ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -42. பதினான்காம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது
இடத்து அடக்கி,
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர்
மகோததியின்
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து, பற்குனப்
பொருப்பிடைப் பொழியும்
கரிய பைம் புயலைக் கைதொழுமவரே கருவிலே திருவுடையவரே.கடவுள் வாழ்த்து

அரிய – (பிறர்க்கு) அருமையான, தண் – குளிர்ச்சியாகிய,
கலைவாள் -கலைகளின் ஒளியையுடைய, மதியம்உம் – சந்திரனையும்,
கொதிகொள்- கொடுமையைக்கொண்ட, ஆலம்உம் – விஷத்தையும், தனதுஇடத்து
– தன்னிடத்தில்,அடக்கி – அடங்கவைத்துக் கொண்டு, உரிய ஓள் கங்காநதிக்கு
ஒரு பதி ஆய் -தனக்கு உரியதான சிறந்த கங்காநதிக்கு ஓர் இடமாய் [ஒரு
தலைவனாய்].உரைபெறும்- புகழ்பெற்ற – உயர் மகோததியில் – சிறந்த
(பரமசிவனாகிய)பெருங்கடலினின்று, பரிய திண் சிலையோடு அம்புஎலாம்
முகந்து – பெரிய வலியவில்லும் அம்பும் ஆகிய எல்லாவற்றையும் நிரம்ப எடுத்து,
பற்குனன் பொருப்பிடை- அருச்சுனனாகிய மலையிடத்தே, பொழியும் – சொரிந்த,
கரிய பைம் புயலை -கருநிறமுடைய குளிர்ந்தமேகம் போன்ற கண்ணனை,
கைதொழுமவர்ஏ – கைகூப்பிவணங்குந் தன்மையுடையவர்கள்தாமே, கருவிலே
திரு உடையவர் -கருப்பத்திலேதொடங்கி ஐசுவரியமுடையவராவர்; ( எ -று.)

     கண்ணபிரான் தனது பெருங்கருணையால் பாண்டவர்க்குச் சகாயனாய்
நின்று அருச்சுனனது சபதத்தை நிறைவேறச்செய்தற் பொருட்டு அவனுடன்
கைலாசத்துக்குச்சென்று அதற்கு உரிய கருவிகளை அவ்வருச்சுனனுக்குச்
சிவபிரானைக்கொண்டு கொடுப்பித்தருளின வரலாற்றைக் கீழ்ப்
பதின்மூன்றாம்போர்ச்சருக்கத்திற் கூறிவந்தபொழுது அப்பிரானது அந்தக் கலியாண
குணத்தில் இவ்வாசிரியர்க்கு உண்டான ஈடுபாடு அச்சருக்கம் முடிந்தபின்பும்
ஆராதுதலையெடுத்து நின்றதனால், அச்செய்தியையே குறித்து அடுத்த
இச்சருக்கத்துக்குக்கடவுள்வாழ்த்துக் கூறுகின்றனர்.

   சிவபிரானிடத்தில் கடலின்தன்மையையும், கண்ணபிரானிடத்துக்காளமேகத்தின்
தன்மையையும், அருச்சுனனிடத்துமலையின் தன்மையையும் ஏற்றிக்கூறினார்;
உருவகவணி. மதியமும் ஆலமும் தனதிடத்து அடக்குதல் – உபமானம் உபமேயம்
இரண்டுக்கும் பொருந்துதலும், பதி சிலை அம்பு என்ற சொற்கள் உபமானமாகிய
கடலோடு இயையுமிடத்து முறையே கணவன் மழைக்கல் நீர் என்றும்,
உபமேயமாகிய சிவபிரானோடு இயையுமிடத்து முறையே இடம் வில் பாணம்
என்றும் பொருள்பட்டு, அச்சிலேடை உருவகத்துக்கு அங்கமாய் அமைதலும்
காண்க. கடலுக்கு, மதியை அடக்குதல் – பாற்கடல் கடைந்தகாலத்து அக்கடல்
சந்திரனது உற்பத்திக்கு இடமானதும், நாள்தோறும் சந்திரனுதித்தல் கடலினின்று
தோன்றுகிறவாறுபோல இருத்தலும்: ஆலம் அடக்குதல் – பாற் கடல்கடைந்த
காலத்து அக்கடல் கொடிய ஹாலாஹலமென்னும் விஷந்தோன்றுதற்கு
இடமாயினமை : கங்காநதிக்குப்பதியாதல்- கங்கைநதியாகிய பெண்ணுக்குக் கடல்
கணவனாதலும், கடல் கங்கை நதி சேருமிடமாதலும். (எல்லாநதிகளுங் கடலிற்
சேர்தலும், நதி சப்தமும் ஸமுத்ரசப்தமும் வடமொழியில் முறையே பெண்பால்
ஆண்பாற் சொற்களாக அமைந்திருத்தலு மாகிய தன்மைபற்றி நதிகளை
மனைவிகளாகவும் கடலை அவைகட்குக் கணவனாகவும் கூறுதல் மரபு.)
பொதுப்பட ‘நதிக்கொருபதியாய்’ என்றுகூறாது இங்கே ‘கங்காநதிக் கொரு பதியாய்’
என்று எடுத்துக்கூறினது. அந்நதியின் ஒப்புயர்வற்ற சிறப்புப்பற்றி யென்க.
அவ்யாற்றின் மிக்க சிறப்பு, பிரசித்தம். கடலுக்குச் சிலை – ஆலங்கட்டியும்,
அம்பு -சாதாரணநீர்த்துளியு மென்க. மிக்கவலிமையும், எதற்குஞ்சலியாத உறுதியும்,
அளவிடவொண்ணாதஉயர்வும் பொருள்வண்மையும் முதலியன உடைமைபற்றி,
அருச்சுனனிடத்து மலையின் தன்மையை யேற்றிக் கூறினார். கண்ணனுக்குக்
காளமேகம் கருநிறத்தால் மாத்திரமே யன்றி உலகத்தின்தாபத்தை யொழிக்கிற
குளிர்ந்த கருணை மழையைச் சொரியுந் தன்மையாலும் அமையு மென்க.
சிவபிரானுக்கு, சந்திரனையும் விஷத்தையும் அடக்குதல் – சந்திரனைத் தலையில்
தரித்தலும், விஷத்தைக் கழுத்தில்நிறுத்தலும் ;  கங்காநதிக்கு ஒரு பதியாதல் –
கங்கையைச் சடையில் வைத்துக்கொண்டிருத்தல் ; இனி, பெண்பாலாகியகங்கை
சிவபிரானை நீங்காதுசேர்ந்திருக்குந் தன்மையென்றலுமுண்டு உபமேயமாகிய
சிவபிரான் பலதேவர்களினுஞ் சிறப்புப்பெற்று மகாதேவனென்றும் மகேசுவரனென்றும்
கருணைக் கடலென்றும் உயர்த்திக்கூறப்படுந்தன்மை தோன்ற, உபமானமாகிய
கடலை ‘உயர் மகோததி’ என்று விசேடித்துக் கூறின ரென்க.

     பெறுதற்கரிய பொருள்களாய்ப் பரமசிவனிடமிருந்த வில் அம்புகளை
அருச்சுனன் எளிதிற்பெற்றுப் பயன்படுத்திக்கொள்ளுதற்குக் கண்ணன் புருஷகாரமாய்
நின்று உதவியமைபற்றி, கண்ணனை ‘பரமசிவனாகிய பெருங்கடலிடத்தினின்று
சிலையும் அம்பும் முகந்து பற்குணப் பொருப்பிடைப்பொழியுங் கரியபைம்புயல்’
என்றார். வில் அம்புகளோடு அவற்றிற்கு உரிய முஷ்டிநிலை என்பனவும்,
ருத்திமகாமந்திரமுங் கொடுப்பித்தமை, ‘எலாம்’, ‘பொழியும்’ என்ற சொற்களாற்
குறிப்பிக்கப்பட்டன வென்க.

     கருவிலே திருவுடைமையாவது – கருப்பத்தி லிருக்கும்பொழுதே எம்பெருமான்
தன் திருவருளால் தனதுசொரூபரூபகுண விபூதிகளைக் காட்டிக் குளிர நோக்கித்
தரிசநந்தரப்பெற்று வணங்கி அப்பயிற்சியின் நிறைவினாற் பிறந்த பின்பும் ஒருகாலும்
அப்பரமனை மறவாமல் எப்பொழுதும் பகவத் பக்தியாகிற ஐசுவரியத்தைப் பரி
பூர்ணமாக உடையராயிருத்தல். தொண்டரடிப்பொடியாழ்வார் எம்பெருமானுக்கு
அடிமைபூணாதவரை “கருவிலேதிருவிலாதீர்” என்று இகழ்ந்து
அருளிச்செய்தமைகொண்டு , இவர் இங்கு எம்பெருமானுக்கு அடிமைபூண்பவரை
‘கருவிலே திருவுடையவர் ‘ என்றார். ‘கருவிலே திருவுடையவர் ‘ – கர்ப்ப ஸ்ரீமாந்.
பி -ம்:கரியவண்புயலை.

     இதுமுதற் பதினொருகவிகள் – பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்களும்,
மாச்சீர்களும மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீராசிரியவிருத்தங்கள்.  

காலை ஆதபனைத் தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி,
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்குத் தானமும்
தகுவன வழங்கி,
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு
அற முடிப்பான்,
வேலை ஆர் அரவப் பல பணை முழங்க, வெம் முரண்
சேனையோடு எழுந்தான்.2.- தருமபுத்திரன் சேனையுடன் போர்க்குப் புறப்படுதல்.

காலை – (பதினான்காநாட்) சூரியோதயகாலத்தில்,- தருமன் மா
மதலை- யமதருமராசனது சிறந்தகுமாரனான யுதிட்டிரன், – ஆதபனை கை தொழு
கடன்முடித்தருளி – சூரியனைக் கை கூப்பிவணங்கிச் செய்யவேண்டிய
கடமைத்தொழில்களை அன்புடன் செய்து முடித்து, – சாலை – யாகசாலையில்,
ஆர்-பொருந்திய, தழல் – அக்கினியில், செய் – செய்கிற, வேள்வி –
யாகங்களையுடைய,அந்தணர்க்கு – பிராமணர்களுக்கு, தகுவன தானம்உம் –
தக்கனவாகியதானங்களையும், வழங்கி – மிகுதியாகக் கொடுத்து,- மாலைஆம்
அளவில் -(அன்றைத்தினம்) மாலைப்பொழுது வருமளவிற்குள், தனஞ்சயன்
மொழிந்தவஞ்சினம் வழு அற முடிப்பான் – அருச்சுனன் ( முதல்நாளிற்) சொன்ன
சபதத்தைத்தவறுதலில்லாமல் நிறைவேற்றும் பொருட்டு,- வேலை ஆர்-
கடலொலியையொத்த,அரவம் – ஆரவாரத்தையுடைய , பலபணை-
அநேகவகைவாத்தியங்கள், முழங்க -மிக ஒலிக்க, வெம் முரண் சேனையோடு –
கொடிய வலிமையையுடைய ( தன்)சேனையுடன், எழுந்தான் – (போர்க்குப்)
புறப்பட்டான்; ( எ -று.)

     மாலையாமளவில் முடிப்பான் என்க. இனி, மாலையாமளவில்மொழிந்த என
இயைத்து, முந்தினநாளைமாலைப்பொழுதிற் சொன்ன என்றலுமாம்.

அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி, ஆடகப்
பொருப்பினால் கடலைக்
கடைந்து, அமுது அளித்த கருணை அம் கடலே கடும்
பரிச் சந்தனம் கடவ,
மிடைந்து ஒளி உமிழும் வேற்படைத் தடக் கை வீமனும்,
இளைஞரும், பலரும்,
குடைந்து இரு புறனும், கைவர, மகவான் குமரனும்
அமர்க்களம் குறுக,3.- அருச்சுனன் போர்க்குப் புறப்படுதல்.

இதுவும், வருங்கவியும் – குளகம்.

     (இ-ள்.) அடைந்தவர் – (தன்னைச்) சரணமடைந்த தேவர்களின் இடுக்கண்-
துன்பத்தை, அகற்றுதற்கு – போக்குதற்கு, எண்ணி- நினைத்து, ஆடகம்
பொருப்பினால் – பொன்மயமான மந்தர மலையைக் கொண்டு , கடலை கடைந்து –
பாற்கடலைக் கடைந்து, அமுது அளித்த – (அத்தேவர்கட்கு) அமிருதத்தைக்
கொடுத்த, கருணை அம் கடலே – அருளுக்கு அழகிய ஒருகடல்போல
இடமாகவுள்ளவனாகிய கண்ணபிரான்தானே, கடும் பரி சந்தனம் கடவ-
வேகத்தையுடைய குதிரைகள் பூட்டிய (தனது) தேரைச் செலுத்தவும்,-
மிடைந்து ஒளி உமிழும் – மிகுதியாக ஒளியை வீசுகிற, வேல் படை –
வேலாயுதத்தையேந்திய, தட கை – பெரியகையையுடைய, வீமன்உம்- வீமசேனனும்,
இளைஞர்உம் – தம்பிமாரான நகுலசகதேவர்களும், பலர்உம் – மற்றும் பல
அரசர்களும், இரு புறன்உம்- (தனது) இரண்டுபக்கங்களிலும், குடைந்து- நெருங்கி,
கைவர – கைகள்போல ( ஏற்றதுணையாக அடுத்து) வரவும்,- மகவான் குமரன் உம்-
இந்திரகுமாரனான அருச்சுனனும், அமர் களம் குறுக- யுத்த களத்தைச்சேர்ந்திட.-
(எ-று.)-“மைத்துனன்வகுத்துநின்றான்” என அடுத்தகவியோடு தொடர்ந்து முடியும்.

     கீழ்க்கவியில், ‘தருமன்மாமதலைசேனையொடெழுந்தான்’ என்றதில்,
மற்றையோர் எழுந்ததும் அடங்குமாயினும், அன்றைத் தினத்தில் சபதத்தை
நிறைவேற்றவேண்டிய பாரத்தை அருச்சுனன் மேற்கொண்டுள்ளானாதலால்,
அவனதுவருகையைச் சிறப்பாகத் தனியேயெடுத்துக்கூறுகிறார். வீமனும்
நகுலசகதேவர்களும் சாத்தகி முதலிய மற்றும் பல அரசரும்
அவனையடுத்துநின்றதற்கும் இதுவே காரணம். கடல் கடைந்ததொருகட லெனச்
சமத்காரந் தோன்றக் கூறினார். தேவர்களைக் காக்கும்பொருட்டுப் பாற்கடல்
கடைந்து அமுதளித்ததுபோலவே, தேவாமிசமான பாண்டவர்களைக்
காத்தற்பொருட்டுப் போர்க்கடலைக் கடைந்து வெற்றியளிக்குங் கருணாநிதி
யென்பார்,இங்கு அத்தன்மையைக் கூறினார். முன்பு கடல்கடைந்தமுதளித்தவனும்,
இப்பொழுதுகிருஷ்ணாவதாரஞ் செய்தவனும் ஒருதிருமாலே யாதலால் அத்தன்மை
கண்ணன்மேல் ஏற்றிக் கூறப்பட்டது . கடலே என்ற ஏகாரம் – உயர்வு சிறப்பு.
குடைதல்என்பது – நீரில்விளையாடுதலையுங் குறிக்குமாதலின், ஒருதொடராய் நின்ற
அடுத்தகவியிற் சேனையைக் கடலென்பதற்கு ஏற்ப, அதனிடையே செல்லுதலை
‘குடைந்து’என்றா ரென்னலுமாம்: அது, இங்கு, உல்லாசமாக ஊக்கத்தோடு
செல்லுதலைவிளக்கும். கைவர – ஒழுங்காய்வரஎனினும், படைவகுப்பில்வர
எனினுமாம்

சோனை அம் புயலின் கணை தொடும் பதாதி, துரகதம், துரகதத்
தடந் தேர்,
யானை, என்று உரைக்கும் நால்வகை உறுப்பும் இராச
மண்டல முகமாக,
தானை அம் கடலை மிடல் உற வகுத்து, தான் முதல்
பேர் அணியாகச்
சேனையின் பதியாம் மைத்துனன் நின்றான், தேவரும்
யாவரும் வியப்ப.4.-திட்டத்துய்மன் பாண்டவர்சேனையை அணிவகுத்தல்.

சேனையின் பதி ஆம்- (பாண்டவ) சேனைக்குத் தலைவனான,
மைத்துனன் – (பாண்டவர்களின்) மைத்துனனாகிய திருஷ்டத்யும்நன்,- சோனை-
விடாப்பெருமழை பொழிகிற, அம் – அழகிய, புயலின் – மேகம்போல, கணை
தொடும் – அம்புகளை மிகுதியாகப் பிரயோகிக்கிற, பதாதி – காலாள்களும்,
துரகதம்- குதிரைகளும், துரகதம் தட தேர் – குதிரைகள் பூண்ட பெரிய தேர்களும்,
யானை- யானைகளும், என்று உரைக்கும் – என்று சொல்லப்படுகிற, நால் வகை –
சதுரங்கங்கள், உறுப்பு உம்- ஏற்ற அவயவங்களும், நால் வகை – சதுரங்கங்கள்,
உறுப்புஉம் – ஏற்ற அவயவங்களும், இராச மண்டலம் – அரசர்கள் கூட்டம், முகம்
ஆக – முகமுமாக (அமையும்படி), தானை அம் கடலை – (தனது) அழகிய
சேனாசமுத்திரத்தை, மிடல்உற – வலிமைமிக, தேவர்உம் யாவர் உம் வியப்ப.
(வானத்தில் நின்ற போர்காணுந்) தேவர்களும்மற்றும் எல்லோரும் (கண்டு)
அதிசயிக்கும்படி, வகுத்து – வியூகம்வகுத்து,- தான்-, முதல் பேர் அணி ஆக –
அச்சேனையின் முகத்திற்கு ஒரு பெரிய அலங்காரமாக, நின்றான் – முன்நின்றான்;

பாப்பு வெம் பதாகைப் பார்த்திவன் பணியால் பத்து-இரண்டு
யோசனைப் பரப்பில்
தீப் புறம் சூழ நடுவண் நிற்பதுபோல், செயத்திரதனை
இடை நிறுத்தி,
கோப்புறப் பரி, தேர், குஞ்சரம், பதாதி, கூறு நூல் முறை
அணி நிறுத்தி,
காப்புறத் திசைகள் எட்டினும் நெருங்கக் காவலர்
யாரையும் நிறுத்தி,5.- மூன்றுகவிகள் – குளகம்: துரோணன் கௌரவசேனையை
அணிவகுத்தலைக் கூறும்.

பாம்பு – பாம்பின்வடிவமெழுதிய, வெம் – பயங்கரமான, பதாகை –
கொடியையுடைய, பார்த்திவன் – துரியோதனராசனது, பணியால் – கட்டளையின்
படி,-பத்து இரண்டு யோசனை பரப்பில் – இருபத  யோசனை விசாலமுள்ள
இடத்திலே,தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் – நெருப்புப் புறத்திற் சூழ்ந்துநிற்க
அதன்நடுவில் நிற்பதுபோல, செயத்திரதனை இடை நிறுவி – சயத்திரதனை
(க்கொடிய பெரியசேனையின்) மத்தியிலே நிற்கச்செய்து,- கோப்பு உற-
இடைவிடாமல் ஒன்றோடொன்று தொடர்ச்சியாக அமையும் படி, பரி தேர் குஞ்சரம்
பதாதி – குதிரை தேர் யானை காலாள் என்ற வகைச்சேனைகளையும், கூறும் நூல்
முறை – (படைவகுப்பைக்) கூறுகிற சாஸ்திரங்களின் முறைமைப்படி, அணி நிறுத்தி –
ஒழுங்கு படச் சுற்றிலும் நிற்கச் செய்து,- காப்புஉற – (அவனுக்குக்) காவலாக
அமையும்படி, திசைகள் எட்டின்உம் – எட்டுத்திக்குக்களிலும், காவலர் யாரைஉம்-
காக்குந் திறமமைந்தவர்களான அரசர்கள் பலரையும், நெருங்க நிறுத்தி –
இடைவிடாது நிற்கும்படி வைத்து,- ( எ -று.)- இப்பாட்டிலும், அடுத்த இரண்டு
பாடல்களிலுமுள்ள ‘நிறுத்தி’ என்ற சொற்களெல்லாம். 7- ஆம் பாட்டிலுள்ள
‘நின்றனன்’ என்றதனைக் கொண்டு முடியும்; அப்பாட்டிலுள்ள ‘துரோணன்’
என்பதேஇவற்றிற்கெல்லாம் எழுவாய்.

     பதின்மூன்றாம்போர்நா ளிரவிலே கடோற்கசனால் அருச்சுனனது சபதத்தை
யறிந்த துரியோதனன், துரோணனை நோக்கி ‘நாளைக்குச் சைந்தவனைப் பாதுகாத்து
அருச்சுனனை அனலிற் குளிப்பிக்கவேண்டும்’ என்றுமிகவும் பிரார்த்தித்தன
னாதலால், இங்கே ‘பார்த்திவன்பணியால்’ என்றார். துரியோதனன்
வேண்டிக்கொண்டதற்குத் துரோணன் ஆமளவுங்காப்பன் என்று
வாக்குத்தத்தஞ்செய்துள்ளா னாதலால், மிக்ககாப்பு அமையும்படி அணிவகுக்கின்றன
னென்க. அபிமனைக் கொன்ற சயத்திரதனை அருச்சுனன் சபதப்படி
கொல்லவொண்ணாவண்ணம் மாலைப்பொழுதளவும்  பாதுகாப்பதுவே
துரியோதனாதியரது முயற்சியாதலால், இங்ஙனம் துரோணன்  அவனை
இடைநிறுத்திச் சுற்றிலும் வெகுதூரமளவும் சேனைகளையும் அரசர்களையும் நிறுத்தி
அணிவகுப்பானாயினான். இரண்டாம்அடியில், சயத்திரதன் கொடியசேனைசூழ
இடைநிற்றற்கு நெருப்புச்சூழ இடைநிற்றலை உவமைகூறியது, உவமையணி.
பாணாசுரன் முதலிய சிலர்க்கு நெருப்புக்கோட்டையிருந்தது கருதி, சயத்திரதனுக்குப்
பாதுகாவலாகச் சூழ்ந்த சேனைக்குத் தீயரண் உவமை
கூறப்பட்டதென்க.        

தூசியில் முதல் நாள் வஞ்சினம் மொழிந்த துன்மருடணன்தனை
நிறுத்தி,
ஊசியும் நுழையா வண்ணம் வில் பதாதி வயவரை உரன்
உற நிறுத்தி,
வாசியில், இபத்தில், தேரில், ஏண் பட்ட மன்னரை இரு
கையும் நிறுத்தி,
பேசிய கன்னன் சகுனி சல்லியரைப் பேர் அணியாகவே நிறுத்தி,

முதல் நாள் – முந்தினநாளில், வஞ்சினம் மொழிந்த – (மறுநாள்
மாலைப்பொழுதளவும் சயத்திரதனைத் தான் காப்பதாகச்) சபதஞ் சொன்ன,
துன்மருடணன் தனை – துர்மர்ஷண னென்ற அரசனை, தூசியில் –
முன்னணிச்சேனையிலே, நிறுத்தி- நிற்க வைத்து,-ஊசிஉம் நுழையா வண்ணம் –
சிறிய ஊசியும் இடையில் நுழையவொண்ணாதபடி [மிக அடர்த்தியாக], வில் பதாதி
வயவரை- வில்லில்வல்ல காலாள்வீரர்களை, உரன் உற – வலிமைபொருந்த நிறுத்தி-
(அவனுக்கு உதவியாக அவனுடன்) நிற்கச்செய்து,- வாசியில் – குதிரைகளிலும்,
இபத்தில் – யானைகளிலும், தேரில் – தேர்களிலும் (ஏறியுள்ள), ஏண் பட்ட
மன்னரை- வலிமைபொருந்திய அரசர்களை, இரு கைஉம் நிறுத்தி – இரண்டு
பக்கங்களிலும்நிற்கச்செய்து,- பேசிய கன்னன் – (சயத்திரதனைத் தான்
பாதுகாப்பதாகப்)பிரதிஜ்ஞைகூறின கர்ணனையும், சகுனி சல்லியரை – சகுனியையும்
சல்லியனையும்,பேர் அணி ஆகஏ நிறுத்தி – பெரிய நடுச்சேனையிற் பொருந்தும்படி
நிறுத்தி,-(எ-று.)-“சகடதுண்டத்து நின்றனன் துரோணன்” என வருங் கவியோடு
தொடர்ந்துமுடியும்.

     தூசி – முந்துற்றுப்பொருபடை. அருச்சுனன்செய்த சபதத்தைக் கடோற்கசனால்
அறிந்து துரியோதனன் துரோணன்முதலானோரை நோக்கி வேண்டியபொழுது,
துர்மர்ஷணன் அங்ஙனமே தான்காப்பதாக உறுதிமொழி கூறியதனை,
கீழ்ச்சருக்கத்திற் காண்க. அப்பொழுது கர்ணன்முதலியோர் தாம் காப்பதாகச்
சபதஞ்செய்தமை பற்றியும் ‘பேசியகன்னன்சகுனிசல்லியரை’ என்றது. ஊசியும்,
உம்மை – இழிவுசிறப்பு. எண்பட்டமன்னரை யென்றும் படிக்கலாம். எண்பட்ட –
மதிப்புப் பெற்ற.     

அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய
சேனையின் சிரத்து,
மணி முடி புனைந்து வைத்தென, அலங்கல் வலம்புரி
மார்பனை நிறுத்தி,
பணிவுறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என,
பயில் போர்த்
துணிவுடன் பல் தேர் சூழ்வர, சகட துண்டத்து நின்றனன்,
துரோணன்.

அணிகள் ஐந்து ஐந்தால் – தனித்தனி ஐந்துஐந்து
பகுப்பாகப்பிரிக்கப்பட்ட சேனைத்தொகுதிகளால், ஐவகை வியூகம் ஆகிய-
ஐந்துவகை வியூகமாக வகுக்கப்பட்ட. சேனையின் – சேனையினுடைய, சிரத்து –
முடியில், மணி முடி புனைந்து வைத்து என – இரத்தினகிரீடத்தைத் தரித்து
வைத்தாற்போல, வலம்புரி அலங்கல் மார்பனை நிறுத்தி –
நஞ்சாவட்டைப்பூமாலையைத் தரித்த மார்பையுடையனான துரியோதனனை
நிற்கச்செய்து,- பணிவு உறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என –
(தன்னை) வணங்குதல்பொருந்திய அசுரர்களுடைய சேனையை அணிவகுத்த
சுக்கிராசாரியனே இவனென்று (ஒப்புமையால் தன்னைக்) கூறும்படி,- பயில் போர்
துணிவுடன் – இடைவிடாமற் போர்செய்யும் உறுதியுடனே, பல் தேர்சூழ்வர –
பலதேர்கள் (தன்னைச்) சூழ்ந்துவர,- துரோணன்-, சகட துண்டத்து –
சகடவியூகத்தின் முகத்திலே, நின்றனன் – (தான்) நின்றான் – (தான்) நின்றான்;

மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு
இயம்பிய வகையே
அந்தணன் அணிந்த விரகினை, விமானத்து அமரரும்
அதிசயித்து உரைத்தார்-
‘சந்து அணி கடக வாகு நீள் சிகரச் சயத்திரதனை ஒரு பகலில்
கொந்து அழல் உரோடத் தனஞ்சயன் பொருது, கோறலோ அரிது!’
எனக் குறித்தே.8.- துரோணன்படைவகுத்ததன் சிறப்பு.

முதல் நாள் கங்குலின் – முந்தினநாளிரவில், மந்தணம் இருந்து –
ஆலோசனைச்சபையிலே யிருந்துகொண்டு, மன்னனோடு இயம்பியவகை ஏ –
துரியோதனனுடன் சொன்னபடியே, 
அந்தணன் – பிராமணனான துரோணன்,
அணிந்த – அணிவகுத்த, விரகினை – தந்திரத்தை, (கண்டு),- விமானத்து
அமரர்உம்- (வானத்தில்) விமானத்தின்மீது இருந்துகொண்டு போர்காண்கிற
தேவர்களும், ‘சந்து அணி – சந்தனக்குழம்பைப் பூசியவையும், கடகம் –
கடகமென்னும் வளையை யணிந்தவையும், நீள் சிகரம் -உயர்ந்த மலையுச்சி
போன்றவையுமான, வாகு – தோள்களையுடைய, சயத்திரதனை-,
கொந்து அழல் உரோடம் தனஞ்சயன் – பற்றியெரிகிற தீத்திரள் போன்ற
பெருங்கோபத்தையுடைய அருச்சுனன், பொருது – போர்  செய்து, ஒரு பகலில் –
இன்றை ஒருபகற்பொழுதினுள், கோறல்ஓ- கொல்லுதலோ, அரிது – அருமையானது’,
என குறித்து – என்று எண்ணி, – அதிசயித்து உரைத்தார் – (துரோணண்
படைவகுத்த திறத்தைப்பற்றி) ஆச்சரியப்பட்டுக் கொண்டாடிப் பேசினார்கள்;

     மந்தணம் = மந்த்ரம்: ஆலோசனையைக் குறிக்கிற இச்சொல் –
இலக்கணையால், அதுசெய்தற்கு உரிய இடத்துக்கு வந்தது. பகைவர்
படைக்கலங்களால் ஊறடையாத திண்மையும் பருமையும் உயர்வும் பற்றி,
‘வாகுநீள்சிகரம்’ எனப்பட்டது. கோறலோ, ஓகாரம்- தெரிநிலை.  

செய்த்தலைக் கயலும் வாளையும் பிணங்கும் செழும் புனல் சிந்து
நாட்டு அரசை,
கைத்தலத்து அடங்கும் பொருள் என, காத்து, காவலர் நின்ற பேர்
அணி கண்டு,
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ,
வித்தக வலவன் முன்செல, தடந் தேர் விசயன் அவ்
வினைஞர்மேல் நடந்தான்.9.- அருச்சுனன் போர்தொடங்குதல்.

செய்த்தலை- கழனிகளிலே, கயல் உம் – கயல்மீன்களும்,
வாளைஉம்- வாளைமீன்களும், பிணங்கும்- (ஒன்றோடொன்று) மாறு பட்டுப்
பொருகிற, செழும்புனல் – மிக்க நீர்வளப்பத்தையுடைய, சிந்து நாடு –
சிந்துதேசத்தின், அரசை -இராசனான சயத்திரதனை, கைத்தலத்து அடங்கும்
பொருள் என – கையிலடங்கியபொருளைப் (பாதுகாத்தல்) போல, காவலர் –
காக்குந்திறமமைந்தவர்களானஅரசர்கள், காத்து நின்ற – பாதுகாத்து நின்ற, பேர்
அணி – பெரிய(எதிர்ப்பக்கத்துப்) படைவகுப்பை, கண்டு – பார்த்து,- தட தேர்
விசயன் -பெரியதேரையுடைய அருச்சுனன், உத்தமோசா உம்உதா மன்உம்
முதலோர்-உத்தமௌஜஸ் என்பவனும் யுதாமந்யு என்பவனும் முதலான வீரர்கள்,
ஒர் இருபுறத்தின்உம் சூழ – (தனது) இரண்டுபக்கங்களிலும் அடுத்துவரவும்,-
வித்தகம்வலவன் – திறமையுள்ள சாரதியான கண்ணபிரான், முன் செல – (தனது
தேரின்)முன்னிடத்திற் பொருந்தவும், அ வினைஞர்மேல் நடந்தான் –
எதிர்ப்பக்கத்துப்போர்வீரர் மேற் (போருக்குச்) சென்றான் ; ( எ-று.)

     சிறிய கயல்மீன்கள் தங்குதற்கு உரிய கழனிகளிலும் சர்ப்
பெருக்குமிகுதியாற்பெரியவாளைமீன்கள் வந்துபாய்கின்றனவென்ற தன்மையும்,
சிறுமீன்களைப் பெருமீன்கள் உணவாகக்கொள்ளுதல் இயல்பாயினும்
அந்நாட்டுக்கழனியில் நீர்வளத்தாற்கொழுத்துள்ள சிறியகயல்மீன்கள்
வெளியிலிருந்துவருகிற பெரியவாளைமீன்களையெதிர்க்கும் வலிமையுடையனவென்ற
தன்மையுந்தோன்ற, சிந்து தேசத்தின் நீர்வளச்சிறப்பை வர்ணித்தன ரென்க.
அருச்சுனன் ஸ்வதந்திரனாகத் தொழில்செய்யாமற் கிருஷ்ணனுக்குப்
பரததந்திரனாகநின்று தொழில் செய்தல் தோன்ற ‘வித்தகவலவன் முன்செல விசயன்
வினைஞர்மேல் நடந்தான்’ என்றார். கண்ணன் தான்யார் யார்மீது போர்க்குத்
தேரைச் செலுத்துகின்றானோ, அவ்வவர் மீதுஅருச்சுனன்
போர்செய்யத்தொடங்கினனென்றவாறு. தடந்தேர் – அக்கினிபகவானாற்
கொடுக்கப்பட்ட பெருமையையுடையதேர். செய் என்பது – வயலாதலை,
‘நன்செய்’,’புன்செய்’ என்ற வழக்கிலுங் காண்க; இது, பன்றிநாட்டில்
வழங்குந் திசைச்சொல் :தலை – ஏழனுருபு. கைக்குள் அடங்கிய சிறியபொருளை
எவ்வளவு நன்றாகப்பாதுகாக்கக்கூடுமோ  அவ்வளவு நன்றாகச் சயத்திரதனை
அரசர் பாதுகாக்கமுயன்றன ரென்பது, ‘கைத்தலத்தடங்கும் பொருளெனக்காத்து’
என்றதனால்விளங்கும். உதாமன் – யுதாமந்யு: வடசொல்திரிபு ; இவன்
துருபதனுக்குநெருங்கினஉறவினனான பாஞ்சாலராசன் ; இச்சொல் – போரிற்
கோபமுடையானெனக்காரணப்பொருள்படும். பி -ம்: வலவன்செலுத்திட

போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம்
படப் பொழி சிலீமுகங்கள்
கார் முகத்து எழுந்த தாரைபோல் வழங்க, கார்முகத்து
ஒலியினால் கலங்கி,
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும்
உடன் உடைந்து,
நீர்முகத்து உடைந்த குரம்பு என, துரோணன் நின்றுழிச்
சென்று அடைந்தனவே.10.- அருச்சுனனம்புக்குப் பகைவர்சேனை யொழிதல்.

போர் முகத்து – யுத்தகளத்திலே, அடங்கா மடங்கல் ஏறு
அனையான் – அடங்குதலில்லாத சிறந்த ஆண்சிங்கத்தை யொத்தவனாகிய
அருச்சுனன், விதம் பட – பலவகையாக, பொழி- சொரிந்த, சிலீமுகங்கள் –
அம்புகள், கார் முகத்து எழுந்த தாரை போல் – மேகத்திடத்தினின்று
வெளியெழுந்தநீர்த்தாரைகள் போல, வழங்க – மிகுதியாக மேற்செல்லுமளவில்,-
தார் முகத்துஅரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கம்உம் –
முன்னணிச்சேனையினிடத்தேபொருந்திய துரியோதனனுக்குத் தம்பியான
துச்சாசனனுடன் அணிவகுப்பட்டுப் பொருந்தியிருந்த சதுரங்க சேனைகளெல்லாம்,
கார்முகத்து ஒலியினால் கலங்கி – (அருச்சுனனதுகாண்டீவமென்னும்) வில்லினது
(நாணியின்) ஓசையாற் கலக்கமடைந்து, நீர்முகத்து உடைந்த குரம்பு என –
நீர்ப்பெருக்குமிக்குப்பாய்தலாலுடைந்த கரைபோல, உடன் உடைந்து – ஒருசேரச்
சிதைந்து, துரோணண் நின்ற உழி சென்று அடைந்தன – துரோணசாரியன்
நின்றவிடத்திற்போய்ச் சேர்ந்தன ; ( எ -று.)

     கழனியின்நாற்புறவரம்பும் மிக்கநீர்ப்பெருக்கினால் அழியுமாறு போல,
கௌரவரது நால்வகைச்சேனையும் அருச்சுனனதுபாணவர் ஷத்தினால்
அழிந்தனவென்க. மடங்கலேறு – எத்துணைப்பெரிய விலங்குக்கும் பின்னிடாத
ஆற்றலையுடைய மிருகராஜனான சிங்கம். ‘அரசன் தம்பியோடு அணிந்த
சாதுரங்கம்’ என்றது – துரியோதனனுக்குத் தம்பியான துர்மர்ஷணனோடு
பொருந்திநின்ற சேனை யென்றும் பொருள்படக்கூடிய தாயினும், அடுத்தகவியின்
இரண்டாமடியையும், முதனூலையும்நோக்கி இவ்வாறு பொருள் கொள்ளப் பட்டது.
இரண்டாமடியில் ‘கார்முகம்’ என்ற சொல் – முன்னர்த் தொடர்மொழியாயும்
பின்னர்த் தனிமொழியாயும் வெவ்வேறு பொருளில் வந்தது, மடக்கு.

புரவி முப்பதினாயிரம் கொடு முனைந்து பொரு திறல்
கிருதவன்மாவும்,
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்தானும்,
இரவியைக் கண்ட மின்மினிக் குலம்போல் ஈடு அழிந்திட,
உடன்று, எங்கும்
சர விதப் படையால் விண்தலம் தூர்த்து, தானை காவலன்
முனை சார்ந்தான்.11.- அருச்சுனன் எதிர்ச்சேனையையழித்துத் துரோணனைநெருங்குதல்.

முப்பதினாயிரம் புரவி கொடு – முப்பதினாயிரங் குதிரைகளை
யுடன்கொண்டுவந்து, முனைந்து பொரு – மிகமுயன்று போர்செய்த, திறல் –
வல்லமையையுடைய, கிருதவன்மாஉம் – கிருதவர்மா என்ற அரசனும், கரம்
விறல்கரி நூறாயிரம் கொண்டு- துதிக்கையின் வலிமையையுடைய லக்ஷம்
யானைகளையுடன்கொண்டு, காது – எதிர்த்துப்போர்செய்த, துச்சாதனன்தான்உம் –
துச்சாசனனும், இரவியை கண்ட மின்மினி குலம்போல் – சூரியனைக்கண்ட
மின்மினிப் பூச்சிக்கூட்டம்போல, ஈடு அழிந்திட – (தமது) வலிமை கெடும்படி,
எங்குஉம் உடன்று – எவ்விடத்தும் போர்செய்து, விதம் சரம் படையால் –
பலவகைப்பட்ட அம்புகளாகிய ஆயுதங்களால், விண்தலம் தூர்த்து –
ஆகாயத்தினிடத்தை நிறைத்துக்கொண்டு, (அருச்சுனன்), தானை காவலன் முனை
சார்ந்தான்- கௌரவசேனைத் தலைவனான துரோணன் போர் செய்யுமிடத்தைச்
சேர்ந்தான்; (எ -று.)- பி -ம் : முனைச்சார்ந்தான்.

     சூரியனில்லாதசமயத்தில் இருளில் மின்னிக்கொண்டு விளங்கி நிற்கும்
மின்மினிக்குழாம்  சூரியன்வந்தவளவில் அவ்விளக்கம் ஒழிதல்போல, அருச்சுனன்
வருமுன் பலபராக்கிரமங் காட்டிவந்த பகையர்சர்கள் அவன் வரக்கண்டவளவிலே
அவ்வாற்றல் முற்றும் ஒடுங்கின ரென்க. 

சென்ற வில் தனஞ்சயற்கும், முனை குலைந்த சேனைவாய்
நின்ற அத் துரோணனுக்கும், நீடு போர் விளைந்ததால்-
ஒன்றொடு ஒன்று துரகதங்கள் உருமின் மிஞ்சி அதிர்வுற,
குன்று குன்றொடு உற்றெனக் கொடி கொள் தேர் குலுங்கவே.12.- மூன்றுகவிகள்- அருச்சுனனும் துரோணனும் போர்செய்தலைக் கூறும். 

சென்ற – (இவ்வாறு) போன, வில் தனஞ்சயற்கு உம் – விற்போரிற்
சிறந்தவனான அருச்சுனனுக்கும், முனை குலைந்த சேனைவாய் நின்ற – முன்பக்கம்
கலக்கமடைந்த (எதிர்புறத்துச்) சேனையில் நின்றுள்ள, அ துரோணனுக்குஉம் –
அந்தத்துரோணாசாரியனுக்கும்,- துரகதங்கள்- தேர்க்குதிரைகள், உருமின் –
இடியோசைபோல, ஒன்றொடு ஒன்று விஞ்சி அதிர்வுற – ஒன்றைக்
காட்டிலுமொன்று மிகுதியாகக் கனைத்தல்செய்யவும், குன்று குன்றொடு உற்று என –
மலைகள் ஒன்றோடொன்று சமீபித்தாற்போல, கொடி கொள் தேர் குலுங்க –
கொடிகட்டியுள்ள இருவர்தேர்களும் அசைந்து நெருங்கவும், நீடு போர் விளைந்தது
– பெரும்போர் உண்டாயிற்று; ( எ -று.)- ஆல் – ஈற்றசை.

     அருச்சுனனும் துரோணனும் ஒருவர்க்கொருவர் சலியாத மகா வீரராதலால்
நெடுநேரம்பொருதன ரென்க. ‘முனைகுலைந்த’ என்பதற்கு – வலிமைநிலையழிந்த
என்றுமாம். பி – ம் : சென்றவித்தனஞ்சயற்கு.

     இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்
சீரொன்றுவிளச்சீரும், மற்றையாறும்மாச்சீர்களுமாகிய எழுசீராசிரிய
விருத்தங்கள்.         

முட்டியாலும், நிலையினாலும், மொய்ம்பினாலும், முரணுறத்
தொட்ட வில்லு நிமிர்வு அறத் தொடுத்த வின்மையாலும், முன்
கிட்டி ஆசிரீயனும் கிரீடியும் பொரப் பொர,
பட்ட இல்லை, இருவர் மேலும் விட்ட விட்ட பகழியே.

ஆசிரீயன்உம்- துரோணாசாரியனும், கிரீடிஉம்- அருச்சுனனும்,
முன்கிட்டி – எதிரிலே (ஒருவரையொருவர்) நெருங்கி, முட்டியால்உம் – கையில்
விற்பிடிக்குந் திறத்தினாலும், நிலையினால் உம் – (விற்போரில்நிற்றற்குரிய)
நிலைவகைகளாலும், மொய்ம்பினால் உம் – தோள்வலிமையினாலும், முரண் உற
தொட்ட வில்லு நிமிர்வு அற – வலிமைபொருந்தக் கையிலேந்திய விற்கள்
நிமிர்தலொழிய [நன்றாகவளைய], தொடுத்த – அம்புதொடுத்த, வின்மையால்உம்-
விற்போர்த்திறத்தினாலும், பொர பொர – மிகுதியாக (ஒருவரோ டொருவர்)
மேன்மேற் போர்செய்கையில், விட்ட விட்ட பகழி – (ஒருவர்மேலொருவர்)
மிகுதியாக விட்ட அம்புகளெல்லாம், இருவர் மேல்உம் பட்ட இல்லை –
இரண்டுபேர்மேலும் பட்டனவில்லை;    

     குருவாகிய துரோணன்போலவே அருச்சுனனும் வில்வித்தையில் மிக்க
திறமுடையவனாதலால், இவ்விருவரும் எய்த அம்புகளெல்லாம் அவரவர் மாறாக
எய்த எதிரம்புகளினால் தடுக்கப்பட்டு இடையில் ஒன்றோடொன்று முட்டிக்
கீழ்விழுந்திட்டனவே யன்றி ஒன்றேனும் இவர்களுடம்பிற் படவில்லை என்பதாம்.
ஆசிரீயன் – நீட்டல்விகாரம்.       

தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர, முனைந்து,
ஓர் இரண்டு தனுவும் வாளி ஓர்ஒர் கோடி உதையவே,
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என,
போர் இரண்டு வீரருக்கும் ஒத்து நின்ற பொழுதிலே,

இதுவும், அடுத்தகவியும் – குளகம்.

     (இ-ள்.) தேர் இரண்டுஉம் – (தங்கள்) தேர்களிரண்டும் இடம் வலம் திரிந்து
சூழ வர – இடசாரியாகவும் வலசாரியாகவும் மண்டலமாகவும் உலாவிவரவும்,- ஓர்
இரண்டு தனுஉம் – (தங்களுடைய) ஒப்பற்ற விற்களிரண்டும், ஒர் ஒர் கோடி வாளி –
ஒவ்வொன்று ஒவ்வொரு கோடிக்கணக்கான அம்புகளை, முனைந்து உதைய –
விரைந்து செலுத்தவும்,- இரண்டு கார் தம்மில் எதிர்ந்து மலைவுறும்
கணக்குஎன – இரண்டுமேகங்கள் தமக்குள்[ஒன்றோடொன்று] எதிர்த்துப்
போர்செய்யும்விதம்போல.- இரண்டு வீரருக்குஉம்- (துரோணன் அருச்சுனன் என்ற)
இரண்டு வீரர்களுக்கும், போர் ஒத்து நின்ற பொழுதில்ஏ – யுத்தம்
ஏற்றத்தாழ்வில்லாமற் சமமாக நடந்துநின்ற பொழுதிலே,- ( எ -று.)-“மால் தேரை
உட்செலுத்தினான்” என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.

     இடசாரி – இடப்பக்கமாகச் செல்லுதல். வலசாரி – வலப்பக்கமாகச் செல்லுதல்.
மண்டலம் – முழுவதும் சுற்றுதல். விற்கொண்டு இடைவிடாது அம்புமழைபொழிதலில்
துரோணார்ச்சுனர்க்குக் காளமேகம் உவமை. காரிரண்டு எதிர்ந்துதம்மில்மலைதல் –
இல் பொருளுவமைபி – ம் : காரிரண்டதிர்ந்து.   

இகல் செய் வெஞ் சிலைக்கை வீர! இந் நிலம்தனக்கு, நின்
பகைவன் நின்ற அந் நிலம் பதிற்றிரண்டு யோசனை;
புகலுகின்ற பொழுது சென்றது’ என்று, அவண் பொறாமல், மால்
உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுறச் செலுத்தினான்.15.- அப்போது கண்ணன் துரோணனை விலகித் தேரைஉட்செலுத்தல்.

(அப்பொழுது), – மால் – கண்ணபிரான்,- அவண் பொறாமல் –
அவ்விடத்து (க் காலதாமதஞ் செய்தலை) ப் பொறாமல்,- (அருச்சுனனை நோக்கி),-
‘இகல் செய் – போரைச் செய்கிற, வெம் சிலை – கொடிய (காண்டீவ) வில்லை
ஏந்திய, கை – கையையுடைய, வீர- வீரனே! நின் பகைவன் நின்ற அ நிலம் –
உனதுபகைவனான சயத்திரதன் நின்றுள்ள அவ்விடம், இ நிலந்தனக்கு – (நாம்
நிற்கும்) இவ்விடத்துக்கு, பதிற்றிரண்டுயோசனை – இருபது யோசனை
தூரத்திலுள்ளது; புகலுகின்ற பொழுது சென்றது – கணக்கிட்டுச் சொல்லப்படுகிற
பொழுது கழிந்திட்டது’, என்று – என்றுசொல்லி,- உகளுகின்ற  பரி கொள் தேரை-
தாவிச்செல்லுகிற குதிரைகளைப் பூண்ட (அருச்சுனனது) தேரை, உள் உற
செலுத்தினான்- (துரோணனது வியூகத்தின்) உள்ளே பாய்ந்து செல்லும்படி
ஓட்டியருளினான் ; ( எ -று.)

     கௌரவசேனாமுகத்தில் நின்றுள்ள துரோணானோடு
அருச்சுனன்போர்செய்கையில் காலதாமத்தைக்கண்டு பொறாதகிருஷ்ணமூர்த்தி,
அருச்சுனனைநோக்கி ‘உன்பகைவன் நின்றுள்ள இடம் இவ்விடத்துக்கு இருபது
யோசனை தூரமுள்ளது: அங்ஙனிருக்கையில், இவ்வாசிரிய னொருவனுடனே விடாது
திறங்காட்டிப் பொருதுகொண்டிருந்தால் சபதத்தை நிறைவேற்றுதல் அரிதாய் விடும்;
ஆனதுபற்றி, இப்பயனில்போரை இவ்வளவோடு நிறுத்துவாய்’ என்று
குறிப்பாகச்சொல்லிக்கொண்டே தந்திரமாகத் தனது தேர்க்குதிரைகளைத்
துரோணனைவிலகி அவனதுவியூகத்தினுட் பாய்ந்து சென்றுசேரும்படி
விரைவாகச்செலுத்தினனென்பதாம். புகலுகின்ற பொழுது சென்றது என்பதற்கு –
நீ சபதங்கூறின காலம்கழிந்திடுகின்றதென இடைநிலை பிரித்துக்கூட்டிப் பொருள்
கொள்ளுதல் பொருத்தம்.

எதிர்த்த தேர், விழித்து இமைக்கும் அளவில், ‘மாயம் இது’ என,
கதித் துரங்க விசையினோடு கண் கரந்து கழிதலும்,
அதிர்த்து அடர்ந்து பின் தொடர்ந்து அடுத்த போது, அருச்சுனன்
கொதித்து வந்த குருவொடு அம்ம, திருகி நின்று கூறுவான்:16.- பின்பு துரோணன் அருச்சுனனைத் தொடர்ந்து நெருங்குதல்.

எதிர்த்த – எதிரிலே நின்றிருந்த, தேர் – (அருச்சுனனது) தேரானது,
விழித்து இமைக்கும் அளவில் – கண்மூடித்திறக்கு மளவினுள்ளே, மாயம் இது என
– மாயைபோல, கதி துரங்கம் விசையினோடு – நடைவல்ல குதிரைகளின்
வேகத்தால், கண் கரந்து கழிதலும் – கண்ணுக்கு (எட்டாமல்) மறைந்து (நெடுந்தூரம்)
போய்விட்டவளவிலே,- (துரோணன்), அதிர்த்து – ஆரவாரஞ் செய்துகொண்டு,
அடர்ந்து – நெருங்கி [விடாமல்], பின்தொடர்ந்து அடுத்தபோது – (அத்தேரைப்)
பின்னேதொடர்ந்து சமீபித்த பொழுது, அருச்சுனன்-, கொதித்து வந்த குருவொடு-
(அங்ஙனங்) கோபங்கொண்டு வந்த அத்துரோணாசாரியனை நோக்கி, திருகி நின்று
கூறுவான் – முகந் திரும்பிநின்று (சிலவார்த்தை) சொல்பவனானான்; ( எ -று.) –
அவற்றை, அடுத்த கவியிற் காண்க. அம்ம- வியப்பிடைச்சொல்.

     ‘திருகி’ என்பதற்கு – மாறுபட்டுச்சினந்து என்று பொருள்கூறுதல்,
மேல்வரும்அருச்சுனனது பணிவுமொழிகளோடு நோக்கப் பொருந்தாதாம்.

ஐய! நின்னொடு அமர் இழைத்தல் அமரருக்கும் அரிது; நின்
செய்ய பங்கயப் பதங்கள் சென்னி வைத்த சிறுவன் யான்;
வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும்’ என்ன, முறுவலித்து,
‘எய்ய வந்த முனிவு மாறி, ஏகுக!’ என்று இயம்பினான்.17.- அருச்சுனது விநயமொழி கேட்டுத் துரோணன் விட்டிடல்.

ஐய – ஸ்வாமீ! நின்னொடு அமர் இழைத்தல் – உன்னுடன்
போரைச்செய்தல், அமரருக்குஉம் அரிது – தேவர்கட்கும் அருமையானது: யான் –
நானோ, நின் – உனது, செய்ய பங்கயம் பதங்கள் – சிவந்த தாமரைமலர்போன்ற
திருவடிகளை, சென்னிவைத்த – தலைமேற்கொண்டு வணங்குகிற, சிறுவன் –
சிறியவனாவேன்; என் – (அப்படிபட்ட) எனது, வெய்ய சொல் – கொடுமையான
சபதச் சொல், வழுவுறாமை வேண்டும் – தவறாதபடி அநுக்கிரகிக்கவேண்டும்,’
என்ன – என்று (அருச்சுனன் துரோணனை நோக்கி நல்வார்த்தை) சொல்ல,
(அதுகேட்டுத் துரோணன்), எய்ய வந்த முனிவு மாறி- (அவன்மேல் அம்பு)
எய்தற்குவந்த கோபந் தணிந்து, முறுவலித்து – புன்சிரிப்புச்செய்து, ஏகுக என்று
இயம்பினான்- ‘செல்வாய்’ என்று சொன்னான்; ( எ -று.) – பி-ம்: அமர்திளைத்தல்.
முனியுமாறி.

     ‘ஸ்வாமி ! உன்னுடன் போர்செய்யத் தேவராலுமாகாதென்றால், யானோ
உன்னையெதிர்க்கவல்லேன்?’ என்று தோத்திரஞ் செய்த’ நினது சீடனாகிய
அடியேன் செய்த சபதத்தை நிறைவேறச் செய்தல், குருவாகிய நினக்கு
முறையன்றோ?’ என்று அருச்சுனன் வணக்கமாகச்சொல்லி வேண்டவே, துரோணன்
கோபமாறி அவனுக்குச் செல்ல விடையளித்தனனென்க. அமர் வல்லார்க்கும்
நின்னுடன் அமர்செய்தால் இயலாது எனச் சமத்காரப்பொருளொன்று ‘அமரிழைத்தல்
அமரருக்குமரிது’ என்ற சொற்போக்கில் தோன்றுதல் காண்க. சிறுவன் யான் –
இடவழுவமைதி.  

ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்தன் மதலை, காம்-
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள்
கூச, நாலு பாலும் நின்ற நின்ற சேனை கொன்று போய்,
பாச நாம அணியில் நின்ற வீரரோடு பற்றினான்.18.- பின்பு அருச்சுனன் பொருதுகொண்டு பாசவியூகஞ் சேர்தல்.

ஈசனால் வரங்கள் பெற்ற – சிவபிரானாற் பலவரங்கள்
அருளப்பெற்ற,இந்திரன்தன் மதலை – தேவேந்திரனுக்குக் குமாரனான
அருச்சனன், – காம்போசன்ஆதி – காம்போஜதேசத்தரசன் முதலான. எண் இல்
மன்னர் – கணக்கில்லாதஅரசர்கள், பொருது அழிந்து – (தன்னுடனே) போர்செய்து
வலிமைசிதைந்து,வெருவி – அஞ்சி, உள் கூச – மனம் திடுக்கிடும்படி, நாலுபால்உம்
நின்ற நின்றசேனை கொன்று போய் – நான்குபக்கங்களிலும் மிகுதியாக
நின்றுகொண்டிருந்தசேனைகளைக் கொன்றுகொண்டே சென்று,- பாசம் நாமம்
அணியில் நின்ற வீரரோடுபற்றினான் – பாசமென்னும்பெயருடைய அணி
வகுப்பிலுள்ள வீரர்களுடனேபோர்தொடர்ந்தான்; (எ -று,)

     இங்கே ‘பாசநாமஅணி’ என்றது- கீழ்ச்சொன்ன ஐவகைவியூகங்களுள்
ஒன்றான சூசீவியூகத்தை; “பாச மூசித்துளையொடு கயிறே” என்ற திவாகரத்தின்படி
ஊசித்துளையைக்குறிக்கிற ‘பாசம்’ என்ற சொல், இலக்கணையால், ஊசியைக்குறிக்க,
அது, ஊசியின்பெயரான சூசீஎன்பதை உணர்த்துமென்க; சூசீவியூகமாவது –
ஊசிபோல வடிவம் அமையச் சேனையை ஒரேவரிசையாய் ஒழுங்குபடநிறுத்துவது;
இதற்கு, எறும்புவரிசை உவமைகூறப்படும். இங்கே ‘காம்போசன்’ என்றவன்பெயர்,
ஜலசந்தனென்று முதனூலால் தெரிகின்றது. இவனும் கிருதவர்மாவும் துரியோதனனும்
கர்ணனும் சூசீவியூகத்திற் பிரதானமாக நின்றனரென்று அந்நூலிற் கூறப்பட்டுள்ளது. 

முன்னர் முன்னர் வந்து வந்து, முனைகள்தோறும் முந்துறும்
மன்னர் தம்தம் வில்லும், வேலும், வாளும், வென்றி வாளியின்
சின்னபின்னமாக எய்து செல்லும் அத் தனஞ்சயன்,
கன்னன் நின்ற உறுதி கண்டு, கண்ணனோடும் உரை செய்தான்:19, .- இவ்விரண்டு கவிகளும் – குளகம்: அருச்சுனன் கர்ணனோடு
போர்செய்யக் கருதியதைக் கண்ணனிடம்கூறல்.

முனைகள் தோறுஉம் – போர்க்களத்தின் இடங்கள்தோறும்,
முன்னர் முன்னர் வந்து வந்து – (ஒருத்தரினும் ஒருத்தர்) முற்பட்டு மிகுதியாகவந்து,
முந்துறும் – எதிர்ப்பட்டுப் பொருகிற, மன்னர்தம்தம்- அந்த அந்த அரசர்களது,
வில்உம் வேல் உம் வாள்உம் – வில்முதலிய ஆயுதங்கள்) வென்றி வாளியின் –
வெள்ளியைத்தருகிற (தனது) அம்புகளால், சின்ன பின்னம் ஆக-
பலபலதுண்டுகளாய்முறியும்படி, எய்து – அம்புதொடுத்துக்கொண்டு, செல்லும் –
செல்லுகிற, அ தனஞ்சயன் – அந்த அருச்சுனன்,- கன்னன் நின்ற உறுதி கண்டு-
(அவ்விடத்திற்) கர்ணன் (பெருமிதம் பட) நிற்கிற வலிமையைப் பார்த்து,- (19)
(அக்கருத்தை), கண்ணனோடு உம் உரைசெய்தான்-;(எ -று.)

     பொருட்குஏற்றபடி சொற்களை யெடுத்துத் கொண்டுகூட்டிப் பொருளுரைத்தல்
தொல்காப்பியத்திற் கூறப்பட்ட செய்யுளுறுப்பு இருபத்தாறனுள் ‘மாட்டு’ என்னும்
உறுப்பாம். 19.- கண்ணனோடும், உம் – அசைநிலை. 20-சுதக்ஷிணன் –
கம்போஜராஜன் மகன். விந்தஅநுவிந்தர், அவந்தியரசர். இவை, வடநூலிற்
கண்டவை. பி -ம்: அவன்மகன்றனாதியா.  

விலங்கி நம்மை அமர் விளைக்க, விடதன், வில் சுதக்கணன்,
அலங்கல் வேல் அவந்தி மன்னன், அவன் புதல்வன், ஆதியா
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனைக்
கலங்குமாறு பொருது போகவேண்டும்’ என்று கருதியே.20.- இவ்விரண்டு கவிகளும் – குளகம்: அருச்சுனன் கர்ணனோடு
போர்செய்யக் கருதியதைக் கண்ணனிடம்கூறல்.

விடதன்- விடதன் என்னும் அரசனும், வில்சுதக்கணன் –
விற்போர்வல்ல சுதட்சிணன் என்ற அரசனும், அலங்கல் வேல் அவந்தி மன்னன்-
(போர்) மாலையைத் தரித்த வேலாயுதத்தையுடைய அவந்தீ நகரத்து அரசனும்,
அவன் புதல்வன் – அவனது புத்திரனும், ஆதி ஆ – முதலாக, வலம் கொள்
வாகை வீரர் -வலிமையைக்கொண்டவரும் வெற்றியையுடையவருமானவீரர்கள்,
சேனை – சேனைகளொடு, வளைய- (தன்னைச்) சூழ்ந்துநிற்க, நம்மை விலங்கி
அமர் திளைக்கநின்ற – நம்மைக்குறுக்கிட்டு விடாப்போர் செய்ய நின்றுள்ள,
கன்னனை – கர்ணனை,கலங்கும் ஆறு – (அவ்வுறுதிநிலை) கலங்கும்படி,
பொருது – போர்செய்து வென்று,போக வேண்டும் – (நாம்) அப்பாற்
செல்லவேண்டும்,’ என்று கருதி – என்றுஎண்ணி, (எ -று.)

     பொருட்குஏற்றபடி சொற்களை யெடுத்துத் கொண்டுகூட்டிப் பொருளுரைத்தல்
தொல்காப்பியத்திற் கூறப்பட்ட செய்யுளுறுப்பு இருபத்தாறனுள் ‘மாட்டு’ என்னும்
உறுப்பாம். 19.- கண்ணனோடும், உம் – அசைநிலை. 20-சுதக்ஷிணன் –
கம்போஜராஜன் மகன். விந்தஅநுவிந்தர், அவந்தியரசர். இவை, வடநூலிற்
கண்டவை. பி -ம்: அவன்மகன்றனாதியா.   

ஒக்கும்!’ என்று, செங்கண்மாலும், உளவு கோல் கொடு இவுளியைப்
பக்கம் நின்ற பானு மைந்தன் முனை உறப் பயிற்றலும்,
மிக்க வெம் பதாதியோடு சூழ நின்ற விருதரும்
தொக்கு வந்து, விசயன் மீது சுடு சரம் தொடுக்கவே,21.- அருச்சுனன் கர்ணனை எதிரிடுதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) (அங்ஙனம் அருச்சுனன்சொன்னவுடனே), செம் கண் மால்உம் –
சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரானும், ஒக்கும் என்ற- (அது) பொருந்தும்
என்று அங்கீகரித்து, உளவு கோல் கொடு – குதிரை தூண்டுங்கோலினால்,
இவுளியை- (தன்) தேர்க்குதிரைகளை, பக்கம் நின்ற பானுமைந்தன் முனை உற –
அருகிலேயுள்ள சூரியகுமாரனான கர்ணனது முன்னே சேரும்படி, பயிற்றலும் –
செலுத்தினவளவிலே,- மிக்க வெம் பதாதியோடு – மிகுதியான கொடிய
காலாட்சேனையுடனே, சூழ நின்ற – (அக்கர்ணனது) சுற்றிலும் நின்ற, விருதர்
உம் -வீரர்களும், தொக்கு வந்து ஒருங்கு கூடிவந்து, விசயன்மீது – அருச்சுனன்மேல்,
சுடு சரம் தொடுக்க – அழிக்கவல்ல அம்புகளைச் செலுத்த,- ( எ -று.)-“வயவரை ***
கலக்கினான் என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.

‘ஒக்கும்’ என்றது – அங்கீகாரவார்த்தை, உளவுகோல் – கசைக்கோல்.

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் – அந்தாதித்தொடையமையப்
பாடப்பட்டிருக்குமாறு காண்க; இது – பொருட்டொடர்நிலையிடையிலே வந்த
சொற்றொடர்நிலை.       

சரம் தொடுத்த வயவரை, சரத்தினின், தனித்தனி,
உரம் குளிக்க, வாகு வீழ, உதரம் மூழ்க, ஒளி முடிச்
சிரங்கள் அற்று மறிய, என்பு சிந்த, வாய்கள் துளைபட,
கரம் துடிக்க, இரு பதங்கள் தறியவே, கலக்கினான்.22.- கர்ணனைச்சார்ந்த வீரர்களை அருச்சுனன் அழித்தல்.

சரம் தொடுத்த – (இவ்வாறு தன்மீது) பாணங்களைப் பிரயோகித்த,
வயவரை – வீரர்களை, – உரம்குளிக்க- (அவர்களுடைய) மார்பில் (அம்புகள்)
மூழ்கவும், வாகு வீழ – தோள்கள் (துணிபட்டு) விழவும் உதரம் மூழ்க – வயிற்றில்
(அம்புகள்) அழுந்தவும், ஒளி முடி சிரங்கள் அற்று மறிய – பிரகாசமுள்ள
கிரீடத்தைத் தரித்த தலைகள் துணிபட்டு விழவும், என்பு சிந்த – எலும்புகள்
வெளிச்சிதறவும், வாய்கள் துளை பட – வாய்கள் துளைப்படவும், கரம் துடிக்க –
கைகள் (துணிபட்டுத்) துடிக்கவும், இரு பதங்கள் தறிய- இரண்டுகால்களும்
துணிபடவும், சரத்தினில் – (தனது) அம்புகளினால், (அருச்சுனன்), தனி தனி –
தனியே தனியே, கலக்கினான்- கலங்கச்செய்தான்; ( எ -று.)- வயவரைக்
கலக்கினான் என இயையும்.’ உரம்குளிக்க உதரம் மூழ்க’- மார்பும் வயிறும்
அம்புகுளிக்கப் பெற என்றுமாம்.

கலக்கம் உற்று, வில் இழந்து, கவன மா இழந்து, மேல்
இலக்கம் அற்ற களிறு இழந்து, கொடி கொள் தேர் இழந்து, போய்
உலக்க விட்டு, அளக்கர்வாய் உலம்ப ஓடு கலம் எனத்
துலக்கம் மிக்கு வருதல் கண்டு, சுரரும் நின்று துதி செய்தார்23.- அருச்சுனனது போர்த்திறத்தைத் தேவருங் கொண்டாடுதல்.

கலக்கம் உற்று – (இவ்வாறு) கலக்கத்தையடைந்தும், வில் இழந்து –
விற்களை யிழந்தும், கவனம் மா இழந்து – நடைவல்ல குதிரைகளையிழந்தும்,
மேல்- மற்றும், இலக்கம் அற்ற களிறுஇழந்து – எண்ணில்லாத யானைகளை
யிழந்தும்,கொடி கொள் தேர் இழந்து – துவசத்தைக் கொண்ட தேர்களை யிழந்தும்,
போய்-தோற்றுப் போய், உலக்க – அழியும்படி, இட்டு- (எதிர்ப்பக்கத்து வீரர்களை
யெல்லாம்) செய்திட்டு,- அளர்க்கர்வாய் உலம்ப ஓடு கலம் என – கடலிலே
ஒலியுண்டாக விரைந்துசெல்கிறமரக்கலம்போல, துலக்கம் மிக்கு வருதல் –
விளக்கம்மிகுந்து (அருச்சுனன் தன்தேரின்மீது) விரைந்துவருதலை, கண்டு –
பார்த்து,சுரர்உம் – தேவர்களும், நின்று – திகைத்துநின்று, துதி செய்தார் –
தோத்திரஞ்செய்தார்கள்;

     சிறப்புடையரான தேவரும் துதித்தன ரென்றதனால், பிறர் துதித்தமைதானே
புலப்படும். மிகப்பரந்த கடலினிடையிலே தடையற ஊடறுத்துக்கொண்டு விரைந்து
செல்கிற மரக்கலம், மிகப்பரந்த சேனையினிடையிலே தடையறப் பகைதொலைத்துக்
கொண்டு பெருமிதத்தோடு விரைந்துசெல்கிற அருச்சுனனுக்கு உவமை.
உபமானமாகிய மரக்கலத்துக்கு ‘ உலம்பவோடு’ என்ற அடைமொழி கொடுத்துக்
கூறினதானால், அருச்சுனன் தனதுவெற்றி தோன்றச் சிங்கநாதஞ்செய்துகொண்டு
வந்தனனென விளங்கும், விட்டுஎனப் பதம்பிரித்தும் பொருள் கொள்ளலாம்.
பி – ம்:
 துலக்க முற்று.  

துதியினால் உயர்ந்த வண்மையுடைய பானு சூனுவும்,
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான்,
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன்,
விதியினால் உயர்ந்த சாப வெஞ் சமம் தொடங்கினார்.24.- நான்குகவிகள்- கர்ணனும் அருச்சுனனும் பொருதலைக் கூறும்.

(அவ்வாறு அருச்சுனன் வருதலைக் கண்டு),- துதியினால் உயர்ந்த –
புகழினாற் சிறந்த, வண்மை உடைய – ஈகைக் குணத்தையுடைய, பானு சூனுஉம் –
சூரியகுமாரனான கர்ணனும்,- கதியினால் உயர்ந்த – பலவகைநடைகளாற் சிறந்த,
மாவொடு – குதிரைகளோடு, ஒத்த – கூடின, தேர் – (தனது) தேரை, மதியினால்
உயர்ந்த கொற்றம் வலவன் உந்து தேருடன் -ஞானத்தினாற் சிறந்த
வெற்றியையுடைய சாரதியான கண்ணபிரான் செலுத்துகிற (அருச்சுனனது)
தேருடன்,கடாவினான் – நெருங்கச்செலுத்தினான்; (பின்பு இருவரும்), விதியினால்
உயர்ந்த -(தநுர்வேதத்திற்கூறிய) விதிகளின்படி சிறந்துள்ள, சாபம் –
வில்லைக்கொண்டுசெய்கிற, வெம்சமம் – கொடிய போரை, தொடங்கினார்-;
(எ -று.)

     வண்மை – பண்புப்பெயர்: யாசகர்க்குத் தடையில்லாமலும்,
வரையறையில்லாமலுங் கொடுத்தல்; புகழின் காரணம் பலவற்றுள்ளும் ஈதலே
சிறந்ததென்பது தோன்ற, ‘துதியினாலுயர்ந்த வண்மை’ என்றார். பி -ம்:
கடாவிமுன்.தொடங்கினான்.      

தொடங்கு போரில், வலியினாலும் மதனினும் துலங்கு மெய்
விடங்கினாலும், வின்மையாலும், உவமை தம்மில் வேறு இலார்,
விடம் கொள் வாளி மின் பரப்பி, வெய்ய நாண் இடிக்கவே,
மடங்கல்போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார்

வலியினால்உம்- பலத்தினாலும், மதனின்உம் துலங்கு மெய்
விடங்கினால்உம்- மன்மதனைக்காட்டிலும் மிகுதியாக விளங்குகிற உடம்பின்
அழகினாலும், வின்மையால்உம்- விற்போர்த்திறத்தினாலும், தம்மில் உவமைவேறு
இலார்- (தமக்குத் தாமேயன்றி) வேறு ஒப்புப்பெறாதவரான அருச்சுனனும் கர்ணனும்,
– தொடங்கு போரில் – செய்யத்தொடங்கிய யுத்தத்திலே,- விடம் கொள் வாளி –
(கொடுமையில்) விஷத்தையொத்த அம்புகளாகிய, மின் – மின்னல்களை, பரப்பி –
பரவச்செய்து,- வெய்ய நாண் – கொடிய வில் நாணி, இடிக்க – இடியோசயைச்
செய்ய,- மடங்கல் போல் – யுகாந்த காலத்து மேகங்கள்போல, இரண்டுவில்உம்-
(தமது) விற்களிரண்டையும், மண்டலம்படுத்தினார் – நன்றாகவளைத்தார்கள்; (எ-று.)

மேகம்  மின்னல்பரப்பி இடமுழக்கி வானவில்வளையப் பெறுதல்போல,
இவர்அம்பு பரப்புதலுற்று நாணொலிமுழக்கி வில் வளைவு செய்தன ரென்க.
நான்காமடியில் வந்த உவமையணிக்கு, மூன்றாமடியில் வந்த உருவகவணி
அங்கமாதல் காண்க ‘மடங்கல்’ என்று கற்பாந்தகாலத்துக்குப் பெயருள்ளதனால்,
அது-காலவாகு பெயராய், அக்காலத்து அளவிலாமழைபொழிந்து
உலகையழிக்கலுறும் மேகத்தைக் குறித்தது. மடங்கல் – இடிஎன்பாருமுளர். வலிமை
அழகு வில்திறம் என்பவற்றில் அருச்சுனனுக்குக் கர்ணனும், கர்ணனுக்கு
அருச்சுனனும் ஒருகால் ஒப்பாகக்கூடுமேயன்றிப் பிறர் இவர்க்கு ஒப்பாகாரென்பது
‘உவமைத்தம்மில்வேறிலார்’ என்றதன் கருத்து. விடங்கொள்வாளி –
பகைவருயிரைக்கவரதக்க மிக்ககொடுமைவாய்ந்த அம்புஎன்றபடி; நுனியில்
நஞ்சுதீற்றிய அம்புமாம்.

மண்டலம் படுத்த வில்லின் வலி கொள் கூர வாளியால்,
விண்தலம் புதைந்து, தங்கள் மெய் படாமல் விலகினார்-
குண்டலங்கள் வெயிலும் மூரல் குளிர் நிலாவும் வீசவே,
வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார்.

குண்டலங்கள் – (தம்தமது) குண்டலமென்னுங் காதணிகள்,
வெயில்உம்- சூரியகாந்திபோன்ற ஒளியையும், மூரல் – புன்சிரிப்பு, குளிர் நிலாஉம்
குளிர்ந்தசந்திதரகாந்திபோன்ற ஒளியையும், வீச – மிகுதியாக வெளிப்படுத்த, –
மண்டல் அம்பு காமன் நேர் வயங்கு – பெரும்போர்செய்கிற (புஷ்ப)
பாணங்களையுடைய மன்மதனுக்கு ஒப்பாய் விளங்குகிற, வாள் முகத்தினார் –
பிரகாசமுள்ள முகத்தையுடையவர்களான அருச்சுனனும் கர்ணனும்,- மண்டலம்
படுத்த வில்லின் – (தாம்தாம்) நன்றாகவளைத்துப்பிடித்த விற்களினாலெய்த,
வலிகொள் கூர வாளியால் – வலிமையைக்கொண்ட கூர்மையையுடைய
அம்புகளினால், விண் தலம் புதைந்து – ஆகாயத்தின் இடம் மறைய, தங்கள்
மெய்படாமல் – தங்களுடம்பு ஊறுபடாத படி, விலகினார் – எதிர் தடுத்தார்கள் ;
(எ- று.)

     இது, தம்மேல் விரைந்துவரும் அம்புகளைக் குறிதவறாமல் எதிரம்புகோத்து
மறுத்திடுங் திறங் கூறியது. இருவரும் அம்புக்கு இலக்காகாதபடி நின்றன
ரென்பதாம்.மண் தலம் புகாமல் நேர் வயங்கு வாள் முகத்தினார் என்று பிரித்து –
தரையைநோக்காமல் [தலை குனியாமல்] எதிராகநிமிர்ந்து விளங்குகிற ஒள்ளிய
முகத்தையுடைவ ரென்று உரைத்தலும் ஒன்று. மூன்றாமடியில், வெயில் நிலா என்று
மாறுபட்ட சொற்கள்வந்தது, முரண்தொடை. புதைந்து – எச்சத்திரிபு. பி – ம்:
வண்டலம்புகமலநேர்,    

முகத்தில் நின்ற கன்னனோடும் முடி மகீபரோடும் நின்று
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது’ என்று, உளம்
மிகக் கனன்று, தேரும் வில்லும் மெய் அணிந்த கவசமும்
தகர்த்து, மார்பின் மூழ்க, வாளி ஏவினன், தனஞ்சயன்.

முகத்தில் நின்ற – எதிரிலே தலைமையாய் நின்ற, கன்னனோடு
உம் -கர்ணனுடனும், முடி மகீபரோடுஉம் – கிரீடந்தரித்த (அவனைச்சார்ந்த)
அரசர்களுடனும் , நின்ற இகல் செய்கின்ற – எதிர்த்துநின்று போர்செய்கிற,
கடிகை -நாழிகை, ஓர் இரண்டுசென்றது – இரண்டுகழிந்திட்டது, என்று –
என்றுஉட்கொண்டு,- தனஞ்சயன் – அருச்சுனன், உளம் மிக கனன்று – மனம்
மிகக்கொதித்து,தேர்உம் வில்உம் மெய் அணிந்த கவசம்உம் தகர்த்து மார்பில்
மூழ்க -(அக்கர்ணன்முதலியோருடைய) தேரையும் உடம்பில் தரித்த கவசத்தையும்
பிளந்துஅவர்கள் மார்பிலும் மிகப்பதியும்படி, வாளி ஏவினன் –
அம்புகளைச்செலுத்தினால்; (எ -று.)

     பொழுதுகழுந்திட்டதைக் கருதி அருச்சுனன் மிகக்கோபித்து எதிரிக்குப்
பலவகையழிவையுண்டாக்கும்படி சிலசிறந்த அம்புகளை உக்கிரமாகப்
பிரயோகித்தனனென்பதாம். பகல் முப்பதுநாழிகைக்குட் சபதத்தைத் தவறாமல்
நிறைவேற்றவேண்டுமே யென்ற கவலையால், இடையில் நாழிகை கழிதலைப்பற்றி
மிகச்சினந்தான். இரண்டுசென்றது – ஒருமைப்பன்மைமயக்கம்.  

தனஞ்சயன் கை அம்பின் நொந்து, தபனன் மைந்தன் மோகியா,
மனம் தளர்ந்து இளைத்த பின்னர், வருண ராசன் மா மகன்
கனன்று எழுந்த சேனையோடு வந்து, கார்முகம் குனித்து,
இனம் கொள் வாளி ஏவினான், எதிர்ந்த போரில், ஈறு இலான்.28.- கர்ணன் தோற்க, சுதாயு அருச்சுனனை எதிர்த்தல்.

தனஞ்சயன் கை அம்பின் – அருச்சுனனது கையினால் எய்யப்பட்ட
அம்புகளினால், தபனன் மைந்தன் – சூரியகுமாரனான கர்ணன், நொந்து – வருந்தி,
மோகியா – மயக்கமடைந்து, மனம் தளர்ந்து – மனஞ்சேர்ந்து, இளைத்த பின்னர் –
மெலிவடைந்த பின்பு,- எதிர்ந்தபோரில் ஈறு இலான் – எதிரிட்டுச்செய்யும்யுத்தத்தில்
அழிவில்லாதபடி வரம்பெற்றவனாகிய, வருணராசன் மா மகன் – நீர்க்கு அரசனாகிற
வருணனனதுசிறந்த குமாரனானசுதாயுவென்பவன், கனன்று எழுந்து –
கோபங்கொண்டு புறப்பட்டு, சேனையொடு வந்து – (தன்) சேனையுடனே
(அருச்சுனனேதிரில்) வந்து, கார்முகம் குனித்து – வில்லைவளைத்து, இனம் கொள்
வாளி – தொகுதி கொண்ட அம்புகளை, ஏவினான் – (அருச்சுனன்மேற்)
பிரயோகித்தான்; ( எ -று.)

     வருணராசன்மாமகன் – வருணபகவானுக்குப் பன்னவாதை யென்பவளிடம்
பிறந்த சிறந்த புத்திரனாகிய சுதாயு வென்பவன்   

ஈறு இலாத வீரன் வந்து எதிர்த்த காலை, வீரரில்
மாறு இலாத விசயன் விட்ட மறைகொள் வாளி யாவையும்,
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன, அவன் உடற்
பேறு இலாமல் முனை உறப் பிளந்து, கீழ் விழுந்தவே. 29.- அருச்சுனன்புகள் சுதாயுவினுடம்பைத்துளைபடுத்தமாட்டாமை.

ஈறு இலாத வீரன் – அழியாவரம்பெற்ற வீரனான அந்தச் சுதாயு.
வந்த எதிர்த்த காலை – முன்வந்து எதிர்த்தபொழுது, – வீரரில் மாறு இலாத
விசயன்- வீரர்களில் எதிரில்லாதவனான [மகாவீரனான] அருச்சுனன், விட்ட –
பிரயோகித்த,மறை கொள் வாளி யாவைஉம் – மந்திரபலத்தைக்கொண்ட
அம்புகளெல்லாம்,- சேறுஇலாத செறுவில் வித்து செந்நெல் என்ன – சேறு இல்லாத
கழனியிலே விதைத்தசெந்நெல்விதைகள்போல, அவன் உடல் பேறு இலாமல் –
அவனுடம்பினுள்ளேசென்று பாயப்பெறுதலில்லாமல், முனை உற பிளந்து-
(அவனுடம்பிற்பட்டமாத்திரத்தில்) நுனி முழுவதும் ஒடிபட்டு, கீழ் விழுந்த –
கீழே விழுந்திட்டன;

     வரம்பலம்பெற்ற சுதாயுவின்மேல் அருச்சுனன் எய்த பாணங்களெல்லாம்,
அவனுடம்பைப் பிளந்து உட்சென்று ஊறுபடுத்தமாட்டாமல், அவனது வலிய
உடம்பிற் பட்டமாத்திரத்தால் தாம் கூர் நுனிமழுங்கிக் கீழ்விழுந்திட்டன என்பதாம்.
மிக்கநீர்வளமுள்ள இடத்திலேயே விளையுந்தன்மையதான செந்நெலென்னும்
ஒருவகை நெற்பயிர்விதை ஈரமில்லாதகழனியில் விதைக்கப்பட்டால் அங்குச்
சிறிதும்முளைக்கமாட்டாமல் வீண்படுதலை, மற்றையோருடம்பில் ஊன்றிப்
புண்படுத்தும்அருச்சுனனம்பு சுதாயுவினுடம்பிற்சிறிதும் பிரவேசிக்கமாட்டாது
வீண்பட்டதற்குஉவமைகூறினார். வித்த என்று பாடங்கொண்டு, அதற்கு
விதைத்தஎனப் பெயரெச்சப்பொருள் உரைத்தாருமுளர்.  

விழுந்த வாளி கண்டு, பின்னும், விசயன் மூரி வில் குனித்து,
அழுந்த வாளி ஒன்று பத்து நூறு வன்பொடு அடைசினான்;
எழுந்த வாளி வாளியால் விலக்க, ஏவி ஆசுகம்,
கழுந்தது ஆக, அவன் எடுத்த கார்முகம் கலக்கினான்.30.- அருச்சுனன் சுதாயுவின்வில்லை அழித்தல்.

விழுந்த – (இங்ஙனம் பயனின்றிக்) கீழ்விழுந்திட்ட, வாளி – (தனது)
அம்புகளை, கண்டு -பார்த்து, பின்னும் – மீண்டும், விசயன் – அருச்சுனன், மூரி
வில்குனித்து – வலிமையையுடைய வில்லை வளைத்து, அழுந்த – (அவனுடம்பிற்)
பதியும்படி, வாளி ஒன்று பத்து நூறு – ஆயிரக்கணக்கான அம்புகளை , வன்பொடு
அடைசினான் – வலிமையோடு செலுத்தினான் ; எழுந்த -(இங்ஙனம் தன்மேல்
உக்கிரமாக) வந்த, வாளி அம்புகளை, வாளியால் விலக்க -(சுதாயுதான் எய்யும்)
எதிரம்புகளால் தடுக்க. (பின்புஅருச்சுனன்), ஆசுகம் ஏவி- பாணங்களைப்
பிரயோகித்து, கழுந்து அது ஆக அவன் எடுத்த கார்முகம் கலக்கினான் –
வைரமுள்ளதாக அந்தச்சுதாயு கையிலேந்தியுள்ளவில்லை யழித்திட்டான்

முகம் கலங்க, மெய் கலங்க, முடி கலங்க, மூரி மார்பு-
அகம் கலங்க, மற்று ஒர் தண்டு அருச்சுனன் தன்மேல்விட,
நகம் கலங்க, உருமின் வந்தது; அதனை உம்பர் நாயகன்
சகம் கலங்க ஏற்றனன், தனாது மெய்யின் ஆகவே.31.- சுதாயுவின் கதையைக் கண்ணன் மார்பில் ஏற்றல்.

மற்று- (தனதுவில் அழிந்த) பின்பு, (சுதாயு), முகம் கலங்க – முகம்
கலக்கமடையும்படியாகவும், மெய் கலங்க – உடம்பு வலிமைகுலையும்படியாகவும்,
முடி கலங்க – தலைசிதறும்படி யாகவும், மூரி மார்பு அகம் கலங்க – வலிமையுள்ள
மார்பின் இடம் சிதையும்படியாகவும், ஒர் தண்டு- ஓர் கதாயுதத்தை, அருச்சுனன்தன்
மேல் விட – அருச்சுனன்மேல் வீச, – நகம் கலங்க உருமின் வந்தது அதனை-
மலைசிதையும்படி (மேல்விழுகிற கொடிய பெரிய) இடிபோல வந்த
அந்தத்தண்டாயுதத்தை, உம்பர்நாயகன் – தேவர்கட்குத் தலைவனான
கண்ணபிரான்,தனது மெய்யின் ஆக – தனது உடம்பிற்படும் படி, சகம் கலங்க
ஏற்றனன் – உலகம்(கண்டு) திடுக்கிட ஏற்றுக் கொண்டான்: (எ -று.)

     வில் அழிபட்டபின்பு சுதாயு பகையைத் தவறாமல் அழிக்க வல்லதொரு
கதாயுதத்தை யெடுத்து அருச்சுனன்மேல் எறிய, அதனை, அவனுக்குப் பாகனாய்
முன்நின்ற கண்ணன் தன்மார்பிற் படும்படி வலிய ஏற்றுக்கொண்டனனென்பதாம்.
கண்ணன் ஏற்றுக்கொண்டசூழ்ச்சி, மேல்விளங்கும். சகங்கலங்குதல் – லோக
நாயகனான இவனுக்கு இதனால் என்ன அபாயம் நேர்ந்திடுமோ வென்று தம் தம்
அன்புபற்றி யாவரும் சங்கித்தலாலென்க; இனி, கண்ணன் எப்பொருளுந்
தானோயானவனென்பதுபற்றி ‘சகங் கலங்க’ என்றாரெனினுமாம். ‘நகங்கலங்க’
என்றது, வந்தது என்பதிலுள்ள வருதல் வினையைக் கொள்ளும், தனாது, ஆது –
ஆறனுருபு.     

ஆகவத்தில் விசயன் உய்ய, ஐயன் மெய்யில் அறையும் முன்,
மோகரித்து எறிந்த தெவ்வன் முடி துளங்கி, மண்மிசைச்
சோகம் மிக்கு விழுதல் கண்டு, தூரகாரி ஆதலால்,
மாகம் உற்ற அமரர் செம்பொன் மழை பொழிந்து வாழ்த்தினார்.32.- சுதாயு இறக்கத் தேதவர்கள் கண்ணன்மீது பூமழைபொழிதல்.

ஐயன் – (யாவர்க்குந்) தலைவனான கண்ணபிரான், தூர காரி
ஆதலால் – வருங்காரியமறிந்து தொழில்செய்பவனாதலால், ஆகவத்தில் விசயன்
உய்ய – போரிலே அருச்சுனன் இறவாது பிழைக்கும்படி, மெய்யில் அறையும்முன் –
(தனது) திருமேனியில் தாக்குமாறு (அக்கதாயுதத்தை) ஏற்றுக்கொண்டவுடனே,-
மோகரித்து எறிந்த தெவ்வன் – மிக உக்கிரங்கொண்டு (அவ்வாயுதத்தைப்)
பிரயோகித்த பகைவனான சுதாயு, முடி துளங்கி – தலைசாய்ந்து, சோகம் மிக்கு –
துன்பம் மிகுந்து, மண்மிசை விழுதல் – தரையிலே விழுந்திட்டதனை, கண்டு –
பார்த்து, – மா கம் உற்ற அமரர் – பெரிய வானத்திற் பொருந்திய தேவர்கள்,
செம்பொன் மழை பொழிந்து – சிவந்த பொன்மயமான கற்பகமலர்
மழையைச்சொரிந்து,வாழ்த்தினார்-;

     சுதாயு அழியாத வரம்பெற்ற காலத்தில், தன் ஆயுதம் நிராயுதர்மேற்
பட்டால்மாத்திரம் தான் இறந்திடும்படி விலக்கும் பெற்றவனாதலால், யாவுமறிந்த
கண்ணபிரான், அருச்சுனனைத் தவறாமற். கொல்லும்படி அவன்மேற் சுதாயு எறிந்த
கதையைத் தன்மார்பில் ஏற்றுக்கொள்ள, கையிலாயுதமில்லாத அப்பெருமான்மேல்
அப்படைக்கலம் பட்டமாத்திரத்திலே சுதாயுகீழ் விழுந்து இறக்க, அருச்சுனன்
பிழைத்திட்டான் ; இங்ஙனம் அடியவனைக் காத்தற் பொருட்டுச் சர்வஜ்ஞனாகிய
கண்ணன் வரம்புகடந்து செய்த பெருங்கருணைத்திறத்தைப் கொண்டாடித் தேவர்கள்
பூமாரிசொரிந்து வாழ்த்துக் கூறின ரென்பதாம். தூரகாரி – வெகுதூரத்தில் இனி
வருஞ் செய்கையை முன்னமே அறிந்து அதற்கு ஏற்ற பரிகாரஞ் செய்பவன் ;
இங்கே, தூரமென்றது, காலத்தின் சேய்மையை; வெகுகாலத்தின் முன்பு நடந்தவற்றை
அறிந்து அவற்றிற்கேற்ற படி தொழில்செய்பவ னென்ற பொருளும், ‘தூரகாரி’ என்ற
பெயரில் அடங்கும், ‘ஐயன் மெய்யிலறையுமுன் தெவ்வனழிதல்’- விரைவுதோன்றக்
காரணத்தின்முன் காரியம் நிகழ்ந்ததாகக் கூறும் மிகையுயர்வுநவிற்சியணி

வாழி, வாழி, குந்தி மைந்தன் வலவன் வாழி, வாழியே!
வாழி, வாழி, அவனி உய்ய வந்த நாதன் வாழியே!
வாழி, வாழி, காளமேகவண்ணன் வாழி, வாழியே!
வாழி, வாழி, வாசுதேவன் வாழி, வாழி, வாழியே!’33.- தேவர்கள் கண்ணனுக்குக் கூறிய வாழ்த்து.

குந்தி மைந்தன் வலவன்- குந்திதேவியின் புத்திரனான
அருச்சுனனது தேர்ப்பாகன்; அவனி உய்ய வந்த நாதன் – பூமி தேவி (பாரந்தீர்ந்து)
வாழும்படி திருவவதரித்த தலைவன் ; காள மேக வண்ணன் – கார் காலத்து
நீலமேகம்போன்ற திருநிறமுடையவன். வாசுதேவன் – வசுதேவகுமாரன்; (எ -று.)

     குந்திமைந்தன்வலவன், அவனியுய்யவந்தநாதன், காளமேகவண்ணன்,
வாசுதேவன் என்ற நான்கும் – ஒருபொருள்மேற் பல பெயராய்வந்து தனித்தனி
ஒருவகை முடிக்குஞ் சொல்லைக் கொண்டன. மகிழ்ச்சி வரம்புகடந்ததனால்,
வாழியென்றசொல், “அசைநிலை பொருள்நிலை யிசைநிறைக்கு ஒருசொல், இரண்டு
மூன்று நான்கு எல்லை முறையடுக்கும் ” என்ற அடுக்கிலக்கணவரம்புங் கடந்து
வந்த தென்க.     

என்று யாவரும் துதிசெய, விரகினால் எறிந்த காவலன்தன்னைக்
கொன்றபோது, தன் உயிர் பெறு தனஞ்சயன்
கொண்டல்வண்ணனைப் போற்றி,
‘நின்தன் மேனியில் எறி கொடுங் கதை பட, எறிந்தவன்
நெடு வானில்
சென்ற மாயம் ஒன்று இருந்தவாறு அடியனேன் தெளியுமாறு
உரை’ என்றான்.34.- சுதாயு இறந்த காரணத்தை அருச்சுனன் கண்ணனை வினாவல்.

என்று,- யாவர்உம் – எல்லோரும், துதி செய – தோத்திரம்
பண்ணும்படி, விரகினால் – தந்திரமாக, எதிர்த்த காவலன்தன்னை கொன்றபோது-
எதிர்த்துப் போர்செய்த சுதாயி என்னும் அரசனைக் ( கண்ணன்)
கொன்றருளியபொழுது, தன் உயிர் பெறு தனஞ்சயன் – தனது உயிர் இறவாமற்
பிழைக்கப்பெற்ற அருச்சுனன், கொண்டல் வண்ணனை போற்றி – காளமேகம்
போன்ற திரு நிறமுடைய கண்ணபிரானைத் துதித்து, ‘எறி கொடுங் கதை –
வீசியெறிந்த கொடிய கதாயுதம், நின்தன் மேனியில் – உனது உடம்பில், பட – பட்ட
அளவிலே, எறிந்தவன் – (அவ்வாயதத்தைப்) பிரயோகித்தவனான சுதாயு, நெடு
வானில் சென்ற- (இறந்து) பெரியதேவலோகத்திற்குப் போன, மாயம் ஒன்று –
ஆச்சரியகரமான ஒருசெய்கை, இருந்த ஆறு – உண்டான காரணத்தை, அடியனேன்
தெளியும் ஆறு உரை – உனது அடியவனாகிய யான் மனந் தெளியும்படி
கூறியருள்வாய்,’ என்றான்-; ( எ -று.)

     இதுமுதற் பதினைந்து கவிகள் – பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும், ஈற்றுச்சீர்
மாங்காய்சீரும், மற்றவை விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.
இவற்றில்இரண்டாஞ்சீர் கூவிளச் சீராகவே வரும். 

பன்னவாதை என்று ஒருத்தி தாய்; தந்தையும், பரவை
மன்னவன்; அந்த
மன்னவன் தரப் பெற்றனன், பல படை மறையொடும் வலி கூர;
துன்னு நாமமும் சுதாயு; மற்று ஒருவரால் தோற்று உயிர்
அழிவு இல்லான்;
முன் நிராயுதன்மிசை இவன் படை உறின், முடிவுறும்
வரம் பெற்றான்.35.- இதுவும் அடுத்த கவியும் ஒருதொடர் : சுதாயுசெய்தியைக்
கண்ணன் கூறல்.

பன்னவாதை என்ற ஒருத்தி – பன்னவாதையென்று பெயர்
சொல்லப்பட்ட ஒருத்தி, தாய்- (இவனுக்குத்) தாய் ; தந்தை உம் – (இவனது)
தகப்பனும், படு திரை பரவைக்கு மன் – மிக்க அலைகளுடைய கடலுக்குத்
தலைவனான வருணன்; பல படை மறையொடுஉம் – அநேகமான படைக்கலங்களை
அவற்றிற்குஉரிய மந்திரத்தோடு, வலி – (தேக) பலத்தையும், கூர – மிகுதியாக,
அவன் தர பெற்றனன் – அவ்வருணன்  கொடுக்கப் பெற்றான் (இவன்); துன்னு
நாமம்உம் – (இவனுக்குப்) பொருந்திய பெயரும், சுதாயு – சுதாயு என்பதாம்; மற்று
ஒருவரால் தோற்று உயிர் அழிவு இல்லான் – வேறுஎவராலும் தோல்வியடைதலும்
இறத்தலும் பெறாதவனான இவன்,- முன்-முன்பு, நிராயுதன்மிசை இவன் படைஉறின்
முடிவுஉறும் வரம்பெற்றான் – (கையில்) ஆயுதமில்லாதவன்மேல் தனதுஆயுதம்
எறியப்பட்டால் மாத்திரமே தான் இறக்கும்படி யான வரத்தைப் பெற்றுள்ளான்;
(எ-று.)

     சுதாயு – ச்ருதாயுத: என்ற வடசொல்லின்திரிபு என்னலாம்: இவன்பெயர்,
வியாசபாரத்தில் இங்ஙனே உள்ளது;  இச்சொல் – பிரசித்தமான படைக்கல
முடையான் என்று பொருள்படும். இவனது தந்தை, வருணன் : தாய், பர்ணாசா
என்னும் மகாநதி. ‘ இம் மகன் மரணமில்லாதவனாயிருக்கும்படி வரமளிக்க
வேண்டும்’என்று பர்ணாசைவருணனைவரங்கேட்க, அந்நீர்க்கடவுள் மனைவியை
நோக்கி ‘பகைவரால் வெல்லுதற்கரியனாம்படி இவனுக்கு வரங்கொடுக்கிறேன்:
உலகத்திற்பிறந்தவரெவர்க்கும் எக்காலத்தும்மரணமில்லாதிருப்பது முறைமையன்று’
என்றுசொல்லி, திவ்யமானதொரு கதாயுதத்தை மந்திரபூர்வமாக மைந்தனுக்குக்
கொடுத்து, இதுதவறாமற் பகையழிக்க வல்லது: ஆனால், போர்செய்யாது
நிற்பவன்மேல் இது பிரயோகிக்கப்படின் அவனைக்கொல்லாமல் மீண்டு வந்து
பிரயோகித்தவனையே கொன்றிடும்’ என்று கூறியிருந்தான்; அங்ஙனமிருந்தும்,
காலம் சமீபித்ததனால் சுருதாயுதன் அவ்வருணன்கட்டளையைக் கருதாமற் போரிற்
கோபத்தோடு கதையைவீச அதுபோர்செய்தலின்றிப் பாகனாய்நின்ற
கண்ணனுடம்பிற்பட்டதனால், அப்பரமனை யாதுஞ்செய்யலாற்றாது திரும்பிச்சென்று
அவனையே வதைத்துக் கீழ்விழுந்தது என்றும், பின்பு காலிங்கரானச்ருதாயு
அசயுதாயு என்ற ரிருவரும் அவர்கள் புத்திரரான நியுதாயு தீர்க்காயு என்ற
இருவரும் முறையே அருச்சுனனுடன்எதிர்த்து மாண்டனரென்றும் வியாசபாரதம்
கூறுகின்றது. பி – ம் :பலபெரும்படையொடும். 

எறிந்த வெங் கதை கொன்றிடும், படைக்கலன் எடுத்தவர்
உடல் பட்டால்;
அறிந்து, நான் இடை ஏற்றலின், அவன் உயிர் அழிந்தது’
என்று அருள்செய்தான்-
பிறிந்த யோனிகள் அனைத்தும் ஆய், முதலும் ஆய், பெருமிதம்
மறந்து, ஈண்டுச்
செறிந்தவர்க்கு ஒரு சகாயன் ஆய், அருந் துயர் தீர்த்திடும்
தேர்ப்பாகன்.

எறிந்த வெம் கதை – (இவன்) பிரயோகித்த கொடிய கதாயுதம்,
படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால் – (கையில்) ஆயுதம் ஏந்தியுள்ளவருடைய
உடம்பிற் பட்டால், கொன்றிடும் – (அவர்களைத்) தவறாமற் கொன்றுவிடும்;
(அப்படிப்பட்ட ஆயுதத்தை) நான் அறிந்து இடை ஏற்றலின் –
(கையிற்படைக்கலமில்லாத) யான் (அவன்செய்தியை) உணர்ந்து நடுவில்
ஏற்றுக்கொண்டதனால், அவன் உயிர் அழிந்தது – அவனது உயிர் இறந்திட்டது,
என்று-, அருள்செய்தான் – சொல்லியருளினான்: (யாவனெனில்) – பிறிந்த
யோனிகள்அனைத்துஉம் ஆய்- (பலவாறாகப்) பிரிவுபட்ட பிறப்பு
வகைகளையுடையஎல்லாச்சராசரங்களின் வடிவமாய், முதல்உம் ஆய்-
(அவற்றிற்கெல்லாம்)மூலகாரணமுமாய், பெருமிதம் மனத்தோடு –
பெருந்தன்மையையுடைய மனத்துடனே,செறிந்தவர்க்கு ஒரு சகாயன் ஆய் –
(தன்னை) அடைந்தவர்க்கு ஒரு துணைவனாய்,அருந்துயர் தீர்த்திடும் –
(அவர்களது) ஒழித்தற்கரிய துன்பத்தை ஒழித்திடுகிற, தேர்ப்பாகன் –
(பார்த்த) சாரதியான கண்ணபிரான்: (எ – று.)

     பிரி என்பது போலப் பிறி என ஒரு தனிவினை உள்ளது.
‘யோனிகளனைத்துமாய்’ என்றது – அநாதியாய்த் தொடர்ந்துவருகிற கருமத்துக்கு
ஏற்றபடி பலவகைப் பிறப்புக்கொள்ளுகிறசகலஜீவாத் மாக்களுள்ளும்
அந்தராந்மாவாய் நின்று அவற்றைக்கொண்டு தொழில்செய்பவனாய் என்றபடி.
‘முதலுமாய்’ என்றதில், அவற்றைப்படைத்தல் காத்தல் அழித்தல் செய்து
அவற்றிற்கெல்லாந் தலைமைபூணுந்தன்மை தோன்றும். எம்பெருமான்
சரணமடைந்தவரைப் பாதுகாக்குந்தன்மை, ஈற்றடியால் விளங்கும். கண்ணன்,
தன்னையடுத்த பாண்டவர்க்கு ஒப்பற்ற தனித்துணை 
வனாய்நின்று அவர்க்கு நேரும்
பலவகைத்துன்பங்களையும் தவறாமல் ஒழித்தவருதல் தோன்ற, ‘ செறிந்தவர்க்
கொருசகாயனா யருந்துயர் தீர்த்திடுந்தேர்ப்பாகன்’ என்றார்; ‘தேர்ப்பாகன்’
என்றதனால், கண்ணனது சௌலப்பியம் வெளியாம். பி – ம்:
அறிந்தநான். பெருமித மறந்தீண்டுச். 

கதாயுதந்தனக்கு உரிய நாயகன்மிசை கதை பட, சிதைவுற்றுச்
சுதாயு என்பவன் பல பெரும் படையுடன் துறக்கம்
எய்திய பின்னர்,
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து,
அவன்தானும்
கெதாயு ஆயினன்; கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே,
கெடாது உய்வார்!37.- பின்பு சதாயு அருச்சுனனை எதிர்த்து அழிதல்.

கதாயுதந்தனக்கு உரிய நாயகன்மிசை – கதாயுதத்துக்குஉரிய
தலைவனான கண்ணபிரான்மேல், கதைபட – (தனது) கதாயுதம் பட்டதனால்,
சுதாயுஎன்பவன்,- சிதைவு உற்று – அழிவடைந்து, பல பெரும் படையுடன் –
(மற்றும்அருச்சுனனாற் கொல்லப்பட்ட தனது) பெரிய பல சேனைவீரர்களுடனே,
துறக்கம்எய்திய பின்னர்- வீரசுவர்க்கமடைந்த பின்பு,- சதாயு என்ற அவன்
இளவல் -அவனது தம்பியான சதாயுஎன்பவன், அவனின்உம் – அந்தச்
சுதாயுவினும் மிகுதியாக,சமர் புரிந்து – (அருச்சுனனோடு) போர்செய்து,
அவன்தாம்உம்- அவனும், கெதஆயு ஆயினன் – கழிந்துபோன
ஆயுளுடையவனானான் [இறந்தான் என்றபடி];கிரீடியோடு எதிர்த்தவர் –
அருச்சுனனோடு எதிரிட்டவருள், யாவர்ஏ- எவர்தாம்,கெடாது உய்வார் –
அழியாமற் பிழைப்பவர்? ( எ -று.) – மற்று – அசை.

     கண்ணன் கௌமோதகியென்ற சிறந்த கதைக்கு உடையவனாதலால்,
‘கதாயுதந்தனக்குஉரிய நாயகன்’ எனப்பட்டான். சதாயு என்பது –  சதஆயுஸ் எனப்
பிரிந்து, மிக்கஆயுளுடையவ னென்று பொருள்படும்; சதம் – நூறு. இங்கே, மிகுதி.
‘சதாயு என்ற அவன் இளவல் அவனினும் சமர்புரிந்து****கெதாயுவாயினன்’ என்ற
விடத்து, ‘அவன்தானும்’ என்றது வேணடுவதன்றாயினும், தமையன்போலவே
தம்பியும் விரைவில் அழிந்தான் என்ற தன்மையை விளக்குதலால்,
தகுதிபற்றிவந்ததென்க. கதாயுஎன்பது, மோனைப் பொருத்தம்நோக்கி ‘கெதாயு’
எனத்திரிந்துநின்றது. தீர்க்கமான ஆயுளுடையவன் அற்பமான
ஆயுளுடையவனானானென முரண் தோன்ற, ‘சதாயு கெதாயுவாயினன்’ என்றார்.
இது, அருச்சுனனதுஆற்றலை வியந்தது. 

ஆயிரம் பதின்மடங்கு தேர், இபம் அதன் மும் மடங்கு,
அடல் வாசி
ஆயிரம் சதம், அதனின் மும் மடங்கு காலாளுடன், அணி ஆக்கி,
ஆயிரம் புயத்து அருச்சுனன் நிகர் என, ஆழியால் துணிப்புண்ட
ஆயிரம் புயத்தவன் என எதிர்த்தனன்-ஆடல் ஆயிரவாகு.38.- பின்பு ஹைஸ்ரபாஹூ என்பவன் அருச்சுனனைஎதிர்த்தல்.

ஆயிரம்பதின்மடங்கு தேர் – பதினாயிரம் தேர்களும். அதன்
மும்மடங்கு இபம் – முப்பதினாயிரம் யானைகளும், ஆயிரம் சதம் அடல் வாசி –
நூறாயிரம் வலிய குதிரைகளும், அதனின் மும்மடங்கு காலாளுடன் – மூன்று
லக்ஷம்காலாள்வீரர்களும் ஆகிய சேனையொடு, அணி ஆக்கி – அணிவகுத்துக்
கொண்டு,ஆயிரம் புயத்து அருச்சனன் நிகர் என – ஆயிரந் தோள்களையுடைய
கார்த்தவீரியார்ச்சுனன் ஒப்பென்று சொல்லும்படியும், ஆழியால் துணிப்புண்ட
ஆயிரம்புயத்தவன் என – (கண்ணனது) சக்கராயுதத்தால் துணிக்கப்பட்ட
ஆயிரந்தோள்களையுடைய வாணாசுரன்போலவும், ஆடல் ஆயிரவாகு-
வெற்றியையுடைய ஸஹஸ்ரபாஹூ என்பவன், எதிர்த்தனன் – (வந்து
அருச்சுனனை)எதிர்த்தான்; ( எ -று.)

     ஆயிரவாகு – ஆயிரந்தோள்களையுடையவன்; பண்புத்தொகை யன்மொழி.
ஸஹஸ்ரபாஹூவுக்குக் கார்த்தவீரியார்ச்சுனனும், பாணாசுரனும்,
ஆயிரந்தோள்களுடைமையோடு கொடுமையிலும் திருமாலால் அழிக்கப்படுதலிலும்
உவமை யென அறிக. இவன் விஷ்ணுவின் அம்சபேதமான அருச்சுனனாற்
கண்ணபிரானிடம் பெற்றதொரு மந்திரத்தைக் கொண்டு தோளறுத்துத்
தொலைக்கப்படுதல் காண்க.

     அர்ஜூனன் என்ற வடசொல் – வெண்ணிறமுடையான் என்று பொருள்படும்.
இவன் – கிருதவீரிய மகாராஜனது புத்திர னாதலால், கார்த்தவீரியார்ஜூந
னெனப்படுவன். சந்திரவமிசத்திற் பிறந்த யயாதிமகாராசனது மூத்த குமாரனாகிய
யதுவினது குலத்தவனாகிற கிருதவீரியனது குமாரனான அருச்சுனனென்பவன்,
நாராயணாம்சமாய் அத்திரிகுமாரராய் விளங்குகிற தத்தாத்திரேய மகாமுனிவரை
ஆராதித்து அவருடைய அநுக்கிரகத்தினாலே ஆயிரந்தோள்களுடைமை,
போரில்வெற்றி, பூமியை முறைப்படிகாத்தல், பகைவர்களால் அவமானப்படாமை,
சகலலோகங்களுங் கொண்டாடும்படியான மகாபுருஷனால் மரணம் முதலிய
பலவரங்களைப்பெற்று, பல வேள்விகளையும் இயற்றி, மாகிஷ்மதி நகரத்திற்
பலகாலம் அரசாண்டு வந்தான்;  இவன் ஒரு காலத்தில் நருமதையாற்றிற்
சலக்ரீடைசெய்துகொண்டு மதுபானத்தால் மதித்திருக்கையில் திக்குவிசயஞ்
செய்துவருகிறஇராவணன் தன்னை எதிர்க்கக் கண்டு, அவனைத் தனது ஆற்றலால்
எளிதிற்கட்டித் தனது பட்டணத்திற் கொண்டுபோய்ச் சிறைச்சாலையில்வைத்து,
பின்புஅவனதுமூதாதையாகிய புலஸ்தியமகாமுனிவரது வேண்டுகோளினால்
அவனைச்சிறைவிடுத்து, அம்முனிவரருளால் ‘ராவணஜித்’ என்கிற பெரும்
பெயரைப்பெற்றவன். இவன் ஒருகாலத்திற் சேனையுடனே வனத்திற் சென்று
வேட்டையாடிவந்து பரசுராமனது தந்தையானஜமதக்கினி மகாமுனிவரது
ஆசிரமத்தை யடைந்து அவரநுமதியால் அங்கு விருந்துணடு மகிழ்ந்து மீளுகையில்,
அவரிடமிருந்தஒமதேனு அவர்க்குப் பல வளங்களையும் எளிதிற் சுரந்தளித்தலைக்
கண்டு அதனிடம் ஆசை  கொண்டு அப்பசுவை  அவரநுமதியில்லாமற்
பலாத்காரமாகக் கவர்ந்துபோக, இதனை அறிந்த பரசுராமன் பெருங்கோபங்
கொண்டுஆயுதங்களுடனே சென்று கார்த்தவீரியார்ச்சுன

னுடன் கடும் போர்செய்து அவனைப் பதினொருஅகௌகிணி சேனையுடனே
நிலைகுலைத்து அவனது ஆயிரந்தோள்களையும் தலையையும் தனது கோடாலிப்
படையால் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டா னென்பது வரலாறு;
ஜமதக்நிமகாமுனிவரைக் கார்த்தவீரியன் யாதொரு காரணமுமின்றிக் கொன்றிட்டா
னென்றும் நூல்களிற் கதை கூறப்படும்.

     வாணாசுரன் வரலாறு: – பாணாசுரன் சிவபெருமானருளால்
ஆயிரங்கைகளையும் நெருப்புமதிலையும் அளவிறந்த வலிமையையும் சிவபெருமான்
பரிவாரங்களோடு மாளிகைவாயிலிற் காவல்செய்திருத்தல் முதலிய வரங்களையும்
பெற்றான். அந்தப் பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள், ஒருநாள்
ஒருபுருஷனோடு தான் கூடியதாகக் கனாக்கண்டு, அவனிடத்தில் மிக்க ஆசை
பற்றியவளாய், தன் உயிர்த்தோழியான சித்திரரேகை மூலமாய்அந்தப் புருஷனைக்
கிருஷ்ணனுடைய பௌத்திரனான அநிருத்தனென்று அறிந்து அத்தோழியினால்
அநிருத்தனைத் தன் அந்தப்புரத்திலே கொணரப் பெற்று அவனோடு
போகங்களைஅநுபவித்துவர, இச்செய்தியை அந்தப் பாணன் காவலாளராலறிந்து
தன்சேனையுடன் அநிருத்தனை  எதிர்த்து மாயையினாற்பொருது நாகாஸ்
திரத்தினாற்கட்டிப்போட்டிருந்தான். அப்போது நாரதமகாமுனிவனால் நடந்த
வரலாறுசொல்லப்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணபகவான், அநிருத்தனை மீட்டுவர எண்ணி,
கருடன்மேல் ஏறிக்கொண்ட பலராமன் முதலானாரோடு கூடப் பாணபுரமாகிய
சோணிதபுரத்துக்கு எழுந்தருளினார். அப்போது அப்பட்டணத்தின் சமீபத்திற்
காவல்செய்துகொண்டிருந்த சிவபிரானது பிரமதகணங்கள் எதிர்த்துவர, க்ருஷ்ணன்
அவர்களை யெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானாலேவப்பட்டதொரு
ஜ்வரதேவதை பாணனைக் காப்பாற்றுதற்பொருட்டுத் தன்னோடு யுத்தஞ் செய்ய,
தானும் ஒரு  ஜ்வரத்தை யுண்டாக்கி இதன் சக்தியினாலே அதனைத்
துரத்திவிட்டான். பாணாசுரனது கோட்டையைச் சூழ்ந்து கொண்டு காத்திருந்த
அக்கினிதேவரைவரும் தன்னோடு எதிர்த்து வர, அவர்களையும் நாசஞ்செய்தான்.
அப்பால் பாணாசுரன் போர், தொடங்க, அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும்
சுப்பிரமணியன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போர்புரிய, கண்ணன்
தான் ஜ்ரும்பணாஸ்திரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றுஞ் செய்யாமற்
கொட்டாவிவிட்டுக்கொண்டு சோர்வடைந்து போம்படிசெய்து, சுப்பிரமணியனையும்
கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்து ஒட்டி, பின்னர், அநேகமாயிரஞ்
சூரியர்க்குச் சமமான சுதரிசநமென்கிற தனது சக்கரத்தை யெடுத்துப்பிரயோகித்து,
அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரைதாரையாய் உதிர மொழுக அறுத்து
அவனுயிரையுஞ் சிதைப்பதாக விருக்கையில், பரமசிவன் அருகில்வந்து வணங்கிப்
பலவாறு பிரார்த்தித்தனால், அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும்
விட்டருளினா னென்பது. நான்குதோள் குறைவாகத் துணிக்கப்பட்டிருக்கவும்,
‘துணிப்புண்ட ஆயிரம்புயத்தவன்’ என்றது, சுருங்கச்சொல்லல் என்னும்
அழகுபடவாகும்; அன்றியும், அவை அருள் பற்றியே விடப்பட்டனவாதலும் அறிக.   

உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி
வில், செங்
கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து, ஆயிரங்கண்ணன்
மைந்தனை நோக்கி,
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன், மதி வகிர்
முகம் ஆன
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடைதனில் எழும்படி, எய்தான்.-39.- ஸஹஸ்ரபாஹூ அருச்சுனன்மேல் அம்பெய்தல்.

ஆயிரம் – மிகப்பலவான, வரங்கள் – வரங்களையும், மறையொடு
உம்- (அஸ்திரங்களுக்கு உரிய) மந்திரங்களையும், பெற்றவன் – பெற்றவனான
அந்தஆயிரவாகு,- ஆயிரம் உரங்கள் பொலம் கிரி அனையன – மிகப்பலவான
வலிமைகளையுடைய பொன்மயமான மகாமேருகிரியைப் போன்றனவான, ஒர் ஒரு
குனி விற்கள் – வளையுமியல்பையுடைய விற்கள் ஒவ்வொன்றையும், கரங்கள்
ஆயிரம் கொடு – (தனது) ஆயிரங்கைகளால், வளைத்து – வணக்கி நாணேற்றி,-
ஆயிரம் கண்ணன் மைந்தனை நோக்கி – ஆயிரங்கண்களையுடையவனான
இந்திரனதுகுமாரனாகிய அருச்சுனனைக்குறித்து, மதிவகிர் முகம் ஆன சரங்கள் –
சந்திரனதுபிளப்புப்போன்ற நுனியுடையனவான ( அர்த்தசந்திர) பாணங்களை, ஒரு
தொடைதனில் ஆயிரம் ஆயிரம் எழும்படி- தொடுக்குந்தரமொவ்வொன்றிலும்
மிகப்பல ஆயிரக்கணக்காக மேற்சொல்லும்படி, எய்தான் – பிரயோகித்தான்; (எ-று.)

     ஆயிரங்கைகளுள் இடப்பக்கத்துள்ள ஐந்நூறுகைகளில் வில்வளைத்துப்
பிடித்துக்கொண்ட வலப்பக்கத்துள்ள ஐந்நூறுகைகளால் அம்பெய்தன னென்க; இது,
அடுத்த கவியால் விளங்கும். மேருமலைபோன்ற சிறப்புடை விற்கள் என்பதற்கு,
‘பொலங்கிரி யனையன விற்கள்’ என்றார். பி- ம்:  குனிவிற்செங்.

எடுத்த போதில் ஒன்று, அருங் குதை நாணிடை இசைத்த போது
ஒரு பத்து,
தொடுத்த போதில் நூறு, உகைத்த போது ஆயிரம் என வரும்
சுடர் வாளி
அடுத்த போர் முடி மன்னவன் விடும்விடும் அநேக
ஆயிரம் அம்பும்
தடுத்த போது, ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன்
எதிர் நின்ற.40.- அருச்சுனன் ஆயிரவாகுவின் அம்புகளை விலக்கல்.

எடுத்த போதில் – (தொடுக்கும்பொருட்டுக் கையில்) எடுத்த
பொழுதில், ஒன்று- ஒன்றும், அருங் குதை நாணிடை – அருமையான வில்லின்
நாணியிலே, இசைத்த போது – வைத்த பொழுதில், ஒரு பத்து – பத்தும், தொடுத்த
போதில் – (வில்லினால்) தொடுத்தபொழுதில், நூறு – நூறும், உகைந்த போது –
(எதிரியின் மேற்)  செலுத்தியபொழுது, ஆயிரம் என – ஆயிரமுமாக இருக்கும்
படி,அருஞ்சுடர் வாளி – பெறுதற்கரியனவும் ஒளியுள்ளனவுமான அம்புகளை,
(அருச்சுனன் ஏவி அவற்றால்), போர் அடுத்த முடி மன்னவன் விடும் விடும்
அநேகம் ஆயிரம் அம்புஉம் தடுத்தபோது – போரில்நெருங்கின கிரீடாதிபதியான
ஸஹஸ்ரபாகுஎன்னும் அரசன் (தன்மேல்) மிகுதியாகப்பிரயோகித்த பல
ஆயிரக்கணக்கான அம்புகளையெல்லாம் தடுத்தபொழுது, ஒரு தனுஉம் – (அருச்
சுனனுடைய) வில் ஒன்றுதானே, ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற (து) –
வலிமையையுடைய (ஆயிரவாகுவினது) ஐந்நூறு விற்களுடனே எதிர்த்துநின்றது;
(எ -று.) – பி -ம்: இசைந்த.

     ஆயிரவாகு தனது பல கைகளாலும் அளவிறந்த அம்புகளை ஏவுகையில்,
அருச்சுனன் தனது இருகைகளாலேயே அவற்றிற் கெல்லாம்எதிராக
அளவிறந்தஅம்புகளைச் சொரிந்து சலியாது போர்செய்தனனென்பதாம்.
இப்பாட்டின்முன்னிரண்டடி, எய்கிற அம்பு ஒவ்வொன்றே தெய்வத்தன்மையால்
வரவரப் பலவாய் வளர்ந்து சென்று எதிரிடுதலை விளக்கியது. குதை என்னும்
வில்லின் அடியின் பெயர், இங்குவில்லுக்குச் சினையாகுபெயராம்.

அலி முகம் தொழும் இளவல், வாணனைப் புயம் அழித்த மா
மறை ஒன்று
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க, மற்றுஅது
பெற்று, அங்-
குலி முகம் செறி வரி சிலை கால் பொரக் குனித்து,
வன்பொடு தொட்ட
சிலிமுகங்களின் துணித்தனன், ஆயிரம் சிகர வாகுவும் சேர.41.- அருச்சுனன் ஆயிரவாகுவின் தோள்களையெல்லாந் துணித்தல்.

அலி – (தமையனான) பலராமரன, முகம் தொழும் – முன் நின்று
வணங்குந்தன்மையுள்ள, இளவல் – தம்பியான கண்ணபிரான், வாணனை புயம்
அழித்த மா மறை ஒன்று – (முன்பு தான்) வாணாசுரனை (ஒருங்கே ஆயிரந்)
தோள்துணித்தற்கு உபயோகித்த சிறந்ததொரு மந்திரத்தை, வலிமுகம் கொடி
உயர்த்தவன் செவியினில் உரைக்க – குரங்குவடிவத்தைக் கொடியிலே
உயரஎடுத்துள்ளவனான அருச்சுனனது காதிலே (அப்பொழுது) உபதேசிக்க,
மற்று -பின்பு [உடனே], (அருச்சுனன்), அது பெற்று – அந்த மந்திரத்தைத்
தெரிந்துகொண்டு, அங்குலி முகம் செறி வரி சிலை – கைவிரல்களின் இடையிலே
உறுதியாகப் பிடித்த கட்டமைந்த காண்டீவவில்லை, கால் பொர குனித்து – நுனிகள்
வளைந்து பொருந்தும்படி வளைத்து, வன்பொடு தொட்ட – வலிமையோடு
பிரயோகித்த, சிலிமுகங்களின் – அம்புகளினால், ஆயிரம் சிகரம்  வாகுஉம் –
மலையுச்சிபோலுயர்ந்த வலிய (அவன்) ஆயிரந்தோள்களையும், சேர
துணித்தனன் -ஒருங்கே துணித்திட்டான்; (எ -று.)

     அலி = ஹலீ: வடசொல்: இது, பலராமன்பெயர்; ஹலம் என்னும்
ஆயுதத்தையுடையவன்: ஹலம் – கலப்பை. பலராமன் கண்ணனுக்குத் தமையன்;
திருமாலின் எட்டாம் அவதாரம் :  இவனிடத்து ஆதிசேஷனது அம்சமுங்
கலந்திருந்தது. வசுதேவனுடைய பத்தினிகளுள் தேவகியின் கர்ப்பத்தில்
(ஏழாவதுகருவாக) ஆறுமாசமும், ரோகிணியின் கர்ப்பத்தில் ஆறுமாசமும் இருந்து
பிறந்தவனிவன். இவனுக்கு கலப்பையும் உலக்கையும் ஆயுதங்கள். தேவகியின்
எட்டாவதுகருப்பத்தில் அவதரித்தவனும் திருமாலின் ஒன்பதாம் அவதாரமுமான
கண்ணனுக்கு இவன் தமையனாதல் காண்க. முகந் தொழும் என்பது – தலையால்
வணங்கு மென்றும் பொருள்படும்.   

மீதலம்தனக்கு இறைவன் வச்சிரத்தினால் வெற்பு இனம்
சிறகு அற்றுப்
பூதலம்தனில் விழுந்தபோல் விழுந்தன, புயங்கள்
ஆயிரமும் போய்-
காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு, காமுகன் ஆகி,
பாதலம் புகுந்து, இன்பம் எய்திய விறல் பார்த்தன் வெங்
கணையாலே.42.-துணிப்புண்ட கைகள் கீழ்விழுதல்.

காதல் – விரும்பப்படுதற்குஉரிய, அங்கனை – அழகியவளான
உலூபி,தடம் படிந்து – நீர்நிலையிலே நீராடி, ஏகுதல் – செல்லுதலை, கண்டு –
பார்த்து,காமுகன் ஆகி – (அவளிடத்து) ஆசைகொண்டவனாய், பாதலம் புகுந்து –
(அவளுடன்) பாதாளலோகத்தைச் சேர்ந்து, இன்பம் எய்திய – (அவளோடு)
சுகம்பெற்ற, விறல் பார்த்தன் – வலிமையையுடைய அருச்சுனனது, வெம் கணையால்
– கொடிய அம்புகளினால்,- புயங்கள் ஆயிரம்உம் – (சகசிரவாகுவின்)
ஆயிரந்தோள்களும்,- மீதலந்தனக்கு இறைவன்- மேலுலகமான சுவர்க்கத்துக்குத்
தலைவனான இந்திரனது, வச்சிரத்தினால் – வச்சிராயுதத்தினால், வெற்பின் அம்
சிறகு- மலைகளின் அழகிய இறகுகள், அற்று பூதலந்தனில் விழுவபோல் –
அறுபட்டுப்பூமியில் விழுவனபோல, போய் விழுந்தன- துணிபட்டுக் கீழ்
விழுந்திட்டன; ( எ -று.)– பி -ம்: விழுந்தபோல்.

     உவமையணி. இந்திரகுமாரனான அருச்சுனனுக்கு – இந்திரனும்,
அருச்சுனனது வலிய அம்புகட்கு – வலிய வச்சிராயுதமும், வலிய பெரிய
ஆயிரவாகுவுக்கு – மலையும், அவன்தோள்கட்கு – மலையிறகுகளும்
உவமையெனக்காண்க. வெற்புஇனம் சிறகற்று விழுவ போல் என எடுத்து
உரைத்தால், மலைகள் தோள்களுக்கு உவமையாம். மீதலம் – சுவர்க்கம்.

     அங்கநா – அழகிய அங்கமுடையாள்: வடசொல். 

அன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களும் அரிந்தனன், மழுவீரன்;
இன்று அருச்சுனன் இவன் புயம் அரிந்தனன்’ என்று
இமையவர் ஏத்த,
துன்று அருச்சுன நான்மறை உரலுடன் தொடர, முன் தவழ்ந்து
ஓடிச் சென்று, அருச்சுனம் இரண்டு
உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான்.43.- அருச்சுனனைத் தேவர்கள் கொண்டாடுதல்.

அன்று – அந்நாளில், அருச்சுனன் ஆயிரம் புயங்கள்உம் –
கார்த்தவீரியார்ச்சுனனது ஆயிரம் தோள்களையும், மழுவீரன் –
கோடாலிப்படையையுடைய மகாவீரனான பரசுராமன், அரிந்தனன் – அறுத்திட்டான்:
( அதுபோலவே), இன்று – இந்நாளில், அருச்சுனன் – இந்த அருச்சுனன், இவன்
புயம் அரிந்தனன் – இந்த ஆயிரவாகுவின் தோள்களை யறுத்திட்டான்’, என்று-
என்றுசொல்லி, இமையவர் – தேவர்கள், ஏத்த- புகழ,-. துன்று – விடாதுநெருங்கிய,
அருச்சுனம் – பரிசுத்தமான, நூல் மறை – நான்கு வேதங்களும், உரலுடன் –
உரலுடனே, தொடர – பின் தொடர்ந்து வர, முன் தவழ்ந்து ஓடி சென்று –
முன்னேதவழ்ந்து கொண்டு விரைவாகப்போய், இரண்டு அருச்சுனம் உதைத்தருளி
னோன் – இரண்டு மருதமரங்களை உதைத்து அருள்செய்தவனான கண்ணபிரான்,
செலுத்து – (பாகனாயமைந்து) ஓட்டுகிற, தேரவன் – தேரையுடைய அருச்சுனன்,
சென்றான் – (அப்பாற்) போயினான்; ( எ -று.) – ஏத்தச் சென்றான் என்க.

     எடுத்துக்காட்டுவமையணி. மழுவீரன் – பரசுராமன். ‘அன்றுஅருச்சுனன்
ஆயிரம்புயங்களும் அரியப்பட்டனன்’: இன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களையும்
அரிந்தனன்’ என்றுசொற்போக்கில் தொடைமுரண் தோன்றக் கூறியது,
கவிசமத்காரம். வெண்ணிறத்தையுணர்த்தும் அர்ஜூநமென்ற வடசொல் –
மூன்றாமடியில், இலக்கணையாய், சுத்தமென்றபொருளில் வந்தது. இனி, அருச்சுனன்
என்ற வடசொல்திரிபு எதுகைநயத்துக்காக அருச்சுனமென விகாரப்
பட்டதாகக்கொண்டு, அருச்சுனம் – சுவாமிபூசைக்கு உதவிகிற அல்லது பூசிக்கத்தக்க,
மறை யென்று உரைத்தலும் ஒன்று: ‘அசேதனமாகிய உரலோடு சகலஞானங்கட்கும்
ஆதாரமான வேதங்களுந்தொடர’ என்றதனால், திருமாலினருள்பெற்றால்
அசேதநங்களும் சேதநங்களோடு ஒப்புமைபெறு மென்பது தோன்றும்.  

கடிகை முப்பதும் சிந்துவுக்கு அரசனைக் காக்குமாறு அறைகூவி,
இடி இடித்தெனப் பல்லியம் அதிர்தர, எழு கடற் படையோடும்
படி நடுக்குற, பணிக் குலம் நெளித்திட, பட்டவர்த்தனர் உள்ளார்,
முடி தரித்தவர், அனைவரும் திரண்டு, ஒருமுனைபட எதிர் சென்றார்.44.- பின்பு பல அரசர் திரண்டு அருச்சுனனை எதிர்த்தல்.

பட்டவர்த்தனர் உள்ளார் – (கிரீடமில்லாமல்) நெற்றிப்பட்டம்
மாத்திரம்தரித்து அரசாளும் பட்டவர்த்தனர்களாக உள்ளவர்களும், முடி தரித்தவர்
-கிரீடத்தைதரித்து அரசாளும் மகுடவர்த்தனர்களாக உள்ளவர்களுமாகிய,
அனைவர்உம் – எல்லா அரசர்களும்,- திரண்டு- ஒருங்கு கூடி , கடிகைமுப்பது
உம்-(அன்றைப்பகல்) நாழிகைமுப்பதும், சிந்துவுக்கு அரசனை – சிந்துதேசத்து
அரசனாகிய சயத்திரதனை, காக்கும் ஆறு – (தாம்) பாதுகாக்கும்படி ( நிச்சயித்து),-
அறைகூவி – (அருச்சுனனை) வலியப் போர்க்கு அழைத்துக்கொண்டு,- பல் இயம் –
அநேகவித வாத்தியங்கள், இடி இடித்து என – இடியிடித்தாற்போல, ஆர்த்து எழ –
ஆரவாரித்து மிக முழங்க,- எழு கடல் கடையோடுஉம் – ஏழுசமுத்திரங்கள்போன்ற
சேனைகளுடனே,- படி நடுக்குஉற -(பாரமிகுதியாற்) பூமி நடுக்கமடையவும், பணி
குலம் நெளித்திட- (மற்றும் அதனால் பூமியைத்தாங்குகிற) பாம்புகளின்கூட்டம்
(சுமக்கமாட்டாது) தலையசைக்கவும் ஒரு முனை பட – ஓரேநோக்கமாக, எதிர்
சென்றார் – அருச்சுனனெதிரில் வந்தார்கள்; ( எ -று.)

     பதினான்காநாட்பகல் முழுவதும் அருச்சுனன்கையிற்படாத படி
சயத்திரதனைத்தாம் பாதுகாப்பதாக மிகப்பல அரசர் ஒன்று கூடித் தம்
சேனைகளோடுபூமிநடுங்கும்படி அருச்சுனனுக்கு எதிரே சென்றா ரென்க. ஆயிரந்தலைகளையுடையஆதிசேஷன் நடுவிலும், அவனுக்குத் துணையாக
அஷ்டமகாநாகங்கள் கிழக்கு முதலிய எட்டுத்திக்குக்களிலுமாகப் பூமியின்கீழிருந்து
பூமியைத் தாங்குகின்றன வென்ப. பி -ம்: அதிர்தரவெழு. 

பரிதியால் வளைப்புண்ட செம் பரிதியின் பற்குனன் தனு வாங்கி,
தெரி சரங்கள் ஓர் ஒருவருக்கு ஆயிரம் சிரம் முதல் அடி ஈறா
நெரிதரும்படி தொடுத்து, வெங் கொடி பரி நேமி அம் தேர் கோடி
கரிகளும் துணிபடப் பட மலைந்தனன், கடிகை ஒன்றினில் மாதோ.45.-அத்தனைபேரோடும் அருச்சுனனொருவன் பொருதல்.

 பரி தியால்வளைப்புண்ட – ஊர்கோளாற் சூழப்பட்ட, செம் பரி
தியின்- சிவந்த சூரியன்போல, (அரசர்பல பேராற் சூழப் பட்டு இடையில் நின்று),
பற்குனன் – அருச்சுனன், தனு வாங்கி – வில்லை வளைத்து, தெரிசரங்கள் –
ஆராய்ந்தெடுக்கப்பட்ட [சிறந்த] அம்புகளை, ஓர் ஒருவருக்கு ஆயிரம் –
ஒவ்வொருத்தருக்குஆயிரம் வீதமாக, சிரம் முதல் அடி ஈறு ஆ நெரிதரும்படி –
(அவர்களுடைய) தலைமுதல் கால் இறுதியாக எல்லாவுறுப்புகளுஞ் சிதையும்படி,
தொடுத்து – (அவர்கள்மேற்) பிரயோகித்து,- வெம் – பயங்கரமான, கொடி –
துவசங்களும், பரி – குதிரைகளும், நேமி தேர்ச்சக்கரங்களும், தேர் – தேர்களும்,
பலகோடி – அநேககோடிக்கணக்கான, கரிகள்உம் – யானைகளும், துணிபட பட –
மிகுதியாகத் துண்டுபடும்படி, கடிகை ஒன்றினில் – ஒருநாழிகைப்பொழுதிலே,
மலைந்தனன் – எதிர்த்துப்பொருதான்; ( எ -று.)

     மண்டலத்தாற் சூழப்பட்ட சூரியன்போல மிகப்பல அரசராற் சூழப்பட்ட
அருச்சனன் தான் ஒருவனாகவே அவ்வளவுபேரையும் எதிர்த்து வில்வளைத்து
ஒவ்வொருத்தருக்கு ஆயிரமாகப் பாணப் பிரயோகஞ்செய்து அவர்களுடைய
குதிரைதேர் யானைகளையும் சேனைகளையும் கொடி முதலிய
இராசசின்னங்களையும் தலைமுதலிய உறுப்புக்களையும் சின்னபின்னமாக
ஒருநாழிகைப்போதில் அழித்திட்டானென்க. வளைத்தவில்லுக்குப் பரிவேடம்
உவமையென்பாருமுளர். பி-ம் :நேமியர்தேர்கோடி.  

போரில் வெவ் விடாய் தணிவுற, களத்தினில்
புறங்கொடுத்தவர், சோரி
நீரில் மூழ்கியும், கழுகு இடு காவண நீழல் ஆறியும், சென்றார்;
தேரில் வாசியில் களிற்றில் வந்தவர்களில், சேவடி சிவப்பேற
யார் யார் குதித்து ஓடுதல் ஒழிந்தவர், எறி படை
வீழ்த்திட்டே!46.-இரண்டுகவிகள் – அருச்சுனன்முன் பகைவர்களிரிந்தோடியமை
கூறும்.

களத்தினில் – அந்தப்போர்க்களத்திலே , புறங்கொடுத்தவர் –
முதுகுகொடுத்த வீரர்கள், போரில் வெவ் விடாய் தணிவுற – போரில்
(தங்கட்குஉண்டான) கொடியஇளைப்புத் தணிவடையும்படி, சோரி நீரில்
முழ்கிஉம் -இரத்தவெள்ளத்திலே முழுகியும், கழுகுஇடு காவணம் நீழல்
ஆறிஉம் – (அங்குப்பிணந்தின்னவந்த) கழுகுகள் (தாம் வானத்திலே இடைவிடாது
பரவுதலால்) அமைத்தபந்தலின் நிழலிலே தாபந்தீர்ந்தும், சென்றார்-
போனார்கள்; தேரில் – தேர்களின்மேலும், வாசியில் – குதிரைகளின் மேலும்,
களிற்றில் – யானைகளின்மேலும், வந்தவர்களில்- எதிர்த்துவந்த வீரர்களில்,
எறிபடைவீழ்த்திட்டு – (பகைவர்மேற்) பிரயோகித்தற்குஉரிய ஆயுதங்களைக்
கீழேபோகவிட்டுவிட்டு, சே அடி சிவப்புஏற – (இயற்கையிற்) சிவந்தனவாகிய
(தங்கள்) பாதங்கள் செந்நிறம் மிகும்படி, குதித்து ஓடுதல் ஓழிந்தவர் – ( தம்தம்
வாகனங்களினின்று கீழே) குதித்து ஓடுதலை நீங்கினவர்கள், யார் யார் –
யாவர்தாம்?[குதித்து ஓடாதவர் எவருமில்லை யென்றபடி] ; ( எ -று.)

     அருச்சுனனை யெதிர்த்தவரில் இறந்தவர் போக மிச்சமானவரனைவரும்
அவனால் வலியழிக்கப்பட்டுத் தோற்று அவனெதிரில் நிற்கவும் ஆற்றாராய்ப்
புறங்கொடுத்து விரைவில் ஓடிப்போய்உயிர் தப்பினரென்பதாம்.  அவன்
முன்னிலையில் தம் தம் வாகனங்களின் மீது  நின்றாலும் அவன் விட
மாட்டானென்றுஅஞ்சி அவற்றினின்று விரைவிற் குதித்து, கையில் ஆயுதங்களோடு
கூடியிருந்தால்அவன் தம்மை அழிக்கக்கூடு மென்ற சங்கையினாலும் அவன்
விஷயத்தி லுண்டானஅச்சமிகுதியா லாகிய கைந்நடுக்கத்தாலும் படைக்கலங்களைக்
கீழேபோகட்டு ஓடினரென்க. அங்ஙனம் புறங்கொடுத்தவர்கள் இரத்தவெள்ளத்தில்
மூழ்குதலும்,கழுகுநிழலிற் பொருந்துதலையும் – விடாய் தணிதற்பொருட்டு நீரில்
மூழ்குதலும்,நிழலிற்பொருந்துதலுமாகக் கற்பித்தார்; தற்குறிப்பேற்றவணி

அநேகம் ஆயிரம் பேர் பட, கவந்தம் ஒன்று ஆடும்;
அக் கவந்தங்கள்
அநேகம் ஆயிரம் ஆட, வெஞ் சிலை மணி அசைந்து
ஒரு குரல் ஆர்க்கும்;
அநேக நாழிகை அருச்சுனன் சிலை மணி ஆர்த்தது;
அக் களம் பட்ட
அநேகம் ஆயிரம் விருதரை அளவு அறிந்து ஆர்கொலோ
உரைக்கிற்பார்?48.- அருச்சுனனது விற்போர்த்திறச்சிறப்பு.

அநேகம் ஆயிரம் பேர் பட (போரில்) பலஆயிரம் பேர் இறக்க,
கவந்தம் ஒன்று ஆடும் – ஒருகவந்தம்[எழுந்துநின்று] கூத்தாடும்: அ கவந்தங்கள்
அநேகம் ஆயிரம் ஆட – அத்தன்மையனவான கவந்தங்கள் பல ஆயிரம் எழுந்து
கூத்தாட, வெம் சிலை மணி அசைந்து, ஒரு குலல் ஆர்க்கும்- பயங்கரமான
வில்லிற்கட்டியுள்ள மணி அசைந்து ஒருமுறை ஒலிக்கும்; அருச்சுனன் சிலை
மணி-(அத்தன்மையுள்ள) அருச்சுனனது காண்வவில்லின் மணி, அநேக நாழிகை
ஆர்த்தது- (அப்போது) பலநாழிகைப் பொழுது ஒலித்தது; (என்றால்),- அ களம்
பட்ட -அந்தப் போர்க்களத்தில் (அன்று) இறந்த, அநேகம் ஆயிரம் விருதரை –
பலஆயிரம் வீரர்களை, ஆர்கொல் – யார்தாம், அளவு அறிந்து உரைக்கிற்பார் –
(இவ்வளவென்று) தொகையறிந்து சொல்லவல்லார்? [எவருமில்லை யென்றபடி]; ஓ –
அசை.

     இப்பாட்டிற்கூறிய மரபை ” ஆனையாயிரந்தேர்பதினாயிர மடர் பரியொரு
கோடி, சேனைகாவலராயிரம்பேர்படிற் செழுங்கவந்த மொன்றாடுங், கானமாயிர
மாயிர கோடிக்குக் கவின்மணி கணிலென்னும், ஏனையம்மணியேழரை நாழிகை
யாடிய தினிதன்றே” என்று கம்பராமாயணத்திலும் காண்க. இது, வடநூல்களிலுங்
கூறப்பட்டுள்ளது. கவந்தம் – கபந்தம் என்ற வடசொல்லின் திரிபு: இதற்கு –
தொழிலுடன் கூடின தலையற்ற உடலென்று பொருள். மணி – அடிக்கும்மணி,
கண்டை. மணியில் அடிக்கிற உறுப்பை ‘நா’ என்றல் மரபாதலின், அதன் ஒலியை
‘குரல்’ என்றார். சொற்பொருட்பின்வருநிலை.  

வெவ் வாசி நெடுந் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு
இவ்வாறு அமர் புரி காலையில், எழு செங் குருதியினால்,
அவ் ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம், அந்திச்
செவ் வானகம் என வந்து சிவப்பு ஏறியது, எங்கும்.49.- படுகளச்சிறப்பு.

வெவ் வாசி – வேகமுள்ள குதிரைகள்பூண்ட, நெடுந் தேர் மிசை –
பெரிய தேரின்மீது, நிமிரா வரி வில் கொண்டு – வளைவு மாறாத கட்டமைந்த
வில்லை யேந்திக்கொண்டுநின்று, இ ஆறு- இப்படி, அமர் புரி வேலையில் –
(அருச்சுனன்) போர்செய்தபொழுதில், எழு – மிக்குப்பெருகிய, செம் குருதியினால் –
சிவந்தஇரத்தத்தால்,- அ ஆடு அரவுஉடையான் அழி ஆயோதனம் எங்குஉம்-
படமெடுத்தாடுந்தன்மையுள்ள பாம்பின்வடிவத்தைக் கொடியிலுடையவனான
அந்தத்துரியோதனனது அழிபட்ட போர்க்களம் முழுவதும்,- அந்தி செவ் வான்
அகம் என- மாலைப்பொழுதிற் காணப்படுகிற செவ்வானம்போல, சிவப்பு வந்து
ஏறியது – செந்நிறம்பரவிமிகப்பெற்றது; ( எ -று.)

     இதுமுதற் பதினேழுகவிகள் -பெரும்பாலும்ஈற்றுச்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.   

முருகு ஆர் இரு சிறை வண்டுஇனம், முளரிப் புது மலர் விட்டு,
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே,
இரு காலமும் முக் கால் விடு கைம் மாரி, இருக்கால்,
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன், உதயன்.50.- மத்தியானகால வருணனை.

முருகு ஆர் – தேனையுண்ணுந்தன்மையுள்ள, இரு சிறை வண்டு
இனம் – இரண்டு இறகுகளையுடைய வண்டுகளின் கூட்டம்; புது முளரி மலர்விட்டு-
புதிய [அன்றுமலர்ந்த] தாமரைப்பூக்களை விட்டு நீங்கி, அருகு ஆர் பொழில்
நிழலூடு – சமீபத்திற் பொருந்திய சோலைகளின் நிழலிலேயுள்ள, அணி அலர்
நாள்மலர் – அழகிய மலர்ந்த புதியபூக்களில், உற -சேரும்படி,- உதயன் –
சூரியன்,-அரு மறையோர் – (அறிதற்கு) அரியவேதங்களையுணர்ந்த பிராமணர்,
இருக்கால் -வேதமந்திரத்தைக்கொண்டு [காயத்திரியுச்சாரணத்தோடு], இரு
காலம்உம் முக்கால்விடு கை மாரி – (காலை மாலை என்ற) இரண்டுபொழுதிலும்
மூன்றுமுறை கைகளால்எடுத்துவிடுகிற அருக்கியநீர்ப்பொழிவை, ஒருகால் விடு-
ஒருமுறைசொரிகிற, பதம் -இடத்தை, நண்ணினன் – சேர்ந்தான்
[உச்சியடைந்தான்] ;  ( எ-று.)

     காலையிலும்மாலையிலுஞ் செய்யும் சந்தியாவந்தனங்களில் மூன்று முறையும்,
மாத்தியான்னிகத்தில் * ஒருமுறையும் காயத்திரிமந்திரங்கூறி அருக்கியம் விடுதல்
மரபாதலால், ‘ உச்சமடைந்தான்’ என்ற பொருளை இங்ஙனங் கூறினார்; இது,
பிறிதினவிற்சியணி. சூரியோதயகாலத்திலே தாமரையில் மொய்த்து அதிலுள்ள
தேனை வயிறுநிரம்பப் பருகிய வண்டுகள் அச்சூரியன் உச்சிவான மடைந்தபோது
வெயில்மிக்கதனா லாகிய தாபத்தைப் பொறுக்க மாட்டாமல் அத்தாமரையைவிட்டுப்
பக்கங்களிலுள்ள சோலைகளிலிருக்கிற மரங்களின் நிழலில் மலர்ந்த வேற்றுப்
பூக்களை நாடியடைகின்றன என்று, அக்காலத்தின் வெயில் மிகுதியை
முன்னிரண்டடி விளக்கும். ‘முருகார்’ என்பது, வண்டுக்கு அடைமொழி;
முருகுஆர்தல் – நறுமணத்தை யுட்கொள்ளுதலும் அழகுநிரம்புதலும்
இளமைபொருந்துதலும் ஆம்.                                    (447)

    * இதற்குமாறாகச் சிலர் மாத்தியான்னிகத்தில் இருமுறை
காயத்திரியர்க்கியப்பிரதாநஞ்செய்தல் கல்பபேதவிதிபற்றியதாதல் வேண்டு மென
அறிக.

விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு,
உரவாவிடில், ஓடா இனி’ என்று ஐயன் உரைப்ப,
அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருணச்
சரவாய் வர எய்தான்; அவண் எழலுற்றது, ஒர் தடமே.51.- அருச்சுனன் அங்கு ஒருகுளம் உண்டாக்கல்.

(அப்பொழுது),- ஐயன் – (யாவர்க்குந்) தலைவனான கண்ணன்,
(அருச்சுனனை நோக்கி), ‘விரவார் முனை அடு – பகைவரது போரை அழிக்கவல்ல,
தேர் – (நமது) தேரினது, நுகம் – நுகத்தடியிற் பூட்டப்பட்டுள்ள, வெவ் வாசிகள் –
விரைந்து செல்லத்தக்க குதிரைகள், புனல் உண்டு உரவா விடில் – நீர்பருகி
வலிமையடையாவிட்டால் [இளைப்பாறாவிட்டால்], இனி ஓடா – இனிமேல்
ஓடமாட்டா,’ என்று உரைப்ப – என்றுசொல்ல,- (உடனே அருச்சுனன்),- அரவு
ஆபரணன் தந்தருள் அரு மாமறை – நாகங்களை ஆபரணமாகவுடைய சிவபிரான்
(தனக்குக்) கொடுத்தருளிய (பிறர்க்கு) அருமையான சிறந்த உருத்திரமந்திரம்,
வருணம் சரவாய் வர – வாருணாஸ்திரத்திலே அமையும்படி, எய்தான் –
பாணப்பிரயோகஞ் செய்தான்; (அம்மாத்திரத்து,) அவண் – அங்கு, ஓர் தடம் –
ஒருதடாகம், எழல்உற்றது – உண்டாயிற்று; ( எ -று.)- வருணாச்சரம் –
நீர்க்கடவுளாகியவருணனைத் தெய்வமாகவுடைய அஸ்திரம்.

ஆழம் புணரியினும் பெரிது; அதினும் பெரிது அகலம்;
சூழ் எங்கணும் வண் தாமரை; துறை எங்கணும் நீலம்;
கீழ் எங்கணும் நெடு வாளை, வரால், பைங் கயல், கெண்டை;
வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம்.52.- இரண்டுகவிகள் – அக்குளத்தின் வருணனை.

ஆழம் – (அக்குளத்தின்) ஆழம், புணரியின்உம் பெரிது – கடலின்
ஆழத்தினும் அதிகமானது; அகலம் -(அக்குளத்தின் அகலமும், அதின்உம்
பெரிது -கடலின் அகலத்தினும் அதிகமானது; சூழ் எங்கண்உம்- (அக்குளத்தில்)
சுற்றிலுமுள்ளஎவ்விடத்தும், வள் தாமரை – செழிப்பான தாமரைகளும்,- துறை
எங்கண்உம் -(அக்குளத்தின் இறங்கு) துறைகளிலெல்லாம், நீலம் –
கருங்குவளைகளும்,- கீழ்எங்கண்உம் – (அதன்) உள்ளிடம் முழுவதிலும், நெடு
வாளை – நீண்டவாளைமீன்களும், வரால் – வரால்மீன்களும், பைங் கயல் –
பசுநிறமான கயல்மீன்களும், கெண்டை – கெண்டைமீன்களும்,- கரை அருகு
எங்கண்உம் – கரைப்பக்கங்களி லெல்லாம், வளர் கின்னர மிதுனம் – நன்றாக
வளர்ந்த கின்னர மிதுனங்களும், வாழும் – (இனிமையாகத்) தங்கும்; ( எ-று.)-
பி -ம்
 :  வீழுங்கரை.

இதனால், தெய்விகமாகவுண்டான அத்தடாகத்தின் ஆழம் அகலம்
நீர்வளச்சிறப்பு என்பவை விளங்கும். கின்னரமிதுனம்- கின்னரமென்னும்
நீர்வாழ்ப்பறவையின் ஆணும் பெண்ணுமான இரட்டை, எப்பொழுதும்
ஆணும்பெண்ணுமாய் இரட்டைப்பட்டு நின்று கிந்நரமென்னும்
வாத்தியங்கைக்கொண்டு பாடித் திரிவதொரு தேவசாதிக்கும் இப்பெயருண்டு ;
இவை,குதிரைமுகமும் மனிதவுடம்பும் உடையவை. முதலடி – உயர்வுநவிற்சியணி
வகையால் அக்குளத்தின் ஆழமிகுதியையும் அகலமிகுதியையும் விளக்கியது.

ஒருபால், வளர் போதா நிரை; கரு நாரைகள் ஒருபால்;
ஒருபால், உளம் மகிழ் நேமிகள்; அன்றில் குலம் ஒருபால்;
ஒருபால், மட அன்னம்; புனல் அரமங்கையர் ஒரு பால்;
ஒருபால், இருபாலும் தவழ் ஒளி நந்து உறை புளினம்.

(மற்றும் அக்குளக்கரையில்), ஒரு பால் – பக்கத்தில், வளர் போதா
நிரை – நன்றாகவளர்ந்தபெருநாரைகளின் கூட்டமும், ஒரு பால்-, கரு நாரைகள் –
கறுப்புநாரைகளும், ஒரு பால்-, உளம் மகிழ் நேமிகள் – (தம்மிற்கூடி) மனம்
மகிழ்கிறசக்கரவாகப்பறவைகளும், ஒருபால்-, அன்றில் குலம் – கிரௌஞ்சமென்னும்
பறவைகளின் கூட்டமும், ஒருபால்-, மட அன்னம்- இளமையான
அன்னப்பறவைகளும், ஒருபால்-, புனல் அர மங்கையர் – நீரில்வாழும்
தேவமகளிரும், ஒருபால்-, இருபால்உம் தவழ் ஒளி – இரண்டுபக்கங்களிலும்
பரவிச்செல்கிற ஒளியையுடைய, நந்து- சங்குகள், உறை – தங்கப்பெற்ற, புளினம் –
மணல்மேடுகளும், (உண்டு); ( எ -று.)

     வினைமுற்று, வருவிக்கப்பட்டது. சக்கரவாகப்பறவைகள் பகலில் ஆணும்
பெண்ணுங் கூடிக் குலாவுந் தன்மையனவாதலால், ‘உளம்மகிழ் நேமிகள்’
எனப்பட்டன. நேமி – வடசொல். புனல் அர மங்கையர் – நீரரமகளிர்
எனப்படுவர் .சொற்பொருட்பின்வருநிலையணி.

தல மா மகள் உந்தித் தடம் நிகரான தடம் கண்டு,
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப,
குல மா மணி அனையான் விரை தேர்நின்று எதிர் குதியா,
வலம் ஆன துரங்கங்களை வள் வார் விசி நெகிழா,54.- இரண்டுகவிகள் – குளகம் : கண்ணன் தேர்க்குதிரைகளை
நீர்பருவித்தலைக் கூறும்.

தலம் ஆம் மகள் – பூமியாகிய பெண்ணினது, உந்தி தடம்நிகர்
ஆன -நாபியினிடத்துக்குஒப்பான , தடம் – அக்குளத்தை, கண்டு – பார்த்து, உலம்
மாறு கொள் இரு தோள் வலி உடை வள்ளல் – திரண்டநல் தூணோடு (தமக்கு
ஒப்பாகா தென்று) பகைமை கொள்கிற இரண்டுதோள்களிலும் வலிமையையுடைய
வரையா தருளுந் தன்மையுடையவனான அருச்சுனன், உரைப்ப – சொல்ல,- மா
குலம் மணி அனையான் – பெரிய சிறந்த சாதி நீலரத்தினம் போன்றவனான
கண்ணன், விரை தேர் நின்று எதிர் குதியா – வேகமாகச்செல்லு மியல்பின தான
(தனது) தேரினின்று முன்னே குதித்து, வலம் ஆன துரங்கங்களை –
வலிமையுடையனவான குதிரைகளை, வள் வார் விசி நெகிழா- தோற்கயிற்றாலாகிய
கட்டுக்களை யவிழவிட்டு, ( எ -று.)  -“வாரிபருக்கி” எனஅடுத்த கவியோடு
தொடரும்.

     உரைப்ப – இங்ஙனம் தனது அம்பின்திறத்தால்
நீர்நிலையையுண்டாக்கியவுடனே அருச்சுனன் கண்ணனைநோக்கி ‘இனித்
தேர்க்குதிரைகட்கு நீருட்டி இளைப்பாற்றலாம்’ என்று சொல்ல என்க. உலகத்தில்
உபமானமாய்ப் பிரசித்தமாக வழங்குகிற குளத்தை உபமேயமாகவும், உபமேயமாய்ப்
பிரசித்தமாகவழங்குகிற நாபியை உபமானமாகவும் மாற்றிக்கூறினது, எதிர்
நிலையணி.
திரண்டுருண்டு பருத்து நீண்டு நெய்ப்புடைய வடிவிலும்
வலிமையிலுங் கற்றூணினும்மேம்பட்ட தோள் என்க. 

குவளைப் பரிமளம் மேவரு குளிர் வாரி பருக்கி,
பவளத் துவர் வாயான் இரு பாதம் கை விளக்கி,
தவளக் கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர்
இவுளிக்கும் இளைப்பு ஆற, இளைப்பு ஆறினன், இப்பால்,

குவளை- நீலோற்பலமலரினது, பரிமளம் – சுகந்தம், மேவரு –
பொருந்திய, குளிர் வாரி – குளிர்ந்த (அக்குளத்தின்) நீரை, பருக்கி –
(குதிரைகளைக்)குடிப்பித்து,- பவளம் துவர் வாயான்- பவழம்போலச் சிவந்த
வாயையுடையஅக்கண்ணன்பிரான்தானும், இரு பாதம் கை விளக்கி – (தனது)
இரண்டுதிருவடிகளையும் திருக்கைகளையும் அலம்பிக்கொண்டு,- தவளம் கிரி
ஒரு நால்எனமேல் மேல் ஒளிர்தரு- வெண்ணிறமான நான்கு (வெள்ளி) மலைகள்
போலமிகுதியாக விளங்குதல்பொருந்திய, பேர் இவுளிக்குஉம்- பெரிய (நான்கு)
குதிரைகட்கும், இளைப்புஆற- இளைப்புத் தணிய, இப்பால் – இப்பக்கத்தில்,
இளைப்பு ஆறினன்-; ( எ -று.)

     கண்ணன் குதிரைகளை நீர்குடிப்பித்துத் தானுங் கைகால்களைக்
கழுவிக்கொண்டு அக்குதிரைகளினிளைப்பைப் தீர்த்துத் தானும் இளைப்பாறின
னென்பதாம். சேனைகள் கைகலந்து போர் செய்யுமிடத்திற் பாண்டவர்பக்கத்தில்
நிகழ்ந்த செய்கைகளை இதுவரையிற் கூறி, இனித் துரியோதனாதியர் பக்கத்தில்
நடந்த செய்தியைக் கூறுவாராய், இப்பாட்டினிறுதியில் ‘இப்பால்’ என்றும், அடுத்த
பாட்டின் முதலில் ‘அப்பால்’ என்றுங் கூறுகின்றார். பி -ம்: ஒளிதரு. போர்.
இவுளிக்குலம்.    

அப்பால் இவனுடனே பொருது அனிலத்து எதிர் சருகோடு
ஒப்பாய், உளம் வெருவு எய்தி, உடைந்து ஓடிய வீரர்,
‘தப்பார் ஒருவரும், இன்று அடு சமரம்தனில், விசயன்
கைப் பாய் கணை பொர நொந்தவர், கழல் மன்னவ!’ என்றார்.56.- தோற்ற வீரர்கள் துரியோதனனிடம் முறையிடுதல்.

இவனுடனே பொருது – இந்த அருச்சுனனோடுபோர் செய்து,
அனிலத்து எதிர் சருகோடு ஒப்பு ஆய் – காற்றின்முன் நேர்ந்த சருகோடு
சமமாய்[காற்றிலகப்பட்ட சரு்குபோல], உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய –
மனத்தில் அச்சமடைந்து உறுதி நிலைகெட்டுப் புறங்கொடுத்தோடின, வீரர் –
வீரர்கள்,- அப்பால்- எதிர்ப்பக்கத்தில்,- (துரியோதனனைச் சேர்ந்து அவனை
நோக்கி), ‘கழல் மன்னவ – வீரக்கழலையணிந்த அரசனே! இன்று-,
அடுசமரந்தனில்-(பகைவரை) அழிக்குந்தன்மையதான போரில், விசயன் கை பாய்
கணை பொர -அருச்சுனனது கையினின்று விரைந்து வெளிவருகிற அம்புகள்
தாக்குதலால்,நேர்ந்தவர் ஒருவர்உம் தப்பார்- (அவனை) எதிர்த்தவருள்
ஒருவரும்உயிர்தப்பிப்பிழையார்’ என்றார் – என்று சொன்னார்கள்; ( எ -று.) –
பி – ம்:
பொரநொந்தவர் என்றும் படிக்கலாம்.

துரியோதனன் அவர் சொல்லிய சொல் தன் செவி சுடவே,
அரியோடு எதிர் பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான்,
எரி ஓடிய புரி என்ன இளைத்து, ஆரண வேள்விப்
பெரியோன் அடி எய்தி, சிறுமையினால், இவை பேசும்:57.- துரியோதனன் துரோணனை யடுத்துக் குறைகூறுதல்.

அவர் – அந்தவீரர்கள், சொல்லிய – அவ்வாறு சொன்ன,
சொல் -பேச்சு, தன் செவி சுடஏ – தனது காதுகளை வருத்துதலாலே,-
அரியோடு எதிர்பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான் – சிங்கத்தோடு
எதிர்நின்றுபோர்செய்தற்குப் பயந்த வலிமையையுடைய யானைப் போன்றவனாகிய
துரியோதனன்-, எரி ஓடிய புரி என்ன இளைத்து – தீமிகுதியாகப்பற்றிய
நகரப்போலச் சோர்ந்து,- ஆரணம் வேள்வி பெரியோன் அடி  யெய்தி-
வேதவிதிப்படி யாகங்கள் செய்துள்ள  பெரியோனான துரோணாசார்யனது
பாதங்களைச் சேர்ந்து,- சிறுமையினால்- (தன் சேனையினது) எளிமைகாரணமாக,
இவை பேசும் – இவ்வார்த்தைகளைச் சொல்வான்; (எ -று.)- அவற்றை அடுத்த
மூன்றுகவிகளிற் காண்க.

     மிகத்தீப்பற்றிய நகரம், மிகப்பொலிவழிதற்கு உவமம், எரியோடியபுரி –
அநுமானால் எங்கும் தீப்பற்றவைக்கப்பட்ட இலங்கை யென்றும்,
சிவபெருமானாலெரிக்கப்பட்ட திரிபுரமென்றுமாம்; அன்றி, நெருப்புப்பற்றிய
வைக்கோற்புரிபோல வெனின், உள்ளீடில்லாமையில் உவமமென்க.  

அதிரேக விறல் பற்குனன் அம்போடு எதிர் அம்பு இட்டு,
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார்?
கதிர் ஏகிடும் முன் துச்சளை கணவன் தலை கடிதின்
பிதிர் ஏறுவது அல்லாது, அது பிழைப்பிப்பவர் இலரால்.58.- இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்; துரியோதனன்
துரோணனைநோக்கிக் கூறியவார்த்தை.

அதிரேகம் – மிகமேம்பட்ட, விறல் – பலபராக்கிரமங்களையுடைய,
பற்குனன் – அருச்சுனனது, அம்போடு- அம்புகளுடன் மாறாக, எதிர் அம்பு இட்டு –
எதிரம்புதொடுத்துக்கொண்டு, எதிர் ஏறிய- அவனெதிரிலே எதிர்த்துச்சென்ற, வய
மன்னரில்- வலிமையுடைய அரசர்களில், ஏ மன்னர் பிழைத்தார்- எந்த அரசர்
அழியாமற் பிழைத்தார்? (இங்ஙனம் ஆகுதலால்), கதிர் ஏகிடும் முன்- சூரியன்
மறைந்துசெல்வதற்கு [அஸ்தமித்தற்கு] முன்னே, துச்சளை கணவன் தலை – (எமது
தங்கையான) துச்சளையின் கொழுநனாகிய சயத்திரனது தலை, கடிதின் –
விரைவிலே, பிதிர் எறுவது அல்லது- (அருச்சுனன்செய்த சபதத்தின்படி அவனாற்)
சிதறிப்  பொடிபடுதல்லாமல், அது பிழைப்பிப்பவர் இலர் – அங்ஙனமாகுதலைத்
தவறச்செய்ய வல்லவர் எவருமில்லை; (எ -று.)

     எமது உடன்பிறந்தவளான துச்சளை மங்கலநாணிழவாதபடி அவள்
கணவனான சயத்திரதனை உயிர்காத்தல் அதியவசியமென்பது தோன்ற,
‘துச்சளைகணவன்’என்றும், இதுவரையிலும் அருச்சனனையெதிர்த்தவர்களில்
யாரும்அழியாதுபிழைத்திலராதலால், இனியும் அவ்வாறேயா மென்பது தோன்ற
‘பிழைப்பிப்பவரிலர்’ என்றுங் கூறினான்.  

காணாத இடத்து ஆண்மை உறக் கூறுவர்; கண்டால்,
ஏண் ஆடு அமர் முனைதன்னில் இமைப்போது எதிர் நில்லார்;
நாணாது முன் வென்னிட்டிடும் நம் சேனை அடங்கச்
சேண் நாடு உறும், இன்றே; ஒரு செயல் கண்டிலம், ஐயா!

(நம்சேனைவீரர்), காணாதஇடத்து – (அருச்சுனனைக்) காணாத
இடத்திலே, ஆண்மை – (அவனைத் தாம் வெல்வதாகப்) பராக்கிரமவார்த்தைகளை,
உற கூறுவர் – மிகுதியாகச் சொல்வார்கள்; கண்டால்- (அவனைஎதிர்வரப்)
பார்த்தாலோ, ஏண் ஆடு அமர் முனை தன்னில் – வலிமையாற் செய்யும் போர்க்கு
உரிய களத்தில், இமை போது எதிர் நில்லார்- ஒருமாத்திரைப் பொழுதேனும்
எதிர்த்துநிற்கமாட்டார்கள்; (இங்ஙனம் ஆகுதலால்), நம்சேனை அடங்க – நமது
சேனைமுழுவதும், நாணாது – வெட்கமில்லாமல், முன் – (அவனது) முன்னிலையில்,
வென் இட்டிடும் – முதுகுகொடுத்தோடுகின்றன; (அங்ஙனம் ஓடவே), இன்றுஏ சேண்
நாடு உறும் – (சயத்திரதன்) இன்றைக்கே (அருச்சுனனாற் கொல்லப்பட்டுச்) சுவர்க்க
லோகஞ் சேர்வான்; ஐயா- ஸ்வாமீ!  ஒரு செயல் கண்டிலம் – (இதற்குப்பரிகாரமாக)
ஒரு செய்கையையுங் கண்டோமில்லை; ( எ -று.)

     இப்பாட்டின் முன்னிரண்டடிகள் ‘சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்,
சொல்லியவண்ணஞ் செயல்” என்றார்போலக் கொள்க. ‘சேணாடுறும்’ என்பதற்கு,
‘சயத்திரதன்’ என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது.   

குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி,
தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால்,
முனி நாயக! வேறு ஓர் விரகு இல்லை; திருமுன்னே,
இனி நாடி, அடும் போர் விரைவொடு காணுதி’ என்றான்.

முனி நாயக – முனிவர்கட்குத் தலைவனே! குனி –
வளைக்கப்பட்டதும், நாண் உடை – நாணியை யுடையதுமாகிய, வரி வில் படை –
கட்டமைந்த (காண்டீவ) வில்லாகிய ஆயுதத்தையுடைய, விசயற்கு எதிர் –
அருச்சுனனுக்கு எதிரிலே, நான்-, தனி – தனியே, குறுகி – சமீபித்து (ப்போர்
செய்து),அவன் உயிர் கொள்ளுதல் – அவனது உயிரைக் கவர்தல், (அல்லது),
தவிர்கிற்குதல்-(அவனால்) இறந்தொழிதல், அல்லால் -என்னும் இவையே
யல்லாமல், வேறு ஓர்விரகு இல்லை- (இப்பொழுது செய்யத்தக்கது) வேறொருபாய
மில்லை; (ஆகையால்),திரு முன்னே -உனது எதிரிலே, இனி – இனிமேல், நாடி-
(நான்) முன்சென்று, அடும்- பகையழிக்கத் தொடங்கிச் செய்யப்போகிற, போர் –
போரை, விரைவொடு காணுதி- விரைவிற் பார்ப்பாய், என்றான்-; ( எ -று.)

     சிறந்தவில்வீரனான அருச்சுனனை எதிர்தடுத்துச் சைந்தவனைப்
பாதுகாப்பவர்எவருமில்லை யாதலால், இனிநானே தனியே அவன்முன் சென்று
ஒருகைபார்த்துவிடுகிறேனென்கிறான் துரியோதனன். இதனால், சேனைத்
தலைவனாகிய நீ அரசனாகிய நானே சென்று பொரும்படி விட்டுப் பகையழித்தலில்
உபேக்ஷைசெய் துள்ளா யென்று நிட்டூரமாகக் கூறியவாறாம். 

முனியும் தரணிபனோடு சில் மொழி நன்கின் உரைக்கும்
‘துனி கொண்டு உளம் அழியாது ஒழி; துணிவுற்றனை முதலே;
இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால்;
அனிகங்கள் அழிந்தாலும், நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ?61-. இதுமுதல் ஐந்துகவிகள் – ஒருதொடர்: துரோணன் பலகூறிக்
கவசமளித்ததைத் தெரிவிக்கும்.

(இங்ஙனந்துரியோதனன்சொன்னவற்றைக் கேட்டு), முனிஉம்-
துரோணாசாரியனும், தரணிபனோடு – (துரியோதன) ராசனுடனே, சில்மொழி –
சிலவார்த்தைகளை, நன்கின் உரைக்கும் – நன்றாகச் சொல்வான்: – (நீ), முதலே –
முன்னமே, துனி கொண்டு உளம் அழியாது- (பகைவர்க்கு) அச்சங்கொண்டு
மனஞ்சோர்தலில்லாமல், ஒழி துணிவு உற்றனை – (அதற்கு) மாறான
துணிவையடைந்தாய்; இனி – இப்பொழுது, அஞ்சி – (பகைக்குப்) பயந்து,
இளைத்து- மெலிந்து. எண்ணிடும்- சிந்திக்கிற, எண்ணம் – சிந்தனை, தகவு
அன்று -தகுதியுடையதன்று; ஆல் – ஆதலால், அனிகங்கள்
அழிந்தால்உம் – (உனது) சேனைகள் அழிவடைந்தாலும், நின்ஆண்மைக்கு
அழிவுஉண்டுஓ – உனது பாராக்கிரமத்துக்கு அழிவுஉண்டாகலாமோ? (எ -று.) –
இப்பாட்டில், இரண்டாம்  அடி முதல் 65- ஆம் பாட்டிம் மூன்றாம் அடி
வரையில்துரோணன்வார்த்தை.

     “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின், எண்ணுவ மென்பது இழுக்கு”
என்றபடி நீ முன்னமே பகைவரது வல்லமையைக் கருதிச் சினந்தணிந்து
சமாதானப்படாமல், உயிர்போவதானாலும் இராச்சியங்கொடுப்பதில்லையென்று
கடுந்துணிபு கொண்டாய்; அங்ஙனந்துணிந்து போர்தொடங்கிவிட்டபின்பு
அஞ்சுதலிலும் சோர்தலிலும் சிந்தித்தலிலும் பயனென்னை? சேனையழிந்தாலும்
உனது தைரியங் குறையாலாகாது என்றனன். 

உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும்,
“நர நாரணர் இவர்” என்பார்கள், ஞானத்தின் உயர்ந்தோர்;
அரனார் திருவருளால் முனை அடல் வாளிகள் பலவும்,
வரனால் உயர் மறையும், பிறர் மற்று ஆர் நனி பெற்றார்?

உரனால் வரு – வலிமையோடு வருகிற, தேர் ஒன்றினில் – ஒரு
தேரிலே, உற்றோர் இருவரைஉம் – பொருந்தியவரான ( அருச்சனன் கிருஷ்ணன்
என்ற) இருவரையும், ஞானத்தின் உயர்ந்தோர் – தத்துவஞானத்தாற்சிறந்த
பெரியோர்கள், நர நாரணர் இவர் என்பர்கள் -‘ நரனும் நாராயணனுமே இவர்கள்’
என்று சொல்வார்கள்; (அன்றியும் அவ்விருவர்போல,) அரனார் திரு அருளால் –
சிவபிரானது சிறந்த கருணையினால், முனை அடல் வாளிகள் பலஉம்- போரிற்
பகையழித்தற்குஉரிய அம்புகள் பலவற்றையும், வரனால் உயர் மறைஉம்-
வரமாகச்சிறந்த மந்திரங்களையும், பிறர் ஆர் நனி பெற்றார் – வேறு எவர்
மிகுதியாகப் பெற்றவர்? [எவருமில்லை யென்றபடி]; ( எ -று.)

     வரனாலுயர்மறை – மிகவிரும்பித் தவம்முதலிய பெருமுயற்சி செய்து
பெறப்படும் மந்திரம், ‘மற்றார்நனிபெற்றார்’– பிராசம். மற்று – அசை;
வினைமாற்றுமாம். பி -ம்: ஞாலத்தில்.  

தவரோடு அவன் நின்றால், விதிதானும் தரம் அல்லன்;
எவரோ, மலையோடும் பொருது, இரு தோள் வலி பெற்றார்?
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான்;
அவரோடு இனி அமர் வெல்லுதல் ஆர்ஆயினும் அரிதால்!

அவன்- அந்த அருச்சுனன், தவரோடு நின்றால் – (காண்டீவ)
வில்லுடன் எதிர்நின்றால், விதி தான்உம் தரம் அல்லன் – படைத்தற்கடவுளான
பிரமனும் (அவனையெதிர்க்கத்) தகுதியுடையானல்லன்; மலையோடுஉம் பொருது –
மலையுடனே தாக்கிப் போர்செய்து, இரு தோள் வலி பெற்றார் – தமது
இரண்டுதோள்களின்வலிமையை அழியாமற்பெற்றவர்கள், எவர்ஓ – யார் தாமோ?
[எவருமில்லை யென்றபடி]; (அதுபோலவே),- அவன் விரை தேர் தனி ஊர்வான் –
அவ்வருச்சுனனது விரைந்துசெல்லுந் தேரை ஒப்பில்லாதபடி செலுத்துபவன்,- உவர்
ஓதம் நிறத்தோன் – உப்புச்சுவையையுடைய கருங்கடல் போலுந் திருநிறமுடையனான
திருமால்; (ஆதலால்), இனி – இப்பொழுது, அவரோடு அமர் வெல்லுதல் –
அவ்விருவருடன் போரிற் சயித்தல், ஆர் ஆயின் உம் அரிது – யாவர்க்காயினும்
அருமையானதே; (எ – று.) பி – ம்: அவனுயர்தேர்நனி.

அதிகம் பகை தமரோடு உறல் ஆகாது” என, அரசர்க்கு
எதிர், அன்று, அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய்;
விதுரன் தனது உளம் நொந்து அடல் வில்லும் துணிசெய்தான்;
மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை, மன்னா!

தமரோடு – நெருங்கிய உறவினருடன், அதிகம் பகை உறல் ஆகாது
– மிகுதியாகப் பகைமைகொள்ளுத லாகாது,’ என – என்று (விதுரன் நீதி) போதிக்க,
அன்று – அச்சமயத்தில், அவையிடையே – சபைநடுவிலே, அரசர்க்கு எதிர் – பல
அரசர்கள் முன்னிலையில், (அவனைக்குறித்து), எது ஏது வசை புகன்றாய் –
என்னஎன்ன நிந்தைமொழி கூறினாய்? [மிகப்பழித்தா யென்றபடி]: (அதனால்),
விதுரன் – அவ்விதுரன், தனது உளம் நொந்து – தன்னுடைய மனம் வருந்தி,
அடல்வில்உம் துணி செய்தான் – வலிமையுயைடைய (தன்) வில்லையுந்
துணித்துப்போகட்டான்;  மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை –
நல்லறிவின்வகைகளை யறிந்த பெரியோர் சொன்ன நல்வழியிலே (நீ)
நடந்தாயில்லை;( எ -று.)- மன், ஓ – ஈற்றசை. பி – ம்:  மன்னா.

     கண்ணன் பாண்டவர்க்குத் தூதாய்வந்தமைபற்றி அவனையும், அவனுக்குத்
தன் வீட்டில் இடங்கொடுத்து விருந்துசெய்து உபசரித்தமைபற்றியும் பாண்டவர்க்கு
இராச்சியங்கொடுக்கும்படி  பலவாறு நீதிபோதித்து வற்புறுத்தியமைபற்றியும்
விதுரனையும் துரியோதனன் பலவாறு இராசசபையில் தூஷிக்க, விதுரன்
கடுங்கோபங்கொண்டு ‘பாதகனாகிய உன்பொருட்டுப் போர்செய்யேன்;
இத்தனைநாளாய் உன்சோற்றையுண்டமைபற்றி, உனக்கு எதிராகப் பாண்டவரோடு
சேர்ந்தும் பொரேன்’ என்ற சொல்லித் தனது வில்லை இரண்டு துண்டாக முறித்துப்
போகட்டுவிட்டானென்க. விதுரன் – யமதருமராசனது அம்சமென்றும்,
பரமபாகவதர்களி லொருவ னென்றும் நூல்கள் கூறும்.இவன், அருச்சுனனையும்
வீமனையும் ஒருங்கேயெதிர்க்கும் வல்லமையுடையானென்று மதிக்கப்படுவன். பாரத
யுத்தம் நடந்த சமயத்தில் இவன். பலராமனுடன் தீர்த்தயாத்திரை சென்றிட்டன
னெனஅறிக. எட்டாம்போர் நாளில் வீடுமனும் இக்கருத்துப்படக்கூறியமை
கருதத்தக்கது.”மதியின் திறனறிவோர் மொழிவழிவந்திலை’ என்றது, பீஷ்மன்
துரோணன் கிருபன்உலூகன் கண்ணன் முதலான நுண்ணறிவுடையோர் பலர்
கூறிய நல்லறிவைச் சிறிதும்கைப்பற்றி நடந்தில னாதலால்.  

மன் ஆகவம் மதியா விறல் வயவன்தனை விசயன் –
தன்னால் ஒரு பகலே உயிர் தபுவித்திடல் ஆமோ?
மின் ஆர் வடி வேலாய்! இவை விதியின் செயல் அன்றோ?’
என்னா, ஒரு கவசம்தனை இவன் மெய்யினில் இட்டான்.

(ஆயினும்), மன் ஆகவம் மதியா – பெரிய போரை ஒரு
பொருளாகக்கருதாத, விறல் – பாராக்கிரமத்தையுடைய, வயவன்தனை – வீரனான
சயத்திரதனை,விசயன்தன்னால் – அருச்சுனனால், ஒரு பகல்ஏ – இந்த ஒரு
பகற்பொழுதினுள்ளே,உயிர் தபுவித்திடல் – உயிரழித்திடுதல், ஆம்ஓ – முடியுமோ?
மின் ஆர் வடிவேலாய் – மின்னல்போன்ற ஒளிபொருந்தின கூர்மையான
வேலாயுதத்தையுடையவனே! இவை விதியின் செயல் அன்றோ- (அருச்சுனனாற்
சயத்திரதன் இன்றைப்பகலே கொல்லப்படுதலும் படாமையு மாகிய) இவை
ஊழ்வினைப்பயனல்லவோ? என்னா – என்று சொல்லி, (துரோணன்), ஒரு
கவசந்தனை – ஒருகவசத்தை, இவன் மெய்யினில் இட்டான் –
இத்துரியோதனனுடம்பிலே பூட்டினான்;

     ‘சயத்திரதனை அருச்சுனன் கொல்லலாகாதபடி பாதுகாக்க
உறுதிகொண்டுள்ளோம்: ஆயினும், தெய்வச்செயல் வேறாயிருப்பின் யாம்
என்னசெய்யலாம்?’ என்பார், ‘இவைவிதியின்செயலன்றோ’ என்றானென்க.
இக்கருத்துப்படவே முந்தினநாளிரவிலும் கூறியமை காண்க. பி – ம் :
தவிர்வித்திடலாமோ. இனி விதியின்செயலன்றோ. இவன்மேனியிலிட்டான்

பங்கயாசனன் வாசவற்கு அளித்தது; வாசவன் பயில் போரில்
அங்கராவினுக்கு உதவியது; அங்கரா எனக்கு அருளியது, இந்தத்
தொங்கல் மா மணிக் கவசம்; எவ் வீரரும் தொழத்தகு
கழற் காலாய்!
புங்க வாளியில், படைகளில், ஒன்றினும் பொன்றிடாது,
இது’ என்றான்.66.- துரோணன் துரியோதனனுக்கு அக்கவசத்தின் சிறப்பைக் கூறுதல்.

எ வீரர்உம்- எல்லாவீரர்களும், தொழ தகு – வணங்கத்தக்க,
கழல்காலாய் – வீரக்கழலையணிந்த பாதத்தையுடையவனே! தொங்கல் – (வெற்றி)
மாலைதரித்தற்குஉரியதும், மா மணி – சிறந்த இரத்தினங்கள் பதித்ததுமான, இந்த
கவசம்-, பங்கய ஆசனன் – (திருமாலின் நாபித்) தாமரைமலரை
இருப்பிடமாகவுடையவனான பிரமன், வாசவற்கு – தேவேந்திரனுக்கு, அளித்தது –
முன்பு கொடுத்தருளியது: (பின்பு), வாசவன் – அவ்விந்திரன், பயில் போரில் –
இடைவிடாதுசெய்யும் போரின் முடிவில், அங்கராவினுக்கு உதவியது –
அங்கிரசுக்குக்கொடுத்தது: (அதன்பின்பு), அங்கரா – அந்த அங்கிரசு, எனக்கு
அருளியது -எனக்குக் கொடுத்தது:  இது – இக்கவசம், புங்கம் வாளியில் – கூரிய
அம்புகளிலும்,படைகளில் – மற்றை ஆயுதங்களிலும், ஒன்றின்உம் – ஒன்றினாலும்,
பொன்றிடாது -அழிந்திடாது,’ என்றான் என்று (அக்கவசத்தின் வரன்முறையையும்
அழியாவலிமைச்சிறப்பையும் துரோணன் துரியோதனனுக்குக்) கூறினான்; ( எ -று.)

     முன்பு இந்திரன் முதலிய தேவர்கட்கும் விருத்திராசுனுக்கும் நடந்த
பெரும்போரில் அசுரனாற் சிதைவு அடைந்ததேவர்கள் திருமாலின் கட்டளைப்படி
பிரமனுடன் மந்தரமலையையடைந்து சிவபிரானைச் சரணம்புக, அப்பெருமான் தனது
மேனியினின்று தோன்றிய தொரு சிறந்த கவசத்தை மந்திரபலத்துடனே அளித்தருள,
எந்த ஆயுதத்தாலும் அழிக்கப்படாத அதனைத் தரித்துத் தேவேந்திரன் விருத்திரனை
யெதிர்த்துப் பொருது கொன்றனனென்றும், அதன்பின் இந்திரன் அக்கவசத்தை
அங்கிரசுக்குக் கொடுக்க, அங்கிரசு தன் குமாரனான பிருகஸ்பதிக்குத் தர ,
பிருகஸ்பதி அக்நிவேச்யமுனிவனுக்கு அருள, அம்முனிவன் தன் மாணாக்கனான
துரோணனுக்கு ஈந்தருளின னென்றும், முதனூலில் விவரங் கூறப்பட்டுள்ளது.
அங்கரா = அங்கிரா: அங்கிரஸ் என்பவன்  -தேவகுருவான பிருகஸ்பதியின் தந்தை.

இதுமுதற் பத்துக்கவிகள் – இச்சருக்கத்தின் 34- ஆம் கவிகள் போன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்   

இட்ட பொற் பெருங் கவசமோடு எழுந்தனன், இராசராசனும்; உள்ள
பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர்களும் பல படைஞரும் கூடி,
எட்டு இபத்தின் வெஞ் செவிகளும் செவிடுறப் பல்லியம்
எழுந்து ஆர்ப்ப
முட்ட விட்டனர், தனஞ்சயன் நின்ற மா முனையில், வேல்
முனை ஒப்பார்.67.- துரியோதனனும் மற்றும்பலரும் அருச்சுனனுடன் போர்க்குஎழுதல்

இட்ட – (துரோணன்) பூட்டின, பொன் பெருங்கவசமோடு –
பொன்மயமான பெரிய கவசத்துடனே, இராசராசன் உம்- அரசர்கட்குஅரசனான
துரியோதனமகாராசனும், எழுந்தனன் – (போர்க்குப்) புறப்பட்டான்;  வேல்
முனைஒப்பார் – வேலாயுதத்தின் நுனிபோலக் கொடியவர்களாகிய, உள்ள-
(அவன்சேனையில்) உள்ள, பட்டவர்த்தனர் – பட்டவர்த்தனர்களும்,
மகுடவர்த்தனர்களும்-, பல படைஞர்உம் – மற்றும் பல சேனைவீரர்களும், கூடி –
ஒருங்குசேர்ந்து,- எட்டு இபத்தின் வெம் செவிகள்உம் – எட்டுத்திக்குயாரனைகளின்
கொடிய காதுகளும், செவிடுஉற – (மிக்கஒலியைக் கேட்டலாற்) செவிடாம்படி, பல்
இயம் – பலவகைவாத்தியங்கள், எழுந்து ஆர்ப்ப – மிக்கு ஒலிக்க,- தனஞ்சயன்
நின்ற மா முனையில் – அருச்சுனன் நின்றுள்ள பெரிய போர்க்களத்தினிடத்திலே,
முட்ட விட்டனர்- சென்றுநெருங்கும்படி (தம்தம் வாகனங்களைச்) செலுத்தினார்கள்;

     பல அரசர்களை வென்று தலைமைபூண்டுநின்றதனால், ‘ராஜராஜன்’என்று
துரியோதனனுக்குஒருபெயர். பலபடைஞர் – மண்டலீகர், மந்திரிகள், தந்திரிகள்,
சாமந்தர் முதலிய வகுப்பினர். திக்குயானைகளின் செவிகளும் மிக்கஒலியதிர்ச்சியாற்
புலனழிகின்றன எனவே, நிலவுலகத்து மற்றையபிராணிகள் செவிடுபடுதல்
கூறவேண்டாதாயிற்று;  இது, உயர்வுநவிற்சி.  

சென்ற சென்ற வெஞ் சேனைகள் இளைப்பு அற,
தெய்விகத்தினில் வந்த
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி, அப் பொய்கையின்
வளம் நோக்கி,
‘என்றும் என்றும் நாம் நுகர் புனல் அன்று; நல் இன் அமுது
இது’ என்பார்,
தென்றல் அம் தடஞ் சோலையில் கரைதொறும் சேர்ந்து, தம்
விடாய் தீர்வார்.68.- இருகவிகள் – ஒருதொடர்: கௌரவசேனை அருச்சுனனுண்டாக்கிய
தடாகத்தில் இளைப்பாறுதலைக் கூறும்.

சென்ற சென்ற – (இங்ஙனம்) மிகுதியாகப் புறப்பட்டுப்போன, வெம்
சேனைகள் – கொடிய (துரியோதனனது) சேனையிலுள்ளார், இளைப்பு அற – (தமது)
இளைப்புத்தணியும்படி, தெய்விகத்தினில் வந்த மன்றல் அம் பெரும் பொய்கை நீர்
பருகி – (அருச்சுனன் எய்த அஸ்திரத்தினது) தெய்வத்தன்மையா லுண்டான
பரிமளமுள்ள அழகிய பெரிய தடாகத்தின் நீரைக் குடித்து, அ பொய்கையின்
வளம்நோக்கி – அக்குளத்தினது வளப்பத்தைப் பார்த்து, ‘இது-இக்குளத்தின் நீர்,
என்றுஉம்என்றுஉம் நாம் நுகர் புனல் அன்று – இத்தனைகாலமாக நாள்தோறும்
நாம் குடித்துவந்த நீர்போல்வதன்று; நல்இன் அமுது – சிறந்த இனிய அமிருதம்
போல்வதாம்,’என்பார் – என்று வியந்து சொல்வார்கள்; (மற்றும்), கரை தொறுஉம்-
(அத்தடாகத்தின்) கரைகளிலுள்ள, தென்றல் அம் தட சோலையில் – தென்றற்காற்று
உலாவப் பெற்ற அழகிய பெரியசோலைகளில், சேர்ந்து – தங்கி, தம் விடாய்
தீர்வார்- தங்கள் தாபந்தணியப்பெறுவார்கள்; ( எ -று.)

     ‘சேனைகள்’ என்பது- சொல்லால் அஃறிணையாயினும், இங்கு
உயர்திணைப்பொருளின்மேலதாதலால், ‘என்பார்,’ ‘தீர்வார்’ என்ற உயர்
திணைப்பன்மைமுற்றுக்களைக் கொண்டது.

மத்த வாரணம் கொண்டு, செந்தாமரை வனம் கலக்குறுவிப்பார்;
தத்து பாய் பரி நறும் புனல் அருத்துவார்; தாமும் நீர்
படிகிற்பார்;
கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி, மென் காவி நாள்
மலர் கொய்வார்;
‘இத் தலத்தினில், இம் மலர்ப் பரிமளம் இல்லை’ என்று
அணிகிற்பார்.

(மற்றும் அத்துரியோதனன்சேனையார்), மத்தம் வாரணம்கொண்டு –
(தங்கள் தங்கள்) மதயானைகளால், செந் தாமரை வனம்-( அந்நீர்நிலையிலுள்ள)
செந்தாமரைத் தொகுதியை, கலக்குறுவிப்பார்- கலக்குவிப்பார்கள்; தத்து பாய்பரி –
தாவிவிரைந்துசெல்வனவானகுதிரைகட்கு, நறும்புனல் அருத்துவார் – சுகந்தமுள்ள
அக்குளத்தினீரைக்குடிப்பிப்பார்கள்; தாமும் நீர்படிகிற்பார் – தாங்களும்  அந்நீரில்
மூழ்குவார்கள்; கைத்தலங்களில் – கைகளினால், அளி இனம் எழுப்பி -(மிகுதியாக
மொய்த்துள்ள) வண்டின்கூட்டங்களை ஓட்டிவிட்டு, மெல் காவி நாள் மலர்
கொய்வார் – மென்மையான நீலோற்பலத்தின் அன்றுமலர்ந்த பூக்களைப்
பறிப்பார்கள்; ‘ இ மலர் பரிமளம் – இந்தப்பூக்களுக்குஉள்ள அவ்வளவு
நறுமணம்,இ தலந்தனில் – இவ்வுலகத்தில், இல்லை – (வேறு எதற்கும்) இல்லை,’
என்று -என்று கொண்டாடி, அணிகிற்பார் – (அக்கருங்குவளைமலர்களைச்)
சூட்டிக்கொள்வார்கள்;

இன்னவாறு தம் அசைவு ஒழிந்து, யாவரும் இப ரத துரகத்தோடு,
அன்ன வாவியை வளைத்தனர், கடல் வளை ஆழி மால்
வரை என்ன;
துன்னு மா மணித் தேரின்நின்று இழிந்து, தன் சுவேத மா
நீர் ஊட்டும்
மன்னு வார் கழல் மகபதி மதலை அவ் வரூதினிக் கடல் கண்டான்.70.- யாவரும் தன்னைச்சூழ்ந்ததை அருச்சுனன் காணுதல்.

இன்ன ஆறு – இந்தப்படி, தம் அசைவு ஒழிந்து – தங்கள்
இளைப்புத்தீர்ந்து, யாவர்உம் – துரியோதனசேனையாரெல்லாரும், இபரத
துரகத்தோடு -யானைதேர்குதிரைகளுடனே, கடல் வளை மால் ஆழி வரை
என்ன -சமுத்திரத்தைச்சூழ்ந்துள்ளபெரிய சக்கரவாளமலை போல, அன்ன
வாவியைவளைத்தனர் – அந்தக் குளத்தைச் சூழ்ந்துகொண்டார்கள்; துன்னும் மா
மணிதேரினின்று – நிறைந்த சிறந்த இரத்தினங்கள் பதித்த (தனது) தேரிலிருந்து,
இழிந்து -(அக்குளத்தில்) இறங்கி, தன் சுவேதம் மா நீர் ஊட்டும் – தனது
வெள்ளைக்குதிரைகளை நீர்பருகுவிக்கிற, மன்னுவார் கழல் மகபதி மதலை –
பெருமை பொருந்திய நீண்டவீரக்கழலையுடைய இந்திர குமாரனான அருச்சுனன்,
அவரூதினி கடல் கண்டான் – அந்தச் சேனா சமுத்திரத்தைப் பார்த்தான்; (எ-று.)

     ‘தன்சுவேதமாநீருட்டும்’ என்றது -ஏவுதற்கருத்தாவின் வினைதனது சாரதியான
கண்ணனைக்கொண்டு தேர்க்குதிரைகட்கு நீருட்டுகிற என்று கருத்துக்கொள்க.
துரியோதனசேனையாரனைவரும் அக்குளத்தை விளைத்ததற்கு, கடல்வளை
ஆழிமால்வரை உவமை – பி-ம்: இபதுரகதத்தோடும்.     

கண்ட போது பின் கண்டிலன், கண்ட அக் கடவுள்
வாவியை;நல் நீர்
உண்ட வாசியைத் தேருடன் பிணித்து, வில் ஓர்
இமைப்பினில் வாங்கி,
‘வண் துழாய் மது மாலையாய்! வளைந்து மேல் வரு வரூதினிதன்னை
அண்டர் ஊர் புக விடுத்த பின், தேரின்மேல் ஆகுமாறு
அருள்’ என்றான்.71.- அருச்சுனன் தேரில் ஏறாமலே அவர்களுடன் போர்செய்யத்துணிதல்

கண்ட போது.(அந்தப்பகைவரது சேனைத்தொகுதியைப்)
பார்த்தபொழுது,- முன் காண்டவம் அழித்தவன்- முன்பு காண்டவவனத்தை
அழியச்செய்தவனான அருச்சுனன்,- (கண்ணனைநோக்கி),-‘வள்துழாய் மது
மாலையாய் – செழிப்பான திருத்துழாயினாலாகிய தேனையுடைய மாலையை
யுடையவனே! கடவுள் வாவியின் நல் நீர்உண்ட வாசியை தேருடன் பிணித்து –
தெய்வத்தன்மையுள்ள இந்தக்குளத்தின் நல்ல நீரைக் குடித்த குதிரைகளை (நீ)
தேரிலே கட்டிவிட்டு,- வில் வாங்கி-(நான்) வில்லை வளைத்து, வளைந்து மேல்
வருவரூதினி தன்னை – சூழ்ந்து (நம்மேல்) நெருங்கிவருகிற இச்சேனையை, ஓர்
இமைப்பினில் -ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே, அண்டர் ஊர் புக விடுத்த பின் –
வீரசுவர்க்கஞ் சேரும்படி (கொன்று)செலுத்தியபின்பு, தேரின்மேல் ஆகும்ஆறு –
தேரின் மேல் ஏறும்படி, அருள் – கருணைசெய்வாய்,’ என்றான் – என்று
சொன்னான்; (எ-று.)

     அருச்சுனன் வரூதினி கண்டபொழுது, கீழ்நின்றவாறே பொருது அவற்றைத்
தொலைத்துப் பின்பு தேரிலேற நினைத்துக் கண்ணனுக்கு அக்கருத்தைத் தெரிவித்து
அநுமதிபெற்றா னென்க. பி -ம்: கண்டபோது பின் கண்டிலனக்கடவுள்வரவியை.

கன்று சிந்தையன், கோப வெங் கனல் பொழி கண்ணினன்,
காலாளாய்
நின்று, தேரினும் களிற்றினும் பரியினும், நிரைநிரை தரங்கம்போல்,
சென்று சென்று அடு வீரரைத் தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி,
கொன்று கொன்று சூழ்வரக் குவித்தனன், மதக் குன்றுதான்
என நின்றான்.72.- அருச்சுனன் அவ்வீரர் பலரை அழித்தல்.

(என்றுசொல்லிப் பின்பு அருச்சுனன்), கன்று சிந்தையன் –
கொதித்தமனமுடையவனும், கோபம் வெம் கனல் பொழி கண்ணினன் –
வெவ்வியகோபாக்கினியைச் சொரிகிள கண்களையுடையவனுமாய், காலாள் ஆய்
நின்று – (தேரிலேறாமலே) பதாதியாகக் கீழே நின்றுகொண்டு,- தேரின்உம்-
தேர்களின்மேலும், களிற்றின்உம் – யானைகளின்மேலும், பரியின்உம் – குதிரைகளின்
மேலும், நிரை நிரை – வரிசைவரிசையாக, தரங்கம்போல் – அலைகள்போல, சென்ற
– (மேன்மேல்) வந்த, வீரரை – வீரர்களை, தனி தனி -தனியே தனியே, சரத்தினால்
– (அவர்கள்மேலெய்த) அம்புகளினால், கொன்று கொன்று – மிகுதியாகக்கொன்று,
சிதை உடல் குன்று ஆக – நொருங்கின (அவர்களுடைய) உடம்புகள் மலைகள்
போலத் திரளும்படி, சூழ்வர குவித்தனன் – சுற்றிலும் குவித்து, மணி குன்று தான்
என நின்றான் – நீலரத்தின மலையொன்றுபோலத் தான் (இடையிலே) நின்றிட்டான்;
(எ-று.)

     அலையுமை – ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாய் அணியணியாக
மேன்மேல் வருதற்கு. அருச்சுனனுக்கு நீலமலை நிறவுவமை. பி -ம்: சென்று
சென்றடுவீரரைத் தனித்தனிசரத்தினாற் சிரஞ்சிந்திக்.  

தலைவனாம் முனி கிருபனும், கிருதனும், துரகதத்தாமாவும்,
அலைவு உறா மனத்து அரசரும், சேனையும், முனைந்து,
அணி அணியாக,
சிலைவலான் எதிர், மிசைபடத் தேர்மிசை விசை உறச் சிலை வாங்கி,
வலைய வாகுவின் வலியெலாம் காட்டினார், வரம் கொள்
வாளிகள் வல்லார்.73.- கிருபன் முதலியோர் அருச்சுனனோடு பொருதல்.

 (பின்பு), வரம் கொள் – மேன்மையைக்கொண்ட’ வாளிகள் –
அம்புகளைத் தொடுத்தலில், வல்லார் – வல்லவர்களாகிய, தலைவன் ஆம் முனி
கிருபன்உம் – சிறந்த அந்தணனாகிய கிருபாசாரியனும், கிருபதன்உம்- கிருதர்மாவும்,
துரகதத்தாமாஉம்- அசுவத்தாமனும், அலைவு உறா மனத்து அரசர்உம் –
கலக்கமடையாத மனத்தையுடைய பல அரசர்களும், சேனைஉம் –
அவர்கள்சேனைவீரர்களும், முனைந்து – ஊக்கங்கொண்டு, அணி அணி ஆக –
வரிசை வரிசையாக, சிலைவலான் எதிர் – வில்லின்வல்லவனான
அருச்சுனனனுடையஎதிரிலே, தேர்மிசை – தேர்களின்மேல் (வந்துநின்று),
மிசைபட – அவன்மேலே(அம்புகள்) படும்படி, விசைஉற- வேகமாக, சிலைவாங்கி –
(தம்தம்) வில்லைவளைத்து, வலையம் வாகுவின் – வளையையணிந்த (தங்கள்)
தோள்களின், வலிஎலாம் – வலிமை முழுவதையும், காட்டினார்-; ( எ -று.)

     தங்களாலியன்றவளவும் கொடிய விற்போரைச்செய்தனரென்பதாம்.
வரங்கொள்வாளிகள் – (தேவர்களிடம்) வரமாகப்பெற்ற அஸ்திரங்களுமாம்

கைதவன் குலக் கன்னி கேள்வனும், ஒரு கணைக்கு
ஒரு கணையாக
எய்து, வெங் கணை யாவையும் விலக்கி, மேல் இரண்டு நால்
எட்டு அம்பால்,
வெய்தின் நேமி அம் தேரொடு கொடிகளும் வில்லும்
வாசியும் வீழக்
கொய்துகொய்து, பல் பவுரி வந்தனன், விறல் குன்றவில்லியொடு
ஒப்பான்.74.-அத்தனைபேரோடும் அருச்சுனனொருத்தன் பொருதல்.

(அப்பொழுது), விறல் குன்றம் வில்லியோடு ஒப்பான் –
வலிமையையுடைய மேருமலையை வில்லாகவுடையவனான சிவபிரானோடு
ஒப்பவனாகிய, கை தவன் குலம் கன்னி கேள்வன்உம் – பாண்டியனுடைய
குலத்திலே பிறந்த (சித்திராங்கதையென்ற) பெண்ணுக்குக்கணவனான
அருச்
சுகுனனும்,ஒரு கணைக்கு ஒரு கணை ஆக எய்து – (அப்பகைவர்கள்
தன்மேல் தொடுத்த) அம்பு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றாக எதிரம்புதொடுத்து,
வெம் கணை யாவைஉம் விலக்கி – கொடிய அவர்களம்புகளையெல்லாம்
(தன்மேற்படாதபடி) இடையிலே தடுத்திட்டு,- மேல் – பின்பு, இரண்டு நால் எட்டு
அம்பால் – சிலசில அம்புகளினால், வெய் தின் – விரைவிலே, நேமி அம்
தேரொடு- சக்கரவலிமையுள்ள அழகிய (அவர்களுடைய) தேர்களும்,
கொடிகள்உம் -தேர்த்துவசங்களும், வில்உம்- விற்களும், வாசிஉம் – குதிரைகளும்,
வீழ-(துணிபட்டு) விழும்படி, கொய்து கொய்து – மிகுதியாகத்துணித்து, பல் பவுரி
வந்தனன் – பலமுறை தான் சுழன்றுகொண்டு நின்றான்;

     ‘இரண்டுநாலெட்டம்பு’ என்ற தொடரைப் பண்புத்தொகையாகவும்
உம்மைத்தொகையாகவும் கொண்டு விகற்பித்தால், அறுபத்துநாலென்றும்
நாற்பத்தெட்டென்றும் முப்பத்துநாலென்றும் பதினாறென்றும் பதினாலென்றும்
பலவாறு பொருள்படும். பி-ம்: வெய்தினெய்தவரவரவர்கொடிகளும்.

தேரில் நின்றவர் பாரில் நின்றவன்மிசை விடு கணைத்
திரள் மின்னுக்
காரின்நின்று பாதலம் உற, உரகமேல் கனன்று
வீழ்வன போன்ற;
பாரில் நின்றவன் தேரில் நின்றவர்மிசை விடு
கணை பாதாலத்து
ஊரில்நின்று, உருமையும் விழுங்குவம்’ என, உரகம்
ஏறுவ போன்ற.75.- பகைவரம்பு அருச்சுனன்மேலும், அருச்சுனனம்பு பகைவர்
மேலும் வருதல்.

தேரில் நின்றவர் – தேர்களில் நின்ற கிருபன் முதலியோர், பாரில்
நின்றவன்மிசை – (தேரில் ஏறாமல்) தரையில்நின்ற அருச்சுனன் மேல், விடு –
பிரயோகித்த, கணை திரள் – அம்புகளின் தொகுதிகள்,- காரினின்று –
மேகங்களினின்று, பாதாலம்உற – பாதாளலோகத்திலே பொருந்த, உரகம்மேல் –
நாகங்களின்மேல், கனன்று வீழ்வன – கொதித்துக் கொண்டு விழுவனவாகிய,
மின்னு- மின்னல்களை [இடிகளை], போன்ற – ஒத்தன;- பாரில் நின்றவன் –
தரையில் நின்றவனான அருச்சுனன், தேரில் நின்றவர் மிசை – தேர்களில் நின்ற
அவ்வெதிரிகளின்மேல், விடு – பிரயோகித்த, கணை – அம்புகள்,- உருமைஉம்
விழுங்குவம் என – இடியையும் விழுங்கி விடுவோமென்று, உரகம் – அந்நாகங்கள்,
பாதாலத்து ஊரினின்று – அந்தப்பாதாளலோகத்திலிருந்து, ஏறுவ – மேலேறு
வனவற்றை, போன்ற – ஒத்தன; ( எ -று.)

     தேர்மீதுள்ள பகைவரால் எய்யப்பட்ட அம்புகள் காளமேகங்களினின்று
மின்னல்கள் கீழுள்ளநாகசாதிமேல் உக்கிரமாக இடிவடிவமாய் விழுவனபோலக்
கீழ்நின்ற அருச்சுனன்கணைகள் மேல் விழுந்திட, தேர்மேல்நின்ற அப்பகைவரது
அம்புகளைத் தடுக்க அவர்கள்மீது உக்கிரமாய் விரைந்தெழுந்து மேற்சென்ற
அருச்சுனனேய்த கொடிய அம்புகள் தம்மேல் விழும்இடிகளை விழுங்கி
யழித்திடக்கருதி அந்நாகங்கள் பாதாளத்தினின்று மேலெழும்பிச்
சென்றார்போலுமென்றார்; தற்குறிப்பேற்றவணி. பி – ம்:உரகர்.

சேண் நிலத்தின்மிசை நின்று அமர் தொடங்கினவர் தேர்கள்
இற்றன; தறிந்தன, நெடுந் துவசம்;
நாணி அற்றன; ஒடிந்தன, தடஞ் சிலையும்; நாகம் உற்றவர்
ஒழிந்தனர், இரிந்தனர்கள்;
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும், நேமி வச்ர மகுடம்
புனை கொடிஞ்சியுடை,
ஏண் நிலத்து இவுளி முந்த, முனை உந்து, இரதம் ஏறியிட்டனன்,
முகுந்தனுடன் இன்புறவே.76.- பகைவரையழித்தபின், கண்ணன் சித்தஞ்செய்த
தேரில் அருச்சுனன் ஏறுதல்.

சேண் நிலத்தின்மிசை நின்று -உயர்ந்த இடத்தின் மேல்
[தேரின்மேல்]நின்று, அமர் தொடங்கினவர் – போர்தொடங்கின பகைவர்களுடைய,
தேர்கள்-, இற்றன – முறிந்தன; நெடுந்துவசம் – நீண்ட கொடிகள், தறிந்தன –
ஒடிந்தன; நாணி – வில்நாணிகள், அற்றன – அறுபட்டன; தட சிலை உம் –
பெரியவிற்களும், ஒடிந்தன – துண்டுபட்டன; நாகம் உற்றவர் ஒழிந்தனர் –
(அப்பகைவர்களில் இறந்து) வீரசுவர்க்கஞ் சேர்ந்தவர்கள் நீங்கலானவர்கள்,
இரிந்தனர்கள் – அஞ்சிஓடிப்போனார்கள்; நீள் நிலத்தினிடைநின்று – நீண்ட
தரையிடத்திலே நின்று, சமர் வென்றவன்உம் – போரில் வெற்றிகொண்டவனான
அருச்சுனன்,- நேமி – சக்கரங்களையும் வச்ரமகுடம் புனை கொடிஞ்சி –
வச்சிரரத்தினமயமான கலசத்தைக் கொண்ட சிகரத்தையும், உடை – உடையதும்,
ஏண் நிலத்து இவுளி முந்த மனை உந்து – வலிய போர்க்களத்தினிடத்திலே
குதிரைகள் முற்படஉக்கிரமாகச் செலுத்துகின்றதுமான, இரதம் – (தனது)
தேரின்மேல்,முகுந்தனுடன் – கண்ணபிரானுடனே, இன்பு உற – இனிமையாக,
ஏறியிட்டனன் -ஏறினான்; (எ- று.)

     இதுமுதற் பதினாறு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
தேமாச்சீர்களும், மற்றையாறும் கூவிளங்காய்ச் சீர்களு மாகிய
எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். ‘ தான தத்ததன தந்ததன தந்ததன தான
தத்ததன தந்ததன தந்ததன’ என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்

ஏறியிட்டவன் விரைந்து, இரதமும் கடவி, ஏகலுற்ற பின், இயம்
பல தழங்கி எழ,
வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட, சகுனியும்
தினகரன் சுதனும்,
ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக, இப்படி பொரும்
படையொடு, அன்று, நனி
சூறியிட்டனன்-வலம்புரி அலங்கல் புனை தோளில் எப் புவனமும்
தனி சுமந்தவனே.77.- அப்போது துரியோதனன் அருச்சுனனை எதிர்த்தல்.

ஏறியிட்டவன் – (இங்ஙனந்தேர்மேல்) ஏறின அருச்சுனன், இரதம்உம்
விரைந்து கடவி – அத்தேரையும்(கண்ணபிரானைக்கொண்டு) விரைவாகச்செலுத்தி,
ஏகல் உற்ற பின் – மேற்சென்றவுடனே,- வலம்புரி அலங்கல் புனை தோளில் எ
புவனம்உம் தனிசுமந்தவன் – நந்தியாவர்த்தப் பூமாலையை (அடையாளமாகத்)
தரித்ததோள்களிலே பூமிமுழுவதையுந் தனியேதாங்கிவனாகியதுரியோதனன்,- பல
இயம் தழங்கி எழு – பலவகைவாத்தியங்கள் மிக்கு ஒலிக்கவும்,- வேறுபட்டு அமர்
உடைந்தவர்கள்உம் திருகி மேல் இட – நிலைகலங்கிப் போரில் (முன்பு
அருச்சுனன்முன்) தோற்றோடினவர்க உம் ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கம்உம்
ஆக-(மாமனாகிய) சகுனியும் சூரியபுத்திரனாகிய கர்ணனும் (தெய்வப்பொய்கையில்
நீர்பருகி) இளைப்பாறின தேர்யானைகுதிரைகளுமாக, இப்படி பொரும் படையொடு-
இவ்வாறு போர்செய்யவல்ல சேனையுடனே, அன்று- அப்பொழுது, நனி
சூறியிட்டனன் – மிகவும் கோபாவேசங்கொண்டு வளைத்திட்டான்; (எ-று.)

     அருச்சுனன் பகையழித்துக் கண்ணனுடன்தேரேறி அப்பாற்செல்லுமளவிலே,
முன்பு துரோணனிடம் அழியாக்கவசம் பெற்ற துரியோதனன், அதனாற் செருக்கி,
சகுனியையும் கர்ணனையும் சேனைகளையும் உடன்கொண்டு, தோற்று மீள்கிற
தன்பக்கத்து வீரர்களையும் தைரியப்படுத்தி உற்சாகமுண்டாக்கி மீளவும் போர்க்கு
எழச்செய்துகொண்டு, மிகஉக்கிரமாக அருச்சுனனை யெதிர்த்துவந்தனனென்பதாம்.
‘சூறியிட்டனன்’ என்பதற்கு – சூழல் காற்றுப்போலக்கொடுமையோடு
வளைத்திட்டானென்றுபொருள்; சூறையென்பது சுழல்காற்றாதல் காண்க.
‘தோளிலெப்புவனமுந் தனிசுமந்தவன்’- தோள்வலியாற் பூலோகமுழுவதையும்
பொதுமை நீக்கித் தானே தனியரசாள்கின்றவன் : தேர்செலுத்தியதை ‘ஏறியிட்டவன்
விரைந் திரத முங்கடவி’ என்று அருச்சுனன்மேல் ஏற்றி்க் கூறியது,
ஏவுதற்கருத்தாவின் வினை. தேர்க்குதிரைகள் இளைப்பாறியதை ‘ஆறியிட்ட ரதம்’
எனத் தேர்களின்மேல் ஏற்றிக்கூறினார்; இது, ஒருபொருளின் வினையை மற்றொரு
பொருளின்மே லேற்றிக்கூறின உபசாரவழக்கு.  

யோதனத்தில், இவன் என் கண் எதிர், இன்று அளவும்,
யோசனைக்கும் இடை நின்றிலன்; முனைந்து சமர்
மோதுகைக்கு நினைவு உண்டுகொல்? எதிர்ந்து மிக மோகரித்து
வருகின்றது தெரிந்ததிலை;
யாது பெற்றனன், நெடுஞ் சிலைகொல், வெங் கணைகொல், ஏதம்
அற்ற கவசம்கொல், இரதம் கொல்?’ என
மாதவற்கு இடை வணங்கி, ‘இது என்கொல்?’ என, வாசவக் கடவுள்
மைந்தன் உரைதந்தனனே.78.- அதுகண்டு அருச்சுனன் கண்ணனை வினாவுதல்.

‘இன்றுஅளவுஉம் – இன்றைத்தினம் வரையிலும், இவன் –
இத்துரியோதனன், யோதனத்தில் – யுத்தத்திலே, என் கண் எதிர் – எனது
கண்ணுக்கு எதிரிலே, யோசனைக்குஉம் இடைநின்றிலன்-யோசனைத்தூரத்
தினுள்ளும்நின்றானில்லை; (அப்படிப்பட்டவன் இப்பொழுது), எதிர்ந்து-
(என்னை) எதிர்த்து, மிகமோகரித்து வருகின்றது – மிகவும்
வீராவேசங்கொண்டுவருகிறசெயல், முனைந்துசமர் மோதுகைக்கு நினைவு
உண்டுகொல். – உக்கிரங்கொண்டு தாக்கிப்போர்செய்தற்கு
எண்ணமுண்டானதனாலேயோ? (வேறு எதனாலேயோ?) தெரிந்ததுஇலை –
தெரியவில்லை; (அன்றியும்), நெடுஞ் சிலை கொல் – சிறந்த வில்லையோ,
வெங் கணை கொல் – கொடியஅம்புகளையோ, ஏதம் அற்ற கவசம் கொல் –
அழிவில்லாத கவசத்தையோ, அரதம் கொல் – அப்படிப்பட்ட) தேரையோ, யாது
பெற்றனன் – (இவற்றில்) எதனைப் பெற்றனோ?’ என – என்று எண்ணி, –
வாசவன்கடவுள் மைந்தன் – தேவேந்திரனது குமாரனான அருச்சுனன்,- மாதவற்கு
இடைவணங்கி – கண்ணபிரானது முன்னிலையிலே தொழுது,- இது என்கொல் என
உரைதந்தனன் – இது என்னகாரணத்தாலோ? என்று வினாவினான்; (எ-று.)

     அங்ஙனம் துரியோதனன் மிக்கயுத்தாவேசத்தோடு படையெடுத்து வந்ததனைக்
கண்ட அருச்சுனன், கண்ணபிரானைத் தொழுது அதன்காரணத்தைக் கேட்டன
னென்பதாம். 

ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி, வென்றி வரி ஏறு விற்கு உரிய
பற்குனனுடன், ‘பழைய
வாசவற்கு அயன் வழங்கு கவசம் துவச மாசுணற்கு அருளினன்,
கலச சம்பவனும்;
ஆசுகத்தினில் ஒழிந்த பல துங்க முனை ஆயுதத்தினில்
அழிந்திடுவது அன்று; அதனை
நீ செகுத்திடுதி!’ என்று, துரகங்களையும் நேர்படக் கடவினன்,
கதி விதம் படவே.79.- அதற்குக் கண்ணன் விடைகூறுதல்.

ஈசன் – (யாவர்க்குந்) தலைவனான கண்ணபிரான்,- அப்பொழுது-,
உணர்ந்தருளி – (நடந்தசெய்தியைத் தனது முற்றுணர்வினால்) அறிந்து,- வென்றி
வரிஏறு விற்கு உரிய பற்குனனுடன் – வெற்றியைத் தருகிற கட்டமைந்த சிறந்த
(காண்டீவ) வில்லுக்கு உரிய அருச்சுனனுடனே,-‘வாசவற்கு அயன் வழங்கு –
தேவேந்திரனுக்குப் பிரமன்(முன்பு) கொடுத்த, பழைய கவசம் –
பழமையானகவசத்தை, கலச சம்பவன்உம் – துரோண கும்பத்தினின்று
தோன்றியவனான துரோணனும், துவசம் மாசுணற்கு – கொடியிற்
பெரும்பாம்புவடிவமுடையவனான துரியோதனனுக்கு, அருளினன் – (இப்பொழுது)
கொடுத்தான்; (அக்கவசம்), ஆசுகத்தினில் – அம்புகளினாலும், ஒழிந்த பல துங்கம்
முனை ஆயுதத்தினில் – மற்றும் பலவகையான சிறந்த கூரிய படைக்கலங்களினாலும்,
அழிந்திடுவது அன்று – அழிவதன்று; அதனை – அக்கவசத்தை, நீ -, செகுத்திடுதி-
அழித்திடுவாய்,’ என்று- என்றுசொல்லி, துரகங்களைஉம் – (தேர்க்) குதிரைகளையும்,
நேர்பட – துரியோதனனெதிரிலே செல்லும்படி, கதி விதம் பட – (பலவகை)
நடைவிகற்பம் பொருந்த, கடவினன் – செலுத்தினான்;

கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு
முனை வெஞ் சமரில்,
மேல் நடக்குமவர்தங்கள் மகுடங்களினும், மேரு ஒத்து உயர்
புயங்களினும், உந்தியினும்,
ஆனனத்தினும், நுழைந்து உருவ, வெம் பரிதி ஆயிரக் கிரணமும்
புடை பரந்ததுஎன,
வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட, வாளி விட்டனன்,
மனம் செய்து தனஞ்சயனே.80.- அருச்சுனன் பகைவர்களின்மேல் அம்புமழைபொழிதல்

(அப்பொழுது), தனஞ்செயன் – அருச்சுனன்,- மனம் செய்து –
(கண்ணபிரான்கூறியதை) மனத்திலேகொண்டு,- கானகத்தினிடை மண்டி ஏரி
அங்கிதரு கார்முகத்தின் வலி கொண்டு- (காண்டவ) வனத்திற் பற்றியெரியும்
அக்கினிபகவான் (தனக்குக்) கொடுத்த (காண்டீவ) வில்லின்வலிமையால்,- முனை
வெம் சமரில் மேல் நடக்குமவர்தங்கள் மகுடங்களின்உம் – ஊக்கத்தோடுசெய்கிற
கொடிய போரில் தன்மேல் எதிர்த்துவருகிற பகைவீரர்களுடைய கிரீடங்களிலும்,
மேரு ஒத்து உயர் புயங்களின்உம்- மேருமலையைப்போன்று உயர்ந்துள்ள
தோள்களிலும், உந்தியின் உம் – நாபியிலும், ஆனனத்தின் உம் – முகத்திலும்,
நுழைந்து உருவதைத்து உட்புகுந்து அப்பாற்செல்லுமாறும்,- வெம் பரிதி ஆயிரம்
கிரணம்உம் புடைபரந்து என – உஷ்ணமான சூரியனது ஆயிரங்கிரணங்களும்
எப்புறத்தும் பரவுவதுபோல, வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட –
ஆகாயத்திலே வெற்றிடமில்லாமல் நெருங்கியபந்தலிட்டாற்போல
இடைவிடாதுசென்றுபரவும்படியும், வாளிவிட்டனன்- பாணங்களைப் பிரயோகித்தான்

நா தெறித்தன, துரங்கமம்; நெடுஞ் சிலைகள் நாணி அற்றன;
உடைந்தன, தடந் திகிரி;
பாதம் அற்றன, மதம் கய விதங்கள்; பொரு பாகர் பட்டனர்;
மறிந்தன, நெடுந் துவசம்;
மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம்
அடங்கலும் நெகிழ்ந்து, அரசர்
ஆதபத்திரம் அழிந்தன;-இவன்தனுடன் ஆர் சரத்தொடு சரம்
தொட இயைந்தவரே?81.- அருச்சுனனம்புகளினாற் பகைவர்சேனை சின்னபின்னப்படுதல்.

(அருச்சுனனெய்த அம்புகளினால்),- துரங்கமம்- குதிரைகள், நா
தெறித்தன – நாக்குத் தெறித்துவிழப்பெற்றன; நெடுஞ் சிலைகள் – நீண்ட விற்கள்,
நாணி அற்றன – நாணறுபட்டன; தட திகிரி – பெரியதேர்ச் சக்கரங்கள்,
உடைந்தன- உடைப்பட்டன; மதங்கயம் விதங்கள் – யானை வருக்கங்கள்,
பாதம் அற்றன -கால்கள் அறுபட்டன; பொரு – போர்க்கு உரிய, பாகர் –
யானைதேர்குதிரை களைச் செலுத்துபவர்கள், பட்டனர் – இறந்தார்கள்; நெடுந்
துவசம் – நீண்டகொடிகள், மறிந்தன – முறிந்துவிழுந்தன; மோதுதற்கு எதிர்
முனைந்தவர் – தாக்கிப்போர்செய்தற்பொருட்டு அருச்சுனனெதிரில் உக்கிரமாக
வந்தவர்களுடைய, சிரங்கள் – தலைகள், பொழி -(உடைப்பட்டு) வெளிச்சொரிந்த,
மூளையின் – மூளைகளினால், களம் அடங்கலும் – போர்க்களம்முழுவதும்,
நெகிழ்ந்து – நெகிழ்ச்சி பெற, அரசர் – பகையரசர்களது, ஆதபத்திரம் – குடைகள்,
அழிந்தன-;- இவன் தனுடன் தரத்தொடு சரம்தொட இயைந்தவர் –
இவ்வருச்சுனனுடன் வலிமையோடு (எதிர்த்து) அம்புதொடுக்கத் தொடங்கினவர்கள்,
ஆர்-யாவர்? [எவருமில்லை]; (எ-று.)

மதங்கஜம் என்பதற்கு – மதங்கமுனிவனிடத்தினின்றும் (ஆதிகாலத்தில்)
உண்டானதென்று காரணப்பொருள். பி -ம்:- ஆர்சரத்தொடு, ஆதரத்தொடு

ஆர் அமர்க்கண் மிக நொந்து, இரவி மைந்தன், நெடிது
ஆகுலத்தொடும் இரிந்தனன்; விரிந்த மணி
வார் கழற் சகுனியும், துணைவரும், தம் முகம் மாறியிட்டனர்;
மறிந்தனர், கலிங்கர் பலர்;
சீருடைக் கிருபனும் கிருதனும், பழைய சேதி வித்தகனும்,
அஞ்சினர் ஒடுங்கினர்கள்;
பூரி பட்டிலன்; நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர்,
ஒழிந்தவர் புறந்தரவே.82.- அருச்சுனன்முன் பகைவீரர்பலர் தோற்றல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) ஆர் அமர்க்கண் – அருமையான அப்போரிலே,- இரவி மைந்தன் –
சூரியகுமாரனான கர்ணன், மிக நொந்து – மிகவும் வருந்தி, நெடிது
ஆகுலத்தொடுஉம் – மிக்க கலக்கத்துடனே, இரிந்தனன் – தோற்றுஓடிப்போனான்;
விரிந்த மணி – ஒளிவீசுகிற இரத்தினங்கள் பதித்த, வார் கழல் – நீண்ட
வீரக்கழலையுடைய, சகுனியும்-, துணைவர்உம்- (அவனது) தம்பிமார்களும், தம்
முகம் மாறி யிட்டனர் – தமதுமுகம்மாறிப் புறங்கொடுத்திட்டார்கள்; கலிங்கர் பலர் –
கலிங்கதேசத்து அரசர்பலரும், மறிந்தனர் – தோற்றுத்திரும்பினார்கள்; சீர் உடை –
சிறப்புடைய, கிருதன்உம் – கிருதவர்மாவும், கிருபன்உம்- கிருபாசாரியனும், பழைய
சேதி வித்தகன்உம்- பழமையான சேதிதேசத்து அரசனும், அஞ்சினர் ஒடுங்கினார்கள்
– பயந்து ஒடுங்கினார்கள்; பூரி – பூரிசிரவாவென்பவன், பட்டிலன் – இறந்தானில்லை
[உயிர்மாத்திரத்தோடு மீண்டானென்றபடி]; நெருங்கி அணி நின்று பொரு பூபர் –
நெருக்கங்கொண்டு படைவகுப்பிலே நின்று போர்செய்த அரசர்களில், பட்டனர்
ஒழிந்தவர் – இறந்தவர்கள்போகஎஞ்சியவரெல்லாம், புறம் தர – முதுகுகொடுக்க,-
(எ -று.)-“தரணிமண்டலதுரந்தரன்முனைந்தனன்” என வருங்கவியோடு தொடரும்.

     இரிந்தனன், முகம்மாறியிட்டனர், மறிந்தனர், அஞ்சினர் ஒடுங்கினர்கள்,
பட்டிலன், புறந்தர என்ற பல சொற்களில் தோற்றுச் செல்லுத லென்ற ஒரு
பொருளேவந்தது, பொருட்பின்வருநிலையணி. கலிங்கம் எழுவிதப்படுதலால்,
கலிங்கர்பலரென்றதென்பர்.      

தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடைப் பணி நெடுங்
கொடி நுடங்கி எழ,
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ, மா முடிக்கண் மகுடம் திகழ,
அன்று பெறு
காவல் மெய்க் கவசமும் தனி புனைந்து, சிலை கால் வளைத்து,
அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை
தூவி உற்று, எதிர் முனைந்தனன்-அனந்த ஒளி தோய் கழல் தரணி
மண்டல துரந்தரனே.83.- துரியோதனன் அருச்சுனனை எதிர்த்தல்.

அனந்தம் ஒளி தோய் – அளவில்லாத பிரகாசம் பொருந்திய,
கழல் -வீரக்கழலையுடைய, தரணி மண்டல துரந்தரன்- பூமண்டலமுழுவதையும்
அரசாள்பவனான துரியோதனன்,- தேவருக்கு அரசன் உந்து – தேவராசனான
இந்திரன் தூண்டிச்செலுத்துகிற, கன பந்தி – மேகராசியை, நிகர் – ஒத்த
[மிகவிரைந்துசெல்லுகிற], தேரிடை- தேரிலே, பணி நெடுங்கொடி –
பாம்புவடிவமெழுதின உயர்ந்தகொடி, நுடங்கி எழ – அசைந்துவிளங்கவும்,-
வலவன்- சாரதி, திறலுடன் – வல்லமையுடனே, மா உகைத்து – குதிரைகளைத்
தூண்டி, கடவ – (தேர்) செலுத்தவும்,- மா முடிக்கண்- இழ- அன்றைத்தினத்தில்
(துரோணாசாரியனிடத்தினின்று தான்) பெற்ற, மெய் காவல் கவசம்உம் –
உடம்பைக்காத்ததற்குஉரிய கவசத்தையும், தனி புனைந்து – ஒப்பில்லாதபடி
தரித்துக்கொண்டு, சிலை கால் வளைத்து – (தனது) வில்லைக் கோடிகள்
வளையச்செய்து,- அவிர் – விளங்குகிற, பெரு – பெரிய, பிறைமுகம்செய்கணை –
அர்த்த சந்திரபாணங்களை, தூவி -மிகுதியாகப் பிரயோகித்துக்கொண்டு, எதிர்
உற்றுமுனைந்தனன் – அருச்சுனனெதிரில் வந்து உக்கிரமாகப் போர்செய்தான்;
(எ -று.)

     இந்திரன் மேகவாகன னாதலால், ‘தேவருக்கரச னுந்துகன பந்தி’ என்றது.
தேவராஜனால் வச்சிராயுதங்கொண்டு வலிய அடித்து விரைவிற்
செலுத்தப்படுகிறமேகவர்க்கம்போலவிரைந்து செல்லுவது ராஜராஜனது
தேரென்க.இனி. ஏழுதட்டிரதத்துக்குக் கனபந்தி உவமையென்னலுமாம்

கோமகக் குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர்
விலங்கி, விசயன் தனது
தீ முகக் கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன்;
விடும் பொழுதின், அந்த விறல்
மா மணிக் கவசம் எங்கும் உடன் ஒன்றி, ஒரு மால் வரைப்
புயலின் நுண் துளி விழுந்த பரிசு
ஆம் என, தலை மழுங்கி, அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில;
அசைந்திலன், அசஞ்சலனே.84.-அருச்சுனனம்புகளினால் துரியோதனன்கவசம் பிளவுபடாமை.

(இவ்வாறு), கோமகன் குரிசில் – (அரசர்கட்கெல்லாம்) அரசனான
துரியோதனராசன், முந்த விடும் – முற்படச் செலுத்திய, அம்பு பல – அநேக
பாணங்களை, விசயன் – அருச்சுனன், கோல் தொடுத்து – (தனது) அம்புகளைப்
பிரயோகித்து, எதிர் விலங்கி – எதிரெதிரே தடுத்து, (மற்றும்), தனது தீ முகம்
கணைஅனந்தம் – நெருப்புப்போலக் கொடிய நுனியையுடைய தனது
அநேகபாணங்களை, நிலைஒன்றில் – ஒரேசமயத்திலே, முனை சேர –
எதிர்சென்றுசேரும்படி, விட்டனன் – செலுத்தினான்; விடும்பொழுதின் –
அங்ஙனஞ்செலுத்தியபொழுதில், அவை – அவ்வம்புகள், அந்த விறல் மாமணி
கவசம் எங்கும் உடன் ஒன்றி – வலிமையுள்ளதும் சிறந்ததும்இரத்தினம்பதித்ததுமான
(அந்தத்துரியோதனனது) கவசம்முழுவதிலும் ஒருசேரச் சென்று தாக்கி, ஒரு
மால்வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு ஆம் என – ஒரு பெரிய
மலையின்மேல் மேகத்தின் சிறிய நீர்த்துளிகள் விழுந்தவிதம்போல, தலைமழுங்கி –
நுனி கூரழிந்து, ஒன்றுஉம் அவன் ஆகம் உற்றில – ஒன்றேனும் அவனுடம்பிற்
படவில்லை; (ஆகவே), அசஞ்சலன் – (எதற்குஞ்) சலியாத இயல்புடையவனான
துரியோதனன், அசைந்திலன் – சிறிதுஞ் சலித்தானில்லை; (எ-று.)

     மலை காளமேகத்தின் சோனைமாரிக்குச்சிறிதுஞ்சலியாதவாறு போலவே,
துரியோதனன் அருச்சுனனது பாணவர்ஷத்துக்குச் சிறிதுஞ்சலித்திலனென்க. விலங்கி
= விலக்கி: சந்தம்நோக்கிய விகாரம். தன்வினை பிறவினையில் வந்ததுமாம்: இதனை,
அந்தர் பாவிதணிச்’ என்ப. 

வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உறப்
படுதல் இன்றி விழுகின்ற நிலை
ஓர் இமைப்பினில் அறிந்து, குமரன் கை அயிலோடு உரைக்க
உவமம் பெறு விடம் கொள் அயில்,
தேரினில் பொலிய நின்று, இரு கை கொண்டு, நனி சீறி, மெய்ப் பட
எறிந்தனன்; எறிந்தளவில்,
வார் சிலைக் குருவின் மைந்தன் அது கண்டு, அதனை வாளியின்
துணிபடும்படி மலைந்தனனே.85.- பின்பு அருச்சுனனெறிந்தவேற்படையை அசுவத்தாமன் துணித்தல்.

வீரன் – சிறந்தவீரனான அருச்சுனன்,- விட்டன சரங்கள்- (தான்)
தொடுத்தவையான அம்புகள், அவன் ஒள்கவசம் மேல் உற படுதல் இன்றி –
அத்துரியோதனனது ஒளியுள்ள கவசத்தின்மேல் உட்செல்லும்படி படுதலில்லலாமல்,
விழுகின்ற- தாக்கிக்கீழ்விழுந்திடுகின்ற, நிலை – தன்மையை, ஓர் இமைப்பினில் –
ஒருநொடிப்பொழுதிலே, அறிந்து-,- குமரன் கை அயிலோடு உவமம் உரைக்க பெறு
– முருகக்கடவுளின் கையிலுள்ள வேலாயுதத்தோடு (உன்னை) உவமைசொல்லும்படி
(சிறப்புப்) பெற்ற, விடம்கொள் அயில் – விஷத்தையொதத [கொடிய] வேலாயுதத்தை,
தேரினில் பொலிய நின்று – (தனது) தேலிலே விளங்க நின்றுகொண்டு,
இருகைகொண்டு – இரண்டுகைகளாலும்எடுத்து நனி சீறி – (துரியோதனன்மேல்)
மிகக்கோபித்து, மெய்பட – அவனுடம்பிலே படும்படி, எறிந்தனன் – வீசினான்;
எறிந்த அளவில் – (அங்ஙனம்) வீசியவளவிலே,- வார் சிலை குருவின் மைந்தன் –
நீண்டவில்லுக்கு ஆசிரியனான துரோணனது புத்திரனாகிய அசுவத்தாமன், அது
கண்டு – அங்ஙனம் எறிந்ததைப் பார்த்து, அதனை – அவ்வேலை, வாளியின் –
(தனது) அம்புகளினால், துணி படும்படி – துண்டாகும்படி, மலைந்தனன் –
எதிர்த்துப்போர்செய்தான்; (எ -று.)

     சுப்பிரமணியன்கைவேல், சூரபதுமனைக் கொல்லுதற்கென்று சிவபெருமான்
நிருமித்துக்கொடுத்தது. எறிந்தளவில் – தொகுத்தல். 

வாகை நெட்டயில் துணிந்திடலும், வன்பினுடன் மா நிரைத்து
இரதமும் கடவி வந்து, முதல்
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனை ஆய் எதிர்த்து, ஒரு
முகம்பட நெருங்கி, மிக
மோகரித்து வருகின்ற செயல் கண்டு, அமரர் மூவருக்கு அரியவன்
கழல் பணிந்து, பரி-
தாகம் உற்று, அமர் தொடங்கவும் மறந்து, கமழ் தார் அருச்சுனன்                        உயங்கினன், அனந்தரமே,86.- பிறகு அருச்சுனன் சோர்ந்து மயங்குதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) வாகை – வெற்றியைத் தரவல்ல, நெடு – நீண்ட, அயில் –
வேலாயுதம்,துணிந்திடலும்- (இவ்வாறு) துண்டுபட்டவுடனே, முதல் ஆகவத்தினில்
உடைந்தவர்அடங்க – முன்பு (தனக்குமுன்) போரில் தோற்றவரெல்லாரும்,
வன்பினுடன் மான்நிரைத்து இரதம்உம் கடவிவந்து – வலிமையுடன்  குதிரைகளை
ஒழுங்குபடுத்தித்தேரையுஞ் செலுத்திக்கொண்டுவந்து, முனை ஆய் எதிர்த்து –
துணிவுகொண்டு(தன்னை) எதிர்த்து, ஒரு முகம் பட நெருங்கி -(தன்னைநோக்கி)
ஒரேமுகமாகத்திரண்டு அடர்ந்து, மிக மோகரித்து வருகின்ற – மிகவும்
உக்கிரங்கொண்டு வருகிற,செயல்- செய்கையை, கண்டு – பார்த்து,–கமழ் தார்
அருச்சுனன் – மணம்வீசுகிறபோர்மாலையையுடைய அருச்சுனன்,- பரிதாகம்
உற்று – மிக்கவருத்தத்தை யடைந்து,அமர் தொடங்கஉம் மறந்து – போர்
செய்தற்கும் மறந்து, அமரர் மூவருக்குஅரியவன் கழல் பணிந்து –
மூன்றுமூர்த்திகட்கும் அருமையான ஸ்ரீமந்நாராயணனதுதிருவவதாரமாகிய
கண்ணபிரானது திருவடிகளை நமஸ்கரித்து, உயங்கினன் -சோர்ந்துநின்றான்;
அநந்தரம் – பின்பு,- ( எ -று,)-” கண்ணன் வலம்புரி வாயில்வைத்தனன்” என
வருங்கவியோடு முடியும்.

     அருச்சுனன் சோர்ந்தது நின்றமைக்குக் காரணம்- தனது ஆயுதங்கள்பலவும்
பயன்படாமையைக் கண்டமனவெழுச்சிக்குறைவு. திருப்பாற்கடலிலெழுந்தருளியுள்ள
திருமாலின் வியூகமூர்த்திகளாகிய வாசுதேவன் சங்கர்ஷணன் பிரத்யும்நன்
அநிருத்தன் என்ற நால்வருள் பிரதானமூர்த்தியான வாசுதேவன், பிரமவிஷ்ணு
ருத்திரரூபிகளாய் படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களைச் செய்யும் மற்றை
மூவர்க்குங் காரணனாகி அவர்கட்கும் அரியவனாய்ச் சிறத்தல் பற்றியும்,
அவ்வாசுதேவனே இங்குக்கண்ணனாக அவதரித்தமைபற்றியும், ‘மூவருக்கு
அரியவன்’ என்றார். மூவர்- தொகைக்குறிப்பு. முற்றும்மை விகாரத்தால் தொக்கது.
‘பரிதாபம்’ என்றார்போல, ‘பரிதாகம்’ என்றார்; வடசொல்: இதில் பரி – மிகுதியை
விளக்குவதோர் உபசர்க்கம். அமர்தொடங்கவும் என்ற சிறப்பும்மை –
அமர்தொடங்குதலின் இன்றியமையாமையைக் காட்டும். பி-ம்;-மைந்தினுடன்

கோ மணிக் குரல் உகந்து புறவின்கண் உயர் கோவலர்க்கு நடு
நின்று முன் வளர்ந்த முகில்,
காமனுக்கு இனிய தந்தை, சமரம் பொருது காதல் மைத்துனன்
அயர்ந்த நிலை கண்டு, பல
தாமரைக்குள் ஒரு திங்கள் என, அங்குலி கொள் தாழ் தடக்
கைகள் இரண்டு ஒரு முகம் பயில,
மா மணிக் குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன்,
நலம் திகழ் வலம்புரியே.87.- கண்ணன் அதுகண்டு சங்கநாதஞ்செய்தல்.

கோ – பசுக்களினுடைய, மணி – (கழுத்திலே கட்டப்பட்டுள்ள
அடிக்கும்) மணிகளின், குரல் – ஓசையை, உகந்து- விரும்பிக்கேட்டுக் கொண்டு,
புறவின்கண் – முல்லைநிலத்திலே, உயர் கோவலர்க்கு நடு நின்று – சிறந்த
இடையர்கட்கு நடுவிலே நின்று, முன் – முன்பு[இளமையில்], வளர்ந்த-, முகில் –
மேகம் போன்றவனும், காமனுக்கு இனிய தந்தை- மன்மதனுக்குப் பிரியமுள்ள
பிதாவுமான கண்ணன்,- காதல் மைத்துனன் சமரம் பொருது அயர்ந்த நிலை
கண்டு- ( தனது) அன்புக்கு இடமான மைத்துனனாகிய அருச்சுனன் போர்செய்து
சோர்வடைந்த நிலைமையைப் பார்த்து,- பல தாமரைக்குள் ஒரு திங்கள் என – பல
தாமரைமலர்களின் இடையிலே ஒருசந்திரன்(விளங்கினாற்)போல,- அங்குலி கொள்
தாழ் தட கைகள்இரண்டு – விரல்களின் அழகைக் கொண்ட நீண்ட பெரிய (தனது)
திருக்கைகளிரண்டும், ஒரு முகம் பயில-(தனது) ஒப்பற்றமுகத்திலேபொருந்த,
(அக்கைகளில்), நலம் திகழ் வலம்புரி -சிறப்பு விளங்குகிற (பாஞ்சசன்னிய மென்னுந்
தனது) வலம்புரிச்சங்கத்தை, மா மணி குழல் மணம் கமழ் செழும் பவளம் வாயில்
வைத்தனன் – சிறந்த அழகிய வேய்ங்குழலின் பரிமளம் வீசப்பெற்ற செழிய
பவழம்போல மிகச்சிவந்த (தனது) திருவாயிலே வைத்து ஊதினான்; (எ -று.)

     அருச்சுனன் சோர்ந்து போரொழிந்ததைக் கண்டு, கண்ணபிரான்,
பகையழித்தற்பொருட்டும் அருச்சுனன்சோர்வை ஒழித்தற்பொருட்டும் தனது
திவ்வியசங்கத்தை வாயில்வைத்து முழக்கத் தொடங்கின னென்க,
செந்தாமரைமலர்கள்போன்ற தனது இரண்டுகைகளினாலும் செந்தாமரைமலர்போன்ற
தனது வாயிலே வெள்ளியசங்கத்தை வைத்ததற்கு, பல தாமரைமலர்களினுள்ளே
பொருந்திய வெண்டிங்கள் உவமை யெனக் காண்க. சந்திரன்சமீபித்தபொழுது
தாமரைமலர் குவிதல்போலச் சங்கத்தையெடுத்து வாயில்வைத்துக்கொண்டு
ஊதுகையிற் கைகளும் வாயும் குவிதல் இயல்பு. குழலின் இனிய ஒலி
வெளியெழுந்துவிளங்கப்பெற்ற வாய் என்ற பொருளில் ‘குழல்மணங்கமழ் வாய்’
என்றது – ஒருபுலனின்தன்மையை மற்றொருபுலனின்மேல் ஏற்றிக்கூறின
உபசாரவழக்காம். பசுக்கள்களிப்போடு தலையசைத்துக்கொண்டிருக்கையில்
க்ருஷ்ணன்அவற்றினருகிற்செல்லும்பொழுது கழுத்திடுமணியோசையைக் கேட்டுத்
திருவுளமகிழ்ந்தருள்வனென்பார், ‘கோமணிக்குரலுகந்து’ என்றார். புறவு – காடும்
காடுசார்ந்தஇடமுமாகியமுல்லைநிலம். கண்ணபிரான் முல்லைநிலத்திலே கோகுல
மெனப்படுகிற ஆயர்பாடியில் இடையர்கள் நடுவிலே வளர்ந்ததனால்,
‘புறவிகண் உயர்கோவலர்க்கு நடுநின்று முன்வளர்ந்த முகில்’ என்றார்.
பி-ம்:
 வலம்புரிவலம்புரியே.   

நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன், வச்சிர
வலம்புரி முழங்கு குரல்,
மேகம் ஒக்கும் என, வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும்
என, எங்கணும் எழுந்த பொழுது,
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய, ஆகவத்து எழு கடுஞ்
சினம் மடிந்து அவிய,
மோகம் உற்றனர், எதிர்ந்து பொரு மண்டலிகர்; மோழை
பட்டதுகொல், அண்ட முகடும் சிறிதே!88.- கண்ணனது சங்கநாதத்தாற் பகைவர்கள் மோகமடைதல்.

நாகர் – தேவர்களது, பொன் தருவை – பொன்மயமான
பாரிஜாதவிருஷத்தை, அன்ற – முன்னொருகாலத்தில், அம்புவியில் தரு – அழகிய
பூலோகத்திற் கொணர்ந்திட்ட, நாதன்- தலைவனான கண்ணபிரானது, வச்சிரம்
வலம்புரி – வயிரம்போலுறுதியுள்ள சிறந்த சங்கம், முழங்கு- மிகஒலித்த, குரல் –
ஓசை, மேகம் ஒக்கும் என – மேகத்தின்  இடியோசையை யொக்குமென்று
சொல்லும்படியாகவும், வெள் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என-
வெண்ணிறமான அலைகளை வீசிமோதுகிற கடலின் ஆரவாரத்தை யொக்கு
மென்றுசொல்லும்படியாகவும், எங்கண்உம் எழுந்த பொழுது – எல்லாவிடங்களிலுஞ்
சென்றுபரவினபொழுது,- எதிர்த்து பொரு மண்டலிகர் – எதிர்த்துப்போர்செய்கிற
பூமண்டலாதிபதிகளான அரசர்கள் (எல்லாரும்), ஆகம் முற்றுறநெகிழ்ந்து –
உடம்புமுழுவதுந் தளர்ந்து, புளகம் புரிய – மயிர்ச்சிலிர்ப்புச் செய்யவும், ஆகவத்து
எழு கடுஞ்சினம் – போர்செய்தலில் மிகுதியாகவுண்டான கொடிய கோபம், மடிந்து
அவிய – குறைந்து ஒடுங்கவும், மோகம் உற்றனர்-; (அப்பொழுது), அண்டம்
முகடுஉம் – அண்ட கோளத்தின் மேகமுகடும், சிறிது-, மோழை பட்டது கொல் –
(சங்கின பேரொலியாலாகிய அதிர்ச்சியினால்) வெடிப்படைதது போலும்; (எ -று.)

     இப்பொழுது கண்ணன் பகைவர்களைத் தனது சங்கினொலியால்மயங்கி
யழியச்செய்தமை, முன்பு தேவலோகத்தினின்றுபாரிசாததருவைப்
பூலோகத்துக்குக்கொணர்ந்தபொழுதுஎதிர்த்த தேவர்களைத் தனது
சங்கநாதத்தினாலே பங்கப்படுத்தினமை போலு மென்பார்,கண்ணபிரானுக்கு
‘நாகர்பொற்றருவை யம்பு வியி லன்றுதரு’ என்ற அடைமொழிகொடுத்தார்;
கருத்துடையடை மொழியணி, வரலாறு.- கண்ணன் நரகாசுரனை யழித்தபின்பு,
அவனால் முன்பு கவர்ந்துபோகப்பட்ட (இந்திரன்தாயான
அதிதிதேவியின்)குண்டலங்களை அவளுக்குக் கொடுக்கும்பொருட்டுச்
சத்தியபாமையுடனே கருடன் தோளின்மேலே தேவலோகத்துக்குச் செல்ல அங்கு
இந்திராணி சத்தியபாமைக்குச்சகலஉபசாரங்களைச் செய்தும், தேவர்க்கேயுரிய
பாரிஜாதபுஷ்பம்மானுடப்பெண்ணாகிய  இவளுக்குத் தகாதென்று சமர்ப்பிக்கவில்லை
யாதலின், இவள்  அதனைக் கண்டுவிருப்புற்றவளாய், சுவாமியைப்பார்த்து,’பிராண
நாயகனே! இந்தப் பாரிஜாததருவைத் துவாரகைக்குக்கொண்டு போகவேண்டும்’
என்றதைக் கண்ணபிரான் திருச்செவிசாத்தி, உடனே அந்தவிருட்சத்தை
வேரொடுபெயர்த்துப் பெரியதிருவடியின் திருத்தோளின்மேல் வைத்தருளி,
அப்பொழுது இந்திராணி தூண்டிவிட்டதனால் வந்துமறித்துப்போர்செய்து
இந்திரனைச் சகலதேவசைனியங்களுடன் சங்கநாதத்தினாலேபங்கப்படுத்தி, பின்பு
வணங்கின அவனது பிரார்த்தனைப்படியே பாரிஜாதமரத்தைத்துவாரகைக்குக்
கொண்டுவந்து சத்தியபாமை வீட்டுப் புறங்கடைத்தோட்டத்தில்நாட்டியருளின
னென்பதாம்.  

பால் நிறப் புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர்
மயங்கியது உணர்ந்தருளி,
மேல் நிலத்து நரகன்தன் உயிர் கொண்டது ஒரு வேல்
கொடுத்து, ‘இதனில் வென்றிடுதி’ என்றளவில்,
வான வச்சிரன் மகன் கடிது உவந்து, ‘பெரு வாழ்வு பெற்றனம்!’
எனும் பரிவினன், தனது
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து, திரு நாள்மலர்ப் பதம்
வணங்கி, அது கொண்டனனே.89.-அப்பொழுது கண்ணன் அருச்சுனனுக்குச்சிறந்தவேல் தருதல்.

பால் நிறம் – பால்போல வெளுத்தநிறத்தையுடைய, புரவி –
குதிரைகளை, உந்தி – தூண்டி, இரதம் – (அருச்சுனனது) தேரை, கடவி –
செலுத்துகின்ற, பாகன் – சாரதியான கண்ணன், அவர் மயங்கியது உணர்ந்தருளி –
அப்பகைவர்கள் மோகித்த தன்மையை அறிந்தருளி, மற்று- பின்பு, மேல் நிலத்து
நரகன்தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து – முன்னொருகாலத்திலே
பூமிதேவிபுத்திரனான நரகாசுரனது உயிரைக்கொணடதாகிய ஒரு வேலாயுதத்தை
(அருச்சுனனுக்கு)க் கொடுத்து, இதனில் வென்றிடுதி என்ற அளவில் – (இதனால்
துரியோதனனைச்) சயித்திடுவா யென்று அருளிச்செய்தவளவிலே,- வானம் வச்சிரன்
மரகைன் – தேவலோகத்திலுள்ள வச்சிராயுதப்பாணியான இந்திரனது புத்திரனாகிய
அருச்சுனன், கடிது – விரைவாக, உவந்து – சந்தோஷித்து, பெரு வாழ்வு பெற்றனன்
எனும் பரிவினன் – பெரிய செல்வவாழ்க்கையைக் பெற்றிட்டேனென்ற
அன்பையுடையவனாய், தனது ஞான பத்தியொடு – தன்னுடைய
தத்துவஞானத்தோடும் பக்தியோடும், எழுந்து-, வலம் வந்து- (கண்ணபிரானைப்)
பிரதட்சிணஞ்செய்துவந்து, திரு நாள் மலர் பதம்வணங்கி – அழகிய அன்று
மலர்ந்தாமரைமலர்போன்ற (அப்பெருமானது) திருவடிகளை நமஸ்கரித்து, அது
கொண்டனன் – அந்த வேற்படையைப் பெற்றுக்கொண்டான்; ( எ -று.)

     நரகனைக்கொன்றகதை:-திருமால் வராகாவதாரஞ்செய்து பூமியைக்
கோட்டாற்குத்தியெடுத்தபொழுது அத்திருமாலின் பரிசத்தாற் பூமிதேவிக்குக்
குமாரனாய்ப் பிறந்தவனும், அசமயத்திற் சேர்ந்து பெறப்பட்டவனாதலால்
அசுரத்தன்மைபூண்டவனுமான நரகனென்பவன், பிராகஜ்
யோதிஷமென்னும்பட்டணத்திலிருந்து கொண்டு, சகலபிராணிகளையும்
மிகஉபத்திரவித்து, தேவர் சித்தர் கந்தருவர் முதலானவர்களுடைய
கன்னிகைகளையும் ராஜாக்களுடைய கன்னிகைகளையும் பலரைப் பலாத்காரமாய்
அபகரித்துக் கொண்டுபோய்த் தான் மணம்புணர்வதாகக்கருதித் தன்மாளி
கையிற் சிறைவைத்து, வருணன் குடையையும் மந்தரகிரிச்சிகரமான
இரத்தினபருவதத்தையும் தேவர்கள்தாயான அதிதிதேவியின் குண்டலங்களையுங்
கவர்ந்து போனதுமன்றி, இந்திரனுடைய ஐராவதயானையையும் அடித்துக்
கொண்டடுபோகச் சமயம்பார்த்திருக்க, அஞ்சி வந்து பணிந்து முறையிட்ட
இந்திரனதுவேண்டுகோளினால், கண்ணபிரான் கருடனை வரவழைத்து,
பூமிதேவியம்சமானசத்தியபாமையுடன் தான் கருடன்மேலேறி, அந்நகரத்தை
அடைந்து சக்கராயுதத்தைப்பிரயோகித்து, அவன்மந்திரியான முரன் முதலிய பல
அசுரர்களையும் இறுதியின்அந்நரகாசுரனையும் அறுத்துத் தள்ளியழித்
திட்டனனென்பதாம். சக்கரப்படையால்நரகன்தலையைத் துணித்ததாகப் பாகவதம்
முதலிய பலநூல்களிலும் கூறியிருக்கவும்,இங்கு ‘நரகன்ற னுயிர்கொண்டதொரு
வேல்’ என்றது, புராணாந்தர கல்பாந்தரகதைப்போக்கைப்பற்றிய தென்க.
என்றளவில் – தொகுத்தல். பி – ம்: உந்தும்,உயிர்கொண்றது, மானவச்சிரன்.
பெற்றனம்.      

மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின், மா மருத்தின்
மகன் வஞ்சினம் அழிந்துவிடும்;
ஊறுபட்டு வெருவும்படி எறிந்து, அமரின் ஓடுவிப்பது பெருந்தகைமை’                        என்று கொடு
நூறு பட்ட மகவின் தலைவன், நெஞ்சம் மிக நோதகக் கடிது
எறிந்தனன்; எறிந்தளவில்,
நீறுபட்டது, பெருங் கவசம்; வந்த வழி நேர்படத் திருகினன்,
சமரில் நின்றிலனே.90.- அருச்சுனன் துரியோதனன் கவசத்தை யழித்தல்.

‘இவனை- இத்துரியோதனனை, மாறுபட்டு – எதிர்த்து, இன்று –
இப்பொழுது, உயிர் கவர்ந்துவிடின் – கொன்றுவிட்டால், மா மருத்தின் மகன்
வஞ்சினம் அழிந்துவிடும் – சிறந்த வாயுதேவனுக்குக் குமாரனான வீமனது சபதம்
தவறிப்போய்விடும்; (ஆதலால், இவனைக் கொல்லாமல்), ஊறுபட்டு வெருவும்படி-
(இவன்) விரணப்பட்டு அஞ்சும்படி, எறிந்து – (இந்த வேலாயுதத்தை இவன்மேல்)
வீசி, அமரின் ஒடுவிப்பது – போரிலே (இவனைப்) புறங்கொடுத்தோடும்படிசெய்வது,
பெருந் தகைமை – மேலான செய்கையாம்,’ என்று கொடு – என்று
எண்ணிக்கொண்டு, (அருச்சுனன்), நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக
நோதக – நூறென்னுந்தொகை பொருந்திய (திருதராட்டிர) புத்திரருள் தலைவனான
துரியோதனனது மனம் மிகவும் வருந்தும்படி, கடிது எறிந்தனன்- வேகமாக
(வேற்படையை அவன்மேல்) வீசினான்; எறிந்த அளவில் – (அங்ஙனம்)
வீசியளவளவிலே, பெருங் கவசம் – சிறந்த அந்தக்கவசமானது, நீறுபட்டது –
பொடியாய் விட்டது:  (உடனே துரியோதனன்), வந்த வழி நேர்பட திருகினன்
-தான்வந்தவழியே நேராகத் திரும்பிப்போய்விட்டான் ; சமரில் நின்றிலன் –
போரில்(சிறிதும்) எதிர்நின்றானில்லை

ஆறுபத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு, வரி வன்
சிலையும், வெம் பரியும்,
ஏறு பைத் தலை நெடுந் துவசமும், புதிய ஏழு தட்டு இரதமும்,
துணிசெய்து, அங்கு அருகு
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு, தேர் அருக்கன்
மகனும், சகுனியும், பலரும்,
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல, மீள விட்டனன்,
முன் எண் திசையும் வென்றவனே.91.- அருச்சுனன் அசுவத்தாமனாதியரை வென்று ஒட்டுதல்.

எண்திசைஉம் முன் வென்றவன் – எட்டுத்திக்கிலுள்ளாரையும் முன்பு
சயித்தவனான அருச்சுனன்,- பெரும் பகழி – சிறந்த அம்புகளை, ஆறு பத்து
அறுபதும், இருபது – இருபதும், ஐம்பது ஆக – ஐம்பதுமாக, விட்டு – செலுத்தி,
(அவற்றால் துரியோதனனது), வரி வில் சிலைஉம் – கட்டமைந்த வலிய வில்லையும்,
வெம் பரிஉம் – கொடிய குதிரைகளையும், பை தலை ஏறு நெடுந் துவசம்உம் –
படத்தையுடைய தலையையுடைய பாம்பின் வடிவம் ஏறியிருக்கப்பெற்ற பெரிய
கொடியையும், புதிய ஏழு தட்டு இரதம்உம் – ஏழுதட்டுக்களையுடையபுதுமையான
தேரையும், துணிசெய்து – துண்டுபடுத்தி,- அங்கு – அப்பொழுது, அருகு –
அவனருகிலே, சீறுதற்கு வரு- (தன்னோடு) கோபித்துப் பொருதற்கு வந்த, திண்
குருவின் மைந்தனொடு – வலிய துரோணாசாரியனுக்குப் புத்திரனான
அசுவத்தாமனும், தேர் அருக்கன் மகன் உம்-(சிறந்த) தேரையுடைய சூரியனுக்குப்
புத்திரனான கர்ணனும், சகுனியும்-, பலர் உம் – மற்றும் பல அரசர்களும், வீறு
கெட்டு – பராக்கிரமமழிந்து, இருபதம் கொடு விரைந்து செல- (தேரழிந்ததனால்
தங்கள்) இரண்டு கால்களைக் கொண்டே வேகமாக ஓடிப்போம்படி, மீள –
மறுபடியும், விட்டனன்- (அவர்கள்மேல் அம்புகளைச்) செலுத்தினான்; ( எ -று.)

     அருச்சுனன் துரியோதனனது கவசத்தைப்பிளந்து வலியழித்ததனைக்
கீழ்க்கவியிற் கூறி, இக்கவியில் அவனது வில் குதிரை கொடி தேர்களை அழித்து
அவனுக்குத் துணைவராய்வந்த பலரையும் வென்று துரத்தினமையைக்
கூறினார்.இப்பாட்டில், துரியோதனனது வில் முதலியவற்றைத் துணித்ததாகக்
கூறினது,கீழ்ப்பாட்டிற் சொன்னபடி அவன் புறங்கொடுத்தோடுதற்கு முன்பு நிகழ்ந்த
செய்கையை அநுவாதத்தாற் கூறியதாம்: அன்றி, வில் முதலியவற்றை அருச்சுனன்
துணித்தவுடனே துரியோதனன் மீண்டானென்ற செய்கையை முறையிலுயர்
வுநவிற்சியணி
 பட ‘முன்பு துரியோதனன் திருகினன் ; பின்பு வில்
முதலியவற்றை அருச்சுனன் துணிசெய்தனன்’ என்று கூறினாரு மாம். பொருதலென்ற
காரியத்தை, சீறுதல் என்ற காரணத்தினாற் குறித்தது, உபசாரவழக்கு.

வேர்த்து எதிர் விசயன் வென்ற களத்தில்
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்கொல் பிழைத்தார்?
ஏத்திய பதினெண் பூமியின் எண்ணும்
பார்த்திவர் பற்பல் ஆயிரர் பட்டார்.92.- மூன்றுகவிகள் – பலரும் அருச்சுனன்முன் அழிதலைக் கூறும்.

விசயன் – அருச்சுனன், வேர்த்து – கோபங்கொண்டு, எதிர்
வென்ற -எதிர்த்துச் சயித்த, களத்தில் – போர்க்களத்திலே, ஆர்த்து எதிர்
வந்தார் -ஆரவாரஞ்செய்துகொண்டு அவனெதிரில் வந்தவர், ஆர்கொல்
பிழைத்தார் – யாவர்பிழைத்தவர்? ஏத்திய – சிறப்பித்துச்சொல்லப்படுகிற,
பதினெண் பூமியின் – சிங்களம்முதலிய பதினெட்டுநாடுகளிலுமுள்ள, எண்ணும் –
நன்குமதிக்கப்படுகிற, பார்த்திவர் -அரசர்கள், பல்பல் ஆயிரர் – பலபல
ஆயிரம்பேர், பட்டார் – அழிந்தார்கள்; (எ-று.)

     இது முதல் ஆறு – கவிகள் பெரும்பாலும் முதற்சீரும் மூன்றாஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். 

தம்பியரும், துச்சாதனன் முதலோர்,
அம்பில் அழிந்து, தம் ஆர் உயிர் உய்ந்தார்;
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ,
அம்பரம் உற்றது அனைவரும் உற்றார்.

துச்சாதனன் முதலோர் – துச்சாசனன் முதலியவர்களான,
தம்பியர்உம்-, அம்பில் அழிந்து – அருச்சுனனம்புகளால் வலியழிந்து, தம் ஆர்
உயிர் உய்ந்தார் – (அரிதில் தப்பித்) தங்களுடைய அரிய உயிர் பிழைத்தார்கள்;
அனைவர்உம் – மற்றும்எல்லாரும், எம்பெருமான் அன்று எரி கணை ஏவ அம்பரம்
உற்றது உற்றார் – எமது தலைவனான திருமால் அந்நாளில் [முன்பு ஒருகாலத்தில்]
ஆக்நேயாஸ்திரத்தைப் பிரயோகிக்க (அதனாற்) கடல் பட்ட பாட்டை யடைந்தார்கள்;
( எ -று.)- திருமாலின் திருவவதாரமான இராமபிரான் இலங்கைக்குச் செல்லும்போது
அடங்கியொழுகாத கடலின் செருக்கை யடக்குதற்கு ஆக்நேயாஸ்திரந்தொடுக்கத்
தொடங்கவே கடலரசன் தவிப்படைந்து அடங்கியொடுங்கின னென்க

மாரதர் வீந்தார்; அதிரதர் மாய்ந்தார்;
சாரதிகளும் வன் தலைகள் இழந்தார்.
நாரதன் முதலோர் நாகர் அநேகர்
‘பாரதம் இன்றே பற்று அறும்’ என்றார்.

(அப்பொழுது அருச்சுனனா லழிக்கப்பட்டு), மாரதர் – மகாரத
வீரர்கள், வீழ்ந்தார் – (இறந்து) கீழ்விழுந்தார்கள்; அதிரதர் அதிரதவீரர்கள்,
மாய்ந்தார் – இறந்தார்கள்; சார திகள்உம்- தேர்ப்பாகர்களும், வல் தலைகள்
இழந்தார் – வலிய (தம்தம்) தலைகளையிழந்தார்கள்; நாரதன் முதலோர் நாகர்
அநேகர் – (வானத்தில் நின்று போர்விநோதம் பார்த்துக்கொண்டிருந்த)
நாரதன்முதலிய தேவர்கள்பலரும், பாரதம் இன்றுஏ பற்று அறும் என்றார் –
பாரதயுத்தம் இன்றைக்கே முற்றமுடிந்திடுமென்றுசொல்பவரானார்கள்.

     பாரதம்- பரதவம்சத்ததாருள் நிகழும் போர். வீழ்ந்தார், மாய்ந்தார்,
தலைகளிழந்தார்- பொருட்பின்வருநிலையணி.     

இந்த வயப் போர் இம் முறை வென்று,
பைந் துளவோனும் பார்த்தனும் ஆக,
சிந்து மகீபன்-தேடி மணித் தேர்
உந்துறும் எல்லை, உற்றது உரைப்பாம்:95.-கவிக்கூற்று: வேறுசெய்தி கூறத்தொடங்குவோமெனல்

இந்த வய போர் -இந்தவலியபோரிலே, இ முறை வென்று –
இந்தவிதமாய்(ப் பகைவரை) ச் சயித்து, பைந் துள வோன்உம் பார்த்தன்உம்
ஆக -பசுநிறமான திருத்துழாய்மாலையையுடைய கண்ணனும் அருச்சுனனுமாக,
(இவ்விருவரும்) சிந்து மகீபன் தேடி  சிந்துநாட்டரசனான சயத்திரதனைக்
தேடிக்கொண்டு, மணி தேர் உந்துறும் எல்லை- மணிகள் கட்டிய தேரைச் செலுத்து
மளவில், உற்றது – நடந்த வேறொரு செய்தியை, உரைப்பாம் – இனிச்சொல்வோம்;
(எ-று.)-அதனை, மேல் 59 – கவிகளிற் காண்க.

வள்ளல் குறித்த வலம்புரி நாதத்
தெள் அமுதம் தன் செவி உறு போழ்தின்,
உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன்
தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான்.96.- கண்ணனது சங்கொலிகேட்டதும் தருமன் கலங்குதல்.

வள்ளல் – (அடியார்கட்கு) வரையாமல் அருள்செய்யுந்தன்மையனான
கண்ணபிரான், குறித்த – (முன்பு) ஊதிமுழக்கின, வலம்புரி – சிறந்த சங்கத்தினது,
நாதம் – ஓசையாகிய, தெள் அமுதம் – தெளிவான அமிருதம், தன் செவி உறு
போழ்தின் – தனது காதிற் பட்டவுடனே,- உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன்-
உள்ளணி மத்தியில் நின்ற தருமபுத்திரன், தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான்-
சஞ்சலப்படுந்தன்மையுள்ள (தன்) மனத்திற் சந்தேகங்கொண்டவனானான்; ( எ-று.)

     “அதிஸ்நேஹ: பாபஸங்கீ” என்றபடி அருச்சுனன்பக்கல் தனக்கு உள்ள மிக்க
அன்பினால் ‘அவனுக்கு என்ன தீங்கு வருமோ!’ என்று தருமபுத்திரன்
சங்கொலிகேட்டவளவிலே சங்கையுற்றன னென்க. அருச்சுனன் சபதத்தை
நிறைவேற்றி உயிருய்தலைக்குறித்துத் தருமபுத்திரன் கவலைகொண்டிருக்குமளவிலே
சங்கொலிகேட்டதனால் “புண்ணிற் புளிப்பெய்தாற்போல்” கலக்கத்தின்மேற் கலக்க
முற்றன னென்றுங் கொள்க.    

தன் துணை நின்ற சாத்தகியைக் கூய்,
‘வென்றிடு போரில் விசயன் இளைத்தால்
அன்றி, முழக்கான் அதிர் வளை, ஐயன்;
சென்று அறிகுதி நீ’ என்று உரைசெய்தான்.97.- தருமன் சாத்தகியை அருச்சுனனுக்குத் துணைசெல்லச் சொல்லுதல்.

(இங்ஙனம் சங்கைகொண்ட தருமபுத்திரன்),- தன் துணை நின்ற
சாத்தகியை கூய் – தனக்குத்துணையாகநின்ற சாத்தகியை அழைத்து,-
(அவனைநோக்கி),-‘வென்றிடு போரில் – சயித்திடுதற்குரிய யுத்தத்திலே, விசயன்
இளைத்தால் அன்றி – அருச்சுனன் இளைப்படைந்தா லல்லாமல், ஐயன் –
தலைவனான கண்ணபிரான், அதிர்வளை முழக்கான் – அதிர்ச்சியுண்டாக்கவல்ல
சங்கத்தை ஊதி ஒலிசெய்யமாட்டான்; (ஆதலால்),நீ-,சென்று- (அவர்களுள்ள
இடத்துக்குப்) போய், அறிகுதி – (நிகழ்ந்தசெய்தியை) அறிவாய்,’ என்று,-
உரைசெய்தான் – சொன்னான்;

     ‘அதிர்வளைமுழக்கான்’ என்ற சொற்போக்கினால், வெற்றிக்கு அறிகுறியாகிற
சங்கொலிக்கும், இளைப்புக்கு அறிகுறியாகிற சங்கொலிக்கும் வேறுபாடறிந்து கூறினா
னென்னலாம். யதுகுலத்தரசர்களில் வசுதேவனுக்கு உடன்பிறந்தமுறையாகிறவனும்
சிநியென்பவனது மகனுமான சத்தியகனதுகுமாரனாகிய சாத்யகி, பிராயத்திற்
கண்ணனினும் இளையவனாதலால், கண்ணனுக்குத் தம்பிமுறையாவன்.
ஸாத்யகிஎன்னும் வடமொழித்தத்திதாந்த நாமம், திரிந்தது. இவன், அருச்சுனனிடம்
வில்வித்தையைக் கற்றறிந்த மாணாக்க னாதலால், ஆசிரியனாகிய
அருச்சுனனிடத்தும்அதுசம்பந்தமாக மற்றைப்பாண்டவரிடத்தும் அன்போடு
ஒழுகுவன்.    

வன்கண் திண் தோள் மன் பலர் நிற்க,
என்கண் தந்தான் இன் உரை’ என்னா,
மன் கள் தாரோன் மலர் அடி வீழ்ந்தான்,
தன் கட்டு ஆண்மைத் தன் முனொடு ஒப்பான்.98.- அதற்குச் சாத்தகி இஷ்டத்தோடு உடன்படுதல்.

வன்கண் – வலியதன்மையையும், திண் தோள் – வலிய
தோள்களையுமுடைய, மன் பலர் – அரசர்கள் பலர், நிற்க-(தன் அருகிற்)
காத்துக்கொண்டிருக்கவும், (தருமபுத்திரன் அவர்களில் ஒருவர்க்கும்
இக்கட்டளையையிடாமல்), இன் உரை – இனிய (இவ்) வார்த்தையை, என்கண்
தந்தான் – என்னிடத்திற் கூறினான்; என்னா – என்றுஎண்ணி, (மகிழ்ச்சி
கொண்டு),–தன் கட்டு ஆண்மை தன்முனொடுஒப்பான் – தன துவலிய
பராக்கிரமத்தில்தனதுதமையனான கண்ணபிரானோடு ஒப்பவனான அந்தச்சாத்தகி,-
மன் கள்தாரோன் மலர் அடி வீழ்ந்தான் – மிகுதியான தேனுள்ள
பூமாலையையுடையதருமபுத்திரனது தாமரைபோன்ற பாதங்களில் நமஸ்கரித்தான்;
(எ -று.)

     இப்பொழுது நமஸ்கரித்தது, விடைபெற்றுச் செல்லுகையிற் செய்யும் உபசார
மென அறிக, என்கண்தந்தான் – தருதல்வினை தன்மைக்கு வந்தது. பி -ம்:
இவ்வுரை.

     இக்கவி – மூன்றாஞ்சீரொன்று விளச்சீரும், மற்றைமூன்றும் மாச்சீர்களுமாகிய
அளவடிநான்கு கொண்ட கலிவிருத்தம்.

கண்ணுற நில்லார், கடவுளர் முதலாம்
விண்ணவரேனும், விசயன் வெகுண்டால்;
மண்ணில் எதிர்க்கும் மன்னவர் யாரோ?
தண் அளி நெஞ்சும் தருமமும் மிக்கோய்!’99.- சாத்தகி அருச்சுனனாற்றலைத் தருமனுக்குக் கூறுதல்.

இதுவும் அடுத்த கவியும் – ஒரு தொடர்.

     (இ-ள்.)’தண் அளி நெஞ்சுஉம் – குளிர்ந்த கருணையுள்ள மனமும்,
தருமம்உம்- அறச்செய்கையும், மிக்கோய் – மிகுந்த யுதிட்டிரனே! விசயன்
வெகுண்டால் -அருச்சுனன் கோபங்கொண்டால், கடவுளர் முதல் ஆம் விண்ணவர்
ஏன்உம் -தேவர்கள் முதலான வானுலகத்தவர்களேயாயினும், கண் உற நில்லார் –
அவன்கண்ணுக்கு எதிராக நிற்கவும் மாட்டார்கள்; (அங்ஙனமிருக்க), மண்ணில்
எதிர்க்கும்மன்னவர் யார்ஓ – இப்பூலோகத்தில் (அருச்சுனனை) எதிர்க்கவல்ல
அரசர் எவரோ? [எவருமில்லை];

     அருச்சுனனை எதிர்க்கவல்லார் தேவரிலுமில்லை யென்றதனால்
மனிதரிலில்லை யென்பது எளிதிற் சாதிக்கப்பட்டமையால், இது –
தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி. கடவுளரென்றது – தேவர்களைக்
குறிப்பதென்றும், விண்ணவ ரென்றது – அவரினத்தவரான யக்ஷர் கந்தருவர்
வித்தியாதரர் கிந்நரர் கிம்புருஷர்முதலிய கணங்களை யுளப்படுத்திய தென்றும்
கொள்க; இனி, ‘கடவுளர் முதலாம் விண்ணவர்’ – திருமூர்த்திகள் முதலான
தேவர்கள் என்றுமாம். ஐந்துகவிகள், 92 – ஆங் கவிபோன்ற கலிவிருத்தங்கள்.

என்று, அறன் மைந்தன் ஏவல் தலைக் கொண்டு,
அன்று ஒரு தேர்மேல் அதிரதரோடும்
சென்றனன் வெய்தின், தேவகி மைந்தன்,
துன்றிய செருவில் தூசி பிளந்தே.100.- சாத்தகி தருமன்கட்டளைப்படி செல்லுதல்.

என்று – என்று (தருமபுத்திரனுக்குத் தைரியஞ்) சொல்லி,-
தேவகிமைந்தன் – தேவகியின்மகனான சாத்தகி,- அறன் மைந்தன் ஏவல்
தலைக்கொண்டு – தருமபுத்திரனதுகட்டளையைத் தலைமேற்கொண்டு,- அன்று –
அப்பொழுது, ஒரு தேர்மேல்- ஒப்பற்றதொரு தேரின்மேலே, அதிரதரோடுஉம் –
(பல) அதிரத வீரர்களுடனே,- துன்றிய செருவில் தூசி பிளந்து – நெருங்கிய
போரிற்(பகைவரது) முற்படையை (த் தனது ஆயுதங்களினாற்) பிளந்துகொண்டு,
வெய்தினசென்றனன் – விரைவாகச்சென்றான்;

     தேவகி – வசுதேவனது மனைவி; கண்ணனைப்பெற்ற தாய்.
சத்தியகனதுபுத்திரனான சாத்தகியை ‘தேவகிமைந்தன்’ என்றது-
நற்குணநற்செய்கைகளிற் சிறந்த அத்தேவகி, தனது அருமைத் திருமகனான
கண்ணனிடம் பேரன்புடையவனும் அவனுக்குத் தம்பிமுறையாகின்றவனுமான
சாத்தகியினிடம் புத்திரவாஞ்சை வைத்திருந்தன ளென்பதுபற்றி யென்க. இனி,
தேவகிமைந்தன் கண்ணன் எனவேகொண்டு, சாத்தகிஎன எழுவாய்
வருவிப்பினுமாம்.  

விருதொடு முந்த விளங்கிய கொற்றக்
கிருதனை, ஆதிக் கேழலொடு ஒப்பான்
ஒரு தனுவும் கொண்டு, ஊர் பரிமாவும்
இரதமும் வில்லும் இமைப்பில் அழித்தான்.101.-சாத்தகி கிருதவன்மனைத் தோற்பித்தல்.

ஆதி கேழலொடு ஒப்பான் – ஆதிவராகமூர்த்தியோடு ஒப்பவனான
சாத்தகி,-விருதொடு-பிருதாவளிகளுடனே, முந்த விளங்கிய-முற்பட [எதிரிலே]
சிறப்பாகக்காணப்பட்ட, கொற்றம்-வெற்றியையுடைய கிருதனை-கிருதவன்மாவை,-
ஒருதனுஉம் கொண்டு-தனது ஒருவில்மாத்திரத்தைக் கொண்டு,-ஊர் பரிமாஉம்
இரதம்உம் வில்லுஉம் இமைப்பில் அழித்தான்-தேரை நடத்திக்கொண்டு
விரைந்துசெல்லுகிற குதிரைகளும் தேரும் வில்லும் கண்ணிமைப்பொழுதிலே
அழியச்செய்தான்;

     ‘ஆதிக்கேழல்’-விஷ்ணுவின் அம்சமான வராகமூர்த்தி: அப்பெருமான்
சிறிதும்சிரமமில்லாமற் பெரியஉலகமுழுவதையும் எளிதில் தாங்கும்
வல்லமையுடையனா யிருப்பதுபோல எப்படிப்பட்ட பெரும்போரையும்
அலட்சியமாகத் தாங்கும் ஆற்றலுடையவன் என்பார், ‘ஆதிக்கேழலொடொப்பான்’
என்றார்.  

பல் மக நூறாயிரவர், பரித் தே-
ரன் மிக, நூறாயிரவர் அழிந்தார்;
மன் மத வெங் கை மலைமிசை, வீரன்
தன் முன் மலைந்தான், தார்ச் சலசந்தன்.102.-பலரையும் அழித்துவந்த சாத்தகியைச் சலசந்தன் எதிர்த்தல்.

பரிதேரன்-குதிரைகள்பூண்ட தேரையுடைய சாத்தகி, மிக-
மேலிட்டுவருதலால்,-நூறு-பகையழிக்குந்தன்மையுள்ள, மக பல் ஆயிரவர்-பல
ஆயிரக்கணக்கான கண்ணன்மக்களும், நூறாயிரவர்-லக்ஷக்கணக்கான
மற்றைவீரர்களும், அழிந்தார்-சிதைந்தார்கள்; (இங்ஙனம் சிதைகையில்), தார்
சலசந்தன்-போர்மாலையையுடைய சலசந்தனென்னும் அரசன், மன் மதம் வெம்
கைமலைமிசை-மிகுதியானமதத்தையும் கொடியதுதிக்கையையு முடைய
மலைபோன்றயானையின்மேலே (வந்து), வீரன்தன் முன்மலைந்தான் – வீரனான
அச்சாத்தகி முன்னே பொருதான்; (எ – று.)

   கண்ணன்மக்களையே சாத்தகியின் மக்கள்போலக் கூறியது, தமையன்
பிள்ளைகளிடம் அவனுக்கு உள்ள உரிமையினா லென்க. மன்மதவெங்கைமலை –
பிறகுறிப்பு. பி-ம்: பன்முக நூறாயிரவர்.

தார்ச் சலசந்தன், சாத்தகி என்னும்
கார்ச் செலவு ஆய கணை மழையாலே,
போர்ச் சலம் இல்லாப் புகர் மலையோடு
மேல் சலம் எய்தி வெங் கனல் ஆனான்.103.-சலசந்தன் சாத்தகியின்முன் ஒடுங்குதல்.

தார் போர்மாலையையுடைய, சலசந்தன்-அந்தச் சலசந்தனானவன்,-
சாத்தகி என்னும் கார் செலவு ஆய-சாத்தகியென்கிற மேகத்தினின்று
வெளிப்பட்டுவந்தனவான, கணை மழையால் – பாணவர்ஷத்தால்,-போர் சலம்
இல்லா புகர் மலையோடு-போரிற்கலங்குதலில்லாத முகச்செம்புள்ளிகளையுடைய
மலைபோன்ற யானையுடனே, மேல் சலம் எய்தி – மிக்ககலக்கத்தையடைந்து,
வெம்கனல் ஆனான்-வெவ்வியநெருப்புப் போன்றவனானான்; (எ – று.)

     சலசந்தனிடத்து நெருப்பின் தன்மையையும், அவன்யானையினிடத்து
மலையின் தன்மையையும், சாத்தகியினிடத்து மேகத்தின் தன்மையையும், அவன்
பிரயோகிக்கிற அம்புத்தொகுதியினிடத்து அம்மேகம் சொரிகிற மழையின்
தன்மையையும் ஏற்றிக்கூறினார்; உருவகவணி, ‘மேற்சலமெய்து வெங்கனலானான்’
என்றபாடம் மேலே நீர்வந்துவிழப்பெற்ற கடுநெருப்புப்போலாயினானென
இனிதுபொருள்படும்.    

நாட்டம் இல்லா நரபதி மைந்தர்
ஈட்டம் ஆக ஈர்-இருவோர்கள்
கூட்டு அம்பு எய்ய, கொடு முனை வென்றான்,
வேட்டம் போன வெங் களிறு ஒப்பான்.104.-துரியோதனன் தம்பியர் நால்வரைச் சாத்தகி வெல்லுதல்.

நாட்டம் இல்லா நரபதி மைந்தர்-கண்களில்லாத அரசனான
திருதராஷ்டிரனது புத்திரர்கள், ஈர்இருவோர்கள்-நாலுபேர், ஈட்டம் ஆக-
ஒருதிரளாக(வந்து), கூட்டு அம்பு எய்ய-தொகுதியாகப் பாணங்களைப்
பிரயோகிக்க,-வேட்டம்போன வெம் களிறு ஒப்பான்-வேட்டையாடச் சென்ற
கொடிய ஆண்யானையைப்போன்றவனான சாத்தகி, கொடு முனை வென்றான் –
கொடிய (அவர்கள்) போரைச்சயித்தான்; (எ – று.)

     கூட்டு அம்பு எய் அ கொடு முனை என்று பிரித்து, தொகுதியான
அம்புகளை யெய்கிற அந்தக் கொடியபோர்க்களத்து என்றுமாம்.பி-ம்:நாட்டமிலாத,
ஈட்டமதாக.இதுவும், அடுத்தகவியும், 98 – ஆங்கவிபோன்ற கலிவிருத்தங்கள்

யாரும் போரில் எளிவர வீரம்
சாரும் சாபம் தன்னொடு நேமித்
தேரும் தானும் சென்றிடுவோனை,
கூரும் சாபக் குரு எதிர் கண்டான்.105.-இங்ஙன்பொருதுசெல்லுஞ் சாத்தகியைத் துரோணன் பார்த்தல்

யார்உம் போரில் எளிவர-(தன்னையெதிர்ப்பவர்) எல்லாரும்
யுத்தத்தில்எளிமையடையும்படி, வீரம் சாரும் சாபந் தன்னொடு-போர்த்திறம்
பொருந்தியவில்லுடனே, நேமி தேர்உம் தான்உம் சென்றிடுவோனை –
சக்கரவலிமையுள்ளதேரும் தானுமாக (த் தடையறச்) செல்பவனான சாத்தகியை,
கூரும் சாபம் குரு-மிக்கவில்வித்தையில்வல்ல துரோணாசாரியன், எதிர் கண்டான்-;
(எ – று.)-பி-ம்:ஆரும்போரிலழிதர.

ஏகல், ஏகல்! என்னுடன் இனி அமர் புரிந்து ஏகு!’ என்று,
ஆகுலம் படத் தகைந்தனன், அடற் சிலை ஆசான்;
மேகவண்ணனுக்கு இளவலும், ‘வேதியருடன் போர்
மோகரிப்பது தகுதி அன்று எனக்கு’ என மொழிந்தான்.106.-துரோணன் போர்க்குஅழைக்க, சாத்தகி மறுமொழிகூறல்.

‘ஏகல் ஏகல்-போகாதே; இனி-இப்பொழுது, என்னுடன் அமர்
புரிந்து-என்னோடு போர் செய்தே, ஏகு-(பின்பு அப்பாற்) செல்,’என்று –
என்றுசொல்லிக்கொண்டு, ஆகுலம்பட-ஆரவாரமுண்டாக, அடல் சிலை ஆசான்-
வலிய வில்லாசிரியனான துரோணன், தகைந்தனன்-(சாத்தகியைத்) தடுத்தான்;
(அப்பொழுது), மேகவண்ணனுக்கு இளவல்உம்-மேகம் போன்ற திருநிறமுடையனான
கண்ணனுக்குத் தம்பியாகியசாத்தகியும், ‘வேதியருடன் போர் மோகரிப்பது-
பிராமணருடனே கொடுமையாகப்போர்செய்வது, எனக்கு தகுதி அன்று-,’என
மொழிந்தான்-என்று சொன்னான்; (எ – று.)

     இங்ஙனம் உபசாரமாகக்கூறிய சாத்தகிவார்த்தையில், ‘நீ உன்சாதிக்கு
இயல்பில்உரியதல்லாத போர்த்தொழிலை மேற்கொண்டாயாயினும், க்ஷத்திரிய
தருமந்தவறாதவனான யான் துணிவுடையேனல்லேன்’ என்ற இகழ்ச்சியுந்தோன்றும்.

     இதுமுதற் பதினைந்து கவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றைமூன்றும் விளச்சீர்களு மாகிய கலிநிலைத்துறைகள்

இருவரும் தமது இரு சிலை எதிர் எதிர் குனித்தார்;
இருவரும் கொடும் பகழிகள் முறை முறை எய்தார்;
இருவரும் தம தேர் சிலை யாவையும் இழந்தார்;
இருவரும் பெரும்பொழுது அமர் திளைத்தனர், இளைத்தார்.107.- இருவரும் பொருது இளைத்தல்.

இருவர்உம்-(துரோணன் சாத்தகி யென்ற) இரண்டுபேரும், தமது இரு
சிலை – தம்வில்இரண்டையும், எதிர் எதிர் குனித்தார்-(ஒருவர்க்கொருவர்) எதிரிலே
வளைத்தார்கள்; இருவர்உம்-, கொடும்பகழிஉம்-கொடிய அம்புகளையும், முறை
முறை எய்தார்-(ஒருவர்மேல்ஒருவர்) மாறிமாறிப் பிரயோகித்தார்கள்;
இருவர்உம்-, தம் தேர் சிலை யாவைஉம் இழந்தார்-(தங்களுடைய) தேர் வில்
முதலியஎல்லாவற்றையும் (அப்போரில்எதிரம்புகளால்) இழந்தார்கள்; இருவரும்-,
பெரும்பொழுது அமர் திளைத்தனர்-நெடு நேரம் இடைவிடாது போர்செய்து,
இளைத்தார்-, (எ – று.)

     துரோணன் விடாது போர்தொடங்கியதனாற் சாத்தகியும் எதிரம்பு
தொடுக்கவேண்டியதாயிற்று பி-ம்: பகழிகளெதிரெதிர். அமர்விளைத்தனர்.

இளைத்து வேதியன் நிற்ப, மன்னவன் இளைப்பு ஆறி,
உளைத் தடம் பரித் தேரும் மற்று ஒன்று மேல்கொண்டு,
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன்,
கிளைத்த பல் பெருங் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான்.108.- சாத்தகி இளைப்புத்தீர்ந்து அப்பாற்செல்லுதல்.

வேதியன்-முனிவனாகிய துரோணன், இளைத்து நிற்ப-சோர்ந்துநிற்
கையில்,-மன்னவன் – அரசனாகிய சாத்தகி, இளைப்பு ஆறி – சோர்வுதீர்ந்து,
உளை தட பரிதேர்உம் மற்று ஒன்று மேல்கொண்டு – பிடரிமயிரையுடைய
பெரியகுதிரைகள்பூட்டிய வேறொருதேரி லேறி, வளைத்த வில்லொடுஉம்-(கையில்)
வளைத்துப்பிடித்த(வேறொரு) வில்லுடனே, மன் அணி கலக்கி –  பெரிய
(பகைவர்)சேனையைக்கலங்கச்செய்துகொண்டு, மேல்வருவோன் – மேலிடத்து
வருபவனாய்,-கிளைத்த பல்பெருங்கிரணனில் – நிறைந்துபெருகிய அநேகமான
பெரியஒளிகளையுடைய சூரியன்போல, வயங்கு ஒளி கிளர்ந்தான் – (இயல்பிலே)
விளங்குகிற தேககாந்தி மிக்குத்தோன்றினான்; (எ – று.)

     கிரகணம் பிடிக்கப்பட்ட சூரியன் அதனினின்று மீண்டபின்பு மிக்குவிளங்கி
இருளையழித்துக்கொண்டு மேற்செல்லுமாறுபோல, இளைப்படைந்த சாத்தகி
அவ்விளைப்புத்தணிந்தவுடன் பகைவர் சேனையைக் கலக்கிக்கொண்டு
விசேஷகாந்திவிளங்க மேற்சென்றன னென்று கருத்துக்கொள்க.

யானை தேர் பரி வீரர் ஈர்-ஒன்பது நிலத்துத்
தானையோடு துச்சாதனன் அடுத்து, எதிர் தடுத்தான்;
சோனை மேகம் ஒத்து இவன் பொழி தொடைகளால், கலங்கி,
பூனைபோல் அழிந்து, இரு பதம் சிவந்திடப் போனான்.09.-துச்சாசனன் சேனையுடன் சாத்தகியை யெதிர்த்துத் தோற்றல்.

யானை-யானைகளும், தேர்-தேர்களும், பரி-குதிரைகளும், வீரர் –
காலாள்வீரர்களும் ஆகிய ஈர்ஒன்பது நிலத்து தானையோடு – பதினெட்டுத்
தேயங்களினின்றும் வந்த சதுரங்க சேனைகளுடனே, துச்சாதனன்-, எதிர் அடுத்து-
எதிரிலேவந்து நெருங்கி, தடுத்தான்- (சாத்தகியைத்) தடுத்து, சோனை மேகம்
ஓத்துஇவன் பொழி தொடைகளால் கலங்கி – விடாப்பெருமழை பொழியும்
மேகம்போன்றுஇச்சாத்தகி சொரிந்த அம்புகளினால் உறுதிநிலைகலங்கி,
அழிந்து-தோற்று, இரு பதம்சிவந்திட – (தனது) இரண்டுகால்களும் சிவக்க,
பூனைபோல் போனான் – பூனைபோல (ஒடுங்கித்தந்திரமாகத் தப்பியோடி)ச்
சென்றான்

இடையில் வந்துவந்து, எதிர்த்தவர் யாரையும் கடந்து,
புடை வரும் தனது அனீகினி நிழல் எனப் போத,
தடை அறும்படி தருக்குடன் சார் பெரும் பருவ
விடை நடந்தென நடந்தனன் விசயன் நின்றுழியே110.-சாத்தகி பலரையும் வென்று அருச்சுனனைச் சார்தல்.

(இங்ஙனந் துச்சாதனனை வென்ற சாத்தகி),- இடையில் வந்து
வந்துஎதிர்த்தவர் யாரைஉம் கடந்து – நடுவிலே மிகுதியாகவந்து
எதிர்த்தவர்களெல்லாரையும் வென்று,-புடை வரும் தனது அனீகினி நிழல் என
போத – பக்கங்களிலேவருகிற  தனதுசேனை நிழல்போல விடாமல்தொடந்துவர,-
தடை அறும்படி-தடையில்லாமல், தருக்குடன் சார் பெரும் பருவம் விடை நடந்து
என – களிப்போடு பொருந்திய சிறந்த காளைப்பருவத்தையுடைய எருது
சென்றாற்போல, விசயன் நின்ற உழிநடந்தனன்- அருச்சுனனுள்ள இடத்திற்
சென்றான்; (எ – று.)-அநீகம் – குதிரை முதலியவற்றின் கூட்டம்:அதனையுடையது
அநீகிநீ.

பின்னரும் கொடி முரசுடைப் பெருந்தகை வருந்தி,
முன்னம் நின்ற வாயுவின் மகன் முகனுற நோக்கி,
‘மன்னர் எண் படு வரூதினி வாரியின் நாப்பண்,
என்னர் ஆயினர், உம்பியும் எம்பெருமானும்?111, -இவ்விரண்டுகவியும்-குளகம்:பின்பு தருமன்
வீமனையும் ஏவுதலைத் தெரிவிக்கும்.

 பின்னர்உம் – (சாத்தகியை யனுப்பின) பின்பும்,-கொடி
முரசுஉடை பெருந்தகை – துவசத்திலே முரசவாத்தியவடிவத்தையுடைய
பெருமைக்குணமுள்ளவனான தருமபுத்திரன்,-வருந்தி -(அருச்சுனன்
விஷயத்திலுண்டான சங்கையால் முன்போல) வருத்தமடைந்து,-முன்னம் நின்ற
வாயுவின் மகன் முகன் உற நோக்கி-(தன்) எதிரில்நின்ற வாயுகுமாரானான
வீமசேனனுடைய முகத்தை அன்புபொருந்தப் பார்த்து,-‘மன்னர் எண் படு வரூதினி
வாரியின் நாப்பண் – அரசர்களுடைய பெருந்தொகைபெற்ற சேனையாகிய கடலின்
நடுவிலே, உம்பிஉம் எம்பெருமான்உம் – உனது தம்பியான அருச்சுனனும் எமது
தலைவனான கண்ணபிரானும், என்னர் ஆயினர் – எத்தன்மையரானார்களோ?
(எ – று)

தருமபுத்திரன், சாத்தகியைத் துணையனுப்பினபின்பும், கண்ணனது
பாஞ்சசன்னியமுழக்கம் கேட்கப்பட்டதனால், வீமனையும் அழைத்துத் துணை
செல்லச்சொல்லின னென்பதாம். 

தகல் அருந் திறல் சாத்தகிதன்னையும் விடுத்தேம்;
பகலும் மேல்திசைப் பட்டது; பாஞ்சசன்னியமும்
புகலுகின்றது, போர்முகத்து, அதிர் குரல் பொம்ம;
இகல் வலம் பட நீயும் அங்கு ஏகுதி’ என்றான்12. -இவ்விரண்டுகவியும்-குளகம்:பின்பு தருமன்
வீமனையும் ஏவுதலைத் தெரிவிக்கும்.

தகல் அருந்திறல் சாத்தகிதன்னைஉம் விடுத்தேம்-தகுதியுள்ள
அருமையான வலிமையையுடைய சாத்தகியையும் யாம் அனுப்பினோம்: பகல்உம்
மேல்திசை பட்டது – சூரியனும் மேற்குத்திக்கிற் சாயலுற்றது: பாஞ்சன்னியம்உம் –
(கண்ணனது) சங்கமும், போர்முகத்து- யுத்தகளத்திலே, அதிர் குரல் –
அதிர்ச்சியுண்டாக்குகிற பெருமுழக்கத்தை, பொம்ம புகலுகின்றது-மிகுதியாக
ஒலிக்கின்றது; இகல் வலம் பட – போரில் வெற்றியுண்டாக, நீஉம் அங்கு ஏகுதி –
நீயும் அவ்விடத்திற்குச் செல்வாய்,’என்றான்-என்று கட்டளையிட்டான்; (எ – று)

     112.-பாஞ்சஜந்யம் – வடசொல்: பஞ்சஜந னென்னும் அசுரனது எலும்பினா
லாகிய தென்று இதற்குக் காரணப்பொருள்: சங்கினுருவந்தரித்துச் சமுத்திரசலத்திற்
சஞ்சரித்துக்கொண்டிருந்த பஞ்சஜந னென்ற அசுரன், மேல்கடலிற்
பிரபாசதீர்த்தகட்டத்தில் ஒருகால் நீராடப்புக்க சாந்தீபினி முனிபுத்திரனைக்
கவர்ந்துகொண்டுபோய்விட, பின்பு சாந்தீபினிமுனிவனிடம் சகலசாஸ்திரங்களையும்
கற்ற கண்ணன் குருதட்சிணையாக அம்மகனை மீட்டுக்கொடுக்கப்பபுக்கபொழுது
கடலிற் பிரவேசித்து அந்தப்பஞ்சஜநனைக்கொன்று அவனது எலும்பாகிய
சங்கத்தைக்கைக் கொண்டன னென்க.

சொன்ன வார்த்தையும் பிற்பட முற்படத் தொழுது,
தன்னொடு ஒத்த தோள் வலியுடைத் தரணிபர் அநேகர்
மன்னு நால் வகைப் படையொடும் திரண்டு, இரு மருங்கும்
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர, போயினன், பெரியோன்.113. – அவ்வேவலின்படி வீமன் செல்லுதல்.

சொன்ன வார்த்தைஉம் பின் பட-(இங்ஙனம் தருமபுத்திரன்)
கட்டளைகூறின வார்த்தையும் பின்னாம்படி, முற்பட(-)விரைவாக, பெரியோன்-
வலிமையிற்பெரியவனான வீமன், தொழுது-(தருமபுத்திரனை) வணங்கி
(விடைபெற்று),-தன்னொடு ஒத்த தோள் வலி உடை தரணிபர் அநேகர்-தன்னோடு
மனமொத்தவர்களும் புயபலத்தையுடையவர்களுமான அரசர்கள் பலர், மன்னும்
நால்வகை படையொடுஉம் திரண்டு – மிகுதியான சதுரங்கசேனைகளுடனே, கூடி,
இருமருங்குஉம்-(தனது) இரண்டுபக்கங்களிலும், பின்உம் முன்உம்-(தனக்குப்)
பின்னேயும்முன்னேயும், மொய்த்து-நெருங்கி, உடன் வர-கூடவர, போயினன்-
சென்றான்; (எ – று.)

     ‘சொன்னவார்த்தையும் பிற்பட முற்படத்தொழுது போயினன்’-
முறையிலுயர்வுநவிற்சியணி. முற்படத் தொழுது – (தருமபுத்திரனது)
முன்னிலையிலே நமஸ்கரித்து என்றுங் கொள்ளலாம்.

கலிங்கர், மாகதர், மாளவர், கௌசலர், கடாரர்,
தெலுங்கர், கன்னடர், யவனர், சோனகரொடு சீனர்,
குலிங்கர், ஆரியர், பப்பரர், குச்சரர், முதலோர்
விலங்கினார்களை, விண் உற விலக்கி, மேல் விரைந்தான்.114.-வீமன் பல்தேயத்துவீரர்களை வென்றுசெல்லுதல்.

கலிங்கரும் ***கொப்பளதேசத்தவரும் முதலானவர்களாய்க்
குறுக்கிட்டவர்களை (இறந்து) வீரசுவர்க்கமடையும்படி ஒழித்துக்கொண்டு, (வீமன்),
அப்பால் (வியூகத்தினுள்)விரைவாசகச்சென்றான்

உரங்க வெங் கொடி உயர்த்த காவலன்தனக்கு இளையோர்,
துரங்கம் ஆதி கொள் பலர் பெருஞ் சேனையின் சூழ்ந்தோர்,
இரங்கும் ஆழ் கடல் பேர் உக இறுதியில் எறியும்
தரங்கம் நேர் என, இடைஇடை தனித்தனி தகைந்தார்.115.-துரியோதனன்தம்பியர்பலர் வீமனை இடைஇடையே தடுத்தல்.

துரங்கம் ஆதி கொள் – குதிரைமுதலியவற்றைக் கொண்ட,
பலபெருஞ்சேனையின்-பல பெரியசேனைகளினால், சூழ்ந்தோர்,
சூழப்பட்டவர்களாகிய, வெம்உரங்கம் கொடி உயர்த்த காவலன் தனக்கு
இளையோர்-பயங்கரமானபாம்புக்கொடியை உயர நிறுத்தின துரியோதனராசனது
தம்பியர்,-இரங்கும் ஆழ்கடல் பேருகம் இறுதியில் எறியும் தரங்கம்  நேர் என-
ஒலிக்கின்ற  ஆழ்ந்த கடல்மகாகற்பமுடிவுகாலத்தில் (உலகையழிக்குமாறு) வீசுகிற
அலைகள் (தமக்கு)ஒப்பென்னும்படி, இடை இடை, தனி தனி தகைந்தார் –
(வீமசேனனை) நடுவிலேநடுவிலே தனித்தனியே தடுத்தார்கள் (எ-று.)-உரங்கம்-
உரகம் என்பதன்விகாரம்.’பேருகவிறுதி’ என்பது-பிரமனது ஆயுளின்முடிவை;
ஊழிக்காலத்துப்பொங்கியெழும்பெருங்கடலினலைகளை உவமை கூறியதனால்,
அவர்களுடைய சேனைப்பெருக்கம்விளங்கும்.

முல்லை, மல்லிகை, உற்பலம், குமுதம், மா முளரி,
பல்லம், வாள், அயில், சூலம், என்பன முதல் பகழி
எல்லை இல்லன, இடையறா வகை தொடுத்து எதிர்ந்தார்,
வில் விதங்களில் யாவையும் பயின்ற கை விறலோர்.116.- அவர்கள் வீமன்மேற் படைக்கலம் வழங்குதல்.

வில் விதங்களில் – விற்போர் வகைகளிலே, யாவைஉம் பயின்ற –
எல்லாவற்றையும் பழகித்தேர்ந்த, கை விறலோர்-கைத்திறமையை
யுடையவர்களானஅத்துரியோதனனதுதம்பிமார்,-முல்லை மல்லிகை உற்பலம்
குமுதம் மா முளரி -முல்லை முதலியவற்றின் அரும்புபோன்ற முனையையுடைய
அம்புகளும், பல்லம் -பல்லமென்னும் அம்புவிசேடங்களும், வாள் – வாளும்,
அயில் – வேலும், சூலம் -சூலமும், என்பன முதல்- என்கிற இவை முதலான,
பகழி – ஆயுதங்களை, எல்லைஇல்லன-அளவில்லாதனவாக, இடை அறா வகை
தொடுத்து – இடைவிடாமல்மேன்மேற் பிரயோகித்துக்கொண்டு, எதிர்ந்தார் –
(வீமனை) எதிரிட்டார்கள்;

     ‘முல்லை’ முதலியன-அந்தந்தஅரும்புபோலக் கூர்நுனி யமைக்கப்பட்ட
அம்புகளை யுணர்த்தின, முளரி-, “தாமரைத்தலையவாளி” என்றார் கம்பரும்;
இது – வடமொழியில் ‘நாளீகாஸ்த்ரம்’ எனவும், தமிழில் ‘மொட்டம்பு’ எனவும்படும்.
பகழி என்ற அம்பின்பெயர் – இங்கு, ஆயுதமென்றமாத்திரமாய் நின்றது; சிறப்புப்
பெயர், பொதுப்பொருளின்மேலது.  

விந்தன் விந்தரன் இருவரும், மேலிடு முனையில்,
தம்தம் வாசியும், தேர் விடு பாகரும், தாமும்
அந்தரம்தனில் தலைகள் போய் முகில்களை அலைப்ப,
சிந்து சோரி போய்ப் பெருங் கடல் அலைத்திட, சிதைந்தார்117.-அவர்களில் விந்தனும் விந்தரனும் இறத்தல்.

விந்தன் விந்தரன் இருவர்உம் – (அத்துரியோதனன் தம்பிமாருள்)
விந்தன் விந்தரன் என்ற இரண்டுபேரும்,- மேலிடு முனையில் – மிக்குச் செய்த
போரில்,-தம் தம் வாசிஉம் தேர் விடு பாகர்உம் தாம்உம் – தம்தம்முடைய
தேர்க்குதிரைகளும் தேர்செலுத்துஞ் சாரதிகளும் தேர்வீரர்களான தாமுமாக,-
தலைகள் அந்தரந்தனில் போய் முகில்களை அலைப்ப- தலைகள் (துணிபட்டு
மேலெழும்பிச் சிதறி) ஆகாயத்திற் சென்று மேகங்களைச் சிதறடிக்கவும், சிந்து
சோரிஅம் பெருங் கடல்அலைத்திட-(உடம்பினின்று) விழுகின்ற இரத்தம் அழகிய
பெரியகடலை(ச் சென்று) கலக்கவும், சிதைந்தார் – அழிந்தார்கள்; (எ – று.)

     விந்தன் விந்தரன் என்பவர்கள் செய்த போரில் வீமனால் தம்குதிரைகளும்
பாகரும் அழியத் தாமும் அழிந்தன ரென்பதாம். ‘இருவரும், வாசியும் பாகருந்
தாமும் சிதைந்தார்’ – மிகுதியினால் உயர்திணைமுடிபுகொண்ட திணைவழுவமைதி.
இவர்கள்கொடுமை தோன்ற, தலைவேறு உடல்வேறான பின்பும் வானத்திற் சென்று
மேகங்களை யலைத்தலையும் நெடுந்தூரஞ்சென்று கடலையலைத்தலையும்
கூறினரென்க. பி-ம்: சோரிபோய்.  

போர்க்கு முந்துறு தேரினான் குண்டலபோசி,
தீர்க்கலோசனன், திண் திறல் சித்திரசேனன்,
மார்க்கம் நேர்பட, விலங்கி, மா மறலி நேர் வரினும்
தோற்கலாதவர் மூவரும், தம் உயிர் தோற்றார்.118.- அவர்களில் குண்டலபோசி முதலிய மூவர் இறத்தல்.

போர்க்கு முந்துறு தேரினான்-சண்டைக்குமுற்பட்டு வருகிற
தேரையுடையவனான, குண்டலபோசி – குண்டலபோசியென்பவனும்,
தீர்க்கலோசனன்- தீர்க்கலோசனனென்பவனும் திண் திறல்-மிக்கவலிமையையுடைய,
சித்திரசேனன்-சித்திரசேனனென்பவனும், (ஆகிய), மா மறலி நேர் வரின்உம்
தோற்கலாதவர்-சிறந்தயமன் எதிர்த்து முன்வந்தாலும் தோல்வியடையாதவர்களான,
மூவர்உம்-(துரியோதனன் தம்பிமார்) மூன்றுபேரும்,- மார்க்கம் நேர்பட விலங்கி-
(வீமன்செல்லும்)வழியிலே எதிராகத் தடுத்து, தம் உயிர் தோற்றார்-தமதுஉயிரை
யிழந்தார்கள்;(எ -று.)

     தீர்க்கலோசநன் – நீண்ட கண்களையுடையவன்; சித்திரஸேநன்-வியக்கத்தக்க
சேனையையுடையவன்: காரணப்பெயர்.     

சேர முப்பது குமாரர்கள், சென்று அமர் மலைந்தோர்,
ஓர் ஒருத்தருக்கு ஓர்ஒரு சாயகம் உடற்றி,
சூரன் மெய்த் துணை நோதகும்படி உடன் தொலைத்தான்;-
மாருதச் சுதன் வல்ல வில் ஆண்மை யார் வல்லார்?119.-அவர்களில் மற்றும் முப்பதுபேர் இறத்தல்.

சேர சென்று அமர் மலைந்தோர் – ஒருசேரஎதிர்வந்து போரை
மிகுதியாகச்செய்தவர்களான, முப்பது குமாரர்கள்-(திருதராட்டிர)புத்திரர்
முப்பதுபேர்களுள்,  ஓர் ஒருத்தருக்கு- ஒவ்வொருத்தருக்கும், ஓர் ஒரு சாயகம்-
ஒவ்வோர் அம்பை, உடற்றி – வலிமையோடு எய்து, சூரன் மெய் துணை
நோதகும்படி – சூரனான துரியோதனனது உடற்காவலாகவுள்ள அத்தம்பிமார்கள்
வேதனைமிகும்படி, உடன் தொலைத்தான் – (அவர்களை) ஒருசேர அழித்தான்;
மாருதன் சுதன் வல்லவில் ஆண்மை வல்லார் யார்-வாயுகுமாரனான வீமன்
தேர்ந்தவிற்போர்த்திறத்தைத் தேர்ந்தவர் (வேறு) யார் உள்ளார்? (எ – று.)

     ‘சூரன்மெய்த்துணைநோதகும்படி’ என்பதற்கு- (அவர்கள்சூரிய
மண்டலத்தைப்பிளந்துகொண்டு வீரசுவர்க்கஞ்செல்லுதலால்) சூரியனுடைய
உடம்பாகிய உறுப்புநோவுமிகும்படி யென்றும் உரைக்கலாம்.  

ஆயு அற்றவர் சுயோதனன் இளைஞர் ஏழ்-ஐவர்
வாயு புத்திரன் வாளியால் ஆர் உயிர் மடிய,
சாய்தலுற்றது, சடக்கெனத் தரணிபன் வியூகம்-
தேயு ஒத்து இவன் சேறலும், திமிரம் நேர் எனவே.120. – கௌரவசேனை சிதைத்தல்.

இவ்வாறு), சுயோதனன் இளைஞர் ஏழ்ஐவர் – துரியோதனனது
தம்பிமார் முப்பத்தைந்துபேர், வாயுபுத்திரன் வாளியால் – வீமசேனனது
பாணங்களால், ஆயு அற்றவர்-ஆயுளொழிந்தவர்களாய், ஆர் உயிர் மடிய –
அரியஉயிரிறக்க,- இவன்-வீமன்,  தேயு ஒத்து – அக்கினிபோன்று, சேறலும் –
கொடுமையாகச் சென்றவளவிலே,-தரணிபன் வியூகம் – துரியோதனராசனது
படைவகுப்பு, திமிரம் நேர் எனஏ-(அந்நெருப்பினொளியின் முன்பட்ட) இருள்
(தனக்கு) உவமை யென்னும்படி, சடக்கென சாய்தல் உற்றது-விரைவாக
அழிவடைந்தது; (எ – று.)-துரியோதனன் தம்பியர் முப்பத்தைவர் மடிய,
வீமன்முன்பகைவரணி சிதறித் றென்பதாம். 117-ஆம்பாடல் முதல் மூன்று
செய்யுளில்முப்பத்தைந்துபேர் கூறப்பட்டிருத்தல் காண்க.

ஏகுகின்றது கண்டு பெருங் கடல் ஏழும் மொண்டு விழுங்கி
அதிர்ந்து எழு
மேகம் அம்பு பொழிந்தென எங்கணும் வீசும் அம்பு
விரைந்து விரைந்திட,
‘யூகம் இன்று பிளந்து, தனஞ்சயனோடு இவன் புகுதந்திடின்,
நம் படை
ஆகுலம் படும்’ என்று தடஞ் சிலை ஆரியன் சமரந்தனில்
முந்தவே,121.-அதுகண்டு துரோணன் வீமனெதிரில் வருதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) ஏகுகின்றது கண்டு -(இங்ஙனம் வீமன்)  செல்லுகிறதைப்பார்த்து,-தட
சிலை ஆரியன் – பெரிய வில்வித்தையில் ஆசிரியனான துரோணன்,-‘பெரு கடல்
ஏழ்உம் – பெரிய ஏழு கடல்களையும், மொண்டு விழுங்கி- நிரம்பமுகந்து
உட்கொண்டு, அதிர்ந்து-ஆரவாரித்துக்கொண்டு, எழு-(வானத்தில்) எழுகிற, மேகம்-,
அம்பு பொழிந்து என- நீரைப்பொழிந்தாற்போல, எங்கண்உம்-எல்லாவிடங்களிலும்,
வீசும் – வலிவாகப் பிரயோகிக்கிற, அம்பு – பாணங்கள், விரைந்து விரைந்திட –
வெகுவேகமாகச் செல்ல, இவன் – இவ்வீமன், இன்று – இப்பொழுது, யூகம் – (நமது)
படைவகுப்பை, பிளந்து – பிளந்திட்டு, தனஞ்சயனொடு புகுதந்திடின் – உட்புகுந்து
அருச்சுனனுடன் சேர்ந்திட்டால், நம்படை ஆகுலம் படும்-நமதுசேனை
கலக்கமடைந்துவிடும்,’ என்று- என்றுஎண்ணி, சமரந்தனில் முந்த-போரில் (முன்)
வர,-(எ – று.)-“அந்தணன் வந்தது கண்டு” என மேல் தொடரும்.

     எதிர்ப்பவரையெல்லாம் அழித்துக்கொண்டு வீமன் வருதலால் துரோணன்,
இவன் அம்புசொரிந்து வியூகத்தைப் பேதித்துக்கொண்டு உட்பிரவேசித்து
அருச்சுனனோடு சேர்ந்துவிட்டாற் பின்பு எவராலும் வெல்லலாகாதாதலால்
நமதுசேனைக்குப் பெருங்கலக்கமுண்டாகுமென்று கருதி அங்ஙனஞ்செல்லாதபடி
தடுத்தற்கு இடையில்வந்து எதிரிட்டனன் என்பதாம்.

     இதுமுதல் ஒன்பதுகவிகள் – முதற்சீர் தேமாச்சீரும் மற்றைமுன்றும்
கூவிளச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும், அஃதிரட்டிகொண்டது ஓரடியாகவும்,
அவ்வடிநான்குகொண்டு, நேரசை முதலான அரையடிக்கு ஒற்றொழித்துப்
பதினோரெழுத்துப் பெற்றுவந்த சந்தக்கலிப்பாக்கள். ‘தான தந்தன தந்தன
தந்தனதான தந்தன தந்தன தந்தன’ என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்

ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி,
‘நலம் பெறு
நீதி அன்று, உனுடன் சமர் உந்திடல்; நீ பெருங் குரு; நின் கழல்
என் தலை
மீது கொண்டனன்’ என்று வணங்கவும், வேதியன் கைமிகுந்து
புகுந்து, எதிர்
மோதி அம்பு தெரிந்தனன்; வன் திறல் மூரி வெஞ் சிலையும்,
குனிகொண்டதே.122. – வீமன்வணங்கவும் துரோணன் தணியாமற் போர்தொடங்குதல்.

ஆதி அந்தணன் – பெரிய பிராமணனான துரோணன், வந்தது –
(தன்னெதிரில்) வந்ததை, கண்டு – பார்த்து, இகல் ஆனிலன் – வலிமையையுடைய
வாயுகுமாரனான வீமன், சினம் இன்றி – கோபமில்லாமல், (அவனைநோக்கி),
‘உனுடன் சமர் உந்திடல்-உன்னோடு (நான்) போர்செய்தல், நலம் பெறு நீதி அன்று
– நன்மைபெறும்படியான நியாயமன்று; (ஏனெனில்),- நீ பெருங் குரு – நீ (எனக்குச்)
சிறந்த ஆசாரியன்; (ஆதலால்), நின் கழல்  என் தலைமீது கொண்டனன் – உனது
திருவடிகளை எனது தலையின்மேற் கொண்டேன்’ என்று – என்றுசொல்லி,
வணங்கஉம் – நமஸ்கரிக்கவும்,-வேதியன் – பிராமணன், கைமிகுந்து –
(மாறுபாடொழியாமல்) வரம்பு கடந்து,  எதிர் புகுந்து மோதி – எதிரில்வந்து தடுத்து,
அம்பு தெரிந்தனன் – (சிறந்த) பாணங்களை (எடுத்துவிடுதற்கு) ஆராய்வானாயினான்;
(அப்பொழுது), வல் திறல் மூரி வெம்சிலைஉம் – மிக்க வலிமையையுடைய பழைய
கொடிய (அவன்) கைவில்லும், குனிகொண்டது – வளைந்தது; (எ – று.)

     வீமசேனன் பணிமொழிகூறி வணங்கவும், துரோணன் கைமிஞ்சி
அம்புகளைத்தேர்ந்தெடுத்தலும், வில்வளைத்தலுஞ் செய்தனனென்பதாம்.
ஆநிலன் -அநிலன்மகன்; வடமொழித்தத்திதாந்தநாமம். ஆதியந்தணன் –
நால்வகைவருணத்துள்ளும் முதலதானபிராமணவருணத்தானெனினுமாம். ‘சமர்செய்
திடல்’ என்றபாடம் சந்தத்துக்கொவ்வாது. பி-ம்: அம்புதெரிந்தன. 

வீரன் ஒன்றும் மொழிந்திலன்; வந்து முன் வீழ் சரங்கள்
விலங்கி, வயம் புனை
தேரினின்றும் இழிந்து, நடந்து, எதிர் சேர வந்து, செழுஞ்
சிலையின் குரு
ஊருகின்ற வயங்கு இரதம்தனை ஓர்இரண்டு கரங்கொடு, வன்புடன் வாரி உந்த எறிந்தனன், வண் புயல் வானில் நின்றவர்
அஞ்சி ஒதுங்கவே.123.- துரோணன்தேரை வீமன் எடுத்தெறிதல்.

வீரன் – வீரனாகிய வீமன்,-ஒன்றுஉம் மொழிந்திலன்-(வாயினால்)
ஒன்றுஞ் சொல்லாமல்,-வந்து முன் வீழ்சரங்கள் விலங்கி-எதிரிலே வந்து
மேல்விழுகிற (துரோணனது) அம்புகளுக்கு(த் தந்திரமாக) விலகி, வயம் புனை
தேரினின்றும் இழிந்து-வெற்றியைக்கொண்ட (தனது) தேரினின்று இறங்கி, நடந்து
எதிர் சேர வந்து –  நடந்துகொண்டு எதிரிலே நெருங்கி வந்து,-செழுஞ் சிலையின்
குரு ஊருகின்ற வயங்கு இரதந்தனை –  சிறந்த வில்லாசிரியனான துரோணன்
ஏறிநடத்துகிற விளங்குகின்ற தேரை, ஓர் இரண்டு கரங்கொடு-(தனது)
ஒப்பற்றஇரண்டுகைகளாலும், வன்புடன் வாரி – வலிமையோடு ஒருசேர எடுத்து,
வள்புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்க – செழிப்பான மேகங்கள் சஞ்சரிக்கிற,
வானத்திலே நிற்கின்ற தேவர்கள் அஞ்சி விலகும்படி, உந்த எறிந்தனன் –
மேல்நோக்க வீசினான்; (எ – று.)

     கீழ்த் தான்கூறிய விநயவார்த்தை துரோணனால் அங்கீகரிக்கப்படாமல்
அலட்சியஞ்செய்யப்பட்டதனால் மீளவும் ஒன்றுங்கூறத்தொடங்கினானில்லை
யென்பதும், தொழில்செய்து திறங்காட்டுவதே தகுதியென்று கருதினானென்பதுந்
தோன்ற, ‘ஒன்று மொழிந்திலன்’ என்றார்.

நாக விந்தம் வளர்ந்து வளர்ந்து, அகல் நாகம் ஒன்றியது
என்று நடுங்கிட,
மேக பந்தி கலங்க எழுந்து, அது மீளவும் புவியின்கண் விழுந்தது;
பாகன் அங்கம் நெரிந்தது; நொந்தது, பார்முகம்; துளை விண்டன,
மண்டு உருள்;
வேக வெம் பரியும் தலை சிந்தின; வேதியன்தனது என்பும்
ஒடிந்ததே.124.-தேரும் துரோணனும் சிதைதல்.

விந்தம் நாகம்-விந்தியமலை, வளர்ந்து கிளர்ந்தது- வளர்ச்சிபெற்று
மேலெழுந்ததாய், நாகம் ஒன்றியது – தேவலோகத்தைச் சார்ந்திட்டது,’ என்று –
என்று எண்ணி, நடுங்கிட – (தேவர்கள்) மிக அஞ்சும்படியாகவும், மேக பந்தி
கலங்க- மேகவரிசை இடையிலே நிலைகுலையும்படியாகவும், அது-
அந்தத்துரோணன்தேர்எழுந்து – மேற்சென்று, மீளஉம் – பின்பு, புவியின் கண்
விழுந்தது – தரையிலேவிழுந்திட்டது; (அப்பொழுது), பாகன் அங்கம் –
சாரதியினுடைய உடம்பு, நெரிந்தது- நொருங்கிற்று; பார்முகம் – பாரினிடம்,
நொந்தது –  வலிமைகுலைந்தது; மண்டுஉருள் – வலிமைமிக்க தேர்ச்சக்கரங்கள்,
துளை விண்டன-துளைபிளந்தன; வேகம்வெம் பரிஉம்-வேகத்தையுடைய கொடிய
குதிரைகளும், தலைசிந்தின-தலைசிதறின;வேதியன் தனது என்பு உம் –
துரோணாசாரியனது எலும்பும், ஒடிந்தது – முறிந்தது;(எ – று.)-பி-ம்:
வளர்ந்துவளர்ந்தகல். பாரமுந்துளை.

     முன்னொருகாலத்தில் நாரதமாமுனிவன் விந்தியகிரியினிடஞ் சென்று
‘மகாமேருமலை, மிகவுயர்ந்திருப்பதனாலும், சூரியன் முதலியகிரகங்கள் தன்னை
வலம்வரப் பெறுதலாலும், தன்னிடந்தேவர்கள் பலர் வசிப்பதனாலும், மற்றும்பல
காரணங்களினாலும், மிக்கசெருக்குக்கொண்டிருக்கின்றது’ என்று கலகஞ்செய்ய,
உடனே விந்தியமலை மேருமலையோடு மாறுபட்டு அதனினும் பெரியதாக வளர்ந்து
வானத்தையளாவி அங்குச் சஞ்சரிக்கிற சூரியசந்திராதிகளுடைய கதியையுந் தடுத்து
அப்பாற்செல்லவுந்தொடங்க, அதுகண்டு அஞ்சிய தேவர்கள்
அகஸ்தியமகாமுனிவனைச்சரணமடைந்து அவனைக் கொண்டு, அம்மலையை
அடக்கினார்களென்ற சரித்திரத்தைக் கருத்திற்கொண்டு, தேர் மேல்வருதலை
நோக்கித் தேவர்கள் அவ்விந்தியமலை மீண்டும் வளர்ந்தெழுந்து வருகின்றதெனக்
கருதி அஞ்சுகின்றன ரென்றார், தேரைக்கண்டு விந்தியமலையென்று
மாறுபாடாகவுணர்ந்ததாகக் கூறினது – மயக்கவணி. பார் – தேரின் பரப்புப்பலகை;
“தேரின்பரப்பும் புவியும் பாரெனல்.”      

வீழ, இங்கும் அவன்தனை வென்று, இவன் மேல் நடந்துழி, எண்                    திசையும் படை
சூழ வந்து வளைந்தனர்,-அந்தக தூதர் தங்களினும் பெரு
வஞ்சகர்,
ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடுங் கடல்
ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று,
சினம் கொடே.125.-பலவீரர்கள் வீமனை வளைதல்.

இங்கு – இவ்வாறு, வீழ – கீழ்விழும்படி, அவன்தனைஉம்
வென்று -அந்தத்துரோணனையும் சயித்து, இவன் – வீமன், மேல் நடந்த உழி –
அப்பாற்சென்றபொழுது,- அந்தக தூதர் தங்களின்உம் பெரு வஞ்சகர் –
யமதூதர்களைக்காட்டிலும் வலிமைமிக்க வஞ்சனையுடையவரான (அநேக) வீரர்கள்,-
ஏழு மண்டலம்உம் – ஏழுதீவாகவுள்ள உலகமுழுவதும், புதையும் பரிசு-
அழுந்தும்படி, ஏறுகின்ற – பொங்கிமேலெழுகிற, தரங்கம்-அலை
களையுடைய, நெடுங்கடல் – பெரியகடலினால், ஊழிஉம் பெயர்கின்றது எனும்
படி -கற்பம் மாறுகிறதென்று  சொல்லும்படி, ஓதை விஞ்ச – ஆரவாரம்
அதிகப்பட,-உடன்று –  பகைத்து, சினம் கொடு –  கோபங்கொண்டு, எண்
திசைஉம் -எட்டுத்திக்குகளிலும், படை சூழ – சேனைகள் சூழ வந்து வளைந்தனர்-வந்து(வீமனைச்) சூழ்ந்துகொண்டார்கள்;-(எ – று.)

     பிரளயப்பெருங்கடலின் பேரொலிக்கு ஒப்பான ஆரவாரத்தைச்செய்துகொண்டு
கொடிய பலவீரர்கள் சேனைகளோடும் வீமனை ஒருங்குசூழ்ந்தன ரென்க. அந்தகன்
– (பிராணிகட்கெல்லாம்) அழிவைச் செய்பவனென்று பொருள், கடலூழியும் –
கடலும்ஊழியும் என்று கூறுவாரு முளர்

காரில் ஐந்து மடங்கு புலம்பின, காகளம்; சுரி சங்கு முழங்கின;
பேரி பம்பின; கொம்பு தழங்கின; பேர் இயங்கள் பெயர்ந்து கறங்கின; தூரியும், பொருது அஞ்சி அவந்தியர் பூபனும், புறம் அன்று
இட, வெங் கணை
மாரி சிந்தி மலைந்தனன், வெஞ் சினம் மாற, முன் பவனன்
திருமைந்தனே.126.-பூரியையும் அவந்திராசனையும் வீமன் வெல்லுதல்.

அப்பொழுது),-காரில் ஐந்து மடங்கு –  மேகங்களினும் ஐந்துபங்கு
அதிகமாக, காகளம் – எக்காள மென்னும் ஊது கருவி, புலம்பின – ஒலித்தன; சுரி
சங்கு-உட்சுழிந்த சங்கவாத்தியங்கள், முழங்கின – ஒலித்தன;  பேரி – பேரிகைகள்,
பம்பின-ஒலித்தன; கொம்பு – ஊதுகொம்புகள், தழங்கின – ஒலித்தன;  பேர்
இயங்கள் – பெரிய (மற்றும்பல) வாத்தியங்கள், பெயர்ந்து கறங்கின-
கிளர்ந்துஒலித்தன; பூரிஉம் – பூரி என்னும் அரசனும், அவந்தியர் பூபன்உம் –
அவந்திதேசத்தவரரசனும், பொருது-(தன்னுடன்) போர்செய்து, அஞ்சி – பயந்து,
அன்று புறம் இட – அப்பொழுதே முதுகுகொடுக்கும்படி, பவனன் திரு மைந்தன்-
வாயுவினது சிறந்தகுமாரனான வீமன், வெம் கணை மாரி சிந்தி – கொடிய
அம்புமழையைப்பொழிந்து, வெம் சினம் மாற – (தனது) கடுங்கோபம் அடங்க,
முன்- எதிர்நின்று, மலைந்தனன்-போர்செய்தான்;

பொருட்பின்வருநிலையணி,’ 
‘புலம்பல்’ என்பது தொனித்த லென்னும்
பொருளதாதலை “முழங்கல் தழங்கல் கத்தல் புலம்பல்” என்ற பிங்கலந்தையினாலும்
உணர்க. பூபன்-பூமியைக் காப்பவன்; வடசொல். 

மாசுணம் தலை நொந்து சுழன்றன; மாதிரங்கள் மருண்டு கலங்கின;
வீசு தெண்திரை அம்பு வெதும்பின; மேலை அண்டமும்
விண்டு பகிர்ந்தன;
பூசலின்கண் உடன்று கழன்றவர் போர் தொடங்க நினைந்து
புகுந்தனர்,
ஆசுகன் திருமைந்தனுடன் சுடர் ஆதபன் குமரன் சமர் முந்தவே.127.-வீமனுடன் கர்ணன் போர்செய்யத் தொடங்குதல்.

ஆசுகன் திரு மைந்தனுடன் – வாயுவினது சிறந்த குமாரனான
வீமனோடு, சுடர் ஆதபன் குமரன் – பிரகாசத்தையுடைய சூரியனது குமாரனான
கர்ணன், சமர் முந்தஏ-போரில் எதிர்த்தவளவிலே,-பூசலின்கண் உடன்று கழன்றவர்-
போரில் (வீமனோடு) எதிர்த்துத் தப்பியோடிப் போனவர்கள், போர் தொடங்க
நினைந்து புகுந்தனர் – (வீமனுடன் மீண்டும்) போர் செய்ய எண்ணி
வந்துசேர்ந்தார்கள்; (அவர்களின் அதிபாரத்தால்), மாசுணம் – (பூமியைத் தாங்குகிற
ஆதிசேஷள் முதலிய)  பெரும்பாம்புகள், தலை நொந்து சுழன்றன – தலைவருந்திச்
சுழலலாயின; மாதிரங்கள் – திகுக்கள், மருண்டு கலங்கின – (இது என்னோ என்று)
திகைத்துக் கலக்கமடைந்தன; வீசு தெள் திரை அம்பு-வீசுகின்ற தெளிவான
அலைகளையுடைய கடல்கள், வெதும்பின – (இவர்களது உக்கிரத்தன்மையை
நோக்கித்தாம்) தாபங்கொண்டன; மேலை அண்டம்உம்- – அண்டகோளத்தின்
மேலிடங்களும், விண்டு பகிர்ந்தன – (இவர்களது ஆரவாரத்தாலாகிய அதிர்ச்சியால்)
வெடிபட்டுப் பிளவுற்றன;  (எ – று.)-ஒருங்கு பலதொழில்களின் நிகழ்ச்சி கூறியது,
கூட்டவணி யென்னும் ஸமுச்சயாலங்காரம்

கோபம் விஞ்சினர், விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள்
தெரிந்தனர் கொண்டனர்;
சாபமும் குனிதந்து, எதிர் உந்தினர், தாரை வெம் பரி
தங்கு இரதங்களும்;
நீபம் எங்கும் மலர்ந்தென, மண்டு செந்-நீர் பரந்திட, நின்று
முனைந்து எழு
பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர்; பூரம் எங்கும் அலைந்து
புரண்டவே.128.- வீமனும் கர்ணனும் பொருதல்.

(அவ்விருவரும்)- கோபம் விஞ்சினர் – கோபம் மிக்கவர்களாய்,-
விஞ்சை வரம் பெறு – மந்திரபலத்துடனே வரமாகப்பெற்ற, கூர்சரங்கள் – கூரிய
அம்புகளை, தெரிந்தனர் கொண்டனர் – ஆராய்ந்து எடுத்துக்கொண்டு, சாபம்உம்
குனிதந்து – விற்களையும் வளைத்து, தாரை வெம் பரி தங்கு இரதங்கள் உம் –
(பலவகை) நடைகளையுடைய கொடிய குதிரைகள் பூட்டிய (தங்கள்) தேர்களையும்,
எதிர் உந்தினர்-(ஒருவர்க்கொருவர்) எதிரிலே செலுத்தினார்கள்; நீபம் எங்கும்
மலர்ந்து என-செங்கடப்ப மரங்கள் எவ்விடமும் மலர்ந்தாற்போல, மண்டு செம்
நீர்பரந்திட-மிக்க இரத்தம் எங்கும்பரவ, நின்று முனைந்து எழு – நிலைநின்று
போர்செய்து விளங்குகிற, பூபர்-(அவ்விரண்டு) அரசரும், தங்கள் உடம்பு
சிவந்தனர்-(அவ்விரத்தப் பெருக்கினால்) தங்கள் உடம்பு செந்நிறமடையப்
பெற்றார்கள்;(அவர்களுடம்பினின்று), பூரம்-(இரத்தப்)பெருக்குக்கள், எங்குஉம்-
எவ்விடங்களிலும்,அலைந்து- அலைவீசிக்கொண்டு, புரண்ட-வழிந்தோடின;
(எ – று.)

     தாரையெனினும், கதியெனும் ஒக்கும்

மாருதன் புதல்வன் தொடும் அம்பினில் மா இரண்டும்
இரண்டும் விழுந்தன;
சோரும் வன் துவசம் தறியுண்டது; சூதனும் தலை சிந்தினன்;
முந்திய
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன; சேம வெங் கவசம்
துளை விஞ்சியது;
ஆர வெண்குடை அம்புலியும் பிறை ஆனது; அஞ்சல் இல்
நெஞ்சும் அழிந்ததே.129.-வீமனாற் கர்ணன் தேருடன் சிதைதல்.

(அப்பொழுது),-மாருதன் புதல்வன் தொடும் அம்பினில்-
வாயுகுமாரனான வீமன் பிரயோகித்த பாணங்களினால், மா இரண்டுஉம் இரண்டுஉம்
விழுந்தன – (கர்ணனது தேர்க்) குதிரைகள் நான்கும் இறந்துவிழுந்தன; சோரும் வல்
துவசம் தறியுண்டது-அசைந்தாடுந்தன்மையுள்ள வலிய கொடி முறிபட்டது; சூதன்உம்
தலை சிந்தினன்-தேர்ப்பாகனும் தலைசிதறினான்; முந்திய தேர்உம்-முற்பட்டுவந்த
இரதமும், உந்து உருள்உம்- (அதனை) நடத்துகிற சக்கரங்களும், துகள் கொண்டன-
பொடிபட்டன; சேமம் வெம் கவசம் – (உடம்புக்குப்)  பாதுகாவலாகவுள்ள வலிய
கவசம், துளை விஞ்சியது – துளைகள்மிகப்பெற்றது; ஆரம்வெள் குடை அம்புலிஉம்-
முத்துமயமான ஒற்றைவெண்கொற்றக்குடையாகிய சந்திரமண்டலமும், பிறை ஆனது
– (பிளவுபட்டுப்) – பிறைச்சந்திரன்போலக் குறைவடிவாயிற்று;  அஞ்சல் இல்
நெஞ்சுஉம் அழிந்தது-(எதற்கும்) அஞ்சு தலில்லாத (அவனது) மனமும்
மிகத்தளர்ந்தது; (எ-று.)-ஏ-ஈற்றசை;தேற்றமுமாம்.

அழிந்து கன்னனும், கால் விசையினில், இவன் அம்பினுக்கு
எட்டாமல்,
வழிந்து போதல் கண்டு, அடல் விடசேனன் அவ் வள்ளலுக்கு
எதிர் ஓடி,
இழிந்து, தன் பெருந் தட மணித் தேரின்மேல் ஏற்றலும்,
இவன் ஏறி,
கழிந்த நீர்க்கு அணை கோலுவான்போல், அவன் கண் எதிர்
உறச் சென்றான்.130.-கர்ணனுக்கு அவன்மகன் தன்தேரைக் கொடுத்தல்.

இவ்வாறு, கண்ணன்உம் – கர்ணனும், அழிந்து- (தேர்முதலியன)
அழியப்பெற்று, கால் விசையினில் – கால்களின் வேகத்தால், இவன் அம்பினுக்கு
எட்டாமல் வழிந்து போதல் – வீமனுடைய பாணங்களுக்கு இலக்காகாதபடி,
(வேகமாக) நழுவியோடிச் செல்லுதலை, கண்டு-பார்த்து, அடல் விடசேனன் –
வலிமையையுடைய (அவன் மகனான) விருஷசேனனென்பவன், அ வள்ளலுக்கு
எதிர் ஓடி-வண்மைக்குணமுடையவனான அக்கர்ணனுக்கு எதிரிலே விரைந்து
சென்று,இழிந்து-(தன்தேரினின்று) இறங்கி தன் பெருந் தட மணி தேரின்மேல் –
பெருமையுள்ளதும் பெரியதுமான அழகிய தனது தேரின்மேல், ஏற்றலும்-(அவனை)
ஏற்றிக்கொண்டவளவிலே, இவன்-கர்ணன் ஏறி-அத்தேரிலேறி, கழிந்த நீர்க்கு
அணைகோலுவான் போல்- கடந்துசென்ற நீர்ப்பெருக்கைத் தடுப்பதற்கு
அணைகட்டமுயல்பவன் போல, அவன் கண் எதிர் உற சென்றான்-அவ்வீமனது
கண்களுக்கு எதிராக (மீண்டும்) சென்றான்; (எ – று.)

     விடசேனன் – கர்ணனது குமாரன், பெருகிச்சென்றவெள்ளத்துக்குத்
தடுத்துவைத்தற்பொருட்டு பின்பு அணைகோலுதலிற்சிறிதும்பயனில்லாமைபோல,
மிகமேலிட்டுவந்திட்ட வீமனைக்கர்ணன் எதிர்த்தல் சிறிதும்பயன்படாது முடிதலால்,
‘கழிந்த நீர்க்கு அணைகோலுவான்போல அவன் கண்ணெ திருறச்சென்றான்’
என்றார்; கழிந்தநீர்க்கு அணைகோலுதல் – வடமொழியில் ‘கதஜலஸேதுபந்தம்’
எனப்படும்.

     இதுமுதல் பதின்மூறு கவிகள் கீழ்முப்பத்துநான்காங் கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

சென்று மீளவும் வீமனோடு எதிர்ந்து, வெஞ் சிலை அமர்
புரிந்து, அந்தக்
குன்றுபோல் நெடுந் தேரும் நுண் துகள் பட, குலைந்து வென்
கொடுத்து ஓட,
கன்றி நாக வெங் கொடியவன், கண்டு தன் கண் நிகர்
இளையோரை,
‘ஒன்றி நீர் விரைந்து உதவும்’ என்று, இருவரை ஒரு
கணத்தினில் ஏவ,131.- கர்ணன் தோற்கவே துரியோதனன் தம்பியரிருவரை
உதவிபுரிய ஏவுதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) (கர்ணன்), மீளஉம் சென்று – மறுபடியும் போய், வீமனோடு எதிர்ந்து
– வீமனுடன் எதிரிட்டு, வெம் சிலை அமர் புரிந்து – கொடிய விற்போரைச்செய்து,
அந்த குன்று போல் நெடுந் தேர்உம் நுண் துகள்பட – மலைபோன்ற பெரிய
அந்தத்தேரும் (முந்தியதேர்போலவே) சிறுபொடிகளாய் விட, குலைந்து –
நிலைகுலைந்து, வென் கொடுத்து ஓட – புறங்கொடுத்துஓடிப்போக,-வெம் நாகம்
கொடியவன் – பயங்கரமான பாம்புக்கொடியையுடையவனாகிய துரியோதனன், கண்டு
– (அதனைப்) பார்த்து, கன்றி – கோபித்து, தன் கண் நிகர் இளையோரை இருவரை
– தனதுகண்களைப்போன்ற அருமைத்தம்பிய ரிரண்டுபேரை, நீர் விரைந்து ஒன்றி
உதவும் என்று – ‘நீங்கள்வேகமாகச்சென்று சேர்ந்து (கர்ணனுக்குத்) துணை
செய்வீர்கள்’ என்றுசொல்லி, ஒரு கணத்தினில் ஏவ – ஒருக்ஷணப் பொழுதிலே
செலுத்த,- (எ -று.)-“இருவரும் கடிதுஉற்று சிலைவாங்கி அமர்புரிந்து உடல்
சிதைந்துவானிடைச் சென்றார்” என வருங் கவியோடு முடியும்.

கன்னனைக் கடிது உற்று, இருவரும் மதுகயிடவர் எனத் தக்கோர்,
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர், வரி சிலை உற வாங்கி,
அந் நிலத்தினில் அவனுடன் நெடும் பொழுது அமர் புரிந்து,
அவன் கையின்
செந் நிறக் கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து, வானிடைச்
சென்றார்.132.- அவ்விருவரும் வீமனாற் கொல்லப்படுதல்

மது கயிடவர் என தக்கோர்-மது கைடபன் என்ற இரண்டு அசுரர்க
ளென்று (ஒப்புமையாற்) சொல்லத்தக்கவர்களான, இருவர்உம்-(கொடிய வலிய
அத்துரியோதனன்  தம்பியர்) இரண்டுபேரும்,-கன்னனை கடிது உற்று – கர்ணனை
விரைவாக அடுத்து,-மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் – அரசர்கட்குச்
சிங்கம்போன்ற வீமசேனனுக்கு எதிரிலே, வரி சிலை உறவாங்கி – கட்டமைந்த
வில்லை நன்றாக வளைத்து, அ நிலத்தினில்- அவ்விடத்திலே, அவனுடன் –
அவ்வீமனுடன், நெடும்பொழுது அமர்புரிந்து-வெகுநேரம் போர்செய்து, அவன்
கையின் செம் நிறம் கொடும் பகழியால் – அவன் கையினாலேவப்பட்ட
சிவந்தநிறமுடைய கொடிய அம்புகளினால், தம் உடல் சிதைந்து – தங்களுடைய
உடம்பு அழிபட்டு, வானிடை சென்றார் – வீரசுவர்க்கத்துக்குப் போனார்கள்;
(எ -று.)

     மகாபலசாலிகளான மதுகைடபரென்ற அசுரரிருவரும், ஆதி
சிருஷ்டிகாலத்தில்தோன்றியவர்; இவர்கள் செருக்கிக்கடலிலிழிந்து திருமாலை
யெதிர்த்துப் பெரும்போர்புரிய இவர்களை அப்பெருமான் தனதுதுடைகளினால்
இடுக்கிக் கீழேதள்ளிக் கால்களால் மிதித்துத் துவைத்துக் கொன்றான். (இவர்களது
உடம்பினின்று வெளிப்பட்ட கொழுப்பினால் நனைந்தமைபற்றி, பூமிக்கு ‘மேதிநீ’
என்று ஒருபெயர் வழங்கும்.)  

தனது கண் எதிர் இருவரும் அழிந்தபின், தபனன்
மைந்தனும் நொந்து,
கன துரங்கமும் முடுகு தேர் வயப் படைக் காவலன்
முகம் நோக்கி,
‘உனது தம்பியர் இருவரைச் செற்றவன் முடித் தலை ஒடியேனேல்,
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன்’ என்று ஏறினான்,
ஒரு தேர்மேல்.133.-பின்பு கர்ணன் வீமனைக்கொல்வதாகச் சபதஞ் செய்தல்.

தனது கண் எதிர் – தன்னுடைய கண்களுக்கு எதிரிலே,
இருவர்உம்அழிந்த பின் – (தனக்குத் துணையாகவந்த) அத்துரியோதனன் தம்பிய
ரிரண்டுபேரும் (வீமனால்) இறந்தவுடனே, தபனன் மைந்தன்உம் – சூரியகுமாரனான
கர்ணனும், நொந்து – வருந்தி, கன துரங்கமம் முடுகு தேர் வய படை காவலன்
முகம் நோக்கி – சிறந்த குதிரைகள் விரைவாக நடத்தப்பெற்ற தேரையும் வலிய
சேனைகளையுமுடைய துரியோதனராசனது முகத்தைப் பார்த்து, ‘உனதுதம்பியர்
இருவரை செற்றவன் முடி  தலைஒடியேன்ஏல் – உன்னுடைய தம்பிமா
ரிரண்டுபேரை (என்முன்னிலையில்) அழித்திட்டவனான வீமனது கிரீடந் தரித்த
தலையை (நான் இப்பொழுது) துணித்திடாமற் போவேனானால், எனது புன்தலை
அவன் கையில் கொடுப்பன்-என்னுடைய அற்பமான தலையை அவ்வீமனது
கையிலே யிழப்பேன்,’ என்று-என்று சபதங் கூறி, ஒரு தேர்மேல் ஏறினான்-;
(எ -று.)

     இப்பொழுது நான் எதிர்த்துப்பொருது வீமனைக்கொல்வேன்: அங்ஙனம்
இயலாதாயின், அவன்கையாற் கொல்லப்படுவேன்; இவ்விரண்டிலொன்று தவறேன்
என்று பிரதிஜ்ஞைசெய்தனன் கர்ணனென்பதாம். அருச்சுனனை யொழிந்த
மற்றைப்பாண்டவர் நால்வரையுங்கொல்வதில்லை என்று தாய்க்கு வாக்குத்தத்தஞ்
செய்துள்ளதற்கு மாறாகக் கர்ணன் இப்பொழுது வீமனைத்தான் கொல்வதாகச்
சபதஞ்செய்வது, “எல்லாம், வெகுண்டார்முற்றோன்றாக்கெடும்” என்றபடி
அனைத்தையும் மறக்கச்செய்கிற கோபவேசத்தின்காரியம்

குனித்த சாபமும், தொடுத்த சாயகங்களும், குலவு மால்
வரைத் தோளும்,
துனித்த நெஞ்சமும், முரிந்தன புருவமும், எரிந்த கண்களும்,
தோன்ற,
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின்
விரைந்து எய்தி,
‘இனித் தராதலம் உரககேதனற்கு’ என, இளவலோடு இகல் செய்தான்.134.- கர்ணன் போர்மூண்டு வீமனெதிரில் வீரவாதஞ்செய்தல்.

குனித்த சாபம்உம் – வளைத்த வில்லும், தொடுத்த சாயகங்கள்உம் –
எய்கிற அம்புகளும், குலவு மால் வரை தோள் உம் – (நெடுந்தூரம்) விளங்குகின்ற
பெரிய மலைகள்போன்றதோள்களும், துனித்த நெஞ்சம்உம்-கோபங்கொண்ட
மனமும், முரிந்தன புருவம்உம்-கோபத்தால்) நெறித்தனவான புருவங்களும், எரிந்த
கண்கள்உம்-(கோபாவேசமிகுதியால்) தீப்பொறிபறக்கப்பெற்ற கண்களும், தோன்ற –
காணப்பட, பனித்த தேரொடுஉம் – அசைந்துசெல்லுகிற தேருடனே, (கர்ணன்),
போர் உடன்று எழுதரும் பரிதியின் – போர்செய்தற்கு உக்கிரங்கொண்டுபுறப்படுகிற
சூரியன் போல, விரைந்து எய்தி – விரைவாக (வீமனை) அடைந்து,-இளவலோடு –
(உண்மையில் தனது) தம்பியான அவனுடனே,-இனி தராதலம் உரககேதனற்கு –
இனிமேல் நிலவுலகம் பாம்புக்கொடியனான துரியோதனனுக்கே (நிலைத்திடும்),’என –
என்று (யாவருஞ்) சொல்ல, இகல் செய்தான்-;

துரியோதனாதியரைக் கொல்வே னென்று சபதஞ்செய்துள்ளவனும் வலிமையிற்
சிறந்தவனுமான உன்னை இப்பொழுது நான் கொல்வேன்; கொல்லவே, பின்பு
அவர்களை வெல்லவல்லா ரெவரும் இல்லை யாதலால் துரியோதனனுக்கே
இராச்சியம் நிலைபெற்றிடும் என்றபடி, ‘போருடன்றெழுதரும் பரிதி’என்றது-
தனக்குப்பகையாகிய இருளையெதிர்த்துத் தாக்கி யழித்தற்கு வெம்மையோடு
உதிக்கிறசூரியனென்றபடி;(மந்தேகரென்னும் அரக்கர்களுடன்) போர்செய்து
அவர்களையழித்துக்கொண்டு உதயஞ்செய்கிற சூரியன்போல வென்றலும்
பொருந்தும். இனி, பனித்த கோளொடும் போருடன்றெழுதரும் என்ற
பாடத்திற்கு -தான் அஞ்சுவதற்குக் காரணமான இராகுவென்னுங் கிரகத்துடனே
உடன்றெழுதரும்என்று இல்பொருளுவமை யாக்குக.

ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள்
அடல் மள்ளர்
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன்
காற்றை ஒத்தனன், வலியினால்; சினத்தினால், கதிரவன்
திரு மைந்தன்
கூற்றை ஒத்தனன்; பிறப்பிலே துவக்குளோர் குணங்களும்
கொள்ளாரோ?135.- வீமனும் கர்ணனும் எதிர்த்த நிலைமை.

ஆற்றை ஒத்தன கால் வழி – (பெருமையினாலும் நீர்மிகுதியினாலும்)
ஆறுபோன்றனவாயுள்ள வாய்க்கால்களின் வழியாய், அளை புகும் – குழைசேற்றுக்
கழனிகளிற் சேர்கிற, ஆமை தொட்டு – ஆமைகளைக்குறித்து, அடல் மள்ளர் –
வலிமையையுடைய உழவர்கள், சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி-
அச்சேற்றைச்சார்ந்துள்ளனவான முத்துக்களை யெடுத்து வீசியடிக்கிற, செல்வம் –
செல்வச்சிறப்பு, நீள் – மிக்க, குருநாடன் – குருநாட்டுக்கு உரியனான வீமன், –
வலியினால் – தேகபலத்தால், காற்றை ஒத்தனன் – காற்றைப்போன்றான்; கதிரவன்
திரு மைந்தன் – சூரியனது சிறந்த குமாரனான கர்ணன் சினத்தினால்-கோபத்தால்,
கூற்றை ஒத்தனன் – யமனைப்போன்றான்; பிறப்பில் துவக்கு உளோர் குணங்கள்உம்
கொள்ளார் ஓ-பிறப்பிலே சம்பந்தமுள்ளவர்கள் (அச்சம்பந்த முடையார்க்கு உரிய
குணங்களையுங் கொள்ளமாட்டார்களோ?  (தவறாமற் கொள்வரென்றபடி); (எ – று.)

     வீமன் வாயுகுமார னாதலால் தனது தந்தையின் வலிமையைத்தான் கொண்டு
அவன்போலானா னென்றும், கர்ணன் யமனுக்குத் தம்பியாதலால் தன் தமையனது
கோபத்தைத் தான்கொண்டு அவன்போலானா னென்றும் சமத்காரமான கருத்து
நிகழ. ‘பிறப்பிலே துவக்குளோர் குணங்களுங் கொள்ளாரோ’ என்றார். வீமனும்
கர்ணனும் காற்றையும் யமனையும் போன்ற வேகத்தையும் கோபத்தையும்
கொண்டிருந்தா ரென்ற சிறப்புப்பொருளை, ‘பிறப்பிலே துவக்குளோர் குணங்களுங்
கொள்ளாரோ’ என்ற பொதுப் பொருள்கொண்டு சாதித்ததனால்,
வேற்றுப்பொருள்வைப்பணி. யமன் சூரியனுக்கு ஸம்ஜ்ஞை யென்னும்
மனைவியினிடத்து முன்புபிறந்த மகனாதலாலும், கர்ணன் சூரியனுக்குக்
குந்திதேவியினிடம் பின்பு  பிறந்த புத்திரனாதலாலும், கர்ணனை ‘யமனுக்குத்
தம்பி’என்றது. கழனிகளிலே ஆமைகள் நீர்வளச்சிறப்பைநோக்கி அங்குச்சென்று
வாழ்தற்பொருட்டு வாய்க்கால்களின்  வழியாய் வந்துசேர, அது கண்ட உழவர்கள்,
உழுபடைகளில் அவை அகப்பட்டு அழிந்திடா வண்ணம் ஓட்டும்படி முத்துக்களை
யெடுத்து எறிகின்றன ரென வர்ணனையின் போக்குக் காண்க. வீமனை ‘குருநாடன்’
என்றது அப்பொழுது குருநாடுமுழுவதுக்கும் உரியவனாய் அரசாள்கிற
துரியோதனனைக் கொன்று அந்நாட்டின் அரசாட்சியுரிமையைக் கைப்பற்றும்
வல்லமை யுடைய னாதலால். நாட்டுக்குக்கொடுத்த அடைமொழியில், அந்நாட்டு
வீரர்தமது தொழிலுக்கு இடையூறாக வருமுயிர்களைக் கையிலகப்பட்ட சிறந்த
கருவிகளைக்கொண்டு விலக்கும் ஆற்றலுடையா ரென்ற கருத்துத் தோன்றுதல்
காண்க.   

தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி,
‘ஆறு அல் வெஞ் சமத்து என்னுடன் முனைந்தனை;
முனைந்தனை ஆனாலும்,
வேறல் என் கடன்; நின்னை மன் அவையின் முன்
விளம்பிய வசனத்தால்,
கோறல் எம்பிதன் கடன்’ என வரி சிலை குனித்தனன்,
கொடித் தேரோன்.136.-வீமன் கர்ணனெதிரில் வீரவாதஞ்செய்தல்.

தேறல் வண்டு இமிர் தெரியலான்-தேனில் வண்டுகள்
மொய்த்தொலிக்கப்பெற்ற மலர்மாலையையுடையவனாகிய, தினபதி சிறுவனை –
பகற்பொழுதுக்குத் தலைவனான சூரியனது  குமரானாகிய கர்ணனை, முகம்
நோக்கி-முகத்தைப்பார்த்து,-‘(நீ), என்னுடன்-,ஆறுஅல் வெம்சமத்து-நியாய
வழியல்லாதகொடிய போரிலே, முனைந்தனை – வீராவேசங்கொண்டாய்;
முனைந்தனைஆனால்உம்-(அங்ஙனங்கொண்டு) போர்தொடங்கினையானாலும்,
நின்னை -உன்னை, வேறல் – வெல்லுதல்மாத்திரமே, என் கடன்- எனது கடமை,
மன்அவையில் – ராஜசபையில், முன் விளம்பிய – முன்பு சொன்ன, வசனத்தால் –
சபதவார்த்தைப்படி, கோறல் – (உன்னைக்) கொல்லுதல், எம்பிதன் கடன் – எனது
தம்பியின் கடமை,’ என- என்றுசொல்லி, கொடி தேரோன்-(சிங்கக்) கொடி கட்டிய
தேரையுடையவனான வீமன், வரி சிலை குனித்தனன் – கட்டமைந்த வில்லை
வளைத்தான்; (எ – று.)

     கர்ணன் எதிர்த்துவருகிற உக்கிரத்தன்மைபற்றி அவனைத் தான்
கொல்லவேண்டுவது அவசியமாயினும், தனதுதம்பியான அருச்சுனனது சபதத்தைப்
பொய்யாக்காமைப்பொருட்டு அங்ஙன்கொல்லாதுவெல்லுதல்
மாத்திரஞ்செய்துஉயிரோடுவிடவேண்டியிருத்தலின், வீமன் இங்ஙன்
கூறினான். இனி, வநவாச அஜ்ஞாத வாசங் கடந்தபின்பு கொடுப்பதாக
உறுதிகூறியுள்ள அரசாட்சியை அங்ஙனங்கொடாமலொழிந்து தொடங்கிச்செய்யும்
போர் அக்கிரமப்போரே யாதலால், அதுபற்றி, ‘ஆறல்வெஞ்சமம்’ என்றதாகவுங்
கொள்ளலாம். அருச்சுனன், துரியோதனனுடைய துஷ்டச்செயலுக்குப்
பெருந்துணையாய் நின்ற கர்ணனைப் போரிற் கொல்வே னென்று சபதஞ்
செய்துள்ளதனை, கீழ்ச் சூதுபோர்ச் சருக்கத்திற் காண்க.

இலக்கம் அற்ற வெங் கணைகளால் இருவரும் எதிர் எதிர்
அமர் ஆடி,
கலக்கம் உற்ற பின், தினகரன் மதலை அக் காற்றின்
மைந்தனைச் சீறி,
அலக்கண் உற்றிடப் பல பெருங் கணை தொடுத்து, அவன் விடும்
கணை யாவும்
விலக்கி, வச்சிரத் தேரும் வெம் புரவியும் விறல் துவசமும்
வீழ்த்தான்.137.-அப்போரிற் கர்ணன் வீமனைத் தேரழித்தல்.

இருவர்உம்-(வீமன் கர்ணன் என்ற) இரண்டுபேரும், இலக்கம்
அற்றவெம் கணைகளால்-எண்ணிக்கையில்லாத கொடிய அம்புகளினால், எதிர்
எதிர்அமர் ஆடி-ஒருவர்க்கொருவர் எதிரிலேபோரை மிகுதியாகச்செய்து, கலக்கம்
உற்றபின்-இளைப்படைந்த பின்பு, தினகரன் மதலை-கர்ணன், அ காற்றின்
மைந்தனை-அவ்வீமனை, சீறி-மிகுதியாகக் கோபித்து, அலக்கண் உற்றிட-(அவன்)
துன்பமடையும்படி, பலபெருங் கணைதொடுத்து-அநேகம் சிறந்த பாணங்களை
(அவன்மேற்)பிரயோகித்து,அவன் விடும்கணை யாஉம் விலக்கி-அவன்
(தன்மேல்)விடும் அம்புகளையெல்லாம் (தனது எதிரம்புகளினால்) தடுத்து,
(அவ்வீமனுடைய) வச்சிரம் தேர்உம்-வச்சிரம்போல் உறுதியான தேரையும்,வெம்
புரவிஉம்-வேகமுள்ள குதிரைகளையும், விறல் துவசம்உம்-வெற்றிக்கு அறிகுறியான
(சிங்கக்) கொடியையும், வீழ்த்தான்-பிளந்துதள்ளினான்; (எ – று.)

     அலக்கண்-சஞ்சலப்பட்ட கண்களையுடைமை என்ற காரியத்தின் பெயர்
காரணமான துன்பத்தின்மேல் நிற்கும்; அலம் – சஞ்சலம். 

காலினால் வரும் காலின் மைந்தனைக் கடுங் கதிரவன்
திருமைந்தன்
வேலினால் அடர்த்து எறிதலும், எறிந்த செவ் வேல்
இரு துணியாகக்
கோலினால் அவன் துணித்து, மீளவும், அழல் கொளுத்தியது
ஒரு தண்டு,
நாலின்-நால் முழம் உடையது, கன்னன்மேல் எறிந்தனன்,
நகை செய்தான்.138.- வேலெறிந்த கர்ணன்மேல் வீமன் கதைவீசுதல்.

காலினால் வரும் -(தேரிழந்ததனாற்) கால்களால் நடந்துமேல்
வருகிற,காலின் மைந்தனை – வாயுபுத்திரனான வீமனை, கடுங் கதிரவன்
திருமைந்தன் -உஷ்ணமானகிரணங்களையுடையவனாகிய சூரியனது புத்திரனான
கர்ணன், வேலினால் அடர்த்து எறிதலும்-வேலாயுதத்தால் வலிமைகொண்டு
வீசியடித்த வளவிலே,-அவன்-வீமன், எறிந்த செவ்வேல் இரு துணி ஆக-(தன்மேல்)
எறியப்பட்ட(அந்தச்) செவ்விய வேலாயுதம் இரண்டு துண்டாகப் பிளவுபடும்படி,
கோலினால் துணித்து-(தானெய்த) அம்புகளினால் துண்டித்து, மீளஉம்-பின்பு, நாலின்
நால் முழம் உடையது அழல் கொளுத்தியது ஒருதண்டு-பதினாறு முழமுள்ளதும்
தீப்பற்றினாற்போல அழிப்பதுமாகிய ஒரு பெரிய கதாயுதத்தை, கன்னன்மேல்
எறிந்தனன் – கர்ணன்மேற்பிரயோகித்து,நகைசெய்தான் சிரித்தான்; (எ – று.)-‘காலினால்வருங் காலின் மைந்தன்’என்றவிடத்துச் சொல்நயங் காண்க. பி-ம்: எறிந்த
வேல்வேறிரு. கொளுத்தியென்றொரு தண்டு.

தேரவன் திருமைந்தன் ஏறிய தடந் தேரும் வாசியும் சிந்தி,
ஊர வந்த வெம் பாகனும் தலை பிளந்து, ஓடலுற்றனன், பின்னும்;
வீரனும் ‘பெரு வலியுடன் வருக!’ என வேறு ஒர் தேர்
மேற்கொள்ள,
தூர நின்றவர் இருவரும் உடன்றமை சுயோதனன் கண்ணுற்றான்.139.- வீமன் கர்ணனை வென்றதைத் துரியோதனன் கண்டமை.

தேரவன்  திரு மைந்தன்-சிறந்ததேரையுடையவனான சூரியனது
சிறந்தமகனாகிய கர்ணன், (வீமனெறிந்த கதையினால்), ஏறிய தடதேர்உம் வாசிஉம்
சிந்தி-தானேறியுள்ள பெரியதேரும் அதன்குதிரைகளும் அழியப்பெற்று, ஊர வந்த
வெம் பாகன்உம் தலை பிளந்து-(அத்தேரைச்) செலுத்துதற்கு அமைந்த கொடிய
சாரதியும் தலைபிளக்கப்பெற்று, பின்உம் ஓடல் உற்றனன் – மீண்டும்
ஓடத்தொடங்கினான்; (அப்பொழுது), வீரன்உம் – அவனை வென்றவனான வீமனும்,
பெரு வலியுடன் – மிக்கவலிமையுடனே, வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள –
‘வருவதாக’ என்று சொல்லி (உடனேவருவித்து) வேறோரு தேரின்மேல்
ஏறிக்கொள்ள,-சுயோதனன்-, துரியோதனன் தூரம் நின்றவர் இருவர்உம் உடன்றமை-
தூரத்திலுள்ளவர்களான (அந்த வீமன்கர்ணன் என்ற) இரண்டு பேரும் போர்செய்து
அடைந்த நிலையை, கண்ணுற்றான்-(அங்கிருந்து) பார்த்தான்;(எ – று.)

     ‘தேரவன் திருமைந்தன்’ என்பதற்கு – (திருதராட்டிரனது) தேர்ப்பாகனான
அதிரதனென்பவன் எடுத்துவளர்த்த மகனாகிய கர்ண னென்றுமாம்.

கண்டு, துன்முகன் எனும் திறல் இளவலைக் கடிதின்
ஏவலும், கங்குல்
வண்டு செஞ் சுடர் வளைய வந்து இறந்தென, வலிய வார்
சிலை வாங்கிக்
கொண்டு, திண் திறல் வாளியால், மலைமிசைக் கொண்டல்
பெய்வது போல,
மண்டு போர் புரிந்து, அண்ணல் கைப் பகழியால், வான்
இமைப்பினில் உற்றான்.140.-துன்முகன் வீமனால் இறத்தல்.

கண்டு-(அங்ஙனம்) பார்த்து, (துரியோதனன்), துன்முகன் எனும் தனி
இளவலை-துர்முகனென்ற ஒப்பற்ற தனது தம்பியை, கடிதின் ஏவலும்-விரைவாக
(வீமன்மேற்) செலுத்திய வளவிலே, (அவன்), கங்குல் வண்டு செம் சுடர் வளைய
வந்து இறந்து என – இராக்காலத்திற் பறப்பதொரு பூச்சி (வீட்டில்)
சிவந்தவிளக்கொளியைச் சூழவந்து அதிற்பட்டு இறந்தாற்போல, வலிய வார் சிலை
வாங்கி கொண்டு-வலிமையுள்ள நீண்ட வில்லை வளைத்தெடுத்துக்கொண்டு (வந்து),
மலைமிசை கொண்டல் பெய்வதுபோல – மலையின்மேற் காளமேகம்
மழைபொழிவதுபோல, திண் திறல் வாளியால் மண்டு போர் புரிந்து-மிகவலிய
அம்புகளினால் (வீமன்மேல்) மிக்கபோரைச்செய்து, அண்ணல் கை பகழியால்-
சிறந்தவீரனான அவ்வீமனது கையாலெய்யப்பட்ட அம்புகளினால், இமைப்பினில்-கண்ணிமைப்பொழுதிலே, வான் உற்றான்-(இறந்து) வீரசுவர்க்கஞ்சேர்ந்தான்; (எ-று.)

துர்முகன் வீமனைவெற்றிகொள்ளவந்து அவனம்புக்கு இலக்காகித் தான்
எளிதில் அழிந்தன னென்க. மலரில் வண்டுமொய்த்தல்போல, தீயில் விட்டில்
மொய்த்தலால், அது ‘வண்டு’ எனப்பட்டது.

தாளின் ஓடிய கன்னன், மன்னவன் விடு தம்பி
வீழ்தலும், வீமன்
தோளின் ஓடி மண்மிசை புதைதர, ஒரு தோமரம்தனை ஏவ,
வேளினோடு இசை வீமன்மேல் அது செலும் வேலையின்,
விட வெவ் வாய்க்
கோளின் ஓடிய குரிசில் கைக் கணையினால் கோள்
அழிந்தது மன்னோ.141.-கர்ணன்எறிந்த தோமரம் வீமனால் துணிக்கப்படுதல்.

தாளின் ஓடிய கன்னன் – (முன்பு) கால்களினால் விரைந்து ஓடிய
கர்ணன், மன்னவன் விடு தம்பி வீழ்தலும் – துரியோதனனேவின அவன் தம்பியான
துர்முகன் இறந்துவிழுந்தவளவிலே, (மீண்டும்வந்து), வீமன் தோளின் ஓடி மண்மிசை
புதைதர-வீமனது தோளில் விரைந்து பாய்ந்து (பின்பு) தரையிற் புதைந்திடும்படி, ஒரு
தோமரந்தனை ஏவ-ஒரு தோமராயுதத்தைப் பிரயோகிக்க,-அது-,வேளினோடு இசை
வீமன்மேல் – முருகக் கடவுளோடு (உவமை) சொல்லப்படுகிற வீமசேனன்மேல்,
செலும் வேலையின்-செல்லும் பொழுது, விடம் வெம் வாய் கோளின் ஓடிய குரிசில்
கை கணையினால் – விஷமுள்ள கொடிய வாயையுடைய (இராகுவென்னுங்)
கிரகம்போல (ப் பயங்கரமாய்) விரைந்துவந்த வீமன்கையம்பினால், கோள்
அழிந்தது-வலிமை சிதைந்திட்டது; (எ – று.)-மன் ஓ-ஈற்றசை. 

     தோமரமென்று இருப்புலக்கைக்கும், கைவேலுக்கும், பேரீட்டிக்கும் நூல்களிற்
பெயர் வழங்குகின்றது – பல பராக்கிரமங்கட்கு முருகக்கடவுளை உவமைகூறினார்.

மன்னர் மன்னவன் தம்பியர் இருவரை மாருதிமிசை ஏவ,
முன்னர் வந்தவர் இருவரும் படப்பட, முனைந்த போர்
மதியாமல்,
மின் இருங் கணை விகருணன் முதலியோர் வீமன்மேல் ஓர் ஐவர
பின்னரும் செல, நால்வரைப் பிறை முகக் கணையினால்
பிளந்திட்டான்.142.-துரியோதனன்தம்பியர் அறுவரை வீமன் தொலைத்தல்.

அதுகண்டு), மன்னர் மன்னவன்-ராஜராஜனான துரியோதனன்,
(மீண்டும்), தம்பியர் இருவரை-(தனது) தம்பிமார் இரண்டுபேரை, மாருதிமிசை
ஏவ -வாயுபுத்திரனான வீமன்மேற் செலுத்த,-முன்னர் வந்தவர் இருவர்உம்-
(ஒருவர்முன்ஒருவராக விரைவாக) எதிர்த்துவந்த அவ்விரண்டுபேரும், பட பட-உடனுக்குடனேஇறக்க,-முனைந்து-கோபங்கொண்டு, போர் மதியாமல்-(வீமனோடு)
பொருதலை(அரிதென்று)கருதாமல், மின் இருங்கணை விகருணன் முதலியோர் ஓர்
ஐவர்-மின்னல்போல விளங்குகின்ற பெரிய அம்புகளையுடைய விகர்ணன் முதலிய
(துரியோதனன் தம்பிமார்)ஐந்துபேர்,பின்னர்உம்-பின்பும், வீமன்மேல் செல-
(துரியோதனனாலேவப்பட்டு) வீமன்மேல் எதிர்த்துச்செல்ல, (வீமன் உடனே),
நால்வரை-(அவர்களில் விகர்ணனொழிந்த) நான்குபேரை, பிறை முகம்
கணையினால்பிளந்திட்டான் – அர்த்தசந்திரபாணங்களினாற் பிளந்தழித்தான்;

பகரும் நால்வரும் பட்டபின், பைங் கழல்
விகருணன் பொர வெஞ் சிலை வாங்கலும்,
‘புகலும் வஞ்சினம் பொய்க்கினும், நின்னுடன்
இகல் செய்யேன்; எம்பி ஏகுக!’ என்றான்அரோ143.-வீமன் விகர்ணனைநோக்கி’உன்னுடன்போர்செய்யேன்’ எனல்.

பகரும் – (கீழ்ச்) சொல்லப்பட்ட, நால்வர்உம்-(துரியோதனன்
தம்பிமார்)நான்குபேரும், பட்டபின்-இறந்தபின்பு, பைங்கழல் விகருணன்-
பசுமையான(பசும்பொன்மயமான) வீரக்கழலையுடைய விகர்ணனென்பவன், பொர-
போர்செய்தற்பொருட்டு, வெம்சிலை-கொடிய வில்லை,வாங்கலும்-வளைத்த
வளவிலே,-(வீமன்அவனை நோக்கி), ‘எம்பி – எனது தம்பியே! புகலும் வஞ்சினம்
பொய்க்கின்உம்-(நான்) சொன்ன சபதம் தவறுவதானாலும், நின்னுடன் இகல்
செய்யேன் – உன்னோடு போர்செய்யமாட்டேன்; ஏகுக-(நீ) செல்வாயாக,’
என்றான் -என்று சொன்னான்; (எ – று.)

     வஞ்சினம் பொய்க்கினும்-“பாஞ்சாலிக்குஅரசவையிற்
பழுதுரைத்தோனுடல்***,***துணைவரொடுகுலமாளப்பொருவேன்யானே”
என்று திரௌபதியைத் துகிலுரிந்தகாலத்திற்கூறின பிரதிஜ்ஞை தவறுவதானாலும்
என்றபடி, துரியோதனன் தம்பியை வீமன் தன் தம்பியாக ‘எம்பி’ எனவிளித்தது,
யோக்கியனான அவனிடத்தில் தனக்குஉள்ள அன்புமிகுதி பற்றியஉபசாரவழக்காம்;
அன்றியும், துரியோதனன் வீமன்பிறந்ததினத்துக்கு முந்தின தினத்தின் இரவிலும்,
மற்றைத்தொண்ணூற்றொன்பதின்மரும் அதற்கு அடுத்த தினம் முதலாக
ஒவ்வொருதினத்திலும் பிறந்தன ரென்பது சரித்திரமாதலால், வீமன் தனதுபெரிய
தந்தையின் மக்களுள் இளையவனான விகர்ணனை எம்பியென்னத் தட்டில்லை.
அரோ – ஈற்றசை.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள்-பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.  

சுடு உரைக் கனல் அன்ன துச்சாதனன்
வடு உரைக்கவும், மன் உறை மன்றிடை,
நடு உரைக்கும் நல் நா உடையாய்! உனைக்
கொடு உரைக் கணை ஏவினும், கொல்லுமோ?144.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: மற்றும் வீமன் விகர்ணனை
நோக்கிக் கூறுவன.

கனல் அன்ன-நெருப்பையொத்த, சுடு உரை-
கொடுஞ்சொற்களையுடைய, துச்சாதனன்-, மன் உறை மன்றுஇடை – அரசர்கள்
தங்கியசபையின் நடுவிலே, வடு உரைக்கஉம்-நிந்தையான வார்த்தைகளைக்கூறவும்,
நடு உரைக்கும் – (அங்கு) நடுவு நிலைமையாகப் பேசிய, நல் நாஉடையாய் –
சிறந்தநாக்கையுடையவனே! கொடு உரை கணை ஏவின்உம்-கொடியசாபச்
சொற்போலத்தவறாமல் அழிக்கவல்ல அம்புகளை (நான் உன்மேற்)
பிரயோகித்தாலும், உனைகொல்லும்ஓ- (அவை) உன்னைக் கொல்லுமோ;

     நான் கொடியஅம்புகளை உன்மேல் ஏவி உன்னைக் கொல்ல மாட்டேனென்ற
பொருளை, துணிவுதோன்ற இங்ஙனம் அம்பின் மேல் வைத்துக் கூறின னென்க.
முனிவரதுவாயினின்று வருங்கோபச்சொல் தவறாமல் அழிவுசெய்தலில் அம்புக்கு
உவமைகூறப்படுதலை, “வைவனமுனிவர் சொல்லனைய வாளிகள்” எனக்
கம்பராமயணத்திலுங் காண்க. சூதுபோர்ச்சருக்கத்தில் “தன்னேரில்லா
நெறித்தருமன்தனவென் றுரைக்கத் தக்கவெலாம், முன்னே தோற்றுத் தங்களையு
முறையேதோற்றுமுடிவுற்றான், சொன்னேருரைக்குத்தான்பிறர்க்குத்
தொண்டாய்விட்டுச்சுரிகுழலைப், பின்னே தோற்கவுரிமையினாற் பெறுமோ
வென்றுபேசீரே” என்பது, நிஷ்பக்ஷபாதமாக விகர்ணன் கூறிய நீதிமொழி.

பார் அறிந்த பழிக்கு உட்படாத நின்
நேர் அறிந்தும், பொர நெஞ்சு இயையுமோ?
போர் அறிந்து பொருக!’ என்றான்-நெடுஞ்
சீர் அறிந்தவர் செய்ந்நன்றி கொல்வரோ?

பார் அறிந்த பழிக்கு-உலகத்தார் அறிந்த குற்றத்துக்கு, உள்
படாத-உள்ளாகாத, நின்-உனது, நேர்-நீதிநெறியை, அறிந்துஉம் – தெரிந்திருந்தும்,
நெஞ்சு -(எனது) மனம், பொர இயையும்ஓ-(உன்னோடு) போர்செய்யச்
சம்மதிக்குமோ?(ஆதலால்), அறிந்து போர் பொருக,- (வேறு யாருடனாயினும்)
ஆராய்ந்துபோர்செய்வாயாக, என்றான் – என்று (விகர்ணனை நோக்கி வீமன்)
கூறினான்:நெடுஞ் சீர் அறிந்தவர் செய் நன்றி கொல்வர்ஓ – சிறந்த
நல்லெழுக்கமுறைமையையுணர்ந்தவர் (தமக்குப் பிறர்) செய்த நன்மையை மறந்து
அவர்க்குத் தீங்கு செய்வரோ? [செய்யார் என்றபடி]; (எ – று.)-என்று வீமன்
கூறினா னென்க.

‘துரியோதனன் முதலியோர்போ லன்றிச் சபையில் நியாயம் பேசின
விகர்ணன்விஷயத்தில் வீமன் நன்றிமறவாமையோடிருந்தன னாதலாற்போர்செய்யே
னென்றான்’என்ற சிறப்புப்பொருளை, சிறந்த நீதிமுறையை யுணர்ந்தவர் செய்ந்நன்றி
சிதைப்பரோஎன்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கியது – வேற்றுப்பொருள்
வைப்பணி –
பார்என்பது –  உலகமென்பதுபோல உயர்ந்தோரைக்காட்டு
மென்னலாம்;பாரறிந்தபழி-உலகோர் பழியென்றறிந்த குற்றமென்க. பி- ம்:
பாரறிந்து.

வீமன் இப்படிச் சொல்லவும், வேரி அம்
தாமம் உற்ற தட வரைத் தோளினான்,
மா மணிச் சிலை வாங்கி, அவ் வீமன்மேல்
தீ முகக் கணையும் சில சிந்தியே,146.-விகர்ணன் போர்தொடங்குதல்.

வீமன் இப்படி சொல்லவும்-, (கேளாமல்), வேரி அம்தாமம் உற்ற
தடவரை தோளினான் – வாசனையுள்ள அழகிய (போர்) மாலைபொருந்திய
பெரியமலைபோலுந் தோள்களையுடையவனான விகர்ணன்,-மா மணி சிலை
வாங்கி-பெரிய சிறந்த வில்லை வளைத்து, அவ்வீமன்மேல்-,தீ முகம் கணைஉம்
சிலசிந்தினான்-நெருப்புப்போலக் கொடிய கூர்நுனியுள்ள சில பாணங்களையும்
பிரயோகித்தான்; (எ – று.)-இச்செய்யுளில் ‘சிலைவாங்கி’ என்பது, கீழ்143- ஆஞ்
செய்யுளில் “சிலைவாங்கலும்”என்றதன் அநுவாத மென்க. பி-ம்: சிந்தியே

எம் முனோர்கள் எனைவரும் உம் கையில்
வெம் முனைக் கணையால் விளிந்து ஏகவும்,
உம் முன் யான் ஒருவேனும் உய்வேன் கொலோ?
வம்மின்! வார் சிலை வாங்குக!’ என்று ஓதினான்147.- விகர்ணன் வீமனை வலியப் போர்க்கு அழைத்தல்

எம் முன்னோர்கள் எனைவர்உம் – எனது தமையன்
மார்களெல்லாரும், உம் கையில் – உமது கையினாலெய்யப்படுகிற, வெம்முனை
கணையால் – கொடிய நுனியையுடைய அம்புகளினால், விளிந்து ஏகஉம் – இறந்து
போகவும், உம் முன் – உமது முன்னிலையில், யான் ஒருவேன் உம் உய்வேன்
கொல்ஓ – நானொருத்தன்மாத்திரம் பிழைத்திருப்பேனோ? வம்மின் – (போர்க்கு)
வருவீராக; வார் சிலை வாங்குக – நீண்ட வில்லை வளைப்பீராக,’ என்று
ஓதினான்-என்று (வீமனைநோக்கி வீகர்ணன்) சொன்னான்;

     ‘எனைவரும் விளிந்தேகவும்’ என்றது-பலர் வீமனால் இறந்ததனாலும்,
மற்றையோரும்இறப்ப ரென்ற துணிவினாலு மென்க. உம்கையில் என்பது
முதலியன – தமையனைநோக்கித் தம்பி கூறிய உயர்வுப்பன்மை

மிக நகைத்தும், வெறுத்தும், திரிபுர
தகனன் ஒத்த சமீரணன் மா மகன்
முகன் உறச் சென்று, மூரி வில் வாங்கி, மேல்
இகல் நிறக் கணை ஏவினன் என்பவே.148.-வீமன் போர்தொடங்குதல்.

திரிபுரதகனன் ஒத்த- திரிபுரமெரித்தவனான
உருத்திரமூர்த்தியைப்போன்ற (பலபராக்கிரமங்களிற்சிறந்த), சமீரணன் மா மகன் –
வாயுவின் சிறந்த புத்திரனாகிய வீமன், (அதுகேட்டு), மிக நகைத்துஉம் –
மிகுதியாகச்சிரித்தும், வெறுத்துஉம் – வெறுப்புக்கொண்டும், முகன் உறசென்று-
அவனெதிராகப்போய்,  மூரி வில் வாங்கி – வலியவில்லை வளைத்து, மேல் –
அவன்மேல், இகல் நிறம் கணை – வலிமையையும் ஒளியையுமுடைய அம்புகளை,
ஏவினன் – எய்தான்; (எ – று.)-நச்சினார்க்கினியர் ‘என்ப’ என்ற அசையைப்
புறனடையாற் கொண்டுள்ளார்.

ஏவினால் இவ் இருவரும் வெஞ் சமம்
மேவினார்; மெய்ப் படாமல் விலக்கினார்;
கூவினார், அறைகூவிப் பொருது இளைத்து
ஓவினார், தமையே நிகர் ஒத்துளார்.149.- இருவரும் பொருதல்.

தமைஏ நிகர் ஓத்து உளார்- (வேறுஉவமையில்லாமல்) தங்களையே
தாங்கள் உவமையாகப் பொருந்தியுள்ளவரான, இ இருவர்உம்-(வீமன் விகர்ணன்
என்ற) இந்த இரண்டு பேரும்-ஏவினால்- அம்புகளைக்கொண்டு, வெம் சமம்
மேவினார் – கொடிய போர்செய்தற்குப் பொருந்தினார்கள்; மெய் படாமல்
விலக்கினார்-(தங்களுள் எதிரி எய்யும் அம்புகளைத்) தம்மேற்படாதபடி
(எதிரம்புகளால்) தடுத்தார்கள்; கூவினார் – (வீராவேசத்தால்) ஆரவாரஞ்
செய்தார்கள்;அறை கூவி-வீரவாதங்கூறி, பொருது-போர்செய்து, இளைத்து –
இளைப்படைந்து,ஓவினார் – (சிறிது பொழுது) போரொழிந்துநின்றார்கள்

விகனன் விட்ட கணைகளின் வீமன் மெய்
இகல் மணிக் கவசம் பிளந்து, ஏறு தேர்
அகல் அரிக் கொடி அற்று, கொடிஞ்சியும்
சகலம் உற்று, தனுவும் முரிந்ததே.150.-விகர்ணன் வீமனைக் கவசமுதலியன அழித்தல்.

விகனன் விட்ட கணைகளின் – விகர்ணன் எய்த அம்புகளினால்,
வீமன் மெய்  – வீமனது உடம்பில் தரித்த, இகல் மணி கவசம் – வலியதும்
இரத்தினம்பதித்ததுமான கவசம், பிளந்து-பிளந்திட,-ஏறு தேர் அகல் அரி கொடி
அற்று-(அவ்வீமன்)ஏறியுள்ள தேரிற்கட்டிய பரந்த சிங்கவடிவமெழுதிய கொடியுந்
துணிபட,- கொடிஞ்சிஉம்  சகலம் உற்று-தேர்மொட்டும் துண்டுபட,-தனுஉம்-
(அவனது) வில்லும், முரிந்தது

மின்னை ஒத்த விறற் படை மாருதி
பின்னை விட்ட பிறைமுக வார் கணை
அன்னை சித்தம் அலமர, பின்னவன்-
தன்னை வெற்றி மகுடம் தடிந்ததே.151.-வீமன் விகர்ணனைத் தலைதுணித்தல்.

மின்னை ஒத்த – மின்னலைப்போன்றுவிளங்குகிற, விறல்படை,-
வலியஆயுதங்களையுடைய, மாருதி-வீமன், பின்னை விட்ட-பின்பு தொடுத்த,
வார் பிறைமுகம் கணை-நீண்ட அர்த்த சந்திரபாணமானது,-பின்னவன் தன்னை-
தம்பியானவிகர்ணனை,-அன்னை சித்தம் அலமர-(அவனைப்பெற்ற) தாயின்
(காந்தாரியின்)மனம் சோகிக்கும்படி, வெற்றி மகுடம் தடிந்தது – சிறந்த
கிரீடத்தைத்தரித்ததலையைத் துணித்தது; (எ – று.)

     மக்களிடம் தாய்க்குஉள்ள அன்பின்ன மிகுதிபற்றி, ‘அன்னை சித்தமலமர’
என்றது. ‘வெற்றிமகுடம்’ என்பது – அன்மொழித்தொகை; அடையடுத்த
வாகுபெயருமாம்.

கோ விகன்னன் கொலைபட, பற்பலர்
ஆவி கன்னம் அறை கணையால் அற,
பாவி கன்னன் பதைக்க வென்று ஏகினான்,
மேவு இகல் நகம்போல், புய வீமனே152.-வீமன் கர்ணன்முதலியோரை வென்று மேற்செல்லுதல்.

(இவ்வாறு), கோ விகன்னன் – விகர்ணராசன், கொலை பட-
கொல்லப்படவும், பற்பலர் ஆவி – மற்றும்பல வீரர்களது உயிர், கன்னம் அறை
கணையால்-காதளவும் நாணியையிழுத்து விடப்படுகிற அம்புகளினால், அற-
(உடம்பினின்று)ஒழியவும், பாவி கன்னன் பதைக்க-தீவினையுடையவனான கர்ணன்
துடிக்கவும், வென்று-வெற்றிகொண்டு, மேவு இகல் நகம் போல் புயம் வீமன்-
நிலைபெற்ற வலிய மலைபோன்ற தோள்களையுடைய வீமன், ஏகினான்-(அப்பாற்)
சென்றான்; (எ – று.)

     துரியோதனன் செய்யுங்கொடுமைகட்கெல்லாந் துணைநின்று
தூண்டுகோலாகுதலால், ‘பாவி கன்னன்’ என்றது. மகாபாபிகளுடன் சேர்தலும்
பாதகமாதல் காண்க; அன்றியும், அடுத்தடுத்துப்பலமுறை தோற்றல்
பாபபலமேயாதலும் உணரத்தக்கது.  கன்னம்-கனம்என்பதன் விரித்தலாகக்கொண்டு,
கன்னம் அறை-மிகவும் மோதுகின்ற என்று பொருள் கூறுவாருமுளர். கன்னம் மறை
என்று பிரித்து-காதுமறையுமாறு நாணி யிழுத்து விடப்படுகிற எனினுமாம்.
இச்செய்யுளில், திரிபு என்னுஞ் சொல்லணி காண்க; அது நோக்கியே, ‘இகன்னகம்’
எதைத் தனிக்குறில் செறியாத லகரம் வரும் நத்திரிந்தபின்
மாயாதுதிரிந்துநின்றது, 

அன்று சாதத்து அலகைகள் ஆடவே,
சென்று, சாத்தகிதன்னுடன் சேர்ந்தனன்,-
துன்று சாத்திரத்தின்படி, சூழ் முனை
வென்று, சாத்திய வாகை கொள் வில்லினான்.153.- வீமன் முன்சென்ற சாத்தகியோடு சேர்தல்.

துன்று சாத்திரத்தின் படி-பொருந்திய நூல்முறைமைப்படி, சூழ்
முனைவென்று-(பகைவர்) சூழ்ந்துசெய்த போரை(ப்பொருது) வென்று, சாத்திய-
சூட்டிய,வாகை-(வெற்றிக்குஅறிகுறியான) வாகைப்பூமாலையை, கொள் – கொண்ட,
வேலினான் – வேலாயுதத்தையுடையவனான வீமன்,-அன்று-அப்பொழுது, சாதத்து
அலகைகள் ஆட-கூட்டமான பேய்கள் கூத்தாட, சென்று-மேற்சென்று,
சாத்தகிதன்னுடன் சேர்ந்தனன்-சாத்தகியோடு சேர்ந்தான்;(எ – று.)-ஜாதம்-
வடசொல்;இதற்குப்பூதமென்று பொருள்கொள்வாருமுளர்.

அங்கிதன்னொடு அனிலமும் சேர்ந்தென,
சங்கபாணிதன் தம்பியும் வீமனும்,
செங் கலங்கல் அம் சேற்றிடை மூழ்கிய
வெங் களத்து விசயனைக் கூடினார்.154.- சாத்தகியும் வீமனும் அருச்சுனனை யடுத்தல்.

அங்கிதன்னொடு அணிலம்உம் சேர்ந்து என-நெருப்பும் காற்றும்
சேர்ந்தாற் போல, சங்கபாணிதன் தம்பிஉம் வீமன்உம்-சங்கத்தைத்
திருக்கையிலுடையவனான கண்ணபிரானது தம்பியாகிய சாத்தகியும் வீமனும், செம்
கலங்கல் சேற்றிடை மூழ்கிய வெம் களத்து-சிவந்ததும்கலங்கலாக
வுள்ளதுமான(இரத்தச்) சேற்றில் முழுகிய கொடிய போர்க்களத்தினிடையில்
நின்ற, விசயனை – அருச்சுனனை, கூடினார்-; (எ-று.) அம்-அசை

தேவரும் பரவு பாகன் செலுத்து தேர் விடலையோடு
மூவரும் சுடர்கள் மூன்றும் மூண்டெனத் திரண்ட காலை,
மேவ அருஞ் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர்
யாவரும் திருகி வந்து, ஆங்கு எதிர் எதிர் அடர்ந்து சூழ்ந்தார்.155.-பகைவர்பலரும் மீண்டு மூவரையும் எதிர்த்தல்.

(சாத்தகியும் வீமனும்), தேவர்உம் பரவு பாகன் செலுத்துதேர்
விடலையோடு-தேவர்களுந் துதிக்கப்பெற்ற (கண்ணனாகிய) சாரதி செலுத்துகின்ற
தேரையுடைய சிறந்தவீரனான அருச்சுனனோடு (சேர்ந்து), மூவர்உம் –
இந்தமூன்றுபேரும், சுடர்கள் மூன்றுஉம் மூண்டு என-(சூரியன் சந்திரன் அக்கினி
என்னும்) முச்சுடர்களும் கூடியெழுந்தாற்போல, திரண்ட காலை – ஒருங்கு
கூடியபொழுது,-மேவு அருஞ் சமரில் முன்னம் வென் கொடுத்து உடைந்த வேந்தர்
யாவர்உம்-கிட்டுதற்கருமையான போரில் முன் புறங்கொடுத்துத் தோற்றோடிய
பகையரசர்களெல்லாரும், திருகி வந்து- திரும்பிவந்து, ஆங்கு எதிர் ஆகி –
அவ்விடத்தில் (அவர்கட்கு) எதிரிலே எதிரிலே பொருந்தி, சூழ்ந்தார்-((எ – று.)
பி-ம்:
 அடர்ந்து சூழ்ந்தார்.

     இதுமுதல் ஒன்பது கவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்

சாத்தகிதானும் பூரிசவாவும் வெஞ் சாபம் வாங்கி,
கோத்தனர், பகழி; சென்று குறுகின, தேரும் தேரும்;
சேர்த்தனர் மலைந்த காலை, சிலை துணிவுண்டு, தேர் விட்டு,
ஏத் தரும் தடக் கை கொட்டி, இருவரும் மல்லின் நேர்ந்தார்.156.-சாத்தகியும் பூரிசிரவசும் பொருதல்.

(அப்பொழுது), சாத்தகிதான்உம் – சாத்தகியும், பூரிசவாஉம்-
பூரிச்ரவஸ்என்பவனும், வெம் சாபம் வாங்கி-கொடியவில்லை வளைத்து, பகழி
கோத்தனர்.அம்பு தொடுத்தார்கள்; (அச்சமயத்தில்), தேர்உம் தேர்உம் –
(அந்தஇரண்டுபேருடைய) தேர்களும், சென்று குறுகின – எதிர்த்துப்போய்
நெருங்கின; சேர்த்தனர்-(இவ்வாறு தேர்களை) நெருங்கச்செலுத்தி, மலைந்த
காலை -போர் செய்தபொழுது, இருவர்உம்-இரண்டுபேரும், சிலை துணிவுண்டு-
வில்துணிபட்டு, (பின்பு) தேர் விட்டு – தேரைவிட்டு (இறங்கி), ஏ தரும் தட கை
கொட்டி- (இதுவரையில்)  அம்பைத் தொடுத்த பெரிய (தங்கள்) கைகளைத்
தட்டிக்கொண்டு,மல்லில் நின்றார்-மற்போர்செய்தலில் முயன்றுநின்றார்கள்;
( எ – று.) – பி ம்: மல்லினேர்ந்தார்.

மல்லினின் வென்று வீழ்த்தி, மாயவன் தம்பிதன்னைக்
கொல்லுவான் முனைந்து, மற்றைக் கோமகன் அடர்த்தல்
நோக்கி,
கல்லினின் மாரி காத்தோன் கண்டு, வில் விசயனோடும்
சொல்லினன், ‘பகைவன்தன்னைச் சுடர் முடி துணித்தி’ என்றே157.-பூரிசிரவனைக் கொல்லும்படி கண்ணன் அருச்சுனனுக்குக் கூறுதல்.

மாயவன் தம்பிதன்னை-கண்ணபிரானுடைய தம்பியான சாத்தகியை
மற்றை கோமகன் – பகையரசனானபூரிசிரவன், மல்லினின் வென்று வீழ்த்தி-
மற்போரினாற்-சயித்துக் கீழேதள்ளி, கொல்லுவான் முனைந்து-(அவனைக்) கொல்ல
முயன்று, அடர்த்தல்-வருத்துதலை,  கல்லினில் மாரிகாத்தோன் – (கோவர்த்தன)
மலையைக் கொண்டு மழையைத் தடுத்தவனான கண்ணன், கண்டு-பார்த்து,
நோக்கிஆலோசித்து, வில் விசயனோடுஉம்-வில்லில்வல்ல அருச்சுனனுடனே,
பகைவன்தன்னை சுடர் முடி துணித்தி என்று சொல்லினன்-‘பகைவனான
பூரிசிரவனைஒளியையுடைய தலையைத் துணித்திடுவாய்’ என்று சொல்லியருளினான்;
(எ – று.) – இங்ஙனஞ் சொன்னது, சாத்தகியை உயிர்பிழைப்பிக்க வேறு
வகையில்லாமையாலென்க.

இருவரும் முனைந்த போரில் இளைத்தவர்க்கு உதவியாகப்
பொருவது கடன் அன்று’ என்று போற்றிய விசயன்தன்னை,
வெருவர முனைந்து சீறி, மீளவும் விளம்ப, மாயன்
திருவுளம் அறிந்து, தெவ்வன் திண் புயம் துணிய எய்தான்158.-அருச்சுனன் அரிதின்உடன்பட்டு அவனைத் தோள்துணித்தல்.

(அதுகேட்டு), ‘இருவர்உம் முனைந்த போரில் இரண்டு பேரும்
தொந்தயுத்தமாகத் தொடங்கிச்செய்த போரில், இளைத்தவற்கு உதவி ஆக-
இளைத்தவனுக்குச் சகாயமாக, பொருவது-(வேறொருவன்) போர்செய்வது, கடன்
அன்று – முறைமையன்று,’ என்று-என்று மறுத்துச்சொல்லி, போற்றிய-வணங்கின,
விசயன் தன்னை-அருச்சுனனை, மாயன் – மாயவனான கண்ணன், பெருவர-
(அவன்)அஞ்சும்படி, முனைந்து சீறி-மிகக் கோபித்து, மீளஉம் விளம்ப-மறுபடியுஞ்
சொல்ல,-(அருச்சுனன்), திருஉளம் அறிந்து-(கண்ணபிரானுடைய) சிறந்த
மனக்கருத்தையுணர்ந்து, தெவ்வன் திண் புயம் துணிய’எய்தான்-பகைவனான
பூரிசிரவனது வலியதோள் அறும்படி பாணம்பிரயோகித்தான்;  (எ – று.)

     மற்போரிற் பூரிசிரவன் சாத்தகியைக் கீழே தள்ளி அவன்மார்பின்மேலிருந்து
உடைவாளை வலக்கையிலெடுத்துச் சாத்தகியின் தலையைத் துணித்தற்கு
ஓச்சுமளவில், அங்ஙனமோச்சிய கையை அருச்சுனன் தோளளவுந்
துணித்திட்டனனென்க.      

புயம் துணிவுண்ட பூரிசவாவினைப் புரிந்து தள்ளி,
சயம் புனை வாளின் தும்பைத் தார் புனை தலையும் கொய்து,
வயம் புனைந்து இளவல் நிற்ப, ‘மன் அறம் அன்று, இப்
போர்’ என்று
இயம்பிய இராசராசற்கு எதிர்மொழி இயம்பலுற்றான்159.-சாத்தகி பூரிசிரவனைத் தலைதுணிக்க, துரியோதனன் இகழ்தல்.

புயம் துணிவுண்ட-(அருச்சுனனம்பினால்) தோளறு பட்ட,
பூரிசவாவினை-பூரிசிரவனை, இளவல்-கண்ணன் தம்பியான சாத்தகி, புரிந்து
தள்ளி -மகிழ்ச்சிகொண்டு கீழேதள்ளி, சயம்புனை வாளின்-வெற்றிகொண்ட (தனது)
உடைவாளினால், தும்பை தார் புனை தலைஉம் கொய்து-தும்பைப்பூமாலையைத்
தரித்த (அவனது) தலையையும் அறுத்து, வயம்புனைந்துநிற்ப-வெற்றிகொண்டு நிற்க,-
(அதுகண்டு), ‘இ போர்-இந்த யுத்தம், மன் அறம் அன்று-இராசதருமமன்று,’ என்று
இயம்பிய-என்றுசொன்ன, இராசராசற்கு-அரசர்க்கசரசனான துரியோதனனுக்கு, எதிர்
மொழி இயம்பல் உற்றான்-(கண்ணன்) விடைகூறத் தொடங்கினான்; (எ – று.)-
அவ்விடையை, மேற்கவியிற் காண்க.

நென்னல் நீர் அபிமன்தன்னை நேர் அற வென்ற போரும்,
முன்னமே சிவேதன்தன்னை வீடுமன் முடித்த போரும்,
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர்!’ என்று நக்கான்-
தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம்
ஒழிக்கும் தாளான்.160.- கண்ணன் துரியோதனனுக்கு ஏற்ற விடை கூறுதல்.

தன்னை வந்து அடைந்தோர்க்கு – வந்து தன்னைச்
சரணமடைந்தவர்கட்கு, உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் – நேர்ந்த துன்பங்களை
யெல்லாம் நீக்கியருளுகிற, தாளான் – திருவடியை யுடையவனான கண்ணபிரான்,-
(துரியோதனனைநோக்கி),-‘நென்னல் – நேற்று, அபிமன் தன்னை – அபிமந்யுவை,
நீர் – நீங்கள், நேர் அற – தடையில்லாமல், வென்ற – சயித்த, போர்உம் –
போரையும், முன்னம்ஏ – முதல் நாளிலேயே, சுவேதன் தன்னை – சுவேதனை,
வீடுமன் முடித்த – பீஷ்மன் கொன்ற, போர்உம் – போரையும், மன் அறம் முறை
தவாமல் மலைந்தனிர் – இராசதரும முறைமை தவறாமற்செய்தீர்கள்,’ என்று-,
நக்கான் – சிரித்தான்; (எ -று.) நகுதல்- எள்ளல் பற்றியது. பி – ம். நேருற

பின்னரும் விசயன் நிற்ப, பேணலார் பின்னிட்டு ஓட,
மன்னரில் மலைந்தோர்தம்மை வாளியால் வானில் ஏற்றி,
முன்னவனோடும், அந்த முகில்வண்ணன் இளவலோடும்,
தன் உரை வழுவாவண்ணம் தரியலர் படையைச் சார்ந்தான்.61.-அருச்சுனன் வீமனுடன் சாத்தகியுடனும் பகைவர்சேனையை
நெருங்குதல்.

பின்னர்உம் – பின்பும், விசயன் – அருச்சுனன் நிற்ப – (போரில்)
நிலைநிற்றலால், பேணலர் – பகைவர்கள், பின் இட்டுஓட –
புறங்கொடுத்துஓடிப்போக,- (அவ்வருச்சுனன்),- மன்னரில் மலைந்தோர்தம்மை
வாளியால் வானில் ஏற்றி – பகையரசர்களில் (புறங்கொடாது)
எதிர்த்துப்போர்செய்தவர்களை (த் தனது) அம்புகளினால் வீரசுவர்க்கத்திற்
செலுத்திக்கொண்டு, முன்னவனோடுஉம் – (தனது) முன்பிறந்தவனான
வீமனுடனும், அந்தமுகில் வண்ணன் இளவலோடுஉம் – காளமேகம்போலுந்
திருநிறமுடையனானகண்ணபிரானது திருத்தம்பியாகிய அச்சாத்தகியுடனும், தன்
உரை வழுவா வண்ணம்- தனது சபத வார்த்தை தவறாமல் நிறைவேறுதற்
பொருட்டு, தரியலர் படையைசார்ந்தான் – பகைவர்களது உட்சேனையை
நெருங்கினான்;    

     தன்னுரை வழுவாவண்ணம் – சயத்திரதனைக் கொல்லுதற் பொருட்டென்க.
இங்கே, ‘தரியலர்படை’ என்றது, பின்னணிச் சேனையை.   

அருக்கன் ஓர் கணத்தில் அத்தம் அடையும் அவ்
அளவும் காக்கின்,
செருக் கிளர் விசயன் இன்றே தீயிடை வீழ்தல் திண்ணம்;
நெருக்குபு நின்மின்’ என்று, நிலவறையதனில் அந்த
மருக் கமழ் தொடையலானை வைத்தனர், மருவலாரே.162. எதிரிகள் சயத்திரதனை நிலவறையுள் மறைத்துவைத்துப்
பாதுகாத்தல்.

அருக்கன் – சூரியன், ஓர் கணத்தில் – ஒருக்ஷணப் பொழுதிலே
[மிகவிரைவிலே என்றபடி], அத்தம் அடையும் – அஸ்தகிரியை அடைவான்
[அஸ்தமிப்பான்]; அ அளவுஉம்- அதுவரையிலும், காக்கின் – (சயத்திரதனைப்)
பாதுகாத்தல், செரு கிளர் விசயன் – போரிற் சிறந்த அருச்சுனன், இன்றுஏ –
இன்றைத்தினமே, தீயிடை வீழ்தல் – அக்கினிப்பிரவேசஞ்செய்து இறத்தல்,
திண்ணம் – நிச்சயம்; (ஆதலால்), நெருக்குபு நின்மின்-(அச்சயத்திரதனுள்ள
இடத்துக்கு அருச்சுனன் செல்லவொண்ணாதபடி இடைவிடாது) நெருக்கிக்கொண்டு
நில்லுங்கள்’, என்று – என்று சொல்லிக்கொண்டு, மருவலார் – பகைவர்கள், அந்த
மருகமழ்’ தொடையலானை – வாசனைவீசுகிற மாலையைத் தரித்தவனான்
அந்தச்சயத்திரதனை, நிலவறை யதனில்வைத்தனர் – நிலத்திலுண்டாக்கிய
ஓரறையினுள்ளே (மறைத்து)  வைத்தார்கள்;

நச்சு அளை அரவம் என்ன நடுங்கினன் நின்ற காலை,
துச்சளை கணவன்தன்னைத் தோற்றம் ஒன்றானும் காணான்-
பச்சளை முடை கொள் மேனிப் பாடி மா மகளிர் பைம் பொன்-
கச்சு அளை புளக பாரக் கன தனம் கலந்த தோளான்.163.-சயத்திரதன் கட்புலனாகாமை.

பசு அளை முடை கொள் – பசிய வெண்ணெய்க்கு உரிய –
முடைநாற்றத்தைக் கொண்ட, மேனி – உடம்பையுடைய, பாடி மா மகளிர் –
திருவாய்ப்பாடியிலுள்ள அழகிய மகளிரது, பைம் பொன் – பசும்
பொன்னணிகளையணிந்தவையும், கச்சு அளை – கஞ்சுகம்பொருந்தியவையும்,
புளகம் – (மகிழ்ச்சி மிகுதியாலாகிய) மயிர்ச்சிலிர்ப்பையுடையவையுமான, பாரம் கன
தனம் – பருத்த வலிய தனங்களிலே, கலந்த – சேர்ந்த, தோளான் – தோள்களை
யுடையவனான கண்ணபிரான்,- அளை நஞ்சு அரவம் என்ன நடுங்கினன் நின்ற
காலை – வளையினுள்ளேபதுங்கிய விஷசர்ப்பம்போல (க் கொடிய சயத்திரதன்
நிலவறையினுட் புக்கு) மிக அச்சங் கொண்டு நின்றபொழுது, துச்சளை கணவன்
தன்னை தோற்றம் ஒன்றான்உம் காணான் – துச்சளையின்கணவனான அவனை
ஒருவகையாலும் வெளித்தோன்றக் காணாதவனாயினான்; (எ – று.)

     அஸ்தமிக்கிறசமயம் சமீபித்தவளவிலும் சயத்திரதன் கண்ணெதிரிலே
காணப்படாமையாலும், அவனை வெளிப்படுத்தற்கு வேறொரு
வகையில்லாமையாலும், பாண்டவசகாயனான கண்ணபிரான் மாயை செய்யலுற்றன
னென்பார், இது கூறினார். முந்தின நாட்போரிலே அபிமன்பக்கல் துரோகஞ்செய்த
சயத்திரதன் அடுத்தநாட்போரில் அருச்சுனனுக்கு அஞ்சி வெளிப்படுதலின்றி
நிலவறையினுள்ளேயே பதுங்கியிருத்தற்கு, உடனே தன்னைப் பிறர் நாடிக்கொல்வ
ரென்னும் அச்சத்தால் ஏதேனும் ஒரு மறைவிடத்தினுள்ளேபுகுந்து வெளிப்படாது
அஞ்சிக்கிடக்கும் தீண்டிய விஷநாகம் ஏற்ற உவமை. துச்சளை – துரியோதனாதியர்
தங்கை. வெண்ணெய்க்குப் பசுமை – குளிர்ச்சியும், உருக்காமையும், புதுமையும்.
கண்ணன் திருவாய்ப்பாடியில் வளர்ந்த இளமைப் பருவத்தில் அங்குள்ள
கோபஸ்திரீகள்பலரோடுங் கலந்து திருவிளையாடல்கொண்டருளின னென்பது
பிரசித்தம். பாடி – முல்லை நிலத்து ஊர். பொன் – கருவியாகுபெயர்

பார் ஆழி அவலம் அற, பாண்டவர்தம் இடர் தீர,
பார்த்தன் வாழ,
பேர் ஆழி அறிதுயிலும் பெருமிதமும் உடன் மறந்து,
பிறந்த மாயோன்,
ஓர் ஆழி எழு பரித் தேர் உடையானை மாயையினால் ஒழிக்க,
தன் கைக்
கூர் ஆழி பணித்தலும், அக் களம் போலச் சிவந்தன, அக்
குடபால் எங்கும்.64.- கண்ணன் தனது திருவாழியாற் சூரியனை மறைத்தல்.

ஆழி – கடல்சூழ்ந்த, பார் – பூமியினது, அவலம் –
(அதிபாரத்தாலாகிய) துன்பம், அற – நீங்குதற்பொருட்டும், பாண்டவர்தம் இடர்தீர –
பஞ்சபாண்டவரது துன்பம் தீர்தற் பொருட்டும், பார்த்தன் வாழ – அருச்சுனன்
அழியாது வாழ்தற் பொருட்டும், பேர் ஆழி அணை துயிலும் பெருமிதம்உம் உடன்
மறந்து பிறந்த – பெரிய திருப்பாற்கடலிலே ஆதிசேஷசயநத்திலே
யோகநித்திரைசெய்தருள்கிற பெருந்தகைமை முழுவதையும் ஒருசேர விரைவிலே
மறந்து (இங்குக் கண்ணனாகத்) திருவவதரித்த, மாயோன் – மாயையையுடையவனான
திருமால், ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை – ஒற்றைச்சக்கரத்தையும்
ஏழுகுதிரைகளையுங் கொண்ட தேரை யுடையவனான சூரியனை, மாயையினால்
ஒழிக்க – வஞ்சனையால் மறைக்க (க் கருதி), தன் கை கூர் ஆழி பணித்தலும் –
தனது திருக்கையிலேந்துதற்கு உரிய கூரிய சக்கரா யுதத்துக்குக்
கட்டளையிட்டவளவிலே, (அது சென்றுகரியதொரு வடிவு கொண்டு சூரிய
மண்டலத்தை மறைத்திட்டதனால்), அ குடபால் எங்கும் அ களம் போல
சிவந்தன -மேற்குத்திக்கிடங்களெல்லாம் (செந்நீர் நிறைந்த) அப்போர்க்களம்
போலச் செந்நிறமடைந்தன [இயல்பான சூரியாஸ்தமநகாலத்திற்போலச் செவ்வானம்
பெற்றன]; (எ-று.)

     துஷ்டநிக்ரக சிஷ்டபரிபாலநத்திற்காகவே அவதாரங் கொண்ட பேரருளான
னென்பது முன்னடிகளின் தேர்ந்த பொருள். அணையிலேதுயிலுதலும் பெருமிதமும்
எனவுமாம். பெருமிதம் – பரத்துவம். பி – ம்: அறிதுயிலும்.

     இதுமுதற் பத்தொன்பதுகவிகள் – பெரும்பாலும்முதல்நான்கு சீர்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரிய
விருத்தங்கள்.       

அயத்து, இரதம் இடப் பசும் பொன் ஆவதுபோல், அருச்சுனன்
ஆர் அறிஞன் ஆக
நயத்து இரத மொழிக் கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார்,
‘நாள் செய்வான் தன்
வயத்து இரதம் மறைந்தது’ என, வலம்புரித் தாரவன் சேனை
மன்னர் யாரும்,
செயத்திரதன்தனைக் கொண்டு, செருமுனையில் விசயன் எதிர்
சென்று சேர்ந்தார்.165.- கௌரவசேனையார் மகிழ்ச்சியோடு சயத்திரதனை
வெளிக்கொணர்தல்.

அயத்து – இரும்பிலே, இரதம் இட – (ரசவாதத்துக்கு உரிய மகா
மூலிகையினது) சாற்றைப் பிழிவதனால், பசும் பொன் ஆவதுபோல்-(அது)
பசும்பொன்னாக மாறுவதுபோல, அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக –
(ஸாமாந்யஞானத்தோடு கூடியிருந்த) அருச்சுனன் (எளிதில்) நிறைந்த தத்துவஞான
முள்ளவனாம்படி, நயத்து இரதம் மொழி கீதை நவின்ற-இனிமையான சுவையுள்ள
சொற்களையுடைய கீதையை உபதேசித்தருளிய, பிரான்- பெருமையையுடைய
கண்ணனது, மயக்கு – மாயையை, அறியார் – அறியாதவர்களாய்,-நாள் செய்வான்
தன் இரதம் வயத்து மறைந்தது என – தினத்தைச் செய்பவனான சூரியனது  தேர்
இயல்பில் அஸ்தமித்திட்ட தெனக் கருதி,-வலம்புரி தாரவன் சேனை மன்னர் யார்உம்
– நஞ்சாவட்டைப் பூமாலையையுடையவனான துரியோதனனது சேனையிலுள்ள
அரசர்களெல்லாரும், செயத்திரதன் தனை கொண்டு செரு முனையில் விசயன் எதிர்
சென்று சேர்ந்தார்- சயத்திரதனை வெளிப்படுத்தி உடனழைத்துக்கொண்டு
போர்க்களத்தில் அருச்சுன னெதிரிற் போய்ச்சேர்ந்தார் (எ – று.)

இரதம் – ரஸகுளிகையுமாம். அருச்சுனனைச் சீர்திருத்தித் தன்வழிப்படுத்தி
அவனைக்கொண்டு பகையழித்தலிற் கண்ணபிரானுக்கு உள்ள ஆதரமும்,
எப்படிப்பட்டதையும் எளிதில்மாற்றவல்ல அப்பெருமானது ஸர்வசக்தியும், எளிதில்
மெய்யுணர்வை இனிது புகட்டுகிற கீதையின் சிறப்புந் தோன்ற, ‘
அருச்சுனனாரறிஞனாக நயத்திரத மொழிக் கீதை நவின்ற பிரான்’ என்றார்.

 

எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக’
என்று நாடி,
தண் சமந்தபஞ்சகம் என்று ஒரு மடுவில் இவன் தாதை
தருப்பிக்கின்றான்;
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய்
விழ, நீ உடற்றுக’ என்று
திண் சயம் கொள் விசயனுக்குச் சிந்துபதிதனைக் காட்டி,
திருமால் சொன்னான்.166.-கண்ணன் அருச்சுனைநோக்கிச் சயத்திரதனைக்
கொல்லச் செல்லுதல்.

எண் சிறந்த மகன் தலையை-வலிமைமிக்க (எனது) புத்திரனான
சயத்திரதனது தலையை, நிலத்து இட்டான் – தரையிலே த்ள்ளியவனது, தலை-,
துகள் ஆக – பொடியாய்விடக்கடவது,’ என்று நாடி-என்று குறித்து
வரம்வேண்டிப்பெற்று,(அதன் பின் இப்பொழுது), இவன் தாதை – இச்சயத்திரதனது
தந்தையான வ்ருத்தக்ஷத்ரன், தண் சமந்த பஞ்சகம் என்ற ஒரு மடுவில் – குளிர்ந்த
ஸ்யமந்தபஞ்சக மென்ற ஒப்பற்ற மடுவிலே, தருப்பிக்கின்றான் – (சந்தியாவந்தனந்
தொடங்கி) அருக்கியசல மெடுத்து விடுகிறான்; அவன் கரத்தில் – அத்தந்தையின்
கையிலே, இவன் தலை போய் விழ – இம்மைந்தனது தலை போய்விழும்படி, ஓள்
சரம் கொண்டு – ஒளிபொருந்திய (சிறந்த) பாணங்களினால்,  நீ உடற்றுக-நீ
பொருதுஅழிப்பாயாக,’ என்று-, திண் சயம் கொள் விசயனுக்கு-வலிய
வெற்றியைக்கொள்ளும்அருச்சுனனுக்கு, திருமால்- கண்ணபிரான், சிந்துபதிதனை
காட்டி – சிந்துநாட்டரசனான அச் சைந்தவனைச் சுட்டிக்காண்பித்து, சொன்னான்-;
(எ – று.)

     இச்சயத்திரதனது தந்தையான வ்ருத்தக்ஷத்ரன் அருமையாக
இவனைப்பெற்றபின் இவனது தலையைக் கீழே தள்ளுபவனது  தலை பொடியாச்
சிதறிவிடுமென்று ஆகாயவாணிவரமருளவும் பெற்று மகிழ்ந்து அப்பால்இவனுக்குப்
பட்டாபிஷேகஞ் செய்து விட்டு வனம்புகுந்து ஸ்யமந்தபஞ்சக மென்ற மடுவின்
கரையில் தன்மகனது ஆக்கம் முதலியவற்றைக் குறித்து அரியதவத்தைச்
செய்துகொண்டிருக்கின்றான்; இவன் தலையை நீ நேரிற் கீழேதள்ளாமல் தக்க
அம்புகளை ஒன்றன்மேலொன்று விடாது தொடுத்து அவற்றால் அத்தலையை
உடம்பினின்று வேறாக்கி அப்பாற் செலுத்தி, சூரியாஸ்தமநமாய்விட்டதென்று
கருதிவிரைவாக மாலைக்கடன் கழிக்கத்தொடங்கி  அருக்கியசலமேந்தியுள்ள
அத்தந்தையின் கையில் விழச்செய்வாயாயின், அவன் அத்தலையைத் தன்கையாற்
கீழேயெறிந்து அதனால் தன் தலை வெடித்து இறப்பான்; உன் தலைக்கு
அபாயமும்இலதா மென்று கண்ணன் அருச்சுனனுக்கு நல்லுபாய மறிவுறுத்தின
னென்பதாம்.பரசுராமன் இருபத்தோர்கால் அரசரைக் களையறுத்தபின் தருப்பிக்க
அவர்குருதிகொண்டு நிருமித்த ஐந்துமடுக்கள் ஸ்யமந்த பஞ்சகமெனப்படும்: இது,
குருக்ஷேத்திரத்திலுள்ளது.  

வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி, அருச்சுனன், சிந்து
மகீபன் மௌலிச்
சிரத்தினில் எய்தலும், துணிந்தது ஒரு சரத்தால்; துணிதலும், அச்
சிரம் வீழாமல்
சரத்தினை மேன்மேல் ஏவி, தடத்து இருந்து தருப்பித்த
தாதைதன் பொற்
கரத்திடையே வீழ்வித்தான்; அவன் அதனை நிலத்து இட்டு,
அக் கணத்தில் மாய்ந்தான்.167.-அருச்சுனன் சயத்திரதனைக் கொல்லுதல்.

(உடனே), அருச்சுனன்-, வரத்தினில் முன்பெறுசாபம் வாங்கி –
வரமாக முந்தினநாளிற் (சிவபிரானிடம்) பெற்ற வில்லை யெடுத்து வளைத்து, சிந்து
மகீபன் மௌலி சிரத்தினில் – சிந்துநாட்டரசனது கிரீடமணிந்த தலையின்மேல்,
எய்தலும்-(ஓரம்பை) எய்தமாத்திரத்திலே, ஒரு சரத்தால் – அந்த அம் பொன்றினால்,
துணிந்தது-(அந்தத்தலை) அறுபட்டது; துணிதலும் – (அங்ஙனம்) அறுபட்டவுடனே,
அ சிரம் வீழாமல்-அத்தலை கீழ் விழுந்திடாதபடி, சரத்தினை மேல் மேல்ஏவி-
அம்புகளை இடைவிடாமல் மேன்மேல்தொடுத்து, தடத்து இருந்து தருப்பித்த
தாதைதன் பொன் கரத்திடையே வீழ்வித்தான்-ஸ்யமந்தபஞ்சக தடாகத்திலே
பொருந்தி அருக்கிய ஜலமெடுத்து விடுகிற இவன் தந்தையான விருத்தக்ஷத்திரனது
அழகிய கையிலே (அத்தலை) விழும்படி செய்தான்; (செய்யவே), அவன் அதனை
நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் – அத்தந்தை அத்தலையைக்கீழே
போகட்டு(அதனால்) அந்தக்ஷணத்திலே இறந்தான்; (எ – று.)

     சயத்திரனது தலையை நேரில் நிலத்திலே தள்ளியவன் அருச்சுனனாகாமல்
அவன் தந்தையே யானதனால், அவன் தலைவெடித்து இறந்தன னென்க. முன் –
பதிமூன்றாம்போர்நா ளிரவில் என்றபடி. 

முன் பட்டான் அருக்கன் என வெளிப்பட்டான்; வெளிப்பட்டு,
முடிவில், சிந்து
மன் பட்டான்; மா மாயன் மாயம் இது என்று அறியாமல்,
‘மகன் போய்ப் பட்ட
பின் பட்டான், அவன் தந்தை; இனிப் பட்டார் எவரும்!’
எனப் பிழைப்பட்டான்போல்
என் பட்டான், அரவு உயர்த்தோன்! ‘எரிப்பட்டான் விசயன்’
என எண்ணி நின்றான்.168.-சயத்திரதன் இறந்ததற்குத் துரியோதனன் மிக இரங்குதல்.

முன் அருக்கன் பட்டான் என-எதிரிற் சூரியன் அஸ்தமித்தானென்ற
காரணத்தால், சிந்து மன் – சிந்துதேசத்தரசனான சயத்திரதன், வெளிப்பட்டான் –
(நிலவறையினின்று) வெளிவந்தான்; வெளிப்பட்டு-(அங்ஙனம்) வெளிவந்து,
முடிவில் -இறுதியிலே, பட்டான் – (அருச்சுனனால்) இறந்திட்டான்; மா மாயன்
மாயம் இதுஎன்று அறியாமல்-மிக்கமாயையை யுடையவனான கண்ணபிரானது
தந்திரமிதுவென்று உணராமல்,- மகன் போய் பட்ட பின் அவன் தந்தை
பட்டான்-(தன்)மகனான சயத்திரதன் இறந்துபோனபின்பு அவனது தந்தையான
விருத்தக்ஷத்திரனும்இறந்தான்; இனி – இவர்கள் இறந்தபின், எவர்உம் பட்டார் –
(நம்பக்கத்தவர்)யாவரும் இறந்தவரேயாவர், என – என்றுசிந்தித்து, பிழைப்பட்டான்
போல்-(குறித்த  இலக்குத்) தவறியவன்போல, விசயன் எரி பட்டான் என எண்ணி
நின்றான் அரவு உயர்த்தோன் என் பட்டான்-அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ்
செய்து இறந்தானென்று எண்ணி மகிழ்ந்துநின்றவனான துரியோதனன் என்ன
வருத்தமடைந்தான்! (மிக வருந்தினான்என்றபடி); (எ – று.)

முடிவில் – அப்பகலிற் பெரும்பான்மையும் மறைந்து தப்பி நின்று அதன்
இறுதியிலே யென்க, ‘இது’ என்றது-தன்கையில் தன்மைந்தன் தலைவிழச் செய்ததை,
‘மாயன் மாய மிதென் றறியாமல்’ என்றது, ‘அவன் தந்தை பட்டான்’ என்பதனோடு
இயையும் ‘இனிப்பட்டாரெவரும்’ என்றது, இனியாவரும் தவறாமல் அழிந்திடுவ
ரென்ற துணிவினால். சூரியன் அஸ்தமிக்குமளவும் சயத்திரதன் அருச்சுனனுக்குப்
புலப்படாமல் நின்றதனால், அருச்சுனன் சபதப்படி தீக்குதித்து இறந்திடுவது தவறா
தென்று எண்ணித் துரியோதனன் களித்துநின்றான்; அந்த எண்ணம் தவறிப்போய்
வேறுவகையாய் முடிந்தமைபற்றி, ‘பிழைப்பட்டான் போல்’ என்றார்; ‘போல்’-
ஒப்பில்போலி: (கையிற் கிடைத்த பொருள்) தவறப்பெற்றவன்போல மிக
வருந்தினனென்க.

கன்ன சவுபலர் முதலாம் காவலரும் சுயோதனனும்,
‘கரந்தான் வெய்யோன்;
சொன்ன மொழி பிழைத்தான், வெஞ் சுவேத துரங்கமன்’ என்று
துள்ளி ஆர்த்தார்;
அன்ன பொழுது, எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி
அகற்ற, நோக்கி,
‘இன்னம் ஒரு பனைத்தனைப் போழ்து உண்டு’ என நின்றனன்,
எழு பேர் இவுளித் தேரோன்.169.- கண்ணன் திருவாழி விலகச் சூரியன் விளங்குதல்.

கன்ன சவுபலர் முதல் ஆம் காவலர்உம்-கர்ணனும் சகுனியும்
முதலான அரசர்களும், சுயேதனன்உம் – துரியோதனனும்,-‘வெய்யொன் கரந்தான்-
சூரியன் அஸ்தமித்தான்; (அதன் பின்பு சயத்திரதனைக் கொன்றதனால்), வெம்
சுவேத துரங்கமன் சொன்ன மொழி பிழைத்தான் – கொடிய (நான்கு)
வெள்ளைக்குதிரைகளையுடையவனான அருச்சுனன் (முந்தினநாட்) சொன்ன சபத
வார்த்தை தவறினான்,’ என்று-என்று எண்ணியும் சொல்லியும், துள்ளி ஆர்த்தார்-
குதித்து ஆராவாரஞ்செய்தார்கள்; அன்னபொழுது-அவ்வளவிலே, எம் பெருமான்-
எமக்குத்தலைவனான கண்ணபிரான், பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற- (தனது)
கட்டளையை நிறைவேற்றிய விளங்குகிற சக்கராயுதத்தை விலகச்செய்ய,-நோக்கின்-
பார்க்குமிடத்து,-எழு பேர் இளிவுதேரோன்-ஏழு பெரிய குதிரைகளையுடைய
தேரையுடையவனான சூரியன், இன்னம் ஒரு பனை தனை போழ்து
உண்டுஎனநின்றனன்-(அஸ்தமிப்பதற்கு) இன்னமும் ஒருபனைமரத்தளவு
இடங்கொண்ட பொழுது உண்டென்றுசொல்லும்படி நின்றான்; (எ – று.)-
பனைத்தனைப்போழ்து-சூரியனிருக்குமிடத்துக்கும் அஸ்தமிக்கச்செல்ல வேண்டிய
இடத்துக்கும் இடைப்பட்ட இடம் ஒருபெரியபனைமரம் எவ்வளவுநீளம்
இருக்குமோஅவ்வளவுதூரம் என்க.

விரி ஓத நெடுங் கடலில் வீழ்வதன்முன், விரைந்து உரகன்
விழுங்கினானோ?
‘எரி ஓடி மகன் இறக்கும்’ என மகவான் மறைக்க, முகில்
ஏவினானோ? கரியோன் கைத்
திகிரியினால் மறைத்தனனோ? இருள் பரந்த கணக்கு
ஈது என்னோ?
பெரியோர்கள் திருவுள்ளம் பேதித்தால், எப் பொருளும்
பேதியாதோ?170.-இதுவும், அடுத்தகவியும்-சேனையிலுள்ளார்வார்த்தை.

விரி-பரவுகின்ற, ஓதம் – அலைகளையுடைய, நெடுங்கடலில்-பெரிய
கடலிலே, வீழ்வதன்முன்-வீழுந்து அஸ்தமிப்பதன் முன்னே, (சூரியனை), உரகன் –
பாம்புவடிவமான ராகு அல்லது கேது, விரைந்துவிழுங்கினான் ஓ-
விரைவாகவந்துவிழுங்கிப் பின்பு உமிழ்ந்தனனோ? (அன்றி), மகவான் – இந்திரன்,
மகன் எரி ஓடி இறக்கும் என்-தன்பிள்ளையான அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ்
செய்து இறப்பனே யென்பதைப் பற்றி, (அங்ஙனம் இறவாமைப் பொருட்டு) மறைக்க
முகில் ஏவினான்ஓ-(சூரியனை) மறைத்தற்கு மேகங்களைச் செலுத்தினானோ?
(அல்லது), கரியோன்-கிருஷ்ணன்,  கை திகிரியினால் மறைத்தனன்ஓ-(தன்)
கைவசப்பட்ட சக்கரத்தைக்கொண்டு (சூரியனை) மறைத்திட்டானோ? இருள் பரந்த
கணக்கு ஈதுஎன்ஓ – (சூரியன் உண்மையாக அஸ்தமிப்பதற்குமுன்னமே இடையில்)
இருள்பரவியவிதம் யாதுகாரணத்தா லானதோ? பெரியோர்கள் திரு உள்ளம்
பேதித்தால் எ பொருள்உம் பேதியாதுஓ-பெரியோர்களுடைய சிறந்த மனம்
மாறினால் எந்தப்பொருளும் மாறுபடாதோ? (எ – று.)

     ஈற்றடி – கண்ணன்முதலான மகான்களுடைய மனம் துரியோதனன் செய்த
கொடுமையால் மாறுபட்டிருத்தலாற் பகலும் இரவாக மாறியதுபோலுமென்ற
சிறப்புப்பொருளைப் பொதுப்பொருளால் விளக்கியவாறு:
வேற்றுப்பொருள்வைப்பணி.  

உந்து இரதத் தனி வலவன் உபாயத்தால், வருணன் மகன்
உயிரை மாய்த்தான்;
மந்திரம் ஒன்று அறிவித்து, வயப் புயம் ஆயிரத்தோனை
மடிவித்திட்டான்;
தந்திரம் மெய்ம் மயங்கி விழத் தன் சங்கம் முழக்கினான்;
தபனன் மாய,
இந்திரசாலமும் செய்தான்; இந்திரன் சேய் வெல்லாமல்,
யார் வெல்வாரே?’

இரதம் உந்து தனி வலவன் – (அருச்சுனனது) தேரைச் செலுத்துகின்ற
ஓப்பற்ற சாரதியான கண்ணன், உபாயத்தால்-ஒரு தந்திரத்தால், வருணன் மகன்
உயிரை மாய்த்தான்-  வருணனதுகுமாரனான சுதாயுவின் உயிரைப்போக்கினான்;
(பின்பு) மந்திரம் ஒன்று அறிவித்து-ஒருமந்திரத்தை (அருச்சுனனுக்கு) உபதேசித்து,
வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான்- (அதனால் அருச்சுனன்) வலிய
ஆயிரவாகுவைக் கொல்லும்படி செய்தான்; (அதன்பிறகு), தந்திரம்-பகைவர்சேனை,
மெய் மயங்கிவிழ-உடம்பு (தெரியாமல்) மயக்கமடைந்து விழும்படி, தன் சங்கம்
முழக்கினான்-தனது பாஞ்சசன்னியத்தை ஒலிப்பித்தான்; (இவையல்லாமல்), தபனன்
மாய இந்திரசாலம்உம் செய்தான் – சூரியன் மறையும்படிபெருமாயையையுஞ்
செய்தான்; (ஆதலால்), இந்திரன் சேய் வெல்லாமல் யார்வெல்வார்-
(அக்கண்ணபிரானது உதவி
யைப் பலவாற்றலும் கொண்ட) அருச்சுனன்
வெற்றிகொள்ளாமல் (வேறு) யார் (போரில்) வெற்றி கொள்வர்? (எ – று.)-31, 32,
35, 36, 41, 88, 164-இக்கவிகள், இங்குநோக்கத்தக்கன. 

முடை எடுத்த நவநீதம் தொட்டு உண்டும், கட்டுண்டும்,
முன் நாள் நாகக்
குடை எடுத்து மழை தடுத்தும், வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம்
கொடிய பாவி,
‘படை எடுத்து வினை செய்யேன்’ எனப் புகன்ற மொழி தப்பி,
பகைத்த போரின்
இடை எடுத்த நேமியினால், வெயில் மறைத்தான்; இன்னம்
இவன் என் செய்யானே?172.-இதுவும், அடுத்த கவியும்- ஒருதொடர்: துரியோதனன் சிலகூறிச்
சேனையோடுஞ் சென்ற போர்தொடங்குதலைக் குறிக்கும்.

முடை எடுத்த – முடைநாற்றம் பொருந்திய, நவநீதம்-வெண்ணெயை,
தொட்டு உண்டுஉம்- கையாலெடுத்துத் தின்றும், கட்டுண்டுஉம் – (அதற்காக
ஆய்ச்சியராற்) கட்டப்பட்டும், முதல் நாள் – இளம்பிராயத்திலேயே, நாகம் குடை
எடுத்து மழை தடுத்துஉம் – (கோவர்த்தந) மலையைக் குடையாக  எடுத்துப் பிடித்து
அதனால் (இந்திரன்பெய்வித்த) மழையைத் தடுத்தும், வஞ்சனைக்கு ஓர் கொள்கலம்
ஆம் – வஞ்சனைக்கட்கு ஓர் இருப்பிடமாகவுள்ள, கொடியபாவி-கொடும்பாவியான
கண்ணன், படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி – ‘(போரில்)
ஆயுதமேந்தித் தொழில்செய்யேன்’ என்று (என்னுடன்)சொன்ன சபதவார்த்தை தவறி,
பகைத்த போரினிடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் –
(ஒருவரோடொருவர்) பகைத்துச்செய்கிற போரின்நடுவிலே தான் ஏந்திய
சக்கராயுதத்தைக்கொண்டு சூரியனை மறைத்திட்டான்; இன்னம் இவன் என்
செய்யான்-இன்னமும் இந்தக்கண்ணன் எந்த அநீதிதான் செய்ய மாட்டான்?
(எ-று.)-பி-ம்:முன்னாள்-என்செய்வானோ.

     நவநீதம் என்ற வடசொல்லுக்கு-புதிய தயிரினின்று கடைந்தெடுக்கப்பட்ட
தென்று காரணப்பொருள் கூறுவர். கொள்கலம்- பாத்திரம்; 

ஒற்றை நெடுந் திகிரி இனன் மறைவதன் முன், ஐவரையும்
உடன்று மோதி,
செற்றிடுதல், யான் படுதல், திண்ணம்’ எனச் சேனையொடும்
சென்று சூழ்ந்தான்;
கொற்றவனது உரை கேட்டு, கொடி நெடுந் தேர் நரபாலர்
சபதம் கூறி,
மற்று அவனோடு, ‘ஒரு கணத்தில் வம்மின்’ எனத்
தனித்தனிபோய் மலைதலுற்றார்.

‘ஒற்றை நெடுந் திகிரியினன் – பெரிய ஒற்றைத் தேராழியை
யுடையவனான சூரியன், மறைவதன் முன் – (இனி உண்மையாக)
அஸ்தமிப்பதன்முன்னே, ஐவரைஉம் உடனே  மோதி செற்றிடுதல் –
பாண்டவரைந்துபேரையும் ஒருசேரத்தாக்கி (யான்) கொன்றிடுதலாவது, யான் படுதல்
– (அங்ஙனம் அது கூடாவிட்டால் அவர்களால்) யான் இறத்தலாவது, திண்ணம் –
(இரண்டில் ஒன்று) நிச்சயம்,’ என – என்று வீரவாதஞ்செய்து கொண்டு,
(துரியோதனன்), சேனையொடுஉம் சென்று சூழ்ந்தான் – சேனையுடனே போய் (ப்
பாண்டவரை)ச் சூழ்ந்துகொண்டான்; கொற்றவனது உரை கேட்டு –
துரியோதனராசனது அந்த வார்த்தையைக் கேட்டு, கொடி நெடுந்தேர் நரபாலர் –
கொடிகட்டிய உயர்ந்த தேரையுடைய அவன் சேனையரசர்களும், சபதம் கூறி –
(தாம் தாம்) சபதவார்த்தை சொல்லிக் கொண்டு, ஒருகணத்தில்-ஒரு
கணப்பொழுதிலே, வம்மின் என-‘(போர்க்கு) வாருங்கள்’ என்றுசொல்லி அறைகூவிக்
கொண்டு, மற்றவரோடு – எதிர்ப்பக்கத்தாருடனே, தனி தனி  போய் மலைதல்
உற்றார்-தனித்தனியே சென்று போர்செய்யத் தொடங்கினார்;  (எ – று.) திகிரி
இனன் என்று பிரித்து, இனன் – சூரியன் எனினும் அமையும்;
இநன்-வடசொல். பி-ம்::உடன்று.

துருபதனும், சாத்தகியும், திரௌபதி மைந்தரும், முடுகி,
தொட்ட சாபக்
குருவுடனே போர் செய்தார்; தம்பியரும், சுயோதனனும்,
கொற்ற வேந்தர்
ஒருபதினாயிரவரும், போய், வீமனுடன் உடற்றி, அவன்
ஊர்ந்த தேரும்
வரி சிலையும் அழித்தனர்; பின் அவனும் வெறுங் கரதலத்தால்
வன் போர் செய்தான்.174.-இருதிறத்தவரும் போர்செய்தல்.

துருபதன்உம் – துருபதாராசனும், சாத்தகியும்-, துரௌபதி
மைந்தர்உம் – திரௌபதியின்குமாரர் ஐந்துபேரும், முடுகி – விரைந்து (அல்லது
கோபம்மூண்டு), தொட்ட சாபம் குருவுடன் – பிடித்த வில்லையுடைய
துரோணாசாரியனுடன், போர் செய்தார்-; சுயோதனன்உம் – துரியோதனனும்
தம்பியர்உம் அவன் தம்பிமார் பலரும், கொற்றம் வேந்தர் ஒரு பதினாயிரவர்உம்-
வெற்றியையுடைய துணையரசர் பதினாயிரம்பேரும், போய்-, வீமனுடன்-, உடற்றி-
போர்செய்து, அவன் ஊர்ந்த தேர்உம் வரிசிலைஉம் அழித்தனர்- அவன் ஏறிய
தேரையும் (அவனது) கட்டமைந்தவில்லையும் அழித்தார்கள்; பின் – பின்பு,
அவன்உம் – அவ்வீமனும், வறுங் கரதலத்தால் வல் போர் செய்தான் –
ஆயுதமில்லாத வெறுங்கைகளினாற் கொடும்போரைச் செய்யலானான்;

     துரௌபதிமைந்தர்-திரௌபதியினிடம் பஞ்சபாண்டவர்க்கு முறையே பிறந்த
விந்தன், சோமன், வீரகீர்த்தி, புண்டலன், சயசேனன் என்பவர்; இவர்பெயர்
வேறுவகையாகவும் வழங்கும்: இவர்கள் உபபாண்டவரென்றும்,
பஞ்சத்ரௌபதேயரென்றுங் கூறப்படுவர்,   

பரி எடுத்துப் பரி எற்றி, பரித் தேரால் தேர் எற்றி,
பனைக்கை வேகக்
கரி எடுத்துக் கரி எற்றி, காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி,
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடந் தோள் இருடிகேசன் என்ன,
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி,
அரிநாதம் செய்தான்.175.- வீமன் வெறுங்கையாற் போர்செய்தல்.

அரி எடுத்த கொடி விடலை –  சிங்கவடிவத்தைத் தரித்த
கொடியையுடைய வீரனான வீமன்,-பரி எடுத்து பரிஎற்றி-குதிரைகளை யெடுத்து
(அவற்றாற்) குதிரைகளை மோதியும், பரி தேரால் தேர் ஏற்றி-குதிரைகள் பூண்ட
தேர்களை யெடுத்து (அவற்றால்) தேர்களைத் தாக்கியும், பனைகை வேகம் கரி
எடுத்து கரி எற்றி-பனைமரம்போலுந் துதிக்கையையும் உக்கிரத்தன்மையையுடைய
யானைகளை யெடுத்து (அவற்றால்) யானைகளைப் புடைத்தும், காலன் நிகர்
காலாளால் காலாள் எற்றி –  யமன்போன்ற காலாளாவீரரையெடுத்து (அவர்களாற்)
காலாள்வீரரை யடித்தும்-,கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தட தோள் இருடிகேசன்
என்ன – மந்தரமலையைக்கொண்டு பரவிய திருப்பாற்கடலைக் கடைந்த பெரிய
தோள்களையுடைய திருமால்போல,-தோள் வலியால் உழக்கி-(தனது)
தோள்களின்வலிமையாற் (கௌரவசேனைக்கடலைக்) கலக்கி,-அரிநாதம் செய்தான்-
(வெற்றி தோன்றச்)சிங்கநாதஞ்செய்தான்; (எ – று.)

     திருப்பாற்கடலைக்கடைந்த திருமால் பகைவர்சேனைக்கடலைக் கலக்குகிற
வீமனுக்கு உவமை. இதில், மந்தரமலை வீமன்தோளுக்கு உவமையாதல்
பெறப்படும்.பி-ம்: கால்பனிப்பக்காலாளால்.

நிருபர் தொழும் கனை கழற் கால் நில வேந்தன் தம்
பியரில்நெடும் போதாக
இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு
தோள் வலி காட்ட, இருவரோடும்
ஒருவர் ஒருவரை அறியாவண்ணம், இவன் ஒருவனுமே
உடன்று சீறி,
பொருது பிருகனையும் விறல் சூசிதனையும் வானில்
போக்கினானே.176.-துரியோதனன்தம்பியரிருவரை வீமன் கொல்லுதல்.

நிருபர் – அரசர்கள், தொழும்-வணங்குகிற, கனைகழல் கால்-
ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த பாதத்தையுடைய, நிலம் வேந்தன்-பூமி
முழுவதுக்கும் அரசனான துரியோதனனது, தம்பியரில்-தம்பிமார்களுள், இருவர்-
இரண்டுபேர், நெடும் போது ஆக-வெகுநேரமாக, புறம்கொடாமல்-முதுகுகொடாமல்,
அதிர்ந்து எதிர்ந்து – ஆரவாரஞ்செய்துகொண்டு எதிரிட்டு, இரு தோள்வலி காட்ட-
(தங்கள்) இரண்டுதோள்களின் வலிமையை வெளிக்காட்ட,-இருவரோடுஉம்-அந்த
இரண்டுபேருடனும், இவன் ஒருவன்உம்ஏ-இந்த வீமனொருத்தன்தானே, உடன்று
சீறிபொருது-மிகக்கோபித்து போர்செய்து, பிருகனைஉம் விறல் சூசிதனைஉம்-
பிருகனென்பவனையும் பராக்கிரமத்தையுடைய சூசியென்பவனையும், ஒருவர்
ஒருவரை அறியா வண்ணம் வானில் போக்கினான் – ஒருத்தர் மற்றொருத்தரை
அறியாதபடி வீரசுவர்க்கத்திற் செலுத்தினான்; (எ – று.)

     உறவுமுறைமை உடம்பைப்பற்றினதேயன்றி உயிரைப்பற்றினதன்றாதலின்
உடம்பைவிட்டு உயிர் நீங்கினவளவிலே அத்தன்மை ஒழிகின்ற இயல்பு விளங்க,
‘ஒருவர் ஒருவரை அறியாவண்ணம் வானிற்போக்கினான்’ என்றார்;அன்றி,
முன்பின்னாகாமற் சமகாலத்திலே இருவரும் இறக்கும்படி அழித்தானென்ற
கருத்துமாம். உடன்று சீறி-ஒருபொருட்பன்மொழி.

இகல் இடிம்பன் மருமகனும் திருமகனும் குரு மகனோடு
எதிர்ந்து, பல் கால்
அகலிடம் செஞ் சேறு ஆக, அமரருடன் அசுரரைப்போல்
அமர்செய் காலை,-
பகலுடன் கார் இருள் பகைத்தால் பலிக்குமோ?-
அஞ்சனபன்மனை அப் போதில்
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி, போக்கினான் ஒரு
கணையால், புரவித்தாமா.177.-கடோற்கசன்மகனை அசுவத்தாமன் கொல்லுதல்.

இகல்-வலிமையையுடைய, இடிம்பன் மருமகன்உம்-இடிம்பனது
உடன்பிறந்தவளின் புத்திரனான கடோற்கசனும், திரு மகன்உம்-(அக்கடோற்கசனது)
சிறந்த புத்திரனான அஞ்சநபத்மனும், குரு மகனோடு-துரோணாசாரியனது
புத்திரனான அகவத்தாமனுடனே, பல் கால் எதிர்ந்து – பலமுறை எதிரிட்டு, அகல்
இடம் செம் சேறு ஆக-பரந்த போர்க்களத்தினிடம் (இரத்தப்பெருக்கினாற்)
சிவந்தசேறாகும்படி, அமரருடன் அசுரரை போல் அமர் செய் காலை-தேவர்களுடன்
அசுரர்கள் (போர்செய்தல்) போலப் போர் செய்தபொழுது,-பகலுடன் கார் இருள்
பகைத்தால் பலிக்கும்ஓ-சூரியனுடனே கரிய இருள் பகைமைகொண்டாற்
பயன்படுமோ? (பயன்படாது); (அவ்வாறே), அ போதில் – அப்பொழுது,
புரவித்தாமா- அசுவத்தாமன், (தன்னோடு மாறுபட்டு எதிர்த்த), அஞ்சனபன்மனை-,
ஒருகணையால்-ஓரம்பினால், புகல் இடம் பொன் உலகு ஆக்கி போக்கினான்; –
(அவன்) செல்லுதற்கு உரிய இடம் வீரசுவர்க்கமாம்படி (எ – று.)

     இடிம்பன் மருமகன் இடிம்பனது உடன்பிறந்தவளாகிய இடிம்பியினிடம்
வீமசேனனுக்குப் பிறந்த கடோற்கசன், பூதேவனான அசுவத்தாமனுக்குத் தேவரும்,
அரக்கரான கடோற்கசனுக்கும் அவன்மகனுக்கும் அசுரரும் உவமைகூறப்பட்டனர்.
பின்னிரண்டடியில்-எடுத்துக்காட்டுவமையணி. ‘மருமகனுந்திருமகனுங்
குருமகனோடு’-பிராசம்.    

மகன்பட்ட சினம் கதுவ, வரை உறழ் தோள்
கடோற்கசன், மா மலைகள் வீசி,
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான்மேல், எறிந்து
எறிந்திட்டு ஆர்த்த காலை,
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா
மைந்தன், வீமன் கையில்
பகன் பட்ட பாடு எல்லாம் படுத்தி, ஒரு கதாயுதத்தால்
படியில் வீழ்த்தான்.178.-கடோற்கசனை அசுவத்தாமன் அடித்துவீழ்த்துதல்.

(பின்பு),வரை உறழ் தோள் கடோற்கசன் – மலையையொத்த
தோள்களையுடைய கடோற்கசன், மகன் பட்ட சினம் கதுவ – (தனது) புத்திரன்
கொல்லப்பட்டதனா லாகிய  கோபம் மிகமூள, அகல் பட்டம் நுதல் வேழம்
அன்னான்மேல்-அகன்ற பட்டமணிந்த நெற்றியையுடைய யானைபோல
வலியவனானஅசுவத்தாமன்மேல், மா மலைகள் வீசி எறிந்து எறிந்திட்டு-பெரிய
மலைகளையெடுத்து வேகமாக மிகுதியாய்எறிந்து, ஆர்த்த காலை –
ஆராவரித்தபொழுது,-குகன் பட்டந்தனக்கு 
உரியகோ முனிவன் மா மைந்தன் –
முருகக்கடவுளின் பெருமை நிலைக்கு உரியவனும் சிறந்த அந்தணனான
துரோணனது சிறந்த குமாரனுமான அசுவத்தாமன், – வீமன் கையில் பகன் பட்ட
பாடு எல்லாம் படுத்தி – வீமசேனனதுகையிற் பகாசுரன் பட்ட பாடெல்லாம்
(அக்கடோற்கசன்) படும்படி செய்து, ஒரு கதாயுதத்தால் படியில் வீழ்த்தான் –
ஒருகதையினால் (அடித்து அவனை) நிலத்திலே தள்ளினான்; (எ-று.)

     குகன்பட்டந்தனக்குரியமைந்தன் எனஇயையும்; முருகக் கடவுள்போல
அசுவத்தாமனும் சிவகுமாரனாகிய சிறப்புடையானென்பதாம். “உலாவருந்தனது
தாதையொத்த வலியுடைய காளைகழ லுதையினால், விலாவொடிந்து
தடமார்பொடிந்துமிடல் வெரிநொடிந்து படுவெம்பிணப், புலாலளைந்த விருகவு
ளொடிந்து பொருபுய மொடிந்து கடையொத்தவாய், நிலாவெழுங்கொடிய வெயி
றொடிந்து செயலின்றி வாணிருதனிற்கவே” என்ற செய்யுளினால், வீமன் கையிற்
பகன் பட்ட பாடெல்லாம் அறிக.   

மோகித்து விழும் அரக்கன், மீண்டு எழுந்து, மோகரிக்க,
முடி மகீபன்
வேகித்துக் கன்னனைப் பார்த்து, ‘இவன் உயிரை வீட்டுக!’ என,
‘வேகத் தண்டால்
சோகித்துத் தளர்ந்தான்மேல் தொடேன்; விசயன்உயிர் உண என்
தொடையோ சாலத்
தாகித்தது; இப்பொழுதே கொன்று, உனக்குக் கடல் ஞாலம்
தருவேன்’ என்றான்.179.-கடோற்கசனைக்கொல்லும்படி துரியோதனன்
வேண்டியதற்குக் கர்ணன் உடன்படாமை.

மோகித்துவிழும் – (இங்ஙனம்) மூர்ச்சித்துக் கீழ் விழுந்த, அரக்கன்
– கடோற்கசன், மீண்டு எழுந்து மோகரிக்க. பின்பு மயக்கந் தெளிந்து
ஆரவாரஞ்செய்ய, – (அதுகண்டு), முடி மகீபன் – கிரீடாதிப தியான துரியோதனன்,
வேகித்து – விரைவு கொண்டு, கன்னனை பார்த்து-, ‘இவன்உயிரை வீட்டுக –
இக்கடோற்கசனுயிரை (இப்பொழுது) ஒழிப்பாயாக,’ என – என்று சொல்ல, –
(அதற்குக் கர்ணன்),-‘வேகம் தண்டால் சோகித்து தளர்ந்தான் மேல் – விசையுள்ள
(அசுவத்தாமன்) கதையினால் வருந்தித் தளர்ச்சியுற்ற இவன்மேல், தொடேன் –
(இப்பொழுது நான்) அம்புதொடுக்கமாட்டேன்: என தொடைஓ – எனது அம்போ,
விசயன் உயிர் உண-அருச்சுனனது உயிரைக் கொள்ளுதற்கு, சால தாகித்தது – மிக
வேட்கைகொண்டுள்ளது; (ஆதலால்), இப்பொழுதுஏ கொன்று உனக்கு கடல்
ஞாலம் தருவேன் – இப்பொழுதே(அருச்சுனனைக்) கொன்றுஉனக்குக் கடல்சூழ்ந்த
நிலவுலகம் முழுவதையும் (இடையூறின்றித் தனியேபுரிய தாம்படி) கொடுப்பேன்,’
என்றான் – என்று சொன்னான்; (எ-று.)-பி-ம்: தொடைபோய்ச்.

நிருபனுடன் இரவி மகன் புகன்ற உரை கேட்டு, அருகே நின்ற
விற் கைக்
கிருபன் மிக நகைத்து, ‘எதிரே கிட்டினால் முதுகிடுவை;
கிரீடிதன்னைப்
பொரு பகழிக்கு இரையாகப் போக்குகின்றேன் என மொழிவை;
போர் வல்லோர்கள்
உரு அழியத் தம் வலிமை உரைப்பரோ?’ என உரைத்தான்,
உரையால் மிக்கோன்.

அம் மொழி தன் செவி சுடப் போய், அக் கணத்தே,
விசயனுடன் அங்கராசன்
வெம் முனை செய் போர் அழிந்து, தேர் அழிந்து,
வென்னிட்டான், மீண்டும் மீண்டும்;
அம் முறையில் பற்குனனால் ஆவி ஒழிந்தவர் அரசர்
அநேக கோடி;
எம் மொழி கொண்டு உரைப்பரிதால்; உரைக்க, எமக்கு ஆயிரம்
நா இல்லை மாதோ!181.-கர்ணன் அருச்சுனனை யெதிர்த்துத் தோற்றல்.

அ மொழி-கிருபாசாரியன் கூறிய அந்தவார்த்தை, தன் செவி சுட –
தனது காதுகளை மிகவும் வருத்தியதனால், அ கணததுஏ-அந்த க்ஷணத்திலேயே,
அங்க ராசன் – அங்கதேசத்தரசனான கர்ணன்,-விசயனுடன்-அருச்சுனனுடனே,
போய் – (போருக்குச்) சென்று, (விரைவிலே அருச்சுனனால்), வெம் முனைசெய்
போர் அழிந்து-கொடிய போர்க்களத்திற் செய்கிற (தனது) போர்த்திறம் அழிபட்டு,
தேர் அழிந்து – தேர் அழிபட்டு, மீண்டு உம் மீண்டுஉம்-பலமுறை, வென்
இட்டான் – பறங்கொடுத்தான்; அ முறையில் – அச்சமயத்திலே, பற்குனனால் ஆவி
ஒழிந்தவர் அரசர்-அருச்சுனனால் உயிரொழிந்த அரசர்கள், அனேக கோடி –
பலகோடிக்கணக்கினராவர்; (இப்படிப்பட்ட அருச்சுனனது போர்த்திறம்), எம்
மொழிகொண்டு உரைப்பு அரிது-எமது வாக்கினாற் சொல்லுதற்கு அரியது;
(ஏனெனில்,-) உரைக்க எமக்கு ஆயிரம் நாஇல்லை – பேசுதற்கு எமக்கு
ஆயிரம்நாக்கு இல்லை; (எ-று.)-ஆல், மாது ஓ-ஈற்றசைகள். ஆயிரம் நாக்கு
இருந்தாலன்றி அது சொல்லமுடியா தென்பதாம். பின்னிரண்
டடிகள் அருச்சுன்னாற்
பலர்பட்டமைகூறுங் கவிக்கூற்று பி – ம்: ராயன். ஆவி யழிந்தவர்

அந்த முனைதனில் மீண்டும், அந்தணன்தன் திருமதலை,
குந்திபோசன்
மைந்தர் இருவரை இரண்டு வடிக் கணையால் மடிவித்தான்;
மாயோன் வன் கைச்
செந் திகிரிதனில் அடங்கி முடங்கிய தன்கிரணத்தின் சிறுமை நாணி,
உந்து திரைச் சிந்துவினில், ஓர் ஆழித் தேரோனும்
ஒளித்திட்டானே.82.- அசுவத்தாமனது போரும்,சூரியாஸ்தனமும்.

மீண்டுஉம் – பின்பும், அந்த முனைதனில் – அந்தப்
போர்க்களத்திலே, அந்தணன் தன் திரு மதலை – துரோணாசாரியனது சிறந்த
குமாரன் (அகவத்தாமன்), குந்திபோசன் மைந்தர் இருவரை – குந்திபோசராசன்
புத்திர ரிரண்டுபேரை, இரண்டு வடி கணையால் – கூரிய இரண்டு அம்புகளினால்,
மடிவித்தான் –  அழியச்செய்தான்; (அப்பொழுது), ஓர் ஆழி தேரோன்உம் –
ஒற்றைச்சக்கரமுள்ள தேரையுடையவனானசூரியனும்,-மாயோன்வல் கை செம்
திகிரிதனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி – கண்ணபிரானது
வலிய திருக்கையிலுள்ள சிவந்தசக்கரத்தினுள் அடங்கி மறைந்த தனது ஒளிகளின்
எளிமையைக் குறித்து வெட்கப்பட்டு, உந்து திரை சிந்துவினில் ஒளித்திட்டான் –
வீசுகின்ற அலைகளையுடைய கடலிலே மறைந்திட்டான்; (எ – று.)

     குந்திபோசன்-குந்தியின்வளர்த்த தந்தை, சூரியன் அஸ்தமித்தல் மேல்கடலில்
மூழ்கிமறைதல்போலத்தோன்றுகிற இயல்பினிடத்து, தன்கிரணம்
கண்ணன்கைச்சக்கரத்தினுள் அகப்பட்டு மறைபட்ட அவமானத்துக்கு வெள்கிக்
கடலிலொளித்தானென்று கவி தானாக ஒரு காரணங்கற்பித்துக் கூறினமையால்,
ஏதுத்தற்குறிப்பேற்றவணி. பி-ம்: வண்கை.  

இசையினும் பெருக நன்று!’ எனத் தனது இயற்கையால்
மிக வளர்த்திடும்
வசையினும் கரிய இருள் பரந்துழி, ‘வயங்கு தீப நெடு வாளினால்
நிசையினும் பொருதும்’ என்று தெவ்வர் முனை நேர்
நடந்தனன்-நெருங்கு குன்று
அசையினும், புடவி அசையினும், சமரில் அசைவு இலாத
தனி ஆண்மையான்.183.-துரியோதனன் இரவிலும் போர்செய்யத் தொடங்குதல்.

நெருங்கு குன்று அசையின்உம் – ஒன்றோடொன்று நெருங்கிய
மலைகள் சலித்தாலும், புடவி அசையின்உம்-பூமி சலித்தாலும், சமரில் அசைவு
இலாத – போரில் (தான்) சலித்தலில்லாத, தனி ஆண்மையான்-ஒப்பற்ற
பராக்கிரமமுள்ளவனான துரியோதனன்,-இசையின்உம் பெருக நன்று என தனது
இயற்கையால் மிக வளர்த்திடும் வசையின்உம் கரிய இருள் பரந்தஉழி-
புகழைக்காட்டிலும் மிகவும் நல்லதென்று கருதித் தனது கொடிய இயல்பினால்
மிகுதியாக(த்தான்) வளரச்செய்கிற பழியைக்காட்டிலுங் கருமையான இருட்டுப்
பரவியபொழுது,-வயங்கு தீபம் நெடு வாளினால் நிசையின்உம் பொருதும் என்று –
விளங்குகிற  விளக்குக்களின் மிக்கஒளியினது உதவியால் இராத்திரியிலும்
போர்செய்வோமென்று நிச்சயித்து, தெவ்வர்முனை நேர் நடந்தனன்-பகைவர்
முன்னிலையிலே எதிர்த்துச்சென்றான்; (எ – று.)

     கீர்த்தியை வெண்ணிறமுடைய தென்றும், அபகீர்த்தியைக்
கருநிறமுடையதென்றுங் கூறுதல், கவிமரபு, புகழின்பெருமையைச் சிறிதும்
பாராட்டாது துரியோதனன் தான் மேன்மேல் ஈட்டுகிற பழியினுங்கருமையான
இருளென்று, இருளின் கருநிறமிகுதியை எடுத்துக்கூறினார்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள்மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் கூவிளங்
காய்ச்சீர்களும், இருளென்று,ஏழாவது விளச்சீரு மாகிய எழுச்சீராசிரிய
விருத்தங்கள்    

பகல் இரா வர அழைத்தனன், பகைவர் பாகன் என்று,
படு பகலை அவ்
அகல் இராவினில் அழைத்தனன்கொல்’ என, ‘அண்டகூடம்
உற இருள் அறுத்து,
இகல் இராக ஒளி உமிழ் விளக்குஇனம் எடுக்க!’ என்று
கடிது ஏவினான்-
தகல் இராதது ஒர் மனத்தினான், வலிய தனதன் நேர்தரு
தனத்தினான்.184.-துரியோதனன் தன்சேனைமுழுவதும் நிறைய விளக்கெடுப்பித்தல்

பகைவர் பாகன் – (தனக்குப்) பகைவர்களான பாண்டவர்கட்கு
உரியதேர்ப்பாகனான கண்ணன், பகல் இரா வர அழைத்தனன் – (சூரியனைச்
சக்கரத்தால்மறைத்துப்) பகலிலே இரவை வரும்படி செய்தான், என்று-என்று
எண்ணி,(அதற்குமாறாக), படு பகலை – நடுப்பகற்பொழுதை, அ அகல் இராவினில்-
அன்றைத்தினத்துநீண்ட இராத்திரியிலே, அழைத்தனன் கொல் – (இவன்)
வரவழைத்தானோ?’ என – என்று (காண்பவர்) கூறும்படி,-தகல் இராதது ஒர்
மனத்தினான் – தக்கஉயர்குணமில்லாததொரு மனத்தையுடையவனும், வலிய தனதன்
நேர்தரு தனத்தினான் –  வலிமையுடைய குபேரன்போன்ற செல்வமுடையவனுமான
துரியோதனன் அண்டகூடம் உற இருள் அறுத்து இகல்-அண்ட கோளத்தினிடம்
முழுவதிலும் இருளை யொழித்து எதிர்க்கவல்ல, இராகம் ஒளி உமிழ் விளக்கு
இனம்-சிவந்த ஒளியை வீசுகிற விளக்குக்களின் கூட்டத்தை, கடிது எடுக்க –
விரைவில் ஏற்று வீராக,  என்று-, ஏவினான்-(ஏவலாளர்க்குக்) கட்டளையிட்டான்;

     சயத்திரதனைக்கொல்லுதற்பொருட்டுக் கண்ணன் பகலில் இரவை
வருவித்தபடியால் அதற்குமாறாகத் துரியோதனன் இரவிற் பகலைவரச்
செய்தானென்றுபார்த்தவர் வியந்துரைக்கும்படி இருளென்பது சிறிதுமில்லாதவாறு
சுடர்விளக்கெடுக்கவென்று கட்டளையிட்டா னென்க. தற்குறிப்பேற்றவணி

பொங்கி ஆடு அரவு எழுந்து அநேகவிதம் ஆனது’ என்று,
அமரர் புகலுமாறு,
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து,
அளப்ப அரிய ஆகவம்
எங்கும் ஆனை பரி தேர்கள்தோறும் ஒளிர் தீப
காகளம் எடுக்கவே,
சங்கு தாரை எழ நின்றனன், தருமன் மதலை
தம்பியர்கள்தம்மொடும்.185.-தருமபுத்திரனும் தன்சேனைமுழுவதும் விளக்கெடுப்பித்தல்.

அங்கு – அப்பொழுது,-தருமன் மதலை – யமதருமராச குமாரன்,-
வாள் அரவு உயர்த்தகோன் நினைவு அறிந்து –  கொடிய பாம்புவடிவத்தை(க்
கொடியில்) உயரநிறுத்திய துரியோதனராசனது எண்ணத்தை அறிந்து,-ஆடு அரவு
பொங்கி எழுந்து அநேகவிதம் ஆனது என்று அமரர் புகலும் ஆறு-பட
மெடுத்தாடுந்தன்மையுள்ள ஆதிசேஷன் சீறிப் பாதாளத்தினின்று) மேலெழுந்து
பலவகையாகத் தோன்றிய தென்று தேவர்கள் (ஒப்புமையாற்) சொல்லும்படி, அளப்பு
அரிய ஆசவம் எங்கு உம் ஆனை பரி தேர்கள்தோறுஉம் ஒளிர் தீப காகளம்
எடுக்க – அளவிடுதற்கு அருமையான (மிகப்பரந்த)  போர்க்களம் முழுவதிலும்
ஆனை குதிரை தேர்களென்னும் இவற்றிலெல்லாம் விளங்குகிற விளக்குக்கலங்களை
அமைக்க(ச்சொல்லி),-சங்கு தாரை எழ-சங்கவாத்தியங்களும் தாரை யென்னும்
ஊதுகருவிகளும் மிக ஒலிக்க, தம்பியர்கள் தம்மொடுஉம் – (வீமன் முதலிய)
தம்பிமார்களுடனே, நின்றனன் – (போர்க்குச் சித்தனாய்) நின்றான்; (எ – று.)

     போர்க்களத்திற் பலவிடத்தும் அநேகவிளக்குகள் விளங்குவது, தனது
ஆயிரம்முடிகளிலுமுள்ள மாணிக்கங்களின் சோதிவிளங்க ஆதிசேஷன்
மேலொழுந்தாற்போன்றது என்று வருணித்தார்; தற்குறிப்பேற்றவணி.
இத்தோற்றத்தின்சிறப்பு வானத்திலிருந்து போர்காண்கிற தேவர்கட்கே நன்கு
விளங்குமாதலால், ‘அமரர்புகலுமாறு’ எனப்பட்டது. சங்குதாரையெழுதல், போர்
தொடங்குதற்கு அறிகுறி.

கருதி வாகை புனை விசயன்மேல் விசய கன்னன் முந்தி
அமர் கடுகினான்;
கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன்
எதிர் கிட்டினான்;
சுருதி மா முனி துரோணனும், பழைய திட்டத்துய்மனொடு
துன்னினான்;
‘பொருது மாய்வன்’ என, வீமனோடு உயர் புயங்க கேது மிகு
போர் செய்தான்.186.- இரண்டுகவிகள்-இருதிறத்துவீரரும் தனித்தனி எதிர்த்துப்
போர்தொடங்குதலைத் தெரிவிக்கும்.

வாகை-வெற்றியையே, கருதி-(பிரதானமாக)எண்ணி, புனை-
மேற்கொள்கிற, விசயன்மேல் – அருச்சுனன்மேல், விசயகன்னன்-வெற்றியையுடைய
கர்ணன், முந்தி அமர் கடுகினான் – முற்பட்டுவந்து போரைவிரைவாகத்
தொடங்கினான்; கிருதவன்மன் எனும் விருதன்-கிருதவர்மாவென்றவீரன்,
மாமுரசகேதனன் தன் எதிர் கிட்டினான் – பெரிய பேரிகை வடிவத்தையெழுதிய
கொடியையுடையவனான தருமபுத்திரனது எதிரிலேபோர்செய்யச் சமீபித்தான்;
சுருதிமா முனி துரோணன்உம் – வேதம்வல்ல சிறந்த அந்தணனான
துரோணாசாரியனும், பழைய திட்டத்துய்மனொடு துன்னினான்-
(தனக்குப்) பழம்பகையாகத் தோன்றியுள்ளவனான திட்டத்துய்மனுடன் (போர்க்கு)
நெருங்கினான்; பொருது மாய்வன் என-போர்செய்து இறப்பேனென்று துணிந்து,
வீமனோடு-,உயர் புயங்க கேது-உயர்ந்த பாம்புக் கொடியையுடையவனான
துரியோதனன், மிகு போர் செய்தான்-மிக்க போரைச் செய்தான்; (எ – று.)-
பொருட்பின்வருநிலையணி. பி-ம்: விசையன்மேல் விசையகன்னன்

சல்லியன் பெருகு சல்லியத்தொடு சதானிகன்தனொடு
போர் செய்தான்;
வல்லியம் புனை கடோற்கசன்தனொடு போர் செய்தான்,
முனிவன் மைந்தனும்;
எல் இயங்கு சுடரினும் மணிச் சுடர்கள் எழு மடங்கு
ஒளி எறிக்கவும்,
பல்லியம் பல முழங்கவும், தரணிபாலர் இப்படி பகைக்கவே,

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ-ள்.) சல்லியன்-,பெருகு சல்லியத்தொடு-மிக்க அம்புகளினால்,
சதானிகன்தனொடு போர் செய்தான் – சதாநீகனுடன் போர்செய்தான்; வல்லியம்
புனை கடோற்கசன் தனொடு – புலியையொத்த கடோற்கசனுடனே, முனிவன்
மைந்தன்உம்-துரோணன்மகனான அசுவத்தாமனும், போர்செய்தான்-;எல் இயங்கு
சுடரின்உம்-பகலிலே பொருந்திவிளங்குகிற சூரியனது ஒளியைக் காட்டிலும், எழு
மடங்கு-ஏழுபங்கு அதிகமாக, மணி சுடர்கள் – அழகிய விளக்குகள், ஒளி
எறிக்கஉம்-ஒளியை வீசவும், பல் இயல் பல முழங்கஉம்-பலவகைப்பட்ட
வாத்தியங்கள் பலவும் மிக ஒலிக்கவும், தரணி பாலர்-அரசர்கள், இப்படி பகைக்க-
இங்ஙனம் மாறுபட்டு எதிர்க்க,-(எ – று.)-அருச்சுனன் கர்ணனைப் பிளந்தா
னென்றுஅடுத்த கவியோடு முடியும்.

     ஸதாநீக னென்ற பெயர் – நூறுசேனையையுடையா னென்று பொருள்படும்;
இவன், மத்ஸயதேசத்தரசனான விராடனது தம்பி: மகனென்பாருமுளர்.
ஒன்றன்கூட்டமும் பலவினீட்டமும் பற்றி, ‘பல்லியம்பல’ என்று இரண்டுபன்மை
கூறினார். சல்லியத்தொடு, மூன்றனுருபு-கருவிப்பொருளது. 

எல் தரும் தபனன் ஏகினான்; இனி எனக்கு வாசி கொடி
நீடு தேர்
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது’ என, முரண் அழிந்திட
மொழிந்து, போர்
வில் தரும் கணைகளால் விழப் பொருது, வெயிலவன்
சுதனை, மீளவும்
பின் தரும்படி, பிளந்தனன்-தனுசர் பின்னிடப் பொருத
பெற்றியான்.188.-அருச்சுனன் கர்ணனை வெல்லுதல்.

தனுசர் பின் இட பொருத பெற்றியான் – (நிவாதகவசர் காலகேயர்
என்னும்) அசுரர்கள் பிற்படும்படி (முன்பு) போர் செய்த பெருமையையுடையவனான
அருச்சுனன்,-(கர்ணனைப்பார்த்து), ‘எல்தரும் தபனன் ஏகினான் -(உனது
தந்தையான) ஒளியைவெளிவீசுகிற சூரியனோ போய்விட்டான்:  இனி –
இப்பொழுது, எனக்கு வாசி கொடி நீடு தேர் முன் தரும் கனலின்
ஒளி எழுந்தது-எனக்கு (நான்குவெள்ளைக்)  குதிரைகளும் குரங்குக்கொடியும்
உயர்ந்ததேரும் முதலியவற்றை முன்புகொடுத்த அக்கினியின் ஒளி
தோன்றிவிளங்கியது’ என-என்று, முரண் அழிந்திட-(அவனது உறுதிநிலை
குலையும்படி, மொழிந்து – வீரவாதங்கூறி, வில் தரும் கணைகளால்-(தனது)
வில்லினால் எய்யப்படும் அம்புகளால், விழ-(அவனது குதிரைகள் கொடி
தேர்முதலியன) கீழ்விழும்படி, போர் பொருது-போர்செய்து, வெயிலவன் சுதனை-
சூரியபுத்திரனான அக்கர்ணனை, மீளஉம்-மறுபடியும், பின் தரும்படி-
புறங்கொடுக்கும்படி, பிளந்தனன்-(உடம்பைப்) பேதித்தான்;(எ – று.)-‘இது உனக்கு
வெற்றிக்காலமன்று, எனக்கே வெற்றிக்காலம்’ என்றுசொல்லி அவன்மனநிலையைக்
குலைத்தவாறாம். பி-ம்: முரண்மிகுந்திட,

ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி
வலியாலும் ஒண்
குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன்
நிகர் ஆயினான்;
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு, மா இரதம்
விட்டு, வாள்
நிருதர்சேகரனொடு உவமை ஆயினன், நெடுங் களத்தில்
எதிர் நின்றிலன்.189.-கிருதவன்மாவைத் தருமன் சயித்தல்.

ஒரு தன் வாகு வலியால்உம்-ஒப்பற்ற தனதுதோள்
வலிமையினாலும்,வார் சிலை உதைத்த வாளி வலியால்உம்-நீண்ட வில்லினின்று
செலுத்தியஅம்புகளின் வலிமையினாலும், ஒள்குருதி பொங்க அடு-ஒள்ளிய
இரத்தம்வெளிச்சொரியும்படி போர் செய்கிற, தருமசாரன்-யுதிட்டிரன், ரகு குலம்
இராமன்நிகர் ஆயினான்-ரகுவென்னும் அரசனது வம்சத்திலே திருவவதரித்த
ஸ்ரீராமன்போலானான்; கிருதவன்மன் என வரும் நராதிபதி-கிருதவர் மாவென்று
பேர்பெற்றுவந்த, அரசன், கெட்டு-தோற்று, மா இரதம் விட்டு-பெரியதேரை விட்டு
இழிந்து, வாள் நிருதர் சேகரனொடு உவமை ஆய்-கொடிய அரக்கர்தலைவனான
இராவணனோடு ஒப்பாய், நெடுங்களத்தில் அவன் எதிர் நின்றிலன்-
பெரியபோர்க்களத்திலே அத்தருமனெதிரிலே நிற்கமாட்டாதவனாய்ப்
புறங்கொடுத்துச்சென்றான்; (எ – று.)

     இராவணன் முதல்நாட்போரில் யாவையு மிழந்தமையும், அப்பொழுது
இராமபிரான் அவனைக்கொல்லாமல் ‘இன்றுபோய் நாளைவா’ என்று விடுத்தமையும்
பிரசித்தம். தருமபுத்திரனது அம்புக்கு ஆற்றாது கிருதவன்மன் சிலையொழிந்து
நிலைதளர்ந்து சென்றானென்றும், அதுகண்ட தருமபுத்திரன் அவனைக்கொல்லாது
கருணைசெய்தா னென்றும், உவமையால்விளங்கும். பலராமனினும்வேறுபாடு
தோன்ற,தசரதராமனை ‘ரகுகுலராமன்’ என்றார். ரகு-சூரியவம்சத்திற்
பிரசித்திபெற்றஓரரசன்;இவன்குலத்தில் அவதரித்ததனால்,ராமனுக்கு ராகவனென்று
ஒருதிருநாமமும்வழங்கும்.   

வாளம் ஆக வில் வணக்கி, உம்பர் பதி மைந்தன், வாள்
இரவி மைந்தனைக்
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி,
அமர் கொள்ளவே,
மீளமீளவும் அழிந்து அழிந்து, அவன் ஒர் வேலினால் எறிய,
வேலையும்
தூளம் ஆக வடி வாளியால் எதிர் துணித்து, வன்பொடு துரக்கவே180.-கிருபாசாரியன் கர்ணனைப் பரிகசித்தல்.

நிருபனுடன் – துரியோதனராசனுடனே, இரவி மகன் –
சூரியகுமாரனான கர்ணன், புகன்ற – சொன்ன, உரை – அந்த வார்த்தையை,
கேட்டு-, அருகே நின்ற – சமீபத்திலே நின்ற, உரையால் மிக்கோன் – புகழினாற்
சிறந்தவனான, வில் கை கிருபன் – வில்லையேந்திய கையையுடைய கிருபாசாரியன்,
மிக நகைத்து – மிகுதியாகச் சிரித்து, (கர்ணனை நோக்கி), ‘எதிரே கிட்டினால்
முதுகு இடுவை – (அருச்சுனன்) எதிரிலே கிட்டினாற் புறங்கொடுப்பாய்;
(அவன்கிட்டாதபொழுது), கிருடீதன்னை பொரு பகழிக்கு இரை ஆக
போக்குகின்றேன் என மொழிவை-அருச்சுனனைப் போர் செய்கிற அம்புக்கு
உணவாம்படி ஒழிக்கின்றேனென்று வீரவாதங்கூறுவாய்; போர் வல்லோர்கள் உரு
அழிய தம் வலிமை உரைப்பர்ஓ – போர்செய்தலில் வல்லமையுள்ளவர் (தமது)
பெருமைகெடத் தம்வலிமையைத் தாமே எடுத்துச் சொல்லுவார்களோ?’ என –
என்று, உரைத்தான்-; (எ-று.)

     இப்பாட்டின்இடையடிகளை இச்சருக்கத்து 59 – ஆம் பாட்டின்
முதலிரண்டடிகளோடு ஒப்பிடுக. தற்புகழ்தல் தனது பெருமைக்குக் குறைவாதலால்,
‘உருவழியத்தம்வலிமையுரைப்பரோ’ என்றான். 

முன் சதாகதி முருக்க, மேரு கிரி முடி முரிந்தென
முரண்கொள் போர்
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திரத்
தலைவன் மனம் முரிந்து,
என் செய்தான்? முடிவில் ஓடினான்; விறல் இடிம்பி
மைந்தன் முனி மைந்தன்மேல்
மின் செய் தாரை அயில் ஏவினான், அவன் விரைந்து
தேரின்மிசை வீழவே.191.-சல்லியனைச் சதானிகனும், அசுவத்தாமனைக்
கடோற்கசனும் வேறல்.

முன்-முன்னொரு காலத்தில், சதாகதி – வாயு தேவன், முருக்க –
விசையாகத் தாக்கியதனால், மேரு கிரி-மகாமேருமலை, முடி முரிந்து என-சிகரம்
ஒடிபட்டாற்போல, முரண் கொள்போர் வல் சதானிகன் வளைத்தவில்கணையின் –
மாறுபாடு கொண்ட போரில் வீசிய சதாநீகன் வணக்கிய வில்லினாலெய்த அம்பு
படுதலால், மத்திரம் தலைவன்-மத்திரநாட்டரசனான சல்லியன், மனம் முரிந்து-
இதயம்சிதைந்து, முடிவில்-இறுதியில், என செய்தான்-யாதுசெய்தான்? (எனில்),
ஓடினான்-புறங்கொடுத்து ஓடிப்போய்விட்டான்; விறல் இடிம்பி மைந்தன்-
வலிமையையுடைய இடிம்பியின் புத்திரனான கடோற்கசன், முனி மைந்தன்மேல்-
துரோணகுமாரானான அசுவத்தாமன்மேல், மின் செய் தாரை அயில் –
மின்னலையொத்து விளங்குகிற கூர்நுனியையுடைய வேலாயுதத்தை, அவன்
விரைந்துதேரின் மிசை வீழ – அவன் விரைவிலே தேரின் மேல் மூர்ச்சித்து
விழும்படி,ஏவினான்-பிரயோகித்தான்;  (எ – று.) எதற்குஞ்சலியாத சல்லியன்
மனம்முரிந்ததற்கு, அசலமாகிய மேரு முடிமுரிந்தது உவமம். செய்-உவமவுருபு.

தானை காவலனும் முந்துறப் பொருது, தரணி மன்னன்
விடு சமர்முகச்
சேனை காவலனை ஓட ஓட, ஒரு தெய்வ வாளி கொடு சீறினான்;
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த
மன்னவர்கள் அனைவரும்,
ஏனை மன்னவர்தமக்கு உடைந்து, முதுகிட்டு மன்னன்
அருகு எய்தினார்.192.-திட்டத்துய்மன் துரோணனைச் சயித்தல்.

தானை காவலன்உம் – பாண்டவசேனைத்தலைவனான
திட்டத்துய்மனும், முந்துற பொருது – விரைவாகப் போர்செய்து, தரணிமன்னன்
விடுசமர் முகம் சேனை காவலனை – பூமியையாளுகிற துரியோதனராசனாலே
வப்பட்டபோரின் முன்னேநின்ற சேனைத்தலைவனான துரோணனை, ஓட ஓட –
மிகுதியாய்ஓடும்படி,  ஒரு தெய்வ வாளிகொடு சீறினான் – தெய்வத்தன்மையுள்ள
ஓர்அம்பினால் (அஸ்திரத்தினால்) கோபித்து எதிர்த்தான்; (இங்ஙனமே), ஆனை
தேர்புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவர்உம் –
யானையும்தேரும் குதிரையும் காலாளுமாகிய சதுரங்கசேனையுடனே பொருந்தி
எதிரில்அணிவகுத்து நின்ற (துரியோதனன்பக்கத்து) அரசர்களெல்லாரும், ஏனை
மன்னவர்தமக்கு உடைந்து முதுகு இட்டு – மற்றை (எதிர்ப்பக்கத்து) அரசர்கட்குத்
தோற்றுப்புறங்கொடுத்து, மன்னன் அருகு எய்தினார்-துரியோதனராசனருகிலே
(சென்று)சேர்ந்தார்கள்;

அன்ன போதினில், அநேக நூறு பதினாயிரம் திறல் அரக்கரோடு,
இன்னவாறு என உரைக்கவே நிகர் இலாத திண் திறல் அலாயுதன்,
கன்ன சௌபலர்தமக்கு நண்பன், இருள் கங்குல் ஓர்
வடிவு கொண்டனான்,
மன்னர் யாவரும் வெருக்கொள, சமரில் மன்னர் மன்னன்
அடி மன்னினான்.193.-அலாயுத னென்னும் அரக்கன் துரியோதனனிடம் வருதல்

அன்ன போதினில் – அப்பொழுது,-கன்ன சௌபலர்தமக்கு நண்பன் –
கர்ணனுக்கும் சகுனிக்கும் சினேகிதனும், இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டு
அனான் – இருண்ட இராத்திரி தானே ஒருபுருஷவடிவத்தைக் கொண்டுவந்தாற்
போன்றவனும் ஆகிய, இன்ன ஆறு என உரைக்க நிகர் இலாத திண் திறல்
அலாயுதன் – இன்னதன்மையென்று சொல்லுதற்கு ஓருவமை பெறாத
மிக்கவலிமையையுடைய அலாயுத னென்னும் அரக்கன், அநேகம்
நூறு பதினாயிரம் திறல் அரக்கரோடு – அநேகம் பத்து லக்ஷக்கணக்கான
வலியஇராக்கதர்களுடனே, மன்னர் யாவர்உம் வெரு கொள – அரசர்களெல்லாரும்
அச்சங்கொள்ளும்படி, சமரில் – போர்க்களத்திலே, மன்னர் மன்னன் அடி
மன்னினான் – இராசராசனான துரியோதனனது பாதத்திற் பொருந்தினான்
(துரியோதனனை வணங்கினான் என்றபடி); (எ – று.)

     ஹலாயுதன் – வடசொல்; ஹல ஆயுதன் – கலப்பையைப் படைக்கலமாக
வுடையவ னென்று பொருள்படும். இருள்கங்குல் –  வினைத்தொகை. இருள்
கங்குல்ஓர்வடிவுகொண்டனான் – தற்குறிப்பேற்றவணி. 

இன்று இரா விடியும் முன்னர் வெஞ் சமம் எதிர்ந்த
பஞ்சவர்கள் எஞ்சிட,
கொன்று பார் முழுதும் நின்னதாக, உயர் வான் உளோர் பதி
கொடுப்பன் யான்’
என்று கோடி சபதம் புகன்று எதிர், எடுத்த தீபமும் இருண்டிட,
சென்று வீமனொடு கிட்டினான், விசை கொள் தேர் இரண்டும்
உடன் முட்டவே.194.-அலாயுதன் சபதஞ்செய்து வீமனை நெருங்குதல்.

இன்று இரா விடியும் முன்னர் – இன்னறயிராப் பொழுது கழிந்து
சூரியனுதிக்குமுன்னே (இன்றையிரவிலேயே), வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள்
எஞ்சிட கொன்று – கொடிய  போரில் எதிர்க்கிற பாண்டவர்கள் ஐவரும்
அழியும்படிகொன்று,  பார் முழுதுஉம் நின்னது ஆக – பூமண்டலம் முழுவதும்
உன்னுடையதேயாகுமாறு, உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் – உயர்ந்த
வானத்திலுள்ள தேவர்களது இடத்தை (வீரசுவர்க்கத்தை)) (அவர்கட்கு இடமாக)க்
கொடுப்பேன் யான்,’ என்று –  என்று இவ்வாறு, கோடி சபதம் புகன்று – மிகப்பல
சபதவார்த்தைகளைச்சொல்லி, எதிர் எடுத்த தீபம்உம் இருண்டிட சென்று –
எதிரிலேஏற்பட்டுள்ள விளக்குக்களின் ஒளியும் (தனதுகருமை மிகுதியால்)
இருளடையும்படிபோய், வீமனொடு-, விசை கொள்தேர் இரண்டுஉம் உடன்
முட்ட – வேகங்கொண்டதன்தேரும் அவன்தேருமாகிய இரண்டும் ஒன்றோடொன்று
தாக்கும்படி, கிட்டினான்- சமீபித்தான்; (எ – று.)-பி-ம்: இராமுடியுமுன்னர்.

பணைத்து இரு புயக் கிரி வளர, மாற்றலர் பயப்பட, வயப்படு
பயம் இல் நூற்றுவர்
துணைப் பெற, மனச் சினம் முடுக, நாக் கொடு சுழற்று கண்
நெருப்பு எழ, நிருதர் பார்த்திவன்
இணைப் பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர,
பகை முனையில் ஏற்கும் முன்-
அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர்,
எதிர்த்தனர், அமரை நோக்கியே.195.-அலாயுதனும் மற்றும்பல அரக்கர்களும் போர்தொடங்குதல்.

நிருதர் பார்த்திவன் – அரக்கர்தலைவனான அலாயுதன்,
இருபுயம்கிரி – (தனது) இரண்டு தோள்களாகிய மலைகள், பணைத்து வளர –
(யுத்தாவேசத்தாற்) புடைபருத்துப்பூரிக்கவும், மாற்றலர் பயப்பட – பகைவர்கள்
அச்சமடையவும், வய படு பயம் இல் நூற்றுவர் – வலிமைமிக்கவர்களும்
நற்பயனில்லாதவர்களுமான துரியோதனாதியர், துணை பெற-(தன்னால்)
உதவிபெறவும், மனம் சினம் முடுக. (தன்) மனத்திலே கோபம் அதிகப்படவும் நா
கொடு சுழற்று கண் – நாக்கிலும் கொடிய  வட்டமிடுகிற கண்களிலும், நெருப்பு எழ
– தீப்பொறி கிளம்பவும், இணை பிறை எயிறு இள நிலவினால்-
இரண்டுஇளஞ்சந்திரன் போன்ற (தனது) கோரதந்தங்களின் இளநிலாப் போன்ற
வெள்ளொளியால், செறி இருள் கிழிதர.- அடர்ந்த இருள் பிளவுபடவும், பகை
முனையில் ஏற்கும் முன் – பகைவர்களுடைய போர்க்களத்திலேசென்று
எதிர்த்தற்குமுன்னே,-  அணைத்து இரு புறத்தின் உம் வரும் இராக்கதர் –
(அவனைச்) சார்ந்துஇரண்டுபக்கங்களிலும் நெருங்கி வருகிற ராக்ஷஸர்கள்,
அதிர்த்தனர் – ஆரவாரஞ்செய்துகொண்டு, அமரை நோக்கி எதிர்த்தனர் –
போரைநோக்கி எதிர்த்துச் சென்றார்கள்; (எ – று.)

     நூற்றுவர் – தொகைக்குறிப்பு; இங்கே, அவர்களில் இறந்தவ ரொழிந்தாரைக்
குறித்தது.

     இதுமுதற் பத்து கவிகள் – ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள்
கருவிளச்சீர்களும், மூன்று ஏழாஞ் சீர்கள் புளிமாச்சீர்களும், நான்கு எட்டாஞ்
சீர்கள்கூவிளச்சீர்களு மாகிய கழிநெடிலடிநான்குகொண்டஎண்சீராசிரியச்சந்த
விருத்தங்கள். 
 ‘தனத்தனதனத் தன தனன தாத்தன தனத்தன
தனத்தன தனன தாத்தன’ என்பது, இவற்றுக்குச் சந்தக்குழிப்பாம், இவற்றில்
வல்லோசை மிக்குவந்தது, வல்லிசைவண்ணம்.    

இருட் கிரி எனத் தகு கரிய தோற்றமும், எயிற்றினில் நிணப் பிண
முடை கொள் நாற்றமும்,
முருக்கு அலர் வெளுத்திடும் அருண நாட்டமும், முகிற் குரல்
இளைத்திட முதிரும் வார்த்தையும்,
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும், மதக் கட களிற்று அதி
மதமுமாய், புடை
நெருக்கினர் தருக்கினர்,-விறல் நிசாச்சரர்-நிமிர்த்தனர் வடிக்
கணை, சிலைகள் கோட்டியே.196.- அரக்கர்நெருக்கிப் பொருதல்.

இருள் கிரி என தரு – இருள்மயமானதொருமலையென்று
சொல்லத்தக்க, கரிய தோற்றம்உம் – கருநிறமுள்ள வடிவமும், எயிற்றினில்-பற்களில்,
கொள் – கொண்ட, பிணம் நிணம் முடை நாற்றம்உம்-(தின்னப்பட்ட) பிணங்களின்
கொழுப்புக்களினது துர்க்கந்தமும், முருக்கு அலர் வெளுத்திடும்
அருணம்நாட்டம்உம்-முருக்கம்பூவும் வெண்ணிறமடையும்படியான சிவந்த
கண்களும், முகில் குரல் இளைத்திட முதிரும் வார்த்தைஉம் – மேகங்களின்
இடிமுழக்கமும் மெலிவடையும்படி (அதனினும்)  உரத்த பேச்சும், மருள் படு
கருத்திடை கதுவு சீற்றம்உம் – மயக்கம்பொருந்திய மனத்திலே மூண்டெழுகிற
கோபமும், மதம் கடம் களிறு அதி மதம்உம் ஆய்-வலிமையுள்ள மதயானை
போன்றமிக்க கொழுப்பு முடையவர்களாய், விறல்நிசாச்சரர்-வலிமையையுடைய
அந்தஅரக்கர்கள், புடை நெருங்கினர்-பக்கங்களில் (வந்து) நெருங்கிநின்று,
தருக்கினர்-(போரில்) உற்சாகங் கொண்டவர்களாய், சிலைகள் கோட்டி-விற்களை
வளைத்து, வடிகணை நிமிர்த்தனர்- கூரியஅம்புகளைப் பிரயோகித்தார்கள்; (எ-று.)

     முருக்கலர் வெளுத்திடும் அருணநாட்டம் – வெண்ணிறத்தோடு
செந்நிறத்துக்குஎவ்வளவு வேறுபாடு உண்டோ அவ்வளவு வேறுபாடுஉண்டு,
பலாசம்பூவின்செந்நிறத்தோடு அரக்கர் கண்கள் கோபத்தாற் கொண்ட மிக்க
செந்நிறத்துக்கு என்க. நிசாச்சரர்- சந்தம் பற்றியவிரித்தல். 

அருக்கனை மறைத்தவர் கடவு தேர்த்தலை அருச்சுனன் முதல்
பல துணைவர், சாத்தகி,
செருக்குடைய மைத்துனர் குமரர், காத்திடு செருக்களம் வெருக்
கொள, வளையும் மாத்திரை,
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடிக் கணை
தொடுத்தலும், இரவு உலாய்த் திரி
துருத்தனும் வளைத்தனன், நெடிய காற் சிலை; தொடுத்தனன்,
இலக்கு அறு தொடைகள் வாய்க்கவே.197.-அலாயுதனும் வீமனும் போர்தொடர்தல்.

அருக்கனை மறைத்தவர்- சூரியனைமறைத்தருளியவரான
கண்ணபிரான், கடவு-செலுத்துகிற, தேர்த்தலை – தேரிலேயுள்ள, அருச்சுனன்
முதல்- அருச்சுனன்முதலான, பல துணைவர் –  பலதம்பிமார்களும,் சாத்தகி-
சாத்தகியும்,செருக்கு உடைய மைத்துனர்-போர்க்களிப்பையுடைய
(திட்டத்துய்மன்முதலிய தமது) மைத்துனன்மார்களும், குமரர்-(தமது)
புத்திரரானஉபபாண்டவர்கடோற்கசன்முதலியோரும், காத்திடு-பாதுகாத்து வருகிற,
செருகளம்-போர்க்களத்தை, வெருகொள-அச்சங்கொள்ளும்படி, வளையும்
மாத்திரை-(அலாயுதனும்பல அரக்கர்களும்)சூழ்ந்தவளவிலே,-மருத்சுதன்-
வாயுகுமாரனான வீமன், வளைத்தது ஒர்தனுவினால்-வணக்கின (தனது)
ஒருவில்லினால், சில வடிகணை தொடுத்தலும்-கூரியசிலஅம்புகளைத்
தொடுத்தவுடனே, இரவு உலா திரி துருத்தன்உம்-இராத்திரியில்உல்லாசமாகத்
திரிகிற வஞ்சகனான அலாயுதனும், நெடிய சிலை கால் வளைத்தனன்-நீண்ட
விற்கழுந்தை வளைத்து, இலக்கு அறு தொடைகள் – எண்ணிக்கையில்லாத
அம்புகளை, வாய்க்க தொடுத்தனன் – பொருந்தப் பிரயோகித்தான்;

     துணைவர்-தம்பியர்மூவர் – தூர்த்த னென்ற வடசொல் விகாரப்பட்டது
வாய்க்க-பலிக்க எதிரிகள் மேற்சென்றுதைத்துத் தவறாது பயன்பட என்க

மருச்சுதன் வடிக் கணை, அமரர் மாற்றலன் வடிக் கணை
தடுத்தும், வல் இரதம் மாற்றியும்,
விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்தியும், விறற் பரிகளைத்
துணிதுணிகள் ஆக்கியும்,
உரத்தொடு செலுத்திய வலவன் மாத் தலை உருட்டியும், மணிச்
சிலை ஒடிய நூக்கியும்,
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும், இமைப்
பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே,198.- பின்பு வீமன் அலாயுதனது தேர்முதலியவற்றை யழித்தல்.

மருத் சுதன் வடி கணை-வீமசேனனது கூரிய அம்புகள்,-அமரர்
மாற்றலன் வடி கணை தடுத்துஉம் – தேவர்கட்குப்பகைவனான அவ்வரக்கனது
கூரிய அம்புகளைத் தடுத்தும், வல்இரதம் மாற்றிஉம்-(அவன் ஏறியிருந்த) வலிய
தேரை யொழித்தும், விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்திஉம்  – (அவன்)
விருப்பத்தோடு விரித்துக்கட்டிய கொடியை அறுத்துத் தள்ளியும் விறல் பரிகளை
துணிதுணிகள் ஆக்கிஉம்-வலிமையையுடைய குதிரைகளை வெட்டிப் பல
துண்டுகளாகச்செய்தும், உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டிஉம்-
வலிமையோடு தேர் செலுத்தி வந்த சாரதியின் பெரிய தலையைப் புரளச்செய்தும்,
மணிசிலை ஒடிய தூக்கிஉம் – உறுதியான வில்லை ஒடிபடும்படி துணித்துத்
தள்ளியும்,இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கிஉம்-இருட்டுப்போன்ற
கரியஒளியையுடைய உடம்பைப் பலதுளைகளாகச்செய்தும், இமைபொழுதினில் –
ஒருமாத்திரைப் பொழுதிலே, திறல் மடிய மாய்த்த – (அவனது) வலிமை
யொழியும்படி அழித்தன;  (எ – று.)-பி-ம்: வலவனாற்றலை. மாய்க்கவே

நிலத்திடை குதித்தனன், வடவைபோல் பெரு நெருப்பு எழ
விழித்தனன், நெடிய மூச்சுடன்,
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன், வரைத் திரள் எடுத்து,
எதிர் முடுகி ஓச்சலும்,-
உலப் புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து,                          அவை பொடிகள் ஆக்கினன்-
இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு
ஒடித்தவன் உதவு கூற்றமே.199.-அலாயுதனெறிந்த மலைகளை வீமன் பொடிபடுத்தல்.

(அதன்பின்), வலத்து உயர் அலம் படை நிசிசா உத்தமன்-
வலிமையில்மிக்க கலப்பைப் படைக்கலமுடைய அரக்கர் தலைவன் (அலாயுதன்),
நெடியமூச்சுடன்-பெரு மூச்சுடனே, நிலத்திடைகுதித்தனன் – (தேரினின்று)
தரையிற் குதித்து,வடவை போல் பெருநெருப்பு எழ விழித்தனன்-
படபாமுகாக்கினிபோலப்பெருநெருப்புவெளிக்கிளம்பும்படி கோபத்தோடு உறுக்கிப்
பார்த்து, வரை திரள்எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – மலைக்கூட்டங்களையெடுத்து
(வீமனுக்கு) எதிரில் விரைவாக வீசய  வளவிலே,-இலக்கம் இல் சுரர்க்கு இடம்
உதவு-கணக்கில்லாத தேவர்கட்கு இருப்பிடமாகஉதவுகிற, கோத்திரம்-(மேரு)
மலையினது, எழில் குவடு-வளர்ச்சியையுடைய (மூன்று) சிகரங்களை, ஒடித்தவன்-
முறித்தவனான வாயுதேவன், உதவு-பெற்ற, கூற்றம்-யமன்போன்றவீமன்,-உலம்புயம்
நிமிர்த்த ஒருகதையினால் – திரண்டகற்றூண்போன்ற(தனது) கையினால்
உயரவெடுத்தஒப்பற்றதொரு கதாயுதத்தைக்கொண்டு, தனது உரத்துடன்
அடித்து-தனதுமுழுவலிமையோடுதாக்கி, அவை பொடிகள் ஆக்கினன் –
அம்மலைகளைத்துகளாகச்செய்தான்; (எ – று.)

     நிசிசரோத்தமன்-குணசந்தி, இடமுதவுதல் – இடங்கொடுத்தல், தேவர்கட்குச்
சுவர்க்கம்போலவே மேருமலையும் ஓரிடமாம்; அன்றியும் அம்மலையின்
சிகரங்களில்மூன்று திரிமுர்த்திகட்கு இடமா மென்றும் புராணங் கூறும்.
கோத்ரம்-பூமியைக்காப்பது; மலை. 

பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி, பரிச் சுடருடைப் பெயர்
முனிகுலோத்தமன்,
மரித்தனன்’ எனத் தனி அயில் கொடு ஓச்சிய, மணிச் சிறு
பொருப்பினை நிகர், கடோற்கசன்,
‘எரித் தலை அரக்கனொடு எதிரியாய்ச் சமர் எனைத் தரு
மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில்; உரத்துடன் மலைத்து, இவன் உயிரை மாட்டுவன் உருத்து’
என உடற்றினன், உறுதி தோற்றவே.00.- கடோற்கசன் வீமனை விலக்கித் தான் அலாயுதனை யெதிர்த்தல்

பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி-பரத்துவாசமுனிவனுக்கு
மிகவும்உரிய குலத்திற் பிறந்தவனாகிய, பரி சுடர் உடை பெயர் முனிகுல
உத்தமன் -அசுவத்தாமாவென்னும் பெயரையுடைய முனிவர் கூட்டத்தலைவன்,
மரித்தனன் -இறந்தான், என-என்றுசொல்லும்படி, தனி அயில் கொடு ஓச்சிய-
ஒப்பற்றவேலாயுதத்தைக்கொண்டு (அவனை) வீசி யெறிந்த, மணி சிறு
பொருப்பினைநிகர் கடோற்கசன்- நீலமணிக்குன்றையொத்த (கருநிறமுடைய)
கடோற்கசனானவன்,-‘எனை தரு மருத்சுதன்- என்னைப்பெற்ற
தந்தையும் வாயுகுமாரனுமான வீமசேனன், எரிதலை அரக்கனொடு எதிரி ஆய் –
நெருப்புப்போன்ற தலைமயிரை (செம்பட்ட மயிரை)யுடைய இவ்விராக்கதனுடனே
சமமாய்நின்று எதிர்த்து, சமர் முனைதல்-போரை முயன்றுசெய்தல், கீழ்தொழில்-
இழிவான செயலாம்; (ஆதலால்),. உரத்துடன் மலைத்து இவன் உயிரை –
மாட்டுவன்-வலிமையோடு (நான்) எதிர்த்துப்பொருது இவனுயிரைமாள்விப்பேன்,’
என- என்று சொல்லி, உருத்து – கோபங்கொண்டு, உறுதி தோற்ற – (தனது)
பேரூக்கம்புலப்படும்படி, உடற்றினன் – (அலாயுதனுடன்) எதிர்த்துப்
பொருபவனானான்; (எ – று.)

     அசுவத்தாமன் பரத்துவாசமுனிவனது புத்திரனானதுரோணனுடைய
மகனாதலால், ‘பரத்துவசனுக்குறவுரிய கோத்திரி’ என்றார், உறவு உரிய என்ற
பிரித்து-உறவினால் உரிமைபெற்ற என்றலு மொன்று. பரத்துவசன் = பரத்வாஜன்;
வடசொல்.கோத்திரி-குலத்திற்பிறந்தவன்-அஸ்வம் தாம என்ற வடசொற்கள் –
முறையேகுதிரையென்றும் ஒளி யென்றும் பொருள் படுதலால், அகவத்தாம
னென்ற பெயரை’பரிச்சுடருடைப்பெயர்’ என்றார்; இது, லக்ஷிதலக்ஷணை
தலை,மயிர்க்கு-இலக்கணை. பி-ம்: உறுதிபோற்றவே.  

இடிக் குரல்!’ என, தலை உரகர் சாய்த்தனர்; எதிர்க் குரல்
எழுப்பின, குல சிலோச்சயம்;
வெடித்தது, முகட்டு உயர் கடக மேல்தலை; ‘விபத்து’ என இபத்
திரள் வெருவு தாக்கின;
துடித்தனர், இயக்கரொடு அமரர் தைத்தியர்; துணுக்கென
இமைத்தனர், திசைகள் காப்பவர்;
அடிக்கடி படித் துகள் பரவை தூர்த்தன;- அரக்கனும் அரக்கனும்
அமரில் ஆர்க்கவே.201.- அலாயுதனும் கடோற்கசனும் ஆரவாரித்தல்.

அரக்கன்உம் அரக்கன்உம் – இராக்கதராகிய அலாயுதனும்
கடோற்கசனும், அமரில் – போரில், ஆர்க்க – ஆரவாரஞ்செய்ததனால்,-உரகர்-
(கீழுலகத்துள்ள) சர்ப்பஜாதியார், இடி குரல்என – (அம்முழக்கத்தை)
இடியோசையென்றுகருதி, தலை சாய்த்தனர்-அஞ்சியொடுங்கி(த் தமது) முடிசாய்த்து
மூர்ச்சித்தார்கள்; குல சிலோச்சயம் – குலபருவதங்கள், எதிர் குரல் எழுப்பின –
(அவ்வொலிக்கு) எதிரொலியை உண்டாக்கின; முகடு உயர் கடகம் மேல் தலை –
மேலிடம் உயரப்பெற்ற அண்டகடாகத்தினது  மேலிடம், வெடித்தது –
பிளவுபட்டது;இபம் திரள் – (திக்கு)  யானைகளின் கூட்டம், விபத்து என –
ஆபத்துநேர்வதென்று எண்ணி, வெருவு தாக்கின –  அச்சமிகப்பெற்றன;
இயக்கரொடுஅமரர் தைத்தியர் – யக்ஷர்களும் தேவர்களும் அசுரர்களும்,
துணுக்கென -திடுக்கிட்டு, துடித்தனர் – (உள்ளமும் உடலும்) பதைத்தார்கள்;
திசைகள் காப்பவர் -திக்பாலகர்கள், இமைத்தனர் – (அச்சத்தால் தமது
இமையாக்கண்களை)இமைத்தார்கள்;  படி துகள்-பூமியிலுள்ள புழுதிகள்,
அடிக்கடி-, பரவைதூர்த்தன-(அதிர்ச்சிமிகுதியால் நிலத்தினின்று – எழும்பிக்)
கடலிற்படிந்து அதனை நிறைத்தன;(எ – று.)

   உயர்வுநவிற்சியணி.எதிர்க்குரல்பிரதித்தொனி,சிலோர்ச்சயம்=ஸிலா+உச்சயம்;
கற்களின் கூட்டம் என்ற மலையைக் காட்டும்,குல பர்வதங்கள்-சிறந்த மலைகள்;
இமயம், ஏமகூடம,் கைலை, நிடதம், நீலம் மந்தரம், விந்தியம் என்பர்;
கந்தமாதனமுங்கூட்டி எட்டெனவும்படும். இமைத்தல், அச்சக்குறி, திசைகள்
காப்பவர்-இந்திரன், அக்கனி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசாநன்
எனஎண்மர்; இவர்களை, கிழக்கு முதலாக முறையே கொள்க.
அமரராத்தியரென்றபாடத்திற்கு – அமரராகிய ஆதித்தியரென்க: ஆத்தியர்=ஆதித்யர்
அல்லது ஆதிதேயர்என்பதன்திரிபு.  

சிரித்தனர்; உருத்தனர்; அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர்,
பெருத்தனர்; மதனின் நோக்கினர்;
எரித்தனர்; இரித்தனர்; ககனமேற்பட எடுத்தனர்; படுத்தனர்,
புடவி கீழ்ப்பட;
முரித்தன கிரிக் கொடுமுடிகளால், சினை முரித்தன மரத்தன
துணிகளால், கடிது
உரித்தனர், துவக்கு; உரம் நெரிய, மேல் பழு ஒடித்தனர்,
இளைத்தனர், உருவம் வேர்க்கவே.202.-அலாயுதனும் கடோற்கசனும் பொருதல்.

(அவ்வரக்கரிருவரும்),-சிரித்தனர்-(வீரத்தெழுந்தவெகுளியாற்)
சிரித்தார்கள்; உருத்தனர் – பெருஞ்சினங்கொண்டார்கள்; மோடு உடல்
அணுவின்சிறுத்தனர் – (தமது) பெரிய உடம்பு அணுப்போலச் சிறுக்கும்படி
குழைந்துகாட்டினார்கள்; பெருத்தனர்-(உடனே) பெரிய வடிவங்கொண்டு
தோன்றினார்கள்; மதனின் நோக்கினர் – செருக்கோடு விழித்துப்பார்த்தார்கள்;
எரித்தனர்-தீயெழுப்பினார்கள்; இரித்தனர் – அச்சமுண்டாக்கினார்கள்; ககனம்
மேல்பட எடுத்தனர் – ஆகாயத்திற் படும்படி (கைப்படைகளை) உயர
எடுத்தார்கள்; புடவிகீழ் பட படுத்தனர் – தரை கீழாம்படி (அவற்றால்)
மோதினார்கள்;  முரித்தன கிரிகொடி முடிகளால் – ஒடித்தெடுத்தனவான
மலைகளின் சிகரங்களைக் கொண்டும்,சினை முரித்தன மரத்தன துணிகளால் –
கிளைகள் முறிக்கப்பட்டனவான மரங்களின்துண்டுகளைக்கொண்டும், (ஒரு
வரையொருவர் அடித்து), கடிது-விரைவாக, துவக்குஉரித்தனர். (உடம்பின்)
தோலையுரித்து, உரம் நெரிய – மார்புநொருங்க, மேல் பிறகு,பழு ஒடித்தனர்-
விலாவெலும்புகளை யொடித்தார்கள்; (அப்பால்), உருவம் வேர்க்க –
உடம்பு வேர்வையடைய, இளைத்தனர் – சோர்வடைந்தார்கள்; (எ – று.)

     ‘ககனமேற்பட எடுத்தனர் புடவிகீழ்ப்படப் படுத்தனர்’ என்பதற்கு-
(ஒருவரையொருவர்) சூரியனுக்கும் மேலாம்படி மிகஉயர எடுத்துத் தரைகுழிபடும்
படிகீழேபோகாட்டார்கள் என்றலும் ஒன்று, சிரித்தனர் உருத்தனர், அணுமோடு,
சிறுத்தனர்பெருத்தனர், மேற்பட கீழ்பட, எடுத்தனர் படுத்தனர்-தொடைமுரண்,
‘ககனம்’, ‘மேற்பழு’என்ற இடங்களில் ‘அருக்கன்’, வேபழு’ என்ற பாடங்கள்
சந்தத்திற்கு மாறுபடும். பி-ம்: மரத்தின தடிகளாற்.  

சிலைப் படை, அயிற் படை, தெளியும் வாட் படை, திறற் பல
படைக்கல வலிமை காட்டியும்,
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும், வயத்தொடு செயப்
புய வலிமை காட்டியும்,
உலைப் படு கனற் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய
அரக்கரை ஒருவர்போல் பொருது,
அலப்படை அரக்கனது உயிரை மாய்த்தனன், அடல் தொடைகளின்
தொடை அடைசி வீழ்த்தியே.203.-கடோற்கசன் அரக்கர்களுடன் அலாயுதனை அழித்தல்.

உலை படு கனல் – உலைக்களத்திற்பற்றி யெழுகிற
நெருப்புப்போல, சினம் முதிர் – கோபம் மிக்க, கடோற்கசன்-,- சிலை படை –
வில்லாகிய ஆயுதமும், அயில் படை – வேலாயுதமும், தெளியும் வாள் படை-
தேர்ந்தெடுத்த வாளாயுதமும், திறல் பல படைக்கலம் – வலிமையையுடைய மற்றும்
பல ஆயுதங்களும் என்பவற்றின், வலிமை – பலத்தை, காட்டிஉம் –
உபயோகித்தும்,-வலம் பட வளைத்து – பலம் பொருந்த (ப் பகைவரை)க் கட்டி,
மல் வலிமைகாட்டிஉம் – மற்போரின் வலிமையை உபயோகித்தும்,- வயத்தொடு
சயம் புயம்வலிமை காட்டிஉம் – பலத்தோடு வெற்றியைக்கொண்ட தோள்களின்
திறமையை உபயோகித்தும், – உடற்றிய அரக்கரை – (தன்னோடு) போராடிய
இராக்கதர்களை,ஒருவர்போல் பொருது – ஒருத்தரை (யெதிர்த்தாற்) போலவே
(பலரையும்) எதிர்த்துப்போர்செய்து (அழித்து),- (பின்பு), அடல் தொடைகளின்
தொடை அடைசி வீழ்த்தி -வலிமையையுடைய (தனது) தொடைகளால் (எதிரியின்)
தொடைகளை நெருக்கி(அவனை)க் கீழே தள்ளி, அலம் படை அரக்கனது
உயிரைமாய்த்தனன் -அலாயுதனென்னும் அவ்வரக்கனது உயிரை யொழித்தான்;

     ‘தொடைகளின் தொடை அடைசி வீழ்த்தி’- (தனது) அம்புகளினால்
(பகைவருடைய) அம்புகளை விலக்கித் தள்ளி யென்றும், வரிசைகளாக அம்புகளைச்
செலுத்தி(ப் பகைவரை) வீழ்த்தி யென்றுமாம். படைக்கலவலிமைகாட்டியும்,
மல்வலிமைகாட்டியும் புயவலிமைகாட்டியும், பொருது, வீழ்த்தி மாய்த்தனன்
என்க.        

புரத்தினை எரித்தவர் கயிலை மாக் கிரி புயத்தினில் எடுத்து
இசை புனை பராக்ரமன்
வரத்தினில் வனத்திடை திரியும் நாள், சில மனித்தரொடு
எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன்;
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும்,
எனைப் பலருடனும் ஏற்று, எதிர்
துரத்தலின், மறத்தினன் இவன்’ எனா, பலர் துதித்து,
அதிசயித்தனர், சுரரும் வாழ்த்தியே.204.-தேவர்கள் பலரும் கடோற்கசனைப் புகழ்தல்.

புரத்தினை எரித்தவர் – திரிபுரத்தை எரித்தழித்தவரான சிவபிரானது,
கயிலை மா கிரி – பெரிய கைலாசபருவதத்தை, புயத்தினில் எடுத்து – (தனது)
கைகளினால் நிலை பெயர்த்து, இசை புனை – கீர்த்திபெற்ற, பராக்ரமன் –
பராக்கிரமசாலியான இராவணன், வரத்தினில் – பலவரங்களைப்பெற்றிருந்தும்,
வனத்திடைதிரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கஉம் வயிரி ஆய்த்திலன் –
காட்டிற்சஞ்சரித்தகாலத்தில் இரண்டு மனிதர்களுடனே எதிர்த்தற்கும்
வீரமுள்ளவனாயினானில்லை; (அங்ஙனமன்றி), மருத்சுதன் உதவு இராக்கதன்
ஒருத்தன்உம் – வாயுகுமாரனான வீமன் பெற்ற அரக்கனாகிய
கடோற்கசனொருத்தன்மாத்திரம், உரத்துடன் – வலிமையுடன் ஏற்று
எதிர் துரத்தலின் – எதிர்த்து எதிரிலே தொடர்தலால், எனை பலருடன்உம் இவன்
மரித்தனன் – மிகப்பல அரக்கரோடும் இவ்வலாயுதன் இறந்தான், எனா – என்று
பலர் சுரர்உம் – தேவர்கள்பலரும், துதித்து – புகழ்ந்து, வாழ்த்தி – (கடோற்கசனை)
ஆசிர்வதித்து, அதிசயித்தனர் – வியந்தார்கள்; (எ – று.)

     சிவபிரானது கைலாசிரியைப் பெயர்த்தெடுத்துப் புகழ்கொண்டும்
பலவரங்கள்பெற்றும் இராமலட்சுமணர்களாகிய இரண்டு மனிதர்களுடனே எதிர்த்து
வெல்லுதற்குத் திறமையற்றவனாயொழிந்த ராக்ஷஸராஜனான இராவணனினும்
இக்கடோற்கசனாகிய  அரக்கன் தனியேபொருது அரக்கரநேகரைத் தொலைத்து
அவர்கட்குத் தலைவனான அலாயுதனையுங் கொன்றதனால் மேம்பட்டவ னென்று
வியந்து கொண்டாடின ரென்க. பலபராக்கிரமங்களிற்சிறந்த ராக்ஷஸசிரேஷ்டரான
இராவணனுக்கும் கடோற்கசனுக்கும் வேறுபாடு தோன்றக் கூறினது.
வேற்றுமையணி.
‘வனத்திடை திரியுநாள் சிலமனித்தரொடெதிர்க்கவும்
வயிரியாய்த்திலன்’ என்றது-இராமலட்சுமணர் வனவாசஞ்செய்கையில் மாரீசனுடன்
வந்த இராவணன்அவர்களைப்பொருது வென்று சீதையைக் கவர்ந்து
செல்லமாட்டாமல் வஞ்சனையாகத்தொழில்செய்தமைபற்றியென்க. ஆய்த்திலன்
என்ற எதிர்மறைமுற்றில், து – சாரியை. பி-ம்: புரக்குலம்.

அன்று கங்குலில் பல பதினாயிரம் அரக்கரோடு
அலாயுதன்தன்னைக்
கொன்று, வெம் பணிக் கொடியவன் சேனையைக் குரங்கு கொள்
கோதைபோல் கலக்கி,
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு, இவுளி,
தேர், களிறு, ஆள்,
சென்று, இமைப் பொழுது அளவையில் யாவரும் தென்புலம்
படருமா செற்றான்.205.-கடோற்கசன் பலவுருவங்கொண்டு பொருதல்.

(கடோற்கசன்),- அன்றுகங்குலில்-அன்றைநாளிரவிலே, பல
பதினாயிரம்அரக்கரோடு அலாயுதன்தன்னை-அநேகம் பதினாயிரக்கணக்கான
இராக்தர்களுடனேஅலாயுதனையும், கொன்று-, வெம் பணி கொடியவன்
சேனையை -கொடியபாம்புக்கொடியையுடையவனான துரியோதனனது சேனையை,
குரங்கு கொள்கோதை போல் கலக்கி – குரங்கு கைக்கொண்ட பூமாலையைப்போல
நிலைகலங்கச்செய்து,-ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி ஆம் உருவு கொண்டு-
மிகப்பலவான வடிவங்கொண்டு,- சென்று-எதிர்த்துப்போய், இவுளி தேர்  களிறு
ஆள் – சதுரங்க சேனைகளும், யாவர்உம் – (அச்சேனைவீரர்) பலரும்,
இமைபொழுது அளவையில்-ஒருமாத்திரைப்பொழுதளவிலுள்ளே, தென் புலம்
படரும்ஆ – தென்திசையிலுள்ள தான யமலோகத்துச் சேரும்படி, செற்றான் –
அழித்தான்; (எ – று.)-குரங்குகொள் கோதை – உலகநவிற்சியணி.

     இக்கவி-முதற்சீரும் ஏழாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றையைந்தும்
விளச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தம்

சண்டமாருதமாய் எழுந்திடும், ஒருகால், சலதியாய்
எழுந்திடும், ஒருகால்;
கொண்டலாய் உதகம் பொழிந்திடும், ஒருகால்; குன்றமாய்
உயர்ந்திடும், ஒருகால்;
மண்டு பாவகனாய் எரிந்திடும், ஒருகால்; வல் இருளாய்
வரும், ஒருகால்;
பண்டு தான் வல்ல மாயைகள் பலவும் பயிற்றினன்;-மாருதி
பயந்தோன்.206.-கடோற்கசன் பலவகைமாயை செய்தல்.

மாருதி பயந்தோன் – வாயுகுமாரனான வீமன் பெற்ற மகனாகிய
கடோற்கசன், ஒரு கால் – ஒரு முறை, சண்டமாருதம் ஆய்-பெருங்காற்று
வடிவமாய்,எழுந்திடும் – மேல்வீசுவான், ஒரு கால்-, சலதி ஆய் – கடல்வடிவமாய்,
எழுந்திடும்- பொங்குவான்; ஒருகால்-, கொண்டல் ஆய்-காளமேகவடிவமாய்,
உதகம்பொழிந்திடும் – நீர்மழைபொழிவான்; ஒருகால்-, குன்றம் ஆய் –
மலைவடிவமாய்,உயர்ந்திடும் – உயர்ந்துகாணப்படுவான்; ஒருகால்-, மண்டு
பாகவன் ஆய்-மூண்டெழுகிற நெருப்பின்வடிவமாய்,  எரிந்திடும் – எரிந்து
தோன்றுவான்; ஒருகால்-,வல் இருள் ஆய் வரும் – வலிய (அழித்தற்கரிய)
இருளாய் அடர்ந்துவருவான்; (இவ்வாறு),பண்டு தான் வல்ல மாயைகள் பலஉம்
பயிற்றினன் – முன்னந்தான்தேர்ந்துள்ள பலவகைமாயைகளையுஞ் செய்திட்டான்;
(எ – று.)

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவுமுள்ள பதினைந்துகவிகள் இரண்டு நான்கு
ஏழாஞ் சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.

இம்பர் வாள் அரக்கன் நிணத்தொடு பிணம் தின்று இடம்கொள்                          வாய்கொடு மடுத்திலனேல்,
தும்பிமா, பரிமா, வீரர், என்று இவர் மெய் துணித்தலின், சொரிந்த                          செஞ் சோரி
அம்புராசிகளில், அண்டகோளகையில், அடங்குமோ? அண்டமும்
பிளந்திட்டு,
உம்பர் வாரியையும் கலக்குமே, மிகவும்!-உண்மை நாம்
உரைசெயும் பொழுதே!207.-கவிக்கூற்று; அப்பொழுது உண்டான இரத்தப்பெருக்குமிகுதி.

நாம் உண்மை உரைசெயும் பொழுது – நாம் மெய்யாகக்
கூறுமளவில்,-இம்பர் – இப்போர்க்களத்தில், வாள் அரக்கன்-கொடிய அரக்கனான
கடோற்கசன், நிணத்தொடு பிணம் தின்று – கொழுப்புக்களுடனே
பிணங்களைப்புசித்து, இடம் கொள் வாய்கொடு மடுத்திலன்ஏல் – பரந்தவாயினால்
(குருதியைக்) குடித்திடானாயின், தும்பிமா பரிமா வீரர்  என்ற இவர்மெய்
துணித்தலின் சொரிந்த செம் சோரி-யானை குதிரை வீரர்என்ற
இவர்களது உடம்பைத் துணித்தலாற் பெருகிய சிவந்த இரத்தம், அம்புராசிகளில்
அண்டகோளகையில் அடங்கும்ஓ-கடல்களிலும் அண்டகோளம் முழுவதிலும்
அடங்குமோ? (அடங்காமல்), அண்டம்உம் பிளந்திட்டு-
அண்டகோளத்தையும்உடைத்துக்கொண்டு, உம்பர் வாரியைஉம் மிகஉம்
கலக்கும்ஏ -வெளியிலுள்ள பெரும்புறக்கடலையும் மிகுதியாகச்சேர்ந்து
கலங்கச்செய்யுமே;(எ – று.)

     கடோங்றகசன் தான் கொன்ற பிராணிகளின் உடலை உணவாகத்தின்று
அவற்றின் இரத்தத்தை நீராகப்பருகின னென்ற உண்மையை இங்ஙனம்
வெளியிட்டபடி. ‘தும்பிமா பரிமா வீரர் என்ற இவர்மெய்’- இருதிணையுங் கலந்து
சிறப்பினால் உயர்திணை முடிபைப்பெற்ற திணைவழுவமைதி, பி- ம்: அரக்கர்
பிணத்தொடுநிணந்.  

கட் செவி எழுதும் கொடி உடைக் கொடியோன் கன்னனைக்
கடைக்கணித்தருளி,
‘விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால்,
வீமன் மா மகனை
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து,
உம்பர் ஊர் புகுத,
புள் செறி தொடையாய்! கொல்க!’ என, விரைவின் புகைந்து,
நாப் பொறி எழப் புகன்றான்.208,-கடோற்கசனை வேலினாற்கொல்லும்படி துரியோதனன்
கர்ணனோடுகூறல்.

கட்செவி எழுதும் கொடி உடை கொடியோன் – பாம்பின்
வடிவமெழுதப்பெற்ற துவசத்தையுடைய துஷ்டனான துரியோதனன்,-கன்னனை
கடைக்கணித்தருளி-கர்ணனை அன்போடு பார்த்து,-‘புள் செறிதொடையாய் –
வண்டுகளடர்ந்த மாலையையுடையவனே! விண் சுரபதி – சுவர்க்கத்தில் வாழ்கிற
தேவேந்திரன், அன்று – அந்நாளில் (முன்பொருசமயத்தில்), வந்து,-உனக்கு-,
அளித்த- கொடுத்தருளின,  வேலினால்-, வீமன் மா மகனை  – வீமனது
சிறந்தபுத்திரனானஇந்தக்டோற்கசனை, உள் செறி சினம்உம் வலிமைஉம் உயிர்உம்
உடன் அழிந்துஉம்பர் ஊர் புகுத – மனத்தில் நிறைந்த கோபமும் தேக பலமும்
உயிரும் ஒருசேரஒழியப்பெற்றுத் தேவர்களதுவீரசுவர்க்கத்துச் சேரும்படி, கொல்க-கொல்வாயாக,’என-என்று, விரைவின்-விரைவாக, நா புகைந்து பொறி எழ
புகன்றான் – நாக்குப்புகைகொண்டு தீப்பொறியெழும்படி கூறினான்; (எ – று.)

     பாண்டவர்க்குத் தூதுசென்றபொழுது கண்ணன் ஏவியபடி இந்திரன்
அந்தணவடிவங்கொண்டு சென்று கர்ணனை இரந்து அவனதுகவசகுண்டலங்களைப்
பெற்றவுடன் சிறந்ததொருவேற் படையை அவனுக்குக் கைம்மாறாகத் தந்தனனென
அறிக. புள் – இங்கே, வண்டு. 

புகன்றபோது, அருக்கன் புதல்வனும், ‘மாயப் போர் இது; கங்குல்
இப் பொழுதே அகன்றிடும்;
அகன்றால் இவன் உயிர் பிறிது ஓர் அம்பினால்
அகற்றுவித்திடலாம்;
இகன்ற போர் முனையில், நாளை இவ் வடி வேல் எறிந்து,
நான் இமையவர்க்குஇறைவன்
மகன்தன் ஆர் உயிர் கொன்று, உனது வெண் குடைக் கீழ்
வைப்பன், இவ் வையகம்!’ என்றான்.209.-அதற்குக் கர்ணன் உடன்படாமை.

 புகன்றபோது-(இங்ஙனம் துரியோதனன்) சொன்ன பொழுது,-
அருக்கன்புதல்வன்உம் – சூரியகுமாரனான கர்ணனும்,-(அத்துரியோதனனை
நோக்கி),-‘இதுமாயம் போர்-(அரக்கனான கடோற்கசன் செய்யும்) இப்போர்
மாயையினாற்செய்யும்போராம்; கங்குல்-(அரக்கர்க்குவலிமை மிகுங்காலமான)
இராப்பொழுது, இப்பொழுதுஏஅகன்றிடும் – விரைவிலே நீங்கும்;  அகன்றால் –
நீங்கிவிட்டால், (உடனே), இவன்உயிர் பிறிது ஓர் அம்பினால் அகற்றுவித்திடல்
ஆம் – இவனுடையஉயிரைவேறோரம்பினால் (எளிதில்) ஒழியச்செய்திடலாம்;
நாளை – நாளைக்கு,  இகன்றபோர் முனையில் – எதிர்த்துச்செய்யும்
போரிடத்திலே, நான்-,இ வடி வேல் எறிந்து-கூரிய இந்த வேலாயுதத்தை வீசி,
இமையவர்க்கு இறைவன்மகன்தன் ஆர்உயிர்கொன்று-தேவேந்திரனது புத்திரனான
அருச்சுனனது அழித்தற்கரிய உயிரையழித்து,இவையகம் உனது வெள் குடை கீழ்
வைப்பன்-இந் நிலவுலகமுழுவதையும்உன்னுடைய புகழுள்ள ஆளுகையின்
கீழ் (த் தடையற) வைப்பேன்,’ என்றான்-என்றுசொன்னான்;

     அருச்சுனனைக் கொல்வதற் கென்று வைத்திருக்கிற வேலைக் கொண்டு
இவ்வரக்கனைக் கொல்லேனென்று மறுத்தனனென்க.  இந்தவேல் கடோற்கசனைத்
தவறாமற்கொல்ல  வல்லதென்று சொல்லி இந்திரன்கொடுத்தாகக் கிருட்டிணன்
தூதுசருக்கத்தில் வந்துள்ளது; அங்கு, “வெலற்கருந்திறல்விசயன்மேலொழித்துநீ…..
கடோற்கசக்காளை தன்னுயிரே,யிலக்குவந்தெதிர்மலைந்தபோது இதற்கு”எனக்
குறிப்பிட்டு இந்திரன் சொற்றதாகவே யுள்ளது. அங்ஙனிருந்தும், கர்ணன்
அருச்சுனனை இலக்காக்கொண்டு பேசுவது அதற்கு முரணேயாகும். இனி,
‘விசயனையொழித்துநீ’ என்று  கூறியதாலேயே, அவனையும் இவ்வேல் தவறாது
கொல்லும் எனக் கொண்டு கூறினானுமாம். இது, மேல் கண்ணன் கூறுவதற்கும்
பொருந்தும். கடோற்கசனது மாயப்போர் பகலில் அங்ஙனஞ்செல்லாதெனக்
கொண்டு’கங்குலகன்றால் இவனுயிர் அகற்று வித்திடலாம்’ என்றான்

என்றலும், அரசன், ‘யாமும் எம் படையும் இரவிடைப் பிழைக்க,
நீ இவனைக்
கொன்று போர் பொருது, சிலை விசயனையும் கொல்லுதி!’ என
மனம் கொதித்துக்
கன்றலும், அவ் வேல், அக் கணத்து, அவன்மேல் கால வெஞ்
சூலம் ஒத்து எறிந்தான்-
தென்றலும் நிலவும் நிகர் என, தன்னைச் சேர்ந்தவர் இளைப்பு
எலாம் தீர்ப்பான்.210.-துரியோதனன்வற்புறுத்தக் கர்ணன்கடோற்கசன்மீது வேலெறிதல்.

என்றலும் – என்று (கர்ணன்) சொன்னவுடனே, அரசன் –
துரியோதனன்,- ‘யாம்உம் எம் படைஉம் இரவிடை பிழைக்க-நாமும் நமது
சேனையும் இவ்விரவிலே தப்பிப்பிழைத்திடுமாறு, நீ இவனை கொன்று, –
நீ(அவ்வேலினால்) இவ்வரக்கனை (இப்பொழுது) கொன்று போர் பொருது சிலை
விசயனைஉம் கொல்லுதி – (பின்பு) போர்செய்து வில்லில்வல்ல அருச்சுனனையும்
(வேறோராயுதத்தாற்) கொல்வாயாக,’ என-என்று சொல்லி, மனம் கொதித்து
கன்றலும்-மனம் மிக வெதும்பியவளவில்,- தென்றல்உம் நிலவுஉம் நிகர் என
தன்னை சேர்ந்தவர் இளைப்புஎலாம் தீர்ப்பான்-தென்றற்காற்றும் நிலாவும்
ஒப்பாம்படிதன்னை யடுத்தவர்களுடைய இளைப்பு முழுவதையுங் களைபவனான
கர்ணன், அகணத்து – அந்தக்ஷணத்திலே, அ வேல்-அந்தவேலாயுதத்தை,
அவன்மேல் -அந்தக்கடோற்கசன்மேல், காலன் வெம் சூலம் ஒத்து எறிந்தான் –
யமனதுகொடியசூலாயுதத்தை (யெறிந்தாற்) போல எறிந்தான்; (எ – று.)

     ‘இப்பொழுது இவ்வேலினால் இவ்வரக்கனைக் கொன்று எம்மையும் எமது
சேனையையும் பிழைப்பித்தாற் பின்பு அருச்சுனனை வேறுவகையாற் கொல்லலாம்’
என்று கூறித் துரியோதனன் நிர்ப்பந்திக்க, கர்ணன் அங்ஙனே செய்தானென்க.
தென்றலும் நிலவும் நிகரெனத்தன்னைச்சேர்ந்தவரிளைப்பெலாந் தீர்ப்பான் –
கருத்துடையடைகொளியணி

எறிந்த வேல் பகைவன் மார்பகம் துளைத்திட்டு இந்திரனிடத்து
மீண்டு எய்த,
மறிந்த மால் வரைபோல், அரக்கனும் முகம் பார் மருங்கு உற
விழுந்து, உயிர் மடிந்தான்;
செறிந்து அருகு அணைந்த சேனையும், பயந்தோர் சிந்தையும்,
செயல் அறக் கலங்க,
அறிந்தவர்க்கு அன்றி அறியொணா ஐயன் அவர் துயர்
அகற்றுமாறு உரைப்பான்:211.-கடோற்கசன் இறத்தல்.

எறிந்த வேல் – (கர்ணன்) வீசிய வேற்படை, பகைவன் மார்பகம்
துளைத்திட்டு – பகைவனான கடோற்கசனது மார்பினிடத்தை நன்றாகத்துளைத்து,
இந்திரனிடத்து மீண்டு எய்த – (தனக்கு உரியவனான)இந்திரனிடத்திலே
மீண்டுசென்று சேர,-அரக்கன்உம்-கடோற்கசனும், மறிந்த மால் வரை போல் –
கவிழ்ந்துவிட்ட பெரிய மலைபோல, பார் மருங்கு முகம் உற விழுந்து-தரையிலே
முகம்படும்படி கவிழ்ந்துவிழுந்து, உயிர்மடிந்தான் – இறந்தான்; (அப்பொழுது),
செறிந்து அருகு அணைந்த சேனைஉம் – அடர்ந்து அருகிலெடுத்துள்ள
பாண்டவர்சேனையும்,  பயந்தோர் சிந்தைஉம் – (அவனது) தந்தையரான
பாண்டவரது மனமும், செயல் அற கலங்க – செய்தொழிலொன்று மில்லாதபடி
கலக்கமடைய,-அறிந்தவர்க்கு அன்றி அறிய ஒணா ஐயன் –
தந்துவஞானமுடையோர்க்கேயன்றி (மற்றையோர்க்கு)-அறிய முடியாத கடவுளான
கண்ணன், அவர் துயர் அகற்றும் ஆறு உரைப்பான் – அவர்களுடைய
துன்பத்தைப்போக்கும் பொருட்டுச் சொல்வான்; (எ – று.) -அதனை அடுத்த
இரண்டுகவிகளிற் காண்க. பெரியதாதையையும் சிறியதாதையரையுஞ் சேர்த்து
‘பயந்தோர்’ என்றது, உபசாரவழக்கின்பாற்படும்.

இந்த வேல் கவச குண்டலம் கவர் நாள், இந்திரன் இரவி
மைந்தனுக்குத்
தந்த வேல்; இதனை யாவர்மேல் விடினும், தரிப்பு அறத் தெறும்,
அவன் வரத்தால்;
உந்த வேல் அமரில் விசயன்மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு
உயிர் உய்ந்தால்,
அந்த வேலையில், மற்று எறிவதற்கு இருந்தான், ஆற்றலால்
கூற்றினும் கொடியோன்.212.-இதுவும், அடுத்தகவியும்-ஒருதொடர்: கிருஷ்ணன்
பாண்டவர்க்குச் சமாதானங்கூறலைத் தெரிவிக்கும்.

இந்த வேல்-இவ்வேற்படை, இந்திரன் கவச குண்டலம் கவர்
நாள்இரவி மைந்தனுக்கு தந்த வேல்-இந்திரன் (கர்ணனது) கவசகுண்டலங்களை
இரந்துபெற்றகாலத்தில் அவனுக்குக் கொடுத்த வேலாம்: இதனை- இவ்வாயுதத்தை,
யாவர்மேல் விடின்உம்-யார்மேற் பிரயோகித்தாலும், (இது), அவன் வரத்தால்-
அவ்விந்திரனது வரத்தினால், தரிப்பு அறதெறும் – (அவர்களைத்) தாங்கமுடியாதபடி
கொல்லும்; ஆற்றலால் கூற்றின்உம் கொடியோன்-வலிமையால் யமனினுங்
கொடியவனான கர்ணன், அமரில் விசயன்மேல் தொடுக்கும் உரகம் அம்பினுக்கு
உயிர் உய்ந்தால் – போரில் (தான் இனி) அருச்சுனன்மேற் பிரயோகிக்கும்
நாகாஸ்திரத்துக்கு (அவ்வருச்சுனன்) உயிர் தப்பிப் பிழைப்பானாயின்,
அந்தவேலையில் – அச்சமயத்தில், மற்று-பிறகு, உந்த வேல் – இந்தவேற்படையை,
எறிவதற்கு இருந்தான் – (அவன்மேற்) பிரயோகித்தற்கு எண்ணியிருந்தான்;

அலப்படையவனும் அநேகம் ஆயிரம் போர் அரக்கரும்
விளியுமாறு அடர்த்தோன்
உலப்பு அடையவும், தான் உய்யவும், அரசன் உரைத்தலால்
ஓச்சினன், இவன்மேல்;
வலம் பட முனையில், இன்று உமக்கு அவனி வழங்கினன்,
கன்னனே’ என்றான்- குலப் பட
அரவின் முடியின்மேல் நடித்த கூத்துடைக் கோவியர் கூத்தன்.

அலம் படையவன்உம் -அலாயுதனும், அநேகம் ஆயிரம் பேர்
அரக்கர்உம்-(மற்றும்) பல ஆயிரக்கணக்கான பெரிய இராக்கதர்களும், விளியும்
ஆறு – இறக்கும்படி, அடர்த்தோன் – பொருது அழித்தவனான கடோற்கசன்,
உலப்பு அடையஉம் – அழிவையடையும்படி, தான் உய்யஉம்-தான்
பிழைத்திடும்படியும், அரசன்-துரியோதனன்,உரைத்தலால் –
சொன்னதனால்,(கர்ணன்),இவன்மேல் ஓச்சினன் – (அவ்வேற்படையை) இந்தக்
கடோற்கசன்மேல் வீசியெறிந்தான்; (ஆதலால்), முனையில்-போரில், வலம் பட –
வெற்றியுண்டாக, உமக்கு – உங்கட்கு, கன்னன்ஏ – கர்ணன் தானே, இன்று –
இன்றைக்கு, அவனிவழங்கினன் – இராச்சியத்தைக் கொடுத்தவனாயினான்,’
என்றான்- என்று சொல்லியருளினான்: (யாவனெனில்) -குலம் படம் அரவின்
முடியின்மேல்நடித்த கூத்து உடை – சிறந்த படத்தையுடைய (காளியனென்னும்)
பாம்பினதுதலையின்மேல் ஆடிய நடனத்தையுடைய, கோவியர் கூத்தன் –
கோபஸ்திரீகளோடுகூத்தாடியவனாகிய கண்ணபிரான்; (எ –  று.)

     அருச்சுனன் நாகாஸ்திரத்துக்குத் தப்பியுய்வானாயின் அப்பொழுது, அவன்
மேல்இந்தவேலை எறிவானானால் அவன் தவறாமல் இறந்திடுவனாதலால்,
அங்ஙனஞ்செய்யாமல் இப்பொழுதே போக்கியமைபற்றி, உமக்குக் கர்ணனே
போரில்வெற்றியும் அரசும் இன்று கொடுத்தவனாவ னென்று கண்ணன்
அருளிச்செய்தான்.அவனிவழங்குதற்குக் கர்ணன் பரம்பரைக் காரணமென்றவாறு.
இந்த உண்மையைவெளியிட்டது, பாண்டவரது புத்திரசோகத்தைத் தீர்க்கும்பொருட்
டென்க. கண்ணன்திரு வாய்ப்பாடியில் ஆய்ச்சியரோடு கலந்து குரவைக்கூத்து
குடக்கூத்து முதலியநடனங்களைத் திருவிளையாட்டாக நிகழ்த்தி அவர்கள்
மனத்தை மகிழ்வித்துத்தானும் திருவுள்ளமுவந்தமைபற்றி, ‘கோவியர் கூத்தன்’
என்றார். கண்ணனை’அரவின் முடியின்மேல் நடித்த கூத்துடைக்கோவியர்கூத்தன்’
எனக் குறித்ததனால்,கர்ணன் வேலை யெறிந்து கடோற்கசனைக்கொன்றவளவிலே
அருச்சுனன்பிழைத்ததற்காக மிகமகிழ்ந்து கூத்தாடினனென்று வியாசபாரதத்திற்
கூறியசெய்திகுறிப்பித்தவாறு. பி – ம்: போரரக்கர், ‘நலப்படை வடிவேல்
விசயனைச்செகுக்கு நால்வருமழிவதுதிண்ண, மலப்படாதரவக்கொடியவனுரை
யாலந்தவேலோச்சினனிவன்மேல்’ என்று சிலபிரதிகளில்முன்னிரண்டடிகள்

தருமனும், மருத்தும், அடல் மருத்துவரும், தந்தவர்
மருத்துவான் மகனை,
‘பெருமையும் வலியும் நல்வினைப் பயத்தால் பெற்றனம்’
என உறத் தழுவி,
அருமையின் அளித்த மகவுடைச் சோகம் ஆற்றி, அங்கு
உவகையர் ஆனார்;-
கருமமும் உலகத்து இயற்கையும் உணர்ந்தோர் கலங்குதல்
உறுவரோ? கலங்கார்.214.-அதுகேட்டும்பாண்டவர் தேறி மகிழ்தல்.

தருமன்உம்-யமதருமராசனும், மருத்துஉம்-வாயுதேவனும், அடல்
மருத்துவர்உம்-வல்லமையுள்ள தேவவைத்தியரான அசுவிநீ தேவர்களும்.
தந்தவர்-பெற்றகுமாரராகிய தருமனும் வீமனும் நகுலசகதேவரும், அங்கு –
(கண்ணன்வார்த்தையைக்கேட்ட) அப்பொழுது, பெருமைஉம் வலிஉம் நல்வினை
பயத்தால் பெற்றனம் என – கௌரவத்தையும் வலிமையையும்
புண்ணியபயனாகபெற்றோ மென்று எண்ணி, மருத்துவான்மகனை உற தழுவி-
இந்திரகுமாரனான அருச்சுனனை நன்றாகத்தழுவிக்கொண்டு, அருமையின்
அளித்தமகவுடை சோகம் ஆற்றி –  அருமையாகத்தாம் பெற்ற புத்திரனான
கடோற்கசனதுசம்பந்தமான விசனத்தை யொழித்து, உவகையர் ஆனார் –
மகிழ்ச்சியுடையவரானார்கள்; கருமம்உம் உலகத்து இயற்கைஉம்உணர்ந்தோர் –
வினைப்பயனையும் உலகநடத்தையின் தன்மையையும் அறிந்தவர்கள், கலங்குதல்
உறுவர்ஓ – கலக்கமடைவார்களோ? கலங்கார்-: (எ- று.)

     ஈற்றடியிற்கூறிய பொதுப் பொருளைக்கொண்டு மற்றையடிகளிற் கூறிய
சிறப்புப்பொருளை விளங்கவைத்ததனால், வேற்றுப்
பொருள்வைப்பணி. மற்றைப்
பாண்டவரதுபெருமைக்கும் வலிமைக்கும் அருச்சுனன்முக்கியகாரணமென்பதுபற்றி
அவன்பிழைக்கப்பெற்றதனை, மற்றவர் ‘பெருமையும்வலியும்
நல்வினைப்பயத்தாற்பெற்றனம்’ என்று பாராட்டினர்.  

இராவணன் படு போர்க் களம் எனக் கிடந்த இந்த வெங்
களத்திடை, மீண்டும்
அரா உயர் துவசன் ஆணையால், வரி வில் ஆரியன்
அனீகினியுடன் போய்,
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரோடு எதிர்ந்து,
அமர் மலைந்து,
தராதிபர் பலரோடு அவ் இருவரையும் சரங்களால்
சிரங்களைத் தடிந்தான்.215.-துரோணன் பலஅரசரோடு விராடனையும் துருபதனையும்
தலைதுணித்தல்.

இராவணன் படு போர் களம் என கிடந்த – இராவணன்
இறந்துவிழுந்த யுத்தகளம்போலிருந்த (மிகப்பலஅரக்கர்இறந்துவிழப்பெற்ற), இந்த
வெம் களத்திடை – இந்தக்கொடிய போர்க்களத்திலே, மீண்டும்-, அரா உயர்
துவசன்ஆணையால் –  பாம்புவடிவத்தை உயரநிறுத்திய கொடியையுடையவனான
துரியோதனனது கட்டளையினால், வரி வில் ஆரியன் – கட்டமைந்த வில்
வித்தையில்தேர்ந்த ஆசாரியனான துரோணன், அனீகினியுடன் போய்-
சேனையுடனேசென்று,விராடன்உம் யாகசேனன் உம்முதல் ஆம் வேந்தரோடு
எதிர்ந்து அமர்மலைந்து – விராடனும் துருபதனும் முதலான அரசர்களுடனே
எதிர்த்துப்போர்செய்து, தராதிபர் பலரோடு அ  இருவரைஉம் – பல
அரசர்களுடனே அந்தஇரண்டுபேரையும், சரங்களால் சிரங்களை தடிந்தான் –
அம்புகளினால் தலைகளைத்துணித்தான்;

துருபதன் மடிந்த எல்லையில், திட்டத் துய்மனும் வெகுண்டு,
உளம் சுடப் போய்,
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று, வஞ்சினம்
எடுத்து உரைத்தான்-
‘பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை;
உனை நாளை
நிருபர்தம் எதிரே, நின் மகன் காண, நீடு உயிர் அகற்றுவன்!’
என்றே.216.-திட்டத்துய்மன் ‘மறுநாள் துரோணனைக் கொல்வேன்’ எனல்.

துருபதன் மடிந்த எல்லையில் – துருபதராசன் இறந்தவளவிலே,-
திட்டத்துய்மன்உம் – (அவன்மகனான)த்ருஷ்டத்யும்நனும்,-வெகுண்டு-கோபித்து,
உளம் சுட-மனந்தபிக்க, போய்-சென்று,-இருபதம் அரசர் முடிகமழ் முனியை
ஏன்று-இரண்டுபாதங்களிலும் அரசர்களது முடியில் மணம் வீசப்பெற்ற
துரோணாசாரியனையெதிர்த்து,-‘பொரு பகை முனையின்-போர் செய்கிற
பகைவர்களுடைய முன்னிலையிலே, எந்தையை – எமது தந்தையான துருபதனை,
என் முன் – எனதுஎதிரிலே, பொன்று வித்தனை –  அழித்தாய்; (ஆதலால்),
உனை – உன்னை, நாளை-  நாளைக்கு, நிருபர்தம் எதிரே-அரசர்கள்
முன்னிலையிலே, நின்மகன் காண-உனது புத்திரனான அகவத்தாமன் பார்க்க
(அவனெதிரிலே), நீடு உயிர் அகற்றுவன்- நெடுநாள் வாழுந்தன்மையதான உயிரை
ஒழிப்பேன்,’என்று-,வஞ்சினம் எடுத்துஉரைத்தான் – சபதவார்த்தைகளை
யெடுத்துச்சொன்னான்

மாமனை மகுடம் துணித்தனன், எவரும் வணங்கு தாள் முனி!’
என வயிர்த்து,
காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெங்
கார்முக வீரன்,
சோமனை வகிர்செய்தனைய வெம் முனைய தொடைகளால்,
சுரும்பு சூழ் கமலத்
தாமனை முதுகு கண்டனன், முன்னம் தயித்தியர்
முதுகிடத் தக்கோன்.217.- அருச்சுனன் வைரங்கொண்டு துரோணனை வெல்லுதல்

எவர்உம் வணங்கு தாள் முனி-யாவரும் வணங்கும்
பாதங்களையுடைய துரோணசாரியன், மாமனை மகுடம் துணித்தனன்- (தங்கள்)
மனைவிதந்தையான துருபனைத் தலைதுணித்திட்டான், என – என்று, வயிர்த்து-
வைரங்கொண்டு,- காமனை அழகு உம்  கந்தனை விறல்உம் கவர்ந்த
வெம்கார்முகம் வீரன் – மன்மதனது அழகையும்சுப்பிரமணியனது
பராக்கிரமத்தையும்தனதாகக்கொண்ட கொடிய காண்டீவவில்லையுடைய வீரனும்,
முன்னம் தயித்தியர்முதுகு  இட தக்கோன் – முன்பு (நிவாதகவசர் காலகேயர்
என்னும்) அசுரர்கள்முதுகிடும்படி செய்தவனுமான அருச்சுனன்,- சோமனை வகிர்
செய்து அனையவெம்முனைய தொடைகளால்-சந்திரனைப் பிளவுசெய்தாற்போன்ற
கொடியகூர்நுனியையுடைய அம்புகளினால் [அர்த்தசந்திரபாணங்களால்], சுரும்புசூழ்
கமலம் தாமரை முதுகு கண்டனன்-வண்டுகள் சூழ்ந்துமொய்க்கப்பெற்ற
தாமரைமலர்மாலையையுடையவனான அந்தத்துரோணசாரியனை முதுகிடும்படி
வென்றான்

பூத்து, அகிக் குலமும், மால் வரைக் குலமும், புகர் இபக்
குலங்களும், புகழக்
காத்து, அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர்
நீதியைக் கடந்தோன்,
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திருப்புயத்து
அணிதரும் திருத் தார்ச்
சாத்தகி முனைச் சென்று, அம் முனைக்கு ஆற்றாது, அரி
எதிர் கரி எனத் தளர்ந்தான்.218.-துரியோதனன் சாத்தகியினால் வெல்லப்படுதல்.

அகி குலம்உம் – மகாநாகங்களின் வர்க்கமும், மால் வரை குலம்உம் –
பெரிய குலபருவதங்களின் வர்க்கமும், புகர் இபம் குலங்கள்உம் –
(உத்தமவிலக்கணமாகிய) செம் புள்ளிகளையுடைய திக்கஜங்களின் வர்க்கங்களும்,
பூத்து புகழ – பொலிவுபெற்றுக் கொண்டாடும்படி, அகிலம்உம்- உலக முழுவதையும்,
காத்து – பாதுகாத்து, தன்குடை நிழல் படுத்தும் – தனது வெண்கொற்றக்குடையின்
நிழலிலே பொருந்தச்செய்கிற (தனதுதனியரசாட்சியின்கீழ்ப்படுத்துகிற,) காவலர்-
அரசரது, நீதிபதி – நீதிவரம்பை, கடந்தோன் – கடந்தொழுகியவனான
துரியோதனன்,-சேத்துஅகில்-செந்நிறமுடையஅகில்தேய்வையும், புழுகு சந்தனம்-
கஸ்தூரிப்புழுகு கலந்த கலவைச் சந்தனக்குழம்பும், கமழும்-பரிமளிக்கப்பெற்ற, திரு
புயத்து-அழகிய தோள்களில், அணிதரும்-தரித்த திரு தார் – அழகிய
மாலையையுடைய, சாத்தகி-சாத்தகியினது, முனை – எதிரிலே,  சென்று-போய், அ
முனைக்கு ஆற்றாது – அவனதுபோருக்கு ஈடு கொடுக்கமாட்டாமல், அரி எதிர் கரி
என தளர்ந்தான் சிங்கத்தை யெதிர்த்த யானைபோல மிகத்தளர்ச்சியடைந்தான்;-
(எ -று.)

    சூதுபோரிற் பாண்டவரை வென்றமை, திரௌபதியைத் துகிலுரியத்
தொடங்கியமை,வநவாச அஜ்ஞாதவாசங்களைக் கடந்த பின்பும் பாண்டவர்க்கு
அரசுஇல்லையென்றமை முதலிய பல அக்கிரமங்களையுடைமைபற்றி,
‘காவலர்நீதியைக்கடந்தோன்’ என்றார், சேத்து-செந்நிறம், அரியெதிர்கரி-
இல்பொருளுவமைபி-ம்:படுத்துக். எதிர்க்கரியென.  

அனைவரும் ஒருவர்போல் உடைந்து, அவனி ஆளுடை
அரசனோடு, அமரில்
துனை வரு தடந் தேர், துரகதம், களிறு, முதலிய
யாவையும் தோற்று,
நினைவு அரு விறலோர் தனித்தனி நெருக்கி நின்றுழி
நின்றுழித் துரக்க,
அனைவரும் கழற் கால் கொப்புளம் அரும்ப, ஆசறைப்
பாசறை அடைந்தார்.219.-கௌரவர் தோற்றுச்செல்லுதல்.

நினைவு அரு விறலோர் அனைவர்உம்-மனத்தினால் நினைத்தற்கும்
அருமையான பராக்கிரமத்தையுடைய பாண்டவர் பக்கத்தவரெல்லாரும், தனி தனி
நெருக்கி-தனியே தனியே (ஒவ்வொருவரும்) எதிர்த்து வந்து தாக்கி, நின்றஉழி
நின்றஉழி துரக்க-நின்றநின்ற இடங்கள்தோறுந் துரத்துதலால்,-அமரில்-போரிலே,
அவனி ஆள் உடை அரசனோடு அனைவர்உம் ஒருவர்போல் உடைந்து-பூமியை
யாளுதலுடைய துரியோதனராசனுடன் கௌரவர்பக்கத்தவ ரெல்லாரும்
ஒருத்தர்போலவே தோற்று, துனைவரு தட தேர்-விரைந்துவருகிற பெரிய
தேர்களும்,துரகதம்-குதிரைகளும், களிறு – யானைகளும், முதலிய – முதலாகவுள்ள,
யாவைஉம்-எல்லாச் சிறப்புக்களையும், தோற்று-இழந்து,-கழல் கால் கொப்புளம்
அரும்ப-வீரக்கழலையணிந்த பாதங்களிலே, கொப்புளமுண்டாக, ஆசறை –
முடிவிலே பாசறை அடைந்தார்-(தமது) படைவீட்டைச் சேர்ந்தார்கள்; (எ – று.)

     ஆசறை-‘ஐ’ விகுதிபெற்ற தொழிற்பெயர்; ஆசறுதி-முடிவு-வனைவரும் கழல்
கால் என்று எடுத்து – அணிந்த வீரக்கழலையுடைய கால் என்று உரைப்பினுமாம்;
இவ்வுரைக்கு, வாசறை பாசறை என்று எடுத்து, வாசஞ்செய்யுமிடமான படைவீடு
என்க; வாசறை-வாசவறை யென்பதன்விகாரம். பி-ம்: ஆசறுபாசறை. 

முற் பொழுது ஒரு பொன்-திகிரியால் மறைந்த தாழ்வு அற,
மூள் எரி முகத்தில்
அற் பொழுது அடைந்த ஆயிரம் சுடரும் அநேக
நூறாயிரம் சுடர் ஆய்,
‘நற் பொழுது இது’ என்று யாவரும் வியப்ப, நாகர்
ஆலயம் வலம் புரிந்து,
பிற் பொழுது அவற்றைக் கவர்ந்து சென்று, உதயப் பிறங்கலில்
பிறங்கினன் பெரியோன்.220.-மறுநாட் சூரியனுதித்தல்.

பெரியோன்-தேவர்களில் முதல்வனான சூரியன்,-ஒரு பொன் திகிரியால்
முன்பொழுது மறைந்த தாழ்வு அற-ஒப்பற்ற பொன்னிறமான (அல்லது அழகிய)
திருவாழியால் முந்தின நாளில் (தான்) மறைபட்டதனலாகிய குறைவு நீங்க, மூள் எரி
முகத்தில் அல் பொழுது அடைந்த ஆயிரம் சுடர்உம் அநேகம்
நூறு ஆயிரம் சுடர் ஆய்-பற்றியெழுந்தன்மையுள்ளஅக்கினியினிடத்திலே
இராக்காலத்திற் சேர்ந்த (தனது) ஆயிரங்கிரணங்களும் பல நூறாயிரக்கணக்கான
விளக்கொளிகளாய்(மிக்கவிளங்கிநின்று),-நாகர் ஆலயம் வலம் புரிந்து –
தேவர்கட்குத்தங்குமிடமான மகாமேருகிரியைப் பிரதட்சிணஞ் செய்துகொண்டு,-
பின்பொழுது-பின்பு, அவற்றை கவர்ந்து சென்று – அவ்வொளிகளையெல்லாம்
மீளவுங் கவர்ந்துகொண்டு வந்து,-நல்பொழுது இது என்று யாவர்உம் வியப்ப-இது
நல்லகாலமென்று எல்லாரும் கொண்டாடும்படி, உதயம் பிறங்கலில்பிறங்கினன்-
உதயபருவதத்திலே விளங்கினான்; (எ – று.) பி-ம்: அனேகமாயிரஞ்சுடராய.

     சூரியன் அஸ்தமிக்கிற பொழுதில் தனதுகிரணங்களை அக்கினியினிடம்
வைத்துவிட்டுச் சென்று பின்பு உதிக்கையில் அக்கிரணங்களை அக்கினியினின்றும்
மீட்டுக்கொள்கின்றன னென்பது, நூற்கொள்கை, அங்ஙனம் அக்கினியினிடத்தில்
வைக்கப்பட்ட சூரியகிரணங்கள் அன்றைநாளிரவில் மிகப் பலவிளக்கொளிகளாய்
விளங்கினமையை, சூரியன் சக்கரத்தால் தான் மறைபட்ட குறைதீரத் தனது
ஆயிரங்கிரணங்களையும் அவ்விரவிற் பல நூறாயிரங் கிரணங்களாக வளரச்செய்து
நின்றதாகக் கற்பித்துக் கூறினார்; தற்குறிப்பேற்றவணி.  அந்நாளிரவிற்
போர்நிகழ்கையில் தேர்தோறும் ஐவைந்தும், யானைதோறும் மும்மூன்றும், குதிரை
தோறும் ஒவ்வொன்றுமாகச் சேனைகளிற் பெரிய தீபங்கள் ஏற்றி யமைக்கப்பட்டன
வென்று முதனூலிற்கூறியுள்ளதனால், ‘அநேகநுறாயிரஞ் சுடர்’ எனப்பட்டது

———————————  

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading