திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-2-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கருமாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.

    பொ-ரை :- நிலைபெற்று விளங்குகின்ற கிரீடத்தையுடையவனே! இருபத்தொருபடிகால் அரசர்களைக் குலத்தோடு வேர் அறுத்த வெற்றி பொருந்திய நீண்ட மழு என்னும் ஆயுதத்தையுடையவனே! அகன்ற உலகத்தையெல்லாம் முன்னே உண்டாக்கினவனே! இக்காலத்திலும் இந்த ஆயர் குலமானது அடியோடு உய்வுபெறும்படியாகத் தோன்றிய கரிய மாணிக்கச் சுடரே! ஆய்ச்சியர்களாகிய நாங்கள் எப்பொழுதும் உன்னால் துன்பமே படுகின்றோம்.

வி-கு :- களைகட்டல் – களைபிடுங்குதல். ‘மழுவா’ என்றது, பரசுராமனை. குலத்தை – குலமானது; உருபு மயக்கம். வீடு உய்ய – விடுபட்டு உய்ய என்னலுமாம்; மோக்ஷத்தைப் பெற்று உய்வுபெற என்னலுமாம். ஆய்ச்சியோம் நலிவே படுவோம் என்க.

ஈடு :- பத்தாம்பாட்டு. 2“நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே” என்று விழுக்காடு அறியாதே வாய் தப்பச் சொல்லிக்கொண்டு நின்றார்கள்; காலால் அழித்தது சிற்றிலையன்று; இவர்கள் நெஞ்சுகளிலுள்ள மறத்தையே யன்றோ. அந்த மறம் போனவாறே மேல்நோக்கிப் பாதாதி கேசாந்தமாகப் பார்த்தார்கள்; தங்களை வென்றதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி நின்றான்; அவ்வடிவிலே பிறந்த வேறுபாட்டினைச் சொல்லுகிறார்கள்.

நின்று இலங்கு முடியினாய் – 1இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச்சுமையாய்க் காணும் கிடந்தது; இப்போதாயிற்று நற்றரித்து ஒளிவிடத் தொடங்கிற்று. 2இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே. முன்பே முடிசூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது. 3இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும், காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது; 4இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும் மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது. 5“ஸ்ரீராமபிரான் விபீடணனை அரக்கர்களுக்குத் தலைவனாக இலங்கையில் அபிடேகம் செய்து, அப்போது செய்து முடித்த எல்லாக் காரியங்களையுமுடையவராயும் நடுக்கம் அற்றவராயும் மகிழ்ந்தார் அன்றோ.”அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீக்ஷணம்
க்ருதக்ருத்ய: ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 85.

6ஸ்ரீபரதாழ்வானைப்போலே, ‘நான் முடி சூடேன், நீர் முடிசூடும்’ என்று முடிக்கு இறாய்க்கின் செய்வது என்? என்று உடம்பு வெளுத்துக் காணும் இவர் இருந்தது; 7‘ஒருபடி அத்தலைச்சுமையைக் கழித்துப் போந்தோம்; இதுவும் ஒரு தலைச்சுமையாகின் செய்வது என்?’ என்று. 1இக்ஷ்வாகு குலத்தார்க்குப் பணியன்றோ முடிக்கு இறாய்க்கை.

குகனொடும் ஐவரானேம் முன்பு; பின் குன்றுசூழ்வான்
மகனொடும் அறுவரானேம்; எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னோடும் எழுவ ரானேம்;
புகலருங் கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.

நடுவினிப் பகர்வ தென்னே நாயக! நாயி னேனை
உடனுதித் தவர்களோடும் ஒருவனென் றுரையா நின்றாய்
அடிமையிற் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித்
தொடுகழற் செம்பொன் மௌலி சென்னியிற் சூட்டிக் கொண்டான்.-என்பன அநுசந்தேயம்.

2அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம். 3‘அது கிடக்க; உங்களுடைய எண்ணங்களைக் குலைத்து உங்களை வென்றோம் அன்றோ’ என்றான். இருபத்தொருகால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா – 4மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ? “எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ? இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ? அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே! களைகட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.

வியன் ஞாலம் முன் படைத்தாய் – 1பிரளயத்தில் உருமாய்ந்து கிடந்த பூமியை உண்டாக்கினாற் போலே அன்றோ, பிரணய ரோஷத்தாலே அழிந்த எங்களை உண்டாக்கினபடி. வியன் – ஆச்சரியம். 2பிரளயம் கொண்ட பூமியை எடுத்தாற் போலே, விரஹ பிரளயம் கொண்ட எங்களை எடுத்தபடி. 3அங்கு விலக்குவார் இல்லாமையாலே செய்யலாம்; ‘கழக மேறேல்’ என்று விலக்கச் செய்தேயன்றோ உண்டாக்கிற்று. இன்று இவ் வாயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய கருமாணிக்கச் சுடர் – 4“பல பொருள்களாக ஆகக்கடவேன்” என்று பொதுவான சிருஷ்டியைத் தேடிப் போக வேணுமோ? இந்த ஆயர்குலத்திலே வந்து பிறந்து, இன்று இவ்வாயர்குலத்தை வடிவைக் காட்டி மனைவி மக்கள் முதலியவர்களோடு ரக்ஷித்தவனாதலின் ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள். அன்றிக்கே, தன்னை அடைந்தார் திறத்திற் பண்ணின ஓரம் தன்பேறு என்னுமிடம் வடிவிலே தோன்றும்படி காணும் இருக்கிறது; ஆதலின், ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள் என்னுதல். அன்றிக்கே, பிரணயரோஷத்தாலே ‘சேரோம்’ என்று இருக்கிற தங்களைச் சேர்த்தபடியாலே ‘கருமாணிக்கச்சுடர்’ என்கிறார்கள் என்னுதல். “புத்திர பௌத்திரர்களாகிய அடிமைப்பொருள்களோடு” என்கிறபடியே, ஒரு சேர உய்வுபெறும்படி செய்தானாதலின் ‘வீடு உய்ய’ என்கிறது. தோன்றிய – ஆவிர்ப்பவித்த. நின்தன்னால் என்றும் நலிவேபடுவோம்ஆய்ச்சியோமே – 1பகைவர்களாய் முடிந்து போகப்பெறாதே, சம்சாரிகளாய் வேறு ஒன்றிலே நோக்குள்ளவர்களாய்ப் போகப் பெறாதே, நீ நலியவும் நாங்கள் நோவுபடவுமாம்படி சமைந்து விட்டதன்றோ! 2இரண்டு தலையும் கூடி மேல்விழுந்து அணைத்துக் கொண்டு நின்று சொல்லுகிற வார்த்தை அன்றோ. இவ்வளவும் தங்கள் வெற்றியே அன்றோ சொல்லிப் போந்தது; இப்போது அன்றோ தங்கள் தோல்விக்கு இசைந்தது. நலிவேபடுவோம் – 3இதுதான் எங்களுக்கு மெய்யாகப் புகாநின்றதோ, எங்களுடையது அன்றோ எங்களுக்குச் சித்தித்து விடுவது. இவர்களுடையதாவது, 4“கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்” – திருவிருத்தம்.-என்று மெலிவேயாயிருக்கை. செய்வது இன்னது என்று அறியாத தாங்கள் என்பார் “ஆய்ச்சியோமே” என்கிறார்கள்.

இத்திருப்பாசுரக் கருத்தோடு,

“வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்”-  என்னும் திருக்குறள், ஒரு புடை ஒப்புமையுடைத்தாம்.

வடிவில் பிறந்த வேறுபாடு தோற்ற இந்த பாசுரம் 
முடி அணிந்து வென்ற வீராப்பு
21 தலை முறை அழித்த மழு
எங்கள் மனத்தையும் அழித்து
ஞாலம் படைத்தது –
எங்களையும் உண்டாக்கி ஜகத் சிருஷ்டி போலே
ஆயர் குலத்தை உஜ்ஜீவிக்க பிறந்த கரு மாணிக்க சுடர்
நலிவே பெறுவோம் சம்ச்லேஷத்தால்
தலை சுமையாய் இருந்தது இவர்களை வெல்வதற்கு முன்பு
இப்பொழுது தான்
தன்னிறம் பெற்றது
வீராபிஷேகம் -விஜயத்துக்கு
நின்று இலங்கிய முடி -முன்பு அசத் சாம்யம்
அதிசந்தியை குலைத்து –
கிருத்கிருத்யா -விஜுரகா ஹா -ததா ராம -பிரமோத -superlative –
அபிசிஷ்ய லங்காயாம் –
செய்த பின்பு தான் இப்படி ஆனான் சொன்னது போலே
பரத ஆழ்வான் போலே முடிக்கு இறாய்க்காமல் இருந்தானே-

தம்பி வேற -இஷ்வாகு குலம் -ஆனதால்
உடம்பு வெளுத்து இருந்தான்
தலை சுமையை கழித்து போந்தோம் அத்தை
இதுவும் விழுந்தால் என்ன செய்வது ஜுரம் வர
அடிக்கு இறாயாது இருக்கையும் -அடி சூடும் அரசு
தான் உளர் ஆனார் -சந்தோசம் ஜுரம் நீங்க ஹா ரிஷி கொண்டாட 
எனக்கு என்பாரையும் -ஷத்ரியர் உனக்காக ஆக்கிக் கொண்ட நீ
உன்னையே ஆசை கொண்ட எங்களை வெல்லுகை ஏற்றமோ
மிடுக்கன் -21 கால் அரசு களை  கட்ட -எடுத்துப் பொகட்டுகை –
ராஜாக்களை வென்றாய்
இடைசிகளை அபலைகள் வெல்லுவது ஏற்றமோ 
வியன் ஞாலம் முன் படைத்தாய்
உள் மாய்ந்து இருந்த எங்களை வென்றாய் இது மகா கார்யம்

விரக பிரளயம்
விலக்குவார் இல்லை அங்கு
கழகம் ஏறேல் நிஷேதிக்க
வடிவை காட்டி ரஷித்தாய் –
தனது பேறாய் -உடம்பில் தேஜஸ் காட்ட
வீடு உய்ய
ச பரிகரமாய்
ஆயர் குலம் -ஆவிர்பவித்த –
சேர்த்த படியால் கரு மாணிக்க சுடர் புகர்
சத்ருகளாய்  முடிந்து போகாமல்
சம்சாரிகளாய் வேறே விஷயங்களில் போக முடியாமல் 
நீ நலிய
வெற்றியிலே இவ்வளவும் சொல்லிப் போந்து
தோல்விக்கு இசைந்து
தோற்றோம் மட நெஞ்சே
ஜிதந்தே
தாங்கள் தோற்ற படியை அவனுக்கு
வ்யாக்யானதுக்கு பொருந்தாது
மானச அனுபவம் இது வரை
கூடி விட்டோம் -என்றும் நலிவு
இது தான்  மெய்யாக
கூடி இருந்தும் மெலிவு  இடைக்கையும் வலக்கையும் அறியாத ஆயர்
சந்தோஷம் பொறு க்க முடியாதே
உண்டோ கண்கள் துஞ்சுதல் 
சம்ச்லேஷத்தில் ஆனந்தமாக சொல்லிய வார்த்தை நலியும் என்றும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading