திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-6-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

    மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்குஎன்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.

பொ-ரை :- அழகுபொருந்திய வடிவத்தையும் வஞ்சனையையுமுடைய வாமனனாக அவதரித்தவனுக்கு, உயர்ந்த பிரகாசம்பொருந்திய மலைபோன்ற சிவந்த ஒளியையுடைய திருமேனியையுடையவனுக்கு, காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய ஸ்ரீராம்பிரானுக்கு என்னுடைய, ஆபரணங்களைத் தரித்த மெல்லிய முலைகளையுடைய பெண்ணானவள் அழகினைத் தோற்றாள்.

வி-கு :- தோற்றம் – தோன்றுதல்; அவதாரத்தைக் குறித்தபடி காகுத்தன் – ககுஸ்தவம்சத்தில் பிறந்தவன். நம்பி – பூர்ணன்.

ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 1ஸ்ரீ வாமனம் முதலிய அநேக அவதாரங்களிலே அகப்பட்டு இவள் தன் அழகினை இழந்தாள் என்கிறாள்.

மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு – 2அழகு சமைந்த ஒப்பனையையுடையனாய், ஆச்சரியமான வேடத்தையுடைய ஸ்ரீ வாமனனுக்கு. மாண்பு – அழகு. மாயம் வஞ்சனையாகவுமாம். சேண் சுடர் குன்று அன்ன செம்சுடர் மூர்த்திக்கு – 3அடியிலே நீர்வார்த்துக் கொடுத்தவாறே வளர்ந்தபடி. ஓங்கிய புகரையுடைய மலைபோலே அழகிய ஒளியையுடைய வடிவினையுடையவனுக்கு. காண் பெரும் 4தோற்றத்து – கண்களுக்கு இனியதாய் அளவிடற்கரியதான இனிமையையுடைய தோற்றத்தையுடைய என்னுதல்; தோற்றம் – அழகு. அன்றிக்கே, “ஸ்ரீராமபிரானுடைய மஹத்தான அவதாரம்” என்கிற அவதாரத்தின் மஹத்துவமாதல்

“ஜந்ம ராமஸ்ய ஸுமஹத் வீர்யம் ஸர்வாநுகூலதாம்
லோகஸ்ய ப்ரியதாம் க்ஷாந்திம் ஸௌம்யதாம் ஸத்ய ஸீலதாம்”–
என்பது, ஸ்ரீராமா. பால, 3 : 10.

எம் காகுத்த நம்பிக்கு-1குணங்கள் நிறைந்த சக்கரவர்த்தி திருமகனுக்கு.

ஆந்ருஸம்ஸ்யம் அநுக்ரோஸ: க்ஷமா சத்யம் தமஸ்ஸம:
ராகவம் ஸோபயந்தி ஏதே ஷட்குணா: புருஷோத்தமம்”-  என்றது, அநுசந்தேயம். ஸ்ரீராமா. அயோத். 33 : 12.

2“தசரதற்கு மகன் தன்னை யன்றி மற்று இலேன்”-திருவாய். 3. 6 : 8.– என்னுமவராதலின் ‘எம் காகுத்தன்” என்கிறாள். 3“குணங்களுக்கு எல்லாம் நிலைக்களமானவர்”குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

ஆதலின் ‘நம்பி’ என்கிறாள். என் பூண் புனை மென்முலை – ஆபரணத்தாலே அலங்கரிக்கப்பட்டனவாய் விரகத்தைப் பொறுக்கும் அளவில்லாத மெல்லிய முலைகளையுடையவள். தோற்றது பொற்பே – 4“பூண்புனை மென்முலை” என்கையாலே, ஒப்பனையால் வந்த அழகினை இழந்தாள் என்கிறாள். பொற்பு – அழகு. 5“மலராள் தனத்துள்ளான்”-மூன்றாந் திருவந். 3.- என்கிறபடியே, அவனைத் தன்னழகாலே புறம்பு ஒன்று அறியாதபடி பண்ணி அநுபவிக்குமவள் கண்டீர் தோற்றாள் என்கை.

பல அவதார செஷ்டிதங்கள் காட்டி அழகை
மாண்பு -சமைந்து ஒப்பனை உள்ள வாமனன்
நெஞ்சு உருக்கும் படி அழகு
மாயம் -ஆச்சர்யம் வஞ்சனை
உயர்ந்த குன்றம் போலே எம்பெருமான்
அடியிலே நீர் வார்த்து கொடுத்த உடன் வளர்ந்த படி
தோற்றம் -அழகு
சக்கரவர்த்தி திரு மகனுக்கும் சொல்லலாம்
காகுத்த நம்பி -குண பூர்த்தி உள்ளவன்
மனத்துக்கு இனியான்
பெண் பிள்ளைகளுக்கு உதவினதால் இப்படியே பேசுவார்கள்
தயரதர்க்கு மகன் தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாக
பூம் புணை மென் முளை
பொற்பு அழகு
ஒப்பனையால் வந்த அழகை யும் இயற்க்கை அழகையும் இழந்தாள்
ஸ்தனத்துள்ளான் -அவனையே வைத்து கொள்ளுபவள் இழந்தாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading