தோற்றோம் மடநெஞ்சம்
எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி
அழுவோமை நீநடுவே
வேற்றோர் வகையிற்
கொடிதாய் எனைஊழி
மாற்றாண்மை நிற்றியோ?
வாழி! கனைஇருளே!
பொ – ரை : எம்பெருமானாகிய நாராயணனுக்கு எங்கள் மடநெஞ்சத்தைத் தோற்றோம்; தோற்று, எங்களுடைய ஆற்றாமையைச் சொல்லி அழுதுகொண்டிருக்கின்ற எங்களை, செறிந்த இருளே! நீ நடுவே வந்து, பகைவர்கள் தன்மையைக் காட்டிலும் கொடுமையையுடையாய் வருத்துக்கின்றாய்; காலமுள்ள வரையிலும் இக்கொடுந்தன்மையிலேயே நிற்பாயோ? கொடுந்தன்மை நீங்கி வாழ்ந்திடுக.
வி – கு : மேற்கூறிய நாரை முதலாயவற்றையும் உளப்படுத்தி நிற்றலின் ‘தோற்றோம் என்பது, உளப்பாட்டுத் தன்மைப்பன்மை முற்று. அழுவோம் – வினையாலணையும் பெயர். ‘எனை’ என்பது, ‘எத்தனை’ என்னும் பொருளையுடைய மரூஉமொழி. மாற்றாண்மை – பகைமை. கனை – செறிவு.
ஈடு : ஏழாம் பாட்டு. 1‘மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிட்டது,’ என்கிறாள்.
இப்பாசுரத்திற்கு, 2முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய, 3சொற்களின் நயத்தைத் திருவுள்ளம் பற்றிஎம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஒன்று உண்டு: அம்மங்கியம்மாளும் அதனையே நிர்ப்பந்தித்துப் போரும். அதாகிறது, தான், பிரிவாற்றாதார் பலர் கூடக் கட்டிக்கொண்டு கூப்பிடாநிற்க, இருள் வந்து முகத்தை மறைக்க, அத்தைப்பார்த்து, 4‘ஆற்றாமைக்குப் போக்குவிட்டுத் தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக்கடவையோ?’ என்கிறாள் என்பதாம்.
மடம் நெஞ்சம் தோற்றோம் – பகவத் விஷயம் என்றால் விட மாட்டாதபடி ஆசையுள்ள நெஞ்சை இழந்தோம்; இனி, இதற்கு, ‘உரிமைப்பட்ட நெஞ்சை இழந்தோம்’ என்று பொருள் கூறலுமாம். ‘எம்மே போல்’ என்கிற பொருள்களையெல்லாம் கூட்டிக்கொண்டு ‘சொல்லுகிறாளாதலின், ‘தோற்றோம்’ என்கிறாள். எம்பெருமாற்கு –5கெடுவாய், வகுத்த விஷயத்திலே அன்றோ நாங்கள் நெஞ்சை இழந்தது? நாரணற்கு -‘தன்னுடைமை’ என்றால்6வாத்சல்ய குணமுடையவனுக்கு அன்றோ இழந்தது? இனி, இதற்கு, ‘சுலபனாயிருக்கமவனுக்கு’ என்று பொருள் கூறலுமாம். எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை – ஆற்றாமையுடையார், தத்தமது ஆற்றாமை சொல்லிக் கூப்பிடுவர்கள் அன்றோ? ‘நாங்கள் பெறப்போகும் பயன்
ஒன்று உண்டாய் ‘அத்தை விலக்கி நாம் பெறல் வேண்டும்’ என்றுதான் செய்கிறாய் அன்றே!’ என்பாள், ‘ஆற்றாமை அழுவோம்’ என்கிறாள். ‘அவனைப் பெறவோ போன நெஞ்சைப்பெறவோ? எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ?’ என்பாள், ‘சொல்லி அழுவோம்’ என்கிறாள்.
நீ நடுவே – ‘அல்லாதவற்றுக்கு உள்ளது அமையாதோ உனக்கு?’ என்பாள், ‘நீ’ என்கிறாள். அதாவது, ‘அவனை ஒழிந்த நம்மில் நாம் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிடுகை ஒழிய, நமக்குள் ஒருவரை ஒருவர் வருத்தும் தன்மை உளதோ?’ என்றபடி. ‘நலிகைக்கு ஒரு காரணம் இல்லாதிருந்தும் நலிகின்றாயே?’ என்பாள், ‘நடுவே’என்கிறாள். வேற்றோர் வகையின் கொடிதாய் – பகைவர்கள் நலிகின்ற வகையைக்காட்டிலும் கொடிதாக நலிகின்றாய். பகைவர்களானாலும் நோவுபட்டாரை ‘ஐயோ!’ என்ன அன்றோ அடுப்பது? எனை ஊழி மாற்றாண்மை நிற்றியோ- காலம் என்னும் ஒருபொருள் உள்ள வரையிலும் பகையிலே நிற்கக்கடவையோ? ‘இராவணன் முதலியோர்கள் பிரித்தார்கள் அத்துணையே, கூப்பிடப் பொறுத்தார்கள்; நீர்மை யுடையார் கண்ணநீரை விழவிட்டார்கள்; நீர்மையுடையார் படியும் கண்டிலோம்; பகைவர்கள் படியும் கண்டிலோம்; உன்னுடைய தன்மை வேறுபட்டதாய் இருக்கின்றதே!’ என்றபடி.
வாழி – 1காதுகரை ‘உடன் பிறந்தீர்’ என்னுமாறுபோன்று ‘வாழி’ என்கிறாள். கனை இருளே – செறிந்த இருளே! இனி, ‘கனைத்துக் கொண்டு செருக்கி வருகிற இருளே!’ என்று பொருள் கூறலுமாம்.
இனி, இப்பாசுரத்துக்குப் பொருந்திய பொருளாவது ‘இருள் என்று ஒரு பொருள், அதுதான் ஒளி மழுங்கி, 2அடங்கி இருக்கை அதன் தன்மை என்று அறியாமல், 3காதலரைப் பிரிந்த பிரிவாலே ஒளி மழுங்கி வாய் விட்டுக் கூப்பிடவும் மாட்டாதே நோவு படுகிறதாகக் கொண்டு, ‘உன் இழவு கனத்திருந்ததே! 4வகுத்த எம்பெருமானிடத்தில் யாமெல்லாம் நெஞ்சிழந்து கூப்பிடாநிற்க
1நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலிகின்றாயே! உன் நலிவு நீங்கி வாழ்ந்திடுக,’ என்கிறாள் என்பதாம்.
மதி கெட்டவாறே -அந்தகாரம் வருமே
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply