அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதுஆவுயுள் கலந்தே.
பொ – ரை : ‘பெரிய பிராட்டியாரும் அறியாதவாறு வாமனாதாரத்தைச் செய்து, ‘மாவலி, மூவடி நிலம்’ என்று இரந்து, அசுர குருவாகிய சுக்கிரன் கூறிய சொற்களையும் மஹாபலி அறியாதவாறு அவனை வஞ்சித்தது போன்று, என்னுடைய உயிரில் வந்து கலந்து அறியாமையினை உண்டுபண்ணுகிற மிகக்கொடிய இப்பிறவியில் அகப்பட்டிருக்கும் என்னை, ஒன்றையும் அறியாத இளமைப்பருவத்திலேயே அடிமை செய்வதில் மிகப் பெரியது ஓர் அவாவை எனக்கு உண்டாக்கி வைத்தாய்,’ என்கிறார்.
வி – கு : ‘மாவலியை வஞ்சித்தது போன்று, ‘எனது ஆவியுள் கலந்து, அறியா மாமாயத்து அடியேனை, அறியாக் காலத்துள் அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாய்’ என்று கூட்டுக. ’கலந்து செய்வித்து வைத்தாய்’ என்க. அறியாமை – மையீற்று வினையெச்சம்.
ஈடு : மூன்றாம் பாட்டு. ‘அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்; பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய இச்சரீரத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் 1இன்னாப்பாலே சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச்செய்வர். இதனை, எம்பெருமானார்கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவாநிற்க, நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது; ஆன பின்னர், இங்ஙனேயாமித்தனை. ‘அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச்செய்தார். ‘அத்தா நீ செய்தன’ என்று, ‘நாம் செய்த உபகாரங்களைச் சொல்லுகின்றீர்; அவற்றிலே நீர்மதித்திருப்பது ஓர் உபகாரத்தைச் சொல்லிக் காணீர்,’ என்ன, அதனைச் சொல்லுகிறார்.
1அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து – ‘இராமபிரான் பக்கல் இலக்குமணர் இளமைப்பருவம் தொடங்கி எப்பொழுதும் நேசத்துடன் இருந்தார்,’ என்கிறபடியே, அறிவு நடையாடாத பருவத்திலே 3‘தூங்குகிற நிலையிலும் விழித்திருக்கிற நிலையிலும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே, சமுசாரத்தில் சிறிதும் சம்பந்தம் இல்லாத நித்தியசூரிகளுடைய பரிமாற்றத்திலேயன்றோ என்னைச் சேர்த்தாய்? ‘வரில் போகடேன்; கெடில் தேடேன்’ என்று இருத்தல் அன்றி, 4‘என்னை உடன் வருகின்றவனாகச் செய்தருளல் வேண்டும்’ என்கிறபடியே. பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’என்கிறார். அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் – அறிவின்மையினை உண்டு பண்ணுகிற பிரகிருதியில் சேர்ந்தவனாயிருக்கிற அடியேனை வைத்தாய். ‘பிள்ளாய்! ஊமத் தங்காய் தின்று மயங்கினாரைப் போன்று, அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை அன்றோ இப்படிச் செய்தான்?’ என்பார், ‘அறியா மாயத்து அடியேனை’ என்கிறார். ‘இது எங்கே சிறைப்பட்டாலும் நல்லது; நம்முடைய பொருள் அன்றோ? என்று இருக்கிறான் இறைவன் என்பார்,‘அடியேனை’ என்கிறார். ‘வைத்தாயால்’ என்ற சொற்போக்கால், ‘இத்தண்ணீர்ப்பந்தலை வைத்தாயே’ என்ற தொனிப்பொருள் தோன்றும். அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்த வைத்தாயால்.
தம்மை அறியாமை வஞ்சித்ததற்கு எடுத்துக்காட்டு ஒன்று அருளிச்செய்கிறார் மேல்: அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூ வடி என்று – நெஞ்சு அறியாதபடி காரியம் செய்வாரைப் போன்று, திருமார்வில் இருக்கிற நாய்ச்சியாருங்கூட அறியாதவாறு வாமன வேடத்தை மேற்கொண்டு, 1‘கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே’ என்கிறபடியே, ‘நிலம் மாவலி மூவடி’ என்ற பொருத்தம்அற்ற வார்த்தைகளைக் கூறி; பண்டும் இரந்து பழக்கம் உண்டாகில் அன்றோ பொருத்தம் உள்ள வார்த்தைகளைக் கூறுவது? அறியாமை வஞ்சித்தாய் –2சுக்கிரன் முதலியோர் ‘இவன் சர்வேஸ்வரன்; தேவ காரியம் செய்ய வந்தான்; உன் செல்வம் அனைத்தையும் அபகரிக்க வந்தான்,’ என்றால், அவர்கள் வார்த்தைகள் செவிப்படாதவாறு உன் பேச்சாலே அவனை அறிவு கெடுத்து வஞ்சித்தாய். அப்படியே, எனது ஆவியுள் கலந்து – நான் இருக்குமிடத்தளவும் வந்து என்னோடே கலந்து, ‘மிகவும் பராக்காய் இருக்கிற ஆத்துமாவிலே புகுந்து உன் குணத்தாலும் செயலாலும் வசீகரித்தாய்,’ என்பதாம்.
‘அறியாமையிற் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தது போன்று, எனது ஆவியுள் கலந்து, அறியா மா மாயத்து அடியேனை, அறியாக்காலத்துள் அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாய்,’ என்க.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply