ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்ற
[முண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.
பொ-ரை :- அன்று வெண்ணெய் களவு போயிற்று என்ற வார்த்தை பிறந்த அளவிலே ஆய்ச்சியாகிய தாயால் சீறப்பட்டு அழுத கூத்தனாகிய அப்பனை, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் துதித்த தமிழ்மாலை ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் இசையோடும் நாவினால் விருப்பத்தோடு சொல்லுகின்றவர்கட்கு வறுமை இல்லை.
வி-கு :- அன்று வெண்ணெய் வார்த்தையுள் ஆய்ச்சியாகிய அன்னையால் சீற்றம் உண்டு அழு அப்பன் என்க. ‘ஆய்ச்சியாகியஅன்னை’ என்றது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம். நவில உரைத்தல்-மனத்தொடுபடவுரைத்தல்.
ஈடு :- முடிவில், 1இத் திருவாய்மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்குப் பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறார்.
ஆய்ச்சியாகிய அன்னையால்-2அரசர்குலத்தில் ஒரு தாயும் ஆயர்குலத்தில் ஒருதாயும் ஆகையாலே. பொதுவறுத்து ஆய்ச்சியாகிய தாயாலே என்கிறார். 3தேவகிப் பிராட்டியார் அடிக்கில் இத்தனை நோவாது காணும். 4“தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து ஓடி” -இது, பெரிய
திருமொழி, 8. 3 : 5.-என்கிறபடியே, ‘இவள் நம்மை அதட்டுவதே!’ என்று உளைந்தன்றோ கிடப்பது. 5தெய்வம் அறியத் தாய் ஆயினமை அன்றோ தேவகியார்பக்கல் உள்ளது; முலைச்சுவடு அறிந்ததும் முகம் பழகிற்றும் வளர்ந்ததும் எல்லாம் இங்கே அன்றோ. அன்று வெண்ணெய்வார்த்தையுள் – 1ஊரில் ‘வெண்ணெய் களவு போயிற்று’ என்றார்கள்; அவ்வளவிலே ‘நாம் அன்றோ இதற்கு இலக்கு’ என்று அழப்புக்கான். 2‘மடம் மெழுகுவார் யார்?’ என்ன, ‘அஸ்ரோத்திரியன்’ என்றார்கள்; ‘இப்பரப்பு எல்லாம் என்னாலே மெழுகப்போமோ’ என்றான்; அதுபோலே. 3யாரேனும் ஏதேனும் செய்யிலும் இவனைச் சொல்லும்படியன்றோ இவனுடைய தீம்பு தான் இருப்பது! “பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன் மேலன்றிப் போகாது” -பெரியாழ்வார் திருமொழி, 2. 8 : 5.-என்னும்படியன்றோ இருப்பது. சீற்றம் உண்டு அழு கூத்த அப்பன் தன்னை – 4தாயார் பொடியப் பொடியுண்டு அழுகிற நிலையில் “பையவே நிலையும்” -திருவாய். 5. 10 : 3.-என்கிறபடியே நிற்கிற நிலை, வல்லார் ஆடினாற்போலே இருந்தபடி. 5அன்றிக்கே, அழுகையாகிற கூத்தையுடைய மஹோபகாரகனை என்றுமாம். 6இது ஒன்றற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறது, “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும் இவர்கள் சொன்னபோது ஒன்றிலும்விருப்பம் இல்லாத அவன் கால் வாங்கிப்போகமாட்டாதே நின்ற நிலைக்குத் தியோதகம். அப்பன் தன்னை – 1அந்த நிலையைக் காட்டிச் சேர்த்துக்கொண்டு தம்மை உண்டாக்கினபடி.
குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை – 2பிரணயரோஷத்தாலே “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும், “நின்புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ” என்றும் சொன்னவை யெல்லாம் அந்தப் பிரணயரோஷம் போனவாறே ஏத்தாய்விட்டது. ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து – 3தன்னை அடைந்தவர்களோடு உண்டான பாவபந்தத்தை வெளியிட்ட ஒப்பற்ற பத்து. இசையொடும் – சொல் மாத்திரத்தாலே. நவில உரைப்பார்க்கு – ஆதரத்தோடு சொல்லுவார்க்கு. நல்குரவு இல்லை – வறுமை இல்லை; பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை. என்றது, தூதுவிட்டு, அவன் வரக்கொண்டு ‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் படவேண்டா என்றபடி. 4சோறும் புடைவையும் கிடைக்கும் என்கிறது அன்று; பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறது. 5“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”-திருவாய்.
6. 7 : 1.- என்று இருக்கிற இவருடைய வறுமை அன்றோ. ஆகையாலே, அதிகாரிகட்குத் தகுதியாக அன்றோ உண்ணும் உணவு
முதலானவைகளும் இருப்பன. 1“உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்” –பெருமாள் திருமொழி, 3 : 4.-என்கிறவர்கள் இவற்றைச் செல்வமாக நினையார்களே. 2“சென்று ஒன்றி நின்ற திரு” – நான்முகன் திருவந். 61.-என்கிறபடியே அவன்தானே வந்து மேல்விழ நித்தியா நுபவம் பண்ணப்பெறுவர்கள்.
‘அழு கூத்த அப்பன்’ என்கிற இடத்தில் 3“முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்”- பெருமாள் திருமொழி, 7 : 8.– என்கிற பாசுரத்தை யோஜித்துக் கொள்வது.
திருவாய்மொழி நூற்றந்தாதி
மின்னிடையார் சேர்கண்ணன் மெத்தெனவந் தானென்று
தன்னிலைபோய்ப் பெண்ணிலையாய்த் தான்தள்ளி-உன்னுடனே
கூடேனென்று ஊடுங் குருகையர்கோன் தாள்தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு.
தாரித்ர்யம் இல்லை பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
அன்னையால் வெண்ணெய் வார்த்தையுள்
ஆய்ச்சியாகிய அன்னை
இடைச்சி தாய் ஷத்ரிய தாய்
ராஜ குமாரி அடிக்க மாட்டாள்
இவள் நம்மை அடிப்பதே
முலைச் சுவை அறிந்ததும் இங்கே இ றே
வார்த்தை களவு போனதே
வெண்ணெய் -வார்த்தைக்கே
நான் அல்லேன் என்றானாம்
அழப் புக்கான்
தர்ம சத்திரம் -யார் நித்யம் பெருக்க
எவனோ சோம்பேறி
என்னால் முடியாது இவன் சொல்ல
தானே குட்டை வெளிப்படுத்த
அழும் கூத்த அப்பன்
தீங்கு எல்லாம் உன் மேல்
பையவே நிலை –
கூத்து வல்லார் ஆடினாப் போலே
அழுகை எகிற கூத்தை உடைய மஹோ உபகாரகன்
இங்கும் அது போலே செய்து
நிரபேஷமாக போக மாட்டாமல் நின்ற நிலையும் அப்படியே
இந்த நிலையைக் காட்டி சேர்த்துக் கொண்டான்
குருகூர் சடகோபன் ஏத்திய –
ஆயிரத்துள் இவை ஒரு பத்து
பாவ பந்தம்
ஈடுபாட்டுடன் அர்த்தம் அனுசந்தித்து
தாரித்ர்யம் இல்லை
பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”-திருவாய்.
6. 7 : 1.- என்று இருக்கிற இவருடைய வறுமை அன்றோ.
அவன்தானே வந்து மேல்விழ நித்தியா நுபவம் பண்ணப்பெறுவர்கள்.
சாரம்
தன் நிலை போய்
பெண் நிலையாய்
இவர் தள்ளி
கூடேன் என்று ஊடும் குருகையர் கோன்
ஆழ்வார் திருவடி தொழவே நித்யம் நல்க வேண்டும்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply