நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று அன்னையரும் முனிதிர்
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண்துழாயும் பொன்முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும்நாணும் பாவியேன் பக்கத்தவே.
பொ-ரை :- கண்களிலே தண்ணீர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கின்றன என்று அன்னையரும் முனிகின்றீர்கள்; தேனைக் கொண்டிருக்கின்ற சோலைகளால் சூழப்பட்ட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின், அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையும் பொன் முடியும் திருமேனியும் அழகாகத் தோன்றுகிற பட்டாடையும் அரைநாணும் பாவியேனாகிய என்னுடைய பக்கங்களிலேயே இருக்கின்றன.
வி-கு :- நீர்கள் நில்லா என்க. பாங்கு – தகுதி. நாண் – அரை ஞாண்.ஈடு :- நான்காம் பாட்டு. 1காத்தலுக்குக் கவித்தமுடியும், தனி மாலையும், பரிவட்டப்பண்பும் முதலானவை பக்கங்களிலே நின்று என்னை நலியாநின்றன என்கிறாள்.
நீங்க நில்லா கண்ண நீர்கள் – அவன் நீங்க, கண்களில் நீர் நீங்குகின்றது இல்லை. அன்றிக்கே, நீங்க நில்லா-2பேரநில்லா என்னுதல். அன்றிக்கே நீங்கநில்லா என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு 3நீக்க நிற்கின்றன இல்லை என்னுதல். நீக்க – நீங்க என வல்லொற்று மெல்லொற்றாகத் திரிந்தது. அன்னையரும் முனிதிர்-உங்கள் கண்கள் 4ஆனந்தபாஷ்பமும் பாய்ந்து அறியாவோ. தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி-அந்தச் சோலையில் தேனை வற்றச் செய்யமாட்டீர்களோ நான் என் கண்ண நீரையும் மாற்ற. 5இந்தக் கண்ண நீர்க்கு ஸஹ்யம் அவ்வூரில் இனிமை போலே காணும். நான் கண்ட பின்-6அவனுடைய ஸ்வாபாவிகமான மேன்மையை அறியும் நான் கண்டபின். பூந் தண் மாலைத் தண் துழாயும் – இரண்டு உலகங்களுக்குமாக முதலியாக விட்ட, காட்சிக்கு இனிதாய்க் குளிர்ந்த செவ்வித் திருத்துழாய்த் தனி மாலையும், பொன்முடியும் – இரண்டு உலகங்களும் தன்முடியிலே செல்லும்படி கவித்த திருமுடியும். வடிவும் – அம்மாலைக்கும் முடிக்கும் இசைந்த வடிவும் – ‘இவனே மாலைக்கும் முடிக்கும்உரியான்’ என்று 1படி எடுத்துக் காட்டலாமே. 2“‘வடிவும்’ என்பதே!” என்று ஈடுபட்டவராய் இருப்பர். பாங்கு தோன்றும் பட்டும்-திரு அரை பூத்தாற்போலே அங்குத்தைக்குப் பாங்காத் தோற்றுகிற திருப்பீதாம்பரமும், நாணும் – விடுநாணும், பாவியேன் பக்கத்தவே-அநுபவிக்கத் தருதல், உருவெளிப்பாடாய்த் தோன்றாதே ஒழிதல் செய்யாதபடியான மஹா பாவத்தைச் செய்தேன். 3அருகே நின்று பிகாசித்துக்கொண்டு நின்றன; அநுபவ யோக்கியமாகப் பெறுகின்றன இல்லை. 4அணைக்கத் தருதல், அகல நிற்றல் செய்கின்றன இல்லை.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply