புளிமாச்சீர்களும், மற்றை ஆறும்கருவிளஞ்சீர்களுமாகிய
எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். ‘தனன தனதன தனதன தனதன தனன தனதன
தனதன தனதன’ என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம். 

நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன
மகுடமும்,
அறையும் அருவியை உவமை கொள் சவரமும், அடவி நிகர் என
அசைவுறு துவசமும்,
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும், முடுகும் இடனுடை
முழைகளும் உடையன-
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி, இசை பெற, நடவின-இரதமே.21.- தேர்வருணனை.

நிறனில் மிகுவன – (தம் தமக்கு உரிய) நிறங்களிற் சிறந்தனவான,
நவமணிகளின் – ஒன்பதுவகை இரத்தினங்களைக் கொண்டு, இயல், செய்யப்பட்ட,
நெடிய – உயர்ந்த, கொடிமுடி நிகர்வன – மலைச்சிகரத்தை ஒப்பனவாகிய,
மகுடம்உம் – முடியையும்,- அறையும் – ஒலிக்கின்ற, அருவியை –
மலைநீர்ப்பெருக்கை, உவமை கொள் – (தனக்கு) உவமையாகக்கொண்ட, சவரம்உம்
– சாமரையையும்,- அடவி நிகர் என – காடு உவமை யென்னும்படி, அசைவுறு –
அசைந்தாடுகின்ற, துவசம்உம் – கொடியையும்,- முறையின் – ஒழுங்காக, நறை கமழ்
– வாசனை வீசுகின்ற, தொடைபடு – (மலையாகத்) தொடுக்கப்பெற்ற, மலர்கள்உம் –
பூக்களையும், – முடுகும் இடன் உடை – நெருங்கிய இடத்தையுடைய, முழைகள்உம்
– குகைபோன்ற மறைவிடங்களையும்,- உடையன – உடையவையாகிய, இரதம் –
தேர்கள்,- இறகர் கொடு திரிவன – (இந்திரனால் வெட்டப்படுவதற்கு முன்பு
தம்தமக்கு உள்ள) சிறகுகளாற் சஞ்சரிப்பனவாகிய, பல மலைஎன –
பலமலைகள்போல, இகலி – நெருங்கி, இசை பெற – ஒலி பெறும்படி ,
நடவின -ஓடின; (எ – று.)

     தேரின்உச்சி – மலையின் சிகரத்தையும், அதன் சவரம் – மலையருவியையும்,
அதன் துவசம் – மலையிலுள்ள வனத்தையும், தொங்க விடப்பட்டுள்ள
மாலையின்மலர்கள் – மலையிலுள்ள மலர்களையும், தேரில் மறைவாகவுள்ள
உள்ளிடங்களுட் சில – மலைக்குகைகளையும் ஒத்தலால், விரைந்தோடுகின்ற
தேர்கள்- இறகுகளைக்கொண்டு திரிகின்ற மலைகளை யொத்தன வென்க:
தற்குறிப்பேற்றவணி. சமரம் = சாமரம், பி – ம்:விசைபெற.

அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன, அகில புவனமும்
நொடியினில் வருவன,
பொடியின்மிசை வெளி புதைதர விடுவன, புணரியிடை அலை
அலையொடு பொருவன,
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன, விரியும் நறு மலர்
கமழ் முக உயிரன,
படியில் ஒரு படி நிலை அறு கதியன, பவனம் என நனி
பரவின -பரிகளே.22.- குதிரைவருணனை

அடலில் – பொருதலிலும், வலிமையில் – பலத்திலும்,
விரைவினில் -வேகத்திலும், உயர்வன – மிகுந்தவையும்,- அகிலபுவனம்உம் –
எல்லாவுலகங்களிலும், நொடியினில் – ஒருமாத்திரைப் பொழுதிலே, வருவன –
(சென்றுதிரிந்து) வரத்தக்கவையும்,- பொடியின் – (பூமியினின்று எழுப்பப்படுகிற)
புழுதிகளினால், மிசை வெளி – மேலுள்ள ஆகாயவெளியெல்லாம், துகள் தர –
புழுதிமயமாம்படி, விடுவன – (அப்புழுதிகளைக்) கிளப்பிவிடுபவையும்,- புணரியிடை
– கடலிலே, அலை – அலைகின்ற, அலையொடு – அலைவரிசைகளோடு,
பொருவன – ஒத்திருப்பவையும்,- விடவி படு – மரம்போல அடர்ந்திருக்கின்ற,
படை- சேனை, மடிதர – அழியும்படி, நிமிர்வன – கம்பீரமாகச்செல்பவையும்,-
விரியும் -மலர்ந்த, நறு – வாசனைவீசுகின்ற, மலர் – பூக்கள்போல, கமழ் –
நல்லவாசனைவீசுகின்ற, முகம் உயிரன – முகத்தினின்று வருகின்ற
சுவாசத்தையுடையவையும்,-படியில் – பூமியில் ஒரு படி நிலை அறு – ஒரே
தன்மையாக நிலைத்தலில்லாத,கதியன – (பலவகை) நடையையுடையவையுமாகிய,
பரிகள் – குதிரைகள்,- பவனம்என – காற்றுப்போல, நனி – மிகுதியாய்,
பரவின – பரந்து சென்றன;(எ -று.)

     இப்பாட்டிலுள்ள விசேஷணங்களெல்லாம் – உபமேயமாகிய குதிரைக்கும்,
உபமானமாகிய காற்றுக்கும் பொது. காற்றுக்குச் சேரும்பொழுது, புணரியிடை
அலைஅலையொடு பொருவன – கடலில் அலைகின்ற அலைகளோடு
பொருந்துவனஎன்றும், விடவி படு படை மடிதர நிமிர்வன – மரங்களின்
அடர்ந்த தொகுதிசாயும்படி வீசுவன என்றும், விரியும் நறு மலர் கமழ் முகம்
உயிரன -(கந்தவகனாதலால்) மலர்ந்த நல்ல மலர்களின் மணம் வீசுகின்ற
முன்காற்றையுடையன என்றும், ஒரு படியில் ஒருபடி நிலை அறு கதியன –
(சதாகதியாதலால்) பூமியில் ஒருவகை நிலையில்லாத சஞ்சாரத்தையுடையனஎன்றும்
பொருள். சிலேடையை அங்கமாகக்கொண்டு வந்த உவமையணி. விடவி =விடபீ:
வடமொழி: விடபம் – மரக்கிளை. உயர்ந்தசாதி யசுவங்களின் சுவாசத்தில் நல்ல
மணம் வீசும். பி – ம்: அடல்கொள், வெளி புதைதரவிடுவன. மிடலிலடுபடை

அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு
நவமணி என,
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச
குலம் என,
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரைகெழு திரை என,
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என, வெகுளி மிகு கதி கடுகினர்-விருதரே.23.- காலாள் வருணனை.

அரிய விலையன – (மதித்தற்கு) அருமையான [மிக்க]
விலையையுடையவையாகிய, அணி கலன் அடையஉம் – (தாம்) அணிந்துள்ள
ஆபரணங்க ளெல்லாம், அறலின் முழுகின – நீரிற் பொருந்திய, அரு நவமணி
என- (கிடைப்பதற்கு) அரிய நவரத்தினம்போ லிருப்பவும்,- வரி வில்முதலிய –
கட்டமைந்த வில் முதலான, பல படைகள்உம் – பலவகை ஆயுதங்களும், உடல்
வலிய செலவு உறு – உடம்பினால் வலிந்துசெல்லுதல் பொருந்திய, பவனச
குலம் என – நீர்ப்பாம்புகூட்டம்போலிருப்பவும்,- நெரிய வருவன –
நெருங்கிவருவனவாகிய, வகை படு – பலவகைப்பட்ட, மிடல் – வலிமையையுடைய,
அணி – வரிசைகள், நிமிர எழுவன – உயர்ந்து எழுவனவாகிய, நிரை கெழு திரை
என – ஒழுங்குபொருந்திய அலைகள்போலிருப்பவும்,- விருதர் – காலாள்வீரர்கள்,-
விரிவின் – பரப்பிலே, அளவு அறு -ஓரளவில்லாத, சலநிதி – கடல், நிகர் என –
உவமை யென்னும்படி, வெகுளி மிகுகதி கடுகினர் – கோபம்மிக்கநடையுடனே
விரைந்துசென்றனர்; (எ-று.)

     பவனசம் பவநாஸம் என்பதன் விகாரம்; காற்றை யுண்பது என்று பொருள்.

முரசு, கரடிகை, கிணை, துடி, பெருமரம், முருடு, படு பறை,
முதலிய கருவிகள்
அரச வரி வளை, கொடு வயிர், எழு குழல், அரவ விருதுகள்
முதலிய கருவிகள்,
உரை செய் கருவிகள், முழுவதும் எழு வகை உலகம் முடிவுற
உக இறுதியில் எழு
கரை செய் கடல் என, எறி வளி என, மிசை கஞலி, உரும் எறி
கனம் என, அதிரவே.24.- வாத்தியகோஷ வருணனை.

இதுமுதல் மூன்றுகவிகள் குளகம்.

     (இ-ள்.) முரசு – பேரிகையும், கரடிகை-, கிணை-, துடி-, பெருமரம்-, முருடு-,
படு – (என்று) சொல்லப்படுகின்ற, பறை – பறைகளும், முதலிய முதலான,
கருவிகள்- அடிக்கப்படுகின்ற வாத்தியங்களும்,-அரச(ர்) வரி வளை –
அரசர்கட்குஉரியகோடுகளமைந்த சங்குகளும், கொடு வயிர்- வளைந்த
ஊதுகொம்புகளும், எழுகுழல் – ஒலியெழுகின்ற வேய்ங்குழல்களும், அரவம்
விருதுகள் – ஓசையையுடையவெற்றிக்கு அடையாளமான சின்னங்களும், முதலிய –
முதலான, கருவிகள் -வாத்தியங்களும்,- முழுவதும்உம் – ஆகிய இவையெல்லாம்,-
ஏழு வகை உலகம்முடிவுற – ஏழுவகை யுலகங்களும் அழியும்படி, உகம்
இறுதியில் – யுகாந்த[பிரளய] காலத்தில், எழு – மேற்பொங்கிவருகின்ற ,
கரை செய் – ஒலித்தலைச்செய்கிற, கடல் என – கடல்போலவும், ஏறி வளி
என – வீசுகின்றபெருங்காற்றுப்போலவும், மிவை கஞலி உரும் எறி கனம் என –
ஆகாயத்தின் மேற்பரந்து இடி யிடிக்கின்ற மேகம்போலவும், அதிர – ஒலிக்க,-
(எ -று.) – இக்கவியில்’அதிர’ என்ற செயவெனெச்சமும், மேற்கவியில் ‘நடவ’
என்ற செயவெனெச்சமும்,அதன் மேற்கவியிலுள்ள ‘பருகின’ என்னும் முற்றைக்
கொண்டு முடியும்.

     கரடிகை முதலியன – பறைகளின் பேதங்கள். பெருமரம் – பெரிய
மரத்தினாலாகிய தெனக் காரணப்பெயர்.     

எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர்
இரு படையினும்,
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும், விசயம் மிகுவன
இரதமும் இரதமும்,
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும், நிருதர் குலம் நிகர்
விருதரும் விருதரும்,
நறிய தொடை முடி நிருபரும் நிருபரும், நடலை அமரிடை,
அடலுடன் உடலவே.25.- இருதிறத்துச்சேனையும் ஒன்றோடொன்று எதிர்த்தல்.

எறியும் முரசம்உம் – அடிக்கப்படுகிற வாத்தியமான பேரிகையின்
உருவத்தையும், எரி விழி உரகம்உம் – நெருப்புப் போன்ற கண்களையுடைய
பாம்பின் உருவத்தையும், எழுது – (முறையே) எழுதியுள்ள, கொடி உடையவர் –
துவசத்தையுடையவர்களான தருமபுத்திரன் துரியோதனன் என்னுமிவரது, இரு
படையின்உம் – சேனையிரண்டிலும்,- வெறி கொள் – பெருங்கோபத்தைக்
கொண்ட,மதம் மலைகள் உம் மதம் மலைகள்உம் – மதங் கொண்ட மலைபோன்ற
யானைகளும் யானைகளும்,- விசயம் மிகுவன – வெற்றி மிகுவனவாகிய, இரதம்உம்
இரதம்உம் – தேர்களும் தேர்களும்,- நெறி கொள் – முறைமையைக் கொண்ட,
நவகதி – ஒன்பதுவகை நடைகளையுடைய, இவுளிஉம் இவுளிஉம் – குதிரைகளும்
குதிரைகளும், – நிருதர் குலம் நிகர் – அரக்கர் கூட்டத்தை யொத்த, விருதர்உம்
விருதர்உம் – காலாள் வீரர்களும்,- நறிய தொடை – நறுமணமுள்ள மாலைகளைத்
தரித்த, முடி நிருபர்உம் நிருபர்உம் – கிரீடாதிபதிகளான அரசர்களும் அரசர்களும்,
நடலை அமரிடை – நடுக்கத்தைத்தருகின்ற போரில், அடலுடன் – வலிமையோடு,
நடவ – எதிர்த்துச்செல்ல,- (எ -று.)

இரவி மதலையும், இரவி தன் மதலையர் இருவர் மதலையும், இருவரும்,
எதிர் எதிர்,
புரவிமிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு
பல கதிகளின்
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில்
எழ, நனி பரவி இருள்
வர, நிரை நிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே.26- கன்னனும் நகுலனும் குதிரைமேலேறிப் பொருதல்.

இரவி மதலைஉம் – சூரியகுமாரனான கர்ணனும், இரவி தன்
மதலையர் இருவர் மதலைஉம் – சூரியபுத்திரராகிய அசுவினீ தேவரென்னும்
இரட்டையரது குமாரனான நகுலனும், இருவர்உம் – இவ்விரண்டுபேரும், எதிர்
எதிர்- எதிர்க்கு எதிராக, புரவி மிசை – குதிரைகளின்மேல் (ஏறிக்கொண்டு),
விசை பட -வேகமாக, வலம் இடம் – வலமும் இடமுமாக, நிகழ் – செல்லுகின்ற,
புரிவினுடன் -சாரிகளுடனே , அமர் பொரு – போர்செய்கின்ற, பல கதிகளின் –
பலவகைநடைகளால் (பூமியின் துகளெல்லாம் மேலெழுப்பப் படுதலால்),- அரவின்
அதிபதி -(பூமியைத்தாங்குகின்ற) சர்ப்பராசனான ஆதிசேஷனது, முடி கெழு –
தலையிற்பொருந்திய, சுடிகையின் – உச்சிக் கொண்டையிலேயுள்ள, அருணம்
மணி -செந்நிறமுள்ள மாணிக்கத்தினது, வெயில் – சூரியகாந்தி போன்றஒளி,
அவனியில் -பூமியிலே,  எழ – விளங்காநிற்க,- நனி பரவி – மிகுதியாய்ப் பரந்து,
இருள் வர -இருட்டுவரும்படி, நிரை நிரை – கூட்டங் கூட்டமாக, எழு –
மேலெழுகின்ற, துகள் -புழுதிகள்,- பகல் செய் – பகலைச்செய்கின்ற, ஒளி –
ஒளியையுடைய, வெயில் -சூரியகிரணங்களை, செருகி – மறைத்து, பருகின –
மூடின; (எ -று.)

     துகள் வெயிலைமறைத்தாலும், மணிவெயில் அவனியி லெழுந்த தென்க:
உயர்வுநவிற்சியணி – வலமிட நிகழ்புரிவு – வலசாரியும், இடசாரியும். அசுவிநீதேவர்
– தேவவைத்தியர்; இவர் – பெண்குதிரை வடிவங்கொண்டு வனத்தில் ஒளித்திருந்த
சமிஜ்ஞையென்னும் மனைவியினிடத்துக் குதிரை வடிவமாய்ச்சேர்ந்த சூரியனுக்குப்
பிறந்த பிள்ளைகள்.   

அசைவு இல் தொடை அடி, கசை, குசை உரம், நினைவு அறியும்
உணர்வின; வளமையும் உடையன;
வசை இல் சுழியன; பழுது அறு வடிவின; வருணம் மொழி குரல்
மன வலி மிகுவன;
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன; விபுதர் குலபதி விடு
பரி நிகர்வன;-
இசைகள் ஒருபது திசைகளும் எழுதிய இறைவர் இருவரும்
மிசைகொளும் இவுளியே.27.- அவர்கள் குதிரைகளின் வருணனை

இசைகள் -(தமது) கீர்த்திகளை, ஒருபது திசைகள் உம் – பத்துத்
திக்குக்களிலும், எழுதிய – எழுதிநாட்டிய, இறைவர் இருவர்உம்- அரசர்கள்
இருவரும்[கர்ணனும் நகுலனும்], மிசைகொளும் – ஏறியுள்ள, இவுளி – குதிரைகள்,-
அசைவு இல் -சோர்தல் இல்லாத, தொடை அடி-(தம்மேல் ஏறியவரது)
தொடைகளின் அடிகளாலும், கசை – சவுக்கின் அடிகளாலும், குசை உரம் –
கடிவாளத்தையிழுக்கும் வலிமையாலும், நினைவு – அவர்களெண்ணத்தை,
அறியும் -தெரிந்து கொள்ளுகின்ற, உணர்வினை – நல்லறிவையுடையவை;
வளமைஉம்உடையன – வளர்ச்சியையும் உடையவை; வசை இல் சுழியன – குற்ற
மில்லாதசுழிகளை யுடையவை; பழுது அறு வடிவின – குற்றமில்லாத வடிவத்தை
யுடையவை; வருணம் – நிறமும், மொழி குரல் – கனைக்கின்ற ஒலியும், மனம்
வலி -மனத்தின் ஊக்கமும், மிகுவன – சிறந்துள்ளவை: விசை கொள் –
வலிமைகொண்ட,பல கதியின்உம் – பலவகை நடைகளிலும், விரைவு உறுவன –
வேகம்பொருந்துபவை; விபுதர் குலபதி – தேவர்கூட்டத்துக்குத் தலைவனான
இந்திரன், விடு – செலுத்துகின்ற, பரி -(உச்சைச்சிரவ மென்னும் வெள்ளைக்)
குதிரையை, நிகர்வன – ஒத்திருப்பவை; (எ-று.)

     குற்றமுள்ள சுழிகள் – சந்திரம், அண்டாவர்த்தம், கௌவகம், காகாவர்த்தம்,
முன்வளையம், கேதாரி, கேசாவர்த்தம், பட்டடை என்பன. குற்றமற்றசுழி –
கழுத்தில்வலமாகச் சுழிந்திருக்குந் தேவமணி முதலியன. 

முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண்
அரவு எழுதிய
கொடியும் உடையவன் எலுவலும், முரசு உயர் கொடியில் எழுதிய
குருபதி இளவலும்,
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும், நிமிர விடு கணை
நிரைநிரை முடுகவும்,
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது
இகலொடு புரியவே,28.- கர்ணநகுலரது போர்

இதுமுதல் ஐந்து கவிகள் – குளகம்.

     (இ-ள்.) முடிஉம் – கிரீடத்தையும், ஒரு கவிகைஉம் – ஒற்றை (வெண்கொற்ற)க்
குடையையும், இரு கவரிஉம் – இரண்டு சாமரங்களையும், முதிரும் எரி விடம்
அரவு எழுதிய கொடிஉம் – மிக்க வெதும்புகின்ற விஷத்தையுடைய கோபிக்கிற
பாம்பின் வடிவத்தை யெழுதியுள்ள துவசத்தையும், உடையவன் – உடையவனான
துரியோதனனுடைய, எலுவல்உம் – தோழனாகிய கர்ணனும்,- முரசு – முரசத்தின்
வடிவத்தை, உயர் கொடியில் – உயர்ந்த துவசத்தில், எழுதிய-, குரு பதி –
குருகுலத்துக்குத் தலைவனான தருமபுத்திரனது, இளவல்உம் – தம்பியாகிய
நகுலனும்,- நெடிய வரி சிலை – நீண்ட கட்டமைந்த (தமது) வில், நிலைபெற
வளையஉம் – நிலையாக வளைந்திருக்கவும்,- நிமிர விடு கணை –
வேகமாய்எய்யப்படுகின்ற (தமது) அம்புகள், நிரை நிரை முடுகஉம் – வரிசை
வரிசையாகவிரைந்து செல்லவும்,- இடியில் – இடியோசையைக்காட்டிலும்,
எழுமடி – ஏழுமடங்குஅதிகமாக, அதிர்குரல் – ஆரவாரிக்கின்ற ஓசை,
விளையஉம் – உண்டாகவும்,-இவுளி அமர் – குதிரைமேலிருந்து செய்யும் போரை,
கடிது இகலொடு – மிக்கவலிமையுடனே, புரிய – செய்ய,- (எ -று.)

     எலுவல் – கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுட் சீதநாட்டுத் திசைச்சொல்;
பெண்பால் – இகுளை. முடியும் இருகவிகையும் இரு கவரியும் கொடியும் –
அரசர்க்கு உரிய அங்கங்கள்.      

நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில்
குரம் அற,
இகலும் வரி சிலை நடு அற, வடம் அற, இடு கவசம் அற, எழுத
அரும் இரு புய
சிகரி புதையவும், உரம் முழுகவும், நுதல் திலகம் என ஒளி திகழவும்,
மலைதலின்,
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக, நிலனிடை வலன்
உற இழியவே,29.- கர்ணனது குதிரைமுதலியன அழிதல்.

நகுலன்-, -விடு கணை – (தான்) எய்கின்ற அம்புகளினால், விதரண
குண பதி நடவு – தானகுணத்துக்குத் தலைவனான கர்ணன் ஏறிச்செலுத்துகின்ற,
குரகதம் – குதிரையின், நடை பயில் குரம் – கதிகளைப் பயின்ற குளம்புகள்
[கால்கள்], அற – அறுபடவும் – இகலும் – போர்செய்கின்ற, வரி – கட்டமைந்த,
சிலை – (அக்கர்னனது) வில், நடு அற – நடுவில் அற்றுப்போகவும்,-எழுதரும்
இருபுயசிகரி – ஒங்கிவளர்ந்த மலை போன்ற இரண்டு தோள்களில் , புதைய
உம் -அழுந்தவும்,- உரம் – மார்பில், முழுகஉம் – உட்புகவும்,- நுதல் –
நெற்றியில், திலகம்என – சிந்தூரத் திலகம்போல, ஒளி திகழஉம்- (இரத்தத்தால்)
சிவந்த ஒளிவிளங்கவும்,- மலைதலின் – போர் செய்ததனால்,- (கர்ணன்),- மகிழ்வு
சினம் எனும்இரு குணமுடன் – களிப்பும் கோபமும் என்கிற இரண்டு
குணத்தோடும், மனம் மறுக- மனஞ்சுழல, நிலனிடை – பூமியில், வலன் உற –
வலிமை பொருந்த, இழிய -இறங்க, (எ -று.)

     எழு தரும் – இருப்புத்தூணை யொத்த, தோளுமாம், மகிழ்வி –
சிறந்தவீரனோடு தனக்குப்போர்நேர்ந்ததனாலும், தன் தம்பியாகிய அவனது
போர்த்திறத்தைப் கண்டதனாலு மென்க.  

இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு
கொடுவர, விரி கதிர்
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு
புகுதலும், உயர் பரி
ஒழிய, நகுலனும் ஒரு தன் இரதமிசை உபரிசரர் என, உரனொடு புகுதர,
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும், விசைய குரகதம்
விசையொடு கடவவே,30.- கர்ணன் தேரிலேற நகுலனும் தேரிலேறுதல்.

இழியும் அளவையின் -(கர்ணன் குதிரையினின்று)
இறங்கியமாத்திரத்தில்,- வினை உடை வலன் -(தனக்கு உரியவனான
அக்கர்ணனது)தேர்த்தொழிலிலே வல்ல சாரதி, ஒர் இரதம். ஒருதேரை,
விரைவொடு – வேகத்தொடு,கொடு வர – கொண்டுவரவே, – விரி கதிர்
பொழியும் இள வெயில் -மிக்ககிரணங்களைச்சொரிகிற இளமையான
வெயிலையுடைய, இரவி முன் உதவியபுதல்வன் – சூரியன் முன்னே பெற்ற
குமாரனாகிய அக் கர்ணன், விறலொடுபுகுதலும் – வலிமையோடு(அத்தேரில்)
ஏறியவளவில்,- நகுலனும்-, உயர் பரி ஒழிய -உயர்ந்த(தன்) குதிரை நீங்கும்படி,
(அதனைவிட்டு) [தான் ஏறியிருந்த குதிரையைவிட்டு என்றபடி]. ஒரு தன் இரதம்
மிசை – தனது ஒரு தேரின் மேல், உபரிசார் என- மேலே [ஆகாயத்தில்]
சஞ்சரிக்கிற தேர்கள் போல, உரனொடு – வலிமையோடு ,
புகுதர- ஏறிநிற்க,- விழியின் மணி நிகர்-( அவர்வர்க்குக்) கண்ணின் கருமணி
போன்ற[மிக அருமையான], வலவன்உம் வலவன்உம் – தேர்ப்பாக ரிருவரும்,
விசையகுரகதம் – வெற்றியையுடைய (தேர்க்) குதிரைகளை, விசையொடு –
வேகத்தோடு, கடவ – செலுத்த,-(எ-று.)-உபரிசரர் எனப் பன்மையாற்
கூறினது,கர்ணனுக்கும் உவமையாதற் பொருட்டென்க.

கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும், இருவரும்
இரு சிலை
அடர வளைவுற, நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள்
அளவு இல சிதறினர்;
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு
புயல் மழை என விழ,
உடலம் உகு குருதியின் நனையினர், அருகு உதவி செய வரு
தரணிபர் உருளவே.31.- கர்ணனும் நகுலனும் பொருதல்.

கடவும் -(அப்பாகர்களாற்) செலுத்தப்படுகின்ற இரதம்உம்
இரதம்உம் -அத்தேரிரண்டும், உருள் – சக்கரங்களால், கதி கடுக –
நடைவிரைவுபெற, வருதலும்- வந்தவிளவில்,- இருவர்உம் – கன்னனும் நகுலனும்,
இரு சிலை – (தம்) வில்இரண்டும், அட வளைவு உற – நன்றாக வளைவு பெற
(வளைத்து), எயிறு உடை -பற்களையுடைய, அயில் கொள் – கூர்மையைக்
கொண்ட, அளவு இத -அளவில்லாதவையாகிய, பகழிகள் – அம்புகளை,
நொடியினில் -ஒருமாத்திரைப்பொழுதிலே, சிதறினர் – சிந்தினார்கள்: இவர் –
இவர்கள், அகல்வெளி முழுவதுஉம்- பரந்த ஆகாயத்தினிடம் முழுவதிலும்,
பொழியும் – சொரிகிற,மழை என – ஏழுமேகங்களின் மழைபோல, விழ –
விழுவதனால், – உதவி செயஅருகு வரு தரணிபர் – (அவ்விருவர்க்கும்
போரில்) துணை செய்தற்காக அருகில்வந்த அரசர்கள், உடலம்உகு குருதியின்
நனையினர் – உடம்புமுழுவதும் பெருகுகிற இரத்தத்தினால் நனைந்தவர்களாய்,
உருள – (கீழேவிழுந்து) புரள,- (எ – று.)

     நகுலனுக்கு உதவிசெய்தற்காக அருகில்வந்த இராசாக்கள் கர்ணனது
அம்புமழையினாலும், கர்ணனுக்கு உதவிசெய்தற்காக அருகில்வந்த அரசர்கள்
நகுலனது அம்புமழையினாலும் புண்பட்டுக் குருதியில் நனைந்து கீழ்விழுந்து
உருளலானா ரென்க, பி – ம்:- உயர்கதி. கடுகி   

இருவர் பரிகளும் உரன் உற முழுகின; இருவர் வலவரும் விழ,
எரி கதுவின;
இருவர் இரதமும் அழிய, முன் முடுகின; இருவர் துவசமும் அற,
விசை கடுகின;
இருவர் சிலைகளும் நடு அற, மருவின; இருவர் கவசமும்
இடை இடை கெழுமின;
இருவர் கவிகையும் மறிதர, வருடின;-இருவர் உடலமும் எழுதின
கணைகளே.32 – கர்ணநகுலரது தேர்முதலியன அழிதல்.

கணைகள் – (கர்ணனும் நகுலனும் தம்மில் ஒருவர்க்கொருவர்
எதிராகஎய்த) அம்புகள்,- இருவர் பரிகள்உம் – இருவர் தேர்க்குதிரைகளின்
உடம்பிலும்,உரன் உற – வலிமைபொருந்த, முழுகின – செருகின; இருவர்
வலவர்உம் -இருவர்தேர்ப்பாகரும், விழ – இறந்துகீழ்விழும்படி, எரி கதுவின –
நெருப்புப்போலபற்றின; இருவர் இரதம்உம் – இருவர்தேரும், அழிய –
அழியும்படி, முன் முடுகின -விரைந்து ஊடுருவின; இருவர் துவசம்உம்- இருவர்
கொடிகளும், அற – அறும்படி,விசை கடுகின – வேகமாய்ச் சென்றன; இருவர்
சிலைகள்உம் – இருவர்விற்களும்,நடு அற – நடுவில் அற்றுப்போம்படி, மருவின –
பொருந்தின; இருவர் கவசம்உம்- இருவர்கவசங்களிலும், இடை இடை –
இடையிடையே, கெழுமின – தைத்தன;இருவர கவிகைஉம் – இருவர்குடைகளும்,
மறிதர – சாயும் படி, வருடின – தடவின;இருவர் உடலம்உம் – இருவருடம்பிலும்,
எழுதின – கிளறின: (எ -று.)- உரன்உற -மார்பிற் பொருந்த எனினுமாம். 28-
ஆம் பாடல் முதல் செயவெனெச்சங்களைஅடுக்கி, இச்செய்யுளில் ‘எழுதின’
என்றுமுடிக்க.

கன்னனும் பரி நகுலனும் தம காலின் நின்றிடவே,
பின்னரும் பொரு பாகர் தந்த பிறங்கு தேர்மிசையார்,
முன்னர் அம்பு தொடுத்த போரினும் மும் மடங்கு பொர,
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே,33.- கர்ணனும் நகுலனும் வேறுதேரேறிக் கடும்போர்
தொடங்குதல்.

கன்னனும்-, பரி – குதிரைத்தொழிலில் வல்ல, நகுலனும்-,(தேரழிந்து),
தம காலின் – தம்முடைய கால்களினால், நின்றிட – கீழேநிற்க,(அதுநோக்கி),
பின்னர்உம் – மறுபடியும், பொருபாகர் – போரில் வல்லதேர்ப்பாகர், தந்த –
கொணர்ந்த, பிறங்கு தேர் மிசையார் – விளங்குகிற தேரின்மேல் ஏறினவர்களாய்,-
முன்னர் – முன்னே, அம்புதொடுத்த – பாணங்களை எய்துசெய்த, போரின்உம் –
யுத்தத்தைக்காட்டிலும், மும்மடங்கு – மூன்றுபங்கு அதிகமாக, பொர –
போர்செய்ய (எண்ணி),- மன்னர் யார்உம் மதிக்கும் ஆறு – (கண்ட கேட்ட)
அரசர்களெல்லாரும் நன்கு மதிக்கும்படி, அமர் தொடங்கினார் – போர்
தொடங்கினார்கள்; (எ -று.)

     இதுமுதற் பதினாறு கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள்
மாச்சீர்களும், இரண்டுநான்காஞ் சீர்கள் விளச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று
காய்ச்சீருமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.  

அல்லி நாள்முகை அம்புயங்கள் அலர்த்தும் நாதன் மகன்
சொல்லினால் உயர் ஆயுள் வேதியர் சுதனை, ‘இன்று அமரில்
கொல்லின் நா தவறும்கொல்?’ என்று, ஒரு கோலினால் அழியா,
வில்லின் நாண் அழியா, ‘நடக்க’ என மீள விட்டனனே.34.- கர்ணன் நகுலனை வென்று உயிரோடுவிடுதல்.

அல்லி – அகவிதழ்களையுடைய, நாள் – புதிய, முகை அம்புயங்கள்
[அம்புயம்முகைகள்]- தாமரையரும்புகளை, அலர்த்தும் – மலரைச்செய்கின்ற,
நாதன்- தலைவனான சூரியனுடைய, மகன் – குமாரனான கர்ணன்,- ‘சொல்லினால்
உயர் -புகழினாற் சிறந்த, ஆயுள் வேதியர் சுதனை – வைத்திய
சாஸ்திரம்வல்லவர்களானஅசுவினீதேவரது குமாரனான நகுலனை, இன்று –
இப்பொழுது, அமரில் -யுத்தத்தில், கொல்லின் – (நான்) கொன்றால், நா தவறும் –
(முன்புகொல்லெனென்றுகுந்திக்குச்சொன்ன எனது) நாக்குத் தவறிப்போம்,’ என்று –
என்றுஎண்ணி,- ஒருகோலினால் – அம்பு ஒன்றைக்கொண்டு, அழியா வில்லினால் –
அழியாதவில்லினாலே, அழியா- தோற்கச்செய்து,- நடக்க என-‘(நீ உயிருடன்)
செல்வாயாக’என்று (தனது பெருமிதந் தோன்றச்) சொல்லி, மீள – திரும்பும்படி,
விட்டனன்-;(எ-று.)

     ஆயுர்வேதமாவது வியாதியின் காரணம் குறிமுதலியவற்றை அறிந்து மந்திரம்
ஒளஷதம் முதலியவற்றால் சிகிச்சை செய்யும்படி ஆயுள் ஆரோக்கியம்
முதலியவற்றைச் சொல்லும் வைத்திய நூல் ‘அமரில்கொல்லின்நாதவறும்’
என்றது -பாண்டவர்க்கு இராச்சியங்கேட்கும்பொருட்டுத் துரியோதனனிடந்
தூதுவந்தகிருஷ்ணனது சொல்லின்படி குந்தி கர்ணனிடம் வந்து, தான் அவன்
தாயென்பதையும் பாண்டவர் அவன்சகோதரரென்பதையும் தெரிவித்துப்
பாண்டவர்பக்கஞ் சேரவேண்டுமென்று சொல்லியதற்குக் கர்ணன் இணங்கானாக,
பின்னர்க் குந்தி அருச்சுனன் மீது நாகாஸ்திரத்தை இரண்டாம்முறை
விடாமலிருக்கவும் மற்றைத் தம்பிமாரைக் கொல்லாமலிருக்கவும்
வேண்டுமென்றுகேட்ட வரங்க ளிரண்டைனையும் கர்ணன் கொடுத்தன
னாதலின். நா- சொல்லுக்கு. இலக்கணை. கொல் – அசைநிலை. பி-ம்:-
வில்லினாணழியா.     

நின்ற மா நகுலற்கு வன் துணையாகி நின்றிடலால்,
மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும்,
வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்தனையும்,
கொன்று, வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே35.- மகதராசனையும் விடதரனையும் கர்ணன் கொல்லுதல்.

கர்ணன்),- நின்ற -(முதுகுகாட்டி) நின்ற, மா நகுலற்கு –
குதிரைதொழிலில்வல்ல நகுலனுக்கு, வல் துணை ஆகி- வலிய உதவியாகி,
நின்றிடலால் – நின்றதனால்,- மன்றல் மாலை – வாசனையையுடைய போர்
மாலையைத்தரித்த, விசாலம் மார்பினன் – அகன்ற மார்பினையுடையவனான,
மகதபூபனைஉம் – மகததேசத்தரசனையும்,- வென்றி வேல் முருகற்கு –
வெற்றியைத்தருகிற வேலாயுதத்தையுடைய சுப்பிரமணியக்கடவுளுக்கு, நேர்புகல் –
(பல பராக்கிரமங்களில்) ஒப்பாகச் சொல்லப்படுகின்ற, விடதரன்தனைஉம் –
விடதரனென்பவனையும், கொன்று-,- வாசவன் மைந்தன்- இந்திரகுமாரனான
அருச்சுனனது, மா முனை – சிறந்த போர்செய்யுமிடத்திற்கு, குறுக – சமீபமாக,
ஏகினன் – சென்றான்; (எ -று.) பி -ம்: புகழ்.

மடங்கல்மேல் எழு மதமும் மேலிட வரு பணைக் கரிபோல்,
விடம் கொள் சாயக வில்லி சென்று, தன் வில் குனித்து, அடு போர்
தொடங்கும் முன், பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன்
திடம் கொள் மார்பினில் அம்பு இரண்டு தெரிந்து விட்டனனே.36.- கர்ணனும் அருச்சுனனும் போர்செய்தல்.

விடம் கொள்- (தவறாது பகையழித்தலில்) விஷம் போன்ற,
சாயகம் -அம்புகளையெய்கின்ற, வில்லி – (காலப்ருஷ்டம் என்னும்)
வில்லையுடையவனானகர்ணன்,- மடங்கல்மேல்- சிங்கத்தின்மேல், எழு மதம்உம்
மேலிட -ஏழுவகைமதமும் மிக, வரு – (போர்க்கு) வருகிற, பணை கரிபோல் –
பருத்தயானைபோல, சென்று – (அருச்சுனனுக்கு எதிரிற்) போய், தன் வில்
குனித்து -தனது வில்லை வளைத்து, அடு போர் – கொல்லுகின்றபோரை,
தொடங்குமுன் -தொடங்குமுன்னமே,- வில் எடுத்தவர் பலர் சொல்லும் வில்லி –
விற்பிடித்தவீரரெல்லாராலும் (சிறப்பித்துச்) சொல்லப்படுகின்ற (காண்டீவமென்னும்)
வில்லையுடையவனான அருச்சுனன்,- அவன்- அக்கர்ணனது, திடம்
கொள்மார்பினில் – வலிமையைக்கொண்ட மார்பில், அம்பு இரண்டு – இரண்டு
பாணங்களை, தெரிந்து விட்டனன் – தேர்ந்தெடுத்து எய்தான்; (எ – று.)

     மடங்கல் மேல் வரு கரி – இல்பொருளுவமம், இவ்வுவமையால்,
அருச்சுனனது உயர்வும், கர்ணனது இழிவும் விளங்கும். ஒரு பெரிய யானை
மதம்மிகுதலால் தன் நிலையையுஞ் சிங்கத்தின் நிலையையும் மறந்து சிங்கத்துடன்
போர்செய்தற்கு வந்தாற்போலும் இது என்க. விடங்கொள் சாயகம் – நஞ்சுதீற்றிய
அம்புமாம்      

அருண வெங் கதிர் ஆயிரத்தவன் அன்பினால் உதவும்
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா,
‘வருணமும் பெயரும் பிறிந்திலர்; மனனும் ஒன்று’ எனவே
தருண வாள் நிலவு எழ நகைத்து, உரைதந்து போயினனே.37.- கர்ணன் கிருஷ்ணார்ச்சுனரை வெல்லமாட்டாமல்
விலகுதல்.

அருணம் – செந்நிறமான, வெம் கதிர் ஆயிரத்தவன்- வெவ்விய –
ஆயிரங்கிரணங்களையுடையவனாகிய சூரியன், அன்பினால் உதவும் – அன்போடு
பெற்ற (மகனான), கருணைஉம் – கர்ணனும்,- சில பகழி – சில அம்புகளை, ஈர்
இருகண்ணர் மார்பில் – ஒப்பில்லாத இரண்டு கிருஷ்ணரது [கிருஷ்ண
அருச்சுனரது]மார்புகளில், விடா – செலுத்தி,- (அவையொன்றும் பயன்
படாமையால்),- ‘(இவ்விருவரும்), வருணம்உம் – நிறமும், பெயர்உம் – பேரும்,
பிறந்திலர் – வேறுபட்டிலர்;மனன்உம் ஒன்று – (அவைமாத்திரமன்றி இவர்கட்கு)
மனமும் ஒன்றே,’ என -என்று, வாள் தருணம் நிலவு எழ – ஒளியையுடைய
இளமையான சந்திரகாந்திபோன்ற பற்களின் வெள்ளொளி வெளித்தோன்றும்படி,
நகைத்து – சிரித்து,வரைதந்து – சொல்லிக் கொண்டு, போயினான் – (அப்பாற்)
செல்பவனானான்

அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை, ‘நீ
இன்று போய் இனி நாளை வா’ என இனிது இயம்பினனால்-
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன்
கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான்.8.- அருச்சுனன் கர்ணனை ‘நாளைவா’ என்று விடுதல்.

அன்று – அப்பொழுது, போர்புரி – யுத்தஞ்செய்த, சேனையின் பதி
ஆன – (கௌரவ) சேனைத்தலைவனான, வீரனை – வீரனாகிய கர்ணனை நோக்கி,
‘நீ இன்று போய் – நீ இன்றைக்குப் (போர் செய்யாமல் உயிரோடு மீண்டு) போய்,
இனி – பின்பு, நாளைவா – நாளைக்கு (ப் போர்க்கு) வருவாயாக,’ என – என்று,
இனிது இயம்பினன் – இனிமையாகச் சொன்னான்: (யாவனெனில்,-) வென்றி கூர் –
வெற்றிமிகுந்த, வரி – கட்டமைந்த, வின்மையால் – வில்லின் தொழிலால், அடல்
வெம் அரக்கரை – வலிமையையுடைய கொடிய இராக்கதரை, முன் –
முன்னே[திரோதாயுகத்தில்], கொன்ற-, காளையை – வீரனாகிய ஸ்ரீராமபிரானை,
ஒத்த-, பேர் இசை கொண்ட – மிக்க புகழைக் கொண்ட, ஆண்மையினான் –
பராக்கிரமமுள்ள அருச்சுனன்;

     ஸ்ரீராமன் முதல்நாட்போரிலே இராவணனை ‘இன்றுபோய் நாளை நின்
சேனையொடு வா’ என்றுகூறி விட்டாற்போல, அருச்சுனனும் தளர்ச்சியுற்ற
கர்ணனைநோக்கி, ‘இன்றுபோய்ப்போர்க்கு நாளைவா’ என்று இனிது
இயம்பிஉயிரோடு விட்டதனால், இங்கு இராமனை உவமைகூறினார்; இங்ஙனம்
விட்டது, தழிஞ்சி என்னும் புறப்பொருள் துறை. 

அல்லி அம்புயம் அனைய கண்ணினன் அனுசனும், குனி வில்
சல்லியன் பெயர் என விளங்கிய தானை மன்னவனும்
பல்லியங்கள் துவைப்ப, நீடு பணைப் பகட்டுடனே
வல்லியம் பொருமாறு எனப் பொர, மாறுஇலார், ஒரு பால்;9.- சாத்தகியும் சல்லியனும் தம்மிற்பொருதல்.

ஐந்து கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) மாறு இலார் – ஒப்பற்றவராகிய,- அல்லி அம்புயம் அனைய
கண்ணினன் அனுசன்உம் – அகவிதழ்களையுடைய செந்தாமரைமலர்போன்ற
திருக்கண்களையுடையவனான கண்ணபிரானது தம்பியாகிய சாத்தகியும்,- குனி
வில் -வளைத்த வில்லையுடைய, சல்லியன் பெயர் என விளங்கிய –
சல்லியனென்றுபேர்விளங்கப்பெற்ற, தானை மன்னவன்உம் – சேனைகளையுடைய
அரசனும்,- பல்இயங்கள் துவைப்ப – பலவகைவாத்தியங்கள் முழங்க,- நீடு பணை
பகட்டுடனே-உயர்ந்த பருத்த ஆண்யானையுடனே, வல்லியம் – புலி, பொரும்
ஆறு என -போர்செய்யும் விதம்போல், ஒரு பால் – ஒரு பக்கத்தில், பொர –
போர்செய்ய,-(எ-று.) – செயவெனெச்சங்கள் அடுக்கி, 43 – ஆங்கவியில் முடியும்,
பணை -தந்தமுமாம். அநுஜன் – பின் பிறந்தவன்; முன் பிறந்தவன் ‘அக்ரஜன்’
எனப்படுவன்.யானை புலிகளை உவமை கூறியதனால், இவ்விருவரும் தம்மிற்
சமபலமுடையவரென்றவாறாம்.  

மாரனுக்கு இளையாமல் அம்பையை மா தவத்து விடும்
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெஞ்
சூரனுக்கு எதிராகி மேனி துலங்கு சேரன் எனும்
வீரனுக்கும் மிகுத்த பேர் அமர் விளைய, வேறு ஒரு பால்;40.- சாலுவனும் சேரனும் தம்மிற்பொருதல்.

மாரனுக்கு – மன்மதனுக்கு, இளையாமல் – தோற்காமல்
[வசப்படாமல்],அம்பையை – அம்பையென்பவளை, மா தவத்து விடும் – சிறந்த
தவவொழுக்கத்திலே செலுத்திவிட்ட, தீரனுக்கு உம் – தைரியசாலியான
சாலுவனுக்கும்,- ஓர் ஆழிகொண்டு – ஓர சக்கரத்தால், செலுத்து – செலுத்தப்படுகிற,
தேர் உடை – தேரையுடைய , வெம்  – வெவ்விய, சூரனுக்கு – சூரியனுக்கு, எதிர்
ஆகி – ஒப்பாகி, மேனி துலங்கு – உடம்பு விளங்குகின்ற, சேரன் எனும்
வீரனுக்குஉம் – சேரநாட்டரசனென்கிற வீரனுக்கும், வேறு ஒரு பால் –
மற்றொருபக்கத்தில், மிகுத்த பேர் அமர் – சிறந்தபெரும்போர்,விளைய-நடக்க,-
(எ-று.)

     மாரன் – (பிராணிகளை ஆசைநோயால்) மரணவேதனைப்படுத்துபவன்.
அம்பை – காசிராசனது பெண்கள் மூவரில் ஒருத்தி; சுயம்வரங் கோடித்த பொழுது,
பீஷ்மன் காசிராசன் புத்திரிகளாகிய கன்னியர் மூவரையும் தன் தேரின்மேல்
ஏற்றிக்கொண்டு செல்லுகையில் சுயம்வரத்துக்கு வந்திருந்த மற்ற அரசர்யாவரும்
சினந்து திரண்டுவந்து போர்செய்துதோற்றுப் பரிபவப்பட்டுப் பின்னிட, அவர்களுட்
சிறிது போரில் முன்னிட்டசாலுவனிடத்து அம்பை மனத்தைச் செலுத்த
அதனையறிந்த வீடுமனால் அனுப்பப்பட்டுச் சாலுவனிடஞ் சென்றுசேர, அவன்
‘பகைவர் கவர்ந்துபோன உன்னை யான் தொடேன்’ என்று மணம்மறுத்துவிட,
பின்னர் இருவராலும் கைவிடப்பட்ட அவள் தவஞ்செய்து வரம்பெற்று வீடுமனைக்
கொல்லுதற்குச் சிகண்டியாகப்பிறந்தாளென்பது முன்னடியிற் குறித்த கதை. ஒராழி –
காலரூபமான ஏகசக்கரம். ‘ஓர் வாளி கொண்டு செலுத்து தேருடை வெஞ்,
சூரனுக்கெதிராக மேனிதுளக்கமெய்திய தோள்,’ என்னும் பாடத்துக்கு –
அருச்சுனனுக்கும், அவனுக்குஎதிரிற் சென்று உடம்புநடுக்கமடைந்ததோள்
வலிமையையுடைய கர்ணனுக்கும் (மீண்டும்) பெரும்போர்விளைய எனப்
பொருள்கொள்க      

முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும்
பழுது அறும்படி தெளிஞர் ஏறிய பலகை ஒன்று உடையான்
வழுதியும், தனி மதி நெடுங் குடை மன்னன் மாதுலனும்,
பொழுது சென்றிடும் அளவும் வெஞ் சமர் புரிய, வேறு ஒரு பால்41.- பாண்டியனும் சகுனியும் தம்மிற் பொருதல்

முழுது உணர்ந்தருள் – எல்லாவற்றையும் அறிந்தருளிய, முனி
வரன்- முனிவர்களிற் சிறந்தவனான அகத்தியமகா முனிவன், புகல் –
எடுத்துச்சொன்ன, மும்மை வள்தமிழ்உம் – (இயல் இசை நாடகம் என்னும்)
மூன்றுவகைச் சிறந்ததமிழையும், பழுது அறும்படி – குற்றமில்லாமல், தெளிஞர் –
அறிந்தவர்களானதெய்வப் புலவர்கள், ஏறிய – ஏறிவீற்றிருத்தற்கு இடமான, பலகை
ஒன்று உடையான்- ஒப்பற்ற சங்கப்பலகையையுடையவனாகிய, வழுதிஉம் –
பாண்டியராசனும்,- தனிமதி நெடுங் குடை – ஒப்பற்ற  பூர்ணசந்திரன் போன்ற
பெரிய குடையையுடைய,மன்னன் – துரியோதனராசனது, மாதுலன்உம் – மாமனாகிய
சகுனியும்,- பொழுதுசென்றிடும் அளவு உம் – பகற்பொழுது கழியுமட்டும், வேறு
ஒருபால் -மற்றொருபக்கத்தில், வெம் சமர் – கொடிய யுத்தத்தை, புரிய –
செய்ய; (எ – று.)

     பூர்வத்தில் மகாமுனிவர்க ளெல்லாருஞ் சேர்ந்து ஸம்ஸ்கிருத பாஷையை
அபிவிருத்திசெய்து காசியில் வடமொழிச்சங்கம்ஒன்று ஏற்படுத்த,
அச்சங்கப்புலவர்களுள் ஒருவராகிய அகத்தியனார் மற்றைப் புலவர்களோடு
பலுகாலுந் தருக்கஞ்செய்துவந்து ஒரு நாள் அவர்களோடு மாறுகொண்டு
அவர்களிறுமாப்பை அடக்குதற்பொருட்டுச் சிவபிரானிடஞ்சென்று தம்கருத்தை
வெளியிட, உடனே பரமசிவன் தமிழ்ப்பாஷையை உபதேசிக்க, தத்க்ஷணமே
தக்ஷிணத்திலுள்ள பொதியமலைக்கு வந்து தனிவாசஞ்செய்து இலக்கணநூல்களை
இயற்றி, அவற்றைத் தம் முதல்மாணாக்கராகிய தொல்காப்பியர் முதலிய
பன்னிருவர்க்குங் கற்பித்தருளி மூவகைத்தமிழையுந்தழைத்தோங்கிப் பரவச்
செய்ததனால், ‘முனிவரன் புகல் தமிழ்’ எனப்பட்டது. மும்மை – எண்ணின்மேல்
நின்றது. பழுது – ஐயந் திரிபுகள். பலகை -இரண்டுசாணளவிற்குச்
சதுரமாயிருக்கின்றதொரு சிறுபலகையாயிருந்து, சரசுவதியமிசமாயுள்ள மெய்ப்புலவர்
எத்தனைபேர் வந்தாலும் ஒவ்வொருமுழமாக வளர்ந்து அவர்க்கு ஏற இடங்
கொடுக்கும் பீடம்; இப்பலகை மற்றைப்புலவர் கட்குந்தமக்குங்கல்வித்திறத்திலுள்ள
வேறுபாட்டை வெளியிடத்தக்க கருவியொன்றைத்தந்தருளவேண்டுமென வேண்டிய
சங்கப் புலவர்களின் பொருட்டாகத் தென்மதுரைச்சோமசுந்தரக் கடவுளாற்
கொடுத்தருளப்பட்டது.  

குரவர் சொற்கள் மறுத்து வன்பொடு கொண்ட பார் உடையான்
அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன்,
கரவு சற்றும் இலாத சிந்தையன் வாயு வேக கதிப்
புரவி வித்தகன் இளவல் சென்று, அமர் புரிய, வேறு ஒரு பால்;42.- துச்சாதனனும் சகதேவனும் தம்மிற் பொருதல்.

குரவர் – பொரியோர்களுடைய, சொற்கள் – நல்வார்த்தைகளை,
மறுத்து – (கேட்டு நடவாமல்) விலக்கி, வன்பொடு – பலாத்காரமாக, கொண்ட –
(பாண்டவரிடத்தினின்று) பறித்துக்கொண்ட, பார் உடையான்- பூமியை
யுடையவனாகிய,அரவு உயர்த்தவனுக்கு-, அனந்தரம் ஆன தம்பியுடன் –
பின்னே பிறந்த [அடுத்ததம்பியாகிய] துச்சாதனனுடனே,- கரவு சற்றுஉம் இலாத
சிந்தையன் – கபடம் சிறிதும்இல்லாத நல்மனம் உடையவனாகிய, வாயு வேக கதி
புரவி வித்தகன் இளவல் -காற்றின் வேகம்போல விரைந்த நடையையுடைய
குதிரைகளைப் பயிற்றுந் தொழிலில்வல்லவனாகிய நகுலனது தம்பியான
சகதேவன்,- வேறு ஒரு பால் -மற்றொருபுறத்தில், சென்று – போய், அமர் புரிய –
போர்செய்ய,- (எ-று.)- ‘குரவர்’ என்றது உலூக முனிவன், பீஷ்மன், துரோணன்,
கிருபன், விதுரன், கண்ணன்முதலியோரை, அநந்தரம் – வடசொல்

வேரி அம்புயன் வேதம் யாவையும் வில்லின் வேதமும் வல்
ஆரியன் தரு கடவுள் மைந்தனும், அனிலன் மைந்தனுமே,
தூரியம் பல கோடி கோடி துவைப்ப, ‘வெஞ் சமரே
காரியம்; பிறிது இல்லை’ என்று, கலந்து மோதினரே43.-அசுவத்தாமனும் வீமனும் தம்மிற் போர்தொடங்குதல்.

வேரி அம்புயன் – வாசனையையுடைய (திருமாலின் திருநாபித்)
தாமரைமலரில் தோன்றியவனான பிரமதேவனால் வெளியிடப்பட்ட, வேதம்
யாவைஉம் – (இருக்கு முதலிய) வேதங்களெல்லாவற்றையும், வில்லின் வேதம்உம் –
தநுர்வேதத்தையும், வல் – வல்ல, ஆரியன் – துரோணாசாரியனால், தரு –
வளர்க்கப்பட்ட, கடவுள் மைந்தன் உம் – பரமசிவனது குமாரனான
அசுவத்தாமனும்,- அனிலன் மைந்தன் 
உம் – வாயுகுமாரனான வீமனும்,- தூரியம்
பல கோடி கோடி – அநேக கோடிக்கணக்காகிய வாத்தியங்கள், துவைப்ப –
ஒலிக்க, – வெம் சமர்ஏ காரியம் – கொடிய போரே செய்தொழில்: பிறிது இல்லை –
வேறொரு தொழிலில்லை, என்று -என்ற எண்ணி, கலந்து மோதினர் – கை கலந்து
போர்செய்தார்கள்; (எ -று.) -வில்லின்வேதமாவது – வில் முதலிய
ஆயுதங்களிற்பயிலும் வகைகளையும்சத்துருவை வெல்லுதற்குரியமந்திரம் முதலிய
பிரயோகங்களையும் அறிவிக்கிறஆயுதசாஸ்திரம்.      

சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன்-மேல்-
வரு சதாகதி மகனை நால்-இரு வாளி ஏவி, வெகுண்டு,
இரத நேமி குலைந்து, சூதனொடு இவுளி நாலும் விழ,
பொருது சீறினன்,-முன் பயந்த புராரியே அனையான்.44.- அசுவத்தாமன் வீமனைத் தேரழித்தல்.

முன் பயந்த – முன்னே (தன்னைப்) பெற்ற, புராரிஏ – திரிபுர
சங்காரஞ்செய்த பரமசிவனையே, அனையான் – ஒத்தவனாகிய, சுரர் உலோகம்
மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன் -(இறந்து) தேவலோகத்தை
மகிழ்ச்சியோடு அடைந்த துரோணனது சிறந்த குமாரனாகிய அசுவத்தாமன், மேல்
வரு – தன்மேல்எதிர்த்துவருகிற, சதா கதி மகனை – வாயுகுமாரனான வீமனை (ப்
பார்த்து), வெகுண்டு – கோபித்து,- இரதம் நேமி குலைந்து -(அவனது) தேர்ச்
சக்கரங்கள் அழிந்து, சூதனொடு – பாகனும், இவுளி நால்உம் – நான்கு
குதிரைகளும்,விழ – விழும்படி, பொருது – போர்செய்து, சீறினான் –
கர்ச்சித்தான்; (எ-று.)-, இனி,அசுவத்தாமனென்னும் பெயர்பற்றி, ‘மாமகன்’
என்றாருமாம்: மா – குதிரை.

மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெஞ் சினம் மேல்
மூள, மல் புய கிரி தடித்திட, மூரி வில் வளையா,
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர்
தூளம் உற்றிட முதுகிடும்படி தொட்டனன், கணையே.45.- வீமன் அசுவத்தாமனை வெல்லுதல்.

மீள பின்பு, மற்று ஒரு தேரில்ஏறிய-, வீமன் -, வெம் சினம் –
கடுங்கோபம், மேல் மூள – மேல்மேலுண்டாக,- மல் புய கிரி – மற்போரில்வல்ல
மலைகள்போன்ற தோள்கள், தடித்திட – (கோபாவேசத்தாற்) புடைபருக்க,- மூரி
வில்- வலிமையையுடைய- [அல்லது பெரிய ] வில்லை, வாளம்ஒப்பு என –
சக்கரவாளகிரி உவமை யென்னும்படி, வளையா -(வட்டமாக) நன்கு வளைத்து, –
அவன்-அந்த அசுவத்தாமனது, கொடி – துவசமும், வாசி – குதிரைகளும்,
பாகொடு -சாரதியும், தேர் – தேரும், தூளம் உற்றிட- பொடியாய்விடவும், முதுகு
இடும்படி -(அவன்) புறங்கொடுத்துப்போம்படியாகவும், கணை – அம்புகளை,
தொட்டனன் -தொடுத்தான்; (எ -று.) – வாளம் = சக்கரவாளம்: இது, ஏழுதீவு
களையுஞ்சூழ்ந்த ஏழுகடல்கட்கும் அப்புறத்தில் வட்டவடிவாகச் சுற்றி
யிருப்பதொருமலை.

கருதி வாய்த்தது போர்’ எனா, மெய் களித்த கைகயனும்,
சுருத கீர்த்தியும் உடன் மலைந்து தொடங்கினார் ஒருபால்;
கிருத பார்த்திவனுடன் மலைந்து சிகண்டி கெட்டனன், மா
இரதமேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால்.46.- கைகயனும் சுருதகீர்த்தியும் பொர , கிருதவர்மாவோடு பொருது
சிகண்டி தோற்றல்
.

போர்- (சிறந்த) யுத்தம், வாய்த்தது – நேர்ந்தது’, எனா – என்று,
கருதி – எண்ணி, மெய் களித்த – மனங்களிக்கப்பெற்ற, கைகயன்உம் – கேகய
நாட்டரசனும், சுருதகீர்த்திஉம் – சுருதகீர்த்தி யென்பவனும், உடன் மலைந்து –
ஒருவரோடொருவர் எதிர்த்து, ஒரு பால் – ஒருபக்கத்தில், தொடங்கினார் –
(போர்)தொடங்கினார்கள்; சிகண்டி-,ஒருபால் – மற்றொருபக்கத்தில், கிருத
பார்த்திவனுடன் -கிருதவர்மாவென்னும் அரசனோடு, மலைந்து – போர் செய்து,-
மா இரதம்மேல் -பெரிய தேரின்மேற் கட்டப்பட்டுள்ள, கொடிஆடை-
கொடிச்சீலை, வீழ்தர -(அறுபட்டுக்) கீழேவிழும்படி, கெட்டனன்- தோற்று,
ஏகினான் – போனான்; (எ -று.)

     ‘கருதிவாய்த்தது போரெனாமெய்களித்த’ என்ற அடைமொழியைச்
சுருதகீர்த்திக்கும் இயைக்க, கைகயன்பெயர் – விந்தன்; இவன், கௌரவர்
பக்கத்தான்.ஸ்ருதகீர்த்தியென்பதற்கு – பிரசித்தமான கீர்த்தியை யுடையவன்
என்றுபொருள்;இவன் , அருச்சுனனுக்குத் திரௌபதியிடம் பிறந்தவன்.
கொடியாடை – த்வஜபடம். 

தரும பூபதி சேனையின் பதி-சாப ஆசிரியன்
கிருபனோடு மலைந்து, வெஞ் சமர் கெட்டு, நீடு இரதம்,
புரவி, பாகு, தரித்த திண் சிலை, பொன்ற, அன்று உயிரோடு
அரிது போயினன்-வேள்வி ஆகுதி அங்கிவாய் வருவோன்.47.- திட்டத்துய்மன் கிருபனை யெதிர்த்துத் தோற்றல்.

ஆகுதி – நெய்ம் முதலியவற்றை விட்டு ஓமஞ் செய்யப்பட்ட,
வேள்வி அங்கிவாய் – யாகத்தீயினிடத்தில், வருவோன் – தோன்றினவனாகிய,
தருமபூபதி சேனையின் பதி – தருமராசனது சேனைக்குத் தலைவனான
திட்டத்துய்மன்,- சாப ஆசிரியன் -(கௌரவ பாண்டவர்க்கு முதல்)
வில்லாசிரியனான,கிருபனோடு – கிருபாசாரியனுடனே, வெம் சமர் மலைந்து –
கொடி போரைச்செய்து,- நீடு இரதம் – உயர்ந்த தேரும், புரவி – குதிரைகளும்,
பாகு – சாரதியும்,தரித்த திண் சிலை – பிடித்த வலிய வில்லும், பொன்ற –
அழியும்படி, கெட்டு -தோற்று,- அன்று அப்பொழுது, உயிரோடு அரிது
போயினன் — அருமையாகத்தப்பி(ப்பிழைத்து) உயிருடன் போனான்; (எ -று.)-
வருவோன்=காலவழுவமைதி.

திங்களைத் தலையாக மன்னவர் செப்பு மா மரபோர்,
தங்களில் பகை ஆகி, வானவர் தானவர்க்கு எதிராய்,
‘எங்களுக்கு, எழு பார் அடங்கலும்!’ என்று போர் புரியும்
வெங் களத்தின் இயற்கை எங்ஙன் வியந்து கூறுவதே!48.- கவிக்கூற்று: படுகளச்சிறப்பின் கூறற்கருமை.

திங்களை – சந்திரனை , தலை ஆக – ஆதிபுருஷனாக,
மன்னவர் -அரசர்களெல்லாரும், செப்பு – சொல்லுகின்ற, மா மரபோர் – சிறந்த
குலத்தில்தோன்றியவர்களான பாண்டவரும் துரியோதனாதியரும், தங்களில் பகை
ஆகி -தமக்குள்[ஒருவர்க்கொருவர்] பகைவராகி, வானவர் தானவர்க்கு எதிர்
ஆய் – தேவஅசுரர்கட்குச் சமானமாய், ‘எழு பார் அடங்கலும் –
ஏழுதீவுகளாயுள்ளஇப்பூமிமுழுவதும், எங்களுக்கு – எங்களுக்கே (உரியது),’
என்று – என்று (தனித்தனி) சொல்லிக்கொண்டு , போர் புரியும் – போர்செய்கிற,
வெம் களத்தின் – கொடியயுத்தகளத்தினது, இயற்கை – இயல்பை, வியந்து
கூறுவது – புகழ்ந்து சொல்வது,எங்ஙன் – எவ்வாறு? (எ – று.)- அப்போர்க்
களத்தின் இயல்பை வருணித்துச்சொல்லுதல் எம்போலியர்க்கு அரியது ஆயினும்
ஒருவாறு சொல்வேனெனஅவையடக்கங் கூறுமுகத்தால் தோற்றுவாய் செய்தவாறாம்.

     எழு பார் – ஜம்பு, பிலக்ஷம், குசம், கிரௌஞ்சம், சாகம், சால் மலி,
புஷ்கரம்என்பன.     

இற்ற கை கால் செறி களம் முழுதும் கழுகு இட்டன, காவணமே;
உற்றது, கொள் அலகைக் குலம் வெங் களம் உரை பெருகா வணமே,
வெற்று உடல் மன்னர் சரிந்த குடைக்கண் விரிந்தன சாமரமே;
கொற்றம் மிகும் பறை ஓசை அழிந்து குலைந்தன, சா மரமே.49.- இதுமுதற் பதினைந்து கவிகள் – படுகளச்சிறப்பு

இற்ற – அறுபட்ட, கை கால் – கைகளுங் கால்களும், செறி –
நிரம்பவிழுந்து கிடக்கப் பெற்ற, களம் முழுதுஉம் – போர்க்களம் முழுவதிலும்,
கழுகு-(அவற்றைத் தின்னவந்த) கழுகு என்னும் பறவைகள், (மேலே இடைவிடாமல்
நெருங்கிப்பரவி), காவணம் இட்டன – பந்தல் போகட்டன; கொள் –
(அக்கைகால்களைத் தின்ன) எடுத்துக்கொள்ளுகிற, அலகை குலம் –
போய்கூட்டமானது, உரை பெருகா வணம் – சொல்லுக்கு அடங்காதபடி, வெம்
களம்- பயங்கரமான அப்போர்களத்தை, உற்றது – அடைந்தது, வெறு உடல்
மன்னர் -வெறுமையாகிய [அதாவது உயிர் நீங்கிய] உடம்பாய்க் கிடக்கிற அரசரது,
சரிந்தகுடைக்கண் – முறிந்து கீழ்விழுந்த குடைகளிலே, சாமரம் – சா மரங்கள்,
விரிந்தன -பரவலாக விழுந்துகிடந்தன; கொற்றம் மிகும்- வெற்றிமிகுதிக்கு
அறிகுறியான, பறை -பேரிகைகள், ஓசை அழிந்து குலைந்தன- (தோலும் வாரும்
இற்றதனால்) ஒலியிழந்துஅழிந்தவை, சா மரம்ஏ – பட்டமரம் மாத்திரமாய்
நின்றன; (எ-று.)

     உரைபெருகா வ(ண்)ணம் – சொல்லினும் பொருள் மிகும்படி என்றவாறு.
சாமரம் – சமரமென்னும் மானின் சம்பந்தமானது: வட மொழித்தத்திதாந்த நாமம்.
சாமரம் – வினைத்தொகை, இரண்டாம் அடிக்கு, அலகைக்குலம் – பேய்க்கூட்டம்,
உற்று – வந்து, அது கொள்- அவ்வுறுப்பைக் கொள்ளுகிற, வெம் களம் – கொடிய
போர்க்களம், (பேரிசைச்சலால்), உரை பெருகு ஆவணம்- ஆரவாரம் மிக்க
கடைத்தெருவையே போன்றது என்றும்[ஆபணம் – வடசொல்], நான்காம் அடிக்கு,
சாமரம் – போர்க்களத்தில் [ஸமரமென்பதன் விகாரம்], கொற்றம் மிகும் பறைகள்
ஓசையழிந்து குலைந்தனவென்றும் உரைக்கலாம். இவ்விரண்டடிகளுள் ஈற்றில்
எழுத்துக்கள் தனித்தனி ஒத்துவந்தது – மடக்கு, மேலுஞ் சிலபாடல்களில் இது
காண்க.

     இதுமுதற் பதினைந்து கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று
கூவிளங்காய்ச்சீரும் மற்றைஐந்தும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.

மின் புயல்வாய் விரிகின்றன ஒத்தன, விரி நுதல் ஓடைகளே;
என்பு உற ஊறி விழும் கட தாரையின் ஏயின, ஓடைகளே
முன் புடை வாலதி செற்றது, வெம் புகர் முகம் முழுகும் சரமே.
வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன, குஞ்சரமே.

விரி நுதல் – (யானைகளின்)  விசாலமான நெற்றியிலே
(கட்டப்பட்டுள்ள), ஓடைகள் – பட்டங்களானவை,- புயல் வாய் விரிகின்றன –
மேகம்வாய்திறந்து வெளிவிடுவனவாகிய, மின் – மின்னலை, ஒத்தன –
ஒத்துவிளங்கின;என்பு – எலும்பினின்றும், உற வீறி விழும் – மிகவும் அதிகமாய்ப்
பெருகுகிற, கடதாரையின் -(யானைகளின்) மதசலப் பெருக்கினால், ஓடைகள்
ஏயின – நீரோடைகள்உண்டாயின்; முன் புடை – முன்பக்கத்தில், வெம் புகர்
முகம் – வெவ்வியபுள்ளிகளையுடைய (அவ்யானைகளின்) முகத்தில், முழுகும் –
தைக்கின்ற, சரம் -அம்பானது, (ஊடுருவிச்சென்று), வாலதி – வாலை, செற்றது –
துணித்தது; வன்புஉடை – வலிமையையுடைய, மால் வரை – பெரிய மலைகள்,
மறிவன போல -விழுந்து கிடப்பவைபோல, குஞ்சரம் – யானைகள், மறிந்தன –
இறந்துவீழ்ந்துகிடந்தன; (எ -று.)

     புயல் – யானைக்கும், மின் – அதன் பட்டத்துக்கும் உவமை. பார்வைக்கு
வாயைத் திறந்துவிடுவதுபோலக் காணப்படுதலால், மின் புயல் வாய்விரிகின்றன’
என்றார். நாலடியாரிலும் முன்பு உடை வலிமையையுடைய, வாலதியென்றுமாம்,
பி -ம்:
 இன்புறவீறி என்புறவூறி.        

பட்டம் அணிந்த நுதற்கு இடையே விழு தும்பிகள் பட்டனவே;
தொட்டியுடன் பொரு சமர் முனை சீறிய தும்பிகள் பட்டனவே.
வெட்டி அறன் புதல்வன்தன் வரூதினி வென்று களித்தனவே;
இட்ட குமண்டைய பேய், பிணம் மிக்கன என்று, உகளித்தனவே.

பட்டம் அணிந்த – பட்டத்தைத் தரித்த, நுதற்கு இடைஏ –
(யானைகளின்) நெற்றியின் நடுவிலே, விழு- (மதநீரையுண்ணுதற்கு வந்து)
விழுந்துமொய்க்கின்ற, தும்பிகள் – வண்டுகள், பட்டன – அதிகப்பட்டன; பொரு
சமர் முனை – போர்செய்கிற யுத்த களத்தில், சீறிய – கோபித்து நின்ற,
தும்பிகள் -யானைகள், தொட்டியுடன் – அம்பாரியுடனே, பட்டன – இறந்து
விழுந்தன; அறன்புதல்வன்தன் – தருமபுத்திரனது, வரூதினி – சேனைகள்,
வெட்டி -(பகைவர்சேனைகளைத்) துணித்து, வென்று- சயங்கொண்டு, களித்தன –
(மகிழ்ச்சியாற்) களிப்படைந்தன; பேய் – பேய்கள், இட்டகு மண்டைய- (வயிறு
நிறைதலால்) தெவிட்டுதல் பொருந்தினவாகி, பிணம் மிக்கன என்று-, உகளித்தன –
(மகிழ்ந்து) குதித்தன;

     முதலடியில், தும்பிகள் பட்டன எனப் பிரித்து, வண்டுகள் (மாலைகளின்)
மதுவில் அகப்பட்டன வெனினுமாம்; பட்டன- ஒலித்தனஎன்பாருமுளர்.
தொட்டியென்பதைத் தோட்டி யென்பதன் குறுக்க லெனக்கொண்டால்,
அங்குசமெனப்பொருள்படும்- இட்டகுமண்டைய = குமண்டையிட்டன:
குமண்டையிடுதல் – உண்டது அதிமாகித் தெவிட்டல், குமட்டலெனவழக்குதலுங்
காண்க.           

பழுது அற வீழ் படை மன்னவர் பேர் உடல் பற்பல அம்பினவே;
பொழி குருதிப் புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே.
தழல் விழி வாரண வீரர் முடித் தலை தடிவன, சக்கரமே;
அழல் உமிழ் வாள்கள் சுழற்றின மீளவும், மா வனசக் கரமே.

பழுது அள – பழிப்பில்லாதபடி, வீழ் – (போரில் இறந்து கிழே)
விழுந்துகிடக்கிற, படை மன்னர் – ஆயுதங்களையுடைய அரசர்களது, பேர்
உடல் -பெரிய உடம்புகள், பல் பல அம்பின – மிகப்பல அம்புகளை
யுடையன[மிகவும்அம்புகள் தைக்கப் பெற்றன]பொழி – பெருகுகின்ற, குருதி
புனல் – இரத்தவெள்ளத்தில், மூழ்கினர் – முழுகிக்கிடக்கின்றவரது, மேனி –
உடம்புகள், புலாலினவம்பின – புலால்நாற்றமுடையன; சக்கரம் –
சக்கராயுதங்கள்,- தழல் விழி -(கோபமிகுதியால்) தீப்பொறியைச் சிந்துகிற
கண்களையுடைய, வாரணம் வீரர் -யானைமேல் வந்த வீரர்களுடைய, முடிதலை –
கிரீடந்தரித்த தலைகளை, தடிவன -அறுப்பன; வனசம் கரம் –
(அவ்வீரர்களுடைய) தாமரைமலர் போலுங் கைகள்,மீளஉம் – தலையற்ற பின்பும்,
அழல் உமிழ் வாள்கள்- நெருப்புப்பொறியைச்சிந்துகிற வாள்களை, சுழற்றின-;
ஆ – ஆச்சரியம்! (எ -று.)

     போர்க்குவந்த வீரர்க்குப் புண்பட்டு இறத்தல் சிறப்பு ஆதலால், ‘பழுதற
வீழ்மன்னவர்’ என்றார். ‘படைமன்னவர்’ என்றது இறந்தபின்பும் ஆயுதம்பிடித்த
பிடியைநழுவவிடாது அவர்களுறுதியை விளக்கிற்று. புலாலின என்ற
குறிப்புப்பெயரெச்சம்,வம்பு என்னும் பெயரைக் கொண்டது. புலாலின வம்பு –
ஊனின் சம்பந்தமான துர்க்கந்தம், வந ஜம்= நீரிற் பிறப்பது; வநம் – நீர். பி-ம்:
வாளிகள் சுற்றின.  

முழுகிய வாளிகள் குழுமிய வீரர் முகத்தின எண் இலவே;
விழிவழி தீ எழ முறுவல் பரப்ப விரித்தன, வெண் நிலவே
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன, வெவ் வெயிலே;
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன, எவ் எயிலே!

குழுமிய – கூட்டமாகத் திரண்டுவந்த, வீரர் – வீரர்களது,
முகத்தன -முகத்தற்பொருந்தியவையாகிய, முழுகிய வாளிகள் – தைத்த
பாணங்கள், எண் இல- கணக்கில்லாதவையாம்; விழி வழி – (வீரர்களுடைய)
கண்களினின்றும், தீ எழ -கோபத்தால் நெருப்புப்பொறி பறக்க, முறுவல் –
(அவர்களுடைய) புன்சிரிப்புக்கள்,வெள் நிலவு – வெண்மையான நிலாப்போன்ற
ஒளியை, பரப்ப – அதிகமாக,விரித்தன – வெளிவீசின; உழை – பக்கங்களில்,
மழை – மழைபோல, வீழ்வன-விழுவனவாகிய, பலபடை – அநேக ஆயுதங்கள்,
எங்கும்உம் – எவ்விடத்தும், வெவ்வெயில் – வெவ்விய வெயில் போலும்
ஒளியை, உமிழ்ந்தன- வீசின; அழிவு இல் -அழிதலில்லாத, வரூதினி –
சேனையின், சூழ்வு – சூழ்தலாகிய, எயிலுக்கு – மதிலுக்குஎ எயில் –
எந்தமதில்கள்தாம், எதிர் ஆவன – ஒப்பாவன? (எ-று.)

     எறிவன, எய்வன, வெட்டுவன, குத்துவன என்ற எல்லாவற்றையுந் தொகுத்து
‘பலபடை’ என்றார். மழைவீழ்வன – மழையை யொப்பனவாகிய என்பாருமுளர்.
நான்காமடிக்கு – சேனைகள் மதிலினும் உறுதியாகச் சிறிதும் இடைவிடாமற்
சுற்றிலும்நின்றன வென்று கருத்து.     

சர மழை, காவலர்தங்கள் மனோ வனசம் புக, மேயினவே;
இரை கவர் புள்ளினொடு உள் உறவு ஆவன, சம்புகம் ஏயினவே.
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன, வாரணமே;
அருகு நடிப்பன அலகைகள் பாடுவ, யாமள ஆரணமே.

சரம் மழை – பாணவருஷங்கள், காவலர்தங்கள் – அரசர்களது,
மனோ வனசம் – இருதய கமலம், புக – ஒடுங்கும்படியாக, மேயின – பொருந்தின;
ஏயின- (அங்குப்பிணந்தின்ன) வந்தனவாகிய, சம்புகம் – நரிகள், இரை கவர்
புள்ளினொடு – (தசையாகிய) உணவைக் கொள்ளுகிற (கழுகு பருந்து முதலிய)
பறவைகளுடன், உள் உறவு ஆவன – மனங்கலந்த சிநேகமாவன; சிறகு அற்று
விழுந்தன – (இந்திரனால்) இறகறுக்கப்பட்டு விழுந்தவையாகிய, வரை என்ன –
மலைகள்போல, வாரணம் – யானைகள், மறிந்தன – விழுந்து கிடந்தன; அருகு –
பக்கங்களில், நடிப்பன – கூத்தாடுபவையாகிய, அலகைகள் – பேய்கள், யாமளம்
ஆரணம் – யாமளவேதத்தை, பாடுவ – பாடுவன; (எ – று.)

     முதலடி – உருவகவணி; வீரரது உள்ளத்தாமரை ஒடுங்கும்படி அம்புமழை
மேயின வென்க- சம்புகம் – ஜம்புகம்: வடசொல்.    

செயிருடை ஆடவர் சோரி பரந்து, சிவந்தது, பார் இடமே;
வயிறு பெருங் குருதிச் சுனை ஆக வளர்ந்தன, பாரிடமே.
பயில மறைத்தன, பாறு பருந்தொடு பல கழுகு அந்தரமே;
எயிறுடை வாளி துணிப்ப விழுந்தன, எத்தனை கந்தரமே!

செயிர் உடை – வலிமையையுடைய, ஆடவர் – வீரர்களது,
சோரி -இரத்தம், பரந்து – பரவியதனால், பார் இடம் – பூமியினிடம்(முழுவதும்),
சிவந்தது -செந்நிறமாயிற்று; பாரிடம் – பூதகணம், வயிறு -(தம்) வயிறுகள், பெருங்
குருதி சுனைஆக – பெரிய இரத்தம் நிரம்பிய சுனையை ஒத்திருக்க[வயிறுநிரம்ப
இரத்தத்தைக்குடித்து], வளர்ந்தன-; பாறு – பாறு என்னும் பறவைகளும்,
பருந்தோடு -பருந்துகளும், பல கழுகு – பலவகைப்பட கழுகுகளும், பயில -(தாம்)
சஞ்சரித்தலால்,அந்தரம் – ஆகாயவெளியை, மறைத்தன;- எயிறு உடை –
பற்களையுடைய, வாளி -அம்புகள், துணிப்ப – துண்டித்தலினால், விழுந்தன –
கீழ்விழுந்தவையாகிய, கந்தரம்- கழுத்துக்கள், எத்தனை – எத்தனையோ? (எ -று.)

     செயிர் உடை ஆடவர்-(பகைவர்களது) வலிமையை உடைக்கிற [அழக்கிற]
வீர ரென்றுமாம்: (பகைவரால்) வலியழிந்த வீரருமாம் பாரிடம்- =பார்ஷதம்:
வளர்ந்ததுஎன்ற பாடத்திற்கு, ‘பாரிடம்’ சாதியொருமை. பாறு – பருந்தின்சாதிபேதம்.
எயிறு – அம்புமுனை.  

உம்பல் அநேகம், இளம் பிடி என்ன, ஒடிந்தன, கோடுகளே;
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன, கோடுகளே.
தும்பிகளால் அறையுண்டன, கொற்றவர் சூழ் மன அம்புயமே;
வெம் புகர் வாளில் அழிந்தன, மால் வரை விதம் அன அம் புயமே

உம்பல் அனேகம் – பல ஆண்யானைகள், இளம் பிடி என்ன –
இளமையான பெண்யானைகள்போல, கோடுகள் ஒடிந்தன – தந்தங்கள்
ஒடியப்பெற்றன; செம் புனல் யாறு – இரண்டு பக்கங்களிலும், வீழ் குறை –
(துணிபட்டு) விழுந்துகிடக்கின்ற உடற்குறைகள், கோடுகள் செய்தன –
கரைகளமைத்தாற்போலிருந்தன; கொற்றவர் – வெற்றியையுடைய அரசர்களது,
சூழ் -(பல எண்ணங்களை) என்ணுகிற, மனம் அம்புயம் – இருதய கமலங்கள்,
தும்புகளால்- யானைகளால், அறையுண்டன – அழிக்கப்பட்டன; மால் வரை
விதம் அன -பெரிய மலைகளின்வகையை யொத்த, அம் புயம் – அழகிய
தோள்கள், வெம் -கொடிய, புகர் – பளபளப்புள்ள, வாளில் – வாள்களால்,
அழிந்தன-; (எ -று.)

     பெண்யானைகட்குக் பெரும்பாலுந் தந்தங்கள் முளையா வென்க.
தாமரையைக்கலக்குதல் யானையின் இயற்கையாதலால், ‘தும்பிகளால்
அறையுண்டன மனவம்புயம்’ என்றார்; இதில், வண்டுகளால் தாமரை மொய்க்கப்
பட்டன வென்னும் பொருளுந்தொனிக்கும்.       

தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன, சாயகமே;
ஆழ் குருதித் தடம் ஒத்தன, அவர் அவர் அவ் உடல் சாய் அகமே.
ஏழ் புயல் வானம் இருண்டிட எங்கும் எழுந்த, இருந் துகளே;
வீழ் பசியால் உழல் பேயொடு பாரிடம் மிக்க, விருந்துகளே.

தாள் – முயற்சியையும், வலி – வலிமையைமுடைய, ஆடவர் –
வீரர்களது, சிரம் – தலைகள், உருளும்படி – கீழ்விழுந்து புரளும்படி, சாயகம் –
அம்புகள், தைத்தன-; அவர் அவர் – அவ்வவ்வீரர்களது, அ உடல் – அந்தந்த
உடம்புகள், சாய் – விழுந்து கிடக்கிற, அகம் – இடங்கள்,- ஆழ் குருதி தடம்
ஒத்தன – ஆழமாகிய இரத்தம் நிரம்பிய குளத்தைப் போன்றன; ஏழ் புயல் – ஏழு
மேகங்களையுடைய, வானம் – ஆகாயமெல்லாம், இருண்டிட – இருளடையும்படி,
எங்கும்உம் – எல்லாவிடத்தும், இருந் துகள் – மிகுதியான புழுதிகள், எழுந்த –
கிளம்பின; வீழ் பசியால்- (உணவை) விரும்புகின்ற பசியினால், உழல் – வருந்துகிற,
பேயொடு – பேய்களும், பாரிடம் – பூதங்களும் விருந்துகள் மிக்க – விருந்துகளாகி
மிகுந்தன; (எ -று.)

     தாள்வலியாடவர் – காலாள் வீரருமாம். விருந்துகள்மிக்க- அங்கு உள்ள
இறைச்சியைத்தின்று இரத்தத்தைத்குடித்துப் பசிதாகங்கள் தீருமாறு பேயும்
பூதமும்மிகுதியாகவந்து திரண்டன வென்க. ‘தாள்வலி’ இனவெதுகை. 

செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே;
கைகொடு கால்கொடு தம்மின் வெகுண்டு, கவந்தம் மலைந்தனவே.
ஐவகை ஆன கதிக் குரம் நாலும் அழிந்தன, வாசிகளே;
மெய் வகையால், இவை, கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே.

சிவந்த கவந்தம் – செந்நிறமான இரத்தம், செய் கடல் ஆம் என –
சிவந்ததொரு கடல்போல, வந்து அலைந்தன – பெருகி அலையெறிந்தன;
கவந்தம் -தலையற்ற உடம்புகள், வெகுண்டு – கோபித்து, தம்மின் – தமக்குள்ளே,
கைகொடுகால்கொடு – கைகளாலும் கால்களாலும், மலைந்தன – போர்செய்தன;
வாசிகள் -குதிரைகள், ஐ வகை ஆன கதி – ஐந்துவகைப்பட்ட நடைகளையுடைய,
குரல்நால்உம் – நான்கு குளம்புகளும், அழிந்தன – அழியப்பெற்றன; இவை –
இவையெல்லாம், மெய் வகையால் – உண்மையாக, கூர் எறி கோல் எறி வீரர் கை
வாசிகள் – கூர்மை விளங்குகிற அம்புகளை எறிகின்ற வீரர்களுடைய கைகளின்
சித்திகளாம்; (எ – று.)

     செய்கடல் – புதிதாகச் செய்யப்பட்டதொரு கடலுமாம். சிவந்த கவந்தம் –
செந்நீர்; கபந்தம் -நீர்: வடசொல். கோபத்தோடு விரைந்து போர்செய்து நின்ற
வீரர்களின் உடம்புகள் தலையறுபட்ட பின்பு பதைபதைத்துக் கால்கள்
துடிப்பனவற்றை – கைகளாலுங் கால்களாலும் போர்செய்வனவாகக் குறித்தார்;
தற்குறிப்பேற்றம். கவந்தம் – நீரும் தலையற்றஉடலுமாதலை “காரறல் புவன நாரங்
கன விரதங் கவந்தம்” என்னும் நிகண்டினாலும் அறிக.  

தாரைகள், ஒற்றை, தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே;
ஓர் இமையில் சிலை யானை துரங்க சங்கம் உழக்கினவே.
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே;
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அரமங்கையர் மெய்ம்முகம்
மேவினவே.

தாரைகள் – தாரையென்னும் வாத்தியங்களும், ஒற்றைகள் –
ஒற்றையென்னும் ஊதுகொம்புகளும், வங்கியம் – வேய்ங்குழல்களும், நீள்வயிர் –
நீண்டவயிரென்னும் ஊதுகொம்புகளும், சங்கம் – சங்கங்களும், முழக்கின –
மிகஒலிசெய்தன; ஓர் இமையில் – ஓரிமைப்பொழுதினுள்ளே, சில யானை-, துரங்கம
சங்கம் – குதிரைக்கூட்டங்களை, உழக்கின – கலக்கின, வளைத்த வில் ஒன்று –
வளைத்துப்பிடித்த ஒவ்வொருவில்லும், ஒரு கோடி சிலீமுகம் – ஒரு கோடி
அம்புகளை, சேர – ஒருசேர, ஏவின – பிரயோகித்தன; வீரர் – வீரர்களது,
உயிர்ப்பு- உயிர், உடல் விட்டு – உடம்பைவிட்டு, அரமங்கையர் –
தெய்வப்பெண்களது,மெய் முகம் – உடம்பினிடத்தை, மேவின – அடைந்தன;
(எ – று.)

     வங்கியம் – வம்ஸம் என்ற வடசொற் சிதைவு; மூங்கிலின் பெயர் –
சினையாகுபெயராய், அதனாலாகிய புள்ளாங்குழலைக் குறித்தது. முதலடியில்,
சங்கம்-ஸங்கம்; இரண்டாமடியில், சங்கம் – ஸங்கம். யுத்தகளத்திற் புறங்கொடாது
எதிர்நின்று போர்செய்து இறந்தவர் உடனே வீரசுவர்க்கத்தை அடைந்து அங்குள்ள
தெய்வமகளிரது உடம்பைத் தழுவி இன்பமனுபவித்தலால், ‘வீரருயிர்ப்புடல் விட்டர
மங்கையர் மெய்ம்முக மேவின’ என்றார். 

பொரு கடல் ஒத்த பெருங் குருதிக் கடல் போத இரைந்தனவே;
விரவுறு தேவர் விமானம் விசும்பிடை போத விரைந்தனவே.
கரு முகில் முட்டின பட்டவர் கட் கனல் காலும் அரும் புகையே;
சுரிகையொடு அற்று விழுந்தன, மங்கையர் துனியில் அரும்பு கையே.

பொரு – அலைமோதுகிற, கடல் – கடல்களை, ஒத்த -,
பெருங்குருதிகடல் – பெரிய இரத்தவெள்ளங்கள், போத இரைந்தன – மிகவும்
ஒலித்தன; விரைவுஉறு -(போரைக்காணுதற்கு) விரைதல் பொருந்திய, தேவர் –
தேவர்களது, விமானம் -(வாகனமாகிய) விமானங்கள், விசும்பிடை போத –
ஆகாயமார்க்கத்தில் வருதற்கு,விரைந்தன – விரைவுபட்டன; பட்டவர் – இறந்த
வீரரது, கண் – கண்களினின்றுதோன்றுகிற, கனல் – கோபத்தீ, காலும் –
வெளியில் விடுகிற, அரும் புகை -(அளவிடுதற்கு) அருமையான புகைகள், கரு
முகில் – கரிய மேகங்களை, முட்டின -அளாவிப்பரந்தன;  மங்கையர்- மாதர்களது,
துனியில் – ஊடல்மிகுதியில், அரும்பு-(அவ்வூடலைத் தீர்த்தற் பொருட்டு
அவர்களைத்தொழுது) கூப்புகிற, கை – கைகள்,சுரிகையொடு – உடைவாளுடனே,
அற்று – அறுந்து, விழுந்தன-; (எ -று.)

     இன்சொல்முதலிய வேறுஉபாயங்களினால் தணிக்கக்கூடிய நிலையைக் கடந்த
பெரும்புலவியில், ஆடவர், எவரையும் வசப்படுத்து மியல்பினதான வணக்கத்தை
மேற்கொண்டு அவ்வூடலைத் தணிவிக்க முயல்வ ரென்பதையறிக.
“மனைவியுயர்வுங்கிழ வோன்பணிவு நினையுங்காலைப் புலவியுளுரிய” என்றது
தொல்காப்பியம். ‘அரும்பி’ என்ற சொல்லின் ஆற்றலால், கைகள் தாமரை
மலர்போன்றன வென்பது தொனிக்கும்.

கட கரி ஏனமொடு ஒத்தன, அம்பொடு போன கரத்தனவே;
புடவியின்மீது உறை நிறை மதியம் பலபோல் நகரத்தனவே.
படு திறல் வேலவர் கண்மணி சென்று பறித்தன, வாயசமே;
அடு பணை யானையின் வெங் குடர் சென்று பிடுங்கின, ஆயசமே.

புடவியின்மீது – பூமியில், உறை – வந்துதங்கிய, நிறை மதியம் பல
போல் – (பதினாறுகலைகளும்) நிரம்பிய பல பூர்ணசந்திரர் போன்ற, நகரத்தன –
நகங்களையுடையனவாகிய, கட கரி – மதயானைகள், அம்பொடு – (பகைவர் எய்த)
அம்பினால், போன கரத்தன- அற்றுவிழுந்த துதிக்கையை யுடையனவாகி,
ஏனமொடுஒத்தன – பன்றிகளொடு ஒத்திருந்தன; வாயசம் – காக்கைகள், கடு –
இறந்த போன,திறல் வேலவர் – வலிய வேலாயுதத்தையுடைய வீரர்களது, கண்
மணி – கண்களின்கருவிழிகளை, சென்று பறித்தன – போய்க் குத்தியெடுத்தன;
ஆயசம் – ஆயுதங்கள்,அடு – (பகைவரைக்) கொல்லுகிற, பணை – பருத்த,
யானையின்-, வெம் குடர் -கொடிய குடலை, சென்று பிடுங்கின-; (எ-று.)-
ஆயஸம் – இரும்பினாலாகியது எனப்பொருள்படுங் காரணக்குறி; வடமொழித்தத்தி
தாந்தநாமம். நகரம் – உகிர்: வடசொல்

அணி தொடை தேன், மதுகர நிரை சால அருந்த, விளைத்தனவே;
மணி முடி பாரம் உறப் பல நாகம் வருந்த இளைத்தனவே.
கணை பல வீரர் முகத்தன, தோளன, கண்ணன, மார்வனவே;
நிணமொடு மூளை நெடுங் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே.

அணி -(வீரர்கள்) அணிந்துள்ள, தொடை  – மாலைகள் மதுகரம்
நிரை அருந்த – வண்டுகளின் கூட்டம் குடிக்கும்படி, தேன் – தேனை, சால –
மிகுதியாக, விளைத்தன – உண்டாக்கின; பல நாகம்- (கீழிருந்துபூமியைத் தாங்குகிற)
சர்ப்பங்களெல்லாம், மணி முடி – மாணிக்கத்தையுடைய (தம்) தலைகளின்மேல்,
பாரம் உற – சுமை அதிகப்படுதலால், வருந்த இளைத்தன – வருத்தமுண்டாக
மெலிந்தன; பல கணை – பல அம்புகள், வீரர் – வீரர்களது, முகத்தன – முகத்தில்
தைத்தனவும், தோளன – தோள்களில் அழுந்தினவும், கண்ணன் –
கண்களிடத்தனவும், மார்வன – மார்பிற்பாய்ந்தனவுமாயின; பூதம் கணம் நிரை –
பூதகணங்களின் கூட்டம் , நிணமொடு – கொழுப்பையும், மூளை – மூளையையும்,
நெடுங் குடர் – நீண்ட குடல்களையும், ஆர்வன – உண்பன; (எ-று.)-ஒன்றன்
கூட்டம்,பலவினீட்டம் என இரண்டுவகை உளவாதல் பற்றி, ‘பூதநிரைக்கணம்’
என்றார்

ஆவமொடு ஒத்தன, ஆடவர் நெஞ்சுகள் ஆகிய போது-அகமே;
பூ வலயத்து உடல், ஆர் உயிர் வானிடை புக்கன, போதகமே.
மேவு நரிக்கு விளைந்தன, வெங் கரி வீழ் தலை ஓதனமே;
நாவலருக்கும் உரைப்பு அரிது, அந்த நனந் தலை யோதனமே

ஆடவர் – வீரர்களுடைய, நெஞ்சுகள் ஆகிய போது அகம் –
இருதயகமலங்களினிடங்கள், (பகைவரெய்த அம்புகள் மிகுதியாக
உள்தைக்கப்பெற்றதனால்), ஆவமொடு  – அம்பறாத் தூணிகளோடு, ஒத்தன-;
போதகம் – யானைகள், பூ வலயத்து – பூமண்டலத்தில், உடல் – உடம்பும்,
வானிடை- சுவர்க்கத்தில், ஆர் உயிர் – அருமையான உயிரும், புக்கன –
போகப்பெற்றன;வெம் – கொடிய, கரி – யானைகளின், வீழ் தலை – அறுந்து
விழுந்த தலைகளாகிற,ஓதனம் – உணவுகள், மேவும் நரிக்கு – விரும்பிவருகிற
நரிகளுக்கு, விழைந்தன -விருப்பமாயின; அந்த-, நனந் தலை – அகன்ற
இடத்தையுடைய, யோதனம் -யுத்தகளத்தின்சிறப்பு, நாவலருக்கு உம் உரைப்பு
அரிது – புலவர்கட்கும்சொல்லுதற்கு அரியது; (எ -று.)

     “வெங்களத்தினியற்கை யெங்ஙன் வியந்துகூறுவதே” என்று தொடக்கத்தில்
அருமைகூறியவர், ஈற்றிலும் ‘நாவலருக்குமுரைப்பரி தந்த நனந்தலை யோதனமே’
என அருமைகூறி முடித்தார். யோதனம் – இருமடியாகுபெயர்.    

பேர் ஆண்மை செய் சேனாபதி பின்னிட்டிடு முன்னே,
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல,
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்தாமும்,
நாராயண கோபாலரும், அணியாக நடந்தார்.64.-சஞ்சத்தகரும் நாராயணகோபாலரும் அருச்சுனனை
யெதிர்த்தல்.

பேர் ஆண்மை செய் – சிறந்த வீரத்தொழில்களைச் செய்கிற,
சேனாபதி -(பாண்டவ) சேநாபதியான திட்டத்துய்மன், பின்னிட்டிடு முன்னே –
(கிருபனோடு பொருது) புறங்கொடுக்கு முன்னே,- தேர் ஆண்மைஉம் வில்
ஆண்மைஉம் உடையான் – தேர் செலுத்துந்திறமையையும் விற்போர்த்
திறமையையும்(ஒருங்கே) உடையவனான அருச்சுனன், எதிர்செல்ல –
எதிரிற்போக,- தார் ஆர் -போர்மாலைபொருந்திய, அகல் – பரந்த, வரை –
மலைபோன்ற, மார்பினர் -மார்பையுடையவர்களாகிய, சஞ்சத்தகர்தாம்உம் –
ஸம்சப்தகர் என்னும் வீரர்களும்,நாராயணகோபாலரும்-, அணி ஆக – ஒழுங்காக,
நடந்தார் -(அவ்வருச்சுனனேதிரே) சென்றார்கள்; (எ -று.)

     பாண்டவசேனாபதி பின்னிட்டமையை, கீழ் 47 – ஆம் கவியிற் காண்க; இது ,
அதன்தொடர்ச்சி: (இடையிற் பதினாறுகவிகள் – போர்க்களவருணனை.) அருச்சுனன்
தேராண்மையுடையனாதலை, உத்தரகோக்கிரகணகாலத்தில் உத்தனுக்குத்
தேரூர்ந்ததனால் அறிக. வரை மார்பினர் – (உத்தமஇலக்கணமாகிய மூன்று)
இரேகைகளையுடைய மார்புடைய ரென்றுமாம். சஞ்சத்ததகருள்ளும்
நாராணகோபாலருள்ளுந் கீழ்நாட்போர்களில் இறந்தவர்போக மிச்சப் பட்டவர்
இன்றுபோர்க்கு வந்தனர்; அது, மேல் 68 – ஆம் கவியில் விளங்கும். அணி –
வரிசை.

     இதுமுதல் எட்டுக் கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் மாங்கனிச்சீரு மாகிய கலிவிருத்தங்கள்.   

சட் கோண நெடுந் தேர்மிசை வரு சத்தியசேனன்,
புட் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன்
துட்கோடு உளம் மறுகும்படி, சுடு தோமரம் ஒன்றால்,
முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன், முரணால்.65.- சத்தியசேனன் கண்ணனுக்கு ஊறுசெய்தல்.

சட் கோணம் – ஆறு மூலைகளையுடைய, நெடுந்தேர் மிசை –
பெரியதேரில், வரு – வரூகிற, சத்தியசேனன்-, சுடு தோமரம் ஒன்றார் –
(பகைவரை)அழிக்கவல்லதொரு தோமரமென்கிற ஆயுதத்தால்,- புள் கோ –
பறவைகட்குஅரசனாகிய கருடனை, எழுதிய-, சீர்பெறு – சிறப்புப்பெற்ற, பொன்
அம் கோடி -பொற்கரம்பிட்ட அழகிய துவசத்தையுடைய, வலவன் –
(அருச்சுனனது) சாரதியாகியகண்ணன், துட்கோடு – அச்சத்துடனே, உளம்
மறுகும்படி – மனங்கலகுமாறும், (அக்கண்ணன் கைகளிற்பிடித்துள்ள), முள்
கோலுடன் – (தேர்க்குதிரைகளைக்குத்தியோட்டுகிற) இருப்புமுள்ளை
முனையிலுடைய கோலும்,வடம்உம் -( குதிரைகளைவலிய இழுத்தற்கும்
தளரவிடுதற்குமுரிய வார்க்) கயிறும்,சிதைவு உற – அழிவையடையும்படியும்,
முரணால் – வலிமையோடு,மோதினன்-; (எ-று.) – சட் = ஷட் – ஆறு.
ஸத்யஸேநன் – உண்மையான சேனையுடையான்;இவனைக்கர்ணன்
புத்திரனென்பர் ஒருசாரார். தோ மரம் – தண்டாயுதமென்பர்.

புடையுண்டு உளம் உருகிப் புயல்போல் வண்ணன் நகைத்து,
தொடை உண்ட மலர்த் தும்பை சுமக்கும் திரள் தோளார்
உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி, அவர்மேல்
தடையுண்ட தடந் தேரினை விட்டான், முனைதரவே66.- கண்ணன் எதிரிகளின்மேல் தேரை விசையாகக்
செலுத்துதல்
.

புயல் போல் வண்ணன் – மேகப்போலுந் கருநிறமுடையவனான
கண்ணன்,- புடையுண்டு- (அத்தோமரத்தால்) அடிபட்டு, உளம் உருகி – மனம்
தளர்ந்து, நகைத்து – (கோபத்தாற்) சிரித்து,- தொடை உண்ட மலர் தும்பை –
மாலையாகத் தொடுக்கப்பட்ட தும்பை மலர்களை, சுமக்கும் – தரிக்கின்ற, திரள்
தோளார் – திரண்ட தோள்களையுடையவர்களான அவ்வீரரெல்லாம்,
உடையுண்டதுஓர் கடல் ஆம் என – கரையுடைப்பட்டதொரு கடல் போல,
ஓடும்படி-,அவர்மேல்-,தடையுண்ட தட தேரினை- (கீழே சிறிது) தடைப்பட்ட
பெரிய (தனது) தேரை,முனைதர – விரைந்து செல்லும்படி, விட்டான்-; (எ -று.)
தடை உண்ட – தடையைஇல்லையாக்கின, தேர் என்றுமாம்: (எங்குந்)
தடையில்லாத தேரென்க.

சென்று ஆடு அமர் புரி சேனையுடன், சித்திரசேனன்,
வன் தாள் வலி மிகு மந்திரபாலன்தனை வானோர்
தன் தாதை அளிக்கும் பல சரத்தால், விழ மோதிக்
கொன்றான்-மிடல் வழுவாத குரக்குக் கொடி உடையோன்.67.- அருச்சுனன் சித்திரசேனனையும் மந்திரபாலனையுங்
கொல்லல்

மிடல் வழுவாத – வீரந் தவறாத, குரங்கு கொடிஉடையோன் –
அநுமத்துவசத்தையுடையவனான அருச்சுனன்,- சென்று – எதிர்வந்து, ஆடு
அமர்புரி – மோதுகிற யுத்தத்தைச் செய்கின்ற, சேனையுடன்-, சித்திரசேனன் –
சித்திரசேனனையும், வல் தாள் வலி மிகு மந்திரபாலன் தனை – வலிய முயற்சியும்
வலிமையும் மிக்க மந்திர பாலனையும், – வானோர் – தேவர்களுள், தன் தாதை –
தனது தந்தையாகிய இந்திரன், அளிக்கும் – கொடுத்தருளிய, பல சரத்தால் – பல
அம்புகளினால், விழ மோதி கொன்றான்-; (எ -று.)

     சித்திரஸேநன் – பலவகைப்பட்ட சேனைகளை யுடையவன். மந்திர பாலன் –
ஆலோசனையாற் காப்பவன். சித்திரசேனனாகிய மந்திரபாலனென்று கூறி,
இருவருமொருவரேரயென்பாரு முளர். இந்திரன் அளித்த பலசரம் – ஐந்திராஸ்திரம்
முதலியன வென்க; பாசுபதம் பெற்றபின்பு அருச்சுனனைத் தேலோகத்துக்கு
அழைத்துப் போன பொழுது இந்திரன் அவனுக்குப் பல அஸ்திரசஸ்திரங்களைத்
தந்தருளினான்.    

முன் நாள் முதல் நால்-நாலினும் முனைதோறும் முருக்கி,
தன்னால் உயிர் கவராதவர் சஞ்சத்தகர் யாரும்
நல் நாரண கோபாலரும் நாகம் குடி ஏற,
பொன் நாண் வரி சிலை கோலினன், மாலோன் உயிர் போல்வான்.68.- அருச்சுனன், சஞ்சத்தக நாராயணகோபாலர்களைத் தொலைத்தல்

மாலோன் உயிர்போல்வான் – கிருஷ்ணபகவானுக்கு
உயிர்போல்வனான அருச்சுனன்,- முன் நாள் முதல் – முதல்நாள் முதலாகிய, நால்
நாலின்உம் – பதினாறு நாட்களிலும், முனைதோறுஉம் – போர்களிலெல்லாம்,
முருக்கி- கொன்று, தன்னால் உயிர் கவராதவர் – தன்னால் உயிர்கொள்ளப்
படாதவராகிய,சஞ்சத்தகர் யார்உம் – சம்சப்தகர் எல்லாரும், நல் – நல்ல,
நாரணகோபாலர்உம் -நாராயண கோபாலர்களும், நாகம் – வீரசுவர்க்கத்தில், குடி
ஏற -, பொன் நாண் -அழகியநாணியையுடைய, வரி சிலை – கட்டமைந்தவில்லை,
கோலினன் -வளைத்தான்; (எ -று.)

     “மமப்ராணாஹி பாண்டவர்:” எனக் கண்ணன் தானே கூறியுள்ளதற்கு ஏற்ப,
‘மாலோனுயிர்போல்வான்’ என்றார். இங்கே இவ்வாறு கூறியது, மைந்தரிடத்தினும்
அருச்சுனனிடத்துக் கண்ணனுக்கு அன்பு மிகுதி யென்பதை விளக்கும்பொருட்டு.
பி-ம்: முனைதோறுமுடற்றித்

சஞ்சத்தகர், கண்ணன் தரு தனயோர் பலர், அடைவே
எஞ்சப் பொருதனன் வெஞ் சிலை இமையோர் பதி மகன்’ என்று
அஞ்சிக் களம் முழுதும் கழுகு ஆட, குறை ஆட,
குஞ்சத்தொடு குடை வீழ்தர, முதுகிட்டனர் கூடார்.69. துரியோதனன்சேனையார் புறங்கொடுத்தல்.

வெம் சிலை – கொடிய வில்லையுடைய, இமையோர் பதி மகன் –
தேவராஜனான இந்திரனது குமாரனாகிய அருச்சுனன்,- சஞ்சத்தகர் – சம்சப்தகரும்,
கண்ணன் தரு தனயோர் – கிருஷ்ணன் பெற்ற பிள்ளைகளாகிய
நாராயணகோபாலர்களும், பலர் – எல்லாரும், அடைவே – ஒருங்கே, எஞ்ச –
அழியும்படி, பொருதனன் – போர்செய்தான்,’ என்று – என்றகாரணத்தால்,-
கூடார் -பகைவர்கள்,- அஞ்சி – அச்சமுற்று, களம்முழுதுஉம்-, கழுது ஆட –
பேய்கள்கூத்தாடவும், குறை ஆட – உடற்குறைகள் கூத்தாடவும்,- குஞ்சத்தொடு –
குஞ்சங்களும், குடை – குடைகளும், வீழ்தர – விழும்படி (போகட்டு), முதுகு
இட்டனர்-; (எ – று.)-குஞ்சம் – அழகிய மயிராற்செய்யப்பட்ட ஓர்வகை
அலங்காரத்தூக்கு. இது,  ராஜசின்னம். பி – ம்: கழுகாட.

முதுகிட்டவர் துரியோதனன் முன் வீழ்தலும், நூறைம்-
பது கற்கியும், நாலாயிரம் விகடப் பொரு பகடும்,
மதுகைப் படு தேர் ஆயிரமும், கொண்டு, எதிர் வந்தான்-
எதிர்கைப் பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான்.70.-துரியோதனன் பகைவர்மேல் வருதல்.

முதுகு இட்டவர் – (அருச்சுனனுக்குப்) புறங்கொடுத்த வீரர்கள்,
துரியோதனன் முன் – துரியோதனனுக்கு எதிரில், வீழ்தலும் – விழுந்தவுடனே,-
எதிர்க்கை பட – (தன்னை) எதிர்த்தல் செய்தற்கு, ஒரு மன்னர்உம் இல்லா –
ஓரரசரையும் (இதுவரை) பெற்றிராத, அமர் வல்லான் – போரில்வல்லவனான
அத்துரியோதனன்,- நூறு ஐம்பது கற்கிஉம் – ஐயாயிரங் குதிரைகளையும்,
விகடம்பொரு நால் ஆயிரம்பகடுஉம் – விசேஷ மதத்தையுடைய போர்
செய்கின்றநாலாயிரம் யானைகளையும், மதுகை படு – வலிமைபொருந்திய, தேர்
ஆயிரமும்-,கொண்டு – உடன்கொண்டு, எதிர்வந்தான்-; (எ -று.) –
எதிர்கைப்பட – ஒப்பாகவென்றுமாம். விகடம் – பெருமையுமாம். பி -ம்:
முனைவீழ்தலும்

குருமித்து நடக்கின்றனன்; இவனோடு கொடுங் கார்
உருமின் பொருகுவம்!’ என்று உளம் உகளித்து எழ முனைமேல்
நிருமித்து நடந்தான்-மனு நீதிக்கு ஒரு நிலையான்,
தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன்.71.- தருமன் துரியோதனனை எதிர்த்தல்.

குருமித்து – ஆரவாரித்து, நடக்கின்றனன்- (போர்க்கு) வருகின்றான்:
(ஆதலால்), இவனோடு – இத்துரியோதனனோடு, கார் கொடு உருமின் – மேகத்தில்
தோன்றுகிற கொடிய இடிபோல, பொருகுவம் – போர்செய்வோம்,’ என்று – என்று
எண்ணி, உளம் – மனம், உகளித்து எழ – (உற்சாகத்தாற்) குதித்துக் கிளர, மனு
நீதிக்கு ஒரு நிலையான் – மனு(வினால் தருமசாஸ்திரத்திற்சொல்லப்பட்ட நல்ல)
நீதிகட்கெல்லலாம் ஓர் இருப்பிடமாக வுள்ளவனும், தருமத்தினது உயிர் என்று
தக்கோர் உரை சொல மிக்கோன் – தருமத்துக்கு உயிர்போல இன்றியமையாதவ
னென்று பெரியோர் புகழ்ந்து சொல்லும்படி சிறந்தவனுமாகிய யுதிட்டிரன்,-
முனைமேல் – (சேனையின்) முற்பக்கத்தில், நிருமித்து -(யாவரையுங்)
கட்டளையிட்டுக் கொண்டு, நடந்தான்-; (எ -று.)- பி -ம்: உகளித்தெழு. மேன்
மேல்.

துனை வெங் கபோல விகட கட கரி, துரகம், பதாதி, இரதம்,
அளவு இல’
என நின்ற சேனை முடுகி, அயில் சிலை எறி துங்க வாளொடு
இகலி எழ, எதிர்
குனி சங்கு, தாரை, வயிர்கள், முதலிய, குணில் கொண்டு சாடு
பறைகள் முதலிய,
தனிதம் கொள் மேகம் எனவும், மலை பொரு தமரம் கொள்
வேலை எனவும், அதிரவே,72.-சேனைகள் நெருங்குதலும், வாத்தியகோஷமும்

இதுமுதல் ஐந்து கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) துனை – விரைந்துசெல்லுகின்றவையும், வெம் கபோலம் –
வெவ்வியகன்னங்களையுடையவையும், விகடம் – களி மயக்கங்கொண்டவையுமான,
கட கரி -மதயானைகளும், துரகம் – குதிரைகளும், பதாதி – காலாள்களும்,
இரதம் -தேர்களும், அளவு இல – அளவில்லாதன, என – என்று சொல்லும்படி,
நின்ற-,சேனை – இரண்டுசேனைகளும், முடுகி – விரைந்து, அயில் – வேலும்,
சிலை -வில்லும், எறி துங்கம் வாளொடு -(பகைவர்களைத்) துணிக்கிற சிறந்த
வாளும் ஆகியஇவற்றுடனே, இகலி எழ – பகைமை கொண்டு முன்வரவும்,-
வெதிர் -வேய்ங்குழல்களும், குனி சங்கு – வளைந்த சங்குகளும், தாரை –
தாரைகளும்,வயிர்கள் – ஊதுகொம்புகளும், முதலிய – முதலான ஊதுகிற
வாச்சியங்களும்,குணில் கொண்டு சாரு – குறுந்தடியினால் அடிக்கப்படுகிற,
பறைகள் முதலிய -பேரிகைமுதாலான வாச்சியங்களும், தனிதம் கொள் மேகம்
என உம் -இடிமுழக்கத்தைக்கொண்ட மேகம்போலவும், அலை பொரு தமரம்
கொள் வேலைஎனஉம் – அலைகள் மோதுகிற ஆரவாரத்தைக் கொண்ட
கடல்போலவும், அதிர, -மிக ஒலிக்கவும்,- (எ-று.) – செயவெனெச்சங்கள்
அடுக்கி, 76 – ஆஞ் செய்யுளில் “முழுகின” என்ற மூற்றோடு முடியும். ‘முதலிய’ –
வினையாலணையும் பெயர்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
புளிமாங்காய்ச்சீர்களும், இரண்டு ஆறாஞ் சீர்கள் தேமாச்சீர்களும், மூன்று
ஏழாஞ்சீர்கள் புளிமாச்சீர்களும், நான்கு எட்டாஞ்சீர்கள் கருவிளச் சீர்களுமாகிய
எண்சீராசிரியச் சந்த விருத்தங்கள. ‘தன தந்த தான தனன தனதன தனதந்த
தானதனன தனதன’ எனச் சந்தக்குழிப்புக் காண்க.

கதி கொண்ட சேனை நடவ, எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற,
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ, முகில் பஞ்ச பூத வடிவு
பெற, வியன்
நதி வண்டலாக, அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ, முழு-
மதி அங்க மாசு கழிய, நிரை நிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே,

கதி கொண்ட – (பலவகை) நடைகளைக்கொண்ட, சேனை – இரண்டு
சேனைகளும், நடவ – முன் நடப்பதனால், எழு – (பூமியினின்று) கிளம்புகிற, துகள்
– புழுதி, ககனம் – ஆகாயமார்க்கத்தில், சுலாவி – சுழன்று, அனில் கதி உற –
காற்றின் வேகத்தைப் பொருந்த, (அதனால்), முதிர் -(ஒலி) மிகுந்த, அண்ட சூர
கிரணம் – ஆகாயத்திலுள்ள சூரியனது கிரணங்கள், இருள் எழ – இருட்சியைப்
பொருந்தவும்,- முகில் – மேகம், பஞ்ச பூதம் வடிவு பெற – ஐம்பூதங்களின்
வடிவத்தை அடையவும்,- வியத் நதி – ஆகாச கங்காநதி, வண்டல் ஆக –
சேறாகவும்,- அமரர் உறைதரு நகரம் – அமராவதி பட்டணம், பொன் வீதி –
பொன்மயமான தெருக்களில், புழுதி எழ – மண்தூளி யெழும்பப்பெறவும்,- முழு
மதி- பூர்ணசந்திரன், அங்கம் மாசு கழிய – தன்னுடலிலுள்ள களங்கம்
மிகப்பெறவும்,-நிரை நிரை – அடுக்கு அடுக்காக, வளர் அண்ட கூடம் –
(மேன்மேல்)வளர்ந்திருக்கிற உருண்டைவடிவமான அண்டத்தின், முகடுஉம் –
மேல்முகடும்,அதிர – அதிர்ச்சி யடையவும்,- (எ -று.) – பி -ம்: மதியங்கண்மாசு.
பிதிரவே.

     ‘முகில் பஞ்சபூதவடிவுபெற’ – ஐம்பெரும்பூதங்களுள் நீர் தீ காற்று வானம்
என்னும் நான்குபூதங்களின் சம்பந்தத்தை இயல்பாகவேயுடைய மேகங்கள்
இப்புழுதிகளின் சேர்க்கையால் நிலத்தின் சம்பந்தத்தையும் அடையவென்றபடி,
சுவர்க்கலோகத்து ராஜதானியான அமராவதி பொன்னகரமாதலால், ‘பொன்வீதி’
எனப்பட்டது. வியத் + நதீ= வியந்நதீ: வடமொழித்தொடர்; அது, வியனதி யெனத்
திரிந்தது; வியத் – ஆகாயம். கழிய, கழி – உரிச்சொல்.   

குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி
வயவர் குறுகினர்;
துதி வெங் கை வேழ மறவர் பலரொடு துதி வெங் கை வேழ
மறவர் துதையினர்;
அதிர் சண்ட வேக இரதர் பலரொடும் அதிர் சண்ட வேக
இரதர் அணுகினர்;-
பொதி வெம் பதாதி விருதர் பலரொடு, பொதி வெம் பதாதி
விருதர் பொதுளவே.74.- நால்வகைச்சேனைவீரரும் ஒருவரோடொருவர் எதிர்த்தல்.

குதி கொண்ட – குதித்தலைக்கொண்ட, வாசி – குதிரைகளின்
மேலேறிய, வயவர் பலரொடு – பலவீரர்களுடனே, குதி கொண்ட வாசி வயவர்-,
குறுகினர் – நெருங்கவும்,- வெம் – வெவ்விய, துதிகை – துதிக்கையையுடைய,
வேழம் – யானைகளின்மேலேறிய, மறவர் பலரோடு – வீரர்கள் பலருடனே,
துதிவெம் கை வேழம் மறவர்-, துதையினர் – நெருங்கவும்,- அதிர் – ஒலிக்கின்ற,
சண்ட வேகம் – மிக்க வேகத்தையுடைய, இரதர் பலரொடுஉம் –
தேர்களின்மேலேறிய வீரர்கள் அநேகருடனே, அதிர் சண்ட வேக இரதர்,-
அணுகினர் – நெருங்கவும்,- பொதி (வலி) மிகுந்த, வெம் – கொடிய, பதாதி
விருதர்பலரொடு – பல காலாள் வீரர்களுடனே, பொதி வெம் பதாதி விருதர்-,
பொதுள-நெருங்கவும்,-

புரி செம் பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல
நவமணியின் ஒளி
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள்
கடவ, வல்லவர்கள்,
எரி செங் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை
நிருபர் இருவரும்,
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம்
முழுதும் மறையவே,75.- பாகர் தேர்செலுத்துந் திறமும், யுதிட்டிர துரியோதனரது
அம்புமழைமிகுதியும்

செம் பொன் புரி – சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட, நேமி –
சக்கரங்களின், விசையொடு – வேகத்துடனே, இரு கிரி – இரண்டு மலைகள்,
பொரு- போர்செய்கின்ற, வன்பு போல- வலிமைபோல, நவமணியின் ஒளி –
(இழைக்கப்பட்டுள்ள) நவரத்தினங்களின் காந்தி, விரிதந்த – பரவப்பெற்ற, சோதி
படலம் மிகுவன – ஒளிக்கூட்டம் மிகுவனவாகிய, மிசை கொண்ட தேர்கள்- (தாம்)
ஏறியுள்ள தேர்களை, வலவர்கள்- சாரதிகள், கடவ – செலுத்தாநிற்கவும்- எரி –
(கோபத்தால்) எரிகிற, செம் கண் – சிவந்த கண்களையுடைய, நாகம் அரசுஉம் –
மகாநாகத்தையும், முரசம்உம் – முரசத்தையும், எழுதும் – (முறையே) எழுதியுள்ள,
பாதகை – கொடிகளையுடைய, நிருபர் இருவர்உம் ( துரியோதனன் யுதிட்டிரன்
ஆகிய) அரசர்கள் இரண்டு பேரும், முரிதந்த – வளைத்த, சாபம் – விற்களினால்,
முடுகு – விரைவாக எய்யப்படுகிற, பகழியின் – அம்புகளால், முகில் தங்கு வானம்
முழுதுஉம்-, மறைய – மறைவடையாநிற்கவும்; -(எ-று.) நேமிவிசையொடு
இருகிரிபொருதல் – இல்பொருளுவமம். சிறந்ததை ‘அரசு’ என்றால் மரபு.

அறன் மைந்தன் வாளி அடைய, நயனமி-லவன் மைந்தன் வாளி
விலக; விரகுடை
விறல் மைந்தன் வாளி அடைய, விரகு இலி விடு புங்க வாளி விலக;
முறை முறை,
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத
பின், நிறம் ஒன்றும் ஏழு
பகழி முழுகின, நிருபன்தன் மார்பு குருதி பொழியவே.76.- தருமனம்புகளினால் துரியோதனன்மார்பிற்
குருதிசொரிதல்

அறன் மைந்தன் – தருமபுத்திரனது, வாளி – அம்புகள்,
அடைய -(எதிரிற்) சேர்தலால், நயனம் இலவன் மைந்தன் – பிறவிக்குருடனான
திருதராட்டிரனது குமாரனாகிய துரியோதனனது, வாளி – அம்புகள், விலக –
தடைப்பட்டுநீங்கவும்,- விரகு உடை விறல் மைந்தன்- வஞ்சனையினாற் பெறும்
வெற்றியையுடைய வீரனான துரியோதனனது, வாளி – அம்புகள், அடைய –
எதிர்தலால், விரகு இலி விடு புங்க வாளி – வஞ்சனையில்லாத யுதிட்டிரன் எய்கிற
சிறந்த பாணங்கள், விலக – தடைப்படவும்,- முறை முறை – முறைமுறையே
[மாறிமாறி], மறம்உம் – பராக்கிரமமும், பொறாத சினம்உம் – அடங்காத கோபமும்,
இரு புயம் வலிஉம் – இரண்டு தோள்களின் வலிமையும், தவாமல் – அழியாமல்,
அரிது – அருமையாக, பொருத பின் – போர்செய்தபின்பு, நிறம் ஒன்றும் –
ஒளிபொருந்திய, ஏழுபகழி – (தருமபுத்திரன்எய்த) எழம்புகள், நிருபன் தன்மார்பு –
துரியோதனனது மார்பில், குருதி பொழிய – இரத்தம் வழியும்படி, முழுகின-;
(எ -று.)-முழுகுதல் – நெடுந்தூரம் பாய்தல்.

விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு
சொரிகின்ற சோரி
உடைய மகிபதி, சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில் முரிகின்ற நீடு
புருவம் நிகர் என
முனைகின்ற சாபம் முரிய, விரைவொடு
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திருமைந்தன் மார்பு குருதி
பொழியவே,77.-துரியோதனனம்புகளினால் தருமன்மார்பிற்
குருதிசொரிதல்.

இதுமுதல் மூன்றுகவிகள் – குளகம்

     (இ -ள்.) விரிகின்ற – பரந்த, நீலகிரியில் – நீலநிறமாகிய மலையில்,
இளவெயில்- இளஞ்சூரியகிரணம், விழுகின்ற-, தாரை- ஒழுங்கை, அனைய – ஒத்த,
அழகொடு- அழகுடனே, சொரிகின்ற சோரி உடைய- (மார்பில்) வழிகிற
இரத்தத்தையுடைய,மகிபதி- (துரியோதன) ராசன், சுளிவு இன்றி – வாட்டமில்லாமல்,
மீள – திரும்பவும்,ஒரு கை நொடியினில் – ஒருகைந் நொடிப்பொழுதிற்குள்ளே,
முரிகின்ற நீடு புருவம்நிகர் என – நெறிகின்ற நீண்ட புருவம் ஒப்பென்னும்படி,
முனைக்கின்ற சாபம் முரிய- பொருகின்ற வில் வளைவுற,(அதில்), விரைவொடு
தெரிகின்ற – வேகத்தொடுஆராய்ந்து விடுகிற, கோல்கள் – அம்புகள், முழுகி –
அழுந்துதலால், அறன் அருள்திரு மைந்தன் மார்பு – தருமராசன் பெற்ற சிறந்த
குமாரனாகிய யுதிட்டிரனதுமார்பிலே, குருதி பொழிய – இரத்தம் வழியாநிற்க;

     நீலகிரி – இந்திரநீலரத்தினமயமான மலை: இது – கருநிறமுடைய
துரியோதனனது வலிய பரந்த மார்புக்கும், அதில் விழுந்துவிளங்குகிற
இளவெயில் -மார்பிற் பெருகிவழிகிற செந்நீர்க்கும் உவமை. புருவங்கள்
கோபத்தால்நெறிப்படைதல் – அம்பையெய்யும்போது வில் அசைவுறுதற்கு
உவமை. முழுகி =முழுக.   

மருமங்கள் சோரி வடிய, இருவரும் மலைகின்ற போதில்,
மதுகை நிலையொடு
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன்
உரக துவசமும்,
அருமந்த தேரும், விசய வலவனும், அடல் கொண்டு பாய்
புரவியும் அழிவுற,
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு
பகழி உதையவே,78.- தருமன் துரியோதனனது தேர்முதலியவற்றை யழித்தல்.

மருமங்கள் – மார்புகள், சோரி வடிய – இரத்தம் வழியும்படி,
இருவரும் -, மலைகின்ற போதில்-,- தருமன் குமாரன் – தருமபுத்திரன், மதுகை
நிலையொடு – வலிமையான நிலையோடு (நின்று), நகை கொடு – (கோபத்தாற்)
சிரித்துக்கொண்டு,- அவனிபர் தலைவன் குமாரன் – அரசர்க்கு அரசனான
திருதராட்டிரனது புததிரனாகிய துரியோதனனது, உரக துவசம்உம் – பாம்புக்
கொடியும், அருமந்த தேர்உம்- (கிடைத்தற்கு) அரிய அமிருதம்போன்ற [மிகச்
சிறந்த] தேரும், விசயம் வலவன்உம் – வெற்றியைத்தருகிற சாரதியும் அடல்
கொண்டு பாய் புரவிஉம் – வலிமைகொண்டு பாய்கிற குதிரைகளும், (ஆகிய
நான்கும்). அழிவுஉற – அழிவடையும்படி,- நாணி எறியும் ஒலி – வில்நாணி
தெறிப்பதனாலுண்டாகிய ஓசை, உரும் அஞ்ச – இடியும் அச்சமுறுமாறு, எழ –
உண்டாக. ஒளி விஞ்சு நாலு பகழி – ஒளிமிக்கநான்கு அம்புகளை, உதைய –
செலுத்த,- (எ – று.)- நிலை – விற்போர்செய்வார்க்கு உரிய நிலை.அருமந்த
=அருமருந்தன்ன; மரூஉ.

இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி
எறியும் அளவினில்,
மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில்
விழ, எதிர்
பொழிதந்ததால் ஒர் பகழி-அறன் அருள் புதல்வன் கை வாகை
புனையும் வரி விலே.79.- துரியோதனன் வீசிய வேற்படையைத் தருமன்
துணித்தல்.

துரியோதனன்), இழிதந்து – (தேரினின்று) இறங்கி, மீள –
மறுபடியும்,இமயம் அனையது ஓர் இரதம் – இமயமலைபோன்றதொரு பெருந்தேரை,
கடாவி -ஏறிநடத்திக்கொண்டு, எதிரி – பகைவன், உரன்இடை – மார்பினிடம்,
அழிதந்து -அழியப் பெற்று, மீள – திரும்பிப்போம்படி, அயில் கொள் முனையது
ஓர் அயில் -கூர்மையைக் கொண்ட நுனியையுடையதாகிய ஒருவேலாயுதத்தை,
கொண்டு -கையிலெடுத்து, வீசி எறியும் அளவையில் – வேகமாய் எறிகிற
சமயத்தில்,- அறன்அருள் புதல்வன் – தருமக்கடவுள்பெற்ற புத்திரனது, கை –
கையிலுள்ள, வாகைபுனையும் – வாகைப்பூமாலையைச் சூடிய, வரி வல் –
கட்டமைந்த வில்லானது,-மொழி தந்த -(கீழ்ச்) சொல்லப் பட்ட, வேலின் –
வேலினது, முனைஉம் – நுனியும்,ஒடிவுஉற – ஒடியவும், முரிவுஉண்டு –
(அவ்வேலும்) பிளந்து, கீறி – (இரண்டு)துண்டாகி, வழியில் விழ – இடைவழியில்
விழவும், ஓர் பகழி – ஓர் அம்பை, எதிர் -எதிரே, பொழிதந்தது –
பிரயோகித்தது; (எ -று.)-பி -ம் அளவினின்

பிளவுண்டு வேல் விழுதலின், மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய
மெலிவினன், உளம் நொந்து
நாண உருளும் இரதமும் உடைதந்து, போரும் ஒழியும்வகை சில
கிளர் அம்பு வீசி, ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என,
முன் நிலைபெறு
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன், மிசை வரும் உம்பர் யாரும்
இதயம் மகிழவே.80.- தருமன் துரியோதனனைத் தோற்கடித்தல்

வேல்-, பிளவுண்டு – பிளக்கப்பட்டு, விழுதலின் – கீழே
விழுந்துபோனதால், பிழைகொண்ட வேழம் அனைய மெலிவினன்- (தன்குறிப்புத்)
தவறுதலைக்கொண்ட யானையைப்போன்ற வாட்டத்தையுடையவனாகிய, மகிபதி –
அத்துரியோதனராசன், (பின்னும்), உளம் நொந்து – மனம்வருந்தி, நாணி – வெள்கி,
உருள்உம் இரதம்உம் உடைதந்து – சக்கரங்களுந் தேரும் உடையப் பெற்று,
போர்உம் ஒழியும் வகை – போரும் நீங்கும்படியாக, கிளர் சில அம்பு வீசி –
விளங்குகிற சிலஅம்புகளைப் பிரயோகித்து, ஒரு பவள முதுகிரி நின்றது ஆகும்
என – பவழமயமானதொரு பழைய [பெரிய] மழை நின்றதை ஒக்கு மென்னும்படி,
முன் – எதிரே, நிலை பெறு – நிலையாக நின்ற, வளம் மைந்தன் –
வெற்றியையுடைய வீரனான யுதிட்டிரன்,- மிசை வரும் மேலே [ஆகாயத்தில்]
(போர் காண) வந்த, உம்பர் யார்உம் – தேவர்களெல்லாரும், இதயம் மகிழ –
மனம் மகிழும்படி, வாய்மை-(சில) மெய்வார்த்தைகளை, உரை செய்தனன் –
(துரியோதனனை நோக்கிச்)செல்லுவானானான்; (எ -று.)அவற்றை, மேல் தவறி(ப்
படுகுழியிலே) அகப்பட்டுப்கொண்ட யானை என்றலுமாம். பவளமலையை உவமை
கூறியதனால் தருமன்செந்நிறத்தவ னென்க.

அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன்
அவனி கவர்வுற,
எளிவந்த சூது பொருத விரகு அரிது; ‘எளிது, இன்று பூசல்’ என
முன் விரவினை;
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு, நீயும்
உறுதி தவறினை;
தெளிவு என்பது ஆசும் இலது, உன் மனம்; உறு செரு வென்ற
வீரம் அமையும், அமையுமே!81.- இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர். தருமன்
துரியோதனனை இகழ்தலைத் தெரிவிக்கும்.

அளிதங்கு – வண்டுகள் மொய்க்கின்ற, மாலை –
மாலைகளைத்தரித்த, அரசர் – அரசர்களது, அவையில் – சபையிலே, உன் அதி
வஞ்சம் மாமன் – உன்னுடைய மிக்க வஞ்சனையையுடைய மாமனாகிய சகுனி,
அவனி கவர்வுற -(எங்கள்) இராச்சியத்தைப் பறித்துக்கொள்ளும்படி, எளி வந்த
சூதுபொருத – எளிமைபொருந்திய சூதாட்டத்தை யாடின, விரகு – தந்திரம்,
அரிது -(செய்தற்கு) அருமையானது: இன்று – இப்பொழுது, பூசல் – போர்செய்தல்,
எளிது -(செய்தற்கு) எளியது,’ என – என்று எண்ணி, முன் – எதிரில், விரவினை
-(போர்க்கு) வந்து நின்றாய்போலும்; ஒளி விஞ்சு தேர்உம்- ஒளிமிக்க இரதமும்,
உடைய படைகள்உம் – உடையனவான ஆயுதங்களும், உடையுண்டு – அழிபட்டு,
நீயும்-, உறுதி தவறினை – (மனத்தின்) வலிமைநிலை தவறினாய்; உன் மனம்-,
தெளிவு என்பது – தெளிவான அறிவென்பதை, ஆசுஉம் இலது – சிறிதும்
உடையதன்று; உறு செரு வென்ற – மிக்க போரிலே(நீ பகைவரைச்) சயித்த,
வீரம் -வீரத்தன்மை, அமையும் அமையும் – போதும்போதும்;

     ‘சூதுபோர் அரியதேயன்றி மோதுபோர் அரியதன்று: மிக வெளியது’ என்று
எண்ணினை யாதலின், எதிர்த்துவந்தாய்; அங்ஙனம் எண்ணாமற் சூதுபோரினும்
மோதுபோர் அரிய தென்று எண்ணினையாயின் சூதுபோர்க்கே அயலாரையேவின்
நீஇம்மோது போர்க்கு வந்திராய் என்றபடி. அமையும் அமையும் – அடுக்கு,
இகழ்ச்சி.          

அனிலன் குமாரன், அரசர் அசனி, என் அநுசன் சொல் வாய்மை
பழுதுபடும் என உனை இன்று
கோறல் ஒழிவது அலது, நின் உரம் என்கொல் ஆகும், எனது
கணை எதிர்?
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி
மறைக, விரைவுடன்!
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன்? எதிர் வந்து
நாளை அணிக, இகலியே!’

அனிலன் குமாரன் – வாயுபுத்திரனும், அரசர் அசனி பகையரசர்க்கு
இடிபோன்றவனும், என் அனுசன் – எனது – தம்பியுமாகிய வீமன், சொல் வாய்மை
– (முன்னே) சபதஞ்செய்த வார்த்தை, பழுது படும் -(உன்னை நான் கொன்றால்)
தவறிப் போகும், என – என்று எண்ணி, உனை-, இன்று-, கோறல் ஒழிவது அலது-
கொல்லுதலைச் செய்யாதொழிவ தல்லாமல், நின் உரம் – உனது வலிமை, எனது
கணை எதிர் -என் அம்புகளுக்கு எதிரில், என் கொல் ஆகும் – என்ன
தன்மையதாம்? புனைதும்பை மாலை – அணிந்துள்ள தும்பைப்பூமாலை, சருகு
பட -சருகாக உலர்ந்துபோம் படி, எழு பொடி மண்ட – (கால்களின்விசையாற்)
கிளப்பப்ப டுகிற புழுதி மிகுமாறு, விரைவுடன் – வேகத்தொடு, ஓடி மறைக –
(என்கண்ணெதிரில்நில்லாமல்) ஓடிச்சென்று மறைந்து போவாயாக; இனி எங்கள்
ஆண்மை உரைசெய்து எது பயன்-? நாளை – நாளைக்கு, இகலி –
வலிமைகொண்டு, எதிர் வந்து அணிக – எதிரில் அணி வகுத்துப் போர்க்கு
வருவாயாக; (எ -று.)- என்று தருமபுத்திரன் துரியோதனனைநோக்கிக்
கூறினானென்க. தழிஞ்சி யென்னும் புறத்துறை போலவந்தது, இது.

     சொல்வாய்மை – துரியோதனாதியர் நூற்றுவரையும் யான் ஒருவனே
பொருதுகொல்வனென்று திரௌபதியைத் துகிலுரிந்த காலத்துக் கூறிய பிரதிஜ்ஞை
‘ஆண்மையுரைசெய் தெதுபயன்’- அது யாவர்க்கும் நிச்சயமாகத் தெரிந்தே
யென்க.       

முதிர் குந்திபோசன் மகள்தன் மகன் இவை மொழிதந்த போழ்து,
பெருக முறுவல் செய்து,
அதிரும் சுயோதனனும், ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின்
உரனொடு எறிதர,
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும், எறி தண்டு கூறுபடவும்,
எறிபவன்
விதிருண்டு பாரில் விழவும், ஒரு தனி விறல் உந்து வேல்கொடு
உருவ எறியவே,83.- கதையெறிந்த துரியோதனன்மேல் தருமன்
வேலெறிதல்.

இரண்டுகவிகள் – குளகம்

     (இ-ள்.) போசன் மகள் குந்திதன் முதிர் மகன் – போஜ தேசத்து
அரசனாகியகுந்தியென்பவனது மகளான குந்தியின் மூத்த குமாரனாகிய யுதிட்டிரன்,
இவை மொழிதந்த போழ்து-, பெருக முறுவல் செய்து – மிகச்சிரித்து, அதிரும் –
சிங்கநாதஞ் செய்கிற, சுயோதனன்உம் – துரியோதனனும், ஓர் உயர் கதை – ஒரு
பெரிய கதாயுதத்தை, அவன் மன்றல் மார்பின் – அத்தருமனது வாசனையையுடைய
மார்பிலே, உரனொடு எறிதர-, எதிர் சென்று – எதிரிற்போய், உறும் – வருகிற,
அவன் எறி தண்டு – அவனெறிந்த கதாயுதம், கூறு படஉம் –
பிளவுபடும்படியாகவும், – எறிபவன் -(கதையை) எறிந்த அவன், விதிருண்டு –
நடுக்கமடைந்து, பாரில் விழஉம்-, நீதி நிருபன் – நியாத்தையுடைய தருமபுத்திரன்,-
தனி – ஒப்பில்லாத, விறல் உந்து- வலிமையோடு எறியத்தக்க, ஒரு வேல் கொடு –
ஒரு வேலாயுதத்தை எடுத்து,உருவ – ஊடுருவும்படி, எறிய – வீச,- (எ -று.)-
“வேந்தர் வேந்தன் வீழ்ந்தனன்”என மேலே முடியும்.

     குந்தி – வசுதேவருடன் பிறந்தவள்; கிருஷ்ணனுக்கு அத்தை; (இவளைத்
தந்தையான சூரன் தனதுநண்பனும் பிள்ளையில்லாதவனு மான
குந்தியென்பவனுக்குத் தத்துக்கொடுத்ததனால், இவளுக்குக் குந்தியென்று பெயர்:
பிருதை யென்பது, இவளது இயற்பெயர். பி -ம்: புனையுநிருபனும்.

சூழ்ந்தது விதிகொல்? பாகும் துரகமும் தேரும் வீழ,
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன், மெய் தவா வேந்தன் வேலால்;
தாழ்ந்தது, நமது கொற்றம்’ என நடுத் தரிப்பு ஒன்று இன்றி,
ஆழ்ந்த பைங் கடலோடு ஒப்பான் அடுத்தனன், அங்கர் கோமான்84.- துரியோதனன் கீழ்விழக் கர்ணன் அவனையடுத்தல்.

ஆழ்ந்த பைங் கடலோடு ஒப்பான் – ஆழமான பசிய கடலோடு
ஒப்பவனாகிய, அங்கர் கோமான் – அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணன்,-
‘வேந்தர் வேந்தன் – ராஜராஜனான துரியோதனன், பாகுஉம் துரகம்உம் தேர்உம்
வீழ – சாரதியும் குதிரைகளும் தேரும் (முன்னமே) அழிய, மெய் தவா வேந்தன்
வேலால் – சத்தியந் தவறாத யுதிட்டிரராசனது வேலினால், வீழ்ந்தனன் – தரையில்
(பிறகு) விழுந்தான்; விதி சூழ்ந்தது கொல் – ஊழ்வினை (அவனைமுடித்தற்குச்)
சுற்றிக்கொண்டதோ? நமது-, கொற்றம் – வெற்றி, தாழ்ந்தது- தாழ்வடைந்தது,’
என-என்று எண்ணி, நடு தரிப்பு ஒன்று இன்றி – மனம் நிலைநிற்றல் சிறிதும்
இல்லாமல்[மனங்கலங்கி],அடுத்தனன்-(துரியோதனனருகில்)வந்துசேர்ந்தான்;(எ-று.)

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவுமுள்ள எட்டுக் கவிகள் –
பதினாகாம்போர்ச் சருக்கத்தின் 155 – ஆங்கவிபோன்ற அறுசீராசிரியவிருத்தங்கள்

முன் படு தினத்தில் தந்தை முடிந்த மெய் வருத்தத்தோடு
கல் படு புண்ணின் மீளத் தடி படு கணக்கிற்று ஆக,
வெற்பு அடு தடந் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று, வெய்தின்
எல் படு பரிதி என்னத் தோன்றினன், இவுளித்தாமா.85.- அசுவத்தாமன் துரியோதனனை அடுத்தல்.

இவுளித்தாமா – அசுவத்தாமன்,- முன் படு தினத்தில் –
முந்தினநாளையுத்தத்தில், தந்தை முடிந்த -(தன்) பிதாவாகிய துரோணன்
இறந்ததனாலுண்டான, மெய் வருத்தத்தோடு – மன வருத்தத்துடன், கல்படு
புண்ணின் மீள தடிபடு கணக்கிற்று ஆக – கல்பட்டதனாலாகிய விரணத்திலே
மற்றும் தடியடிபட்ட தன்மைய தாம்படி, வெற்புஅடு தட தோள் வேந்தன்
வீழ்ந்தனன் – மலையை யொத்த பெரிய தோள்களையுடைய அரசன்(இன்று) கீழ்
வீழ்ந்தான், என்று என்று எண்ணி வருந்தி,வெய்தின் – உக்கிரமாக எல் படு பரிதி
என்ன – பகலில் தோன்றுகிற சூரியன்போல,தோன்றினன் – (அங்கே) வந்தான்;
(எ -று.)

     மெய் – மனத்துக்கு முதலாகுபெயர். வருத்தத்தின்மேல் வருத்தத்திற்குக்
கற்படுபுண்ணில் மீளத் தடிபடுதல் உவமம்.   

வேட்ட வெங் களிறோடு ஒப்பான், மேதினிக்கு அரசன், வில் போர்ப்
பூட்டு அறு புரவித் தேரும் பொன்றிய புலனும் ஆகி,
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் உடைந்த மாற்றம்
கேட்டனன், அவர்க்கு முன்னே கிருபஆசிரியன் வந்தான்.86.- கிருபாசாரியன் துரியோதனனை அடுத்தல்.

 வேட்டம் வெம் களிறோடு ஒப்பான் – வேட்டைத் தொழிலிற்
பொருந்திய கொடிய ஆண்யானையோடு ஒப்பவனாகிய மேதினிக்கு அரசன் –
பூமிக்கு அரசனான துரியோதனன், வில்போர் – வில்லைக்கொண்டு செய்யும்
போரில், பூட்டு அரும் புரவி தேர்உம் – (கட்டிப்)பூட்டுதற்கு அரிய குதிரைகள்
பூட்டியதேரும், பொன்றிய புலன்உம் ஆகி – அழிந்த அறிவும் உடையவனாய்,
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் – (புறங்கொடுத்து) ஓடுதலில்லாதசேனை
யையுடையவனான யுதிட்டிரனது கையினாலெறியப்பட்டவேலினால், உடைந்த –
அழிந்த, மாற்றம் – செய்கையை, கேட்டனன் – கேட்டவனாகி, கிருப ஆசிரியன் –
கிரிபாசாரியன், அவர்க்குமுன்னேவந்தான் – கீழ்க் கூறிய கர்ண
அசுவத்தாமர்களுக்குமுன்னே ஓடி வந்தான்;

     வேட்டவெங்களிறு, அடங்காத சீற்றத்துக்கு உவமை. வேட்ட வெங்களிறு –
வேட்டையிற்பிடிப்பட்ட களிறுமாம். வில் – வேல் முதலிய மற்றை ஆயுதங்கட்கும்
உபலக்ஷணம்.   

காப்புடை ஒற்றை நேமிக் காவலன் தாம மார்பில்
நாப் புகல் வாய்மையான்தன் நாள்மலர்ச் செங் கை வை வேல்
கோப்புற வீழும் முன்னர்க் கொதித்து எழு மனத்தன் ஆகி,
தாப் புலி பாய்ந்தது என்ன, சல்லியன்தானும் வந்தான்.87.- சல்லியன் துரியோதனனை அடுத்தல்

காப்பு உடை – காத்தல்தொழிலையுடைய, ஒற்றை நேமி – ஒப்பற்ற
ஆஜ்ஞாசக்கரத்தைக்கொண்ட, காவலன் – துரியோதனராசனது, தாமம் மார்பில்-
(நஞ்சாவட்டைப்பூ) மாலையையுடைய மார்பிலே, நா புகல் வாய்மையான்தன் –
நாவினாற்சொல்லப்படுகின்ற சத்தியத்தையே யுடையவனான யுதிட்டிரனது, நாள்
மலர்செம் கை – அன்றலர்ந்த செந்தாமரைமலர்போன்ற சிவந்த கையினாலெறியப்
பட்ட,வை வேல் – கூர்மையான வேல், கோப்பு உற – கோத்தல் பொருந்த, வீழும்
முன்னர் – விழும்முன்னமே, கொதித்து எழும் மனத்தன் ஆகி – கோபித்து எழுகிற
மனத்தையுடையவனாய், சல்லியன் தான்உம் – சல்லியனும், தா புலி பாய்ந்தது
என்ன – வலிய பலி பாய்ந்ததுபோல, வந்தான் – விரைந்துவந்தான்; (எ -று.) –
ஒற்றைநேமி – ஏகசக்கராபத்தியம். வீழுமுன்னர் வந்தான் – விரைவை விளக்கும்

எப் பெருஞ் சேனையோடும், எக் குல வேந்தும், வந்து,
தப்பு அருங் கொற்ற வேல் கைத் தருமனை வளைந்த காலை,
அப் பெருந் தானைதன்னில் அருச்சுனன் ஆதியான
ஒப்பு அருந் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே.88.- அருச்சுனன் முதலியோர் தருமனை யடுத்தல்.

எ குலம் வேந்துஉம் – உயர்குலத்தில் தோன்றிய எல்லாவரசரும், எ
பெருஞ் சேனையொடுஉம் – பெரிய எல்லாச்சேனைகளுடனும், வந்து-, தப்பு அருங்
கொற்றம் வேல் கை – தவறுதலில்லாத வெற்றியைத்தருகிற வேற்படையை யெறிந்த
கையையுடைய, தருமனை-, வளைந்த காலை – சூழ்ந்த பொழுதில்,- அ பெருந்
தானை தன்னில் – அந்தப் பெரிய பாண்டவசேனையிலுள்ள, அருச்சுனன் ஆதி
அன – அருச்சுனன் முதலான, ஒப்பு அருந் தரணி பாலர் – உவமையில்லாத
அரசர்கள், இவற்றைஉம் வந்து உதவினார் – இத்தருமனுக்கும் வந்த
துணையானார்கள்

இரு படை அரசும் தம்மில் ஈர்-இரண்டு அங்கம் ஆகி,
வரு படை கொண்டு நின்று, வல்லவா பூசல் தாக்க,
பொரு பணியுடைப் பதாகைப் பூபதிதனையும் கொண்டு, ஆங்கு
ஒரு படை கைக் கொளாமல், ஒன்னலர் உடைந்து போனார்.89.- பின்பு நிகழ்ந்த போரிற் கௌரவர் புறமிடுதல்.

இருபடை அரசுஉம் – ஆயுதங்களில்வல்ல (கௌரவர் பாண்டவர்
என்னும்) இருதிறத்தரசர்களும், ஈர் இரண்டு அங்கம் ஆகி வரு படை கொண்டு-
(யானை தேர் குதிரை காலாள் என்னும்) நான்கு அங்கமாகி வருகின்ற சேனையை
யுடன்கொண்டு, நின்று – எதிர்த்துநின்று, வல்ல ஆ – (தாம் தாம்) வல்லபடி,
தம்மில்- தமக்குள், பூசல் தாக்கி – போரை மோதிச்செய்து,- (பின்பு),- ஆங்கு –
அப்போரில்,ஒன்னலர் – பகைவர் [கௌரவசேனையார்], உடைந்து – தோற்று,
பொரும் அரவுஉடை பதாகை பூபதி தனைஉம் கொண்டு – (பிராணிகளைத்)
தீண்டியழிக்குந்தன்மையதான பாம்பின் வடிவத்தை யெழுதியகொடியையுடைய
துரியோதனராசனையும் எடுத்துக்கொண்டு, ஒரு படை கை கொளாமல் – ஓர்
ஆயுதத்தையுங் கையிற் கொள்ளாமல்[எல்லாவாயுதங்களையும் இழந்து], போனார் –
ஓடிப்போனார்; (எ -று.) – பி -ம்: தாக்கப்பொருபணி.

நா கையாப் புகழான், பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன்,
வாகையால் பொலி திண் தோளான், மாகதக் கொங்கர் கோமான்,
பாகை ஆட்கொண்டான், செங்கைப் பரிசு பெற்றவர்கள் போல
ஓகையால் செருக்கி மீண்டார், உதிட்டிரன் சேனை உள்ளார்.90.- பாண்டவசேனையார் வெற்றியொடு மீளுதல்.

உதிட்டிரன் சேனை உள்ளார் – தருமனது சேனையிலுள்ள
வீரர்கள்,-நா கையா புகழான் – நாவுக்குக் கைக்காத[மிக இனிய]
கீர்த்தியையுடையவனும்,பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன் –
பெண்ணையாற்றின் நீர்வளம் மிக்கதிருமுனைப்பாடிநாட்டை யுடையவனும்,
வாகையால் பொலி திண் தோளான் -வெற்றிமாலையால்  விளங்குகின்ற வலிய
தோள்களையுடையவனும், மாகதம்கொங்கர் கோமான் – மாகதக்கொங்குநாட்டிற்குத்
தலைவனும் ஆகிய பாகை -வக்கபாகையென்னும் நகரத்தில் அரசாளுகிற,
ஆட்கொண்டான் -வரபதியாட்கொண்டா னென்னும் மன்னவனது, செம் கை –
சிவந்த இரண்டுகைகளினாலும் கொடுக்கபடுகிற, பரிசு – வெகு மானத்தை,
பெற்றவர் – பெற்றபுலவர்களது, நெஞ்சு என்ன – மனம் போல, ஓகையால்
செருக்கி -மகிழ்ச்சியினாற்களித்து, மீண்டார் – திரும்பி ( த் தம் படைவீட்டுக்கு)ச்
சென்றார்கள்;(எ -று.)

     வெறுப்பைத் தராத புகழின் இனிமைமிகுதியை நன்கு விளக்குதற்கு, ‘நா
கையாப்புகழ்’ என்றது. மாகதக்கொங்கு என்பது – நடு நாட்டைக்குறிக்கு மென்பர்.
பாகை = வக்கபாகை: முதற்குறைவிகாரம். ஆட்கொண்டான் – பெயர். பி – ம்:
பெற்றவர்கள்போல     

அருக்கனும், தருமன் மைந்தன் ஆண்மையும் நிலையும் கண்டு,
வெருக் கொளும் நிருபர் என்ன, மேல் திசை வேலை மூழ்கி,
சுருக்கம் இல் கங்குற் காலம் சென்ற பின், சுதன்மேல் அன்பு
பெருக்க உண்டாக, மீண்டும் குண கடல் பிறந்திட்டானே.91.- அன்றைச் சூரியாஸ்தமனமும், மறுநாட் சூரியோதயமும்

அருக்கன்உம் – சூரியனும்,- தருமன் மைந்தன் – தருமபுத்திரனது,
ஆண்மைஉம் – பராக்கிரமத்தையும், நிலைஉம் – போர் நிலைமையையும், கண்டு –
பார்த்து, வெரு கொளும் – அச்சங்கொள்ளுகிற, நிருபர் என்ன – அரசர்கள்
(ஓடியொளித்தல்) போல, மேல் திசை வேலை – மேற்குத்திக்கிலுள்ள கடலில்,
மூழ்கி- முழுகிமறைந்து [அஸ்தமித்து], – சுருக்கம் இல் – சுருங்குதலில்லாத,
கங்குல் காலம்- இராப்பொழுது, சென்றபின் – கழிந்தபின்பு,- சுதன்மேல் அன்பு
பெருக்க உண்டாக-(தன்) குமாரனான கர்ணனிடத்து அன்பு மிகுதியாக
உண்டாக,(அதனால் அவனைக்காணுதற்கு வந்தவன் போல), மீண்டும்உம் –
மறுபடியும், குண கடல் பிறந்திட்டான் -கிழக்குக்கடலில் உதித்தான்;

     முதலிரண்டடி – உவமையணி. பின்னிரண்டடியில் சூரியன் உதித்தற்குச்
சுதன்மேலன்பு பெருக்க உண்டாதலைக் காரணமாகக் கற்பித்ததனால்,
ஏதுத்தற்குறிப்பேற்றவணி.   

——————————–  

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading