பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்குஎன்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.
பொ-ரை :- அழகுபொருந்திய நீண்ட திருமுடியிலே தரித்த அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனுக்கு, சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்லர்களோடே போர்செய்த தோள்களையும் ஆச்சரியமான செயல்களையுமுடைய உபகாரகனுக்கு, நிற்கின்றனவான பலவகைப்பட்ட பொருள்களையும் சரீரமாகவுடையவனாய் அவற்றின் குற்றங்கள் தன்பக்கல் தட்டாமலே நிற்கின்ற மாயவனுக்கு, அறிவுடைய என் மகளானவள் மரியாதையை இழந்தாள்.
வி-கு :- மல் – மல்லர்கள். கற்பு – கல்வி; அறிவு. கட்டு – உலக மரியாதை. பெண்களுக்குள்ள மரியாதையுமாம்.
ஈடு :- பத்தாம்பாட்டு. 1பரத்துவம் என்ன, அவதாரம் என்ன, உலகமே உருவமாயிருக்கும் தன்மை என்ன இவற்றை யடங்கக் காட்டி இவள் உடைமை எல்லாவற்றையும் கொண்டான் என்கிறாள்.
பொற்பு அமை நீள்முடி பூந்தண் துழாயற்கு-அழகு சமைந்திருப்பதாய் ஆதிராஜ்யப் பிரகாசகமான திருமுடியின் மேலே இறைமைத்தன்மைக்கு அறிகுறியான திருத்துழாய் மாலையை யுடையவனுக்கு; தன்னுடைய பரிசத்தாலே பூத்துச் சிரம ஹரமாயிருத்தலின் ‘பூந்தண்துழாய்’ என்கிறாள். மல் பொரு தோளுடை மாயம் பிரானுக்கு-வந்து அவதரித்து மற்பொரு தோளையுடையனாயிருக்கை. சாத்தின சாந்து அழியாதபடி மல் பொருத ஆச்சரியத்தையுடையவனாதலின் ‘மாயப் பிரான்’ என்கிறாள். 2சாவத் தகர்த்த சாந்து அணி தோளன் – பெரியாழ்வார் திருமொழி, 4. 2 : 6.-அன்றோ. ஸ்ரீ மதுரையிற் பெண்களுக்கு அழகினை உபகரித்தவனாதலின் ‘பிரான்’ என்கிறாள். அன்றிக்கே, மற்றும் ஆச்சரியமான உபகாரங்களைச் செய்தவனுக்கு என்றுமாம். நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு – தாவர சங்கமங்களான எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே, அவற்றின் தோஷங்கள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கிற ஆச்சரியத்தையுடையவனுக்கு. என் கற்புடையாட்டி – மிக்க அறிவையுடைய என்மகள். 3“என்னை அழைத்துக்கொண்டு போகும் அச்செயல் அவர்க்குத் தக்கதாம்” –“தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30.
என்று இருக்குமவள் அன்றோ.இழந்தது கட்டே – 1தனக்கு உள்ளவற்றை நேராகக் காட்டி இவள் பக்கல் உள்ளவற்றை நேராகக் கொண்டான். கட்டு – முழுதும். ‘கட்டு’ என்று மரியாதையாய், உலக மரியாதையை இழந்தாள் என்றுமாம்
பரத்வம் என்ன -விபவம் என்ன -அனைத்தையும் காட்டி
அனைத்தையும் இழந்தாள்
பொற்பு அணை -நீண் முடி ஆதிராஜ்ய -ஐஸ்வர்ய சூசுகம்
ஸ்பர்ச்த்தால் வந்த பெருமை
வந்து அவதரித்து மல்லர் உடன்
மாயப்பிரான் சாத்தின சாந்து குறி அழியாத படி
சாந்தணி தோள் சதுரன் இ றே
ஆச்சர்யமான உபகாரங்கள் பல செய்தவன்
ஸ்தாவர ஜங்கம -உள்ளே இருந்தும் தோஷம் தட்டாத மாயன் ஆயன் –
என் கற்புடை யாட்டி -மிக அறிவை உடைய என் மகள்
மிக்க அறிவு -தக்க அறிவு -தது தஸ்ய சத்ரும் பவேத் அறிவு
தன் உடையவை காட்டி -அனைத்தையும் கொண்டான்
கட்டு கட்டடங்க
கட்டுப்பாடை இழக்க வைத்தான்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply