நைவாய எம்மேபோல் நாண்மதியே! நீஇந்நாள்
மைவான் இருள்அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐவாய் அரவணைமேல் ஆழிப் பெருமானார்
மெய்வா சகம்கேட்டுஉன் மெய்ந்நீர்மை தோற்றாயே?
பொ – ரை : ‘ஒரு கலையோடு கூடியிருக்கின்ற சந்திரனே! வருந்து தலையுடைய எம்மைப் போன்று, இக்காலத்தில் நீ ஆகாயத்திலிருக்கின்ற மிகக் கரிய இருளினைப் போக்குகின்றாய் இல்லை; ஒளியெல்லாம் மழுங்கி அழிகின்றாய்; ஆதலால், ஐந்து வாயினையுடைய பாம்பாகிய படுக்கையின்மேல் தங்கியிருக்கின்ற – சக்கரத்தைத் தரித்த – இறைவனுடைய பொய் வார்த்தையைக் கேட்டு, உன் சரீரத்திலுள்ள ஒளியை இழந்தாயோ?’ என்கிறாள்.
வி – கு : அகற்றாய் – முற்று; எச்சமுமாம். மாழாந்து – ஒளி மழுங்கி. தேம்புதல் – கெடுதல். ‘புட்டேம்பப் புயன்மாறி’ (பட்டினப்பாலை, 4.) என்றார் பிறரும். கற்கறித்து, ‘நன்கட்டாய்’ என்புழிப் போன்று, ஈண்டு ‘மெய் வாசகம்’ என்பது குறிப்பு மொழி. ‘எம்மேபோல் மாழாந்து தேம்புதி’ எனக் கூட்டுக.
ஈடு : ஆறாம் பாட்டு. 1மேகத்தினருகே ஒரு கலையையுடைய சந்திரன் தோன்றினான்; அவனைப் பார்த்து, உன் வடிவில் எழில் இழந்தாய் ஆகாதே?’ என்கிறாள்.
நைவாய எம்மே போல் -நைவையுடைய எங்களைப் போன்று. இனி, ‘நைவு தான் ஒரு வடிவு கொண்டாற்போன்று இருக்கின்ற எங்களைப் போன்று’ என்று கூறலுமாம்; 2‘பூமியினின்றும் தோன்றினவளைப் போன்றிருந்தவளும், அதனை அழித்து அலங்காரம் செய்கின்றவர்கள் இன்மையின் ஒப்பனை அழிந்திருந்தவளும், பெருமாள் வரினும்3‘இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது’ என்னும்படி முதலிலே தாமரை குடி போன பொய்கை போன்றிருந்தவளும் போய்த் தேய்ந்தற்ற படிக்கும் பசலைக்கும் நிதரிசனமாகச் சொல்லும்படி இருந்தவளும், ‘நற்சரக்குக்கு வந்த அழுக்கு’ என்று தோற்ற இருந்தவளும், 4அம்பு வாய் உள்ளே கிடக்கப் புறம்பே சமாதானம் பண்ணினாற்போலே ‘அகவாயில் இழவு பெரிது’ என்று தோற்ற இருந்தவளும், 5பெருங்காற்றால் சிதற அடியுண்ட மேகதுண்டங்கள் போல இருந்தவளும், ஆன சீதை’ என்றார் வால்மீகி பகவானும். நாள் மதியே கலைகள்
நிறைந்த சந்திரனே! 6முன்னர்க் கலைகள் நிறைந்திருத்தலைக் கண்டிருந்தவள் ஆதலின், ‘நாள் மதியே’ என்கிறாள். இனி, ‘நாட்பூ’ என்னுமாறு போன்று, ‘இளமதியே!’ என்று பொருள் கூறலுமாம். நீ – காட்சிக்கு இனியனான நீ. இந்நாள் – இக்காலம். மை வான் இருள் அகற்றாய் – ஆகாயத்தில் கறுத்த இருளைப் போக்க மாட்டுகின்றிலை’ என்று பொருள் கூறலுமாம். வான் – சிலேடை: ஆகாயமும், வலிமையும்.
‘இப்படி, குறை அற்று இருக்கக்கடவ நீ, இக்காலத்தில் வந்தவாறே போக்கமாட்டுகின்றிலை’ என்பாள், ‘நாள் மதியே, நீ இந்நாள் அகன்றாய்’ என்கிறாள். ‘எதிரி எளியன் ஆனால் பகைவர்கள் கூட நின்று உருமுமாறு போன்று, மேலிடாநின்றது,’ என்றவாறு. இதனால், ‘இருளை ஒழிக்கவேண்டிய உன்னோடு அவ்விருளும் உடன் உள்ளததே!’ என்கிறாள். மாழாந்து தேம்புதி – ஒளி மழுங்கிக் குறைந்திராநின்றாய். ஐ வாய் அரவணைமேல் ஆழிப் பெருமானார் மெய்வாசகம் கேட்டு – இதனால் ‘அவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாய் ஆகாதே நீ’ என்கிறாள். 1‘தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாயிற்று’ என்கிறபடியே, தமக்குப் பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில், தம்மைச் சேர்ந்த படைக்கு ஐந்து வாய் உண்டு என்பாள், ‘ஐ வாய் அரவணை’ என்கிறாள். இதனால், அவனுக்குப் 2பள்ளித்தோழமை பலித்தமை தெரிவித்தபடி, இனி, மற்றைப் படைகளைப் பார்ப்போமாயின், அவர்களுடைய தன்மைகள் தாம் என்னே! தாம் பகலை இரவாக்க நினைக்கின், அதற்குப் பெருநிலை நிற்கும் சக்கரம் என்பாள், ‘ஆழிப் பெருமான்’ என்கிறாள்.
‘ஆயின், 3புருஷகாரமாய் இருக்கும் படைகளை வெறுத்துப் பேசலாமோ?’ எனின், பேறு அவர்களாலேயானால், இழவிலும் இன்னாதாகப் பேசுதற்கு இடமுண்டு. அத்தகைய அவர்களும் தம் பக்கலிலே பொய் ஓத வேண்டும்படி பொய்யால் பெரியவர் என்பாள், ‘பெருமானார்’ என்கிறாள். 4‘பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை’ என்றார்மங்கை மன்னனும். ‘ஆயின், பாசுரத்தில் ‘மெய்வாசகம்’ என்று இருக்க, பொய்வாசகம் என்று பொருள் கூறுவது என்னை?’ எனின், 5‘ஆழிப்பெருமானார் மெய் வாசகம்’ எனவே, ‘பொய்’ என்று பிரசித்தமாய் இருக்கும் போலேகாணும். ‘ஆயின்,’பொய்’ என்னாது ஒழிவான் என்?’ என்னில், ‘பொய்’ என்னில், நாட்டார் பொய்யைப் போன்று ஆகுமே? அதனினின்றும் வேறுபடுத்துதற்கு ‘மெய்வாசகம்’ என்கிறாள். ‘அம்மெய்வாசகம் யாது?’ எனின், 6என்னை அடைந்தவர்களை எல்லாத் துன்பத்தி
னின்றும் நீக்கிப் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு’ என்று கூறிய வார்த்தை. ‘‘ஆயின், அவ்வார்த்தை பொய்யோ?’ எனின், இப்பொழுது தனக்கு உதவாமையாலே பொய் என்று இருக்கின்றாள். ‘ஆயின், பொய் என்று இருக்கின்றவள் மெய்ந்நீர்மை தோற்கக் கூடுமோ?’ எனின், இராமாவதாரத்தில் மெய்யும் 1கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.
உன் மெய்ந்நீர்மை தோற்றாயே – உன் வடிவில் எழில் இழந்தாயே! ‘காட்சிக்கு இனியதான தண்ணளியேயாய் உலகத்திற்கு உபகாரமான உன் உடம்பின் ஒளியை அன்றோ இழந்தாய்?’ என்றபடிகலா மாத்ரமான சந்தரன் தோற்ற -உன்வடிவில் எழில் அழகை இழந்தாயோ
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply