சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.
பொ-ரை :- சங்கம் வில் வாள் தண்டு சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களையும் தரித்த திருக்கரங்களையுடையவனுக்கு, சிவந்த கோவைக்கனி போன்ற திருவதரத்தையும் செந்தாமரைபோன்ற திருக்கண்களையுமுடையவனுக்கு, தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனுக்கு, என் பெண்ணானவள் இழந்தது அழகிய நிறமேயாகும்.
வி-கு :- கொங்கு – வாசனையுமாம். மாமை – ஒரு நிறவிசேடமுமாம். இத் திருப்பாசுரத்தில், பஞ்சாயுதங்களையும் ஒருசேர அருளிச்செய்திருத்தல் காண்க.
ஈடு :- இரண்டாம் பாட்டு. 3திருவுலகு அளந்தருளின காலத்தில் திவ்விய ஆயுதங்கள் முதலியவைகளின் அழகிலே அகப்பட்டுத் தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் என்கிறாள்.
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் கையற்கு – ஸ்ரீபஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே ஆயிற்று இவள் ஈடுபட்டது. இவளுடைய 1ஓர் ஆபரணம் வாங்குகைக்கு எத்தனை ஆபரணம் பூண்டு காட்டினான்? கைக்குமேல் ஐந்துங் காட்டிக்காணும் இவளுடைய ஆபரணம் வாங்கிற்று. 2ஆபரணகோடியிலும் ஆயுதகோடியிலும் இருபுடைமெய்க் காட்டின அன்றோ இவைதாம். செம்கனிவாய்ச்செய்ய தாமரைக்கண்ணற்கு-கையிலே ஒன்றனைத் தரித்துக் காட்டிக் கவர்ச்சி செய்யவேண்டி இருந்ததோ? புன்சிரிப்பும் நோக்கும் அமையாதோ நலிகைக்கு? கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு – தேன் பெருக்கு எடுக்கின்ற திருத்துழாய்மாலையை, ஆதிராஜ்ய சூசகமான திருமுடியிலேயுடையவனுக்கு. வைத்த வளையத்தைக் காட்டிக்காணும் இவள் நிறத்தை அபகரித்தது. ஆக, ஆபரணசோபை, அவயவ சோபை, ஒப்பனை அழகு என எத்தனை செய்யவேணும் இவள் நிறத்தினைக் கொள்ளுகைக்கு என்றபடி. என்மங்கை -தன்பருவத்தாலே இவற்றையடையத் தோற்பிக்குமவள் கண்டீர் நிறம் இழந்தாள்! மாமைநிறம் – அழகிய நிறம். மாமை – அழகு.
நிறம் இழந்தாள்
திவ்ய ஆயுதம் -சேர்த்தி அழகை காட்டி
இவள் ஒரு ஆபரணம் கவர பஞ்ச ஆபரணங்கள் பூண்டு வந்தான்
கைக்கு மேல் ஐஞ்சு காட்டி இவள் ஆபரணம் வாங்கிற்று
ஆபரணம் ஆயுத கோஷ்டி மெய்ப்பாடு உண்டே
செம் கனி வாய் -செய்ய தாமரைக் கண் -ஆபரணம் வேண்டாத இரண்டு அவயவங்கள் இவை இரண்டும்
ஸ்மிதமும் நோக்கும் அமையாதோ அபஹரிக்க
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி யான் வகுத்த வளையம் காட்டி
ஆபரணம் -அவயவம் -ஒப்பனை இத்தனையும் காட்டி அபஹரிக்க
மங்கை -பருவம்
மாமை அழகிய நிறம் இழந்தாள்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply