ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன 3அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே.
பொ – ரை : ஒத்தவர்களும் உயர்ந்தவர்களும் இல்லாத மிகப்பெரிய ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவனே! அவ்வப் பொருள்கட்குத் தக்க நிலைகளை உடையவனாகி வந்து அவதரித்தவனே! சுவாமியே! என்னுடைய உயிராகி, என்னைப் பெற்ற அந்தத் தாயாகித் தந்தையுமாகி, அறியாதனவற்றை எல்லாம் அறியச் செய்து நீ செய்த காரியங்களை அடியேன் அறியேன்.
வி-கு : ‘அத்தா! தாயாகித் தந்தையாகி அறிவித்து நீ செய்தன அடியேன் அறியேன்,’ என்க. ‘இலையாய மாயா’ என்க, அறியாதன, செய்தன – வினையாலணையும் பெயர்கள்.
ஈடு : இரண்டாம் பாட்டு. ‘அகன்ற நம்மை அவன் திருவடிகளிலே சேரவிட்டது நெஞ்சு அன்றோ?’ என்று, இவர் திருவுள்ளத்தைக் கொண்டாடப் புகுந்தவாறே, நெஞ்சு, ‘நீர் அடி
அறியாதே, வழிப்போவாரைக் கொண்டாடுகிறது என்? என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன, கேட்ட ஆழ்வார், ‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ? நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு, சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.
1எம்பார், திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச்செய்து வருங்கால், இப்பாசுரம் வந்த அளவில், எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம் குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது; இருந்த 2முதலிகளிற்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர், ‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேரவிட்ட ஸ்ரீவைஷ்ணவர்,’ என்றனர்; எம்பார், ‘அங்ஙன் அன்றுகாண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி 3‘இசைவித்து’ என்கிறபடி, அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன்காண் பிரதம குரு’ என்று அருளிச்செய்தார்.
ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயா – 4‘பரம்பொருளுக்கு ஒத்தவனும் காணப்படுவது இல்லை; மிக்கவனும் காணப்படுவது இல்லை,’ என்கிறபடியே, ஒத்தவனும் மிக்கவனும் இல்லாதவனாய் இருப்பான். திருமகள் கேள்வனுக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாதபடி இருப்பது ஒரு 5தாரித்திரியம் உண்டு என்று அருளிச்செய்வார்,எம்பார், ‘என்னை அப்படி அங்கீகரித்த நீதான் ஒரு குறைவாளனாய்ச் செய்தாயோ?’ என்பார், ‘ஒத்தார் மிக்காரை இலையாய’ என்கிறார். ‘இவ்வாச்சரியந்தான் என்னே!’ ‘மா மாயா’ என்கிறார். எப்பொருட்கும் ஒத்தாய – ஒத்தாரும் மிக்காரும் இலையாய நீயே, இதர சாதீயனாய் வந்து அவதரித்தாய்; அவையாவன, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்னும் பெயரோடும், இந்திரனுக்குத் தம்பியாகவும், இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தும், விலங்குகளைப் போன்று மஹா வராஹமாகியும், நிலையியற் பொருள் போன்று குட்டை மாமரமாயும் நின்ற நிலைகள் போல்வன.
1‘குட்டை மாமரமாக நின்றது எற்றிற்கு?’ எனின், செவ்வே நிற்பின் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லோர்க்கும் ஒக்க எளியன் ஆகைக்கு. ‘ஆயின் எப்பொருட்கும் ஒத்து வருவதற்குக் காரணம் என்னை?’ எனின், மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்; தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்; ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான். 2‘ஒத்தாரை இல்லாதவனாய் ஒளியுருவனாய் உள்ள இறைவனுக்கு, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்ற ஒரு எண்ணிக்கையும், பன்னிரண்டு சூரியர்களுள் விஷ்ணு என்ற ஓர் எண்ணிக்கையும், அதிதிக்குப் புத்திரனாய் இருக்கும் ஒரு சம்பந்தத்தால் 3உபேந்திர அவதாரமும், இராமகிருஷ்ணர்களாய் வந்து அவதரிப்பதுமான மேற்கூறிய இவைகள் போற்றத் தக்கவைகளாய் இருக்கின்றன, என்றார் கூரத்தாழ்வான்.
‘‘இப்படி அவதரித்துச் செய்தது என்?’ எனின், உயிராய் – இவ்வாத்துமாதான் தனக்குப் பார்க்கும் ஹிதத்தையும் பார்க்கக் கூடியவனாய் இருக்கை. இனி, ‘உயிராய்’ என்பதற்குத் ‘தாரகனாய்’ எனலுமாம். என்னைப் பெற்ற அத்தாயாய் – பெறல் வேண்டும் என்று நோன்பு நோற்றுத் தன் சரீரத்தினை ஒறுத்துப் பெற்று இவன் பிரியத்தையே நடத்தக் கூடிய தாயாய். 4மற்றைத் தாயர்களை நீங்குதற்குப் ‘பெற்ற தாய்’ என்கிறார். தந்தையாய் – இப்படி நோன்பு நோற்று வருந்தி வரம் கிடந்து பெற்ற தாயும் இட்டு வைத்தற்கு ஒரு பை மாத்திரமாம் படி, இவன் தோன்றுவதற்குக் காரணனாய் ஹிதம் பார்க்கும் தந்தையாகி. தான், தனக்குத் தேடிக் கொள்ளும் நன்மையும், 5தான் உளனாய பின்னரே செய்துகொள்ள வேண்டுதலின், ‘உயிராய்’ என்றதனைச் சார, தாய் தந்தையர்களை அருளிச்செய்கிறார். அவ்வளவே அன்றி, அறியாதன அறிவித்து –
1ஆசாரியனாய் இருந்துவிரிந்த ஞானத்தையும் எனக்கு உண்டாகச் செய்து 2‘தாய் தந்தையர்கள் சரீரத்தை மட்டும் கொடுத்தார்கள்; ஆசாரியன் மாணாக்கனைக் கல்வியால் வேறு ஒரு சரீரத்தை அடையும்படி செய்கிறான்; கல்வியால் ஆய பிறவியே சிறந்தது,’ என்கிறபடியே, இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர்பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச்செய்கிறார். ‘ஆயின், இறைவன் ஆசாரியன் ஆவனோ?’ எனின், 3‘அது என்னுடைய விரதம்’ என்றார் பெருமாள். 4‘என்னுடைய இரண்டு திருவடிகளையும் சரணமாகப் பற்று’ என்றான் ஸ்ரீகண்ணபிரான். 5‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் வசிக்கும் இடமும் பற்றுக்கோடும் நட்டோனும் பேறும் ஆகிய அனைத்தும் நாராயணனே,’ என்பது உபநிடதம். 6’பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ, மற்றையார் ஆவாரும் நீ பேசில்’ என்பது தமிழ் மறை.
அத்தா – மஹோபகாரகன் ஆனவனே! இவ்வுபகாரங்களை உடையவனாகையாலே செய்தான் என்கிறார். நீ செய்தன அடியேன் அறியேன்-ஸ்வாமியான நீ, அடியவனான என் பக்கல் செய்த உபகாரங்களை அடியேன் அறியேனே. ஒன்று இரண்டு ஆகில் அன்றே ‘இன்னது’ என்னலாவது? ஆகையாலே, ‘நீ செய்தன’ என்னுமித்தனை. செய்த நீ அறியில் அறியுமித்தனை; என்னால் சொல்லித் தலைக்கட்டப் போமோ? அனுபவித்துக் 7குமிழி நீர் உண்டு போமித்தனை ஒழிய என்பார், ‘அடியேன் அறியேன்,’ என்கிறார்.
7. குமிழிநீர் உண்கை -‘தண்ணீருக்குள் இருக்கிற மணலைத் தொடுகின்றவாறு
தண்ணீருக்குள் புக்குக் கீழே இறங்குதல். நீரிலே குமிழி புறப்படுதல்’ என்பது பொருள்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply