நின்றிடும் திசைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும்வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.
பொ-ரை :- செயல் அற்று நிற்பாள், பின் அறிவு கலங்குவாள், பின் வருந்துவாள் என்று தாய்மாராகிய நீங்களும் முனியாநின்றீர்கள்; மலைகளைப்போன்று மாடங்கள் உயர்ந்து காணப்படுகின்ற திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்னர், வெற்றி பொருந்திய வில்லும் தண்டமும் வாளும் சக்கரமும் சங்கமும் ஒருபடிப்பட நின்று கண்களுள் தோன்றி நீங்குகின்றன இல்லை; நெஞ்சுக்குள்ளேயும் நீங்குகின்றன இல்லை. என் செய்வேன்?
வி-கு :- என்று முனிதிர்: கண்டபின் கண்ணுள் நீங்கா, நெஞ்சுளும் நீங்கா என்க.
ஈடு :- மூன்றாம் பாட்டு. 1நம்பியுடைய திவ்விய ஆயுதங்களின் சேர்த்தி அழகு, உள்ளும் புறம்பும் ஒக்க எப்பொழுதும் தோன்றாநின்றது என்கிறாள்.
நின்றிடும் திசைக்கும் கையும் – 2“ஸ்ரீராமபிரானுடைய பாணங்களால் அரக்கர் சேனை அறுக்கப்பட்டதாகவும் பிளக்கப்பட்டதாகவும் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும் கண்டார்கள்” என்கிறபடியே, இராமபாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று, நம்பியுடைய 3அழகுகளும். 4ஒன்றுசெயல் அறுதலைப் பண்ணும், ஒன்று அறிவைக் குடிபோக்கும், ஒன்று அறிவைக்கொடுத்து வருந்தப் பண்ணும். செயல் அற்றவள் ஆகா நின்றாள், அறிவுகெடா நின்றாள், வருந்தா நின்றாள் என்று என் குற்றமாக நினைத்துப் பொடியாநின்றீர்கோள். அன்னையரும் முனிதிர் – 1தெளிந்திருப்பார்தாம் பொடியப்பெற்றதோ. இவற்றிற்கெல்லாம் தாயாயிருக்கிற நீங்கள் இப்படிச் செய்யக் கடவதோ. 2தெளிவது கலங்குவதாய் இவைதாமே யாத்திரையாகப் போந்த நீங்களும் முனியா நின்றீர்கோள். “ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்றறியேன்” என்னுமவர்கள் அலரோ. 3யௌவனத்தில் நீங்கள் செய்து போந்தவற்றை அப்பருவத்தில் நான் செய்தவாறே குற்றமாயினவோ. இந்தக் குடிக்காகப் பகவத்பிராவண் யமே யாத்திரைபோலே காணும். குன்றம் மாடம் திருக்குறுங்குடி-மலைகளை நெருங்க வைத்தாற் போலே இருக்கிற மாடங்களையுடைத்தான திருக்குறுங்குடி.நான் கண்ட பின் – 1ஆயுதம் பிடித்த பிடியில் வாசி அறியும் நான் கண்ட பின். வீரபத்தினி ஆகையாலே வாசி அறிவாளே அன்றோ! 2பெருமாளுக்கு வில் எடுத்துக்கொடுப்பவள் பிராட்டி அன்றோ.
3பெருமாள் ‘வில்லைத் தா’ என்ன, கொடுத்து, அவர் கையும் வில்லுமாய் நின்ற நிலையைக் கண்டவாறே, ‘நீர் இப்படி வில்லைத் தரித்தவராய்த் திரியப் புக்கால் உம்மை இருடிகள் வந்து சரணம் புகுவார்கள்; அவர்களுக்குப் பகைவர்களான இராக்கதர்களோடு எதிரிட வேண்டிவரும்; அது பின்னை சாதிப் பகையாம், பின்னை நீரும் நானும் இரண்டு இடத்திலே இருக்க வேண்டிவரும். ஆன பின்னர், வில்லைப் போகட்டுத் தாபத வேடத்தோடே திரிய அமையும்’ என்றாளே அன்றோ. பெருமாள்பக்கல் சாங்கமே அன்றோ இப்படிச் சொல்லுவித்தது. வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா – 4திவ்விய ஆயுதங்களுக்கு, ஆயுதங்கள் ஆபரணங்கள் என்னும் இரண்டு இடங்களிலும் மெய்க்காட்டு உண்டுகாணும். 5போர்த்தலையில் ஆயிற்றுஆயுதம் என்று அறியலாவது. “இந்திரன் வில்லுக்கு ஒப்பானவையும் பகைவர்களைக் கொல்லக்கூடியனவுமான விற்களைப் பிடித்துக்கொண்டு நிற்கின்ற நீங்கள்” என்கிறபடியே, அநுகூலர் கண்டு ஜீவிக்கைக்கும், பகைவர்களுக்குப் பிடித்த பிடியிலே முடிகைக்கும் காரணமாக இருக்குமன்றோ. வென்றி வில்லும்-உகப்பாரோடு உகவாதாரோடு வாசி அற வெற்றியே இயல்பாக இருக்கின்ற திருவில்லும். தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்-அந்த வில்லின் ஸ்வபாவத்தையுடைத்தான மற்றைய திவ்ய ஆயுதங்களும். நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா-கண்வட்டத்தை விடாதே நின்று தோன்றாநின்றன. இவை கண்முகப்பே நின்று நலியப் புக்கவாறே, அஞ்சிக் கண்களைச் 1செம்பளித்தவாறே நெஞ்சுக்குள்ளே நின்று பிரகாசிக்கத் தொடங்கின. நெஞ்சுள்ளும் நீங்கா – மேலே “வந்து எங்கும் நின்றிடுமே” என்றாள்; இங்கு உள்ளும் புறம்பும் ஒக்க நலியா நின்றன என்கிறாள். இவற்றிற்கு வாசி என்? என்னில், நம்பியுடைய அழகுக்கு உள்ளன எல்லாம் உண்டாயிற்று இவளுக்கும். அவ்வழகு எங்கும் ஒக்க நலிகிறாப்போலே ஆயிற்று, இவளும் கட்கண்ணாலும் உட்கண்ணாலும் அநுபவிக்கிறபடியும்.
“சிந்நம்பிந்நம் ஸரை: தத்தம் ப்ரபக்நம் ஸஸ்த்ரபீடிதம்
பலம் ராமேண தத்ருஸு: ந ராமம் ஸீக்ர கர்ரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.
‘தெளிவது கலங்குவதாய்’ என்றது, யௌவன தசையில் தெளிவது
கலங்குவதாய் இருந்ததைக் குறித்தபடி. அப்படி இருந்ததற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘ஆழியொடும்’ என்று தொடங்கி.
இன்னார் என்றறியேன்
அன்னே! ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை
இன்னார் என்றறியேன்.-என்பது, பெரிய திரு. 10. 10 : 9.
இது, பெண்பிள்ளை வார்த்தையானாலும், இங்கு, “அன்னையர்” என்றது,
அத்யவசாயநிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆகையாலே, அவர்களுக்கும்
தெளிவதும் கலங்குவதும் உண்டு ஆகையாலே, இங்குப் பிரமாணமாகக் குறை இல்லை.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply