ஸ்ரீ த்வயார்த்த வார்த்தைகள் –
பெரிய பிராட்டியாரையும் -பெருமாளையும் – இவர்களுக்கு பிரிவில்லாமையும் -பெருமாளுடைய பொருளையும் –
அருள் சுரக்கும் திருவடியையும் -திருவடிகள் சரணாம் படியையும் – அரணாம் திருவடிகளை அடையும் படியையும் –
அடைந்து ஆரா அனுபவத்தையும் -அருள் உடையவன் ஆக்கத்தையும் – அநுபவத்தில் உகப்பையும் –
அநுபவத்தில் அழுக்கை அறுக்கையும் சொல்லுகிறது -த்வயம் -த்வயத்தாலே திருவடிகளை அநு சந்திப்பான் —
த்வயத்தில் ச விசேஷணமான நாராயண பதத்தாலே பர ஸ்வரூபம் சொல்லிற்று —
பிரபத்யே -என்கிற உத்தமனாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தி நமஸ் ஸூ க்களாலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று —
நமஸ் சப்தத்தில் மகாரத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
சரண சப்தத்தாலே உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –
திருமந்த்ரார்த்த சரம ஸ்லோகார்த்த- இரண்டு அர்த்தத்திலும் ருசி வுடையவனுடைய அநு சந்தான பிரகாரம் -த்வயம் –
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்-த்வயம்-
உபேய யாதாம்ய பிரதிபாதன பரம்-த்வயம்-
புருஷகார பிரதானம் -த்வயம்-
பிராட்டியை ஈஸ்வரனோடு சமானை என்பாரையும் –சேதனரோடு சமானை என்பாரையும் —
வ்யாவர்த்திக்கிறது -ஸ்ரீ -என்கிற சப்தத்தாலே –
ஆஸ்ரயணீயம் ஒரு மிதுனம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது மதுப்பாலே –
நிர்க் குணம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -நாராயண பதத்தாலே –
நிர் விக்ரஹன் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -சரணவ் -என்கிற பதத்தாலே –
உபாயாந்தர நிஷ்டரை வ்யாவர்த்திக்கிறது -சரணம் -என்கிற பதத்தாலே –
உபாய ஸ்வீகாரத்தை உபாயம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -பிரபத்யே -என்கிற பதத்தாலே –
பிராப்யம் ஒரு மிதுனம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது -ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே
த்ரிமூர்த்தி சாம்யதையை வ்யாவர்த்திக்கிறது -நாராயண பதத்தாலே –
கைங்கர்யம் புருஷார்த்தம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது -சதுர்த்தியாலே –
கைங்கர்யம் ஸ்வயம் பிரயோஜனம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது நமஸ்ஸாலே –
பட்டர் ஜீயருக்கு த்வயத்தின் அர்த்தத்தை அருளிச் செய்து அருளி –
இதில் உத்தரார்த்தம் அநு சந்திக்கலாவது பரம பதத்தை சென்றாலாய் இருக்கும் –
இங்கே இவ் அர்த்ததம் அநு சந்தித்தவன் ஜீவன் முக்தன் என்று அருளிச் செய்தார் –
நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –
த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –
திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் – த்வயம் சிஷ்ய வாக்கியம் –
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்த துரும்பு எடுத்து பொகட பிராப்தி இல்லை –
உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை – மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –
பாடல் கொட்டையப் பிள்ளை வார்த்தை –
பூர்வ கண்டம் அநந்ய கதித்வம் சொல்லுகிறது–உத்தர கண்டம் அநந்ய பிரயோஜனத்வம் சொல்லுகிறது –
பூர்வ கண்டம் -பகவத் கிருபைக்கு வர்த்தகம்–உத்தர கண்டம் -பகவத் ப்ரீதிக்கு வர்த்தகம்
அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் இரு வருக்கும்-ஈஸ்வரன் -சேதனன் -ஓன்று போலே காணும் –
பூர்வ கண்டம் -அசித் வ்யாவ்ருத்தி–உத்தர கண்டம் -ஈஸ்வர வ்யாவ்ருத்தி –
நான் அடியேன் -பெரிய திருமொழி -7-3-1- என்று நம் பூர்வாச்சார்யர்கள் ரஹஸ்ய த்ரயத்தையும் தங்களுக்கு
தஞ்சம் என்று நினைத்துக் கொண்டு போரா நிற்கச் செய்தேயும் –
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையாலே-த்வயத்தை மிகவும் ஆதரித்து போருவார்கள் –
இதனுடைய அருமையையும் பெருமையையும் சீர்மையையும் பாராதே -வந்தபடி வரச் சொல்லார்கள்–நம் பூர்வாச்சார்யர்கள் என்று –
அதிகாரி துர் லபத்தாலே -இதனுடைய அருமை சொல்லிற்று–
கர்ம ஞான பக்தி நிர்வ்ருத்தி பூர்வகம் ஆகையாலே இதனுடைய பெருமை சொல்லிற்று –
ரஹஸ்ய த்ரய த்தில் வ்யாவ்ருத்தி வுண்டாகையாலே சீர்மை சொல்லிற்று –
த்வயத்தில் அர்த்தம் உபாயாந்தரங்களைப் பொறாது–சப்தம் சாதநாந்தரங்களைப் பொறாது –
பிரபத்தியை சக்ருத் என்பர் ஆழ்வான் -உடனே–சதா என்பர் முதலி யாண்டான்–சக்ருதேவ என்பர் பட்டர்
பக்தியில் காட்டில் பிரபத்திக்கு வாசி -அதி க்ருதாதி அதிகாரம் -சர்வாதிகாரமாகையும் –சாத்தியம் சித்தமாகையும் -கர்ம அவசாநம்
-சரீர அவசநாம ஆகையும் -அந்திம ஸ்ம்ருதியும் -அவனதேயாகையும் –
ஆசார்யன் முன்னிலையாக எம்பெருமான்-திருவடிகளிலே பண்ணின பிரபத்தி யாகையாலே –
பூர்வ கண்டத்தில் அர்த்தம் பலாந்தரங்களுக்கும் பல பிரதமாகையாலே –
இவன் நம்மை உபாயமாக பற்றி பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போகிறான் ஆகாதே -என்று ஈஸ்வர ஹிருதயம்
கடல் கலங்கினால் போலே கலங்கும்
-உத்தர கண்டத்தாலே -உன்னையே–உபாயமாகப் பற்றி பிரயோஜனாந்தரன்களைக் கொண்டு போவான் ஒருவன் அல்லன் -என்று
ஈஸ்வரன் மாஸூ ச என்று சேதனன் கண்ணா நீரை துடைத்தால் போலே –
சேதனனும் ஈஸ்வரனை -மாஸூ ச-என்கிறான் –
பிரகிருதி -விசேஷணம்–விக்ருதி -அனுபவம்–ஏதத் விக்ருதி -வ்ருத்தி விசேஷம்–பிரக்ருத்யந்தரமும் விக்ருத்யந்தரமும் -ஆத்ம நாசம் –
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் சில வைஷ்ணவர்களைக் காட்டி த்வயத்தில் பூர்வ கண்டத்துக்கும் உத்தர கண்டத்துக்கும்
வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய -பிள்ளை அருளிச் செய்தபடி –
பெருமாளும் பெரிய பிராட்டியாரும் அபிமதங்களை முடிப்பார் என்று இருக்கை –
அபிமதங்கள் தான் எவை என்னில் -பெருமாளும் பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பில் எல்லாம் அடிமையும் செய்ய வேணும் என்று இருக்கையும்
-அடிமைக்கு விரோதி கழிய வேணும் என்று இருக்கையும் -என்று அருளிச் செய்தபடி நினைத்து இருக்கிறார்கள் –
ஸ்ரீ பாதத்தில் அவர்கள் நினைத்து இருப்பது ஏது என்று ஜீயர் கேட்க -இம் மஹோ உபகாரத்தை பண்ணினவன் -த்வயார்த்தத்தை அருளியது
-என்று நினைத்து இருப்பது -பின்னையும் ஜீயர் புருஷகாரமாய் இருக்கும் இவள் -அகலகில்லேன் -என்று ஆழம் கால் படா நிற்க –
புருஷகார பூதை யாகிறபடி எங்கனே என்னில் -அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -திருவாய் மொழி -3-10-8- என்றும்
-பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18- என்றும்
-நிற்கச் செய்தேயும் ஜகத் நிர்வாகமும் சொல்லுகிறது இல்லையோ -என்று அருளிச் செய்தார் –
நம்பியை கோவர்த்தன தாசர் -அர்ஜுனனைப் போலே யாகிலும் யோக்யதை வேண்டாவோ என்ன –
ஷத்ரியவாதிகளும் வேணுமோ என்றார் –
அதிகாரிக்கு அபராதாநாம் ஆலயத்வமும் – ஆர்த்தியும் -அநந்ய கதித்வமும் -ஸ்வ ஞானமும் -ஸ்வரூப பிரகாசமும் -வேணும் –
பூர்வ அபராதம் பொறுக்கைக்கு புருஷகாரம் வேணும் – கால நியதி பாராமைக்கு மதுப்பு வேணும் –
புருஷகாரம் தான் ஜீவிக்கைக்கு சீலாதி குணங்கள் வேணும் – அது தான் -கார்யகரம் ஆகைக்கு ஞான சக்தியாதி குணங்கள் வேணும் –
சம்சாரிகளுக்கு ருசி ஜநகமுமாய் -முமுஷுக்களுக்கு சுபாஸ்ரயமுமாய் முக்தருக்கு போக்யையும் ஆகைக்கு விலஷண விக்ரகம் வேணும் –
உபாய சௌகுமார்யத்துக்கு நைர பேஷ்யம் வேணும் – அதுதான் பலத்தோடே வ்யாப்தம் ஆகைக்கு ச்வீகாரம் வேணும் –
கீழ் புருஷகாரம் ஆனால் போலே மேலும் பிராப்ய பூதை யாகவேணும் –
கீழ் உபாய பூதன் ஆனால் போலே மேலும் பிராப்ய பூதன் ஆக வேணும் –
சேஷத்வத்து அளவு அன்றிக்கே -சேஷத்வ வருத்தியும் வேண்டும் -ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி அன்றிக்கே
ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேண்டும் –
வங்கி புரந்து நம்பி -யதிவர சூடாமணி தாஸ்ர்க்கு -ஒரு சர்வ சக்தியை அசக்தன் பெரும் போது தானும் பிறரும் தஞ்சம் அன்று
-ஆசார்யன் அனுக்ரஹ பூர்வகமாக த்வயத்தில் அர்த்தத்தை அனுசந்தித்து பிழைத்தல் -நித்ய சம்சாரியாய் முடிதல் செய்யுமதுக்கு
மேற்பட்டது இல்லை என்று அருளிச் செய்தார்
எம்பெருமானார் புழுவன் காலத்திலே வெள்ளை சாத்தி மேல் நாட்டுக்கு எழுந்து அருள-
அங்கே நம்பெருமாள் பிரசாதம் கொண்டு காண வந்த
அம்பங்கி அம்மாளுக்கு உடையவர் ஓருரு த்வயத்தை அருளிச் செய்தார் –
பார்ஸ்வச்தர் -இது என் ஜீயா அங்கீகரித்து அருளிற்றே என்ன -இத்தனை தூரம்
பெருமாள் பிரசாதம் கொண்டு வந்த இவருக்கு த்வயம் ஒழிய பிரத்யுபகாரம் உண்டோ -என்று அருளிச் செய்தார் –
ஸ்வீகாரத்தில் உபாய புத்தியும் -பேற்றில் சம்சயமும் காண் ஒருவனுக்கு மோஷ விரோதி –
சாபராதிகளான சம்சாரிகளுக்கு சர்வ ஸ்வாமியான எம்பெருமானைப் பற்றும் இடத்து -தன் அபராத பரம்பரைகளைப் பார்த்து பிற்காலியாதே
-பின் பற்றுகைக்கு புருஷகார பூதையான பிராட்டியை சொல்லுகிறது -ஸ்ரீ -என்கிற பதத்தாலே –
இப்படி புருஷகார பூதையான பிராட்டி அவனோடே சேர இருப்பது ஒரு தேச காலங்களிலேயோ
என்னில் -பிராப்ய பிரபாவான்களைப் போலே பிரியாத நித்ய யோகங்களைச் சொல்லுகிறது -மதுப்பு –
இப் புருஷகாரமும் மிகை என்னும்படியாய் இவள் தானே குறை சொல்லிலும் -செய்தாரேல் நன்று செய்தார் –
பெரியாழ்வார் திருமொழி -4-9-2- என்று பரிந்து நோக்கும் வாத்சல்யாதி குணம் சொல்கிறது -நாராயண -பதத்தாலே –
ஆஸ்ரிதரை கைவிடாதே சௌலப்யம் சொல்லுகிறது -சரணவ் -பதத்தாலே –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயம் என்கிறது சரணம் என்கிற பதத்தாலே –
அவன் திருவடிகளில் இத்தனை நன்மை உண்டாய் இருக்க -இந்நாள் வரை இழந்தது இவன்
பற்றாமை இறே -அக் குறைகள் தீர பற்றும் பற்றுகையைச் சொல்லுகிறது பிரபத்யே -என்கிற பதத்தாலே –
இப்படி பூர்வ கண்டம் சொல்லி நின்றது –
மேல் உத்தர கண்டம்சொல்லுகிறது–இதில்
மதுப்பாலே இவனோடே கூடி இருக்கிற இவளும் உத்தேச்யை யாகையாலே -நாம் ஏதேனும் ஒரு
கிஞ்சித்காரம் செயிலும் -அவனோடே கூடி இருந்து ஒன்றை பத்தாக்கி அவன் திரு உள்ளத்தை உகப்பிக்கும்
ஆகையாலே -அவனோடு கூடி இருந்தவள் என்கிறது -ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே –
நம்மோடு நித்ய முக்தரோடு வாசி யற எல்லாரையும் சமமாக ரஷிக்கும் ஸ்வாமித்வம் சொல்லுகிறது -நாராயண பதத்தாலே –
இப்படி ஸ்வாமியான எம்பெருமான் திருவடிகளிலே -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமான சர்வவித
கைங்கர்யங்களையும் பண்ண வேணும் என்று பிரார்த்திக்கும்படி யைச் சொல்கிறது சதுர்த்தியாலே –
இப்படி இருந்துள்ள அடிமை செய்யும் இடத்து -அவன் உகந்த உகப்பு ஒழிய தான் உகந்த உகப்பை தவிரச் சொல்கிறது -நம -என்கிற பதத்தாலே –
ஸ்ரீ மத என்கிற பதத்தாலே -திரு மார்பில் நாய்ச்சியாரோடே அனுசந்திக்கிறார் –
ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே -என்கிற பதங்களாலே திருவடிகளை அனுசந்திக்கிறார் –
ஸ்ரீ மதே நாராயண -என்கிற பதங்களாலே -அருகு இருந்த நாய்ச்சிமாரோடே -இட்ட தனி மாலையையும் – கவித்த திரு அபிஷேகத்தையும்
-சிவந்த திரு முக மண்டலத்தையும்-அனுசந்திக்கிறார் –
ஆய -நம -என்கிற பதங்களாலே கைங்கர்யத்தை அனுசந்திக்கிறார் –
எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரித்ததொரு ஸ்ரீ வைஷ்ணவருடைய பிள்ளைக்கு ஏகாயனரோட்டை சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன்வ்யபசரித்து அநர்த்த பட ஒண்ணாது என்று -பெருமாள் திருவடிகளிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
-அவனும் அங்கே சந்நிஹிதனாக -வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யமில்லை
-நாம் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள் -இவ் வாத்மாவுக்கு தஞ்சமாக இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை
-என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து சத்யம் பண்ணிக் கொடுத்து அருளினார் –
அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டர் ஆனார் –
பட்டர் த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி சப்தாந்தரத்தாலே இவ் வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ -என்று
உடையவருக்கு விண்ணப்பம் செய்ய -அதுக்கு குறை இல்லை –
ஆகிலும் இப் பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம் வேறொரு பாசுரத்துக்கு சுரவாதே -என்று அருளிச் செய்தார் –
நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –
த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –
திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் – த்வயம் சிஷ்ய வாக்கியம் –
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்ததுரும்பு எடுத்துப் பொகட பிராப்தி இல்லை –
உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை – மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –
பகவத் சரணாரவிந்த சரணாகதனாய் -ஞாநினாம் அக்ரேசரனாய் -விலஷண அதிகாரியான -பிரபன்னனுக்கு
உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி —உபேயத்தில் நிவ்ருத்தி ருசி விரோதி –
உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப ஹானி —உபேயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –
இவ்விரண்டு அர்த்தத்துக்கும் நிதர்சன பூதர் -ஸ்வ ரஷண ஷமையாய் இருக்கச் செய்தே –
ஸ்வ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து -அசோக வநிகையில் எழுந்து அருளி இருந்த பிராட்டியும் –
பெருமாள் -நில் -என்னச் செய்தேயும் -தம்முடைய செல்லாமையைக் காட்டி -அவருடைய வார்த்தையை அதிக்ரமித்து —
காட்டிலே தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளும் –
சம்சார சம்பந்தம் அற்று திரு நாட்டிலே போய் இருக்கும் அளவும் -த்வயத்தில் இரண்டு கண்டத்தில் அர்த்தத்தையும் கொண்டு –
பிரபன்னனாவன் கால ஷேபம் பண்ணும்படி -பெரிய பிராட்டியாரை பின் செல்லும் -ஸ்வபாவன் ஆகையாலே -இவள் புருஷகாரமாக கொண்டு
ஆஸ்ரயிக்கிற நம் பெரும் பிழைகள் பாராதனுமாய் -ஆஸ்ரயிப்பாருக்கு மிகவும் எளியனான நாராயணனுடைய திருவடிகள் இரண்டையும்
-எனக்கு அத்யந்தம் அநிஷ்டமாய் அநாதியாக இன்றளவும் வர வடிம்பிட்டு வருகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கி -எனக்கு இஷ்ட தமமாய்
-நிரதிசய ஆனந்தவஹமாய் -அனந்தமாய் -அபுநாவருத்தி லஷணமான மோஷத்தை பெறுகைக்கு அவ்யஹித சாதனமாகப் பற்றி நின்றேன் –
பெரிய பிராட்டியாரோடு கூடி -சர்வ ஸ்வாமி யான நாராயணன் திருவடிகளிலே -சர்வ தேச சர்வ கால
சர்வ அவஸ்த உசிதமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ணப் பெறுவேன் ஆகவுமாம் –
அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்கள் தவிருவதாகவும் -இதனுடைய அநுக்ர மணம் -இருக்கும்படி
சாபராதானனான சம்சாரி சேதனனுக்கு சர்வஞ்ஞானான சர்வேஸ்வரனைக் கிட்டும் இடத்தில் -இவனுடைய அபராதம்
அவன் திரு உள்ளத்தில் படாதபடி -அழகாலும் குணங்களாலும் -அவனைத் துவக்கி இவனை திருவடிகளில் சேர விடுகைக்கு –
கண் அழிவு அற்ற புருஷகாரமான பிராட்டி ஸ்வரூபம் சொல்லி -மதுப்பாலே -இவளுக்கு அவனைப் பிரிய
சம்பாவனை இல்லாதா மகா சம்பத்தான நித்ய யோகம் சொல்லி -நாராயண பதத்தாலே -இவள் புருஷகாரமும்
மிகை யாம் படியாக -அவன் ஆஸ்ரித விஷயத்தில் பண்ணும் வாத்சல்யாதி குண யோகம் சொல்லி –
சரணவ் -என்கிற பதத்தாலே -இவன் குற்றங்களை இட்டுக் கை விடும் என்று -வரையாதே மேல் விழுந்து
-சுவீகரிக்கும் திருவடிகளினுடைய சேர்த்தி அழகைச் சொல்லி -சரணம் -என்கிற பதத்தாலே -அவை தான் இவனுக்கு
அநிஷ்ட நிவ்ருதிக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் -சாதனம் என்னும் இடம் சொல்லி -ப்ரபத்யே என்கிற வர்த்தமானத்தாலே –
சேதனன் நெடும் காலம் பண்ணின பராதி கூல்யம் தவிர்ந்து -இன்று இசைந்து பற்றுகிற பற்றிச் சொல்லி –
உத்தர கண்டத்திலே
ஸ்ரீமத் பதத்தாலே -உபேயத்திலும் பிராட்டி புருஷகார பூதையுமாய் ஸ்வாமிநியுமாய்க் கொண்டு –
அவனோடே நித்யவாசம் பண்ணுகிற படியை சொல்லி –
நாராயண பதத்தாலே அவனுடைய சர்வ ஸ்வாமித்வம் சொல்லி –
ஆய -என்கிற சதுர்த்தியாலே -இவ்விருவருமான சேர்த்தியிலே இப்ப்ரபன்னனான சேதனன் –
ஸ்வரூப அனுரூபமான வருத்தி விசேஷத்தை பிரார்த்தித்து -அத்யா ஹார்யமான ஸ்வ சப்தத்தாலே பெற்றபடி சொல்லி –
நமஸ் ஸாலே அடிமை செய்யும் இடத்து அவன் உகந்த உகப்பைக் கண்டு உகக்கும் அது ஒழிய
தன் உகப்பு தவிர்ந்தபடி சொல்லித் தலைக்கட்டுகிறது-
ஆழ்வான் எம்பெருமானாரை -ப்ரபத்தி என் பட்டு இருக்கும் -என்று கேட்க –
அது கர்மாதிகளை விட்டல்ல தான் இருப்பது –ஒன்றில் ஆயிரம் இல்லை -ஆயிரத்தில் ஓன்று உண்டு
குளப்படியில் கடல் இல்லை கடலில் குளப்படி உண்டு
ஆகையாலே எல்லாம் ப்ரபத்தியிலே உண்டு என்று அருளிச் செய்தார் –
அதில் இவை கண்டபடி எங்கனே என்னில்
ராஜகுமாரன் கர்ப்பூர நிகரத்தை வாயிலே இட்டு பல்லாலே அசைக்குமா போலே த்வயத்தை உச்சரிக்கை கர்மம்
அவன் அதன் ரசத்தை பானம் பண்ணுமா போலே இடை விடாதே அனுசந்திக்கை -ஜ்ஞானம்
அவன் அந்த ரசத்தாலே தன்னை மறந்து இருக்குமா போலே இவனும்
அதின் அர்த்த அனுசந்தானத்தாலே ரச அதிசயினாய் தன்னை மறந்து இருக்கும் அது -பக்தி
அத்தாலும் பிரபன்னனுடைய அனுஷ்டானம் இருக்கும்படி பிறந்துடையவள் ஒப்பனை போலேயும்
ராஜகுமாரன் கர்ப்பூர நிகரத்தை வாயில் இட்டு நீரை நாக்காலே போக்குமா போலேயும்
பிரபன்னனுக்கு த்வய அர்த்த அனுசந்தானம் ஒழிய தேக யாத்ரை செல்லாது
திருமந்தரம் விலைப்பால் த்வயம் முலைப் பால்
நம்முடைய த்வயம் இருக்கும் படி–
கரை கட்டின காவேரியும் -கரை கட்டாக் காவேரியுமாய் -அப்படி இறங்கும் துறையுமாய் இருக்கும் -அவை எவை என்னில்
பரம பதம் -கரை கட்டாக் காவேரி ராம கிருஷ்ணாதி விபவம் கரை கட்டின காவேரி அப்படி இறங்கும் துறை திருமந்த்ரமும் த்வயமும் –
இங்கன் ஒத்தவனைக் காண்பது எங்கனே என்னில்-
திருவனந்தாழ்வான் மடியிலும் பெரிய திருவடி முதுகிலும் சேனை முதலியார் திருப் பிரம்பின் கீழும்
இருப்பவன் இறே நமக்கு ப்ராப்யன் –
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply